pm logo

குகை நமசிவாய தேவர் அருளிய
அருணகிரி அந்தாதி


aruNakiri antAti
of kukai namacivAya tEvar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குகை நமசிவாய தேவர் அருளிய
அருணகிரி அந்தாதி

Source :
குகை நமசிவாய தேவர் அருளிய
அருணகிரி அந்தாதி
(பொழிப்புரையுடன்)
பதிப்பாசிரியர் : வித்துவான் திரு. அடிகளாசிரியர், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்,
கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர்.
சரசுவதி மகால் 1992
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
விலை ரூ. 12-00
சரசுவதி மகால் வெளியீட்டு எண். 118
------------
நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் ; அருணகிரி அந்தாதி
பதிப்பாசிரியர் : திரு.அடிகளாசிரியர்
வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால்
வெளியீட்டு எண்: 118
மொழி : தமிழ்
வெளியீட்டு நாள் : செப்டம்பர், 1992
இரண்டாம் பதிப்பு
பக்கங்கள் : 82
அச்சிட்டோர் : சரசுவதி மகால் நூலக அச்சகம்
பொருள் : இலக்கியம்
விலை 12-00
----------
இரண்டாம் பதிப்பின் வெளியீட்டாளர் முகவுரை

குகை நமசிவாய தேவர் அருளிய அருணகிரி அந்தாதி' என்னும் இந்நூலைச் சரசுவதி மகால் நூலகம் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளியிடுகின்றது.

அந்தாதித் தொடையிலமைந்த நூறு வெண்பாக்களால் ஆன அருணகிரி அந்தாதி' என்னும் இந்நூல் திருவண்ணாமலை என்னும் அருணகிரியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும்.

இலக்கியச் சுவையும் புலமை வளமும் கெழுமிய இந்நூல் பொதுநிலையில் தமிழன்பர் களுக்கும் சிறப்பு நிலையில் சைவ சமய அன்பர்களுக்கும் பயன்படக் கூடியதாகும்.

இந்நூல், 1967-ல் பேராசிரியர் திரு. அடிகளாசிரியர் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டதாகும்.

இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந் நூலின் வெளியீட்டுக்கும் வழக்கம்போலப்
பொருளுதவி நல்கியுள்ள நடுவண் அரசுக்கு எனது நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இந்நூலை நன்முறையில் அச்சிட்டுள்ள சரசு வதி மகால் நூலக அச்சகத்தாருக்கு எனது பாராட்டுகள். இந்நூல் நன்முறையில் வெளிவர உதவிய ஏனையோருக்கும் நன்றி.
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந் நூல் முதற்பதிப்பில் பெற்ற வரவேற்பை இப் பதிப்பிலும் பெறுதல் திண்ணம்.

தஞ்சாவூர், 14-9-92 தி.சண்முக ராஜேஸ்வரன், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர் (பொறுப்பு)
சரசுவதி மகால் நூலகம்.
-------------

INTRODUCTION

Of the several types of minor poems in Tamil Antadi is the one that has been very abuntantly handled by great poets from ancient times. Its very name defines its nature as an antadi is so composed that the last word or syllable (antam) of each preceding verse is taken up as the first adi) of every succeeding one. Such a sequential arrangement of verses is admirably suited for hymns in extollation of God. since it constitutes a veritable garland of words; for as in a garland each beautiful and fragrant blossom is strung up with the next. in the antadi each sweet and thoughtful stanza is linked up with the one that follows. Poetry has always been the handmaid of Religion and Philosophy in India and the bulk of the antadi poems pertains to the literature of psalms and praises.

The present work, ARUNAGIRI ANTADI is a poem extolling Lord Siva. hailed as Arunachalesvara enshrined in the sacred hill known popularly as Thiruvannamalai and by several other names like Arunagiri and Sonachalam. Tradition has it that Lord Siva manifested himself here, as a huge mountain, according to one version, and as a great column of fire, according to another. posing to the Gods, Vishnu and Brahma, the
challenge to discover the bottom and the top respectively of his form and that by the futility of their efforts was established the infinitude of the Lord and his supremacy over all the other Gods The holy emblems, the lingas. of five sacred spots are said to be composed of the five elements and the Arunachala Linga is one of the five. The annual celebration of the Karthigai Deepam or the Holy torch of Krithika, which attracts thousands of pilgrims every year is symbolical of this fact and it is believed that the Holy Torch lit up annually on the night of the full moon day in the month of Karthigai is the gross and visible form of the subtle fire which constitutes the linga manifesting itself forth for conferring bliss on the devotees who see this holy light and pray to it. The glory of this Lord is sung about in this antadi.

The author of this poem is a mystic and saintly poet named Guhai Namasivayar who is understood to have flourished in the middle of the 16th century A. D. His name Namasivayar is always appended with the prelude guhai as he spent the major part of his life in the practice of yogic meditation on the Lord of Annamalai in a cave in the hill, by the command of the Lord himself. communicated to him in the course of a dream. The hill of Arunagiri is renowned both in mythology and history as the abode of great saints from times of yore and Ghai Namasivayar is one of the foremost among them. Many are the philosophical and devotional works composed by him of which only a few have been brought to light. Not only his literary accomplishments but also a religious institution known as Guhai Namasivayar Mutt, established in Tiruvannamalai, of which he himself is reckoned as the first pontiff, keep alive the memory of this great soul in the minds of his numerous literary admirers and spiritual devotees. Detailed and critical accounts of the poet. his life and times and of the fame and excellence of the poem are given by the learned editor in his preface.

The poem. Arunagiri Antadi, combines in it poetic art with religious fervour and has been the source of inspiration to many scholars and devotees of Saivism in suceeding ages. The author has appropriately chosen for the expression of his thought, the popular venba metre which has a charming rhythm and cadence of its own. To illustrate the variety of appeal and the comprehensive genius of the poet. we may drawn the attention of the readers to a few specimen stanzas, although the perfection of the poem allows no room for any such distinctive or exclusive choice. Verses 35, 35, 46 and 56 set forth in glowing terms the transcendental glory of the Lord of Tiruvannamalai hills. Stanzas 34 and 52 bring out effectively the futility of all other merits and of life itself when they are devoid of devotion to God and verse 27 stresses on the needlessness of other merits when one sticks to the service of God. Many verses like 15, 28, 54 and 83 dwell upon the great variety of boons, ranging from the mundane comforts to the supreme Bliss of Emancipation which one may acquire by devotion to the Lord of Arunagiri and by merely reciting the holy five-syllabled mantra of the Lord. In many stanzas like 3, 21.62 and 76 the saintly poet holds forth the Lord as the sole refuge and source of succour for man. The depth and profundity of the author's knowledge of legendary lore are prominently visible in the numerous and effective allusions which are scattered throughout the poem, as far example in verses 10. 17, 66. In stanzas 68 and 69 we hear the ringing note of the optimism and of the triumphant sense of fearlessness which a devotee acquires when he has surrendered himself merely to the service and prayer of God. The crowing beauty of the poem lies in the two closing stanzas where the mystic poet resorts to a grand and sublime symbolism depicting the Lord Arunachala as the Director of the pantomime of the world and as the ambrosial cloud which floods the world with streams of Grace.

The publication is based on four manuscripts of the poem preserved in the T. M. S S. M. Library bearing Mss. Nos. M. 135. 136, 137 and 480 D. The authorities of the Library are deeply indebted to Thiru Adigalasiriar. professor of Tamil, Palavar Kalluri, Karandai, who has brought to bear his vast learning and critical acumen on the task of editing this work in an admirable manner, adding lucid and faithful prose rendering of the verses. Our thanks are due in no less measure to Prof. V. Gopala Iyengar, M. A.. our learned and versatile Librarian for his overall supervision of the edition.

We record here our deep sense of gratitude to our State Government for its financial grant which has rendered possible the bringing out of this work and such other literary gems from the mine of our Library.

Thanjavur, 25-10-1967.       O. A. NARAYANASWAMI,
T. M. S. S. M. LIBRARY,       Honorary Secretary,
      ADMINISTRATIVE COMMITTEE,
------------

AN APPEAL

Manuscripts on Palm Leaf or Paper of the ancient works of the wise men of the past, are the great treasures, solely inherited by the Nation and it is the moral obligation of persons who possess them to preserve them safely for the future generations of mankind.

Probably you have some of these in your possession or you know friends or neighbours who possess them. You can make a great contribution to the cause of the preser-vation not only of our National Culture but also to the Culture of Humanity as a whole by arranging to present such manuscripts to the famous T. M. S. S. M, Library, Thanjavur.

The manuscripts so presented will be accepted and acknowledged with pleasure and gratitude by the authorities of the Library, preserved with meticulous care and made available to successive generations of readers and scholars for study and research. The hitherto unpublished works found among them, will be printed and published in due course, as facilities occur, with the expression of the Library's gratitude for your gift.

The great Scholar-King of Tanjore, Rajah Serfoji, has attained immortal fame by dedicating enormous time and wealth to the expansion and firm establishment of this world-famous Sarasvati Mahal Library.' It is open to you to share the honour of Serfoji, in your own measure by contributing your manuscripts to the great institution built by him.

This great Honour is beckoning to you to accept it. Will you hasten to take it up? The Library waits for your answer.

DIRECTOR,
Sarasvati Mahal Library, Thanjavur
-----------
முகவுரை


எல்லோருக்கும் இன்பம் அடைவதில் விருப்பம் உண்டு. துன்பம் அடைவதில் சிறிதும் விருப்பம் இராது; வெறுப்பே உண்டு. அந்த இன்பம் என்பது எதுவென்று வினாவினால் அதற்குப் பலரும் பலவிதமாக விடையளிக்கின்றனர். பெரும் பாலான பொதுமக்கள் ”கண்களுக்கு அழகான காட்சியும் செவிகளுக்கு இனிமையான இசையும் நாவிற்குச் சுவையான உண்டியும் மூக்கிற்கு நல்ல மணமும் உடம்பிற்கு மென்மையான படுக்கையும் கிடைக்குமேயானால் அவையே சிறந்த இன்பமாகும்” என்று கூறுவர்.

ஆனால், நல்லறிவு படைத்த சிறந்த மக்களாயுள்ளவர் ”மேலே சொன்ன அவைகளும் இன்பமென்று கூறப்படும்; அவைகளுக்கு ஐம்புல இன்பம் என்று பெயர்; அந்த ஐம்புல இன்பங்களையே குறிக்கோளாகக் கொண்டவர்கட்கு மெய்ப்பொருளுணர்ச்சி தோன்றுவதில்லை; மெய்ப்பொருளுணர்ச்சி தோன்றப் பெறாமையால் அவர்களிடம் மனத் தூய்மையும் மனநிறைவும் அன்பு முதலான நற்பண்புகளும் அறவுணர்ச்சியும் ஏற்படுவதில்லை; அவற்றிற்கு மாறாகக் காமம் சினம் முதலிய மன அழுக்குகளும் மனச்சஞ்சலமும் வெறுப்பு முதலான தீய பண்புகளும் மறவுணர்ச்சியும்
உண்டாகின்றன. அதனால் ஐம்புல இன்பம் ஒன்றினையே குறியாகக் கொண்ட அவர்களுடைய வாழ்வு இன்பமா யிருப்பதில்லை. ஆதலால், அவற்றை விடுத்து நல்ல இலக்கியங்களை நன்கு கற்றுக் கேட்டுப் பயின்று அவ்விலக்கியங்களில் உள்ள உறுதிப் பொருளைத் துய்க்கின்ற இன்பமே பேரின்பமாகும்" என்று கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் ”ஐம்புல இன்பங்களை நம்மிலுந் தாழ்ந்த விலங்கு முதலானவைகளும் பெறுகின்றன; மக்களாகிய நாமும் அடைகின்றோம்; ஆனால், எந்த விலங்குகளும் இலக்கியங்களைக்கற்று அவற்றிலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை அறிந்து இன்பம் அடைவதில்லை; ஏன் என்றால் அவற்றிற்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறி வுணர்ச்சியும் பேசும் வாய்ப்பும் இல்லை; ஆறறிவு படைத்த மக்கட் கூட்டம் மட்டுமே பேசும் வாய்ப்பினைப் பெற்று இலக்கியச் சுவையை நுகர்ந்து இன்பம் அடைகின்றது. இவ் வின்பம் மக்களுக்கே உரிய இன்பமாயிருத்தலினாலும் அது மக்கள் அறிவிலே எப்பொழுதும் இனித்துக்கொண்டே விளங்கி அவர்கட்கு நன்மனம் முதலியவற்றை உண்டாக்கி அவர்களை நல்வழிப் படுத்தலினாலும் இதுவே மிகச் சிறந்த இன்பமாகும்" என்று கூறுகின்றனர்.

இலக்கியம்

எத்தொழிலைச் செய்யும் மக்கட்கும் மனத்திலே ஓர் நல்ல இலக்கு வேண்டுமென்றும், அந்த இலக்கு சோம்பல் முதலானவற்றைப் போக்கி மக்களை நல்வழிப்படுத்து மென்றும்
மக்களுக்கேயன்றி இவ்வுலகத்தில் எல்லாப் பொருள்கட்கும் ஓர் இலக்கு உண்டென்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார். பிறர்க்கென வாழும் நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர் இவ்வுலசும் நன்கு வாழ்வதற்கேதுவான சிறந்த இலக்குகளை அமைத்துச் சொற்சுவை பொருட்சுவை நிரம்ப நல்ல இலக்கியங்களை இயற்றி வருகின்றனர். இலக்குகளைத் தம்மிடத்தே கொண்டிருத்தலின் அவையெல்லாம் இலக்கிய மென்று அழைக்கப்படுவன வாயின.

நம் நாட்டு இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியர் இலக்கியத்தை `யாப்பு' என்று கூறி அந்த யாப்பு பாட்டு, உரை, நூல், மந்திரம், பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகையாய் நடந்து, குறித்த பொருளை முடிய நாட்டும் என்று கூறியுள்ளார். இவ்வெழுவகை இலக்கியத்திலே பாட்டு என்னும் இலக்கியந்தான் மிகச்சிறந்த இலக்கியமாக அறிஞரால் கருதப்படுகின்றது.

ஏழு இலக்கியங்களில் முதன்மையாயது பாட்டு என்னும் இலக்கியமென்று மேலே கூறினோம். அது தமிழில் பல வகையாக அமைந்துள்ளன. அவற்றைத் தனிப் பாடல்களென்றும் தொடர்ப் பாடல்களென்றும் பிரித்துக் கொள்ளலாம். தனிப்பாடல்கள் பலவகை ஏதுக்களால் தொகுக்கப்பட்டுத் தொகை இலக்கியமென்று பெயர் பெற்று நடக்கும் தொடர்ப்பாடல்கள் சொற்றொடர் நிலையென்றும் பொருட்டொடர் நிலையென்றும் இரு கூறாய் நிகழும்.

அந்தாதி

மேலே குறிப்பிட்ட இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது அந்தாதி என்னும் இலக்கியமாகும். அந்தம் என்றால் ஈறு; ஆதி என்றால் முதல்; ஒன்றனுடைய ஈறு மற்றொன்றிற்கு முதலாய்வரப் பாடினால் அந்தாதியாகும். இதனை அடிதொறும் அந்தாதித் தொடையமைந்த தனிச் செய்யுளென்றும், ஒரு பாட்டின் அந்தம் அடுத்த பாட்டிற்கு ஆதியாய் வரும் சொற்றொடர் நிலைச் செய்யுள்களென்றும் இரு வகையாகப் பகுத்துக் கொள்ளலாம். இவ்விரண்டுள் இரண்டாவதாகிய சொற்றொடர்நிலை அந்தாதியே புலவர்களால் மிகவும் பாடப்பட்டுள்ளது.

கலம்பகம், மும்மணிக்கோவை, இரட்டைமணிமாலை, இணை மணிமாலை, மும்மணிமாலை, நவமணிமாலை, பன்மணிமாலை, இருபாவிருபது, அட்டமங்கலம்,
நான்மணிமாலை ஒருபாவொருபது அலங்காரபஞ்சகம் முதலிய சிற்றிலக்கியங்களிலுள்ள பாடல்களெல்லாம் அந்தாதியாய் வரப் பாடப்படுவது வழக்கமாயிருப்பினும் அவற்றை அந்தாதி என்று வழங்கும் வழக்கமில்லை. ஒலியலந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதி என்னும் இவற்றையே அந்தாதி என்று வழங்குகின்றனர்.

அந்தாதி என்னும் இலக்கியம் சங்கிலித் தொடர் போல் ஒரு பாட்டுடன் அடுத்த பாட்டு சொற்றொடர்பாய் அமைந்துள்ளதால் பாட்டுக்களை மனப்பாடம் செய்கின்றவர்கட்கு அது ஏற்றதாயுள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் திருவாய்மொழிப் பாடல்கள் முற்றிலும் அந்தாதியாகவே உள்ளன. அப்பிரபந்தத்துள் முதற்றிரு வந்தாதி முதலான பல அந்தாதி இலக்கியங்களிருக்கின்றன.

சைவத் திருமுறைகளுள் திருவாசகத்திலே திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் முதலியன அந்தாதியாகவே உள்ளன. பதினோராந் திருமுறையுள் எட்டு அந்தாதி இலக்கியங்கள் உள்ளன. இன்னும் பல தலங்களில் எழுந்தருளிளிருக்கும் கடவுளரைப் பற்றியும், பல வள்ளல்களைப் பற்றியும் புலவர் பலர் அந்தாதி இலக்கியங்களைப் பாடியுள்ளனர். 'கோவை யுலா வந்தாதிக் கொட்டக் கூத்தன்' என்னும் பாடலால் அந்தாதி பாடுவதில் ஓட்டக் கூத்தர் மிகச் சிறந்தவர் என்பது தெரிகின்றது. ஆனால் அவர் பாடிய அந்தாதி யொன்றும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

அருணகிரியும், அருணகிரி அந்தாதியின் சிறப்பும்.

சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுள் திருவண்ணாமலை மிகச் சிறந்த தலமாகும். இது அருணகிரி, அருணாசலம், சோணாசலம், சோணசைலம், முத்திநகர், ஞானநகர், கலேச்சுரம், சுத்த நகர், தென்கயிலை என்று பல பெயர்களைப் பெற்றுள்ளது, இத்தலத்திலே திருமாலும் பிரமதேவனும் முறையே அடியையும் முடியையும் தேடிக் காண்டற்கரிய உயர்ந்த மலை யுருவாய்ச் சிவபெருமான் விளங்கியிருந்தார் என்று புராணம் கூறும். இத்திருவண்ணாமலை தொண்டை நாட்டுச் சிவத் தலங்களில் மிகச்சிறந்தது; நினைத்தவர்கட்கு முத்தியளிக்கும் பெருமை வாய்ந்தது; ஐம்பூதத் தலங்களுள் நெருப் பென்னும் பூதத்தலமாக விளங்குவது; தேவரும் முனிவரும் மன்னரும் பிறரும் வழிபட்டுப் பேறு பெற்றது; சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் என்னும் மூவராலும் பிற சான்றோர்களாலும் பாடப் பெற்றுள்ளது.

இங்ஙனம் சிறந்த திருவண்ணாமலை என்னும் அருணகிரியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்துக் குகை நமசிவாயர் என்னும் அருட்புலவர் அழகான வெண்பாக்களால் நூற்றந்தாதியாக அருணகிரி அந்தாதி என்று பெயர் வைத்து இலக்கியமொன்றினை இயற்றினார். இவ் வந்தாதியை மக்கள் பழங்காலத்தில் விரும்பிப் படித்து வந்தனர். பழங்காலத்துத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் மாணவர் படிக்கும் பாடப் புத்தகமாகவும், இது இருந்து வந்தது. மற்றும் இவ்வருணகிரி அந்தாதியைச் சிவானு பூதிச் செல்வர் பலரும் நன்கு போற்றிக் கற்று வந்துள்ளனர்.

கி.பி. 1677-ஐ ஒட்டி வாழ்ந்தவராகக் கருதப்படும் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் என்னும் பேரறிஞர் வைராக்கிய சதகம், அவிரோதவுந்தியார் என்னும் நூல்களுக்குத் தாம் எழுதிய உரையில் அருணகிரி அந்தாதிப் பாட்டினையும் குகைநமசிவாயர் பாடிய வேறு பாட்டுக் களையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

"சோம சேகரன் சரணமே
      சரணெனத் தொழுதுநின் றழுதன்னோன்
நாமம் நாவினாற் செபித்திலை
      அவத்திலே நாளெலாங் கழித்தாயே"

என்னும் வைராக்கிய சதகப் பாட்டுரையில் "திருவைந் தெழுத்தை நாவினாற் செபித்திலை" என்பதற்கு மேற் கோளாக அருணகிரி அந்தாதியுள்

"பரகதிக்கு வித்தாமுன் பஞ்சாக் கரத்தைப்
பரபரப்ப வெண்ணாத பாவம் - நரகப்
பிறப்பிற்கு மீடாப் பிறந்தருணை யீசா
விறப்பிற்கு மீடாயி னேன்” (59)

என்னும் பாட்டைக் காட்டியுள்ளனர்.

"படைப்பாதிக் கீசன் அதிகாரி பற்றா(து)
உடற்காவல் நீவிடுத் துந்தீபற
ஓவா தவனைநோக் குந்தீபற" (78)

என்னும் அவிரோத வுந்தியார்ப் பாடலுரையில் "உடற் காவல் கைவிடு" என்றமையால்,
அதனைக்கைவிடவே அதன்கட் பற்றிவரும் இருவகைத் துவந்தமும் கூடவே நீங்கு-மென்பதாயிற்று. இதற்குப் பிரமாணம் குகை நமசிவாயர் பாடல்.

"ஐயா மரப்பாவை யாடுவதுஞ் சூத்திரிதன்
கைவாசி யோபாவை கற்றதோ- வெய்யவினை
யென்னிச்சை யோவருணை யீசா படைத்தளிக்கும்
உன்னிச்சை யன்றோ வுரை" (அருணகிரி-94)

அன்றியும்.

"நீயே படைத்தவுட னீகாப்பை காவென்ன
நாயேனுக் கென்பொறுப்பு நாயகனே - ஆயுமறைச்
சீர்கேட்குஞ் சோணகிரிச் சீமானே வைத்தவனை நீ
ர்கேட்கு மோமரங்க ணின்று.'

என்றும் வரும் என்றனர். இவ்விரண்டு பாட்டுள் 'நீயே படைத்த வுடல்’ என்னும் பாட்டு அருணகிரி அந்தாதி யள்ளும் திருவருணைத் தனிவெண்பாக்களுள்ளும் காணப்படவில்லை.

“இரும்பூ ரணபின் மலன்வினை யெல்லாம்
ஒருங்குணர்ந் தூட்டுமே லுந்தீபற
உண்ணா தொழிப்பதா ருந்தீபற' (77)

என்னும் அவிரோத வுந்தியார்ப் பாடலுரையில் "மகத்துவ மாகிய பூரணத்தையும் நிருமலனாகையாற் சுதந்திரத்தை யும் முழுதுணர் தலையு முடைய பரமேசுரன் பல்லுயிர்களது வி னைகளையும் அவ்வினைகளுக்கேற்ற தனுவாதிகளையும் ஏக காலத்து உணர்ந்து ஊட்டுமாயின், அவ்வினைப் பயன்களை அனுபவியாது நீங்குவது யாவரால் ஆவது" என்று உரை கூறிக் குகை நமசிவாயர்,

"பேரா யிரமுடைய பெம்மானைச் சோணகிரி
யாரா வமுதை யறியாமல் - வாராது
தீதும் நலமுந் தெரியுங்கால் நெஞ்சமே
யேதுமவ னென்றே யிரு' (அருணகிரி-78)

என்றும் மற்றும் வருவனவற்றாற் காண்க என்றனர்.

"உறும்பொழு தவ்வீ டொருதன் னுழப்பான்
உறும்பிறர் யானென்பொ யுந்தீபற
அலதொன் றினுமாறா துந்தீபற (78)

என்னும் அவிரோத வுந்தியார்ப் பாடற்கு"ஒருவற்கு முத்தி யடையுங் காலையில் தன்னிடத் துண்டாகிய யான் பிறன் என்னும் பொய்ப்பாவனை முயற்சியால் நீங்கா நிற்கும்; அஃதன்றி மற்றொன்றாலும் அப்பாவனை நீங்கிச் சிவ பாவனை தோன்றாது
என்று உரை கூறிக் குகை நமசிவாய தேவர் பாடல்,

"சும்மா கிடைக்குமோ சோணா சலன்பாதம்
அம்மால் விரிஞ்ச னறிகிலார்-நம்மால்
இருந்துகதை சொன்னக்கா லென்னாகு நெஞ்சே
பொருந்த நினையாத போது' (அருணகிரி-64)

என்றும் மற்றும் வருவனவற்றாற் காண்க என்றனர்.

"வேண்டாத துன்பமும் மேவல்போ லின்பமும்
வேண்டா விடினுமுண் டுந்தீபற
விதிவழி நெஞ்சேயென் றுந்தீபற" (91)

என்னும் அவிரோத வுந்தியார்ப் பாடற்கு "யாவனொரு வனுக்கும் இன்ப துன்பங்க-ளெல்லாம் ஊழின் வழியே அடைதலால். வெறுக்கப்பட்ட துன்பமும் உனக்கு இயல்பாய் வருதல் போல, யாதொரு விடய சுகமும் நீ விரும்பா விடினும் அமைத்தபடியே வந்து கூடும்; ஆகையால், அவற்றினை அவாவுதல் ஒழிவாய் நெஞ்சமே" என்று உரை கூறிக் குகை நமசிவாயர்

"வையமுழு தும்படைத்து வாழு மருணகிரி
யைய னமைத்தபடி யல்லாமல் - நொய்யமனம்
நூறா யிரம்விதமாய் நொந்தாலு மெள்ளளவு
மேறா ததிற்குறையா தே” (22)

என்றும் மற்றும் வருவனவற்றாற் காண்க என்பர். மேற்கண்ட பாட்டு அருணகிரி யந்தாதியில் இல்லை. திருவருணைத் தனிவெண்பாவில் உள்ளது.

திருவண்ணாமலைக் குகை நமசிவாயர் திருமடத்தில் ஆறாவது பட்டத்திலிருந்த குகை நமசிவாயரின் சீடரும் திருக்கோவலூராதீனத்தின் முதற் குருநாதரும் ஆகிய ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நிட்டானுபூதி என்னும் அரிய யோக நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் "கட்டறத் துறந்தே" என்னும் நான்காம் பாட்டுரையில் "சிவஞான தேசிகர் அநுக்கிரகிக்கின்ற நிலையின் வழி நின்று சாதனஞ் செய்கின்ற அனுபவிக்கேயன்றி, அனுபவ மில்லாமல் ஞான நூலைப் படித்து வருபவருக்கு முத்தி யில்லை” என்பதற்கு மேற்கோளாகக்,

'கற்றதனாற் றொல்லைவினை கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதனாற் போமோ பிறவிநோய் - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி' (அருணகிரி-52)

என்னும் பாட்டும்; அந்நூலுள் 'வித்தகமாக' என்னும் ஐந்தாம் பாட்டின் உரையில் ஞானகுரு அநுக்கிரகிக்கின் வழியே யன்றி ஏனையவற்றால் முத்தியின்று என்பதற்கு மேற்கோளாகச்,

"செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி
யப்பனே நன்னூ லறிந்தாலும்-இப்புவியிற்
கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் பயனேது
கண்டவெலம் வீணிலே கற்று" (அருணகிரி - 51)

என்னும் பாட்டும் காட்டப்பட்டுள்ளன.

இங்ஙனம் வைராக்ய சதகம், அவிரோத வுந்தியார் என்னும் சிவஞான நூல்களுக்கும் நிட்டானுபூதி என்னும் யோக நூலுக்கும் குகை நமசிவாயரின் பாடல்கள் இலக்கியமாக அமையுமேயானால், இவர்தம் பாடற் சிறப்பினை என்போன்றவர் எவ்வாறு எடுத்தியம்ப
முடியும்.

குகை நமசிவாயர் வரலாறு

நந்தியம்பெருமானுடன் சிறந்த சிவகணங்கள் அவதரித்துச் சிவநெறிச் செல்வத்தைப் பரப்பி வாழ்ந்திருந்த இடம் கன்னட தேயமாகும். அத்தேயத்திலே ஓர் பதியில் வீரமா கேசுரர் குடும்பத்திலே சிவநெறிச் செல்வராகிய பெற்றோர்க்கு நமசிவாயன் என்னும் பெயருடன் ஓர் குழந்தை யொன்று தோன்றி வளர்ந்து வந்தது. அக் குழந்தை நல்லொழுக்கமும் கல்வியும் உடையதாய் வளர்ந்து வந்தது. இளமையிலேயே அக்குழந்தையின் மனம் உலகப் பற்றில் அமிழாமல் இறைவனுடைய திருவருளைப் பெறுவதில் நாட்டமுடையதாயிருந்தது. அதனால் அது உண்மைப் பொருளை அறிவுறுத்தும் ஞான குருவை நாடி மல்லிகார்ச் சுனம் சென்று அங்கே சிறந்த சிவயோகியாயிருந்த சிவானந்த தேசிகர் என்பாரை அடுத்து அவர் மனம் உவக்குமாறு குரு வழிபாட்டினைச் செய்துவந்தது.

சிவானந்த தேசிகரும் மாணவனுடைய பக்குவ நிலையைத் தேர்ந்து சிவயோக நெறியைப் படிப்படியாக உணர்த்தினார். நமசிவாயராகிய மாணவரும் தம் ஆசிரியர்க்குத் தொண்டு செய்த காலம் தவிர மற்றக் கால மெல்லாம் தனியிடத்திருந்து சிவயோக நெறியைப் பயின்று வருவாராயினர். நாளடைவில் அவர்க்கு அப்பயிற்சி நன்கு கைகூடிற்று.

நமசிவாயருடைய சிறந்த சிவயோகப் பயிற்சி நிலையை அறிந்த மல்லிகார்ச்சுனேசர் கனவிலே ஒரு நாள் தோன்றி, அப்பா! நீ திருவருணையம் பதிக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து. பக்குவமுடைய மாணவர்க்கு உபதேசம் புரிந்துகொண்டு, குருமூர்த்தமாய்த் தங்கி யிருப்பாயாக என்று கட்டளையிட்டருளினார். நமசிவாயரும் கனா நிகழ்ச்சியைத் தம் குருவிற்கு விண்ணப்பஞ்செய்து அவர்கள் விடை தர குதிரை யொன்றினை ஊர்ந்து திருவருணையம்பதி நோக்கிப் புறப்பட்டார்.

அவர் புறப்பட்டுத் திருவருணையை நோக்கி வந்து கொண்டிருக்கும்பொழுது ஓர் நாள் மாலை ஓர் ஊரினை அடைந்தார். அவ்வூரிலே ஒருவனுடைய வீட்டில் திருமண நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. அவ்வீட்டுத் தலைவன் நமசிவாயரைக் கண்டு வணங்கித் தன் வீட்டிற் கழைத்துக் கொண்டு சென்று பீடத்திலே எழுந்தருளச் செய்து பூசித்து வீட்டிலுள்ள அனைவருடனும் அவரிடம் திருநீறு பெற்றுக் கொண்டான்.

அது நிகழ்ந்து முடிந்த பின்னர் அவ்வீடு முழுதும் நெருப்பு பற்றி எரிந்துவிட்டது. அதனைக்கண்ட மாந்தர் பலர், `இத்தவசி தந்த நீறு வீட்டையும் நீறாக்கி விட்டது' என்று இகழ்ந்துரைத்தனர். இதனை யுணர்ந்த நமசிவாயர் இவர் கூறும் இகழ்ச்சி நமக்கேயன்றி இறைவனுடைய திருநீற்றிற்கும் ஏற்பட்டதே என்று மிகவும் வருந்தி இறைவனைத் தியானித்து றைவனருளால் எரிந்த வீட்டைப் பழையபடி உண்டாக்கி விட்டனர். பின்னர் வைதவரெல்லாம் இதனை உணர்ந்து இத்தவசி ஆக்கல், அழித்தல் காத்தல் முதலிய தொழிலில் வல்ல சிவனே என்று கருதி ஏத்தி வணங்கினர். நமசிவாயரும் இந்நிகழ்ச்சி நடந்ததிலிருந்து எவ்வூர்க்குச் சென்றாலும் ஒருவருடைய மனையிலும் தங்குவதில்லை என்று உறு பூண்டு, புறப்பட்டுத், திருவருணையம்பதிக்கு வந்து சேர்ந்தார்.

திருவண்ணாமலையை அடைந்த நமசிவாயர் ஒருவர்க்குரிய வீட்டில் தங்கியிராமல், பொதுவான இடத்திலே தங்கியிருந்து, தம் இட்ட லிங்க பூசையையும் சிவயோக சமாதியையும் செய்து வருவாராயினர். நாள்தோறும் ஒரு வேளை அண்ணாமலையார் திருக்கோயிலின் முகப்பிற் சென்று, அவரை வணங்காமல் நீ நன்றாக இருக்கின்றாயா? என்று கையினாற் சைகை செய்துவிட்டுத் தன்னுறைவிடம் சென்று நிட்டையிலிருப்பார்.
இந்நிகழ்ச்சியைக்கண்ட சிவாக்கிர யோகி என்பார் இவன் அண்ணாமலையார் மேல் அன்பில்லாதவன் போலும் என்று கருதி, நமசிவாயர் வந்து கைக்குறி காட்டும்பொழுது அவரைப் பிரம்பினால் ஓங்கியடித்தார். அடிபட்ட நம சிவாயரும் சிவாக்கிர யோகியை எதிர்த்தலும், இகழ்ந் துரையாடலும் செய்யாமல் இறைவன் என்னிடத்திலுள்ள தீய குணங்களைப் போக்குதற்கே இவ்வாறு செய்தான் என்றொரு வெண்பாவினைப் பாடிவிட்டுச் சென்றனர். இந்நிகழ்ச்சியை யறிந்த சிவாக்கிர யோகியும் நீறு பூத்த நெருப்புப் போன்ற தவசியின் நிலையை நான் சிறிதும் தெரிந்திலேனே என்று கூறி மனம் வருந்தினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் நமசிவாயர் நாம் கோயிலுட் சென்று அண்ணாமலையாரை வணங்குவதே நன்றன்று கருதத் தொடங்கினார். அங்ஙனம் கருதிக் கொண்டிருந்த பொழுது மல்லிகார்ச்சுனத்தே தமக்கு உப தேசித்த சிவானந்த தேசிகர் என்னும் ஆசிரியர் தொண்டர்கள் புடைசூழ அங்கே தோன்றினார். அவரைப் பேரன்புடன் நமசிவாயர் வணங்கினார். வந்த தேசிகரும் உரிமை மொழி பல மொழிந்து நமசிவாயரையும் அழைத்துக் கொண்டு தொண்டர் கூட்டத்துடன் அருணாசலேசுரர் கோயிற்குச் சென்றார். சென்றவர் அண்ணாமலையார் திருமுன்பிற் சென்று கீழே வீழ்ந்து வணங்கினார். தம்
ஆசிரியர் வணங்கவே உடனிருந்த நமசிவாயரும் கீழே வீழ்ந்து பரவசமாய் அண்ணாமலையாரை வணங்கினார்; வணங்கி யெழுந்து பார்த்தபொழுது அங்கே தம் ஆசிரியரையும் தொண்டரையும் கண்டிலர். அதற்குப் பதிலாக அண்ணாமலையார் வடிவம் தம் ஆசிரிய வடிவம் போலவே தோன்றிற்று. உடனே,

"மானமிலி பொய்யன் மனங்கனிவி லாதபத்தி
யீனனிவ னென்று மிகழாதே-ஞான
உருவே! அருணகிரி ஓம்நமசி வாய
குருவே! எனையாண்டு கொள்"

என்றொரு வெண்பாவினைப் பாடினர். நமசிவாயர் இவ்வாறு நடந்த இந்நிகழ்ச்சி இறைவன் திருவிளையாட்டே என்றுணர்ந்து நாடோறும் தம் நித்திய நியமம் முடிந்த பின்னர் அண்ணாமலையார்க்குப் பூமாலையும், பாமாலையும் செய்து அணிவித்துக் கோயிலின் வாசலிலேயே தங்கி யிருப்பாராயினர். இந்நிகழ்ச்சிகளை இவர் பாடிய

"பூமாலை சாத்திப் புவிபுகழ்சோ ணாசலற்குப்
பாமாலை சூட்டிப் பலகாலும்-நாமாலை
பண்ணா யிரம்பாடிப் பார்த்திருக்க நாயேற்குக்
கண்ணா யிரம்வேண்டுங் காண்'

"நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுதவன்றன்
இச்சையிலே யானும் இருப்பதுவும்-பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாசலிலே
தூங்குவதுந் தானே சுகம்"

இவ்வெண்பாக்களால் அறிதல் கூடும்.

நமசிவாயர் தாம் முன்பு செய்துகொண்ட உறுதியின்படி யார் வீட்டிலும் தங்காமல் ஊர் மன்றங்களிலும், நந்த வனங்களிலும், காட்டிலும் தங்கியிருந்தார். பின்னர் அண்ணாமலையார் திருக்கோவில் வாயிலிலும் தங்கியிருந்தார். இதனால் அவருடைய சிவயோகத்திற்குப் பலவகை இன்னல்கள் ஏற்பட்டதை உணர்ந்து, அண்ணாமலையார் கனவில் எழுந்தருளி, "நீ நம்மலை நடுவேயுள்ள குகையுள் தங்கி யோகம் புரிந்து வருக" என்று கட்டளையிட்டனர். நமசிவாயரும் இறைவன் கட்டளையிட்டவாறு திருவண்ணாமலை மலைமீது முலைப்பால் தீர்த்தத்திற்கு அண்மையிலுள்ள குகையில் தங்கிச் சிவயோகம் செய்து வருவாராயினர். குகையுள் தங்கி யோகம் புரிந்து வந்ததால் இவர் குகை நமசிவாயர் என்று பெயர் பெற்றார். இதனை,

"ஊரினும் வனத்தினும் உலாவி னான்றனை
பாரிய மலைநடு வசிக்கப் பண்ணலால்
சீரிய குகைநம சிவாய னென்றொரு
பேரிக மெங்கணும் பிறங்கக் கண்டனன்”

என்னும் புலவர் புராணப் பாட்டால் அறியலாம். இக்குகை நமசிவாயர் திருவண்ணாமலைக் குகையில் அருட் குருவாய் வீற்றிருந்தபொழுது இவரிடத்திலே உபதேசம் பெற்றவர் பல மாணவராவார். அம்மாணவருள் சிறந்தவர் குரு நமசிவாயர் என்பவராவார். குகை நமசிவாயர் அவ்வப்பொழுது செய்த அருள் விளையாட்டுகள் பலவாகும். அவற்றைத் தொகுத்து குகை நமசிவாய லீலை என்ற பெயரால் வேலைய சுவாமிகள் பாடியுள்ளார்.

அகித்து என்னும் மிலேச்ச மன்னனொருவள் தமிழ் நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். அவன் அழகான பெண் மக்களைச் சிறைபிடித்தும் பொருட்களை கொள்ளை யடித்தும் பலரைக் கொன்றும் இவ்வகையான கொடுஞ் செயல்களைப் புரிந்தான். அன்னான் திருவண்ணாமலையிலும் புகுந்து அண்ணாமலையார் திருக்கோயிலுள் தங்கி யிருந்துகொண்டு பல தீய செயல்களைப் புரியத் தொடங்கினான். இதனைக் குகை நமசிவாயர் உணர்ந்து அண்ணாமலையாரைக் கருதி,

"நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சோ-சற்றும்
அபிமானமின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்"

என்றொரு வெண்பா பாடினர். அன்றிரவில் அண்ணா மலையார் ஒரு தவசியின் வடிவாய் அகித்தென்பானின் கனவிற்றோன்றி, ஒரு படையினாலே அவன் முதுகிற் குத்தினார். அவனும் அஞ்சி விழித்தான். அக்குத்துப்பட்ட இடத்திலே யிருந்து அவனுக்குச் சிறிய வேர்க்குரு தோன்றிற்று. அது மிக விரைவில் ஒரு பிளவைக் கட்டியாக எழுந்தது. அம்மிலேச்சன் அந்நிகழ்ச்சியை அங்கு வந்த பெரியவர்கள்பால் கூறினான். அதைக்கேட்ட அவர்கள் நீ இவ்வாலயத்துள் இருக்கக் கூடாதென்றனர். அவனும்
அஞ்சி அவ்விடத்தை விட்டு நீங்கினான். அதன் பின்னர் அன்பர்கள் கோயிலைத் தூய்மை செய்து பூசைவிதி தப்பாமல் பூசித்தனர். பின்னர் கோயிலை விட்டு அகன்ற அகித் தென்பானுக்குப் பிளவைப்புண் வளர்ந்து பெருந்துன்பம் கொடுக்கத் தொடங்கிற்று. அப்புண்ணில் பல புழுக்கள் தோன்றி அரித்தன. அத்துன்பம் தீர்வதற்காகக் கருவுற்ற மகளிரைக் கொன்று கருவிலிருந்த குழந்தைகளையெடுத்து அப்பிளவையில் வைத்துக் கட்டுவித்துக் கொண்டான் என்று மக்கள் செவிவழிச் செய்தியாக இன்றும் கூறி வருகின்றனர். எதனாலும் அப்பிளவை நோய் தீராமல் அவன் துடிதுடித்துச் செத்தான் என்பர். அவன் இறந்த அன்று மக்களெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து எண்ணெய் தேய்த்து முழுகிப் புத்தாடை அணிந்து சிறந்த உணவினை உண்டு களியாட்டம் புரிந்தனர் என்பர்.

குகை நமசிவாயர் பல அற்புதங்களைச் செய்து கொண்டு நூறு வயதுவரை வாழ்ந்திருந்தார். அப்பொழுது அவர், பிரமன் மக்கட்கு வகுத்த வயது நூறாண்டாகும்; இதுவரை இவ்வுலகத்திலே வாழ்ந்து வந்தது போதும் என்றெண்ணித், தாம் சமாதியடைதற்குக் குகையொன்று கட்டி, அதனுள் இறங்கினார். அப்பொழுது இறைவன் அசரீரியாய் "அன்பனே! நீ இன்னும் ஒரு நூறு யாண்டு இவ்வுலகிலே தங்கியிருக்க வேண்டும்" என்று கட்டளை யிட்டருளினார். அதனைக் கேட்ட குகைநமசிவாயர்,

"தாயினுநல் லாரினிய தாதையினுந் தானல்லார்
ஆயிலரு ணேச ரடியேற்கு-மாயவுடல்
நோகப் பொருத்துவரோ நூறு வயதிருந்தும்
சாகப் பொருத்துவரோ சற்று"

என்ற வெண்பாவைப் பாடினார்.

குகை நமசிவாயர் கன்னட நாட்டிலே பிறந்து கன்னட மொழியைத் தாய் மொழியாகப் பெற்றிருந்தாலும் தமிழ் மொழியை நன்கு கற்று அழகான வெண்பா பாடுவதில் மிக வல்லவராயிருந்தார். இப்பேறு இறைவனுடைய திருவருட்பெருக்கால் நிகழ்ந்த தென்பர் புலவர் புராண ஆசிரியர்.

"கன்னட மல்லதோர் கலையும் கற்றிலா
அன்னவன் தமிழுணர்த் தாரிற் சீரியர்
பன்னலாந் தகைகொள்வெண் பாச்சொலச் செய்தான்
என்னரன் செய்திடான் இதயத் தெண்ணினே”
      - (குகை நமசிவாயர் புராணம் 14)

குகை நமசிவாயர் அண்ணாமலையார்மேல் நாடொறும் ஒவ்வொரு வெண்பாப் பாடி வந்தாராம். இச்செய்தியை இவர் சீடராகிய குருநமசிவாயர் தாம் பாடிய அண்ணாமலை வெண்பா என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.

"மாமா தவநமசி வாயன் றினமொருவெண்
பாமாலை சாத்திப் பணியுமலை" (7)

"நண்பாக் குகையில் நமசிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை” (14)

குகைநமசிவாயர் இவ்வாறு அண்ணாமலையார் மேல் நாடொறும் ஒரு வெண்பாப்பாடி வணங்கி வரினும் அவ் வெண்பாக்கள் முற்றிலும் இப்பொழுது உலகத்தில் வெளி வந்து வழங்கவில்லை. (திருவண்ணாமலையிலுள்ள குகை நமசிவாய சுவாமிகளின் ஆதினத்தாரிடம் பல ஓலைச்சுவடிகள் உள்ளன. அவற்றைப்பெற்று ஆராய்ந்தால் அவை கிடைக்கும் போலும்) இப்பொழுது வெளிவந்திருப்பது அருணகிரியந்தாதி என்னும் இலக்கியம் ஒன்றும், தனிப்பாட்டுகளும் ஆகும். இதனை,

"இந்த மாமுனிவன் வெண்ட ளைக்கவிக
      ளெண்ணி லாதபல சொல்லினும்
அந்த மாதிதொடர் பாடல் சோணகிரி
      ஆதி மீதுசொலல் நூறுதான் "

என்பர் புலவர் புராண முடையார்.

இவ்வாறு விளங்கிய இவர் முன்னே இயற்கையா யிருந்த வயது நூறும் அதன்பின் இறைவன் தந்த வயது நூறும் இருந்து, அதற்குமேல் இவ்வுலகிலிருக்க விரும்பாராய்த், திருவண்ணாமலை மலை மீது தாம் யோகம் புரிந்துவந்த குகையுள் சமாதிக்குழி அமைத்து,

"ஆயபிணி முந்நூற் றறுபதுக்குங் கூடாகி
மாயுமுட லைச்சுமக்க மாட்டேனே - தேயுமதி
அப்பணியும் வேணி அருணேச ரேதமியேற்
கிப்பிறவி மாற்றீ ரினி"

"அடைக்கலமாச் சோணகிரி அப்பனடி சார்ந்தோம்
கடைப்பிறவி முந்நீர் கடந்தோம்-படைக்குமந்த மு
ண்டகனை யும்மதியோம் மூரிக் கடாவேறும்
கண்டகனை யும்மதியோங் காண்"

என்ற வெண்பாக்களை அருளிச்செய்து சமாதிக் குகையுள் இறங்கித் தாமே பதுமாசனத்திலிருந்து சிவயோக நெறி யால், தம் உயிரை பிரமரந்திரத்தின் வழியே செலுத்தி இறைவனோடு இரண்டறக் கலந்திருந்தனர். பின்னர் அவர் வழிவந்த மாணவர் அவ்விடத்திற் சிவலிங்கமொன்று எழுந்தருளச்செய்து வழிபட்டு வருவாராயினர்.
----------------------
கால ஆராய்ச்சி

திருக்கோவிலூராதின ஸ்தாபகராகிய ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் காலம் கி. பி. 1673-லிருந்து கி. பி. 1769 வரை என்பது ஐயமறத் தெரிந்ததொன்றாம். இச்சுவாமிகள் திருவண்ணாமலைக் குகை நமசிவாயர் திருமடத்தில் ஆறாம் பட்டத்தில் இருந்த சுவாமிகளிடம் இலிங்கதாரண தீட்சை செய்து கொண்டனர் என்று தெரிவதால் திருவண்ணாமலைக் குகை நமசிவாய முதற் குருமூர்த்திகள் காலம் கி.பி. 1548-ஆம் யாண்டினை ஒட்டியிருக்கலாம் என்று கருதி யுணரப்படுகின்றது.
----------------

திருவண்ணாமலைக் குகை மடம், ஞான யோகீசுரர் ஆன
குகை நமசிவாய தேவர் அருளிய "அருணகிரி அந்தாதி "

இறைவன் துணை

காப்பு
சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் [1]சேர்விக்கும்
பத்திதரு [2]மெய்ஞானம் பாலிக்குங் - கொத்தி
[3]யரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த
கரிமுகனைக் கைதொழுதக் கால்.

(பொழிப்புரை) யானைமுகக் கடவுளைக் கைகுவித்து வணங்கினால், காரிய சித்தியைக் கொடுக்கும்; அறிவு விளக்கத்தைக் கொடுக்கும்; சிலந்த இலக்குமியின் அருளை அடைவிக்கும்; கடவுள் பத்தியைத் தரும்; உண்மைப் பொருளுணர்ச்சியாகிய சிவஞானத்தையும் கொடுக்கும் என்றவாறு.

யானைமுகக் கடவுள் எத்தகையோர் எனில்? இரணியனைக் கொல்வதற்காக நரசிங்காவதாரம் எடுத்த திருமாலைச் சரபப் பறவையின் வடிவெடுத்து வாயலகாற் கொத்திச் சினந்த அருணாகலேசுரர் தோற்றுவித்த கரிமுகன் என்க.
--
(பிரதி பேதம்) [1]. சேருவிக்கும்; [2]. மெஞ்ஞானம்: [3]. அரிமகனை,
-----------
நூல்

2. கார்கொண்ட மேனியனுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை
[1]யார்கொண் டுரைசெய்வா ரம்புவியிற்-சீர்கொண்
டருணகிரி மேவுகின்ற வையாநீ வேண்டிக்
கருணைபுரி யாதிருந்தக் கால்

பி-பே. [1].ஆர்கொண்டு.
(பொ-ரை.) புகழினைக் கொண்டு அருணாசலத்திற் பொருந்தியிருக்கின்ற ஐயனே! நீ விரும்பி அருள் புரியா திருந்தால், இந்த அழகிய உலகத்திலே, கரிய மேகத்தின் அழகினைக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனும் அறிய முடியாத நின் பெருமையை எவர் மனத்திற் கருதிச் சொல்வார்கள்? ஆதலினால், உன்னைப்பற்றி உரைக்கும் அந்தாதிக்கு நீயே அருள்புரிய வேண்டும்.
------------

3. காலைமலர் தூவக் கருத்தறியா நாயேற்கு
வேலைவிட முண்ட விமலனே-மேலாய
வாசிகனே கண்பலித்து வாழ்விக்குஞ் சோணகிரி
தேசிகனே நீகண்டாய் திக்கு.

(பொ-ரை.) திருப்பாற் கடலிற் றோன்றிய நஞ்சினை உண்ட தூயவனே! மேலாய தூதுவனே! விழிக்குப் பயனாயிருந்து உயிர்களை வாழச்செய்யும் அருட்குருவே! உரிய காலத்திலே வந்து, பூக்களை உன் திருவடியிலிட்டு. வணங்க எண்ணங்கொள்ளாத நாய் போன்ற அடியேனுக்கு நீயே புகலிடங் கண்டாய்.

வாசிகம் - செய்தி; வாசிகன் - செய்தியைச் சொல்லும் தூதுவன், இறைவன் சுந்தரர்க்காகப் பரவை நாச்சியாரிடம் தூதுரைக்கச் சென்றானாதலால் வாசிகனே என்றார். "தொன்மை துரைச் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை" (54) என்பது
அண்ணாமலை வெண்பா. காலை- காலை நேரமுமாம். சோணம் - சிவப்பு, நெருப்பு; கிரி - மலை: இறைவன் நெருப்பு மலையாய் நின்றான் என்ற புராண வரலாற்றை உணர்க.
---------

4. திக்குவே றில்லைத் திருவுளமே யல்லாம
லிக்குவே ளைக்காய்ந்த வீசனே - மிக்கவிடந்
தன்னையுண்ட சோணகிரித் தாணுவே நாயேற்கும்
பின்னையுண்டோ நீயல்லாற் பேசு.

(பொ-ரை.) கரும்புவில் லேந்திய காமனை எரித்த ஈசனே! திருப்பாற் கடலிற் றோன்றிய மிகுந்த நஞ்சினை யுண்ட அருணாசலத்தில் எழுந்தருளியுள்ள நிலையான வனே! நாய் போன்ற எளியேனுக்கு நீ யல்லாமல், நின் திருவுளமே யல்லாமல் புகலிடம் வேறு இல்லை; வேறு உண்டோ நீயே சொல்.
'ஸ்தாணு` என்னும் வடசொல் தாணுவெனத் திரிந்தது. பிரளயத்திலு மிருப்பவர் என்று பொருள். திருவுளம் -- திரு வருட்சத்தி.
---------

5. பேசுமவர் வஞ்சப் பிறப்பறுக்கு மென்றுலகில்
[1]வீசுபுகழ் சோணகிரி வித்தகா- மாசிலா
வண்ணா மலையானே யன்னைவயிற் றென்னையுருப்
பண்ணா மலையாகண் பார்.

பி-பே. [1]. வீசு புகழருணை வித்தகா
(பொ-ரை.) உரைப்பவருடைய பொய்மை நிறைந்த பிறவியை நீக்கும் என்று உலகில் பரவிய புகழினையுடைய அருணாசலத்தில் எழுந்தருளியிருக்கும் ஞானத்திற்கிட மானவனே! குற்றமில்லாத அண்ணாமலையானே! இனி ஒரு தாயின் வயிற்றிலே உடம்பெடுத்துப் பிறக்கப்பண்ணாமல் ஐயனே! உன் திருவருட் கண்ணால் நோக்கு.

'வித்தகன்' என்னும் சொல் விளி ஏற்று வித்தகா என்று ஆயிற்று. வித் - ஞானம்; அகம் இடம்.
----------

6. பாராம னீயிருந்தாற் பார்மீதி னாயேனுக்
காராவார் சோணகிரி யண்ணலே - தீராப்
பிறப்பை [1]யகற்றுதற்கும் பிஞ்ஞகனே சூழ்ந்த
விறப்பை [2]யகற்றுதற்கு மின்று,

பி-பே. [1]. அகற்றுவிக்கும் [2]. அகற்றுவிக்கும்
(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் அண்ணலே! பிஞ்ஞகனே! என்னுடைய தீராத பிறப்பினைப் போக்கு தற்கும், அப்பிறப்பினைத் தொடர்ந்த இறப்பினைப் போக்குதற்கும், இன்று, உலகத்தின் கண் என்னை நீ பார்த்து அருள் செய்யாமலிருந்தால், நாயேனுக்கு அருள் செய்வார் வேறு யார் ஆவார்?

பிஞ்ஞகன் - சிவபெருமானுடைய பெயர்களில் ஒன்று. இதற்குத் தலைக்கோல-முடையவன் என்று காரணம் கூறுவர்.
-----------

7. இன்று[3]போ காவோ விருவினையு மும்மலமு
நின்றுதமி யேனை நெருக்காம - னன்றிதரு
மாரணனே சோணகிரி யத்தனே மாறேடுங்
காரணனே நீநினைந்தக் கால்.

பி-பே. [3]. யோகாதோ
(பொ-ரை.) நன்மையைத் தரும் வேதத்தை யுடையவனே! திருமால் தேடும் முதல்வனே! அருணாசலத்தில் வாழும் பெரியோனே! நீ அடியேனுக்கு அருள் புரியக் கருதினால், அறம்' பாவம்' என்னும் இரண்டாகிய வினை யும், ஆணவம் மாயை மூலகன்மம் என்னும் மும்மலமும் நின்று, தமியேனை நெருக்கி வருத்தாமல், இன்றே போகாவோ? (போகும் என்பது கருத்து)
தமி - தனி : தமியேன் - தனியேன்.
------------

8. காலன் [1]றனக்கஞ்சக் காரணமென் னெஞ்சமே
யால முகந்த வருணேசன்--கோலத்தை
நேசமுற்று நீகருதி னீங்காம நின்றலைக்கும்
பாசமுற்று நீக்கும் பரன்.

பி-பே. [1]. றனக்கஞ்சாக்
(பொ-ரை.) மனமே! நஞ்சினை உணவாக விரும்பிய அருணாசலேசுரனுடைய திருவடிவத்தை அன்புகொண்டு நீ தியானித்தால், உன்னை விட்டு நீங்காமலிருந்து வருத்தும் பாசப் பிணிப்பு முழுவதையும் அப்பரமன் நீக்கிவிடும். அங்ஙனம் ஆனால், நீ இயமனுக்கு அஞ்சவேண்டிய காரணம் என்ன?

பாசம் நீங்காத பொழுதுதான் காலனுக்கு அஞ்ச வேண்டும். பாசம் நீங்கின் அவனுக்கு அஞ்ச வேண்டுவதில்லை என்பது கருத்தாகும்.
--------

9. பரமனீ யென்று பணிந்துருகிப் பாடிக்
கரஞ்சேர்த்து நீர்சோரக் கண்கள்—வரங்கேட்ட
வென்னவா வின்படியே யீந்தா [2]யிதற்கருணை
மன்னவா காணேன்கைம் மாறு.

பி-பே. [2]. யிதே னருணை
(பொ-ரை.) அருணையம் பதியில் வாழும் மன்னவனே! நீ ஒருவனே மேலானவன் என்று கருதி, வணங்கி மளம் உருகிப் புகழ் பாடிக் கை தொழுது, விழிகள் புனல் சோரப் பத்தி செய்ய வேண்டுமென்று நின்னிடம் வரங் கேட்ட என் விருப்பத்தின்படியே, அவ்வரத்தைக் கொடுத்தாய்; இவ்வரம் கொடுத்ததற்குக் கைம்மாறாக நினக்குக் கொடுப்பதற்கு வேறொரு பொருளுங் காணேன்.
பணிதலும், கைகுவித்தலும் உடம்பாற் செய்யும் பத்தி. பாடுதல் வாயினாற் செய்யும் பத்தி. பரமன் நீ என்று கருதி உருகுதல் மனத்தாற் செய்யும் பத்தி.
---------

10. மாறுகொண்ட தக்கன் மனோரதமெல் லாந்[1]தவிர்த்து
வீறுகொண்ட சோணகிரி வித்தகா -வாறுகொண்ட
[2]செஞ்சடையாய் நின்னைத் தெரிசித்தல் [3]வேண்டுமென்கண்
பஞ்சடையா முன்னே பரிந்து.

பி-பே. [1].தவிழ்த்து; [2]. செஞ்சடைஎா, [3]. வேணுமென்கண்,
(பொ-ரை ) பகைமை கொண்ட தக்கனுடைய மன விருப்பத்தினை யெல்லாம் ஒழித்துப் பெருமிதம் கொண்ட அருணாசலத்தில் வாழும் ஞான வடிவினனே! கங்கை யாற்றினை அணிந்துகொண்ட சிவந்த சடையை யுடையவனே! என்விழிப்பார்வை மங்குதற்கு முன்னே யான் உன் மீது அன்புற்று, நின் திருவடிவத்தைக் கண்டுணர வேண்டும்.
---------

11. பரிந்தணிந்த வெண்ணீறும் பாம்புந்தீக் கண்ணு
[4]மரிந்ததலை மாலை யழகுந்-தெரிந்து
நெருக்குமாம் வல்வினையை நீக்குமரு ணேசற்
கிருக்குமாங் கோலங்க ளேத்து.

பி-பே. [4]. அரிந்தசிர
(பொ-ரை.) விரும்பி அணிந்த திருவெண்ணீறும், அரவமும், நெருப்பைத் தோற்றுவிக்கும் விழியும் செருக்குக் கொண்ட பிரமனுடைய) தலையை அரிந்து அணிந்த அத்தலையாலான மாலையின் அழகும் ஆகிய இவை அருணாசலேசுரனுக்கு இருக்கும் வடிவழகாம்; நீ அவ்வடிவழகைக் கருதி ஏத்துவாயாக; ஏத்தினால் உன்னை நெருக்கும் தீவினையைத் தெரிந்து நீக்கும்.
'நெருக்குமாம்' என்னும் சொல்லில் 'ஆம்' சாரியையாகும். இறைவனுக்குப் போகலடிவம், யோகவடிவம், கோரவடிவம் என்று மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அரிந்த சிரமாலை அழகினையுடைய கோரவடிவத்தைத் தியானித்தால் தீவினை அழியுமாதலின் வல்வினையை நீக்கும்' என்று கூறினார்.
-----------

12. கோலமுதற் றேடிநெஞ்சே கூப்பிட்டுங் காணாத
கோலங் குருவடிவு கொண்டேதா—னாலந்
தரித்தபிரான் சோணேசன் றான்முனிந்து வேளை
யெரித்தபிரான் வந்தா னிதென்.

(பொ-ரை.) மனமே! நஞ்சினைக் கண்டத்தில் வைத்த பெருமானும், காமனைக் கண்ணால் எரித்த தலைவனும் ஆகிய அருணாசலேசுரன் திருமாலாகிய பன்றி திருவடி யைத் தேடியும் அழைத்தும் காணமுடியாத அரியவடி வத்தையுடையவன் இப்பொழுது குரு வடிவத்தைக் கொண்டருளி (யாங்களெல்லாம் எளிதிற் காணும்படி)த் தானாக வந்தருளினான்; இதென்ன வியப்பு?
சாரப் பிரபந்தம் என்னும் நூலில் "அடிகளருள் உருவாம் சிவானந்த தேசிகற் கடிமையாம் நமசிவாயன்" என்று கூறப் பட்டுள்ளதால் குகை நமசிவாயரின் குரு சிவானந்த தேசிகர் என் பதும், அவர் அண்ணாமலையாரின் திருவருளுருவமாய்த் தோன்றி யவர் என்பதும் அறியப்படுகின்றன.
------------

13. என்ன தவப்பயனோ வேழையேற் கென்றறியேன்
முன்னமறை காணாத முக்கண்ணா-[1]நின்னையே
தேடுகைக்குஞ் சோணகிரித் தேசிகனே நின்புகழைப்
பாடுகைக்கும் [2]பெற்ற பயன்.

பி-பே. [1]. உன்னையே [2]. பெற்றோம் பலன்
(பொ-ரை.) முதன்மையாகிய வேதத்தினால் அறிய வொண்ணாத மூன்று கண்களை யுடையவனே! அருணாசலத்தில் வாழும் ஆசிரியனே! உன்னையே ஆராய்தலுக்
கும், ஆராய்ந்து உன் புகழையே பாடுவதற்கும் யான் பெற்ற நல்வினையாகிய பயன் ஏழையேற்கு எந்தத் தவப் பயனால் விளைந்ததோ என்று யான் அறியேன்.
--------------

14. பெற்றோம் பலனைப் பிறந்ததனா னெஞ்சமே
யற்றோ மனத்தி லனவரதம்-பற்றுவா
ருள்ளலைக்குந் தீவினையை யோட்டு மருணகிரி
வள்ளலைக்கொண் டாட வரம்.

(பொ-ரை.) நெஞ்சமே! மனத்தினாலே எப்பொழு தும் பற்றுவாருடைய உள்ளத்தை வருத்தும் தீய வினை யைப் போக்குகின்ற அருணாசலத்தில் வாழும் வள்ளலைப் பாராட்டிப் புகழ்வதற்கு நாம் வரத்தினைப் பெற்றுள் ளோம்; மக்களாகப் பிறந்ததனால் அடைய வேண்டிய பயனையும் பெற்றோம்; பிறவித் துன்பமும் அற்றோம்.
வரத்தைப் பெற்றோம்! பலனைப் பெற்றோம் என்று கூட்டுக. அற்றோம்' என்பதற்கு இயைபான செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது,
-----------

15. வரம்பலிக்கு மெய்ஞ்ஞான வாழ்வே பலிக்குந்
திரம்பலிக்குஞ் செல்வம் பலிக்கு-முரம்பலிக்குஞ்
சோணா சலனைச் சுவாமிதனை யுள்ளத்தே
[1]காணார் கருத்தென் கருத்து

பி-பே. [1]. காணாக்
(பொ-ரை.) அருணாசலேசுரரான சுவாமியை உள் ளத்தே வைத்துத் தியானிக்க வரம் உண்டாகும்; உண்மை ஞானமாகிய திருவருண்ஞான வாழ்க்கை உண்டாகும்; உறுதி உண்டாகும்; செல்வம் உண்டாகும்; ஊக்கம் உண்டாகும்; அங்ஙனமிருக்க, அக்கடவுளைக் காணா தவரு டைய கருத்து என்ன கருத்தாகும்? (பயனில்லாத கருத்து என்பது குறிப்புப் பொருள்.)
------------

16. கருத்தி வருணேசன் கஞ்சமலர்த் தாளை
யிருத்தி நினைப்பாரை யென்றும்-வருத்துமோ
நாட்டும் பலவுயிரை நாடோறும் பின்றொடர்ந்து
வாட்டும் பிறவிநோய் வன்பு.

(பொ-ரை.) பவ வென்று நாட்டப்பட்ட உயிர்களை நாள்தோறும் பின்றொடர்ந்து துன்புறுத்துகிற பிறவித் துன்பத்தின் வலிமையானது உள்ளத்திலே அருணாசலே சுரரது தாமரை மலர் போன்ற திருவடியை வைத்துத், தியானிப்பவர்களை வருத்துமோ? (வருத்தா தென்பது கருத்து.)
-----------

17. வன்பெருக்கிற் கன்மிதக்கும் வாய்முதலை பிள்ளைதரு
[1]மென்டிருக்கொள் பெண்ணா யிருக்குமே--யன்பருக்கு
நாட்டுகுரு சோணகிரி நாதனடி யார்மூவர்
பாட்டினிகை கேட்ட பரம்.
சுரன்றன்

பி-பே. [1]. என் புறம் பெண்ணா
(பொ-ரை.) அன்புடைய அடியார்க்கு உண்மைப் பொருளை நாட்டுகிற ஆசிரியனாக வரும் அருணாசலே அடியவராகிய ருநாவுக்கரசர், திருநாவ லூரர், திருஞானசம்பந்தர். என்னும் மூன்று நாயன் மார்களுடைய பாட்டின் இசையைக் கேட்ட மேன்மை யால், ஆழுங் கருங்கல்லும் கடலிலே தெப்பமாக மிதக் கும்; முதலையினுடைய வாயும் தாள் உண்ட பிள்ளையைத் திருப்பித் தரும்; எலும்பும் நல்ல வடிவத்தைக் கொண்ட பெண்ணாகயிருக்கும். (எனவே அப்பாட்டின் இசையைப் பொருளுடன் கேட்பவர்க்கு ஆகாத காரியமும் ஆகும் என்பது கருத்து.)
வன்பெருக்கு-கடல்; மூவர்' தொகைக்குறிப்பு மொழியாய்த் திருநாவுக்கரசர் முதலானவர்களை உணர்த்திற்று. பரம் - மேன்மை.
----------------

18. பரமனரு ணேசன் பதம்பணியார்க் கென்றுங்
கருமஞ் சிதையுமெனல் கண்டோம்-- அருமந்தக்
கூட்டுத் தலைபோய்க் கொடியதக்கன் வேள்வியிலே
யாட்டுத் [1]தலையாகை யால்.

பி.பே. [1] தலைபெற்றதால்
(பொ-ரை.) கொடுமை நிறைந்த தஙகன் என்னுந் தேவன் அருணாசலேசுரன் திருவடியை வணங்காமல் செய்த யாகத்திலே அவனுக்கு அருமருந்து போல் கூடியிருந்த தலைபோகப் பெற்றுச் சிறவாத ஆட்டுத்தலை உண்டானமையால், மேலான அருணாசலேசுரனுடைய திருவடியை வணங்காதவர்க்கு, எப்பொழுதும் தாம் தொடங்கிய செயல் அழிந்தொழியும் என்பதை, யாம் உண்மையாகக் கண்டோம்.
அருமருந்து அன்ன' என்னும் சொல் "அருமந்த" என மருவிற்று. அருமருந்து - அரிய அமிழ்தம்.
-----------

19. ஆலம் வருவதுகண் டஞ்சி யமரர்குழாஞ்
சால [2]மருண் டோடுஞ் சமயத்தி-லோலமென
நின்றா னுலகறிய நேசமடி யாரிடத்துக்
குன்றாத சோணகிரிக் [3]கோ.

பி.பே. [2] வெருண்டோடுஞ் -வெருண்டோடுஞ் . [3]. கோன்.
(பொ-ரை.) தேவர் கூட்டம் அமிழ்தம் வேண்டித் திருப்பாற் கடலைக் கடைய அப்பொழுது ஆலகால விஷம் வருதலைக் கண்டு அச்சமடைந்து ஓலமிட்டுக் கொண்டு மருட்சியடைந்து ஓடிய காலத்திலே, அடியாரிடத்தில் அன்பு குறையாத அருணாசலேசுரப் பெருமான் உலகத் தவர் அறிய அத்தேவர் கூட்டத்தைக் காத்து நின்றான்.
------------

20. கோடி விதி [1]மாளிற் குலாவுகம லக்கண்ண
னோடி வடவா லுறங்குமே-நாடுங்கா
லக்கண்ணர் கோடி யழியி னருணகிரி
[2]நக்கனருள் சற்றே நகும்.

பி.பே. [1] மாண்டால், [2]. நக்கனொரு
(பொ-ரை ) கோடி என்னும் எண்ணுள்ள பிரம தேவர்கள் இறந்தால் விளங்கும் தாமரைமலர் போன்ற விழியைப் பெற்றிருக்கும் திருமாலுக்குப் பகற்காலம் கழிந்ததாகலின், அப்பகற்காலத்தின் பின்வந்த இக் காலத்திலே, அத்திருமால் சென்று வடவால மரத்தின் இலையிலே உறக்கங் கொள்ளும்; ஆராயுங்கால் அத்தகைய திருமால்கள் கோடிபேர் அழிந்தால், அருணா லேசுரனாகிய நக்கனுடைய திருவருட்சத்தி சிறிது சிரிக்கும்.
நக்கன் சங்கார கருத்தன். இப்பாட்டின் கருத்தைச் "சதுரயுக மவையிரண்டா யிரந்தான். சென்றாற் சதுர்முகனுக் கொருதிவசந் தகையார்வாணி, பதிமகிழுந் தினத்திலொரு பகலிற் றானே பதினால்வ ரிந்தரர்தம் பதம்போ மிந்த, விதியடைவே பிரமரொரு கோடி நீங்கில் விண்டுவினுக்கொரு பகலாய் விழியாற் றுஞ்சு மதிதிருமா லொருகோடி யிறக்குங் காலம் மலரளக மவிழ்த்துமையாள் மூடிக்கு நேரம்" என்னும் சிவஞான தீபப்பாட் டால் (31) அறிக.
------------

21. நகுமானை யேந்தருணை நம்பா பிறப்பிற்
புகுவேனைக் காக்கும் புனிதா-[1]தகுமென்னப்
பெற்றதுணை நீயல்லாற் பேருலகி னாயேனுக்
குற்றதுணை [2]மற்றவரா ரோது.

பி.பே. [1].தகுமேவை. [2]. மந்தியான
(பொ-ரை.) நகைத்திருக்கும் மானையேந்திய அருணாசலத்தில் வாழும் நம்பனே!
பிறப்பில் புகும் என்னைக் காக்கின்ற தூயவனே! தகும் என்று சொல்லப்
பெற்ற துணை நீயே யல்லாமல் பெரிய உலகத்திலே நாய் போன்ற ற அடியேனுக்குப்
பொருந்திய துணை ஓதுவாயாக. வேறு யாவர்?
நம்பன். - விரும்பப்படுபவன்'. நம்பு-விருப்பம்.
-----------

22. ஓதக் கடனஞ்சை யுண்டசோ ணாசலனை
யோதக் கடனெஞ்சே யோதினாற்-பாதம்
பெறலாம் நமது பிணிமூப்புச் சாக்கா
டறலாங் கரையேற லாம்.

(பொ-ரை.) நெஞ்சமே! அலையையுடைய திருப்பாற் கடலின்கண் தோன்றிய நஞ்சினை உணவாக உட் கொண்டருளிய அருணாசலேசுரனை ஓதுதல் (துதித்தல்) உன் கடமையாகும்: ஓதினால் அவ்விறைவனுடைய திரு வடிப்பேற்றை ஆடையலாம்: நம்முடைய நோயும். மூப்பும் இறப்பும் ஆகிய இவற்றை நீங்கலாம். பிறவிக் கடலிலிருந்தும் கரையேறலாம் (எ-று.)
-------

23. ஆமென்று நம்பி அனுதினமும் போற்றினா
னாமென்று [4]பற்றி நலமாகக்-காமித்துச்
சிட்டாகுஞ் சோணகிரி சிந்தித்தா னெஞ்சுமே
விட்டேகும் வெய்ய வினை.

[3]. அளவரதம். [4]. பத்தி.
(பொ-ரை.) நெஞ்சமே! (இம்மைப் பயனும் மறுமைப் பயனும்) உண்டாகும் என்று நம்பி, நாடோறும் போற்றினால் இதோ தா நாம் உள்ளோம். என்று கூறி நம்மைப் பற்றி, நலம் உண்டாக விரும்பிப், போதிக்கும் அருணாசலேசுரரை நீ நினைந்தால் கொடிய
வினைக ளெல்லாம் விட்டுச் சென்று விடும்.
சிக்ஷ-போதித்தல்; அது சிட்டா என்று திரிந்தது. அக ளமாகிய இறைவன் சகளமான குருவடிவாய் வந்து போதிக்கும் வழக்கம் உண்மையின் சிட்டாகுஞ் சோணகிரி,என்றார்.
-----------

24. வெய்ய பிறவிதனை வேரறுக்குஞ் சோணகிரி
[1]அய்யரடி யார் [2]பாட்டுக் கல்லாமற் - றுய்யகரா
வாய்க்குமோ [3]பிள்ளையுந்தண் வாரிதியிற் கன்மிதந்து
காய்க்குமோ வாண்பனையுங் காய்,

பி.பே [1]ஐயர, [2].பாட்ஷம். [3]. பிள்ளையந்த
(பொ-ரை.) சொடிய பிறவியை வேரறுக்கும் அருணா சலத்தில் எழுந்தருளியுள்ள ஐயருடைய அடியாராகிய திருநாவலூரர். திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் என்னும் இவர் பாடும் பாட்டிற்கன்றி மற்றையோர் பாடும் பாட்டிற்கு உண்ட முதலை பிள்ளையைக் கக்குமோ? குளிர்ந்த கடலிலே சுல்லானது மிதந்து தெப்பமாக வாய்க்குமோ? ஆண்பனையும் காய் காய்க்குமோ?
துய்ய கரா-உண்ட முதலை; துய்த்தல் - உண்டல். கரா பிள்ளையும் வாய்க்குமோ, வாரிதியிற் கன் மிதந்து வாய்க்குமோ என்று கூட்டுக இறைவனுடைய திருவருள் பெற்றவர்க்கன்றி, ஏனையோர்க்கு இங்ஙனம் பாடும் ஆற்றல் உண்டாகா தென்பது கருத்து.
-----------

25. காய நெகிழாமுன் கண்க ளிருளாமுன்
வாயிலுள்ள பல்லும் [1]வழுவாமுன்-காயம்பார்த்
தோடிநமன் வாராமுன் னுள்ளமே சோணகிரி
நாடி[2]நம வென்றே நட.

பி.பே. [1] குறையாமுன் [2] நமதென்றே.
(பொ-ரை.) நெஞ்சமே! உடல் தளராத முன்னே, விழிகள் ஒளிகுறைந்து இருளாத முன்னே, வாயிலுள்ள பற்கள் விழாத முன்னே, நம் உடலை நோக்கிக் கூற்றுவன் விரைந்து வராதமுன்னே அருணாசலத்திற்குச் செல்லும் வழியைக் கருதி அக்கடவுளுக்கு வணக்கம் என்று கூறிக் கொண்டு அங்கு நடந்தே செல்வாயாக.
நாடுதலும் நமவென்று கூறுதலும் நடத்தலும் முறையே
மனம் வாக்குக் காயங்களின் தொண்டாகும்.
-------------

26. நடக்குங் குலங்கல்வி [3]நம்மவென்பா ராசை
யடக்கும் [4]வகைசற் றறியார்- [5]தொடுக்குநூல்
காட்டுமோ [6]சோணேசன் கஞ்சமலர்த் தாளிணையைக்
கூட்டுமோ சொல்லீர் குலம்.

பி.பே. [3]. நம்மதென்பார். [4]. வகையொன்றறியார். [5] எடுக்கு நூல். [6]. சோணேசர்
(பொ-ரை.) உலகத்திலே சிறந்ததென்று கருதி நடைபெறுகின்ற குலம் கல்வி என்னும் இரண்டையும் நம்முடையன என்று கருதியிருப்பவர் பிறப்பி ற்குக் காரணமாகிய ஆசையை அடக்கும் விதத்தைச் சிறிதே னும் அறிவரோ? அறியார்.
ஆசையை அடக்கும் வகையை அறியாத அவர் சுட்டிச் சொல்லும் நூல்கள் அருணாசலேசுரருடைய தாமரை மலர்போன்ற திருவடித் துணையை அறிவிக்குமோ? அவர் சிறந்ததென்று கருதிய குலமாவது அக்கடவுள் திருவடியைக் கூட்டுமோ?
-------------

27. குலமில்லார் வண்மைக் குணமில்லார் கல்வி
நலமில்லா ரானாலு நன்றே-வலம்வந்
தரிய திருவருணை யண்ணலுக்கா ளாவார்
[1]பெரியவர்க்கு மேலான பேர்.

பி.பே. [1] பெரியவர்க்குள்.
(பொ-ரை.) ஒருவர் உயர்குலப் பிறப்பை இல்லா தவ ரானாலும். கொடுக்கும் குணம் இல்லா தவரானாலும், கல்வி நலம் இல்லாதவரானாலும் நல்லதே; அத்தகை யோர் அரிய அருணாசலத்தை வலம் வந்து அருணாசலே சுரர்க்குத் தொண்டராவாராயின் குலத்தாலும் வண்மை யாலும் கல்வி நலத்தாலும் பெரியவராயினார்க்கு மேம் பட்ட பெரியவராவார்.
குலமும். வண்மையும், கல்வியும் ஒருவர்க்குச் செருக் கிளை தருதலால், இவையில்லை-யானாலும் நன்றே என்றார். ''கல்வியால் பொருளால் உயர்குடிப் பிறப்பால் கருதுநல்வலிமை யால் மறத்தால், சொல்லுறும் பிறவால் மிகமிகச் செருக்கும்" என்ற செய்யுளைக் காண்க.
--------

28. பேரும் பெருவாழ்வும் பிள்ளைகளும் வேண்டுவா
[2]ராரும் பரவு மருணேசன்--சீரை
உறக்கத் திலுமறக்க வொண்ணா துரைக்கிற்
பிறக்கக் கிடையாது பின்.

பி.பே. [2]. ஆருமருணேச ரஞ்செழுத்தை - வாரும்.
(பொ-ரை.) புகழினையும், பெரிய வாழ்வினையும், மகப்பேற்றினையும் விரும்புபவ ரெல்லோரும் போற்றுகின்ற அருணாசலேசுரருடைய புகழினைக் கனவிலும் மறக்காது, ஒருவர் கூறிவருவாரேயானால், அவர்க்கு இனி பிறத்தல் என்பது கிடையா தாகும்.
---------

29. பின்னறியேன் முன்னறியேன் பேதையேன் பாமாலை
யென்னறியேன் கோணகிரி யீசனே - நின்னருளைக்
கொண்டுரையா நிற்குங் குறியுங் குறிதேடுங்
கண்டுரையா தென்றன் கருத்து.

(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் ஈசனே! (அறியாமையையுடைய யான் நின்மேல் பாமாலை பாடத் தொடங்கினேன்; புலவரைப்போல அப்பாமாலையின் இலக்கணத்திற்குப் பின்னதாகச் சொல்லப்படும் அணி யிலக்கணத்தையும் அறியேன். முன்னதாகச் சொல்லப் படும் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பொருளிலக்கணங்களையும் அறியேன்; அப்படியானால் பாமாலை பாடுவதற்கு ஒன்றையும் அறியா தவனாயினேன். (அவற்றை அறியாதவனாயிருந்தாலும் திருஞான சம்பந்தர் முதலானவர்களைப்போல) நின்னுடைய திரு வருண் ஞானத்தைக் கருவியாகக் கொண்டு உரைக்கும் குறிப்பையும், அக்குறிப்பினால் தேடப்படும் பொருளையும் என்றன் கருத்து கண்டுரையாது (இங்ஙனம் இரண்டுணர்வும் இல்லாத பேதையேன் நின்மேல் எங்ஙனம் பாமாலை பாடுவேன்?).
------------

30. [1]கருத்தறிந்த மெய்யடியார் கண்காண வெள்ளை"
யெருத்தில்வருஞ் சோணகிரி யீசா- [2]பருத்த
வலங்கார நால்வேத னைந்தலையு ளொன்றைக்
கலங்காம னீயறுத்தாய்க் கண்டு

பி.பே. [1] கருத்திருத்து. [2]. பெருத்த
அகக்கண்ணாலே உணர்ந்த உண்மை யான தொண்டர்கள் புறக்கண்ணாலும் கண்டு உவக்கும்படி வெள்ளையாகிய விடையில் வரும் அருணாசலே கரனே! நான்கு வேதத்தையும் உணர்ந்த பிரமதேவன் செருக்குற் றிருத்தலைக் கண்டு அவனுடைய பருத்த அலங்காரம் அமைந்த ஐந்து தலையுள் ஒன்றினை அவன் மயங்காமல் இருத்தற் பொருட்டு அறுத்தாயன்றோ!
------------

31. கண்டுமிலை யென்பார் கருத்துநா வும்வாழி
யண்டர்கோ வேயருணை [1]யண்ணலே-விண்டுவாஞ்
சங்கையெடுத் தோன்கண் [2]சரணத்திற் சாற்றுமுன்றன்
செங்கையிலே வேதன் சிரம்.

பி பே. [1]. வள்ளலே. [2]. சரணத்தைச் சாத்து,
(பொ-ரை.) தேவர்க்குத் தலைவனே! அருணையம் பதியுள் வாழும் அண்ணலே! விஷ்ணு என்னும் பெயரு டையவனாகிச் சங்கினை எடுத்தோனுடைய விழி அவனால் அர்ச்சிக்கப்பட்டு உன்னுடைய திருவடியிலும், பிரம தேவனுடைய தலையானது சிறப்பித்துச் சொல்லப்படும் உன்றன் சிவந்த கையிலும் இருத்தலை அறிந்தும், நீ அவ்விருவருக்கும் முதல்வன் இல்லை என்பாருடைய கருத்தும், நாவும் இத்தகைய பொய்யுணர்விலும் பொய்ம் மொழியிலுமே வாழ்வ தாகுக.
--------

32. சிரமாலை தானணிந்து [3]சேவிலுகந் தேறி
யருமா மறைதேடு மண்ணல் – [4]வருமா
முனிக்கூட்டம் போற்று முதல்வனரு ணேச
னினிக்கூட்டான் றுன்பத் தெமை.

பி பே. [3]. சேவையுகந். [4].வரமா.
(பொ-ரை.) அரிய பெரிய வேதம் தேடுகின்ற அண்ண லும், முனிவர் கூட்டம் போற்றும் முதல்வனும் ஆகிய அருணேசன், பிரமனுடைய சிரமாலையை அணிந்து, திருமாலாகிய விடையிலே ஏறி, அழித்தலுக்கேயன்றி ஆக்கலுக்கும், காத்தற்கும் தானே முதல்வன்
என்பது தோன்ற வருமாம்; வந்து பிறவித் துண்பத்தின்கண் இனி எம்மைக் கூட்டான்,
---

33. எமையாளுஞ் சோணகிரி யீசாநின்பாகத்
துமையாளு நீயு[1]முகந்த- சமயத்
திருக்கின்ற கோலத்தை யான்காண வேண்டி
யிருக்குங் கருணைசெய்வா யென்று.

பி.பே. [1] முகந்தே.
(பொ-ரை.) எம்மைத் தொண்டனாக ஆண்டு கொள் ளும் அருணாசலத்தில் வாழும் ஈசனே! நின்னுடைய இடப்பாகத்தே வாழும் உமாதேவியும். நீயும் மகிழ்ந் திருக்கும் காலத்திலே இருக்கின்ற ற இனிய திருவடி வழகை யான் கண்டு மகிழவேண்டி யுள்ளது; என்று திருவருள் செய்வாய்?
----------

34. என்று [2]மருணேச னிருபதத்தை நம்பாதார்
குன்றில் வனத்திற் குகையதனிற்-சென்று
[3]திரிந்தென் பலமருந்து தின்று சிவகால
மிருந்தெ னிராமலிருந் தென்.

பி.பே. [2]. மருணேசர். [3]. திரிந்தே.
எப்பொழுதும் அருணாசலேசுர ருடைய இரண்டு திருவடிகளை விரும்பாதவர் தவம் செய்வதற் காகக் குன்றிலும், காட்டிலும், குகையிலும் சென்று உழன்றதாற் பயனென்ன?
காயசித்தி அடைவதற்காகப் பலவகை மருந்துகளை யுண்டு சில காலம் உயிருடனிருந்து பயனென்ன? இறந்தாலும் மறுமையிலடையும் பயனென்ன? ஒன்றுமில்லை யென்பதாம்.
-----------

35. ஏனமனந் தேட விணையடியுஞ் சீர்முடியுந்
தானவற்றிற் கெட்டாத [1]தாணுவாம்-ஞானத்
[2]தழல்கண்ட மேனித் தலைவனரு ணேசன்
கழல்கண்டார் காணார் கரு.

பி.பே. [1]. தாணுவாய் ஆனத். [2]. தழல் கொண்ட.
(பொ-ரை.) திருமாலாகிய பன்றியும், பிரமனாகிய அன்னப் பறவையும் முறையே, இரண்டு திருவடிகளையும், புகழமைந்த திருமுடியையுந் தேட, அவற்றிற் கெட்டாத தாணுவாயிருப்பவனும் ஞானம் என்னும் நெருப்பால் அமைந்த திருமேனியைக் கொண்ட தலைவனாயிருப்ப வனுமாகிய அருணேசன் திருவடியைக் கண்டார் பிறப் பினைக் காணார்.
'ஸ்தாணு என்னும் வடசொல் தாணு எனத் திரிந்தது. பிரளயத்திலு மிருப்பவர் என்று இச்சொற்குப் பொருளாம்.
----------

36. கருமா முகில்வண்ணன் கஞ்சனுக்கு மெட்டாப்
பெருமான் விடையேறும் பெம்மா—னொருமான்
மழுவேற்குஞ் சோணகிரி மன்னனடி யாரைத்
[3]தொழுவேற்கு முண்டோ துயர்.

பி.பே. [3]. தொழுவோற்கும்.
(பொ-ரை.) கரிய பெரிய மேகம் போன்ற நிறத்தை யுடைய திருமாலுக்கும் தாமரை மலரிலே வாழும் பிரமனுக்கும் கிட்டாத பெருமான்: இடபத்தில் ஏறிவரும் பெருமான்! ஒன்றாகிய மானையும் மழுவையும் தாங்கி யிருக்கும் அருணாசலேசுரப் பெருமான் அத்தகையோன் அடியவரைத் தொழுகின்ற எனக்கும் துன்பம் உண்டோ? இல்லை.
---------

37. துயர்கொண்டு நாளுந் தொலையாப் பிறப்பி
லயர்கின்ற நாயேற்கு மாமோ-வுயர்தவத்தா
ராரும் பரவு மருணேச ரம்புயத்தாள்
சேருங் கருத்தொருக்காற் செப்பு.

(பொ-ரை.) உயர்ந்த தவத்தினை யுடையோர் எவரும் போற்றுகின்ற அருணாசலே-சுரருடைய தாமரை மலர் போன்ற திருவடியை அடையும் எண்ணம், ஒரு முறை, துன்பங்கொண்டு, நாடோறும் நீங்காத பிறவி நெறியிலே நடக்கின்ற நாய்போன்ற ற எளியேனுக்கும் உண்டாகுமோ? சொல்லு.
நாயேற்கும் கருத்து ஒருக்கால் ஆமோ செப்பு எனக்கூட்டுக
-----------

38. செப்பரிய மால்பிரமர் சிந்தைதனக் கெட்டாத
[1]வப்பரிய சோணகிரி யப்பனே--யெப்பொழுதும்
பெண்ணைவிட்டு நீங்காநின் [2]பேரழகு [3]சந்ததமென்
கண்ணைவிட்டு நீங்காது காண்.

பி.பே. [1] வப்பெரிய. [2]. பேரழகுஞ், [3]. சந்ததமுஞ்.
(பொ-ரை.) திருமால் பிரமர் முதலான தேவர்களா லும் சொல்லுதற் கரிய, சிந்தைக்கு மெட்டாத அப் பேர்ப்பட்ட வியாபகத்தையுடைய அருணாசல
சலத்தில் வாழும் அப்பனே! நினக்குப் பெண்ணென் று கூறப் படும் திருவருட் சத்தியை எப்பொழுதும் நீங்காமலிருக் கும் நின் பேரழகு எக்காலத்தும் என் அகக்கண்ணை விட்டு நீங்கா திருக்குமென் றறிவாயாக.
இறைவனுக்குப் பராசத்தியாகிய திருவருட் சத்தி தாதான்மிய சத்தியாதலின் "எப்பொழுதும் பெண்ணை விட்டு நீங்கா" என்றார். அல்லது அர்த்தநாரீசுரர் திருக் கோலமுமாம்.
----------

39. காணா ரரிபிரமர் கஞ்சமலர்த் தாளிணையை
[4]நாணாம னான்காண நாடியே -சேணாட
ராயும் புகழருணை யண்ணா மலையானே
[5]மாயுந் தமியேன் மனம்.

பி.பே. [4] நாணாமற் றான்காண. [5]. மாயுமிருந் தய்யா மனம்.
(பொ-ரை.) வானுலகத்தவரும் ஆராய்கின்ற புகழினை யுடைய அருணையம் பதியில் வாழும் அண்ணாமலை யானே! திருமாலும் பிரமனும் நின் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணார். நான் என் சிற்றறி விற்கு நாணமடையாமல் நின் திருவடிகளை நின் திருவருளால் ஆராய்ந்து காணவே, உலகப் பொருளில் தோய்ந்த தமியேனுடைய மனம் தானாகவே மாய் கின்றது.
--------

40. மனத்திற் பயமறிந்து மாமுனிவர்க் காகச்
சினத்திற் புரமெரித்த சீமா-னனத்தனருள்
தக்கன் றலையறுத்த தாணு வருணகிரி
நக்கன் றுணைமனமே நம்பு.

(பொ-ரை.) மனத்தின்கண் உண்டான அச்சத்தை அறிந்து கொண்டு, பெரிய முனிவர்க்காகச் சினத்தி னாலே தூல சூக்கும காரண மென்னும் மூன்று உடம்பு களாகிய திரிபுரங்களை எரித்தருளிய அருட்செல்வ முடை யோன்: பிரம தேவன் பெற்ற தக்கனுடைய தலையை அறுத்த தாணு; அருணாசலத்தில் வாழும் நக்கன்! அவனே நமக்குத் துணை; மனமே! இதனை விரும்பு.
தேவர்க்காகத் திரிபுரம் எரித்ததும் முனிவர்க்காகத் திரிபுரம் எரித்தது மெனத் திரிபுரம் எரித்த செயல் இரண்டு விதமாகக் கூறப்படும். தேவர்க்காகத் திரிபுர மெரித்த செய்தியை இந்நூல் "தானவர்கண் முப்புரத்தைத் தானெரித்து நஞ்சுகந்தீர், வானவர்க்காச் சோணகிரி வள்ளலே" (94) என்னும் பாட்டால் அறிக. இப்பாட்டில் முனிவருடைய மனத்திற்கு, பிறவிக்கு உரியதென்று அச்சந் தரும் தூல சூக்கும காரணமென்னும் மூன்று உடம்புகளாகிய புரங்களை இறைவன் ஞானாக்கினியால் எரித்தருளும் செயலே கூறப்பட்டுள்ளது.
-------

41. நம்பியிரு நெஞ்சமே நாளு மருணகிரி
யும்பர்கோ னன்றுரைத்த [1]வுண்மையை- நம்பிக்
கெடுத்தாலுஞ் சோணேசன் கேடுபடா தெம்மை
யெடுத்தாலுஞ் சோணேச னென்று.

(பொ-ரை.) மனமே! அருணாசலத்தில் வாழும் மகாதேவன் நன்றாக உரைத்தருளிய உண்மை மொழியாகிய தத்துவ ஞானத்தை அடைய விரும்பி, நமக்கு அருள் செய்யாமல் கெடுத்தாலும் சோணேசனே துணை யென்றும் கெடுக்காமல் அருள் செய்து நம்மை யெடுத் தாலும் சோணேசனே துணையென்றும் கருதி விரும்பி யிரு.
---------

42. என்றுதரு வாய்மகிழ்ந்தே யான்பெறுவ [2]தெந்தநாள்
இன்று தமியேற் கியம்பிடாய்- நன்றி தரு
மேகனே சோணகிரி யீசனே சேவேறும்
வாகனே [3]சாகா வரம்.

பி.பே. [1].உண்மையே, உண்மைதனை. [2]. தென்றைக்கோ. [3]. சாவாவரம்;
(பொ-ரை.) நன்மையைத் தரும் ஒருவனே! விடையேறும் அழகனே! அருணாசலத்தில் வாழும் ஈசனே! யான் சாகாத நிலையைப் பெறுவதற்குரிய வரத்தினை என்றைக்கு நீ தருவாய்? யான் மகிழ்ந்து அதனைப் பெறுவது எந்த நாள்? இன்றைக்கே தமியேற்கு அதனைச் சொல்லுவாய். (தமி -தனி, வாகன் - அழகன்)
---------

43. சாகா வரம்பெறலாஞ் சந்ததமுஞ் சோணகிரி
நாகா பரணன்றா ணாடியே-யேகாந்த
நண்ணுமக்க மாலைகொடு [4]நாவார வைந்தெழுத்தை
யெண்ணு மறவா தெடுத்து.

பி.பே. [4]. நன்றாக
(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் அரவங்களை அணியாகக் கொண்ட இறைவனின் திருவடிப் பேற்றைக் கருதித் தனியிடத் திருந்து பொருந்தும் உருத்திராக்க மாலையைக் கையிற் கொண்டு, நா நிறையும்படித் திரு வைந்தெழுத்தை ஒவ்வொன்றாக
க எடுத்து, ஒவ்வொரு எழுத்தின் பொருளையும் மறவாமல் எண்ணுவீர்களாக; அவ்வாறு எண்ணினால், எப்பொழுதும் இறவாமலிருக்கும் வரத்தைப் பெறலாம்.
----------

44. [1]எடுத்த பயனை யிருவினையை யெண்ணா
ரடுத்தசிவ பூசை யறியார் - [2]தொடுத்த
[3]நெறியாகுஞ் சோணகிரி நித்தரடி யாரை
யறியாத மானிடவ ரச்சு.

பி.பே. [1]. எடுத்துப் பயனென்ன. [2]. தொடுத்ததிரு. [3]. நெறியாகுஞ்.
(பொ-ரை.) பற்றிய நன்னெறியாக விளங்கும் அருணாசலத்தில் வாழும் அழியாத கடவுளையும், அவர்தம் அடியார்களையும் அறிந்துகொள்ளாத மக்கள், உடம்பினை எடுத்ததற்குரிய பயனையும் பெரிய நல்வினையையும் எண் ணார்; பொருந்திய சிவபூசை செய்தலையும் அறியார். (அச்சு - உடல்; உயிர் என்றும் கூறலாம்)
----------

45. அச்செல்லா [4]மொன்றா யதிலே யிருவகையா
[5]வச்சதென்ன சோணகிரி வள்ளலே – [6]யிச்சையிலே
வாழ்ந்துசில பேரிருக்க வாய்புதைத்துக் கைகட்டித்
தாழ்ந்துசில பேரிருக்கத் தான்.

பி.பே. [4]. மொன்றாம்,மொன்றே, [5]. வைச்ச தென்ன. [6]. இச்சையுடன் நிச்சயமாய்.
(பொ-ரை.) அருணாசலத்தில் வா வாழும் வள்ளலே! மக்கள் உடம்பெல்லாம் ஒரு சாதியாயிருக்கவும் அம்மக் கட் சாதியிலே சிலபேர் தன்னிச்சையாய் (உரிமையாய்) வாழ்ந்திருக்கவும் சிலபேர் அவர்முன்னே வாயைக் கையால் மூடிக்கொண்டு, கையைக் கட்டிக்கொண்டு பணிந்திருக்கவும் இங்ஙனம் இருவகையாய் நீ வைத்த தற்குக் காரணமான வினை என்ன? அதனைச் சொல்வாயாக.
---------

46. தானே யுலகுடையோன் றன்னசைவே [1]யெவ்வுயிர்க்குந்
தானே யனைவர்க்குந் [2]தந்தையாய்த்-தானே
யனைத்துயிருங் காக்கு மருணேச னென்றான்
மனத்துயரம் [3]போவதே மாண்டு.

பி.பே. [1]. பல்லுயிர்க்கும். [2]. தாதையாய்த். [3]. போகுமதோ.
(பொ-ரை.) அருணேசன்றானே எல்லா வுலகங்களை யும் தன் உடைமையாக வுடைய பரம சுவாமி; அருணே சனுடைய அசைவே எல்லா வுயிர்கட்கும் அசைவைத் தரும்; அருணேசன்றானே அனைவர்க்கும் தந்தை தாய் ஆகி விளங்குவன்; அருணேசன்றானே அனைத்துயிர் களையும் காக்குமென்று இவ்வுண்மை நிலையைக் கருதி னால் பலவகையாகக் கருதும் என் மனத்துயரம் அழிந்து போவதாகும்.
------

47. மாண்டு பிறந்துழலு மாப்பிணியை [4]நீக்குதற்கு
வேண்டு மருந்துனக்கு வேண்டினா-லீண்டுலகில்
வீணேசர் சொல்லை விரும்பாம னெஞ்சமே
[5]சோணேச ரென்றொருக்காற் சொல்.

பி.பே. [4]. நீக்குகைக்கு. [5]. சோணேச னென்றொருக்கால்.
(பொ-ரை.) மனமே! இறந்தும், பிறந்தும் திரிகின்ற பெரிய நோயை நீக்குதற்கு வேண்டும் மருந்துஉனக்குக் கிடைக்க வேண்டுமென்று விரும்பினால், வீணா பேசுபவர்தம் சொற்களை விரும்பாமல் அருணாசலேசுரர் என்று ஒருமுறை கூறுவாயாக,
வீண் + ஏசர் - வீணாகப் பழித்துப் பேசுபவர்; வீண்+ நேசர் என்றுமாம்.
---------

48. சொல்லரிய நால்வேதஞ் சொன்னபடி யேகருதி
நில்லரிய பூசையிலே நேசமாய்-வெல்லரிய
நஞ்சே தரித்தருளு [1]நாதனடித் தாமரையை
நெஞ்சே மறவாம னீ.

பி.பே. [1]. நாதன் திருவடியை
(பொ-ரை.) நெஞ்சமே! நீ சொல்லுதற்கரிய நான்கு வேதங்கள் சொன்ன விதிப்படியே ஆராய்ந்து அரிய சிவ பூசையிலே நில்; பிறராள் வெல்லுதற் கரிய நஞ்சினையே கண்டத்தின்கண் அணிபோல் அணிந்தருளும் அருணாசலேசுரருடைய திருவடித் தாமரையை மறவாமல் நில்.
''அரிய நால் வேதத்தைச் சொல்" என்றும் உரை கூறலாம்.
--------

49. நீயே வரல்வேண்டு நின்னைப்போ லானதுணை
நாயேனுக் கியாருண்டு நாடுங்காற்-றாயகமா
மண்ணா மலைமேவு மப்பனே யென்பிறவிப்
[2]புண்ணா மலையகற்றும் போது.

பி.பே. [2]. புண்ணான தாறு மெப்போது.
(பொ-ரை.) எனக்குத் தாயகமாய் விளங்கும் திரு வண்ணாமலையிற் பொருந்தி யிருக்கும் அப்பனே! என்னுடைய பிறவி என்னும் புண் செய்கின்ற கடலினை நீக் குங் காலத்திலே நீயே வருதல் வேண்டும்; நின்னைப் போலான சிறந்த துணை, ஆராயின், நாயேனுக்கு வேறு யார் உண்டு?
-----------

50. போதுமதி சூடும் புனிதர் புவியீன்ற
மாதுபங்க ரண்ணா மலைநாதர்-பாத
மிறுகப் பிடிமனமே யெந்நாளு நின்னைக்
குறுகப் பயப்படுமே கூற்று.

(பொ-ரை.) மனமே! மலரையும் பிறைமதியையும் சூடியிருக்குந் தூயவரும் உலகத்தை ஈன்ற உமாதேவி அம்மையாரை இடப்பாகத்திலே ல யுடையவருமாகிய அண்ணாமலை நாதருடைய திருவடியை எப்பொழுதும் கெட்டியாகப் பிடித்துக்கொள்; அவ்வாறு பிடித்துக் கொண்டால், கூற்றுவன் நின்னை அணுகுவதற்கு அஞ்சு வான்.
----------

51. [1]கூற்றிருக்கு முன்காலிற் கூறு புறங்காலி
லேற்றிருக்கு மாயவன்க ணெப்பொழுதுஞ்--சாற்றுகையி
லம்புயத்தோன் கம்மிருக்கு மண்ணா மலைநாதர் செ
ம்புயத்திற் காரிணையாஞ் செப்பு.

பி.பே. [1]. கூற்றுருக்கு முள்ளங்கால். கூற்றிருக்குங் காலில்.
அண்ணாமலை நாதருடைய முன் காலிலே கூற்றுவன் உதையுண்டிருக்கும், அவருடைய புறங்காலிலே திருமாலுடைய கண் (அர்ச்சிக்கப்பட்டு) எப்பொழுதும் பொருந்தியிருக்கும்; சிறப்பித்துக் கூறப் படும் அவருடைய கையிலே பிரமதேவனுடைய தலை யிருக்கும்; இப்படியானால் அவருடைய செம்மையாகிய தோளாற்றலுக்கு எவர் ஒப்பாவார் சொல். (புயம் ஆகுபெயர்.)
-----------

52. செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி
யப்பனே நன்னூ வறிந்தாலு-மிப்புவியிற்
கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் [1]பயனேது
கண்டவெல்லாம் [2]வீணிலே கற்று.

பி.பே. [1]. குணமேது [2]. வீணாகுங்
(பொ-ரை.) சொல்லுதற்கரிய ஞானம் என்னும் நல்ல விளக்கே! அருணாசலத்தில் வாழும் அப்பனே! இந்த உலகத்திலே நீ உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிவரும் குருவடிவத்தை உண்மைப் பொருளாகக் கருதாதவர் பல நூல்களைக் கற்றுக் கண்டன
வெல்லாம் வீணிலே யாம்; அவற்றால் விளையும் பயன் ஏது?
--------

53. கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுளம்
பெற்றதனாற் போமோ பிற்விநோய்-உற்றகட
னஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி.

(பொ-ரை.) பொருந்திய திருப்பாற்கடலினின்றுந் தோன்றிய நஞ்சினை விரும்பி மிடற்றிலே அணிந்து கொண்ட அருணாசலேசருடைய திருவடித் தாமரையை மனம் விரும்பிக் கருதாத நெறிக்கண்ணே சென்று வெறுங் கல்வியை மட்டுங் கற்றதனாலே பழைய வினைப் பிணிப்பு அறுபட்டுப் போகுமோ? (அறுபடாது) உயர்ந்த குலத்தை மட்டும் பெற்றதனாலே பிறவிப் பிணி நீங் குமோ? (நீங்காது).
'கொண்ட அருணைநாதர்' என்னும் பெயரெச்சத் தொட ரில் பெயரெச்சத்தின் ஈற்றகரம் கெட்டது.
---------

54. நெறியுண்டா நல்ல நிலையுண்டா ஞானக்
குறியுண்டா மெண்ணமெலாங் கூடுஞ்-செறிவுண்டா
மாதி யருணகிரி யண்ணலா ரைந்தெழுத்தை
யோதிமட நெஞ்சமே [1]யுன்.

பி. பே. [1] யுன்னு
(பொ-ரை.) முதல்வனாகிய அருணகிரி அண்ணலாரது நாமமாகிய திருவைந்தெழுத்தினை மடப்பம் வாய்ந்த மனமே! ஓதிக் கருதுவாயாக; அங்ஙனம் செய் தால் உனக்கு நல்வழி உண்டாகும்; (சஞ்சலம் நீங்கி ஒன்றிலே நிலைத்திருக்கும்) நிலைபேறு உண்டாகும்: சிவஞான உணர்வு உண்டாம்; நீ கருதியன வெல்லாம் கைகூடும்; உனக்கு நிறைவு (சாந்தி) உண்டாகும்.
---------

55. உன்னைக் கருத்துண் டுரைப்பதற்கு நாவுண்டு
பன்னச் சிவநூல் பலவுண்டு- முன்னமறைக்
கெட்டாத சோணகிரி யீசரிரு தாள்பணிய
வொட்டாது பாவ முயர்ந்து.

(பொ-ரை.) பெறுதற் கரிய மக்கட் பிறவியைப் பெற்றவர்க்குக் கருதுதற்குக் கருவியாக மனம் உண்டு; சொல்வதற்குக் கருவியாக நாவுண்டு; கறப்பதற்குப் பல சிவாகமங்கள் உண்டு; ஆனால் முதன்மையான வேதத் திற்கும் அறிதற் கெட்டாத
அருணாசலேசுரருடைய இரண்டு திருவடிகளை உன்னி, உரைத்துப்பன்னி வணங் குதற்கு. அவர்கள் செய்த பாவமானது மிகுந்து நின்று இடங் கொடுக்காது.
-------

56. [2]உயர்ந்தவர்க்கு ளெல்லா முயர்ந்திருக்குங் கோவே
நயந்தபுகழ்ச் சோணகிரி நாதா-பயந்தமர
ருண்ணப் படாநஞ்சை யுண்டவுன்னைச் சாமவரோ
டெண்ணப் படுவா ரிதென்.

பி. பே. [2]. உயர்ந்த வற்று
(பொ-ரை.) உயர்ந்த தேவர்க்குளெல்லாம் உயர்ந் திருக்கும் முதல்வனே! எல்லோராலும் விரும்பப்பட்ட புகழினையுடைய அருணாசலத்தில் வாழுந் தலைவனே! அஞ்சித் தேவராலுந் தலைப்பட முடியாத நஞ்சினை உண் டருளிய (அத்தகைய) உன்னைச் சிலர் சாகின்ற இயல்பு வாய்ந்த தேவருடன் சமனாக வைத்து எண்ணுதற்குத் தொடங்குவார்; இதற்குக் காரணம் என்ன?
----------

57. என்ன சனன மெடுத்தார் புவிமீதி
லன்னமிடா ரின்சொல் வறிகிலார்-முன்னமே
யொன்னார் புரமெரித்த வுண்ணா [1]முலைப்பாகா
வென்னார் திருநீ றிடார்.

பி. பே. [1]. பாக ரென்னார்
(பொ-ரை.) பசித்தவர்க்குச் சோறிடாதவரும், இனிய சொற்களைக் கூறுதற்கு அறியா தவரும் முன்னே பகைவருடைய திரிபுரத்தை எரித்த உண்ணா முலை யம்மையை இடப்பக்கத்திலே உடையவனே என்று கூறா தவரும், திருநீற்றினை அணியா தவரும் ஆகிய இவர் இவ்வுலகின்கண்ணே எத்தகைய பிறப்பினை எடுத்தார்? (சிறவாத பிறப்பினை எடுத்தார் என்பது கருத்து).
-----------

58. நீறிடே னைந்தெழுத்தை நேசமுட னே [2]கருதிக்
கூறிடே [3]னென்னையுமாட் கொள்வதனுக்-காறணிந்த
வேணியார் சோணகிரி வித்தகனார் வெற்றிமழுப்
[4]பாணியார்க் கன்றோ பரம்.

பி. பே. [2]. நினைந்து [3]. னென்னையாட் கொண்டருள்வாய்
[4]. பாணியார்க் கென்றோ
(பொ-ரை.) யான் திருநீற்றினை அணிந்துகொள்ளேன்; திருவைந்தெழுத்தை அன்புடனே
எண்ணிக் கூறிடேன்: அத்தகைய இழிந்தவனாகிய என்னையும் ஆட்கொள்வதற்குள்ள பாரம், கங்கையாற்றை யணிந்த சடையினை யுடையாரும் அருணாசலத்தில் வாழும் வித்த கனாரும் வெற்றியையுடைய மழுவாயுதத்தைக் கையிலே யுடையவருமாகிய அவர்க்கன்றோ உரியது.
---------

59. பரகதிக்கு [1]வித்தாமுன் பஞ்சாக் கரத்தைப்
[2]பரபரப்பா யெண்ணாத பாவ--நரகப்
பிறப்பிற்கு மீடாய்ப் பிறந்தருணை யீசா
விறப்பிற்கு மீடாயி னேன்.

பி.பே. [1]. வித்தாய [2]. பரபரப்ப வோதாத
(பொ-ரை.) திருவருணையில் வாழும் ஈசனே! மேலான கதி விளைதற்கு விதை போலுள்ள உன்னுடைய திருவைந் தெழுத்தைத் தீவிரப்பட்டுக் கருதாமையி னாலே என்னிடம் போகாதிருந்த பாவத்தால், யான் கீழான பிறவிக்குரியவனாகப் பிறந்து, பின்னர் இறத்த லுக்கும் உரியவனானேன்.
--------

60. ஏனிருந்து நெஞ்சே யிரவுபக லாயுடலைத்
தானொறுப்பாய்ச் சோணகிரித் தாணுவா-மானுகந்த
[3]வெந்தையா னீங்கு மிருவினைநோய் சிந்திக்குஞ்
சிந்தையான் வேறென் செயல்.

பி.பே. [3]. எந்தையால் நிற்கு
(பொ-ரை.) மனமே! இரவு பகலாக (உலகப் பற் றிலே யுழன்று) உடம்பினை வருத்துகின்றாய்; இதற்குக் காரணமென்ன? மானை விரும்பிக் கையிற் கொண்ட எந்தையாகிய சோ.ை கிரித் தாணுவினாலே இருவினை காரணமாகத் தோன்றும் பிறவி நோயெல்லாம் நீங் குமே: அவனைச் சிந்திக்கின்ற சிந்தையினாலே வேறு என்ன செயலாம்? (சிவனைச் சிந்திக்கும் சிந்தையால் வேறொன்றும் செய்தற் கூடாதென்பது கருத்து)
----------

61. என்செயலாஞ் சோணேச ரிட்டபடி யேயொழிய
நெஞ்சையெலாம் புண்ணா நினைந்தாலும்-விஞ்ச
வருமோ பெருவாழ்வு வல்லமையா னெஞ்சந்
[1]தருமோநம் பேராசை தான்.

பி.பே. [1]. தருமோ நின் பேராசைதான்
(பொ-ரை.) அருணாசலேசுரர் நமக்கு அருள்செய்த படியேயன்றி, மனமெலாம் புண்ணாகும்படி வருந்த எண் ணினாலும், (அவ்வெண்ணத்தால்) பெரு வாழ்வானது மிகும்படி வருமோ? மனமானது தனக்குள்ள வல்லமை யினாலே நாம் பேராசைப்பட்ட பொருளத்தனையுந் தருமோ? அவன் அருளின்றி நாம் என்ன காரியத்தைச் செய்யலாம்?
--------

62. தானே யெனக்குத் தவமாய்த் தவப்பயனாய்த்
தானே யெனக்கன்னை தாதையாய்த்-தானென்னை
செப்பரிய [2]நின்பாதஞ் சேர்விக்குஞ் சோணகிரி
யப்பனே நீயேறு மான்.

பி.பே. [2]. நின்னடிக்கே, நின்னடிக்கீழ்
(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் அப்பனே! நீ ஊர்தியாகக் கொண்ட நந்திகேசுரன் றானே. எனக்குத் தவமாகியும். தவத்தினாலே விளையும் பயனாகியும். அம்மையும் அப்பனும் ஆகியும் விளங்கிப், பின்னர் குருநா தனாகிச் சொல்லுதற்கரிய நின் திருவடியிலே என்னைச் சேரவும் செய்துவிடும்.
---------

63. ஆனவர நல்குநதி யாயிரஞ்சென் றாடுகிலென்
றானம் பதினாறுந் தான்செயிலே - னானனங்க
[3]ளஞ்சுடையான் சோணகிரி யண்ணறனை யெண்ணாத
நெஞ்சுடையார் பூதலத்தே நின்று.

பி.பே. [3]. அஞ்சுடையார் சோணகிரி யண்ணலா ரென்னாத
(பொ-ரை.) ஐந்து திருமுகங்களை யுடைய அருணா சலேசுரனைக் கருதாத மனத்தினை-யுடையார் நிலவுலகத் திலே நிலைபெற வாழ்ந்து, பொருந்திய வரத்தினைத் தரும் ஆயிரம் நதிகளினிடத்தே சென்று மூழ்கினாற் பயனென்ன? மூழ்கி அந்நதிக்கரையிலே பதினாறு தானங்களையும் செய்தாற் பயனென்ன? அவற்றாற் பய னொன்றும் இல்லை.
இறைவனுடைய ஐந்து திருமுகத்தை 'ஈசானந்தற் புருடமகோரம் வாமம், சத்தியோ சாதம் சங்கர னைமுகம் என்னும் பிங்கல நிகண்டால் அறிக.
-------

64. நின்று [1]தவம்புரியாய் நெஞ்சே திருக்கோயிற்
சென்றுசிவ பூசையறஞ் [2]செய்திடாய்-வென்றிதரு
[3]மம்மான் கருத்த னருணேச னம்புயத்தாள்
சும்மா கிடைக்குமோ சொல்.

பி.பே. [1]. தவம் புரியார் [2]. சிந்தியார் [3]. அம்மான் கரத்தன் அம்மானுகந்த
(பொ-ரை.) மனமே! நிலைத்துத் தவத்தினைச் செய் திடாய்; திருக்கோயிலின்கண் புகுந்து சிவபூசையையும் சிவ புண்ணியங்களையும் செய்திடாய்; வெற்றியைத் தரும் அப்பனும் உலகத்திற்கு நிமித்த காரணனும் ஆகிய அருணாசலேசுரருடைய தாமரை மலர் போன்ற திருவடிப் ஒன்றும் செய்யாமலிருந்தாற் கிடைக்குமோ? பேறு நீயே சொல்?
-----

65. சும்மா கிடைக்குமோ சோணாசலன் பாத
மம்மால் விரிஞ்ச னறிகிலார் - நம்மா
[4]லிருந்துகதை சொன்னக்கா லென்னாகு நெஞ்சே
பொருந்த நினையாத போது,

பி.பே. [4]. லிருந்த கதை சொன்னா
(பொ-ரை.) மனமே! அருணாசலேசுரருடைய திரு வடியை அந்தத் திருமாலும் பிரமதேவனுமே அறிகிலார்; சும்மா விருந்து பல கதைகளைக் கூறிக் கொண்டிருந்தால் நம்மாலே என்ன ஆகும்? அவ்விறைவன் நம்முடைய பக்குவமறிந்து நம்மைப் பொருந்தும்படிக் கருதாத காலத்தே அவன் திருவடி உனக்குச் சும்மா கிடைக்குமோ? (இறைவன் திருவருள் வைத்தபொழுது நமக்குக் கிடைக்கும் என்பது கருத்து.)
-------

66. போதையிரு பல்லுகுத்துப் புண்டரிகன் றேவியெனும்
மாதையன்று மூக்கரிந்த மாவீரன்-றாதை
[1]விருப்பா மதிசூடி [2]வெண்டலையோ டேந்தி
யிருப்பா னருணேச னின்று.

பி. பே. [1]. விருப்பான் மலர்சூடி. [2]. வெண்டலை யொன்றேந்தி.
(பொ-ரை.) சூரியனுடைய பெரிய பல்லினைச் சிந்து வித்துப் பிரம தேவனுடைய மனைவியை மூக்கினை அரிந்து (தக்க யாகத்தை அழித்த) பெரிய வீரபத்திரக் கடவுளின் தந்தையாகிய அருணாசலேசுரனும் (சூரிய னுக்கு மாறாகிய) திங்களை விருப்பமாகச் சூடிக்கொண்டு அருள்செய்தும், (செருக்குற்றிருந்த பிரமதேவன் தலை யைக் கிள்ளி) அவ்வெண்டலை யோட்டை யேந்தித் தண் டித்தும், அருளுதல் தண்டித்தல் என்னும் இரண்டுக்கும் உரியவனென்று இன்று உலகம் சொல்ல விளங்குகிறான்.
---------

67. இன்றைக்கு நாளைக் [3]கிறவிற் கெனுந்துயர
மென்றைக்குப் போமருணை யீசனே!- கொன்றைமதி
புன்னை யெருக்கும் புனையுஞ் சடாடவியா
யென்னை நெருக்கு மிவை.

பி. பே. [3] கிரவிற், கிரவைச்
(பொ-ரை.) கொன்றை மலரினையும் பிறையையும் புன்னை மலரினையும் எருக்கு மலரினையும் அணிந்து கொண்டிருக்குஞ் சடைக் காட்டினை யுடையவனே! அருணாசலேசுரனே! யான் காலதத்துவத்திற் கட்டுப்பட்டு நிகழ்காலத்திற் கென்றும் எதிர் காலத்திற்கென்றும் இறந்த காலத்திற் கென்றும் கருதுகின்ற துயரம் எப் பொழுது போகுமோ? இவ்வெண்ணங்களாகிய என்னை நெருக்கி வருத்துகின்றன.
----

68. நெருக்குமிவை யென்னுயிரை நீங்காமற் சூழ்ந்தே
யிருக்கும் பலபிணிநோ யெல்லா-[1]முருக்கும்வகை
கண்டே னருணேசன் கஞ்சமலர்த் [2]தாள்கருத்திற்
கொண்டே னெனக்கென் குறை.

பி.பே. [1]. மொருக்க வகை. [2]. தாளிணையைக்
(பொ-ரை.) என் உயிரினை விட்டு நீங்காமல் சூழ்ந்தே யிருக்கிற ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலப் பிணிப்பும் இவற்றால் விளையும் மோகம் முத லான நோய்களுமாகிய இவை என்னை நெருக்கி வருத் தும்; இப்பொழுது அவற்றை அழிக்கும் வகையைக் கண்டு கொண்டேன்; அருணாசலேசுரருடைய தாமரை மலர் போன்ற திருவடியைக் கருத்திற் கொண்டேன்; இனிமேல் எனக்கென்ன குறையுள்ளது?
----------

69. குறையேது மில்லையினிக் கூறுங்கால் வானோர்க்
கிறையாகுஞ் சோணேசற் [3]கென்று-மறைபுகுந்தேம்
பற்றி நமன்றொடரான் பார்க்குங்கா னெஞ்சமே
வெற்றிநமன் கைத்தலத்து வேல்.

பி.பே. [3]. கின்று.
(பொ-ரை.) தேவர்கட்குத் தலைவனாகிய அருணா சலேகரர்க்கு என்றும் (அடிமை யானோம்) என்று சொல் லிப் புகுந்தோம்; இனிக் கூற்றுவன் நம்மைப் பின் பற்றித் தொடர மாட்டான்; சிந்தித்துப் பார்க்குங்கால் மனமே!
கூற்றுவன் கையிடத்துள்ள வேற்படையையும் வெற்றி கொண்டோம்; ஆகையால், இனி நமக்குக் குறை எதுவும் இல்லை. அறை புகுதல் - அறுதியிட்டுச் சொல்லிப் புகுதல்.
----------

70. வேலைவிட முண்ட [1]விமல ரருணேசர்
மாலையணி மார்பர் மலர்ப்பதத்தை--மேலமரர்
பண்ணினார் பூசையறம் பண்ணிப் பரகதியி
னண்ணினா ரெல்லா நலம்.

பி.பே. [1]. விமலரரு ணேசர் கொன்றை.
(பொ-ரை.) திருப்பாற் கடலிற் றோன்றிய நஞ்சினை யுண்ட தூயவரும் மாலை யணிந்த மார்பினை யுடையவரு மாகிய அருணாசலேசுரருடைய தாமரை மலர் போன்ற திருவடியை மேலுலகத்திலே வாழும் தேவரும் அருணை யம் பதியில் வந்து பூசை செய்தனர்; அறம் செய்தனர்; செய்து மேலான கதியின் கண் சென்று எல்லா நன்மை களையும் அடைந்தனர்.
----------

71. எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ்
சொல்லாற் றெளிந்தேநஞ் சோணேச--ரில்லிற்
பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்
டிறந்தகதை யுங்கேட்டி லேம்.

(பொ-ரை.) (தெய்வங்க ளென்று கூறப்படுகின்ற) எல்லோருடைய பிறப்பினையும் இறப்பினையும் இயற் றமிழ்ப் புலவர் செய்த நூல்களால் நாம் தெளிவாக அறிந்துகொண்டோம்; ஆனால், நம்முடைய அருணாசலேசுரர் ஒருவர் இல்லத்திலே
சென்று மகவாகப் பிறந்த கதையையும் கேட்டிலோம்; இப்பெரிய உலகத் திலே அவர் வாழ்ந்திருந்து பலவகைப் பொருள்களை நுகர்ந்து பின் இறந்த கதையையும் நாங்கள் கேட்டிலோம். 'சொல்' ஆகுபெயர்; நூல்களை உணர்த்திற்று.
--------

72. ஏமாந்த சோணகிரி யீசரடி யாரடிக்கே
பூமா மலர்தூவிப் போற்றாதார்-தாமென்றும்
வெஞ்ச மனத்திருக்கும் வேடராய் நாடோறும்
வஞ்சநம னுக்கஞ்சு வார்.

(பொ-ரை,) பேரானந்தத்தை யுடைய அருணாசலே சுரருடைய அடியார் திருவடிக்கே பொலிவுள்ள பெரிய மலர்களைத் தூவிப் போற்றாதவரெல்லாம் எப்பொழுதும் சினம் மனத்திலே யிருக்கும் வேடரைப்போல் வளர்ந்து நாடோறும் வஞ்சகம் தங்கிய கூற்றுவனுக்கு அஞ்சுபவரா யிருப்பார் என்க.
ஏம் -- இன்பம், ஆனந்தம். வெஞ்சம்- சினம்.
----------

73, வஞ்சநம னுக்கஞ்சி வாடுந் தமியேனை
யஞ்சலென்ற சோணகிரி யண்ணலே-நெஞ்சறிய
வாண்டகுரு நீயென் றறியாதார் செய்ததவ
மாண்டமரத் திற்கணைத்த மண்.

(பொ-ரை.) வஞ்சகத்தை யுடைய கூற்றுவனுக் கஞ்சி வாடுகின்ற தனியேனை அஞ்சற்க என்று சொல்லி ஆட்கொண்டருளிய அண்ணலே! மனம் அறிய (அருவ மாயிருந்த நீ உருவமாய் வந்து) ஆட்கொண்ட குரு மூர்த்தி நீயே யென்றறியாதவர் செய்த தவங்க ளெல் லாம் 'பட்டுப்போன மரத்திற்கு அணைத்த மண்ணைப் போலப்' பயனில்லையாகும்.
------

74. மண்ணிற் பிறந்திறந்து மாயுந்தெய் வங்களோ
டெண்ணப் படாவருணை யீசனே - விண்ணப்ப
மொன்றுண் டடியே னுனைப்பிரியா தேயிருக்க
வென்று தருவா யெனக்கு.

(பொ-ரை.) நிலவுலகத்திலே பிறந்து பின் இறந்து அழிந்தே போகுந் தெய்வங்களோடு ஒருங்கு வைத்துக் கருதப்படாத அருணையம் பதியில் வாழும் ஈசனே! அடி யேன் செய்து கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உண்டு; அது, அடியேன் உன்னைவிட்டுப் பிரியாமலே யிருக்க வேண்டுமென்பது அதனை எனக்கு என்று தருவாய்?
`இருக்க' என்னும் வினையெச்சத்திற்கு முடிபாகிய வினை வருவிக்கப்பட்டது.
--------

75. தருவா யெனக்குகந்துன் றன்னிருதா டன்னை
மருவார் புரமெரித்த மன்னா-குருவாகி
[1]முன்னை வினையகற்றி மூர்த்தி யருணேச
வென்னைப் பொருளா வெடுத்து.

பி.பே. [1] முன்னை வினையகற்று மூர்த்தியான் சோணகிரி.
(பொ-ரை.) பகைவர் வாழும் திரிபுரத்தை எரித்த மன்னனே! அருணாசலேசுரன் என்னும் மூர்த்தியே! நீ குரு வடிவமும் உடையவனாகி இழிந்த என்னையும் ஒரு பொருளாகக் கருதி யெடுத்து, முன்னை வினையான சஞ்சிதத்தைப் போக்கி, விரும்பி, உன்றன் இரண்டு திருவடிகளையும் எனக்குத் தருவாயாக.
----------

76. எடுப்பானுங் காப்பானு மேற்பானு மேற்பக்
கொடுப்பானு மேதுங் கொடானும்-விடப்பானம்
பண்ணி [2]யனேகர் பயங்கெடுத்த சோணகிரிப் பு
ண்ணியனே நீகாணிப் போது.

பி.பே. [2] யனேகம்.
(பொ- ரை.) நஞ்சினைக் குடித்தல் செய்து எண்ணி றந்த தேவர்களின் அச்சங்களையெல்லாம் போக்கிய அருணாசலத்தில் வாழும் அறக்கடவுளே! இப்பொழுது என்னைத் துன்பத்தினின்று எடுப்பவனும் நீயே; காப்பவனும் நீயே;
என்னை உன்பால் ஏற்றுக் கொள்கின்றவனும் நீயே; உன்னையான் ஏற்றுப் பூசிக்கக் கொடுப்ப வனும் நீயே; எத்தகைய துன்பத்தையும் கொடாதவனும் நீயே.

முதலான வினைகளுக்கு வேண்டும் செயப்படுத்தல் பொருள் வருவிக்கப்பட்டன. 'ஏற்பானும்; ஏற்பக் கொடுப்பானும்' என்று கூறிய கருத்தைத் "தந்ததுன்றன்னைக் கொண்ட றன்னை என்ற திருவாசகத்தால் உணர்க.
தென்
------

77. இப்போது [1]பின்னைக் கிலையென் றிரப்போரை
யெப்போதுந் தள்ளா திரங்கியே --முப்போதும்
பூசிப்ப தெந்நாள் புனிதனே சோணகிரி
நேசிப்ப தெந்நா ணினைந்து,

பி. பே. [1] பின்னை யிலையென் றிரப்பாரை.
(பொ-ரை.) இப்பொழுது ஒரு பொருளும் இல்லை; நாளைக்கு ஒரு பொருளும் இல்லை என்று கூறி இரக் கின்ற அடியார்களை எப்பொழுதும் விட்டுவிடாமல் இரக்கமுற்று, அவர்களை மூன்று காலத்திலும் பூசிக்கும் நிலை எனக்கு எந்நாளிற் கிட்டும்? தூயவனே! நீ வாழும் அருணாசலத்தை நினைந்து நேசிப்பது எந்நாளிற் கிட்டும்?

'பூசிப்பது, என்ற சொல்லால் இரப்போரை என்ப தற்கு, இரக்கும் அடியாரை, என்று உரை கூறப்பட்டது. முப்போது காலை, உச்சி,இரவு.
------------

78. நினையேன் [1]றிருக்கோவில் நின்றுகண்ணீர் சோர
நனையேன் பிறப்பறுக்க நாடேன்-புனையேனின்
பொன்னடிக்குப் பூமாலை போற்றி யருணேச
பின்னடிக்கிங் காருதவும் பேர்.

பி.பே. [1] றிருக்கோலம்,
(பொ-ரை.) அருணாசலேசுரனே! யான் நின் திருக் கோவிலை நினையேன்; திருக்கோவிலுள் வந்து நின்று அன்புக் கண்ணீர் ஒழுக உடல் நனையேன்: என் பிறவி நோயை நீக்கிக்கொள்ள ஆரா யேன்; நின்னுடைய அழகிய அடிக்குப் பூமாலைனைப் புகழ்ந்து புனையேன்: (நான் இவ்வாறிருந்தால்) இங்கே பிற்காலத்தே உதவு மவர் யாராயிருப்பார்? ஒருவருமிரார்.
'பின்' என்ற சொல் பின்னடி என்று மருவிற்று.
--------

79. பேரா யிரமுடைய பெம்மானைச் சோணகிரி
யாரா வமுதை யறியாமல்--வாராது
தீது நலமுந் தெரியுங்கா னெஞ்சமே
[2]யேதுமவ னென்றே யிரு.

பி.பே. [2] யேது நம தென்றே யிரு.
(பொ-ரை.) மனமே! ஆராயுமிடத்து நமக்கு வரு கின்ற நன்மைகளும் தீமைகளும் ஆயிரம் திருப்பெயரை யுடைய பெருமானாகிய, அருணாசலத்தில் வாழும் ஆராவ முது போன்ற இறைவனை அறியாமல் வராது; ஆகை யினாலே எதுவும் அவனருளால் வருவதாம் என்று கருதிக் கொண்டே அவன் திருவருள் வசமா யிரு.

தீதும் வாராது; நலமும் வாராது என்று தனித்தனி கூட்டுக.
------

80. இருந்துநினைப் பார்த மிருவினையை நீக்கும்
பொருந்துமிடி யிம்மையிலே பேரக்கு-மருந்தன்றோ
தம்பிரா னெவ்வுயிர்க்குந் தாணு வருணகிரி
யெம்பிரா னோரஞ் செழுத்து.

(பொ-ரை.) தமக்குத் தாமே தலைவன்: எல்லா வுயிர்க்கும் நிலைபேறா யுள்ளவன்; அருணாசலத்தில் வாழும் எம்முடைய பெருமான்; அவனுடைய ஒப்பற்ற திருவைந்-தெழுத்தானது இருந்து எண்ணுபவருடைய இருவினையை நீக்குவதற்கும் பொருந்தும் வறுமையை இம்மையில்தானே போக்குவதற்கும் உரிய மருந்தன்றோ.
நீக்கும் மருந்து; போக்கும் மருந்து என்று கூட்டுக.
-----------

81. அஞ்செழுத்தை யோதுமவர்க் கஞ்சி யவர்தலையிற்
றுஞ்செழுத்தைக் கஞ்சன் [1]றுடைக்குமே- யஞ்சுதலைக்
கொ ன்றறுத்து நாலா வொருகுறையா நின்றதலை
யின்றறுப்பான் சோணேச னென்று.

பி.பே. [1]. துடைப்பனே.
(பொ-ரை.) பிரம தேவனானவன், "முன்னே தான் பெற்றிருந்த ஐந்து தலைகளில் ஒன்றினை அருணாசலே சுரன் அறுத்துவிட அறுபடாமல் குறையாக நின்ற நாலாகிய தலைகளையும் அவன் இன்று அறுத்து விடுவான்" என்று கருதி, அவன் திருநாமமாகிய ஐந்தெ ழுத்தை ஓதுமவரைக் கண்டு அஞ்சி. அவர் தலையிலே தங்கியுள்ள தான் எழுதிய எழுத்தைத் துடைத்து விடும்.
--------

82. என்றுநமன் றூதுவரை யேற்கவே தானழைத்து
நின்றுரைக்குஞ் சோணகிரி நித்தனார்க்-கின்றடிமை
யானவர்க்கு நீர்வணங்கி யப்பாலே போமென்று
தானவர்க்குப் புத்தியாய்த் தான்.

(பொ-ரை.) கூற்றுவன் எப்பொழுதும் தன்னுடைய கால தூதரைப் பொருந்த வழைத்து, அவர்கட்குப் புத்தி கூறுவதாக நின்று, “அருணாசலத்தில் வாழும் அழிவற்ற கடவுட்கு இன்று நீயிர் வணக்கம் செய்து, தொண்டராயினவர்க்கு அவர்க்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அப்பாலே போசு வேண்டும்" என்று உரைக்கும்.
------------

83. புத்திதருஞ் சோணேசன் பொன்னடியை [1]வாழ்த்துநர்க்குப்
பத்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்கு-முத்திதரும்
[2] மாற்றரிய தீவினையை மாற்றுவிக்கு மைந்தெழுத்தைப்
[3]போற்றரிய நெஞ்சமே பூண்டு.

பி. பே; [1] வாழ்த்துதற்குப். [2]. மாற்றறிய. [3]. போற்றறிய.
(பொ-ரை.) அருமையாகிய மனமே! அறிவினைத் தருகின்ற அருணாசலேசுரனுடைய அழகிய திருவடியை வாழ்த்துபவர்க்குப் பத்தியைத் தரும்; உண்மையான சிவ ஞானத்தையுங் கொடுக்கும்; வீடு பேற்றினையுந் தரும்; ஆகையால், மாற்றுதற்கரிய தீயவினைகளை மாற்றுவிக்கிற அவன் திருவைந்தெழுத்தினை
மேற் கொண்டு போற்றுவாயாக.
------------

84. பூண்டவகைக் கெல்லாம் பொருந்துமணி முத்திருக்க
வேண்டும் [1]பசும்பொன் விளைவிருக்கத்- [2]தீண்டாமற்
பொங்கரவுந் தோலெலும்பும் பூண்டா யிதென்னருணைச்
சங்கரா கங்கா தரா.

பி. பே. [1]. பலசுகந்த மேயிருக்க, [2]. தீண்டாதே
(பொ ரை.) திருவருணையில் வாழும் சங்கரனே! கங்காதரனே! நீ அணிகலனாக அணிந்து கொண்ட வகைக்கெல்லாம் பொருந்தும்படி இரத்தினங்களும் முத்தும் இருக்கவும், அணிகலன்களுக்கு வேண்டும் சிறந்த பொன் விளையுமிடமும் இருக்கவும், அவற்றை யெல்லாம் தொடாமல், சினம் பொங்குகின்ற பாம்பினை யும் தோலையும் எலும்பையும் அணியாக அணிந்து கொண்டனையே! இதற்குக் காரணம் என்ன?
----------

85. கங்கா தரனே கடையேனை யெந்தநா
ளங்கா தரவா வழைக்குநா- ணங்காதல்
பார்க்குநாள் சோணேச பார்த்துப் பரகதியிற்
சேர்க்குநா ளெந்தநாள் செப்பு.

(பொ-ரை.) கங்கை யாற்றை அணிந்துள்ளவனே! கடைப்பட்ட என்னை (அடியார் கூட்டம் நிரம்பிய) அவ் விடத்தே அன்பாக அழைக்கும் நாள் எந்த நாளாகும்? அருணாசலேசுரனே! எங்களுடைய அன்பினை ஆராய்ந்து பார்க்கும் நாள் எந்த நாள்? ஆராய்ந்து பார்த்து ங்களை மேலான கதியிற் சேர்க்கும் நாள் எந்த நாள்? இவற்றைச் சொல்லு.
--------

86. [1]செப்பி லிருவினையைச் சேதமற்ற மும்மலத்தை
யொப்பிலாச் [2]சஞ்சலத்தை யோட்டினே-னிப்போ
[3]தருவாகி நின்ற வருணகிரி யானைக்
[4]குருவாக வெண்ணுளத்தே கொண்டு.

பி-பே. [1]. செப்பரிய வாணவத்தைச் சேதமுறா. [2]. சஞ்சிதத்தை.
[3]. அருவா யிருக்கு. [4]. குருவாயென் னெஞ்சகத்தே.
(பொ-ரை.) இப்பொழுது அரூபியாய் நின்ற அருணாசலேசுரனை எனக்கு உபதேசித்த
குருமூர்த்தி யாகவே என் மனத்தில் கருதிக்கொண்டு, சொல்லுமிடத்து இரு வினைகளையும், அழிவற்ற மும்மலத்தையும் ஒப்பற்ற சஞ்சலத்தையும் ஓட்டிவிட்டேன்.
---------------

87. கொண்டநெறி சற்றுங் குலையார் மனத்திருக்கு
மண்டர்கோ வேயருணை யண்ணலே- [5]தொண்டர்க்
கிடையாது நெஞ்ச மிருவினையா லென்று
மடையா தெழுபிறப்பா மல்.

(பொ-ரை.) தாம் மேற்கொண்ட நல்வழியிலிருந்து சிறிதும் தளராதவர் தம் மனத்தாமரையிலே நிலைபெற் றிருக்கும் தேவர் தம் தலைவனே! அருணையம் பதியில் வாழும் அண்ணலே! உன்னுடைய தொண்டர்கட்கு உனக்குத் தொண்டு செய்யும் விருப்பத்திலிருந்து அவர் தம் மனம் பின் வாங்காது. அவர் (தம் செயலற்றுச் சிவச் செயலே என்று கருதிச் செய்யும்) நல்வினை தீவினைகளால் ஏழு பிறப்பாகிய அல்லல் அவர்களை எப்பொழுதும் அடையாது.

பி-பே. [5]. தொண்டற்
------------

88. அல்லதொரு தெய்வ மறியே னறிந்தாலு
நல்லதென்று நெஞ்சகத்தி னாடேன்யான் - சொல்லரிய
வண்ணா மலைமேவு. மண்ணலையு மண்ணலிடத்
துண்ணா முலையாளை யும்.

(பொ-ரை.) சொல்லுதற் கரிய திருவண்ணாமலையிற் பொருந்தியிருக்கும் அண்ணலையும் அவ்வண்ணலின் இடப்பாகத்திலே யுள்ள உண்ணாமுலை யம்மையாரையு மல்லாமல், யான் மற்றொரு தெய்வத்தை அறியேன்: அறிந்தாலும் அத்தெய்வங்களை நல்ல தெய்வமென்று கருதி மனத்தாலும் நாடேன்.
------------

89. உம்மை நினைந்தே யுருகி யருணேசர்
தம்மை நினைந்தார் தமக்கல்லா--லிம்மையிலே
யெல்லாருங் காண வெளிதோ புவிமீதி
[1]னல்லார் துதிக்கு நடம்.

பி - பே. [1] நல்லா ரிருக்கு நடம்.
(பொ-ரை.) போன பிறவியிலே நினைந்து மனம் உருகி அருணாசலேசுரர் தம்மைத் தியானித் திருந்தவர் கட் கன்றி, நல்லவர் புகழும் அக்கடவுளுடைய திருநட னத்தை இப்பிறவியிலே இவ்வுலகில் வாழும் எல்லோ ரும் காண்பதற்கு எளிதோ?
----------

90. நடலையறுத் தாளருணை நம்பனுக்கன் பில்லா
ருடலையொறுத் தாலாவ துண்டோ – [2]வடலை நூ
லோதினாற் பாச மொழியுமோ புற்றிலே
மோதினாற் பாம்புசா மோ.

பி - பே. [2]. வடநூல்
(பொ-ரை.) பொய்யான வாழ்வினை யறுத்து ஆட் கொள்ளும். அருணையம்பதியில் வாழும் சிவபெருமானுக்கு அன்பில்லாதவர் விரதம் முதலான கர்மங்களால் உடம்பினை வருத்திக் கொண்டால் அதனால் விளையும் பயன் உண்டோ? இலக்கணம் தருக்கம் முதலிய வலிய நூல்களை ஓதினால் அதனால் பாசம் நீங்குமோ? பாம்பினை அடிக்காமல் அது வாழும் புற்றினை அடித்தால் அது சாகுமோ?

நடலை - பொய்: ஆகுபெயராய்ப் பொய்யான வாழ்வை உணர்த்திற்று. அடல் - வலிமை: ஐகாரச் சாரியை பெற்று அடலை என்றாயிற்று; வலிய நூல்களாவன:- இலக்கணம், தருக் கம். சோதிடம், மருத்துவம் முதலியன.
------------

91. மோகமறேன் சோணகிரி மூர்த்தியேமும்மலத்தில்
[1]தாகமறேன் நின்பெருமை தானறியேன்- [2]தாக மதாய்த்
தம்மதென்னுங் காயத்தைத் தானெடுத்துத் தாரணியி
னம்மதென்னுங் கண்டாய் நரி

பி - பே. [1] தாகமறு. [2]. காகநாய்
(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் அருள்வடி வனே! மிக விருப்பமாய்த் தம்முடையதென்று பற்றுச் செய்யும் உடம்பினை இவ்வுலகத்திலே நரிதான் கௌவிக் கொண்டு நம்முடைய தென்று தின்னுங் கண்டாங்! இதனை அறிந்திருந்தும்) யான் உடம்பை நிலையென்று கருதிப் பற்றுச் செய்யும் மோகத்தை நீங்கேன்: ஆணவம் முதலான மும்மலங்களில் விருப்பஞ் செய் வதை நீங்கேள்; உன் பெருமையையும் அறிந்து கொள்ளேன்.
----------

92. நரிக்குப் பொதிசோறு நான்சுமந்து நொந்தே
னரிக்கு மரிதா மரனே-தெரிக்குமறை
காணாத சோணகிரிக் கண்ணுதலே [1]நின்பதத்தைப்
பேணாத நாயேன் பிறந்து.

பி-பே. [1] நின்னருளைப்
(பொ-ரை.) திருமாலுக்கும் காணுதற்கரிதாகிய அரனே! அறிவிக்கும் வேதமும் காணமுடியாத அருணாசலத்தில் வாழும் நெற்றிக் கண்ணை யுடைய சிவபெருமானே! உன்னுடைய திருவடியை விரும்பாத நாயேனாகிய யான் இவ்வுலகத்திலே பிறந்து நரிக்குக் கட்டுச்சோறு போற் பயன்படும் உடம்பினைப் பயனின்றிச் சுமந்து வருந்தினேன்.
------------

93, [2]பிறந்திறக்குந் தெய்வப் பிணங்களைக்கொண் டாடே
னறந்தழைக்குஞ் [3]சோணகிரி யாரே-பிறந்திறவா
[4]வும்மைப் புகழ்ந்தே வுமக்கடிமை யானபேர்
[5]தம்மைப் புகழ்வதலாற் றான்.

பி-பே. [2] பிறந்திருக்கும். [3] சோணகிரியானே.
[4]. வுன்னைப் [5]. தன்னைப்
(பொ-ரை.) அறம் தழைப்பதற்குக் காரணமான அருணாசலத்தை யுடையவரே! உலகத்திலே பிறத்தலும் இறத்தலும் அடையாத உம்மைப் புகழ்ந்தும், உமக்கு அடிமையான பேர் தம்மைப் புகழ்வதுமல்லாமல், பிறவியெடுத்துப் பின் இறந்துவிடும் தேவர்களாகிய பிணங் களை யான் புகழ்ந்து பாராட்டேன்.
------------

94. தானவர்கள் முப்புரத்தைத் தானெரித்து நஞ்சுகந்தீர்
வானவர்க்காச் சோணகிரி வள்ளலே- [1]யேனம்
விருப்பாய் [2]மலரடியை வேண்டினா னீண்ட
நெருப்பா [3]யிருந்ததென்ன நீர்.

பி-பே [1]. ஏன விருப்பா மலரடியில் வெண்டலையொன் றேந்தி
[2]. மலர்சூடி. [3]. விருந்தென்ன.

(பொ-ரை.) அருணாசலத்தில் வாழும் வள்ளலே! தேவர்களைக் காத்தற்காக அசுரர்கள் வாழ்ந்த திரி புரத்தை எரித்துத், திருப்பாற் கடலிற் றோன்றிய நஞ்சினையும் உணவாக விரும்பினீர்; அங்ஙன மிருக்கத் தேவர்களிற் சிறந்த திருமாலாகிய பன்றி விருப்பத்தை உடையதாய்த் தாமரை மலர் போன்ற உன் திருவடியைக் காண விரும்பினால், அப்பன்றி அணுகுதற் கரிய நீண்ட நெருப்பு வடிவாய் இருந்ததற்குக் காரணமென்ன?
----------

95. நீராழி நஞ்சுகந்த [4]நித்தரே சோணகிரி
[5]யாரா வமுதரே யய்யரே-பாராளுந்
தாதையே பூசையறந் தானறியா மற்றிரியும்
பேதையேற் காராவார் பின்.

பி-பே [4] நித்தனே [5]. ஆராவமுதேயென்னையனே.

(பொ-ரை.). நீரினை யுடைய கடலிலிருந்து தோன் றிய நஞ்சினை உணவாக விரும்பியுண்டு அழியாமலிருந்த வரே! அருணாசலத்தில் வாழும் ஆரா அமுதரே! ஐயரே! உலகத்தையாளுந் தந்தையே! சிவ பூசையையும் சிவ புண்ணியத்தையும் அறிந்து கொள்ளாமல் வாளா திரியும் அறிவில்லாதேற்கு வேறு துணையாவார் யார்? பின் வேறு என்னும் பொருளது.)
-------------

96. பின்னை யொருவரில்லை பேருலகிற் றஞ்சமா
வன்னந் தருமருணை யையரே--யென்னை
யெடுப்பதற்குங் காப்பதற்கு மென்பிறவி நோயைக்
கெடுப்பதற்கு [1]நீரே கதி.

பி- பே [1]. நீரேகெமர்
(பொ-ரை.) இப்பெரிய உலகத்திலே எனக்குத் துணையாயிருந்து உணவினைத் தரும் அருணையம் பதி யில் வாழும் ஐயரே! என்னை உலகப் பற்றிலிருந்து எடுப்பதற்கும் காப்பதற்கும் எனது பிறவியாகிய பிணி யைக் கெடுப்பதற்கும் நீரே கெதியாவீர்; வேறொருவர் எனக்குத் துணையில்லை.
-----------

97. நீர்கொண்ட வேணி நிமலாவென் னீள்பிறப்பை
யார்தொலைப்பார் நீயல்லா தாயுங்காற்-பார்மீதிற்
பொய்யா வரங்கொடுக்கும் புண்ணியனே சோணகிரி
யையா கருணா வயர்.

(பொ-ரை.) கங்கையாற்றினை அணிந்துகொண்ட சடையையுடைய தூயவனே! நிலவுலகத்திலே பொய்த் துப் போகாத வரத்தைக் கொடுக்கும் அறவடிவான வனே! அருளுக்கு இருப்பிட மானவனே; அருணாசலத் தில் வாழும் ஐயனே! ஆராயுமிடத்து என்னுடைய நீண்ட பிறப்பினை நீயல்லாமல் வேறு யார் போக்குவார்?
----------

98. கருணா லயாநின் கழல்பணிய மாட்டே
னருணா சலாவென் றழையேன்-மரணாந்த
[2]காலத்தி லொன்றுங் கருத்தறியேன் கண்ணையுன்றன்
கோலத்தில் வையேன் குறித்து,

பி- பே [2]. காலத்தி வோ வாதும்

(பொ-ரை.) அருளுக்கு இருப்பிட மானவனே! இறப்பு நேரிடும் அந்திம காலத்திலே (என் ஆற்ற லெல்லாங் குறைய) நின் திருவடியைப் பணிய மாட்டாத வனா யிருப்பேன்; அருணாசலா வென்று அழைக்க முடி யாதவனா யிருப்பேன்; சிறிதும் உன்னைப்பற்றி எண் ணும் எண்ணத்தையும் அறியேன்; என் விழியை உன் வடிவத்திலே குறித்து வைக்கவும் மாட்டாதவனா யிருப் பேனே; அப்பொழுதுதான் உன் நிறைந்த திருவருள் எனக்குக் கிட்ட வேணும்.
------------

99. குறியே னிருபதத்தைக் [1]கூறும் வகைசற்
றறியே [2]னலந்தவர்க்கொன் றாற்றேன்- [3]சறியேனின்
றாயுமறை தேடரிய வண்ணா மலையானே
மாயுமிருந் தையா மனம்.

பி-பே. [1] கூட வகைசற் [2]. தளர்ந்தவர்க்கொள், அறித்தவர்க்கொன்
[3] செறியேனுக் காயுமற யானது

(பொ-ரை.) நிலைபெற்று நின்று ஆராய்கின்ற வேதமுந் தேடுதற் கரிய அண்ணாமலைக் கடவுளே! றுமையையுடைய யான் உன் இரண்டு திருவடிகளைக் கருதியுணரேன்: நாவினாலே கூறும் வகையைச் சிறிதும் அறியேன்; வருந்தியவர்க் கொன்றும் கொடேன்; ஐயனே! என் மனம் பயனின்றியிருந்து அழிகின்றது.
-----

100. ஐயா மரப்பாவை யாடுவதுஞ் சூத்திரிதன்
கைவாசி யோபாவை கற்றதோ-வெய்யவினை
யென்னிச்சை யோவருணை யீசா படைத்தளிக்கு
முன்னிச்சை யன்றோ வுரை.


(பொ-ரை) ஐயனே! மரத்தினாற் செய்த பாவை நாடகம் ஆடுவதும் அப்பாவையை ஆட்டுபவ னுடைய கைப் பயிற்சியோ? அல்லது அப்பாவையே கற்றுக் கொண்ட பழக்கமோ? கொடிய வினையாகிய கயிற்றால் இயங்குவது என் விருப்பப்படியோ? வினைக் குத் தக்கவாறு படைத்துக் காத்து அழிக்கும் உன் விருப்ப மன்றோ? நீயே கூறுவாயாக.
----------

101. உரைக்கு மடியா ருயிர்ப்பயிர்வா டாமற்
றரைக்குளா னந்தவெள்ளந் தன்னை – [1]நிறைக்குமே
யெண்ணார் புரமெரித்த யெந்தை யருணகிரிக்
கண்ணா ரமுதமெனுங் கார்.

பி- பே. [1] நிறைக்குமே
(பொ-ரை.) தன்னைக் கருதாதவருடைய திரிபுரங் களை எரித்த எந்தையாகிய அருணாசலத்தில் வாழும் அமிழ்தம் என்னும் முகிலானது, சிறப்பித்துக் கூறப்ப டும் அடியாரின் உயிராகிய பயிர் மும்மல தாபத்தால் வாட்டம் அடையாமல் நிலவுலகத்திலே பேரானந்தப் பெரு வெள்ளத்தை நிரப்பும் என்க.
கார் என்னும் அந்தம் கார்கொண்ட மேனியனும் என்னும் முதற் பாட்டிற்கு ஆதியாயிற்று.

நூல் முற்றும்.
------------

பயன்
102. அருணகிரி யந்தாதி யழகுவெண்பா நூறும்
கருணையுடன் கற்றோரைக் கண்டு - அருணையண்ணல்
வீறான பொன்னுலகை வேந்தனுக்கு மாற்றியங்கே
மாறாமல் வைப்பார் மகிழ்ந்து. 1

(பொ-ரை.) அருணையம் பதியில் வாழும் அண்ண லானவர் 'அருணகிரி யந்தாதி' என்று பெயர் பூண்ட அழகிய வெண்பாக்கள் நூறையும் திருவருள் ஞானத் துடன் கற்றவரைத் தெரிந்தெடுத்து, சிறந்த பொன்னு லக வாழ்வினை இந்திரனுக்கு மாற்றிவிட்டு அப்பொன் னுலகில் மாறாமல் வாழ மகிழ்ந்து வைப்பார் என்க.
----------

103. அஞ்செழுத்தன் சோணேச னாய்ந்துரைத்த வந்தாதி
நெஞ்சழுத்திச் சால நினைப்போர்க்கு- விஞ்சுலகை
யாளும் பதம்பெறலா மன்றரிக்கு மெட்டாத
தாளும் பெறலாகுந் தான். 2

(பொ-ரை.) அஞ்செழுத்தனாகிய நமசிவாயன் அரு ணாசலேசுரனை
ஆராய்ந்து கூறிய அந்தாதி என்னும் நூலினை மனத்திலே பதிய வைத்து மிகவும் சிந்தித்துத் தெளிபவர் மிகுந்த உலகத்தினை ஆளும் அரச பதவி யையும் பெறுவர்; அதற்குமேல், அன்று திருமாலுக்கும் எட்டாத திருவடியையும் பெறுவர்.
------------
ஆக்கியோன்
104. அந்தாதி செய்தான் அடியாரை யீடேற்ற
அந்தாதி யாமருணை யண்ணலைச்--சந்ததமும்
மெய்யன் அருணகிரி மேவுங் குகைமீதில்
அய்யன் நமச்சிவா யன் 3

(பொ-ரை.) எப்பொழுதும் உண்மையையே உரைப் பவனாய்த் திருவருணை மலையின்மேல் மேவும் குகைக் கண் வாழும் ஐயனாகிய நமச்சிவாயன் 'அந்தாதி' என்று பெயர் பூண்ட அண்ணலைக் குறித்து அடியரா வாரை உய்விக்கக் கருதி அந்தாதி என்னும் நூலினைச் செய்தான்.
---------
குறிப்பு- இப்பாட்டு தஞ்சை சரசுவதி மகால் 136 137 எண்ணுள்ள சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
அருணகிரி அந்தாதி முற்றும்
-------
அருணகிரி அந்தாதிப் பாட்டுகளின் முதற்குறிப்பு (பாட்டு எண் )

அச்செல்லா 45 சிரமாலை 32
அஞ்செழுத்தன் 103 சும்மா 65
அஞ்செழுத்தை 81 செப்பரிய ஞானச் 52
அந்தாதி செய்தான் 104 செப்பரிய மால் 38
அருணகிரியந்தாதி 102 செப்பிலிரு 86
அல்ல தொரு 88 சொல்லரிய 48
ஆமென்று 23 தருவாயெனக்கு 75
ஆலம் வருவது 19 தானவர்கள் 94
ஆனவர 63 தானே யெனக்குத் 62
இப்போது 77 தானேயுலகு 46
இருந்து 80 திக்குவேறில்லை 4
இன்றுபோ 7 துயர்கொண்டு 37
இன்றைக்கு 67 நகுமானை 21
உம்மை நினைந் 89 நடக்குங்குலங் 26
உயர்ந்தவர்க்கு 56 நடலையறுத் 90
உரைக்குமடியார் 101 நம்பி யிரு 41
உன்னைக் 55 நரிக்குப் 92
எடுத்த பயனை 44 நினையேன் 78
எடுப்பானுங் 76 நின்று தவம் 64
எமையாளுஞ் 33 நீயே வரல் 49
எல்லார் 71 நீராழி 95
என் செயலாஞ் 61 நீறிடே 58
என்று தரு 42 நீர் கொண்ட 97
என்று நமன் 82 நெருக்குமிவை 68
என்று மருணேச 34 நெறியுண்டா 54
என்ன சனன 57 பரகதிக்கு 59
என்ன தவப்பயனோ 13 பரமனருணேசன் 18
ஏமாந்த 72 பரமனீ 9
ஏனமனந் 35 பரிந்தணிந்த 11
ஏனிருந்து 60 பாராம 6
ஐயா மரப் 100 பிறந்திறக்குந் 93
ஒதக்கடனஞ்சை 22 பின்னறியேன் 29
கங்காதரனே 85 பின்னையொரு 96
கண்டுமிலை 31 புத்திதருஞ் 83
கருணாலயா 98 பூண்ட வகைக் 84
கருத்தறிந்த 30 பெற்றோம் 14
கருத்தி 16 பேசுமவர் 5
கருமா முகில் 36 பேராயிர 79
கற்றதனாற் 53 பேரும் 28
காணாரரி பிரமர் 39 போதுமதி 50
காய நெகிழாமுன் 25 போதையிரு 66<
கார்கொண்ட 2 மண்ணிற் 74
காலன் 8 மனத்திற் 40
காலை மலர் 3 மாண்டு பிறந்து 47
குலமில்லார் 27 மாறுகொண்ட 10
குறியேனிரு 99 மோகமறேன் 91
குறையேது 69 வஞ்சநம 73
கூற்றிருக்கு 51 வரம்பலிக்கு 15
கொண்டநெறி 87 வன்பெருக்கிற் 17
கோடி விதி 20 வெய்ய பிறவி 24
கோல முதற் 12 வேலை விட 70
சாகா வரம் 43
---------------

This file was last updated on 8 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)