உ.வே. சாமிநாதையர் அவர்கள் இயற்றிய
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி
tuRaicai mAcilAmaNi Icar antAti
by U.vE. cAminAta aiyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உ.வே. சாமிநாதையர் அவர்கள் இயற்றிய
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி
Source :
மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் இயற்றிய
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி
பதிப்பாசிரியர் வித்துவான் சு. பாலசாரநாதன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்
பெசன்ட் நகர், சென்னை-90
1995
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு எண் - 133
முதற்பதிப்பு - 1995 - பிரதிகள் 1000
© டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம் பெசன்ட் நகர் - சென்னை - 600090.
விலை ரூ.15/-
Typesetting and Printed by:
SHRI VIGNESH PRINTS
158, Lake View Road, West Mambalam, Madras-600 033.
-----------
முகவுரை
திருவாவடுதுறை நரசிங்கன்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே ஒருகல்
தொலைவில் உள்ளது. திருமூல நாயனார் திருமந்திரம் அருளிய தலம். சம்பந்தர் தமது தந்தையார்
வேள்வி செய்யும் பொருட்டு இறைவனைப் பாடி ஆயிரம் பொற்காசு பெற்றுக் கொடுத்ததைத்
தேவாரம் கூறுகின்றது.
திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பும் இத்தலத்துக்கு உண்டு. பசுவடிவுடன்
உமை பூசித்ததால் ஆவடு துறை என்று வழங்கப்பெறுகிறது. தரும தேவதை பூசித்த தலம்.
இறைவன் பெயர் மாசிலாமணியீசர். இறைவியின் பெயர் ஒப்பிலா முலையம்மை. தலவிருட்சம்
படரரசு. ஆதலால் இத்த லத்திற்குப் பிப்பலாரணியம் எனப் பெயருண்டு.
இங்குள்ள தியாகேசருக்குப் புத்திரத் தியாகர் என்ற பெயரும் உண்டு. இவர் ஆசனம்
வீரசிங்காசனம்; நடனம் சுந்தர நடனம். திருமாளிகைத்தேவர் திருக்கோயில் ஆதீன மடத்தில்
ஸ்ரீ நமச்சி வாய மூர்த்திகளுக்குப் பக்கத்தில் விளங்குகிறது. கோயில் உட்பிராகாரத்து வடமேற்கு
மூலையில் திருமூலர் திருக்கோயில் இருக்கிறது. தை மாதத்தில் திருமூலர் உற்சவம்
நடைபெறுகின்றது. தரும தேவதையைப் பெருமான் வாகனமாகக் கொண்டதோடு தம்
சந்நிதியில் இருக்கும்படி வரமும் அளித்தார். மாணிக்கவாசகருக்கு இறைவன் குரு வடிவில்
காட்சி கொடுத்ததும் இந்தத் தலத்திலேதான். சபை போதி அம்பலம். தாண்டம் மகாதாண்டவம்.
தீர்த்தம் - கோமுக்தி தீர்த்தம்.
திருக்கயிலையில் அம்மை இறைவனோடு பொழுதுபோக்காகச் சூதாடியபோது, இறைவன்
வெற்றி அடைவதைக் கண்டு சிறிது மனம் வேறுபட இறைவன் 'மாடே போ' என்று கூற
அதனால் அம்மை பசு வடிவம் கொண்டார். அந்த வடிவை இறைவன் ஆணையின் வண்ணம்
இத்தலத்திற்கு வந்து வழிபட்டுப் போக்கிக் கொண்டார்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிஅருளிய திருப்பதிகங்களை உடையது.
சேந்தனார் பாடிய திருவிசைப் பாவும், ஸ்ரீ சாமிநாத மனிவர் இயற்றிய தல புராணமும்,
மகாவித்துவான் பிள்ளையவர்கள் இயற்றிய யமக அந்தாதியும், தொட்டிக்கலை சுப்பிரமணிய
முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக் கோவையும், துறைசை வெண்பா அந்தாதியும்
இத்தலத்திற்கு உள்ளன.
ஸ்தல விசேடம்
திருவாவடுதுறையிலுள்ள மடம் மிகச் சிறப்புடையதாயிருப்பது அவ்வூருக்கு முக்கியமான
பெருமை. அதனோடு இயல்பாகவே அது தேவாரம் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், தம்
தந்தையார் செய்த வேள்விக்காக ஆயிரம் பொன் சிவபெருமானிடமிருந்து அத்தலத்தில்
பெற்றனர். அதனால் அங்கே உள்ள தியாகராச மூர்த்திக்குச் சுவர்ணத் தியாகர் என்ற பெயர்
வழங்கும்.
சுவாமியின் திருநாமம் மாசிலாமணியீசர். அம்பிகையின் திரு நாமம் அதுல்ய குசநாயகி
என்பது. ஒருமுறை அம்பிகை சிவஆக்ஞையால் அங்கே பசு வடிவத்துடன் வந்து அங்குள்ள
தீர்த்தத்தில் நீராட, அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் அத்தலத்திற்குக் கோமுக்தி,
கோகழி என்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற காலத்து அப்பிராட்டியைச்
சிவபெருமான் அணைத்து எழுந்தார் என்பது புராண வரலாறு. அதற்கு அடையாளமாக
அணைத்து எழுந்த நாயகர் என்ற திருநாமத்தோடு ஒரு மூர்த்தி அங்கே எழுந்தருளியிருக்கிறார்.
உற்சவத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே.
அத்தலத்தின் ஆலயத்தில் பல அரச மரங்கள் உள்ளன. அவை படரும் அரசு. மண்டபத்தின்
மேலும் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தல விருட்சம் அந்த அரசே. அதனால் அதற்கு
அரசவனம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன் மார்களுள்
ஒருவருமாகிய திருமூலர் இத்தலத்தில் தவம் புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர்.
ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.
மடத்தைச் சார்ந்த ஓரிடத்தில் திருமாளிகைத்தேவர் என்னும் சித்தருடைய ஆலயம் உண்டு.
போகரின் சிஷ்யரும் திருவிசைப்பா பாடியவர்களுள் ஒருவருமாகிய அவர் ஒரு சமயம் அக்கோயில்
மதில்களின் மேலுள்ள நந்தி உருவங்களை யெல்லாம் உயிர்பெறச் செய்து ஒருபகையரசனோடு
போர் புரிய அனுப்பினாரென்பது பழைய வரலாறு. அதுமுதல் அவ்வாலய மதிலின் மேல்
நந்திகளே இல்லாமற் போயினவாம்.
அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள இடபம் மிகப் பெரிது. "படர்ந்த அரசு வளர்ந்த இடபம்" என்று
ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.
அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இயல்பாகவே சிறப்புள்ள
அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும் சிறப்புடையதாக விளங்குகிறது.
திருவாவடுதுறை மடத்தில் குருபூஜை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் ரதோற்சவம்
நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். ரதசப்தமி அன்று தீர்த்தம்.
பெரும்பாலும் ரத சப்தமியும் குருபூஜையும் ஒன்றை யொன்று அடுத்தே வரும். சில வருஷங்களில்
இரண்டும் ஒரேநாளில் வருவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும்
ஸ்ரீ கோமுக்தீசர் வீதியில் திருவுலா வருவார். அப்பொழுது ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன்
வந்து உற்சவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார். தியாகராச மூர்த்தியின் நடனமும்
உண்டு. அதற்குப் பந்தர்க்காட்சி என்று பெயர்.
தல விநாயகர் இருவர்: 1. துணை வந்த விநாயகர். இவர் அம்பிகை பசுவடிவம் கொண்டு
வந்தபொழுது துணையாக வந்தவர். 2. அழகிய விநாயகர். இவர் அகத்திய முனிவருக்குப்
பஞ்சாட்சர உபதேசம் செய்தவர்.
சுவாமியின் திருநாமங்கள்: ஸ்ரீ ஸ்வயம் வியக்தேசுவரர், பிரகாச மணிநாதர், மாசிலாமணியீசர்,
கோமுக்தீசர், கோகழிநாதர், அணைத்தெழுந்த நாயகர், பூகைலாஸசுவரர், புத்திரத்தியாகர்,
போதிவன நாதர், போதியம் பலவாணர், மகாதாண்டவேசுரர், அர்த்தத் தியாகர், முக்தித்தியாகர்,
சிவலோகநாயகர் என்பனவும் இவற்றின் வேறு பரியாய நாமங்களும் உண்டு.
தேவியாரின் திருநாமங்கள்: அதுல்யகுசநாயகி, ஒப்பிலாமுலையம்மை, ஒப்பிலாள்.
தலத்தின் திருநாமங்கள்: கோமுக்தி, கோகழி, திருவாவடுதுறை, பூகைலாசம், நந்தி நகர்,
தியாகபுரம், போதிவனம், அரசவனம், மகாதாண்டவபுரம், வேதபுரம், சித்தபுரம், நவகோடி
சித்தபுரம், முக்திக்ஷேத்திரம், சிவபுரம்.
தீர்த்தங்கள் மூன்று:
1. முக்தி தீர்த்தம் அல்லது கோமுக்தி தீர்த்தம், 2. கைவல்ய தீர்த்தம், 3. பத்ம தீர்த்தம்
என்பன. இவை முறையே திருக்கோயி லின் எதிரிலும், திருக்காவிரியிலும், ஸ்ரீ கொங்கணேசுவரர்
கோயிலின் பக்கத்திலுமுள்ளன.
2. விருட்சம்: திருவரசுகள் படர்ந்து விளங்குதலால் இவை படர்ந்த அரசுகள் என்றும்
நிலவரசுகள் என்றும் வழங்கப்படும்.
சபை: போதியம்பலம் அல்லது அரசம்பலம்.
நந்தி: தருமநந்தி தேவர்.
இத்தலத்தில் சிவபெருமான் நிகழ்த்தியருளிய விசேடங்கள்:
1. லீலார்த்தமாக நேர்ந்த பசுவடிவத்தை உமாதேவியார்க்கு நீக்கி அணைத்து எழுந்து நின்று
இத்தலத்தைக் கைலையங்கிரியாகக் காட்டினார்.
2. தமது கட்டளைப்படி தேவர்கள் படர்ந்த அரச விருட்சங்களாகத் தோன்றி விளங்க அவற்றின்
நிழலில் எழுந்தருளியிருந்தனர்.
3. மகப்பேறு கருதிவந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்தத் தலத்தைத் திருவாரூராகவும்,
தம்மைத் தியாகேசராகவும் காட்டிப் புத்திரப்பேறும் அளித்தனர்.
4. தம்மைப் போற்றிய தருமதேவதையை இடப வாகனமாகக் கொண்டதன்றிச் சந்நிதியில்
அரச விருட்சத்தின் நிழலில் கோயில் கொண்டிருக்கும்படிக்கும் வரமளித்தனர்.
5. தேவர்களும் முனிவர்களும் செய்த பிரார்த்தனைக்கு இரங்கி அரச விருட்சத்தின் நிழலில்
அமைந்த அம்பலத்தில் மகா தாண்டம் புரிந்தனர்.
6. திருமூல நாயனாரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தத்
திருவருள் புரிந்தனர்.
7. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குப் பொற்கிழி அளித்தனர்.
8. சில முனிவர்களுக்குச் சிவஞானோபதேசம் செய்தருளினர்.
9. சில அந்தணர்களுக்கு வேதத்தை ஓதியருளினர்.
10. போகர் முதலிய சித்தர்களுக்கும், நவகோடி சித்தர்களுக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம்
அட்டமாசித்திகளையும் பிற வற்றையும் அருளினர்.
இத்தலத்தில் கோச்செங்கோட் சோழ நாயனார் திருப்பணி செய்து பேறு பெற்றாரென்றும்,
சித்தர்கள் பலர் எப்பொழுதுமே தங்கியிருக்கின்றார்களென்றும் புராணங் கூறும்.
ஸ்ரீ அணைத்தெழுந்த நாயகர்: இவர் உமாதேவியாரை அணைத்து எழுந்த கோலமாக
எழுந்தருளியிருப்பவர். உற்சவ முடிவில் கோமுக்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பவர்
இவரே.
ஸ்ரீ தியாகேசர்: முசுகுந்தருக்குச் சிவபெருமான் திருவாரூர்த் தியாகேசராகக் காட்சி கொடுத்தது
தொடங்கி இவர் சந்நதி இங்கே உளதாயிற்று. இவர் வீரசிங்காதன-முடையார். இவருடைய
நடனம் சுந்தர நடனம். உற்சவத்தில் திருத்தேர் ஊர்ந்து அருள்பவர் இவரே. இவரது பந்தர்க்
காட்சி மிக அற்புதமானது. திருவாரூரில் ஸ்ரீதியாகராசர்க்குள்ள சிறப்புக்கள் இங்கும் உள்ளன.
மூவராலும் பாடப்பெற்ற தலம்.
"ஆவடு துறைமா சிலாமணி ஞானத்
தியாகர் ஒப்பிலா முலைதிகழ்கோ முக்தி"
என்பது சிவக்ஷேத்திர விளக்கம்.
கல்வெட்டுக்கள்: இத்திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களாகிய முதலாம் பராந்தகன்,
முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், அவனது மகனாகிய விசயராசேந்திரன்,
முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜதேவன் முதலானோர்
காலக் கல்வெட்டுக்களும் பாண்டியர்களுள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்துக்
கல்வெட்டு ஒன்றும் இருக்கின்றன. இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுக்களுக்கு மேல்
உள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும் போற்றப்படுகின்ற
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களைத் தமிழ் உலகம் நன்கு
அறியும். அவர்களுடைய அரும்பெரும் முயற்சியால் பல சங்ககால நூல்களும், ஐம்பெரும்
காப்பியங்களுள் மூன்றும், பிரபந்த நூல்களும், புராணங்களும் தமிழுலகில் பீடுநடை
போடுகின்றன.
ஐயரவர்கள் பிறந்த ஊர் உத்தமதானபுரம். தந்தையார் பெயர் வேங்கட சுப்பிரமணிய ஐயர்.
இளமையில் தந்தையாரிடம் கல்வி பயின்றார். பின்பு அரியலூர் சடகோப ஐயங்கார் முதலிய
பலரிடம் தமிழ் நூல்களைக் கற்றார். அதற்குப் பிறகு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களிடம் திருவாவடுதுறை ஆதீனத்திலேயே இருந்து கொண்டு 1871 முதல்
1876 வரை ஆறு ஆண்டுகள் இலக்கிய இலக்கண நூல்களைப் பாடம் கேட்டார். பிள்ளையவர்ள்
காலமான பின்பு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்பால் 1880 வரை பல நூல்களைப் பாடம் கேட்டார்.
ஐயரவர்களுக்கு உடல், உணர்வு, கல்வி முதலிய எல்லாவற்றாலும் தாம் உருவா யினமை
திருவாவடுதுறை ஆதீனத்தாலேயே என்ற எண்ணம் வாழ்நாள் பூராவும் நிலைத்திருந்தது.
பின்பு கும்பகோணம் அரசியலார் கல்லூரியில் வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களால்
தமிழாசிரியர் பதவி கிடைத்தது. சங்கநூல்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து திருத்தமுறப்
பதிப்பித்தார்கள். வெளி நாட்டு அறிஞர்களும் போற்ற வாழ்ந்தவர். திருவாவடுதுறையில்
இருந்த காலத்தில் தினந்தோறும் ஸ்ரீகோமுத்தீசுவரர் விஷயமாக ஒவ்வொரு செய்யுள்
இயற்றி வந்தார்கள். அதுவே மாசிலாமணியீசர் அந்தாதியாக அமைந்தது. இதற்குச் சான்று
57-ஆவது பாடலும், 83-ஆவது பாடலும். இந்நூலில் தேவார, திருவாசகக் கருத்துக்கள்
மிளிர்கின்றன. பதிப்பு இலக்கிய கர்த்தாவாகிய ஐயரவர்கள் இந்நூலைப் பாடியதன் வாயிலாகப்
படைப்பு இலக்கிய கர்த்தாவாகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலிற்கு
அடியேன் சிறுகுறிப்புரை எழுதிச் சேர்த்துள்ளேன். இந்நூல் வெளியிட திருவாவடுதுறை
ஆதீன ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் மிகச்சிறிய தொகையை அன்பளிப்பாக
அளித்துள்ளார்கள்.
இதுவரை அச்சாகாமல் இருந்த இந்நூலினை அன்னாரது திருஉருவச்சிலை திறப்பு விழாவின்
போது அச்சிட்டுத் தமிழ் அன்பர்களுக்கு நூல்நிலையம் அளிக்கின்றது.
இந்நூல் அச்சாகும்போது உடனிருந்து ஒப்புநோக்குதல் முதலிய பணிகளைச் செய்தவர்
திரு.சாயிராமன்.
இந்நூலை நன்கு அச்சிட்டுக் கொடுத்த ஸ்ரீ விக்னேஷ் பிரிண்டர் அச்சக உரிமையாளர்
திரு கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி.
பெசன்ட் நகர் வித்துவான் சு.பாலசாரநாதன்,
சென்னை - 90 15.6.1995 ஆராய்ச்சித்துறை,
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.
----------------
1 திருஞானசம்பந்தர் தேவாரம் (மூன்றாம் திருமுறை) நாலடி மேல்வைப்பு
பண் - காந்தார பஞ்சமம் திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறைத் தேவாரத் திருப்பதிகங்கள்
1. இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள்ஆவடுதுறை அரனே.
2. வாழினும் சாவினும் வருந்தி னும்போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே;
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
3. நனவினும் கனவினும் நம்பி உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே.
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள்ஆ வடுதுறை அரனே.
4. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள்ஆவடுதுறை அரனே.
5. கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருள்ஆவடுதறை அரனே.
6.வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை அரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே.
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை அரனே.
7.வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை அரனே.
8. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை அரனே.
9. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை அரனே.
10. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன்னடியலால் அரற்றாதென்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
11. அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணகர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.
---------------
2 திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் (ஆறாம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்
1. நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக்
கற்பகமாய் அடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
2. மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான்
தன்னைத் தன்னானைத் தன்னொப்பார் இல்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை எந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
3. பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
4. பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதுண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
5.ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தின் உச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6. ஏற்றானை எண்தோள் உடையான் தன்னை
எல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை
நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
7. கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
கடல்வரைவான் ஆகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
8. மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ ஏந்தும்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன்றுடையான் தன்னைப்
பையா டரவ மதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
9. வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப்
படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட உதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
10. பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
திருமார்பிற புரிவெண்ணூல் திகழ்ப்பூண்ட
அந்தணனை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே
11. தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான்
தன்னைத் தக்கன்றன் பெருவேள்வி
தகர்த்தான் தன்னைப் பிரித்தானைப் பிறைதவழ்செஞ்
சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த
அரக்கன்தன்னை நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே.
3 திருநாவுக்கரசர் தேவாரம் (நாலாம் திருமுறை) திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
1. மாயிரு ஞாலமெல்லா மலரடி வணங்கும்போலும்
பாயிரு கங்கையாளைப் படர்சடை வைப்பர்போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கம்பொன்
ஆயிரம் கொடுப்பர்போலும் ஆவடு துறையனாரே.
2. மடந்தைபா கத்தர்போலும் மான்மறிக் கையர்போலும்
குடந்தையிற் குழகர்போலும் கொல்புலித்தோலர்போலும்
கடைந்தநஞ் சுண்பர்போலும் காலனைக் காய்வர்போலும்
அடைந்தவர்க் கன்பர்போலும் ஆவடு துறையனாரே.
3.உற்றநோய் தீர்ப்பர்போலும் உறுதுணை யாவர்போலும்
செற்றவர் புரங்கண் மூன்றும் தீயெழச் செறுவர்போலும்
கற்றவர் பரவியேத்தக் கலந்துலந் தலந்துபாடும்
அற்றவர்க் கன்பர்போலும் ஆவடு துறையனாரே
4. மழுவமர் கையர்போலும் மாதவள் பாகர்போலும்
எழுநுனை வேலர்போலும் என்புகொண் டணிவர்போலும்
தொழுதெழுந் தாடிப்பாடித் தோத்திரம் பலவுஞ்சொல்லி
அழுமவர்க் கன்பர்போலும் ஆவடு துறையனாரே
5. பொடியணி மெய்யர்போலும் பொங்குவெண் ணூலர்போலும்
கடியதோர் விடையர்போலும் காமனைக் காய்வர்போலும்
வெடிபடு தலையர்போலும் வேட்கையாற் பரவுந்தொண்டர்
அடிமையை ஆள்வர்போலும் ஆவடு துறையனாரே
6. வக்கரன் உயிரைவவ்வக் கண்மலர் கொண்டுபோற்றச்
சக்கரம் கொடுப்பர்போலும் தானவர் தலைவர்போலும்
துக்கமா மூடர்தம்மைத் துயரிலே வீழ்ப்பர்போலும்
அக்கரை யார்ப்பர்போலும் ஆவடு துறையனாரே
7. விடைதரு கொடியர்போலும் வெண்புரி நூலர்போலும்
படைதரு மழுவர்போலும் பாய்புலித் தோலர்போலும்
உடைதரு கீளர்போலும் உலகமும் ஆவர்போலும்
அடைபவர் இடர்கடீர்க்கும் ஆவடு துறையனாரே
8. முந்திவா னோர்கள்வந்து முறைமையால் வணங்கியேத்த
நந்திமா காளரென்பார் நடுவுடை யார்கணிற்பச்
சிந்தியா தேயொழிந்தார் திரிபுரம் எரிப்பர்போலும்
அந்திவான் மதியஞ்சூடும் ஆவடு துறையனாரே
9. பானமா ரேனமாகிப் பாரிடந் திட்டமாலும்
தேனமர்ந் தேறுமல்லித் திசைமுக முடையகோவும்
தீனரைத் தியக்கறுத்த திருவுரு உடையர்போலும்
ஆனரை ஏற்றர்போலும் ஆவடு துறையனாரே
10. பார்த்தனுக் கருள்வர்போலும் படர்சடை முடியர்போலும்
ஏத்துவர் இடர்கடீர இன்பங்கள் கொடுப்பர்போலும்
கூத்தராய்ப் பாடியாடிக் கொடுவரி அரக்கன்றன்னை
ஆர்த்தவாய் அலறுவிப்பார் ஆவடு துறையனாரே.
-------------- --------------
1. மஞ்சனே மணியுமானாய் மரகதத் திருளுமானாய்
நெஞ்சுளே புகுந்துநின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சும்போ தாகவந்து துணையெனக் காகிநின்று
அஞ்சலென் றருளவேண்டும் ஆவடு துறையுளானே.
2. நானுகந் துன்னைநாளும் நணுகுமா கருதியேயும்
ஊனுகந் தோம்புநாயேன் உள்ளுற ஐவர்நின்றார்
தானுகந் தேயுகந்த தகவிலாத் தொண்டனேனான்
ஆனுகந் தேறுவானே ஆவடு துறையுளானே.
3. கட்டமே வினைகளான காத்திவை நோக்கியாளாய்
ஒட்டவே ஒட்டிநாளும் உன்னையுள் வைக்கமாட்டேன்
பட்டவான் தலைகையேந்திப் பலிதிரிந் தூர்கடோறும்
அட்டமா உருவினானே ஆவடு துறையுளானே.
4. பெருமைநன் றுடையதில்லை என்றுநான் பேசமாட்டேன்
ஒருமையால் உன்னையுள்கி உகந்துவா னேறமாட்டேன்
கருமையிட் டாயவூனைக் கட்டமே கழிக்கின்றேனான்
அருமையா நஞ்சமுண்ட ஆவடு துறையுளானே.
5. பெருமைநான் றுடையதில்லை என்றுநான் பேசமாட்டேன்
ஒருமையால் உன்னையுள்கி உகந்துவா னேறமாட்டேன்
கருமையிட் டாயவூனைக் கட்டமே கழிக்கின்றேனான்
அருமையா நஞ்சமுண்ட ஆவடு துறையுளானே.
6.துட்டனாய் வினையதென்னுஞ் சுழித்தலை அகப்பட்டேனைக்
கட்டனா ஐவர்வந்து கலக்காமைக் காத்துக்கொள்வாய்
மட்டவிழ் கோதைதன்னை மகிழ்ந்தொரு பாகம்வைத்து
அட்டமா நாகமாட்டும் ஆவடு துறையுளானே.
7. காரழல் கண்டமேயாய் கடிமதிற் புரங்கள்மூன்றும்
ஓரழல் அம்பினாலே உகைத்துத்தீ எரியமூட்டி.
நீரழல் சடையுளானே நினைப்பவர் வினைகடீர்ப்பாய்
ஆரழல் ஏந்தியாடும் ஆவடு துறையுளானே.
8. செறிவிலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன்
குறியிலேன் குணமொன்றில்லேன் கூறுமா கூறமாட்டேன்
நெறிபடு மதியொன்றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையுளானே.
9. கோலமா மங்கைதன்னைக் கொண்டொரு கோலமாய
சீலமே அறியமாட்டேன் செய்வினை மூடிநின்று
ஞாலமாம் இதனுளென்னை நைவியா வண்ணநல்காய்
ஆலமா நஞ்சமுண்ட ஆவடு துறையுளானே.
10. நெடியவன் மலரினானும் நேர்ந்திரு பாலுநேடக்
கடியதோர் உருவமாகிக் கனலெரி யாகிநின்ற
வடிவின வண்ணமென்றே என்றுதாம் பேசலாகார்
அடியனேன் நெஞ்சினுள்ளார் ஆவடு துறையுளானே.
11. மலைக்குநே ராயரக்கன் சென்றுற மங்கையஞ்சத்
தலைக்குமேற் கைகளாலே தாங்கினான் வலியைமாள உவப்பிலா
விரலாலூன்றி ஒறுத்தவற் கருள்கள்செய்து
அலைத்தவான் கங்கைசூடும் ஆவடு துறையுளானே.
4 சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்
1. கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்கணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
2. மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயால்
கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே தேவ
னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
3. ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா
உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளும்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
4. கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
5. வந்த வாள் அரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
6. குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த
னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன் ஒருபி
ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ
னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7. வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே
மெய்ய னே அட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
8. கோதி லா அமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டி
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேஎனை அஞ்சலென் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
9. வான நாடனே வழித்துணை மருந்தே மாசி
லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும் ஈடு தாங்கிய
மார்புடையானே தேனெய் பால்தயிர் ஆட்டுகந்
தானே தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சலென் றருளாய் ஆர்எ
னக்குன்றே வமரர்கள் ஏறே.
10. வெண்ட லைப்பிறை கொன்றையும்
அரவும் வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
-சுந்தரர்
--------------------------
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி
திருச்சிற்றம்பலம்
1. வாழும் துறைசை வளர்மாசி லாமணி வள்ளல்மலத்
தாழும் படிஅடி யாரைஒட் டாஅருள் ஆகரனைச்
சூழும் படிஉண் விடையாய் எனத்துதி சொல்லும் துயர்
போழும் படிநுங் களை இனி தாள்வன்நற் புத்தியிதே.
குறிப்புரை:
1. துறைசை - திருவாவடுதுறை. மாசிலாமணி வள்ளல் - திருவாவடுதுறையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான். மலம் - ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்கள். அருளாகரன் - அருளுக்கு இருப்பிடமானவன். உள்சூழும்படி - உள்ளத்தில் நிறைந்திருக்குமாறு. விடையாய் - இடபவாக னனே. துயர்போழும்படி - துன்பங்கள் போகும்படி. இனிதுஆள்வான் இனிதாக ஆட்கொள்வான். இதுநற்புத்தி -இதுவே அறிவுரையாகும்.
----
2. புத்தி இலாதவன் நின்சீரை வாழ்த்திப் புகழுதற்குப்
பத்தி இலாதவன் நின்அடி யார்கள்தம் பால் மருவச்
சுத்தி இலாதவன் எங்ஙனுய் வேன்வளந் தோய்திருக்கோ
முத்தியில் ஆதவன் நேர்மாசி லாமணி முன்னவனே.
2. சுத்தி இலாதவன் - தூய்மையற்றவன். எங்கன் - எப்படி. கோமுத்தியில் திருவாவடுதுறையில். ஆதவன்நேர் - சூரியனுக்கு ஒப்பாகும். மாசிலாமணியின் ஒளிக்குச் சூரிய ஒளி உவமை.
-------
3. முன்னவ னேதொல் மரத்தடி மேவி முனிவர்க்கிதம்
சொன்னவ னேதுறை சைக்கர சேஎச் சுரர்களுக்கும்
மன்னவ னேபவ னேமாசி லாமணி வன்னிஒளி
அன்னவ னே அடி யேனையும் ஆளல் அழகுஉனக்கே.
3. தொல் - பழமை. மரம் - கல்லாலமரம். மேவி - பொருந்தி. இதம் - உபதேசம். முனிவர் -சனகாதி முனிவர்கள். இதம் - நன்மை. சுரர்களுக்கு மன்னவன் - மகாதேவன். பவன் - தோற்றத்துக்கு காரணமானவன். வன்னி ஒளி அன்னவன் - அக்கினியின் ஒளிபோன்ற சோதி வடிவினன்.
-------
4. அழகார்தென் கோமுத்தி வாழ்மாசி லாமணி அண்ணலைத்தேன்
ஒழுகார் அணியும் சடையாள வாள்கண் உமையொடும்வாழ்
குழகாவென் றேத்திற் குறைதீர்த்து அடியர் குழாத்தினொடும்
பழகாத பாவம் தொலைத்தே அருளுவன் பாவிநெஞ்சே.
4. அண்ணலை இறைவனை. ஆர் ஆத்தி. வாள்கண் கூர்மையான ஒளிபெற்ற கண். ஏத்தி - துதித்து. குழகா - அழகனே.. 'கொட்கப்பெயர்க்கும் குழகன்" (திருவாசகம் 3, 12)
----------
5. பாவித்து அறிகிலன் நின்னை நின்பாத பதுமத்தினைச்
சேவித்து அறிகிலன் மங்கையர் மோகத் தினையகல
ஓவித்து அறிகிலன் எங்ஙன்உய் வேன்நன்கு உணர்ந்திடும் அவ்
ஆவிக்கு அமுதனை யாய்திருக் கோமுத்தி அற்புதனே.
5. பாவித்து - தியானித்து, பாதபதுமம் - தாமரை மலர் போன்ற பாதம். அகல - அகலும்படி, ஓவித்து - நீக்கி. ஆவிக்கு - உயிர்களுக்கு. அமுதனை யாய் - அமிர்தம் போன்றவனே.
---------
6. அற்புத னேதிருக் கோமுத்தி வாண அமுதுஅயில்கா(து)
அற்புதர் வாழ முனமாலம் உண்ட தயாளஉடல்
புற்புதம் நேர்வ தெனநினைந் தேநின் புரா ணம்படித்து
அற்புத ஓப்பி உள்ளே நினைக்காண அருள்புரியே.
6. அயில்காது - உண்ணாமல், அற்புதர் -தேவர்கள். முனம் - முன்பு, ஆலம் - ஆலகால விடம். புற்புதம் - நீர்க்குமிழி.
---------
7. அருளிடத் தாய்திருக் கோமுத்தி நாத அமரரன்று
வெருளிடத் தாய விடமயின் றோய்விகிர் தாகொடிய
மருளிடத் தாதன் றனைப்போகட் டேயிவ் வருத்தமறத்
தெருளிடத் தாரொடும் சேரச் செயாத செயலெவனே.
7. அமரர் தேவர்கள். வெருளிடத்தாய பயப்படுவதற்குக் காரணமான. விடம் - ஆலகால விடம். அயின்றோய் - பருகினோய். விகிர்தா - கடவுளே. மருளிடத்து - மயக்கத்திற்கு இருப்பிடமான. ஆதன்றனை - அறிவிலியை. போகட்டே - போகவிட்டு. தெருளிடத்தார் - தெளிந்த ஞானிகள். எவனே - என்னே.
---------
8. செயலோடு வாக்கும் மனமும் நின்றாளைச் செறிதலின்றி
அயலோடும் ஈங்கிதற்கு யானென்செய் கேனர வாபரணா
கயலோடு நீர்ப்பொன்னிக் கோமுத்தி வாண கவலையொழிந்
துயலோ டுறஅடி யேற்கோ ருபாயம் உரைத்தருளே.
8. செயலோடு வாக்கு மனம் - மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களும். அயல்ஒடும் - வேறுபக்கம் செல்லும். உயல் - உய்யும் வண்ணம்.
----
9. உரையாமல் நின்பெயர் நின்சீரை நித்தமும் உன்னியுன்னிக்
கரையாமல் நாள்கள் பலகழித் தேபுன் கவலைஉற்றேன்
வரையாமல் நின்னை வழுத்துவன் ஆளல் வழக்கதன்றோ
திரையா மலக மலிதிருக் கோமுத்திச் சிற்பரனே.
9. வரையாமல் - எல்லையில்லாமல். ஆளல் - ஆண்டருளல். திரைஆமலகம்- கூட்டமான நெல்லிமரம். சிற்பரன் - அறிவுக்கு எட்டாதவன். சிவசிவ வெண்பாசெய்.1.
-------
10. சிற்பர அம்பலத் தானந்த நாடகம் செய்துஅருள்வோய்
நற்பர மேட்டி நளினா தனத்தன் நணுகரிய
பொற்புஅர வான்றுறை சைக்கர சேயெனப் புந்திநினைந்
தற்பக லேத்தில் கிடையாப் பொருளு மவனியுண்டே.
10. அம்பலம் - மன்று. நளினாதனத்தன் - தாமரையை இருப்பிடமாகவுடையவன் (பிரமன்). பொற்பு - தன்மை. அர - அரனே. அல்பகல் - இரவும்பகலும். ஆன்துறைசை - திருவாவடுதுறை. அவனி - பூமி.
---------
11. அவமே வருந்தி யகமே நவிற்றி யலைந்தலைந்து
தவமே செயாத தவறுடை யேனையுந் தாங்கனன்றே
நவமே தருவளக் கோமுத்தி நாத நவில்பரம சிவமே
கவாகனன் முன்னா மமரர் சிகாமணியே.
11. அவமே - வீணாக. அகமே நவிற்றி - அகங்காரத்தைக் கூறி வெளிப்படுத்தி.
தாங்கல் - தரவ அளித்தல். நவம் - புதுமை. மேகவாகனன் - இந்திரன்.
--------
12. மணிவாக் கருளி மறையவர்க் காத்த வகையினையுள்
எணிவாக்கு மெய்மன மூன்றுநின் றாளிணைக் கீந்துநினைத்
துணிவாக் குறித்தனன் ஆண்டரு ள்வாய்வளச் சோலைவெம்மை
தணிவாக்கு கோமுத்தி மாநகர் வாண தயாநிதியே.
12. மணிவாக்கு அருளி மறையவர் காத்தவகை - மாணிக்கவாசகருக்கு அருளிச் செய்தது. திருவாவடுதுறையில் மாணிக்கவாசகருக்கு மீண்டும் குருந்த மரத்தடியில் காட்சி கொடுத்த செய்தியைத் துறைசைப் புராணத்தால் அறிக. எணி - எண்ணி, இடைக்குறை. வெம்மை - வெப்பத்தை. தணிவாக்கு -தணியச் செய்யும் வாக்கு.
-----
13. தயாநிதி யேகற் பகதரு வேதன தாஇந்திரா
நயாஎன வேமுழு மூடரை ஏத்தி நலிந்துநொந்தேன்
கயாதிகள் மேவுறு கோமுத்தி வாணகங் காதரவெம்
பயாதிகள் தீர்த்தருள் பாலிப்பையோ இந்தப் பாவிக்குமே.
13. தனதா - - குபேரன். நயா - நீதிமானே. கயாதிகள் - குளம் குட்டைகள். பயாதிகள் - அச்சம் முதலிய துன்பங்கள்.
---------
14.பாவூடு உழலும் குழல்போல் அலையுமிப் பாவியின்தன்
நாவூடு மெய்ம்மை யுறுநாள்எந் நாள்நவி லாய்மதியம்
காவூடு செல்லும் திருக்கோ முத்தீச கங்காதரவெண்
சேவூடு மேவும் அழகா கயிலைச் சிவக்கொழுந்தே.
14. பாவு - நெசவுத்தறி. குழல் - நெய்வதற்கு நூல் சுற்றியிருக்கும் கருவி. மதியம் - சந்திரன். வெண்சேவூடு - இடபத்தின் முதுகின் நடு.
---------
15. சிவமார் அடியர் திருக்கூட்டத் தோடு செறிதலின்றி
அவமார் கொடியர் மருள்கூட்டத் தோடும் அணுகிநொந்தேன்
தவமார் முனிவரர் சித்தர்கள் யோகர்கள் தங்கியென்றும்
நவமார் வளத்திருக் கோமுத்தி மேவிய நாயகனே.
15.சிவம்ஆர் - சிவசிந்தனை பொருந்திய. செறிதல் - நெருங்கல். அவம்ஆர் - கேடு பொருந்திய. என்றும் எப்போதும். நவம் புதுமை. ஆர் - பொலியும். மேவிய - பொருந்திய, எழுந்தருளியிருக்கின்ற.
------
16. நாயக கோமுத்தி நாத கங்காதர நஞ்சமுறும்
பாயகத் தூடு பயில்பரந் தாமன் பணிபதத்தாய்
சேயகம் நன்கிலை யேனும் பராமுகம் செய்திடுதல்
தாயகம் உண்டுகொ லோஅடி யேனுயச் சாற்றுதியே.
16. நஞ்சம்உறும் பாய் - விஷத்தையுடைய ஆதிசேடனாகிய படுக்கை. சேய் - குழந்தை. அகம் - மனம். பராமுகம் - அலட்சியம். தாய்அகம் - தாய் மனம். உய - உய்ய.
---------
17. சாற்று கிலேன்நின் பெரும்புகழ் தன்னைத் தளர்ந்துருகிப்
போற்று கிலேன்நின் சரணார விந்தம் புகைசினத்தை
ஆற்று கிலேன்விடை யத்திடை ஓடுறும் ஐந்தினையும்
பாற்று கிலேன்திருக் கோமுத்தி யாய்அருள் பாலிப்பையே.
17. விடையத்திடை -சிற்றின்பத்தில். ஓடுறும் - செல்லும். ஐந்தினையும் ஐம்புலன்களையும். பாற்றுகிலேன் - நீக்கவில்லை.
---------
18. பாலித் திருநதிப் பைதிரக் கச்சிப் பரமமிக
ஆலித் தெழுநதி வேய்ந்தாய் துறைசை அமலவெனை
வாலிக் கனைய மொழியார் மயலில் வருந்தவிட்டே
ஒலித்துப் போற்றவும் வாளா இருத்தல் உனக்கழகே.
18. பாலித்திருநதி - பாலாறு. பைதிரம் - நாடு. பாலாறும் பாயும் தொண்டை நாடு. ஆலித்து - ஆரவாரித்து. எழுநதி - பொங்கி எழுகின்ற நதியாகிய கங்கை. வால்- இளைய. இக்கு - கரும்பு. ஒலித்துப் போற்ற - உரத்த குரலில் துதிக்க. வாளா - சும்மா.
-------
19. உனதார் அருளை உறுவதென் றோதுய ருற்றலைந்து
தனதாஎன் றேபல வீணரை ஏத்தித் தளருகின்றேன்
வினதா சுதன்பதி போற்றும் துறைசை விமலவையா ன்னதா பத
சனகா தியர்தம்மை அன்று ஆண்டவனே.
19. தனதாஎன்றே (ஒலிக்குறிப்பு) தனவென்றும் தாவென்றும். வீணர் - அற்பர்கள். ஏத்தி - துதித்து. வினதாசுதன் - கருடன். பதி -தலைவன் - திருமால். ஐயானன - ஐந்து முகங்களையுடையவனே. தாபத சனகாதியர் -சனகாதி முனிவர்கள்.
---------
20. ஆண்டாண்டு தோறும் நுகர்போகம் தன்னை அனுபவித்தே
மாண்டாங் குறுவதல் லால்எவர் தாம்மன மேநிலையார்
சேண்டாங்கு மாளிகைக் கோமுத்தி யானைத் திகம்பரனைப்
பேண்டாங்கு எனையெனப் போற்றுதி யோடும் பிறப்பிறப்பே.
20. மாண்டு ஆங்கு உறுவதல்லால் - இறந்து மீண்டும் பிறப்பதல்லால். மனம்
நிலையார் - பேண்தாங்கு எனைஎன - மனமே போற்று என்றவாறு.
--------
21. பிறக்கும் துயரமும் நோய்பல வாட்டப் பெரிதுமயர்ந்
திறக்கும் துயரமும் யானினி நீங்க வினிதருள்வாய்
நறக்குந் தளவுமை வாமத் தினாய்அர நாமத்தினாய்
சிறக்கும் தமிழ்த்திருக் கோமுத் திமேய திகம்பரனே.
21. நறக்குந்தளஉமை - மட்டுவார்குழலியம்மை. நறவு - தேன். குந்தளம் - கூந்தல்.
---------
22. திகம்பரன் தில்லை வனத்தாடு றும்குஞ் சிதபதத்தான்
இகம்பரம் கான்ற பதமாக்கொள் வோர்க்குஅரு ளெம்பெருமான்
நகம்பரன் கோமுத்தி நாயகன் தேவர்கள் நாதனினி
அகம்பர வாத மொழித்து ஆளுவனிவ் வடியனையே.
22. குஞ்சிதபதத்தான் - தூக்கிய திருவடியையுடையவன். இகம் பரம் கான்ற பதம் - இம்மை மறுமை இரண்டையும் விலக்கிய நிலை. நகம் - மலை. அகம்பரவாதம் ஒழித்து என் மனமானது புறச்சமயங்களில் ஈடுபடாதபடி நீக்கி.
------
23. அடியோ வதலங் கடந்துசெல் லாநின்ற தம்புலியார்
முடியோ விசும்பு கடந்ததெவ் வாறுனை முன்னுவனியான்
துடியோ வரிய கரத்தாய் துறைசைச் சுராதிபவெப்
படியோ நினைநினைப் பார்கடல் சூழிப் படியினரே.
23. அதலம் - கீழே உள்ள உலகத்துள் ஒன்று. விசும்பு - ஆகாயம். துடியோ அரிய - துடிகரத்தை விட்டு நீங்காத. துடி - உடுக்கை.
------------
24.படியென்றும் இன்றி யொளிர்பர மேட்டி பராபரவெண்
கொடியென்றும் ஏறெனக் கொண்டாய் துறைசை வை கும்பகவா
மடியென்று மேவு மயக்கங்கள் யாவும் மனத்தகன்றுன்
அடிஎன்று கண்டு களிப்பேன் அடியன் அவனியிலே.
24. படி ஒப்பு.என்று -எப்போதும். பரமேட்டி - சிவன். ஏறு - இடபம். மடி சோம்பல். ''இப்படியன் இந்நிறத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே" என்பது தேவாரம்.
-------
25. அவனிமுன் னாயஎண் மேனிய வாடர வங்கத்தவிப்
புவனி கொண்டாடும் துறைசைப் புராதன புத்தமுதே
நவனிதியாம் நின்சர ணாரவிந் தங்கள் நான்பணிந்து
தவனிதம் ஆற்றல்என் றோபல வாய தளர்வகன்றே.
25. அவனி பூமி. முன்னாய - முன்னாகிய. நிதம் - தினந்தோறும். "அட்டமூர்த்தமாகி" திருநாவுக்கரசர் தேவாரம்.
------------
26. தளரத் தளரக் கவலைகள் வந்தெனைத் தாக்கவுமியாழ்
உளரத்த நங்கையர் மோகத்தில் மேவி உழலுகின்றேன்
வளரத்த நந்தன மாக்கோமுத் தீச வழுத்தினர்பால்
கிளரத்த வாசம் கெழுமத்த என்றுஉனைக் கிட்டுவனே.
26. யாழ் உளர் அத்த - யாழைப் பயிலும் கையையுடையவனே. ஹஸ்தம் என்ற வடமொழிச் சொல் தமிழில் அத்தம் என்றாயிற்று. வளர் அத்த நந்தன - வழி எல்லாம் வளர்ச்சியையுடைய சோலை. கிளர் அத்த - விளங்கும் தலைவ. வாசம் கெழுமத்த - மிக்க வாசனை பொருந்திய ஊமத்த மாலை. என்று - எப்பொழுது. உனைக்கிட்டுவன் - உன்னையடை வேன்.
---------
27. கிட்டாத ஒன்றும்உண் டோநின் கருணை கிடைத்திடிற்றே
மட்டார் கடுக்கை வனைசடை யாய்சிறு மைந்தரென்றும்
வட்டாடும் வீதித் திருவா வடுதுறை மாநகராய்
தட்டாதுன் தாளைச் சதாகாலம் ஏந்துத் தகையருளே.
27. தேம்மட்டு ஆர் - இனிய மணம் பொருந்திய. கடுக்கை - கொன்றை. சதாகாலம் - எப்பொழுதும்.
------
28. தகையும் கவிசொலும் சால்பும் பலகலை தாம்பயிலும்
வகையும் சினமகல் வண்ணமும் மேவ வரமருள்வாய்
பகையும் உறவும் இல்லாதாய் அதுல பராபரவெத்
திகையும் விசும்பும் புகழும் துறைசைச் சிவபரனே.
28. தகை - சிறந்த. சால்பு தன்மை. மேவ - பொருந்த. அதுல -ஒப்பற்ற. பராபர - பரம்பொருளே. திகையும் - மானிடரும். விசும்பும் - தேவர்களும்.
----------
29. பரமன்னும் சிந்தை அவரோடு நாளும் பயில்வொழிந்தா
துரமன்னும் தீயர்கள் நட்புறு வேனைத் துறந்துவிடேல்
கரமன்னும் செந்தழ லாய்திரி சூல கபாலஎன்றும்
வரமன்னும் கோமுத்தி வாழ்மா சிலாமணி மாநிதியே.
29. ஆதுரம் - பரபரப்பு. கோமுத்திவாழ் - திருவாவடுதுறையில் எழுந்தருளி-யிருக்கின்ற.
-------
30. மாவொன்று கொன்றை வரநதி வேய்பவ ளச்சடையான்
பாவொன்று கோமுத்தி வாணன்எண் ணான்கறம் பாலித்தருள்
ஆவொன்று பூசை செயவதை யாண்ட வழகறைய
நாவொன்று பெற்றனன் அந்தோ இதற்கென்ன நான்செய்வனே.
30. மா- வண்டு. ஒன்றும் - மொய்க்கும். வரநதி - கங்கை. எண்ணான்கு அறம்
- முப்பதிரண்டு தருமம். ஆ - பசு.
---------
31. செய்வாய் கழையொளிர் கோமுத்தி யானைத்தியா னம்செய்து
நைவாய் அலையவன் நாமங்கள் நாளும் நவில்தலிலாய்
ஐவாய் அரவணி யத்தாவென் றேத்தி அலரவன்தாள்
பெய்வாய் அலையெங் ஙனமுய்தி யோகொடும் பேதைநெஞ்சே.
31. கழை - கரும்பு. நைவாய் - இரங்குதல். அலை - அல்லை. நவில்தல் -
சொல்லுதல். ஐவாய் அரவணி "ஐந்தலை அரவுகொண்டு" சம்பந்தர் ஆவடுதுறை.
-----------
32. பேதையர் நோக்கம் தினநோக்கி யுந்துறு பித்தரொடும்
வாதை அனந்தந் தரம்செய்து மிக்க வருத்தமுற்றேன் சூ
தை அடரும் முலைமலை மாது இடச் சோதிகொடும்
தீதை ஒழித்தருள் கோமுத்தி வாழும் சிவக்கொழுந்தே.
32. வாதை- குற்றம். அனந்தம்தரம் - பலமுறை. சூதை - சூதாடுகருவி. அடரும் - ஒத்த
-----
33. கொழுந்தும் மருவும் மணமார் மலரும் குளிரடிதூய்
அழுந்தும் சுகத்தின ரோடடி யேனையும் ஆளல்நன்றே
விழுந்தும் துதித்தும் கரைவார்க் கருளும் விமலவுறின்
அழுந்துன் பகற்றும் திருக்கோமுத் தீச அருட்கடலே.
33. கொழுந்தும் மருவும் - மருக்கொழுந்து. ஆளல் -ஆட்கொள்ளுதல். அழும்துன்பு - வருந்துதற்குக் காரணமாகிய துன்பம்.
----------
34. அருளா ரிடத்த னவையார் நடத்த னனுதினமும்
தெருளா ரிடத்தன் பிலாமா திடத்தன் திறன்மிகவுற்
றிருள்பா ரிடத்த னிவர்பா ரிடத்த னெவருங்கண்டு
வெருளார் படத்தன் துறைசைப் பிரானென் விழுத்துணையே.
34. அருள் ஆரிடத்தன் - அருளாகிய சக்தியை இடது பாகத்திலே உடையவன். அவை - சபை. தெருளார் - தெளிவில்லாதவர். இருள்பாரிடத்தன் - கரிய பூதப்படையை உடையவன். இவர் பாரிடத்தன் - திரிபுர சங்கார காலத்தில் பூமியைத் தேராக உடையவன். வெருளார் - பிறர் பயப்படும் தன்மையையுடைய. படத்தான் - போர்வை (மதயானை உரி போர்த்து) "காரானை ஈருரிவைப் போர்வையானை" தேவாரம்.
-------------
35. விழுமெழுங் கோமுத்தி எங்கேயென் றென்னை விளம்புமுவந்(து)
எழுமெனை ஆளுவன் கொல்லோ அவனென்று இயம்புந்திசை
தொழும்பசு வாய்வரி னன்றோ அருள்வன் துனைந்தெனுநின்
றழுமலங் காரஞ் சிதைக்கும் அவட்கின் றருளண்ணலே.
35. நற்றாய் இரங்கல்துறை பசுவாய்வரின் அன்றோ அருள்வன். இறைவி இத்தலத்தில் பசு உருவில் ஈசனை வழிபட்டு அருள் பெற்றது. துனைந்து - விரைந்து.
------------
36. அண்ணியர் தங்கள்சிந் தாமணி கோமுத்தி யத்தனித்தன்
பண்ணியன் மென்மொழி பங்கன்கங் காளன் பதமலரை
எண்ணி யருச்சித் தருந்தமிழ் பாடி இறைஞ்சமுன்செய்
புண்ணி யமின்ன தெனவோர்ந் திலனிந்தப் பூதலத்தே.
36. அண்ணியர் - அடைந்தனர். ஓர்தல் - அறிதல். "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே" என்ற தேவாரப் பாடல் கருத்து ஒற்றுமை காண்க -எண்நான்கு அறம் - முப்பத்திரண்டு தர்மம்.
--------
37. பூவோ இரதம் பொருமுனி யோமலை பொன்றலில்கூர்
ஏவோ முகுந்தன் இருசுட ரோவிர தத்துருளா
மாவோ சதுமறை யெண்ணான் கறமும் வளர்த்தருளும்
ஆவோ மனைவளக் கோமுத்தி வாழுமை யானனுக்கே
37. பூ - பூமி. இரதம் - தேர். முனி - வில். மலை - மேருமலை. கூர் ஏ -கூரிய அம்பு. முகுந்தன் - திருமால். இருசுடர் -சூரிய சந்திரர். உருள் சக்கரம். மா - குதிரை. சதுமறை வேதங்கள். ஆ - பசு. மனை - தலைவி.
---------
38. ஐயா னனனை அரவா பரணனை ஐங்கரனைக்
கையா றிரண்டு டையானைப் பெற்றானைக் கவரியுறை
மெய்யானைக் கோமுத்தி மேலானைப் போற்றி விழைந்துநெஞ்சம்
நையாமல் ஏழையர் பால்ஒடு மால்என்ன நான்செய்வவே.
38. ஐயானனன் -ஐந்து முகத்தையுடையவன். நையாமல் -உருகாமல்.
----------
39. நான்எனது என்னும் அபிமானம் அற்றுன் நறுமலர்த்தாள்
தான்எனது என்னும் படியடி யேனுக்குத் தந்தருள்வாய்
வான்எனது என்னும் பொழில்திருக் கோமுத்தி வாணவெழில்
மான்எனது என்னும் விழியொப் பிலாமுலை வாமத்தனே.
39. அபிமானம் பற்று. பொழில் - சோலை. மான் எனது என்னும் விழி மான் தன் விழியோ என மயங்கும் அழகிய விழியுடையாள். ஒப்பிலாமு லையம்மை - இத்தலத்து இறைவியின் பெயர்.
-------------
40. வாமத் தொருத்தி தனையும் துறைசை வரன்குடிலச்
சேமத் தொருத்தி தனையும் கண்டாளிச் சிறுமருங்குல்
காமத் தொருத்தி தனைமறந் தாள்பொற் கமலையெனும்
நாமத் தொருத்தி தனைநிகர்த் தாணிற நங்கையரே.
40. குடிலச்சேமத்து ஒருத்தி -கங்கை. காமத்து ஒருத்தி - தலைவி. பொற்கமலை -பொன் போன்ற மேனியையுடைய கமலாம்பாள். (திருவாரூரில் தியாகேசரை அடைய கமலாம்பிகை தவக்கோலம் பூண்டதை நினைந்து கூறியது. நிறம் பசலை. நங்கையரே என்றது பிற தோழியர்களை. இச்செய்யுள் தோழி கூற்றாக அமைந்துள்ளது.
-------
41. நங்கைத் திருமடந் தைக்குரம் ஈந்தருள் நாரணனோர்
பங்கைக் கவர்ந்தனன் பங்கயனோர் பங்கைப் பற்றினன்விண்
கங்கைச் சடையர் திருக்கோமுத் தீசர் கறுத்துவரும்
வெங்கைக் கரியுரித் தார்க்கத னான்மெய் வெளியென்பரே.
41. நங்கை திருமடந்தை இலக்குமி. சிதம்பரத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் ஆகாசமே திருமேனியாக உடையவன் என்பதை 'மெய்வெளி' என்பது குறிக்கின்றது போலும். (என்சரித்திரம் பக்கம் 643)
-----------
42. வெளியோ டிடவம் புவித்தேர் செலுத்தி விரைந்துசித்துக்
களியோ டிடமுப் புரஞ்செற்றல் போன்ற கதையிருந்தும்
அளியோ லிடும்பொழிற் கோமுத்தி வாண ரருஞ்செயலை
தெளியோ டுணர்தலில் லாதே யுழல்வர் சிலரிதென்னே.
42. வெளிஓடிட -புவித்தேரை அண்டவெளியில் செலுத்தி. சித்து மாயை. களி - ஆணவம். இவற்றிற்கு இடமாகிய முப்புரம். அளி - வண்டு. ஒலிடும் சப்திக்கின்ற.
-----------
43. சிலருரு மாறிவிண் மீதே திரியச் சிலரிரியக்
கலர்சில ரேற்றுரு வஞ்சிதைந் தோடக் கவின்றுறைசை
மலர்பரன் தக்கன் மகஞ்சிதை திட்ட வகையறிந்தும்
பலரவன் சேவடி போற்றா திருக்கும் பரிசெவனே.
43. தக்கன் யாகத்தை அழித்திட்டபோது வானவர் பட்ட இன்னல்களை இச்செய்யுளில் குறிப்பிக்கின்றார். இரிய - ஓட. கலர் ஓட. கலர் - கீழோர். மகம் - யாகம். பரிசு -விதம்
------------
44. எவனைந் தொழிற்கு மிறையென் றியம்பும் இயல்புடையான்
அவனைந் திரக்கு மவர்க்கருள் கோமுத்தி யண்ணலைம்மு
கவனந் திமேனியன் ஞானியர் தந்நெஞ் சகத்துறைவோன்
பவனென் றுநித்தம் துதித்தே அருச்சனை பண்ணுநெஞ்சே.
44. ஐந்தொழில் சிருட்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம். அந்திமேனியன் செவ்வானம் போன்ற சரீரத்தையுடையவன். பவன் - தோற்றத்துக்குக் காரணமானவன். "பவன் எங்கள் பிரான்" திருவாசகம்.
---------
45. பண்ணீர் தினந்துதி பங்கயத் தாளைப் பணிதல்செய்யீர்
எண்ணீர் அவனை இயம்பீ ரெழுத்தஞ் சுமேதமற
நண்ணீ ரவன்றலஞ் செய்யீர் வலமவன் நல்தவரோ
டுண்ணீர்எவ் வாறுநங் கோமுத்தி யானரு ளுற்றிடலே.
45. பங்கயம் - தாமரை தாள். பாதம் ஏதமற - குற்றமற
--------------
46. உற்ற இடத்து நினையோர்ந் துருகல் ஒழியத்துயர்
அற்றஇடத்து நினையேற் கருள்வைகொல் அவ்விரண்டும்
பெற்ற இடத்து நினைந்தார் அலதருள் பெற்றவரார்
கொற்ற இடத்து வலிதெறும் கோமுத்திக் கொற்றவனே.
46. துயர் என்பதனை உற்றவிடத்து அற்றவிடத்து என்பதனோடு கூட்டிப் பொருள் காண்க. கொற்ற இடத்து வலிதெறும் - அரசாங்கத்தால் ஏற்படும் துன்பங்களை நீக்கும். கொற்றவனே - பேரரசனே. கொற்ற விடத்து - கொல்லும் தன்மையையுடைய விடத்தினுடைய. வலி - வலிமையை. தெறும் - போக்கின என்ற பொருளும் கொள்ளலாம்.
------
47. கொற்றவர் ஆயினும் இல்லற வாழ்க்கை கொடிதென்றுன்னி
அற்றவர் ஆயினும் இல்லற வாழ்க்கை யடைந்துஞற்றும்
மற்றவர் ஆயினும் கோமுத்தி யானை வழுத்திலரேல்
உற்றவர் ஆயினும் பற்றவ ரோவ வுறுதியுண்டே.
47.கொற்றவர் - அரசர். அற்றவர் துறவிகள். உஞற்றுதல் - செய்தல். வழுத்திலரேல் - துதிக்கவில்லையென்றால். உற்றவர் ஆயினும் - நெருங்கி யவர்களாயினும். பற்று - ஆசை. அவர்ஓவ -அவர்கள் நீக்குதற்கு. உறுதி உற்ற வழி.
------
48. உண்டாகும் ஊறு நினையா தடியன் உனதடிக்குத்
தொண்டாகும் நாளும் உளதோ குகற்குட் சுரந்துபயம்
செண்டாகும் சீரொப் பிலாமுலை வாமத் தினாய்கருணை
கொண்டாடு வாகனன் தந்தாய் துறைசைக் குருபரனே.
48. ஊறு - இடையூறு. குகன் - முருகன். பயம் - பால். செண்டு ஆகும் - பந்து போன்ற. ஆகுவாகனன் - பெருச்சாளியை வாகனமாகயுடைய விநாயகன்.
----------
49. குருவாய்த் திருவுருக் கொண்டற வோர்க்குண்மை கூறியநின்
திருவாய் மலர்ந்தடி யேனுய வோருண்மை செப்புநலம்
வருவாய் இலாதபுன் வாழ்க்கை யனுய்யும் வகையறியேன்
கருவாய் முளைத்தருள் கோமுத்தி நாத கங்காதரனே.
49. குருவாய் திருஉரு கொண்டு - தட்சிணாமூர்த்தி வடிவத்தைக் கொண்டு. அறவோர் சனகாதியர். கருவாய் முளைத்தருள் -நிமித்த காரணமாகத் தோன்றி.
--------
50. கங்கா நதிச்சடைக் கங்காள கோமுத்திக் கணுமையோர்
பங்கா னதிகம் பரவலஞ் செய்யப்பங் கானதென்றாள்
எங்கா னதிக்கொடிப் பிப்பில மித்தவர் எங்குளர்மற்
றிங்கா னதிப்பிய மெங்குண்டென் னேனிருந் தென்பயனே.
50. கங்காள - எலும்புகளை மாலையாகத் தரித்தவனே. "கங்காளன் தோள் மேலே காதலித்தான் காணேடி" (திருவாசகம்) என்னேன் என்று உரைக்கிலேன்.
--------
51. என்பய னென்றுண ராதரி யோடும் எதிர்த்துடற்ற
முன்பய னாப்பட் சிரங்கொய்த செங்கை முதலவதோற்
புன்பயன் பேதுமி லார்வாழ் துறைசை புகுந்துறைய
இன்பயன் மாதக் களித்தாய் கருணை இருந்ததென்னே.
51. அரி - திருமால். பயன் - சுகம். பேது - துக்கம். மாது - இறைவி. நாப்பண்
நடு. "பன்மீன் நாப்பட் டிங்கள்போலவும்" புறநா. 13.
--------
52. இருமா வருந்தி யுருமாறு முன்னம் இறைஞ்சமனம்
வருமா பொறியும் பொருமாவில் வாறென மாழ்கினன்யான்
திருமா தவன்கட் டிருமா மலாலத் தினையயின்றோய்
தருமா திமிக்குக் கருமாறு கோமுத்தி சங்கரனே.
52. இருமா - இருமி. பொருமா துன்புற்று. மாழ்கி - அறிவிழந்து. திரு - இலக்குமி. மாதவன்கண் திருமா - திருமால் பக்கம் ஏக. ஆலத்தினை அயின்றோய் - நீ ஆலகால விடத்தினை அருந்தினாய். கருமாறு - பிறப்பை மாற்றும்.
---------
53. சங்கரன் தேவி சகிதன் துறைசைச் சதாசிவன்முன்
னம்கரன் ஆதியர்ச் செற்றோற் கரியன் நளினமணி கங்கரன்
ஐங்கரன் தந்தைகங் காதரன் காதலர்பால்
தங்கரன் பிப்பிலத் தண்ணிழ லானென்று சாற்றுநெஞ்சே.
53. முன்னம் கரன் ஆதியர்க்கு - முன்பு கர தூஷணாதியரை அழித்த திருமாலுக்கு. நளினமணி - அடியார்க்கு நெகிழும் மணி (மாசிலாமணி) கம்கரன் - கபாலத்தை கையில் உடையவன். பிப்பிலம் - அரசமரம்
---------
54. சாற்ற இனிக்கும் புகழ்திருக் கோமுத்திச் சங்கரனைப்
போற்ற இனிக்கும் புகழ்புண் ணியங்கள் பொருந்துநுமை
ஆற்ற இனிக்கும் இதைவிடுத்தே பொன்று அமரரடி
தூற்ற இனிக்கும் மலர்தேடும் உங்கள் துணிபெவனே.
54. ஆற்ற -மிக, முழுதும் பொன்று அமரர் - அழியக்கூடிய பிறதேவர்கள்.
--------
55. துணிமதி யாளர்நம் சொன்னத் தியாகர் துறைசைவெற்பில்
தணிமதி யாளுமுக மடந்தாய் இங்ஙன் சாற்றிடில்நீ
பிணிமதி யாளர்என முகம்வா டிப்பெரி தும்நொந்து
அணிமதி யாளர் வருவார் அவர்க்கென் னறைகுவனே.
55. துணி - ஒளி. தணிமதி ஆளும் முகம் - குளிர்ந்த சந்திரனைப் போன்ற முகம். இங்ஙன் - இவ்விதம். நொந்து 'பாவியேன் என்று நொந்து' சீவக.2099. (இச்செய்யுள் தோழி கூற்றாக அமைந்துள்ளது) 'கழுமலஊரவர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறை தேவாரம். நாவுக்.
------------
56. அறைந்திட முற்றுங்கொ லென்றுயர் நீக்க அடைபவர்யார்
குறைந்திட முற்றுங்கொல் நின்னையல் லாதருள் கூரெங்கணும்
நிறைந்திட முற்றுங்கொள் காவிரிக் கோமுத்தி நீணகர்வாய்
உறைந்திட முற்றும்ஒப் பில்லா முலைக்கரு ளுத்தமனே.
56. இடம் முற்றும்கொள் காவிரி - பூமி முழுவதும் பரவி பாயும் காவிரி. நீள் - நீண்ட. கவர்வாய் - பிளந்துபட்டு ஓடும். இடம் முற்றும் - இடது பாகம் முழுவதும்
------------
57. உத்தம மாதவர் யோகியர் சித்த ருறைதுறைசைக்
கத்த மதாசலத் தோலணி தோள கதியடைய நித்தம்
அகத்திய னார்பணி பாத நிராமயவிம்
மத்த மனத்தன் நினைத்தினம் போற்றநல் வாக்கருளே.
57. உத்தம - சிறந்த. நிராமயம் - நோயிலான். மதாசலம் - யானை
----------
58. வாக்குடன் நெஞ்சுமொன் றாய்நித முன்னை வணங்கிடயான்
பாக்குடன் வெற்றிலை வைத்தழைத் தாலும் பகைக்கின்றவான்
மாக்குடன் மாலை வனைமா னிடவரி வன்மையகல்
பாக்குடன் மாச்சிம்புள் வேடங்கொள் கோமுத்திப் பண்ணவனே.
58. வாக்கு, உடல், நெஞ்சு மனம், மெய் மொழிகள். மானிட அரி நரசிம்மன். சிம்புள் - எட்டுக் கால்களையுடைய சரபப்பறவை. (நரசிம்மத்தின் சினத்தை அடக்க சிவபெருமான் சரபப்புள்ளாகத் தோன்றிய வரலாறு.)
-----------
59. பண்நவ மேவச் செயுமொழி வாழிடப் பாகவழற்
கண்ணவ நாதி பரவளக் கோமுத்திக் காரணவான்
எண்ணவ பேத முடையாயென் றேத்த இனிதருள்வாய்
நண்ணவ மேதினம் செய்யும்பொல் லாதவிந் நாயினுக்கே.
59. நவ பேதமுடையாய் - ஒன்பது வகையான சிவபேதமுடையான். சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வகையான சிவபேதம். ''சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், திகழும் ஈசன் நவந்தரு பேதம்" (சிவஞான சித்தியார், சுபக்கம்) நான்காம் அதிகரணம் செய்.2.
---------
60. நாயாய்க் கடைப்பட்டு நெஞ்சம்புண் ணாகியிந் நானிலத்தில்
ஓயாக் கவலை யடைந்தடுத் தேனை ஒழித்துவிடேல்
சாயாத் திறல்விடைப் பாகா வுயிர்கட்குத் தந்தையொடு
தாயாய்த் துறைசை வளர்மாசி லாமணிச் சங்கரனே.
60. அடுத்தேனை - உன்னை அடைந்தவனை. வினையாலணையும்பெயர். சாயா - குன்றாத. திறல்விடை - வலிமை பொருந்திய இடபம். "விமலா விடைப்பாகா! திருவாசகம் தாயாய்: "அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ " ஆறாம் திருமுறை. பதிகம் 95. செய்:1. 'அம்மையே அப்பா" "தாயான தத்துவனை" திருவாசகம்.
---------
61. சங்கணி செங்கை எழிற்றா ருகாவனத் தையலர்கள்
அங்கணி யாரறி வெல்லாம்கொ ளுன்னை அடுத்திடுமென்
பொங்கணி யாரறி வெல்லாம் தெரிவையர் போக்கனன்றோ
கொங்கணி பூம்பொழில் கோமுத்தி நாத குணக்கடலே.
61. தாருகாவனம் இந்த வனத்தில் இருந்த முனிவர்கள் சிவபூசை செய்து பேறு பெற்ற வனம். தையலர் முனிவர்களுடைய மனைவிமார்கள். பொங்கணியார் - சப்திக்கின்ற அணிகளையுடையவர். கொங்கு - தேன்.
----------
62. குணமாதி யற்றவ னென்பார் புரந்தெறக் கோளரவக்
குணமாதி யுற்றவன் யாவனென் பேன்திருக் கோமுத்தியங்
கணமாதி யான மனத்தா யறிஞர் கருத்தினென்றுங்
கணமாதி யாமைந் தெழுந்தாய் கயிலைக் கணபதியே.
62. குணமாதி அற்றவன் - நிர்க்குணன். புரந்தெற - முப்புரத்தை அழிக்க.
கோளரவம் - வாசுகி என்னும் பாம்பை. குணமாதியுற்றவன் வில்லின் நாணாகக் கொண்டவன்.
-----------
63. கணமா யினுநின் திருத்தாளை நெஞ்சங் கரையவுன்னி
எணமா யினுமுதி யோரைஎண் ணாமல் இகழ்ந்துதிரி
பிணமா யினுமுழ னாயடி யேன்செய் பிழைபொறுப்பாய்
விணமா யினுங்கிளர் கோமுத்தி மேய விடையவனே.
63. கணம் - க்ஷணம். எணம் - எண்ணம். உழல் -உழலுகின்ற. விணம் - விண்ணம்
ஆகாயம். விடையவனே: 'கருருணையினாலல் ஆண்டு கொண்ட விடையவனே" திருவாசகம்.
---------
64. விடையே றுமையர் திருக்கோமுத் தீசரிவ் வீதிவரக்
கடையே முணர்ந்து வரம்பெறச் சென்றெதிர் கைகுவித்தேம்
தடையே யிலாத ஐம்படை யேவமாரன் றணந்தனந்தாள்
நடையே கொளுங்கண் படையே தணந்தன நாணமுமே.
64. மாரன் - மன்மதன்
-----------
65. நாணாது லுத்தரிடஞ் சென்று பாடல் நவின்றுபயன்
காணாது ழலிக்கடை யேனை யாளக் கடனுனக்கே
பேணாது கைவிடிற் காப்பவ ராரெனைப் பின்வளங்கள்
கோணாது மிக்கெழு கோமுத்தி வாழ்மலைக் கோதண்டனே.
65. உலுத்தர் - உலோபிகள். ஆள - ஆட்கொள்ள. பேணாது - காப்பாற்றாமல்.
கோதண்டம் - வில்.
-----
66. கோதண்ட மாகச் சிலைகொண்டு முப்புரம் கொன்றழியா
மூதண்ட வாணர் துயர்தீர்த்த கோமுத்தி முக்கணவம்
மாதண்ட பாணி தமர்வந்து சால வருத்திச்செயும்
வாதண்ட விட்டு விடாதே மெலியில் வறியனையே.
66. மூதண்டவாணர் - தேவர்கள்.. மாதண்ட பாணிதமர் -எமதூதர். சால - மிகவும். முப்புரம் - பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் அமைக்கப்பட்ட நகரம். 'முப்புரத்தை நீறாக்கி' சிவசிவ வெண்பா. செய். 58. "முப்புரம் எரிசெய்த அச்சிவன்'' திருப்புகழ்.
----------
67. வறிதே யிருந்து கலைபயி லாது மயங்கிவஞ்சக்
கிறிதேர் முழுமகர் கூட்டங் கெழுமுமக் கீழ்மையறச்
செறிதே னலம்பும் பொழிற்றிருக் கோமுத்திச் சிற்பரனை
மறிதே யுவார்கைம் மலரானை என்றும் வணங்குதுமே.
67. வறிதே இருந்து - வீணாக இருந்து கலை - கல்வி. கிறி - பொய். ''கிறிபேசி மடவார் பெய்வளை கொள்ளும்'' 6ஆம் திருமுறை செய். 6. திருக்கஞ்சனூர். தேன்அயம்பும் - வண்டுகள் ஆரவாரம் செய்கின்ற. பொழில் - சோலை. சிற்பரன் - அறிவுக்கு எட்டாதவன். 'எப்பொருளினும் மாஞ்சிற்பரன்'' (திருவாத பு.திருப்பெருந்-செய்.21.) முழுமகர் - மூடர் "சிற்பரஞ்சோதி' திருமந்திரம் செய்.2722. "கிறிஎலாம்" திருச்சதகம் 32.
----------
68. வணங்கத் தலையுண்டு வாழ்த்திட வாயுண்டு மன்றவுன்னி
இணங்கக் கருத்துண் டினிமயங் கேம்விண் ணிமையவர்வாய்
வுணங்கக் கிளர்திருக் கோமுத்தி நாதனை உத்தமனை
பிணங்கப் படவர வார்த்தானை வேணிப் பிரான்தனையே.
68. மன்ற - தெளிவாக. உள்ளி - நினைந்து. வாய் உணங்கக்கிளர் - வாய் உலரச் சொல்லுகின்ற. (புகழ்கின்ற) பிணங்க பட அரவு - சுற்றி இருக்கும் படமுடைய பாம்பு
--------
69. தனையர் களாப்பன் னிருகரத் தானையொர் தந்தனைப்பெற்
றினையல் விண்ணாடர் அகன்றிடச் செய்த இறையவனை
நனைபொழில் கோமுத்தி நாதனைச் சீத நறும்புனல்கொள்
வனைசடைக் கண்ணுதல் வள்ளலை ஈசனை வாழ்த்துவமே.
69. ஏகதந்தன் - ஓர் தந்தன், விநாயகர். இனையல் - அஞ்சுதல். நனை - தேன். வணங்கத் தலையுண்டு: 'வணங்க தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து'' திருவாசகம். 'வாழ்த்தவாயும் நினைக்க மடநெஞ்சும்''. நாவுக்கரசர்.
--------
70. வாதா சனவுடன் மீதம்பு ராசி வளர்பவனும்
போதா சனனும் பணிந்துறல ஓர்ந்தும் புகழ்த்துறைசை
நாதா சனனங் கடந்த பரானந்த நாரியர்கள்
மாதா சனன்புற் றுனைவணங் காத வகையெவனே.
70. வாதாசனம் - காற்றை உணவாகயுடைய பாம்பு. 'வாதாசனச்சயனர்" (அழகர் கலம்பகம். செய்.75) "வாதாசனஇறை' ஆரூர்க்கோவை செய்.2. அம்புராசி - கடல். போது ஆசனன் - பிரமன். சனனம் கடந்த பரானந்த - பிறப்பு இல்லாத பரனே. நாரியர்கள் - பெண்கள்.
---------
71. வகைவகை யாமலர் வாளிதொட் டான்மதன் மாங்குயிலும்
அகைபகை யாக வனுதினங் கூவு மயலவருந்
தகைநகை யாலலர் தூற்றுவர் கோமுத்திச் சங்கரனெண்
திகையுகை யானுடை யான்சடை யானருள் செய்வதென்றே.
71. அகைதல் - தழைத்தல். ''அகைந்தன ஏடுஇல் தாமரை" பொருந.அடி.159; கயன் அகைய வயல் நிறைக்கும் "மதுரைக்காஞ்சி. அடி.92. அகைதல் மலர்தல் "அகைமத்த" தக்க. 98. அனுதினம் தினந்தோறும். அலர் தூற்றுவர் - பழிப்பார்கள். திகை - திசை. உகை -மேலே எழும்பியவன். ஆனுடையான் - பசுபதி.
-----------
72. செய்யாத வெந்தொழில் செய்தேயுன் றாளைத் தியானித்துளம்
நையாதனந்தந் தினங்கழித் தேனினிதா னென்செய்கேன்
பொய்யாத வேதச் சிரத்துந் துறைசைப் புரத்துமொளிர்
ஐயா தழலணி கையா வளியன டைக்கலமே.
72. செய்யாத வெந்தொழில் - செய்யக்கூடாத கொடிய பாவங்கள். அனந்தம் பலநாட்கள்.
--------
73. அடையார் புரஞ்செற்ற வாரரு ளாள வயிலுருசூற்
படையார் நறுமலர்க் கையாய் பிரம கபாலவயன்
மடையார் தவள வளைமுரல் கோமுத்தி வாணவினிக்
கடையார்தம் மோடு மிடையாத வண்ணங் கடைக்கணியே.
73. அடையார் - பகைவர். 'அடையார் தம்புரங்கள்" (தே.அம்பர் மகாகாளம் செய்.1. புறப்பொருள் வெண்பாமாலை வெட்சி. செய். 1 அயில் - கூர்மை. சூற்படை - சூலாயுதம். தவளவளை - வெண்சங்கம். முரல் - ஒலிக்கும். மிடையாத - சேராத.
-------
74. கடைக்கணி யாவடி யார்துயர் தீர்க்குங் கருணையனீர்
மடைக்கணி யாவெள் வளைமுத்த மீன்று வருதுறைசைச்
சடைக்கணி யாவெண் மதியணி வான்றனைத் தாழ்ந்தவன்சீர்த்
தொடைக்கணி யாவைத்துப் பாடிப்பல் பாத்தொடை சூட்டுவமே.
74. கடைக்கணியா - கடைக்கணித்து, சடைக்கு அணியா - சடைக்கு அலங்காரமாக. சீர்தொடைக்கு - புகழாகிய மாலைக்கு. அணியாவைத்து - அருகில் இருக்கும்படி. பாத்தொடை - பாமாலை.
----
75. சூட்டார் அரவணி கோமுத்தி மேய சுராதிபன்தன்
தாட்டா மரையைப் பணியாது நொந்து தளருகின்றேன்
மாட்டார் விருப்பம் உறுவார் யாவரும் வைதுதம்மிற்
கூட்டா ரினியென்னதுன்புறு மோவிக் குவலயத்தே.
75. சூட்டார் அரவு - படத்தோடு கூடிய பாம்பு. தாள்தாமரை - திருவடி. "தாள் தாமரகைாட்டி" திருவாசகம். நொந்து - வருந்தி. குவலயம் - பூமி.
---------
76. குவலய மஞ்சத் தெறும்வலி வெங்கதக் கூற்றுவனும்
அவலமிக் காற்ற வரினென்செய் வேனனலங் கையிற்கொள்
சிவதிருக் கோமுத்திச் சிற்பர தேவி திகழிடத்தாய்
பவவலை யூட்டி யேனுழ லாதுகண் பார்த்தருளே.
76. வெங்கதக்கூற்றுவன் - கொடிய இயமனும். அவலம் - துன்பம். அனலம் - தீ. பவம் - சம்சாரம்.
---------
77. பாவாதி வல்லர் இவரென வேசையர் பால்மயங்கி
நோவாதி வீணரை மேவாதி நிச்சலு நொந்துநொந்து
சாவாதி நல்வள மேவா வடுதுறைத் தண்பதியின்
மேவாதி நாயகன் றாட்டா மரையை விழைதிநெஞ்சே.
77. பாஆதி - ஆடல்பாடல். மேவாது - பொருந்தாது. நிச்சலும் - எப்பொழுதும். ''நிச்சலும் விண்ணப்பம் செய்ய" திருவாய்மொழி. 1-9-11. தாள்தாமரை -பாதமாகிய தாமரை. உருவகம்.
-----------
78. விழைவாய் மகளிர் எழினலங் காணவிவ் வீண்மையினால்
பிழைவாய் மிகவும் அகப்பட் டனையென்ன பேச்சினியால்
உழைவாய் முனிவ ரொருநால் வருக்கற மோதிவளைக்
குழைவாய் தருதிருக் கோமுத்தி நாதனைக் கூடுநெஞ்சே.
78. உழை - பக்கம். நால்வருக்கு பக்கம். நால்வருக்கு - சனகாதி முனிவர்களுக்கு. 'நால்வருக் கறமாதி பொருளுரைப்ப.... செல்வமே" தேசோமயானந்தம் செய். 10.
------------
79. கூடும் படிநில மேல்விர லாற்சுழி கூட்டிமிக
வாடும் தமிய ளுயிர்கலங் காத வகையருள்வாய்
தேடும் பிரம னரிக்கரி யாய்வளத் தில்லைமன்றுள்
ஆடும் பதபங் கயத்தாய் தென்கோமுத்தி அற்புதனே.
79. இச்செய்யுள் கூடல் இழைத்தல் என்னும் துறையைச் சார்ந்தது. கூடல் இழைத்தல் - 'கூடலாவது - வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றுஞ் சுழித்து இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப் பட்டால் கூடுகை; ஒற்றைப்பட்டால் கூடாமை" (நாச்சியார் திரு மொழி) ''ஒண்கொடி மாதராள்..... மருகல் பெருமான் வரில் கூடு நீ என்று கூடல் இழைக்குமே" திருநாவுக்கரசர் தே.
--------------
80. அல்லார் களத்த மலாதிருக் கோமுத்தி யங்கணநூல்
கல்லா தநாயிற் கடையேன் எனினும் கருத்தினிடை
எல்லா முனதருள் என்றிருப் பேன்பொய் யிதுவன்றிழி
பொல்லா தவர்வருத் தும்படிநீ செய்பு துமையென்னே.
80. அல் ஆர் களம் - கருமைபொருந்திய கழுத்து. பொய் இதுவன்று - இது உண்மை. இழிபொல்லாதவர் - கீழ்ப்பட்ட பொல்லாத மக்கள். அங்கணா: 'திருவாவடுதுறையுள் அங்கண" சுந்தரர். தே..
-----------
81. என்னேயென் னேகணப் போதா யினுந்தனை யெண்ணுநர்க்கு
பொன்னேர் சடையன் திருவா வடுதுறைப் புண்ணியன்தான்
தன்னே ரிலாத நலந்தந்தெப் போதுந் தகநினைவேற்
கன்னோ மிகுதுன் பளித்தே வருத்துறு மற்புதமே.
81. கணப்போது - க்ஷணநேரம் = நொடிப்பொழுது. பொன்நேர் சடையன் - பொன்னை ஒத்த திருச்சடையினையுடையவன் "பொன்னார் சடையான்" (திருக்கோவையார்.89) "பொன்னார் சடைப்புண்ணியன்'" திருநாவுக்கரசர். தே.தகநினைவேற்கு - தக்க வண்ணம் நினைக்கும் எனக்கு.
-----------
82. அன்னையன் னான்திருக் கோமுத்தி மாநகர் அண்ணலொளிர்
பொன்னையன் னான்சடை முன்னகைத் தான்முப் புரமெரியத்
தன்னையன் னான்அரு ளாகரன் சங்கரன் தன்னினையும்
என்னையன் னான்சிறி தாயினு நெஞ்சிடை எண்ணிலனே.
82. அன்னை அன்னான் - தாயைப் போன்றவன். "அன்னை ஒப்பாய் எனக்கு தனக்குத் தானே அத்தன் ஒப்பாய்" திருவாசகம். தன்னை அன்னான் ஒப்பானவன். அருளாகரன் அருளுக்கு இருப்பிடமானவன். சங்கரன் - மங்களத்தைச் செய்பவன்.
-------
83. எண்ணுவன் கோமுத்தி யீசன் கமல இணையடியை
நண்ணுவன் ஓர்ந்த வளவுந் தினந்தின நற்றுதிகள்
பண்ணுவன் தீயவெம் பாவப் படிறப் பதகருடன்
ஒண்ணுவ னோமரு வேன்மரு வேன்நல உண்மையிதே.
83. கமல இணை அடியை - தாமரைப் போன்ற பாதங்களை. ஓர்ந்த அளவும் - ஆராய்ந்து அறிந்த அளவுவரையும். படிறு - வஞ்சகம். பதகர் - தீயவர். "முழுப்பதகன்'' சீவக. 2783.
---------
84. உண்மை யாவவவு மாதுலர் வெம்பசி ஒப்புதற்குக்
கண்மை யவாவவும் பாரோர் தவறு கரைந்திடினும்
தண்மை யவாவவு நல்வரந் தாவித் தமியனுக்கு
வண்மை யவாவுங் கரத்தாய் துறைசை மகாலிங்கமே.
84. ஆதுலர் - வறிஞர். வெம்பசி - கொடிய பசி. ஒப்புதல் ஒப்புதல் - போக்குதல். ஓம்புதல் என்ற சொல் வலித்தல் விகாரத்தால் ஒப்புதல் என்றாயிற்று. கண்மை - கண்ணோட்டம் (தாக்ஷிண்யம்). ஓர் தவறு கரைந்திடினும் ஒரு குற்றத்தைச் சொல்லி இரங்கினாலும் தண்மை அவாவவும் - குளிர்ந்த அருளை விரும்பும். இத்தமியனுக்கு நல்வரம் தா. வண்மை - கொடை.
----------
85. காத்திரம் வந்த வரலாறு ளத்திற் கருதுகிலார்
சாத்திரம் பற்பல கற்பா ரதற்குத் தகநடவார்
தோத்திரம் செய்கிலர் கோமுத்தி நாதனைச் தூயவருட்
பாத்திரம் அன்னவர் ஆகார்மற் றாவர் பவத்தினுக்கே.
85. காத்திரம் - உடல்
-------------
86. பவத்துயர் தன்னை யொழிக்குநின் பாத பதுமமுன்னித்
தவத்துயர் வுற்றுத் தளர்வகன் றோர்வது தானுணர்ந்து
சிவத்துயர் முத்தி யடைய கிலார்அவர் சென்மமென்னே
அவத்துயர் யார்க்கும் அகற்றுந் துறைசை யிலங்கணனே.
86. பவம் பிறப்பு. பாதபதுமம் உருவகம். உன்னுதல் - நினைத்தல். சிவத்துயர் முக்தி - சிவமாகிய உயர்ந்த முக்தி. அடையகிலார் - அடைய மாட்டாதவர். அவம் - வீண். ''திருவாவடுதுறையுள் அங்கணா" சுந்தரர் தேவாரம்.
------------
87. அங்கண வாரணி வேணிய வாட ரவாவணிந்த
கங்கண முக்கண வக்கண னோடெண் கணணுடன்முற்
றுங்கண னாதியர் ஓராப் பெருமை யமலவென்று
நங்கண லோவத் துறைசைப் பிரானை நவிலுவமே.
87. அக்கணன் - திருமால். எண்கண்ணன் - பிரமன். உடல் முற்றும் கண்ணன் இந்திரன். நம்கண் அல் ஓவ - நம்மிடம் மயக்கம் நீங்க. நவிலுவம் - துதிப்போம்.
-------
88. உவமையில் நின்றன் பெருமையை உன்னி உளங்கரைந்து
தவமயல் உற்று அடியார் இடைமேவுபு தங்கலென்றோ
சிவமயி லூர்பவன் ஆதியர் போற்றித் தினம்பணியும்
நவமயில் நாயகன் அத்தா துறைசையின் நாயகனே.
88. உவமைஇல் - ஒப்பு இல்லாத. தவ - மிகவும். மேவுபு பொருந்தி - மயில் ஊர்பவன் - முருகன். நவம் - புதுமை. மயில் புதுமை. மயில் - இறைவி. அத்தா:- "அத்தா உனக்கு ஆளாய்" சுந்தரர் -தே.
------
89. நாதா வளைக்குழைக் காதா கமல நயனன்பணி
பாதா எனத்துதி ஓதேன் எனினும் படியினிடைத்
தீதாதிகளறுத் தாள்வார் எவரெனச் சிந்தைசெய்வேன்
ஆதார நீயெற் கருள்வாய் துறைசை யிலங்கணனே
89. கமல நயனன் - திருமால். படியினிடை - பூமியில். எற்கு - அடியேனுக்கு
-------------
90. அண்டா பரணன் அருட்கடல் ஏற்றி வரங்கணனல்
வண்டார் கடுக்கை மலர்த்தொடை வேணி வரதன்மகிழ்
கொண்டா வடுதண் டுறைநகர் மேய குணமலையைக்
கண்டால் அளவில் பெரும்பாக் கியமவர் கைவசமே.
90. அண்டு ஆபரணன் - மணிவடம் முதலிய ஆபரணங்களை யுடையவன்.
கடுக்கைமலர் - கொன்றைமலர். கண்டால் - கண்டபொழுதே. அளவுஇல் - அளவில்லாத.
-------------
91. கையா னனத்தனை ஈன்றானைக் கோமுத்திக் கண்ணுதலை
ஐயா னனத்தனை யாரா அமுதை அநகனைக்கார்
மெய்யா னனத்தனை அத்தனை நித்தனை வேண்டித்துதி
செய்யா னனத்தல் நைவுஇயாவு முறேனெந்தச் சென்மத்துமே.
91. கையானனன் விநாயகர். ஐயானனன் - பரமசிவன். கார்மெய்யான் - திருமால். நைவு துன்பம்.
--------
92. செந்நாப் புலவ ரிடைமேவி நூன்முனஞ் செய்தநினை
உன்னாக் கருத்தி னனுய்வதெவ் வாறுரை உன்னலருள்
மன்னாக் கமல பதத்தாய் துறைசை வரவிசும்பின்
மின்னார் புயனிகர் கந்தரத் தாயருள் வேதியனே.
92. மேவி பொருந்தி. நூல்முனம் செய்த நினை – என்பது இறையனார் அகப்பொருள் செய்ததை மனத்தில் கொண்டு கூறியது. புயல் நிகர் - மேகத்தை ஒத்த.
------
93.வேதா கமங்கள் நவில்நின் பெருமை விதமுணரேன்
மாதா வயிற்றி னிடையென்று மேவி வருந்துகிற்பேன்
ஈதா நினது கருணைய தாம்பொன்னி ஈர்ந்துறைசை
நாதா அகில விநோதா பலபவ நாசனனே.
93. விதம் வகை. மேவி பொருந்தி. ஈர்ந்துறைசை - தண்மைமிக்க துறைசைப்பதி. பவநாசனனே - பிறப்பை அறுப்பவனே.
-----------
94. நாசஞ்செய் மூன்று புரநொடிப் போதினி னாசமுற
வாசஞ்செய் கோமுத்தி யற்புதன் தாளிணைக் கன்பதில்லேன்
வாசஞ்செய் ஐம்படை யான்மயல் மேவி மனஞ்சலித்தேன்
பாசஞ்செய் வெய்ய வருத்தம்எவ் வாறினிப் பாற்றுவனே.
94. நாசம் செய் - அழிவைச் செய்கின்ற. மூன்றுபுரம் - பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால் எரிக்கப்பட்டனவும் விண்ணில் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள். "திரிபுரம் ஒரு நொடியள வினிலலல்.... வெந்தழிந்தர" தேவாரம்.
------------
95. பாற்றினத் தோடு கழுகுபுன் நாய்நரி பார்க்குமுடம்(பு)
ஏற்றின மீதொழி யக்கரு தாமல் இதற்கிதமே
ஆற்றினம் வீணரைப் போற்றினம் எங்ஙன் அருளடைதல்
தாற்றினஞ் சோலைக் கழகாம் துறைசைத் தனிமுதலே.
95. பாற்றினம் - பருந்துக்கூட்டம். ஈதுஒழிய - இவ்வுடம்பு அழிய. தாற்றினம் சோலை வாழை முதலியவற்றின் குலைகளினால் அழகு பொருந்திய சோலை. "பருத்த தொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான்" பட்டினத்தார்.
---------
96. தனியே இருந்து மனமொன்றி ஐந்தும் தகைதல்செய்து
துனியே அறநின் றனைநினைந் தேத்திதொழு தல்செய்யேன்
இனியேய் துயரம் எவனே அறிந்திலன் ஏழையன்வான்
பனியேய் பிறைத்துணி வேய்திருக் கோமுத்திப் பண்ணவனே.
96. ஐந்து மெய், வாய், கண், மூக்கு, செவி. தகைதல் செய்து - அடங்கச் செய்து. துனி - குற்றம். எவன் - என். பிறைத்துணி - துண்டப்பிறை.
----
97. பண்ணல மார்மொழி விண்ணல மாரிடைப் பார்ப்பதியோ
டெண்ணல நின்னை மனத்தே துறைசை எழினகரின்
நண்ணல நின்னடி யார்தமை ஏத்தி நவிலவரோ
டுண்ணலஞ் சென்மம் ஒருவிவ் வாறினி யுய்குவமே.
97. விண்நலம் ஆர் - விண்ணின் பெருமை பொருந்திய. ஒருவி - நீங்கி
-----------
98. உன்பாத பங்கய மேத்தி உய்யாமல் உழலுமிந்த
வன்பாத கன்றனை நீக்கல் செயாதருள் வாய்வலிய
கொன்பா ரிடத்தொடு மாநட மாடும் குழகவிடும்
என்பா ரணியுடை யாய்திருக் கோமுத்தி எண்புயனே.
98. உய்யாமல் - ஈடேறாமல். வன்பாதகன் - கொடியவனை. வலிய கொன்பாரிடம் -
அச்சத்தைத் தரும் பூதம். என்பாரணியுடையாய் - எலும்புகளை மாலையாக உடையவனே. ''மாண்டர் எலும்பணிந்த வாழ்க்கையானே ..... என்பு பூண்டானை" திருநாவுக்கரசர்.தே.
--------
99. எண்ணாது நின்னைப் பலநாள் கழிந்தன என்னசெய்வேன்
அண்ணா துறைசை அமலா நிகரில் அருட்கடலே
புண்ணார் மனமுடை யேன்கடை யேன்மயற் புந்தியுளேன்
திண்ணார் மறதிக் கடலினின் றீர்த்தருள் செய்குவையே.
99. நிகரில் - ஒப்பற்ற அருட்கடல் -உருவகம். மயல் - மயக்கம். திண்ஆர் – திண்மை பொருந்திய. மறதிக்கடலின் நின்று - நினைவு இன்மை என்னும் கடலில் நின்றும். ஈர்த்து - இழுத்து.
---------
100. சேயா யருளடி யேனுக் கெனிலயன் திண்சிரங்கொய்
கையா கழலணி காலா நிகரில் கயிலைமலை
ஐயா துறைசை அமலா ஒருபொரு ளாகவெனை
வையார் மதித்தலைச் செய்யார் திருவருள் வாழியவே.
100. அயன் - பிரமன். திண்சிரம் - வலியதலை. ''அறுத்தானை அஞ்சிலொன்றை" திருநாவுக்கரசர். தே.
முற்றும்
------------
செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - செய்யுள் எண் )
அங்கண 87 | சூட்டார் 75 |
அடியோ அதலம் 23 | செந்நாப் புலவர் 92 |
அடையார் 73 | செயலோடு 8 |
அண்டா பரணன் 90 | செய்யாத 72 |
அண்ணியர் 36 | செய்வாய் 31 |
அருளார் 34 | சேயாயருள் 100 |
அருளிடத்தாய் 7 | தகையும் 28 |
அல்லார் 80 | தயாநிதியே 13 |
அவமே 11 | தளரத்தளர 28 |
அவனி முன்னாய் 25 | தனியே இருந்து 96 |
அழகார் 4 | தனையர் 69 |
அறைந்திட 56 | திகம்பரன் 22 |
அற்புதனே 6 | துணிமதி 55 |
அன்னையன் 82 | நங்கைத் 41 |
ஆண்டாண்டு 20 | நாசஞ்செய் 94 |
இருமாவருந்தி 52 | நாணாது 65 |
உண்டாகும் 48 | நாதா 89 |
உண்மை 84 | நாயக 16 |
உத்தம மாதவர் 57 | நாயாய்க் 60 |
உரையாமல் 9 | நான்எனது 39 |
உவமையில் 88 | படியென்றும் 24 |
உற்ற இடத்து 46 | பண்ணல 97 |
உனதார் 19 | பண்ணீர் 45 |
உன்பாத 98 | பண்நவ 59 |
எண்ணாது 99 | பரமன்னும் 29 |
எண்ணுவன் 83 | பவத்துயர் 86 |
எவனைந் தொழிற்கும் 44 | பாலித் 18 |
என்பயன் 51 | பாவாதி 77 |
என்னே 81 | பாவித்து 5 |
ஐயானனனை 38 | பாவூடு 14 |
கங்காநதி 50 | பாற்றினத் 95 |
கடைக்கணி 74 | பிறக்கும் 21 |
கணமாயினு 63 | புத்தி 2 |
காத்திரம் 85 | பூவோ 37 |
கிட்டாத 27 | பேதையர் 32 |
குணமாதி 62 | மணிவாக் 12 |
குருவாய் 49 | மாவொன்று 30 |
குவலய 76 | முன்னவ 3 |
கூடும்படி 79 | வகைவகை 71 |
கையானனத்தானை 91 | வணங்கத் 68 |
கொழுந்தும் 33 | வறிதே 67 |
கொற்றவர் 47 | வாக்குடன் 58 |
கோதண்ட 66 | வாதா 70 |
சங்கணி 61 | வாமத் 40 |
சங்கரன் 53 | வாழும் 1 |
சாற்ற இனிக்கும் 54 | விடையே 64 |
சாற்று 17 | விழுமெழுங் 35 |
சாற்றுகிலேன் | விழைவாய் 78 |
சிலருருமாறி 43 | வெளியோ 42 |
சிவமார் 15 | வேதா 93 |
சிற்பர 10 | |
--------------
This file was last updated on 9 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)