pm logo

சிவகாமி அம்மன் அந்தாதி - பாகம் 1
முன்னுரை
வித்துவான் பாலசாரநாதன் தொகுப்பு


civakAmi amman antAti
part 1 (Introduction)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவகாமி அம்மன் அந்தாதி
பாகம் 1 (முன்னுரை)
வித்துவான் பாலசாரநாதன் தொகுப்பு

Source :
சிவகாமி அம்மன் அந்தாதி
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் , பெசன்ட் நகர் - 90
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்
நூல்நிலைய வெளியீடு எண்-84
முதற் பதிப்பு 1984-1000 பிரதிகள்
(C) மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம்,
பெசன்ட் நகர், சென்னை - 600 090.
விலை: ரூ. 15-00
Printed with the financial assistance from the Ministry of Culture Govt. of India.
Printed at Sudha Printers, Royapettah, Madras-14
------------
உள்ளடக்கம்
பதிப்பாளர் குறிப்பு
முன்னுரையும் ஆராய்ச்சியும்
நூல் மூலமும் குறிப்புரையும்
செய்யுண் முதற் குறிப்பகராதி
அருஞ்சொல் அகராதி
இதுவரை தெரியவந்துள்ள அந்தாதி நூல்களின் பெயர்கள்
இணைப்பு:
முகவுரை
சிவகாமி அம்மன் அகவல்
சிவகாமி அம்மன் ஊசல்
தில்லைச் சிவகாமி அம்மன் கலிவெண்பா
சிவகாமி அம்மன்பேரில் தோத்திரம்
சிவகாமவல்லி விருத்தம்
--------------

பதிப்பாளர் குறிப்பு

மன்றின்மணி விளக்கெனலா மருவுமுக நகைபோற்றி
ஒன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர்
சென்றுதொழ வருள்சுரக்குஞ் சிவகாம சுந்தரிதன்
நின்றதிரு நிலைபோற்றி நிலைவுதிரு வடிபோற்றி.
      -- (கோயிற் புராணம்)

இவ்வுலக வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை ஆழ்ந்து நோக்கும் எந்த மனிதனும் ஓர் உண்மையை உணராமல் இருக்க முடியாது. எவ்வளவு திறமை வாய்ந்தவனும் சில சமயங்களில் தன் திறமை செயலற்றுப்போவதை உணர்வான். ஒரு சக்தியே எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றது என்பதை உணர வேண்டும்."நம் செயலால் யாதொன்று மில்லை எல்லாம் இறைவன் செயல்" என்று நினைக்கவேண்டும்.

இந்தச் சக்தி மானிடப்பிறவிகளுக்கு மட்டுமின்றி இந்திரன் முதலிய தேவர்களுக்கும் எட்டாத நிலையில் இருக்கின்றது என்பதைக் "கேனோபநிஷத்” போன்ற உபநிடதங்கள் விளக்குகின்றன.

எந்தப் பிறவியும் கடவுள் அருள் இல்லாமல் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவன் அருள்பெற அவனை வழிபடுதல் வேண்டும்.

தத்துவ சாத்திரங்கள், அண்டம் எனவும், பிண்டம் எனவும் உலகை இருவகையாகப் பிரித்துக் கூறுகின்றன. பிண்டம் உடல், இதில் செய்யப்படும் உபாஸனம் ஒருவகை. அவ்வாறே அண்டம் என்ற வெளியுலகிலும் தஹரோபாசனம் உண்டு. வெளியுலகை ஓர் உடலாகக்கொண்டால் அதற்கு ஒரு இதயம் இருக்கவேண்டு மல்லவா? அந்த இதயமே சிதம்பர க்ஷேத்திரம். அதில் உள்ள வெளியானது சிற்றம்பலம் என்கிற சிற்சபை. அதில் நர்த்தனம் செய்யும் நடராசப் பெருமானே ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்ல சக்தி பெற்றவர். உலகம் என்னும் உடலுக்கு இதயமாகும் சிதம்பரத்தின் மகிமையை விரித்துக் கூறவும் முடியுமோ?

சிதம்பரம் பூலோக கயிலாயம் என்று போற்றப்படுகின்றது. முத்தித்தலங்களைத் தொகுத்த குருஞான சம்பந்த சுவாமிகள்.

"தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனங் கூடல் முதுகுன்றம்—நெல்லைகளர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்”.

என்று தில்லையை முதற்கண் கூறியுள்ளார். உமாபதி சிவாசாரிய சுவாமிகள் கோயிற் புராணத்தில் பிறந்தாலும், இறந்தாலும், தரிசித்தாலும் முத்தி சித்திக்கும் தலம் என்று கூறுகின்றார். உலகில்வாழ் மக்களைத் தன்பால் ஈர்க்கவல்ல தெய்வத்தன்மை பொருந்திய தலம்.

சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்காக நடராசப்பெருமானாகத் தோன்றிச் சிவகாமி அம்மை காண ஆனந்த தாண்டவமாகிய அருட்கூத்தினை இயற்றி அருளுகின்றான்.

சிவகங்கைத் தீர்த்தத்தின் மேல்கரையில் சிவகாமி அம்மை கோயில் கொண்டு அடியார்களின் தீவினைகளையகற்றி அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றாள்.

கி.பி. 1118.1136 வரை ஆட்சி செய்த விக்கிரம சோழன் காலத்தில் சிவகாமி திருக்கோயில் கருங்கற்றளியாக அமைக்கப் பெற்றது என்று தெரிகிறது. மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் சிவகாமி அம்மன் திருக்கோயிலைச் சூழ்ந்த திருச்சுற்றும், திருமாளிகைப்பத்தியும் அமைத்து அம்பிகைக்கு அபிடேகத்திற்குரிய பசுவும், அம்பிகைக்குச் சாத்த பீதாம்பரமும் அளித்துள்ளான்.

அம்பிகையின் பாத தூளியின் சிறப்பு:
"பாத தாமரையின் நுண்துகள் பரம
      அணுவி னில்பல இயற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
      விரித லைப்புவனம் அடையமால்
மூது அராவடி யெடுத்து அனந்தமுது
      கணப ணாடவி பரிப்பமேல்
நாதனார் பொடிபடுத்து நீறணியின்
      நாமு ரைத்தெனவள் பான்மையே".
      --(சௌந்தர்யலஹரி)

தேவியின் பாதத்தாமரையின் நுண்ணிய தூசியாகிய பரமாணுவைக் கொண்டு பிரமன் பேத அபேதங்கள் கொண்ட இவ்வுலகைப் படைத்தான். (இரவு பகல், இன்பதுன்பம் தூக்கம் விழிப்புப் போன்ற பேத அபேதங்கள்) அதைப் பெரிய வடிவெடுத்து முடிவில்லாக் காலம் தொட்டுத் திருமால் தாங்குகின்றான். அரனோ ஊழிக் காலத்தில் உலகத்தை அழித்துப் பொடியாக்கி நீறாக அணிந்து கொள்கிறான் என்று ஆதிசங்கரர் தாம் இயற்றிய சௌந்தர்யலஹரியில் கூறியுள்ளார்.

மானிடப்பிறவியில் அடையவேண்டிய புருஷார்த்தங்களில் முக்கியமானது மோட்சம். அதை அம்பிகையின் பாததூளி அடியார்களுக்கு எளிமையாகக் கொடுத்துவிடுகிறது. அம்பிகை வராபய முத்திரைகளைக் கைகளில் தரித்துக்கொள்ளவில்லை. அடியார்கள் சிலர் நாம் எப்படி உபாசித்தாலும் தேவி அபயத்தையும் வரத்தையும் கொடுக்கமாட்டாள். வீணாகத் தேவியை வழிபாடு செய்வதில் என்ன பலன், என்று நினைத்துப் பராசக்தியிடம் வெறுப்படையும் வேளையில் பராசக்தி உதாஸீனமாகவே இருந்தாள். அச்சமயம் தேவியின் பாதகமலங்கள் முன் வந்து அடியார்களுக்கு நன்மைகளை நாங்களே தருகிறோம் என்று போக மோட்சத்தைக் கொடுத்து அடியார்களைச் சிரத்தையுடையவர்களாகச் செய்தன. இதனால் தேவியினுடைய சரணங்களே போகாபவர்க்கங்களைக் கொடுக்கக் கூடிய சக்திவாய்ந்தவை. மற்ற தேவதைகள் கைகளால் கொடுக்கும் போகாபவர்க்கங்களை அம்பிகையானவள் தனது திருப்பாதங்களாலேயே கொடுத்து விடுகிறாள். இக்காரணத்தினால் தான் லலிதாம்பிகை கைகளால் அபயமுத்திரை காட்டவில்லை போலும். மோட்சத்தை விரும்புகின்றவர்களுக்கு மட்டுமன்றிப் போகத்தை விரும்புகின்றவர்களுக்கும் தேவியின் பாததூளியே சேவிக்கத் தகுந்ததாக ஆகின்றது. (சௌந்தர்யலஹரி. சுலோகம்-2, 3).

இந்நூலாசிரியரும் "பாதந் தருந்துகளாற் புவிபடைத்தவம்மே" (செய். 11. அடி. 3) என்று கூறுகின்றார்.

ஆதிசங்கரர் "தேவி பஞ்சரத்நம்" என்று ஒரு நூல் இயற்றியுள்ளார். அந்நூலில் "அதிகாலையில் விழித்த குழந்தையின் முதல் எண்ணம் தாயின் முகமாம். தாயின் பரந்த நெற்றியும், அதில் விளங்கும் குங்குமமும், செக்கச்சிவந்த இதழும், புல்லக்கணிந்த மூக்கின் அழகும், புன்சிரிப்புக் கலந்த முகமலர்ச்சியும் நோக்கில் உலகத்தை அளித்துக் காக்கும் கருணையும் குழந்தையின் மனக்கண் முன்வந்து நிற்கின்றன, தாயைத் தோத்திரத்து நாமாக்களைச் சொல்லிக் கொண்டிருக்கையில் தாயே வந்துவிட்டால் எல்லையில்லாத ஆனந்தம் உண்டாகின்றது என்று கூறுகின்றார்.

நீலகண்ட தீக்ஷிதர் தாம் இயற்றிய "ஆனந்த சாகரஸ்தவம" என்ற நூலில் "சூரிய சந்திரர்கள் மறுபடி உதயமில்லாமல் அத்தமித்து விடும் காலத்தில் ஆனந்தமயமானதும், அத்வைத ஞான மயமானதுமான உன் பாதாரவிந்தம் என் அந்தரங்கத்தில் காணக் கிடைக்குமா” என்று கேட்கின்றார்.

இந்நூலாசிரியரும் மேற்சொன்ன கருத்தினை மனத்தினுள் கொண்டு "சிவகாமவல்லி மலர்ப்பதத்தைச் சிந்தனை செய்து உள்ளுருகிக் கசிந்து செயலறுத்தால் பந்தமுண்ணீங்கிச் சிவபோகம் யார்க்கும் கிடைக்கும்” என்று கூறுகின்றார்.

எல்லாமே அவளாக இருப்பதை உணர, அவள் திருவருள் வேண்டும். அவளருளாலே அவள் தாள் வணங்க வேண்டும். எல்லாவுலகங்களுக்கும், உயிர்களுக்கும், அவற்றின் இயக்கங்களுக்கும் அவள் தான் காரணம் என்று வேதங்கள் கூறுகின்றன.

"அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப்
பிறிந்தேனின் னன்பர் பெருமையெண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே"

‘யாவரும் அறியாத வேதத்தின் பொருளாகிய உன் திருவடிகளை அறிந்து கொண்டேன். அறிந்து கொண்டு உன் திருவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டேன். உன் அடியார்களின் சிறப்பினை ஆராயாத அஞ்ஞானம் நிறைந்த மனத்தால் அழுந்துகின்ற நரகத்திற்கு உறவாகிய மனிதர்களுக்குப் பயந்து அவர்களை விட்டு நீங்கினேன்', என்று கூறுகின்றார் அபிராமபட்டர்.

மேலும் அவர் "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக் குனிதரும் சேவடிக் கோமளமே" என்கிறார்.

சர்வேசுவரியான ஜகந்மாதா தனது பொற்பாத கமலங்களால் ஸ்ரீபுரம் என்ற நகரத்தின் உத்தியானவனத்தில் மெதுவாக நடந்து கொண்டு தோழிகளுடன் ஆனந்தமாக இருக்கும் பொழுது பிரமாவானவர் ஜகந்மாதாவைத் தரிசனம் செய்து, அம்பாள் நடந்து வந்த இடத்திலுள்ள பாததூளிகளைத் தான் எடுத்துக் கொண்டு ஈரேழுலகங்களையும் படைத்து, "சிருஷ்டி கர்த்தா" என்ற பெயரை யடைந்தார்.

இந்த உலகம் ஸ்ரீவித்யையின் பாததூளியின் அம்சம் என்று அறிந்து திருமாலானவர் காப்பாற்றி வருகின்றார். இதையறிந்த ருத்திரர் பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் தேவியினுடைய பாததூளி கிடைத்ததே நாம் அதை அடைய பாக்கியமில்லாதவனாகி விட்டோமே என்று எண்ணி மகாப் பிரளய காலத்தில் சம்ஹாரத் தொழிலின் கர்த்தாவாக ஆகிறேன் என்று தீர்மானித்து அவ்விதமே பிரளய காலத்தில் பதினான்கு உலகங்களாக விளங்கி வரும் தேவியினுடைய பாத தூளியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு "த்ரியம்பக" மந்திரத்தால் தேவியினுடைய அருளை அடைவதற்காகத் தன் பாதம் முதல் தலைவரையிலும் பூசிக் கொண்டு கிருதார்த்தராகிப் பரதேவதையினுடைய தியானத்தில் ஈடுபட்டிருந்தார் என்று சௌந்தர்யலஹரி கூறுகின்றது.

இதனால் பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்ற மும்மூர்த்திகளும் தேவியினுடைய பாத தூளியைப் பூசை செய்து படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயல்களைச் செய்து வருகின்றார்களே தவிரச் சுயமாக அவர்களுக்குத் தொழிலைச் செய்யும் ஆற்றல் இல்லை. தேவர்களும் கூட தேவியினுடைய பாத தூளியின் சிறப்பினால் தான் எல்லாவிதமான நன்மைகளையும் அடைகின்றார்கள். இல்லறத்தார்களுக்கும் ஆயுள் ஆரோக்கிய ஐசுவரியப் பெருக்கிற்கும், சத்ருக்கள் அழிவதற்கும், சிறந்த ஞானத்தை யடைவதற்கும் பராசக்தியின் பாதாரவிந்த தூளியின் பூசையே சிறந்தது. பராசக்தியின் பாத தூளியே மோட்சத்தை அடியார்களுக்குச் சுலபமாகக் கொடுக்கக் கூடியது.
டாக்டர் ஐயரவர்கள் அரும்பாடுபட்டுக் கறையானுக்கும், இராமபாணப் பூச்சிகளுக்கும் உணவாகாமலும், ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் போகாமலும் பாதுகாத்துப் பல சங்க இலக்கியங்களையும், புராணங்களையும், பிரபந்தங்களையும், ஐம்பெருங் காப்பியங்களில் மூன்றினையும் அச்சுவாகனம் ஏற்றி என்றும் அழியாவண்ணம் செய்தார்கள்.
ஐயரவர்கள் தம் வாணாளில் ஊர் ஊராகச் சென்று அரும்பாடு பட்டுச் சேகரித்த சுவடிகள் பல. அவற்றில் முக்கியமான நூல்களை அவரே பதிப்பித்து விட்டார்கள். பதிப்பிக்காமல் விடுபட்ட நூல்களை அவரது பெயரால் திருவான்மியூரில் திருமதி. ருக்மிணிதேவி அவர்களால் நிறுவப்பட்டு இலங்கிவரும் நூலகம் பதிப்பித்துக் கொண்டு வருகிறது.
ஐயரவர்கள் சேகரித்து வைத்த சுவடிகளில் "சிவகாமி அம்மன் அந்தாதி", "சிவகாமி அம்மன் அகவல்", "சிவகாமி அம்மன் ஊசல்", "தில்லைச் சிவகாமி அம்மன் கலிவெண்பா", "சிவகாமி அம்மன் பேரில் தோத்திரம்", "சிவகாமவல்லி விருத்தம்" என்பவை மிகவும் முக்கியமானவை. ஐயரவர்களே இந்நூல்களைப் படித்துத் திருத்தஞ் செய்துள்ளார்கள். தாமே பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது போலும்.
"சிவகாமி அம்மன் அந்தாதி” என்னும் இந்நூலினைப் பதிப்பிக்க 850 எண்ணுள்ள ஓர் ஓலைச்சுவடி மட்டும் உள்ளது. அதைப் பிரதி செய்து திரு. ந. ஐயாசாமி என்பவரிடம் கொடுத்து ஐயரவர்கள் முறையினைப் பின்பற்றிக் குறிப்புரை முதலியன எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது திரு. ந. ஐயாசாமி அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டு குறிப்புரை எழுதிக் கொடுத்து நன்கு ஆய்ந்து சிறந்த முறையில் முன்னுரையையும் எழுதிக் கொடுத்தார்கள். அவரது முன்னுரையைக் கூர்ந்து நோக்கின் எவ்வளவு ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் இப்பணியைச் செய்துள்ளார் என்பது நன்கு விளங்கும். அன்னாருக்கு நூல் நிலையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்நூல் நன்கு வெளிவர ஊக்கம் காட்டிய நூல்நிலைய ஆட்சிக் குழுத் தலைவர் திரு. எஸ். குகன் அவர்களுக்கு நன்றி.
இந்நூல் அச்சாகும்போது ஒப்பு நோக்குதல் முதலிய பணிகளைச் செய்தவர் திரு. எஸ். சாயிராமன் ஆவர்.
இந்நூலினைச் சிறந்த முறையில் அச்சிட்டுக் கொடுத்த சுதா அச்சக உரிமையாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
மத்திய அரசு இப்பதிப்பு வெளிவர ஓரளவு மானியம் அமைத்தமைக்கு நன்றி.

பெசன்ட் நகர்       வித்துவான். சு. பாலசாரநாதன்
8-3-1984       ஆராய்ச்சித்துறைப் பிரிவு
      டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்
------------------

சிவகாமி அம்மன் அந்தாதி - முன்னுரை

அந்தாதிப் பிரபந்தங்கள்

தமிழ் இலக்கியத்தில் பிரபந்தங்கள் பெரும் பான்மையான இடத்தை வகிக்கின்றன.
அவை தொண்ணூற்றாறு வகைப்படும் என்பர். அவற்றுள் அந்தாதியும் ஒன்று.

அந்தாதி-பொது விளக்கம்:
“அந்தாதி”-இது வடமொழிச் சொல். அந்தத்தை ஆதியாக உடையது என்பது பொருள். இப்பொருளின்படி இஃது இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை காரணக்குறிப் பெயராயிற்று. (பதாம்புயம் என்பதுபோல இது தீர்க்கசந்தி).

"தன்கண் உள்ள செய்யுட்களுள் முன் உள்ள செய்யுளின் அந்தத்தால் அடைந்த ஆதியை, அடுத்துள்ள செய்யுள் பெற்று வருதலை உடையது. இது நூலுக்கு மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகிய காரணப் பெயர். மண்ணாலாகிய குடம் போன்றது-" என்பதும் இலக்கணம்.[1]

தூது, உலா, கோவை, கலம்பகம் போன்றவைகளும் பிரபந்தங்களே. ஆனால். அந்தாதிப் பிரபந்தம் இவைகளினின்றும் மாறுபட்டது; எளியது; விதிகள் குறைந்து காணப்படுவது. மேற்கூறப் பெற்ற தூது, உலா, கோவை, கலம்பகம் ஆகியவைகளிலும் அந்தாதி முறை அமைந்திருப்பினும், வேறுபல இலக்கணங்களும் அவைகட்குண்டு. இன்றியமையாதனவாகிய உறுப்புக்கள் உண்டு. அத்தகைய உறுப்புக்கள் யாவுமின்றி, சொல்தொடர் நிலை ஒன்றனை மட்டுமே பெற்று இயல்வது "அந்தாதி" எனப்பெறும்.
----------------
[1]. பன்னிருபாட்டியல்: பக்; 139. ; கா, ரா. கோவிந்தராச முதலியார் அவர்கள் கழகப் பதிப்பு.
-----------------------

பிரபந்தச் செய்திகள்:
சிறு பிரபந்தங்களைப் பற்றிய செய்திகள் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரத்தில் உள. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த 'பன்னிரு பாட்டிய’லிலும் காணக்கிடக்கின்றன.[2] இந்நூல்களும் பிரபந்தங்களின் முழு எண்ணிக்கையைக் கூறவில்லை.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு எனக் கூறுகின்றார்.
---
[2]. பன்னிருபாட்டியல்: சூ. 99:
------- "பிரபந்த மரபியல்" என்னும் நூல்,
"பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாத்
தொண்ணூற் றாறு எனுந்தொ கையதாம்”
எனக் குறிப்பிடுகின்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “சிவந்தெழுந்த பல்லவராயன் உலா” என்னும் நூல்.

“பற்பல சந்தம் பரணிமணிக் கோவைமுதற்
பொற்பொலி யந்தாதி பூச்சின்னம் - சொற்பொருள்கள்
ஆலப்ர வஞ்சம்போ லாகிய தொண்ணூற்றாறு
கோலப்ர பந்தங்கள் கொண்டபிரான்"
      (கண்ணி103, 104).
எனப் பேசுகிறது.[3]
இவ்விரண்டு நூல்களும் எண்ணிக்கையை மட்டுமே கூறுகின்றன. அவை யாவை என முறைப்படுத்திக் கூறவில்லை. இத்தொண்ணூற்றாறு பிரபந்தங்களையும் முறையாக எடுத்தியம்பிய பெருமை வீரமா முனிவர் அவர்களையே சாரும்.

கி.பி. 1738-இல் வீரமா முனிவர் அவர்கள் வெளியிட்ட "தொன்னூல் விளக்கம்" என்னும் நூலில் செய்யுள் மரபில் இவற்றை முறைப்படுத்திக் கூறியுள்ளார். தமிழில் வழங்கும், "96 வகைப் பிரபந்தங்களுக்கு உருக்கொடுத்து நடமாடவிட்டவர் வீரமா முனிவர் ஆவார்” என்று அறிஞர் கூறியுள்ளார்.[4]
--------
[3]: கல்வெட்டு
[4]. தமிழ் இலக்கியக் கொள்கை 2. சிறு பிரபந்தங்கள்; மு. சண்முகம் பிள்ளை: பக்: 77
-----------------------------------

பன்னிரு பாட்டியல் வாயிலாக அறியப்படும் அந்தாதிகள் மூன்று;
(1) கலியந்தாதி, (2) ஒலியந்தாதி, (3) அந்தாதித் தொகை என்பனவாம்.

தொன்னூல் விளக்கம் வாயிலாக அறியப்படும் அந்தாதிகள்:
(1) ஒலியந்தாதி. (2) பதிற்றந்தாதி. (3) நூற்றந்தாதி என மூன்று.

மேற்கூறப் பெற்ற இரு நூல்கள் வாயிலாகவும் அறியப் பெற்ற அந்தாதி நூல்கள் மொத்தத்தில் ஐந்தாகும். அவை,
(1) ஒலியந்தாதி (2) கலியந்தாதி (ஒலியமைப்பு)
(3) பதிற்றந்தாதி (4) நூற்றந்தாதி (எண்ணிக்கை)
(2) அந்தாதித் தொகை (தொகை பற்றியது)

அந்தாதியின் பல்வேறு இலக்கணம் பற்றிக் கூறும் நூல்கள் பல. அவற்றுள்ளும் முதன்மையானவை யாப்பருங்கலக் காரிகையும், தண்டியலங்காரமும் ஆம். இவ்விரு நூல்களாலும் அறியப்படும் செய்திகளாவன.

1. அந்தாதி- "தொடை":
`தொடை எனப்படுவது செய்யுளின் ஓர் உறுப்பு ஆகும். மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை ஆகியனவும் தொடை எனப்பெறும் செய்யுள் உறுப்பாகும்.

"ஒரு பாடலின் ஒரு அடியில் இறுதிக்கண் நின்ற எழுத்தானும், அசையானும், சீரானும், அடியானும், மற்றையவடிக்கு ஆதியாய்த் தொடுப்பது அந்தாதித் தொடை' எனப்படும்,

"ஈறு முதலாத் தொடுப்ப தந்தாதியென்
றோதினர் மாதோ உணர்ந்திசி னோரே”-
என்பது யாப்பருங்கலம்.
"அந்த முதலாத் தொடுப்பதந் தாதி" (17) என்பது யாப்பருங்கலக் காரிகை.

"அடியுஞ் சீரும் அசையும் எழுத்தும்
முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ
தந்தாதித் தொடையென் றறைதல் வேண்டும்”
என்று நத்தத்தனார் விளக்கினார்.

அந்தாதித் தொடை என்பது ஒரு செய்யுளின் ஓர் அடியுள்ளும், ஒரு செய்யுளுக்குள்ளேயும் அமையப் பாடப் பெறுவது. டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள், "இரண்டு அடிகளுக்குள் அமைவது அந்தாதித் தொடை" எனத் “திருமயிலை யமக அந்தாதி" என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவதைக் காணலாம்.

2. அந்தாதி - ஒரு சொல்லணி:
"எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே"
(சூ: 92) என்பது மடக்குப் பற்றிய 'தண்டியலங்கார'ச் சூத்திரம். ஒரு செய்யுளுள்ளே ஓரடியிறுதி மற்றையடிக்கு முதலாகத் தொடுப்பனவுமுள (சூ: 12, உரை) என இம்மடக்கு அமையும் முறைபற்றியும் கூறப்பட்டுள்ளது.

'மடக்கு' எவ்வெவ்வாறு ஒரு செய்யுளில் அமைந்து வரும் என்பது பற்றிய செய்திகளைக் கீழே காணலாம்:

(அ) அடிபற்றியன:
ஓரடி மடக்கு, ஈரடி மடக்கு, மூன்றாமடி மடக்கு, நான்காம் அடி மடக்கு. (4)
(ஆ) இரண்டடி மடக்குகள்:
முதலீரடிக்கண் மடக்குதல், முதலடிக்கண்ணும் மூன்றாம் அடிக்கண்ணும் மடங்குதல், முதலடிக்கண்ணும், நான்கா மடிக்கண்ணும் மடங்குதல், கடையீரடிக்கண் மடக்குதல், இடையீரடிக்கண் மடக்குதல், இரண்டாமடிக்கண்ணும் நான்காம் அடிக்கண்ணும் மடக்குதல். (6)
(இ) மூன்றடி மடக்குகள்:
ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடி மடக்கு, முதலடியொழித்து ஏனை மூன்றடி மடக்கு, முதலடியொழித்து ஏனைய மூன்றடி மடக்கு, ஈற்றயலடியொழிந்து ஏனை மூன்றடி மடக்கு. (4)
(ஈ) நான்கடி மடக்கு:
நான்கடியும் மடக்கியது முற்று மடக்கு. (1)
(உ) ஓரடியில் வரும் மடக்குகள்
ஆதிமடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு, ஆதி இடை மடக்கு, ஆதி கடைமடக்கு, இடைகடை மடக்கு, முழுதும் மடக்கு. (7)
ஊ) மூவகை:
இடையிட்டு வருவன, இடையிடாது வருவன, இடையிட்டும் இடையிடாதும் வருவன.
ஆக மொத்தம் மடக்குகள் முந்நூற்றுப் பதினைந்து ஆகும்.

'மடக்கு' எனத் தண்டியலங்காரம் மேற்கூறிய எல்லாச் செய்திகளும், 'தொடை' பற்றி யாப்பதிகாரம் கூறியனவேயாகும்.

'ஓரெழுத்து மடக்கலும் உரித்தென மொழிப” (சூ: 97), என்பதன் வாயிலாக ஓர் எழுத்து மீண்டும் வந்தாலும், 'மடக்கு' என அறிகிறோம்.
"ஓரெழுத்தும், ஈரெழுத்தும், மூன்றெழுத்தும், நான்கெழுத்தும், இனவெழுத்தும், மெய்யெழுத்தும், உயிரெழுத்து மடங்கும்; உயிரும் மெய்யும் மடங்கும்போது உயிர்மெய்யாய் மடங்கும் என்பன யாவும் 'மடக்கலும்' என்ற உம்மையால் பெறப்பட்டன.

மேற்கூறிய மடக்குகள் அனைத்தும் ஒரு செய்யுள் முழுதும் மடங்குதலும், ஓரடி முழுதும் மடங்குதலும் உண்டு எனக் கொள்ள வேண்டும்.

இரண்டு, இரண்டு அடிகள் ஒரேயளவினையுடையவாய் மடங்கும்போது, அதற்குப் "பாடகமடக்கு” என்று பெயர்.
ஓர் அடியின் ஈற்றுச் சொல் அடுத்த அடியின் ஆதியாக மடங்கி வருவதும் உண்டு. இது இடையிட்டு முதலும் இறுதியும் மடங்கி வரும். இதனைச் "சந்தட்டய மடக்கு" அல்லது 'முற்று மடக்கு' என்று கூறுவர்.

"அந்தாதிப் பதந்தாதி மடக்கே” (மாறனலங்காரம்)
"ஒத்த வெழுத்திற் பொருள்வே றாக
வைத்துமொழி மடக்கினது மடக்கெனப் படுமே"
      (வீரசோழியம்)
எனப் பிற இலக்கண நூல்கள் கூறுதுங் காண்க. மடக்கு என்பதும் யமகம் என்பதும் ஒன்றே யாகும்.

(3) அந்தாதி-சொற்றொடர்நிலைச் செய்யுள்:
செய்யுள் அந்தாதி சொற்றொடர் நிலையே” (12) என்பது தண்டியலங்காரச் சூத்திரம். செய்யுள் தனிச்செய்யுள் என்றும் தொடர்நிலைச் செய்யுள் என்றும் இரு பிரிவுபடும். தொடர் நிலைச் செய்யுள், சொற்றொடர் நிலைச் செய்யுள் என்றும் பொருள் தொடர் நிலைச் செய்யுள் என்றும் இரு வகைப்படும். இவ்விருவகையுள்ளும் அந்தாதி என்பது சொற்றொடர் நிலைச் செய்யுள் ஆகும் என்பதே மேல் உள்ள சூத்திரக் கருத்து,

(4) அந்தாதி-மூன்று நிலைகள்:
நாம் இதுகாறும் கண்டவற்றால் மூன்று நிலைகளில் நின்று 'அந்தாதி' செயல்படுகிறது.

முதலாவதாக அமைவது "தொடை அந்தாதி” அல்லது அந்தாதித் தொடை" ஆகும். ஒரு செய்யுளுக்குள்ளேயே சொல் தொடர்ந்து வருமாறு தொடுப்பதைக் குறிக்கின்றது; இரண்டு அடிகளுக்கிடையில் அமைவது.

இரண்டாவதாக அமைவது அணி அந்தாதி - இதுவே மடக்கு ஆகும். இது பற்றிய விரிவினை முன்னரே கண்டோம்.

மூன்றாவதாக அமைவது - ‘செய்யுள் அந்தாதி’. செய்யுட்களின் சொல்தொடர் நிலையைக் குறிக்கின்றது. இம்மூன்று செயல் நிலைகளும், ஒன்றே என்பதும், பெயரளவில் வேறு என்பதும் புலப்படும்.

அந்தாதித்து வரும் பிரபந்தங்கள்:
“ஒன்றுபல வாகிய இனமந் தாதி
கோவை காப்பிய மாதியாக் கூறுவன."
என்பது 'பன்னிரு பாட்டியற்' சூத்திரம்.

கலம்பகம், மும்மணிக் கோவை முதலியனவும் அந்தாதித்து வருவனவேயாகும். அவை சொல்லால் தொடர்ந்து வருதலுடன், முதன்மையான பல்வகை வேறு உறுப்புக்களைக் கொண்டும் வருவன. அந்தாதித்து வரினும் பிற பிரபந்தங்கள் சொற்றொடர் நிலைச் செய்யுள் ஆகா. சொற்றொடர் நிலைச் செய்யுள் ஆகும் தகுதி “அந்தாதி” ஒன்றற்கு மட்டுமே உண்டு. எப்பொருளைக் கொண்டு வேண்டுமானாலும் அந்தாதியாக்கப் பெறலாம். "வேண்டிய பொருளிற் பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே" (128) என்பது பன்னிரு பாட்டியற் சூத்திரம்.

அந்தாதி எனினும், அந்தாதித் தொகை எனினும் (இரண்டும்) ஒன்றேயாகும்.

'பன்னிரு பாட்டியல் கூறும் பிரபந்தங்களின் மொத்த எண்ணிக்கை அறுபத்து மூன்று. அவற்றுள் பின்வரும் பதினான்கு மட்டுமே அந்தாதித்து வரும்.

1. கலம்பகம் 2. பல்சந்தமாலை 3. இணைமணி மாலை
4. இரட்டைமணி மாலை 5. மும்மணி மாலை 6. நான்மணி மாலை
7. கலம்பக மாலை 8. மும்மணிக் கோவை 9. கலி அந்தாதி
10. ஒலி அந்தாதி 11. நவமணி மாலை 12. அந்தாதித் தொகை
13. ஒருபா ஒருபஃது 14 இருபா இருபஃது.

அவ்வாறே, 19-ஆம் நூற்றாண்டு இலக்கண நூலான 'முத்து வீரியம்' 13 பிரபந்தங்கள் அந்தாதித்து வரும் எனக் கூறுகின்றது. அவை:

1. கலம்பகம் 2. இரட்டைமணிமாலை 3. அட்டமங்கலம்
4. மும்மணிக் கோவை 5. நவமணிமாலை 6. நான்மணிமாலை
7. மும்மணிமாலை 8. ஒலியலந்தாதி 9. பதிற்றந்தாதி
10. நூற்றந்தாதி 11. ஒருபா ஒருபஃது 12. அலங்கார பஞ்சகம், 13, இருபா இருபஃது.

மேலே கூறப்பட்ட இரண்டு இலக்கண நூல்களினாலும், மொத்தம் உள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் பதினெட்டுப் பிரபந்தங்கள் மட்டுமே அந்தாதித் தொடையாய் வரும் என்பதை அறிகிறோம், அவற்றுள்ளும்.

"கலி அந்தாதி”, “ஒலி அந்தாதி, "பதிற்றந்தாதி", "நூற்றந்தாதி", "அந்தாதித் தொகை” ஆகியவை மட்டுமே சொல்தொடர் நிலைச் செய்யுளாகிய அந்தாதி நூல்களாகும்.

பிற பதின்மூன்று நூல்களும் பிற உறுப்புக்களை முதன்மையாகக் கொண்டும், பின்னர் அந்தாதித் தொடை கொண்டும் நூல் அமையப் பெறும்.

அந்தாதியும் மண்டலித்தலும்:
அந்தாதித் தொடை கொண்டும் நூல்கள் பாடப் பெறுவதனாலும், அந்தாதி நூல்களும் அவ்வாறே வருவதனாலும்,இரண்டற்கும் ஒரு வேறுபாட்டை உணர்த்துவதற்காக அமைந்தது - இம் 'மண்டலி'த்தல் ஆகும்.

நூலின் (முதல்) தொடக்கச் சொல்லே, நூலின் இறுதிச் சொல்லாக மீண்டும் வருமாறு அமைத்துப் பாடுவது மண்டலித்தல் எனப்படும்.

எடுத்துக்காட்டாகக் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி "பிறந்து மொழிபயின்ற" எனத் தொடங்கி, "பேராத காதல் பிறந்து" என முடிகிறது. இதனையே மண்டலித்தல் என்கிறோம். இம் மண்டலித்து முடிதலே 'அந்தாதி' நூலிற்குள்ள சிறப்பு உத்தியும், விதியும் எனக் கூறலாம்.

`ஒரு நூலுக்குள் 'மண்டலித்தல்' அமைவதைப் போலவே, ஒரு பாடலுக்குள்ளேயும், "மண்டலித்தல்" அமைவதுண்டு.
"உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி யறிவனவ்
வாசனத் திருந்த திருந்தொளி யறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே"-

எனவரும் 'யாப்பருங்கலவிருத்தி’ப் பாடல் “மண்டல மயக்கந்தாதி”க் குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இப்பாடலின் முதலும், முடிவும் உலகு என அமைந்து மண்டலித்தல் காண்க,

'கயலேர் தரவருங் கடிபுனற் காவிரி
காவிரி மலருகக் கரைபொரு மரவம்
மரவம் பூஞ்சினை வண்டொடுஞ் சிலம்பும்
சிலம்புதுழ் தளிரடித் திருமனைக் கயலே"
என்றும்,

''மாலை யாகவெய் யனங்கவேள் பயிறருமாலை
மாலை வேட்டவர் மனங்கொலோ வவன்றுழாய்மாலை
மாலை யோவுடைத் ததுநினைந் தொழுகுமாலை
மாலை யாவுடை யவரைவந் திடர்செயுமாலை"
என்றும்,

வரும் இவ்விரு பாடல்களும், 'அந்தாதி மடக்கு' பற்றிய தண்டியலங்கார உதாரணப் பாடல்கள். இவ்விரு பாடல்களிலும், முறையே, 'கயலே" என்னும் சொல்லும் "மாலை" என்னும் சொல்லும் மண்டலித்து வந்துள்ளமை காண்க.

'திருத்தொண்டர் புராணம்' என்றும் 'பெரிய புராணம்'- 'உலகெலாம்' எனத் தொடங்குகின்றது. பிறகு "நிலவி உலகெலாம்" என மண்டலித்து முடிகின்றது. இந்நூல் 'அந்தாதி'யன்று; ஆயினும் மண்டலித்தல் கையாளப்பட்டுள்ளது.

மண்டலிக்கும் நூல்கள் அந்தாதியாக இருக்க வேண்டுவது இல்லை; ஆனால் அந்தாதி நூல்கள் மண்டலித்தல் சிறப்பு. அந்தாதி நூல்கள் மண்டலிக்காமலும் வரும். மண்டலிக்காது வரும் அந்தாதிப் பாடல்களையோ, நூல்களையோ நாம் "செந்நடை அந்தாதி" என்கிறோம்.

இனிப் பல்வேறு வகையான "மண்டல அந்தாதி"களையும், "செந்நடையந்தாதி" களையும் வகைப்படுத்திக் காண்போம்.
மண்டல அந்தாதிகள் பின்வருமாறு அமையும் :
"வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண் டதுவே"
என்பது, "மண்டல எழுத்தந்தாதி".

''பேதுற விகந்த பெருந்தண் காவிரி
விரிதிரை தந்த வெறிகமழ் வாசம்
சந்தனக் குழப்பு முலைமிசைத் தடவிய
வியனறுங் கோதைக்கு மெல்லிதால் நுசுப்பே"
என்பது 'மண்டல அசையந்தாதி'.

"உலகுடன்...உலகே" என மேலே எடுத்துக் காட்டப் பெற்றது-"மண்டல மயக்கந்தாதி".
மேலும்,
"வேத முதல்வ! ஏதமில் அகணித
தத்துவர் தலைவ முத்தி முதல்வ
வழுவா ஞானக் குழுவுடன் வந்து
துன்னாப் பாவ மன்னரை அவித்த
தரும நேமிப் பரமனென! வியந்து
துன்னின ராகி மின்னென மிளிர்ந்த
தகைமுடி சாய்த்துச் சத்துவர் வணங்குவ
வகைமுடி வில்லினை வாடுக எனவே!'
      (திருப்பாமாலை)
என்பது அசையந்தாதியும், எழுத்தந்தாதியும் மயங்கி வந்த மண்டல மயக்கந்தாதி ஆகும். உதாரணங்கள் பிறவற்றிற்கு வந்த வழிக் கண்டு கொள்க. இவற்றை யெல்லாம் வைத்து ஒருமித்துக் காணும்போது, மண்டல அந்தாதிகள்-

"மண்டல எழுத்தந்தாதி," "மண்டல அசையந்தாதி", மண்டலச் சீரந்தாதி", “மண்டல அடியந்தாதி”, “மண்டல மயக்கந்தாதி" எனவரும். அவ்வாறே, "செந்நடை அந்தாதிகள்", "செந்நடை எழுத்தந்தாதி", "செந்நடை அசையந்தாதி", "செந்நடைச் சீரந்தாதி", "செந்நடை அடியந்தாதி", "செந்நடை மயக்கந்தாதி", "செந்நடை இடையிட்ட அடியந்தாதி" என வரும்.

"முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி
இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம்
நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்
எக்கர் இட்ட எறிமீன் உணங்கல்
உணங்கல் கவரும் ஒய்தாள் அன்னம்
அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர்
மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி
அடம்பி அயலது நெடும்பூந் தாழை
தாழை அயலது வீழ்குலைக் கண்டல்
கண்டல் அயலது முண்டகக் கானல்
கானல் அயலது காமரு நெடுங்கழி
நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம்
பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி
பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின்"
என வருவது, "செந்நடைச் சீரந்தாதி".

''ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய
சேதியஞ் செல்வநின் திருவடி பரவுதும்"
(சூளா: இரத: 96). இது "செந்நடை அடியந்தாதி”.

"பொன்னலர் துதைந்த பொரிதாள் வேங்கை
வேங்கை ஓங்கிய வியன்பெரும் குன்றம்
குன்றத் தயலது கொடிச்சியர் கொய்புனம்
புனத்தயற் சென்ற சிலம்பன்
சிலம்படி மாதர்க்கு நிறைதோற் றனனே"-
என்பது, "செந்நடை மயக்கந்தாதி”.
சீரந்தாதியும், அசையந்தாதியும் மயங்கி வந்துள்ளமை காண்க.
"இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா
அரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்
அரங்கம் அணிபொழிலா ஆடுமாயின்
மரங்கொல் மனத்தகன்றார் நெஞ்சமென்செய் ததிளவேனில்”
இது "செந்நடை இடையிட்டந்தாதி" எனப்படும்.
இஃது, எழுத்து, அசை, சீர்களால் இடையிட்டு வந்த அடியந்தாதி என்பதனை அறிக.
----------
அந்தாதித் தொடையும் பிற தொடைகளும்:

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை எனப்படும் ஐந்து தொடைகளுடனும் கூடி அந்தாதித் தொடை வழங்கப் பெறுவது உண்டு. மோனையும் அந்தாதியும் கூடிவரின் அது மோனையந்தாதி, எனப்படும். அவ்வாறே வருவன, எதுகையந்தாதி, என்றும், முரணாய் வருவன முரணந்தாதி என்றும், இயைபாய் வருவன இயைபந்தாதி என்றும், அளபெடையாய் வருவன அளபெடையந்தாதி என்றும் கொள்ளப் பெறும்.

அந்தாதித் தொடை பிற ஐந்து தொடைகளுடனும் கூடி வரும் ஆற்றல் உடைமையை நாம் இப்பகுதியில் காணமுடிந்தது.
"மேனமக் கருளும் வியனருங் கலமே
மேலக விசும்பின் விழவொடு வருமே
மேருவரை அன்ன விழுக்குணத் தவமே
மேவதன் றிறநனி மிக்கதென் மனமே."
என்பது மோனையந்தாதி. மண்டலித்தும் வந்தமை காண்க.

இவ்வாறே, எதுகையந்தாதி, முரணந்தாதி, இயைபந்தாதி, அளபெடையந்தாதி ஆகியனவற்றிற்கும் உதாரணம் பொருத்திக் கண்டு கொள்ள வேண்டும்.

பொருள் நோக்கு அந்தாதி:

சொல் தொடர் நிலைச் செய்யுளை அந்தாதி எனக் கூறுவது போலவே, பொருள் தொடர் அந்தாதியும் உண்டு எனக் கொள்ள வேண்டும். சொல்லாலும் பொருளாலும் தொடர்ந்து வரும் நிலை அந்தாதிக்குண்டு என்பதனை அறிய முடிகின்றது.
மேற்கூறப் பெற்ற அனைத்து அந்தாதிகளையும் பின்வருமாறு அடக்கலாம்.

மண்டல அந்தாதி:
மண்டல எழுத்தந்தாதி, மண்டல அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, மண்டல அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடியந்தாதி.
செந்நடை அந்தாதி:
செந்நடை எழுத்தந்தாதி, செந்நடை அசையந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, செந்நடை அடியந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, செந்நடை இடையிட்ட அடியந்தாதி.
தொடையந்தாதி:
மோனையந்தாதி, எதுகையந்தாதி, முரணந்தாதி, இயைபந்தாதி, அளபெடையந்தாதி.
பொருள் நோக்கு அந்தாதி:
இவற்றையும், இவற்றின் விரிவையும், “யாப்பருங்கல விருத்தி”யில் காண்க.

அந்தாதியும் தொல்காப்பியமும்:
ஒல்காப்புகழ்த் தொல்காப்பியத்தில் 'அந்தாதி' பற்றிக் கூறப் பட்டுள்ள செய்திகளைத் தொகுத்து அறிவதே இப்பகுதியின் நோக்கம். உரையாசிரியர்கள் மூலமாகவே 'அந்தாதி' பற்றிய குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கின்றன. முதலாவதாகத் தொல்காப்பியச் செய்யுளியலுள் எண்வகை வனப்புப் பற்றிக் கூறும் இடத்திலும், பின்னர் தொடை பற்றிக் கூறுமிடத்தில் சற்று விரிவாகவும் குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன.

எண்வகை வனப்புக்கள் ஆவன:
"அம்மை அழகு தொன்மை தோல்விருந்
தியைபு புலனிழை பெனவனப் பெட்டே" (செய்: சூ: 1).
இவற்றுள்,
"விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" (செய்: சூ: 239)
என்பது - 'விருந்து' என்னும் வனப்புப் பற்றியது. உரையாசிரியர்கள் 'விருந்து' பற்றித் தரும் விளக்கங்கள்:

(அ) "புதிதாகப் புனைதலாவது ஒருவர் சொன்ன நிழல் வழியன்றித் தானே
தோற்றுவித்தல்; இது பெரும்பான்மை யும் ஆசிரியப்பாவைக் குறித்தது'' –
இளம்பூரணர்.

(ஆ) 'விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது; அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார். முதலியோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உரைக்க., கலம்பகம் முதலாயினவும் சொல்லுப" - பேராசிரியர்.

(இ) "முற்கூறிய 'தோல்' என்பது பழைய கதையைப் புதிதாகக் கூறல் என்றும், ஈண்டுக் கூறிய விருந்து என்பது பழையதும், புதியதுமாகிய கதை மேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர் நிலைச் செய்யுள் செய்வது" - நச்சினார்க்கினியர்.
மேற்கண்ட மூன்று உரையாசிரியர்களின் விளக்கங்களுள் பொதிந்துள்ள அடிப்படைக் கருத்துக்களின் திரட்சி:
(1) விருந்து - புதிதாகப் புனையப்படுவது-

(2) அது தொடர் நிலைச் செய்யுள் - பொருள் தொடர் நிலைச் செய்யுளாகவோ, சொற்றொடர் நிலைச் செய்யுளாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு நூல்கள்: முத்தொள்ளாயிரம், பொய்கையார் முதலியோர் செய்த அந்தாதி, கலம்பகம் முதலியன.

விருந்து என்றால் புதிது என்பது பொருள். புதிதாகப் புனையப் பெற்ற தொடர்நிலைச் செய்யுட்கள் விருந்து என்னும் வனப்பினுள் அடங்கின. "விருந்தென்பது புதுமை; அஃது ஈண்டு ஆகு பெயராய்ப் புதியராய் வந்தார் மேல் நின்றது (திருக்: 44)" என்ற பரிமேலழகர் உரையும் ஒப்பு நோக்கத் தக்கது.

"விருந்து என்பது புதியவற்றின் மேற்று; அஃது இப்பொழு துள்ளாரைப் பாடுவது; அது வந்தவழிக் கண்டு கொள்க” என யாப்பருங்கலக்காரிகை கூறுவதும் காண்க.

அந்தாதி என்றால் என்ன என்பது பற்றியோ, அந்நூல் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியோ, 'விருந்து’ என்னும் வனப்பு யாதும் கூறவில்லை. மாறாகப் புதிதாகப் படைக்கப் பெற்ற நூல்கள் 'விருந்து' என்னும் வனப்பிற்கிலக்கியமாகக் கொள்ளப்பட்டன என்பதை நாம் உணர்ந்தோம்.

இரண்டாவதாகச் செய்யுளியலுள் 'தொடை' பற்றிய சூத்திரங்களின் உரை வாயிலாக 'அந்தாதி' பற்றிய குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. அவையாவன:

(1) இளம்பூரணர் உரைக்குறிப்பு:
"தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்” மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவற்றின் கண் இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், கடை, கடையிணை, கடைக்கூழை, இடைப்புணரென வேறுபடுத்துறழ்ந்தும், எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி எனவும்...... வரம்பிலவாகி விரியும்" (பக்: 467).

"இவ்வகையினான் ஒரு பாட்டிறுதி மற்றைப் பாட்டின் ஆதிச் சீராகி வருதல் கொள்க" (பக்: 469)[1].
இவர் அசையந்தாதி, சீரந்தாதி என இரண்டும், எழுத்தந்தாதி, அடியந்தாதி என இரண்டும், ஆக நான்கந்தாதித் தொடை கூறுவது நோக்கற்பாலது. சொற்றொடர் நிலைச் செய்யுள் பற்றிக் கூறுவதும் உன்னற்பாலது.
--------------
1: தொல்காப்பியம்: பொருளதிகாரம்: இளம்பூரணர். கழகப் பதிவு: 1953,
---------------------

2) பேராசிரியர் உரைக் குறிப்பு:
"ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற்
பொழிப்பென மொழிப புலவ ராறே” (சூ:93).
இன்னும் 'புலவராறெ'ன்றதனால் 'தொடையந்தாதி'யும், 'விட்டிசை'யும் ஒரோவென்று இரண்டாகி அசையந்தாதியும், சீரந்தாதியும், விட்டிசைத் தொடையும்,

குறிப்பு விட்டிசையுமென நான்காம்"-
"இன்னும் 'புலவராறே' என்று மிகுத்துச் சொல்லியவதனானே அமைவன வேறுளவெனத் தழீஇப் புகுந்தவற்றுள் ஈண்டுக் கூறாத அந்தாதித் தொடையும், மற்றை விகற்பத் தொடையாகிய ஒரூஉத் தொடையுங் கூறிக் கொள்க” [1] எனப் புலப்படுத்தப் பெற்றமை காண்க.
-------------------------------
1: தொல்காப்பியம்; பொருளதிகாரம்: இ: பாகம்: பேராசிரியர். பிரமஸ்ரீ
சி. கணேசையர் உரைக் குறிப்பு: நா. பொன்னையா அவர்கள் பதிப்பு: 1943:
------------
“ஓரடியுள் இறுதிச்சீரின் ஈற்றசையும், மற்றையடியின் முதற் சீரின் முதலசையும் ஒன்றத் தொடுப்பது அசையந்தாதி" - "இனி, இறுதிச்சீர் முதற்சீரொடு சேரிற் சீரந்தாதியாம்" -(உ-ம்)

"குன்றகச் சாரற் குதித்தன கோண்மா
மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்”
என்பது அசையந்தாதி.
“தழைபூஞ் சாரற் பூத்த முல்லை
முல்லை சான்ற கற்பி னல்லோள்”
என்பது சீரந்தாதி,
"அசையந் தாதி முந்நூற்றிருபத் தைந்தாயினவாறு கண்டு
கொள்க:
“அவ்வகை யந்தாதி முந்நூற் றிருபத்தைந்
திவ்வகை முப்பாக் கியற்று" - (உரைச்சூத்திரம்).
எனவும், இவ்வுரைச் சூத்திரங்களால் அசையந்தாதி முந்நூற்றிருபத்தைந்தும் ஆயினவாறு அறிந்து கொள்க:

"இனிச் சீரந்தாதி நூற்றறுபத்து நான்கு”
"பாத்தொறும் வந்தசீ ரந்தாதி பாற்படுப்ப
நூற்றோ டறுபத்து நான்கு" எனவும்,
“அந்தாதி யோரிரண்டு மாகத் தொடைநானூற்
றெண்பான்மே லொன்பா னெனல்” - எனவும் பேராசிரியர் சூ: 99 இன் உரையில் விளக்கிக் கூறுகின்றார். [2]
----------
2: தொல்காப்பியம்: பொருளதிகாரம்: பேராசிரியம்: கழகவெளியீடு; (பக். 265,266, 267, 268, 269, 270 காண்க.)
---------------------

(3) நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பு:

"மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே" (சூ101)

"பதின்மூவாயிரத்தோடே ஆறாயிரத்துஇரு நூற்றுத்
தொண்ணூற்றொன்று எனவே, தொகை, பத்தொன்பதினாயி
ரத்திருநூற்றுத் தொண்ணூற்றொன்றாயிற்று." (19291)

இனியசையந்தாதி, சீரந்தாதி வருமாறு:
"மூவகைப் பாவிற்குஞ் சீரந் தாதி
நூற்றோ டறுபத்து நான்கென நுவல்ப
நானூற்று முப்பத் தாறீ ரந்தாதி"
ஆக இரண்டந்தாதியும் 436. (பக்: 120) (தொல்: நச்: கழக வெளியீடு: 1965)

மேற்கூறிய மூவர் உரைக்குறிப்பினாலும், 'தொடை' பற்றி விளங்குவன பின்வருமாறு:
(1) எழுத்தந்தாதி-அடியந்தாதி --இளம் பூரணர்.

(2) அசையந்தாதி-சீரந்தாதி --இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர்
இவையனைத்தும், தொல்காப்பியர் கூறிய,

"மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்
றொன்பஃதென்ப உணர்ந்திசி னோரே." (சூ101).
எனப்பட்ட 'தொடை'யில் அடங்கியனவாகும்.

தொல்காப்பியம் நமக்கு அந்தாதி பற்றிக் கூறும் விளக்கத்தால்,
அசையந்தாதி, சீரந்தாதி என்பன இரண்டும், எழுத்தந்தாதி, அடியந்தாதி என்பன இரண்டும் இருந்தன என்பதும், அவ்வந்தாதி பிற தொடைகளுடனும் கூடி இயலும் என்பதும் ஆகிய செய்திகள் இவையே பின்னர் அந்தாதி நூல் அமையக் காரணம் ஆயின என்பதும் உணரலாம்.
"அந்தாதித் தொடை" தொல்காப்பியர் கூறும் பழமையினை உடையது என்பதும், அதுவே, பின்னர்ச் செய்யுட்களில் அமைத்துப் பாடப்பட்டது என்பதும், பின்னர் சொற்றொடர் நிலை என அழைக்கப்பட்டது என்பதும் வெளிப்படும் உண்மைகள்.
இவ்வளவு ‘பழமை’யினை உடைய அந்தாதித் தொடை எவ்வாறு தமிழலக்கியங்களில் பயின்றன என்பதைக் காண்போம்.
அந்தாதியும் இலக்கியங்களும்:
தொல்காப்பியம் கூறும் 'தொடைவகை'க்குள் இருக்கும் 'அந்தாதித் தொடை' எவ்வெவ்வாறு பண்டை இலக்கியங்களுள் பயின்றுள்ளன என்பதை ஒரு சிறிது இப்பகுதியில் காண்போம்:

(1) திருக்குறளில் அந்தாதிக் கூறுகள்:
"பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற் றாதல் அரிது” (248)
“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்" (602).
என ஒரு செய்யுட்கண் அந்தாதிக் கூறுகள் வந்தமை காண்க.

"ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357).
"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு" (358).
என இரு பாடலுக்குள் அந்தாதித் தொடைக் கூறுகள் காண்க,

(2) புறநானூறு:
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு" (புறம்:2).
"களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்” (புறம்: 26).
"வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை" (புறம்: 38),
"எமக்கீவோர் பிறர்க்கீவோர்
பிறர்க்கீவோர் தமக்கீபவென" (புறம்: 136).
"நிரப்பாது கொடுக்குஞ் செல்வமும் இலனே
இல்லென மறுக்குஞ் சிறுமையும் இலனே” (180)
"தொய்யா உலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின் மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்து” (புறம்:214)

(3) நற்றிணை:
………………………………………….
குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத் ததுவேபிறர்" (95)

(4) சிறுபாணாற்றுப்படை:
வரிகள்: 11-28 மடக்கிற்கு நல்ல எடுத்துக்காட்டு.

(5) தனிப்பாடல்: ஒளவை:
"வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடிஉயரக் கோல்உயரும்
கோலுயரக் கோன் உயர்வான்"

(6) சிலப்பதிகாரம்:
"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. (நிலைவரி:1).

"பவள வுலக்கை கையாற் பற்றித்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை யல்ல கொடிய கொடிய,"
(திணை நிலைவரி: வேறு: 4)
"சேரன் மடவன்னஞ் சேர னடையொவ்வாய்
சேரன் மடவன்னஞ் சேர னடையொவ்வாய்
ஊர்திரைநீர் வேலி யுழக்கித் திரிவாள்பின்
சேரன் மடவன்னஞ் சேர னடையொவ்வாய்"
(திணை நிலைவரி :7)
எனப் பலவாறு வந்துள்ளமை காண்க.

அந்தாதி - ஐங்குறுநூற்றிலும் பதிற்றுப் பத்திலும் :
'சொற்றொடர் நிலைச் செய்யுள்' அல்லது “அந்தாதி”ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரு சங்க நூல்களில் சிறப்பாகக் காணப்படுகின்றது. அவ்வந்தாதி - ஐங்குறுநூற்றில் தொண்டிப் பத்திலும், திற்றுப்பத்து நான்காம் பத்திலும் செந்நடையந்தாதியாகக் காணக்கிடக்கின்றது.

தொண்டி என்னும் நகர் மேலைக் கடற்கரையில் விளங்கிய துறைமுகப்பட்டினம் ஆகும். இத்தொண்டிநகரைப் பற்றிப் பத்துப் பாடல்கள் ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையில் பாடப் பட்டுள்ளன. அவை தொண்டிப்பத்து எனப்படும். அவற்றை யாத்தவர் அம்மூவனார் என்னும் புலவர். இவர் பரணர் காலத்தவர்.

"களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" என்னும் சேரமன்னனைப் புகழ்ந்து, காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய பத்துப் பாடல்களே பதிற்றுப்பத்து நான்காம் பத்து ஆகும். சேரன் செங்குட்டுவனின் தமையனே களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் கி: பி: 120 முதல் 145 வரையில் அரசாண்டவன்.

சொற்றொடர் நிலைச்செய்யுளாகிய அந்தாதியினை அம்மூவனார் அகத்திணைக்கும், காப்பியாற்றுக் காப்பியனார் புறத்திணைக்கும் யாத்து அளித்துள்ளமையால், அந்தாதிக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளும், அதற்கு மேலும் என்பது வலியுறுகிறது.

மிகப்பழைய தொடைவகையான அந்தாதித்தொடை இவ்விரு நூல்களுள் அமைந்துள்ள முறையைக் காண்போம்.

ஐங்குறுநூறு: தொண்டிப் பத்து: அகத்திணை:

"திரையிமி ழின்னிசை யளை இ யயலது.
… … … … … … …….. …….. …….. ...
ஒண்டொடி யரிவையென் னெஞ்சுகொண் டோளே (1)

"ஒண்டொடி யரிவை கொண்டனள் நெஞ்சே.. ...
இரவி னானுந் துயிலறி யேனே' (2).

"இரவி னானு மின்றுயி லறியாது......
பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே" (3).

"அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன.......
அங்கலிழ் மேனி யசைஇய வெமக்கே (4)

"எமக்கு நயந் தருளினை யாயின் பணைத்தோள்........
…….. ...... ... ... ... ……… பண்புபல கொண்டே. (5)

"பண்பும் பாயலும் ………………………………..
...... ..... ……… …… …………. …………. தவறே". (6)

"தவறில ராயினும் ……. …… ………… ………
……… …… ……… …… ……. தோளுற் றோரே''. (7)

"தோளுங் கூந்தலும். ... ... ... ... ... ... ... ... ..........
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... . நல்காக் காலே. (8)

"நல்குமதி வாழியோ ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... இவள்சிறு நுதலே. (9)

"சிறுநனி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
துறைகெழு தொண்டி யன்ன இவள் நலனே. (10)

இப்பத்துப் பாடல்களும் பொருளாலும், மற்றுச் சொல்லாலும் தொடர்ந்து வருவதனை நாம் அறிய முடிகின்றது. இவ்வந்தாதி பத்தும் மண்டலிக்காமல் செந்நடையாக அமைத்துள்ளமை காண்க.
'இவை பத்தும் சொல்வகையால் தொடர்ச்சி பெறுதலேயன்றிக் கிளவி வகையால் தொடர்ச்சியுடையவாறும் அறிக,' என்றும் ''சொல்வகையால் தொடர்ச்சி பெற்றது அந்தாதித் தொடை" என்றும் டாக்டர்.உ.வே. சாமிநாதையர் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்[1].

“இப்பத்தின்கண் வருகின்ற பாட்டுக்கள் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்தவை. இந்நூல் தொகுக்கப் பெற்ற காலத்தில் இவ்வந்தாதி பத்தும் தமிழகத்தில் சிறப்பாக நிலவினமையின் இவற்றைச் சான்றோர் ஒரு சேர மேற்கொண்டு தொகுத்து விட்டனர் என்று கருதலாம்" என்பார் உரைவேந்தர்.[2]

பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையவர்கள், "பதிகத்திற்கு வழி காட்டிய சங்க இலக்கியம் அந்தாதிக்கும் கால்கோளிட்டுள்ளமை காணலாம்" என்பதும் கருதற்பாலது[3].
----------------------
[1]: ஐங்குறுநூறு: டாக்டர்.உ.வே. சாமிநாதையர் அவர்கள்.
[2]. ஐங்குறுநூறு: ஒளவை. சு: து. பிள்ளை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம். பக்: 418:
[3]. தமிழ் இலக்கியக் கொள்கை, 2: பக்: 77.
-----------

பதிற்றுப் பத்து: நான்காம் பத்து: புறத்திணை:

(1) "குன்றுதலை மணந்து" எனத் தொடங்கி, "மாண்டனை பலவே" என முடிகின்றது. (கமழ்குரல் துழாய்).

(2) 'மாண்டனை பலவே" எனத் தொடங்கி "இறும்பூதாற் பெரிதே" என முடிகின்றது. (கழையமல் கழனி).

(3) "இறும்பூதாற் பெரிதே" எனத்தொடங்கி நின்னே" என முடிகின்றது. (வரம்பில் வெள்ளம்).
"ஒரூஉப

(4) "ஒரூஉப நின்னை" எனத் தொடங்கி "புரைசால் மைந்தநீ யோம்பன் மாறே" என முடிகின்றது. (ஒண்பொறிக் கழற்கால்)

(5) "புரைசால் மைந்தநீ யோம்பன் மாறே" எனக் கடைசியடி முழுதும் தொடங்கி, "வீயா யாணர் நின்வயி னானே” என முடிகின்றது. (மெய்யாடு பறந்தலை.) இப்பாடல் அடியந்தாதியாகும்.

(6) வீயா யாணர் நின்வயி னானே' என அடிமுழுதும் தொடக்கமாகக் கொண்டு. "வாழ்கநின் வளனே" என முடிகின்றது. (வாண்மயங்கு கடுந்தார்). இதுவும் அடியந்தாதி.

(7) "வாழ்கநின் வளனே” எனத் தொடங்கி”, வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே என முடிகின்றது. (வலம்படு வென்றி).

(8) "உலகத் தோரே" எனத் தொடங்கி," பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே” என முடிகின்றது. (பரிசிலர் வெறுக்கை).

(9) "பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே" என முழுதும் அடியந்தாதியாகத் தொடங்கி, “நார்முடிச் சேரனின் போர்நிழல் புகன்றே" என முடிகின்றது. (ஏவல் வியன்பணை).

(10) "போர்நிழற் புகன்ற" எனத் தொடங்கி," நல்குவன் பலவே" என முடிந்தது. (நாடுகாண் அவிர்சுடர்).
நான்காம் பத்தின் இப்பத்துப் பாடல்களும் புறத்திணை பற்றிய அந்தாதிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சங்க காலத்தைச் சேர்ந்தது அந்தாதி என்பது நன்கு வலியுறுதல் காண்க, "பதிற்றுப் பத்து நான்காம் பத்து தொடை அந்தாதிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு” என இரா. நாகசாமி அவர்கள் கூறுவது காண்க.[1]
இவ்வந்தாதி பத்தும் மண்டலிக்காது வந்த செந்நடை மயக்கந்தாதி எனலாம்.

பிற்காலம்:
அந்தாதியமைப்பு பழங் காப்பியங்களுள் ஒன்றான, "உதயணன் கதை", மற்றும் "தேசிகமாலை" ஆகிய நூல்களுள்ளும் உண்டு.'' உதயணன் கதையும் தேசிகமாலையும் முதலா உடைய தொடர் நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க,[2]
----------------------
[1]: கல்வெட்டு: சங்ககாலத்தில் அந்தாதி: இதழ் 2: பக்: 16.
[2]: யாப்பருங்கலவிருத்தி. மே.வீ.வே. பக்:187.
-----------------

அந்தாதி நூற் பெருக்கம்-வரலாறு:

ஒரே செய்யுளுக்குள் அமைந்திருந்த அந்தாதித் தொடை, சொற்றொடர் நிலைச் செய்யுளாகவும் மாறி, அந்தாதியாக நூல்வடிவில் உருவெடுத்தது.

தனிச்செய்யுட்களில் அந்தாதித்தொடை நிலையைப் புறநானூறு, நற்றிணை முதலிய நூல்கள் வாயிலாக அறிந்தோம்.

அகத்திணை பற்றிப் பத்து அந்தாதிப் பாடல்களை ஐங்குறு நூற்றிலும், புறத்திணை பற்றிப் பத்து அந்தாதிப் பாடல்களைப் பதிற்றுப்பத்து நான்காம் பத்திலும் கண்டோம்.

நூல் வடிவாக அந்தாதிகள் உருவெடுக்கக் கால் கோளிட்டவர் பொய்கையார் ஆவார். இவர் இயற்றிய அந்தாதி நூல் கிடைக்கவில்லை. இதுவே நூல் வடிவில் முந்தியது. இவரைப் பின்பற்றிப் பலர் அந்தாதி நூல்கள் செய்திருக்கக்கூடும். அவையும் நமக்குக் கிடைத்தில!

இதனையடுத்துக் கி.பி. 550க்குப் பிறகு வெகு வேகமாக அந்தாதி நூல்கள் வளர்ந்தன. நூறு வெண்பாவைக் கொண்டு அந்தாதித் தொடையால் காரைக்கால் அம்மையார் அவர்கள் "அற்புதத் திருவந்தாதி" யாத்தளித்தார். கிடைக்கப் பெற்ற அந்தாதி நூல்களில் இதுவே மூத்ததும், முழுவதும் ஆகும்.

கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாழ்வார் மூவரும் அந்தாதிகள் இயற்றினர். "தாண்டவ அரசரான அப்பரும், செந்தமிழால் இசைபரப்பவந்த சம்பந்தரும் அந்தாதியைத் தங்கள் பதிகங்களில் கையாளவில்லை. ஆனால் கி.பி. 6, 7ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த முதலாழ்வார் மூவரும் அந்தாதி பாடி யுள்ளனர்" என்று இரா. நாகசாமி அவர்கள் கூறியுள்ளமை காண்க.[1]

கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை சோழப் பேரரசர் காலம். "பிரபந்த வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியங்கள் முதன்மை பெற்ற காலம்" என்பார் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள்[2]
கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசக சுவாமிகள் பின்வரும் செய்யுள் அந்தாதிகளைப் பாடியுள்ளார் என்பதைக் கண்ணுறும்போது சாஸ்திரியார் அவர்களின் கூற்றின் பொருத்தம் விளங்குகின்றது.
-----------------
[1]. கல்வெட்டு: இதழ்: 2: பக்: 16 காண்க.
[2]: தென்னிந்திய வரலாறு: பாகம்: 2,
-------------
(1) திருச்சதகம்:
100 பாடல்கள் அறுசீர்,எழுசீர், எண்சீர், கலிவிருத்தம், கலிநிலைத்துறை கொண்ட நூல் செந்நடையந்தாதி.
(2) நீத்தல் விண்ணப்பம்:
50 பாடல்களைக் கொண்டது. மண்டலவந்தாதி.
(3) கோயில் மூத்த திருப்பதிகம்:
அறுசீர்., 10 பாடல்கள் கொண்ட மண்டலவந்தாதி
(4) கோயில் திருப்பதிகம்:
10 பாடல்கள்., எழுசீர், மண்டலவந்தாதி.
(5) பிரார்த்தனைப் பத்து:
அறுசீர்க் கழிநெடிலடி. 11 பாடல்கள். மண்டலவந்தாதி,
(6) குழைத்த பத்து-
அறுசீர் ஆசிரிய விருத்தம். 10 பாடல்கள் மண்டலித்தது.
(7) யாத்திரைப் பத்து:
ஆசிரிய விருத்தம்: 10 பாடல்கள்.
(8) பண்டாய நான்மறை:
7 பாடல்கள் நேரிசை வெண்பா. செந்நடையந்தாதி.

கி.பி. பதின்மூன்று முதல் பதினைந்தாம் நூற்றாண்டு முடிய அந்தாதி இலக்கியங்கள் இடைநிகர்த்தனவாய் வளர்ந்தன.
கி.பி. பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது ஆகிய நூற்றாண்டுகளுள், பின் மூன்று நூற்றாண்டுகள் அதிகமாகப் பிரபந்தங்கள் தோன்றிய காலம். "கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளைப் பிரபந்த காலம் எனவே கூறலாம்'' என்னும் ஆய்வாளர் க ருத்து மிகமிகப் பொருத்தம்.[1]
------------------
[1]: தமிழ் இலக்கியக் கொள்கை: 2: பக்: 77, மு. சண்முகம் பிள்ளை.
-----------------
கி.பி. இருபதாம் நூற்றாண்டும் பிரபந்த இலக்கிய வளர்ச்சி குன்றாத காலம் எனலாம். அந்தாதி நூற்பட்டியல் இவ்வுண்மையை விளக்கும்.

மனப்பாடம் செய்வதற்கு எளிதாக இருத்தல் இத்தகைய அந்தாதித் தொடை முறை நூல்கள் அதிகம் ஏற்படக் காரணம் என்பர் பலர். பக்தி இயக்கம் வளர்க்க இவ்வந்தாதி நூல்கள் பயன்பட்டன என்பர் மற்றும் சிலர். எவ்வாறாயினும், அன்று முதல் இன்றுவரை அந்தாதி நூல்கள் தோன்றிக் கொண்டே உள்ளன.

"நூற்றுக்கணக்கான புலவர்கள் அந்த அந்தத் தலத்திலுள்ள மூர்த்திகளுக்குப் பல பிரபந்தங்கள் பாடி அணி செய்தனர். இந்த மரபு இன்னும் அழியாமல் இருந்து வருகிறது" எனப் பேரறிஞர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் கூறியுள்ள கருத்து கருதற்பாலது.[1]
------------------
[1]: காமாட்சி அந்தாதி: தமிழழகன்: 1965, கி.வா. ஜ. முன்னுரை.
-------------------

தொல்காப்பியத்தில் தொடை வகைக்குள் ஒன்றாய் விளங்கும் 'அந்தாதி', சங்ககாலப் பாக்களில் பயின்று, சொற்றொடர் நிலைச் செய்யுளாக வளர்ந்து, நூலாகத் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பது வியத்தகு செய்தி.
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் ஐந்து தொடைகளுடன் கூடியும் அந்தாதித் தொடை இயலும் என்பதும், மேற்கூறப் பெற்ற வேறு எந்தத் தொடையும் பெறாத 'நூல்' வளர்ச்சியினை இவ்வொரு தொடை மட்டுமே பெற்றுள்ளது என்பதனையும், மேற்கூறிய செய்திகளால் அறிந்து வியக்கிறோம்.
------------
அந்தாதி நூற்களும்-பாடல் எண்ணிக்கையும்:

(1) ஒரே பாடலுக்குள் நிகழும் அந்தாதிக்குத் தொடையந்தாதி என்று பெயர். 'உலகுடன்' எனத் தொடங்கும் பாடலும், "கயலேர்", 'மாலை' என வந்த பாடல்களும் நல்ல எடுத்துக் காட்டுகள்.

(2) இரண்டு செய்யுட்களுள் நிகழும் செய்யுள் அந்தாதியினைத் திருக்குறளில் கண்டோம்.

(3) பத்துப் பாடல்களைக் கொண்டமைந்தது. 'பதிற்றந்தாதி' எனப்பட்டது.
"வெண்பா பத்துக் கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி" (இல. விள: பாட்)
என்பது சூத்திரம். நூறு பாடல்களைக் கொண்டது, "நூற்றந்தாதி" எனப்பட்டது.

'நூறு வெண்பா நூறு கலித்துறை
கூறுதல் நூற்றந் தாதிக் கோளே"
(இல. விள: பாட்டியல்) என்பது சூத்திரம்.

பத்துப் பாடல்களுக்கும் குறைவாக அந்தாதி பற்றிய இலக்கண நூற்பா காணக்கிடைக்க வில்லை. “சிஷ்டரந்தாதி” என்னும் நூலில் ஐந்து பாடல்களே காணப் பெறுகின்றன.

(4) மாணிக்க வாசகப் பெருமானின், “பண்டு ஆய நான்மறை" ஏழு பாடல்களால் ஆன அந்தாதி.
நம்மாழ்வாரின் 'திருவாசிரியம்' எட்டு அந்தாதிப் பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகப் பெருமானின் 'பிரார்த்தனைப் பத்து பதினோரு பாடல்களைக் கொண்டது. (ஏகாதசம் எனப்படும்.)

(5) கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நயினார் ஆசாரி என்பவர் எழுதிய 'பிள்ளையந்தாதி" இருபது பாடல்களைக் கொண் டது. கி.பி. 20ஆம் நூற்றாண்டுச் "சித்தர் அந்தாதி" இருபத்திரண்டு பாடல்கள் கொண்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கம்பர் யாத்த, "சரசுவதியந்தாதி" முப்பது பாடல்களை உடைய நூல்.

கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிவாசகப் பெருமான் யாத்த 'நீத்தல் விண்ணப்பம்' ஐம்பது பாக்களைக் கொண்டது. கி.பி. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "திருக்குறள் அந்தாதி" அறுபத்து நான்கு பாடல்கள் கொண்ட நூல். கி. பி. 9ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் (அவர்கள்) இயற்றிய, பெரிய திருவந்தாதி' எண்பத்தேழு பாடல்களைக் கொண்டது. கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமழிசை யாழ்வார் (அவர்கள்) தொண் ணூற்றாறு பாடல்களைக் கொண்ட, “நான்முகன் திருவந்தாதி'யினை இயற்றியருளினார்கள்.

"பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையந் தாதி வெண்பா
வைத்தார்கள் நூறு கலித்துறை தன்னையும் மற்ற வெண்பா
ஒத்தான ஐம்ப தெழுபது தொண்ணூறும்பேர் பெற்றதாய்
இத்தா ரணியில் புலவரெல்லாரும் இயம்புவரே”
(நவநீதப் பாட்டியல் 37) என்னும் சூத்திரப்படி, ஐம்பது, எழுபது, தொண்ணூறு பாடல்களைக் கொண்டும் அந்தாதி நூல்கள் எழுதப் பெற்றன என அறிய முடிகின்றது

(6) நூறு பாடல்களுக்கு மேலும் அந்தாதி நூல்களில் பாடல்கள் இருந்தன என்றும் அறிய முடிகின்றது.

கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அவர்கள் இயற்றிய "நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி” நூற்றுப்பத்துப் பாக்களைக் கொண்டது ஆகும்.

கி.பி. 19ஆம் நூற்றாண்டுச் "சிவபூசையந்தாதி" என்னும் நூல் நூற்று இருபத்தேழு பாடல்களைக் கொண்டது. கி.பி. 20ஆம் நூற்றாண்டு நூலான 'பாண் பெருமாளந்தாதி" இருநூற்று இருபது பாடல்களைக் கொண்டது.

கி.பி.20-ஆம் நூற்றாண்டு "ஆன்மநாதன் பதிற்று நூற்றந்தாதி" என்னும் நூல் ஆயிரம் பாடல்களைக் கொண்டது.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வார் யாத்த "திருவாய்மொழி அந்தாதி'" 'உயர்வற உயர் நலமுடையவன்" எனத் தொடங்கி, "பிறந்தார் உயர்ந்தே" என மண்டலித்து முடியும் நூற்றுக்குப் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்டது. இந்நூலில் மொத்தம் ஆயிரத்து நூற்று இரண்டு பாடல்கள் உண்டு.

அந்தாதி நூலின் சிற்றெல்லை ஐந்து பாடல் கொண்ட நூல் என்பதனையும், மேல் எல்லை ஆயிரத்துக்கும் மேற்பட்டது என்றும் இதுகாறும் கூறிய செய்திகள் விளக்கின.

பதிற்றந்தாதி என்றும், நூற்றந்தாதி என்றும், பதிற்று நூற்றந்தாதி என்றும் அந்தாதிகள் எண்ணிக்கையில் வேறுபட்டு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதும் செய்திகள் விளக்கின.

அந்தாதி நூல்களின் நோக்கம்:

பெரும்பாலும் அந்தாதி நூல்கள் இறைவனைப் பற்றிய துதி நூல்களாகவே அமைந்துள்ளமையைக் காண்கின்றோம். அந்தாதிகள் வேண்டிய பொருட்களில் பாடப்பெற்றன என்பதை,
"வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருள்களில்
பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே" (பன்: பாட்: 211)
என்னும் சூத்திரம் விளக்குகிறது.

"நூற்றெட்டுத் தாள வெண்பா அந்தாதி" என்னும் இசையின் தாளச் செய்திகளைக் செய்திகளைக் கொண்ட நூல். "களவியற் காரிகை" என்னும் நூல், அந்தாதி முறையில் இலக்கணத்தை எடுத்தியம்பும் நூல் ஆகும். அகப்பொருள் இலக்கணம் இதில் அந்தாதி முறையில் கூறப்பட்டுள்ளது.
அந்தாதி எல்லாப் பொருள்களைக் கொண்டும் பாடப்பெற்றது என்பதை அறிகிறோம்.

பல்வேறு அந்தாதிகளும் பண்பியல்புகளும்:


அந்தாதி நூல்கள் பல்வேறு பெயர்களைத் தாங்கி வெளி வந்துள்ளன. அவற்றை ஆய்ந்து பார்த்தால் அந்தாதி நூல்களின் போக்கில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பண்பியல்புகளும் நன்கு விளங்கும்,


(1) வெண்பா அந்தாதி:
வெண்பாக்களில் அந்தாதித் தொடையமையுமாறு பாடப் பெற்ற நூல்கள் "வெண்பா அந்தாதி" நூல்கள் எனப்பட்டன. பெரும் பாலான நூல்கள் வெண்பா யாப்பினால் யாக்கப் பெற்றவை.

(2) கலித்துறை யந்தாதி:
"அடியடி தோறு மைஞ்சீ ராகி
முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்
கடையொரு சீரும் விளங்காய் ஆகி
நேர்பதி னாறே நிரைபதி னேழென்
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே"
என்பது யாப்பருங்கலக் காரிகைச் சூத்திரம்.
எழுத்து அளவினைப் பெற்றுவருவது இக்கட்டளைக் கலித்துறை, இதற்கு விருத்தம் என்றும் மற்றொரு பெயருண்டு என்பதனை, அப்பர் திருவிருத்தம், நம்மாழ்வார் திருவிருத்தம் என்னும் பெயர் வழக்கினால் அறியக்கூடும்.[1]
-------------
[1]: யாப்பருங்கலக்காரிகை : கழகவெளியீடு: பிற்சேர்க்கை:
-----------------

கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூறு கொண்டுவரின் கலித்துறையந்தாதி எனப்பட்டது. நம்பியாண்டார் 'கலித்துறையந்தாதி' என்ற பெயராலேயே ஓர் நூல் யாத்துள்ளார்,

(3) அகவற்பா அந்தாதி:
நம்பி
''ஐங்குறு நூற்று”த் 'தொண்டிப் பத்தும்', "பதிற்றுப் பத்து" நான்காம் பத்தும், அகவற்பாவினால் அந்தாதித் தொடை கொண்டு ஆக்கப் பெற்றவை. பத்துப் பாடல்களைக் கொண்ட இவை செந்நடையந்தாதியாகும்.

(4) கலி விருத்த அந்தாதி:
கலி விருத்தப்பாக்கள் அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடுவது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மு. ரா. அருணாசலக் கவிராயர் என்பவர் "சிவகாசிக் கலிவிருத்த அந்தாதி” யாத்துள்ளார்.

(5) வஞ்சித்துறை அந்தாதி :
வஞ்சித்துறையால் அமைந்த பத்து அந்தாதிப் பாக்களைக் கொண்டது, இராமலிங்க அடிகளாரின், "முத்தியுபாயம்".
"ஒற்றி யூரனைப் "சேர நெஞ்சமே
பற்றி நெஞ்சமே தூர மன்றுகாண்
நிற்றி நீயருட் வாரம் வைத்தியேற்
பெற்றி சேரவே" (1) சாரு முத்தியே" (2)
என வருதல் காண்க.

(6) இருசீர் அந்தாதி:
வஞ்சித் துறையினால் ஆகிய பாடல்களை இருசீர் எனவே பெயரிட்டு, 'இருசீர் அந்தாதி" என்னும் நூலினை, கி.வா.ஜகந்நாதன் அவர்கள் யாத்துள்ளார்கள். இதில் நூறு பாடல்கள் உள்ளன.
''குகனைச் சிவனார் "பணியொன் றியவர்
மகனை உரும்பை துணிவொன் றுபவர்
யகமுற் றொளிரும் அணியும் உரும்பை
சுகனைப் பணியே" (11) மணியன் னவன்பால் (12)
என வருதல் காண்க.[1]
---------------
[1]: சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க்கதம்பம்: 1966. கி.வா.ஜகந்நாதன்.
--------------------

(7) முச்சீர் அந்தாதி:
வஞ்சி விருத்தப் பாக்களை "முச்சீர்” எனப் பெயரிட்டு நூறு அந்தாதிப் பாக்களை, கி.வா. ஜகந்நாதன் அவர்கள் யாத்துள்ளார்கள்.
"கூரும் கருணைக் கோலன் சேரும் பொருளும் தேரும்
சீரொன் றுரும்பைச் சீலன் ஊரும் உறவும் ஒன்றோ
பாரொன் றுதுயர் பாற்றும் நீரொன் றுரும்பை நீதன்
தீரன் அடியைச் சேர்க (5) நாரொன் றதுவே நன்மை (6)
என வருதல் காண்க.[1]
---------------
[1]: சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க்கதம்பம்: 1966. கி.வா.ஜகந்நாதன்.
--------------------

(8) நாற்சீர் அந்தாதி:
கலிவிருத்தப் பாக்களுக்குள்ள நாற்சீரையே அந்தாதிக்குப் பெயராக்கி, நூறு பாடல்களை, கி.வா.ஜகந்நாதன் அவர்கள் யாத்துள்ளார்கள்.
"தேன்மலர்த்திரு சேரும் உரும்பராய்
கோன்ம லர்க்கட் குறமகள் நாயகன்
கான்மலர்ந்த கடம்பணி மாலையன்
வான்மலர்ந்த மணிக்கழல் வாழ்த்துவாம்" (1)
"வாழ்த்தி மேவி வணங்கித் துதிப்பவர்
தாழ்த்த லின்றிச் சதுர்படச் செய்பவன்
சூழ்த்த தேம்பொழில் துன்றும் உரும்பையில்
காழ்த்த பாசம் கழற்ற விளங்கினான் (2)
எனவருதல் காண்க.[1]
---------------
[1]: சிதம்பர சுப்பிரமணியன் புகழ்க்கதம்பம்: 1966. கி.வா.ஜகந்நாதன்.
--------------------

(9) திரிபு அந்தாதி:
ஒரு செய்யுளின் நான்கடியிலும், முதல் எழுத்து திரிந்து, மாறு பட்டு, ஏனைய பிற எழுத்துக்கள் மாறாமல், பொருள் வேறுபட வருமாறு அந்தாதியாகப் பல பாடல்களைக் கொண்டு ஒரு நூல் இயற்றினால், அந்நூல் "திரிபு அந்தாதி” எனப்படும்.

குறட்டி வரதையன் என்பவர் எழுதிய "திரிபு அந்தாதி" என்னும் நூல் கி. பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.

(10) திரிபு வெண்பா அந்தாதி:
மேற்கூறப் பெற்ற திரிபினை, வெண்பாவில் அமைத்துப் பாடுவது முண்டு. "விநாயகர் திரிபு வெண்பா அந்தாதி" பூ. ஆறுமுகம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது.

(11) கொம்பிலா வெண்பா அந்தாதி:
கொம்பில்லாத எழுத்துக்களைக் கொண்டும், வெண்பாவினாலும் அந்தாதியாக யாக்கப் பெற்ற பாடல்களைக் கொண்டது இந்நூல்.
'காரணா நான்மறையும் காணா தரற்றுகின்ற
பூரணா புன்னைவனம் புக்கவா-தாரணத்த
ருன்னு வடிவுடையா யுண்மா சறவருளன்
பின்னுனதாள் யான்கைப் பிடித்து" (39) என்பது. "திருச்சுழியற் கொம்பிலா வெண்பா வந்தாதி" என்னும் நூலில் வரும் பாடல்,[1] இவ்வகையந்தாதி இலக்கணத்திற்கு இதுவே ஓர் இலக்கியம்.
---------
1: தமிழ்ப் புலவர் அகரவரிசை: கழக வெளியீடு.
-----------------

(12) யமகவந்தாதி:
அடி முதலெழுத்தோடு இரண்டெழுத்து முதல் பத்து எழுத்து இறுதியாக ஓரடிபோலவே நான்கடியும் பாடப்பெறுவது யமகம் எனப்படும். 'மடக்கு' என்று இது தமிழில் கூறப்பெறும்.
"எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும் வேறு பொருடரின் மடக்கெனும்
பெயர்த்தே” (சொல்: தண்டி : 92)
என்பது சூத்திரம். வந்த சொல்லே மீண்டும் வருதல் மடக்கு எனப்படும்.

"அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே' (தண்டி: 94) என்று கூறியுள்ளவாறு அமைவதுமுண்டு. இவ்வியமகம் அந்தாதியாகப் பாடப் பெறின் 'யமகவந்தாதி' எனப்படும். இது சொல்லணிகளுள்' 'இடையிட்டு வந்த ஆதிமடக்கு' ஆகும்.[2]

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய 'திருத்தில்லை யமக அந்தாதி' எடுத்துக்காட்டாக அமையும்.

"சித்திர யமக'மாகவும் அமைவதுண்டு. தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் "சித்திர யமகவந்தாதி" என ஒரு நூல் இயற்றியுள்ளார்.

(13) நிரோட்டக யமக அந்தாதி:
முன்னர்க் கூறப்பெற்ற யமகமும், நிரோட்டகமும் பொருந்துமாறு பாக்களை அந்தாதித் தொடையாக அமைத்துப் பாடுவதும் உண்டு. இதனை நிரோட்டக யமக அந்தாதி என்பர்.

நிரோட்டகம் (நிர் + ஓஷ்டகம்) என்பது - இதழுடன் இதழ் ஒட்டாதது எனப் பொருள்படும். இதழுடன் இதழ் ஒட்டுவது ஒட்டகம் அன்றோ! இதுவே தமிழில் "இதழகல்" என வழங்கப் படுகிறது.

இதழ் குவிக்கும் முயற்சியால் பிறக்கும் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் வராமற்பாடுவது. இதழ் குவியும், உயிரும், மெய்யும் இன்றிப் பாடுவது.
-----------------
[2]: திருமயிலை யமகவந்தாதி: 1975: டாக்டர்: உ. வே. சாமிநாதையர்.
---------------------
''உஊஒஓ ஒள பமவ விவற்றியைப
சேரா நிரோட்டத் திறத்து."
என்பது சூத்திரம்.
"சீலத்தான் ஞானத்தாற் தேற்றத்தாற் சென்றகன்ற
காலத்தா லாராத காதலான் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங்
கச்சிக்கச் சாலைக் கனி''
என்பது நிரோட்டகத்திற்குத் தண்டியலங்காரம் தரும் எடுத்துக்காட்டு.
துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் யாத்த "திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி” யும் "சென்னைக் கந்தர் இதழகலந்தாதி" என்னும் நூலும் இவ்வகைக்கு உதாரணம்.

(14) ஏகத்தாள் இதழகலந்தாதி:
ஏகபாதம் அல்லது ஏகத்தாளில் நிரோட்டகம் அமையப் பாடுவதற்கு "ஏகத்தாள் இதழகலந்தாதி" எனப் பெயர். இருபதாம் நூற்றாண்டினைச் சேர்ந்த தண்டபாணி சுவாமிகள் இத்தகைய அந்தாதியினை யாத்தருளியுள்ளார்.

(15) ஏகபாத நூற்றந்தாதி:
ஒரு செய்யுளின் நான்கடிகளும் ஒரே விதமாக மடக்கி வரின் அதற்கு நான்கடி மடக்கு என்று பெயர். இதனையே ஏகபாதம் என்று கூறுவர். ஏகபாதமாகவும், அந்தாதியாகவும் நூறு பாடல்கள் பாடப்பெறின் அது ஏகபாத நூற்றந்தாதி.

திருஞானசம்பந்தரும் திருமூலரும் ஏகபாதம் பாடியுள்ளனர். அவை அந்தாதியல்ல.
நான்கடி மடக்கு எனப்படும் ஏகபாதத்திற்குத் தண்டியலங்காரம் பின்வரும் உதாரணம் தருகின்றது.

"வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
எனவரும்.
இவ்வேகபாதம் சித்திரகவி வகையினைச் சேர்ந்தது. "மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம் ஏகபாதம்" (சேந்: திவாகரம்).
புலவர் அரசஞ் சண்முகனார் "ஏகபாத நூற்றந்தாதி" என்னும் நூலை யாத்துள்ளார்.

(16) சிலேடையந்தாதி:
ஒரு வகையால் நின்ற தொடர்சொல் பல பொருள்களது தன்மை தெரியவருவது, 'சிலேடை' யென்னும் அலங்காரம்.
இஃது இருபொருள் பயப்பது
"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்" (சூ: 76.)
என்பது தண்டியலங்காரம்,

வெண்பாவாலோ, கலித்துறையாலோ ஆக்கப்பெற்ற பாக்கள், சிலேடையலங்காரம் பொருந்தவும், அந்தாதித் தொடையேற்றும் வருவதாகும்.
"சிங்கைச் சிலேடை" "கலைசைச் சிலேடை " யந்தாதிகள் எடுத்துக்காட்டுக்களாக அமையும்.

(17) ஒலியந்தாதி:
பதினாறுகலை ஓரடியாக வைத்து, நாலடிக்கு அறுபத்து நான்கு கலையாக வகுத்துப் பலசந்தமும், வண்ணமும், கலைவைப்பும், தவறாமல் முப்பது பாடல்களாக அந்தாதி யாப்பில் பாடப்பெறுவது 'ஒலியந்தாதி' என்றும் 'ஒலியலந்தாதி' என்றும் வழங்கும்.

வெண்பா, அகவல், கலித்துறை என்னும் இம்மூன்று பாவினத்தில் இனத்திற்குப் பத்து வீதம் அந்தாதி யாப்பில் பாடிய நூலையும் இப்பெயரிட்டு அழைப்பர்.

"தத்தம் இனத்தில் ஒப்புமுறை பிறழாது
நாலடி ஈரெண் கலையொரு முப்பது
கோலிய தொலியந் தாதி யாகும்" (159)
"ஈரொலி யாகிய எண்ணான்கு கலையெனச்
சீரியற் புலவர் செப்பினர் கொளலே" (160)
"வண்ணகம் என்பது ஒலியெனப் படுமே” (161)
எனப் பன்னிரு பாட்டியல் இலக்கணம் வகுக்கின்றது.

"ஈண்டிய முப்பதா யீரெண் கலைவண்ணம்
மூண்டதொலி அந்தாதி முப்பதாம் (13)
என்பது வச்சணந்திமாலை செய்யுளியற் சூத்திரம்.

"ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்ட தொலிஅந்தாதி ஆகும்” (64)
என்று வெண்பாப் பாட்டியல் கூறுகின்றது.

இதனைப் பிரபந்தத்திரட்டுடையார், 'அளவியற்றாண்டகம்" என்பார்.
நவநீதப் பாட்டியல்,
“ஈட்டிய வீரெண் கலைவண்ணச் செய்யுள் இயைந்த முப்பான்
கூட்டிய நீடொலி யந்தாதி கூறும்" (39)
என இலக்கணம் வகுக்கின்றது.

முதலொலியந்தாதி என்றும், பேரொலியலந்தாதி என்றும், நடுவொலியல் அந்தாதி என்றும் பெயர்கள் இதனை யொட்டிக் காணக்கிடக்கின்றன.

(18) கலியந்தாதி:
பாடல் தோறும் முப்பத்திரண்டு கலைவைப்பு அமையுமாறு அந்தாதி யாப்பில் முப்பது பாடல்கள் பாடப் பெறுவது. வகுப்பு, வண்ணகம், வண்ணம், ஒலி என்பன பெயர்கள். இச்செய்யுள் சந்தக் குழிப்புக்களை அடியாகக் கொண்டு வருவன.

இங்குப் பேசப்பெறும் வண்ணங்கள் வேறு; தொல்காப்பியம், யாப்பருங்கலம் போன்ற நூல்களில் எடுத்துக் கூறப் பெறுகின்ற வண்ணங்கள் வேறு.

''வல்லின மெல்லின இடையின எழுத்துப்
புல்லி மருங்கு போகா தொன்றிக்
குறிலெனில் குறிலே நெடிலெனில் நெடிலே
பொருந்தி நாற்கலை கொண்டோர் அடியாய்த்
திருந்தும் இவ்வகை நான்கடி யாகியும்
ஓரொலி யாகியும் எண்ணான் காகிய
கலையொடு பொருந்தியும் குறிலும் நெடிலும்
முறைமுதல் வரினும் அவ்வெழுத் தாகியும்
இப்பரிசியன்ற முப்பது கட்டளை
மிக்கது கலியந் தாதி யாகும்" (157)

"வெண்கலி யும்சில சிறுபான்மை வருமே" (158) என்று "பன்னிருபாட்டியல்" இலக்கணம் கூறுகின்றது.

(19) பல்சந்த அந்தாதி:
பலவகையான சந்தங்களில் பாடல்கள் அமையுமாறு பாடப் பெறும் அந்தாதி நூல். சந்தம் என்பது நான்கு எழுத்துக்கள் முதல் இருபத்தாறு எழுத்துக்கள் வரை ஒரேவடியால் ஒத்து வருவதாகும்.

(20) மும்மாலையந்தாதி :
மும்மணிக் கோவை போன்றதே "மும்மாலை அந்தாதி” கலித்துறை, விருத்தம், "யமகம்" கொண்ட பாடல்கள் அமையப் பாடுவது ஆகும். குழந்தைக் களத்தில் வென்றார் என்பவர் பஞ்சாட்சர மும்மாலை யந்தாதி” என ஒரு நூல் யாத்துள்ளார்.

(21) ஓரெழுத்தந்தாதி, ஓரெழுத்து யமகவந்தாதி, மகர வந்தாதி, எனப் பல்வேறு பெயர்களில் அந்தாதி நூல்கள் உள.

அந்தாதியில் சித்திரகவி:

பல்வேறு வகைப்பட்ட அந்தாதிகளை நாம் இதுவரை கண்டோம். பல சித்திரகவிகள் நிறைந்த அந்தாதிகளும் உள்ளன.

திரிபங்கி, பிறிதுபடுபாட்டு, கரந்துறைப்பாட்டு, காதைகரப்பு, ஆறாரைச் சக்கரம் ஆகியவை சில சித்திரகவிகள். இவைகளின் இலக்கணம் 'தண்டியலங்காரம்' சொல்லணியியலில் விரிவாக உள்ளது.

மேலே கூறப் பெற்ற சித்திரகவிகள் அனைத்தும் அமைய வந்துள்ள நூல், "திருவெவ்வுளூரந்தாதி".
குறைவை நிறைவாக்கல்:

குறையாக விடப்பட்ட அந்தாதி நூற் பாடல்களை வேறு புலவர் பாடி நிறைவாக்கி முடித்துள்ள செய்தியும் அறியக்கிடக்கின்றன.

"திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி"யினைச் சிவப்பிரகாசர் யாத்தருளினார். இவர் எழுதியது முப்பது பாடல்கள். பின்னர் 5 பாடல்கள் கிடைத்தன என்னும், அதையொட்டிச் 'சின்னையன்' என்னும் புலவர் (மிகுதி) அறுபத்தைந்து பாடல்களையும் யாத்து அதனை முடித்துவைத்துள்ளார்.

இக்குறிப்பு டாக்டர்: உ. வே. சாமிநாதையர் அவர்களின் நூல் நிலையத்தில் உள்ள ஓ லைச்சுவடியில் காணப்படும் அரிய குறிப்பாகும். (ஓலைச்சுவடி எண்: 1099இன் அடிக்குறிப்பு).

கற்பந்தல் அந்தாதி :
"திரிச்சிராப்பள்ளி மகேந்திரவர்மன் குடைந்த குடவரைக் கோயிலில், பின்புறச் சுவரில், 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த எழுத்துக்களில் அந்தாதி உள்ளது. இது கலித்துறைப் பாடல். வேம்பையர் கோன் நற்பந்தமார் தமிழ் நாராயணன் "இயற்றினார் என அறிகிறோம்.[1]

"உலக மடந்தை" எனத் தொடங்கி (1), "இவ்வுலகத் துளே'' என முடிகின்றது. (102). இவ்வாசிரியர் வணிகர் குலத்தவர் என்றும், இவர் மணியன் மகன் நாராயணன் என்றும் வழங்கப்பட்டார் எனவும் தெரிகின்றது.[2] இதனைத் தம் அரிய புலமைத் தெளிவின் காரணத்தால் உயர்திரு, மு. இராகவையங்கார் அவர்கள் நூலாக வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

ஒப்பும் அந்தாதியும்:
"மேற்சீரும், தளையும் அடியும், 'வரையறுக்கப்பட்ட பாவும், பாவினமும், சொன்ன பெற்றியில் திரிந்தும், மிக்கும், குறைந்தும் வந்தால், அவை ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒழிந்த செய்யுட்களின்பாற் பகுத்து வழங்கப்படுவது - ஒப்பு' எனப்படும்.

சிஷ்டரந்தாதி என்னும், நூலில் மூன்றடி கொண்ட கட்டளைக் கலித்துறைப் பாடல் ஒன்று காணப்படுகிறது: "அன்னையை........ வெளிப்பட்டதே" (4) என்பது அப்பாடல். அடுத்த "வெளிப்பட்ட சோதியை" எனத் தொடங்குகின்றது.
பாடல்,
இதனை ‘ஒப்பு’ என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாய்க் கொள்ளலாம்.[3]

வாய்மொழி அந்தாதி:
ஒரு புலவர் ஒரு வெண்பாவை எடுத்துக்கூற, அவ்வெண்பாவின் ஈற்றையே முதலாகக் கொண்டு, மற்றொரு புலவர் வெண்பா யாத்துக் கூறும் முறையும் அந்தாதி முறையாகும். இதனைத் "தூசங் கொளல்" என்று வீரசோழியம் கூறுகின்றது.

உரைநடை அந்தாதி:
உரைநடையிலும் அந்தாதி முறை இருந்தது நன்கு விளங்கும்.
"அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது; செல்லவே பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாம் கூவி "வம்மின்! யானுங்களைப் புரந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்தபின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்தபின்னர்"...எனவரும் இறையனாரகப் பொருள் உரை உரை நடையந்தாதிக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது.
---------------------------------
[1]: கல்வெட்டு. 2: ச. செங்கல்வராயன்: கற்பந்தல் அந்தாதி.
[2]: சாசனத் தமிழ்க்கவி சரிதம்: பக்: 34, 35.
[3]: **உலகிய... குருவே ஐந்தடி கொண்ட அறுசீர் விருத்தம். காண்க இராமலிங்க அடிகளாரின் ஆளுடைய பிள்ளை அருள் மாலை:
----------------

அந்தாதியும் பெண்பாற் புலவர்களும்:

பல அந்தாதி நூற்களைப் பெண்பாற் புலவர்களும் பாடியுள்ளனர்.

1. அற்புதத் திருவந்தாதி: காரைக்கால் அம்மையார் கி.பி.550.
2. பந்தன் அந்தாதி : ஒளவையார் கி.பி. 12. நூ.
3. திருவாரூர் அகிலாண்ட ]
நாயகி அந்தாதி ]
4. திருமயிலைக் கற்பகாம்பாள் அந்தாதி மனோன்மணியம்மை (1863-1904).
5. திருமுல்லைவாயில் கொடியிடை அந்தாதி
---------
பல சமய அந்தாதிகள் :

1. சமணம்:
அ. திருநூற்றந்தாதி - அவிரோதியாழ்வார்,
ஆ. திருமேற்றிசையந்தாதி.
இ. தர்மதேவியந்தாதி என மூன்று.
--------
2. மகமதியம்:
1. மெதினத்தந்தாதி - 18-ஆம் நூற்றாண்டு.
2. பதிற்றந்தாதி -- 19-ஆம் நூற்றாண்டு.
3. முகையிதீன் அப்துல் காதிறாண்டவர் பேரில் பதிற்றந்தாதி- “
4. திருமதீனத்துப் பதிற்றுப் பத்தந்தாதி- “
5. திருமதீனத்து வெண்பா வந்தாதி- “
6. திருமதீனத்து மாலை யந்தாதி- “
7. திருமதீனத்து யமக வந்தாதி- “
8. குணங்குடி நாதர் “
9. நாகையந்தாதி “
10. நாகூர்த்திரிபந்தாதி “
11. திருபகுதாதந்தாதி “
12. திரிமக்கா திரிபந்தாதி “
13. அகமதுல் கபீறுற்றிலாகி
ஆண்டகைமீது அந்தாதி “
------------ 3. கிறித்தவம்:
1. அன்னை அழுங்கல் அந்தாதி - வீரமாமுனிவர் 18 நூற்.
2. அபிடேக நாதர் மாலையந்தாதி- 19 நூற்றாண்டு
3. தேவமாதா பேரின்ப அந்தாதி - 19 நூற்றாண்டு
4. திருவருள் அந்தாதி - 19 நூற்றாண்டு
5. தேவமாதா அந்தாதி - 19 நூற்றாண்டு
-------
முடிவுரை:
தொல்காப்பியர் காலந்தொட்டு, இன்று வரையுள்ள 2500 ஆண்டுக் காலமாகத் தொடர்ச்சியான ஒரு வரலாற்றினை அந்தாதி கொண்டுள்ளது என்பதனைக் கண்டோம்.

ஒரே பாடலுக்குள் வரும் அந்தாதித் தொடை பற்றியும், பாடலில் பொதிந்து வரும் அந்தாதி மடக்கு அணிபற்றியும், சொற்றொடர் நிலைச் செய்யுள் ஆகிய அந்தாதி நூல்நிலை பற்றியும் பல்வேறு விதமான செய்திகளை நாம் மேலே கண்டோம்.

அந்தாதி என்கின்ற ஒரு பா உறுப்பு மட்டுமே, நூலாக வளர்ந்தது என்பதனை வரலாற்றுச் சான்றுகளுடன் கண்டோம். வேறு எந்தத் 'தொடை'யும் இவ்வாறு நூலாக வளரவில்லை என்பதையும் நாம் அறிதல் வேண்டும்.

அந்தாதித் தொடை பிற ஐந்து தொடைகளுடனும் கூடியியல் வதையும், அதனால் பல அந்தாதிகள் ஏற்படுவதனையும் கண்டோம். மண்டல அந்தாதியும், செந்நடையந்தாதியும் செயல்படும் நிலையையும் அறிந்தோம்.

மேலும், சொற்றொடர் நிலையந்தாதி போலவே பொருள் தொடர் நிலை யந்தாதியும் உண்டு என்பதையும் கண்டோம், எல்லாப் பொருள் பற்றியும் அந்தாதிகள் தோன்றின என்பதும் அறிந்தோம்.

அந்தாதியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இப்பகுதியில் (விரிவாக) ஆய்ந்துள்ளமை காண்க. ஆய்வாளர்கள் மேலும் இது விரிவடைய, உதவினால் 'அந்தாதி' பற்றிய ஒரு முழு வரலாறு கிடைக்கும் அன்றோ!)
அந்தாதி பற்றிய ஒரு முழு வரலாறு வெளிவர வேண்டும்.
----------------

2. தில்லை வரலாறு


I. பொதுச் செய்திகள்:
'அன்னம் பாலிக்கும் வயற்றில்லை" எனப் பாராட்டப் பெற்ற பெருமையினை உடையது தில்லையம்பதி. இத்தலத்தைப் பற்றிய பொதுச் செய்திகளை அறிந்து கொள்வோம்.

1. தலத்தின் திருநாமங்கள்:
`தமிழ் நூல்களாலும், வடமொழி நூல்களாலும் அறியப் பெற்ற இத்தலத்தின் பல்வேறு பெயர்கள் கீழே தரப்பெற்றுள்ளன.
`சத், பரம், சபா, புண்டரீகம், சத்தியம், மகத்விவிக்தம், அற்புதம், குகை, ஞானாமிர்தம், பரவியோமம், பரமாலயம், சுத்தம், சத்தியமாய தளம், கோயில், தில்லைவனம், புண்டரீகவீடு, சிதம்பரம், புலியூர், பெரும்பற்றப்புலியூர், தென்புலியூர், புலீச்சரம் என்பன.
மன்று, அம்பலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், ஞான சுகோதயம், சிவாலயம், பரப்பிரமம் முதலியன காரணப்பெயர்கள்.

2. இறைவன் திருநாமங்கள்:
தேவர்கள் தேவன், நடராசர், நிருத்தர், தில்லை நடராசர், நிருத்தரசர், கருமூலகரன், ஆனந்த ஒளி, நடமாடும் திருவாளர், ஆடவல்லான், நட்டம் பயின்றாடும் நாதன், கூத்தன், ஞானச் செவ்வொளி, அம்பலவாணன் என்பன.

3. இறைவி திருநாமங்கள் :
உமையம்மை, சிவகாமியம்மை என்பன.

4. தீர்த்தங்கள்:
சிவகங்கை, குய்ய தீர்த்தம் (பாசமறுத்ததுறை)புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம்,
தீர்த்தம், சிவப்பிரியை, அனந்த தீர்த்தம், நாகசேரி, பிரும்ம திருப்பாற்கடல், பரமானந்த கூபம் என்பன.

5. தல விருட்சம்:
"கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து
தில்லை யன்ன புல்லென் சடை" (புறம் 252).
''நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி யிவ்வூர்க்
கல்லென் கௌவை யெழா அக் காலே" (ஐங்குறு 131)
எனவும் இலக்கியங்களில் வரும் நெய்தல் நிலக் கருப்பொருளாகிய தில்லைமரம் இத்தல விருட்சம்.

6. தல விநாயகர்:
இத்தல விநாயகர் கற்பகவிநாயகர் ஆவார். இவர் நர்த்தனம் செய்வது போன்ற உருவ அமைப்பு உடையவர். இவர்,
"மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபால்
பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர்கற் பகம்போற்றி"
எனக் "கோயிற் புராணத்”தில் புகழப்படுகின்றார்.

7. கோபுரங்கள்:
தென் கோபுரம்: கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1245).
மேலைக் கோபுரம்: சுந்தரபாண்டியன் (கி.பி. 1258)
வடக்குக் கோபுரம் : கிருஷ்ணதேவராயர் அச்சுதராயர் (கி.பி.1509)
கிழக்குக் கோபுரம்: விக்கிரமசோழன் (கி.பி.1076).

8. மண்டபம்:
விக்கிரம சோழன் மண்டபம்.

9. சபைகள்:
பொன்னம்பலம் எனப்படும் கனகசபை, ஸ்ரீ நடராச மூர்த்தியும், பராசக்தி வடிவமும் அமைந்துள்ள சிற்றம்பலம் என்றழைக்கப்படும் சிற்சபை, ஊர்த்துவ தாண்டவம் மேற்கொண்ட நிருத்தசபை, ஆயிரக்கால் மண்டபம் எனப்பட்ட இராசசபை, பேரம்பலம் என்று வழங்கப்படும் தேவசபை ஆகிய ஐந்து சபைகள் கோயிலில் இடம் பெற்றுள்ளன.

10. விழாக்கள்
''சித்திரையில் ஓணமுதல் சீரானி யுத்தரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருவு சதுர்த்தசிமன்
றீசரபி டேகதின மாம்"
சித்திரை -திருஓணம். ஆனி உத்தரம்; ஆவணி-சதுர்த்தசி: புரட்டாசி - சதுர்த்தசி; மார்கழி,-ஆதிரை; மாசி – சதுர்த்தசி - நடராஜர் அபிடேக நாட்கள்,

11. தல ஆகமம்:
மகுடாகமம் இத்தல ஆகமம் ஆகும்.

12. சித்திரகூடம்.
காஞ்சிப் பதியைத் தலைநகராகக் கொண்டு (கி.பி. 717-785) ஆண்டுவந்த நந்திவர்ம பல்லவன், காஞ்சிப்பதியில் வைகுந்தப் பெருமாள் கோயில் எடுப்பித்தான். அவ்வாறே, தில்லையம்பல முன்றிலில் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியை நிறுவினான். அதுவே திருச்சித்திரகூடம் என்பது.
"தில்லைநகரத் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணிமணி யாசனத் திருந்த அம்மான்" (குலசேகரர்)
"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்”
(திருமங்கையாழ்வார்).
"கரங் கடந்தா னொன்றுகாட்ட
மற்றாங்கதும் காட்டி டென்று
வரங் கிடந்தான் தில்லையம்பல
முன்றிலம் மாயவனே."
(மாணிக்கவாசகர்: திருக்:)
"தில்லைசூழ் திருச்சித்திர கூட மேவிய
கோவிந்தராசர்க்குத் தினமுமே கூத்தாடியாயினான்
சிவன்" (பி: பெரு: ஐயங்கார்).
"அடியா லுலகெல்லாம் அன்றளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே - கொடிதாய
குத்திரகூ டங்கி கொளுந்தாமுன் கோவிந்தன்
சித்திரகூ டங்கருதிச் செல்”
(நூற்: திருப்: அந்தாதி: பி: பெ: ஐயங்கார்).
"சந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்
துஞ்சினன் துயிலொரீ இ யெழாஅன்
அஞ்சினன் போலுநின் ஆடல்காண் பதற்கே".
(குமரகுருபரர்: சிதம்பர மும்மணிக் கோவை)
எனப் பலராலும் பாடப்பெற்ற பெருமையினையுடையது.

13. பிற புலியூர்கள்:
புலியூர் எனப்படுவது தில்லை(யை)யேயாகும். தில்லையைச் சுற்றிப் பல தலங்கள் புலியூர் என்ற பெயரில் உள்ளன.
பெரும்பற்றப் புலியூர், திரு எருக்கத்தம் புலியூர், திருப்பாதிரிப் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர், காறாட்டம் புலியூர் என்பன அத்தலங்கள்.

14. பிற தலங்கள்:
தில்லையம்பதிக்கு அருகாமையில் உள்ள சில தலங்களும், அங்குள்ள கோயில்களின் பெயர்களும் அறியற்பாலன. தில்லை செல்வோர் இவற்றையும் பூசிக்கும் மரபு உள்ள காரணம் பற்றியும், தில்லைக்கு அண்மையில் இவை உள்ளபடியாலும் அவற்றை அறிவது நன்மை பயக்கும்.

1. இளமையாக்கினார் கோயில் என வழங்கும் திருப்புலீச்சுரம்.
2. ஸ்ரீ அனந்தீசுவரர் திருக்கோயில்.
3. திருக்களாஞ்செடியுடையார் திருக்கோயில்.
4. ஸ்ரீ தில்லையம்மன் கோயில்.
5. ஸ்ரீ சுடலையமர்ந்தார் கோயில் (மத்தியந்தனேசுவரம்).
6. தில்லையில் திருப்பாற் கடல் தீர்த்தமும், திருப்பெருந்துறைக் கோயிலும்.
7. சேக்கிழார் நாயனார் திருக்கோயில்.
8. கீழத்தெரு மாரியம்மன் கோயில்.
9. ஸ்ரீ தெட்சிண காளியம்மன் கோயில்.
10. ஸ்ரீ காளி நர்த்தன விநாயகர் ஆலயம்.
-------------
II. தல புராணங்கள்:

இத்தலத்தைப் பற்றிய வரலாறுகளைத் தெரிவிக்கும் வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள், தல புராணங்கள், தலத்தைப் பற்றிப் பாடப் பெற்றுள்ள பிரபந்தங்கள் முதலிய செய்திகளை இப்பகுதியில் காணலாம்.
1. இத்தலத்தைப் பற்றிய வடமொழி நுல்கள்:
சிதம்பர ரகஸ்யம், சம்மேளனப் பிரஸ்தாரம்; ரகசியப் பிரணவப் பிரகாரலட்சணம்; மகா இரகசியத்தான இலட்சணம்; தில்லைவன மான்மியம், வியாக்கிரபுர மான்மியம்; புலியூர் மான்மியம்; புண்டரிகபுர மான்மியம்; சிதம்பர மான்மியம்; ஏமசபா நாத மான்மியம்; ஆகாச பைரவ கற்பம்; சிதம்பர ரகசிய மந்திர உபாசனா கற்பம்; சிந்தாமணி மந்திரம்; சிதம்பர பஞ்சாட்சர கற்பம்; சித்சபா கைங்கர்ய ஸ்வதந்திர சக்தி; சித்சபா சம்புரோக்ஷண கவிதை; சித்சபா சம்புரோக்ஷண மான்மியம்; சிதம்பர கற்பம்; சித்சபா பிரதிஷ்டா மான்மியம்; நடராஜ சகஸ்ரநாம ஸ்தோத்திரம், சிதம்பர கவசம்; சிதம்பர தீக்ஷித ஸ்தோத்திரம்; சிதம்பராஷ்டகம்; நடேசாஷ்டகம்; நடேச ஸ்தோத்திரம்; நடேச சிந்தாமணி; நடராஜ திக்பந்தனம்; சிதானந்தாஷ்டக ஸ்தோத்திரம்; சிதம்பரேஸ்வராஷ்டகம்; சிதம்பரேஸ்வர புஜங்காஷ்டகம், சிதானந்தசாரம்; நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம்; சபாபதி விலாச நாடகம் முதலியன வடமொழி நூல்கள்.

2. தமிழ் நூல்கள்:

1. திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரம் - 2 திருப்பதிகம்.
2. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - 8 திருப்பதிகம்.
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் - 1 திருப்பதிகம்.

4. ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள (கீர்த்தித் திருஅகவல்; திரு அண்டப் பகுதி, போற்றித் திரு அகவல், திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், கோயில் மூத்த திருப் பதிகம், கோயில் திருப்பதிகம், கண்டபத்து, அச்சப்பத்து, குலாப்பத்து, எண்ணப் பதிகம், யாத்திரைப்பத்து, திருப் படையெழுச்சி, திருப்படையாட்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம்.)

5. ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்.

6. திருவிசைப்பாவில் உள்ள-திருமாளிகைத் தேவர் பாடல் கள் நான்கு; கருவூர்த்தேவர் பாடல் ஒன்று; பூந்துருத்தி நம்பி, காட நம்பி பாடல் ஒன்று; வேணாட்டடிகள் பாடல் ஒன்று; திருவாலியமுதனார் பாடல் நான்கு, புருடோத்தம நம்பி பாடல்கள் இரண்டு; சேதிராயர் பாடல் ஒன்று.

7. திருப்பல்லாண்டு-சேந்தனார் அருளியது.
8. திருமூலர் திருமந்திரம்— (திருவம்பலச் சக்கரம்; திருக் கூத்துத்தரிசனம்).
9. சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன் வண்ணத் தந்தாதி.

10. பட்டினத்தார் அருளிய கோயில் நான்மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம்.
"பூலோக கைலாயம்" இதுவேயாகும், உலகிற்கு நடுவிடம் சிதம்பரம் என்றும், தாம் மேற்கொண்ட ஐந்தொழில் நடனமாகிய ஆனந்த நடனம் காரணமாகவே உலகம் நிலை பெறுகின்றதென்றும் இறைவன் வெளிப்படுத்தினார் என்பர்.

தமது உடுக்கை பொருந்திய திருக்கரத்தால் சிருட்டியையும், அமைத்த திருக்கரத்தால் காத்தலையும், அக்கினித்திருக்கரத்தால் அழித்தலையும் குறிப்பிடுகின்றார் என்பர். மக்களை உலக போகத்தில் அழுத்துவது தமது ஊன்றிய திருவடி என்றும், ஆன்மாக்களைப் பிறவிப் பெருங்கடலினின்று முத்திக்கரைக்குச் சேர்ப்பது தமது எடுத்த பொற்பாதம் என்றும் குறிக்கின்றார் என்பர். இவையே ஐந்தொழில் நடனமாகிய ஆனந்த நடனத்தின் நோக்கம் என்பர் பெரியோர்.

தில்லைவனத்தில் குடிகொண்டிருந்தவள் காளி. தில்லையில் இறைவன் கோயில் கொள்ள இவள் எதிர்த்தனள், 'ஊர்த்துவத் தாண்டவத்'தின் மூலம் அவள் கர்வத்தை இறைவன் அடக்கினார். அதன் பின் இறைவனை வேண்டி அழகுருப் பெற்று தில்லைவன பரமேஸ்வரி" ஏன்றழைக்கப்பட்டனள்.

இருவகைத் தாண்டவங்களை இயற்றிய பெருமையினை உடைய தில்லைப் பதியில் பூசித்துப் பலர் பேறு பெற்றனர்.

III. அருளிச் செயல்கள்:

சிவபெருமானை வழிபட்டு நிற்றலே வீடுபேறுய்க்கும் என்றறிந்த மத்தியந்த முனிவரின் மகன், இளமையிலேயே, தில்லைக்கு வந்து ஓர் தில்லைச் செடியின் கீழ் சிவலிங்கம் நிறுவி, மலரிட்டு வணங்கி வந்தார். வண்டெச்சில் படுவதன் முன்னமே இறைவனுக்கு மலர் கொய்வதற்கு ஏற்பப் புலிக்காலும், நகங்களும், வேண்டிப் பெற்றுக் கொண்டார். பூசையைத் தொடர்ந்தியற்றினார். இக்காரணத்தால் அவருக்கு வியாக்கிரபாதர் அல்லது புலிக்கால் முனிவர் எனப் பெயராயிற்று. அவரை ஆட்கொண்ட பெருமையையுடையது இத்தில்லைப் பதி.

பிச்சாடன வேடம் பூண்டு, சிவபெருமான், தாருகவனத்தில் நடனம் ஆடினார். அவராடிய அந்நடனத்தைக் காண விரும்பினார் ஆதிசேடன். பதஞ்சலி முனிவராக ஆதிசேடன் தில்லைக்கு வந்து, வியாக்கிரபாத முனிவருடன் மன்றிற்கு வரும்போது, இருவருக்குமாக நடனம் ஆடுவதாக இறைவன் திருவுள்ளம் இரங்கினார். அவ்வாறே ஆதிசேடன் பதஞ்சலி முனிவராகத் தில்லைக்கு வந்து ஆடல் கண்டார். அவர்க்கு அருளியது இத்தலம் ஆகும்.

சிம்மவர்மன் என்னும் மன்னன் எழில் குறைந்து விளங்கியவன். நல்லெழில் வேண்டிப் பல தலங்களும் தரிசித்துப் பின்னர் தில்லை வந்தடைந்தான். வியாக்கிரபாதர் ஆணைப்படி சிவகங்கையில் நீராடி இறைவனைப் பணிந்த சிம்மவர்மன் நல்லெழில் பெற்றான். பொன்மயமான உடல் பெற்று, இரணியவர்மன் என அழைக்கப்பட்ட சிறப்பினை உடையது இத்தலம்.

சிவகணங்களே தில்லைவாழ் அந்தணர் என்ற பெயரில் தில்லையில் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இறைவனைத் தரிசிக்க ஞானசம்பந்தப் பெருமான் தில்லை வந்தடைய, மூவாயிரவரும் எதிர்கொண்டழைக்க வரும் போது அவர் கண்களுக்கு அம்மூவாயிரவரும் சிவகணங்களாகத் தென்பட்டனர். அந்நிலையை அருகிருந்த நீலகண்டயாழ்ப்பாணருக்குக் காட்டியருளினார் ஞானசம்பந்தர். அம்மூவாயிரவரும் தன்னை வணங்கு முன்னமே, அவரை வணங்குமாறு அருளியது இத்தில்லைப் பதியாகும்.

"என்று வந்தாய் எனும்எம் பெருமான் திருக்குறிப்பைப் புலப் படுத்தி"த் தில்லையில் பல பதிகங்கள் பாடியவர் அப்பர் அடிகள். தில்லை நகரை, அங்கப் பிரதட்சணம் மேற்கொள்ளுமாறு அருளிய தலம் இது.

"தம்பிரான் தோழர்" எனப் பெற்ற சுந்தரர் அடியாரைப் பாட இறைவன் அருளை வேண்டினார். இறைவனும், 'தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என அடி எடுத்துக் கொடுத்த பெருமையுடைய தலம் இது.

மாணிக்கவாசகர் தாம் பாடிய திருவாசகம் அறுநூற்றையும், கோவை நானூற்றையும், "வாதவூரன் மொழிய எழுதிய திருச்சிற்றம்பல முடையான் கையெழுத்து” - என எழுதி இறைவன் கைச்சாத்திட்ட பெருமையை உடையது இத்தலம். "நான் எழுதிய தமிழ் நூலின் பொருள் எம்பெருமானே" எனக் கூறி மாணிக்க வாசகர் கலந்தருளிய பெருமையினை உடையது இத்தலம் ஆகும்.

இறைவனை வணங்கி முடித்ததும் சிலம்பின் ஓசை கேட்டு மனநிறைவடைபவர் சேரமான் பெருமாள். ஒரு நாள் இறைவன் சிலம்பொலி செய்யக் கால தாமதமாயிற்று. தம் பூசையில் இறைவன் ஏதோ குறை கண்டனன் போலும் எனக் கருதிய சேரமான், வாளெடுத்துத் தம்மைத் துண்டிக்க எண்ணினார். அத்தருணம், இறைவன் சிலம்போசை கேட்பித்தார். சுந்தரரின் அருட்பாடலைக் கேட்டு மகிழ்ந்தமையால் சிலம்போசைக்குக் காலங்கடந்தது என்று இறைவன் கூறியதைக் கேட்டார். உடனே, சேரமான் சுந்தரரைக் காணத் தில்லை சென்று கண்டு மகிழ்ந்தார். “பொன் வண்ணத் தந்தாதி" பாடினார். அது கேட்ட ஈசன் மகிழ்ந்து சிலம்பொலி செய்தருளினார். அத்தகைய பெருமை மிக்கது தில்லையம்பதி.

சேக்கிழார் பெருமான் எழுதப் புகுந்த பெரிய புராணம் என்ற நூலுக்கு, இறைவனே "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுத்தார். அவ்வரிய நிகழ்ச்சி இப்பதியிலே நிகழ்ந்த ஒன்று அன்றோ!

"எம்மைத் தீண்டுவையோ திருநீலகண்டம்” என மனைவி இட்ட ஆணைப்படியே நின்று தம்முடைய முதுமையை எய்தினார் திருநீலகண்டர். அவரை ஆட்கொள்ளவேண்டி, அவரையும் அவர் மனைவியையும் குளத்தில் மூழ்குவித்து, இளமையாக்கி எழச் செய்த அருட்செயல் மிக்கது இத்திருப்பதி.

தில்லை சென்று இறைவனை வணங்க நாளை, நாளை என்று காலங் கடத்தி வந்தார் நந்தனார். பின்னர் ஒருவாறு இறைவனைக் காணச் சென்றனர். இறைவன் இட்ட ஆணைப்படி தீக்குழியில் இறங்கி ஏறி அந்தண உருவம் அமையப் பெற்று இறைவனை வழிபட்டு வீடுபேறு உறச் செய்த நற்பதியாகும் தில்லையம்பதி.

உய்யவந்த தேவநாயனார் தாம் எழுதிய 'திருவுந்தியார்' என்னும் நூலினைச் சிதம்பரம் கோயிலில் இருந்த கல்யானைக்கு அருகில் இட, அக்கல்யானை அந்நூலை எடுத்து அருகிருந்த படியின் மிசை வைக்கவே, அந்நூல்: 'திருக்களிற்றுப்படியார்' எனப் புகழத் தக்க பெருமையினை எய்தியது. இப்பேறு உய்ய வந்த தேவநாயனார் பெறச்செய்தது இப்பதியாகும்.

மேலும், குரு நமச்சிவாயர் அவர்கள், இறைவனின் ஆணைப்படியே இறைவனின் பாதகமலங்களுக்குக் கிண்கிணி, சிலம்பு முதலிய செய்து அணிவிக்க எண்ணினார். அருகிருந்தோர் 'அவற்றை யணிந்து இறைவன் ஆடுவாரோ' எனக் கேட்டனர். "சம்புவே! வெற்றிப் பதஞ்சலிக்கும், வெம்புலிக்கும், தித்தி என, ஒத்துப் பதஞ்சலிக்கு மோ" எனப்பாடினார் குரு நமச்சிவாயர். அது கேட்ட இறைவன் உடனே ஆடல் மேற்கொண்டு காட்டியருளிய அருள் மிக்க தலம் இது.

கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் அவர்கட்குப் பல அருளைச் செய்ததும் இத்தலமே யாகும். ஆதிசங்கரர் அவர்கட்குக் கேனோப நிடதத்தில் ஏற்பட்ட ஐயத்தினைத் தில்லைச் சிவகாமி யம்மை தீர்த்தருளிய தலம்.

குமரகுருபரர் தம் அருள்வாக்கினை வெளிப்படுத்தித் தமிழ் இலக்கியத் தொண்டு செய்யக் காரணம் தில்லையம்பதி.

மறைஞான சம்பந்த சுவாமிகள் அம்பலத்தில் மூர்ச்சையுற்றுக் கிடக்க அது
நீங்குமாறு சிவகாமியன்னையே வள்ளத்தில் பால் அருந்தித் தெளிவித்த பெருமை மிக்க தலமிது.

இராமலிங்க வள்ளலார் கண்டு வணங்கிப் பல அருட்பாடல்கள் இயற்றுமாறு பணித்த தலம் இதுவாகும்.

முன்னர் ஒருகால் துருவாச முனிவர் தில்லைப்பதி வந்தடைந்தனர். பல இடத்துச் சுற்றியும் உண்ண யாதும் இலாது வருந்தி, எருக்கு முளைத்ததில் ஈசனுமிங்கில்லை" என, அது கேட்ட அன்னை சிவகாமி, ஓர் அந்தணப் பெண்ணாகி, ஒரு கிண்ணத்தில் பால் அளித்து, வெம்பசி போக்கினள். பசியாறிய அவர் அகமலர, "ஈசனு மிங்குண்டு" என்று மாற்றிக் கூறினார் என்றும் கூறுவதுண்டு.
இத்தகைய அருட் செயல்கள் மிக்கது தில்லை.

IV. வரலாற்றுப் பின்னணியில் தில்லையின் வளர்ச்சி

"விண்ணுக்கும் மேல்வியன்
      பாதலக்கீழ் விரிநீர் உடுத்த
மண்ணுக்கு நாப்பண்
      நயந்து தென்றில்லை நின்றோர்”
எனக் கூறுவது திருக்கோவையார். உலகின் நடுவில் இருப்பதால் நடராசன் தில்லையை இடமாகக் கொண்டார். மக்களும் அவர்க்குக் கோயில் எடுப்பித்து வழிபட்டு பேறு பெற்றனர்.
இக்கோயில் எடுக்கப் பெற்ற செய்தியும், அது படிப்படியாக வளர்ந்த செய்தியும் பிறவும் வரலாற்றுப் பின்னணியில் காண்போம்.

1. அம்பலம் அமைக்கப்பட்டது:
எழில் குறைந்து காணப்பெற்ற சிம்மவர்மன் என்னும் பல்லவன் தில்லையடைந்தான். வியாக்கிரபாத முனிவரின் வாக்கால் மனந்தேறிச் சிவகங்கை படிந்தான்; எழுந்தான்; எழில்மிக்குக் காணப் பட்டான்; பொன்மயமாகத் தான் விளங்கியதால் இரண்யவர்மன் என்றழைக்கப்பட்டான்.
இதற்கு நன்றிக்கடன் ஆற்றுமாறும், இறைவனின் நினைவாகவும் முழுமுதற் கடவுளாகிய நடராசப் பெருமானுக்கு ஓர் அம்பலம் கட்டினான்.
தில்லையில் நடராசப் பெருமானுக்கு அம்பலம் சிம்மவர்ம பல்லவனாலேயே அமைக்கப்பட்டது. (கி.பி.436-475)1, இவ்வாலய வழிபாட்டிற்காகப் பல நிவந்தங்களும் அளித்தான்.
இவ்வரலாற்று நிகழ்ச்சியை அழகிய வண்ண ஓவியமாகக் காமக் கோட்ட மேல் முகட்டுத் தளங்களில் காணலாம்.
திருப்பணி மேற்கொண்ட சோழர்கள்:
முதல் ஆதித்த சோழன்: (கி.பி. 871.90).
சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன் வேய்ந்து அழகு படுத்தினான் முதல் ஆதித்த சோழன்.
"சிற்றம்பல முகடு கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதல்வோன்" என நம்பியாண்டார் நம்பியால், திருத்தொண்டத் திருவந்தாதியில் புகழப்படும் பெருமையையுடையவன்.
இவன் செயல்களை ஆனைமங்கலச் செப்பேடுகளும், திருவாலங் காட்டுச் செப்பேடுகளும் புகழ்ந்து கூறுகின்றன.
முதற் பராந்தக சோழன்: (கி.பி. 907.953)
ஆதித்த சோழனையடுத்து, முதற் பராந்தக சோழன் மேற்கொண்ட திருப்பணிகள் பலவாகும்.
"வெங்கோல் வேந்தன் தென்னரும்
ஈழரும் கொண்டதிறற்செற்கோற் சோழன் கோழிவேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடியாடும்
அணிதில்லை யம்பலம் (8)
எனக் 'கோயிற்பதிகம்' இவனைப் புகழ்ந்து கூறுகிறது.
"தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலம் ஆக்கினான்" என்பது கல்வெட்டுச் செய்தி. ''கோயிற் பதிகம்" நூலினையாத்த சிவஞான கண்டராதித்தர், முதற் பராந்தக சோழனின் இரண்டாவது திருமகனாராவர்.
தில்லைக்குப் பொன்வேய்ந்த இவன் செயல்,
"கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும்"
என, "விக்கிரம சோழனுலா”வில் புகழ்ந்து பாடப்படுகின்றது.
-----------------------
1. கடைச் சங்க வரலாறு: பக்: 83, சதாசிவப் பண்டாரத்தார்: ஆண்டு: 55
---------------------
முதல் இராசராச சோழன்: (கி.பி. 985-1014)
முதலாம் இராசராச சோழன் தில்லையில் முடி சூடிக் கொண்டான். 'சிவபாத சேகரன்” என்றும் அவன் அழைக்கப்பட்டான். இவனுக்கு 'இராசராசன்" எனத் தில்லைவாழ் அந்தணர் பெயர் சூட்டினர்,
தன் சிவத் திருப்பணிகள் அனைத்தையும் தஞ்சையில் பிருகதீசுவரர் கோயிலிலேயே முழுமையாக ஈடுபடுத்தி விட்டமையால், தில்லையில் இவன் திருப்பணிகள் யாதும் இல்லை என்பது நன்கு விளங்கும்.
ஆயினும், “வடகரை ராஜராஜ வள நாட்டு பெண்ணையூர் தனியூர் பெரும்பற்றப் புலியூர்” எனக் கல்வெட்டுக்கள் வழங்கும் சிறப்பினைத் தில்லை இவன் காலத்தில் பெற்றிருந்தது.

முதற் குலோத்துங்கன்: (கி.பி. 1070-1120)
இவன் 'திருநீற்றுச் சோழன்" எனப்பட்டான். 'கம்போடியா' என்று தற்போது வழங்கப்பெறும் 'காம்போச' நாட்டின் மன்னன் கல் ஒன்றினை உவந்து இவனுக்குப் பரிசிலாக அளித்தான். அதனை இறைவனின் திருவெதிர் அம்பலத்தில் வைத்து இறையருள் பெற்றான் எனக் கூறுகிறது சிதம்பரக் கல்வெட்டு ஒன்று.
இவனுக்கு இரு சகோதரிகள் உண்டு. குந்தவை என்றும் மதுராந்தகி என்றும் அவர்கள் அழைக்கப்பட்டனர். தில்லைக்கு இவ்விருவரும் ஆற்றியுள்ள தொண்டுகள்:
(அ) தில்லைச் சிற்றம்பலவர் தண்ணீர் அமுது செய்து அருள வேண்டும் என்பதற்காக ஐம்பது கழஞ்சு நிறையுள்ள பொற்கலயம் ஒன்றை இவனுடைய தங்கை குந்தவை அளித்துள்ளனள்.
கி.பி.114இல் அப்பெருமானின் திருக்கோயில் முழுதும் பொன் வேய்ந்தாள்:
"தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தம் கோயிலெலாஞ்
செம்பொன் வேய்ந்தாள்:
ஏனவருந் தொழுதேத்து மாராசராசன் குந்தவை
பூ விந்தையாளே"
எனக் கூறுவது கல்வெட்டு.
ஆ) மற்றொரு சகோதரியாகிய மதுராந்தகி என்பவள், திருச்சிற்றம்பலமுடையார் நந்தவனத்திற்கும், சிவனடியார்கள் உண்ணும் மடத்திற்கும் இறையிலி நிலங்களை நிவந்தங்களாகக் கி.பி. 1116 இல் அளித்துள்ள கல்வெட்டுச் செய்தியைக் கீழே காணலாம்:
"திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு
யாண்டு நாற்பத்தியாறாவது ராஜாதிராஜ வள நாட்டுத் தனியூர்,
பெரும்பற்றப் புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு,
திருநந்தவனப் புறமாகவும், ஸ்ரீ மஹேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய
மடப்புறம் நம்பெருமாள் திருத் தங்கையார், மதுராந்தகியாழ்வார்
விலைகொண்ட நிலம்............'

அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன்:
முதற் குலோத்துங்க சோழனின் உயர் அதிகாரி, பேரம்பலத்திற்குச் செப்புத்தகடு வேய்ந்தான். நூற்றுக்கால் மண்டபம் கட்டினான். பெரிய திருச்சுற்று மாளிகை கட்டினான். தேவாரம் ஓதும் மண்டபம் அமைத்தான். திருஞான சம்பந்தர் கோவிலுக்குப் பொன் வேய்ந்தான். திரு நந்தவனம் அமைத்தான் தில்லையில் உள்ள பேரேரிக்கு மதகுகள் அமைத்தான்.
சுடலையமந்தார் கோயிலைக் கற்றளியாக்கிக் கொடுத்தான். அதுமட்டுமன்று சமயகுரவர் மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பலத்தில் சேமித்து வைத்தான்”-என்னும் அரியபணி மிகவும் ஆர்வமூட்டுவது.
இவனுடைய திருப்பணிகள் குறித்து விளக்கமாகத் தில்லையில் 36 வெண்பாக்கள் பொறிக்கப்பெற்றுள.

விக்கிரம சோழன்: (கி.பி. 1118-1136).
"திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்தான்" என இவன் சிறப்பிக்கப்பட்டான். தில்லைச் சிற்றம்பலத்தைச் சேர்ந்த திருச்சுற்று மாளிகை, கோபுரவாயில், கூட சாலை, பலிபீடம் ஆகியவற்றிற்கும் பொன் வேய்ந்தான்.
திருத்தேர்க்குப் பொன் வேய்ந்ததுடன் முத்துவடமும் தரித்தான். பொற்கலங்கள் அளித்ததுடன் பொன்னாலான கற்பகத்தருக்களையும் கொடுத்தான்.
'விக்கிரம சோழன் திருவீதி' இவனால் அமைக்கப்பட்டதே, நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள பன்னிரண்டு தூண்களில் 'விக்கிரம சோழன் திருமண்டபம்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
"மாசிக் கடலாடி மண்டபம்" என்னும் ஒரு மண்டபத்தினைச் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள 'கிள்ளை' என்னும் ஊரில் கட்டினான்.

இரண்டாம் குலோத்துங்க சோழன்: (கி.பி. 1133.1150)
இவன், அபயன், அனபாயன் என்றும், 'திருநீற்றுச் சோழன்' எனவும் சிறப்புப் பெயர்கள் கொண்டவன். தில்லைக்கு இவன் ஆற்றியுள்ள திருப்பணிகள் பல.
நாற்பெருந் தெருக்கள் அமைத்தான். பற்பல மண்டபங்கள் கட்டுவித்தான். சிற்றம்பலத்தைப் பொன்னாலும் பல்வகை மணிகளாலும் ஒப்பனை செய்தான். பேரம்பலத்தையும், உட்கோபுரம், திருச்சுற்று மாளிகைகளையும் மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான்.
இவ்வாறு இவன் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தபின், அதனை விரிவுபடுத்த எண்ணினான். அதற்காகத் தில்லைச் 'சித்திரகூடத்தில்', குலசேகர ஆழ்வாரும், பொய்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்வித்திருந்த ஸ்ரீ கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியைக் கைக்கொள்ளக் கருதினான். அதற்காகத் திருமால் மூர்த்தத்தைக் கடலில் எறிந்தான். இதன் பயனாகக் 'கிருமிகண்ட சோழன்' எனப்பட்டான்.
இம்மூர்த்தம் 1539-இல் திருப்பதியிலிருந்து மீண்டும் கொணரப்பட்டு, கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுதராயர் அவர்களால் தில்லையில் நிறுவப்பட்டது. அவரே அக்கோயிலுக்கு அர்ச்சகர்களையும் நியமித்தார்.

மூன்றாம் குலோத்துங்கன்: (கி.பி. 1178-1218)
இம்மன்னன் தில்லைப் பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான். அம்பலவாணர் திருக்கோயில் முகமண்டபம், மூன்றாம் பிரகாரம், ஆகியவற்றைக் கட்டுவித்தான்.
"எத்தரையும் தொழும் இறைவற்கு எதிரம்பலம் செம்பொன் வேய்ந்து, சித்திரைவிழா அமைத்து, இறைவி திருக்கோயில் செம் பொன் வேய்ந்து", என்ற மெய்க்கீர்த்தி இவன் செயலைப் பாராட்டுகின்றது.
மூன்றாம் இராசராசன்:

மூன்றாம் இராசரசனுடைய பதினாறாம் ஆட்சியாண்டாகிய 1232-இல் இராமனதீச்சுரக் கோயில் வழிபாட்டிற்கு முட்டுப்பாடு ஏற்பட்டது. அக்கோயில் நிர்வாகிகளும், மகேசுவரரும், தில்லைப் பெரும்பற்றப்புலியூர் கோயில் தானத்தினர்க்கு விண்ணப்பம் செய்து கொண்டனர்.
தில்லை மகேசுவரர்கள் செவிசாய்த்து, இவ்வேண்டுகோளுக்கு உடனே
"சோழமண்டலம், இராஜராஜபாண்டி மண்டலம், வீர சோழ மண்டலம், நடுவில் நாடு, தொண்டைநாடு, சயங்கொண்ட சோழ மண்டலம், ஆகிய இடங்களில் இருந்த கோயிலார்களை அழைத்து, நெல்லாகவோ, பொன்னாகவோ, இராமனதீச்சுவரர் கோயிலுக்குக் கொடுக்குமாறு செய்து, இராமனதீச்சுரர் கோயில் பூசனை குறைவற நிகழுமாறு ஏற்பாடு செய்தனர்” என்பது இராமனதீச்சுவரக் கல்வெட்டு.
திருவாதிரைத் திருநாளில் தில்லை மூவாயிரவருள் ஒருவர் வந்து, ஆடவல்லானுக்குத் திருமஞ்சனம் செய்விப்பது வழக்கம் என மோகனூர்ச் சிவன் கோயில் கல்வெட்டு அரிய ஓர் செய்தியைக் குறிப்பிடுகின்றது.

3. திருப்பணி மேற்கொண்ட பாண்டியர்கள்:

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்: (கி.பி. 1239-1251)
இவனுடைய திருப்பணிகளை விளக்கும் செந்தமிழ்ப்பாக்கள் பல சிதம்பரத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
தில்லையம்பலவனை வணங்கிப் பல துலாபாரங்கள் இவன் அருளிச் செய்துள்ளான். அப்பெருமானின் திருக்கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். "கோயில் பொன்வேய்ந்த பெருமான்” எனப் பெருமையோடு அழைக்கப்பட்டான். தில்லையின் மேலைக் கோபுரம் கட்டினான். இன்றும் "சுந்தரபாண்டியன் கோபுரம்" என வழங்கப் படுகிறது.
இக்கோபுரத்தை கட்டிய சிற்பிகள், ''விருத்தகிரிகேசவப் பெருமாள்; அவன் மகன் விச்வமித்ரு; திருபிணக்குடையாசாரி திருமருங்கனும், அவன் சசோதரன் காரணாசாரியும்" எனவும், இது "சுந்தரபாண்டியன் திருநிலை எழுகோபுரம்" எனவும் அழைக்கப் பட்டது என்பனவற்றைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம்.

சடையவர்மன் வீரபாண்டியன்: (கி.பி. 1253.1268.)
தொண்டை நாட்டை வென்றபிறகு கி.பி. 1253-இல் வீராபிடேகமும், விஜயாபிடேகமும் தில்லைமாநகரில் மேற்கொண்டான்.
"பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து, காடலவன் திறையிடக் கண்டினிதிருந்து வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணியருளினான்”, என்பது கல்வெட்டுச் செய்தி.
தில்லையிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இவன் பெயர் வரையப்பெற்று விளங்குகிறது.

4. திருப்பணி மேற்கொண்ட பிற்காலப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1243.1279,)
"பட்டுக்கிடந்த பல்லவ வமிசத்தை உயிர்ப்பித்து, சேந்த மங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டான்" கோப்பெருஞ்சிங்கன் என்பது வரலாறு.1
பல்லவன் கோப்பெருஞ்சிங்கனுக்குச் சொக்கசீயன் எனவும் மறுபெயருண்டு. தில்லைத் தெற்குக் கோபுரம் கட்டினான். அதன் பராமரிப்புக்காகச் செங்கற்பட்டு ஆற்றூரினை நிவந்தம் ஆக விடுத்தான்.
"காடவர்கோன் சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்க தேவனால் தொண்டை நாட்டு ஆத்தூரில் 3013/4 வேலிநிலம் இறையிலி தேவதானமாக ஏற்படுத்தி, அதன் வருவாயினைக் கொண்டு செய்யப்பெற்றது" என்பதுதில்லைக் கோயிலின் இரண்டாவது திருச்சுற்று வடக்கு மதிற்சுவரிலுள்ள கல்வெட்டு விளக்கம்.
இக்கல்வெட்டினுடைய பிரதி ஒன்று, ஆத்தூர் முத்தீஸ்வரர் கோவிலிலும், கச்சி ஏகம்பமுடையார் கோயிலிலும், இருப்பதாகக் கல்வெட்டுச் செய்தி உணர்த்துகின்றது.
கோப்பெருஞ்சிங்கன் தன் எட்டாவது ஆட்சியாண்டில் தில்லையம்மன் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தான். இதற்காகத் தில்லையில் விக்கிரம சோழன் தெற்குத் திருவீதியின் தென்பால் 1000 காசுக்கு 50 குழி நிலத்தை வாங்கினான். சோழர்கோன் விலைக்கு வாங்கப்பட்டது இது. பிறகு பிடாரியார் கோயிலைச் சமைத்தான். இக்கோயில், "தில்லைவனமுடைய பரமேசுவரி கோயில்,’ என்றும், ‘திருச்சிற்றம்பல மாகாளி கோயில்" என்றும் வழங்கப்படுகிறது.
இவனுடைய பெயர் தில்லை நடராசர் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றிலுள்ள மேலை வாயிலிலும், சிவகாமி அம்மன் கோயில் வாயிலினும் கற்றூண்களில் பொறிக்கப் பெற்றுள்ளது.

5. திருப்பணி மேற்கொண்ட ராயர்கள்:
கி.பி. 1509-க்குமேல் தில்லையில் வடக்குக் கோபுரத்தைக் கிருஷ்ண தேவராயர் கட்டத் தொடங்கினார். போர் முதலிய காரணங்களால் அக்கோபுரம் அச்சுத தேவராயர் அவர்களால் கட்டிமுடிக்கப்பெற்றது. இது 'ராயலு' கோபுரம் என்று வழங்கப் படுகிறது.
--------------------
1: கோப்பெருஞ்சிங்கன்: எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்: பாரிநிலையம்: 1965.
-------------
திருப்பதியிலிருந்து கோவிந்தராஜப் பெருமாள் மூர்த்தத்தை மீண்டும் தில்லையில் அமைத்தவர் அச்சுததேவராயர் என்பது முன்னர்க் கண்டோம்.

6. திருப்பணி மேற்கொண்ட நாயக்கரும், வடவரும்:
“வடகரை ராசாதிராசன் வள நாட்டுப் பெண்ணையூர் நாட்டுப் பெருதலம்பட்டுச் சாவடித் தனியூர் பெரும்பற்றப் புலியூர்" எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு போற்றப்பட்டது நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்திலாகும். அவர்களும் தங்கள் பங்கைத் தில்லைத் திருப்பணிக்கு ஆற்றியுள்ளனர்.
வடநாட்டைச் சேர்ந்த ஈசுவரசிவர் என்பவர் நிலம் தானம் செய்யப்பெற்ற செய்தியைக் கீழ்க்காணும் கல்வெட்டு கூறுகின்றது.
"உத்தரவாதத்துத் தக்ஷிணராதத்து ஸாவர்ண கோத்திரத்துக் கங்கோணி திருச்சிற்றம்பலமுடையாரான உடையார் ஈசுவர சிவர் என்பவர் திருச்சிற்றம்பலமுடையான் திருநந்தவனத்துக்குத் திருப்பள்ளித்தானம் ஆக்கித் திருச்சிற்றம்பலம் உடையார்க்கும், திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார்க்கும் அளக்கிற பேர் நால்வருக்கு இலக்கைக்கு உலாக நிலம் தானம் செய்தார். இது (கோப்பெருஞ்சிங்கன்) 19-ஆம் ஆண்டில் தீட்டப்பட்டது"-
இதன் மூலம் வடநாட்டினரும் தில்லையம்பலமுடையான் கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் தெரிவருகின்றன.

7. திருக்காமக் கோட்டம் உருப்பெற்றது:
முதற்குலோத்துங்க சோழனிடம் உயர்பதவி வகித்த "அரும் பாக்கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன்" என்பவனே முதல் முதலாகச் 'சிவகாமக் கோட்டம்' கட்டுவித்தான். இது முதல் “திருக்காமக் கோட்டப் பெரிய நாச்சியார்', என்றே இறைவி கல்வெட்டுக்களில் அழைக்கப்படுகின்றார்.
இவனையடுத்து, இரண்டாம் குலோத்துங்க சோழன், இச்சிவகாமக் கோட்டத்தினை மிகப்பெரிய அளவில் அமைத்துக் கொடுத்தான். "ஸ்ரீ பீடங்கண்ட பெரிய பெருமாள்' என இவனைக் கல்வெட்டுக்கள் புகழ்கின்றன.
“நீடிய வெண்டிசை நீடில் வாய்ப்ப
நீடிய தெக்கினை மேருவென்னப்
பீடிகை தில்லைத் வனத்தமைத்த
பெரிய பெருமாளை வாழ்த்தினமே!"
என்பது தக்கயாகப்பரணி!
அழகிய தேர் ஒன்றையும், கற்பகத்தரு முதலியனவற்றையும் இக்கோயிலுக்கு இவன் கொடுத்தருளியுள்ளான். ''உமாதேவியார் தரம்பிழந்த இமயவெற்பை மறக்கும்படி சிவகாமக் கோட்டம் மிகப் பெரிதாக அமைத்தான்" எனக் கல்வெட்டுக்கள் இவன் அமைத்த கோட்டத்தைப் பற்றிப் புகழ்கின்றன.
மூன்றாங் குலோத்துங்க சோழன் சிவகாம கோட்டக் கோயில் கோபுரத்தினைக் கட்டி நிறைவு செய்தான். சோழர்களின் கை வண்ணத்தால் உயர்ந்து விளங்கும் இச்சிவகாமக் கோட்டத்தின் எதிரில் சிறந்து விளங்குவது 'சிவகங்கை' எனப்படும் தீர்த்தம் ஆகும்.
இக்கோட்டத்தில் கிழக்கு முகம் நோக்கி எழுந்தருளியுள்ள அன்னை சிவகாமியின் வலக்கரங்கள் இரண்டும் அக்கமாலையையும், நீலோற்பல மலரையும் ஏந்தியுள்ளன, இடக்கரங்கள் இரண்டனில் ஒன்று பைங்கிளி ஏந்தியிருக்க மற்றொன்று இடுப்பிற் பொருந்தியுள்ளது.

8. கலைச்செல்வம்
ஒப்புயர்வற்ற சிற்பச்செல்வங்கள் நிறைந்து விளங்குவது தில்லைக் கோயில். பலவிதமான நடனங்களை விளக்கும் சிற்பங்களும், நர்த்தனமாடும் நிலையில் உள்ள கற்பக விநாயகர் சிற்பமும், கோயில் கோபுரங்களின் சிற்ப வேலைப்பாடுகளும் பலரின் கைவண்ணத்திற்குச் சான்றுகளாகும்.
பிற்காலச் சோழர் காலத்து ஓவியங்கள் பல இங்குள்ளன. தாருகவனத்து ரிஷி மகளிரைச் சிவன் ஆண்டியாக உருக்கொண்டு போந்து மயக்கும் காட்சியும் விஷ்ணு மோகினி உருக்கொண்டு ரிஷிகளை மயக்கும் காட்சியும், வியப்பு மிக்கவகையில் ஓவியங் களாகத் தீட்டப் பெற்றுள்ளன.
கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டுகால நாயக்க மன்னர்களின் ஓவியங்களும் சிதம்பரம் கோவிலில் இடம் பெற்றுள்ளன.

9. பச்சையப்ப முதலியாரின் அறப்பணிகள்
திருவாயிற் கோபுரமாக விளங்கிய கீழைக் கோபுரம் விக்கிரம சோழன் கோபுரம் எனவழங்கப்பட்டது. இது சற்றுப் பழுதடைந்திருந்தது. அதனைக் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் செப்பனிட்டுச் சீராக்கினார். மேலும் சில கட்டளைகள் மூலமும் இறைவன் பணி சிறக்கச் செய்துள்ளார்.

10. செட்டி நாட்டார் அறப்பணி
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர், சோழர், பாண்டியர், ராயர், நாயக்கர்கள் ஆகியவர்களின் அரவணைப்பில் பெரிதும் வளர்ந்து பொலிவுற்ற இத்தில்லைமா நகர், செட்டிநாட்டு அரசர்களாலும் அறப்பணிகள் செய்யப் பெற்றுப் பொலிவுற்றது.

11. முடிவுரை
மரத்தால் ஆன கோயிலாக விளங்கிய சிற்றம்பலம், பேரம்பலம் ஆகியவை வானளாவும் கோபுரங்களுடன் இன்று புகழ்பெற்று விளங்குகிறது. நடராசர் ஆடும் நடனமும், காமக்கோட்டி எழுந்தருளியிருப்பதும், சிவகங்கைத் தடம் உள்ள தன்மையும் அனைத்தும் இப்பகுதியில் அறிந்தோம், இதற்கு மேலும் சிறப்பு கூட்டுவது போல் தில்லையின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்தியது அங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம்” ஆகும். இதனை.
“தில்லைப் பதியுடையான் சிற்றம் பலந்தன்னில்
அல்லும் பகலும் நின்றாடுகின்றான்-எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து.”
என்னும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் தனிப்பாடல் மூலம் அறியலாம்.
================================

3. நூற் பொருள் காண்டல்


"பூலோக கைலாயம்" என அழைக்கப்படும் பெருமையினை உடையது தில்லைத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புக்களை யுடையது. வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் பணிந்து வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்கட்கு இறைவன் நடனம் அருளிக் காட்டிய திருத்தலம். சிம்மவர்மன் என்பவன் சிவகங்கையில் நீராடி தன் உடல் பொன்மயம் ஆகப் பெற்றான். இரணியவர்மன் என்றும் அழைக்கப்பட்டான். ஓர் அம்பலம் சிறிய அளவில் அமைத்து அருளித் தன் நன்றிக்கடன் செலுத்த உதவிய நற்பதி. அதுவே இன்றும் நிலவிச் சிற்றம்பலம் எனப்படுவது.

இறைவன் ஐந்தொழில் நடனத்தை மேற்கொண்டு உலகம் நிலைபெறச் செய்ய அருளுவது சிதம்பரமேயாகும். “தில்லை மூவாயிரவர் வணங்கும் தலம்," மூவராலும் பாராட்ட பெற்ற தலம்.

திருச்சிற்றம்பலக் கோவையார் முகிழ்ப்பதற்கும், பொன் வண்ணத்தந்தாதி பாடப் பெறுவதற்கும் காரணமாயிருந்ததும், 'உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்ததும் இத்தலம் ஆகும். மேலும், எல்லாத் திருத்தலங்களிலிருந்தும், சிவபெருமானின் பல்வேறு கலைகளும், நடுநிசியில் தன்னிடத்துப் பொருந்தப் பெறும் தலம். "சிதம்பர ரகசியம்" அறிதற் கிடமான தலமும் ஆகும்.

இத்தில்லையில்தான் காமகோட்டத்துள் அன்னை சிவகாமி எழுந்தருளியுள்ளார்.

1. பிற இலக்கியங்களில் தில்லை

(1) "செல்வச் செழிப்பினைக் காட்டும் உயர்ந்த மாடங்கள் சென்று, வானூர் மதியினைத் தோயுமாறு அமைந்துள்ளன. அவ்வாறே உயர்கின்ற தன்மையினை உடையது செல்வந்தர்கள் வாழும் தில்லை மாநகர்.
"வேத நூல்களைக் கற்று, அவை கூறியவாறே எரியோம்பிக் கலி வராமல் வாழ்கின்ற மக்களையுடைய பதி;
"எப்பொழுதும் ஓயாத வேள்வித் தீயினை உடையது தில்லை மாநகர்" என ஞானசம்பந்தரால் பாராட்டப்பெற்றது.

(2) "கமுக மரங்கள் ஓங்கிப் பரந்திருக்கவும், பல மாடங்கள் எங்கும் நெருங்கி ஓங்கியிருக்கவும், வாளை மீன்களையுடைய புனல் வந்து எத்துமாறு வயல் சூழ்ந்து இருப்பதும் தில்லை;
"நீலோற்பல மலர்கள் மலர்ந்த வயல்களைக் கொண்டு விளங்குவது.

"செம்மையான இறைவன் திருவடிகளை மனத்தில் நித்தமும் வைத்து, அவனையே எண்ணிக் கொண்டிருக்கும் அடியவர் நிறைந்த திருச்சிற்றம்பலம் ;
"அன்னம் பாலிக்கும் தில்லை" என்றெல்லாம் திருநாவுக்கரசப் பெருமானால் பாடப்பெற்றது.

(3) "மூன்று தேவர்களும் நின்று வணங்க, நடராசப் பெருமான் திருக்கூத்தயர, முப்பத்து முக்கோடி தேவர்களும் சென்று ஏத்தும் சிறப்பினையுடையது" என்கின்றார் சுந்தரர்.

(4) "செம்பட்டை முடியினையுடைய கடைசியர்கள் வயல்களில் உழைத்து, அவர்கள் களைந்து வீசிய நீலோற்பல மலர்கள், யாவும் நிலங்களின் வரப்புக்களின்மீது அரும்புகின்ற தன்மையையுடையது பெரும்பற்றப் புலியூர் ஆகிய சிதம்பரம்" என்பார் கருவூர்த் தேவர்.

(5) "அழகிய திரண்ட வளையல்களை அணிந்துள்ள பெண்கள், பாடியாடும் அழகுமிக்க தில்லைப்பதி" எனக் கண்டராதித்தர் புகழ் கின்றார்.
பெரிய பராணத்தில் சேக்கிழார் பெருமான் பல இடங்களில் தில்லையின் பெருமையைக் கூறியுள்ளார். மருதமும் நெய்தலும் மயங்கிய நிலையில் உள்ள தில்லையை "நெய்தலொடு தழீஇய மருதவேலித் தெய்வ புலியூர்" எனப் புகழ்ந்துள்ளார் குமரகுருபரர்.

2. சிவகாமி யந்தாதியில் தில்லை

"சீர்மேவு தில்லை" எனவும், "பெரியார் தொழும் புலியூர்" எனவும், "தில்லைவனம்" எனவும், 'சிதம்பரம்' எனவும், புண்டரிக புரம்" எனவும் இவர்தம் நூலில் இயல்பாகத் தில்லையைப் பற்றிக் கூறியுள்ளார்.

முற்காலத்தில் கோயில்களும் கோட்டைகளாகப் பயன்பட்டன என்பதும், கோயிற் சுவர்களின் மீதும் போர் நிகழ்ந்தது என்பதும், நாம் அறிவோம். அதனை "அகமிசைக் கிவர்ந்தோன் பக்கம்” (தொல்-68 புறத் சூ. 13.) என்னும் துறையால் அறியலாகும். கோயில்களும் கோட்டைகளாக விளங்கின என்பதற்கு வேலூர்க் கோட்டைக் கோயில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இத்தகைய ஒருநிலை இவ்வாசிரியர் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்பதனை, "ஒளியெயில் சூழ்ந்த தில்லை” (41) என இந்நூலாசிரியர் பாடியுள்ள வரிகள் உணர்த்துவனபோல் அமைந்துள்ளன.

இந்நூல் ஒரு துதிநூல். சிறப்பாக அன்னை சிவகாமியைப் போற்றிப் புகழ்ந்துள்ளது. இனி, இந்நூல் கூறும் செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

2. இறைவனின் திருநாமங்கள்

இந்நூல் அன்னை சிவகாமியைத் துதியுறு நூல்: ஆயினும், தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமானையும், பிற இறைவர்களையும் இந்நூலாசிரியர் எவ்வெவ்வாறு போற்றியுள்ளார் என்பதனை முதற்கண் காண்போம்.

"விப்பிர ஞானிகள் மூவாயிரவர் தொழும் வேதர் (88) "எனக் கூறித் தில்லை மூவாயிரவரால் இறைவன் வணங்கப் படுவதனைக் கூறியுள்ளார். மின்னல்களைக் கொண்டு இயற்றப்பெற்றது போல் ஒளிவீசுகின்ற மன்றத்தில் இறைவன் நின்றாடுவதாகவும், தென்திக்கை நேரக்கி நின்றாடும் பிரான்" (25, 47) என்றும் கூறிப் புகழ்கின்றார்.

''மன்றுளாடும் பிரான்” (4), "மன்றுளாடி" (6), "நடராசர்" (16,66) 'தாண்டவர்' (20), "நின்றாடும் பிரான், (47) எனவும், 'அம்பலத்தப்பன்' (காப்பு), 'தில்லைக் கடவுள்" (59) எனவும் பாராட்டுகின்றார்.

"பெருவயிற்றுக் கார்மேவும் யானைமுகன் மகன் (காப்பு)" எனக் கூறி, அவரும் நர்த்தன விநாயகராக விளங்குவதனை," அம்பலத் தப்பனோ டாடும்" என்றும் சொற்களாலும் விளக்கி, அரியவொரு குறிப்பினைக் காப்புச் செய்யுளிலேயே கொடுக்கின்றார்.

3. இறைவியின் தன்மைகள்

"கருணைக் கடலமு”தாக அன்னை சிவகாம சுந்தரி விளங்கி, மக்களின் பிறவிப் பிணி தீர்க்கும் மலைமருந்து"மாக விளங்கி, எல்லா இடங்களிலும் பரந்து ஒளி செய்யும் 'விளக்கொளி'யாகவும் இலங்கி, "கருணைப் பெரு வெள்ளம்" எனவும் திகழ்பவள்.

அன்னை சிவகாமி பிறந்த இடம் இமயமலை யாகுமன்றோ! பிறந்த இடப் பெருமைகளாக ஆசிரியர் கூறுவன யாவை என்றால், பெருகும், எனவே இன்றியமையாத ஒருசில பெருமைகளைக் காண்போம். ''இமவான் அளித்த வனப்பேடை," "குன்றிடத்தில்

பிறந்து யாவையும் ஏற்ற குலக்கொடி", "இமாலயக் கோன் வளர்த்த பிடி," "மலைமன்னவன் பெற்ற துரைப் பெண்" என்பன சிறந்த புகழுரைகள் ஆகும். (9, 10, 84, 16).

மேலும் அன்னை புகுந்த இடம் தில்லைப்பதியன்றோ! புகுந்த இடச் சிறப்பாக ஆசிரியர் கூறும் செய்திகள் மிகவும் நயமானவை. "தில்லைவனச் சிவகாமி", "தில்லைவன மயில்" எனவும் பின்னர் 'தில்லைக் கரசி", "தில்லைப் பார்ப்பதி", "தில்லைப் பெண்ணமுது' எனப் புகழ்கின்றார்.(56,18) (52. 86, 84). புலியூர் என்பது முதலில் தில்லைக்கு வழங்கிய பெயர். அதனையொட்டிப். "புலியூர் மேவி வாழ் சிவகாமி", "பெரியார் தொழும் புலியூர்ச் சிவகாமி", "புலியூர்ச் சிவகாமி", "தென்புலியூர் சிவகாமி" (9,17, 60,73,76,100) எனக் கூறியுள்ளார். புண்டரிகபுரம் எனவும் ஒரு பெயர் தில்லைக்குண்டு. அதனை மனத்துட் கொண்டு, "புண்டரிகபுரம் வாழ் சிவகாமி" (45) எனவும், "தில்லைப் பொழிற்றங்கி வாழும் சிவகாமி" (60) எனவும் பாராட்டித் துதிக்கின்றார்.

இறைவனோடு பொன்னம்பலத்தில் எழுந்தருளி அன்பர்கட்கு வேண்டும் வரம் தருபவள் அன்னை சிவகாமி. "மன்றிடத்தாற் சிவகாமி" (10), "மன்றிற் சிறந்த சிவகாமி" (47), "பொன்னம் பலத்துறு பூங்குயில்" (26), பொன்மன்றிலுற்ற தேன்" (14) எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

"நீதர் இடத்துறையும் சிவகாமி" (29), "சிலைக் காமனை எரித்தோர் இடஞ்சேர் சிவகாமி" (26) எனக்கூறி, அன்னை சிவகாமி இறைவனின் வாமபாகத்து விளங்கும் சிறப்பினைக் கூறி மகிழ்கின்றார்.

அன்னை சிவகாமி, நடராசரின் 'இன்பத் தலைவி'. தில்லைக் கடவுளின் 'அருள் பன்னி'. 'சிவானந்த வாருதி' யாகவும் இவள் விளங்குகின்றாள். "தாண்டவர் மேவு பொன்”னாக விளங்குகின்றாள் எனச் சுவைபடக் கூறுகின்றார்.(66,89,78,20).

பெற்றரும் மகனைப் பெற்று அதனால் பெரும் புகழ் அன்னை சிவகாமி கொண்டனள் என்பதனைக் "கந்தனை யீன்ற தாய்” (67) எனக்கூறிப் புலப்படுத்தினார்.

இவ்விருவரும் பிரியாத கூறுடையவர்கள். இருவரும் ஒருவராக வந்து தமக்கு அருள் செய்ய வேண்டும் என்றும் பெருவிருப்புடையவர் ஆசிரியர். "உடல் விடும் போதஞ்ச லென்றனைக் காப்பதற்குன் பதியோடும் வந்துமுன்னின்றேன்று கொள்ளப் பரமுனக்கே (78)" என அன்னைக்கெடுத்துக்கூறி வேண்டுகின்றார்.

கணவனுக்குப் பொருந்தும் குணங்கள் அனைத்தையும் மனைவிக்கும் ஏற்றிக் கூறுவது உலகியல். மரபும் அதுவே. அம்மரபினை யொட்டி இறைவனின் குணங்களையும், செயல்களையும் இறைவி மாட்டு ஏற்றிப் போற்றி வணங்கும் சிறப்பு பாராட்டற்குரியது.

"பிறைமேவு தில்லைச் சிவகாமி" (37) எனக்கூறி இறைவன் முடியிலுள்ள பிறை இவள் திருமுடியில் இருப்பதாகக் கூறினார். இதனையே, "அந்திப் பிறையணியுஞ் சிவகாமி" (2) என்னும் வரிகளால் வலியுறுத்தினார். இறைவன் ஆடும் நடனத்தை, இறை விக்கும் ஆக்கியருளி, “நடமாடும் உன்பொற் பாதம்" (71) என்றார். முனிவர் இறைவனைத் தொழ, அவர் இறைவியைத் தொழுததாகப் புலப்படுமாறு,

'புலிக்கால் முனிதொழும் பொன்னம் பலத்துறு பூங்குயில்”(26) என்றார். மேலும், "கண்டங் கறுத்த கடவுளைக் காட்டிக் கசிந்து தொழும் தொண்டர் (55) உண்மையில் அன்னை சிவகாமியையும் தொழுகின்றனர் என்பதை மறைமுகமாக விளக்கிக் கூறிப் பெருமைப்படுத்தும் உத்தி சிறப்பாக அமைந்துள்ளது.

சிவகாமியின் அருட் குணங்களை இவர் மிகவும் வியந்து போற்றுகின்றார். வேண்டியவர்க்கு வேண்டுவன நல்குபவள். நம்பியவர்க்கு நன்மையும், நம்பாதவர்க்குத் துன்பமும் நல்குபவள். அம்மட்டோ!

"கற்றவர்க்குத் துணையாகியவள்" (85)
"கடைக்கண் அத்தனையும் அளித்திடும்" (68)
"தொண்டரை வீட்டில் விடுந் சிவகாமி" (55)
என்பனவற்றைக் கூறி,

''துன்மார்க்கர்க்கு முன் வன்னிக்கொழுந்து" (5)
'வன்கணர் நெஞ்சிற் புகாச் சிவகாமி" (97)
''உண்டென்று நம்பினபேர்துயர் போக்கும்,
இகழ்ந்த மனத்தினர்க்கே மண்டும் படிக்கு
வளர்க்கும்" (55)
என்பனவும் கூறி அவளின் பண்பு நலன் விளக்கியருளினார்.

"தூயநிறக் கயிலாயச் செல்வி" (50) என்பதன் மூலம் கயிலையிடத்தும் அன்னை மேவியிருந்த தன்மையினை இவர் விளக்கினார்.

வேதம் தந்தவள்; வேதத்தின் சிரத்தில் நடம் இடுபவள்; வேதத்தின் அந்தமும் இவள், இதனை. "மறையீறறியாக் கதி" (78) எனவும், 'ஒருவன் ஒருத்தி ஒன்றெல்லாந் தந்த உத்தமி" (67) எனவும் கூறிப் புகழ்ந்தார்.

'மலர்மகள்', 'கலைவாணி', 'உமைமங்கை', 'ஆதி மனோன்மணி', 'உலகம்', என (66)வும், நாரணி (51) எனவும், சிவகாமியன்னையே பல்வேறு கூறுடையவளாக விரிந்து விளங்குகின்றாள் என்று விளக்கியருளினார்.

இத்தகைய பண்பு நலன்கள் கொண்ட அன்னை சிவகாமியின் 'உருவப் பொலி' வினைப் பாதாதி கேசமாகப் புனைந்தருளியுள்ளமையைக் கீழே காண்போம் :

"தனிச்சுடர் போற் பொங்கும் அழகு" (18) மிக்கவளாகிய அன்னை சிவகாமி, 'பச்சை' (15) 'பசுங்கிளி' (71) போன்ற வண்ணம் கொண்டு மிளிர்கின்றவள்.

"அவளுடைய 'பொற்றாள்', 'பொன்னார் மணிச் சிலம்பு ஏந்து பொற்பாதம்'. 'பாடகக் கஞ்சம்' போன்ற அத் 'துணை மலர்த்தாள்', 'கமலபதம்' போன்ற 'பொன்னடி', 'கமலத் திருவடி' என்றே கூறும் தன்மையன. வேறு 'ஒப்பில்லை' என்னுமாறு மிளிர்ந்து அன்பர்களை அப்பாதங்கள் வாழ்விக்கின்றன" எனக் கூறினார். (1,57,55, 69, 100, 98; 15).

"மின்னார் மருங்குல்”, 'மின் இடை', 'கொடியிடை' 'சிற்றிடை' கொண்டு விளங்குபவள் அன்னை.(1, 15,65,95,88).

"பட்டுடை" (18) நன்கு உடுத்து, விளங்கும் மெல்லியல், பூணணிந்து, கோங்க மலர்போல், கனகவம்பிடப் பெற்ற, செப்பிள மென் நகில்கள் கொண்டவள். "தங்கத்திகழ் வில்வத்தார்" (18) அணிந்தவள்.

அவளுடைய எழிற்கை மலர்கள் நான்கும், செங்காந்தள் போன்றவை. சூடகம் அணியப் பெற்றவை. அவற்றுள் ஒன்று 'அபயக்கை', மற்றொன்று 'வரதக்கை'யாகும். அத்திருக்கரங்கள் நான்கையும் ஒட்டிய திருத்தோள்கள் நான்கும் "வேயன தோள்கள்" (75).
அன்னையின் திருக்கழுத்தில் மின்னி மிளிர்வது "மங்கல நாண்" (18) ஆகும்.

அன்னையின் 'செந்துவர்வாய்' (96) 'பவழம்' போன்றது (15) அவ்வழகிய வாயினின்றும் எழுகின்ற சொற்கள், ' 'பண்மொழி', 'அருள்மொழி', 'கிளிமொழி', 'தத்தைக் கிளிமொழி' (15, 48, 72, 80) எனக் கூறத்தகும். "தோடு" (18) அணிந்த திருக்காதும் கொண்டு விளங்குபவள் அன்னை சிவகாமி.

"மலர்” போன்ற விழியழகுடையவள். 'கயற் கண்', 'வடிவேல் விழி', 'அயில்விழி', 'வரிக்கயலாங் கண்ணிணை" எனவும் புகழப்படுகின்ற தன்மையினை உடையன அவை. (6,95, 96, 84, 48, 15).

அவ்விழிகளை ஒட்டிய நன்னுதல் (96), 'வில்லைப் பொருநுதல்’ (8) ஆகும். அந்நுதல், “சுட்டி” (18) யும் அணிந்து மிகச் சிறந்து விளங்குவது.

"மேகம் போன்ற கருமை காரணமாக”, 'மழைபொரு கூந்தல்' (55) எனப்படும் குழலுடையவள். இக்குழல், "பிரசமலர்த் துன்னிக் கிடப்பது” (5), அதனால் 'அளிக்குலம் மேவும்' சிறப்புடையது.

அன்னையின் முகப்பொலிவுபற்றி ஆசிரியர் "முகத்தண் மதியம்', 'முக மதியம்', 'வதனாம்புயம்' என்றார். 'நகைமுகம்', ‘அருள் முகம்', 'கருணை முகம்' கொண்டவள் அன்னை.

அழகிய "மாமுடி” (18) கவிக்கப்பெற்ற முகத்தின் அழகினை அன்னையின் 'சிந்துரப்' பொட்டு (89) பொலிவை மிகுவிக்கும் எனக் கருதிய ஆசிரியர் கருத்து போற்றற்குரியது,

இவ்வாறு 'பாதாதி கேசமாக' இறைவியை வருணித்துக் காட்டித் 'தாம்பெற்ற பரவசம்' உலகோர் பெறப் புனைந்து காட்டுகின்றார்.

அன்னை சிவகாமி 'வலியவந் தாண்டவர்' என்பதனை மிக அழகாக வெளிப்படுத்துகின்றார்.
"நேராய் வினைஒப்பு செய்தாணவத்தையும் நீக்கி யுண்ணின் றாராத பேரின்பளிக்க வலியவந் தாண்டபொன்" (30) எனவும், வந்தாட்கொண்ட தெள்ளமுது" (29) எனவும் கூறி விளக்குகிறார். பிறரும் அவ்வாறே ஆட்பட வேண்டும் என்பது அவர் கருத்து.
சிவகாமித் தாயை வணங்குவதால் ஏற்படும் 'பலாபலன்கள்’ அழகாகக் கூறப்பட்டுள்ளன.

''முத்தர்க்கென்றுந் தத்துவ சுத்திசெய்
முத்தி பெற்றுய்வது சத்தியம்” (3)
என்றார்.
"பணியும் தவமுடையார் பெறும்பேறு பகரரிதே" (16) என்றார். "மாயத்தாய் உட்சலித்திட நெஞ்சே சலியாது போற்று (25) என்றார்”. “மயிலாற் பெறுவர்மெய் யன்பர்பே ரின்பெனு மாபொசிப்பே" (50) என்றார். தெரிசனை "செய்தவற் கன்றே பரமுத்தி சித்திக்கும்" (67) எனவும், "பலித்திடும் நெஞ்சத்துதித்த வெல்லாம் (90) எனவும் கூறினார். அன்னையைப் பக்திப் பெருக்கால் தாம் உணர்ந்தவாறே பிறரும் உணர வேண்டும் எனக் கருதினார்.

பிற தேவர்களும் இவ்வன்னையைப் பூசித்துப் பயன்பெற்றனர் என்பதும் ஆசிரியர் கூறும் முறை சுவையானது.

“அரியாசனத்திலிருந்து உலகாளும் மன்னர், திருமால்; அயன் முதலாக விண்ணுலக தேவர் அனைவரும், சிவகாமியின் பெருங் கருணை மருவியதாலேயே சுகம் பெற்றுள்ளனர்” (17) என்றும் ஆண்டருள் செய்வாயாக என்று அரி பிரமாதிகள் சபை முன்றின் முன் கூடுவர். (20) எனவும்”; “மனிதரும் தேவரும் மற்றும் உள்ளவர்களும் வந்து பனிமலர் தூவித் தொழுது நின்று பதாம்புயம் வணங்குவர்" (54) எனவும், "பட்டாபிஷேகம் கொண்டு முடிசூடி வாழும் மன்னரும், தேனொழுகு மாலையினைப் புயத்தில் சூடியுள்ள வானவரும் முன்பு சிவகாமியினைப் பூ இட்டு" (99) வணங்கினர், எனவும் கூறிய பாடல் கருத்துக்கள் மிகவும் சுவையானவை.
எல்லா வினைகளையும் ஓட்டுபவள் அன்னை சிவகாமி என்பது விளங்கும்.

அன்னை, "தன்னை வணங்கும் அன்பர்களிள் முன் பிறப்பு வினைகளையெல்லாம் நசிப்பித்து ஆட்கொள்பவள்' (51) எனவும்; "மதியொன்றும் இல்லாதவர்கள் கூறும் மொழிகளை யெல்லாம் கேட்டிரங்கி, முதிர்கதிக்கு வழி மிகவும் எளிதாய்க் கொடுத்தவள் சிவகாமி" (53) எனவும், "தொன்று தொட்டு வரும் பவக்கடல் கடக்க உதவும் தோணி சிவகாமியின் பாதமலர்" (65) எனவும் கூறி வினை கடியும் அன்னை திறம் வெளிப்படுத்தினார்.

சிவகாமி யன்னையை, எண்ணிப்பாராது; முன்னாள் தாம் வீணாக அலைந்து கெட்டதாகவும், அன்னை தங்கும் மன்றத்து ஊற்றெடுக்கும் அமுதினைத் தமக்கு ஊட்டுமாறும், அவளுக்கு ஏவல் செய்யும் அடியாருடன் கூட்டி இன்பம் தமக்கும் தரவேண்டும் என்றும், அவளைத் தவிரத் தமக்கு வேறு துணையில்லையென்றும்; தொல் வினைப்பகை தீர்த்தருள வேண்டுமென்றும், இனிமேலாவது வீணாக ஊரார்க்கு உழைத்துக் கெடாமல் இருக்க அருள வேண்டுமென்றும், புலையன்; சண்டாளன் என்று தம்மை மிகவும் இழித்துக் கூறிக் கொண்டும்; முன்னின்று காத்தல் அவளுக்குக் கடன் என்றும், அவளுடைய அபயக் கையும்; வரதக் கையும் கண்டு உட்களித்ததாகவும், கூறிக் கொள்ளும் ஆசிரியர்; சிவகாமியையே அன்னையாகக் கொண்டு; தாய்க்குச் செய்யக் கூடிய கைமாறு இல்லை யெனவும், அவளுக்கு முகமன் உரை வேண்டுவதில்லை யெனவும் கூறுகின்றார்.

அன்னையின் அருட் காட்சியினைத் தாம் கண்டவாறு மற்றவரும் காணவேண்டும் என்னும் ஆவல் மேலீட்டால் பின் வருமாறு கூறுகின்றார்.

"பொன்னார் மணிச்சிலம்பு ஏந்திய பாதமும், நகிலும், மின் போன்ற மருங்குலும், கை நான்கும், தோளும் விழிமலரும், அருள் முகமும் கொண்ட சிவகாமியினைத் தனக்கு நிகரில்லாதவளைப் பொன்னம்பலத்தில் கண்டுகளிக்கவே உயிர்" என்பதனைக் கூறினார். பின்னர், சிவகாமி காட்சி கொடுத்த விதம் பின்வரும் பாடலால் கூறுகின்றார்.

"மங்கல நாணுந் திருத்தோடுஞ் சுட்டியும் மாமுடியும்
தங்கத் திகழ்வில்வத் தாரும்பொற் பட்டுந் தனிச்சுடர்போல்
பொங்கு மழகொழு கச்சிவ கங்கைப் புறத்தினின்று
குங்குமக் கொங்கைச் சிவகாமி காட்சி கொடுத்தனளே' (18)
என்று கூறி, அக்காட்சி நாமும் காண விழைகின்றார்.

"நாரணி, சிவகாமசவுந்தரநாயகி, பூரணி, தில்லைக்கரசி, அருட்காரணி ஆகியவள் அன்னை. அவளைப் பணிந்து உய்யாமல், அஞ்ஞானத்தைக்கற்று, அதனையே மெய்யானதும் எனக் கருதிப் பிற சமயவாதிகள் செய்யும் கேலிக் கூத்தினை என்னென்பது" (52) என்னும் கருத்து உள்ள பாடலால், சிவகாமியே எல்லாச் சமயமும் என்பதனை உணர்த்தினார்.

பலவடிவங்களில் சிவகாமியன்னையின் தாள்கள் முன்னின்ற செய்தியினைக் கூறும் பாடல் உன்னற்பாலது.

"சத்தியு மாய்விந்து நாதமு மாய்ச்சதுர் வேதமுமாய்
சித்தியும் புத்தியும் வித்தையு மாய்ச்செக மாயுயிராய்ப்
பெத்தமு மாய்மன்று ளாடும் பிரான்றரும் பின்னமிலா
முத்தியு மாய்ச்சிவ காபொற் றாளெங்கு முன்னின்றதே! (6)
என்ற பாடல் இதனை விளக்கும்.

நான்கு மறைகளும், அன்னை சிவகாமியைப் பல்வேறு விதமாகக் கூப்பிடுகின்றன. "ஒரு மறை கன்னி யெனவும், ஒரு மறை தில்லைக் கடவுளருட் பன்னி யெனவும், ஒரு மறை சிற்றம்பல வடிவானவள் எனவும், மன்னுயிர்க்குப் பின்னிருந்து காப்பவள் என ஒரு மறையும் அழைப்பதாக" (56)ப் பாடலில் கூறியிருப்பது மிகவும் உன்னற்பாலது.

உலகினைப் படைத்தவளே அன்னை சிவகாமி. "பாதந் தருந்துக ளாற்புவி யாவும் படைத்தவம்மே (11)" என்னும் அடியால் இதனை நமக்கு அறிவுறுத்தினார். இவளே, தன் "குல தெய்வம்" என்றும், "நம் தெய்வம்” என்றும் கூறியிருத்தல் காண்க.

“சிவகாம சுந்தரி (11; 15), சிவகாமவல்லி (69) சிவகாமி (3.10,31-38, 90-96), சிவகாமியம்மன் (62) உமை (66,67) நாரணி (51), பூரணி (52), சிவசங்கரி (46); காரணி (52), தில்லைக்கரசி (52, 96), மனோன்மணி (53, 66), மலர்மகள் (66); கலைவாணி (66), பராபரை (80) எனப் பல்வேறு பெயர்களால் அன்னையை விளித்து மகிழ்வார்.

இறுதியாகத் தாம் பெற்ற இன்பம் பிறரும் பெற்றுய்ய வேண்டும் என்பதற்காகச் சில அறிவுரைகளை அவர் வழங்கும் விதம், எளிமையாகவும், எளிதில் கடைப்பிடிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. அப்பாடல்கள் பின்வருமாறு:

"உற்பன மான உபதேச முண்டுல கோர்க்கதுதான்
கற்பனை யல்ல சிவகாமி யைச்சிவ கங்கைபடிந்
தற்ப மெனினு மியன்ற பணிசெய் தடிபணிந்தாற்
பற்பல வூழி தவஞ்செய்த பேறு பலித்திடுமே!" (24)
என்னும் பாடலும்,

"கலியாணி சுந்தரத் தாய்சிவ காமியைக் கண்டுநித்தஞ்
சலியாது போற்றுநெஞ் சேமாயத் தாயுட் சலித்திடவே" (25)
எனவும்.

"எத்தனை வேண்டினுஞ் சிற்றம் பலம்கண் டிறைஞ்சினபேர்க்
கத்தனை யுஞ்சிவ காமி கடைக்க ணளித்திடுமே" (68)
எனவும்;

"சிந்தனை செய்து ளுருகிக் கசிந்து செயலறுத்தாற்
பந்தமுண் ணீங்கிச் சிவபோகம் யார்க்கும் பலித்திடுமே' (89)
எனவும்,

"எல்லையில் லாத்தவஞ் செய்தவற் கன்றி யிமையவர்க்குந்
தில்லை யெனுஞ்சொல் சொலவுங்கிட் டாது" (92)
எனவும் கூறி,

"பலித்திடும் நெஞ்சத் துதித்ததெல் லாம்பண்டைத் தொண்டருள்ளத்
திலத்தினின் மேவும் சிவகாமி யைப்பணிந் தேத்திமுக்கால்
வலப்பிர தெக்கணம் வந்தவ ளாடிய மஞ்சன நீர்
சொலத்தகு பத்தி யுடனள்ளி யோர்துளி துய்ப்பவர்க்கே” (90)
என்றும் கூறி அனைவரையும் நல்லாற்றுப்படுத்துகின்றார்.

உலகத்தவரை வாழ்விப்பதற்காக 'ஏற்றுரை' யாக இவர் கூறும் சில கருத்துகளும் உண்டு.
"மின்னே ரனையபொய் மெய்யினை நானென்று மேற்றுமகிழ்ந்
தென்னே யென்னேயும் களித்த நெஞ்சே” (28)
எனவும்;

"களித்தே னுலையுறும் மாமாயைப் பொன்முன் கடுந்துயர்பெற்
றொளித்தே நரகிற்பின்" (34)
எனவும்,

'இருந்தேன் புவிக்கொரு பார மதாயெவ் வகைசெயினும்
திருந்தேன்" (36)
எனவும் கூறுவன காண்க.

சில அரிய கருத்துள்ள பாடல்களும் இந்நூலுள் உள:
(1) "இல்லைத் துறந்தெவ் வகைப்பற்று மற்றிரு எற்றுநிற்போர்
செல்வக் குழாத்திற் புகுந்திரு வேசிவ காமி" (8)
என்றும்;

(2) 'இரவார் இரப்பவர்க் கீவார் கனசெல்வ மெய்தித்துன்பில்
விரவார் நல் லோர்திருக் கூட்டம் பணிய விளங்குமன்பு
கரவார் உமைசிவ காமி யருளைக் கடைப்பிடித்துத்
திரமாய் பணிசெய்திங் குய்யமுன் னாட்டவஞ் செய்தவரே" (32)
எனவும்;

உன்றனக் கென்று மடிமை யுலகத் துயிரதிலொன்
றன்றக மேபிர்ம மென்றெண்ணி யெண்ணி அலைந்தவென்னை
மன்றி லழைத்து வழக்கறுத் தாண்ட மகிமைமெத்த
நன்றுநன் றாஞ்சிவ காம சவுந்தர நாயகியே" (74)
என வரும் சிலபாடல்கள் நல்ல கருத்துடையன.

சிவகாமியன்னையையே முழுதும் நம்பியவர் இவர். அனைத்தும் அவள் செயல் எனக் கருதியவர் என்பதனைப் பின்வரும் பாடல் வரிகள் உணர்த்தும்.
"நன்றுசெய் தாலு முனக்கே பரம்இவ னல்லனல்ல
னென்றிகழ்ந் தாலு முனக்கே பரம்இரண் டற்றகதி
யொன்றிடென் றாலு முனக்கே பரமற்றிங் கொன்றுமின்றிக்
குன்றிலக் காய்ச்சிவ காமி உனை நம்பிக் கொண்டனனே" (61)
எனவும்

“பனிமலர் தூவித் தொழுஞ்சிவ காமி பதாம்புயமே
இனிய பொருளென்று கண்டதல் லாற்றில்லை யெய்தியபின்
கனமென் றுணர்பொரு ளெங்கெங்கும் தேடியுங் கண்டிலனே” (54)
எனவும்,

“கும்பிடு மென்கை கொடுக்கு மவள்கை குறைவறவே
நம்பிடு மென்னெஞ்சிற் றங்கு மவள் மனம் நற்கனக
வம்பிடுங் கொங்கைச் சிவகாமி பாதம் வழங்கொளியால்
வெம்பிடும் பாச மதுநின்று காயும் வெயிலெனவே." (49)
எனவும்;

“கூப்பிடு வேன்சிவ காமியென் றேகொடுங் கூற்றுவன்கைக்
காப்பிடு வேன் அலன் மன்றுநின் றாடுமெய் யானந்தத்தேன்
சாப்பிடு வேன்களித் துக்குதித் தாடுவேன் சார்மலத்தைத்
தீப்படுவாயென்று நோக்கிவை வேன் தில்லை சேர்ந்தபின்னே" (42)
எனவரும் பாடல்கள் இதனை வலியுறுத்தும்.
-----------------

4. பிற நூல் கருத்துக்கள்

இந்நூலுள், திருக்குறள், குறுந்தொகை, சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திருமுறை, சிவஞானபோதம், சௌந்தரியலகரி; திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, போன்ற நூலில் உள்ள கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை இப்பகுதியில் காணலாம். அவரது நூல் அறிவு இதனால் துணியப் பெறும். குமரகுருபரர், சிவப்பிரகாசர் போன்றோர் கருத்துக்களும் இந்நூலுள் உள்ளன. அபிராமி அந்தாதியின் கருத்துக்கள் இந்நூலுள் இடம்பெற்றிருக்கும் அமைப்பால் இந்நூல், அதனை யடியொற்றி எழுதப் பெற்றதோ எனும் ஐயத்தையும் உண்டாக்கும். அவற்றை முறைப்படுத்திக் காண்போம்.

1. திருக்குறட் கருத்துக்கள்
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்ஆற்றும் கொல்லோ உலகு" (211)
என்னும் பாடலின்கருத்தை மனத்துட்கொண்ட ஆசிரியர் அதனைப் பின்வரும் வரிகளில் வெளிப்படுத்துகின்றார். "உருக்க முடன்செயுங் கைம்மாறு பார்க்கிலெற் கொன்றிலையே” (7) என்றும் வரி இதற்கு எடுத்துக் காட்டு.

"சிவகாமி பாதம் வழங்கொளியால் - வெம்பிடும் பாச மது நின்று காயும் வெயிலெனவே" (49) என்றும் இந்நூலின் வரிகள், "என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” (77) என்னும் பாடற்கருத்து பொதிந்துள்ளமை காண்க.

"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" (481)
என்னும் குறட் கருத்து ; ''வெயிலாற் பயனிலை யேபகற் கூகைக்கு' என்னும் வரியில் பொதிந்துள்ளது, (50)
மேலும், "குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்" (66)
என்னும் குறட் கருத்து. அவ்வாறே,

''குழலொலி யாழொலி தன்னினும் பெற்ற குழந்தை புன்சொன்
மழலை யினிதென்று கேட்பது போல்" (53)
என அதனை உவமானமாக்கிக் காட்டியுள்ளமை காணலாம்.

"தொன்று தொட்டுவரும் அடியேன் பவக்கடற் கோர்தோணி யாமுன் அடிமலர்” (65) என வரும் இந்நூற் பாடல், "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” (10) என்றும் குறட்கருத்தினை உட்கொண்டதாகும் என்பது நன்கு விளங்கும்.
'பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்" (349)
என்னும் குறட்பாவின் தொடக்கம்,

'பற்றற்ற கண்ணே பிறப்பறும்" (85) என்னும் இந்நூல் பாடலின் தொடக்கமாக அமைந்துள்ளமை காண்க. ஆசிரியர் குறளின் பால் கொண்டுள்ள ஈடுபாடு இவற்றால் விளங்கும்.

2. குறுந்தொகைக் கருத்து
'விரும்பிடில் வேம்புங் கரும்பா தல் போல்" (35) என்னும் இந்நூல் பாடல், குறுந்தொகையில்;
"வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்" (196)
எனவரும் பாடலின் கருத்து தெளிவாக விளங்கும் தன்மை பாராட்டற்குரியது.

3. சிலப்பதிகாரக் கருத்து
சிலப்பதிகாரத்தில் உள்ள; "குழல்வழி நின்றது யாழ்” என்னும் மரபினை; குழலொலி யாழொலி" (53) என்னும் பாடலில் கடைப் பிடித்துள்ளார்.
மாதவி எழுதிய கடிதத்தின் முதல் வரியான, ''வடியாக்கிளவி” யினை மனத்தில் கொண்ட ஆசிரியர், "வடி போக்கினன்" எனப் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.
மேலும், பாடல் 87இல், "மறப்பே னெனினும் அவள் மறவா தென்றும் வாழ்விப்பள்” என்னும் வரிகள், 'நம்மை மறந்தாரை, நாம் மறக்கமாட்டேமால்" என்னும் வரிகளின் மறுதலையாகவும் விளங்குகின்றது.

4. தேவாரக் கருத்துக்கள்
"தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே" (அப்பர்) என்பதை யொட்டி "முத்திக் கொழுந்து" (3) என்றும், "புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே" (சம்பந்தர்) என்பதை யொட்டி "முகமன் " எனவும், "கடைக் கண்ணால் மங்கை உமை நோக்கா என்மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் தன்னை (அப்பர்) என்பதை யொட்டி, "சிவகாமி கடைக்கண் அளித்திடுமே எனவும், "இவராடுமாறு மிவள்காணு மாறு இதுதா னிவர்க்கோ ரியல்பே" (தேவாரம்) என்பதை யொட்டி "நாயகராடல் கண்டுள் மகிழ்ந் தாடும்” (75) எனவும் கூறியுள்ளமை காண்க.

"பொன்னார் மேனியனே" எனவரும் சுந்தரரின் (திருமழபாடி) பாடலை நமக்கு நினைவூட்டுவதாக இந்நூலின் முதல் பாடலாகிய "பொன்னார் மணிச்சிலம்பு" எனத் தொடங்கும் பாடல் அமைந்துள்ளது. இவ்வாறே 77ஆம் பாடலில் உள்ள,இந்நூலின்

"ஏன்றுகொணீ" என்றும் சொல், "தாளே வந்தடைந்தேன் றலைவாவெனை ஏற்றுகொணீ" என(2)வும், "ஆளா வந்தடைந் தேன் அடியேனையு மேன்றுகொணீ" (7) எனவும் வரும் பாடல் களின் சொல்லாட்சியின் பிரதிபலிப்பேயாகும்.

5. திருவாசக கருத்துக்கள்
திருவாசகக் கருத்துக்கள் நூலில் பல இடங்களில் மறைந்தும், வெளிப்பட்டும் காணப்படுகின்றன.
"உண்டாமோ கைமாறு உரை" (திருவாசகம்) என்னும் கருத்து; "உருக்கமுடன் செயுங் கைமாறு பார்க்கிலெற் கொன்றிலையே” (7) எனும் பாடலில் உள்ளது காண்க. அவ்வாறே, "என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி”, என்னும் கருத்தும், "ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே" என்னும் திருவாசகக் கருத்தும், இந்நூலில் 22ஆம் பாடலில் பொதிந்துள்ளமை காண்க.
மேலும்,
“பேசப் பட்டே நின்னடி யாரிற் திருநீறே
பூசப் பட்டேன் பூதல ராலுன் அடியானென்
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேனுன் அடியேனே”
(தி. சதகம்: 82)
"உலகத்தவரால் உனதுதொண்டன் என்று இகழ்ந்துரைக்கப் பட்டேன்”
"நாடவர் பழித்துரை பூணது வாக" (போ-திரு: 69) எனவரும் பாடல்களின் மொத்தக் கருத்து;
"சொல்லாற் றுதித்துனை நெஞ்சகத்தே வைத்துத் தொண்டுசெய்து
நில்லே னெனினுமுன் றொண்டானென் றியாரு நினைப்பதனால்
அல்லால் பொழிற்றென் புலியூர்ச் சிவகாமி யம்பிகைநீ
பல்லோர் நகைக்க விகழ்தல் முறையன்று பார்த்தருளே" (76)
இப்பாடலில் வந்துள்ளமை காண்க.

6. சிவஞானபோதக் கருத்துக்கள்
"பெத்தம் முத்தி இரண்டினும் சிவன் பிரேரிப்பன்", என்னும் கருத்தும், "விழித்தீக் கென்றன் வினையிலக் காகுமாலோ” என்னும் கருத்தும், "ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப் பட்ட பிரபஞ்சம்" எனவரும் கருத்துக்களும் பொதிந்துள்ள பாடல்கள் இந்நூலில் உள என்பது குறிப்புரையின் மூலம் விளங்கும்.

7. செளந்தரி யந்தாதி
"சிதம்பர நடனங்கொள்ளும் கல்வியே செல்வமாதே” என்னும் பாடல் கருத்து, 'கற்றவர்க்குற்ற துணை” என் (97)னும் வரியால் விளங்கும். "பாதந்தருந் துகளால் புவியேழும் படைத்தவம்மே'' எனவரும் இந்நூற் பாடல், "பாத தாமரையினுண்டு கட்பரம வணுவினிற் பல வியற்றினால் வேதநான் முகன் விதிக்க" எனவரும் ஆனந்தலகரிப் பாடல் கருத்து என்பதும் நன்கு விளங்கும்.

8. திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
''குட்டித் திருவாசகக்" கருத்துக்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
''நெஞ்செனும் கருங்கல்லைக் கரைவித்து அநுபூதி நெஞ்சக் கனகல்" (23) என்னும் பாடற் கருத்து இந்நூலின் 8-வது பாடலி லும், 86-ஆம் பாடலில் உள்ள, 'சினகரம்' என்னும் சொல், இந்நூலின் 3-ஆம் பாடலிலும், 10-ஆம் பாடலில் உள்ள 'நன்று நன்று' என்றும் அடுக்கு இந்நூலில் 74-ஆம் பாடலிலும் வந்துள்ளமை காண்க.
"அம்பிகை கண்களித்திடத் தில்லை மன்றினிற் களி நடம்புரி கடவுள்" (99) எனவரும் அந்நூற் பாடற் கருத்து, "நாயகரா ஆடல் கண் டுள்மகிழ்ந் தாடும்" (75) என இந்நூலுள் வந்துள்ளமை கண்டு இன்புறற்குரியது.

9. அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதியின் பாடற் கருத்துக்கள் இந்நூல் முழுதும் உள்ளமையைக் குறிப்புரையில் காணலாம். அபிராமி அந்தாதியின் 18-ஆவது பாடல் கருத்துக்களின் முன்பாதி இந்நூலின் 77-வது பாடலிலும், பின்பகுதி 78-வது பாடலிலும் வந்துள்ளமை காணலாம்.

10. குமரகுருபரர் கருத்து
"விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே” என்னும் பாடல் கருத்து இந்நூலுள் 80, 83-ஆம் பாடல்களில் வந்துள்ளமை காணலாம்.
"தருவறம் நாணத் திருவறச் சாலை சமைத்தாய்" என்னும் அவர் கருத்திற்கு ஒருபடி மேலே போய் அன்னையை 'அறச்சாலை" என்றே விளிக்கும் செய்தி காண வியப்பானது.
"உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே" என்னும் குமர குருபரரின் கருத்து, இந்நூலின் 8-வது பாடலில் வந்துள்ளமையும் காண்க.

11. நூலுக்குள் ஒப்புமை
இந்நூலுக்குள்ளேயே சில ஒத்த கருத்துக்களும், பாடல்களும் வந்துள்ளன. அவற்றை ஒரு சிறிது காண்போம்.
1. பாடல்: 3 'முத்திக் கொழுந்து"
பாடல்: 5 "வன்னிக்கொழுந்து''
2. பாடல்: 17 'அரியாசனத்திலிருந்து உலகாளும்"
பாடல்: 99 "பட்டாபிஷேக முடிசூடி".
3. பாடல்: 18 "சிவகங்கைப் புறத்தினின்று"
பாடல்: 24 'சிவகாமியைச் சிவகங்கை "
4. பாடல்: 28 இன் கருத்து
பாடல்: 31 இலும்,
5. பாடல்: 13 இன் கருத்து
பாடல்: 30 இலும்,
6. பாடல்: 19 இன் கருத்து விரிவினைப்
பாடல்: 78 இலும் காணலாம்.
7. பாடல்: 80 இன் சொற்றொடர்கள் மீண்டும்
பாடல்: 83 இலும் வந்துள்ளமை காணலாம்.

5. நூல் அமைப்பு

இந்நூலுள் காணப்பெறும் சில சிறு சிறு செய்திகளைக் காணலாம்.

1. பழமொழிகள்
இந்நூலுள் காணப்பெறுகின்ற பழமொழிகள் சில:
1. "பித்துறுஞ் சேயையுங் காப்பதல்லோ
கடன் பெற்றவட்கே"- (12)
2. "நில்லா விழுசுவ ரைப்பூசிக்
கோலம் நிறுத்துவர்போல் " (31)
3. "வளியேறிச் சூறை சருகொத்து" (72)
4. "ஓடிய கானலை நீரென்றெனக்
குதித்தோடி"
(57)
2. புராணச் செய்திகள்

1. சிவபெருமான் மானை ஏந்தியுள்ள செய்தி, "மானேந்து செங்கைக் கடவுள்" (14) எனப்பட்டது.
2. காமனை எரித்த செய்தி, "சிலைக்காமனை எரித்தோர்". (26) என்றும், தாருகவனத்தில் பிச்சை யேற்ற செய்தி, “பலியேற்ற கையும்" (25) என்பதனாலும், அண்ணாமலையாய் நின்ற செய்தி, “மாலறியாப் பொற்பதாம்புயமும், (25), "அழையுண்ட வாயனும் பெண் புணர் நாவனும் அம்புவிவான் உழைசென்று தேடியும் காணாப் பரம்பொருள் (60) எனவரும் பாடல் அடிகளால் கூறப்பட்டமை காண்க,

இறைவன் நஞ்சுண்ட செய்தி, "கண்டங் கறுத்த கடவுள் (55) என்பதனால் வெளியாயிற்று. இறைவன் தாருகவனப் பாம்பையும், வேங்கையையும் அடக்கிய செய்திகளும் இந்நூலுள் உள்ளன.

6. இலக்கணச் செய்திகள்
1. அடுக்குத் தொடர்கள்
"சிந்திக்கச் சிந்திக்க” (2)
"எண்ணி எண்ணி” (37, 74)
"ஏன் ஏன்" (14)
"அஞ்சல் அஞ்சல்" (19)
"என்னே என்னே” (28)
“அன்னே அன்னே" (28)
"சய சய" (69)
'நன்று நன்று" (76)

2. வழக்காற்றுச் சொல்:
“சும்மா” (35). வைவேன் (42). நம் (39).
திகைப்பது (12)., அடிக்கடி, இடிக்கிய பிள்ளை (19).
இனிப்பாரு (53) வாதனை (56), தொன்று தொட்டு (65).
ஒட்டற (69) சண்டாளன் (62). புலையன் (33)

3. மரூஉ மொழி:
"ஆர் செய்தவம்" (64)

4. இலக்கணப் போலி
முன்றில் (20), அன்புள் (2) கடைக்கண்.(68)

5. உவம உருபுகள்:
கடுக்கும் (19), உவமானம் பார்க்கில் (21),
ஒப்புப் பார்க்கில் (15), ஒத்திடும் (21) பொரு' (8)

6. உவமைத் தொடர்கள்
பொற்பாதம், மின்னார் மருங்குல் (1)
கயலாம் கண்ணினை (15)
செங்காந்தள் கரம் (15)
அயில் விழி (47), வேயென தோள் (75)

7. உருவகத் தொடர்கள்:
கண்மலர் (1) அருட்கதிர் (5), இருட்பகை (5)
மனக்கல் (8), மனக்கோயில் (9), கூந்தற் கனம் (15),
தனம் கோங்கு (15) பதாம்புயம் (25) வினைப்பகை (26)
முக மதியம் (62), கருணை வெள்ளம் (65) இதயமலர்(83).

8. யாப்பு
இந்நூலில் நேர் அசைகொண்டு தொடங்கும் பாடல்கள் : 57.
நிரையசை கொண்டு தொடங்கும் பாடல்கள் 44:
இனி இந்நூலில் உள்ள யாப்பதிகாரச் செய்திகள் சிலவற்றைக் காண்போம்:
ஈ. யாப்பதிகாரச் செய்திகள்:
1. பொருள் கோள்:
நிரல் நிரைப்பொருள்கோள்: பாடல்: 60
2. முரண்தொடை:
பாடல் எண்: 5,25, 28, 40, 43 ஆகிய பாடல்களில் முரண்தொடை அமைந்துள்ளது.

9. அணிகள்:
பல வகையணிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
1. தன்மை நவிற்சியணி: பாடல்: 45.
2. உவமையணி: பாடல்: 21,72,81
3. சொற்பின் வருநிலை: பாடல்: 61.
4. சொற்பொருள் பின்வருநிலை: பாடல்: 27.
5. உருவகவணி: பாடல்: 7, 56, 65
6. உவமை உருவகம்: பாடல்: 29.
7. விரியுவமையணி: பாடல்: 62.
8. அயுத்தவேது: பாடல்: 87.

"சிவகாமியம்மன் அந்தாதி" பற்றிய சில செய்திகளை மேலே கண்டோம். நூலின் உள்நுழைந்து கற்கக் கற்க மேலும் பல செய்திகள் உணர்வினை உயர்விக்கும் அளவில் இருப்பதைக் காணலாம். அந்தாதி நூல் வரிசைக்கு இது நல்ல ஒரு சேர்க்கையாகும்.

திருச்சிற்றம்பலம்.
------------------------
5. நூலைப் பற்றி


"பூலோக கைலாயம்" என அழைக்கப்படும் பெருமையினை உடையது தில்லைத் தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புக்களையுடையது.

வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் பணிந்து வேண்டிக் கொண்டதனால் அவர்கட்கு இறைவன் நடனம் அருளிய திருத்தலம். சிவகங்கையில் நீராடிப் பொன் மயமான உடலைப் பெற்ற சிம்மவர்ம பல்லவன், இறைவனுக்கு மரத்தாலான சிறிய கோயில் ஒன்று அமைத்துப் பூசித்த தலம். அம்மரக் கோயிலே இன்று பெருமளவில் வளர்ந்துள்ள தில்லைக் கோயிலுக்கு மூலம்.

ஐந்தொழில் நடனத்தை இறைவன் மேற்கொண்டு உலகம் நிலை பெறச் செய்ய அருளுவது சிதம்பரம். திருச்சிற்றம்பலக் கோவையார் முகிழ்ப்பதற்கும், பொன்வண்ணத்தந்தாதி பாடப் பெறுதற்கும், பெரியபுராணம் தோன்றவும், உதவிய தலம்.

இத்தில்லையில் காமகோட்டத்துள் அன்னை சிவகாமி எழுந்தருளியுள்ளார். அவரை வணங்கி ஈடேறிய புலவர் ஒருவர். அன்னை அபிராமி அந்தாதியின் பாவெள்ளத்தில் மூழ்கித் திளைத்த அனுபவத்தை வைத்துக் கொண்டு, பாடித் தமிழ் உலகிற்கு அளித்த நூலே, "சிவகாமியம்மன் அந்தாதி"

அபிராமி அந்தாதிக்குள்ள பெருமைகளும், சிறப்புக்களும் இந்நூலுக்கு இல்லையாயினும் இறைவியின் மீது பாடப் பெற்றுள்ள அந்தாதி நூல்களின் எண்ணிக்கையை மிகுவிக்கும்.

அன்னையின் தன்மைகள்:
அன்னை சிவகாம சுந்தரி "கருணைக்கடலமுது". மக்களின் பிறவிப் பிணி தீர்க்கும் “மலை மருந்து." "எங்கும் தோன்றும் "விளக்கொளி” “கருணைப் பெருவள்ளம்' ஆனவள்.

'இமவான் அளித்த வனப்பேடை” அன்னை சிவகாமி. "மலை மன்னவன் பெற்ற துரைப்பெண்" ஆவார். “தில்லை வனமயில் என விளங்கிய அன்னை "தில்லைக்கரசி” எனவும், தில்லைப் பார்ப்பதி' எனவும், 'தில்லைப் பெண்ணமுது' எனவும் கூறப்படுவதுண்டு.

அன்னை சிவகாமி சிற்றம்பலத்தில் இருக்கும் செய்தியினை ஆசிரியர், "பொன்னம்பலத்துறு பூங்குயில்', எனவும், “பொன்மன்றிலுற்ற தேன்" எனவும் விளக்கிக் கூறுகின்றார்,

இறைவனின் வாமபாகத்தை அன்னை வவ்வியவள் என்பது, "நீதர் இடத்துறையும் சிவகாமி” “சிலைக்காமனை எரித்தோர் இடஞ் சேர் சிவகாமி' என்னும் வரிகளில் அழகாக ஆசிரியரால் கூறப்படுகின்றது.

"கந்தனை யீன்ற தாய்" அன்னை சிவகாமி.
இத்தகைய சிறப்பியல்புகள் கொண்ட அன்னை சிவகாமி, தன்னைக் கணவனோடு வந்து காக்கவேண்டும் என்பதே நூலாசிரியர் விருப்பம். அதற்காக,
“உடல்விடும் போதஞ்ச லென்றெனைக் காப்பதற்குன்
பதியோடும் வந்துமுன்
னின்றேன்று கொள்ளப் பரமுனக்கே”
எனக் கடமையை அன்னைக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.

அன்னையின் அருட்குணங்கள்:
அன்னை சிவகாமியின் அருட்குணங்களை ஆசிரியர் வியந்து பாராட்டுகின்றார்:
''கற்றவர்க்குத் துணையாகியவள்"-
"கடைக்கண் அத்தனையும் அளித்திடும்'-
"தொண்டரை வீட்டில் விடுஞ் சிவகாமி''-
என்பன சில.
"துன்மார்க்கர்க்கு முன் வன்னிக் கொழுந்து"
'வன்கணர் நெஞ்சிற் புகாச் சிவகாமி"
''உண்டென்று நம்பினபேர் துயர்போக்கும்,
”இகழ்ந்த மனத்தினர்க்கே மண்டும்
படிக்குத்துன்பம் வளர்க்கும்''
என்பன அவளுடைய மருட்குணங்களுள் சில.

அன்னையின் உருவப் பொலிவு:
"தனிச்சுடர் போற் பொங்கும் அழகு" மிக்கவள் அன்னை. 'பச்சை", "பசுங்கிளி" போன்ற வண்ணமுடையவள் அன்னை சிவகாமி.

"பொன்னார் மணிச்சிலம்பு ஏந்து பொற்பாதம்", "பாடகம்" கொண்டு விளங்குவன ஆகும்.
'மின்னார் மருங்குல்', 'துடியேர் இடை' கொண்டு விளங்குபவள் அன்னை.

"பட்டுடை" நன்கு உடுத்து, விளங்கும் மெல்லியல், பூணணிந்து, கோங்க மலர்போல், கனக வம்பிடப் பெற்ற, செப்பிள மென் நகில்கள் கொண்டவள். "தங்கத் திகழ் வில்வத்தார்" ஏற்றவள்.

எழிற்கை மலர்கள் நான்கும், செங்காந்தள் போன்றவை. சூடகம் அணியப் பெற்றவை. ஒன்று 'அபயக்கை', மற்றொன்று, 'வரதக்கை', திருத்தோள்கள் நான்கும் "வேயன தோள்கள்".
அன்னையின் திருக்கழுத்தில் மின்னி மிளிர்வது, 'மங்கலநாண்”.

அன்னையின் "செந்துவர் வா”யினின்றும் எழுகின்ற சொற்கள், 'பண்மொழி', 'அருள்மொழி', 'தத்தைக் கிளிமொழி'.
'தோடு' அணிந்த திருக்காதும் கொண்டவள்.

"மலர்" போன்ற விழியழகு, அவ்விழிகளை ஒட்டியது "வில்லைப் பொருநுதல்'; 'சுட்டி' அணிந்தது.
மேகம் போன்ற கருமை காரணமாக, "மழைபொரு கூந்தல்" எனப்பட்டது. இதில், "பிரச மலர்த்துன்னிக்" கிடப்பதால், "அளிக்க குலம் மேவும்" சிறப்பினையுடையது,

'முகத்தண் மதியம்', “கருணை முகம்" கொண்டவள் அன்னை. அழகிய "மா முடி” கவிக்கப் பெற்றதுடன் “சிந்துரப்” பொட்டுப் பொலிவுடன் கொண்டவள்.
இத்தகைய உருவப் பொலிவு கொண்ட அன்னை தன்னை, "வலிய வந்தாண்ட பொன்" எனப் பாராட்டும் ஆசிரியர்,. அவ்வாறே பிறரும் அன்னையால் ஆட்கொள்ளப்படவேண்டும் என்னும் கருத்துடையவர் என்பது பாடலால் விளங்கும்.

"பொன்னார் மணிச்சிலம் பேந்துபொற் பாதமும் பூண்முலையும்
மின்னார் மருங்குலுங் கைநான்குந் தோளும் விழிமலரும்
அன்னேயென் பாருக் கருள்செய் முகமும்பொன் னம்பலத்திற்
றன்னே ரில்லாச்சிவ காமியைக் கண்டுயிர் சந்திக்கவே" (1 )
எனவும்,
"வண்ணமும் பச்சைசெவ் வாயோ பவழம் வரிக்கயலாங்
கண்ணிணை கூந்தற் கனந்தனங் கோங்குசெங் காந்தள்கரம்
பண்மொழி மின்னிடை யென்றாலு மாமொப்புப் பார்க்கிலில்லைத்
தண்ணளி செய்யுஞ் சிவகாம சுந்தரி தாளிணைக்கே! (15)
எனவும்,
"மங்கல நாணுந் திருத்தோடுஞ் சுட்டியு மாமுடியுந்
தங்கந் திகழ்வில்வத் தாரும்பொற் பட்டுந் தனிச்சுடர்போற்
பொங்கு மழகொழு கச்சிவ கங்கைப் புறத்தினின்று
குங்குமக் கொங்கைச் சிவகாமி காட்சி கொடுத்தனளே! (18)
எனவும்,
வந்துள்ள பாடல்கள் மேற்கூறியனவற்றை இனிது விளக்கும்.

தேவர்கள் பூசித்துப் பயன் பெற்றனர்:
'அரியாசனத்திலிருந்து உலகாளும் மன்னர் -
திருமால்-அயன் முதலாக உள்ள விண்
ணுலக தேவர் அனைவரும், சிவகாமியின்
பெருங்கருணை மருவியதாலேயே சுகம்
பெற்றுள்ளனர்"
எனவும்,
"ஆண்டருள் செய்வாயாக என அரிபிரமாதி
கள் சபைமுன்றின் முன் கூடுவர்"
எனவும்,
"மனிதரும் தேவரும் வந்து பனிமலர் தூவித்
தொழுவர்”
எனவும்,
"பட்டாபிஷேகம் கொண்டு முடிசூடி வாழும்
மன்னரும், தேனொழுகு மாலையினைப் புயத்தில்
சூடியுள்ள வானவரும், முன்பு சிவகாமி
யினைப் பூ இட்டு வணங்கியவரே" எனவும்
ஆசிரியர் கூறும் பாடல்கள் நயமானவை.

வழங்கும் அறிவுரைகள்:
"எத்தனை வேண்டினுஞ் சிற்றம்பலம் கண்டி றைஞ்சினபேர்க்
கத்தனை யுஞ்சிவ காமி கடைக்க ணளித்திடுமே!"
என்றும்,
"சிந்தனை செய்து ளுருகிக் கசிந்து செயலறுத்தாற்
பந்தமுண் ணீங்கிச் சிவபோகம் யார்க்கும் பலித்திடுமே"
என்றும்,
"எல்லையில் லாத்தவஞ் செய்தவற் கன்றி இமையவர்க்குந்
தில்லை யெனுஞ்சொல் சொலவும் கிட்டாது"
என்றும்,
"உற்பன மான உபதேச முண்டுல கோர்க்கதுதான்
கற்பனை யல்ல சிவகாமி யைச்சிவ கங்கைபடிந்
தற்ப மெனினு மியன்ற பணிசெய் தடிபணிந்தாற்
பற்பல வூழி தவஞ்செய்த பேறு பலித்திடுமே”. (24)
என்றும்,
"பலித்திடும் நெஞ்சத் துதித்ததெல் லாம்பண்டைத் தொண்டருள்ளத்
திலத்தினின் மேவும் சிவகாமி யைப்பணிந் தேத்திமுக்கால்
வலப்பிர தெக்கணம் வந்தவ ளாடிய மஞ்ன நீர்
சொலத்தகு பத்தி யுடனள்ளி ஓர்துளி துய்ப்பவர்க்கே". (90)
என்றும்,
அவர் கூறியுள்ள அநுபவ அறிவுரைகள் ‘கடையனையும் கடைத் தேற்றும்’ பண்பினை உடைய பாடல்கள்,
சுவையான சிலபாடல்கள்:

1. காப்புப் பாடலே மிகவும் சுவையுள்ளதாயும், அரிய செய்தி கொண்டதாயும் அமைந்துள்ளமை காண்க:

"சீர்மேவு தில்லைச் சிவகாம சுந்தரி சீறடிமேல்
தார்மேவு செந்தமிழ் அந்தாதிப் பாவொன்று சாற்றுதற்குப்
பேர்மேவும் அம்பலத் தப்பனோ டாடும் பெருவயிற்றுக்
கார்மேவும் யானை முகமகன் றாளுண்டு காப்பதற்கே".
இதில் கற்பக விநாயகர் நர்த்தன விநாயகர் வடிவில் உள்ளார் என்பதனை அழகாகச் சித்தரித்துள்ளார். "வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட நின்றாடு மழகளிறு" என்பதை நமக்குப் புலப்படுத்தும் திறம் மிகச்சிறந்தது.

2. செல்வக் குழாத்திற் புகுந்திருவே”

"இல்லைத் துறந்தெவ் வகைப்பற்று மற்றிரு ளற்றுநிற்போர்
செல்வக் குழாத்திற் புகுந்திரு வேசிவ காமியெனும் -
வில்லைப் பொருநுதற் பொன்னேநின் றாள்விரும் பாவென்மனக்
கல்லைக் கரைத்துநீ முன்னின்று காக்கக் கடனுனக்கே” (8)
என இறைவியைத் திருவாகக் காட்டி மகிழ்வது மிகவும் சுவையான பாடல்.

3. தில்லை சேர்ந்தபின்னே:
தில்லையடைந்தபின் தனக்குச் சிவகாமியின் அருள் அதிகம் உயர்வானவை, கிட்டுவதால், தாம் செய்யப் போகும் காரியம் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் ஆசிரியர் விளக்குகின்றார்.

கூப்பிடு வேன்சிவ காமியென் றேகொடுங் கூற்றுவன்கைக்
காப்பிடு வேன் அலன் மன்றுநின் றாடுமெய் யானந்தத்தேன்
சாப்பிடு வேன்களித் துக்குதித் தாடுவேன் சார்மலத்தைத்
தீப்படு வாயென்று நோக்கிவை வேன்றில்லை சேர்ந்தபின்னே! (42)

4. மனக்குரங்காட்டல்:
தன்னை இதுகாறும் வாட்டிய மனக்குரங்கை எவ்வெவ்வாறு தாம் ஆட்டிப் படைப்பதாக ஆசிரியர் கூறும் திறம் கேட்டு மகிழற்குரியது:

''மனக்குரங் கேகொள்ளி வட்டமொத் தைம்புல வாதனையில்
எனைக்கொடு சுற்றித் திரிந்தனை யேயினிப் பாருதில்லை
வனச்சிவ காமி யருட்கயிற் றால்கட்டி வஞ்சமுற்ற
உனைச்செம்பொன் மன்றுள்வைத் தாட்டுவ னெங்கினி யோடுவதே. (56)
என்னும் பாடம் மிகச்சிறப்பாயுள்ளது.

கருத்துள்ள பாடல்கள்:
கருத்துள்ள சிலபாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன:
1. தத்துவம் :
"சத்தியு மாய்விந்து நாதமு மாய்ச்சதுர் வேதமுமாய்ச்
சித்தியும் புத்தியும் வித்தையு மாய்ச்செக மாயுயிராய்ப்
பெத்தமு மாய்மன்று ளாடும் பிரான் தரும் பின்னமிலா
முத்தியு மாய்ச்சிவ காமிபொற் றாளெங்கு முன்னின்றதே”. (4
"மலர்மகளாய்க்கலை வாணியு மாயுமை மங்கையுமாய்
நலமிகு மாதி மனோன்மணி யாய்நட ராசரின்பத்
தலைவியு மாய்த்தில்லை மூதூர்க் கனக சபைவடிவாய்
உலகமு மாய்நின் றனள்சிவ காமி ஒருத்தியுமே.” (66)
என்னும் பாடல்கள் தத்துவப் பாடல்களில் சில.

2. பிறநூல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள்:

திருக்குறள்:
“குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்” (66)
என்னும் குறளின் கருத்து
''குழலொலி யாழொலி தன்னினும் பெற்ற குழந்தைபுன்சொல்
மழலை யினிதென்று கேட்பது போன்மதி யொன்றுமில்லேன்
மொழியு மொழிகளெல் லாங்கேட் டிரங்கி முதிர்கதிக்கு
வழியெளிதாய்க் கொடுத் தாள்சிவ காம மனோன்மணியே!” (53)
என்னும் பாடலில் பொதிந்துள்ளமை காண்க.

திருவாசகம்:
“பேசப் பட்டே நின்னடி யாரிற் திருநீறே
பூசப் பட்டேன் பூதல ராலுன் அடியானென்
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேனுன் அடியேனே!
(தி: சதகம்: 82)
"உலகத்தவரால் உனதுதொண்டன் என்று இகழ்ந்துரைக்கப் பட்டேன்'
"நாடவர் பழித்துரை பூணது வாக" (போ. திரு:69)
எனவரும் பாடல்களின் மொத்தக் கருத்தும்,

"சொல்லாற் றுதித்துனை நெஞ்சகத்தே வைத்துத் தொண்டு செய்து
நில்லே னெனினுமுன் றொண்டனென் றியாரு நினைப்பதனால்
அல்லால் பொழிற்றென் புலியூர்ச் சிவகாமி யம்பிகை நீ
பல்லோர் நகைக்க விகழ்தல் முறையன்று பார்த்தருளே!" (76)
என்னும் பாடலில் உள்ளமை காண்க.

3. அணிநலன்

நல்ல அணிநலன் உள்ள பாடல்கள் பல இந்நூலின்கண் உள. எடுத்துக்காட்டாக:
"திறற்பாம்பு வேங்கையுங் காணநின் றாடிக்கட் டிங்கள் முந்
துறக்கூம்ப லின்றி யலர்வதனாம்புய உத்தமியை
அறச்சாலை யைச்சிவ காமியைப் பேதை அறிவுடையேன்
மறப்பே னெனினு மவள்மற வாதென்றும் வாழ்விப்பளே!. (87)
என்னும் பாடல் கொள்ளலாம். அயுத்தவேது அணி.

4. பலமொழிகள்:

இந்நூலுள் காணப் பெறும் பழமொழிகள் சில:
(1) "பித்துறுஞ் சேயையுங் காப்பதல்லோ
கடன் பெற்றவட்கே" (12)
(2) "நில்லா விழுசுவரைப் பூசிக்
கோலம் நிறுத்துவர் போல்' (31)
(3) "ஓடிய கானலை நீரென்று'' (57)
(4) "வளியேறிச் சூறை சருகொத்து" (72)

5. புராணச் செய்திகள்

தாருகவனப் பிச்சை :-
"பலியேற்ற கையும்'' (25)
(2) காமனை எரித்தசெய்தி :-
''சிலைக்காமனை எரித்தோர்" (26)
(3) நஞ்சுண்ட செய்தி :
"கண்டங் கறுத்த கடவுள்" (55)
(4) அண்ணாமலையாய் நின்றது :-
"அழையுண்ட வாயனும் பெண்புணர் நாவனும் அம்புவிவான்
உழைசென்று தேடியும் காணாப் பரம்பொருள்" (60)
என்பதனாலும் சில புராணச் செய்திகள் விளங்கின.

6. பாடலில் பயின்றுவரும் சில அணிகள்:

1. தன்மை நவிற்சியணி: பாடல்: 45
2. உவமையணி : பாடல்: 21, 72, 81
3. சொல்பின் வருநிலை: பாடல்: 61
4. சொற்பொருள் பின்வருநிலை: பாடல் : 27
5. உருவகவணி: பாடல்: 7,56,65
6. உவமை உருவகம் : பாடல்: 29
7. விரியுவமையணி: பாடல்: 62
8. அயுத்தவேது: பாடல்: 87

7. பாடல் யாப்பு:

இத்தகு சிறப்புடைய 'சிவகாமியம்மன் அந்தாதி' கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆன நூல். காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களையுடையது. இந்நூற்றொன்று பாடல்களுள், 57 பாடல்கள் நேரசை கொண்டு தொடங்கும் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள்; மிகுதி 44 பாடல்களும் நிரையசை கொண்டு தொடங்குபவை.

8. முடிவுரை:
அன்னை சிவகாமி அனைவர்க்கும் நன்மையே புரிபவள்.
"தரியாது வஞ்சர் மனத்தகத் தன்பர்க டம்மனத்தைப்
பிரியாதென் கன்மனத் தும்பிரி யாது பிரிந்துநின்றார்
தெரியா தெவர்க்குந் தொழுவோருக் கின்பன்றித் தீமைசற்றும்
புரியாது தென்புலி யூர்ச்சிவ காமிதன் பொன்னடியே!"
என ஆசிரியர் கூறியவாறு, அன்னையின் அருள் பெற இந்நூலை ஓதுவோம்.
============

இதுவரை தெரியவந்துள்ள அந்தாதி நூல்களின் பெயர்கள்
அகர வரிசையில் தரப்பெற்றுள்ளன

* இக்குறியிட்டவை அச்சாகாதவை
நூற் பெயர் ஆசிரியர் பெயர்
அகத்தீசன் அந்தாதி சா.வேங்கடராமன்
அகோரரந்தாதி சிவானந்தன்
அங்காளேசுவரியம்மன் அந்தாதி சண்முகனார்
அத்திகிரிவரதன் அந்தாதி -
அபிராமி அந்தாதி அபிராமிபட்டர்
அம்பிகை அந்தாதி தே.பழனிச்சாமி
அரங்கத்திதழகலந்தாதி தண்டபாணி சுவாமிகள்
அரசிலியந்தாதி அ. சிதம்பரநாத முதலியார்
அருணகிரியந்தாதி குகை நமச்சிவாயதேவர்
அற்புதத்திருவந்தாதி காரைக்காலம்மையார்
அறப்பளீசர் அந்தாதி மு.ஆ. அருணாசல முதலியார்
அன்னை கருமாரி அம்மன் அந்தாதி அருட்கவி அரங்கசீனிவாசன்
ஆதிபுரி நிரோட்டக ககரயமக அந்தாதி க.தி, கந்தசாமி கவிராஜர்
ஆதிவயலூர் வெண்பா அந்தாதி சுந்தர நாதபிள்ளை
*ஆரூர் மெய்த்தேசிகர் மேல் பதிற்றுப் பத்தந்தாதி -
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி
ஆறெழுத்து அந்தாதி அகத்தியமுனிவர்
ஆறைப் பதிற்றுப்பத்தந்தாதி ஏ.டி. இராமலிங்கம் பிள்ளை
இராமபிரான் நூற்றந்தாதி வித்துவான்.தே. வீரராகவன்
இராமாநுஜ நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார்
இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி சிவஞான சுவாமிகள்
ஈங்கோய்மலை அந்தாதி கே.எம்.பாலசுப்பிரமணியம்
உலகம்மை கலித்துறை அந்தாதி நமசிவாயக் கவிராஜர்
*எட்டெட்டு அந்தாதி -
ஏகத்தாள் இதழகலந்தாதி தண்டபாணி சுவாமிகள்
ஒற்றைக்கடை விநாயகரந்தாதி மு.ரா. அருணாசலக்கவிராயர்
கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி கச்சியப்ப சுவாமிகள்
கச்சி இதழகலந்தாதி ப.தி.கார்த்திகேயமுதலியார்
கடவுளந்தாதி இராமசுவாமியா பிள்ளை
கணபதி அந்தாதி -
*கணபதி அந்தாதி -
கந்தர்வெண்பாப் பதிற்றுப் பத்தந்தாதி கணபதி சுப்பிரமணிய ஐயர்
கந்தரந்தாதி அருணகிரி நாதர்
கருணையந்தாதி கருணைதாசர்
கல்வளையந்தாதி சின்னத்தம்பிப் புலவர்
கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி சிவஞான சுவாமிகள்
கலைமகளந்தாதி செ.சீனித்தம்பி
களந்தைக்கயிலாய நாதர் வெண்பா அந்தாதி -
களந்தைக் கலித்துறை அந்தாதி -
காமாக்ஷியம்மன் அந்தாதி எஸ்.ஆர்.கணபதி செட்டியார்
காமாக்ஷியம்மை திருவந்தாதி காமாக்ஷிதாசர்
காழி அந்தாதி அருணாசலக் கவிராயர்
குடந்தை அந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*கும்பேசர் வெண்பா அந்தாதி டாக்டர் உ. வே. சாமிநாதையர்
குமரன் அந்தாதி மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
குருந்தாசலப் பதிற்றுப்பத்தந்தாதி கந்தசாமி சுவாமிகள்
குருநாதன் அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி மாதவச்சிவஞானயோகிகள்
குன்றுதோறாடும் சண்முகப் பெருமான் நிரோட்டகயமக வந்தாதி சௌந்திர பாரதி
குன்றைத் திரிபந்தாதி பாலசுப்பிரமணிய ஐயர்
கூடலந்தாதி எம்.எஸ். பிச்சுவையர்
கைலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீரதேவ நாயனார்
சங்கர நயினார் கோயிலந்தாதி -
சங்கரன் திருவந்தாதி வி. மு. சண்முகனார்
சடகோபர் சதக அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
சடகோபரந்தாதி கம்பர்
சந்தக் கலித்துறையந்தாதி தண்டபாணி சுவாமிகள்
சரசுவதியந்தாதி கம்பர்
சற்குரு வெண்பா அந்தாதி ச.மு.கந்தசாமிப் பிள்ளை
சித்தரந்தாதி -
சிதம்பரக் கலித்துறையந்தாதி தியாகேச முதலியார்
சிதம்பர வெண்பா அந்தாதி தியாகேச முதலியார்
சிராமலைத் தாயுமானார் அந்தாதி வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார்
சிராமலைப் பதிற்றுப்பத்தந்தாதி -
சிலம்பைப் பதிற்றுப்பத்தந்தாதி சின்னயச் செட்டியார்
*சிவகாமியம்மை அந்தாதி -
சிவகிரி ஒலியலந்தாதி -
சிவகிரி பதிற்றுப்பத்தந்தாதி பாலகுருசுவாமி
சிவகிரி யமக அந்தாதி மாம்பழக்கவி சிங்க நாவலர்
சிவபூசை அந்தாதி அழகிய சொக்கநாத வரோதயன்
சிவபெருமான் தனித்திரு அந்தாதி அ. வி. கிருஷ்ணசாமி ஐயர்
சிவபெருமான் திருவந்தாதி கபில தேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி பரணதேவ நாயனார்
சிவயோகநாயகி அந்தாதி கு.செ. இராமசாமி
சிஷ்டரந்தாதி -
சுப்பிரமணியரந்தாதி -
சென்னைக் கந்தர் இதழகலந்தாதி தண்டபாணி சுவாமிகள்
சென்னைக் கந்தசுவாமி வெண்பா அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
சேடமலை அந்தாதி பள்ளி கொண்டான் பிள்ளை
சேடமலை பதிற்றுப்பத்தந்தாதி -
ஞான அந்தாதி குமார சுவாமி முனிவர்
தணிகை அந்தாதி அ.மு. பரமசிவானந்தம்
தாயுமானேசுவரர் பதிற்றுப் பத்தந்தாதி நாகமுத்துப் பாவாணர்
திரிகூடத் திரிபந்தாதி திரிகூட ராசப்பக் கவிராயர்
திரிசிராமலை அந்தாதி வேம்பை நாராயணன்
*திரிசிராமலைப் பதிற்றுப்பத்தந்தாதி -
திருக்கருவைக் கலித்துறையந்தாதி அதிவீர ராமபாண்டியர்
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி அதிவீர ராமபாண்டியர்
திருக்கருவை வெண்பா அந்தாதி அதிவீர ராமபாண்டியர்
திருக்கழுக் குன்றத்தந்தாதி ஜகந்நாத நாயகர்
திருக்குடந்தைத் திரிபந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருக்குற்றால யமக வந்தாதி திரிகூட ரரசப்பக் கவிராயர்
திருக்கோகர்ண அந்தாதி சுப்பிரமணிய ஐயர்
திருச்சிராமலை யமக அந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பல யமக அந்தாதி சபாபதிப் பிள்ளை
திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி சி.தியாகராச செட்டியார்
திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி தியாகேச முதலியார்
திருச்சுழியல் வெண்பா அந்தாதி கி.சுவாமிநாதன்
திருச்செங்காட்டங்குடி யமக அந்தாதி நல்லூர்த்தியாகன்
திருச்செந்திலந்தாதி திருவண்ண நாதக் கவிராஜர்
திருச்செந்தில் யமக அந்தாதி அ. சிவசம்புப் புலவர்<
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி சிவப்பிரகாச சுவாமிகள்
திருச்செந்தில் வெண்பாவந்தாதி சிவானந்த சாகரயோகி
திருத்தணிகை அந்தாதி கந்தப்பையர்
திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி நீ.சண்முகானந்த சுவாமி
திருத்தணிகை யமக அந்தாதி சொக்கலிங்க தேசிகர்
திருத்தணிகை வெண்பா அந்தாதி சண்முக முதலியார்
*திருத்தவத்துறைக் கலித்துறை அந்தாதி -
*திருத்தவத்துறைத் திரிபந்தாதி -
திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் அந்தாதி ந. அழகர்சாமி
திருத்தில்லை யமக அந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருத்தென்சேறை யிதழகலந்தாதி -
திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி
திருநாவுக்கரசர் பதிற்றுப் பத்தந்தாதி கே.எம் பாலசுப்பிரமணியம்
திருநூற்றந்தாதி அவிரோதி ஆழ்வார்
திருநெல்லைத் திரிபந்தாதி வீரபத்திரக் கவிராயர்
திருப்பழனிப் பதிற்றுப் பத்தந்தாதி சோம சுந்தரம்பிள்ளை
திருப்பனழசைப் பதிற்றுப் பத்தந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
திருப்புகலூரந்தாதி நெற்குன்றவாண முதலியார்
திருப்புடைமருதூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி முத்துக் குமாரசாமிக் கவிராயர்
திருப்புத்தூர்ச் சீதளிநாதன் பதிற்றுப் பத்தந்தாதி நா. கனகராஜ ஐயர்
திருப்புல்லைத் திரிபந்தாதி கிருஷ்ணமாச்சாரியர்
திருப்பெருந்துறை சிவயோக நாயகி அந்தாதி கு.செ. இராமசாமி
திருப்பெருந்துறை யமக அந்தாதி மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர்
திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருப்போரூரந்தாதி காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
*திருமகள் அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
திருமகள் திரு அந்தாதி சி இராமசாமி
திருமங்கைக் கரும்பேசர் பதிற்றுப் பத்தந்தாதி -
திருமதீனத்துப் பதிற்றுப் பத்தந்தாதி ஆ. கா. பிச்சை இபுராகீம்
திருமதீனத்து யமக வந்தாதி ஆ. கா. பிச்சை இபுராகீம்
திருமதீனத்து வெண்பா அந்தாதி ஆ.கா.பிச்சை இபுராகீம்
திருமயிலைத் திரிபந்தாதி இராமையர்
திருமயிலை யமக வந்தாதி தாண்டவராயக் கவிராயர்
திருமலைக் கந்தரந்தாதி சிவராமலிங்கம் பிள்ளை
திருமலைக் கந்தரனுபூதி அந்தாதி -
திருமலை யமக வந்தாதி நெல்லையப்பக் கவிராச பண்டாரம்
திருமலைக் குமாரசுவாமி வெண்பா அந்தாதி நகரம் சங்கர பாண்டியனார்
திருமுட்டப் பதிற்றுப் பத்தந்தாதி அழகிய மாணவாள ராமாநுஜர்
திருமெய்யத் திரிபந்தாதி வீரபத்திரக் கவிராயர்
*திருமேனியார் கோயில் திரிபந்தாதி பூ. அ. சிதம்பர நாத முதலியார்
திருவரங்கத்தந்தாதி பிள்ளைப் பெருமாளையங்கார்
திருவரங்கப்பதிற்றுப் பத்தந்தாதி வேங்கடாசலதாசன்
திருவருணை அந்தாதி சைவ எல்லப்ப நாவலர்
திருவருள் அந்தாதி வீரநாதக் கோனார்
திருவாமாத்தூர்த் திரிபுயமக அந்தாதி அசலாம்பிகை அம்மாள்
திருவாரூரந்தாதி சொக்கலிங்க செட்டியார்
திருவாரூர்பாதி திருவொற்றியூர் பாதிவெண்பா அந்தாதி வித்துவான் தியாகராச செட்டியார்
திருவாலவாய் அந்தாதி சொக்கலிங்க செட்டியார்
திருவாவினன்குடி பதிற்றுப் பத்தந்தாதி சுப்பிரமணிய முனிவர்
திருவாவூர்த் திரிபந்தாதி சிவப்பிரகாச உபாத்தியாயர்
திருவான்மியூர்க் கலித்துறை அந்தாதி ஈ. எஸ். வரதராஜ ஐயர்
திருவானைக்காப் பதிற்றுப் பத்தந்தாதி கே. வி. சுப்பையர்
திருவானைக்காப் பதிற்றுப் பத்தந்தாதி தே. பெரியசாமிபிள்ளை
திருவானைக்கா யமக அந்தாதி தண்டபாணி சுவாமிகள்
திருவிடைமருதூர்த் திரிபந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவிடைமருதூர்ப் பதிற்றுப் பத்தந்தாதிசபாபதி நாவலர்
திருவிளையாடலந்தாதி சிவலிங்க உவாத்தியாயர்
திருவுசாத்தானத் திரிபந்தாதி -
திருவுறந்தைப் பதிற்றுப் பத்தந்தாதி வைத்தியநாத செட்டியார்
திருவூறைப் பதிற்றுப் பத்தந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவெவ்வுளூரந்தாதி -
திருவேகம்பமுடையாரந்தாதி பட்டினத்துப் பிள்ளையார்
திருவேகம்பரந்தாதி சிவஞான சுவாமிகள்
திருவேகம்பரந்தாதி -
திருவேங்கடத்தந்தாதி பிள்ளைப் பெருமாளையங்கார்
திருவேரகத்தந்தாதி கவித்தலம் வேலையரவர்கள்
திருவையாற்று அந்தாதி இராமசாமி ஐயர்
திருவையாற்று நிரோட்டக யமக அந்தாதி இராமசாமி ஐயர்
திருவையாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி முத்துச்சாமி பாரதி
திருவொற்றியூர் வடிவுடை யம்மன் அந்தாதி தியாகேச முதலியார்
திருவோத்தூர் இளமுலை அம்பிகை அந்தாதி வி. சாமிநாதப் பிள்ளை
தில்லை அந்தாதி -
தில்லைக்கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி சிதம்பரச் செட்டியார்
தில்லை நிரோட்டக யமக அந்தாதி சு. வேலுச் சாமிப்பிள்ளை
தில்லை யிதழகலந்தாதி தண்டபாணி சுவாமிகள்
தில்லைத் திரிபந்தாதி தண்டபாணி சுவாமிகள்
துறைசை யமக அந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
துறைசை வெண்பா அந்தாதி -
தென் கன்னிக் குமரி வெண்பா அந்தாதி சாதுராம் சுவாமிகள்
தேசிக நாராயணர் திருவந்தாதி மணவாள சுவாமி
தேவைத் திரிபந்தாதி சின்னயச் செட்டியார்
நடுக் காவேரி பதிற்றுப் பத்தந்தாதி சிவாநந்த சாகர யோகீசுவரர்
நான்முகன் திருவந்தாதி திருமழிசை யாழ்வார்
நீதிபதி வேதநாயகர் அந்தாதி சரவணபவாநந்தர்
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பிள்ளைப் பெருமாளையங்கார்
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி அத்தங்கி தாதாரியர் தொண்டன்
*நெல்லை யமக அந்தாதி -
*பசுவந்தனை வெண்பா அந்தாதி சொக்கலிங்க செட்டியார்
பஞ்சாக்கர தேசிகரந்தாதி கச்சியப்ப சுவாமிகள்
படையூரந்தாதி அருணாசலம் பிள்ளை
பந்தனந்தாதி ஒளவையார்
பரங்கிரிக் கலித்துறையந்தாதி மு.ரா. அருணாசலக் கவிராயர்
பரங்கிரிப் பதிற்றுப்பத்தந்தாதி மு.ரா. அருணாசலக் கவிராயர்
பரங்கிரி வெண்பா அந்தாதி மு.ரா. அருணாசலக் கவிராயர்
பவானி பதிற்றுப்பத்தந்தாதி கு. குமாரசாமிப்பிள்ளை
பழநிப் பதிற்றுப்பத்தந்தாதி தே. குரு.சுப்பிரமணிய ஐயர்
பழனி யமக அந்தாதி பாலசுப்பிரமணியன்
பழனியாண்டவர் திருவருட் பாசுர அந்தாதி ஏ.சிவசூரியப் பிள்ளை
பழமலையந்தாதி சிவப்பிரகாச சுவாமிகள்
பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி கச்சியப்ப சுவாமிகள்
பிள்ளையந்தாதி தூப்புல் நயினாராசாரியர்
புகலூரந்தாதி மேலைச் சிதம்பரனார்
புல்லை அந்தாதி -
புலியூர் அந்தாதி மயில்வாகனப் புலவர்
பூவாளூர்ப்பதிற்றுப் பத்தந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பெரிய திருவந்தாதி நம்மாழ்வார்
பொன்வண்ணத்தந்தாதி சேரமான் பெருமாள் நாயனார்
போரூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி சண்முகம்பிள்ளை
மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி பரஞ்சோதி முனிவர்
மதுரை யமக அந்தாதி பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
மயிலத்தந்தாதி பி. எம். இராஜமாணிக்கம் பிள்ளை
மயிலாசலத் தந்தாதி சிந்நய உவாத்தியாயர்
மயிலைபாதி வான்மியூர்பாதி கலித்துறை யந்தாதி கா. ஆறுமுக நாயகர்
மருதூர் அந்தாதி தலைமலை கண்டதேவர்
மறைசை யந்தாதி சின்னத்தம்பிப் புலவர்
*மாசிலாமணி தேசிகர் அந்தாதி டாக்டர் உ. வே. சாமிநாதையர்
மாயூரநாதர் அந்தாதி வே. முத்துசாமி ஐயர்
மாவை யந்தாதி பொன்னம்பலம் பிள்ளை
*மீனாட்சி சுந்தரம்பிள்ளை அந்தாதி வித்துவான் தியாகராச செட்டியார்
மீனாட்சியம்மை பதிற்றுப் பத்தந்தாதி தெய்வசிகாமணி குருக்கள்
முத்துக்குமாரசுவாமி அந்தாதி முத்துக்குமர தாஸர்
முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார்
முதலொலியலந்தாதி தண்டபாணி சுவாமிகள்
மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி காரைக்குடி இரா. சொ. சொக்கலிங்க செட்டியார்
வடகதிர்காம முருகன் அந்தாதி வ.சு.செங்கல்வராயப்பிள்ளை
வடதிருமுல்லைவாயிலந்தாதி சிவஞான சுவாமிகள்
வடிவேலன் அந்தாதி வி.சுப்பையர்
*வயலூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி சுந்தரம் பிள்ளை
வில்லிப்பாக்கம் சிவபெருமான் பதிற்றுப் பத்தந்தாதி தண்டபாணி சுவாமிகள்
வில்வவன அந்தாதி சுப்பு இராமசாமி முதலியார்
வெண்பா அந்தாதி தத்துவராய சுவாமிகள்
வைணவி அந்தாதி -
ஸ்ரீகந்தர் வெண்பா பதிற்றுப் பத்தந்தாதி செ. ரா. கணபதி சுப்பிரமணிய ஐயர்
ஸ்ரீ கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி இராகவன் முத்து
ஸ்ரீ செங்கச்சேரி மாரியம்மன் அந்தாதி சா.வேங்கடராமன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

This file was last updated on 10 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)