சிவகாமி அம்மன் அந்தாதி - பாகம் 2
நூல் மூலம் குறிப்புரையுடன்
வித்துவான் பாலசாரநாதன் தொகுப்பு
civakAmi amman antAti
mUlam verses with commentary
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிவகாமி அம்மன் அந்தாதி - பாகம் 2
நூல் மூலம் குறிப்புரையுடன்
வித்துவான் பாலசாரநாதன் தொகுப்பு
Source :
சிவகாமி அம்மன் அந்தாதி
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் , பெசன்ட் நகர் - 90
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்
நூல்நிலைய வெளியீடு எண்-84
முதற் பதிப்பு 1984-1000 பிரதிகள்
(C) மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம்,
பெசன்ட் நகர், சென்னை - 600 090.
விலை: ரூ. 15-00
Printed with the financial assistance from the Ministry of Culture Govt. of India.
Printed at Sudha Printers, Royapettah, Madras-14
------------
திருச்சிற்றம்பலம்
சிவகாமி அம்மன் அந்தாதி
காப்பு
சீர்மேவு தில்லைச் சிவகாம சுந்தரி சீறடிமேல்
தார்மேவு செந்தமிழ் அந்தாதிப் பாவொன்று சாற்றுதற்குப்
பேர்மேவும் அம்பலத் தப்பனோ டாடும் பெருவயிற்றுக்
கார்மேவும் யானை முகமகன் றாளுண்டு காப்பதற்கே.
குறிப்புரை
தில்லையம்பதியில் கோயில் கொண்டுள்ள அன்னை சிவகாமியின் மீது பாடப்பெற்ற துதி நூல்.
இந்நூல் தடையேதுமின்றி எளிது நிறைவேற வேண்டும் என்னும் கருத்தினராய் மரபு பற்றிக்
கடவுள் வாழ்த்துப் பாடினார். காப்புச் செய்யுள் எனவும் இது கூறப்பெறும். ஒழுக்க நெறி
நிலைக்கவும், மாணாக்கர் அறிவு பெறவும், இடையூறு நேராமலிருக்கவும், விநாயகனைப்
போற்றி வணங்குகின்றார். சீர் மேவுதில்லை -சிறப்பு மிக்க தில்லையம்பதி; தலங்கள்
அனைத்திலும் சிறந்து விளங்குவது. சிவகாமசுந்தரி: இறைவியின் திருநாமம்; 'சிவனால்
விரும்பப்படும் அழகி' என்றும் பொருள்கொள்ளலாம். "சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும்
தவமுடை யார்படை யாத தனமில்லையே” (68) எனவரும் 'அபிராமி அந்தாதி' காண்க.
செந்தமிழ் அந்தாதிப் பா- செந்தமிழால் இயற்றப் பெற்றதும், அந்தாதியாக இயற்றப்
பெற்றதுமாகிய பாடல்களையுடைய நூல் எனப் பொருள். சாற்றுதற்கு - ஆக்கிப் படைத்தற்கு.
அம்பலத் தப்பன் - சிற்றம்பலத்தில் நடமிடும் சிவன். யானைமுகன் மகன் யானையின்
முகத்தினையுடைய விநாயகன்; முகத்தை உடையவன் முகன் - குறிப்பு வினைமுற்று. 'தான்
காப்பதற்கு உண்டு' என மொழிமாற்றிக் கொள்க. "அம்பலத் தப்பனோ டாடும் பெரு வயிற்றுக்
கார்மேவும் யானைமுகன் மகன்" என்பது நர்த்தன விநாயகரை;"வென்றாடு திருத்தாதை வியந்துகை
துடிகொட்ட நின்றாடு மழகளிறு" (தொல்: உரை) காண்க. 'ஏ' தேற்றப் பொருளில் வந்தது.
----
நூல்
1. பொன்னார் மணிச்சிலம் பேந்துபொற்
பாதமும் பூண்முலையும்
மின்னார் மருங்குலுங் கைந்நான்குந்
தோளும் விழிமலரும்
அன்னேயென் பாருக் கருள்செய்
முகமும்பொன் னம்பலத்திற்
றன்னேரில் லாச்சிவ காமியைக்
கண்டுயிர் சந்திக்கவே.
1. பொற்பாதம் - பொன்போன்ற திருவடிகள். மின்னார் மருங்குல் - மின்னல்
போன்ற இடை. விழிமலர் கண்களாகிய மலர்; உருவகம். பொன் அம்பலம் - பொன்னாலாகிய
அம்பலம்- சிதம்பரம். நேர் - நிகர், ஈடு. மங்கலச் சொல் கொண்டு நூலைத் தொடங்கும் மரபில்
'பொன்' எனப் பாடலைத் தொடங்கியுள்ளார். 'பொன்னார் மேனியனே' எனப்படும் சுந்தரர்
தேவாரப் பாடலை நினைவூட்டுகிறது இப்பாடல், சிவகாமி அன்னையின் அங்கங்களை
வருணிக்கின்றார். 'கண்டு சந்திக்கவே உயிர்' என இயைக்க. இறைவியின் தன்மைகளை
இயல்பாக எடுத்துக் கூறுவதால் இப்பாடல் "தன்மை நவிற்சியணி" யாகும்.
----
2. சந்திக்கு முன்னம்மெய்ச் சாயுச்சி
யந்தந்து சாருமன்பர்
புந்திக்குண் மேவு பரிபூ
ரணத்தையும் பொற்சபைவாழ்
அந்திப் பிறையணி யுஞ்சிவ
காமியை அன்புள்வைத்துச்
சிந்திக்கச் சிந்திக்கப் புத்தமு
தொத்தென்றுந் தித்திக்குமே.
2. சந்திக்கு முன்னம் - இறைவியைக் கண்டு வணங்கு முன்னரே. சாயுச்சியம் - கடவுளோடு
ஒன்றுபடும் நான்கு பதவிகளில் ஒன்று; (சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சியம்). புந்தி - அறிவு.
அந்திப்பிறை - மாலைப்பிறை அல்லது கடைப்பிறை என்றும் கொள்ளலாம். புத்தமுது - புதிய
அமுது. பொற்சபை - பொன்னால் ஆகிய சபை. சிந்திக்கச் சிந்திக்க - துணிவு பற்றிய அடுக்கு.
'உள்ளன்பு' எனப்படுவது செய்யுளுள் "அன்புள்" என வந்தது.
----
3. தித்திக்குந் தேனைச் செழுங்கரும்
பூறிய தேறலைநம்
புத்திக்குண் மேவு பரானந்த
போகத்தைப் பொற்சபைவாழ்
முத்திக் கொழுந்தைச் சிவகா
மியைத்தொழு முத்தர்க்கென்றுந்
தத்துவ சுத்திசெய் முத்திபெற்
றுய்வது சத்தியமே.
3. செழுங்கரும்பு - செழுமையான கரும்பு. தேறல் - கருப்பஞ் சாறு. கொழுந்து - தளிர்.
முத்திக் கொழுந்து - வீடு பேற்றின் தளிர் போன்ற உயர்ந்த நிலையில் உள்ள இறைவி எனப்
பொருள் கொள்ள வேண்டும். முத்தர்- வீடு பேற்றிற் குரியவர்.
"தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே" என அப்பரும், "ஆயர்தங் கொழுந்தே" எனப்
பெரியாழ்வாரும் கூறியுள்ளமை காண்க. 'பழமறைக் கொழுந்தே" (திருக். கரு. ப. ப. அந்தாதி),
''கொழுந்து" (அபி. அந். 2.) இவ்வாசிரியரே "வன்னிக் கொழுந்து" (5) என இந்நூலில் கூறியுள்ளார்.
----
4. சத்தியு மாய்விந்து நாதமு
மாய்ச்சதுர் வேதமுமாய்ச்
சித்தியும் புத்தியும் வித்தையு
மாய்ச்செக மாயுயிராய்ப்
பெத்தமு மாய்மன்று ளாடும்
பிரான்றரும் பின்னமிலா
முத்தியு மாய்ச்சிவ காமிபொற்
றாளெங்கு முன்னின்றதே.
4. சத்தி- சிவதத்துவம் ஐந்தில் ஒன்று; விந்து- சுத்த மாயை. நாதம் - ஒலி. சித்தி - யோகத்தில்
ஒன்று. புத்தி - அறிவு. வித்தை- கல்வி. செகம் உலகம். உயிர்-உயிர்கள். பெத்தம் -ஆன்மாவின்
பாசபந்தம். முத்தி- வீடுபேறு.
'பெத்தம் முத்தி இரண்டிலும் சிவன் பிரேரிப்பன்' என்பது சிவஞான போதம்.
சத்தியும் பிரேரிப்பள் என்பது சத்தி தத்துவக் கருத்து. தில்லையில் நடமிடும் இறைவன் பாதம்
இடது பாதமாத லால் அது இறைவனின் இடப்பால் உறையும் அம்பிகை பாதம் என்ற குறிப்பைச்
சிவகாமி பொற்றாள் என உணர்த்துகின்றார். 'பெத்த முத்தர்' என வழங்குதல் காண்க.
இப்பாடல் பின்வரும் 'அபிராமி அந்தாதி'யின் பாடலை ஒத்து இருத்தல் காண்க.
"சித்தியும் சித்தி தரும்தெய்வ மாகித் திகழும்பரா
சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே” (29)
----
5. முன்னிற்பள் பின்னிற்பள் கீழ்மேலு
நிற்பள் முதிர்ந்தவன்பு
பின்னித் தொழுபவர்க் குண்ணின்றுங்
காப்பள் பிரசமலர்த்
துன்னிக் கிடக்குங் குழற்சிவ
காமிதுன் மார்க்கர்க்குமுன்
வன்னிக் கொழுந்தொத்துப் பின்னமு
தாவள் வளம்பெறவே.
5. பிரசம் - தேன்; பிரசமலர் என்றது தேனோடு கூடிய மலர், வண்டு நுகரா மலர் என்றபடி.
வன்னிக் கொழுந்து- தீச்சுடர்; துன்மார்க்கர்களுக்கு முதலில் வன்னிக்கொழுந்தாகி அவர்கள்
தீநெறியை அழித்துப்பின்னர் அவர்கள் என்றும் நிலைபெற வாழ அமுதமாவாள் என்றவாறு.
முதிர்ந்த அன்பினராய அடியார்களின் முன்னேயும், பின்னேயும், கீழேயும் மேலும்,
உள்ளத்திலும் நின்று காப்பள் என்க. "தனித்துவழி நடக்குமென திடத்தும்ஒரு வலத்தும் இரு
புறத்தும் அருகடுத்திரவு பகற்றுணையதாகும்" வேல்வகுப்பு.
----
6. வளங்கொள் கருணைக் கடலமு
தேமன்று ளாடிபங்கில்
விளங்கு மலைமருந் தேயெங்குந்
தோற்றும் விளக்கொளியே
களங்கந் தவிர்த்தென்னை யாண்டரு
ளுஞ்சிவ காமியம்மே
யுளங்குளிர்ந் துன்னை மறவா
திருக்குமன் புய்த்தருளே.
6. கருணைக் கடல் - கருணையாகிய கடல், உருவகம். மன்றுளாடி- மன்றத்தில் ஆடும்
சிவபெருமான்; நடராசர், மலைமருந்து- மலையில் தோன்றிய மருந்து; இமவான் மகள்
எனினும், சஞ்சீவி எனினும் பொருந்தும். தோற்றும். தோன்றும், ஒளிவீசும்.
“மன்றுளாடி பங்கில் விளங்கு மலைமருந்தே" எனக் கூறி இறைவி இறைவனின் இடப்பாகத்தே
விளங்குவதனைக் கூறினார். கருணையாகிய கடலிற் றோன்றிய அமுதம் என்றும் மலை
மருந்து எனவும் நயம்படக் கூறியுள்ளார். அமுதமும் சஞ்சீவியும் இறப்பை ஒழிக்குந்
தன்மையுடையன.
----------
7. அருட்கதி ராயென துள்ளத்திற்
றோன்றிநின் றல்லல்செய்த
இருட்பகை தீர்த்தொழியா வின்பங்
காட்டி யிணையடிக்கீழ்
வருத்த மிலாதுவைத் தாண்டரு
ளுஞ்சிவ காமிமங்கைக்
குருக்க முடன்செயுங் கைம்மாறு
பார்க்கிலெற் கொன்றிலையே.
7. அருட்கதிர்- இறைவியின் அருளாகிய கதிர்; இருட்பகை - மனத்தில் தோன்றும் மல இருளாகிய பகை, ஒழியா(த) - குறையாத. கைம்மாறு -மாற்றுதவி;
"கைம்மாறு களெல்லாம் காரணம் உடையன". (பரிமேலழகர்) ஆனால் இறைவியின் செய்கை காரண காரியப் பொருட்டு அன்று. "கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி” (குறள்: 211) "தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை...யானிதற் கிலனோர் கைம்மாறே" (திருவாசகம்). இப்பாடல் உருவக அணி.
------
8. இல்லைத் துறந்தெவ் வகைப்பற்று
மற்றிரு ளற்றுநிற்போர்
செல்வக் குழாத்திற் புகுந்திரு
வேசிவ காமியெனும் வில்லைப்
பொருநுதற் பொன்னேநின்
றாள்விரும் பாவென்மனக்
கல்லைக் கரைத்து நீ முன்னின்று
காக்கக் கடனுனக்கே.
8. இல் - வீடு, இல்லம்; மனைவி; இல்லறம். எவ்வகைப் பற்றும் - எந்தவித ஆசையும்; அகப்பற்றும் புறப்பற்றும்; யான் என்பது அகப்பற்று, எனது என்பது புறப்பற்று; இதனையே உட்பற்று என்றும் புறப்பற்று என்றும் கூறுவதும் உண்டு. செல்வக் குழாம் - திருக்கூட்டம்; (செல்வம் -திரு.). நுதல் - நெற்றி. வில்லைப் பொருநுதல் - வில்லைப் போன்ற நெற்றி; 'பொரு' உவம உருபு. மனக்கல் - மனமாகிய கல் - உருவகம். "கல்லை மென்கனி யாக்கும் விச்சை கொண்டு" (திருவாசகம் 98), நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருக" - கந். அநுபூதி.
----------
9. உனக்கேவல் செய்யும் வழியடி
யாருடன் கூட்டியென்றன்
மனக்கோயிற் குள்ளிருந் தின்பருள்
வாயிம் வானளித்த
வனப்பேடை யேபுலி யூர்மேவி
வாழ்சிவ காமியம்மே
எனக்காசை வேறுமுத் திப்பே
றிதுவன்றி யின்றினியே.
9. ஏவல் - பணி. வழியடியார் - பரம்பரைத்தொண்டர்; அரன் பணியில் நின்றிடவும் அகலுங் குற்றம்" (சிவஞான சித்தியார்) எனவும்," இனிச் சிவபக்தரோடு இணங்குக, அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்து வாராகலான்" (சிவஞான போதம்) எனவும் வருதல் காண்க. இமவான் - பனி உறையும் இமயமலைக்கு அரசன்.
பேடை - பெண்பறவை; குயில், மயில், அன்னம் எனக் கொள்ளலாம். மனக்கோயில்-உருவகம்; மனமாகிய கோயில். புலியூர்- சிதம்பரம்.
"எனக்கு முத்திப்பேறு ஆசை" என்றும், 'இதுவன்றி வேறு இன்று (இன்று - இல்லை) இனி,' என மொழிமாற்றுக.
----------
10. இன்றெனக் குள்ளத்தின் மெய்யன்பென்
செய்குவ னீன்றெடுத்த
உன்றனக் குஞ்சொன் முகமனுண்
டோவுய்யு மாறருளாய்
குன்றிடத் திற்பிறந் தியாவையு
மேற்ற குலக்கொடியே
மன்றிடத் தாற்சிவ காமியா
மென்னுநன் மாதங்கியே.
10. ஈன்றெடுத்த - பெற்றெடுத்த; சொல்முகமன் - சொல்லக் கூடிய புகழுரைகள்; முகமன் - ஒருவரை அவருக்கு முன்னரேயே புகழ்ந்து கூறுவது; "என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்” (நன்னெறி), 'புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே" (சம். தேவாரம்) குன்றிடம் - இமயமலை. மா தங்கி - மதங்க முனிவருடைய பெண்.
"மதங்கர் குலம்" என்பது பாணர்குலம். அக்குலத்தில் தோன்றியதால் சிவபெருமாட்டிக்கு மாதங்கி எனப் பெயர். "மாதங்கி யென்று, ஆய கியாதி யுடையாள் சரணம் அரண் நமக்கே. (50)." "மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி (70)" என்பன அபிராமி அந்தாதி.
----------
11. மாதங்க மேமணி யேஅணி
யேநன் மரகதமே
வேதங்கள் போற்றுஞ் சிவகாம
சுந்தர மென்கொடியே
பாதந் தருந்துக ளாற்புவி
யாவும் படைத்தவம்மே
நீதங்கு மன்றத்துக் கூற்றமு
தூட்டெற்கு நித்தமுமே.
11. மாதங்கம் - சிறந்த தங்கம்; துகள் - தூசி, தூளி. ஊற்றமுது - ஊறும் அமுதம்.
வேதங்கள் சிவகாமசுந்தரியைப் போற்றுகின்றன என்றும், இறைவியின் பாதத்துகள்களே புவனமாகப் படைக்கப்பட்டன என்றும் நூலாசிரியர் கூறுகின்றார், "அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் (71) "வேதமும்... பரவும் அபிராமவல்லி" (74), என்பன அபிராமி அந்தாதி அடிகள். "மறையும் பரவும் திருவடிப் பாரடையே” (22) என்பது சித்தரந்தாதி.
----------
12. நித்தனை அத்தனை சிற்றம்
பலத்து ணிருத்தஞ்செய்வித்
துத்தமற் கானந்த மூட்டுகின்
றாயென் றுனையிரந்தேன்
சித்தமு மெத்தத் திகைப்பது
பார்சிவ காமியம்மே
பித்துறுஞ் சேயையுங் காப்பதல்
லோகடன்பெற்றவட்கே.
12. நித்தன் - நித்தியன், அழிவில்லாதவன், சிவபெருமான். அத்தன் - தலைவன், உயர்ந்தோன்; "அத்தா போற்றி" (போற்றித் திருவகவல்). சித்தம்- உள்ளம். மெத்த - மிக. திகைப்பது - மயங்குவது. "பித்துறுஞ் சேயையுங் காப்பதல் லோகடன் பெற்றவட்கே" என்றார் ஆசிரியர். "திரங்காணாப் பிள்ளையெனத் தாய்விடாளே, சிவகாம வல்லியெனும் தெய்வத் தாயே" (சிவ. தோத்திரம்) என்றார் இராமலிங்க அடிகள்.
இறைவி காண இறைவன் நடமிடுதல்- "அம்பிகை கண்களித் திடத்தில்லை மன்றினிற் கடிந டம்புரி கடவுள் (99)" என்றார் வரதுங்கராமர். (திருக். கரு. ப. ப. அந்தாதி.)
----------
13. பெற்றே னுனது மலர்த்தாள்
சிரத்தினிற் பெற்றுமெய்யன்
புற்றேனல் லேனெனி லென்போலும்
பாவிக ளுண்டுகொல்லோ
சற்றே யிரக்கம்நீ வைத்தாள்
சிவகாம சௌந்தரியே
மற்றே தெனக்குத் துணையுன்னை
யன்றியிம் மாநிலத்தே.
13. மலர்த்தாள்- மலர்போன்ற மென்மையான பாதங்கள். மாநிலம் - மிகப்பெரிய நிலம், உலகம். சிரம்- தலை; சென்னி.
"என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல், சென்னியில் வைத்த சேவக போற்றி" (போ. திருவகவல்), "சிரங்குவிவார் ஓங்கு விக்கும் சீரோன்" (சிவபுராணம்). மற்று -வேறு; பிறிதுப் பொருளில் வந்த இடைச்சொல்.
''இம்மாநிலத்தே எனக்கு உன்னையன்றித் துணை மற்று ஏது" என மொழி மாற்றிப்பொருள் கொள்க.
-----
14. மானேந்து செங்கைக் கடவுணின்
றாடும்பொன் மன்றிலுற்ற
தேனே கருணைத் திருவுரு
வேசிவ காமியம்மே
ஊனார் புலக்குடிற் குண்ணின்
றரற்றி யுனையழைத்தேற்
கேனேனென் னாவிடில் நாயேனுக்
குய்வகை யெவ்வண்ணமே.
14. மான்ஏந்து செங்கைக் கடவுள் - மானை இடக்கையிலே தாங்கிக் கொண்டுள்ள சிவபெருமான்; "இடங்கொண்ட மானும் வலங்கொண்ட மழுவும்", "நவ்வி யங்கண் மானு மானுமினிது கந்தி டங்கொள்வார்" (ம கலம்.90). பொன்மன்று- பொன் அம்பலம். ஊனார் - ஊன் நிறைந்த, புலக்குடில் - ஐம்புலன்கள் குடிகொண்டுள்ள இடம்; குடிசை; இதனை, "இப்புழுக்கூடு" (திருச்சதகம்), “புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற்குழல்" (திருவாசகம்) என்றும், "குடருங் கொழுவும் குருதியும் தோயும் குரம்பை'' (அபி: அந்: 48). நாயேன் - நாய்போன்ற கீழாம் குணமுடையவன். ஏன்ஏன் - இரக்கம் பற்றிய அடுக்கு.
----------
15. வண்ணமும் பச்சைசெவ் வாயோ
பவழம் வரிக்கயலாங்
கண்ணிணை கூந்தற் கனந்தனந்
கோங்குசெங் காந்தள்கரம்
பண்மொழி மின்னிடை யென்றாலு
மாமொப்புப் பார்க்கிலில்லை
தண்ணளி செய்யுஞ் சிவகாம
சுந்தரி தாளிணைக்கே.
15. வண்ணம் - நிறம்; இங்குப் பச்சை என்றார்; "நீலமேனி வாலிழை பாகம்' (ஐங்குறுநூறு); “பரிமள யாமளைப் பைங்கிளியே" (15), "மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி" (70) என வரும் அபிராமி அந்தாதி அடிகள் காண்க; "பச்சை அன்னம்" என்றார் குமரகுருபரர்; "பால்திரு நீறுபூத்த பவழ வெற்பனைய பச்சைக் கோல்தொடி மணந்த மேனிக் குழகனே" (இளசைப். பதி, அந் தாதி 60 எனவும் வருதல் காண்க. பவழம் - பவளம்; கயல் - ஒரு வகைமீன். கனம் - மேகம். தண்ணளி - இரக்கம்; "பாரில் உன்னைச் சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி தன் தண்ணளியே" (14) அபிராமி அந்தாதி.
நிறம் - பச்சை; வாய் -பவளம்; கண்ணிணை - கயல்; கூந்தல் மேகம்; தனம் - கோங்கு; கரம் - செங்காந்தள் மலர்; மொழி - பண்; இடை - மின்னல்-என ஒப்புரைத்தாலும் திருவடிகளுக்கு ஒப்பு நோக்கில் ஒன்றும் இல்லை. "ஒப்புடையனல்லன் ஒருவமனில்லி" - (திருநா.தே. 6ஆம் திருமுறை.)
----------
16. இணையு மளவுமில் லா நட
ராச ரிடத்திலுற்ற
துணைவியு மாய்மலை மன்னவன்
பெற்ற துரைப்பெண்ணுமாய்
அணையுந் திருவுடை யாள்சிவ
காமி யடியிணையைப்
பணியுந் தவமுடை யார்பெறும்
பேறு பகரரிதே.
16. இடத்தில் உற்ற - இடப்பாகத்தை அடைந்த. மலை மன்னவன் - இமயமலை அரசன். துரைப்பெண் துரைசானி (அ) தலைமகள். இணை - ஒப்பு; அளவு - பரிமாணம். (மாலும் அயனும் அடிமுடி காணாமை கருதி). பேறு பகரரிதே- பெருமைகள் அளவில. இம்மையிலும் மறுமையிலும் சிறப்புப்பல பெறுவர்.
"அரியா சனத்தின் நடுவே கயற்கண் அருள்சேர் துரைப் பெண் ஒருபால்" (மது -பதி ப. அந்தாதி), "அழைக்குந் தடம்புரிசை மதுரைத் துரைப்பெண்ணுடன் அம்புலியாட வாவே" (மீனாட்சி. பிள். தமிழ்.), "இனத்தா, லுயர்ந்த மணமாலை யிட்டுக் களித்த துரைப் பெண்ணே (சிவகாமவல்லித் தோத்திரம்.) என வருதல் காண்க. "சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே” (68) எனவரும் அபிராமி அந்தாதி காண்க.
--------
17. அரியா சனத்தி லிருந்துல
காளு மரசருக்குந்
திருமா லயன்முதல் விண்ணுல
காளும்நற் றேவருக்கும்
பெரியார் தொழும்புலி யூர்ச்சிவ
காமி பெருங்கருணை
மருவா விடிலுள தாமோ
மிகுசுக மங்கலமே.
17. அரியாசனம் - சிங்காதனம்; அயன் - பிரமன். தேவருக்கும் பெரியார் -மகாதேவன்; சிவபெருமான். புலியூர் - புலிக்கால் முனிவர் தொழுத காரணத்தால் தில்லைக்கு எய்திய பெயர். மருவுதல் - பொருந்துதல். "எம்மூர் பெரும்பற்றப் புலியூராகும்" (கோயிற் புராணம், 69).
"விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டி" (40) எனவும், "மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே" (4) எனவரும் 'அபிராமி அந்தாதி' அடிகள் காண்க. இப்பாடல் கருத்து மேலைப் பாடல் 99 ல் வருதல் காண்க.
------
18. மங்கல நாணுந் திருத்தோடுஞ்
சுட்டியு மாமுடியுந்
தங்கந் திகழ்வில்வத் தாரும்பொற்
பட்டுந் தனிச்சுடர்போற்
பொங்கு மழகொழு கச்சிவ
கங்கைப் புறத்தினின்று
குங்குமக் கொங்கைச் சிவகாமி
காட்சி கொடுத்தனளே
18. மங்கலநாண்- தாலிச் சரடு; மங்கல சூத்திரம்; சசிதேவி மாங்கல்ய தந்து" (கந்தரலங்காரம்), தோடு - காதணிவகை; "தோடுடைய செவியன்" தேவாரம். சுட்டி - நெற்றியணிகலன்; நெற்றிச் சுட்டி. மாமுடி- கிரீடம், வில்வத்தார் - வில்வ மாலை. சிவகங்கை - தில்லைச் சிற்றம்பலத்துள்ள தீர்த்தம்; இந்நூலில் "சிவகாமியைச் சிவகங்கை படிந்து" (24) என வருதல் காண்க.
"தீர்த்த மென்பது சிவகங்கையே”-சிதம்பரச் செய்யுட் கோவை.
"சாரம் பலமுறை நூலுமி தேயெனச் சாற்றுமென்வி
சாரம் பலமுறை வேடரிற் கூடித் தளர்மனமா
சாரம் பலமுறை யார்சிவ கங்கைத் தடம்படிதி
சாரம் பலமுறை சாங்காறுங் கூத்துத் தரிசித்திடே".
(திருத்தில்லை யமகவந்தாதி -42.).
--------
19. கொடுக்கு முனது கருணை
முகத்தின் குறிப்பினைப்பார்த்
தடிக்கடி யென்னுயிர் நோக்குதல்
பார்சிவ காமியம்மே
இடிக்கிய பிள்ளை தனைத்தவ
றாதிரட் சிப்பதுதாய்க்
கடுக்குந் தகுதியன் றோஅஞ்ச
லஞ்சலென் றாண்டருளே.
19. இடிக்கிய பிள்ளை - இடுக்கிய பிள்ளை (அல்) கைக்குழந்தை. இரட்சிப்பது தாய் - காப்பாற்றுவது தாய். அடுக்கும் - ஒக்கும். கருணை - இரக்கம்; அறக்கருணை, மறக்கருணை என இரண்டு. நோக்குதல் பார் - காத்தருள். தவறாது - மாறாது. அஞ்சல் அஞ்சல். காத்தல் பொருள் பற்றிய அடுக்கு. முகத்தின் - முகத்தினால்; உருபு மயக்கம். குறிப்பினைப் பார்த்து - செய்கைக் குறிப்புக்களைக் கண்டு; "அடைந்தவர்களை அஞ்சேல் என்று இரட்சிக்கை கருத்தாவுக்கு முறையாதலாலே, அடைந்தவர்களை இரட்சித்தும், அடையாதவர்களை இரட்சியா திருப்பினும், வெறுப்பின்றியிருப்பன். (பாண்டி, விருத்தி.). "அஞ்ச லஞ்ச லென்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே" (கம்ப பால காண்).
------
20. ஆண்டருள் சேயென் றாபிர
மாதிக ளல்லல்சொல்லி
மூண்டிடு முன்சபை முன்றின்முன்
வந்தடி யேன்மொழிந்து
வேண்டிடும் புன்சொலு முன்செவி
கேட்க விரும்புங்கொல்லோ
தாண்டவர் மேவுபொன் னே சிவ
காம சவுந்தரியே.
20. சேய் என்று - சேய் போன்றவன் நான் என்பதால். ஆண்டு அருள் என்னை ஆண்டருள். அரி - திருமால். பிரம ஆதிகள் - பிரமன் முதலாகியோர். அல்லல் - துன்பம். முன்றில்- முற்றம்; இலக்கணப் போலி. புன்சொல் -குறைகள். தாண்டவர் - சிவபெருமான். 'கொல்' வினாப் பொருளில் வந்த இடைச்சொல். பொன்னே பொன் போன்றவளே.
"கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்" (அபி. அந்தாதி.7.)
-----
21. சவுபாக் கியசெல்வ ராயில்லஞ்
சேர்பவர் சார்சுகமுங்
கவுபீனங் கந்தை திருவேடம்
பூண்டுகை பாத்திரமாய்ச்
சிவகாமி பிச்சை சிதம்பரத்
தேற்றுண்ணுஞ் செல்வரின்பு
முவமானம் பார்க்கில் கடுகுபொன்
மேருவு மொத்திடுமே.
21. சவுபாக்கியம் -சௌபாக்கியம், மிகு செல்வம். இல்லம் சேர்பவர் - இல்லறத்தார். சார் சுகம் - அடையும் சுகம்; (இவையின்றி); கவுபீனம் - கோவணம்; கௌபீனம். திருவேடம்- சைவத் திருக்கோலம். கை பாத்திரம் -கையே பிச்சைப் பாத்திரமாக. கரபாத்திரர். சிவகாமி பிச்சை - சிவகாமி தரும் அருட் பிச்சை. செல்வர்-செல்வர்களாகிய அடியவர்; இன்பும் - பெறும் இன்பமும் உவமானம் பார்க்கில் - ஒப்பிட்டுப் பார்க்கும் போது.
'கடுகு ஒத்திடும்; பொன்மேரு ஒத்திடும்' என ஈரிடத்தும் கூட்டுக. மேரு என்பது மேரு மலையை; பொன்மலை. இப்பாடல் உவமையணி.
------
22. மொத்த வினையும் பருவமும்
பாத்துருக் கொண்டுமுன்னின்
அத்தமுந் தாளுமென் சென்னியில்
வைத்தரு ளைப்பிரியா
முத்தி கொடுக்குஞ் சிவகாமித்
தாயைமுன் னாண்மறந்து
பத்தியில் லாதுகெட் டேனே
கொடுமை பலபடைத்தே.
22. மொத்தம் - தொகுதி; கூட்டம். பாத்துரு - பாத்து உரு, ஐம்புல இன்பங்களின் வடிவு. அத்தம் - 'அஸ்தம்' திருக்கரம். முன்னின் - நினைத்தால். தாள் - திருப்பாதம். முத்தி - வீடுபேறு. தாயை- தாய் போன்றவளை; மறந்து - நினைவிலிருத்தாது.
இறைவனை மறந்தால் பிறப்பு ஏற்படும்; மறப்பிப்பவனும் அவனேயாகும். "என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல், சென்னி யில் வைத்த சேவக போற்றி" (திருவாசகம்); இக்கருத்து பாடல் 13 இல் கூறப்பட்டது காண்க. "ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே" (திருவாசகம்) எனவும் வருதல் அறிக.
------
23. படைப்போனை யும்புரப் போனையும்
முன்பு படைத்தளித்துத்
துடைப்போனைப் பெற்ற துணைவியைத்
தில்லையுட் டோற்றியசிற்
றிடைப்பா லுடைச்சிவ காமியைக்
காணவெண் ணாயிரங்கண்
உடைத்தாய்ப் பிறந்தில னேயவ
மேயிங்க ணுற்பவித்தே!
23. படைப்போன் - பிரமன்; புரப்போன் - திருமால். துடைப்போன் - இவர்கள் படைத்துக் காத்தவற்றை அழிப்போன் ஆகிய சிவன். பெற்ற - தலைவனாகப் பெற்ற; துணைவி - மனைவி; காண வணங்கி, அவள் உரு எழிலைக் காண்பதற்கு; எண் ஆயிரம். எட்டு ஆயிரம். கண் உடைத்தாய் - கண் உள்ளவனாக. இங்கண் இவ்வாறு, உற்பவித்தது அவம் - பிறந்தது வீண்.
"நாலாயி ரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே'' என்பது கந்தர் அலங்காரம்.
"சிற்றிடைக் கொல்கி நுடங்கும் திருவயிற் றாளொருத்தி
பெற்றெடுக் குந்திறல் பிள்ளைகள் மூவரம் மூவரையும்
கற்றிடச் சொன்ன தொழிலொரு மூன்றவ ரிற்கடைக்காற்
செற்றிடச் சொன்ன பிள்ளைக்கவ ளேயம்மை தேவியுமே!"
(சித்தரந்தாதி)
------
24. உற்பன மான உபதேச
முண்டுல கோர்க்கதுதான்
கற்பனை யல்ல சிவகாமி
யைச்சிவ கங்கைபடிந்
தற்ப மெனினு மியன்ற
பணிசெய் தடிபணிந்தாற்
பற்பல வூழி தவஞ்செய்த
பேறு பலித்திடுமே.
24. உற்பனமான - உற்பவமான; தோன்றிய, உபதேசம் - நல்லறிவு கூறல்; உலகோர்க்கு - உலக மக்கட்கு. கற்பனை- புனைந்துரை; அல்ல - அன்று (இல்லை). அற்பம் - சிறிது; இயன்ற பணி செய்து - முடிந்தவளவு தொண்டு செய்து, அடிபணிந்தால்-வணங்கினால். பற்பல - பலபல. ஊழி - நெடுங்காலம்; யுகங்கள். பேறு- பயன். பலித்திடும் - வாய்த்திடும்.
"அற்பங்கொ டுதிக்குமிறை யருடருமென் றனரென்றார்'' (கோயிற்புராணம்: பாயிரம். 21).
-----------
25. பலியேற்ற கையுமுன் மாலறி
யாப்பொற் பதாம்புயமும்
புலியூரிற் காட்டிநின் றாடும்
பிரானைப் புணருநித்ய
கலியாணி சுந்தரத் தாய்சிவ
காமியைக் கண்டுநித்தஞ்
சலியாது போற்றுநெஞ் சேமாயத்
தாயுட் சலித்திடவே.
25. பலி ஏற்ற கை. தாருகவன முனிவர்களின் மனைவியரிடம் முன்னர் பிச்சை ஏற்ற கைகள்; கைகளைக் கை என்றது தொகுதி ஒருமை. மால் அறியாப் பொற்பதாம்புயம் - திருமாலாலும் அறிய முடியாத பொன் போன்ற பாத தாமரைகள்; திருவடிகள். புணரும்- பொருந்தும். நித்ய கலியாணி- எப்போதும் அழியாத இளமையுடன் கல்யாணக் கோலம் கொண்ட உமை. சுந்தரத் தாய் - அழகு மிக்க அன்னை. நித்தம் - தினமும், நாடொறும். சலியாது - மனம் சுளிக்காது. சலித்திடவே - மனம் வெறுத்திட. மாயத்தாய்- ஒவ்வொரு பிறவியிலும் நம்மைப் பெற்றெடுக்கும் அழியுந் தன்மையுள்ள தாயர்.
------
26. சலித்தா லொருவர் துணையில்லை
யீங்கெனைத் தாங்குதற்குப்
புலிக்கான் முனிதொழும் பொன்னம்
பலத்துறு பூங்குயிலே
சிலைக்கா மனையெரித் தோரிடஞ்
சேர்சிவ காமியம்மே
கலித்தே யடர்தொல் வினைப்பகை
தீர்த்தெனை காத்தருளே.
26. சலித்தால் - வெறுத்தால். எனை - என்னை. தாங்குதற்கு- ஆதரிப்பதற்கு. புலிக்கால் முனி- புலிக்கால் கொண்ட வியாக்கிரபாத முனிவர். உறு - தங்கும். பூங்குயில்-பூங்குயில் போன்றவள். சிலை- வில்(கரும்பு). காமன் மன்மதன்; 'வான்கருப்பு வில்லி கணை தெரிந்து மெய்காப்ப."(நளவெண்பா97); “சிலைக்காமன் உடலெரிய'" அண்ணாமலையார் வண்ணம். எரித்தோன் - எரித்தவனாகிய சிவபெருமான்; காமதகனன். இடம் சேர் சிவகாமி- இடப்பாகம் சேர்ந்த சிவகாமி; சேர்சிவகாமி - வினைத்தொகை. கலித்து - தழைத்து. தொல்வினை- தொன்மையாகிய பழவினை; பண்புத்தொகை. வினைப்
பகை -உருவகம்.
-------
27. காத்த சிறையைக் கடைபோகக்
காப்பது காப்பவர்கட்
கேத்த முறைமையன் றோசிவ
காமியம் மேயுனக்கென்
வார்த்தையி னாற்பிர யோசன
மேதிம வானுடைய
கோத்திரம் வாழ வெனையாள
நாளுங் குறிக்கொண்மினே.
27. காத்த- காத்திருந்த. சிறையை - அடியேனை. போக - கடைத்தேறுமாறு. காப்பது- பாதுகாத்தல். காப்பவர்கட்கு - பாதுகாப்பவர்கட்கு. ஏத்தமுறைமை -ஏற்ற நெறியாகும். அன்றோ - அல்லவா. பிரயோசனம்- பயன். ஏது - இல்லை. இமவானுடைய கோத்திரம் வாழ - இமயமலை மன்னனுடைய குலம் சிறக்க. எனை ஆள நாளும் குறிக்கொள்மின் - என்னை ஆட்கொள்ள எப்போதும் கருத்திற் கொள்வாயாக. ஏ - ஈற்றசை.
---------
28. மின்னே ரனையபொய் மெய்யினை
நானென்று மேற்றுமகிழ்ந்
தென்னேயென் னேயுட் களித்தநெஞ்
சேயினி நீதொடர்ந்து
நன்னேயம் வைத்துள் ளுருகிக்
கசிந்தென்றும் நல்வரங்கேட்
டன்னேயன் னேயென் றழைசிவ
காமியை ஆதரித்தே.
28. மின் - தோன்றி மறையும் தன்மை கொண்ட மின்னலுக்கு. நேர் அனைய - சரியான தன்மையினையுடைய. பொய் மெய் - பொய்யான உடம்பினை. என்னே என்னே - வியந்து உவகைப் பொருளில் வந்த அடுக்கு. உட்களித்த - உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்த. அன்னே அன்னே - தாயே, தாயே- விளிப் பொருள், அடுக்கு. ஆதரித்து - அன்பு செய்து.
மின் நேர் அனைய பொய்மெய் - உவமை ; நான் என்றும்- நான் என்ற அகம்பாவத்துடனும்; ஏற்று - கொண்டு. இப்பாடல் நெஞ்சுக் குரைத்தல்.
-----------
29. ஆதரித் துன்னை அழைப்பது
கேட்டஞ்ச லென்றுன்பதப்
போதரத் தாலறுத் தென்னெஞ்
சிரும்பைப் பொடித்தருள்வாய்
சீதரர்க் குத்தங்கை போலும்வந்
தாட்கொண்ட தெள்ளமுதே
நீத ரிடத்துறை யுஞ்சிவ
காமிநன் னேரிழையே.
29. அஞ்சல் - அஞ்சாதே. உன் பதப் போது அரம் - உன்னுடைய பாதமாகிய மலர் போன்ற அரம். என் நெஞ்சிரும்பை - என்னுடைய நெஞ்சாகிய இரும்பினை. பொடித்தருள்வாய்- அறுத்துப் பொடியாக்குவாயாக. சீதரர் - திருமால்.
"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" (13), "செங்கண் மால் திருத்தங் கைச்சியே" ('அபிராமி அந்தாதி' 61). "உன்பதப் போதரத்தாலறுத் தென்னெஞ் சிரும்பைப் பொடித்தருள்வாய்" என வந்தது ''உவமை உருவக அணி.
------
30. நேராய் வினையொப்பு செய்தா
ணவத்தையும் நீக்கியுண்ணின்
றாராத பேரின் பளிக்க
வலியவந் தாண்டபொன்னைத்
தாரார் குழற்சிவ காம
சவுந்தரத் தாயைமறந்
தூரார்க் குழைத்து விடாமைநெஞ்
சேசெய லோய்ந்துநில்லே.
30. வினை ஒப்பு- நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினையும் சமமாக ஒத்து வருவதை இருவினை ஒப்பு என்பர். ஆணவம் - தான் பெரியவன் என்னும் எண்ணம். உண்ணின்று உள்ளிருந்து. "உண்ணின் றுடற்றும் பசி" (குறள் 3.). தார் ஆர் குழல் -கண்ணி மாலை பொருந்திய கூந்தல். விடாமை - விடாமல், விடாது; மை - வினையெச்ச விகுதி. செயலோய்ந்து நில் - வாளா இரு.
'வலிய வந்தாண்ட' - வந்தாட்கொண்ட (29.) பெரிய நீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்" (திருவிசைப்பா). "நின்பாத மென்னும், வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டுகொண்ட நேசத்தை என்சொல்லுவேன்" (அபி. அந்: 32).
--------
31. நில்லா விழுசுவ ரைப்பூசிக்
கோலம் நிறுத்துவர்போல்
பொல்லா முடைப்புழுக் கூட்டை
நிலையென்று போற்றிநிற்குங்
கல்லாப் புலைநெஞ்ச மேசிவ
காமியைக் கண்டுபணிந்
தில்லாமை சொல்லித் தொழுதிரு
வுள்ள மிரங்கிடவே.
31. நில்லா விழுசுவர் - நில்லாமல் விழுகின்ற நிலையில் உள்ள சுவர். கோலம் பூசி-கோலம் இட்டு அலங்கரித்து. நிறுத்துவர் போல் - நிலைபெறச் செய்பவரின் அறியாமைச் செயல்போல். முடைப்புழுக்கூடு -உடல். இல்லாமை - குறைகள். இரங்கிட - இரங்குமாறு, இரங்கும் வண்ணம்.
------
32. இரவா ரிரப்பவர்க் கீவார்
கனசெல்வ மெய்தித்துன்பில்
விரவார்நல் லோர்திருக் கூட்டம்
பணிய விளங்குமன்பு
கரவார் உமைசிவ காமி
யருளைக் கடைப்பிடித்துத்
திரமாய்ப் பணிசெய்திங் குய்யமுன்
னாட்டவஞ் செய்தவரே.
'முடையார் புழுக்கூடு" (திருவாசக திருச்சதகம். 56.) என வருதல் காண்க. இப்பாடல் கருத்து பாடல் 28 இலும் உள்ளமை காண்க. பாடலின் முதலடியில் விரியுவமை வந்தது: உவமையணி. "இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற்சென்றிழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்" - (அபி: அந்: 54.)
32. இரவார் - பிறரிடம் சென்று எதனையும் கேட்டுப் பெறார். இரப்பவர்க்கு ஈவார் - தம்மிடம் வந்து எதனையும் கேட்பவர்க்கு அளிப்பார். கனம் - மிகுதியான. விரவார் - கலக்கமாட்டார். கரவார் - ஒளியார். திருக்கூட்டம் - அடியார் சேர்க்கை. பணிய விளங்கும் - பணிந்து தொழ இவர் சிறந்து விளங்குவார். திரமாய் - நிலையாக (ஸ்திரம்). முன்னாள் - முற்பிறப்பில். "இரப்பவர்க் கீய வைத்தார், ஈபவர்க் கருளும் வைத்தார்" (திருநாவு: தேவாரம்: 4ஆம் திருமுறை).
---------
33. செய்யுஞ் செயலு முரையு
நினைவுந் திகழ்கொலையும்
பொய்யுங் கொடுமையு மாய்ப்போக்கி
வாழ்ந்த புலையனுக்கு
உய்யும் வகையுமுண் டேசிவ
காமி உமைஅபயக்
கையும் வரதமுங் கண்டுகொண்
டேயுட் களித்தனனே.
33. செயலும் - செய்கையும்; (கொலை). உரையும் - சொற்களும்; (பொய்). பொய் - உண்மையற்ற சொல். கொடுமை- துன்புறுத்தல்; (நினைவு). உய்யும் - பிழைக்கக்கூடிய. உண்டே- உண்டு. அபயக்கை - காக்கும் திருக்கரம்; அபயஹஸ்தம். வரதக்கை - வரந்தரும் திருக்கரம்; வரத ஹஸ்தம். உட்களித்தனன் - மனம் மகிழ்ந்தேன்.
'வினைவேறு சொல்வேறுபட்ட' நிலையினைச் செய்யும் செயலும் உரையும் என்னும் சொற்கள் விளக்கின. செயலும், உரையும், நினைவும் முறையே கொலையும், பொய்யும், கொடுமையும் என்றார்.
------
34. களித்தே னுலையுறும் மாமாயைப்
பொன்முன் கடுந்துயர்பெற்
றொளித்தே நரகிற்பின் பென்போலும்
பாவிக ளுண்டுகொல்லோ
அளிதேர்ந் துறுங்குழ லாய்ச்சிவ
காமியம் மேயுன்னருள்
வெளித்தேனுக் கெந்த மதிகொண்டிந்
நாள்நான் விரும்பியதே.
34. மாமாயை - பெரிய மாயையாகிய மயக்கம். உலையுறும் பொன் - உலைவுறும் (அல்) கெடும் பொன். பொன்முன் - பொன் போல். அளி தேர்ந்துறுங்குழல் - மதுவைத் தேர்ந்துகொள்ளும் வண்டுகள் அடையும் குழலினையுடையவளாகிய சிவகாமி. வெளித் தேன் - வெளியாகிய தேன் (வெளி - பரவெளி, ஆகாயம் - தில்லை); உருவகம். இந்நாள் - இன்று. கடுந்துயர் - கடுமையாகிய துயர், பண்புத்தொகை.
மாமாயைப் பொன் என்றது அழியுந் தன்மையுள்ள செல்வங்களை. பஞ்ச பூத க்ஷேத்திரங்களுள் தில்லை ஆகாய க்ஷேத்திரம். ''தில்லை வெளியிலே கலந்து கொண்டாலவர் திரும்பியும் வருவாரோ' - நந்தன் சரித்திரக் கீர்த்தனை.
35. விரும்பிடில் வேம்புங் கரும்பா தல்
போனீ விரும்பிலொரு
துரும்புதூ ணாவது போலடி
யேன்முன் றொண்டர்பெறும்
அரும்பயன் பெற்றுய் கிலன்சிவ
காமியம் மேநீசும்மா
விருந்திடிற் றுன்ப மிடங்கொண்டென்
னுள்ளத் திருந்திடுமே.
35. விரும்பிடில் - மனம் வைத்து விரும்பினால். வேம்பும் - வேப்பங்காயும். கரும்பாதல் போல் - கருப்பஞ்சாறு ஆவது போலவும். துரும்பும் - உதவாத சிறு துரும்பும். தூணாவதுபோல் - தாங்கும் பெரிய தூண் போலவும். முன் தொண்டர் - முன்னுள்ள தொண்டர்கள். அரும்பயன் - அரிய பயன்கள்; பலன்கள். உய்கிலன் - பேறு பெறவில்லை. இடங்கொண்டு - வேரூன்றி. "வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் (குறுந்தொகை: 196) என்பது காண்க.
------
36. இருந்தேன் புவிக்கொரு பார
மதாயெவ் வகைசெயினுந்
திருந்தேன்தில் லைச்சிவ காமி
யருளிற் செயலறவும்
பொருந்தே னிருந்தும் பணியே
னவள்சொலும் போதத்தின்பும்
அருந்தே னினியுன்னை யென்னென்று
சொல்லி அறைகுவதே.
36. புவி - உலகம். பாரம் - சுமை. எவ்வகை செயினும் - என்ன செய்தாலும்.
செய்தாலும். செயலறவும் - வாளா இருக்கவும். அவள் சொலும் - அவள் உரைக்கின்ற. போதத்து இன்பும் - ஞானச் சுவையும். அருந்தேன் - உட்கொள்ளேன். உன்னை - நெஞ்சே உன்னை. என்னென்று - என்னவென்று. சொல்லி-அழைத்து; அறைகுவது - அறிவுரை கூறுவது.
----------
37. அறைகூவிப் பின்தொடர்ந் தாண்டபொற்
றாளையும் அன்றணைந்த
கறைபோகப் பையக் கழுவி
வளர்த்திட்ட கையிணையும்
பிறைமேவு தில்லைச் சிவகாமி
யைநினைந் தெண்ணியெண்ணி
மறவா திருக்கில்நெஞ் சேஉனை
நான்றினம் வந்திப்பனே.
37. அறைகூவி கூப்பிட்டு. பின் தொடர்ந்து - பின்னர் தொடர்ந்து வந்து. ஆண்ட - ஆட்கொண்ட. பொற்றாளையும் - பொன்போன்ற பாதங்களையும். அன்று அணைந்த - முன் வந்து பற்றிக் கொண்ட. கறைபோக - தீமைகள் அகலுமாறு. பைய - மெல்ல. கழுவி வளர்த்திட்ட கையிணையும் - தூய்மைப்படுத்தி வளர்த்த கைகளையும். நினைந்து - மனதில் நினைத்து. எண்ணி எண்ணி - கருதிப் பார்த்து; மிகுதி பற்றிய அடுக்கு. மறவாதிருக்கில்- மறவாமல் இருப்பின். வந்திப்பன் - வாழ்த்துவன்; வணங்குவன்.
------
38. வந்தித் திடுங்கையும் வாழ்த்திடும்
நாவு மகிழ்ந்துநைந்து
சிந்திக்கும் நெஞ்சும் சிவகாமித்
தாய்பொற் சினகரத்தைச்
சந்தித்துச் சூழும் விழியும்
பதமுந்தற் போதமற்ற
புந்திச் சுகமும் பெறமால்கொண்
டேங்கிப் புலம்பினனே!
38. வந்தித்திடும் கை - வணங்கும் கைகள். வாழ்த்திடும் நா - வாழ்த்துகின்ற நாக்கு. நைந்து - உருகி; சிந்திக்கும் நெஞ்சு - வணங்கும் நெஞ்சு. பொற்சினகரம் - பொன்கோயில். சந்திக்கும் - காணும். சூழும் - சுற்றிவரும். விழியும் பதமும் - கண்களும் கால்களும். தற்போத மற்ற - தான் எனும் ஆணவமற்ற. புந்திச் சுகம் - அறிவுச் சுகம். மால் - மயக்கம்.
"கருவையிற் சினகரம் புகுந்து" (திருக்: கரு: ப: பத். அந்தாதி:86). 'சினகரத்தைச் சந்தித்துச் சூழும் விழியும், சினகரத்தைச் சந்தித்துச் சூழும் பதமும்' - என இடைநிலை விளக்காகவும் கொள்ளலாம். பெற, மால்கொண்டு, ஏங்கிப் புலம்பினன் என வினை முடிவு கொள்க.
-------
39. புலர்ந்திரு ணீங்கி விடிந்திடு
நாட்புலி யூர்நடுவுண்
மலர்ந்தபொன் மன்றையும் நம்சிவ
காமி வடிவையும்பொற்
சிலம்பலம் பத்திருக் கூத்தாடு
வோரையுஞ் சேவைசெய்து
நலந்திகழ் முத்தியிங் கேபெறும்
நாளெனும் நான்மறையே.
39. நடுவுண் - நடுவில். மலர்ந்த பொன்மன்று - தோன்றி விளங்கும் பொன்மன்றம். வடிவு - திருவுருவம். பொற்சிலம்பு பொன்னாலாகிய சிலம்பு. அலம்ப -ஒலி செய்ய. திருக்கூத்தாடுவோர் - சிவபெருமான். செய்து - செய்தால். முத்தி இங்கே பெறும் நாள் - இவ்வுலகிலேயே முத்தி பெறும் நாள். நான்மறை - நான்கு மறைகளும்; முற்றும்மை விகாரத்தால் தொக்கது. எனும் - என்று கூறும்.
------
40. நான்மறை போற்றுஞ் சிதம்பர
மென்றும் நடம்புரிபொற்
கான்மலர் மேவுசிற் றம்பல
மென்றுங் கருங்குழற்செந்
தேன்மொழி யேசிவ காமியம்
மேயென்றுஞ் செப்பியபின்
னூன்மறைப் பற்று விபுவாகி
நின்றுயி ரோங்கியதே.
40. நான்மறை போற்றும் - நான்கு மறைகளாலும் பாராட்டப் பெறுகின்ற. என்றும்- எனவும். பொற்கான்மலர் - பொன்போன்ற திருவடித்தாமரை. மேவும் - பொருந்திய. சிற்றம்பலம் - சிற்சபை விபுவாகி- விரிந்து. ஓங்கியது உயிர் - உயிரானது உயர்ந்தது.
-------
41. ஓங்காரத் துட்பொரு ளானதுந்
தன்சிரத் துச்சியின்மேற்
பாங்காய் நடிப்பது மானந்தத்
தாண்டவம் பார்த்துநல்லோர்
தூங்காமற் றூங்கும் வெளியு
மொளியெயில் சூழ்ந்ததில்லை
கோங்கார் முலைச்சிவ காமியென்
றேமறை கூப்பிடுமே.
41. சிவகாமி - அன்னை சிவகாமி. ஓங்காரத் துட்பொருள் - 'ஓம்' எனும் பிரணவத்தின் உட்பொருள். மறைதன் சிரத்துச்சியின் மேற்பாங்காய் நடிப்பதும் - வேதத்தின் முடிமீது நடிப்பவளும்; தூங்காமல் தூங்கும் வெளி - யோகநித்திரை; அறிதுயில் கொள்ளும் இடம். "தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ தெக்காலம்" -தாயுமானவர். "சிதம்பர நடனங் கொள்ளும் செல்வியே" (சௌந்தரியந்தாதி.97) எனவருதல் காண்க.
------
42. கூப்பிடு வேன்சிவ காமியென்
றேகொடுங் கூற்றுவன்கைக்
காப்பிடு வேன்அலன் மன்றுநின்
றாடுமெய் யானந்தத்தேன்
சாப்பிடு வேன்களித் துக்குதித்
தாடுவேன் சார்மலத்தைத்
தீப்படு வாயென்று நோக்கிவை
வேன்றில்லை சேர்ந்தபின்னே.
42. கொடுங் கூற்றுவன் - கொடுமைமிக்க எமன், கைக்கு ஆப்பிடுவேன் அலன் - அவன் கைக்கு அகப்படமாட்டேன். ஆனந்தத்தேன் - ஆனந்தக் கூத்தாடும் தேன் போன்ற சிவன். ஆடுவேன் - ஆட்டமிடுவேன். சார் மலம் - சாரும் மும்மலம். வைவேன் - இகழ்வேன். தில்லை சேர்ந்த பின்னே, கூப்பிடுவேன் ஆப்பிடுவேனலன், சாப்பிடுவேன், ஆடுவேன், வைவேன் என இயைக்க.
-------
43. பின்னிற்க செய்யுது முன்னின்றின்
பூட்டிப் பிழைபொறுத்தென்
றன்னையு மாட்கொண்ட வேளையன்
றோதவ ளாம்புயையோ
டன்ன நடைத்திரு வேற்று
மருட்சிவ காமியையும்
முன்னி உலகத் தவர்பேதைப்
பெண்ணென் றுரைப்பதுவே.
43. செய்யுதும் - செய்வோம். என்றன்னையும் - என்னையும். தவளாம்புயை - வெண்டாமரையில் வீற்றிருப்பவள்; சரசுவதி. அன்ன நடைத்திரு - அன்ன நடையுள்ள இலக்குமி. ஏற்றும் (ஏத்தும்) - துதிக்கின்ற. முன்னி - நினைத்து. பேதைப்பெண் ஒன்றுமறியாள்.
------
44. பதுமா சனனும் படைப்பைவிட்
டானெமன் பாசதண்டம்
இதுவே னினியென் றெறிந்து
துயின்றன னின்பவண்டூர்
புதுமா மலர்க்குழற் றாய்சிவ
காமிபொற் றாளிணையே
கதியாகு மென்றென் மனந்தேறிக்
கொண்டதைக் கண்டபின்னே.
தந்ததுன்றன்னை, கொண்டதென்றன்னை என்பது போல் 'என்றன்னை' எனச் சொல்லாட்சி காண்க. 'தவளமுளரி மின்னே' (சரசுவதியந்தாதி. 21). "அம்புயாதனத்து அம்பிகையே" (அபி. அந்:36) என வருதல் காண்க.
44. பதுமாசனன் - தாமரைமேல் வீற்றிருப்பவனாகிய பிரமன். பாசதண்டம் - பாசக் கயிற்றையும் தண்டாயுதத்தையும். துயின்றனன் - உறங்கினன். கதியாகும் - துணையாகும். கண்டபின் கண்டதனால் 'கண்டபின்னே' என்பதனைக் கடைநிலை விளக்காகக் கொள்க.
-------
45. கண்டுளி கொண்டுடல் கம்பித்து
விம்மிக் கனபுளகங்
கொண்டுநின் றாடிக் குதித்தசை
யாநிலை கொள்ளவுயிர்
மண்டிய பேரின்பத் துள்ளாகித்
தூங்க வரந்தருவாய்
புண்டரி கப்புரம் வாழ்சிவ
காம புராதனியே.
45. கண்துளி - கண்ணீர். கம்பித்து – உடல்நடுங்கி, விம்மி - நெஞ்சு விம்மப் பெற்று. கனபுளகங் கொண்டு - மயிர்ச் சிலிர்ப்புக் கொண்டு. நின்றாடி - நின்றும் பின்னர் ஆடியும், குதித்து - உயரக் குதித்தும். அசையாநிலை - மனம் மாறுபடாத நிலை. மண்டிய - மிகுந்த. பேரின்பம் - வீடுபேறு. தூங்க -உறங்க. புண்டரிகப்புரம் - புலியூர்; புண்டரிகம் - புலி. புராதனி - பழமையானவள்.
பேரின்பத்துள்ளாவாரின் குணத்தன்மைகள் கூறப்பட்டுள்ள படியால் இது, 'குணத்தன்மை நவிற்சியணி".
------
46. தனியே பலவுரு வேநிறை
வேசிவ சங்கரியே
கனியே கருணைக் கடலமு
தேசிவ காமியம்மே
முனியே லெனைமுன்னைப் பற்றினை
முற்று முனிந்துவந்தேன்
இனிநாளுந் தஞ்சமுன் றாளன்றி
வேறில்லை யென்றனக்கே.
46. தனியே -ஒன்றாகவும். பலவுருவே - பலவடிவினளாகவும். நிறைவே - எங்கும் நிறைந்தவளாகவும். கனியே -பழச்சுவை போன்றவளே. கருணைக்கடல் அமுதே - கருணையாகிய கடலில் தோன்றிய அமுதம் போன்றவளே. முனியேல் - முனிவுறாதே. முன்னைப் பற்று முற்றும் - பழவினைகள் அனைத்தையும். முனிந்துவந்தேன் - கோபித்தேன். தஞ்சம் - அடைக்கலம்.
-------
47. என்றைக்கும் முத்தியி லான்மாவை
வைப்பதற் கிச்சைகொண்டு
மன்றிற் சிறந்த சிவகாமித்
தாய்நிற்க வாழ்வுபெற்று
தென்றிக்கை நோக்கிநின் றாடும்
பிரான்றனைச் சென்றுகண்டும்
பொன்றிப் பிறப்பமென் றென்கொனெஞ்
சேநீ புழுங்குவதே.
47. முத்தி- மோட்சம். இச்சை -ஆவல். மன்று - கோயில். சென்று கண்டும் - போய்ப் பார்த்தும். பிறப்பம் - பிறப்போம்; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று. என்கொல் -ஏன்; கொல் - ஐயப்பொருளில் வந்தது.
சிவபெருமான் தென்றிக்கை நோக்கி நின்றாடுதல் கூறப்பட்டது. 'சிவகாமி மன்றில் நிற்க, அதனால் வாழ்வுபெற்று, தென்திக்கை நோக்கிச் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைக் கண்டபின்னும் பிறவி உண்டு என நெஞ்சமே ஏன் புழுங்குகின்றாய்- பிறவி இல்லை" என்பது பொருள்.
------
48. புழுத்தலை நாயினைப் போலைம்
புலன்றொறும் புக்கழுந்தும்
அழுக்குடை யேனுக் கருளு
மொழிக்கும் அயில்விழிக்குந்
தழிற்கை மலர்க்குஞ் சிவகாமித்
தாய்முகத் தண்மதியங்
கொழிக்கு மருட்குமென் றாலோ
அனந்தங்கை கும்பிடவே.
48. நாயினைப் போல- நாய் போல. ஐம்புலன்றொறும் - ஐம்புலன் முழுதும். புக்கு அழுந்து அழுக்குடையேன் - புகுந்து அதிலேயே மூழ்கிய குற்றங்கள் உடையேன். அயில்விழி - வேல் போன்ற விழி. முகமதியம் - முகமாகிய மதி. தளிர்க் கை மலர் -கையாகிய மலர். (தழிற்கை எதுகை நோக்கி 'ளகரம்' ழகரமாயிற்றுப் போலும்.) என்றாலோ - என்றால்; 'ஓ' அசை. அனந்தங்கை - அளவற்ற கைகள். கும்பிடவே - கும்பிட வேண்டும்.
'ஐம்புலன்களில் எல்லாம், தனித்தனி நிறைந்துள்ள அழுக்குகளை (குற்றங்களை) உடைய எனக்கு அருளும் சிவகாமியின் மொழிக்கும், விழிக்கும், கைமலருக்கும், முகத்துக்கும் கும்பிட என்றால் அனந்தம் (பல) கைகள் வேண்டும், என்பது பொருள். "சிவகாமியைக் காண வெண்ணாயிரங்கண் உடைத்தாய்ப் பிறந்திலன்" என வரும் (23) இந்நூல் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.
-------
49. கும்பிடு மென்கை கொடுக்கு
மவள்கை குறைவறவே
நம்பிடு மென்னெஞ்சிற் றங்கு
மவள்மனம் நற்கனக
வம்பிடுங் கொங்கைச் சிவகாமி
பாதம் வழங்கொளியால்
வெம்பிடும் பாச மதுநின்று
காயும் வெயிலெனவே.
49. குறைவறவே - குறைவில்லாமல். கனகம் - பொன். வம்பு - முலைக்கச்சு. பாதம் - பாதங்கள். ஒளியால் - ஒளியினால். பாசமது- பாசம். வெம்பிடும் - வருந்திடும்; பட்டுப் போகும். வெயிலென - வெயில் போல.
"நின்று காயும் வெயில் எனவே சிவகாமி பாதம் வழங்கு ஒளியால் பாசம் வெம்பிடும்" எனக் கொண்டு கூட்டுக. "என்பி லதனை வெயில் போலக் காயுமே, அன்பி லதனை அறம்" என்னும் குறட் கருத்தும் ஒப்பு நோக்குக.
------
50. வெயிலாற் பயனிலை யேபகற்
கூகைக்கு மிக்கமலத்
துயிலாய்த் திரிபவர்க் கின்பமிங்
கேதுநற் றூய நிறக்
கயிலாயச் செல்வி திருத்தில்லை
வாழ்சிவ காமியெனும்
மயிலாற் பெறுவர்மெய் யன்பர்பே
ரின்பெனு மாபொசிப்பே.
50. வெயில் - சூரிய ஒளி. பயனிலை - ஏதும் உதவியில்லை. கூகைக்கு - கோட்டானுக்கு. பகல் - பகலில். மலத்துயிலாய்த் திரிபவர் - மலமாகிய இருளில் தூங்கிக் கனவிற் றிரிபவர்களுக்கு. இன்பமிங்கேது - இவ்வுலகிற் சுகமில்லை. கயிலாயச் செல்வி - இறைவி. மயில் - மயில் போன்றவள். மெய்யன்பர்க்கு - உண்மை அடியவர்களுக்கு. மா - பெரிய. பொசிப்பு - சிறந்த உண்டியாகும்.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" (481).
"இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்" (851).
என்னும் இருகுறட் கருத்துக்கள் இப்பாடலில் உள்ளன.
-------
51. பொசிப்பாரைப் பார்த்துப் பெருமூச்
செறிந்து புறம்பிருந்து
பசிப்பாரை யொத்திருந் தேங்கி
விடாமற் பரசுகத்தில்
வசிப்பாயென் றென்னையும் வாழ்விக்க
வேண்டுமுள் வஞ்சமெல்லாம்
நசிப்பாக்கி யாட்கொண் டிடுஞ்சிவ
காமநன் னாரணியே.
51. பொசிப்பார் - உண்பவர். பெருமூச்சு எறிந்து - ஏங்கிப் பெருமூச்சு விட்டு. புறம்பிருந்து - வெளியே இருந்து. பசிப்பாரை யொத்து இருந்து ஏங்கி விடாமல் - பசிப்பவர் உணவிற்காக ஏங்குவது போல் ஏங்கிவிடாதவாறு. பரசுகம் - பசி, தாகமற்ற வீடு பேற்று இன்பம். நாரணி - நாராயணனுடைய சகோதரியாதலின் நாராயணி என்ற பெயர். உள் வஞ்சம் - நெஞ்சகந் தோன்றும் வஞ்சகச் சொற்கள். நசிப்பாக்கி - கெடுத்து; நசிக்கச் செய்து.
------
52. நாரணி யைச்சிவ காம
சவுந்தர நாயகியைப்
பூரணி யைத்திருத் தில்லைக்
கரசியைப் போற்றுமருட்
காரணி யைப்பணிந் துய்யா தஞ்
ஞானத்தைக் கற்றுமெய்போற்
கோரணி யான சமயிக
ளென்கொல் குழறுவதே.
52. பூரணி - உமை. தில்லைக்கரசி - தில்லைக்கு அரசி போன்று விளங்குபவள். அருட்காரணி - அருளுக்குக் காரணமாக விளங்குபவள். கோரணியான - கேலிக்கூத்து நிறைந்த. சமயிகள் - புறச் சமயவாதிகள். குழறுவது - பேச்சுத் தடுமாறுவது. மெய்போல் - உண்மையைப் போல; ஒப்பில் போலி.
"அபிராமி சமயம் நன்றே" (அபி. அந்: 94) என்பதை யொட்டிச் சிவகாமியின் சமயம் உயர்ந்தது எனக் கூறப்பட்டது.
-------
53. குழலொலி யாழொலி தன்னினும்
பெற்ற குழந்தைபுன்சொன்
மழலை யினிதென்று கேட்பது
போன்மதி யொன்றுமில்லேன்
மொழியு மொழிகளெல் லாங்கேட்
டிரங்கி முதிர்கதிக்கு
வழியெளி தாய்க்கொடுத் தாள்சிவ
காம மனோன்மணியே.
53. குழல் ஒலி - குழலோசை. யாழொலி - யாழிசை; குழலுக்குப் பின் யாழைக்கூறும் மரபு "குழல்வழி நின்றதுயாழ்" (சிலம்பு) என்பதனால் அறிக. புன்சொல் -புன்மையாகிய சொல்; பண்புத்தொகை. மழலை - இளஞ்சொல், குதலைச்சொல். தாய் போல் - தாயைப்போல, எல்லா உயிர்க்குந் தாயாகிய சிவகாமி. மொழியும் மொழிகள் - மொழிகின்ற சொற்கள், பெயரெச்சத் தொடர். முதிர்கதி - மோட்சம். மனோன் மணி- உமை; "வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி” (அபி. அந்: 5).
''குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" (66) என்னும் குறட் கருத்து அமைந்துள்ள பாடல்.
------
54. மனிதருந் தேவரு மற்றுமுள்
ளோர்களும் வந்துநின்று
பனிமலர் தூவித் தொழுஞ்சிவ
காமி பதாம்புயமே
இனிய பொருளென்று கண்டதல்
லாற்றில்லை யெய்தியபின்
கனமென் றுணர்பொரு ளெங்கெங்கும்
தேடியுங் கண்டிலனே
54. பனிமலர் - குளிர்ந்த மலர். பதாம்புயம் - பாதமாகிய தாமரை; உருவகம். பதம் + அம்புயம் - பதாம்புயம்; தீர்க்கசந்தி, கனம் - பெரிய. எங்கெங்கும் - எல்லாவிடங்களிலும்.
"மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே" (அபி: அந்: 4) என வருதல் காண்க. மென்மையான சிவகாமி அன்னையின் திருவடித்தாமரை இனிய பொருள் என்று கண்டு தில்லை எய்தியபின், பாறை போன்ற பளுவான பொருள் என்று உணரும் பொருள் எதுவுமே காணப் பெறவில்லை; எல்லாம் பளுவற்றதாகிவிட்டது.
-------
55. கண்டங் கறுத்த கடவுளைக்
காட்டிக் கசிந்துதொழுந்
தொண்டரை வீட்டில் விடுஞ்சிவ
காமி துணைமலர்த்தாள்
உண்டென்று நம்பின பேர்துயர்
போக்கு முயர்ந்துதுன்பம்
மண்டும் படிக்கு வளர்க்கும்
இகழ்ந்த மனத்தினர்க்கே.
55. கண்டங் கறுத்த கடவுள் - நீலக் கழுத்தினையுடைய சிவன்; நீலகண்டன். தொண்டர் - தொண்டுசெய்பவர்; அடியவர். வீட்டில் - மோட்சத்தில். விடும் - கொண்டு சேர்ப்பிக்கும். துணை மலர்த்தாள் - நம்பினவர்க்குத் துணையாகிய மலர்போன்ற பாதங் கள்; மலர் போன்ற துணைத்தாள்.
'துணைமலர்த்தாள்' உண்டென்று நம்பினபேர் துயர்போக்கும் எனவும், இகழ்ந்த மனத்தினர்க்கு உயர்ந்து மண்டும்படிக்குத் துன்பம் வளர்க்கும் எனவும் பொருள் இயைக்க.
------
56. மனக்குரங் கேகொள்ளி வட்டமொத்
தைம்புல வாதனையில்
எனைக்கொடு சுற்றித் திரிந்தனை
யேயினிப் பாருதில்லை
வனச்சிவ காமி யருட்கயிற்
றால்கட்டி வஞ்சமுற்ற
உனைச்செம்பொன் மன்றுள்வைத் தாட்டுவ
னெங்கினி யோடுவதே.
56. கொள்ளி வட்டம் - நெருப்பு வட்டம். மனக்குரங்கு - மனமாகிய குரங்கு; உருவகம். இனிப்பாரு - இனிமேல் ஆகட்டும். அருட்கயிறு - அருளாகிய கயிறு; உருவகம். வஞ்சமுற்ற - வஞ்சனை கொண்ட. உனை உன்னை, விகாரம். பொன் மன்றுள் பொன்னம்பலத்துள்; வைத்து ஆட்டுவன் - இருக்கச் செய்து ஆட்டம் காட்டுவேன்.
"பொருப்புவட்ட மான நகிற் பூங்கொடியீர் இந்த நெருப்புவட்ட மான நிலா” (தனிப்பாடல்). "திரிந்தனையே, மனக்குரங்கே! அருட்கயிற்றால் கட்டி, மன்றுள் வைத்து ஆட்டுவன்" என உருவக வணி.
-------
57. ஓடிய கானலை நீரென்
றெனக்குதித் தோடியென்றும்
வாடிய மானெத் தலைந்தவென்
தாக மறமலர்ந்த
சூடகக் காந்தளும் பாடகக்
கஞ்சமும் தோன்றவளர்
பீடுறுந் தில்லைச் சிவகாமி
தேனுணப் பெற்றனனே.
57. ஓடிய கானல் - மேன்மேல் அருகிச் சென்றுகொண்டிருந்த பேய்த்தேர்; பெயரெச்சத் தொடர். "பூத்தாரும் பொய் கைப் புனலிதுவே யெனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதை" (திருவாசகம் திருத்தோணோக்கம்). தாகம் அற - நீர் வேட்கை நீங்குமாறு. சூடகம் - கை அணிகலன். பாடகம் - ஒருவகைக் கால் அணிகலன். பீடுறும் - சிறப்புப் பொருந்திய.'ஏ' - ஈற்றசை; தேற்றமுமாம்.
இதில் உபமேயம் வேற்றுமைப்படுத்தப்பட்டு அதிகம் சொல்லப் பட்டதால், வேற்றுமையணி.
------
58. பெற்றவ ளாய்ப்பித்துக் கொண்டவென்
போற்பித்துக் கொண்டுபின்னே
யுற்றவ ளாஞ்சிவ புண்ணிய
நன்மருந் தூட்டிமுன்னோய்ப்
பற்றறுத் தாண்டு சிவகாமி
நேயம் பரிந்தருத்தக்
கற்றவ ளாஞ்சிவ காமிக்கென்
செய்யுமென் கன்னெஞ்சமே.
58. பெற்றவளாய் - தாய்போல். பித்துக் கொண்ட - ஆசை கொண்ட. என்போல் - என்னைப் போலவே. பித்துக் கொண்டு - ஆசை கொண்டு. சிவபுண்ணிய நன்மருந்து - சிவனருள் எனப்படும் நல்ல மருந்து. ஊட்டி - உண்பித்து. முன்னோய்- வினையாகிய முன்னோய். பற்றறுத்து - பிடிப்பை நீக்கி. நேயம் - அன்பு. அருத்த - உண்பிக்க. கற்றவள் - நன்கு அறிந்தவள். என்கன் நெஞ்சு என் செயும் - என்னுடைய கல்மனம் என்ன கைமாறு செய்யும்?
-------
59. கன்னியென் றோர்மறை கூப்பிடுந்
தில்லைக் கடவுளருட்
பன்னியென் றோர்மறை கூப்பிடுஞ்
சிற்றம் பலவடிவாய்
மன்னியென் றோர்மறை சொல்லு
மொருமறை மன்னுயிர்க்கும்
பின்னை யெனுஞ்சிவ காமியை
யென்னென் றழைப்பதுவே.
59. கன்னி -என்றும் மாறாத இளமையினள். அழியாத கன்னிகை" (அபி: அந்:8), "கலைமறைகள் நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும் தான்குமரி யாகியிருந்தாள்" (தில்: சிவ: இரட்டை மணிமாலை : 15). பன்னி - பத்தினி, மனைவி. மன்னி - நிலைபேறுடையவள். பின்னை - பின்னிருந்து காப்பவள். என்னென்றழைப்பது - என்ன சொல்லி அழைப்பது.
நான்கு வேதங்களும் அம்மையை முறையே கன்னி என்றும், தில்லைக் கடவுள் பன்னி (பத்தினி) என்றும், சிற்றம்பலத்தை மன்னியவள் என்றும், எல்லா உயிர்களுக்கும் பின்னை (பின் நிற்பவள்) என்றும் போற்றுவதாகக் கூறுகிறார். பின்னை - அழியும் உயிர் களுக்குப் பின்னும் அழியாதிருப்பவள் என்றுமாம்.
------
60. அழையுண்ட வாயனும் பெண்புணர்
நாவனு மம்புவிவான்
உழைசென்று தேடியுங் காணாப்
பரம்பொரு ளோடுந்தில்லை
பொழிறங்கி வாழுஞ் சிவகாமி
கோலப் பொலிவையெல்லாம்
விழிகண் டெனக்கருள் செய்யுப
கார மிகவும் நன்றே.
60. அழை - அளை; வெண்ணெய்; 'ளை' ழையானது எதுகை நோக்கி - "பொன்றிகழ் பங்கய மூ(ழ்)ள்கி" (கோயிற்புராணம்) என வந்தது காண்க, "உரியளை வாரியுண்டோன் ஒருபிடி யவல்தின் றானே" (குசேலோ: 476). வாயனும் - வாயினை உடைய திருமாலும். பெண் புணர் நாவனும்- சரசுவதி பொருந்திய நாவினை உடைய பிரமனும். அம்புவி, வான், உழை - முறையே உலகிலும், வானிலும். பரம்பொருள் - சிவபெருமான். கோலப் பொலிவு - உருவ அழகு. விழிகண்டு - கண்கள் பார்த்து.
'அழையுண்ட வாயனும் பெண்புணர் நாவனும் அம்புவிவான் உழை சென்று தேடியுங் காணாப் பரம்பொருள்' - என்பது முறை நிரல் நிறைப் பொருள்கோள்.
-------
61. நன்றுசெய் தாலு முனக்கே
பரமிவ னல்லனல்லன்
என்றிகழ்ந் தாலு முனக்கே
பரமிரண் டற்றகதி
யொன்றிடென் றாலு முனக்கே
பரமற்றிங் கொன்றுமின்றிக்
குன்றிலக் காய்ச்சிவ காமி
உனைநம்பிக் கொண்டனனே.
61. பரம் - பொறுப்பு. நல்லன் அல்லன் - தீயன். குன்றிலக்கு - குன்றினைக் குறியாகக் குறித்தது. இன்றி - இல்லாமல், குறிப்பு வினையெச்சம், உனக்கு பரம் - உனது செயல், உருபு மயக்கம்.
(விழி) "விழித்தீக் கென்றன் வினையிலக்காகுமாலோ" (சிவதத்துவ விவேகம்.) என வருதல் காண்க. "நன்றே வருகினுந் தீதே விளைகினும் நானறிவ தொன்றேனும் இல்லை உனக்கே பரம்” (அபி: அந்: 95) பரம் என்ற சொல் பலவிடங்களிலும் வருதல் சொற்பின் வருநிலையணி.
------
62. கொண்டலைக் கண்ட மயில்போலுந்
தாயின் குளிர்ந்தமுக
மண்டலங் கண்ட மகப்போலும்
பானு வருதல்கண்ட
முண்டகம் போலுஞ் சிவகாமி
யம்மன் முகமதியங்
கண்டுகொண் டேனினி யின்னிதைப்
பார்க்கக் கதிமகிழ்வே.
62. கொண்டல் - மேகம். முகமண்டலம் - முகமாகிய மண்டலம்; உருவகம். மகப்போலும் - குழந்தையைப் போலும்; "மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி” (பெரும்பாண்: 89). பானு - சூரியன். முண்டகம் - தாமரை. முகமதியம் - முகமாகிய தாமரை. கதி மகிழ்வே - மோட்ச இன்பம். இது விரியுவமையணி
-------
63. மகிழ்ந்தேதென் றில்லைமன் றுங்கண்டன்
றேயின்ப வாழ்வினையிற்(று)
இகழ்ந்தேன் அரிபிர மாதிகள்
போகத்தை யின்புருவாய்த்
திகழ்ந்தேனிப் பேறு தருஞ்சிவ
காமிபொற் சேவடியைப்
புகழ்ந்தேன் றொழுது விழுந்தேன்
சயசய போற்றியென்றே.
63. போகம் - மகிழ்ச்சி; இன்பம். இன்புருவாய் -இன்பமே உருவாக. திகழ்ந்தேன் - விளங்கினேன். பொற் சேவடி- பொன் போன்ற செம்மையான திருவடி.
------
64. போற்றாம னீணெடு நாளையெல்
லாம்வடி போக்கினதற்
காற்றேனந் தோமன மேநமக்
கிப்பொழு தார்செய்தவப்
பேற்றால்வந் தெய்திய தோசிவ
காமி பெருங்கருணைக்
கோற்றேன் மறக்கிலுன் போலில்லை
யெங்குங் கொடியவரே.
64. வடி- வீணே; முதுக்குறைவாய். போக்கினதற்கு - கழித்தமைக்காக. ஆற்றேன் - பொறேன். அந்தோ - இரக்கக் குறிப்புக் காட்டும் இடைச்சொல். ஆர் -யார். கருணைக் கோற்றேன்- கருணையாகிய கொம்புத்தேன்.
"வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்" (சிலம்பு); "கோற்றேன் மொழிக் கிள்ளாய்" (திருவாசகம்) என வருதல் காண்க. மறக்கின் மனமே உன்போல் கொடியவர் எங்கும் இல்லை என இயைக்க.
-------
65. கொடியே மலைமக ளேயமு
தேயென் குலதெய்வமே
பிடியே கருணைப் பெருவெள்ள
மேமன்றைப் பேணிநின்ற
துடியே ரிடைச்சிவ காமியம்
மேதொன்று தொட்டுவரும்
அடியேன் பவக்கடற் கோர்தோணி
யாமுன் னடிமலரே.
65. கொடியே - கொடி போன்றவளே. அமுதே - அமுதம் போன்றவளே. பிடியே - பெண்யானை போன்றவளே. கருணைப் பெருவெள்ளம் - கருணையாகிய பெரிய வெள்ளம் போன்றவளே. தொன்றுதொட்டு - பழங்காலமுதல். பவக்கடல் - பிறவியாகிய கடல். அடிமலர் பாதமாகிய மலர்.
'கொடியே இளவஞ்சிக் கொம்பே." (அபி: அந்: 22.) "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்” (குறள்). 'பிடித்தேன் பிறவிக் கடல் நீந்தப் பெரியபுணையா உனதடியை" (திருக்: கரு: ப: ப: அந்: 5) உருவகவணி.
------
66. மலர்மக ளாய்க்கலை வாணியு
மாயுமை மங்கையுமாய்
நலமிகு மாதி மனோன்மணி
யாய்நட ராசரின்பத்
தலைவியு மாய்த்தில்லை மூதூர்க்
கனக சபைவடிவாய்
உலகமு மாய்நின் றனள்சிவ
காமி ஒருத்தியுமே.
66. மலர்மகள் - திருமகள். கலைவாணி- சரசுவதி. உமைமங்கை - உமாதேவி. ஆதி மனோன்மணி -இம் முத்தேவியர்க்கும் ஆதியானவள் - தலைவி சிவகாமி. கனகசபைவடிவு - கனகசபை உருவம். உலகமுமாய் - இவ்வுலகமும் ஆகி. நின்றனள் - பல்லுருப் பெற்று நிலைத்தனள்.
சதாசிவத்துக்கு முந்தினதான சத்தி தத்துவம் கூறுவது இப்பாடல்.
-------
67. ஒருவனொ ருத்தியொன் றென்பதெல்
லாந்தந்த உத்தமியைக்
கருணை திருவுரு வாகிய
கன்னியைக் கந்தனையீன்
றருளிய தாயைச் சிவகாமி
யைத்திரு வம்பலத்திற்
றெரிசனை செய்தவர்க் கன்றே
பரமுத்தி சித்திக்குமே.
67. ஒருவன் - அவன். ஒருத்தி- அவள். ஒன்று -அது. "ஈண்டு உளதாய் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்” என்பது சிவஞான போதம். கன்னி-பார்வதி. கந்தனையீன்று அருளிய தாய் - கந்தனைப் பெற்று உலகிற்கு அருளிய தாயாகிய பார்வதி. கந்தன்- பற்றுக் கோடானவன்; "மறங் கந்தாக நல்லமர் வீழ்ந்த" (புறம்: 93). தெரிசனை - தரிசனம். பரமுத்தி - மேலான வீட்டின்பம்.
உத்தமி, கன்னி, தாய், சிவகாமி என்பது நயம். திரு அம்பலம் - பொன்னம்பலம் (திரு - பொன்).
------
68. சித்தியை வேண்டினு முத்தியை
வேண்டினுஞ் சீர்மிகுந்த
பத்தியை வேண்டினு மிம்மைநற்
போகம் பலபலவாய்
எத்தனை வேண்டினுஞ் சிற்றம்
பலங்கண் டிறைஞ்சினபேர்க்
கத்தனை யுஞ்சிவ காமி
கடைக்க ணளித்திடுமே.
68. சித்தி - எண்பெருஞ் சித்திகள். முத்தி - வீட்டு இன்பம். பத்தி - அருள்நெறி. இம்மை - இப்பிறப்பில் அடைதற்குரிய. போகம்- இன்பங்கள். பலபல - நிறைய. கடைக்கண் - கண்ணின் கடைப் பார்வை; இது இலக்கணப் போலி. "கடைக்கண்ணால் மங்கை உமைநோக்கா என்மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் தன்னை." (திருஆலவாய்: அப்பர்)
-------
69. அளிக்குல மேவுங் குழற்கொடி
யேஅகி லாண்டமெல்லாம்
வெளிக்குள் நிறுத்திய வித்தகி
யேதில்லை மேவியென்றுங்
களிக்கு மெழிற்சிவ காமியம்
மேயுன் கமலபத
ஒளிக்கு ளொளித்தெனை ஆள்மும்
மலப்பகை யொட்டறவே.
69. அளிக்குலம் - வண்டுக்குலம். மேவும் - பொருந்தும். குழல் கொடி- கூந்தலையுடைய கொடி போன்றவள். அகில அண்டம் - எல்லா உலகங்களையும். வித்தகி - திறமையுடையாள். மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை, ஒட்டு அற - முழுதும் அற்றுப் போகுமாறு. பத ஒளிக்குள் ஒளித்து -பாதமாகிய ஒளிக்குள் இணைத்து; ஒளிக்குள் ஒளித்தல் என்பது வீட்டு நிலையை அடியவர் அடைதல்.
'பச்சை அன்னம் பயந்தன கொல்லாம்பல்லாயிர அண்டமுமே" (தில்லை.சிவ.இ. மணிமாலை.)
------
70. அறம்பல செய்து சிவதன்ம
முத்தி அறிவறிந்து
பெறுங்கதிக் கேற்ற முயற்சிசெய்
யாமற் பிறவிரும்பித்
திறம்பெறு முன்சன் னிதியடைந்
தேன்சிவ காமியம்மே
புறம்பெனைப் போக்கல்செய் யாதே
யினியில்லை போக்கிடமே.
70. பல அறம் - பலவகையான தருமங்கள். தன்மம் - தர்மம், நெறி. முத்தி -வீட்டுப்பேறு. முயற்சி செய்யாமல் - உழைப்பின்றி. பிறவிரும்பி - பிற அழியும் இன்பங்களை விரும்பி. புறம்பு - வெளியே போக்கல் செய்யாதே- போக்காதே. போக்கிடம் - புகலிடம்.
"வேறெனக்குத் திக்காரு மில்லை சிவனே" (சொக்கநாத வெண்பா). பாடல் 13 இன் கருத்தும், இப்பாடற் கருத்துடன் ஒப்பு நோக்கற்பாலது.
-------
71. இடமேவும் வேதச் சிரத்துங்
கயிலை யிடத்துமிகுந்
திடமா தவர்நெஞ் சகத்துமெய்ஞ்
ஞான சிதம்பரத்தும்
நடமாடு முன்பொற் பதமடி
யேனுடை நாய்த்தலைமேற்
படமா தவஞ்செய்த தென்சிவ
காமப் பசுங்கிளியே.
71. வேதச்சிரத்தும் - வேதத்தின் உச்சியிலும். கயிலை யிடத்தும் - கயிலாயத்திலும், மிகும் திட மாதவர்- சிறந்த உறுதியான தவசிகள்; திடம்மிகுந்த தவசிகள். மெய்ஞ்ஞான - மெய்ம்மையான ஞானம். நாய்த்தலை - நாயினது தலைபோன்ற தலை. நடமாடும் உன் பொற்பாதம் - இறைவன் நடனமாட, இறைவி நடனமாடுவதாகக் கூறுவது கவிமரபு.
"அடியேன் முடை நாய்த்தலையே" (அபி: அந்: 60). பட செய்த மாதவம் என் என மொழி மாற்றுக.
"வேத முடியகத்தோ வேடர் பொருப்பகத்தோ
தீதில் தணிகைச் சிலம்பகத்தோ - கீதத்து
மாண்பேறும் வாய்மைத் திருப்புகழ்ப்பா வாழிடத்தோ
காண்பேம்நம் கந்தர் கழல்"-
தணிகைமணி வ.சு.செ.(கந்தர்கழலெழுபது.)
-------
72. கிளிமொழி யாலென்னை வாவென்
றழைத்துமெய்க் கேள்வரெனுங்
களிதரு மானந்தங் காட்டினல்
லாற்சிவ காமியம்மே
வளியேறிச் சூறை சருகொத்துச்
சுற்று மனத்துயர
விளைவொழி யேனிரங் கம்மே
யெனக்குள்ள மெய்மையிதே.
72. கிளி மொழி - கிளியினது மொழி போன்ற மொழி. மெய்க் கேள்வர் உண்மைக் கணவர். ஆனந்தம் -ஆனந்த நடமியற்றும் நடராசர். காட்டினல்லால்-காட்டாவிடின். மனத்துயர விளைவு- மனத்தில் ஏற்படும் துயரம். ஒழியேன் -தீர்ந்தேனில்லை. எனக்குள்ள மெய்மையிதே - என்னிடத்துள்ள மெய்ம்மையான நிலை இதுவே.
"வளியேறிச் சூறை சருகொத்துச் சுற்று மனத்துயர விளைவு''- உவமையணி.
------
73. மெய்யினைப் பொய்யென்று பொய்யைமெய்
யென்று விரும்பிநொந்து
நையு மெனக்கு மருள்கொடுத்
தாண்டு நலமளித்த
செய்ய மலர்த்திரு வேபுலி
யூர்ச்சிவ காமியம்மே
உய்யவென் போலுக் கிரங்குவ
தோபுக ழுன்றனக்கே.
73. எனக்கும் - என்போன்ற கீழேனுக்கும்., உம் - இழிவு சிறப்பு. செய்ய மலர்த்திரு செம்மையான மலர்போன்ற அழகியே. என்போலுக்கு -என் போன்றவனுக்கு; நான்காம் வேற்றுமை உருபு 'கு' திரியாது வரப்பெற்றது.
"பொய் நிலையில்லாதது, மெய் நிலைபெற்றது" (சிவஞான போதம்).
------
74. உன்றனக் கென்று மடிமை
யுலகத் துயிரதிலொன்
றன்றக மேபிர்ம மென்றெண்ணி
யெண்ணி அலைந்தவென்னை
மன்றி லழைத்து வழக்கறுத்
தாண்ட மகிமைமெத்த
நன்றுநன் றாஞ்சிவ காம
சவுந்தர நாயகியே.
74. அகமேபிரமம் - 'அகம் பிரமம்' என்னும் கொள்கை. மன்றில் அழைத்து - சிதம்பரத்தில் உள்ள பொன் மன்றிற் கழைத்து. வழக்கு அறுத்து - வழக்கத்தை மாற்றி. ஆண்ட- ஆண்டுகொண்ட. மகிமை - பெருமை. மெத்த - மிகவும். நன்றுநன்று - நல்லது.
எண்ணிஎண்ணி, நன்றுநன்று- பொருள் அடுக்குகள். "எண்ணம் புரிந்த இனிய அருள் நன்றுநன்று" (திருக்: ப: ப: அந்: 10). "இடப்பட்ட தாமுத்தி நன்றுநன் றெவ்வுள் திருவூரனே" (திரு வெவ்வுளூரந்தாதி.) என 'நன்றுநன்று' என்னும் அடுக்கு வருதல்
காண்க.
------
75. நாயக ராடல்கண் டுள்மகிழ்ந்
தாடு நகைமுகத்து
வேயன தோட்சிவ காம
சவுந்தர மெல்லியலைத்
தாயென யான்சொல வோஆண்ட
நாயகி தானெனவோ
தூய வமுதென வோவின்ன
தென்றென்கொல் சொல்லுவதே.
75. நகைமுகம் - முறுவல் பூத்தமுகம். வேய் அன தோள் - மூங்கில் எனக் கூறுமாறு அமைந்துள்ள தோள். 'வேயுறு தோளி' (தேவாரம்) மெல்லியல் மென்மைத்
தன்மையுடையவள்; பண்புத்தொகை.
நாயகர் ஆடல் கண்டு அன்னை உளம் மகிழ்ந்து தானும் ஆடுகின்ற தன்மை கூறப்பட்டுள்ளது.
---------
76. சொல்லாற் றுதித்துனை நெஞ்சகத்தே
வைத்துத் தொண்டுசெய்து
நில்லே னெனினுமுன் றொண்டனென்
றியாரு நினைப்பதனால்
அல்லால் பொழிற்றென் புலியூர்ச்
சிவகாமி யம்பிகைநீ
பல்லோர் நகைக்க விகழ்தல்
முறையன்று பார்த்தருளே.
76. சொல்லால் துதித்து - பாடிப்பரவி, நெஞ்சகத்தே வைத்து -உள்ளத்து வைத்துப் பூசை செய்து. தொண்டு செய்து - பணிகளும் செய்து. நில்லேன் எனினும் - வழிபட்டு ஒழுகவில்லை யாயினும், யாரும் - எல்லாரும். தொண்டன் என்று - உன்னுடைய தொண்டன் என்று. நினைப்பதனால் - நினைப்பதனாலேயே. அல்ஆல் பொழில் - இருண்டு செழித்த ஆலம்பொழில். முறையன்று- முறைமையன்று. பார்த்தருள் - அறிந்துகொள்.
நகைக்க - நகைத்து என்னும் பொருளில் வந்தது. "பேசப் பட்டேன் நின்னடியாரிற் றிருநீறே பூசப்பட்டேன் பூதல ராலுன் அடியானென் றேசப் பட்டேன் இனிப்படுகின்ற தமையாதால் ஆசைப் பட்டேன் ஆட்பட் டேனுன் அடியேனே" (திருச்சதகம்). "உலகத் தவரால் உனதுதொண்டன் என்று இகழ்ந்துரைக்கப் பட்டேன்", "நாடவர் பழித்துரை பூணது வாக." (போ. திருவகவல்) எனவருதல் காண்க.
------
77. பார்ப்ப துனது திருமணக்
கோலம் பணிந்துபுகழ்ந்
தார்ப்பதுன் நாமம் விழிநீர்
சொரிய அழுதுன்னிடத்
தேற்ப துயர்பர போகமல்
லால்இல்லை யேன்றுகொணீ
தார்ப்பொலி யுங்குழ லாய்சிவ
காம தயாநிதியே.
77. ஆர்ப்பது - ஒலிப்பது. விழிநீர் - விழியிலிருந்து பெருகும் சொரிய - பெருக. ஏற்பது - இரப்பது. பரலோகம்- மேன்மையான முத்திப்பேறு. அல்லால் இல்லை - அல்லாது வேறொன்றில்லை. ஏன்று கொள்நீ -ஏற்றுக் கொள் நீ. "தாளே வந்தடைந்தேன் தலைவாவெனை யேன்று கொணீ (2) ஆளா வந்தடைந்தேன் அடியேனையு மேன்றுகொணீ" (b) எனவருதல்காண்க. (சுந்: தேவாரம்).
''வவ்விய பாகத் திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும்"
(அபி: அந்: 13). எனவருதல் காண்க. இப்பாடலும் பின் வரும் பாடலும் ஓதியுணர்தற்குரியன.
------
78. நிதியேதென் றில்லை வனமயி
லேநினைப் போர் நினைக்கும்
மதியே சிவானந்த வாருதி
யேமறை யீற்றியாக்
கதியே உடல்விடும் போதஞ்ச
லென்றெனைக் காப்பதற்குன்
பதியோடும் வந்துமுன் னின்றேன்று
கொள்ளப் பரமுனக்கே.
78. தில்லைவன மயிலே - தில்லைவனமாகிய சிதம்பரத்தில் உள்ள மயில் போன்ற சாயலை உடையவளே. மதியே - அறிவே. வாருதி- கடல். ஈறு - முடிவு. உடல் விடும் போது - உயிர் பிரியும் போது. பதி - தலைவன். உனக்கே பரம் - உன் கடனாகும்.
தான் இறக்குங்கால், இறைவி அம்மை அப்பராய்க் காட்சி நல்கவேண்டிய கடன் அவருடையதே எனச் சமத்காரமாகக் கூறு கின்றார். “....... சிந்தையுள்ளே, அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன்என் மேல்வரும் போது வெளிநிற்கவே' (அபி: அந்: 18) என வருதல் காண்க.
------
79. பரக்க விழித்து மயங்குமென்
னாவி பலபலவாய்
இருக்குங் கருவி பிரிந்திடு
நாளிட ராலுனையும்
மறக்கும்நெஞ் சிப்பொழு தேசிவ
காம மனோன்மணியே
திருக்குட லென்னைத் தொடராமற்
காத்தருட் சிந்தைவைத்தே.
79. பலபலவாய் - தனித்தனியாய். இருக்கும் கருவி - உள்ள பல அவயவங்கள். பிரிந்திடு நாள் -செயலற்று இயக்கம் பிரிந்திடு நாளில். இடரால் - துன்பமிகுதியால். நெஞ்சம் மறக்கும்- உன்னை எண்ண மறந்து விடும். திருக்குடல் - குற்றம் உடைய உடல். தொடராமல் - மீண்டும் பிறவாமல். இப்பொழுதே காத்தருள் - இப்பொழுதே அருள் செய்வாயாக.
பிறவியறுத்தருள்க என வேண்டுகின்றார்.
------
80. வைத்திடும் நச்சுப் பணிபுனைந்
தாடிய வள்ளலருண்
முத்திப் பதக்குஞ் சிதமலர்
காட்டி முதிர்ந்தவன்பு
பத்திக் கடலுட் பதித்தின்ப
மூட்டு பராபரையே
தத்தைக் கிளிமொழி யேசிவ
காம சவுந்தரியே.
80. நச்சு வைத்திடும் பணி -நஞ்சு வைத்திருக்கும் பாம்பு. புனைந்து - சூடி. ஆடிய வள்ளல் - சிவபெருமான். பராபரை - பார்வதி. முத்திப்பதம் முத்தியைத் தரும் பாதம், குஞ்சித பதம் மலர் - தூக்கி வளைத்துள்ள பாதமாகிய மலர் என உருவகம். பத்திக் கடலுள் பதித்து - பக்தியாகிய கடலுள் மூழ்குவித்து. தத்தைக் கிளி - தத்தையாகிய கிளி.
"விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே" (சி. செ.கோவை.) இப்பாடலும் 83-ஆம் பாடலும் ஒன்று.
------
81. தரியேன் பிரவஞ்ச வாழ்க்கையில்
யானுன்பொற் றாண்மலரைப்
பிரியே னினிப்பிரிந் தாலுந்
தொடர்ந்து பிடித்திழுத்துன்
அருள்வாழ் வளிக்கக் கடனுனக்
காஞ்சிவ காமியம்மே
வரிமீன் கயங்கிடக் கத்துள்ள
லொக்குமென் வன்னெஞ்சமே.
81. வாழ்க்கையில்- வாழ்க்கையினை, உருபு மயக்கம். தரியேன் – ஏற்க மாட்டேன். பொற்றாள் மலர் பொன்போன்ற பாதமாகிய மலர். பிரியேன் - அகலேன். கடன் உனக்காம் - உன்னுடைய கடமை ஆகும். வரிமீன் - வரிகளை உடைய மீனானது. கயங்கிடக்க - குளத்தில் இருக்கும்போது. துள்ளல் ஒக்கும் என் மனத் துள்ளல் - துள்ளுவதைப் போன்றது என்னுடைய மனம் துள்ளும் செய்கை.
இப்பாடல் உவமையணி.
----------
82. வன்னெஞ்சக் கள்வனைப் பின்தொடர்ந்
துள்ள மயக்கறுத்த
உன்னன்பை யின்னு முணராச்சண்
டாளனை யோதினர்போல்
அன்ன பிறர்க்குரைத் தும்மடங்
காவெனை யாளவுநீ
உன்னினை யேசிவ காம
சவுந்தர உத்தமியே.
82. நெஞ்சக் கள்வன் - நெஞ்சமாகிய கள்வன். உள்ள மயக்கு - மனமயக்கம். சண்டாளனை - இழிந்த என்னை. ஓதினர் போல் - படித்தவர் போல. உன்னினை - கருதினை. 'ஓதியுணர்ந்தும் பிறக்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்" (திருக்குறள் 834)
கள்வன் - தோன்றாது நிற்றல் பற்றி நெஞ்சம் கள்வன் என உவமிக்கப்பட்டது.
----------
83. உத்திப் பணிக்கங் கணம்பூண்டு
கண்ட உயிரையெல்லாம்
முத்திப் பதக்குஞ் சிதமலர்
காட்டி முதிர்ந்தவன்பே
யெத்திக்குங் காட்டுங் கொடியோமெய்
யன்ப ரிதையமலர்
புத்திக்குண் மேவுஞ் சிவகாமி
யென்னுமிப் பூங்கொடியே.
83. உத்திப்பணி - படம் கொண்ட பாம்பு; "உத்தியும் துத்தியும் உரகப் படப்பொறி' (பிங்கலம்). கங்கணம் - தொடி. கொடி-சின்னக் கொடி.
'முதிர்ந்த அன்பு எத்திக்கும் காட்டும் கொடியோ' எனவும், "முதிர்ந்த வெத்திக்கும் அன்பு காட்டும் கொடியோ" எனவும் இயைக்கலாம். அன்புக் கொடி காட்டுபவள் அன்னை சிவகாமி என்பது இப்பாடலின் கருத்து.
பாடல்: 80 ஒப்பு நோக்குக.
----------
84. கொடியேனை ஆண்ட கொடியே
யிமாசலக் கோன்வளர்த்த
பிடியே கருணைப் பெருந்திரு
வேதில்லைப் பெண்ணமுதே
வடிவேல் விழிச்சிவ காமியம்
மேநீ வகுத்தவிதிப்
படியேயல் லாதன்றி யானென
வில்லையோர் பற்றெனக்கே.
84. கொடியேன் -கொடியவன். ஆண்ட கொடியே- ஆட் கொண்ட கொடி போன்றவளே. இமாசலக் கோன் - இமயமலை அரசன். யான் என - யான் என்னும் அகப்பற்றும், என என்னும் புறப்பற்றுக்களும்; ஆறன் வேற்றுமை அகர வுருபேற்றுப் பன்மையைக் குறித்தது. பற்று - பிடித்தம். நீ வகுத்த விதிப்படியே நீ ஆணையிட்டவாறு அன்றி எனக்கெனப் பற்றுகளிலேன் என்றாயிற்று.
"வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே”. (மீனா. பி. தமிழ்).
---------
85. பற்றற்ற கண்ணே பிறப்பறு
மென்றசொற் பாற்றென்னடை
குற்றமென் றுள்ளங் கொ திப்பதுபாற்
றில்லைக் கோகிலமே
கற்றவற் குற்ற துணையா
கியசிவ காமியம்மே
முற்றுமென் னெஞ்சத்து நீநின்றென்
னெண்ண முடித்தருளே.
85. பற்றற்ற கண் - பற்றுகள் குறைந்தவுடன். பிறப்பறும் - மறுபிறவி அற்றுப் போகும். "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று நிலையாமை காணப் படும்" (திருக்குறள் - 349) கோகிலம்- குயில். எண்ணம் - கருத்து. முடித்தருள் - முடித்து அருள்வாயாக. கற்றவற் குற்ற துணை - கல்வியறிவுடையார்க்குத் தக்க துணையானவள். பாற்று - அழிக்கும். என் அடை- என்னை அடையும்.
"கதம்பமு மணியுங் காமக்கோட்டியே கருணைபாராய், சிதம்பர நடனங் கொள்ளும் செல்வியே கல்விமாதே' 'சௌந்தரியந்தாதி" (97).
----------
86. முடியாத காரிய முன்றனக்
கில்லை முடியுமென்ப
தடியேனுக் கெங்குமோ ரற்பமு
மில்லை யருட்குணமெப்
படியாகு மப்படிச் செய்தெனைக்
காதில்லைப் பார்ப்பதியே
மடியா லுடைய வெளியேனுக்
கேதுமுன் வாய்திறப்பே.
86. கா- காப்பாயாக. தில்லைப் பார்வதி - தில்லையில் உள்ள பார்வதி. மடியால் உடைய எளியேன் - சோம்பலை உடைய அறிவிலி.
"பார்ப்பதியைப்பகை சாற்றிய தக்கனை” (திரு-உந்தியார்: 8). "சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரிகொண் மின்" (திருப்பொற் சுண்ணம்).
----------
87. திறற்பாம்பு வேங்கையுங் காண நின்
றாடிக்கட் டிங்களுமுந்
துறக்கூம்ப லின்றி யலர்வத
னாம்புய உத்தமியை
அறச்சாலை யைச்சிவ காமியைப்
பேதை அறிவுடையேன்
மறப்பே னெனினு மவள்மற
வாதென்றும் வாழ்விப்பளே.
87. திறற் பாம்பு - திண்மைமிக்க பாம்பு (பதஞ்சலி), திறல் வேங்கை - வலிமை மிக்க புலி (வியாக்ரபாதர்), காண நின்றாடிக் கண் திங்கள் - கண்ணாகிய சந்திரன், முன் தாருகவனத்தில் ஆடிய கூத்தினை ஆடியவன் சிவபெருமான். முந்துற - முன்னர் காணப் பட்டும். கூம்பல் இன்றி - குவியாது. அலர் -மலரும், வதன அம்புயம் - முகமாகிய தாமரை. உத்தமி - சிவகாமி. அறச்சாலை
அறச்சாலை போன்றவள். வாழ்விப்பள்- வாழவைப்பாள்.
''தருவற நாணத் திருவறச்சாலை சமைத்தாய் நீ. (தில்.சி.இ. ம.மாலை) "நின்றாடிக் கண் திங்கள் முந்துறக் கூம்பலின்றி அலர் வதனாம் புயம்" என்பது அயுத்த வேறு அணி.
----------
88. விப்பிர ஞானிகள் மூவா
யிரர்தொழும் வேதர்புணர்
செப்பிள மென்முலைச் சிற்றிடை
யேசிவ காமியம்மே
அப்புறு மீனோத் துனதருள்
வெள்ளத் தழுந்துகின்றேன்
றுய்ப்பவர்க் கெப்பொழு துந்தாவுன்
பேரெழிற் சுந்தரமே.
88. விப்பிர ஞானிகள் மூவாயிரர் - தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர். தொழும் வேதர் -தொழுகின்ற சிவன். சிற்றிடை - சிறுமை இடை. அப்பு - நீர்.
பாடல் 81 இனும் இதே உவமை வந்தமை காண்க.
----------
89. சுந்தரி அந்தரி சிந்துர
நன்னுதற் றோகையும்பர்
வந்தனை செய்யும் சிவகாம
வல்லி மலர்ப்பதத்தைச்
சிந்தனை செய்து ளுருகிக்
கசிந்து செயலறுத்தாற்
பந்தமுண் ணீங்கிச் சிவபோகம்
யார்க்கும் பலித்திடுமே.
89. சுந்தரி - பார்வதி. அந்தரி - துர்க்கை. சிந்துரம் - சிவப்புத் திலகம். தோகை - தோகையையுடைய
மயில் போன்ற சிவகாமி; ஆகுபெயர். மலர்ப்பதம் - மலர் போன்ற பாதம்; உவமைத் தொகை. பந்தம் - பாசம்
. பலித்திடும் - கிட்டும்.
----------
90. பலித்திடும் நெஞ்சத் துதித்ததெல்
லாம்பண்டைத் தொண்டருள்ளத்
திலத்தினின் மேவுஞ் சிவகாமி
யைப்பணிந் தேத்திமுக்கால்
வலப்பிர தெக்கணம் வந்தவ
ளாடிய மஞ்சனநீர்
சொலத்தகு பத்தி யுடனள்ளி
யோர்துளி துய்ப்பவர்க்கே.
90. உள்ளத் திலம் - உள்ளமாகிய இல்லம்; 'இலம்' என்பது விகாரம். முக்கால் - மூன்று முறை. வலப் பிரதக்கணம்
- வலமாகச் சுற்றி வருதல். ஆடிய - நீராடிய. மஞ்சன நீர் - அபிடேக நீர். துய்ப்பவர் - உண்பவர்.
"தொண்டர் உள்ளத்து இல்லத்தினில் மேவுந்" தன்மையுடையவள் சிவகாமி என்றார்.
----------
91. துய்த்தாற் றெரியு மமுதா
சனச்சுவை சூழ்ந்துதுன்பம்
மொய்த்தாற் றெரியுமுன் செய்பாவக்
கூட்ட முதிர்ந்தபத்தி
வைத்தாற் றெரியுஞ் சிவகாமி
நேய மதியற்றுயிர்
எய்த்தாற் றெரியு மவடரு
பேரின்பத் தெல்லையுமே.
91. அமுதாசனச் சுவை - தேவர் இன்பம். மொய்த்தல் - சூழ்ந்து கொள்ளுதல். கூட்டம் -
அளவு மிகுதி. முதிர்ந்த- பழுத்த, நிறைந்த. எய்த்தால் -மெய் வருந்தினால். எல்லை - அளவு.
இப்பாடலில் 'தெரியும்' என ஒரே சொல் வந்து பொருளும் மாறாமையால் இது 'சொல்பின்வரு
நிலையணி' யாகும்.
-------------
92. எல்லையில் லாத்தவஞ் செய்தவற்
கன்றி யிமையவர்க்குந்
தில்லை யெனுஞ்சொற் சொலவுங்கிட்
டாததிற் சேர்ந்துதவம்
புல்லும் படிநின் றெழிற்சிவ
காமியைப் போற்றுமருள்
நல்லமு துண்டிடப் பெற்றோர்பே
றென்கொ னவிற்றுவதே.
92. எல்லையில்லாத் தவம்- அளவற்ற தவம். இமையவர்க்கும் - வானவர்க்கும். கிட்டாது
-வாய்க்கப் பெறாது. புல்லும்படி - பொருந்தும்படி. நல்லமுது - நன்மையாகிய அமுது. பேறு -வாய்ப்பு. நவிற்றுவது - சொல்லுவது.
'தில்லை' யென்று சொல்வதற்கே எல்லையில்லாத் தவம் செய்திருக்க வேண்டும் என்னும்
கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.
-------------
93. நவிற்றார் சிதம்பர மென்றத்
திசைதனை நாடியங்கை
குவித்தா கினும்பிழை யார்சிவ
காமியைக் கும்பிடுநற்
றவத்தோருக் கேவல்செய் வோர்க்கேவல்
செய்யவுந் தானறியார்
உவப்பாய்க் கதியுறு வோமென்றென்
னோசில ருன்னுவதே.
93. நவிற்றார் -சொல்லாதவர். அங்கை - உள்ளங்கை. பிழையார் – தப்பிக்க மாட்டார்.
ஏவல் செய்வோர்க்கு ஏவல் செய்ய - அடியார்க் கடிமைபூண. உவப்பாய் மகிழ்ச்சியுடன்.
கதியுறுவோம் - வீட்டின்பம் அடைவோம் என. என்னோ -எவ்வாறோ?
சிவகாமியைக் கும்பிடுந் தவத்தராகிய அடியவருக்கு அடியவரின் அடியவராகாதவர்-"உன்னடி
யாரடி யாரடி யோமென" (திருவா) என வருதல் காண்க,
------------
94. உன்னுமுன் னன்பர் கருத்தறிந்
தின்ப முதவுமருள்
அன்னை திருவருட் செல்விநற்
றில்லைக் கரசியெங்கும்
மன்னும் புகழ்ச்சிவ காமி
யினியென்னை வன்பிறவி
தன்னில் விடாளென்ற னுள்ளத்
துவகை தழைக்கின்றதே.
94. அருள் அன்னை - அருள்மிக்க அன்னை. மன்னும் - நிலை பெற்றுள்ள. புகழ்ச் சிவகாமி -
புகழினை உடைய சிவகாமி. இனி - இதன் பின். வன்பிறவி -வன்மையான; கொடுமையான
பிறவி. உள்ளத்து - மனதில். உவகை - மகிழ்ச்சி. தழைக்கின்றது - துளிர்க்கின்றது; வளர்கின்றது.
------------
95. தழைவிரி கொன்றைச் சடைநட
ராசர் தடம்புயத்திற்
குழைகிழித் தோடி யுலாவுங்
கயற்கட் கொடியிடையாள்
மழைபொரு கூந்தற் சிவகாமி
தாளை மறந்தவரே
உழைவ ரெழுவகைத் தோற்றப்
பிறப்பினு முற்றுநொந்தே.
95. கொன்றைச் சடை - கொன்றை மலரையணிந்த சடை. தடம்புயம் - பெரிய தோள்.
கயல் கண் - கயல்மீன் போன்ற கண். கொடியிடையாள் - கொடிபோன்ற இடையினை உடையாள்.
மழை பொரு கூந்தல் - மேகம் போன்ற கூந்தல். உழைவர் -துன்புறுவர். எழுவகைத் தோற்றப்
பிறவி - ஏழு பிறவி.
------------
96. நொந்துகொண் டேன்முன் னறியாமை
யால்நன் னுதற்கயற்கட்
செந்துவர் வாய்ச்சிவ காமியிப்
போது தெருட்டியசொற்
புந்தியு ணின்றத னாற்குறை
யாவும் பொறுத்திடென்றும்
பிந்திநின் றுள்ளஞ்சிக் கெஞ்சுகின்
றேனென் பிழைமின்னவே.
96. நன்னுதல் - நல்லநெற்றி. கயற்கண் - கயல் போன்ற கண். செந்துவர் வாய் - மிகவும் சிவந்த
வாய். தெருட்டிய -வற்புறுத்திய; வன்புறை. புந்தி - அறிவு. பிந்தி நின்று - பின் வழிபட்டு நின்று.
மின்னவே - மறையவே.
------------
97. மின்களைக் கொண்டுசெய் தாற்போன்
மணியொளி வீசுமன்று
தன்கணின் றாடும் பிரானிட
மேவிய சங்கரிநீள்
வன்கணர் நெஞ்சிற் புகாச்சிவ
காமி மலர்வடிவாம்
என்க ணிடத்தும் பிரியாமை
நிற்க இசைந்தனளே.
97. மின்கள் -மின்னல்கள். செய்தால் போல் - செய்தது போல. மணி ஒளி-மணியினது ஒளி.
வீசுமன்று- வீசுகின்ற மன்று. வன்கணர் - கொடியவர். வடிவு ஆம் - வடிவம் ஆம்-வடிவம் ஆகும்.
என் கணிடத்தும் - என்னிடத்தும். இசைந்தனள் -மனம் ஒப்பினள்.
"மின்னாயிரம்" (55) எனவரும் அபிராமி அந்தாதிச் சொற்றொடர் காண்க.
------------
98. இசையொளி யூறு சுவைநாற்றத்
தாற்புள் ளெழுபதங்கம்
நசையுறு மாக்கயல் வண்டையொத்
தேமுன நைந்துகெட்டேன்
திசைபுகழ் நற்சிவ காமி
கமலத் திருவடித்தேன்
பசையினி லொட்டிய ஈப்போலிந்
நாளகப் பட்டனனே.
98. இசை- யாழிசை. ஒளி - தீயொளி, ஊறு- காமம். சுவை - ஊண்சுவை. நாற்றம் - வாசனை.
புள் அசுணமா. பதங்கம் - விட்டில். மா ஆண்யானை. கயல் - மீன். வண்டு - தேனுண் வண்டு.
இவற்றைப் போல் ஐம்புல வாதனையால் முறையே கெட்டதாக ஆசிரியர் ஏற்றுரைக்கின்றார்.
யாழிசையால் அழிந்த அசுணமா- "அசுணங் கொல்பவர் கையே போன்று " (நற்: 304) என்பதால்
அறியக் கூடும். "செழிகின்ற தீப்புகு விட்டில்" (நீ: வி:5). "தூண்டில் பொன்மீன் விழுங்கியற்று"
என வருதல் காண்க.
------------
99. பட்டாபி ஷேக முடிசூடி
வாழ்கின்ற பார்த்திபரும்
மட்டா ரலங்கற் புயவா
னவருமற் றுள்ளவருங்
கட்டாணி முத்தம் புனைசிவ
காமிபொற் காற்கொருபூ
இட்டோர்க ளென்று சுருதிகள்
பேசி யியறருமே.
99. பார்த்திபர் -மன்னர். மட்டு ஆர் - தேன் பொருந்திய. அலங்கல் - மாலை. வானவர்
தேவர்கள். வைகும் - தங்கும். கட்டாணி முத்தம் - திருகாணி அல்லது கடைப்பூட்டாணி கொண்ட
முத்துமாலை. புனை - அணியும். பூ இட்டார்கள் - பூ இட்டு வணங்கினார்கள். சுருதிகள் -வேதங்கள்.
இயல்தரும் - கூறும்.
இப்பாடற் கருத்து பாடல் 17-இலும் காண்க.
-----
100. தரியாது வஞ்சர் மனத்தகத்
தன்பர்க டம்மனத்தைப்
பிரியாதென் கன்மனத் தும்பிரி
யாது பிரிந்துநின்றார்
தெரியா தெவர்க்குந் தொழுவோருக்
கின்பன்றித் தீமைசற்றும்
புரியாது தென்புலி யூர்ச்சிவ
காமிதன் பொன்னடியே.
100. தரியாது -தங்காது. பிரியாது - நீங்காது. கன்மனம்- கல்போன்ற மனம். சற்றும் - சிறிதும்.
இன்பன்றி - இன்பம் அல்லாமல். தீமை - துன்பம். புரியாது - செய்யாது.
திருச்சிற்றம்பலம்.