pm logo

கனிச்சாறு (முதல் தொகுதி)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

kaniccARu (part 1)
pAvalarERu perunjcittiranAr pATalkaL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கனிச்சாறு (முதல் தொகுதி)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

Source:
நூல் தலைப்பு : பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்
(கனிச்சாறு – முதல் தொகுதி)
ஆசிரியர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வெளியீடு : தென்மொழி நூல்வெளியீட்டு விற்பனையகம்,
செந்தமிழ் அடுக்ககம், (சி.கே. அடுக்ககம்)
மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை 601 302.
படையல் எதிர்காலத் தமிழின மீட்பர்களுக்கு.
முதல் பதிப்பு தி.பி. 2010, மேழம் 1 (14-4-1979)
மறுபதிப்பு தி.பி. 2030, ஆடவை 6 (20-6-1999)
அச்சாக்கம் ; தென்மொழி அச்சகம், சென்னை 601 302.
உரிமை தாமரை பெருஞ்சித்திரனார்
பக்கங்கள் 30+114
விலை ரூ. 50.00
------------------

பொது முன்னுரை

இயற்கை ஓர் ஒழுங்குடையது. நிலம் நெறியான ஓர் இயல்போட்டத்தை உடையது. கதிரவனும் விண்மீனும் ஓர் ஒழுங்கான அசைவை உடையன. புடவியும் பேரண்டமும் அவற்றுள் இயங்கும் பல்லாயிரங்கோடி இயற்கைக் கோளங்களும் சுடர்த் தொகுதிகளும் சிறிதே ஒழுங்கின்றி இயங்கத் தொடங்கினும் உடனே பேரழிவு நேரும்.

இவ்வியற்கை நிலையினைப்போல், இயற்கையுட்பட்ட அனைத்து நிலைகளிலும் அதனதற்குப் பொருந்திய ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். இயற்கை அறிவிக்கும் இவ்வொழுங்கு சிதைவுறின், அச்சிதைவுக்கேற்ப, படிப்படியான அழிவு நிலைகளே நேரும் என்பதில் துளியும் ஐயமின்று.

உயிர்கள் அனைத்தினும் மேம்பட்டு விளங்கும் மாந்த இயக்கமும் அதன் பரும, நுண்ம நிலைகளுக்கு ஏற்ப, ஒழுங்குற இயங்குதல் வேண்டும் என்பதே இயற்கையின் உட்கோளாதல் வேண்டும். ஒழுங்கற்ற பரும இயக்கத்தால் உடல் சிதைவுறுதல் போல் ஒழுங்கற்ற உணர்வியக்கத்தால் உள்ளமும் சிதைவுறும். உள்ளச் சிதைவு மாந்தப் பேரழிவையே தோற்றுவிக்கும்.

உணர்வியக்கத்தின் தலைமைக்கூறு மொழி. மொழியின் படிநிலையுற்ற ஒழுங்கியக்கம் இலக்கணம். எனவே, இலக்கணச் சிதைவு மொழியைச் சிதைப்பதும், மொழிச் சிதைவு கருத்தைச் சிதைப்பதும், கருத்துச் சிதைவு உணர்வைச் சிதைப்பதும், உணர்வுச் சிதைவு உளத்தைச் சிதைப்பதும், உளச்சிதைவு உலகியலைச் சிதைப்பதும் ஒன்றினின்று ஒன்றெழும் தொடர் விளைவுகளாகும்.

மொழியின் மலர்ச்சியே பாட்டு. பாட்டுணர்வால்தான் மாந்தன் மீமிசை உயிருணர்வை எட்டுகின்றான். மற்ற உணர்வுகள் மாந்த உணர்வுகளிலேயே அவனைத் தேக்கி வைத்திருக்கையில், பாடல் உணர்வே புறவுணர்வுத் தளைகளைக் கட்டறுத்து, உலகியல் கூறுகளினின்றும் விடுவித்து, அவனை மீமிசை மாந்த நிலைக்கு உயர்த்து கிறது. பாட்டுணர்வு தாழ்ச்சியுறுதலால் அவன் உணர்வுயர்ச்சிக்குச் சறுக்கல் ஏற்படுகின்றது; உயிர்மைக்கு அயர்வு ஏற்படுகின்றது. இதனால் இயற்கைத் துய்ப்பு கெடுகிறது. உயிர்மை குன்றுகிறது; உலகியல் உணர்விருள் அவனைப் பற்றி அலைக்கழிக்கின்றது. இவ் வியற்கைப் பொது நிலைகளை யொட்டி, ஒவ்வொருவரும் சில இன்றியமையாக் கலை, இலக்கியக் கூறுகளை உணர்ந்திருத்தல் வேண்டும். இவற்றுள் கலை புறமும் இலக்கியம் அகமும் ஆகும். இலக்கியத்தின் கொடுமுடி பாடல்! பிற அவற்றினின்று விரிந்து படரும் கொடிகளையும் கிளைகளையும் போன்றவை.

ஒழுங்கற்ற ஓசையைவிட ஒழுங்கான ஒலி உயிர்க்கவர்ச்சி உடையது. ஒலியொழுங்கோடு உணர்வும் சேருமாயின் உயிர்க் கவர்ச்சியுடன் உளக்கவர்ச்சியையும் அஃது உண்டாக்கி, அறிவுணர்வு உயர்ச்சியுடைய மாந்தனை அது தன்வயப் படுத்துகிறது. இனி, உணர்வு சேர்ந்த ஒலியொழுங்குடன் ஏற்ற இறக்க அலைவொலிகள் அளவொத்து இணைதலும், பின் அவற்றுடன் ஏதாமொரு மொழி சேர்தலும், அவற்றைப் பண் என்றும் பாவென்றும் உயர் நிலைப்படுத்துவிக்கும். இப்பண்ணொடு தாளம் சேர்ந்து இசையென்றும், பாவொடு கருத்துச் சேர்ந்து பாடல் என்றும் தமிழில் வழங்கும். இனி, பண்ணும் பாடலும் சேர்ந்து நடக்கும் இசைத்தமிழ் என்னும் ஒரு மொழியியல் மரபையே பண்டைத் தமிழ்மொழி முனைவோர் உலகோர் உணர்ந்துய்ய உண்டாக்கித் தந்துள்ளனர். வேற்றுமொழிகளில் இம் மொழியியல் கூறு தோன்றியிருப்பினும் தமிழ்மொழியில் உள்ளதுபோல், அஃது அத்துணையளவு தனித்தோ, சிறந்தோ இயங்க வில்லை யென்பதை அறிவினார் உணர்வர்.

இனி, பாடல் என்பது பா தழுவிய கருத்துமொழி என்று பொதுவில் பொருள் தரினும், அதற்கெனப் பல தனிக்கூறுகள் உண்டு. பாடல் இயற்கையாக வெளிப்படுதல் வேண்டும். மனமும் அறிவும் வயப்பட, உணர்வும் எழுச்சியும் மேம்பட்டுப் புறநிலையழுத்தத்தால் பீறிக் கொண்டு வெளியேறும் பாடலிலேயே இயற்கைச் சாயல் படிந் திருக்கும். மொத்தத்தில் அஃது ஒரு வெளிப்பாடாக இருத்தல் வேண்டுமேயன்றி, வெளிப் படுத்துதலாக இருத்தல் கூடாது. அவ்வாறு உள்ள நிலையில் அது சிறவாது; நிலைத்து நிற்காது; அதுவன்றிக் காலத்தில் கரைந்து போகும் தன்மையுடையதாக அஃது இருக்கும்.

ஓர் உணர்வு சான்ற இயற்கைப்பாடல் உணர்வுள்ள உள்ளங்களை மட்டுமேயல்லாது, உணர்வற்ற உள்ளங்களையும் அவையளவில் தொடுதல் வேண்டும். அப்பொழுதுதான் அதால் உயிர்க்கூறு படிப்படியாக மலர்ச்சி எய்துதல் முடியும். பிற உள்ளங்களை ஆட்கொள்ளும் நிலையில் அஃது ஒரு மண்வெட்டியைப்போல் பயன்படுதல் வேண்டும். மண்வெட்டி பள்ளம் மேடுகள் நிறைந்த நிலத்திற்கே மிகுதியும் பயன்படுவதாகும். சமமான தரையில் அதன் பயன்பாடு மிகவும் குறைவே. வெறும் சுவைக்காக மட்டுமே வெளிப்படும் பாடல்கள் மாந்த உள்ளுணர்வுகளை வளர்த்து வாழ்விக்காமல் அவற்றை மழுங்கடித்துவிடும்.

பாட்டுணர்வு இயற்கையேயாயினும், அதன் புறக்கூறுகள் உலகியல் சான்றனவே. அப் புறக்கூறுகள் அசை படிந்த சொற்களாலும், சொற்களமைந்த சீர்களாலும், சீர்கள் இணைந்தியங்கும் யாப்பாலும், யாப்புடன் கூடிய அணியாலும், அணிபெற்றியங்கும் கருத்தாலும் விளங்கித் தோன்றுவனவாகும். அவையே பாடலுக்குரிய தகுதிகளும் ஆகும். அவை பதினான்கு இன்றியமையாக் கூறுகளைக் கொண்டவை. அவை இவை:

அ. சொற்கள்:
1. கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்கள்.
2. சுற்றி வளைக்காத சொல்லாட்சி.
3. வளங்கொழுவிய பொருத்தமான சொற்கள்.
4. குறைவான இடைச் சொற்கள்.

ஆ.சீர் அமைப்பு:
1.ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு.
2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம்.
3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஓட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள்.

இ. யாப்பு.
1. பிழையற்ற யாப்பு.
2.கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை.
3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு.

ஈ. அணிகள்.
1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும்.
2. பாட்டின் பெருமையைக் குறைக்கும் பிற ஆரவார அணிகள் பெரிதும் தவிர்க்கப் பெறுதல்.

உ. கருத்து.
1. மயக்கம் தராது உடனே புலப்படும் தெளிவு நிறைந்த கருத்து.
2. பொது மனத்திற்குப் புலப்படாத உயர்ந்த கருத்து.

இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக் கொத்த மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை. நன்கு வளர்ச்சியுறாத உறுப்பு நிலைகளும், உணர்வு நிலைகளும், அக்குழந்தைகளைக் கவர்ச்சியற்றனவாகவும் நீடிய காலத் தக்குத லற்றனவாகவும் ஆக்கிவிடுகின்றன.

ஒழுங்கற்ற ஓசை இசையாகாததுபோல், ஒழுங்கான கட்டுக் கோப்பற்ற கருத்து வெளிப்பாடும் பாடலாகாது.

பாடல் உள்ளத்தின் மலர்; உணர்வின் மணம்; உயிரின் ஒலி யொழுங்கு.

பாடல் மலரிலிருந்தே உரைநடையென்னும் காய் தோன்றிக் கதையாகக் கனிகிறது.

பாடல் உணர்வு சிதைவுறுமானால் உரைநடையாக அது தத்துகிறது. உரைநடையில் பாடல் உண்டு. பாடலில் உரைநடை இல்லை. பாடல் உரைநடையாவது, மலர் தன் மென்மையையும் மணத்தையும் இழந்து பருமையும் வெறுமையும் உறுவது போன்றதே. அத்தகைய பாடற் போலிகள் தேங்காய் மட்டையின் ஊறலினின்று அடித்தெடுக்கும் நார் போன்றவை.

இனி, உண்மையான பாடலை வெளிப்படுத்துபவனே உயர்ந்த பாவலன். பாவலன் பிறக்கிறான்; பாடல் தோன்றுகிறது. பாவலன் படைப்பாளன். அவன் உண்டாக்கித்தரும் உணர்வுருவாய கற்பனை மாந்தர்களையே இயற்கை பருவுருவாக உலகுக்குப் படைத்துத் தருகிறது. எனவே உலகின் இயற்கைப் படைப்புக்கே அவன் உணர்வுக் கருவைத் தருபவனாகிறான்.

உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பத்து. அவை, நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுநிலைமை, துணிவு என்பனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்து விளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற் கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும்.

கனிச்சாறு என்னும் இப்பாடல் தொகுதி பல நூறு கற்பனைத் தோற்றங்களை உங்கட்குக் காட்டுவதாகும். பல வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்த நிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்- வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம்.

கனியைப் பிழிந்திட்ட சாறு- எம்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!

என்றும்,

கனிச்சாறு போல்பல நூலெல்லாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு!

என்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையும் உணர்த்தக் கனிச்சாற்றை உவமை பேசுவார்.

எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் கனிச்சாறு என்று பெயர் தரப்பெற்றது.

மிக அரும்பாடுபட்டு வெளியிடப் பெறுகின்றன.

இத்தொகுதித் தொடர்கள்

தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத் தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக.

சென்னை-5       அன்பன்,
14-4-1979       (ஒப்பம்) பெருஞ்சித்திரன்
----------------------

முதல் பதிப்பு - பதிப்புரை

உலக வரலாற்றிலேயே தலைசிறந்தது மாந்த வரலாறாகும். அதனுள்ளும், நம் முதுபழங் குமரித் தமிழிய வரலாறோ, மூல முதன்மையும்,உயர் மாந்தத் தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்

அத் தென்குமரித் தலைக்கழக(சங்க)க் காலத்து முத்தமிழ் மீமிசை மாந்த வாழ்வியலின் ஏந்திய பண்பு நலன்கள் யாவும், அடுத்து வந்த இடைக்கழகக் காலந்தொட்டே, (பிற்காலக் கீழை) வேத ஆரியத்தின் நுழைவால் தாக்குண்டு சீர்குலையத் தொடங்கின. அதுமுதலே, ஆரிய எதிர்ப்பியக்கங்களும், தொடர்ந்து, பரவல் சிதறலாகத் தமிழகத்தில் தோன்றி வரவே செய்தன. ஆனால், அவை எவற்றுக்கும் ஆரியத்தை அடிதுமித்துச் சாய்த்துத் தமிழ் மீட்பினை நிலைநாட்டித் தரும் மொய்ம்புரம் வாய்க்கவில்லை.

இறுதியாக, சென்ற நூற்றாண்டில், மேலைநாட்டு நல்லறிஞரால் விழிப்புறுத்தப் பெற்றும், மறைமலையடிகளாரின் தனித்தமிழ்த் தொண்டினாலும், பெரியாரின் இனமானத் தொண்டினாலும் இந் நூற்றாண்டில் புத்துரமூட்டப் பெற்றும், பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றலாயின. அவற்றின் ஒட்டுமொத்த முயற்சிகளின் மெய்வருத்தக் கூலியாக, இன்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் மொழிமுதற் புலத்தில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் உரன்வல அறிவாண்மைப் படை கொண்டு முனைந்துழுது 'தென்மொழி' என்னும் இதழ்வாயிலாக, தேடரிய தெளிவியக்கம் ஒன்று புரட்சிக்கால் ஊன்றி, ஆள்வினையும் ஏற்றுள்ளது.

அத் 'தென்மொழி இயக்கத்தின், வினை வேளாண்மைக்கென மொழி இன - நாடு தழுவிய பல்வேறு துறைகளிலும், பாவலரேறு அவர்கள், முப்பது ஆண்டுகட்கும் மேலாக, பன்னூற்றுக் கணக்கில் பாடிக் குவித்துள்ள அரும்பாடற் கனிகளையே இங்ஙனம் தொகுத்து, 'கனிச்சாறு' ஆகப் படைத்துள்ளோம். அவ்வமிழ்தச் சாற்றினை ஆரப் பருகும் எவரும், தமிழியக் குடிசெயலுக்கு வேண்டிய 'வீறெய்தி மாண்ட' வினைத் திட்பம் பெற்று, தொண்டாற்ற முன்வர வேண்டுதலே எமது பெருநோக்கம் ஆகும்.

இப்பாடற் களஞ்சிய வெளியீட்டுத் திட்டம், கோவை மாவட்டத் தமிழன்பர்களின் அருமுயற்சியால் இயல்வதாகி, தி.பி. 2006-இல் அறிவிக்கப் பெற்று, தி.பி.2008 முதல் செயலாக்கங் கொண்டு, இக்கால் முழுமையாக்கப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை வினைப் படுத்திய தென்மொழி ந. முத்துக்குமரனார், அவர் துணைவர் தென்மொழி மறை. நித்தலின்பனார், ஊக்கப்படுத்திய திரு. க. ஆகுன்றன், கொடை நல்கி வலந்தந்த புரவலன்மார் ஆகிய அனைவரும் தமிழின மீட்பு வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெறும் சிறப்புடையர். வெல்க எம் தமிழம்! மலர்க நல்லுலகம்!

பணிவுடன்,
'கனிச்சாறு வெளியீட்டுக் குழு'
(14.4.1979)
------------------------

முதல் பதிப்பு - சிறப்பு முன்னுரை

கனிச்சாறு-முதல் தொகுதி இது. இதில் தமிழ், இந்தி எதிர்ப்பு, இன எழுச்சி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சில பாடல்கள் பகுப்பு மாறியும் சேர்க்கப் பெற்றிருக்கலாம். விரைந்து அச்சேறியதால் ஏற்பட்ட விளைவு இது.ஒவ்வொரு தொகுதியிலும் பாடல் விளக்கக் குறிப்புகள் என்று ஒரு பகுதியும் சேர்க்கப் பெற்றுள்ளது. புதிய முறை இது. பாடல்கள் சில விடுபட்டுள்ளன. அவை அடுத்த பதிப்பில் சேர்க்கப்பெறும்.

இத்தொகுப்பு வரிசையில் தென்மொழி முதல் இதழிலிருந்து சுவடி 14 ஓலை 12 முடியவும், தமிழ்ச்சிட்டு முதல் இதழிலிருந்து குரல் 9 இசை 12 வரை வெளிவந்த பாடல்களுள், பள்ளிப் பறவைகள் முதல் தொகுப்பில் சேர்க்கப்பெற்றன தவிர, பெரியோர்களுக்கானவும், பிற தமிழ் வெளியீடுகளான பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி, தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலியவற்றுள் வந்தனவும் ஒரு சேரத் தொகுத்துச் சேர்க்கப் பெற்றுள்ளன.

இத் தொகுப்புகளில் உள்ள பழம்பாடல்கள் சில தனித்தமிழ்ப்படுத்தப் பெற்றுள்ளன. சில ஆங்காங்குத் திருத்தம் பெற்றுள்ளன

என் நெடும் பாடல் நூல்கள் சில தனியாக முன்பே வெளியிடப் பெற்றிருந்தும், தனிச் சிறுபாடல்கள் அனைத்தும் சேர்த்துத் தொகுதிகளாக வெளியிடப் பெறாமலிருந்தமைக்குக் கரணியம் பொருள் முட்டுப்பாடே.

இவற்றின் இக்காலத் தேவையை உணர்ந்து கட்டாயம் இத்தொகுதி வரிசையைக் கொணர்ந்துவிடவேண்டும் என்று அருமுயற்சி செய்தவர்களுள் தலையாயவர்கள் தென்மொழி மறை. நித்தலின்பனார் அவர்களும் தென்மொழி ந. முத்துக்குமரன் அவர்களுமே ஆவர். திரு. க. ஆகுன்றன் அம்முயற்சிக்குப் பெரிதும் தூண்டுகோலாய் இருந்தார். வெளியீட்டுக் குழுவினர் பிறரும் என் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.

இத்தொகுதி வரிசைத் தொடர்பாகப் பாடலைப் படியெடுத்துதவிய தென்மொழி மாணவர் சிலர்க்கும், அவர்களின் அன்புப் பணியை அமைத்துக் கொடுத்த தென்மொழி ந. முத்துக்குமரன் அவர்களுக்கும், அவற்றை ஒழுங்குபடுத்திய தென்மொழி மறை. நித்தலின்பனார்க்கும், அவற்றைச் சரிபார்த்துதவிய, ப. அருளி அவர்களுக்கும், அச்சிட உதவிய என் மகன் மா. பூங்குன்றனுக்கும், அலுவலகப் பொறுப்பாளர் இளமுருகன் அவர்களுக்கும், பிழைதிருத்தப்பட்டி எடுத்துதவிய பேரா. மு.ச. சிவம் அவர்களுக்கும், பொருளடக்கம், பாட்டு முதற்குறிப்பு அகர வரிசை தொகுத்துதவிய செம்பியன் வல்லத்தரசு அவர்களுக்கும், மற்றும் தென்மொழி அச்சகப் பணியாளர்க்கும், அழகிய முகப்போவியம் வரைந்த ஓவியர் அமுதோன் அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியும் பாராட்டும் உரியவாகுக.

      - (ஒப்பம்) பெருஞ்சித்திரன்
--------------------

இரண்டாம் பதிப்பு - வெளியீட்டுரை

கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) முதற்பதிப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின், அதன் இரண்டாம் பதிப்பு இப்போது வெளிவருகிறது.

முதற்பதிப்பின் முத்தொகுதிகளும் தென்மொ மாழியில் சுவடி : 14; ஓலை : 12 வரையிலும் மற்றுத் தமிழ்ச்சிட்டில் குரல் : 9; இசை : 12 வரையிலும் வெளிவந்த பாடல்கள் அளவிலேயே அமைந்தன. அதன்பின் தொடர்ந்து வந்த இதழ்களின் பாடல்கள் அனைத்தும் துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று எண்தொகுதிகளாக இப் பதிப்பு நிறைவு செய்யப்பெற்றுள்ளது. மேலும், ஐயா அவர்கள் தம் இளமைக் காலத்தில் எழுதியனவும் இதுகாறும் அச்சுக்கு வராதனவுமான பாடல்கள் சில, பழைய குறிப்புச் சுவடிகளினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன; அன்றியும் ஐயா அவர்கள் அன்பர்கள் பலருக்குப் பல்வேறு நிகழ்வுகளையொட்டி எழுதியனுப்பிய பாடல்கள் பல, அவ் அன்பர்களிடமிருந்து பெறப்பட்டும், சில ஐயா அவர்களின் சுவடிகளிலிருந்து எடுத்தும் இணைக்கப் பட்டுள்ளன. (பழைய பாடல்களில் ஒரோவழி இடம் பெற்றிருந்த அயன்மொழிச்சொற்கள் வரிவடிவில் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன.)

மொத்தத்தில், ஐயா அவர்களின் தனி இலக்கியங்களான கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு, கழுதை அழுத கதை, அறுபருவத் திருக்கூத்து ஆகியன அல்லாத பிற பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்று 'பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனிப்பாடல்கள் அடங்கல்' என்னுமாறு இப் பதிப்பு முழுமையான பதிப்பாக வெளிவருகிறது. அவ் வகையில் இதுவே முதற் பதிப்பு எனலாம்.

பாடல்கள் அனைத்திற்கும் முன்னைப் பதிப்பின் போக்கிலேயே தொடர்ந்து பாடல் விளக்கக் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளளன.

இயற்றப்பெற்ற அல்லது வெளிவந்த காலத்தையொட்டி ஆண்டு, மாத முறைப்படி பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும்.

பழைய பாடல்கள் சில எழுதப்பெற்ற காலம் தெளிவாகத் தெரியாமையால், அப்பாடற்குரிய ஆண்டையொட்டி வினாக்குறி யிடப்பட்டுள்ளது.

இக் கனிச்சாற்றில், தமிழ் மற்றும் இந்தி யெதிர்ப்புப் பற்றிய பாடல்கள் முதல் தொகுதியாகவும், இன எழுச்சிப் பாடல்கள் இரண்டாந் தொகுதியாகவும் அமைந்துள்ளன; நாட்டுரிமை பற்றிய மூன்றாந் தொகுதியில் தமிழகம், தமிழீழம், இயக்கம் என்னும் பிரிவுகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன; பொதுமை, இளைய தலைமுறை ஆகியன பற்றிய பாடல்கள் நான்காந் தொகுதியாகவும், குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னுந் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் ஐந்தாந் தொகுதியாகவும் கொள்ளப்பெற்றுள்ளன; ஆறாந் தொகுதியாவது காதல், இயற்கை, இறைமை என்னும் பிரிவுகளைக் கொண்ட பாடல்கள்; தன்னிலை விளக்கம், பெருமக்கள் சிறப்பு கையறு நிலை, திருநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, மதிப்புரைகள் முதலியனவாகிய பாடல்கள் ஏழாந் தொகுதியில் வைக்கப் பெற்றுள்ளன. பாட்டரங்கப் பாடல்கள் எட்டாந் தொகுதி.

திருவாளர்கள் மறை. நித்தலின்பனார், ந. முத்துக்குமரனார், க. ஆகுன்றன் (கோவிந்தசாமி) தென்மொழி ப. துரையரசன், கோ.ப. சீரங்கசாமி,இரா. கந்தசாமி, மா.ஆறுமுகம், தமிழ்மகன், பேரா. வீ. இராசமாணிக்கனார், கு. வெ. கி. ஆசான் ஆகியோரான முதற் பதிப்பு வெளியீட்டுக் குழுவினர் பத்துப் பேரும், பங்குத் தொகை ரூ.1000/= மேனி அரைப் பங்கு, ஒரு பங்கு, இரு பங்கு என்னும் அடிப்படையில் தொகுக்கப்பெற்ற தொகையைக் கொண்டு கனிச்சாறு (முத்தொகுதிகளும்) முதற் பதிப்பு அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

நூல் அச்சீட்டின் முடிவிலும் அதன் பின்னருமாகத் திரு. மறை. நித்தலின்பனார், பேரா. வீ. இராசமாணிக்கனார், திரு. தமிழ்மகன், பேரா. கு.வெ.கி. ஆசான் ஆகியோர்க்கு நூலாகவும் தொகையாகவும் அப்பங்குகள் திருப்பப்பெற்றன. ஏனையோர்தம் பங்குத் தொகை அவர்கள் சொற்படி நன்கொடையாக ஏற்கப் பெற்றன.

இனி, தமிழ்மக்கள் தம் மொழிநலத்தையும் வாழ்வியற் சிறப்புகள் சீரழிவுகள் ஆகியவற்றையும் உணர்ந்து, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து, எழுச்சிபெற்று, இனநலம் பேணி, நாட்டுரிமை பெற்று வாழ்வாங்கு வாழ வகைசெய்யும் கருத்துத் தெளிவும் உணர்வுச் செழுமையும் வாய்ந்த பாடல் திரட்டான இக் கனிச்சாறு தொகுதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பயன்கொண்டு சிறக்கும் என்று நம்புகின்றோம்.

-தென்மொழி நூல் வெளியீட்டகத்தினர்.
------------------

கனிச்சாறு முதல் தொகுதி
பொருளடக்கம்

பாடல்
1. உளம்புகுந்த தமிழச்சி!
2. தமிழ்த் தலைவர்க்கு!
3. தமிழ்த்தாய் அறுபது
4. கூட்டுக்கிளி
5. பாட்டும் மொழியும்
6. முத்தமிழ் முப்பது!
7. தமிழ்த்தாய்ப் பத்து!
8. முத்தமிழைக் காப்போம் முனைந்து !
9. முத்தமிழ்
10. தமிழ் நாட்டவரே!
11. தாயுரை!
12. முன்னே தமிழ்....!
13. தமிழர்க்குத் தமிழ் உயிர்!
14. உயிர் வாங்குவேன்!
15. கவிதைமேற் கவிதை
16. தமிழில் வடசொற்கள்
17. முந்துற்றோம் யாண்டும்
18. தமிழ்க்கு மூவுடைமை!
19. தமிழில் கற்க முன்வருக!
20. தமிழ் உழவு செய்க!
21. நரிச்செயல்!
22. மொழிப்போர் புரி!
23. தமிழ்ப் போராட்டம்!
24. மணிநாள் விரைந்தது...!
25. செந்தமிழ்ப் பாவை!
26. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க்கொலை!
27. முதலமைச்சே முதற்பகை!
28. மற்போர் தொடங்குக!
29. தமிழ் நெஞ்சம்!
30. தமிழ் ஆர்ப்பரிப்பா? வெட்கம்!
31. தமிழ் படித்தால் வாழ்வு புதுமைபெறும்!
32. 'தமிழ்' எனும் கூட்டினுள் தமிழரே இணைக!
33. தமிழ் வாழ வேண்டுமா?
34. கோடரிக் காம்புகள்!
35. பைந்தமிழில் படிப்பது முறை!
36. 'நமோ ஓம் நமக!'
37. இதற்கென்ன சொல்கின்றீர்?
38. வெற்றிக்கென் வேண்டுவதே!
39. தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள்!
40. தமிழ்நலத்தைத் தவிர்ப்பாரைத் தவிர்த்திடுக!
41. தமிழ்மொழி வாழ்க!
42. தமிழ் முழக்கஞ் செய்க!
43. கிறுக்கர்தம் வாலை அறுக்க!
44. செந்தமிழ்ச் சிட்டே!
45. மானத்தை இழப்பேனோ?
46. குருடும் பேதையும்!
47. மொழி, கருத்து, வினை!
48. தமிழே எனக்கு இறைவன்
49. தமிழ் கெடுப்பானைக் கெடுப்பான் தமிழைக் காப்பான்!
50. தவிராமல் தமிழ்நலம் காக்க!
51. அருள்க செந்தமிழே!
52. தலைவர்கள் தமிழ்நலம் காக்க!
53. செந்தமிழைத் தீய்க்கும் சீர்திருத்தம்!
54. இதுவா, செய்யவேண்டிய சீர்த்திருத்தம்?
55. புலமையைக் கீழ்மை செய்வீர்!
56. தூயதமிழ் பேசுங்கள், எழுதுங்கள்!
57. தமிழைக் கொல்லும் மூடர்களே!
58. செத்துவிட்ட வடமொழி எதற்கு?
செந்தமிழிலேயே வழிபாடு செய்வீர்!
59. தமிழ்மொழி வாழ்க!
60. வயங்குதமிழ் வளர்ப்பதற்கு வன்முறை இயக்கம் ஒன்று தேவை!
61. இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
62. தமிழ்ச் 'சங்கம்' தோற்றுவித்துத் தமிழ்த் தமுக்கை அடிக்கின்றார்!
63. முகிலே, நேருவுக்குச் செய்தி சொல்!
64. வெம்புலியே வாளெடு
65. உரம் இழந்தீரா?
66. தூள் தூள் தூளே!
67. வெள்ளம் வருமுன் அணை!
68. நன்றே செய்வீர்!
69. தமிழ்ப்பயிரில் இந்தித் தீ!
70. தமிழா, எப்படி...?
71. நாடற்றுப் போவாய்.....!
72. மாளல் நன்று!
73. செந்தமிழ் தந்த சிறை!
74. சிறையகம் புக்க காதை
75. மும்மொழித்திட்டம் மூளையைக் குழப்பும்!
76. எத்தனைநாள் இந்திப்போர்?
77. வாளெடுத்துக் கொள்ளுங்கள்?
78. இந்திவெறி ஆளுநரை அகற்றியது!
79. இந்தியை மாற்றுக!
80. தமிழக அமைச்சர்களே! இந்திக்கு வால்பிடிக்காதீர்கள்! 108
81. பொங்காதோ உள்ளம் புலர்ந்து!
82. இந்திக் கோட்டையைச் சுக்குநூறாக்குக!
83. உற்றதமிழ்த் தாய்நாட்டை மீட்போம் இங்கே!
84. வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்!
-------------------------

தமிழ்த்தாய் வாழ்த்து!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே! செங்கைச் செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ!
சிந்துங் கலைவடிவே! சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே!
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!
தமிழ்
---------------

1. உளம் புகுந்த தமிழச்சி!

திருமிகுந்த உருவுடையாள்: சீரமைந்த சொல்லாள்!
தேன்கசியும் மொழிநிறைந்தாள்! திட்பநுட்ப முள்ளாள்!
பருமிகுந்த உட்பொருளும், பயன்மிகுந்த உரையும்,
பல்சுவையும் நிறைந்தொளிரும் திறமிகுந்த பேச்சும்,
கருமிகுந்த மெய்யுணர்வும், கனிவுநிறை அன்பும்
களிப்பெழுந்து பொங்குகின்ற காதல்விளை நோக்கும்
தருமிகுந்த மதிபடைத்தாள்! தமிழெனும்இன் பெயராள்
தமிழனெனை இளமையிலே கண்டுளத்தை வென்றாள்!

தொல்குடிமைப் பிறப்புடையாள்; ஓங்குசிறப் புடையாள்;
தோல்வியிலாப் பாண்டியர்தம் குலக்கொடியின் வித்து!
பல்புலவர் தமிழ்மடியில் பயின்றுவிளை யாடிப்
பாடலிலே உளந்திளைத்துக் கண்வளர்ந்த செல்வி!
வெல்மறவர் தோள்களிலே மறம்வளர்த்த வல்லி;
வேற்றுவரும் சீர்மடுத்தே ஏற்கவரும் நங்கை;
மல்குபெரும் பேறுடையாள்! மன்னுதமிழ்ப் பெயராள்!
மயலறியாப் போதிலந்த மங்கையெனை வென்றாள்!

இலக்கணத்துப் புலமையினாள்! இலக்கியங்கள் கண்டோள்!
எவ்வெவரும் வியந்துரைக்கும் பொருள்விளக்கம் பெற்றாள்!
துலக்கமிலாப் பிறமொழிகள் தோன்றுமுனந் தோன்றித்
துலங்கியசீர்த் தன்மையினாள்! இளமைவளங் குன்றாள்;
கலக்கமறு நல்லறநூல் விளக்கமுறக் கற்றாள்!
காதலுக்குத் தூய்மையினாள்! சாதலிலா நல்லாள்!
குலக்கொழுந்து; நிறைவுடையாள்! கொழுந்தமிழென் பெயராள்!
கொஞ்சுமொழி கூறியிள வஞ்சியெனை வென்றாள்!

செங்கனிவாய்க் கிள்ளையினைச் சிறுமைசெயு மியலாள்;
சீருயர்ந்த குயின்மொழியைக் கொடுமைசெயு மிசையாள்;
பொங்குணர்வால் துடிப்புறுநற் கூத்தியக்கும் வல்லாள்;
புதுக்கலைக்குஞ் சலிப்படையாப் புத்திளமைக் காரி!
தங்குயர்தொல் காப்பியமும், தொகையெட்டும் பத்துத்
தனித்தமிழ்சேர் பாட்டுகளும் பதினெண்கீழ்க் கணக்கும்
மங்கையறி வாளவற்றை விழைந்தவர்க்குஞ் சொல்வாள்!
மனந்துலங்கா இளமையிலே எனைவளைத்துக் கொண்டாள்!

உளமறிந்து வந்தவளை உவந்துவர வேற்றேன்;
உணர்வளித்து நான்வளர இலக்கியப்பால் ஊட்டி வளமையுற
உயிருவக்கும் மெய்யுணர்வைக் கீண்டு
வயங்குதமிழ்த் தேன்பிழிந்தே எனைச்சுவைக்க வைத்தாள்!
அளவகன்ற தவள்பெருமை அத்துணைக்கும் வேட்கை;
ஆயினும்என் செய்குவன்யான்? வளர்ச்சியுறாப் பிள்ளை
பிளவுபடாத் தொடர்புகொள வேண்டுகிறேன் யாண்டும்;
பிணி, உறக்கம், சாவு, ஒடுக்கம் இவற்றினுக்கென் செய்வேன்?
- 1954
------------------------

2. தமிழ்த் தலைவர்க்கு!

தமிழ்த் தலைமை தாங்குவரே, தண்டமிழ்க்குத்
தணிப்பறியாக் கொடுமை செய்தே
அமிழ்பகைவர் தம்பாலே தகுபொருளைத்
தண்டுகின்றார், அவர்க்குச் சொல்வோம்!
தமிழ்க்குலத்தீர்! தமிழ்குலைத்தீர்; தமிழ்ப்பண்பு
தனைவிட்டீர், உங்கள் வாழ்வும்
தமிழ்த்தாயின் வாழ்வன்றோ? அந்நன்றி
தனக்கேனும் தமிழ்காப் பீரே!
-1950
----------------------

3 தமிழ்த்தாய் அறுபது.

அந்தமிழ் நாட்டில் தோன்றி ஆன்றோருக் கின்பங் காட்டிச்
செந்தமிழ்க் கழகம் ஊர்ந்து சிறப்பாய நூல்க ளாக்கி
வந்தனை யன்றோ உன்னை வாழ்த்தாத நாவென் நாவோ?
எந்துயர் கண்டாய்; வந்தெம் இடரினைக் களைவாய் நீயே. 1

ஆவதை யாக்கி னோருள் அனையுனைப் போற்றார் யாரோ?
காவதி நாட்டை யண்டிக் கனிதமிழ் கல்லார் யாரோ?
நாவதி ராற வுன்றன் நற்றமிழ் பாடார் யாரோ?
ஈவதி லுன்னை விட்டே யெங்கணிற் காண்பார் யாரே? 2

இத்தரை தமிழ்நா டென்றே எப்பொழு தார்ப்பேன் நீர்சூழ்
இத்தரை குறள்நா டென்றே யார்சொலக் கேட்பேன் இந்திப்
பித்தரின் வாயிலும்நற் றமிழாடும் நாளென் நாளோ?
குத்தல்சேர் வறுமை நீக்கிக் குறைபோக்கெந் தமிழின்தாயே! 3

ஈயார்நற் றமிழைக் கேட்டே ஈயுநா ளெந்த நாளோ?
தீயார்செந் தமிழால் உள்ளம் திருந்துநா ளெந்த நாளோ?
வாயாரத் தமிழால் மக்கள் வாழ்த்துநா ளெந்த நாளோ?
சேயானை அன்னாய் நீயே சிறப்பிக்கு நாளெந் நாளோ? 4

உன்றனைப் பாடா ரெல்லாம் ஊமைய ரன்றோ வாழ்வில்
செந்தமிழ் படியா ரெல்லாஞ் சீர்பெறா ரன்றோ மண்மே
லுன்றனைப் பேணார் எல்லாம் உளமிலார் அன்றோ உள்ளம்
வந்துனைப் போற்று கின்றேன் வகைசெய்வாய் தீமை போக்கி! 5

ஊமையர் தமிழைப் பாடி உருப்பெறல் வேண்டுந் தீய
காமியர் தமிழால் நெஞ்சங் கரைந்துய வேண்டும் வாழ்வின்
தீமையர் உன்னைப் போற்றித் திருந்திய ராகல் வேண்டும்
நேர்மையி லின்னல் வாழ்வை நீந்தும்நா ளெந்த நாளோ? 6

எவ்வினைத் தமிழைக் காக்க என்றறிந் திருப்பார் யாரும்
அவ்வினை யாக்க முன்றில் ஆர்த்திட வேண்டும் அம்மா!
செவ்வினை யாக்கி யென்றன் செந்தமிழ்த் தாயைப் போற்றி
இவ்வுல கெல்லாம் வாழ்ந்தே இன்புறும் நாளென் நாளோ? 7

ஏற்றஞ்சேர் பாட்டு வேண்டும் ஏர்ப்பாட்டு தமிழில் வேண்டும்
ஆற்றினில் படகுய்ப் பார்க்கு மணிதமிழ் வேண்டுந் தென்றற்
காற்றெலாந் தமிழ்ம ணந்து களிதரல் வேண்டும்; பாடற்
சோற்றினைப் படையல் செய்தேன்; சோர்வற நீக்கு வாயே! 8

ஐயத்தைப் போக்கி மக்கள் ஆர்வத்தை ஊக்கி வைக்கத்
தையலைப் போற்று கின்றேன் தனித்தமிழ்த் தாயுன் னோடு
மெய்யுற வாக நிற்கும் மென்றமிழ்ப் பித்தன் என்னைக்
கையற வேண்டாம் அம்மா காத்தெனை ஊக்கு வாயே! 9
.
ஒருகையிற் குறளு மற்று மொருகையி லடியு மேந்தி
மருங்கினில் மணியுங் காலில் மருவறு சிலம்பும் பூண்டு
கருங்குழற் காட்டிற் சங்கக் கவின்பெரு நூலாய்க் காட்சி
தருந்தனித் தாயே! என்னைத் தளர்விலா தணைப்பாய் நீயே! 10

ஓடுகைக் கொண்டோ ருன்னை வழுத்துவ ரென்னில் சங்க
ஏடுகைக் கொண்டோ ரெல்லா மேத்துவ ரன்றோ நல்ல
பாடுகைக் கொண்டார் வாழ்வர்; பைந்தமி ழன்னா யுன்னை
நாடுகை கொண்டோன் மட்டும் நலிவதோ? சொல்வா யம்மா! 11

ஒளவியஞ் சொல்வார் வாழ்ந்தும், அறிவிலார், கல்லார் வாழ்ந்தும்
வெளவுதல் செய்வார் தீய வஞ்சகர் வாழ்ந்தும், வாழா
திவ்விடுக் கண்பட் டுள்ளோ னின்பத்தைக் காணா தெல்லாந்
தவ்வையின் கொடுமை யில்லை; தனித்தமிழ்க் கொடுமை யன்றோ! 12

கவின்பெறு தமிழே! என்னைக் காக்கின்ற அருளே! இன்பம்
குவிந்தநற் பொருளே! எண்ணக் குன்றமே! இடுக்கண் கண்டால்
அவிழ்கின்ற உடுக்கைக் காற்றுங் கையென விரைநீ யென்று
நவில்மறை யுடையா யானால் நாவலர்ப் போற்றாய் வாழி! 13

காமலர்க் கள்ளே! கண்ணின் கருமையே! கனியின் சாறே!
பாமலர் அளித்தோ னெண்ணப் பரவையே! தீயோர் வாழ
நாமலர்ந் துன்னைப் போற்றும் நல்லவற் பேணா ளாகிப்
பூமலர் வாயடைத்தாய்; புரைதுயர் நீக்காய் வாழி! 14

கிளிவாய்வாழ் தமிழே! யாவின் கிளைவாழ்மைக் குயிலின் பாட்டில்
ஒளிவாய் நீ! தென்றல் வாயின் ஒலியே! பூ வண்டின் வாயில்
நெளிவாய் நீ! நீலந் தோய்ந்த நீளலைச் சுருளில் பேசி
ஒளிர்வாய் நீ! என்னைக் காணா தொளிவாயுள் ளொளியே வாழி! 15

கீழ்மைகைக் கொண்டோர் போற்றிக் கிழமையு மறவா துள்ளும்
ஏழ்மைகொள் புலவ னெம்மை இரங்கியே காணா தாளைத்
தாழ்விலும் உளம்நை யாமல் தனித்தமிழ்ப் பாடல் யாத்து
வாழ்விலா வகையாய்ப் பேணி வருகின்றேன் காணாய் வாழி! 16

குழவியி னுள்ளத் துள்ளே குவிந்துநீ வாழ்வு பெற்று
மழலையில் வளர்ந்து தாயின் மார்பினிற் புரண்டு பள்ளி
நிழலிலே குந்தி யின்பம் நீட்டியே என்னைக் கண்டு
விழைந்தனை ஆனால் வாழ்வை விளைவிக்க விழையாய் வாழி! 17

கூத்திசை யியலு மாகக் கோலஞ்செய் தமிழே, ஈண்டு
நீத்திசை யின்றிப் போன நிலையினைப் பாடிப் பல்வா
றேத்திசீர் பரப்பி யென்றன் ஏற்றத்தை நாட்டி உன்னை
நாத்திசை யிரண்டும் வாழ வைப்பன்; நீ வாழ்வா யம்மா! 18

கெடுதியைச் செய்வார் கண்டால் கீழ்க்குனிந் திடுவேனுன்னை
யடுத்தவர் தீயராயின் அவர்நாண வைப்பேன்; வாழ்வில்
படுத்தவர் தமிழ ராயின் பணிந்துடன் சென்று காப்பேன்;
கடுத்தவள் நீயா யிற்பின் கழறுவ துண்டோ அம்மா? 19

கேட்டலே இன்பம்; வாயால் கிளத்தலோ இன்பம் இன்பம்.
பாட்டிலே நெஞ்சு தோயப் படித்தலோ வாயுக் கின்பம்.
ஏட்டிலே கண்ணை வைத்தா லெடுப்பதோ ஈட்டிக் குத்து.
வாட்டினாய் உனைவாழ் விக்க வாடுவேன் காணாய் வாழி! 20

கையடி செய்வார்க் கெல்லாம் களிசெய்வாய்; கூட்டத் தூர்ந்து
பையடி செய்வோர் பையைப் பணத்தினால் நிரப்பு கின்றாய்!
தையலே, உன்னைக் காணத் தலைநிலம் கவியு மென்பேன்.
நைந்துளேன் என்ப தெல்லாம் நாணய விளைவே யாகும்! 21

கொல்லியில் வளர்ந்தா யென்று குறுகினே னின்பங் கண்டேன்.
நெல்லியின் கனியால் இன்பம் நேர்ந்ததே யென்று பாடுஞ்
செல்வியைக் காணுகின்றேன்; சேக்கிழார் பேசு கின்றார்
இல்லையென் றுள்ள வர்க்கே யெந்தமி ழில்லை யம்மா! 22

கோவலன் கண்ட பெண்ணைக் குவலயம் போற்றப் பாடி
நாவலன் இளங்கோ தன்னை நற்புகழ் எய்தச் செய்த,
பாவலர் நெஞ்சில் வாழும் பத்தினி படிக்குங் காலை
ஆவலைத் துண்டு செய்வாய்; ஆனாலும் வாழ்த்து கின்றேன்! 23

கவ்விருள் அன்றோ உன்னைக் கல்லாரின் அறிவெல்லாங் கொல்
அவ்விருள் போக்கு தற்கே அருந்தமிழ் பேசல் வேண்டும்.
இவ்வகை எடுத்துச் சொல்லும் எம்மோரிவ் வுலகத்துள்ளே
எவ்வகை வாழல் வேண்டும் என்பதை அறியாய் வாழி! 24

சங்கத்தின் விளைவே! என்றன் செந்தமிழ் வீடே! ஒவ்வோர்
அங்கத்தின் உருவே! மூச்சிற் காகிய முதலே! ஆழ்ந்த
வங்கத்தைக் கிழக்கும் வாழும் அரபியை மேற்குந் தாங்கி
எங்களைக் காக்கத் தெற்கில் கடலோடும் மலையே வாழி! 25

சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்
மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்
ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்
காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா! 26

சிவிகையிற் குந்தி ஏத்திச் 'சிரமீ’து வைத்துப் பேணி
அவிகையில் லாமற் காத்த அரசரின் தமிழே, யின்று
‘புவி’மிசை யஃகித் தேய்ந்து போயினை யன்றோ நெஞ்சு
குவியுதென் னுயிரோ நைந்து குலையுது காத்துத் தேர்வாய்! 27

சீர்த்திசேர் வேந்தர் எல்லாம் செந்தமிழ்ப் புலவர் செய்த
நேர்த்திசேர் பாக்கட் கீந்து நேர்மிடி போக்கிப் போந்த
ஆர்த்திடு கழகம் ஆக்கி வைத்தனர் தமிழின் வேந்தே
பார்த்திடு வறுமை நீக்காப் பாவையே பாச்சு வைப்பாய்! 28

சுவைத்தவா யூறிநிற்கும் செம்பொருள் விண்டு கண்டு
துவைத்திடு நெஞ்சுக் கேயோர் இன்பத்திற் கொப்புண்டோ, வேந்
தவைத்திடு வாழ்த்துப் பெற்றோய் அல்லலைப் பெற்றோன் கண்டும்
சுவைத்திடு வாழ்வைத் தாராய் சுரும்புநான் மலர்நீ யன்றோ! 29

சூட்டினார் புலவர் பன்னூல் சூழ்ந்துள்ள வறுமை உந்தும்
வாட்டத்தைப் போக்கா தன்னார் வாணாளைத் தீநாள் ஆக்கி
மேட்டிமை பெற்றாய் தீய வஞ்சனை கண்டும் உன்னை
ஏட்டிலே தோய்ப்பேன் நீயோ வாழ்வினைத் தீயிற் றோய்ப்பாய்! 30

செம்மொழித் திருவே! என்னைச் சேர்ந்த நற்கலையே! வாழ்வின்
மும்மொழிப் படையே! உள்ளம் மூழ்கின்ற அன்பே! ஞாலத்
தெம்மொழி ஒன்றே ஏற்றம் உண்டென உணர்த்தி மக்கள்
மம்மரை யறுப்பேன்; என்றன் மனையினிற் குடிசேர் வாயே! 31

சேராது தனித்தி யங்கும் செந்தமிழ் நாட்டாட் சிக்கே
ஓராது தீங்கு செய்யும் உணரார்க்கே உணர்த்து மாற்றான்
ஆறாது கதறும் வாயை ஆற்றாமற் கேடு செய்யும்
வேறார்க்குத் துணையாய் நிற்பாய்! விரிமதி கொள்ளாய் வாழி! 32

சொல்லொன்றை யெண்ண லின்பஞ் சுவடியி லெழுத லின்பஞ்
சொல்லொன்றைச் சொல்ல வாய்க்குச் சொல்லொணா வின்பஞ் சொன்ன
சொல்லொன்றைக் கூர்ந்து கேட்ட செவிக்கின்பம் செவியிற் பட்ட
சொல்லினால் உடற்கே இன்ப மைவகை யின்ப மம்மா! 33

சோர்வுற்ற பொழுதிலேயோர் செந்தமிழ்ப் பாடல் உண்டால்
ஆர்வற்ற உள்ளத் திற்கோ ராயிர மின்பம்; வந்து
நேர்வுற்ற துயரால் உள்ளம் நைந்திடும் போழ்தில் காதிற்
சேர்வுற்ற தமிழ்ச்சொல் லம்மா சேர்ப்பது கோடி யின்பம்! 34

ஞமலியொன் றிரவிற் றோயுங் திங்களைக் குரைப்ப தொப்பத்
தமநலம் மறந்தே இன்பத் தமிழினைப் பழிப்பார்க் கெல்லாம்
எமதுநா விளக்கஞ் சொல்லு மேற்றத்தை விளைக்கு மானா
லுமதுநா கலிநோய்க் காற்றா துட்புகும் பவள வாயே! 35

ஞாலத்து முதலே! மக்கள் நன்னிலை வாழ்வுத் தாயே!
கோலத்து வரியே! உன்னைக் கொடுமொழி சொல்வார் கொண்ட
தாலத்துப் போகச் செய்யும் தனிமகன் வறுமை யேற்றுச்
சேலத்துள் வாழ்வான் கண்டு செம்மைசேர் சீலத் தாயே! 36

ஞிமிறுநான் மலர்நீ ஊரும் எறும்புநான் கன்னல் நீயே
தமிழ்நெஞ்சக் கிழிஞல் நான்நீ தனிமுத்தா யதனுள் வாழ்வாய்
கமழ்நறு மாரம்நீ; என் கவிமன மாரக் கல்லே!
அமிழ்தெழு பரவைநீ நான் அதிலுறு மீனந் தாயே! 37

ஞெமுக்கிடு மிடுக்கண்பட்ட ஏழையன் வறுமை யென்னும்
இமிழ்க்கிடு மாழி நீந்த வின்றமிழ்ப் படகை யாடா
தமுக்குவை; கரையே றிப்போய் ஆக்குந வாற்றிமீட்டே
உமக்கொளி மண்டு நீண்ட உயர்புகழ் சேர்ப்பன் காணாய்! 38

ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறு போந்து திங்கள்
நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த
தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்
வள்ளண்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்! 39

தனித்தகை மொழியே! இந்தத் தரையில்வாழ் மக்கட் கெல்லாம்
இனித்தநற் பொருளே! சொல்லின் எளிமைசேர் அழகே! இன்பக்
கனித்தமிழ் மொழிகூ ரன்னாய்! கடிதமிழ் கற்குங் கால்முன்
னினித்துப்பின் தீமை சேர்க்கும் முரண்பாடு கொண்டோய் வாழி! 40

தாவில்மன் புகழைச் சேர்ப்பேன்; தனித்தமிழ் தமிழ்என் றார்ப்பேன்
பாவில்நன் கருத்தைச் சொல்லிப் பாரினுக் குதவி யன்பு
தூவிய நிலையில் வாழக் குறிக்கொண்டு வாழுங் காலை
மேவிலா தென்றன் போக்கில் மிடிசேர்த்தாய் தாயே வாழி! 41

திரும்பிய திசைகள் தோறுந் தீந்தமிழ் பேசல் வேண்டும்
விரும்பிய கருத்தைக் கூறச் செந்தமிழ்ச் சொல்லே வேண்டும்
கரும்புதீஞ் சுவையே! வாழ்வின் கதிரொளி! இன்பம் யாண்டும்
அரும்பிய வாழ்வு வேண்டு மனத்தினை வாழ வைப்பாய்! 42

தீஞ்சுளைக் கனியின் சாறே! தென்றலே! தென்ற லூரும்
பூஞ்சுனைப் புனலிற் றோயும் புதுமண மலரே உந்தும்
ஊஞ்சலின் அசைவால் உள்ளம் உணர்ந்திடு மின்ப மேவான்
றோய்ந்துவீ ழருவியெல்லாந் தோகையுன் தோற்ற மன்றோ? 43

துருவுங்கா லென்னின் மிக்க துன்பத்தைக் கொண்டாய்! கொண்ட
அரும்பெறு நூற்செல் வத்தை ஆழிக்குப் பறிகொ டுத்தே
பெருந்துன்பம் மேவுநீண்ட பிணிவாழ்க்கை யுடையாய் என்பால்
வருந்துன்பம் போக்க நீயும் வல்லையோ? மிடிகொண் டாளே! 44

தூறலெந் துன்ப மென்னின் தொலையாப் பேய் மழையுன் துன்பம்.
பீறலெந் துன்பெனில், நாண் பேணவுங் கூறை யில்லாய்!
ஏறலெந் துன்ப மென்னின் ஏறிய துன்பங் கொண்டாய்
ஆறலெந் துன்ப மென்னின் ஆற்றாத துயர்கொண் டாயே! 45

தொங்குநீர்க் கோடைக் காகுந் திரண்டுள நூற்க ளெல்லா
மிங்குளோர் வெம்மை போக்கு மின்னிழ லாகும் நாறுஞ்
சங்குசாய் ஆழி யுண்ட நூற்கோடி யென்றால் வந்தே
தங்கினார் மேய்ந்த நூற்கள் கணக்கிலை; தமிழின் தாயே! 46

தேடிய நூற்செல் வத்தைத் திரட்டியே அணிகள் செய்து
நீடிய வின்பந் துய்த்துப் போந்தனர் சான்றோர்; ஈண்டு
நாடிய கள்ளர் எல்லாம் நாட்குநாள் நினைச்சி தைத்து
வாடிய நெஞ்சாய் விட்டார் வாட்டம் வான் கொள்ளா தம்மா! 47

தையலே எஞ்சிநின்ற செம்பொருள் நூற்செல் வங்கள்
கையள வேயா னாலுங் கணக்கிலா மதிப்புச் சூழும்.
உய்விலை யென்கின் றேனான் உயிரிலை என்கின் றாய்நீ
நையலி னின்று மீளும் நாளெந்நாள் அறியே னம்மா? 48

தொன்மையை எண்ணுங் காலைத் துவள்கின்றேன் ஐயோ வந்தார்
புன்மையை உன்னுங் காலைப் புரள்கின்றேன் தீயோர் உன்றன்
நன்மையைக் காணார் அல்லால் நலவினை ஏற்றுவார் கொல்.
என்மை சூழ் இன்னல் உன்றன் இடரிலோர் துளியே அம்மா! 49

தோளொடு தோள்நின் றாற்றத் துகள்வானில் மேவ வார்க்கும்
வாளொடு வாள்நின் றாற்ற வாங்குகை வீச் சொலிப்ப
ஆளொடு ஆள்நின் றாற்றும் அருந்தமிழ்க் கூட்ட மெங்கோ
தூளொடு தூளாய்ப் போன வகையாகித் துவண்டு போனாய்! 50

நந்தமிழ்த் தாயைக் காக்க நாட்டினுள் மக்க ளெல்லாம்
வெந்தநெஞ் சோடுகண்ணில் வெம்மையோ டணுகி நின்று
வந்தவ ரோட்டி வாழ்வை வகை செய்தே ஆட்சி மாற்றி
அந்தமிழ் பேணித் துன்ப மகற்றுநா ளெந்த நாளோ? 51

நானிலந் தமிழை யேற்று நந்தாத சீருண் டாக்கி
மாநில மக்கட் கெல்லாம் மணித்தமிழ்ப் பேசச் சொல்லி
ஈநில நூற்க ளெல்லாந் தனித்தமிழ் இயம்பல் தானே
நாநில மீதுகாணு நற்கனா தமிழ்த்தா யம்மா? 52

பசிப்பிணி பஞ்சம் என்றே பாடுடை மக்கள் கூற
புசித்தினி யெஞ்சோ மென்றே புவிமிசைச் சிலரே வாழ
விசித்தழு குழவி தாங்கி வெம்பசி மடியிற் றாங்கி
விசித்திலா வேழைக் கெந்நாள் வாழ்வுசேர் நாளோ அம்மா! 53

பாருக்கோ ரரசுசெய்து பணிமொழி யமைச்சுண் டாக்கி
நேருக்கோர் மொழியை வேண்டின் நந்தமிழ் அரசி லேற்றி
ஊருக்கந் தமிழ்ப்பேர் சூட்டி உழைப்பினால் சீர்மை செய்து
ஏருக்கித் தரையை ஈந்தே இன்னலஞ் சேர்ப்பா யம்மா! 54

பிறங்கிய நன்னூ லாக்கீர் பீடுறு வினைகள் ஆற்றீர்
கறங்குசீ ரடிசேர் அன்புக் கன்னியர் போற்றீர்; தொல்சீ
ரிறங்கிய நற்றாய்ப் பேணி ஏறுசீர் நாளுஞ் சேர்த்துத்
திறங்குவி நாட்டைக் காப்பீர் தீந்தமிழ்த் தாய்காப் பீரே! 55

(வேறு)
புகவொடு புனைவிற் பொருளும், பொருள்தரு தொண்டும் புலனார்
மகவொடு மனையு மகலா மாண்பொடு பிறவும் மலியத்
தகவொடு வாழ்வுந் தகராத் தகைசேர் தமிழும் சூழ
அகமொடு புறமு மாநல் லறவாழ் வாழ்த்துக தாயே! 56

(வேறு)
பூக்கக் காப் புன்னைக் கோட்டின் மாக்குயிற் பேடுதன்னோ
டூக்கக்கூக் குக்கூக் குக்கூ வெனக் குரலெற்றுப் பாடத்
தேக்கக்கோ டொன்றிற் கிள்ளைக் கூட்டந்தீந் தமிழைப் பேச
மாக்கவி நாட்டற் கேயான் மயலுற வேண்டுந் தாயே! 57

(வேறு)
பெண்கட்குக் கல்வி வேண்டும் பேதைக்குந் தமிழைச் சொல்லிக்
கண்கட்கே வொளியுண் டாக்கிக் கவினுள்ள பொருளைக் காட்டிப்
பண்புடை யாராய்ச் செய்து பாரினில் யாவர் தாமும்
விண்ணொலி யெழுப்பி யுன்பேர் வாழ்த்துநா ளென்வாழ்நாளே! 58

(வேறு)
மேகந் தூங்கும் வான்பொரு நின்று மென்றமிழ் நின்று காண்குதுபோல்
மாகந் தோங்கு செந்நூ லூடாய் மாநிலங் காணும் வகை யாலே
தாகந் தாங்கு மென்னுள வாசை தணியாய் நெஞ்சுள் வாழ்வாளே
பாகம் புனல்பாய் செந்தமிழ் நாட்டுப் பாவரசீ என் நாவரசீ! 59

(வேறு)
வேட்டல் நெஞ்சின் வாழ்வே! ஒளியே! வேறெம் மொழிக்குந் தாயேவுன்
னோட்டம் எல்லாஞ் செந்தமிழ் நாட்டின் நோதீர்க் கன்றோ எம்போல
ஊட்டங் கொள்ளும் பாவலர் நெஞ்சில் உறைவோளே நாவுரையாளே
வாட்டங் கண்டாய் கதிராய் என்றன் வன்பனி போக்கெந் தமிழ்த்தாயே! 60
-1953
---------------------

4. கூட்டுக் கிளி!

கூட்டுக் கிளியே! கூட்டுக் கிளியே!
பாட்டைக் கேளாய் கூட்டுக் கிளியே!
நாட்டு விடுதலை நாட்டுக வென்றே
நீட்டி முழக்கினும் நின்மொழி கேட்டுக்
கூட்டைத் திறக்குங் கனிவுடை யாளரிந்
நாட்டி லில்லை கூட்டுக் கிளியே!

நின்வாய்ச் செந்தமிழ் நேற்றே மடிந்த
புன்வாய் வடமொழி போட்ட பிள்ளையாம்!
இப்படி இயம்புதல் இழிந்தவ ரல்லர்!
நற்படி யாத்தமிழ் நலம்படித் துயர்ந்து
பட்டம் பெற்ற பன்மொழிப் புலவர்!
திட்டம் அறிவையோ யான்மொழி கின்றேன்!

காதிற் புகுவது கடுங்குரல் எனினும்,
ஓதி யுணர்ந்த துயர்நூ லெனினும்,
கண்ணாற் பார்ப்பதும் உண்மையே எனினும்
பன்மலர் நுகர்தல் மூக்கே எனினும்
வயிற்றைப் புடைப்பது வாய்புக வேண்டுமே!
சோற்றுப் பருக்கை சொன்னசொல்! தமிழ்ப்பயிர்
நாற்றின் நடுவில் நலிவுசெய் களைகளே!
-1955
-------------------

5 பாட்டும் மொழியும்!

பாட்டெனப் படுவது பண்ணும் கருத்தும்
கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் நீக்கலும்
உள்ளத் தாழ்ந்த உள்ளுணர் வெழுந்து
வெள்ளத் தோசையில் விளைக்கும் சொற்குழு!
ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம்
சுற்றிய தொன்றின் பான்மையைச் சொற்களால்
அழகுறக் காட்டி அணைக்கும் மகிழ்வைப்
பழகுநற் கூட்டும் பான்மை யுடையது!
எண்ணமே மலர்ந்தோ ரிசைபட வருதலாற்
என்ன மொழியிலும் எழுந்துயிர் பெறுவது!

கிளர்த்தெழு முணர்வைக் கிளத்துதல் மொழியின்
வளத்தைப் பொறுத்தது? வைய மொழிகளுள்
படலி லாமொழி பயனில தெனலாம்!
தேடருஞ் சொற்கள் திகழ்தரு மொழியே
பீடுறு மொழியாம்! பாட்டெனும் இசைப்பெண்
ஆடுநல் அரங்கமம் மொழியே எனலாம்!
இசையினுக் கேற்ற மெல்லொலிச் சொற்கள்!
வசையினுக் கேற்றவை வல்லொலிச் சொற்கள்!

இன்னவை இரண்டும் இனியநம் தமிழில்
கன்னலில் இன்சுவை கலந்தது போலக்
கலந்துள தறிவோம்! காணும் மொழிகளுள்
இலவா மிவ்வகை! எடுத்துக் காட்டுவாம்!
கரடும் முருடும் கடிபொருட் சொற்கள்!
பறித்தலும் முறித்தலும் பாடுடை வன்செயல்!
'பேசுதல்' என்பது மெதுவாய்க் கடிதலும்!
ஏசுதல் என்பது வலிவாய் இரைதலாம்!
திட்டுதல் என்பது தீமொழி கூறலாம்!
முன்னிரு சொற்களில் மொய்க்கும் எளிமையும்
பின்னொரு சொல்லிற் புரளும் வன்மையும்
வாய்விட் லொலிக்கின் வல்லோர் உணர்வர்!
புல்லைப் 'பறித்தனன்' என்பதும், மென்மைப்
‘பூவைக் கொய்தனன்' என்பதும் காண்மின்!
வேற்று மொழிகளில் வினைச்சொல் பெயர்ச்சொலை
ஏற்று வருவதை எங்கும் கண்டிலம்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

'யாய்' எனக் கூறுதல் 'என்தாய்' எனப்படும்!
'ஞாய்' என மொழிதலோ 'நும்தாய்' என்றலை!
அவன்தாய் என்றலைத் தாயென மொழிகுவர்!
எவர்மொழி தமிழ்விட் டியம்புமிவ் வாறு!
ஏவலி னொரு சொல் லோ'டல்' விகுதி
தாவல் செய்யின் வினைச்சொல் தோன்றும்!
ஒவ்வொரு செயற்கும் ஒவ்வொரு புதுச்சொல்
பயிறல் என்பது பண்தமிழ்க் கண்ணிலை!

பாடு எனப் படுமோர் ஏவலோடு 'அல்' வரின்
'பாடுதல்' எனுமோர் வினைவரும்! இதுபோல்
கூடுதல் தேடுதல் குனிதல் குரைத்தல்,
ஓடுதல் உண்ணல், உடுத்தல் உலவுதல்,
எனவரும்! இத்தகு முறைஆங் கிலத்தில்
உண்டென் றியம்பினும் உறுந்தொடர் வினைக்கும்
ஒன்றென நிற்கும், மயக்கொன் றுண்டு
இத்துணைச் சொற்சிறப் பேற்றதந் தமிழில்
இசைபொருட் கேற்ற வகைசில காண்போம்!
எத்துணைச் சிறப்பொடு, எழுந்தது இலக்கியம்!

மேனாட் டார்கள் மிகுதியும் கருத்தையே
வீணாய்ப் புகுத்தினர்! வேட்டல் கொடுத்திடும்
சொற்களின் அழகிலாச் சொற்றொடர் மனத்தில்
நிற்கு மென்பது நிலையிலாக் கொள்கை!
பெருங்கருத் தெனினும் பாடலோ டியன்ற
அருந்திறன் பெற்றகத் தமைந்திடும் விரைவில்!

இதனை எண்ணியே இலக்கணம் என்னும்
பொதுவரம் பதனைப் பாடலிற் புகுத்தி
எளிதினில் யாவரும் உள்ளத் திறுத்திட
தொல்காப் பியனெனுந் தொன்முது புலவனும்,
பவணந்தி என்றொரு நன்னூல் முனிவனும்,
மொழியினுக் கடித்தள வன்மைசெய் வார்போல்
அழியா இலக்கணம் அன்றே செய்தனர்
இலக்கணம் என்னும் ஈடிலாச் செல்வமும்
இலக்கிய வழகொடு இருப்பது தமிழ்போன்
றெம்மொழி தனிலும் இலை யென் றெண்ணி
இம்முறை யொன்றே ஈடிலாப் பெருவாய்!
-1955 (?)
----------------------

6 முத்தமிழ் முப்பது!

6.1. பாட்டுப் பத்து

1. மூத்த வுணர்வின் முதிர்வசைவால் உள்ளணுக்கள்
யாத்த வரியிசையே பாட்டு.
2. வல்லார் நினைத்த நினைவலைகள் வந்துறுத்தச்
சொல்லால் எதிரொலித்தல் பாட்டு.

3. காற்றின் நுணித்தாய்க் கருத்தலைகள் உள்ளூறி
ஊற்றுப் பெருக்குவதே பாட்டு!

4. கிடந்த வொழுங்கின் உணர்வலைகள் நெஞ்சில்
நடந்த வொழுங்கிசையே பாட்டு.

5. ஊன்றும் இறையொளிமூண் டுள்ளக் கனலெழுப்பத்
தோன்றும் உணர்வொலியே பாட்டு.

6. மூண்ட நெடுநினைவால் முற்றும் உளக்கனியைக்
கீண்ட வொலியூற்றே பாட்டு.

7. அண்ட வெளியொலியை ஆகத் தணுப்புகுத்தி
விண்ட வுணர்வொழுங்கே பாட்டு.

8. தோற்றம் நிலைப்பொடுக்கம்
என்னுந் தொலையுணர்வின்
ஏற்றம் விளக்கொலியே பாட்டு.

9. அணுவை அணுத்துடிப்பை ஆன்ற வொளியின்
அணுவை ஒலியாக்கல் பாட்டு.

10. என்றும் இருப்ப தினியொன் றிருப்பதுபோல்
என்றும் இருப்பதுவே பாட்டு.
--------------

6.2. கூத்துப் பத்து

1. தானதுவா யெண்ண அதுதானே வந்துளொன்றி
ஊனணுவை யுந்துவதே கூத்து.
ல்
2. புலம்பற்றி யுள்பற்றிப் பூதங்கள் பற்றித்
துலங்கசைவைத் தோற்றுவதே கூத்து.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. கண்ணொளியை மெய்யொளிர்ப்பக்
காதொலியை வாயுதிர்ப்பத்
திண்ணணுவில் நெஞ்சாடல் கூத்து.

4. கோடி யணுத்திரளும் கூத்தன் உளக்கயிற்றில்
ஆடி வுணர்வியக்கல் கூத்து.

5. வாங்குணர்வை யேந்தி
வழங்குணர்வால் காண்பார்க்குள்
ஓங்குணர்வைப் பாய்ச்சுவதே கூத்து.

6. அண்ட வியக்கத்தை ஆன்றணுக்கள் ஏற்றியங்கி
விண்டு விளக்குவதே கூத்து.

7. நாடித் துடிப்புமுயிர் நற்றுடிப்பும் ஓரிசையுள்
ஓடித் துடிப்பெடுத்தல் கூத்து.

8. அணுவோ டணுமோதி யஃதிரண்டாய் விண்டுள்
உணர்ந்தாடி வீறுவதே கூத்து.

9. மின்னணுக்கள் வீழ மிளிரணுக்கள் தாமியங்க
மன்னுணர்வை யாட்டுவதே கூத்து.

10. புதைத்த உளத்துணர்வைப் பொன்றா வெளியுட்
சிதைக்கச் சிலிர்ப்பதுவே கூத்து.
---------------------

6.3. இயற் பத்து

1. நிற்றல் நிலைமாறல் நீடிசைத்தல் ஆடலெனக்
கற்றல் ஒடுங்கல் இயல்.

2. ஊன்றல் உணர்தல் ஒளியேற உள்ளாடி
ஆன்றல் அவிதல் இயல்.

3. பிணைதல் பிளத்தல் பிறந்திசைந்தே ஆடி
இணைதல் புதைதல் இயல்.

4. தோன்றல் துலங்கலொரு
துண்ணணுவாய் மின்னியுளம்
நோன்றல் நுடங்கல் இயல்.

5. ஏறல் இணைந்தொளிர்தல் எண்ணிறந்து மாறியுயிர்
ஆறல் அடங்கல் இயல்.

6. பிறங்கல் புலனுயர்தல் பீடுணர்வால் ஆழ்ந்துள்
உறங்கல் ஓடுங்கல் இயல்.

7. பொங்கல் புணர்தல் பொதியுடம்பு விட்டவுயிர்
தொங்கல் துதைதல் இயல்.

8. சோம்பல் சுடர்தல் சுரப்பித்தல் உள்நிறைந்து
கூம்பல் குமைதல் இயல்.

9. விசைந்தேறி உள்விளங்கி விண்டவுயிர் சோர
இசைந்தாடி ஒன்றல் இயல்.

10. எடுத்தல் இயங்கல் இசைந்தாடி உள்ளம்
படுத்தல் மடுத்தல் இயல்.
-1957
----------------------

7 தமிழ்த்தாய்ப் பத்து!

என்றுன் னகரத் திருவரி கூறி எழுதினரோ?
என்றுன் சிலம்பக் கழலடி ஆணை இயற்றியதோ?
மன்றுண் ணமர்ந்து புலவர் துடிநா விளையமிழ்தத்
தன்றன் றிளமை அணையுந் தமிழே! அணிமொழியே!

மொழியா திருந்தார் முடவாய்ப் புகுந்தொலி முன்முழக்கி
வழியா யிருந்து வடுவறு வாழ்க்கை யமைத்தவளே!
அழியா திளமை அருகாத் திருவளம் ஆர்ந்துயர்ந்தோர்
விழியா திரவும் பகலும் புரக்கும் விழிமணியே!

மணிமுடி யேறிக் கழகப் புலவர் மடிபுரண்டே
அணிமுடி சூட்டி அரசேய்ந் திருக்க அடிதழீஇத்
திணிதெலுங் கங்கன் னடமலை யாளந் துளுவமெனப்
பணிமொழி பத்தொரு மூன்றும் பரவப்
பரந்தவளே!

பரந்துயர் நற்சீர் பழுனிய நின்னைப் பரவியெழிற்
கரந்தவர் பல்லோர் கழலடி தாங்கிக் கழியிளமை
இரந்தவர் பல்லோர்! இடர்ந்தவர் பல்லோர் எனினுமுனைப்
புரந்தவர் உள்ளப் பொழில்மணை யேறிய பூவையளே!

பூவை நினதெழிற் பேசற் கெளிதோ புலமையர்க்கே!
கூவைத் திலங்குங் குறைவறு பல்லா யிர மொழிக்குள்
நீவைத் தொளிரும் நெடுநூற் பரப்பிலை யேகுறள்தீம்
பாவைத் திருக்கும் பசுமைத் திருவே பழம்பிறப்பே!

பிறவாப் பெருஞ்சீர் இலக்கியத் தோடின் னிலக்கணமும்
அறவோர் புகழும் அறநெறி நூற்கள் அளவிறந்தும்
நறவாப் பிழிந்தே நறுநூற் புலவோர்க் களிப்பவளே !
இறவாப் பெருமூ தொருத்தி மொழிநா வினிப்பவளே!

இனித்த நறுவாய் நடம்விளைத் துள்ளத் துயிரிலெலாம்
நனித்தண் ஒலியாய் நடந்தே இயலிசை நாடகமாய்
நுனித்த புலனே புனற்கோள் எரிகோள் நுழைந்திருந்துந்
தனித்த மொழியே விழியே ஒளியே தமிழரசே!

அரசீ உலகிடை அன்றன் றுயரும் அயல்மொழியின்
வரிசை உணர்வேம்! வளங்கெழு நின்சீர் வழுவலெலாம்
எரிசேர் இழிஞர் குடர்க்கிட நின்னை இழிப்பதுவே!
முரசே அவர்தம் முழுமடம் ஞாயிறு முன்பனியே!

பனிக்குன் றதிர்த்த பழம்பே ரரசர் பணிந்துயர்த்த
இனிக்குந் தமிழ்ப்பா வெழுதும் இணையறு வின்புலவோர்
கனிக்குந் நிகராப் பலநூல் எழுதிக் களித்ததெலாம்
தனிக்குன் றணையாய் இனிக்காண் குவமோ தவழ்கொழுந்தே!

கொழுங்கட் பிழிவே! நறவே! நறுஞ்சுவைப் பால்கலந்த
பழங்கெழு ஊணே! உடலே! உயிரே! பணிவொடுசீர்
வழங்கெஞ் சிறுநா வளரின் னிசையே! இயல்நடமென்
றெழுங்கலை யேமகிழ் வேவுல கேயிணை யில்லையன்றே!
-1958
----------------------

8 முத்தமிழைக் காப்போம் முனைந்து!

கற்றவரே! அன்பு கனிந்தவரே! செல்வச்சீர்
பெற்றவரே! இன்பம் பெறாமல் துடிப்பவரே!
சான்றோரை, நாட்டைச் சலியாது காப்பவரை
ஈன்றதாய் மாரே! இழிவறியா மங்கையரே!
தூய தமிழ்வளர்த்த தொன்மதுரைச் செம்புலிகாள்!
சாயாப் புகழ்காத்த சேரர் குலப்பிறப்பீர்!
சோழக் கொடிவழியீர்! சோர்வின்றிப் பூரிக்கும்
வேழத் தடந்தோள் விறல்மறவீர்! வேற்றுவர்க்கே
மேன்மேல் உழைத்து மிகுந்ததற்குக் கையேந்திக்
கூன்தங்கிப் போனவரே! கொப்புளிக்கும் நல்லுணர்வைச்
சாகடித்து விட்டுச் சாகா உரிமையினை
வேகடித்துத் தூங்குகின்ற வேங்கைத் தமிழ்மக்காள்!
கூற்றுவரே ஆனாலுங் கூப்பியகை யோடணைத்துப்
போற்றுந் தமிழ்மரபீர்! பொன்பொருளைத் தாமடையக்,
கற்றறிந்த செந்தமிழைக் காசுக்கே ஈடுவைத்துப்
பெற்றெடுத்த நாட்டைப் பெரும்பழிக்கே ஆளாக்கும்
கீழெண்ணங் கொண்டவரே! கேட்டுக் குழிக்குள்ளே
வீழென்னும் முன்னம் விழுந்திறக்கப் போவோரே!
வாடிக் குலைவதினும் வல்லுயிருக் காக் கடல்
ஓடிப் பிழைக்கும் உலகத் தமிழ்க்குலத்தீர்!

எல்லார்க்கும் யானொன் றியம்புகின்றேன்; மாந்தரிலே
நல்லார்க் கொருசொல் எனுங்கூற்றை நாடறியும்
ஆதலினால் எற்றுக்கும் ஆகாச் சிறுவனிதைக்
காதலினால் கூறலுற்றேன்! கன்னித் தமிழ்நாட்டீர்!
சேர்ந்தொருங்கே வாரீரோ! செந்தமிழர் கூட்டங்காள்!
நேர்ந்திருக்கும் உள்ள நெகிழ்வை அகற்றிவிட்டு,
நம்மை அரித்துவரும் நாற்சாதிப் பூசலெல்லாம்,
செம்மை ஒழுங்கில்லாச் சூழ்ச்சியெலாம் கட்டவிழ்த்தே
ஈன்றதாய் மேலாணை இட்டு, நமைக் காத்துவரும்
ஆன்ற மனைவிமேல் ஆணையிட்டுப் பெற்றெடுத்த
மூத்த பெரும்பிள்ளை முன்னேயோர் ஆணையிட்டுக்
காத்து வளர்த்ததமிழ்க் கன்னியின்மே லாணையிட்டு

முன்னர் நமக்கிருந்த மொய்ம்புகழ்மே லாணையிட்டுத்
தென்னவருக் கோர்முடிவைத் தேர்ந்திடுவோம் வாரீரோ!
செல்வத்தால் கண்ணிழந்து, சென்றோரைத், தாங்கொண்ட
பல்வளத்தால் இன்பப் பரண்மேல் இருப்போரை,
யாவரையும் பார்த்தே இயம்புகின்றேன் ! நாமெல்லாம்
ஆவதிலே கண்ணின்றி ஆளக் கருத்தின்றி
ஒற்றுமையு மின்றி உணர்வின்றி நாணமின்றி
வெற்றுரையைப் பேசி விளைவில் நினைவின்றிச்
சீரழிந்து விட்டோம்! சிறப்பிழந்தோம்! நாமிருக்கும்
நேரழிந்து விட்டோம்! நிலைகுலைந்தோம்! ஆதலினால்
ஊரழியு முன்னம், உருவழியு முன்னேயே
பேரழியு முன்னம், பிழையறிந்து வாரீரென்
றெல்லார்க்கும் கூறுகின்றேன்! ஏற்றதெனக் கண்டீரேல்
நல்லார் ஒருவர் தலைமையிலே நாமொருங்கே
கூடித் தமிழுயர்த்துங் கொள்கை வழிப்பட்டே
ஈடில்லை எங்கட்கென் றேற்ற குரல்கொடுப்போம்
வள்ளுவரைக் கற்றோம்! வளர்பயனைக் கண்டோமா?
தெள்ளுதமிழ் கற்றோர் திரள்பொருளைக் கண்டாரோ?
உற்ற நெறிநூல்கள் ஓரா யிரங்கோடி
பெற்றிருந்தும் நந்நெறியைப் பேணி வளர்த்தோமா?
பாரோர்க்குக் கூறி, பலநூல்கள் தாமெழுதி
ஊரோர்க்குக் கூறி, ஒருநெறியுந் தாங்கொள்ளாப்
பெற்றியரை யன்றோ பெருமளவிற் காண்கின்றோம்! குற்றியுமி
குற்றிக் குவித்தோய்ந்து போனோமே!

"பாட்டன் பரணிருந்தான்; பாராண்ட வேந்தனவன்:
பாட்டனுக்குப் பாட்டன் பவள அரியணையில்
நீட்டிப் படுத்திருந்தான்! நேர்ந்துவிட்ட காலத்தால்
ஓட்டையொரு கட்டிலிலே ஒன்றி யிருக்கிறேன்!”
என்றுபல சொல்வாரை யார்மதிப்பார்! பேரறிவீர்!
நன்றுசெய வேண்டாமா? நாமுழைக்க வேண்டாமா?
தண்டமிழ்த்தாய் ஆளுந் தனிநாடு வேண்டாமா?
பண்டிருந்த நந்நிலையைப் பார்த்துவக்க வேண்டாமா?

நாட்டில் வளங்குறைவா? நானியம்ப வல்லேனோ?
பாட்டுச் சுவைபெருக்கும் பாழடைந்து போகின்ற
ஆற்றுப் பெருக்கிற்கே ஆனதடை என்னேயோ?
காற்றைத் தடுக்கும் கணக்கில்லா வான்மலைகள்!
வித்தூன்றி வைத்தால் விளைவாகும் நன்னிலங்கள்!
முத்தெறியும் வீங்குகடல்! மூண்ட மணிப்புதையல்!
பொன்னும் இரும்பும் புகைக்கரியும் வேரோடி
மன்னும் பெருஞ்சுருங்கை! மாயாப் பெருவிளைவு!
கன்னல் குறைவா? கனிமரங்கள் தாங்குறைவா?
பின்னிக் கிடக்கும் பெருங்காடு ஒன்றிரண்டா?

ஆனை உதைத்தும் முடியிலையும் ஆடாத
வானை அணைத்த வளர்மரங்கள் கொஞ்சமா?
காளை உழுதாலோ கால்விளைவா காதென்றே
கூளி மதயானை கொண்டே உழத்தக்க
நல்வயல்கள் எண்கோடி! நாற்றங்கால் பல்கோடி!
சொல்விளைவும் தோற்றுப்போம் நெல்விளைவு கண்டோமே!
இத்துணையாய்ப் பல்வளங்கள் இங்கிருந்தும் செந்தமிழர்
செத்தழிந்து போவதென்ன? சீர்குன்றிப் போவதென்ன?
கிள்ளை அடை முட்டை கடும்பாம் பயின்றதுபோல்
கொள்ளை யடிக்கின்றார் கொடுவடவர்! கண்டோமா?
ஆழநினைத் தின்றே அவர்விளைவை வெட்டொன்றில்
வீழக் கிடத்தி விறல்சூட வேண்டாமோ?

நாட்டைப் புதுக்கி, நகர்புதுக்கி நாம் வாழும்
வீட்டைப் புதுக்கி வினைபுதுக்க வேண்டாமோ?
கற்றுப் பெரும்பயனைக் கண்டவரார்? கல்லாரும்
உற்றபயன் என்னை? உழவரெல்லாம் என்னகண்டார்?
ஊர்ப்பெயரை மாற்றும் உரிமைக்கும் வானொலியின்
பேர்புதுக்கும் நல்லுரிமைப் பேச்சுக்கும் இல்லையெனின்
எற்றுக் கமைச்சரெலாம் இங்கிருக்க வேண்டுமவர்
ஒற்றுக்குத் தாளம் உரக்கவே போடுதற்கா?

இஃதெல்லாம் எண்ணில் இமைமூட மாட்டுதில்லை!
எஃகுடலும் கூனியே ஈரடியாய் நாணின்றால்!
ஆன்ற தமிழ்மறவீர் ஆதலினால் கூவுகின்றேன்.
ஊன்றீர் தமிழ்க்கொடியை! ஊரைத் திரட்டுவமே!
உண்ணில் தமிழ்த்தாய் உயர்கொடிக்கீழ் இந்நாட்டு
மண்ணில் விளைந்த விளைவுண்போம்! மானம்போய்ச்
செத்தழிந்து போமுன்னே சீர்விளங்கப் பேர்விளங்க
முத்தமிழைக் காப்போம் முனைந்து!
----1959
-------------------

9. முத்தமிழ்

ஈடறவே நெஞ்சில் இனித்த தமிழ்மொழியைக்
கேடறவே காத்துக் கெடுப்பார் தமைக்கெடுத்துப்
பூடறவே வெட்டப் புறப்பட்டே னென்றவர்முன்
பீடுறவே பைங்கிளியே பேசு!

பாட்டுக்குள் நச்சைப் பயிற்றி இசைத்தமிழைக்
கேட்டுக்குள் ளாக்கும் கெடுமனத்தைத் தான்புதைக்கக்
கூட்டுக்குள் ஆவி கொடுப்பேனென் றன்னவர்முன்
கோட்டுக் குயிலே,நீ கூவு!

பூத்த கலைகள் பொலிந்ததமிழ் நாட்டரங்கில்
கூத்துக் கலையாங் குரங்காட்டம் காட்டுவர்க்கே
ஏத்துந் தமிழ்க்கூத் திளமயிலே, எந்தமிழைக்
காத்த நடமாடிக் காட்டு!
-1959
--------------------

10 தமிழ் நாட்டவரே!

தாதயிறுங் களிவண்டுந் தளிரயிறும் பைங்கிளியுங்
கோதயிருங் குயிற்பிணையுங் குறியயருங் குருகிணையுங்
காதயருங் கருத்தயரக் கனிந்துடலங் கண்ணயரத்
தீதயரு மிசைமொழியாந் தெள்ளுதமிழ் மொழியாமே,

தீங்கைநினைந் தோராமே தெளிவிறந்து பொலிவழிய
மூங்கையவர் சொற்கலந்து மொழிகுவதுந் தமிழாமோ?

இணரவிழ்ந்து மணமெழுப்பு மினியதமிழ் நிலைகுலைய
உணர்விழந்து வடமொழிச்சொல் உலப்பதுவுந் தமிழாமோ?

பயிரிழந்த களைவளர்ப்பார் பசுந்தமிழ்ப்பைங் கூழ்கருக
உயிரிழந்த சொற்கலந்தே உரைப்பதுவுந் தமிழாமோ?

அரசிருந்து தமிழ்காத்தார் அரும்புகழும் புதைவுறவே
முரசிருக்க வடபறையை முழக்குவதுந் தமிழாமோ?

சிறைப்படுக்கும் சிறப்பிழக்கும் என்றுணராச் செழும்புலமை
குறைப்படுக்கும் மொழிகலந்து கூறுவதுந் தமிழாமோ?

கூற்றுக்கே வழியென்று கொடும்பழியை நினையாமே
சோற்றுக்கே நாத்திறம்பிச் சொல்லுவதுந் தமிழாமோ?

அஃதிலையால்
மொழியெனப் படுவது விழியெனக் கருதிப்
பழியெனப் பிறமொழி பயில்வது துறந்து,
புதுச்சொற் புனைவும் புதுநூல் யாப்பும்
எதுகுறை வெனவாய்ந் ததுவது இயற்றலும்
வளர்தலென் றறிகுமின் அல்லதைத்
தளர்தலென் றறிகுமின் தமிழ்நாட் டவரே!
---1959
------------------


11 தாயுரை !

உன்னைப் பெற்ற தாயுனக் கிதனை
உரைக்கின் றேனடா, மகனே - இது
முன்னைக் கொடுத்த செல்வங் களிலும்
மூத்தது கேளடா, மகனே!

உண்ணக் கொடுத்த பாலிலுஞ் சோற்றிலும்
ஊட்டிக் கொடுத்த தமிழை -- உளம்
எண்ணக் கடுத்த வகைபோல் -அதனின்
எழிலைக் கெடுத்தனர் அடடா!

மண்ணைப் படுத்தினர் அடிமை! தமிழின்
மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் -- நம்
கண்ணைக் கெடுத்தனர் எனினும் உய்வோம்;
கருத்தைக் கெடுத்தனர் அட்டா!

பண்ணைக் கொடுத்த யாழை இசைக்கையில்
பறையை எடுத்தனர் முழுக்க — தேன்
உண்ணக் கொடுத்த கையினால் நஞ்சை
ஊட்டத் துணிந்தனர் அடடா!

தூங்கப் படுத்தனர் தமிழர்! இனியவர்
துயில்நீங் கிடுதல் கடினம் -- உயிர்
வாங்கப் புறப்படு; பகைமுன் உறையின்
வாளைக் கையினில் எட்டா!

தாயைக் காத்திடு முன்னம், ஆன்றோர்
தமிழைக் காத்திடற் கெழுவாய் - ஒரு
பேயை அரியணை வைத்தார் அவர்தம்
பிழையைப் போற்றிடில் கெடுவாய்!
தாயுரை!
---- 1959
-------------------------

12 முன்னே தமிழ்...!

கற்றைக் குழலும் கருங்குவளைப் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும் காட்டிடினும்
அற்றைத் தமிழ்த்தாய் அருந்துயரம் நீக்காமல்
மற்றைக் கிசையேன் மனம்!

அள்ளுங் கொடியுடலும் ஆர்க்கும் எழில்மார்பும்
வள்ளைத் திருக்காதும், வாயழகும் காட்டிடினும்
கள்ளத் தயர்ந்த கனித்தமிழை மீட்காமல்
உள்ளத் திருத்தேன் உனை!

முத்து நகையும், முழுமை நிலாமுகமும்
தொத்திப் பிணைகையும் தோளெழிலும் காட்டிடினும்
பித்தர் சிதைக்கும் பெருந்தமிழைக் காக்காமல்
ஒத்துக் கொளாதென் உளம்!

நெற்றி வகிரும், நெடுங்கை விரலுகிரும்,
சுற்றிப் பிணையும் சுடர்க்காலும் காட்டிடினும்
முற்றி முதிர்ந்த முழுத்தமிழைப் பேணாமல்
பற்றிப் படரவிடேன் பார்!
---1960
-------------------

13. தமிழர்க்குத் தமிழ் உயிர்!

தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
தமிழர்க்குத் தீங்கு செய்யும்!
தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
தருந்தமிழால் தமிழர் தாழ்வர்!
தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
தமிழ்நாட்டைக் கேடு சூழும்!
தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
தமிழ்நாட்டுப் பகைவ ராமே!
-1960
---------------------

14 உயிர் வாங்குவேன்!

தாய்க்குறின் கேடே தழற்படு முளமே!
சேய்க்குறின் தீங்கே விழிநீர்ப் படுமே?
கேட்டீ எலுவ! நாட்டுத் துயர்தரின்
ஈட்டி யாயினும் எந்தோள் அடுமே!
பல்லா யிரமாண் டுயர்வழி பயின்ற
செல்லா நல்லிசை வெல்லத் தமிழ்மொழிக்
கொருவன் இழிசெயின் நெறியிகந்
தருமுயிர் வாங்குவ னவ்விடத் தானே!
--- 1960
-----------------

15. 'கவிதை'மேற் 'கவிதை'

கவிதை ஒளிர்மின்னல் என்போம்! உடன்
கிளர்த்துக் கிளைத்து மிளிர்ந்திட லால்! -- நல்ல
கவிதை வீழ் அருவி என்போம்! -- உளங்
கல்வி உடல் எங்கும் குளிர்செய்தலால்! -- இன்பக்
கவிதை ஒரு குழந்தை என்போம்; --நாம்
கூவச் சுணங்கிக் கூவா தருகலால்! -- ஒளிக்
கவிதை புது நங்கை என்போம்; -- நாம்
கூடென ஊடி, உடக் கூடலால்!

கவிதை யிளந் தென்றல் என்போம்; --செவி
குளிர்ந்திடுஞ் சொல்லால் உளந் தோயலால்! -- நல்ல
கவிதை பெரும் புயலா மென்போம்; தீமை
கொன்றுள மெங்கும் மாற்றஞ் செய்தலால்! -- இன்பக்
கவிதை மூண்டெரி தீ என்போம்; -- உளங்
காய்த்துரு மாற்றி உயிர் கவ்வலால் -- ஒளிக்
கவிதை நறுந் தாய்மை என்போம்; -- தனைக்
கற்றார் தமைப்பேணிப் புகழ் காத்தலால்!
- 1960 (?)
-------------------

16 தமிழில் வடசொற்கள்

மொழியறிவு துளியுமிலாக் குழுவின் பாலே
முத்தமிழை ஒப்படைத்தே, ஆராய்ந்தின்னும்,
வழிவகைகள் செய்திதனைத் தமிழாட்சிக்கு
வணங்குகின்ற மொழியாகச் செய்வீரென்று
பழிவாங்கிக் கொண்டார் இந் நாட்டை ஆள்வார் !
பைந்தமிழ்க்குத் தீங்கு செய்தார்; நஞ்சைச் சேர்த்தார்!
விழியற்ற அறுவர்போய் யானைகண்ட
வினைதவிர வேறென்ன? உணர்வீர் நன்றே!

சந்தோஷம் என்பதற்கு 'ஷ' வேண்டுமாம்;
ஜனநாயகத்திற்கு 'ஜ' தேவையாம்;
சிந்தித்துப் 'புஸ்கத்'தை ‘அக்ஷரத்'தைச்
சொல்லுங்கால் 'ஸ' வேண்டும் 'க்ஷ'வும் வேண்டும்!
இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
விந்தையல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
வெள்ளெலும்பு கண்டார், வெள் ளெலும்பே கண்டார்!
குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்ச ரெல்லாம்
'கோணல் முடிவல்ல' 'நல்ல முடிவே' என்றார்!
எழுமுடிவு வேறென்ன? அமைச்ச ரென்றால்
எழுத்துப்பற்றி ஆராய்ச்சி எதற்கு வேண்டும்?
குழுமுடிவோ? யார்முடிவோ? அமைச்சர்க் கெல்லாம்
கொண்ட முடிவே முடிவு! நம்மனோர்க்குக்
கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
கண்ட பின்னும் பிணம்போல இருப்பதற்கே!

'மகிழ்ச்சி' எனும் சொல்லிருக்கச் 'சந்தோஷம்' ஏன்?
மக்களர சிருக்க 'ஜனநாயக' மிங்கேன்?
புகழ்ச்சி பெறும் 'நூல்' இருக்க 'புஸ்தக'மிங்கேன்?
(புத்தகமும் தமிழ்ச்சொல்லே! போந்து மூலம்)
இகழ்ச்சிதரும் 'அக்ஷர’மேன் 'எழுத்'திருக்க!
'இழிமலடி' வெறுவயிறி வடவர் மூளி
புகழ்ச்சிபெறும் மங்கைக்குத் தருமாம் பிள்ளை;
பைந்தமிழ்த்தாய்க் காணையிட்டு நிற்பீர் மக்காள்!
-1960 (?)
----------------

17

செந்தமிழே! உள்ளுயிரே;
செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வா
றெடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும்
முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும்
வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப
வுள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக்
குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும்
அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும்
முழங்கத் தனித்தமிழே!
முந்துற்றோம் யாண்டும்!
-1960 (?)
---------------------

18 தமிழ்க்கு மூவுடைமை!

எடுப்பு

நீயே - செந்தமிழ்த் தாயே! நான்
நினையறிந் தவன்; ஒரு சேயே! முன்
நிலைகெட மிகவும்நொந் தாயே; என்
நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது - தீயே! (-- நீயே)

தொடுப்பு
ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்!
உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! (-- நீயே)

முடிப்பு
காயே விழைவார்; கனிச்சுவை அறியார் !
கண்விழிப்பார்; உளம் விழியார்; தமிழ்த்
தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்!
தம்செயல் அறிவுக்கு நாணார் ! நாணார்! (-- நீயே)

அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்!
அரும்பொருள் அயில்வார்; நினையார்; -- மதி
மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்!
மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்! (-- நீயே)

பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே,
வால்கறப் பார்கழி மூடர்! -- அது
போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்!
புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! (நீயே)
-1962
--------------------

19 தமிழில் கற்க முன்வருக!

பழக்குலை கோதும் கிளிக்குழாம் அன்ன பசுந்தமிழ்த்தீம்
பழக்குலை உண்டிட முன்வரல் வேண்டும் தமிழ் இளையோர்!
சழக்குளங் கொண்டவர் நாணும் படிக்குடன் நண்ணியொன்றாய்
முழக்குக அன்னார் செவிப்பறை யில்"தமிழ் வேண்டு" மென்றே!
--- 1963
----------------------

20. தமிழ் உழவு செய்க!

எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞர் உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க!
பின்னர் செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!
-1963
--------------------

21 நரிச் செயல்!

மொழி நலமும் இனநலமும் காவாதார்
தமிழ் காப்போம் எனமு ழங்கல்
குழிமுயலைக் காப்பமெனக் கோளரிபால்
நரிகொண்டு சேர்த்தல் ஒக்கும்;
பழி சேர்க்கும் செந்தமிழ்க்கு; தமிழகத்தைப்
பகைவரின்கைக் கொண்டு சேர்க்கும்.
விழி சோர்தல் இல்லாது தமிழரெல்லாம்
வியன்றமிழைக் காத்தல் செய்வீர்!
---1963
--------------------

22. மொழிப்போர் புரி!

மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
மொழிப்பால் குடிப்பாய்! - இனிப்
பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
விழிப்பாய் தமிழா!

அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
மறப்போர் புரிவாய்! - உயிர்
துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
இறப்பே தட்டா!

சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
பொறுத்தாய் பலநாள்!- உயர்(வு)
அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
நிறுத்தாய் நெடுந்தோள்!
-1963
-------------------

23 . தமிழ்ப் போராட்டம்!

பாவலர், யாத்திடும் பாக்களில்
பைந்தமிழ்த் திறம்பயில்க!
நாவலர் ஆர்த்திடும் பொழிவிலும்
உரையிலும் தமிழ்ஒளிர்க
காவலர் மறத்தொடும் விழிப்பொடும்
செந்தமிழ்க் காப்பளிக்க!
ஆவலர் தனித்தமிழ் ஆண்மையர்
பெண்டிரோ டார்ப்பரிமே!
--1965
-------------------------

24. மணிநாள் விரைந்தது......!

கல்லறைப் பிணத்தைத் தோண்டிக்
கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச்
செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்!
செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேரும்
மணிநாளும் விரைந்த தன்றே!
-1965
-----------------

25. செந்தமிழ்ப் பாவை!

தாய்மைக் குலத்தீர்! தமிழ்மொழிக்கே யாம்பாடும்
வாய்மைத் தமிழ்ப்பாவை வந்திங்குக் கேண்மினோ!
தூய்மையுறும் நெஞ்சம்! சுடர்மணிப்பூண் தோள்கலிக்கும்
பேய்மை யகலும்! பிறவிநலம் வந்தெய்தும்!
மாயப் புரைசால் மலிவினைகள் மாண்டொழியும்
சேயவிழ்வாய் நாறச் சிமிழ்மார்பு அமிழ்தூட்டி
ஏய அவர்செவியில் எந்தமிழ்ப்பால் ஊட்டுதற்கே
ஆய பொழுதும் அலர்ந்தேலோ ரெம்பாவாய்! 1

மன்னும் பிறவி மடுக்குந்
முன்னம் பிறப்பறியோம்! முந்துகடல் வாங்கியுண்ட
பன்னூல் சிறப்பறியோம்! பாவையரீர்! பாழ்பட்ட
இன்னூல் கணக்கிங் கெடுத்தறியோம்; எந்தமிழ்க்கே
தொன்னூல் தோற்றுவன யாம்கண்டோம்;
நன்னர் முடிவெடுத்தோம்; நாணாமே,
என்னெமக்கே வந்துற்ற தென்றே இமைதிறவாது
இன்னும் துயில்வீர்! எழுகேலோ ரெம்பாவாய்! 2

போதார் திருவைப் புரைவில்லாச் செந்தமிழைத்
தீதார் பிழைநாவின் வல்படையோர் சீரழிக்கப்
போதரு கின்றார்; புறப்பட்டார்; பொன்னொளிர்கல்
காதார் பிறைநுதலீர்; கண்பாடுங் கொண்டீர்காண்!
ஈதார் கடனோவென் றெண்ணாதீர்! ஈண்டெழுந்த
பேதைப் பெருங்கூட்டம் பின்னிட் டடங்கிடவே
ஊதுமினோ வெண்சங்கம்! வெற்றிப்பால் ஊட்டுமினோ!
மாதர் குலமே, மலையேலோ ரெம்பாவாய்! 3

காமம் மதர்க்கும் கருவிழிமேல் வில்லிமைக்கே
யாமத் திருளைக் குழைத்திட்டு, நீள்குழற்கே
பூமுன்னாள் மாலை முடித்தாய்; புலர்பொழுதில்
ஊமைச் செவிடா உறங்குதியே! ஒண்டமிழ்க்குத்
தீமை புரிவார் திறங்கலங்க, பூண்பொடிய
மாமைப்பொற் றேமல் மலியும் மணிவயிற்றில்
ஏமம் புரிய இளையோரைப் பெற்றெடுக்குந்
தாமரைப் பூங்கண் திறவேலோ ரெம்பாவாய்! 4

கொந்தார் மலர்க்கொண்டைக் கோதையரீர்; பாடேமுக்
கிந்தா வெழுந்தேம்என் றென்னா தயர்வீர்போல்,
செந்தா மரைமுகத்தைப் பஞ்சணையிற் சேர்த்தீரால்!
வந்தார் தமிழழிக்க; வாயவிழ்ந்தார் வார்படைக்கே!
செந்தோள் மறவர் சிறுத்தாரென் றேயெழுந்து
முந்துவீர் அன்னை மொழிக்கென்றே ஆர்ப்பரிப்பீர்!
சிந்துவீர் செங்குருதி தாய்மைச் செருக்குலத்தீர்!
இந்த நொடியே எழுகேலோ ரெம்பாவாய்! 5

எண்ணற் கினிக்கும்; எடுத்தியம்ப வாயினிக்கும்;
பண்ணு மொழிகேட்பார் செவியினிக்கும் பைந்தமிழை
உண்ணும் சுவடியிலே நஞ்சிட்டார் ஒண்டொடியீர்!
கண்ணென் எழுத்தும் கருத்தும் கலைப்பாரால்
பெண்ணென் பிறவியினைப் பெற்றேமென் றெண்ணாமே
விண்ணதிர ஆர்த்துப் பிடிக்கூட்டம் போலெழுந்து
மண்ணின் உரிமை மொழியுரிமை மீட்குதிரேல்
பெண்ணுரிமை நாட்டுகின்ற பெற்றியலோ ரெம்பாவாய்! 6

வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்;
மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்;
சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்!
இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி
வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி
ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண்
வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே!
எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்! 7

பெற்ற மகர்வாய் தமிழைப் பிலிற்றாமல்
வெற்று மொழியாமோர் வேம்பை உயிர்கழிக்கும்
புற்றரவ நஞ்சைப் பிழியும் புலையோரைச்
செற்றுச் செருக்காமல் 'சீற்றச் செருவிழி, மூ
டுற்ற மயக்கத் துருண்டும் புரண்டும்நீ
மற்றிங் குறங்கல் அழகோ, மதிமுகமே?
கற்ற தமிழ்மேல் கடுஞ்சூள் உரைசாற்றி
இற்றே இளம்பிடியே நூறேலோ ரெம்பாவாய்! 8

ஆங்கப் பொழுதே மொழியலைத்தார்; ஆரியத்தால்
தேங்குந் தனிச்சீர்மை தீர எழில்குலைத்தார்;
ஓங்கப் பிறகுழைத்தார் உற்றுணர்ந்தார்; ஒண்டொடியே!
ஈங்கப் பிழைக்கே இடந்தரநாம் ஒப்புவமேல்
வாங்கப் படுங்காண், நம் வாழ்வுரிமை1 பின்வருவார்
ஏங்கித் தவிப்பதோ? இக்கால் எழாமலே
தூங்கிக் கிடப்பதோ? நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலிப்பிணையே! வீறேலோ ரெம்பாவாய்! 9

களையாய்த் தமிழ்வயலுள் காலிடவேர் ஊன்றி
முளையாக் கிடக்கின்ற மூங்கை மொழியை
உளையாப் பெருமுயல்வால் ஊழ்த்துத் தமிழை
விளையாமற் போவோமேல் வீணானோம்; வீழ்ந்தோம்!
கிளைபரப்பி நின்ற கிளர்தமிழைக் கீழோர்
களையமுற் பட்டாங்கே கள்ளியினை ஊன்ற
வளையாய்! இடந்தரலும் வாய்மையோ? வாட்கண்
இளையாய் உறங்கேல் எழுகேலோ ரெம்பாவாய்! 10

இந்நாளாப் பட்ட அடிமைக் கிறக்கத்தால்
செந்நா வடக்கிச் சினமடக்கி உள்ளுணர்வைக்
கொன்னே மடக்கி உறங்குதியோ? கொல்பிடியே!
மின்னே இடையாக வேற்கண்ணே வெல்படையா
இன்னே எழுந்தே எரிபுயலாச் சீறுதியே!
அந்நாள் அயர்ந்த அறியாமைக் குள்நாணி,
நன்னர் உரிமைப்போர் நாட்டுதியே! செய்யபசும்
பொன்னே! பொழுதும் புலர்ந்தேலோ ரெம்பாவாய்! 11

உள்ளம் மலையாத ஆடவரும் தாமலைந்தார்;
கள்ள விலைவாங்கி நல்லுரிமைக் கால்துணித்தார்!
பள்ளத் திறங்கிப் படுசேற்றில் தாம்புரள
உள்ளம் ஒருப்பட்டார்! உண்கண்ணாய்! நீயெழுந்தே
எள்ளல் தவிர்க்க இசையாயின் இம்மண்ணும்
கொள்ளல் தவிரார்! குலக்கொடியே ஈங்கின்னும்
பள்ளிக் கிடத்தியே! பாவைப் படைகூட்டி
வெள்ளம்போல் பாய்வாய் விரைந்தேலோ ரெம்பாவாய்! 12

தண்டைப் பிடித்தவரோ தாவித் தமிழரின்
சிண்டைப் பிடித்தனர்காண்! செம்மாந்த எந்தமிழர்
அண்டை நிலத்தில் அடிமையுறத் தாழ்வதுவோ?
பண்டைப் பெருமையும் பாழ்பட்டுப் போவதுவோ?
உண்டிங் குறங்குவதே ஓங்குநிலை என்பதுவோ?
பெண்டிர் விழிப்புற்றால் பேருரிமை வாயாதோ?
தொண்டிற் பெருந்தொண்டு தோகையர்தம் தொண்டன்றோ?
கெண்டை விழியே! கிளர்கேலோ ரெம்பாவாய்! 13

கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுனம்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலோ ரெம்பாவாய்! 14

திங்கள் முகங்கருகச் செவ்விதழும் தாம்வறளச்
செங்கண் குழிவீழச் சிற்றிடையும் சோர்ந்துவிழப்
பொங்கும் இளம்பருவப் பூரிப்பில் நுங்கணவர்
தங்கை அணைப்பில் இராமுழுதும் சேர்ந்திருந்தே
செங்கதிர்ப் போழ்தில் சிறுதுயிலும் கொள்ளுகின்ற
மங்கையரீர் நுந்தம் மணிவாய் கமழ்தமிழுக்
கெங்கும் இடர்வர வுற்றதுகாண்! இந்நொடியே
பொங்கி எழுவீர் புலர்ந்தேலோ ரெம்பாவாய்! 15

மானே! முன் மாலை மணிக்கதவந் தாழிட்டுத்
தேனும் பழமும் தெளிதமிழும் உண்டவனின்
வானென் வரிமார்பில் வண்டுவிழி மூடினையே!
கூனற் பிறைநுதலீ! கொண்டதுயில் நீங்குவதற்குள்
ஊனின் உயிரை உளஞ்சான்ற வல்லுணர்வை
மானம் இறவாது மங்கா தொளிர்தமிழை
ஏனென்று கேட்டே இடர்பலவும் செய்தனர்காண்!
கானப் புலியே! கனல்கேலோ ரெம்பாவாய்! 16

மாணவரை வேண்டினோம்; மற்றவரைக் கால்பிடித்தோம்!
நாணமிலா மக்களுக்கு நல்லமறம் பாடிநின்றோம்!
வீணவரே இந்நிலையில் பெண்டிர் வெகுண்டெழுந்தால்
தூணவரே ஆனாலும் துண்துரும்பாய்ப் போவார்காண்!
பூணுதியே வெல்பெருமை! பூங்கண்ணே நீவிழிப்பாய்!
சேணுயர்ந்த குன்றின்மேல் செந்தமிழின் சீர்பொறிப்பாய்!
நாணம் ஒதுக்கிடுவாய்! அச்சம் நசுக்கிடுவாய்!
கோணா தெழுந்துகுறை போக்கேலோ ரெம்பாவாய்! 17

புத்தம் புதிய புலிக்குருளை பெற்றெடுத்தே
கத்துங் கனிவாய் கமழ அமிழ்தூட்டி
முத்தம் பயிலும் முறுவல் மலரிதழீ!
செத்தார் தமிழர்; சிறுசோற்றுக் கங்காந்தார்!
கொத்துகின்ற வல்லடிமைச் சேற்றில் குமைந்துழல்வார்!
எத்தும் வடக்கர்க் கிணங்கிப் பணிபுரிய
ஒத்தார் உளங்கெண்டார்; ஓவாப் பிணிபட்டார்!
முத்தென் நகையாய்! முனைந்தேலோ ரெம்பாவாய்! 18

மஞ்சள் மதிமுகமும் மல்லிகைசேர் வார்குழலும்
செஞ்சாந்துப் பொட்டும் சிரிக்கும் எழிலோடு
வஞ்சி இராமுழுதும் வாள்விழியும் மூடியளாய்த்
துஞ்சி யிருக்கின்றாய்! செம்பரிதி தோன்றிற்றால்!
நஞ்சைத் தமிழ்மேல் தெளிக்கின்றார் நாடாள்வார்.
அஞ்சிக் குலைந்தார் அருந்தமிழர் ஆரணங்கே!
விஞ்சும் விரகால் விறல்மறந்து போகுமுன்னே
பஞ்சென்றே ஊதாய், பகையேலோ ரெம்பாவாய்! 19

சேல்விழியே! முன்னைச் செழும்புலவோர் ஆக்கிவைத்த
நூல்வழியே செந்தமிழின் நுண்பெருமை கண்டாய்காண்!
கோல்வலியால் - ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
வால்பிடிக்கச் செய்தே வடவர் கொடுமொழியை
மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்!
நூலிடையும் வாட நுதலும் நனிவெயர்ப்பக்
கால்குடைந்த கட்டில்மேல் கண்ணயர்ந்து தூங்குகின்ற
வேல்விழியே! இக்கால் விழியேலோ 20

"செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
இந்தி படிக்க இசையோம் யாம்" என்பதனை
வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்! 21

தேக்கும் இளமை திரண்டெழுந்த நற்பாவாய்!
பூக்கும் மலரின் புதுப்பஞ் சணைமேலே
தூக்கம் வளருதியே! தொல்தமிழும் பல்வகையா
ஆக்கம் தளர்ந்ததுகாண்! அற்றைச்சீர் மாய்ந்ததுகாண்!
ஊக்கம் குறைந்தார் உயர்வறியா நம்மிளைஞர்!
ஏக்கம் நிறைந்தார்! இடுசோற்றுக் கேங்கிநின்றார் !
நோக்கம் கருதியே நுண்ணிடையாய் நந்தமிழைக்
காக்க எழுவாய் கனன்றேலோ ரெம்பாவாய்! 22

மானை நிகர்த்த மருள்விழியே! மாமலைசேர்
தேனை நிகர்த்த தமிழ்மொழியைத் தேராமல்
ஊனை வளர்க்கும் உரிமையால் நின்றழிக்கும்
கூனல் அரசினரின் கொள்கை அறிந்திருந்தும்
ஏனோ உறக்கத் திருக்கின்றாய்? ஏந்திழையே!
கானின் விலங்கும் அடிமை கடிந்தொதுக்கும்;
வானப் பெருந்தமிழர் வல்லடிமை தாங்குவதோ?
யானைப் பிணவே! பிளிறேலோ ரெம்பாவாய்! 23

தேடிக் களைத்தோம் யாம் தீந்தமிழர் உள்ளுணர்வை!
ஓடிக் களைத்தோம்; உரவோர்க்குச் செந்தமிழைப்
பாடிக் களைத்தோம்; பணிபுரிவார் காண்கிலமே!
வாடிக் குலைந்தோம்! வளர்மயிலே! முன்மாலை
ஆடிக் களைத்தாய்போல்-ஆளனொடு நீளிரவாய்க்
கூடிக் களைத்தாய்போல் கொள்ளுதியே வல்லுறக்கம்!
வேடிக்கை யன்று! விறல்பெறநீ ஆர்த்தெழுவாய்!
ஏடி இளையாய்! எழுகேலோ ரெம்பாவாய்! 24

காலை முதலாக் கவின்மாலைப் போழ்துவரை
வேலை புரிந்த களைப்பால் விடியுமட்டும்
சேலென் விழிமூடித் தூங்குதியோ! செந்தமிழென்
பாலிற் கொடுநஞ்சைப் பாய்ச்சினர்காண்; கூர்மழுங்கா
வேலில் வடித்த விழியுடையாய்! வெம்பகைவர்
காலில் தலைதெறிக்க ஓடக் கனன்றிலையேல்!
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப் படுவோங்காண்!
வாலைக் குமரி! விரையேலோ ரெம்பாவாய்! 25

மண்டும் இருள்போய் மனைச்சேவல் சீர்த்தெழுந்து
கொண்டை குலுங்கிடவே கொக்கரக்கோ கோவென்று
தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே
மண்டுங் கறவை மடிநிரம்பிக் கூவிநிற்கும்;
தொண்டு புரியும் பணியாளர் பேச்செழும்பும்!
பண்டைப் பெருமைநலம் பண்ண மறந்தவளாய்,
வண்டு விழிமுடி வார்குழலும் தூங்குதியே!
அண்டை நிலத்தார் அடிமைகொள வந்தனர்காண்!
உண்டு பணிகள்! உணர்கேலோ ரெம்பாவாய்! 26

காக்கை கரையும்! கருவானம் வெள்வாங்கும்!
மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்
ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
யாக்கை வளர்ப்பார் தவிரஎவர் இப்பொழுதில்
சேக்கை புரள்வார்? சிறுதுயிலுங் கொள்ளுதியே!
தீக்கை வடவர் திரிபுரையால் தீந்தமிழின்
ஆக்கந் தடுப்பார்; அவர்மொழிக்கே வித்திடுவார்!
போக்கைத் தடுக்கப் புறப்படுவாய் பொற்சிலம்பாய்!
தூக்கங் களைந்து துணிவேலோ ரெம்பாவாய்! 27

மாணிக்கச் செம்பரிதி வார்கடலை விட்டெழும்பும்;
தோணி வலைவீசித் தோய்துறைக்கு மீண்டுவரும்;
காணி உழுதார் கதிரெழுமுன் வேளாளர்!
நாணும் மடவார் இருளுடையில் நீர்குடைவார்!
கேணிக் கரையில் வளைக்குடங்கள் கிண்கிணிக்கும்!
பூணுதியே பேயுறக்கம்! பூவாய்! பொலிதமிழைப்
பேண வெழுந்தால் பிழைப்பாரார்? பெண்புலியே!
தூணுந் துரும்பாம்! துணிவேலோ ரெம்பாவாய்! 28

சிட்டென் இளையோர் சிறுவாயில் செந்தமிழின்
மட்டு தவிர்த்துயரா மால்மொழியை ஊட்டுவர்காண்!
மொட்டென் அவர்கை முதிரா மொழியெழுத
ஒட்டா தவர்நெஞ்சில் ஊமைமொழி பாய்ச்சுவர்காண்!
மொட்டென் விழியாய்! முழுநிலையும் கண்டறிந்தே
பட்டின் படுக்கை படுத்துக் கிடத்தியே!
சட்டென் றெழுவாய்! சளைக்காமல் நின்கருத்தை
வெட்டொன்று துண்டிரண்டாய் வீசேலோ ரெம்பாவாய்! 29

கூர்த்த மதியீர்! குறைகடியும் வல்விறலீர்!
ஆர்த்த பெரும்புகழ்மேல் ஆணையிட்டே
ஆர்த்தெழுவீர்! போர்த்த இருள்விலகப் பூவையர்நும்
சீர்விளங்க சீர்த்த பெரும்புயலா வல்பிடியாச் செற்றிடுவீர்!
தூர்த்த புகழெல்லாம் தொல்தமிழர் பாடெல்லாம்
ஏர்த்தடங்கண் பாவையரால் மீண்டும் எழுந்தவென்றே
வார்த்த நெடுங்கல் வழிவழிக்கே நின்றுரைக்கும்
சீர்த்தி பெறுகுவீர்! செற்றேலோ ரெம்பாவாய்! 30
-1965
(இந்தியெதிர்ப்பால் வேலூர்ச்சிறையுள் பட்டிருந்த ஞான்று பாடியது.)
--------------------

26 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கொலை...!

‘எழுதுவ தெல்லாம் இலக்கியம்' என்னும்
பழுதுறுங் கருத்தைப் பல்கலைக் கழக
மொழியா சிரியன் முத்துச் சண்முகம்
கழிசடை வாயால் கக்கித் தொலைத்தான்!
அண்ணா மலையார் தமிழ்க்கென அமைத்த
பண்ணார்ந் திசைத்த பல்கலைக் கழகம்
கொட்டிக் கொடுக்கும் ஊதியம் பெறுவோன்
தட்டிக் கேட்க ஆளிலாத் தன்மையால்
இப்படிப் பற்பல இழிந்த கருத்தெலாம்
தப்படி யாக அடித்துத் தள்ளினான்! 10

இத்தனை நாட்களாய் இலக்கியம் என்னும்
முத்தமிழ்ச் சொற்கு முழுப்பொருள் அறியோம்!
முத்துச் சண்முகம் மொழிவதைக் கேண்மின்!
எத்துப் புரட்டென எண்ணிட வேண்டா!
'அவாள்' 'இவாள்' என்னும் 'ஆனந்த விகடன்'
கவர்ச்சி ஓவியக் கழிசடைக் 'குமுதம்'
ஓட்டைவாய்ப் பார்ப்பான் உளறும் மொழிகளைக்
கோட்டைமே லேற்றிடுங் 'கல்கி' 'மித்திரன்'
படித்த வாயைப் பன்முறை கழுவினும்,
அடித்ததீ நாற்றம் அடிவயிறு கலக்கிடத் 20

தீது பரப்பும் 'தினத்தந்தி' முதலிய
பொல்லாத் தாள்கள் பொழிந்தன பொழிவன
எல்லா எழுத்தும் இலக்கியம் ஆகுமாம்!
அச்சுப் பிழையதும் அகற்றிடல் வேண்டா!
அச்சுப் பிழையுமோர் இலக்கிய அழகே!
முத்துச் சண்முக மொழியா சிரியனின்
சொத்தைக் கருத்தைக் கேட்டபின், நாட்டில்
விளையும் விளைவைக் கேட்கவும் வேண்டுமோ?
களையும் பயிர்தான்! காக்கையும் கிளிதான்!
தத்துப் பித்தென எழுதித் தள்ளலாம்! 30
எத்திப் பிழைத்திட எவரும் முன் வரலாம்!

குடியன் உளறலும் கோணையன் மொழிவதும்
தடியர் பிதற்றலும் தவளைக் கூச்சலும்
அழகு மங்கை ஆடை களைவதும்
பழகு தமிழில் பக்கம் பக்கமாய்
எழுதித் தள்ளலாம்? இழிவென்ன இழிவு?
புழுதிக் கருத்துகள் பொல பொல வென்று
நந்தமி ழகத்தின் எழுதுவார் நாவில்
வந்து மொழிவதும் இலக்கிய வளர்ச்சியே!

'பிடித்த'தைப் 'பிடிச்ச'தென் றெழுதலாம் இனிமேல்! 40
'பெற்ற'தைப் 'பெத்த'தென் றெழுதலாம் இனிமேல்!
'போன'தைப் 'போச்'செனப் புகலலாம் இனியே !
'வேண்டு' மென்பதை 'வேணு'மென் றெழுதலாம்!

மொத்தமாய்க் கூட்டிக் கழித்து மொழிந்தால்
முத்துச் சண்முகம் கருத்துப் படியினி
அத்திம்பேர் அம்மாமித் தமிழே இலக்கியம்!
முத்தமிழ் வளர்ச்சியைப் பாருங்கள் தமிழரே!

முத்துச் சண்முகம் மூதறி வாளன் (!)
திக்குவாய்த் தமிழன் தெ.பொ.மீ.யின் 50
தக்கநல் லடியான்; அவன் தாள் பிடிப்பவன்!
படித்தவன்; படித்துப் பட்டம் பெற்றவன்;
நடிப்பவன் தமிழ் நலம் நாடுவான் போல;
மொழிநலம் பேணும் மொழியா சிரியன்!
இழிவு அவனுக்கா? தமிழர்க்கே என்க!

மெய்யாய்ச் சொல்லுவேன் முத்துச் சண்முகம்
வையா புரியின் வகையிலோர் புது ஆள்!
கழிசடை நாயும் கண்டதை உணாதே!
இழிவுற அவனோ எதையும் உண்பவன்!
இத்தகை யான இழிந்த பிறவிகள் 60
முத்தமிழ் நலத்தை முழுவதும் அழிக்கப்
புறப்பட் டனர்காண்! தமிழனே! பாரடா!
இறப்பத் தூங்கினை! எழடா இனிமேல்!

யாழிசைப் போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப் படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!

ஆனால்,

முத்துச் சண்முகம் எனும் முழு மகனின்
முத்துக் கருத்து யாதெனில், தாளெடுத் 70
தெழுதுவ தெல்லாம் இலக்கியம்! அதனை
எழுதுவோர் யாவரும் இலக்கியப் புலவரே!
கல்லார் உளறும் மொழியே உயிர்மொழி!
எல்லா ரும் அதை எழுதிடல் சாலும்!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இல்லையாம்!
மொழியா சிரியனின் முழுமைக் கருத்திது!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இன்றால்
மொழியா சிரியனுக் கிங்கென்ன வேலை?

பாண்டியன் பேணிய பண்பார் தமிழைத்
தோண்டிப் புதைத்திட இவனுந் தோன்றினான்! 80
முப்பழங் கழகத்து முகிழ்த்த தமிழைத்
தப்புந் தவறுமாய்த் தாழ்த்துகின் றானே!
ஏடா, தமிழனே! எடுத்தெறி எழுதுகோல்!
நீடார் பழம்புகழ் நினை! வாள் தூக்கு!

அன்றிலும் மானும் அலைந்த சோலையுள்
பன்றியும் கழுதையும் தமிழைக் கலக்குவ!
மொழியென் பெயரால் முள்ளங்கிப் பற்றைபோல்
கொழிக்கின் றனரே கொள்ளை ஊதியம்!
அத்தனைப் பணமும் தமிழர் அளித்ததே!
இத்தனை நாட்களும் தமிழரை ஏய்த்தனர்! 90

அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும்
மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத்
தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழியை
உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்!

ஒன்றை 'ஒன்னாய்' இரண்டை 'ரெண்டா’ய்
மூன்றை 'மூனா'ய் அவரிடை மொழிவான்!
பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக்
காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்!
அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார்
விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை 100

நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்!
அரசினர் கேளார்! அண்ணா மலையின்
கரிசனக் காரர் கவனியார் இதனை!
தெ.பொ.மீ.யின் தலைமையில்
காப்பா ரின்றிக் குலைந்தது நாளும்!

பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம்
வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட
ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு
துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும்
அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே 110
உண்ணா உணவுக்குத் தமிழ் உலை வைப்பார்!

விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல்
மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய்
இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு!
அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால்
பல்லாற் றானும் பரவிய தென்று
புல்லிய வாயால் புகல்கின் றானே!
ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ!
உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ?
சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால் 120
நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான்!

ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி
மீளத் தெரியா மேலதி காரி!
அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில்
குறைந்திட விரும்பாக் கல்வித் தலைமையர்!
சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்!
அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்!
உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே!
இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும்
குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே
பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஓவியம்
தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்! தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே!
இமையும் மூடாது எழுக இளைஞரே!
---1965
--------------------

27 முதலமைச்சே முதற்பகை!

தமிழகத்தின் முதலமைச்சே தமிழ்மொழியின்
முதற்பகையாய் இருக்கும் கீழ்மை,
தமிழகத்துள் அல்லாமல் பிறநாட்டில்
எங்கேனும் நடப்ப துண்டோ?
தமிழ்மொழியைக் காவாதான் தமிழ்த்தலைமை
தாங்குவதோ? தமிழ கத்தீர்,
தமிழகத்தின் வாழ்வெல்லாம் அன்னவரின்
வீழ்வன்றோ? எண்ணு வீரே!
- 1965
--------

28. மற்போர் தொடங்குக!

கற்போரே செந்தமிழைக் கலக்குகின்றார்;
காசுபணம் பதவிநலம் தமக்கே மானம்
விற்போராய் வாழுகின்றார்; விளைவெல்லாம்
வீழ்த்துகின்றார்; இனிமேலும் அவர்பால் சென்றே
சொற்போரால் மல்லாடிச் சோர்வுறுதல்.
முறையன்று; தமிழ்நினைவு சூம்பும் முன்னே
மற்போரைத் தொடங்கிடுவாய்; எழுதமிழா!
மறுநொடியில் விளைவுபல மலிதல் காண்பாய்!
-1966
-----------------

29. தமிழ் நெஞ்சம்!

வானார்ந்த பள்ளிகளில் கல்லூரி தன்னில்
வளர்கல்வி பயில்கின்ற இளைஞர்எல் லார்க்கும்
தேனார்ந்த செந்தமிழ்மேற் பற்றில்லை; முன்னோர்
தேக்கி வைத்த நூற்களிலே ஈடுபா டில்லை;
கூனார்ந்த மென்முதுகும், பொலிவிழந்த தோளும்
குழிவிழுந்த விழிகளிலே ஒளியிழந்த நோக்கும்,
ஊனார்ந்த பருவுடலும் வாய்த்திருக்கக் கண்டேன்;
உளங்கவன்றேன்; அவர்நெஞ்சில் தமிழில்லை யன்றோ?

படிக்கின்ற மங்கையர்க்கும் முகத்திலொளி இல்லை;
பழகுகின்ற செயல்களிலும் செந்தமிழ்ப்பண் பில்லை;
துடிக்கின்ற இடையில்லை; பருத்துள்ள தூண்கள்!
தோள்களிலும் அழகில்லை; வலிவில்லை; சூம்பல்!
நடிக்கின்ற பொய்யன்பு; நாகரிகப் போலி!
நலிந்தவுடல்; இல்லறத்தில் நாட்டமிலாப் போக்கு!
கடிக்கின்ற உரையாடல் வாய்த்திருக்கக் கண்டேன்;
கவல்கின்றேன்; அவர்நெஞ்சில் தமிழில்லை யன்றோ?

கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால்
கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்!
சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச்
சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!
விற்கின்றார் மொழிமானம்; தன்மானம்! விற்றே
விழலுக்கு நீர்பாய்ச்சி வீழ்ந்திறந்து போவார்!
பொற்குன்றம் பொடிமணலாச் சிதறுண்டு போகும்
பொருட்டென்ன? அவர் நெஞ்சில் தமிழில்லை அன்றோ?

வல்லடிமை இனித்ததென்ன? மெய்புளித்த தென்ன?
வாங்கியுண்ணும் கைச்சோறிங் குயர்ந்ததென்ன? வாழ்வில்
மல்லடிமைப் பட்டதென்ன?அறம்மறந்த தென்ன?
மானமெனும் உயர்உணர்வும் அற்றதென்ன? உள்ளம்
புல்லடிக்கும் கீழடியாய்த் தாழ்ந்ததென்ன? பெண்டிர்
பொற்பிழந்து போனதென்ன? உயிர்ப்பழிந்த தென்ன?
சொல்லடிமைப் பட்டதன்றோ? மொழியடிமைப் பட்ட
சோர்வன்றோ? அவர்நெஞ்சில் தமிழில்லை அன்றோ?

வளர்ந்துவரும் இளையோர்க்கும் மங்கையர்க்கும் நெஞ்சு
வளம்கொழிக்கும் அறஞ்சான்ற தமிழ்க்கல்வி வாய்ந்தால்
தளர்ந்துவரும் உடல்களிலே வீறுவரும்; தோளில்
தாவிவரும் பூரிப்பு; முகத்திலொளி மின்னும்!
கிளர்ந்துவரும் மெய்யன்பு; கீண்டியெழும் பண்பு!
கிளத்துகின்ற உரைகளெலாம் தேன்சுவையை விஞ்சும்!
வளர்ந்துவரும் உளத்தூய்மை! விளைந்துவரும் வாய்மை!
வினைகளிலும் அஞ்சாமை நேர்மைவரு மன்றோ?

தமிழர்க்குத் தமிழ்நெஞ்சம் வாய்த்துவிடு மாயின்
தமிழ்க்குருதி ஊற்றெடுக்கும்; தமிழுணர்வு வீறும்!
உமிழ்கின்ற வல்லடிமை மொழியடிமை சாகும்!
ஊக்கமிகும்! தாக்கவரும் பகை தூளாய்ப் போகும்!
அமிழ்தூற்றுச் சுனைசுரக்கும்; அன்புமனம் பூக்கும்!
அமைதியெழும்; ஆர்ப்பரித்த புன்மைநிலை நீங்கும்!
தமிழரறம் செழித்தோங்கும்! உலகதனை வாங்கும்!
தாழ்வகலும்! வாழ்வலரும்! தமிழின்பம் அன்றோ?
-1967
---------------

30. தமிழ் ஆர்ப்பரிப்பா? வெட்கம்!

தமிழரசின் அவைத்தலைவர்
செய்தித்தாள் நடத்துகின்றார்;
'தினத்தந்தி' 'ராணி' என்றே!

உமிழ்கின்ற கொச்சை நடை;
உடை களையும் புகைப் படங்கள்;
ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!

தமிழ் நாட்டின் இளைஞர்கை
மிளிர் தலெல்லாம் 'பேசும் படம்'
'குமுதங்'கள் இழிந்த நூல்கள்!

அமிழ்கின்ற பண்பாட்டில்
தமிழ் என்ற ஆர்ப்பரிப்பா?
போர்ப்பாட்டா? அந்தோ! வெட்கம்!
- 1967
----------------

31. தமிழ் படித்தால் வாழ்வு புதுமைபெறும்!

அறம் பெருகும் தமிழ் படித்தால்;
அகத்தில் ஒளி பெருகும்!
திறம் பெருகும்; உரம் பெருகும்;
தீமைக் கெதிர் நிற்கும்
மறம் பெருகும்; ஆண்மை வரும்!
மருள் விலகிப் போகும்!
புறம் பெயரும் பொய்மை யெலாம்!
புதுமை பெறும் வாழ்வே!
-1967
------------------

32. 'தமிழ்' எனும் கூட்டினுள் தமிழரே இணைக!

நெஞ்சிலும் நினைவிலும் தமிழனே நீதான்!
நெட்டுயிர்க் கின்றஎன் மூச்சிலும் நீதான்!
எஞ்சிய புகழினை எண்ணுதல் செய்வாய்.
எத்தனை நாட்டினை அடைக்கலம் கொண்டாய்.
கொஞ்சமும் நம்நிலை கருதுகி லாயே!
கூறு மொழிக்கிரு செவிகளும் தாராய்!
அஞ்சுதல் கண்டனை; அடங்குதல் செய்வாய்.
ஆயிர மாயிர மாண்டுகள் வீழ்ந்தாய்!

எண்ணிட எண்ணிடத் துணுக்குறும் நெஞ்சம்;
ஏங்கிட ஏங்கிடச் சாம்பிடும் மூச்சு!
பண்ணிலும் உரையிலும் பற்பல சொன்னோம்;
பாலிலும் நெய்யிலும் சொற்களைத் தோய்த்தோம்!
எண்ணறு மேடையில் விண்ணதிர்ந் தாட
ஏ!தமிழா! விழி! விழி!- எனச் சொன்னோம்!
கண்ணிமை திறந்தனை திறந்தனை இல்லை;
காதுகள் தூர்ந்தனை தூர்ந்தனை! கண்டோம்!

'ஆரியன் என்றனைத் தாழ்த்தினன்' என்றாய்;
'ஆயிர மாண்டுகள் வீழத்தினன்' என்றாய்;
'பாரியும் ஓரியும் கொடைமடம் கொண்டே
பல்லினத் தாரையும் வளர்த்தனர்'- என்றாய்;
'வாரியும் கொண்டது பழஞ்சிறப்' பென்றாய்;
'வடவனும் புகுந்தனன்; ஒழித்தனன்'-என்றாய்;
'ஆரிதை நம்புவர்? உன்றனை நீயே
அடிமைசெய் தாய்; உனைத் தாழ்த்தியும் கொண்டாய்!

வித்தப் படாதெனத் தடுத்தவர் யாரே?
விளைக்கப் படாதென மறித்தவர் யாரே?
தொத்தப் படாதெனச் சொன்னவர் யாவர்?
தூங்கிடப் போவென உரைத்தவர் யாவர்?
கத்தப் படாதெனும் கட்டளை ஏது?
கனைக்கப் படாதென நெரித்தகை யார் கை?
முத்தப் படாதெனில் உரிமையென் னாகும்?
முனையப் படாதென யாருனைச் சொன்னார்!

விழிக்கப் படாதென வெருட்டிய தாரே?
வீழ்ந்திவண் கிடவென மருட்டிய தாரே?
அழிக்கப் படாததா பகை, எழுந்திட்டால்?
ஆர்க்கப் படாதன வா,முர சங்கள்?
செழிக்கப் படாததா தமிழரின் வாழ்வு?
செகுக்கப் படாததா வடவரின் சூழ்ச்சி?
ஒழிக்கப் படாதன வா, மிடி சோர்வு?
ஒற்றுமை யுற்றன ரெனில்வரும் வாழ்வு!

உன்னையே உன்னவன் தாழ்த்துதல் செய்வான்!
உன்னுரை உன்செயல் பொய்யெனச் சொல்வான்!
பின்னையே குழியினைத் தோண்டமுற் பட்டான்!
பித்தனென் றுன்னையிங் கிகழுதல் செய்தான்!
சின்னதாய் அறிவெனும் கனல்புகக் கண்டால் சீ
ர்த்தது பேரறி வெனப்புகழ் செய்வான்!
'என்னை நீ எழுதுதல் பேசுதல்'-என்பான்
'எவர்க்கது தேவையாம்'- என்றிகழ் செய்வான்!

அன்புடைத் தமிழனே! ஒன்றுரைக் கின்றேன்;
ஆருடை மொழியிது நாள்வரை கேட்டாய்?
என்பினில், சதையினில், குருதியில் எல்லாம்
எண்ணிலா ஆண்டுகள் அடிமைமேற் கொண்டாய்!
தின்பதில், உடுப்பதில், துயில்வதில் எல்லாம்
திகழ்ந்தநல் அடிமைவாழ் வின்பமென் கின்றாய்!
மன்பதை திரிந்தது; திரிந்ததுன் உள்ளம்!
மற்றிவண் கூறுதற் கேதுகாண் உண்மை!

இன்னமும் கூறுவேன்; இறுதிவந் தில்லை!
இருள்மடிந் தொளிவரும்! ஒளிவரும்! அக்கால்
முன்னவை மீட்பதும் வாழ்வதும் உண்மை!
முழக்கிடு! வழக்கிடு! சோம்பியி ராதே!
சின்னவை-இழிந்தவை நினைவுகள் தூர்ப்பாய்!
சேர்ந்துகொள் உன்னினம்! ஒற்றுமை காண்பாய்!
சொன்னவை நினைவுகொள்! இணைகநீ இன்றே!
சொந்தஉன் மொழியினை, நாட்டினை ஆள்வாய்!
-1970
----------------

33. தமிழ் வாழ வேண்டுமா?

'தமிழ் வாழ்க' வென்பதிலும் தமிழ்வா ழாது;
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ் கின்ற நெஞ் செல்லாம்; குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்,
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் "தமிழ் தமிழ்”-என்றெழுதி வைத்தே
முட்டி நின்று,தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை!

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்;
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்;
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்;
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்;
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்!
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக் க
ண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்!
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே!
- 1970
--------------

34. கோடரிக் காம்புகள்!

ஆங்கிலத்தை யார்வெறுப்பார்?
அருந்தமிழை யார்தவிர்ப்பார்?
அரசியலால் பதவி நலம் அடைதல் வேண்டித்
தீங்குளத்தைப் பாய்ச்சுகின்றார்;
தீமைசெய்யத் தூண்டுகின்றார்;
திரிபுணர்வை மாணவர்பால் எழுப்ப லானார்!
தேங்குகின்ற அறிவியல்நூல்
தெளிவதற்கும் உலகமெலாம்
உலாவரற்கும் ஆங்கிலமே தேவை என்றால்
ஓங்குயர்ந்த மனநலத்தை
மாண்பொழுங்கை மெய்யறிவை
உணர்வதற்கோ செந்தமிழை ஓதல் வேண்டும்!

கயிற்றினையே பாம்பென்றும்
பாம்பினையே கயிறென்றும்
கருதுதல்போல் மாணவர்கள் கலக்க முற்று,
வயிற்றுமொழி பெரிதென்றும்
வாய்மொழி பெரிதென்றும்
வாய்மொழியாஞ் செந்தமிழைத்
தீதென்றும் மயலுணர்வால் வம்பு ரைப்பார்!
பயிற்றுமொழி தமிழேதான்
என்றிங்கே பகர்ந்தவர்யார்?
ஆங்கிலத்தைப் பழித்தவர்யார் ? பதற்ற முற்றே
குயிற்றிறத்துத் தீந்தமிழைக்
குலைத்திடவும் எழுந்துவிட்டீர்?
கோடரிக்காம் பன்ன;குலம் கெடுக்க வந்தீர்?

அருந்தமிழில் கற்பதுவும் ஆங்கிலத்தில் கற்பதுவும்
அவர்விருப்பம்; இல்லையென மறுத்தார் யாரே?
பெருந்தொகையாய் மதிப்பீட்டெண்
பெறாதவர்க்கே ஆங்கிலத்தில்
பயிற்றுவித்தால் பெரும்பயன்தான் கிடைப்ப துண்டோ?
அருந்துகிலாப் பிள்ளையுடன் சாப்பாட்டு இராமனுக்கே
விருந்தளித்தால் ஆர்க்குநலன்? ஆய்ந்து சொல்வீர்!
பொருந்துகின்ற செந்தமிழில் அறிவியலைப் புகட்டுவதில்
புதுமையென்ன? விரும்பிலர்ஏன் புகைதல் வேண்டும்?

வழிவழியாய்க் கற்றமொழி ஆகையினால் பார்ப்பனர்க்கே
ஆங்கிலத்தில் வல்லாண்மை மிக்க வுண்டு.
மொழிவழியாய் அறிவியலைக் கற்பதெனில் தாய்மொழிக்கே
முதற்சலுகை தரல்வேண்டும் என்ற கொள்கை
விழிவழியே செங்குருதி கொப்புளிக்க வைத்ததெனில்
வீணுரைசெய் தமிழர்க்கிது விளங்க வேண்டும்!
இழிவழிய எந்தமிழர் தம் வாழ்வை முன்னேற்றற்
கிதுதவிர வழியுண்டோ? இயம்பு வீரே!
-1970
-------------------

35; பைந்தமிழ் மொழியில் படிப்பது முறை

பழந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் மொழியில்
படிப்பதுதானே முறை?
இழந்தநம் உரிமை
எய்திடத் தடுக்கும்
பைந்தமிழில் படிப்பது முறை!
இழிஞரின் செவிபட, அறை !

கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனுந் தமிழில்
கற்பது தானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட் டே, உடன் எரி!

தமிழ்வழங் கிடத்தில்
தாய்மொழி வழியாய்த்
தமிழர் படிப்பதா பிழை?
அமிழ்ந்தவர் எழுந்தால்
அயலவர்க் கென்ன?
அயர்வதா? நீ,முனைந் துழை!

பிறந்தநம் மண்ணில்
பீடுறும் தமிழில்
பேசுதற் கோ, ஒரு தடை?
மறந்த, பண் பாட்டை
மறவர்கள் மீட்க
மறிப்பவர் எவர்?கொடி றுடை!

முத்தமிழ்த் தரையில்
முதுதமிழ் மொழியில்
முறைப்படப் பயில்வதா தீது?
எத்துறை அறிவையும்
ஏற்குநந் தமிழே
இனியுங்கள் பருப்பு,வே காது!

அத்தனை, பாட்டனை
அடிமைசெய் ததுபோல்
ஆரையிங் கரற்றுவாய் இன்னும்?
எத்தனை ஆண்டுகள் இழப்பதெம் உரிமை?
எழுந்திடின் கழுகுமைத் தின்னும்!
-1970
-------------

36. 'நமோ ஓம் நமக!'

ஓ!ஓ!ஓ 'குமுதமே' தமிழ் தின்னுங் கழுதையே!
ஊர் கெடுக்கும் 'விகடன்' 'கதிரே!
ஒப்பரிய தமிழென்னும் உண்ணீர்க் குளத்தையே
உழப்புகின்ற எருமைக் குலமே!

ஏ!ஓ!ஆ தித்தரே! 'தினத்தந்தி' 'ராணி'-யால்
எந்தமிழைக் கெடுக்கும் உருவே!
இங்கங்கெ னாதபடி தமிழைப் புதைக்கவே
எழுந்துலவும் இதழ்கள் இனமே!

ஈவோ, இ ரக்கமோ வைக்காதீர்! உங்களுக்
கிருக்கின்ற நமைச்சல் தீர,
எப்படியும் எழுதுங்கள்! எழுதிக் குவியுங்கள்!!
எல்லாமும் இலக்கி யந்தான்!!!

நாவோ, வெண் மூளையோ நக்குவதில், எண்ணுவதில்
நரகலோ இழிவோ என்ன?
நல்லதமிழ் என்பதெது? நல்லநடை என்பதெது?
"நமோ ஓம் 'துக்ளக்' நமக!”

-1971
----------------
37. இதற்கென்ன சொல்லுகின்றீர் ?

சுனிதி குமார் சட்டர்சி
எனும்வட நாட்டுப் பார்ப்பான், சொல்லுகின்றான்;
சமற்கிருத உதவி யின்றி
இனிதியங்கா தாம், தமிழும்;
அதன்மடியில் வளர்ந்துவாம்!
-இதைக்கேட்டே இளிக்கின்றார் தெ.பொ.மீயார்!
குனிதொழிலை நன்குசெய்த பெருமை சொல்லி,சட்டர்சி
கொண்டையத்திற் கேற்றுகிறான், தெ.பொ.மீ.-யை!
இனியென்ன?
'நடப்பதும் தமிழாட்சி' எனத்தருக்கும்
தமிழர்களே! இதற்கென்ன சொல்லுகின்றீர்?

சட்டர்சி போன்றவர்க்கும் தெ.பொ.மீ. போன்றவர்க்கும்,
சாட்டையடி போல் தந்தே,
உடன்முன் நின்று,
தட்டியடக் கின்றதிறம் படைத்தவர்கள் இங்கிலரா?
தன்மானம் உள்ளவர்கள் அற்றாபோனார்?
அட்டியிலை; இருக்கின்றார்'
ஆனாலும், வாய்ப்பிலராய்-
ஆள்கின்றார் துணையிலராய்!
முடங்கிப் போனார்!
கெட்டதொரு வாய்ப்பிதுதான்! நமைநாமே
என்றென்றும்
கெடுத்துவந்த கதையிதுதான்!
கேட்டுக் கொள்வீர்!

-1971
--------------

38. வெற்றிக்கென் வேண்டுவதே ?

நெஞ்சில் தமிழ் நினைவு;
நீங்காத மெய்யுணர்வு;
செஞ்சொல் குமிழியிடும்
சிதையாத பாட்டுயிர்ப்பு;
துஞ்சா இரு விழிகள்;
தொய்ந்து விழா நற்றோள்கள்;
அஞ்சுதல் இன்றி
அயர்வின்றி நின்றவுரம்;
எஞ்சுகின்ற காலமெலாம்
ஏற்ற நறுந்தொண்டு;
நஞ்சு மனங் கொண்டார்
நடுக்கமுறுஞ் செந்துணிவு;
கொஞ்சமிலை, நல்லிளைஞர்
கூட்டமோ கோடி பெறும்!
விஞ்சுகின்ற செந்தமிழே,
வெற்றிக்கென் வேண்டுவதே?
- 1972
------------

39 தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்குகள்!

ஆங்கிலத்தில் வடமொழியில் பிழையொன்று வரக்கண்டால்
அதைப்பொறுக்காப் பார்ப்பனர்தாம் அவர்நடத்தும்
தீங்கான தாள்களிலும் கதைகளிலும் தமிழ்க்கொலையை
நாள்தோறும் விடாப்பிடியாய்ச் செய்கின் றார்கள்!
ஈங்கிந்தத் தமிழர்களும் எதற்காகத் தாய்மொழியைத்
தாம்நடத்தும் இதழ்களிலே இழிவு செய்வார்?
தூங்காதீர் தமிழர்களே! மொழியிழிவே இனஇழிவாம்!
முதன்முதலில் இதழ்ப்புரட்சி தொடங்கு வீரே!

ஏயதமிழ் வளர்க்கின்ற மாணவரீர்! ஆசிரியப்
பெருமாண்பீர்! எந்தமிழ்த்தாய் தந்தை யர்க்கே
சேயவர்தாம் நீவிரெனின் இதழ்களிலே தமிழ்நலத்தைச்
சிதைக்கின்ற சிறுமையினைப் பொறுக்க லாமோ?
தூயதமிழ் எழுதாத இதழொன்று தமிழகத்தின்
கடைகளிலே எழில்கொழிக்கத் தொங்கு மாயின்
போயதனைப் பறித்தெடுத்துக் கிழித்தொருங்கே புலங்குவித்துப்
புடைசூழ்த்து தீமூட்டிப் பொசுக்கு வீரே!
- 1974
----------------

40. தமிழ் நலத்தைத் தவிர்ப்பாரைத் தவிர்த்திடுக!

விழித்திருத்தம் இல்லாதான் மின்மினியை விண்மீனாய்
வியப்புறவே உரைப்ப தைப்போல் -
வழித்திருத்தம் காணாதான் தானறியா ஊருக்கு
வழிகாட்ட வந்த தைப்போல்,
மொழித்திருத்தம் இல்லாத எழுத்தாளர் எதைத்திருத்த
முன்வந்திங் கெழுத லுற்றார்?
பழித்தொதுக்கி வாருங்கள் அவரெழுத்தை அவர்நலத்தை;
பயனுண்டாம் சிறிது நாளில்!

தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான்;
தன்னலத்தைப் பேண வந்தான்!
தமிழினத்தைப் பேணாதான் பிறவினத்தைத் தான்எங்ஙன்
பேணவுளங் கொள்ள வல்லான்?
கமழ்மலரைப் பேணாத மூக்கறையன் கனிநலத்தைக்
காணவுளங் கருது வானோ?
தமிழ்நலத்தைப் பேணாத எழுத்தாளர் தம்மெழுத்தைத்
தம்நலத்தைத் தவிர்த்தல் நன்றே!
- 1974
---------
41. தமிழ்மொழி வாழ்க!

எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் -- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!

முப்படி நிலையில் முதற்படி தமிழ்ப்படி!
முறைப்படி அதன்நலம் வேண்டும்! - முழு
முயற்சியும் அதற்கிடல் வேண்டும்!

தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்!
தாழ்நிலை இழிவுகள் மாறும்! - நம்
தலைவிலை எனின் தரல் வேண்டும்!

தமிழின உரிமையே தமிழ்நில உரிமை
தருமெனில் மறுப்புரை உண்டோ? இத்
தலைமுறைக் (கு) உழைப்(பு) அது வன்றோ?

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க!
தமிழ்மொழி வாழ்க வென் றுரைப்போம்! - அதால்
தமிழினம் மலர்க வென் றழைப்போம்!

தமிழினம் வாழ்க! தமிழினம் வாழ்க!
தமிழினம் வாழ்க - வென் றுரைப்போம்! அதால்
தமிழ்நிலம் தழைக்க வென் றுழைப்போம்!

எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்! என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!
-1975
-----------

42. தமிழ் முழக்கஞ் செய்க!

தமிழரெல்லாம் 'தமிழ்' என்னும் ஒருகூட் டுக்குள்
தமையிணைத்துக் கொளல்வேண்டும்; தாம்தாம் கொண்ட
உமிழுநிலைப் பிறப்புக்கும் வேற்று மைக்கும்
உளமொப்பக் கூடாது; தமிழர் ஒன்றே!
கமழுமின வொற்றுமையை மொழியால் பேணிக்
காத்திடுதல் அன்றோயிவ் வியற்கைக் கொள்கை!
இமிழ்கடல்சூழ் உலகெங்கும் போய்வாழ்ந் தாலும்
எந்தமிழர் தமிழ்மொழியால் இணைந்து கொள்க!

ஆங்கிலத்தைப் பிறமொழியைத் தமிழ்கல் லாத
அயலவர்தம் பாங்கில்உரை யாடற் கன்றி,
ஈங்கினிமேல் தம்மவர்க்குள் பயன்ப டுத்தல்
இல்லையெனும் உறுதிமொழி தமிழர் கொள்க!
தூங்கியதால், மொழிதாழ்ந்தே இனத்தைத் தாழ்த்தும்
தொலையாத இடர்ப்பாடு போதும் என்க!
தேங்குவது கூடாது! பிறர்போல் நாமும்
தீங்கின்றித் தாய்மொழியைக் காத்தல் வேண்டும்.

தமிழர்க்குத் தமிழே தாய் மொழியாம்; அந்தத்
தாய்மொழியை நாம்துறந்தால் தமிழர் ஆமோ?
தமிழின்றித் தமிழினமும் இல்லை யன்றோ?
தமிழ்பற்றிக் கவலாதார் எண்ணிப் பார்க்க!
தமிழர்க்குப் பிறமொழியைக் கற்குந் தேவை
தள்ளாத தேவையெனில் கற்க! இந்தத்
தமிழினத்துள் தமிழ்நிலத்துள் தமிழ்கல் லாத
தமிழர்களை அயலார்க்கே பிறந்தார் என்க!

கட்சிகளைத் தவிர்த்திடுக! 'சாதி' என்னும்
கண்மூடிப் பிரிவுகளைப் புதைத்தொ ழிக்க!
எச்சமயத் தும்'தமிழர்' என்றே தம்மின்
இனப்பெயரை மொழியாலே தெரியச் சொல்க!
நச்சுயிர்கள் போலினத்தை அழிக்கும் மூட
நயவஞ்சக் கொள்கைகளை விழாக்கள் தம்மை-
எச்சிலிலை ஈக்களைப்போல் மொய்த்துக் கேட்கும்
'இதிகாசம்' ‘புராண'த்தைத் — தவிர்த்தல் செய்க!

தமிழ்மகளிர் செந்தமிழ்மேல் பற்றுக் கொண்ட
தமிழரையே மணஞ்செய்க! இளைஞர் தாமும்
தமிழ்நலஞ்செய் பெண்டிரையே மணந்து கொள்க!
தமிழறியார் தமிழ்க்குநலஞ் செய்யார் அன்றோ?
தமிழ்நலத்தைக் காவாத எழுத்தா ளர்கள்
தாமெழுதும் நூற்களையும் தவிர்த்தல் செய்க!.
நமிலுயர்வு தாழ்வகற்றி ஒருங்கி ணைக்கும்
நல்லறிஞர் உரைகளையே போற்றிக் கொள்க!

வானொலியில் திரைப்படத்தில் தமிழ்பே ணாத
வரலாறு, கதை, பாடல் வருதல் கண்டால்,
கூனொலியைக் கேட்காமல், படம்பார்க் காமல்
கொள்கைக்குப் போரிடுக! தமிழைக் காக்க!
தேனளிக்குஞ் சுவையினையும் எள்ளல் செய்யும்
செந்தமிழின் தனிச்சுவையைப் பழிக்கு மாறு
வீணொலிக்கும் இரைச்சலுக்கும் பொழுதைப் போக்கும்
வீணர்தம் போக்கிற்குத் தடையாய் நிற்க!

தமிழ்மொழியைத் தாழ்த்துகின்ற வரலா றெல்லாம்
தவிடுபொடி யாக்கிடுக! தமிழர் பாங்கில்
தமிழ்நலத்தைப் பேணாத தலைவர் தம்மைத்
தமிழ்நிலத்துப் புறக்கணிக்க! பொதுமை பேசித்.
தமிழ்மொழியைப் பழித்திடுவார் தம்மால் இங்குத்
தமிழர்க்குக் கேடல்லால் நலன்கள் இல்லை!
தமிழ்நாட்டின் தெருவெல்லாம் மனைகள் எல்லாம்
தமிழ்முழங்கச் செய்திடுவீர் தமிழ்நாட் டீரே!
- 1975
-----------

43. கிறுக்கர்தம் வாலை அறுக்க!

இலக்கியத்தைத் தவிர்த்திடுக! கதைகளினி
எழுதற்க! எழுதினாலும்
துலக்கமிலா எந்தமிழர் வாழ்வுபெற
உண்மையினைத் துணிந்து சொல்க!
புலக்கவினால், கலைத்திறனால் தமிழினத்தைக்
கட்டழிக்கும் புல்லர் எல்லாம்
கலக்கமுற்றுப் போகும்படி எழுத்தினிலே
சூடேற்றிக் கனலச் செய்க!

பாட்டெழுதிக் கொண்டிருக்கும் படுகோழைக்
'கவிஞ’ரெலாம் பதை பதைக்க
ஏட்டினிலே நெருப்பெழுத்தால் எந்தமிழப்
பாவலர்கள் எழுதிக் காட்டி,
வாட்டமுறுந் தமிழினத்தைக் காத்திடுக!
வரலாற்றைப் புதுக்கச் செய்க!
ஆட்டமுறுங் கிறுக்கர்தம் வாலையெல்லாம்
ஒட்டறுத்தே அடங்கச் செய்க!
-1975
----------

44. செந்தமிழ்ச் சிட்டே!

செந்தமிழ்ச் சிட்டே! செந்தமிழ்ச் சிட்டே!
எந்தமிழ் மக்களுக் கேற்றம் உரைத்திடு!
எந்தமிழ் மக்களுக் கேற்றம் உரைக்கையில்,
வெந்தழிந் தாலும் 'வீழ்விலை' என்க:

பைந்தமிழ்ச் சிட்டே! பைந்தமிழ்ச் சிட்டே!
நைந்த தமிழரின் நலத்துக் குழைத்திடு!
நைந்த தமிழரின் நலத்துக் குழைக்கையில்,
தொய்ந்த துயரெலாம் 'தூசுகள்' என்க!

தீந்தமிழ்ச் சிட்டே! தீந்தமிழ்ச் சிட்டே!
மாய்ந்த தமிழரின் மலர்ச்சிக் குதவிடு!
மாய்ந்த தமிழரின் மலர்ச்சிக் குதவையில்,
ஏய்ந்த துன்பமும் 'இன்பமே' என்க!

தனித்தமிழ்ச் சிட்டே! தனித்தமிழ்ச் சிட்டே!
இனித்தமிழ் நலத்தையே எண்ணிப் பறந்திடு!
இனித்தமிழ் நலத்தையே எண்ணிப் பறக்கையில்,
பனித்தகண் ணீரையும் 'பனித்துளி' என்க!

பழந்தமிழ்ச் சிட்டே! பழந்தமிழ்ச் சிட்டே!
இழந்த தமிழ்நலம் ஈட்ட முனைந்திடு!
இழந்த தமிழ்நலம் ஈட்ட முனைகையில்,
உழந்த நெஞ்சிலும் 'உவகையே' என்க!

தென்மொழிச் சிட்டே! தென்மொழிச் சிட்டே!
என்மொழி என்னினம் என்நிலம் வாழ்த்திடு!
என்மொழி என்னினம் என்நில வாழ்த்திலே,
புன்மொழி கேட்பினும் 'பொன்மொழி' என்க!
-1975
-------------

45. மானத்தை இழப்பேனோ?

[மார்கழி மாதம் திருவாதிரை நாள்' - என்னும் மெட்டு]

ஐம்பதி னாயிரம் ஆண்டுமுன் பிறந்த
அருந்தமிழ் வளர்க்காமல்
மொய்ம்பிலதான வடமொழி பேசி என்
வாழ்வைக் குலைப்பேனோ?

மெய்யின் முற்பிறந்த மேந்தமிழ்ப் பாடி
மேம்பட்டு வாழாமல்
பொய்யின் பிற்பிறந்த வடமொழி பேசி- என்
பூண்டை அறுப்பேனோ?

செந்தமிழ்ப் பாடி உயிர்நலந் தேடி- என்
சித்தத்தை உயர்த்தாமல்
வந்தவர் மொழியாம் வடமொழி பேசி என்
வாழ்வைச் சிதைப்பேனோ?

வள்ளுவன் குறளை, தொகையினைப் பாட்டை
வாய்மகிழ்ந் துரைக்காமல்
எள்ளுறும் மனுவை வேதத்தைப் பாடி என்
இனத்தைப் புதைப்பேனோ?

சிலம்புமே கலையினைச் சிந்தா மணியினைச்
சீருறப் பாடாமல்
புலம்புபா ரதத்தினை இராமா யணத்தினைப்
போற்றிநான் அழிவேனோ?

வடவரின் மொழியை இந்தியென் பேயை
வழிவழி தவிர்க்காமல்,
முடவனைப் போலொரு குருடனைப்
போல்மனம் முரண்படக் கிடப்பேனோ?

அற்றைநாள் பிறந்த அருந்தமிழ்த் தாயை
அரியணை யேற்றாமல்
மற்றையர் ஆட்சி மதித்துளம் வெம்பி
மானத்தை இழப்பேனோ?

தந்தன தான தன்தன் தான தந்தன தனனான
தந்தன தனன தன தன தான தன்னா தன தான!
-1975
------------

46. குருடும் பேதையும்!


பாப்பித் துயர்ந்த பாவலர் முன்னாள் பயந்ததமிழ்த்,
தோப்பிற் புகுந்துமேல் தோலும் இருக்கச் சுளையெடுத்து
யாப்பிற் புகுத்தியே யானும் புலவனென் பானையுங்கை
கூப்பித் தொழுவதோ கூர்த்தறி வில்லாக் குருடர்களே!

ஊறித் திளைத்ததம் காமக் கழிவின் உணர்வுகளை
நாறித் துளும்பிடும் சொற்களால் தீட்டி நயப்பவனைக்
காறிச் சழக்கென் றுமிழ்வதல் லால்ஓர் கலைஞனெனக்
கூறிப் புகழ்வதோ ஓங்கறி வில்லாத குள்ளர்களே!

ஊசிப் புழுத்த கருத்தை உளந்தாழ் இழிவுரையால்
பூசிக் கலவை மொழியால் அடுக்கிப் புளுகுவரைக்
கூசித் திருத்துவ தல்லால் தமிழ்தேர் குரிசிலெனப்
பேசித் திரிவதோ மெய்யறி வில்லாத பேதைகளே!
-1976
----------

47. மொழி, கருத்து, வினை!

தனித்தமிழைப் போற்றாதார் நூலெழுதல்
தமிழ்மொழிக்குக் கேடு செய்யும்!
தனித்தமிழைப் பேணாதார் உரையாற்றல்
தமிழினத்தை அடிமை கொள்ளும்!
தனித்தமிழைப் பழித்திடுவார் அரசாளல்
தமிழ்நிலத்தில் கீழ்மை சேர்க்கும்!
தனித்தமிழே இனித்தமிழாம்! தமிழினத்திற்
குரிமைதரும் எழுச்சி ஊற்றாம்!

தாழ்ச்சியுறுந் தமிழினத்தின் மேன்மையெலாம்
தமிழ்மொழியின் மேன்மை ஒன்றே
சூழ்ச்சிமிகும் தமிழ்க்கலப்பை நீக்கிடுக,
சொல்லாலும் எழுத்தாலும் வழக்கினாலும்!
வீழ்ச்சியுற்ற வரலாற்றின் அடிநிலையில்
தமிழ்வீழ்ந்த நிலையைக் காண்க!
காழ்ச்செயிர்த்த வல்லுணர்வால் முனைத்தெழுந்து
கலப்புமொழித் தீமை கொல்க!

மொழிநலமே இனநலமாம்! முழுமாந்தப்
பெருநலத்தின் பகுதிக் கூறாம்!
மொழிநலத்தைச் சிதைத்திடுவோர் இனஞ்சிதைப்போர்!
இனநலத்தின் முளையைச் சீய்ப்போர்!
மொழிநலத்தைக் காவாமல் இனமிழந்த
முழுநலன்கள் கோடி கோடி!
மொழிநலமே கருத்துநலம்; கருத்திலையேல்
வினையில்லை; விளைவும் இல்லை!
-1977
-------------

48. தமிழே எனக்கு இறைவன்!

தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி - செந்
தமிழே எனக்கிங் குடலம்!
தமிழே எனக்கிங் குள்ளுணர்வு -- பைந்
தமிழே எனக்கிங் குலகம்!

தமிழே எனக்குக் கருத்தெழுச்சி! - தீந்
தமிழே எனக்குப் பார்வை!
தமிழே எனக்குச் செவியோசை! - நற்
றமிழே எனக்குப் பிறவி!

தமிழே எனக்கு முழுமுதல் தாய்! - முத்
தமிழே எனக்குத் தந்தை!
தமிழே எனக்குக் குரு, கல்வி! - நந்
தமிழே எனக்குக் காட்சி!

தமிழே எனக்கிங் குயிர்த்துணைவி! - இன்
தமிழே எனக்குக் குடும்பம்!
தமிழே எனக்கிங் குயிரின்பம்! வண்
தமிழே எனக்குக் குழவி!

தமிழே எனக்கிங் குறவுரிமை! - வன்
தமிழே எனக்குச் சுற்றம்!
தமிழே எனக்கிங் குயர்வாழ்க்கை! - அந்
தமிழே எனக்குத் தொண்டு!

தமிழே எனக்கோர் எழுத்துறவு! - இயற்
றமிழே எனக்குப் பேச்சு!
தமிழே எனக்கோர் அறிவியக்கம்! - இசைத்
தமிழே எனக்குயிர் மூச்சு!

தமிழே எனக்கிங் குயிர்நட்பு! - நடத்
தமிழே எனக்கு விருந்து!
தமிழே எனக்கு வினையாடல் - உயிர்த்
தமிழே எனக்கு நனவு!

தமிழே எனக்குத் திருமறைநூல் - பழந்
தமிழே எனக்குக் கனவு!
தமிழே எனக்கு மத மெய்மம்! -அருந்
தமிழே எனக்கிங் கிறைவன்!
-1978
------------------

49. தமிழ் கெடுப்பானைக் கெடுப்பான் தமிழைக் காப்பான்!

தரங்குறைந்த எழுத்தெழுதிப்
பணந்திரட்டும் நோக்கத்தால்
தாள்தொடங்கு கின்றார், இங்கே!
உரங்குலைந்த உள்ளத்தார்-
நரம்பிளைத்த உடலத்தார்-
வெற்றுணர்வால் ஓடோ டிப்போய்,
குரங்கினம்போல் தாவியதை
வாங்கி, அறைத் தாழடைத்துத்
தனிப்படித்து விடாய்தணிப்பார்!
இரங்குகின்றோம்!ஓ ! ஓ!ஓ
இளைஞர்களே! இளைஞைகளே!
வாழ்வென்ப ததுவே தானோ?

கயமையினை எழுத்தாக்கிக்
கற்பிழப்பைக் கதையாக்கிக்
காமத்தைக் கடையில் விற்கும்
நயமில்லா இப்போக்கை
முள்மரத்தை நந்தமிழர்
முளையினிலே நசுக்கல் வேண்டும்!
வளமிழக்கச் செய்கின்ற
இந்நோய்க்கு வாய்த்தநறு
கயமையினைத் தமிழெழுத்தால்
மருந்தேசெந் தமிழ்மருந்தாம்!
விலைபோக்கும் தமிழ்கெடுப்பா
னைக்கெடுப்பான் தமிழைக் காப்பான்!
-1978
-------------

50. தவிராமல் தமிழ்நலம் காக்க!

தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல்
தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள்
இனியேனும் தமிழ்நிலத்தில்
எழுந்திடுக! பொதுத்தொண்டில்
இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!
பனியேனும் குளிரேனும் மழையேனும் வெயிலேனும்
பாராமல் தெருத்தெருவாய் ஊரூராகத்
தனியேனும் இணைந்தேனும் தந்தம்மால் முடிந்தவரை
தமிழினத்திற் குளமுவந்தே உழைத்தல் செய்க!

புலையறைவாய் விளம்பரத்தால்
பொதுத்தொண்டர் போல்நடித்துப்
பொருள்தொகுக்கும் புல்லியரும் மலிந்துபோனார்!
தலைமறைவாய்த் தமிழ்நலத்தைப்
பகைவரிடம் விலைபோக்கும்
தன்நலத்தார் தமிழ்நாட்டில் தலைமையேற்றார்!
இலைமறைவாய்க் காய்மறைவாய்
உண்மைத்தொண் டாற்றுவரும்
இந்நிலத்தில் இல்லாமல் இல்லை; இந்தத்
தலைமுறையில் அவரெழுந்து தவிராமல் சலியாமல்
தமிழ்நலத்தைக் காத்தால்தான் தப்புவோமே!
-1978
-------------

51. அருள்க செந்தமிழே!

எங்கு, எந் தமிழர் இருக்கின் றார்களோ,
எங்கு, அவர் துயரால் இழிகின் றார்களோ,
எங்கு, அவர் உரிமை இழக்கின் றார்களோ,
இனம் விளங் காமல், மொழிதெரி யாமல்,
எங்கு, அவர் பல்வே றினத்திற் கடிமையாய்
எம்முன் னேற்றமும் இன்றி உள் ளார்களோ-
அங்கு, என் அறிவும், உள்ளமும், உயிரும்
அளாவி யிருக்க அருள்க, செந் தமிழே!

மானந் துறந்து, தமிழ்தோய் மண்ணின்
மண்டிய பழம்பெரும் மாண்பை இழந்து,
கூனல் விழுந்து, குரலும் மழுங்கிக்
கூப்பிய கையும் காலுமாய், எங்கு, செந்
தேனெனும் மொழியைப் படைத்த எந் தமிழர்
திறங்கித் தேய்ந்து திகைக்கின் றார்களோ-
ஆனநற் பெருமை அனைத்தும் சான்ற, என்
அன்னைத் தமிழே, ஆங்கெனைச் சேர்த்துக!

ஒற்றைத் தமிழராய் உலக உருண்டைமேல்
ஓடிக் களைத்துக் கைகால் சோர்ந்தும்,
அற்றைப் பெருமை முழுமையும் மறந்தும்,
அன்றைச் சோற்றுக்கே அடிமுடி பதித்தும்,
எற்றைக் கெம்நிலை ஏற்றம் உறும் - என
ஏங்கிக் கிடக்கும் எந் தமிழரின் பாங்கில்,
சுற்றமாய் உறவாய்த் தொண்டனாய் நின்று, தோள்
சுமக்கும் பெருமையை அருள்க, தாய்த் தமிழே!

வாடிய பயிர்க்கே வந்தநல் மழையென-
வறுபிணி யாளர்க்கு வாழ்க்கை மருந்தென -
தேடிய குழவியைத் தேற்றிடுந் தாயெனத் -
தெறல்நெடும் பாலையில் திகழ்ந்திடும் பொழிலெனப் -
பேடியர் சூழ்ச்சியால் பிரிந்தஎன் தாயினம்
பீடுற் றுய்ந்திடும் நினைவினால் உயிர்க்கும்என்
ஓடிய மூச்சையும் உணர்வுதோய் நெஞ்சையும்
உகுத்திட விழைகிறேன்; உதவுக அன்னையே!
-1978
-----------

52. தலைவர்கள் தமிழ்நலம் காக்க!

செத்திடும் தமிழ்ஞா லத்தின்
செந்தமிழ் நலத்தின் - நோக்கம்
ஒத்திடும் உணர்வால் மக்கட்
குண்மையில் பொதுத்தொண் டாற்ற
வித்திடும் தலைவர்க் கெல்லாம்
வேண்டுதல் ஒன்று கேட்பேன்;
'முத்திடும் கடல்சூழ் நாட்டின்
முதுதமிழ் மொழிகாப் பீரே!'

'தமிழ்நலம் காத்தல் ஒன்றே
தமிழினம் காத்தற் கொப்பாம்! க
மழ்தரும் தமிழ்ந லத்தைக்
கலப்பினால் கெடுப்பீ ராயின்
உமிழ்தகு நிலைவந் தெய்தும்!
உயிர், மொழி; இனம்,மெய் யன்றோ?
அமிழ்வது மொழிமுன் என்றால்
அழிவுறும் இனம்,நா டென்பீர்'
-1978
----------------

53. செந்தமிழைத் தீய்க்கும் சீர்திருத்தம்!

கொச்சைத் தமிழும் கொடுந்தமிழும் கூறவெண்ணாப்
பச்சைத் தமிழும் பயின்று நிதம் - நச்சுறுத்திச்
செந்தமிழைத் தீய்க்கும் சிறுமையரே சீர்திருத்தம்
எந் தமிழ்க்குச் செய்யவந்தார் இங்கு!

சொற்பிழையால் வேற்றுமொழிச்
சொற்கலப்பால் இன்தமிழைக்
கற்பழிக்கும் தீய கயவோரே - பொற்புடைய
செந்தமிழை இங்குத் திருத்தவந்தார் தாமதற்குச்
சொந்தமென்று கொண்டாடிச் சூழ்ந்து!

எழுத்தால் உரையால் இலக்கணத்தை என்றும்
கழுத்தை முரிக்கின்ற காரறிவார் இங்கே
எழுத்துத் திருத்தம் இயற்றுகின்றார் நண்டு
கொழுத்துத் திரிவதுபோல் கொண்டு!

கலப்புமொழி யால்,எம் கனித்தமிழை நாளும்
உலப்புகின்ற தீய உலுத்தர் - வலுப்பெறவும்
செய்யாத் திருத்தமெல்லாம்
செய்வார், நாய் [1]சான்றவை, [2]வாய்
வையாப் புகுந்ததுபோல் வந்து.

---
[1]. சான்றவை -சான்றோர் அவை.
[2]. வாய் வையாப் புகுந்தது - வாய் வைக்கப்புகுந்தது.
-1978
-----------

54. இதுவா, செயவேண்டிய சீர்திருத்தம் ?

ஊருண்ணக் கொடுக்கின்ற உழவர்க்கிந் நாட்டில்
உருப்படியாய் ஒரு நலனும் செய்யவந்தார் இல்லை!
போருண்ணும் மாடுகள்போல் ஒருபுறத்தில் செல்வர்
புடைக்கவயி றுண்ணுகின்றார்! மறுபுறத்தில் சோற்று
நீருண்ணும் வாய்ப்புமின்றி நெடும்பசியில் மாளும்
நிலையின்னும் மாறவில்லை பலகோடிப் பேர்க்கு!
சீரெண்ணித் திருத்தவந்தார் எழுத்துகளை இங்கே!
செயவேண்டும் சீர்திருத்தம் எதுவென்று காணார் !

தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
சிறு குடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
ஓயாத தொல்லைகளால் நலிகின்றார் ! இன்னும்
எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
எழுத்துக்களைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே!
-1979
------------

55. புலமையைக் கீழ்மை செய்வீர்!

இன்றுள புலவர் யார்க்கும்
இலக்கண இலக்கி யங்கள்
ஒன்றினும் தேர்ச்சி யில்லை;
உள்ளுரன் சிறிது மில்லை;
தொன்றுதீந் தமிழில் நல்ல
தோய்வில்லை; புலமை யில்லை;
நன்றெனும் கொள்கை ஒன்றில்
நம்பிக்கை துளியும் இல்லை!

ஒழுங்கிலை; நேர்மை யில்லை;
உண்மைநல் லுணர்வு மில்லை;
மழுங்கிலா ஊக்க மில்லை;
மானமும் மாண்பும் இல்லை;
செழுங்கிளை புரத்தல் இல்லை;
பெரியோரைச் சேர்தல் இல்லை;
அழுங்கிடும் இனத்தைக் காக்கும்
ஆர்வமும் உழைப்பும் இல்லை!

பொய்மையும் கரவுங் கொண்டு
புலமையைக் கீழ்மை செய்வார்!
மெய்மையைக் கைநெ கிழ்ப்பார் !
மேலேறக் கால்பி டிப்பார்!
நொய்மைசேர் உரைகள் கூறி
நொடிந்திடு வினைகள் மேய்ந்து
தொய்மைகூர் வாழ்க்கை செய்வார்!
தோல்வியை வெற்றி யென்பார்!

அற்றைநாள் புலவர் போல
அளப்பரும் புலமை மிக்கார்
இற்றைநாள் ஒருவ ரேனும்
இல்லெனல் இழிவே ஆகும்!
வெற்றுரை அன்றாம், ஈது!
வியன்தமிழ்ப் புலவீர்! நீவிர்
கற்றுரை தமிழை என்றும்
கயமைக்கு விற்றல் நன்றோ?

மண்டுபே ரறிவால் மல்கு
மறைமலை யடிக ளைப்போல்
பண்டித மணிபோல், சோம
சுந்தரப் பாவ லர்போல்
விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
விறல்மிகு திறமை மிக்கார்
உண்டெனில் அன்றோ நந்தம்
ஒண்டமிழ் வளரும் கண்டீர்!
-1979
------------

56. தூயதமிழ் பேசுங்கள், எழுதுங்கள்!

தமிழ்நாட்டின் விடுதலையை நினைந்திடுவீர்;
நினைப்பதற்கே அஞ்சுவோர்கள்,
தமிழினத்தின் முன்னேற்றம் கருதிடுவீர்;
கருதுதற்குத் தயங்கு வோர்கள்,
தமிழ்மொழியைப் பேணுதற்கு முனைந்திடுவீர்;
பேணுதற்கும் தயக்கம் கொண்டால்
தமிழரென்ற பெயர்கூடத் தரையினிலே
தமிழர்க்குத் தங்கா தன்றோ?

தமிழென்றால் தூயதனித் தமிழ்மொழியே!
தமிழெழுதிப் பேசா தார்கள்
தமிழென்று பிறமொழிகள் பிழைமொழிகள்
கலந்தெழுதிப் பேசி வந்தால்
தமிழ்மொழியும் தரங்குறைந்து நாளுக்கு
நாளழிந்து தாழ்வ துண்மை!
தமிழ்மொழியும் பேணாதார் தமிழரென்று
பெயர்தாங்கல் தாழ்ச்சி யன்றோ?
-1980
--------------

57. தமிழைக் கொல்லும் மூடர்களே!

கலப்புத் தமிழும் தமிழாமோ? - இழி
கயமைச் செயலும் செயலாமோ?
அலப்புச் சொல்லும் இசையாமோ? - வீண்
ஆரவாரமும் வாழ்வாமோ?

கொச்சைத் தமிழும் தமிழாமோ? - கடுங்
கொடுமை உரையும் உரையாமோ?
பச்சைச் சொல்லில் பாலுணர்வைத் - தாள்
பதிக்கும் இதழும் இதழாமோ?

போலித் தமிழும் தமிழாமோ? - வெறும்
புன்மைப் பேச்சும் பேச்சாமோ?
கூலிப் பிழைப்பும் பிழைப்பாமோ? - ஒரு
கொள்கைச் சிதைவும் சிறப்பாமோ?

கீழ்மைப் பேச்சும் தமிழாமோ? - சிறு
கிறுக்குத் தனமும் அறிவாமோ?
தாழ்மைச் செயலால் பிழையுரையால் - செந்
தமிழைக் கொல்லும் மூடர்களே !
-1980
--------------

58. செத்துவிட்ட வடமொழி எதற்கு ?
செந்தமிழிலேயே வழிபாடு செய்வீர்!

வழங்குதமிழ் மொழியிருக்க வழங்கி டாத
வடமொழியில் வழிபாடு செய்கின் றீர்கள்!
பழங்கதையில் குரங்கினமாய்ப் பார்ப்பா னுக்கே
பாதங்கள் தாங்குகின்றீர்! அடிமை யுற்றீர்!
புழங்குகின்ற தமிழ்மொழியில் இறைவ னுக்கே
போற்றிசெயும் திருப்பாடல் கோடி யுண்டு!
முழங்கிடுவீர் அவற்றினையே! விளங்கி டாத
மூடமொழி நமக் கெதற்கு? விலக்கு வீரே!

செந்தமிழைப் போற்றாமல் மனங்கொள் ளாமல்-
செத்தசமற் கிருதத்தில் பொருள்கா ணாத
மந்திரங்கள் பலசொல்லி வழிபா டாற்றி
மகிழ்கின் றீர் ! தன்மானம் துறந்து விட்டீர்!
தந்திரஞ்செய் பார்ப்பானின் கைச்சோற் றுக்கே
தமிழினத்தை அடகுவைத்தீர் ! இனிமே லேனும்
சிந்தனைசெய் தும்மொழியை உம்மினத்தைச்
சிறப்புறவே காத்திடற்கு முனைகு வீரே!
-1981.
-----------------

59. தமிழ்மொழி வாழ்க!

எடுப்பு
தமிழ் மொழி வாழ்க!
தமிழினம் வாழ்க!
தமிழ்நாடு வாழ்கவே வாழ்க!

தொடுப்பு
அமிழ்தினும் இனிய அருந்தமிழ் வாழ்க!
அதனினம் நிலமென்றும் வாழ்க! வாழ்க! (தமிழ்)

முடிப்பு
தொன்மைத் தமிழ்மொழி! முன்மைத் தமிழ்மொழி!
தூய்மையும் தாய்மையும் வாய்ந்தமொழி!
மென்மைத் தமிழ்மொழி! மேன்மைத் தமிழ்மொழி!
மேவும் இலக்கியம் நிறைந்த மொழி! (தமிழ்)

இளமைத் தமிழ்மொழி! இனிமைத் தமிழ்மொழி!
எளிமையும் இயன்மையும் தோய்ந்தமொழி!
வளமைத் தமிழ்மொழி! வன்மைத் தமிழ்மொழி!
வாழ்வியல் (அறவியல்) ஆய்ந்தமொழி! (தமிழ்)

அறிவுத் தமிழ்மொழி! அழகுத் தமிழ்மொழி!
ஆன்றமெய் யறிவியல் சான்றமொழி!
செறிவுத் தமிழ்மொழி! செம்மைத் தமிழ்மொழி!
செப்பமும் நுட்பமும் சேர்ந்தமொழி! (தமிழ்)

திண்மைத் தமிழ்மொழி! உண்மைத் தமிழ்மொழி!
செழுமையும் முழுமையும் ஏய்ந்தமொழி!
ஒண்மைத் தமிழ்மொழி! உயர்மைத் தமிழ்மொழி!
ஓர்மையும் சீர்மையும் அமைந்தமொழி! (தமிழ்)

பாண்மைத் தமிழ்மொழி! பரவைத் தமிழ்மொழி!
பழமையும் புதுமையும் இணைந்தமொழி!
ஆண்மைத் தமிழ்மொழி! பெண்மைத் தமிழ்மொழி!
அன்றையும் என்றையும் நின்றமொழி! (தமிழ்)
-1981
---------------

60. வயங்குதமிழ் வளர்ப்பதற்கு வன்முறை
இயக்கம் ஒன்று தேவை!

மென்முறையாய் அன்போடும் அறிவோடும்
மிகச் சொல்லி மேந்தமிழை வளர்க்கும் பாங்கைப்
பன்முறையாய் விளங்கவைத்தும் பயனில்லை;
பாழ்மொழியும் பிழைமொழியும் பல்கக் கண்டோம்!
என்முறையாய்ச் சொன்னாலும் எழுதியுண்ணும்
எத்தர்களும் தாளகரும் இணங்க மாட்டார்!
வன்முறையாய் இயக்கமொன்று தேவையிங்கே;
வணிகரையும் வம்பரையும் வயக்கு தற்கே!

நற்றமிழில் இல்லாத வணிகர்வரிப்
பலகைகளைப் பெயர்த்தகற்றி நலித்தல் வேண்டும்!
சொற்றமிழில் பிழைசேர்க்கும் கலப்புமொழி
எழுத்தாளர் இல்லங்களைச் சூழ்ந்து நின்று,
முற்றுகையிட் டவர்குற்றம் எடுத்துரைப்போம்;
தாளிகைகள் நிலைமாற முறையாய்க் கேட்போம்!
அற்றெனிலவ் வெழுத்துகளைப் புறக்கணிப்போம்!
தாள்களையும் குவித்தொருங்கே தணல்சேர்ப் போமே!
-1982
------------

61. இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

வேலை யற்றவன் ஆட்டு வாலை
அளந்து பார்க்கிறான்! ஒரு
வினையு மற்றவன் குப்பைச் சருகைக்
கிளறிச் சேர்க்கிறான்!
நூலை விற்றவன் பதரை வாங்கி
நோம்பிச் சலிக்கிறான்! - ஒரு
நொள்ளை மாந்தன் அவனுக் குதவி
நொடித்துக் களிக்கிறான்!

உழக்கு மெய்யும் பதக்குப் பொய்யும்
ஒன்றாய் அளக்கிறான்! - ஓர்
உண்மை தெரிந்து புன்மை சொரிந்து
உருவம் வளர்க்கிறான்!
சழக்கு வினையைத் தேடித் தேடிச்
சல்லரி கொட்டுகிறான்! - ஒரு
சாவை வேண்டிச் சவத்தை எரிக்கச்
சாணி தட்டுகிறான்!

எச்சில் துப்பியே நெருப்பை அணைக்க
இருமிக் களைக்கிறான்! - ஓர்
ஏரி நீரைத் துடைப்பக் குச்சியால்
கலக்கிச் சளைக்கிறான்!
முச்சில் எடுத்தே ஆற்று மணலைச்
சலித்துப் புடைக்கிறான்! - சில
மொழுக்கைக் கல்லை எடுத்துக் காட்டி
மதகை அடைக்கிறான்!

கட்டிக் குளித்த சீலைத் துணியைக்
கசக்கிப் பிழிகிறான்! - கைக்
கட்கத் துள்ள அழுக்கை எடுத்து
முகர்ந்து சுழிகிறான்!
வட்டிக் கணக்கில் முட்டைச் சாம்பல்
பொதியை அவிழ்க்கிறான்! முன்
வாந்தி யெடுத்த கலயந் தூக்கி
வழியில் கவிழ்க்கிறான்!

நாட்டுக் குள்ளே இவனைப் போல
நல்லவர் உளரோ?- தமிழ்
நயத்தைப் படித்த இவனின் உள்ளம்
கயமையின் களரோ?
பாட்டுப் புலவன் வாய்மை உணரும்
பண்பும் அற்றவனோ?- நறும்
பசுமைத் தமிழை இழிவில் தோய்க்கும்
பழியைக் கற்றவனோ?
-1984
--------------

62. 'தமிழ்ச் சங்கம்' தோற்றுவித்துத்
தமிழ்த் தழுக்கை அடிக்கின்றார்!

தமிழ்வளர்ச்சித் துறையும்தமிழ் அகரமுத லித்துறையும்
தமிழ்ப்பல்க லைக்க ழகமும்,
தமிழ்ப்பண்பாட் டுத்துறையும், உலகத்தமிழ் ஆராய்ச்சி
நிறுவனமும் அறுக்க மாட்டான்
இமிழ்க்கின்ற அரிவாள்ஆ யிரம்இடுப்பில் செருகினாற்போல்
இருக்கின்ற நிலையில், 'உலகத்
தமிழ்ச்சங்கம்' தோற்றுவித்துத் தமிழ்த்தமுக்கை அடிக்கின்றார்,
தமிழரசார்; வியப்பென் சொல்வோம்!

எதனாலே தமிழ்வளரும் எவராலே தமிழ்மீளும்
என்றுணரும் மதுகை யற்றார்
இதனாலே தமிழ்வளர்ப்போம் என்றுலகத் தமிழ்ச்சங்கம்
எழிலுறவே இமைப்பத் தோற்றி,
அதனாலே பகற்கொள்ளை அடித்திடவும் முனைந்திட்டார்
அறிஞரென அமர்ந்தும் கொண்டார்!
பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுதல்போல் காய்ச்சுவரோ,
பைந்தமிழை? விளைவென் பார்ப்போம்!

நார்நாராய்த் தமிழ்கிழிக்கப் போகின்றார், நம்புலவர்!
நந்தமிழும் வாழ்ந்த திங்கே!
ஊர்ஊராய்ப் பாட்டரங்கம் பட்டிமன்றம் கருத்தரங்கம்
எனும்பெயரில் உளறல் கேட்கப்
பேர்பேராய்ச் சுவரொட்டி பேரளவில் அச்சடித்துப்
பெரும்புரட்சி செய்வார் போலும்
யார்யாரோ அழித்ததமிழ் இன்னவரால்
திரண்டுருண்டு யாப்புறவே வளரும் காணீர்!

உலகமெலாம் தமிழ்செழிக்கச் செய்வரினி; உலகிலுள்ள
ஒண்தமிழர் ஒன்று கூடி
முலமுலென முன்னேறப் போகின்றார்; முதலமைச்சர்
முனைந்துவிட்டார் தமிழ்வ ளர்க்க!
கலகமென ஒன்றில்லை; அழிவில்லை தமிழர்போய்க்
கூலிகளாய்க் கருகும் நாட்டில்
பொலபொலென அட்டா,ஓ! தமிழ்ப்பொழுது விடியுமிங்கே!
திறந்திருங்கள் பொக்கை வாயை!
-1986
---------------

இந்தி எதிர்ப்பு

63. முகிலே, நேருவுக்குச் செய்திசொல்!

வீங்கலைத் தென்கடல் எழுந்து
வீசிளந் தென்றலில் ஊர்ந்தே
ஓங்குயர் வேங்கடந் தாண்டி
உயர்பனி மலைத்திசை நோக்கிப்
போங்கரு முகில்காள்! தில்லி
போகுதின் நேருவின் காதில்
தாங்கரும் வகையெனத் திரண்டோர்
தமிழ்ப்படை வருகுதென் றுரைப்பீர்!

சந்தனப் பொதிகையில் தூங்கிச்
சலியாத் தமிழிசை முழங்கி
விந்தியங் கடந்தர சாளும்
வடநா டேகிடும் முகில்காள்!
இந்தியை எதிர்த்திடத் தமிழ்த்தாய்
இடர்களை மாய்த்திட எழுந்தோர்
செந்தமிழ்ப் படைவரும் என்றே
செப்புக, செப்புக! மறவீர்!

பனித்துளி சிதறிட ஊர்ந்தே
பனிமலைக் கேகிடு முகில்காள்!
இனித்தமிழ் நாட்டினர் இழிவை
இம்மியும் பொறுத்திட மாட்டார்!
தனித்தமிழ் நாட்டினை வாங்கத்
தலைவாங் கினும்பின் வாங்கார்;
முனித்தெழுந் தனர்; அதை அடக்கல்
முடிவது மிலையென உரைப்பீர்!
-1959
--------------

64. வெம்புலியே வாளெடு!

நம்மை, நம் நாட்டை
நலம் பல பேணி
நாளும் காப்பது மொழி!
நல்லன காட்டித் தீயன களைய
உதவும்; நமக்கது விழி!

செம்மைத் தமிழ் மொழி
சீர்குலை வதனால்
செந்தமிழ் நாடுறும் பழி!
சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச்
சீறுவர்; நீயதை ஒழி!

வெம்மைக் கொடும் போர்
விளையினும், மொழிக்கென
வெற்புத் தோளினைக் கொடு
வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து!
வெம்புலியே வாளெடு!

இம்மை மறுமை யென்
றேபல பிதற்றி
இழிவார் பலர்; அதை விடு!
இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி
ஏற்பது தீது! உயிர் விடு!
-1959
--------------

65. உரம் இழந்தீரா?

நிலை தளராதா? - இந்திக்
களை உலராதா?
நெடு நெடுவென, தளதளவெனப்
பயிர் வளராதா? - தமிழ்ப்
பயிர் வளராதா?

அறம் சிறக்காதா? - நெஞ்சில்
மறம் பிறக்காதா?
அன்று பிறந்த தமிழர் போலத்
திறம் இருக்காதா? - மானத்
திறம் இருக்காதா?

இகழ் நடக்காதா? - இன்பப்
புகழ் கிடைக்காதா?
இரும்புத் தோள்கள் முனைந்துவிட்டால்
துயர் துடைக்காதா? -நாடு
உயர் வடையாதா?

வெயர்வை சிந்தீரா? - உங்கள்
அயர்வை நொந்தீரா?
வீட்டுக் கதவைத் திறந்து கொண்டே
படைக்கு முந்தீரா? - துயர்
துடைக்க வந்தீரா?

உரம் இழந்தீரா? - அடிமைத்
திறம் விழைந்தீரா?
உலகை யாண்ட தமிழர் நீவிர்
உடல் குலைந்தீரா? -நாடு
கெடல் முனைந்தீரா?
- 1959
-------------

66. தூள் தூள் தூளே!

ஊராளும் தலைவர்க்கே ஒன்றுரைப்போம்;
உணர்கஅவர்; "ஒண்ட மிழ்த்தாய்ப்
பேராளும் இடத்திலெல்லாம் பிள்ளைமொழி
இந்தியினைப் புகுத்து கின்றீர்!
சீராளும் செந்தமிழர்! பொறுத்திருந்தார்
இனிப்பொறுக்கார்! புலியைப் போல,
ஏராளம் தமிழ்நிலத்தில் அவர்எழின்,உம்
எண்ணமெலாம் தூள் தூள் தூளே!"
-1963
--------------

67. வெள்ளம் வருமுன் அணை!

மொழிப்பற்று, தீதென்றால் இந்திக்கு
முதன்மைதரல் தீதா காதா?
பழிப்புற்ற அம்மொழியைச் செந்தமிழ்ப்பால்
பருகுகின்ற சிறுவர்க் கூட்டிச்
செழிப்புற்ற நல்லுணர்வைக் கெடுப்பதுதான்
சிறப்பான அறமோ சொல்வீர்!
விழிப்புற்றுத் தமிழரெலாம் எழல்வேண்டும்;
வெள்ளம் முன் அணைபோ டற்கே!
- 1963
------------

68. நன்றே செய்வீர்!

செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச்
சிதைத்தொழிப்பீர்; தமிழர்க் கென்றும்
சொந்தமிலாக் குலமுறையைக் கடிந்தெறிவீர்;
சோற்றுக்குத் தமிழை விற்றே
எந்தமிழ்க்கு வாழ்வளியா ஏடுகளை
எரியிடுவீர்; தமிழர் நாட்டில்
இந்திக்கு வால்பிடிப்பார் எவரெனினும்
அவர் முகத்தில் உமிழ்வீர் நன்றே!
-1963
------------------

69. தமிழ்ப் பயிரில் இந்தித் தீ!

செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும்
செந்தீயை மூட்டி விட்டே,
அழிக்கின்றார் தமிழினத்தை! ஆரென்று
கேட்பதற்கோ ராளிங் கில்லை!
மொழிக்கின்று வந்தநிலை தவிர்க்கிலமேல்
தமிழ்நாட்டை அடிமை சூழும்!
ஒழிக்கின்ற சூளுடனே கொல்களிறு
போல் எழுந்து முனைவீர் இன்றே!
-1963
------------

70. தமிழா, எப்படி.?

என்னபடி மக்களெல்லாம் எதிர்த்தாலும்,
தமிழ்நாட்டில் இந்தி யைத்தாம்
சொன்னபடி புகுத்துவதே முதற்படியாய்
வடநாட்டார் கொண்டு விட்டார்!
அன்னபடி நடந்திடவே அமைச்சரெல்லாம்
அடிபணிந்தார்! தமிழா,இன்னும்
இன்னபடி நீ கிடந்தால் எப்படித்தான்
மேற்படியை எட்டு வாயோ?
-1963
----------

71. நாடற்றுப் போவாய்.....!

பீடற்ற இந்திப் பிணிப்பைப் பெயர்த்து, இப்
பெருநிலத்துள்,
ஈடற்ற செந்தமிழ்த் தாயை அரியணை
ஏற்றிலையேல்,
ஏடற்று முன்செய் எழுத்தற் றிருக்க
இடமுமற்று,
நாடற்றுப் போவாய் தமிழா, இனுஞ்சில
நாட்களிலே!
-1963
--------------

72. மாளல் நன்று!

வில்லெடுத்துப் போரிட்ட விறலெங்கே?
வெற்றிபெறும் மணிமார் பெங்கே?
கொல்லவரும் வெம்புலிமேற் குறிதவறா
தெய்கின்ற கூர்வேல் எங்கே?
சொல்லெடுத்துப் பேசிடவும் அஞ்சுகின்றாய்!
சோற்றுக்கு மானம் விற்றாய்!
மல்லெடுத்த இந்திக்கு மருள்கின்றாய்!
தமிழா, நீ மாளல் நன்றே!
-1964
-------------

73. செந்தமிழ் தந்த சிறை!

எந்தமிழ் மொழிக்கும் எந்தமி ழர்க்கும்
வந்த இழிவெலாம், வருந்துயர் எல்லாம்
துடைத்திடச் சிறைக்குள் தொண்ணூ றாண்டுகள்
அடைத்துக் கிடக்கப் படுவேன் என்னினும்
உள்ளமும் உயிரும் உவந்துடன் ஒப்புவேன்!
கள்ள மிலாவென் மனைவியும் மக்களும் எ
ன்னைப் பிரிந்திட வேண்டும் என்னினும்
அன்னைத் தமிழ்க்கென அகமகிழ்ந் திசைவேன்!

எவ்வாற் றானும் எந்தமிழ் நாடும்
செவ்விய தமிழும் சிறப்புற் றிலங்க
வேண்டும் என்பதே என்னுயிர் விழைவாம்!
ஈண்டியான் பெற்ற ஈரிரு மாதக்
கடுஞ்சிறை வாழ்வு எம் கன்னித் தமிழையும்
கொடுந்துயர்ப் பட்ட எந்தமிழ்க் குலத்தையும்
ஒருபடி உயர்த்தும் என்னின் உண்மையாய்
இருபடி வாழ்ந்தேன் என்றே இயம்புவேன்!

இவ்வுடல் தானும் இதனுள் ஓடும்
ஒவ்விய குருதியும் உணர்வும் நரம்பும்
எந்தமிழ்த் தாய்க்கும் எந்தமி ழர்க்கும்
சொந்தம் என்பதால் சோர்வெனக் கில்லை!

என்னிலை தமிழர்க்கு இனியநல் உணர்வினை
முன்னினும் பன்மடங் காக உயர்த்துக!
தன்னிலை மறந்த தமிழர்க்கு என்சிறை
முன்னிலை உணர்த்தி முழுவுணர் வூட்டுக!

அற்றைப் பெருநிலை அறவே மறந்து
குற்றுயி ருற்றயெந் தமிழ்க்குடி உயர்க!

செந்தமிழ் நாடும் செந்தமிழ் மக்களும்
முந்தை துறந்த மொய்ம்புகழ் மீண்டும்
முளைத்துக் கிளைத்து மூண்டுபுடை விரிக!
களைத்துக் கிடக்கும்எம் தமிழுளம் களிக்க!

ஆண்டுகொண் டிருக்கும் அரசுப்பட் டாளம்
மாண்டுகொண் டிருக்கும் தமிழரை மதிக்க
மீண்டுகொண் டிருக்கும் உரிமை உணர்வினைத்
தூண்டுங் கோலென என்சிறை துலங்குக!

ஒற்றுமை பேசி உரிமையை மறுக்கும்
வெற்றுரை அரசின் வீண்செய லெல்லாம்
குற்றுமி போலத் தமிழர்முன் குலைக!
மற்று அவர் ஆட்சி மண்ணுள் புதைக!

இனியுந் தமிழர் எழாமற் போயின்
கனிந்திடும் உரிமைக் கனிச்சுவை நுகரார்!
மலர்ந்திடும் தமிழக மாட்சிமை அறியார்!
உலர்ந்திடுஞ் சருகா உதிர்ந்திழிந் தழிவார்!

இறுதியாய்த் தமிழரை ஒன்று வேண்டுவேன்!
உறுதி உளத்துடன் பன்முறை உன்னுக!

தமிழ்மொழி தாழ்ந்தால் தமிழினம் வாழுமா?
தமிழ்மொழி சிதைந்தால் தமிழர் உயர்வரா?
இந்திய அரசினர் இந்தி மொழிக்குத்
தந்த உயர்வு தமிழ்க்குவேண் டாவா?

மொழிச்சிறப் பழித்து மொழியுணர் வழித்தால்
எழுச்சி யின்றித் தமிழினம் இன்றினும்
அடிமை யுற்றுத் தாழ்ந்தழி யாதா?
மிடிமை முற்றும் மீண்டு வராதா?

ஆகலின் தமிழரே தமிழ்உணர் வாக்குக
சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது?
செந்தமிழ் தந்தது சிறையெனில் இதனினும்
எந்தமிழ் உள்ளம் எதற்கினி மகிழும்?
வீழாது தமிழ்ப்பயிர் விளையத்
தாழாது வித்துக தமிழைத் தமிழரே!
1965
--------------

74. சிறையகம் புக்க காதை

"அறைந்திரை வீழ்த்திய அரிமா ஏற்றின்
பிறழாப் பெருநடை பீடுறப் பயின்று,
மதிமுகம் உவப்ப மலர்விழி ஒளிர,
எதிர்வரும் ஒள்ளியோய் இரு"மென இருத்தி,
'அலைகோற் கொடியரும், அழல்மடுத் தாரும்,
கொலைகொள் நினைவின் நெஞ்சழிந் தாரும்,
இரந்துண் வாழ்க்கை இழிவெனக் கொண்டு
கரந்தூண் அயிலுங் கவடறிந் தாரும்,
கனிவிலா நெஞ்சின் கங்குற் கள்வரும்
முனிவுறு போக்கின் முறை பிறழ்ந் தாரும்,
அடுநறாக் காய்ச்சி அகப்பட் டாரும்,
விடுதல் இலாதது விழைந்துண் டாரும்,
மலிவுறு கவடரும், மங்கையர் மானம்
வலிவுறப் பற்றி வாங்கி யோரும்
கறையகம் போகக் காவற் படூஉம்
சிறையகம் புக்கினிர் செய்ததும் என்'னெனக்
கேட்பீ ராயின் கிளத்துதற் கேண்மோ:

நாட்பட நாட்பட நல்லவை நாடும்
சால்புடை நெஞ்சின் சான்றோர் தாமும்
நூல்பயில் அறத்தின் நோற்றோர் தாமும்
கடைபெறக் கிடக்கும் கயவர் ஆணையின்
அடைபெறக் கிடப்பினும் அதுவியப் பன்றே!

மூடரும் முரடரும் முனைந்தர சாளும்
நாடுநா டின்றி நலிந்த பின்றை
புரையிலார் தமக்குப் புக்கிலும் உண்டோ?
வரைவிலா தோங்கின வன்மையும் புன்மையும்!
சிறையகத் திருப்போர் சீரகத் துள்ளார் !
இறையகத் திருப்போர் எஃககத் துள்ளார்!

காலச் சுழலினும் கயமை வாழ்வினும்
சாலப் புரைவோர் சால்புடைப் பெரியோர்!
புல்லுரை பகர்வோர் புலமைச் செவ்வியர்!
நல்லுரை சொல்வோர் நாயினுங் கீழோர்!

பொய்யாம் வினைகளை மெய்யே என்பர்;
செய்யாப் பணிக்குச் சீர்சிறப் பென்பார்!
கேடுகள் புரிவோர் கேண்மைக் குரியோர்;
பீடுறச் செய்வோர் பிடிபடத் தக்கவர்!
பூரியர் சிறையுட் புகுதலோ அக்கால்!
சீரியர் இக்கால் சிறைவாழ் குநரே!

இந்நாள் உண்மை இயம்பலே குற்றம்!
மண்ணாள் அரசின் மந்திரக் கூற்றிது!
வாய்மொழிக் குரிமை வழங்கினோம் என்பார்;
தாய்மொழி பேணுதல் தவறெனக் கடிவார்
நாட்டுப் பற்று நாட்டுக என்பார்;
நாட்டுப் பற்றால் நல்லவை நவின்றால்,
கேட்டுக் கொள்ளார்; கேடவை என்றே
வேட்டுக் குழற்கே விருந்துநீ என்பார்!
அறமெனக் கூறின் அதன்வரு மானத்
திறமென் னென்று சாற்றக் கேட்பார்.
பொருளெனப் புகல்வது பொன்னே என்பார்;
மருள்தவிர் இன்பம் மனையோள் செய்யும்
நெய்யொழு கடிசில் முப்புடை முங்கி
மெய்பெறக் கிடந்து துயில்வதே என்பார்!
வீடென விளம்பின் விசும்பு தடவிய
மாடருங் கட்டிட மலையே என்பார்!

இறைப்பற் றென்பதோ எருவெண் ணீற்றை
உறைப்பப் பூசி உருள்மணி மாலை
பொன்னில் தோய்த்துப் பூண்ட மேனியாப்
பின்னிய காலொடு பிரான்பிரான் என்றலும்,
பொய்முதல் வைத்துப் புனைசுருட் டூதியப்
பைமுதல் கொண்டு பன்னூ றாயிரங்
கோவிலில் விழுந்து கும்பிட் டெழுந்தே
ஆவின் பால்நெய் அடிசில் உண்ணலும்,
மிச்சிலை இரவோர் மிசைந்திடத் தரலும்
பச்சிலை நீறு பெறலுமே என்பார்!

மெய்ப்பொருள் தேரார்; மேனி வளர்ப்பதும்
பொய்ப்பொருள் நாட்டமும் போலிப் புகழ்ச்சியும்
அன்னவர் நோக்கம்; அந்நோக் கிற்கே
பன்னருந் தடைகளைப் பண்ணுவோர் தீயரே!

அரசியல் என்பதோ ஆயிரம் பொய்களை
உரைத்துப் பெற்ற ஒப்போ லைகளால்
ஆளுநர் மன்றப் பதவி அடைவதும்,
நாளோர் ஊராய் நடைக்கொரு கூட்டமாய்ச்
சென்று மக்களின் சிறுமைக் கிரங்கலாய்
நன்றே புளுகலும், நம்பச் செய்தலும்,
இலக்கக் கணக்கில் பொருள்பல ஈட்டலும்,
துலக்கமில் கருத்துப் பற்பல கூறலும்
என்பதே நம்மவர் இன்றைய கருத்து!
தின்பதும் உறங்கலும் தவிரவே றறியார்!

இத்தகை வாழ்வுக் கெவர்தடை செய்யினும்
அத்தகை யோரைச் சிறையில் அடைப்பதும்
துயர்பல கொடுப்பதும் தூக்கில் இடுவதும்
உயர்நிலை பெற்றவர் ஒருபெருங் கொள்கை!

மக்களுக் குண்மை சாற்றிட மறுப்பார்!
ஒக்கவர் நலத்திற் குழைப்பதா நடிப்பார்!
பொல்லார் எனினும் பொருள்பல இறைத்து
நல்லார் போல நடிப்பரே மேலோர்!
அன்னவர் நடிப்பிற் கொத்ததா ஆடுவர்
இன்னார் எனினும், இனியவர் அவர்க்கே!

ஊர்திகள் பெறலாம்; பொருள்மேல் உறங்கலாம்;
பார்புகழ் தரும்படி பலபடச் செய்தித்
தாள்களில் எழுதிடச் செய்து தருக்கலாம்!
சால்புறக் கல்லால் படிவம் சமைக்கலாம்!

ஓராயிர மெனில் ஊராள் மன்றம்;
ஈராயிர மெனில் நகராள் மன்றம்;
சற்றே கூடினால் சட்ட மன்றம்;
பத்தா யிரமெனில் பாராள் மன்றம்;
ஐம்பதா யிரமெனில் அமைச்சரின் பதவி;
நைந்த அரசியல் நாடகம் இதுவே!

உய்யுமா நாடு? பொதுமை ஓங்குமா?
மெய்பிழைத் திடுமா? மேன்மை பெறுவமா?
காய்களை உருட்டுங் கவறாட் டம்போல்
ஏய்த்துப் பிழைப்பதே அரசியல் என்னின்
மக்களின் விலங்கே மாண்பு பெற்றதாம்!
ஒக்கநா கரிகம் உயரச் சிறந்ததாம்!

இப்படிக் கேட்டால் எழுதினால் பிழையெனில்
எப்படி இதனை மக்கட் குரைப்பது?
செப்படிக் கூத்தரின் தில்லு மல்லுகள்,
முப்படிப் பொய்கள் முரண்படு பேச்சுகள்
யாவும் பொறுத்திட மக்கள் யாவரும்
மாவும் புட்களும் என்றா மதித்தனர்?
உணர்வுடை நெஞ்சம் ஒன்றுபோ தாதா?
இனநலங் கருதுவார் இறந்தா போயினர்?
மக்கள் அரசெனில் கருத்தை மறைக்குமா?
சிக்கல் தெளிவுறச் செப்பலும் பிழையோ?
ஒப்பிலாக் கருத்தை ஒருவன் உரைத்தால்?
தப்பெனக் காட்டுதல் அன்றோ தக்கது?
ஏற்ற கருத்தெனில் மக்களேற் கட்டும்!
மாற்றம் கண்டிடில் மறுத்துரை தரட்டும்!

கருத்தடை செய்யுங் கணக்கீட் டாளர்
கருத்தையுந் தடைசெயக் கருதுதல் தக்கதோ?
துலக்கிடுங் கருத்தினால் மக்களைத் தூண்டினால்
விலக்குவார் அதனை விளக்கிக் காட்டி
எழுந்தோர் தமக்கே இணக்கம் கூறி
அழுந்த அமர்த்திடல் அன்றோ நல்லறம்!
இத்திற மற்றார் எடுபிடி என்றே
கத்தியைத் தூக்கிக் கழுத்தைத் துணிப்பதால்
மக்கள் உணர்வை மாய்க்க வியலுமா?
தக்கன என்றும் தழைப்பதே இயற்கை!

இந்திய நாட்டை இணைத்திட வேண்டி
இந்தியைத் திணித்தல் அறமிலை என்று
கூறுதல் பிழையோ? கூற்றினை அடக்கிடச்
சீறுதல் மட்டும் செய்தகு செயலோ?

பன்மொழி வழங்கும் பாரத நாடு
நன்மொழி நவின்று நல்லன செய்யும்
உயர்ந்தோர் என்பரால் ஒற்றுமை பெறாமல்,
நயமிலாச் சிறுமொழி ஒன்றினால் மட்டும்
ஒற்றுமை பெறுமெனில் உயர்ந்தோர்க் கிழிவே!
பெற்ற உரிமை இந்தியால் பிறந்ததா?
இந்தியால் ஒற்றுமை இயலும் என்றால்
இந்தியை மறுப்பவர் இருந்திடு வாரா ?
இப்படிக் கேட்பதே எங்ஙன் பிழைபடும்?
ஒப்பிலாக் கருத்தை உணர்த்துதல் எப்படி?

அரசியல் செய்வார் அனைவரும் ஒப்பும்
முரணிலாக் கருத்தை முழுவதும் ஆய்ந்து
நாடுதல் அன்றோ நல்லறம்! அதனால்
கேடுறும் ஆங்கொரு கூட்டம் என்னில்
மற்றவர் கருத்தை மாற்றி வேறோர்
உற்ற செயலுக் குழைத்தலே முறைமை!
எக்கருத் தினையும் எதிர்ப்பவர் உளரெனில்
தக்க படிக்கவர் தரும்புது மறுப்பை
ஒக்க ஆய்தல் அன்றோ உயர்வு!
செக்கு மாடுபோல் சிறந்ததா ஒன்றையே
அழுத்திப் பிடிப்பதால் அதன்வலி மிகுமா?
விழுப்ப மிலாதவர் வினையது வாகலாம்!

இந்தியால் தமிழ் கெடும் என்றுரை செய்தால்
எந்த வகைகெடும்? எவரதைச் சொன்னார்?
சொன்னவர் மொழித்திறம் கல்விச் சிறப்போ
டன்னவர் கொண்ட அரசியல் அறிவு,
நாட்டுப் பற்றென நால்வகை யாகக்
கேட்டறிந் ததன்பின் கிளத்திய உரைக்கு
மாற்றுரை அன்னவர் மனங்கொள உரைத்தே
ஆற்றுதல் அன்றோ அரசியல் திறமை!

இவ்வகை இன்றி “ஆஆ ஊஊ
எவ்வகை அவரென் கருத்தை எதிர்க்கலாம்?
ஆச்சா போச்சா? ஆரவர் தண்டலர்?
ஓச்சுக சட்டம்; உமததி கார”மென்
றார்ப்புரை செய்தே, அரைகுறை ஆய்ந்து,
தீர்ப்பு வழங்கித் திடுமெனக் கடுஞ்சிறை
தள்ளி அடைத்துத் தொடையைத் தட்டலால்
உள்ள கருத்ததன் உயர்வை இழக்குமா?
இல்லை அதுதான் இன்றொடு சாகுமா?
தொல்லை தருதலால் நெஞ்சுரம் தொலையுமா?
அரசநாற் காலியில் அமர்ந்துளார் முன்னர்
முரசறைந் திதனை முழக்குவேன் கேளீர்!

தமிழக நிலத்தில் இந்தியைத் தூவுகல்
உமிவிதைத் துழைப்பதை ஒத்திடும் என்பேன்!
அரங்கிலா நும்மின் அரசியல் நாடகம்
குரங்கு கை மாலையாக் குலைவதோ உண்மை!

ஒற்றுமை ஒற்றுமை என்றே உழைத்துக்
குற்றுமி ஊதிக் கொதியுலை யேற்றி
வெற்றிலை விரித்து விருந்திடல் போல
உற்ற உணர்வையும் ஒழித்திடல் உண்மை!

நெடும்பயன் கருதா நெறியிலா தீரே!
கடுஞ்சிறை யிடினும் கழுத்தைச் சீவினும்
உற்ற கருத்தின் உண்மை மாறுமா?
பெற்ற தாய்மேல், பெருந்தமிழ் மொழிமேல்
ஆணையிட் டிதனை அறைகுவேன் கேளீர்!
கோணை மொழியினார் கொள்கைகள் நில்லா!

மொழியெனப் படுவது உணர்வினால் முளைப்பது !
மொழியெனப் படுவது மாந்தரின் முனைப்பு!
மொழியெனப் படுவது கல்விக் கடிப்படை!
மொழியெனப் படுவது பண்பொளிர் விளக்கம்!
மொழியெனப் படுவது உள்ளுயிர் முழக்கம்!
மொழியெனப் படுவது இனநல முயக்கம்!

அத்தகு சிறந்த ஆயிர மொழிகளுள்
செத்தறி யாத சீரிள மைத்திறம்,
இலக்கணச் சீர்மை, இலக்கியக் கொழுவளம்,
துலக்கரு மெய்ம்மை, துள்ளும் எழில்நலம்,
உரைப்பதற் கினிமை, உள்ளுணர் வுக்கொளி,
வரையறு சொற்கள், வான்சீர்ப் பெரும்புகழ்
முற்றுங் கொண்டது முத்தமிழ் மொழியே!

கற்றிடக் கற்றிட உளங்கனி விப்பதும்,
மெய்ம்மை கொளுத்தி மேலுக் குய்ப்பதும்,
செய்வினைத் தூய்மை, சீர்மை, ஒழுக்கம்,
உயிர்களுக் கூட்டி உறுதுணை நிற்பதும்,
மயர்வறு வாழ்வை மாந்தர்க் களிப்பதும்,
செந்தமிழ் செய்பயன்!

பிறமொழி தாமும்
எந்தமிழ் மொழிபோல் இயற்கையே எனினும்,
பூத்துக் காய்த்துப் புடைநலங் கனிந்த
மாத்தமிழ் மொழிபோல் மனவொளி கொளுத்தும்
ஆற்றலும் முதுமையும் அற்றன வென்பேன்;
மாற்றுரை கூறின் மறுப்புரை தருவேன்.

ஒலித்திறம் வரித்திறம் ஒத்த பொருட்டிறம்
வலித்திறம் மெலித்திறம் வாய்ந்த மொழித்திறம்
மொழிபயில் இலக்கியம் முகிழ்த்த இலக்கணம்
ஒழுகுமெய் யுணர்வின் ஊற்றொடு பல்திறம்
ஆயிவை தமிழில் ஆழ்ந்து கிடப்பதை
ஏய முறையினால் இயம்புநூல் அறிமின்!
இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன
முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்!
வாயுரை யன்று; வாய்மை உரையிது!
தாய்மொழி வெறியால் தருக்குரை அன்று!
தகைநலம் இன்றித் தாயெனும் உரிமையால்
மிகைநலங் கூறலை மேன்மையர் செய்யார்!

அத்தகு அடிப்படை ஆர்வ முதிர்ச்சியால்
முத்தமிழ் மொழியின் முதுநலம். முழக்கியும்
எந்தமிழ் நாட்டில் இந்தி நுழைவதை
வெந்த உளத்தொடும் உரையொடும் விலக்கிட
எண்ணரும் வகையால் எடுத்து விளக்கியும்
பண்ணலங் கூட்டிப் பாட்டிலும் எழுத்திலும்
எழுதிக் காட்டினேன்! எந்தமிழ்த் தோழரீர்
பழுதென அவ்வுரை அவர்க்குப் பட்டதால்
உள்ளமும் உடலும் ஊறுற் றனவெனக்
கள்ளமில் என்னைக் கடுஞ்சிறை தள்ளினர்!

என்னைக் கடுஞ்சிறை இட்டதால் என்னுளம்
முன்னினும் மூளுமோ? முங்கி யொழியுமோ?
சீர்த்துப் பாய்ந்திடும் சிறுத்தையின் கூருகிர்
ஆர்த்த நெடும்புல் அசைவில் வழுக்குமோ?
மதர்த்தெழு களிற்றின் மலையுடல் தூண்கால்
பதர்க்குவை கண்டு பதுங்கி யொடுங்குமோ?
பொங்கு பேரலைப் போக்கினை வீழ்சிறு
தெங்கின் குரும்பை தேக்கி நிறுத்துமோ?
தீக்குழம் புருக்கித் தெறிக்கும் எரிமலைப்
பாக்குழம் பினையொரு பழம்பாய் தடுக்குமோ?
எழுந்த வல்லரி ஏற்றின் உறுமலைப்
பழம்பறை கொட்டொலி பரக்கச் சிதர்க்குமோ?
உணர்வில் உயிரில் உடலின் நரம்பினில்
புணர்ந்த செந்தமிழ் பூண்ட கூத்தினை
அரசக் கோலெடுத் தாடும் குரங்கதன்
உரசக் கால்நடம் ஊன்றி நிறுத்துமோ?'

என்றுரை முழக்கி எழுந்து செந்தமிழ்
வென்றர சாளும் நாளும் விரைந்ததே!
ஆகலின் அன்பரீர் அந்நாள் நோக்கி
ஏகுக நம்முயிர்! ஏகுக நம்முடல்;
அந்நாள் சிறைக்கத வகலத் திறக்கும்;
அந்நாள் தமிழ்வித் தூன்றுக” என்றேன்!
சிறையகப் பட்டோர் சிறுமை மறந்தே
கரையகப் பட்ட கலம்போல் மகிழ்ந்து
வாழ்த்தினார் என்றன் வரவை
காழ்த்தது மேலுமென் கவினுறு நெஞ்சே!

-1965
---------------

75. மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்!

"இராதெம் நிலத்தில் இந்திப் படிப்பு"
மொரார்சி தேசாய் செவிப்பறை அறுபட
முதல மைச்சர் முழங்கிட வேண்டும்;
உதவாப் பேச்சும் உளறலும் வேண்டா!

பள்ளிப் பிள்ளைகள் இந்தி படிப்பதைக்
கள்ளிப் பாலைக் குடிப்பதாய்க் கருதுக!
பேராயக் கட்சிப் பெருந்தலை வர்கள்
ஊரா யத்தில் உலாவர விரும்பின்
வடவர்க்கும் இந்திக்கும் வால்பிடித் துயிர்ப்பதை
விடவும்; அல்லது தம்முயிர் விடவும்;

மனநலம், பண்பாடு வேண்டின் தமிழர்
இனநலம் பேணுக! இந்தியைத் தவிர்க்க!

மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்!
தம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க!
தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்
அமிழ்தெனக் கற்க; ஆக்கம் பெறுகவே!
-1967
-----------------

76. எத்தனை நாள் இந்திப்போர் ?

எத்தனை நாள் எத்தனை ஆண்
டெத்தனைப் போர் எத்தனைப் பேர்
எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?

எத்தனைப்பேச் செத்தனைத்தாள்?
எத்தனைப்பா டெத்தனைப் பாட்
டெத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?

எத்தனைநாள் நாம் பொறுப்ப
தெத்தனைப் பேர் நாமிறப்ப
தெத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?

ஒத்திணையும் எண்ணமிலை;
ஒன்றிரண்டு பார்த்துவிட
ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே!
-1967
---------------

77. வாளெடுத்துக் கொள்ளுங்கள்!

தோளெடுத்துப் பொங்குகின்ற தமிழ்மறவீர்!
இந்தியினைத் தொலைத்தற் கென்றோர்
நாளெடுத்துக் கொள்ளுங்கள்; தாய்மனைவி
மக்கள்முன் தமிழைக் காக்கச்
சூளெடுத்துக் கொள்ளுங்கள்; வடவர்நெறி
மேன்மேலும் சூழின், கூர்த்த
வாளெடுத்துக் கொள்ளுங்கள்; வந்தமையும்
செந்தமிழ்த்தாய் வாழ்வும் அன்றே!
-1970
-----------
78. இந்திவெறி ஆளுநரை அகற்றியது!

வரும்பயனை நினையாமல், வந்தபயன்
கருதாமல், வல்லார் வாய்ச்சொல்
தரும்பொருளை ஓராமல், பிறங்கடையை
உன்னாமல் தகவில் லாமல்,
பெரும்பிழையை எந்தமிழர் செய்திட்டார்;
அரசியலில் பிழைசெய் திட்டார்!
அரும்புதுமை ஒன்றுண்மை ! இந்திவெறி
ஆளுநரை அகற்றிற் றிங்கே!
- 1971
------------

79. இந்தியை மாற்றுக!

சிறையுட் புகுத்தியும், சிற்றுயிர் வௌவியும்
செந்தமிழ்ச்சீர்
மறையப் புகுத்திய இந்தியை மாற்றுக!
மாற்றிலிரேல்,
குறையக் கிடத்திய கொம்பொடு போகாக்
குவட் டெருமைக்(கு)
உறையுட் புகுத்திய வாளை உருவுதற்
கோர் நொடியே!
-1971
-------------

80. தமிழக அமைச்சர்களே இந்திக்கு வால் பிடிக்காதீர்கள்!

'இந்தித் திணிப்பே இல்லை'யென் றிங்கே
எந்தமிழ் அமைச்சரும் இளிக்கின்றார் பல்லை!
குந்தித் தின்னும் கொழுப்பினால் இவர்கள்
குருட்டுத் தனமாய்க் கூறலாம் அப்படி!
'இந்திப் படிப்புக் கிலவயம், சலுகை;
இந்தி படித்தால் கூடுதல் சம்பளம்;
இந்திக் குயர்நிலை பதவி' என்றெல்லாம்
இருக்கும் நிலைகளை என்னென் றழைப்பதோ?

எந்தமிழ் மொழியும் இனமும் இந்தியால்
இரண்டாம் படிநிலை எய்துவ துண்மை!
எந்த வடிவிலும் வழியிலும் இந்தி
இங்கே வருவதை உயிர்கொண் டெதிர்ப்பதும்,
செந்தமிழ் மொழியைச் சிறக்கக் காப்பதும்
செந்தமிழ் நாட்டின் அமைச்சர்கள் வேலை!
சொந்த நலத்தையும் சோற்றையும் விரும்பும்
சூதர்கள் இதனைச் செய, இய லாதே!

இந்திக் கிருக்கும் எல்லாச் சலுகையும்
எந்தமிழ் மொழிக்கும் இவர்பெறல் வேண்டும்!
இந்தியப் பொதுமொழி இந்திஎன் றில்லா(து)
எல்லா மொழிகளும் பொதுமொழி என்னும்
முந்தைய நிலையே தொடர்ந்திடல் வேண்டும்!
மூடர்கள் விரும்பினால் இந்தியைத் தம்தம்
சொந்த முயற்சியால் கற்றுச் சிறக்கெனச்
சூழ்ச்சி வடவர்க்குச் சொல்லுவீர் அமைச்சரே!
-1978
---------

81. பொங்காதோ உள்ளம் புலர்ந்து! (1980)

‘எந்த ஓர் ஆற்றலும் இந்தித் திணிப்பையினி
வந்து நிறுத்துதல் வாயாதாம்! என்றே, உன்
இந்திரா காந்தி இயம்புகிறார், செந்தமிழா!
இந்திரா காந்தி இயம்புவது, நீ, உன்றன்
சொந்த நலன் கருதிச் சோர்வுற்ற தன்மையன்றோ?

சொந்த நலன்கருதிச் சோர்வுற்ற தன்மையினால்
நந்தமிழ்த் தாய்க்கே நலிவுவந்து சேராதோ?
நந்தமிழ்த் தாய்க்கே நலிவுவந்து சேர்ந்திடுமேல்
எந்தமிழ்ப் பேரினமும் என்றும் அடிமையன்றோ?
எந்தமிழப் பேரினந்தான் என்றும் அடிமையுற்றால்
இந்த நிலமும் போம்! ஏய்ந்தநலம் எல்லாம்போம்!

அந்தப் பொழுதிலுனை ஆர்வந்து காத்திடுவார்?
அந்தப் பொழுதிலுனை ஆர்வந்து காத்திடினும்
இந்த மொழியும் இனமும் இருந்திடுமா?
இந்த மொழியும் இனமும் இல்லையென்றால்,
எங்குன் ஒளியுருவம்? எங்குன் பெருமைநலம்?
எங்குன் வரலாறு? எங்கேதான் நீயிருப்பாய்?

இங்கா கிலுமுன்றன் எண்ணம் மலரட்டும்!
இங்கா கிலுமுன் இனநலமும் ஓங்கட்டும்!
மங்காத செந்தமிழின் மாட்சி விளங்கட்டும்!
பொங்காதோ உள்ளம் புலர்ந்து!
-----------

82. இந்திக் கோட்டையைச் சுக்குநூ றாக்குக! (1982)

இந்தி என்னும் இரும்புக் கோட்டையை
இடித்துச் சுக்குநூ றாக்குக! அங்கே
செந்தமிழ்க் கோட்டையைச் செழிப்புடன் எழுப்புக!
சிறுமைச் சாதி மதங்களை அகற்றுக!
சொந்தமென் றொருநிலம் தமிழருக் காக்குக!
சோர்வையும் அடிமைத் தனத்தையும் விலக்குக!
இந்தவோர் கொள்கையில் தமிழினம் இளைத்தால்
எந்தமிழ் இருக்கும்; இனமிருக் காதே!

----------

83. உற்றதமிழ்த் தாய்நாட்டை மீட்போம் இங்கே! (1985)

முள்மரத்தை வெட்டவெட்ட தழைப்ப தைப்போல்-
முரடர்களின் இந்திமொழி மேலும் மேலும்
உள்நுழைந்து நடுக்கூடம், சரக்குக் கூடம்,
ஓய்வறை, உள் ளறை, சமையல் அறைக்குள் எல்லாம்
கள்ளநகை இதழ்விரித்து நடைந டந்து
காலூன்றி மெல்லமர்ந்து படுக்கை சாய்ந்து,
உள்ளமனை விலைபேசும் உலுத்தனைப் போல்
உரிமையினைப் பறிபோக்கும் நிலைகண் டீரோ?

கண்டுங்கா ணாததுபோல் கவலை யின்றிக்
கட்சிக்குள், இனத்துக்குள் குத்து வெட்டுச்
சண்டைகளும், மடிவிரித்துப் பொறுக்கித் தின்னும்
சரடுவிடும் பேச்சுகளும் குறைய வில்லை!
துண்டுடுத்துத் தோள்நிறைக்கும் மாலை போட்டுத்
தோழருடன் ஊர்தோறும் உலாப்போ கின்றோம்!
மண்டையடி அடிக்கின்றான் வடவன், இங்கே!
மானத்தை விலைபோக்கி வாழ்கின்றோம், நாம்!

மாநாடு, தீர்மானம் வழக்கம் போல!
மாளாத கிளிப்பேச்சு! மக்கள் எல்லாம்
பூநாடும் தேனீப்போல் கூடும் கூட்டம்!
புல்லரித்துப் போகின்றோம்! அடடா? வெட்கம்!
நாநாடும் அடுக்குமொழி அழகுக் கிந்தி
நடுநடுங்கி யா,போகும்? எழடா,தம்பி!
ஓநாய்கள் கூட்டத்தை ஒடுக்க வேண்டும்;
உற்றதமிழ்த் தாய்நாட்டை மீட்போம் இங்கே!

-----------

84. வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்! (1985)

ஆயிரந் தடவை இந்தியை அழித்தோம்!
ஆயிரந் தடவை மீண்டும் எழுதினர்!
ஆயிரந் தடவை இந்தியை எதிர்த்தோம்!
ஆயிரந் தடவையும் மீண்டும் புகுத்தினர்!

எந்தவோர் தடவையும் எதிர்த்த எதிர்ப்பால்
இந்தி நுழைவு நின்றதும் இல்லை;
இந்திய மடயர்கள் அதிர்ந்ததும் இல்லை!

இந்திஒன் றன்று;நம் எந்த எதிர்ப்பையும்
இந்திக் காரர்கள் உணர்ந்ததும் இல்லை;
எந்தக்கோ ரிக்கையும் ஏற்றதும் இல்லை!

வடநாட் டாருக்குநாம் வாயிலாப் பூச்சிகள்;
விடமாட் டார்; அவர் வெறி, வீம்பு அப்படி!

ஒரேவொரு முடிவுதான் உன்மத்த ருக்கே!
'அரே,அரே இந்தி முண்டமே! ஆள்கின்ற
பிடாரியே! அன்பிலாப் பேதையே! இதுகேள்:

அடாவடித் தனமாய் அடக்கியும் ஒடுக்கியும்
எங்களை அடிமையாய் எண்ணி வருத்துவாய்!
எங்களுக் குன்மேல் நம்பிக்கை இல்லை!
வாழவும் விடாமல் சாகவும் விடாமல்
ஈழத் தமிழர் படுகின்ற இன்னல்போல்
எங்கட்கும் நீஇடர் செய்துகொண் டிருக்கிறாய்.
இங்குஉன் ஆட்சியில் இருப்பதற் கில்லை.
எங்கள் நிலத்தில் எங்கள்ஆ ளுமையே
தங்கி யிருக்கவும் தமிழினம் தழைக்கவும்
தனித்தமிழ் நாட்டுக்கு விடுதலை தா " வென
முனித்த குரலொடு முழங்கலே முறையாம்!
அன்புத் தமிழரே! அக்குரல்
வன்பு வடவரை நடுங்கிட வைக்குமே!
------------------

(முதல் தொகுதி)
உள்ளே...

மண்ணைப் படுத்தினர் அடிமை! தமிழின்
மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் நம்
கண்ணைக் கெடுத்தனர் எனினும் உய்வோம்;
கருத்தைக் கெடுத்தனர் அட்டா!

பழந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் மொழியில்
படிப்பதுதானே முறை?
இழந்தநம் உரிமை
எய்திடத் தடுக்கும்
இழிஞரின் செவிபட, அறை!

நெஞ்சில் தமிழ் நினைவு;
நீங்காத மெய்யுணர்வு;
செஞ்சொல் குமிழியிடும்
சிதையாத பாட்டுயிர்ப்பு;
துஞ்சா இரு விழிகள்;
தொய்ந்து விழா நற்றோள்கள்;
அஞ்சுதல் இன்றி
அயர்வின்றி நின்றவுரம்;
எஞ்சுகின்ற காலமெலாம்
ஏற்ற நறுந்தொண்டு;
நஞ்சு மனங் கொண்டார்
நடுக்கமுறுஞ் செந்துணிவு;
கொஞ்சமிலை, நல்லிளைஞர்
கூட்டமோ கோடி பெறும்!
விஞ்சுகின்ற செந்தமிழே,
வெற்றிக்கென் வேண்டுவதே?

எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும். என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!

தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி, செந்
தமிழே எனக்கிங் குடலம்!
தமிழே எனக்கிங் குள்ளுணர்வு,. பைந்
தமிழே எனக்கிங் குலகம்!
----------------
கனிச்சாறு முதல் தொகுதி - பாடல் விளக்கக் குறிப்புகள்

தமிழ்

1. இளமையிலே உளம் புகுந்த தமிழச்சியை அவள் பிறப்பு, பெருமை, புலமை, இளமை, வளமை முதலிய எழில் நலங்கள் கூறி ஏத்துவது இந்தப் பாட்டு.

2. தமிழால் பிழைக்கும் எத்தர்களுக்குச் சொன்னது.

3. "9.3.1953 - அன்று ஓரகவையுள்ள எம் மகள் பொற்கொடிக்குக் கடுங் காய்ச்சலும், மார்ச்சளியும் வந்து ஐந்தாறு நாட்களாக மிகக் கொடுமை செய்தன. அதுகால்,ஓர் இரவு முழுதும் நொந்து வருந்தி, நோய் தீர்க்கும் பொருட்டுத் தமிழ்த்தாயை வேண்டி எழுதிய பாக்கள் இவை. இவற்றை எழுதிய ஓரிரு நாட்களில் குழந்தை சாவினின்று மீண்டது குறிப்பிடற்குரியது" -- என்று இப்பாடலுக்குக் குறிப்பெழுதியுள்ளார் பாவலரேறு.

4. வடமொழியினின்றே தமிழ் தோன்றியது என்னும் கருத்தை மறுத்துக் கூட்டுக்கிளியிடம் கூறியது.

5. பாட்டின் சிறப்பினையும், அப்பாட்டு வெளிப்பாட்டுக்கான ஏந்துடையதாக மொழிச் சிறப்பு பொருந்தியதாக இருத்தல் வேண்டுமென்பதற்கேற்ப அமைந்துள்ள தமிழ்மொழியின் அருஞ்சிறப்பினையும் அழகுற விளக்குகிறார் பாவலரேறு. (பழைய குறிப்புச் சுவடியினின்றும் எடுக்கப்பட்ட இப்பாடல், ஆங்காங்குச் சிறிது சிதைவுபட்டுள்ளமையால் சிலவிடங்களில் சொற் பொருளியைபு புலப்படவில்லை.)

6. முத்தமிழ் இலக்கணங் கூறும் முப்பது குறள் வெண்பாக்கள்.

7. தமிழ்த்தாயை வாழ்த்திப் புகழ்பாடும் இனிய பத்துப் பாடல்கள். சுவைத்துப்
போற்றத் தக்கவை.

8. தமிழினம் மானமிழந்து செத்தழிந்து போகுமுன்னே முனைந்து முத்தமிழைக்
காக்கவேண்டும், வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு இது.

9. தமிழைக் கெடுக்கின்ற கெடுமனங்களை வெட்டிப் புதைப்பதற்கு எடுத்த
துளுரை இது.

10.மொழியெனப்படுவது விழியெனக் கூறித் தெள்ளுதமிழ் மொழியாமே மூங்கையவர் சொற்கலந்து மொழிகுவதும் தமிழாமோ? தமிழ்நாட்டவரே, தூய தமிழில் பேசுங்கள்' என்று அறிவுறுத்துகிறது இப்பாட்டு.

11. "தாயைக் காத்திடு முன்னம் ஆன்றோர் தமிழைக் காத்திட எழுவாய்" என்று மகனுக்குப் பெற்ற தாய் கட்டளையிடுகின்றாள் இப்பாட்டில்.

12. தமிழ்த்தாய்க்கு வந்த இடர்ப்பாடுகளைக் களையாமல் காதலும் கவர்ச்சி
தராது என்னும் அழகிய நான்கு வெண்பாக்கள்.

13. தமிழ்த் தொடர்பற்ற எந்த வினையும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் நன்மை
செய்வதில்லை என்பதிது.

14. தமிழ்மொழிக்குக் கேடு செய்வோனை உயிர்வாங்கவும் தயங்கேன் என்பது.

15. ஆசிரியர்தம் பள்ளி, கல்லூரிக் காலங்களில் 'கவிதை' எனும் தலைப்பிட்டுத் தொகுத்து எழுதிய பாடல்களில் இதுவும் ஓன்று.

16. வடசொற்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது எனப் பேராயக் கட்சியைச் சார்ந்த அன்றைய ஆட்சியாளர்கள் வினா எழுப்ப, அதற்கு விடையாக எழுதியது இப்பாடல்.

17. இப்பாடலில் பழந்தமிழ் இலக்கியத்தைப் பருகிய தும்பிபோல் முழங்கிப் பாடி மகிழ்வுகொள்ளுகிறார் ஆசிரியர்.

18. செந்தமிழ்த் தாயிடம் ஒரு துளுரைப்பு.

19.இளைஞர்கள் தமிழிலேயே கற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது இது.

20.இளைஞரீர், உங்கள் இளமைதருங் கனவு ஒருபால் இருக்கட்டும், செழுமையுறும் தமிழ்க் குலத்தைச் செம்மை செய்து, செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்ற வழிசெய்யுங்கள் என்று ஏவுகிறது இப்பாடல்.

21.மொழிநலத்தையும் இன நலத்தையும் காவாதார் 'தமிழ் நலம் காப்போம்' என்பது நரிச் செயலன்றி வேறென்ன என்பது.

22. மொழிப்போர் புரிய அழைப்பு இது.

23. பாட்டியற்றுவோரும், மேடையில் பேசுவோரும் தமிழ்மொழியைப் பேணுதல் வேண்டும் என்பது.

24. வழக்கிழந்து போன மொழிகளெல்லாம் புதுப்பிக்கப்பெறும் பொழுது, உயர்தனிச் செம்மொழியாகிய தமிழைச் சீரழிக்கின்றவரை மல்லறையால் திருத்த வேண்டும் என்பது.

25.1965-ஆம் ஆண்டு எழுந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது ஆசிரியர் தென்மொழியில் வீறு சான்ற ஆசிரியவுரைகளையும் பாடல்களையும் எழுதி மாணவர்க்கும் பொது மக்கட்கும் உணர்வும் ஊக்கமும் ஊட்டினார். அதன் பொருட்டு அவர்மேல் அரசு வழக்குப் போட்டுச் சிறைக்கு அனுப்பியது. வேலூர்ச் சிறையுள் இரண்டு மாதங்கள் சிறையிருந்தார். அக்கால் சிலை(மார்கழி) மாதமாகையால் சிறைக்கு வெளியே, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் கேட்கும். அந்த உணர்வு இவரையும் தமிழ்மொழிப் போராட்டத்திற்கென இளம் பெண்களை எழுப்புவது போலும் ஒரு பாவைப் பாடலை யெழுதத் தூண்டியது. அக்கால் எழுதிய பாடல் இது. இதுவன்றிச் சிறையிருந்த அப்பொழுது 'சிறையகம் புக்க காதை' (பாடல் எண் : 74), ஐயை (முதல் பகுதி) போலும் பிற பாடல்களையும் எழுதியது குறிப்பிடத்தக்கது. செந்தமிழின் பொருட்டு எழுந்த விழிப்புணர்வுப் பாடல்களாகையால், இவை செந்தமிழ்ப் பாவை எனப்பெற்றன. அழகிய, இனிய, உணர்வு மிக்க வளங்கெழுமிய சொற்களால் இப்பாடல்கள் இயங்குவதை இசைத்தும் ஆழ்ந்துணர்ந்தும் மகிழலாம். தமிழர் ஒவ்வொருவரும் தம்தம் பெண்டிர்க்கும் பிள்ளைகளுக்கும் இவற்றைப் பாடிக்காட்டிப் பயனுறுதல் வேண்டும்.

26.1965-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்துச் சண்முகம் என்ற பேராசிரியர் மொழியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics) என்னும் மொழியியலை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். அவர் பேச்சுத்தமிழே (Spoken Tamil) உண்மைத் தமிழ்; பிற இலக்கியத் தமிழ் உண்மைத் தமிழன்று என்னும் கருத்துக் கொண்டு தாறுமாறாகத் தமிழைக் கெடுத்துவந்தார். தமிழ் கற்பதற்காகத் தமிழகம் வந்த ஏறத்தாழ இருபது வெளிநாட்டு அயல் மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பு அவரிடம் விடப்பெற்றது. அவர்களுக்கு அவர் பேச்சுத் தமிழாகிய கொச்சைத் தமிழையே உண்மைத் தமிழ் என்று பயிற்றுவித்து மிகுதியும் தமிழ்க்கேடு புரிந்து வந்தார். அவர் ஒருகால் கலைக்கதிர் என்னும் அறிவியல் திங்கள் வெளியீட்டில், 'தென்மொழி' எழுதும் தமிழ் செயற்கைத் தமிழ் என்றும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் முதலிய இதழ்களில் எழுதப்பெறும் தமிழே உண்மைத் தமிழ்' என்றும் தம் கருத்தை ஒரு கட்டுரையில் வெளியிட்டிருந்தார். அவர் கொள்கையைத் தாக்கியும் அவரைக் கண்டித்தும் எழுதிய பாடல் இது. இப்பாடலை எழுதியதுடன் அமையாமல், ஆசிரியர் ஒருகால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து மாணவர்களுடன் அப் பேராசிரியர் இல்லத்திற்கும் சென்று, அவரை நேருக்கு நேராகக் கண்டு இது போலும் தவறான கருத்துரைகளை இனி உரைத்தல் கூடாது எனவும் எச்சரித்தார். அவர் 'இனி அவ்வாறு உரையேன்' என்று உறுதி தந்த பின்னரே, மாணவர்கள் அவரை வாளாவிடுத்தனர் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

27. தமிழ்நாட்டின் முதலமைச்சரே தமிழ்க்குப் பகையாயிருப்பதைப் போலும் கீழ்மை வேறெங்கேனும் இருக்குமா? 1965-ஆம் ஆண்டில் பத்தவத்சலம் ஆட்சியில் நிலைமை அப்படியிருந்தது.

28. தமிழ் கற்போரே பொருளுக்காகத் தமிழ்மொழியை இழித்தும் பழித்தும் பேசிவருகின்றனர். அந்நிலையை மற்போரால் தடுத்தல் வேண்டும் என்பது.

29.இக்கால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கின்ற இளைஞர்க்கும் மங்கையர்க்கும் செந்தமிழ்மேல் ஆவல் இருப்பதில்லை. அவர்கள் நெஞ்சில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது இந்தப் பாட்டு.

30. அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ்மொழியில் அக்கறையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் 1967-இல் தமிழரசின் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ஒருவர் கொச்சைத் தமிழில் தினத்தந்தி, ராணி என்னும் இதழ்களை நடத்தித் தமிழ் கெடுக்கிறாரே என்று இழித்துக் கூறியது.

31. அகத்தில் ஒளி பெருகி, மருள் விலகி, புதுமைபெறும் வாழ்வு என்று பாவலரேறு விளக்குவதெல்லாம் தமிழ் படித்தால் கிடைக்கும் நலன்களே.

32. 'தமிழனைத் தமிழனே தலையறுக்கின்றான். மிகக் கொடிய இந்நிலை மாற வேண்டும். தமிழ் எனும் ஒரு கூட்டினுள் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும். என்று முழங்குகிறது இது.

33. 'தமிழ் வாழ்க!' என்று உரக்க முழங்குவதிலும், பட்டிமன்றம் வைத்து வழக்கிடுவதிலும், பாட்டரங்கில் இசைப்பதிலும் தமிழ் வாழாது; தமிழ் கற்ற அறிஞர்களைப் போற்றுங்கள்; புரந்து நில்லுங்கள்; தூயதமிழைப் பேசுங்கள். அறிவியல், கலை, அனைத்தையும் தமிழ் ஆக்குங்கள். அப்பொழுதுதான் தமிழ் நிலைத்து வாழும்' என்கிறது இப்பாட்டு.

34. அறிவியலைக் கற்கத் தாய்மொழிக்கே முதற் சலுகை தரவேண்டும் என்று விளக்குகின்ற பாடல் இது.

35. தமிழ்நாட்டில் தமிழில் படிப்பதுதானே முறை?

36. தமிழைக் கெடுக்கும் இதழ்களைக் கண்டித்தது.

37. சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டுப் பிராமணர் இந்தியத் திரவிட மொழியியல் ஆராய்ச்சித் துறைக்குத் தலைமை தாங்கினார். அவர் பல வழிகளிலும் தமிழ்மொழிக்குக் கிடைத்த உண்மை நலன்களையெல்லாம் மட்டந்தட்டி வந்தார். சமற்கிருத மொழியையே தலைமேல் வைத்து மறைமுகமாகப் பாராட்டி வந்தார். அவருக்குக் கையாளாகத் தமிழகத்திலிருந்து செயற்பட்டு வந்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியராகவிருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். அதனால் அவர்க்கு அரசுச் சார்பில் பலவகை நலன்களும் கிடைத்து வந்தன. ஒருமுறை சட்டர்சி ஒரு கருத்தரங்கில் 'சமற்கிருத மொழியின்றித் தமிழ்மொழி இயங்காது' என்னும் உண்மைக்கு மாறான பொய்க் கருத்தைக் கூறியதுமன்றித் தம் கருத்துக்குத் துணைநிற்கும் தெ.பொ.மீயையும் வானளாவப் பாராட்டியுரைத்தார். அக்கால் எழுதியது இப்பாடல்.

38. தூய உணர்வுகளையும் வினைகளையுமே ஆசிரியர் கைக்கருவிகளாகக் கொண்டிருப்பதால் தமிழ்ப் போராட்ட முயற்சிகளில் வெற்றியே கிட்டும் என்பது.

39. ஆங்கில மொழியைப் பிழையின்றியும் சிறப்பாகவும் அக்கறையுடனும் பேச விரும்பும் தமிழர், தமிழ்மொழியை மட்டும் பிழையாகவும் கலப்பாகவும் பேசுவானேன்? தூய்மையான தமிழை வளர்க்காத - எழுதாத இதழ்களைத் தீயிட்டுப் பொசுக்குதல் வேண்டும் என்கிறது இது.

40. தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான். அத்தகையவன்
எழுத்தை, வினைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது.

41. 'எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும், என் மூச்சு அதற்கு உதவிடல் வேண்டும்' என்னும் ஆவலைத் தெரிவிக்கிறது இந்தப் பாட்டு.

42. "தமிழை வளர்க்க; தமிழ்மொழியால் ஒன்றுபடுக; தமிழைத் தாழ்த்துகின்ற அனைத்து நிலைகளையும் தவிடு பொடியாக்கிடுக" என்று தமிழ் முழக்கம் கேட்கிறது இப்பாட்டில்.

43. எழுத்தாளர்கள், பொய் இலக்கியங்களும் போலிக் கதைகளும் இனி எழுதாமல், மெய் இலக்கியங்களையே துணிந்து உருவாக்க வேண்டும் என்பது.

44. 1975 அரசியல் நெருக்கடி நிலைக் காலத்தில் ஆசிரியர் நடத்தும் தென்மொழி இதழை அரசு தடைசெய்திருப்பதாக செய்தி வந்தது. அக்கால் ஆசிரியரின் இன்னோர் இதழும் சிறுவர்க்குரியதுமான தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தென்மொழிக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். அக்கால் எழுதிய பாடல் இது. இதில், தமிழ் மொழிக்கென்று ஆசிரியர் உழைக்க முற்படுகையில் அழிவையும், துயரையும், துன்பத்தையும், இன்பத்தையும், புன்மொழிகளையும் பொருட்படுத்தமாட்டேன் என்று உரைத்த துளுரையைக் கேட்கலாம்.

45.1975-இல் சென்னையில் தென்மொழிச் சார்பில் தமிழக விடுதலை மாநாடு நடத்தத் திட்டமிடப் பெற்றுச் செய்தியும் அறிவிக்கப் பெற்றது. மாநாடு நடைபெறவிருந்த நாளுக்கு முந்திய நாளே அரசு மாநாட்டை நடத்தவிருந்த ஆசிரியரையும் செயற் குழுவினரையும் மாநாட்டில் பங்கு கொள்ள வந்திருந்த சிலரையுமாக இருபத்திரண்டு பேரைத் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ்ச் சிறைப்படுத்திச் சென்னைச் சிறையில் இரண்டு மாதங்கள் வைத்திருந்தது. அக்கால் உடன் சிறையிருந்த அன்பர்கள் இரவு வேளையில் தூங்கப் போகுமுன் தம் கொள்கை விளக்கப் பாடல்களை உரக்கப் பாடி உணர்வை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தங்களுக்குத் தெரிந்துள்ள பாடல்களையே நாளும் பாடி அவர்களுக்குச் சலித்துவிட்டது. அதன்பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆசிரியரவர்கள் ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு புதுப்பாடலை எழுதிக் கொடுத்தார்கள். அப் பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழ், வடமொழியாகிய சமற்கிருதத்தினும் உயர்ந்தது என்னும் பொருளைத் தருவது இது.

46. தமிழறிவில்லாதாரைத் தமிழறிஞர் என்று போற்றும் போலிமையைக் கண்டித்தது.

47. தூயதமிழைப் போற்றாதவர் நூல் எழுதுதலும், உரையாற்றுவதும், தமிழகத்தில் அரசுத் தலைமை தாங்குவதும் கேடு செய்யுமன்றோ? அந்தக் கீழ்மையைக் கடிவது இது.

48. தமிழே உயிர், உடலம், உணர்வு, உலகம், கருத்து, பார்வை, ஓசை, பிறவி, தாய், தந்தை, குரு, கல்வி, காட்சி, துணைவி, குடும்பம், இன்பம், குழவி, உறவு, சுற்றம்,வாழ்க்கை, தொண்டு, எழுத்து, பேச்சு, அறிவு,மூச்சு,நட்பு, விருந்து, வினை, நனவு, மறை, கனவு, மெய்ம்மம், இறைவன் என்னும் உயிர்க் கொள்கை இப்பாட்டில் ஒளிப்பிழம்பாய்த் திகழ்கிறது.

49. கயமையினை எழுத்தாக்கி எத்தனைப்பேர் காசு பணம் சேர்க்கின்றனர். அதனைக் கடுமையாகக் கடிவது இது.

50. பொதுத் தொண்டில் தனிமானம் கருதுதல் கூடாது; ஆரவாரம் கூடாது என்னும் கருத்தை யுணர்த்துவது இது.

51. தமிழர் எங்குத் துயரால் அடிமையுற்றிருக்கின்றனரோ, அங்கு என்னைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்த் தாயை வேண்டுவது.

52. தமிழக அரசியல் தலைவர்களிடம் அக்கால் இல்லாதிருந்த தமிழ்நல உணர்வு குறித்து எழுதப்பெற்றது இப்பாடல்.

53. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நினைவையொட்டி அன்றைய ம.கோ.இரா. அரசு அறிவித்திருந்த எழுத்துச் சீர்திருத்த அறிவிப்பு எந்த அளவில் மொழிநலனில் அக்கறை கொள்ளாதது என்பதான அறிவிப்புப் பாடல்.

54. முந்தைய பாடலின் கருத்தடிப்படையிலேயேயான விளக்கப் பாடல். சாதியாலும், மதத்தாலும், ஏழைமையாலும்- பிற ஓயாத தொல்லைகளாலும் நலிவுறும் கூட்டத்தைச் சீர்செய்ய வேண்டிய நிலையிருக்க எழுத்துத் திருத்தம்தான் தேவையா என்கிறார் பாவலரேறு.

55. நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மறைவையொட்டி அவரின் புலமையொடு இக்காலப் புலவர்களின் கல்வியறிவுத் தேர்ச்சியின்மையை ஒப்பிட்டு எண்ணி வருந்திப் பாடியது.

56. தமிழ்நாட்டு விடுதலையை, தமிழின முன்னேற்றத்தை எண்ண
தயங்குபவர்களைத் தூயதமிழிலாவது பேசுங்கள், அவ்வகையிலேனும் தமிழர் எனும் பெயர் தாங்குங்கள் என்பதிப் பாடல்.

57. பேச்சுத் தமிழையும், கலப்புத் தமிழையுமே தமிழ் எனப் பிதற்றியவர்களுக்குக்
கண்டன அடியாய் அமைந்தது இப் பாடல்.

58. மதவெறித்தனமும், சங்கரப் பார்ப்பனக் கூட்டத்தின் கூச்சல்களும் மிகுந்த நிலையில் ஆசிரியர் பாவலரேறு அவர்களின் வலியுறுத்தத்தால் திராவிடர் கழகம் வழிபாட்டுரிமை மாநாடு நடத்தியது. அக்கால் அக்கருத்திற்கு அழுத்தமாய் எழுந்தது இப் பாடல்.

59. 'மநு நூல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாவலரேறு ஐயா அவர்கள் கோவை நடுவண் சிறையில் இருந்தபோது எழுதப் பெற்ற பாடல் இது. சிறையில் அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐயா அவர்கள், இசைகூட்டிப் பாடுமாறு எழுதிய பாடல். தமிழ்மொழியின் சிறப்புக் குறித்து விரிவாய்ப் பாடப்பெற்றது.

60. சங்கரப் பார்ப்பனக் கூச்சல்களுக்கு அக்கால் அமைச்சர் வீரப்பன் தாளம் தட்டிக்கொண்டிருக்கையில், இத்தகைய போக்குகளைச் சரிசெய்ய வன்முறை இயக்கமே தேவை என்பதாக எண்ணிப் பாடியது.

61. இவ்வின முன்னேற்றத்திற்கென உள்ள ஏராளமான பணிகளை விடுத்துப் புலவர்கள் வெற்றுச் செயல்களில் ஈடுபட்டிருக்கிற சூழலை விளக்கிக் கடிந்து எழுதப்பெற்றது இப்பாடல்.

62. அக்கால் அரசால் தமிழ் வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட பல்வேறு இயக்கங்களும், துறைகளும் அறுக்கமாட்டாதான் இடுப்பில் செருகப்பட்ட அரிவாள்கள் போன்றவையெனக் கடிந்து எழுதியது இது. இந்தி எதிர்ப்பு-

63. இந்தித் திணிப்பைத் தமிழர் இனியும் பொறுத்திடமாட்டார் என்பது. 1959-இல் நேருவுக்கு விடுத்த தூது.

64. மொழியே விழி; அதைக் காவாவிடில் வரும் பழி; தமிழைச் சீர்குலைக்க வரும் இந்தியை ஒழி என்பது.

65. உரம் குன்றிப் போன தமிழர் முனைந்து மறுமலர்ச்சியுற்று எழல் வேண்டும் என்பது.

66. இந்தி மொழியைப் புகுத்தினால் என்ன நேரும் என்று ஆளும் தலைவர்க்கு எச்சரிப்பது இது.

67. இந்தி வருமுன் அணையிட வேண்டுமென்பது.

68. செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச் சிதைத்தொழிப்பீர் என்பது இது. 69. தமிழ்ப்பயிரில் வைத்த தீ போன்றது இந்தி என்பது இது.

70. இருந்தபடியே இருந்தால் இந்தியை நீக்க முடியாது என்பது.

71. இந்தியை அறவே தடுத்து நிறுத்தவில்லையாயின் தமிழனுக்கு நாடு என்பது ஓன்றில்லாமல் போய்விடும் என்று முன்கூட்டி யுரைக்கின்றது இப்பாட்டு.

72. மறமிழந்த தமிழன் மாளல் நன்றென்பது.

73. 1965-கடலூர்க் கிளைச் சிறையில் எழுதியது இது.

74.1965-இல் இந்திக்கிளர்ச்சியில் ஈடுபட்டு வேலூர்ச் சிறையில் இருந்த பொழுது, எழுதியது. சிறையாளிகள் ஆசிரியர் சிறைக்கு வந்தது எதற்கு என்று கேட்டதும், அதற்கு அவர் விடை கூறியதும் ஆகிய நீண்ட பாடல் இது. 25-ஆம் பாடல் குறிப்புப் பார்க்க.

75. மும்மொழித் திட்டம் கொணர்ந்த பொழுது அதை எதிர்த்தது. தமிழர் தமிழையும் ஆங்கிலத்தையுமே கற்றல் வேண்டும் என்றது.

76. இந்திப் போரை எத்தனைக் காலம் நிகழ்த்தவது, இரண்டில் ஒன்றை ஒரே எழுச்சியில் பெற வேண்டும் என்பது.

77. இந்தியை எதிர்த்துப் போரிட ஒருநாள் குறிக்க வேண்டும் என்பது. 78.1971-இல் இருந்த சென்னை ஆளுநரை இந்திப் போராட்டம் அகற்றியது பற்றியது இது.

79. இந்தியை உடனடியாக மாற்றவில்லையாயின் கருவிப் போராட்டம் நிகழும் என்பது.

80. தமிழக அமைச்சர்கள் இந்தி மொழிக்குக் கங்காணிகளாக இராமல் போனால் இந்தித் திணிப்பே இராது என்று உறுதி கூறுகிறது இது.

81. இந்தித் திணிப்பை எவராலும் தடுத்திட இயலாது என அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கூறியதைத் தமிழனுக்கு உணர்த்தி இனியேனும் எழுச்சி கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

82. இந்தி மொழி அரசு அலுவல்களில், தொலைக்காட்சியில் திணிக்கப்பட்ட பொழுது அதைக் கண்டித்தெழுதியது இப் பாடல்.

83. வெட்டத் தழைக்கும் முள்மரமாய் வளரும் இந்தியை முட்டித் தள்ளி எதிர்த்திடாமல், கட்சிகள் பலவும் தந்நலப் பித்துடன் இருப்பதும், மாநாடு போடுவதும், தீர்மானம் இயற்றுவதுமான வழக்கங்களை உதறித்தள்ளிவிட்டு ஓநாய்க் கூட்டத்தை ஓடுக்க எழடா தம்பி என்று எழுப்புகிறார் பாவலரேறு. 84. இந்தி மொழியை ஆயிரந்தடவை அழிப்பதாலேயோ எதிர்ப்பதாலேயோ எந்த மாற்றமும் வந்திடவில்லை. எங்கள் நிலத்தில் எங்கள் ஆளுமையே வேண்டும் என முழக்கும் குரலே வன்பு வடவரை நடுங்கிட வைக்கும் என்கிறது பாடல்.
---------------------------

கனிச்சாறு முதல் தொகுதி
பாடல் முதல் குறிப்பு அகர வரிசை


பாடல் பாடல் எண்.
அந்தமிழ் நாட்டில் 3 தமிழரசின் அவைத்தலைவர் 30
அறம் பெருகும் 31 தமிழரெல்லாம் 'தமிழ்' என்னும் 42
அறைந்திரை வீழ்த்திய 74 தமிழே எனக்கு 48
ஆங்கிலத்தில் வடமொழியில் 39 தமிழ்த் தலைமை தாங்குவரே 2
ஆங்கிலத்தை யார் வெறுப்பார் 34 தமிழ்நாட்டின் விடுதலையை 56
ஆயிரந் தடவை 84 தமிழ்ப் பற்றை ஊட்டாத 13
இந்தி என்னும் இரும்புக் கோட்டையை 82 தமிழ்மொழி வாழ்க 59
இந்தித்திணிப்பே 80 தமிழ்வளர்ச்சித் துறையும் 62
இராதெம் நிலத்தில் 75 'தமிழ் வாழ்க' வென்பதிலும் 33
இலக்கியத்தைத் தவிர்த்திடுக 43 தரங்குறைந்த எழுத்தெழுதி 49
இன்றுள புலவர் யார்க்கும் 55 தனித்தமிழைப் போற்றாதார் 47
ஈடறவே நெஞ்சில் 9 தனிமானம் கருதாமல் 50
உன்னைப் பெற்ற தாயுனக் கிதனை 11 தாதயிறுங் களிவண்டு 10
ஊராளும் தலைவர்க்கே 66 தாய்க்குறின் கேடே 14
ஊருண்ணக் கொடுக்கின்ற 54 தாய்மைக் குலத்தீர் 25
எங்கு எந்தமிழர் 51 திருமிகுந்த உருவுடையாள் 1
எத்தனைநாள் 76 தோளெடுத்துப் பொங்குகின்ற 77
எந்த ஓர் ஆற்றலும் 81 நம்மை, நம் நாட்டை 64
எந்தமிழ் மொழிக்கும் 73 நிலை தளராதா 65
எப்படியேனும் இத்தமிழகத்தை 41 நீயே -செந்தமிழ்த்தாயே 18
எழுக தமிழ் மங்கையரே 20நெஞ்சிலும் நினைவிலும் 32
எழுதுவதெல்லாம் 26 நெஞ்சில் தமிழ் நினைவு 38
என்றுன் னகரத் திருவரி கூறி 7 பழக்குலை கோதும் 19
என்னபடி மக்களெல்லாம் பழந்தமிழ் நாட்டில் 35
ஐம்பதினாயிரம் ஆண்டுமுன் பிறந்த 45 பாட்டெனப் படுவது 5
ஓ! ஓ! ஓ! குமுதமே 36 பாப்பித்துயர்ந்த 46
கலப்புத் தமிழும் 57 பாவலர் யாத்திடும் பாக்களில் 23
கல்லறைப் பிணத்தை 24 பீடற்ற இந்திப் பிணிப்பை 71
கவிதை ஒளிர்மின்னல் 15 முள்மரத்தை வெட்டவெட்ட 83
கற்போரே செந்தமிழை 28 மூத்த உணர்வின் 6
கற்றவரே! அன்பு கனிந்தவரே! 8 மென்முறையாய் அன்போடு 60
கற்றைக் குழலும் 12 மொழியறிவு துளியுமிலா 16
கூட்டுக் கிளியே 4 மொழிநலமும் இனநலமும் 21
கொச்சைத் தமிழும் 53 மொழிப்பற்று தீதென்றால் 57
சிறையுட் புகுத்தியும் 79 மொழிப்போர் புரி! 22
சுனிதி குமார் 37 வரும் பயனை நினையாமல் 78
செத்திடும் தமிழ்ஞாலத்தின் 52 வழங்குதமிழ் மொழியிருக்க 58
செந்தமிழே, உள்ளுயிரே 17 வானார்ந்த பள்ளிகளில் 29
செந்தமிழ்க்குக் காப்பளியா 68 வில்லெடுத்துப் போரிட்ட 72
செந்தமிழ்ச் சிட்டே 44விழித்திருத்தம் இல்லாதான் 40
செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் 69 வீங்கலைத் தென்கடல் எழுந்து 63
தமிழகத்தின் முதலமைச்சே 27 வேலையற்றவன் 61
-------------

This file was last updated on 11 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)