pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 4
திருவல்லிக்கேணி உருப்பிணித்தாயார் மாலை

tiruvallikkENi uruppiNittAyAr mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 4)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
We thank Mr. Rajendran Govindasamy, Chennai, India for his assistance
in the proof reading of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 4
திருவல்லிக்கேணி உருப்பிணித்தாயார் மாலை

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி
இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும்
தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள்
இயற்றிய பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----

"திருவல்லிக்கேணி உருப்பிணித்தாயார் மாலை"

ஸ்ரீ
ஸ்ரீமதேராமாநுஜாய நம:
காப்பு.
கருப்பிணியை நீக்குங் கமலையல்லிக்கேணி
உருப்பிணியாமன்னை யுபயத்-திருப்பதத்திற்
பாமாலை சூட்டப் பணித்தருள்வான்றண்வகுளப்
பூமாலைமாறன் புரிந்து.

நூல்.

திருவளர்செந்தாமரைமலர்மாளிகைசேரனமே
உருவளரெம்மானுரப்பஞ்சரத்திலுறைகிளியே
மருவளரோதியுருப்பிணித்தேவிமயிலன்னையே
கருவளரென்மனக்கண்வாழ்ந்திருக்கக்கருணை செய்யே.       1

நெஞ்சகமேநந்நிராதாரைநின் மலைநித்தியைசெங்
கஞ்சமலர்மாளிகை வீற்றிருக்குங்கனங்குழைகார்
மஞ்சனவோதியுருப்பிணியன்னைமலரடியைத்
தஞ்சமென நம்புதிநம்முத்தாபந்தணந்திடுமே.       2

அமலையநகையதுலையசலையரிப்பிரியை
கமலைகமலாசனை கமலாக்கிகராம்புயை நந்
நிமலையுருப்பிணியன்னையை நெஞ்சேநினைதிவினை
அமலையஞரம்பரமுற்றும்வற்றவருளுவளே.       3

நிரந்தரைநித்யகல்யாணிநிராமயை நிர்விகற்பை
தரந்தருசர்வஞ்ஞைசத்யசங்கற்பைதழையசர
சரந்தருசத்தியகாமயுருப்பிணித்தம்மனையை
நிரந்தர நின்று நினைதி நெஞ்சேபவ நீங்கிடுமே.       4

அநந்தவிபவையசோகையயோநிசையாவருஞ்சொல்
அநந்ததிருவபிதாநையகளங்கையாம துலை
அநந்தை நல்லாநந்தரூபையுருப்பிணியன்னையை நீ
அநந்தலொழிந்தேத்துதிநெஞ்சமே நம்மயர்வறுமே.       5)

அப்பிரமேயைபராசிதையநசூயை நல்ல
சுப்பிரசந்நை சுகாவகைசொல்லுந்து திப்பிரியை
ஒப்பிலுருப்பிணியன்னைநமையுளமேயுவக்கின்
பிரபஞ்சத்திடர்நீக்கிமோக்கத்திருத்துவளே.       6

அருளுக்கணியையழகுக்கணியையறக்கணியைப்
பொருளுக்கணியைப்புகழுக்கணியைப்பொறைக்கணியைத்
தெருளுக்கணியையுருப்பிணிச்செல்வியைத்தேர்ந்து நெஞ்சே
மருளுக்கணிசெயுமாயையை மாய்த்திடவாழ்த்துதியே.       7

முழுமதிபோன்றமுகத்தாளைமுத்தியை முன்னி நிற்குஞ்
செழுமதியோர்க்கருள்செய்யுஞ்செய்யாளைநற்றெள்ளமுதோ
டெழுமதிரேகவுருப்பிணியன்னையையென்று நெஞ்சே
தொழுமதிநந்தொல்லைத்துன்பத்தொகுதிதொலைந்திடுமே.       8

பாவனநாமிபதுமை பராபரைபல்லுயிர்க்குஞ்
சீவனகாமியுருப்பிணிசின்மயைசிற்பரைதாள்
நீவனமாலையும் பாவினமாலையுநித்தநித்தம்
ஆவனவாக்கியணிதிநெஞ்சேயல்லலற்றிடுமே.       9

பராசரனாதிப்படிவர்க்குந்தேவப்படிவர்கட்கும்
இராசரதாங்கர்க்குமெண்கணனாதியிலேகர்கட்குஞ்
சராசரம்யாவைக்குந்தண்டலை சூழல்லிக்கேணியில்வாழ்
தராசரண்போலுமுருப்பிணித்தேவியைத்தாயென்பவே.       10

ஆரணியம்புயையாதாரபூதையனைத்துயிர்க்குங்
காரணிகாருணியக்கடலெங்குங்கலந்தபரி
பூரணியாகுமுருப்பிணியன்னையைப்போற்றுநெஞ்சே
தாரணியின்புமந்தாமவின் புந்தந்து தாங்குவளே.       11

சுரமங்கையரானவர்களெவர்கட்குந்தோயுநில
நரமங்கையர்கட்கு நாகவுலகத்து நங்கையர்க்கும்
வரமங்கலந்தருந்தாயாமுருப்பிணிமாமகளைத்
திரமங்கைகூப்பித்தொழுதி நெஞ்சேவினைத்தீதறுமே.       12

எண்வகைச்சித்தியுமெண்வகையோகமுமேன்றுவரும்
எண்வகைச்செல்வமுமெண்வகையான விலக்குமியாய்
எண்வகையாவுமிசைக்குமுருப்பிணியெண்குணியை
எண்வகையெண்ணுதிநெஞ்சேயிடர்களிரிந்திடுமே.       (13)

அசனமளிப்பவளாடையளிப்பவள் யாருமெச்சும்
வசனமளிப்பவள் வண்ணமளிப்பவள்வாய்ந்துதொழும்
யசனமளிப்பவளாகுமுருப்பிணியன்னை நெஞ்சே
விசனமொழித்தருள்வாளவணாமம் விளம்புதியே.       14

பரமாளிகைதிருப்பாற்கடன் மாளிகைப்பத்தருள்ள
வரமாளிகைநல்லவாரிசமாளிகைமான்மணி
யுரமாளிகை கொளுருப்பிணித்தாயையுள்ளேயுனம்
புரமாளிகையையும் பொன்மாளிகையாப்பொருந்துவளே.       15

பண்ணின் சுவையைப்பழத்தின் சுவையைப்பழுத்தநல்லோர்
எண்ணின் சுவையையிறாற்றேன்சுவையையிலங்குமிரு
கண்ணின் சுவையையுருப்பிணியன்னையைக்கண்டவட
நண்ணின்னடலை நன்னெஞ்சேநடுங்கிநசித்திடுமே.       16

பூத்திடுந்தாயைப்புவனசராசரபூதமெல்லாங்
காத்திடுந்தாயைக்கதிதருந்தாயைக்கவலையெல்லாம்
த்திடுந்தாயையுருப்பிணித்தாயை நினைதி நெஞ்சே
யாத்திடுந்தாவத்தஞரஞ்சியற்றிடுமக்கணத்தே.       17

வறிஞரைச்செல்வர்களாக்கவல்லாளைவன்மண்ணையரை
அறிஞரெனச்செயவல்லாளைத்தன்னடியம்புயத்தைச்
செறிஞர் தந்தீவினை தீர்க்குமுருப்பிணித்தேவியைநீ
எறிஞமனென்னவிடர்செய்வினையறவெண்ணுநெஞ்சே.       18

ஆட்டாக்கரும்பையமைக்காக்கற்கண்டையறுபதங்கள்
ஈட்டர்த்தேனையெரிக்காதபாகையெண்ணோடதியாற்
கூட்டாவமுதையுருப்பிணியன்னையைக்கூர்ந்து நெஞ்சே
கோட்டாலைக்கூட்டப்பவங்குன்றநீ நிதங்கூறுதியே.       19

கறவாதபாலைக்கடையாதவெண்ணெயைக்காய்த்திறக்கப்
பிறவாதநெய்யைப்பெருமக்களின்பப்பெருக்கையன்பர்
மறவாமருந்தையுருப்பிணியன்னையை வாழ்த்துதியேற்
பிறவாதபேறுபெறச்செய்வணெஞ்சே பெரிதுவந்தே.       20

தலைக்கோலந்தாடங்கமூக்கணிமாமணித்தாழ்வடங்கள்
கலைக்கோலமங்கதங்கங்கணமாழி நற்காலணியிந்
நிலைக்கோலங்கொண்டவுருப்பிணித்தாயை நினைதி நெஞ்சே
மலைக்கோலத்துன்பமனுக்கோலமாகிமறைந்திடுமே.       21

அவணிவணென்னாதெவணுநிறைந்தவ்வவ்வாவிதொறுஞ்
சிவணியுறைந்து திகழுமுருப்பிணித்தேவிநந்தாய்
சுவணவடியைத் தொழுதி நெஞ்சேயவடொல்லருளாம்
உவணன்வரிலிவ்வுறுவலுரகமொழிந்திடுமே.       22

அரிமாமுரலவ விழலர்க்காவல்லிக்கேணியன்னை
விரிமாமலராசனையாமுருப்பிணிவித்தகிதாள்
புரிமாயமின்றிப்புகழ்தி நெஞ்சேயவள்பொங்கருளாம்
அரிமாவரிலிவ்வஞர்க்கரிமாநமக்கஞ்சிடுமே.       23

பரவியபற்பலவண்டத்துயிர்களும்பாங்குபெறப்
புரவியைநங்களுருப்பிணியன்னையைப்பூமகளைக்
கரவியையாதுகருதுநெஞ்சேயவள் கட்கருணை
இரவிவரினமையில் விடும்பைத்தமமென்செயுமே.       24

பன்னிருபாலென்படிவத்தினின்னைப்பதிட்டை செய்துன்
பன்னிருநாமமும்பன்னிப்பரவாப்பகலுளதோ
என்னிருகண்ணாமுருப்பிணியன்னாயிதயவின்னாத்
துன்னரிதுஞ்சவருட்சரபத்தினைத்தோற்றுவியே.       25

எவ்வவதாரமெங்கோனிச்சையாலெடுக்கின்றனனே
அவ்வவதாரந்தொறுமகலாமலவதரிக்கும்
எவ்வமிலாநம்முருப்பிணியன்னையையெண்ணினெஞ்சே
பவ்வப்பிறவிப்படப்படங்கள் பறந்திடுமே.       26

அதிதிக்கரிமகனாங்காற்பதுமையென்னங்கனையாய்த்
துதிதிக்கணவுமுருப்பிணித்தம்மனை தோன்றினையா யாற்
கதிதிக்கிலாதகடையேனுழிநின் கருணைவரின்
மதிதிட்கொழிந்திடும் வாய்த்திடுமாக்கதிவாழ்வெற்குமே.       27

தரணியிலாதியிராமனெனவரிசார்ந்தவெல்வை
தரணியெனநீயுருப்பிணித்தம்மனைசார்ந்தனையால்
அரணியனின்னருளென்மீதிலேசமமையினெற்கு
முரணியவல்வினைமோசனமாம்வருமோக்கமுமே.       28

முந்தைப்புவியெந்தைநேமியன்சேயாய் முளைத்தவெல்வை
தந்தைச்சனகன்றிருமகளாகத்தரணிவந்தாய்
இந்தைத்தொடும்பொழிலல்லிக்குளத்தன்னையேயெளியேன் சி
எந்தைச் சிறுமையைத்தீர்த்தாளுருப்பிணிச்செய்யவளே.       29

பூவைவண்ணன்கண்ணனாயிப்புடவியிற்போ
பூவையுருப்பிணித்தாய்நீபுவியிற்புகுந்துதித்தாய்
பூவையெரியிட்டெனவினையென்னைப்புலர்த்திநிற்கும்
பூவையயிற்கண்ணருண்மழையாலெற்புரந்தருளே.       30

தேவப்பிறவியிலெம்பெருமான்றிருவுள்ளங்கொள்ளின்
மேவப்பிறவிவருதியுருப்பிணிவித்தகியே
கோவப்பிறவிக்குணத்தினன் மீதருள்கூரினென்றன்
பாவப்பிறவிப்படரோடுநெஞ்சப்பயமறுமே.       31

மானுடசன்மமெம்மான்கொளினீயுமொர்மாநுடையாய்த்
தானுடனண்ணுதி சந்தத்தநஞ்சயன் சாரதியாங்
கோனுடனண்ணுமன்னாய் நீகுறிக்கிற்கொடுவினைகள்
வானுடன் வாரிவனம்வரையோடி மறைந்திடுமே.       32

என்றுமில்லாவிறும்பூ தொளியெத்திசைக்கண்ணும் விம்ம
மன்றலந்தாமரையாசனையாய்மணிப்பாற்கடற்கண்
அன்றுவந்தாயெம்முருப்பிணிநங்கையன்னாயடியேன்
துன்றுமனத்துயர் நீங்கவொர்சூழ்ச்சி துணிந்தருளே.       33

தொல்லிசை நூல்வல்லவராகுந்தும்புருநாரதர்கள்
நல்லிசைபாடவரம்பையராடநயந்துவந்தா நாய்
சொல்லிசையோங்கு முருப்பிணித்தோகையன்னாய் தொடர்ந்து
மல்லிசை மம்மரைமாற்றியெற்காக்கமகிழ்ந்தருளே.       34

அருணோதயத்திற்றுவாதசிக்காலத்தமரர்தம்பாற்
கருணோதய காரணத்தாற்கடல்வந்தகற்பகமே
தருணோதயத்திருமேனியுருப்பிணித்தம்மனையே
மருணோயிமத்தையருட்சூரியற்கொடுமாய்த்தருளே.       35

மதியறவோர்மறைமந்திரஞ்சொல்லிவழுத்திநிற்க
நதியறனல்கத்திந்நாகமணிப்பொன்னளிர்க்குடத்தால்
விதிவழி நன்மஞ்சனஞ்செய்யவந்தவிளங்கிழையே
கதியறமேயல்லிக்கேணியன்னாயென்னைக்காத்தருளே.       36

தேவத்தபதிதருந்தெய்வமாமணிச்சேயிழையுந்
தாவக்கடறந்ததாமரைத்தாருந்தரித்தவளே
ஆவத்தனமேயுருப்பிணிநங்கையன்னாயடியேன்
பாவத்தின் வந்தபடர்படரெய்தப்பணித்தருளே.       37

பரமன்பிரமன்சுரமன்முதலினர்பார்த்து நிற்க
வரமன்னும் வானோர் குழாம் வீற்றிருந்தவெம்மான்மணியார்.
உரமன்னிலக்குமியேயல்லிக்கேணியுருப்பிணியே
திரமன்னியென்னைச்செறுக்குஞ்சிறுமையைத்தீர்த்தருளே.       38

வானவர்கோன்மனவெப்பந்தணிந்து மகிழ்ந்திட
தானவருள்ளந்தளரவும்பாற்கடறன்னின் முன்னாள்
தானவதாரஞ்செய்தம்மனையேதறுகட்டுயரக்
கானவர்கைவிடுவித்தெனைக்காக்குங்கடனினதே.       39

நிரந்தரமூவுலகத்துந்தயையொடுநிற்றியென்று வுந்
புரந்தரன்போற்றிடவங்ஙனமேயான் புரிவலென்று
வரந்தருநங்களுருப்பிணிநங்கையை வாழ்த்துதியேற்
பரந்தருநம்வினைப்பையுள்பறந்திடும் பார்த்திநெஞ்சே.       40

அனைத்துலகத்துக்கு மன்னையையவ்வவ்வகிலத்துள்ள
அனைத்துமுள்ளாளையுருப்பிணித்தாயையடியர் வெஃகும்
அனைத்துமருளுமமலையைநெஞ்சேயடைதிவினை
அனைத்து மொழியு நம்மல்லற்பகையுமழிந்திடுமே.       41

கஞ்சமலர்த்திருக்கண்முகத்தாளைக்கருது நெஞ்சே
கஞ்சமலராசனையையுருப்பிணிக்காரணியைக்
கஞ்சமலர்கொடிருக்கங்கணக்கரக்காருணியைக்
கஞ்சமலரவன்காலன்செய்கவ்வைகழிந்திடுமே.       42

ஆள்விக்குமிந்திரஞாலவித்தைக்குமதிபதியா
வேள்விக்கருமநல் வேதாந்தம்பன்மநுவித்தைகட்கும்
மூள்வித்திடுநம்முருப்பிணியன்னையை முன்னுநெஞ்சே
மாள்வித்திடுநம்மனத்துயரோடிமறைந்திடுமே.       43

வேதந்தருக்கமுதலாம் வித்தைக்கும்விளைநிலமாப்
நீதந்தருமேருழவுவணிகநிரைபுரத்தல்
போதந்தருநம்முருப்பிணியன்னையைப்போற்றுநெஞ்சே
ஏதந்தருபிறவித்துயரின்றேயிரிந்திடுமே.       44

எல்லாவுலகுக்குமீடுமெடுப்புமிலாவிறைவி
எல்லாஞ்செயவல்லளெல்லாமுணர்பவளேய்ந்திலங்கும்
எல்லாவுருவுளுமேயுமுருப்பிணியென்னன்னையை
எல்லாவினையுமிரிந்திடவெண்ணுதியேழைநெஞ்சே.       45

அருளுறினெவ்வுலகத்துப்பொருளுமமைந்திலங்கும்
அருளறினெவ்வுலகத்துப்பொருளுமழியுமென்ப
அருளுருவாகுமுருப்பிணி நங்கையன்னாயிரங்கி
அருளுதிநின்னடியண்மிக்களிக்கவடியனுக்கே.       46

தாழ்ந்தோருயர்ந்தோரெனும் பேதமின்றிச்சமநிலையா
வீழ்ந்தோர்க்கருள்செயும்வித்தகியே மறைமெய்ப்பொருட்கண்
ஆழ்ந்தோர்தொழுமல்லிக்கேணியுருப்பிணியம்மனையே
போழ்ந்தோங்குபுன்கணைப்போக்கித்தமியற்புரந்தருளே.       47

என்றைக்குமெம்பெருமானைப்பிரியாதிருப்பவளாய்
என்றைக்குங்கன்மவயச்சநநாதிகளில்லவளாய்
என்றைக்குங் காக்குமுருப்பிணியன்னையையென்மனனே
என்றைக்குமேத்துதியீறிலிருஞ்சுகமெய்துதற்கே.       48

எங்குங்கமலக்கண்ணெம்மானெனவிடையீடின்றியே
தங்குங்குணகணையாமல்லிக்கேணித்தலைவியைச்சீர்
பொங்குங்கருணையுருப்பிணியன்னையைப்போற்றுநெஞ்சே
கங்குங்கரையுமில்லாக்கவ்வைவாரிகரந்திடுமே.       49

பதமும்பொருளும் பகலுமொளியும்பனிமலரும்
இதமும்மணமுரியாவணமெனவெந்தையுடன்
நிதமுமுறையுமுருப்பிணியன்னையை நேயநெஞ்சே
சதமுநினைதிசதாநந்தவீட்டின் பஞ்சார்வதற்கே.       50

அனலுருப்பமுமாசிலாதனவாதபமும்
புனலினிற் சீதமும்போலெங்குமேவும் புராதனைநம்
இனலிரித்தாளுமுருப்பிணிப்பேர்கொளிறைவிதன்றாள்
உனலின்புளத்துக்குரைத்திடனாவுக்குருசியதே.       51

இடாதுண்ணுவர்களிலாவல்லிக்கேணியிறைவியைக்கை
விடாதன்பர்க்காக்குமுருப்பிணியன்னையைமேவுதியேற்
சுடாது சுட்டுக்கவற்றுந்துயர்த்தீச்சற்றுந் தொட்டு நம்மை
அடாதருண்மாரி பொழிந்தவிப்பாளீதறிதி நெஞ்சே.       52

வாணிக்கலைமகள் வல்லபன் வாழ்த்தி வணங்குமல்லிக்
கேணிக்கண்வாழுமுருப்பிணியன்னையைக்கிட்டியவள்
தோணிக்கமலத்துணைத்தாடுதித்தியெனிற்றுயர்கள்
நாணிக்கவிழ்தலையிட்டோடும் பார்த்தியென்னன்னெஞ்சமே.       53

வையப்பட்டாரகர் வாழ்த்துமல்லிக்குளம் வழுநங்கள்
சையப்பட்டாத பன்றன் மணவாட்டிதன்னாற்கருணை
செய்யப்பட்டார்தஞ்சிறப்பினைச்செய்யுளிற் செப்பலுடன்
உய்யப்பட்டோலைகொள்லுமுரித்தாமுயர்தவர்க்கே       54

சகல லவுலகுக்குந்தாரகையானதயாபரையே
சகலசுகுணநிதியாமுருப்பிணித்தம் மனையே
சகலசுபகரநின்னருளென்னுழிச்சற்றமையின்
சகலவிகபரசாதனத்தன்மந்தழைத்திடுமே.       55

விண்பான் மண்பாலார்விபுதமனிதவிலங்குகளுட்
பெண்பாற்பொருள்கடன்கூறெனக்கொள்ளெம்பிராட்டியையித்
திண்பார்புகழுந்திருவல்லிக்கேணித்திருவைநெஞ்சே
நண்பாகவெண்ணுதிநற்றிருநாட்டினலம்பெறவே.       56

மூவர்க்கு முன்னவனாங்கண்ணன்மார்பமுளரிவைகும்
ஓவர்க்குந் தீட்டவொண்ணாவுருவார்ந்தவுருப்பிணியை
யாவர்க்கும்யாவைக்குமந்தாமத்தின்பமநுபவிக்குந்
தேவர்க்குந்தாயைச் சிறியேனென்னென்று சிறப்பிப்பனே.       57

பரந்தெரிந்தோங்கும்படிவர்களோடு பழமறையின்
சிறந்தெரிந்தோரும்புகழுமுருப்பிணித்தேவியருள்
வரந்தெரிந்தோர்தமைவாய்மையின் வாழ்த்தி வணங்கியுய்யுந்
தரந்தெரிந்தோர்சரணேசரணாகுந்தமியனுக்கே.       58

தீயகியுச்சிநடித்தருடேவகிசெம்மன்மகிழ்
நாயகியாகு முருப்பிணிநின்னருணன்மைபெற்றோர்
போகிலேசர்களாம்போதனாதியர்புன்பவமாய்
மேயகிலேசமொழிகுநராவர்கள் மெய்ம்மையிதே.       59

அனைத்துலகங்களுமீன்றவுருப்பிணியன்னை நின்னை
நினைத்துநிதமுநெகிழாத நெஞ்சமுநின்புகழே
தினைத்துணையேனுந்திளையாச்செவியுநிற்றெண்டனிடாப்
பனைத்துணைக்காயமுநின்சுதனெற்கேன்படைத்தனனே.       60

மருப்பிணிவிள்ளுமலர்க்காவல்லிக்குளவாணன்மகிழ்
உருப்பிணிநாமவன்னாயிவ்வுலகத்துறுபொருட்கட்
பருப்பிணிநீதநின்பாதத்திற்பத்திமைபல்கச்செய்தென்
கருப்பிணியின்னே கடிந்தெனைக்காக்குங்கடனினதே       61

நினக்குமெனக்குமிந்நீளண்டகோடி நிலவுமுயிர்
தனக்குங்களைகணுருப்பிணித்தாயிறடுப்பரிய
கனக்குங்கருணையென்காத்திரியுண்டென்றன்கையின் முன்போற்
சினக்குந்தொழில் சற்றுஞ்செல்லாதென்மேற்றென்றிசைச்சமனே.       62

நாசத்தைநல் குமரக்கியராமெனுநாரியர்பால்
நேசத்தை நீக்கியதை நின்னடியினிறுவியமன்
பாசத்தைப்பாற்றிப்பரம் வீழ்பததிற்பரமபத்
வாசத்தைத் தந்தாளுருப்பிணிநாமவராநனையே.       63

வேதனைப்பெற்றவிமலையையல்லிக்குளம்விளங்கி
வேதனையூதியவிண்டுவின்பாடுறைவித்தகியை
வேதனை தீர்க்குமுருப்பிணியன்னையை வேண்டுநெஞ்
வேதனைத்துங்கொண்டவெந்துயர் யாவும் விளிந்திடுமே.       64

பாரியைபுத்திரர்பந்துக்களன்பர்பணிவகைகள்
நேரியை வீடுநிலந்தன மூர்திகணேர்ந்தருளுஞ்
சீரியை நற்குணச்செல்வியுருப்பிணித்தேவியன்னாய்
போரியையென்மனப்புங்கணைப்போக்கிப்புரந்தருளே.       65

அறப்பெரிதாந்தன்ன ருட்கிலக்கானவர்க்கன் பினென்றுஞ்
சிறப்பதிகாரந்திடகாத்திரஞ்சுகஞ்சேரலர்கள்
விறப்புறும் வெற்றி தந்தாளுமுருப்பிணிவித்த
மறப்பறவென்றுமனனஞ்செய்நெஞ்சேமயக்கறவே       66

நித்தியநின்றனருட்கிலக்காகுநெறிமையிலார்
சத்தியஞ்செளசந்தவம் பொறையாதியசாரகிலார்
சித்தியளிக்குமுருப்பிணித்தாயாஞ் செழுந்திருவே
நத்தியநாயேனவைப்பவந்தீரநயந்தருளே.       67

உன்றிருவுள்ளக்குரித்தானவரேயுயர்குலத்தோர்
ஒன்றியவுத்தமரூதியர்மேதையரோங்கறத்தோர்
வென்றியராவருருப்பிணியன்னாய் விரும்புமென்றன்
கன்றியநெஞ்சக்கலக்கங்கடிந்தெனைக்காத்தருளே.       68

நிதியா நினதுகல்யாணகுணங்கணிகிலமறை
மதியார்விதியுமதிககிலானெனின் மாண்மதியே
தியாதவனெங்ஙனமுரைக்கேனுலகம் புரக்கும்
விதியாருருப்பிணியன்னாயென்வெவ்வினை வீட்டுதியே.       69

பத்தர்க்கினியசெந்தேனே நற்பாலே பரவுநித்தர்
முத்தர்க்கநுபாவியமாம்பராநந்தமுக்கனியே
சுத்தச்சுகவுருவாகுமுருப்பிணித்தோகையன்னாய்
சித்தச்சிறுமையைத்தீர்த்தருள்செய்யச்சிந்தித்தருளே.       70

ஐப்படுமீயினவலமுறாதல்லிக்கேணியில்வாழ்
மைப்படுகண்ணியுருப்பிணியன்னையை வாழ்த்துதியேல்
வைப்படுதூறெரியிற்படுமாநம்வருத்தமறுங்
கைப்படுநெல்லிக்கனியெனக்காண்டிகவலனெஞ்சே.       71

எட்டனையேனுமிதயத்தினின்னடியீரமில்லாத்
துட்டனைத்தொன்றுதொட்டுன்பொருளாமுயிர்ச்சோரனெனும்
பட்டனை நீயேயுருப்பிணியன்னாய்பனிப்புடன்கை
விட்டனையேன்மற்றுக்காப்பாரெவரிவ்விபூதியிலே.       72

செய்யாளையல்லிக்குளத்தாளையன்புதிகழ்திருக்கண்
மையாளைமைத்தமலர்க்குழலாளைத்தண்மாதுளம்பூ
மெய்யாளைமெய்ம்மையின் மேதக்க நம்மையிம்மேதினிமேல்
வையாளைவானத்துவைப்பாளை வாழ்த்தென்மடநெஞ்சமே.       73

இலக்குமியைத்திருவல்லிக்குளத்திந்திரையை நன்னூல்
துலக்குமிறைவியைத்தோந்தீருருப்பிணித் தூயவளைச்
சலக்குமிழிக்குநிகர்தநுவீழ்சமயத்தினமைக்
கலக்குமியமபடர்க்கடிவான் முற்கருதுநெஞ்சே.       74

இளையாளையல்லிக்குளப்பதியாளையிலாங்கலிக்கை
வளையாளைவான்மதிமானுமனோகரமாம்வதனக்
களையாளைநெஞ்சேகடைப்பட்ட நம்மையுங்காத்தளிக்கச்
சளையாளைநங்களுருப்பிணித்தாயைச் சரணடையே.       75

அகிலாண்டகோடியுயிர்கள்படைத்தவையாங்கமைய
நகிலாண்ட பாலன்றி நல்லருட்பாறந்து நாட்டுமன்னாய்
முகிலாண்டமேனியன்பாஞ்சாலிமானத்தை முன்னருளாந்
துகிலாண்டவாறென்றன்மானமுங்காத்துத்துணைநிற்றியே.       76

நனையார்பொழிலல்லிக்கேணியுருப்பிணிநங்கையெனும்
அனையே நங்கண்ணனடுக்கலி னாக்கள்ளித்தமைபோல்
வினைமேகம்பெய்துக்கச்சோனைமழையின்மெலிந்துநிற்கும்
எனைநீயருட்குடையேந்திப்புரக்கவிசைந்தருளே.       77

சொக்கக்கருணைசுதந்தரமின்மைச்சு குணமற்றும்
ஒக்கப்பிறர்க்குரித்தாகாமைகொண்டெம்முடையவற்குப்
பக்கச்சொற்சொல்லுமுருப்பிணித்தாயைப்பழிச்சினெஞ்சே
துக்கப்பிறவித்துயர்தொலைந்தோடத்தொடங்கிடுமே.       78

மூன்று குணத்தையுமூதலிப்பானெண்ணிமுற்பவத்தின்
மூன்றுமுறை பிரிந்தாளை முந்நீர்வளைமூதுலகோர்
ஏன்றுதொழுநம்முருப்பிணியன்னையையேத்துதியேற்
றோன்று துயரநெஞ்சேநம்மைவிட்டுத்தொலைந்திடுமே.       79

பிரிந்துழிச்சேதநனைப்பிரியாவுழிப்பேணியெங்கும்
விரிந்துறைவிண்டுவை வேட்டுத்திருத்தும்விமலையை நூல்
தரிந்தவர்போற்றுமுருப்பிணியன்னையைத்தேர்தி நெஞ்சே
சரிந்தலைந்தோடுநமைத்தாக்குஞ்சன்மத்தனித்துயரே.       80

வரதந்திரவுபதேசத்திருவர்க்கும்வாய்கரும
பரதந்திரமொழிப்பாளையல்லிக்குளப்பண்ணவியைச்
சுரதந்திரர்தொழுந்தூப்பதத்தாளைத்தொழுநெஞ்சே
சரதந்திரணமெனத்தீர்ந்தறுநம்மைச்சார்துயரே.       81

தெருளார்மொழியிற்றிருந்தாதிருக்கின்றசேதநரை
அருளாற்றிருத்தியுமவ்வாறுறையண்ணலையழகாம்
மருளாற்றிருத்துமுருப்பிணியன்னை மலரடியை
இருளாரிடரறவெப்போழ்துமேத்துதியென்னெஞ்சமே.       82

அறியாப்பொருள்களனைத்தையுமன்பர்க்கடைவுடனன்
னெறியார் குரவற்கொடுதெரிவிக்குநிமலைதன்னை
வறியார்தனத்தையுருப்பிணியன்னையை வாழ்த்தினெஞ்சே
பிறியாவினைத்துயர் பீரிட்டுப்பேதுற்றுப்பேர்ந்திடுமே.       83

தன்னிலைமேலாம்பரநிலைசார்புருடார்த்தநிலை
யுன்னுமுபாயவிரோதிநிலைகளுணர்த்துவிக்கும்
அன்னையுருப்பிணியம்புயத்தாளையடைதி நெஞ்சே
முன்னை வினைப்பயனாந்துயர் முற்று முடிந்தறுமே.       84

பெருமாறுடைத்துப்பிறங்கொளிவை குந்தப்பேறு தருந்
திருமால் பரனென்னுஞ் செஞ்ஞானக் ல்வியைத்தேக்குவிக்கு
பெருமாட்டியை நம்முருப்பிணியன்னையைப் பேணுநெஞ்ச
கருமாட்டுறுவினைதாமேகழியுங்கலகலத்தே.       85

பொருடீஞ்சொற்பூவையர் பூமிப்புரிவிற்புகுந்து நிற்கும்
மருடீர்த்தெம்மானுடன் வாதுகள் பேசிவழக்குரைத்துப்
புருடீகரிக்குமுருப்பிணியன்னையைப்போற்று நெஞ்சே
இருடீர்ந்தவரஃதிலாதவரோடுமியைவிப்பளே.       86

பெற்றவர்பிள்ளையின் பீழையைக்கண்டுபெறாதவுற
வற்றவர்போலப்பராமுகமாகவமைந்திருத்தல்
சுற்றவனீர்ப்புவிதன்னிலுண்டோசொல்லுதியவித்தை
அற்றவர்போற்றுமுருப்பிணி நாமவகளங்கையே.       87

நோக்குமிடந்தொறுமுள்ளவணீயென்று நூனுவலுந்
தேக்குமென்னுள்ளத்துயரைத்தெரிவித்துந் தீர்த்திலையாற்
சூக்குமமொன்றிருக்கின்றதெனக்கதுதோன்றவில்லை
ஆக்கியளிக்குமுருப்பிணியென்னுமென்னம்மனையே.       88

அடியன்முறைநின்செவியமையாமலடுத்துநின்றென்
இடியன்னவல்வினையீர்க்கின்றதுபோன்மியங்குமதைக்
கடியன்புகூர்ந்தெனைக்காத்தாளுதிகருணாலயையே
பிடியன்னமேயெம்முருப்பிணிநாமப்பிராப்பியையே.       89

பெற்றோருபயவிபூதிப்பெருஞ்செல்வராய்ப்பிறங்க
அற்றோரென நந்தநரல்லலம்புதியாழ்ந்திருத்தல்
கற்றோர் தொழுமெம்முருப்பிணிப்பேர்க்கருணைக்கடலே
எற்றோவதனையிதயத்திரங்கியிசைத்தருளே.       90

இருட்செல்விழுங்குறுமீர்ங்குழலாளெளியோர்க்கிரங்கும்
அருட்செல்வியானாவமுதமமரடியார்க்கருளுந்
தெருட்செல்வியல்லிக்குளம் வாழுருப்பிணித்தேவியன்னை
பொருட்செல்விபூங்கழனெஞ்சே நமக்குப் பொன்றாப்புகலே.       91

பிறர்துயர் சற்றும்பொறாக்குணத்தாயென்றுபெட்புறு நூல்
திறமுறக்கூறுமென்சிந்தைத்துயர்கண்டுந்திக்கரித்தல்
அறமன்றடைக்கலமென்றவடியனையாதரித்தாள்
அறவுருவாகுமுருப்பிணிநாமவயோநிசையே.       92

தீராவியற்கைச்சிறுமியர் சிற்றின்பந் தீர்த்துமற்றை
ஆராவியற்கையவாவினடியறுத்தல்லலென்றும்
பேராவியற்கைப்பிறப்பறுத்தாளுதிபேணுமருள்
சோராவியற்கையுருப்பிணிநாமச்சுகோதயையே.       93

மயற்கைப்படைகொண்டுமாய்க்குநின் மாயை மறைக்கவந்த
செயற்கைக்குணங்கடிருமிவராதறத்தீர்த்துவிட்டென்
இயற்கைக்குணங்களெந்நாளுமிலங்கவினிதருள்வாய்
புயற்கைக்கொடைகொளுருப்பிணித்தாயெனும் பூமகளே.       94

அண்டமெலாம் பெற்றளிக்குமுருப்பிணியம்மனையே
விண்டமெலாம்பெற்றுக்கீழ்மேலுலகம் பிறங்குநவ
கண்டமெலாஞ்சுழன்றெய்த்தேன்கதியிலைகாலனிழை
தண்டமெலாந்துடைத்துன்றிருத்தாணிழறந்தருளே.       95

கடைக்கலங்கிட் க்கனநோய்க்கணங்கள்கறுவிமொய்க்கக்
கிடைக்கலந்தையக்கிழவன்றன்கேதக்கிரீடை செய்ய
முடைக்கலம் வீழ்முன்னுருப்பிணிநாமமுதல்விநின்றன்
அடைக்கலநாயேனணியடி நீழறந்தாதரியே.       96

சீர்க்கவிவாணர் புகழல்லிக்கேணி சிறந்துவளர்
பார்க்கவியேயெம்முருப்பிணித்தாயெனும்பண்ணவியே
கார்க்கவிகைக்கைக்கமலாதனாய்கடையேன்கவிதை
நார்க்கவினற்றதெனினுமதனை நயந்தரு ளே.       97

எழுத்துக்கிளவி பொருளாதியேதங்களேய்ந்தவென்றன்
வழுத்துக்கவிகளைவானிளமைந்தர் மழலையெனப்
பழுத்துக்கனிந்தபழமெனவேற்றடியேன் பகரும்
வழுத்துக்கநீக்கியெற்காத்தாளுருப்பிணிமாமகளே.       98

முழுமூடனின் முளரிக்கழலின் கண்முறைமொழிந்த
வழுமூடியகவிதம்மைவண்மாலையெனமகிழ்ந்து
குழுமூடியதுயர்தீர்த்தென்கருமங்கை கூடும்வண்ணம்
எழுமூதருள் செய்துகாத்தாளுருப்பிணியென்னம்மையே.       99

சங்கீதவோதைதமிழ்மறைச்சும்மைசதுமறையில்
அங்கீதவேதவமலையராவல்லிக்கேணியில்வாழ்
எங்கீதைவள்ளன்மகிழுமுருப்பிணியென்னம்மையே
அங்கீகரித்தருளென்செய்யுள்யாவுமகமகிழ்ந்தே.       100

வாழிகயிரவக்கேணித்திருப்பதி வண்மையென்றும்
வாழியுருப்பிணித்தாயுளமேய்ந்தமணாளனொடும்
வாழியவளடி சேருங்குரவர்தம் வர்க்கமெலாம்
வாழியெப்போதுமென்மீதவண்மைக்கண்வளரருளே.       101

கொண்டானொடுங்கைரவக்கேணியுள்ளங்குளிர்ந்துகுடி
கொண்டாளுருப்பிணித்தாய்மலர்த்தாளிற்குலவும்பள்ளி
கொண்டான்கடாம்பியிராமாநுசனைக்குலதனமாக்
கொண்டான் சொற்பூந்தொடை சூட்டினன்றன் பவக்கோதறவே       102

உருப்பிணித்தாயார் மாலை முற்றிற்று.

This file was last created on 10 March 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)