> வித்துவான் தெய்வசிகாமணி இயற்றிய சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை (in unicode UTF-8 format)
pm logo

வித்துவான் தெய்வசிகாமணி இயற்றிய
சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை


cennimalai murukan pulavarARRupaTai
by vitvAn teivacikAmani
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வித்துவான் தெய்வசிகாமணி இயற்றிய
சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை.

Source:
சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை.
(குறிப்புரையுடன்)
ஆசிரியர்: வித்துவான், வே.ரா.தெய்வசிகாமணி,
வேலம்பாளையம், எழுமாத்தூர் (வழி) ஈரோடு R. M. S.
பராபவ வருடம் ஆனி மாதம்.
உரிமை ஆசிரியருக்கே.] [விலை 75 காசு.
1966.
வெளியீடு: சென்னிமலைத் தலபுராண வெளியீட்டுக் குழுவினர்.
சிவாஜி பிரஸ், சென்னிமலை. போன் நெ.69.
~~~~~~~~~~~~~~~~~~~~~

முகவுரை

உ - கணபதி துணை.
குறுந்தொகை.

“தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின்
நெஞ்சு பகவெறிந்த செஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைக லெய்தின்றா லுலகே.''
      - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

செந்தமிழ் மொழிக்குரிய பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகையன. புதிதாகச் செய்யப்பெறும் அப்பிரபந்தங்கள் "விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே' எனத் தொல்காப்பியனார் கூறிய விருந்து என்னும் யாப்பின் பாற் படுவனவாகும். அவற்றுள் ஆற்றுப்படையும் ஒன்றாம். அவ்வாற்றுப் படையானது புலவராற்றுப் படை, பாணராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியராற்றுப்படை, கூத்தராற்றுப்படை என ஐந்து வகைப்படும்.

புலவராற்றுப்படை யென்பது பரிசில் பெற்று வந்த புலவனொருவன் பரிசில் வேண்டி வந்த புலவன் ஒருவனை எதிர்ப்பட்டு நீயும் ஆண்டுச் சென்றால் சிறந்த பரிசில் பெற்று வரலாம் எனத் தனக்குப் பரிசில் நல்கிய தலைவனுடைய நாடும் ஊரும், பெயரும், ஈகையுமாகியவற்றைப் புகழ்ந்து கூறி அத்தலைவன்பாற் செல்லுமாறு வழிப்படுத்துவதாக மூன்றடிச் சிறுமையும் ஆயிரமடிப் பெருமையும் உடைய அகவற்பாவினாற் பாடுவது. இதன் இலக்கணம் பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்களிற் கூறப் பெற்றுள்ளது.

“புகழகவ லாற்புலவர் பாணர் கூத்தர்
பொருநர்முத லவருரையாற் றெதிர்ப்பா டாகப்
பகரும தாற்றுப் படையாம்'      - சிதம்பரப் பாட்டியல் 35.
ஆற்றுப்படை பாடாண்டிணையின் பாற்படும்.

புலவராற்றுப்படை என்பது பாடாண்டிணைக்குரிய கடவுள் வாழ்த்து, அறுமுறை வாழ்த்து, மக்கள் வாழ்த்து என்னும் மூவகை வாழ்த்துக்களுள் ஒன்றாகிய அறுமுறை வாழ்த்தின்பாற் பட்டது. வாழ்த்து என்பது புகழ் கூறுவதும், வாழ்கென வாழ்த்துதலுமாம். “வாழ்த்தலே துதித்த லாசி" என்பது அரும்பொருள் விளக்க நிகண்டு. அறுமுறை வாழ்த்து - அமரர் வாழ்த்து. இதனை "அமரர்கண் முடியும் அறுவகையானும் ' என்னும் தொல்காப்பியப் புறத் திணையியல் 21-ம் சூத்திரவடிக்குப் புலத்துறை முற்றிய நலத்துறலாளராகிய இளம்பூரணவடிகள் அமரர்கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை. புகழ்தல், பரவல் என்பனவற்றினும்" என எழுதிய உரையினாலும்.

“அமரர்கண் முடியும் அறுவகை யாகிய
கொடி நிலை கந்தழி வள்ளி குணஞ்சால்
புலவரை யவர்வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல்
புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர்ப் பணிதல்"
என ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடாண் சூத்திரத்தாலும் அறிக.

அறுமுறை வாழ்த்து நெறிகளில் ஒன்றாகிய புலவராற்றுப்படை யென்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய் நூலுக்குப் பெயராய் விளங்குகிறது. இது சிறப்பாகத் தேவர்களுக்குரியதெனத் தெரிகிறது. ஆசிரியர் ஐயனாரிதனார் அறுமுறை வாழ்த்துக் கூறுமிடத்து. ''அமரர்கண் முடியும் அறுவகையாகிய” என்று கூறியதல்லாமல் அப்புலவராற்றுப் படைக்கு விளக்கம் கூறும் பாடாண் படலத்திலுள்ள நாற்பத்திரண்டாவது கொளுவில்,
“இருங்கண் வானத் திமையோ ருழைப்
பெரும் புலவனை யாற்றுப் படுத்தன்று”
என்ற இமையோராகிய தேவர்பால் ஆற்றுப்படுத்திக் கூறுதலானும், ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனாரும் இதனையுட் கொண்டே "அமரர்கண் முடியும் அறுவகை யானும்" என்று புலவராற்றுப்படையை அடக்கிக் கூறுவதானும் அறியலாம்.

அமரர்க்கே சிறப்பாகவுரிய புலவராற்றுப்படையானது அவ்வமரர்க்கே யன்றி, அமரரினும் உயர்ந்த கடவுளுக்கும், அமரரின் தாழ்ந்த மக்களுக்கும் உரியதாக இலக்கியங்களில் காணப்படுகின்றது.

சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை என்பது கொங்கில் முதன்மையாக விளங்கும் பூந்துறை நாட்டின் கண்ணுள்ள குன்றுதோறாடல் திருப்பதிகளில் ஒன்றாய் விளங்கும் சென்னிமலையின்கண் தண்டபாணியாய் வீற்றிருந்து தமது திருவடி நீழலில் உறையும் உயிர்களுக்கு இம்மை மறுமை என்னும் இருமை இன்பங்களையும் தந்து அருள் புரியும் முருகக் கடவுள் மீது பாடப்பட்ட புலவராற்றுப் படையாம். இந்நூல் பரந்த மொழிகளால் ஆயிரத்தை யடுத்த அடிகளின் நிமிர்ந்து செல்லுதலினால் தொல்காப்பியங் கூறும் தோல் என்னும் செய்யுள் வகையைச் சேர்ந்தது.

இந்நூலானது ஆசிரியன் மாணாக்கனுக்குச் செய்யும் உபதேசம் போன்ற உபதேசக் கிரமத்தில் அமைந்ததாகும். உத்தம இயல்புடைய நல்லாசிரியன் ஒருவன் மும்மல வாதனையால் வரும் பிறவித் துன்பத்திற் கஞ்சி வீடு பெற விரும்பும் நன்மாணாக்கன் ஒருவனை எதிர்ப்பட்டு அவனது வேட்கையை அறிந்து, அவன் விரும்பியபடியே மெய்ப் பொருளை உபதேசித்து வீடுபேறெய்தச் செய்வன். அதுபோல இந் நூலும் மேலான நூலறிவையும், முருகக் கடவுளின் அருளையும் பெற்ற புலவனொருவன் வறுமையால் வாடித் தீர்வு காணாது வருந்தியலையும் புலவனொருவனை எதிர்ப்பட்டு அவனது வறுமை நிலையைக் குறிப்பினாலறிந்து அருள் வள்ளலா கய சென்னிமலைச் செவ்வேட் பெருமான் இயல்பினை உபதேசித்து அவன்பாற் சென்று அற முதலாகிய நாற்பெரும் பயன்களையு மடையுமாறு வழிப்படுத்துவது கூறுதல் காண்க.

இந்நூலின்கண் சென்னிமலையின் சிறப்பு, தீர்த்தங்கள், தெய்வீகங்கள், அருளாடிகளின் இயல்பு, தண்டபாணியின் திருவுருவக் காட்சி, வழிபாட்டு முறை, தலபுராணச் சிறப்பு, சென்னிமா நகர்ச் சிறப்பு, முருகக் கடவுளின புகழ், அவன் அருள் செய்யும் திறம் முதலிய தல சம்பந்தமான செய்திகளும்; மற்றும் தமிழ் நூல்களின் இயல்பும், புலவர்தம் புலமைத் திறமும், அவரது வறுமை நிலைமையும், அதைக் கடத்தற்குத் திருவருள் நெறியே செந்நெறி யென்பதும் ஆகிய செய்திகளும்; கொங்கு, பூந்துறை நாடுகளும், காவிரி காஞ்சியென்னும் ஆறுகளும், நானில வளமும் முதலாகிய நாட்டைப் பற்றிய செய்திகளும் ஆங்காங்கே கூறப்பட்டு உள்ளன.

இந் நூலைப் பயில்வோர் மேற்கூறிய பலவகையான செய்தி களையறிந்து இன்பமடைவதோடு சென்னிமலை முருகன் திருவடிகளுக்காட்பட்டு அவனருளால் எல்லாவகையான நலன்களு மடைந்து இன்பம் எய்துவர்.

எம்மைப் பூந்துறை நாட்டில் பொலிவுற வாழ்விக்கும் சென்னிமலைக் கந்தனுக்குச் சீர்மிகு நூலொன்றை இயற்ற வேண்டுமென என் உள்ளத்தில் தோன்றிய வேட்கையே இந்நூல் இயற்றக் காரணமாயிருந்தது. இத் தமிழ் மாலையை முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் வள்ளல் பெருமானாகிய சென்னியங்கிரியான் தன் திருத் தோள்களில் அணிந்துள்ள கடம்ப மாலையுடன் அணிந்து மகிழ்வான் என்பது எனது நம்பிக்கை. "முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும்
போன்னே போற் போற்றுவம்”
என்பதற் கிலக்கியமாக அறிவு மாட்சிமையுடைய முன்னோர் நூல்களின் சொல்லும் பொருளும் அமைய இந்நூலை யாத்துள்ளேன்.

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ"
என்ற கவிச் சக்கரவர்த்தி கம்பரின் கூற்றிற்கிணங்க முத்தமிழ் நூல்களையும் முறையுறக் கற்றறிந்த உத்தம வித்துவான்களாயுள்ளோர் இதில் குற்றமாராய மாட்டார்களென நம்புகிறேன். அருளுள்ளம் படைத்த அன்பர்கள் இந்நூலின் கண் செய்யவேண்டிய திருத்தங்களை அறிவிப்பாராயின் அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்வேன்.

இந்நூல் முழுவதையும் படிக்கக் கேட்டு மனமுவந்து சிறப்புப் பாயிரம் வழங்கிய புலத்துறை முற்றிய நலத்துறை நாவலரும், எனது பேரன்பிற்குரிய பெரியருமாகிய பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி யாண்டும் உரியதாகட்டும்.

30-6-1966.]       இங்ஙனம்,
      வித்துவான். வே. ரா. தெய்வசிகாமணி,
எழுமாத்தூர், வேலம்பாளையம்.
~~~~~~~~~~~~~~~~~~~
இந்நூலின் பொருட் சுருக்கம்.


பாண்டிய நாட்டின் தலைநகரமாகப் பொற்றாமரைக் குளக்கரையில் விளங்கும் மதுரை மாநகரில் சிவபெருமான் சங்கப் புலவர்களுடன் கூடி ஆராய்ந்த தமிழ்மொழியிலுள்ள பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும், மற்றும் தொல்காப்பியம் முதலாகிய சிறந்த நூல்களையும் தெளிவுறப் பயின்று, புலமைத் தேர்ச்சி பெற்றுக் கவிதை வாழ்வு வாழ்ந்த புலவனொருவன் வறுமையால் வாடிப் பரிசில் நல்கும் கொடையாளியை நாடிப் பாலைநிலமாகிய காட்டு வழியிற் சென்றனன்.

அது சமயம், பரிசில் பலபெற்றுச் சிறப்புடன் வந்த புலவனொருவன் பரிசில் வேண்டிவந்த அப்புலவனை யெதிர்ப்பட்டு அவனது வறுமைநிலையைக் குறிப்பாலறிந்து வருத்தமுற்று முத்தமிழ் சொரிதலின் மும்மதயானை போன்ற புலவனே! வறுமையால் வாட்டமுற்றுப் பூனைபோலாயினை. பொருள் மிகுந்த செல்வர் பலரிடம் சென்று பாடியும், அவர் ஒன்றும் கொடாமையினால் குறிப்பறிந்து உதவும் கொடைக் குணம் மிகுந்த குடிப்பிறப்புடைய கொடையாளியை நோக்கி, வெயில் மிகுந்த பாலைநிலமாகிய கொடிய காட்டு வழியில் வந்து பருக்கைக் கல் உறுத்தியதனால் உண்டாகிய கொப்புளங்களில் தைத்த வேலின் முட்களைப் பிடுங்கிப் பதைப்புறுகின்றாய். பாவலனே! செல்வமும் ஆடையும் சிறப்புறப் பெற்றுவரும் என்னை நீ அறியாயோ? யான், வறுமை மிகுந்த புலவர் குடிப்பிறந்த புலவன் மகன். பூமியை யாளும் புரவலனுடைய மகனல்லன். நீயும் நானும் ஒத்த குடிப் பிறப்புடையோம். என்னை நீ வேறாக எண்ண வேண்டாம். அகத்தியன் வளர்த்த அருந்தமிழ் உன்னைச் சிறப்புற வாழச் செய்யும். அறிஞர்கள் வறுமையின் கொடுமை நோக்கி அதனை மிகவும் வெறுத்தனர். வறுமையிலும் மனந்தளராது திருவருள் நெறியில் சென்று உயர்ந்தோருமுளர். வறுமையும் நன்மை தருவதாகக் கொண்டு அதனை வேண்டுமென்று விரும்பினருமுண்டு.

வறுமையின் காரணமாக நீ உய்திபெறும் காலம் வந்தது. நீ முன்செய்த நல்வினை கூட்ட என்னை எதிர்ப்பட்டாய், நூல் முழுதுமுணர்ந்த புலவனே! முன்பு நானும் உன்னைப்போல் வறுமையால் வாடி நோய்மிகப் பெற்று அவை தீர்தலின் பொருட்டுச் செல்வர்களிடமும், மருத்துவர்களிடமும் சென்றேன். சென்றும், வறுமையும் நோயும் தீரப் பெறாமல் மிகவும் வருந்தித் துயர்தாழாமல் புண்ணிய நதியொன்றில் மூழ்கித் தீவினை தீர உயிர்விடுதலே தக்கதென்று காவிரி நதியை நோக்கி வடதிசை வழியிற் சென்றேன்.

அவ்வழியில் வளங்கள் யாவும் நிறைந்த உயர்ந்த மலையொன்றினைக் கண்டேன். அம்மலையின் காட்சி என் உள்ளத்தைக் கவர்ந்தது. அக் காட்சியால் என் துன்பங்களும் சிறிது சிறிதாகத் தீர்ந்தன. ஆதலின் உள்ளத்தில் மிகவும் அதிசயமடைந்த நான் அவ்விடத்துள்ள பெரியரொருவரை நோக்கி நீர் இம்மலையின் பெயரையும் மகிமைகளையும் எனக்குச் சொல்ல வேண்டுமென்று வேண்டினேன்.

அவ்வறிஞர், இம்மலைக்குச் சென்னிமலை யென்பது பெயர். இம்மலையைச் சார்ந்து விளங்கும் சரவண தீர்த்தத்தில் நீராடி மலைமேற் சென்று ஒருமுகவுருவில் தண்டபாணியாய் வீற்றிருக்கும் முருகக் கடவுளுடைய குஞ்சிதமாயுள்ள திருவடிகளைக் காண்போர் வறுமையுறாதவராய் எந்நாளும் செல்வம் பொருந்த வாழ்வர் என்று கூறினார்.

பின்பு நான், மலர்கள் நிறைந்த சரவண தீர்த்தத்தில் நீராடி மலைமேற் சென்று செங்காந்தள் மலர் சென்னியிற் பொலியத் தண்டு தாங்கிய வலக்கரமும், இடையிற் சேர்த்த இடக்கரமும், பவளம் போன்ற பாதங்களும் திகழ விளங்கும் முருகக் கடவுளைக் கண்களி கொள்ளத் தரிசித்து வணங்கி நின்று, "சென்னிமலையிற் செம்பொருள் முருகா! நின்னுடைய பதினாறு நாமங்களை என்றும் அன்புடன் சொல்லி நின் திருவடி நீழலில் யாமும் எம் சுற்றத்தாரும் வழிவழியாகச் சார்ந்து வறுமையும் நோயுமின்றி இன்புற வாழுமாறு அருள் செய்வாய்” என்று வேண்டினேன்.

அப்பொழுது அருச்சகனொருவன் வந்து நீறும் சந்தனமும் மலர்மாலையும் தந்து நீ இம்மலையுச்சியில் கோவில் கொண்டு விளங்கும் வள்ளி தெய்வயானையாரையும் வணங்கிப் பயன்பெறுக வென்றனன். அவன் கூறியவாறே மலை உச்சியில் சென்று தாமரை மலர் விளங்கும் திருக்கரமுடைய வள்ளியம்மையார் வலப்பக்கமாகவும், கழுநீர் மலர் (நீலோற்பலம்) கரத்தில் திகழ விளங்கும் தெய்வயானை இடப்பக்கமாகவும் வீற்றிருந்தருளும் அழகிய காட்சியைக் கண்டு அன்புடன் வணங்கித் துதித்து நின்றேன்.

அது சமயம் திருநீறும், உருத்திராக்க மணியும், வெண்ணிற வாடையு மணிந்த அருளாடிகள் மடத்தின் தலைவராகிய அடியவரொருவர் முகமலர்ச்சியுடன் என்முன் வந்து என் கரத்தைப் பிடித்துச் சென்று மண்டப மொன்றில் அமரச் செய்து சென்னிமலை முருகன் உனக்கு மிகுதியும் அருள் செய்தனன். நீ நல்வாழ்வுறுகெனக் கூறித் திருநீற்றை என்னுடைய நெற்றியில் பூசி வாழையிலையை விரித்துப் பலவகையான சுவையுணவினைப் படைத்து உண்ணச் செய்தனர். உண்டபின் என் முகத்திலுண்டான மலர்ச்சியைக் கண்டு மகிழ்ந்த அடியவர், என்னை நோக்கி நீ முன் செய்த பெருந்தவம் கூட்டிவைத்தபடியால் இம்மலையை வந்தடைந்தாய். இம்மலையின்கண் போனவுயிருடல் புகுந்திடச் செய்யும் சஞ்சீவனி முதலாகிய நால்வகை மருந்துகளும், கையாதவெட்டியும், கருநொச்சியும், வெண்சாரைப் பாம்பும், காணாச் சுனையும், காகமேறாத கூடமும், மாமாங்கச் சுனையும், சித்தர் குகையும், தெய்வ மூலிகையும், பவளக் குறிஞ்சியும், கல்லில் முளைத்த புல்லுருவியுமாகிய அற்புதங்கள் பலவுமுள்ளன. இம்மலையில், முருகனுக்கும், வள்ளி தெய்வயானைக்கும் கோவிலும் பிரதிஷ்டையும் தேர்விழாவும் செய்து வாழ்ந்த சரவண முனிவன் செய்த தலபுராணமும் உண்டு. சென்னிமலை முருகனைத் தரிசித்து வணங்குவோர் செல்வமும், வலிமையும், கல்வியும் பெற்று மனைவி மக்களுடன் இன்புற வாழ்ந்து முடிவில் சிவஞான சித்தியும், சீர்பெறு முத்தியும் பெறுவர் என்று சொல்லிச் செந்நிறமுடைய பட்டுடையை யெடுத்து என்னுடைய இடுப்பில் உடுத்திப் பொன்னும் மணியும் முதலாயுள்ள பலவகைப் பொருள்களையும் ஆடைகளையும் பரிசிலாகத் தந்து வாழ்த்தினர். நான் அவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு வந்தேன்.

புலவ! வாழி, யான் சொல்வதைக் கேட்பாய். நீயும் சென்னிமலையின்கட் சென்று முருகக் கடவுளைத் தரிசித்துப் பாமாலை சூட்டி வணங்குவையாயின் வறுமையும் நோயும் வாய்விட்டோடச் செல்வமும் இன்பமும் சீர்த்தியும் பெறுவாய். சென்னிமலை, கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றாய். முதன்மையுற்று விளங்கும் பூந்துறை நாட்டில் வளமிகுந்த காஞ்சிமா நதியின் வடதிசைக்கண் உள்ளது. அம்மலையைச் சூழ்ந்து குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும், மருத நிலமும், பாலை நிலமும், தத்தமக்குரிய வளங்களுடன் சிறந்து விளங்கும். வளமிகுந்த சென்னிமலை மேற் செல்குவையாயின் முதலில் வழியிலுள்ள மலைவழி விநாயகரையும், இடும்பனையும் முறையே வணங்கி மலைமேற் சென்று அங்குத் தல விநாயகராக விளங்கும் சந்தி விநாயகரை வணங்கவேண்டும். பின்பு, அங்குத் தண்ட பாணியாய் விளங்கும் முருகக் கடவுளின் திருமுன்பில் சென்று “கன்னியம்பிகை சேய் என்பது முதல் கந்த” என்பது வரையிலுமுள்ள அவனுடைய புகழுரைகளைக் கூறித் துதிப்பாய். அத்துதி மொழிகளைக் கேட்டருளிய சென்னிமலைக்குரிய முருகக் கடவுளானவன், நம் புலவன் வந்தனன் என்று சொல்லித் தன் மனதில் அருள் பெருகக் கண்களால் நோக்கி உன் தீவினைகள் விலகும்படி செய்து உனக்கு வேண்டிய அறமுதலாகிய நால்வகைப் பயன்களையும் பரிசிலாகத் தந்தருளுவான்.
~~~~~~~~~~~~~~~

கோயமுத்தூர் அரசினர் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும்,
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், பேரூர்வாழ் முதுபெரும் புலவரும்,
இலக்கண நிறைகடலுமாகிய பண்டித, அ.கந்தசாமிப் பிள்ளையவர்கள்
இந்நூலுக்கு மனமுவந்தளித்த சிறப்புப் பாயிரம்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

பூமகள்தன் வதனமெனப் பொலிகொங்கு
      மண்டலத்திற் புகழின் மிக்குத்
தேமலிநற் றிலகமெனத் திகழரைய
      நன்னாடன் செம்மை யாய
ஏர்மலிசீர்ப் புகழ்வேளாண் குலன்கூர
      கோத்திரத்தான் இசைமை மேவும்
ராமசா மிப்பெரியோன் அங்கம்மை
      செய்தவத்தின் நல்கு மைந்தன்

வளம்பெருகு வேலனகர் வாழ்வுபெறும்
      தாளாளன் மதியின் மேன்மை
உளமருவு சின்னத்தம் பிப்பூபன்
      வளர்த்தெடுத்த உவகைப் பேரன்
களமருவு செந்தமிழ்நூற் கலையுணர்ந்த
      பெரும்புலவன் கற்பிப் போனால்
இளமையிலே கவிபாடி உரையியற்றி
      ஏடுபல உணரும் சீலன்

சரிதநூல் உணரறிஞன் பழஞ்சுவடி
      யச்சேற்றித் தந்த மேலோன்
திருநீறும் அஞ்செழுத்தும் சிவனடியும்
      மறவாத சிந்தை யன்பன்
திருமலியும் சென்னிமலை யாண்டவனார்
      சேவடிக்கே செவ்வி மிக்க
அருமைமிகும் சுவையாற்றுப் படையென்னும்
      பாமாலை யணிந்தான் தானே.

திருப்பேர்தான் தெய்வசிகா மணியென்று
      தமிழுலகம் செப்பும் சீரோன்
விருப்பமொடு பணிமொழியும் நல்லொழுக்கும்
      உயர்பண்பும் விளங்கும் மேலோன்
பொருப்பகழ்ந்த சிவகிரிவே லாயுதனார்
      திருவருளால் பொலிந்து வாழ்க!
அருட்பெருகு தமிழ்த்தாயின் அடிக்கிதுபோல்
      பல்பணியும் அணிந்து வாழி.

வெண்பா.
சென்னிமலை யாண்டவனார் செவ்வேள் திருவடிக்குப்
பன்னுசுவை யாற்றுப் படைத்தமிழ்நூல்- நன்மைமிகத்
தேற்றியுயர் தெய்வ சிகாமணியாம் சீர்க்கவிஞன்
சாற்றினான் வாழி தழைத்து.
~~~~~~~~~~~

முருகன் துணை.

புலவராற்றுப்படை (ஆராய்ச்சிக் கட்டுரை)

“நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக்
காலை யிருள்சீக்குங் காய்கதிர்போற்- கோல
மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற் சூர்வென்றோன்
அணிச்சே வடியெம் மரண்,"       - இரும்பல் காஞ்சி.

சென்னிமலை முருகன் புலவராற்றுப்படைக்கு முகவுரை எழுதிக் கொண்டிருக்கும்பொழுது புலவராற்றுப்படையைத் தன்னகத்துக் கொண்ட அறுமுறை வாழ்த்துப்பற்றிய சில சிந்தனைகள் என்னுள்ளத்தில் தோன்றின. அவை இக் கட்டுரையில் வெளியிடப்படுகின்றன. வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பது தந்திர வுத்தியாகலின், வாழ்த்து; கடவுள் வாழ்த்து, மக்கள் வாழ்த்து, அமரர் வாழ்த்து என மூவகையாம்.
அவற்றுள் ஒன்றாகிய அமரர் வாழ்த்து அறுவகையினவாதலின் அறுமுறை வாழ்த்தெனப் பெயர் பெறும். “அமரர் கண்முடியு மறுவகையான” என்று தொல்காப்பியமும்; “அமரர்கண் ணெனலா மறுமுறை வாழ்த்தே" என மாறனலங்காரமும் கூறுதலானறிக.

புறப்பொருள் வெண்பா மாலையிற் கூறும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்னும் ஆறும் தொல்காப்பிய மூலத்திலும் சிறிது முறை மாறிக் கூறப் பெற்றுள்ளன. அவை பரவல், புகழ்ச்சி, குறிப்பு, கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பனவாம்.

“வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.”
      -தொல்காப்பியம் புறத்திணையியல் 27.

“கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
      -தொல்காப்பியம் புறத்திணையியல் 33.

வீரசோழிய இலக்கண நூலாசிரியர் புறத்திணையில் பாடாண் பகுதிக்குச் சிறந்தனவாக இவ்வாறினையுமே கூறுகின்றார்.

“புகழ்ச்சி பரவல் குறிப்புக் கொடிநிலை கந்தழியே
யிகழ்ச்சி மலிவள்ளி யென்றிவை யாறு நெறிமுறையிற்
நிகழ்ச்சி மலைதரு பாடாண் பகுதிசெப் பாதனவும்
இகழ்ச்சியுண் டாகா வகைதேர்ந் தறித லியல்புடைத்தே"
      -வீரசோழியம் பொருட்படலம் 2.

மேற்குறித்த தொல்காப்பிய சூத்திரங்களிலும் வீரசோழியப் பாடலிலும் "புலவராற்றுப்படை" கூறவில்லையே? "குறிப்பு" என்பதொன்றன்றோ கூறப்படுகிறது? எனிற் கூறுதும். தொல்காப்பிய சூத்திரம் குறித்த “குறிப்பு” என்பது புலவராற்றுப் படையாம். இளம்பூரணவடிகள் அமரர்கண் முடியும் அறுவகையானும் என்பதற்கு உரை கூறுமிடத்து குறிப்பு என்பதற்குப் புலவராற்றுப்படை என்று பொருள் கூறுகிறார். அதற்கு உதாரணம் காட்டுமிடத்துப் புறப்பொருள் வெண்பா மாலையில் புலவராற்றுப் படைக்கு உதாரணமாகப் பாடியுள்ள,
"வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
வருளீயு மாழி யவன்."
என்னும் வெண்பாவை உதாரணங் காட்டுதலானும் அறிக. மற்றும் வீரசோழிய வுரையாசிரியராகிய பெருந்தேவனார் என்பவர் "குறிப்பாவது நன்மை வேண்டிற் றெய்வத்தை வழிபடு மென்பது” எனவுங் கூறினர்.

குறிப்பு என்பது புலவன் தான் மனத்திற் குறித்த பொருளைக் குறிப்பினாலறிந்து வழங்கும் தெய்வத்தை வழிபட்டுக் குறித்தபடியே பெறுதலாற் குறிப்பாயிற்று.

புலவராற்றுப்படை யென்பது பரிசில் பெற்ற புலவன் பரிசில் வேண்டி வந்த புலவனுடைய வறுமை நிலையை அவனுடைய முகம், கண் முதலியவற்றின் குறிப்பினால் அறிந்து கொண்டு நீயும் எனக்குக் குறிப்பறிந்து நல்கிய தெய்வத்தின்பாற் சென்று குறித்தபடியே பரிசில் பெறுகவெனக் கூறித் தெய்வத்தின்பால் வழிப்படுத்துவது கூறலின் புலவராற்றுப்படையாயிற்று.

எனவே குறிப்பு என்பதும் புலவராற்றுப்படை யென்பதும் சொல்லால் வேறுபடினும் பொருளால் ஒன்றாம் என்பது காண்க. ஐயனாரிதனார் வழிநூல் செய்தனராகலின் முன்னோர் நூலின் சிறிது வேறுபாடு கூறுதல் முறையாகலின் குறிப்பு என்பதனை அதன் பரியாயச் சொல்லாகிய புலவராற்றுப்படை என்ற சொல்லாற் கூறினார்.

இதனைப் புலவனொருவன் எதிர்வந்த புலவனொருவனை முருகக் கடவுள்பால் ஆற்றுப்படுத்தியதாகக் கூறும் முருகாற்றுப்படையினும் காண்க.

“புரையுந ரில்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்"
      - முருகாற்றுப்படை 280, 281.
“ஒரு நீ யாகித் தோன்றி விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி"
-       முருகாற்றுப்படை 294, 295.

தொல்காப்பியனார் அறுமுறை வாழ்த்து ஆறினையும் ஒன்றாக வைத்துச் சூத்திரம் செய்யாது; பரவல், புகழ்தல், குறிப்பு என்ற மூன்றையும் ஒன்றாக வைத்துத் தனிச் சூத்திரமாகவும், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றையும் ஒன்றாக வைத்து வேறு தனிச் சூத்திரமாகவும் செய்திருப்பதற்குக் காரணமென்னெனிற் கூறுதும்.

பரவல் முதலிய மூன்றும் அமரரை வாழ்த்துதற்குரிய மூவகை நெறிகளாமாதலின் அவற்றைத் தனியே வைத்தும்; கொடிநிலை முதலிய மூன்றும் கடவுளைச் சார்ந்து வழங்கும் அமரத் தன்மையுடைய பொருள்களாமாதலின் அவற்றைத் தனியே வைத்தும் சூத்திரம் செய்தார்.

வாழ்த்து நெறிகள் மூன்றும், வாழ்த்துதற்குரிய பொருள்கள் மூன்றும் ஆகிய ஆறனையும் சேர்த்து அறுமுறை வாழ்த்தெனல் மரபாம்.
இனி இவற்றின் பொருள்பற்றிக் கூறுவாம்.

1. கொடிநிலை:- அரன், அரி, அயன் என்னும் மூவர் கொடியுள் ஒன்றுடன்
உவமித்துத் தன் அரசனுடைய கொடியைப் புகழ்தல்.
2. கந்தழி:- திருமாலானவர் வாணாசுரனுக்குரிய சோ வென்னும் மதிலின்
வலியை அழித்ததைக் கூறுவது.
3. வள்ளி:- பெண்டிர் வேல் முருகனுக்கு வெறிக் கூத்தாடுவது.
4. புலவராற்றுப்படை:- தேவரிடத்துப் பெரும்புலவனை வழிப்படுத்துவது.
5. பரவல்:- இன்ன பொருளை எய்துவமெனத் தெய்வத்தை முன்னிலையில்
புகழ்வது.
6. புகழ்தல்:- பயன்பெறுதலின் பொருட்டு வானவனைப் படர்க்கையில் புகழ்வது.
      - புறப்பொருள் வெண்பாமாலை.

இப் பொருள்களையே பழைய தமிழ் நெறி பற்றிய பொருள்களாகக் கருதுவர் தமிழ்மரபு பற்றியொழுகும் ஆன்றோர்கள்.

அறுமுறை வாழ்த்தில் வரும் கொடிநிலை முதலிய முதல் மூன்று பொருள்கட்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு வகையான பொருள் கொண்டனர். வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் "கொடியாவது கொடியது தன்மை கூறுவது. கந்தழியாவது செருவிற்றிட்பமுடைமை. வள்ளியாவது முருகவேளைக் குறித்தது பிறவுமன்ன- எனவுரை கூறினர். வள்ளியாவது முருகவேளைக் குறித்தது பிறவு மன்ன என்பதனால் ஏனைய பரவல் முதலிய ஐந்தும் முருகனுக்குரியன வென்பது பெருந்தேவனார் கருத்தெனத் தெரிகின்றது.

அறுமுறை வாழ்த்து முருகனுக்குரியதாதல் பற்றியே ஆசிரியர் நக்கீரனார் அவ்வாறனுள் ஒன்றாகிய குறிப்பு என்னும் புலவராற்றுப்படையை முருகக் கடவுளுக்குப் பாடினார் என்பது தெள்ளிதிற் புலனாகும்.

தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஒருவர் மட்டும் முற்கூறிய நூலாசிரியர் உரையாசிரியர்களின் வேறுபட்டு அறுமுறை வாழ்த்துக் கூறினர். இவர் தொல்காப்பியப் புறத்திணையியல் 26-ஆம் சூத்திரவுரையில், “அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் வேந்தரும் உலகமுமாம்"- என்பர். இவர் கூறும் அறுமுறை வாழ்த்துப் பொருளுக்குப் பழைய தமிழ் நூல்களில் யாண்டும் ஆதாரம் காண்கிலேம். மேலும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் தெய்வங்களென்றும்; அவை அறுமுறை வாழ்த்தின் வேறாகக் கடவுள் வாழ்த்துடன் வருமென்றும் கூறுகின்றார். இவர் கொள்கையை மேற்கொண்டு பிற்காலத்தில் அறுமுறை வாழ்த்துச் சூத்திரம் செய்தாரும் உளர். அவர் மாறனலங்கார ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார்.

நச்சினார்க்கினியர் "கொடிநிலை" என்று தொடங்கும் அறுமுறை வாழ்த்துப் பற்றிய தொல்காப்பியம் புறத்திணையியல் 27-ஆம் சூத்திரவுரையில்,

"கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்.
கந்தழி - ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள்.
வள்ளி - தண்கதிர் மண்டிலம்; என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - என்று
சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று
தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - முற்கூறிய அமரரோடே
கருதுமாற்றால் தோன்று மென்றவாறு" - எனவுரைத்தார்.

நச்சினார்க்கினியர் "அமரர்கண் முடியும்” - என்னும் தொல்காப்பியப் புறத்திணையியல் 26-ஆம் சூத்திரவுரையில், அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை மூவேந்தரும் உலகுமாம் என அறுமுறை வாழ்த்துக் கூறினர். மேற்கூறிய 27-ஆம் சூத்திரவுரையில் முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும் என்று கூறுகின்றார். முன் என்பது எந்த முன்? முன்னுள்ள 26-ஆம் சூத்திரத்தைக் குறிக்கின்றாரா? முற் சூத்திரத்தைக் குறித்தாராயின் அச்சூத்திரவுரையில் முனிவர் முதலாயின பொருள்களன்றோ அறுமுறை வாழ்த்துப் பொருள்களாக அமைந்திருப்பதாகக் கூறுகின்றார். கொடிநிலை முதலிய மூன்றும் அமைவதெங்ஙனம்? அச்சூத்திரத்திற் கூறும் பொருளை முன் கூறப்பட்ட என்று கூறுவானேன்? அச்சூத்திரத்தின் பின்பு வேறு பொருள்கள் கூறினாலன்றோ முற் கூறப்பட்ட என்று கூற வேண்டும்? கடவுள் வாழ்த்தொடு என்பதற்கு அமரரோடே என்று உரை எழுதினார். கடவுள் வேறு அமரர் வேறு. கடவுள் ஒருமை. அமரர் பன்மை. கடவுள் தத்துவங் கடந்த தனிப் பரம்பொருள். அமரரென்போர் புண்ணிய முதிர்ச்சியால் கடவுளின் சம்பந்தம் பெற்று நீண்ட வாழ்நாள் பெற்று புண்ணிய முடிவில் உயிர் துறப்போர். உபசாரத்தால் அமரரெனப் பெற்றனர்.

கடவுள் என்பதற்கு அமரர் என்று பொருள் கூறியது எங்ஙனம் பொருந்தும்? கடவுள் வாழ்த்தோடு கண்ணியவரும் மூன்று பொருள்களில் ஒன்றாய் வரும் கந்தழி என்பதே ஒரு பற்றுக் கோடுமின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் என்று உரை கூறினார். கடவுள் என்பதே ஒரு பற்றுக் கோடுமின்றித் தத்துவங் கடந்த பொருளாயிருக்க அப்பொருளையுடைய கந்தழியைக் கடவுளுடன் வைத்து வேறு கூறுவானேன்?

என்பன முதலாகப் பல ஆட்சேபங்கள் இவருரையில் எழுகின்றன மற்றும் கொடிநிலை முதலியவற்றிற்கு இவர் கூறும் பொருள் கள் அனைத்தும் தாமாகவே வலிந்து படைத்த பொருள்களின்றி முன்னூல்களிற் கூறும் இயற்கை நெறியானமைந்த பொருள்களுடன் இயைபுடையனவுமன்று என்பது ஆராய்வார்க்குப் புலனாகாமற் போகாது

“கொடிநிலை" என்னும் இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறும் உரையை நோக்குவோம். வடுநீங்கு சிறப்பின் கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற மூன்றும்- குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும்- (பாட்டுடைத் தலைமகனைச் சார்ந்து வருங்காலத்து) கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.'- என்பது இளம்பூரணர் உரை.

கடவுள் வாழ்த்துடன் பொருந்தி வரும் பொருள்கள் மூன்றும் கொடிநிலை முதலாகக் கொண்டு வருவனவாகலின் கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றும் என்றும்; அறுமுறை வாழ்த்துப் பொருள்களாகிய கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, பரவல், புகழ்தல், என்னும் ஆறனுள் கொடிநிலை முதலிய மூன்றும் முதல் மூன்று பொருள்களாதலின் முற்பட்ட மூன்றும் என்று தெளிவாக அறியும்படி உரையெழுதியுள்ளனர். அறுமுறை வாழ்த்துப் பொருள்கள் ஆறனுள் முதன்மை யுடையன கொடிநிலை முதலிய மூன்றுமாகலின் முற்பட்ட என்றார் எனினுமாம். கடவுள் வாழ்த்தோடு அமரர் வகையைச் சார்ந்தனவாகக் கூறும் மூன்று பொருள்கள் பொருந்தி வருதல் கூறுகின்றது இச்சூத்திரமாகையினால் "மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தியவரும்'- என்று உரைத்த வுரையும் ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக உள்ளது.

இளம்பூரணர் கூறும் அறுமுறை வாழ்த்திற்குரிய பொருள்கள் மூன்றும் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம் என்னும் மிகவும் பழமையாகிய இலக்கண நூல்களிற் கூறப்பெற்றுள்ளன.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கொடிநிலை மூவருளொருவர் கொடியையும், கந்தழி என்பது திருமால் மதிலின் வலியை யழித்ததையும், வள்ளி என்பது முருகனுக்கு வெறியாடுவதையும் தனித்தனியாய்க் குறிப்பதாகக் கூறினரேனும் இம்மூன்றும் சிறப்பாக முருகக் கடவுளுக்குரிய கொடி, வலிமை, வள்ளியாகியவற்றைக் குறிப்பதாய்க் கொள்வதே இயைபுடையதாகும். அங்ஙனம் கூறுமிடத்துக் கடவுள் என்றது முருகக் கடவுளும்; அமரர் கண்ணவாகிய மூன்று பொருள்கள் என்றது அவரது கொடியும், கந்தழியும், வள்ளியுமாகிய மூன்று பொருள்களுமாம் என்று கொள்ளுவதே சிறப்புடையதாம்.

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றனுள் வள்ளி என்பது முருகனுக்குரியது என்பது யாவரும் அறிந்ததே யாகலின் அதனின் முற்கூறிய கொடிநிலை கந்தழிகளும் முருகனுக்குரியனவாகக் கொள்ளுதல் சிறப்புடையதாம். அவ்வாறே பிற்கூறிய புலவராற்றுப்படை, பரவல், புகழ்தல் என்பவைகளும் முருகக்கடவுளுக்குச் சிறப்பாக உரிமையுடை யனவாகக் கோடல் வேண்டும். மற்றும் யாம் இவ்வாறு கொள்வதற்கு ஆதாரமாயிருப்பது "வள்ளியாவது முருகக் கடவுளைக் குறித்தது; பிறவுமன்ன" என்று வீரசோழிய வுரையாசிரியர் கூறியதுமாம். அவ்வுரையில் "பிறவுமன்ன " என்பது கொடிநிலை முதலாகிய ஐந்தும் முருகனைக் குறித்தன வென்பதாம். ஆறு என்ற எண்ணிற்குச் சிறப்பாக உரியவர் முருகக் கடவுளே. அவர் ஆறு குணங்களும் ஆறு திருமுகமும் ஆறெழுத்து மந்திரமும் அறுகோணச் சக்கரமும் ஆறுபடை வீடும் ஆறாவது திதியுயும் ஆறு தாயரும் உடையவர். ஆதலின் ஆறுவகையாகக் கூறும் அறுமுறை வாழ்த்தும் அவர்க்கே சிறப்பாக உரியதாகும்.

இனி அறுமுறை வாழ்த்து முருகக் கடவுளுக்கு இயைபுறுமாறு காட்டுதும்.

1. கொடி நிலை:-
முருகனுக்குரிய கோழியாகிய பறவையின் உருவம் தீட்டப் பெற்ற கொடி நிற்றலையுடைய கம்பமாம்.
"புள்ளணி நீள்கொடிப் புணர் நிலைத் தோன்றும்'
-      சிலம்பு, காடுகாண் காதை 136.

"கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்தி'      - திருமுருகாற்றுப்படை 38, 39.
கொடி முருகனுக்குரிய மயிற் கொடி யெனினுமாம்.
"மணிமயி லுயரிய மாரு வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்”       - புறநானூறு 56.
“நீலமணி போலும் நிறத்தையுடைய மயிற் கொடியை எடுத்த மாறாத வெற்றியையுடைய அம்மயிலாகிய ஊர்தியையுடைய ஒள்ளிய செய்யோனும்''
-       புறநானூறு 56 பழைய வுரை.

"பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
-      திருமுருகாற்றுப்படை 122.

"மணிமுக மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்
பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ!"
      - பரிபாடல் 17.

பிணிமுகம் - மயில், மயிலினது உறுப்புக்களில் மிகவும் அழகற்றது முகம். நோய் பிணித்தாற் போன்ற முகமுடைமையால் மயிலுக்குப் பிணிமுகம் என்ற பெயராயிற்று.

2. கந்தழி -
தூணின் வலிமையை யழித்து விளங்கும் முருகனது ஊர்தியாகிய பிணிமுகமென்னும் யானை. கந்தழி - கந்தை அழிக்கின்ற யானையென்பது வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப் பெயராம்.
யானையைத் தூணிற் கட்டுவர் என்பதும் அது தூணின் வலிமையை யழித்து விளங்குமென்பதும் யாவரும் அறிந்ததே.
“கந்திற் பிணிப்பர் களிற்றை" - நான்மணிக்கடிகை.
“கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்"
முருகனுக்கு யானை வாகனமுண்டென்பதை
“சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு”
      -பதிற்றுப் பத்து 11.

முருகனூர்தியாகிய யானைக்குப் பிணிமுகம் என்று பெயர் என்பதை
. "சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கி "      பரிபாடல் 5-2.

“சேயுயர் - மிகவுமுயர்ந்த, பிணிமுகம் - முருகக் கடவுளுக்குரித்தாகிய யானை
     - பரிபாடல் 5-2-பரிமேலழகருரை

பிணிமுகம் - யானை, நெற்றிப் பட்டமென்னும் அணிகலனாற் சிறந்து விளங்கும் முகத்தினையுடையது யானை.
"ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி'
      - முருகாற்றுப்படை - 247.

“கெடாத வலிமையினையுடைய பிணிமுகம் என்னும் பட்டத்தினை
யுடைய யானையை வாழ்த்தி, பிணிமுகம் மயில் எனினுமாம்”
      - முருகு - 247 - நச்சினார்க்கினியர் உரை.

3. வள்ளி:-
முருகனது தேவியாகிய வள்ளி. இவள் முருகனுக்கு மிகவும் உரிமையுடையவள்.
"அக்களவிற் புணர்ச்சி யுடைமையால் வள்ளி சிறந்தவாறும்
கூறுகின்றார்" என்பது பரிபாடல் 9 - பரிமேலழகர் உரை.
முருகன் தம் தேவியர்களில் வள்ளியை மிகவும் விரும்புகிறவன்.
"அறுமுகத் தாறிரு தோளால் வென்றி
நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே"       - பரிபாடல் 14.

4. புலவராற்றுப்படை:-
புலவன் ஒருவன் புலவனொருவனை; புலவனாகிய முருகனை வாழ்த்தி அவன்பால் ஆற்றுப் படுத்துவது. புலவன் என்பது முருகனுக்குப் பெயர். புலவராற்றுப்படை படர்க்கையும் முன்னிலையுமாகிய புகழ்தல், பரவல் என்னும் இரண்டு வகையாலும் முருகனது புகழ் கூறுவது புலவன் எதிர்வந்த புலவனுக்குப் படர்க்கையாக முருகன் புகழ் கூறிப் பின்னர் முன்னிலையாகத் துதிக்குமாறு கூறுதல் திருமுரு காற்றுப்படை முதலியவற்றானுணர்க.
"உலவா வூக்கமோ டுன்னியது முடிக்கும்
புலவ ராற்றுப்படை புத்தேட்கு முரித்தே"
      -புறப்பொருள் வெண்பாமாலை மேற்கோட் சூத்திரம்.
புத்தேள் ― கடவுள்.

5. பரவல்-
முருகனை முன்னிலையாகப் புகழ்தல்.
''குறமக ளவளெம குலமக ளவளொடும்
அறுமுக வொருவநின் னடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே
      - சிலம்பு - குன்றக் குரவை.

6. புகழ்தல்:
முருகனைப் படர்க்கையாக்கிப் புகழ்தல்.
அணிமுகங் களோராறு மீரா றுகையு
மிணையின்றித் தானுடையோ னேந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே ''
      சிலம்பு - குன்றக் குரவை.

இக் கட்டுரையாலறிதற்குரிய பொருள்களாவன வாழ்த்து மூவகைப்படும் என்பதும் அவற்றுள் ஒன்றாகிய அறுமுறை வாழ்த்து கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவ ராற்றுப்படை, பரவல், புகழ்தல் என்னும் ஆறுமாம் என்பதும் அவற்றுள் கொடிநிலை முதலிய மூன்றும் வாழ்த்துதற்குரிய பொருள்களாமென்பதும் பரவல் முதலிய மூன்றும் வாழ்த்துதற்குரிய நெறிகளாமென்பதும் இவ்வறுமுறை வாழ்த்துப் பொதுவாகத் தேவர்கள் எல்லோருக்கும் கொள்ளப்படினும் சிறப்பாக முருகக்கடவுளின் கொடி முதலியவற்றிற் குரியன வென்பதுமாம்.

குறிப்புரையில் மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்

1. அணியியல் விளக்கம்.14. தணிகாசலப் புராணம்.
2. இலக்கண விளக்கப் பாட்டியல். 15. தனிப்பாடல்.
3. ஒளவையார் பாடல். 16. திருவாசகம்.
4. கந்தர் கலிவெண்பா.17. திருக்குறள்.
5. குறுந்தொகை. 18. திருமுருகாற்றுப் படை.
6. கொங்குமண்டல சதகம். 19. தொல்காப்பியம்.
7. கெளமார முறைமை.20. நாலடியார்.
8. சிதம்பர மும்மணிக் கோவை.21. பன்னிரு பாட்டியல்.
9. சிதம்பரப் பாட்டியல். 22. புறநானூறு.
10. சிலப்பதிகாரம்.23. மன்மதன் பிரதாபாலங்காரக் கொத்து.
11. சிற்றகத்தியம். 24. மேழி விளக்கம்
12. சீகாளத்திப் புராணம்.25. ஸ்ரீ தத்வ நிதி.
13. தணிகைப் புராணம்.
**********************************

சென்னிமலை முருகன் புலவராற்றுப் படை.


சென்னிமலையாண்டவன் துணை.
காப்பு.
கட்டளைக் கலித்துறை.

தேர்கொண்ட சென்னி மலைவேலர் பாதந் தினந்துதித்துப்
பார்கொண்ட செந்தமி ழாற்றுப் படையினைப் பாடுதற்குத்
தார்கொண்ட கொன்றைச் சடையான் குமாரன் தலத்துரியான்
கார்கொண்ட மும்மதச் சந்தி விநாயகன் காப்பெமக்கே.

நூல்.
பரிசில் பெற்று மீண்ட புலவன் பரிசில் வேண்டி வரும் புலவனை நோக்கிக் கூறுதல்:-
புலமைத் திறம்.

மணிவளர் கடல்சூழ் மாநில வளாகத்
தணிவளர் சாந்த மருந்தமிழ் தென்றல்
மணமிகும் பாண்டி மகள்திரு முகமாம்
பொன்றிகழ் கமலப் பொய்கையங் கோட்டுத்
தன்னிக ரமுதத் தண்மதி தழீஇய       5
மாட மோங்கிய மலிபுகழ்க் கூடலிற்
_______
[1]. மணி - முத்து; மங்கலச் சொல். வளாகம் - உலகம்.
"தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி'' -புறநானூறு 189
"நாமநீர் வைப்பின் நானில வளாகமும்'' -சிதம்பர மும்மணிக் கோவை
[3]. பாண்டிமகள். -பாண்டிய நாடாகிய பெண், உருவகம்.
[4]. அம்கோடு - அழகிய கரை
_________

பாடல் சான்ற பளகறு சிறப்பின்
பிறைமுடி யணிந்த கறைகெழு மிடற்றோன்
ஆல வாயின் அவிர்சடைக் கடவுள்
தலைவ னாகத் தன்னுடன் குழீஇய
புலவரே ழெழுவரும் புலமுற வாய்ந்த       10

தேனுறை சங்கத் தீந்தமிழ் நூலாம்
பழந்தமிழ் நாட்டின் பண்பும் வளமும்
இயல்வர லாறு மெழில்பெறக் காட்டிச்
சேய்நோக் காடியிற் றிகழ்தரு கின்ற
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்       15
______________
[6]. பளகறு - குற்றமற்ற.
[7]. கறைகெழு - விடம் பொருந்திய, மிடற்றோன் - கண்டத்தினையுடைய சிவபிரான். 8. ஆலவாய் - மதுரை. 9. குழீஇய-கூடிய.
[10]. புலவர் ஏழெழுவர்- சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் [1]4. சேய் நோக்கு ஆடி இல்- தூரதிருஷ்டிக் கண்ணாடி போல.
[15]. பத்துப் பாட்டு - நூறடி சிறுமையாக நூற்றுப்பத்தும் நூற்றுப்பத்தின் மிக்கனவுமாகிய
அடிகளாற் பத்துப் பாட்டுப் பாடப் படுவது பத்துப் பாட்டாம். அவை கடைச் சங்கத்தார்
தொகுத்த திருமுருகாற்றுப் படை முதலிய பத்து நூல்களாம்.
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
எட்டுத் தொகை -தொழில் அளவு பாட்டு பொருள் ஆகியவற்றில் ஒவ்வொன்றால் தொகுக்கப்பட்ட எட்டு நூல்களின் தொகையாம். அவை நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை
__________

செய்வதுந் தவிர்வதுந் தெரிவுறக் கூறும்
நாலடி முதலா நற்கீழ்க் கணக்கும்
எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்னும்
ஒல்காப் பொருள்மிகு தொல்காப் பியத்தொ
டறுபது சூத்திரத் தன்பினைந் திணையும்       20

ஐங்கா வியங்களு மறிவுறப் பயின்று
பெருவிளை யாடற் றிருவிளை யாடலும்
தெய்வ மணக்குஞ் செய்யுள்க டோறும்
அரிய பொருண்மிகு பெரிய புராணமும்
நச்சிய பொருள்சேர் நளினமிக் குடைய       25

கச்சியப் பன்செய் கந்தபு ராணமும்
இம்ப ருலகிற் கின்சுவை யமுதாங்
கம்பர்செய் நூலுங் களியுறப் பயின்று
முத்தி யளிக்கு மூவர்தே வார
முதற்றிரு முறையு முரணிலா ஞானச்       30
____________
[17]. கீழ்க் கணக்கு-அடியளவிற் குறைந்தனவாயிருக்கும் வெண்பாவின் தொகுதியால் அறம்
பொருள் இன்பம் என்னும் பொருள்களையடுக்கித் திறம்பெறச் சொல்லுவதாம்.
அவை நாலடி முதலிய பதினெட்டு நூல்களாம்.
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”
[20]. அன்பினைந்திணை - இறையனார் களவியல்.
[21]. ஐங்காவியம் - ஐம்பெருங் காப்பியங்கள். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன.
காவியம் - அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயப்ப ஒரு கதைமேற் செல்லும் கவிகளாலாகிய நூல். பெருங்காவி யத்தைப் பெருஞ்செய்யுளென்றும் சிறுகாவியத்தைச்
சிறுசெய்யுளென்றும் கூறுவர். காவியவுறுப்புக்கள் பதினெட்டாம்.
"பெருஞ்செய் யுட்டிறம் பேசுங் காலை
நகர்கடன் மலைபரு வங்கதிர் மதிகளின்
றோற்றம் பொழில்விளை யாட்டுநீ ராட்டு
மதுவுண் டாட்டுப் புணர்ச்சி பிரிவு
மணமகப் பேறு சூட்சி தூது
செலவு பெருவென்றி மூவாறு முடைத்தே.”
"அவைசில குறைந்துள தாஞ்சிறு செய்யுள்"
- அணியியல் விளக்கம் செய்யுட் படலம் 50,51.
[27]. இம்பருலகு - இந் நிலவுலகம்.
[30]. தேவார முதல் திருமுறை - தேவார முதலிய பன்னிரு திருமுறைகள்.
___________

சந்தான குரவர் சாத்திர நூல்களும்
செந்தூர் முருகன் றிருவருட் பொலிவுடன்
பாண்டித் தமிழ்வளம் பழுனிக் கிடக்கும்
குமர குருபரன் கொழுந்தமிழ் நூல்களும்
கற்பனைக் களஞ்சியக் காவியப் புலவன்       35

சொற்புகழ் கொண்ட தூய்தவ மாமுனி
சிவப்பிர காசன் செழுந்தமிழ்ப் பனுவலும்
ஐயமுந் திரிபு மணுவுமில் லாமல்
தெளிவுறப் பயின்ற தீந்தமிழ்ப் புலவ!
பாற்கட லமுதம் பரவுதல் போல       40

நாற்பொருள் விராவு நற்காவி யச்செயுள்
பொழிப்பு மகலமும் புகலுறு நுட்பமும்
அறநூல் விதியு மதிலுறு விலக்கும்
உயர்ந்தோர் வழக்கு முறுநூல் வழக்கும்
வண்டமிழ் மரபும் வடநூன் மரபும்       45

முன்னுறு பழமையும் பின்வரு புதுமையும்
ஐந்திலக் கணத்தி னமைதியும் பயனும்
தோன்ற விரித்துச் சொற்பொரு ணயங்கள்
விளங்குற வேது மேற்கோள் காட்டிக்
கேட்டோர் மேலுங் கேட்குறு மாறு       50

அவைக்கள மேறி யாற்றொழுக் கேபோல்
விரிவுரை யாற்றும் மேன்மைசா லறிஞ!
நூலுரை போதகா சிரியரின் றிறங்கள்
மேலுறப் பெற்று விளங்கா சிரிய
எல்லாப் பொருட்கு மியல்குண முணர்ந்த       55
____________
[31]. சந்தான குரவர் - திருக்கைலாய மரபில் தோன்றிச் சைவ சாத்திரங்களைத் தமிழ் மொழியில் அருளிச் செய்த மெய்கண்டதேவர் முதலியோர். [33]. பழுனிக் கிடக்கும் - பழுத்துக் கிடக்கும். பாண்டித் தமிழ்-பாண்டிய நாட்டுத் தமிழ். வளம் - அழகு.
"பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி"-புறம் 113.
[35]. கற்பனை இல்லாததொன்றை யுள்ளதாகக் கற்பித்துக் கூறுதல்.
[49]. ஏது - காரணம்
_________________

வல்லோர் குற்றம் வரும்வழிக் காட்டுவர்
வல்லோ ரறிந்து வழங்கிய குற்றம்
அல்லவென் றுரைப்ப ததுவே புலமை
என்றகத் தியனா ரியம்பின ராதலின்
சீர்மிகு மறிஞர்செய் செய்யுளிற் குற்றம்       60

ஆக்கிப் பின்ன ரலவெனக் கூறும்
வாதத் திறமை வளமுறப் பெற்ற
அகடித கடன் வாற்றலு முடையாய்!
சேரஞ் சோழம் பாண்டிய மென்னும்
மூவகைச் செய்யுள் முறைநெறி கொண்டு       65

காவிளை யாடுங் கருங்குயி லனைய
தேனினு மினிய செஞ்சொற் கவிதை
நாலும் பாடி நானிலத் தறிஞர்
_____________
[63]. அகடித கடனம் - நூலிற்குக் கூறிய பத்துக் குற்றங்களையும் யாப்பின்கண்
வரப்படுத்திக் குற்றம் தோற்றுவித்து; பின்பு குற்றத்தை நீக்கிக் கொள்ளச் செய்வது
அகடித கடனமாம். இதற்கு அகடன கடனம் என்றும் பெயர். மாணிக்கவாசகத்
தம்பிரான் செய்த குவலயானந்தம் சித்திரவியலில் இதன் விரிவு காண்க.

[64]. சேரநெறி- - எளிதான செஞ்சொல்லும் புணர்ச்சியும் தொகையு அமையப் பாடுவது.
''சேர நெறியினைச் செப்புங் காலை
புணர்ச்சி வன்மை சொல்வன்மை நெடுந்தொகை
எனுமிவை மூன்றின் இளமை யுடையதாம்"
சோழநெறி. விளக்கமும் ஒளியும் பொருந்திய சொல்லையும் புணர்ச்சியையும் தொகையையும் கொண்டு விளங்குவது.
"சோழ நெறியினைச் சொல்லுங் காலை
விளக்கமு மொளியு மேவிய தாகும்."
பாண்டியநெறி - முற்கூறிய இரண்டு நெறிகளும் அமையப்பாடுவது,
“பாண்டிய நெறியினைப் பகருங் காலை
முன்னவை யிரண்டின் தன்மைய தாகும்."
- அணியியல் விளக்கம் செய்யுட் படலம் 22, 23, 24
[68]. கவிதை நான்கு -ஆசு, மதுரம், சித்திரம்,வித்தாரம்.
____________________

செய்யு ளின்பம் செவிவழிப் பருகி
மகிழ்வுறக் கூறும் வாழ்வுசால் கவிஞ!       70

அகப்பாப் புறப்பா வாமிரு பாவில்
புறப்பா வதனிற் பொலிவுற விளங்கும்
கடவு ளமரர் கனம்பெறு மக்க
ளாகிய தலைவர்க் கமைந்துள சிறந்த
ஒளியு மாற்றலு மோம்பா வீகையும்       75

அளியு மென்றிவை யாய்ந்துறப் பாடும்
பாடாண் டிணையிற் பாவல் லோயே!
நில்லா வுலகில் நிலைபெறும் புகழ்செய்
மும்மணிக் கோவையும் நான்மணி மாலையும்
________________
[69]. செய்யுளின்பம் - செய்யுட்களில் வரும் சொற்சுவை பொருட்சுவைகளால் வருமின்பம். வழிமோனை முதலாயின வரத் தொடுப்பது சொற்சுவை. அறம் பொருள் இன்பம் வீடென்னும் பொருள் காரணமாக, மதுகரங்கட்கு மது காரணமாக வரும் மகிழ்ச்சி
போலக் கேட்போர்க்கு வரும் இன்பம் பொருளின்பமாம்.
சுவையாவது சிருங்கார முதலாகவுடைய நாடகச் சுவையொன்பது மாமென்பர்
வீரசோழிய வுரையாசிரியர்.
“அச்சுவை யுவகை நகையே யழுகை
வெகுளி பெருமித மச்ச மிளிவரல்
மருட்கை நடுநிலை யெனவொன் பதாகும்.”
- அணியியல் விளக்கம் - சுவைப் படலம் 2.
[71]. அகப்பா - இன்பத்தைப் பொருளாகக் கொண்டு பாடும் பாடல்கள்
புறப்பா - அறத்தையும் பொருளையும் பற்றிப் பாடும் பாடல்கள்.

[77]. பாடாண்டிணை - பாடுதற்குரிய ஆண்மகனது ஒழுகலாறு.
[79]. மும்மணிக் கோவை - நேரிசையாசிரியப்பாவும் நேரிசை வெண்பாவும் கட்டளைக்
கலித்துறையும் முறையாக முப்பதுபெற வடுக்கி அந்தாதித் தொடையாற் பாடுவது மும்மணிக் கோவையாம்.
"தோன்றிய அகவல் வெள்ளை கலித்துறை
மூன்றும் வருவது மும்மணிக் கோவை,”
- பன்னிரு பாட்டியல் 108.
_______________

மங்கல முதலா மருவிய பொருத்தமும்       80

எழுத்தசை முதலாம் யாப்புறு விதியும்
சொற்பொரு ளணியுந் துலங்குற வளமாய்
இம்மெனு முன்னே இயற்றிடுந் திறலோய்!
பூவு மணமும் பொருந்துறல் போல
வியல்புறு மிலக்கண விலக்கிய மென்னுங்       85
_____________
நான்மணி மாலை -வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் ஆசிரியப்பாவும் முறையாகப் பொருந்த அந்தாதித் தொடையால் நாற்பது செய்யுட் பாடுவது நான்மணி மாலையாம்.
"வெண்பாக் கலித்துறை விருத்த மகவல்
பின்பேசு மந்தாதியின் நாற்பது பெறினே
நான்மணிமாலை யாமென நவில்வர் "
- இலக்கண விளக்கப்பாட்டியல் 61.
[80-. மங்கல முதலாகிய பத்துப் பொருத்தங்கள்.
"பகர்செய்யுள் மங்கலச்சொல் லெழுத்துத் தானம்
பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப்
புகரில்கண மெனப்பத்தும் பிறங்கு கேள்விப்
புலவர் புகழ்முன் மொழிக்குப் புகல்வர்"
- சிதம்பரப் பாட்டியல் 6.
[81]. யாப்புறு விதி - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா,
பாவினம் என்ற எட்டுமாம்.
[82]. சொற் பொருளணி - சொல்லணி பொருளணிகள். யமகம், திரிபு, பிராசம்
முதலாகச் சொல் பற்றி வருவன சொல்லணிகளாம். உவமையணி முதலாகப் பொருள்பற்றி வரும் அணிகள் பொருளணிகளாம்.

[85]. இலக்கணம் - கருத்து; இலக்கியம் - அதனை விவரிக்கும் நெறி.
“இலக்கணம் கருத்தே இலக்கிய மதனெறி" - என்பது குவலயானந்தம். இவ்விரண்டும் பூவும் மணமும் போலத் தம்முள் இயைபுடையன. இலக்கு + இயம் = இலக்கியம் - மனத்திற்குறித்த பொருளைப் புலப்படுத்தும் சொற்கள். இலக்கு + அணம் = இலக்கணம் - இலக்கியத்தைத் தழுவி நிற்பது என்பது சொற்பொருள்.
“பூவினுள் வாசம் பொருந்துதல் போல
இலக்கண விலக்கிய மியைபுடைத் தாகும் “
- சிற்றகத்தியம்.
___________________

கலைக்கடல் கடந்துங் கலிக்கடல் கடக்கும்
வகையறி யாது மயங்கினை யந்தோ!

புலவர் வறுமை.
மான முதலா மருவிய பத்தும்
பறந்திடச் செய்யும் பசிப்பிணி யதனால்
ஒட்டிய வயிற்றொ டுறுவிலா வென்பு       90

இருமருங் கினிலு மெழுந்துநிற் றலினால்
வங்கினைப் பற்றும் வல்லுடும் பதனை
யுரித்துவிட் டாற்போ லுடம்பினை யாயினை
கந்தை யுடையுங் கைதனிற் கிழிந்த
புத்தகக் காட்சியும் பொலிதர வந்தனை.       95

முத்தமிழ் சொரிதலின் மும்மத யானை
போன்ற புலவ! பூனைபோ லாயினை.
வெயில்படக் கிடந்த மென்மல ரதுபோல்
வாடினை மேனி வருந்தினை யந்தோ!
புலவர்தம் வறுமை பொல்லா தன்றோ?       100
________
[86]. கலைக் கடல் - கல்வியாகிய கடல்.
"கல்வி யென்னும் பல்கடற் பிழைத்து” - திருவாசகம்.
கலிக் கடல்- வறுமையாகிய கடல் கலி - வறுமைத் துன்பம்.
[88]. மானம் முதலா மருவிய பத்து:
மானம் குலம்கல்வி வண்மை யறிவுடைமை
தானம் தவம்முயற்சி தாளாண்மை- தேனின்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்'' - ஒளவையார்.
[96]. முத்தமிழ் - இயல், இசை, நாடகம். மும்மதம் - கன்னமதம்,
கபோலமதம், பீஜமதம்.
"மோனை முத்தமிழ் மும்மத முஞ்சொரி
யானை முன்வந் தெதிர்த்தவ னாரடா?" - தனிப்பாடல்.
_________________

காற்று மழையுங் கடுங்கதிர் வெயிலும்
ஒன்றுபி னொன்றா யுறுதுயர் செய்யும்
ஓட்டை மிகுந்த வோலையில் லத்தில்
வறுமைப் பேய்கொள வருத்தமுற் றயர்ந்து
தலைக்கிடு மெண்ணெய் தான்கா ணாமல்       105

மஞ்சள் பூசாது மதிமுக நுதலிற்
றிலக மிடாமல் திகழுற முன்பு
கட்டுநூற் கழுத்துங் கந்தைசூழ் இடையும்
உணவு காணாம லொட்டிய வயிறும்
துயர்கூர் முகமுந் தோன்றுறு மனைவியும்,       110

''அம்மா! பசிகா தடைக்கு தென் செய்கேம்
உப்புநீர்க் கஞ்சி யொருவாய் தாராய்”
என்றழு தேங்கு மிளமைகூர் சிறாரும்;
உறுதுயர் கண்டே யுளமிகக் கலங்கிச்
செய்வ தொன்றுந் தேர்ந்தறி யாமல்       115

அவர்வயிற் றுணவும் அரைதனி லுடையும்
முகத்திற் பொலியும் முன்னுறப் பெற்று
வாழ்வுறக் காண மனத்தினி லெண்ணி
அன்னவர் தம்மை யரிதினிற் பிரிந்து
காடை காகங் கட்டிடக் கண்டும்       120

பரிசில் வேண்டிச் செல்வரை நாடியது கூறல்:
செல்வரை மனதிற் றெய்வமென் றெண்ணிக்
கல்முள் நிறைந்த கானக மதனில்
ஆமாத் திரியு மதர்வழி கடந்தும்
வேழந் திரியும் வியன்மலை தாண்டியும்
ஆழ மிகுந்த வாற்றினை நீந்தியும்       125
______________________
[120]. காடைகாகம் கட்டுதல் - பறவைச் சகுனம் தடை செய்தல்.
“புள்ளிடை தட்ப " - புறம்.
[123]. ஆமா - காட்டுப்பசு. அதர்வழி - ஒருபொருட் பன்மொழி.
[124]. வேழம் - யானை.
____________

தேனினை நாடித் திசைதொறும் பறந்து
மலரினைத் தேடும் வண்டெனத் திரிந்து
முன்செய் வினையால் முழுப்பொருள் படைத்த
செல்வ ரில்லந் தெரிவுறக் கண்டவர்
தலைக்கடை கால்கள் தளர்வுற நின்று      130

கன்ன லைங்கணைகள் கரங்களிற் றிகழ
மன்மதன் போர்க்கு மகிழ்வுற வேறுந்
தென்றலந் தேருஞ் சிறுமதிக் குழவியும்
வெளிப்படக் கண்டு விரகநோய் கொண்டு
கொச்சி மஞ்சளும் குடமலைச் சாந்தும்       135

வசிய மருந்தும் மணமுறப் பூசி
கொங்கையு மாடையும் குலுங்குற நடந்து
நாடக நடித்தும் நல்லிசை பயின்றும்
கண்வலை வீசியும் காளையர் தமது
உளங்கவர்ந் தவர்த முறுபொருட் குவியலிற்       140

காணியு மின்றிக் கறந்துறும் வாழ்க்கைப்
பாசிழை யல்குற் பரத்தை யரில்லம்
அவசமுற் றோடி யடைக்கல மென்றும்
உம்மை யல்லா லுயிரிலை யென்றும்
செம்பொனும் மணியும் சீர்பெறக் கொடுத்து       145
________________
[130]. தலைக்கடை - தலைவாயில்.
[131]. கன்னல் கரும்புவில். மன்மதனுடைய ஐந்து விற்களில் ஒன்று.
"தேங்கன்னல் கமுகு செழித்தநல் வாகை
பூங்கொம்பு தாமரை போற்றுவில் ஐந்தே'
-இப்பாடல் மன்மதன் பிரதாபாலங்காரக் கொத்து.
ஐங்கணை - ஐந்து புட்ப பாணங்கள்
"முல்லை அசோகு மாந்தளிர் தாமரை
அல்லி நீலம் ஐங்கணை ஆகும் " - பன்னிரு பாட்டியல்.
[141]. காணி-அளவுப் பெயர். முந்திரி, காணி என்பன அளவுப் பெயர்கள். முந்திரி மிகச் சிறிய அளவுக்கும், காணி அதனினுஞ் சிறிது மேற்பட்ட அளவிற்கும் பெயராகும். முந்திரி: ஒன்றை முந்நூற்று இருபது பாகமாக்கியதில் ஒரு பாகம். முந்திரி நான்கு கொண்டது ஒரு காணி. “முந்திரி மேற் காணி” - நாலடியார்.
கறத்தல் - வாங்கிக் கொள்ளுதல்.
____________________

மற்றவர்ப் புகழ்ந்து மகிழ்வுறச் செய்து
மழைதிகழ் மாட மஞ்சகத் தணைமேல்
அன்னவர் மார்பி னகலிடம் பெற்று
மலர்வா யமுத மகிழ்வுட னுண்டு
காம வின்பங் களிப்புறத் துய்க்கும்       150

செல்வருன் வருகை தெரிதலின் பொருட்டுக்
கடவுள் வணக்கமும் கலைக்குரு வணக்கமும்
உன்பெரும் புகழு முவமையில் தலைவன்
தன்பெரும் புகழுஞ் சாருமா சிரியச்
சீர்மிகு விருத்தச் சீட்டுக் கவியோர்       155

ஆளின் மூல மன்புற வனுப்பிச்
செல்வர்தஞ் சமயந் தெரிவுறக் கண்டு
அவர்பெருஞ் செல்வ மனைத்து முனக்கே
வந்தது போல மகிழ்ச்சிமீக் கூர்ந்து
நாவூற் றெழுந்த நனிசுவை மிகுந்த       160

தேனூற் றெழுந்த செழுந்தமிழ்க் கவிதை
வானூற் றெழுந்த மழையெனப் பொழிந்து
நின்று வள்ளலை நேருறக் கண்டதால்
நன்றுசெய் புண்ணியம் நான்மிக வுடையேன்
இன்றிது வேளை யிடர்செயும் வறுமைப்       165

பொல்லா விடத்தைப் போக்குற நின்றன்
அமுதமாங் கொடையை யளியுட னாடிப்
பெறுதற்கு வந்தேன் பெருந்தமிழ்ப் புலவன்
பொன்மனம் வைத்தெனைப் போற்றுக வெனநீ
முற்றுஞ் சொல்லி முடியா முன்பே       170

புலவர்க் கீந்து புகழ்மிகப் பெறலே
நில்லா வுலகி னிலையென வறியாப்
பொல்லாச் செல்வர் புற்றினில் நாகம்
என்னச் சீறி யியைபிலா மொழியில்
"நூல்பல வுணர்ந்த நுண்மதிப் புலவீர்!       175
____________
[167]. அளி - விருப்பம்.
__________________

வேளை தெரியும் விவேகமொன் றில்லீர்.
விளைபொரு ளுள்ள வேளையை யறிந்து
மற்றோர் வேளை வரு"கெனக் கூறி
நில்லா தேகி நெடுங்கத வடைக்கப்
போன வுயிரும் பொலிவழி யுடலுமாய்       180

நின்றுலை நீரி னெஞ்சகங் கொதிப்ப
ஊழினை யெண்ணி யுறுமெய்க் குறளில்
இரக்க விரக்கத் தக்கார்க் காணின்
என்றுவள் ளுவனா ரியம்புரை யறிந்தபின்
வழிவழி யாக வண்டமிழ் புரக்குங்       185

கொடைமிகு செல்வக் கொழுங்குடிப் பிறந்து
ஈகென வருந்தி யியம்பா முன்பே
குறிப்பறிந் துதவுங் கொள்கையின் மிகுந்த
வள்ளலை நாடி வழிகுழி யாகக்
காற்றினில் விரைந்து கடுநடை கொண்டு      190

பழுமர மதுதேர் பறவையிற் போல
வந்தனை நொந்து வழிதனி லன்ப!
நல்லோர் வறுமையில் நலிவுற வென்றும்
பொல்லார் செல்வம் பொருந்துதல் முறையோ?
இருவே றுலகத் தியல்போ கொடிது.       195

நல்லோர் வறுமையும் நலந்தரும் என்னல்.

பொதிய மலையிற் புண்ணிய முனிவன்
அகத்தியன் வளர்த்த வருந்தமி ழிந்த
மண்டிணி யுலகில் வளமிகத் தந்து
ஓங்குவாழ் வளிக்கு முளங்கவ லாதே.
புலக்குடிப் பிறந்து புகழ்பெறு முன்னோர்       200

வறுமையின் மெலிந்து வாட்டமுற் றவரே.
தூக்கமு மின்றிச் சுட்டிடுங் கொடிய
போக்கறும் வறுமைப் புலவர்க ளுலகில்
நிலைதளர்ந் தேகி நீணிதி மிகுந்த
ஈயாச் செல்வ ரிடந்தொறு மிரந்து       205
________________
[183]. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று " -குறள்.
_______________

ஓயாத் துயர முற்றது கண்டே
இரந்துயிர் வாழ வியற்றிய தலைவன்
பரந்து கெடுகெனப் பழமறைக் குறளில்
தெய்வப் புலவன் சீறின னன்றியும்
நல்லோர் வறுமை நலிவுறக் கண்டும்       210

அல்லோர் பக்க மணுகினை யாகலின்
புறவித ழேபோற் பூவுறு மகளே
நிலத்து நீறாய் நீவிளி கென்று
செல்வத் திருமேற் சீற்றமீக் கொண்டு
நாலடி நன்னூல் நவின்றது மன்றோ?       215

செல்வமும் வறுமையுஞ் சேர்தற் கேதுவை
எல்லா வகையிலு மெண்ணிய முன்னோர்
முன்செய் வினையென முடிவு கண்டனரே.
செய்தீ வினையாற் சேர்வுறும் வறுமை
தீர வேண்டிற் றெய்வதம் பராவுந்       220

திருவருள் நெறியிற் சென்றிட வேண்டும்.
என்று தெளிந்தீங் கிசைத்தன ரன்றியும்
அந்நெறி சென்றே யரும்பயன் கொண்டார்.
ஆதலி னீயும் அந்நெறிச் சென்று
ஓதநீ ருலகி லுயர்பயன் கொள்வாய்.       225

வறுமை யுலகில் மலிதுயர் செயினும்
இரவு பகலி னினிமைகாட் டுதல்போல்
வறுமை செல்வ மகத்துவ முணர்த்தும்
வறுமை யிறைவனை மறவா தென்றும்
உறுதி நினைவை யுற்றிடச் செய்யும்       230
______________
[207]. “இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற் றியான்” -குறள்.
[212]. புறவிதழ் - மணமற்ற விதழ். பூவுறு மகள் - இலக்குமி.
[213]. நீறு - சாம்பல், விளிக - அழிக; எரிக.
“நாறாத் தகடேபோ னன்மலர்மேற் பொற்பவாய்
நீறாய் நிலத்து விளியரோ- வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலு
நன்மக்கள் பக்கம் துறந்து" -நாலடி 266.
________________

ஆகலின் வறுமை யகலா தென்றும்
வேண்டு மென்று விரும்பின ருளரே
அன்னவர் வேண்டு மதனை யணியில்
வேண்ட லணியென விதித்தனர் புலவர்
வறியோர் சிலர்மிடி வருதுயர் நலிந்தும்       235

நெறியி னின்றும் நீங்கல ராகிச்
செல்வர்க் கரிய செழும்புகழ் கொண்டார்
வறுமையும் வாழ்வும் மன்னுத லின்றிச்
றுறுவோர் சிந்தையி னளவாய்த்
துயரு மகிழ்வுந் தோன்றுறச் செய்து       240

நில்லா தேகு நீர்மைய வாகலின்
அறிஞ ரவற்றை யணுவு மெண்ணாடிற்
செந்நெறி யதனிற் றிறமுறச் சென்று
கருதிய முடித்துக் கனமிகப் பெறுவர்.
திருவருட் புலமைச் செல்வர்க ளென்னும்       245

அருண கிரியு மபிராமி பட்டரும்
வறுமையாம் பாவி வலிந்து வருத்தத்
தெய்வ நெறியே சென்னெ றியாக
வறுமை கடந்து வாழ்ந்தன ரன்றோ?
நெருப்பிற் சுடச்சுட நீளொளி கொள்ளும்       250

அரும்பொ னென்ன வடர்தரு மிடிநோய்
வருத்த வருத்த மலர்தரு ஞானம்
திருந்துற முதிர்ந்த சீலரு முளரே
பாவியர் வறுமை பற்றுவர் பற்றின்
தீநெறிச் சென்று தீமையி லழிவர்       255

புண்ணியர் வறுமை பொருந்தார் பொருந்தின்
நன்னெறிச் சென்று நலமிகப் பெறுவர்
வறுமையில் வாழ்ந்தும் மாண்புறு நெறியிற்
சென்றிவ் வுலகிற் சிறந்தனர் பலரே.
உறுதுயர் வறுமை யுன்றனைத் துரத்திப்       260
____________
[244]. கனம் - பெருமை.
______________

பெரும்பயன் பலவும் பெற்றிடச் செய்யும்
சமய மிதுநீ தகுபயன் கொள்வாய்.
முன்செய்தீ வினையின் முழுத்துயர் நீங்கப்
பின்செய்மா தவத்தின் பெரும்பய னனைத்தும்
உறுநற் கால முனக்கின் றாகலின்       265

இற்றைநா ளென்ற னெதிருற வந்தாய்.

சென்னிமலையின் சிறப்புறு மகிமை.

முழுதுணர் புலவ! முன்னையூழ் வலியால்
வறுமை யெனைமுன் வந்தடர்த் திடலும்
உறுமெய்ப் பிணியு முற்றிட வவற்றால்
பசியும் வலியும் படுதுயர் செய்ய       270

அத்துய ரிரண்டு மகற்றிட வேண்டிச்
செல்வர் மனைகள் தேடிநின் றிரந்தும்
மருத்துவர் பலரின் மனைமருந் துண்டும்
அன்னவை யிரண்டு மகன்றில வாகிக்
காற்றுந் தீயுங் கலந்தது போலப்       275

பின்னுமென் மேலும் பெருகுற வளர்ந்து
தள்ளாத் துயர்பல தாஞ்செயுங் காலைச்
செய்வ தொன்றுந் தேர்ந்தறி கிலனாய்ச்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங் கொடிது இளமையில் வறுமை       280

அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
என்றுநம் மவ்வை யியம்பிய பாடல்
உண்மையை யுணர்ந்து ஒருநா ளிரவில்
விதியினை நினைந்து விழிமூ டாமல்
படுதுயர் நொந்து படுத்திருந் தேற்குத்       285

தீராத் தீவினை சேர்ந்துடல் பற்றிக்
கழுவா யொன்றினு நழுகா தாகிப்
பேரா மிடிநோய் பிணிப்புறுங் காலை
_____________
[287]. கழுவாய் - பரிகாரம். நழுகாதாகி - நீங்காமல்.
[288]. மிடிநோய் - வறுமையும் பிணியும்.
_______________

தன்னுயி ரிடும்பை தாங்கா தாயின்
கங்கை யமுனை நருமதை சரஸ்வதி       290

பொங்கு காவிரி புகழ்பெருங் குமரி
ஒன்றினீர் மூழ்கி யுயிர்துறந் திடுதல்
தக்க தென்று தகுநெறி கூறுஞ்
சிவபுரா ணப்பொருள் தேர்ந்துரை செய்த
புலவரென் னிளமையிற் புகலுரை யென்றன்      295

நினைவிற் றோன்ற நெஞ்சக மகிழ்ந்து
அந்நெறி நன்னெறி யாமெனத் துணிந்து
சீல மறிந்தருள் தெய்வமே போலக்
கால மறிந்துயிர் களியுறப் பெருகும்
பூவிரி சோலைக் காவிரித் தாயை       300

மனதினி லெண்ணி வடதிசை நோக்கிச்
சென்றேன் வழியிற் சேணகல் வானின்
கொண்டல் படியுங் குவடுகள் விளங்கத்
தண்டலை சூழ்ந்து தலைநிமிர்ந் தோங்க
வண்டினம் பாட மயில்நட மாடத்       305

தென்றல்வந் துலவத் தெய்வநா தங்கள்
ஓமென வொலிக்க வோங்குயர் வேங்கை
பொன்பூச் சொரியும் பொலிவொடு விளங்கப்
பறவையும் விலங்கும் பரந்தொலி செய்யச்
சாந்தமு மகிலுந் தண்மணங் கமழத்       310

தெய்வ மணஞ்சார் திசையெலாம் விளங்க
மஞ்சடை கிடக்கு மலையிருஞ் சாரற்
குன்றக் குறவர் கொடிச்சியர் தம்முடன்
மலையிருஞ் சுனையில் மகிழ்ந்துநீ ராடி
மலைமிசைச் செவ்வேள் மலரடி வாழ்த்தித்       315
______________
[302]. சேண் - உயரம்; நீளம். அகல் - அகன்ற
[303]. கொண்டல் - மேகம். குவடுகள் - சிகரங்கள்.
[304]. தண்டலை - சோலை.
[312]. மஞ்சு- மேகம். அடைகிடக்கும் - நீங்காதிருக்கின்ற.
[313]. கொடிச்சியர் - குறிஞ்சி நிலப் பெண்கள்; குறமகளிர்.
_________________

தேன்குட மெடுத்துச் சென்றிடுங் காட்சியும்
செந்தீக் காந்தட் செம்மலர் மாலையுங்
காவி யுடையுங் கரந்திகழ் வேலுந்
திகழ மலைவாழ் சேந்தனைப் பாடி
யச்சமுண் டாக வாடிமுக் கால       320

நிகழ்ச்சிக ளனைத்து நிசமுறக் கூறி
யருளா டியர்செலு மற்புதக் காட்சியும்
வயிற்றிடைக் குட்டி வலிவுறப் பற்றச்
செம்முக மந்தி செழுமர மேறித்
தாண்டிக் குதித்துத் தான்செலுங் காட்சியும்       325

வழிச்செல் லடியவர் வளர்கரத் துள்ள
தெங்கங் காயைத் திடுக்குறப் பிடுங்கிக்
குடந்தலைக் கொண்ட கூன்கிழ வன்போற்
றலையிற் கடுவன் றான்சுமந் தேகுங்
காட்சியு மலிந்து கலையுணர் பெரியோ       330

ருள்ளம் போல வுயர்வுறு மலையைக்
கண்டேன் றலையிற் கரங்கள் குவிந்தன.
காந்த மிரும்பைக் கவர்ந்தது போலவும்
சிற்றிலை நெருஞ்சிச் சிறுபொன் மலரைக்
கதிரோன் றன்முகங் கவருதல் போலவும்       335

என்னுளங் கவர்ந்த வெழின்மலைக் காட்சியிற்
றலையுறு பாரந் தானகன் றாற்போல்
உறுபசித் துயரு மோவிலாப் பிணியும்
சிறிது சிறிதாய்த் தீர்ந்தன காணேன்
அன்பு மின்பு மகந்தனில் பெருகு       340
______________
[322]. அருளாடிகள்—முருகக் கடவுளின் அருளால் முக்கால நிகழ்ச்சி களையும் கூறுவோர். சென்னிமலையில் அருளாடிகள் தொண்ணூற் றிரண்டு தலைமுறையினர் என்பர். அவருள் செங்கத்துறைத் தம்பிரான் என்பவரும், வேட்டுவபாளையம் வேளாளத் தம்பிரான் என்பவரும் மிகுந்த திருப்பணி செய்து பிரசித்தமானவர்கள்.
[324]. மந்தி- பெண்குரங்கு. [325]. கடுவன் - ஆண்குரங்கு.
___________________

மற்புதங் கண்டே னாங்குறும் பெரியரை
இம்மலைப் பெயரு மிதன்மகி மையுநீர்
தரிதர வெனக்குச் செப்புதல் வேண்டும்
என்றியான் வேண்ட வியைபுறும் பெரியர்
இக்குன் றத்தின் எழில்மிகு முகட்டில்       345

பச்சை மயிலிற் பரஞ்சுடர் முருகன்
உதய காலத் தொளிரிளம் பரிதி
பசுங்கடல் விளங்கும் பான்மை போல
விரும்பிவீற் றிருந்து வேண்டுநர் தமக்கு
வேண்டுவ வேண்டுவ வேண்டியாங் கருளும்       350

சென்னி மலையிது சேர்வுறும் வடசார்
சரவண தீர்த்தஞ் சார்ந்து நீராடி
யன்பர் மனம்போ லமைவுறும் படிகள்
ஒவ்வொன் றாய்க்கடந் துயர்மலை யேறி
அறுமுகங் கரந்த வொருதிரு முகமும்       355

கடம்பணி மார்புங் கரந்தனிற் றண்டுந்
திகழவீற் றிருக்குந் திருமலைக் கந்தன்
குஞ்சித நிலைத்த குளிர்மலர்ப் பதங்கள்
கண்ணிணை குளிரக் காண்பவ ருலகில்
வறுமை தீர்வர் வளமுற வாழ்வர்       360
_____________
[355]. கரந்த- மறைத்த.
[357]. ஒரு முகமும் இரண்டு கண்ணும் இரண்டு கரமும் தலையிற் சிகை யும் மார்பிற் பூணூலும், இடுப்பில் முஞ்சிப் புல்லாலான அரைநா ணும் கோவணவுடையும் வலக்கையில் தண்டமும் இடக்கையில் வச்சிரமும் செந்நிறமும் தாமரை மலர்மேல் வலக்காலும் சிறிது வளைந்த இடக்காலும் (குஞ்சிதபாதம்) நின்ற திருக்கோலமுடைய வராயுள்ள முருகக் கடவுளைப் பிரமசாரி என்று ஸ்ரீ தத்வநிதி கூறும். ஒரு முகமும் இரண்டு கரமும் வலக்கரத்தில் தண்டமும் இடுப்பில் இடது கரமும் கோவணவுடையும் செந்தாமரை போன்ற நிறமும் நின்ற கோலமுமுடையராய்க் காட்சியருளுபவர் ஸ்கந்தர் என்று ஸ்ரீ தத்வநிதி கூறுகின்றது.
ஏகானனம் த்விபாகும்சா
த்விநேத்ரம்ச த்விகர்ணகம்
வாமஹஸ்தே குக்குடம்சா
சக்திம் திருத்வாசதக்ஷிணே
கிம்சித் கும்சிதபதம்
குமாரம் மோதரூபிணம் " - ஸ்ரீதத்வநிதி.
________

வேதனை மிகுந்த வியாதிகள் தீர்வர்
கலைஞா னங்கள் கைவரப் பெறுவர்
நீண்ட வாழ்நாள் நிலையுறப் பெறுவர்
இம்மையு மறுமையு மிரும்பய னளிக்கும்
நன்மகப் பெறுவர் நாற்பொருள் பெறுவர்       365

என்று மலைநல மியம்பின ரதனால்
ஓங்குயர் மலையி னுச்சியின் மீமிசைப்
பருவமே கம்பெய் பஃறுளி திரண்டு
மணியும் பொன்னும் மலர்களும் வாரிப்
பெருமலை யாரம் பிறங்கிய தென்ன       370

வீங்குநீ ரருவி வீழ்வுறுந் தாழ்வரைப்
பரமா னந்தப் பழங்கடல் போன்ற
சீதப் புனலிற் செழுமலர் நிறைந்த
சரவணப் பொய்கை சார்ந்துநீ ராடி
மலைமிசை யேற மனமிக விரும்பி       375

முத்திசோ பான முறைமையிற் றிகழுஞ்
சித்திரப் படிகள் சென்றுசென் றேறிச்
சந்தனஞ் செண்பகந் தருநிழற் புன்னை
சிந்துரம் வில்வஞ் செச்சை வேங்கை
வானுற வளர்ந்து வான்முகில் சூழத்       380

தேனடை கிடக்குஞ் செழும்பொழில் நடுவண்
குளிர்மதி தவழுங் கோபுரம் விளங்குஞ்
செம்பொற் கோயி றிகழ்மணித் தவிசி
லுள்ளுதோ றுள்ளுதோ றுளங்களி கொள்ளக்
காண்டொறுங் காண்டொறுங் கண்களி கொள்ள       385

ஒளிப்பிழம் பாகு முதயஞா யிற்றின்
மலைமிசை யெழுமுழு மாமதி யதனின்
அழகெலாந் திரண்டோ ரற்புதம் பெருக்கும்
மணங்கமழ் தெய்வத் திளநலம் பொலிய
உலகுயிர்த் தொகுதி யுய்ந்திடற் பொருட்டா       390

யருளுருக் கொண்ட வண்ணல் செவ்வேளின்
சேயொளி மேனியுஞ் செஞ்சுடர்க் காந்தள்
பொலிதரு சென்னியும் புதுநில வெறிக்கும்
முழுமதி முகமும் முழுமதி யுதயத்
தலர்ந்தசெங் குமுத மனையகண் களுஞ்சீர்       395

பொலிந்தசெவ் வாயும் புன்முறு வலும்பொற்
குன்றிரண் டனைய குவிதடந் தோள்களும்
அண்ட வாணர்த மருந்துயர் மாற்றும்
தண்டுறு கரமுந் தனியிடை சார்த்திய
இலங்கெழிற் கரமு மேர்திகழ் மலயச்       400

சந்தன மணக்குந் தடவரை மார்பும்
மார்பில் விளங்கும் மழைநெடுங் கானிற்
காரின் மலர்ந்த கடம்பணி மாலையும்
அரத்தம் பூப்போ லழகுற விளங்கும்
செந்நிற வாடை திகழ்தரு மிடையும்       405

பொய்வழி புகாத மெய்வழித் தொண்ட
ருய்வுறப் போற்று மொலிகடற் பூத்த
பவள நிறமார் பதமலர்த் துணையும்
என்று மிலதே தோ ரின்பங் கிளர்வர
நின்ற கோலம் நேர்படக் கண்டேன்.       410

வேலும் மயிலும் விரிசிறைச் சேவலும்
வேழமு முன்பில் விளங்குதல் கண்டேன்
கண்டு விரைவிற் கரஞ்சிரங் குவிய
நின்று தொழுது நிலமுற வீழ்ந்து
எண்வகை யுறுப்பு மிருநிலந் தோயப்       415

பன்முறை வணங்கிப் பார்தனை மறந்து
நின்ற நிலையில் நேர்பட வெழுந்து
தண்டொரு கரத்திற் றாங்கிவீற் றிருக்கும்
சென்னிமா மலைவாழ் செம்பொருள் முருகா!
அடியவர் துயரம் அகற்றிடுந் தீரா!       420
__________________
[395]. செங்குமுதம் - செவ்வாம்பல் மலர்.
[404]. அரத்தம்பூ - செம்பரத்தம்பூ.
[415]. எண்வகையுறுப்பு--இரண்டு கால், இரண்டு கை, முகம், மார்பு, இரண்டு காது.
_________________

கடிமண மாலைக் கடம்பணி மார்பா!
மணிமயிற் குமரா! மலைகொழு வள்ளிக்
கொடிபடர் கொம்பே! குஞ்சரப் பிடிதோய்
வளர்புய மலையோய்! வளர்பிறை யணிந்த
செஞ்சடைப் பெருமான் திருநுதல் விழியில்       425

வெளிப்பட் டும்பர் விண்ணகம் புரந்தோய்!
அஞ்சிடா வணமெனை யாட்கொள வேண்டும்
தனக்கு நிகராய்த் தானே விளங்கும்
நின்பதி னாறு நிகரிலாப் பேர்கள்
அனைத்து மென்று மன்புறச் சொல்லி       430
_________
[422]. மணிமயில் - நீல நிறமான மயில். அழகாகிய மயில்.
[423]. குஞ்சரப்பிடி - தெய்வயானையம்மையார்.
[426]. உம்பர் - தேவர்கள். புரந்தோய் - பாதுகாத்தவனே.
[429]. பதினாறுபேர்கள் - முருகக் கடவுளின் பதினாறுவடிவங்களுக்குரிய பதினாறு பெயர்கள். அவையாவன :-
1. சக்திதரன், 2. கந்தன் 3. ஆறுமுகத் தேவசேனாபதி,
4. சுப்பிரமணியன், 5. கஜவாகனன், 6. சரவணபவன்,
7. கார்த்திகேயன், 8. குமாரன், 9. சண்முகன்
10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தன்,
13. வள்ளி கல்யாணசுந்தரர், 14. பாலஸ்வாமி, 15. கிரவுஞ்சபேதனர், 16. சிகிவாகனர்.
இவை குமார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளவை.

ஸ்ரீ சுப்பிரமணிய ஷோடசநாம ஸ்தோத்திரம்.
1. ஓம் ஞானசத்தியாத்மநே நம:       9. ஓம் ஷண்முகாய நம:
2. “ ஸ்கந்தாய நம:       10. “ தாரகாரயே நம:
3. “ அக்நீகர்ப்பாய நம:       11. “ ஸேநாந்யே நம:
4. “ பாகுலேயாய நம:       12. “ குகாய நம:
5. “ காங்கேயாய நம:       13. “ ப்ரஹ்மசாரிணே நம:
6. “ சரவணோத்பவாய நம:       14. “ சிவதேஜஸே நம:
7. “ கார்த்திகேயாய நம:       15. “ க்ரௌஞ்சதாரிணே நம:
8. “ குமாராய நம :       16. “ சிகிவாஹநாய நம:

குறிப்பு:- இந்தப் பதினாறு மந்திரங்களையும் நாடோறும் மூன்று காலமும் பாராயணம் பண்ணுபவர்களுக்கு நல்ல வாக்கு வன்மையும் ப்ரஹ்மதேஜஸும் விவாகமும் ஞானமும் கல்வியும் செல்வமும் இஷ்ட சித்தியும் உண்டாகுமென்பர்.
________________

மிடிதுயர் பகைபிணி மேவா வண்ணம்
என்று மின்ப மின்றுபோ லெய்தி
நின்றிரு வடியி னீழலில் யாமும்
வழிவழிச் சுற்றமும் வாழ்வுற வருள்வாய்.
என்றியான் வேண்டி யிருந்திடும் போழ்தில்       435

அந்தணர் மரபி னருச்சக னொருவன்
நீறுஞ் சாந்தும் நீள்மலர் மாலையும்
கையுறத் தந்தென் கண்களி கொள்ள
என்முக நோக்கி யிம்மலை யுச்சி
வள்ளிதெய் வப்பிடி வாழ்பெருங் கோயி       440

லுள்ள த்தனை யுவப்புடன் சென்று
கண்டு வணங்கிக் கருதிய பெறுவை
என்று மொழிந்தா னிணையடி வணங்கிச்
சென்றே னுச்சித் திருவளர் கோயில்
பொன்றிகழ் மணியிற் பொலிபூந் தவிசில்       445

மலைவா ழெயினர் மன்னவன் காட்டில்
வளமுற வளர்த்த வள்ளியங் கொடியும்
கற்பக நாட்டுக் காவலன் செல்வி
பொற்புறு மமுதப் பொலம்பூங் கொம்பும்
தாமரை மலருந் தண்கழு நீரின்       450
_____________
[445]. பூந்தவிசு - அழகிய ஆசனம், பீடம்.
[446]. எயினர் மன்னவன் - வேடர் தலைவன்; நம்பிராசன்.
[448]. காவலன் - தேவேந்திரன். செல்வி - புதல்வி.
[449]. அமுதப் பொலம்பூங் கொம்பு - தெய்வயானையார்.
[450-452]. வள்ளியம்மையார் தாமரை மலரையேந்தி வலப்பக்கத்தும் முறை நிரனிறையாகக் கொள்க.
“நறைகதித்த மலர்க்கழுநீர் நளினமவன் விழியருகு நலக்கவேந்தி
நிறைகதித்த வுளத்தொடிடம் வலமமர்ந்த மாதர்பத நினைத்தல் செய்வாம்"
      தணிகைப் புராணம் கடவுள் வாழ்த்து 5.

"பைங்கழுநீர் விழியாளைப் பைங்கழு நீர் நிறமே
படைத்தாளைப் பைங்கழுநீர் செங்கரங் கொண்டாளைச்
செங்கமலை தருமமுதைக் கந்தரிடத் தமரும்
தெய்வயா னையைத்தொழுது திருவருள் பெற்றிடுவாம்"

“காதலுடன் புரிந்திறைவர் வலப்பாகத் தமரும்
கன்னியெனும் வல்லிபத முன்னி வாழ்வாம்”
      - தணிகாசலப் புராணம் கடவுள் வாழ்த்து 7,8.
________________

பூமல ருங்கை பொலிதர வேந்தி
மதிமுகம் பொலிய வலமிட மாக
நின்றுயிர்க் கருளு நிலையினைக் கண்டு
அற்புதம் பெருக வார்வமுற் றோடி
வணங்கித் தொழுது வாழ்த்திநின் றிருந்தேன்.       455

அருளாடியர் மடத்துத் தலைவர் புலவருக்குப் பரிசில் நல்கியது கூறல்.
அன்ன வேளை யழகுற் மேனியில்
அரிய வெண்ணீறும் அக்கமா மணியும்
வெள்ளொலி யாடையும் விளங்குறத் தரித்த
அருளா டிகள்மடத் தருள்மிகு தலைவர்
அகத்திற் கருணை முகத்திற் பொலியவந்       460

தென்கரம் பற்றி யேகினர் சென்றோர்
மண்டபத் தென்னை வான்றவி சமர்த்தி
யென்முக நோக்கி யெழில்மிகு மிந்தச்
சென்னிக் குன்றந் திகழ்தரப் பொலியுங்
குன்ற மெறிந்த குமரவே ளுனக்கு       465

நல்லுடல் வாழ்வும் நயமுறு செல்வமும்
மன்னுற வருளை வழங்கினன் வாழ்கென
நீற்றினை யென்றன் நெற்றியிற் பூசிக்
குமரி வாழைக் குருத்தினை விரித்து
நீர்தெளித் தென்ற னேர்முக மிருந்து       470
______________
[458]. ஒலியாடை - துவைத்த ஆடை.
[469]. குமரிவாழை - இளவாழை.
____________

திகழைந் தமுதுந் தேன்தினை மாவும்
மாம்பழங் கதலி வருக்கையின் சுளையும்
அறுசுவைக் கறிகளு மப்பள வகையும்
அன்னமும் பருப்பும் ஆன்புது நெய்யும்
சுண்டை வற்றற் சுவைமிகு குழம்பும்       475

நெல்லிசேர்த் தரைத்த நிகரில்மோர்க் குழம்பும்
மிளகு சீரகம் மிதமாய்த் தூதுளை
சேர்த்துச் செய்த தெளிவுறு ரசமும்
கன்னல் நெய்பால் கலந்துடன் சமைத்த
சர்க்கரைப் பொங்கலுந் தாளித மணஞ்சேர்       480

புளியுலை வெந்த பொன்னிறப் புழுக்கலும்
மொந்தையில் நிறைந்த முளிதயிர் விராவிய
அன்னமு மாப்பா லடிசிலும் துவையும்
அன்புறப் படைத்து ஆர்வமிக் குடைய
சொல்லினும் பொருளினுஞ் சுவையுற முகமன்       485

இன்னுரை பலவு மிடையிடை கூறி
உண்ணுமா றென்னை யூக்கின ருணவை
வயிறும் வாயும் வாய்த்த பயன்கொளத்
தேவ ரமுதினுஞ் தீஞ்சுவை மிகுந்த
தென்றமிழ்க் கவியிற் சீர்பெறச் சுவைத்து       490
________________
[471]. ஐந்தமுது- பஞ்சாமிர்தம். சர்க்கரை,தேன்,நெய்,தயிர்,பால்.
தேன்தினைமா -தேன் கலந்த தினைமா.
[472]. கதலி - வாழைப் பழம். வருக்கை - பலாப் பழம்.
[473]. அறுசுவை - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.
[479]. கன்னல் - சருக்கரை.
[481]. புழுக்கல் - சோறு.
[482]. முளிதயிர் - முதிர்ந்த தயிர். வீராய - கலந்த.
[483]. ஆப்பால் அடிசில் - பாலுலையில் வெந்த வெண்சோறு. துவை - துவையல்.
[485]. முகமன் - உபசாரம்.
[490]. தென் - அழகு. தமிழ்க்கவியின் - தமிழ்க் கவியிலுள்ள சொற்சுவை
பொருட்சுவை தொடைநோக்கு நடைநோக்கு முதலியவற்றை சுவைத்தறிவது போல.
_________________

உண்டே னுண்டபி னுற்றவென் முகத்தின்
மலர்ச்சி கண்டு மகிழ்வுறு மடியவர்
என்னை நோக்கி யிலங்கெழிற் புலவ!
முன்னைமா தவத்தின் முழுப்பயன் கூட்டச்
செம்பொன் வரையின் சிகரமென் றுரைக்குஞ்       495

சென்னிமா மலையிற் சேர்ந்தனை யாதலின்
இல்வாழ் வதனி னிருந்துயர் கடந்து
நல்வாழ் வதனை நயமுறப் பெறுவாய்.
இம்மலை மகிமை யியம்புத லெளிதல்
வாயினுஞ் சிறிதிங் கறைகுவன் கேண்மோ.       500

தெவ்வுசூர் மாவின் றிறலுரம் பிளந்த
செவ்வேட் சேயின் றிருவருட் பொலிவும்
போன வுயிருடல் புகுந்திடச் செய்யும்
சஞ்சீ வனிமுதற் சாற்றுநால் வகைசேர்
மருந்து களுமிம் மலைதனி லுண்டு.       505

மூப்பும் பிணியு முறைபெறத் தவிர்த்து
மரணமெய் தாமல் வாழ்ந்திடச் செய்யும்
கையா வெட்டியிக் கல்வரை யுண்டு.
கடியர வோட்டுங் கடிமண மிகுந்த
கருநொச் சியைநீ காணலா மீங்கு       510

அற்றற் றுடல்சேர் அற்புதங் கொண்டு
சினந்தெயி றதனாற் றீண்டிடிற் சித்தி
தருவதாய் முத்துந் தவளமும் போன்ற
வெண்ணிறச் சாரை மேவுமோர் பாலில்
கண்முன் றோன்றிக் காணப் பெறாத       515
________________
[495]. செம்பொன்வரை - மேரு மலை. சிகரம் - முடி.
[501]. தெவ்வு - பகைவன். சூர்மா - மாமரவடிவாகிய சூரபன்மன். உரம் - மார்பு.
[504]. நால்வகை மருந்து - சல்லியகரணி, சந்தானகரணி, சமனியகரணி, மிருத சஞ்சீவனி
[513]. தவளம் - கற்பூரம். [514]. சாரை- வெண்சாரைப் பாம்பு.
_________________

காணாச் சுனையுங் காணுமிம் மலையில்
கருங்கொடி யென்னுங் காகமே றாத
சினகரக் கூடஞ் சிறந்திடு மோர்பால்
வானம் பெய்யாது வறட்சிமீக் கூர்ந்து
கனல்வளி வீசுங் காலநீர் சுரந்து       520

அருவியாய் வழியும் அற்புதம் பெருக்கு
மாமாங்கச் சுனையி மலைதனிற் பொலியும்
சித்தர்வாழ் குகையுத் தெய்வமூ லிகையும்
பவளக் குறிஞ்சியும் பரூஉக்கலின் முளைத்த
புல்லுரு வியுமிப் பொன்வரை யுண்டு       525

இம்மலை மாதவ மெய்திவாழ்ந் திருந்திவ்
வற்புத மனைத்தும் பொற்புறக் கண்டு
சென்னிமா மலையிற் செவ்வேள் தனக்கும்
வள்ளிதெய் வப்பிடி மங்கையர் தமக்கும்
ஆலயம் கோபுரம் அழகுசேர் பதிட்டை       530

திருத்தேர் விழாக்கள் சிறப்புறச் செய்தோன்
அரவணி சடையோற் கன்புமா றாத
சரவண முனிவன் தமிழ்மொழிச் செய்த
தலபுரா ணமுமித் தலத்தினி லுண்டு.
அன்னதன் பெருமை யாரளந் துரைப்போர்?       535
_______________
[518]. சினகரக் கூடம் - கோவிலில் உள்ள கோபுரங்களில் ஒன்று.
[522]. மாமாங்கச் சுனை -- மாமகச் சுனை. மலையில் தென்மேற் றிசையில் உள்ள
விநாயகன் கோவிலுக்கு எதிர்ப்புறத்திலுள்ளது.
[523]. சித்தர் வாழ்குகை -சத்திய ஞானியார் குகை; இது புண்ணாக்குச் சித்தர் குகை
என வழங்குகிறது. வள்ளியம்மன் சந்நிதிக்கு மேற் றிசையிலுள்ளது
[524]. பவளக்குறிஞ்சி - பெருங்குறிஞ்சி முதலிய ஐவகைக் குறிஞ்சிகளில் ஒன்று.
பவளம் போன்ற சிவந்த நிறமுடையதாயிருக்கும். குறிஞ்சி - மருதோன்றி.
525. புல்லுருவி - பறவைகளையகப்படுத்தல் முதலிய சூழ்ச்சிகளுக்குரியது.
குருவிச்சையெனப் பெயர் பெறும்.
“கல்லதன்மேல், தோணாத புல்லுருவிச் சூட்சிகளும்" - மேழி விளக்கம்.
[530]. பதிட்டை -பிரதிஷ்டை.
[533]. சரவண முனிவன் - சென்னிமலையை யடுத்துள்ள பிடாரியூர் என வழங்கும் திருவிருந்த புரத்தில் தோன்றியவன். கலியுக சகாப்தம் 4649ல் வாழ்ந்தவன்.
_______________

மணப்பூங் கடம்பணி மார்பனை யிவ்வரை
யன்புடன் கண்டவ னடிவணங் குறுவோர்
பூமகள் திருவும் புவிமகள் திறனும்
நாமகள் கல்வியும் நலமுறப் பெற்று
மனைவி மகாருடன் மகிழ்வுற வாழ்ந்து       540

சிவஞான சித்தியும் சீர்பெறு முத்தியும்
எய்தப் பெறுவ ரென்றினி தியம்பிச்
செம்பூம் பட்டின் சீருடை யென்றன்
மருங்கில் விளங்க மகிழ்வுட னுடுத்தி
எழுதலை முறையு மெடுக்கக் குறையாப்       545

பொன்னும் மணியும் புரைதவிர் முத்தும்
மணிவிர லாழியு மகரகண் டிகையும்
மரகத மாலையும் வயிரக் கடுக்கனும்
தங்கப் பதக்கமும் தகுகைக் கடகமும்
அழகு திகழுறு மணிகலன் பிறவும்       550

நோக்கு நுழையா நுண்ணிழை யோட்டிய
வேயுரி யன்ன வெண்டுகி லாடையும்
கம்பளச் சால்வையுங் கவின்றலைப் பாகையும்
சட்டையுங் குட்டையுந் தரிக்கு மேலாடையும்
நீறுஞ் சாந்தும் நிரல்பட நிரைத்த       555

பொற்பூந் தட்டைப் பொற்புற வெடுத்து
ஆர்கலி யுவகை யகந்தனிற் பெருக
அறிஞ! கொள்கவென் றன்புடன் கொடுத்துச்
சென்னிமா மலைவேள் திருவரு ளதனால்
திருவு மகிழ்வுஞ் சீருறப் பெருக       560

வழிவழி யாக வாழ்கென வாழ்த்திய
அருளா ளடிக ளடியிணை போற்றி
_______________
[551]. நோக்கு --பார்வை. நுண்ணிழை - மிகவும் நுட்பமான நூலிழை, ஓட்டிய - செலுத்திய. 552. வேய்உரி - மூங்கிலின்றோல். இது மிகவும் மென்மையானது
[557]. ஆர்கலி - கடல் போன்ற; உவகை பெருமகிழ்ச்சி
________________

நிலம்படர் வணக்க நேருறச் செய்து
பிரியா விடையாற் பெயர்ந்தனன் வந்தேன்.
வாழிய கேண்மதி வளர்மதிப் புலவ!       565

எல்லா மலையிலு மிருந்தருள் செவ்வேள்
சென்னி மலையிற் சிறப்புற அருள்வான்
ஆகலின் நீயு மம்மலை சென்று
வள்ளி துணைவன் மலரடி கண்டு
புகழ்ப்பொரு ளமைந்த தமிழ்க்கவி மாலை       570

வளமுறப் பாடி வணங்குவை யாயின்
வறுமைப் புலியும் வருத்துநோய்ப் பேயும்
வாய்விட் டோட வளர்மிகு செல்வமும்
உடலி னலமு மொளியும் பெறுகுவை.
சென்னி மலைதிகழ் சீர்பெறு நாடும்       575

பூந்துறைநாடு.
நாட்டின் சிறப்பும் நானில வளமும்
மலைமேல் முருகன் வளர்புகழ் பாடலும்
பாட்டிற்கு வந்தவன் பரிசருள் திறமும்
சிறப்பு முறையிற் றெரிதரக் கூறுவல்.
அன்புறக் கேட்டி யருந்தமிழ்ப் பாவல!       580

ஆதவன் சூழு மகன்றிரை யுலகின்
மாதவஞ் செய்த மாண்புறு திசையெனுந்
தென்றிசை யதனிற் செழிப்புற விளங்கி
வடதிசை வேங்கடந் தென்றிசைக் குமரி
எனுநான் கெல்லையு ளியல்புறக் கிடக்குந்       585

தகுபொருள் விரித்த தண்டமிழ் நாடு
வடிதமிழ் வலத்தால் வழிவழி வளர்த்த
முடிகெழு வேந்தர் மூவரும் புரந்த
சேரஞ் சோழம் பாண்டியங் கொங்கு
தொண்டை யென்னுந் தொல்பெயர் படைத்து       590
______________
[563]. நிலம்படர்வணக்கம்-- நிலத்தில் வீழ்ந்து வணங்குதல்.
[572]. வறுமைப்புலி - வறுமையாகிய புலி. நோய்ப் பேய் நோயாகிய பேய். உருவகங்கள்.
[581]. ஆதவன் சூழும் சூரியன் வலமாகச் சுற்றுகின்ற.
திரையுலகு கடல் சூழ்ந்து நிலவுலகம்.
________________

ஐவகைப் பிரிவா மவற்றினுட் கொங்கு
நீர்நில வளத்தால் நிகரில தாகிச்
செல்வமுங் கல்வியுஞ் சீர்தரு மீகையும்
வீரமும் புகழும் விளங்குறு நாடாம்
பிறைமுடிக் கண்ணிப் பெருமான் செஞ்சடை       595

திசையகம் பொலியத் திருநட மியற்றும்
அம்பலந் திகழு மணிகெழு காஞ்சிவாய்ப்
பிறவாப் பழனப் பேரூர்ப் பதிமுதல்
இறவாச் சிவதல மெண்ணில் திகழ்வது
மாறுகொள் சூரன் வல்லுரம் பிளந்து       600

கூறுசெய் வேலன் குடிகொண் டிருக்கும்
ஆறு படைவீ டாமெனுந் தலத்தில்
வீறுகொ ளேரக வெற்பெனுஞ் செங்கோ
டாறுகா விரிவா யணிகொள வுடையது
இமிழ்கடல் ஞாலத் தீடிணை யின்றித்       605

தமிழ்ச்சுவை யெல்லாந் தாமொரு வடிவாய்ப்
புலவர்க ளெல்லாம் புத்தமு தென்னக்
களிகொண் டுள்ளக் கவலைதீர்ந் தனராய்க்
கொள்ளைகூட் டுண்ணுங் கொள்கையின் மலிந்து
ஐஞ்சிறு காவிய வடைவினு ளொன்றாய்ப்       610

பெருங்கா வியத்திறம் பெற்று விளங்குந்
தலைமணிக் காவியந் தானெனும் புகழ்சேர்
கொங்குவேள் மாக்கதை கொடுத்ததந் நாடு.
____________
[609]. கொள்ளை - மிகுதி. கூட்டுண்ணும் -கூட்டியுண்ணுகின்ற.
[610]. ஐஞ்சிறு காவியம் - யசோதர காவியம், சூளாமணி, உதயண
காவியம், நாககுமார காவியம், நீலகேசி. அடைவு - முறை.
[613]. கொங்குவேள் மாக்கதை - உதயண காவியம். இது விசயமங்கலத்தில் வாழ்ந்திருந்த கொங்குவேளிர் என்பவரால் செய்யப்பெற்றது. இவரது காலம்
கி. பி. 6-ஆம் நூற்றாண்டு. இதனைப் பெருங்கதையென்பர்.
“நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக்கொண் டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே"
-       - கொங்குமண்டல சதகம்.
___________

வெண்ணைச் சடையன் வியன்குலக் காணி
நண்ணப் பெற்றது நலமுறு கொங்கம்.       615

மங்குறோய் மாட மதுரையிற் சொக்கர்
கொங்குதேர் வாழ்க்கை யெனுங்கவி முதலின்
மங்கலப் பேர்கொளு மாட்சிமிக் குடைய
______________
[614]. வெண்ணைச் சடையன். நடுநாட்டிலுள்ள திருவெண்ணைநல்லூர்ச் சடையப்பன்
குலம் -- சாத்தந்தை குலம் காணி-உரிமையாகிய இடம். வெள்ளோடு, காங்கயம், விசயமங்கலம், காரை தொளு, பாலதொளு, அல்லாளபுரம். இவை சாத்தந்தை குலக் காணியாய்க் கொங்கு நாட்டில் விளங்கும் ஊர்கள்.
வெண்ணைநல்லூர்ச் சடையன் – இவன் கொங்குமண்டல சதகம் ஒன்று பாடுவித்தவன்.
“இடுக்குவர் பிள்ளை தன்னை யிறங்கினு மிறக்கா ரென்று
வடித்தமிழ் நூலையாசான் வாலசுந் தரம்யான் சொன்னேன்
படிக்கவே பொருட்சாத் தந்தைப் பண்ணைகோன் வெண்ணை நல்லூர்
கொடுத்திடு மிரதம்வாரிக் கொங்குசெய் சதகந் தானே'
      --- கொங்குமண்டல சதகம் அவையடக்கம் - 3.

வெண்ணைச் சடையன் கொங்கு நாட்டிற் காணியுடையவன் என்பது.
“சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத் தெண்ணாயிர மென்னும் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுக மாயிரத் தன்பத்தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே "
“பெண்ணைநல் லாறுந் திருக்கோவ லூரும் பிரபலமும்
வெண்ணைநல் லூருஞ் சடையனல் வாழ்வும் விளங்குசம்பாப்
பண்ணை குலாதிபன் தொண்ணூறு மாறும் பரர்பதி
மண்ணையும் வெண்ணையு முண்டவன் வாழ்கொங்கு மண்டலமே"
      -கொங்குமண்டல சதகம் ஏட்டுச் சுவடி -58-59.
[616]. மங்குல் - மேகம். மாடம் - உப்பரிகை (மேல் மாடம்)
சொக்கர் - பேராலவாயர்.
[617]. 'கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ்செப் பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே'       - குறுந்தொகை.
[618]. மங்கலப் பேர் - கொங்கு.
______________

கொங்குச் செல்வி கொளுமுறுப் பாக
இருபா னான்கெனு மெழினா டுடையாள்       620

அத்திரு நாடா மணிதிகழ் மகட்குத்
திகழ்முக மாகச் சிறந்திடு நாடு
புகழ்மிகப் பொலியும் பூந்துறை நாடே.
தீந்தமிழ்ச் சைவச் செழுந்துறை விளக்கும்
பூந்துறை நாடு பூவள் முடையது.       625

பொன்றிகழ் குடகப் பொருவரைத் தோன்றிப்
பொன்னு மணியும் பொருதிரைக் கரத்தால்
வாரிக் கொழித்து வறட்சிமீக் கூர்ந்த
வேனிற் காலத்தும் விழைவுறப் பெருகிப்
பெட்புடன் மகவைப் பேணுறுந் தாய்போல்       630

உலகுயி ரூட்டு முயர்கா விரிநீர்ப்
பொலியும் பூந்துறை நாட்டில்

குறிஞ்சி நிலம்.
செங்கேழ் முருகன் சிறந்தமர் காணியாய்க்
குறவரும் மருளும் குன்றத் துச்சியில்
அவிர்துகில் புரையு மருவியுஞ் சுனையும்       635

குறவர்தே னெடுத்தலும் குன்றக் குறத்தியர்
வரைத்தினை குற்றி மகிழ்வுறப் பாடும்
வள்ளைப் பாட்டின் மங்கல வொலியும்
குறக்குடிக் கன்னியர் குளிர்தினைப் புனத்தில்
ஆயோ வென்னும் அழகிய மொழியும்       640
___________
[619]. கொங்குச் செல்வி - கொங்கு நாடாகிய செல்வி; உருவகம்.
[626]. குடகப் பொருவரை - மேற்கிலுள்ள சையமலை.
[633]. செங்கேழ் - செந்நிறம். காணி - உரிமையான இடம்.
[634]. குறவரும் மருளும் குன்றம் என்பது குன்றத்தினுயர்ச்சியைக் காட்டுவதால் உயர்வு நவிற்சி.
[635]. அவிர்துகில் - விளங்குகின்ற கொடிச்சீலை. புரையும் - ஒத்த
[638]. வள்ளைப் பாட்டு - உலக்கைப் பாட்டு.
[640]. ஆயோ- பறவையோட்டும் சொல் ஆலோலம் என்பர்.
_________________.

மலையெதிர் சிலம்ப வந்திடு மொலியும்
சேணோன் வீசிய கவண்கல் மீதுறக்
கறையடி சீறுங் கடும்புலிக் குழாமும்
சந்தனந் தேக்கின் றழைவிரி கிளையில்
கிள்ளை கொஞ்சலுங் கிளர்மயி லாடலும்       645

வேங்கையும் பிணாவும் மெய்யுறக் கூடி
வாய்வாய் வைத்து மகிழ்வுறுங் காட்சியும்
தினைப்புனங் காத்த சிறுமியர் நண்பகல்
அருவி யாடியு மகன்சுனை மூழ்கியும்
கொய்தளிர்க் குறிஞ்சிக் கொழுமலர் கொய்தும்       650

காந்தள் பறித்தும் கண்ணிகள் புனைந்தும்
கூந்தலிற் சூடியும் குளிர்தே னுண்டும்
சிலம்பெதிர் கூவியும் திகழ்ந்திடு காட்சியும்
மண்டிய கிடக்கும் மலைநிலக் குறிஞ்சியும்

முல்லை நிலம்.
ஆழி சங்க மடுகதை வில்வாள்       655

பாழி நெடுங்கைப் பரூஉமல ரேந்திய
திருவுறை மார்பிற் றிருமா லென்னுங்
காயா மலர்நிகர் காட்சிகொள் மேனி
மாயோ னுறையும் வளம்மிகு காட்சியும்
ஆயர் பாடியும் ஆன்மணி யோசையும்       660
___________________________________________________________
[641]. சிலம்ப - ஒலிக்க. [642]. சேணோன்- பரண்மீதிருப்பவன்.
[643]. கறையடி - யானை சேணோன் எறிந்த கவண் கல் தம்மீது படப்
பக்கத்திலுள்ள யானையைச் சீறும் புலிக் குழாமென்க.
[646]. வேங்கை - ஆண் வேங்கை. பிணா-பெண் வேங்கை.
[653]. சிலம்பெதிர் கூவல் - (எதிரொலியுண்டாகுமாறு) மலையின் எதிரில் நின்று கூப்பிடுதல்,
[655]. ஆழி - சக்கரம். கதை- தண்டாயுதம்.
[656]. பாழி - வலிமை; பெருமை, பரூஉமலர்- பெருமையாகிய செந்தாமரைப் பூ.
________________

குடவர்வேய்ங் குழலும் குடத்தியர் குரவையும்
நாவலர் வண்டு நல்லிசை பாடக்
கானியாற் றடைகரைக் கவின்பெற மலர்ந்த
குருந்துந் தோன்றியுங் கொழுநெடுங் காதிற்
புல்வாய் முயலும் பொலிகான் கோழியும்       665

கார்விளை யெள்ளுங் கவின்கதிர் வரகும்
குல்லையு மேவிய குறுமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற முல்லையந் திணையும்

மருத நிலம்.
வெண்ணிறந் தழீஇய விளங்குநாற் கோட்டு
ஐரா வதப்பிட ரணிமணிக் குடைக்கீழ்       670

பொன்னரி மாலை பொலிமணி மகுடமும்
வச்சிரப் படையும் வல்லிடிக் கொடியும்
வலமுறத் தாங்கிய வானவர் தலைவன்
காமதேனுங் கற்பகச் சோலையும்
சிந்தா மணியுஞ் செழுநிதிக் குவியும்       675

அமுதமும் போகமு மரம்பையர் தடமும்
களியுறப் பெற்ற கண்ணா யிரத்தோன்
உலகுயிர் புரக்கு முயர்மழைச் செல்வன்
ஐந்தருச் செல்வி யகமகிழ் நாயகன்
மகட்கொடை வேட்கு வழங்கிய புகழ்சால்       680
______________
[661]. குடவர் - இடையர். குடத்தியர் - இடைச்சியர். குரவை - குரவைக் கூத்து.
[663]. கானியாறு - காட்டாறு. அடைகரை அடுத்துள்ள கரை.
[665]. புல்வாய் - புல்லைவாயிலுடைய; மான் எனினுமாம்.
[667]. குல்லை - கஞ்சாச் செடி. குறுமுகை - சிற்றரும்பு.
[668]. முல்லையந்திணை - அழகிய முல்லை நிலம். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாம்.
[670]. ஐராவதம் - இந்திரனுக்குரிய வெள்ளை யானை. இந்திரன் மருத நிலத்திற்குரிய தெய்வம்.
[672]. வச்சிரம் - வைரவாள்.
[679]. ஐந்தருச் செல்வி – இந்திராணி.
___________________

இமையாச் செங்க ணிந்திரக் கடவுள்
காவல் கொள்ளுங் கடிமலர்ச் சோலையும்
செந்தா மரையுஞ் செங்கழு நீரும்
பூத்துப் புனல்வழி பொய்கையிற் பெடையொடு
அன்ன மாடும் அகன்றுறைக் காட்சியும்       685

மருதங் காஞ்சி மரநிழற் பொதும்பர்
மள்ள ருழத்தியர் வளர்குழல் நீவி
யூடல் தீர்க்கு முவப்புறு காட்சியும்
அரக்கித ழாம்ப லரும்பினை மேய்ந்து
குண்டுநீர்க் குட்டை குழிகளின் மூழ்கிக்       690

கலங்கிய நீரைக் களிமிக வருந்தி
மாவி னீழல் வளமுறத் துயிலும்
கயவாய்க் கோட்டுக் காரான் குழூஉவும்
நிலத்துக் கணிசெய் நெல்லுங் கரும்பும்
பாளைக் கமுகும் பைங்குலைத் தெங்கும்       695

பாசடை வாழையும் பலாவும் வஞ்சியும்
மடைநீ ரொலியும் வரம்பிடை மணியும்
களைகளை மகளிர் களமது வுண்டு
மழலைக் கிளியின் மகிழ்வுறப் பாடலும்
வருபுன லாடலும் மன்றணி விழாவும்       700
_________________
[686]. பொதும்பர் - சோலை.
[687]. மள்ளர் - மருதநிலத்தோர் (உழவர்). குழல் - கூந்தல். உழத்தியர் - மருதநிலப் பெண்கள்.
[688]. ஊடல் - பிணக்கு; பிரணய கலகம்.
[689]. அரக்கிதழ் ஆம்பல் - செவ்வல்லி. 690. குண்டு - ஆழம்.
[693]. கயவாய்- பிளந்த வாய். கோடு - கொம்பு காரான் - எருமை. குழூஉ- கூட்டம்.
[696]. பாசடை - பசுமையான இலை. வஞ்சி - வஞ்சி மரம்.
[700]. மன்று-மன்றல்; கலியாணம். அணிவிழா- அழகிய திருவிழா
________________

மல்கிய நீர்மலி மருதத் திணையும்

பாலை நிலம்.
தவளப் பிறையொளிர் சடைமுடி யுடையாள்
பச்சை நிறத்தி பவள வாய்ச்சி
முத்தின் மூரல் முகமதி யுடையாள்
கயனிகர் கண்ணி கச்சார் தனத்தி       705

எண்டோட் செல்வி இமையவர் நாடி
அகநிறை கருணை முகமுறு சீற்றம்
பொற்புற விளங்கு மற்புதக் கன்னி
மாமறைக் கூட்டில் வளர்ந்திடுங் கிள்ளை
மகிடற் காய்ந்து வானவர்ப் புரந்தாள்       710

தண்டு வில்வாள் சக்கரம் சங்கம்
கொண்டு விளங்குங் கொற்றவை செல்வி
பூதவே தாளப் பொருபடை யுடையாள்
கான நாடி கருதுறு மடியர்
அஞ்சிடா வண்ண மருள்புரி சண்டிகை       715

தென்றல் வாடை திகழிரு புறத்துஞ்
சாமரம் வீசத் தரளமா லிகைசூழ்
திங்கட் குடைக்கீழ்த் திகழ்தர வயர்வாள்
கற்சிறைக் கோட்டங் கடுகினர் சென்று
வழிப்பறி சூறை வருபொருள் கொற்றம்       720
________________
[702]. தவளப்பிறை - வெண்மையாகிய பிறைச்சந்திரன்.
பாலை நிலத்திற்குரிய தெய்வம் துர்க்கை.
[704]. மூரல் - புன்முறுவல்.
[714]. கானநாடி - காட்டு நாட்டினை உடையவள்; காடுகிழாள்.
[717]. சாமரம் - விசிறி. தரளமாலிகை - முத்து மாலை.
[719]. கற்சிறைக் கோட்டம் - கல்லிற்கட்டிய காவலையுடைய கோயில்.
கடுகினர் - விரைந்தனராய்; முற்றெச்சம்
[720]. வழிப்பறி - வழிச்செல்வோர் பொருளைப் பறித்தல் சூறை கொள்ளையடித்தல்.
கொற்றம் - வெற்றி.
____________

செழிப்புற வருள்வாய் தேவியே! யென்று
புலிநிகர் மறவர் புலிப்பற் றாலி
மலியணி மறத்தியர் மறப்பலி தந்து
நிலமுற வணங்கி நின்றுறு காட்சியும்
வாகையுங் கோங்கு மணமலர் சொரிதலுங்       725

கற்பர லுண்ட கவின்மணிப் புறாவின்
சேவலும் பேடுஞ் சென்றினி தமர்ந்து
கள்ளியஞ் சினையிற் களிப்புறக் கூவலுந்
திலதநீ ரில்லாச் சேற்றுநீர்க் கூவலும்
செங்கதிர் வெய்யோன் றெறலினாற் கரிந்த       730

கள்ளியும் பாலையும் காரகில் மரமும்
பசித்தீ வருத்தப் பருந்துங் கழுகும்
ஆனையு மானு மடர்செந் நாயு
மாவிபோ காம ல்லைதரு காட்சியுந்
தாங்கொணாப் பசித்தீத் தழற்படுங் காலை       735


உயர்ந்தோர் தாமு முயர்வினை விடுத்து
இழிந்தோர் நல்கு மிழியுண வுணல்போல்
திரிதர வந்த செந்நாய் வாயின்
வாங்கிய நாவின் வடிதுளி நீரைத்
தேவாங்கு நக்குஞ் சிறுபுன் காட்சியும்       740

கூர்த்தலைப் பரலுங் குவிமலை முரம்பும்
கார்ப்பரு வத்துங் கனலுறு வெப்பமும்
மன்னிய பாலை வன்பெருந் திணையும்
சூழக் கிடந்ததுஞ் சுடரொளி வெள்ளி
மலைவாய்த் தெய்வ மணிநிழற் காஞ்சி       745

மரவேர்த் தோன்றி மலரொடு சாந்தும்
வாரி வீசி வருதிரைக் கரத்தால்
போற்றி வணங்கிப் பொலிவுட னிருபாற்
சிவதலம் பலவுஞ் செழிப்புறச் செய்து
கள்ளவிழ் சோலை கடிதினிற் புகுந்து       750
________________________
[723]. மறப்பலி-வீரப்பலி (பூசை)
[729]. திலதம் - பொட்டு. கூவல் - கிணறு.
[740]. தேவாங்கு - தேவாங்கு என்னும் மிருகம்.
__________________________

அமர முனிவன் அகத்தியன் கொணர்ந்த
காவிரி கலக்குங் காஞ்சிமா நதியின்
அணிகெழு வடபா லமைந்தது மான

சென்னிமலைமேல் செவ்வேளைத் தரிசித்தல்.
வானுற வளர்ந்த வளமிகுஞ் சிகரச்
சென்னிமா மலையிற் செல்குவை செல்லின்       755

அம்மலை வழிமுத லமைவுடன் விளங்கும்
மலைவழி வேழ மாமுகற் போற்றி
மலைகா வடிகொள் மலைகா வலனாம்
மலையடி வார மண்டபத் தமரு
மிடும்பக் குமர னிணையடி பணிந்து       760

வழித்துணை யாகென மலைமிசை யேறி
செழிப்புறு முச்சி சேர்ந்தினி தருளும்
அந்தி வணம்போ லழகொளிர் மேனிச்
சந்தி விநாயகன் றாண்மலர் தொழுது
அண்டர் மாதவரு மருமறைக் குழாமு       765

மெண்டிசை யோரு மின்புறப் போற்ற
நந்தா வளமருள் நறுமணம் பொலியுஞ்
செந்தா மரைமலர்த் திருவடித் துணையும்
இடைப்பட் டிகையு மிலங்குகோ வணமுந்
தொடைமலர் மாலை துலங்குநூன் மார்பும்       770

வேத்திரத் தண்டம் விளங்கு கைத்தலமுஞ்
சாத்துடை யிடையிற் சார்ந்த கைத்தலமும்
ஒளிவளர் குழைதா ழூறுசெவித் துணையு
________________
[752]. காஞ்சிமாநதி - நொய்யலாறு.
[763]. அந்திவணம் - செவ்வானத்தின் நிறம். வணம் - வண்ணம் என்பதன் விகாரம்.
[769]. இடைப்பட்டிகை - அரை நாண்.
[771]. வேத்திரத்தண்டம்- பிரம்பாகிய தண்டு. கைத்தலம் - வலக்கரம்
[772]. இடை இடுப்பு. கைத்தலம் - இடக் கரம்.
_________________

மளியுற நோக்கு மலர்விழித் துணையும்
பூத்தபுன் சிரிப்புப் பொலிதனி முகமும்       775

பின்றாழ் சடையும் பிறங்கநின் றுலக
நன்றா மாறெந் நாளும் புரக்கு
மரன்றிரு மதலையை யயில்வேற் கரனைச்
சிரங்கை குவித்துத் திருவடி தாழ்ந்து

முருகன் புகழ் பாடுதல்.
கன்னியம் பிகைசேய்! கார்த்திகை புதல்வ!       780

சென்னியங் கிரியிற் சேர்திரு முருகா!
பொன்னியந் துறைசேர் பூந்துறை நாட!
ஆரந் திகழு மணிகெழு மார்பின்
வீரவா குப்பேர் வீரனே முதலாம்
வீரர் தம்முடன் மேவுறுந் தலைவ!       785

உறுநினை வினிலு முளஞ்சுடும் பொல்லா
வறுமைநோய் பிணிப்ப வாட்டமுற் றயர்ந்தேன்
பாடும் புலவர் படுமிடர் தீர்த்து
நாடும் வாழ்வு நனிமிக வருளும்
புகழ்மிக வுடைய புண்ணியக் கடவுள்       790

நீயே யாகலின் நின்புகழ் பாடி
யுறுதுயர் தீர வுனைவந் தடைந்தேன்.
சொல்லுறு மறையுஞ் சொல்லுதற் கரிய
வெல்லையி னின்புக ழியம்புதற் கரிதே
யெனினு மன்பி னிசைக்குவ னீயே       795
__________________
[775]. தண்டபாணிக்குச் சடையுமுண்டு.
“தொண்டினர் சிற்சில ருளத்திற் சடிலத் தோடு
தோன்றலு முண்டதன் பெருமை சொலவொண் ணாது”
      கௌமாரமுறைமை பக்திக் காண்டம் 73.
[782]. பொன்னி அம் துறை - காவிரியின் அழகிய நீர்த்துறைகள்.
[784]. வீரவாகு முதலிய வீரர் பதின்மர். அவர்கள். வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேச்சுரன், வீரபுரந்தரன், வீரராக்கதன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன் என்பவர்கள்.
_________________

மூவிலைச் சூல முதற்பெருங் கடவுள்
மேவுறு நெற்றி விழிவரு பொறியாய்த்
தோன்றிக் கயிலைத் தொல்வரை யடுத்த
வடவிம யச்சார் வளர்சர வணஞ்சூழ்
தடமலர்ப் பொய்கை தன்னிலா றுருவாய்       800

அறுவர் தருமுலை யமுதினை யுண்டு
நறைவிரி கமல நறுமலர் வளர்ந்தனை
இமையா முக்க ணெண்டோட் செல்வ
னம்மை யப்ப னருளிய வாக்கால்
அரன்மனைக் கிழத்தி யம்பிகை கையா       805

லார்வமுற் றணைப்ப வறுவே றுருவுந்
திரண்டொரு வடிவாய்த் திருமுக மாறும்
ஆறிரு புயமு மணிகொளத் திகழ்ந்தனை.
மண்ணுறு கடலும் வானமு மலையும்
நண்ணி யாடல் நடுக்குறச் செய்தனை.       810

விண்ணோர் சினந்தமர் மேவிடத் தோல்வி
நண்ணுறச் செய்தனை நடுங்கிய தேவர்
அசுர்ரசெ யச்ச மக்ன்றிடத் தம்மைக்
காக்கும் வலிமிகு கடவுணீ யென்று
தேறினர் தேவ சேனா பதியென       815

வாழ்த்தி வணங்கி வரிசை களாகத்
தீத்தழற் கடவுள் செஞ்சுடர்க் கோழியும்
மாத்தரு வேந்தன் மஞ்ஞையுந் தென்றிசைக்
கோமான் மறலி கொடுந்தகர்க் கடாவும்
கொடுத்தன ரவரும் கூடிய பிறரும்       820
________________
[796]. முதற்பெருங் கடவுள் - சிவபெருமான். [797]. பொறி - தீப்பொறி.
[801]. அறுவர் - கார்த்திகை மாதர் அறுவர். “அறுமீன் முலையுண் டழுது விளையாடி” - கந்தர் கலிவெண்பா.
[818]. மா – பெருமை. தருவேந்தன் - ஐந்தரு வேந்தன்; இந்திரன். மஞ்ஞை - மயில்
[819]. மறலி - இயமன். தகர்க் கடா- ஆட்டுக் கடா
___________

வச்சிரந் தோட்டி வானுதி யம்பு
வடிவேல் மாலை மணிமழுத் தண்டம்
ஆகிய பிறவு மன்புறத் தந்தனர்
அழகுறு மனைய யாவையு மேற்றுப்
பெரிதுள் மகிழ்ந்து பேரருள் செய்தனை.       25

தேவர் பெருந்துயர் தீர்த்திட வேண்டப்
பவளம் பூத்த பசுங்கடல் நாப்பண்
தவளப் பளிங்கின் றடந்திடர் மேய
மயேந்திரத் திருந்து மன்னுயிர் தின்று
விண்ணகம் புடைத்து விழைபொருள் கவர்ந்து       830

வானவர் குழாத்தை வல்விலங் கிட்டுச்
சிறைவைத் தொறுத்துத் தீத்தொழில் புரிந்த
கொன்றுண லஞ்சாக் கொடியசூர் முதல்வனும்
அசுர வெள்ளமு மடுசிறைப் புட்பேர்க்
குன்றமுங் கடலுங் கொன்றுயிர் குடித்துப்       835

பவளச் சிவப்பும் பாசிலைக் கூர்மையும்
தழற்கால் நுனியுந் தாரைக ளெட்டும்
மந்திர வலியும் மலிந்தழ குற்ற
செஞ்சுடர் மணிவேற் றிருக்கரங் கொண்டனை.
வன்சிறை யுற்ற வானவர் தம்மை       840

விண்குடி யேற்றி விளங்குறச் செய்தனை.
அசுரர்செய் துயர மகன்றினி திருக்க
வாசவன் றனக்கு மணிமுடி சூட்டினை.
அமுதமுந் தருவு மவிர்மணி யினமும்
மேவுறப் பெற்ற விண்ணவர் தலைவனும்       845

அயிராணி தேவியு மன்புட னல்கத்
தெய்வப் பிடியைத் திருப்பரங் குன்றிலும்
வள்ளி யென்னும் வளர்குறக் கொடியை
_________
[834]. புள்பேர்க் குன்றம் - கிரவுஞ்சமலை. புள் - பறவை (கிரவுஞ்சப்பறவை)
_______

வள்ளியஞ் சிலம்பிலு மகிழ்வுற மணந்து
களவுகற் பென்னுங் கைகோ ளிரண்டுந்       850

தமிழ்நூல் மரபின் சால்பென விளக்கினை.
நளிர்கடல் சூழு நானிலத் துயர்ந்த
குளிர்வரை யுலகக் குறிஞ்சிக் கிழவ!
மணிமருங் கொலிப்ப ஒளியென விரைந்து
சினத்தீ தெறிக்கச் செங்களம் புகுந்து 855

அவுணர்த் தேய்த்த வடல்மிகு கோட்டுப்
பிணிமுக வேழப் பிடர்த்தலைப் பெரும!
தானவர் மந்திரந் தாங்கொடு வளர்த்த
மாக்கடல் நடுவண் வலிகவர் மாவினை
அவுணர் நல்வல மடங்குற வீழ்த்திய       860

திறல்மிகு செவ்வேற் செவ்வேட் சேயே!
நிலநீர் தீவளி நெடுவளி யென்னு
மைம்பெரும் பூத மடைவுற வகுத்தனை.
பூதத் துணர்வாய்ப் பொலிந்தனை. பூதத்
தகில வுலகு மாயினை. யெண்ணில்       865

சமயத் தவருஞ் சார்பொரு ளாயினை,
மாதவ ருள்ள மதிவிளக் காயினை
யாறுங் குளனு மாற்றுறு நடுவும்
மலையுங் கந்தும் வாழ்த்தினர்க் கருள்குவை.
மலயமா தவத்தோன் மகிழ்வுறப் பொருணூல்       870
_______________
[850]. கைகோள் - ஒழுக்கம். களவு - ஒருவனும் ஒருத்தியும் ஊழ்வகையால் எதிர்ப்பட்டுப் பிறரறியால் கூடும் கூட்டம். இது காந்தருவ மணம் போன்றது. கற்பு ஒருவன் ஒருத்தியைப் பலருமறியச் சடங்குகளுடன் மணம் செய்து கொள்வது. இவ்விருவகை மணமும் பழந்தமிழ் நூல்களில் விதித்த மணமுறைகளாம்.
[853]. வரையுலகம் - மலைநிலம். 856. அவுணர் - அசூரர்.
      "சேயோன் மேய மைவரை யுலகமும்" தொல்காப்பியம்.
[857]. முருகன் ஊர்தியாகிய யானைக்குப் பிணிமுகமென்று பெயர்.
[858]. தானவர்-அசுரர். 859. வலிகவர்மா - எதிர்ந்தோர்களுடைய வலிமையைக் கவர்ந்துகொள்ளுகின்ற மா மரம்.
[870]. மலயமாதவத்தோன் - அகத்திய முனிவன்.
________________

தெளிதர வுணர்த்திய தென்றமிழ்ப் புலவ!
ஆலவா யிறைவ னருளிய களவியல்
உரைகளி லுண்மை யுரையியல் புணர்த்தினை.
ஆவண வீதி யருந்தமிழ்க் கூடல்
மேற்பரங் குன்றில் விளங்குறு செல்வ!       875

நந்தூ ரலைவாய்ச் செந்தூர்க் கடவுள்!
மாவினந் திகழு மாவினங் குடியாய்!
ஏரகச் செங்குன் றினிதமர்ந் துறைவோய்!
தளிர்புரை மேனித் தையலர் குழுவில்
குளிர்காந் தட்பூக் குன்றுதோ றாடல்       880

நனிவிரும் பியவேள்! நார்சிலம் பாற்றின்
அழகமர் சோலைப் பழமுதிர் சோலை
மலைமகிழ்ந் துறையு மலைமகள் புதல்வ!
அருமறை யுணர்வு மாகமத் தேர்வும்
முத்தீச் செல்வமும் முறையுறப் பெற்ற       885

அந்தணர் மணமல ரங்கையி லேந்தி
ஆயிரம் பேரு மன்புறச் சொல்லி
யருச்சனை புரிய வகமகிழ்ந் தருளும்
கடம்பமர் கந்தக் கடவுளிவ் வுலகில்
புலவர் சிங்க மெனப்புகல் கீரன்       890
_________
[874]. ஆவண வீதி- கடைவீதி; கூடல் -மதுரை.
[879-881]. மெய் தீண்டி விளையாடுதற்குரிய மகளிர் கூட்டத்துடன் செங் காந்தட் பூ நிறைந்த குன்றுகள் தோறும் விளையாடுதலை மிகவும் விரும்பியவன் முருகன்.
"மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே.”
      - திருமுருகாற்றுப்படை.
தையலர் குழு-மகளிர் கூட்டம்.
[881]. வேள் - முருகன். அண்மைவிளி இயல்பாயிற்று.
[889]. கந்தக் கடவுள் - அண்மைவிளி.
[890]. புலவர் சிங்கம் - விலங்குகளில் சிங்கம் தலைமையுற்று விளங்குதல் போலக் கடைச் சங்கப் புலவர்களில் தலைமை பெற்று விளங்கியவனாதலின் நக்கீரன் புலவர் சிங்கமெனப் பெற்றான்.
“இனைவறு குறுமுனி யிலக்க ணம்பெற
புனைதரு மிலக்கியப் புலவர் சிங்கமே"
      - சீகாளத்திப் புராணம் - நக்கீரச் சருக்கம் - 101.
புலவர்களாகிய மதயானைகளுக்குச் சிங்கம் போன்றவன் எனினுமாம்.
_____________

ஆற்றுப் படைகேட் டருள்திருச் செவியில்
என்புன் மொழியு மேற்றருள் செய்வா
யென்று துதிக ளியம்பிய பின்னர்
எல்லை யில்லா விருந்துயர் செய்யும்
பொல்லா வறுமைப் பொருகடல் வீழ்ந்து       895

வாத முதலாம் வலிவிடப் பாந்தள்
கொல்லாத் துயர்செய் கொடுமையாற் றாது
நின்றிரு வருளாம் நேசப் புணைகொடு
இன்பவாழ் வென்னு மிருங்கரை யேறி
உய்தி பெறுதற் குன்றிரு வடிகட்       900

காயிரங் காலெ னன்புறு வணக்கம்
செவ்வேள் பரிசில் நல்குதல்.
எனவுன் குறிப்பை இயம்பா முன்னந்
தன்னுளங் குறித்துத் தண்டமிழ்ப் புலவன்
வருத்தமுற் றயர்ந்து வண்டமிழ்த் துதிகள்
வளமுறப் பாடி வந்தன னாகலின்       905

அளிசெயத் தக்கான் அளிசெயத் தக்கான்
என்றருள் கொண்டுன் னூழ்வினை யேகக்
கடைக்கணித் தருளிக் கவிமதிப் புலவ!
அஞ்சலென் றருளி யகலிடத் தோர்கள்
உயர்ந்தவ னீயென் றுரைத்திடு மாறு       910
___________
[891]. ஆற்றுப்படை - நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை.
“இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற் செம்மல்
பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதில்
உன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுண்
முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொ ழிந்தான்"
      -சீகாளத்திப் புராணம் - நக்கீரச் சருக்கம் 115.
[896]. வாதம் முதலாம் என்பது வாத பித்த சிலேத்தும நோய்களை.
பாந்தள் - பாம்பு. இம் மூன்று நோய்களும் பாம்பு போல் துன்பம்
செய்தலின் அவை பாம்பாக உருவகம் செய்யப்பெற்றன.
[898]. திருவருள் துயரமாகிய கடலைக் கடக்க உதவுதலின் அது தெப்பமாக உருவகஞ் செய்யப் பெற்றது. புணை - தெப்பம்.
[901]. ஆயிரங்கால் -ஆயிரந்தடவை
[906]. அளி - அருள். அடுக்குத் தொட ருவகைப்பற்றி வந்தது
[908]. கடைக் கணித்து -கடைக்கண் பார்வை செய்து
_______

அறம்பொரு ளின்பம் வீடெனு நான்கின்
திறமுறும் பொருள்கள் சீர்பெற வருளுவன்

சென்னிநகரச் சிறப்பு.
தடங்கரைச் சங்கத் தவளவெண் முத்தின்
நிலவொளிக் குமுத நெகிழ்ந்துவாய் விரியத்
தென்றல் வரவால் திருமகள் விழையும்       915

தாமரை மலரத் தண்புனல் நிறைந்த
வாவியு மோடையும் வன்கலிற் சுனையும்
பொறிவரிச் சுரும்பும் பூவையுங் கிளியுங்
குயிலு மிவற்றின் குரலொலி நிறைந்த
பூவார் சோலைப் பொதும்பருஞ் சூழத்       920

தேவர் வாழிடங்கள் செறிதர நடுவிற்
சுடர்மணிக் கோபுரந் துலங்குற விளங்குங்
கயிலை மால்வரைக் கடவுள்தன் கோயிலும்
தேர்நிலை யிடமும் திருவிழாச் சிறப்பும்
நூலிழை யனைய நுண்ணிடை மடவார்       925

கலாப மயிலிற் களிப்புற நடித்து
மின்னென நுடங்கி விளையாட் டயரும்
மலைநிகர் மாட மாளிகை நிரையும்
யாறுசூழ் கிடந்தென வகன்பெரு வீதியும்
கால்கொணர் பொருளும் கலங்கொணர் பொருளும்       930
_________________
[913]. சங்குகளீன்ற முத்துக்கள் நிலாவொளி போலக் குளிர்ச்சியான ஒளி
வீசுதலால் குமுதமும் தென்றற் காற்று வீசுதலால் தாமரைகளும் மலரும் வாவியும் ஓடையுமென்க.
[918]. பொறிவரி சுரும்பு - புள்ளிகளையும் வரிகளையுமுடைய வண்டுகள். பூவை -
நாகணவாய் பறவை.
[923]. கடவுள் - கயிலாய நாதர்; சென்னிநகர்ச் சிவபெருமான் திருநாமம்.
[930]. கால்கொணர் பொருள் வண்டியில் கொண்டுவந்த பொருள். கால்நடையிற் கொண்டு வந்த பொருள் எனினுமாம்.
கலம்கொணர் பொருள் - மரக்கலமாகிய கப்பலின் மூலம் கொண்டு வந்த பொருள்கள்.
"பெரும்பண்டங், கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட”
      - சிலம்பு - மனையறம்படுத்த காதை 6-7.
____________

பொன்னும் மணியும் பொலிதர விலைசெய்
ஆவண வீதியு மடியவர் மடமும்
பொன்னகர் தனிலும் பொலிவுற விளங்கும்
சென்னிமா நகரம் சீருறத் தழீஇத்
தாமரை பயின்ற நான்முகத் தொருவனும்       935

ஆழிசேர் மாலு மகலிரு விசும்பிற்
காவல் வேந்துங் கவின்மிகு தேவரும்
முனிவரும் பிறரு முறைமுறை சிரஞ்சேர்
கரத்தின ராகிக் கண்களி கொள்ளப்
போற்றி வணங்கப் புகலிரு விசும்பில்       940

ஆயிரங் கிரணத் தலர்கதிர் ஞாயிறும்
மாயிரு மதியமு மற்றுள கோள்களும்
வலமுறச் சூழ மகிழ்வுட னென்றும்
நின்றுயிர்க் கருளு நிலையினைக் கொண்டு
மன்னுறுஞ் சென்னி மலைகிழ வோனே!       945

திணை: பாடாண்.; துறை: புலவராற்றுப்படை.
பா : நிலைமண்டில ஆசிரியப்பா.
- முற்றிற்று. ―

___________
[932]. ஆவண வீதி- கடை வீதி.
[933]. பொன்னகர் - அமராவதி நகரம்.
[934]. தழீஇ - தழுவி.
[936]. விசும்பு - வானுலகம், காவல்வேந்து - தேவேந்திரன்.
[941]. ஞாயிறு - சூரியன். [942]. மதியம் - சந்திரன்; கோள்கள் -ஏனைய கிரகங்கள். ஞாயிறு முதலிய கோள்கள் வலமாகச் சுற்றி வழிபாடு செய்ய.
[945]. மன்னுறும் - நிலைபெற்றிருக்கின்ற; சென்னிமலை கிழவோன் - சென்னிமலைக்குரிய முருகன். கிழமை - உரிமை.
பழமுதிர் சோலைமலை கிழவோனே - திருமுருகாற்றுப்படை.
[934]. தழீஇ [945]. மன்னுறும் என்றும், [944]. கொண்டு [945]. மன்னுறும் என்றும்
[945]. மலைகிழவோன்
[912]. அருளுவான் என்றும் கூட்டிப் பொருள்கொள்க.
இவ்வாறு கூட்டிப் பொருள்கொள்ளுதலை “மாட்டு" என்பர் தொல்காப்பியனார்.
“அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்”
      -தொல்காப்பியம், செய்யுளியல் சூத்திரம் 202
- குறிப்புரை முற்றிற்று. -

_________________
வேண்டுகோள்.
கட்டளைக் கலித்துறை.
வேற்றுப் புலப்பகை யோனிந்தி யாவை விழுங்கவென்று
மாற்றுப் படைகொண்டு போர்க்குவந் தாலவன் வன்படையைக்
காற்றுப் புடைக்கும் பெரும்பூளை யென்னக் கதிகலங்க
ஆற்றுப் படைகொண் டடிப்பாய் செனிமலை யாண்டவனே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


This file was last updated on 17 April 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)