pm logo

நாயன்மார் கதை (இரண்டாம் பகுதி)
“திருஞானசம்பந்தர்”
கி. வா. ஜகந்நாதன் எழுதியது


nAyanmAr kataikaL (part 2)
tirunjAnacampantar
by ki,vA. jakannAtan
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நாயன்மார் கதை (இரண்டாம் பகுதி)
“திருஞானசம்பந்தர்”
கி. வா. ஜகந்நாதன்

Source:
நாயன்மார் கதை- இரண்டாம் பகுதி
“திருஞானசம்பந்தர்”
கி. வா. ஜகந்நாதன்
அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தேனாம்பேட்டை, சென்னை-18
உரிமை பதிவு, அமுதம் - 215
முதல் பதிப்பு: நவம்பர், 1962
விலை ரூ. 2-00
நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனாம்பேட்டை, சென்னை-18
--------------
முன்னுரை

நாயன்மார்களின் வரலாற்றை அறிந்துகொள்வதனால் நம் பண்பு உயரும். பக்தி சுவை பொங்கத் திருத்தொண்டா புராணத்தைச் சேக்கிழார் காப்பியமாகப் பாடி அளித்திருக்கிறார். அதனை அடியொற்றி எழுதிய 27 நாயன்மார் வரலாறுகள் முதல் தொகுதியாக, ‘நாயன்மார் கதை' என்ற பெயரோடு முன்பு வெளிவந்தன. இது இரண்டாவது தொகுதி.

இது திருஞானசம்பந்தர் வரலாற்றை மட்டும் கொண்டது. பெரிய புராணத்தில் அப் பெருமானுடைய புராணம் மிக விரிவாக அமைந்திருக்கிறது. இந்த வரலாற்றையும் சேக்கிழார் பெருமான் திருவாக்கை அடியொற்றியே எழுதினேன். இடையே பெரிய புராணப் பாடல் சிலவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளேன்.

'ஸ்ரீ காமகோடிப் பிரதீபம்' பத்திரிகையில் இந்த வரலாற்றைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அதற்கு வாய்ப்பளித்த அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு என் நன்றியறிவு உரியது.

திருஞான சம்பந்தப் பெருமானுடைய வரலாற்றினிடையே எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களைச் சேக்கிழார் காட்டியிருக்கிறார். பக்தர்கள் மேற்கொள்ள வேண்டியவை பல: நல்ல மனிதர்கள் மேற்கொள்ள வேண்டியனவும் பல. சேக்கிழாருடைய திருவாக்கில் ஈடுபடும்போது அவருக்கு நாயன்மார்களிடத்தில் எவ்வளவு பக்தி இருக்கிறது என்பது நன்கு புலனாகிறது. மிக மெல்லிய மலரை கசங்கக்கூடாதே என்ற அச்சத்தோடும் அருமைப்பாட்டோடும் எடுத்துத் தொடுப்பது போல அவர் பாடல்களைத் தொடுக்கிறார்.
இப்படி ஒரு காப்பியம் கிடைத்தது நம் பாக்கியம்.

காந்தமலை கி. வா. ஜகந்நாதன்
கல்யாண நகர், சென்னை-28 1-11-62
-----------------
பொருளடக்கம்
1. தோற்றுவாய் 12. மதுரைக்குப் புறப்பாடு
2. திரு அவதாரம் 13. வரவேற்பு
3. ஞானப்பால் 14. ஞானத்தின் திருவுரு
4. திருநெறித் தமிழ் உதயம் 15. வெப்பு நோய் தீர்த்தல்
5. ஆணை நமதே 16. கனல் வாதம்
6. தில்லைக் காட்சி 17. புனல் வாதம்
7. சிவிகைப் பேறும் உபநயனமும் 18. புத்தர்களை வெல்லுதல்
8. அற்புதச் செயல்கள் 19. பூந்துருத்தி முதல் காஞ்சி வரை
9. யாழில் அடங்கா இசை 20. பல தல தரிசனம்
10. நாவுக்கரசருடன் யாத்திரை 21. எலும்பு பெண்ணானது
11. வீழிமிழலையும் மறைக்காடும் 22. திருமணச் சோதி
--------------------

திருஞான சம்பந்தர்
1. தோற்றுவாய்


ஏழாவது நூற்றாண்டு: தமிழ் நாட்டின் வடக்கே பல்லவ அரசனும் தெற்கே பாண்டிய அரசனும் வீறு பெற்றுக் கோலோச்சிய காலம். வீரமும் விறலும் காட்டிப் போர் செய்து வெற்றி பெற்ற பின்னர் அம் மன்னர்கள் நாட்டினர் வாழ்க்கையில் கவனம் செலுத்தலானார்கள். சமயத்துறையிலும் அவர்களுடைய உள்ளங்கள் சற்றே புகுந்தன.

அக்காலத்தில் சைன சமயத்தில் ஊற்றமுள்ளவர்கள் காஞ்சியிலும் மதுரையிலும் பலர் இருந்தார்கள். சைன சமயத்தின் பெருமையை வற்புறுத்தியும் மற்றச் சமயங்களை இழித்தும், அறிவாற்றல் கொண்டு மக்களுக்குப் பிரசாரம் செய்து வந்தார்கள். பல்லவனும் பாண்டியனும் சைனமதத்தைத் தழுவினார்கள். அவர்களுடைய ஆட்சியில் அச்சமயத்துக்குச் சிறப்பும், அது பரவும் வாய்ப்பும் உண்டாயின. சமயவாதிகள் அரசர்களோடு பயின்று அவர்களுடன் ஒன்றி அரசியலிலும் தலையிட்டார்கள்.

இதனால் சிவபெருமானை வணங்குபவர்களுக்கும் திருமாலை வழிபடுபவர்களுக்கும் மறைமுகமான பல இடையூறுகள் நேர்ந்தன. சிவாலயங்கள் விளக்க மழிந்து நின்றன. சிவனடியார்கள் தம் மனத்துக்கு இயைந்த வண்ணம் வழிபாடு செய்ய வகை இல்லாமல் வருந்தினார்கள். இத்தகைய காலத்தில்தான் திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்தார். சிவபக்தியையும் அறத்தையும் வாழச் செய்யும்பொருட்டு இறைவன் அப்பெருமானைத் தமிழ் நாட்டில் அவதரிக்கத் திருவருள் பாலித்தான். அவர் அவதரித்தமையால் வேதநெறி தழைத்தது; சைவத்துறை விளங்கியது; உயிர்க்-கூட்டங்கள் பொலிவுற்றன. இதனைத் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் ஒரு பாட்டில் குறிப்பிக்கிறார்.

"வேதநெறி தழைத்தோங்க
      மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரையொலியப்
      புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
      திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
      திருத்தொண்டு பரவுவாம்."

[வேதத்தின் வழி மங்காமல் வளர்ந்து ஓங்கவும், மிக்க சைவத்துறை விளங்கவும், உயிர்க் கூட்டங்கள் வழிவழியே விளக்கம் பெறவும் தூய திருவாய் மலர்ந்து அழுத, குளிர்ச்சியும் வளமுடைய வயல்கள் பரவிய சீகாழிப்பதியில் திருவவதரித்த திருஞான சம்பந்தப் பெருமானுடைய திருவடி மலர்களைத் தலைமேற்கொண்டு அப்பெருமான் செய்தருளிய திருத்தொண்டுகளைப் பாராட்டுவோம்.]

திருஞானசம்பந்தப் பெருமான் சைவசமயாசாரியர்களில் முதல்வராக மதிக்கப் பெற்றவர். முருகப் பெருமானுடைய திருவவதாரம் என்று ஒட்டக்கூத்தர், அருண்கிரிநாதர் முதலிய புலவர் பெருமக்கள் துதித்துப் பாடியிருக்கிறார்கள். சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்ற நான்கு வகை நெறியில் சத்புத்திர மார்க்கத்தில் நின்று இறைவனை வழிபட்டவர். சிவானந்தலகரியில் வரும் "திரவிடசிசு" என்ற தொடர் இப் பெருமானையே குறிப்பதாகச் சிலர் கொள்வர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களையும் துதித்துச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் திருஞானசம்பந்தரை,

''வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணு
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்"

என்று துதிக்கிறார். பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் மிகப் பெரியது. 4287 பாடல்கள் அடங்கிய பெரியபுராணத்தில் 1256 பாடல்கள் கொண்டது ஞானசம்பந்தப் பெருமான் வரலாறு. இதை எண்ணியே, "பிள்ளை பாதி, புராணம் பாதி" என்ற பழமொழி வழங்கி வருகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் அவ்வந்தாதியில் இரண்டு பாடல்களால் சம்பந்தரைப் போற்றியதோடு தனியே அவரைப்பற்றி ஆறு பிரபந்தங்களை அருளியிருக்கிறார். ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும் மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடையபிள்ளையார் திருத்தொகை என்பவை அவை. பிற்காலத்தில் அப்பெருமான்மேல் பிள்ளைத்தமிழ் ஒன்றை ஒரு புலவர் பாடி யிருக்கிறார்.

ஞானசம்பந்தர் முருகப்பெருமானுடைய அவதாரம் என்று சேக்கிழார் சொல்லவில்லை. ஆயினும் அக் கொள்கையுடையவர்கள் அவர் காலத்தில் இருந்தனர் என்றே தெரிய வருகிறது. நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் ஒரு பாட்டில் அவரை,

'தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு
வரதன் அணிதமிழ் விரகன்

என்று பாடுகிறார். இங்கே 'நதிதரு வரதன்' என்பது கங்கையாற்றால் வழங்கப் பெற்ற அருளாளன் என்று பொருள்பட்டு முருகனைக் குறிக்கும் என்று கொள்ளலாம். இதனால் திருஞானசம்பந்தர் முருகனுடைய அவதாரம் என்பது நம்பியாண்டார் நம்பிக்கும் உடன்பாடு என்பது புலனாகும்.

சேக்கிழார் காலத்தில் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் திருத்தொண்டர் புராணம் இயற்றப்பட்டது. அதற்குப்பின் இரண்டாம் இராசராசன் காலத்தில் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றினார். அதில் முருகனே திருஞான சம்பந்தராக அவதரித்தான் என்பதைக் கூறுகிறார்.

"தெய்வமகள் என் மருமகள் வள்ளி வதுவை
மனமகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லுமினிய தொருகதை”

''எழுமலை கொல்லு மசனி இளமயில் வள்ளி கணவன்
      இறைமலை வில்லி புதல்வன் இகல்மகள் ஐயை களிறு
உய்ய விரவு கலியுக வெல்லை பொருத கதைகள்”

என்பவற்றில் இக்கருத்தைக் காணலாம்.

அருணகிரி நாதர் திருப்புகழில் பல பல இடங்களில் முருகனே சம்பந்தராக அவதரித்தான்
என்பதைக் கூறுகிறார்.

“பொறியுடைச் செழியன்வெப்பொழிதரப் பறிதலைப்
பொறியிலிச் சமணரத் - தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் - புலவோனே"

என்பது போன்ற பகுதிகள் பல.

சைவசமய ஆசாரியர்கள் நால்வரையும் அவதார புருஷர்களாகவே கொள்வது ஒரு வழக்கு. அப்பர் கைலையில் இருந்த சித்தர் ஒருவருடைய அவதாரமென்றும், சுந்தரர் ஆலால சுந்தரரின் அவதாரமென்றும், மாணிக்கவாசகர் நந்தியெம்பெருமானின் அவதாரமென்றும் பெரியோர் கூறுவர். அந்த வகையில் திருஞானசம்பந்தர் முருகப்பெருமானது திருவவதாரம் என்று கொண்டார்கள். இந்த அவதார முறையிலும் முருகனுடைய அவதாரம் மற்ற அவதாரங்களினும் சிறப்புடையது என்பதை யாவரும் அறிவர்.

திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட, மரபு நெறி தெளிவாகப் புலப்பட செந்தமிழ்ச் சுவை பொங்கப் பாடியிருக்கிறார் சேக்கிழார் சுவாமிகள். அவருடைய திருவாக்கை ஒட்டி இனி அவருடைய வரலாற்றைப் பார்ப்போம்.
------------

2. திரு அவதாரம்

சோழ நாட்டில் பொன்னியினால் வளம் பெறும் இடத்தில் அமைந்திருப்பது சீகாழி என்னும் திருப்பதி. பல பல காரணங்களால் அதற்குப் பன்னிரண்டு திருநாமங்கள் உண்டு. பழங்காலத்தில் அதன் பெயர் கழுமலம் என்பது. யுகத்தின் கடைசியில் உலகமெல்லாம் பிரளய வெள்ளத்தில் மூழ்க அந்தத் தலம் மட்டும் தோணி போல மேலே மிதப்பதனால் அதற்குத் தோணிபுரம் என்ற திருநாமம் உண்டாயிற்று.

அங்கே வேதியர்களின் வேதவொலியும் வேள்விச் சிறப்பும் என்றும் குறைவின்றி இலங்கி வந்தன. சிறந்த அந்தணர் குலத்தில் திருவவதாரம் செய்ய இருந்த ஞான சம்பந்தர் தமக்கேற்ற நிலத்தையும் தலத்தையும் பெற்றார். சிவபக்தி மலிந்தவர்களும் வேதநெறி வழுவாமல் ஒழுகியவர்களும் நிரம்பிய சீகாழிப்பதி அப் பெருமானுடைய திருவவதாரத்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக அமைந்தது. அதன் நிலவள நீர்வளத்தைச் சொல்ல வந்த சேக்கிழார் ஓர் அழகான கற்பனைக் காட்சியைக் காட்டுகிறார்.

நன்றாக விளைந்த வயலுக்கு அருகே தண்ணீர் தேங்கிய இடத்தில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. அது செந்தாமரை யாதலின் நெருப்பைப் போலத் தோன்றுகிறது. வயலின் வரப்பில் தித்திப்புக் கனிகளையுடைய மாமரம் ஒன்று வளர்கிறது. அதில் கனிகள் பழுத்து வெடித்துக் குலுங்குகின்றன. தேனும் அருகில் இருக்கிறது. சாறு மரத்திலிருந்து இலையின் வழியே ஒழுகி அந்தத் தாமரை மலரில் வழிகின்றது. அது நெய்யைப் போலத் தோன்றுகிறது. மாவிலையின் வழியே தாமரை மலரில் அது விழும் காட்சி, மாமரங்களும் மாவிலையின் நுனி வழியே அக்கினியில் நெய்யை ஆகுதி செய்வது போலத் தோன்றுகிறதாம்.

''பரந்தவிளை வயற்செய்ய பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம் நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும் ஆ குதிவேட்கும் தகையஎன மணந் துளதால்."

[பரந்த வயல், விளை வயல். வரம்பு - வரப்பு. தேமா இனிப்பு மா. மது நறு நெய்-தேனாகிய மணமுடைய நெய். நிரந்தரம் - எப்போதும். இலைக்கடை - இலையின் நுனி. நெடிது - நெடுங் காலம். வேட்கும் - வேள்வி செய்யும். தகைய - தன்மையை உடையன.]

இத்தகைய வளம் சார்ந்த பதியில் கவுண்டி கோத்திரத்தில் பிறந்த சிவபாத இருதயர் என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருடைய தரும பத்தினியின் திருநாமம் பகவதியார் என்பது. அவ்வந்தணர் தம் திருநாமத்துக்கு ஏற்றபடியே எப்போதும் சிவபெருமான் திருவடியை இதயத்தில் வைத்துத் தியானம் பண்ணிக் கொண்டு வந்தார். கற்பிற் சிறந்த பகவதியாரும், சிவபாத இருதயரும் மரபு தவிராமல் இல்வாழ்வை நடத்தி வந்தார்கள்.

தமிழ்நாட்டில் விளக்கமாக இருக்க வேண்டிய சிவ நெறி அயல் சமயத்தாருடைய அதிகாரத்தால் வரவர மங்கி வருவதைச் சிவபாத இருதயர் உணர்ந்தார். விபூதி, ருத்திராட்சங்களை அணியும் வழக்கம் குறைந்துகொண்டு வந்தது. சிவாலய வழிபாடும் குறையலாயிற்று. இவற்றை யெல்லாம் கண்டு மனம் வருந்திய சிவபாத இருதயர் இறைவனை நாள்தோறும் வணங்கி வழிபட்டு, "இந்த நிலை மாறி எங்கும் நின் திருவருள் விளக்கம் பரவும் நாள் வருமா?" என்று ஏங்கினார். மனிதருடைய முயற்சியினால் மாறாத வகையில் புறச் சமயத்தார் முயற்சிகள் நாள் தோறும் ஓங்கி வருவதைக் கண்டு, 'இறைவன் திருவருள் வலிமை இல்லாவிட்டால் இந்தக் களையை விலக்க வொண்ணாது' என்று வாடினார். அவன் திருவருள் இருக்குமானால் யாரேனும் பெரியவர் திருவவதாரம் செய்து சிவநெறி தழைத்தோங்கச் செய்ய இயலும்' என்று நினைந்தார். அவ்வாறு ஒரு மூர்த்தி திருவவதாரம் செய்வதானால் இந்தக் குடும்பத்திலே தோன்றும் வண்ணம் நாம் தவம் செய்வோம்' என்ற உறுதி அவருக்கு உண்டாயிற்று. அது முதல் அவரும் அவர் மனைவியாரும் இறைவன் திருவருளை எண்ணி, புறச்சமயங்களைப் போக்கும் பிள்ளையை அருள வேண்டும் என்று வேண்டி வரங்கிடந்தார்கள்.

சீகாழியில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுடைய திருநாமம் பிரமபுரீசர் என்பது; அம்பிகை திருநிலை நாயகி அங்கே திருத்தோணி என்று வழங்கும் உயர்ந்த மாடம் ஒன்று உண்டு. அதை மலை யென்றும் கூறுவர். அங்கே உமாபாகராகிய தோணியப்பர் எழுந்தருளியிருக்கிறார். அம்பிகையைப் பெரிய நாச்சியார் என்று வழங்குவர். நாள்தோறும் இத் தம்பதிகள் தோணியப்பரையும் பெரிய நாச்சியாரையும் பணிந்து வழிபட்டுத் தம் கருத்தை விண்ணப்பித்துக் கொண்டு வந்தனர்.

இறைவனுடைய திருவருளால் பகவதியார் வயிறு வாய்த்தார்.

"பெருத்தெழும் அன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடித் திடப்பரவும் காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய உளதாக.''

[புகலி - சீகாழி. திருத்தோணி யென்றது மாடக் கோயிலை. உருத்தெரிய - குழந்தையின் உருவம் புலப்பட. உலகு உய்யப் பேறு உளதாக.]

அப்பால் செய்யவேண்டிய சடங்குகளை யெல்லாம் மறைவழிப்படியே ஆற்ற, கருப்பம் முதிர்ந்து அம்மையார் ஓர் அழகிய ஆண் குழந்தையை நல்ல நாளில் பெற்றெடுத்தார்.

குழந்தை திருவவதாரம் செய்த அப்பொழுது நல்ல சகுனங்கள் பல உண்டாயின. சீகாழியில் உள்ள யாவருக்கும் உடம்பில் ஒரு வகையான பூரிப்பும் புளகமும் உண்டாயின. இந்த நன்னிமித்தங்களை உணர்ந்தவர்கள், ''சிவபெருமான் திருவருளால் இக் குழந்தை உதித்திருக்கிறது. இவனால் உலகம் உய்யும்" என்று மகிழ்ந்தார்கள்.

மரங்களெல்லாம் தழைத்து மலர்ந்தன; தென்றல் மெல்ல வீசியது; மழை பெய்தது; தண்ணீர் தெளிவு பெற்றுப் பொய்கைகளில் நிரம்பியது; எங்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. உலகிலுள்ள சராசரங்கள் யாவுமே இந்தக் குழந்தையின் திருவவதாரத்துக்காகக் காத்திருந்து, தோன்றியவுடன் ஆரவாரிப்பது போல
இருந்தது.

சிவபாத இருதயர் வைதிக முறைப்படி குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றை யெல்லாம் குறைவின்றிச் செய்தார். ஜாதகர்மாச் செய்தார். மங்கல மடந்தையர் வாழ்த்தொலி யெடுத்தார்கள். எங்கும் பாலிகையும் பொற் குடங்களும் வைத்தார்கள். பலவகைத் தானங்களைச் செய்தார்கள். வீடுமுழுதும் அழகாக அலங்கரித்தார்கள். வெண் சிறு கடுகு, அகில் முதலியவற்றால் தூபம் எடுத்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் களிப்புப் பொங்கியது.

குழந்தைக்குத் தொட்டிலிட்டுக் கண்குளிரத் தாய் தந்தையரும் பிறரும் கண்டு களித்தார்கள். திருநீற்றை நெற்றியில் இட்டு வேறு காப்பு இப் பெருமானுக்கு வேண்டாம் என்று அந்த ரட்சையே காப்பாக நிற்க மகிழ்ந்தார்கள். தொட்டிலில் இட்டுத் தாலாட்டி நலம் செய்தார்கள்.

குழந்தை, நன்கு வளர்ந்து அவ்வப் பருவத்துக்கு ஏற்ற விளையாடல்களைப் புரிந்து கண்டாரை மகிழ்வித்தது. செங்கீரைப் பருவம். சப்பாணிப் பருவம் முதலிய பருவங்கள் தாண்டித் தளர்நடை நடந்து வீதியிலே சிறு தேருருட்டி விளையாடினார். இவ்வாறு வளர்ந்தருளிய குழந்தைக்கு இரண்டாண்டு நிரம்பி மூன்றாவது ஆண்டு தொடங்கியது. சிவபிரானுடைய திருவருளைப் பெறும்பொருட்டுச் செய்யும் தவத்தின் முளைபோல அப் பெருமான் வளர்ந்தார். மூன்றாவது ஆண்டில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
------------

3. ஞானப்பால்

அன்று வழக்கம்போல் சிவபாத இருதயர் காலையில் நீராடப் புறப்பட்டார். திருக்கோயிலை அடுத்திருக்கும் பிரம தீர்த்தத்தில் நீராடுவது வழக்கமாதலின் அதனை நோக்கிப் புறப்படுகையில் அவர் குழந்தை, "நானும் வருவேன்" என்று அழுதார். அந்தணர் சினங்கொண்ட வரைப்போல் அவரை அதட்டினார். குழந்தைப் பெருமான் அழுகையை நிறுத்தாமல் காலைத் தப்புத்திப்பென்று வைத்து அவரைத் தொடர்ந்தார். அது கண்ட தந்தையார், "சரி, வா" என்று அழைத்துச் சென்றார்.

திருக்கோயிலைச் சார்ந்த திருக்குளத்திற்குச் சென்ற சிவபாத இருதயர் தம் இளஞ் செல்வரைக் கரையில் உட்காரவைத்துத் தீர்த்தத்தில் இறங்கி நீராடிச் செய்ய வேண்டியவற்றைச் செய்யலானார். நீராடிப் பின்பு அகமருஷண மந்திரம் ஜபித்து மூழ்கினார். அவர் தண்ணீரில் மூழ்கியிருந்த போது அவரைக் காணாது அலமந்த இளம் பெருமான் நாலு திசையும் பார்த்தார். அருகே இருந்த திருத்தோணியாகிய கோயிலைப் பார்த்து, "அம்மா! அப்பா!" என்று அழைத்து அழுதார்.

கண்மலர்களில் நீர் ததும்பக் கையால் கண்ணைப் கையால் பிசைந்து இதழ் துடிக்கப் புண்ணியக் கன்று போன்ற அப்பெருமான் அழுதது, உலகம் உய்யக் காரணமாயிற்று; மறை ஒலி பெருகவும் உயிர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகவும் அவர் அழுத அழுகை ஏதுவாக அமைந்தது.

"கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக எவ்வுயிரும் குதுகலிப்பம்
புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமி அழு தருளினார்"

என்று அதனைச் சேக்கிழார் பாடுகிறார்.

குழந்தைப்பிரான் அழும்போது திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பர் உமாதேவியாரோடும் விடையின் மேல் எழுந்தருளி, அப்பிரான் அருகே வந்து நின்றார். உமாதேவியாரை அக்குழந்தைக்குப் பால் கறந்து அருத்தும்படி பெருமான் அருள் செய்ய, அவ்வண்ணமே கருணையே வடிவாய் விளங்கும் எம்பெருமாட்டி ஒரு பொற் கிண்ணத்தில் தன் திருமுலைப்பாலைக் கறந்து ஊட்டினாள். அந்தப் பாலை உண்ட பிள்ளையார் தம் முன்னை நிலை மாறிச் சிவஞான சம்பந்தர் ஆனார். அப்போது அவரிடம் நிறைந்த ஞானத்தை நான்கு வகையாகப் பகுத்துக் கூறுகிறார் சேக்கிழார்.

"சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்."

சிவன் அடியே சிந்திக்கும் ஞானம், பவத்தை மாற்றும் ஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் என்ற நான்கும் சம்பந்தரிடத்திலே வந்து அமைந்தனவாம். இந்த நான்கும் பரஞானம், அபரஞானம் என்பவற்றின் கூறுபாடுகள் என்று சிலர் கொள்வர். நான்கு வேறு வகையாகப் பிரித்துக் காட்டியதற்கு ஏதேனும் பயன் இருக்க வேண்டும். அதனை இங்கே சற்று ஆராய்வது பயன் உடையதாக இருக்கும்.

ஓர் ஆத்மா ஞானம் பெறவேண்டுமானால் அதற்கு இறைவன் திருவருள் துணை நிற்க வேண்டும். ஞானத்தைத் தமிழில் அறிவு என்று சொல்வார்கள். அந்த அறிவு வெவ்வேறு நிலையில் வெவ்வேறாக நிற்கும். முதலில் இறைவன் உள்ளான் என்ற அறிவு வரவேண்டும். அவனே நமக்கு எல்லாவற்றையும் வழங்கினான் என்ற அறிவு பிறகு தோன்ற வேண்டும். பிறவித் துயரைப் போக்குவதற்கு அவனருளை யன்றி வேறு போக்கில்லை என்ற அறிவு பின்பு உண்டாக வேண்டும். அந்த அருளைப் பெற வழி இன்னதென்று தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்துகொண்டு முயற்சியில் ஈடுபடும்போது வரவர அநுபவம் ஏறிவரும். அப்போது அநுபவத்தோடு கலந்து வரும் ஞானம் ஊறி வரும். அநுபவம் இன்றி வரும் ஞானம் நூலறிவு; அபரஞானம் என்றும், பரோட்சம் என்றும் கூறுவது அது. அநுபவமாக வரும் ஞானம் வாலறிவு; அதையே பரஞானம் என்றும் அபரோட்ச ஞானம் என்றும் சொல்வார்கள்.

இங்கே, ஊன சம்பந்தம் பெற்ற மக்களில் ஒருவராகத் தோன்றிய சம்பந்தப் பெருமான் அம்மை தந்த பாலால் ஞானசம்பந்தம் பெற்றார். அநுபவ முதிர்ச்சியிலே,ஞானம், ஆனந்தம், உண்மை என்று வேறு வேறாகக் கூறப்படுவன அனைத்தும் ஒன்றாகவே நிற்கும். அதுதான் சச்சிதானந்தம்; சத்தென்றாலும், சித்தென்றாலும், ஆனந்தம் என்றாலும் ஒன்றனையே சுட்டும் நிலை அது. அந்த முடிந்த நிலையே மெய்ஞ்ஞான நிலை. அது கைவரப் பெற்றார் சம்பந்தர். அந்த ஞானம் இந்திரியங்களுக்கும் மனத்துக்கும் அப்பாற் பட்டது. உயிரின் அநுபவமாக நிலவுவது. அதை ‘"உணர்வரிய மெய்ஞ்ஞானம்" என்று சேக்கிழார் குறிக்கிறார். ஆனால் அந்த அநுபவ நிலைக்குமுன் மூன்று படிகளைக் கடந்தார் சம்பந்தர்.

பிரபஞ்சச் சேற்றில் உழன்று பல பொருள்களில் ஆசை வைத்து அவற்றைப்பற்றியே சிந்திப்பவனுக்கு ஞானம் கிட்டாது. உலகப் பொருளின் நிலையாமையை உணர்ந்து இறைவன் ஒருவனே என்றும் நிலையான பொருளென்பதைத் தெளிந்து அவனுடைய அடியையே நினைந்திருக்கும் அறிவு மிகச் சிறந்தது. அந்த நிலை வந்தால் தான் பற்றற நிற்கும் அநுபவம் உண்டாகும். முதலில் சம்பந்தப் பெருமானுக்கு, 'சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்' வந்தது."மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப் பாதமே மனம் பாவித்தேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் சொல்லும் நிலை அது.

அது கனிந்தது; கணத்திலே சம்பந்தப் பெருமானுக்கு இந்தக் கனிவு வந்துவிட்டது. உடனே அதன் பயனாக இனிப் பிறவி இல்லை என்றுள்ள நிலைக்கு ஏற்ற ஞானசித்தி கிடைத்தது. பவம் என்பது பிறப்பு. அதனை அடியோடு மாற்றிப் போக்கும் ஞானம் உண்டாயிற்றாம். "பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்" என்று அதனைக் கூறுகிறார். அவன் அடியையே சிந்திக்கும் ஞானத்தின் வழியே இது பிறப்பது என்பதையும் சுந்தரர் வாக்கிலே காணலாம். "மற்றுப்பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்' என்றவர் தொடர்ந்து, "பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்" என்றார். பாதமே மனம் பாவித்தலும், பிறவாத தன்மை வந்ததும் விளைவுகள். அவ்விரண்டுக்கும் ஏதுவான ஞானங்களே, "சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்' என்னும் இரண்டும் ஆகும்.

உண்மையை உணர்ந்து முயன்று இனிப் பிறவா வகையில் வினைகளைச் சுட்டெரித்து நிற்பவர்கள் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுவார்கள். இங்கே ஞான சம்பந்தப் பெருமான் இவ்விரண்டு ஞானத்தையும் பெற்றதோடு நின்றிருந்தால் தம்மளவிலே இறையின்பத்தில் திளைத்திருப்பார். ஆனால் அவருடைய திருவவதாரம் தமிழ்நாடு உய்வதற்காக எடுத்தது. சமய ஆசாரியராகத் திகழ வேண்டிய செல்வர் அவர். குருநாதராகத் திகழ்ந்தவர்கள் பலர். அவருள் இப்பெருமான் "திருநெறிய தமிழ்" பாடி அதனால் தமிழுலகம் உய்வை அடைவதற்காகவே போந்தவர். ஆதலின் அதற்கு ஏற்ற கலை ஞானத்தை அவர் பெற்றார். பிற கலைகள் யாவற்றையும் விடக் கல்லாக் கலையாகச் சிறப்புப் பெறுவது கவிதைக் கலை. தேவாரம் பாடித் தமிழுலகம் இறைவனருளைப் பெற வைத்த வள்ளல் சம்பந்தர். கவிதைக் கலையிலே சிறந்து நின்றவர். கலையியே சிறந்தது கவிதை. அந்தக் கவிதை களிலும் இறைவன் இசை பாடும் கவிதை மிகச் சிறந்தது. அவற்றுள்ளும் சம்பந்தப் பெருமானுடைய திருவாக்குப் பின்னும் சிறந்தது; எழுதும் மறை என்று போற்று வதற்குரியது. அது அவர்பால் மலர்வதற்கு ஏற்ற வகையில், "உவமை இலாக் கலை ஞானம்' அவரை வந்து அடைந்தது. அப்பால் ஜீவன் முக்த நிலையில் அநுபவமே ஞானமாக நிற்கும் “உணர்வரிய மெய்ஞ்ஞானம்" அவர்பால் தேங்கியது. சைவ சித்தாந்தத்தில் கூறியபடி பசுகரணங்கள் எல்லாம் மாறிப் பதிகரணங்களாக நிற்க, மெய்ஞ்ஞான சம்பந்தராக விளங்கினார்.

ஆகவே, ஞானசம்பந்தர் சிவஞான சம்பந்தராகவும், பவஹர ஞான சம்பந்தராகவும், கலை ஞான சம்பந்தராகவும், மெய்ஞ்ஞான சம்பந்தராகவும் விளங்கினார் என்பதை உணரலாம். அம்மை இந்த அருட் குழந்தைக்கு நாலு மிடறு பால் ஊற்றினாள்போலும்! ஒவ்வொரு மிடற்றிலும் ஒவ்வொரு ஞானம் நிறைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு கற்பனை செய்யும்படி சேக்கிழார் பாடல் அமைந்திருக்கிறது.

"சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்,
உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார், அந்நிலையில்."

"செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே" என்று சம்பந்தர் பாடுவார். அந்தச் செல்வத்தையே, 'சிவனடியே சிந்திக்கும் திரு' என்று சேக்கிழார் கூறினார். இங்கே உள்ள சிவஞானம் என்றது முடிந்த முடிபாகிய மெய்ஞ் ஞானத்தை அன்று. பவம் - பிறப்பு. அற - முற்றும். முற்றும் மாற்றும் தன்மையிலே சிறந்து நிற்கும் ஞானம்.

இந்த ஞான விளைவைப் பெறுவதற்கு அவர் முன்னைத் தவம் செய்தவர் என்பதைப் புலப்படுத்த, 'தவ முதல்வர்' என்றார். தவத்தினால் முதன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள வேண்டும். "அந்நிலையில்' என்று சுட்டியது, அம்மை பால் ஊட்டிய அந்த நிலையிலே என்ற கருத்தை உடையது. வித்து நட்டு நீர் ஊற்றிச் செடியாகி மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனிந்தது போலின்றி, மாய வித்தைக்காரர்கள் கனிகளுடன் மாஞ்செடியை வருவித் தாற் போல, மகாசக்தியின் திருவருளால் விளைவு விரைவில் வந்தது என்பது கருத்து. உணர்ந்தார் அந்நிலையில்' என்றார்; அறிதல் வேறு; உணர்தல் வேறு. அநுபவத்தோடு கலந்து வருவது உணர்வு: இங்கே சம்பந்தப் பெருமான் அநுபவமாக இவற்றைப் பெற்றார் என்று கொள்ள வேண்டும்.
---------

4. திருநெறித் தமிழ் உதயம்

சிவஞானப் பாலமுது வாயிலிருந்து வழிய நின்றார் ஞானசம்பந்தப் பிள்ளையார். அப்போது நீராடிக் கரைக்கு வந்த தந்தையார் அவரைப் பார்த்தார். வாயிற் பால் வழிவதைக் கண்டு, "நீ யார் கொடுத்த பாலை உண்டாய்?" என்று கையில் ஒரு கோலை எடுத்துக்கொண்டு கேட்டார். அந்தச் சிறிய பெருந்தகையார் உடனே ஆனந்தக் கண்ணீர் துளும்ப, தம்முடைய வலக்கைச் சுட்டு விரலை நீட்டித் தோணியப்பரைக் காட்டியபடியே ஒரு பாசுரத்தைப் பாடத் தொடங்கினார் :

தோடுடைய செவியன்விடை ஏறியோர்
      தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசிஎன்
      உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாள்பணிந்து
      ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
      பெம்மான் இவன் அன்றே!

என்ற தண்டமிழ்த் திருமறை உதயமாயிற்று. உவமையிலாக் கலைஞானம் தரும் பாலை உண்ட வாயிலிருந்து இந்த அற்புதப் பாடலும் அதைத் தொடர்ந்து மற்றப் பாடல்களும் பொங்கி வழிந்தன. அவர் தந்தையார். "உனக்கு யார் பால் தந்தார்?" என்று கேட்ட கேள்விக்கு நேர்விடை யாக இல்லை இது. "இதோ இவரே!" என்று சுட்டிக் காட்டினாலும், பாட்டு ஒரு பொருளைத் தந்தவரைச் சொல்லவில்லை; தம் பொருளைக் கொண்டவரைச் சொல்லுகிறது. கொடுத்த பொருள் வழியக் கண்ட தந்தைக்கு, உள்ளே ஆனந்த வெள்ளம் பொங்கி வழிவதையும் வெளியே திருநெறித் தமிழ் வெள்ளம் பொங்கப் போவதையும் புலப்படுத்தி இப்பாசுரத்தைப் பாடினார் சம்பந்தர்.

யாரோ அயலார், எந்த உறவின் முறையும் இல்லாதார் தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்றாரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், "இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள்" என்று சொல்லியிருக்கலாம். அவர் அப்படிச் சொல்லவில்லை. "இத்தகைய திருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பிரமபுரமாகிய சீகாழியில் உள்ள பெருமான்" என்று சொல்கிறார். பாலைப் பற்றிய பேச்சே பாட்டில்
வரவில்லை.

ஆயினும் அதற்குள் கேள்விக்குரிய விடையும் அடங்கி யிருக்கிறது. "எனக்குப் பால் கொடுத்தவனைத்தானே கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்து கொண்டான். உலகில் யார் யாரையோ உறவினராக எண்ணியிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை. தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண்டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை; அவனிடம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது. அவன் அதனை எப்படி யெல்லாம் இயக்குகிறானோ, அப்படியெல்லாம் இயங்கும். நினைக்கச் செய்தால் நினைக்கும்; மறக்கச் செய்தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனை விட்டுப் பிரியாது" என்பதையெல்லாம் உள்ளடக்கி, "என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்" என்றார்.

பிறரை மயக்குபவர் தம்மிடத்திலுள்ள பொருளைக் காட்டியும் குணத்தைக் காட்டியும் செயலைக் காட்டியும் அவர் உள்ளத்தைத் தம் வசமாக்குவது வழக்கம். இங்கே இறைவன் எவற்றைக் காட்டிச் சம்பந்தக் குழந்தையின் உள்ளத்தைக் கவர்ந்தான்?

தோடு உடைய செவியைக் காட்டினான்; தான் ஏறி வந்த விடையைக் காட்டினான்; தூவெண்மதியைக் ட்டினான்; உடம்பெல்லாம் பூசிய சுடலைப் பொடியைக் காட்டினான். எல்லாம் வெண்மை நிறம் உடையவை.

உலகிலுள்ள குழந்தைகளுக்கு வண்ண வண்ண விளையாட்டுப் பண்டங்களை வாங்கித் தருவார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ள புத்தகங்களை அளிப்பார்கள். உலகியலில் பல நிறங்களோடு ஊடாடிப் பல குணங்களைப் பெற்றுப் பல செயல்களைச் செய்ய இருக்கும் குழந்தைகளாதலின் பலவகை வண்ணங்களைக் கண்டு அவை மகிழ்ச்சி அடைகின்றன. ஆனால் இந்தக் குழந்தையோ ஞானக் குழந்தை. ஞானம் தூயது; அதற்கு வெண்மை நிறம் அடையாளம். குணங்கள் பலவானாலும் அவற்றைச் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை நிறமாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப்பால் வெண்மை நிறம் கொண்டது. அதனை உண்ட பிரான் தூய சத்துவ குணமே பெற்றார். அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக் காட்டும் வெண்மைப் பொருள்களையே கண்டு மகிழ்ந்தன.

இந்தக் குழந்தை இறைவன் காட்டிய திருக்கோலத் திலுள்ள மற்றவற்றைப் பின்னாலே நினைத்துப் புகழப் போகிறது. ஆயினும் முதல்முதலாக நினைவுக்கு வருபவை இந்த வெண்மை நிறம் பெற்ற பொருள்களே. தூய சத்துவ குணத்தை நினைக்கச் செய்யும் வண்ணத்தை உடையவைகளே அக்குழந்தையின் உள்ளத்தை எடுத்த எடுப்பில் கொள்ளை கொண்டன.

தோடு -ஓலை ; இது வெள்ளையானது. "வெள்ளோலை கண் பார்த்துக் கையால் எழுதானை" என்பது ஒரு பழம் பாட்டு. விடையாகிய வாகனமும் தர்மரிஷபமானதால் வெள்ளையானது. 'வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி" என்று வேறு ஒரு பாட்டில் ஞான சம்பந்தர் பாடுவார். மதியைத் தூவெண் மதி என்றார். இறைவனுடைய திருமுடியிலே இருப்பது பிறை. முழுமதிக்காவது கறை உண்டு. பிறையில் அது இல்லை. ஆதலின் தூவெண்மதி ஆயிற்று. சுடலைப் பொடி வெண்மை நிறமுடையது. ''வெந்த வெண்ணீறணிந்து" என்பது சம்பந்தர் பாசுரம்.

தோடுடைய செவி என்பது அர்த்தநாரீசத் திருக்கோலத்தில் வாமபாகத்துத் திருச்செவியைக் குறிக்கிறது. இடக்காதில் ஓலையும், வலக்காதில் சங்கக் குழையும் மாதிருக்கும் பாதியனாகிய இறைவன் அணிந்திருக்கிறான். “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்" என்று பாடுவார் மாணிக்கவாசகர்.

சம்பந்தப் பெருமானுக்குப் பாலைக் கறந்து வழங்கியவர் உமாதேவியார். அவர் தந்த பாலின் பயனே இப்போது பாடலாக வருகிறது. உமா தேவியாரும் சிவபெருமானும் வேறல்லர். இதனை அர்த்தநாரீசுவரத் திருக்கோலம் நினைவூட்டுகிறது. தமக்குப் பால் கொடுத்த பிராட்டியை எண்ணி வாமபாகக் காதைச் சிறப்பித்து, 'தோடுடைய என்று எடுத்தார். உடனே சக்தியும் சிவமும் வேறல்லர் என்ற உண்மையை உணர்த்த, ''செவியள்'' என்று பாடாமல், "செவியன்" என்று பாடினார்.

வாமபாகத்தை நினைப்பவர் தோடுடைய செவியைச் சொல்லாமல் வேறு ஒன்றைச் சொல்லியிருக்கலாமே! திருவடியைச் சொல்லலாம். இங்கே சம்பந்தப் பெருமான் இனித் தேவாரப் பதிகங்களால் இறைவனுடைய புகழைப் பாடுவதையே தம் வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொள்ளப் போகிறார். அப்பாடல்களைப் பாடும்போது அவை சென்று சேரும் இடம் செவியே அல்லவா? அதனால் அதை முதலில் பாடினார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இதை எடுத்துச் சொல்கிறார்.

"பல்லுயிரும் களிகூரத் தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து”
என்று கூறுகிறார்.

இறைவனுடைய திருச்செவியில் இரண்டு கந்தருவர்கள் தோடாக இருந்து எப்போதும் இசை பாடிக்கொண்டே இருக்கிறார்களாம்.

"தோடுவார்காதன்றே தோன்றாத் துணைஐயர்
யாடுவார் ஓரிருவர்க் கிட்ட படைவீடே"

என்பது திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்.

அந்தச் செவி இசைப் பாடலைக் கேட்பதில் விருப்பம் உடையது. ஞானசம்பந்தப் பெருமான் பாடும் தேவாரப் பதிகங்கள் பண்ணோடு கலந்த இசைப்பாடல்கள். அவற்றைச் சார்த்துவதற்கு, முன்னமே இசையின் சுவை கண்ட இறைவனுடைய தோடுடைய செவியை அல்லாமல் வேறு சிறந்த இடம் ஏது?

தேவாரம் வேதம் போன்றது. அதைத் தமிழ் வேதம் என்றே கூறுவர். வடமொழி வேதம் எழுதாக் கிளவி. தமிழ் மறை எழுதும் மறை. வடமொழி வேதம் ஓம் என்ற பிரணவத்துடன் தொடங்குகிறது. இங்கே, ஓ என்ற எழுத்தைப் பீடம் போன்ற வேறு ஓர் எழுத்தோடு சேர்த்து வைத்துத் "தோ" என்று தமிழ் வேதத்தை தொடங்கினார் ஞானசம்பந்தப் பிள்ளையார். இதையும் சேக்கிழார் சொல்கிறார்.

"எல்லையிலா மறைமுதல்மெய் யுடன் எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழால் இம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப"

என்பது அவர் கூறுவது. 'அநந்தாவை வேதா' என்று சொல்லும் வண்ணம் எல்லையின்றிப் படர்ந்து கிடப்பது எழுதாத மறை. அதன் முதலில் விளங்குவது பிரணவம். அதனை ஒரு மெய்யெழுத்துடன் வைத்துத் தொடங்கிய எழுதும் மறை தேவாரம். அதை நெடுந்தமிழால் மாநிலத்தோர்க்குப் புகழ் சிறக்கும்படி சம்பந்தர் பாடினாராம்.

உலகமெல்லாம் பிரளயத்தில் மூழ்கிக் கிடக்கச் சீகாழி மட்டும் தோணியைப் போல மிதந்தமையால் தோணிபுரம் என்று பெயர் பெற்றது. பிரளயம் வடிந்த பிறகு
பிரமதேவன் இத் தலத்துக்கு வந்து பூசித்துப் படைப்புத் தொழிலுக்குரிய ஆற்றலைப் பெற்றுப் படைக்கத் தொடங்கினான். ஆதலின் இதற்குப் பிரமபுரம் என்ற பெயர் வந்தது. "ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்" என்பது இந்த வரலாற்றை உளங்கொண்டு கூறியது.

உலகின் தோற்றத்துக்கு மூலமான அருளை இறைவன் வழங்கிய இடம் பிரமபுரம். அத்தலமே தமிழ்மறையாகிய தேவாரம் தொடங்குவதற்கும் இடமாயிற்று. இறைவன் திருவருள் துணைகொண்டு வேதத்தை எப்பொழுதும் நான் முகன் ஓதிப் பணிபுரியும் இடத்தில் தமிழ் வேதத்தைப் பாடிப் பணிபுரியும் சம்பந்தப் பிரான் அருள் பெற்றார்.

“தோடுடைய செவியன்” என்று தொடங்கிய பாசுரத்தோடு மேலே ஒன்பது பாடல்களையும், அப்பால் பதினோராவது பாடலாகிய திருக்கடைக் காப்பையும் பாடி முடித்தார் சம்பந்தர். அந்தக் கடைசிப் பாட்டில்,"ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த, திருநெறிய தமிழ்" என்று தாம் பாடிய பாசுரங்களைக் கூறிக்கொள்கிறார். இறைவன் திருவருள் பெறும் நெறியிலே நம்மைச் செலுத்தும் தமிழாதலின், 'திருநெறிய தமிழ்' என்றார். இதைக் கொண்டு இப்போது தேவாரத்தைத் 'திருநெறித் தமிழ்' என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
-----------

5. ஆணை நமதே.

திருஞான சம்பந்தராக விளங்கிய பெருமானுடைய திருவாயினின்று எழுந்த இன்னிசைப் பதிகத்தைக் கேட்ட அவர் தந்தையாராகிய சிவபாத இருதயர் இறைவன் திருவருளை எண்ணி வியப்பெய்தினார். அப்பால் ஞானக் குழந்தையார் இறைவன் திருக்கோயிலுக்குள் சென்று தாழுது வணங்கித் திருப்பதிகம் பாடியருளினார். இதற்குள் இங்கே நிகழ்ந்த அற்புதச் செயல் ஊரெல்லாம் பரவிவிட்டது. மக்கள் திரண்டு வந்து திருக்கோயில் வாயிலில் சம்பந்தரைத் தரிசித்து இன்புறக் கூடினார்கள்.

ஞான இளங்கன்று ஆலய வழிபாடு செய்து புறம் போந்தார். சிவனடியார்கள் கூடி ஆரவாரம் செய்தார்கள்; பாடினார்கள். "சீகாழி மாநகரில் இருந்த பெரியோர்கள் செய்த தவப்பயனே!" என்று சிலர் வாழ்த்தினர். "கவுணிய குலத்தினருக்கு மதிப்பு உண்டாக்கிய பெருஞ் செல்வமே!' என்று சிலர் போற்றினர். "கலைஞானம் திருவருளால் நிரம்பப் பெற்ற ஆழமான கடல் போன்றவனே!' என்று சிலர் பாராட்டினர். "கலைஞானக் கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!" என்று புகழ்ந்தனர் சிலர். "அடியார்களாகிய நாங்கள் காண இந்நிலவுலகிலேயே தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானுடைய திருவருளையும் ஏழிசை போன்ற மொழியையுடைய எம்பிராட்டியின் பேரரருளையும் பெற்றாய்" என்று வழுத்தினர் சிலர்.

'காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத்
தாழிய கடலே, அதனிடை அமுதே, அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தம்திரு வருள்பெற் றனைஎன்பார்.”

இவ்வாறு பலரும் பாராட்டி வழிபடச் சம்பந்தப் பிள்ளையார் தம்முடைய இல்லத்துக்கு எழுந்தருளினார்.

மறுநாள் காலையில் திருக்கோயிலுக்கு வந்து பதிகம் பாடி வழிப்பட்டார். பின்பு அருகில் உள்ள திருக்கோலக்கா என்ற தலத்துக்குச் சென்று, கையினால் தாளம் போட்டுக் கொண்டே, “மடையில் வாளை பாய" என்ற பதிகத்தைப் பாடலானார். அப்பொழுது அப்பிரான் கைசிவக்கத் தாளம் போடுவதைக் கண்டு சிவபெருமானுக்குப் பொறுக்கவில்லை போலும்! உடனே பஞ்சாட்சரம் எழுதிய இரண்டு பொன் தாளங்களைச் சம்பந்தப் பெருமானுடைய திருக்கரத்தில் இருக்கும்படி இறைவன் திருவருள் பாலித்தான். அவற் றைத் தலையில் வைத்து வணங்கி, அவற்றாலே தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார் சம்பந்தர்.

கையிலே அத் தலத்து இறைவன் தாளங்களை அருள், அந்தத் தாளத்திற்கு நல்ல ஓசை உண்டாகும்படி அங்கே எழுந்தருளிய அம்பிகை அருள் செய்தாள் என்று ஒரு வரலாறு வழங்குகிறது. இப்போது திருக்கோலக்காவைத் தாளமுடையார் கோயில் என்றும், அங்கே கோயில் கொண்டுள்ள இறைவனைச் சப்த புரீசர் என்றும், அம்பி கையை ஓசை கொடுத்த நாயகி என்றும் வழங்குகின்றனர்.

திருஞான சம்பந்தர் மீட்டும் சீகாழிக்கு வந்து பலரும் போற்ற இருந்தார். அருகிலுள்ள ஊர்களிலிருந்து அந்தணர்களும் சிவனடியார்களும் வந்து தங்கள் தங்கள் ஊருக்கு வந்து சிவதரிசனம் செய்துகொண்டு போகவேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள்.

சம்பந்தருடைய தாய் பிறந்த ஊர் திருநனிபள்ளி. அவ்வூரினர் வருந்தி அழைக்க, அங்கே செல்லப் புறப்பட்டார் ஞானசம்பந்தர். சிறு குழந்தையாதலினால் நடந்து செல்ல இயலாதென்று அவருடைய தந்தையார் தம்முடைய தோளில் அவரை எடுத்துக்கொண்டு நடந்தார். இதைச் சேக்கிழார் ஓர் அழகிய பாடலால் தெரிவிக்கிறார்:

"தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
      சீறடிகள் தரையின் மீது
போதுவதும், பிறர்ஒருவர் பொறுப்பதுவும்
      பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
      தோளின்மிசை வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத்
      துடன்போந்தார், ஞானம் உண்டார்."

சம்பந்தப் பெருமானுடைய சிறிய திருவடிகள் தாது அவிழும் செந்தாமரையின் உள்ளிதழ் போலச் சிவப்பாகவும் மென்மையாகவும் இருந்தன. அவை தரையில் நடந்தால் கன்றி வருந்தும். அப்படிச் செய்வதை அவர் தந்தையார் உள்ளம் பொறுக்கவில்லை. வேறு யாரையாவது எடுத்துக் கொண்டுவரச் செய்யலாம். அதற்கு ஆயிரம் பேர் காத்து நின்றார்கள். அதற்கும் அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. தாமே அந்த இன்பத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு.

தவம் செய்து பெற்ற பிள்ளையால் பெறும் இன்பத்தை நழுவவிட மனம் வருமா? 'மாதவம் செய்தாதையார்' அல்லவா? அவர் வந்து எடுத்துத் தம்முடைய தோளின் மேல் வைத்துக்கொண்டார்.

பெருங்கூட்டம் சூழ்ந்து நின்றது. தம்முடைய தந்தையாருடைய தோளில் அமர்ந்த இளங்குழந்தைப் பிரான் சாமானியக் குழந்தையாக இருந்தால் சுற்றிச் சுற்றிப் பார்க்கும்; தந்தையார் தோளில் ஏறிய பெருமையால் துள்ளிக் குதிக்கும். சம்பந்தரோ ஞானம் உண்டவர். அவர் என்றும் தந்தையாராக உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம் திருமுடிமேல் வைத்துக் கொண்டதாக உள்ளத்தினால் பாவித்து அங்கே அமர்ந்திருந்தார். கீழே பெற்ற தந்தையாரும், முடிமேலே இறைவனுமாக அந்த ஞானக் கன்று எழுந்தருளியதாம்.

அவர்கள் போய்க்கொண் டிருந்தபோது எதிரே சோலையினிடையே திருநனிபள்ளி தோன்றியது. அதைக் கண்டு, "இது எந்த ஊர்?" என்று சம்பந்தர் கேட்கத் தந்தையார், 'இதுதான் திருநனி பள்ளி" என்று சொன்னார். அங்கிருந்தபடியே இறைவனைத் தொழுது ஒரு திருப்பதிகம் பாடத் தொடங்கினார் சம்பந்தர்.

"காரைகள் கூகைமுல்லை" என்று தொடங்கும் அந்தப் பதிகத்தைப் பாடிக் கடைசியிலுள்ள பாட்டாகிய திருக்கடைக் காப்பில், "திருநனி பள்ளியைத் தியானித்தால் பாவங்கள் கெடும்" என்று பயனைக் கூறினார். அதோடு, "நமதாணை' என்று மிடுக்கோடு பாடினார். இறைவன் திருவருளைப் பெற்ற பலத்தால், இவ்வாறு பாடும் மிடுக்கை அப் பெருமான் பெற்றார்.

இப் பதிகத்தைத் தம்முடைய தந்தையாருடைய தோளின்மேல் இருந்தபடியே பாடினார். அந்தக் குறிப்பை, அத்தர் பியல்மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்" என்று புலப்படுத்தினார். தம்மை, "ஞான முனிவன்" என்று அதில் சொல்லியிருக்கிறார். அந்தத் திருப்பாட்டு வருமாறு:

கடல்வரை ஓதம்மல்கு கழிகானல்
      பானல்கமழ் காழி என்று கருதப்
படுபொருள் ஆறும் நாலும் உள
      தாக வைத்தபதி யான ஞான முனிவன்
இடுபறை யொன்ற அத்தர் பியல்
      மேலிருந்தின் இசை யாலுரைத்த பனுவல்
நடுவிருள் ஆடும் எந்தைநனி பள்ளி
      உள்கவினை கெடுதல் ஆணை நமதே.

கடலில் மலைபோல் அலைகள் மல்குவதும் கழியிலும் கடற்கரைச் சோலையிலும் செங்குமுத மலர் கமழ்வதுமாகிய சீகாழி என்று சிறப்பாகக் கருதப் பெறுவதாகிய, ஆறு சாத்திரங்களும் நாலு வேதங்களும் தன்னிடத்திலுள்ள பெருஞ் செல்வமாக வைத்துப் போற்றும் ஊரே தன்னுடைய ஊராகக் கொண்ட ஞானமுனிவனாகிய சம்பந்தன், ஒலிக்கின்ற முரசொலி கேட்க, தன் தந்தையார் பிடரின்மேல் அமர்ந்து இனிய இசையினால் பாடிய பாடலைச் சொல்லி, நள்ளிருளில் நடனமாடும் எம் தந்தையாகிய சிவபெருமானுக்குரிய நனிபள்ளியைத் தியானிக்க பாவம் கெடும்; அப்படிக் கெடுதல் நம் ஆணை' என்பது இதன் பொருள்.

திருநனிபள்ளித் திருக்கோயில் சென்று வணங்கி அப்படியே பல தலங்களுக்குச் சென்று வழிபட்டுத் திருப்பதிகம் பாடி, மீட்டும் சீகாழியை வந்து அடைந்தார் சம்பந்தர்.
--------------

6. தில்லைக் காட்சி

சீகாழியிலிருந்து அடிக்கடி அருகிலுள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார் ஞானசம்பந்தப் பிள்ளையார். ஒரு நாள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் தம்முடைய மனைவியாராகிய மதங்க சூளாமணியாருடன் அவரைத் தரிசிக்கும் பொருட்டு வந்தார்.

பழங்கால முதல் இந்நாட்டில் இசைக்கலையை வளர்த்து வரும் பாணர் மரபில் தோன்றிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிறந்த சிவபக்தர். இராசேந்திரப் பட்டினம் என்று இக்காலத்தில் வழங்கும் திருஎருக்கத்தம்புலியூரில் தோன்றினவர். சிவத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு அவன் புகழை யாழில் வாசிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார். அவ்வாறு தலதரிசனம் செய்து கொண்டு வரும்போது சீகாழியில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு, தேவாரத் திருப்பதிகங்களை வெள்ளம் போலப் பொழிந்து வருவதைக் கேள்வியுற்றார். உடனே தம்முடைய மனைவியாருடன் சீகாழி சென்றார். அவர் வருவதை அறிந்த சம்பந்தர் அவரை எதிர்கொண்டு சென்று வரவேற்க, பாணர் ஞானசம்பந்தர் அடிவிழுந்து பணிந்தார். சம்பந்தர், "நீங்கள் இங்கே வந்ததனால் நாம் உளம் மிக மகிழ்ந்தோம்" என்று இன்னுரை கூறி, அவரை அழைத்துக்கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார். திருக்கோயிலின் புற முற்றத்தில் இருந்து இறைவனை வழிபடச் செய்து, "உங்கள் யாழிசைத் தொண்டைப் புரியுங்கள்" என்று கூறினார். ஞானசம்பந்தர் பணித்தபடி பாணர் யாழிற் சுருதி கூட்டித் தம் மனைவியாருடன் பாடி வாசித்தார். அவருடைய பாட்டில் யாவரும் ஒன்றித் தம்மை மறந்து நின்றனர்.

பின்பு யாழ்ப்பாணரை அழைத்து ஊருக்குள் வந்து அவருக்குத் தனியே ஓரிடம் அமைத்து அங்கே தங்கும்படி செய்தார் சம்பந்தர். பாணர் சம்பந்தப் பெருமானுடைய தேவாரங்களைக் கேட்டு அமுதத்தை நுகர்ந்தவரைப் போல இன்புற்றார். அவற்றைத் தம் யாழில் இசைத்துப் பாடினார். பாலும் தேனும் கலந்ததுபோல யாழிசையில் ஒன்றிய அப்பாடல்கள் கேட்டோரைப் பிணித்தன; உள்ளத்தை உருக்கின.

யாழ்ப்பாணர் தம்முடைய வாழ்க்கைப் பயனையே பெற்றவர் போல மனநிறைவு பெற்றார். சம்பந்தரை வணங்கி, "அடியேன் எப்பொழுதும் தேவரீருடன் இருந்து தேவரீர் அருளிச் செய்யும் திருப்பாடல்களை யாழில் அமைத்து வாசிக்கும் பேற்றைப் பெறும்படி அருளவேண்டும்" என்று வேண்டினார். சம்பந்தரும் அதற்கு இசைந்தார். அதுமுதல் திருநீலகண்ட யாழ்ப் பாணர் அவருடன் இணைபிரியாமல் இருந்து அவருடைய திருப்பதிகங்களை யாழிலே வாசிக்கும் புண்ணியச் செயலைப் புரிந்து வரலானார்.

சம்பந்தப் பெருமானுக்குத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கவேண்டும் என்ற ஆர்வம் தோன்றி வளர்ந்து வந்தது. அதனை அவர் தம் தந்தையாரிடம் கூற, அவர் இசைந்தார். உடனே சம்பந்தர் தம் தந்தையாரோடும் யாழ்ப்பாணரோடும் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். இடையிலே உள்ள தலங்களைத் தரிசித்துக்கொண்டு சென்று கொள்ளிடத்தைக் கடந்தார்.

தில்லையை நெருங்கித் தென்திசைவாயில் வழியே அத் திருப்பதியை அடைந்தார். சம்பந்தப் பெருமான் எழுந்தருளுவதை அறிந்த தில்லைவாழ் அந்தணர்கள் பலவகை மங்கலப் பொருள்களோடு வந்து வரவேற்றார்கள். வேதநாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்தன. நிறைகுடங்களும் தீபங்களும் திசை எல்லாம் நிரம்பின. சோபனம் சொல்லி மறையவர்கள் ஞானப்பால் உண்ட பிரானை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். தில்லைத் திருவீதிகளின் வழியே சென்ற சம்பந்தர் எழுநிலைக் கோபுரத்தைக் கண்டு பணிந்து எழுந்தார். கோபுர வாயிலின் வழியே புகுந்து ஆலயத்தை வலம் வந்து, இறைவன் ஞான ஆனந்த நடம் பயிலும் பொன்னம் பலத்தின் முன்னே வந்தார். கண் களிகொள்ள, சிந்தை யார்வம் முந்த, திருவணுக்கன் திருவாயிலை அடைந்து நின்றார். சிவபெருமான் தமக்கு வழங்கிய ஞானமே அம்பலமாகவும் உள்ளே அந்த ஞானத்தால் விளைந்த ஆனந்தமே திருக்கூத்தாகவும் அமைந்த காட்சியைக் கண்டு கும்பிட்டார்; விழுந்து பணிந்தார். "உணர்வினுக்கும் அப்பாற்பட்ட சிவபோகத்தை உருவையுடைய உடம்பிலுள்ள ஐம்பொறிகளாலும் எளிதாக நுகரும்படி செய்தருளினையே! நின் பெருங்கருணை இருந்தவாறு என்னே!" என்று உருகினார். உள்ள மகிழ்ச்சியின் நிறைவிலே அருமையான இசையோடு திருப்பதிகம் பாடினார்; ஆனந்தம் மேற்கொள விம்மி விம்மிக் கண்ணீர் பொழிந்து ஆடினார். அவர் திருவாக்கிலே எழுந்த பதிகத்தில் தில்லை வாழ் அந்தணருடைய சிறப்பு முன்னே நிற்கிறது.

கற்றாங் கெரிஓம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய
முற்ற வெண்டிங்கள் முதல்வன் திருப்பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே!

என்று தொடங்குவது அத் திருப்பதிகம்.

தில்லைவாழ் அந்தணர்கள் வேத வேள்வியை ஓம்பி, இறைவனை வழிபட்டு வாழ்கிறவர்கள். அவர்கள் வேதம் ஓதி எரியோம்புதலால் கலியினால் வரும் தீங்கு அவர்களுக்கும் பிறருக்கும் வாராமல் நன்மையே உண்டாயிற்று. கலியை வாராமல் செற்றாராகிய மூவாயிரவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எம்பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிகின்றான். இளந்திங்களைச் சூடிய அப் பெருமானுடைய திருப்பாதத்தையே பற்றாகப் பற்றி நின்றவர்களைப் பாவங்கள் பற்றுவதில்லை. நெருப்பிலே செல்லரிக்காதது போல இறைவன் திருவடிப் பற்றுடையார்பால் பாவம் பற்றாது.

இவ்வாறு பாடிய அப்பதிகத்தை நிறைவேற்றிக் கோயிலினின்றும் புறம் போந்தார். தில்லையிலே தங்கி யிருக்க விரும்பாமல் அருகில் உள்ள திருவேட்களம் சென்று தங்கி, அங்கிருந்து வந்து வந்து சிற்றம்பல தரிசனம் செய்து கொண்டார். "ஆடினாய் நறு நெய்யொடு" என்று பின்னும் ஒரு திருப்பதிகம் பாடினார்.
-------------

7. சிவிகைப்பேறும் உபநயனமும்

தில்லையில் நடராசப் பெருமானைச் சேவித்து இன்புற்ற சம்பந்தப் பெருமான் அங்கிருந்து புறப்பட்டு வேறு தலங்களைத் தரிசிக்க எண்ணினார். அப்போது திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார் அவரை வணங்கி, "அடியேனுடைய ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கும் வெள்ளாற்றங்கரையிலுள்ள பிற பதிகளுக்கும் எழுந்தருள வேண்டும்" என்று விண்ணப்பித்துக்கொள்ள, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி அத்தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டார். திருஎருக்கத்தம்புலியூர் சென்று
இறைவனைத் தரிசித்து, "ஐயர் நீர் அவதரிக்க இப்பதி அளவில்லாத மாதவம் முன்பு செய்தது போலும்!" என்று யாழ்ப்பாணரிடம் அன்புடன் கூறி, அங்கிருந்து விருத்தாசலம் முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை வழி பட்டுத் திருப்பதிகம் பாடினார்.

இவ்வாறு தலயாத்திரை செய்யும்போது ஆளுடைய பிள்ளையார் சில காலம் தந்தையார் தோளில் ஏறிச் செல்வார்; சில காலம் தாமே நடந்து செல்வார். திருநெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மீதூர், நடந்தே செல்லலானார். அவருடைய தந்தையார் குழந்தையின் பாத தாமரை நொந்தது கண்டு வருந்தினார். ஆயினும் அப்பெருமான் நடந்தே சென்றார். போகும் வழியில் மாறன்பாடி என்னும் இடத்தில் இளைப்பாறத் தங்கினார். அப்போது கதிரவன் மலைவாயில் மறைந்தான். இரவு வந்தது. யாவரும் அங்கேயே துயில் கொண்டனர். அப்போது திருநெல்வாயில் அரத்துறை மேவிய சிவபெருமான் ஞானப்பால் உண்ட பிள்ளையார் வழிநடக்கும் வருத்தத்தைக் கண்டு திருவுள்ளம் பொறாத வராயினார். அந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டுப் பிள்ளையார் ஏறுவதற்கு முத்துச் சிவிகையும், அவருக்குப் பிடிக்கக் குடையும், திருச்சின்னங்களும் வழங்கத் திருவுள்ளம் கொண்டார். அவற்றைத் திருக்கோயிலில் வைத்து, திருநெல்வாயிலில் உள்ள மறையவர்கள் கனவில் தோன்றி, "ஞானசம்பந்தன் நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனுக்காகச் சிவிகையும் குடையும் திருச்சின்னங்களும் வைத்திருக்கிறோம். அவற்றைக் கொண்டு அவனை எதிர்கொண்டு சென்று கொடுத்து அழைத்து வாருங்கள்' என்று அருளினார். அப்படியே சம்பந்தப் பெருமான் கனவினிலும் தோன்றி, "சிவிகை முதலியவை வரும். நீ அவற்றைப் பயன்படுத்திக் கொள்வாயாக!" என்று வாய்மலர்ந்தார்.

கனவு கண்ட மறையவர் யாவரும் எழுந்து ஒருவருக் கொருவர் தாம் கண்ட கனவைக் கூறி வியந்தனர். யாவரும் திருக்கோயிலுக்குச் சென்று பார்க்கும்போது அங்கே முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் திருச்சின்னங்களும் இருந்தன. அவற்றைக் கண்டு இறைவன் திருவருளை எண்ணி உருகிய அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

கனவு கண்ட சம்பந்தரோ எழுந்து தாம் கண்ட கனவைத் தந்தையாருக்கும் பிறருக்கும் கூறினார். உதயமானவுடன் யாவரும் எழுந்திருந்தனர். அப்போது மறையவர்கள் சிவிகை முதலியவற்றுடன் வந்து, ஞான சம்பந்தரைத் தொழுது நிகழ்ந்தவற்றை யெல்லாம் உரைத்தனர். உடனே சம்பந்தப் பெருமான், "எந்தை ஈசன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, இறைவன் திருவருளை வியந்து பாராட்டினார். பின்னர், திருவைந் தெழுத்தை ஓதி அந்தச் சிவிகையின் மீது ஏறினார். உடன் இருந்தவர் யாவரும் இறைவன் திருவருளை எண்ணி எண்ணி வியந்தனர். முத்துக்குடை நிழற்ற, திருச் சின்னம் ஊத பிற இசைக்கருவிகள் முழங்க, மக்கள் ஆரவாரம் செய்ய, சம்பந்தர் அந்தச் சிவிகையில் நெல்வாயில் அரத்துறையை நோக்கிப் புறப்பட்டார். அப்பதி சென்று இறைவனை வணங்கிப் பதிகம் பாடி அங்கே சில நாட்கள் தங்கியிருந்தார். அருகில் உள்ள தலங்களை அவ்வப்போது தரிசித்து வந்தார்.

பின்பு சீகாழிக்குச் செல்லும் விருப்புடையவராகி அங்கிருந்து புறப்பட்டார், சம்பந்தர். வழியிலுள்ள ஊர்களில் வாழும் மக்கள் அவரை வரவேற்று உபசரித்துத் துதித்து வணங்கினார்கள். பழுவூர், விசயமங்கை, திருப் புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், திருப்பந்தணை நல்லூர், ஓமாம்புலியூர், திருவாழ்கொளிபுத்தூர், கடம்பூர், திருநாரையூர், திருக்கருப்பறியலூர் முதலிய பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு சீகாழியை அணுகினார்.

சம்பந்தர் எழுந்தருளுகிறார் என்பதைக் கேட்டு அந்நகரத்தில் உள்ள மறையவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி ஓங்க, மறையொலியை வீதிதோறும் முழங்கினர். எங்கும் மகர தோரணங்களும் வாழையும் கட்டினர். நிறைகுடம், தூபம், தீபம் வைத்தனர். கொடிகளைக் கட்டினர். பூரணகும்பங்களை ஏந்தி ஞானசம்பந்தரை வரவேற்றனர்.

மிகச் சிறப்பாக யாவரும் வரவேற்க, அப்பெருமான் சீகாழிக்குள் வந்து
வந்து திருநீலகண்ட யாழ்ப்பாணரை அவருடைய திருமனைக்குச் செல்ல விடை கொடுத்துத் தாம் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளினார். பின்பு சீகாழித் திருக்கோயில் சென்று இறைவனைத் தரிசித்துப் பல பதிகங்களைப் பாடினார்.

அப்பொழுது உபநயனம் செய்யும் பருவம் வந்து எய்தவே, மறையவர்கள் கூடிச் செய்யவேண்டிய வற்றைச் செய்ய, ஞானசம்பந்தர் தம் திருமார்பில் முந்நூல் தாங்கலானார். மந்திரங்களை மொழிந்த அந்தணர்கள்முன் அப்பெருமான் வேதமந்திரங்கள் பலவற்றையும் சொல்லி அவர்களை வியப்பில் மூழ்கச் செய்தார். மறையவர்களுக்கு மந்திரங்களிலும் சடங்குகளிலும் இருந்த ஐயங்களை நீக்கி யருளினார். அப்பால் எல்லா மந்திரங்களிலும் சிறந்தது ஸ்ரீ பஞ்சாட்சரம் என்று கூறி, அதன் பெருமையை ஒரு பதிகம் பாடி விளக்கினார்.

அவற்றையெல்லாம் கேட்ட அந்தணர் பிள்ளைப பெருமானை வணங்கி, பெறாத பேறு பெற்றோம் என்று உள்ளம் கனிந்தனர்.
---------------

8. அற்புதச் செயல்கள்

திருஞான சம்பந்தருடைய பெரும்புகழ் எங்கும் பரவியது. அதனைத் திருநாவுக்கரசர் கேட்டு, அப்பெருமானைக் கண்டு பணிய வேண்டும் என்ற ஆர்வத்தோடு சீகாழிக்கு வந்தார். அவருடைய வரவை அறிந்த சம்பந்தர், அன்பர்களுடன் சென்று வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் தொழுது கொண்டனர். சீகாழிப்பிள்ளையார் நாவுக்கரசரை நேரே திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் இறைவனை வழிபட்டபின், சம்பந்தப் பிள்ளையார் திரு மாளிகையை அடைந்தனர். அங்கே நாவுக்கரசருக்கு அறுசுவை யுண்டி அருத்தி அளவளாவினார் சம்பந்தர். சில நாட்கள் அங்கே தங்கிய நாவுக்கரசர், சிவபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

ஞானசம்பந்தர், சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்மேல் பல வகையான சித்திர கவிகளையும் செந்தமிழ் மாலைகளையும் பாடினார். அப்பால் தலயாத்திரை செய்யத் தொடங்கிப் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருப்பதிகங்கள் பாடினார். அவருடன் அவருடைய தந்தையாரும், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், பாணருடைய மனைவியாராகிய மதங்க சூளாமணி யாரும் சென்றனர். போன இடங்களிலெல்லாம் மக்கள் திரண்டெழுந்து வரவேற்றுப் பணிந்தனர்; சம்பந்தருடைய திருப்பதிகங்களைக் கேட்டு உருகினர்.

சோழ நாட்டில் காவிரிக் கரையில் உள்ள தலங்களைத் தரிசித்துவந்த போது, வட கரையில் உள்ள திருப்பாச்சி லாச்சிராமத்தை அடைந்தார். அக் காலத்தில் மழநாட்டுப் பகுதிக்குத் தலைவனாகக் கொல்லி மழவன் என்பவன் ஆண்டுவந்தான். அவனுடைய மகளுக்கு வலிப்பு நோய் வந்து மிகவும் துன்புற்றாள். அதனை முயலக வியாதி என்றும் சொல்வார்கள். மணி மந்திர மருத்துவத்தினால் பலவகையில் பரிகாரம் செய்தும் அந்த நோய் தீரவில்லை. அதனால் மனம் வருந்திய கொல்லி மழவன், "இனி இறைவனையன்றி வேறு புகல் இல்லை" என்று எண்ணித் தன் பெண்ணைத் திருப்பாச்சிலாச்சிராமத் திருக்கோயி லுக்கு எடுத்து வந்து, இறைவன் சந்நிதியில் இட்டு வைத்திருந்தான்.

ஞானசம்பந்தப் பிள்ளையார் அந்தத் தலத்துக்கு வந்ததை உணர்ந்த கொல்லி மழவன் அவரை எதிர் கொள்ளச் சென்று, அவர் முத்துப் பந்தரினின்றும் இறங்கும்போது அவர் காலில் வீழ்ந்து எழுந்து கண்ணீர் வார நின்று ஏத்தினான். எங்கும் அலங்காரம் செய்யச் சொல்லி முன் ஏற்பாடு செய்திருந்த அவன், திருவீதி வழியே சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோயிலை அடைந்தான்.

திருக்கோயிலை வலம் வந்து சந்நிதியிற் புகும்பொழுது அங்கே கிடந்த பெண்ணைக் கண்டார் சம்பந்தர்."ஏன், இப்படிக் கிடக்கிறாள்?" என்று அவர் கேட்க, மழவன் நிகழ்ந்ததை உரைத்தான். உடனே மனம் இரங்கிய பிள்ளைப் பெருமான் இறைவன் திருவருளை வழுத்தி, 'துணிவளர் திங்கள்" என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினார். அதில், "பாச்சிலாச்சிராமத் துறைகின்ற, மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று அந்தப் பெண்ணின் நிலைக்கு இரங்கிப் பாடினார். திருப் பதிகம் பாடி முடித்தவுடன், அந்தப் பெண் நோய் நீங்கி, நாணத்துடன் எழுந்துவந்து தன் தந்தையினருகில் நின்றாள்.

கொல்லி மழவன் மகிழ்ச்சி பொங்கத் தன் மகளுடன் தானும் சம்பந்தர் தாளில் வீழ்ந்தான். இறைவன் திருவருட் சிறப்பை நினைந்த அப்பெருமான் 'நீரணி வேணி நிமலர் பாதம் ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார்'.

அப்பால் கோயிலுள்ளே சென்று திருப்பாச்சிலாச் சிராமப் பெருமானை வணங்கிவிட்டுப் பிற தலங்களையும் வழிபடப் புறப்பட்டார். அந்தப் பக்கத்தில் உள்ள திருக் கோயில்களை வணங்கிப் பதிகம் பாடிப் பின் கொங்கு நாட்டை அடைந்தார். இறைவன் மாதிருக்கும் பாதியனாக எழுந்தருளியிருக்கும் திருச்செங்கோட்டை அடைந்து வணங்கினார். அதற்குக் கொடிமாடச்செங்குன்றூர் என்றும் ஒரு பெயர் உண்டு. அங்கிருந்து பவானியாகிய திருநணாவுக்குச் சென்று வழிபட்டுப் பதிகம் பாடி, மீண்டும் திருச்செங்கோட்டை அடைந்தார்.

அப்போது பனிக் காலம் வந்தது. வண்டுகள் மலரை மொய்த்தலை வெறுத்தன. தாமரைகள் கருகின. மரகதச் சிறு கொடியில் பளிங்குமணியைக் கோத்தாற்போல அறுகம்புல்லின் நுனியில் பனித்துளிகள் நின்றன. மலைகளின்மேல் பனிப் போர்வை வெள்ளை நிறத்தோடு படர்ந் தது. குளிருக்கு வருந்தி வெண்போர்வையைக் குன்றுகள் போர்த்துக் கொண்டது போல இருந்தது அந்தக் காட்சி.

''அளிக்குலங்கள் சுளிந்தகல அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்”.
[அளிக்குலங்கள் - வண்டுக்கூட்டங்கள். சுளிந்து - வெறுத்து. புலர - வாட, மரகதவல்லி - மரகதக்கொடி. படாம்-போர்வை.]

வரவரப் பனி மிகுதியாயிற்று. எங்கும் குளிர் சுரம் பரவியது. சம்பந்தரோடு வந்திருந்த அடியார்களில் சிலரும் அந்தச் சுரத்தினால் இன்னலுற்றனர். அதனால் வருந்திய அவர்கள் தங்கள் நிலையைப் பிள்ளையாரிடம் விண்ணப்பித் துக் கொண்டார்கள். "இந்த நோய் இந்த இடத்துக்கு இயல்பானாலும் சிவனடியாராகிய நம்மை வருத்தாது" என்று கூறி, “அவ்வினைக் கிவ்வினை" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார் சம்பந்தர். கைவினை செய்து எம் பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்" என்று அப்பாட்டில் அமைத்தார். ஒவ்வொரு பாட்டும் இந்தக் கருத்தோடும் திருநீலகண்டம் என்ற திருநாமத்தோடும் முடிந்து நின்றது.

பதிகத்தை நிறைவேற்றினார் சம்பந்தர். அடியவர்களுக்கு வந்த குளிர் சுரம் நீங்கியது; ஊரில் பிறருக்கு வந்திருந்த நோயும் நீங்கியது. அந்த ஊரில் வழக்கமாக வரும் அந்நோய் அதுமுதல் வராமல் ஒழிந்தது.

சம்பந்தர் திருச்செங்கோட்டிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருப்பாண்டிக்கொடுமுடி வந்து இறைவனைப் பணிந்து தமிழ்மாலை சாத்தினார். அப்பால் வெஞ்சமாக் கூடல், கருவூர் என்னும் கொங்கு நாட்டுத் தலங்களைத் தரிசித்து இன்புற்றார். மீட்டும் கிழக்கே உள்ள சோழ நாட்டுப் பகுதிகளை வழிபடப் புறப்பட்டு, இரத்தினகிரியாகிய வாட்போக்கி, திருப்பராய்த் துறை, திருவாலந்துறை, திருச்செந்துறை, திருக்கற்குடி முதலிய பல தலங்களை அடைந்து போற்றித் திருவானைக்காவலை நண்ணினார். அங்கே இறைவனை வழிபட்டுப் பல பதிகங்கள் பாடினார்.

ஒரு திருப்பாட்டில்,

செங்கட் பெயர்கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட் கருணை பெரிதாயவனே.

என்று கோச்செங்கட் சோழன் அருள் பெற்றதைக் குறிப்பித்தார்.

மேலும் பல திருத்தலங்களை வழிபட்டு அடியார் கூட்டத்தோடும் திருவலஞ்சுழியை அடைந்தார். அப்போது கோடைக்காலம் வந்தது. எங்கும் வெம்மை படர்ந்தது. சம்பந்தர் திருச்சத்திமுற்றம் வந்து பணிந்து அருகில் உள்ள பட்டீச்சுரத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார். அப்பொழுது இளம் பிள்ளையாகிய அவர் கீழிறங்கி நடக்கையில் அவர் திருமேனியின்மேல் வெயில் வீசியது. அதனால் அவர் திருவுடம்பு அலைசுமே என்ற கருணையினால் சிவபெருமான் ஒரு பூதத்தை ஏவி முத்துப் பந்தர் எடுத்துச் சென்று நிழல் பரப்பும்படி அருளினான். அவ்வாறே அப்பூதம் செய்து, "பட்டீசர் அருளிச் செயல் இது" என்று குரல் காட்டியது. வானத்தில் எழுந்த ஒலியையும், வந்த பந்தரையும் கண்டு மனமுருகிய பிள்ளையார், கீழே விழுந்து பணிந்தார். உடனே அடியவர்கள் அந்தப் பந்தரின் கால்களைப் பற்றிக்கொண்டு பிடிக்கலானார்கள்.

அந்தப் பந்தரின் நிழலில் ஞானசம்பந்தர் பட்டீச்சுரம் வந்து எம்பெருமானைப் போற்றிப் பாடியருளினார். எங்கே சென்றாலும் இறைவன் திருவருளால் அற்புதங்கள் நிகழ்வதையும், பிள்ளையார் தமிழ்மறை பாடுவதையும் யாவரும் உணர்ந்து உருகி உருகிப் பாராட்டினார்கள்.
-------------

9. யாழில் அடங்கா இசை

திருப்பட்டீச்சுரத்தினின்றும் புறப்பட்டுச் சோழ நாட்டுத் தலங்கள் பலவற்றையும் தரிசித்துத் திருப்பதிகம் பாடிய சம்பந்தர் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கே உள்ள அடியார்கள் இந்த ஞானக்கன்று எழுந்தருளுவதை அறிந்து வந்து எதிர்கொண்டு பணிந்து வரவேற்றார்கள். சம்பந்தர் முத்துச் சிவிகையினின்றும் இறங்கி இறைவன் திருக்கோயில் முன் சென்றார். உயர்ந்த கோபுரத்தைத் தரிசித்து வணங்கி
உள்ளே புகுந்து திருக்கோயிலை வலம் வந்து பணிந்து இறைவனை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார்.

முத்தமிழ் விரகர், கண் அருவி பொழிய இறைவனைப் போற்றி, உடன் வந்த தொண்டர்களுடன் அத்திருப் பதியில் சில காலம் தங்கினார். அப்போது அவருடைய தந்தையார், தாம் வேள்வி புரியும் காலம் அடுத்ததென்றும், அதற்குப் பொருள் வேண்டுமென்றும் புகன்றார். அது கேட்ட சம்பந்தப் பிள்ளையார், “நமக்கு என்றும் குறை விலாச் செல்வமாக இருப்பவன் இறைவன் அல்லவோ?" என்று கூறி, அவனைத் தொழும்பொருட்டுத் திருக்கோயில் சென்று வணங்கிப் பதிகம் பாடத் தொடங்கினார். 'நம்மை வந்து வேண்டுவார்க்கு ஈய நம்மிடம் ஒரு பொருளும் இல்லை. இறைவன் திருவடியன்றி வேறு ஒன்றும் அறியேம்' என்ற எண்ணத்தோடு அதைப் பாடினார்.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோஉன தின்னருள் ஆவடு துறையரனே!

என்று தொடங்கிப் பதிகம் பாடினவுடன், இறைவன் அருளாணையால் ஒரு பூதம் ஆயிரம் பொன் உள்ள கிழி ஒன்றை ஒரு பீடத்தில் வைத்து, "இது எடுக்க எடுக்கக் குறையாக் கிழி; இறைவர் அருளியது" என்று சொல்லி மறைந்தது.

இறைவனைப் பணிந்து அக்கிழியை எடுத்துத் தம் தந்தையாரிடம் அளித்து, “சிவபெருமானை முதல்வராக வைத்துத் தாங்கள் வேள்வி புரியவும், சீகாழியில் உள்ள வேதியர் அனைவரும் செய்யவும் இந்தக் கிழி உதவும்” என்று கூறினார் சம்பந்தர். தந்தையார் அதைப் பெற்றுக் கொண்டு சீகாழியை அடைந்தார்.

ஞானம்பந்தப் பிள்ளையார் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருத்தருமபுரத்துக்கு வந்தார். அவருடன் இருந்து அவருடைய திருப்பதிகங்களை யாழில் இசைத்துப் பாடி வந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய தாயார் பிறந்த இடம் அது. அங்கே யாழ்ப்பாணருடைய சுற்றத்தார் பலரும் வந்து பிள்ளை யாரை வணங்கினார்கள். அப்போது திருநீலகண்ட யாழ்ப் பாணர், "ஞானசம்பந்தப் பெருமான் தாம் பாடியருளும் திருப்பதிகங்களை யாழில் அமைத்து வாசிக்கும் பெரும் பேற்றை எளியேனுக்கு அருளியிருக்கிறார்" என்று அவர்களிடம் சொன்னார். அவர்கள் அதுகேட்டு, ''நீங்கள் அப்படி வாசிப்பதனாலேதான் அந்தப் பதிகங்கள் எங்கும் பரவிப் புகழ் பெறுகின்றன" என்றார்கள். அதைக் கேட்ட யாழ்ப்பாணர் உளம் நடுங்கினார். "என்ன அறியாமை இது’ என்று வருந்தினார். உடனே ஞானசம்பந்தரை வணங்கி, "தேவரீர் யாழில் இசைக்க முடியாத வகையில் திருப்பதிகம் பாடியருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

அப் பெருமான் இறைவன் திருவருளை வழுத்தி, "மாதர் மடப்பிடி என்று தொடங்கும் பதிகத்தை அருளிச்செய்தார். அதனை முற்றும் பாடி முடித்த பிறகு, யாழ்ப்பாணர் தம் யாழை எடுத்து அந்தப் பதிகத்தை அக்கருவியில் அமைத்துப் பாட முயன்றார். அதன் நரம்புக்கட்டில் அமையாத வகையில் பதிகம் இருந்தமையால் அவரால் அதை வாசிக்க முடியவில்லை. எனன முயன்றும் பாசுரத்தை யாழிசையில் பொருத்த முடியாமல் கலங்கிய யாழ்ப்பாணர் யாழைக் கீழே வைத்துவிட்டுச் சம்பந்தர் திருத்தாளில் வீழ்ந்தார். எழுந்து, “இப் பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்திசையை யாழில் பொருத்திப் பாடுவேன் என்று நான் செருக்குடன் கூறியதற்குக் காரணம், இக்கருவியை நான் தொட்டதுதான். இந்த யாழினால்தான் எனக்கு இத்தகைய தருக்கு உண்டாயிற்று. இனி இதனை உடைத்து விடுவேன்" என்று சொல்லி யாழை உடைக்க ங்கினார். பிள்ளையார் அதைத் தடுத்து, 'இதை என்னிடம் தாரும்" என்று வாங்கிக்கொண்டு, "இறைவன் திருவருட் பெருமையை இதனுள் அடக்கிவிடலாம் என்று எண்ண முடியுமா? இந்தக் கருவியின் அளவுக்கு எவை அடங்குமோ, அவற்றை வழக்கம்போல் வாசித்து வருவீராக" என்று கூறினார். பாணர் அவரைத் தொழுது யாழை வாங்கிக்கொண்டார். யாழ்ப்பாணருடைய சுற்றத்தார் இந்த நிகழ்ச்சியைக் கண்டு தம் பேதைமையை உணர்ந்து இரங்கினர்.

மீட்டும் சிவத் தலங்களை வழிபடும் கருத்தோடு புறப்பட்ட சம்பந்தர் திருச்சாத்தமங்கை வந்து அங்கே வாழ்ந்த திருநீலநக்க நாயனாரைக் கண்டு, அவர் வழிபட்டு உபசரிக்க, அங்கே தங்கி இறைவனைத் தரிசித்தார். பிறகு வேறு தலங்களைப் பணிந்து சென்று திருச்செங்காட்டங் குடியை அணைந்தார். அங்கே இருந்த சிறுத்தொண்டர் அவர் வரவை அறிந்து ஓடிச் சென் வரவேற்று அழைத்துச் சென்றார். அத்தலத்திலுள்ள கோயிலுக்குக் கணபதீச்சரம் என்று பெயர். சம்பந்தரும் சிறுத் தொண்டரும் பிற அடியார்களும் நேரே திருக்கோயிலுக் குச் சென்றார்கள். அமைச்சராக இருந்து புகழ்பெற்றவர் சிறுத்தொண்டர். அவர் அடியாராக நின்று தொழும் தகைமையைச் சுட்டித் திருப்பதிகம் பாடினார் பிள்ளையார்.

செடிநுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகரும் சிறுத்தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே'

என்ற திருப்பாட்டில் அச்செய்தி வருகிறது. இறைவனைத் தரிசித்து இன்புற்றுப் பின்பு சிறுத்தொண்டருடைய திருமனையிற் சென்று சில நாள் தங்கினார் சம்பந்தர்.
--------------

10. நாவுக்கரசருடன் யாத்திரை

திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டருடைய உபசாரத்தைப் பெற்று ஞானசம்பந்தர் தங்கியிருக்கையில், அருகில் உள்ள திருமருகல் என்ற தலத்துக்குப் போய் இறைவனைத் தரிசித்து வரவேண்டுமென்று புறப்பட்டார். அங்கே சென்று இறைவனை வழிபட்டுப் பதிகம் பாடிச் சில நாட்கள் தங்கியிருந்தார்.

வைப்பூர் என்ற ஊரில் தாமன் என்ற வணிகன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவனுக்கு ஏழு பெண்கள் பிறந்தனர். அவனுடைய மருமகன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தன் மூத்த பெண்ணை மணம் செய்து கொடுப்பதாகத் தாமன் சொன்னான். ஆனால், சொன்னபடி நடவாமல் பொருளாசை காரணமாக அயலான் ஒருவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்துவிட்டான். பிறகு இரண்டாம் பெண்ணைத் தருவதாகச் சொல்லி ஆசை
காட்டி அவளையும் அயலானுக்குக் கொடுத்து விட்டான். இப்படியே ஆறு பெண்களை அந்த வணிகன் அயலார்களுக்கே மணம் செய்து கொடுத்தான். இது கண்ட மருமகன் மிகவும் மனம் வாடியிருந்தான். ஏழாம் பெண் தன் தந்தை செய்த வஞ்சகத்தையும் தன் அத்தை மகன் படும் துயரத்தையும் கண்டு தானே அவனை மணந்து கொள்ளத் துணிந்தாள்.

தன்னைப் பெற்றவர்களுக்குத் தெரியாமல் அந்த மைந்தனோடு புறப்பட்டு வந்துவிட்டாள். இருவரும் எங்கேனும் போய்த் திருமணம் செய்துகொள்ள எண்ணி வந்தவர்கள், இடையே திருமருகலில் ஒரு மடத்தில் தங்கினார்கள். அன்று ஒரு பாம்பு அந்த வணிக மைந்தனைக் கடிக்க, நஞ்சேறி அவன் உயிர்விடும் நிலையை அடைந்தான். அதுகண்டு அவனுடன் வந்த கன்னி, நிலை தளர்ந்து சோர்ந்தாள். திருமணம் ஆகாதவளாதலின் அவனைத் தீண்டாமல் அருகே வீழ்ந்து அரற்றலானாள். யாரும் அவளுக்கு ஆறுதல் கூறுவார் இல்லை. "என் தாய் தந்தையரைப் பிரிந்து உன்னையே பற்றுக்கோடாக எண்ணி உடன் வந்தேன். பாம்பு கடிக்க என்னை விட்டுச் சென்றாயே! யான் என் செய்வேன்! என் இடர் தீர்ப்பார் யாரும் இல்லையே! யானும் இனி உயிர் வாழப் போவதில்லை" என்று அரற்றியவள், அருகில் உள்ள கோயில் கண்ணில் படவே, அந்தத் திசையை நோக்கித் தொழுது சிவபிரானைக் குறித்து ஓலமிடத் தொடங்கினாள்.

''நின் அடி அடைந்து பணிந்த இமையவர் கூட்டம் உயிர் பிழைக்க வேண்டி, அலைகடலில் எழுந்த நஞ்சை உண்ட அமுதம் போன்ற பெருமானே! கரிய விடத்தை யுடைய அரவை அணிந்த நிமலனே! வெந்து பொடியான காமனை அவனுடைய மனைவியான இரதி வேண்ட உயிர் தந்து எழுப்பிய புண்ணியனே! திருமருகற் பெருமானே! நீதான் காக்க வேண்டும். என்று அரற்றினாள்; பின்னும், "சிறு மறையோனாகிய மார்க் கண்டேயனைப் பற்ற வந்த காலனை உதைத்து உருட்டிய திருவடியை உடையவனே! இந்த நஞ்சின் வேகம் நீங்கும் படியும், அடியேன் இடுக்கணென்னும் குழிநின்று ஏறும் படியும் அருளவேண்டும்" என்று புலம்பினாள்.

அப்போது திருக்கோயிலைத் தரிசிக்கும்பொருட்டு வந்துகொண்டிருந்த சம்பந்தப் பெருமான் திருச்செவியில் அந்தப் பெண் அரற்றும் ஓசை விழுந்தது. உடனே அவள் இருக்குமிடம் சென்று அந்தப் பெண்ணைக் கண்டு, ''நீ அஞ்சாதே; உங்கள் வரலாறு என்ன? சொல்" என்று கேட்டார். அவள் யாவற்றையும் எடுத்துரைத்தாள்.

அதுகேட்டு மனம் இரங்கிய சீகாழிப் பெருமான் வணிகனுடைய விடம் தீருமாறு ஒரு திருப்பதிகம் பாடத் தொடங்கினார்.

சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவளுள் மெலிவே

என்பது அப்பதிகத்தின் முதல் திருப்பாட்டு. பதிகம் முடிந்தவுடன் அரவு தீண்டிய மைந்தன் விடம் நீங்கி எழுந்து சம்பந்தரைப் பணிந்தான். அவனுடைய காதலியும் அவரைப் பணிய, அவ்விருவரையும் திருமணம் புரிந்துகொண்டு நீடூழி வாழ்கவென்று ஆசி கூறி அனுப்பினார்.

பிறகு சிறுத்தொண்டர் வேண்டுகோளின் மேல் சம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்று தங்கினார். பின்பு திருப்புகலூர் அடைந்து அங்குள்ளோர் எதிர்கொண்டு போற்ற, முருகநாயனார் மடத்தில் சென்று தங்கினார். அங்கே தங்கியிருந்தபோது, திருநாவுக்கரசர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வணங்கிப் பாடித் தொண்டர்குழாத்துடன் திருப்புகலூருக்கு வந்து கொண்டிருந்தார். அதனை அறிந்த ஞானப்பிள்ளை யார் அன்பு மிக ஊற ஊருக்கு வெளியிலே அப்பரை எதிர் கொண்டழைக்கச் சென்றார். அப்பர் வந்தணைய, இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி நலத்தை வினவிக் கொண்டனர். "திருவாரூரில் தரிசனம் எப்படி?" என்று சம்பந்தர் கேட்க, அப்பர் ஒரு திருப்பதிகத்தால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னார். அதுகேட்ட சம்பந்தருக்குத் திருவாரூர் சென்று வழிபட வேண்டும் என்ற விருப்பம் உண்டாக, "தாங்கள் திருப்புகலூரில் தங்கியிருக்க வேண்டும்; நான் திருவாரூர் சென்று தரிசித்து மீண்டும் இங்கே வந்து சேர்ந்து கொள்வேன்" என்று விடைபெற்று அந்நகரை நோக்கிப் புறப்பட்டார்.

இடையில் உள்ள சில தலங்களை வழிபட்டு ஆராக் காதல் மீதூர ஆரூரை அடைந்தார், சம்பந்தர். அங்கே நகர மக்கள் ஊரை அலங்கரித்து வரவேற்க, நகருள் சென்று திருவாரூர் எம்பெருமானை வழிபட்டு ஏத்தினார். அங்கே சில நாட்கள் தங்கிப் பல பதிகங்கள் பாடி இன்புற்றார். பின்பு அங்கிருந்து திருப்புகலூர் வந்து திருநாவுக்கரசருடன் சில நாள் அங்கே தங்கினார்.

அப்பால் அவ்விருவரும் ஒருங்கே சிவத்தல வழிபாடு செய்யப் புறப்பட்டார்கள். ஞானசம்பந்தர் திருநாவுக்கர சடருன் நடந்து வர, அவருடைய முத்துச்சிவிகை பின்னே வந்தது. அது கண்ட நாவுக்கரசர், "சிவபெருமான் தாங்கள் நடக்கக்கூடாது என்ற திருவுள்ளத்தினால் அருளிய இந்தச் சிவிகை தனியே வருவது முறையன்று. தாங்கள் இதன் மேல் ஊர்ந்து வரவேண்டும்'' என்று வேண்டினார். நாவுக்கரசர் நடந்து செல்ல, தாம் மட்டும் சிவிகையில் ஏறிப் போவதைச் சம்பந்தர் விரும்பவில்லை. ஆயினும் நாவுக்கரசர் கூறியதையும் தட்டமுடியவில்லை. "இறைவன் திருவுள்ளம் அதுவானால் தாங்கள் முன்னே எழுந் தருளுங்கள். தாங்கள் எங்கே போகிறீர்களோ, அங்கே பின்பு வந்து சேர்கிறேன்" என்று அவர் சொல்ல, அப்பரும் அதற்கு இசைந்தார். அதுமுதல் அப்பர் முதலிலே சென்று ஒரு தலத்தை அடைவதும், சம்பந்தர் பிறகு சிவிகையில் அவ்விடத்தை அடைவதுமாகவே யாத்திரை செய்யலாயினர்.திருவம்பர். திருக்கடவூர் முதலிய பல தலங்களுக்கு இந்த முறையில் இருவரும் சென்று தரிசித்துத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர்.
-----------------

11. வீழிமிழலையும் மறைக்காடும்

பல தலங்களைத் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் தரிசித்துக்கொண்டு திருவீழிமிழலை சென்று அடைந்தனர். திருஞான சம்பந்தர் அந்தத் தலத்தில் எழுந்தருளி யிருப்பதை அறிந்த சீகாழி அந்தணர்கள் அவ்வூர் வந்து சம்பந்தரைப் பணிந்து தம் ஊருக்கு எழுந்தருள வேண்டு மென்று வேண்டிக்கொண்டனர். திருவீழிமிழலைப் பெருமானிடம் விடை பெற்றுப் புறப்படலாம் என்று சம்பந்தர் கூறினார். அன்று இரவு அவர் கனவில் சீகாழிப் பெருமான் தோன்றி, "இந்தத் தலத்தில் உள்ள விண்ணிழி விமானக் கோயிலில் நாளை நம்முடைய காட்சியைக் காட்டுகின்றோம். என்று அருளினான்.

மறுநாள் ஞானசம்பந்தப் பிள்ளையார் திருவீழிமிழலைத் திருக்கோயிலுக்குட் சென்று தரிசித்தபோது அங்கே சீகாழிப் பெருமானுடைய அழகுக் காட்சியைக் கண்டு பணிந்து இன்புற்றார். "மைம்மரு பூங்குழல்" என்ற திருப்பதிகம் பாடி, "சீகாழியில் எழுந்தருளி யிருக்கும் பெருமானாகிய தேவரீர் இந்த விண்ணிழி கோயிலை விரும்பியது என்னே!' என்று அப்பதிகப் பாடல்களில் வினாவை அமைத்தார். அப்பால் சீகாழியிலிருந்து வந்திருந்த மறையோர்களைப் பார்த்து, "பல சிவத்தலங்களையும் தரிசிக்கப் புறப்பட்ட அடியேன் பயணம் தடையுறக் கூடாது என்ற பேரருளால் சீகாழிப் பெருமான் இங்கேயே காட்சி வழங்கினான். ஆதலின் நீங்கள் சீகாழியை அடைவீர்களாக" என்று சொல்ல, அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் அங்கே நாள்தோறும் திருவீழிமிழலை எம்பெருமானைத் தரிசித்துப் பதிகங்களைப் பாடித் தங்கியிருந்தனர். அப்போது நாடு எங்கும் மழை பெய்யாமல் பஞ்சம் உண்டாயிற்று. ஆறுகள் வறண்டன. நீர் இன்மையால் வயல்கள் விளைய வில்லை. அதனால் மக்களுக்குப் போதிய உணவு கிடைக்காமல் வாடினர். அது கண்டு சம்பந்தப் பிள்ளையாரும் நாவுக்கரசரும் மிக்க வருத்தத்தோடு இருந்தனர்.

ஒரு நாள் இரவில் அவ்விருவருடைய கனவிலும் இறைவன் தோன்றி, "இந்தப் பஞ்சத்தால் உங்களுக்கு ஒரு தீங்கும் உண்டாகாது. உங்களுடன் உள்ள அடியார்களுக்கு உணவு கிடைக்க ஒரு வழி செய்வோம். நாள்தோறும் திருக்கோயிற் பீடத்தில் கிழக்கிலும் மேற்கிலும் ஒவ்வொரு காசு வைப்போம். அவற்றைக் கொண்டு அடியார்களுக்கு உணவு வழங்கத் திட்டம் செய்யுங்கள்" என்று அருளினான். உடனே துயிலுணர்ந்த சம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்தார்.

மறுநாள் அப்பரும் சம்பந்தரும் திருக்கோயிலுக்குள்ளே சென்று வணங்கியபோது பீடத்தின் கீழ்ப்பக்கத்திலும் மேற்பக்கத்திலும் ஒவ்வொரு பொற்காசு இருந்தது. கிழக்குப் பக்கத்துக் காசைச் சம்பந்தரும் மற்றையதை அப்பரும் தொழுது எடுத்து, அவற்றைக் கொண்டு அரிசி முதலிய பண்டங்களை வாங்கி, தம் தம் மடத்தில் தம் முடன் இருந்த அடியார்களுக்குக் குறைவின்றி உணவூட்டி வந்தார்கள்.

அப்போது திருநாவுக்கரசர் மடத்தில் உரிய காலத்தே யாவரும் உணவு பெற்று வந்தனர். ஆனால் சம்பந்தர் திரு மடத்தில் தாமதித்தே உணவு அளித்தார்கள். இதனை உணர்ந்த பிள்ளையார்,"ஏன், நம் மடத்தில் உணவு வழங்க இவ்வளவு நேரமாகிறது?" என்று கேட்டார். அடியார்கள், "நம்முடைய காசைக் கொண்டு போய்க் கடையில் காட்டினால், வாசியுள்ள காசு என்று கூறி வட்டம் கேட்கிறார்கள். அதனால் பண்டங்கள் வாங்கத் தாமதம் ஏற்படுகிறது. திருநாவுக்கரசர் பெறும் காசைக் கொடுத்தவுடனே பண்டங்களைக் கொடுத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள்.

'அப்பர் உழைத்துப் பெறுவதாதலின் வாசி தீர்ந்த காசைப் பெறுகிறார் போலும்! அவர் தொண்டு செய்து படும் பாட்டால் பெறும் காசை நான் பாடும் பாட்டால் பெறுவேன்' என்று எண்ணி, "வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அதுமுதல் அவருக்கும் வாசி தீர்ந்த நல்ல காசு கிடைக்கலாயிற்று. அதை வாங்கிய வுடனே கடைக்காரர்கள் பண்டங்களைத் தந்தார்கள். அதனால் திருஞான சம்பந்தர் மடத்திலும் சரியான வேளையில் யாவரும் உணவு உண்ணலாயினர்.

சில நாளில் 'எங்கும்’ மழை பெய்து பஞ்சம் தீர்ந்தது. மக்களுக்கு வேண்டிய உணவுப் பண்டங்கள் கிடைத்தன. திருவீழிமிழலையில் இருந்த அவ்விரு நாயன்மாரும் அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டு வேறு பல திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருமறைக் காடாகிய வேதாரணியத்தை அடைந்தனர். திருநாவுக்கரசர் அப்பதிக்கு முதலில் செல்ல, அவரை வரவேற்றனர் அந்நகரத்து மக்கள். பின்னே சம்பந்தப் பெருமான் எழுந்தருள்கின்றாரென்பதை அப்பர் சுவாமிகள் மூலமாக உணர்ந்து அவர்கள் அப் பெருமானை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பிள்ளையார் வந்தபோது மிகச் சிறப்பாக வரவேற்றுப் பணிந்தார்கள்.

சம்பந்தரும் திருநாவுக்கரசரும் மறைக் காட்டுறையும் பெருமானைத் தரிசிக்கத் திருக்கோயிலுக்குச் சென்றார்கள். அங்கே கோயிலின்முன் உள்ள திருவாயில் அடைத்துக் கிடக்க, அருகே வேறு ஒரு வாயிலை உண்டாக்கி, அதன் வழியே அடியார்கள் சென்று வழிபட்டு வந்தார்கள்.

திருஞான சம்பந்தர் அதன் காரணத்தைக் கேட்க, "ஒரு காலத்தில் இங்கே மறைகள் வந்து இறைவனைப் பூசித்து இந்த வாயிலை அடைத்துச் சென்றுவிட்டன. அது முதல் இப்படியே உள்ளது" என்று அடியார்கள் கூறினர்.

அது கேட்ட பிள்ளையார் அப்பரை நோக்கி, ''அப்பரே, வேதவனப் பெருமானை இந்தக் கிழக்குத் திருவாயிலின் வழியே புகுந்து நாம் வணங்கவேண்டும். நீங்கள் இந்த வாயிலின் திருக்காப்பு நீங்குமாறு தண்டமிழ்ப் பதிகம் பாடி அருள வேண்டும்" என்று வேண்டினார்.

அது கேட்ட அப்பர், "உங்கள் திருவுள்ளம் இதுவானால் அப்படியே செய்கிறேன்'' என்று கூறி, ஒரு திருப்பதிகம் பாடலானார். பத்துப் பாடல்களைப் பாடியும் திருக் கதவம் திறக்கவில்லை. அதனால் வருந்திய அப்பர் அடுத்த பாட்டில் அவ்வருத்தத்தைக் குறிப்பித்துப் பாட, உடனே திருக்கதவம் திறந்துகொண்டது.

உடனே யாவரும் அவ்வாயிலின் வழியே புகுந்து இறைவனை வழிபட்டார்கள். அப்பர் சுவாமிகள் உள்ளம் உருகி இறைவனைப் பணிந்து பதிகம் பாடினார். யாவரும் தரிசனம் செய்துகொண்டு புறம்பே வந்தபோது நாவுக்கரசர் சம்பந்தப் பெருமானை நோக்கி, "இந்தத் திருக்கதவம் மீட்டும் அடைக்கவும் திறக்கவும் எளிதாயிருக்க வேண்டும். ஆதலின் இப்போது அடைக்க நீங்கள் பாடுங்கள்" என்று கூற, அப்படியே சம்பந்தர், ''சதுரம்" என்று தொடங்கி ஒரு திருப்பதிகத்தைப் பாடினார். உடனே அக்கதவம் அடைபட்டது. உடன் இருந்த அடியார்கள் இறைவன் திருவருளை எண்ணி ஆரவாரம் செய்தனர்.

அதுமுதல் அந்தத் திருவாயில் அடைக்கவும் திறக் கவும் எளிதாக அமைந்தது. வேதங்கள் அடைத்துச் சென்ற வாயிலைத் திறக்கவும் மூடவும் செய்த திருப்பதிகங்களை யாவரும் ஓதினர்; இவையும் வேதத்துக்கு நிகராவன என்று பாராட்டினர்.
-------------

12. மதுரைக்குப் புறப்பாடு

திருமறைக்காட்டில் சம்பந்தப் பெருமானும் நாவுக்கர சரும் தங்கியிருந்தபோது, இறைவன் நாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வா என்று பணிக்க, அவர் அந்தத் திருப்பதிக்குச் சென்றார். அதனை அறிந்த ஞானசம்பந் தரும் அங்கே சென்று இறைவனை வணங்கினார். பின்பு இருவரும் மீட்டும் திருமறைக்காட்டுக்கு வந்து, நாள் தோறும் இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடினார்கள். சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்.

அக்காலத்தில் பாண்டி நாட்டில் நெடுமாறன் என்ற கூன்பாண்டியன் அரசாண்டு வந்தான். அவனுடைய மாதேவி, சோழன் மகளாகிய மங்கையர்க்கரசியார். அவனுக்கு முதல் மந்திரியாக இருந்தவர் குலச்சிறையார். சமண சமயத்தினர் அரசனைத் தம் வசப்படுத்தி எங்கும் தம்முடைய சமயத்தைப் பரப்பத் தொடங்கினார்கள். அரசனுடைய துணைவலிமையால் அவர்களுடைய முயற்சி கள் வெற்றி அடைந்தன. சைவர்கள் பலர் சைனர்களாயினர். வேதநெறியும் சைவ நெறியும் மங்கின. சைவம் சிறந்து வளர்ந்த அந்த நாட்டில் இப்போது அது ஒளிந்து வாழலாயிற்று.

மன்னவன் சமணனானாலும் அவனுடைய மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும் அமைச்சராகிய குலச்சிறையாரும் மட்டும் சைவ நெறி பிறழாது வாழ்ந்து வந்தனர். இறைவனுடைய திருவருளால் பாண்டிநாடு பழையபடி சைவ நெறியில் மேலோங்கி நிற்கும் நாள் என்று வரும் என்று ஏங்கியிருந்தார்கள்.

அவர்கள் காதில் திருஞான சம்பந்தருடைய பெருமையும், அவர் செய்து வரும் அற்புதங்களும் விழுந்தன. இப்போது திருமறைக்காட்டில் வந்து தங்கியிருக்கும் செய்தியையும் அறிந்தார்கள். உடனே சிலரை, “மறைக் காடு சென்று சம்பந்தப் பெருமானை வணங்கிவிட்டு வாருங்கள்" என்று அனுப்பினார்கள்.
.
அவர்கள் திருமறைக்காட்டுக்கு வந்து பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தை அடைந்து, தாம் வந்திருக்கும் செய்தியை வாயில் காவலரிடம் சொன்னார்கள். அவர்கள் உள்ளே புக்கு, ''வளவர்கோன் மகளாரும் தென்னவன் தேவியாரு மாகிய மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் என்னும் இருவரும் ஏவப் பொற்கழல் பணிய வந்தோம் என்று சிலர் புறத்தே வந்து சொன்னார்கள்'' என்று விண்ணப்பம் செய்து கொண்டார்கள்.

புகலி காவலர் அதைக் கேட்டு அருள் கூர்ந்து, "அவர்களை இங்கே அழையுங்கள்" என்று பணித்தார். அப்பெருமான் பணித்தபடியே அவர்கள் மதுரையிலிருந்து வந்தவர்களை அழைத்துவர, வந்தவர்கள் பெருமானை வணங்கி எழுந்தார்கள். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்னும் இருவருடைய நலத்தையும் பிள்ளையார் சொல்லிவிட்டு மேலே சொல்லலானார்கள்; "பாண்டி நாடு சமணர்களுடைய செயல்களால் கட்டழிந்து இழிந்துவிட்டது; மன்னனும் அவர்களுடைய மாயத்தில் அழுந்தினான். இந்த நிலையைத் தேவரீரிடம் விண்ணப்பித்துக் கொள்ளும்படி அரசியாரும் அமைச்சரும் பணித்தனர்'' என்றார்கள்.

அதுகேட்டு அருகில் இருந்த சிவனடியார்கள் "தேவரீர் அந்நாடு பழையபடி வேதநெறியில் செல்வது ஆகவும் வேந்தன் வெண்ணீறு இடுபவன் ஆகவும் செய்யத் திருவுளம் கொள்ளவேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

சீகாழிப் பிள்ளையார் முகமலர்ந்து அவர்களுக்கு அருள் செய்து, பிறகு திருநாவுக்கரசருடன் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனை வணங்கி மீண்டு, பெரிய திருக்கோபுர நிலையில் இருந்தபடியே அப்பரை நோக்கி, அரசியாரும் அமைச்சரும் சொல்லியனுப்பிய வார்த்தை யைக் கூறினார்; ''அங்கே சென்று இறைவன் திருவருளால் ஏதாவது செய்ய வேண்டும்; போவதாகத் தீர்மானம் செய்துவிட்டேன்” என்றார்.

அதுகேட்ட திருநாவுக்கரசர்,"குழந்தைப் பெருமானே, சமணர்கள் செய்யும் வஞ்சனைகளுக்கு எல்லையே இல்லை. இப்போது கிரக நிலையும் சரியாக இல்லை. ஆதலின் போவது தக்கதன்று" என்று கூறினார். உடனே சம்பந்தர், “நாம் எம்பெருமான் திருவடிகளையே ஏத்தி வாழும்போது எந்த விதமான தீங்கும் அணையாது" என்று சொல்லித் தம் கருத்தை ஒரு திருப்பதிகம் பாடி உணர்த்தினார்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
      மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
      சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

[மூங்கிலின் அழகைப் பெற்ற தோளையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்திலே உடையவன் ஆலகால நஞ்சை உண்ட கழுத்தை உடையவனாகிய சிவபெருமான், அழுக்கற்ற சந்திரனையும் கங்கையையும் தன் திருமுடிமேல் அணிந்துகொண்டு அடியேனுடைய உள்ளத்தில் புகுந்து பாதுகாக்கும் அச்செயலால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன், சனி, இராகு கேதுக்களாகிய பாம்பு இரண்டு ஆகிய யாவும் ஒருங்கே எனக்குத் தீங்கு அற்று நலம் தரும்; அவை அடியார்களுக்கு மிகவும் நன்மையையே தரும்.]

இந்த முதற்பாட்டையுடைய அப்பதிகத்துக்குக் கோளறு பதிகம் என்ற திருநாமம் வழங்குகிறது.

இதனைக் கேட்ட அப்பர், சம்பந்தர் மதுரை செல்வதற்கு இசைந்ததோடு தாமும் முன்னால் செல்லப் புறப் பட்டார். அப்போது சம்பந்தர், "நீங்கள் இந்தச் சோழ நாட்டில் எழுந்தருளியிருங்கள்'' என்று கூறி, மீட்டும் வேதவனத்து இறைவரை வணங்கித் திருநாவுக்கரசரிடம் விடை கொண்டு தம்முடைய முத்துப் பல்லக்கில் ஏறிப் புறப்பட்டார்.

திருத்தொண்டர்கள் இருமருங்கும் நின்று போற்றிசைப்ப, எங்கும் வேத ஒலியும் கீத ஒலியும் முழங்க, இசைக் கருவிகள் இயம்ப, அங்கங்கே தோரணங்களும் கொடிகளும் நாற்றி மக்கள் எதிர்கொள்ள, மலர்மாரி பொழியச் சம்பந்தப்பெருமான் இடையே உள்ள திருத் தலங்களுக்குச் சென்று வழிபட்டார். திருஅகத்தியான் பள்ளி, கோடிக்குழகர், கடிக்குளம், திரு இடும்பாவனம், திருவுசாத்தானம் முதலிய தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடினார். பாலை நிலத்தையும் நெய்தல் நிலத்தையும் கடந்து, மருத நிலத்து வழியே சென்று சோழ நாட்டையும் கடந்து, அப்பால் மறவர் வாழும் இடங்களையும் கடந்து, பாண்டி நாட்டை அடைந்தார். கொடுங்குன்றமென்னும் பிரான் மலையை வணங்கித் தமிழ்ப் பதிகம் பாடி மதுரையை நோக்கி வருவாராயினார்.
----------------

13. வரவேற்பு

திருஞானசம்பந்தப் பெருமான் வருவதற்கு முன்பே மதுரையிலும் அதைச் சார்ந்த ஊர்களிலும் உள்ள சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் உண்டாயின. அவற்றைக் கண்டு அஞ்சிய அவர்கள் மதுரையில் வந்து கூடினர்.

அச்சமயத்தில் பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க் கரசியாருக்கும், அமைச்சர் குலச்சிறையாருக்கும் பல நன்னிமித்தங்கள் உண்டாயின. அப்போது வெளியூர் சென்றிருந்த அன்பர்கள் வந்து, சம்பந்தப் பெருமான் மதுரைக்கு எழுந்தருளிவரும் செய்தியைச் சொன்னார்கள். அதனை அறிந்த குலச்சிறையார் மகிழ்ச்சி மீதூர, அதனை அரசியாரிடம் வந்து கூறினார். அரசியார்."அந்த ஞான போனகரை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வாருங்கள்" என்றார். குலச்சிறையார் அந்தக் கட்டளையை மேற் கொண்டு மதுரைக்குப் புறத்தே சம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொள்ளச் சென்றார். மங்கையர்க்கரசியார், "ஆலவாய் அமர்ந்த இறையவனைக் கும்பிடவேண்டும்" என்று அரசனிடம் சொல்லி, ஏவலரோடும் காவலரோடும் திருக்கோயிலை அடைந்து, ஆலவாயப்பனை வணங்கி, ஞானசம்பந்தரை எதிர்நோக்கி நின்றார்.

முத்துச் சிவிகையில் ஏறி முத்துக்குடை நிழற்ற, திருநீறு அணிந்த தொண்டர்கள் கூட்டமாக உடன்வர சம்பந்தர் மதுரையை நோக்கி எழுந்தருளினார். மந்திரித் தலைவராகிய குலச்சிறையார் அந்த நற்றவக் கடலைத் தரிசிக்கச் சென்று தொண்டர் கூட்டத்தின்முன் நிலத்திலே விழுந்து பணிந்தார். தொண்டர்கள் அவரை எழுப்ப, அவர் ஏழாமலே கிடக்க, அவர் வரவையும் நிலையையும் அவர்கள் பிள்ளையாரிடம் சென்று சொன்னார்கள். அது கேட்ட சம்பந்தர் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து விரைந்து
சென்று, குலச்சிறையாரை அணுகித் தம்முடைய கரகமலங்களால் பற்றி எடுக்க, அவர் அஞ்சலி செய்தபடியே நின்றார்.

அப்போது சம்பந்தப் பெருமான், "செம்பியர் பெருமான் குலமகளாராகிய மங்கையர்க்கரசியாருக்கும் உமக்கும் நம்பெருமானுடைய திருவருளால் நலம் நன்கு அமைந்துளதா?" என்று கேட்டார். அது கேட்ட அமைச்சர் மண்மிசைத் தாழ்ந்து வணங்கி, "இதுகாறும் சென்ற காலத்தில் எங்களுக்கு யாதொரு பழுதும் வராமல் வாழ்ந்தோம். இனி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதைத் தேவரீர் இன்று எழுந்தருளப் பெற்ற பேற்றினால் உணர்கிறோம். தீய நெறியில் அழுந்திய நாடும் உய்யும்; நற்றமிழ் வேந்தனும் உய்வான்; திருநீற்றொளி எங்கும் விளங்கும் என்ற நம்பிக்கையும் பெற்றோம். இங்கே தேவரீர் எழுந் தருளுவதைக் கேட்டு மங்கையர்க்கரசியார் நம்முடைய வாழ்வு எழுந்தருளியதென்று மகிழ்ந்து, அடியேனை எதிர் கொள்ளும்படி பணித்தார்கள்'' என்று கூறினார். அது கேட்டுக் கருணைபுரிந்த சம்பந்தர்,"எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவாலவாய் எப்பக்கத்தில் இருக்கிறது?' என்று கேட்க, "அதோ கோபுரம் தோன்றுகிறதே, அது தான்" என்று அமைச்சர் காட்டினார்.

சம்பந்தர் தம் கரம் குவித்துப் பின் மண்மிசை வீழ்ந்து பணிந்து ஒரு திருப்பதிகம் பாடலானார்.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
      வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
      பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன் நால்
      வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
      ஆலவா யாவதும் இதுவே!

என்பது அப்பதிகத்தின் முதல் திருப்பாட்டு.

பின்பு மதுரையை அடைந்து திருக்கோயிலிற் புகுந்து வலம்வந்து எம்பெருமானைப் பணிந்து திருப்பதிகம் பாடினார். மிக்க ஆர்வத்துடன் பதிக இசை பாடிப் புறத்தே வந்தார். அவர் கோயிலினுள் புகும்போது அங்கே இருந்த மங்கையர்க்கரசியார், இறைவனை அப்பெருமான் வழிபடச் சென்றமையால் எதிர்வராமல் ஒதுங்கி நின்றார். அவர் வழிபட்டுப் புறம் போந்தபோது அவர் முன்பு எய்தினார். குலச்சிறையார், அரசியாரை இன்னாரென்று சொல்லிக் காட்ட, அப் பெருமாட்டியார் அந்தச் சிவக்கன்றின் திருவடிகளை வணங்கினார். உள்ளம் உருகிக் கண்ணீர் ததும்ப, "யானும் என் கணவரும் என்ன தவம் செய்தோமோ!" என்று பணிவுடன் கூறினார்.

சம்பந்தர், "சுற்றிலும் அயற்சமயம் செறிந்திருக்க, அதனிடையே சிவத் தொண்டு புரிந்து வாழும் உம்மைக் காணத்தான் வந்தோம்" என்றார். குலச் சிறையார் நாட்டு நிலையையெல்லாம் எடுத்து உரைத்தார். சம்பந்தர் அரசியாருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தொண்டர்கள் சூழ ஊருக்குள் சென்றார். அங்கங்கே சிவனடியார்கள் வந்து தரிசித்துப் பணிந்து இன்புற்றார்கள். பிறகு அமைச்சர் ஒரு திருமடத்தைக் காட்ட, அங்கே தம்முடன் வந்த பரிசனங்களுடன் பிள்ளையார் தங்கினார். அவருக்கும் அவருடன் வந்த அடியவர்களுக்கும் அரசியார் விருப்பப்படி அமைச்சர் விருந்தளித்தார். பகல் போய் இரவு வந்தது.
.
அடியார் கூட்டத்துடன் மாமறைத் தலைவராகிய சம்பந்தர் வருவதைக் கண்ட சமணர்கள் அந்த இரவில் ஓரிடத்தில் கூடினார்கள். அப்பெருமான் தங்கியிருந்த திரு மடத்தில் தொண்டர்கள் திருப்பதிகங்களைப் பாடினார்கள். அதனைக் கேட்கப் பொறாத சமணர்கள் உளம் கலங்கினர். அரசனிடம் சென்று சொல்வோம் என்று யாவரும் அரண்மனையை அடைந்தனர்.

காவலரிடம் சொல்லியனுப்பி, பாண்டிய மன்னன் வருகவென்று பணிக்க உள்ளே சென்று அவனைக் கண்டனர். அரசன், "நீங்கள் யாவரும் ஒருங்கே திரண்டு
வரும்படி என்ன நடந்தது?" என்று கேட்க அவர்கள், 'அரசே, நின்னுடைய மதுரையில் ஒரு சைவ வேதியன் வந்ததைக் கண்டோம். அதனால் நாங்கள் கண்டு முட்டு ஆனோம்" என்றார்கள்."அப்படியானால் நான் கேட்டு முட்டு. அந்தச் சிவனடியார் இம் மாநகர் வந்ததற்குக் காரணம் என்ன? அவர் யார்?" என்று கேட்டான் அரசன். சோழநாட்டில் சீகாழியில் சூலபாணியிடம் ஞானம் பெற்றவனாம். பிராமணனாகிய அவன் அடியார் கூட்டத்தோடு முத்துப் பல்லக்கில் எங்களை வாதில் வெல்ல வந்திருக்கிறான்" என்று சமணர்கள் கூறி, தாம் கேட்டறிந்த செய்திகளையும் சொன்னார்கள்.

"அப்படியா? அந்த வைதிகப் பிராமணன் இங்கே வந்தானென்றால் நாம் என்ன காரியம் இப்போது செய்வது?”

''நாம் அவனை வலி செய்து போக்கவேண்டாம். அவன் உறையும் மடத்தில் மந்திரஞ் செய்து தீ மூளச் செய்து விட்டால், அவன் இந் நகரில் இராமல் போய்விடுவான்.”

"அப்படியானால் அந்தக் காரியத்தை விரைவிலே செய்யுங்கள்' என்று அரசன் கூறி அவர்களை அனுப்பி விட்டு, ஒன்றும் பேசாதவனாய்த் தன் அமளியில் போய்ப் படுத்தான். அங்கே வந்த மங்கையர்க்கரசியார் அவன் ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு, "தங்களுக்கு என்ன வருத்தம் வந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"காவிரி நாட்டில் உள்ள சீகாழியிலிருந்து சிவன் அருள் பெற்று ஒருவன் நம் அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கிறான். அவனையும் அவனுடன் வந்துள்ள நீறு பூசிய தொண்டரையும் அடிகள்மார் கண்டு முட்டாளாயினர். நான் கேட்டு முட்டாளானேன். இதுதான் நிகழ்ந்தது'' என்றான்.

அதுகேட்ட அரசியார், "வாது நடந்தால் யார் வெல்கிறார்களோ அவர்கள் பக்கம் சேர்ந்துகொள்ளலாம். இதற்காகத் தாங்கள் வருந்தவேண்டாம்'' என்றார். இப்படிச் சொன்னாலும் அரசியார் உள்ளத்துள்ளே பேருவகை பூண்டார். அங்கிருந்து அகன்று குலச்சிறையாரிடம் இந்தச் செய்தியைக் கூறினார். அவரோ, "பிள்ளையார் இங்கே அணைந்திடப் பெறும் பெரும் பேற்றைப் பெற்றோம்" என்று மகிழ்ந்தார்; உடனே, "ஆனால் அப்பெருமானை இந்தச் சமணர்கள் என்ன வஞ்சனை செய்வார்களோ
தெரியவில்லையே!" என்று இரங்கினார். அரசியாரும் அஞ்சி, "இந்த வஞ்சகர்கள் எந்த இழிதொழிலையும் செய்ய வல்லவர்களே. சம்பந்தப் பெருமானுக்கு ஏதேனும் தீங்கு நேரிள் நாமும் உயிர் துறந்து ஒழிகுவோம்" என்று கூறினார்.
-----------

14. ஞானத்தின் திருவுரு

சமணர்கள் தாம் தீர்மானம் செய்தவாறே தங்கள் மந்திரத்தால் ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் தீயைச் சாரும்படி செய்யலானார்கள். அவர்கள் செய்த மந்திரம் ஒன்றும் பலிக்கவில்லை. அதனால் தளர்ச்சி அடைந்த அவர்கள், "இந்தச் செய்தியை நம் மன்னன் அறிந்தால் நம் பெருமையை எண்ணாமல் இகழ்வான்; நமக்கு வழங்கியிருக்கும் இறையிலி நிலங்கள் முதலியவற்றை எடுத்துக்கொள்வான்" என்று அஞ்சினார்கள். மந்திரம் பலிக்காவிட்டாலும் தந்திரமாவது பலிக்கட்டும் என்று எண்ணி யாரும் அறியாமல் மறைந்து சென்று அந்த மடத்தில் நெருப்பை வைத்துவிட்டார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள் இட்ட தீயானது பற்றி எரிவது கண்டு துயிலுணர்ந்த தொண்டர்கள் அவித்துவிட்டு, ஞானசம்பந்தரிடம் சென்று அதனை சமணர்
செய்த தீய செயலைச் சொன்னார்கள். சம்பந்தப்பிள்ளையார், "மாதவர் பலர் துயிலும் இந்தத் திருமடத்தில் இரவிலே இந்தத் தீமை புரிவதா? ஐயோ! பாவிகளே!" என்று இரங்கினார். "என்பொருட்டு அவர்கள் இந்தத் தீங்கைச் செய்தாலும் இங்கே எத்தனை சிவனடியார்கள் இருக்கிறார்கள்! அவர்களுக்குத் தீங்கு நேருமோ?'' என்று கூறி, "இப்படிச் செய்தவர்கள்மேல் குற்றம் இருப்பினும், இத்தகைய செயல்கள் நிகழும்படியாக நாட்டின் நிலை இருக்கிறதென் பதை உணராமல் ஆட்சிபுரியும் வேந்தனுடைய குற்றந் தான் பெரிது' என்று எண்ணினார். உடனே ஒரு திருப்பதிகம் பாடி, "இந்த அழல் பையவே சென்று பாண்டிய மன்னன்பால் சேரட்டும், என்று வாய்மலர்ந் தருளினார்.

சேய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னே, அஞ்சல் என்றருள் செய்,எனைப்
பொய்ய ராம்அம ணர்கொளுவும்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே

என்பது அப் பதிகத்தின் முதற்பாடல். ஒவ்வொரு பாடலிலும், "அமணர் இட்ட தீயானது பாண்டியனைச் சாரட்டும் என்ற கருத்தை வைத்துப் பாடினார். இறுதிப் பாட்டாகிய திருக்கடைக்காப்பில் இதனைப் பாடிய காரணத்தை வெளியிட்டார்.

அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற, மேதினிக்கு
ஒப்ப ஞானசம் பந்தன் உரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

முதல் பாட்டில், 'அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே''
என்று அருளினார். பையவே என்பது மெல்ல என்ற பொருளுடையது. அவ்வாறு சம்பந்தப்பெருமான் அருளியதற்குரிய காரணம் இன்னவை என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் விளக்குகிறார். ஐந்து காரணங்களை அங்கே கூறுகிறார். (1) மங்கையர்க்கரசியாருடைய திருமங்கல நாணைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், (2) குலச்சிறையாருக்கு அரசன்பால் உள்ள அன்பு, (3) அரசன் அபராதம் செய்த தற்குத் தண்டனையும் வேண்டும் என்ற நினைவு, (4) மீண்டும் அரசன் சிவநெறியடைந்து வாழவேண்டும் என்ற அருள், (5) அவனுடைய வெப்பு நோய் அகலும்படி சம்பந்தப் பெருமான் தம் திருக்கையால் திருநீறு இடத் தீண்டும் பேறு அவனுக்கு இருத்தல் - இந்த ஐந்தையும் கூறும் பாடல் வருமாறு:

"பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
      பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
      அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்
      வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டிஇடப் பேறுடையன் ஆத லாலும்
      தீப்பிணியைப் பையவே செல்க என்றார்."

அபராதமுடையவன் அரசன் என்பது அவனைத் தண்டிப்பதற்கு ஏற்ற காரணம்; அவன் உடம்பைத் தீண்டித் திருநீறு இடப்பெறும் பேறு இருப்பது, அவன் உடம்பில் அந்தத் தீ வெப்பாக அமைவதற்குக் காரணம். மற்ற மூன்று காரணங்களும் அவனை இறந்துபடாமல் வைத்து, துன்பம் அடையுமளவுக்கு அந்த வெப்பு மூளுவதற்கு உரியவை.

இந்தப் பதிகத்தைப் பாடியவுடன் பாண்டிய மன்னனை வெப்பு நோய் பற்றியது. அவன் துடிதுடித்து வெம்பி மறுகினான்.

சூரியன் உதயமானான். இரவில் திருமடத்தில் தீ வைத்துவிட்டார்கள் என்ற செய்தி குலச்சிறையார் காதில் விழுந்தது. "ஐயோ! இனி நாம் உயிரை விட்டு விட வேண்டியதுதான்" என்று அவர் பதைபதைக்கும் போது, சிவனடியார்களுக்குத் தீங்கு யாதும் இல்லை என் பதைச் சிலர் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட அமைச்சர் ஆறுதல் பெற்றாரேனும், 'இந்தப் பாதகர்கள் செய்யும் தீங்கு இனி எப்படிப் போய் முடியுமோ?' என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அப்போது அரசனுடன் இருந்த காவலர்கள் அவனுக்குக் கொடிய வெப்பு நோய் வந்திருப்பதைப் பாண்டிமா தேவிக்குச் சொல்ல, அவர் மன்னனை அணுகினார். அச்சமும் வேகமும் உந்தக் குலச்சிறையாரும் மன்னவனிடம் சென்றார். அரசன் சுரநோயால் வெதும்பினான். அருகில் நின்றவர்மேலும் அதன் வெப்பம் வீசியது. அரசனுடைய உணர்வும் உயிரும் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி நின்றன. அவனை அணுகினவர் யாரும் அஞ்சிச் சற்றுத் தூரத்தே அகன்று நின்றனர். வாழைக் குருத்துக் களைக் கொண்டு அவனருகில் இட்டு வெப்பத்தைத் தணிக்க முயன்றனர். அவை தீய்ந்து சருகாயின.

மருத்துவர் பலர் வந்தனர். மருத்துவ நூல் முறைப்படியே பலவகைப் பரிகாரங்களைச் செய்தனர். அவற்றால் வெப்பு நோய் தீராமல் மேன்மேலும் மிகுதியாயிற்று. பாண்டியன் உணர்விழந்து கிடந்தான்.

அரசனுடைய நிலையைக் கேட்ட சமணர்கள், 'நாம் நேற்று இரவு செய்ததுதான் இப்படி விளைந்ததோ!' என்று அஞ்சி, அவனை அணுகினார்கள். அரசனுடைய வெப்பு நோயைத் தம்முடைய மந்திர சக்தியால் தீர்த்து விடலாம் என்ற எண்ணத்துடன், அதனைச் சொல்லி மயில் பீலியால் அவன் உடம்பைத் தடவினார்கள். வெப்பு மிகுதியால் தடவிய பீலியும் கருகியது. பிறகு தம் கையிலுள்ள கமண்டலத்தின் நீரை அரசன்மேல் தெளித்து மந்திரத்தை நவின்றனர். அந்த நீர் ஏரியிலிட்ட நெய் போலாகிப் பின்னும் வெப்பத்தை மிகுதியாக்கியது. அதனால் மிக வெதும்பிய அரசன், 'நீங்கள் என் பக்கத்தில் இருக்கவேண்டாம்; யாவரும் போங்கள்" என்று சொல்லி அயர்வுற்றான்.

இதைக் கண்ட மங்கையர்க்கரசியார் வருந்தி, குலச் சிறையாரை நோக்கி, "இரவில் காழிப்பிள்ளையாருக்குச் சமணர் செய்த தீங்கு இவ்வாறு வந்து முடிந்ததோ?' என்றார். "ஆம், அவர்கள் சிவனடியார்பால் செய்த தீமையே இங்கே அரசனிடம் வந்து பற்றியது. இவர்கள் இதைத் தீர்க்கப் புகுந்தால் பெருகுமேயன்றிக் குறையாது" என்று அமைச்சரும் சொன்னார். பிறகு இருவரும் அரசனைப் பணிந்து, "இந்த வெப்பு உண்டாவதற்குக் காரணம், சம்பந்தப் பெருமானுக்குச் சமணர்கள் செய்த அநுசிதமே; இதற்குத் தீர்வு அப் பிள்ளையாருடைய அருள்தான். ஆகவே அப்பெருமான் இங்கே எழுந்தருளித் தம் திருக்கடைக்கண் நோக்கத்தைப் பாலித்தால் தீய. இப்பிணியே அன்றிப் பிறவியும் தீரும்'' என்றார்கள்.

ஞானசம்பந்தர் திருநாமமே மந்திரம் போலச் செவியில் பட அரசன் சற்றே தெளிவு பெற்றான்; "இவர்கள் செய்கை யெல்லாம் இந்த நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவாயின். அந்தச் சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்து அருள்புரிய இந்த நோய் அகலுமானால் அதனையும் அறியலாம்" என்று சொல்லிப் பின்னும், ''நான் படும் இந்த வேதனையைத் தீர்ப்பதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் பக்கம் நான் சேர்வேன். அவரிடம் தீர்க்கும் முறை இருந்தால் அழைத்து வாருங்கள்'' என்றான். அதுகேட்ட
அரசியாரும் அமைச்சனாரும் உவகை பொங்க மிக்க ஆர்வத்தோடு சம்பந்தப் பெருமானை அழைத்துவரப் புறப்பட்டார்கள். மங்கையர்க்கரசியார் சிவிகை ஏறிச் சென்றும் குலச்சிறையார் நடந்து சென்றும் மடத்தைச் சார்ந்தார்கள். தம் வரவைச் சொல்லியனுப்பி, இசைவுபெற்று உள்ளே புகுந்து சம்பந்தரைக் கண்டு வணங்கினார்கள்.

இதற்குமுன் மதுரைக்குத் திருஞான சம்பந்தர் எழுந்தருளியபோது தரிசித்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். அப்போது அப்பெருமானை அரசன் அறியாமல் அவர்கள் வர வேற்றார்கள். ஆதலின் உரிமையோடு அச்சம் சிறிதும் இல்லாமல் அவரைத் தரிசித்து இன்புற இயலவில்லை. ஆனால் இப்பொழுதோ அரசனே அழைத்துவரும்படி சொல்லிவிட்டான். சற்றும் ஒளிமறைவு இன்றி யாவரும் காண அப்பெருமானைத் தம் அரண்மனைக்கே அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். முன்னை நிலைக்கும் இந்த நிலைக்கும் எத்தனை வேறுபாடு!

சம்பந்தப் பெருமானுடைய திருப்பார்வை பட்டால் அரசன் உய்வான் என்ற உறுதியான எண்ணம் அவ்விரு வருக்கும் இருந்தது. மன்னன் அப்பெருமானுடைய தரிசனத்தை எப்படியாவது பெற்று உய்யவேண்டுமே என்று ஏங்கினவர்கள் அவர்கள். இப்போது அது நிறைவேறப் போகிறது. ஆதலால் அவ்விருவரும் உணர்ச்சியால் நிறைந்து நின்றனர். இப்போது அந்த மன இயல்போடு கண்களை அகலத் திறந்து திருஞான சம்பந்தரை அவர்கள் கண்டார்கள். முன்பு அஞ்சிக் கண்ட நிலை அன்று இது; இப்போது உரிமையோடு, தடையின்றி, ஆர்வத்தோடு, இனி வர இருக்கும் பெரும்பேறு அனைத்திற்கும் மூலமான நிகழ்ச்சிக்கு அடிப்படைச் செயலாக அவர்கள் காணுகிறார்கள். ஆதலின் இங்கே சேக்கிழார், அவர்கள் ஞானசம்பந்தரைக் கண்டார்கள் என்று போகிற போக்கில் சொல்லி விட்டுவிடவில்லை. எப்படிக் கண்டார்கள் என்று ஒரு முழுப் பாடலாலே விளக்குகிறார். அருமையான பாடல் அது.

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேன் நக்க மலர்க்கொன்றைச்செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்."

அவர் ஞானசம்பந்தர்; சிவஞானமே வடிவாக அமைந்தவர். தாய்ப்பாலுண்டு வளரும் ஊன உடம்பையுடையவர்கள் மற்றக் குழந்தைகள். இந்தக் குழந்தையோ அம்மை யருளிய ஞானப்பாலை உண்டு வளர்ந்த ஞான உடம்பை உடையவர். அவருக்கே உரிய சிறப்பு அது. ஆதலின் முதலில், "ஞானத்தின் திருவுருவை" என்றார்.

மறையவர் குலத்தில் உதித்தவர் அவர். நான் மறையை முழக்கும் தொண்டை வளரச் செய்கிறவர். வைதிக வாழ்வு தேய்ந்து வேத ஒலி மங்கிய பாண்டி நாட்டில் மீண்டும் வேதமுழக்கம் உண்டாகும்படி வந்திருக்கிறவர். நான்மறையின் வழக்கத்தைப் பாண்டிய மன்னனும் அவன் ஆட்சியில் அடங்கிய மக்களும் கைவிட்டு விட்டார்கள். மறை துணையின்றி மலங்கியது. அதை மீண்டும் தலையெடுக்கும்படி செய்ய ஒப்பற்ற துணையாக இவர் எழுந்தருளியிருக்கிறார். ஆதலின், “நான்மறையின் தனித்துணையை”
என்றார்.

பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயை இனி நீக்கப் போகிறார். வெப்பத்துக்கு மாற்றுத் தண்மை. குளிர்ச்சிக்கு இடமானது திங்கள். குளிர்ச்சியை உண்டாக்கும் ஹிம கரன் அவன். ஞானசம்பந்தர் அருள் வழங்கிக் குளிரச் செய்யப்போகிறார். ஆதலின் அவர் திங்களைப் போன்றவர்; இளமை உடையவராதலின் மதிக்கொழுந்து என்று சொல்லலாம். தன் குலத்தில் பிறந்தவன் அல்லலுறுவதைப் பொறாமல் வானிலிருந்து மதிக்கொழுந்து வந்தது. போல இருக்கிறது. வானில் உள்ள மதியம் தேய்ந்து குறையும். இந்த மதிக்கொழுந்தோ மண்ணில் ஒரு காலைக்கு ஒரு கால் வளர்கிறது.

வானத்தின் மிசை அன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தை."

ஞானசம்பந்தப் பெருமானை இன்றும் நமக்கு நினைப்பு மூட்டிக்கொண்டிருப்பவை அவருடைய தேவாரப் பாடல்கள். தேவாரம் அவருடைய திருப்பாடல்களையே முதலில் கொண்டு விளங்குகிறது. 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்'' பெருமான் அவர். இடமும் காலமும் கடந்து தமிழ் நாடு முழுவதும் இன்றளவும் அவர் அருளிய இசை பரவி விளங்குகிறது. அவர் அருளிய கானம் சிவபெருமானது புகழை விரிப்பது. கொன்றை மாலையைச் செஞ்சடையிலே அணிந்த பெருமானுக்கு என்றும் வாடாத மாலையாக அமைந்தவை அவர் திருப்பாடல்கள். கான்றையைப் பிரணவ மலர் என்பார்கள். தேவாரமும் பிரணவத்தை, 'தோடுடைய செவியன்" என்ற தொடரின் முதலில் பெற்று விளங்குவது.

தேன் பொங்கும் கொன்றை மலர் மாலையைச் செஞ்சடையில் அணிகின்ற சிவபிரானுடைய புகழைத்தொடுத்து அமைத்த பாமாலையை அருளினவர் ஞானசம்பந்தர். அவர் அவதரித்து இந்தக் கானத்தை அருளினாரோ, அன்றி அந்தக் கானமே இப்படி உருவெடுத்துப் பிறந்ததோ? ஒரு பிறப்பிலே இந்தச் சிறப்பு வராது. சிவபெருமான் சீரைத் தொடுக்கவேண்டு மென்று இசைக் கலையே பிறவி ஏற்று வந்தது. ஒரு பிறப்பில் அது தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. இரண்டாம் முறையும் பிறந்து வளப்பம் பெற்றது. இப்படிப் பிறந்து பிறந்து பரிணாமம் பெற்று ஏழு பிறவிகளை எடுத்தது. அந்த ஏழாம் பிறவியிலே முழுமை பெற்றுவிட்டது. ஏழு பிறவிகள் பிறந்து முழுமை பெற்று வந்த, சிவபெருமான் சீர்தொடுக்கும் கானந்தான் ஞானசம்பந்தப் பெருமான்.

இசைக்கு ஆதாரமாக இருப்பவை ஏழு நரம்புகள்; அல்லது ஏழு சுரங்கள். இதனால் ஏழிசையென்று சொல்வது ஒரு மரபு. ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு சுரமாக முழுமை பெற்று ஏழு பிறவிகளில் ஏழிசையும் நிரம்பிக் குறைவிலா நிறைவாய் வந்த கோதிலாக் கானம் இது என்றே தோன்றுகிறது.

“தேன் நக்க மலர்க்கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறம்பை."

அத்தகைய பெருமானை மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் தம் கண்கள் களிக்கும்படி கண்டார்களாம்.

"ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.'

ஞானத்தின் திருவுரு, இனிப் பாண்டி நாட்டில் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தைப் பரப்பப் போகின்றது; நான்மறையின் தனித்துணை, மறை வழக்கமிலாத மாபாவியரை அடக்கி வேதநெறி தழைத் தோங்கச் செய்யப் போகின்றது; மண்ணில் வளர்மதிக் கொழுந்து, மதிக்குலத்து மன்னவனை ஆட்கொள்ளப் போகின்றது; செஞ்சடையார் சீர் பேசும் கானத்தின் எழுபிறப்பு, இனி இங்கே எத்தனையோ திருநெறிய தமிழ்ப் பதிகங்களைப் பாடப் போகின்றது. ஆகவே, இனி வரப்போகும் பெரும்பேற்றை எண்ணிக் கண்ணும் மனமும் களிக்க அரசியாரும் அமைச்சனாரும் சம்பந்தப் பெருமானை வணங்கினார்கள்.
----------

15. வெப்பு நோய் தீர்த்தல்

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு கிடக்க, அப்பெருமான் அவர்களை மெல்ல எடுத்து நிறுத்தினார்; "உங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ?", என்று வினவினார்.

"சமணர்கள் செய்த வஞ்சனைக்கு அஞ்சி வருந்தினோம். ஆனால் தேவரீருடைய திருமேனிக்கு ஒன்றும் வாராது என்று நம்பி ஆறுதல் பெற்றோம். இப்போது அவர்கள் செய்த தீங்கு மன்னர்பிரானிடம் போய் வெப்பு நோயாக எழுந்துவிட்டது. அந்த நோயைச் சமணர்கள் தம்முடைய மணி மந்திரங்களால் தீர்க்க எவ்வளவு பாடுபட்டும், அது நீங்வில்லை. தேவரீர் அங்கே எழுந்தருளிச் சமணர்களை வென்று அருள் புரிந்தால், மன்னர்பிரான் உயிரும் பிழைக்கும்; நாங்களும் உயிர் பிழைப்போம்" என்று வேண்டிக்கொண்டார்கள்.

"அவ்வாறே இறைவன் திருவருளால் செய்வோம்; நீங்கள் சிறிதும் அஞ்சவேண்டாம்" என்று சம்பந்தர் அவர்களைத் தேற்றினார். அது கேட்டு மீண்டும் அவ்விருவரும் அவரை வணங்கி எழுந்தார்கள்.

"ஆலவாய் இறைவனைத் தரிசித்து விடைபெற்று வருவேன்" என்று ஞானசம்பந்தர் தொண்டர் கூட்டத்துடன் திருக்கோயிலை நோக்கிச் சென்றார். அவருடன் அரசியாரும் அமைச்சரும் சென்றனர். இறைவனைப் பணிந்து, "எம்பெருமானே, சமணர்களோடு வாதிட்டு வெல்ல எண்ணுகிறேன்; உன்னுடைய திருவுள்ளம் யாதோ?" என்று வேண்டி ஒரு திருப்பதிகம் பாடினார். மீட்டும், "வேதத்தையும் வேள்வியையும் நிந்தனை செய்து உழலுகின்ற சமணர்களையும் பௌத்தர்களையும் வாது செய்து போக்க எண்ணுகிறேன். உன் திருவுள்ளம் இயையுமோ? ஞாலம் முழுவதும் உன் புகழே மிக வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று கூறி மற்றொரு பதிகமும் பாடியருளினார்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே!
ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்; தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே!

ஆலவாய் இறைவன் தன் அருளைக் குறிப்பால் தெரிவிக்க, ஞானசம்பந்தர் மிக்க மகிழ்ச்சியோடு கோயிலுக்குப் புறம்பே வந்து சிவிகையில் ஏறி அரண் மனையை நோக்கிச் செல்லலானார். தொண்டர்கள் பலர் சூழ்ந்து சென்றார்கள். மங்கையர்க்கரசியார் பின்னே ஒரு பல்லக்கில் வர, குலச்சிறையார் முன்னே தொண்டர்களுடன் சேர்ந்து நடந்து சென்றார்.

அரண்மனைக்கு அருகில் தொண்டர் கூட்டம் வந்து கொண்டிருந்தபோது குலச்சிறையார் விரைவாக முன் சென்று அரசனிடம் ஞானபோனகர் வருவதை அறிவித்தார். அவர் வரவைக் கேட்ட அளவிலே அரசன் சிறிது துயரம் நீங்கி, தன் தலைமாட்டிலே ஒரு பொன் ஆசனம் இடும்படி பணித்தான். அமைச்சரை எதிர்கொண்டு அழைத்து வரும்படி ஏவி, சம்பந்தர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அரசனுடைய மனப்பாங்கை உணர்ந்த சமணர்கள் 'இதுவா நம் சமயத்தை நாட்டும் வழி?' என்று கவலை கொண்டார்கள். அரசனை நோக்கி, நீ சைன சமயத்தைக் காவாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள்? அவரை இங்கே வரும்படி அழைத்திருக்கிறாய். அவரும் நாங்களும் சேர்ந்து பிணியைத் தீர்க்கும்படி சொல்லி, அவரால் தீர்ந்தாலும் எங்களாலும் அகன்ற தாகச் சொல்ல வேண்டும்" என்று சொன்னார்கள்.
.
"இரண்டு சாராரும் நோயைத் தீருங்கள்; ஆனால் நான் பொய் சொல்ல மாட்டேன்" என்றான் பாண்டியன்.

அரண்மனை வாயிலை அடைந்த சம்பந்தர் சிவிகையினின்றும் இறங்க, குலச்சிறையார் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பாண்டி மாதேவியாரும் பின்னே வந்தார்.

சம்பந்தப் பெருமானைக் கண்டபொழுது பாண்டியன் கிடந்தபடியே தன்கையை எடுத்து அஞ்சலி செய்து, தலை மாட்டில் இருந்த பொற்பீடத்தைக் காட்டினான். தமிழ் விரகர் அதன்மேல் எழுந்தருளியிருந்தார். சமணர்கள் உள்ளத்தே அச்சம் குடிகொண்டது.

அரசன் பிள்ளையாருடைய திருமேனியைக் கண்களால் நன்றாகப் பார்த்தான். அப்போதே வெப்பு நோய் சிறிது தணிந்தது போலத் தோன்றியது. அவரை நோக்கி, "தங்கள் ஊர் எது?" என்று கேட்டான். உடனே அப்பெருமான், தம் திருப்பதி பன்னிரண்டு திருப் பெயர்களை உடைய சீகாழி என்பதை ஒரு பதிகத்தால் உணர்த்தினார்.

அப்போது சமணர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தம்முடைய நூலிலிருந்து சில பகுதிகளைச் சொல்லி வாதிட அழைத்தார்கள். சம்பந்தர், "உங்கள் சமய நூற் கருத்துக்களை அடைவாகச் சொல்லுங்கள்" என்று சொல்ல, சமணர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பலபல பேசலானார்கள். இந்த ஆரவாரத்தைக் கண்டு அஞ்சிய மங்கையர்க்கரசியார் அரசனை நோக்கி, "இந்தப் பெருமான் சிறிய திருமேனியையுடைய பிள்ளைப் பருவத்தினர். அவர்களோ எண்ணிலாதவர்கள். இவ்வளவு பேரும் ஒரு பக்கமும் பிள்ளையார் ஒரு பக்கமும் இருந்து பேசுவது எப்படி? முதலில் மன்னர்பிரானுடைய வெப்பு இவரால் நீங்கட்டும்; பிறகு இவர்கள் பேசட்டும்" என்று கூறினார்.

அரசன், "நீ வருந்தாதே!" என்று அரசியாரைக் கை அமர்த்திச் சமணர்களை நோக்கி, "வேறு வாதம் எதற்காக? என்னுடைய வெப்பு நோயை நீங்களும் சிவனடியாராகிய இவருமாகத் தீர்த்து, உங்கள் தெய்வத் தன்மையை விளக்குங்கள்" என்றான்.

மங்கையர்க்கரசியார் அஞ்சுவதைக் கண்ட ஞானப் பிள்ளையார், "இறைவன் திருவருள் துணை இருக்கும்போது என்ன பயம்? நான் இளம்பிள்ளை என்று நீ அஞ்சாதே. நான் இவர்களுக்கு எளியேன் அல்லேன்' என்ற கருத்தைப் புலப்படுத்தும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். அதன் முதற் பாட்டு வருமாறு:

மானின் நேர்விழி மாத ராய்வழு
      திக்கு மாபெருந் தேவிகேள்:
பால் நல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன்
      என்று நீபரி வெய்திடேல்;
ஆனை மாமலை ஆதி யாய
      இடங்க ளிற்பல அல்லல்சேர்
ஈனர் கட்கெளி யேன லேன் திரு
      ஆல வாய்அரன் நிற்கவே.

[மானின் நேர் விழி மான் கண்ணை ஒத்த கண்ணையுடைய. மாதராய் - பெண்மணியே. பரிவு - இரக்கம்.ஆனைமலை முதலிய எட்டு மலைகளில் சமணர்கள் தங்கித் தவம் புரிந்தார்கள்.]

சமணர்கள் ஆரவாரம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். அரசன், "நீங்கள் இருவரும் இப்போது என் நோயைத் தீர்க்க முயலுங்கள். யார் தீர்க்கிறார்களோ அவர்களே வாதில் வென்றவராவார்கள்" என்று கூற, சமணர்கள், "நாங்கள் உன்னுடைய இடப்பக்கத்தில் உள்ள வெப்பைத் தீர்ப்போம்" என்று சொல்லி மந்திரம் போடத் தொடங்கினார்கள். பீலியைக் கொண்டு அரசன் உடம்பைத் தடவினார்கள். தடவத் தடவ வெப்பு அதிகமாயிற்றேயன்றிக் குறையவே இல்லை.

அரசன் வெப்புத் தாங்காமல் ஞானசம்பந்தரைப் பார்த்தான். அவனுடைய பார்வைக் குறிப்பை உணர்ந்த பெருமான் வலப்பக்கத்தில் உள்ள வெப்பை நீக்கப் புகுந்தார். இறைவனுடைய திருநீற்றை எடுத்து, "மந்திர மாவது நீறு" என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பாடி வலப் பக்கத்தில் தடவினார். தடவியவுடன் அப்பகுதியில் இருந்த வெப்புத் தீர்ந்து தண்மை நிலவியது. அவ்வளவுக்கவ்வளவு இடப்பக்கம் தீயைப் போலச் சுரநோய் எரிக்கத் தொடங்கி யது. சமணர்களே அந்த வெப்பத்தைத் தாங்காமல் ஒதுங்கி நின்றனர். அவர்கள் பீலி கருகிவிட்டது.

அப்போது மன்னவன், "இது என்ன வியப்பு! என் உடம்பில் ஒரு பக்கம் நரக வேதனையும் ஒரு பக்கம் வீட்டின்பமும் சேர்ந்து நிகழ்கின்றனவே! ஒரு பக்கம் நஞ்சும் ஒரு பக்கம் அமுதமும் இருப்பதுபோல இருக்கிறதே!" என்று கூறி, "கொடிய சமணர்களே, நீங்கள் தோற்றுப் போனீர்கள். என்னை உய்யக் கொண்ட பெருமானே, மற்றொரு பக்கத்து நோயையும் நீக்கியருளல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்.

திருமுகம் கருணை பொலியத் திருக்கரத்தால் திரு நீற்றை எடுத்து மற்றப் பக்கத்திலும் பிள்ளையார் ஒரு தடவை தடவவே, அரசன் வெப்பு நோய் முற்றும் நீங்கினான். அது கண்ட அரசியாரும் அமைச்சரும் ஞானசம்பந்தரை வணங்கி எழுந்தார்கள். அரசன் தன் தலையின்மேல் கைகளைக் கூப்பித் தொழுது, "ஞானசம்பந்தப் பெருமான் திருவடிகளை அடைந்து நான் உயிர் பிழைத்தேன்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.
-------------

16. கனல் வாதம்

ஞானசம்பந்தரிடம் பக்தி பாண்டியன் உள்ளத்தே மிகுதியாகி வருவதை அவனுடைய வார்த்தைகளால் உணர்ந்த சமணர்கள் அச்சம் கொண்டனர். 'இந்தச் சைவப் பிள்ளை பாட்டுப் பாடிப் பாண்டியன் வெப்பை ஒழித்ததைக் கண்டோம். இவருடன் தர்க்கமிட்டு வெல்லவும் இயலாது. கனவினும் புனலினும் நம்முடைய தவ ஆற்றலால் வாதமிட்டு வெல்லலாம்' என்று அவர்கள் என்ணினார்கள். நெருப்பையும் நீரையும் தம்பனம் செய்யும் வித்தையில் வல்லவர்கள் அவர்கள்.

அப்போது சம்பந்தப் பிள்ளையார், "உங்கள் சமய உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்; வாதிடலாம் என்றார். சமணர்கள், "தர்க்கவாதத்தினால் கொள்ளும் வெற்றி வெற்றியாகாது. கண்கூடாகத் தெரியும்படி ஏதாவது செய்யவேண்டும்" என்றார்கள். அது கேட்ட பாண்டியன்,"என் உடம்பு வெப்பு நோயால் வருந்திய போது உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை; உங்களுக்கு என்ன வாது இருக்கிறது?" என்று கேட்டான். 'என்ன வாது?' என்று அவன் கேட்டதையே பற்றுக் கோடாகக் கொண்டு, "ஏட்டிலே அவரவர்கள் சமய உண்மைகளை எழுதி நெருப்பில் இட்டால் வேவாமல் இருக்குமாயின் வெற்றியாகக் கொள்ளலாம்" என்றார்கள். அதனெதிர் பாண்டிய மன்னன் ஏதேனும் சொல்வதற்கு முன்பே சம்பந்தர், "நீங்கள் உரைத்தது நல்ல காரியம். ஏட்டைத் தீயிலிட்டு வேவாத வாய்மையை யுடையவர் வென்றவர் என்று கொள்வதானால் வாருங்கள்; அப்படியே செய்யலாம்" என்று இசைந்தார்.

சமணர்கள் கனல் வாதத்துக்குச் சித்தமானார்கள். அரசன் விறகு கொணர்ந்து தீ மூட்டச் சொன்னான். எரி கொழுந்துவிட்டு வளர்ந்தது. உடனே சம்பந்தப்பிரான் தாம் பாடிய பதிகங்கள் எழுதிய ஏட்டை அவிழ்த்துக் கையால் பிரித்துப் பார்த்தார். அவ்விடத்தில் திருநள்ளாற் றுப் பதிகம் எழுதிய ஏடு இருந்தது.

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
ஆர்த்த நம்பெருமான் மேயது நன்னாறே

என்னும் பாசுரத்தை முதலாகக் கொண்டது அது. அப்பதிகம் எழுதிய ஏட்டை எடுத்துத் திருநள்ளாற்றுப் பெருமானை வணங்கிப் புதியதாக ஒரு திருப்பதிகம் பாடி அந்த ஏட்டை எரியில் இட்டார். அந்தப் பதிகம், "இறைவனுடைய நாமத்தை எரியில் இட்டால் பழுதின்றி நிற்கும்; இது சத்தியம்" என்ற கருத்தை உடையது.

தளரிள வளர்ஒளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே மிளிரிள
வளரெரி இடிலிவை பழுதிலை மெய்ம்மையே

என்று தொடங்குவது அத் திருப்பதிகம்.

அந்த ஏட்டை எரியில் இட்டவுடன் அது தீயில் கருகா மல் பச்சையாய் விளங்கியது. அது கண்டு சமணர் நடுங்கி னர். தாங்களும் ஓர் ஏட்டை இட்டனர். சம்பந்தர் இட்ட ஏடு எரியாமல் இருப்பது கண்டு யாவரும் வியந்தனர். அதனைத் தீயினின்றும் எடுத்து அவையிலுள்ளோர் யாவரும் காணக் காட்டி அதை மீட்டும் தேவாரம் எழுதிய சுவடியில் சேர்த்துக் கட்டினார் சம்பந்தர்.

மன்னவன் சமணரை நோக்கி, ‘உங்கள் ஏட்டை எடுத்துக் காட்டுங்கள்' என்றான். அவர்கள் ஏடு தீயில் வெந்து போயிற்று. பாண்டியன் நீரைக் கொண்டுவந்து தீயை அவிக்கச் செய்தான். சமணர்கள் தங்கள் ஏடு கரியாகவும் சாம்பலாகவும் எரிந்து கிடப்பதைக் கண்டார்கள். அந்தக் கரியை அவர்கள் கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் அவர்களை நோக்கிச் சிரித்து, "இன்னும் அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுபவர்களே! போங்கள்" என்றான்; "யான் வெப்பு நோயினால் வருந்தியபோது அதைத் தீர்க்கப் புகுந்து தோல்வியுற்றீர்கள். இப்போதும் உங்கள் ஏடு எரிந்து போயிற்று. இன்னும் நீங்கள் தோல்வியடைய வில்லையோ?" என்று இழித்துக் கூறினான்.

அப்போது சமணர் இரண்டு முறை வாது செய்தோம். மூன்றாம் முறையாகவும் ஒன்று செய்யலாம். அதில் வென்றால் எங்கள் சமயம் உண்மையான என்று கொள்ளலாம்" என்றார்கள். "இதென்ன பேச்சு?" என்று மன்னவன் மறுக்கவே, ஞானசம்பந்தர், "வேறு வாதம் எப்படிச் செய்வது?" என்று கேட்டார். "நாம் இருவரும் நம் சமய உண்மைகளை ஏட்டில் எழுதி ஆற்றில் இட்டால், எது ஆற்றோடு போகாமல் நிற்கிறதோ அதுவே உண்மைப் பொருளைச் சொல்வதாகும். என்று சமணர் கூற, "அப்படியே செய்வோம்" என்று சம்பந்தப்பிரான் இசைந்தார்.

அப்போது குலச்சிறையாராகிய அமைச்சர், "இந்த வாதிலும் இவர்கள் தோற்றால் என்ன செய்வது என்பதை உறுதி செய்துகொண்டு அதற்குமேல் இதைச் செய்ய
நிதி வேண்டும்" என்று கூறினார்.

அதுகேட்ட சமணர் மானம் பொறாராகி, "அப்படித் தோற்றால் எங்களை அரசன் கழுவில் ஏற்றட்டும்" என்று கூறினார்கள். மன்னன், "நீங்கள் பகையினால் இவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் பட்டவற்றை மறந்துவிட்டீர்கள். சரி, இனி வையையாற்றில் ஏடுகளை விடுவதற்கு நாம் போவோம்' என்று இயம்பினான்.

யாவரும் வையையாற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் முன்பு போக, அவரைத் தாடர்ந்து பாண்டிய மன்னன் குதிரையின்மேலே ஏறிச் சென்றான். மற்றவர்களும் கூட்டமாகச் சென்றார்கள்.
----------------

17. புனல் வாதம்

திருஞான சம்பந்தப் பெருமானும் மற்றவர்களும் வையையை நோக்கிச் செல்லும்போது நகரில் உள்ளவர்கள் அவர்களைக் கண்டு ஆரவாரித்தார்கள். அரண்மனையில்
நிகழ்ந்தவை எங்கும் பரந்து வியப்பை உண்டாக்கின. ஆதலின் வீதியில் உள்ளவர்கள் பேரார்வத்தோடு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக் காண வந்து திரண்டார்கள்.

"இதோ முத்துப் பல்லக்கில் எழுந்தருளும் பெருமான் தான் திருஞான சம்பந்தர்; இவரே நம் மன்னனுடையவெப்பு நோயைத் தீர்த்தருளியவர்" என்றார் சிலர். "பாண்டி நாடு நல்வாழ்வு பெறவேண்டுமென்று இந்தக் குழந்தை இங்கே வந்திருக்கிறது" என்றார் சிலர். "இந்த ஊரில் உள்ள சமணர்கள் கனல் வாதத்தில் தோல்வியுற்றது இவராலே" என்றார் சிலர். 'சிவபெருமானுடைய திரு நீறே உண்மையான ஆற்றலுடையது என்பதைத் தெளிந் தோம்" என்றனர் சிலர்.

“இந்த முத்துச் சிவிகையில் இளம் பருவப் பிள்ளையார் வருகிறது எவ்வளவு அழகாய் இருக்கிறது!" என்று சிலர் அந்தக் காட்சியில் ஈடுபட்டனர். "நம் கண்கள் நல்ல பயனைப் பெற்றன என்றனர் சிலர்.

இவ்வாறு தெருவில் இரண்டு பக்கங்களிலும் உள்ள மக்கள் தங்கள் வியப்பையும், பக்தியையும், விருப்பத்தையும் பலபலவாறு பேசிக் காட்டிக்கொண்டார்கள்.

பலவகை இன்னிசைக் கருவிகள் புடைசூழ்ந்து ஒலிக்க, தம் பின்னே பாண்டிய மன்னனும்
மன்னனும் மங்கையர்க்காசியாரும் வர, சமணர்கள் வேறோர் பக்கத்தில் திரண்டு வர. சம்பந்தப் பெருமான் வையையாற்றின் கரையை அணுகினார். நீர் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. யாவரும் அங்கே அடைந்தவுடன் அரசன், "அவரவர்கள் ஏடுகளை இந்த ஆற்றில் விடுக" என்றான்.

சமணர்கள் தம்முடைய கொள்கையமைந்த வாக்கியங்களை எழுதி முதலில் ஆற்றில் இட்டார்கள். அது நீரோடு சென்று கடலை நோக்கி ஓடத் தொடங்கியது. அதனைப் பிடிக்கச் சமணர்கள் ஓட, அது அவர்கள் கையில் கிடைக்காமல் நீரிலே அடித்துச் செல்லப்பட்டது. அது அவர்களை நட்டாற்றில் விட்டுப் போய்விட்டது. அச்சம் தம் மனத்தை வருத்த, ஏடு கைப்படாமல் அவர் மீண்டனர்.

"காணவும் எய்தா வண்ணம்
      கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
      நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
      சிதறினார்; திகைத்தார்; மன்னன்
ஆணையில் வழுவ மாட்டா
      தஞ்சுவார் அணைய மீண்டார்."

அஞ்சி நடுங்கிய அவர்கள், "எதிர்க்கட்சியாரும் இட்டால் நடப்பதைப் பார்க்கலாம்" என்றார்கள்.

பாண்டிய மன்னன் ஞானசம்பந்தப் பிள்ளையாருடைய திருவுள்ளக் குறிப்பை அறியும் பொருட்டு அவரைப் பார்த்தான். அப்பொழுது அப்பெருமான் ஒரு புதிய திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். அதற்குத் திருப்பாசுரம் என்று பெயர் வழங்கும். கெளசிகப் பண்ணில் அமைந்த அப்பதிகத்தின் முதற் பாசுரம் வருமாறு:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!

பதிகம் முழுவதும் ஏட்டில் எழுதி,சம்பந்தர் ஆற்றில் இட்டார். அந்த ஏடு, பிறவியாற்றில் தவமுடைய மெய்ஞ் ஞானியர் மனம் எதிர் செல்வது போல, வையையாற்றின் நீரைக் கிழித்துக்கொண்டு எதிரே சென்றது. அது எதிர் செல்வதை எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள். பாண்டிய மன்னனும் தலைநிமிர்ந்து எட்டிப் பார்க்க முயன்றான். அவன் கூனுடையவனாதலினால் அவ்வாறு பார்க்கமுடியாது. ஆயினும் திருப்பாசுரத்தின் முதற் பாட்டில், "வேந்தனும் ஓங்குக " என்று ஞானசம்பந்தர் பாடிய சிறப்பினால் அவன் கூன் நீங்கி, ஏடு எதிர் செல்வதை நன்றாகப் பார்த்தான். இந்த அற்புதங்களைக் கண்ட யாவரும், "ஹர ஹர!" என்று சொல்லி ஆரவாரம் செய்தார்கள்.

ஆற்றை எதிர்த்துக்கொண்டு சென்ற ஏட்டை எடுக்கும் பொருட்டுக் குதிரையின்மேல் ஏறிக்கொண்டு அமைச்சராகிய குலச்சிறையார் சென்றார். ஏடு போய்க் கொண்டே இருந்தமையால் அது ஓரிடத்தில் நிற்க வேண்டு மென்று எண்ணிய திருஞான சம்பந்தப் பெருமான், திருவேடகம் என்ற தலத்திலுள்ள இறைவனை ஒரு பதிகம் பாடித் துதித்தார். அத்தலம் வையையாற்றின் கரையில் இருக்கிறது. அத்தலத்துக்கு அருகே ஏடு நிற்க, குலச் சிறையார் குதிரையினின்று இறங்கி அதை எடுத்துக் கொண்டு வந்தார்.

திருவேடகப் பதிகத்தில் ஏடு சென்று கரையை அணைந்த செய்தியைத் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

கோடுசந் தனமகில் கொண்டிழி வைகை நீர்
ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே!

என்பது அத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பு.

குலச்சிறையார் திருப்பாசுரம் எழுதிய ஏட்டுடன் திருஞானசம்பந்தரை அணுகி அவர் திருவடியை வணங்கி ஏட்டை யாவருக்கும் காட்டினார். அனைவரும் களிப்பினால் பெருமுழக்கம் செய்தார்கள். அப்போது பாண்டிய மன்னன் அமைச்சரைப் பார்த்து, "இந்தச் சமணர்கள் சம்பந்தப் பெருமான் திறத்தில் குற்றப்பட்டார்கள். அவர்களை உரிய வகையில் தண்டித்து முறை செய்யவேண்டும்" என்றான். தாம் தம் வாதத்தில் தோல்வியுற்றாலும் மேற்கொண்ட உறுதியில் தோல்வியுறக் கூடாதென்று எண்ணிய சமணர் கள். தாம் சொன்னபடியே கழுவிலேறி உயிர் நீத்தார்கள்.

அரசன் இப்போது திருநீற்றின் பெருமையையும் உண்மை அன்பின் உயர்வையும் நன்கு உணர்ந்து சைவ நீதி பாண்டி நாடெங்கும் விளங்கச் செய்தான். கூன் பாண்டியனாக இருந்த அவன் இப்போது நின்றசீர் நெடு மாறன் என்ற சிறப்பான பெயரைப் பெற்றதோடு, நின்ற சீர் நெடுமாற நாயனார் என்று அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவனாகும் பேறும் பெற்றான்.

திருஞானசம்பந்தப் பெருமான் இறைவன் திருவருள் வல்லபத்தை எண்ணி உருகி ஆலவாய்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்றார். அவருடன் மங்கையர்க்கரசியாரும் பாண்டிய மன்னனும் பிறரும் சென்றார்கள். ஞான சம்பந்தர் இறைவனை வணங்கி, "வீடலால வாயிலாய்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினார். 'இத்தகைய அருளாளருக்கு ஆட்பட்டு நாம் உய்ந்தோமே! இறைவன் திருவருளால் இந்தப் பேறு நமக்குக் கிடைத்ததே!' என்று எண்ணி மனம் கசிந்தான் பாண்டிய மன்னன், 'எம்பெருமானே, சமணர்களுடைய வஞ்சகத்தில் மயங்கி அடியேன் உன்னை
அறியாமல் இருந்தேன். அப்படியே இருந்த அடியேனது பிணியைத் தீர்த்து ஆட்கொள்ளும்படி திருஞான சம்பந்தப் பிள்ளையாரைத் தந்தருளினாய்" என்று ஆலவாயப்பனை ஏத்தினான்.

தென்னவன் பணிந்து நின்று
      'திருவால வாயில் மேவும்
மன்னனே, அமணர் தங்கள்
      மாயையால் மயங்கி யானு ம்
உன்னையான் அறிந்திலேனை
      உறுபிணி தீர்த்தாட் காள
இன்னருட் பின்ளை யாரைத்
      தந்தனை இறைவ' என்றான்.''

இறைவனைத் தரிசித்துக்கொண்டு யாவரும் தத்தம் இடம் சென்றார். சம்பந்தப் பிள்ளையார் தமக்கென அமைத்த மடத்தில் தங்கினார். சில காலம் மதுரையில் இருந்து ஆலவாய்ப் பெருமானை வணங்கி இன்புற்றார்.
--------------

18. புத்தர்களை வெல்லுதல்

சிவஞானப் பெருங்களிறு போலே ஞானசம்பந்தப் பிள்ளையார் மதுரையில் தங்கியிருந்தபோது, ஆலவாய் இறைவனைப் பல பதிகங்களால் பாடி வணங்கினார். சீகாழியிலே இருந்த சிவபாத இருதயர் தம் குமாரர் மதுரைக்குச் சென்றிருப்பதை உணர்ந்து அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் உந்தவே, புறப்பட்டு மதுரையை வந்து அடைந்தார். தம் தகப்பனாரைக் கண்ட சம்பந்தர் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் தோணியப்பரை நினைந்து ஒரு பதிகம் பாடினார்.

அப்பால் சிவத்தலங்களைத் தரிசிக்கும் விருப்பத்தோடு பிள்ளையார் மதுரையை விட்டுப் புறப்பட எண்ணினார். அவருடைய பிரிவை ஆற்றமாட்டாத பாண்டிய மன்னனும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மிக வருந்தினர். அது கண்ட சம்பந்தர், "பாண்டி நாட்டுத் திருப்பதிகளைத் தரிசிக்கு மட்டும் நீங்கள் என்னுடன் வாருங்கள்'' என்று அருள, அம் மூவரும் மகிழ்ந்து அப்படியே அவரைத் தொடர்ந்து செல்வாராயினர்.

அடியார்களோடும் மன்னன், அரசி, அமைச்சர் ஆகியவரோடும் மதுரையைவிட்டுப் புறப்பட்ட ஞானச் செல்வர், திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், திருப்புத்தூர், திருப் பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, இராமேசுவரம் ஆகிய தலங்களைத் தரிசித்தார். இராமேசுவரத்தில் சில காலம் தங்கியிருந்து அங்கிருந்தபடியே இலங்கையிலுள்ள திருக்கோணமலை, திருக்கேதீச்சுரம் என்னும் இரண்டு தலங்களையும் பாடிப் பரவினார்.

இராமேசுவரத்தினின்றும் புறப்பட்டு, திருவாடானை, திருப்புனவாயில் என்னும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, வேறு இடங்களுக்கும் சென்று பரவிக் குலச் சிறையார் பிறந்த ஊராகிய மணமேற்குடிக்கு வந்தார். அங்கே சில நாள் தங்கிப் பிறகு சோழ நாட்டுக்கு மீண்டும் போகும் விருப்பத்தை மேற்கொண்டார்.

அவர் பாண்டி நாட்டை விட்டுச் செல்வார் என்பதை உணர்ந்த பாண்டியன் முதலியோர் ஆராமை மீதூர வருந்தினர். அது கண்ட சம்பந்தர் அவர்களுக்குத் தக்கபடி ஆறுதல் கூறி விடைகொண்டார்.

சோழ நாட்டை அடைந்து பல தலங்களைத் தரிசித்து வரும்போது முள்ளிவாய் என்னும் ஆற்றின் கரையை அடைந்தார். அக்கரையில் கொள்ளம்பூதூர் என்ற தலம் தெரிந்தது. ஆற்றில் வெள்ளம் மிகுதியாக வந்து கோலும் நிலைக்காமற் போகவே, ஓடக்காரர்கள் ஓடத்தைக் கரையிலே கட்டிவிட்டுச் சும்மா இருந்தார்கள்.

திருக்கொள்ளம்பூதூர் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூர்ந்தது. ஆதனால் சம்பந்தர் ஓடத்தில் ஏறிக் கயிற்றை அவிழ்த்துவிட்டார். ஓடம் ஆற்றில் போகத் தொடங்கியது. அப்போது சம்பந்தர், "கொட்டமே கமழும்" என்ற திருப்பதிகத்தைப் பாடி யருள, ஓடம் யாரும் செலுத்தாமல் தானே அக்கரையைப் போய் அடைந்தது. கீழிறங்கிய பெருமான் அடியார்களுடன் திருக்கோயிலுக்குச் சென்று
இறைவனை இறைஞ்சினார். அப்பால் வேறு இடங்களுக்குச் சென்று திருநள்ளாற்றை அடைந்தார். கனல் வாதத்தில் இடுவதற்காகத் திருமுறைச் சுவடியில் கயிறு சாத்திப் பார்த்த போது வந்த பதிகம் திருநள்ளாற்றுப் பதிகம் என்பதை முன்னே கண்டோம். அந்த நினைவினால் மீட்டும் திருநள்ளாற்றுக்கு வந்து இறைவனை இறைஞ்சி, "பாடக மெல்லடிப் பாவையோடும்" என்று புதிய திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்.

அதன் பின்பு வேறு தலங்களைத் தரிசித்துக்கொண்டு போதிமங்கை என்ற ஊரை அணுகினார். அடியார்கள் புடைசூழ, "பரசமய கோளரி வந்தான்" என்று விருது காளம்
ஊதச் சம்பந்தர் முத்துச்சிவிகையில் எழுந்தருளினார். அவ்வூரில் பௌத்தர்கள் பலர் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாகப் புத்த நந்தி என்று ஒருவன் இருந்தான்.

சிவசமயம் நிலைநிறுத்தும் சிங்க ஏறாகச் சம்பந்தர் எழுந்தருளுவதைக் கண்டு பொறாமையால் சீறினான் புத்த நந்தி. அடியார் கூட்டத்தின் முன் போய், "எங்களை வெல்லாமல் எப்படி நீங்கள் விருது காளம் ஊதுவீர்கள்?" என்று தடுத்தான்.

இந்தச் செய்தியை அடியவர்கள் சம்பந்தரிடம் எடுத்துக் கூற, அவரோடு தக்க இடத்தில் வாது செய்து நம் சமயத்தை நிலைநிறுத்துவோம்' என்றார். அதற்குள் புத்த நந்தி செய்த மிடுக்குச் செயலைக் கண்டு பொறாமல், ஞான சம்பந்தப் பெருமான் அருளும் பதிகங்களை எழுதி வரும் தொண்டினை மேற்கொண்டிருந்த அடியார் ஒருவர் உள்ளம் வருந்தி, "புத்தநந்தியின் தலைமேல் இடி விழுக!" என்று சபித்தார். அவருடைய உரையே இடியாக, புத்தகந்தி இடியேறுண்டு தலை வேறு உடல் வேறாகி அழிந்தான். புத்தர்கள் அஞ்சி ஓடினர்.

ஆனால் ஊரில் உள்ள மற்றப் புத்தர்கள் திரண்டெழுந்து சாரிபுத்தன் என்பவனை முன்னிட்டுக்கொண்டு வந்து, "எங்களோடு வாதம் செய்துவிட்டு அப்பால் போங்கள்'' என்றார்கள். அது கேட்ட சம்பந்தர், "அப்படியே செய்வோம்" என்று சிவிகையினின்றும் இறங்கி, அருகில் இருந்த சத்திர மண்டபம் ஒன்றைச் சார்ந்தார்.

புத்தர்கள் தம் தலைவனாகிய சாரிபுத்தனோடு அங்கே வந்து சேர்ந்தார்கள். இரு சாராருக்கும் வாதம் தொடங்கியது. புத்தர்களுடைய சமய உண்மைகளை அவர்கள் கூற, அவற்றைத் தக்கபடி மறுத்து வாதிட்டார் சைவப் பிள்ளையார். புத்தர்கள் தம் ஆற்றல் முழுவதும் காட்டி வாதிட்டும் ஞானசம்பந்தர்முன் நிற்க இயலாமல் தோல்வி யுற்றனர். அப்பால் அவர்கள் சைவ சமயத்தை மேற் கொண்டு சம்பந்தர் தாள் பணிந்தார்கள். இவ்வாறு புத்தர் களை வாதில் வென்ற பெருமான் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கடவூரை அடைந்து காலகாலனைப் பணிந்து இன்புற்றார்.

அப்போது, "திருநாவுக்கரசர் எங்கே இருக்கிறார்? என்று அடியார்களைச் சம்பந்தப் பெருமான் வினாவினார். அவர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருப்பதை உணர்ந்து, அவரைப் பார்த்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் உண்டாகவே, திருப்பூந்துருத்தியை நோக்கி அடியார் கூட்டத்தோடும் புறப்பட்டார்.
---------------

19. பூந்துருத்தி முதல் காஞ்சி வரை

திருஞான சம்பந்தப் பெருமான் திருப்பூந்துருத்தியை அணுகிக் கொண்டிருந்தார். அந்தச் செய்தியைக் கேட்ட திருநாவுக்கரசர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். மதுரை சென்று சமணர்களை வாதில் வென்று வெற்றியுடன் வரும் அந்த ஞானக் குழந்தையை எதிர்சென்று வரவேற்க வேண்டும் என்ற ஆசை அவரை உந்தியது.

பெரிய கூட்டத்துடன் சம்பந்தர் வந்துகொண்டிருந்தார் .அப்பர்சுவாமிகள் யாரும் அறியாமல் அந்தக் கூட்டத்தில் புகுந்து சம்பந்தருடைய சிவிகையைத் தாங்குவோருடன் ஒருவராகச் சேர்ந்துகொண்டு தாங்கி வந்தார். அப்போது ஞானசம்பந்தருக்குத் திருவுள்ளத்தில் ஏதோ ஒரு குறிப்புத் தோன்ற, "அப்பர் சுவாமிகள் இப்போது எங்கிருக்கிறார்கள்?" என்று கேட்டார். திருநாவுக்கரசர் கீழிருந்தபடியே, "அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனாகத் தேவரீருடைய திருவடிகளைத் தாங்கிவரும் பேறு பெற்றேன்'' என்றார்.

அதனைக் கேட்ட சம்பந்தர் துணுக்குற்று, பல்லக்கினின்றும் கீழே குதித்து, "இவ்வாறு செய்யலாமா?" என்று கூறி இறைஞ்சினார். திருநாவுக்கரசர், "திருஞானசம்பந்தப் பெருமானுக்கு வேறு எவ்வாறு அடியேன் திருத்தொண்டு செய்வது?" என்று சொல்லி இறைஞ்சினார். அருகில் இருந்த தொண்டர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மனமுருகி இருவரையும் நிலத்தின்மேல் விழுந்து வணங்கினார்கள்.

பின்பு இருவரும் திருப்பூந்துருத்தியை அடைந்து திருக்கோயில் புகுந்து இறைவனை வணங்கினார்கள். அப்பால் கோயிலைச் சார்ந்த ஓரிடத்தில் சம்பந்தர் தம்முடன் வந்து திருக்கூட்டத்தோடு தங்கினார்.

நாவுக்கரசர் ஞானசம்பந்தப் பெருமானுடைய நலத்தை விசாரிக்க, அப்பெருமான் மதுரையில் நிகழ்ந்தவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னார். அப்பர் அவரை வணங்கி, 'திருத்தொண்டென்னும் பயிர் தழைக்க வேலியாக விளங்குகிறீர்கள்" என்று பாராட்டித் தொழுதார். ஞானசம்பந்தர் நாவுக்கரசரைத் தொழுது மங்கையர்க்கரசியாரின் மேன்மையையும் குலச்சிறையாருடைய திருத்தொண்டின் பெருமையையும் கூறி, "அவர்கள் முயற்சியே எல்லாவற்றிற்கும் காரணமாக நின்றது" என்று உரைத்தருளினார்.

பின்பு நாவுக்கரசர் தாம் தொண்டை நாடு சென்றதையும் காஞ்சியைப் பணிந்ததையும் சொல்ல, சம்பந்தரும் தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட வேண்டும் என்ற விருப்பம் உடையவரானார். யாவரும் திருநாவுக்கரசருடைய மடத்துக்குச் சென்று அங்கே தங்கி இறைவனை வழிபட்டு இன்புற்றனர்.

திருநாவுக்கரசருக்கு மதுரை சென்று திருவாலவாய்ப் பெருமானைப் பணிய வேண்டும் என்ற விருப்பு எழுந்தது. ஞானசம்பந்தரும் தொண்டை நாடு செல்லும் பெருவிருப்புடன் அப்பர் சுவாமிகளிடம் விடை பெற்றுப் புறப் பட்டார். முதலில் தம்முடைய ஊராகிய சீகாழிப்பதியை அடைந்தார். மதுரையில் பல வகை வாதங்களைச் செய்து வெற்றியுடன்
திரும்பும் அவரைக் காணவேண்டும் என்ற பேரார்வத்துடன் அந்நகரத்தார் காத்திருந்தனர். ஆகவே அவர்கள் சம்பந்தப் பிள்ளையாரைப் பலவகையான வாத்தியங்களுடனும் மங்கலப் பொருள்களுடனும் வந்து எதிர்கொண்டார்கள்.

சம்பந்தர் பல்லக்கினின்றும் இறங்கி அவர்களோடு கலந்து திருக்கோயிற்குச் சென்றார். உள்ளே புகுந்து திருத்தோணியில் வீற்றிருக்கும் உமாபாகர் சந்நிதியை அடைந்து, "உற்றுமை சேர்வது மெய்யினையே" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

அப்பால் தம் திருமாளிகையை அடைந்து காலந் தோறும் தோணியப்பரைத்
தரிசித்துக்கொண்டு சில நாட்கள் தங்கியிருந்தார்.

சில நாட்கள் ஆனபிறகு திருத்தொண்டை நாட்டுத் தலங்களைத் தரிசிக்கும் ஆவல் மீதூரத் தொண்டர்களுடன் புறப்பட எண்ணினார். இதுவரையில் உடன் வந்துகொண்டிருந்த தந்தையாரிடம், "தாங்கள் இங்கே தங்கிச் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து கொண்டிருங்கள்" என்று கூறி விடை பெற்றார்.

சீகாழியினின்றும் புறப்பட்ட ஞானச்செல்வர் தில்லை வந்து சிற்றம்பலத்தைப் பணிந்து, பின்பு பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு தொண்டை நாட்டிலுள்ள திரு வோத்தூர் என்னும் திருப்பதியை அடைந்தார்.

அங்கே எழுந்தருளியிருக்கும் வேதபுரீசரை வணங்கினார். அப்போது ஒரு சிவனடியார் அப்பெருமானை வணங்கி அழுதபடியே ஒரு விண்ணப்பம் செய்துகொண்டார்; "எம்பெருமானே, இந்தத் திருக்கோயிலில் அடியேன் சில பனைகளை வைத்து வளர்த்தேன். அவை வளர்ந்தன. ஆனால் காய்க்கவில்லை. இங்குள்ள சமணர் சிலர், 'இவ் விடத்தில் நட்ட பனையில் காயும் உண்டாகுமோ?' என்று இழிவாகப் பேசுகிறார்கள்.
யான் என் செய்வேன்! என்றார்.

அது கேட்டு இரங்கிய தமிழ்விரகர் உடனே "பூத் தேர்ந்தாயன' என வரும் திருப்பதிகத்தைப் பாடினார். அந்தப் பதிகத்தின் திருக்கடைக்காப்பில்,ஆண்பனை குரும்பைகளை ஈனும் ஓத்தூர்' என்று குறிப்பிட்டுப் பாடினார்.

குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே

என்பது அத்திருப்பாசுரம்.

அப்போதே ஆண்பனைகள் காய்காய்த்துக் குலைவிட் டன. அது கண்டு இறைவன் அருள்வல்லபத்தை அறிந்து யாவரும் வியந்தனர். குறை கூறிய சமணர்கள் அஞ்சினர். சிலர் சைவராயினர்.

திருவோத்தூரை நீங்கிய சிவஞானப்பிள்ளையார் குரங்கணில் முட்டம் என்னும் தலத்தைத் தரிசித்துக் கொண்டு காஞ்சீபுரத்தை அடைந்தார்.
-------------------

20. பல தல தரிசனம்

காஞ்சீபுரத்து அன்பர்கள் சம்பந்தப் பெருமான் எழுந்தருள்வதை அறிந்து நகரை அலங்கரித்து அவரை வரவேற்றார்கள். எங்கும் வாழை மரம் கட்டித் தோரணங்கள் தொங்கவிட்டார்கள். நிறைகுடமும் விளக்கும் வைத்தார்கள்.

யாவரும் வணங்கி வரவேற்க, ஞானசம்பந்தர் பல்லக் கினின்றும் இறங்கி இறைவன் திருக்கோயிலை அணுகினார். உள்ளே புகுந்து மனம் உருகித் தரிசித்துத் திருப்பதிகம் பாடியருளினார். சங்கீத மழை பொழிய, மனத்தில் அன்பு பொழிய, பக்திப் பெருக்கால் கண்ணில் நீர் பொழிய இறைவனைத் தரிசித்துக் கொண்டு புறம் போந்தார்.

மருவியஏ ழிசைபொழிய மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகிய அன் புள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்
ருகியமெய் யுணர்வினொடும் பரவியே புறத்தணைந்தார்."

பின்பு காமக் கோட்டம் வந்து அம்மையைத் தரிசித்தார். அப்பால் காஞ்சீபுரத்திலுள்ள பிற தலங்களையும் தரிசித்துப் பதிகம் பாடித் திருப்பாசூர், திருவாலங்காடு முதலிய தலங்களை வழிபட்டுத் திருக்காளத்தியை அடைந்தார். அங்கே உள்ள தொண்டர் குழாமும் முனிவர்களும் வேடர்களும் பிறரும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்.

தொண்டர் திருக்கூட்டம் சிவலோகமே வந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்க எழுந்தருளிய சம்பந்தர் முத்துச்சிவிகை-யினின்றும் இறங்கி, "எதிரே தோன்றும் மலைகளில் திருக்காளத்தி மலை யாது?' எனக் கேட்டார். அங்கு வந்த மாதவத்தினர் வணங்கித் தாழ்ந்து, "மறை வாழ்வே! சைவ சிகாமணியே! இதோ தெரிகிறதே இதுதான் காளன் என்னும் பாம்பும் அத்தியாகிய யானையும் ஒன்றனோடு ஒன்று மாறுபட்டு வழிபாடு செய்த திருக்காளத்தி" என்று காட்டினர். உடனே ஞானபோனகர் தரையின்மேல் விழுந்து பணிந்து எழுந்து அஞ்சலித்த கரங்களை உடையவராய். உள்ளத்தில் ஆனந்தம் பொங்கத் திருப்பதிகம் பாடத்தொடங்கினார். அந்தப் பதிகத்தில் ஒரு பதிகத்தில் ஒரு திருப்பாட்டில் கண்ணப்ப நாயனாரைச் சிறப்பித்துப் பாடினார்.

வேய் அனைய தோள்உமைஓர் பாகமது
      வாகவிடை ஏறி, சடைமேல்
தூயமதி சூடி, சுடு காடில்நட மாடிமலை
      தன்னை வினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
      வேடன்மலர் ஆகும் நயனம்
காய்கணையி னாலிடந் தீசனடி
      கூடுகா ளத்தி மலையே!

திருக்கோயிலைத் தரிசித்துக்கொண்டு, தாம் கும்பிட்ட பயனைக் காண்பவரைப்போலக் கண்ணப்ப நாயனாரைக் கண்டு வீழ்ந்து பணிந்தார். அன்பின் உண்மை ருவான அவரையும் அவருள்ளே உள்ள சிவபெருமானையும் ஒருங்கே கண்ட ஆனந்தம் மீதூர, பலமுறையும் அப்பெருமானை வணங்கினார்.

பின்பு அங்குள்ள திருமடம் ஒன்றில் தங்கிக் காலந் தோறும் திருக்கோயில் சென்று வணங்கினார். அத்தலத்திற்கு வடக்கே தமிழ் வழங்காத நிலப் பரப்பில் உள்ள தலங்களை எண்ணி அங்கிருந்தபடியே திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருக்கைலாயம், திருக்கேதாரம், திருக் கோகரணம், ஸ்ரீசைலமாகிய திருப்பருப்பதம், இந்திர நீல பர்வதம் முதலியவற்றைப் பாடினார்.

திருக்காளத்தியில் தங்கியிருந்தபோது திருவொற்றியூர் நினைவு வரவே அங்கே சென்று தரிசிக்க எண்ணித் தென் திசை நோக்கிப் புறப்பட்டார். திருவேற்காடு, திருவலி தாயம் முதலிய திருப்பதிகளை வழிபட்டுத் திருவொற்றியூரை அடைந்தார். அங்குள்ள தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றுத் தொழுதார்கள். பிள்ளையாரும் எதிர் தொழுது, திருவொற்றியூர் இறைவனைப் பாடத் தொடங்கினார்.

விடையவன் விண்ணும்மண் ணுந்தொழ
      நின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித் தோல்உடை
      கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சர்மவே தன்சசி
      தங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில் லியுறை
      யும்மிடம் ஒற்றியூரே.

பாடிக்கொண்டே வந்து திருக்கோயிற் கோபுரத்தின் முன் விழுந்து பணிந்தார். பின்பு ஆலயத்துள் புகுந்து எழுத்தறியும் பெருமானைத் தரிசித்துத் திருப்பதிகம் பாடினார்.

இறைவனைத் தரிசித்த இன்பத்தோடு புறம் போந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார்.

"பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
      பொங்கிஎழும் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றிஎழும் மயிர்ப்புளகம் எங்கும் ஆகிப்
      பரந்திழியும் கண்ணருவி பாய நின்று
சொற்றிகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித்
      தாழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரோடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
      உலகுய்ய உலவர்த ஞானம் உண்டார்."
----------------

21. எலும்பு பெண்ணானது

மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் கப்பல் வாணிகம் செய்து பெரும் பொருளை ஈட்டினார். சிவபெருமானிடம் மாறாத பேரன்பும் அடியார்களிடம் பக்தியும் உடையவராக இருந்தார். அவர் திருஞானசம்பந்தப் பெருமான் பெருமையைக் கேள்வியுற்று அவருடைய திருவருட் சிறப்பை எண்ணி எண்ணி வியந்தார்.

பலகாலம் மகப்பேறு இல்லாமையால் அதன் பொருட்டுத் தவம் செய்தார். சிவனை வழிபட்டார். அடியார் வழிபாடு செய்தார். அவற்றின் பயனாக அவர் மனைவியின் திருவயிற்றில் ஒரு பெண் குழந்தை தோன்றினாள்.நல்ல நேரத்தில் உதித்த அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த சிவநேசர் அடியவர்களுக்கும் பிறருக்கும் அன்னம் ஆடை முதலியவற்றை வழங்கினார்.

பின்பு வேத விதிப்படி சாதகன்மம் முதலியன செய்து பத்து நாள் ஆன பின் புண்யாகவாசனமும் நடத்தினார். குழந்தை தாமரையில் தோன்றிய திருமகளைப் போன்ற அழகுடன் விளங்கியமையால் அவளுக்குப் பூம்பாவை என்று பெயரிட்டு வளர்க்கலானார்.

மாதந்தோறும் குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய, அவள் வளர்ந்து முதிர்ந்து தளர்நடை பயின்றாள். ஏழு ஆண்டு முதிர்ந்தவுடன் மற்றப் பெண்களுடன் கழல், அம்மனை, பந்து முதலிய விளையாடல்களையும் பயின்றாள்.

பூம்பாவை எழிலிலும் குணத்திலும் வளர்ந்து வந்ததைக் கண்ட சிவநேசர், அவளை மணந்து கொள்ளும் ஆடவன் என் உடைமை முழுவதற்கும் உரியவனாவான்' என்று எண்ணி மகிழ்ந்தார். ஞானசம்பந்தப் பெருமான் மதுரை சென்றதும், இறைவன் திருவருளால் பாண்டியனுடைய வெப்பை நீக்கியதும், கனல் வாதம் புனல்வாதம் செய்து சமணர்களை வென்றதும் ஆகிய செய்திகளை வந்தவர் கூறக்கேட்டு மிக்க ஆனந்தம் அடைந்து, அவற் றைச் சொன்னவர்களுக்குப் பொன்னும் ஆடையும் அளித்தார். பின்பு ஞானசம்பந்தரை மனத்தில் தியானித்துத் திசை நோக்கித்தொழுது, "யான் பெற்றெடுத்த பூம்பாவையையும். என் நிதியையும் என்னையும் திருஞானசம்பந்த மூர்த்திக்கே அர்ப்பணம் செய்துவிட்டேன்" என்று மனமுருகிச் சொன்னார்.

பூம்பாவைக்குக் கன்னிமாடம் சமைத்து அதில் தோழியருடன் இருந்து வரும்படி செய்தார் அவ்வணிகர். ஒரு நாள் அவ்விளம் பெண் சேடியருடன் புறத்தே உள்ள பூம்பொழிலுக்கு வந்து மலர் கொய்தபோது அவள் விரலில் ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனே அவள் மயங்கி வீழ, அவளைத் தோழியர் தாங்கிக்கொண்டு மாளிகைக்குக் கொண்டு சென்றனர். அவள் நிலையைக் கண்டு சிவநேசரும் அவருடைய சுற்றத்தாரும் பிறரும் மனம் பதைபதைத்து வருந்தினர்.

உடனே விடத்தைப் போக்குவதற்குரிய மந்திரவாதிகளை அழைத்துவந்து மந்திரம் போடச் செய்தார். மருந்துகள் பலவற்றையும் மருத்துவர்கள் ஊட்டினார்கள். இவ்வளவு செய்தும் விடம் குறையாமல் தலைக்கு ஏறிவிட்டது. கடைசியில் உடலினின்றும் உயிர் பிரிந்தது. மந்திரம் போட்டவர்கள், ''இது விதி" என்று சொல்லிப் போய்விட்டார்கள். சுற்றத்தாரும் உற்றவர்களும் உயிரை இழந்த சடலத்தின் மேல் விழுந்து அலறினார்கள்.

சிவநேசர் மிக்க துயரத்தை அடைந்து, இனி என்ன செய்வதென்று யோசித்தார்."இந்த விடத்தை யாரேனும் தீர்த்தால் அவருக்கு அளவில்லாத நிதியை வழங்குவேன்" என்று பறை அறைவித்தார். அன்று முதல் மூன்று நாட்கள் பல இடங்களிலுமுள்ள பலர் வந்து தம்மால் ஆன செய்கைகளைச் செய்தனர். யாவரும் தம் முயற்சி பலிக்காமல் போயொழிந்தனர்.

அப்பால் அந்த வணிகர் அவள் உடலத்தை எரித்து விட்டுச் சாம்பரை ஒரு கும்பத்தில் சேமித்து வைத்து, 'ஆளுடைய பிள்ளையாருக்கு உரியவள் இவள் என்று முன்பே
சொல்லிவிட்டமையால், நமக்கு இதுபற்றித் துன்பம் இல்லை" என்று சொல்லி, அந்தக் கும்பத்தைக் கன்னிமாடத்தில் வைத்துக் காப்புச் செய்யலானார். அதற்கு ஆடை, அணிகலன் புனைந்து மாலையும் சந்தனமும் அணிந்தார். நாள்தோறும் திருமஞ்சனம் செய்து விளக்கெடுத்து நிவேதனம் செய்து போற்றி வந்தார்.

இவ்வாறு இருக்கும்போது, திருஞான சம்பந்தப் பெருமான் திருவொற்றியூர் வந்து தங்கியிருப்பதை அங்கிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அதுகேட்டு மகிழ்ந்த சிவநேசர் அவர்களுக்கு ஆடை பொன் ஆதியன அளித்து உடனே அவரை வரவேற்க எண்ணி அதற்கு ஆவன செய்யலானார்.

அப்போது தொண்டர்களும் பிறரும் அங்கே வந்து கூடினர். பிற சமயத்தினரும் என்ன நடக்கிறதென்று அறியும் ஆர்வத்துடன் வந்து குழுமினர்.

ஞானசம்பந்தர், "உலகத்தில் பிறந்தவர்கள் பெறும் பயன் சிவபெருமான் அடியார்களுக்கு அமுது செய்வித் தலும், அப்பெருமானுடைய நல்விழாக் காண்பதும் என்பது உண்மையானால் உலகவர் முன் வருவாயாக' என்று சொல்லி ஒரு திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.

"மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகென உரைப்பார்''

என்று சேக்கிழார் பாடுகிறார்.

பூம்பாவையை விளித்துப் பாடியதாக அமைந்தது. அந்தப் பதிகம். திருஞான சம்பந்தப் பெருமான் திரு வாக்கால் விளித்துப் பாடிய பெருமையை உடையவர்கள் இரண்டு பெண்மணிகள். ஒருவர் மங்கையர்க்கரசியார். "மானினேர்விழி மாதராய்" என்று தொடங்கும் பதிகம் அவரை முன்னிலைப் படுத்திப் பாடியது. மற்றொரு பெண் பூம்பாவை. அந்தப் பதிகத்தின் முதல் பாசுரம் வருமாறு:

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

[தேன் உள்ள புன்னை மரம் நிறைந்த கடற்கரைச் சோலையில் மயிலாக வந்து வழிபட்ட உமாதேவியாரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைக் கொண்டான் கபாலீச்சரத்தில் எழுந்தருளிய சிவபெருமான். ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகும் குணமுள்ள சிவனடியார் கூட்டத்தினருக்கு அந்த விழாவில் இங்குள்ள மக்கள் சமையல் செய்து விருந்து அருத்தி மாகேசுவர பூசை செய்வதைக் காணாமல் மறைந்து போகிறாயா? பூம்பாவையே!]

இவ்வாறு திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கி ஒவ்வொரு பாசுரமாகப் பாடப் பாட அந்தக் குடத்தில் மெல்ல மெல்லப் பூம்பாவை உருவம் பெறலானாள். எட்டுத் திருப் பாட்டு ஆனபோது குடம் உடைந்து பன்னிரண்டு வயசுடைய பெண்ணாக வளர்ந்து நிற்க, பின் பத்துப் பாட்டு ஆனவுடன் பேரழகுபெற்று நின்றாள். திருக்கடைக் காப்பையும் பாடிச் சம்பந்தர் பதிகத்தை நிறைவேற்றினார்.

உயிர்பெற்று எழுந்து நின்ற பெண்ணைக் கண்டு யாவரும் மகிழ்ச்சி யாரவாரம் செய்தனர். ஹரஹர என்ற முழக்கம் பெருகியது. அழகுப் பிழம்பாக நின்ற பூம்பாவை இறைவனைப் பணிந்து சம்பந்தர் அடியில் விழுந்து பணிந்தாள். சிவநேசரும் பிறரும் அவர் காலில் விழுந்தனர்.

"உங்கள் மகளை அழைத்துக்கொண்டு உங்கள் மாளிகைக்குப் போங்கள்" என்று சம்பந்தர் கூற, சிவநேசர் அவரை வணங்கி, "எம்பெருமானே, இவளைத் தேவரீர் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அது கேட்ட சம்பந்தர், "நீர் பெற்ற பெண் விடத்தினால் இறந்துபோனாள். இவள் இறைவன் திருவருளால் யான் காணத் தோன்றினாள். இவளை மணத்தல் முறையாகாது என்று கூறி ஆசி சொல்லி அனுப்பினார்.

அவ்வணிகர், "இவளை வேறு ஒருவருக்கு அளிக்க மாட்டேன் " என்று சொல்லி அழைத்துச் சென்றார். பூம்பாவை தவம் செய்து வாழ்ந்தனள்.

ஞானசம்பந்தப் பெருமான் இறைவனை வணங்கி மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டார்.
--------------

22. திருமணச் சோதி

மயிலாப்பூரினின்றும் புறப்பட்ட திருஞானசம்பந்தர் திருவான்மியூர், திருஇடைச்சுரம் திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு தில்லையை வந்து அடைந்தார். அந்நகரில் உள்ளார் சம்பந்தப்பெருமானை வரவேற்க, தில்லைத் திருக்கோயில் சென்று இறைவனைத் தரிசித்துப் பல பதிகங்கள் பாடினார். அங்கே சில நாட்கள் தங்கினார். அவர் அங்கே தங்கியிருப்பதை அறிந்து சீகாழியில் உள்ள வேதியரும் பிறரும் அங்கு வந்து அவரை வணங்கிச் சென்றார்கள்.

அப்பால் ஞானசம்பந்தர் தில்லையினின்றும் புறப்பட்டுச் சீகாழியை அடைந்தார். ஆலயம் சென்று இறைவனை வணங்கித் தம்முடைய திருமாளிகையை நண்ணினார்.
அங்கே இருக்கும்போது, பெருமானைப் பெற்றவர்களும் மற்ற உறவினர்களும் அவரை அணுகி, "தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பருவம் வந்து விட்டது" என்று கூறி, "மறையவர்களுக்குரிய வேள்விகளை வேட்பதற்குத் தகுதி வேண்டும். இல்வாழ்வை மேற் கொண்டால்தான் அது இயலும். ஆதலின் ஒரு கன்னியை மணம்புரிந்து கொள்ள வேண்டும்" என்று விண்ணப்பம் செய்துகொண்டார்கள். அது கேட்ட சம்பந்தர் பாசத் தொடர்பை ஏற்க விரும்பாதவராய், 'பருவம் வந்ததானாலும் திருமணம் வேண்டாம்" என்றார். மறையவர்கள் கை தொழுது, "நீங்கள் இவ்வுலகில் வைதிக நெறி கெடாமல் ஓங்கும்படி செய்தீர்கள். ஆகையால் நீங்களும் மறையவர்களுக்குரிய ஆறு தொழில்களையும் செய்து வைதிக நெறியில் ஒழுகுவதே முறை. அதற்காகத் திருமணம் செய்து கொண்டருளவேண்டும்" என்று வற்புறுத்தினார்கள்.

அது கேட்ட சம்பந்தப்பிரான் ஒருவாறு உடம்பட்டார். மறையவர் யாவரும், 'இது சிவபெருமான் திருவருள் என்று எண்ணி உளம் களித்தார்கள்; திருமணத்துக்கு வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கினார்கள்.

இப்போது ஆச்சாபுரம் என்று வழங்கும் திருப்பெருமண நல்லூரில் அக் காலத்தில் நம்பாண்டார் நம்பி என்ற மறையவர் வாழ்ந்தார். அவருடைய திருமகள் எல்லா வகையாலும் சம்பந்தருடைய வாழ்க்கை நிறைவு பெறத் தக்க துணைவியாக இருப்பாள் என்பதை உணர்ந்தார் ஞானசம்பந்தருடைய தந்தையார். அக்கால முறைப்படி நம்பாண்டார் நம்பியிடம் சென்று அவர் திருமகளைத் திருமணம் செய்து தரும்படி கேட்பதற்காகச் சிவபாத இருதயர் திருத்தொண்டர்களும் மறையவர்களும் உடன் வரத் திருப்பெருமண நல்லூர் சென்றார். அவர்கள் வருவதை அறிந்த நம்பாண்டார் நம்பி நிறைகுடம், குத்து விளக்கு முதலியன வைத்து அவர்களை வரவேற்றார்.

பின்பு சிவபாத இருதயர் தாம் வந்த காரியத்தைச் சொல்ல, நம்பாண்டார் நம்பி மிக்க மகிழ்வெய்தி, "உம்முடைய தவப் புதல்வரும், அம்மை திருமுலைப்பாலில் குழைத்த ஆரமுதுண்டாருமாகிய சம்பந்தப்பெருமானுக்கு எம்முடைய குலக் கொழுந்தாகிய மகளை யாம் உய்ய மணம் செய்து தருகிறோம்" என்று கூறி விடை கொடுத் தனுப்பினார். அவர்கள் மீட்டும் சீகாழி வந்து, நிகழ்ந்த தைச் சம்பந்தருக்குத் தெரிவித்து, மேற்கொண்டு திருமணத் துக்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினர்.

திருமணத்துக்குரிய நாளும் முகூர்த்தமும் சோதிடர்கள் ஆராய்ந்து கூறினர். அதன்மேல் முகூர்த்த ஓலை எழுதிப் பலருக்கும் அனுப்பிவிட்டு, ஒரு நல்ல நாளில் திருமுளைப்பாலிகை தெளித்தார்கள். ஊரெல்லாம் அலங்கரித்தார்கள். ஞானசம்பந்தப் பெருமானுக்குக் கங்கண தாரணம் செய்து, செய்ய வேண்டிய நற்கருமங்களை இனிது இயற்றினார்கள். பிறகு நல்ல ஓரையில் திருமணத்துக்கு யாவரும் புறப்பட்டார்கள். சம்பந்தப்பெருமான் முத்துச் சிவிகையில் ஏறிச் சென்றார். உறவினரும் தொண்டரும் வேதியரும் சூழ, வாத்தியங்கள் ஒலிக்க, மறையவர் வேதம் ஓத, தொண்டர்கள் திருப்பதிகங்கள் ஓத, இந்தத் திருமண ஊர்வலம் மெல்ல மெல்லப் பெருமண நல்லூரை வந்து அடைந்தது.

சம்பந்தர் முதலில் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினார். "திருமணக் கோலம் புனைந் தருள வேண்டும்" என்று உடனிருந்தோர் சொல்லக் கோயிலுக்கு அருகில் உள்ள திருமடம் ஒன்றை அடைந்தார். அங்கே திருமஞ்சன நீராடி வெண்பட்டாடை அணிந்து முத்தால் அமைந்த அணிகளைப் பூண்டார். ருத்திராட்ச மாலை புனைந்து நெற்றியில் திருநீறு அணிந்தார். இவ்வாறு அலங்காரம் செய்துகொண்டு திருவீதிக்கு வந்து, இறைவனைத் தொழுது, முத்துப் பல்லக்கில் ஏறினார். பலவகை வாத்தியங்கள் முழங்கின. தேவர்கள் பூமாரி பெய்தனர். மறையவர் வேதம் ஓதி வாழ்த்தினர். எங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவார மல்க, ஞானசம்பந்தர் ஊர்வலம் வந்தார்.

அப்போது சம்பந்தப் பெருமானை மணக்கும் பேறு பெற்ற நங்கையாருக்கும் கங்கணம் தரித்து அலங்காரம் செய்தார்கள். அவர் கல்யாணப் பந்தருக்கு வந்தார். திருஞான சம்பந்தரும் அங்கே எழுந்தருள, திருமண வினைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அந்த நங்கை யாரைத் திருக்கரம்பற்றிச் சம்பந்தர் எரிவலம் வந்தார். இந்த அழகிய காட்சியை அங்கு வந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்கள். கண் இமையாமல் பார்த்ததனால் அவர்கள் தேவர்களைப் போல இருந்தார்கள்.

“புனிதமெய்க் கோலம் நீடு புகலியர் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில் நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார் கண் இமை யாது வாழ்த்தி”.

அப்போது திருஞானசம்பந்தர் திருவுள்ளத்தில் ஒரு வேதனைக் குறிப்புத் தோன்றிற்று. நாம் விரும்பாத இந்த இல்லொழுக்கம் நமக்கு வந்து சேர்ந்ததே! இனி இவளோடும் சிவபெருமான் திருவடியை அடைவேன்' என்று எண்ணினார். உடனே யாவரும் தம்மைச் சூழ, சிவபெருமான் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானை வணங்கி, "எம்பிரானே, என்னைத் தேவரீர் திருவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்ற உணர்வுடன் நின்று, ஒரு திருப்பதிகம் அருள் செய்தார்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா ; கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் ஆய்த்தில;
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்;
நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே

என்பது அப்பதிகத்தின் முதல் பாசுரம். கல்வின் மேல் கால் வைத்துச் செல்லும் அம்மி மிதித்தவாகிய செயலைப் பெற்ற பெரிய திருமணத்தினாற் பெறும் இவ்வாழ்வு எனக்கு வேண்டாம். திருக்கழுமலமாகிய சீகாழி முதல் பல ஊர்களாகிய பெரிய தலங்களைப் பாடிய அழகிய பாடல்கள் யாவும் (உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்று நான் விரும்பியபடி) உண்மையாகவில்லை. (நான் தனியே இருந்து கடமைகளின் கட்டுப்பாடின்றி எங்கும் திரிந்து தொண்டு செய்ய இயலாத நிலையில் இப்போது கட்டுப்பட்டுவிட்டேன்.) சொல்லில் பரவிய பெரிய மணமாகிய கருத்தைத் தொண்டர்கள் தம் அறிவிலே தாங்கித் (தொண்டுபுரிய இன்னும் தமக்குத் தகுதியை உண்டாக்கிக்) கொள்ளவில்லை; நல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தில் எழுந்தருளிய பெருமானே' என்பது இதன் பொருள்.

"ஞாலம் நின் புகழே மிக வேண்டும்" என்ற பேரார்வம் உடையவர் ஞானசம்பந்தர். எங்கும் சென்று இறைவன் அருள் விளக்கத்தை யாவரும் உணரச் செய்து தொண்டு செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். இல்வாழ்வை மேற்கொண்ட மறையவர்கள் அப்படி எப்போதும் பயணம் செய்து கொண்டே இருக்க முடியாது. தமக்குத் திருமணம் ஆனது ஒரு கால்கட்டு என்று எண்ணினார். இறைவன் திருத்தொண்டு செய்யாமல் வாழ்வதில் அவருக்கு விருப்பம் இல்லை - இந்தப் பாடல் இத்தகைய மனநிலையைத் தெரிவிக்கிறது.

அப்போது அசரீரி வாக்காக ஓர் ஒலி எழுந்தது. "நீயும் நின்னுடைய மனைவியும் இந்த மணத்துக்கு வந்தவர்கள் யாவரும் இதோ தோற்றும் சோதியுட்புகுந்து நம்மை வந்து அடையுங்கள்" என்று இறைவன் அருளிச் செய்தான். அப்போது திருக்கோயில் முழுவதும் ஒரே சோதி வடிவாய்த் தோன்ற, அதில் ஒரு திருவாயில் தோன்றியது. அதுகண்ட ஞானசம்பந்தப் பெருமான்,

காத லாகிக் கசிந்து கண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தை ஓதி, அங்குள்ளவர்கள் யாவரையும் நோக்கி, "ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக" என்றார். உடனே ஒவ்வொருவராக அச்சோதியுட் புகலானார்கள். திரு நீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி ஆகியவர்கள் தம் மனைவிமாருடன் உள்ளே புகுந்தார்கள். பிறரும் புகுந்தனர். அங்கே இருந்த யாவரும் சோதியிலே கலந்த பிறகு, திருஞானசம்பந்தர் தம் மனைவியின் திருக்கரத்தைப் பற்றி வலம் வந்து அச்சோதியிலே புகுந்து, இறைவனுடன் என்றும் பிரியாத இரண்டற்ற நிலையில் கலந்தருளினார்.

யாவரும் புகுந்த பிறகு அங்கே தோன்றிய சோதி மறையவே, பழையபடி திருக்கோயில் இயல்பாகத் தோற்றம் அளித்தது. பின்பு வந்து கண்டவர்கள் எல்லாம், நிகழ்ந்த செய்தியை அறிந்து, தமக்கு இறை யொளியில் கலக்கும் பேறு கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்கினர்.

திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் இப்போது சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் முதல் மூன்றாக விளங்குகின்றன. இறைவனுடைய திருவருள் மணமும் செந்தமிழ் மணமும் செறிந்து விளங்கும் அவை, தமிழ் மக்களுக்கு மங்காத செல்வமாய் நின்று நிலவுகின்றன.
--------------

This file was last created on 10 Sept. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)