pm logo

ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்
பாகம் 1 (முகவுரை, பாடல்கள் 1-102)


takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum, part 1 (introduction, verses 1-102)
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
We thank Mr. Rajendran Govindasamy for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum - part 1 [introduction, verses 1-102]

Source:
கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்.
இவை சென்னை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி
உ. வே. சாமிநாதையரால்
பல பிரதிகளைக்கொண்டு பரிசோதித்து நூதனமாக
எழுதிய பலவகைக் குறிப்புக்களுடன்
சென்னை கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
சுக்கில ௵ தை ௴
Copyright Registered ] 1930 [ விலை ரூ. 4-0-0
---------

கணபதி துணை
இப்புத்தகத்திலடங்கியவை.
1. நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி
2. பிழையுந் திருத்தமும்
3. முகவுரை
4. நூலாசிரியர் வரலாறு
5. நூலாராய்ச்சி
மற்றப் பரணிகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள், சரித்திர சம்பந்தமான விஷயங்கள், நூலாசிரியர் கொள்கைகள், அரிய விஷயங்கள், புறப்பொருளமைதிகள், பொருளணிகள், சொல்லணிகள், தெய்வங்கள், சிவபெருமான் திருநாமவகைகள், தேவியின் திருநாமவகைகள், ஞானசம்பந்தருக்கு வழங்கும் திருநாமங்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், நதிகள், கொடிகள், சமணர் கொள்கைகள், வடமொழிப் பிரயோகங்கள், ஆக்கச்சொற்கள், அரும்பதங்கள், சொற்பிரயோகங்கள், அடுக்கு, வாக்கியப் பிரயோகங்கள், அதிகமாக உபயோகிக்கும் சொற்கள், ஒப்புமைப் பகுதிகள்.
6. உரையாசிரியர் வரலாறு
உரைவகை, பொருளை விளக்கும் முறை, முடிபு காட்டல், பிறர் கொள்கை, பாடபேதம், இலக்கணக்கூற்று, மேற்கோளாட்சி, நூலாசிரியருடைய கருத்தறிந்து எழுதுதல், சொல்லாராய்ச்சி, உரைநடை, சிலவகையான சொற்களும் தொடர் மொழிகளும், பலவிடங்களிற் காணப்படும் சொற்கள், பெயர்களை வழங்கும் மரபு, வழக்கு, சில கொள்கைகள், உரையால்தெரிந்த பாஷைகள், மதக்கொள்கைகள், தெய்வபக்தி, தமிழபிமானம், நூலாசிரியர்கள், இதுகாறும் அறியப்படாத நூல்கள், அரும்பதங்கள், அரியவிஷயங்கள், விளங்காத விஷயங்கள், உரை விசேடங்கள்.
7. இரண்டாம் இராசராசசோழன் வரலாறு
8. இப்பதிப்பின் அடிக்குறிப்பிலும் விசேடக்குறிப்பிலும் நூதனமாக எடுத்தாண்ட நூற்பெயர்கள் முதலியவற்றின் அகராதி
9. தக்கயாகப்பரணி மூலமும் உரையும்
      காப்பு
      1. கடவுள் வாழ்த்து (1-9)
      2. கடைதிறப்பு (10-47)
      3. காடுபாடியது (48-102)
      4. தேவியைப் பாடியது (103- 119)
      5. பேய்களைப் பாடியது (120 - 135)
      6. கோயிலைப் பாடியது (136 - 221 )
      7. பேய்முறைப்பாடு (222- 244 )
      8. காளிக்குக் கூளி கூறியது (245 - )
      9. கூழடுதலும் இடுதலும் (728 - 777)
      10. களங்காட்டல் (778 - 799)
      11. வாழ்த்து (800 - 814)
10. மூலமட்டும் உள்ள ஏட்டுச்சுவடிகளில் அதிகமாகக் காணப்பட்ட தாழிசைகள் (1-4)
11. விசேடக்குறிப்பு |
12. அரும்பதமுதலியவற்றினகராதி
13. செய்யுள் முதற்குறிப்பகராதி
14. விளங்காமேற்கோளகராதி
15. பிரதிபேதம்
16. இலக்கண விசேடங்கள்
-----------

இப்பதிப்பில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி.

குறிப்பு - நூற்பெயர்
அகநா - அகநானூறு.
அஞ்ஞ, அஞ்ஞவதை - அஞ்ஞவதைப் பரணி.
அ.கு. - அடிக்குறிப்பு
அடியார், அடியார்க்கு - அடியார்க்கு நல்லாருரை
அரிச்சந்திர - அரிச்சந்திரபுராணம்.
அருணாசல - அருணாசலபுராணம்.
அருணைக்கலம் - அருணைக்கலம்பகம்
அழகர்கலம் - அழகர்கலம்பகம்.
ஆத்திரையன் - ஆத்திரையன் பேராசிரியன் பாயிரம்.
ஆதி - ஆதியுலா.
ஆளுடையபிள்ளை - ஆளுடைய பிள்ளையார்.
இரணிய, இரணியவதை - இரணிய வதைப்பரணி.
இராச, இராசராச - இராசராசசோழனுலா.
இராச, மெய்க் - இராசராசன் (I) மெய்க்கீர்த்தி இளம் - இளம்பூரணம்.
இறை - இறையனாரகப்பொருள்.
எ-து - என்பது
உத்தர - உத்தரகாண்டம்.
ஐங், ஐங்குறு - ஐங்குறு நூறு.
கடம்பவன - கடம்பவன புராணம்.
கந்த - கந்தபுராணம்.
கந்தரநு - கந்தரநுபூதி.
கந்தரலங் - கந்தரலங்காரம்.
கம்ப - கம்பராமாயணம்.
கல் - கல்லாடம்.
கலம் - கலம்பகம்.
கலி - கலித்தொகை..
கலிங்க, கலிங்கத்துப் - கலிங்கத்துப் பரணி
கலித் - கலித்துறை.
களவழி - களவழிநாற்பது.
காஞ்சிப் - காஞ்சிப்புராணம்.
காரைக் - காரைக்காலம்மையார்.
குலோத் - குலோத்துங்கசோழன்.
குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு,
குறுந் - குறுந்தொகை.
கூர்ம - கூர்மபுராணம்.
சங் - சங்கர நமச்சிவாயருரை.
சித்திரச் சத்திரப் - சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை
சிதம்பரச் செய் - சிதம்பரச் செய்யுட்கோவை.
சிலப் - சிலப்பதிகாரம்.
சிவ - சிவ பெருமான்.
சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை
சீகாளத்திப் - சீகாளத்திப் புராணம்.
சீவக - சீவகசிந்தாமணி.
சுந்தர - சுந்தரமூர்த்தி நாயனார்.
சூ - சூத்திரம்.
சூடா, சூடாமணி - சூடாமணி நிகண்டு
சூளா - சூளாமணி.
செவ்வந்திப் - செவ்வந்திப்புராணம்.
சே - சேனாவரையம்.
தக்க - தக்கயாகப்பரணி.
தகடூர் - தகடூர்யாத்திரை
தஞ்சை - தஞ்சைவாணன் கோவை.
தண்டி - தண்டியலங்காரம்.
தணிகைப் - தணிகைப் புராணம்.
தமிழ்நா - தமிழ்நாவலர் சரிதை.
தனிப் - தனிப்பாடற்றிரட்டு.
தா - தாழிசை.
தாயுமானவர் - தாயுமானவர் பாடல்
தியாகராச - தியாகராசலீலை.
திருக்காளத்திப் - திருக்காளத்திப் புராணம்.
திருக்குற் - திருக்குற்றாலப்புராணம்.
திருச்சண்பை - திருச்சண்பைத் திருவிருத்தம்.
திருச்சிற் - திருச்சிற்றம்பலக்கோவையார்.
திருஞா, திருஞான - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
திருநா - திருநாவுக்கரசு நாயனார்.
திருநாகைக் - திருநாகைக் காரோணப் புராணம்.
திருப் - திருப்புகழ்.
திருப்பெருந் - திருப்பெருந்துறைப் புராணம்.
திருவந் - திருவந்தாதி,
திருவரங்கக் - திருவரங்கக் கலம்பகம்.
திருவரங்கத் - திருவரங்கத்தந்தாதி.
திருவா - திருவாசகம்.
திருவாதவூரர் - திருவாதவூரர் புராணம்.
திருவாரூர்ப் - திருவாரூர்ப்புராணம்.
திருவால - திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்.
திருவானைக்காப் – திருவானைக்காப் புராணம்
திருவிடை. மும், திருவிடை. மும்மணி - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவிரட்டை - திருவிரட்டைமணிமாலை.
திருவிளை - திருவிளையாடற்புராணம்.
திருவெண்காட்டுப் - திருவெண்காட்டுப் புராணம்
திவ் - திவ்யப்பிரபந்தம்.
திவா - திவாகரம்.
தே - தேவாரம்.
தொல் - தொல்காப்பியம்,
ந - நச்சினார்க்கினியருரை.
நம்பி - நம்பியகப்பொருள்.
நள - நளவெண்பா .
நற் - நற்றிணை.
நன் - நன்னூல்.
நாலடி - நாலடியார்.
நான்மணி - நான்மணிமாலை.
நீதிநெறி - நீதிநெறி விளக்கம்.
நீல - நீலகேசித்திரட்டு.
நைட, நைடத - நைடதம்.
ப, பக் - பக்கம்.
பட் - பட்டினப்பாலை.
பதிற் - பதிற்றுப்பத்து.
பதினோராந் - பதினோராந் திருமுறை.
பரி - பரிபாடல்.
பழமலை - பழமலையந்தாதி.
பாசவதை - பாசவதைப்பரணி.
பி-ம் - பிரதிபேதம்.
பிரபு - பிரபுலிங்கலீலை.
பிள்ளை - பிள்ளைத்தமிழ்.
பு. வெ. - புறப்பொருள் வெண்பா மாலை
புறநா - புறநானூறு.
பெரிய - பெரிய புராணம்.
பெரிய திரு - பெரிய திருமொழி.
பெரியாழ் - பெரியாழ்வார் திருமொழி
பெருங் - பெருங்கதை.
பெருந் - பெருந்தேவனார்.
பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை.
பெருமாள் - பெருமாள் திருமொழி.
பேர் - பேராசியருரை.
பொ, பொருள் - பொருளதிகாரம்.
பொருந - பொருநராற்றுப்படை.
பொன்வண்ணத் - பொன்வண்ணத்தந்தாதி.
மணி - மணிமேகலை.
மதுரை - மதுரைக்காஞ்சி.
மதுரைக்கலம் - மதுரைக்கலம்பகம்.
மயிலை - மயிலைநாதருரை.
மலைபடு - மலைபடுகடாம்.
மாயூரப் - மாயூரப் புராணம்.
மீ. பிரபந்த - மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு.
மீனாட்சியம்மை - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.
மு-முற்றும்.
முத் - முத்தொள்ளாயிரம்.
மும் - மும்மணிக்கோவை.
முருகு - திருமுருகாற்றுப்படை,
மூ - மூலம்.
மூத்த - மூத்ததிருப்பதிகம்.
மேற் - மேற்கோள்.
மோக, மோகவதை - மோகவதைப் பரணி.
யா-கா - யாப்பருங்கலக்காரிகை.
யா-வி - யாப்பருங்கல விருத்தி.
லக்ஷ்மீதரர் - லக்ஷ்மீதரர் வியாக்கியானம்.
வட - வடமொழி.
வளை - வளையாபதி.
வி-பா, வி-பாரதம் - வில்லிபுத்தூராழ்வார் பாரதம்
விக்கிரம, விக்கிரம. உலா - விக்கிரமசோழனுலா
விநாயக, விநாயகபு - விநாயக புராணம்.
விறலி - விறலிவிடு தூது,
[௧௧] 11-ஆம் - பதினோராந் திருமுறை.
------------
கணபதி துணை

முகவுரை.

தேவாரம்.
கீழ்வேளூர்த் திருத்தாண்டகம்.

திருச்சிற்றம்பலம்

சொற்பாவும் பொருடெரிந்து தூய்மை நோக்கித்
      தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை யறியாத நாயி னேனை
      நன்னெறிக்கே செல்லும்வண நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
      பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
      கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

சகலகலாவல்லிமாலை.

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தமிழ்த் தெய்வ வணக்கம்.

"இருந்தமிழே யுன்னா லிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்" - திருந்த
உதிப்பித்த பன்னூ லொளிர வடியேன்
பதிப்பிக்க வேகடைக்கண் பார்.

புதிய புதிய செயல்களும் பொருள்களும் பற்பல இடங்களிலும் ஒவ்வொரு தினத்தும் தோன்றித்தோன்றி யாவருக்கும் விம்மிதத்தை விளைவித்துவரும் இக்காலத்தில் வழக்கமற்றுப் போயினவும் பாராட்டப்-படாதனவுமான ஒரு நூலையும் உரையையும் வெளியிடுதலாலுண்டாகும் பயன் என்னவென்று சிலர் நினைத்தல் கூடும் ; சொல்லவுங்கூடும் ; அதனை நினைந்து சில அபிப்பிராயங்களை இங்கே தெரிவிக்கிறேன்.

ஒரு தேசத்தின் ஏற்றத்திற்கு அத்தேசபாஷையிலுள்ள பழைய காப்பியங்களைப் படித்தறிதலும் ஒரு முக்கியமான சாதனமாகுமென்பது ஆன்றோர் கொள்கை. ஒரு பழைய நூலால் அதனை இயற்றிய கவியின் பாஷாஞான நிலையும், அம்மொழியினிடத்துள்ள அன்பினால் இயல்பாகவே அவர் அதனை வளர்த்துவந்த விதமும், அவரால் மதிப்புற்ற புலவர்கள் பிரபுக்கள் அரசர்கள் முதலியோருடைய இயல்பும், அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களால் அப்பெரியோர் அடைந்த நன்மதிப்பும், அவர்களுடைய காலப்போக்கும், அக்காலத்திலிருந்த தெய்வபக்தி இராசபக்தி முதலியனவும், ஒழுக்கவழக்கங்களும், தேச இயற்கையும் படிப்பவர்களுக்குப் புலனாகும் ; அந்த நூலைப் படித்து அறிந்து அனுபவிப்பவர்களுக்கு அவற்றுட் சில சில நேரிற் கண்டாற்போலத் தோன்றியும் இன்புறுத்தும்; அதனால் சிலர் திருத்தமடைந்து ஒழுகவுங்கூடும். அதன் உரையினால் அவ்வுரையாசிரியருடைய கல்விப்பரப்பும், நூலாசிரியருடைய உண்மைக் கருத்துக்களும், பல ஆசிரியர்கள் பெயர்களும், இக்காலத்து வழங்காத அரிய விஷயங்களும், பல நூற்பெயர்களும், அக்காலத்து வழங்கிய சொற்பிரயோகங்களும், இவைபோல்வனபிறவும் விளங்கும். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் முதலியவர்களுள் ஒவ்வொரு வகுப்பினரும் யாதொரு வருத்தமுமின்றி அவற்றிலிருந்து தத்தமக்குரியவற்றை எளிதிற்பெற்றுப் பயனடையவும் கூடும். நிற்க.

பரணி யென்பது தமிழ்மொழியிலுள்ள ௯௬-வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; போர்முகத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன்மேற் கடவுள்வாழ்த்து, கடைதிறப்பு முதலிய உறுப்புக்களை அமைத்து அவனுடைய பலவகைச் சிறப்புக்களையும் பலமுகமாகப் புறப்பொருளமைதி தோன்ற ஆங்காங்கு விளக்கிக் கலித்தாழிசையாற் பாடப்படுவதென்பர்; பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணியென்று கூறுவர். இவை முறையே பன்னிருபாட்டியல் முதலிய பிரபந்த இலக்கண நூல்களாலும், கலிங்கத்துப்பரணி முதலிய பரணிகளிலும் விக்கிரம சோழனுலா முதலிய உலாக்களிலும் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழிலுமுள்ள பிரயோக அமைப்பாலும், “பதாதி யோடமரி லைவரும்பட மலைந்தி டப்பரணி பாடவே" (வில்லிபாரதம், கிருட்டினன் றூதுச் சருக்கம், [௧௩௪] 134) என்பதனாலும் விளங்குகின்றன. இப்பிரபந்தமானது தொல்காப்பியச் செய்யுளியலில் தொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணமாகக் கூறப்படுகின்ற அம்மை முதலிய வனப்புக்கள் எட்டினுள் விருந்து என்பதன்பாற்படும்.

இஃது அரசர் முதலியோர்மேற் செய்யப்படுவதன்றித் தெய்வங்கண்மேலும் தத்தம் ஆசிரியர்மேலும் அறிஞர்களால் இயற்றப்பெற்று வழங்கும்; கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, இரணியவதைப்பரணி, கஞ்சவதைப்பரணி, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி, பாசவதைப்பரணியென்பன இவற்றிற்கு உதாரணங்கள்.

சிவபெருமானுடைய வீரச்செயல்களைப் புலப்படுத்தும் சில தாழிசைகளின் தொகுதி பரணியென்னும் பெயருடன் பல தலங்களில் திருவந்திக்காப்புக்காலத்தில் உரியவர்களால் தொன்றுதொட்டு ஓதப்படுவதுண்டு.

ஏனைப்பிரபந்தங்கள்போலப் பாட்டுடைத்தலைவன் பெயருடன் வழங்காமல் தோல்வியுற்றோருடைய பெயருடன் சார்ந்தே இப்பிரபந்தம் வழங்கும்.

பரணியென்னும் பெயர்க்காரணம் பலவாறாகக் கூறப்படினும் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப்பெற்ற பரணி யென்னும் நாண்மீனால் வந்த பெயரென்பதே பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது. இது, [*] "காடு கிழவோள் பூத மடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப், பாகு பட்டது பரணி நாட் பெயரே" என்னும் திவாகர முதலியவற்றால் விளங்கும். மேலே கூறப்பட்டதற்கேற்பப் பரணிகளிற் காளியின் சிறப்பும் பகைவருடைய உயிர்நீக்கமும் கூறப்படுதல் காண்க.
------
[*] பரணி நூலுட் கூறப்படும் பொருள்களின் பெயர்கள் பரணிநாளின் பெயர்களாக அமைந்திருத்தல் இங்கே ஆராய்தற்பாலது.
-------

பரணிநாளிற் கூழ்சமைத்துக் கூளிகள் காளிக்குப் படைப்பது மரபென்பர்; இது, "களப்பரணிக்கூழ்", "பண்டுமிகுமோர் பரணிக்கூழ் பாரதத்தி லறியேமோ", "மணலூரிற் கீழ்நா ளட்ட பரணிக்கூழ்" (கலிங்க.), 'காடுகெழுசெல்விக்குப் பரணிநாளிற் கூழும்துணங்கையுங் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு' (தொல். செய், சூ, [௧௪௯] 149 - பேர் ) என்பவற்றாலும் விளங்கும்.

'பரணிபிறந்தான் தரணியாள்வான்' என்னும் பழமொழியும், 'பரணியான் பாரவன்'. (நன். சூ. [௧௫௦] 150-மயிலை.) என்னும் மேற்கோளும், "பரணிநாட்பிறந்தான்" (சீவக. 1813) என்பதற்கு, 'பரணி யானைபிறந்த நாளாதலின் அதுபோலப் பகையை இவன் மதியான்' என்று நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையும் பரணிநாள் வெற்றியின் சம்பந்தமுடையதென்பதைத் தெரிவிக்கின்றன.

தக்கயாகப்பரணி யென்பது தக்கன் சிவபெருமானை அவமதித்துச் செய்யப்புகுந்த யாகத்தை ஸ்ரீ வீரபத்திரக்கடவுள் அழித்து அவனுக்கு உதவிபுரியவந்த தேவர்களையெல்லாம் வென்று அவனுடைய தலையையும் தடிந்த வரலாற்றைப் பொருளாக அமைத்துக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தரென்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்டது. விக்கிரமசோழன் முதலிய மூவருடைய அவைக்களத்தை அலங்கரித்து விளங்கியவராயினும் இக்கவிஞர் பெருமான் அம்மூவருள் மூன்றாமவனாகிய இரண்டாம் இராசராச சோழனுடைய வீரச்செயல் முதலியவற்றை உவமை முகத்தாலும் வேறுவகையாலும் ஆங்காங்குப் பலபடப் பாராட்டிச் செல்லுதலால் இந்நூல் அவன் விருப்பத்தின்படியே செய்யப்பட்டிருத்தல் வேண்டுமென்று தோற்றுகின்றது. இந்நூலை இவர் இயற்றியதற்குக் காரணமாக வீரசிங்காதனபுராண முதலியவற்றிற் கூறப்படும் வரலாறு இந்நூலிலிருந்தேனும் உரையாசிரியருடைய வாக்காலேனும் வேறு பழைய தக்க ஆதாரத்தாலேனும் விளங்கவில்லை.

இதில் [*]வைரவக்கடவுள் காப்பும் உமாபாகர் வாழ்த்தும் ஆளுடையபிள்ளையார் வாழ்த்தும் அவர் சமணரை வாதில்வென்ற வரலாறும் கூறப்பெற்றிருத்தலின், சீகாழியில் இந்நூலாசிரியர் சிலகாலம் இருந்தனரென்றும் அப்பொழுது இந்நூலைச் செய்திருக்க வேண்டுமென்றும் ஊகித்தற்கு இடமுண்டு. "கம்பனென்றும்" என்ற தனிப்பாடலில் "கம்பனென்றுந்தாதனென்றுங் [#]காழியொட்டக் கூத்தனென்றும்" என்று ஏட்டிற்கண்ட பழைய பாடம் ஒட்டக்கூத்தர் காழியிலிருந்தமையைப் புலப்படுத்துகின்றது.
----------
[*] வைரவமூர்த்தியாகிய சட்டைநாதருடைய திருக்கோயிலும் தோணியப்பராகிய உமாபாகர் சந்நிதியும் சீகாழிப் பிரமபுரேசர் திருத்தளியில் தனித்தனியே மிக்கசிறப்புடன் அமைந்திருத்தல் யாவருக்கும் தெரிந்ததே. [#] இதிலுள்ள எண்ணிடைச் சொல்லும் எண்ணும்மையும் காளியென்ற பாடத்தினும் காழியென்ற பாடம் சிறந்ததென்பதை விளக்குகின்றன.
--------

காலத்தால் முந்திய கலிங்கத்துப் பரணியினின்றும் வேறுபட்டுள்ள இதன் அமைப்பைப் பார்க்கையில் அப்பரணிக்கு முன்னரே சில பரணிகள் இருந்திருக்க வேண்டுமென்றும் அவற்றின் வழியையும், "பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி" என்பதையும் பின்பற்றி இந்நூல் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்றும் தோற்றுகின்றன.

இந்நூல் வைரவக்கடவுள் காப்பை முதலிற் பெற்றுக் கடவுள் வாழ்த்து முதல் வாழ்த்து ஈறாகவுள்ள பதினோருறுப்புக்களால் முடிகின்றது; அவற்றுள்,

(1) கடவுள் வாழ்த்தில் நூலாசிரியர் முதலில் உமாபாகரையும் பின்பு முறையே விநாயகக்கடவுள் முருகக்கடவுள் ஆளுடைய பிள்ளையாரென்பவர்களையும் சோழனுக்கு வெற்றியுண்டாக வேண்டுமென்று வாழ்த்தி ஒன்பதாந்தாழிசையிற் பொதுவியல் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

(2) கடைதிறப்பில் வீரபத்திரதேவருடைய வெற்றியைப் பாடுதற்குப் பலவகை மகளிரைக் கதவு திறக்கும்படி விளித்தல் கூறப்படுகின்றது; அம்மகளிராவார் தேவியின் அடியார்களாகிய பெண்கள், தேவமங்கையர், உருத்திரகணிகையர், இராசராசபுரத்து வீதிமாதர், அங்கே வந்து குடிபுகுந்த மகளிர், வித்தியாதர மகளிர், நீரரமகளிர், நாககன்னியர், சக்கரவாளம் பொதியில் மேரு இமயம் உதயகிரி யென்பவற்றிலுள்ள அரமகளிரென்பவர்கள். இப்பகுதியால் தேவி, இராசராசபுரீசர், அகத்தியர், தெய்வமகளிர், சோழவரசன் முதலியவர்களுடைய பெருமையும், நதிகள் மேரு முதலியவற்றின் உயர்வும் புலப்படுகின்றன. இதன் ஈற்றிலுள்ள நான்கு தாழிசைகளால் தக்கயாக சங்காரத்தில் தேவர்கள் தோற்ற செய்தியைப் பாடுவதற்காகக் கடைதிறமினென்று கூறுமுகத்தால் கடைதிறப்பு இத்தன்மையதென்பதை ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

(3) காடுபாடியதில் தேவி கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் பாலைவனத்தின் வெம்மை, வாமமார்க்கத்தாருடைய செயல்கள், காளியின் கோயிலைச் சூழ்ந்த சோலைகளின் பெருமை, யோகினிகள் முதலியோருடைய பெருமை, பைரவர்களின் செயல்கள் முதலியன கூறப்படுகின்றன.

(4) தேவியைப் பாடியதில் காளியின் பெருமையும் பூசைக்குரிய திரவியங்களும் விரித்துச் சொல்லப்படுகின்றன.

(5), பேய்களைப்பாடியதில் பேய்களின் உருவவருணனையும் அவற்றின் பசிமிகுதியும் விளங்கக் கூறப்படுகின்றன.

(6) கோயிலைப் பாடியதில் காளிக்குரியனவாகிய கோயில், ஆலமரம், ஆதிசேடன், பஞ்சாயுதங்கள் முதலியவற்றின் பெருமைகள் முதலிற் பாராட்டப்படுகின்றன. பின்பு காளி நாமகளை விளித்து முருகக்கடவுள் ஆளுடையபிள்ளையாராகி வந்து சமணரை வாதில் வென்ற கதையைக் கூறும்படி கட்டளையிட அவ்வாறே கலைமகள் கூறுவதாக ஆளுடையபிள்ளையாருடைய சரித்திரப் பகுதி கூறப்படுகின்றது. ஆசிரியர் இங்கே கூறியுள்ள கதையின் சுருக்கம் வருமாறு:-

ஆளுடையபிள்ளையார் மதுரையையடைந்து மதிற்புறத்தே ஒருமடத்தில் எழுந்தருளியிருந்தார். அதனையறிந்த சமணர்கள் அம்மடத்தில் தீவைப்ப, அவர் பாண்டியனை வெதுப்புமாறு அத்தீயை ஏவினார். அக்கனல் வெப்புநோயாகப் பாண்டியனைச் சார்ந்து வருத்தியது; சமணர்கள் தங்கள் மந்திரயந்திரங்களைக்கொண்டு நீக்க மிகமுயன்றும் தணியாமல் அது மிகுவதாயிற்று; அதனைக்கண்டு அஞ்சிய மங்கையர்க்கரசியார் மந்திரியாரை அனுப்ப, அவர் பிள்ளையார்பாற்சென்று அரசன் படுந்துன்பத்தை விண்ணப்பித்தலும் அவர் உடனே அரண்மனைக்கு எழுந்தருளக் கண்ட மங்கையர்க்கரசியார் வணங்கி முறையிட அவர் அஞ்சற்கவென்று கூறிப் பாண்டியனுக்கு அருகிலிடப்பட்ட பீடத்தில் வீற்றிருந்தனர். அதுகண்டு பொறாமைகொண்ட சமணர், “விரோதியாகிய சோழனது நாட்டிலுள்ள ஓர் அந்தணச்சிறுவன் இங்கேவந்து எங்கள் பாண்டியனைத் தொடலாமோ? எங்களால் நீக்கமுடியாத வெப்பு நோயை இவன் நீக்குவானோ!" என்று இகழ்ந்துபேசினர்; குலச்சிறையார் சமணரைச் சும்மா இருக்கச் செய்துவிட்டுத் திருநீறிட்டுப் பாண்டியனது வெப்பை நீக்கியருளும்படி வேண்டினர்; பிள்ளையார் அவ்வாறே செய்தருள வெப்புநீங்கிய பாண்டியன் எழுந்து வியந்து அவரை வணங்கினன்.

அந்நிகழ்ச்சியைக் கண்ட சமணர் சினந்து, "எங்களால் நீக்கப்படாத வெப்புநோயை இச்சிறுவன்றான் நீக்கினனோ? நாங்கள் ஒன்றும் செய்யவில்லையோ? எதுபற்றி இவனைப் பணிந்து அரசன் நீறணிந்தனன்?" என்று கூறப் பாண்டியன், “இவர் எளியரோ? உங்கள் கோபத்தை விடுமின்; நீங்கள் தொடத்தொட வெப்பு மிகுந்த என்னுடல் இவர் தொடத் தொடக் குளிர்ந்தது" என்றான். உடனே சமணரெண்ணாயிரவரும், "அரச, நீ ஒரு பிரமசாரியின் நீற்றால் உய்ந்ததாகக் கூறுவாயேல் இனி இருவேமுடைய மந்திரயந்திரங்களின் ஆற்றல்களையும் நீராலும் நெருப்பாலும் அறியலாம்; மந்திரங்களெழுதப் பெற்ற ஏடுகளைத் தீயிலிடும்போதும் வைகைநீரிலிடும்போதும் முறையே எரிந்துபோகாதனவும் எதிரோடுவனவுமாகியவற்றை உடையாரே வென்றவராவர்; தோற்பவரைக் கழுவில் ஏற்றுக" என்று சொல்லி வஞ்சினமுங் கூறினர்.

அவர்களுடைய கூற்றைக் கேட்ட மங்கையர்க்கரசியார் மிக அஞ்சிப் பிள்ளையாரைநோக்கி, "ஸ்வாமீ! இவர்கள் மந்திரவாத சத்தியாற் பல பெருங்காரியங்களை முன்பு செய்திருக்கின்றனர்; இவர்களோடு வாதஞ்செய்யாமல் சீகாழிக்கு எழுந்தருள்க" எனவேண்டித் தடுக்கவே பிள்ளையார், "கவலாதொழிக; திருவருளால் வெற்றி யுண்டாகும்" என்றனர்; சமணர்கள் வீரம்பேசினர்; பின்னர் அவ்விருதிறத்தாரும் ஏடுகளை நெருப்பிலும் வைகைநீரிலுமிட்டனர்; சமணர் நெருப்பிலிட்ட ஏடுகள் எரிந்து கரிந்து போயின; வைகைநீரிலிட்டவை கடலிற் புகுந்தன; பிள்ளையார் அவற்றிலிட்ட ஏடுகள் முறையே வேவாமற் பசுமையுற்றும் ஆற்றை எதிர்த்துச் சென்றும் விளங்கின. இந் நிகழ்ச்சியைக் கண்ட யாவரும் மகிழ்ந்து ஆரவாரித்தனர்.

அப்பாற் பிள்ளையார் பாண்டியனுடைய உடம்பில் திருக்கையை வைத்தவுடன் அவனுக்கு இருந்த கூன்நீங்கி உடம்பு பொன்னிறம் பெற்றது. பின்பு சமணர்களை அரசன் கழுவேற்றப் புகுகையில், "ஈது ஆகாது" என்று பிள்ளையார் விலக்கியருளச் சமணர் தாம் கூறிய சபதம் தவறலாகாதென்றுசொல்லி வலிந்து தாமே கழுவிலேறினர்; பிறகு பிள்ளையார் சீகாழிக்கு எழுந்தருளினர்.

இக்கதையைக் கூறிய நாமகளைத் தன்முன் இருக்கும்படி துர்க்காபரமேசுவரி அருளினளென்னு முகத்தால் நாமகளின் பெருமையையும் தமக்கு நாமகள்பாலுள்ள அன்பையும் ஆசிரியர் புலப்படுத்தியிருக்கிறார்.

(7) [*]பேய் முறைப்பாட்டில் நாமகளுக்கு அருள்கூர்ந்து உவகையுடன் காளி இருத்தலைக்கண்ட பேய்கள் தம்முடைய குறைகளைக் கூறி முறையிடுதற்கு அதுதான் நல்ல சமயமென்றெண்ணிப் புகுந்து நின்று, “அம்மே, உணவளிப்ப வாய்த்த சமயங்களிலெல்லாம் உன்னுடைய கணவர் எங்களை ஏமாற்றிவிட்டனர்; நீ வேண்டிய பொருள்களை உன்பிள்ளைகளுக்குமட்டும் தடையின்றி அவ்வப்பொழுது அருளுகின்றாய். பண்டைக்காலத்தில் நடந்த பெரும் போரில் யாங்கள் பசிதீரவுண்டு வாழ்ந்தோம்; பின்னர்ப் பசியால் வருந்திப் புலர்ந்தோம்" என்று முறையிட்டுத் தாம்கண்ட கனாக்களைக் கூறிக்கொண்டிருக்கையில், தக்கன் யாகத்தை அழித்தற்குப் படைபோன பூதகணங்களோடு முன்பு சென்றிருந்த பேயொன்று ஓடிவந்து, 'பசி மிக்க பேய்கள் என்பின் விரைந்து வருக" என்றுரைத்துவிட்டு மீண்டு உணவின் நசையால் யாகசாலைக்கு மிக விரைந்தோடக் காளி அதனைப் பிடித்துவரச்செய்து தேவர்கள் தக்கன்யாகத்தில் அழிந்த வரலாற்றைக் கூறும்படி கட்டளையிட அவ்வாறே அது சொல்லத் தொடங்கியதென்பது கூறப்படுகின்றது.
-------
[*] "வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற, பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத், துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்கு" (பெரும்பாண். [௪௫௭-௯] 457-9) என்பதனாலும், 'காடுகெழுசெல்விக்குப் பேய் கூறும் அல்லல்போல வழக்கினுள்ளார் கூறுவன' (தொல். மெய். சூ. [௧௨-] 12- பேர்.) என்பதனாலும் பேய்கள் காளியிடத்து முறையிடும் வழக்குண்மை அறியலாகும்.
-----

(8) காளிக்கக் கூளிகூறியதில் தக்கன் சிவபெருமானை மதியாமல் வேதவிதிக்கு மாறாக யாகஞ் செய்யத் தொடங்கியதும், அதற்குவந்த தாக்ஷாயணி தக்கன் முதலியோரால் அவமதிக்கப்பெற்றதும் தேவி சினந்துசென்றதும் அது தெரிந்த சிவபெருமான் வீரபத்திரக்கடவுளை வருவித்து அவ்வேள்வியை அழிக்கும்படி அனுப்பியதும், அவர் அங்ஙனமே பூதகணங்களுடன் சென்று தக்கனுக்கு உதவிசெய்வதற்கு வந்த தேவர்களுடன் போர்செய்து கொன்று யாகத்தைச் சிதைத்ததும், இறந்ததேவர்கள் பேயானதும் மிக விரிவாகக் கூறப்படுகின்றன.

(9) கூழடுதலும் இடுதலும்:- இப்பகுதியில் கதையைக்கேட்ட காளி யாகசாலைசென்று கூழடும்படி பேய்களுக்குக் கட்டளையிடுதலும், அவ்வாறே பேய்கள் அக்களத்தில் இறந்தவர்களுடைய தசைமுதலியவற்றைக் கொண்டு கூழ்சமைத்துக் காளிக்குப் படைத்துப் பிறபேய்களுக்கு இட்டுத் தாமும் உண்ணுதலும், பின்புகளித்து இரண்டாம் இராசராசனுடைய முன்னோர்களையும் அவனையும் வாழ்த்துதலும் கூறப்படுகின்றன.

(10) களங்காட்டலில் சிவபெருமான் அம்பிகையோடுமெழுந்தருளிப் போர்க்களத்திருந்த பேய்களைச் சுட்டிக்காட்டி இவற்றுள் இறந்த இன்ன தேவர் இன்னபேயாக ஆயினரென்று புலப்படுத்தத் தேவி அவர்கள்பால் தான்கொண்டிருந்த முனிவாறியதன்றிச் சினம் தணிந்தருள வேண்டுமென்று சிவபெருமானை வேண்டுதலும், அவர் இரங்கித் தம்மை இகழ்ந்த தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையையும் உயிரையும் ஏனை வானவர்களுக்கு உயிரையும் உரியபதவிகளையும் அளித்தருளுதலும், அவர்கள் அவற்றைப்பெற்று வலம் வந்து வணங்கி வீரபத்திரதேவரைவாழ்த்தித் தத்தம் இடஞ் செல்லுதலும் கூறப்படுகின்றன.

(11) வாழ்த்து :- இதில் நூலாசிரியர் தம்மை ஆதரித்தவர்களுள் ஒருவனும் இந்நூலைச் செய்வித்தோனுமாகிய இராசராச சோழனையும் பிறரையும் வாழ்த்துதல் காணப்படுகின்றது. இப்பகுதியின் ஈற்றிலுள்ள மூன்று தாழிசைகளால் உறையூரையும் காவிரியையும் திருமகள் கலைமகள் முதலியோரையும் தமிழையும்
ஆசிரியர் வாழ்த்துகின்றார்.

மகாபுராணங்களிலும் வேறு நூல்களிலும் கூறப்பட்டிருக்கும் தக்கயாகசங்காரக்கதையினின்றும் இதிலுள்ள கதைப்போக்கு வேறுபட்டிருத்தலின் இந்த முறைக்கு ஆதாரமாக உள்ள முதல் நூல் இன்னதென்று இப்பொழுது விளங்கவில்லை.

ஆளுடையபிள்ளையார் சமணரை வாதில்வென்ற வரலாற்றிற் காணப்படுவனவாய் இதன்பாலுள்ள சில செய்திகள் பெரிய புராணத்திற் காணப்படவில்லை; இஃது ஆராய்ச்சி செய்யற்பாலது.

இப்பரணியிலுள்ள தாழிசைகள் [௮௧௫] 815; இவை உரைப்பிரதியில் உள்ளவை ; மூலமட்டுமுள்ள சுவடிகளில் அதிகமாக அங்கங்கே காணப்பட்ட [௪] 4- தாழிசைகள் உரைப்பிரதியிற் காணப்படாமையாலும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமின்றியும் பிழை மலிந்தும் இருந்தமையாலும் அவை இப்புத்தகத்தினிறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதனுரையாசிரியர் பெயர் தெரியவில்லை. ஆயினும் உரை யானது மிகப் பழையதாகக் காணப்படுவதன்றி இக்காலத்து வழங்காத அரிய சொற்களையும் சொற்றொடர்களையும் பல அரிய கருத்துக்களையும் மேற்கோள்களையும் தன்பாற் கொண்டு பொருள்களை அங்கங்கே நன்கு விளக்கிச் செல்லுதலின், இவ்வுரையாசிரியர் ஒட்டக்கூத்தருடைய மாணாக்கரோ அன்றி அவர்பால் இந்நூற் பொருளை முறையே நன்கு அறிந்து கொண்டவரோ வேறுயாரோவென்று நினைக்கப்படுகிறார். இக்காலத்துக் காணப்படாத தமிழ்நூல்களிலிருந்தும் பல வடநூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக்காட்டுதலால் இவர் ஒட்டக்கூத்தரைப்போலவே தமிழிலும் வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று தெரிகின்றது; தமிழில் இவருக்கு அபிமானமதிகமென்று உரையிலுள்ள சில குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

"அறுவர்தந் நூலு மறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி--மறுவரவின்
மாசா ரியனாய் மறுதலைச்சொன் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு" (ஏலாதி, 79)

என்பதிற் கூறப்படும் உரையாசிரியருக்குரிய இலக்கணங்கள் இவர்பால் நன்கமைந்துள்ளன. பல இயல்பினால் அடியார்க்குநல்லாரையொத்தும் சிலவகையால் அவருக்கு மேற்பட்டும் இவர் விளங்குகிறார். இவரைப்பற்றிய வேறு வரலாறுகளை இப்புத்தகத்தில் உரையாசிரியர் வரலாறு என்னும் பகுதியிற் கண்டுகொள்க.

இவ்வுரை ஒரே படித்தாக இராமற் சில இடங்களிற் சுருங்கியும் சில இடங்களில் விரிந்தும் சில இடங்களில் தொடர்ச்சியின்றியு மிருத்தலைப் பார்க்கையில், இது பின்பு விரிவாக எழுதக்கருதி முற்பட உரையாசிரியர் குறித்த குறிப்போவென்று எண்ணும்படிக்கும் செய்தது.

கிடைத்த பிரதியில் ஓரிடத்திலிருக்கவேண்டிய சொற்களும் வாக்கியங்களும் வேறிடத்திலெழுதப்பட்டும் அறிந்து கொள்ளக்கூடாத நிலையில் மிகப் பிழைபட்டும் பூர்த்தியாக வாக்கியங்கள் எழுதப்படாமலும் சில சொற்களும் வாக்கியங்களும் கிரந்தலிபியிற் பிழையாக எழுதப்பட்டும் எழுத்துக்கள் மாறியுமிருந்தமையாலும் சுவடியிலுள்ள ஏடுகள் சிலவிடங்களில் தேய்வுற்றும் முறிந்தும் எழுத்துக்களின் உருவங்கள் புலப்படாமலும் இராமபாணங்கள் ஊடுருவிச் செல்லப்பட்டும் இருந்தமையாலும் இந்நூலைப் பரிசோதனை செய்வது மிக்க வருத்தத்தை விளைவித்தது. ஆனாலும் இந்தப் பிரதி இல்லையேல் இப்பரணியின் ஒழுங்கான பொருளையும் பிற விசேடங்களையும் காணுதல் அருமையிலும் அருமையாகும்.

இற்றைக்கு நாற்பத்துநான்கு வருடங்களுக்குமுன் பத்துப்பாட்டுப் பிரதியைத் தேடுதற்கு யான் சென்றபோது திருக்கைலாயபரம்பரைத் தருமபுர ஆதீனமடத்துப் புத்தகசாலையிலுள்ள பல புத்தகங்களுள் இவ்வுரைப்பிரதியைப் பார்த்துவிட்டு வந்தேன். அப்பாற் சில மாதங்களுக்குப் பின்பு என் வேண்டுகோளுக்கிணங்கி அப்போது [௸] மேற்படி ஆதீனத்தின் தலைவர்களாக விளங்கிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகரவர்கள் என் நண்பர்கள் முகமாக [௸] மேற்படி பிரதியைக் கொடுத்தனுப்பி யுதவினார்கள். அவர்கள் செய்த இப்பேருதவிக்குச் செய்தற்குரிய கைம்மாறு யாதுளது?

பின்பு சென்னைத் தங்கசாலைத் தெருவிலிருந்த திருத்தணிகைச் சரவணப் பெருமாளையருடைய பரம்பரையினராகிய குருசாமி ஐயரென்பவருடைய வீட்டிலிருந்த சுவடிகளில் இவ்வுரைப் பிரதியின் சில பகுதிகள் காணப்பட்டன. அவற்றைப் பார்த்து ஒப்புநோக்கிக் கொண்டேன். அதுவும் பிழைமலிந்த பிரதியே. அவ்வுரைப் பிரதியின் எஞ்சிய பகுதிகளைப்பற்றி அவரை விசாரிக்கையில் ஒருவரிடம் கொடுத்ததாகச் சொல்ல அவரைத் தேடிப்பிடித்துக் கேட்குங்கால் அவர் மற்றொருவரைச் சுட்ட அன்னவரும் அவ்வாறே செய்ய இவ்வாறே பலரிடம் சென்று கேட்டும் அம்முயற்சி பயனிலதாயிற்று.

சென்னைக்கு நான் வந்தபிறகு ஒருநாள் பிற்பகலிற் சில அன்பர்களுடன் கடற்கரைக்குச் சென்ற பொழுது ஒரன்பர் பக்கிங்ஹாம்கால்வாய் ஓரத்திற் கிடந்தனவென்று எழுதப்பட்ட பல ஒற்றையேடுகளைக் கொணர்ந்து கொடுத்தனர். அவற்றை வாங்கிவந்து சோதித்தபோது இந்நூலின் இரண்டு ஒற்றையேடுகளே கிடைத்தன. படித்துப் பார்க்கையில் கோயில் பாடியதில் ஆளுடையபிள்ளையார் கதையைக் கூறும்பகுதியிற் சில தாழிசைகளும் அவற்றினுரையுமே பிழைகளுடன் காணப்பட்டன. அவற்றையும் வைத்து ஒப்புநோக்கிக் கொண்டேன்.

பின்பு கிடைத்த சில மூலப்பிரதிகளும் ஒப்பு நோக்கப்பட்டன. உரைப்பிரதியிற் சில இடங்களில் உரைக்குமாறாக மூலங்களிருந்தன; சில இடங்ளில் உரைக்குரிய தாழிசைகள் காணப்படவில்லை. இவ்விருவகைக் குறைகளையும் மூலமட்டுமுள்ள பிரதிகள் நீக்கியுதவின.

இந்நூற்றாழிசைகள் குறட்டாழிசை யென்றும் இந்நூலின் பெயர் வீரபத்திரப்பரணி யென்றும் சில மூலப்பிரதிகளிற் காணப்பட்டன.

இந்த உரைப்பிரதி கிடைத்ததுமுதல் இதுகாறும் செல்லுமிடங்களிலெல்லாம் தேடிப் பார்த்தும் உரையுள்ள பிரதியாக வேறொன்றும் கிடைக்கவில்லை. சொன்னால் என் மனங்கனியுமென்று பல உரைப்பிரதிகளை வருவித்துக் கொடுப்பதாகக் கூறித் தங்கள் காரியத்தைமட்டும் நிறைவேற்றிக் கொண்டு சென்ற புண்ணியவான்கள் சிலர்.

கிடைத்த பூர்த்தியான கையெழுத்துப் பிரதிகள் :
(உரைப்பிரதி)

தருமபுர ஆதீனத்துப்பிரதி -1 (மூலப்பிரதி)
காஞ்சீபுரம் ஸ்ரீ கங்காதர முதலியார் தந்த பிரதி -1.
சீகாழி ஸ்ரீ சிதம்பர வாத்தியார் தந்த பிரதி -1
சிதம்பரம் ஸ்ரீ தில்லைநாயக முதலியார் தந்த பிரதி -1
சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைப் பிரதி -1

இந்நூலும் உரையும் மிகப் பிழைப்பட்டுக் காணப்பட்டமையாலும் வேறு நல்ல பிரதிகள் அகப்படாமையாலும் எழுதுவோரால் நேர்ந்த பிழைகள் இன்னவையென்று நிச்சயமாகத் தெரிந்தவற்றைமட்டும் திருத்தியமைத்தும் அங்ஙனம் நிச்சயிக்க முடியாதவற்றை வேறு பிரதி கிடைத்தால் செப்பஞ்செய்துகொள்ளலாமெனவெண்ணி அங்ஙனமே அமைத்தும் பதிப்பிக்கப்பெற்றன. விளங்காத மேற்கோள்களின் ஆகரங்களை விளக்கியும் கடினமான விஷயங்களை அடிக்குறிப்பாற் புலப்படுத்தியும் மூலத்திலும் உரையிலும் கடினமாகவுள்ள பகுதிகளை இயன்றவரையில் விளக்கிப் பழைய நூல்களிலும் பிற்காலத்து நூல்களிலும் இந்நூலோடு ஒத்துள்ள பகுதிகளை எடுத்துக்காட்டி எழுதுவித்த விசேடக்குறிப்பையும் அரும்பதமுதலியவற்றின் அகராதியையும் பாடபேதத்தையும் உரையிற்கண்ட இலக்கண விசேடங்களையும் விளங்கா மேற்கோளகராதியையும் பிறவற்றையும் வழக்கம்போ லவே சேர்த்தும் இப்புத்தகத்தை வெளியிடலானேன். இவை வித்தியாவிநோதர்களுக்கு மிகப் பயன்படுமென்று எண்ணுகிறேன்.

இதனால் தெரியவருவனவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தனவுமாகிய முதல் இராசராசன் முதற்குலோத்துங்கன் விக்கிரமசோழன் முதலிய மூவர் நம்பிப்பிள்ளை முதலியோர்களின் சரித்திரப் பகுதிகளும், அவர்கள் பகைவரை வென்று நாடுகாத்தமையும், ஸ்ரீ சிதம்பரம் முதலிய ஸ்தலங்களில் திருப்பணி செய்தமையும், பிறதருமங்கள் புரிந்தமையும், அவர் காலத்து நிகழ்ந்த பிறநிகழ்ச்சிகளும், சில சொற்பிரயோகங்களும், பிறவும் சிலாசாஸனங்களின் உதவியால் தெளியப்பெற்று வலியுறுவனவாயின.

இந்நால் ஆராயப்பெற்று வந்தகாலத்தும் பதிப்பிக்கப் பெற்று வந்தகாலத்தும் சென்னைச் சிலாசாஸன ஆபீஸிலுள்ள சில அறிக்கைகளும் புத்தகங்களும், சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப்புத்தகசாலையிலும் சென்னை ஸர்வகலாசாலைப் புத்தகசாலையிலும் உள்ள சில புத்தகங்களும் மிக்க உதவியாக இருந்தன.

ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதிகளாக விளங்கும் கும்பகோணம் ஜகத்குரு ஸ்ரீமத் சங்கராசாரிய ஸ்வாமிகளவர்களை யான் தரிசிக்குங் காலங்களிற் பழந்தமிழ் நூலாராய்ச்சியைப்பற்றிப் பெருங்கருணையுடன் விசாரிப்பதுண்டு. அது மிக்க ஊக்கத்தையும் தைரியத்தையும் எனக்கு அளித்து வருகின்றது.

அவ்வப்போது நிகழ்ந்த ஐயங்களை நீக்கிய மைஸூர் ஸர்வகலாசாலை, திராவிட பாஷா ஸபைத்தலைவரான ஸ்ரீமான் பிரகடன விமர்ச விசக்ஷண கர்னாடகாசார்ய வித்யாவைபவ ராவ்பகதூர், ஆர். நரசிம்மாசாரியரவர்களையும், பங்களூர்த் தண்டிலுள்ள தேவி உபாஸகராகிய பண்டிதர் பிரம்மஸ்ரீ ராமதாஸ சாஸ்திரிகளவர்களையும், சென்னையிலிருக்கும் ஸ்ரீனிவாஸநல்லூர் பிரம்மஸ்ரீ ராமசந்திர சாஸ்திரிகளவர்களையும் ஒருபொழுதும் மறவேன்.

திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்களும், திருப்பனந்தாட் காசிமடத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சொக்கலிங்கஸ்வாமிகளவர்களும், மதுரை அட்வோகேட் ஸ்ரீமான் டி. ஸி. ஸ்ரீனிவாஸையங்கார் M. L. C. அவர்களும், பெரும்பன்றியூர் ஸ்ரீமான் ஏ. எம் பெரியசாமி முத்தைய உடையாரவர்களும், கொழும்பு நகரத்துள்ள ஸ்ரீமான் டாக்டர் கு. ஸ்ரீகாந்த முதலியாரவர்களும் தமிழ்ப் பாஷையின்கண் உள்ள பேரபிமானத்தினால் நூற்பதிப்பு விஷயத்தில் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து தமிழை அன்புடன் ஆதரித்து வருவதை இது முகமாகத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்த நூலை ஆக்குவித்தோனாகிய இராசராசனுடைய செயல்களையும் ஒட்டக்கூத்தர் முதலிய தமிழ்ப் புலவர்களை அவன் ஆதரித்து விளங்கியதையும் நினைக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீஸேது ஸமஸ்தானாதிபதிகளும் தமிழ்ச்சுவையை நன்கறிந்து தமிழ்ப்புலவர்களை மிக்க அன்போடு ஆதரித்துவந்தவர்களுமான காலஞ்சென்ற மகாராஜராஜஸ்ரீ பா. இராஜராஜேஸ்வர ஸேதுபதி மகாராஜா அவர்களுடைய ஞாபகம் உண்டாகி மேன்மேலும் வருத்தியது. அவர்களுடைய செல்வப்புதல்வர்களும் இப்பொழுது ஸேது ஸமஸ்தானாதிபதிகளாக விளங்குபவர்களும் தந்தையாரவர்களைப் போலவே தமிழ்ச்சுவையையறிந்து இன்புறுபவர்களும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வருபவர்களும், " மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை, யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்" என்னும் பெரியார் வாக்கிற்கு இலக்கியமாக உள்ளவர்களுமாகிய கௌரவம் பொருந்திய மகாராஜராஜஸ்ரீ ஷண்முக ராஜேஸ்வர நாகநாத ஸேதுபதி மகாராஜா அவர்கள், நூற்பரிசோதனைக் காலத்தில் உடனிருந்து உதவிசெய்து வருபவர்கள் விஷயத்தில் நான் பொருட்கவலை யடையாதபடி வழக்கம்போலவே கவனித்து உதவிசெய்து வருதல் மிகப் போற்றற்பாலது.

என்னுடைய பதிப்புக்கள் வெளிவருவதை மிக்க ஆவலுடன் எதிர்நோக்கி அடிக்கடி உண்மை அன்பர்கள் கடிதம் எழுதி வருவது எனக்கு மிக்க ஊக்கத்தை விளைவிக்கின்றது.

இந்நூலைப் பரிசோதித்துப் பதிப்பித்துவருங் காலங்களில் உடனிருந்து எழுதுதல், ஆராய்தல், ஒப்பு நோக்குதல் முதலிய உதவிகளை அன்புடன் செய்தவர்கள் என் இளைய சகோதரர் சிரஞ்சீவி, வே. சுந்தரேச ஐயரும், சென்னை விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வித்வான், சிரஞ்சீவி, சு. கோதண்டராம ஐயரும், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வித்வான், சிரஞ்சீவி, வி. மு. சுப்பிரமணிய ஐயரும், மோகனூர் , தமிழ்ப் பண்டிதர், சிரஞ்சீவி, கி. வா. ஜகந்நாத ஐயரும் ஆவர். இவர்களுள் ஜகந்நாதையர் எடுத்துக்கொண்ட உழைப்பு பாராட்டத்தக்கது.

இப்புத்தகத்தில் எதிர்பாராத பிழைகள் பலகாரணங்களால் அங்கங்கே நேர்ந்திருத்தல் கூடும். அவற்றைப் பொறுத்துக்கொள்ளும்படி இதனைப்படிக்கும் அறிஞர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

என்னை இம்முயற்சியிற் புகுத்தி நடத்திப் பாதுகாத்தருளும் தோன்றாத் துணையை அனவரதமும் சிந்தித்து வந்திக்கின்றேன்.

திருவாசகம்.

"அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங்
குன்றே யனையா யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
வின்றோ ரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்க ணெம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே."

'தியாகராஜ விலாஸம் '       இங்ஙனம்
திருவேட்டீசுவரன் பேட்டை,       வே. சாமிநாதையர்.
20-1-1930.
------------

நூலாசிரியர் வரலாறு.

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

கன்றாடுங் கரதலத்துச் சிவகாமி யம்மை
      கண்டுகளித் திடத்தில்லைக் கடிநகரிற் கனக
மன்றாடுங் கூத்தனைப்போ லிருமொழிக்குந் தலைமை
      வாய்ந்துவிறற் புலவர்சிகா மணியாகி விளங்கி
என்றாடுங் குலத்தேவர் மூவர்வழி படவைந்
      தியற்றியிணை யிலியாகிச் சருவஞ்ஞ னாகி
நின்றாடும் புகழ்க்கூத்தன் கவிச்சக்ர வர்த்தி
      நேர்மையினை யெடுத்துரைக்கு நீர்மையன்கொல் யானே.

எண்ணுமிரு வேறுலகத் தியற்கையெனுங் குறளை
      யெதிர்மறுத்தே யிருபொருளு மொருங்குபெறுங் கூத்தன்
கண்ணுபல குணக்குன்றாம் வரராச ராசன்
      கரசிரகம் பிதஞ்செய்யக் கவிஞர்குழாங் களிப்பப்
பண்ணுமிரு மொழிச்சுவைக ணண்ணுதக்க யாகப்
      பாணியினைப் புகழ்ந்திடுகோ முரணிலதன் கண்ணே
அண்ணுசுவை பலவிளங்க வரியவுரை செய்த
      வாசிரியன் பெரும்புலமை பேசிடுகோ யானே.

இந்நூலாசிரியராகிய ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தரென்பது; இவர் கூத்தமுதலியாரென்றும் வழங்கப்படுவார். கூத்தரென்பது ஸ்ரீநடராசப் பெருமானுடைய திருநாமம். இவர் பிறந்த ஊர் மலரியென்பர்; "மலரி வருங்கூத்தன்" (தண்டி. மேற்.)

இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வடமொழி நூல்களிலும் மிகுந்த பயிற்சி வாய்ந்தவர். செய்யுள் இயற்றுமாற்றல் இவர்பால் மிகச் செவ்வனே அமைந்திருந்தது. வடமொழியிலுள்ள பலவகையான சொற்களையும் தொடர்மொழிகளையும் தாம் இயற்றும் செய்யுட்களில் உரிய இடங்களில் அமைத்துப்பாடுபவர். அவ்வாறமைப்பதில் இவருக்கு மிகுந்த ஊக்கமும் பிரீதியுமுண்டு. பல மாணாக்கர்கட்குப் பாடஞ்சொல்லும் இயல்பினர். சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்; கலைமகளையும் வழிபட்டுப் பேறு பெற்றவர். இவர் இன்னராதல் இவரியற்றிய நூல்களாலும் இந்நூலுரையாலும் விளங்கும்.

இவர் விக்கிரமசோழன் காலத்தில் அவனுடைய ஆஸ்தான பண்டிதராகவும், குலோத்துங்கனுக்கு வித்தியாகுருவாகவும், அவனுக்கும் அவன் குமாரன் இரண்டாம் இராசராசனுக்கும் ஆஸ்தான பண்டிதராகவும் இருந்து அவர்களுடைய அவைக்களத்தை அலங்கரித்துப் பல புலவர்களை ஆதரித்தும் பல நூல்களை இயற்றியும் இயற்றுவித்தும் விளங்கியவர். அக்காலத்தில் அம்மூவருள் ஒவ்வொருவர்மீதும் ஒவ்வோருலாவும் குலோத்துங்கசோழன்மீது ஒரு பிள்ளைத் தமிழும் இயற்றினார். இவரிடத்துப் பேரன்புற்ற அம்மூவருளொருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரைக்கண்ணதாகிய ஓரூரை அளித்தனன்; அஃது இவர் பெயராற் [*]கூத்தனூர் என்று இக்காலத்து வழங்கப்படுகிறது. இவர் கலைமகளுடைய திருவருள் பெற்றவராதலின், அவ்வூரில் அத்தேவியின் திருவுருவத்தைப் பிரதிஷ்டிப்பித்துக் கோயிலெடுப்பித்து வழிபட்டு வந்தனர். இஃது, "ஆற்றங்கரைச் சொற் கிழத்தி வாழியே” (தக்க. 813) என்பதனாலும் விளங்கும்; இத்திருக் கோயில் இன்றும் உளது.
- - - - -
[*] இது தஞ்சாவூர் ஜில்லாவில் பூந்தோட்டம் ரெயில்வேஸ்டேஷ னுக்குச் சமீபத்தில் உள்ளது.
-----

தன்மீது இவர் செய்த உலாவிலுள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் இயற்றும்படி விக்கிரமசோழன் சொல்ல அவ்வாறே விரைந்து பாடினமையால் இவர் ஒட்டக்கூத்தரென்னும் பெயர்பெற்றாரென்பர். இப்பெயருக்கு வேறு காரணங் கூறுவாருமுளர்.

விக்கிரமசோழன் இவருக்கு யானை காளம் முதலிய வரிசைகளை அளிக்க இவர், "இவ்விருதுகளைப் பெறுதற்கு யான் உரியேனல்லேன்" என்று, "பெருக்கத்து வேண்டும் பணிவு" என்பதற்கிணங்கத் தம்முடைய பணிவைத் தெரிவித்தனர்;
இவை பின்னுள்ள செய்யுட்களால் விளங்கும் :

[+] "இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்
      றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந்
திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்
      றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன
படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம்
      பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரங்
கடுக்கக் குண்டலங் கலிக்கச் சங்கினங்
      கவிக்குப் பஞ்சரங் கவிக்கத் தொங்கலே"

[+] "பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய் முடியப்
      பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடையே
மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால்
      வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா
முத்துப்பந் தரினிற்குங் குருளைக்குஞ் சினவேன்
      முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக்
கொத்தற்குஞ் சடிலக்குந் தளருக்கு மல்லாற்
      கூழைத்தண் டமிழுக்கேன் கொடியுங்கா ளமுமே."
-------
[+] தமிழ்நா. 118, 119.
-----

இராசராசனுலாவைப் பாடி அரங்கேற்றியபொழுது இவருக்கு அவ்வரசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஆயிரம் பொன் விழுக்காடு வழங்கினான். இது, "தெள்ளித்தம், முன்னா யகரிலவன் மூதுலாக் கண்ணிதொறும், பொன்னா யிரஞ்சொரிந்த பூபதியும்" (சங்கரசோழனுலா), "கூட, னராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக், கொராயிரம்பொ னீந்த வுலாவும்" (தமிழ்விடுதூது) என்பவற்றால் தெரிகின்றது.

இவரை ஆதரித்தவர்கள் மேற்கூறிய மூவரேயன்றி, திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள்நம்பி, காவிரிப்பூம்பட்டினத்திருந்த உபகாரிகளாகியவீரர் சிலர், புதுவைக்காங்கேயன், திரிபுவனச்சோமனென்னும் செல்வர்களுமென்று இந்நூலாலும் இதனுரையாலும் பிறவற்றாலும் விளங்குகின்றது.

இந்நூலின் இறுதியில், “ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே" என்று திருமகளை வாழ்த்தியிருத்தல் சோழர் முதலியோரால் நன்கு ஆதரிக்கப்பட்டு மேன்மேலும் செல்வம், புகழ், மதிப்பு இவற்றை மிகுதியாக அடைந்து யாதுங்கவலையின்றி இவர் வாழ்ந்து வந்தனரென்பதைப் புலப்படுத்துகின்றது.

இராசராச சோழன் (II) காலத்தில் முதுமைப் பிராயம் அடைந்திருந்த இவர் உடற்றளர்ச்சியுற்றிருந்தாரேனும் அறிவிற்றளர்ச்சியுறவில்லை. இவர் இயற்றிய மூவருலாவில் இராசராச சோழனுலா ஏனைய இரண்டிலும் அளவாலும் சுவையாலும் மிக்கிருத்தலும் இந்நூலமைப்பும் இதனை அறிவிக்கும்; "நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவி னுரைமூதாளன்" என்னும் மணிமேகலையடிகள் இங்கே ஞாபகத்திற்கு வருகின்றன.

இவர்காலத்திலிருந்த புலவர்கள் நம்பிகாளியார், நெற்தன்றவாண முதலியார் முதலியோர். கம்பரும் புகழேந்தியும் இவர்காலத்தில் இருந்தவரென்பது சிலர் கொள்கை; அதற்குத் தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இவர், "பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்ரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ் செய்த சோழன்றிருப்பெயர” (குலோத். பிள்ளை.) என்பதில் முதற்குலோத்துங்கன்மீது சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி இயற்றியதையெடுத்துக் கூறுதலால் பிறபுலவர்களைப் பாராட்டும் இவருடைய அரியகுணமும், சயங்கொண்டார்பால் இவர் கொண்ட மதிப்பும் விளங்கும்.

இவர் உலகஇயல்பைக் கடந்து வருணனைகளை அமைப்பதாற் கௌடப்புலவரெனப்படுவார். அவ்வாறமைப்பதை இந்நூலுள் 29, 37, 85-ஆம் தாழிசைகளாலும் பூதகணங்களின் செயல்களை விரித்துக் கூறும் பகுதி முதலியவற்றாலும் உணரலாகும். செய்யுள் செய்யும் ஆற்றலில் அக்காலத்துள்ள கவிகளுட் சிறந்து விளங்கினமையால் [1]கவிராக்ஷசனென்றும் [2]கவிச்சக்கரவர்த்திகளென்றும் [3]சக்கரவர்த்திகளென்றும், அரசனாற் காளம் என்னும் விருதுபெற்றமையால் [4]காளக்கவியென்றும் இருமொழி நூல்களுள்ளும் இன்றியமையாதனவற்றைச் செவ்வனே அறிந்து அறிந்தவற்றை நன்கு புலப்படுத்திச் செய்யுள் செய்யும் திறம் வாய்ந்திருந்தமையின் [5]சருவஞ்ஞகவி யென்றும் இவர் வழங்கப்படுவர்.
----
[1] சோழமண்டல சதகம், [௯௩] 93-மேற். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீகச்சியப்ப முனிவர் கவிராக்ஷஸனென்ற சிறப்புப்பெயர் வாய்ந்திருந்தவரென்பது கர்ணபரம்பரைச் செய்தி.
[2] தக்க. 813 - 4 மூலங்கள்; 536, 776 - உரைகள்.
[3] தக்க. 457 - உரை.
[4] தக்க. 70 - உரை; விசேடக் குறிப்பு.
[5] தக்க. 433 - உரை.
-----

இவர் தேவியைப்பற்றிக் கூறுவனவெல்லாம் பெரும்பாலும் யாமள சாஸ்திரக் கருத்துக்களைப் பின்பற்றியனவென்று தெரிவதால் இவருக்கு அந்நூல்களிற் பயிற்சியுண்டென்றும் சைனமுதலிய பிற சமயங்களைப்பற்றிய செய்திகளையும் பரிபாஷைகளையும் எடுத்தாளுதலின் அச்சமயநூல்களை யறிந்தவரென்றும் சொல்லலாம்.

இவர் செய்த வேறு நூல்கள் :-
காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், ஈட்டியெழுபது முதலியன. அன்றியும் இவர் அவ்வப்பொழுது செய்தனவாகச் சில செய்யுட்கள் தமிழ்நாவலர் சரிதை முதலியவற்றிற் காணப்படுகின்றன. இந்நூலில் 776-ஆம் தாழிசை உரையினால், விக்கிரமசோழன்மீது கலிங்கவெற்றியைக் குறித்து ஒரு பரணி இவராற் பாடப்பட்டதென்று தெரிகின்றது; இந்நூல் 13-ஆம் தாழிசை உரையில் உரையாசிரியர், " என்றார் தாமே " என்று குறிப்பித்துக் காட்டிய, "முத்தின் கனங்குழையை யுங்குமிழை யுங்கதுவி முட்டுங் கருங்கயல்க ளின்கடை யடங்குவன" என்பதும், சிலப்பதிகாரவுரையில் அடியார்க்குநல்லார் காட்டிய மேற்கோள்களுள் பரணித்தாழிசைகளாகக் காணப்படும், "மோடிமுன் றலையை வைப்ப ரேமுடி குலைந்தகுஞ்சியை முடிப்பரே, ஆடி நின்று குரு திப்பு துத்திலத மம்முகத்தினி லமைப்பரே", "மண்ணி னாளற வறுத்ததங்கடலை வைத்தபீடிகை வலங்கொள, விண்ணி னாயகிதன் யாக சாலைதொறு மீளவுஞ்சிலர் மிறைப்பரே" என்பவைகளும் அப்பரணியிலுள்ளன போலும்.

"சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே, நின்றளவிலின்ப நிறைப்பவற்றுள் - ஒன்று, மலரிவருங் கூந்தலார் மாதர்நோக்கொன்று, மலரிவருங் கூத்தன்றன் வாக்கு" என்ற தண்டியலங்கார மேற்கோட்செய்யுளால் இவர் வாக்குநயத்தை அக்காலத்தார் நன்குமதித்திருந்தாரென்பதும் இவரால் ஆதரிக்கப்பெற்ற புலவர்களுள் தண்டியலங்கார மேற்கோளாசிரியரும் ஒருவரென்பதும் விளங்குகின்றன.

இந்நூலிலும் இவரியற்றிய வேறு நூல்களிலும் அமைந்துள்ள பிரயோகங்களை உற்று நோக்குகையில் இவர் சைவத்தில் மிக்க பற்றுடையவரென்பது தெளிவாகும்.

துர்க்காபரமேசுவரி கலைமகளை நோக்கி ஆளுடையபிள்ளையார் கதையைச் சொல்லும்படி கட்டளையிட்டு, அங்ஙனமே சொல்லிய கலைமகளை மனமுவந்து தன் அருகில் வீற்றிருக்கும்படி அருளிச்செய்ததாகக் கூறியிருப்பதும், தக்கயாக சங்காரத்தைக் கூறும் ஏனைய நூல்களில் வீரபத்திரதேவர் கலைமகளுடைய நாசியை அரிந்ததாகக் காணப்படும் செய்தியைக் கூறாதொழிந்ததும், வாழ்த்தில், "ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே" என்று பாராட்டியிருப்பதும் இவருக்குக் கலைமகள் பாலுள்ள பேரன்பைப் புலப்படுத்துகின்றன.
இவர் தமிழ்ப்பரமாசாரியராகிய அகத்தியரிடத்து மிக்க பக்தி உடையவர்; 40, 233, 624-ஆம் தாழிசைகளைப் பார்க்க. இருமொழியிலும் நல்ல பயிற்சியுடையவராயிருப்பினும் வீரபத்திரதேவர் போர்க்கோலங்கொண்டெழுந்த காலத்தில் தும்பைமாலையை அணிந்து கொண்டதாகக் கூறப்புகுந்த இவர், "பொதியில் வாழ்முனி புங்கவன்றிரு வாய்மலர்ந்த புராணநூல், விதியினால்வரு தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே" என்று கூறியதாலும், அகத்திய முனிவரை, "ஒரு தமிழ் முனிவரன்" என்றும், பொதியின்மலையை, "தமிழ்க்குன்று", "தமிழ்ப் பொதியில்" என்றும் சொல்லியதாலும், "கோக்குந் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே", "வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை, வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும், வாழி திசைக்கப் புறத்து நாற்கவி" என்று வாழ்த்தியதாலும் தமிழ்மொழியிலும் அதன் வளர்ச்சியிலும் இவர் அதிக அபிமானம் உடையவரென்பது விளங்கும்.

கடவுள் வாழ்த்தில் திருஞானசம்பந்தமூர்த்தியை வாழ்த்தியிருத்தலாலும் அவர் கதையைக் கோயில் பாடியதிற் புகுத்தி விளங்கப் பாராட்டியிருத்தலாலும் பிறவற்றாலும் இவருக்கு அவரிடத்திருந்த சிறந்த பக்தி வெளியாகின்றது.

இவர் நன்றியறிவிற் சிறந்தவர்; இந்நூலில், பொதுவாகச் சோழர்களைச் சிறப்பித்தும் சிறப்பாகத் தம்மை ஆதரித்த சோழர்களைப் பலப்படப் பாராட்டியும் காவிரிப்பூம்பட்டினத்திருந்த உபகாரிகளையும் பல்லவராயனென்று பட்டம் பெற்ற நம்பிப்பிள்ளையையும் நல்ல சந்தர்ப்பத்திலெடுத்துச் சிறப்பித்துமிருப்பதால் இது தெளிவாகும்.

போர்செய்யச்சென்ற வீரபத்திரதேவர் காஞ்சியில் சிவபெருமானுக்கு நீழல்செய்யும் மாமரத்தின் பல்லவத்தை (தளிரை) அணிந்தனரென்று கூறியிருத்தலால் காஞ்சீபுரத்தில் இவருக்கிருந்த பேரன்பு விளங்கும்.

இவருடைய வாலாறுகளைத் தனிப்புத்தக ரூபமாகவும் வேறு வேறாகவும் பலர் வெளியிட்டிருத்தலால் அவற்றை விரித்தெழுதாமல் இன்றியமையாத சில வரலாறுகளும் இந்நூலாலறியப்பட்ட செய்திகளுமே இங்குத் தெரிவிக்கப்பட்டன.
-------------

நூலாராய்ச்சி.

I. மற்றப் பரணிகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள்:

(1) மற்றப் பரணிகளைப்போலப் பாட்டுடைத்தலைவனுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்று வாழ்த்தாமல் ஆக்குவித்தோனுக்கு நன்மை உண்டாகும்படி தெய்வங்களை வாழ்த்தியிருத்தல்.
(2) உமாபாகர், விநாயகர், முருகக்கடவுள், திருஞானசம்பந்தரென்னும் இவர்களை மட்டும் வாழ்த்தியிருத்தல்.
(3) நூலுறுப்புக்களின் பிறழ்ச்சி.
(4) காடுபாடியது முதலியவற்றில் யாமளநூலின் முறைப்படி வருணித்திருத்தல்.
(5) சைவத்தின் ஏற்றம் புலப்படும்படி திருஞானசம்பந்தர் சைனரை வென்ற கதையைத் தேவிக்கு நாமகள் கூறியது முகமாகப் புதிதாக விளங்கக் கூறியிருத்தல்.
(6) கூழடுதலென்னும் உறுப்பிற் பேய்கள் கூழையாக்கிக் குடித்துப் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தாமல் இந்நூலை ஆக்குவித்த இராசராச சோழனையும் அவன் முன்னோர்களையும் அவர்களுடைய நற்செய்கைகளையும் வாழ்த்துதலைக் கூறியிருத்தல்.
(7) களங்காட்டுதலிற் காளி பேய்களுக்குக் களங்காட்டியதாகக் கூறியது போலன்றிக் கதைத் தொடர்பு புலப்படத் தேவிக்குச் சிவபெருமான் காட்டியதாகக் கூறியிருத்தல்.
(8) ஆக்குவித்தோனிடத்துள்ள பேரன்பால் அவனைத் தனியே இறுதியில் வாழ்த்தியிருத்தல்.

II. சரித்திர சம்பந்தமான விஷயங்கள்:

இராசகம்பீரன் (இரண்டாம் இராசராசன்) பிரட்டனைவென்று இரட்டனுக்குப் பட்டங்கட்டியது, இராசராசபுரி பல அரசர்களாற் காக்கப்படுதல், இராசராசன் (II) தில்லைத்தலத்தில் தேர் அமைத்தது, அவன் பாண்டியரை வெல்லப் படைவிடுத்தது, அவன் மலையை வெட்டிப் பொன்னிக்கு வழிகண்டது, அவன் வஞ்சியில் வாகை புனைந்தது, ஒரு பாண்டியன்கை பொன்னானது, காவிரிப்பூம்பட்டினத்தார் கட்டரணம் வல்லவனை நடைகொண்டது, குலோத்துங்கன் (II) (தில்லையில்) ஏழ்நிலைக் கோபுரம் வகுத்தது, அவன் கோயிலுக்கு ஆனிரையையும் யானைகளையும் வழங்கியது, அவன் தில்லைமன்றிற்கு இடங்கண்டது, அவன் தில்லையில் மண்டபங்களமைத்தது, அவன் தில்லையிற் கற்பகம் வைத்தது, அவன் மகோதைமேற் சென்றது, அவன் மதுரைமேற் சென்றது, அவன் (தில்லையில்) மறுகு வகுத்தது, சோழர் கருநடர் ஒளித்த விந்தவனத்தில் எரியிட்டது, சோழர் மலைகளிற் புலிவடிவம் பொறித்தது, தண்டகாபதியாகிய பல்லவராயன் (நம்பிப்பிள்ளை) சேரனைத் திறைகொண்டது, தெய்வப்பெருமாள் (முதல் இராசராசன்) இராசராசேசுவரம் சமைத்தது, பெரியபெருமாள் (குலோத்துங்கன் II) தில்லை வனத்திற் பீடிகையமைத்தது, முதற்குலோத்துங்கன் வேதத்தழிவு மாற்றிச் சுங்கந்தவிர்த்தது, விக்கிரமசோழன் கலிங்கரை வென்று தெய்வப்பரணி கொண்டது முதலியன.

III. இந்நூலாலறியப்படும் இந்நூலாசிரியர் கொள்கைகளிற் சில:

ஆளுடையபிள்ளையார் முருகக்கடவுளின் திருவவதாரம், சில வென்பதை இரண்டென்னும் பொருளில் வழங்குதல், சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் அக்கினி, சூரியன் ஏழுகுதிரைகளை யுடையான், தேவியே திருமால்.

IV. அரிய விஷயங்களிற் சில:

அகத்தியர் யாழ் வாசித்தலில் வல்லவர், ஆளுடையபிள்ளையார் பாண்டியனுடைய இருவகைக் கூனையும் நீக்கினர், இந்திரர்கள் விமானம் முப்பத்து நான்கு, இரத்தமழை பெய்யும் மேகமுண்மை, இருதயம் தாமரை மொட்டைப்போல் இருத்தல், ஈசானனது எருது மூப்புடையது, உலகத்தார் சூரியனை வணங்குதல், ஒருவகை நாகங்கள் யானைகளை யுண்ணல், ஒருவகைப் பாம்பின் கண்ணில் விஷமுண்மை, கருடலோகமென ஒன்றுண்மை, கருடன் இரண்டுருவங்களை ஒருங்கே உடைமை, காலன் வேறு யமன் வேறு, காவிரி வற்றாமை, காளியினடியவர்களும் அவர்கள் செயலும், கின்னர மிதுனங்கள் பாடும் வன்மையையுடையன, குபேரனுக்கு நானென்னும் யட்சன் வாகனம், குலச்சிறை நாயனார் அதிகாரி பெருநம்பி யென்னும் பட்டங்களுடைமை, கைலைமலை இமயமலையின் ஒருகுவடென்பது, கோலோகத்தின் இலக்கணம், சக்கரவாளகிரி பொன்னிறத்தது, சமணர் தாமே கழுவேறியது, சமணர் மந்திரவாதவித்தையிற்றேர்ந்தவர், சமணருடைய இலக்கணங்களுஞ் செயல்களும், சிவபெருமான் அண்டங்களைத் தாராக அணிந்தது, சிவபெருமானுடைய கங்கணமாகிய பாம்பு திருஷ்டிவிஷமென்பது, சூரன் ஒளித்திருந்த மலையையும் அவன் மார்பையும் ஒரே காலத்தில் ஊடுருவிச் செல்ல முருகக் கடவுள் வேல் விட்டது, தட்சகன் திருஷ்டிவிஷமென்பது, திருமால் புனலையே உடம்பாக உடையவர், திருமாலின் சார்ங்கம் மூங்கில், திருமாலின் வடிவு ஐந்து, துர்க்காபரமேசுவரி கோயில் வாயிலின் இருபுறத்தும் சங்கநிதி பதுமநிதி உண்மை, துர்க்காபரமேசுவரி முல்லை மாதவி கற்பகக் கொடிகளை வளர்த்தல், தெய்வஸ்திரீகள் பூங்கொடியைப் பிடித்து வருதல், தேவி இறைவன் மார்பிலிருத்தல், நட்சத்திரங்கள் இருபத்தெட்டு, பாசம் காலனுக்கும் தண்டு யமனுக்கும் ஆயுதங்கள், பிரமா அவதரித்தது திருமாலின் உந்திச் செந்தாமரையில், பின்பு அவர் தங்கியது வெண்டாமரையில், அவர் குறளை கூறியதால் தண்டனை யடைந்தது, புத்தன் வாளெறிந்த வாயினூடு பால் சுரந்தது, பூமியணுவினால் மணல் வந்தது, பேய்கள் யுத்தகளத்தில் உணவுபெறுதல், பைரவமதத்தினர் வெப்புநோயை நீக்குதற்குச் சக்கரபூசை செய்தல், மந்தரம் மேருவின் வடபாற் சிகரமென்பது, மயில் பாம்பை உண்ணுதல், மரத்திற்கு உயிருண்மை , மலைகளுக்குச் சிறகிருந்தமை, மாகேசுவரத்தொண்டர்கள் நாற்பத்தெண்ணாயிரவர், மாடப்புறா கல்லையுண்ணுதல், முருகக்கடவுளுக்கு மயில் கொடியுமாதல், வருணன் நாகபாச முடையான், வானவிற்கள் இரண்டுண்மை, வீரபத்திரர் போர்மேற்செல்லுகையில் மாந்தளிரையணிந்தது, வேதங்கள் மூன்று.

V. புறப்பொருளமைதிகள்:

கற்புமுல்லை, தும்பை சூடுதல், பகைவருடைய அரணங்களில் எரியிடுதல் (உழபுலவஞ்சி), படைவழக்கு, வஞ்சி சூடுதல், வாகை சூடுதல், வென்று களங் கொள்ளுதல் (பேராண்முல்லை.)

VI. பொருளணிகளிற் சில:

அபூதவுவமை, ஆதிதீபகம், உவமை, எதிர்நிரனிறை, சிலேடை, சொற்பின்வருநிலை, சொற்பொருட்பின்வருநிலை, நிதரிசனம், நிந்தாத்துதி, நிரனிறை, விபரீதாலங்காரம்.
தொனி, 12, 561.

VII. சொல்லணிகள்:

திரிபு, 3, 5, 16, 27, 34-5, 73-4, 167, 228, 230, 277, 292, 357, 363, 391, 394, 524, 560, 619, 649, 682.
சந்தம்.

VIII. தெய்வங்கள்:

அட்டகணநாதர், அரமங்கையர்களிற் பலவகையினர், இந்திரன் முதலியோர், உபேந்திரன், உமாபாகர், உரோணி, கந்தருவர், கலைமகள், காமன், குமரியரெழுவர், சன்மினிகள், சாகினிகள், சாத்தன், டாகினிகள், திருமகள், திருமால், துர்க்காபரமேசுவரி, பத்துப்பிரமர், பரசுராமர், பலதேவர், பிரமர், புராதனர்கள் (தேவியடியார்களில் ஆடவர்), முப்பத்து முக்கோடி தேவர், முப்பத்து மூன்று தேவர், முருகக்கடவுள், மோகினிகள், யஞ்ஞதேவன், யோகினிகள், வள்ளி, விசயை, வித்தியாதரர், விநாயகர், வீரபத்திரதேவர், வையமகள், வைரவர்.

IX. சிவபெருமானுக்கு இந்நூலுள் வழங்கும் திருநாமவகைகள்:

அடிப்பெருங்கடவுள், அந்திப்போதனையான், அரன், அற்புதத்துயிர்க்கிழத்தி புக்குழி, அனலன், ஆதிவானவன், ஆலமமுதுசெய்யுமையன், ஆலாலமயிலுநாதன், இருவர்கட்கரியராமெங்கணாயகர், இருவரே தெரியவரியர், இறை, இறைமலைவில்லி , இறைவர், ஈசன் உமைவாழ்வதொருபாகர், ஐயன், கண்ணுதற்கடவுள், கண்ணுதன்முதற்கடவுள், கபாலநிரைப்பேரார மார்புடையவீரர், குன்றவில்லி, கொன்றையார், சடாடவிமுடித்தேவர், சிங்கமுங்கற்கியும் பன்றியுஞ்செற்றவர், சிவன், சூலபாணி, சேயோன், தலைவர், தனிமூலமுதல்வர், தாராகவண்டந்தொடுத்தணிந்தோர், திரிபுரம் பொடிபடப்பொரும்பொருநர், தேவர் தேவர், தொல்லைநாயகர், நக்கர், நாதர், நாயனார், நிசிந்தர், பணிமதாணியோர், பரசுபாணி, பரம்பரன், பரமன், பரன், பலிமேவுநாயகன், பிரான், புராரி, பெருமான், பெருமானடி, பொலஞ்செக்கர்ச் சடையான், மதியமூர்சடாமோலி மகிணர், மழுவார், மழுவாளியார், முக்கணெம்மாதி, முத்தர், முப்பத்து முத்தேவராயவர் (தேவர் ஆயும் அவர்), முப்புரஞ்சுட்ட வீரர், மூவராயவரின் முதல்வர், மேருதரர், மேருவரையிற் கடவுள், ரசதக்குன்றவர், ராசராசபுரேசர், வல்லவன், வெள்ளிமலைப் பெருமான்.

X. தேவியின் திருநாம வகைகள்:

அகிலலோகநாயகி, அகிலலோகமாதா, அகிலாண்டநாயகி, அந்திப்போதனையானுடனாடுந்திரு, அமலை, அன்னை, ஆரணாகாரி, இகன்மகள், இமவான்மகள், இரணியருரம் பிளவுபட நடுமுகிரி, இறைமகள், இறையாள், இறைவி, உடையாள், உமை, உயிர்க்கிழத்தி, உலகினன்னை, உலகுடையசெல்வி, உவணவூர்தியூர்வாள், ஐயை, ஒப்பரியநாயகி, கடவுணீலி, கலையுகைப்பாள், கனகனாகமிரு கூறுபடுகூரேக நகநாயகி, கானநாடி, கௌரி, த்ரிபுரபயிரவி, தலைவி, தொல்லைநாயகி, நாயகி, நிலாவீசுசடில மோலி, நூபுராதாரசரணி, பங்கனகலத்திறைவி, பச்சை விளக்கு, பணிமதாணி மார்பாள், பத்ரகாளி, பரம்பரன்றேவி, பாகனகங் குழைவித்த பவித்ரபயோதரி, பிரமற்குமம்மனை, பிரமனைப் பண்டுபெற்ற பெருந்திரு, புணரியிற்றுயில்வல்லி, புவனநாயகி, மங்கலமகள், மலைமகள், மாகாளி, மாதேவி, மாயோள், மூலநாயகி, மோகினி, மோடி, யோகமுதலிறைவி , யோக யாமளத்தினாள், வன்மானுகைத்தகொடி, வேதங்கவர் கிளவித்திருமின், வேதநாயகி.

XI. திருஞானசம்பந்தருக்கு வழங்கும் திருநாம வகைகள்:

அமண்மூகர் கருமாள வருமீளி, இமவான் மகளார்மகன், ஐயைகளிறு, கொச்சைப் பெருமான், நான் மறையோரேறு, பரசமய கோளரி, பிள்ளை, பிள்ளையார், புகலிக்கிறை, புகலிப்பெருந்தகை, மலையாண் முலையாரமுதுண்டவர், மலைவில்லிபுதல்வர், வெள்ளிமலைப் பெருமான்மகனார், வைதிகராச சிங்கம், வைதிகவாரணம்.

XII. நாடுகள்:

கலிங்க நாடு, சேரநாடு, சோழநாடு, தண்டகநாடு, பாண்டியநாடு.

XIII. ஊர்கள்:

இராசராசபுரி, உறையூர், காஞ்சீபுரம், காவிரிப்பூம்பட்டினம், சீகாழி, தில்லை, மகோதை, மதுரை, வஞ்சி.

XIV. மலைகள்:

இமயம், உதயகிரி, எழுமலைகள், ஏமகூடம், ஓமகூடம், கயிலை, கனககூடம், கிரவுஞ்சம், சக்கரவாளம், சித்திரகூடம், நேரி, பொதியில், மேரு, வித்தியாதரர் வெள்ளி வெற்பு, விந்தமலை.

XV. நதிகள்:

அரிசில், கங்கை, காவிரி, குமரி, கோதாவரி, யமுனை, வைகை.

XVI. கொடிகள்:

தேவர்களுடைய கொடிகள்:- அன்னம் (பிரமா, விசுவதேவர்), ஆடு (அக்கினி), இடபம், எருமை (யமன்), கருடன், கோழி, தூமகேது (அக்கினி), மயில் (முருகன்), மேகம் (இந்திரன்.)
அரசர்களுடைய கொடிகள்:- எருது (பல்லவன்), கயல், கலை (கபிலேசுவரன்), சிலை, புலி, மலை (பாண்டியன்), யானை (ஆதித்தன்.)

XVII. சமணர் கொள்கைகள்:

இந்திரர்பலர், இருபத்துநாலு தீர்த்தங்கரர், கற்பகவிருட்சம் பத்து, தென்சேடி வடசேடியுள்ள வெள்ளிமலை, பொன்னெயில் வட்டம்.

XVIII. வடமொழிப் பிரயோகங்கள்:

1. இணைந்தியலும் மெய்களை வழங்கல்: ஆதபத்ரம், இந்த்ரர், சக்ரபாணி, சந்த்ரன், திவ்யசாமரை, பத்ரகாளி, பவித்ரபயோதரி, மந்த்ரம், யந்த்ரம், வச்ரகாயம், வச்ரமாலை, வர்க்கம், விக்ரமம்.
2. மெய்ம்முதன் மொழிகள்: த்ரிசூலம், த்வனி, ந்ருபதீபன், ப்ரத்தம், ப்ரதானர், ப்ரபை.
3. தமிழில் மொழிக்கு முதலாகா எழத்தை முதலாக்கி வழங்கல்: டாகினி, ரகுமரபு, ரசதமலை, ரத்னவிதம், ரவி, ராசராசபுரி, லோகபாலர்.
4. தொடர் மொழிகள்: ஆரணாகாரி, இந்த்ரசாபம், சக்ரபாணி, சகத்ரயம், சத்ரசாயை, சூடிகாகோடி, த்ரிதண்டு, த்ரிபுரபயிரவி, த்ரிவேதபோத காரணன், திவ்யபானம், நூபுராதாரசரணி, பத்மயோனி, புரத்ரயம், புரூப்பங்கம், யந்த்ரசாபம், வச்ரபாணி, வர்க்கத்வாதசாதிபர், வீரபத்ர கணம்.
5. திரித்துவழங்கல்: அத்ரசாலம், அமராபதி, அயிராபதம், ஆவுதி, உகம், கன்னம், கோதம், துல்லபம், தெக்கணம், தெக்கிணம், பயணம், பாகை, மிர்கமதம், மிர்தமதனன், யஞ்ஞன், விம்பம்.
6. தமிழ் முடிவுள்ள வடசொற்றெடர்: சுரரீசன், பஞ்சவாயுதம்.
7. தமிழம் வடமொழியும் கூடிய தொடர்: தச நூறு.

XIX. இந்நூலில் வழங்கும் ஆக்கச்சொற்கள்:

அண்டர் பொன்னெயில் வட்டம்-சுவர்க்கலோகம், இரதநேமி-சந்திராதித்தர், உலகக் கவிப்பு-பரமாகாசம், சேயோன்-சிவபெருமான், தண் கதிர்க்கோள்-சந்திரன், தாமரை மொட்டு-இருதயம், நடை-கால், பகற்சுடர்-சூரியன், பூகண்டகர்-அசுரர், பேரொளிவட்டம்-சந்திராதித்தர், வெங்கண் மண்டிலம்-சூரியன்.

XX. இந்நூலாலறியப்படும் அரும்பதங்கள்:

அ - பிரமா; அகைதல் - மலர்தல்; அட்டம் - பக்கம்; அருகுதல் -பெருகுதல்; அழுக்கு - உடம்பு; அறைகூறல் - பொர அழைத்தல்; இரைப்பு - மோகம்; இறை - கூட்டம், பெருமை; ஈடு - எளிவரவு; உயிர்த்தல் - புறப்பட விடுதல்; உழறுதல் - உருக்காட்டுதல்; உழைத்தல் - வியசனப்படுதல்; உளைதல் - ஒதுங்குதல்; எழும் - கெடும்; ஏ - இசை; ஏறு - எறியுந்தொழில்; ஒருக்கல் - அழித்தல்; கச்சை - யானைக்கழுத்திலிடும் மெத்தை; கடுமை - புதுமை; கதம் - வலி; கதழ் - வலி; கலகம் - கேடு, நாகம்; கழி - கயிறு; கறடு - சிறுகுன்று ; கான் - செவி, புகழ்; கிடைக்கை - மாறுபடுதல்; கிற்றல் - சம்மதித்தல்; குடலை - கிணற்றிற்கமைக்கும் உட்கூடு; குதை - நாணி; குந்தம் - பலவகை ஆயுதப் பொதுப்பெயர்; குமுதம் - ஆரவாரம்; குறங்கு - மலையடிவாரம்; கொந்து - பூந்தாது; சளம்பம் - குளிர்ச்சட்டை ; சிலைத்தல் - பொருதல், பொருந்தல்; சாமனார் - முருகக் கடவுள் ; சூழல் - செய்தல்; ஞாண் - யுத்தம்; தகடு - மின்னும் பொன்; தகனம் - அணு; தாழி - வைகுண்டம்; திணுங்கல் - உறைதல்; துளப்பு - வயிறு; தூக்கல் - செய்தல்; தொட்டி - அம்பாரி; தொப்பை; நாள் -மலர்; நெற்றி - ஆகாசம், நடு; நேராதல் - அழிதல்; ப்ரத்தம் - தவறு; பரிகை - காவல்; பாரம் - உடம்பு; பாலை - உட்டினம்; பாழி - யுத்தம், வட்டம்; புரை - இரேகை; புற்கிடல் - ஒளி மழுங்கல்; புனலன் - நாராயணன்; புனைதல் - குளித்தல்; பைத்தல் - சோபித்தல்; பொக்கம் - செறிவு; மக்கட்டு - கலையிற் கட்டிய கட்டு, மணிக்கட்டு; மலை மருப்பு - மலைச்சிகரம்; மாயிரம் - புறமான முகம்; மான - நாண; முக்கல் - முழுகச்செய்தல்; முகடுபடுதல் - பாழாதல்; முகரம் -ஆரவாரம்; முளரி - பிரமலோகம்; மூகை - படைக் கூட்டம்; மேல் - வித்தை; யாளி - படையின் சுகாசனவாகனம்; வடவு - மெலிவு; வர்க்கம் - பசாசு; வாள் - வார்த்தை, கீர்த்தி; விதைத்தல் - எய்தல்; விலகுதல் - எறிதல்; வேதல் - கோபித்தல்.

XXI. இந்நூலிற் காணப்படும் சொற்பிரயோகங்களிற் சில:

காவு, கீணிலம், நாலு, மகிணர், மார்வு, வில்லு.

XXII. அடுக்கு:

கொடுக்கொடுத்து, புத்தப்புது, பொருபொரியும்.

XXIII. ஒருவகை வாக்கியப் பிரயோகங்களிற் சில:

உரைத்ததோ வதுவுமில்லையோ, 242; உளதோ வில்லையோ, 402; வானோர் பெருமிதம் வாழியே, 562.

XXIV. அதிகமாக உபயோகிக்கும் சொற்கள்:

அடைய, வெறும்.

XXV. இந்நூலிலும் இந்நூலாசிரியர் இயற்றிய வேறு நூல்களிலுமுள்ள ஒப்புமைப் பகுதிகள்:

தக்கயாகப்பரணி எண்.

3. "குதிபாய்கடாம்” :
இராச. "குதிக்கு மதச்சுவடு", "குதிக்கு மதத்தில்."

4. "நககோடி பலகோடி புலியேறு தனியேற" :
இராச. "கன்மலை மார்புங் கடவுள் வடமேருப், பொன்மலை மார்பும் புலிபொறித்தோன்."

5. "உழல்சூரு மலைமார்பு முடனூடுறப் பொருது” :
குலோத். பிள்ளை. "புரண்டதொரு குன்றமுஞ் சென்ற தானவ னுடம்புமப்படி நிறந்திறக்க வொரு செங்கைவே லெறிந்த."

6. "கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களி கூர்வதோர், அட லாழி தனியேவு" :
விக்கிரம. “நீராழி யேழு நிலவாழி யேழுந்தன், போராழி யொன்றாற் பொதுநீக்கி."

17. "உம்பராளுமம ராபுரந்தவிர லோகபாலரெதிர் காவல்கூர், செம்பொன் மாடநிரை ராசராசபுரி வீதிமாதர்" :
இராச. "விண்ணாடு காத்து முசுகுந்தன் மீண்டநாள், மண்ணாடு கண்ட மடந்தையரும்."

19. "பண்டை நுங்கள்வட சேடிதென், சேடியுந்தவிர ராசராசபுரி புகுதுமாதர்கடை திறமினோ" :
இராச. "கோ தண்டங் கொண்டிரு சேடியுடன்கொண்ட, வேதண்ட லோக விமலையரும்."

35. "தெளிவராமிர்த மதனனாள்வரு தெரிவைமீர்" :
இராச. "கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த, வாழியிற் கொண்ட வரம்பையரும்."

37. "திகிரி வரையிலரமகளிர்" :
இராச. "சோளன் பரிசாந்தேர் சூழ வருஞ்சக்ர, வாள கிரியிலர மங்கையரும்."

41. "கனகவரையா மகளிர்கள்” :
இராச. "மேரு வரையிற் புலி பொறித்து மீண்டநாள், வாரும் வரையர மாதரும்."

72. "மலை தருவன கடறருவன மணியணிபணி மகுடத், தலைதருவன புவிதருவன" :
இராச. "வரையேழி னுள்ள வயிரமும் வாங்கும், திரையேழின் முத்தின் றிரளுந் - தரையேழிற், பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக, மின்னுஞ் சுடிகை வெயின்மணியும்."

81. "ஒலக் கடனெருப்பி னுலகேழு முருகுங், காலக் கடையினுங் கொடியகட் கடைகளே" :
விக்கிரம. "ஒலக் கடலேழு மொன்றா யுலகொடுக்குங், காலக் கடையனைய கட்கடையாள்."

82. "புங்கப் படைவிழிக் கடையிலன் றிவர்புரூஉப், பங்கத் தகிலமும் படுகொலைப் படுவதே" :
குலோத். உலா. "திருநயன, பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும்."

100. [*] "குடரட்டம்" :
குலோத். பிள்ளை. "ஈரட்டமும்."
------
[*] குடர் + அட்டம்; அட்டம் - பக்கம். குலோத்துங்கன் பிள்ளைத்தமிழிலுள்ள பிரயோகத்தாற்றான் இதன்பொருள் விளங்கியது; இந்நூல் இப்பொழுது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் வெளியிடும் 'தமிழ்ப் பொழில்' என்னும் பத்திரிகையிற் பதிப்பிக்கப்பெற்று வருகின்றது.
------

106, 280. "பேரார நிபுடமாலை மால்யாறு நிமிரவீழ்வ போல்வீழ", "நதிக்குப் போத வொழுகுமுத் தாரமும்" :
குலோத். உலா. " மன்னன் புனைந்த திருமுத்தின் மாலையை, யன்னம் படிந்தாட வாறென்னும்", "ஆர்க்கு நதியேழு மாரமோ."

237. "கட்டரணம் வல்லவனை" :
விக்கிரம. "கட்டரணங் கட்டழித்த."

277. "பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம்" :
குலோத். உலா. "கடல் சேப்ப வந்த கவுத்துவம்."

457. [+] "உலகக்கவிப்பு" :
குலோத். பிள்ளை. "அகிலலோகங் கவித்த வெளி."
-----
[+] உலகக் கவிப்பு - பரமாகாசம்; இது சக்கரவர்த்திகள் (ஒட்டக்கூத்தர்) படைத்த திரிசொலென்பர் உரையாசிரியர்.
-----

549. "கண்டன்" :
இராச. "கனகளபன் கண்டன் ", "கண்டன யிராபதம் ", "மானதன் கண்டன்", "கண்ட னொருபெரும்பே ராகம்", "கண்டனை."

549. "மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன், வரராச ராசன்கை வாள்" :
இராச. "சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ, வழியிட்ட வாள்."

549, 812. "வரராசராசன்", "வாழி வரராச ராசனே" :
இராச. "அடுத்த வாராச ராசன்."

567. "எழுமடி முடுகி" :
குலோத். பிள்ளை. "எழுமடி தித்தியா."

610. "முன்ன ரம்பினு முத்தர் மிடற்றினுங், கின்ன ரஞ்சுரர் நெஞ்சங் கிழிக்கவே" :
குலோத். உலா. "யாழான் மிடற்றால் வளைக்குதும் யாமென்பார்."

617. "புரத்ரயம்" :
குலோத். பிள்ளை. "பொங்கு புரத்ரயம்."

700. "சங்கு திகிரி சந்த்ரசூரியர்" :
குலோத். பிள்ளை. "அழகொடு திருக்கைவளை திகிரிகளி னொப்புடைய வழல்கதிரிரட்டை."

756. "கும்பஞ்சாய்த்த, மதப்புதுத் தயிலந் தோய்ந்த மணிமுத்து" :
குலோத். பிள்ளை. "கும்பத்து முத்துதிர."

773. “பீடிகை தில்லை வனத்தமைத்த" :
இராச. "பீடிகையும்...... பொன்னிற் குயிற்றி."

773. "பெரிய பெருமாள்" :
குலோத். உலா. "பெரிய பெருமாள் பெரும்பவனி."

774. "கட்டழித்து” :
விக்கிரம. "கட்டரணங் கட்டழித்த.”

775. "சுங்கந் தவிர்த்த பிரான்" :
விக்கிரம. "சுங்கமுமாற்றி...... ஆரிற் பொலிதோ ளபயன்";
குலோத். உலா. "தவிராத சுங்கந் தவிர்த்தோன்";
இராச. "சுங்கமும்...... மாற்றி, உலகைமுன் காத்த வுரவோன்.”

777. "முன்றிற் கிடந்த தடங்கடல்போய் முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை, மன்றிற் கிடங்கண்ட கொண்டல்” :
குலோத். உலா. “தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறுதெய்வத், தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து...... கோயிற் பணிகுயிற்றி";
இராச. "பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பறுத்து, முன்னைக் கடலகழின் மூழ்குவித்த - சென்னி."

777. "கொண்டல்" :
குலோத். உலா. “முகில் வண்ணன்", "மைம்முகில் வண்ணத்து வானவன்";
குலோத். பிள்ளை. "தீராத பச்சை முகில்", "ஒளிபெற வருமுகில்."

777. "மரகதமேரு" :
இராச. “மஞ்சாய கோல மணாளன்."

800. "இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த, வஞ்சியின் வாகை புனைந்தவன்” :
இராச. "உதியர் - இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட, கடப்ப முதுமுரசங் காணீர்."

802. “குறுகு முடுக்கு மிலங்கு பொலன்கொடி, மறுகும் வகுத்த பிரான்” :
குலோத். உலா. “திருவீதி யீரிரண்டுந் தேவர்கோன் மூதூர்ப், பெருவீதி நாணப் பெருக்கி“;
இராச. “எத்தெருவுங் குயிற்றி."

804. "தில்லை வனங்கட வுள்செறி கற்பக, வல்ல வனம்பெற வந்தவன்" :
குலோத். உலா. "அற்பக லாக வனந்த சதகோடி, கற்பக சாதி கதிர்கதுவ."

808. "கோபுர மாட மெடுத்த பிரான்" :
குலோத். உலா. "தலையில், மகரங்கொள் கோபுரமும்";
இராச. "மாடமுங் கோபுரமும்...... குயிற்றி."

809. "கோயின்மு னேழ்நிலை கொண்டதொர் கோபுர, வாயில் வகுத்த பிரான்” :
குலோத். உலா. "நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்கு, மலையேழு மென்ன வகுத்து."

810. “தில்லையி னெல்லையின் மண்டபம் வைத்த பிரான்" :
இராச. "மற்றும் பலபல மண்ட பமும்......குயிற்றி."

812. “வற்றாத காவிரி” :
விக்கிரம. "பிழையாத பொன்னி";
குலோத். பிள்ளை. “வற்றாத பொன்னி நதி."

XXVI. இந்நூலினுட் சுவையுள்ள பகுதிகளிற் சில:

கடைதிறப்பு முற்றும், ஆளுடையபிள்ளையார் சரித்திரப்பகுதி, பேய் முறைப்பாடு, 276-86, 324-32, 389-95, 448-54, 537-59, 604-12, 621-34, 644-50, 652-62, 671-81, 703-5, 713-4, 762-8, 772-7, 780-93.
-----------

உரையாசிரியர் வரலாறு.

கட்டளைக் கலித்துறை.

பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப் பரணியின்பால்
ஆருஞ் சுவைபல வாருந் தெளிய வணியுரைசெய்
சீருஞ் சிறப்பு முடையோ யிருமொழிச் செல்வநின்றன்
பேருந் தெரிந்தில னென்செய்கு வேனிந்தப் பேதையனே.

இவருடைய பெயர் தெரியவில்லை. ஆயினும் இவருடைய உரையினால் இவர் இருமொழியினும் வல்லுநரென்பதும், தமிழில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தகடூர்யாத்திரை, இரும்பல்காஞ்சி, மாடலம், ஐம்பெருங்காப்பியம், சூளாமணி, உதயணன் கதை முதலிய பழைய நூல்களிலும், தொல்காப்பியம், அவிநயம், வயிரமேகவிருத்தி முதலிய இலக்கணங்களிலும், வடமொழியில் வேதம், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள், வியாகரணங்கள், யோகம், சோதிடம், வைத்தியம் முதலியவற்றிற்குரிய நூல்களிலும், பல சமய நூல்களிலும் தக்க பயிற்சி உடையாரென்பதும், நூலாசிரியர் கருத்தறிந்து உரையெழுதுபவரென்பதும் விளங்கும். இதுவரையிற் கேட்கப்படாத சில நூல்களும், அவற்றின் இயல்பும், இப்பொழுது குறையாகக் கிடைக்கும் உதயணன் கதையில் முன்னும் பின்னுமுள்ள பகுதிகளின் சில அடிகளும், சில சரித்திரங்களும், அரியபதங்களும், செய்திகளும், பழைய வழக்கங்களும், பழமொழிகளும் இவ்வுரையால் - தெரியவருகின்றன. அன்றியும் அக்காலத்துப் பலசமய நூல்கள் இருந்தனவென்பதும் பின்பு வழக்கற்றமையால் இக்காலத்துக் காணப்படாமற் போயினவென்பதும் விளங்கும். இவருடைய உரைநடை பெரும்பாலும் வடசொற் பிரயோகங்கள் பயின்று எளியநடையாக அமைந்திருக்கின்றது. இவருடைய உரையினால் வேறு நூல்களிலுள்ள சில பிரயோகங்களுக்குப் பொருள்கள் விளங்கின; சில ஐயங்கள் நீங்கின. இவர் சிவபெருமானிடத்துப் பேரன்பு வாய்ந்தவர். சோழகுலத்தில் மிக்க அன்புடையவர். தமிழில் மிகுதியான அபிமானமுடையவர். சொற்களை ஆராய்ந்தெழுதுபவர். இவருடைய இயல்புகளும் கல்விப்பயிற்சியும் பிறவும் பின் காட்டப்படும் பகுதிகளாலறியலாகும்:

1. உரைவகை:

இவருடைய உரை ஒரே முறையாக அமையவில்லை, சில தாழிசைகளுக்கு, "இதன்பொருளறிக" என்று கூறிப் பொருளெழுதாது விடுப்பர்; சிலவற்றிற்குப் பொழிப்புரையும், அதனோடு விசேடவுரையும், பாடபேதமும், இலக்கணக்குறிப்பும் எழுதுவதுண்டு. சிலவற்றிற்குக் கருத்தும், சிலவற்றிற் சில அரும்பதங்களுக்கு மட்டும் உரையும், சிலவற்றில் முடிபும் வரைந்துசெல்வர். சில தாழிசைகளில் சிலசொற்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட பொருளும் எழுதுவர்.

2. பொருளை விளக்கும் முறை:

இதற்குக்காரணம் இதுவென்றும் இதன்கருத்து இதுவென்றும், இதனாற் பயன் இஃதென்றும் இது பொருளரிதென்றும் இது விசேடமென்றும் கூறியும், கடாவிடைகளாலும் பொருள்களை விளங்கவைப்பர். இன்னது கூறினார் இனி இது கூறுவாரென்பதும், இனி வருவது இன்னார் கூற்றென்பதும், முன் பாட்டிற்கூறியதை அனுவதித்துப் பொருளெழுதுவதும், மூலத்தில் இல்லாத விஷயங்களைப் பொழிப்புரையிற் கூட்டி உரைப்பதும், முன் கூறியவற்றோடு சம்பந்தங்காட்டுவதும், முன் சொன்னோமென்று நினைவுறுத்துவதும், பிற இடங்களில் உள்ள தாழிசை விஷயங்களை நினைத்து வேறோரிடத்துப் பொருளெழுதுவதும், இவ்வாறு கூறியது இத்தாழிசையைக்கொண்டு என்று ஆதாரங் காட்டுவதும், இன்னதல்லது இதுவென மொழிதலும், இதனால் இச்செய்கையை உணர்க என்பதும், "பொருணயமுணர்க, அருமை பெருமையை யுணர்க, பொருளெழுதிய குறிப்புணர்க" என்று நயங்களை விளக்குவதும், இஃது ஆட்சேபமென்னலும், இடையிலே ஒருவர் கேட்க விடை கூறியது இஃது எனப்புகுத்தி யெழுதுவதும் (391, 745) இவருக்கு இயல்பு.

ஒருசொல்லிற்குரிய இரண்டு பொருள்களையும் சேர்த்து எழுதுவர் : அலகில் - குற்றமும் கணக்கு மில்லாத (38); தனித்துரகம் - தனியே ஒன்றாகிச் சமானமின்றி இருக்கும் குதிரை (475); பள்ளி வேலை - கோயிலும் படுக்கையுமான சமுத்திரம் (54); மாயோள் - மாயா சக்தியாய்க் கரு நிறத்தை யுடையாள் (104.)

ஒருமொழிக்குரிய பல பொருளையும் கூறி இங்கே இது நல்ல பொருளென்பர்; 181. ஒரு பொருளுக்குரிய பல பெயர்களைக் கூறுவர்; 384, 534, 593, 610, 665. உவமை நயங்களை விரித்துச் சொல்வர்.

இச்செய்கை இதுபோன்றதென அரியனவும் உலகவழக்கிலுள்ளனவு மாகிய உதாரணங்களைக் காட்டி விஷயங்களை விளக்குவர்; அவ்வாறு காட்டும் உதாரணங்களிற் சில வருமாறு :
அரசனல்லாதோர் முடியைத் தம் தலையில் வைத்துக்கொள்ளவும் சிங்காதனத்தில் ஏறவும் பெறாததுபோல; ஆடு குளகு மேய்ந்தாற்போல; எளியோர்க்கு ஈசுவரன் போல; கான வேட்டுவர் இசைபாடி மிருகங்களை அழைத்துக் கொன்றதுபோல; கிடாயைச் சுடுவது போல; கிடாயை வெட்டுவதுபோல; கிராதர் வேட்டைபோய் விடாய்த்து ஏரியில் தண்ணீர் குடிக்கும் தகுதிபோல; தாய்வந்த வரவுபோல; நன்னீரால் உப்புப் பொருளைக் கழுவினதுபோல; நெல்லைப் பெருக்கி யென்றாற்போல; பஞ்சமகாசத்தத்தில் நொடியடக்கம்போல; பட்சிகட்கு ஆகாசம்போல; பித்ததோஷத்திற்குப் பால் கைத்தாற்போல; மச்சியத்துக்குச் சலம்போல; மண்ணாங்கட்டிக்கு உள்ளங்காலை ஏவினதுபோல; மத்தியான்ன ஆதித்தன் எல்லாப் பிராணிகட்கும் ஒக்கநிற்குமாப்போல; மனுஷ்யலோகத்துள்ளாரெல்லாரும் சோழனைப்போலிருப்பதுபோல; மாம்பூ பனிக்குக் கருகுகின்றது போல; யானைமேல் கொண்டா ரென்பதுபோல; ராசாவில்லாத தன்னரசு நாட்டிற் கோட்டிபோல; வல்லி நிமிர்ந்தயானையைப் போல; வலையுள் அகப்பட்ட மச்சியசாதிபோல; வாமிகள் சுரையைப் பிறர் முகந்தோறும் உமிழ்ந்த வகை போல.

3. முடிபுகாட்டல்:

சில இடங்களிற் பொருண் முடிபும் வாக்கிய முடிபும் காட்டுவர் : வழக்கு முடிபு இது, செய்யுண்முடிபு இது என்பர்; 156, 494. இது தமிழ் முடி பு, இஃது ஆரிய முடிபு என்று வேறுபடுத்திக் காட்டுவர்; 153, 655. சில வடமொழி முடிபைத் தமிழாகக் காட்டுவதுமுண்டு; 124, 193, 611.

4. பிறர்கொள்கை:

பிறர் கொள்கையைத் தக்ககாரணங்கூறி மறுப்பதும், பிறர் கூறும் பொருளுக்கு இஃது இடமன்றென்பதும் (457), பிறர்கொள்கை பலவாயினும் இதுதான் பொருளென்பதும், இரண்டில் நல்லது கொள்கவென்பதும், பிறர் இவ்வாறும் கூறுவரென உடம்படுவதும், பலர் கூறுவதையும் வாளா கூறிவிடுவதும் இவருக்கியல்பு.

5. பாடபேதம்:

பாடபேதங்களைக் காரணங்கூறி மறுப்பதும், பிறர் பாடத்தை வாளா கூறிச் செல்வதும், பாடபேதங்களுக்கு உரை கூறுவதும், தாம் மேற்கொள்ளாமலே இந்தப்பாடம் அழகிதென்றலும் (95, 164) இவர் உரையிற் காணலாம்.

6. இலக்கணக் கூற்று:

இவர் பெரும்பாலும் தொல்காப்பியத்தினின்றும், சிறுபான்மை அவிநயத்தினின்றும் இலக்கணச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுவர். வடமொழி இலக்கணங்களைக் கூறுவதன்றிச் சில இடங்களில் அவற்றிற்கு மேற்கோளாக வடமொழிச் சூத்திரங்களையே காட்டுவார். தொகைநிலைகளை விரித்துக்காட்டியும், இலக்கணங்கூறி அஃதமைந்த வேறு உதாரணங்களைக்காட்டியும், இன்னதற்கு இலக்கணம் இதனால் விளங்குமென்றும், இலக்கணச் சூத்திரத்தைக் காட்டி இதனால் இவ்வாறு வருவதையுங்கொள்கவென உரையிற் கோடலென்னுமுத்தியால் இலக்கணங்களைப் புலப்படுத்தியும் (577) செல்வர். "உங்கள்", "உன்" என்பன தமிழல்ல (186, 604) என்பர். எவை, எப்படி என வருவனவெல்லாம் தமிழ் முடிபல்லவென்பதும் ஆரிய முடிபென்பதும் இவர் கொள்கை; 153, 398, 521. சிதைந்த தமிழைப் பிராகிருதமென்பதும் (323), விகுதியை அடைசொலென்பதும் (463), அவாய் நிலையை வேண்டப்பாடென்பதும் (704) இவர் இலக்கண பரிபாஷைகளிற் சில. பிறவற்றை 'இலக்கண விசேடங்கள்' என்ற பகுதியிற் கண்டுகொள்க.

7. மேற்கோளாட்சி:

சில சொற்களுக்கும், பிரயோகங்களுக்கும், கருத்துக்களுக்கும் மேற்கோள்காட்டுவர். ஒரு விஷயத்தைப் புதிதாகக் கூறி அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுவர். இந்நூலில் இச்செய்தியைக் காண்கவென்பர். சில இடங்களில் விஷயத்தை விளக்காமல் மேற்கோளை மட்டும் காட்டி உய்த்துணரவைப்பதையும் (33, 221, 273, 345, 540, 562, 623, 641, 662, 748), மேற்கோள்களின் பொருள்களை விளக்குதலையும் (10, 21, 77, 83, 553) இவருரையிற் காணலாம். வடமொழி மேற்கோள் இவராற் பல காட்டப்படுகின்றன; 31, 35, 40, 45, 334, 345, 380, 457, 475, 546, 553, 623, 630. இன்ன நூலென்று தெரியாத இலக்கிய மேற்கோள்கள் சில; அவற்றுள் இலக்கணச் சூத்திரங்களும் உள; 388, 394, 577, 579. சில மேற்கோள்களுக்குப் பழைய உரையாசிரியர்கள் கொண்ட பாடத்தினும் வேறுபாடங் கொள்வனவும் (340 - பரி; 386, 540 - புறநா.), பழைய உரையாசிரியர்களுக்கு மாறாகப்பொருள் கூறுவனவும் (37-தொல். 334 - கலி. 467 - பொருந.) ஆராய்ச்சிக்குரியன. ஓரிடத்தில், 'சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை' என்று இவர் கூறுவதால் இவருக்கு அந்நூலின்பாலிருந்த மதிப்பு விளங்கும். இவர்காட்டும் மேற்கோள்களுட் பெரும்பான்மை உதயணன்கதையாக இருப்பதால், இவர் அந்நூலை முற்றும் அறிந்திருந்தனரென்பதும் அக்காலத்து அந்நூல் முழுவதும் வழங்கி வந்ததென்பதும் அது தக்க மேற்கோள் நூலாகக் கருதப்பட்டதென்பதும் அறியப்படும். திவ்யப்பிரபந்தத்துள் திருவாய்மொழியை மட்டும் இவர் மேற்கோளாக எடுத்தாளுவார். புராண கதைகளையும் வேதகதை யென்பர்; 38, 40, 63, 131. குறுந்தொகை யென்றும் (54), சிந்தாமணி (380) யென்றும் இவரால் இரண்டிடங்களிற் காட்டப்பெற்ற மேற்கோள்கள் அந்நூல்களிற் காணப்படவில்லை.

சிலமேற்கோள் நூல்களின் பெயர்களை இவர் வேறுவிதமாக வழங்குவர். அவற்றிற் சிலவருமாறு :
இறைவனார் பொருள் - இறையனாரகப் பொருள்; காரிகை - யாப்பருங்கலக் காரிகை; சிறுபாணாறு; திருக்கோவை; திருப்பாட்டு - தேவாரம்; திருமந்திரமாலை; திருவள்ளுவப்பயன் - குறள்; புறம், புறம்பு நானூறு - புறநானூறு; பெரும்பாணாறு, பாணாறு - பெரும்பாணாற்றுப்படை; பொருநாற்றுப்படை; முல்லை - முல்லைப்பாட்டு; வெண்பாமாலை - புறப்பொருள் வெண்பாமாலை; ஸ்ரீகீதை - பகவத்கீதை.

இவர் மேற்கோளாகவும் வேறு வகையாகவும் எடுத்துக் காட்டிய நூற்பெயர்கள் வருமாறு :
அசிதாகமம் (வட), அநந்தாகமம் (வட), அரிவம்சம் (வட), அவிநயம், ஆதித்தியம் (வட), இராமாயணம் (வட), இரும்பல்காஞ்சி, இறைவனார் பொருள், உதயணன்கதை, ஏகபாதம் (தேவாரம்), கலித்தொகை, கவிராச ராசன் வாக்கு, காதம்பரி (வட), காரிகை, குண்டலகேசி, குறுந்தொகை, கூச்மாண்டபுராணம் (வட), கௌமார வியாகரணம் (வட), சாமவேதம் (வட), சாலிகோத்திரம் (வட), சித்தர்களுடைய சாத்திரம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், சிறுபஞ்சமூலம், சிறுபாணாற்றுப்படை, சூரியசதகம் (வட), தகடூர் யாத்திரை, திருக்கோவை, திருப்பாட்டு (தேவாரம்), திருமந்திரமாலை, திருமாலைமாற்று, திருமுருகாற்றுப்படை, திருவள்ளுவப்பயன் (குறள்), திருவாய்மொழி, தொல்காப்பியம், நக்கீரர்வாக்கு (கைலைபாதி காளத்திபாதியந்தாதி), நம்பிகாளியார் நூல், நவயாமளம் (வட), நற்றிணை, நாலடியார், நான்மணிக்கடிகை, நிகண்டு (வட), நெடுநல்வாடை, பதினெண் புராணம் (வட), பரிபாடல், பாணாறு (பெரும்பாணாற்றுப்படை), பிரமயாமளம் (வட), பிரமாண்டபுராணம் (வட), புறநானூறு, பைரவம், பொருநராற்றுப்படை, மகாகாளஸ்தவம் (வட), மகா சாத்திரப்பிராகிருத மாகதம் (வட), மகாப்பிரதமாகேசுரம் (வட), மகாபாரதம், மாகதம் (வட), மாடலம், முல்லைப்பாட்டு, யாமளம், யாமளருபதேசம், யோகமணிமாலை (வட), ரூபாவதாரம் (வட), வயிரமேக விருத்தி, வளையாபதி, வாகடம் (வட), வாதுளாகமம் (வட), விட்டுணு புராணம் (வட), வெண்பாமாலை, வேதம் (வட), வைத்திய சாத்திரம் (வட), ஸ்ரீகீதை (வட), ஹர்ஷ சரிதம் (வட), ஹலாயுதம் (வட.)


இவர் மேற்கோளாகக் காட்டிய உலகவழக்குகள் : அடிசிற்பானையைத் தொட்டோமாவோம்; அடுப்பிலே மாட்டாது அழலிலே மாட்டாய்; அமஞ்சிவெட்டிக்கு ஆளிடுக; அருச்சுனர் வருக, பீமசேனர் வருக, தரும புத்திரர் வருக; இராமனால் வடக்குநோக்கிப் போகவிட்ட குரங்கு இன் னும் மீளத் தொடங்கிற்றில்லை; ஒருகைபறந்தபடி; சிறியவன் தோல்வி பெரியவனுடன் பொருதல், மதுராபுரி வாது; தேராட்கள்; நின்பிராணனைக் கொள்கிறேன்; நெல்லைப் பெருக்கி; மாய்காலமானது ; விளக்கவி தொழில்.

8. இவர் நூலாசிரியர் கருத்தையறிந்து எழுதுவர்:

"பொழிலேழென்பதற்கு ஏழு சோலை யெனச் சொல்லுவாருமுளர். இப்பொருள் காளக்கவிக்குப் பொருந்தாது" (70), "எங்ஙனம் அங்கன மென்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் வளையாபதியை நினைத்தார் கவியழகுவேண்டி”” (425), "உலகக் கவிப்பென்னும் பெயர் சக்கரவர்த்திகள் தாம்படைத்த திரிசொல்லென வுணர்க" (457), (அகத்தியரை) “குகைப்புக விட்டென்றது மெத்தெனக் கொண்டு போய் விட்டா ரென்றவாறு; அடைத்தது, ராட்சதர் அநியாயம் செய்யாமைப் பொருட்டு" (489) என்பவற்றால் இது விளங்கும்.

9. சொல்லாராய்ச்சி:

இவர், இஃது இன்னபாஷைச் சொல்; இவ்வாறு திரிந்து வந்த தென்பதும் (37, 410, 448, 466, 521), இஃது இந்நாட்டுச் சொல் என்பதும் (212, 684), சில சொற்களின் வரலாற்றை விளக்குவதும் (112, 147, 457) அறிந்து இன்புறற்பாலன. சில சொற்கிடக்கைகளால் ஐயமுறாதிருக்கவேண்டி அவற்றை, 'இஃது ஒரு சொல்' எனக் குறிப்பிடுவர்: மாமடிகள், 47; அங்காத்தல், 676. வட சொற்களையும் சொற்றொடரையும் பிரித்துப் பொருள் விளக்குவர்; 40, 67, 88, 104, 154, 183, 194, 257, 262, 458, 693. *வச்ரபாணிஎன்பது யுத்தப்பெயர் என்று பொருள் கூறியிருப்பது இவர் சொல்லாராய்ச்சித்திறனை நன்கு விளக்கும். சொற்கள், சொற்றொடர்கள் இவற்றின் ஓசை நயத்தை எடுத்துக் காட்டுதலும் இவ்வாறு சொல்கவென்றலும் இவர் இயல்பு; 'வெம் பகல் என்று பாடஞ்சொல்லின் அழகிது; ஓசையுமுண்டு'; 'ஒருதோகை யென்று படுத்துச் சொல்லுக மெல்லிதாக'; 'அளபெடையிட்டு ஓசை கூட்டிக்கொள்க' என்பவற்றால் இவற்றை அறியலாம்.
-----
[*]

(ஸுந்தர காண்டம், ஸர்க்கம், 51, சுலோகம் 45) என்னும் வான்மீக சுலோகத்தில் இந்திரன் முதலிய ஒவ்வொருவருக்கும் உரிய பெயர்கள் மும்மூன்றனுள் இன்னது இன்ன சமயத்தில் வழங்கற்பாலதென்று பரம்பரையாகக் கூறப் பெற்றுவரும் வைஷ்ணவ ஸம்பிரதாயம் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது
-----

10. உரைநடை:

சிதைந்த வடசொற் பிரயோகம் :
பெரும்பாலும் மூலத்திலுள்ள தமிழ்ச் சொற்களுக்கு வடசொற்களாலேயே உரை எழுதுதலும் அவ்வா றெழுதுங்கால் அவ்வடசொற்களைத் தமிழுருவாக்கி வழங்குதலும் இவர் உரை நடையிற் காணப்படும்.

அவற்றிற் சில வருமாறு :
அக்கினியோத்திரம், அங்கிசம் (ஹம்ஸம், அம்சம்), அஞ்சம் (ஹம்ஸம்), அரி, அவத்தை, ஆக்கினாசக்கிரம், ஆக்கினை, ஆக்வானம், ஆத்தானம், இட்சு, உச்சாகம், உட்டினம், கலைக்கியானம், கெர்ப்பம், கெறுவம் (கர்வம்), சங்காரம், சங்கிருத சத்தம் (ஸம்ஸ்க்ருத சப்தம்), சங்கிருதம், சத்த (ஸப்த), சத்திரிய லாஞ்சனை, சதுசட்டி (சதுஷ்ஷஷ்டி), சமிஞ்ஞை, சூரபன்மா, சேத்திரங்கள், தமிட்டிரம், திரி (ஸ்த்ரீ), நமக்கரிக்க, பாராட்டிரம், பருப்பதம், பிரதட்சிணம், பிரமா, பிறச்சுவலித்தது, புட்பம், மச்சியம், மயானவாசினி, மாங்கிசம், மிருதித்த, மீமாங்கிசம், யக்கிஞமூர்த்தி, யக்கியவிநாசம், யஞ்ஞன், வங்கிசம், வத்துக்கள், வருடம், விட்டுணு, விருட்டி.

ஒரு பொருள் தரும் இரண்டு சொற்களைச் சேர்த்து வழங்குவர் :
அளகமான பனிச்சை, இராத்திரியான அந்தகாரம், கடகவளையல், குமுதமான அரக்கம்பால், நூபுரமான சிலம்பு, நெருப்புக்கட்டியான கந்துள், பணைக்கவடுகள், பவிஷ்யமான எதிர்காலம், மதாணியான பேரணிகலப் பதக்கம், மதுச்சமுத்திரமான கட்கடல், மெய்யுடம்பு, ரேகைக்கீற்று, வயிரபருவதமான வச்சிரபருவதம், வெதுப்புஷ்ணம், வெப்பான உஷ்ணவியாதி, வெளியாகாசம், வேலான சூலம்.

கட்டுரைச் சுவைபட எழுதுவர் :
இந்திரன் முடிமேலின வளைதகர்த்தும்; உருமேறுஞ் செவ்விகெடின் வெறுமேறாம்; கோத்துக்கொண்டு காத்துக்கொள்வது; தாகமோகங்கள்; திரைமலிகடல்; பொறைசூழ்ந்த மலைதோறும் புலியெழுதுஞ் சோழன்; முகிழ்விரி சிறுகுழை; வேலையை வேல் கொண்டெறிந்தது.

பழைய இலக்கியங்களிலுள்ள செய்யுளையும் சுலோகத்தையும் பொழிப் புரையில் இடையிட்டுச் சில இடங்களில் எழுதுவர்; 40, 71.

பழைய இலக்கண இலக்கியங்களிலுள்ள சூத்திரங்களையும் செய்யுட்களையும் அவற்றின் பகுதிகளையும் உரை நடையாக எழுதுவர் :
அதிரப் பொருதும்பை, அம்மகேட்பிக்கும், ஐஒடுகுஇன் அது கண்ணென்னும் இவ்வாறென்னு மாறுருபும், ஒன்றல்லவை பலவென்பது தமிழ்நடை, கொட்டாட்டுப் பாட்டு, கொல்லேஐயம், நெட்டெழுத்தும்ப ரொற்றுமிகத்தோன்றிற்று, புரையுயர்பாகும், மாயோன் மார்பிலாரம்போல, மிகற்கைமருங்கி னியற்கை தோன்றல், வாராமரபின வரக்கூறுதல், வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

நகைச்சுவை தோன்றச் சில விடங்களிற் பொருளெழுதுவர் :
"ஈசுவரனல்லாத எல்லாரும் தகப்பனும் தாயுமுடையர் நாம கோத்திரங்களையு முடையர். மகாதேவர்க்கோ அக்கினிகோத்திரந்தான் சொல்லலாவது" (300); "இவைகளில் ஒருபூதமும் ஒருபேயுமே தனித்தனி எல்லாமாக வல்லன; அழிந்தனவென அஞ்சவேண்டாமென்பது பொருள்" (405); "ஆடியென்றது கூத்தல்ல; (உண்டபின்பு) விக்கினதற்குப் பரிகாரமாக உடம்பை அசக்கிக் கொடுத்தது" (410); "திரைத்து அவனை நிலத்து அரைக்கை சந்திரன் நெடியனாதலின் அவனை மடித்துக்கொள்ள வேண்டியிருந்தது" (487.)

11. இவர் உரையிற்பயின்றுவரும் சில வகையான சொற்களும், தொடர்மொழிகளும்:

அகத்தீடு, அசங்காதே, அத்தனையே, ஆய்த்து - ஆயிற்று, இப்படிக்கொத்த, இராமாறு, இருக்கச்செய்தே, ஈடாக, உருக்கவற்றான, எங்குத்து, கர்ப்பக்கிரகம் - கருப்பை, காய்த்த, காலந்தான், கூறிற்று (வினையாலணையும் பெயர்), சுழற்றி, சொல்லச்செய்தே, சொல்லிற்றுச்செய்யும், சொல்லு, தொப்புள், நாலு , நிதானம், நிற்கச்செய்தே, நீறாக்கித்து, பருந்துதான், புகலிகள், புள்ளீடு, பொன்றக்கெடுதல், மிகுத்துச் சொல்லியது, மொட்டிப்ப, வசவு, வஞ்சிப்பான்பொருட்டு, வரப்பெற்றிலோமாகாதே - வரப்பெற்றிலோமன்றே, விடாய்த்து, வினைசெய்யவற்றாய், வேண்டற்பாடு, வேண்டாவினைக்கேடு , வேணும். வைத்துக்கொண்டு.

12. இவர் உரையிற் பலவிடங்களிற் காணப்படும் சொற்கள்:

ஆறே - உடனே, உணர்க, ஒக்க, கேளாய், கொண்டு, தான், தானும், போலும்.

13. இவர் கடவுள், அடியார், அரசர் முதலியோர்களின் பெயர்களை வழங்கும் மரபிற் சில வருமாறு:

அருகபரமேஷ்டி; ஆளுடைய பிள்ளையார், பிள்ளையார் - ஞானசம்பந்தர்; கருடபகவான், கருடாழ்வான்; குலச்சிறையாண்டார்; சேனாபதியாழ்வார்; திருவாலவாய்ச் சொக்கனார்; தேவசேனாபதி, பிள்ளையார், சுப்பிரமணியப் பிள்ளையார்; பாண்டியன் குலபதி; பாண்டியன் குலமகாதேவியார்; மகாதேவர்; மகாவிட்டுணு, விட்டுணுபகவான், விஷ்ணுக்கள்; மயித்திரியாழ்வார்; மாகேசுவார் - சைவர்; வைசிரவணன்; ஸ்ரீகிருஷ்ணபகவான்.

14. தெய்வம், பெரியோர் முதலியோர் சம்பந்தமான பெயர்களுக்கு முன் திரு (௧) 1, ஸ்ரீ (௨) 2 என்பவற்றைக் கூட்டியும் அவர்கள் செயல்களுக்குப் பின் அருளல் (௩) 3 என்பதைக் கூட்டியும் வழங்குவர்:

(௧) 1. திருக்கோயில், திருச்செஞ்சடை, திருநிழல், திருமகனார், திருவடி, திருவடிமலர்கள், திருவுள்ளம், திருவெள்ளிமலைப் பெருமான், திருவேடுவர் முதலியன.

(௨) 2. ஸ்ரீபாதங்கள், ஸ்ரீவராக ரூபம் முதலியன.

(௩) 3. ஆடியருளல், எழுந்தருளல், சென்றுவிட்டருளல், பிரசாதித்தருளல் முதலியன.

15. சில கொள்கைகள்:

அமணர்குணங்களைச் சிறப்பித்தல், 170, 190, 203; அமணர் தாமே கழுவேறியது; அமுதம் லவணசமுத்திரத்திற் பிறந்தது; சோழ நாட்டையும் சோழனையும் சிறப்பித்தல், 19, 246, 275; தெய்வவிஷயத்தில் அபசாரப்படாமற் காத்தல், 3, 492, 538, 650; தேவி எல்லாமாதல்; தேவி திருமால்.

16. இவர் உரையாலறிந்த பாஷைகள்:

கௌடபாஷை, பிராகிருதம், மாகதம், வடமொழி.

17. மதக்கொள்கைகள்:

இவர் சில இடங்களில் இஃது இன்ன இன்னமதத்தினர் கொள்கையென்றும், இஃது இன்னமதத்தார் நூல்களிலுண்டென்றும், இக்கொள்கை இம்மதத்தினர்க்கும் ஒக்குமென்றும் எழுதுவதுண்டு.

அவ்வாறு இவர்காட்டிய மதங்களிற் சில :
ஆசீவகமதம், உலோகாயதம், கர்மமீமாங்கிசம். சைவம், சைனம், ஞானமீமாம்ஸம், நிரீசுவரசாங்கியம், நையாயிகசித்தி, பைரவமதம், பௌத்தம், மகேசுவரசாங்கியம், மகேசுவர வைசேஷிகம், வரசைவம், வாமமதம், விஷ்ணுசமயம் முதலியன.

18. தெய்வபக்தி:

சிவபெருமான் லட்சணத்தை நன்கு தெரிவிப்பதாலும் (408), அபசாரம் வராமற் காத்தலாலும், "இதன் கருத்து; உயிர்பெய்து கூத்தாட்டுக்காண்டல், என்னைப்போன்றவர்களும் விஷ்ணுவாதிகளும் ஒப்பர், பூதகணநாதர்க்கெனவறிக" (511) என்பதனாலும், "எளியோர்க்கு ஈசுவரன் போலவும்" (474) என்பதனாலும் இவருடைய தெய்வபக்தி விளங்கும்.

19. தமிழபிமானம்:

ஆரியமுடிபுகளைத் தமிழ்முடிபாகச் சிலவிடத்துக் காட்டுவதும், 'தமிழ்முறை இது, இது தமிழல்ல' என்றுகூறித் தமிழ்முறையை நிறுத்துவதும், [*]வடசொற்களில் உள்ள ரகரத்தைத் தமிழில் வல்லின றகரமாக வழங்குவது பசுந்தமிழென்று கூறி அவ்வாறே சிலசொற்களை வழங்கிவருதலும் (35, 537, 637), வேதத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் மேற்கோள்காட்டி, 'இஃது உதயணன்கதையிலுமுண்டு, இது தமிழிலுமுண்டு' எனக் காட்டுவதும் இவருடைய தமிழபிமான மிகுதியை அறிவிக்கும்.
------
[*] 'இதனைப் பசுந்தமிழாற் சொல்லின், "எளிவராமிறுத மதனனாள் படையிறைவர் சீறினு மினியெனாத், தெளிவராமிறுத மதனனாள்வரு தெரிவைமீர்கடை திறமினோ" என்க.' தக்க. 35 - உரை.
-------

20. இந்நூலுரையிற் கூறப்படும் நூலாசிரியர்கள்:

கவிராசராசன், தொல்காப்பியர், நக்கீரர், நம்பிகாளியார்.

21. இதுகாறும் அறியப்படாத நூல்கள்:

தமிழ் :
ஒட்டக்கூத்தர் இயற்றிய மற்றொருபரணி, கவிராசராசன் இயற்றிய நூல், நம்பிகாளியார் நூல், பைரவம், மாடலம், வயிரமேகவிருத்தி.

வடமொழி :
ஆதித்தியம், கூச்மாண்டபுராணம், கௌமாரவியாகரணம், சாலிகோத்திரம், பிரமயாமளம், மகாசாத்திரப்பிராகிருதமாகதம், மகாப்பிரதமாகேசுவரம், யோகமணிமாலை.

விளங்காதன :
மாகதம், யாமளருபதேசம்.

22. இவ்வுரையினால் தெரிந்த அரும்பதங்கள் சில:

அட்டம் - குறுக்கு; அனுவிஷம் - ஒருவகைமீன்; ஆவடதர் (?); இதழ் - பனையேடு; இலகடவிசி - அம்பாரி; இறாஞ்சுதல்; உடன்கள்ளர்; கட்டணம்; கையர் - கள்ளர்; கோமாளம்; கோஷவதி - நாகலோகம், வீணை; சகத்திரவேதி - நகில்; சகளபஞ்சகம்; சம்பிரமித்தல்; சித்தார்த்தம் - ஆல்; தாரகாம்யம் - ஒரு மகாயுத்தம்; தெற்சி (?); தொந்தம் - ஒருவகை ஆயுதம்; தோரணமாலை; பகவன் - பகனென்னுமாதித்தன்; பகவான் - பகன்; பிவாயம் - சோறு சமைத்த பாத்திரங்களில் இடும் குறி; பெருநிலைநிற்போர்; மழு - கடல்; மோங்கில் - ஒருவகை மீன்; யட்சம் - நாய், மந்திரம்; யாவனம் - ஒருவகைக்குதிரை ; விற்பிடி மாணிக்கம்.

23. இவ்வுரையால் தெரிந்த சில அரிய விஷயங்கள்:

அக்கினிவகைகள், இராசராசனுக்கு (II) ச்சொக்கப்பெருமாளென் னும் பெயருண்மை, ஈசானனுக்குக் காரெருதுவாகனம், ஈசுவரன் குழையில் இயலிசை நாடகச் சங்கம் இருத்தல், உருவசி முதலாயினார் மக்கள் இன்னாரென்பது, ஊழித்தீ ஏழு, ஏமகூடம் இந்திரன் விடாயாற்றிமலை, கண்டனென்றது இராசராசன் (II) சிறப்புப்பெயர், கருடன் ஐந்து வர்ணங்களையுடையன், காளை பதினாறு பிராயத்தான், குலச்சிறையார் அதிகாரி பெருநம்பியென்னும் பட்டங்கள் பெற்றவர், கொடிகளின் விளக்கம், கொப்புளித்தலால் ஆயுளையறிதல், சக்கரவாளங்கள் பல, சகசிரதாரை யென்னு முத்தக்கோவை, சசிசுவாகா வென்னுந் தெய்வப்பெண்களுக்குப் பித்தளையாலே மேகலாபாரம், சசிதேவிமக்கள் இன்னாரென்பது, சந்திரன் யாகத்திற் பிறந்தது, சித்திரகூடம் இந்திரன் ஓலக்கமலை, சிம்புள் பிராணவதம் பண்ணாததொரு பட்சி, சிவபெருமான் திருமுடியில் ஆமையேடுண்மை, சோழன் கடகப்பக்கக்கற்றைக்காரன் என்னும் விருதுடையவன், சோழன் மனுஷ்யருடைய வரம்பழியாமற் காப்பவன், சோழனுக்கு நரபதி யென்னும் பெயருண்மை, தருமரூபம் வெளுத்திருத்தல், தாரகாம்யமென்னும் யுத்தம் தேவாசுரத்திற்கு முந்தியது, தூசிப்படைக்கு இலக்கணம், தூமகேதுக்களின் இயல்பு, தேவேந்திரன் ஆயுதம் வச்சிரபருவதம், நவகுண்டப் பிரயோகாக்கினிகளின் வகை, நாகலோகத்தில் இருப்புச்சுவருண்மை, நிரை உலகத்திற்கு ரட்சையாவது, பரதாழ்வான் முதலாகச் சுங்கம் வந்ததென்பது, பாண்டியனுக்கு இரண்டு கூன் இருந்தமை, பாலை வன்பாலை மென்பாலையென இரண்டு வகைப்படுதல், பெண்பிறந்தார் தாய்மாராற் சினேகிக்கப்படுதல், போசராச வம்சத்தாருடைய இலக்கணம், மகாசத்தம் ஐந்து, மகாதேவர் வாகனமாகியவிடை இளமை நீங்காதது, வச்சிரகாயமென்பதொரு மருந்துண்மை, வாதுசெய்த வாரணமென்னும் ஊர் மதுரையின் பக்கத்துண்மை, வாமமதத்தினர் இயல்புகள், விசுவதேவர் அன்னக் கொடியுடையார், விற்பிடி மாணிக்கமென்பதொன் றுண்மை, விற்பிடி மாணிக்கம் மகளிர் இடைக்கு உவமை, வீரபுருஷர் பட்டால் அவர் வயிற்றிலுள்ள உதிரத்தை வீரர்கள் நெற்றியிலிடுதல்.

24. விளங்காத விஷயங்கள்:

சிலதொகைகளுக்கு மேற்கோள் விளங்கவில்லை :
சூரியனோடு யுத்தம் செய்யும் அசுரர் மூன்று நூறாயிரத்தறுபதினாயிரவர், 124; பசாசகணம் நாற்பத்தெண்ணாயிரந்திறம், 336; நாகபாலரிற் பிரதானர் எழுபதிற்றேழு நூற்றுத்தொண்ணூற்றாறு வெள்ளத்தார், 463; இந்திரன் மக்கள் நாற்பத்தொன்பதின்மர், 470; அசுரர் பதின்மூன்று திறத்தினர், 477; தளம் ஏழு , 485.

சாங்கியம், வேதாந்தம் முதலிய மதவிஷயங்களைப்பற்றிக் கூறுவனவற்றிற் பெரும்பாலன விளங்கவில்லை; 183, 245-6.

25. உரை விசேடங்கள்:

இவர் அங்கங்கே எழுதிய பதசாரங்களும் உரை நயங்களும் ஆராய்ந்தறிந்து இன்புறத்தக்கன. அவ்வாறெழுதிய இடங்களிற் சிலவற்றிற்குரிய மூலங்கள் கீழே காட்டப்படுகின்றன :
சோழிய வைதிகன், 190; இவன், 191; நாணீர், 193; வருநீர், 201; பாட்டறிவே, 226; அறந்தவா....... அகத்தியன், 233; முன்னைமேரு, 276; காதலனை விட்டு, 293; நீயும், 297; எனக்கும், 301; விழிவழிகருணை,308; நம்பதினொருதேவர், 443; வறுநிழல், 451; தனி, 460; விழுக்குன்று, 537; கையடங்கிய தீ, 576; வெறும்பொடி, 654.

----------
இந்நூலை ஆக்குவித்தோனாகிய
இரண்டாம் இராசராசசோழன் வரலாறு


வெண்பா.

தெங்கா ருறந்தைபுகார் தென்பழசை வீறுதஞ்சை
கங்கா புரம்புரந்த காவலவன் - மங்காப்பேர்
வாய்ந்தவிறற் கண்டன் வரராச ராசன்சீர்
ஆய்ந்துரைக்க வல்லே னலன்.

இந்நூலை ஆக்குவித்தோனாகிய இராசராசசோழன் (II) என்பவன், அநபாயனென்று சிறப்பிக்கப்படுபவனும் ஸ்ரீபீடங்கண்ட பெருமாளென இந்நூலின் உரையாசிரியராற் சுட்டப்படுபவனும் தில்லையம்பலம் பொன் வேய்ந்து அங்கே பல திருப்பணிகளைச் செய்வித்தவனுமாகிய இரண்டாம்குலோத்துங்க சோழனுடைய திருக்குமாரனாவான்; பரகேசரி வர்மன், திரிபுவன சக்கரவர்த்திகள், கோ நேரின்மை கொண்டான் என்னும் பட்டங்களையுடையவன்; ஒட்டக்கூத்தர் பாடிய உலாவைப் பெற்ற பெருமை வாய்ந்தவன்; அவரால் வரராசராசனென்று சிறப்பிக்கப் பெற்றவன்.

இவன் கி - பி. 1146-ஆம் வருஷத்திற் சிங்காதனமேறினான்.[1] "பூ மருவிய புவிமாதும்", "பூமருவிய பொழிலேழம்" எனத்தொடங்கும் இரண்டு மெய்க்கீர்த்திகள் இவனுக்குண்டு.
-------
[1] இவை திருவாரூர் ம-ள-ள--ஸ்ரீ சோமசுந்தர தேசிகரவர்களால் மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிகை, 26-ஆந்தொகுதி, 10-ஆம் பகுதியில் 471-4-ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
------

இவனுக்குப் புவனமுழுதுடையாள், தரணிமுழுதுடையாள், உலகுடை முக்கோக்கிழானடிகள், அவனிமுழுதுடையாள், தென்னவன்கிழானடிகளென ஐவர் மனைவியரிருந்தனரென்பதும் அவர்களுள் புவனமுழு துடையாள் இவன் பட்டத்துத் தேவி யென்பதும் அவற்றால் விளங்குகின்றன. இவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம், தஞ்சை, [2] பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், உறையூரென்பன இராசதானிகளாக இருந்தன. இராசராசனுலாவில் அரசன் புகார் வீதியில் உலாப்போந்தானெனக் குறிப்பிடப்படுவதாலும் வேறுசில ஆதாரங்களாலும் பெரும்பான்மையும் காவிரிப்பூம்பட்டினமே இவனுடைய தலைநகராகச் சிறந்திருந்ததென்று தெரிகிறது.
-------
[2] இது தஞ்சாவூர் ஜில்லாவில் தாராசாம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது. < தாராசுரம் >
------

தன்னுடைய குலதெய்வமான ஸ்ரீநடராசப் பெருமானிடம் விசேஷ பக்திகொண்டவன்; "தொல்லைத் திருமரபிற் கெல்லாந் தொழுகுலமாந், தில்லைத் திருநடனஞ் சிந்தித்து" (இராச.) இவனுடைய முன்னோர் சிலரால் அநாதரவு செய்யப்பட்டுவந்த வைணவ சமயத்தை மீண்டும் தன்னிலை யுறச்செய்தனன்; "விழுந்த வரிசமயத்தையு மீளவெடுத்து" (இராச. மெய்க்.)

இவன் காலத்து ஒருவகைப் போரும் நிகழவில்லையாதலின் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. இவனுடைய அரசாட்சியின் தன்மையும் இவன் குடிகளைக் காத்துவத்த இயல்பும் கீழ்க்கண்டவாறு இவன் மெய்க்கீர்த்தியிற் பாராட்டப் பெற்றுள்ளன :

"ஆதியுகங், கொழுந்துவிட்டுத் தழைத்தோங்கக் கோடாதறங் குளிர்தூங்க
மாரிவாய்த்து வளஞ்சுரக்கத் தாரணியோர் பிணிநீங்க
நல்லோர்தங் கற்புயர நான்மறையோர் தொழில்வளர
எல்லோருந் தனித்தனியே வாழ்ந்தனமென மனமகிழ்ந்து
ஒருவருட னொருவர்க்கு மொன்றினுட னொன்றுக்கும்
வெருவருபகை மனத்தின்றி விழைந்துகாத லுடன்சேர
இந்திரன்முதற் றிசாபால ரெண்மருமொரு வடிவாகி
வந்தபடி தரைநின்று மனுவாணை தனிநடாத்தி ....

தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந் தாயிலோர்க்குத் தாயாகியு
மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட் குயிராகியும்
................ அரசியற்கை முறை நிறுத்தி."

சிலாசாஸனங்களினால் இவன்காலத்தில் சிற்சில தலங்களில் இலகுளீசபாசுபதர், வாமமதத்தார், சைவர், வைணவர் முதலிய பல சமயத்தினரும் கவலையின்றி வாழ்ந்திருந்தனரென்பது அறியப்படும். இன்னும் பல தலங்களில் பல திருப்பணிகள் இவனால் இயற்றப்பட்டன. அவற்றுள் திருப்பனந்தாளிலிருந்து ஸ்ரீ தாடகேச்சுரத்து நாயகர் தீர்த்தங்கொடுக்கக் கொள்ளிடத்துக்கு எழுந்தருளுவதற்காக ஒரு சாலை அமைக்கப்பெற்று இவன் பேரால் [3] 'ராஜகம்பீரன் திருவீதீ' என்று வழங்கப்பட்டதென்பதும், [4] திருப்பாலைத்துறையுடைய மகாதேவருக்குச் சில நிலங்கள் வழங்கப்பட்டனவென்பதும் அந்நிலங்கள் உள்ள இடத்திற்கு ராஜகம்பீர நல்லூரென்னும் பெயர் வைக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கவை.
-------
[3] Annual Report of South Indian Epigraphy, No. 44 of 1914.
[4] A.R. No. 440 of 1912; இத்தலம் பாபநாசம் ரெயில்வே ஸ்டேஷனுக் கருகிலுள்ளது.
------

இவன் ஒரு சமயம் துலாபுருடதானம் செய்தனன். அப்போது அக்காட்சியைக் கண்டு களித்து ஒட்டக்கூத்தர், "தொழுகின்ற மன்னர்" என்ற தொடக்கத்தையுடைய செய்யுளை (தமிழ்நா. 124)ப் பாடினர்.

இவன் தமிழில் மிக்க அபிமானமுடையவனாதலால் பல புலவர்களை ஆதரித்து வந்ததோடு கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரை மிக்க மரியாதையோடு உபசரித்து வேண்டியவற்றையெல்லாம் உதவிப் பாதுகாத்துவந்தான். இவன் காலத்தில் ஒட்டக்கூத்தர் முதுமையுடையவராக இருந்தனரென்று தெரிகிறது. ஒருசமயத்தில் ஆதனத்திலிருந்து எழும்பொழுதோ நடக்கும் பொழுதோ அவர் தளர்ச்சியுறுவது கண்டு இம்மன்னர் மன்னன் [5] "நாத்தொலை வில்லை யாயினுந் தளர்ந்து, மூத்ததிவ் யாக்கை வாழ்கபல் லாண்டு" என்று கூறிக் கைகொடுத்துதவினான். அப்போது அப்புலவர் சிகாமணி மிக மகிழ்ந்து,

“கொலையைத் தடவிய வைவே லாக்கர் குலமடியச்
சிலையைத் தடவிய கையே யிதுசெக தண்டத்துள்ள
மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்தவொன்னார்
தலையைத் தடவி நடக்குங்கொல் யானைச் சயதுங்கனே"

என்று இவன் கையைச் சிறப்பித்துப்பாடினார். இவ்வரிய செயலால் இவ்வரசன் அப்புலவரிடத்தில் வைத்திருந்த பேரன்பும், எளியனாக இருத்தலும் புலப்படுகின்றன. அவர், தன் மீது பாடிய உலாவை அரங்கேற்றுகையில் ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வோராயிரம் பொன் வழங்கினான். இந்நூலில் கடவுள் வாழ்த்திலும், வாழ்த்திலும், இடையிலும் அவராற் பலபடப்பாராட்டப் பெற்றனன்.
-------
[5]. மணிமேகலை.
------

தனது சபையிற் பல புலவர்கள் கூடித் தமிழ்ச்சுவையை எடுத்துப் பாராட்ட அவற்றை விரும்பிக்கேட்டு மகிழ்ந்து வீற்றிருக்கு மியல்பினனாதலின், "செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்" (இராச.) என்று செந்தமிழ்ப் பரமாசாரியராகிய அகத்திய முனிவரும் தமிழ்ச் சங்கமும் இருந்த பொதியின் மலையாக உருவகிக்கப்பட்டிருத்தலும், இயலிசை, நாடகமாகிய முத்தமிழும் செழித்தோங்க அவற்றில் வல்ல புலலர்களைப் பாதுகாத்து வந்தமையால், "முத்தமிழ்க்குந்தலைவன்" (இராச. மெய்க்.) என்று பாராட்டப்படுதலும் இவனுக்குத் தமிழின்பாலுள்ள பேரன்பைத் தெரிவிக்கின்றன.

இவனுடைய காலத்தில் மகாசாமந்தனாக இருந்தவன் ஒட்டக்கூத்தரால் இந்நூலிற் பாராட்டப்பட்ட திருச்சிற்றம்பலழடையான் பெருமாள் நம்பியென்பவன். [6] திருமந்திரவோலைக்காரனாக இருந்தவன் இராஜாசிரயப்பல்லவராயனென்பவன்.
-----
[6]. A. R. 530 of 1912.
-----

இவன் காலத்திற் சில நாடுகளின் பெயரும் ஊர்களின் பெயரும் மாற்றப்பட்டு வழங்கலாயின; அவற்றுட் சில ராஐகம்பீரவளநாடு, உலகுடைமுக்கோக்கிழானடி வளநாடு, ராஜகம்பீரநல்லூர் முதலியன. ராஜகம்பீரன்மலையெனப் பெயரிய மலையும் ஒன்றுண்டு.

இவனுக்கு வழங்கிய ஏனைப் பெயர்கள் :
இராசகம்பீரன், இராசபுரந்தரன், கண்டன், குலதீபன், சனநாதன், சொக்கப்பெருமாள், தெய்வப் பெருமாள், வரராசராசன்.

இம்மன்னர்பிரான் கி. பி. 1162-ஆம் வருஷம் வரையில் இருந்தானென்று தெரிகிறது. இவனுக்கு இரண்டு குமாரர்களுண்டென்றும் அவ்விருவருள் ஒருவன் மூன்றாங் குலோத்துங்கனென்றுங் கூறுவர்.

குணமழியா தென்பர்தமிழ் கோதாட்டு நின்றன்
குணமெங் கொளித்துவைத்தாய் கொல்லோ - குணமலையே
மன்னர் வழுத்தும் வரராச ராசவஃ
தின்னவிட மென்றெற் கியம்பு.

----------------

இப்பதிப்பின் அடிக்குறிப்பிலும் விசேடக்குறிப்பிலும்
நூதனமாக எடுத்தாண்ட நூற்பெயர்கள் முதலியவற்றின் அகராதி.


அகத்தியம், அகநானூறு,
அஞ்ஞவதைப்பரணி, அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திரு மும்மணிக்கோவை,
அம்பிகாபதிபாடல், அரிகேசரிதேவன் பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தி,
அரிச்சந்திரபுராணம், அருணாசல புராணம்,
அருணைக்கலம்பகம், அழகர்கலம்பகம்
ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரம், ஆதியுலா அல்லது திருக்கைலாய ஞானவுலா,
ஆதிராசேந்திரதேவன் மெய்க்கீர்த்தி, ஆநந்தலகரி லஷ்மீதரர் வியாக்கியானம் (வட),
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை,
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, இயற்பா,
இரங்கேசவெண்பா, இரண்டாம் இராஜராஜன் மெய்க்கீர்த்தி,
இரணியவதைப்பரணி, இராசராசசோழனுலா,
இறையனாரகப்பொருளுரை, ஈட்டியெழுபது,
உண்மை விளக்கம், உத்தரகாண்டம் அல்லது உத்தரராமாயணம்,
உத்தரமேரூர்ச்சாஸனம், உதயணன்கதை அல்லது பெருங்கதை,
உபமன்னியு பக்தவிலாஸம் (வட), ஏகாம்பரநாதருலா,
ஏரெழுபது, ஐங்குறு நூறு,
ஐந்திணையைம்பது, ஒட்டக்கூத்தர்பாடல்,
கஞ்சவதைப்பரணி, கடம்பவன புராணம்,
கந்தபுராணம், கந்தரநுபூதி,
கந்தரலங்காரம், கம்பராமாயணம்,
கருவூர்த்தேவர் திருவிசைப்பா, கல்லாடம்,
கலிங்கத்துப்பரணி, கலித்தொகை,
களந்தை இரட்டைமணிமாலை, களவழிநாற்பது,
காசிகாண்டம். காஞ்சிப்புராணம்,
காரைக்காலம்மையார் கோயின் மூத்ததிருப்பதிகம், காரைக்காலம்மையார் திருவிரட்டைமணிமாலை,

காளமேகத்தின் பாடல், குணநாற்பது,
குணவாகடத் திரட்டு, குலோத்துங்க சோழனுலா,
குலோத்துங்க சோழனுலா உரை, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்,
குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை,
கூர்மபுராணம், கைலைபாதி காளத்தி பாதியந்தாதி,
கோதாவரி மாகாத்மியம் (வட), கோபப்பிரசாதம்,
கோயிற்புராணம், சகலகலாவல்லிமாலை,
சாக்தப்பிரமோதம் (வட), சாகுந்தலம் (வட),
சித்தராரூடம், சித்திரச் சத்திரப்புகழ்ச்சிமாலை,
சிதம்பரச் செய்யுட் கோவை, சிதம்பர புராணம்,
சிதம்பரம் சாஸனம், சிலப்பதிகாரம்,
சிவஞானசித்தியார், சிவஞான பாலையர் பிள்ளைத்தமிழ்,
சிவதருமோத்திரம், சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை,
சிவஸஹஸ்ர நாமம் (வட), சிறுபாணாற்றுப்படை,
சீகாளத்திப்புராணம், சீவகசிந்தாமணி,
சுசீந்திரம் சாஸனம், சுத்தானந்தப் பிரகாசம்,
சூடாமணி நிகண்டு, சூளாமணி,
செவ்வந்திப்புராணம், சேக்கிழார் புராணம்,
சைவசமயநெறி, சொக்கநாதருலா,
தகடூர் யாத்திரை, தஞ்சைச் சிலாசாஸனம்,
தஞ்சைவாணன் கோவை, தண்டியலங்காரம்,
தணிகைப் புராணம், தந்திரசாரம் (வட),
தமிழ்நாவலர் சரிதை, தமிழ்விடு தூது,
தனிப்பாடல், தாயுமானவர் பாடல்,
தியாகராசலீலை, திரிகடுகம்,

திருக்களிற்றுப்படியார், திருக்காளத்திநாதருலா,
திருக்காளத்திப் புராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி,
திருக்குற்றாலப் புராணம், திருச்சண்பைத்திருவிருத்தம்,
திருச்சிற்றம்பலக் கோவையார் அல்லது திருக்கோவையார், திருச்செந்தூர்ப் புராணம்,
திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி,
திருநாகைக் காரோணப் புராணம், திருநாவுக்கரசர் திருவேகாதசமாலை,
திருப்பல்லாண்டு, திருப்பாவை,
திருப்புகழ், திருப்பூவணநாதருலா,
திருப்பெருந்துறைப் புராணம், திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா,
திருமுருகாற்றுப்படை, திருவரங்கக்கலம்பகம்,
திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை,
திருவல்லத்துச் சாஸனம், திருவாங்கூர்ச்சிலாசாஸனங்கள்,
திருவாசகம், திருவாதவூரர்புராணம்,
திருவாய்மொழி, திருவாரூர்க்கோவை,
திருவாரூர்ப் புராணம், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்,
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருவானைக்காப் புராணம்,
திருவானைக்காவுலா, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,
திருவிடைமருதூருலா, திருவிளையாடற் புராணம்,
திருவுசாத்தான நான்மணிமாலை, திருவெங்கைக்கோவை,
திருவெண்காட்டுப் புராணம், திருவேங்கடமாலை,
திவ்யப்பிரபந்த வியாக்கியானங்கள், திவாகரம்,
துடிநூல், துரியோதனன் கலம்பகம்,
தென்காசிச் சாஸனம், தென்னிந்திய சிலாசஸனங்கள்,
தென்னிந்திய சிலாசாஸனங்களின் வருஷாந்த அறிக்கைகள், தேரையர் வெண்பா,
தேவாரம், தேவீ புராணம்,

தொண்டை மண்டல சதகம், தொல்காப்பிய இளம்பூரணம்,
தொல்காப்பியச் சேனாவரையம், தொல்காப்பிய நச்சினார்க்கினியம்,
தொல்காப்பியப் பொருள்- பேராசிரியர் உரை, நக்கீரதேவ நாயனார் போற்றிக் கலிவெண்பா,
நக்கீரர் திருவெழு கூற்றிருக்கை, நம்பியகப் பொருள்,
நல்வழி, நளவெண்பா,
நற்றிணை, நன்னூல் சங்கர நமச்சிவாயருரை,
நன்னூல் மயிலை நாதருரை, நன்னெறி, நாலடியார்,
நீதிநெறி விளக்கம், நீலகேசி,
நீலகேசி விருத்தி சமய திவாகரம், நெடுநல்வாடை,
நைடதம், பஞ்சாக்கரதேசிகரந்தாதி,
பட்டினத்துப் பிள்ளையார் பாடல், பட்டினப்பாலை,
படிக்காசுப் புலவர் பாடல், பதிற்றுப்பத்து,
பதினோராம் திருமுறை, பரகேசரி ராசேந்திர சோழதேவன் மெய்க்கீர்த்தி,
பரிபாடல், பழமலையந்தாதி,
பழமொழி, பழைய செய்யுட்கள்,
பாகவதம், பாசவதைப் பரணி,
பாரதம் (வட), பிங்கலந்தை ,
பீரபுலிங்கலீலை, புறநானூறு,
புறப்பொருள் வெண்பாமாலை, பெரிய திருமொழி,
பெரியநாட்டுமடத்துத் தாம்பிரப்பட்டயம் (காஞ்சீபுரம்), பெரியபுராணம்,
பெரியாழ்வார் திருமொழி, பெருந்தேவபாணி,
பெருந்தேவனார் பாரதம் பெரும்பாணாற்றுப் படை,
பெருமாள் திருமொழி, பொருநராற்றுப்படை,
பொன்வண்ணத் தந்தாதி, போஜ ராஜீயம் (வட),

மணிமேகலை, மதுரைக்கலம்பகம்,
மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்,
மறைசையந்தாதி, மனுஸ்மிருதி (வட,)
மாடலம், மாயூரப்புராணம்,
மாளவிகாக்கினிமித்திரம் (வட), மிருச்சகடிகம் (வட),
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்,
முத்தொள்ளாயிரம், முதற்குலோத்துங்க சோழதேவன் மெய்க்கீர்த்தி,
மேருமந்தரபுராணம், மோகவதைப்பரணி,
யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி,
லலிதா ஸஹஸ்ரநாமம் (வட), லலிதா ஸஹஸ்ரநாமம் பாஸ்கரராயர் வியாக்கியானம் (வட),
வடமொழி வைத்திய நூல், வளையாபதி,
வாச்சியாயன சூத்திரம் (வட), விக்கிரம சோழதேவன் மெய்க்கீர்த்தி,
விக்கிரம சோழனுலா, விசுவசார தந்திரம் (வட),
விநாயகபுராணம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம்,
விறலி விடுதூது, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் (வட),
வீரராசேந்திரதேவன் மெய்க்கீர்த்தி, ஸ்ரீபுராணம்,
ஸ்தேயசாஸ்திரம் (வட.)

-----------

கணபதி துணை.

தக்கயாகப்பரணி : மூலமும் உரையும்.


காப்பு.

வைரவக் கடவுள்.

உரககங்கணந் தருவனபணமணி
      யுலகடங்கலுந் துயிலெழவெயிலெழ
      உடைதவிர்ந்ததன் றிருவரையுடைமணி
      யுலவியொன்றொடொன் றலமரவிலகிய
கரதலந்தருந் தமருகசதிபொதி
      கழல்புனைந்தசெம் பரிபுரவொலியொடு
      கலகலன்கலன் கலனெனவருமொரு
      கரியகஞ்சுகன் கழலிணைகருதுவாம்.

1. - கடவுள் வாழ்த்து.
உமாபாகர்
வேறு.

1. புயல்வாழ நெடிதூழி புவிவாழ முதலீறு புகல்வேதநூ
லியல்வாழ வுமைவாழ்வ தொருபாக ரிருதாளி னிசைபாடுவாம்.

இதன் பொருளறிக.
-------

2. குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு குலதீபனே
நிலநேமி பொலனேமி யளவாக வுககோடி நெடிதாளவே.

இரவிகோலுகையாவது உலகத்திற்கு வலமாக ஓராழித்தேரை நடாத்துகை. வலநேமி - இராசசக்கரம். அது தனிகோலுகையாவது பூசக்கரம் பொதுக்கடிதல். குலதீபன் - குலத்தை விளங்கப் பண்ணும் தீபம் போல்வான்; ஈறு திரிந்தது; வில்லி வாளி தொல்காப்பியனென்பன போல. 'குலதீபனே' என்றதில் ஏகாரம் பிரிநிலை; இதன் இரண்டாமடியிற் புலனேமியைப் பொலனேமியென்று பாடங் கொள்ளவேண்டிற்று, சக்கரவாளகிரி பொன்னிறத்ததாதலின்; [*]பொன்னென்னுஞ் சொல்லுத்தான் பொலனென்றாவது, செய்யுளிடத்து வன்கணமும் பிறகணங்களும் வருமொழிமுதலாக வந்தாலென வுணர்க; "போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்" (௧: ௬௦) (1: 60) என்னுஞ் சிலப்பதிகாரப் பாட்டும், "பூநறுந் தேறல் பொலன்வள்ளத் தேந்தி" (௧. ௩௫: ௧௭௭) (1. 35: 177) என்னும் உதயணன் கதையு மறிவார் பொலனே வேண்டுவரெனவுணர்க. புலனென்பது ஐம்புலத்தையும் விளைபுலத்தையுமுணர்த்தும். நெடிதாளவே : ஏகாரம் ஈற்றசை.

நெடிதாள (1) இசைபாடுவாமென முன்னதனோடும் இயைக்க.

இனி, இப்பாட்டு வேண்டா; முன்பு புயலும் புவியும் வாழவே ஈசுவரனைப் புகழ்வாமென, "புயல்வாழ" (தக்க.1) என்ற பாட்டில் அற்றது பொருளென்னின், அன்று; புயலும்புவியும் வாழவேண்டிப் பரமேசுவரி வாழ அவளுடனே வாழ்கின்றனர், திருமேனியில் ஒருபாகரான மகேசுரரென வுணர்க.
------
[*] "பொன்னென் கிளவி" (தொல். புள்ளி. சூ. (௬௧) (61) என்பதன் உரை யால் இது விளங்கும்.
------

விநாயகக்கடவுள்.

3. சதகோடி விததாள சதிபாய முகபாகை குதிபாய்கடா
மதகோடி யுலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம்.

என்பது: நூறுகோடிவிதமான தாளச்சதி பரக்கத் திருமுகப் பக்கக்கடத்தினின்றும் குதிபாய்வதுபோல விழுகின்றமதம் சக்கரவாள வெற்பைக் கடந்தோடி உலகமேழினும் நறுநாற்றம் புறப்பட நடந்தருளும் யானையினுடைய பலத்தைப் பாடுவாம். எ-று.

இதிற் சதமென்றது நூற்றினும் பலவினுஞ்செல்லும். 'சதிபாய வரும்யானை' என்பதற்குச் சதிபாய்ந்து வரும்யானையென, [+]"வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" என்பதனாற் பொருள் கொள்வாருமுளர். அதனாற் செவ்வைகுன்றும்; தெய்வத்தன்மையாரெனவே கூத்தாடுதல் விநாயகர்க்கு இயல்பன்றெனவுணர்க; பாய்தல் - பரத்தல்; “பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல்" (௩௬) (36); இது கலித்தொகை, மதகென்றது, சக்கரவாளத்திற்குப் பெயராம்; இதற்குக்காரணம், மற்றைஉலகங்களிலும் சென்று மணநாறுதலிற் கொண்ட பொருளெனவுணர்க. யானையின் வலியாவது, அசுரகுஞ்சரமென்னும் யானையை வென்று கொன்று மற்றதன் கொம்பை முறித்துக்கொண்டதும், திரிபுர தகனத்தில் இடையூறு தீர்த்ததும் பிறவுமாம். 'மதகோடி' என்பதில் உம்மையைத் தொக்கதாக்கி உலகமேழினுமோடி மணநாறச் செல்லுமென்னும் பொருளும் கோடற்குரியது.
-----
[+] தொல். எச்ச. சூ. 61.
-----

4. நககோடி பலகோடி புலியேறு தனியேற நளினாலயன்
உககோடி பலகோடி குலதீப னெழுதீவு முடனாளவே.

எ-து: அநந்தகோடி மலைகளின் சிகரகோடிகளிற் சோழ சக்கரவர்த்தியுடைய புலிப்போத்துக்கொடி தனியே சென்று ஏறப் பிரமாவினுடைய வாணாளான சதுர்யுக கோடிகள் குலதீபன் ஏழுதீவுகளையும் உடனாள. எ-று.

நளினாலயன் - பிரமா. 'புலியேறு தனியேற' என்றதனால், பரராட்டிரத்து இராசாக்களுடைய அநேககொடிகள் சேவிக்கு முறையில் அயற்கண்ணே தாழவரையப்பட்டிருப்பச் சோழசக்கரவர்த்தியின் [*]புலிக்கொடி மேலே தனியே வரையப்பட்டிருக்குமெனவுணர்க. நாகம் நகமாயிற்று; குறுக்கும்வழிக் குறுக்கலென்னும் விகாரம்.

உடனாள(3) யானைவலிபாடுவா மென்க.
-----
[*] "கயலெழுதிய இமயநெற்றியி, னயலெழுதிய புலியும் வில்லும்" (சிலப். (௧௭: ௧-௨) 17 : 1-2) என்பதும் இதனுரையும், "இடிக்கும் வானுருமேறு" (திருவிளை. திருமணப். (௧௧௦) 110) என்னும் செய்யுளும் இவ்வழக்கமுண்மையைத் தெரிவிக்கும்.
-----

முருகக்கடவுள்.

5. ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப்
பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்.

எ-து: ஒரு மயிலின்மேல் ஏறியருளித் தனக்குப் பகைவனான சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளிச் சமுத்திர ஆரவாரத்தைச் சுவர்க்கத்தேறப்போகவிட்ட இளையோனுடைய புகழைப்பாடுவாம். எ-று.

ஒருதோகையென்றது இங்கே சினைப்பொருளுக்காகாதெனவுணர்க. ஒருதோகையென்று படுத்துச்சொல்லுக, மெல்லிதாக. உடனென்றது, மலையுருவிப் பின்னை அவன்மேற் பட்டதன்றென்று அதன்கடுமையை யுணர்த்திற்று. சுரராசபுரமென்றது, தேவேந்திரனது கோயிற்பட்டணத்துள்ள அந்தப்புரத்தை. காளை - பதினாறு பிராயத்தான்.
--------

6. கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோ
ரடலாழி தனியேவு குலதீப ந்ருபதீப னருள்கூரவே.

எ-து: கடல்வட்டமும் சக்கரவாளமும் பூசக்கரமும் சந்திராதித்த சக்கரமும் மனமகிழ்ச்சிமிகுவதாய் ஒன்றாய் வலிதாயிருக்கும் இராசாக்கினாசக்கரத்தைச் சத்துருக்களின்றித் தனியே செலுத்தும் குலதீபனான இராசாதிபன் திருவுள்ளத்து அருள் சுரந்துவாழ. எ-று.

வரையாழி, பருவதமெனினுமமையும். இதில், கடலும் மலையும் நிலனுமாகிய சக்கரங்களிற் கதிராழியான ஆதித்தன் களிகூருவதற்குக் காரணமான தனிச்சக்கரத்தை நடத்துங் குலதீபனெனத் தோன்றும் ஒரு பொருணயமு முண்டு,

அருள்கூரக் (5) காளை புகழ்பாடுவா மென்க.
--------------------

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

7. வழுவேறு குடகூடல் வடவாறு வழிமாற மணலாலொரோர்
கழுவேறு மமண்மூகர் கருமாள வருமீளி கழல்பாடுவாம்.

எ-து: வேதமார்க்க முதலாகிய மகாமார்க்கங்களைத் தவிர்ந்து நிர்வாணமார்க்கமாகிய மிக்க குற்றமேறின மேற்றிசைமதுரைக்கு வடக்கிலாறான வைகையாறு வழிபோவார்க்குப் போகவொண்ணாதபடி துர்க்கந்திக்கும்வண்ணம் மணற்குன்றுதோறுமுள்ள ஒவ்வொரு கழுவேறின அமணரென்னப்பட்ட அறியாதார் வங்கிசம் மாண்டுகெடும்படி அவதரித்தருளிய மகாபலபராக்கிரமனுடைய ஸ்ரீபாதங்களை நமஸ்கரிப்பாம். எ-று.

வழு, ஒன்று உண்டென்றும் இல்லையென்றும் ஒன்றென்றும் பலவென்றும் நித்தியமென்றும் அநித்தியமென்றும் தம்பொருளைத் தாமே கெடுத்துச் சுவசன விரோதமென்னும் பிரமாணாபாசஞ் சொல்லுதலாகிய குற்றமாம். மணலென்றது மணற்குன்றுகளை; என்னை? சினையிற் கூறு முதலறி கிளவியான ஆகுபெயர். இத்தாற்பயன்: பிள்ளையார் தோற்றி யருளினபின்பு அமண்சமயங்கெட்டதென்பது.
--------

8. எருதோடு கலையோடு சிலையோட மலையோட விபமோடநேர்
விருதோடு பொருதேறு புலிநேமி கிரிசூழ விளையாடவே.

எ-து: எருத்துக்கொடியான பல்லவராசன் இலாஞ்சனையும், மானினத்திற் கலைமான் கொடியான கபிலேசுரன் கசபதி இலாஞ்சனையும், விற்கொடியான கேரளேசுரன் சேரமானிலாஞ்சனையும், [*]பருவதத்தை எழுதிய கொடியான. பாண்டியன் இலாஞ்சனையும் ஒக்க ஓடப் பின்பு தங்கள் குலோற்பவனான ஆதித்தனது சத்திரியலாஞ்சனையான யானை ஓடத் தாந்தாம் பிடித்த பிடித்த விருதுகள் ஓடிப்போகப் பொருது வென்றேறிய புலிப்போத்துச் சக்கரவாளகிரிக்கு உள்ளும்புறம்பும் எங்கும் தானேயாகி விளையாடும் பொருட்டு. எ-று.

விளையாடப் (7) பரசமயகோளரியின் கழல்பாடுவா மென்க.

மலயத்துவசனென்பானொரு பாண்டியனுளனாகவும் அவனுக்கு மலயவதி யென்பாளொருத்தி உளளாகவும் அவளைச் சீமூதவாகன னென்னும் உபகாரவித்தியாதரன் கலியாணம் பண்ணினானாகவும் மகாகவி யொருவர் ஒருகாவியத்திலிட்டனர். மலையைக் கொடியாகவுடையார், பாஞ்சாலரிற் பங்குபெற்ற பிரமச்சத்திரிய ரென்பாருமுளர். இரண்டில் நல்லது கொள்க.

இனி, எருதும் கலையும் வில்லுமான சலப்பொருளுடனே அசலமான பருவதமோடுகை பயன்; இவையன்றி எருது கலை இவற்றுடன் யானையோடலும் பயன். இவ்விவர் பிடித்தவிருதுகள், சோழன் கடகப்பக்கக் கற்றைக்காரன் முதலான பலவிருதுகளுமெனவுணர்க. இவ்வடையாளஞ்சொல்லவே இராசாக்களின் பெயர்கள் விளங்கும்.

இனிப் பொதுவியல் வாழ்த்துரைக்கப் புகுகின்றார். அதற்குமுன்பு சருவேசுரனையும் அவன்புத்திரரான மூவரையும் புகழ்ந்து மற்று இந்த நால்வரும் சோழசக்கரவர்த்தியை ரட்சிப்பாராக வென்றாரெனவுணர்க.
--------
[*] "மலைக்கொடி மன்னன், பொன்னினாட்டிடைப் போயினிதமர்ந்து வீற்றிருப்ப" திருவால. (௪ : ௧) 4 : 1.
--------

9. இறைவாழி தரைவாழி நிரைவாழி யியல்வாழி யிசைவாழியே
மறைவாழி மனுவாழி [*]மதிவாழி ரவிவாழி மழைவாழியே.

இறைவாழி - ஈசுரன்வாழ்க, தரைவாழி - பூமிவாழ்க, நிரைவாழி - முந்நிரைவாழ்க, இயல்வாழி - ஒழுக்கம் வாழ்க, இசைவாழி - கீர்த்தி வாழ்க, மறைவாழி - வேதம்வாழ்க, மனுவாழி - மனுவான சோழசக்கரவர்த்தி வாழ்க, மதிவாழி ரவிவாழி - சந்திராதித்தர்வாழ்க, மழைவாழி - காலவருஷம் வாழ்க.

இதில், இறையென்பதனை இராசாவென்பாருமுளர்; [+]"இறைவனடி சேராதார்" எனவும், [#]"இறைவனார் பொருள்" எனவும் வருவனவற்றால் அது பொருளன்மையுணர்க; ஈசுரனென்னும் பொருளே உண்மை. தரையென. நிலத்துள்ளனவெல்லாங் கொள்ளப்படும். நிரை, உலகத்துள்ளவற்றுக்கு ரட்சை. இயலென்பதனைச் சொல்லுமியலென்பாருமுளர்; அதன்பொருள், தன்மார்த்த காமமோட்சங்களாதலால் அப்பொருளும் இப்பொருளும் வேறல்லவெனவுணர்க. இசையை இன்பவிசை (ஸங்கீதம்) யென்பாரறியார்; ஓசையேயாதலால் அஃது இயலெனவடங்கும். அன்றியே இன்பவிசையை நோக்கினானாயின், நாடகத்தையும் புகழ வேண்டும்.

மனுவென்றதற்கு நீதியைநினைக்கின் முன்பு மறையென்றதுவேயமையும்; மறையின் பொருளும் மனுநீதியே. மனுவென்பதனை மனுஷ சாதி யென்றாலு மிழுக்காது; நரபதியென்பது சோழன் பெயராதலாற் சிறப்புடைத்து. மதியை முதலில் வாழ்த்தியது சந்திராதித்தரென்னு முறைமை கொண்டு; இவை அட்டமூர்த்தத்தைச் சார்ந்தவையெனவுணர்க. கால வருஷத்தை வாழ்த்தியது, முன்சொன்னவையெல்லாம் நிலைநிற்பது மழையாலாதலின்; "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும், நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோன், மேனின்று தான்சுரத்த லான் " (க : 7-9.) ( 1 : 7-9 ); இது சிலப்பதிகாரம். அன்றியும் திருவள்ளுவப்பயனில், வான்சிறப்பென்னு மதிகாரத்துள்ளுங் கண்டுகொள்க. இப்பாட்டு ஒன்பதிலே கடவுள்வாழ்த்தான முதற்பாட்டில், "புயல் வாழ" என்றதையுமுணர்க. புளிமாங்காயான சந்திரகணம் ஐந்தும் ஏழும் விருத்தி.
--------
[*] சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப் பாடலிலுள்ள, "திங்களைப் போற்றுதும்" என்பது முதலிய மூன்றையும் இத்தொடர் பின்பற்றி நிற்றல் அறிதற்பாலது.
[+] திருக்குறள், (௧௦) 10.
[#] இறையனரகப்பொருள்.
--------

கடவுள் வாழ்த்து முற்றிற்று.
-----------

2. - கடைதிறப்பு. (10-47)

10. தார்மார்பமு முகவிம்பமு நுமகாதலர் தரநீர்
சேர்தாமரை யிறையாளடி பணிவீர்கடை திறமின்.

ஸ்ரீதேவியும் சரசுவதியும் அடியாராக விட்டுணுவாலும் பிரமாவாலும் உமாபரமேசுவரிக்கு ஸ்திரீ தனமாகக் கொடுக்கப்பட்டாரென்னும் புராண கதையை உட்கொண்டு கூறியது இக்கடைதிறப்பு.

தார்மார்பமாவது விட்டுணுவினுடைய திருத்துழாய்த் திருமார்பு. முகவிம்பமாவது பிரமாவினுடைய முகமண்டலம்.

எ-து: இவை யிரண்டையும் உம்முடைய புருஷரான இருவரும் உமக்கே தர நீங்களிருவருமிருக்குந் தாமரைகளை உமாபரமேசுவரியுடைய ஸ்ரீபாதங்களிலே ஒப்பிப்பீர், உம்முடைய கோயிற்றிருவாயிற் கதவுகளைத் திறமின். எ-று.

எனவே தார்மார்பமான மகாவிட்டுணுவின் திருமார்பு பூமிதேவிக்கு முரித்தாய்ப் பொதுவாயிருத்தலைத்தவிர்ந்து ஸ்ரீதேவி தானே பெறுதற்கும், பிரமாவினது திருமுகமண்டலமானது சாவித்திரிக்குமுரித்தாய்ப் பொதுவாயிருத்தலைத் தவிர்ந்து சரசுவதி தானே பெறுதற்கும் வேண்டிச் சௌபாக்கிய கர்த்தரி பரமேசுவரியாவதறிந்து அவளுடைய ஸ்ரீபாதங்களிலே ஸ்ரீதேவி தன்செந்தாமரையும் சரசுவதி தன்வெண்டாமரையுமான இரண்டுபுட்பங்களையுமிட்டு அர்ச்சிக்கவே பரமேசுவரி அனுக்கிரகித்தருளித் தாங்களிருக்குமிடங்களை நமக்குத் தந்தாரென அவர் நினைத்த சிறப்பைப் பிரசாதித்தருளுவளென்பது பொருள்.

இப்பாட்டுக் குறிப்பாற் பொருளுணர்த்து மருமையையும் பெருமையையு முணர்க; இது, “குறிப்பினறிநவும்" என்னுமிலக்கணத்தின்பாற் பட்டது; "காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்" (௨௩௮-௯) (238-9) என்பது, பீமசேனற்குப் பெயராயிற்றெனவுணர்க; இது சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை.
--------

11. கைவைக்கவு மடிதோயவு முடனின்று கவிக்குந்
தெய்வக்கொடி திசைதைவர நிற்பீர்கடை திறமின்.

இனிவருவன, சுவர்க்கவாசிகளுடைய தேவிமாராகிய தேவஸ்திரீகளை நோக்கிய கடைதிறப்பு.

தேவஸ்திரீகள் வரும்பொழுது கற்பகவல்லிசாதியைத் தமக்கு வெயின் மறையாகத் தம்முடைய பாங்கிமார் பிடித்துவரத் தாம்வருதல் பண்பு.

எ-து: கையாற் பிடிக்கவும் காலாற்றீண்டவும் தெய்வக்கொடிகள் தாம் கெருவமதம் பெற்றுத் திக்குக்களின் முடிவளவுஞ்சென்று வளரவும் தாம் தமது பெருந்தன்மையால் அதனை அறியாது நிற்பீர், கடைதிறமின். எ-று.
----------

12. வெல்லும்பொரு ளதிகார மலங்காரம் விளங்கச்
சொல்லும்பொருள் பகருங்குழன் மடவீர்கடை திறமின்.

இதன் பொருளுணர்க.
--------

13. உருகுஞ்சுர ருயிருண்டன வுணர்வுண்டன வொழுகத்
திருகுங்குழ லரமங்கையர் திறமின்கடை திறமின்.

எ-து: இளையராய்க் காமுகராய் ஸ்திரீகளைக் கண்டால் உருகுந் தேவர்களுடைய பிராணன்களும் அவர்களுடைய ஞானங்களுமான அவை ஒழுகத் திருகப்படுகின்ற குழல்களையுடைய தேவஸ்திரீகாள் , கடைதிறமின். எ-று.

இது பொருளரிது. உருகுஞ் சுரருயிர்கள் உண்ணப்பட்டன, உணர்வுகள் உண்ணப்பட்டன; அவை தலைமயிர்களினுள்ளே புக்குக் கிடந்தன. அவ்வுயிர்களும் உணர்வுகளும் புறப்பட்டு ஒழுகிவிடும்படி முறுக்கி முடியுங் கொண்டையை யுடையீரென்பதுபொருள்.

இனி, நீராடி நனைந்தகுழல்களை முறுக்கிப் பிழிகின்றபோது அவை தம்மாலுண்ணப்பட்ட தேவர்களுயிரும் உணர்வும் குழலில் நில்லாதொழுகி விழ முறுக்குவது போன்றன வென்பாரும், மற்றும் இப்பெற்றியன பல பொருள் சொல்லுவாருமுளர். இவை யெல்லாம் பொருளாயினுமாகுக, ஆகாதொழியினுமொழிக. மேலதே பொருளாவது.

இனி ஒரு சாரார் கூறுவது வருமாறு :
உயிருண்டன உணர்வுண்டன வென்பன, கண்களின் றொழிற்பெயர். ஒழுக - அவை உலகத்தோடு ஒத்த ஒழுக்கத்தையுடையனவாக. அவை முகத்துக்குள் அடங்கி மூக்குக்கும் செவிக்கும் நடுவே அகப்பட்டு நிற்கவேண்டுமென்று நினைத்து வரம்பு கோலுவாரைப்போலக் குழல்களைச் சுருளத் திருகி முறுக்கிவிட்ட தொழிலையுடையீர், திறமினென்பது. மூக்குக்கு இடைவெளியின்மையின் முட்டிக்கிடந்தது, மற்றதற்கு ஒழுக்கமும் அதுவேயாதலால்; இப்பாற் காதளவு வருவன கடப்பனவாகலாகாதென இட்ட வரம்பாவது பொருளெனவறிக; இதற்கு, "முத்தின் கனங்குழையை யுங்குமிழை யுங்கதுவி முட்டுங் கருங்கயல்க ளின்கடை யடங்குவன" என்றார் தாமேயெனவுணர்க. மங்கையரென்னுஞ்சொல் மங்கையரேயென விளியேற்றுச் செய்யுளாதலின் விகாரப்பட்டது.
--------

14. வேல்போனிறை பொருதுண்பது மெய்யேயுயிர் பொய்யே
சேல்போற்கடை பிறழுஞ்சில கண்ணீர்கடை திறமின்.

எ-து: கண்டாருடைய அறிவு நிறைவு ஓர்ப்புக் கடைப்பிடிகளைப் பொருது உட்கிடந்த உயிரை யுண்ணும்பொழுது மெய்யே வேல் போன்று பின்னைப் பார்த்தார்க்குப் புடைபெயர்ச்சி பிறழ்ச்சி இனைய செயலாற் சேல்போற் பொய்யே தோன்றிக் கடைபிறழுஞ்சில கண்ணையுடையீர், கடைதிறமின். எ-று.

இது கள்ளர்க்கு இலக்கணம்; அது பொய்யுமெய்யும் கலந்து திரிதல்.
--------

15. வெங்கோல்வர நீர்பெற்ற தலைக்கோல்வர விறல்வேள்
செங்கோல்வர வருவீருயர் செம்பொற்கடை திறமின்.

முன்னெல்லாஞ் சொன்னது, தெய்வப்பெண்களான தேவரடியாரை. இப்பாட்டு உருத்திரகணிகையரான தளியிலாரை.

எ-து: லோகத்துக்குச் சாந்தியாக நீங்களாடுகின்ற நூற்றெட்டுக் காணமுடைய சௌபாக்கியமான சொக்கநிருத்தக் கூத்துக்கு முன்னே நின்ற சயந்தனான இந்திரபுத்திரன் வடிவிற் றலைக்கோற்கு வெங்கோ லென்னும் நாமம்வரப் பின்னை வலியனாகிய வரிஷ்டத்தையுடையனான காமதேவன் செங்கோலான காமாக்கினை முன்னும்பின்னும் அருகும்வர வருவீர், உயர்ந்த செம்பொற் கதவுகளைத் திறமின். எ-று.

விறல்வேளென்றது இங்கே காமனை; வேளென்பது தேவசேனாபதிக்கும் பெயராம்.

இனிச் சொல்லத்தக்க கடைதிறப்புக்களெல்லாம் எல்லாரையும் கலந்து சொல்லுவனவெனவுணர்க.
-----------
வேறு.

16. மூவராயவரின் முதல்வராயதிதி புதல்வராயமுப் பத்துமுத்
தேவராயவர்தம் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.

எ-து: பிரமாவிட்டுணு ருத்திரரென்னுந் தேவர்மூவராவாரும் தாமே யாகி அவர் மூவரினும் வைத்துக்கொண்டு முதல்வராய், பின்னை அதிதி புதல்வரான முப்பத்து மூன்று தேவர்கள் ஆராயும் அவருடைய [*] இராசராசபுரித் திருவீதியிற் பெண்காள், கதவுதிறமின். எ-று.

அதிதிபுதல்வர் - காசியபருக்கு அதிதி வயிற்றிற் பிறந்தார்; அவர் துவாதசாதித்தரும் ஏகாதசருத்திரரும் அட்டவசுக்களும் அசுவினிக ளிருவருமாவார். தேவராயவர்தமென்பதில், தேவர் ஆயும் அவரெனச் செய்யுமென்னும் பெயரெச்சத்தின் உகரமும் மகரவொற்றும் கெட்டன வெனவுணர்க; இது, வயிரமேக விருத்தியுள் விளங்கும். ராசராசன்புரி ராசராசபுரியென னகரங்கெட்டது; [+] "உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும்" என்னுஞ் சூத்திரத்துள்ள விகற்பாற்கொள்க.
-----
[*] இராசராசபுரி - தஞ்சைமாநகரம்.
[+] தொல். தொகை. சூ. (௧௧) 11.
----

17. உம்பராளுமம ராபுரந்தவிர லோகபாலரெயில் காவல்கூர்
செம்பொன்மாடநிரை ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.

எ-து: தேவர்களால் ஆளப்படாநின்ற அமராபுரந்தவிர, உலோக பாலர்கள் மதிற்காவல்கள் சிறக்கச்செய்யும் செம்பொன் மாடநிரைகளையுடைய இராசராசபுரித் திருவீதியிற் பெண்காள், கதவு திறமின். எ-று.

எனவே, உம்பராளும் அமராபுரந்தவிர்ந்து இராசராசபுரி வீதியிற் புகுந்த தெய்வப் பெண்காளென்க. உலோகபாலரென்பதற்கு இந்திரன் முதலான திக்கிற்றேவரெண்மரையுங் கொள்ளாதே பூமியிலுள்ள இராசாக்களெனக் கொள்க. சோழனேவலின் அவர்கள் இராசராசபுரம் காக்கவந்தாரென வுணர்க.
--------

18. யாவரும்பரவு மிந்த்ரரும்பழைய சந்த்ரசூரியரு மெண்டிசைத்
தேவரும்புகுதும் ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.

எ-து: எல்லாரும் வாழ்த்தும் தேவேந்திரரும் பழையராகிய சந்திர சூரியரும் அட்டதிக்குத்தேவரும் புகுதும் இராசராசபுரி வீதிமாதர், கடைதிறமின். எ-று.

இந்திரரென்று பன்மைபடச் சொல்லலாயிற்று, பலருண்டாதலால். பழைய சந்திரசூரிய ரென்றது, அவர்களுடைய பழமை சொல்லியவாறு; [#]"தவலருந்தொல் கேள்வி" என்றதுபோல.
--------
[#]. நாலடியார், (௧௩௭) 137.
-------

19. பாடியும்பணிந் தும்பராவியும் பண்டைநுங்கள்வட சேடிதென்
சேடியுந்தவிர ராசராசபுரி புகுதுமாதர்கடை திறமினோ.

இது வித்தியாதர மகளிரைநோக்கிய கடைதிறப்பு.

எ-து: கானம்பண்ணியும் வணங்கியும் பிரார்த்தித்தும்வந்து பண்டு நீங்களிருக்கும் வித்தியாதரலோகத்து வடசேடி தென்சேடியென்னும் வெள்ளியம்பெருமலையைவிட்டு இராசராசபுரியிற்புகுதும் வித்தியாதரப்பெண்காள், கதவுதிறமின். எ-று.

புகுதற்குக் காரணம், இது வித்தியாவினோதமுள்ள தேசமென்றும் ஈசுவரப் பிரத்தியட்ச தேசமென்றும் பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் கிடைக்குமிடமென்றும் செம்பொன்மலைபோலு மாடங்களிருக்குமிடமென்றும் வித்தியாதர ஒழுக்கந்தவிர மனுநீதியால் ஒழுகலாமென்றுமே.
--------

20. யாவர்தேவரிவர் தாமெனப்பெரிய விருவர்தேவரிவ ரெளிவருந்
தேவர்தேவர்தமி ராசராசபுரி வீதிமாதர்கடை திறமினோ.

எ-து: யாவர் தேவர்? இவர்தாமென்னலாம்படி சொல்லுகின்ற பெரிய இருவர் தேவராவார் பிரமா விட்டுணுக்கள். எளிவருந் தேவரென்றதும் இவர் தம்மையே. இவர்கட்குத் தேவராயவர்தம் இராசராசபுரிவீதிமாதர், கடைதிறமின். எ-று.

எளிவருந்தேவரென்றது, இவர்கள் கர்ப்பவேதனையும் மரணவேதனையும் பற்றுதலால். இவர்கட்குத் தேவரென்று மிகுத்துச்சொல்லியது, இவர்களுக்குச் சநநமரணமில்லாத பதத்தைக் கொடுத்தலின்.
--------

21. ஈருமதியமென முதியமதிவெருவி
      ராசராசநா யகர்முடிச்
சேருமதியமென விளையமதியொடுற
      வுடையமகளிர்கடை திறமினோ.

எ-து: ஒருதலைக் காமிகளுடைய புத்திகளையீருஞ் சந்திரனெனப் பூரணசந்திரனைப் பயப்பட்டுத் தாங்கள் காதலித்தபொருள் இராசராசபுரியில் இராசராசனுடைய நாயகனான ஈசுவரனுடைய திருமுடியிற் சேர்ந்திருக்கும் பாலசந்திரனென நினைத்து இளம்பிறையுடனளைந்து அளவளாவியிருக்கும் புத்தியையுடைய பெண்காள், கதவுதிறமின். எ-று.

மாலையம்பொழுதும் இளம்பிறையுமே மயக்குவது காமிகளையென வுணர்க. இதற்கு உதாரணம், [*]காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்" என்பது. நோயென்றது காமநோயை. திருமுடியிற் சேர்தலால், இளம்பிறை திருக்கொன்றைமாலையை ஒத்ததெனவுணர்க. இது விபரீதாலங்காரம்.
-------
[*] திருக்குறள், (௧௨௨௭) 1227.
--------

22. போயபேரொளி யடைத்துவைத்தபல
      புண்டரீகமிரு பொற்குழைச்
சேயபேரொளி மணிப்பெரும்ப்ரபை
      திறக்கவந்துகடை திறமினோ.

எ-து: அத்தமன பருவதத்திற் சென்ற ஆதித்தியனால் அடைக்கப்பட்ட அநந்தம் புண்டரீகங்களை நும்முடைய முகங்களின் பக்கங்களிலுள்ள இரண்டு பொற்குழைகளிலுஞ் சிவந்த பெரிய சோதியையுடைய மாணிக்கப் பெரும்பிரபையான சோதிமணிமண்டலம் திறப்பிக்க எழுந்தருளிக் கதவுகளைத் திறமின். எ-று.

பேரொளி, பண்புத்தொகை; இஃது ஆதித்தியனுக்குப் பேரானது, பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. போயவென்னுஞ் சொல்லால் இராத்திரியீனஞ்சொன்னதுவுமாம். ஆதித்தியனா லடைக்கப்பட்ட நும்மனைகளை நுங்கள் செவிகளிலுள்ள ஆபரணச்சோதிகளால் திறப்பிப்பீரென்பது பொருளாம். புண்டரீகமென்பது செந்தாமரைக்கும் பெயர்; புண்டரீகாட்சனென்ப; இது செந்தாமரைக்கும் பெயரன்றாயின், தந்திரவுத்தியாலும் தொடர்நிலைச் செய்யுளாலுமுணர்க.
--------

23. தாமவில்லுவெறு மொன்றுமுன்னமிவை
      சாமனார்கொடிகள் காமனார்
சேமவில்லென விசும்புவில்வெருவு
      தெய்வமாதர்கடை திறமினோ.

எ-து: பூந்தாமமாலை நாற்றின வில்லொன்றுமே பண்டுள்ளது, காமதேவர்க்கு. இவை தேவசேனாபதியுடைய கொடிகளாகிய மயில்களாயிருந்தன; இவையிற்றிற் காமனாருடைய சேமவில்லொன்றுக்கு இரண்டுள்ளனவென நினைந்து ஆகாசத்திற் சோதிசக்கிரமுங்கூடப் பயப்படும்படியான தெய்வீகத்தையுடைய மாதரீர், கதவுதிறமின். எ-று.

முருகக்கடவுளின் கொடி கோழிக்கொடியன்றோவெனின், அவர் மயிற் கொடியையுமுடையார்; “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ" (௧௨௨) (122) திருமுருகாற்றுப்படை; மற்றும் புராணங்களிற் கண்டுகொள்க.
--------

24. மையவாயருகு வெளியவாயசில கெண்டைபுண்டரிக மலரினுஞ்
செய்யவாயுலக முறவுகோளழிய நறவுகொண்மகளிர் திறமினோ.

எ-து: கரியவாய் அருகு வெள்ளென்றிருப்பன சிலகெண்டையினம் தாமரைப்பூவினும் மிகச்சிவக்கும்படி, இவை சிவத்தலால் உலகந்தாம் தம்மிற் சேர்வுசார்வழியும்படி காமபானம் பருகும் வாமமார்க்கப் பெண்காள், கதவு திறமின். எ-று.

உறவுகோளழிதல், கரணம் வேறுபட இவர்தாமும் வேறுபட்டு நம்முடையவரல்லரெனலன்றியே உலகத்திற் கண்டாரெல்லாரும் தம்மில் உறவுகலங்கி முறைமை மயங்கவும் படுதல்.
--------

25. கலகமாரன்வெறு மொருவனாலுலகு களவுபோகவிரு காலமுந்
திலகமாருநுத லளகபாரவிரு ளருளுமாதர்கடை திறமினோ.

எ-து: காமவியசன கலகஞ்செய்யும் காமதேவனொருவனால், உலகத்து உணர்வும் ஒழுக்கமும் களவுபோகப் பகலுமிரவுமான இரண்டு பொழுதிலும் திருமுகங்களில் திலகமார்ந்த நெற்றியிற் பனிச்சையான அளகபாரத்தால் அந்தகாரத்தைக் கொடுத்தருளுமாதரீர், கதவுதிறமின். எ-று.

மாரனொருவனாலென்றது, உலகத்துக்களவுகாண்பார்க்கு உடன்கள்ளரும் ஒற்றிக்கொடுப்போரும் பெருநிலைநிற்போரும் கரவடசாத்திரமும் வேண்டும். அன்றியே ஓரகத்துக்கு ஒருகள்ளனேயாகக் காமதேவன் இந்தச் சதுர்த்தச புவனத்திலுமுள்ளாரறிவுகளை வாங்க, இராத்திரியல்லாத பகலும் அந்தகாரம்படப் பண்ணுவரென்பது பொருள்.
--------

26. எளிவருங்கொழுநர் புயமுநுங்களிரு
      குயமுமண்டியெதி ரெதிர்விழுந்
தெளிவருங்கலவி புலவிபோலினிய
      தெய்வமாதர்கடை திறமினோ.

எ-து: நும்மைக்கண்டால் எல்லா எளிவரவும்படும் பிராணவல்லபருடைய தோள்களும் நும்முடைய குயங்களும் இரண்டுக்கிரண்டு தம்மில் ஒன்றுக்கொன்றுமண்டி மேலேறி எதிரேற்றுக்கொண்டு புரண்டு விழுகின்ற பொழுதத்து உணர்விற்குத் தெளிவுவருதலரிதான சுரதானு போகக்கலவி புலவிபோல இனியமாதர், கடைதிறமின். எ-று.

[*]"ஊடுதல் காமத்துக் கின்பம்" எனவும், [+]"ஊடினும் புணர்ந்த தொத் தினியவள்" எனவும் வருவனகாண்க.
-----
[*] திருக்குறள், (௧௩௩௦) 1330;
[+] சீவக, (௧௯௯௬) 1996.
-----

27. உலகபாடமனு வெனவுலாவுவன வொழுகுநீணயன முடையநீர்
திலகபாடமிருள் பருகவந்துநிலை செறிகபாடநிரை திறமினோ.

எ-து: உலகத்தில் உயர்ந்தாரெல்லாரும் மனுநீதியைத் தப்பென்னக் காதளவும் நீண்ட கருங்கண்களையுடைய நீங்கள் நுங்கள் திருமுகமீது நெற்றியிலிட்ட திலகத்திலுண்டானசோதி பாடஞ்செய்தலின் அதனால் இருளைக் கவர்ந்தருளி நிலைசெறிந்த கதவுநிரைகளைத் திறமின். எ-று.

எனவே கண்களால் உலகத்தார் மனங்களில் இருள்களைப் புகப்புகப் பெய்து உலகத்திலிருளைத் திலகத்தால் வாங்குவீரென்பது பொருள். பாடம் - சோதி. கபாடம் - கதவு.
--------

28. அரனுமேனை யிமையவருமுண்பரென
      வஞ்சிநஞ்சுமமு தமுமுடன்
றிரைமகோததியைவிட விருந்தனைய
      தெய்வமாதர்கடை திறமினோ.

எ-து: மகாதேவரும் புரந்தராதி தேவர்களும் உண்பரெனப் பயப்பட்டு நஞ்சும் அமுதமுமான இவையிரண்டும் சமுத்திரத்தைவிட்டு வேறோரிடத்து வந்திருந்தனைய தெய்வப்பெண்காள், கதவுதிறமின். எ-று.

இஃது என்சொன்னவாறோவெனின், கடலிற்பிறந்த நஞ்சுகாணின் இவ்வாலகாலம் லோகத்தைச் சங்கரிக்குமென்று மகாதேவர் அமுது செய்தருளுவரென்று பயப்பட்டு அவராற் சங்கிரகிக்கவும் அருகு செல்லவும் அரிதாயிருந்துள்ள தானந்தேடி நஞ்சுபுக்கு இருந்ததெனவும் இந்திராதி தேவர்கள் கடலிற் பிறந்த அமுதுகண்டால் அசுரர் இதனையுண்டால் நம்மைப்போல நித்தியத்துவம் பெறுவரென்று கருதி அத்தேவர்கள் அதை வாங்கியுண்பரென நினைந்து அஞ்சி அத்தேவர்களுக்கு முட்டவும் எட்டவும் அரிதாய இடந்தேடி அமுதமிருந்ததெனவுமுணர்க. எனவே இந்தப் பெண்களுக்கு நஞ்சும் அமிழ்துமல்லாத மற்றுறுப்புக்களில்லை யென்று கூறினாராயிற்று.

இப்பாட்டில் தெய்வமாதரென்னுஞ்சொல்லில், மாதரைக் காதலாக்கி அதனைப் பெண்களின் பெயராக்கியும், தெய்வமென்பதைத் திவ்வியமான வஸ்துவின் பெயராக்கியும், அவற்றை ஆகுபெயராக்கியும், நஞ்சு கண்களாகவும் அமுதம் குயங்களாகவுங் கொள்க. இது குறிப்பினாற் றோன்றல். கண்களினருகு மகாதேவர்க்குப் போதலரிதெனவும் குயம் தேவர்களுக்குத் தீண்டலரிதெனவுங் கொள்க. குயத்தை அமுதென்கைக்குக் காரணம், அமிர்தகலசத்து உவமை பெறுதலும் சகத்திர வேதியாகலும் முப்பத்திரண் டுறுப்பும் ஒப்ப இனிமைபெறுதலுமாம். கண்களை நஞ்சென்கைக்குக் காரணம், உலகத்துயிரும் அறிவும் வாங்குதலும் கறுத்திடுதலும் கொடுமை யுடைமையுமாம். அன்றியே [*] கண்கள் செய்த வியசனவிஷத்தையும் கொங்கையென்னு மமுதம் தீர்ப்பதெனவுமுணர்க;

"பந்துவிளை யாடிய பாவைதன் முகத்துச், சிந்தரி நெடுங்கணென் னெஞ்சம் போழக், கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்த, லாற்றே னவ்வழ லவிக்குமா மருந்து, கோற்றேன் கிளவிதன் குவிமுலை யாகும்......…, பாந்துரைத் தென்னை பாவை யிக்குறை, யிரந்தனனியான்” (௪.௧௩ : ௬௯-௯௧) (4.13 : 69-91) என்பது உதயணன் கதை; "துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத தோற்ற மாய்வான், பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர் நுண்டாது போர்க்குங் கானல், நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த, வுறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்" (கானல். (௮) 8.) இது சிலப்பதிகாரம். மற்றும் இப்பெற்றியன வெல்லாமுணர்க. மகாதேவர் முற்படவும் அவர்க்கு நஞ்சும், தேவர்கள் பிற்படவும் அவர்கட்கு அமுதமுங்கொண்டது, பெண்கள் கண்ணாற்பட்ட விஷ வியசனம் அவர்கள் குயத்தாலல்லது தீராதென்பதைக் கூறுதல்பற்றி.
----
[*] "தங்குகண்வேல்செய்த" (கலிங்க. (௩௩) 33) என்னும் தாழிசையை இக்கருத்து நினைப்பிக்கின்றது.
----

29. மிசையகன்றுயரு நகின்மருங்குல்குடி யடிபறிந்த தழவிடுமெனத்
திசையகன்றளவு மகனிதம்பதட முடையமாதர்கடை திறமினோ.

எ-து: மேலே அண்ணாந்து உயர்ந்து அகன்று வளருங் கொங்கைகள் ஒருகாலைக்கு ஒருகால்வளராநின்றன; இடையானது குடியிருக்கமாட்டாது அடிபறிந்தது; இதனைக் கொங்கைகள் அழவிடுவது போன்றிருந்தன; இவ் விடைக்கு மேனின்ற கொங்கைகள் சத்துருவானால் இவ்விடைக்குக் கீழ் நின்ற நாம் இந்த இடையைப் பரிகரிப்போமென நினைந்து கொங்கைப்பெருமைக்குத் தக்கபடிவளர வேண்டுமென்றெண்ணி எண்டிசைகளின் அகன்று விரிந்து நின்ற நிதம்பதடத்தையுடைய பெண்காள், கதவு திறமின். எ-று.

தடம் -- பெருமை.
------------
வேறு.

30. மகரவாரிதி மறுகவாசுகி வளையமேருவில் வடமுகச்
சிகரசீகர வருவிநீரர மகளிர்நீர்கடை திறமினோ.

இது நீரரமகளிரைநோக்கிய கடைதிறப்பு.

எ-து: சுறாவென்னு மீன முடைத்தான மகாசமுத்திரம் வயிறுமறுகப் பண்டு வாசுகியென்னு மகாநாகத்தாலே வளையப்பட்ட மகாமேருபர்வதத்தில் வடமுகச்சிகரபருவதமான மந்தரபருவதத்துத் திரிவினாற் கடற்றிவலையிற் புறப்பட்ட அருவி நீரினின்றும் தோன்றிய தெய்வப்பெண்காள், கதவு திறமின். எ-று.

வாரிதி - கடல். மேருவின் வடமுகச் சிகரமெனவே மகாமேருவையல்லது மத்தாகக்கொண்டது, மகாமேருவின் வடபக்கத்தேயுள்ள மந்தரமென்னுஞ் சிகரத்தையென வுணர்க. சீகரம் - திவலை. இங்ஙனம் உற்பவித்தாரென்றது வங்கிச்சுத்தம் சொன்னவாறு.

இவரும் தேவரடியாரென வுணர்க.
--------

31. வடபகீரதி குமரிகாவிரி யமுனைகௌதமை மகரமேய்
தடமகோததி யிவைவிடாதுறை தருணமாதர்கடை திறமினோ.

எ-து: வடக்கிற் கங்கையும் குமரியும் காவிரியும் யமுனையும் கோதாவிரியும் மகரமீன் மேயு மகாசமுத்திரமும் இவையிற்றைவிடாதேவசிக்குஞ் சல வாசப்பெண்களான இளைய நீரரமகளிர்காள், கடைதிறமின். எ-று.

பாகீரதி பகீரதியெனச் செய்யுளாதலிற் குறுக்கும்வழிக் குறுகிய தெனவுணர்க. கௌதமை யென்பது கௌதமனாற் கொணரப்பட்ட கங்கா தீர்த்தமான ஏழு கோதாவரி; இது கார்க்கியமதம். தருணமென்பது இளமை; “தருண ரவிகிரண புஞ்ச ரஞ்சித பாடலம்” என்பது காதம்பரி.
--------

32. உருகுவாருயிர் படுபடாமுலை யுழறுமேலுல கிறுமெனத்
திருகுவார்முசி விசிவிடாதவர் திறமினோகடை திறமினோ.

எ-து: நும்மைக்கண்டால் மனமுருகுவார் யாவர் சிலர் அவர்களுடைய உயிரகப்படவும் தாம் படாத முலையானவை உழறுமாகில் உலகமடங்கச் சங்காரப்படுமென நினைத்தாற்போலத் திருகிக் கட்டப்பட்ட கச்சுக்கட்டுண்டு முசியிலும் கட்டவிழாத பெண்காள், கதவு திறமின் . எ-று.

உழறுதல் - உருக்காட்டுதல். வார் - கச்சு. திறமினோ திறமினோவென்பது புனருத்தியல்ல; வியவகாரம். விடாதவரென்றது விளியேற்றதல்ல; முன்னிலை.
--------

33. மந்தமேசில நூபுராரவ மகிழ்நர்சேகர மதுகரஞ்
சிந்தமேல்வரு மேகலாரவ முடையநீர்கடை திறமினோ.

எ-து: மந்தவோசைபடச் சில் சிலம்பினாரவாரம் நும்முடைய பிராண வல்லபருடைய முடிகளிலுள்ள வண்டினங்களைச் சிதற அவற்றின் மேலேவரு மேகலையின் ஆரவாரமுமுடைய பெண்காள், கதவு திறமின். எ-று.

நூபுரம் - சிலம்பு. சேகரம் - தலைச்சூட்டு. மதுகரம் - வண்டு. "கிழவோன், சென்னி மிதித்த பஞ்சிமெல்லடிப், பொன்செய் கிண்கிணி யின்னரி யொடுக்கிப், புலவிபெயர்த்த." இஃது உதயணன் கதை; "குஞ்சி மேலனிச் சம்மலர் கூட்டுணும், அஞ்சி லோதிய ரம்மலர்ச் சீறடி" ((௧௩௪) 134) இது சிந்தாமணி.
--------

34. நாவிமான மணங்கமழ்ந்திள நவ்விமான மலர்ப்பெருந்
தேவிமான விமானவாயில் புகுந்தரம்பையர் திறமினோ.

நாவிமான் - கஸ்தூரி மிருகம்; 'அ' என்பது ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு.

எ-து: கஸ்தூரி மிருகங்களென. மணங்கமழ்ந்து இளைதாயிருந்த மான் கன்றுகளை யொப்பத் தாமரைமலரிலிருந்த திருவானதேவி இலச்சிப்பக் கோயில் வாயில் புகுந்து அரம்பையொப்பீர், கதவு திறமின். எ-று.

கஸ்தூரிமிருகத்திற்கு அகரப்பான்மை கொடுத்தது, கஸ்தூரி போலும் சுகந்தங்களெல்லாவற்றையு நினைத்தெனவுணர்க. இளநவ்விக்கு ஒப்புக் கொடுத்தது, அதன்விழி நோக்கிற்கு உவமையாதல்பற்றி. நவ்விக்கு இலச்சைகொடாது விட்டது, மிருகசாதிக்கு இலச்சையில்லையென நினைந்து. ஸ்ரீதேவிக்கு இலச்சை கொடுத்தது, பெண்ணாதலால். அவள் இலச்சித்தற்குக்காரணம், ரூபசௌந்தரிய சௌபாக்கியங்களை நினைத்தே. அரம்பையரென்றது, அரம்பை போல்வாராகிய பெண்களை. இதற்குக் காரணம் அரம்பையொருத்தியே யுள்ளாளாதலால்; அருச்சுனர் வருக, பீம சேனர்வருக, தருமபுத்திரர்வருகவென ஒருவர்குணம் பலர் பக்கல் இருப்பக்கண்டால் இவ்வாறுரைப்பர் உலகத்தார்.
--------

35. எளிவராமிர்த மதனனாள்படை யிறைவர்சீறினு மினியெனாத்
தெளிவராமிர்த மதனனாள்வரு தெரிவைமீர்கடை திறமினோ.

எ-து: ஈசுவரனால் இறந்துபோன காமதேவனது படையான பஞ்ச பாணங்களும் இட்சுசாபமும் ஈசுவரனே கோபிக்கினும் எளிவரவுபடா இனி யென்று உலகு சொல்லும்படிக்கீடாகத் தெளிந்து வரிஷ்டமான அமுது கடையுநாளிற் பிறந்த தெய்வப்பெண்காள், கதவு திறமின். எ-று.

மிர்தமதனன் - மரித்த காமதேவன். ஆள் படை - அவனாளும்படை; கரும்பும் பூவும் முதலாயின. வர அமிர்தமென்பது, [*] "அகஸ்ஸவர்ணே தீர்க்கம்" என்பதனால், வராமிர்த மென்றாயிற்று; தீர்க்கசந்தி. அமிர்த மதன நாள் - அமிர்து கடையுநாள்; மதனம் - கடைதல். இதனைப் பசுந்தமிழாற் சொல்லின், "எளிவராமிறுத மதனனாள்படை யிறைவர் சீறினு மினியெனாத் தெளிவராமிறுத மதனனாள்வரு தெரிவைமீர்கடை திறமினோ" என்க. இதுபோலுந் தமிழுக்குச் சிறப்பு; [+] "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" என்றார்.
---
[*] வியாகரண சூத்திரம்.
[+] தொல். எச்ச. சூ. (௫) 5.
---

வேறு.

36. நெளியுமகரவிரு குழையுமிள வெயில்விட
      நிறையுமதியிரவு மழுகிநிலை கெடநகைத்
தெளியுநிலவுபக லினுமுளரி கெடமலர்
      திலகவதனசுர மகளிர்கடை திறமினோ.

எ-து: பார்த்தார்க்குப் பணியின் அழகால் உயிர்பெற்று நெளிவது போன்றிருக்கும் மகரபத்திர விசித்திரக் குழையிரண்டும் தம்மிலிட்ட இரத்தினங்களால் இளவெயில் போலச் சோதிவிட்டு விளங்கப் பூரணசந்திரன் இராத்திரியிலும் ஒளிமழுங்கித் தன்னிலை கெடவும் இனியசிரிப்பினாலே தெளிந்து விளங்கும் நிலாப் பிரகாசத்தினாலே பகலிலும் தாமரை மொட்டிப்ப மலரப்பட்ட திலகமுகத்தையுடைய தெய்வப் பெண்காள், கதவு திறமின். எ-று.

குழையிலுள்ள மாணிக்கவெயிலாற் சந்திரன் இராத்திரியிலும் ஒளிகெடச் சிரிப்பின் நிலாவாலே பகலிலும் தாமரை மொட்டிப்ப, வெயிலாலும் நிலாவாலும் விநியோகங் கொண்டு மலர்கின்ற திலகமுகத்தையுடைய பெண்காள், கதவு திறமினென்பது பொருள்.

இவைபடுகின்றபாடுகண்டால் உலகுபடுதல் உரைக்கவேண்டா வென்ற வாறு.
--------

37. அருகுதிசையருகு கடிதடமு மிசைவெளி
      அகலமடையவளர் தனதடமு மவையவை
திருகுசெருநினைய நினையநடு விடையிறு
      திகிரிவரையிலர மகளிர்கடை திறமினோ.

எ-து: பெருகப்படுகின்ற திக்கடங்கச் சுருங்கும்படி அகல்கின்ற கடிதடங்களும் மேலான வெளியாகாசவகலமடங்க வளர்கின்ற குயங்களும் அவையவை தம்மிலே சினங்கொண்டு மிகுதிப்படப் பகைநினைந்து தம் பெருமைகாட்ட நடுநின்ற மத்திய தேசமான இடை நடுநிற்கப்பயப்பட்டு இற்றுப்போயினது போல நடுவின்றியிருக்கும் வடிவையுடைய சக்கிரவாள பருவதத்திலிருக்கும் வரையரமகளிர்காள், கதவுதிறமின். எ-று.

அருகுதல் - பெருகுதல்; "உருவினு மிசையினு மருகித் தோன்று, மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா, வாய்த மஃகாக் காலையான" (மொழி. (௭) 7.) இது தொல்காப்பியம். இனி, அருகுதல் - சுருங்குதல்; "வெண் மழை, யருகித் தோன்று மச்சிரக் காலத்து, மாங்க தன்றியு மோங்கிரும் பரப்பின், வங்க வீட்டத்துத் தொண்டியோ ரிட்ட" ((௧௪ : ௧௦௪-௭) 14 : 104-7). இது சிலப்பதிகாரம்; "அருகிக் கலியோ டகவன் மருங்கின்" (ஒழிபு. (௫) 5). இது காரிகை. கடிதட மென்பது கடிப்பிரதேசமென்னும் ஆரியச்சொல்; தடம் - பெருமை. வெளி - ஆகாசம். தனமும் ஆரியச்சொல். அவையவை யென்றது கடிதடமிரண்டையும் தனமிரண்டையும்.
--------

வேறு

38. உலருமுதுமர மிளமையும் வளமையு
      முயிருநிலைபெற வொளிவிடுமிவருரு
      வுறுதியமுதினு மிவரிவர்பிறவியு
      முததியிவர்களி லொருமகடிருமக

ளலகில்சுரபதி மதனர்களரசிவ
      ரவரதிகிரியு மனிகமுமகிலமு
      மலகில்புவனமு மிவரிவரெனவரு
      மமரர்வனிதைய ரணிகடைதிறமினோ.

எ-து: வருஷாகாலத்திலும் கோடைபோலத் தன் முதுமையால் உலருமரமுங்கூட இளமையும் வளமையும் பெற்றுப் பிராணனும் பெற்று நிலைநிற்கச் சோதிவிடும், இவர்களுடைய ரூபச்சாயை. அமுதினும் விளங்குறுவர் இவர்; இவர் பிறவியும் மதன சமுத்திரத்திலே; இன்னும் இவர்களில் ஒருத்தியே ஸ்ரீ தேவியென்று உலகத்தாராற் சொல்லப்படுகின்ற லட்சுமியும். குற்றமும் கணக்குமில்லாத தேவேந்திரனும் காமதேவனு மெனப்பட்ட அவருடைய இராச்சியபார ஸ்ரீயும் இவரே; அவ்விருவருடைய சக்கிரங்களும் தந்திரங்களும் மற்றும் அவருடையனவும் இவராதலால் எல்லா லோகங்களும் இவருடையவென உயர்ந்தோர் சொல்லவரும் தேவலோகத்திலுள்ள பெண்காள், கதவு திறமின். எ-று.

மரத்தின் வளமையாவது, தளிரும் இலையும் கொம்பும் தழையும் பூவும் பிறவும். உயிருநிலை பெற என்றது விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனுமுளவென்னும் பொருள் நிலைநிற்ப வென்றவாறு. இதில் அதிகம் மாகேசுவரமாதலிற் புத்தரையழித்தது. உறுதியமுதினு மென்றது, ஈண்டுக் கடல் கடைகிற காலத்துக் கற்பகவிருட்சமும் சுரபியும் அகலிகையென்னும் தெய்வப் பெண்ணுந்தோற்ற இந்திர கௌதமர் அகமருஷணங் கிடந்த கதையாலுணர்க; கற்பகசுரபிகள் அமிர்தங் கொடுக்கவல்லன; இவரைக் கொடுக்கமாட்டா; இவர் போல்வாரைக் கொடுக்கும். இவருற்பவித்தது மதன சமுத்திரத்திலே; உததி - கடல். இவர்களில் ஒருத்தி திருமகளாதலை அரம்பை முதலான தெய்வப் பெண்களும் திருமகளும் அமுதுகடைகிற காலத்துக் கடலிற் பிறந்தாரென் பதனாலுணர்க. இது வேதகதை.

இந்திரனும் காமனும் இராச்சியம் பண்ணுவது இவரால்; இந்திரபதம் வேண்டித் தவம்பண்ணுவாரைத் தவமழிப்பாரிவர். காமதேவனுக்குச் சயங்கொடுப்பாருமிவர். இன்னமும் இந்திரகாமதேவர்க்குச் சக்கிரஞ்செலுத்துவாருமிவர். எனவே இந்திரனேவின விடத்துப்போய், இந்திரசயம் பண்ணுவாரையும் சயஞ்செய்வாரிவர்; காமசக்கிரம் செலுத்துவாருமிவர்; அவரிருவர்க்கும் தந்திரமும் இவரேயெனவுணர்க. திகிரி - சக்கிரம். அனிகம் - படை. எல்லாம் இவர்களானவாறு; அகிலமென்பது. எல்லாவற்றிற்கும் பெயர். முத்திச்சேத்திரங்கள் உலோகமல்ல, அலோகமென வுணர்க.
--------

39. அடையவரியன கடையிருபுடையினும்
      அளவுகெடநிமிர் விழிவிடமடுதலின்
      அமரரனைவரு முனிவரிலதிகரும்
      அவனிதலமுற விழுபொழுதயிலெயி

றுடையகவிரித ழுமிழ்நகையமிழ்துயிர்
      உதவுமுதவியொ டுவமையிலிளமையொ
      டுரககுலபதி வரவவனுடன்வரு
      முரிமையரிவைய ருயர்கடைதிறமினோ.

இது, முன்னிற்பாட்டில் தேவேந்திரனுடைய தேவிமாரைப்போல நாகராசாவினுடைய தேவிமாரும் வந்து இராசராசேசுவரமுடையார் கோவிலிற் சேவைபண்ண வருவராதலில் அவருடைய கடைதிறப்பு.

எ-து: மற்றிவர் வருமிடத்துப் பிறரால் வந்து பிரவேசித்தற்கு அரிய கடைக்கண்கள் இரண்டுபக்கத்திலும் தம்மளவு கெடப் பிறரைக் கண்டவாறே வல்லி நிமிர்ந்த யானையைப்போலச் செல்ல நிமிர்ந்த கண்களான ஆலகாலச் சில்விஷம் கொல்லுதலால் முப்பத்து மூவர் முதலான தேவர்களும் பிரமரிஷிகளும் தத்தம் பதமிழந்து சுவர்க்காபவர்க்கங்களை யிழந்துவிட்டுப் பூதலத்திலே விழுகின்றவிடத்து அவரெளிமைகண்டு கூர்மையுண்டான இளமுறுவலெயிற்றையுடைய முருக்கம்பூப்போலும் அதரத்தினின்றும் புறப்படுகின்ற சிரிப்பான அமுதினால் முன்னம் கண்கதுவின விஷந்தீர்ந்து அந்தத்தேவர்களும் ரிஷிகளும் பிராணன் பெற உபகரிக்கும் உபகாரத்துடன், ஒப்பில்லாத யௌவன வளமையுடனே உரககுலத்திற்கு இராசாவான நாகராசன்வர அவனுடனேவரும் நாகராசன் தேவிமாரான பெண்காள், உம்முடைய மனைகளில் உயர்ந்த கதவுகளைத் திறமின். எ-று.

அதிகர் - மிகுதியுடையார். கவிர் - முருக்கு. உயர்கடை - மாணிக்கத்தாற் செய்யப்பட்ட கதவு. இதில் இவர்சிரித்தது இகழ்ச்சி; அவர் பிழைத்தது மோகம்.
--------

40. முடிதுமெனமறை முதலியபரவவும்
      முறிதுமெனநிசி சரர்குலமிரியவும்
      முரிதுமெனவெழு குலகிரிகுலையவும்
      முளிதுமெனவெழு புணரிகண்மறுகவும்

மடிதுமெனமகி தலநிலைதளரவும்
      மறிதுமெனவடி சுரபதிவருடவும்
      வரதனொருதமிழ் முனிவரன்வரவரு
      மலயவரையர மகளிர்கடிறமினோ.

எ-து: முடிந்து போவேமென்று வேதமுதலான சாத்திரங்கள் புகழவும், முறிந்து போவேமென்று இராக்கதர்குலம் ஓடவும், விழுவோமெனச் சத்தபருவதங்கள் குலையவும், உலர்வேமெனச் சத்த சமுத்திரங்கள் மறுகவும், கெடுவோமெனப் பூதலம் நின்றுநிலை தளரவும், மீள்வேமெனத் திருப்பாதங்களைத் தேவராசன் வருடவும் வரங்கொடுக்கவல்லவனாகிச் சமானமின்றியிருக்கும் அகத்தியமகாரிஷிவர அவனுடனே வரும் பொதியின் மலையில் வரையரமகளிரான தெய்வப்பெண்காள், கதவு திறமின். எ-று.

இதியாசமுதலானவை பவிஷ்யமான எதிர்காலமு முணர்வன வாதலால் அகத்தியன் பண்டு மகாதேவ ரருளிச்செய்ய வடக்கினின்றும் தெற்கு நோக்கிப் போதுகின்ற காலத்தில் இவன் வேதாதி சாத்திரமான நம்மை யெல்லாம் "அநந்தாவை வேதா:" என்னும் கீர்த்தியற மூன்று தமிழாக்கி முடிக்கின்றானெனவும், நிசிசரர் (நிசி என்பது இராத்திரி, அதில் சஞ்சரிப்பார் நிசிசரர்), பிரமரிஷியாகிய அகத்தியன் வாரா நின்றான்; அவனால் நாமெல்லாம் முறிந்து போவேமென அவனது சாபமஞ்சியோடவும், பண்டு விந்தபருவதத்தை மேருபருவதங் காணத் தன் ஸ்ரீ பாதத்தாற் பாதாளத்தில் அழுத்தியகதையை நினைத்து உயர்ந்த தலையையுடைய குலபருவதங்கள் நம்மையும் இப்பிரகாரஞ் செய்வனென நினைந்து குலையவும், பண்டு ஓர் அசுரனைச்சுட்டி நம்மையும் உள்ளங்கையிலே கொண்டு நக்கி உதராக்கினியால் தகிப்பித்தான்; இவன் நம்மை எவ்வாறு செய்வனோவென்று எழுகடல்கள் மறுகவும், தவஞ் செய்யாதே தானஞ் செய்யாதே வடதிசைப் பெருங்கனத்தாற் சுவர்க்கத்தைத் தொடலாம்படி உயர்ந்த எம்மை ஈசுவரனது ஏவலாலே சமதளமாக்கத் தனியே வருகின்றான்; இனி நாம் கெட்டுப் பொன்னாகாது மண்ணே யாவோமெனப் பூமி தானின்ற நிலையில் தளரவும், பண்டு நகுஷனான கௌரவகுலபதி சுவர்க்கராச்சியத்து அமரராசனாக வீற்றிருந்து இந்திரனுடைய தேவி சசிதேவியைக் கண்டு மோகிப்ப அவள் பிரமரிஷிகளே காவின சிவிகையேறின் வரலாமென்ன அவனும் அகத்திய புலத்தியர்களை யழைத்துக் காவச்சொல்லி ஏறிவர முன்தண்டு காவின அகத்தியன் குறளனாதலின் அவன் முதுகிலே கால்படப் பெரும்பாம்பாய் விழுகெனச் சாபமிட்டதனை நினைத்துப் பூருவ தேவேந்திரன் பயப்பட்டுத் திருப்பாதங்களை வருடவுமென்பது பொருள். இவையெல்லாம் வேதகதை.

இனி, 'முடிதும் ... மறிதும்' என உயர்திணைப் பன்மைத்தன்மை வாசகப்படச் சொல்லியது: வேத சாத்திரங்கள்தோறு நின்றருளிய சரசுவதி ஒருத்தியேயாயின் முதன்மையாம்; பலராயின் முடிவேயாம். அசுரர் உயர்திணைப்பாற்படுவர். மலையும் கடலும் பூமியும் வருணராசனும் பன்மையினும் ஒருமையினும் அப்படிப்படுவர். தேவேந்திரனது முதன்மை சொல்ல வேண்டா . வரதன் - வரத்தைத் தருபவன்.
--------

41. அலகின்மரகத முறிகளும்வயிரமும்
      அபரிமிதமெரி தமனியமடையவும்
      அரியதரளமு மழகியபவளமும்
      அரசவரவின சிகையவுமலைகொடு

கலகமறிகடல் புகவிடுவனகதிர்
      கவடுவிடுவன விவருழையினுமுள
      ககனதருவன மிவர்களுமெனவரு
      கனகவரையர மகளிர்கடிறமினோ.

எ-து: குற்றமில்லாத மரகதமுறிகளும் வயிரமும் அளவற்று எரிகின்ற சோதியையுடைய உயர்ந்த பொன்களெல்லாமும் பெறுதற்கரியமுத்தும் அழகுடைத்தான பவளமும் நாகராசாக்களுடைய முடிகளிலுள்ள மாணிக்கங்களும் பருவதத்தைக்கொண்டு கடையுங்காலத்து மறிகடலிலே புகவிடுவனவான அமிர்தும் சோதி கவடுபட விடுவனவாகிய கவுத்துவமணிகளும் இவர் பக்கலிலே உளவாதலால் இவர் ஆகாசத்துக் கற்பகவிருட்சக்காடு போல்வாரென உலகத்தார் சொல்ல வருவீரான மகாமேருபருவதத்திற் றெய்வப் பெண்காள், கதவு திறமின். எ - று.

மரகதமுறியாவன உருவப்பச்சையும் பிறவும். வயிரமாவது மனம்; இதனைக்கொங்கைகளென்பாருமுளர்; பொருளல்ல; உவமை பதஞ்செய்தலருமை. தமனியமாவது விசேஷமுள்ள பொன். அஃது இவர்களுடை உகிரும் மயிருந்தவிர உடம்பெல்லாவற்றினுமமைந்த சோதி. எரிதலென்றது ஒளி விட்டு விளங்கும் விளக்கத்தை. அரிய தரளமென்றது முறுவற்பற்களை. அதற்கு அருமை அதரத்துள்ளிருந்து வேண்டினபொழுது தோன்றி விளங்குதல்; வலம்புரிமுத்து. அழகிய பவளமென்றது, திருக்கு முடக்கும் பருமையும் நேர்மையும் வெளுப்பும் கறுப்பும் இரேகையும் கீற்றும் பிளப்பும் பெருமையும் . பிறவுமான தோஷமும் சிக்கெனலும் மிக்க மென்மையுமின்றி யிருக்கும் பவளம். அஃது இவர்கள் திருவாய்களே யெனவுணர்க. அரசவரவின சிகையவு மென்றது, நாகராசாக்களுடைய திருமுடியிலேயுள்ள விற்பிடி மாணிக்கத்தை; அஃது இவருடைய மருங்குலெனவுணர்க. பெறுதற் கருமையும் விற்பிடியளவாதலு மெல்லாம் கொள்க. சிகையவு மென்பது இடம் பற்றிப்பிறந்த பொருள்; பிறந்த வழிக்கூறலாம். மலைகொண்டு கடலிற் புக விடுவன அமிர்த கலசங்கள்; அமுது கடையக்கருத்து அதுவாதலின். அவை இவ்விடத்து மற்றிவர் கொங்கைகளெனவுணர்க. கவுத்துவமானமாணிக்கம் இவர்களுடைய குணமும் கண்ணின் விசாலமும் பிறவுமெனவுணர்க. ஆதலால் இவர் கற்பகக்காடுபோல்வர், வேண்டியது கொடுத்தலின். பிறவு முணர்க.
--------

42. அளகமுகிலிரு புடையினுமதிரவும்
      அகருமணமிர்க மதமொடுகமழவும்
      அதிகமிடையிடை சிலகொடியலசவும்
      அமிர்துபொதிவன சிலகுவடசையவும்

இளகுகலவைகொ டெழுதமைசமையவும்
      எறியுமிருகடை யினபிணையணையவும்
      இறைவர்கயிலையி லிறைமகளுடன்வரும்
      இமயவரையர மகளிர்கடிறமினோ.

எ-து: அளகமான பனிச்சையையுடைய கருமுகில்போலும் கொண்டை இரண்டருகிலும் சிறிது குலையவும் குலைதலால் அகிற்புகையின் நாற்றம் கஸ்தூரியுடன் கலந்து நாறவும் நடுவேசில வல்லிசாதிகளான இடைகள் மிக வருந்தவும் அமிர்தை உள்ளேபொதிந்து கொண்டிருக்கிற மலைக்குவடான குயத்தடங்கள் சிறிது அசையவும் பனிநீராலிளக்கி எழுதப்பட்ட குங்கு மச் சேற்றுக்கோலக்கரும்பும் வல்லிசாதியுமான தொய்யிலெழுதிய தோள்கள் கடுநடைக்கே சமையவும் காதளவுஞ்சென்று எடுத்துவிட்டு எறிகின்ற கண்களின் கடைகளிரண்டருகினும் தம்மினங்களெனப் பெடைமானினம் தொடர்ந்து வரவும் ஈசுவரனுடைய திருக்கைலாச பருவதத்தில் உமாபரமே சுவரியுடனே சேவித்து வருகின்ற இமய பருவதத் தெய்வப்பெண்காள், கதவு திறமின். எ-று.

அகரு - அகில். மிர்கமதம் - கஸ்தூரி. கலவை - பசுஞ்செஞ்சாந்து; குங்குமத் தளம். அமை - மூங்கில். பிணை - பெட்டைமான். இவர்கள் உமா பரமேசுவரியின் ஸ்திரீதனப் பெண்களெனவுணர்க. இதன்பாற் பல ஆகுபெயருமுள.
--------

43. எமதுமலையிறை யிகல்பொருசிலைமலை
      ரவியுமதியமு முடன்வலம்வருமலை
      யிருளுமிருள்கெட வெரிதமனியமலை
      ரசதமலையிம மலையிலொர்சிறுகுவ

டுமதுமலையென வுயர்கயிலையையிக
      ழுரிமையுடைவட வரையரமகளிரை
      யுலகுவெயில்கெட விளநிலவெழநகு
      முதயவரையர மகளிர்கடிறமினோ.

எ-து: எங்களுடையமலை ஈசுவரன் பண்டு திரிரபு தகனம் பண்ணுகின்ற காலத்தில் அதற்குத் தக்கபடி போதுமென வில்லாகக்கொண்ட மகாமேருபருவதம்; அன்றியும் ஆதித்திய சந்திரர்களிருவரும் ஒக்கப் பிரதட்சிணம் வரும் தெய்விகமலை; இருள் கெட விளங்குகின்ற பொன்மலை; உமது கயிலைமலை எமது இமயமலையில் ஒரு சிறு குவடென, எல்லா லோகத்திலும் மிக்குயர்ந்து வேண்டற் பாட்டினை யுடைத்தாயிருக்கின்ற ஸ்ரீகைலாச பருவதத்தை இகழ்ந்து சொல்லவல்ல வடக்கில் மலையிலுள்ள தெய்வப் பெண்களை இகழ்ந்து சொல்லுவதற்கு உலகத்தாருடைய காமாக்கினி வியசன உஷ்ணந்தீர இளைய நிலாவைப் புறப்பட விடுவீர்போலச் சிரித்தருளும் உதயகிரியிற் றெய்வப்பெண்காள், கதவு திறமின். எ-று.

உமாபாமேசுவரியுடைய அடியார் மகாதேவரடியாரைப் பழித்துரைத்தவாறு இது.

வேறு.

44. மயிலா யிறக்கி னயிர்ப்பிக்கும் வறுங்க ணென்று வாசவனார்
குயிலா யிறந்த கதைபாடக் கோலக் கபாடந் திறமினோ.

எ-து: தட்சயாகத்தை ஈசுவரன் கோபித்து விநாசம் பண்ணுகின்ற காலத்துத் தேவேந்திரன் பயப்பட்டு வேண்டினரூபங் கொண்டுபோக வல்லவன் வழியிடைப் போகவேண்டுமென்று நினைத்துத் தேவசேனாபதி யுடைய வாகனமாகிப் போகவேண்டுமென்று பார்த்து மயூரவேஷங்கொண்டு போனால் எண்ணிறந்தகண்பீலியால் இந்திரனென்று அயிர்த்துக்கொண்டு பூதகணநாதர் புடைப்பரென்று பயப்பட்டுப் பிள்ளைப் பட்சிகளிற் குயிலாய், எல்லாரும் அனுக்கிரகிக்கினும் பிடித்து வளர்ப்பாரின்றி யிருக்கு மிதுவென்று சென்று இறந்துபோன புராணகதையைப்பாடக் கதவு திறமின். எ-று.

வறுங்கணென்றது, சாபமோட்சக் கண்ணுக்கும் அடைவுடைத்து. வாசவன் - தேவேந்திரன். குயிலாயிறந்த: குயிலாயும் இறந்தவென உம்மை தொக்கது. கோலம் - அழகு.
--------

45. விண்ணிற் பகனார் தாந்துரக்கு மெல்லா விருளு மீண்டுந்தங்
கண்ணிற் புகுந்த கதைபாடக் கனபொற் கபாடந் திறமினோ.

எ-து: ஆகாசத்தில் ஆதித்தனால் துரப்புண்ணும் அந்தகாரமெல்லாம் மீண்டும் அந்த ஆதித்தனுடைய கண்களிலே புகுந்த புராணகதையைப் பாடக் கதவு திறமின். எ-று.

இப்பாட்டின் கருத்து : தட்சயக்கிய விநாசத்து வந்த ஆதித்தனுடைய கண்ணை ஈசுவரன் பறித்தருளினகதை; [*] "பகாட்சஹா" என்பது மகாகாளஸ்தவம்.
---
[*] "பகன்றா மரைக்கண் கெடக்கடந்தோன்" திருக்கோவையார், (௧௮௪) 184.
---

46. புக்கா வுதிகள் பலவேற்றும் போரி லேற்றுஞ் சிரமொருவர்
முக்கா லிழந்த கதைபாட மூரிக் கபாடந் திறமினோ.

எ-து: தக்கனுடைய யக்கியத்தில் அக்கினி கோத்திர ஒளபாசன யக்கியாகுதியை உண்கைக்கு யக்கிய மூர்த்தியாய்ப் புகுந்தும் சகத்திரதாரையாய அவிர்ப்பாக அவிசை ஏற்றுக்கொண்டருளியும் ஈசுவரனெதிரே நின்று பொருதும் ஒருவரெனப்பட்ட விட்டுணு தேவர் தமது தலையை மூன்று விசை இழந்தருளிய புராணகதையைப் பாடப் பெரிய கதவுகளைத் திறமின். எ-று.

மூரி - பெருமை. ஒருவர் ஒருதலையை முக்காலிழந்தது விசேடமென வுணர்க.
--------

47. ஊத்தைத் தலைநீத் துய்ந்தொழிந்த
வொருமா மடிக ளொருமுருட்டு
மோத்தைத் தலைபெற் றமைபாட
மூரிக் கபாடந் திறமினோ .

எ-து: பொல்லாத்தலையைப் போகவிட்டுத் தக்கனார் மோத்தைத் தலைபெற்ற புராணகதையைப் பாடப் பெரிய கதவுகளைத்திறமின். எ-று.

முருடு - பெருமை. மாமடிகளென்பது ஒரு சொல். ஊத்தைத் தலை யென்பது இடக்கரடக்குமொழி; [*]“ஊத்தை வாய்ச்சமண்", "ஊத்தைத் துருத்தி."
---
[*] திருஞான. தே. திருச்சாய்க்காடு.
---

கடை திறப்பு முற்றிற்று.
----------

3. காடு பாடியது. (48 - )

48. நெடுங்குன் றேழும் பிலமேழு நேமிக் கிரியுங் கடலேழும்
ஒடுங்கும் பாகத் துறைமோடி யுறையுங் காடு பாடுவாம்.

எ-து: சத்தபருவதங்களும் ஏழுபிலங்களும் சக்கரவாள பருவதமும் சத்தசமுத்திரங்களு மொடுங்கும் வாமபாகத்தேயுறையும் துர்க்காபரமேசுவரி எழுந்தருளியிருக்குங்காடு சொல்லுவோம். எ-று.
------
வேறு.

49. பால்வறந்துகீழ் நின்றகள்ளியும்
      பசைவறந்துபோய் மீமிசைச்
சூல்வறந்துபோய் மாகமேகமுஞ்
      சுண்டவீமவெரி மண்டவே.

இனி, துர்க்காபரமேசுவரிக்கு இருப்பான பாலைநிலத்தைக் கூறத் தொடங்கினார்.

எ-து: அந்நிலத்தில் வெம்மையையே விரும்பிநின்ற மகாவிருட்சமான கள்ளியும் பால்வற்றிப் பின்னை உடற் புறப்பசையுமற்றுப்போக மேன்மேலான ஆகாசத்திற் கருக்கொண்டு நின்ற மேகத்திற் சூல்வற்றிக் கள்ளியேபோல அம்மேகமும் தன்னுடற் பசைவற்றிப் பின்னையும் இங்கேநின்ற கள்ளியே போலக் கரிந்து சுண்டி இன்றியே போம்படி சுடுகாட்டு நெருப்புமிஞ்சியெழ. எ-று.

மாகம் - ஆகாசம். ஈமம் - சுடுகாடு.
--------

50. பிணங்கடுங்கனலு மின்றிவெந்துநில
      வாய்நிமிர்ந்துபில வாயபேய்
நிணங்கரைந்துருக நெய்யைநீரென
      நினைத்துநாவினை நனைக்குமே.

எ-து: அந்நிலத்திலிட்ட பிணங்களெல்லாம் நெருப்புமின்றி நிலங்களி னிடமெல்லாம் பரந்து வெந்து அப்பிணங்களின் நிணங்களால் நெய்யுருகப் பிலத்துவாரம் போன்றிருக்கும் வாய்களையுடைய பேய்கள் அந்நெய்யை நீராகநினைத்துத் தம்முடைய நாக்குக்களை நனைக்கும். எ-று.

நாவை நனைப்பதற்கலது நெய் கிடையாது, உலருங்கடுப்பினென வுணர்க. கடுங்கனல் - புதுநெருப்பு. எனவே, பாலைநிலத்து உஷ்ணமே அமையும்; நெருப்பும் விறகும் கொண்டுவாராரென்றவாறு.
--------

51. சிரந்தெரிந்தன வறிந்தறிந்துகுவை
      செய்துபைரவர்கள் செந்நிலம்
பரந்தெரிந்துபொடி செய்யமற்றவை
      பரிக்கவந்தவர் சிரிப்பரே.

எ-து: மயான வாசினியது மந்திரசாதகரான பைரவவேஷதாரிகள், தமது தலைகளில் உணர்வுடையன அறிந்து ஆராய்ந்து அறுத்தறுத்துக் குவையாகத் தலைமலையான சிரபுட்பமிட்டுவைக்க அவை அந்நிலமான செம்பாலைத் தரையிலே பரந்து வெந்து பஸ்மமாய்ப்போகப் பின்பு அர்ச்சித்து வைத்த சிரபுட்பமான நிர்மாலிய புட்பமெடுத்துப் போகட வந்த மந்திரசாதகருடைய மாணாக்கர் அத்தலைகளைக்காணாது சிரிப்பர். எ-று.

சிரந்தெரிந்தன வென்றது, மது மச்சிய மாங்கிச முத்திரை இணை விழைச்சென்ற சகள பஞ்சகந்தெரிந்த யாமளாசாரியர் தலைகளையெனவுணர்க. இப்பொருள் மகாவிரதிகளுடைய சாத்திரமான ஆகமத்திலுண்டு; கண்டு கொள்க.
--------

52. புற்றினின்றெழு புயங்கசூடிகை
      நெருப்புவிட்டசிறு பொறியெனப்
பற்றிநின்றன வநந்தமின்மினி
      யினந்தனித்தனி பரப்பவே.

எ-து: அந்நிலத்துப் புற்றுக்களினின்றும் எழுகின்ற மகாநாகங்களின் தலையின்மாணிக்கம், மூடிக்கிடந்த நெருப்புப் புறப்படுமாறு போன்றன; அந்நெருப்பினின்றும் புறப்படுகின்ற சிறு தழற்பொறி யொத்தன, அப்புற்றைப் பற்றிநின்ற அளவில்லாத மின்மினியினங்கள்; அவ்வண்ணமே தனித்தனியே புற்றுத்தோறும் பரப்பனவுள். எ-று.

புற்றினின்றும் பாம்பெழுதற்குக் காரணம், நிலத்தழல் பொறுக்கமாட்டாமையாலென வுணர்க; மின்மினிக்கும் இது. புயங்கம் - பாம்பு. சூடிகை - முடிமணி.
--------

53. பிணப்பறைக்குர லுவந்துவந்துசில
      பேய்துணங்கையிடு தொறுமிடுங்
கணப்பறைக்குரல் படப்படச்சிறிது
      செவிடுபடுமமரர் கன்னமே.

எ-து: பிணமிடவருவார் கொட்டிக்கொண்டு வருகின்ற சாக்காட்டுப் பறைக்குரலைக்கேட்டுத் தம்பசிமிகுதியாற் சந்தோஷித்துவந்து சில பசாசினங்கள் துணங்கையென்னுங் கூத்தாடுந்தோறும் அப்பிண்ப்பறைக் கூத்துக்காண வேண்டியிடுங் கூட்டப்பறைக்குரல் ஓசைபடமுழங்கச் சிறிது தேவலோகத்தார் செவிகள் செவிடுபடும். எ-று.

பிணப்பறை - செத்தார்க்குக் கொட்டும்பறை. கணப்பறை - வாய்ப் பலிக்குக் கொட்டும்பறையுமாம்.
--------

54. பள்ளிவேலைவிடு கானநாடிபடை
      பாடிவீடுகொள் படங்கெனக்
கள்ளிவேலிகளின் மீதெழப்பல
      சிலம்பிநூல்கொடு கவிக்குமே.

எ-து: தன்கோயிலும் படுக்கையுமான சமுத்திர சலத்தைவிட்ட வனதுர்க்காதேவியுடைய படைக்குப் பாடிவீடு கொள்ள எடுத்துவிட்டுக் குடிஞைப்படங்கு அடித்தாற்போல அந்நிலத்துப் பிழைத்துநின்ற கள்ளிகளாலமைத்த வேலிகளின் மேலே பல சிலந்தி வாய்நூல் இழைத்துக் கவிந்து கிடக்கும். எ-று.

பள்ளி - கோயில்; "பள்ளி மாட்டுப் பற்பல பிறாண்டும்" என்பது உதயணன் கதை. பள்ளி - படுக்கை; "ஒருகைப் பள்ளி யொற்றி." இது முல்லை. (75). வேலை - கடல். கானநாடி - காட்டையே நாடாகவுடையவள்; மயான வாசினியென்னலுமாம். சிலம்பி - சிலந்தி; "சிலம்பிபொதி செங்காய்". இது [*] குறுந்தொகை.

[*] இம்மேற்கோள், குறுந்தொகையிற் கிடைக்கவில்லை; பழைய உரைகளில் மேற்கோளாகக் காணப்படும், "உள்ளார் கொல்லோ தோழி" என் னுஞ் செய்யுளில் உள்ளது.
----

55. காதுமேயிறைவி திகிரிபூதமுங்
      கழுதுமேககன முழுதுமே
போதுமேயிரவி புரவியுடுவுநடு
      புகுதுமேனகுது நகுதுமே.

எ-து: அந்நிலத்துக்குப் பரமேசுவரியைத் தவிர ஆதித்தனும் தெய்வமென்று சொல்லுவர்; ஆதித்தனது நிலம் மென்பாலை; இது வன்பாலை யாதலால் ஆதித்தனுடைய குதிரைகளும் அவ்வழியே போகா; போகின் தேவியது உஷ்ண சக்கரம் பொரும்; அதற்குக் காரணம், ஆகாசமுழுவதும் தேவியுடைய பூதமும் பசாசுமே; அன்றி இவையிற்றின் உயரங்களாலும் வலியாலும் பூமியுஷ்ணத்தாலும் நட்சத்திரங்களும் நடுவுபுகுதப் பெறா; புகுதரின் நாங்கள் சிரித்தும் சிரித்தும். எ-று.

காதுமேயென்றதில் ஏகாரம் தேற்றேகாரம். போதுமேயென்றதில் ஏகாரம் ஐய ஏகாரம். கழுதுமே யென்றதில் ஏகாரம் தேற்றேகாரம். முழுதுமேயென்றதில் ஏகாரம் ஈற்றசையேகாரம். கழுது - பேய்; “கழுதுகள் காணக் கருமைத் தாகி.” இஃது உதயணன்கதை. உடு - நட்சத்திரம்; “ஊர்கோண் மதியை யுடுச்சூழ்ந் தாங்கு". இதுவும் உதயணன் கதை. நகுதுமே : ஏகாரம் ஈற்றசை.
-------------
வேறு.

56. யோகமுதலிறைவி கோயின்மிசைநிருதர்
      யூதம்வரவலகை யொட்டுமே
மேகமுருமொடற வெற்புமிறகொடற
      மேலையெயிறுகொடு வெட்டுமே.

எ-து: யோககர்த்தரியா யிருக்கின்ற தேவிகோயிலின் மேலே அசுரர் கூட்டம் வர ஈசுவரியுடைய படையான பசாசுகள் ஒட்டுவனவல்ல; மேகங்கள் வரின் அவை உருமேறுடன் அறவும், பருவதங்கள் வரின் அவை இறகோடு அறவும் மேல்வாயெயிற்றாலே அறவெட்டும். எ-று.

எனவே மேகங்கள் மழையைப் பெய்யாத பாலைநில மெனவுணர்க. நிருதர் - அசுரர்; ராட்சதர்க்கும் பெயர். பூதம் - பெரும்படைக்கூட்டம்.
--------

57. நீலவரைநிரைகள் போலுமவுணர்தொகை
      நிற்குமேயிறைவி கிற்குமே
காலவிறுதியெரி போலமுகில்வயிறு
      காயவருமுருமு கக்குமே.

எ-து: நீல பருவதங்களை நிரைத்தாற் போன்றிருக்கும் அவலட்சண ரூபங்களையுடைய அசுரருடைய கூட்டம் நிலத்தின்மேல் வந்து நிற்கவற்றே? நிற்கிற் பரமேசுவரி சம்மதிக்குமே? உகாந்தகாலத்து அக்கினிபோல மேல்வந்த மழைமுகில் வயிற்றினீருலர்ந்து காயும்படி தரையினெருப்புத் தழல் மேனோக்கிப் புறப்படக் கக்கும். எ-று.

மழைமுகில் வயிறுகாய நிலத்து அசுரர்க்கு நிற்கவரிது. கிற்றல் - சம்மதித்தல். உருமுவென்றது, உருமேறு போலு நெருப்பையென வுணர்க. 'உருமு' என்னுமுடிவுணர்க; உருமென்பது மகர வீறு.
--------

58, ஈரல்சுருளமுளி பேய்களெரிதலையொ
டேறுசருகுட னெடுத்தெழுஞ்
சூரனிரைகளெரி சூளைநிரைகளென
வானினிடையிடை சுழிக்குமே.

எ-து: வயிற்றின் பசியின் பெருமையாலே ஈரலும் சுருளும்படி உலர்ந்து விறகான பேய்களின் நெருப்புப் போன்றிருக்கும் தலைமயிர்களுடன் சருகுகளை எடுத்தெழுந்த சூறைக்காற்றுத் துராலான் எரித்தசூளைகள் நெருப்பும் புகையுங் கூடத் தூற்றுவது போல ஆகாசத்தே சுழித்து இடையிடையே தூற்றும். எ-று.
--------

59. பூதமலகிலன பொங்குகழுதிரத
      மெங்குமெழநடுவு புதையவந்
தோதமுகவிறுதி போதநடுநடுவு
      முழுகுமெழுகிரியு மொக்குமே.

எ-து: தேவியுடைய படையான பூதங்கள் எண்ணிலாதனவற்
றிடையே பொங்கியெழுந்த பேய்த்தேர்கள் எவ்விடத்திலும் வந்துநடுவு வெளியடங்கப் புதையவருதலின், உகாந்த காலத்துக்கடலோதம் கிளர்ந்து புறப்பட நடுவு முழுகிப்போயெழுகின்ற சத்த பருவதங்களை யொக்கும். எ-று.

பூதம் பருவதம், பேய்த்தேர் ஓதமெனவுணர்க. கழுதிரதம் - பேய்த் தேர்.
----------
வேறு.

60. யாமுமிமையவர் தாமும்வெருவர வீமவெரியிர வெரிதொறுந்
தாமுமெரிவன போலவெரிவன தாபமிலசில தீபமே.

எது: மனுஷ்யலோகத்துள்ள யாமும் சுவர்க்கலோகத்துள்ள தேவர்களும் மரணமுண்டென்று பயப்பட்டிட இராமாறு எரியும் சுடுகாட்டு நெருப்பு எரியுந்தோறும் அவற்றுடனே கூடத் தாமும் எரிவனபோலவே எரிவன சில விளக்குகள்; அவையிற்றுக்குத் தாகமோகங்களில்லை. எ-று.

எனவே உடம்பினும் தலையினும் விளக்கேற்றித் தேவிக்குத் திருவிளக்கெரிக்கும் மந்திரசாதகரதுநிலைமை கூறியவாறு. நெய் உடம்பினெய்யே; விறகு தலைமயிரே. தாபமில்லையென்பதனாற்பயன், விளக்குத் தாபமுடையனபோல நெய்யைப்பருகி மீண்டும் நெய்பெறாவிடின் அவியும்; நெருப்புப் பசியுடையதுபோல விறகை எரித்துத்தின்னினும் வேண்டும்விறகு பெறாவிடின் அவியும். இந்நெருப்பு இங்குச்சொன்னது தந்திரவுத்தி. யாமென்பது உளப்பாட்டுத்தன்மைச்சொல்; இமையவர் பயப்படுவது பண்டு. வெந்தபடியை நினைத்தெனவுணர்க.
----------

61. ஈடுபடுமிறை மகள்பொறாமைகொ
      லிதுபொறாமைகொ லிறைவர்தங்
காடுபடுசடை யூடுமுருவு
      கரந்துவருவது கங்கையே.

எ-து: எளிவரவு பட்டுண்ட ஈசுவரி பொறாளென்றோ, இந்நிலத்தி னுஷ்ணந்தான் சசிக்கமாட்டாமையானோ, கங்கை ஈசுவரனது காடுபடு சடையின் நடுவே தன் வடிவைக்கரந்து வருவது? எ-று.

காடுபடுசடையாவது, கொன்றையும் எருக்கு முதலியனவும் பாம்பும் பிறவுமுள்ளதான திருச்சடை. கங்கைதான், எழுகடலும் அளவொக்கும் ஆகாயகங்கையெனவுணர்க. இதில் நெருப்பை அவிப்பது நீர், நீர்தன்னை நெருப்பு வெதுப்புமிடத்து வேறுபட்ட விகாரகாரியம் வேண்டுமென வுணர்க.
--------

62. வெம்புகருநடர் வந்தவனமெனும்
      விந்தவனமென வேவவுங்
கொம்புவிடுவன கொங்குகமழ்வன
      கொந்துசொரிவன கொன்றையே.

எ-து: சோழனுடைய ஐசுவரியத்தின் பெருமைகண்டு சகியாதே வெம்பித் திரியும் கன்னாடராசனான சந்திரகௌரீவல்லபன் யுத்தஞ் செய்ய அவனைக் கலியாணபுரத்தினின்றுந் தாக்க அவனும் துரப்புண்டு விந்தாடவியிற் சென்றுபுக அவன் புக்க அவ்விந்தத் தடவியைத் தடவிப் பிடிக்கப்புக்கு அவ்வடவியை நெருப்பையிட்டுச்சுட அக்காடு வெந்தவாறு போல இப்பாலைநிலம் உஷ்ணத்தாலே வெந்தெழுந்து போகவும் இந்நிலத்து நாயகியான பரமேசுவரியுடைய திருமுடியிற்பூவும் திருத்தோள்களில் தோண்மாலையுமான புட்பங்களையுடைய திருக்கொன்றைகளே கொம்புவிட்டு வளர்வனவும் சுகந்தமாகித் திவ்யமாக நாறுவனவும் பூந்தாது சொரிவனவும். எ-று.

கொன்றையேயென்ற ஏகாரத்தால் மற்ற விருட்சங்களுள் ஒன்றுமின்று என்றவாறு.
--------

63. கண்டமலைவன சண்டதருநிரை கந்துளெழமிசை கதுவவுஞ்
சண்டவெரியினு ணின்றுகுளிர்வது தங்களொருசிறு திங்களே.

எ-து: வெந்து பொடியாய் முறியானமலைகளும் மரக்கூட்டமும் காற்றினால் எடுக்கப்பட்ட நெருப்புக்கட்டியான கந்துளெழும்படி வேவ மிக்கபிரசண்டமான நெருப்பெழவும் பின்னையும் அதில் நிலைநின்று சீதமிகக் குளிர்வது தங்களுடைய திருமுடித் தனிச்சிறு திங்களொன்றுமே. எ-று.

கண்டம் - பிளவு. வன தருநிரை - காட்டுமரக்கூட்டம். சண்டம் - பெருமை. தரு - விருட்சம். கந்துள் - நெருப்பொடு கூடிய கரிக்கட்டி. கதுவவும் - சந்திரபதத்தளவுஞ்சென்று ஓரோர் அக்கினிச்சுவாலை தொடவும். தங்களொருசிறு திங்களென்றது, திருமேனியிரண்டும் ஒன்றாய்நின்றவிடத்துத் தங்களுக்குத் திருமுடியொன்றேயாதல் பெற்றது. பண்டு கங்காள வேடம் ஈசுவரன் கொண்டருளின காலத்தில் முனிவர்கள் விட்ட அக்கினி நலியாமற் சீதத்தாலே நலிவுண்ண அவர்படைத்துவிட்ட சந்திரனெனவும் ஆலகாலம் அமுது செய்தற்குப் பிரதியுபகாரமாகத் தேவர்கள் பாலசந்திரனைக் கொடுத்தார்களெனவும் கதைகளுள. இது வேதத்திற்கண்டு கொள்க.
--------

64. படப்படப்பொடி யாகவெங்குள பாதவாதிக ளாதவஞ்
சுடச்சுடப்பொடி யாயெழச்சுழல் சூறைபுகுவன பாறையே.

எ-து: உஷ்ணமுண்டாக உண்டாகப் பொடியாய்ப் போக எங்குள்ள விருட்சமுதலான எல்லாம் வெயில் சுடச்சுடப் பொடியாய் வெந்தெழச் சுழன்று அடிக்கின்ற சூறைக்காற்றில் அகப்படுவன அந்நிலத்திற் படர் பாறையான பாறாங்கல். எ-று.

பாதவம் - விருட்சம். ஆதவம் - வெயில். சூறை - சுழல் காற்று; "சூறைக்காற்றின் பாறாங்கல்லே" என்றாராதலின். புகுதல் - அகப்படுதல். பாறைகளும் பொடியாய்ச் சருகிலையாயே கிடந்தன வெனவுணர்க.
----------
வேறு.

65. புறச்சோலை பூதங்க ளும்பேயும் யாவும் புகுஞ்சோலையே
யறச்சோலை தானும் பிரானும் பயின்றாடு மச்சோலையே.

எ-து: இந்நிலத்திற் புறச்சோலை பரமேசுவரியுடைய படைகளான ஸ்ரீ பூதகணங்களும் பசாசுகளும் அவற்றிற் கடையான தந்திரமாதிகளு மெல்லாம் புக்கிருக்குஞ்சோலை; அச்சோலை கொன்றைச்சோலை. அறச் சோலையாவது, பரமேசுவரியிருக்குங் கோயிற் சோலையான உட்சோலை. அதுதான் பரமேசுவரி தானும் தனக்குக் கர்த்தாவான ஈசுவரனும் பழகியாடும் அழகிய சோலை. எ-று.

'அ' என்றது, பிரமாவின் பெயருமாம்; அகரம்போலும் சோலை அச்சோலையென்றுமாம். யாவதேயாக, அச்சோலைதான் கற்பகச்சோலை. கொன்றைச்சோலை துவாரநந்தவனம், கற்பகச்சோலை அந்தப்புரமான உபவனச்சோலையெனவுணர்க.

இனிக் கற்பகங்களைச் சொல்லப் புகுகின்றார்.
-----------
வேறு.

66. வெற்ப நேகசிக ரத்துடன் மிடைந்தனவென
கற்ப கோடிவிழ நீடுவன கற்பதருவே.

எ-து: குலபருவதங்கள் பலபல சிகரங்களுடனே மிடைந்து தம்மிற் செறிந்தனவெனக் கூடிப் பின்னை உகாந்தகற்பங்கள் அநேக நூறாயிரங்கள் போகவும் நின்று வளர்ந்தோங்கிவருவன கற்பகவிருட்சமுள, இவளது அகச்சோலையில். எ-று.

எனவே இந்திரபதமும் பிரமபதமுமழிந்த புறங்களிலும் நிற்பன, தேவியுடைய கற்பகச்சோலைகளெனவுணர்க.

--------

67. வாரி சாலையனு மாலய நமக்கெனவரும்
பாரி சாதமுள சாதகர் பராவுவனவே.

எ-து: வருணராசனும் நமக்கு உட்டினமிக்ககாலத்தில் உட்டினந் தீர்ந்திருக்கலாமிருப்பிடமிதுவெனவந்து புகுதும் கற்பகசாதியில் இரண்டாங்குலமான பாரிசாதச் சோலையுள; அவைதாம் யாமளசாத்திர மந்திரசாதகர் காலம்பார்த்துப் பிரார்த்தித்துப் புகழப்படுவன. எ-று.

வாரியாவது சலம்; கடலுக்கும் பெயராம். "வருணராசனுக்கு உட்டினம் வடவாமுகாக்கினியும் யுகாந்தாக்கினியும் அகத்தியரிஷியின் உதராக்கினியும் ஈசுரனது அமுதமான ஆலகாலவிஷாக்கினியும் இராமசக்கரவர்த்தியுடைய சராக்கினியும் பதிவிரதைகளுடைய சாபாக்கினியுமெனவுணர்க. வாரிசாலயனென்று பாடமோது வாருமுளர்; வாரிசம் - செந்தாமரை. ஆலயம் - இடம்.
--------

68. பாலை தாழமது மாரிசொரி யும்பருவநாண்
மாலை தாழ்வன வநேகமுள மந்தாரமே.

எ-து: பாலை நிலமான இந்நிலமும் பிறபுலத்திற் பாலை நிலங்களும் தமது தன்மை கெட்டுத் தாழ்வுப்பட்டுக் குளிரத் தேனென்னுங் கால வருடம் வருடிக்கவல்ல பரிபக்குவப் புஷ்பக்கொத்துக்களைத் தாழவிடவல்ல அநேக விதமான கற்பகத்துக்கு மூன்றாஞ் சாதிகளான மந்தாரச் சோலைகளுமுள. எ-று.

பாலையென்பது உட்டினத்துக்குப் பெயருமாம்; "காலை ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்பப், பாலைநின்ற பாலை நெடுவழி" ((௧௦-௧௧) 10-11.) இது சிறுபாணாற்றுப்படை. பருவம் - காலபக்குவம். நாள் - புஷ்பம்.
--------

69. மீதெ டுத்தபணை யாவையும் விழுங்கவெழுசெந்
தாதெ டுத்தன வநேகமுள சந்தானமே.

எ-து: மீதெடுத்த பணைக்கவடுகளைப் புட்பத்தால் விழுங்குவது போல மேன்மேலெழுந்த சிவந்த பூந்தாதெடுத்து விளங்குவன அநேக கோடியுள, கற்பகத்தில் நாலாஞ்சாதியான சந்தான விருட்சம். எ-று.
மீது ஆகாயமுமாகும்.
--------

70. சுவடு கொண்டபொழி லேழின்ஞிமி றுந்துறுமொரோர்
கவடு கொண்டவரி சந்தன வனங்கவினவே.

எ-து: சுகந்தச்சுவடுகொண்டு சீவிக்கும் பிரமரசாதியால் மொய்த்திருக்கும் அரிசந்தனச்சோலையும் அழகு செய்ய. எ-று.

பொழிலேழென்பதற்கு ஏழுசோலையெனச் சொல்லுவாருமுளர். இப்பொருள் காளக்கவிக்குப் பொருந்தாது. பொழிலேழென்பது ஏழு பூமி; "ஏழுடை யான்பொழி லெட்டுடை யான்புயம்" ((௭) 7) எனத் திருக்கோ
வையில் இரண்டு பொருளுமுளவெனவுணர்க.

வேறு.

71. பூவைந் தாலும் புகுதற் கரும்பொலங்
காவைந் தாலைந்து சோலை கவினவே.

எ-து: "மாம்பூ வசோகப்பூத் தாமரைப்பூ முல்லைப்பூ, தேம்பாய் தருகுவளைச் செவ்விப்பூ - மேம்பட்ட, மைந்துபூண் மார்ப மதனன் கணையான, வைந்துபூ வாகு மவ" என்னும் இப்பஞ்ச புட்பங்களாற் புகுதற் கரியனவாய் இப்புட்பங்களின்றி யொழிந்தாற் காமதேவற்கு வேண்டியபொழுது பெறப்படுதற்கு எளியனவாயிருக்கும் பொன்னின் சோலையான கற்பகம் மந்தாரம் சந்தானம் பாரிசாதம் அரிசந்தன மென்னப்பட்ட ஐந்து விருட்சங்களிலும் ஓரொன்றால் ஒரு சோலையான ஐந்துசோலைகள் அழகு பெற்றிருக்க. எ-று.

வேறு.

72. மலைதருவன கடறருவன மணியணிபணி மகுடத்
தலைதருவன புவிதருவன தருவனசுர தருவே.

பருவதங்களால் தரப்படுவனவான சிங்கமுதலிய மிருகங்களும் மற்றும்பலவும் தாமே தருவனவான சுரதருவெனவும், சமுத்திரம் தருவனவான இப்பி சங்கு வலம்புரி சலஞ்சலம் இவைகளும் இவை தருவனவான முத்துக்களும் பவழங்களும் மகாமச்சியங்களும் மாணிக்கங்களும் இவை முதலான பலவும் தாமே தருவனவான சுரதருவெனவும், விற்பிடிமாணிக்கங்களை ஆபாணமாகவுடைய நாகராசாக்களது தலைகள் தருவனவான மகா ரத்தினங்களும் பிறவும் தாமே தருவனவான சுரதருவெனவும், பூமியால் தரப்படுவனவான மகாவாகனமாகிய கசரத முதலாயின பிறவும் தாமே தருவனவான சுரதருவெனவும் கொள்க.

எ-து: இவ்வாறு எல்லாம் வல்லனவான தேவ விருட்சமைந்தும் ஐந்து சோலையாய்த் தேவியது உத்தியான நந்தனவனமாயிருக்கும். எ-று.

வேறு.

73. பொங்க மளிப்புண ரித்துயில் வல்லி புறங்கடையிற்
சங்க மளிப்பன ரத்ன விதஞ்சத கோடியே.

எ-து: விஞ்சப்பட்ட படுக்கையானதுகொண்டு கடலில் உறங்கும் விட்டுணுசத்தியான பரமேசுவரியின் திருக்கோயிற்றிருவாசற் புறத்திருக்கும் சங்கநிதி கொடுப்பன, அரிய ரத்தினவத்துக்கள் அநேகவித நூறு கோடிகள். எ-று.

சதமென்பது [*]அநந்தவாசி.
----
[*] அநந்தவாசி - பலவற்றைச் சொல்லுவது.
----

74. பாகன கங்குழை வித்த பவித்ர பயோதரிதன்
கோகன கங்கன கஞ்சத கோடி கொடுப்பனவே.

எ-து: தனது சமபாகங்கொண்டு நின்ற பரமேசுவரனுடைய திருவுள்ளத்தைக் குழைவித்த பவித்திரமான குயங்களையுடையாளது திருக்கோயிற்றிருவாசலிற் பத்மநிதிகொடுப்பன சதகோடி கனகராசிகள். எ–று.

பவித்திரமென்பது [+] வரிட்ட மங்கலம்.
---.
[+] வரிட்ட மங்கலம் - மிகஉயர்ந்த மங்கலப்பொருள்கள்.
---

வேறு.

75. நுதிக்கோடு கூர்கலை யுகைப்பாள் விடாமுல்லை
      நூறாயி ரங்கிளைகொ டேறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர வெழுந்தண் கொழுந்துகளை
      வாயா வெனக்கொண்டு மேயாது மான்மறியே.

எ-து: நுனியிற்கொம்பு கூரிதாயிருக்கும் கலைமான்மேலேறி நடாத்தும் துர்க்காபரமேசுவரி கைவிடாதே வளர்க்கின்ற முல்லைவல்லிசாதி நூறாயிரங்கிளைகொண்டு வளர்ந்து ஆகாசத்திலே ஏறி மைத்திரம் பரந்த சந்திரனுடைய இரண்டு கோடுகளையுந் தடவும்படி எழுந்த கொழுந்துகளை, நம்பசியாலே மேய்ந்தேமாயினும் வாயாது, [#] பிரமாதம் பிறக்கும்; இஃது ஈசுவரி பரிசாரக முல்லையென்று கொண்டு சந்திரனுட்கிடந்த மான்மறி பயப்படும். எ-று.

தேவி முல்லைவளர்த்தற்குக் காரணம் கற்புடைமை யெனவுணர்க; "முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" ((௩௦) 30.) இது சிறுபாணாற்றுப்படை. [$] மதி என்றது, இளம்பிறையை. இம்முல்லைக்கொழுந்துகள் சந்திரன் பக்கலுள்ள மான்மறியது. பசியுணர்ந்து தெய்வீகமாதலாற் சென்றன போன்றன.
---
[#] பிரமாதம் - தவறு.
[$] “இருகோட் டொருமதி யெழில்பெற மிலைத்தனை” நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை, (௫) 5.
----

76. வாருஞ் சடாடவி முடித்தேவர் தந்தேவி
      வன்மா னுகைத்தகொடி பொன்மா தவிக்கொடிகள்
ஊரும் பகற்றேரை முட்டுவன கட்டுவன
      வுருகா கொழுந்துமுகை கருகா செழுந்துணருமே.

எ-து: நெடுஞ்சடைக்காட்டை முடியாகவுடைய தேவர்தமது திருத்தேவியாய் வலியாயிருக்குஞ் சிங்கத்தை ஏறி ஓட்டும் கற்பகவல்லி சாதிபோல்வாள் வளர்த்த பொற்குருக்கத்திக்கொடிகள் சென்று ஆகாசம் புக்கு அங்கே ஊர்ந்து திரியும் ஆதித்தியபகவானுடைய தேரை முட்டுவனவும் கட்டுவனவுமாயினும் அக்குருக்கத்திக் கொழுந்துகள் ஆதித்தியனது உட்டினத்துக்கு உருகுவதுஞ் செய்யா; அன்றியே புட்பமொட்டுக்களும் கருகா; வளப்பத்தையுடைய பூந்தொத்துக்களும் அப்படியே ஒன்றுஞ் செய்யா. எ-று.

ஆதித்தனும் பயப்பட்டுத் தண்ணியனாவனென்பதாம். இவை அவனது ஓராழித்தேர்க்கு நிழலளிப்பனபோல வளருமென வுணர்க.
---------

77. பிரமற்கு மம்மனை பெறுங்கற்ப கக்கொடிகள்
      பெருவான மேறுவன வருவான மாறுவன
பரமற்கு மீதுமிடை சடையொக்கு மென்பதுகொல்
      பறியா பெருஞ்சுழியு மெறியா தரங்கமுமே.

எ-து: பிரமாவுக்குந் தாயாகிய பரமேசுவரிபெற்ற பிள்ளையான கற்பகவல்லிசாதிக் கொடிகள் சென்று மேனோக்கி ஆகாசத்திற் கங்கையிலே சென்றேறுவனவும் கங்கை போகாமல் மாறுவனவுமானாலும் அந்தக்கங்கை மகாதேவருடைய திருமுடியில் மிடைந்த சடையை ஒக்குமெனக் கருதிக் கொல்லோ, கங்கைத் தண்ணீர்ச்சுழிகளும் பறியா? கங்கையிற்றிரைகளும் இவையிற்றைப் போக எறியா? எ-று.

[*] 'பிரமற்கு மம்மனை ' என்ற உம்மையால், விட்டுணு புரந்தராதிகட்கும் தாயாதல் முடிந்தது; இதனால் [+] ஈசுவரனுக்குத் தாயெனலுமாம்; "சத்தி யீன்ற சதாசிவம்" என்பதறிக. இது திருமந்திரமாலை; 'சத்தி யீன்ற' என்பது தடுமாறுதொழிற்பெயர்.
----
[*] "கலைவள ருத்தமனைக் கருமுகி லொப்பவனை..... தருமத் திருவுதரத்தினளே " கலிங்க. (௧௧௧) 111.
[+] "எம்பெரு மானிம வான்மகட்குத், தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன் றமையனெம் மையன்" என்பது திருவாசகம், திருப்பொற் சுண்ணம், (௧௩) 13; "தன்னொருபால், அவளத்த னாமக னாந்தில்லையான்” என்பது திருக்கோவையார், (௧௧௨) 112; "கனக, மார்க வின்செய் மன்றில், அனக நாட கற்கெ மன்னை, மனைவிதாய் தங்கை மகள்" என்பது சிதம்பரச்செய்யுட்கோவை, (௩௩) 33.
-----

வேறு.

78. சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண் டாயிரஞ்
      சுடரொடுஞ் சூழ்வருவரே
நேரியர்க டிகிரியுந் திகிரியோ வவைதொறு
      நிலாவர வுலாவருவதே.

எ-து: இங்குச் சொல்லப்பட்ட பரமேசுவரியுடைய திருக்கோயிலைச் சூழ ஆதித்தர் பன்னிருவரும் ஒரோவொருவர் தம்முடைய ஆயிரங்கதிர்களைக் கைவிளக்காகப் பிடித்துக்கொண்டு பன்னீராயிரம் விளக்குடன் சூழ வருவர். இதனை ரட்சிக்குஞ் சோழசக்கரவர்த்திகளுடைய சக்கரமும் சக்கரமோ? அல்ல; அப்பன்னீராயிரங்கதிர்களும் உட்டினஞ்செய்யாதபடி குளிர்ந்து நிலாவாம்படிவர உலாவித்திரியும். எ-று.

எனவே தேவிகோயிலைச்சுற்றும் வந்து விளக்குக்கொண்டு திரிகின்றார், எங்கள் [*] வாமத்தாரென்றவாறு. மற்று அவருட்டினம் நலியாதபடி ரட்சிக்கு மென்பது நிந்தாத்து தியலங்காரம் ; நிதரிசனமென்னு மலங்காரமுமாம்.

நேரியர் - நேரிமலையையுடையவர்.
-----
[*] தேவியின் உபாஸகர்களில் ஒருவகையினர்.
-----

79. சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன
      சிவாகம விதந்தெரிவரே
பூவகம் விடாதவர்க ளோதவுட னோதுவர்
      பரம்பர புரந்தரருமே.

எ-து: தேவி திருக்கோயிலிடத்து விட்டுணுக்கள் பலருமிருந்து மகாதேவராலருளிச் செய்யப்பட்ட சிவாகமமான சைவசித்தாந்தப் பரப்புக்களை ஆராய்வர்; அன்றியே இவ்வாகமங்களையே பிரமாக்களோத அவருடனே வழிவழிப் பரமசுவாமியிந்திரர் ஓதுவர். எ-று.

முராரிகள் - முரனென்பானோரசுரனைக் கொன்றருளின மகா விட்டுணுக்கள். புராரி - திரிபுரங்களை எரித்தருளின மகாதேவர். முராரிகளென்பது பன்மைவாசகம். புராரிகளென்பது முதன்மைவாசகம், பலர் ஈசுவரரின்மையால். பூவகம் விடாதவர் பிரமாக்கள்; அவர்களோத வென்பதனைக் கற்பிக்கவென்று கொள்ளலுமாம்.

வேறு.

80. கான நாடிதிரு முன்றில்கவி னக்கஞலுவார்
வான நாடியர் வணங்கவரு மாதருளரே.

எ-து: மயான வாசினியான மகாதேவி திருக்கோயிற்றிருமுற்றம் அழகுபெற நெருங்கிநிற்பார், சுவர்க்கவாசிகளான அரம்பை ஊர்வசி முதலாயினராகிய நமக்கரிக்கவரும் வடிவையுடைய பெண்கள். எ-று.

கவின் - அழகு. கஞலுதல் - நெருங்குதல். வானநாடு - சுவர்க்கம்.
முன்றில் - இல்முன்; மரூஉச்சொல்.

வேறு.

81. ஓலக் கடனெருப்பி னுலகேழு முருகுங்
காலக் கடையினுங் கொடியகட் கடைகளே.

எ-து: இங்குச்சொல்லப்பட்ட தெய்வப்பெண்களுடைய திருமுகத்துக் கடைக்கண்களானவை, ஆரவாரத்தையுடைய கடலிலுறையும் வடவாமுகாக்கினி புறப்பட உலகமேழுமுருகும் உகாந்தகால இறுதிப்பொழுதினும் மிகக்கொடிய. எ-று.

கட்கடைக்கு உவமை காலக்கடை; நெருப்பிற்கு உவமை நோக்கு. ஓலம் - ஆரவாரம்.
---------

82. புங்கப் படைவிழிக் கடையிலன் றிவர்புரூஉப்
பங்கத் தகிலமும் படுகொலைப் படுவதே.

எ-து: முன்சொல்லப்பட்ட பெண்களுடைய கடைக்கண்களான அப்புப்படைபோலும் விழிக்கடைக்கண்ணாலன்று; மற்றும் எல்லா உலோகமும் படுகொலைப்படுவது, இந்தப்பெண்களுடைய புருவமுரிப்பிலே. எ-று.

புரூஉ - புருவம்; புரூபங்கமென்றே சங்கிருதசத்தம்; புங்கம் - அம்பு.
-----------

83. நச்சுக்கண் முலைமே லிடுதுகிற்கு நகுபொற்
கச்சுக்கு மடையப் புடவிகை யடைகொலோ.

எ-து: இந்த மகாதேவியின் திருக்கோயிலின் திருமுற்றத்திருந்து நெருங்கிவிளையாடும் தெய்வப்பெண்களுடைய நஞ்சுபோலுங் கண்ணுடைய நகில்களின் மேலிடும் துகில்களுக்கும் அவை விசித்துக்கட்டுஞ் சோதிவிடும் பொற்கச்சுக்கும் இப்பூமியெல்லாம் அடைக்கலங்கொல்லோ? எ-று.

துகிலிட்டுத் தனங்களை மறையாவிடினும் அவை விம்மி வீங்காவகைக் கச்சிட்டுக் கட்டாவிடினும் அவற்றைக்கண்டால் [*]மதனவியசனராய்க் காமாக்கினியில் அகப்படுதல் பொருள். கச்சிட்டுக் கட்டுவது கொங்கைகள் தாம்காணாமல்; துகிலிட்டு மறைப்பது அவற்றைப் பிறர்காணாமல்; [+] “கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர், படாஅ முலைமேற் றுகில்." யானைக்கு முகபடாமணிதல் யானை காணிற் கொல்லுமென்று. அவற்றின் கண்களும் யானைக்கண்போல உணர்வுடையவாகப் பாடியவாறெனவுணர்க.
-----
[*] "மலையினும்பர் புகினுமண்டு மதனவங்கி விதனமே" என்பது மோகவதைப்பரணி, (௫௯) 59.
[+] திருக்குறள், (௧௦௮௭) 1087.
-----

84. மின்போல்வ ரவரே யவர்மருங்கு லினிவே
றென்போல்வ தெனவெண் ணுவதெனில்லை யிணையே.

எ-து: தேவியது திருமுற்றத்துத் தெய்வப்பெண்கள், மின்போல் விட்டு விளங்கியும் மெல்லியராயு மிருப்பாராதலால் அவர்தாமே மின்னையொப்பார்; அவரிடைக்கு உவமை வேறு நுண்ணிய மின்னில்லை; ஆதலால் அவரிடைக்கு இணையில்லை. எ-று.

வேறு.

85. நின்ன்ற கன்றவிடை நேடிவரை நேமியளவுஞ்
சென்ன்ற கன்றன நிதம்பநடு வில்லைதிசையே.

எ-து: திருமுற்றத் திருக்குந் தெய்வப்பெண்களுடைய இடைகள் அகன்று போய் நின்றன; மீண்டனவில்லையென்று நினைத்து இடையைத் தேடிக்கொண்டுவரச் சக்கரவாள பருவதத்தளவுஞ் சென்றன, இவர் நிதம்பம்; இனி உலகத்தில் திசையில்லாமையால் நின்றன; திசையுண்டாயின் வளரும். எ-று.

வரைநேமி - சக்கரவாள பருவதம், பருவத சக்கரவாளமென்றவாறு. நிதம்பம் - கடிதடம்.
---------------

86. அங்ங்கண் முளரிமல ரன்மையது திங்களறியத்
திங்ங்க ளன்மையர வறியவில குந்திலகமே.

எ-து: திருமுற்றத்திருக்குந் தெய்வப்பெண்களின் திருநெற்றியிற் றிலகமிடுவது, இவர் முகத்தைச் செந்தாமரையெனச் சந்திரன் நினைக்கலாகாதெனவும் அவனோடுபகைத்த இராகுகேதுக்கள் இவர்கள் முகத்தைச் சந்திரனென்று நினைக்கலாகாதெனவுமே; அல்லது திலகம் வேண்டாம், எ-று.

எனவே இவர் தாமே உலகத்தின் திலகமாவரென்றவாறு.

இலகுதல் - ஒளிவிடுதல். ஒருகுறி இரண்டுபகையைக் காத்ததென வுணர்க.

இவற்றில் இயல்விளங்கிய ஒற்றளபெடையுணர்க.
----------

87. அடைய மோகினிக ளாயினர்கொ லவ்வுருநினைந்
துடைய மோகினியை யொக்கவுளர் யோகினிகளே.

எ-து: பரமேசுவரி திருக்கோயிலிலிருக்கும் யோகினிப்பெண்கள் எல்லாரும் இயல்பாகவே மோகினிப்பெண்களாயினாரோ? அன்று; அந்தப் பரமேசுவரியின் ரூபத்தைத் தியானம்பண்ணித் தங்களையும் பிறரையுமுடைய அந்தப் பரமேசுவரியான மோகினியை ஒக்க உளரானார், அவ்யோகினிகள். எ-று.

உடைய மோகினியென்றது, பண்டு மகாவிட்டுணு மோகினிவடிவங் கொண்டதை நினைத்தெனவுணர்க.
---------------

88. சூழு மின்னொளி நிவந்துசுர நாடியர்களுந்
தாழு மின்மினிக ளாகவுளர் சர்மினிகளே.

எ-து: பரமேசுவரி திருக்கோயிலிற் சிலதிவ்வியப்பெண்கள் சர்மினிகளென்னும் பெயரையுடையாருளர்; அவர்கள் திருக்கோயிலிற் றிருப்பணியெடுத்துக் கைநீட்டுவார்; அவர்களுடைய விட்டுவிளங்கும் மின்னொளி சூழ்ந்து பரந்துவருதலால் தேவலோகத்திலுள்ள பெண்களும் ஆதித்தனெதிர் மின்மினிபோல்வர். எ-று.

ஆதித்தனென்பது தந்திரயுத்தி. நிவத்தல் - பரத்தல். சர்மினிகளாவார் தோல் போர்த்திருப்பார்; சர்மம் - தோல். இங்கே சர்மினிகளென்பது பரமேசுவரியுடைய திருவடி நிலையை எடுப்பாரெனவுணர்க; சர்மகாரரையுணர்க; இக்காலத்துத் தமிழாற்சிதைந்து [*] செம்மாராயிற்று.
-----
[*] தோலின்றுன்னரைச் செம்மாரென்பர், அரும்பதவுரையாசிரியர்; சிலப். (௫: ௩௨) 5: 32.
-----

89. தரவ ரும்புடவி குறையவுளர் சாகினிகளே
பரவ ருந்தகைய நாயகிப தாகினிகளே.

எ-து: பிரமா படைக்க வந்து தோன்றும் பூமண்டலமடங்க இடங்குறையும்படி உளராவார்கள் சாகினிகளென்பார், ஒருவராலும் புகழுதற்கரிய அழகினையுடைய நாயகியுடைய கொடிப்படைகள். எ-று.

இப்பாட்டைத் தாவருவெனவும் பாவருவெனவும் நெட்டெழுத்திற் றாக்கிக் கூவிளமென்று பாடமோதிற் கெடுதற்கரியவெனவும் பரந்துவரு மழகெனவுங் கொள்க. பதாசினி - கொடிப்படை. சாகினிகளாவார், ஈசுவரனதுகாதலாற் பிராமணிகள் வயிற்றிற் பிறந்த நங்கைமாரென வுணர்க.
--------

90. நகுந குங்கடவு ளித்தகைய மாதர்நகைபோய்
[+]மொகுமொ கென்றகில லோகமு முழங்குவனவே.

எ-து: யோகினிகள் சர்மினிகள் சாகினிகள் முதலாய இப்பெற்றியோரான எல்லாத் தெய்வப்பெண்களும் பரமேசுவரி திருக்கோயிலில் திருமுற்றத்திருந்து சிரித்து விளையாடுஞ் சிரிப்புப் போய் மொகுமொகென்னும் அனுகரண மகாசத்தம்பிறந்து சதுர்த்தசபுவனமு முழங்கும். எ-று.

நகுநகைபோயென்று கொள்க. மொகுமொகென்பது இரட்டைக் கிளவி; [#] "இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந்திசையா". என்னை? "வாளமர் நீந்தும் போழ்து வழுவழுத் தொழியு மன்றே" ((௨௫௭) 257) இது சிந்தாமணி; "குறுகுறு நடந்து சிறுகை நீட்டி" ((௧௮௮) 188.) இது புறம்.
-----
[+] "மொகுமொ கென்றொலி மிகுந்தமரு கங்கள்பலவே" கலிங்க. (௧௦௦) 100.
[#] தொல். கிளவி. சூ. (௪௮) 48.
-----

91. [*]தலைய ரிந்துவிடு வாருயிர் விடார்தலைவிமுன்
னிலைய ருந்தமது [+]மெய்யெரியி னின்றெரிவரே.

எ-து: பரமேசுவரியுடைய யாமள சாத்திர மந்திரசாதகர், தம்முடைய தலையைத் தாமேயரிந்தரிந்து தலையைவிட்டு உடலைப்பற்றிநிற்பார், தம் பிராணன்களைவிடார்; பரமேசுவரிமுன்னே பிறருக்கு நிற்கவரிய நிலையிலேநின்று தம்முடைய சரீரங்களிலுண்டாகிய அக்கினியினாலே நின்றெரிவர். எ-று.

எனவே தலையை அறுத்துவிட்டு உடலோடேநின்று தங்கள் யோகாங்கத்தாற் பிராணனைப் போகாமற்றடுத்து நாபீகமலத்து அக்கினி மண்டலத்தை யெழுப்பி இருதயகமலத்திற் றீபத்திற்கொளுத்தி அதுவேநெருப்பாக நின்று யோகாக்கினியமைப்பரென்றவாறு.
---
[*] "மோடி முன்றலையை வைப்ப ரேமுடி குலைந்த குஞ்சியை முடிப்பரே, யாடி நின்றுகுரு திப்பு துத்திலக மம்மு கத்தினி லமைப்பரே" (சிலப். (௫: ௭௬ - ௮௮) 5 : 76 - 88, மேற்); "அடிக்கழுத்தி னொடுஞ்சிரத்தை யரிவராலோ வரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்பராலோ, கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவுமாலோ குறையுடலுங் கும்பிட்டு நிற்குமாலோ", " கடனமைந்தது கருந்தலை யரிந்தபொழுதே கடவ தொன்றுமிலை யென்றுவிளை யாடுமுடலே" (கலிங்க. (௯௭, ௯௯) 97, 99); "அடலருந்திற னினைவுடன் சிலரரிபசுந்தலை பலிகொடுத், துடல்வலஞ்செய வரமிருந்தவை யொன்றிரண்டென வெண்ணுமே." இரணிய. (௯௪) 94.
[+] "மெய்விளக்கினார் மேவுகோயிலுக் கெவ்விளக்குவே றினிவிளக்குமே" அஞ்ஞவதைப்பரணி, (௮௭) 87.
----

வேறு.

92. அகவனச முகவனச மவைமலர வரிவார்
நகவனச மலர்குவிய வலம்வருவர் நகரே.

எ-து: இருதயகமலமறுக்கும் பொழுது வதனகமலமலரவும் முககமலமான தமது தலையையறுக்கும் பொழுது இருதயகமலமலரவும் இரண்டும் இரண்டு கூறிட அறுக்கும் பொழுது இரண்டுமலரை அரிவாராய் அரிந்து கொண்டு சீருடைய கைத்தாமரைமலர்குவித்துக் கும்பிட்டுத் தேவி கோட்டத்தைப் பிரதட்சணமாகவருவர், சிலமந்திரசாதகர். எ-று.

வனசம் - தாமரை. நகவனசம் - மலர்ந்த வனசம்; அன்றி உகிருடைய வனசமென்றுமாம். நகரென்பது கோவில்.
------
வேறு.

93. கொக்கொ ழுங்குபட வோடிமுகில் கூடியனையா
ரக்கொ ழுங்குபடு கஞ்சுக மலம்பவுளரே.

எ-து: ஆகாசத்து வருஷாகாலத்துப் பறந்து திரியும் கொக்கென்னும் பெயரையுடைய வெண்பறவை நிரைபட ஓடிவரக் கருமுகில் அதற்குமேலாகக் கூடினவை போன்றிருக்கும்படி சங்குமணிவடம் கோக்கப்பட்ட கருஞ்சட்டையைக் கலந்திட்டவர் பலருளர். எ-று.

ஒழுங்கு - நிரை. அக்கொழுங்கு - சங்குமணிவடம். படுதல் - உண்டாதல். அலம்புதல் - கலத்தல்; அசைதற்கும் பெயர்; [*]வேலைவடிம்பலம்பநின்றானென்னுஞ் சொல்லாலுணர்க.
-----
[*] வேலைவடிம்பலம்பநின்றான் - உக்கிரகுமாரபாண்டியன்; "மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால், வேலைவடிம் பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதால்" (திருவால. (௨௧: ௭) 21: 7); “ஆவு மானியற் பார்ப்பன " (புறநா. (௯) 9) என்னும்பாட்டின் (௧௦) 10-வது அடியின் கீழ்க்குறிப்பைப் பார்க்க.
----

94. இந்தி ராதியரு மெக்கமல யோனிகளுமே
சந்தி ராதியரு மத்தலைவி சாதகர்களே.

எ-து: பரமேசுவரி திருக்கோயிலில் மந்திரசாதகம் பண்ணுவாரை எண்ணக்கடவதோ! இந்திரன் அக்கினி வருணன் வாயுவாதிதேவர்களும் எல்லாலோகங்களிலுமுள்ள பிரமாக்களும் எங்குமுள்ள சந்திராதித்திய நட்சத்திரகணங்களெல்லாம் பரமேசுவரியுடைய கோயிலிலிருந்து மந்திரசாதகம் பண்ணுவார்கள். எ-று.

இதற்குப்பயன், அவர்க்கு ஐசுவரியங்களறாதே சோதியும் கீர்த்தியு முண்டாதலென வுணர்க.

வேறு.

95. அடையாள முளரித் தலைவியாதி மடவா
ருடையா டிருவகம் படியில்யோ கினிகளே.

எ-து: தாமரை முதலான அடையாளங்களையுடையராகிய ஸ்ரீதேவி முதலான பிரதானப்பெண்களெல்லாரும் பரமேசுவரியுடைய திருக்கோயிற் [+] றிருவகம்படிப் பெண்டுகளில் யோகநிட்டை பண்ணின யோகினிப் பெண்கள். எ-று.

சரசுவதியையுங்கொள்க, அவளும் நித்தியசித்திப்பெண்ணாதலின். அடையாண் முளரியென்னும்பாடமழகிது; அடை - இலை.
-----
[+] திருவகம்படிப்பெண்டுகள் - திருவணுக்கத்தொண்டு செய்யும் மகளிர்; அகம்படி - உள்ளிடம்.
-----

வேறு.

96. சுழல்வட்டத் [*] துடிகொட்டத் துனைநட்டத் தினரே
தழல்வட்டத் தனிநெற்றித் தறுகட்கொட் பினரே.

எ-து: சுழன்றிருக்கும் வட்டத்தையுடைய துடியென்னும் பறை கொட்டுமளவில் விரைந்தாடுங் கூத்தினர் ....... எ-று.

துனை - விரைவு. கொட்பு – [+] சுழற்றி.
----
[*] "தமருகங்கடரு கின்றசதி யின்கண்வருவார்" கலிங்க. (௧௦௧) 101.
[+] சுழற்றி - சுழற்சி; கழற்றிபோல.
-----

97. கழுவைப்புக் கறவெட்டிக் கவர்சுற்றத் தினரே
யுழுவைச்சிற் றுரிவைப்பச் சுதிரப்பட் டினரே.

எ-து: உயிர்க்கழுமுதலான கழுக்களிற்புக்கு அவற்றை அறும்படி வெட்டிப் பிணங்களைக்கொள்ளும் பேய்ச்சுற்றத்தினையுடையர் சிலர்; புலிகளுடைய சிறுதோலையுரித்து அத்தோலை வாங்கி உதிரப்பசுமைகெடாமே யுடுத்த உடைப்பட்டினையுடையர் சிலர். எ-று.

உழுவையுதிரப்பட்டென்க; உழுவை - புலி; உரிவை - தோல்; "அரியி னுரிவை மேகலை யாட்டி" ((௧௨ : ௬௨) 12 : 62) என்பது சிலப்பதிகாரம். பச்சுதிரப்பட்டென்பதன் பயன், விலைக்குக் கொண்டு உடுத்த தோலல்ல; தாங்களே புலியைப்பிடித்துக் கொல்லாதே உரித்ததோலெனவுணர்க.
-----------

98. அகைமத்தத் தளிவர்க்கத் தளகக்கொத் தினரே
பகைகுத்திப் பயில்சத்திப் பருமுக்கப் பினரே.

எ-து: மலர்ந்த [#] மதமத்தையிற் பூவின்வண்டினஞ் சேரவணிந்து வைத்த அளகக்கொத்துக்களை யுடையராயும் பகைகளைக்குத்திப் பழகிய வேலான மூன்று கவட்டினையுடைய ஆயுதத்தை யுடையராயுமிருப்பர் சிலர். எ-று.

அகைத்தல் - வலியமலர்த்தலுமாம். அளி - வண்டு. முக்கப்பு - சூலம்.
---
[#] மதமத்தை - ஊமத்தை; இது மதமத்தமெனவும் வழங்கும்; "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங்கதிர்மதியம், உள்ளார்ந்த சடைமுடி யெம்பெருமான்" தேவாரம்.
----

99. உகுநச்சுத் தலைநெட்டெட் டுரகக்கச் சினரே
தகுபுத்தப் புதுமக்கட் டலைமக்கட் டினரே.

எ-து: விஷதாரை ஓவாது சொரிதரும் தலைகளையுடையவாய் நெடியவாயிருக்கும் எட்டுப்பாம்புகளையே கச்சாக அரைக்குமேற் கட்டின கட்டையுடையர் சிலர். அதற்குத் தக்கவாகச் சேர்த்த மனிதர் தலைகளை அவையிற்றின்மேலே மணிவடமாகக் கட்டின கட்டையுடையர் சிலர். எ-று.

எட்டுரகமாவன : அநந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பற்பன், மகாபற்பனெனவுணர்க. இவ்வெட்டும் எண்மர் கட்டின வல்ல; இவ்வினங்களில் தெரிந்து பலருங்கட்டின வெனவுணர்க. மக்கட்டு, மணிக்கட்டான முன்கைக்கும் கலையிற் கட்டின கட்டுக்கும் பெயர். மக்கட்டலையென்பதின் முடிவுணர்க. தகுமென்ற சொல்லால், நாகராசாக்களுக்குத் தக்கபடியுள்ள மனுஷ்யராசாக்கள் தலையெனவுணர்க. இது நிலையாமைப்பொருள்.
---------

100. குடரட்டத் தொருசெக்கர்க் [*]குருதிப்பொட் டினரே
படர்பொற்கைச் செறியக்குச் சரிபப்பத் தினரே.

எ-து: வீரபுருஷர் குடர்களிலுதிரத்தை ஒருவிரலாற்றோட்டு நெற்றியிலிட்டுக்கொண்ட பொட்டுடையர் சிலர்; மிகப்படர்ந்த அழகிய கைகளிற்செறிந்த சங்குமணிச்சரி பத்துப்பத்தினையுடையர் சிலர். எ-று.

வீரபுருஷர் அஞ்சாதுபட்டால் அவர்வயிற்றிலுதிரத்தை ஒருவிரலாற் றொட்டு நெற்றியிலிடுவரென்றுணர்க.

மிகப்படர்ந்த அழகிய கையென்பது [+] பேய்க்கழகு; இது [#] கோமாளமெனவுணர்க.
----
[*] திலகமிட் டழகுறத் திரிவர்பை ரவர்களே ", " குருதிப்பொட்டு நுதல்." இரணியவதைப்பரணி, (௧௦௦, ௧௧௧) 100, 111.
[+] "புகல்வ தென்கொல்பேய்க் கழகுபொல் லாமையே யன்றோ" என்பது மோகவதைப்பரணி, (௩௮௯) 389.
[#] "கோமாள மான குறிக்கழுத்திகள்." திருப்புகழ், விராலிமலை.
---

101. இருபக்கத் தொருபக்கத் தெறிவச்ரத் தினரே
யொருபக்கத் தொளிவட்டத் தொருபொற்றட் டினரே.

எ-து: வலமும் இடமுமான இரண்டுபக்கத்திலும் வலப்பக்கமான ஒருபக்கத்திற் சத்துருக்களை எறியாநின்ற வச்சிராயுதத்தையுடையர், மற்றை ஒருபக்கமான இடக்கையிலே சோதிவிடும் பொன்னாற்சமைத்த [$] வட்டணைக் கிடுகையுடையர் சிலர். எ-று.

வச்சிரம் - வச்சிராயுதம்.
---
[$] வட்டணைக்கிடுகு - வட்டமாகிய கேடகம்; "கட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகை." பெருங். (௧. ௪௨ : ௬௩) 1.42.63.
----

102. தழைவர்க்கக் கருவெப்புத் தடிசக்ரத் தினரே
கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட்கட் சியரே.

எ-து: பசுந்தழையைக் கருகும்படி செய்கின்ற வெப்பான உஷ்ண வியாதியைக் கெடுக்குஞ் சக்கரபூசையையுடையர் சிலர்; அவர், மூங்கில்கள் முத்துப்பொதியைப் புறப்படவிடும்படி கிழிக்கின்ற கண்களையுடைய காட்டினர். எ-று.

"சக்கரபூசை பூசிப்பார்" என்பது பைரவத்திற்பாட்டு. கிழிகண்ணென்றது மூங்கிற்கண்ணின் கிழிவை. கட்சி - காடு; "கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்" ((௨௦௫) 205.) இது பெரும்பாணாறு.

3. காடுபாடியது முற்றிற்று.
--------

------------

This file was last updated on 25 Feb 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)