pm logo

ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்
பாகம் 2(பாடல்கள் 103-400)


takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum, part 2 (verses 103-400)
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
We thank Mr. Rajendran Govindasamy for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum [part 2, verses 103-400]

Source:
கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்.
இவை சென்னை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி
உ. வே. சாமிநாதையரால்
பல பிரதிகளைக்கொண்டு பரிசோதித்து நூதனமாக
எழுதிய பலவகைக் குறிப்புக்களுடன்
சென்னை கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
சுக்கில ௵ தை ௴
Copyright Registered ] 1930 [ விலை ரூ. 4-0-0
---------
உள்ளடக்கம்
1. கடவுள் வாழ்த்து (1-9)
2. கடைதிறப்பு (10-47)
3. காடுபாடியது (48-102)
4. தேவியைப் பாடியது (103- 119)
5. பேய்களைப் பாடியது (120 - 135)
6. கோயிலைப் பாடியது (136 - 221 )
7. பேய்முறைப்பாடு (222- 244 )
8. காளிக்குக் கூளி கூறியது (245 - 727 )
9. கூழடுதலும் இடுதலும் (728 - 777)
10. களங்காட்டல் (778 - 799)
11. வாழ்த்து (800 - 814)
-----------------

4. தேவியைப் பாடியது (103-119)


103. கவனமாவொ டீராறு கதிரும்வாரி யூடாடு
        கனல்கடாவி யோரேழு கடலும்வாரு மாலால
மவனிவேவ வான்வேவ வளறுவேவ வேவாம
        லயிலுநாதன் மாதேவி யகிலலோக மாதாவே.

என்பது : வாவுந்தொழில்வல்ல குதிரைகளுடனே துவாதசாதித்தியர் அனைவரையும் வாரிக்கொண்டு நடுவே ஆகாசத்திலே ஊடாடுகின்ற நெருப்புக்களைச் சென்று தாவிச் சத்த சமுத்திரங்களான லவணம், இட்சு, சுரா, ததி, கிருதம், சீரம், சலமென்னாநின்ற ஏழுகடலையுங் கூட வாரிக்கொள்ளும் ஆலகாலமான விஷத்தைப் பூமி வேவவும் சுவர்க்கம் வேவவும் பாதாளநாகம் வேவவும் வேவாதபடி அமுது செய்தருளின மகாதேவருடைய மகாதேவி, சகலலோகங்களையும் பெற்ற தனித்தாய். என்றவாறு.

கவனம் - முன்னிலிரண்டடிகளை ஒக்கவைத்துப் பாயும் பாய்ச்சல். மாவொடென்றது, ஆதித்தியர்களையுங் கொண்டோடிப் போகவல்ல குதிரைகளையுங்கூட வாரிக்கொண்டென வுணர்க. ஊடாடுகனலாவது, உருமேற்றினெருப்பெனவும் அக்கினி பகவானெனவுங் கொள்க. அவனி - பூமி. வான் - சுவர்க்கம். அளறு - நரகம். அளறுவேகையாவது, நரகத்துள்ளார்க்கு விஷஞ்சென்று வியசனமிகுகை. வேவாமலென்றது விடந்தான் கோபியாமலென்றவாறு. கோபித்தாரை வெந்தாரென்றும் வேவாநின்றா ரென்றுஞ் சொல்லுவாருமுளர். அயிலுதல் - உண்டல்.

104. அனகபூமி [1]கோலோக மருகுநேமி பாதாள
        மயனிவாச மேழ்தீவு மசலமேழு மேழ்காவு
கனகலோக மேழாழி கஞலவீதி போதாத
        கலகபூத வேதாள கடகமேய மாயோளே.

எ-து : புண்ணியதேசமும் பசுசாதிலோகமும் பெருகப்பட்ட சக்கரவாளமும் பாதாளலோகமும் பிரமலோகமும் ஏழு தீவுகளும் ஏழு மலைகளும் ஏழு பொழிலெனப்பட்ட சோலைகளும் பொன்னுலகமும் ஏழு கடல்களும் இவைகளெல்லாம் விளையாட இடம் போதாதபடி கலகமிடும் ஸ்ரீபூதபசாச கணநாதருடனே மேவியிருக்குந் திருக்கோயிற் றிருமுற்றத்தை யுடைய மகாமாயாசத்தியாய்க் கருநிறத்தை யுடையாள். எ-று.

அகம் - பாவம்; அநகம் - புண்ணியம். நிவாசம் - இருப்பு. அசலம் - மலை. கா - சோலை. கனகம் - பொன். ஆழி - கடல். கஞலுதல் - நெருங்குதல். வேதாளம் - பசாசு. கடகம் - பெரும்படை. [2]மாயோள் - அழகியோளென்றுமாம்.

----
[104-1] கோலோகம் - பசுக்களின் உலகம்; "ஆனிலையுலகம்" (புறநா. (௬:௭) 6 : 7) என்பர்; இதனியல்பைச் சிவதருமோத்தரத்துள்ள கோபுரவியலாலும் காசிகாண்டத்தாலு முணர்க.
[104-2] "யாயாகியளே மாஅயோளே." குறுந். (௯:௧) 9 : 1.
----

105. இரவையீரு மீர்வாள்கொ லெனவிடாது பாதாள
        விருளைவேறு போய்நூறி யெழிலியேழொ டேழாய
பரவையோளி வாளேறு படநடாவி மீள்சோதி
        படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே.

எ-து : இராத்திரியான அந்தகார மெல்லாவற்றையு மீர்ந்து களைவதோர் ஈர்வாளென விடாதே சென்று பாதாளத்திருளை யெல்லாம் பொடி செய்து மேலேறி மேகங்களேழாகிய யானைகளையும் அவற்றோடு கூட ஏழான கடல்களாகிய யானைக் கூடங்களையும் சோதிபட நடாத்தி மீண்ட சோதி படலமான நாகராசாக்களின் மாணிக்கச் சூடிகா கோடிகளைப் பணிவிக்கும் மதாணியான பேரணிகலப் பதக்கமுடைய மார்பினள். எ-று.

இப்பாட்டில், ஈர்வாளென்றது இருளின் செறிவைப் பிளத்தலினென வுணர்க. வேறு போய் நூறுகையாவது, என்றும் மேனோக்கிய சோதியானது கீழ்நோக்கியுஞ் சென்று ஆதித்தியசோதி போல்வது. பொடிசெய் தென்றது இருட்டினையென்று நினைக்க. மேகமுங் கடலுமென்றது அவற்றின் கருநிறங்களை. எழிலி - மேகம். ஒளி - யானைக்கூடம்; யானை நீருண்ணு மிடமுமாம். வாள் - சோதி; எறித்தற் றொழிலால் வாளேறென்று பெயர் பெற்றது. "சோதி படலசூடி காகோடி மணிமதாணி" என்று பாடங் கொண்டு, சோதிப்பெரும் பரப்பினையுடைய முடியின்மணியாலான மதாணியெனப் பொருள் கொள்வாருமுளர். மணியென்ற பாடத்திலும் பணியென்னும் பாடமழகிது; முடியும் பணியும் மதாணியென்பது மிக்க அழகுடைத்து.

106. நிகரவேறு வேறாய நிலவுவீசு பேரார
        நிபுடமாலை மால்யாறு நிமிரவீழ்வ போல்வீழ
மகரவேறு மீராளி மதுகையேறு மாறாடி
        வதனபாக மேய்வாகு வலையமோது காதாளே.

எ-து : வேறுவேறுபட்ட திரள்முத்து நிலாவாகப் புறப்படவிடும் முத்துமாலையின் நெருக்கமானவை பெரிய யாறு நிமிர்தற்கு விழுவதுபோல விழவும், மச்சசாதியில் மகரங்களில் ஆணேறும் இரண்டு யாளியேறுகளும் வலியுடையவானவை யாகக்கொண்டு கோத்தன இரண்டு தம்மில் மாறாடி முகபாகங்களிலே மேவித் திருத்தோளிலிட்ட வாகுவலையங்களை மோதும் காதினையுடையாள். எ-று.

நிகரமென்பது திரள். நிபுடமென்பது நெருக்கம். மாலை -சகசிரதாரை யென்னு முத்தக்கோவை. மதுகை - வலி. வதனம் - முகம். வாகுவலையம் - தோள்வளை.

107. தமரநூபு ராதார சரணியார ணாகாரி
        தருணவாணி லாவீசு சடிலமோலி மாகாளி
யமரர்வாழ்வு வாழ்வாக வவுணர்வாழ்வு பாழாக
        வருளுமோகி னீயாகி யமுதபான மீவாளே.

எ-து : ஆரவாரத்தையுடைய சிலம்புக்கு ஆதாரமாயுள்ள திருவடி மலர்களையுடையாள்; வேதங்களுக்கு ஆகாரமாயுள்ளாள்; இளநிலவை விரித்து விளங்குஞ் சடைமுடியை யுடையாள்; மகாகாளி; அவள்தான் பண்டு தேவர்களின் வாழ்வு வாழ்வாகவும் அசுரர்களின் வாழ்வு பாழாகவும் அனுக்கிரகிக்கு மோகினிவடிவு கொண்டருளி அமிர்தபானம் ஊட்டி யருளினவள். எ-று.

தமரம் - ஆரவாரம். நூபுரம் - சிலம்பு. சரணி, [1]உடைப்பெயர். ஆரணம் - வேதம். ஆகாரம் - உடம்பு. தருணம் - இளமை. சடிலம் - சடை. காளி - கறுப்பினை யுடையோள்.

----
[107-1] உடைப்பெயர் - தன் உடைமையாற் பெற்றபெயர்; தொல். பெயர். சூ. (௧௧) 11 - சே. பார்க்க.
----

108. எறியவோவி மாவாத மிரியவீசி யூடாடு
        மெழிலிபீறி மாமேரு விடையைநூறி யோராழி
முறியமோதி வான்யாறு முழுதுமாறி யாகாய
        முடியவேறி மேலாய முகடுசாடு தாளாளே.

எ-து : எடுத்தவிசையால் மகாவாதமான பெருங்காற்றானது எறிகை தவிர்ந்து இரிந்தோடாநிற்க எடுத்துவீசியருளி ஆகாசத்திடையே நடையாடு மேகங்களைப்பீறி மகாமேருவி னிடைக்கட்டைப் பொடியாக்கிச் சோதிச்சக்கரமான ஏகசக்கரத்தை முறியும்படியடித்து ஆகாசமெங்கும் வழிமாறி வழிமுழுதுங்கெட்ட அவ்வாகாசம் இனியில்லையென்ன வெளியடங்க முடியச்சென்றேறி எல்லாவற்றிற்கு மேலான மோட்ச லோகத்தைச் சாடி யருளிய ஸ்ரீபாதங்களை யுடையாள். எ-று.

எறியலென்றது காற்றெறித லென்னுந்தொழில். ஓவுதல் - ஒழிதல். மாவாதம் - பெருங்காற்று. எழிலி - மேகம். மேகத்தைப் பீறுதலாவது ஸ்ரீபாதமெடுத்த கடுமை மேகத்துக்கு ஓடவேண்டினதில்லை யெனவுணர்க. மகாமேருவின் இடைக்கட்டாவன சுவர்க்கங்கள். ஓராழி - [1]சோதிச்சக்கரம்.

----
[108-1] சோதிச்சக்கரம் - துருவசக்கரம்.
----

109. வழியுநீறு வேறார மகிழுமோரொ ரோர்கூறு
        மறமறாத வாணாள மடமறாத மானாள
வொழியுமோரொ ரோர்கூறு மொருவராகி நேராகி
        யுடையகேள்வ ரோர்பாதி யுருகுகாதல் கூர்வாளே.

எ-து : திருமேனியை முட்ட வழியவிட்ட திருநீறு வேறுகூறான கூறு நிரம்பச் சம்பிரமிக்கும் ஒருபக்கத்தை வீரமறாத புருஷனாள, நின்ற ஒருபக்கத்தை மடப்பமறாத மான்போல்வாள் ஆளாநிற்கச் செய்தேயும் தமக்கின்றி யொழிந்த ஒவ்வொரு பக்கத்தே நின்றவராகத் தமக்குவமையாகத் தம்மையுடைய சுவாமியாகிய ஒருபாதி யுருகுங் காதல்மிகுவாள். எ-று.

வழியுநீறு - வழியவிட்ட நீறு; வழுவில் நீறு - வழுவில்லாத நீறென்றுமாம். திருநீறுவேறேநிரம்ப மகிழுமென்பது, இடப்பாகமும் திருநீறுபட மகிழ்வர் மகாதேவரென வுணர்க. எனவே இடப்பக்கம் வலப்பக்கத்தைத் தழுவலும் வலப்பக்கம் இடப்பக்கத்தைத் தழுவலும் கொள்க. வீரமறாதார் மகாதேவரொருவருமென வுணர்க.

110. அதரசோதி மீதாடு குமுதவாச வாயார
        வமிழ்தமாக நேராக வகிலலோக மீரேழு
முதரசோபி தாநாபி கமலவாயி னான்மீள
        வுமிழுநீலி மேலாய வுவணவூர்தி யூர்வாளே.

எ-து : திருவதரச்சோதிச் செஞ்சிவப்பு மேன்மேல் மீதாடுங் குமுதமான அரக்காம்பல் போன்றிருக்குஞ் சுகந்தமுடைய திருவாய்க்கு நிரம்ப அளவுபோதவும் பதினாலு லோகமும் லோகத்திலுள்ள வத்துக்களும் ஒன்றுமொழியாமல் நேராய்ப்போம்படி திருவயிற்றுக்கு அமிழ்தமாகவும் அமுது செய்து, மற்றந்த அமுது செய்த பதினாலு லோகங்களையும் மீளத் திருவயிற்றிற் சோதியுண்டான திருத்தொப்புளான மடுவிற்பிறந்த செந்தாமரையினாலே புறப்படவிடும் நீலி, வரிட்டமான கருடபகவானை ஏறி ஊர்ந்து திரிவாள். எ-று.

அமிழ்தம் - உணவு. உதரம் - வயிறு. சோபிதம் - சோதி. உமிழ்தல் - புறப்படவிடுதல்; இஃது இந்திரஞாலங்காட்டுதல். இப்பாட்டு இடக்கரடக்கு.

111. வலையவாள ராமீது துயில்விடாத தான்மான
        மதியமூர்ச டாமோலி மகிணர்தாமு மீதோடி
யலையுமேக லாபார கடிதடாக மாநாக
        வமளியேறி னாராக வழகுகூர நேர்வாளே.

எ-து : வளைத்த வளையத்தை யுடைத்தாய்ப் படுக்கையான வார்த்தை, கீர்த்தியையுடைய பாம்பின்மேலே என்றும் உறக்கத்தைத் தவிராத தன்னையொப்பப் பாலசந்திரன் தவழ்ந்து திரியுஞ் சடையை முடியாக வுடைய சுவாமியான மகாதேவரும் மேலேபோந்து அலைகின்ற மேகலாபாரத்தை யுடைய அல்குற்பரப்பான பெரும்பாம்பின் படுக்கையின் மேலே ஏறினாராக, அழகுமிகும்படி அதற்கும் பொருந்துவாள். எ-று.

வலையமென்பது, திருப்பாற்கடலில் இப்பாம்பு வளையமாகிவிடி னல்லது நேர்கிடக்கின் தலையும்வாலும் கடற்புறத்திற் கிடக்குமென வுணர்க; வாள் - வார்த்தை, கீர்த்தி; மாணிக்கச்சோதி யென்பாரும் பாம்புச்சோதி யென்பாரு முளர். துயில் - உறக்கம். தானென்பது விட்டுணுசத்தியை. சடா வென்றது சடையை. மீதோடியலையு மேகலையாவது, அல்குலை விட்டுக் கழன்றுபோன மேகலையென வுணர்க. இதுவும் இடக்கரடக்கு.

வேறு.

112. போர்ப்பன தீம்புகையோ புராதனரோ மப்புகையே
ஆர்ப்பன பல்லியமோ வந்தரதுந் துமியுமே.

எ-து : தேவியுடைய திருக்கோயிலை முட்டப்போர்ப்பன தித்தித்த தூபமான புகைகளேயோ? அல்ல; பிறவுமுள; அவை பழையோருடைய அக்கினியோத்திர ஓமப்புகையே. தேவிக்குத் திருப்பள்ளியெழுச்சி முதலாகத் திருவர்த்தயாம மீறாகவுள்ள மங்கல காரியங்களுக்கு முழக்கக்கடவ வாச்சியங்கள் பலவுமேயோ வுள்ளன? அல்ல; தேவலோகத்தில் இந்திராதி பிரமாதிகளால் பூசைசெய்து முழக்கப்படுகின்ற ஆகாசதுந்துமி முழக்கங்களுமுள. எ-று.

தீம்புகை : அகில், கண்டசர்க்கரை, கற்பூரம் இம் மூன்று முதலாகிய [1]முப்பத்திரண்டு தூபத் திரவியங்களென வுணர்க. என்னை? "நேர்கட்டி செந்தே [2]னிரியாசங் கற்பூர, மார மகிலுறுப்போரைந்து" என்பன முதலானவை. இவற்றை யாமளத்திற் கண்டுகொள்க. ஓகாரம் சிறப்பினும் வினாவினுங் கொள்க. துந்துமி : அனுகரண சத்தத்தாற் பிறந்த பெயர்.

----
[112-1] ஓமாலிகை முப்பத்திரண்டென்று கூறுவர்; சீவக. (௬௨௩) 623 - ந; சிலப். (௬ : ௭௬-௯) 6 : 76-9 - அடியார். பார்க்க.
[112-2] நிரியாசம் - பிசின், குங்குலிய முதலியன; சீவக, (௫௩௪) 534 - ந. உரை.
----

113. பரவுவன யாமளமோ பதினெட்டுப் புராணமுமே
விரவுவன பூதமோ விண்முதலைம் பூதமே.

எ-து : தேவியைத் துதிப்பன [1]பிரமயாமள முதலான பிரதம யாமளங்களும் ஒன்பதிற்றொன்பது எண்பத்தொன்றான உப யாமளங்களு மேயோ? அல்லன பிறவுமுள; அவை பிரமாண்ட புராண முதலாக விட்டுணு புராண நடுவாகக் கூச்மாண்ட புராணங் கடையான பதினெட்டு மகாபுராணங்களுமே. அன்றியே தேவியடைய ஸ்ரீ பாதங்களைச் சென்று சேர்வன வீரபத்திர விசித்திர கர்ணாதிகளான ஸ்ரீபூதகணங்களேயோ? அல்லன பிறவுமுள; அவை ஆகாசாதி பூதமான பஞ்சமகா பூதங்களுமே. எ-று.

சதாசிவ ஈசுவர ருத்திர விட்டுணு பிரமா வென்னப்பட்ட பஞ்சமகா பூதங்களும் தேவி திருக்கோயிற் றிருவாசலிற் பணிசெய்யக்கடவ பஞ்சபூத மகாபசாசுகளென வுணர்க. ஓகாரம் இங்குமொக்கும்.

----
[113-1] பிரமயாமளம், விஷ்ணுயாமளம், ருத்திரயாமளம், சக்தியாமள முதலாக யாமள நூல்கள் பலவுள வென்பர்.
----

114. ஆடுவன தோகையோ வயனூர்தி யன்னமுமே
பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே.

எ-து : தேவி திருக்கோயிலிற் கூத்தாடுவன [1]பிள்ளையாருடைய துவச வாகனமான தோகைமயில்களேயோ? அல்லன; பிரமாவினுடைய வாகனமான அன்னங்களுமுள. தேவி கீதப்பிரியை யாதலால் பாடுவன தேவியால் வளர்க்கப்பட்ட பூவைப்பட்சி சாதிகளேயோ? அல்லன; தேவலோகத்திலுள்ள கின்னர மிதுனங்களான அபேதப் புட்களினினம் பலவுமுள. எ-று.

[2]கொட்டாட்டுப்பாட்டுப் பூசாந்தம்.

----
[114-1] பிள்ளையார் - முருகக்கடவுள்.
[114-2] கொட்டும், ஆட்டும், பாட்டும் ஆகிய இவை பூசையின் முடிவில் நிகழ்த்தப்படுவன வென்பது இதன் பொருள்; “கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானை", "கொட்டாட்டொடு பாட்டொலியோவாத்துறையூர்" என்பன தேவாரங்கள்.
----

115. வனமலரோ பூமாரி வானக்கற் பகமலரே
கனசலமோ வபிடேகங் கடவுட்கங் காசலமே.

எ-து : தேவிக்குத் திருமுடிமுதல் திருமேனிக்குச் சாத்தப்பட்ட புட்பவருடம் திருக்கோயிலி லுண்டாகிய கற்பகசாதியான [1]ஐந்துபவனச் சோலையிலுண்டான புட்பங்களேயோ? அவையல்லன; சுவர்க்கத்து அமராபதியிலுள்ள கற்பக விருட்சங்களின் நித்தியமான புட்பங்களுமுள்ளன; அன்றியே தேவிக்குத் திருமஞ்சனமாகத் திருவபிஷேகம் பண்ணுவன மேக சலங்களேயோ? அவையல்லன; தெய்வீகமான ஈசுவரனுடைய திருமுடியிற் கங்கையின் சலங்களுமுள. எ-று.

கனம் - மேகம். கடவுட்கங்கையை ஈசுவரன் திருமுடியிற் கங்கையாகப் பொருளெழுதிய குறிப்புணர்க.

----
[115-1] ஐந்து பவனச்சோலை - தேவியின் திருக்கோயிலிலுள்ள கற்பகச் சோலை முதலிய ஐந்து சோலைகள்; பவனம் - கோயில்; இந்நூல். (௬௬) 66 - ஆம் தாழிசை முதலியவற்றைப் பார்க்க.
----

116. வயங்குகுழை மதியமோ வாளிரவி மண்டலமே
தயங்குகவுத் துவமோபூண் டனிச்சோதிச் சக்கரமே.

எ-து : தேவிக்குத் திருக்காதி லிடப்படும் குழை சந்திரனேயோ? அல்ல; ஒளிபொருந்திய ஆதித்தனு மல்லனோ? அன்றியேயும் திருமார்புக்கு ஆபரணமாவது ஒளிவிட்டு விளங்கிய கவுத்துப மென்னும் இரத்தினமேயோ? அல்ல; ஆகாசத்திற் சந்திராதித்த கிரக நட்சத்திர தாரகா கணங்களைக் கொண்டு உலாவாநின்ற ஏகசோதிச் சக்கரமுமே. எ-று.

தேவிக்கு மதியம் முத்தக்குழை யென்றும் இரவிமண்டலம் மாணிக்கக்குழை யென்றுங் கொள்க.

இதனால், தேவி சருவலோகமும் தானேயாத லறிக.

117. சார்த்துவன கோசிகமோ தன்பேழைத் தமனியமே
ஆர்த்துவன வறுசுவையோ வந்தமிலா வமுதமுமே.

எ-து : தேவிக்குத் திருவுடை யாடையாக உபாசக [1]பாரசவன் சார்த்துவன கௌசிகப் பட்டாடைகளேயோ? அல்ல; பண்டைத் தனது பேழைப் பொன்னாடை யல்லவோ; அன்றியும் தேவியைப் பூசிக்கும் பாரசவன் அமுது செய்விப்பன அறுசுவை யடிசிலேயோ? அல்ல; முடிவில்லாத ஆயுஷ்யத்தைக் கொடுக்கும் அமிர்தமல்லவோ? எ-று.

இவ்வமுதமுதவுவார் தேவர்களென வுணர்க. இது யாமளத்திற் கண்டது.

கோசிகப்பட்டு - [2]கௌசிகவிஷய பாசனம்.

----
[117-1] பாரசவன் - தேவி பூசைபண்ணுபவன்; "பாரசவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியம்" என்பர் (சிலப். உரைப்பாயிரம்.)
[117-2] கௌசிகநாட்டில் நெய்யப்படும் பட்டு; விஷயம் - நாடு.
----

118. கொடும்புரிசை நேமியோ கொற்றப்போர் நேமியே
இடுந்திலக மான்மதமோ வெண்டிசைய மான்மதமே.

எ-து : தேவிகோயிற் றிருமதில் சக்கரவாள பருவதமோ? அல்ல; தன்னுடைய ஆக்கினாசக்கர மல்லவோ? அல்லவாகிற் சக்கரவாள பருவதத்தைக் கடந்து பாசமயிகள் புகுதாரோ? அன்றியே, நெற்றிக்குத் திலகமிடுவன கத்தூரியோ? அல்ல; எட்டுத்திக்கிலு நின்ற ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீப மென்கின்ற திக்கசங்களினுடைய கபோலத்தலங்கள் முதலான [1]சத்ததாரைகளின் மதங்களல்லவோ ? எ-று.

எனவே திருநெற்றிக்குக் கத்தூரித் திலகம் போதாதெனக்கொள்க.

இதில் தேவிபெருமை யுணர்க.

----
[118-1] யானைக்கு மதமுண்டாகுமிடங்க ளேழாவன : கன்னமிரண்டு, கண்களிரண்டு, துதிக்கைத் துவாரமிரண்டு, கோசமொன்று; "எழுதிறத் தினு மிக விடுவன மததாரை" வி. பாரதம். சூது. (௭௯) 79.
----

119. அடிச்சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே
முடிச்சூட்டு முல்லையோ [1]முதற்கற்பு முல்லையே.

எ-து : தேவியுடைய திருவடிமலர்களைச் சுற்றுமடர்ந்து கட்டிக் கொண்டிருப்பன நூபுரமான சிலம்புகளோ? அல்ல; வேதமந்திர சாகையாகிய சகசிராஸ்பதமான மந்திரங்களுமுள வல்லவோ? அன்றியே, திருமுடிச்சுற்று மாலையாவன வல்லிசாதி முல்லைப்பூவோ? அல்ல; தன்னுடைய பிரதான குணமான பதிவிரதமுல்லை யல்லவோ? எ-று.

சிலம்போசையும் வேதமந்திர வோசையும் ஒக்கும். [2]கற்புக்கு முல்லை சொல்லுதற்குக் காரணம் ஸ்ரீயும் சரசுவதியு முதலாயினோர் புண்ணியபாபவழிச் செல்வரென வுணர்க.

----
[119-1] கற்புமுல்லையி னிலக்கணத்தைப் புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றா லுணர்க.
[119-2] "முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” (சிறுபாண். (௩௦) 30) என்பதையும் அதனுரையையும் அவ்வடியின் அடிக்குறிப்பையும் பார்க்க;
"முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்" (அகநா. (௨௭௪) 274);
"வாணுத லரிவை முல்லை மலைய, வினிதிருந் தனனே" (ஐங்குறு, (௪௦௮) 408);
“பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்" சீவக. (௬௨௪) 624.
----
4. தேவியைப்பாடியது முற்றிற்று.

----------

5. பேய்களைப்பாடியது (120 -135)

120. எல்லைநான் மறைபரவு மிறைமகளைச் சிறிதுரைத்தாந்
தொல்லைநா யகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம்.

எ–து : தனது விசேஷப் பிரபாவத்தை நாலு வேதங்களும் புகழவல்லவளை எம்முடைய தரத்தார் புகழ்கை ஆவதன்றாகிலும் எங்களறியாமையாற் சிறிது சொல்லினோம். இனிப் புராதன நாயகியான பரமேசுவரியுடைய பசாச கணங்களையுஞ் சொல்லுதும். எ-று.

தொல்லை - பழமை. கணங்கள் : இரண்டாவது தொக்கது.

வேறு.

121. வாயெழப் புகைந்துகீழ் வயிற்றெரிந்து மண்டுசெந்
தீயெழக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே.

எ-து : நாபிக்குக் கீழான வயிற்றிற் பசியின் பெருமையாலே எழுந்த உதராக்கினிச் சுவாலை புறப்பட்டு வாயினாலே மேனோக்கிப் புகைந்து தலைக்கொண்டு சிவந்த நெருப்பெழக் கொளுந்தினாற்போல இருக்கும் மயிரை யுடைய தலைகளை யுடையன. எ-று.

குஞ்சியென்றதனால் ஆண்பேயெனக் கொள்க.

122. புரண்டுபோத வேரிவாரி போனபோன பூமிபுக்
கிரண்டுபோது முண்டுமுண்டி லாதபோ லிருப்பவே.

மதுச்சமுத்திரமான கட்கடற்கு ஏறுநீர் இழிநீருளவோ வென்னிற் கடலாந் தன்மையால் உரைத்ததென வுணர்க. வேரி - மது. வாரி - கடல். ஏறுநீர், இப்பேய்களுக்குப் பயப்பட்டுப்போவது போன்றது. கடல் வற்ற வற்றப் பிரமா படைக்கு மென்ப. அவனுக்கு ஈசுவரன் பணித்த பணி இது.

123. பாதியிற் பிலந்துழாவு [1]பாறுகால மாறுகால்
ஓதியிற் [2]செவித்துளைத் திளைக்குமுத் துடுப்பவே.

எ-து : பாதிக்காலில் ஏழு பிலத்துவாரமும் துழாவவல்லவா யிருக்கும் பாறியகாலை யுடையன; மாறுகாலை யுடையவாகிய ஒந்திகள் பலவும் பண்டே புக்கிருக்குஞ் செவித்துளை யிடத்திற்புக்கு இடைவிடாதே யிருக்கும் [3]முத்துடும்புகளை யுடையன. எ-று.

பாதியிற் பிலந்துழாவுங் காலெனவே பேயின் பெருமை கொள்க.

----
[123-1] “பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்” என்பது (௧௧) 11-ஆம் திருமுறை; திருவாலங்காட்டு மூத்ததிருப் பதிகம், (௬) 6.
[123-2] "ஆந்தை பாந்தி யிருப்பத் துரிஞ்சில்புக் கங்கு மிங்கு முலாவுஞ் செவியன?” கலிங்க. (௧௨௭) 127.
[123-3] முத்துடும்பு - முதுமையாகிய உடும்புகள்.
----

124. எழுங்கடற் பகைப்பிணத்தும் ரவிதிகந்த வெல்லைபோய்
விழுங்கடற் பகைப்பிணத்து மோடியுண்டு மீள்பவே.

எ–து : ஆதித்தனுதயஞ் செய்தருளும் கீழைச் சமுத்திரத்திற் புறத்திலே நின்று அவனுடன் யுத்தஞ் செய்யும் அசுரர்களை அவன் கொன்றருளினால், பட்ட மூன்று நூறாயிரத் தறுபதினாயிரவர் பிணங்களை அப்பொழுதே சென்று புக்குத் தின்று பின்னையும் அவ்வாதித்தன் அத்தமிக்கும்பொழுதே மேலைச் சமுத்திரத்தினது புறத்தினின்று பொருத அசுரர்களையும் அவ்வண்ணமே அவன் கொன்றால் அவ்வண்ணமே அவர்களின் பிணங்களையும் ஓடிச் சென்று தின்று மீண்டு வருவன. எ-று.

திகந்தம் - திக்கின் முடிவு; திக் அந்தம்; அல்லின் மேல் அச்சேறின ஆரியமுடிவு; இதனைக் குற்றியலுகரவீறென்னாதே தமிழாமிதற்குத் தமிழாமுடிவு, [1]"புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலாது" என்பதனாற் கொள்ளின், ககாரவொற்றுமுதலிய வல்லெழுத்துக்களாறும் மொழிக்கிறுதியில் வாரா; ஆனபடியால், இதனைத் திக்கென்னுஞ் சொல்லின் கடையைக் குறைத்து உயிரேற்றி முடித்துக்கொள்க; விறகு, கோடு, மூக்கு என்பவை முடிந்தது போலக் கொள்கையு நலமாம்; [2]"சிதைந்தன வரினு மியைந்தன வரையார்" என்பதனாற் கொள்ளலுமாம். திகந்தமென்றதனாற் கிழக்கறுதியும் மேற்கறுதியுங் கொள்க. இப்பாட்டில் ஓடியென்னுஞ் சொல்லால் தேவியுடைய குற்றேவல் செய்ய வருதற்குரிய பேய்களின் விரைவு கூறப்பட்டது. ஆதித்தன் முப்பது நாழிகையிற் செல்லுமிட முழுதும் ஒரு முகூர்த்தத்திற் போய் வருவன பேயுள வென்றவாறு.

----
[124-1] தொல். புணர். சூ. (௩௬) 36.
[124-2] தொல். எச்ச. சூ. (௬) 6.
----

125. எயிறிரண்டு தட்டினூ டுமிவ்விரண்டெ ழுந்துபாழ்
வயிறறிந்து தாழ்செறித்து வைத்தவொத்த வாயவே.

எ-து : மேலுங்கீழுமான வாயுதடு இரண்டிலும் ஏறி இழிந்து இதழொன்றிற்கு இரண்டெயிறாகக் கீழுமேலும் நாலெயிறுளவன்றே அவை இவையிற்றின் வயிற்றின் பெருமையறிந்து வாயை யடைத்துத் தாழிட்டு வைத்தன போன்றன. எ-று.

இல்லையாயின் உலகமெல்லா மொருக்காலே விழுங்குமென வுணர்க.

126. வயங்களிற் புறப்பொருப்பில் வேரிவாரி வந்துதிக்
கயங்களிற் கடாமிடா மடுத்தெடுத்த கையவே.

எ-து : வலிகளாலே சென்று சென்று, சக்கரவாள பருவதங்களின் புறத்து மதுச் சமுத்திரங்களை வாரியுண்டு வந்து பின்னைத் திக்கயங்களின் [1]செவிமுதல்மதங்களை மிடாக்களை மடுத்தெடுத்து மிடற்றின்மடுத்த கையினை யுடையன. எ-று.

----
[126-1] “இருகவுட்டுளை வாக்குகார்க் கடங்கள்” காஞ்சிப். விநாயகர்.
----

வேறு.

127. உலரெலும்பொ டொசிநரம்பி னுடலினின்ற குடலைபோன்
றலர்சிலம்பி யிழைசுழன்று வெளியடங்க வணிவவே.

எ-து : பசையற வுலர்ந்த எலும்புடன் கட்டொசிந்த நரம்புடன் நின்ற பசாசுகளி னுடம்புகளைக் கிணற்றுக்குக் கட்டிவிட்ட குடலையாக நினைத்துக்கொண்டு பெருத்த சிலந்திகள் தம்முடைய வாய் நூலால் அவற்றின் வயிற்றெலும்புகளின் இடைவெளி தோன்றாவகை அணிவன. எ-று.

இதன்பயன், தம்முடம்பின் மாங்கிசங்களையும் தம்முதராக்கினி தின்றதென்றவாறு.

குடலை - கிணற்றிற்கூடு.

வேறு.

128. குறிக்குமெக் கொழுக்களுக்கு மிக்கடிக்கொ டுக்கொடுத்
தெறிக்குமெப் பிறைக்குமெட்டி ரட்டிநெட்டெ யிற்றவே.

குறிக்கும் எக்கொழுக்களுக்கும் - பேய்களின் பற்கு உவமையாக உலகத்தாராற் சொல்லப்பட்ட உழுகொழுக்க ளெவற்றினுக்கும்; குறித்தல் பிறைக்குமொக்கும். கொடுக்கொடுத்து : இரட்டைக்கிளவி. எறித்தல் - நிலாவெறித்தல். பிறை - பதினாலாம் [1]பக்கத்துப் பிறையும், முதற்பக்கத்துப் பிறையும்.

----
[128-1] பக்கம் - திதி; "பூர்வபக்கத்துப் பதினாலாம் பக்கமாதலால்", “பூர்வ பக்கத்துப் பதின்மூன்றாம் பக்கம்" சிலப்பதிகாரம், பக். (௨௩௭) 237, (௨௬௯) 269 பார்க்க.
----

129. கதுப்பிறக் கழுக்களிற் பழுக்களைக் கடித்துழிப்
புதுப்பிணத் திரைப்புமிக் கடிப்பொருப் பொருப்பவே.

எ-து : உயர்ந்த கழுக்களிற் பழுவெலும்புகளைத் தம்முடைய வாய்களில் இரண்டு கதுப்பும் ஒடிந்தோடக் கடித்துத் தின்று அவையிற்றிற் பசை காணாதவிடத்திற் புதிதான பிணங் கிடைத்திலதென இரைப்புமிக்கு வயிற்றடி வீங்கிப் பொருப்பொருத்த பலபேயுமுள. எ-று.

கதுப்பென்றது கொடிற்றை. இரைப்பு - மோகம்; செந்தமிழ். பொருப்பொருப்ப : இரட்டைக்கிளவி.

130. புரக்குமற் புதத்துயிர்க் கிழத்திபுக் குழித்தமக்
கிரக்கமற் றிருப்பதற் கெடுத்துளைத் திளைப்பவே.

எ-து : பசாசகணங்கள் தமக்கு உணவு முதலாயின கொடுக்கு மகாதேவி வாழ்க்கைப்பட்டுப் புக்க மகாதேவர் தங்களுக்கு உணவு முதலாயின கொடாதே இரக்கமின்றி யிருப்பதற்கு எடுத்துக் கதறி முறையிட்டு இளைத்திருப்பன அநேகமுள. எ-று.

அற்புதத் துயிரென்றது, உணவுண்டாகில் இருந்து உணவில்லையாகில் வருந்தும் இதுவல்லது காணப்படாத பிராணனென்றவாறு.

அற்புதம் - அதிசயம்; அது காணப்படாமை. புக்குழியென்றது, மகாதேவரை. உளைகை - கதறுகை.

வேறு.

131. மதிதுரந்து வரவொழிந்த மதநினைந்து சதமகன்
பதிதுரந்து படையயின்று சிறிதவிந்த பசியவே.

எ-து : சந்திரனைத் துரந்து பின்னை அவன் ஆகாசத்தில் வருதலைத் தவிர்ந்த கருவத்தை நினைந்து தேவேந்திரனது பதியான சுவர்க்கத்தைத் துரந்து அதிற் றேவர்களான படையைத் தின்று சிறிதடங்கின பசியை யுடையன. எ-று.

இது தர்க்கவாதம். இது தமிழில் தகடூர் யாத்திரையிலுமுண்டு. இக்கதை வேதகதை.

132. கருநிறங்கொ டுருவுகொம்பு வெருவுமும்பர் கழிவிடும்
பரிபிளந்து தசைமிசைந்து சிறிதவிந்த பசியவே.

எ-து : கருநிறத்தைக் கொண்டு பிறருடலை உருவு கொம்புகளாற் குத்தவல்ல கடாக்களை வெருவுந் தேவர்கள் பண்டு கட்டவிழ்த்துவிட்ட குதிரைகளைப் பிளந்து மற்றவற்றின் மாங்கிசங்களைத் தின்று சிறிது பசி தவிர்ந்தன, அப்பசாசுகள். எ-று.

இது, பண்டு மகிஷவதை பண்ணின பரமேசுவரி, தன்னை வஞ்சித்துவிட்ட தேவர்கள்மேல் தன் படைகளைப் போகவிட்ட கதையென வுணர்க.

உருவுகொம்பு : அன்மொழித் தொகை. கழி - கயிறு. இதனை "வானுகத்தின் றுளைவழி நேர்கழி கோத்தென" ((௬) 6) என்ற திருச்சிற்றம்பலக் கோவையிற் கண்டுகொள்க.

133. இருவிசும்பு வறிதியம்ப விடிவிழுந்த தெனவிழும்
பெருவிலங்க லனபுயங்க பிசிதவுண்டி பெறுபவே.

எ-து : பெரிய ஆகாசத்திற் சுவர்க்கம் அரசின்றிப் பாழ்பட்டுக் கதறப் பூமியிலே அசனி விழுந்தாற்போல விழுந்த மலை போன்றிருக்கும் வடிவை யுடைய பாம்பி னிறைச்சியை உண்டியாகப் பெற்றுப் பசி தீர்ந்தன. எ-று.

புயங்கம் - பாம்பு. பிசிதம் - மாங்கிசம்.

134. வாரியுண்டு மேகவிந்த்ர வாகனங்கள் வாய்விடுஞ்
சோரியுண்டு சூன்முதிர்ந்த போன்மிதந்த தோலவே.

எ-து : சமுத்திர சலத்தைக் குடித்து மேகமான தேவேந்திர வாகனங்களைப் பிடித்துக்கொண்டு பிளந்து மற்றவற்றின் வாயாற் சொரிகின்ற இரத்தங்களை மிகவுங் குடித்து உள்ளிற் கெர்ப்பம் வளர்ந்தாற்போல மேன்மிதந்த தோலையுடையன. எ-று.

சோரி - உதிரம். சூன்முதிர்தலாவது உடம்பின் மாங்கிச மிகுகை.

இது காண்டாவனப்பூசற்கதை.

வேறு.

135. மிசைபெறாதுகுற ளானகூளிகளும்
        விம்மி யுள்ளதிசை செம்மியே
திசைபெறாதுதடி யாதபாரிடமு
        முடைய ளுலகுடைய செல்வியே.

எ-து : மேல்வளர ஆகாச மில்லாமையிற் குறளான பேய்களையும் திக்குமுட்டப் பருத்து விம்மித் திசையை யடைத்து மீண்டும் வளரத் திக்குப் பெறாது தடிக்கை தவிர்ந்த பூதங்களையும் உடையள், அகிலலோக நாயகியான பரமேசுவரி. எ-று.

மிசையென்றது ஆகாசத்தை. கூளி - பேய். பாரிடம் - பூதம்.

5. பேய்களைப்பாடியது முற்றிற்று.

--------

6. கோயிலைப் பாடியது (136-221)

136. இக்கணங்கள் வந்துசூழும் யோகயா மளத்தினாள்
மெய்க்கணங்க ளேவிரும்பு கோயில்யாம் விளம்புவாம்.

எ-து : முன்சொல்லப்பட்ட பூதபசாச கணங்களால் வந்து சூழப்படும் வேத சிவாகமங்களாற் பொருந்தும் யாமள சாத்திரத்தினாற் சொல்லப்படுகின்ற ஈசுவரியின் பதினெண் கணநாதராலும் விரும்பப்படுகின்ற கோயிலை யாம் இனிச் சொல்லப் புகுகின்றோம். எ-று.

பதினெண் கணமாவன தேவகணம் பிதிரர்கண முதலியன.

வேறு.

137. கீழுமேழுநிலை மேலுமேழுநிலை கோயில்வாயிலிரு கிரியுமே
சூழுமேழ்கடலு மகழிசக்ரகிரி புரிசைகாவலொரு சூலமே.

எ-து : கீழேழுலகமென்று சொல்லப்பட்ட சத்த பாதாளங்களும் கீழ்நிலை; மேலேழு லோகமும் நாயகி கோயிலின் மேல் நிலை; இது கோயிற் [1]கட்டணம். திருவாசல் உதயகிரியும் அத்தமனகிரியுமான இரண்டு மலைகளும். கோயிற் கிடங்கு சத்த சமுத்திரங்களும். இந்தக் கோயிற்கு மதில் சக்கரவாளம். இந்தக் கோயிற் கட்டணம் இத்தனைக்கும் ரட்சையாவது தேவி திருக்கையிலிருக்கும் ஒரு சூலம். எ-று.

கோயிற்குக் கிடங்குண்மை உதயணன் கதையிற் கண்டுகொள்க.

----
[137-1] கட்டணம் : "தாரருந் தகைப்பென்றது, ஒழுங்குபாட்டை யுடைய ஆண்டு வாழ்வார்க்கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டணமென்றவாறு" பதிற். (௬௪ : ௭) 64 : 7 - உரை.
----

138. பூதநாயகர் மகோதராதிகள் புரக்கவாயின்முறை புகுதுவார்
வேதநாயகி விமானபீடிகை யநேககோடிவட மேருவே.

எ-து : இப்படிக்கொத்த திருக்கோயிற் றிருவாசற் காவலாள ராகிய மகோதரர் குண்டோதார் வியாக்கிரமுகராதி காரண பூதகணநாதர் உள்ளுப்புக்கு விண்ணப்பஞ் செய்து, வரவிடுகவென்ன, தடை தவிர்ந்து விலகாது புகுமினென் றருளப் புகுதப் பெறுவார், ஐவகைப் பூதத்துக்கும் நாயகரான பிரமா விட்டுணு ருத்திர ஈசுவர சதாசிவர்கள். வேதநாயகியான விசுவேசுவரியுடைய கோயிற் பலிபீடமானவை அநேக கோடி வடதிசை மகாமேருக்கள். எ-று.

புரத்தல் - அனுக்கிரகித்தல். அனந்த சக்கரவாள முண்டென்னுங் கதையால் மகாமேருவும் அநேக கோடியுள வென்பர். அநேகங் குவடுகளை யுடைய மகாமேரு வொன்றுமே யென்பாருமுளர். இது மகாசத்தியான தேவி பெருமைக்குப் போதாது.

ஆலமரம்.

139. அப்பெரும்பழைய கோயிலூடகில லோகநாயகி யமர்ந்ததோர்
ஒப்பருங்கடவு ளாலமுண்டதனை யுள்ளவாசிறி துரைத்துமே.

எ-து : இங்குச் சொல்லப்பட்ட பெரிதாய்ப் பழைதாயிருக்கும் சருவாண்டங்களான கோயிலினடுவே எல்லா லோகங்களுக்கும் நாயகியான பரமேசுவரி சமித்திருப்பதொரு வடவிருட்சமுண்டு. அதனை உள்ளபடி சிறிது சொல்லுவோம். எ-று.

பழைய கோயிலென்பது, பிரமா முதலான காரணேசுவரராலும் செய்யப்படாத கோயில். அதுதான் நித்திய சித்தமென வுணர்க. இது வைதீகம். உள்ளவா வென்றது உள்ளவாறு முரைப்ப அரிதென்றபடி.

வேறு.

140. முடுகியபுறம்பு நீர்நலிய முகடுபடு மண்டகோளகையை
நெடுகியவரப்பி லாதபணை நிரைகொடுசு மந்தநேமியது.

எ-து : உகாந்த காலத்தில் உலகத்தை முட்டமுடுகி வந்த புறம்பிலுள்ள மகா சமுத்திரங்களி னீரான பிரளயோததி நலிதலாற் பாழ்பட்ட அண்ட கோளகைகளைத் தன்னுடைய நெடுகிய அளவில்லாத பெருங் கவடுகளான பல நிரைகளைக்கொடு சுமந்து தாங்கிய சுற்றுக்களை யுடைத்து. எ-று.

முகடுபடுதல் - பாழாகை; முகடு மோட்சமுமாம்.

141. விரிகடல்கொளுந்தி வேவவிழ வருமிகுபதங்க ராறிருவர்
எரிவிரிகரங்க ளாறியெழ வெழுகுழையசைந்த சாகையது.

எ-து : விரிவினையுடைய கடல்களெல்லாம் அழல்கொளுந்தி வேம்படிக்கீடாக வருமிக்க பதங்கர்களான [1]ஆதித்தியர் பன்னிருவருடைய நெருப்பு விரிகிற கதிர்கள் பன்னீராயிரமும் குளிர்ந்துபோம்படி அப்பொழுது எழுகின்ற முகிழ்விரி சிறுகுழையசைந்த கொம்புகளை யுடையது. எ-று.

எனவே திக்குத்தோறும் துவாதசாதித்தர் வரினும் இப்படிப் படுவரென வுணர்க.

மிகுபதங்கரென்றது, ஈசுவரனுடைய அங்கிசமானது பற்றி. அதனை [2]அட்டமூர்த்தி யென்னும் ஈசுவரன் பெயராலுணர்க. பதங்கர் - ஆதித்தர். கரம் - கதிர்; சகசிரகிரணம்.

----
[141-1] "சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண் டாயிரஞ் சுடரொடுஞ் சூழ்வருவரே" என்றார் முன்னும்; (௭௮) 78.
[141-2] "இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி யியமான னாயெறியுங் காற்று மாகி, யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகி" என்பது தேவாரம்.
----

142. சதுமுகன்முடிந்த வூழியொரு சருகிலையுதிர்ந்து தூர்புனலி
னிதுமுதலவைந்து பூதமென விருநிலம்வழங்கு சோபையது.

எ-து : ஒரு பிரமா மரித்தால் அந்தப் பிரமகற்பத்தில் ஒரு சருகிலை விழும். விழுவதாகியவது கடலினடுவே விழுந்தால் அந்தக் கடலினது [1]கம்பீரமெல்லாம் தூர்ந்து தரையாம்; இத்தரை முதலாக ஐந்து பூதங்களா மென உலகத்தார் வியவகரிக்கும் அழகுடையது அது. எ-று.

"இது முதலியைந்தபூதமெனவிரு நிலம்வழங்கு" எனப்பாட மோதி, இது முதலாக இயைந்து பொருந்திய பூமியான பூதமாய் வழங்குமென்பாரு முளர்.

----
[142-1] கம்பீரம் - ஆழம்.
----

143. இறுதியினெரிந்து பாருருக வெழுகனல்கரிந்து போயவிய
உறுதியினனந்த சாகைதொறு மொருதனிகுளிர்ந்த நீர்மையது.

எ-து : உகாந்த காலத்து எரிந்து பூமியுருகும்படியாக எழுகின்ற யுகாந்தாக்கினி கரிந்துபோய் அவியும்படிக்கு ஈடாக உரவிதாய் அளவில்லாத கவடுதொறும் ஒன்றாய்த் தனித்தனி குளிர்ந்த நீர்மையுடைத்து அது. எ-று.

இறுதி - ஊழி. உறுதி - சத்தி.

144. படியடியெறிந்து கால்பொருது பலகுலவிலங்கன் மேருவொடு
குடியடிபறிந்த நாளுமொரு குழைசலனமின்றி நீடுவது.

எ-து : பூமியினுடைய ஊசிவேர் அடிபறிய எறிந்து மகாவாதஞ் சென்று தாக்கியபொழுது பின்னைப் பல குலபருவதங்களோடு மகாமேருவுங் குடியிருப்பு அடிபறிந்த மகாகற்பாந்த நாளிலும் அந்தக் காற்றுக்கு ஓர் அற்பமாயினும் ஓர் இலை அசங்காதே நிலைநிற்கத் தானு முண்டாவது அது. எ-று.

கால் - காற்று.

145. மழையெனவுகங்க ளேழெழிலி வரவரவிசும்பின் மாறுவது
பழையனபொதும்பி லேழுமெழு பரவையுமடங்கு கோளினது.

எ-து : யுகாந்தங்கள் தோறும் மேகமேழும் உலகமெல்லாம் ஏகோதகமாய்ப் பெய்யுநாள் வரவர அம்மழைப் புனல்களை ஏற்றுக்கொண்டு ஆகாசத்திலே மாறிப் பூமியைக் காப்பது; பழையனவான பொதும்பில் இவ்வேழு மேகப் புனல்களையும் கடலேழினது சலங்களையும் கொள்ளுங் கோட்பாட்டினை யுடையது. எ-று.

இதன் பொதும்பிலடங்குவன இவையென வுணர்க.

146. அரிதனிதுயின்ற தோரிலையி லரனவையிருந்த நீழலது
விரிசுடர்நிவந்த சாயைமதி மிசையிடைவிளங்கு சோபையது.

எ-து : மகாவிட்டுணு பதினாலு லோகமும் அமுது செய்தருளிப் பள்ளிகொள்ளும் பாற்கடற் பரப்புப் போதாமல் வந்து உறங்கும்படி விரிந்த இலையை யுடையது. அதுவுமன்றி மகாதேவரான தட்சிணாமூர்த்தி அறுபத்துநாலு கலைக்கியானமும் உலகத்தா ரெல்லார்க்கும் உபதேசிப்ப ஆத்தானமிருந்த நிழலினை யுடையது. மிக்குவிரிந்த பிரகாசத்தை யுடைய சந்திரன் மேலேபோய் அவன் மேல் விளங்கித் தோன்றும் நிழலினை யுடையது. எ-று.

147. இசையனபிலங்க ளேழுமத னிடையிடைவிழுந்த வேர்விவர
மிசையனபதங்க ளேழுமதன் விடுகவடுதந்த கோடரமே.

எ-து : ஓசையை யுடையவான ஏழுபிலமும் அவ்வடவிருட்சத்தின் கீழிடத்து விழுந்த வேர்களின் வெளியந்தரம்; இனி மேனின்ற ஆகாசத் தானமான பதங்களேழும் அவ்விருட்சத்தின் பெரிய கவடுகளிலாகிய கோடரங்களின் இடையே நின்ற பெரிய வெளிகள். எ-று.

கோஷவதியென்பது, நாகலோகத்திற்கும் வீணைக்கும் பெயர்; 'இசையனபிலங்களேழும்' என்பதற்குப் பொருள், இவைகொண்டு கண்டுபிடித்ததென வுணர்க.

148. உரியபலவண்ட கோடிபுகு முதரமொடனந்த கோடியுகம்
[1]அரிதனிதுயின்ற தோரிலையி லதனளவியம்பு வாரெவரே.

எ-து : அமுது செயற்குரிய திருப்போனகமான பிரமாண்ட முதலாகிய அநேக கோடி அண்டங்களையும் இவற்றிலகப்பட்ட மகாமேருவாதி அநேக கோடி வத்துக்களையும் அமுது செய்தருளிய திருவயிற்றுடன் அநேக உகாந்தம் மகாவிட்டுணு பகவானான பெரியோன் யோகநித்திரை கொள்ளுவது அவ்விருட்சத்தின் ஓரிலையி லென்றால் அதனுடைய பெருமையைச் சொல்லுவார் யாவர்? எ-று.

----
[148-1] "அயனையுல கடையவரு மோருந்தி மாமலரி னருளியறி வரியபா யோகொன்றி மாறுயில்கொள், சயனமென மொழிவதொரு தாழ்கொம்பின் மேவுசிறு தளிரினொரு தலையினுனி யேயென்பர் சாகையையே" அஞ்ஞவதைப். (௧௦௧) 101.
-----

வேறு.

149. கடநாகத் தீருரிவை யரன்விரிப்பக் கடற்றிவலைப்
படநாகப் பெரும்பாய லரிவிரிக்கும் பணையதே.

எ-து : எல்லா உலகங்களையும் வருணராசனும் வாதராசனும் எற்றியுஞ் சுழற்றியுந் திரிந்து கெடுக்கும் சருவசங்கார லோக யுகாந்தத்தில் வெள்ளந் தட்டாமலும் காற்று அசைக்காமலும் பரிகாரமாக மகாதேவர் தம்முடைய யானைத் தோலாகிய உரிவையைப் படுத்து அதனுடைய ஒரு பணையிலே பள்ளிகொண் டருளுவர். அக்காலத்தில் இவருடனே மகாவிட்டுணுவும் தம்முடைய அனந்தனென்னு மகாநாகப் படுக்கையை அதன் வேறு ஒரு பணையிலே படுத்துப் பள்ளிகொண் டருளுவர். எ-று.

கடநாகம் - மதயானை. ஈருரிவை - எப்போதும் ஈரமான தோல். பாயல் விரிக்கையாவது படுக்கையைப் படுத்தல்.

150. கோழியான் மயிலதனிற் குலமயிலி லொருமயிலே
ஆழியா னேறுவது மதனுவணத் துவணமே.

எ-து : தேவசேனாபதியுடைய மயிலும் அவ்விருட்சத்தின் மயில்களில் ஒரு மயிலே; விட்டுணுபகவான் ஏறியருளுங் கருடனும் அதிலுண்டாகிய கருடர்களில் ஒரு கருடனே. எ-று.

கோழியான் - கோழிக்கொடியை யுடையான். குலமயிலென்றது, வாலிய மயிலென மயிற்குலத்திலுஞ் செல்லும். ஆழி - சக்கரம்.

151. அயனுடைய வூர்தியத னன்னத்தோ ரன்னமே
பயனுடைய கின்னரமு மதிற்பிறந்த பறவையே.

எ-து : பிரமாவினுடைய இராச அங்கிசமும் அம்மரத்தி லுறையும் அன்னங்களில் ஒன்றே; மிடற்றுப் பயனையுடைய முதற்கின்னர ராசாவான கின்னர மிதுனபட்சியும் அதிற் பிறந்த பறவையே. எ-று.

152. பைந்நாக மிருநான்கு மதன்வேரிற் பயில்வனவே
கைந்நாக மிருநான்கு மதன்வீழிற் கட்டுபவே.

எ-து : அட்டமகா நாகங்களும் அவ்விருட்சத்தின் கீழே பழகுவன; அன்றியே திக்கயங்க ளெட்டும் அதனுடைய விழுதுகளிற் கட்டப்படுவன. எ-று.

பை - படம். கை - துதிக்கை .

தேவியின் அமளியான அரவரசு.

153. அப்படிய தொருகடவு ளாலின்கீ ழமளியா
யெப்படியுந் தனிதாங்கு மரவரசை யியம்புவாம்.

எ-து : இங்குச் சொன்ன பிரகாரமேயான தெய்வீக வடவிருட்சத்தின் கீழிருந்த தேவிக்குப் படுக்கையாகி எவ்வுலகுந் தாங்கும் நாகராசாவை இனிச் சொல்லுவேம். எ-று.

அப்படியதென்றது சுட்டு. எப்படி யென்ற முடிவு ஆரியமுடிவு.

வேறு.

154. மாயிரும்பயோ ததித்தொகையென
        வாள்விடுந்திவா கரத்திரளென
வாயிரம்பணா மிதப்பரவைய
        தாயிரஞ்சிகா மணிப்ரபையதே.

எ-து : மாவை யுடைத்தாய்ப் பெருத்திருக்கும் பாற்கடற் றொகைக ளெனவும் சோதிவிடும் ஆதித்தர் கூட்டங்க ளெனவும் ஆயிரமான பணமாய் அளக்கப்படாத பரப்பை யுடையது; பின்னை ஆயிரந் தலையிலும் ஆயிரம் விற்பிடிமாணிக்கச் சோதியை யுடைத்து. எ-று.

மாவையும் பெருமையிற் கொள்வாருமுளர். பயம் - பால். உததி - கடல்; பயோததி, “ஆத்குண:" எனக் குணசந்தி. இது ரூபாவதாரம்; "அவர்ணே இவர்ணே." இது கௌமார வியாகரணம். திவாகரன் - ஆதித்தன். பண அமிதம், பணாமிதமாயிற்று; அமிதம் அளவுபடாமை. பரவை - பரப்பு. சிகா - சிகை. இப்பாட்டு நிரனிறை.

அன்றியே ஆயிரம் பாற்கடலில் ஆயிரம் ஆதித்தர் உதித்தாற்போல வாயிருக்கும் ஆயிரம் படத்தையும் ஆயிரம் இரத்தினத்தையு முடைய பாம்பென வுணர்க.

ஒரு படத்துக்கு ஒரு பாற்கட லொப்பல்லது உடம்பி னீளத்துக்கு உவமையில்லை யெனவுணர்க. . ,

155. வேலைநின்றெழா வுகக்கனலென
        வேகநஞ்சறா மதிப்பிளவென
மாலையும்படா விழித்திரளது
        வாய்தொறுங்குவா லெயிற்றணியதே.

எ-து : சமுத்திர சலத்தினின்றும் புறப்படாது உகாந்தங்கடோறும் புறப்பட்டு உலகைத் தகனம் பண்ணும் வடவாமுகாக்கினி யெனவும், அதி வேகத்தினை யுடைத்தான விஷம் என்றுமறாத சந்திரனுடைய பாதிவகிர்ப் பிளப்பெனவும் உண்டாயின பாதி ராத்திரியிலு முறங்காத கண்களையும் வாய்தோறு முண்டான எயிற்றுக்கு வால்களையு முடையது. எ-று.

இதுவும் நிரனிறைப்பாற்படும்.

ஒருகண்ணே வடவாமுகாக்கினி யொப்பது; இரண்டாயிரம் கண்ணுள. ஒருவாயிற் பற்களே சந்திரனுடைய பிளந்த வகிர்களை யொப்பன; நான்கு விஷதந்த முள்ளன; ஆதலால், இரண்டாயிர மதிகளின் வகிர்ப் பிளப் புடையனவென நினைந்து குவாலென்றார். என - என்று வேதஞ்சொல்ல. மதி - அமுதகிரணம்; நஞ்சறா மதிப்பிளவு; அபூதவுவமை. மதிப்பிள வென்பதற்கு இரண்டு வகிரையுங் கொள்க. காளியும் காளாத்திரியும் தூதியும் யம தூதியுமென்ற பற்கள் தமிட்டிரம். இப்பொருள் [1]சித்தர்களுடைய சாத்திரங்களிலும் தமிழிற் [2]சிந்தாமணியிலும் கண்டுகொள்க.

----
[155-1] சித்தர்களுடைய சாத்திர மென்றது, சித்தராரூட முதலியவற்றை.
[155-2] சீவக சிந்தாமணியிலுள்ள (௧௨௮௬) 1286 - ஆம்பாடல் முதலியவற்றாலும் அவற்றின் உரைகளாலும் பாம்பின் விடப்பற்களி னியல்பு அறியலாகும்.
----

156. நேரியன்பதா கையிற்புலியென
        நேரியன்றரா தரப்புயமென
மேருவும்பொறா வயப்பொறையது
        மேருவின்பரா ரையிற்பெரியதே.

எ-து : சோழ சக்கரவர்த்தியுடைய படைக்கு முன்னெடுக்குங் கொடியிலெழுதிய புலிபோல மகாமேருவும் சகிக்கமாட்டாத வலியகனத்தை யுடையது (எனவே அம்மகாநாகத்தை மகாமேரு சகிக்கமாட்டா தெனப் பாம்பின் மகிமை சொன்னவாறு); இன்னுஞ் சோழ சக்கரவர்த்தியுடைய பூமியைத் தரிக்கிற திருப்புயங்களேபோல மகாமேருவின் பெரிய தாழ்வரையிலும் பெரியது. எ-று.

எனவே மேருப்பொறாத வலியை யுடையன சோழன் புலியும் இப்பாம்பு மெனவும் மேருவிற் பெரியன சோழனுடைய திருத்தோள்களும் இப்பாம்புமெனவு முணர்க.

இது விஷமகவி. பொறை - கனம். பராரை - பருவரை; செய்யுள் முடிவு [1]“பராரைமராஅத்து" எனவும், வழக்கு முடிவு பருவரை யெனவும் முடியும்.

----
[156-1]. முருகு. (௧௦) 10.
----

தேவியின் வீற்றிருக்கை.
வேறு.

157. திரண்டகலை கூடிநிறை திங்கள்குடை
        யாகநிழல் செய்யமுறையால்
இரண்டருகும் வாடையொடு தென்றல்குளிர்
        சாமரை யிரட்டிவரவே.

எ-து : பிரிந்து திரளப்பட்ட பதினாறு கலைகளுந் தம்மிற்கூடிச் சந்திர மண்டலம் வந்து வெண்குடையாகக் கவித்து நிழல்செய்ய முறைமையாலே வாடையும் தென்றலும் இரண்டருகும் வந்து வெண்சாமரையாய் வினியோகப்பட்டு வீச எழுந்தருளி யிருந்தாள் மகாகாளி. எ-று.

இதுமுதலாகத் தேவி இருக்கும்படி சொல்லுகிறார்.

158. குறிக்குமிரு பாலுமுள தீபமென வேறுசில கூறவுளவோ
எறிக்குமதி யும்பருதி யுஞ்சுட ரெடுப்பன விரண்டருகுமே.

எ-து : பிராட்டி திருக்கோயிற்குக் குறித்தெடுக்குந் திருவிளக்கு வேறுசில சொல்லவுளவோ? சோதிவிடுஞ் சந்திர சூரிய ரிருவரும் இரண்டு பக்கத்திலும் விளக்காகத் திரிவர். எ-று.

பாலும் அருகும் பக்கம். இரண்டருகு மென்றது தேவி தனக்கு இரண்டருகும்; அவையிற்றைப் பகலும் இரவுமாகக் கொள்க. தேவிதான் இவ் வுலகமெல்லா மெனவுணர்க. இனிக் குடையும் தானேயாய் விளக்கும் தானேயாமோ சந்திரனெனின், சக்கரவாளங்கடோறுமுள்ள சந்திரர்களை யென்க; அன்றியேயும் குடையாயும் விளக்காயும் வரவல்லன அவை; [1]இறப்பது பிறப்பது வளர்வது தேய்வதா கின்றவற்றிற்கு மாட்டாதன இல்லையென வுணர்க. பருதி - ஆதித்தன்.

----
[158-1] “தேய்த லுண்மையும் பெருக லுண்மையும், மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும், அறியா தோரையு மறியக் காட்டித், திங்கட் புத்தே டிரிதரு முலகம்." புறநா. (௨௭) 27.
----

வேறு.

159. எளிதளித்தன சுரர்தருத்தொகை யிரவிபுற்கிட வெழிலியுந்
தளிதளித்திரு தனுவெடுத்தன தகனமற்றது ககனமே.

எ-து : தேவி கோயிலிற் கற்பக விருட்சங்கள், ஆதித்தனுட்டினம் புற்கிடும்படியாக எளியவான நிழலையும் ஒளியையும் கொடுத்தன; மேகங்களும் மழைத்துளிகளைத் துளித்துப் பின்னை இந்திரதனுவான இரண்டு வில்லையு மெடுத்தன; பின்னை ஆகாசம் வெளியடங்கிற்று. எ-று.

எனவே கற்பக விருட்சங்கள் சோதியையும் புறப்பட விட்டன வென வுணர்க. அவை எளியவெனவும் அவையே பெரியவெனவுங் கொள்க; எளிது: சாதியொருமை.

160. வட்டமொத்தன வண்ணமொத்தன
        மதுகையொத்தன வானில்வந்
திட்டவிற்க ளிரண்டுதங்க
        ளிரண்டுவிற்களு மென்னவே.

எ-து : ஆகாசத்து வந்திட்ட இரண்டு இந்திரதனுக்களும் வளைவும் நவரத்தின வண்ணமும் வலியும் இவையெல்லாம் சமானமாயின, தங்களுடைய கைகளிலுள்ள இரண்டு வில்லுமென்ன. எ-று.

தங்கள் வில்லாவன, பிநாகமும். சார்ங்கமும் எனவறிக. [1]விட்டுணு ஈசுவரற்குத் தேவி.

----
[160-1] "அரியலாற் றேவி யில்லை யையனை யாற னார்க்கே .” தேவாரம்.
----

தேவியின் பஞ்சாயுதங்கள் :

1. தண்டாயுதம்:

161. பொங்குதிரிபுரம் வெந்துபொடிபட
        வந்துபொருமொரு பொருநர்கைத்
தங்குமலைசிலை கொண்டபொழுதுல
        கங்கள் தகைவது தண்டமே.

இனிச் சொல்லப் புகுகின்றது ஸ்ரீ பஞ்சாயுதங்களை.

எ-து : கருவித்துத் திரியுந் திரிபுரங்கள் வெந்து பொடியாக அசுர ரெதிரே நின்று பொருகிற ஒரு சேவகரான மகாதேவர் திருக்கையிற்
றிருவில்லாகப் பிடித்தற்கு மகாமேரு பருவதத்தை மூலவேருடன் முடியுடன் வாங்கினவன்று மகாமேருவாய்ச் சென்று பதினாலு லோகங்களையும் கோத்துக்கொண்டு காத்துக் கொள்வது, வீரகாளியுடைய திருக்கையிற் பிடித்து விளையாடும் தண்டு. எ-று.

இதன் கருத்து : மகாமேருப் பறியுண்ண உலகு நிலைகுலையும்; குலையவே மகாதேவரைப் பழிப்பார்கள் தண்டு தகையாதாயின்.

2. கட்காயுதம்.

162. தடிந்ததுரக குலங்களுரக பிலங்கள்வயிறு தழங்குமா
வடிந்தகுருதி படிந்துபருதிகண் மட்கவருமொரு கட்கமே.

எ-து : வெட்டுண்ட குதிரைக் குலங்களினின்றும் நாககுலம் வாழும் பிலத்துவாரங்கள் நிரம்பவிழுமகா வுதிரத்திற் படிந்து தோய்ந்து சிவந்து சூரியமண்டலச் சிவப்பும் ஒளிமட்க வரும், ஒரு வாள். எ-று.

துரகம் - குதிரை. உரகம் - பாம்பு. மா - மகா. வடிந்த குருதி - வடிந்த உதிரம். கட்கம் - வாள்; வடசொல். [1]சூரபன்மா துரகவங்கிசத்தின் முதல்; தேவாசுரம் முதற்போர்.

----
[162-1] சூரபன்மா குதிரை முகமுடைய னாதலின் இங்ஙனங் கொண்டனர் போலும்; "இருபேருருவின்" (முருகு. (௫௭) 57) என்பதன் உரையையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.
----

3. வில்.

163. எறிப்பவெறிபடை நிசிசரன்சிர மொருபதுங்கர மிருபதுந்
தறிப்பவொருசரம் விடுவதுங்கடல் சுடுவதுங்குனி சாபமே.

எ-து : சோதி விட்டெறிப்ப எறியவல்ல படையை யுடைய இராவண னுடைய தலைபத்தும் கையிருபதும் ஒக்க ஒருதொடையில் ஒரேவால் அறும்படி ஒரம்பு விட்டதும் கடலைக் கொதிப்பித்ததும் திருக்கையில் வளைந்திருக்கும் வில். எ-று.

நிசிசரன் - இராவணன். கடல்சுடுவது வில்லல்ல; அதனால் விடப்பட்ட அம்பென வுணர்க. இதற்குக் காரணம், வைணவ மந்திரத்தினால் அபிமந்திரித்த அம்பு ஏவின பணி செய்து மீண்டும் போய்த் திருப்பாற்கடல் புக்குச் சுத்திபண்ணி மீண்டும் பெருமாள் பக்கலிலே வருமெனவறிக. இஃது [1]இராமாயணத்திற் கண்டுகொள்க.

----
[163-1] "ஆர்க்கின்ற வானவரு மந்தணரு முனிவர்களு மாசி கூறித், தூர்க்கின்ற வலர்மாரி தொடரப்போய்ப் பாற்கடலிற் றூநீ ராடித், தேர்க்குன்ற விராவணன்றன் செழுங்குருதிப் பெரும்பாவைத் திரைமேற் சென்று, கார்க்குன்ற மனையான்றன் கடுங்கணைப்புட் டிலீனடுவுட் கலந்த தம்மா.” கம்ப. இராவணன் வதை (௧௯௯) 199.
----

4. சங்கம்.

164. இகலுநிசிசர கணமுமவுணரு மிடியின்மலையென மடியவெப்
பகலும்ரவியொளி யிரியநிலவொளி விரியவருமொரு பணிலமே.

எ-து : மாறுபடும் ராட்சதரும் அசுரர்களும் இடியாலேறுண்ட மலைகள் மடிவ்னபோல் மடிய ஓசைப்பட்டு, இனி எப்பகலும் ஆதித்தன் சோதியோடச் சந்திரன் சோதிமிடையத் தனது சோதி விடும், ஒரு திருச்சங்கான ஆயுதம். எ-று.

'வெம்பகல்' என்று பாடஞ் சொல்லின் அழகிது; ஓசையுமுண்டு; வெம்பகல் - மத்தியான்னம். இப்படிக்கொத்தது சங்கத்தொனி. இது தந்திரவுத்தி.

5. சக்கராயுதம்.

165. இருவருதயமு மிருளவொளிவிடு மெனையபலரிர ணியரெனும்
ஒருவருரமிரு பிளவுபடநடு முகிரிதனதொரு திகிரியே.

எ-து : பண்டு இரணியனுடைய இரத்தம் தரையில் விழின் ஒரு துளிக்கு ஒன்பது கோடி இரணியர் பிறக்க அவ்வுதிர வெள்ளத்தின் துளிகளிற் பிறந்த எல்லா இரணியர்களின் உடல்களுள் ஓருடல் இரண்டு வகிர்பட ஒரு முகூர்த்தத்தில் அவர்கள் மார்பிலே நடவல்ல திருக்கையிற்றிருவுகிருடைய ஸ்ரீவைணவியினுடைய திருக்கையில் திருச்சக்கரம் சந்திராதித்தருடைய சோதிமழுங்கி அந்தகாரமாம்படி மகாசோதியை விடும். எ-று.

இது சக்கராஞ்ஞை.

தேவி திருமேனியின் மரகதசோதி.

166. அரவினமளியி னகிலபணமணி
        யடையமரகத மானவோர்
இரவிவெயிலிலன் மதியுநிலவில
        னிறைவியொளிவெளி யெங்குமே

எ-து : ஈசுவரியுடைய திருமேனிச் சோதிப் [1]பசுமையாலே தானெழுந்தருளி யிருந்த நாகராசாப்படம் ஆயிரத்திலு முள்ளவான ஆயிரம் விற்பிடி மாணிக்கங்களும் தம் சிவப்புக்கெட்டு மரகத ரத்தினமாயின. இனி மற்றுரைப்பதென்? ஒப்பற்ற ஆதித்தனும் சோதியிலன்; சந்திரனும் அவ்வண்ணமே. உலகமடங்கத் தேவியுடைய சோதியே எங்கும் பிரகாசித்தது . எ-று.

----
[166-1] "பச்சையெ றிக்கும் ப்ரபையடண் டிற்கைப் பத்ம மடப்பெண் கொடிவாழ்வே", "தெரிவருஞ்சுத்தப் பச்சைநிறப்பெண்", “கருணையுஞ் சுத்தப் பச்சைவனப்புங் கருதுமன்பர்க்குச் சித்தியளிக்குங் கௌரி." ஸ்ரீ காஞ்சீபுரத் திருப்புகழ்.
----

வேறு.

167. கோகனக னாள்பெறு கொடுங்கனக னாகமிரு கூறுபடுகூர்
ஏகநக நாயகி யனந்தசய னத்தினி திருந்தருளியே.

எ-து : பிரமாவினுடைய வாணாள் பெற்ற இரணியனுடைய மார்பை இரண்டு கூறுபடும்படி கூர்த்த ஒரு திருவுகிருடைய பரமேசுவரி முன்பு சொல்லப்பட்ட பெரும்பாம்பின் படுக்கையில் வீற்றிருந்தருளி. எ-று.

கோகனகனாற் கொடுக்கப்பட்ட வாணாளென்னலுமாம். கொடுங்கனகன் : பண்புத்தொகை. அவன்மார்பு கூறுபடக் கூர்த்தது விசேடம். ஏகம் - ஒன்று; "ஏகச் செல்வத் தின்பமெய் தியது" என்பது உதயணன்கதை.

வேறு.

168. எறிபடை வல்லவிசயை யிசைகெழு தெய்வமகளி
        ரெழுவரும் வெள்ளைமுளரி யினிதுறை செல்வமகளு
மறிகடல் வையமகளு மலர்கெழு செய்யதிருவும்
        வரவிரு மெல்லவுரகன் மணியணி பள்ளியருகே.

எ-து : பகைவரை எறியும் ஆயுதங்களில் வல்ல விசயையும் கீர்த்தி கெழுமிய தெய்வ முதல்வியரான பெண்க ளெழுவரும் வெண்டாமரை மேல் வீற்றிருக்குஞ் செல்வப் [1]பெண்டாட்டியுந் திரைமலிகடலை உடையாக வுடைய பூமிதேவியும் சிவந்த மலருடன் கெழுமிய சிவந்த வடிவினை யுடையளான ஸ்ரீதேவியும் தூரவிராதே மெத்தென மாணிக்க மணிந்த பாம்பின் படுக்கையி னருகே இரும். எ-று.

இவ்வார்த்தை சொன்னார் ஏவலாட்டியரென வுணர்க. விசயை - வெற்றிமகள். எழுவராவார் சத்தமாதாக்கள். எனவே அவர்களில் ஒருத்தி யல்லள் பரமேசுவரி யென்பது போந்தது; மாயாசத்தி யெனவுணர்க; அவர்க ளெழுவரும் பிறராற் படைக்கப்பட்டார்; படைத்தவர்கட்கு முதல்வியான தேவி இவள். இது யாமளருபதேசம். மெல்லவென்று தேவியே அழைத்தருளிற் பணியெளி தென்றவாறு. தேவிதான் இது சொல்லின், தன் படுக்கையைத் தானே புகழ்ந்தாளாம்; அங்ஙனம் புகழாளென வுணர்க.

இனிச் சொல்லும் பாட்டுத் தேவியருளிச் செயல்.

----
[168-1] பெண்டாட்டி - பெண்; ஐயையைப் பூசற்பெண்டாட்டி யென்பர் பின்னும்; (௧௭௦) 170-உரை.
----

ஆளுடைய பிள்ளையார் சமணரை வாதில் வென்ற கதை.

169. வருகதை தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை
        மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய
தொருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி
        யொளிதிக ழல்லிகமழு மொருமனை வல்லியெனவே.

வருகதை - இக்கலியுகத்தில் வருங்கதை.

எ-து : 'தெய்வப்பெண், எனக்கு மருமகள், வள்ளியென்னும் பெயர் பெற்றவள். அவளுடைய கலியாணத்தை மனமகிழ்ந்த பிள்ளை, முருகனென்னும் பெயருடைய தெய்வம்; அவன் பாண்டி மண்டலத்து மதுரை யென்னு மாநகரியில் மகாசமய ஆசிரியருடன் மந்திரவாத விவாதம் பண்ணி வெல்லும் இனியதொரு கதையினைச் சொல்லுவாயாக, வெள்ளிய ஒளி விரிந்த தாமரை யிதழொழுகி அல்லியும் இனிதாகி நாறியிருக்குமொரு புட்பத்தின் மேலிருக்கும் வல்லிசாதி போல்வாய்' என்ன. எ-று.

எனவே சரசுவதி யெனவுணர்க. [1]ஆளுடைய பிள்ளையார் முருகக் கடவுளென் றுணர்க.

இது கேட்டுச் சரசுவதி விண்ணப்பஞ் செய்வாள்.

----
[169-1] "பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலிச் சமணரத் தனைபேரும், பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியிற் கவுணியப் புலவோனே." திருத்தணிகைத் திருப்புகழ்.
----

170. [1]எழுமலை கொல்லுமசனி யிளமயில் வள்ளிகணவ
        னிறைமலை வில்லிபுதல்வ னிகன்மக ளையைகளிறு
கழுமல முய்யவிரவு கலியுக வெல்லைபொருத
        கதைகளி லுள்ளதமணர் கழுமிசை கொள்வதிதுவே.

எ-து : கருவிக்கு மலைகளைக் கொல்லும் இடியுருமேற்றோ
டொப்பான்; இளமயிற் சாயலையுடைய வள்ளி தேவிக்குக் கர்த்தாவானவன்; மகா மேருவை வில்லாகவுடைய இறைவனுடைய புத்திரன்; பூசற்பெண்டாட்டி யான துர்க்காதேவி பெற்ற யானை; திருக்கழுமல மென்னும் ஊர் பிழைக்க மேல்வரப்படுங் கலியுகத்தில் அவனால் வெல்லப்பட்ட கதைகளிலுள்ள கதை; இதுதான் அமண சமயத்தார் பலரும் கழுவை மேல் கொண்டேறின கதை. எ-று.

கருவம், சூரபன்மாவைக் காக்கின்றே மென்பது. அசனி - உருமேறு. மலையைக் கொல்லுமென்றது, மலை பண்டு பிராண னுடையவாய்ப் பறந்து திரிந்தமையின்; "குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து" ((௨௬௬) 266.) இது திருமுருகாற்றுப்படை. ஐயையென்றது உயர்ந்தோ ளென்றவாறு; ஆரியை யென்றுமாம். களிறு : ஆகுபெயர். கழுமல மென்பது சீகாழி. அஃது உய்தலாவது வைதிக வாழ்க்கை பெறுவது. கழுமிசைக் கொள்கை யாவது யானைமேல் கொண்டாரென்பது போல உயிர்க்கழு வேறுகை. இதுதான் அமணர் கழுவைத் தொத்தப் பிள்ளையார் கொல்லாதே விட்டருளினா ரென்னுங் கதை.

அமணர் தாம் கழுவேறுதற்குக் காரணம் பொய் சொல்லா விரதமென வுணர்க.

----
[170-1] "எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல், வள்ளிதுணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த, கறங்குகா லருவிப் பரங்குன்று." கல்லாடம், (௩) 3.
----

வேறு.

171. [1]பொய்கைசூழ்புக லிப்பெருந்தகை
        பொன்னிநாடு கடந்துபோய்
வைகைசூழ்மது ராபுரித்திரு
        [2]வாலவாயை வணங்கியே.

இதன்பொருளுணர்க. புகலி - சீகாழி.

----
[171-1] பொய்கை - இங்கே பிரம தீர்த்தம்.
[171-2] வாலவாயென்பது மதுரைத்தலத்தின் திருநாமங்களுள் ஒன்று; இது ஸ்ரீசோமசுந்தரக் கடவுளுடைய திருக்கோயிலின் பெயராகவும் வழங்கும்; வாட்போக்கி யென்பது ஆட்போக்கி யென்றும், விடைக்கழி யென்பது இடைக்கழி யென்றும் மருவி வழங்குவதுபோல வாலவா யென்பது ஆலவா யென்று வழங்கலாயிற் றென்று தெரிகிறது; "வாலவாய் வதிந்த மதிமுடித் தனிமுதல்." கல். (௪௮) 48.
----

172. ஞாயில்கொண்ட மதிற்புறம்பர
        சமயகோளரி நண்ணியே
கோயில்கொண்ட மடத்தைவெங்கனல்
        கொண்டுகுண்டர் கொளுத்தவே.

இவ்விரண்டும் ஒரு தொடர்.

எ-து : பிள்ளையார் மதுரையினுள்ளுப் புகாதே தூரத்தே திருவாலவாய்ச் சொக்கனார் கோயில்கண்டு நமக்கரித்து வந்தணைவதற்கு முன்னே பிள்ளையா ரெழுந்தருளுவரென மதிற்புறம்பாகக் கோயிலாக மடஞ்செய்தார். அம்மடத்தில் பிள்ளையார் சென்றுவிட் டருளினபின் திருமடத்தின் திருவாசலிலே அமணர் செருப்பிட்டுக் கொளுத்தினார். எ-று.

ஞாயில் - அட்டாலை; இங்கே பரசமய கோளரி எழுந்தருளிய தற்குக் காரணம் [1]அட்டாலைச் சேவகரை நினைத்து. அம்மடத் தருகாக [2]வாது செய் வாரண மென்பதோ ரூராயிற்று; அஃது இக்காலத்து முள்ளது.

----
[172-1] சிவபக்திச் செல்வம் வாய்ந்த பாண்டிய னொருவனைக் கொல்லக் கருதிய சமணர் யாகத்தில் தோற்றுவித் தனுப்பிய யானையை அவன் வேண்டுகோளின்படி ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் வேட்டுவ வீரராய்ச் சென்று மதுரையின் கீழ்பாலுள்ள மதிலின்மேற் கட்டுவிக்கப் பெற்றிருந்த அட்டாலை மண்டபத்தில் நின்றருளி அந்த யானையை எய்து வீழ்த்தி அடியார் வேண்டுகோளின்படி அம்மண்டபத்திலேயே அந்த வேட்டுவக் கோலத்தோடு அட்டாலைச் சேவகரென்னும் திருநாமங் கொண்டு எழுந்தருளி யிருந்தன ரென்பதும் பிற்காலத்துப் பாண்டிய பரம்பரையினர்களும் பிறரும் அவ்வப்போது தத்தமக்குப் பகைவராலும் பிறராலும் நேரும் இடையூறுகளை அம்மூர்த்தியை வழிபட்டுப் போக்கிக்கொண்டு வாழ்ந்தார்க ளென்பதும் பண்டை வரலாறுகள். இவை திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண முதலியவற்றால் அறியலாகும்; "ஊனெழு குன்றை யானை மலையென வொழிந்த குன்றை, யீனமி லாவி லத்தி மலையென வெய்த கோவைத், தேனலர்த் தொடையட்டாலைச் சேவக னென்ன நாம, மாநிலத் தன்று முன்னா மன்னிட வழங்கு மன்றே.” திருவால. (௨௬ : ௨௮) 26 : 28.
[172-2] "தளம்புநெஞ் சுடைய வெண்ணா யிரஞ்சமண் டலைவ ராயோ, ருளம்பரி வொடுக ழுக்கண் யோசனை யகல மேற, வளம்பட வாது செய்த வாரண மென்னு நாமம், விளங்கிய தன்று முன்னா மேதகு தராத லத்தே” திருவால. (௩௮ : ௪௯) 38 : 49.
----

173. திருமடத்தெரி யிட்டகுண்டர் கிடக்கவவ்வெரி தென்னனிற்
பெருமடத்தர சைச்சுடத்திரு வாய்மலர்ந்தது பிள்ளையே.

அமணர் நிற்க அரசர் மேலே நெருப்பேவினது [1]இராசாக்கினை யில்லையோவென நினைத்து இராசாவிற் குணர்த்த அக்கினி தேவனை ஏவினபடி யெனவுணர்க.

பெருமடமென்றது அஞ்ஞானம்; "மடவோர் காட்சி நாணிக் கடை யடைத்து" ((௧௩௮) 138) என்பது சிறுபாணாற்றுப்படை. 'திருவாய் மலர்ந்தது பிள்ளை' என்பது விரவுப்பெயர்; [2]"குடிமையாண்மை" என்பதனாற் கொள்க.

----
[173-1] "முத்தமிழ் விரகர், மன்பு ரக்குமெய்ம் முறைவழு வெனமனங் கொண்டார்." பெரிய. திருஞான. (௭௦௩) 703.
[173-2] தொல். கிளவி. சூ. (௫௬) 56.
----

174. பிள்ளைகொண்ட சினத்தொடக்கனல்
        சென்றுதென்னர் பிரானுயிர்
கொள்ளைகொண்டுட லங்கிளர்ந்து
        கொதிப்பவந்து கொளுந்தவே.

எ-து : பிள்ளையாரால் ஏவப்பட்ட அக்கினி தான் தனிச் செல்ல மாட்டாது அவருடைய கோபமே துணையாகச் சென்று புக்கது. (இதற்குக் காரணம், [1]வேலையை வேல்கொண் டெறிந்தும் இந்திரன் முடிமேல் இனவளை தகர்த்தும் மேகத்தைத் தொடர்கொளுவியும் மகா பாரக்கிரமங்கள் செய்தார்கள் பாண்டியர்களென வுணர்க.) இக்கனலால் அவனுடம்பு வெதும்பிற்று. எ-று.

----
[174-1] வேலையை வேல்கொண் டெறிந்த வரலாறு முதலியவற்றை "வடிவே லெறிந்த வான்பகை பொறாது" (சிலப். (௧௧ : ௧௮) 11 : 18) என்பது முதலியவற்றா லுணர்க.
----

175. [1]யந்திரங்கள் வரைந்துகட்டி விரைந்துகுண்ட ரெடுக்குமா
மந்திரங்களின் மிக்கபேரழல் [2]மாதிரங்களின் மண்டவே.

எ-து : இராசாவை விஷசுரம் பற்றினவாறே அமணர் தாங்க ளறிந்தவாறு யந்திரங்களை வரைந்து குளிகை செய்து கட்டிப் பின்னை அதிலு மிகக் கடுகி விரைந்து தங்களுடைய மகா மந்திரங்களைச் சொன்னார்; அது சொல்லவே வெதுப்பு மிக்குத் திக்குத் தோறும் புறப்படப் பேரழல் மண்டிற்று. எ-று.

விரைய யந்திரங் கட்டினவாறே வெதுப்பு மிக்கது, அரசற்கென வுணர்க.

மண்டுதல் - சுடுதல்; மேற்செல்லலுமாம். திக்குக்களில் மண்டுதலாவது அருகுகின்ற அமணர்மேலும் படுதல்.

----
[175-1] "கண்டலர் வருந்தே றிண்டிறன் மன்னா கடிதினிக் கடுங்கொடுஞ் சுரத்தை, மண்டல மதிப்ப மாற்றுவ மென்றே வரைந்தயந் திரங்கண்மந் திரங்கள், கொண்டுறப் பார்க்கு மளவினின் முன்னர்க் கொடுஞ்சுர மாங்கவை கண்டு, பண்டையின் வருத்த நிலத்தினு மரசன் றரித்திலன் மிகப்பரி தவித்தான்.” திருவால. (௩௭ : ௪௫) 37 : 45.
[175-2] "வேந்த னுக்குமெய் விதிர்ப்புற வெதுப்புறு வெம்மை, காந்து வெந்தழற் கணமென மெய்யெலாங் கவர்ந்து, போந்து மாளிகைப் புறத்துநின் றார்களும் புலர்ந்து, தீந்து போம்படி யெழுந்தது விழுந்துட றிரங்க." பெரிய. திருஞான. (௭௧௧) 711.
----
வேறு.

176. [1]ஆலிவெந்து மந்த்ரம்வெந்தி யந்த்ரம்வெந்த மைந்ததோர்
பீலிவெந்து பாயும்வெந்து பிண்டியேற மண்டவே.

ஆலி - குண்டிகைநீர். மந்திரம் வேகையாவது தங்களான்மாவிற் கோபாக்கினியால் மந்திரமறுகை; "எல்லாம், வெகுண்டோர்முற் றோன்றா கெடும்" ((௮) 8.) இது நான்மணிக்கடிகை. பீலி கட்டினபீலி யென்பர்; அது பொருளல்ல; பார்ப்பவரது கரமென வுணர்க. பிண்டியென்பது அசோக விருட்சம். அருக தேவரையும் நினைத்துச் சென்றது அக்கினியென வுணர்க.

----
[176-1] “பண்டைமந் திரங்கள் வெந்து படைத்தயந் திரங்கள் வெந்து, பிண்டியுந் தண்டும் பாயும் பீலியுங் குடையும் வெந்து, மண்டழ றணிப்பா னங்கண் டெளிப்பமந் திரித்த கையிற், குண்டிகை நீரு நின்று கொதித்திடக் கண்டார் குண்டர்.” திருவால. (௩௭ : ௬௩) 37 : 63.
----
வேறு.

177. ஒருவரும்பொரு வாததென்ன
        னிரண்டுகண்களு மொத்தபேர்
இருவரும்பெரி தஞ்சியாமினி
        யென்செய்வேமென வெண்ணியே.

பொருவு - ஒப்பு; 'ஒருவரும் பொருவாததென்னன்' என்றது [1]தெய்வப் பாண்டியனாதலா லெனவுணர்க. இருவராவார் பாண்டியன் குலமகா தேவியாரான மங்கையர்க்கரசியாரும் பெருநம்பி குலோற்பவரான குலச் சிறையாண்டாரும். எண்ணுதல் - நினைத்தல்.

----
[177-1] பாண்டிய பரம்பரையிற் சிலர் தெய்வப் பாண்டியரென்று பாராட்டப்பட்டிருத்தலு முண்டு; "தெய்வப் பாண்டிய னென்று முடிசூடி." திருவால. கடவுள். (௧௯) 19.
----

178. விலங்கினாரிலர் வெம்மையெம்மையு
        மேன்முனிந்திடு வான்மிகக்
கலங்கினானிறை பிள்ளையாரை
        யழைத்துமே லிதுகாலமே.

எ-து : பாண்டியனுற்ற உட்டினத்தைத் தடுத்தாரிலர்; எங்களை இனிமேல் இராசா முனியினு முனிவன். இவன் மிகக் கலங்கினான்; பிள்ளையாரை அழைப்பேமாயின் இது காலம். எ-று.

வெம்மை யென்றது வெதுப்பை. "விலங்கினாரிலரென்னை" என்று பாடமோதுவாரு முளர். இறை - இராசா.

179. என்றுபோயதி காரி[1]வைதிக ராசசிங்க மிருந்துழிச்
சென்றுமுன்னர் விழுந்துபின்ன ரெழுந்துதங்குறை செப்புமே.

வைதிகராசசிங்க மென்றது பிள்ளையாரை.

இப்பாட்டில் அதிகாரி தனித்துப் போனா னென்பதனை நினைத்து முன்னிற் பாட்டிலும் என்னையென வேண்டுமென்பாரு முளர். அது பொருளன்று. இராசா துஞ்சின் உடன்துஞ்ச விருந்தார் நம்பிராட்டியார்; இது விஷசுரத்தின் கொடுமை மிகுதியாலென வுணர்க. முன்னிற் பாட்டில் இது காலமென்றதனாலே அவத்தையை யறிக.

இதில் [2]அதிகாரி யென்றதனால் இவரைப் [3]போசராசா வங்கிசோற்பவர் தங்கள் வங்கிசத்தா ரென்பர். அவ்வங்கிசத்தவர் மந்திரிகளாகவே இருப்பதல்லது காரியஞ் செய்யார். அவர் இக்காலத்துக் கணக்கெழுது கின்றது முறைமையல்ல; அவர் முடிசூடப் பெறாத அத்தனையே யல்லாது இராச விபவமெல்லாம் பெறுவரெனவும் மந்திரிகளாவதே முறையெனவு முணர்க. [4]பெருநம்பிப் பட்டம் பெறுதல் [5]சிந்தாமணியிலும் உதயணன் கதையிலுமுள்ளது. அது குமாரப்பட்ட மாதலால் இராசாவும் நம்பிராட்டியும் ஏவின கருமம் செய்யக் கடவர்; அல்லாத போசராசா வங்கிசோற்பவர் மந்திரிகளாயே இராசாக்களையும் நம்பிராட்டிகளையும் சிட்சித்துத் தங்களேவல் செய்விப்பர். இஃது இவர்களுடைய வாசி. இரண்டு சாதியார்க்கும் அதிகாரி யென்னும் பட்டப்பெயர் பொதுவென வுணர்க.

----
[179-1] "வைதிகத் தனியிளஞ்சிறு மடங்கலேறு." திருவிளை. பாண்டியன் சுரந்தீர்த்த. (௪௨) 42.
[179-2] "எழிற் சங்கம்வைத்த, பெருந்தமிழ் மீனவன் றன்னதி காரி பிரசமல்கு, குருந்தவிழ் சாரன் மணமேற் குடிமன் குலச்சிறையே.” திருத்தொண்டர் திருவந்தாதி, (௨௬) 26.
[179-3] இங்கே குறிப்பிட்ட போசராசா குந்திபோச னென்னும் அரசனாக இருத்தல் கூடுமென்பர்.
[179-4] “பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்” (திருத்தொண்டத் தொகை, (௪) 4);
"அப்பதிக்கு முதல்வர்வன் றொண்டர்தாம், ஒப்பரும் பெருநம்பியென் றோதிய, செப்பருஞ் சீர்க்குலச்சிறை யார்." பெரிய. குலச்சிறை. (௨) 2.
[179-5] "கூரெயி றணிந்த கொவ்வைக் கொழுங்கனிக் கோலச் செவ்வாய், ஏரணி மயிலஞ் சாய லிலக்கணை யீன்ற சிங்கஞ், சீருடைச் செம்பொற் கண்ணிச் சிறுவனைச் செம்பொன் மாரி, பேரறைந் துலக முண்ணப் பெருநம்பி யாக வென்றான்" (சீவக. (௨௯௧௩) 2913);
"முன்னோன் றன்னைப் பின்ன ரியற்றிப், பின்னோன் றன்னையும் பெருநம்பி யாகென" (சிலப். பதிகம், (௧-௨) 1-2; கட்டுரை; அடியார்.)
----

வேறு.

180. [1]கச்சைக்கிரி நேரியர் பாவைதிருக்
        காவற்கிறை வாவிது காலமெனக்
கொச்சைப்பெரு மானடி தன்முடியிற்
        கொண்டானதி காரி குலச்சிறையே.

கச்சையாவது யானைக் கழுத்திலிடும் மெத்தை; கிரியென்பது மலை. கச்சைக்கிரி யென்பது ஆகுபெயர்; "பிறிதின் பெயராற் பிறிது பொருள் சொலி, னறிவோ ரதனை யாகுபெய ரென்ப." இஃது அவிநயம். நேரியர் - சோழர். சோழன் மகளார் - பாண்டியன்குல மகாதேவியார்; [2]"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை" என்னுந் திருப்பாட்டாலு முணர்க. அவர் திருவிற்குக் காவலான முதலியே! இது காலமென்னப் பாண்டிய னவத்தையை உணர்த்தியவாறு.

கொச்சை - சீகாழி. [3]குலச்சிறை யென்பதற்குக் குலங்காப்பவ ரென்பது பொருள். இனி, 'குலைச்சிறை யென்பது பெயர்; குலைப்பட்டிருக்கிற சிறை யென்பது அதன் பொருள்; அது மணந்தப்பாமை; இஃது எல்லார்க்கும் பெயர். இவர்க்குச் சிறப்புப் பெயர், இவர் அறிதலால்'. என்றுரைப்பாரு முளர்; நல்லதுணர்க.

----
[180-1] "கச்சையானை" சிலப். (௫ : ௧௪௨) 5 : 142; (௨௬ : ௨௩௧) 26 : 231.
[180-2] திருஞான. தேவாரம்.
[180-3] இவரைக் குலபக்ஷரென்பர் உபமன்னியுபக்தவிலாஸமுடையார்.
----

181. உவரிப்பரு முத்த நிரைத்ததிருப்
        பள்ளிச்சிவி கைப்புடை யும்பர்வரக்
கவரிச்சிறு தென்ற லசைப்பமிசைக்
        கொற்றக்குடை வந்து கவிப்பவுமே.

உவரி - கடல். உவரி முத்தென்றது எட்டிடத்திலும் சிறப்புடைய விடம் கடலாகையா லெனவுணர்க. உம்பர் - தேவர்; இங்குப் பிராமண ரென்பது நல்ல பொருள்.

182. [1]மேகத்தொரு பந்த ரெடுத்துவாம்
வெண்முத்த மொழுக்கி மினற்கொடியால்
மாகத்து நிரைத்து மழைச்சிலையால்
        வழிதோரண மிட்டனன் வாசவனே.

மேகம் பந்தல்; நட்சத்திரம் முத்துமாலை; மின்னல் கொடி; இந்திர தனு மகர தோரணம். இவை செய்தான் தேவேந்திர னெனிற் கண்டாரில்லை யென்பார்க்கு உத்தரமில்லை. இவரைத் தேவசேனாபதி யென்று கருதிச் செய்தா னென்றலுமாம்; இறைவன் மெய்த்தவப் புதல்வராதலிற் செய்தா னென்றலுமாம்.

இனி, மேகம் போலும் பந்தரும் நட்சத்திரம் போலு முத்தும் மின்னல் போலும் கொடியும் இந்திரதனுப் போலு மகரதோரணமும் குலச்சிறை யாண்டார் இட்டன ரென்பதும் கொள்ள லாகும். வாசவன் - இந்திரன்; மதுரையிலுள்ளா ரெல்லாரும் பத்தியால் [2]இந்திரசமானர்; ஐசுவரியத்தாற் கொள்ளின் வாசவ னென்னும் பெருமை மாறுபடும். ஆதலால் வாசவ னென்பதற்குக் குலச்சிறையாண்டா ரெனப்பொருள் கொள்ளுதலே நேர்.

----
[182-1] “மேகம் விதானமா மின்னெலாஞ் சூழ்கொடியா, மேகத் துருமு முரசறைய" என்பது ஆதியுலா, (௩௨) 32.
[182-2] விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொள்ளுதற் பொருட்டு மதுரைவந்து இந்திரன் ஸ்ரீசோமசுந்தரக் கடவுளைப் பூசித்துப் பேறுபெற்ற வரலாறு இங்கே அறிதற்பாலது.
----

183. [1]சதுரா னனனுஞ் சக்ரா யுதனுஞ்
        சந்த்ரா தவரு மிந்த்ரா தியரும்
மதுரா புரிவா தறிவா மெனமேல்
        வரவந் தனன்[2]வை திகவா ரணமே.

எ-து : பிரமா விட்டுணு சந்திராதித்தர் தேவேந்திரர் முதலாகிய சுவர்க்கவாசிக ளெல்லாரும் மதுராபுரியிற் புகுந்த இவ்வாதமறிவோ மென்று மேலேவர எழுந்தருளினான், வைதிகசமய மதகசம். எ-று.

சதுரானனன் - பிரமா; சதுரம் - நான்கு; ஆனனம் - முகம்; நான்முக னென்றவாறு. இங்கு வைதிக மென்றது ஞானகாண்ட வேதத்தை.

இதனையும் முன்னையன போலப் பொய்யென்றவர்க்குப் பொருள் : சதுரானன னென்றதற்கு நான்மறையாளரான பிராமணரிற் பிரதானனைக் கொள்க; அவன் கர்மமீமாங்கிசகன்; ஆதி ஈசுவர நிராகரணம் பண்ணுமவனென வுணர்க. சக்கராயுதன் விட்டுணு சமய கர்த்தாவென வுணர்க. சந்திரன் பௌத்த சமயத்தானென வுணர்க, க்ஷணபவபங்கத்தால். ஆதவன் - ஆதித்தன்; ஆதித்தன் ஆருகத சித்தாந்தியென வுணர்க, அனந்த சோதியால். இந்திரன் - லோகாயதன்; ஆதியர் - ஸ்தவிர மதவாத சாத்திர ராதியராவர். எனவே மகேசுவர வைசேஷிக ரொழிந்தோர் வாது ஒத்ததால் வந்தாரென வுணர்க.

மேல் விழுந்த ஆதித்தன் கிழக்கே உதிப்பா னென்பது பூர்வீகரான வானவாத சித்தாந்தமென் றுணர்க.

பொருளென் னென்னின், ஆருகத வாசிரிய ரெல்லாரும் பாண்டியன் பக்கலிலே இருந்தா ரென்பது.

ஆசீவக சங்க சமயத்தவர்க்கு ஆதித்திய மென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றி யிருக்கும்; அது சோதிசாத்திர மெனவுணர்க. அன்றியேயும் ஆதித்தனைப்போல மீண்டும் அவர் வானமண்டல வரவுடையா ரெனப்படுவர்.

இந்திரன் உலோகாயத னானதற்குக் காரணம் பிருகஸ்பதி மதமாதலினென வுணர்க. இந்திரகணகாமவாமகாபடாதி சாத்திரம் உலோகாயதர் விரிப்பரென வுணர்க.

இவர்களெல்லாரும் பிள்ளையார் நக்ஷத்திரத்தின் நிலைமையைப் பார்த்துத் தோற்பரென வந்தவர்கள்; "சிறியவன் தோல்வி பெரியவனுடன் பொருதல்; அது மதுராபுரி வாது" என்பர். இம்மண்டலங்களை யெல்லாம் பிள்ளையார் வென்றமை யுணர்க. இங்ஙனம் வரைந்தது, "கதைகளிலுள்ள தமணர் கழுமிசை கொள்வதிது" (௧௭௦) 170 என்னும் பாட்டைக் கடைப்பிடித்து.

இவ்வெண்ணின சமயமெல்லாம் அர்த்தவாதமல்ல; கர்மவாதம்.

ஆருகத சமயிகள் தங்களில் இருபத்துநாலு தீர்த்தத்தாரிலும் [3]ஆதிநாதரான விருஷபதேவர் திருத்தாயார் மருதேவியார் அவதரித்த தேவரைத் திருவயிறு வாய்த்தருளின வன்று அபிஷேகத் திருமஞ்சனமாட்ட முப்பத்து மூன்று கோடி தேவர்களும் அமுதகலசம் தனித்தனி ஏந்தினார்கள். கலச மொவ்வொன்றும் ஒருகடல் கொள்வது. இப்படி முப்பத்து முக்கோடி கடல். இவர் திருவவதாரம் பண்ணின இன்றே சகிக்கமாட்டா ரென்று தேவர்கள் நினைப்ப அன்று திருவவதாரம் பண்ணின பிள்ளை இத்தேவர்கள் நினைத்த வெல்லா முணர்ந்து திருமூக்கில் [4]மச்சிய சுவாசத்தை விட்டருளத் தேவர்க ளனைவரும் முப்பத்து மூன்று கோடி கலசங்களோடு பறந்து போயின ரென்னுங் கதை பொய்யோ மெய்யோவென நினைக.

இனிப் புத்ததேவரில், சினேந்திரபுத்தர் சுவர்க்கத்துக்கு எழுந்தருளுகிற பொழுது சுவர்க்கத்துத் தெருவழகு செய்கிற விடத்துக்கருகு குழிநீர் வற்றா திருப்பத் ததாகத புத்தராவதற்கு முன்பு தமது திருமேனியைவிட்டு அக்குழி தூர்த்தாரென்பது ஆகமத்தாற் காட்டுவதல்லது அனுமானமுமாம். அந்தத் ததாகத புத்தர் ஸ்ரீ வாரணாசியிலே தர்மம் அருளிச் செய்கிறார்: இனிப் பிறக்கக்கடவ மயித்திரி யாழ்வாரான புத்ததேவர்க்குப் பாதாளத்திலே மாணிக்கத்தா லடித்துக் கிடப்பதொரு கோயிலுண்டு; அக்கோயில் மாணிக்க ரத்தின மாளிகை. ஐஞ்ஞூறு யோசனை நீளமும் ஐஞ்ஞூறு யோசனை அகலமு முள்ளதொன் றென்று தம்முடைய ஸ்ரீ பாதத்தி லொன்றாலே பெருவிரலு மணிவிரலுங் கொண்டு எடுத்துக்காட்டி யருளி மீட்டும் காலாலே அழுத்திய ருளினாரென்று ஒருகதை யுண்டு. இதுபோல்வன பிறவுமுள; இவை பொய்யோ மெய்யோ?

அவ்வளவில் இராசா அவத்தைகண்டு அமணர் செய்கிற மந்திரவாதம் இவ்வண்ண மாயிற்று.

----
[183-1] "முதிருமா மறைமு ழங்க முத்தமிழ் வாணர் போற்றக், கதிர்விடு முத்தக் கொற்றச் சிவிகைமேற் கவிகை துன்றப், புதியசா மரையி ரட்டப் பொருவரும் வாது காண்பான், றுதிசெய்து வந்த வானோர் சூழ்ந்தலர் மாரி பெய்ய." திருவால. (௩௭ : ௨௧) 37 : 21.
[183-2] "மன்னுமறை யோர்குலத்து வைதிகவா ரண மென்றோர், கன்னன் மொழிப் பாலகனார் கௌணியகோத் திரத்துதித்தார்", " மற்றவன்றனை வைதிக வாரணம்...... செப்பினார்" (திருவால. (௩௭ : ௨) 37 : 2; (௬௨ : ௨௪) 62 : 24);
“புகலியினில் வைதிகவா ரணமென் றியாரும் போற்றியசம் பந்தரென்றோர் புதல்வர் தோன்றி." கடம்பவனப். இலீலாசங்கிரக. (௩௭) 37.
[183-3] ஆதிநாதர் - முதல் தீர்த்தங்கரர்; ஸ்ரீ புராணத்தைப்பார்த்ததில் இங்கே கூறப்படுஞ் சரித்திரம் (௨௪) 24 - ஆம் தீர்த்தங்கரராகிய ஸ்ரீவர்த்தமானருடைய சரித்திரமாகக் காணப்படுகின்றது.
[183-4] இந்த இடத்தில், நாசிகாபுடத்தெழுந்த க்ஷுதபவன ஜலத்தாலென்பது ஸ்ரீ புராணத்தில் வரையப்பட்டுள்ளது.
----
வேறு.

184. ஆலியுங்கடி திற்புலர்ந்து கலந்துகுண்டர் துடைக்குமப்
பீலியுஞ்[1]சுறு நாறியேறி யெரிந்துபோன பிரம்புமே.

இதன் பொருளறிக.

----
[184-1] "கூறுமங் கையர்நறுங் கூந்த லின்சுறு, நாறுகின்ற துநுகர்ந் திருத்து நாமெலாம்" (கம்ப. யுத்த. மந்திர. (௧௩) 13);
"பொய்யர்கள் பார்க்கும் பீலி சுறுநாறிப் புகைந்து முன்னிற், கையறவெந்தது.” திருவால. (௩௭ : ௬௭) 37 : 67.
----
வேறு.

185. பொறைசூழ்வரை யிற்புலி யேறெழுதும்
        பொன்மேரு வரைப்பெரு மான்மகளார்
மறைசூழ்திரு வெள்ளி மலைப்பெருமான்
        மகனாரடி வந்து வணங்கியுமே.

எ-து : பொறை சூழ்ந்த மலை தோறும் புலியெழுதுஞ் சோழன் பொன்னான மகாமேரு மலையினை யுடையவன்; அவன் மகளாரான மங்கையர்க்கரசியார் வேதங்கள் சூழப்பட்ட திருவெள்ளிமலைப் பெருமானான மகாதேவருடைய திருமகனாரைக் கண்டவாறே அவர் திருவடி மலர்களில் நமக்கரித்து . எ-று.

பொன்மலை இவன தாதற்குக் காரணம் மகாமேருவின் அடிமுதல் முடி கடை சோழர்களா லெழுதப்பட்ட புலிப்பொறியே யாதலாலும் [1]கரிகாலன் கைச்செண்டால் திரித்தா னென்னுங் கதையுண் டாதலாலும். இனி அம்மலையில் இடமில்லை யென்று கொண்டு பிறமலைகளிற் புலியே றெழுதப்பட்டதென வுணர்க. பொன்மலை யுடையவன் மகள் வெள்ளிமலை யுடையவன் மகனைக் கும்பிடுதற்குக் காரணம் வேதவேள்வி தப்பாமையும், [2]"அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா, ரென்னுடைய ரேனு மிலர் " என்பதுமே; இதனை யுணர்க.

----
[185-1] செண்டு கொண்டுகரி காலனொரு காலிலிமயச் சிமய மால்வரை திரித்தருளி மீளவதனைப், பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்பு லிப்பொறி குறித்தது மறித்தபொழுதே" (கலிங்க. இராச. (௧) 1);
"கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச் சாத்தன் - கைச்செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற் கிரிதிரித்த செண்டு.” சிலப். (௫ : ௯௫ - ௮) 5 : 95 - 8, அடியார். மேற்.
[185-2] திருக்குறள் (௪௩௦) 430.
----

186. மன்காதலி னுய்வதிவ் வையமெலா
        மலையாண்முலை யாரமு துண்டவனே
என்காதல னெம்பெரு மானிவனுக்
        கிதுவோதக வென்றன ளென்றலுமே.

'உன்காதலின் ' எனப்பாடஞ் சொல்லுவாரு முளர். அது தமிழல்ல. மன்காதலி லுய்வதிவ் வையமெலா மென்பது உத்தமம் ; மன்னே யென்னும் விளி தொக்கது.

என்று விண்ணப்பஞ்செய்யப் [1]பெண்பெருமாளுக்குப் பிள்ளையா ரருளிச் செய்வார்.

----
[186-1] பெண்பெருமா ளென்றது மங்கையர்க்கரசியாரை; இப்பெயர் பெருமையை யுடையவளென்ற பொருளிலும் வழங்குவ துண்டு; "நஞ்சிலே தோய்ந்த நயனவிழிப் பெண்பெருமாள், நெஞ்சிலே யிட்ட நெருப்பு." அம்பிகாபதி பாடல்.
----

187. மாமான்மர பிற்பகன் மண்டிலமொத்
        தெரிமண்டின னென்னு மகீபதிநின்
கோமான்மர பிற்சசி மண்டிலநேர்
        குளிரும்படி காணுதி கோமளமே.

எ-து : கேளாய் பாண்டியகுல மகாதேவி, தன்மாமனான சோழ வங்கிசத்துக்கு முதல்வனான ஆதித்தனையொத்த உட்டினம் படைத்தா னாயினும், நின்னுடைய சுவாமியான பாண்டியன், தன் வங்கிசத்துக்கு முதல்வனான சந்திரனைப்போலச் சைத்தியமாம்படி காணக்கடவை . எ-று.

இதிற் காணுதி யென்றது காண்டி யென்றவாறு. மகீ - பூமி.

188. (1) என்னக்களி கூரு மிளங்கொடியோ
        டெதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்
தென்னற்கரு கேயொரு பீடிகையிட்
        டினிதேறி யிருந்தருள் செய்கெனவே.

----------

189. (2) ஏறிச்செழி யற்கரு கிட்டதிருப்
        பள்ளித்தவி சின்க ணிருந்தருளச்
சீறிச்சமண் மூகர் குலச்சிறையார்
        செவிவேவன சிற்சில செப்புவரே.

எ-து : இராச புத்திரியே, நின்சுவாமியை வெதுப்புத் தீர்க்கின்றோ மென்றருளிச்செய்ய, சம்பிரமித்த மங்கையர்க்கரசியாருடனே குலச்சிறை யாண்டாரும் பிள்ளையாரை எதிர்கொண்டு எழுந்தருளுவித்துக்கொண்டு வந்து பாண்டியற்கு அருகாகத் திருப்பள்ளிப்பீட மொன்று இட்டு இதில் ஏறியிருந்தருள்க வென்று பிள்ளையாரை வேண்ட, அமணர்கள் கோபித்துக் குலச்சிறை யாண்டார் திருச்செவி வேவப் [1]பருஷவாக்கியங்கள் சொல்வார்கள். எ-று.

(2) [2]சமண்மூக ரென்றது, சமணரான ஊமர்க ளென்றவாறு; [3]"எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை, மையறு கேள்வி கேளா தோர்க்கே." இஃது இரும்பல்காஞ்சி. எனவே அமணர்கேள்வி சகத்துக்குச் சிருஷ்டி கர்த்தா ஒருவனில்லை யென்னுங் கேள்வி யென்றது. குலச்சிறையார் செவிகள் வேவனவாவன சிவத்துரோக வார்த்தைகள். சிற்சிலவென்பது, "தொடா லிறுதி தம்முற் றாம்வரின், லஃகான் றகரவொற் றாதலு முரித்தே" (உயிர்மயங்கு. (௧௨) 12) என்பதனால் முடிந்தது; இது தொல்காப்பியம்.

----
[189-1] பருஷவாக்கியங்கள் - கொடுஞ்சொற்கள்.
[189-2] "வெற்றரையே மூங்கைகள் போலுண்ணு மூடர்" தேவாரம்.
[189-3] "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி" (திருக்குறள் (௪௧௮) 418) என்பது இதனுடன் ஒப்பு நோக்கற்பாலது.
----

இனி, அவர்வைத வசவுகள் வருமாறு.

190. வருவானொரு [1]சோழிய வைதிகனாம்
        வந்தாலிவன் மாளிகை வாயிறனில்
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ
        மீளச்செழி யன்றிரு மேனியையே.

இதிற் சோழிய வைதிக னென்றது பாண்டி நாட்டாரைப் பகைத்த நாட்டின னென்றும் யாகம் பண்ணுபவ னென்றும் கூறியவாறு.

அமணர் தாங்கள் பெரியாராதலிற் சமயப் பொருள் பற்றியல்லது கோபியாரென வுணர்க. மீளவென்றது மாளிகை வாயிலிலே புகுமிதனாலேயே தோஷம்போதும். இதுவன்றிப் பாண்டியனைத் தீண்டுவதே யென்றவாறு.

----
[190-1] "மறைஞானி யென்பானோர் சோழியவை திகச்சிறுவன்." திருவால. (௩௭ : ௩௫) 37 : 35.
----

191. தண்ணார்மதி யக்கவி கைச்செழியன்
        றனிமந்திரி காண்முனி புங்கவரோ
ரெண்ணாயிர வர்க்கும் விடாதவெதுப்
        பிவனால்விடு மென்ப திழித்தகவே.

தண்மை - தட்பம். ஆர்தல் - நிறைதல். மதியம் - சந்திரன். கவிகை - குடை. தனிமந்திரிகா ளென்றது தனித்தனி மந்திரிகா ளென்று விளித்தவாறு. முனிபுங்கவ ரென்றது அமணர்களில் ரிஷிகளாயினாரிவ ரென்றவாறு; இவனென்றது ரிஷிபோல்வானிவ னென்றவாறு. இழித்தகவு - இளிவரவு.

192. என்றாரவ ரென்றலு மேகெடுவீ
        ரெரியாலர வாலிடி யான்முடியச்
சென்றார்பவ மேழினு மிப்படியே
        செல்வாரிவர் முன்பு செயிர்த்தவரே.

எ-து : என்று அமணர்கள் இப்படிச்சொன்னார்கள்; என்றபோதே குலச்சிறை யாண்டாரருளிச் செய்வார் : கெடுவீர், அமணீர்காள், கேளீர்; நெருப்பாலும் பாம்பாலும் இடியுருமேற்றினாலும் பட்டுப்போய் மீண்டும் பிறந்து இப்படி ஏழுபிறப்பும் பாவாத்துமாக்களாய் மரிப்பர்; மாகேசுவரர் முன்பு கோபித்தவர். எ-று.

இது சிவதர்மம். அரவாலெனவே புலி கரடிகள் முதலாயினவும் கொள்க. இவரென்றது மாகேசுவரர் கோபியாமையை விளக்கி நின்றது.
இன்னும் குலச்சிறையாண்டா ரருளிச்செய்வார்.

193. [1]நாணீரறி யீருறி வல்லமணீர்
        மதுரேசனை யெங்குல நாயகனைக்
காணீரிவர் தந்திரு நீறிடவே
        முகிலூர்தி பெறாத கவின்பெறவே.

நாணீரென்றது மிருகசாதியோ டொப்பீ ரென்றவாறு. அறியீ ரென்றது ஒன்றுமறியீ ரென்றவாறு; பாவாத்துமாவான உணர்வத்தனையே யென்றுமாம். உறிவல்லமணீ ரென்றது குண்டிகைக்குக் கயிற்றுறி பண்ணவல்லீ ரென்றவாறு; இதுபண்ணவா சங்கத்திலும் புக்கீரெனலுமாம். மதுரேசனை யென்றது மதுரா ஈசனென்க; குணமுடிவு; தமிழ்க்கு ஒருசொல். காணீரென்றது இனிச் சற்றுப்போதிற் பாரீரென்றவாறு.

இவரென்றது ஆளுடைய பிள்ளையாரை. முகிலூர்தி - வருணராசன்.

பின்னைப் பிள்ளையாரை நோக்கிக் குலச்சிறை யாண்டார் விண்ணப்பஞ் செய்வார்.

----
[193-1] "நாணிலீர் மன்னன் முன்னா நல்லசொல் கின்றேன்.” திருவால. (௩௮ : ௩௨) 38 : 32.
----

194. ஏயேயிம வான்மக ளார்மகனே
        யெந்தாய்சிந் தாகுல வேரரியுஞ்
சேயேவர [1]சைவ சிகாமணியே
        திருநீறினி யிட்டருள் செய்கெனவே.

ஏயேயிமவான்மகளார் - இசையை யொக்கும் உமாபரமேசுவரி; இன்னும் இசையைப் பொருந்தும் பரமேசுவரி யென்றுமாம், [2]இசை மகாதேவ ராதலால். சிந்தாகுலம் - துக்கம்; சிந்தா ஆகுலம்; சிந்தா வென்பது சிந்தை. சேயே யென்பது தூரியா வென்றவாறு; இங்கே தேவசேனாபதி பெயரல்ல. வரசைவ வென்றது சுத்தசைவ வென்றவாறு; வரசைவந்தான் ஆறுகூறுபடும். இனித் திருநீறிட்டருள் செய்கவென்றது பாண்டியன் குலபதிக்கு அவத்தை மிக்க தென்றவாறு.

----
[194-1] "இன்னருள்சேர் சைவசிகாமணியே." திருவால. (௩௮ : ௨) 38 : 2.
[194-2] "ஏழிசையா யிசைப்பயனாய்.” தேவாரம்.
----

195. எப்புத்தரொ டெவ்வம ணுங்களைவார்
        திருநீறிவ னெற்றியி லிட்டலுமே
வெப்புத்தடை பட்டது பட்டளவே
        வேவாத வுடம்புடை மீனவனே.

எப்புத்தரோ டென்றது[1] தீபங்கரர் கௌதமர் முதலாயினா ரெல்லாரையு மென்க. எவ்வமணு மென்றது ஆதிதேவரான ரிஷபதேவர் நேமிநாதர் பார்சுவநாதர் முதலாயினா ரெனவுணர்க . இவர்களைக் களைவார் மாகேசுவரர்களி லொருவரான ஆளுடைய பிள்ளையாரென வுணர்க.

----
[195-1] தீபங்கரர் : இவர் கௌதம புத்தருடைய காலத்திற்கு முன்பு அவதரித்த புத்தர்களுள் ஒருவர்; மணிமேகலை, (௩௦) 30-ஆவது காதை, (௧௪) 14-ஆவது அடியின் குறிப்பைப் பார்க்க.
----

இனிப் பாண்டியன்றான் செய்தபடி.

196. உய்யாவுண ராவிழி யாவருகே
        சரியாவொரு கேசரி யாசனமேல்
வையாவதி காரிக ளும்பெருமாண்
        மகளாரும் வணங்க வணங்கினனே.

எ-து : ஆளுடைய பிள்ளையார் திருக்கையிற் றிருநீறிட்டவாறே வெதுப்பும் அவத்தையும் ஒக்கவிட்டுப் போகப் பிராணன் வந்து இந்திரியங்க ளுடனே கலந்தபின்னைக் கண்ணால் விழித்துப் பார்த்து ஒரு பீடத்திலே எழுந்தருளி யிருந்த பிள்ளையாரைக் கண்டு பயப்பட்டுத் தானிழிந்து ஓரருகே சரிந்து தன்னுடைய சிங்காதனத்தின் மேலே பிள்ளையாரை யெடுத்தேற வைத்துப் பின்னைத்தன் அதிகாரிகளான குலச்சிறை யாண்டாரும் தன்குல மகாதேவியாரும் நமக்கரிக்கத் தானும் நமக்கரித்தான். எ-று.

பெருமா ளென்றது சோழனை, ஸ்ரீராமன் வங்கிசமாதலால். பாண்டியன் பண்டு கிடந்தது வியாதி மிகுதியாற் பள்ளிக்கட்டிலி லெனவுணர்க; அதற்குக் காரணம் ஒரு கேசரியாசன மென்றது; கேசரி - சிங்கம். மந்திரியாரும் தேவியாரும் இவரையே கும்பிடுதற்குச் சமிஞ்ஞை அறிவித்தாரென வுணர்க. அருகே சரிந்தென்பது பதற்றம்.

இனி அமணர்கள் சொல்லுவார்.

197. சுடுகின்ற மருங்கிரு பாலுமிருந்
        தனைவேமும் விடாது தொடத்தொடவே
விடுகின்ற வெதுப்பை வெறும்பொடியால்
        விடுவித்தன னாமிவன் வேதியனே.

இதன் பொருளுணர்க.

198. யாம்யாது மிதற்கு முயன்றிலமோ
        வெம்மந்த்ரமும் யந்த்ரமு மில்லைகொலோ
கோமானிவ னைப்பணி கின்றதெனீ
        றணிகின்றதெ னென்று கொதித்தெழவே.

முன்னிற்பாட்டில் வெறும் பொடியென்றது போல இப்பாட்டிலும் திருநீறென்னாமல் நீறென்றார் அமணர். கொதித்தெழுதல் - கோபித்துப் புடையெழுதல்.

இனிப் பாண்டியன் சொல்வான்.

199. கெடுவீர் கெடுவீ ரிவைசொல் லுவதே
        கெட்டே னடிகள் ளிவர்கே வலரோ
விடுவீர் விடுவீ ரினியென் னெதிர்நீர்
        வெங்கோ பமுமுங் கள்விவா தமுமே.

அடிகளிவ ரென்றது மகாதேவ ருறவாகிய இவரென்றவாறு. கேவலம் - எளிமை.

200. நீர்வந்து தொடத்தொட வெந்துருகா
        நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்
கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங்
        காடொத்தனென் யானிவர் கைப்படவே.

எ-து : நீங்கள் தொடத்தொடக் கோடைக் காலத்துக் காடுபட்டது பட்டு வெந்துருகினேன்; இவர் தொடத்தொட அக்காட்டைக் கார்காலத்தில் மகாவருஷம் வருஷித்துத் தளிருந்தழையு மாக்கினாற்போலக் குளிர்ந்திளகினேன் யான். எ-று.

வேனில் - கோடை.

இனி அமணர் சொல்லுவார்.

201. ஒருநீயொரு மாணி யிடும்பொடியா
        லுய்ந்தேனுயி ரென்ப துரைத்தனையேல்
வருநீரினு மிட்டு நெருப்பினுமிட்
        டறிவோமிரு மந்த்ரமும் யந்த்ரமுமே.

[1]மாணியென்றது இப்பொழுது ஓதுகின்றவ னென்றவாறு; பிராமணச் சிறுபிள்ளைக்குப் பெயர். திருநீற்றைப் பொடியென்றது பிள்ளையார் திருநீறிடுகின்றபோது வேதமந்திரம் பிராமண ரல்லாதார்க்கு ஆகாதென்று மனத்திலே உச்சரித்து வைத்தலால்; அமணரில் அச்சாதி மிக்கிருத்தலால் அச்சிவமூல மந்திரங்களான வேதமந்திரம் கேட்டிலரென வுணர்க. வருநீரெனவே ஏடெதிரோட மந்திரமெழுதுக வென்றாரென வுணர்க.

----
[201-1] "மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித், துறைபோய்." சிலப். (௯ : ௨௯ - ௩௦) 9 : 29 - 30.
----

202. எரியாதன தீயி லிடிற்கொடுபோ
        யெறிவைகையி லேயிடில் வைகையுடன்
சரியாதன வேடுடை யார்தவமே
        தவமாவது மேலிது சாதனமே.

எ-து : நெருப்பி லிட்டால் எரியாதனவும் வைகையாற்றி லிட்டால் வைகையாறு போனவழி போகாதே எதிரோடிவந்து நீரினது சத்தியைக் கெடுக்கவல்லனவுமாகிய மந்திரமெழுதின ஓலையேட்டை யுடையவரே வென்றார். எ-று.

உடன் சரித்தல் - ஒக்கவொழுகுதல்.

இன்னும் அமணர் சொல்லுவார்.

203. வேமேடுடை யாரையும் வைகையிலே
        விட்டாலதன் மீது மிதந்தொழுகிப்
போமேடுடை யாரையு நீகழுவிற்
        புகுவிப்பது தெக்கண பூபதியே.

தெக்கணம் - தெற்கு. பூபதி - இராசா. இதற்குப் பொருள் தர்ம ராசாவும் நீயேயென்று பாண்டியனைப் புகழ்ந்தவாறு. இப்பொருளும் அமணர் சொல்லுதற்குக் காரணம் தாம் கொலை செய்வாரல்லர்; தாம்கற்ற மந்திரவாத வித்தையாற் கொல்லக்கடவ ராதலாற் சொன்னாரென்க.

204. என்னக்கடி [1]தெண்பெரு வெற்பும்விடா
        வெண்ணாயிர மூகரு மிப்படியே
பன்னப்பெரி தஞ்சிய வச்சமுடன்
        பகலோன்மர பிற்பெறு பைந்தொடியே.

பன்ன - சொல்ல; இது வெகுசன வசனம்.

இப்படியே தோற்றாரைக் கழுவேற்றக் கடவதென்ன, சோழ சக்கரவர்த்தி மகளாரான பாண்டியகுலபதி மகாதேவியார் பயப்பட்டுச் சொல்லுவார்.

----
[1] "எண்பெருங்குன்றத்து " என்பர் பின்னும்; (௨௧௮) 218.
----

அவர் சொன்னவார்த்தை வருமாறு.

205. மலைகொண்டெழு வார்கடல் கொண்டெழுவார்
        மிசைவந்து சிலாவரு டஞ்சொரிவார்
நிலைகொண்டெழு வார்கொலை கொண்டெழுதற்
        கிவரிற்பிறர் யாவர் நிசாசரரே.

எ-து : அமணர்கள் - மந்திரவாதம் வல்லவாறு பண்டு கண்டறிவோம். மலைகளை எடுத்துக்கொண் டெழுவார். கடல்களை எடுத்துக்கொண் டெழுவார். அன்றியே ஆகாசத்தால் வந்து பருவதங்களைச் சிறு துளியாகச் சொரிய வல்லார். மேகங்களின் நிலைகளைக்கொண் டெழுவார். ஆதலாற் கொலையை மேற்கொண் டொழுகுவதற்கு இவரிற் பிறர் யாவரேனு முளரோ ராட்சதர்? எ-று.

யானைமலை நாகமலையென இரண்டுமலை உளவென அவையிற்றைக் காட்டி, “பண்டு இவை அமணர் மந்திரவாத வலிகாட்டின மலைகள். மதுரையை ஒருமலை யானையா யழிக்கவும் அவ்வியானை மதுரையில் வருவதன் முன் இந்தமலை மகாநாகமாய் அந்தயானையை விழுங்கவுங்காட்டி உயிர்பெறுத்தி நடத்திவர, என்சுவாமி சாதுவாதலிற் பயப்பட்டு இம்மகாநகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமு முண்டு. உறையூரில் கல்வருஷமும் மண்வருஷமும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர். அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளியாய்த்து" என்றவாறு.

206. குழைதந்தனை செந்தமிழ் மண்டலமுங்
        கொடிமாநக ருங்குன் றங்களிகூர்
மழைதந்தென வந்தனை வாழியினிப்
        பிரமாபுர மேற மறித்தருளே.

எ-து : செந்தமிழ் மண்டலமான பாண்டி மண்டலத்தைத் தளிரெழப் பண்ணினை; மதுரையையு மப்படியே செய்தனை. மலைகளிகூர மழை தந்தாற் போல எழுந்தருளினை. சயசய! இனிப்போய்ப் பிரமாபுரத்தேற மீண்டருள். எ-று.

வாழியென்றது சயசயவென்றவாறு.

என்னப் பிள்ளையார் திருவுள்ளத்தே வாதுசெய்வோமென நினைத்தருளப் பின்னையும் பாண்டியன் குலமகாதேவி சொல்லுவார்.

207. கேள்பற்றி யமண்கெடு வாரொடுபோர்
        கெட்டேனடி கேளொட்டே னெனவே
தாள்பற்றி வணங்கி வணங்கிவிடாள்
        தவனன்குல வல்லி தடுத்தலுமே.

எ-து : தங்கள் சமயத்தையே பற்றிப் பிறசமயத்தார் பசிக்கினுஞ் சோறிடார் அமணர்; அக்கெடுவாரோடு கெட்டேன்! சுவாமி, உறவா யிருப்பீர்; உம்மைப் போர் செய்ய ஒட்டேனென்று பிள்ளையார் சீபாதங்களைப்பற்றி நமக்கரித்து விடாதே தடுத்தாள், தவனன் குல வல்லியான பாண்டியன் குலமகாதேவி. எ-று.

தவனன் - ஆதித்தன்.

என்னப் பிள்ளையார் அருளிச்செய்வார்.

208. காதிற்கனகக் குழைநின் றிலகக்
        கமழுங்குழன் முன்பு கலந்தசையச்
சோதித்திரு நெற்றியில் நீறிலகச்
        சுட்டிக்கலன் மீது துலங்கவுமே.

இதன் பொருளுணர்க.

209. கனலெங்கன லக்கன லால்விளையுங்
        கார்காரவை வந்து தருங்கலுழிப்
புனலெம்புனல் யாமிடு மேடுசுடா
        போகாதிரி யக்கொடு போமெனவே.

எ-து : பாண்டியகுல மகாதேவி, கேளாய். உலகத்தில் அக்கினி யெல்லாம் எங்களக்கினி; அவ்வக்கினியால் விளைவன மழையானவை; அம்மழைதான் வந்து சொரியும் ஆற்று நீர் எங்கள் நீரே. ஆதலால் யாமிடும் ஏடுகளைச் சுடா அக்கினி; உடன்கொண்டு போகா சலமும்; திரியக்கொண்டு போமென்று சொல்ல. எ-று.

எனவே, சொல்லிற்றுச் செய்யும் அக்கினி தேவனும் வருண ராசனும் உளர் எங்கட்கு; பரசமயத்தார்க் கெல்லாம் நெருப்பும் நீருமே யுளவென வுணர்க.

என்று பிள்ளையார் அருளிச்செய்யப் பாண்டியன் குலமகாதேவியார் நீங்கியருள எண்பெருங்குன்றத்தெண்ணாயிர அமணருங்கூடிப் பிள்ளையா ரெதிரேவந்து சொல்லுவார்.

210. நீரோடு நெருப்பிவை நும்மனவே
        யிதுநிச்சய மாகிலு நின்னெதிரிப்
பாரோடு விசும்பு பனிப்பவினிப்
        பணிகொள்ளுதும் யாமிது பாரெனவே.

எ-து : நீரும் நெருப்புமானவை மாகேசுவரரினவே; இது நிச்சயமாயினும் நின்னுடைய எதிரே மனுஷ்யரன்றித் தேவர்களும் பயப்படும்படி நீரையும் நெருப்பையும் யாம்பணி கொள்ளுமாறு பாரென்றார். எ-று.

நீரும் நெருப்பும் சடையினுங் கையினும் உளவென்னும் நயமுமாம்; அவை இவையல்ல வென்றுமாம். பனித்தல் - பயப்படுதல்.

இதற்குப்பின்னைப் புகுந்தகதை.

211. என்னுஞ்சமண் மூகருநான் மறையோ
        ரேறுந்தமிழ் நாடனும் ரகுமரபிற்
பொன்னும்பெரு நம்பி குலச்சிறையும்
        போய்வைகையில் வாது களம்புகவே.[1]

ரகுமரபாவது ஸ்ரீராகவ வங்கிசம். பொன்போல் வாளைப் பொன்னென்றார். வாதுகளம் - தர்மாசனம்.

----
[211-1] இதன்பின்னே, "எரிபுக்கனவே டிறைவன் சடையிற் பிறையொத் தனவை கையிலிட்டனவுங் கிரிபுக்கனவக் கிரிசூழருவிக் கிழியா தககங்கள கிழிததறவே" என்னும்பாடலொன்று மூலமட்டும் உள்ள பிரதியொன்றில் இந்த வடிவமாகவே யுள்ளது.
----

212. கனலிற்புகு மேடிறை கண்ணின்மதன்
        கையம்பென வெந்தன கையரிடப்
புனலிற்புகு மேடிறை வைகையுடன்
        போகாவிடி னுங்கடல் புக்கனவே.

எ-து : முற்பட்ட இலச்சையின் மிகுதியாலே அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட, ஈசுவரனது நெற்றிக்கண்மலரிற் புறப்பட்ட கோபாக்கினியால் காமதேவனுடைய அம்பென ஒலையேடுகள் வெந்தன. உயிரென மந்திரம் ஆகாசமே அரூபியாய்ப் போயின. பின்னை வைகையாற்றி லிட்ட சலத்தம்பன விபரீத மந்திர வோலைகள்தாம் வைகையுடனே கூடிப்போய் வைகைதான் கடல் புகாதாயினும் மந்திரங்களுடனே கடல்புக்கன. எ-று.

மதன்கையம்பென வெந்தன - நெருப்பிலிட்டபுட்பம் போல் வெந்தன. மதனும் கையம்புமென உம்மைத் தொகையுமாம். இதற்கு உவமை ஏடும் மந்திரமு மென்னலுமாம்; எழுத்தும் ஓசையு மென்னலுமாம். (கையரென்னும் பெயர் மழுவேந்தினாரைக் கள்ளரென்பது போலக் கொள்க; இது மலைநாட்டிற்சொல்.) வைகையானது சமுத்திர காமினியல்ல. ஏடுகடல் புக்கவாறு என்னெனின் [1]பாம்பாற்றுக் காலொடு கூடிக் கடல்புக்கதென வுணர்க.

----
[212-1] பாம்பாறென்னும் ஒரு சிற்றாறு, இராமநாதபுரம் ஸமஸ்தானத்தி லுள்ள ஹனுமந்தக்குடி தாலூகாவிற் பல குளங்களை நிரப்பிக்கொண்டு சென்று கடலிற் கலக்கின்ற தென்று (௸) மேற்படி ஸமஸ்தான சரித்திரம் தெரிவிக்கின்றமையின், (௸) மேற்படி ஆறு பண்டைக்காலத்தில் வைகையாற்றி லிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டுமென்று தோற்றுகிறது.
----

213. பொற்பங்கன லிற்புகு மேடுறவும்
        புனலிற்புகு மேடெதிர் போகவுமேழ்
வெற்பும்பிள வோட வொலித்தனவால்
        வேதங் களுமைம் பூதங்களுமே.

எ-து : ஆளுடைய பிள்ளையாருடைய மாகேசுவர மந்திர சத்தியாலே எழுதின பனையோலை யேடு நெருப்பிலிடக் குற்றமற்ற பொன் போலப் பசுமைபெற்று அழகுமிகா நிற்கவும் கிழக்கு நோக்கிப் போகின்ற ஆற்றிலிட்ட பனையோலையின் ஓரிதழை ஆளுடைய பிள்ளையார் எழுதின மந்திர சத்திக்குச் சலசத்தி தோற்றுக் கூடக் கொண்டுபோக மாட்டாதொழிய இம்மந்திர சத்தி ஏட்டுக்கும் பலங்கொடுத்து மேற்கு நோக்கிக் கொண்டு போகவும் கண்டு அறியாதார்க்குச் சொல்லுவன போல ஆரவாரித்தன, வேதங்கள் நான்கும் பூதங்க ளைந்தும். இவை ஆர்த்த சத்தங்களாலே பருவதங்களும் பிளந்தன. எ-று.

214. மேனின்ற சுராசுர ரார்த்தனரே
        திருமாலும் விரிஞ்சனு மார்த்தனரே
பானின்ற சராசர மார்த்தனவே
        பதினாலுல கங்களு மார்த்தனவே.

சுராசுரர் - தேவரும் அசுரரும். விரிஞ்சன் - பிரமா. பால் - பக்கம். சராசரம் - சரமும் அசரமும்; உலகிற் பொருளெல்லா மென்றவாறு.

215. வாராயிவ ராகம துல்லபமும்
        வருமெங்கள் சிவாகம வல்லபமும்
பாராய்வழு தீயிது பாருருவத்
        திருவிக்ரம மின்று படும்படியே.

பாண்டியனை நோக்கிப் பிள்ளையார் அருளிச்செய்தது இது.

வருமெங்கள் சிவாகம மென்றது, ஈசுவர மூலம்பற்றி வருகிற சிவாகம மென்றவாறு. துல்லபம் - அருமை; குறிப்பு. வல்லபம் - வலிமை.

216. ஒருகூன்மிசை வைத்த திருக்கைபுறத்
        தொருகூன்மிசை வைத்தனர் வைத்தலுமே
[1]இருகூனு நிமிர்ந்தன தென்னவர்கோன்
        முதுகுந்தட மார்பு மிடம்பெறவே.

முன்னும் பின்னும் ஒக்க நிமிர்ந்தவாறே தடமார்பும் அழகிய முதுகும் ஆயின, இவ்விடத்துத் தடம் பெருமை.

இதன்கருத்து : பிரத்தியட்ச சத்தி காட்டுகை. அன்றியேயும் இந்திர ஞாலமுமல்ல, பிறவுமல்ல, ஈசுவரனே வடிவுகளைப் படைத்தா னென்பது பிரகாசித்தபடி.

----
[216-1] "வண்புகலி, வேந்தரா லாருயிர்க்கூன் மெய்க்கூன் றவிர்ந்தருளே, சேர்ந்துவாழ் நின்றசீர்த் தென்னவனும்" என்பர் ஸ்ரீ சொக்கநாதருலா வுடையார்.
----

217. ஆதிச்செழி யற்கொரு கைம்மலர்பொன்
        னடையப்புக லிக்கிறை வெப்பழலால்
வேதிக்க வுடம்பொரு பொன்மயமா
        யொளிவிட்டு விளங்கினன் மீனவனே.

எ-து : பண்டொரு [1]பாண்டியன் பிறனுடைய பெண்டாட்டி யகத்திற் கதவை அறியாமற் றட்டிய தன்கையைத் தானே தறித்துக்கொண்டு பொற்கை பண்ணிச் செறிப்ப அத்திருக்கை உயிர்பெற்று வழங்கிய தென்னும் புராணத்தால் அவனுக்கு ஒருகையே பொன்னாயிற் றென்று தெரிகிறது. இக்கூன்பாண்டிய னுடம்பை ஆளுடைய பிள்ளையார் திருக்கைகளால் தடவச் சரீர முழுவதும் பேதித்துக் கனகமய மாயிற்று. எ-று.

இவன்றான் கொண்ட வெதுப்புஷ்ணம் மெய்யுடம்பான இரும்பை உருக்கப் பிள்ளையாருடைய திருக்கைமலரான சித்தரசம்படக் காணி கோடியைப் பேதித்தாற்போலச் சுவர்ணமயமாய்த் தென்றவாறு.

----
[217-1] பாண்டியன் தன்கையைக் குறைத்துப் பின்பு அதனைப் பொன்னாகப் பெற்ற வரலாறு,
"நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன், ஆடுமழைத் தடக்கை யறுத்துமுறை செய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதார்ப் பாண்டியன்” (குணநாற்பது),
"எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத்தன் கைகுறைத்தான் பாண்டியன் காணா, ரெனச்செய்யார் மாணா வினை" (பழமொழி, (௧௦௨) 102),
"உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி, புதவக் கதவம் புடைத்தன னொருநா, ளரைச வேலி யல்ல தியாவதும், புரைதீர் வேலி யில்லென மொழிந்து, மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி, யின்றவ் வேலி காவா தோவெனச், செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி, நெஞ்சஞ் சுடுதலி னஞ்சி நடுக்குற்று, வச்சிரத் தடக்கை யமரர் கோமா, னுச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை, குறைத்த செங்கோற் குறையாக் கொற்றத் திறை" (சிலப். (௨௩ : ௪௨ - ௫௩) 23 : 42 - 53),
“கையரிந்தான் மாறன் கதவிடித்த குற்றத்தா, லெய்யுஞ் சிலைக்கை யிரங்கேசா" (இரங்கேசவெண்பா),
"மையிலாள் கடைதொட் டுயர்கரங் குறைத்த மாசறு தேசுடை நீதி, யையனே" (திருவால. (௫௭ : ௪) 57 : 4),
"தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ" (திருவிளை. பழியஞ்சின. (௧௭) 17),
"செங்கோலை முட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான் கண்ணும் தன்கைகுறைத்தான் கண்ணுங்காண்க" (திருக்குறள், (௫௪௭) 547 - பரிமேல்),
"கொற்கையான் மாறன் குலசே கரன்வழுதி, பொற்கையா னானகதை போதாதோ" (தனிப்பாடல்) என்பவற்றால் விளங்கும்.
----

இனிப் பாண்டியகுலபதி அருளிச்செய்வான்.

வேறு.

218. வேதப் பகைவர் தம்முடம்பு
        வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
கேதப் படுமெண் பெருங்குன்றத்
        தெல்லா வசோகு மெறிகெனவே.

வேதப்பகைவ ரென்றது, வேதமந்திரசத்தி தனக்கேற வுணர்ந்த பாண்டியன் அமணர்க்குப் பெயரிட்டபடி யெனவுணர்க. எண்ணாயிரமரம் கிடையாவென்று துக்கப்படே மென்றவாறு; ஏதம் - துக்கம். [1]எண்பெருங் குன்றாவன, யானை மலையும் நாகமலையும் நீலமலையும் சுணங்கமலையும் செப்புமலையும்............. வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன வெனவுணர்க.

இராசாவைநோக்கி [2]ஈது ஆகாதென்று பிள்ளையார் விலக்கியருள இராசாவையும் பிள்ளையாரையுங் கூடவைத்து மாகேசுவர கணபதித் தொண்டர்கள் அருளிச்செய்வார்.[3]
----
[218-1] இங்கே கூறிய எண்பெருங் குன்றப் பெயர்கள் பிறவகையாகவும் வேறிடங்களிற் காணப்படுகின்றன; "பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி, யருங்குன்றம் பேராந்தை யானை - யிருங்குன்றம், என்றெட்டு வெற்பு மெடுத்தியம்ப வல்லார்க்குச், சென்றெட்டு மோபிறவித் தீங்கு" (ஒரு பழைய சைன நூல்),
"அஞ்சனங் கவுஞ்சங் கோவத் தனந்திரி கூடங் காஞ்சி, குஞ்சர சைய மேம கூடமே விந்த மென்னு, மஞ்சிவர் வரைக ளெட்டும் வைகுறு மமணர்.” திருவிளை. யானை. (௭) 7.
[218-2] 'ஈது ஆகாதென்று பிள்ளையார் விலக்கியருள' என்ற வாக்கியம் சம்பந்த மூர்த்தியினுடைய பெருங்கருணைத் திறத்தை நன்கு புலப்படுத்துகின்றது. அவர் சமணரை நோக்கிக் கூறியனவாகத் திருவாலவாயுடையார் திருவிளை யாடற்புராணத்தில் (௩௮) 38-ஆவது திருவிளையாடலிற் காணப்படும்,
"பவங்க ணீக்கும்வெம் பாதக மாற்றுநற், றவங்க ணல்குந் தலைமை தருந்தொழுஞ், சிவந்த தாணிழல் சேர்த்திடுங் காத்திரத், துவந்து பூணினுருத்திர சாதனம்”,
"நினைவினை முடிக்குந் தூய்மை யாக்கும்வெம் பாவ நீக்கு, மனவிடர் விடம்பேய் தெவ்வு மறலிவா ராமற் காக்கும், புனையற மின்பம் வீடு பொருண்முத லெவையு நல்கும், வினைகடி நால்வே தத்து மிக்கமந் திரவெண் ணீறு",
"குலந்தரு நீதி மிக்க குணந்தரும் வேதஞ் சொல்லும், பலந்தரு முயர்ந்த சாயுச் சியந்தரும் பழுதி லாத, தலந்தரு மெல்லாம் வல்ல சயந்தரு நிறைந்த செல்வ, நலந்தரும் பெருமை குன்றாநயந்தரு நமச்சி வாய",
"நாணிலீர் மன்னன் முன்னா நல்லசொல் கின்றேன் கண்டி, பூணும்வெண் ணீறு பூசும் போற்றியஞ் செழுத்தை யோதுங், காணொணா முத்தி யின்பங் காணலாம்" ((௨௯ - ௩௨) 29 - 32) என்னும் பாடல்கள் இச்செய்தியை வலியுறுத்துகின்றன.
[218-3] இதன்பின் சில பாடல்களிருந்து இறந்து போயிருக்க வேண்டு மென்று தோற்றுகிறது.
----

219. மண்ணா வுடம்பு தங்குருதி
        மண்ணக் கழுவின் மிசைவைத்தார்
எண்ணா யிரவர்க் கெளியரோ
        [1]நாற்பத் தெண்ணா யிரவரே.

மண்ணாவுடம்பு - கழுவாஉடம்பு.
----
[219-1] இங்கே கூறப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவ ரென்னும் சிவகணத்தார், பண்டைக் காலத்தில் இருந்து சிவகைங்கரியம் செய்து கொண்டு விளங்கினார்க ளென்பது பின்னுள்ள துதியால் தெரிகின்றது;
"பலந்தரு தவத்தான் மிக்கோர் பத்திவை ராக்கி யத்தோர், புலங்களுங் கடந்தோ ரீசன் றனையலாற் போற்ற லில்லோர், நலந்திகழ் சரியை யாதி நான்குமார்க் கத்தோர் நீற்றா, லிலங்கிய நாற்பத் தெண்ணா யிரவர்தாள் போற்றி போற்றி" (திருவால. கடவுள். (௨௨) 22.)
நாற்பத்தெண்ணாயிரவ ரென்பது, தில்லை மூவாயிரவர், திருப்பெருந்துறை முந்நூற்றுவர் , திருவாக்கூர் ஆயிரவர், திருவீழிமிழலை ஐந்நூற்றுவ ரென்பன போன்ற குழூஉப்பெய ரென்றும், இக்குழுவினர் இன்னும் சிதம்பரம் முதலிய தலங்களிலும் இருந்து திருத்தொண்டு புரிந்து வந்தார்களென்றும் தெரிகின்றன;
"எதிரின் றியநாற்பத் தெண்ணா யிரரும்" (திருவானைக்காவுலா, (௧௫௯) 159),
"எப்பற்றுந் தீர்நாற்பத் தெண்ணா யிரவரெனும், ஒப்பற்ற வேடத் துயர்ந்தோரும்" (திருப்பூவண நாதருலா, (௯௦) 90),
"எண்ணுமொரு நாற்பத் தெண்ணா யிரவரெலும், புண்ணிய வேடப் புனிதரும்." ஸ்ரீஏகாம்பர நாதருலா; (௬௯) 69.
----

220. கொன்று பிள்ளை யூர்புக்கார்
        குண்டர் நரகக் குழிபுக்கார்
என்று சொல்லி யகிலகலா
        வல்லி யிறைஞ்சி யிருத்தலுமே.

பிள்ளையார் கொன்றாராகச் சொல்லியது, படை செய்த பராக்கிரமம் இராசாக்கள் தாமெனவே யுணர்க. அமணர்கள் நரகக்குழியிற் புக்கது, பிராமணச் சிறுபிள்ளை தேசாந்தரத்தில் நின்றும் வந்து மதுரைக்குப் புறத்தே ஒருமடத்திலேவிட அம்மடத்தின் வாசலிலே அநியாயமாக நெருப்பிட்ட பாவத்தாலென வுணர்க. அகிலகலாவல்லி யென்றது ஞானங்களுக்கு முதல்வியான சரசுவதியை யெனவுணர்க.

221. தெம்முன் சென்று நம்பிள்ளை
        செய்த தொருபோர் செப்பினையால்
நம்முன் தவள முளரிமிசை
        யிருக்கப் பெறுதி நாமகளே.

இஃது, இக்கதை யெல்லாம் விண்ணப்பஞ் செய்த சரசுவதியை நோக்கிப் பரமேசுவரி அருளிச்செய்து பிரசாதஞ் செய்தருளினபடி.

[1]“தெவ்வுப்பகை யாகும்", "தெம்முனை தேய்க்குவர்" ((௫௮) 58பி - ம்) வெண்பாமாலை; இம்முடிபுணர்க.

----
[221-1] தொல். உரி. சூ. (௪௮) 48.
----
6. கோயிலைப்பாடியது முற்றிற்று.
------------

தக்கயாகப்பரணி - மூலமும் உரையும், பாகம் 3
7. பேய் முறைப்பாடு (222-244)


222. என்றிறைவி நாமகட்குத் திருவுள்ளஞ் செய்யக்கேட்
      டிருந்த பேயில்
ஒன்றிறையுங் கூசாதே யுறுபசிநோய் விண்ணப்பஞ்
      செய்ய லுற்றே.

நாமகள் - சரசுவதி. இறை - அற்பம். இவ்விடத்துச் சரசுவதியை அனுக்கிரகித்த காலத்திலே நம்மையும் அனுக்கிரகிப்பளென்று பேய்கள் தங்கள் காரியஞ் சொல்லத் தொடங்கின வெனவுணர்க. உறுதல் - மிகுதல்.

வேறு.

223. ஒற்றைத் தலைவெட் டுண்டதுகொண்
டோடிச் சென்றான் சென்றாலென்
மற்றைத் தலையுந் தானுமாய்
வணங்கி நின்றான் மலரோனே.

இதன்பொருளுணர்க.

224. உலகிற் பெரிய கபாலத்தே
யொருவ ருதிர மேற்றூற்றி
விலகிற் பிழையாச் சூலத்தே
கொண்டார் கணவர் வெற்றுடலே.

என்பது : இவ்வுலகத்திலும் பெரியதொரு தலையோட்டிலே ஒருவருடைய உதிரத்தை ஏற்று ஊற்றிக்கொண்டு பின்னை உதிரமூற்றின உடம்பையும் திருக்கையிற் சூலத்தே ஏற்றுக் கொண்டருளினார், நின்னுடைய கணவனார். என்றவாறு.

உலகிற் பெரிய கபாலம் பிரமசிரம். ஒருவரென்றது விஷ்ணுவை. ஏற்று - உடலை வளைத்துக் களேபரமாக்கி. விலகுதல் - எறிதல். எங்களுக்குப் பிணத்தையும் தந்தில ரென்றவாறு.

225. கூறாக் குதற்கு வாளிலரோ குத்தி நூக்க வேலிலரோ
நீறாக் குவதென் முப்புரத்தி லுள்ள வெள்ள நிருதரையே.

இதன் பொருளுணர்க.

வேறு.
226. குழம்படியேம் புகவிழுந்து பொருப்படியிற் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை விட்டார்தம் பாட்டறிவே.

எ-து : பத்துத்தலை யுடையானொரு ராட்சதன் வந்து திருமலையை யெடுக்கத் தாம் அவனை ஸ்ரீபாதத்தில் திருவிரலாலூன்றி யருள அவன் சரீரம் நெரிந்துபோக அவ்விடத்தில் அவன் சரீரத்தி னுதிரக் குழம்பை நாங்கள் புகுந்து கொள்ளை கொள்ளாமே அவனை அனுக்கிரகித்துப் பிழைக்கவிட் டருளினார், அவன் பாடின பாட்டுக்கேட் டருளி. அவர்தம் பாழான பாட்டறிவு இருந்தவாறு என்னே! எ-று.

பழம்படியே விடுதல் அவனைச் சிட்சியாதே போக விடுதல். அதனாலன்றோ அவன் விஷ்ணுவினுடைய தேவியை வஞ்சித்துக் கொண்டு போய்ச் சிறை வைத்தா னென்பது கருத்து. பாட்டறிவே யென்றது, எங்களிலும் பாடவல்லனோ இராவண னென்றவாறு.

வேறு.
227. வைய முண்ணோங் கடன்மடோ மற்றும் புவன முற்றும்போய்
ஐய முண்ணோங் கடனஞ்சு குடியோ முங்க ளடியோமே.

எ-து : தேவி, பரமேசுவரி, நின்னுடைய அங்கிசமான விஷ்ணுவைப் போலப் பூமியெல்லாம் வாரி விழுங்கோம்; நின் புலவனைப் போலக் கடலேழும் ஒருக்காலே குடியோம்; நின் சுவாமியை போலத் திரைலோக்கியங்க ளெங்கும் புக்குப் பிச்சை யுண்ணோம்; எல்லா லோகங்களையுங் கடல்களையு மொக்கச் சுடவற்றாய்ப் பெருத்துக்கறுத் திருக்கும் ஆலகாலத்தைக் குடியோம்; இதற்குக் காரணம் நினக்கும் நின் சுவாமிக்கும் அடியோமான தாழ்வல்லது இவை செய்ய மாட்டாதே மல்லேம். இவை செய்யின் அடிசிற் பானையைத் தொட்டோ மாவோம். எ-று.

புலவன் - அகத்தியன். கடனஞ்சென்றது கடல் கடைகிற காலத்துத் தோன்றிய நஞ்சு; வாசுகியென்னு மகாநாகத்தின் நஞ்சு; மற்றது மகாமேருவைப் பன்னிரண்டு சுற்றுக் கொண்டு மறுத்துப் படத்தாலே தலையையும் மறைத்தது, மகாமேருவுக்குள் இராமல்.

வேறு.
228. கார்மலையச் சந்தனமும் வடவிமயக் காரகிலும்
போர்மலையக் கடவதொரு பிள்ளைக்குப் போக்குதியே.

எ-து : கருநிறத்தையுடைய பொதியின்மலைச் சந்தனக்கா டெல்லாவற்றையும் வடதிசை இமய பர்வதத்து அகில்வன மெல்லாவற்றையும் எடுப்பித்து பெற்ற பிள்ளையாய் என்றும் யுத்தோன் முகனா யிருக்குந் தேவசேனாபதிப் பிள்ளையார்க்கே போகவிடுவை. எ-று.

இதன் பயன் இளம்பிள்ளை யென்றவாறு. சந்தனத்தையும் அகிலையும் காடென்று [1]விருத்தியிட்டது; நீ எழுந்தருளி யிருக்கும் அவ்வனத்தில் மற்று விருட்சமில்லை.

-----
[228-1] விருத்தி - சீவிதம்; கவலையின்றிச் சீவிக்கும்படி பெரியோரால் விடப்படும் சருவமானியம்;
"வீடி லைந்தரைக் கோடி விருத்திமே, னாடி யாயிர நாடொறு நங்கைமார்க், காடு சாந்தடி சிற்புற மாக்கினான்" (சீவக. (௨௫௭௭) 2577). பெருங்கதையில் உள்ள 'விருத்தி வகுத்தது' (ப. (௪௨௧) 421) என்னும் பகுதியைப் பார்ப்பின் விருத்தியின் பாகுபாடு விளங்கும்.
-----

229. எப்பயறு மெக்கனியு மெக்கிழங்கு மெத்தேனுந்
[1]தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே.

சுமப்போம் நாங்கள், நினக்குப் பயப்பட்டுத் தேனிலும் ஒரு துளி நக்கோ மென்றவாறு.

-----
[229-1] "வித்தகத்திப்பவள தொப்பையப்பற்கிளைய வெற்றிசத்திக்கரக முருகோனே.” திருப்புகழ், "தத்துவத்துச் செயல்".
-----

230. மிக்கள்ளுங் கறியநந்த மிடாப்பலவுந் தடாப்பலவு
மெக்கள்ளு மொருபிள்ளை மடுத்தாட வெடுத்துதியே.

எ-து : உன் மிடாக்களிலும் அனந்தம் தடாக்களிலும் உலகத்தில் எல்லாக் கறியும் எல்லாக் கள்ளும் பெய்து நீ பெற்ற பிள்ளையொருவற்கு எங்களையிட்டுச் சுமப்பித்துப் போக்குவையே. நாங்களும் நின் ஆக்கினையினாலே கள்ளின் நாற்றமுங் கொள்ளோம்; பசிக்குச் சகிக்கமாட்டாது பிள்ளையாதலிற் பதறியள்ளும், அவன். எ-று.

இந்தப்பிள்ளை மகாதேவர்க்கு விஷ்ணு மோகினியான காலத்திலே அவர் வயிற்றிற் பிறந்த மகாசாத்தரென்று கொள்க. இது வங்கிசத்தாழ்வால் வந்த குணம்.

வேறு.
231. சூரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளையார்படை தொட்டநாள்
ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிறைத்தனம்.

எ-து : சூரபன்மாவான அசுர சேனாபதியுடன் பொருதற்குமேற் செல்ல வஞ்சியென்கின்ற பூமாலை சூடியருளிய சுப்பிரமணியப் பிள்ளையார் தம் வேலைத் தீண்டியருளின நாள் அசுரசேனாபதி பட்டு விழ அவனுடைய [1]குதிரையும் அசுரனுமான இரண்டு வடிவும் அடையத்தின்று அவ்வுடம்பினுதிர வெள்ளத்தையும் இறைத்துக் குடித்தோம். எ-று.

-----
[231-1] இந்நூல், (கசுஉ) 162 - ஆம் தாழிசையையும் அதனுரையையும் அடிக்குறிப்பையும் பார்க்க.
-----

232. அசும்புதூர்வயி றாரமுன்பவர் செற்றதானவ ரற்றநாள்
விசும்புதூர விழும்பிணங்க ணிணங்களூற மிசைந்தனம்.
எ-து : பசை தூர்ந்து உலர்ந்த எங்கள் வயிறு நிரம்பும்வகை ஆகாசத்து வெளியடங்க விழும் பிணங்களின் பிணங்களை ஊறத் தின்றோம், முன்பு சொன்ன பிள்ளையாரே அசுரரைப் பொருத அன்று. எ-று.

அவ்வசுரர் மாவின் இராசாக்களென வுணர்க.

233. அறந்தவாமல யப்பொருப்பி லகத்தியற்கமு தாகநீர்
வறந்தவாரிதி யேழின்மீனு மெடுத்துவாயின் மடுத்தனம்.

அறந்தவா மலயப்பொருப்பில் அகத்திய னென்றதனால், அவன் கடலேழிலும் உள்ள மச்சியங்களை விரோதியேனென்றும், உண்டால் என்னுடைய விரதம் அழியுமென்றும் விட்டான்; கடல் குடிக்குங் கோபம் வரவும் கருத்தில் அறிவு கலங்கிலனென்று கூறியவாறாம்.

வேறு.

234. மிடையப்போய் நரம்புடலும் வெறுந்தலையே தலையாகி
அடையப்போ யடியோமு மாண்டலையா யற்றனமே.

எ-து : சரீரத்தில் மிடைந்துவிற்கும் நீர்மைபோய் நரம்பும் உடலும் அடையப்போய் வெறுந்தலையாய் நாங்களும் நின்னுடைய கோயிற் குருவிகளான ஆண்டலைப் புள்ளானோம். எ-று.

நரம்பும் உடலும் அடையப்போயெனக் கூட்டுக.

235. வற்றியே யுடம்பிழந்தோ மற்றொருமா னிடவுடம்பு
பற்றியே நின்றடியோம் பணிசெய்யப் பணிவாழி.

மற்றொரு மனுஷ்ய சரீரத்தைப் பற்றியுண்டு நின்று நின்பாடு திரிதற்குப் பணித்தருளென்று தேவியை வேண்டுதற்குக் காரணம் அக்காலத்து இராசா மகாவரதனாதலால் மனுஷ்யரைப் பேய் பற்றாதென்பது.

236. வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்ட காபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே.
தண்டகமாவது தொண்டை நாடு; தண்டகாபதி யென்றது தொண்டைநாட்டுக் [1]குளத்துளார் குடிப்பிறந்த பல்லவராயனான நம்பிப்பிள்ளையை யென வுணர்க.

இதன் பயன், [2]வேளாளரை யடையாதார் பசிப்பாரென்பது. வில்லவன் - சேரன்.

-----
[236-1] குளத்துளார் குடியிற் பிறந்த வேளாளர் தொண்டை வளநாட்டில், எயிற்கோட்டத்துள்ள தண்டக நாட்டிலும் புலியூர்க் கோட்டத்துள்ள குன்றத்தூர் நாட்டிலும் பையூர்க் கோட்டத்துள்ள சேணூர் நாட்டிலும் பிற கோட்டங்களுட் சில நாடுகளிலும் உள்ளாரென்று காஞ்சீபுரம் பெரிய நாட்டு மடத்துத் தாம்பிரப் பட்டயப் பிரதி யொன்றனால் தெரியவருகின்றது.
[236-2] வேளாளரை யடையாதார் பசிப்ப ரென்றதனால் அவர்களை யடைந்தவர்கள் பசியாரென்பது பெறப்பட்டது.
இது, "கார்நடக்கும் படிநடக்குங் காராளர் தம்முடைய, ஏர்நடக்கு மெனிற்புகழ்சா லியலிசைநா டகநடக்குஞ், சீர்நடக்குந் திறனடக்குந் திருவறத்தின் செயனடக்கும், பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே" (ஏரெழுபது, (௧௮) 18),
"வாசங்கலந்த மரைநாளநூலின் வகையென்பதென்னை மழையென், றாசங்கைகொண்ட கொடைமீளியண்ணல் சரராமன்வெண்ணெ யணுகுந், தேசங்கலந்த மறைவாணர்செஞ்சொ லறிவாளரென்றிம் முதலோர், பாசங்கலந்த பசிபோலகன்ற பதகன்றுரந்த வுரகம்" (கம்ப, நாகபாசப் (௨௬௩) 263) என்பவைகளாலும் நன்குவிளங்கும்.
-----

237. [1]கட்டரணம் வல்லவனை நடைகொண்டார் காவிரிப்பூம்
பட்டினமும் பாடாதார் பசியன்ன பசியினமே.

இதன் பொருளறிக.

-----
[237-1] கட்டரணம் வல்லவனென்றது வல்லானென்னும் வீரனாக இருத்தல் வேண்டுமென்று தோற்றுகிறது; அவன் வரலாறு ஈட்டி எழபது முதலியவற்றிற் காணப்படும்.
-----

பேய்களின் கனாக்காட்சி.

வேறு.

238. விரைந்திருந்து தின்பதற்கு முண்பதற்கு மேமிகக்
கரைந்திருந்து கண்டுயின்று காணுநற்[1]க னாவமே.

கனாவமென்றது கனாவினையுடையே மென்றவாறு; இதனை, 'இன்னவூரேம் இன்னபுடையேம்' என்றாற்போலக் கொள்க.

இனிப் பசாசுகள் தாந்தாம் காணும் கனாவைச் சொல்லத் தொடங்கின.

-----
[238-1] "நங்கள் கணிதப் பேய்கூறு நனவுங் கனவுஞ் சொல்லுவாம்”, "கனாவுரைத்த பேயினைக் கழுத்தினிற்கொ டாடுமே" (கலிங்க. (௨௧௩, ௨௯௭) 213, 297),
"எனவிளைப்பெ லாம்விளம்ப விரவுகண்ட தொருகனா, நனவெனத் திகழ்ந்ததென்ன வொன்றுநின்று நவிலுமே." (மோகவதைப். (௨௨௬) 226.)
-----

239. கடன்முகந்து தனியெழுந்த முகில்விழுந்த கனவுகண்
டடன்முகந்த திகிரிமொய்ம்ப னமளிமண்டி யறிதுமே.

எ-து : சமுத்திர சலத்தை முகந்தெடுத்ததொரு கருமேகம் தனியே பூமியில் விழுந்ததாகக் கனாக்கண்டு கனா விடுக்கும்படி யுணர்ந்து மேகவர்ண மகாவிஷ்ணுவே யெனவெண்ணி வலியை முகந்தெடுத்த திகிரியையுடைய அழகனை நினைந்து அவனுடைய படுக்கையான திருப்பாற்கடலளவுஞ் சென்றோடி யறிவோம். எ-று.

திகிரி - சக்கரம். 'முகுந்த திகிரிமொய்ம்பன்' என்றால் முகுந்தனும் அவனே, திகிரி மொய்ம்பனும் அவனே; 'ஆயன் சாத்தன்' என்பதைப் போல; முகுந்தன் - விஷ்ணு. இவற்றில் வலியை முகந்தெடுத்த சக்கர மொய்ம்பனென்பது அழகிது. அன்றெனிற் சத்தம் புனருத்திப்படும். கனாக் கனவானபடி : "குறியத னிறுதிச் சினைகெட வுகர, மறிய வருதல் செய்யுளு ளுரித்தே" (உயிர்மயங்கு. (௩௨) 32); இது தொல்காப்பியம்.

240. கடைபயின்ற பவனமண்ட முகடுகொண்ட கனவொடும்
புடைபெயர்ந்து தனிவிரிஞ்சன் முளரிசென்று புகுதுமே.

எ-து : உகாந்தங்களைச் செய்து பழகிய மகாவாதம் ஆகாசத்தின் முகட்டை யிடித்துப் பொடி செய்ததாகக் கனாக்கண்டு இக்கனா விடுக்கப்பார்த் தெழுந்திருந்து தனியே ஓடிப்போய்ப் பிரமாவினுடைய இருப்பான தாமரையிலே சென்று புகுவேம். எ-று.

பவனம் - காற்று. புடைபெயர்தல் - எழுந்திருத்தல். தனியென்றது தனித்தனி கனாக்கண்டு தனித்தனியே போயினே மென்றவாறு. தனி விரிஞ்சனென்று பிரமாவின் மேலே ஏற்றுவாருமுளர்; அது பொருளன்று. முளரி யென்பதனைப் பிரமலோக மெனினு மமையும்.

வேறு.

241. என்றுபேயடைய நின்றுபூசலிட
      விங்குநின்றுபடை போனபேய்
ஒன்றுபேருவகை சென்றுகூறுகென
      வோடிமோடிகழல் சூடியே.

எ-து : இப்பிரகாரமே தேவிக்குப் பசாச கணத்தார்க ளெல்லாம் முறையிட்ட அவசரத்திலே பண்டு இங்கு நின்றும் ஈசுவர னருளால் யுத்தத்துக்குப் போன பேய்ப் படைகளில் ஒன்று அங்கு நின்றும் உவகையாக ஒடித் தேவியுடைய ஸ்ரீபாதங்களை நமக்கரித்து. எ-று.

படைபோகையாவது படையொடு போதல், படைக்குப் போதல், படைக்கட் போதல், படையாய்ப் போதல்; பிறவுமுணர்க. [1]மோடியென்றது பெருமையுடையா ளென்றவாறு; எல்லாரையும் பெற்ற வயிற்றை யுடையா ளென்றுமாம்.

-----
[241-1] மோடென்பதற்கு உயரம், பெருமை, வயிறு என்பன பொருளென்பது இங்கு அறிதற்பாலது; "உயரமும் பெருமையும் வயிறு மோடெனல்.” பிங்கலந்தை, (௪00௧) 4001.
-----

242. இரைத்தகூர்பசி யுழந்தபேய்களினி
      யென்பின்வாருமென முன்புசென்
றுரைத்ததோவதுவு மில்லையோதிரிய
      யாகசாலைபுக வோடவே.

எ-து : தேவியின் ஸ்ரீபாதத்தை நமக்கரித்த பேய் எழுந்து நின்று, பேராசையால் வீங்கிய பசிமிக்கு வருந்திய பேய்களெல்லாம் இனி என்பின்னே வாருமென முன்னேபுக்குச் சொல்லிற்றோ இல்லையோ தெரியாது, பின்னையும் [1]யாகசாலையிற் புக ஓட. எ-று.

இரைத்தல் - வீங்குதல்.

-----
[242-1] யாகசாலை யென்றது தக்கன் யாகசாலையை.
-----

243. ஓடுகின்றதனை நின்றபேய்தொடர
      வோடியோடியுளை யப்பிடித்
தாடுகின்றகொடி மாடமுன்றில்விட
      வையைகண்டருளி யதனையே.

எ-து : சம்பிரமித்து யாகசாலையிற்புக ஓடுகின்ற பேயை நின்றபேய் தொடர்ந்து ஓடிப்பிடித்து வருந்தும்படி மகாகாளி திருக்கோயிற் றிருமுற்றத்துக் கொண்டுவர அதனைத் தேவி கண்டருளி. எ-று.

ஆடுகின்ற கொடிமாடமுன்றில் - திருக்கொடியேறி அசைகின்ற அலங்காரத்தையுடைய வாயில்மாடத் திருமுற்றம்.

244. அஞ்சலென்றுதிரு வாய்மலர்ந்தயனு
      மம்பரத்தவனு மும்பரும்
எஞ்சலின்றியுட னின்றவிந்தபடி
      யெம்படைக்குரைசெய் கென்னவே.

எ-து : அங்கு நின்று வந்த பேயைப் பார்த்துப் பயப்பட வேண்டாமென் றருளிச்செய்து பிரமனும் தேவேந்திரனும் தேவர்களும் குறையாமே நின்று பொருது இறந்துபோனபடியை நம்படைக்குச் சொல்லுவாயாக வென்ன. எ–று.

அம்பரம் - ஆகாசம். எஞ்சல் - குறைதல். அவிதல் - சாதல். செய்க வென்னுஞ் சொல் செய்கென் றாயிற்று, செய்யுளாதலால்; அகரந் திரிந்து உகரமாயிற்று; "வருகென வந்து போகெனப் போகிய, கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்" ((௮ : ௮௨ - ௩) 8 : 82 - 3); இது சிலப்பதிகாரம்.

7. பேய்முறைப்பாடு முற்றிற்று.
--------------

8. காளிக்குக் கூளி கூறியது (245-727).


245. பாவியார்சிறு தக்கனாரொரு பக்கமாய பரம்பரன்
தேவியான்முனி வுண்டுபட்டது கேண்மினென்றது செப்புமே.

பாவியாரென்றதைப் படுத்துச்சொல்லி எளிமையிற் கொள்க. சிறு தக்கனாரென்றது அறிவு சிறிய தக்கனாரென்றவாறு; தக்கன் - தட்சன். ஒருபக்கமென்றது பெண்பக்கமென்றவாறு.

இது சருவலோக மெனினுமாம். ஈசுவரனிடப் பக்கமெனலுமாம். இப்பொருள் நல்லமாகேசுவரம். போதத்தியாக காருணியத்தையுங் கடந்தது இது; இதனை வாதுளமென்னுஞ் சிவாகமத்திற் காண்க. இதுகருதியே ஈசுவரனை நினையாதே ஒருபக்கமென்றது.

இப்பாட்டின் ஈற்றில் 'செப்புவாம்' என்னும் பாடமுமுண்டு.

தக்கன் யாகம்.

246. எல்லைநாயக ராசராச புரேசரீச ரிதற்கெனுந்
தொல்லைநான்மறை நிற்கமற்றொரு கேள்விவேள்வி தொடங்கியே.

எ-து : எல்லையென்பது மனுஷ்ய லோகம். இதற்கு நாயகனான சோழனுடைய இராசராசபுரத்தின் ஈசுவரனான இராசராசேசுவரமுடையார் [1]யாகத்துக்குக் [2]கர்த்தாவெனச் சொல்லுகின்ற புராணவேதங்களான சாத்திரம்நிற்க வேறொரு சாத்திரத்தைப்பற்றி யாகத்தைத் தொடங்கினான் தட்சன். எ-று.

எல்லை யென்றதனால் வரம்புடையார் மனுஷ்யரென வுணர்க. எனவே மனுஷ்யருடைய வரம்பழியாமற் காப்பவன் சோழனென்பது. இதற்குக் காரணம் [3]நரபதியென்னும் பெயருடையனாதல். இதற்கென்றது, [4]"சுட்டு முதலுகர மன்னொடு சிவணி, யொட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே" என்பதனாலும், [5]"னஃகான் றஃகா னான்க னுருபிற்கு" என்பதனாலும் கொள்க. "பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும், பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே" (கிளவி. சூ. (௩௭) 37;) இது தொல்காப்பியம்.

[தொல்லைநான்மறை யென்றது, மாகேசுவர சாங்கிய முதலாக வேதாந்த முட்பட்ட நைஷ்கர்ம்மியசித்தி பிரம்மசித்தி தியானசித்தியான சித்தித்திரயங்களைப் பிடித்து ஞானமீமாங்கிச சாத்திரமாகிய நியாய வைசேஷிகங்களைக் குத்திரவாதமென வேறுபடச் சொலிப்பித்து ஈசுவர னிலனென நிரீசுவர சாங்கியம்பற்றிக் கர்மண்யசாத்திர விவாதத்தாற் றொடங்கினன்; மீமாங்கிசா தரிசனங்களைப்பற்றி வேறொரு வழியான யாகத்தைத் தொடங்கினா னென்றவாறு. இதற்குக் கொடுப்பாரில்லை.]

பிறவும் உணர்க.

எனவே மகாதேவரை யொழிய வேறு யாகஞ் செய்யத் தொடங்கினான் தட்ச னென்றவா றாயிற்று.

-----
[246-1] சிவபெருமான் யாகத்திற்குக் கர்த்தா வென்பதனை,
“புங்கவ ரெவர்க்கு நல்கும் புவிபுக ழவிகொள் வானு, மங்கியின் முதலும் வேள்விக் கதிபனு மளிக்கின் றானுஞ், சங்கரன் றானே வேதஞ் சாற்றுமான் மகத்துக் காதி, யிங்கொரு தேவுண் டென்னி னெழுகென வுரைத்தி மாதோ" (கந்த. ததீசிப். (௧௯) 19),
“எச்சமென யாவர்களு மியம்புவார் மாயவனை, யெச்சவதி பதிசிவனே யெனப்புகலு மெம்மறையும்" (திருநாகைக்காரோணப். புண்டரீகமுனிவர் முதற்காட்சியுரைத்த. (௨௯) 29) என்பவற்றாலு முணரலாகும்.
[246-2] கர்த்தா வெனுந்தெய்வ மம்பலத் தேரிற்க.” காளமேகத்தின் பாடல்.
[246-3] சோழன் நரபதி என்பது இந்நூல் (௨௭௫) 275 -ஆம் தாழிசை உரையாலும் அறியப்படும்.
[246-4] தொல். உருபு. சூ. (௪) 4.
[246-5] தொல். புணர். சூ. (௨௧) 21.
-----

247. கங்கைமாநதி வீழ்புறத்தது [1]கனகலத்தொரு களனிழைத்
தங்கண்வானவர் வருகவென்றனன் முனிவர்தன்படை யாகவே.

எ-து : கங்கா தீர்த்தமான மகா சலம் ஆகாசத்தினின்று முற்பட வந்து விழுந்த விடத்துக்குப் புறமாகக் கனகலமென்னும் பெருமையை யுடைய ஆராமத்தில் யாகத்தானம் சமைத்து அவ்விடத்தே தேவர்க ளெல்லாம் அவிர்ப்பாகங் கொள்ள வருகவென [2]ஆக்வானம் பண்ணினான், முனிவர் தனக்குப் படைத் துணையாக நிற்க. எ-று.

-----
[247-1] "இனிதென விறைஞ்சியே யேகிக் கங்கையம், புனனதி யதனொரு புடைய தாகிய, கனகல மென்பதோர் கவின்கொள் வைப்பிடை, வினைபுரி கம்மியன் விதித்தன் மேயினான்.” கந்த, சாலைசெய். (௮) 8.
[247-2] ஆக்வானம் = ஆஹ்வானம் - அழைப்பு.
-----

248. அழைத்தவானவர் [1]பயணமென்றலு
      மவுணர்நின்றில ராசையால்
இழைத்தயாக விபாகமுற்பட
      வுண்ணலாமென வெண்ணியே.

எ-து : ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் சுவர்க்கத்தில்நின்றும் கனகலபூமிக்குப் பயணமென்னுமளவில் இரணியாட்சன் முதலாகிய தானவதயித்தியரான அசுரர் தங்களுடைய [2]சோணிதபுரத்துநின்றும் புறப்பட்டுப் போந்தார், ரிஷிகளாற் செய்யப்பட்ட யாகத்தில் அவிர்ப்பாகங் கொண்டு அனுபவிக்கலா மென்னும் எண்ணத்தால். எ-று.

இதனாற்பயன், மந்திரங்களால் அழைத்திலர் அசுரரை; அவர் தேவர்கள் பயணத்தால் அறிந்து வந்தாரென்பது.

-----
[248-1] பயணம் பிரயாண மென்பதன் மரூஉ; "பயணநின்றது சொல்லுவாம்" என்பர் பின்னும்; (௨௬௧) 261; "வல்லவலத் திசையாகிற் பொருளே சேரும் வருபயணம் பேர்தலுறும்." துடிநூல்.
[248-2] "அவுணர் கோமான், சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தொடர்ந்து சென்றான்.” கந்த. சாலைசெய். (௪௩) 43.
-----

தக்கன்யாகத்திற்குத் தேவர்முதலியோர் வருகை.

திக்குப்பாலகர்.

249. பாவகாதிகள் லோகபாலர் பரந்துவந்து புரந்தரன்
சேவகாதிகள் போலநாலிரு வேழமேறினர் சேரவே.

எ-து : தேவர்களில் உலோக பாலகரான எண்மரும் எட்டானை மேலேறித் தேவேந்திரனுடைய சேனைத் தலைவரைப்போல வானத்துத் தங்களிற் சேர்ந்து வந்தார்கள். எ-று.

பாவகாதிகள் - அக்கினி தேவன் முதலாக வுள்ளோர்; பாவகன் - அக்கினிதேவன். பாவகாரிகளென்பது பாடமாயிற் பாவஞ் செய்தவர்க ளென்று பொருளாம்.

துவாதசாதித்தர்.

250. திங்கள்வெண்குடை மேலெறிப்ப வருக்கர்பன்னிரு தேரினுந்
தங்கள்வெங்கதிர் நடுவெறித்தன ருடுவெறிப்பொளி தவிரவே.

திங்கள் போலும் வெண்குடை திங்கள் வெண்குடை. அருக்கர் - ஆதித்தர். உடு - நக்ஷத்திரம்.

ஏகாதசருத்திரர்.

251. ஏறுகளிறென வேறியெரிவிழி யீசர்பதினொரு தேசருங்
கூறுபடுபிறை யாறுசுழல்சடை யோடுமுடுகினர் கூடவே.

இதன் பொருளறிக.

அச்சுவினிதேவர்கள்.

252. விண்மருங்கமரர் தம்முடன்பழகி வேள்வியாவுதி யுண்ணவோ
புண்மருந்திட வெண்ணியோகடி தாயுள்வேதியர் போதவே.

ஆயுள் வேதியர் - அசுவினிகள்; இவர்கள் கோயிலார்.

மருத்துக்கள் முதலியோர்.

253. மருக்கணங்களும் விசுவதேவரு மற்றையட்ட வசுக்களுங்
குருக்களும்பிற ருங்கடாவு விமானகோடிகள் கூடவே.

மருக்கணங்கள் - மருத்துக்களும் அவர்கள் கணங்களும்; கணங்கள் கூட்டங்கள். விசுவதேவராவார் பிராமணர் பூசைக்கு முற்பட்டு நிற்குந் தேவர்களுள் அன்னக்கொடியர். அட்டவசுக்களாவார் பஞ்சலோகங்களுங் காத்தற்குரியோர். குருக்கள் - சுக்கிர பிரகஸ்பதிகள். பிறர் - மற்றுந்தேவர்கள். விமான கோடிகளென்றது, கோயிற் பரிகரங்களின் விமானங்களையு முளப்படுத்தி.

இந்திரன்.

254. சோதிநேமியும் வச்ரமாலையு மருளிநின்று துளும்பவே
யாதுகற்பகம் யாதுமேரு வெனத்தெளிந்திலர் யாதுமே.

எ-து : சோதிச்சக்கரமும் வயிரமாலைகளும் தம்மில் மயங்கிச் சோதி விடுதலின் யாது கற்பகம் யாது மகமேருவென யாதும் உணர்ந்திலர். எ-று.

வச்சிரமாலை - இந்திராதிகளின் தோண்மாலை. சோதிச்சக்கரம் - நட்சத்திர தாரகா கணங்களைக் கோத்து நிற்பதொரு மகாசோதி மண்டலம். யாதுமென்பதனை யாருமென்று பாடஞ் சொல்லுவாரு முளர்.

255. வேய்திரைக்கட லேழுமம்புத மேழுமையல் விளைக்கவெம்
மாதிரக்களி றெட்டுமாதி விலங்கலெட்டு மயங்கவே.

வேய் திரைக்கடல் - திரைவேய்கடல். அம்புதம் - மேகம். மேகமேழாவன, காளமேகமே தாளப்பிரியனே காஞ்சனபரியே புட்பதனே வானதனே நிகுசகாயனே மேகநாதனே யென்பன. மாதிரம் - திசை. வெம்மை யானைக்கு அடை. மலையெட்டு மென்றது மகாமேருவின் எட்டுக் கூடங்களை; குலபருவதங்க ளென்றுமாம்.

256. குரத்துரங்கமும் வெய்யகாலு மனத்தின்மையல் கொளுத்தவே
அரக்கர்வெள்ளமு முள்ளதீயு நிகர்ப்பயாரு மயர்ப்பவே.

குரம் - குதிரைக்குளம்பு. துரங்கம் - குதிரை. கால் - காற்று. நிகர்ப்ப - தம்மிலொப்பன. அரக்கர் குழாமும் நெருப்பும் தம்மிலொப்பன, கடுமையும் கொடுமையும்; இதற்கு எல்லாரும் மயங்குவரென்பது பொருள்.

257. [1]மீதுபோநதி யும்பதாகையும் வேறுபட்டில விண்ணிலே
ஆதபத்ரமு மண்டகோளமு மொத்துமம்ம ரளிக்கவே.

மீதுபோம் நதி - ஆகாசகங்கை. பதாகை - கொடி. ஆதபத்திரம் - குடை; இது காரணப்பெயர்; வெயில்நீக்கி என்பது; ஆதபம் - வெயில், த்ரம் - நீக்குதல்; புத்திரசத்தம்போல; புத் - நாகம், த்ரம் - நீக்குதல்; நரகத்தில்நின்றும் பிதாவை நீக்குவான் புத்திரனென்பது பொருள். அண்டகோளம் - பிரமாண்டம். மம்மர் - மயக்கம்.

-----
[257-1] "மங்குறவழ் வெண்கொடியும் வானதியு மணியால், வெங்கதிர்செய் மாடமிசை வேறறியலாகா.” நைடதம், நகரப். (௨௩) 23.
-----

258. விட்டகார்முகில் யாவையாவர் சுரேசரென்று வியக்கவே
இட்டகார்முகம் யாவையாவை யெடுத்தகார்முக மென்னவே.

விட்டகார்முகில் - ஏறி வந்து மீளவிட்டமேகங்கள். சுரேசர் - தேவ ராசாக்கள்; தேவலோகம் பலவென்க; இப்பொருளை வேதத்திலும் உதயணன் கதையிலும் கண்டு கொள்க. எடுத்தகார்முகம் - தேவராசாக்கள் எடுத்த விற்கள்; அவை பொன்னும் இரத்தினமு மெனவுணர்க.

259. அலங்கையிற்படை யுடையநம்பியொ
      டதிர்[1]பயோததி யனையதோர்
இலங்கெயிற்றயி ராபதத்தொடு
      கடிதுவந்தன னிந்திரன்.

எ-து : கலப்பையைக் கையிற்படையாகவுடைய ஸ்ரீபலதேவரையும் பாற்கடலையுமொத்த வெண்ணிறத்தினை யுடைத்தாயிருக்கும் ஐராபதத்தை ஏறிவந்தான் இந்திரன். எ-று.

ஸ்ரீபலதேவருடனே ஒருபாற்கடல் வருவதாயின், அதற்கு எதிர்போதும் வெள்ளானை யென்பது பொருள். இலங்கெயிறு - விளங்குகின்ற கொம்பு; [2]கையும் மத்தகமும் கொம்பும் கலப்பைக்கு ஒப்பென்பது. 'எதிர் பயோததி' எனவும் பாடம்.

-----
[259-1] "உருத்தனித்தனி பாற்கட லொப்பன" ((௨௭௪) 274) என வெள்ளை யானைகளுக்குப் பாற்கடலை உவமை கூ றுவர் பின்னும்.
[259-2] இங்கே கூறிய உவமையைப் பின்வருவனவற்றிலுங் காண்க : "பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சில்" (பெரும்பாண். (௧௯௯) 199),
"உறலூறு கமழ்கடாஅத் தொல்கிய வெழில்வேழம், வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ்சேர" (கலி. (௮ : ௪ - ௫) 8 : 4 - 5),
"யானைத், தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள" (புறநா. (௧௯ : ௯ - ௧௧) 19 : 9 - 11),
"வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோ, லெல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த" (களவழி. (௪0) 40),
"அலப்படை யனைய தூங்குவாய் நெடுங்கை யலைசெவி வாரணம்.” விநாயக. திருநகரப். (௨௧) 21.
-----

பிரமதேவர் வருகை.

260. மைந்தரான சுரேசரோடசு ரேசர்முன்வர மதிமருண்
டந்தணாளனு மலரில்வந்தனன் முனிவர்தன்புடை யாகவே.

அசுரரும் பிரமபுத்திரரா [1]யிருக்கச்செய்தே தேவர்களே மக்களாகியாரெனச் சொல்லியது, வேதஞ்சொன்னபடி அசுரர் செய்தில ரென்பதனால், சுரா ஈசர் = சுரேசர் - தேவேந்திரர். அவர்கள் இரண்டு திறத்தாரும் முன்புவர வந்தான் பிரமன். மலரிலேறுகையாவது புட்பவிமானத்தி லேறுகை. [2]அஞ்சவிமானத்தைத் தவிர்ந்தது, மதிமருண்டு; கடுகவருதற்கு அன்னங்களைப் பூட்டவேண்டும், மலர்பூட்ட வேண்டாவெனக் கொள்க.

-----
[260-1] இருக்கச்செய்தே யென்பது வழக்கில் 'இருக்கச்சே' என வழங்கப்படுகின்றது. இச்சொல் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலும் சிலப்பதிகார அரும்பதவுரையிலும் காணப்படும்.
[260-2] “அன்னத்தே ரேறி யயன்வலப்பாற் கைபோத.” ஆதியுலா.
-----

திருமால்வருகை.

261. ஆதிநான்முக னொடுசுராசுரர் வரவுசொல்லி யமைந்ததோ
சோதிநேமி வலத்தினானொரு பயணநின்றது சொல்லுவாம்.

ஆதிநான்முகன் நான்முகனாதி யென்க.

எ-து : பிரமா முதலியவருடன் கூடித் தேவர்கள் வரவு சொல்லவே இக்காரியம் தீர்ந்ததில்லை; மகாவிஷ்ணுவின் வரவுமுண்டு; அது சொல்கின்றோம். எ-று.

வலத்தினான் வலியனென்றுமாம்.

குதிரைகள்.

வேறு.

262. மரகத மேயென லாய வனப்பின
குரகத மேபதி னாயிர கோடியே.

குரகதம் - குதிரை; குரம் - குளம்பு; கதம் - நடக்கை.

263. ஏறிய தாமிவை போகில மெனவே
கூறிய கற்கிக ளேசத கோடியே.

கற்கிகள் - கற்கியென்னும் வர்க்கக் குதிரைகள். தாமென்றது, இவற்றின் மேலேறின [1]வாசிவாரியர்களை. 'இக்குதிரைகளின் மேலேறுதற்குப் போகிலம் நாம்' என்று அவர்களாற் கூறப்பட்டன நூறுகோடி குதிரைகள்; "ஏவ லிளிவெனக் கண்ணிப் பாகன் மனக்க ணியக்கம் பூண்டமா னத்து.” இஃது உதயணன்கதை.

-----
[263-1] வாசிவாரியர் - குதிரைகளைத் தடுத்து நடத்துவோர்; "வாய்ந்தமா வுகைத்த வாசி வாரியப் பெருமா னெங்கே." திருவால. (௨௯ : ௧௭) 29 : 17.
-----

264. கவனமுவப்பன கரியவனப்பின
பவனம்வியப்பன பற்பல கோடியே.

கவனம் - கால்கொள்கை முதலாயின தொழில். கரியவனப்பின வென்றது கரியவுமாய் அழகியன வென்பது; [1]விஷ்ணுக்கள் தம்மை யொப்பன வென்றவாறு. பவனம் - காற்று.

-----
[264-1] "அல்லையாண் டமைந்த மேனி யழகனு மவளுந் துஞ்ச.” கம்ப. குகப். (௪௨) 42.
-----

265. தரங்க நிரைத்தன தரளநிரைத்தன
துரங்கமெனைப்பல கோடிதொகுத்தே.

எ-து : முத்தை நிரைத்தாற் போன்ற தோற்றத்தை யுடையவாய குதிரைகள் ஒன்றன் பின்னொன்று வாராதே நிரைநிரையாக வருகின்றவை, கடலிற்றிரை அளவுபடாது அமையாது வருகின்றன போலும்; அவை கணக்கின்றிப் பலகோடி யுள்ளன. எ-று.

'தாழநிரைத் தன' என்றுபாடஞ் சொல்லுவாரு முளர்; தரங்கநிரைத்தன தாழவென்று கொள்க; தாழ - தாழ்த்து.

266. வெய்யனசெக்கர் விசும்புவெளுக்கச்
செய்யனவாயிர கோடிதிரண்டே.

செக்கர் விசும்பு - மாலைப்பொழுது.

267. பைத்துர கங்கள் விசித்த படைப்பரி
கைத்துர கங்கள் கலந்திடை யிட்டே.

எ-து : படமுடைய பாம்புகளை வாராக விசித்துக் கட்டப்பட்ட கலனையை யுடைய குதிரைகள் முன்புவந்த குதிரைகளின் இடையிட்டு வந்தன. எ-று.

பரிகை - காவல்.

தேர்கள்.

வேறு.

268. திரையைத்தோய்வன நாலிரு
திசையைச்சூழ்வன சூழ்வரு
சிலையைப்போல்வன தானவர்
திரளைப்போழ்வன வேழ்குல
வரையைப்பாய்வன சூன்முதிர்
மழையைக்கீள்வன கால்கொடு
மதியைக்காய்வன பேரொளி
வயிரத்தேர்சத கோடியே.

திரையைத் தோய்தல் - நீர்மேலோடுதல்; இது நொய்ம்மை. எட்டுத் திசையையுஞ் சூழ்கை; இது கடுமை. சூழ்வருசிலையைப் போல்வன வென்றது ஒரு சக்கரவாள பருவதத்தை ஒரு தேரே அளவொப்ப தென்றவாறு. தானவர் திரளைப்போழ்தல் - அசுரரைக் கெடுக்கை. வரையைப் பாய்கை - மலையைக் கிடாய்போல முட்டுகை; தேர் முட்டும். மழையைக் கீள்கை - கருமுற்றின மேகத்தைப் பிளத்தல்; அவற்றின் செறிவை நீக்குத லெனவுமாம். கால்கொடு மதியைக் [1]காய்வன - தம் உருளையைக் கொண்டு சந்திரவட்டத்தை யொப்பன. வயிரத்தேர் சதகோடியே - வயிரக்கால் சமைத்த தேர் நூறுகோடி.

-----
[268-1] காய்வன - ஒப்பன; காய் உவமவுருபு; "போல மறுப்ப வொப்பக் காய்த்த.” தொல். உவம. சூ. (௧௬) 16.
-----

269. பவனப்போர்விர வாதன
பருவத்தீயுறை யாதன
பரவைக்கால்குளி யாதன
பறியப்பேரிடிபோல்வன
கவனத்தாலெழு வாரிதி
கழியப்பாய்பரி மாவின
கமலத்தோன்முடி தாழ்வன
கனகத்தேர்சதகோடியே.

வாயுவின் பூசலைச் சேராதன; எனவே உகாந்த வாயுவால் அழிக்கப் படாதன. பருவத்தீக்கும் - அப்படியே. கடலிற் றேர்க்கால் புகாதன; எனவே நீர்மேலோடுவன. பறியப் பேரிடி - உலகம் பறியும்படி இடிக்குமிடி; இது தேர் முழக்கம்; "அர்ச்சுனன் தேர் கடலொத்தது; ஆசாரியன் தேர் மழையொத்தது" என்னும் ஒப்புணர்க. ஒருதாவுகையால் எழுகடலையுங் கடக்கவல்ல குதிரைகளாற் பூணப்பட்டன; வாரிதி - கடல். பிரமா நமக்கரிக்கை பிதாத்தானத்தா லெனக்கொள்க. இப்படிப்பட்ட பொற்றேர் நூறுகோடி.

270. கடையிற்காயெரி போல்விரி
கனலிக்கேகுளிர் கூர்வன
கதுவிச்சீதக லாமதி
கருகக்காயுநி லாவின
சடையிற்பாய்புனல் வானவர்
தறுகட்டீயொடு மூள்வன
தமரச்சேனைய றாதன
தரளத்தேர்சத கோடியே.

உகாந்த காலத்தில் ஆதித்தர்களைக் குளிர்விப்பன. சந்திரனைச் சென்று கதுவிச் சீதத்தால் அவனும் கருகும்படி நிலாவிடுவன. சீதத்துக்குக் கருகுகை யாவது, மாம்பூ பனிக்குக் கருகுகின்றது போல்வது. ஈசுவரருடைய திருக்கையில் நெருப்புடன் பகை கொள்வன; இது சீதமிகுதி. ஆரவாரதந்திர மெப்போதும் உடையன. அவை முத்தாற் சமைத்த தேர் நூறுகோடி.

யானைகள்.

வேறு.

271. என்று மாதிர மெட்டினுஞ் சென்றுசென்
      றெவ்வெட் டாவண்டம் யாவுஞ் சுமப்பன
சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய
      சேடன் றெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.

எ-து : உகாந்த காலத்து ரட்சா மூர்த்தியின் யானைகளாதலின் அவனேவலாலே ஓரானையே சென்று எட்டுத் திக்கயங்களாகி உலகடையச் சுமக்கவல்லன; அவை மாய்வனவாதலின். போய்த் தம்மையுடைய விஷ்ணுவின் படுக்கையாக விரும்பின சேடனான மகாநாகம் வந்தெதிர்க்கின் இவையிற்றில் ஓரானை தனியே சென்று சேடன் சுமக்கும் பூமியெல்லாஞ் சுமப்பன. எ-று.

272. விலங்க லேழிற் றடத்துங் குலநதி
      வேலை யேழினு நீர்க்கு விடுவன
பொலங்கன் மேரு கிரிச்சிக ரந்தொறும்
      போக விட்டசிந் தூரப் பொடியன.

எ-து : [1]குலபருவதங்கள் ஏழிலுள்ள தடங்களினின்றும் புறப்படும் குலவாற்றினும் கடலேழினும் நீர்க்குவிடுவன. மகாமேருவின் சிகரந்தோறும் போகச்செய்த சிந்தூரப் பொடியை யுடையன. எ-று.

-----
[272-1] ஹிமவான், மஹாஹிமவான், நிஷதம், நீலி, ருக்மி, சிகரியென மலைகள் ஆறு உண்டென்பதும் அவற்றில் முறையே பத்மை, மஹாபத்மை, திங்கச்சை, கேசரி, புண்டரீகை, மஹாபுண்டரீகையென ஆறு பொய்கைகளுள வென்பதும் சைனநூல் வழக்குக்கள்.
-----

273. மழவிற் பாற்கடல் மாந்தி வளர்ந்தன
      மதத்தி லக்கடற் பான்முடை மாற்றின
முழவிற் பூரித்த கும்ப குடந்தொறு
      மூரி யேழ்கட லுந்தரு மூக்கின.

எ-து : இளங்காலத்திற் பாலாகப் பருகுவது பாற்கடலை. வளர்ந்த காலத்துத் தாம்பட்ட மதத்தினாலே பாற்கடலின் முடைநாற்றத்தை மாற்றின. குடமுழாப்போல விளங்கின கும்பகுடங்கள்தோறுஞ் சிறுதிவலைநீர் விடுமிடத்துக் கடலேழினீரும் ஒருக்காலேபோதவிடும் மூக்கினை யுடையன. எ-று.

[1]கையும் மூக்கும் ஓரிடத்தன வெனவுணர்க. "மழவுங் குழவு மிளமைப் பொருள.” கும்பகுடமென்றது குடங்கவித்தாற் போன்றிருத்தலை.

-----
[273-1] "நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்" (தேவாரம், திருநா. பொது),
"பெயர்க்குறு கால்கள்கை யாகப் பெற்றவு, முயிர்க்குறு நாசிகை யாக வுள்ளவு, மயக்கறு தீயினை வளர்த்து வான்புனல், பயக்குறு முனிவரர் பணிகள் செய்யுமால்" (பிரபு. முனிவர். (௧௩) 13),
"கமழ்கந்தங் கையான் மோக்கு மண்ணா.” திருவானைக்காப். கடவுள்.
[273-2] தொல். உரி. சூ. (௧௪) 14.
-----

274. ஓடு நான்கு பரூஉத்தா ளுடையன
      வுருத்தனித்தனி பாற்கட லொப்பன
கோடு நான்கின செக்கர் முகத்தின
      குஞ்ச ரம்பதி னாயிர கோடியே.

இதன் பொருளுணர்க.

வீரர்கள்.

275. அப்பெ ரும்புர வித்தொகை மேலுநீ
      டாட கக்கொடி யாடுபொற் றேரினும்
எப்பெ ருங்களிற் றீட்டத்தின் மேலினு
      மெண்ணில் கோடிநா ராயண ரேறவே.

மனுஷ்ய லோகத்திலுள்ளா ரெல்லாரும் சோழனைப் போலிருப்பார் அவன் நரபதி யாதலால்; அதுபோல விஷ்ணு லோகத்தா ரெல்லாரும் விஷ்ணுவைப் போன்றிருப்பா ரெனவுணர்க.

276. முகடு விண்ட பழவண்ட கோளமு
      முன்னை மேருவு மிட்டுருக் கிப்பெருந்
தகடு செய்துகொண் டொப்பமு மிட்டன
      சாத்தும் பீதக வாடை தயங்கவே.

முகடு விண்ட பழவண்ட கோளம் - ஆதித்தன் புறப்பட்ட பழமுட்டைப் பிளப்பு; அல்லவாயின் பிரமாண்டம். இரணி பகர்ப்பனென்பது பிரமாவின் பெயர். ஆதித்தன் பிறந்த முட்டையிலே திக்கயங்க ளெட்டும் பின்னைப் பிறந்தன வென்னுங் கதையு முண்டு. அம்முட்டைச் சிவப்பாலே ஆதித்தனைச் செங்கதிரோன் [1]செய்யோனென்பர். "பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற் பூமுதலிருந்த நான்முகத் தனிச்சுடர் வேதம் பாடிய மேதகப் படைத்தன வெண்பெரு வேழம்.” இஃது இரும்பல்காஞ்சி. முன்னை மேருவென்றது, மகா தேவர்க்கு வில்லாதற்கு முன்னை மகாமேரு வென்றவாறு. எனவே வில்லாக்க மகாமேரு சிறிது செதுக்கப்பட்டதென வுணர்க.

-----
[276-1] செய்யோ னென்பதற்குச் சூரியனென்னும் பொருளுண்மையைச்
சீவகசிந்தாமணி, (௨௩௨௨) 2322 - ஆம் செய்யுளின் உரையாலும் அறியலாகும்.
-----

277. பொங்க லங்கல் வருண னுரம்புகப்
      பொருப்பு மத்தந் திரித்த பொழுதெழுஞ்
செங்க லங்கல் பரந்தெனப் பாற்கடல்
      சேப்ப வந்த கவுத்துவஞ் சேர்த்தியே.

பொங்கலங்கல் - பொங்கிய அலங்கல்; என்றது நுரைமாலையை. சேப்ப - சிவக்க.

278. அரிசெய் நாட்டத் தரவிந்த வாணுத
      லம்ம ணிக்கெதி ராகவந் தாகத்தில்
எரிசெய் தாமரைப் பூவிட் டிலையிலே
      யிருந்த தென்ன வெதிர்வீற் றிருப்பவே.

அரி - செவ்வரியும் கருவரியும். நாட்டம் - கண். அரவிந்தம் - தாமரை. வாணுதல் : அன்மொழித்தொகை. இலை மகாவிஷ்ணுவின் திருமேனியிற் சோதிக்கு ஒப்பு; "அக்கமலத் திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே" ((௯. ௭. ௩) 973) என்பது திருவாய்மொழி.

279. காலை சூழ்செங் கதிர்முத லாயின
      கமலக் காடன்ன கண்ணன் கமழ்துழாய்
மாலை சூழ்முடி சூழ்வரு தற்கொளி
      மழுங்கி மேரு கிரிசூழ் வருவதே.

காலை - சிறுகாலை. செங்கதிர் - ஆதித்தன். இது காலையைச் சூழும் கதிரென்றல்லது பொருளாகாது; சூழல் - செய்தல். செங்கதிர் : பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; முதலாயின - வெண்கதிர் முதலியவை. கமலக்காடன்ன கண்ணனென்றது இரண்டு கமலத்தாற்றீரா அழகும் பெருமையும் பிறவுமென வுணர்க. இவன் திருமுடியில் இரத்தினச் சோதியாலே அவை தம்முடைய சோதி மழுங்கின.

280. நதிக்குப் போத வொழுகுமுத் தாரமு
      நகைசெய் வச்சிர நாயக மாலையு
மதிக்குப் புன்மறு வாய்த்தெனத் தன்றிரு
      மரக தப்பெருஞ் சோதிமெய் வாய்ப்பவே.

நதி - ஆறு. [1]ஆற்றுக்குத் தாமம் ஒப்பு. போதவொழுகுதல், [2]மாயோன் மார்பிலாரம் போலவென வுணர்க. நகை - ஒளி. வயிரம் இரத்தினங்களின் நாயகம்; இதற்குக் காரணம் [3]வயிரச் சாணையாலே எல்லா இரத்தினமும் கடையப்படுதல். அன்றியும் [4]வலாசுரன் எலும்பு வயிரமென்பர். இவையெல்லாம் சந்திரனையொத்தன; சந்திரனிடத்து மறுவையொத்தது மரகதச்சோதி. மரகதமென்றது இரத்தினத்தையன்று, திருமேனியை.

-----
[280-1] "இறுவரை யிழிதரும் பொன்மணியருவியி, னிறனொடு மாறுந்தார்" (பரி. (௧௩ : ௩ - ௪) 13 : 3 - 4),
"மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி, அலங்கு மருவி.” (பரி. (௧௫ : ௨0 - ௨௧) 15 : 20 - 21).
[280-2] "மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணிகிள ரருவி.” தொல். பொருள். பேர். மேற்.
[280-3] எல்லா இரத்தினமு மென்றதனால் வயிரமும் கொள்ளப்படும். வயிரம் தன்னையும் ஏனை இரத்தினங்களையும் சாணை பிடித்தற்குக் கருவியாகு மென்பது,
"வயிர வூசியு மயன்வினை யிரும்புஞ், செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியுந், தமக்கமை கருவியுந் தாமா மவைபோ, லுரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே" (அகத்தியம்),
"மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி, யாமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி லேனைக், காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத், தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும்" (திருவிளை. மாணிக்கம்விற்ற. (௬௧) 61) என்பவற்றால் அறியலாகும்.
[280-4] "பரியவா ளென்பு வயிரம்" (திருவால. (௨௫ : ௧0) 25 : 10),
"மாசறு தவத்தோ னென்பும் வலாசுர னென்பும் வீழ்ந்த, கோசல மாதி நாட்டிற் பட்டது குணத்தான் மாண்ட, தேசதா யிலேச தாகித் தெள்ளிதா யளக்கி னெல்லை, வீசிய விலைய தாகி மேம்படு வயிரம்,” (திருவிளை. மாணிக்கம்விற்ற. (௫௯) 59).
-----

281. அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணு
      மாதிக் காதல்கூ ராயிரம் பேரிதழ்
உந்திச் செந்தனித் தாமரை நாண்மல
      ரூடி ருந்த குருசிலோ டோங்கவே.

அந்திச்சேயொளி யென்றது வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. முச்சுடர் முக்கணு மென்றது சோமசூரி யாக்கினிகளாகிய திருநயனங்களை. இம்[1]மூன்று திருக்கண் மலர்க்கும் முற்பட்ட மோகத்தையீந்த தொப்புள் விஷ்ணுவினுடைய திருநாபியாதலால் விஷ்ணுவே சத்தியென வுணர்க. குருசில் - பிரமா.

-----
[281-1] மூன்று திருக்கண்மல ரென்றது, இறைவன் திருக்கண்களை.
-----

282. திறத்து மாலைத் திருமுடிப் பக்கமே
      சென்ற கன்ற பணங்களுஞ் சேடனும்
புறத்து மாயிரம் வெள்ளித ழாலொரு
      புண்ட ரீகமு மண்ணலும் போலவே.

எ-து : [1]திறந்தோறும் ஒரு பூமாலையை யுடைய [2]திருமுடியிடத்தில் விரிந்தகன்ற பணங்களுடன் நாகராசன் கவித்து நின்றபடி, புறம்பும் ஆயிரம் வெள்ளையிதழை யுடையதொரு வெண்டாமரையையும் அதிலிருந்த பிரமாவையும்போல் தோன்ற. எ-று.

சகசிரபத்திரம் ஆயிரம் படத்திற்கும் உவமை. [3]புண்டரீக மென்று வெண்டாமரைக்கே பெயர்.

-----
[282-1] திறமென்றது முடிக்கு உறுப்பாகக் கூறிய ஐந்தனையும். இஃது,
"ஐவே றுருவிற் செய்வினை முற்றிய, முடி" (முருகு. (௮௩ - ௪) 83 - 4) என்பதனாலும்,
"ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய செய்யுந் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற முடி" என்னும் அதன் உரையாலும்,
"தாம முகுடம் பதுமங் கிம்புரி, கோடக மிவைமுடிக் கைவே றுருவே" என்னும் அதன் மேற்கோளாலும்,
"உவமை நீங்கிய வைவகைத் தாயவேற் றுருவின் மவுலி" (கந்த. முதனாட்பானு. (௨௫௨) 252) என்பதனாலும் அறியப்படும்.
[282-2] ஆதிசேடன் வெண்ணிறமுடைய னாதலால் ஆயிரம் படங்களையுடைய அவனுக்கு ஆயிரம் இதழ்களையுடைய வெண்டாமரையையும் அப்படங்களினிடையே தோன்றும் திருமுடிக்குப் பிரமதேவரையும் உவமை கூறினர். பிரமதேவர் வெண்டாமரை மலரிலிருத்தல்,
"சாம வெண்டாமரை மேலயனும்" (திருவக்கரைத் தேவாரம்),
"வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோ, லெம்பெருமான் றேவர்பிரா னென்று" (திருவா. திருத்தசாங்கம், (௧) 1),
"வெண்ணிறக் கமலமேல் வீற்றி ருந்தரு ளண்ணல்" (திருக்காளத்திப். பதிகம், (௧௫) 15),
"புண்ட ரீகமென் பொகுட்டுறை திசைமுகப் புத்தேள்" (திருக்காளத்திப். தாருகாவன. (௭௫) 75) என்பவற்றால் விளங்கும்.
[282-3] புண்டரீகமென்பது வெண்டாமரைக்கே பெயரென்பதனை,
"அன்று தொட்டனைய தீர்த்த மரும்புண்ட ரீக தீர்த்த, மென்றுபேர் புனைந்த தின்னு மெய்ம்மையே யென்றுகூற, வொன்றுவெண் கமலம்பல்ல வுருகெழ வலரா நிற்குங், கன்றுபல் லுயிரு மின்பங் கலவநோக் கிடுக ணல்லாய்" (திருநாகைக்காரோணப். புண்டரீகமுனிவர் மூன்றாங் காட்சியுரைத்த, (௪௭) 47) என்பதனாலும் அறியலாகும்.
-----

283. பெயர்த்த தோரடித் தாமரைத் தாள்விடப்
      பெரும்பொற் கோளகை பண்டு பிளந்ததற்
குயர்த்த தோர்வெள்ளி யண்ட கபாலமொத்
      தொருத னிக்கொற்ற வெண்குடை யோங்கவே.

பொன்னுக்கு ஈடு வெள்ளி. பிளப்பு - தாள்செய்த புழை.

284. திரண்டு வந்த வராமிர்த சீகரஞ்
      சிதற வீசித் திருப்பாற் கடற்றிரை
இரண்டு வந்தன வெங்கும் விடாவென
      விரும ருங்குங் கவரி யிரட்டவே.

வராமிர்தம் - வரிட்டமான அமுது. அமிர்தம் வந்தது பாற்கடலிலல்ல; [1]அமிர்து கடைந்தது லவண சமுத்திரத்தென வுணர்க. அமிர்தம் போலுந் திவலையை வீசியெனக் கொள்க. சீகரம் - திவலை.

-----
[284-1] “நீல மார்கடல் விடந்தனை யுண்டு" (திருப்புன்கூர், தே.),
"வஞ்சக கருங்கடனஞ் சுண்டார் போலும்." (திருவாக்கூர், தே.).
-----

285. வாளும் வில்லுந் திகிரியுந் தண்டமும்
      வளையு மென்ற கிளைபுறஞ் சூழ்வர
ஆளு மைம்படை யும்புடை சூழவந்
      தம்ப ரப்பரப் பெங்கு மடைப்பவே.

எ-து : வாளும் வில்லும் சக்கரமும் தண்டும் சங்குமான பஞ்சாயுதங்களும் புறத்தே சூழ்ந்துவர, அவைகளையுடைய பஞ்சப் பிரதாப தந்திரத்தினால் ஆகாசம் வெளியடங்க. எ-று.

286. வயங்கு மீருரு வண்ணக் கலுழன்மேல்
      வளரும் பாற்கடல் பாழ்பட வந்தனன்
இயங்கு மேரு கிரிச்சிக ரத்திலோ
      ரிந்த்ர நீல கிரிபோன் றிருப்பவே.

வளர்தல் - உறங்குதல். மகாமேருவுக்கொப்புக் கருடபகவான். இந்திரநீலகிரிக்கு உவமை விஷ்ணு.

உமாதேவியார்செயல்.

வேறு.

287. இப்பரிசு வேள்விபுரி தாதைசெய லெல்லாம்
ஒப்பரிய நாயகி யுணர்ந்தன ளுணர்ந்தே.

இதன் பொருளுணர்க.

288. எந்தைபுரி வேள்வியிடை யானும்விடை கொள்ளத்
தந்தருளு கென்றனள் பணிந்திறைவர் தாளே.

இதன் பொருளுணர்க.

289. விண்ணவர்கள் மேலுமயன் மேலுமரி மேலுங்
கண்ணுதன் முதற்கடவு ளுங்கருணை வைத்தே.

எ-து : மேல்வருவன வெல்லாம் உணர்ந்தருளி இந்திராதி தேவர்கள் படக்கடவன உணர்ந்து கண்ணுதல் கருணை வைத்து. எ-று.

290. அழைத்தில னதற்ககல்வ தென்கொலென வையன்
பிழைத்தன பொறுத்தருளு கென்றனள் பெயர்த்தே.

எ-து : விடைதந்தருளுக வென்று தம்மை வேண்டியருளிய பரமேசுவரியை நோக்கி ஈசுவரன், "நின்பிதா நின்னை அழைத்திலன்; அங்குப் போகின்றது என்?” என, பரமேசுவரியும் அவரை நோக்கி, "என்பிதா செய்த பிழையைச் சகித்தருள வேண்டும்" என்றனள். எ-று.

291. என்றலு முகிழ்த்தகுறு முறுவலொடும் ரசதக்
குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.

எ-து : பரமேசுவரி என் பிதாசெய்த பிழையைச் சகித்தருள வேணுமென்ன, இவள்தானே நாம் சகிக்கவொட்டாதே கோபித்திடுவளென மேல்வருவதறிந்து அற்பமே சிரித்தருளி வெள்ளிமலையை யுடையவர் விடை கொடுப்ப அவர்பால் விடை கொண்டாள் பரமேசுவரி. எ-று.

292. பங்கனக லத்திறைவி வேள்விபழு தாகத்
தங்கனக லத்தமர்செய் தாதைமனை புக்கே.

எ-து : ஈசுவரனுடைய [1]திருமார்பிலுள்ள பரமேசுவரி விடை கொண்டு போய்த் தட்சனுடைய மனையிலே புக்கருளினாள். எ-று.

பங்கன் - ஸ்ரீமங்கலிபங்கன். இதன்பயன் : ஈசுவரன் தனக்கு ஒருவடிவுடையனல்லன்; பரமேசுவரியுடைய திருமேனியிற் பாதியே அவனென்றவாறு. வடிவுடைய மங்கை யென்பது பரமேசுவரியின் பெயர்; அஃது அழகைப்பற்றின் துரோகமாம்; ஆதலால் தோற்றப்பட்ட ரூபமெல்லாம் பரமேசுவரியின் வடிவெனக் கொள்க; எனவே தோற்றாதன வெல்லாம் ஈசுவரன் வடிவென வுணர்க.

-----
[292-1] "மெல்லியலைமல்லற் றன்னிற மொன்றி லிருத்திநின்றோன்.” திருச்சிற். (௫௮) 58.
-----

293. காதலனை விட்டவ ளெழுந்தருள வுங்கண்
டேதில ரெனத்தம ரிருந்தன ரிருந்தே.

'காதலனைவிட்டு' என்றதனால் உமை ஒரு முகூர்த்தமும் இறைவனைப் பிரியாளென வுணர்க.

இதன்பயன் : [1]"ஒருபக்கமாய பரம்பரன்றேவி" என்ற முன்னைப்பாட்டின் பொருளை விளக்கியவாறு. இதனாலே சகத்தில் வடிவெல்லாம் பரமேசுவரி வடிவும் அல்லாத வடிவெல்லாம் பரமேசுவரன் வடிவுமெனக் கொள்க.

-----
[293-1] (௨௪௫) 245 - ஆம் தாழிசை.
-----

294. தன்னையிகழ் தாதையொடு தங்கைய ரொடுந்தன்
அன்னையை முனிந்துலகி னன்னையருள் செய்வாள்.

தங்கைய ரென்றது பிரமாவினுடைய தேவிமாரான இருபத்தெண்மரையும் பிறரையும். உலகினன்னை யெனவே தட்சனுக்கும் [1]வச்சலப் பிராட்டிக்கும் இவள் தாயென வுணர்க.

-----
[294-1] வேதவல்லி யென்று வேறு நூல்கள் கூறும்.
-----

வேறு.

295. பின்னோர் பெறுங்கண் பெறேஎன்
என்னோ விவன்பட்ட தின்றே.

எ-து : என் தங்கைமார் இவனாற் பெற்ற அனுக்கிரகம் பெறேன். இவன் என்பட்டானோ வெனத் தன் பிதாவைப் பரமேசுவரி நினைத்தனள். எ-று.

கண்ணென்றது கண்ணோட்டம்; [1]"கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார், கண்ணோட்ட மின்மையு மில்." தங்கைமாரிலும் என்னை யிகழ்ந்தது என்னென்பதற்குப் பொருள் [2]மூத்தாரைப் பிதா விரும்பலும் இளையாரைத் தாய் விரும்பலும் உலக வழக்கென வுணர்க. பெறேனென்ற விடத்து அளபெடையிட்டு ஓசைகூட்டிக் கொள்க.

-----
[295-1] குறள், (௫௭௭) 577.
[295-2] "பெற்றவ ளிளவ லெற்கே யென்றனள் பிதாமுன் சென்றான்” (கம்ப. மிதிலைக். (௧௨௧) 121),
"மூத்தமக னிடத்தார்வ மீன்றெடுத்த பிதாவினுக்கு முதிரும்.” (விநாயகபு, கடவுள். (௬) 6).
-----

296. இழைப்பா யிழைப்பா யினியாகம்
பிழைப்பாய் பிழைப்பாய் பிதாவே.

பிதாவென்றது கோபமென வுணர்க.

297. யாயுங் கொடியேற் கிரங்காய்
நீயுங் கெடவோ நினைப்பே.

நீயுமென்றதற்குப் பொருள் : பெண்பிறந்தார் தாய்மாராலே சினேகிக்கப்படுத லொருதலையென்பது.

298. எங்கை மீரே னென்கிலீர்
நங்கைமீ ரீதோ நலனே.

எ-து : என்னுடன் பிறந்து எனக்கு இளைய தங்கைமீர், நுமக்கு நலம் இதுவோ? எ-று.

நங்கைமீரீதோ நலனேயென்றது பிராமணிகாள்! உறவிலீரென்ற வாறு.

299. எம்படைப்புத் தானும் யாயுங்
கும்பிடப் போலுங் குறிப்பே.

எ-து : எங்களுடைய படைப்பு எனக்குப் பிதாவான தானும் எனக்குத் தாயானஅவளுமானால் தங்களை நமக்கரிக்கவோ? எ-று.

இஃது இப்பொழுது புகுந்ததல்ல; தட்சன்வரப் [1]பண்டு பரமேசுவரி நமக்கரியா தொழிய அவன் இகழ்ந்த கதை.

-----
[299-1] இவ்வரலாறு கந்தபுராணம், தக்கன்கைலைசெல் படலத்தி லுள்ளது.
-----

300. தந்தையார் தாயார் தலைவருக்
கெந்தையார் யாயா ரெமக்கே.

இதன் கருத்து : ஈசுவரனல்லாத எல்லாரும் தகப்பனும் தாயுமுடையர்; நாமகோத்திரங்களையு முடையர். மகாதேவர்க்கோ அக்கினி கோத்திரந்தான் சொல்லலாவது.

301. எனக்கு மெவற்கு மிறைவன்
தனக்கு மெவனோ தவறே.

எனக்கென்றது, லோகத்துக்கு முற்பட்டது பிற்பட்டது தெரியாதே என்றும் மயக்கிவருகிற மாயாசத்தியான எனக்கென்றவாறு. எவற்கு மிறைவனென்றது யாவர்க்கு மிறைவனென்றவாறு;
"ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப" (பொருளியல், சூ. (௨௮) 28), "இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு, முரியவை யுரிய பேர்வயி னான" (பெயரியல், சூ. (௭) 7); இவை தொல்காப்பியம்; இச்சூத்திரங்களால், எவள், எவர், எது, எவை; யாவன், யாவள், யாவர், யாது, யாவையென எல்லாங் கொள்க. எவனோ வென்றது என்னோ வென்றவாறு. எவனோதவறு - குற்றமில்லை; எங்களுக்கு முதலிகளுளரோ குற்ற முண்மையாய வென்பது கருத்து;
[1]"தானே யுலகாள்வான் றான்கண்ட தேவழக்காம், ஆனான்மற் றாரிதனை யன்றென்பார் - வானோர், களைகண்டா னாய்நின்ற காளத்தி வாழ்வான், வளைகொண்டான் மாலை கொண்டு வந்து”; இது நக்கீரர் வாக்கு; இஃது ஒருதலைக் காமக் கைக்கிளைப் பொருளதென வுணர்க. இதனால் யாகமழித்தற் கிஷ்டமென்பதை உணர்த்தினா ளாயிற்று. இது நாடகாலங்காரம்.

-----
[301-1] கைலைபாதிகாளத்திபாதியந்தாதி, (௮௨) 82.
-----

302. இரையாசை யால்வந்த யஞ்ஞா
உரையா யுறுமோநின் னூணே.

இரையாசை - ஊணாசை. யஞ்ஞன் - அக்கினி.

இப்பாட்டு அக்கினி பகவானை நோக்கிக் கூறிற்று.

303. வான்வந்த மண்வந்த வேள்விக்
கியான்வந்த வெளிவந்த வாறே.

எ-து : தேவர்களும் பூமியும் ஒக்கப்புகுந்த யாகத்துக்கு யான்வர எளிவரவும் உடன் வந்தது என்னே! எ-று.

வான் மண்ணென்பன ஆகுபெயர்; பிறந்தவழிக் கூறல்.

304. தீக்குப் பிறந்தவில் லென்னும்
வேய்க்குச் சிறப்பென்கொல் வேறே.

இப்படி இவ்யாகத்துக்கு யானும் நெருப்பு; வேய் இதற்கு உவமை; அவ்வேய்கள் தாமே தம்மில் தேய்த்துத் தீயை யெழுப்புகையா னென்று எச்சங் கொள்க;
"வையெயிற், றரிமதர் மழைக்க ணம்மா வரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே" ((௩௪௯) 349); இது [1]புறம்புநானூறு.

-----
[304-1] புறம்புநானூறு - புறநானூறு.
-----

305. இவ்வா றுரைத்திங்கு நின்றுஞ்
செவ்வாய் மடப்பாவை சென்றே.

இதன்பொருளுணர்க.

306. விற்சாரு மேருப் பொருப்பின்
பொற்சாரல் சாரப் புகவே.

விற்சாரும் - வில்லைச்சாரும், வில்லாகச்சாரும். பொற்சாரல் - அழகியசாரல்; இதற்கு அழகு ஸ்ரீகைலாசத்தைச் சேர்தலால் எல்லாரும் நன்மை பெறுவரென்பது. பொன்னென்பது வெள்ளி யுலோகத்திற்கும் பெயர்.

வேறு.

307. விதிநன்கமைத்து வழிபாடுசெய்து மடவாயமாகி மிடையும்
பதினெண்கணத்து மடவாருமன்னை முனிவாறுமாறு பகர்வார்.

எ-து : இன்னார் இன்ன பணி செய்கவென்னத் தரத்துக்குத் தக்கபடி விதித்தமைக்கப்பட்ட விளையாட்டுக் கூட்டமான பதினெண்கணத்துத் தெய்வப்பெண்களும் பரமேசுவரியுடைய கோபமாறும்படி விண்ணப்பஞ் செய்வார். எ-று.

வேறு.

308. விழிவழிகருணைப் பச்சைவிளக்கே மின்னேநின்
வழிவழியடியே நீரரமகளி ரோம்யாமே.

விழிவழிகருணை - திருநயனத்தைக்கருதி இடங்கொள்ளாது வழிந்து புறப்படும் காருண்யம்; பச்சை விளக்கு: அபூதம். மின்னென்றது இடைக் குவமையல்ல; பிடிக்கப்படாதா ளென்றவாறு. வழிவழியடியே மென்றது நினக்கு வழிவழியடிமையே மென்றவாறு. நீரரமகளிரோ மென்றது திவ்ய நதியிலுள்ளோ மென்றவாறு.

309. இதுதிருமலையிது திருவடிமலர்தோய் மலர்வாவி
இதுதுறைவருமிவ டிருமகளிவள்பார் மகள்பாரே.

திருமலை - வெள்ளிமலை. திருவடிமலர்தோய் மலர் வாவி - மானச தீர்த்தம். இது துறை - இது தேவிக்குத் திருமஞ்சனத் துறை. இவள் திருமகள், இவள் பூமிதேவி; இவர்களைப் பார்த்தருள்.

எனவே திருமஞ்சனமாடும் மானச கோட்டகத்துச் சதுர்வேத தீர்த்தத்துறையில் நின் திருவடி மலர் தீண்டுவாள் லட்சுமி, திருமேனி தீண்டுவாள் பூமிதேவி யென்றவாறு.

வேறு.

310. மேனிற்பன வுலகம்பொதி வெள்ளம்பொதி கள்ளச்
சேனிற்பன விடுநீர்புனை தெண்ணீர்படு சுனையே.

எ-து : உலகத்துக்கு மேல் நிற்பனவாகிய ஆகாசலோக மேழினையும் அடக்கும் உகாந்தப் பிரளயகால வெள்ள மெல்லாவற்றையும் பொதிந்து கொண்டு ஒரு [1]செலுவிலே அடக்கவல்ல மாயச்சேல் பலவும் நிற்பனவாக விட்ட நீங்களிருவீரும் திருமஞ்சனமாடும் தெளிந்த நீரினையுடைய சுனைகள் இவை. எ-று.

இச்சேல்களைப் பரிகரமாகப் பிடித்துவிட்டுவைத்தாள், பரமேசுவரி யெனவுணர்க. புனைதல் - குளித்தல். கள்ளச்சேலென்றது பெருவெள் ளத்தை அடக்கிக் கொள்ளுஞ் சேலென்றவாறு. விடுநீரென்பதற்கு வேறு பொருளுரைப்பாருமுளர்; அது பொருளன்று.

-----
[310-1] செலு - மீனின் புறத்தேயுள்ள முள்;
"உளையாழி யோரேழு மொருசெலுவி னடங்குதலால், விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே" (தொல். செய். சூ. (௧௪௯) 149 - பேர். மேற்.)
"சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்தவுக்ரப், பாழித் திகிரிப் படையாங் கேசர் படைப்பவன்றன், ஊழிப் பொழுதொரு சேலா யொருசெலு வுட்கரந்த, ஆழிப் பெரும்புனல் காணாது தேடுவ ரவ்விடத்தே" (திருவரங்கத்துமாலை, (௨௨) 22) என்பவற்றாலும் மச்சாவதாரத்தின் செலுவில் ஊழிவெள்ளம் அடங்கினமை விளங்கும். செலு செதிளென்றும் வழங்கப்படும்.
-----

311. அடையப்[1]பில நதிகீழ்விழ வண்டத்தடி யிடைபோய்
உடையப்புடை பெயர்வெள்ள முடைத்திக்குளிர் தடமே.

புடை பெயர்தல் - கற்பம் பெயர்தல்.

-----
[311-1] பிலநதி - பாதாள கங்கை; "குதலை மொழியருள் பேதை பிலநதி மட்டுவார் குவளை மதர்விழி மாலை மதியைமருட்டுவா, ணுதலை வழிபடவேகி மறியும் வியப்பொடே நுவலி லளவிலவாகும் வளமலி கச்சியாய்.” சிவஞான பாலையர் பிள்ளைத்தமிழ், முத்தப், (௯) 9.
-----

312. அலரோடளி தோயாதன விவ்வாவி யணங்கே
மலரோனுல கடையப்புடை பெயர்கார்களின் வைப்பே.

கார்களின் வைப்பென்றது, அம்மேகங்களும் அக்காலத்து இங்கே வந்து முகக்குமென்றவாறு; கடலேழும் வற்றினும் இது வற்றாதென்பது.

313. மண்முழுவது மேல்வான்முழு வதுங்கொண்டது போல
வெண்மதிதின பதிதாரகை விழவெழுசா யையதே.

எ-து : பூமி முழுவதுங் கொண்டதுபோல ஆகாசம் முழுவதுங் கொண்டதுபோலச் சந்திரனையும் ஆதித்தனையும் நாண்மீன்களையும் மறைக்கும் நிழலுடைத்து. எ-று.

பூமியை மறைப்பது பரப்பால்; ஆகாசத்தை மறைப்பது நெடுமையால். எழுசாயை - மேலே செல்லும் சோதி.

314. நடுவேவரு நானாவித ரத்னங்களி னான்மேல்
உடுவேய்தரு ககனாகர ரூரொத்துள வொளியே.

எ-து : இத்திருமலையின் நடுப்பட வுண்டான வெகுவித இரத்தினச் சோதிகளால் மேலுள்ள நட்சத்திரங்கள் சூழ்ந்தன, சந்திரர்கள் பலரையும் பரிவேடமிட்டாற் போலும். எ-று.

மேலேசோதி செல்லுதல் இங்குமாம். ககனாகரர் - ஆகாசவிடத்தர்; இவர் சந்திரர். ஊர் - பரிவேடம்.

315. அந்திப்போ தனையானுட னாடுந்திரு வேநின்
னுந்திப்போ திவ்வாவியி னூடேயொரு மலரே.

அந்திப் போது அனையானுடன் - அந்தியம்பொழுதிற் செக்கர் வான நிறத்தை ஒப்பானவனுடன்; ஆடுதல் - அனுபவித்தல்; அன்றியே விளையாட்டென்பாரு முளர்.

நீ விஷ்ணு மூர்த்தியாதலால் நின் திருநாபியிற் பிறக்கும் பிரமாவைப் படைக்கும் தாமரை இவ்வாவியிலுள்ள புட்பங்களில் ஒருபுட்பம்; இதனையே இவ்வொரு பூவென்பாரு முளர்.

316. படைக்குந்திரி புவனம்பின் பாழாக வெழுந்தங்
குடைக்கும்பெரு வெள்ளங்களி னுற்பத்திய தீதே.

உற்பத்தி - பிறப்பு.

317. இவ்வாவியி லிவைசெங்குவ ளைகளேயிவை யிவைநின்
மைவார்திரு நயனங்களின் வலிபட்டன மிகவே.

இதன் பொருளுணர்க.

318. நிரையேறிய குமுதங்களில் வெள்ளென்பன விவைநின்
விரையேறிய திருவாய்மலர் மீதூர்வன வுறவே.

எ-து : நிரைநின்ற அரக்காம்பல்களில் இவைதாம் வெள்ளாம்பல் போன்றன, நின் திருவாய்மலர்ச் சிவப்பைத் தீண்டுவனபோல நின்றன வாதலின். எ-று.

மீதூர்கை - மெய்தீண்டுதல்.

319. வேதங்கவர் கிளவித்திரு மின்னேவிரை கெழுநின்
பாதங்கவர் செந்தாமரை வெண்டாமரை பண்டே.

எ-து : வேதங் கவர்தலாவது இவள் திருவார்த்தைகளை வேதங்கள் கொள்ளை கொள்ளுதல். கிளவி - வார்த்தை. பாதங் கவர்தல் - பாதத்தை விரும்புதல்; [1]"கவர்வு விருப்புமாகும்.”

-----
[319-1] தொல். உரி. சூ. (௬௪) 64, பி - ம்.
-----

320. குளிப்பாரில ரஞ்சாதிது கொண்டோதி முடிக்கட்
டெளிப்பார்கலை மகள்பார்மக டிருவென்பவ ரிவரே.

குளிப்பாரெவரென்று பாடஞ் சொல்லுவாருமுளர்; அது தமிழன்று.

இனி இதிற் குளிப்பவர் நீயும் நின் கணவனுமே. நின்முடியென்று எச்சங்கொடுக்க.

321. அலம்வந்தன வேதங்க ளரற்றத் திருமலையே
வலம்வந்தனண் மழுவார்திரு நெடுமங்கல மகளே.

வேதங்களலம் வந்தது, தேவி பூதலமேல் வருவதையறிந்து. நெடுமை - கால நெடுமை. மகளென்றது மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்றவாறு. முதலடி யிறுதியில் ஐகாரந்தொக்கது.

தேவி கைலைக்குச் செல்லுதல்.

வேறு.

322. என்றென்று வணங்கி வணங்கிவிடா
      தெல்லாரு மிரப்ப விரப்பவதற்
கொன்றுந்தணி வின்றி விரைந்துபிரா
      னுறைகோநகர் புக்கன ளொண்ணுதலே.

இதன் பொருளுணர்க.

தேவி விண்ணப்பஞ்செய்தல்.

323. புக்குப்பெரு மானடி சேவடியிற்
      பொன்மாமலர் கொண்டு புனைந்துபொலஞ்
செக்கர்ச்சடை யானெதிர் நின்றருளிச்
      செய்தாளடை யத்தமர் செய்தனவே.

பெருமானடி யென்றது மகாதேவர் திருநாமம். இதிற் கள்ளென்பது தொக்கதென்பாரும் இல்லையென்பாரு முளர்; [1]"பேய்பேயென்ன வருவாரவரெம் பெருமானடிகளே;" இத்திருப்பாட் டுணர்க. பெருமானும் அடிகளும் அவரே. பெருமா னென்பது பெம்மா னென்றுமாம்; [2]"பிரமபுரத்துறை பெம்மான்" என்னும் ஏகபாதத்திற் கண்டுகொள்க. பெம்மா னென்றது பிராகிருத பாஷை; சிதைந்த தமிழ். பெருமானடி யென்றதில் அடியென்றது முதல்; சேவடி யென்றதில் அடியென்றது திருப்பாதம்.

-----
[323-1] திருஞா. திருக்கடவூர்மயானம், தே.
[323-2] திருஞா. சீகாழி. தே.
-----

தேவியின் சினம்.

324. தாய்தந்தை யெனத்தடை செய்வளினித்
தானேயென வேள்வி தகர்ப்பதுமேல்
நாதன்றிரு வுள்ள மெடுத்திலன்மற்
றதுகண்டு முனிந்தன ணாயகியே.

எ-து : இவ்வார்த்தை கேட்டருளின மகாதேவர் பரமேசுவரியை நோக்கி நாம் கோபிக்கின், தன்னுடைய தாயுந் தந்தையுமென்று சொல்லி நாம் கோபிக்கையை ஒழிக்கவும் வல்லளென நினைத்துத் திருவுள்ளத்தில் எடுத்துக் கொள்ளாதொழிய, பரமேசுவரி மிகக் கோபித்தாள். எ-று.

வேறு.

325. வேலெடுத்தில ரம்புதொட்டிலர் முயலகன்பெரு வெரிந்மிசைக்
காலெடுத்தில ரகிலமுஞ்சுடு கையெடுத்தில ரையரே.

வேல் - சூலம். வெரிந் - முதுகு. முயலகன் முதுகிற் காலெடுத்தல் பிரளயகால தாண்டவமாடல். அகிலமுஞ்சுடு கையெடுத்தல் திருக்கையில் அக்கினியைக் கிளர்த்துதல்.

326. விழித்ததில்லை நுதற்றிருக்கண் மிடற்றிலாலமு மேலெழக்
கொழித்ததில்லை யிருந்தவாவிது வென்றுநாயகி கூசியே.

கொழித்தல் - கிளர்ந்தெழுதல். கூசுதல் - லச்சித்தல்.

இதற்குப் பொருள் என்னை மதித்தருளினா ரில்லை யென்பது.

தேவி பிரிந்துசெல்லல்.

327. கரந்தபாகமு நின்றபாகமும் வேறுகொண்டமை காதலாள்
புரந்தபாகமு மவற்குவிட்டிம யம்புகத்தனி போகவே.

பண்டு ஈசுவரனது திருமேனியிற்புக்கு அடங்கின தன் வலப்பாகமும் அடங்காதே புறம்பு தோற்றிநின்ற தன் இடப்பாகமுமான இவ்விரண்டு பாகத்தையும் ஈசுவரனது திருமேனியினின்று வேறுபடக்கொண்டு மற்றதற்கு அமைந்துபோக நினைத்தாள், பரமேசுவரி.

அமைகாதலாள் - காதலமைந்தவள்; ரமித்த காதலையுடையா ளென்பாருமுளர்; நல்லதறிக. தனிபோக வென்றதன் பொருள், [1]வலப்பாகங் கொண்டுபோகாதே தன் இடப்பாகமே கொண்டுபோனா ளென்பது. இதனாற்பயன் : திருமேனிக்குச் சலனம் பண்ணிலள்.

இது தகுதிமொழி.

-----
[327-1] இங்கே வலப்பாக மென்றது சிவபெருமான் திருமேனியை. இத்தாழிசைக்கு உரையாசிரியர் எழுதியிருக்கும் அரியபொருள் கூர்ந்தறிந்து மிக இன்புறற்பாலது. இக்கருத்தை, "ஒற்றை வார்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்தவெம் புலித்தோலும், கொற்ற வாண்மழுக் கரமும்வெண் ணீறணி கோலமு நூன்மார்புங், கற்றை வேணியுந் தன்னையே நோக்கிய கருணைசெய் திருநோக்கும், பெற்ற தன்வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியு மெதிர்கண்டாள்" (திருவிளை. திருமணப். (௪௨) 42) என்னும் அருமைச் செய்யுள் நன்கு விளக்குகின்றது.
-----

சிவபெருமானுடைய சினம்.

328. விட்டபாகம் வலிந்துகண்டனர் வேறுகண்டிலர் மெய்ப்படப்
பட்டபாக மிரண்டுமங்கவ ரில்லையன்று படாதவே.

எ-து : பரமேசுவரியால் விடப்பட்டுத் தம்முள் புக்க பரமேசுவரியுடைய வலப்பாகமான தம்முடைய பாகத்தை யோகபலத்தாற் கண்டருளித் தம்வடிவு வேறுபட்டுப் பண்டைவடிவு காணாது மெய்ப்படும்படி யுண்டான தம்மிரண்டு பாகமும் கண்டிலர். இவைநிற்க, அன்று மகாதேவர் படாதன இல்லை. எ-று.

மெய்ப்படப் பட்டபாகமிரண்டு மென்றதில், படுதல் கெடுதலாக்கிப் பொருள் கொள்வாரு முளர்.

329. இந்தனாடவி முன்சிவக்க வெரிந்ததொத்த திருண்டதண்
சந்தனாடவி வேறுபட்டது தம்மலைக்குளிர் சாரலே.

எ-து : மரக்காடான விறகுகாடு எரிந்ததொத்தது, திருமலையிற் சீதலமான சந்தனக்காடு; ஸ்ரீகைலாசபருவதச்சாரலும் உட்டினத்தால் வேறுபட்ட து. எ-று.

இந்தனம் - விறகு. இருண்ட சந்தனாடவியென்றது, இருளடரச் செறிந்து தமக்கென விளையாடச் சமைந்த சந்தன நந்தவன மென்றவாறு.

330. பைத்தபூணு முயிர்ப்பழன்றன பண்டையுண்டியு மவ்வழிக்
கைத்ததூழியி லாடுமஞ்சன முங்கிளர்ந்து கனன்றதே.

படமெடுத்திருக்கும் ஆபரணமான மகாநாகங்களும் கோபித்து நிசுவாசங்களை விட்டன; எனவே பண்டு திருமேனியைச் சார்ந்து கோபமும் கொலையும் கொடுமைக்குணமும் ஆசையும் நீங்கி யிருந்தன வெனவுணர்க. பண்டொருகாலம் அமுது செய்தருளிய ஆலகாலமும் திருக்கழுத்தின் வட்டத்திலே நின்று கைத்தது. இதற்குக்காரணம் : திருவமுது கைத்தல் பித்த தோஷத்துக்குப் பால் கைத்தாற்போல; எனவே அவருக்கு அமுதாகிய நஞ்சு கோபத்தாலே கைத்ததென வுணர்க. உகாந்த காலத்தில் திருமஞ்சனமாடக்கடவ உகாந்தாக்கினியும் எழுந்து கோபித்தது. பண்டு நெருப்பு நீராதற்குக் காரணம் : லோகத்தின் வத்துக்களெல்லாம் ஈசுவரன் வேண்டியருளினபோது தம்முடைய குணங்களும் வேறுபடுமென வுணர்க.

331. மதியுமன்றொரு தீவிளைந்து வளைந்துகொண்டது கங்கைமா
நதியும்வீசிய சீகரங்களின் வந்துவந்து நலிந்ததே.

மதியுமென்ற உம்மையால் திருச்சடையில் உள்ள மற்றவையும் கொள்க. கங்காதீர்த்தமும் சிறிது உஷ்ணத்திவலை விட்டதென வுணர்க. சீகரம் - திவலை.

332. சூடுமஞ்சன வாறுசுட்டது கண்ணிசுட்டது பண்டுதாம்
ஆடுமஞ்சன முங்கொதித்த திருப்பரோதனி யையரே.

எ-து : கங்கைசுட்டது; [1]சந்திரன் கொன்றை முதலாயின புட்பங்களும் கொதித்தன. அன்றியே அக்கினி தேவனும் கோபித்தான். இனி மகாதேவரும் கோபியாதே தனியே இருப்பரோ? எ-று.

இக்கவியின் பொருள் விரித்துத்தொகுத்தல்.

ஆடுமஞ்சனம் அக்கினி; [2]"அங்கமே பூண்டா யனலாடினாய்" என்னுந் திருப்பாட்டிற் கண்டுகொள்க. தனியையரென்றது சமானமில ரென்றுமாம்.

-----
[332-1] "மேகமொ டோடு திங்கண்ம லராவணிந்து”, "திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன்” (தேவாரம்) என்பவற்றால் திங்கள் மலராகவும் கண்ணியாகவுங் கூறப்படுதல் அறியற்பாலது.
[332-2] "அங்கமே பூண்டா யனலாடினா யாதிரையா யானிழலா யானே றூர்ந்தாய்.” திருநா. திருப்புகலூர்த் தேவாரம்.
-----

வீரபத்திரதேவர் தோற்றம்.

333. அன்றுவானவ ருய்யவையர் மிடற்றடக்கிய வாலமே
சென்றுவானவ ருயிர்கொளத்திரு வுள்ளம்வைத்தமை தெரியவே.

எ-து : பண்டு தேவர் அசுரர் முதலாக எல்லாரும் எல்லாமும் பிழைக்கத் திருமிடற்றில் அடக்கியருளிய ஆலகாலத்தையே அவர்பட விடவமையுமென்று நினைந்தருளிய குறிப்பை அறிந்தருளி. எ-று.

தெரியவென்றது தெரிந்தென்பதன் திரிபு.

திருமிடற்றுக் கறுப்பொழியின் ஒருவரோடொருவர் உருத்தெரியாது ருத்திரலோகம் கெடுமென நினைத்து வந்து திருமுன்னே நின்றனர், வீரபத்திரரெனக் கொள்க.

334. காலைநெற்றியி னகிலமுஞ்ஈடு கனலிகுறைபட விறைவர்தம்
மேலைநெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே.

காலை - பகல்; நெற்றி - நடு; பகல் நடுவாவது மத்தியான்னம். நெற்றியை முதலெனக் கொண்டு விடிவென்பாரு முளர்; அப்பொழுது உஷ்ணமில்லை. மேலை யென்றது, கண்கள் நிற்கும் நிலைமையைத் தவிர மேலே யென்றவாறு. நெற்றி யென்றது நேரேயான நெற்றி யெனவுணர்க. இது யோகாப்பியாசத்தால் வந்த திருநயன மாதலால் கோதண்டவெளி யென்றும் கோதண்டவெள்ள மென்றும் புருவத்துமேல தென்றும் கூறப்படுவதை ஞான யோகங்களிலும் அட்டாங்க யோகங்களிலும் யோகபட்ச சாத்திரங்களிலும் பிறவற்றிலும் கண்டுகொள்க; "இமையா முக்கண், மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்" ((௧௫௩-௪) 153-4) திருமுருகாற்றுப்படை; இமைத்தகண் விழித்தது போல விழிக்கவெனச் சொல்லியது : விழித்தலாவது பிரச்சுவலித்தல்.

இவ்வவசரத்துக்கு மகாதேவர் திருமுன்னே வந்து நின்றார், மகாவீரபத்திரதேவ ரென்னும் கணநாத ரென்றவாறு; என்றது அநந்தாகமம்; இதனை யுணர்க.

இதனைப்போலும், [1]"கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி, மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி" என்பதும், ஸ்ரீமகாபாரதத்தில் [2]ஸத்தியவதி நினைக்க ஸ்ரீவேதவியாசர் வந்தாரென்பதும்.

-----
[334-1] கலித்தொகை. கடவுள். (௩ - ௪) 3 – 4.
[334-2] "வழுவற மனஞ்செய்யக், கனக்க ருங்குழன் மகிழ்வுற முதற்பெறு காதன்மைந் தனும்வந்தான்" வில்லி. பாரதம், சம்பவச்சருக்கம், (௯) 9.
-----

சிவபெருமான் கட்டளை.

335. நின்றவீரனை மாமன்வேள்வி தகர்க்கவென்று நெடுஞ்சிலைக்
குன்றவீரர் பணித்தலும்பணி யாமல்வந்தன கூளியே.

நெடுஞ்சிலைக்குன்ற வீரர் - மகாமேருவை நெடுஞ்சிலையாகக் கொண்டவர்.

வீரபத்திரதேவர் புறப்பாடு.

336. திரண்டபூத பசாசமாயிர கோடிகோடி திறத்தவாய்
இரண்டுபாலு முடன்செலத்திரு மலைவலஞ்செய் திறைஞ்சியே.

ஆயிரகோடி கோடியென்றது ஆயிரகோடி ஒருதிறனாக வெனவுணர்க; திறம் - தரம். பூதகணம் பதினெட்டுத் திறம்; பசாசகணம் நாற்பத்தெண்ணா யிரந்திறம்; இவற்றைப் பெருக்கிக்கொள்க.

வேறு.

337. உலகு மூழியுங் கொண்ட மைந்ததோர்
இலகு வைதிகத் தேரி லேறியே.

உலகென்ற உவமையால் பரப்பும் சிறப்பும் செறிவும் திண்மையு முதலாயின கொள்க. ஊழியென்ற உவமையால் செல்லும் உலகங்கள் எல்லாவற்றிலும் சென்று உலாவித் தான் அழியாமை நிற்றல் கொள்க. அது காலமென்கிற பொருள்; "கழிந்துவளர் கிழமையி லொழிந்த வூழி, யொன்பதிற் றிரட்டி யொருமுறை செல்ல, நன்கென மொழிவன நான்கே நான்கிலு, முதலது தொடங்கிய நுதல்விழிப் பெரியோன், கடகக் கங்கணப் படவரவு, பூட்டி மலைச்சிலை வளைத்த பொழுதே”; இது மாடலம்.

338. மாக சந்த்ரமண் டலமழுங்கநின்
றேக சந்த்ரமண் டலமெறிப்பவே.

மாகம் - ஆகாசம். ஏகசந்திரமண்டல மென்றது அன்றைக்கன்று பலவாய்த் தோன்றாது ஒன்றியே வட்டப்பட்டு நிற்கும் சந்திரமண்டல மெனவறிக. இது ஆதபத்திரத்தின் பெயர். எறிப்ப - விளங்க.

339. மழைத்த தென்றலால் வாடையால்வகுத்
திழைத்த திவ்யசா மரையிரட்டவே.

மழைத்தல் - தழைத்தல்; சீதலித்தற்கும் பெயர். வாடைக்குத் தழைப்பும் சீதமும் சொல்ல வேண்டா. இழைத்தல் - செய்தல். இழைத்த போலுமென உவமைதொக்கது. திவ்விய மென்றது வீசுவாரைத் தோற்றாதொழிகை.

340. கொள்ளையிற்படுங் குலவராகமான்
வெள்ளெயிற்றுமுத் தாரமின்னவே.

குலவராகமென்றது ஆதிவராகத்தை : இஃது ஒன்று; கொள்ளையிற் படுகையாவது : விஷ்ணுக்கள் பூமி விழவிழ எடுக்குந்தோறும் பிறக்கும் பிறவி ஆயிரத்தெட்டுக் கொண்டது வீரபத்திரதேவருக்கு ஒருநாழிகை யென வுணர்க; "ஊழியூழிக்க ணிருநிலமுருகெழு, கேழலாய்மருப்பி னுழுதோய்" ((௨௩ - ௪) 23 - 4) என்பது பரிபாடல் மூன்றாம்பாட்டு.

வராகமான் - பன்றிமிருகம். இதனையே லிங்கபுராணத்திலேற்றிப் பொருள் கொள்ளினுமாம். முத்துப்படும் அட்டத்தானத்திலும் பன்றியின் கொம்பும் ஒன்றாமெனவறிக. முத்தாரமென்றது முத்தினாற் சமைக்கப்பட்ட ஆரமல்ல; முத்து[1]நிரப்பமென வுணர்க. இஃது ஏகாவலி வடம்.

-----
[340-1] "நிலவிற் கமைந்த நிரப்ப மெய்தி" பெருங். ( ௨. ௬ : ௭௮) 2. 6 : 78.
-----

341. காத்தவாமையோ டுங்கபாலமுங்
கோத்தசன்ன வீரங்குலாவவே.

காத்த ஆமை யென்றது, இரட்சா மூர்த்தியான ஆமை யென்பதல்ல; கடல் கடைகிற காலத்து மந்தர பருவதத்துக்கு அடைகல்லாய் நின்ற கூர்ம ராசன்விழ ஆமை வடிவாய்ப் புகுந்து கடலிலே ஆகாசமேநின்று மந்தர பருவதத்தை முதுகில் தாங்கி ரட்சித்த ஆமையென வுணர்க. கபாலமென்றது பிரம கபாலத்தை. இவையிரண்டும் சன்னவீரம்; வீரக்குறியார மென்பாரும், வாகுவலய மென்பாரும், பதக்க மென்பாரு முளர். அவை பொருளல்ல; வீரசங்கிலிக்குப் பெயர். ஆமையோடும் பிரம கபாலமும் பலவென வுணர்க.

342. வந்தவந்தமா யவர்கண் மாய்தொறுந்
தந்ததந்தசங் கந்தழங்கவே.

ஒற்றைச்சங்கு மகாதேவர் தமக்கே உரியது.

343. திருக்கொண்மார்பன் றிரிவிக்ரமஞ்செய்த
உருக்கொணீள்குரற் காளமூதவே.

எ-து : நாராயணன் உலகத்தைத்தாட்கொண்டு பிரமாண்டத் தளவுஞ்சென்று நெடுகிய திருமேனியைக் காளமாக ஊதிவர. எ-று.

தசை கழன்று எலும்பு நின்றாலும் ஊதலாம்; அன்று காசியபருக்கு அதிதிப்பிராட்டிபால் அவதரித்தருளியது.

344. செய்தவேள்விவா யஞ்ஞர் தஞ்சிரம்
பெய்த சிங்கசின் னம்பிடிக்கவே.

எ-து : பண்டு செய்த அக்கினிகோத்திர யாகத்திடத்து யக்கிஞமூர்த்தியான அக்கினி தேவனுடைய கொம்புகளைச் சிறுசின்னமாகப் பிடிக்க. எ-று.

இது தாருகாவனத்திற் கங்காளவேடம் கொண்ட கதை.

அக்கினி தேவனும் விஷ்ணு மூர்த்தியே. பெய்த [1]சிங்கம் - வரவிட்ட கொம்புகள். இது சிறுதுத்திரி; இரட்டைச் சின்னம்.

-----
[344-1] சிருங்கம் சிங்கமென வழங்கும்; "சிங்க நாதங் கிடந்தசையச் சித்த வடிவா யெழுந்தருளி" திருவிளை. உலவாக்கிழி. (௭) 7.
-----

345. ஓடியோடிவீழ் தருமரூர்தியின்
கோடிகோடிகொம் புகள்குறிக்கவே.

ஓடி ஓடி விழுகையாவது பிறந்திறந்து வருதலும், உதைக்க உதைக்க வீழ்தலும். தருமன் - யமராசன். ரகரவீற்றால் அநந்தகோடி யமராசரைக் கொள்க. தருமர்ஊர்தி - எருமைக்கடா; "நிர்ப்பயமகிஷம்.” இது சூரிய சதகம்.

அவையிற்றின் கொம்புகள் குறிக்குங் கொம்புகள்.

346. கொண்ட சூலவேல் விடுபொறிக்குழாம்
மண்டவானமீ னிரைமயங்கவே.

எ-து : திருக்கையில் எடுத்துக்கொண்டருளிய சூலமான ஓராயுதம் விடுகிற நெருப்புப்பொறிக் கூட்டங்கள் சென்று மண்டுதலால் ஆகாசத்து நட்சத்திரங்கள் மதிமயங்க. எ-று.

347. அற்றவில்லின்வா னடையவுந்திருக்
கொற்றவில்லினாண் விழிகொளுத்தவே.

எ-து : வானிற்சோதி அடையவும் அற்றன, திருக்கொற்றவில்லில் ஏற்றின நாணான பாம்பின்கண் நெருப்புக் கொளுத்த. எ-று.

வில் மகாமேருவல்ல, பினாகம்; வில்லின் நாணும் வாசுகியல்ல, தட்சகன். இப்பொருள் வாதுளதந்திரத்திற் கண்டு கொள்க.

பூதகணங்களின் செயல்கள்.

348. பூதநெற்றியிற் புண்டரம்புகுந்
தியாதுதானர்நெய்த் தோரிழக்கவே.

எ-து : பூதகணநாதருடைய திருநெற்றியில் திரிபுண்டரமிட்ட திருநீறு குழைப்பவேண்டி அசுரர் தங்களுடைய ரத்தங்களையெல்லாம் இழக்க. எ-று.

யாதுதானராவார் அசுரரிலே சிறப்புடையார்; திதியின் மக்கள் யாதுக்களும் தனுவின் மக்கள் தானவருமாகிய அநந்தகோடி அசுரர்கள்.

349. கூளிநாயகக் குலம்விடுந்திருத்
தூளிசாகரா திகள்சுவற்றவே.

கூளிநாயகராவார் பேய்க்கணத் தலைவர்; அவர்கள் ஸ்ரீபாதங்களில் திருத்தூளிக்கே கடல்களேழும் சுவறின.

சாகராதிக ளென்றதனால் [1]சகரர்களால் அகழப்படாத கடல்களுங் கொள்க.

-----
[349-1] சகரர் தோண்டிய கடல் கீழ்கடலென்று பழைய நூல்கள் கூறும்; இதுபற்றியே அக்கடல் தொடுகடலென்று கூறப்படும்; "குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்" (புறநா. (௬ : ௩) 6 : 3) என்பதும் அதனுரையும் இங்கே அறியற்பாலன.
-----

350. ஏனையோரிருந் தினையதென்னவே
சேனைவல்லபஞ் செய்தசெய்தியே.

ஏனையோரென்றது வேறுசிலர்; ஸ்ரீவேதவியாசாதி பிரமரிஷிகள்.

351. கொம்மைமுலைமருங் கெழுவர்குமரிமார்
தம்மையிடுகபே யென்றுசாடியே.

கொம்மை - வீக்கம்; மருங்கு - வீங்கா வெறுமருங்குல்; குமரிமார் - வாழ்க்கைப்படாதார். பேயிடுகவென்றது [1]அமஞ்சி வெட்டிக்கு ஆளிடுக வென்றவாறு.

எனவே, தேவி, நீ ஈசுவரனுடைய திருவுள்ளம் உணர்ந்தருளி முன்னமே படைபோக விட்டருளினாய்; அவற்றில் யானும் ஆளன்றோ வென்பது கருத்து.

-----
[351-1] அமஞ்சி, வெட்டியென்பன கூலியின்றிச் செய்யப்படும் வேலையின் வகைகள்;
"இப்பூங்கோதைப் பூண்டியில் குடிகளை வெட்டியும் அமஞ்சியும் இறையும் எப்பேர்ப்பட்டனவும் கொள்ளப்பெறாதோமாகவும்" (உத்தரமேரூர்ச் சிலாசாஸனம், South Indian Inscriptions, Vol. VI. p. 150),
"இந்நிலத்துக்கு நீர்விலை அந்தராயக் காசென்றும் உப்புக் காசென்றும் வெட்டி அமஞ்சி எச்சோறு கூற்றுநெல்லென்றும் மற்று எப்பேர்ப்பட்டனவுங் கடவனல்லாதானாகவும்” (திருவல்லத்துச் சிலாசாஸனம், South Indian Inscriptions, Vol. VI p.175).
-----

352. படைவிடாவிசும் பாளரைப்பறித்
திடைவிடாவிமா னங்களேறியே.

விசும்பாளர் - தேவர்கள்; விசும்பாளரென்கைக்குக் காரணம் விமான மோட்சத்தலமான ஆகாசத்திலிருக்கை; அதிலிருப்பார் சுவர்க்க வாசிகளிலும் பெரியவரான அகதிக்ஷேத்திரத்தார்; அவர் லோகாக்கிரசித்தரெனச் சொல்லப்படுவார். அவர் படைவிடாமை வீரபத்திர தேவர்க்கல்ல; யாகத்துக்குப் போன தேவர்கட்குக் கூட்டுப் படை விடாதாரென்பது. அவர் படை விடாமைக்குக் காரணம் : ஆகாசத்துக் காணியாளர் அவர்கள்; அல்லாத தேவர்களெல்லாம் புண்ணியத்தால் வலிந்து புகுந்த புகலிகளென வுணர்க. அவர்களைப் பறித்தலாவது அவர்களிருந்த இடத்தைப் பறித்தல்; அவர்களிருந்த இடம் ஈசுவரன் படைக்கு எளிமைப்படும் இடம். இதுவன்றி மோட்சமாவது சாலோக்கிய சாமீப்பிய சாரூப்பிய சாயுச்சியமென்னும் நான்குமே யெனவுணர்க. விமானங்க ளென்றது அவர்களிருப்பான இடங்களையல்ல; அவரவரால் விடப்பட்ட விமானங்களை. இடைவிடா - இடங்கொடாத.

353. இடியிருந்தகட் பதினொரீசர்தங்
குடியிருந்தவூ ரெரிகொளுத்தியே.

இடி - அக்கினி. ஏகாதசருத்திரர் இருந்த ருத்திரலோகத்தை ஊரென்றது. அது மோட்சத்தலத்துக்கு நேரே கீழாக வுள்ளது.

354. அகலிடந்தொழுந் துவாதசாதித்தர்
புகலிடம்பொடி செய்துபோகியே.

அகலிடந்தொழு மென்றதற்கு ஆதித்தியபதத்துக்கு மேலுள்ள ருத்திர லோகத்தார்ஆதித்தனை நமக்கரியா ரென்பது கருத்து.

355. போழுமின்னின்முன் புகுந்தெழுந்துகீழ்
வீழுமுன்பிடித் திடிவிழுங்கியே.

எ-து : மின்மறைவதன் முன்பு புக்கு மேகத்துநின்றுங் கீழ்விழும் உருமேறுகளைப் பிடித்து விழுங்கி. எ-று.

போழ்தல் - பிளத்தல்.

356. பூதம்யாவையும் புகவிழுங்குமா
ஓதம்யாவையுந் தேடியோடியே.

தேடியது, உகாந்த காலத்துப் பிரளயோததி எல்லாப் பொருளையும் மறைத்துக்கொண்டு காக்குமென நினைத்து. ஓடியது இரண்டு தொழில் செய்யமாட்டாமையின்.

வேறு.

357. இந்துகாந்தக் கிரியை யிடக்கணால்
வந்துகாந்தக் கடல்செய்து மாந்தியே.

இந்துகாந்தம் - சந்திரகாந்தம். இடக்கணென்றது சந்திரனான கண்ணை. வந்து - மற்றைக் கண்ணை மறைத்துவந்து.

மலையைக் கடலாக உருக்கி யெனவுணர்க.

வேறு.

358. முதியவானமீன் வாரிமுக்கிவான்
நதியவானமீன் முழுகிநாடியே.

முதியவான மீனாவன பண்டே உண்டாயிருக்கும் நட்சத்திர தாரகா கணமென வுணர்க. வான்நதிய ஆனமீன் - ஆகாசகங்கையில் உண்டான மீன்.

359. கடவுணீலியூர் யாளிகைப்படுத்
தடவிவாரிமால் யானைவாரியே.

அடவி வாரி - அடவியைவாரி, அடவியில் யானைவாரி, அடவியான யானைவாரி யென்பனவும் பிறவும் உள்ளன.

துர்க்காபரமேசுவரி வாகனமான யாளியின மெல்லாம் ஒருவிரோதப் படாமற் பிடித்துத் தம் கைப்பட வைத்தாரெனவறிக.

360. செலல்விலங்குதேன் மடைதெவிட்டியேழ்
குலவிலங்கலும் பாதிகுன்றவே.

செலல்விலங்குதேன் - தன்னைவிட்டுப் போகையை விலக்குந்தேன். இத்தேன்களை மடுத்துத் தெவிட்டினால் அம்மலைமரமும் முழையும் அடிவாரமும் சிகரங்களுமான உறுப்புக் குறையுமாதலிற் குலபருவதங்களும் குன்ற வென்றார். இதனையே தேன்மடை தெவிட்டி அம்மலையை விழுங்குவ ரென்று சொல்வாரு முளர்; அது பொருளன்று.

361. கார்கிழித்தமரர் நாடுகண்டுடன்
பார்கிழித்துரகர் பூமிபற்றியே.

கார்கிழித்து - சுவர்க்கத்தைக் காத்து மூடிக்கொடு கிடந்த மேகங்களைக் கிழித்து. அமரருடைய நாட்டைக் காண்கையாவது அதன் வலியை ஒழித்தல். பூமி நாகலோகத்தைக் காத்தது; மேக அடுப்பமும் பார் அடுப்பமும் ஒத்தன பேய்க்கணங்கட்கு. உரகர்பூமி - பாதாளலோகம். பற்றுதலாவது சுவர்க்கத்தாற் பசி தீராமையின் நாகங்களையும் பற்றித் தின்றன வென்பது.

362. குடத்தெடுத்துநல் லமுதுகொண்டவர்
படத்தெடுத்தசூ டிகைபறித்துமே.

பாதாள லோகத்தைப் பற்றிச்செய்த பணி இதுவென்பது.

குடத்தெடுத்த அமுதாவது தேவர்கள் உண்டு மிஞ்சின அமிழ்து; இது கருடன் கொண்டுபோய் வைத்தது. சூடிகை - முடியின்மணி.

363. கடித்துமென்றுரகர் நஞ்சுகருதியோ
குடித்துமென்றமிழ்து கொண்டுபோயுமே.

கடித்து மென்று என்பன இரண்டும் செய்தென்னும் வினையெச்சம். கருதியோ வென்றது, பாம்பின் விஷம் தங்களை நலியாவாயினும் என்பது. குடித்தும் - குடிப்போம்; உயர்திணைப் பன்மை உளப்பாட்டுத் தன்மைச்சொல்.

வேறு.

364. எழாதவாறு மெழுந்த சுராசுரர்
விழாதவாறும் விசும்பற வீசியே.

முன்னே சிலரை ஆகாசமே போக எடுத்து வீசினால் அவர்கள் பூமியிலே விழுவர். அவர் விழுந்தால் அவர்கள் எழுந்திருத்தல் மரித்து மீண்டு பிறத்தல்; இதற்குப் பரிகாரம், கீழ்விழாதே நட்சத்திரங்களுடன் காணவொண்ணாமல் ஆகாசமேசரித்து அவை மாய்ந்தால் ஒக்கமாயும்படி வீசுகை; அஃதாவது விழாதபடி வீசுகை. 'விழுந்த' என்றபாடமு முண்டு. வீசல் எழுந்தாரை நோக்கிற்று. சுராசுரர் - சுரர் அசுரர்; தேவர்களும் அசுரர்களும். விழாதவாறு விசும்பறவீசி யென்றது : எடுத்துச் சுழற்றி வீசின விசை மேல் ஆகாச முள்ளளவும் செல்ல வீசுதல்; அப்பாற்போம் இத்தனை யல்லது கீழ் விழக் காலம் இல்லை, ஆகாசம் அறாதாதலால். எனவே அவர் விபுத்தியும் சத்தியும் இவ்விரண்டும் கூடின யுத்தி இது. விசும்பற வென்றது விசும்பு அறுவதல்ல; விசும்பற விசை அறுகை யென்றவாறு. இது மந்திரசத்தி. [1]இராமனால் வடக்கு நோக்கிப் போகவிட்ட குரங்கு இன்னும் மீளத் தொடங்கிற் றில்லை யென்னும் பொருள் இது.

-----
[364-1] இச்செய்தி உலகத்தில் எங்கும் வழங்குகின்றது.
-----

365. பேர்த்துநின்ற வயிற்றின் பெருவெளித்
தூர்த்துநின்ற விசும்பெதிர் தோன்றவே.

ஆகாசத்து மிடைந்துநின்ற தேவர்கள் சரீரங்களை அவ்விடத்தினின்றும் வாங்கித் தின்று தங்கள் வயிற்றில் ஒன்றுமின்றி வெளியாகக் கிடந்த பெரும்பாழ்களை அடைத்தன; அடைத்த பின்னை முன்பு தோன்றாதேநின்ற ஆகாசம் இவையிற்றிற்கு எதிராய்த் தோன்றிற்று.

இவர்கள் பரோதார்; ஆகாசம் வயிறெனப்படும் விதூஷகதூஷணநாத ரென்றறிக. இது தந்திரயுத்தி; எச்சமன்று.

366. வருதரைக்குன்று வாழுங் குழிவழி
நிருதரைப்புக நூக்கி நிரப்பியே.

வருநிருதரை யெனக்கூட்டுக. தரைக்குன்று வாழுங் குழி யென்றது பறக்குங் குன்றுகளை நினைத்தென வுணர்க. குழி நிரப்புகையாவது முன்னிற் பாட்டில் ஆகாசத்தை ஆக்கினதுபோல இங்கும் பூமியை ஆக்குகை. மலைக்குச் சமானர் அசுரரென வுணர்க.

வேறு.

367. ஓதமும் பொருப்புமண்ணும் விண்ணுமற்று முள்ளவெப்
பூதமுந்த்ரி சூலமிட் டுடன்கலந்து போதவே.

திரிசூல மென்றது ஒருகழுவல்ல வென்பது. சூலம் - கழு. ஓதம் - சல சாதி. பொருப்பு - பருவத சாதி. மண் - பசு பட்சி நர மிருக சாதி. விண் - தேவ தானவ தைத்திய சித்த வித்தியாதர யட்ச கந்தருவ கின்னர கிம்புருஷ கருடாதியான தேவயோனி. மற்றுமுள்ள எப்பூதமாவன, சக்கரவாளத்துக்கு அப்பாலுள்ள மிலேச்ச கண்டங்களில் கொலைகடியாவாய்ப் புண்ணிய மென்பதை யறியாத பிராணிசாலங்க ளெல்லாம்.

எல்லார் தோள்களிலும் திரிசூலம் இடப்பட்டன.

போத இட்டு என்க.

368. வெம்மையே புரிந்தபே ரலாயுதத்தர் வெள்ளையோர்
தம்மையே யுரித்தமைத்த சட்டைமெய் தயங்கவே.

அலாயுதம் - கலப்பைப் படை. [1]வெள்ளையோர் - பலதேவர்; இவர்கள் அநதருளர், பிறவிதோறும்.

-----
[368-1] "புகர்வெள்ளை நாகர்தங்கோட்டம்.” சிலப். (௯ : ௧0) 9 : 10.
-----

369. துற்றெழுந்த பேய்நிரை துளங்குதம் முடம்புவிட்
டற்றெழுந்த தோன்முழுச் சளம்பமீ தலம்பவே.

துற்று - உண்டு.

பண்டுமெலிந் திருத்தலின் அற்றதோல் உண்டலால் நிறம் பெற்று எழுந்து பருத்துச் சளம்பச்சட்டை இட்டன போன் றன.

370. மலைப்பிடித்த சீயவே றுடன்பிணைத்து வாரிநீர்
அலைப்பிடித்த மீனவேறு பெய்தகா தலைப்பவே.

மலைப்பிடித்த - மலைக்கட்பிடித்த. சீயவேறு - இராசசிங்கம். அலைப்பிடித்த - கடலுட்பிடித்த; ஏழாம் வேற்றுமைத் தொகை. மீனவேறு - ஆண்மீன்; ஏறு - சுறா; கொம்புடை மகரம்.

இவை [1]இரண்டு சாதியையும் ஒன்றாகப் பிடித்துத் தூங்கக் காதுகளில் இட்டன வென்பது பொருள்; மலையினும் கடலினும் உண்டான இரத்தினக் குழை இவை.

-----
[370-1] சிங்கவேறும் மீனேறும் குண்டலங்களாக அணியப்படுதல், இந்நூல், (௧0௬) 106 - ஆம் தாழிசையாலும் அறியப்படும்.
-----

371. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாதுவிஞ்சை மன்னர்பாழ்
வெள்ளிவெற் பெடுத்திடுங் குதம்பைகாதின் மின்னவே.

பள்ளி - கோயில்; "பள்ளி மாட்டும் பற்பல பிறாண்டும்" என்பது உதயணன்கதை. பள்ளி வெற்பு - ஸ்ரீகைலாசம். பாழ்வெள்ளி வெற்பென்பது நாயகமில்லாத வெள்ளிமலை, தன்னரசு நாடாதலால். [1]தென்சேடி வடசேடி யென்னும் வெள்ளிமலை இரண்டும் இரண்டுகாதிற் குதம்பை.

-----
[371-1] தென்சேடி வடசேடி முதலியவை இந்நூல், (௧௯) 19 - ஆம் தாழிசையாலும் அதனுரையாலும் விளங்கும்.
-----

372. குஞ்சிவேர் பறித்தகுண்டர் செம்பொனிற் குயின்றபேர்
இஞ்சிவே ரகழ்ந்துகாதி விட்டதோ டெறிப்பவே.

குஞ்சி - ஆண்மக்கள் தலை மயிர். வேர் பறித்தலாவது மயிரைப் பறித்தல் அல்ல; அலங்காரத்தைப் பறித்தல். எனவே குஞ்சி முதலான அலங்காரம் களைந்தா ரென்க; [1]"குஞ்சியழகு,” [2]"மயிர்வனப்பு" என்பனவும் பிறவும் கண்டுகொள்க. செம்பொனிற்குயின்றபேரிஞ்சி [3]பொன்னெயில் வட்டம்; இஃது அருகதேவருடையது; ஐந்து நூறு யோசனை வட்டமும் நீளமும் உடையது; இதுபோலும் பூதகணநாதர்க்கு ஒருகாதில் ஒலை. வேரகழ்ந்து - அடியை அகழ்ந்து.

-----
[372-1] நாலடியார், (௧௩௧) 131.
[372-2] சிறுபஞ்சமூலம், (௩௭) 37.
[372-3] இது சமவசரணமென்று ஜைன ஸம்பிரதாயத்தில் வழங்கும்.
-----

373. பாரிடக் குலங்கள்பேய் நெடுங்கைகால்க ளிற்படக்
காருடற் சமண்குழா மநேககோடி கட்டியே.

பாரிடக்குலங்கள் - பூதகணங்கள்.

இவற்றோடு பேய்கள் தங்களுடைய நெடுங்கைகளிலும் நெடுங்கால்களிலும் அமணருடைய கூட்டங்களைக் கட்டிக்கொண்டன.

காருடலென்றது [1]குளியாதா ரென்றவாறு. பேய் நெடுங்கை நெடுங்காலெனவே பூதகணங்களுடைய குறுங்கை குறுங்கால்களையுங் கொள்க. இவ்வமணர் பொன்னெயில் வட்டத்திருக்கும் அட்டநேமிநாதர் முதலாயினார்.

-----
[373-1] "மண்ணாவுடம்பு" என்றார் முன்னும்; (௨௧௯) 219;
"அலையாரும் புனறுறந்த வமணர்”, "மாசுகொண்மேனி யமணர்" என்பன தேவாரங்கள்.
-----

374. படர்ந்தபார மேகவர்ந்து தின்றுபாழ் படுத்தின
கிடந்தகுண்டர் மெய்ந்நரம்பு மென்புமே கிடப்பவே.

படர்ந்த பாரமாவது வட்டமே போகப்படர்ந்த அமணர்களினுடம்பு. அவையிற்றை அமுது செய்தன, அவர்களுடைய எலும்பும் நரம்புங் கிடக்க வென்றவாறு.
----------

375. ஏறுநாலு திக்கிலும் புதுப்புலால் கமழ்ந்தெழுந்
தாறுநா லமண்பிணங் கிடந்தெயிற் றலைப்பவே.

புதுப்புலா லென்றது மரித்தபின்னிற் புதுப்புலாலை; எனவே முன்னேயும் புலால் நாறுவ ரென்றவாறு. ஆறுநாலமண் பிணமாவன இருபத்துநாலு தீர்த்தங்கரரு மெனவுணர்க; அவர்கள் : விருஷபர், அஜிதர், சம்பவர், அபிநந்தனர், சுமதி, பத்மப்பிரபர், சுபார்சுவநாதர், சந்திரப்பிரபர், புஷ்பதந்தர், சித்திபட்டாரகர், சிரேயாம்ஸர், வாஸுபூஜ்யதேவர், விமலர், அநந்தஜித் பட்டாரகர், தர்மர், சாந்திநாதர், குந்து பட்டாரகர், அரதேவர், மல்லிஸேன தேவர், சதாநந்ததேவர், நமிபட்டாரகர், அரிட்டநேமி, பார்சுவநாதர், ஸ்ரீவர்த்தமான ரென்பார்.
------------

376. தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே.

தாழி - முதுமக்கட் சாடி; வைகுண்டத்துக்கும் பெயர். தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே [1]ஆசீவகர் பெருமிடாக்களிற்புக்குத் தவம் செய்வராதலின் அவரைச் சுட்டிநின்றது. பாழி - [2]அமண் பாழி. வெறுந் தவமென்றது முதலில்லாத் தவமென்றவாறு. துளப்பு - வயிறு.

-----
[376-1] "தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக, வாழிய நோற்றனை மால்வரையே" (தொல். புறத்திணை. சூ. (௬0) 60. ந.மேற்.) என்பதும் இச்செயலைப் புலப்படுத்துகின்றது.
[376-2] அமண்பாழி - சமணர்கள் தங்குமிடம், அவர்கள் தவஞ் செய்யுங் குகை; "அமணர் சேரும், பாழியு மருகன் மேவும் பள்ளியும்" (பெரிய. திருஞான. (௮௭௧) 871); "எங்குமமணர் பாழிகளாய்" (பெரிய. தண்டியடிகள். (௪) 4).
----------

377. பாலெழுங்கொல் பண்டுபோல வன்றியே பசும்புணீர்
மேலெழுங்கொ லென்றுதேரர் தேவடங்க வெட்டியே.

பாலெழுங்கொல்பண்டு போலவென்றது : "வன்பசிக்கடும்புலிக் குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து" என்றது கவிராசராசன் வாக்கு; "துன்னார்க்கு மீர்ம்பால் சுரந்தான்”; இது குண்டல கேசி. இதனைப்பற்றி ஆட்சேபம். தேரர் - புத்தர். தேவென்பது தேவர்கள்; "ஒன்றுந் தேவு முயிரு முலகும்” ((௪.௧0.௧) 4.10.1) என்பது திருவாய் மொழி. [1]புத்ததேவர்க்குக் கணக்கில்லை; அநந்த புத்தரென்பது அவர்கள் ஆகமம்.

-----
[377-1] 'புத்ததேவர்க்குக் கணக்கில்லை' என்பதை, "இறந்த காலத் தெண்ணில் புத்தர்கள்” (மணி. (௩0 : ௧௪) 30 : 14) என்பதனாலும் அதன் குறிப்புரையாலும் அறியலாகும்.
----------

378. தடந்தொறும் படிந்துகைத்ரி தண்டுமேக தண்டுமாய்
மடந்தொறுங் கிடந்தசோரர் கொத்தடங்க வாரியே.

தடம் - பொய்கை. இதன் கருத்து சந்நியசித்தோ மென்று சொல்லியே குளித்துத் திரிகை. ஏகம் - ஒன்று. திரி - மூன்று. சோரர் - கள்ளர்; என்றது, சாங்கியத்திலும் வேதத்திலும் சைவத்திலும் பௌத்தத்திலும் லோகாயதத்திலும் வாங்கின பொருளை யுடையரல்லது தமக்கென ஒருசமயமும் பொருளும் இலராயிருத்தலின்.
----------

379. வேலைவா யரக்கர்தம்மை மேருவில்லி மஞ்சனச்
சாலைவாய் வெதுப்பிவா ளெயிற்றினிற் சவட்டியே.

வேலைவாயரக்கர் - சமுத்திர ராட்சதர்.

என்றது : அரக்கர்களை, நன்னீரால் உப்புப்பொருளைக் கழுவினதுபோல மகாதேவர் திருமஞ்சனமான வடவாமுகாக்கினியிலே வெதுப்பித் தங்களுடைய வாய்களில் எயிற்றிலிட்டு மென்று குதட்டி. என்றவாறு.

இதிலே அநேகங் காலம் நீரிலே கிடந்தவர்களைச் சிறிது வெதுப்பிக் கொண்ட தெனினுமாம் பற்கூசாமைக்கு.
----------

380. காவிவண்ண னூர்தியுந்த்ரி வேதபோத காரணன்
தூவியன்ன முங்கலந்து சுட்டுவாயி லிட்டுமே.

காவி - நீலோற்பலம்; "காவிநோய் செய்த கருங்கயற்கண் மாதராள்" என்பது சிந்தாமணி. விஷ்ணுக்களின் ஊர்தி கருடன்; கருட லோகத் துள்ளன வெல்லாம் பிடித்துக் கொண்டார். திரிவேத போத காரணனாவான் பிரமா; திரிவேத மென்றது : மூன்றே வேதம்; நாலாவது மந்திர சாகையான அதர்வவேதம்; "திரைவேதா" என்பது ஹலாயுதம். பிரமாவினுடைய வாகனம் அன்னம்; பிரம லோகத் துள்ளனவும் எங்கு முள்ளனவும் கொள்க. கலந்து சுடுதலாவது சூட்டுக்கோலிற் கலந்து சுடுதல்; சுட்டநெருப்பு ஈசுவரனுடைய திருமஞ்சனமென வுணர்க.
----------

381. [1]சங்கெடுத் துடைத்தயின்று தன்றுணைத் தனிப்பெருங்
கொங்குடைச் சரோருகக் கிழங்ககழ்ந்து கொண்டுமே.

எ-து : சங்குச்சாதிகளை எடுத்துத் தகர்த்து உடைத்து அவற்றின் அகத்து இறைச்சிகளைத் தின்று அவையிற்றினுடன் எண்ணப்பட்ட பத்மங்களின் கிழங்கை அகழ்ந்து தின்று. எ-று.

கொங்கு - கந்தம். சரோருகம் - தாமரை.

சங்கின் இறைச்சியும் தாமரைக்கிழங்கு மெனவுணர்க. இவை வைசிரவணன் உலகத்துள்ளன.

-----
[381-1] இதிற் கூறப்படுவன சங்கநிதியும் பதுமநிதியும்.
----------

382. [1]கைவழிக் குலப்பொருப்பொ ரெட்டுடன் கலந்துகொண்
டவ்வழிப் புயங்கமெட்டு மம்புயத் திருத்தியே.

கைவழிப்பொருப்பு ஓரெட்டாவன மகாமேருவின் சிகரங்களாக அதன் எட்டுத் திக்கிலுமுள்ள எட்டு மலைகள்.

அம்மலைக ளெட்டையும் பாம்பையும் கலந்து பிணைத்துத் தங்கள் தோள்களில் ஆபரணமாக இட்டுக்கொண்டா ரென்பது.

புயங்கம் - பாம்பு. அம் புயம் - அழகிய புயம்.

-----
[382-1] மலைகளைப் பாம்புடன் பிணைத்து ஆபரணமாக இட்டுக்கொண்டமை இந்நூல், (௪௧௧) 411 - ஆம் தாழிசையிலும் வந்துள்ளது.
----------

383. நீர்கலக்கி மீனவே றெடுத்தயின்று நீனிறக்
கார்கலக்கி வானவேறு செவ்வியோடு கவ்வியே.

நீரென்றது சலாங்கிச மெல்லாமென வுணர்க. வானவேறு செவ்வியோடு கவ்வுகையாவது நெருப்பு அவியாமற் கவ்வுகை. நெருப்பு அவியின் உருமேறென்னும் பெயர் கெடும்; சுறாவும் செவ்விகெடிற் புன்மீனாம்; உருமேறும் செவ்விகெடின் வெறுமேறாம்.
----------

384. ஆழிமால் வரைப்புறத் திறைத்துவாரி யற்றபின்
பாழிமால் கடற்பெருந் திமிங்கிலங்கள் பற்றியே.

ஆழிமால்வரை - சக்கரவாள வெற்பு. அதற்கு அப்பாலுள்ள சமுத்திர சலங்களை இறைத்து அற்றபின் னென்றது மீனற்ற பின்னை யெனவுணர்க. பாழிமால்கடல் - பெருங்கடல். திமிங்கிலங்கள் - மச்சியராச குலங்கள்; இவையிற்றை [1]யானையை விழுங்கும் மீனென்பர். யானையை விழுங்கும் மீன்கள் இக்கடலிலும் உள; அவை பனைமீனென்றும் யானைமீனென்றும் மோங்கிலென்றும் அனுவிஷமென்றும் பெயருடையன; அவை இவற்றிற்கு எளியனவென வுணர்க.

-----
[384-1] "யானையை விழுங்குமீன் றிமிங்கில மாகும்.” பிங்கலந்தை.
----------

385. அடவிமுற்று மசலமுற்று மவனிமுற்று மதிர்படத்
தடவிமுற்று முயிர்தொலைச்சி வயிறுவேட்கை தணியவே.

தொலைச்சி - விட்டு; உயிர் நித்தியமாதலால் தொலைச்சி யென்றார்.
----------

386. பிடிப்பிடித் துணித்துணிப் பிணிக்கெனப் பெயற்புலத்
திடிப்பிடித் தெருத்திறத் தெயிற்றரைத் திறக்கியே.

எ-து : பிடிப்பிடி முறிமுறி பிணிக்கவெனச் சொல்லும் ஓசை வருஷாகாலத்து இடிஇடித்தாற் போன்று ஆரவாரித்துத் தாங்கள் பிடித்த பிராணிகளுடைய இறைச்சி முதலாயினவெல்லாம் தங்கள் எயிற்றினாலே அரைத்து வயிற்றிலே இழித்து. எ-று.

எருத்திறமென்றது இறைச்சித்திற மெல்லாவற்றையும்; எனவே உயிர்த்திறம் இங்கும் விட்டார்; "எருத்துவ்விய புலிபோன்றன" ((௪ : ௯) 4 : 9 - பி-ம்); இது புறநானூறு.
----------

387. வாலெடுத்து நாகர்தங்கள் திவ்யபானம் வைத்தபொற்
சாலெடுத்து வாய்மடுத்து வெவ்விடாய் தணித்துமே.

வாலெடுத் தென்றதற்குப் பாம்பின் வால்களை யெடுத்த மாத்திரத்திலே அமுதகலசம் எடுக்கலாயின வென்பது பொருள்.
----------

388. கொண்டல்கோ ளறுத்துவான யாறுகோ ளறுத்துமேல்
அண்டகோள கைப்புறத் தறாதநீ ரறுத்துமே.

கோள் - கோட்பாடு. கொண்டல் கோளென்றது [1]மெய்பிறிதா கிடத்தியற்கையானது. வானயாற்றுக் கோளென வேண்டுவதனை வானயாறு கோளென்றது மிகற்கைமருங்கினியற்கை தோன்றுதல். அண்ட கோளகைப்புறத் தறாத நீரென்றது மகாதேவர் திருச்சடாபாரம் போல இந்நீர் அறாததென்றவாறு. இஃது அசூயை போலும்.

-----
[388-1] தொல். தொகை. சூ. (௧௫) 15.
----------

வேறு.

389. மண்ணிற்செந்தீ யடுப்பவுடுப்பல மாய்ந்தன
கண்ணிற்காய்ச்சிக் குடித்தனநாற்பாற் கடலுமே.

பூமியிலுள்ள நெருப்பெல்லாம் நட்சத்திரங்களோடே அற்றன. நாற் பாற்கடல் காய்த்தத் தங்கள் கண்களான நெருப்பைக் கொண்டாரென வுணர்க. மாய்ந்தனவென்னுஞ் சொல்லை நட்சத்திரத்திலும் நெருப்பிலும் ஒக்கக்கொள்க.
----------

390. உயிர்ப்பெரும்பசி தீர்ந்தகொலில்லைகொ லுண்டுவெண்
தயிர்ப்பெருங்கடன் மாய்த்தனபூதவே தாளமே.

இவையெல்லாம் உண்டும் பசிதீர்ந்தனவில்லை யென்பது கருத்து.

தயிர்க்கடல் மாய்க்கையாவது விடாய் மாத்திரம் ஆற்றுகை.
----------

391. அப்புளித்தயிர்க் கடலினுப்புக்கட லடையவே
கொப்புளித்தவை யிரண்டுமொன்றாக்கிக் குடித்தவே.

இக்கதை சொல்லச்செய்தே ஒருபசாசு தயிர்க்கடல் காலப்பழமையாற் புளித்ததன்றோ? குடிக்க அரிதல்லவோ? குடித்தவாறெப்படி யென்ன, இப்பசாசு சொன்னபடி இது.

அப்புளித்தயிர்க் கடலென்றது முன்னஞ் சொல்லப்பட்ட புளித்தயிர்க் கடலை. அதில் உப்புக் கடலைக் கலந்து புளி நீக்கிக் குடித்தன வென்பது.
----------

392. பொய்க்கடற்புறத் தெய்வங்களைப் பொரித் துத்தினா
நெய்க்கடற்பசை யற்றதெங்குண் டினிநெய்யே.

பொய்க்கடற்புறத் தெய்வங்களாவன பரசமய தெய்வங்கள்.

பொரிக்கப் போந்த அத்தனையே நெய்க்கடல்.
----------

393. வடியவாங்கி மடுக்கவெங்கேயுள வந்துதாம்
படியவன்றள றாயினதண்ணீர்ப் பரவையே.

வடியவாங்கி மடுத்தலாவது கைம்மண்டை ஏற்றுக் குடித்தல். அஃதல்லது கடல்கொள்ளும் கலம் பிறிதில்லை. வந்து தாம்படிய - ஒத்துவந்து உடம்பு கழுவ.
----------

394. கருப்புச்சாற்றுக் கடலன்றுபிழைத்ததோ கழுது
விருப்புச்சாற்றிற் குடித்தனகிடந்தன வெடித்தே.

கழுது - பேய். விருப்புச்சாற்றின் - விருப்பமுடைய விழாக்கோள் போல; சாறு - விழா; "சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது" ((௨) 2); இது பொருநாற்றுப்படை. நெட்டெழுத்தும்பர் ஒற்றுமிகத் தோன்றிற்று. வெடித்தல் - கடல்வயிறு வெடித்தல்.
----------

395. மட்பெரும்பழங் கலத்தொடுமடுத்தன வெடுத்துக்
கட்பெருங்கடல் குடித்தனதடித்தன கழுதே.

மட்பெருங்கலம் - பூமி.

எனவே கிராதர் வேட்டைபோய் விடாய்த்து ஏரியில் தண்ணீர் குடிக்கும் தகுதிபோலத் தலைமடுத்துக் குடித்தனவென வுணர்க.

மட்கலமுடிவுணர்க : [1]"ணகர விறுதி வல்லெழுத் தியையின், டகர மாகும் வேற்றுமைப் பொருட்கே”; "மட்கலத் துண்ணு மக்கட் பாக்கியம்”; இஃது உதயணன்கதை. கட்கடல்முடிவுணர்க : [2]"ளகர விறுதி ணகர வியற்றே.” மெய்தடித்தல் விசேஷமென வுணர்க.

-----
[395-1] தொல். புள்ளி. சூ. (௭) 7.
[395-2] தொல். புள்ளி. சூ. (௧0௧) 101.
----------

வேறு.

396. வேலின்மாயன்மாய் வுறவிடும்பலி மேவுநாயகன் விடுபடைக்
காலின்மாய்வன வல்லவோவொரு கையின்மாய்வன கடலுமே.

எ-து : வேலான சூலத்தாலே மாயும்படி விஷ்ணுக்களாலே இடப்பட்ட பலிகொண்டருளிய மகாதேவர் தந்திரமான பூதபசாசுகளின் காலினால் மாயாதிருப்பனவோ, பண்டு அகத்தியனென்னும் ஒரு பிராமணனுடைய ஒருகையிலே மாய்ந்த கடல்களேழும்? எ-று.

விடும்பலியென நரம்புவிட்ட உதிரப்பலி யெனலுமாம்.
----------

வேறு.

397. நதிக ளேழினு முதற்கிரிக ளேழினுமறா
      நளினி யேழினும் வலம்புரியு நல்லனமகோ
ததிக ளேழினு மெடுத்தடைய வுள்ளனவெனுஞ்
      சங்க கோடிகள் குறித்தகில முந்தகரவே.

நதிகளேழாவன கங்கை முதலாயின ஏழாறு. முதற்கிரிகளேழினு மறாநளினி - ஏழுகுல பருவதங்களிலுமுள்ள சுனைகளான தாமரைத் தடாகங்கள்; ஏழுமலைகளையும் கொள்ளின் மலையில் வலம்புரியும் சங்கும் இல்லையென வுணர்க. நளினத்தை யுடையது நளினி; அவிநயத்தால் உடைப்பெயர்ச்சொல் ஈறுதிரிந்தது.

இவையிற்றில் உண்டான நல்ல வலம்புரிகளையும் கடலேழினுமுள்ள சங்கினங்களையும் எடுத்துக்கொண்டு வாய்வைத்து ஊதின அவ்வளவில் எல்லா லோகங்களும் பொடியாயின. இதற்குமுன்னே அவையிற்றிற் சலாங்கிசமான நீர்க்கூறெல்லாம் வற்றக்குடித்துப் பின்பு அங்குக்கிடந்த சங்கினங்களை எடுத்தன வெனக்கொள்க.

இதிலே நல்லனவென்னுஞ் சொல் சலஞ்சலங்களைக் காட்டுமென்பாரும் உளர்; அதன்பயன் அவை தானே முழங்குவன.
----------

398. சக்க ரக்கிரியு மெக்கிரியு மெப்புடவியுஞ்
      சமைய வந்துதக ரத்தழுவி னுந்தழுவுநின்
றக்க ரத்துலகு டைக்கினு முடைக்கு மிதிலோ
      ரலகை யேயென விரிஞ்சனலம் வந்தலறவே.

சக்கரக்கிரி - சக்கரவாள பருவதம். எக்கிரியும் - இவையல்லாத எல்லாப் பருவதங்களும். புடவி - பூமி.

இவையெல்லாம் உடைந்துபோக ஒருகையாலே தழுவினும் தழுவவல்லதாய்த் தழுவினகை தன்னாலே உலகமெல்லாவற்றையும் தகர்க்கவல்லதா யிருந்தது இப்பேய்ப்படையில் ஒருபேயென்று பிரமா துக்கப்பட்டுக் கதறப் படையெழுந்தது.

'இது' என்றது குழாத்தைப்பற்றி. தழுவுகை கையின் நீளம். உடைக்கை தழுவின கையின் தொழில்.

இதிற்போந்த பயன் : தன்னாற் படைக்கப்பட்ட மலைகளும் உலகமும் ஒருபேயின் ஒருகைக்குப் போதவில்லையே யென்பது பிரமாவின் கருத்து. பிரமாவின் படைப்பல்ல பசாசலோகமும் பிரமலோகமும்; அவை இரும்பும் பொன்னுமென வுணர்க; சத்தியும் இப்பெற்றியவே.

இத்தாழிசையில் 'எக்கிரியுமெப்புடவியும்' என்றது சொல்லதிகார உபதேசத்தாலல்லது உணரலரிது.
----------

399. ஓரெ யிற்றினும் வயிற்றினொரு பாலு மிடவே
      யுள்ள தெவ்வுலகு மல்லதொரு பூதமொருபேய்
ஈரெ யிற்றினும் வயிற்றினிரு பாலுமிடவே
      றில்லை யேயென வெறித்தயன் மறித்திரியவே.

ஒருபூதம் ஒருபேயென்றது ஒருபூதத்தினது ஒருபேயினதென்க; ஒருபூதத்துக்கு ஒருபேய்க் கென்றுமாம். வெறித்து - பயப்பட்டு. மறித்திரிதல் - மீண்டுபோகை.
----------

400. சுடர்கிளைத்தனைய செய்யசுரி பங்கிவிரியச்
      சுழல்விழிப்புகை பரந்துதிசை சூழவருபேய்
கடல்குடித்தவனி தின்றுலகு மண்டமுமெழக்
      கதுவுமூழிமுடி விற்கன லெனக்கடுகவே.

எ-து : அக்கினிச்சுவாலை மேனோக்கிப் பல கிளைகொண்டெழுந்தாற் போன்ற சிவந்த இடையிடை சுழன்ற தலைமயிர் விரியவும் எப்பொழுதும் சுழன்றுவரும் கண்களிற் புகை பரந்துவரத் திக்கனைத்தையும் சூழவருவ தொருபேய் உலகத்திற் கடல்களைக் குடித்துப் பூமியைத் தின்று உலகும் அண்டமுமான எல்லாவற்றையும் எரிந்துபோம்படி சுடவல்லதான ஊழி முடிவின் வடவாமுகாக்கினிபோலக் கடுகவர. எ-று.

ஊழிவடிவென்னும் பாடத்திற்கு ஊழிக்கடலின் வடிவென்றும், ஊழிக்கடல் வற்றினவிடத்தென்றும் பொருள் கொள்க.

இது சருவமும் கெடுகை.
----------


This file was last updated on 25 Feb. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)