pm logo

நாயன்மார் கதை (மூன்றாம் பகுதி)
கி.வா.ஜகந்நாதன்


nAyanmAr kataikaL, part 3
by ki.vA. jakannAtan
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

nAyanmAr kataikaL, part 3
by ki.vA. jakannAtan

Source:
நாயன்மார் கதை (மூன்றாம் பகுதி)
கி.வா.ஜகந்நாதன்
அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
சென்னை--18, தேனாம்பேட்டை
உரிமை பதிவு அமுதம் - 216
முதல் பதிப்பு -நவம்பர், 1962
விலை ரூ.2-00
நாஷனல் ஆர்ட் பிரஸ், தேனாம்பேட்டை, சென்னை -18
---------------

முன்னுரை

நாயன்மார் கதையின் மூன்றாம் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனார் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.
பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளை எழுதினாலும், சில இடங்களில் சில கருத்துக் களை விளக்கியிருக்கிறேன்.

அமிர்த வசனி' என்னும் பத்திரிகையில் வந்தவை இந்த வரலாறுகள். அதன் ஆசிரியராகிய திரு சு. முத்துசாமி ஐயரவர்களுக்கு என் நன்றி உரியது.

'காந்தமலை' கி.வா.ஜகந்நாதன்
கல்யாண தகர், சென்னை-28 9-11-62
-------------
பொருள் அடக்கம்

29. ஏயர்கோன் கலிக்காம நாயனார் 46. சத்தி நாயனார்
30. திருமூல நாயனார் 47. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
31. தண்டியடிகள் நாயனார் 48. கணம்புல்ல நாயனார்
32.மூர்க்க நாயனார் 49. காரி நாயனார்
33. சோமாசி மாற நாயனார் 50. நின்ற சீர் நெடுமாற நாயனார்
34. சாக்கிய நாயனா 51. வாயிலார் நாயனார்
35.சிறப்புலி நாயனார் 52. முனையடுவார் நாயனார்
36. சிறுத்தொண்ட நாயனார் 53. கழற்சிங்க நாயனார்
37. சேரமான் பெருமாள் நாயனார் 54. இடங்கழி நாயனார்
38. கணநாத நாயனார் 55. செருத்துணை நாயனார்
39. கூற்றுவ நாயனா னார் 56. புகழ்த்துணை நாயனார்
40. பொய்யடிமை இல்லாத புலவர் 57. கோட்புலி நாயனார்
41. புகழ்ச்சோழ நாயனார் 58. பத்தராய்ப் பணிவார்
42. நரசிங்க முனையரைய நாயனார் 59. பரமனையே பாடுவார்
43. அதிபத்த நாயனார் 60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
44. கலிக்கம்ப நாயனார் 61. திருவாரூர்ப் பிறந்தார்
45. கலிய நாயனார்
----------------------------

நாயன்மார் கதை (மூன்றாம் பகுதி)
29. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

காவிரியின் வடகரையில் பெருமங்கலம் என்று வளம் மிக்க ஊர் ஒன்று உண்டு. அங்கே வேளாண்மை செய்யும் ஏயர் குலம் என்ற ஒரு குலத்தினர் பலர் வாழ்ந்திருந்தனர். அக் குலத்தினர் சோழ அரசர்களின் சேனாபதிகளாக இருக்கும் பெருமை உடையவர்கள்.

அந்தக் குலத்தில் கலிக்காமர் என்பவர் சிறந்த சிவ பக்தராகத் திகழ்ந்தார். திருப்புன்கூர்ச் சிவாலயத்தில் மிகுதியான திருப்பணிகளைச் செய்தவர் அவர். சிவனடியார்களிடம் பெருமதிப்பு வைத்து அவர்களைப் போற்றி வழிபட்டு வந்தார்.

அக்காலத்தில் திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக இறைவன் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் கேட்ட கலிக்காமர், 'நெஞ்சிலே சிறிதும் அச்சம் இல்லாமல் ஒரு பெண்ணினிடம் எம்பிரானைத் தூது விடுவதாவது! இதைக் கேட்டும் உயிர் வாழும் அபாக்கியம் எனக்கு இருக்கிறதே!' என்று வருந்தினார். “இந்தச் செயலைச் செய்தவனுடைய மனம் எவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்! அவனை நான் காண்பேனாகில் என்ன ஆகுமோ, அறியேன்" என்று பொருமினார். அவருடைய சினத்தை ஊரிலுள்ளார் உணர்ந்து கொண்டனர்.

இது சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் எட்டியது. "நான் செய்தது பிழைதான். அவர் என்மேல் கொண்ட சினத்தை மாற்றுவது எப்படி? இறைவனே, நீதான் திருவருள் செய்ய வேண்டும்' என்று அவர் ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டிக் கொண்டு வந்தார்.

இந்த இரண்டு தொண்டர்களுக்கும் இடையே உள்ள பிணக்கைத் தீர்க்க வேண்டும் என்று திருவுள்ளங் கொண்ட இறைவன் கலிக்காமருக்குச் சூலைநோய் வரச் செய்தான். பின்பு அவர் கனவிற் சென்று, "இந்தச் சூலை வன்றொண்டன் வந்து தீர்த்தால் அன்றிப் போகாது" என்று அருளிச் செய்தான். கலிக்காமர், 'இந்தச் சூலை நோயால் வரும் துன்பத்தைப் பொறுத்தாலும் பொறுப் பேனேயன்றி, பெரிய பிழையைச் செய்த வன்றொண்டனால் உண்டாகும் பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற உறுதியோடிருந்தார்.

இறைவன் சுந்தரரிடம், "நம்முடைய ஏவலால் கலிக்காமனுக்குச் சூலை நோய் உண்டாகி யிருக்கிறது. அதை நீ போய்த் தீர்ப்பாயாக" என்று உணர்த்தினான். அதனை உணர்ந்த சுந்தரர், இறைவன் திருவருளை நினைந்து மகிழ்ந்து வணங்கினார். எம்பெருமான் ஏவலின் படியே அவர் புறப்பட்டு விரைந்து சென்றார். தமது வருகையைக் கலிக்காமருக்குச் சொல்லிவிட்டார்.

அது கேட்ட கலிக்காமர்,"ஐயோ! இந்தத் துன்பத்துக்கு என் செய்வேன்! அவன் இங்கே வந்து என் நோயைத் தீர்ப்பதற்கு முன் நான் இறந்து போவது நல்லது. இந்தச் சூலையையும் இதுபற்றியிருக்கும் வயிற்றையும் கிழிப்பேன்" என்று தம் உடைவாளை எடுத்துக் கிழித்துக் கொண்டார். சூலையோடு உயிரும் போயிற்று.

அது கண்டு அவர் தேவியார் தாமும் அவரோடு உயிரை நீக்கத் துணிந்த சமயத்தில், "சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகிறார்கள்" என்று சிலர் வந்து தெரிவித்தார்கள். அது கேட்டவுடன் அப்பிராட்டியார், "இங்கே நிகழ்ந்தது ஒன்றும் அவருக்குத் தெரிய வேண்டாம். யாரும் அழாதீர்கள். அவரை நன்கு வரவேற்று உபசரியுங்கள்" என்று உடனிருப்போரை ஏவினார். அப்டியே அவர்கள் செய்ய, நம்பியாரூரர் உள்ளே போந்து ஓர் ஆசனத்தில் எழுந்தருளி யிருந்தார். "ஏயர்கோனுக்கு வந்த சூலையைத் தீர்த்து அவருடன் சில காலம் இருக்கலாம் என்று வந்திருக்கிறேன். அவரைக் காண வேண்டும்" என்று கூறினார்.

வீட்டில் இருந்த ஏவலாளர்கள் கலிக்காமர் மனைவியாருடைய சொற்படி, "அவருக்கு ஒரு துன்பமும் இல்லை; உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.

சுந்தரர், "ஒரு தீங்கும் இல்லையென்றாலும் என் மனம் தெளிவு பெறவில்லை; ஆகையால் அவரைக் காண வேண்டும்" என்றார். அவர் வற்புறுத்தியதனால் அவரை அழைத்துச் சென்று கலிக்காமர் உடலைக் காட்டினார்கள்.

இரத்தம் சொரிந்து குடல் வெளியே தள்ளி இறந்து கிடந்த ஏயர்கோனைப் பார்த்தவுடன், "ஐயோ! இப்படி ஆகிவிட்டதே!" என வருந்தி, ''நானும் இவர் முன்னே உயிரை நீத்துச் செல்வேன்'' என்று கூறி அந்த உடை வாளைப் பற்றினார். அப்போது இறைவன் திருவருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்து, "நான் நண்பனாகி விட்டேன்" என்று விரைந்து சுந்தரர் கையில் இருந்த வாளைப் பற்றிக் கொள்ள, அப்பெருமான் ஏயர்கோனை வணங்கி அடி வீழ்ந்தார். உடனே வாளை எறிந்துவிட்டுக் கலிக்காமரும் சுந்தரர் காலில் விழுந்து பணிந்தார். இந்த அதிசயம் கண்டு வானவர் மலர் மாரி பொழிந்தனர்.

இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இருவரும் வேறுபாடு நீங்கி உளம் கலந்த அன் புடையவராகித் திருப்புன்கூர் சென்று இறைவனை வணங்கினார்கள்.
---------------

30. திரு மூல நாயனார்

திருக்கைலாயத்தில் நந்தியெம்பெருமானுடைய உபதேசம் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. அவருள் ஒருவர், பொதியில் மலையில் இருந்த அகத்திய முனிவரைப் பார்த்து அவருடன் சிலகாலம் இருந்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தால் புறப்பட்டார். செல்லும் வழியில் திருக்கேதாரத்தை வழிபட்டு, நேபாளத்தில் எழுந்தருளியிருக்கும் பசுபதீசுவரரை வணங்கி, கங்கைக் கரைக்கு வந்தார். அவ்வாற்றில் நீராடிக் காசி விசுவேசரைத் தரிசித்துக் கொண்டு ஸ்ரீசைலத்துக்கு வந்து இறைவனைப் போற்றித் திருக்காளத்திக்குச் சென்று காளத்தியப்பனைத் தொழுது தென்றிசை நோக்கி வந்தார்.

திருவாலங்காடு, காஞ்சீபுரம் என்னும் தலங்களைத் தரிசித்துக் காஞ்சியில் இருந்த யோகியர்களுடன் அளவளாவிச் சில நாள் தங்கினார். அப்பால் திருவதிகையை வழிபட்டு விட்டுத் தில்லையை அடைந்தார். நடராசப் பெருமானைக் கும்பிட்டுத் தெவிட்டாத இன்பம் பெற்று அங்கே சில நாள் வைகினார். பின் காவிரிக் கரையை அடைந்து திருவாவடுதுறையை நண்ணினார். அங்கே ஆலயத்துக்குச் சென்று எம் பெருமானை வணங்கிய பொழுது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தே எழுந்தது. எழுந்தாலும் மீண்டும் பயணந் தொடங்கிப் புறப்பட்டுச் செல்கையில் அவ்வூர்க் காவிரிக்கரையில் பல பசுக்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்.

அருகில் அந்தணர்கள் வாழ்கின்ற சாத்தனூரிலிருந்த மூலன் என்னும் பெயருடைய ஆயன் அந்தப் பசுக்களை அங்கே அழைத்து வந்து மேய்ப்பது வழக்கம். அன்றும் மேய்க்கும் போது அவனுடைய வாழ்நாளுக்கு இறுதி வந்து எய்தியமையின் உயிர் நீங்கினான். அவன் உடலம் கீழே கிடக்க, ஆவினங்கள் அந்த உடலைச் சுற்றிச் சுற்றி வந்து நாவால் வருடின; மோந்து பார்த்தன; கண்ணீர் விட்டுப் பெருமூச் செறிந்தன.

இந்தக் காட்சியைக் கண்ட சித்தர் திருவுள்ளம் இரங்கி, இந்தப் பசுக்களின் துயரத்தை நீக்கும் வழியாது என்று யோசித்தார். மீட்டும் ஆயன் உயிர்பெற்று எழுந் தாலன்றிப் பசுக்களின் துயரம் நீங்காதென்று தெரிந்து, தம்முடைய யோக ஆற்றலால் தம் உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு, ஆயன் உடலுக்குள் புகுந்து எழுந்தார்.

தம்மைப் பாதுகாப்பவன் எழுந்தவுடன் பசுக்கள் அவனை நக்கி மோந்து இன்புற்றுத் துள்ளிக் குதித்து மேயச் சென்றன. திருமூலர் அந்தப் பசுக்கள் மேயும் இடத்துக்குச் சென்று அவற்றை மேய்த்துப் பிறகு தண்ணீர் காட்டிப் பாதுகாத்தார். கதிரவன் மறைந்தவுடன் பசுக்கள் தம் கன்றை நினைத்துச் சாத்தனூரை நோக்கிப் புறப்பட்டன. திருமூலர் அவற்றின் பின்னே சென்றார். ஒவ்வொரு மாடும் தன் தன் வீட்டில் புக, அவர் நின்றார். ஆயனுடைய மனைவி, தன் கணவன் வர நேரமாகி விட்டது என்று அறிந்து காத்திருந்தாள். திருமூலரைக் கண்ட வுடன் அவள், "ஏன் இவ்வளவு நேரம்? உடம்புக்கு ஏதேனும் தீங்குண்டோ?" என்று சொல்லி அவரைத் தொடச் சென்றாள். அவர் விலகி நிற்க, "ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று அவள் கேட்டாள். "எனக்கும் உனக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை" என்று திருமூலர் சொல்லி விட்டு, அவ்வூரில் உள்ள பொது மடத்துக்குச் சென்று யோகத்தில் இருக்கத் தொடங்கினார்.

இரவெல்லாம் துயிலாமல் வருத்தத்துடன் இருந்த ஆயனுடைய மனைவி, காலையில் திருமூலர் வேறுபாட்டோடு இருப்பதை ஊரவருக்கு உரைத்தாள். அவர்கள் சென்று மடத்தில் யோகநிலையில் அமர்ந்திருந்தவரைக் கண்டு வியந்தார்கள். "இவருக்குப் பித்துப் பிடிக்க வில்லை. வேறு ஒரு பெண்ணிடத்தில் வைத்த அன்பினால் புறக்கணிக்க-வில்லை. சித்த விகற்பம் நீங்கித் தெளிந்த சிவயோக நிலையில் இருக்கிறார். பழைய நிலைப்படி இனி உறவு முறை கொள்ள இயலாது" என்று அந்தப் பெண்ணிடம் கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

திருமூலர் யோகு தெளிந்து பசுக்களுடன் திருவாவடு துறைக்குச் சென்றார். மறைத்து வைத்திருந்த தம் உடலைப் பார்த்தபோது அதனை அங்கே காணவில்லை. திருமூலர் வாயிலாகச் சிவாகமப் பொருள் தமிழில் வெளிவர வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளமாதலின் அவ் வுடம்பை மறைத்தருளினான். இதனை ஞானப்பார்வையால் உணர்ந்த திருமூலர் திருவருளின் வழியே நடக்க எண்ணி, திருவாவடுதுறைக் கோயிலை அடைந்தார். அக் கோயிலில் உள்ள தல விருட்சமாகிய அரசமரத்தின் அடியில் அமர்ந்து சிவயோகம் செய்யத் தலைப்பட்டார்.

யோக நிலையில் இருந்த திருமூலர் ஓர் ஆண்டு யோகம் செய்து கண்விழிப்பார். ஒரு பாடல் பாடுவார். இப்படி ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திர மாலை என்ற அரிய நூலை அருளினார். மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து, பிறகு இறைவன் திருவரு ளால் மீட்டும் திருக் கைலாயம் சென்று எம்பெருமானைப் பிரியாமல் உறையும் பெருவாழ்வு பெற்றார்.

திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலை திருமந்திரம் என்றும் வழங்கப் பெறும். அது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கைப் பற்றியும் சொல்லும் ஒன்பது தந்திரங்கள் அமைந்தது. சைவத் திரு முறைகள் பன்னிரண்டில் அது பத்தாந் திருமுறையாகச் சேர்க்கப் பெற்றிருக்கிறது.
--------------

31. தண்டியடிகள் நாயனார்

திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே வழிபடுதற்கு உரியவர்கள். அதனால்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" என்று பாடினார். அத்தகைய பேறு பெற்றவர்களுள் ஒருவர் தண்டியடிகள் நாயனார். அவர் புறக்கண் இல்லாத குருடர். ஆயினும் அகக் கண்ணில் எப்போதும் இறைவன் திருவடியைக் கண்டு இன்புறும் இயல்பு பெற்றிருந்தார். நாள்தோறும் ஆரூர் எம்பெருமானை வணங்கிப் பஞ்சாட்சரத்தைச் செபித்துக் கொண்டே சென்று வருவார்.

கோயிலின் மேற்கே உள்ள குளத்தைச் சுற்றிலும் அக்காலத்தில் சமணர்கள் மடங்களைக் கட்டிக் கொண்டார்கள். வரவரக் குளத்தின் அளவு குறுகிக்கொண்டே வந்தது. அதனை அறிந்த தண்டியடிகள் நாயனார், ''இந்தத் திருக்குளத்தை அகழ்ந்து பெருகச் செய்ய வேண்டும்' என்று முடிவு பண்ணி, அதற்கு ஆவனவற்றைச் செய்யத் தொடங்கினார். அங்கங்கே அடையாள முளை நட்டுக் கயிறு கட்டி நடு இடத்தைக் கையாலே தடவிப் பார்த்து மண் வெட்டியால் வெட்டி மண்ணைப் புறத்தே கொட்டி மறுபடியும் வெட்டுவார். இந்தத் தொண்டு செய்யும் போது திருவைந்தெழுத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவர் குளத்தின் அளவைப் பெருக்கும் பொருட்டுத் தோண்டுவதைக் கண்ட சமணர்களுக்கு அவர் செயல் பொறுக்கவில்லை. அவரை அணுகி, "மண்ணைத் தோண்டினால் இங்குள்ள பிராணிகள் இறந்துபடும்; அவற்றைத் துன்புறுத்த வேண்டாம்" என்றார்கள்.

அது கேட்ட தண்டியடிகள், "உண்மை அறியாதவர்களே, திருநீற்றைச் சாந்தாகப் பூணும் எம்பெருமானுக்கு உரிய திருப்பணி அல்லவா இது? இது மிகச் சிறந்த அறம் என்பதை நீங்கள் அறிய முடியுமா?” என்றார்.

அதனைக் கேட்ட சமணர், "நாங்கள் எடுத்துச் சொல்லும் தருமத்தை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. காதையும் இழந்தாயோ?" என்று கேட்டனர். தண்டியடிகள், "மந்தமான அறிவும் காணாத கண்ணும் கேளாத செவியும் உங்களுக்குத்தான் உள்ளன. நான் இறைவன் திருவடிகளையே காண்கின்றேன் அன்றி மற்றவற்றைக் காண்பதில்லை. மற்றவர்களைப் போல நான் எல்லாப் பொருளையும் காண வல்லேனானால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதைக் கேட்ட சமணர்கள், "உன்னுடைய கட வுள் அருளால் நீ கண் பெற்றாயானால் நாங்கள் இந்த ஊரில் இராமல் ஓடிப் போகிறோம்" என்று சொல்லி, அவர் கையில் இருந்த மண் வெட்டியைப் பறித்துக்கொண்டு, முளைகளையும் கயிற்றையும் எடுத்து எறிந்தார்கள்.

அதனை உணர்ந்த தண்டியடிகளுக்குக் கோபம் மூண்டது. அவர் எம்பெருமான் சந்நிதியில் வந்து வணங்கி, எம்பெருமானே, இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்து விட்டார்களே! இந்தப் பழிதீர அருள வேண்டும்" என்று நைந்து அடி வீழ்ந்தார். பின்பு தம் திருமடத்துக்குச் சென்று இரவு தூங்குகையில் இறைவன் எழுந்தருளி, நீ மனக் கவலையை ஒழி. உன் கண் திறக்கவும் சமணர் விழி மங்கவும் காணப் போகிறாய். அஞ்ச வேண்டாம்" என்று அருளி மறைந்தான். அப்பால் அன்று இரவே அரசனுடைய கனவில் தோன்றி, "தண்டியடிகள் நமக்குக் குளந்தோண்டுவதைச் சமணர்கள் சகிக்காமல் இடையூறு செய்கிறார்கள்.நீ அங்கே போய் அவன் கருத்தை நிறை வேற்று" என்று சொல்லி மறைந்தான்.

உடனே அரசன் எழுந்து தண்டியடிகள் நாயனாரிடம் சென்று பணிய, அவர் எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்து உரைத்தார். சமணர் கூறியதையும், தான் கண் பெறுவதாகச் சொன்னதையும், அப்போது ஊரை விட்டே ஓடுகிறோமென்று அவர்கள் கூறியதையும் சொன்னார்.

அரசன் சமணர்களை அழைத்து விசாரித்தான். அவர்கள் முன் சொன்னதையே சொன்னார்கள். அரசன் யாவரையும் அழைத்துக் கொண்டு குளத்தை அடைந்தான். நாயனாரை நோக்கி, "கண்களைத் திருவருளால் பெற முடியும் என்பதைக் காட்டும்" என்றான்.

தண்டியடிகள் உடனே எழுந்து, "நான் சிவனுக்கு அடிமையானது உண்மையானால் இன்று நான் கண் பெற வேண்டும்; இங்குள்ள சமணர் கண்ணை இழக்க வேண்டும்' என்று கூறி அஞ்செழுத்தை ஓதிக் குளத்தில் மூழ்கினார்.

இறைவனைத் தொழுதபடியே அவர் நீரிலிருந்து எழுந்தபோது அவருக்குக் கண்ணொளி கிடைத்துவிட்டது. அதே சமயத்தில் சமணர்கள் கண் ஒளியை இழந்தார்கள். மன்னன், சமணர்கள் முன்னே கூறிய உறுதிமொழிப்படி அவர்களை ஊரை விட்டு ஓடச் செய்தான். அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் போய் விட்டனர். சமணர் மடங்கள் இருந்த இடங்களில் அவற்றை இடித்துக் குளத்தை விரிவாகச் செய்து தண்டியடிகளை அடிபணிந் தான் அரசன். அப்பெரியார் கண் பெற்ற பயனாக இறைவனைத் தரிசித்து எப்போதும் அஞ்செழுத்தை ஓதி இன்புற்று இறுதியில் சிவபெருமான் திருவடி நீழலில் ஒன்றினார்.
--------------

32. மூர்க்க நாயனார்

சான்றோர் பலர் வாழும் தொண்டை நன்னாட்டில் பாலாற்றின் வடகரையில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அங்கே வேளாண் மரபில் உதித்த ஒருவர் சிறந்த சிவனடியாராக விளங்கினார். திருநீற்றைச் செல்வமாகப் போற்றிச் சிவபெருமானை வழிபட்டு வாழ்ந்த அவர் அடியார்களிடத்தில் அளவற்ற அன்புடையவரானார்.
நாள்தோறும் அடியார்களுக்கு ஆறு சுவையும் பொருந்திய அமுது செய்வித்துப் பின்பே உண்ணும் வழக்கத்தை மேற் கொண்டார். இந்த வரையறையினின்றும் ஒருநாளும் வழு வாமல் ஒழுகி வந்தார்.

அவர் அமுது செய்விக்கிறார் என்ற செய்தி நாடு எங்கும் பரவியது. அது கேட்டு நாளுக்கு நாள் மிகுதியான சிவனடியார்கள் அவரை நாடி வரத் தலைப்பட்டார்கள். அவர்கள் யாவருக்கும் முகம் கோணாமல் விருந்துணவு அருத்திப் பின்பு எஞ்சியதை உண்டு இன்புற்றார் அவ்வன்பர். கணக்குக்கு மிஞ்சிய அடியார்கள் வந்தமையால் அவரிடம் உள்ள பொருள் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது. நிலத்தை விற்றும் பண்டங்களை விற்றும் தம்முடைய குறிக்கோள் தவறாமல் நடந்து வந்தார். இப்படிச் சில காலம் கழிந்த பின் விற்பதற்கு ஒரு பொருளும் இல்லாத நிலை வந்தது. தாம் உண்ணாமல் பட்டினியாகக் கிடந்தாலும் அடியார்களுக்கு விருந்து செய்யாமல் வாழ இயலாது என்ற உறுதியை உடையவர் அவர். இனி என் செய்வது என்று ஆராய்ந்தார்.

அவர் இளம்பருவத்தில் சூதாடும் வித்தையைக் கற்றிருந்தார். அதில் பேராற்றல் உடையவராகவும் இருந்தார். இப்பொது அது நினைவுக்கு வந்தது. மீட்டும் சூதாடி அதனால் வரும் பொருளைக் கொண்டு அடியாருக்கு அமு தூட்டலாம் என்று தீர்மானம் செய்தார். அவ்வாறு செய்யத் தொடங்கவே, அவரிடம் பொருள் சேர்ந்தது. அடியார் பசியைப் போக்கி வந்தார்.

அவருடன் பலர் சூதாடித் தோற்றார்கள். அந்த ஊர்க்காரர் யாவரும் தோற்றனர். மேலே ஊரில் அவரோடு சூதாட வருவார் யாரும் இலராயினர். அதனை அறிந்த அவ்வன்பர், "இனி இவ்வூரில் இருந்து பயன் இல்லை" என்று எண்ணி, இறைவன் எழுந்தருளி யிருக்கும் தலங்களை நாடிச் சென்றார். ஓர் ஊருக்குச் சென்று இறைவனைத் தரிசிப்பது, பிறகு அங்குள்ளாருடன் சூதாடுவது, அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு அடியார்களுக்கு அமுதூட்டுவது, பிறகே தாம் உண்பது இப்படியாகச் சில காலம் செய்து வந்தார். பல ஊர்களுக்குச் சென்று அவ்வவ் வூர்களில் உள்ளாருடன் சூதாடி, பிறகு
யாரும் அவருடன் ஆட வருவார் இல்லாமற் போகவே, வேறு ஊர்களுக்குப் போனார். 'ஏதேனும் பெரிய நகரமாக இருந்தால் அங்கேயே தங்கிவிடலாம்' என்று எண்ணிய அவர் கடைசியில் திருக்குடந்தையை அடைந்தார்.

எவ்வளவு காலம் இருந்தாலும் சூதாடுவார் கிடைப்பார் என்ற நம்பிக்கை அங்கே உண்டாயிற்று. இப்போது ஒரு புதிய தந்திரத்தை அவர் மேற்கொண்டார். சூது ஆடும்போது முதல் ஆட்டத்தில் அவர் தோல்வி அடைவார். அப்போது அவருடன் ஆடுபவருக்கு ஊக்கம் உண்டாகி விடும். அடுத்த முறை பெரும் பணயத்தை வைப்பார். அந்த ஆட்டத்தில் அவர் வென்று விடுவார். இப்படியாக அவர் பொருள் ஈட்டினார். தாம் வென்றபோது பொருளைத் தர மாட்டோம் என்று யாரேனும் முரண் செய்தால் அவர்களை அச்சுறுத்தியும் உடைவாளால் குத்தியும் பொருளைப் பெறுவார்.இதனால் அவருடன் சூது ஆடுபவர்கள் ஏமாற்ற மாட்டார்கள். அவரிடம் மிகவும் அச்சம் கொண்டிருந்தார்கள். அவருடைய இயல்பு கண்டு யாவரும் அவரை மூர்க்கர் என்று வழங்கத் தொடங்கினர். அது முதல் அவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியாமல் மறைந்து போயிற்று.

சூதில் தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு உணவுக்குரிய பண்டங்களை வாங்குவார்; சமையல்காரர்களைத் திட்டம் செய்வார்; நாள்தோறும் அடியவர்களுக்கு அமு தூட்டுவார். ஒவ்வொரு நாளும் பல பந்திகள் நடை பெற்றும், அவர் தமக்கென்று அப்பொருளிற் சிறிதும் எடுத்துக் கொள்வதில்லை. எல்லோரும் உண்ட பிறகு கடைப் பந்தியில் அவர் இருந்து உண்ணுவார்.

தம்முடைய கடைப்பிடியை விடாமல், சூதினால் பொருள் பெற்றபோது பொருளாசை பெறாமல், அடியவர்களை அருத்துவது ஒன்றையே வாழ்க்கைப் பயனாகக் கொண்ட மூர்க்க நாயனார், இறுதியில் இறைவன் திருவடியை அடைந்து பேரின்ப வாழ்வு பெற்றார்.
-------------

33. சோமாசி மாற நாயனார்

எங்கே பார்த்தாலும் பசுஞ்சோலை; நல்லோர்களின் உள்ளம் போலக் குளிர்ச்சியைத் தரும் பூம்பொழில்கள். மாமரங்கள் தழைத்து மலர்ந்து நிற்கின்றன. இத்தகைய வளம் பொருந்தியது அம்பர் என்ற திருத்தலம், சோழ நாட்டுப் பழம்பதிகளில் ஒன்று அது.

அங்கே வேதியர் குலத்தில் வந்தவர் மாறர் என்பவர். இறைவனுக்கு அன்பர்கள் யார் வரினும் அவர்களுடைய திருவடியைப் பணிந்து அமுதூட்டுவதைத் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார். 'இறைவனை எண்ணி அவரைப் போற்றி யாகம் பல புரிவதனால் ஏழுலகில் உள்ள உயிர்களும் நன்மை அடையும். அப்படிச் செய்வதன் பயனாகவே இறைவனை மறவாமல் வாழ்த்தும் வாழ்க்கை கிடைக்கும்' என்ற உறுதி பூண்டு அவர் வேள்விகள் பல செய்தார். பல சோம யாகங்களைச் செய்தமையால் அவரைச் சோமயாஜி என்றே யாவரும் அழைக்கலாயினர். சோமாசி மாறநாயனார் என்று மதிப்புடன் சிவனடியார் வழங்குவர்.

ஈசனுக்கு அன்பரானவர்கள் எந்த இயல்புடன் இருந்தாலும் அவரே நம்மை ஆட்கொள்ளும் தகுதி உடையவர் என்ற உறுதிப்பாடு உடையவர் அவர். சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தை மறவாமல் செபித்து இன்புறுகிறவர்.

சிவபெருமான் உறையும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கமும் அவரிடம் இருந்தது. ஒரு முறை திருவாரூருக்குச் சென்றிருந்தபோது அங்கே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு எழுந்தருளி யிருப்பதை அறிந்தார். அப்-பெருமானுடைய பக்திச் சிறப்பையும் பிற பெருமைகளையும் நன்கு உணர்ந்து அவரை அணுகிப் பாதம் பணிந்து வழிபட்டார். சிவனடியாரிடம் அளவற்ற அன்பு கொண்ட சோமாசி மாறரிடம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அன்பு உண்டாயிற்று. இருவரும் நண்பர்களாயினர்.

இறைவன்பாலும் அடியார்களிடமும் முறுகிய அன்பு பண்ட சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் மிக்க பக்தியுடையவராகித் தொண்டு புரிந்து வாழ்ந்தார். பின்பு இறைவன் திருவருளிற் கலந்தார்.
----------------

34. சாக்கிய நாயனார்

சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றிய சிவனடியார் சாக்கிய நாயனார். அவர் காஞ்சீபுரம் சென்று அங்குள்ள பெளத்தர்களோடு பழகிச் சாக்கிய தர்மத்தையே மேற்கொண்டார். பின்னும் பல சமய நூல்களையும் ஆராய்ந்து பார்த்துச் சிவநெறியே நல்ல இன்பம் பெறுவதற்கு ஏற்ற வழியென்று தெளிந்தார். சிவபெருமானிடம் அவருக்கு அன்பு தோன்றி வளர்ந்து வந்தது. பௌத்த வேடத்தில் இருந்தாலும் அவர் உள்ளம் சிவபெருமான் உறையும் கோயிலாகியது.

நாள்தோறும் சிவலிங்க தரிசனம் செய்து பிறகே உண்ணவேண்டும் என்ற விரதத்தை அவர் மேற்கொண்டார். சாக்கிய வேடத்தில் இருந்த அவர் திருக்கோயிலில் புக யாரும் உடம்பட மாட்டார். தம்முடைய விரதம் நிறைவேற வழியின்றித் தவித்த அவருக்குப் பரந்த வெளியொன்றில் பூசையின்றிக் கிடந்த ஒரு சிவலிங்கம் நேர்பட்டது. அதைக் கண்டவுடன் அவருக்கு உண்டான ஆனந்தத்துக்கு அளவில்லை. 'புறத்தில் சாக்கியனாகவும் அகத்தில் சைவனாகவும் இருக்கும் நமக்கு ஏற்ற வகையில் இந்தப் பெருமான் கிடைத்தாரே! இது அவன் திருவருளே' என்று உணர்ச்சி விஞ்சியவராய்ச் சிவலிங்கத்தை அணுகினார். அருச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. வெறும் வெளியில் நீரா, பூவா, இலையா, ஒன்றும் கிடைக்க வில்லை. அருகிலே இருந்த சிறு கல்லை எடுத்து அதையே மலராகப் பாவித்து எறிந்தார்.

தன்னை விட்டுச் சென்ற குழந்தை வந்து இகழ்வதற் சூரிய செயலைச் செய்தாலும் அதனைப் பொருட் படுத்தாமல் தாய் அக் குழந்தைக்கு இன்பம் செய்வது போல, சிவபெருமான் சாக்கியர் அன்பைக் கண்டு திருவுள்ளம் உவந்தான்.

மறுநாளும் அவர் அவ்விடம் வந்து சிவலிங்கப் பெருமானைத் தரிசித்தார். முதல் நாள் அப் பெருமானைக் கண்ட உவகைப் பெருக்கினால் கல்லையே மலராக வீசி எறிந்த செயலை நினைந்து பார்த்தார். 'இதுவும் சிவபெருமானுடைய ஆணையினால் நிகழ்ந்தது போலும்! அந்த எண்ணம் தோன்றியதற்கு வேறு காரணம் இல்லை. புறச் சமயத்துக்குரிய வேடம் புனைந்திருக்கும் நான் மலரால் பூசை செய்தால் அயலார் என்னை ஏசுவார்கள். கல் எறிந்தால் புறச் சமயத்தான் வெறுப்பினால் செய்வது என்று எண்ணிக்கொள்வார்கள்; நம்மைத் தவறு சொல்லமாட்டார்கள். இதனால்தான் இப்படி ஓர் எண்ணத்தை எம்பெருமான் எனக்குத் தோன்றச் செய்தான்' என்று சிந்தித்தார். ஆகவே அன்றும் சிறு கற்களை எடுத்து அந்தச் சிவலிங்கத்தின்மேல் வீசி எறிந்துவிட்டுச் சென்றார். அது முதல் ஒவ்வொரு நாளும் உண்ணுவதற்கு முன் மறவாமல் அந்த வெளியில் இருந்த சிவபிரான் மேல் கல்லை எறிந்து பின்பே உண்ணுவார். இந்த விரதத்துக்கு இழுக்கு வராமல் ஒழுகி வந்தார்.

ஒருநாள் இறைவன் திருவருள் நியதிபோலும். அவர் இந்த ஒழுங்கை மறந்துபோய் உணவு கொள்ள உட்கார்ந்து விட்டார். அப்போது பளிச்சென்று கல்லருச்சனை நினைவுக்கு வந்தது. 'ஐயோ! என்ன காரியம் செய்யப் புகுந்தேன்! இன்று எம்பெருமான்-மேல் கல்லை வீச மறந்துபோய் விட்டேனே!' என்று நைந்து எழுந்து, அன்பு உந்த மிக்க விரைவாகச் சிவலிங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்.

சிவலிங்கப் பெருமானிடம் ஆராத காதல் கொண்டு ஓடினவர், வழக்கம்போல் ஒரு கல்லை எடுத்து வீசினார். தாம் மேற்கொண்ட விரதத்தினின்றும் வழுவாது அன்பிலே சிறந்து நிற்கும் சாக்கிய நாயனாரின் உள்ளப் பண்பை அறிந்த எம்பெருமான் விடையின் மேல் உமா தேவியாரோடும் எழுந்தருளிக் காட்சி கொடுத்தார்.

இடைவிடாது உள்ளக் கோயிலில் எம்பெருமானை வைத்து இறைஞ்சும் சாக்கிய நாயனாருக்கு இறைவன் சிவலோகத்தில் மீளா அடிமையாக நிற்கும் பாங்கை அருளி ஆட்கொண்டான்.

தாம் மேற்கொண்ட செயல் தம் நிலைக்கு ஏற்றதென்று அதை விரதமாகக் கடைப்பிடித்த சாக்கிய நாயனாருடைய செயல் வியப்பதற்குரியது. அவர் உள்ளத்தே அன்பு நிறைந்திருந்தமையால் அவர் எறிந்த கல் இறைவனுக்கு மணமலர் ஆயிற்று. புறச் செயலைக் காட்டிலும் உள்ளன்பே எம்பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு உரிய கருவி என்பதைச் சாக்கிய நாயனார் வரலாறு காட்டுகிறது.
--------------

35. சிறப்புலி நாயனார்

சோழ வளநாட்டில் நீர்வளமும் நிலவளமும் மிக்கு விளங்குவது, ஆக்கூர். அங்குள்ள திருக் கோயிலுக்குத் தான்தோன்றி மாடம் என்று பெயர். திருஞான சம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகங்களை உடையது அவ்வூர்.

"அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூர்'"

"நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூர்”

என்று சம்பந்தர் அத் தலத்திலுள்ள அந்தணர்களைப் பாராட்டியுள்ளார். அப்படியே அங்குள்ள வேளாளரை,

வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூர்''

என்றும், கொடையாளரை,

"இன்மையால்சென்றிரந்தார்க்கில்லையென்னா தீத்துவக்கும்
தன்மையார் ஆக்கூர்”

என்றும், அடியாரை,

"பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூர்"

என்றும் சிறப்பித்திருக்கிறார்.

நீர்வளமும் நீர்மை வளமும் மலிந்த அவ்வூரில் மறையவர் குலத்தில் சிறப்புலியார் தோன்றினார். அவர் சிவபிரானுக்குரிய தொண்டுகளை இயற்றுவதில் வல்லவராகவும் ஈகைத் திறத்தில் சிறந்தவராகவும் இருந்தார். இறைவனுடைய அடியார்கள் வந்தால் அவர்களை அடிபணிந்து முன் நின்று இனிய மொழிகளைக் கூறி, அவர்கள் இனிய உணவை உண்ணச் செய்வார். அவர்களுக்கு வேண்டிய பொருளையும் வழங்குவார்.

சிவ பக்திக்குரிய அடையாளங்களிலும் இயல்பிலும் அவர் சிறந்து நின்றார். ஸ்ரீ பஞ்சாட்சரத்தைச் செபித்துத் தம் மரபுக்கு ஏற்ற வகையில் வேள்விகளை இயற்றி அதன் பயனைச் சிவபிரானுக்கே அர்ப்பணம் செய்தார். அடியார்களுக்கும், பிறருக்கும் நலம் புரிந்து தம் மரபிற்கு ஏற்ற அறங்களிலும் தலைநின்று வாழ்ந்த சிறப்புலியார் யாவராலும் போற்றப் பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகச் சைவ உலகம் வழிபடும் அடைந்தார்.

'அஞ்செழுத் தோதி அங்கி
      வேட்டுநல் வேள்வி எல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
      நண்ணிடச் செய்து ஞாலத்
தெஞ்சலில் அடியார்க் கென்றும்
      இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசன்
      தாள் நிழல் தங்கி னாரே "

என்று இவருடைய புகழைச் சேக்கிழார் பாடியுள்ளார்.
----------------

36. சிறுத்தொண்ட நாயனார்

சோழ நாடு என்றால் நீர் வளம் நிலவளத்துக்குக் கேட்கவேண்டுமா? திருச்செங்காட்டங்குடி காவேரித் திருநாட்டில் உள்ளது என்று சொன்னாலே போதும்; அதன் வளத்தைத் தனியே எடுத்துச் சொல்ல வேண்டாம்.


அந்த ஊரில் பரம்பரை பரம்பரையாக அரசனுக்கு மந்திரியாகவும் சேனைத் தலைவராகவும் உள்ள மாமாத்திரர் குலத்தில் உதித்தவர் பரஞ்சோதியார் என்னும் சிவபக்தர். வடமொழித் தேர்ச்சியும் உள்ளவர். படைக்கலப் பயிற்சி, ஆனையேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றிலும் அவர் பேராற்றல் உடையவராக விளங்கினார்.

இத்தனை கலைகளிலும் பயின்று திறல்பெற்ற அவருடைய உள்ளம் எப்போதும் சிவன் கழலையே சிந்திக்கும் இயல்புடையதாக இருந்தது. சிவனடியார்களிடம் பெரு மதிப்பு வைத்து வழிபட்டு அடியார் தொண்டினும் சிறந்து நின்றார். அரசனுக்கு அவர் மிக நெருங்கியவராய், அவருக்கு வேண்டும் போதெல்லாம் துணையாகச் சென்று போர் செய்து பகைஞரைப் புறங்கண்டு வருவார். ஒரு முறை வடக்கே வாதாவிக்குச் சென்று அங்குள்ள மன்னரைப் போரில் வென்று அங்குள்ள நிதிக் குவைகளைச் சோழ நாட்டுக்குக் கொண்டுவந்து அரசன் முன் வைத்தார். வடபுல மன்னன் படைப்பலம் மிகுதியாக உடையவன். அவ்வளவு பெரிய மன்னனைப் பொருது வென்று வந்த பரஞ்சோதியாரைச் சோழ மன்னனும் பிறரும் பாராட்டினார்கள்.

"நம்முடைய படைக்கு இத்தனை வலிமை உண்டு என்று நானே நம்பவில்லை" என்றான் அரசன்.

“நம் படை வலிமை காரணம் அன்று; படைத் தலைவராகச் சென்ற பரஞ்சோதியாருடைய வலிமைதான் இந்த வெற்றிக்குக் காரணம்" என்றார் ஓர் அமைச்சர்.

"அவருடைய உடற் பலமும் படைக்கலப் பயிற்சிப் பலமுங்கூடக் காரணம் அன்று '" என்று ஓர் அமைச்சர் சொன்னார்.

“அது என்ன, அப்படிச் சொல்கிறீரே; அவருக்குத் தேர்ந்த படைக்கலப் பயிற்சி இருப்பதனால்தானே இந்த வெற்றி கிடைத்தது?" என்று கேட்டான் அரசன்.

அவர் இந்தப் படைகளை நம்புகிறவர் அல்ல. இறைவனுடைய திருவருட் பலத்தை நம்பி வாழ்கிறவர். அந்த வலிமையினால் அவர் எந்தச் செயலை மேற்கொண்டாலும் வெற்றி உண்டாகும். இறைவன் அன்பராகிய அவருக்கு இணையாகச் சொல்ல யார் இருக்கிறார்கள்?" என்று மற்றோர் அமைச்சர் கூறுவதைக் கேட்ட மன்னன் சிறிது யோசனையில் ஆழ்ந்தான்.

"பரஞ்சோதியார் சிவனடியார் என்று சொன்னீரே! அவருக்கு எப்படிப் படைக்கலப் பயிற்சி கைகூடியது?"

"தம் கடமையை நன்றாகச் செய்யத் தெரிந்தவர் அவர். எந்தச் செயல் செய்தாலும் இறைவனடியை மறவாத சீலர்" என்றார் அமைச்சர்.

“அத்தகைய பெரியவரை நாம் கடவுளைப் போல வைத்து வழிபடுவதை விட்டு, போர் செய்ய அனுப்பியது தவறு. அவரை ஏவல் கொள்ள நாம் யார்?" என்று சொல்லிய அரசன் பெருமூச்சு விட்டான்.

பரஞ்சோதியாரை அழைத்துவரச் செய்து, அவர் அடிபணிந்து, 'தங்களைப் போர்-முனைக்கு அனுப்பிய என் பேதைமையைப் பொறுத்தருள வேண்டும். தங்கள் பெருமை இத்தனை காலம் எனக்குத் தெரியாமல் போயிற்று" என்று இரங்கினான் அரசன்.

பரஞ்சோதியார் மன்னனெதிர் வணங்கி, “எனக்கு எந்தத் தொழிலில் உரிமை உண்டோ அதனை நான் செய் தேன். அப்படிச் செய்வது என் கடமை அல்லவா? அதில் என்ன தீங்கு எனக்கு உண்டாகும்?" என்று பணிவுடன் கூறினார்.

அரசன் அவரைக் கும்பிட்டு, 'இனித் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே நான் ஏவல் இடமாட்டேன். தங்கள் விருப்பப்படியே இருந்து எங்களுக்கு அருள்புரிய வேண்டும்" என்று சொல்லி, பொன்னும் பொருளும் வழங்கினான். அவர் வாழ்க்கைக்கு ஒரு குறையும் வாராத வண்ணம் இறையிலி நிலங்களை அளித்தான்.

“இதுவும் இறைவன் திருவருள்!' என்று எண்ணிய பரஞ்சோதியார், அவ்வூரில் உள்ள கணபதீச்சரம் என்னும் திருக்கோயிற்குச் சென்று வழிபட்டுச் சிவபக்தியிலும் அடியார் பக்தியிலும் மேன்மேலும் சிறந்து நின்றார். பின்பு நல்ல குடியிலே பிறந்த வெண்காட்டு நங்கையென்னும் பெருமாட்டியை மணந்து, இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் சிவனடியாரைப் பணிந்து அவர்களுக்கு உணவூட்டிப் பின்பே உண்ணும் வரையறையை மேற்கொண்டார். அவருடைய விருப்பத்துக்கு இசைந்தவாறே வெண்காட்டு நங்கையாரும் வேண்டுவன செய்ய, அவர்களுடைய இல்லறம் எதனாலும் குறைவின்றி நன்கு நிகழ்ந்து வந்தது.

புகழாலும் நிலையாலும் பலர் போற்ற வாழ்ந்த பரஞ்சோதியார், அடியார்களிடம் மிகவும் பணிவாக ஒழுகி அவர்களிடம் பயபக்தியோடு பழகினார். எல்லா வற்றிலும் பெரியவராகிய அவர் சிறியவரைப் போல அடங்கி ஒடுங்கியிருத்தலைக் கண்டவர்கள் அவரைச் சிறுத்தொண்டர் என்று அழைக்கத் தலைப்பட்டனர்.

இறைவன் திருவருளால் சிறுத் தொண்டருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்குச் சீராளன் என்று திரு நாமம் புனைந்து மிகச் செல்வமாக வளர்த்து வந்தார். அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ற சிறப்புகளைச் செய்து குழந்தையைச் சிறுத்தொண்டரும் அவர் மனைவியாரும் வளர்த்து வந்தனர். சீராளன் பள்ளிக்குச் செல்லும் பருவத்தை அடையவே, பெற்றோர் அவனைப் பள்ளியிற் சேர்த்து, அவன் கல்வியிற் சிறந்து வளர்வதை அறிந்து இன்புற்றனர்.

இவ்வாறு இருக்கையில், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் ஒரு முறை அந்தத் தலத்திற்கு எழுந்தருளினார். அவரை வணங்கி வழிபட்டு அன்பு செய்து இன்புற்றார் சிறுத்தொண்டர். சம்பந்தப் பெருமான் சிறுத்தொண்டரைத் தம் திருப்பதிகத்தினிடையே சிறப்பித்துப் பாடிச் சில நாள் அங்கே தங்கிப் புறப்பட்டார்.

சிவபெருமான் சிறுத்தொண்டருடைய அன்பை நுகர்வதற்கும் அவருடைய பெருமையை உலகம் அறியும்படி செய்வதற்கும் திருவுளங்கொண்டான்; பைரவத் திருக்கோலம் பூண்டு திருச்செங்காட்டங்குடியை அடைந்தான்.

சிறுத்தொண்டருடைய வீட்டைத் தேடிச் சென்ற பைரவர் அவர் வீட்டுக்குள் புகுந்து, 'சிவனடியவருக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரோ?'' என்று கேட்டார். அப்போது அவ்வீட்டில் ஏவல்புரியும் சந்தனமென்னும் பெயருடைய நங்கை அவரைக் கண்டு, சிவனடியார் என்றறிந்து வணங்கி, 'அவர் சிவனடியார்களைத் தேடிக்கொண்டுதான் போயிருக்கிறார். வந்துவிடுவார். தாங்கள் உள்ளே எழுந்தருள வேண்டும்" என்று கூறினாள்.

“பெண்கள் மட்டும் உள்ள இடத்தில் நாம் வருவதில்லை" என்று சொல்லி அவர் புறப்படும்போது, சிறுத் தொண்டர் மனைவியாராகிய திருவெண்காட்டு நங்கையார் வந்து, "இதோ அவர் வந்துவிடுவார்; தாழ்க்கமாட்டார்" என்று சொன்னார். "நாம் சிறுத்தொண்டரைக் காணுவதற்காக வந்தோம். அவர் இல்லாத சமயத்தில் இங்கே இருக்கமாட்டோம். இவ்வூர்த் திருக்கோயிலில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருக்கிறோம். அவர் வந்தால் சொல்லுங்கள்” என்று சொல்லி அவர் போய்விட்டார்.

சிறிது நேரங் கழித்துச் சென்று சிவனடியார் யாரையும் காணாமல் வாட்டத்தோடு வந்த சிறுத்தொண்டரிடம் அவர் மனைவியார், பைரவத் திருக்கோலத்திலிருந்த அடியார் வந்துபோன செய்தியைத் தெரிவித்தார். உள்ளங் களிகூர்ந்த அவர் உடனே திருக்கோயில் சென்று பைரவரைக் கண்டு நின்றார்.

அப்போது பைரவர், "நீர்தாம் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ?" என்று கேட்டார்.

"அடியேனுக்கு ஒரு தகுதியும் இல்லாவிட்டாலும் அந்தப் பெயரால் அன்பர்கள் அழைப்பதுண்டு. இன்று சிவனடியார் யாரையும் காணவில்லையே என்று வருந்தி யிருந்த எனக்கு நீங்கள் கிடைத்தீர்கள். அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்" என்று பணிந்து வேண்டினார் சிறுத்தொண்டர்

“நாம் வடநாட்டில் உள்ளோம். உம்மைக் காண வந்தோம். எமக்கு வேண்டிய உணவை வழங்குதல் உம்மால் முடியாது.”

''சிவனடியார்களுக்குக் கிடைக்காத பொருளும் உண்டோ? தங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று அருளுங்கள்.'

"நாம் ஆறுமாதம் உண்ணாமல் இருந்து பிறகு பசுவை அடித்து உண்ணுவது வழக்கம். இன்று அப்படி உண்ண வேண்டிய நாள். உம்மால் அப்படிச் செய்ய முடியாது.

''என்னிடம் ஆடு மாடு எருமையென மூன்று நிரைகளும் இருக்கின்றன. தேவரீருக்கு எத்தகைய பசு வேண்டுமோ, அதைத் தெரிவித்தால் வீட்டுக்குச் சென்று அதனை அமைக்கச் செய்துவிட்டுக் காலம் தவறாமல் இங்கே வந்து அழைத்துச் செல்வேன்.”

"சொன்னால் உமக்கு விநோதமாக இருக்கும். நாம் உண்ணுவது பசுமாடு அன்று; நரபசுவையே உண்போம். ஐந்து பிராயமுள்ள குழந்தையாக, உடம்பில் மறு ஏதும் இல்லாதவனாக இருக்க வேண்டும். இன்னும் வேண்டியதைச் சொன்னால் நீர் வருந்துவீர்."

"அருமையான பொருள் என்று ஏதும் இல்லை. விரைவில் தாங்கள் வேண்டியதைச் சொல்லவேண்டும்.”

"ஒரு குடிக்கு ஒரு மகனாக உள்ளவனைத் தந்தை அரியத் தாய் பிடிக்க வேண்டும். அவர்கள் மனமுவந்து கறி சமைத்துத் தந்தால் அதை நாம் உண்போம்.” என்றார் பைரவர்.

“இது எனக்கு அரிதன்று; அப்படியே செய்வேன்" என்று கூறி விடை பெற்றுக்கொண்ட சிறுத்தொண்டர், நேரே வீடு சென்றார். சென்று தம் மனைவியாரை அழைத்து, 'தொண்டர் பிரான் நம் இல்லத்தில் அமுது செய்யத் திருவுள்ளம் இசைந்தார். ஐந்து பிராயமுடையவனாய், ஒரு குடிக்கு ஒரு மகனாய், உறுப்புக் குறைவு இல்லாதவனாக உள்ள குழந்தையைத் தாய் பிடித்துக் கொள்ள, தந்தை அரிந்துதர, கறி சமைத்துக் கொடுக்க வேண்டுமாம்."
.
"அப்படி ஒரு சிறுவனை எங்கே பெறுவது?" என்று கேட்டார் நங்கையார்.

"இத்தகைய மைந்தன் ஒருவனை விலைகொடுத்தால் கூடத் தரமாட்டார்கள். அப்படி அளித்தாலும் தாயும் தந்தையும் இருந்து அரிய மாட்டார்கள். நீ பெற்ற பிள்ளையைத்தான் அழைத்துவர வேண்டும்" என்றார் சிறுத் தாண்டர்.

இல்வாழ்வுக்குத் துணையாக நின்ற அப்பிராட்டியார் சிறிதும் தடையின்றி இசைந்து, ''பள்ளியிலிருந்து அவனை அழைத்து வாருங்கள்'' என்றார்.

அப்படியே அழைத்து வந்து நீராட்டி, தாய் பிடித்துக் கொள்ள, சிறுத்தொண்டர் தலையை அரிந்து உறுப்புக்களையும் வெவ்வேறு அரிந்து தர, வெண்காட்டு நங்கையார் அவற்றைப் பெற்றுச் சமைக்கப் புகுந்தார். தலை கறிக்கு ஆகாதென்று தனியே வைத்துவிட்டார். அதனைச் சந்தன நங்கை எடுத்துச் சமைத்து வைத்தாள்.

சமையல் முடிந்தவுடன் மனைவியார் கூறச் சிறுத் தொண்டர் பைரவரை அழைப்பதற்குத் திருக்கோயிலுக்குச் சென்றார். அவரை வணங்கி, "காலந் தாழ்த்ததைப் பொறுத்து, அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளவேண் டும்" என்றார். அவர் உடன் வர, அழைத்துச் சென்று இருக்கை தந்து அவர் திருவடியை நீரால் விளக்கி அந்த நீரைத் தம் தலையின் மேல் தெளித்துக்கொண்டு தீபதூபங் காட்டிப் பூசை செய்தார்; பின்பு, "எவ்வாறு உணவு படைக்கவேண்டும்?" என்று கேட்டார். "எல்லாவற்றையும் ஒருங்கே படையும்" என்று பைரவர் கூறினார்.

அப்படியே படைத்தபின், "நான் சொன்ன முறைப் படியே நரபசுவை அடித்து எல்லா
அடித்து எல்லா உறுப்புக்களையும் கொண்டு சமைத்தீரோ?" என்று கேட்டார் பைரவர். தொண்டர்தம் மனைவியார், "தலைக்கறி ஆகாது என்று சமைக்கவில்லை" என்றார்.

"அதையும் நாம் உண்பதுண்டு என்று அவர் சொல்ல, சிறுத்தொண்டர், "இதற்கென் செய்வேன்!" என்று வருந்தும்போது, "நான் அதையும் சமைத்து வைத்தேன்" என்று சந்தன நங்கை சொல்லி எடுத்துத் தந்தாள்.

சிறுத்தொண்டர் முகமலர்ந்து அதையும் படைத்தார். வந்த அடியார், 'நாம் தனியே உண்ணுவது இல்லை. ஈசனடியார் யாரேனும் அருகில் நின்றால் அழைத்து வாரும்" என்று சொல்ல, அவர் வெளியே சென்று பார்க்க, யாரும் கிடைத்திலர். அதை அவர் பைரவரிடம் சொல்ல, "உம்மை விட வேறு அடியார் யார் உள்ளார்? நீர் அமரும்" என்று சொல்ல, அவர் அவ்வாறே அமர்ந்தார். அவருக்கும் கலம் திருத்தி, பைரவர் கூறியவாறே எல்லாக் கறியும் அவர் கலத்தில் இட்டனர் திருவெண் காட்டம்மையார்.

அடியாருக்கு இட்டு உண்பது என் விரதம் என்று பைரவர் சொன்னமையால், அவர் உண்ணவேண்டும் என்பதற்காக, முன்னே சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்கினார். பாசம், வெறுப்பு, அருவருப்பு, பற்று ஆகிய எல்லாவற்றையும் கடந்து, சிவனடியார் திருவுள்ளம் கூசாமல் ஒழுகவேண்டும் என்ற ஒன்றையன்றி மற்ற யாவற்றையும் மறந்த நிலையில் அவர் இருந்தார்.

அப்போது பைரவர் அவரைத் தடுத்து, 'ஆறுமாத மாகப் பட்டினி கிடக்கும் நான் இன்னும் உண்ணாமல் இருக்க, நாள்தோறும் சோறுண்ணும் நீர் அவசரப் படுகிறீரே! இரும். இன்னும் ஒன்று உண்டு. நீர் மகனைப் பெற்றவராக இருந்தால் அந்தக் குழந்தையையும் அழையும்; சேர்ந்து உண்ணலாம்" என்று கூறினார்.

சிறுத்தொண்டர் உண்மை கூறத் துணியாதவராய், "அவன் இப்போது உதவான்" என்றார்.

"அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய்த் தேடி அழைத்து வாரும்" என்றார்.

‘இவ்வடியார் அமுது செய்ய எத்தனை தாமதம்!' என்று கருதிச் சிறுத்தொண்டர் தம் மனைவியாரோடு புறம் போந்து தம் குழந்தையை அழைப்பவரைப் போலப் பாவனை செய்யத் தொடங்கி, "மைந்தா, வா" என்று அழைத்தார். அவர் மனைவியாரும், "செய்ய மணியே, சீராளா, நாம் உய்யச் சிவனடியார் உடனுண்ண அழைக்கின்றார்; வா அப்பா" என்று உரக்க அழைத்தார்.

என்ன ஆச்சரியம்! இறைவன் திருவருளால் குழந்தை சீராளன் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி வருபவனைப்போல வந்தான். அவனை அம்மையார் எடுத்தணைத்துக் கணவர் கையில் கொடுக்க அவர், "அடியார் உண்ணும் பேறு நமக்குக் கிடைக்கும்" என்ற பேருவகையோடு அவனைக் கையில் வாங்கிக் கொண்டார். தாம் அரிந்த மகன் வந்தானே என்ற வியப்போ, அவன் எவ்வாறு வந்தான் என்ற ஆராய்ச்சியோ அவருக்கு அப்போது தோன்றவில்லை. அடியார் ஏதேனும் காரணம் கூறி அமுது செய்யாமல் போய்விடுவாரோ என்று ஏங்கி நின்ற அவருக்கு, "இப்போது அவர் அமுது செய்வார்" என்ற நம்பிக்கையும் அதனால் உவகையும் உண்டாயின.

அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு இல்லத்துள் சென்று பார்க்க, அங்கே அடியாரைக் காணவில்லை. பரி கலத்தில் இட்ட கறியையும் காணவில்லை. சிறுத்தொண்டர் ஒன்றும் தெளியாமல் கலங்கி வீழ்ந்து நைந்தார். ''ஐயோ! வந்த அடியார் அமுது செய்யாமல் எங்கே போனார்?" எனத் தேடி மயங்கி வெளியே வரும்போது, வானில் இறைவன் உமாதேவியாரோடும் குழந்தைப் பிரானாகிய முருகனோடும் காட்சி அளித்தான். அந்த மூவரையும் அடியாரும் மனைவியாரும் சீராளனுமாகிய மூவரும் தொழுது பரவசமாகி ஏத்தினார்கள். அம்மூவருக்கும் சந்தன நங்கைக்கும் இறைவன் திருவருள் புரிந்து வாழ்வித்தான்.

எல்லாப் பற்றையும் விட்டு அடியாரைப் பேணுவதே பயனென்று அதற்காக இல்வாழ்வில் வாழ்ந்து, மைந்தனையும் தம் கையால் அறிந்து கறி சமைக்கச் செய்த சிறுத்தொண்டருடைய பக்தியின் முறுகிய நிலையைத் தெளிவது மிக மிக அருமை. புறப்பகையை வென்று அவர் பெற்ற புகழ் பெரிது அன்று; அகப்பகையை வென்று நின்ற அவர், இறைவன்பாற் பெற்ற திருவருள் பெரிது.
---------------

37. சேரமான் பெருமாள் நாயனார்

மேல் கடற்கரையில் கொடுங்கோளூர் என்ற ஊர் ஒன்று உள்ளது. அதற்கருகே திருவஞ்சைக்களம் என்ற திருப்பதி இருக்கிறது. கொடுங்கோளுரை இப்போது கொடுங்கல்லூர் என்றும், திருவஞ்சைக்களத்தை திருவஞ்சிக்குளம் என்றும் வழங்குவர். கொடுங்கோளூருக்கு மகோதை யென்றும் ஒரு பெயர் உண்டு. பழங்காலத்தில் சேரமன்னர் தம்முடைய ஆட்சித் தலைநகராகக் கொடுங் கோளூரையே கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் அவ்வூருக்கு வஞ்சியென்ற பெயரே வழங்கி வந்தது.

சேரர் குலத்துப் பிறந்த பெருமாக் கோதையார் என்ப வர் இறைவனிடம் ஆராத காதல் உடையவராக இருந்தார். திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கி அக்கோயிலில் உரிய தொண்டுகளைச் செய்து அவனடியே நினைந்து வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் கொடுங்கோளூரில் அரசாண்டு வந்த சேரமன்னர் துறவு பூண்டு அரசு துறந்து போய்விட்டார். அதனால் அமைச்சர் முதலியோர் பெருமாக் கோதையாரிடம் வந்து, "தேவரீர் உரிமையுடையவராதலின் சேர நாட்டின் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று பணிந்து விண்ணப்பம் செய்தனர். "இறைவன் திருவுள்ளம் அறிந்து வருவேன்'' என்று சொல்லித் திருவஞ்சைக் களத்தப்பன் முன் சென்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார். அப் பெருமான் பெருமாக் கோதையாருக்குத் திருவருள் பாலித்து, எல்லா விலங்குகளும் பேசும் மொழிகளை அறியும் ஆற்றலை அருளினான்.

அதன்பின் அவர் முடி சூடி மன்னராக ஆட்சிபுரியத் தலைப்பட்டார். விலங்குகளின் மொழியை உணரும் ஆற்றல் பெற்றமையால் கழறிற்று அறிவார் என்னும் திருநாமம் அவருக்கு உண்டாயிற்று.

சேரமான் பெருமாள் என்ற பெயரோடு அவர் ஆட்சி புரியலானார். அவர் வஞ்சி நகரை வலம்வரும் போது, யாரோ ஒரு வண்ணான் உவர் மண்ணைத் தலையிற் சுமந்து செல்ல, மழையினால் அது உடம்பின்மேல் வழிந்து காய்ந்து, நீறு பூத்திருக்கும் கோலத்தோடு எதிரே வந்துகொண் டிருந்தான். உடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு வருவதாக எண்ணிய சேரமான் உடனே யானையினின்றும் இறங்கி அவன் அடியைப் பணிந்தார். அதுகண்டு அஞ்சிய அவன், "அடியேன் அடிவண்ணான்" என்று சொல்லி ஒதுங்கினான். மன்னரோ, 'அடியேன் அடிச் சேரன். நீர் திருநீற்றை நினைப்பித்தீர்" என்று சொல்லி அளவளாவினர். இது கண்டு யாவரும் வியப்படைந்து, சேரமான் பெருமாளுடைய பக்தி விசித்திரத்தைப் பாராட்டினார்கள்.

மதுரையில் பாணபத்திரர் என்னும் பாணர் நாள் தோறும் சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு அவர் திரு முன் யாழ் வாசித்துத் தொண்டு புரிந்து வந்தார். அவர் வறுமையால் வாடுவதை அறிந்த சொக்கலிங்கக் கடவுள், "மதிமலி புரிசை" என்று ஒரு திருமுகப் பாசுரத்தை எழுதி, அவரிடம், "சேரமான் பெருமாளிடம் இதைக் கொடுத்தால் பரிசில் வழங்குவான்" என்று குறிப்பித்தார். பாணபத்திரர் அப்படியே வஞ்சிமாநகரம் வந்து அத்திருமுகத்தைச் சேர மன்னரிடம் அளித்தார். அதில், ''மதுரைப் பதியில் இருக்கும் ஆலவாயரனாகிய நான் சேரமானுக்கு எழுதுவதாவது: இது கொணர்பவன் உன்னைப் போல் என்னிடம் பேரன் புடையவன். இவனுக்கு வேண்டியதை அளித்து அனுப்புக" என்ற செய்தி பாட்டாக இருந்தது.

அதைக் கண்டவுடன் சேரர் தம் தலைமேல் வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்தார். "எம்பெருமான் திருமுகம் பெறும் பேறு எனக்குக் கிடைத் ததே!" என்று களிநடம் புரிந்தார். பிறகு அமைச்சர்களை அழைத்துத் தமக்குரிய செல்வங்கள் யாவற்றையும் ஒன்று விடாமல் துருவிக்கொண்டு வரச் செய்தார். பாணனாருக்கு அவற்றைக் காட்டி, "இவை யாவும் தங்களுடையனவே; இந்த அரசாட்சியும் தங்களுடையதே" என்று சொல்லி வைக்கவும், பாணர் அஞ்சி நடுங்கினார். தமக்கு வேண்டிய சிலவற்றை எடுத்துக்கொண்டு, 'இறைவர் ஆணை; இந்த அரசை நீரே மேற்கொண்டு ஆட்சிபுரிய வேண்டும்" என்று கூறினார். இறைவர் ஆணை யென்றதற்கு அஞ்சி, மீட்டும் அரசை ஏற்றுக் கொண்டு பாணபத்திரரை அன்போடும் உபசரித்து வழியனுப்பினார்.

சேரமான் பெருமாள் ஒவ்வொரு நாளும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அருச்சித்துப் பூசை புரிவது வழக்கம். பூசை முடிந்தவுடன் நடராசப் பெருமானுடைய சிலம்பொலி கேட்கும். அதனைக் கேட்டு உருகி இன்புறுவார்.

ஒருநாள் பூசை செய்து முடிந்தவுடன் வழக்கப்படி சிலம்பொலி கேட்கவில்லை. 'நாம் செய்த பூசையில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது' என்று வருந்திய சேரர் உடைவாளை எடுத்துக் குத்திக் கொள்ளப் போனார். அப்போது சிலம்பொலி கேட்டது. உடனே, "எம்பெருமானே, இன்று இந்த ஒலி தாழ்த்ததற்கு என்ன காரணம்?" என்று நைந்து வினவினார். இறைவன் அசரீரியாக, "தில்லையில் சுந்தரன் வந்து திருப்பதிகம் பாடினான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தமையால் தாமதமாயிற்று" என்று கூறினான். சுந்தரரையும் சேரமானையும் தோழர்களாக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தோடு இறைவன் இவ்வாறு குறிப்பிக்கவே, சேரமான் பெருமாள், "அவ்வளவு சிறந்தவராகிய பெருமானை நான் தரிசிக்க வேண்டும்" என்று தில்லையை நோக்கிப் புறப்பட்டார்.

தில்லை சென்று நடராசப் பெருமானை வணங்கிப் பொன் வண்ணத் தந்தாதி என்ற நூலைப் பாடினார். சுந்தரர் திருவாரூரில் இருப்பதை உணர்ந்து அங்கே சென்று அவரை வணங்கி நட்பு பூண்டார். இருவரும் உளங்கலந்த பெரு நண்பரானார்கள். அடியார்கள் அதுகண்டு இருவர் பண்பையும் வியந்தார்கள். இருவரும் திருவாரூர்த் திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டார்கள். சேரமான் பெருமாள் திருவாரூர் மூம்மணிக் கோவை என்ற நூலைப் பாடியருளினார்.

அப்பால் சுந்தரமூர்த்தி நாயனாரோடு பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் உள்ள பல தலங்களைத் தரிசித்து இன்புற்றார். நாயனாரையும் அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களத்துக்கு வந்து இறைவனை வழிபட்டார். நகர் முழுவதையும் அலங்கரிக்கச் செய்து, சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சிறந்த முறையில் வரவேற்பளித்துப் பேருபசாரம் செய்து சில நாட்கள் தம்முடன் இருக்கச் செய்தார்.

பிறகு சுந்தரர் விடைபெற்றுத் திருவாரூர் சென்றார். பின்னும் ஒருமுறை அப் பெருமான் வஞ்சிமாநகரம் வந்தார். திருவஞ்சைக்களம் சென்று வழிபட்டபோது, 'இனி இவ்வுலக வாழ்க்கை போதும்' என்ற எண்ணம் தோன்ற, அதனைக் குறிப்பாக இறைவனிடம் விண்ணப் பித்துக் கொண்டார். கைலாசபதி சிவகணங்களுடன் ஒரு வெள்ளை யானையை அனுப்ப, அதன்மேல் ஏறிச் சுந்தரர் அனுப்ப, அதன்மேல் கைலையை நோக்கிச் செல்லலானார்.

அரண்மனையில் இருந்த சேரமான் பெருமாள் இதைக் கேள்வியுற்று ஒரு குதிரையின் மீதேறி விரைவாகத் திருக் கோயிலை நோக்கி வந்தார். அதற்குள் சுந்தரர் யானை மீதேறிச் சென்றதை அறிந்து அக்குதிரையின் காதில் சிவமந்திரத்தை ஓதவே, அது வானில் செல்லத் தொடங்கியது. அதனைச் செலுத்திக் கொண்டு சேரர்பிரான் சுந்தரர் யானைக்கு முன்னே சென்றார். திருக்கைலையில் எம்பெருமான் திருக் கோயில் வாயிலில் தடைப்பட்டு நின்றார்.

சுந்தரர் உள்ளே சென்று எம்பெருமான் அடிபணிய, பெருமான் அவரைத் தாயன்புடன் வரவேற்றான். சுந்தரர், "வாயிலில் சேரமான் காத்திருக்கிறார்" என்று விண்ணப்பிக்க, உடனே சிவபெருமான் அவரையும் அழைத்துவரப் பணித்தான்.

உட்சென்று இறைவன்முன் சேரமான் பணிந்தெழுந்த போது இறைவன், ''நாம் அழைக்காமல் இங்கே நீ ஏன் வந்தாய்?" என்று கேட்டான்.

“அடியேன் சுந்தரமூர்த்தியார் திருவடியைப் பணிந்து அவர் யானைக்குமுன் சேவித்து வந்தேன்.தேவரீருடைய கருணையினால் இங்கே வரப்பெற்றேன்" என்று சொல்லிப் பணிந்தார். பின்பு, 'மற்றொரு விண்ணப்பமும் கேட்டருள வேண்டும். அடியேன் தேவரீர்மேல் உலா ஒன்று பாடினேன். அதைச் திருச்செவி சாத்தியருள வேண்டும்" என்று கூற, இறைவன், 'சொல்லுக" என்றான். சேரமான் அதனை அங்கே அரங்கேற்றினார். கேட்ட சிவபிரான் மகிழ்ந்து, "நீ சிவகணத்தோடு ஒருவனாகி இங்கே இருப்பாயாக!" என்று அருள் பாலித்தான்.

சேரமான் இயற்றிய உலா, திருக்கைலாய ஞான உலா என்றும் ஆதி உலா என்றும் பேர் பெறும். அதனைக் கைலையில் கேட்ட மகாசாஸ்தா அதைக் கொண்டுவந்து உலகத் தாருக்கு வெளிப்படுத்தினார்.
-----------------

38. கணநாத நாயனார்

திருஞான சம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்தருளிய சீகாழித் திருப்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். கணநாதர் என்ற பெயரை அவருக்குத் தாய் தந்தையர் வைத்தார்கள். அது பிற்காலத்தில் அவர் வளர்ந்து பெரியவரான பிறகு பொருள் உடையதாயிற்று. மறையவர் கூட்டத்துக்குத் தலைவராக, அவர்களுக்கு நல்வழி காட்டியாக அவர் விளங்கினார்.

அவர் தம் மரபுக்கு ஏற்ற ஒழுக்கத்திற் சிறந்து நின்றார். சீகாழியில் எழுந்தருளியிருக்கும் தோணியப்பர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் பல வகையான தொண்டுகளைச் செய்து வந்தார். திருக்கோயில், நந்தனவனம், தீர்த்தம் ஆகியவற்றைச் செப்பஞ் செய்தும் பாதுகாத்தும் சிறப்பாக விளங்கச் செய்தும் வருவதையே தம் வாழ்நாட் பணியாகக் கொண்டார்.

இவ்வாறு செய்து வந்தவர் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை அவரவர்க்கு ஏற்ற தொண்டு செய்யும் வழியில் பயிற்சி தந்து நிறுத்தினார். நந்தவனப் பணி செய்பவர்களுக்கு, எவ்வாறு செடிகொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். மலரைக் கொய்யும் முறையைச் சிலருக்குக் கற்பித்தார். வேறு சிலருக்கு அம் மலர்களை மாலையாகக் கட்டும் கலையைப் பயிற்றினார். திரு மஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திருவலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திரு முறைகளை எழுதுபவர், அவற்றை ஓதுவார் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைக் கவனித்துச் செய்ய ஊக்கம் உண்டாக்கினார். இதனால் அவரைச் சுற்றி எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருந்து வந்தது. அந்தக் கணத்துக்கு நடுவில் தலைவராக நாதராக, கணநாத நாயனார் விளங்கினார். இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத் தொண்டில் ஊற்றம் பெற்றுத் தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் நாயனார்.

திருஞான சம்பந்தரிடத்தில் அவருக்கு அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் திருவடியைத் தொழுது மூன்று போதும் அருச்சனை செய்து வந்தார். தொண்டருக்குத் தொண்டராகியும், தொண்டருக்கு நாதராகியும், ஞான சம்பந்தர் பக்தராகியும் வாழ்ந்த இப்பெருமான் சிவபெருமான் திருவருளால் திருக்கயிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.
---------------

39. கூற்றுவ நாயனார்

அரச குலத்தில் பிறந்த அவருடைய இயற் பெயர் இன்னதென்று தெரியவில்லை. பகைவர்களுக்குக் கூற்றுவனைப் போலத் தோன்றி மிடுக்குடன் போர் செய்து வென்றமையால் அவருக்குக் கூற்றுவர் என்ற பெயரே வழங்கலாயிற்று. சிவபெருமான்பால் ஆழ்ந்த அன்புடைய அவர் கூற்றுவ நாயனார் ஆனார்.

களந்தை என்னும் ஊரில் இருந்த அந்த மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வென்றார். அந்த வெற்றி மிடுக்கால் அவர் இறைவனை மறக்கவில்லை. எல்லாம் அவன் திருவருள் என்று வாழும் திறம் உள்ளவர் ஆதலின், அவனுடைய திருநாமத்தை எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பார். சிவனடியார்களைக் கண்டால் வழிபட்டு ஆவன செய்வார். பல வகையான சிவத் தொண்டுகளிலும் ஈடு பட்டு இன்பம் கண்டார்.

இறைவனுடைய அருள் வலிமை இருந்தமையால் அவருக்கு எல்லா வலிமைகளும் சேர்ந்தன. படை வலிமை சிறப்பாக அமைந்தது. அயலில் உள்ள நாடுகளை யெல்லாம் வென்று தம்முடைய ஆணையின் வழியே நடை பெறும்படி செய்தார். அவருக்கு எல்லையற்ற பொருள் வளம் அமைந்தது. தேர், களிறு, பரி, காலாள் என்னும் நால்வகைப் படைகளும் நிறைந்திருந்தன. வீரச் செருக்கும் வெற்றித் திருவும் மிக்கவராகி அவர் விளங்கினார்.

இவ்வாறு பல மன்னர்களையும் எதிர்த்துப் போர் செய்து அவர் நாட்டைக் கைப்பற்றி விரிந்த நாட்டுக்கு உரிய அரசராகப் பெற்றும், முடி அணியும் சிறப்பை அவர் பெறவில்லை. அவர் இயல்பிலே குறுநில மன்னரில் ஒருவராக இருந்தவர். தமிழ்நாட்டிலே குறுநில மன்னர்கள் பலர் இருந்து வந்தார்கள். சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவரே திருமுடி அணியும் உரிமை பெற்றவர்கள்; அதனால் அவர்களை முடியுடை மன்னர் என்று வழங்குவது மரபு.

சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று பெரு மன்னர்களும் வலி இழந்திருந்த அக்காலத்தில், கூற்றுவ மன்னர் தம்முடைய திறமையால் அவர் நாடுகளைக் கைப்பற்றினார். அப்படிப் பெற்றும் முடியுடை மன்னர் ஆக அவரால் முடியவில்லை.
தாமே சூட்டிக்கொள்வது அன்று முடிவேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்குத் திருமுடியைச் சூட்டுவார்கள். தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது வழக்கம்.

சிவபக்தியிற் சிறந்திருந்த கூற்றுவ நாயனார் இறைவனுடைய திருக்கோயில்களில் சிறந்த தில்லையில் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். முடி புனைவதற்கு ஏற்ற இலக்கணங்கள் யாவும் அவரிடம் இருந்தும், சோழர் குலத்தில் பிறக்கவில்லை என்ற குறை ஒன்று இருந்தது. இருப்பினும், 'இப்போது நாட்டின் ஆட்சி முறை நம் கையில் இருப்பதனால் நாமே முடி புனைந்து அரசாள்வது முறை' என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. தில்லைவாழ் அந்தணர்களை அணுகிப் பணிந்து, தமக்குப் பொன்முடி சூட்ட வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மரபு தவிராத தில்லைவாழ் அந்தணர்கள் அதற்கு உடம்படவில்லை. சோழர்கள் பரம்பரை பரம்பரையாக அணிந்து வந்த திருமுடி அவர்களுடைய பாதுகாப்பில் இருந்தது. அதையே தாம் சூட்டிக்கொள்ள வேண்டு மென்று கூற்றுவர் விரும்பினார். அவர்கள் மறுத்து விட் டார்கள். "சோழ குலத்திலே பிறந்த அரசர்களுக்கன்றி வேறு யாருக்கும் இந்த முடியைச் சூட்ட மாட்டோம்" என்று சொல்லி விட்டார்கள்.

முடி சூடினாலும் சூடாவிட்டாலும் கூற்றுவரே அரசாட்சி செய்து வந்தார். அரசருடைய விருப்பத்தின்படி நடக்காவிட்டால் அவரால் தமக்குத் தீங்கு வருமென்று அஞ்சினார்கள் தில்லைவாழ் அந்தணர்கள். ஆகவே தம்முள் ஒரு குடும்பத்தை மாத்திரம் தில்லையில் எழுந்தருளியிருக்கும் அம்பலவாணருக்குப் பூசை புரியவும், திருமுடியைக் காவல் புரியவும் வைத்துவிட்டு யாவரும் சேர நாட்டுக்குப் போய் விட்டார்கள். அங்கிருந்தபடியே, நடராசப் பெரு மானுக்குப் பூசை புரியாமல் இருக்கும்படி நேர்ந்த தம் நிலையை எண்ணி வாடினார்கள்; ஆடும் பெருமானை மனத் தால் வழிபட்டார்கள்.

தில்லைவாழ் அந்தணர்களில் பல்லோர் சோழ நாட்டை விட்டுப் போனதற்குக் காரணம் இன்னதென்று தெரியாமல் மயங்கினார் நாயனார். 'தில்லைவாழ் அந்தணர்கள் பொன்முடியைச் சூட்டாவிட்டாலும் அவர்களுள் முதல்வனாகிய அம்பலவாணனுடைய அடியாகிய நன்முடியைச் சூட்டிக் கொள்வேன்' என்று எண்ணிய அவர் நடராசப் பெருமானை வணங்கி, "நீயே நின் அடியை எனக்கு முடியாகச் சூட்டியருள வேண்டும்" என்று மனமுருகி வேண்டிக் கொண்டார். இதே நினைவாக இருந்த கூற்றுவ நாயனார் அன்று துயின்றபொழுது அம்பலவாணன் அவர் கனவில் எழுந்தருளினான். தன்னுடைய அடியாரின் விருப்பப்படியே அவருடைய சென்னிமிசைத் திருவடியைச் சூட்டினான்.

உடனே விழித்துணர்ந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி வியந்தார்; இறைவன் திருவருளை எண்ணி எண்ணி உருகினார். தாம் வேண்டியதைப் பிற அந்தணர்கள் செய்யாமல் இருக்க, முதல் அந்தணனாகிய இறைவன் தம் விருப்பம் அறிந்து நிறைவேற்றியதை நினைந்து நெகிழ்ந்து பரவினார்.

அப்பால் தில்லை வாழந்தணர்களுக்கு ஓலை போக்கி, அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாமென்று உறுதி கூறி அவர்களை வருவித்து வழிபட்டார். அவர்கள் கூற்றுவ நாயனாருக்கு இறைவன் அருள் செய்த திறத்தை உணர்ந்து, அவரிடம் இருந்த அச்சத்தை ஒழித்து அன்பு பூண்டனர்.

தலந்தோறும் சென்று அங்கங்கே சிறப்பாகப் பூசை வழிபாடுகளை நடத்தி இன்புற்று வாழ்ந்த கூற்றுவநாயனார் இறுதியில் உமையாள் கணவன் திருவடியை அடைந்து மீளா மாளா இன்பநிலை பெற்றார்.
-----------------------

40. பொய் அடிமை இல்லாத புலவர்

பெரிய புராணத்தில் தனி அடியார்களாகக் காட்சி அளிப்பவர்கள் அறுபத்து மூன்று பேர். அவர்களோடு தொகையடியார்களாக வருபவர்கள் ஒன்பது வகையினர். இன்ன காலத்தில் இன்ன இடத்தில் வாழ்ந்தார் என்று சுட்டிக் காட்டும் வாழ்க்கையை யுடையவர்கள், தனி அடியார்கள். தொகையடியார்கள் என்பவர்கள் ஒவ்வோர் இயல்புபற்றி ஒன்றாக இருந்து பழகும் கூட்டத்தார்கள். அவர்கள் இன்ன காலத்தில் இருந்தவர்கள் என்று குறிப் பிட்டுச் சொல்ல இயலாது. முன்பும் இருந்திருப்பார்கள்; பின்பும் இருப்பார்கள்.

அவர்களில் முன்பு தில்லை வாழ் அந்தணர்கள் என்ற வகையினரைப் பார்த்தோம். திருத்தொண்டத் தொகையின் தொடக்கத்தில் வருகிறவர்கள் அவர்கள். அவர்களைப் போலவே பொய்யடிமை இல்லாத புலவர் என்னும் கூட்டத்தினரும் தொகை-யடியார்களே.

திருத்தொண்டத் தொகையில் ஏழாம் பாசுரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார், 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" என்று பாடினார். அதற்கு வகை நூல் பாடிய நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில், கடைச் சங்கப் புலவர்களாகிய நாற்பத்தொன்பது பேரையுமே பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்று பாராட்டினார்.

“தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
      சங்கம் அதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
      தொன்பது பல்புலவோர்
அருள் நமக் கீயும் திருவால
      வாய்அரன் சேவடிக்கே
பொருள் அமைத் தின்பக் கவிபல
      பாடும் புலவர்களே"

என்பது அவர் பாட்டு. உமாபதிசிவம் அருளிய திருத்தாண்டர் புராண சாரம் என்னும் நூலும், கபிலர் பரணர் முதலிய சங்கப் புலவர்களையே பொய்யடிமை யில்லாத புலவர் என்று சொல்கிறது.

சங்க காலத்துப் புலவர்கள் யாவரும் சிவபிரான் திருவடிக்கே ஆளாகி வாழ்ந்தவர் என்று திட்டமாகச் சொல்ல இயலாது. பொதுவாக யாவரும் கடவுளன்பு உடையவர்களாக இருந்திருக்கலாம். ஆயினும், மக்களைப் புகழ்ந்து அவர்களுடைய ஈகைக்காக ஏங்கி நின்றவர்கள் அவர்களைப் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சொல்லுவது பொருந்தாது.

இதனை உணர்ந்த சேக்கிழார், உலகில் யு புலமையுடையவர்கள் இரு வேறு வகையினராக இருப்பதைத் தெரிவித்தார். தம்முடைய புலமைத் திறத்தால் பலர் உள்ளத்தைக் கவர்ந்து மக்களைப் பாடி அவர்களிடமிருந்து பரிசு பெற்று வாழ்பவர் பலர். தமக்கு வந்த புலமை இறைவன் அருளால் வந்ததென்று தெளிந்து, அவனுக்கு ஆளாதலே மனிதப் பிறவிக்கும் அதில் கிடைத்த அறிவுக்கும் பயன் என்று கண்டு, மெய்யான பெருமானுக்கு மெய்யான அடிமையாகி, பொய்யான மக்களுக்குப் பொய்யான அடிமை யாகாமல் இருக்கும் புலவர் சிலர். அத்தகைய மெய்யடிமை செய்யும் புலவர்களையே உள்ளங் கொண்டு சுந்தரர் "பொய்யடிமை இல்லாத புலவர்" என்று சொல்லி யிருக்க வேண்டும்.

திருப்புகலூர்ப் பதிகத்தில் சுந்தரர்' பொய்யடிமை உள்ள புலவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

"தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
      சார்வினுந் தொண்டர்த் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
      புகலூர் பாடுமின் புலவீர்காள்!
இம்மை யேதரும் சோறும் கூறையும்;
      ஏத்த லாம்இடர் கெடலுமாம்;
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
      கியாதும் ஐயுற வில்லையே "

என்று பாடியதில் பொய்ம்மையாளரைப் பாடும் பொய் யடிமைப் புலவரைக் குறிப்பிடுகிறார். ஆதலின் மெய்ம்மை யாளனாகிய இறைவனையே பாடி 'மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே' இருப்பவரை அவர் திருத்தொண்டத் தொகையில் பாராட்டினார்.

இவற்றை யெல்லாம் நன்கு ஓர்ந்த சேக்கிழார், எக் காலத்தும் இறைவனையே பாடி ஆளாகும் புலவர்களையே பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்று சொல்லுகிறார்.
“மெய்ஞ் ஞானத்தின் பயனாக இறைவன் அடிக்கு ஆளாவதே செய்யுட்களிலே நிகழும் சொற்களின் தெளி வுக்கும், செவ்விய நூல் பலவற்றின் நோக்குக்கும் பயனாகும்" எனத் துணிந்து, நீலகண்டப் பெருமான் திருவடி மலருக்கே ஆளானவர்களே, பொய்யடிமை யில்லாத புலவர் என்று ஆளுடைய நம்பிகள் வரையறுத்துப் பாராட்டும் புகழை உடையவர்கள் அவர்கள். அரவத்தை அணிந்த புரிந்த சடையை யுடைய சிவபெருமானை யன்றித் தம் வாய் திறந்து சொல்லும் சொற்களால் பாடாத தொண்டில் அவர்கள் தலை நின்றார்கள். அதனால் அவர்கள் மெய்யடிமைத் தன்மை படைத்தவர்களாகிப் பெரும் புலவர்களாகவும் விளங்குவார்கள். அவர் பெருமையை உணர்ந்து சொல்ல வல்லார் யார்?

இவ்வாறு சேக்கிழார் பாடுகிறார்.
--------------------

41. புகழ்ச்சோழ நாயனார்

சோழநாட்டின் தலைநகரம் உறையூர். செல்வம் கொழிக்கும் திருநகரம் அது. அங்குள்ள கடைவீதிகளில் எல்லா நாடுகளிலிருந்தும் வந்துள்ள பண்டங்கள் நிரம்பி யிருக்கும். யானைப்பந்திகளும் குதிரைக் கொட்டடிகளும் பல அங்கங்கே இருந்தன. கார் ஏறும் கோபுரங்களும் கதிர் ஏறும் மலர்ச்சோலைகளும் தேர் ஏறும் மணி வீதிகளும் உடைய உறையூரின் புகழ் உலகம் எங்கணும் பரவியது.

அந்த நகரத்தில் சோழகுலப் பெருமன்னராக இருந்து அரசாண்டார் புகழ்ச்சோழர் என்பவர். அவர் தம்முடைய தோள் வலியினால் பகை மன்னர்களை அடக்கி அவர்களைத் திறையளிக்கப் பணித்து, மன்னர் மன்னராகச் சேங்கோல் ஓச்சி வந்தார்.
சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டவர் அவர். ஆலயங்களிலெல்லாம் நன்றாகப் பூசை முதலியன நடை பெறும்படி வேண்டியன அளித்துப் பாதுகாத்தார். சிவனடியார்கள் யாரேனும் வந்தால் அவர்களுக்கு வேண்டுவன் அளிப்பார். அவர்களிடம் குறையிரந்து நிற்பார்போலப் பணிந்து ஒழுகி அவர்கள் குறிப்பை அறிந்து வேண்டும் பொருளைக் கொடுப்பார். ஒரு பொருளை ஒருவனிடம் பெற எண்ணிய இரவலன் அவனிடம் சென்று குறையிரந்து நிற்பதே உலகத்தின் பெருவழக்கு. ஆனால் புகழ்ச்சோழரோ தாம் கொடுக்க வேண்டியவற்றை, குறையுடையர் ஒருவரைப் போலப் பணிந்து நின்று அடியவர்களுக்குக் கொடுப்பார். தொண்டர்களிடம் அவருக்கு இருந்த பெருமதிப்பும் அன் புமே அதற்குக் காரணம்.

அவர் கொங்குநாட்டரசரும் மேற்குத் திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் தம்முடைய திறைகளைக் கொண்டு வந்து கொடுக்க வசதியாகக் கருவூர் என்னும் நகரத்துக்குச் சென்று தம் சுற்றத்துடன் தங்கலானார். அத்திருத்தலத் தில் உள்ள திருக்கோயிலுக்கு ஆனிலை என்று பெயர். அக்கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கித்தமக்குரிய திருமாளிகைக்குச் சென்றார். மேற்புறத்துள்ள அரசர்கள் வந்து மன்னரைக் கண்டு பணிந்து தம் திறைகளை அளித்துச் சென்றார்கள்.

அப்போது புகழ்ச்சோழர், "இந்தப் பக்கத்திலுள்ள மன்னர் யாவரும் திறைகொண்டு வந்து கொடுத்து விட் டார்களா? யாரேனும் எஞ்சியிருந்தால் சொல்லுங்கள்" என்று தம் அமைச்சரிடம் சொன்னார்.

அதுகேட்ட அமைச்சர்கள், "யாவரும் திறை செலுத்தி விட்டார்கள்; ஒருவன் மட்டும் இன்னும் திறை கொணராமல் தாமதம் செய்கின்றான்” என்றார்கள்.

"யார் அவன்?" என்று சோழமன்னர் கேட்டார்.

"இங்கே அருகில் மலையரணத்துக்குள் இருக்கும் அதிகன் என்பவன் இன்னும் திறைகொடுக்கவில்லை”.

“அப்படியா? அவன் எத்தகைய அரணத்தில் இருந்தால்தான் என்ன? உங்களுக்கு அது ஒரு பொருளோ? நீங்கள் படைகளுடன் சென்று அவன் அரணத்தை அழித்து வாருங்கள்" என்று மன்னர் கட்டளையிட்டார்.

அரசருடைய ஆணைப்படியே பெரிய படை அதிகனுடைய அரணை நோக்கிச் சென்றது.
அதிகமானுடைய படையும் சோழர் படையும் ஒன்றை ஒன்று எதிர்த்தன. பெரும்போர் மூண்டது. போர் மிகவும் கடுமையாக நிகழ்ந்தது. அதிகமானுடைய படை முழு ஆற்றலுடன் போர்செய்யும்; ஆயினும் சோழ அரசருடைய படைக்குமுன் அப்படை நிற்க இயலவில்லை. யானைகள் வீழ்ந்தன; குதிரைகள் குலைந்தன; போர்வீரர் பலர் மாண் டனர். அதிகமான படை இவ்வாறு சிதைந்து குலைந்து அழியவே அவன் தன் கோட்டையை விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போனான்.

போர்க்களத்தில் பகைவர் விட்ட பொருள்களையும் அந்த அரணில் இருந்த பொன் முதலியவற்றையும் படை வீரர்கள் கைப்பற்றிக் கருவூருக்குக் கொண்டு வந்தார்கள். பட்ட பல படைத்தலைவர்களுடைய தலைகளையும் வீரர்களின் தலைகளையும் சோழமன்னர் பார்த்துக் களிக்கட்டும் என்று எண்ணிக் குவையாகக் கொண்டுவந்து கருவூரில் குவித்தார்கள்.

புகழ்ச்சோழர் அதிகன் அரண் விட்டு ஓடியதைக் கேட்டு மகிழ்ந்தார். பகைப்படையினர் தலைக்குவையைப் பார்ப்பதற்கு வந்தார். வந்து பார்த்தார். அந்தத் தலைக் குவியலின் நடுவில் ஒருதலை அவர் பார்வையை இழுத்தது. அதை உற்றுக் கவனித்தார். "என்ன இது?" என்று திடுக்கிட்டு நடுங்கினார்.

அவர் பார்த்த அந்தத் தலையில் ஒரு சிறிய சடை இருந்தது. அவர் மனம் நடுங்கிக் கலங்கியது: அதைக் கண்டு கைதொழுதார். என்ன தீங்கு நேர்ந்ததோ என்று அஞ்சினார். அந்தத் தலையைக் கொண்டுவரச் சொல்லிப் பார்த்தார். இப்போது அதில் நன்றாகச் சடை தெரிந்தது. அவர் கண்கள் நீரைக் கக்கின.

"நான் பெரிய படையைப் போக்கி இந்த உலகில் சைவ நெறியைப் பாதுகாத்து அரசாட்சி செய்யும் முறை மெத்த அழகாயிருக்கிறது!" என்று சொல்லி அயர்ந்தார். "இந்தத் திருமுடியிலே சடைதாங்கும் இவர் சடாதாரியாகிய இறைவனுடைய அடியாராகத்தான் இருக்க வேண்டும். இத்தகையவருடைய தலையைக் கொண்டுவர, நான் என் கண்ணாலே பார்த்தும் இன்னும் இந்த உலகத்தை ஆள்வேன் என்று இருப்பேனா? பார் தாங்காமல் பழியல்லவா தாங்கவேண்டி யிருக்கும்? எள் ஆட்சியில் சிவனடியாரைக் கொலைசெய்த பாவமன்றோ வந்து சூழ்ந்து விட்டது?" என்று புலம்பினார்.

"இனிமேல் அரசாட்சி செய்யும் தகுதியை நான் இழந்துவிட்டேன்; இனி இறைவனுடைய தொண்டு நெறி யில் நின்று வழுவின்றி நாட்டைப் புரக்கும்படி என் மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்று அமைச்சர்களை நோக்கிக் கூறினார்.

இதைக்கேட்ட அமைச்சர்கள் கலங்கினார்கள்; என் செய்வதென்று தெரியாமல் மயங்கினார்கள். அவர்களுக்குரிய சமாதானத்தைச் சொல்லிய சோழர், "இனி நான் உலகில் வாழ்வது முறையன்று; தீயிற் குளித்து உயிர் விடுவதே தக்கது. இறைவனுக்குச் செய்யும் அபராதத்தை விட அடியவர்களுக்குச் செய்யும் அபராதத்துக்கு வேறு போக்கில்லை" என்று சொல்லித் தீயை வளர்க்கச் செய்தார். திருநீற்றை மெய்ம் முழுவதும் பூசிக்கொண்டு சடையுள்ள தலையை ஒரு பொன் தட்டில் வைத்துத் தம் தலையில் தாங்கிக்கொண்டு அந்த எரியை வலம் வந்தார். சிவபிரானுடைய பஞ்சாட்சர மந்திரத்தைச் செபித்துக் கொண்டே அந்தத் தீப்பிழம்புக்குள்ளே இறங்கிவிட்டார்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்; அங்கிருந்தவர்கள் கண்மாரி பொழிந்தனர்; சிவபெருமான் புகழ்ச்சோழரைத் தம்முடைய திருவடி நிழலில் இருக்கச்செய்து பேரின்பப் பெருவாழ்வாழ்வை அருளினான்.

இந்தப் புகழ்ச்சோழரே, எறிபத்த நாயனார் தம் பட்டத்து யானையை வெட்டி நின்ற போது, இந்த அபராதத்துக்கு இது போதாதென்றால் என் தலையையும் கொய்தருள வேண்டும்" என்று தம் வாளை உருவி நீட்டியவர்.
-------------------

42. நரசிங்க முனையரைய நாயனார்

நடுநாட்டின் ஒரு பகுதிக்குத் திருமுனைப்பாடி நாடு என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்த திருநாவலூர் அந்த நாட்டில் உள்ளது. அந்தத் திருமுனைப்பாடி நாட்டை நரசிங்க முனையரையர் என்ற அரசர் ஆண்டுவந்தார்.

பாரியின் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரையும் திருக்கோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற மன்னன் மணம்செய்து கொண்டான் என்றும், அந்தத் திருமணத்தை ஒளவையார் முன் இருந்து நடத்தி வைத்தாரென்றும் ஒரு வரலாறு வழங்குகிறது. அந்தத் தெய்வீகனுடைய மரபில் வந்தவர் நரசிங்க முனையரையர் என்று ஒரு புராணம் சொல்கிறது.

நரசிங்கமுனையரையர் சிறந்த சிவபக்தர். தம்முடைய நாட்டிலுள்ள சிவாலயங்களில் வழிபாடுகள் குறைவின்றி நடைபெறும்படி பேணிவந்தார். அக்காலத்தில் திரு நாவலூரில் ஆரூரர் என்னும் திருநாமத்தோடு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவவதாரம் செய்து வளர்ந்து வந்தார். திரு நாவலூருக்கு நரசிங்க முனையரையர் சென்றிருந்தபோது அப்பெருமானின் உருவப் பொலிவையும் பேரறிவையும் தெரிந்து அவரை அழைத்து வந்து வளர்த்து வந்தார். இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபின்பு பல தலங்களுக்குச் சென்று அப்பெருமான் திருவாரூரையே தம் இருப்பிடமாகக் கொண்டார்.

நரசிங்க முனையரையர் வீரத்தில் சிறந்தவர். பல போர்களில் வெற்றிபெற்றவர். இறைவனுடைய அடியார்களை வணங்கித் தொண்டு புரிவதே பெரும்பேறு எனக் கருதி ஒழுகிவந்தார்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று இறைவனுக்குச் சிறப்பான பூசை முதலியன புரிவித்து வழிபடுவார். அப்போது வருகிற சிவனடியார்களுக்கெல்லாம் அறுசுவை உண்டியும் ஆடையும் வழங்குவார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னுக்குக் குறையாமல் அளிப்பார். இவ்வாறு நீறணியும் தொண்டர்களுக்கு வேண்டிய வழிபாடு செய்து பொருள் வழங்கியமையால் வரவர அடியார்களின் கூட்டம் மிகுதியாயிற்று.

இப்படித் திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாடு நிகழ்ந்து வருகையில், ஒருமுறை வந்திருந்த அடியவர்களில் ஒருவர் காமக்குறிப்புத் தோற்றும் உருவம் உடையவராய் இருந்தார். அவருடைய நெற்றியில் திருநீறு இருந்தது. ஆயினும் அவருடைய அலங்காரங்களும் பார்வையும் காமக்குறிப்பை வெளிப்படுத்துவனவாக இருந்தன. அவற்றைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவரிடம் அவமதிப்புடையவராகி ஒதுங்கிச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்மட்டும் தனியே நின்றார்.

இதை நரசிங்கமுனையரையர் கண்டார். எத்தகைய ஒழுக்கம் உடையவரானாலும் திருநீறு அணிந்திருந்தால் அவரை இகழக்கூடாது என்ற கொள்கை உடையவர் மன்னர். ஆதலின் அந்த அடியாரை அணுகி வணங்கி அவருக்கு யாவருக்கும் கொடுப்பதைப்போல் இரண்டு பங்கு பொன்கொடுத்து வழிபட்டார்.

இறைவனுடைய பேரருளை நினையச்செய்யும் திருநீற் றுக்கு உரிய மதிப்பை மறந்து மற்றவற்றில் மனம் போக்கினால், வந்தவருடைய சீலம் முதலியவற்றில் ஆராய்ச்சி தலைப்படும். பொன் அழுக்கான இடத்தில் கிடந்தாலும் பொன்னைப் பெரிதாக மதிப்பவன் அதை வெறுக்காமல் கைக்கொள்வான். அதுபோலத் திருநீறு அணிதலே ஒரு பெரிய செயல் என்று எண்ணிய நரசிங்கமுனையரையர் அதனை அணிந்தவரைக் கண்டு, பிறவற்றைக் காணாது, இவரும் சிவனுக்கு அடியார் என்று வணங்கியது அவ ருடைய திண்ணிய நெஞ்சத்தைக் காட்டுகிறது.
-----------

43. அதிபத்த நாயனார்

கடற்கரையை அடுத்த நகரங்களைப் பட்டினம் என் பது தமிழ் வழக்கு. சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த பெருநகரமாக விளங்கியது. அதற்கு அடுத்த சிறப்புடையது நாகப்பட்டினம். கப்பல் வாணிகம் செய்யும் பல பெரு மக்கள் வாழும் செல்வம் மிக்க நகரம் அது: வேற்று நாட்டுப் பொருள்கள் கலங்களிலிருந்து இறங்க, உள்நாட்டுப் பொருள்கள் அவற்றில் ஏற, எப்போதும் இடைவிடாத ஆரவாரம் உடையதாக இருப்பது; குதிரைகளும் யானைகளும் ஆடை அணிகளும் வந்து இறங்கும் துறைமுகத்தை உடையது.

அந்நகரின் ஒருசார் நெய்தல் நில மக்களாகிய வலைஞர் வாழும் பகுதி ஒன்று உண்டு. கடலில் வலை வீசி மீன்களைப் பிடித்து விற்று வாழும் மக்கள் அங்கே இருந்தனர். வலையிலுள்ள கயிறுகளைப் பிடித்து இழுப்பவர்களின் ஒலியும், மீன் விலை பகர்பவர்களின் ஆரவாரமும், சங்குகளைக் குவிப்பவரின் முழக்கமும் கடலொலிபோலப் பொங்கும் இடம் அது.

அத்தகைய நுளையர் பாடியில் வாழும் வலைஞர்களுக்குத் தலைவராக அதிபத்தர் என்பவர் இருந்தார். அவர் சிவபெருமானிடம் நிறைந்த அன்புடைய அடியவர். அங்கே வாழும் வலைஞர்கள் கடலில் படகை இயக்கிச் சென்று மீன்களைக் கொணர்ந்து குவிப்பார்கள். அவற்றைத் தம்முடைய வருவாயாகப் பெற்று மீன் வாணிகம் செய்து செல்வராக ஓங்கி நின்றார் அதிபத்தர்

அந்த அடியார் ஒரு சிறந்த கொள்கையை மேற் கொண்டிருந்தார். வலையில் அகப்படும் முதல் மீனை, இது சிவபெருமானுக்கு உரியது" என்று கடலிலே விட்டுவிடுவது அவர் வழக்கம். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் முதலில் உண்டாகும் விளைபொருளை இறைவனுக் கென்று வழங்கி விடுவது மரபு. காயோ, கனியோ, நெல்லோ, புல்லோ எதுவானாலும் முதலில் விளைந்ததைத் தனியே எடுத்து இறைவனுக்கென்று வைத்து விடுவார்கள். அந்த முறையில் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கென்று கூறிக் கடலில் விட்டுவிடச் செய்தார்.

எவ்வளவு குறைவாக மீன் கிடைத்தாலும், முதலில் கிடைக்கும் மீன் மிகப் பெரியதாக இருந்தாலும், அந்த மீனைக் கடலில் விட்டு விடுவார். ஒரே ஒரு மீன் மாத்திரம் ஒருநாள் கிடைத்தால் அதை இறைவனுக்கென்று விட்டு விட்டு வெறுங் கையோடு வருவார். எந்த வகையிலும் தம்முடைய விரதம் மாறாமல் ஒழுகி வந்தார் அவர்.

இப்படி இருக்கையில் இறைவன் செய்த சோதனை யினால் தொடர்ந்து பல நாட்கள் ஒரு மீனே கிடைத்து வந்தது. அவர் அதைக் கடலிலே விட்டுவிட்டு வெறுங் கையோடு வீட்டுக்கு வந்தார். வலைவளம் சுருங்கியமை யாலும், தாம் பெற்ற ஒரு மீனையும் விட்டுவிட்டு வந்தமை யாலும் அவருடைய செல்வம் கரைந்தது. உறவினர் களுக்கு வேண்டியவை அளித்துப் பாதுகாத்தார்.நாளடை வில் பொருள் கரைந்து உணவு பெற இயலாத வறுமை வந்து அடைந்தது. தம்முடைய வீட்டில் உள்ள மனைவி மக்கள் பட்டினியால் சாம்புவதை அறிந்தும், அவர் தம் முடைய கொள்கையினின்றும் வழுவவில்லை. ஒவ்வொரு நாளும் கிடைத்த ஒற்றை மீனைச் சிவபெருமானுக்கு என்று விட்டு வந்தார்.

உணவின்றி அவர் உடம்பு வாடியது. ஆயினும் கொள்கை மங்கவில்லை. இறைவன் தன் சோதனையைப் பின்னும் கடுமை ஆக்கினான். ஒருநாள் அவருடைய வலையில் மிகவும் பளபளப்பான மீன் ஒன்று படும்படி செய்தான். உடம்பெல்லாம் பொன்னால் அமைந்து, அங்கங்கே நவமணிகளைச் செதில்களாகவும் கண்ணாகவும் கொண்ட மீன் அது. அதன் விலை அளவிடுதற்கரியது. அதனைப் பிடித்த வலைஞர்கள் மிக்க வியப்படைந்து, "இதோ ஒரு மீனைப் பிடித்து விட்டோம்" என்றார்கள். சிவபெருமானுடைய அடித் தொண்டராகிய அதிபத்தர் அதைப் பார்த்தார். பொன்னும் நவமணியும் இணைந்து பொருந்திய மீன் என்பதை உணர்ந்தார். ஆயினும் அதனை எடுத்துக் கொண்டு பயன் அடையும் எண்ணம் அவருக்கு உண்டாகவில்லை. “இந்த மீன் வழக்கம்போல எம்பெருமானுக்குரியது. ஆதலின் கடலிலே விட்டுவிடுக” என்று சொல்லி விடச் செய்தார்.

பொருளில் ஆசை இல்லாதவர்கள் உலகத்தில் மிக அரியர். மனைவி மக்களுடன் வாழ்ந்து தமக்கென ஒரு தொழிலை மேற்கொண்டு வாழ்கிறவர்களுக்குப் பொருள் இன்றியமையாதது. ஆதலின் அவர்கள் ஆர்வத்தோடு பொருளை ஈட்டுவார்கள். இப்படி இருக்க, வறுமை வந்து நலிந்த போதும், பசியிலும் இறக்கும் துன்பத்திலும் தாம் கொண்ட கொள்கையை விடுவது பெரும் துன்பம் என்று அதிபத்தர் எண்ணினார். அந்த ஒருநாள் தம் கொள்கையை விட்டு விட்டுக் கிடைத்த மீனை விற்றிருந்தால் பொற்குவையையே பெற்றிருக்கலாம். அவர் அதை நினைக்கவில்லை. இறைவனுக்கு உரியதாகச் செய்யும் முதல் மீன் அதுவாதலின், அது சிறிதாயினும் பெரிதாயினும், விலை சிறந்த தாயினும் தாழ்ந்ததாயினும் அவனுக்கே உரியதென்று உறுதியாக எண்ணி விட்டு விட்டார்.

அன்பினால் மேற்கொண்ட விரதத்தைப் பொருளாசையால் விட்டு மயங்காமல் கடைப்பிடித்த அன்பருடைய பெருமையை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டான் இறைவன். பொன்னும் மணியும் உறுப்பாகப் பெற்ற அந்த மீனை மீண்டும் கடலிலே அதிபத்தர் விடச் செய்த அந்தக் கணத்தில், சிவபெருமான் விடையின்மேல் அருளுருவாகிய ய அம்மையுடன் எழுந்தருளிக் காட்சி கொடுத்தருளினான். இறைவனை வணங்கி இன்ப வாரிதியிற் குளித்த அதிபத்தர் என்றும் மாறாத இன்ப வாழ்வைப் பெற்றார்.
------------

44. கலிக்கம்ப நாயனார்

நடுநாட்டில் பெண்ணாகடம் என்னும் திருத்தலம் ஒன்று இருக்கிறது. திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் வந்து தரிசித்துப் பாமாலை சூட்டிய திருப்பதி அது. அங்குள்ள திருக்கோயிலுக்குத் தூங்கானை மாடம் என்ற பெயர் வழங்கும்.

அங்கே வணிகர் குலத்தில் கலிக்கம்பர் என்ற அடியார் ஒருவர் இருந்தார். இறைவனிடத்தில் மாறாத பேரன்புடைய அவர், ஒவ்வொரு நாளும் திருத்தூங்கானை மாடம் சென்று வழிபட்டுத் தொண்டு புரிவார். தமக்குரிய பெரும் பற்றாக இறைவனையே பற்றிக் கொண்டு வாழும் பெருந்தகைமை உடையவர் அவர். சிவனடியார்களை வரவேற்று உபசரித்து அறுசுவை உண்டியளித்து, அவர் களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வழங்கி வந்தார்.

இவ்வாறு ஒழுகிவரும் நாளில் ஒருநாள் அவர் தம் மனை யில் அமுது செய்யும்பொருட்டு வந்திருந்த சிவனடியார்களை வரவேற்று, அவர்களுக்கு அமுதுபடைப்பதற்குமுன் அவர்களுடைய திருவடிகளை வழக்கம்போல விளக்க முற்பட்டார்.

அவருடைய மனைவியார் வீட்டையெல்லாம் நன்றாகச் சுத்தம் செய்து அடியார்களுக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகளை யெல்லாம் செவ்வனே சமைத்தார். பின்பு அடியார்களின் திருவடியை விளக்கும்பொருட்டுச் செம்பில் நீரெடுத்துவிட, கலிக்கம்பர் அவர்கள் திருவடியை விளக் கினார். இப்படியே ஒவ்வொருவராக வந்திருக்கும் அடியார் அனைவருடைய திருவடிகளையும் விளக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

அடியார்களுள் ஒருவர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். அவர் முகத்தைக் கலிக்கம்பருடைய மனைவியார் பார்த்தார். அவருக்குச் சிறிதே அருவருப்புணர்ச்சி உண்டாயிற்று. அந்த அடியார் அந்த வீட்டில் முன்பு சில காலம் வேலைக்காரராக இருந்தவர். பின்பு வேலை செய்வதை விட்டுப் போய்ச் சிவனடியாராகி விட்டார். 'இவர் நம் வீட்டில் பணியாளாக இருந்தவர் அல்லவா?' என்ற நினைவினால் சற்றே தயங்கி நின்றார், அந்தப் பெண்மணியார்.

அந்த அடியாருடைய காலைப் பற்றி விளக்கும் பொருட்டு நின்றார் கலிக்கம்பர். அவர் மனைவியாரோ செம்பிலிருந்து நீரை வார்க்காமல் சிறிது பாணித்தார். இதனைக் கண்ட வணிகர் பெருமானுக்குத் தம் மனைவியாருடைய நினைவு புலனாயிற்று. 'இவர் சிவவேடப் பொலிவுடன் சிவனடியாராக இப்போது எழுந்தருளி யிருக்கும் நிலையை மறந்து, பழைய காலத்துக் கதையை எண்ணிக் கொண்டு தயங்குகிறாள்' என்று எண்ணினவுடனே, மேலே ஒன்றும் யோசிக்கவில்லை; ஒரு வாளை உருவி அந்தப் பெண் மணியார் கையிலிருந்த செம்பை வாங்கிக்கொண்டு அந்தக் கையை வெட்டி விட்டுத் தாமே செம்பின் நீரை விட்டு அடியார் தாளை விளக்கலானார்.

தாமே எல்லா அடியார்களுக்கும் அமுது பரிமாறி உபசரித்தார்.

தாம் செய்யும் அறத்துக்குத் துணையாக நிற்கவேண் டிய தம் மனைவி அடியார் பெருமையை உணராமல் புறக் கணித்தமையால், கலிக்கம்பர் தம் காதல் மனைவி என்றும் பாராமல் கையைத் தறித்தார். அடியார்களிடம் அவருக்கிருந்த பேரன்பு மனைவியிடம் இருந்த காதலைவிடச் சிறந்து நின்றது. இத்தனை காலம் தம்முடன் பழகியும் தம் மனை விக்கு இத்தகைய வேற்றுமை உணர்வு வந்ததே என்ற எண்ணத்தால் அவளை ஒறுத்தார்.

முன்னைநிலை எதுவாக இருத்தாலும், சிவனடியாரான பிறகு எவரும் ஒத்த நிலையையே அடைகிறார்கள். பல காலம் அடைத்துக் கிடந்த அறையானாலும், ஒரு நாள் மூடியிருந்த அறையானாலும் விளக்கு ஏற்றியவுடன் அங்குள்ள இருள் உடனே நீங்கிவிடும். அவ்வாறே இறைவன்பால் அடிமை புகுவார்களினிடையே அதற்கு முன்பு முயற்சியிலும் நிலையிலும் வேறுபாடுகள் இருந்தாலும், சிவபிரானிடத்து அன்பு முதிர்ந்து தொண்டராகி விட்டால் யாவரும் ஒரே நிலையை அடைகிறார்கள். இதனை உணர்ந்த பெரியோர்கள் அவருக்குள் வேறுபாடு நினையாமல் யாவரையும் சிவபெருமானாகவே பாவித்து வழிபட்டு இன்புறுவார்கள்.

இதனைத் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு சிறந்து நின்றவர் கலிக்கம்ப நாயனார்.
--------------

45. கலிய நாயனார்

எழுத்தறியும் பெருமான் எழுந்தருளி யிருப்பது திருவொற்றியூர். தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலம் அது. நெடு வீதிகளும் மாளிகைகளுமாகச் சிறந்த தோற்றமுடைய பேரூராக அது விளங்கியது. அங்கங்கே உள்ள மண்டபங்களில் எப்போதும் திருப்பதிக இசை நிலவும். அணியரங்குகளில் மகளிர் ஆடல் பயில்வார்கள். அங்குள்ள மடங்களில் இடைவிடாமல் அடியவர்களுக்கு உணவு அருத்திக் கொண்டிருப்பார்கள்.

கடற்கரையை அடுத்துள்ளது திருவொற்றியூர். கடற் கரையில் நிலவு பரந்தது போல மணற்பரப்பு விரிந்து கிடக்கும். புன்னை, புலிநகக் கொன்றை, தாழை ஆகிய
நெய்தல் நில மலர்களின் மணமும், மாதவி, செண்பகம் செருந்தி ஆகிய பிற மலர்களின் மணமும் இணைந்து வீசும்.

இறைவன் திருக்கோயிலில் பல வகை வாத்தியங்கள் எப்போதும் முழங்கிக் கொண்டே இருக்கும். கடலின் ஒலியும் இடைவிடாமல் கேட்கும்.

அந்த நகரில் சக்கரப்பாடித் தெரு என்று ஒரு தெரு. உண்டு. அங்கே எண்ணெய் வாணிகர் பலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் கலியனார் என்பவர் ஒருவர். செல்வம் நிறைந்த குடியில் பிறந்தவர் அவர். பொருட் செல்வத்தோடு இறைவனிடம் ஆழ்ந்த அன்பு வைத்து ஒழுகும் பண்புச் செல்வத்தையும் அவர் பெற்றிருந்தார்.

இறைவன் திருக்கோயிலில் தம்மால் செய்வதற்குரிய திருத்தொண்டு இன்னதென்று தேர்ந்து, ஒற்றியூருடைய பெருமான் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் வரிசை வரிசையாக விளக்குகளை வைத்து ஏற்றி இன்புற்றார். இரவும் பகலும் இடைவிடாமல் திருவிளக்குப் பணியை அவர் செய்து வந்தார்.

பல ஏவலர்களை வைத்தும் தாமே நேரில் இருந்தும் இந்தத் திருப்பணி முட்டாமல் நடைபெறும்படி செய்து வந்தார், கலியனார். இறைவன் செய்த சோதனையால், அவரிடம் இருந்த செல்வம் வர வரக் கரைந்து வந்தது. தாமாக எள்ளாட்டி எண்ணெய் எடுத்து ஆலயத்தில் விளக்கு வைக்கும் திருப்பணி தொடர்ந்து நடைபெறுவது அரிதாயிற்று. அவர் பிறரிடம் எண்ணெய் வாங்கி விற்று, அதில் கிடைக்கும் லாபத்திற்கு வரும் எண்ணெயைக் கொண்டு விளக்கேற்றி வந்தார்.

நாளடைவில் இந்தப் பிழைப்பிலும் முட்டுப்பாடு உண்டாயிற்று. செக்கு ஓட்டும் ஏவலாளாக வேலை செய்து கூலி பெற்றுத் தம் திருத்தொண்டைச் செய்து வந்தார். அதன் பின்பு அந்தக் கூலி வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைவிடத் திறம்பட வேலை செய்யும் மக்கள் பலர் வந்தார்கள். செல்வத்திலே வளர்ந்த அவரால் அவர்களைப் போல வேலை செய்ய முடியவில்லை. ஆதலின் கூலி வேலைகூட அவருக்குக் கிடைக்கவில்லை.

வேறு வகை ஒன்றும் காணாராகித் தம்மிடம் உள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று, எண்ணெய் வாங்கித் திருவிளக்கு எரித்தார். பண்டங்கள் இல்லையாகவே, கடைசியில் தம்முடைய வீட்டையே விற்றுச் சில நாட்கள் தம் தொண்டை நிறுத்தாமல் நடத்தினார். வீட்டை விற்ற பொருள் எத்தனை நாளைக்கு வரும்? யாரோ ஒருவன் பரிகாசமாக, "இனிமேல் பெண்டாட்டியைத்தான் விற்க வேண்டும்" என்று கூறிக்கொண்டே போனது அவர் காதில் விழுந்தது. அவன் பரிகாசமாகச் சொல்கிறான் என்று அவர் நினைக்கவில்லை.இறைவனே தமக்கு வழி காட்டுகிறான் என்று எண்ணிக் கொண்டார். அரிச்சந்திரன் தன் மனைவியை விற்கவில்லையா? எல்லாம் அறிந்த தர்மபுத்திரர் தம் மனைவியைச் சூதாட்டத்தில் பணயமாக வைக்கவில்லையா? ஆகவே தாமும் தம் மனைவியை விற்க லாம் என்று துணிந்தார் அவர்.

இறைவனுடைய திருத்தொண்டு ஒன்றையே அவர் தம் வாழ்க்கையின் பயனாகக் கொண்டிருந்தார். மற்ற எதுவும் அதற்கு நிகராகத் தோன்றவில்லை. இறைவன் திருக்கோயிலில் விளக்கு எரியாமல் நின்றால் அவர் உயிரும் உடலில் இராமல் நின்றுவிட வேண்டும். அந்த விளக்குக்கு எண்ணெயையா அவர் விட்டு எரித்தார்? தம் செல்வ முழுவதையும் கொண்டு எரித்தார்; தம் வீட்டைக் கொண்டு எரித்தார்; தம் மதிப்பை விட்டு எரித்தார். இப்போது நாணத்தை விட்டு எரிக்க முன் வந்தார்.

கலியனார் தம் மனைவியாரை விலை கூறினார். வாங்கு பவரைக் காணவில்லை. நன்றாக வாழ்ந்த அவரிடம் இன்னும் மக்களுக்கு மதிப்பு இருந்து வந்தது.

பிறர் செய்யத் துணியாத ஒன்றைச் செய்ய முன் வந்த கலிய நாயனார் எண்ணம் ஈடேறவில்லை. மனைவியை விற்றுப் பொருள் கொள்ள முடியவில்லை. ஒன்றும் வகை தெரியாமல் இறைவன் சந்நிதிக்குள் வாட்டத்தோடு நின்றார்.

'விளக்கு உதிரத்தால் எரிவதானால் நம் உதிரத்தையே எண்ணெயாக வார்க்கலாம்' என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அகலை வைத்துத் திரியை இட்டு அதில் இரத்தத்தை விட எண்ணி, கையில் வாளை எடுத்துத் தம் கழுத்தை அரியத் தொடங்கினார். அப்போது அருட்கட லாகிய இறைவன் தோன்றி அவர் கையைப் பிடித்து நிறுத்தினான்.

பிறகு எம்பெருமான் நாயனாருக்குச் சீரும் சிறப்பு முடைய பெருவாழ்வு அளித்து இறுதியில் பேரின்ப வாழ்வும் கொடுத்தருளினான்.

போரில் புகுந்து சமர் செய்யும் வீரர்கள் தம் உயில் மதிப்பதில்லை.அவர்கள் மன்னர்களின் ஏவலர்களாகி ஊதியம் பெற்று வாழ்பவர்கள். பகை மன்னரோடு போர் புரிவது தக்க காரணங் கொண்டா என்று அவர்கள் ஆராய்வதில்லை. போரின் முடிவில் வெற்றி உண்டானால், கிடைக்கும் நாட்டில் அவர்களுக்குப் பங்கு கிடைக்கப் போவதில்லை; ஏதோ பரிசு கிடைக்கலாம். மாதச் சம்பளந்தான் நிச்சயமாகக் கிடைக்கும். இந்தக் கூலிக்காகத் தம் உயிரை விடவும் துணிந்து போரிடுகிறார்கள் வீரர்கள். அது மனித மன இயல்புக்கு ஒத்த செயலாக இருப்பதைக் காண்கிறோம்; இன்னும் இந்த நிலை இருந்து வருகிறது.

தம்முடைய வாழ்க்கைக்குப் பயன் இது என்று உறுதியாக நம்பி ஒரு தொண்டைச் செய்து வருபவர்கள், அதன் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கத் துணிவது இயல்புக்கு மாறுபாடு அன்று. போர் வீரன் தான் பெறும் கூலிக்காகத் தன் உயிரைக் கொடுக்க முன் வருவது இயல்பானால், இது ஆயிரம் மடங்கு அதைவிட இயல்பாகும். அதனால்தான் நாயனார் தாம் மேற்கொண்ட பணிக்கு இடையூறு வந்தபொழுது தமக்கு உரியனவாக இருந்த அனைத்தையும் இழந்து நின்றதோடு, தம் உயிரையும் இழக்கத் துணிந்தார்.
------------------

46. சத்தி நாயனார்

சோழ நாட்டில் வரிஞ்சையூர் என்பது வேளாண் செல்வர் மலிந்த பதி. அந்தக் குலத்தில் சத்தியார் என்பவர் தோன்றினார். சிவபிரானுடைய திருவடித் தொண்டை வாழ்க்கையின் பெரும் பயனாக எண்ணி வாழ்ந்தார் அவர். அவருடைய இயல்பான பெயர் இன்னதென்று தெரியவில்லை.

அவர் இறைவனுடைய அன்பர்களிடத்தில் மிக்க ஈடு பாடு உடையவராக இருந்தார். நடமாடும் தெய்வமாக அவர்களை எண்ணி வழிபட்டார். அடியாரிடம் உலகம் முழுவதும் மதிப்பு வைத்து ஒழுகவேண்டும் என்பது அவர் பேராவல். அடியாரைக் கண்டால் எழுந்து வணங்கி உபசரிக்காதவர்களை விலங்கெனவே எண்ணினார். அடியவர்களை யாரேனும் இகழ்ந்தால் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கமாட்டார். அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்கத் துடிப்பார். நாளடைவில் அவர் சினம் மிக்கது. யாரேனும் அடியார்களை இகழ்ந்தால் உடனே ஒரு கிடுக்கியைக் கொண்டு, இகழ்ந்தவர்களுடைய நாவைப் பற்றி இழுத்து வாளால் அரியத் தொடங்கினார். அவர் மிடுக்கும் உடல் வலிமையும் உடையவராதலின் இவ்வாறு செய்ய முடிந்தது. இந்த வலிய சத்தியை உடையவராக இருந்ததனால்தான் அவருக்குச் சத்தியார் என்ற பெயர் உண்டாயிற்று.

அடியவர்களை இகழ்பவர் யாராயினும் சத்தியார் வருகிறாரென்றால் அஞ்சி நடுங்குவர். இதனால் மனம் போனபடி யெல்லாம் அடியவர்களைப் பழிக்கும் செயல் குறைந்து வந்தது. எங்கிருந்தாவது சத்தியார் வந்து கேட்டுவிட்டால் என் செய்வது என்று அஞ்சி நடுங்கினார்கள், அடியாரைப் பழிக்கும் இழிதகைமை யுடையவர்கள்.

தீங்கு செய்வாரைத் தண்டிப்பது அறம். பயிருக்குக் களையெடுப்பது போன்றது அது. பிறர் தீங்கு செய்வதைக் கண்டிருந்தும் அதைக் கண்டிக்கப் பலருக்கு வாய் எழாது. "நமக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு" என்று ஒதுங்கி விடுபவர்களே பலர். அவ்வாறு இன்றி ஏது வரினும் வரட்டும் என்று துணிந்து தீயவை புரிபவர்களைத் தண்டிக்கும் வீரம் எல்லோருக்கும் வருவதில்லை. சத்தியார் இந்த வீரம் பெற்றவர்.

சிவனுக்கு அபசாரம் செய்வதைக் காட்டிலும் சிவனடி யாருக்கு அபசாரம் செய்வதனால் மிக்க துன்பம் நேரும். ஆதலின் சிவனடியாருக்கு யாரும் தீங்கு செய்யாமல் பாதுகாப்பது வீரம் உடையவர்கள் கடமை. இதை மேற்கொண்டு வாழ்ந்த சத்தியார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக எண்ணும் பெருமையைப் பெற்றார்.
----------

47. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

மன்னவர்க்கு மன்னராய்ப் பல்லவ குலத்தில் உதித்து அரசாண்டார் ஐயடிகள் காடவர்கோன். தம் குடிமக்களுக்கு வறுமை வாராமல் அவர்கள் வளவாழ்வில் இன்புறுமாறு செய்தார். வேற்று நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மன்னர்களை வென்று அவர்களுடைய நாட்டையும் தம் அரசாட்சியின்கீழ்க் கொண்டு வந்தார். தம் ஆட்சிக்கு அடங்கிய நில முழுவதிலும் எல்லா உயிர்களும் இனிது அமரும்படி செங்கோல் செலுத்தி, எங்கும் சிவநெறியும் வேத நெறியும் விளக்கம் பெறும்படியாக ஆண்டு வந்தார்.

மன்னர் பலர் தமக்குப் பணிசெய்ய, வடமொழியும் தென் தமிழும் சிறப்புற, பலவகைக் கலைகளும் வளர அரசளித்து வந்த அவருக்கு, அரசாட்சியாகிய பாரம் சிவபிரானை எப்போதும் வழிபட்டு வாழ்வதற்குத் தடையாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனால் தம்முடைய குமரனுக்கு முடிசூட்டி, ஆளும் பொறுப்பை அவன்பால் ஒப்பித்துத் தாம் விரும்புகின்ற சிவத்தொண்டைச் செய்ய முற்பட்டார். அரச நீதிப்படி நாடு காக்கும் பெருங் கடமையை இன்னவாறு ஆற்ற வேண்டுமென்று தம் புதல்வனுக்கு அறிவுறுத்தி விட்டுப் பூட்டவிழ்ந்த ஆனேறு போலப் புறப்பட்டார்.

சிவபிரான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக் கெல்லாம் சென்று தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் அவரிடம் இருந்தது. அந்த ஆவலைத் தணிக்கப் புகுந்தார். ஒவ்வொரு பதியாகச் சென்று அங்குள்ள சிவபெருமான் திருக்கோயிலை அடைந்து தம்மால் இயன்ற
இயன்ற பணிகளைச் செய்தார். தமிழ்ப் புலமை படைத்தவராதலினால் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டார்.
பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரம் சென்று அங்கே திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் ஐயனைத் தரிசித்துக் கண்ணீர் வார நின்றார். உணர்ச்சி வசப்பட்டுக் கூத்தாடும் ஐயனைப் பாடலானார்.

உலகில் கைகால் வலிமை உடையனவாக ஓடியாடித் திரிந்தால் உற்றாரும் உறவினரும் நம்முடன் இருந்து செயல்புரிவார்கள். நம்மால் பெறும் உதவி இருந்தால் அவர்களும் உதவி புரிய வருவார்கள். அந்த நிலை மாறி வயசு ஏறி ஆட்டம்பாட்டம் குறைந்து ஓட்டம் நின்றால், உற்றார் நம்மைக் கண்டு முகத்தைக் கோணிக் கொள்வார்கள். வரவரக் கிழத்தன்மையும் வந்து அடையும். நரை திரை மூப்பு ஆகியவை வந்தால் அடுத்தபடி வருவது மரணந்தான். எவ்வளவு ஆற்றலும் அழகும் உடைய உடம்பானாலும் அது மூப்பினால் தளர்ந்து போகும். மரணம் வந்தால் அந்த உடம்பை யாரும் விரும்ப மாட்டார்கள். அது வரைக்கும் நல்ல அச்சாகக் குடும்பமென்னும் தேரைத் தாங்கி ஓட்டியிருந்தாலும் அது இற்றுப் போயிற்றென்றால், ஒருநாள் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். வெறும் வெளியாகிய மயானத்துக்குக் கொண்டு போய்ச் சுட்டு விடுவார்கள்.

இந்த முடிவு, உடம்பெடுத்த எல்லோருக்கும் பொதுவானது. உடம்பும் உயிரும் இணைந்து வாழும் மட்டும் அவர் வாழ்க்கையில் வேறுபாடு இருக்கலாம். உடம்பின் ஆற்றலிலும் அழகிலும் அதற்கு ஊட்டும் உணவிலும் உடுக்கும் உடையிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் பிணமாகிவிட்டால் எல்லா உடம்பும் பிணமே; மயானத்திலே கொண்டுபோய்க் கொளுத்துவதற்கு உரியனவே. இதனை நாம் நல்ல நினைவோடு இருக்கும்போதே நினைக்க வேண்டும். இங்கே வாழும்போது உற்றார் உறவினராகிய துணையை நாடிக் கொள்கிறோம். அவர்களால் நலம் பெறுகிறோம். ஆனால் உடம்பு பிணமான பிறகு அந்த உற்றரால் பயன் இல்லை.

சிறு குழந்தையாக இருக்கும்போது நம்மைப் போன்ற குழந்தைகளைத் துணையாகக் கூட்டிக்கொண்டு விளையாடுகிறோம். ஆண்டு முதிர்ந்தால் குழந்தை விளையாட்டை விட்டு விட்டுக் கல்வி கற்கப் புகுகிறோம்; நம்மினும் சிறந்த ஆசானைத் துணையாக நாடுகிறோம். பெரிய ஆசானை நாடுபவர்கள் பெரிய கல்வியை அடைகிறார்கள். அப்படியே பொருள் முட்டுப்பாடு வந்தால் பொருளாளரை நாடுகிறோம். பெரிய பொருளாளரை நாடுபவர்களுக்குப் பெரிய முட்டுப்பாடு வந்தாலும் இடர் வராது.

ஆகவே, மிகப் பெரிய துணையை நாடுவது மனித இயல்பு. ஓர் ஊருக்குத் தலைவனது துணை கிடைத்தால் அந்த ஊரளவில் நாம் செல்வாக்குப் பெறலாம்; அந்த ஊர்க்காரர்கள் நம்மிடம் அன்பு வைப்பார்கள். ஒரு நாட்டுக்குத் தலைவனது பெருந்துணை கிடைக்குமானால் அந்த நாடு முழுவதும் நமக்கு நலம் உண்டாகும். அந்தத் தலைவன் உயிருடன் இருக்குமளவும் அந்தச் செல்வாக்கு நிற்கும். அவன் போய்விட்டால் அடுத்த தலைவனுக்கும் நல்லவனாகப் பழகி அவனுடைய துணையையும் பெறும் ஆற் றல் நமக்கு இருந்தால், முன் பெற்ற நலம் பின்னும் கிடைக்கும். இது உலகியலில் காணுகின்ற உண்மை.

எல்லாவிடத்துக்கும் எல்லாக் காலத்திலும் தலைவனாக இருப்பவனுடைய துணை கிடைக்குமானால் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் நமக்கு நலம் கிடைக்கும். அப்படி உள்ள ஒருவனைத் தேடிப் பிடித்துப் பற்றினால், இந்த உடம்பை விட்டு உயிர் வேறு உடம்பை எடுத்தாலும் அங்கும் நலம் உண்டாகும். அத்தகைய தலைவன்தான் நடராசப் பெருமான். அவன் தில்லைச் சிற்றம்பலத்திலே எழுந்தருளி யிருக்கிறான். அவனைச் சேர்ந்து உறவு பிடித்துக்கொண்டால் எந்த ஊர் சென்றாலும், எந்த உலகம் சென்றாலும், எந்தப் பிறவி எடுத்தாலும் அவன் அருள் துணை கிடைக்கும். இத்தகைய உணர்வைப் பெறுவதற்குரிய அறிவு இந்த மனிதப் பிறவியில் கிடைத்திருக்கிறது. ஆதலின் இப்பிறவி முடியும் முன்னரே தில்லைச்சிற்றம் பலத்தானுடைய உறவினர் கூட்டத்திலே நாம் சேர்ந்து விடவேண்டும்.

இந்த அரிய நல்லுரையைத் தம்முடைய நெஞ்சைப் பார்த்து உரைப்பாராய், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருச்சிற்றம்பலத்தின் முன் நின்று ஒரு வெண்பாவைப்
பாடினார்.

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார்; மூப்பும் குறுகிற்று;- நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே!
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

[நன்னெஞ்சே - எனக்கு நல்லது செய்யவேண்டும் என்று எனக்கு நல்லது எண்ணுகிற நெஞ்சமே, ஓடுகின்ற நீர்மை - ஓடியாடி இயங்குகின்ற இயல்பு, ஒழிதலும் - (உடம்புத் தளர்ச்சி காரணமாக) நீங்கின வுடனே, உற்றாரும் -நமக்கு அருகில் உள்ள உறவினர்களும், கோடுகின்றார் - நம்முடன் வருவதற்கும் நம்மை நாடுவதற்கும் நம்மிடம் நாலு வார்த்தை பேசுவதற்கும் விருப்பமின்றி முகம் கோணுகின்றார்; மூப்பும் குறுகிற்று - உடல் தளர்ச்சிக்கு மேலே கிழப் பருவமும் வந்து அடைந்தது; நாடுகின்ற - இதுகாறும் உறவினர்களும் பிறரும் நாடி வருகின்ற, நல் அச்சு -நல்ல உடம்பானது, இற்று - உயிரற்றுப் போய், அம்பலமே - வெறும்வெளியாகிய மயானத்தை, நண்ணாமுன் - அடையாததற்கு முன்பே, தில்லைச் சிற்றம்பலமே - வேறு எவ்விடத்தையும் அடையாமல் நடராசப் பெருமான் ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் தில்லைப்பதியிலுள்ள திருச்சிற்றம்பலத்தையே, சேர் - போய் அடைந்து வழிபட்டு உய்வாயாக. ]

இவ்வாறு பாடிய ஐயடிகள் தில்லையில் சில நாட்கள் தங்கி இறைவனை வழிபட்டு இன்புற்றார். பின்பு ஏனைத் தலங்களுக்கும் செல்லும் வேட்கை உந்த அங்கிருந்து புறப்பட்டு எம்பெருமான் திருக்கோயில் கொண்ட இடங்களுக்கெல்லாம் சென்றார்; தம்மால் இயன்ற சிவத்தொண்டுகளைப் புரிந்தார்; இனிய வெண்பாக்களை மொழிந்தார். இவ்வாறே தொண்டு புரிந்து வாழ்வு முழுவதும் நிறைவுடை யவராகி வாழ்ந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

அவர் பாடிய வெண்பாக்கள் க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுப் பதினோராந் திருமுறையில் சேர்க்கப் பெற்றுள்ளன.
---------

48. கணம்புல்ல நாயனார்

இறைவனுடைய திருக்கோயிலில் அவரவர்கள் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் செய்வதற்குரிய திருப்பணிகள் உண்டு. பொருளுடையார் அப்பொருள் கொண்டு பல நிவந்தங்களை அமைக்கலாம். புதிய மூர்த்திகளை நிறுவி வழிபாடு நடக்கச் செய்யலாம். கோயிலில் புதிய மண்டபங்களை அமைக்கலாம். நந்தவனம் அமைக்கலாம். மிகுதியான பொருள் உதவ வசதி இல்லாதவர்கள் பூசைக்குரிய பண்டங்களை அளிக்கலாம். திருவாபரணம், பரிவட்டம், பாத்திரம் ஆதியன கொடுக்கலாம். திருவிளக்கு ஏற்றலாம். பொருளே இல்லாதவர்கள் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்.

இப்படி உள்ள பலவகைத் திருத் தொண்டுகளில் திருவிளக்கேற்றுதல் ஒன்று. அது இறைவன் திருவுருவை யாரும் காணும்படி செய்யும் தொண்டு.

"விளக்கிட்டார் பேறு சொல்லின்
மெய்ந்நெறி ஞான மாகும்”

என்று அப்பர் சுவாமிகள் அந்தத் தொண்டைச் சிறப் பாகப் பாடியிருக்கின்றார். அத்தகைய சிறந்த தொண்டைச் செய்தவர் கணம்புல்ல நாயனார்.

வெள்ளாற்றின் தென் கரையில் உள்ள இருக்கு வேளுர் என்னும் தலத்தில் தோன்றியவர் அவர். அந்த ஊரில் ஊருக்கெல்லாம் பெரிய நாட்டாண்மைக்காரராய் வாழ்ந்து வந்தார். மிக்க செல்வமும் சிறந்த குணமும் நிரம்பியவர் அவர். இறைவனுடைய திருவடியே இணையற்ற மெய்யான பொருள் என்ற கருத்தை உடையவர். நாள்தோறும் திருக்கோயிலில் பல விளக்குகளை ஏற்றிப் பணி செய்து வந்தார்.

அவருக்கு வறுமை வந்து எய்தியது. நன்றாக வாழ்ந்த ஊரில் வறியராக வாழ மனம் இல்லாத நாயனார் தில்லை மாநகர் வந்து சேர்ந்தார். அங்கே திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றும் திருப்பணியை விடாமல் செய்து வந்தார். அதன் பொருட்டு வீட்டில் உள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக செய்யச் செய்யப் பண்டங்கள் விற்றார். அவ்வா குறைந்து வந்தன. கடைசியில் விற்பதற்கு ஒன்றும் இல்லாமற் போகவே, வேறு என்ன செய்வது என்று யோசித்தார். பிறரிடம் சென்று இரந்து பொருள் பெற்று அதைக் கொண்டு திருவிளக்குத் தொண்டு அவருக்கு விருப்பம் இல்லை. ஆதலால் மெய் வருந்தி ஏதேனும் தொழில் செய்து தம் பணியை நடத்த நினைத்தார். ஒருவரை அணுகி அவருக்கு ஏவல் புரிவதற்கும் அவர் மனம் துணியவில்லை. இறுதியாக ஊருக்குப் புறம்பே உள்ள காட்டுப் புறமான இடங்களில் உள்ள கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அறுத்துக் கொண்டு வந்து அதை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு நெய் வாங்கித் திருவிளக்கு ஏற்றினார்.

இவ்வாறு செய்யும்போது ஒரு நாள் அவர் அறுத்துக் கொண்டு வந்த புல் விலை போகவில்லை; ஆகவே நெய் வாங்கப் பொருள் கிடைக்கவில்லை. அவருக்கு ஒன்றும் தோன்றாமல் வருந்தி, அந்தப் புல்லையே விளக்கைப் போல வைத்து எரித்தார். இப்படியே சிலநாட்கள் செய்துவந்தார்.

யாமந் தோறும் விளக்கு எரிப்பது வழக்கம். நெய் விளக்காக இருந்தால் நின்று எரியும். புல் திகு திகு என்று உடனுக்குடன் எரிந்துவிட்டது. அதனால் யாமந்தோறும் எரிப்பதற்குப் புல் போதவில்லை. நான்காவது யாமத்தில் வைத்திருந்த புல்லெல்லாம் எரிபடவே மேலே எரிக்க ஒன்றும் இல்லை. அந்தச் சமயத்தில் எங்கே போய் எதைக் கொணர்வது? ஒரு கணம் அவர் கலங்கினார். உடனே தெளிவு பெற்றுத் தம்முடைய திருமுடியையே விளக்கி லிட்டு எரிக்கலானார்.

இறைவன் அவருடைய முறுகிய பேரன்பைக் கண்டு திருவருள் பாலித்தான். தம் உடம்புக்கு வரும் துன்பத்தை எண்ணாமல் தாம் மேற்கொண்ட தொண்டை முட்டின்றி முடிக்கும் நெஞ்சத் திண்மை கணம்புல்ல நாயனாரிடம் இருந்தது. அவரை அப்பர் சுவாமிகள் இரண்டிடங்களில் பாராட்டி யிருக்கிறார்.

“வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
      மருந்து; நல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து
      காதலாம் அடியார்க் கென்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும்
      குறுக்கைவீ ரட்ட னாரே”

என்பதில், 'அருந்தவத்த கணம்புல்லர்' என்று சிறப்பித்தார். தம் திருமுடியையே விளக்காக எரிக்கச் சரீராபி மானம் போனால்தான் இயலும், அதைக் காட்டிலும் சிறந்த தவம் ஏது?

“நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறந்த குணத்தி லே
கணம்புல்லன் கருத்துகந்தார்”

என்றும் பாடினார்.
---------------

49. காரி நாயனார்

திருக்கடவூர் என்னும் தலத்தில் தோன்றியவர் காரி நாயனார். தமிழில் பெரும்புலமை வாய்ந்தவராக விளங்கினார் அவர். அக்காலத்தில் பல பழைய பாடல்களுக்குச் சொற்கள் தெளிவாக இருப்பினும் பொருள் விளக்க மில்லாமல் இருந்தமையால், அப்பாடல்களை மக்கள் நாடாமல் போயினர். அதனால் அவை வழக்கு இழந்து வந்தன.

இதனை அறிந்த காரியார் அத்தகைய பாடல்களை யெல்லாம் தொகுத்து ஒரு கோவை யாக்கினார். அந்தப் பாடல் தொகுதிக்குக் காரியார் கோவை என்ற பெயர் வழங்கியது.
அறத்தைச் செய்பவர்கள் சிறந்தவர்களே; ஆனால் அவ் வறத்தை மங்காமல் காப்பாற்றி வருகிறவர்களைப் பின்னும் சிறந்தவர்களென்று சொல்ல வேண்டும். அறம் செய்தார் பெயரையும் அறத்தையும் தம் பெயரையும் மறையாமல் நிலைநிறுத்துகிறவர்கள் அவர்கள். அப்படியே நூல் செய்த புலவர்கள் போற்றுவதற்குரியவர்கள். ஆனால் அந்த நூல்களும் பாடல்களும் நாளடைவில் மறைந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து வருபவர்கள் மிகவும் பாராட்டு தற்கு உரியவர்கள். புதிய கோயில் கட்டுவதைவிடப் பழைய கோயிலைப் பாதுகாத்தல் சிறந்தது. அப்படியே புதிய பாடல் இயற்றுவதை விடப் பழம் பாடல்களைக் காப்பாற்றுவது சாலச் சிறந்தது.

காரியார் இந்த அரிய காரியத்தைச் செய்தார். பொருளறியாமையால் மக்கள் மறந்துபோன பாடல்களைத் தொகுத்துக் கோவையாக்கி மீண்டும் உலவச் செய்தார். அதோடு மற்றொரு பெருஞ் செயலையும் செய்தார். பொருள் தெரியவராத காரணத்தால்தான் அந்தப் பாடல்களை மக்கள் புறக்கணிக்கலாயினர். இதனை அறிந்த காரியார் தாம் தொகுத்த செய்யுட்களுக்கு உரை கண்டு விளக்கினார். அவற்றைச் சேரசோழ பாண்டிய மன்னர்களிடம் சென்று கூறி நயமாக உரை விரித்தார். அவற்றைக் கேட்ட மன்னர்கள் உவந்து காரியாரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினர்; பெருநிதி அளித்தனர்.

அந்த நிதி இறைவன் திருவருளால் வந்தது எனக் கொண்ட காரியார், அதனைத் தக்க வழியில் பயன்படுத்த எண்ணினார். அங்கங்கே சிவபெருமானுக்குக் கோயில்கள் கட்டினார். பழைய சொற்கோயில்களுக்கு உயிரூட்டி யாவரும் பயன்பெறச் செய்த புலமைத் தொண்டோடு, கற்கோயில்களையும் கட்டி அன்பர்கள் பயனடையச் செய்தார். இந்த இரண்டினாலும் மக்கள் அனைவருடைய பேரன்புக்கும் அவர் உரியவரானார்.

சிவனடியார்களை வழிபட்டு அவர்களுக்கு வேண்டிய வற்றை அளித்துப் போற்றினார். இவ்வாறு பல தொண்டுகளைச் செய்து பலரும் போற்ற வாழ்ந்து சிறப்புற்றார் காரி நாயனார்.
---------------

50. நின்றசீர் நெடுமாற நாயனார்

மதுரையில் இருந்து செங்கோல் ஓச்சிய பாண்டியருள் ஒருவர் நெடுமாறர். அவர் இயல்பாகக் கூன்விழுந்த உடலுடையவர். சைன சமயத்தவர் பலர் சூழ்ந்து தம் சமய நெறியைப் போதிக்க அவர் சைனரானார். சோழன் மகளாராகிய மங்கையர்க்கரசியாரை முன்பே மணந்து கொண்டவர் அவர். அவர் சைனரானாலும் அவருடைய மாதேவியார் சைவ ஒழுக்கம் தவறாமல் நின்றார். திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அப் பாண்டியருக்கு வந்த வெப்பு நோயை நீக்கிக் கூனையும் போக்கிச் சைனர்களுடன் வாதம் செய்து வென்றார். பாண்டிய மன்னரும் பிறரும் மீண்டும் சைவர்களாயினர். கூன் நீங்கி நிமிர்ந்த பாண்டியர் நின்ற சீர் நெடுமாறர் என்று சிறப்பாக வழங்கும் நிலைபெற்றார்.

சிவநெறியில் நின்று ஆலவாய் இறைவனைத் தம் துணைவியாராகிய மங்கையர்க்கரசியாரோடும் வழிபட்டுச் சிறந்த பக்தராக விளங்கினார் நெடுமாறர். அவருடைய வீரத்தை எண்ணாமல் வடநாட்டு வேந்தர் அவர் நாட்டின் மேல் படையெடுத்து வந்தனர்.திருநெல்வேலியில் பெரும் போர் நிகழ்ந்தது. அப்போரில் பாண்டி நாட்டுப் படைகள் மிக்க விறலுடன் போர் செய்தன. நெடுமாறர் தாமே படைகளுடன் சென்று போர் புரிந்தார். அப் போரில் அவருக்கே வெற்றி கிடைத்தது. பகை மன்னர் தோற்று ஓடிப்போக, வெற்றிமாலை சூடினார் நெடுமாறர். நெல்வேலி வென்ற நெடுமாறர் என்று புலவர்கள் அவரைச் சிறப்பித்தார்கள்.

இறைவன் திருவருளே தமக்கு வெற்றி வாங்கித் தந்தது என்ற நினைவோடு அவர்
சிவபெருமானைத் தொழுது வணங்கினார். நெறிவாழப் திருநீற்றின் பல அருந்தொண்டுகள் புரிந்து வாழ்ந்தார்.
----------------

51. வாயிலார் நாயனார்

மனிதன் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களினாலும் செயல் புரிகிறான். நினைப்பு, பேச்சு, செயல் என்று அக்கரணங்களின் இயக்கத்தைக் குறிப்பது வழக்கம். இந்த மூன்று கரணங்களும் மனிதனுடைய பிறப்பின் சிறப்பை எடுத்துக் காட்டுவனபோல, மற்ற உயிர்களிடம் இருப்பனவற்றைவிட மிக மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அம் மூன்றிலும் அவனது மனம் பெற்ற வளர்ச்சி மிகவும் அற்புதமானது. மனத்தின் ஒரு பகுதியே அறிவு. அது மனிதனிடத்தில் மிகவும் நுட்பமாகவும் விரி வாகவும் அமைந்திருக்கின்றது. 'நுண்மாண் நுழைபுலம் என்றும், 'அஃகி அகன்ற அறிவு' என்றும் மனித அறிவைப் பாராட்டிப் பேசுவார்கள் புலவர்கள்.

உடம்பாலும் வாக்காலும் செய்யும் செயல்களால் அடையும் பெருமையைவிட உள்ளத்தால் செய்யும் செயல்களே மனிதனுக்கு அதிகப் பெருமையை உண்டாக்குகிறது. முன்னுள்ள அநுபவத்தையும் நிகழ்காலச் செயல்களையும் வருங்கால விளைவுகளையும் ஓர்ந்து நலந்தீங்குகளை நாடி ஆராயும் ஆற்றலை மனிதன் படைத்திருக்கிறான். ஆதலின் உள்ளத்தினால் மேலும் மேலும் உயரும் நிலையில் இ றைவன் அவனை வைத்திருக்கிறான்.

இறைவனை மனமொழி மெய்களால் வணஙக வேண்டும்.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"
என்று திருநாவுக்கரசர் அருளினார். உடம்பால் வணங்கி வாயினால் வாழ்த்தி மனத்தால் தியானம் செய்யவேண்டும். உடம்பால் வணங்குவது எளிது; அதைவிட அரிது புகழ் பாடுதல்; அதையும்விட அரிது தியானித்தல். காயிகம் வாசிகம், மானசம் என்ற மூன்று தொண்டுகளில் மான சிகம் சிறந்ததென்று நூல்கள் கூறும். மானசீக பூசை சிறந்த-தென்பதைப் பெரியோர்கள் வாக்கால் தெரிந்து கொள்ளலாம். உள்ளத்தால் செய்வனவற்றின் பெருமை யைத் தெரிவிக்க ஒரு கதை சொல்வதுண்டு.

ஒருநாள் அருச்சுனன் கைலாசத்தின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே இருந்த சிவ கணங்கள் நிலவுலகில் பூசை புரிவார்கள் இட்ட நிர்மாலியத்தை வாரி வெளியிலே கொட்டிக் கொண்டிருந்தார்கள். வில்வமும் பல மலர்வகைகளும் மலைபோலக் குவிந்திருந்ததைப் பார்த்தபோது, 'இது நம்முடைய பூசையின் நிர்மாலியம்` என்று அருச்சுனன் நினைத்தான். சிவகணங்களை நோக்கி, "இது யார் செய்த பூசையின் நிர்மாலியம்?" என்று கேட் டான். "பூலோகத்தில் பஞ்சபாண்டவர்கள் என்று ஐந்து பேர்கள் நல்ல சிவ பக்தர்கள். அவர்களில் ஒருவன் பூசை யில் போட்டது" என்றார்கள். அவனுக்குச் சற்றே பெரு மிதம் உண்டாயிற்று.

"அவன் பெயர் என்ன?"

”வீமனாம். இந்த மலையைப் போல அந்தப் பக்கம் இன்னும் குவிந்து கிடக்கிறது" என்றார்கள் சிவ கணங்கள்.

"வீமனா!"

அருச்சுனனுக்கு வியப்புத் தாங்கவில்லை.

“அந்த அண்ணா உட்கார்ந்து சிவ பூசை பண்ணியதாக நமக்குத் தெரியவில்லையே!" என்று எண்ணமிடலானா அவன். பிறகு, அருச்சுனன் என்பவன் செய்த பூசா நிர்மாலியம் எது?" என்று கேட்டான். அது அளவிடற்கரிய பெரு மலையாக இருக்கிறது என்ற விடையை எதிர்பார்த்தான். அவர்களோ, "அதுவா? அங்கே ஒரு குடலையில் இருக்கிறது" என்று அலட்சியமாகச் சொன்னார்கள்.

அருச்சுனனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனம் சுழன்றது. "வீமன் பூசை செய்ததை நான் பார்த்த தில்லையே!" என்றான்.

அவன் மனசினாலே பூசை செய்கிறவன். ஒரு நந்த வனத்தைக் கண்டால் அங்குள்ள அத்தனை மலர்களையும் பத்திரங்களையும் சிவபிரானுக்கு என்று மனத்தால் அர்ப்பித்து விடுவான். அது இங்கே மலையாகக் குவிந்துவிடும்."

அருச்சுனனுக்கு மானசிக பூசையின் சிறப்பு நன்கு புலனாயிற்று.
***
மயிலாப்பூரில் இவ்வாறு உள்ளத்தால் பூசை இயற்றிய அன்பர் ஒருவர் இருந்தார். அவரை வாயிலார் நாயனார் என்பர். வேளாண்குடியில் தோன்றிய அவர் சிவபிரானை உள்ளத்தால் வழிபடும் திருத்தொண்டில் சிறந்து விளங்கினார். மனத்துக்குள் தியான முறையில் கோயில் கட்டிப் சை செய்தார். மறவாமையால் மனக்கோயில் அமைத்துச் சிவபிரானை உள் இருத்தி ஞான விளக்கு ஏற்றி ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டி, அன்பு என்னும் அமுது அமைத்து அருச்சனை செய்து வந்தார். புறத்தே காணும் மலர், மஞ்சனம், அமுது முதலிய பொருள்களை வைத்து வழிபடும் போதே நமக்கு மனம் பலவாறாகச் சிதறுகிறது. அவருக்கோ மனத்தில் நினைத்தது அப்படியே நின்றது. அதாவது எண்ணியதை மறப்பதில்லை. தூய உள்ளமாதலின் ஒருமைப்பாட்டோடு எண்ணிய எண்ணம் நன்றாகப் பதிந்தது. அதனால் அவர் மனத்தாலே ஆலயம் அமைத்து, மனத்தாலே பூசை செய்தார். இவ்வாறு செய்வதிலே நெடும்போது கழித்தார். மானசிக பூசையில் காலம் போவதே தெரியாது. மனம் ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் சிறிது காலமும் நெடுங்காலமாகத் தோன்றும். ஒருமைப் பட்டால் நெடுங்காலமும் குறுகிவிடும். தியானத்தால் காலத்தை வெல்லலாம் என்பதற்கு பொருள்.

இதுதான் வாயிலார் இந்தச் சிவவாழிபாட்டை நெடுநாட் செய்து அதன் பயனாகிய இன்பத்தை நுகர்ந்து சலனமற்ற அமைதி யான வாழ்க்கையிலே சிறந்து விளங்கினார்.
--------------

52. முனையடுவார் நாயனார்

பழங்காலத்தில் வீரத்தில் சிறந்த சிலர் அங்கங்கே தம்மோடு வேறு வீரர்களையும் தொகுத்து அவர்களுக்குத் தலைவராக இருந்தார்கள். அரசர்களுக்குள் போர் மூண்ட போது, அவருள் யாரேனும் தம்முடைய உதவியை வேண்டினால் அவர் கட்சியில் சேர்ந்து போர் செய்து வெற்றி உண்டாகும்படி செய்வார்கள். திருக்கோவலூரில் இருந்த மலையமான் திருமுடிக்காரி என்னும் வள்ளல் அவ்வாறு விளங்கிய பெருமறவன். அவன் எந்த அரசருக்குத் துணையாகப் போகிறானோ அவர் பங்கில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை அக்காலத்து மக்களுக்கு இருந்தது. சங்கநூல்களில் சோழன் மறவன், பாண்டியன் மறவன் என்று சிலரைக் குறிப்பிடுவார்கள். சோழனுக்குப் படைத் துணையாகச் செல்லும் வீரன், பாண்டியனுக்குப் படைத் துணையாகச் செல்லும் வீரன் என்பதே அத் தொடர்களின் பொருள்.

மலையமான் திருமுடிக்காரி தம்முடைய படையுடன் பேரரசர்களுக்குத் துணையாகச் சென்று போர் செய்து, அம் மன்னர்கள் தரும் பொருளை உடன் வந்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பான்; எஞ்சியவற்றை யெல்லாம் தன்னைப் பாடிவரும் புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுப் பான். அவனுடைய வீரம் அவனது வள்ளன்மையை வளர்க்கக் காரணமாக இருந்தது. அவனுடைய வீரத்தைவிட வண்மையே சிறந்து நின்றது. அதனால் அவனைக் கடை யெழு வள்ளல்களில் ஒருவனாக வைத்துப் பாராட்டினார்கள் சான்றோர்கள்.

இதே முறையில் ஒரு நாயனார் வாழ்ந்தார். காரி புலவர்களுக்கு ஈந்து வள்ளலென்னும் பெயர் பெற்றான். இந்த நாயனாரோ சிவனடியார்களுக்கு வழங்கி நாயன்மார்களுக்குள் ஒருவரானார்.

சோழவள நாட்டில் பாடல் பெற்ற சிவத் தலங்களில் ஒன்று நீடூர். சோலைவளம், வயல்வளம், நீர்வளம் நிரம்பியது அவ்வூர். அங்கே வேளாளர்களுக்குத் தலைவராக ஒரு பெருமகனார் இருந்து வந்தார். அவர் பெரிய வீரர். சிவனடியாராகவே தோற்றம் அளிப்பார். சிவபெருமானுடைய திருவடியாராகச் சிறந்து நின்று அடியார்களுக்கு வேண்டும் பொருள்களை வழங்குவதில் இன்பம் கண்டார்.

தம்முடைய பகைவர்களோடு போரிட்டு எதிர்நிற்க மாட்டாமல் தோல்வியுற்ற மன்னர்கள் அவரிடம் வந்து தமக்குத் துணையாக வரவேண்டுமென்று வேண்டுவார்கள். அவருக்கு இத்தனை ஊதியம் தருவோம் என்று பேசுவார்கள். அவர் தம் நண்பர்களைக் கூட்டிக் கூலிப்படையாகச் சென்று அவர்களின் சார்பில் போரிட்டு வெற்றி பெறச் செய்வார். அதனால் இன்புற்ற மன்னர்கள் அவருக்கு நிதியமும் பிற பொருளும் வழங்குவார்கள்.

அவற்றை எடுத்து வந்து தம் ஊரை அடைந்து அடியார்கள் உள்ளங்குளிர அவற்றை வழங்குவார். அவர்களை வரவேற்று உபசரித்து விருந்து அருத்தி வழிபடுவார். அவருடைய வீரம் மன்னர்களால் பாராட்டப் பெற்றது; அவரது வண்மை அடியார்களின் புகழுக்கு உரியதாயிற்று; அவர் சிவபக்தி மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது.

மிகச் சிறந்தவர்களாக விளங்கும் பெரியவர்களை இயற்பெயரிட்டு அழைப்பது மரியாதைக் குறைவு என்று பழங்காலத்தில் நினைத்தார்கள். வேறு ஏதேனும் காரணப் பெயரிட்டுக் கூறுவார்கள். நாளடைவில் அவர்களுடைய இயற்பெயர் வழக்கற்றுப்போக, பின்னாலே வந்த சிறப்புப் பெயரே நிலைத்துவிடும். பல புலவர்களின் இயற்பெயர்கள் நமக்குத் தெரியாததற்கு இதுவே காரணம்.

இந்த நாயனாருடைய இயற்பெயரும் அந்த முறையில் வழக்கில் இல்லாமல் போயிற்று. போர்முனையில் எதிரிகளை அடுவதை ஒரு தொழிலாக ஏற்று, அதனால் வரும் ஊதியத்தைக்கொண்டு அடியார்களை உபசரிக்கும் தொண்டு செய்து வந்தவர் அவர். ஆதலின் அவருடைய தொழிலால் யாவரும் முனையடுவார் என்று அவரைக் குறிப்பிட்டு வழங்க லாயினர். பிறகு இயற்பெயர் மறைய, அதுவே நிலைத்து விட்டது. இன்று முனையடுவார் நாயனார் என்பதே திருத் தொண்டத் தொகை முதலியவற்றில் பதிந்து விட்டது.

வீரத்தால் பொருள் விளைத்து,அப்பொருளால் சிவ புண்ணியம் விளைத்த முனையடுவார், மன்னரும் அடியரும் போற்ற நெடுநாள் வாழ்ந்தார். அவருடைய தொடர்பால் வெறும் கூலிப்படையாக இருந்த வீரர்களும் இறைபணிப் படையினராகும் புண்ணியப் பேற்றை அடைந்தனர்.
--------------

53. கழற்சிங்க நாயனார்

காஞ்சிமா நகரில் பல்லவகுல மன்னர்கள் இருந்து பேரரசுரிமை தாங்கிப் புரந்து வந்தார்கள்.அவர்களில் ஒருவர் கழற்சிங்கர். வீரத்தில் மிக்க அம் மன்னர் சிவ பக்தியிலும் சிறந்து விளங்கினார். போர்க்களத்தில் வீரம் விளங்கியது; ஏனைய இடங்களில் அவருடைய பக்தி பொலிவு பெற்றது. வடநாடு சென்று ஆங்குள்ள மன்னர்களோடு போர் செய்து வென்று அவர்கள் அளித்த திறைகளைக் கொணர்ந்து குவித்தார். அவற்றை நல்லற நெறியிலே செலவிட்டார்; சிவ தருமங்களை ஆற்றினார்: சிவனடியார்களுக்கு ஆவன செய்தார்.

அவ்வப்போது சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசித்து வரும் வழக்கம் உடையவர் கழற்சிங்கர். ஒருமுறை சிவபுரமென்று எண்ணுதற்குரிய பெருமையையுடைய திருவாரூருக்குத் தம்முடைய பரிவாரங்களுடன் சென்றிருந்தார். திருக்கோயிலுள் புக்கு முறைப்படியே தரிசனம் செய்துகொண்டு வந்தார். புற்றிடங் கொண்ட நாயகர் திருமுன் நின்று தரிசித்து, விழுந்து வணங்கித் துதித்து உருகினார். இருந்தாடழக னாகிய தியாகராச மூர்த்தியையும் வழிபட்டு இன்புற்றார். அவருடன் வந்திருந்த முதல் தேவியாகிய பட்டத்தரசியும் அந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு மகிழ்ந்து வந்தாள். மிகப் பெரிய கோயிலாதலின் மெல்லப் பல
மண்டபங்களையும் சந்நிதியையும் பார்த்துக் கொண்டு வந்தாள்.

திருவாரூர்த் திருக்கோயில் ஆறு வேலி நிலப் பரப் புடையது; திருக்குளமாகிய கமலாலயமும் ஆறு வேலி; தியாகராசப் பெருமானுக்கு உவப்பான செங்கழுநீர் விளையும் ஓடையும் ஆறு வேலி. செங்கழுநீர் மாலையையும் பிற மலர்களின் மாலைகளையும் பல தொண்டர்கள் தொடுத்து இறைவனுக்கு அணியக் கொடுப்பார்கள். பூத் தொடுப்பதற்கென்றே பெரிய கோயில்களில் தனி மண்ட பம் இருக்கும். திருவாரூரிலும் அப்படி ஒரு மண்டபம் உண்டு. கழற்சிங்கருடைய மாதேவி கோயிலைச் சுற்றி வந்தவள், மாலை தொடுக்கும் மண்டபத்துக்கு வந்தாள். பலர் மிக்க அன்போடு பலவகையான மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். வண்ணமும் மணமும் உடைய அவற்றைத் தொடுப்பது ஒரு கலை. அந்தக் கலையில் வல்லவர்களின் கைத்திறனைப் பார்த்துக்கொண்டு பல்லவ அரசி அங்கே க சற்று நின்றாள். அப்போது ஒரு பூ மண்டபத்துக்கு அருகே சிதறி வீழ்ந்தது. அதை எடுத்த அரசி அதை மோந்து பார்த்தாள். பிறர் தன் கையில் மலரைக் கொடுப்பதும் அதை மோந்து பார்ப்பதும் அவளுடைய வழக்கம். அதனால் பூவை எடுத்தவுடன் மோந்து பார்த்தாள்.
சிவபிரான் பூசைக்குரிய மலரை மோப்பது தவறு. அதனால் பூவைப் பறிப்பவரும் கட்டுபவரும் வாயைத் துணியால் மூடிக்கொண்டு தம் தொண்டைப் புரிவார்கள். தேவி இதை மறந்து கையிற் கிடைத்த மலரை மோந்து பார்த்தாள்.

அப்போது அங்கே செருத்துணை நாயனார் என்பவர் வந்தார். அவர் சிவாபராதம் செய்பவர்களை உடனே கண்டிப்பார்; அவசியமானால் தண்டிப்பார். பட்டத்தரசி மலரை மோந்து பார்ப்பதற்கும் அவர் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. “இறைவனுக்குரிய மலரை யாரோ ஒரு பெண் இவ்வளவு துணிச்சலாக எடுத்து மோந்து பார்க்கிறாளே!' என்று அவருக்குக் கோபம் வந்து விட்டது. வாளை யெடுத்தார்; சரசர வென்று அரசியைப் பற்றி அவள் மூக்கை அரிந்து சிறிதும் அஞ்சாமல் நின்றார். மூக்கிலிருந்து குருதி சோரக் கீழே விழுந்தாள் அரசி; மயில் தளர்வது போல் தளர்ந்து புலம்பினாள். தரிசனம் செய்துவிட்டு அப்பக்கமாகக் கழற்சிங்கர் வந்து பார்த்தார்; தம் மாதேவி குருதி வாரக் கீழே கிடந்து புரளுவதைக் கண்டார்.

"இந்தச் செயலை அஞ்சாமல் செய்தவர் யார்?" என்று கோபத்துடன் கேட்டார்.

அப்போது செருத்துணை நாயனார் முன்னேவந்து, “நான்தான் இது செய்தேன்; அதற்குத் தக்க காரணம் உண்டு" என்றார். அவருடைய சைவத் திருக்கோலத்தைக் கண்டவுடன் கழற்சிங்கர் கோபம் பெரிதும் ஆறியது; காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் ஓங்கியது.

"சிவபிரானுக்குரிய மலரை மோந்து பார்த்த பிழையைச் செய்தமையால் அந்த மூக்கைக் குறைத்தேன்" என்றார் செருத்துணையார்.

"மலர் போனால் வேறு மலர் வரும்; மூக்குப் போனால் வேறு மூக்கு வருமா?" என்று அரசர் கேட்கவில்லை. சிவா பராதம் என்பது சிறிதானாலும் பெரிதானாலும் தண்டிப் பதற்குரியது என்பதைச் செருத்துணையாரைப் போலவே அவரும் உணர்ந்தார். நெருப்புப் பொறியில் சிறிதென்றும் பெரிதென்றும் வேறுபாடு உண்டா? சிறு பொறியே பெருந் தீயாகி ஊரைக் கொளுத்தி விடும் அல்லவா? உலகுக்கு ஒழுக்க முறையைக் காட்டுவது அரசர் கடமை. அரசருக்கு உவந்த சுற்றத்தாருள் அரசனுடன் சிங்காதனத்தில் இருந்து மணிமுடி சூடிப் பெருமை பெறும் உரிமை மாதேவிக்கு உண்டு. அரசனுக்குரிய பொறுப்புக்களில் அவளும் பங்கு கொள்ளுவதற்கு உரியவள். அத்தகை யவள் இந்த அபசாரத்தைச் செய்தால் குடிமக்கள் ஏசமாட்டார்களா? தம் மனைவி என்று அரசர் தண்டிக்கவில்லை என்ற பழி கழற்சிங்கருக்கு வருமே!

இப்படி யெல்லாம் எண்ணங்கள் மன்னர்பிரான் உள் ளத்தில் ஓடியிருக்க வேண்டும்.

"நீங்கள் முறைப்படியே தண்டனை அளிக்கவில்லை” என்று அமைதியாகச் சொன்னார் பல்லவ மன்னவர்.

‘முறை என்பதற்கு என்ன பொருள்? அரசர் எதைக் கருதி இப்படிச் சொல்கிறார்?' என்று அருகில் உள்ளவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "மலரை எடுத்து மோந்தது குற்றந்தான். ஆனால் மோந்த குற்றத்துக்குமுன் எடுத்த குற்றத்தைச் செய்தது கை.
கை எடுக்காவிட்டால் மூக்குக்கு மணம் நுகர வாய்ப்பில்லை. ஆகவே அதை முதலில் தண்டித்திருக்க வேண்டும். அதை நான் செய்கிறேன்" என்றார். இவ்வாறு சொல்லிவிட்டுத் தம் உடைவாளை உருவித் தம் தேவியின் கையை வளையோடும் துணித்து விட்டார்.

அவருடைய சிவபக்தி மற்ற உணர்ச்சிகளை யெல்லாம் அடக்கித் தீக்கொழுந்தாகச் சுடர் விட்டது கண்டு, சிவனடி யார்கள் வியந்து ஆரவாரம் செய்தார்கள்.

பேரரசராகிய கழற்சிங்கர் தம் மனைவி என்றும் பாராது, தவறு செய்ததற்காக அவள் கரத்தைத் துணித்த செயலை வானவர்களும் கொண்டாடினார்கள். அவர் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்றார்.
--------------

54. இடங்கழி நாயனார்

இன்று புதுக்கோட்டை என்று வழங்கும் நகரும் அதைச் சார்ந்த பகுதிகளும் பழங்காலத்தில் கோனாடு என்று வழங்கிவந்தன. அந்நாட்டின் தலைநகரம் கொடும் பாளூர். அது சிற்றரசர்களாகிய வேளிரின் அரசிருக்கை நகராக விளங்கியது. அந்த வேளிர்கள் வழிவழியே சிவத் தொண்டிற் சிறந்து விளங்கியவர்கள்.

அவர் மரபில் வந்தவர் இடங்கழியார். அவர் சிவபெருமானை வழிபட்டு அவனருட் செல்வத்தைப் பெறுவதே பிறவிப் பயன் என்று உணர்ந்தவர். சிவபெருமானுடைய அடித்தொண்டு நெறியே தம் வாழ்க்கையின் வழியாகக் கொண்டு உறுதியுடன் நின்றார் அவர். வேறு எவ்விதத் துறையிலும் ஈடுபடாமல் சிவ பக்திச் செல்வத்தை வளர்த்துவந்த அவர், சிவனடியார்கள் வேண்டுவனவற்றை ஈந்து உவக்கும் பெற்றியரானார். சைவ நெறியும் வைதிக தரும நெறியும் தழைப்பதற்குரிய திருத்தொண்டு பலவற்றை ஆற்றினார். சிவபெருமான் எழுந்தருளிய கோயில்களிலெல்லாம் பூசையும் விழாவும் விதிப்படி நடைபெறும் படி செய்துவந்தார்.

அக்காலத்தில் அவ்வூரில் ஒரு சிவனடியார் சிவத் தொண்டர்களுக்கு நாள்தோறும் அமுதளித்து வழிபடுவதை மேற்கொண்டிருந்தார். தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு இந்த அறத்தை முட்டாமல் நடத்திவந்தார். ஒரு நாள் அடியவர்களுக்கு அமுதருத்துவதற்குரிய பண்டங்கள் பெறும் நிலையில் அவர் இல்லை. போதிய பொருளும் இல்லை; பண்டமும் இல்லை. 'நாளை வரும் தொண்டர்களுக்கு. எப்படி அமுதளிப்பேன்!' என்று அவர் கவலையுற்று வாடினார்.

அப்போது அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை உண்டாயிற்று. அரசருடைய களஞ்சியத்தில் பல ஊர்களிலிருந்துவந்த நெல்லைச் சேமித்து வைத்திருந்தார்கள். இதை அறிந்தவர் அந்த அன்பர். இது செய்வது முறையா,அன்றா என்றும் யோசிக்காமல், அவர் அன்று நள்ளிரவில் அரசர் பண்டாரத்தில் புகுந்தார். அங்குள்ள நெற்கூட்டில் உள்ள நெல்லைத் திருடத் தொடங்கினார்.

இந்தத் தொழிலில் பழகியவராக இருந்தால் அவர் தம் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இன்றுதான் ஏதோ தோன்றிற்று; இவ்வாறு செய்யலானார். அப்போது அங்கே காவல் காத்து நின்றவர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

“ஏன் நீ நெல்லைத் திருடினாய்?" என்று அரசர் கேட்டார்.

"சிவனடியார்களுக்கு நாள்தோறும் அமுது செய்விப்பதை என் கடமையாகக் கொண்டிருக்கிறேன். அந்தத் தொண்டைச் செய்ய முடியாத நிலையை அடைந்தேன். அதனால் இப்படிச் செய்தாவது அமுதூட்டலாம் என்று துணிந்தேன்" என்றார் அடியவர்.

இதைக் கேட்ட அரசருக்கு அவரிடம் பெருமதிப்பு உண்டாயிற்று. 'இவரன்றோ ஒரு நாட்டுக்குக் களஞ்சியம் போன்றவர்?' என்று எண்ணி அவரை விடுவித்ததோடு, அவருக்கு வேண்டிய நெல்லும் பொன்னும் கொடுத்து அனுப்பினார்.

அரசர் அதோடு நிற்கவில்லை. 'இப்படி இன்னும் எத்தனை சிவனடியார்கள் வறுமையால் வாடுகிறார்களோ!" என்று மனம் வருந்தினார். "இறைவனடியார் தமக்கு வேண்டிய பொன்னும் நெல்லும் நம்முடைய களஞ்சியங் களிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்; ஒரு
தடையும் இல்லை" என்று தம் நாடு எங்கும் பறை அறையும்படி செய்தார்.
அவ்வாறே அடியார்கள் திறந்திருந்த பண்டாரங் களுக்குச் சென்று தமக்கு வேண்டியவற்றை எடுத்துச் சென்றனர். இவ்வாறு அடியார்களது வறுமையைப் போக்கித் திருநீற்றின் நெறி தழைக்கும்படியாக நெடுங் காலம் புகழ் வளர்த்து வாழ்ந்தார் இடங்கழியார்.

"எண்ணில்பெரும் பண்டாரம்
      ஈசன்அடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
      உறுகொள்ளை மிகஊட்டித்
தண்ணளியால் நெடுங்காலம்
      திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில் அருள் புரிந்திறைவர்
      மலரடியின் நிழல்சேர்ந்தார்"

என்று பாடுவார் சேக்கிழார்.
-----------------

55. செருத்துணை நாயனார்

இறைவனிடம் ஆராக் காதல் கொண்ட நாயன்மார் களின் அன்புக்கும் ஏனைத் தொண்டர்களின் அன்புக்கும் வேறுபாடு உண்டு. நாயன்மார்களின் சிவபக்தி உயிரினும் சிறந்தது.

உலகியலை உலக இயல்புக்கு எட்டாதது. உணர்பவர்களுக்கு விளங்காதது. இயற்பகையாரைப் பற்றிச் சொல்லவந்த சேக்கிழார் அவரை 'உலகியற் பகையார்" என்று கூறுகிறார். அந்த நிலை அவருக்கு மாத்திரம் இருந்ததன்று. நாயன்மார்களில் பெரும்பா லானவர்களும், சிவபக்தி அடியார் பக்திகள் முறுகிநின்று, உலகியலுக்கு மாறான
செயல்களைச் செய்தவர்களே. உலகியலோடு ஒட்டி வாழும் அன்பர்களுக்கு அது வெறியாகத் தோன்றும். உலகிய லொழுக்கத்தையே போற்றும் மக்களுக்கு அது ஒழுக்க விரோதமாகத் தோன்றும். வீரர்களுக்குக் கோழைமையாகத் தோன்றும் நிகழ்ச்சிகள் உண்டு. அஹிம்சாவாதிகளுக்கு ஹிம்சையாகத் தெரியும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவரவர்கள் தம் தம் நிலையி லிருந்து பார்க்கும்போது தம் சீரிய கொள்கைகளுக்கு எதிராகப் பல நாயன்மார் செயல்கள் இருப்பதைக் காணலாம்.

அத்தகைய செயல்களுக்கெல்லாம் எது மூல காரணம் என்பதை ஆராய வேண்டும். அத்தகைய செயல்களைச் செய்யும் பலரை நாம் குற்றவாளிகளாகக் கருதுகிறோம். அவர்கள் என்ன நோக்கத்தோடு அதைச் செய்தார்களோ, அந்த நோக்கத்தை நாம் ஆராயவேண்டும். நாயன்மார்கள் செய்த செயலுக்கு மூல காரணம் பக்தி. தனக்குப் பகையாக இருக்கும் ஒருவனை ஒரு மனிதன் கொன்றுவிடுகிறான்.அவன் கொலையாளி யாகிறான். எறிபத்த நாயனார் யானையைக் கொன்று, பாகர்களையும் கொல்கிறார். அவரை அரசன் கொலையாளியாகக் கருதவில்லை. அவர் செய்த செயலுக்குக் காரணம் பக்தி. சிவபக்தருக்குத் தீங்கு விளைத்தமையால் அவர் விளைத்தவர்களைத் தடிந்தார். சிவபக்தியுலகத்தில் உள்ள தனியாட்சித் தண்டனை அது என்று அவருக்குத் தோன்றியது. தம்மை அரசன் தூக்கில் ஏற்றியிருந்தாலும் அதுபற்றி அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார்.

தம் உடல், பொருள்,உயிர் மூன்றையும் வழங்கும் தியாகபுத்தி உடையவர்கள் நாயன்மார்கள். அடியார் நலன் கருதிச் செய்யத் தகாத செயல்களையும் செய்பவர்கள். பக்திக்கு மாறான செயல் செய்பவர்களைத் தாமே தண்டிப்பவர்கள். இவை யாவும் உலகியலுக்கு மாறானவையே. தனி மனிதனது ஒழுக்க வகையிலும், சமுதாய அற வகையிலும் வைத்துப் பார்த்தால் இந்தச் செயல்களைப் பாராட்டத் தோன்றாது. இந்தச் செயல்களால் விளைந்த விளைவைக் காணும் கண்ணுக்கு இவை செய்யத் தகாதவை என்றே தோன்றும்.

ஆனால் இவற்றைச் செய்வதற்குக் காரணமான நோக்கம் என்ன, இவற்றால் இவற்றைச் செய்பவர்களுக்கு நேரே உண்டான நலம் ஏதேனும் உண்டா என்பதை ஆராய்ந்தால், அவர்களைக் குற்றவாளிகளே என்று தீர்மானிக்கும் துணிவு உண்டாகாது. பக்தி முறுகிவிட்டால் அதுவும் ஒரு வெறியாகவே மாறும்; வெறி, கொள்கை யில்லாமல் யாவருக்கும் தீங்கு பயக்கும். ஆனால் இந்த முறுகிய பக்தியோ, கொள்கையிற் பிறழாமல் நிற்கும்.

கழற்சிங்க நாயனார் இறைவனுக்காக இருந்த மலரை எடுத்த தம் மனைவியின் கையைத் தடிந்த கதையை முன்பு பார்த்தோம். அதனோடு தொடர்புடையது செருத்துணை நாயனாரது வரலாறு.

சோழ நாட்டுப் பகுதியாகிய மருகல் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் தோன்றினவர் செருத்துணையார். மன்னர் களுக்குப் போரில் துணையாகச் செல்லும் இயல்புடையா ராதலின் அந்தப் பெயர் வந்ததென்று தோன்றுகிறது. வேளாண் குடியிலே பிறந்த அவர் இறைவனிடத்தில் மெய்யன்புடையவராகிப் பல திருத்தொண்டுகளைச் செய்து வந்தார். திருவாரூர்த் திருக்கோயிலில் ஈடுபாடு மிக்கவர் அவர். அங்கே உரிய காலங்களில் சென்று திருத் தொண்டுகளைச் செய்து வந்தார்.

ஒரு நாள் பல்லவ அரசனும் அவனுடைய பட்டத் தரசியும் அங்கே தரிசனத்துக்கு வந்தார்கள். திருவலங்கள் கட்டும் மண்டபத்துக்கு வந்தபோது புறத்தே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள் அரசி. அதனைச் செருத்துணையார் பார்த்தார். அவருக்கு அச் செயல் பொறுக்கவில்லை. அரசி மோந்து பார்த்தது புறத்தே விழுந்து கிடந்த சிறு மலர்தான். செருத்துணையார் அரசியின் மனோபாவத்தை எண்ணினார். 'இந்தச் சிறு மலரைச் சிவனுக்குரியது என்பதை மறந்து மோந்து பார்க்கும் இச் சிறு செயலே பின்பு இன்னும் பெரிய அபசாரங்களைப் புரியக் காரணமாகும்' என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். பாம்பில் குட்டியென்றும் பெரிதென் றும் வேற்றுமை இல்லை. சிவாபசாரத்திலும் சிறிது பெரி தென்று அளவு காணக் கூடாது.- இப்படி யெல்லாம் ஓடிய அவர் சிந்தையிலே கோபம் மூண்டது.

உடனே அரசியைப் பிடித்து வீழ்த்தி அரிவாளால் மலரை மோந்த மூக்கை அறுத்து விட்டார். அவருக்கு அப்போது சிவாபசாரம் நேர்ந்துவிட்டதே என்ற எண்ணம் ஒன்று தான் இருந்தது. தாம் செய்யப் போகும் செயலின் விளைவை அவர் நோக்கவில்லை. இந்தச் செயலைச் செய்தார் யார் என்று கவனிக்கவில்லை. மலரை மோந்தது ஒரு மூக்கு; அதைத் தடிந்து விட்டார்.

இது சமுதாய அறத்திற்கோ, தனி மனிதனது அறத் திற்கோணங்கிய செயல் என்று சொல்வதற்கு இல்லை. உலகியலுக்கு அப்பாற்பட்ட முறுகிய சிவபக்தித் திறத்தால் விளைந்தது இது. இதைச் செய்வதனால் செருத்துணையாருக்கு நலம் ஒன்றும் விளையாது; தீங்கே விளையும். ஆயினும் அதை எண்ணாமல் அவருடைய பக்தி உணர்ச்சியிலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. தம்முடைய மனைவியாக இருந்தாலும் இக்காரியத்தைச் செய்திருப்பார். கழற்சிங்கர் அதைத்தானே பிறகு செய்தார்? 'மூக்கு மோந்து பார்ப்பதற்கு முன் கைதானே அதை எடுத்தது?' என்று கையைத் தடிந்தவர் அவர் என்பதை முன்பு பார்த்தோம் அல்லவா?

இத்தகைய செயல்கள் நாம் பின்பற்றுவதற்காக க அமைந்தவை யல்ல. அசாதாரணமான சம்பவங்கள். சம்பவத்தைவிட அதற்குரிய காரணத்திலே சிந்தை செலுத்துவதுதான் நாம் செய்யத் தக்கது.
---------------

56. புகழ்த்துணை நாயனார்

செருவில்லிபுத்தூர் என்னும் ஊரில் சிவபெருமான் திருக்கோயிலில் முப்பொழுதும் திருமேனி தீண்டிப் பூசனையும் விழாவும் செய்துவரும் நற்குடி அது. அந்தச் சிவமறையோர் திருக்குலத்தில் உதித்தார் புகழ்த்துணையார் என்னும் பண்பாளர். தம்முடைய கடமையிலே சிறிதும் தவறாமல் நாள்தோறும் மனம் உருகி இறைவனைப் பூசித்து வந்தார். அவனுக்கு மனத்தால் அன்பு செய்து, வாயால் அருச்சனைகள் சொல்லி, உடம்பால் வழிபடுவதைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு ஒன்றும் இல்லை என்ற துணிவோடு அவர் தம் கடமையைச் செய்து வந்தார்.

ஒரு சமயம் நாடு முழுவதும் பஞ்சம் வந்துவிட்டது. மழை பல ஆண்டுகளாகப் பெய்யாமையால் நீர் நிலைகள் வறண்டன. வயல்கள் கட்டாந்தரை ஆயின. புல் பூண்டுகளும் முளைக்காத மலட்டு நிலமாகியது எங்கும். ஆடுகள் மடிந்தன. மாடுகள் மறைந்தன. மக்கள் ஊர் விட்டு ஊர் ஓடினர். குழந்தையை விட்டு ஓடினவர்களும் தந்தையை விட்டு ஓடினவர்களும் தாயை விட்டு ஓடினவர்களும் தாரத்தை விட்டு ஓடினவர்களுமாக மக்கள் விலங்கினும் கொடிய இயல்பை மேற்கொண்டார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகுமென்று தெரியாமலா பாட்டி சொன்னாள்?

செருவில்லிபுத்தூரிலும் பஞ்சப் பேயின் கோரதாண்ட வம் பல இன்னல்களை விளைத்தது. ஊர் பாழாகி விட்டது. கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய மக்கள் இல்லை. அவர வர்கள் சோறு கிடைக்கும் இடம் எங்கே என்று தேடி ஓடினார்கள்.

இந்த அவல நிலையில் புகழ்த்துணையார் மாத்திரம் ஊரை விட்டு ஓடவில்லை. அவருடைய உறவினர்கள்கூட அவரை விட்டுப் போய்விட்டனர். அவர் தம் இல்லத்தை விட்டுப் போகவேண்டுமே என்று அஞ்சவில்லை. போகிற இடம் தெரியாமல் வருந்தவில்லை. தாம் வழிபடும் சிவ பெருமானை விட்டுப் போக அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. 'எத்தனை துன்பம் வந்தாலும் சரி; இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரையில் எங்கேயிருந்தேனும் பூவும் நீரும் கொணர்ந்து எம்பெருமானை வழிபடுவேன். எங் கோமானை விடமாட்டேன்' என்ற உறுதிப்பாட்டோடு இருந்தார்.

ஒருநாள் குடத்தில் நீர் கொணர்ந்தார். அவர் உண்டு பல நாட்கள் ஆகியிருந்தன. அந்தக் குடத்தைக் கோயிலுக் குள் கொண்டு வருவதற்குள் பல இடங்களில் அவர் உட்கார்ந்து வந்தார். மெல்லச் சிவலிங்கப் பெருமானை அணுகி நின்று கையை மேலே உயர்த்திக் குடத்திலுள்ள புனலால் திருமஞ்சனம் செய்தார். கையைத் தூக்க முடியாமல் தூக்கி அபிடேகம் செய்தார். அவரால் தாங்க முடியவில்லை.

அப்படியே லொட்டென்று குடத்தைச் சிவலிங்கத்தின் தலையிலே விழும்படி விட்டுத் தளர்ந்து கீழே விழுந்து மூர்ச்சையானார்.

அப்போது அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க அங்கே யார் இருந்தார்கள்? யாராவது அவர் விழுந்து விட்டார் என்று கேட்டால், "பைத்தியக்காரப் பிராமணர் ஊரார் செய்ததுபோல் எங்காவது ஓடாமல் இந்தக் கல்லைக் சொல்லி கட்டிக்கொண்டு அழுகிறாரே!" என்றுதான் சொல்லி யிருப்பார்.

ஆனால் அப்போது அந்தப் பேரன்பரைத் தெளிவிக்கச் சிவபிரான் திருவருள் முன் வந்தது. கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினான். "அன்பா, உன் தவத்தை மெச்சினோம்; உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உறுதியைக் கண்டு மகிழ்ந்தோம். இனி நீ கவலையுற வேண்டாம். ஒவ்வொரு நாளும் காலையில் இங்கே பீடத்தின் கீழே ஒரு பொற்காசு இருக்கும். அதை எடுத்துச் செலவு செய்து உன் உடம்பைப் பேணி, நமக்கும் வழிபாடு செய்து வருவாயாக!' என்று திருவாய் மலர்ந்து மறைந்தான்.

சோர்வு நீங்கிய அன்பர் எழுந்தார். கண்ணைத் துடைத்துக் கொண்டார். 'என்ன காரியம் செய்தோம்! எம்பெருமான் திருமுடியின்மேல் குடத்தைப் போட்டு விட்டோமே!' என்று வருந்தினார். பிறகு தாம் கண்ட கனவை நினைந்தார். இறைவன் பீடத்தின் அடியில் பார்த்தார். கனவிலே இறைவன் சொன்னது உண்மை ஆயிற்று. அங்கே பளபளவென்று ஒரு பொற்காசு கிடந்தது. அதைக் கண்டு அவர் உள்ளம் பாகாய் உருகியது. "எம்பெருமான் என்னளவில் பஞ்சத்தைப் போக்கி விட்டான். ஓடாமல் உழைக்காமல் ஊதியம் கொடுத்துவிட்டான். தன் பூச சனையைப் புரிவதனால் கைமேல் பலன் உண்டு என்று காட்டிவிட்டான்" என்று ஆனந்தக் கூத்தாடினார்.

அந்தக் காசைக் கொண்டு உணவுப் பொருள்களையும் பூசைக்கு வேண்டிய அரும் பொருள்களையும் வாங்கினார். அவர் மீண்டும் உடல் வலிமை பெற்றார். முன் இருந்ததை விடப் பன்மடங்கு உள்ளத்தின் வலிமையையும் அடைந் தார். "என் பசியைப் போக்கவேண்டும் என்ற கவலை என் ஐயனுக்கு இருக்கிறபோது எனக்கு என்ன குறை?" என்று பெருமிதம் கொண்டார். தம்முடைய தொண்டிலே சிறிதும் குறைவின்றிப் பின்னும் சிறப்பாகப் பூசனை செய்து வழிபட்டு வாழ்ந்தார்.
--------------

57. கோட்புலி நாயனார்

ஆளைப் பார்த்தாலே புலி போலத்தான் தோன்றுவார். சொல்லும் வெடிப்பாகவே வரும். அவர் முன் நின்று பேசவே பலருக்குத் தைரியம் இருப்பதில்லை. அவருக்குப் பெயர் கோட்புலியார். கொலை செய்வதில் வல்ல புலி என்பது அந்தப் பெயருக்குப் பொருள். அவர் ஊர் சோழ நாட்டில் உள்ள திருநாட்டியத்தான் குடி.

வேளாண் குலத்தில் உதித்தவர் அவர். ஆனாலும் அவருடைய குலமுதல்வர் உழுபடையை விடப் பொருபடையில் ஊற்றம் மிக்கவர். வழி வழியே அரசனுடைய படை த் தலைமை தாங்கும் குடி அது. உடல் மிடுக்கும் உள்ள மிடுக்கும் தந்தை வழி மகனுக்கு வந்துகொண்டே இருந்தன. அந்தக் கொடி வழியில் பிறந்த கோட்புலியார் தம் குடிப் பெருமையைக் காப்பாற்றுவது மட்டும் அன்று; அதை வளர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்தார்.

அரசனுடைய படையில் அவர் தனிச் சிறப்பான நிலை வகித்தார். பகையைப் புறங்கண்டு வெற்றி பெற்றுத் தம் அரசருக்குப் புகழ் ஈட்டுவதில் அவர் சிறந்து நின்றார். அவருக்கு அரசன் அவ்வப்போது பொன்னும் மணியும் வழங்கிப் பெருஞ் சிறப்புச் செய்தான்.

இந்த மிடுக்குடையார் உள்ளத்தின் ஆழத்தில் சிவ பக்தி ஊற்று இடையறாது சுரந்து கொண்டிருந்தது. அரசன் வழங்கும் பொருளைக் கொண்டு வருவார். நெல் வாங்கி மலைமலையாகக் குவிப்பார். சிவபெருமான் திருக் கோயில்களில் இறை வழிபாட்டில் திருவமுது படைக்கப் பயன்படுத்துவார். இப்படிச் செய்வதில் அவர் பெரிய இன்பத்தைக் கண்டார். திருவமுது முட்டுகின்ற கோயில் உண்டென்று தெரிந்தால் அங்கே நெல்லை அனுப்புவார்.

ஒரு முறை வேந்தனது ஏவலின்மேல் அவர் போர் செய்யப் போகவேண்டி யிருந்தது. பகைவன் படை வலிமை உடையவன். அவனோடு தொடுக்கும் போர் எத்தனை நாள் நீளும் என்று வரையறை கூற இயலாது. போர்க்களத்தை நாடிச் செல்வதற்கு முன் கோட் புலியார் தாம் இல்லா இடைக்காலத்தில் குடும்பம் எப்படி நடக்கும் என்று கவலைப்பட வில்லை. சிவபெருமானுடைய பூசை முட்டாமல் நடைபெற வேண்டும் என்ற ஒன்று தான் அவர் உள்ளத்தில் மீதூர்ந்து நின்றது. தாம் வரும் வரைக்கும் சிவபிரான் திருப்பூசையில் அமுது படைக்க வேண்டிச் செந்நெல்லைக் குதிர் குதிராகச் சேமித்தார். பல கூடுகளைக் கட்டி அவற்றில் நெல்லை நிறைத்தார். தம் உறவினர்களை அழைத்து, "எம்பெருமானுடைய திருவமுதுக்காக இந்த நெல்லை வைத்திருக்கிறேன். இதைப் பாதுகாத்து வழிபாட்டை இடையீடின்றி நடத்தி வாருங்கள். இதிலிருந்து யாரும் தமக்கென்று சிறிதும் எடுக்கக் கூடாது. சிவபெருமான் ஆணை!" என்று சொல்லிவிட்டு அவர் போர்மேற் சென்றார்.

சில நாட்கள் ஆயின. உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. வயல்கள் வளம் குன்றின.
விளைவு இல்லாமற் போயிற்று. எங்கும் பஞ்சமும் பட்டினியும் பரந்தன. பலர் உணவின்றி மடிந்தனர். கோட்புலியாருடைய உறவினரும் பஞ்சத்தால் நலிந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. "கோட் புலியார் இறைவன் அமுதுபடிக்கென்று சேமித்து வைத்துள்ள நெல்லை இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டு உயிர் பிழைப்போம். பின்பு அந்நெல்லைக் கொடுத்துவிடுவோம்" என்று முடிவு கட்டினார்கள். உடனே கூடுகளைப் பிரித்து நெல்லை யெடுத்துப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

போருக்குச் சென்ற கோட்புலியார் வெற்றிபெற்றார்; அரசன் வாரி வழங்கிய பொருள்களைப் பெற்றுத் தம் ஊரை நோக்கி வந்தார். அவருக்குச் சிவபிரானுடைய பூசை தடையின்றி நடைபெற வேண்டுமே என்ற கவலை இருந்தது. நாடெல்லாம் பஞ்சத்தால் நலிந்த செய்தியைக் கேட்டு மிக வருந்தினார். வரும் வழியிலேயே அவர் எல்லா-வற்றையும் விசாரித்து அறிந்து கொண்டார். தாம் சேமித்து வைத்திருந்த நெல்லைச் சுற்றத்தார் எடுத்துப் பயன்படுத்தி விட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அவர்கள்மேல் அவருக்குச் சினம் எழுந்தது. ஆனால் அதை வெளியிலே காட்டிக் கொள்ளவில்லை.

அவர் ஊர் வந்து சேர்ந்தார். அங்கே நிகழ்ந்தது ஒன்றும் அறியாதவரைப் போலவே இருந்தார். அவருடைய சுற்றத்தார் அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள். தம் மாளிகைக்கு வந்த பிறகு அவர், "நம் சுற்றத்தார் எல்லோரையும் அழையுங்கள்; துகிலும் நிதியமும் பரிசளிக்க வேண்டும்" என்று கூறினார். எல்லோரும் ஆவலுடன் வந்தார்கள். யாவரும் வந்த பிறகு அவர்களுக்குப் பரிசளிப்பவரைப் போலக் காட்டி, "இதோ நீங்கள் செய்த உபகாரத்துக்கு ஏற்ற பரிசளிக்கப் போகிறேன்'' என்று வாளை எடுத்துக் கொண்டார்; "சிவ பெருமான்மேல் ஆணையிட்டு, உங்களை நம்பி வைத்துச் சென்ற
நெல் முழுவதையும் எடுத்துச் செலவிட்ட உங்களுக்கு, இந்தக் கணத்திலே வானுலகம் வழங்குவது தான் தக்க பரிசு" என்று கூறி ஒவ்வொருவராக வாளைக் கொண்டு தடிந்தார். தமக்கு இன்ன உறவினர் என்று பார்க்கவில்லை. அர்ச்சுனன் தன் எதிரே போர்க்களத்தில் நின்ற உற்றார் உறவினரைக் கண்டு சிறிதே நடுங்கினான். கோட்புலியாரோ அனைவரையும் சிவாபராதிகளாகவே கண்டார். தந்தை, தந்தை முறையில் உள்ளவர்கள், தாய், உடன் பிறந்தவர்கள், மனைவி, அவளைச் சார்ந்தார் முதலிய யாவரையும் வேறுபாடின்றிக் களை தடிவது போலத் தடிந்தார்.

ஒரு குழந்தை இந்தக் கூட்டத்தில் சேராமல் தனியே இருந்தது. அந்தக் குழந்தையை நோக்கிக் கோட்புலியார் சென்றபோது ஒருவன், "இந்தக் குழந்தை மிக இளைய பருவம் உடையது. இன்னும் சோறு உண்ணும் பருவம் வரவில்லை. பால் குடிக்கும் பச்சைக் குழந்தை. தாங்கள் கூறிய குற்றத்தை இது செய்யவில்லை. இறைவனுக் கென்று வைத்த அமுதுபடியிலிருந்து சமைத்த சோற்றை உண்ணாதது இது. அன்றியும் இந்தக் குடிக்கு இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்" என்று கூறித் தடுத்தான்.

கோட்புலியார், "இவன் சோறு உண்ணாவிட்டாலும் இறைவன் நெல்லை உண்டவளுடைய பாலைக் குடித்தவனல்லவா? இவனும் ஒழியத்தான் வேண்டும்" என்று அந்தக் குழந்தையையும் துணித்துவிட்டார்.

பழி வருமே, பாவம் வருமே என்ற எண்ணமே சிறிதும் இன்றி, சிவனுக்கு அபசாரம் புரிவார் இவ் வுலகில் வாழும் தகுதி பெறாதவர்கள் என்று தம் உறவினர் அனைவரையும் கொன்று வானுலகேற்றினார் கோட்புலியார். அவருடைய பக்தி, வெறியாக முறுகி நின்றது.
--------------

58. பத்தராய்ப் பணிவார்

சிவபெருமானிடம் ஆராத அன்பு பூண்ட மெய்யடியார்களாகிய நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகின்றது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந் தருளிய திருத்தொண்டத் தொகையில் வரும் அடியார்களின் வரலாற்றையே சேக்கிழார் விரித்துரைத்தார். அத்தகைய அடியார்கள் அறுபத்து மூவர்.அவர்களையே அறுபத்து மூன்று நாயன்மார் என்று சைவ உலகம் வழங்கும். இந்த அறுபத்து மூவரும் முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள்.

இவர்களோடு ஒன்பது கூட்டத்தினரைத் திருத் தொண்டத் தொகையில் சேர்த்துப் பாடியிருக்கிறார் சுந்தரர். 'தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று தொடங்கும்போதே தில்லை மூவாயிரவர் என்னும் கூட்டத்தினரைப் போற்றினார். திருத்தொண்டத்தொகையில் ஏழாம் பாடலின் தொடக்கத்தில் 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்' என்று சிவபக்தியிற் சிறந்த புலவர் கூட்டமாகிய தொகை-யடியாரைச் சிறப்பித்தார். பத்தாம் பாடலில் பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடு வார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார். முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச் சார்ந்தார் என்று ஏழு தொகையடியார்களைப் பாடுகிறார். ஆகத் தொகையடியார் கள் ஒன்பது வகையினர்.

பத்தராய்ப் பணிவாராகிய நாயன்மார்கள், இறைவனிடம் அன்புடையவர் யாரைக் கண்டாலும் கூசி மிக்க மனக்களிப்போடு கொண்டாடி மகிழ்வார்கள். தாய்ப் பசுவைக் கன்று அணைவது போல் சார்ந்து பணிவும் இனிமையும் உடைய மொழிகளைப் பேசுவார்கள். சிவபெருமானை வழிபடுகிறவர்களைக் கண்டால் மிக உவந்து இன்புறுவார்கள். பாவனையினாலும் பார்வையினாலும் பயன் பெறுவார்கள்.
சிவபெருமானையும் அடியார்களையும் ஆராத காதலி னால் பூசிப்பார்கள். மிக்க தவமுடையவர்கள் அவர்கள். தம்முடைய உடம்பால் சிவபெருமானுக்குரிய திருத் தொண்டை இடைவிடாமல் செய்து கொண்டே இருப்பார் கள். சிவபிரான் திருக்கதைகளைக் கேட்டு அயலறியாதபடி உருகி அன்பு செய்வார்கள்.

இறைவனைப் பணிந்து நெஞ்சு நெகிழ்ந்து பேரானந் தம் பெற்று, பேச்சு எழாமல் தழுதழுப்பக் கண்ணீர் தாரை தாரையாகப் பொழிந்து மேலணிந்த திருநீற்றை அழிக்க, உடம்பெல்லாம் புளகம் போர்ப்ப உடல் நடுங்குவார்கள். அவர்கள் மிகச் சிறந்த குணம் உடையவர்கள்.

நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும். மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமல் குன்றாத அன்புணர்ச்சியோடு விளங்குபவர்கள் அவர்கள். சிவ பிரானை நினைந்து தவம் பல செய்வார்; ஆயினும் அதனால் வரும் பயனை வேண்டாதவராகி உலகத்தார் நன்மை அடையும்படி செய்யும் பெருந்தகையாளர் அவர்கள்.
----------------

59. பரமனையே பாடுவார்

மனிதனுடைய கரணங்கள் மூன்று; மனம் வாக்குக் காயம் என்பவை அவை. விலங்கினங்களுக்கும் மனம் உண்டு; வாக்கு உண்டு; காயம் உண்டு. ஆனால் மனிதனுக்கு அவை நன்றாக வளர்ந்திருக்கின்றன. அவனுடைய வாக்கு ஈடே இல்லாமல் சிறப்புற்றிருக்கிறது. அதனால் விலங்கினங்களை வாயில்லாப் பிராணிகள் என்றும், மனிதனை வாயுள்ளவன் என்றும் வழங்குகிறோம் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது பழமொழி. வாயுள்ள மனிதனே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு உரியவன்.

மனிதன் தன் கருத்துக்களைச் சொல்லும் ஆற்றல் பெற்றவன். அதற்குரிய கருவியாகிய மொழியை அவன் வளப்படுத்தி யிருக்கிறான். அவன் தன்னுடைய மூன்று கரணங்களாலும் இறைவனை வழிபட்டால் இறையரு. ளைப் பெற்று இன்பம் பெற முடியும்.

“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை''
என்று நாவுக்கரசர் அருளினார். இந்தக் கரணங்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே இவற்றைப் பெற்றதற்குப் பயன். உடம்பினால் வழிபடுவதை மிகுதியாகச் செய்பவர்களைப் பத்தராய்ப் பணிவார் என்றும், வாயினால் வழிபடுவதைச் சிறப்பாக உடையவர்களைப் பரமனையே பாடுவார் என்றும், உள்ளத்தால் சிறப்புத் தொண்டு புரிபவர்களைச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாரென்றும் மூவகைத் தொகை யடியாராக வைத்துத் திருத்தொண்டத் தொகை பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
உண்டு.

தென்தமிழிலும் வடமொழியிலும் பிற மொழிகளி னும் இறைவனுடைய புகழைப் பாடிய பாடல்கள் பல இறைவனிடம் அன்பு செய்த பெருமக்கள் உருகிப் பாடியவை அவை. அவற்றை வாயாரப் பாடி ஆடும் அன்பர்கள் யாவரும் 'பரமனையே பாடுவார்' ஆவர்.

''பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானை”

என்பது அப்பரடிகள் திருவாக்கு. பல வகையான பாடல்களையும் வாய் நிரம்பச் சொல்லிப் பாடி ஆடுவது தொண்டர் இயல்பு. இறைவனைப் பாடும் பாடலே பாடல். மற்றவை பாடலாகா. இறைவனைப் புகழும் புகழ்ச்சி தான் மெய்யான புகழ்.
புகழ். மற்றவை பொய்ப் புகழ். இறைவன் புகழை, "பொருள் சேர் புகழ்" என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."

பொருள் என்பது உண்மையைக் குறிப்பது. பிற விலங்கினங்கள் பெறாத வாயைப் படைத்த மனிதன் அந்த வாயினால் பெரிய பயனை அடைவதுதான் அழகு. இறைவன் புகழைப் பாடுவதைக் காட்டிலும் பெரும் பயனுடைய செயல் வேறு இல்லை. அதைச் செய்கின்ற நாயன்மார், பரமனையே பாடுவார். மன்றினிடை நடம் புரியும் வள்ளலாகிய சிவபெருமானையே பரம்பொருளாகக் கொண்டு, தென்தமிழிலும் வடமொழியிலும் ஏனைத் தேச மொழிகளிலும் பேசப்படுகின்ற துதிகளை இறைவன் பால் ஒன்றிய உண்மையான உணர்ச்சியோடு உள்ளம் உருகிப் பாடுகிறவர்கள்; பரமனையன்றிப் பிறரையும் பிற பொருளையும் பாடாதவர்கள் அவர்கள்.

"தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் உணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்"

என்று அவர்களைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாராட்டிப் பாடுகிறார்.
------------------

60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

மெளனம் மூன்று வகைப்படும். உடம்பு அசைவற்றுக் கிடப்பதைக் காஷ்ட மௌனம் என்பர். வாய் பேசாமல் இருப்பது வாய் மௌனம். மனம் ஓடாமல் நிற்பது மனோ மௌனம். இறைவனுடைய திருவருளில் ஈடுபட்ட யோகியர்கள் மெல்ல மெல்ல ஒவ்வொரு மெளனமாகச் சாதித்துக்கொண்டு வருவார்கள். கடைசியில் மனோ
மெளனமாகிய மனோலயம் சித்தித்த பிறகு அந்த நிலையிலே அசைவின்றி நிற்பார்கள். யோகம் என்பதே சித்த விருத்தியற்று நிற்றல். 'யோக மென்பது சித்தவிருத்தியின் நிரோதம்' என்று பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது.

யோகம் எட்டு வகைப்படும். இயமம், நியமம். ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன அவை. சமாதி என்பது புறக் கரணங்களும் அகக் கரணங்களும் அடங்கி நிற்கும் நிலை, அதற்கு முன் அமைய வேண்டியவை இயமம் முதலிய ஏழும். தாரணை யென்பது தன் உள்ளத்தே பற்றிய பொருள் அசைவின்றி நிற்கும்படி செய்தல். இது எளிதில் யாவர்க்கும் கைகூடுவது அரிது. நம்முடைய எல்லையற்ற அன்புக்குரியவர் ஒருவரை நினைக்கிறோம். அவருடைய உருவம் நம் அகத்தே தெளிவாகத் தெரியாது. கனவில் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால் அந்தக் கனவு நம் விருப்பப்படி வருவதில்லை. விழித்திருக்கும் போது ஒன்றை நினைத்தால் அது கனவிலே காணும் பொருளைப்போலத் தெளிவாகக் காண்பதற்குப் பல காலம் பயிற்சி செய்யவேண்டும். நாம் எண்ணும் உருவை மனத்திலே தரிசிக்கவேண்டும்; அது நிலையாக நிற்க வேண்டும். அதைத் தாரணை என்று சொல்வார்கள்.

சிவபெருமானுடைய திருவுருவத்தை மனத்திலே வைத்துப் பிற நினைவுகள் வாராமல் விலக்கி நிஷ்டாபரர்களாக இருக்கும் சிவ யோகியர்களுக்குத் கைகூடும். பின்பு வேறு எந்த வகையான அது தாரணை இடையீட்டாலும் அது மாறாமல் நிற்கும். அந்தக் காட்சியிலே உறைந்து நிற்பதே தியானம். அப்பால் எல்லாம் மறந்து இன்புறல் சமாதி.

தாரணை கைகூடிய சிவயோகியரைச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்று சுந்தரர் பாடினார். அவர்கள் ஆதாரங்கள் ஐந்திலும் உள்ள பஞ்சமூர்த்திகளின் பதங்களைக் கடந்து, அப்பால் ஆறாவது ஆதாரமும் தாண்டிப் பூரண மெய்ச்சோதியாகப் பொலியும் துவாதசாந்த நிலையில் மனத்தை நிறுத்துவார்கள். அவர்களுடைய சித்தம் சிதறாமல் ஆடாமல் அசையாமல் விருத்தி அடங்கிக் கிடக்கும்.

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாராகிய தொகையடி யர்களை நாமும் போற்றி வழிபடுவோமாக.
-------------

61. திருவாரூர்ப் பிறந்தார்

சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தலங்களில் சில சில தலங்களுக்குச் சில சிறப்பு இயல்புகள் உண்டு. திருவண்ணாமலை நினைக்க முத்தி தருவது என்பார்கள். காசி இறக்க முத்தி தருவது. அப்படியே திருவாரூர் என்ற தலம் பிறக்க முத்தி தருவது. அதாவது திருவாரூரில் பிறந்தாலேயே போதும்; முத்தி கிடைக்கும். இந்த நம்பிக்கை கொண்டு சைவர்கள் எல்லாரும் திருவாரூரைச் சிறந்த தலம் என்று சொல்வார்கள்.சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரிஞல் தங்கிப் பரவை நாச்சியாரோடு இல்லறம் நடத்தி வந்தார். அவர் இல்லறம் நடத்தினாலும் அது சிவ யோகத்தைப் போன்று இருந்தது என்று சேக்கிழார் வருணிக்கிறார்.

திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் மூலலிங்கத்திற்கு வன்மீக நாதர் என்று பெயர். அங்கேயுள்ள சோமாஸ் கந்த மூர்த்தி தியாகராஜப் பெருமான். சைவத்திற்கு முக்கியமாக இரண்டு ராஜாக்கள் உண்டு. ஒரு ராஜா நடராஜப் பெருமான். சிதம்பரத்தில் இருக்கும் நடராஜாவைச் சிறந்த மூர்த்தியாகப் போற்றி வழிபடுகிறவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் தியாகராஜா கொடையில் சிறந்தவர்.
"அடிக்கு ஆயிரம் பொன் இறைக்கும் ஐயர்"
என்று அந்தப் பெருமானைப் பாராட்டுவார்கள்.

திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே சிவகணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு நம்பிக்கை. சிவலோகத்தில் இருக்கிற எம்பெருமான் சில காரணங்களுக்காகத் தம் முடன் இருந்து தொண்டு செய்யும் கணங்களைத் திருவா ரூரில் பிறக்கும்படி ஏவினாராம். அவருடைய தரிசன மாத்திரத்தால் நல்லவர்கள் நன்மை பெறுவார்கள். ஆகையால் திருவாரூரில் பிறந்தவர்கள் அத்தனை பேரையும் தொகை அடியாராக வைத்துப் பாராட்டினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவரைப் பின்பற்றிச் சேக்கிழார் சுவாமிகளும் இரண்டு பாடல்களால் திருவாரூரில் பிறந்தாராகிய தொகை அடியார்களைப் பாராட்டுகிறார்.

“அருவாகவும், உருவாகவும் எல்லாப் பொருளாகவும் சிவபெருமான் நிற்கிறான். அந்தப் பெருமான் திருக்கோயில்களில் திருவுருவம் கொண்டு அடியார்கள் போற்ற எழுந்தருளி யிருக்கிறான். ஞான வாசனை வீசுகின்ற பூங்குழலை உடைய எம்பெருமாட்டியின் மணவாளனாகிய எம்பெருமான் தமிழ் நாட்டில் பல தலங்களில் எழுந்தருளி அடியார்களுக்கு அன்பு பாலிக்கிறான். அப்படி எழுந்தருளியுள்ள தலங்களில் திருவாரூர் ஒன்று. அந்தத் திருவாரூரில் பிறந்தவர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் திருத் தொண்டு என்னாலே தேர்ந்து சொல்லத் தக்கதா? என்று சேக்கிழார் பாடுகிறார்.

திருக்கயிலாயத்தில் வீற்றிருந்து, சிவபெருமானுடன் இருந்து அவன் தொண்டுகளைச் செய்யும் சிவகணத்தார்கள் மிக்க கீர்த்தியுள்ள திருவாரூரில் பிறப்பார்கள். அவர்கள் தம்முடைய ஐந்து இந்திரியங்களை அடக்கி வாழ்கிறார்கள். அவர்களுடைய பாதத்தை வணங்கினால் உயர்ந்த நெறி கைகூடும். இவ்வாறு திருவாரூரில் பிறந்தார்களுடைய சிறப்பைச் சேக்கிழார் நாயனார் பாடியிருக்கிறார்.

-----------------------

This file was last updated on 16 Sept. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)