pm logo

மதுரை மீனாட்சியம்மன், சோமசுந்தரக்கடவுள் பேரில்
அடிமடக்கு ஆசிரியவிருத்தம்


maturai mInATciamman & cOmacuntarar
aTimaTakku Aciriyaviruttam
by T. kOpala aiyar
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
We thank Mr. Rajendran Govindasamy for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

maturai mInATciamman & cOmacuntarar
aTimaTakku Aciriyaviruttam
by T. Gopal Iyer

Source:
மதுரை மீனாட்சியம்மன், சோமசுந்தரக்கடவுள் பேரில்
அடிமடக்கு ஆசிரியவிருத்தம்.
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது
மதராஸ், என்.சி. 100 கோள்டன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
1914
17-18 காளத்தியப்ப முதலிவீதி மதராஸ் என். சி.
---------------

1. மதுரை மீனாட்சியம்மன் அடிமடக்கு ஆசிரியவிருத்தம்

கடவுள் துணை.

கதியாளைக் குழலணிமா கதியாளை யடியருளங்கலங்கத் தான்சம்,
மதியாளைக் கயவர்பணி மதியாளை மண்ணும் விண்ணும் வணங்குமாசந்,
நிதியாளை யளக்கரிய நிதியாளைப் பொய்யன்பர் நினைவிற்றன்பூள்,
பதியாளைத் திருமதுரைப் பதியாளைத் பணிவார்தம் பவமற்றோரே. (1)

வாராளை வீணரெதிர் வாராளைத் தன்றாளை வணங்காரைக்கண்,
பாராளைத் தென்பாண்டிப் பாராளைப் பொய்யன்பர் பணிக்குமுத்தி,
தாராளை நிம்பமலர்த் தாராளை மதயானைத் தடக்கை வாழை,
யூராளைத் திருமதுரை யூரானையுள்ளுமென துள்ளமாதோ. (2)

பரத்தாளை யடியவர்தா பரத்தாளை யங்குசவெம்பா சமேந்துங்,
கரத்தாளை மந்த்ரபஞ்சாக கரத்தாளை முத்தேவர்கட்குமேலாந்,
தரத்தாளை யிலங்குசவுந்தரத்தாளை விண்முடியைத் தடவும் பொற்கோ
புரத்தாளைச் சீவன்முத்தி புரத்தாளை நினைத்திடுமென் புத்திமாதோ. (3)

சேயாளைச் செழியனருள் சேயாளைப் பல்லுயிருஞ் செகத்துந்தானே,
ஆயாளைய டியர்பிழையாயாளைப் பொய்யன்ப ரணிதாரைத்தாள்,
வேயாளை தோட்பசிய வேயாளைச் செம்பவளம் விளங்குமாம்பல்,
வாயாளைத் திருவாலவாயாளைத் தூயாளை வணங்கிவாழ்வாம். (4)

கலையாளை யணிமணிமே கலையாளைக் கன்னிபுரங் காத்தமோலித்,
தலையாளைக் கிளிமொழிக்கு தலையாளை மரகதத்தாற் சமைந்தசோதிச்,
சிலையாளைக் கரும்புருவச் சிலையாளை யெனையாளச் சித்தஞ்சற்றும்,
மலையாளைப்பங் கமர்செம் மலையாளை பணிந்துபவமாற்றுவாமே. (5)

பரையாளைப் பங்குறைநம் பரையாளை வடிவாளைப் பரவார்க்குள்ளங்,
கரையாளை வைகைநதிக் கரையானை முக்கனி கற்கண்டுசெந்தேன்,
உரையாளையானோவவுரை யாளையன்பர்பவத் துழன்றுவாட,
வரையாளைத் தனியிமய வரையாளைப் பணிபவரே மாசற்றாரே. (6)

தவியாளைத் தொண்டருக்கு தவியாளைக் கயவர்குடி தாங்கச்சிந்தை,
கவியாளை முவரிசைக் கவியாளைப் பிரளயத்துங் கற்பத்துந்தான்,
அவிபாளைமகத்தூட்டு மவியாளை விழிக்கடை சென்றடர்ந்துபாயுஞ்,
செவியாளை யெமையாளுஞ் செவியாளைக் கணந்தோறுந் தியானிப்பாமே. (7)

அணியாளை முடியணியாம் பணியாளை மணித்தோளுக் கணிந்தநிம்பக்,
கணியாளைக் கயவர்தொண்டு கணியாளை முத்தேவர்களையுமேவும்,
பணியாளை விளங்குதிருப் பணியாளைத் திருமதுரைப் பாண்டிக்கோன்கண்,
மணியாளைப் புனைந்து நவமணியாளைப் பணியார்நன்மதி யற்றாரே. (8)

துய்யாளை மகவரிந்துந் துய்த்தாளைப் பெருங் கருணை சுரக்குங் கட்பார்,
வையாளைத் தாளென்முடி வைத்தாளை மரகதமா மலைபோல் வாய்த்த,
மெய் யாளை மூவர்தமிழ் மெய்த்தாளைச் சுவைக்கருப்பு வில்லொன்றேந்துங்,
கையாளை மடங்கலையு கைத்தாளைத் துதித்துவினை கடத்துவாமே. (9)

கெலியாளை யெண்டிசையுங் கெலித்தாளை யயன் றலைகைக் கேந்தியேற்ற,
பலியாளை யடிவர்க்கே பலித் தாளை மதுரைவரப் பணித்தவேழார்
கலியாளை யெவ்வு யிருங் கலித்தாளை யடியேனைக் காக்கச்சற்றுஞ்,
சலியா ளைக் கணவனுக்கஞ் சலித்தாளைத் தஞ்சமெனச் சரண் புக்கேனே. (10)

மீனாட்சியம்மன் அடிமடக்கு ஆசிரியவிருத்தம். முற்றிற்று.
-----------------------

2. மதுரை சோமசுந்தரக்கடவுள் அடிமடக்காசிரியவிருத்தம்.

கடவுள் துணை.
#
விடையானைச் சனகர்வினா விடையானை யெனைப் பிறவி வேலைசாரப்,
படையானை வெற்றிமழுப்படையானை யடியரைத் தாபரிக்கநெஞ்சஞ்,
சடையானைச் செம்பவளச் சடையானை வேரிவேங்கைச் சருமம்பூண்ட,
உடையானைத் தென்கூடலுடையானை மறவாதென் னுள் ளமாதோ. (1)

வாட்டானைத் தசமுகனை வாட்டானைத் தொண்டரைவன் னரசிலென்றும்,
வீட்டானைப் பரமபத வீட்டானை முனிவருக்கா வெள்ளிமன்றுள்,
ஆட்டானை யெனைக்கலியி லாட்டானை யந்தகனையடியார் கண்ணிற்,
காட்டானை மதுக்கடப்பங் காட்டானைக் கருதிவினை கடத்துவேனே. (2)

சுகத்தானை வாம்பரியஞ் சுகத்தானை யெரித்தானைச் சுடரார்வெள்ளி,
நகத்தானை நறுங்கோக நகத்தானைத் தடிந்தானை நாலோடொன்று,
முகத்தானையடியவர் சமுகத்தானைத் தனைப்பாடு முதன்மைத் தொண்டற்,
அகத்தானைத் தென்மதுரை யகத்தானைப்பணியடியார்க் கடியேன்யானே. (3)

மையானை யுரித்தவலி மையானைத் திரிசூல மழுமானேந்துங்,
கையானைச் சரணருளங் கையானைப் பணியார்க்குக் கருணைநாட்டஞ்
செய்யானைத் திருமேனிச் செய்யானைத் தென்கூடல் செழித்தபூதி,
மெய்யானைத் தனி முதலா மெய்யானைப் பணிந்துபழ வினைவெல்வேனே. (4)

நலத்தானைக் கரமேந்தனலத்தானைச் சடைமுடிமே னண்ணுங்கங்கா,
சலத்தானைச் சிலைக்கனகா சலத்தானைத் தீரனெதிர் சாற்றுஞ் செஞ்சொல்,
வளத்தானை மலைமடந்தை வலத்தானை வளமிகுது வாழ்மாந்தத்,
தலத்தானைத் தழனுதற்கட் டலத்தானைக் கண்களிப்பத் தரிசித்தேனே. (5)

வண்ணானை யேறியசெவ் வண்ணானை யிரவியங்கி மதியாமூன்று,
கண்ணானை யன்பர்பிழை கண்ணானை வஞ்சநெஞ்சக் கயவர்காண,
வொண்ணானை நான்மறைக்கு மொண்ணானை யெனையினுமோ ருதரஞ்சேரப்,
பண்ணானை யிருவரிசைப் பண்ணானை யென்னாளும் பணிசெய்வேனே. (6)

முடியானைத் தும்பைமலர் முடித்தானைத் திருமேனி முழுதுநீற்றுப்,
பொடியானைக் காமனுடல் பொடித்தா னையிடத்திமயப் பொருப்பார்பச்சைப்,
பிடியானை வெற்றிமழுப் பிடித்தானைத் தன்னிலமை பேசுமாலங்.
குடியானைக் கடல்விடமுன் குடித்தானைத் துதித்திருமை குவித்துவாழ்வாம் (7)

விரியானை நான்மறையும் விரித்தானைத் தனைத் தானே விரும்புமன்பர்க்,
குரியானை மதயானை யுரித்தானை யெவவுயிர்க்கு முயிர்தானாகுங்,
கரியானைக்காமனுடல் கரித்தானைப் பொய்யன்பர் கண்முன்வந்தா,
தரி யானைப்பிறைமௌலி தரித்தானைக் கூடலிடைத் தரிசித்தேனே (8)

கல்லானை கரும்பருந்தக் கற்றானைப் புரம்பொடிய கனகமேரு,
வில்லானை வளையெடுத்து விற்றானை வெஞ்சமணர் விடுக்கவந்த,
கொல்லானைத் தன்விடையாற் கொன்றானை நான்மாடக் கூடலாக்குஞ்
செல்லானைப் பாவையிடஞ் சென்றானைக் குன்றானைத் தியானிப்பாமே. (9)

ஏறானைப் பலியுலகி லேற்றானை முருகளைத்தந்திட வாஞ்சென்னி,
ஆறானைச்சடையிலணி யாற்றானைபஞ்செ ழுத்தை யன்பிலார்க்குக்,
கூறானையுமையவளோர் கூற்றா னையெனையடிமை கொள்ளுஞ் செய்கை,
மாறானைவஞ்சர் பவமாற்றானை நீற்றானை வாழ்த்துவேனே. (10)

சோமசுந்தரக்கடவுள்மீது அடிமடக்காசிரியவிருத்தம். முற்றிற்று.
---------------


This file was last updated on 16 Sept 2024.
Feel free to send your corrections to the webmaster (pmadurai AT gmail.com)