pm logo

காஞ்சீபுரம் செங்குந்தர் காமாட்சியம்மன் விருத்தம்

cengkuntar kAmaTci amman viruttam
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Internet Archives for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

செங்குந்தர் காமாட்சியம்மன் விருத்தம்

Source:
1. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் விருத்தம்
ஆசிரிய விருத்தம்
இஃது திருவாலங்காடு ஆறுமுக சுவாமிகளால் பார்வையிடப்பட்டு
அ. இரங்கசாமி முதலியாரவர்களது பூமகள் விலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிடப்பட்டது
1887௵
2. செங்குந்தர் காமாட்சியம்மன் விருத்தம்
ந. சரவணன் முதலியார் தொகுப்பு
செங்குந்தர் வரலாறு மீட்பு குழு
---------
முன்னுரை


அம்மனைப் பற்றி போற்றி பாடுவது அந்தாதி அகவல் காமாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் போன்றவை பிரசித்தி பெற்றவை. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் இந்த வகையில் சேர்ந்ததே. இறைவனிடம் முறையிட்டு தங்கள் நலம் பெறவும், செழித்து வாழவும் இப்பாடல்கள் பெரிதும் உதவுகின்றன. இவ்வகையில் விருத்தம் என்பதும் நன்று. விருத்தம் எனப்படுவதற்கு சரியான இலக்கணம் குறிப்புகள் இல்லாத போதும், இதற்கான வரைமுறைகளும் இல்லை என்பதே தெளிவு, விருத்தம் எளியவை. பெரும்பாலும் கர்நாடக இசையால் பாடப்படுவது. ஆனாலும் கர்நாடக இசையின் சட்டதிட்டங்கள் இவைகளுக்கு கிடையாது. குறிப்பாக காமாட்சியம்மன் விருத்தம் என்பது அன்னை காமாட்சியை போற்றி பாடுவதோடு, அம்மையிடம் தங்கள் கவலைகளை முறையிடுதல் தான் பிரதானம். காமாட்சியம்மன் கோவில்களில் அலகு குத்துதல் நிகழ்வின் போது, வீரத்தை வெளிப்படுவதற்காக கைக்கோளர் வரலாற்றையும் நெசவு தொழிலுக்கு ஏனைய தேவர்களை துணைபுரிவதற்காகவும், தாங்கள் மேலாதிக்க வர்க்கத்தின் வழக்குகளிலிருந்து மீண்ட கதைகளின் மூலமாகவும், இனத்தாரின் காவல் தெய்வமான சேவற் கொடியோனின் பெருமைகள் பற்றியும், போரிட்ட முறைகளையும் வீர முழக்கத்தோடு “சபாஷ்" என்ற ஆர்பரிப்போடு கூறும் பொழுது நரம்புகள் முறுகேறி தமது இனம் வீரம் விளைந்த இனம் என பறைசாற்றும் முகமாக வாடப்படுவது தான் "விருத்தம்".
பெரும்பாலான காமாட்சியம்மன் விருத்தங்கள் அச்சில்லாமல் செவி வழிச் செய்திகளாக பரம்பரையாக போற்றி பாதுகாக்ப்பட்டவையாகும். இனப்பெருமை கொள்வோம் இத்தகைய விருத்தப் பாடல்களை அச்சியேற்ற வேண்டும் என அவா இருந்தாலும் இன்றைய தினம் இப்பாடல்கள் அச்சேறி அனைவரின் கைகளிலும் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. முயற்சி எடுத்த ந. சரவணன் அவர்களுக்கும், உறுதுணையாய் இருந்திட்ட அனைவருக்கும் இனமக்களின் சார்பாக நன்றி,

செங்குந்தர் வரலாறு மீட்பு குழு
--------

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் விருத்தம்

கணபதி காப்பு

மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே — திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

ஆசிரிய விருத்தம்

1. சுந்தரி, சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியாய் நின்றவுமையே!
சுக்கிரவாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிவிடுவாய்.
சிந்தைகளினுன் பாதந்தன்னையே தொழுபவர்கள் துன்பத்தை மாற்றிவிடுவாய்,
ஜெகமெல்லாம் முன்மாய்கை புகழ என்னால் ஆகுமோ சிறியனால் முடிந்திடாது!
சொந்த உன் மைந்தனாய் எந்தனை இரட்சிக்க சிறியாடனுள்ள தம்மா சிவசிவ!
மகேசுவரி! பரமனிட ஈஸ்வரி, சிரோன்மணி, மனோன்மணியும் நீ, அந்தரி.
துரந்தரி நிரந்தரி, பரம்பரி பனாத ரட்சகியும் நீயே! அழகான
காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி புமையே!!       1

2. பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசம் அது பாடகம் தண்டை கொலுசும்,
பச்சை வைடுரியமும், இச்சையாய் இழைத்திட்ட பாத சிலம்பினொலியும்,
முத்து மூக்குத்தியும், ரத்தினப் பதக்கமும், மோகன மாலையழகும், முழுதும் வைடூரியம்,
புஸ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும். சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும்.
செங்கையில் பொன்கங்கணம். ஜெகமெல்லாம் விலைபெற்ற முகமெல்லாம்
பொலிவுற்ற சிறுகாது கொப்பினழரும், அத்தி வரன் தங்கை ! சக்தி சிவ ரூபத்தை,
அடியானால் சொல்ல திறமோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே!!

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினது முன், குறைகளை சொல்லி நின்றும்,
கொடுமையாய் என்மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல், உந்தனை சதமாக நம்பினேனே!
சற்றாகிலும், மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதிபோல் ஒளியுற்ற, புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே
மாயனது தங்கையே. பரமனது மங்கையே. மயானத்தில் நின்ற உமையே.
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்,
அன்பு வைத்து என்னை ஆள்வாய், அழகான காஞ்சியில்
புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!       3

பூமியில் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான் பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடியறியேன்!
வாழி என்று என்னை சிவகாமி என்றே சொல்லி வாயினால் பாடி அறியேன்!
மாதா, பிதாவின் பாதத்தை நானுமே வணங்கி ஒரு நாளும் அறியேன்!
சாமி என்றே எண்ணி சதிருடன் கைகூப்பி சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு சாஷ்டாங்க எண்டனிற் அறியேன்!
ஆமிந்த புமியினடியனைப் போல் மூடன் ஆட்சி நீ கண்டது உண்டோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் சம்மை காமாட்சி யுமையே!!       4

பெற்ற தாயென்று. உன்னை மெத்தவும் நம்பினேன், பிரியமாய் இருந்தேன் அம்மா!
பித்தலாட்டக் காரியென்று, நான் அறியாது உன் புருசனை மறந்தேனம்மா!
பக்தனாயிருந்து முன் சித்தமும் இரங்காமல், பாராமுகம் பார்த்திருந்தால் - பாலன்
நான் எப்படி விசனம் இல்லாமல் பாங்குடன் இருப்பேன் அம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது! ஆகாது ! இது தர்மம் அல்லவம்மா.
எந்தனை இரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ, இது நீதியில்லையம்மா ?
அத்திமுகன் ஆசையா இப்புத்திரனை மறந்தையோ? அதை எனக்கு அருள் புரிவாய்.
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே !!       5

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ, மணி மந்திரக் காரியே நீ!
மாயா சொருபினி நீ, மகேஸ்வரியுமான நீ, மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி ! நீ சற்குணவல்லி நீ. தயாநிதி விசாலாட்சி நீ.
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ. சரவணனை ஈன்றவள் நீ,
பேய்களுடன் ஆடி நீ அத்தன் இடபாகம் அதில் பேர்பெற வளர்ந்தவளும் நீ,
பிரணவ சொருபி நீ. பிரசன்னவல்லி நீ. பிரிய அண்ணாமலையும் நீ,
ஆயி மகமாயி நீ. ஆனந்தவல்லி நீ. அகிலாண்டவள்ளி நீயே!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!!       6

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் தன்புத்திகளைச் சொல்லவில்லையோ?
பேய் பிள்ளையானாலும், தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ?
கல்லாகிலும், மூச்சு நில்லாமல், வாய்விட்டு கதறி நான் அழுத குரல்!
கடுகுதனில் எட்டில் ஒரு பாகம் கூறுவதாகின் உன் காதினில் நுழைவதில்லையோ?
இல்லாத வன்மங்கள் மீது ஏனம்மா? இனி விடுவதில்லை சும்மா!
இருவரும் மடிபிடித்து தெருதனில் வீழ்வது இது தர்மம் அல்லவம்மா ?
எல்லாரு உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதியல்லவம்மா?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!       7

முன்னையோ சென்மாந்திர என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தேனம்மா?
மெய் என்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ ?
என்னமோ தெரியாது! இக்கணம் தன்னிலே இக்கட்டு வந்தது அம்மா!
ஏழை நான் செய்த பிழை தாய் பொறுத்தருள் தந்து என் கவலை தீரும் அம்மா!
சின்னங்களாகுது ஜெய இல்லையோ? தாயே சிறுநாணம் ஆகுதம்மா!
சிந்தனைகள் என்மீது வைத்த நட்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ?
அன்ன வாகனம் ஏறி, ஆனந்தமாக உன் அடிமை முன் வந்து நிற்பாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!       1 8

எந்தனைப்போலவே ஜனனம் எடுத்தோர்களின் இன்பமாய் வாழ்ந்திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில், உன்னடியேன் தவிப்பதம்மா!
உன்னையே துணையென்று. உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாய்
உன்னையன்றி வேறு துணை யாரையும். இங்கு காணேன்?
உலகம் தனில் எந்தனுக்கு என்னை என்று எண்ணி நீ சொல்லாமல் என் வறுமை
போக்கடித்து என்னை இரட்சித்து பூலோக மெச்சவே
பாலன் மார்க்கண்டன் போல், அடியேனை ரட்சிக்க அடிசெய் யாதேயம்மா!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!!       9

பக்தியாய் உன்னை பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில், சிறு பிணிகள் வாராமல், செங்கலி அணுகாமலும்
சேயனிடம் பாக்கியம் செல்வங்களைத் தந்து, ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர்பெற்ற காலனைப் பின்தொடர ஒட்டாமல் பிரியமாய் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியனான், சொன்னகவி பிழைகளை பொறுத்து,
இரட்சி ஆறுதனில் மணல் குவித்தரிய பூசை செய்த என்னம்மை யோகம்பாரி
நீயே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே!!       10

எத்தனை செனனம் எடுத்தோனோ தெரியாது இப்பூமி தன்னில் அம்மா!
இனியாகினும் கிருபை வைத்து என்னை இரட்சியும்,
இனி செனனம் எடுத்து விடாமல், உத்தரவு வேண்டும் என்று
உன்னையே தொழுது நான் முக்காலும் நம்பினேனே!
முன் பின்னும் தோணாத மனிதரைப்போல் நீ முழித்திருக்காதே அம்மா!
வெற்றிபெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருதங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை விமலனா ஏசப்போறார் ?
அத்தனிட பாகமதை விட்டு வந்தே என் அருங்குறைத் தீரும் அம்மா!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடு அம்மை காமாட்சி யுமையே!       11

--------------
காமாட்சி அம்மன் விருத்தம் (version 2)

கணபதி காப்பு
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்ர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவா மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       1

பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகம் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒளியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும் செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       2

கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.       3

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே !       4

பெத்த தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எத்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       5

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணிமந்த்ரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       6

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       7

முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!       8

எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       9

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!       10

எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா
இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல்
முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே
முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா
வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை விமலனார் ஏசப்போறார்
அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!       11
---------------


This file was last updated on 6 April 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)