திருப்போரூர் - மயில்விருத்தம்
tiruppOrUr mayil viruttam
in Tamil Script, Unicode/UTF-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing
a scanned PDF version of this work for ebook preparation.
Our Sincere thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருப்போரூர் - மயில்விருத்தம்
Source:
திருப்போரூர் மயில்விருத்தம்
இஃது திருநின்றையூர் அருணாசல சுவாமிகளால் பார்வையிடப்பட்டு
பூவிருந்தவல்லி கந்தசாமி முதலியாரால்
தமது இயலிசை நாடகவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ரௌத்திரி வரு (1920) கார்த்திகை மாதம்
-----------
திருப்போரூர் - மயில்விருத்தம்
சிவமயம்:
காப்பு
கட்டளைக்கலித்துறை
காரூர் மருமலர் பூஞ்சோலை வாசங் கதிக்குமெழிற்
போரூர் மருவுமணி முருகேசன் பொரு விலம்பொன்
வாரூர் குறவள்ளி மாரன் மயூரவ ளம்புகல
நீரூர் முகிற்கரியா நநத்தானை நினை நெஞ்சமே.
ஆசிரியவிருத்தம்
அண்டரண் டங்களுட நீரேழு புவனங்க ளதிரநட மாடுமயிலே
ஹரஹரா வென்றுமாற் பிரமன்முதன் முநிவர்க ளர்ச்சிக்க வந்தமயிலே
தண்டையொ டுகிண்கிணிசி லம்பொலிமு ழங்கவே தாண்டவம் புரியுமயிலே -
தர்க்கமிடு சூரனுட னெக்குநீ றாகவே சாரிவரு தோகைமயிலே
கண்டதொரு பேய்பூத பிர்ம்மரா க்ஷஸர்களுடல் கதறிட மிதிக்குமயிலே
கரடிபுலி யாளிபரி மிருகங்க ளியரவையுங் காலாக்கினை கொண்டமயிலே,
தெண்டநிட்டே பணிபுரியு மடியவர்க ளீடேற சேவைதந் தாளுமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (1)
அஞ்சிப்ப யந்தோர்க டாய்தந்தை யாகவந் தாதரிக்கின் றமயிலே
யாருமற் றோர்கட ஞ் சுற்றமேநா னென்றடுத் தாண்டளிக் குமயிலே
வஞ்சகப் பில்லிசூநிய மேவல்செய் வோர்கண் மார்பைப்பிளக் குமயிலே
மட்டுக்க டங்காத துஷ்ட்டப் பசாசுகளை மாரணஞ்செய் யுமயிலே
நஞ்சான விஷமமுத சஞ்சீவி யாகவே நடனமிடு தோகைமயிலே
ராஜபர மேஸ்வரி தருங்கும ரனைக்கொண்டு நாட்டியம்பு ரியுமயிலே
செஞ்சொற் றமிழ்க்கும்ப முனிமகிழ்ந் தோதவே திவ்யநட மாடுமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே (2)
அட்டதிக் கெங்குமொரு நொடியில்வல மாய்வந்த வற்புதக் கலபமயிலே
ஆயிரத்தெண் பணாமுடி யுரகனுடல் குழைய வாக்கிப்பிடித் தாடுமயிலே
கட்டழகர் நவவீரர் வீரபத்தி ரன்பத்ர காளியும்வ ணங்குமயிலே
கனமான வைரவன் சரணெனப் போற்றவே கலகலென் றாடுமயிலே
துட்டரை ஜெயங்கொண்டு சிஷ்ட்டைபரி பாலனந் தோலாதி யற்றுமயிலே
துதிசெயடி யேனுளக் கோரிக்கை நிறைவுறத் தொந்தோமென் றாடுமயிலே
சிட்டர் புகழ்குறவள்ளி மகிழ்தெய்வ யானையிவர் சித்தங்க ளிக்குமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (3)
நந்திமத் தளமதைத் தொந்தோ மெனக்கொட்ட நாட்டியஞ் செய்யுமயிலே
நாரதம காமுனிவன் வீணைவாத் தியஞ்செய்ய நன்காய்ந டிக்குமயிலே
சுந்தரர் சம்மந்த ரப்பர்மா ணிக்கரோடு துறவோரி றைஞ்சுமயிலே
சொற்பெரிய தில்லைமூ வாயிரவ ரநுதினந் தோத்திரஞ் செய்யுமயிலே
கந்தமிகு நவரத்ன மாலையம் பொன்னங் கடம்பணிந் தாடுமயிலே
கதிர்மதிக ளிருபுறந் தீபங்க ளெனவொளிக் கரலநின் றாடுமயிலே
சிந்தையிற் றுயர்நீக்கி யென்ரென்னை யாண்டசெஞ்சீக் கலாபமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே (4)
வாடித்த விக்கின்ற வேழையடி யேனுன்மனத் துயரகற் றுமயிலே
வையாபு ரிக்குமர ரேறியேவிளையாடு மரகதம யூரமயிலே
பாடிப்ப டிக்கின்ற பாவாணர் நாவெறி பரதனட மாடுமயிலே
பக்ஷமா யன்பருக் கதிகசம் பத்தெலாம் பரிவாய ளிக்குமயிலே
கோடிசூர் யப்ரகா சத்தெய்வ யானைபூங் குறவள்ளி மகிழுமயிலே
குன்றைத் துளைத்துமோர் நக்கீரரைக் காத்த குங்குமப டீரமயிலே
தேடித்தி நந்தேவர் பரவமெஞ் ஞானச்செ ழுங்கருணை பொழியுமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (5)
மார்கொண்டு தாங்கியே யென்றனை வளர்க்கின்ற மாதாவு மானமயிலே
மஹம்மேரு கிரியதனி விரைதேர்ந்து விளையாடி வட்டமிட் டாடுமயிலே
பேர்கொண்ட சூரனுட லிருதுண்ட மாகப்பி ளந்திடநி மிர்ந்தமயிலே
பெருகுவட கைலைநிகர் பழநிமலை வேலரைப் ரபலமுட னேந்துமயிலே
கார்கொண்ட முகிறனைக் கண்டின்ப மாகவே கல்லெனந டிக்குமயிலே
கண்டிகதிர் காமத்தி லங்குமுரு கேசரைக் கனமாயெ டுக்குமயிலே
சீர்கொண்டு வளரஷ்ட் டலஷ்மீகடா க்ஷமிச்சிறி யேற்களிக் குமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (6)
அக்கரவு குற்றியே யுக்ரதாண் டவமாடி ஹரஹரா வென்றமயிலே
அரனைவலம் வந்துதான் சரணார விந்தத்தை யகமகிழ்ந் தேத்துமயிலே
குக்குடத் துவஜகரா தலவின் ஜபவேளை மேற்கொண்டுவிளை யாடுமயிலே
குருநாதர் தம்மைச்சு மந்துத் தினைப்புனங் குலவியே வந்தமயிலே
மக்கண்ம னையாடந்தை தாய்சுற்ற மென்றனை மகிழ்ந்தளித் தருளுமயிலே
வையகந் தனிலானை சேனைமுதல் வாழ்வெலா மாறாமலு தவுமயிலே
திக்குன்னை யன்றிவே றில்லையென் போர்க்குதவி செய்தாத ரிக்குமயிலே,
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (7)
கரிமுகவ னுக்கிளைய துரைமுருகர் தண்டையங் காலுக்கி சைந்தமயிலே,
கைக்கனிக் காகவுல கொருநொடியில் வலம்வந்த கம்பீர நீலமயிலே
சரிதைகிரி யாயோக ஞானமார்க் கத்தின்க துர்ப்பதவி சந்தமயிலே,
சாலோக சாமீப சாரூப சாயுச்ய சம்பத்த ளிக்குமயிலே -
தரிதமாய்ச் சமணரைவ கைத்துக்ர மாகவே தொந்தோமென் றாடுமயிலே,
தோகைகுற மான்றனைத் தேடித்தி னைப்புனஞ் சுற்றித்தி ரிந்தமயிலே
திருமருவு கல்வியு மொழுக்க முமடக்க முஞ்செல்வமு மளிக்குமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (8)
கெங்கா பகீரதிச் சேயேறமலை தொறுங் கேளிக்கை யாடுமயிலே
கின்னரர் கிம்புரடர் கெருடகாந் தருவதொழுங் கிண்கிணித்தாள் கொண்மயிலே
வங்கார வடிவேலர் தெய்வானை வள்ளிக்குற வாஹனமு மானமயிலே
வந்தடிப ணிந்தோர்க்கு சந்தான சௌபாக்கிய வாழ்வளித் தாடுமயிலே
மங்காத பெரியோர்கள் குலமெலாம் வர்த்திக்க வட்டமிட் டாடுமயிலே
மறாட்பி ணிக்கென்று மணிமருந் தாகவே வந்துதவு தோகைமயிலே
சிங்கார மங்கையரி தங்கையுமை யாளீன்ற செல்வனைத் தாங்குமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (9 )
பத்தியா யுனதுபா மாலையைப் பாடினோர் பங்கிநின் றாடுமயிலே
பரிபுரை யளித்தவேண் முருகரைத் தாங்கிப் பறந்தாடு கின்றமயிலே
சுத்தமுக் காலந்துதிக் குமானிடர் கடந்துன் பைத்தவிர்க் குமயிலே
துய்யசெஞ் சேவற்ப தாகரைப் போற்றியே சுகமுற் றிருக்குமயிலே
தொத்தியே வருநெடிய கொக்கினைச் சட்டியிற் சுட்டெரித் துண்டமயிலே
மருங்குளோர் புனிதமலர் மாரிபெய் யத்துதைந் துவிளை யாடுமயிலே
சித்தமகிழ் வாயென்னை ரட்சிக்க வந்துற்ற சின்மயா னந்தமயிலே
திருப்போ ரூரில்வளர் கந்தப்ப ரேறிவரு சித்ரக்க லாபமயிலே. (10)
மயில் விருத்தம் முற்றிற்று.
********************************************************
This file was last updated on 24 Sept 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)