pm logo

எழில் விருத்தம்
புதுமைக் கவிஞர் கவிஞரேறு வாணிதாசன்


ezil viruttam
by kavinjcarEru vAnitAcan
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ezil viruttam
by kavinjcarEru vAnitAcan

Source:
எழில் விருத்தம்
புதுமைக் கவிஞர் கவிஞரேறு வாணிதாசன்
திருக்குறள் பதிப்பகம்
66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர்,
சென்னை - 600 078.
முதற் பதிப்பு : ஆகஸ்டு,1970; இரண்டாம் பதிப்பு : 22.7.2004
(புதிய சேர்க்கையுடன்)
விலை : ரூ. 36
அச்சிட்டோர்: ஸ்கிரிப்ட் பிரிண்டர்ஸ், சென்னை - 24
----------
உள்ளடக்கம்
அணிந்துரை 8. ஆறு
பதிப்புரை - (முதற்பதிப்பு) 9. விண்மீன்
என்றும் வாழ்வார் எழில்விருத்தக் கவிஞர்10. காலை
1. மணிக்கூண்டு 11. இரவு
2. சுழல் விளக்கு 12. அருவி
3. கோட்டை 13. என்றன் வீடு
4. மாலை 14. குயில்
5. சேவல் 15. நானிலம்
6. சோலை நினைத்துப் பார்க்கின்
7. கடலோரம்
---------

எழில் விருத்தம் - வாணிதாசன்
அணிந்துரை

சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆராய்ச்சி விரிவுரையாளர்,
திரு. க.த. திருநாவுக்கரசு M.A. (தமிழ்). M.A.,(வரலாறு), M.Litt., மொழியியல் (Dip).,
அவர்கள் அளித்த அணிந்துரை

தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு. வாணிதாசன். அவர் பாரதிதாசன் காட்டிய புதிய வழியில் கற்றாரும் மற்றாரும், துடிக்கும் இளைஞர்களும் தொண்டு கிழவர்களும், நடிகர்களும் நாடாளும் நாவலர்களும் படித்து இன்புறத்தக்க எழில் மிக்க கவிதைகளை இனிய தமிழில் ஏற்றமுறப் பாடி வருகிறார் பன்னெடுங்காலமாக.

அவருடைய பாடல்களில் பைந்தமிழின் பசுமையையும், செந்தமிழின் செழுமையையும், தென் தமிழின் தெவிட்டாத தே னினிப்பையும், தண்டமிழின் தண்மையையும், கன்னித் தமிழின் கணியாத இளமையையும், புதுமைத் தமிழின் புதுப் பொலிவையும் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு, வியந்து போற்றி வருகிறது.

பண்டைத் தமிழ் மரபின் வழிவந்த பாவலர் வாணிதாசனார், பழைய தமிழின் பயன்மிகு பண்புகளை 'விண்வெளி ஆராய்ச்சிக்குகந்த' இன்றைய தமிழில் நம் இதயங்களைக் கவரும் வண்ணம் குழைத்துத் தருவதில் தன்னிகரற்று விளங்குகின்றார். அவர் மரபுவழிக் கவிஞர்! எனினும், பழைமைப் பாசறையின் காவலர் அல்லர்!

"புதியன கண்டபோழ்து விடுவரோ
புதுமை பார்ப்பார்"

என்றதற்கிணங்கப் புதுவையைச் சேர்ந்த புலவர் வாணி தாசனார் புதுமைக் கவிஞராக - புரட்சிக் கவிஞரின் மதிப்பிற்குரிய மாணவராக மாண்புற்று விளங்குகிறார்.

அவருடைய கவிதைகளில் விண்ணைத் தீண்டித் தழுவும் மேகங்களை நாம் காணலாம்; இடியின் அதிர்ச்சி தரும் குரலைக் கேட்கலாம்; கண்ணைப் பறிக்கும் மின்னல் தோன்றி மறைவதைப் பார்க்கலாம்; மெல்லிய பூங்காற்று மெல்ல வீசுவதை உணரலாம்; வையத்தை வாழ வைக்கும் வான்மழை பையப் பெய்வதைப் பார்த்து மகிழலாம்.

வாணிதாசன் அவர்களுடைய கவிதையில் உலக உண்மைகள் உயிர்பெற்று உலவுகின்றன. போலி உணர்ச்சிகள் தோன்றுவதில்லை.

காதற் கவிதையானாலும், வறுமையின் கொடுமையை உள்ளமுருகச் சித்திரிக்கும் பாடலானாலும் அதில் நாம் ஓங்கி ஒளிவீசும் ஓர்

ஆன்மீக உணர்வு இழையோடிச் செல்வதைக் காணலாம்.

கவிஞரின் புதிய புதிய அனுபவங்கள், புதிய புதிய மொழி மின்னல்கள் அவருடைய கவிதைகளில் தவழ்ந்து வருவது இயல்பு. அறிவுக் கொவ்வாத-ஆராய்ச்சிக்குப் பொருந்தாத போலிக்கற்பனைகளோ, உணர்ச்சியற்ற வருணனைகளோ வாணிதாசரின் கவிகளில் காண்பதரிது.

இன்றுவரை அவர் பதின் மூன்று கவிதைப்படைப்புகளைத் தமிழ் அன்னைக்கு அழகுறு அணிகளாக அணிந்து மகிழ்ந்துள்ளார். இப்பொழுது வெளிவரும் 'எழில் விருத்தம்' அவருடைய பதினான்காவது படைப்பாகும்.

கவிஞன் எங்கெங்கும் எழிலைத்தான் காணுகிறான்; கண்டு மகிழ்கிறான்; 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த மனப்பான்மையுடன் அதைப் பாட்டிலே பாங்காக வடித்துக் தருகிறான்.

'கைபுனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு' என்று பாராட்டப் பெறும் இயற்கை யெழிலையும், விந்தை மனிதன் படைத்த செயற்கையெழிலையும் நம் கவிஞர் சொல்லோவியமாகத் தீட்டும் திறம் வியப்பூட்டுவதாகும்.

கருத்துச் செறிவோடு கூடிய இனிய, எளிய சொற்களின் மூலம், 'இழும்' எனும் ஓசை நயம் பெற்று இந்நூல் வீறுடன் விளங்குகிறது.

'விருத்தப்பா' என்பது தமிழ்மொழியின் பாவகைகளுள் காலத்தால் பிற்பட்டது. எனினும், அதனுடைய மூல வடிவத்தைச் சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல்களில் நாம் காண்கின்றோம். அது தேவார, திவ்வியப் பிரபந்தங்களில் வளர்ச்சியுற்றுக் கம்பனுடைய இராமாவதாரத்தில் முழுநிறை வடிவத்தைப் பெற்றிருக்கிறது.

பண்டைத் தமிழின் யாப்பிலக்கணத்திலிருந்து கிளைத்துப் பின்னர் வடமொழி இலக்கண மரபைச் சார்ந்து செழித்து வளர்ந்த சிறப்புடையது விருத்தப்பா. கம்பனுக்குப் பிறகு தோன்றிய புலவர்கள் பெரும்பாலும் விருத்த யாப்பிலேயே தங்கள் அரும்பெரும் நூல்களை இயற்றியுள்ளனர்.

நால்வகைப் பாவிலும், அவற்றின் இனங்களிலும் பல்வேறு பாட்டுக்களை இயற்றிய நம் கவிஞர், உள்ளத்தைக் கவரும் விருத்தமெனும் ஒண்பாவில் பன்னிரண்டு தலைப்புக்களில் இயற்றிய நூற்றிருபது பாட்டுக்களின் தொகுப்பாக 'எழில் விருத்தம்' என்னும் இந்நூலை நமக்கு அளித்துள்ளார்.

இந்நூலின் பெயரும், அதில் பயன்படுத்தப் பட்டுள்ள யாப்பும் அவர் 'மரபுவழிக் கவிஞர்' என்பதைச் சொல்லாமற் சொல்லுகின்றன.

இத்தொகுப்பிலுள்ள பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எண்பத்தைந்து (கி.பி.1885) ஆண்டுகளுக்கு முன்பு திரு.தி. வீரபத்திர முதலியார் பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றப்பட்ட் 'விருத்தப்

பாவியல்' என்னும் இலக்கணத்தில் வகுத்துத் தரப்பட்டுள்ள விருத்தப்பாவின் இலக்கணத்திற்கு ஏற்பக் கவிஞர் வாணிதாசன் தம்முடைய கவிதைகளை இயற்றியுள்ளார். இதை, அவர் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் விருத்தப்பாவியலின் இன்ன விதிபற்றி இயற்றப்பட்டுள்ளதெனத் தெளிவுறுத்தியுள்ளமையால் நாம் அறிகிறோம்.

முதன்முதலாக விருத்தப்பாவின் இலக்கணத்தை விரித்துக் கூறுவதற்காக இயற்றப்பட்டது ‘விருத்தப்பாவியல்' என்னும் இலக்கண நூலாகும். அதை இயற்றிய ஆசிரியர், தாம் வகுத்த விதிகளுக்குத் தம்முடைய நூற்பாக்களையே எடுத்துக்காட்டாகக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

வேறு இலக்கிய எடுத்துக்காட்டுக்களையோ, இவ்விதிகளுக்கேற்பத் தாமே புதிதாகப் புனைந்த செய்யுள்களையோ அவர் எடுத்துக்காட்டாகக்காட்டிச் செல்லாக் குறையை, நம் கவிஞர் போக்க முனைந்துள்ளார். அவருக்குத் தமிழ் உலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

இயற்கை அழகினைப் போற்றிப் பாடுவது தொன்று தொட்டு இலக்கிய மரபாக இருந்து வருகிறது. அன்றைய வாழ்க்கைமுறை இயற்கை யோடு இயைந்து வாழ வேண்டிய ஒன்றாக அமைந்திருந்தது. ஆனால், இன்றோ இயற்கையோடு இயைந்து வாழ முடியாத அவலநிலையன்றோ பெருகிவருகின்றது!

நம்முடைய கவிஞர் இயற்கை அன்னையின் மடியில் மறைந்திருக்கும் அரிய பொருள்களின் சீரையும் சிறப்பையும் நம் மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதில் வல்லவராக விளங்குகிறார். இரண்டோர் எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்: -

"உண்ணத் தெவிட்டா இயற்கை
ஒவியப் பேரெழில் சோலை!" - 6:3

"சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல்
தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்"- 12:2

"பொன்பூத்த கருவானம்
பொலிவற்றுப் போகும்" - 10:2

"பொங்கிச் சிறி அலையெழுப்பிப்
போரைச் செய்யும் கடல்" - 2.5

கவிஞர் வாணிதாசன் இயற்கையை இயற்கை அழகின் இன்பத்திற்காகவே சிறப்பித்துப் பாடுவதோடு அமையாது, இயற்கை அழகை வாழ்க்கைப் போருக்குப் பயன்படுத்தியும் பாடியுள்ளார். இத்தகைய பாடல்களில் கலையழகு கவினுற்று விளங்குகிறது. அதனுடன் நிகழ்வியல் பாங்கும் (Realisam), இன்றைய வாழ்வியல் நிலையும் இணைந்தும் இழைந்தும் காணப்படுகின்றன.

"பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு
பகலவன் வழிநோக்கித் -
தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே
திரும்புவோர் செயல்போலச்
சாயும் செங்கதிர் போய்விழ" - 4:8

"கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி
குன்றிய குளிர்மாலை!" - 4:9

"குந்தி அன்னை குளிர்கால் கவைக்கக்
      குழந்தை மணல்தோண்டச்
சிந்தும் கிளிஞ்சல் சிறுவர் பொறுக்கத்
      திரைகால் உடல்நனைக்க
முந்தும் அலைகள் கரையைத் தாவி
      மோதி முரசார்க்கச்
சிந்தைக் கின்பம் வாரி வழங்கும்
      திரைபாய் கடலோரம்!” - 7:4

“வழியினில் கண்ட மண்வளம் யாவும்
வணிகனைப் போலுடன் ஈட்டிக்
கொழித்தனை மருதம்' - 8:3

"அறிவிலா மக்கள் அணுகிய போதும்
      அவரவர் கீழ்மையை மாற்றும்
அறிவுடை யான்ற மேலவர் போல
      அணுகிய கழிவு நீர் யாவும் -
நெறியொடு மாற்றி நீர்மையைத் தேக்கி" - 8.7

கவிதைக்குக் கற்பனை கண்களைப் போன்றது. “உயர்ந்த உணர்ச்சிகள் ஊற்றெடுப்பதற்குரிய சிறந்த நிலைக்களன்களைக் கற்பனை மூலம் அமைத்துத் தருவதே கவிதை என்பர்.

கவிஞனுடைய உள்ளத்தை நிழற்படம் போல படம் பிடித்துக் காட்டும் ஆற்றலுடையது கற்பனை.

கற்பனையின் சிறப்புக்கு உறுதுணையாக விளங்குவன உவமை உருவகம் போன்ற அணிகள்.

அவற்றோடு 'நயமிகு சொல் வடிவம்' (Image) ஐம்பொறிகள் வாயிலாக ஒருவன் நகர்ந்து பெறத்தக்க கருத்துக்களை உணரச் செய்யும் ஆற்றலுடையது. இவ்வியல்புகள் கவிஞர் வாணிதாசனாருடைய கவிதையில் நிறைந்து ஒளிர்கின்றன.

"காக்கைநிற நள்ளிரவே" - 11:7

“குளத்தினிலே தாமரைகள்
தமிழ் மன்னர் கூட்டம்!” - 10:5

"தைத்திங்கள் குளம்பூத்த பூவோ விண்மீன்?
தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ?" -92

"சோலையாம் கோட்டையின் உள்ளே
தூண்களாம் மா பலா தென்னை" - 6:7

".....தனிமனிதன் நல்வாழ்வு
சரியும் என்றே
அழைப்பளித்தே பாழடைந்த
கோட்டைமதில் அறிவுறுத்தும்" - 3:5

"ஒன்று கேட்பேன். கோட்டான் போல்
உனக்குப் பகலில் கண்குருடோ?" - 2.2

இத்தகைய சிந்தைக்கினிய சொற்சித்திரங்களைத் தீட்டியுள்ள கவிஞரின் பாடல்களைப் படிக்கின்ற பொழுது உணர்ச்சி பொங்கியெழுவதை, இழுமெனும் ஒலிநயம் நம்முடைய காதுகளில் எதிரொலிக்கின்றது. இவற்றோடு தமிழ்மொழிப் பற்றும், தாய்நாட்டின் பற்றும் 'எழில் விருத்தத்தில்' ஏறுநடை போட்டுச் செல்லுவதை நாம் கண்டு மகிழலாம்

சொல் நோக்காலும் பொருள் நோக்காலும், தொடை நோக்காலும், நடை நோக்காலும் நனிசிறந்து விளங்கும் இன்றமிழ் இலக்கியம் 'எழில் விருத்தம்'. இதை இயற்றியதன் மூலம் புதிய தமிழ் இலக்கியக் கருவூலத்தை வளமுறச் செய்த கவிஞர் வாணிதாசனாரின் செந்தமிழ்த் தொண்டு சிறப்புறத் தமிழ் மக்கள் துணை நிற்க வேண்டுகின்றேன்!

சென்னை-2 8.8.1709       கத. திருநாவுக்கரசு
-----------

பதிப்புரை

"பாரதியார், பாரதிதாசர், வாணிதாசர் ஆகிய இந்த மூவரும் மூன்று விதமான தன்மையில் கவி புனைந்திருக்கின்றனர். பாரதியார் அந்தக் காலத்துக்கு ஏற்ப இந்திய மக்களின் சுதந்தர உணர்ச்சியினைத் தட்டி எழுப்பும் வகையில் பாடினார். பாரதிதாசரின் பாடல்கள் பெரும்பாலும் சீர்திருத்த நோக்குடையன. வாணிதாசனார் அவர்களோ இந்த இருவரினும் விஞ்சிய வகையில் உலக நிகழ்ச்சிகள், இயற்கைத் தோற்றங்கள் முதலிய பலவற்றையும் உள்ளுர நினைந்து பார்த்து உளமுருகிப் பாடி வருகின்றார். இவரிடம் பிற புலவர்களுக்குத் தோன்றாத புத்தம் புதிய கருத்துக்களை எல்லாம் நிரம்பக் காணலாம்."

புதுமைக் கவிஞர் வாணிதாசனார் மேற்காட்டிய முன்னோர் மொழி பொருளுக்கேற்பத் தூய தீந்தமிழை வளர்த்து வருகிறார். அவருடைய பதினான்காவது படைப்பாகிய 'எழில் விருத்தம்' என்னும் இந்நூல், இயற்கையின் எழிலோவியமாகவும், இலக்கணத்தை விளக்குவதாகவும், வளர்ந்து வரும் புதுக் கவிஞர்களுக்கு ஊன்று கோலாகவும், கைவிளக்காகவும், வழிகாட்டியாகவும் விளங்குகின்ற.

இன்று இவரைப் போல் எளிய சொற்களால் உயர்ந்த கருத்துக்களை நெஞ்சை அள்ளும் வகையில் தெள்ளு தமிழ் நடையில் உள்ளுதொறும் உணர்வாகும் வண்ணம், பாலொடு தேன் கலந்தாற்போலச் சுவையாகத் தருபவரைக் காண்டல் அரிதே!

"மூர்த்தி சிறிது எனினும், கீர்த்தி பெரிது" என்பது போல, இந்நூல் பன்னிரு தலைப்புக்களில் நூற்றிருபது பாடல்களைக் கொண்டதெனினும், கம்பர் பாடிய பன்னிராயிரம் பாடல்களையும் விழுங்கிவிடுகிறது.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் தம்முடைய பாடலைக் குறித்துச் சீட்டுக் கவியில், "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மா கவிதை" எனத்தாமே பாடியிருப்பினும், அது நம் புதுமைக் கவிஞர் வாணிதாசனை உளங்கொண்டு 'தீர்க்கதரிசன' மாகப் பாடியதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

புதுமைக் கவிஞரின் 'எழில் விருத்தத்' தைக் கற்பவர்க்கு நுழைவாயிலாக ஒரு சில எடுத்துக் காட்டுதும் :

ஊரினைக் காக்கும் வீரன் ஒப்பவே ஓசை காட்டும் 'மணிக் கூண்டி'னைத் தாய்க்கும் மாமிக்கும் ஒப்பிட்டுக் காட்டும் திறன் சுவைக்கும் தன்மையதாகும்.

'சுழல் விளக்கை' விளக்குங் கவிஞர், கோட்டானைப் போல் உனக்கும் பகலில் கண் குருடோ? எனக் கேட்கின்றார். அது பகலில் ஒளி வீசாத் தன்மையைக் காட்ட,

அடுத்து நம் கவிஞர் தமிழ் மன்னன் வேல்நுனியை, மறத்தோளைக், குறுநிலத்தைக் கூறாநிற்கும் 'கோட்டை'யை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார். 'தனி மனிதன் நல்வாழ்வு சரியும் என்றே கோட்டை மதில் அறிவுறுத்தும்' செய்தியைக் கூறுங்கால், 'நினைவில்லாத் தாயகத்தின் நிலையெண்ணா மக்கட்கே நித்தம் நித்தம் மலைக் கோட்டைக் கற்சுவரே! கருத்தை ஊட்டே!' என்று சுழறும் வகையில் தமிழனுக்குத் தன் வரலாற்று அறிவு வேண்டும் என்பதை இடித்துக் கூறும் செவியறிவுறுஉந் தன்மை நீடு நினையத்தக்க ஒன்றாகும்.

'மாலை'யில் காணும் ஒவ்வொரு பாமலரும் தமிழ் மணம் வீசி அடுத்தடி வைக்க வொட்டாமல் தடுத்து நிறுத்துகின்றது. மாலையூட்டும் மாலையாக அமைந்துள்ளது மாலை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

'கூலியாட்களின் கொதி மனம் போல் ஒளி குன்றிய குளிர்மாலை' என்பதில், தொழிலாளர் துயர் துடைக்கத் துடிக்கும் கவிஞரின் தொண்டுள்ளத்தைக். கணடிடலாம.

மாலையைக் காட்டும் கவிஞரின் திறனுக்கும் பொன் மாலை சூட்டத் தமிழறிந்த முன்னாள் தமிழறிஞன் இல்லையே என்ற ஏக்கந்தான் ஏற்படுகின்றது!

'சேவலின்' கொண்டையைக் குறிக்கும் கவிஞர் கொள்ளி நுனி எரி தீயையும், கொம்பிடைப் பூத்த செம்பூவையும் ஒப்பிடுகிறார். அதன் விரல்கள் மஞ்சள் கிழங்கினையும், விரலிடைக் காணும் முள்நாணல் முளையினை நறுக்கிய துண்டினையும் ஒத்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

உற்று நோக்கி ஒரு பொருளை உவமையாகக் காட்டும் திறன் சங்க இலக்கியப் புலவர்களின் புலமையை நினைவூட்டுவதாயிருக்கிறது.

'தன் முன் புறமுதுகிட்ட சேவலைத் தாக்குமோ சேவல்!' என்று கவிஞர் நம்மைக் கேட்கின்றார். இதனால் சேவற் போரினை எவ்வளவு உன்னிப்பாகக் கவிஞர் பார்த்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அடுத்தது 'சோலை’

அதனுள் நுழையும் போதே குளிர்மை தோன்றுகிறது. சோலைப் புதுப்பெண்ணைக் காண்பதற்காக மாமலைவிட்டு மாலைக் கதிரொளி மங்கும் வேளையில், மாமணத் தென்றலாகிய தலைவன் வருவதைக் காணும்போது, உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுநடை போடுகின்றது.

கிளிக்கு மாவின் இலையை ஒப்புமை கூறியுள்ள புதுமையைக் கண்டு இன்புறாமல் இருப்பதற்கில்லை!

செவ்வந்திப்பூ, அந்தி விளக்கினைப் போல அலர்ந்தது எனக் காட்டுகின்றார்.

கொல்லன் உலைக்களத்தில் காணும் செந்தீப் போல இலவு பூத்தது என்கிறார்.

'நொந்த உளத்தினை மாற்றும் நுழைபுலத்தோர் ஒக்கும் சோலை' எனச் சோலையைப் புலவர்க்கு ஒப்புமை கூறியுள்ள நயம் பாராட்டற்குரியதாகும்.

'கடலோரக்' காட்சியைப் படம் பிடித்துக்காட்டும் புதுமைக் கவிஞர் வாணிதாசனார், இளங்கோவடிகளாரின் கானல் வரியை விஞ்சுகிறார்.

கடலோரத்தை நாட்டைக் காக்கும் வீரன் எனவும், நெய்தல் நிலத்தின் அரண் எனவும் குறிப்பிடுகின்றார்.

'கூறு கூறாய்', 'உப்பிட்டுலரும்', 'திரை மேல் சென்றோன்' என்று தொடங்கும் பாடல்களைப் படிக்குந்தோறும் படிக்குந்தோறும் ஒசைநயமும், பொருளழகும், சொல்லழகும் நனிசிறந்து விளங்கக் காணலாம்.

'ஆற்றில்' பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் விளங்க வைத்தலான வேற்றுப்பொருள் வைப்பணியைக் கவிஞர், 'அழிந்தனை

ஆறே! அலைகட லுலகில் அழிவது பிறப்பதின் வித்தாம்' என அமைத்துக் காட்டியுள்ளார். இஃது இயற்கையின் செயலையும் தத்துவ விளக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

'நீர்மையைத் தேக்கி நின்கரை புதுமையால் விளைந்த பொறியினை இயக்கி மின்விசை நல்கிப் புரந்தனை ஆறே' என்னும் அடிகளில், தற்கால விஞ்ஞானப் புதுமையின் விளைவையும் தம் பாடலில் மிளிரச் செய்திருப்பதை அறிபவர் இவர் புதுமைக் கவிஞரே என்பதை நன்கு உணர்வர்.

'விண்மீனி'ல் இந்நாளளவும் வேறெவரும் எடுத்துக் காட்டாத அளவுக்கு ஒப்புமைப் பொருளை மிக மிகப் பொருத்தமாக அமைத்துள்ள அழகைக் கண்டு மகிழலாம்.

கதிரவன் வருகையால் தாமரையும், திங்கள் வருகையால் அல்லியும் மலர்வதாகப் புலவர்கள் பாடியுள்ளார்களே, அவ்வாறே விண்மீன்களின் தோற்றத்தினால் விரியும் பூக்களை விளம்பாததைக் கண்ட கவிஞர், அதனையும் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவுக்கு வேலை கொடுத்துள்ளார். தாவர ஆராய்ச்சியாளர்க்கு இஃதோர் நல்விருந்தாகும்.

'நல்லுழவன் இன்றேல் வேலுயர்த்தி அரசாளும் எந்நாடும் என்றும் விடியாதே எனச் சொல்லி விடிய வரும் காலை' என்பன போன்ற கருத் தோவியங்களைக் 'காலை’ப் பாடல்களில் கண்டு மகிழலாம்.

இரவு இன்பச் சுவையூட்டி நிற்கின்றது. 'ஊரிட்ட இருள் கிழிக்கும் விளக்கெல்லாம் அறிஞர் உரையொக்கும். என்பதில் தான் எத் துனைப் பொருட்செறிவு பாருங்கள்!

'இல்லடங்கா திருக்கின்ற இளங்காலை எருமை.
இரவினிலே ஒன்றிரண்டு கட்டுகயிறறுத்தே
கொல்லையிலே பயிர் மேயும் கொட்டகையைக் குறுகும்!
கொடுமைக்கும் அழிவுக்கும் நீ பொறுப்பா இரவே?'


எனவரும் அடிகளில் காணும் உள்ளுறையுவமம் கண்டு இன்புறத்தக்க தொன்றாகும்.

'அருவி' நீர்வீழ்ச்சியாக மாறுவதைச், 'சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல் தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்' எனக் குறிப்பிடுகின்றார்.

'வெள்ளை நீரினை வழங்கியும் குறையா வள்ளல் தன்மையைக்,
கொள்ளக் கொள்ளவும்
குறைவுறா தளிக்கும்
குன்றம் சூழ்மலை அருவியே!'

என வியக்கின்றார் கவிஞர்.

இங்கு எடுத்துக்காட்டப்பட்டவை ஒரு சிலவே. இவை போன்று கற்பார்க்கு இனிமை பயக்கும் கவின்பெறு பாடல்கள் அனைத்தையும் கற்றுத் தெளிதல் தமிழர்களின் தலையாய கடமையாகும்.

இந்நூல் புலவர்களுக்குப் புது விருந்தாகும்.

கவிதை பாடத் துடிக்கும் கவின்மிகு பாவலர் கட்குச் சிறந்த ஊன்று கோலாகும்.

இந்நூல் புலவர் வகுப்பிற்குப் பாடநூலாக வைக்கத்தக்கதாகும்.

புதுமைக் கவிஞர் வாணிதாசனாரின் புதுமைப் படைப்பாக வெளிவரும் இந்நூலினைத் தமிழ் கூறும் நல்லுலகத்து மக்கள் அனைவர்க்கும் படைக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்கிறோம்.

புதுமைக் கவிஞர்க்கும், அணிந்துரை நல்கிய சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி விரிவுரையாளர், உயர்திரு. க.த. திருநாவுக்கரசு அவர்கட்கும் உங்கட்கும் வணக்கம்! நன்றி!

என்றும் வாழ்வார் எழில் விருத்தக் கவிஞர்!

உலக வாழ்வு உருண்டோடுகிறது. காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதுவரவுகள் பழமை மீது படிகின்றன. மறைவு நேர்கிறது.

1950 முதல் 1970 வரை வாணிதாசனார் மக்கள் நாவில் பயின்று, நெஞ்சங்களில் நிறைந்திருந்தார். புதிய இளைஞர்கள் பழையவர்களை நினைக்க நேரமின்றித் தங்கள் காலத்தவரையே காணலாயினர்.
பாவேந்தருக்கு அடுத்த நிலையில் புதுமைக் கவிஞர் எனப் பாராட்டப் பெற்ற கவிஞரேறு வாணிதாசனாரின் நூல்கள் புதுப்பிறப்பு காணாமையால் படிப்புலகம் மறக்க நேர்ந்தது. தொடர்ந்து நினைவூட்ட இக்காலத்தில் அரசியல் நிலையும் இலக்கிய ஆர்வமும் துணைபுரியவில்லை. எதற்கும் தூண்டுகோல் தேவையன்றோ? கவிஞரின் குடும்பத்தாருக்கும் பொறுப்புண்டல்லவா?

வாணிதாசனாரின் நூல்கள் வெளிவந்த காலத்தில் பழகி மகிழ்ந்த இன்ப உணர்வின் உந்துதலால் அவரது கவி நூல்களைப் பற்றிய திறனாய்வுகள், விளக்கக் கட்டுரைகள், வாழ்க்கைக் குறிப்புகள் எனும் வகையில் சில நூல்களை நான் வெளியிட்டேன். அத்தொடர்ச்சியில் இச்சிறு நூலையும் மறுபதிப்பாக வெளியிடுகிறேன். கடைசியில் 2 தலைப்புகள் இணைத்துள்ளேன். அவரே எழுதிய் நினைத்துப் பார்க்கின். எனும் வாழ்க்கைச் சுருக்கமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. உணர்வும் ஒத்துழைப்பும் முயற்சியும் உறுபயன் கூட்டுமாக!

இயற்கையின்பக் கவிஞர், கொள்கைப் பிடிப்பாளர், கவிஞரேறு வாணிதாசனார்க்கு ஆண்டுதோறும் விழா நடத்தி வருவதுடன் புதுவையில் அவருக்குச் சிலை எழுப்பும் நிலையறிந்து தமிழ்நெஞ்சங்கள் புதுவைஅரசுக்குப் புகழ்மாலை சூட்டி மகிழ்கின்றன.

வாழ்க வாணிதாசர் புகழ்!
என்றும் வாழ்வார் எழில் விருத்தக் கவிஞர்!

அன்பன்       வெள்ளையாம்பட்டு சுந்தரம்
22.7.2004
--------------------

எழில் விருத்தம் - வாணிதாசன்
1. மணிக்கூண்டு

"சீருடன் நிமிர்ந்த செங்கல்
திருமணி மாடத்(து) உச்சித்
தாரணி தமிழர் நாட்டுத் -
தனிமதில் இடையில் மின்னி
ஊரினைக் காக்கும் வீரன்
ஒப்பவே ஓசை காட்டும்
நேரிய செயலைக் கண்டேன்;
நிமிர்மணிக் கூண்டே! வாழி!"............................. .........1

"காலையில் கிழக்கில் தோன்றிக்
கடும்பகல் உச்சி மேவி
மாலையில் மேற்கில் சாய்ந்து
வைகலை வெய்யோன் காட்டும்
மாலையின் அளவே யன்றி,
மணிக்கூண்டே! உன்னைப் போலக்
காலத்தை ஒவ்வோர் நாளும் .
இராப்பகல் காட்டப் போமோ?"...................... ..........2

இருளினைப் போர்த்த வானில்
எழுமதி விண்மீன் கூட்டம்
அரும்பொழு(து) உணர்த்தும் என்றே
அறிவிப்பர்; முகில்கள் சூழ்ந்தால்
பெருமணிக் கூண்டே காலப்
பிச்சையை நாட்டுக் கென்றும்
தருபவர் உன்னை யன்றி
யாரெனச் சாற்றக் கேளே! .............................3

காற்றினில் மழையில் வானக்
காரிடி வீச்சில் கோடை
ஆற்றொணா வெயிலில் நின்றே
அவரிவர் எனப்பா ராது
மாற்றார்க்கும் காலங் காட்டும்
மணிக்கூண்டே ! உன்னைப் போல
நூற்றிலே ஒருவ ரேனும் -
மக்களில் நுவலப் போமோ? ........................4

இருண்டவர்க்(கு) அறிவை ஊட்ட
எவருளார்? ஆன்ற கல்வித்
தெருண்டவர் போல நாளும்
திசையில் வாழ் மக்கட் கெல்லாம்,
பேசினால் கூண்டே! ஒசைப்
பேச்சினால் கடந்த காலம்
வருவதே யில்லை என்ற
வாக்கினை உணர்த்து கின்றாய்! .............. ........5

ஈன்றவள் பிள்ளை காத்தே
இருப்பினும் சிறிது போழ்து
தோன்றுவாள்; இமையை மூடித்
துயின்றுபின் எழுவாள்; நீயோ
ஈன்றவள் தனக்கும் தாயாய்
இமைநொடி மூடல் இன்றி
ஆன்றதை விளக்கி ஊக்கும்
அணிநகர்க்(கு) அன்னை ஆனாய்! .................................. 6

வீட்டினில் அறிவு மிக்க
மேலவள் மாமி வாழ்ந்தால்
வீட்டினில் ஒழுங்கு நேர்மை
மிகுந்திடும் என்பர் மேலோர்;
கூட்டினில் இருந்து கொண்டே
குடியினை ஊக்கி நாளும்
ஆட்டிடும் பெரிய மாமி
மணிக்கூண்டே ஆனாய்! வாழி! ...................................... 7

தன்னலம் சிறிதும் எண்ணாத்
தகைமையால் உழைக்கும் சான்றோர்
மன்னிய புகழைப் போல,
மணிக்கூண்டே! உன்றன் ஓசை
எந்நாளும் நீண்ட தூரம்
இருப்பவர் அறிவர்; ஆனால்
உன்னைப்போல் மேலோர் எல்லாம்
நீண்டநாள் உயிர்த்த துண்டோ? ....................................... 8

உழைப்பினைப் பொதுமை ஆக்கி
உருப்பெறும் விளைவை எல்லாம்
பிழைப்பவர் பகிர்ந்து துய்க்கப்
பேணுதல் பொதுமை ! ஆனால்
உழைப்பினை விளைவை எல்லாம்,
மணிக்கூண்டே ! உனக்கெண் ணாமல்
அழைத்துவாழ் மக்கட் கீயும்
அருஞ்செயற் கீடும் உண்டோ? ......................................9

அறிவினால் பிறந்தாய்; வாழும்
அழகூரின் நடுவில் நின்றாய்;
நெறியொடு காலங் காட்டும்
நீர்மையை நினைக் குந் தோறும்
அறிவுக்கே உலகம் அண்டம்
அணுவுமே அடிமை யாகும்!
அறிவுக்கு வணக்கம் செய்வோம்!
அறிவினைப் பெருக்கு வோமே! ...................................10

"சிர்விள மாச்சி தேமாச்
சிரிணைந் திரட்டு மீங்கே"
என்னும் ‘விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
விளம் என்ற இடத்துக் கூவிளம், கருவிளம்_இரண்டும், மா என்ற விடத்துத் தேமா, புளிமா இரண்டும் கொள்க.
விளச்சீர் வரும் என்று விதித்த இடத்தில் தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரும் என்று அறிக. இறுதிச்சீர் தேமாவாகவே வருதல் வேண்டும் எனக் கொள்க.
----------------

2. சுழல் விளக்கு

கண்ணுக் கெட்டா நெடுந்துரக்
கடலைத் தாண்டிக் காலமெலாம்
மண்ணில் விளையும் பொருளோடும்
வாழ்க்கைக் குதவும் பொருளோடும்
விண்ணைத் தாவும் மணிமாடம்
மேவும் பேரூர்த் துறையோரம்
கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளக்
கதிரைப் பரப்பும் சுழல்விளக்கே ! ....................... ..........1

குன்றின் உச்சி மீதேறிக்
குளிர்ந்த கடலை நிலப்பரப்பை
நின்று சுழன்று திசைபார்க்கும்
நெட்டை மனிதன் போல் இரவில்
என்றும் கடலின் ஒரத்தே
இருந்து வாழும் சுழல் விளக்கே !
ஒன்று கேட்பேன்: கோட்டான்போல்
உனக்கும் பகலில் கண்குருடோ?................................... 2

கடலில் நீந்திச் செல்கின்ற
கண்ணைக் கவரும் சிற்றுர்போல்
கடலைத்தாண்டும் நாவாயைக்
கண்டேன் ஒருநாள் சுழல்விளக்கே !
கடலைத் தாண்டும் நாவாயைக்
கட்டி அனைத்துன் ஒளிமுத்தம்
இன்றேல் கொடுங்கடலில்
எதிர்ப்பை யார்தான் முறியடிப்பார்?....................................... 3

நிறைந்த படையைத் தன்னகத்தே
நிறைத்துக் கொண்டே
மறைந்து மறைந்து கடல் வாழும்
மாற்றார் கப்பல் நீர்மூழ்கி
உறையு மிடத்தைச் சுழல்விளக்கே!
உன்கண் கண்டும் ஊரறிய
அறையா திருந்தால் உன்னாட்டார்
ஊமை என்றே அறையாரோ?................................................ 4

பொங்கிச் சீறி அலையெழுப்பிப்
போரைச் செய்யும் கடலிடையில்
தங்கித் தவித்து விழிபிதுங்கித்
தடந்தோள் அறிவு துணையாகக்
கங்குல் பகலில் கடல்எதிர்த்த
கப்ப லோட்டி செய்தியெலாம்
எங்கட் கேனோ சுழல்விளக்கே !
இன்னும் சொல்லா திருக்கின்றாய்?....................................... 5

கத்தும் கடலின் ஓரத்துக்
கரையில் வாழும் சுழல்விளக்கே !
முத்துக் குவியல் கண்டிருப்பாய்;
முதிர்ந்த பவளக் காட்டிடையில்
செத்த மனிதர் கண்டிருப்பாய்;
சிதைந்த கலங்கள் கண்டிருப்பாய் !
பொத்தி வாயைத் திறவாமல்
பொறுத்தால் நெய்தல் பொறுத்திடுமோ?....................................... 6

நெய்தற் பேரூர்க் கரையோரம்
நிமிர்ந்து நிற்கும் சுழல்விளக்கே !
வையம் எங்கும் உன்னினத்தார்
கடலின் மருங்கே வாழ்ந்தாலும்
கையாம் ஒளியின் கதிர்வீசிக்
கரையின் ஊரை அறிவிக்கும்
பொய்யில் மொழியை நாவாய்க்குப்
புரியச் செய்தல் புதுமையதே !........................................................ 7

காலம் எல்லாம் கரையிருந்தே
கலத்தைக் காக்கும் சுழல்விளக்கே !
ஏலம் மிளகை மலைத்தேக்கை
இருண்ட கடலின் ஒளிமுத்தைக்
கூலப் பொருளை மாமயிலைக்
கொம்பைக் கொடுத்தே குதிரைகளை
ஏலக் கொண்ட தமிழ்நாட்டின்
துறைகள் இருண்ட வகைஎன்னே?................................................ 8

வெள்ள மாக மக்களெலாம்
விரும்பி விரும்பி உனைச்சுற்றி
உள்ளே சுழலும் படியூடே
உன்மேல் ஏறிச் சுழல்விளக்கே !
கொள்ளும் இன்பம் என்னாங்கொல்?
குன்றை ஊரை நீள்கடலை
அள்ளும் காற்று வெளியிருந்தே -
அழகு படுத்திக் காட்டுவதோ?................................... 9

சுங்கம் வாங்கும் கடலோரத்
துறையில் சுழலும் சுழல்விளக்கே !
எங்கெங் கிருந்தோ வந்தாலும்
எந்தக் கப்பல் ஆனாலும்
கங்குல் கிழித்து வழிகாட்டிக்
கரையை உணர்த்தும் மேலான
தங்கக் குணத்துக் கீடிந்தத் .
தரையில் எதைநான் சொல்வேனே !........................... 10


"இருமா காய்ச்சி அரையடிக்காய்
இவையே மற்றை அரையடிக்கும்
வருமா றுணர்க"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
--------------

3. கோட்டை

சீர்நிலவும் திருமுகத்தான்
திருநிலவும் மணிமார்பன்
திண்டோள் முல்லைத்
தார்நிலவும் தமிழ்மன்னன்
தன்னாட்டை அரசாண்ட
தகைமை செப்பிக்
கார்நிலயும் மலையுச்சி
கண்கவரும் பாழடைந்த
கருங்கற் கோட்டை
கூர்நிலவும் வேல்துணியை
மறத்தோளைக் குறுநிலத்தைக்
கூறா நிற்கும் !.............................. .........1

படைநுழையா மலையரண்கள்
பகைதடுக்கும் பெருங்காடு
படுநீர்க் கோட்டை
இடைநுழையாப் பெருஞ்சுவர்கள்
சுவரின் மேல் இருந்தெதிர்க்கும்
இருப்பி டங்கள்
அடைநுழையாத் தேனிப்போல்
அணிவகுத்த வாள்மறவர்
ஆற்றல் யானை,
குடைநுழையாப் பெரு வாயில்
நிலையெல்லாம் வருவோர்க்குக்
கோட்டை சொல்லும் !.......................... ..........2

தலையேறி முடிமிதிக்கும்
மதயானை புரவியொடு
தறுகண் வீரர்
கலையேறிப் பாய்கின்ற
மலையேறிப் பகைவீழ்த்திக்
கைவேல் போக்கி
நிலையேறிப் பறக்கின்ற
கொடியாடும் நெடுஞ்சுவரில்
நின்றெ திர்த்துச்
சிலையேறி வீழ்ந்திறந்த
செய்தியெலாம் பழங்கோட்டை
செப்பும் அந்தோ !...........................................3

வீரமென்ற வெறியேற்றி
விரியுலக மக்களிலே
வெகுபேர் தம்மை
ஈரமென்ற சொல்லுக்கே
இடமின்றி எதிர்ப்போரை
என்றும் வீழ்த்தும்
காரமென்ற சொல்லுக்கே
வெற்றியென்று கதையளந்து
கட்டி வாழ்ந்த
துரமுள்ள மலைக்கோட்டை
இன்றோபாழ்! தாயகத்தின்
துக்கச் செய்தி !....................................... 4

உழைப்பளித்த விளைவினிலே
ஆறிலொன்றை உறுபொருளாய்
உற்றான் மன்னன்
பிழைப்பளித்துப் படைதேக்கி
நாடேய்த்த பெருமன்னர்
பெருங்கற் கோட்டை
தழைப்பளித்து வாழ்ந்ததில்லை;
தனிமனிதன் நல்வாழ்வு
சரியும் என்றே
அழைப்பளித்தே பாழடைந்த
கோட்டைமதில் அறிவுறுத்தும்
அணுகு வோர்க்கே !............................. 5

கோட்டையென்ற மறைவுக்குள்
பெருமன்னர் ஒரு குடும்பம்
குலவி வாழ
நாட்டகத்துப் பேரூர்போல
மணிமாடம் நல்லரங்கு
நடனச் சாலை
காட்டகத்து மலைமேலே !
இந்நாளோ பாழடைந்த
கருங்கற் கும்பல் !
மேட்டகத்தே குரல்கொடுக்கும்
சிறுநரிகள், கூகையினம் .
மேவும்; பாழாம் !........................................... 6

எத்தனையோ முடிமன்னர்
இணையில்லாப் பெருவீரர்
இருகை கட்டி
முத்தணியும் பொற்கலனும்
முறைமுறையே இறைசெலுத்தி
முன்றில் நின்ற
புத்தெழில்சேர் மணிவாயில்
அணிமுரசம் போர்யானை
புகுந்த கோட்டை
இத்தரையில் அந்தோபாழ் !
முடியிாட்சிக் குறிப்புணர்த்தல்
இதுதான் போதிலும் !....................................7

கற்றுணர்ந்த நல்லமைச்சைக்
கவிபாடும் மேலோரைக்
கணித நூலைப்
பெற்றிருந்த முடிமன்னர்
பெரு வாழ்வை அரசியலைப்
பேணிக் காத்த
சுற்றுமதிற் பெருங்கோட்டை
நிலையெல்லாம் தொகைநூல்கள்
சொல்லும்; மக்கள்
கொற்றமிலாக் குறையாலோ
நாட்டகத்துக் கோட்டைச்சீர்
குறைந்த தந்தோ!.................................... 8

சிலைசுற்றித் தமிழ்காத்துத்
திசையெட்டும் புகழ்நாட்டத்
திண்டோள் வீரர்
அலைசுற்றும் கடலாண்ட
பழம்பெருமை நூலகத்தே
அறிந்து கொண்டு
மலைசுற்றும் படியேறித்
தலைசுற்றி மலையுச்சி
மன்னர் கோட்டை
நிலைசுற்றிப் பார்க்கையிலே
தாயகத்தின் நினைப்பினிலே
நெஞ்சம் வேகும் ! ................................. 9

நினைவென்றே உனையொதுக்கி
உன்னாட்டை ஆள்கின்றார்
நினைவில் மக்கள்;
நினைவிற்கே வரலாற்றுப்
பெரும்புலவர் நீள்குறிப்பை
நிலைக்கச் செய்தார்;
நினைவில்லாத் தாயகத்தின்
நிலையெண்ணா மக்கட்கே
நித்தம் நித்தம்
கனவாகிப் போனாயோ
மலைக்கோட்டைக் கற்சுவரே!
கருத்தை ஊட்டே! .......................................... 10

“முதனான்கும் காயாகிப் பின்னவைமா
தேமாவாய் முடியு மன்றே"
என்னும் 'விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
----------------------

4. மாலை

அங்கும் இங்குமாய்ச் சிதறிய வெண்முகில்
அடிக்கடி ஒளிமாறப்
பொங்கு செங்கடல் நீள்மலை ஒப்பவே
புத்தெழில் அமுதூட்டித் -
திங்கள் நாணியே சிரித்தெழ ஊர்ப்பொதுத்
தெருவெலாம் விளக்கேற்ற மங்கு
செங்கதிர் தாமிரத் தட்டென .
மயக்கிடு மருண்மாலை!............................................ 1

பூத்த தாமரை வானிடைப் போய்விழு
பொற்கதிர்ப் பொலிவோடு
மூத்த தாமுயிர் முன்நகு அல்லியின்
முகத்தினில் விழிக்காமல்
போர்த்து வோம்முகம் என இதழ்ப் போர்வையால்
பொலிமுக விழிபொத்தப்
பார்த்த பேடைகள் ஆணினை விளித்திடும்
படுகதிர் சாய்மாலை !................................................ 2

வட்டத் தாமரை இலையினில் கண் வளர்
வாளைகள் நீர்மோதத்
தட்டி ஒட்டிடும் ஆயனின் கழியெனத்
தம்மனைக் கன்றுள்ளிக்
குட்டை மேவிய நாகுகள் வாலினைத்
தூக்கியே குதித்தோட
எட்டி மேற்றிசை மலையிடைப் பரிதிசாய்
எழில்மிகு சுடர்மாலை !................................................ 3

மேலை வானிடை விரவிய செந்நிற
மிகுந்திடு ஒளிவெள்ளம்
சாலை மாவிளந் தளிர்நிறம் பூநிறம்
சார்ந்ததாய்த் தலைதாழ்த்திச்
சோலை புக்கிடும் இணையிணைக் குருவிகள்
தோப்பினைக் குறுகாமுன்
மாலை மங்கிடச் செவ்வொளி மங்கிடும்
மலர்மண இருள்மாலை !................................................... 4

கன்று கூப்பிடக் கறவைகள் ஊர்புகக்
காரிருள் கீழ்நோக்க
முன்றில் நீள்சடை முதுகினை ஊன்றியே
முன்னுள வெளிநோக்கிச்
சென்ற ஆளனின் தோளினை உன்னிடு
தேமொழி மடமாதர்
என்று மீளுவர் சென்றவர் எனநினைத்
தேங்கிடு துயர்மாலை !...................................................... 5

மாடு கன்றொடு வயல்வெளி பூம்புனல்
மலர்மிகு நீள்குன்றம்
ஊடு செஞ்சுடர் பொன்னிற மழைபொழி
ஒளிகுறை கீழ்வானக்
காடு மேவிடும் கதிரவன் கண்டனம் !
கவின்மிகு கதிர்அந்தி
ஓடு போழ்தினில் கீழ்த்திசை விளக்குகள்
ஒத்தன விண்மீன்கள் !............................................. 6

பந்தி பந்தியாய் நாரைகள் இணையுடன்
படுகையைப் போய்ச்சேர
அந்தி பூத்திடப் பூத்திடும் வேலியில்
அழகொளி பொன்பீர்க்கு!
சிந்து பூத்திடச் செவ்வொளி பூத்திடச்
சிரித்தது செவ்வானம் !
வெந்து பூத்திடும் வானிடை முல்லைபோல்
விரிந்தன விண்மீன்கள் !.......................................... 7

காயும் போழ்திலும் கடந்திடு போழ்திலும்
கதிரொளி நனlநல்கும்
பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு
பகலவன் வழிநோக்கித்
தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே
திரும்புவோர் செயல்போலச்
சாயும் செங்கதிர் போய்விழ நன்றியாம்
தண்ணொளி முகம்காட்டும்!................................... 8

ஆலை மாடென மற்றவர் நலம்பெற
அடிக்கடி நாடோறு
வேலை செய்திடு கூலிகள் ஏழையர்
வியர்வையின் பரிசாக
மாலை தந்திடு சிறுபொருள் வாங்கிடு
மனத்தினில் தெளிவில்லாக்
கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி
குன்றிய குளிர்மாலை!............................................. 9

தெங்கு மாவினில் செவ்வொளி மங்கிடத்
தெருவினில் நீர்தெளித்து
மங்கை மெல்லியர் வாழ்மனை கூட்டியே
மாவினார் கோலமிட்டுச்
செங்கை ஏந்திய விளக்கினை நீள்கடைத்
திண்ணையின் மேலேற்றிக்
கங்குல் நீக்கிடு திங்களை வாழ்த்திடு
கவின்மிகு கார்மாலை!........................................... 10

"குறிய ஈற்றுமாக் கூவிள முவவிளங்
காயொடுங் குறிகொள்ளே"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்குகேற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காயொடும் என்பது மாங்காய் என அறிக.
----------------

5. சேவல்

கொள்ளி நுனியெரி தீயோ,
கொம்பிடைப் பூத்தசெம் பூவோ
வெள்ளை நிறத்தொடு புள்ளி
மேவிய சேவலின் கொண்டை?
துள்ளி இறகினை தட்டித்
தொடர்ந்திடு பெட்டையின் பக்கம்
பள்ளம் சீய்த்திடு சேவற்
கூக்குரல் பைந்தமிழ்ப் பாட்டாம்!......................... 1

புன்செய் வயல்வெளி நட்டுப்
போற்றிவ ளர்த்திடு முற்றா
மஞ்சட் கிழங்கினை மானும்
வாய்த்தவி ரல்களைக் கொண்டே
நன்சென் வளந்தரு குப்பை
நன்மணி நாளெலாம் சீய்த்தே
கொஞ்சு மணிக்குரற் சேவல்
குப்பைகு லைத்தர சாளும்!................................. 2

மண்ணில் உழைத்ததால் நேர்ந்த
வலியினைப் போக்கவே உண்டு
கண்ணை இறுக்கியே தூங்கும்
காளையர் கன்னியர் வீட்டுத்
திண்ணை உறங்கிடு நாய்க்கும்
தெருவிடைத் துங்கிடும் ஆட்கும்
விண்ணில் ஒளிவரு செய்தி
விளம்புமே வைகறைச் சேவல்!............................. 3

பெட்டைக் குணவினைக் காட்டப்
பெருங்குரல் இன்றியே கூவும்;
பெட்டை உணவுணச் சேவல்
பின்புறம் நோக்கியே நிற்கும்;
கட்டைச் சுவரிடை ஏறிக்
காளையைப் போல் நடை காட்டும்;
முட்டை இடும்வரை சேவல்
முன்புறப் பின்புறக் காவல்!.................................. 4

நாணல் முளையினை வெட்டி
நறுக்கிய துண்டினைப் போலக்
காணும் விரலிடை முள்ளும்
சேவலின் கைப்படை வேலாம் !
துணைத் தாக்கிடு தூண்போல்
தோற்றிடு மட்டுமே கொத்தும் !
ஆணை எதிர்த்திடு சேவல்
ஆண்மையே ஆண்மையென் போமே !.............. 5

ஒன்னார் படையினை வென்றே
ஒள்முர சார்த்திடல் ஒப்ப
முன்னர் எழும்பியே தாவி
முன்னுள சேவலின் உச்சி
தன்னைப் பலமுறை முள்ளால்
தாக்கிடும் ; வென்றுபின் கூவும்!
தன்முன் புறமுது கிட்ட
சேவலைத் தாக்குமோ சேவல்?............................. 6

கொண்டை நிமிர்த்தொலி யார்க்கும்
கோழியின் சண்டையைக் கண்டோ
முண்டி எழுந்தெதிர் வந்தே
மூண்டிடும் நீள்பகை சீறிப்
பண்டைத் தமிழ்நில மக்கள்
பகையடி பிற்பட மீண்டும்
சண்டை இடுபவர் மீதே
தம்படை ஏவுதல் இல்லை?................................... 7

மாட்டுத் தொழுவரு குள்ள
மண்ணிடைக் குஞ்சுகள் மேயக்
கூட்டி ஒதுக்கிய குப்பைக்
குப்பலில் பெட்டையும் ஏங்கும்;
வீட்டு நெடுவளைக் கூரை
மேலிருந் தேநடை காட்டி
வாட்டம் விலக்கிடு காதல்
மணிக்குரல் காட்டுமே சேவல்!............................. 8

வீட்டுத் தலைவனைப் போல
வேலிநி ழல்மனை தோறும்
கூட்டி ஒதுக்கிய குப்பைக்
கூலம ணிகளைக் கூவிக்
காட்டி மனைவியாம் பெட்டை
காதலர் குஞ்சுகள் மக்கள்
ஊட்டிக் குடித்தனம் செய்யும்
சேவலை ஒப்பவர் உண்டோ?............................ 9

பெட்டை நடந்திடப் பிள்ளைக்
கோழிகள் பின்புறம் ஓடும்;
பெட்டைக் குறுதுணை யாகப்
பின்புறம் குஞ்சுகள் காத்தே
நெட்டை மறவனாம் சேவல்
நின்றுநின் றேவழி பார்க்கும்;
பட்டப் பகலிலும் சேவல்
பெட்டையின் பக்கமே காவல்!.......................... 10

"ஒன்று மூன்றுடன் ஆறு
மரி விளம் பிறவிடம் உறுமே"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
-------------

6. சோலை

சோலைப் புதுப்பெண்ணைக் காணத்
தூரத்து மாமலை விட்டே
மாலைக் கதிரொளி மங்க
வந்தது மாமணத் தென்றல்
காலை உயர்த்தியே வானக்
கார்முகில் கண்டாடும் தோகைக்
கோலத்தை எள்ளி நகைத்தே
குழலிசை மீட்டின தும்பி !............................... 1

மாவிலை ஒத்ததோர் கிள்ளை
வான வெளியினில் கத்தத்
தாவிப் பறந்தோடித் தத்தை
சாரல் மலைசுற்றி மீளும் !
காவிற் கழுகுசெய் பெண்கள்
கண்ணகை காட்டிடு பூக்கள் !
ஆவி பறித்திடக் கண்டேன்;
அடடா அழகேபூஞ் சோலை !......................... 2

வண்ண மலர்கள் நீள் பாத்தி!
மாமணப் புற்கள் நீள் பாத்தி!
கண்ணைக் கவரும் செடிகள்!
காற்றில் அலையும் கொடிகள்!
விண்ணை இடிக்கும் கிளைகள்!
விரிவான் மறைக்கும் மரங்கள்!
உண்ணத் தெவிட்டா இயற்கை
ஓவியப் பேரெழில் சோலை!.......................... 3

அந்தி விளக்கினைப் போல
அலர்ந்தது சோலைச்செவ் வந்தி!
புந்தி மயக்கின ஆம்பல்!
புதரில்கை நீட்டின முல்லை!
செந்தி உலையினைப் போலச்
செழுமலர் பூத்த(து) இலவு!
நொந்த உளத்தினை மாற்றும்
நுழைபுலத் தோர்ஒக்கும் சோலை!...................... 4

மஞ்சள் நிறத்துச்சா மந்தி
மணமகள் போல்வர வேற்கும்!
கொஞ்சிடும் சிட்டிணை கொம்பில்!
குளிரிசை மீட்டும் குயிலும்!
வஞ்சியர் நூலிடை போல
மரத்திடை மேவிய கோவை:
செஞ்சொல் வழங்கும் இதழாம்
செம்பழம் நீட்டிச் சிரிக்கும்! ...       .........5

வாயில் வருபவர் முன்னே
வணங்கி வரவேற்கும் கைபோல்
சாயல் குறையாக் குளத்துள்
தாமரை கூம்பி அழைக்கும்!
பாயினை எங்கும் பரப்பி
வைத்த மணவறை போலக்
காய்கனி பூத்த மலர்கள்
கலைவிருந் துட்டும் சோலை!.................... 6

சோலையாம் கோட்டையின் உள்ளே
துண்களாம் மாபலா தென்னை!
கோல வளைவுகள் கோட்டை
கொட்டு முரசார்க்கும் வாயில்!
மாலையில் வந்தவர் குந்த
வரிசையாய் இட்ட இருக்கை
மேலவர் கூடிடத் தென்றல்
வேந்தன் அறம்பயில் சாலை!................... 7

வெட்டி நறுக்கிய வேலி
விரிவில் விளங்கிடு பூக்கள்
நட்ட மரகதக் கோட்டை .
நடுமதில் ஆடும் கொடிகள்!
தொட்டில் விழித்த குழவி
தொங்கிச் சிரிப்பதைப் போலச்
சட்டி படர்ந்த கொடிப்பூ -
தலைமேல் அசைந்திடும் சோலை!........... 8

புல்லும் புதரும் மணக்கும்;
பூண்டும் கொடியும் மணக்கும்;
கல்லும் மணக்கும்; சருகு
கண்ட இடமும் மணக்கும்;
செல்லும் வழியும் மணக்கும்;
சிறுசெடிப் பூவும் மணக்கும்;
அல்லும் பகலும் மணத்தை
அள்ளி வழங்குமே சோலை!........................ 9

குளக்கரை பூத்தமா வேம்பு
குடிசெய் குயிலிசை மீட்ட
அளப்பரும் தோகைநின் றாட
அழைப்பன போற்கிளை சாய
விளக்கினை ஏந்தியே மன்றில்
விழவயர் கன்னியர் போலக்
குளத்துச்செவ் வல்லியும் பூக்கக்
குளிர் அர(சு) ஒச்சிடும் சோலை! ................. 10

"கடையது மாவிள மாச்சிர்
கலந்தது வெண்டளை என்ப(து)
உடையது பாதியி ரண்டும்"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். விளத்திற்குப் பதிலாக மாங்காய்ச்சீரும் வரலாம். எனவே, இருவகை வெண்டளைகளும் விரவியிருக்கப் பெறும் என அறிக.
--------------

7. கடலோரம்

மக்கள் வாழும் பரப்பாம் உலகில்
வாழ்நீர் முக்காலே
ஒக்கும் என்ற மேலோர் வாக்கை
ஒக்கும் நீள்கடலின்
பக்கக் கரையாம் மணலின் பரப்பாம்
பாயும் அலைவெருட்டி
மிக்க புகழ்சேர் நாட்டைக் காக்கும்
வீரன் கடலோரம் ! ........................ 1

பெய்தல் விளைக்கும் வான முகில்கள்
பிறந்த நீள்கடலின்
கையாம் அலைகள் .... கண்டே
காலப் பேரரசன்
உய்ய நெடுக நிறுத்தும் படையோ
ஒளிமண் பெருமேடு?
நெய்தல் நாட்டின் அரனோ சுவரோ
நீண்ட கடலோரம் ? .................... 2

தென்னை இசைக்கப் பனைமா ஆர்க்கத்
தேங்கும் கழியோரம்
புன்னை சிரிக்கத் தாழை மணக்கப்
புதரில் அடைகாக்கும்
அன்னைக் குருகின் முன்னர்க் கொஞ்சும்
ஆணாம் பெருநாரை !
சின்ன நண்டுக் குஞ்சு பதுங்கச் -
சிரிக்கும் கடலோரம் ! ...................... 3

குந்தி அன்னை குளிர்கால் சுவைக்கக்
குழந்தை மணல்தோண்டச் -
சிந்தும் கிளிஞ்சல் சிறுவர் பொறுக்கத்
திரைகால் உடல் நனைக்க
முந்தும் அலைகள் கரையைத் தாவி
மோதி முரசார்க்கச் -
சிந்தைக் கின்பம் வாரி வழங்கும்
திரைபாய் கடலோரம் ! ..................... 4

தளிர்த்த புல்லும் செடியும் கொடியும்
சமைத்த சிலையோடும்
குளிர்ந்த நிழலும் மணஞ்சேர் மலர்கள்
குலுங்கும் பூங்காவும்
நெளிந்த நீல அலைகள் நல்கும்
நெடுநீர் இளங்காற்றும்
அளிக்கும் இன்பம் ! ஒலிவான் பாடல்
அளிக்கும் கடலோரம் ! ..................... 5

கூறு கூறாய்த் தோணி மரமும்
குடிசெய் பெரு வலையும்
மாறு பட்ட நெய்தல் நிலத்து
மக்கட் சிறுகுடியும்
சீறும் அலையை வென்றிங் காண்ட
தெற்கின் புகழ் பாடித்
தாறு மாறாய்க் கிடக்கக் கிடக்கும்
தமிழ்சேர் கடலோரம் ! ..................... 6

உப்பிட் டுலரும் வாடு நாற
உலர்த்தும் வலைநாறக்
குப்பைப் புன்னை வெண்பூ நாறக்
குளிரும் கழிநாற
ஒப்பில் நெய்தற் கன்னிப் பெண்கள்
ஒளிசேர் விழிநாறச்
சிப்பி நாறச் செழுமண் நாறும்
சிற்றுர்க் கடலோரம் ! ..................... 7

திரைமேல் சென்றோன் மனைவி மைக் கண்
திசையில் போராட
மரத்தில் ஏறி நெய்தற் சிறுவர்
மறிநீர் போராட
உரத்த குரலில் நுளையர் வலைமீன்
உந்திப் போராடக்
குரைக்கும் அலைகள் கரையில் மோதும்
குளிர்ந்த கடலோரம் ! ..................... 8

மட்டார் குழலித் தமிழப் பெண்கள்
வாட்கண் முகமொக்கும்
வட்ட நிலவு கோடி எழுந்து
வான வெளிவிட்டே
எட்டி யெட்டிக் கடலைப் பார்க்க
இறங்கி வந்ததென
நட்ட விளக்குச் சுடரைப் பரப்பும்
நகரக் கடலோரம் ! ..................... 9

தணலைப் போக்கச் சீறிப் பாய்ந்தே
தாவும் அலையோரம்
அணிசேர் பெண்டிர் ஆண்கள் சிறுவர்
அங்கும் இங்குமென
மணலிற் பொங்கும் ஆடல் பாடல்
மக்கட் பெருங்காடு
தணிய மாலைத் தணியா மாலைத்
தருமே கடலோரம் ! ..................... 10

"மாச்சி ஜந்து காய தொன்று' என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
--------------

8. ஆறு

விண்ணிடை எழுந்த முகில்களின் பேய்ச்சல்
விளைவினால் குறிஞ்சியில் பிறந்து
கண்ணிடை யருவி மலையிடை மருவிக்
கடந்தனை ; முல்லையில் ஓடிப்
பண்ணிடை கூட்டி மருதமாம் நாட்டில்
பலகிளை ஓடைகள் சேர
விண்ணிடை நீலம் மேவிய கடலுள்
மேவினை வழியறிந்(து) ஆறே ! .....................1

வயலிடைப் புகுந்தாய்; மணிக்கதிர் விளைத்தாய்:
வளைந்துசெல் கால்களால் ஆறே !
அயலுள ஒடை தாமரை கொட்டி
ஆம்பலின் இதழ்களை விரித்தாய்;
கயலிடைச் செங்கண் கருவரால் வாளை
கரைவளர் தென்னையில் பாயப்
பெயலிடைப் பட்ட வானெனத் தோன்றும்
பெருங்குளம் நிறைத்துவிட் டாயே! .....................2

வழியினில் கண்ட மண்வளம் யாவும்
வணிகனைப் போலுடன் ஈட்டிக்
கொழித்தனை மருதம்; விளைத்தனை; மீண்டும்
கொள்முதல் செய்தவை யாதாம்?
கழியினில் தேங்கி உப்புடன் கலந்தாய்;
கடலிடை விரைந்துமே ஓடி
அழிந்தனை ஆறே ! அலைகட லுலகில்
அழிவது பிறப்பதின் வித்தாம் ! .................... 3

மலைமகள் மார்பு மாலைபோல் பிறந்தாய் ;
வளர்ந்தனை சாரலில் பெருகி ,
இலையடர் பாறை மயிலினம் ஆட
இருங்குயில் தமிழிசை பாடத்
தலைத்தலை யாக முல்லையிற் பூத்த
தளிர்மலர் வண்டுயாழ் மீட்டக்
கலைபயில் மன்ற முழவென, ஆறே !
களிப்பினை ஊட்டுகின் றாயே ! ..................... 4.

உன்வழி மறிப்போர் கொடிற்றினை உடைக்கும்
உயர்வலி உன்னிடம் வாய்த்தும்
உன்வழி மறித்தே உன்வலி அடக்கி
உயரணை கட்டிய போழ்தும்
மின்னிடி தேக்கும் முகிலினம் நாண
மிகு பொருள் வள்ளலைப் போலப்
பொன்கொழி ஆறே ! மருதமும் பாலைப்
பொட்டலும் சோலைசெய் தாயே ! .................... 5

தாமரை முகமோ தடங்கயல் விழியோ
தாவுசெங் கண் வரால் கையோ
மாமரு அல்லி செவ்விதழ் கொஞ்ச
வாய்த்தநற் செவ்விதழ் தாமோ
காமரு வாழை கால்களோ பூண்ட
கைவளை சங்கினம் ஆமோ
பூமரு வண்டு விழிநகை மங்கை
போன்றனை வாழிநீ ஆறே ! .................... 6

அறிவிலா மக்கள் அணுகிய போதும்
அவரவர் கீழ்மையை மாற்றும்
அறிவுடை யான்ற மேலவர் போல
அணுகிய கழிவுநீர் யாவும்
நெறியொடு மாற்றி நீர்மையைத் தேக்கி
நின்கரை புதுமையால் விளைந்த
பொறியினை இயக்கி மின்விசை நல்கிப்
புரந்தனை உலகினை ஆறே ! ..................... 7

ஊட்டியே வளர்க்கும் வயல்மிகு சிற்றுர்
உயர்மணி நெடுங்கடைப் பேரூர்
காட்டினில் ஆடும் பிடியினம் நாணக்
கலையிருள் வைகறை தோறும்
கூட்டமாய்ப் பெண்கள் குடத்தினை
ஏந்திக் குளிர்புனல் ஆடிட வருவர்;
நாட்டினில், ஆறே ! நீயிலா ஊர்க்கே
நல்லழ கில்லையென் றாரே ! ..................... 8

சுற்றிய முந்நீர் உலகினில் ஆறே
தோன்றிய நாளெதோ அறியேன்!
பெற்றவள் போலப் பேருல கெங்கும்
பிறந்தநல் லுயிர்களுக் குணவாம்
உற்றநன் னீரை ஊட்டினை; வாழி!
உன்கரை தங்கினர் மக்கள்;
கற்றனர் வாழ; இயலிசை கூத்தைக்
கண்டனர்; அரசுகண் டாரே; .................... 9

கொண்டலில் பிறந்து கொண்டலுக் குதவிக்
குடிமுறை காத்தனை ஆறே
பண்டைய புலவர் பண்பெலாம் பெற்றாய்!
பாரினைத் திருத்தினை: வாழி!
அண்டைய வாழ்வை அழித்தனை, ஆக்கி
அரசுபோல் உலகினைக் காத்தாய்!
எண்டிசை யுலகில் யாதுமே உன்போல்
இளமையோ டிருப்பது முண்டோ? .....................10.

"நால்விள மும்மா நடை பெறும்" என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். 2,4,7 ஆகிய இடங்களில் மாச்சீரும் பிறவற்றில் விள்ச்சீரும் வரும் என அறிக.
------------------

9. விண்மீன்

செங்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும் ,
செடிகொடிகள் பொன்பூக்கும்; திரும்பும் புட்கள் ;
மங்கிவரும் ஒளிக்கெதிரே மேற்கு வானில்
மையிருட்டுக் கைந்நீட்டும்; வானம் பூத்துத்
தொங்குகின்ற பீர்க்கம்பூப் போலக் கண் முன்
தொடுவானில் கீழ்த்திசையில் ஒளியில் மங்கி
அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர்த் தோன்றி
அடுத்தநொடி வான்நிறையும் விண்மீன் கூட்டம்! ....................1

தைத்திங்கள் குளம்பூத்த பூவோ விண்மீன் ?
தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ,
மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர்
மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ,
தைத்திட்ட பட்டாடை முத்தோ, தீட்டித்
தரப்பட்ட ஒளிக்கல்லோ, சரிகைச் சேலை
உய்த்திட்ட பொடிப்பூவோ, தொலைவில் தோன்றும்
ஊரிட்ட் மின்விளக்கோ விண்மீன் கூட்டம்? .....................2

நிலமுதிர்ந்த இலுப்பைமரத் தந்தப் பூவோ,
நீர்குளித்த கடல்முத்தோ, பவளக் காடோ,
நிலைகுலைந்த பொற்சிலையின் சிதறல் தானோ,
நெல்முத்தோ, மகிழமரம் உதிர்த்த பூவோ,
நிலவரசிப் பெரும்படையோ, நீல வான
நெடுவயலில் தெளித்திட்ட துள்பிண் ணாக்கோ
கலையாத ஓவியமாம் கண்முன் தோன்றிக்
களிப்பூட்டும விண்மீன்கள்? விந்தை விந்தை ..................... 3

பெண்ணரசி நிலாப்பெண்ணாள் வெளியில் வந்தால்
பேரரசர் பின்செல்லும் கூட்டம் போல
விண்ணுலகில் ஒளிமங்கிக் கிடக்கும் விண்மீன்
விடியளவும் ஒளிவீசிக் காலை மங்கும்!
மண்ணரசர் முன்தோற்ற படையைப் போல
வளர்பரிதி வரக்கண்டால் மறைந்து போகும்!
கண்ணுக்குப் பேரழகே வகைவ கையாய்க்
காட்சிதரும் விண்மீன்கள்! விந்தை! விந்தை ..................... 4

திங்கட்கும் பரிதிக்கும் ஏங்கு கின்ற
திருமலர்கள், விண்மீன்கள் உங்கட் குண்டோ?
எங்குள்ளி என்றும்மை மனிதர் கூட்டம்
எண்ணாம லிருந்தவொரு கால முண்டாம்
இங்கிருந்தே உம்மையெல்லாம் அடக்கி யாள
ஏவுகணை கண்டுவிட்டார் அறிவின் மேலோர்:
மங்குகதிர் மீனினங்கள் பகலொளித்தே
வாழ்ந்தாலும் விடமாட்டார் அறிவே வெல்லும் .....................5

விண்மீனில் ஒன்றிரண்டு தெற்கில் நிற்கும்
விரிவானில் ஒன்றிரண்டு வடக்கே செல்லும்;
வெண்ணிலவைப் பின்தொடரும் ஒன்று; நல்ல
விளைவாக்கும் பெருமழையை உணர்த்தும் ஒன்று;
மண்ணுள்ளோர்க்(கு) அதிகாலை வரவைச் சொல்ல
வானடியில் முளைத்துவரும் ஒன்று; மற்றும்
எண்ணுக்கே அடங்காமல் காலம் காட்ட
இரவினிலே எழுகின்ற மீனும் உண்டே! ..................... 6

மக்களெல்லாம் குரங்கினத்தின் வகையே யென்று
வரலாற்றார் உரைக்கின்றார்; மெய்யோ, பொய்யோ?
மக்களிலே தீமைபல நாளும் செய்யும்
மடச்சிறுவர்க்(கு) இங்குள்ளோர் வால்வால்' என்றும்,
எக்களிப்பில் குரங்கென்றும் சொல்லிச் சொல்லி
இடித்துரைத்தல் கேட்டதுண்டு வானில் தோன்றும்
சொக்கவெள்ளி மீனினங்கள்! உங்கட் குள்ளும்
வால்முளைத்துத் தோன்றுமினம் உண்டு போலும் .....................7

கல்லெழுந்து மண்தோன்றி மக்கள் தோன்றிக்
கடல்சூழ்ந்த உலகத்தில் வாழ்தல் கண்டோம்;
அல்லெழுந்து வான்தோன்றி ஆட்சி செய்யும்
அழகுமிகு விண்மீன்காள்! உங்கள் வாழ்வு
பல்லுழிக் காலமென உரைக்கின் றார்கள்!
பண்பட்ட பெரியோரும் இந்த நாட்டில்
புல்முளைக்கப் போனார்கள்! ஆனால், நீங்கள்
புதுப்பொலிவில் எப்படித்தான் வாழ்கின்றீரோ? ....................8

மண்ணுலகம், விண்மீன்காள்! நீங்கள் இன்றேல்
வாழாதாம் ஒரு நாளும்! உண்மை உண்மை!
விண்ணுலகில் வாழ்கின்ற நீங்கள் என்று
விரிவானில் பிறந்தீரோ? கண்டார் இல்லை!
மண்ணுலகில் வாழ்வோர்க்கே வயது நூறாம்!
வாழையடி வாழையென வந்த பேச்சு!
கண்சிமிட்டும் மீனினங்காள்! உயிர்கள் சாகக்
காண்கின்றீர்! நூம்கடைநாள் யாரே காண்பார்? .................... 9

வளிக்குயிராம் ; வான்தோன்றி வெறிகொண்டோடும்
மழைக்குயிராம்; மழைவிளைக்கும் நன்செய் புன்செய்
வெளிக்குயிராம்; வெளியினிலே என்றோ தோன்றி
வீசுகின்ற புயற்காற்றுக் குயிராம்! வெய்யோன்
ஒளிக்குயிராம்; ஒளிமாற்றி உலகுக் கீயும்
உயர்வானுக் குயிராகும்: காண்போர்க் கென்றும்
துளித்துளியாய் வான்நிறைந்தே உலகைக் காக்கத்
தோன்றுகின்ற விண்மீன்காள் வாழ்க வாழ்க! ..................... 10

“காயிரண்டு மாவொன்று தேமாவொன்று
கலந்தவடி இரட்டும்.அதன் விகற்பங் காணே!

என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காய்ச்சீர் இரண்டும் மாச்சீர் ஒன்றும் தேமாச்சீர் ஒன்றும் புணர்ந்திரட்டியதை காண்க.
---------------

10. காலை

வெண்ணிலவு மேற்றிசையில் ஒளிமங்கிச் சாயும்;
விடிவெள்ளி கீழ்த்திசையில் புன்முறுவல் பூக்கும்:
பண்ணெழுப்பும் வரிவண்டு, முல்லைமலர் நாறும்;
பசுங்குழவி விழிமலர்த்திக் காலுதைத்துக் கத்தும்,
கண்ணுறங்கா துறங்குகின்ற இளந்தாயின் கைகள்
கைக்குழந்தை உடல்வருடும்; பூமணத்தை வாரி
மண்ணெழுந்து குளிர்காற்று மெல்லவந்து சேரும்
மரக்கிளைகள் சலசலக்கும்; மலர்ந்துவரும் காலை ....................1

பொன்பூத்த கருவானம் பொலிவற்றுப் போகும்:
புதரெல்லாம் சிட்டிசைக்கும்; வீட்டோரச் சாலை
முன்பூத்த மரமெல்லாம் தாதுதிர்க்கும்; வேலி
முள்முருங்கைக் கருமொட்டுச் செவ்விதழை நீட்டும்:
மின்பூத்த விடைநல்லார் இல்லத்துப் பெண்கள்
வெளிக்கதவின் தாழ்விலக்கச் சிலம்பொலிக்கும் முன்றில்:
பின்பூத்து வருங்கதிரோன் வரவுரைக்கக் கீழ்வான்
பேரழகை உலகளிக்கும் மலர்ந்துவரும் காலை ..................... 2

வீட்டோரச் சுவரிருந்து செம்மூக்குக் கிள்ளை
விரிவானில் சிறகடித்து வெளிவானில் கத்தும்;
மேட்டோரப் பெருமரத்தில் காக்கைகளின் கூச்சல்
விலைபேசும் பெருஞ்சந்தை இரைச்சலெனக் கேட்கும்;
காட்டோரக் கூடெல்லாம் காதினிக்கும் பாட்ல்:
கருங்குயில்கள் கவிஞன்போல் இடையிடையே பாடும்;
கூட்டோரத் தேன்குடத்தில் கருவண்டு செந்தேன்
குறைநிறைக்கும்; கொடியூக்கும்; குளிர்ந்துவரும் காலை ! .................... 3

செம்பருத்திச் செடியூக்கும்; தீக்கொண்டைச் சேவல்
சிறகடித்துக் குரலெழுப்பிப் பெருமுழக்கம் செய்யும்,
கம்பத்து விளக்கெல்லாம் ஒளிமங்கிப் போகும்;
கருவானம் உருமாறும்; கவிழ்ந்தவிருள் தேயும்;
கும்பத்து நீர்மொண்டு சாணமிடும் பெண்கள்
குரல்கேட்கும்; குளிர்காற்றுக் கதவிடையில் பாயும்;
தெம்பற்றுக் கிழப்பாட்டி பாக்கிடிக்கும் ஓசை
தெருக்கோடி எதிரொலிக்கும்; சிரித்துவரும் காலை! ..................... 4

குளத்தினிலே தாமரைகள் தமிழ்மனன்ர் கூட்டம்,
குளிர்அல்லி முகஞ்சுருக்கும்; கொடித்தக்கை பூக்கும்;
பளபளக்கும் பச்சையிலை மரகதப்பூந் தட்டு;
பாய்ந்தேறும் சொரித்தவளை பாசியிடைக் கத்தும்;
இளவாளை கொலைவாளாம்; எழுந்தடித்துப் பாயும்;
இலைமறைவில் நீர்ப்பாம்பு தலைநீட்டிப் பார்க்கும்;
உளத்தினிலே மகிழ்வூட்டும் தொடுவானச் செம்மை
ஒளிக்கதிர்கள் பொன்வரிகள் ஒளிர்ந்துவரும் காலை ! ..................... 5

வயலெல்லாம் பசுங்காடு; பசுங்காட்டின் உச்சி
மணிக்குலங்கள் பனித்துளிகள்; காலைதந்த செல்வம்!
அயலோடும் வாய்க்காலில் சேலினங்கள் ஏறும்;
அடர்நீலம் அரிவையரின் குளிர்விழியைக் காட்டும்;
பெயல்தேய்ந்த வானத்து மூடுபனி மூட்டம்
பின்பொருளைக் காட்டுகின்ற திரைச்சீலை யொக்கும்;
மயலுட்டும் அதிகாலை மதகிடுக்குச் சந்தில்
வழிந்துவரும் தண்ணிரும் மனம்குளிரச் செய்யும் ... 6

குளிர்நிறைந்த ஊரிடையில் சிறுவெப்பம் பாயும்;
கூரையின்கீழ் மண்சீய்த்துக் குக்கலினம் தூங்கும்;
தளிர்நிறைந்த மரக்காடு சருகுதிர்த்து நிற்கும்;
தரையெல்லாம் சிறுபுகைச்சல், தழைகண்ணிர் சொட்டும்;
ஒளிநிறைந்து வான்பரந்து பொன்னருவி போல
ஊர்நுழையும் செங்கதிர்கள்; ஓவியப்பே ரின்பம்!
களிநிறைய உணர்வூட்டி உறங்குகின்ற மக்கள் க
ண்மலர்த்தும்; கதிர்க்கையை நீட்டிவரும் காலை ..................... 7

கொல்லையிலே இளநாகு கன்றுன்னிக் கத்தும்;
குடிசெய்ய நீர்மொள்ளும் குடத்தோசை கேட்கும்;
எல்லையிலே நிற்கின்ற பெருமலையின் உச்சி
எரியிட்ட சூளையைப்போல் பனிப்புகையைக் கக்கும்;
முல்லைநில ஆய்ச்சியர்கள் தயிர்கடையும் ஓசை
முறைகெட்ட மலையருவி இசைப்பாட்டை ஒக்கும்;
மெல்லமெல்ல ஒளிபெருகும்; ஊர்விழித்துக் கொள்ளும்;
விடிவெள்ளி அழத்தொடங்கும்; விரைந்துவரும் காலை! ..................... 8

வாலுயர்த்தி இளங்கன்று தாய்மடியை முட்டும்;
மடிகறக்கும் நல்லாயன் கலம்நிறையும் தீம்பால்;
காலுயர்த்திப் பாய்ந்தோடும் கட்டவிழ்த்த காளை;
கடைமுன்றில் மாக்கோலம் கைத்திறத்தைக் காட்டும் ;
கோலுயர்த்தி எருதோட்டி உழுபடையைத் தூக்கிக்
கொல்லைக்குச் செல்கின்ற நல்லுழவன் இன்றேல்
வேலுயர்த்தி அரசாளும் எந்நாடும் என்றும்
விடியாதே எனச்சொல்லி விடியவரும் காலை! ..................... 9

வல்லுயிரைப் புறங்கண்டு வாழுமுயிர் ஒம்பும்;
மண்ணுலகும் விண்ணுலகும் வாழ்வளித்துக் காக்கும்;
எல்லையிலா நெடுங்கால இயற்கைதந்த வான
எழிற்செல்வம் தீச்செல்வம் ஒளிச்செல்வம் யாதாம்?
மெல்லிசையில் குயில்பாட விரிந்தமலர் நாற
விரைந்தோடும் நீள்குன்ற அருவிமுழ வார்க்க
கொல்லன்தீ உலை.பழுக்கும் நெடுமாடச் செப்புக்
குடம்போல வானுயரும்; குளிர்ந்துவரும் காலை ..................... 10

முன் காட்டிய நூற்பாவில் கூறிய எண்சீர் விகற்பங்களுள் இஃது ஒருவகை விகற்பம். காய்ச்சீர் மூன்றும், தேமாச்சீர் ஒன்றும் புணர்ந்து இரட்டிய எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். -
-----------------

11. இரவு

அந்தியிலே மேற்றிசையில் தொடுவானப் பரப்பில்
அழகூட்டும் முகிலினங்கள்; அடர்ந்தபெரு மலைகள்
செந்தீயில் வெந்தவியும்; சிலுசிலுக்கும் குளிர்கால்;
சிற்றோடை சலசலக்கும்; திசைமறையும் பரிதி;
பொந்திருந்து குரல்கொடுக்கும் கூகையினம்; அலர்ந்த
புதுப்பூக்கள் மணம்பரப்பும்; புள்ளடையும் புதரில்;
மந்தைமணி ஒலிகேட்கும்; குளம்படிந்த எருமை
வந்தடையும் கொட்டகைக்கு வந்தடையும் இரவே ! ..................... 1

தாரிட்ட திரையாகும் தலைமீது விரிவான்;
தழைமரத்தில் பகலெல்லாம் ஒளிந்திருந்த பறவை
கூரிட்ட வாய்திறந்து குரல்காட்டிக் குளிர்நீர்க்
குளம்நோக்கி இணையிணையாய் இறகடித்துக் குறுகும்;
வேரிட்ட குண்டுபலா வெடித்திட்ட வகைபோல்
விண்மீன்கள் கருவானில் அங்குமிங்கும் கிளம்பும் ;
ஊரிட்ட இருள்கிழிக்கும் விளக்கெல்லாம் அறிஞர்
உரையொக்கும்; ஊரடங்கும் ஓடிவரும் இரவே ! .................... 2

மலையருவி முழவார்க்கும்; வட்டமிடும் துரிஞ்சில்;
வாயிலிலே மணம்பரப்பி வந்தடையும் குளிர்கால்;
இலையுதிரும்; கொடிமுல்லை நுணாப்பூக்கள் மலரும்;
இல்லத்து நீள்வாழை படபடக்கும்; அழைக்கும்;
குலையுதிரும் முதிர்ந்தபழம்; குளம்கூம்பும் மலர்கள்
கொட்டைகையில் கால்நீட்டி வைக்கோலை எருமை
தலைநீட்டி இழுக்கின்ற மெல்லோசை இரவில்
தனிஇனிமை தனிஇனிமை, தடித்துவரும் இரவே ..................... 3

வீட்டிடையில் ஒளியடங்கும்; மக்களொலி அடங்கும்;
விரிகடலில் பேரலைகள் கரைமோதி அடங்கும்;
கூட்டிடையில் இசையடங்கும்; வண்டடங்கும் மலரில்;
குயிலடங்கும் பழத்தோப்பில்; மயிலடங்கும் புதரில்
காட்டிடையில் விலங்கடங்கும்; கலையடங்கும் பிணையில்;
காரெருமை கொட்டைகையுள் கால்நீட்டி அடங்கும்;
மேட்டிடையில் வான்பார்க்கும் சிறுகுடிசை உழவர்
வெறுவயிற்றுப்ப சியடங்க அடங்கும்கண் ணிமையே ! ..................... 4

ஊருறங்க உறங்காதார் உளரென்ப துரைக்கும்
ஊளையிடும் நரிக்குலமும் நாய்க்குலமும்; குளத்து
நீருறங்க உறங்காத நீள்குன்றத் தருவி -
நெளிந்துவரும் பாம்பைப் போல் இழிந்துவரும் இடுக்கில்;
காருறங்க உறங்காரே கண்விழிக்கும் உடுக்கள்;
களவுசெய்வோர் பொருள்காப்போர் காதலிப்போர் இரவில்
ஊருறங்க உறங்காரே, உலகறிந்த நிகழ்ச்சி!
ஒண்கடலும் உறங்காமல் ஓலமிடல் அழகோ? ..................... 5

வில்லொத்த புருவத்தார் கன்னியரின் அருகில்
விடிவளவும் விழித்திருக்கும் சிறுவிளக்குத் தனித்தே
பல்லொத்த முருங்கைப்பூ பாய்விரிக்கும் தெருவில்;
பரனேறும் வெண்பூனை, எலியோடிப் பதுங்கும்;
இல்லடங்கா திருக்கின்ற இளங்காளை எருமை
இரவினிலே ஒன்றிரண்டு கட்டுகயி றறுத்தே
கொல்லையிலே பயிர்மேயும்; கொட்டகையைக் குறுகும்;
கொடுமைக்கும் அழிவுக்கும் நீபொறுப்பா இரவே? .....................6

காக்கைநிற நள்ளிரவே! கதிரில்லா உலகே!
கட்டுடலின் சோர்வகற்றி உயிரூக்கும் மருந்தே!
சேக்கையிலே கண்மூடிச் சீராட்டும் திருவே!
செயல்மறக்கும் உடல்மறக்கும் இடம்மறக்கும் இனிமைப்
போக்களிக்கும் நற்றாயே! உனையாரே விரும்பார்?
பொதுமையெனப் புகல்கின்றார்; ஆனாலும் உனைப்போல்
காத்தளிக்க வல்லாரோ? வேற்றுமையைக் களைந்தே
கைகொடுக்கும் நற்றுணையே! வாழியகார் இரவே! .................... 7

விண்ணெழுந்த மீனினத்தை, விடிவெள்ளி நிலவை,
வெறிக்காற்றில் தேய்ந்தாடி மலைச்சாரல்
கண்ணெழுந்த நீள்முங்கில் பெருந்தீயை அறிவோர்
கண்டார்கள்; இருள்கிழிக்கக் கண்டாரே விளக்கை;
மண்ணெழுந்த உயிரினத்தின் சிந்திக்கும் அறிவை
வாழ்த்துகிறேன்; வளரட்டும். ஆனாலும், உலகில்
எண்ணெழுந்த பல்கோடி ஆண்டுகளாய் இரவே
இருக்கின்றாய்; கன்னியைப்போல் இருக்கின்றாய் நிலைத்தே! ..................... 8

கடைந்தெடுத்த தந்தக்கால் கட்டிலின்மெல் லணையில்
கட்டவிழா முல்லைமலர்ப் பாயலின்மேற் பரப்பில்
அடைந்திருந்தே உனைமறந்தே அன்பாற்றில் மிதந்தே
அகமகிழ்ந்த காதலர்கள் கண்டிருப்பாய் இரவே!
உடைந்தமனத் துயருற்றோர் உறக்கமின்றிப் புரள
ஊமையைப்போல் இருப்பாயோ? விளக்குவையோ உரையை?
அடையிருளே! நீ இன்றேல் உயிரினங்கள் அமைதி
அடையாவே! நல்வாழ்வும் அடையாயில் வுலகே! .................... 9

கோட்டான்கள் உன்படையோ? குளிர்காற்றுக் கொடியோ?
குன்றங்கள் உன்னரசின் நீண்டநிலப் பரப்போ?
காட்டாறு மும்முரசோ? கருவான உடுக்கள்
கருவூலப் பொன்னாமோ? முளைத்துவரும் நிலவு
தீட்டாத கூர்வாளோ? வெள்ளிமுடி மணியோ?
செங்கோலோ முல்லைமலர்? செவ்வல்லிக் குடையோ?
நாட்டரசும் உன்னரசின் கீழ்ப்பட்ட அரசே!
நல்லிரவே! நீவாழி! நீவாழி நிலைத்தே! ..................... 10

காய்ச்சீர் மூன்றும் புளிமாச்சீர் ஒன்றும் புணர்ந்திரட்டி வந்த எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். முன்னைய எண்சீர் விருத்தத்துள் கூறப்பெற்ற விகற்பங்களுள் இஃது ஒரு வகையாகும். -
---------------

12. அருவி

தேன்நு கர்ந்திடும் வண்டுகள் தழைத்த
செடியில் மொய்த்திடும்; செவிக்கிசை அளிக்கும்;
மான்கள் பாய்ந்திடும்; மணிக்குரல் புறவு
மரத்தில் தங்கியே இணையினை அழைக்கும்;
ஏனல் கொய்பவர் இரைச்சலுக் கடங்கி
எழுந்து மாமயில் பதுங்கிடும் மலைமேல்;
வானில் தோன்றிய கூன்.பிறை மதிபோல்
வந்து தோன்றினை வாழிநீ அருவி! .................... 1.

அல்லும் நீள்பகல் அருகிய ருகியே
அடர்ந்த சாரலில் மெல்லநீ தவழ்ந்து
கல்லும் தேய்த்தனை; பாய்ந்து மேல் வழிந்து
கடந்து வந்தனை மாமலை அருவி !
சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல்
தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்; குளிர்நீர்ச்
செல்வம் தந்திடும் மின்வளம் அளித்தே
செழிக்கச் செய்தனை வாழ்த்திடும் உலகே! ... 2

கலைந்த கூந்தலை ஒத்திடும் முகில்கள்
கவிழ்ந்த சாரலில் தழைத்துந ழுவியே
மலைக டந்தனை: ஒடையாய்ப் பிரிந்து
வந்து சேர்ந்தனை, முல்லையில் புகுந்து
குலைகி டந்தநீள் வாழையைக் கரும்பைக்
கொடுக்கும் நீள்வயல் மருதமே சிறக்க
அலைகி டந்தமா அணையினுள் அடங்கி
அற்ற காலமும் வயல்விளைத் தனையே! ..................... 3

செந்நெல் மாபலா வாழையும் கரும்பும்
செழிக்கச் செய்தனை செய்தனில்! மருதக்
கன்னல் தீமொழிக் கன்னியர் முகத்தைக்
காட்டச் செய்தனை தாமரை மலரில்;
பொன்வி ளைத்திடும் உழவரின் தொழிலில்
பொங்கு மெல்லிசை அருவியே! அடடா!
என்ன சொல்லுவேன்! கிள்ளையும் குயிலும்
என்று கற்றன. உன்னிடம் உரையே? ..................... 4

காடு மேடுமண் கடந்தனர் உனது
கால்க டந்தவ ழித்துணை அடைந்து;
வீடு கண்டனர்; விளைநிலம் விளைத்து
விளைவு கண்டனர்; வீரமும் கொடையும்
மாட கோபுர மாநகர் மருங்கில்
வாழும் மக்களும் உன்வழி நடந்து
நாடு கண்டனர்; நன்னெறி வகுத்து
நலமும் கண்டனர்; வாழிநீ அருவி! ...................... 5

இரைத்து வந்தனை சாரலில் அருவி!
இழிந்து வந்தனை, ஒடையில் கலந்தே
நுரைத்துச் சென்றனை நுழைந்தனை நதியுள்;
நூறு காதமும் உன்வழித் தடுப்பைக்
கரைத்து வந்தனை, கால்களாய்ப் பிரிந்து
காத்து வந்தனை மக்களின் உயிரை;
திரைத்து வாழ்ந்தனை நீள்கடல் புகுந்து
செல்வம் தந்தனை, வாழிவா ழியவே! ..................... 6

உன்னில் எத்தனை எத்தனை கலங்கள்?
உன்னில் எத்தனை எத்தனை படகு?
பொன்னும் மாமணிப் பொருள்களும் பெரிய
பொதியும் தாங்கியே செல்வதை அறிந்தேன்;
மன்னர் ஆட்சியை மக்களின் அரசை
வாழ வைப்பதும் நீயென உணர்ந்தேன்;
என்ன சொல்லுவேன் உன்னரும் சிறப்பை:
இனிய பாடலுக் கீடெனல் முறையோ? ..................... 7

கோடி கோடியாய்க் கொட்டியும் விலகாக்
கொல்லும் நோயினால் நல்லுடல் மெலிய
வாடி வாடியே வருந்திய உயிர்கள்
வந்து மூழ்கியே நலம்பெறல் அறிந்தேன்;
காடு தாண்டியே நீள்மலை யிடையே
கன்னிச் செந்தமிழ் போலநீ நிலைத்து
நாடு தாண்டியே வருபவர் எவர்க்கும்
நல்கும் மாமருந் தெங்கறிந் தனையோ? .....................8

உன்னில் தோன்றிய மின்விசை யதனால்
ஊரில் தோன்றிய இருள்கடிந் தனையே!
செந்நெல் நீள்வயல் நீரினை இறைத்தாய்;
சிறிய நற்றொழிற் சாலைகள் இயக்கிப்
பொன்வி ளைத்தனை! புதுப்புதுப் பொருள்கள்
புவிக்க ளித்தனை! உன்னரும் புகழை
என்ன கூறுவேன்! அருவிநீ இலையேல்
ஏற்றம் கண்டிட இயலுமோ உலகே? ..................... 9

அள்ளி யள்ளியே மக்களுக் களித்த
ஆன்ற வள்ளலும் அழிந்தனர்; அறிவேன்!
வள்ளல் வாரியே வழங்கிய பொருளும்
வற்றிப் போனதும் அழிந்ததும் அறிவேன்!
கொள்ளக் கொள்ளவும் குறைவுறா தளிக்கும்
குன்றம் சூழ்மலை அருவியே! உனது
வெள்ள நீரினை வழங்கியும் குறையா
வீறு பெற்றவர் உலகினில் இலையே! .....................10

"ஆதி மாவொடும் கூவிளம் விளமா ஆகு மாயரை யடியிருங் குழலே !” என்னும் விருத்தப் பாவியல் விதிக்கேற்ப அமைந்த கழிநெடில் ஆசிரிய விருத்தம். முதலில் குறியமா சீரும், கூவிள மும், விளமும், மாச்சீரும் புணர்ந்திரட்ட வந்துள்ளமை காண்க.
---------------

13. என்றன் வீடு (கலித்துறை)

என்றன் வீடென இயம்பிடப்
போற்றிட ஏதுரிமை?
உன்றன் வீடெனும் உணர்வினை
உணர்த்திய உன் முன்னோர்
சென்ற செய்தியைச் செப்பிடச்
செவியினில் சேர்த்தாயோ?
என்றும் வீடெனும் இடமெலாம்
எவர்க்குமே இடமாமே! ...................... 1

சின்ன வீட்டினில் சேலிய
மேட்டினில் சிறாரோடு
முன்னம் வாழ்ந்ததை முதுமையில்
வாழ்வதை முறையாக்கி
இன்னும் எங்கிடும் என்மன
வியப்பினுக் கென்சொல்வேன்?
அன்னை தந்தையின் அன்புளம்
என்னரம் வீடாமே! ..................... 2

கன்று மாடுகள் கத்திடக்
கதவினில் கையூன்றிச்
சென்ற நாட்களின் செழுமையும்
வறுமையும் சிரித்தெண்ணி
இன்றும் நாளையும் ஏகிடு
மியல் பினை எண்ணாமல்
நின்றி ருக்கநான் நின்றிடும்
சிறுகுடி நீள்வீடே! ..................... 3

கோழி கூவிடக் குழந்தைகள்
உறங்கிட நீள்குப்பை
தாழி கூழடு புகையெனச்
சிறுபுகை தலைநீட்ட
மேழி ஏந்திய உழவரோ
வயல்வெளி மேவாமு ன்
'வாழி செங்கதிர் வாழ்த்தினை
வழங்கிடும் என்விடே ..................... 4

சோம்ப லுற்றநான் தூங்கிடத்
துங்கிடத் துங்காத -
ஆம்பல் போல்விழி அழகிய
பெயர்த்தியர் அண்டிவந்தே
தேம்பல் அன்னையர் சிறுகுளம்
சென்றவர் செயலெண்ணிக்
கூம்பல் நல்லிராக் குளிர்செயக்
குளிர்செயும் என் வீடே! ..................... 5

பொன்செய் செங்கதிர் புதரிடைப்
புகுந்திட எழுந்துவரு
விண்செய் விந்தையை வியந்திட
விடியலில் வெளிவந்தே
பண்செய் புட்களின் பாடலில்
அறிவைநான் பறிகொடுக்கப்
புண்செய் மக்களின் குறையினைப்
போக்கிடும் என்விடே! ..................... 6

கன்று தாய்முலை முட்டிடக்
களிப்பினில் காரெருமை
நின்று கால்சொரி நிலையினில்
கொட்டகை நீண்டிருக்க
முன்றில் சிட்டினை அணிலிசை
முழு வயர் தெருத்திண்ணைத்
தென்றல் பாய்ந்திடச் சிரிப்பொலி
பாய்ந்திடும் என்விடே! ..................... 7

நாயு றங்கிட நானுறங்
கிடச்சிறு நலங்கிள்ளித்
தாயு றங்கிடத் தழையிருள்
உறங்கிடத் தாழ்வெள்ளி
போயு றங்கிடப் பொன்னொளி
எழுந்திடப் புலர்காலை
வாயு றங்கிடாப் புள்ளினம்
வாழ்ந்திடும் என் வீடே! .................. 8

வெள்ள மேவிய விரிமலர்
இளநகை மெல்லியலார்
உள்ளம் மேவிய உவகையின்
உருவொளி ஒண்சிறார்கள்
பள்ள நீரினில் படர்ந்திடு
பறவைகள்; கதிர்முன்னே
கொள்ளும் மின்பமே குவித்திடு
குடிசையாம் என் வீடே! ..................... 9

கொடிய சைந்திடக் குளிர்மலர்
சிரித்திடக் குயில் கூவ
மடிக றந்திடப் பால்வளம்
வற்றிடாக் கொம்பெருமை
அடிபெ யர்த்திடும்; ஆனினம்
அடிக்கடி கன்றுன்னிக்
கடித ழைத்திடும் முகப்பகம்
கவின்மிகு என்விடே! ..................... 10

குறிய மாவொடு கூவிளம் இரு விளம் காயொன்று அறிதி “காயது அந்தம் ஊர் தரும்” என்னும் விருத்தப்பாவின்படி காய்ச்சீர் இறுதியில் அமைந்த கலித்துறைச் செய்யுள் இது.
-------------

14. குயில் (கலித்துறை)

தேன்மி குந்திடு திருமலர்
பூத்திடு செய்யின்
கூன் மிகுந்திடு குளிர்நிழல்
ஆலிடைக் கூண்டின்
கான்மி குந்திடக் கரைந்திடு
காக்கைகள் கண்ட
வானி டையெழு மரக்கிளை
வளர்ந்த செங் குயிலே! ..................... 1

ஏனெ ழுந்துநீ இரவிடப்
பகலவன் எழாமுன்
தேனெ ழுந்திடு செழுங்கவிப்
பாவலர் பாட்டை
வானெ ழுந்துநீ வகையுளி
நீக்கியே வாயால்
கானெ ழுந்துமே பாடுதல்
கண்டனன்; களிப்பே! ..................... 2

பெற்ற தாயினைக் கூண்டிடைக்
கண்டிடு பேற்றை
உற்ற னமெனும் பொய்மையில்
மகிழ்ந்தனை, உண்மைச்
சுற்ற மாரெனக் காக்கைகள்
கூவியே துரத்தக்
கற்ற னையவ ரவரினம்
காப்பதே கடனாம்! ..................... 3

புள்ளி பெற்றனை ஓவியப்
பொறியென வுடலில்;
வெள்ளை மாமலர் மேவிய
தேரையைப் போல் நீ
கள்ள மற்றனை, காவினில்
கூவிநீ குயிலே
உள்ள மீர்த்தனை உயிரையும்
கொடியவர் உணவே! ..................... 4.

கூடு கட்டிடக் குடிசெயக்
கற்றிடாக் குயிலே!
பாடு பாவலர் பாவையர்
பற்றுமிக் கூரக்
காடு தாண்டியே காதலர்
கண்டுவந் துரைக்க
நாடு முற்றிலும் உன்துணை
நாடினர் என்னாம் ? ..................... 5

இன்ப வாழ்க்கையில் இரண்டறக்
கலந்துமே யெங்கும்
அன்பு வாழ்க்கையை அடைவதே
உயிரின ஆக்கம் !
துன்ப வாழ்க்கையின் தொடக்கமே
தனிக்குடி, வேண்டாம்
என்று ரைத்துநீ குடிசெயா
திருப்பதும் முறையோ? ..................... 6

கூசு கின்றனர் குமரிகள்
குயிலிளம் பிள்ளாய் !
காசு நாண் மலர் பிறப்பெனும்
வெண்டளைக் கவியோ?
மாசு போக்கிய வீணையில்
வடித்திடு பாட்டோ?
பேச வாய்த்தவுன் வாய்மொழிப்
பெற்றியைக் கண்டே! ..................... 7

கிள்ளை போலுனைக் கிளிமொழிக்
குமரிகள் கூண்டில்
தள்ளிப் பாலொடு மிகுபழம்
தந்துமே வளர்த்துக்
கள்ளை மீறிடு பேச்சினைக்
கற்றிட விழையார்
கொள்ளை யின்பமாம் உன்மொழிக்
கூற்றுணர்ந் தோர்க்கே! ..................... 8

காடு சுற்றியே காவினில்
கிளைகளில் கண்ட
கூடு சுற்றியே காக்கையின்
கூண்டினில் முட்டை
தேடி யிட்டனனை; ஆயினும்
செழுமரச் சோலை
கூடு கட்டிடக் குறியிலாக்
குறைபெருங் குறையே! .....................9

தெள்ளு தீந்தமிழ்ச் செழுங்கவி
வாணனைப் போன்றே
உள்ளம் பொங்கிட உணர்வுமே
லெழுந்திட நெஞ்சம்
அள்ளுறு பாட்டினை இசைக்கிறாய்
அடிக்கடி; ஆனால்
வள்ளல் யாருளார் இசைப்பொருள்
உணர்ந்துமே வழங்க ! .....................10

'குறிய மாவொடு கூவிளம் இருவிளம் மாவொன்று அறிதி" என்னும் விருத்தப்பாவின் படி அமைந்த கலித்துறைச் செய்யுள் இது.
---------------

15. நானிலம் (ஒக்கும் பிறப்பு - ஒவ்வாச் சிறப்பு)

குறிஞ்சி :
வான் எழுந்த பிள்ளைமதி
மலைஎழுந்த நீளருவி !
மலர்பூஞ் சாரல்
தேன் எழுந்த வட்ட இறால்
செழுமுகிலின் கருநிலவு!
திகழும் உச்சி
கூன் எழுந்த மலைத்தொடரில்
குரல்கொடுக்கும் மழைக்களிறு
கொல்லும் வேங்கை " ... ',
ஊன் எழுந்த பிறப்பொக்கும்!
ஒவ்வாத சிறப்பென்றே
உணரு வோமே! ......................1.

முல்லை : -
புரிமுற்றி நீண்டிருக்கும்
புதுக்கயிறு பொற்கொடிகள்
பூத்துத் தாவி
உரிமுற்றிக் கவைக்கிளைகள்
உயர்ந்திருக்கும் மரமேறும்
ஒளிசேர் முல்லை

வரிமுற்றிக் காண்குயிலும்
வண் புறவும் பசுங்கிளியும்
வாய்த்த மூச்சு
சரிமுற்றி இருந்தாலும்
தகுசெயலின் சிறப்பென்றாய்ச்
சாற்றப் போமோ? ..................... 2

மருதம் :
கரைதேக்கி வனர்தந்த
கார்தேக்கி மதகிடையில்
கால்கள் தேக்கி
நுரைதேக்கி வருநீரால்
நுகம்தேக்கி வயலினிலே
நுணலை தாவ
வரைதேக்கி நீள்கரும்பு
மணிச்செஞ்நெல்
வளர்கின்ற வாழ்க்கை ஒக்கும்!
உரைதேக்கிப் பயனளிக்கும்
ஒப்புயர்வில் ஒவ்வொன்றின் .
உயர்வு வேறே! ..................... 3

நெய்தல் :
நெடுவான நிறம்பெற்று
நீளலைகள் கரைமோத
நீண்ட தாழை
மடுவான நீள்கழியின்
வயல்பூக்கும் வெள்ளுப்பும்
வளரும் மினும்
தொடுவான நெய்தலிலே
தோன்றினவே! பிறப்பொக்கும்!
தூய நன்மை
படுவான உலகத்தில்
பயனளிக்கும் நிலைவேறு;
பண்பும் வேறே! ...................... 4

பாலை :
சீர்பழுத்த காதலியின்
சிலம்பொலியை அல்லுபகல்
சிந்தை எண்ணி
நீர்பழுத்த குளக்கரையில்
நின்றிருந்தே உறவாடி
நிலைத்த இன்பப்
போர்பழுத்த குழந்தைகளின்
பிறப்பொக்கும்! சிறப்பொவ்வா
பிறப்பின் மேன்மை
ஊர்பழுத்த சிறப்பன்றி
ஊன் பழுத்த சிறப்பென்றே,
உள்ளு வாரோ? ...................... 5

மலையிடயில் பிறந்த உயிர்
மக்களினம் செடகொடிகள்
மரங்கள் யாவும்
அலையிடையில் பிறந்தனவும்
அடர்வான நீள்விசும்பில்
அமைந்த யாவும்
நிலையிடையில் பிறப்போக்கும்
நீளசிறப்பில் ஒவ்வாதாம்
நெடுநாள் உண்மை!
தலையிடையில் மனித இனம்
தம்செயலின் சிறப்பின்றித்
தழைத்தி டாதே! ..................6

கடல்சூழந்த உலகத்தில்
கல்தோன்றி மண்தோன்றாக்
காலம் தொட்டே
உடல்சூழ்ந்த மனித இனம்
உயிர்சூழ்ந்த பிறப்பொக்கும்!
உண்மை! உண்மை!
அடல்சூழ்ந்த வெற்றியினை
அடைந்தோர்கள் பலருண்டாம்
ஆனால் என்றும்
மடல்சூழ்ந்த மண்ணுலகில்
மாப்புகழை அழியாமல்
வளர்த்தார் வேறே! .................. 7

மொழிவகுத்தோர் முன்னோர்கள்
மூளுகின்ற ஒலியெல்லாம்
முறையே செய்து
வழிவகுத்தார்; ஒலிக்கேற்ற
வரிவடிவை அமைத்திட்டார்
மக்கள்; ஆனால்
பழிவகுத்தர் சில்லோர்கள்
பண்பில்லாக் கீழ் மக்கள்;
படைப்பில் ஒன்றே!
விழிவகுத்தார் துறைதோறும்
மேன்மைபெறு வாழ்விற்கே
மேலோர் ஆமே! .................. 8

பிறப்பினிலே சாதிபல
பிறப்பித்து வாழ்ந்தாலும்
பிறந்து பின்னர்
இறப்பினிலே வீழாமல்
எவரிருந்தார் எந்நாட்டில்
என்று கேட்டால்
சிறப்பினிலே வாழ்கின்றார்
செத்தாலும்; அஃதில்லார்,
சீர்த்தி என்னாம்?
மறப்பினிலே வாழாமல்
வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும்
வழிகாண் போமே! .....................9

பள்ளத்துள் நீர்நிலைக்கும்
பாருலகில் மனிதரெனப்
பல்லோர் கண்டோம்
உள்ளத்துள் நிலைத்திருப்போர்
ஒரிருவர் அன்றிமண்ணில்
உண்டோ? சொல்வீர்!
கள்ளத்துள் தூயநெறிக்
கருத்தேற நன் மரந்தைக்
கவியால் தந்த
வள்ளத்துள் தேன் பாய்ச்சும்
வள்ளுவனார் வாழ்கவென
வாழ்த்து வோமே! ...................... 10

"முதனான்கும் காயாகிப் பின்னவைமா தேமாவாய் முடியு மன்றே என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கேற்ப அமையும் முற்றெதுகை மோனைகளுடன் சிறந்த அறுசீர்க் நெடில் ஆசிரிய விருத்தம்.
----------------

நினைத்துப் பார்க்கின்...
கவிஞரேறு வாணிதாசன்


1915 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 22 ஆம் நாள் புதுவையை அடுத்த வில்லவ நல்லூரில் (வில்லியனுர்) திருக்காமுவுக்கும் துளசியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தேன் இன்று கவிஞரேறு, பாவலர் மணி, பாவலர் மன்னன், புதுமைக் கவிஞர் வாணிதாசன் என்கின்ற பாராட்டுப் பெயர்களைப் பெற்று நான் நடமாடுகின்றேன்.

என் பெற்றோர்கள் எனக்கிட்ட பெயர் அரங்கசாமி; அழைத்த பெயர் எத்திராசன். என் ஏழாவது வயதில் என் துணைக்கு ஒரு பெண் மகவை ஈன்று என் அன்னை என்னை விட்டு மறைந்தார்கள். தந்தையை ஈன்ற அம்மாயி என்ற என் பாட்டியால் செல்லமாக வளர்க்கப்பட்டேன். அந்நிகழ்ச்சி எனது கீழ்க்கண்ட பாடலால் விளங்கும்.

என் அன்னை சிற்றுாராள்! எழுதாத பாடல்
இல்லறத்தின் வழிகாட்டி! புகழ்ச்சியில்லை! உண்மை!
மின்னலிடைத் தேயாத வெண்மதியம்! நீங்கள்
விரும்புகின்ற என் பாட்டின் ஆதியவள். அந்தத்

தென்னவளைத் தீந்தமிழை என்னுயிரை அன்பைச்
சிறுவயதில் நானிழந்தேன்! ஆனாலும் அந்த
முன்னவர்கள் தீந்தமிழை மறக்கவுமா கூடும்?
முழுநேரம் அவள்கனவே! கனவும் ஒரு கானல்!

என்தந்தை என்தந்தை என்தந்தை என்றே
எழுதுகின்ற வேளையிலும் எண்ணுகின்ற போழ்தும்
தென்னவர்கள் தமிழ்காத்த சிறுத்தையின் மக்கள்
தெரிகின்றார்! ஆனாலும் என்தந்தை போல

அந்நாளில் இருந்தாரோ என்கின்ற அய்யம்
அகத்திலெழும்; அவர்பேச்சோ என்காதில் கேட்கும்!
எந்நாளும் என்ளருகில் ஏதேதோ பேசி -
இருப்பதைப்போல் களாக்காண்பேன் கனவும் ஒரு கானல்!

இளவளதில் தாயற்றுத் தத்தளித்த போழ்து .
யார்யாரோ எனைத்துக்கிச் சிரிப்பூட்டப் பார்த்தார்!
தளதளத்த என்பாட்டி 'அம்மாயி' என்றன் .
தனிச்சொத்து நானவளின் தணியாத காதல்!

உளத்தினிலே குடியேறிப் போன அவள்காட்சி
உயிர்பிரியும் வேளையிலும் நான்மறக்க மாட்டேன்!
வளர்த்த அவள் எனைப்பிரிந்தாள்! அவளன்புச் சாயல்
மாறாத பெருங்கனவு கனவும் ஒரு கானல்:

இளமைக் காலம்

என் தந்தை பிரெஞ்சு அரசாங்க அலுவலர்; அவர் ஒற்றை மாட்டு வண்டியிலேயே தம் அலுவலுக்குச் செல்வார்; அடம் பிடித்து அவரோடு வண்டியிலே செல்வேன்; அவர் போகும்போது வரும்போதும் எனக்கு உறக்கம் வரும் வரை கதைகள் பல சொல்வார். அவரோர் திருமாலன்பர். அவர் ஆண்டாள் திருப்பாவைப் பாடல் வரிகளில் ஒரு சிலவற்றை எனக்குச் சொல்லிக் கொடுத்த துண்டு.

என் அன்னையின் மறைவுக்குப் பின் அய்ந்தாண்டுகள் கழித்து என் அன்னையின் நெருங்கிய உறவுப் பெண்ணை என் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். என் சிற்றன்னை பெயர் செல்லம்மாள். நான் முதன்முதல் எழுத்தறிவிக்கும் சடங்கோடு ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நினைத்துப் பார்க்கின் அது ஒரு பசுமையான நிகழ்ச்சி. திண்ணைப் பள்ளிக்கூடம் போவதாகப் போக்குக் காட்டித் தெருக்கோடியில் உள்ள சிறு கொட்டகையில் ஒளிந்து கொள்வேன்.

ஆண்டுதோறும் காமனுக்கு விழா எடுப்பதற்காக ஊரார்கள் சிறு கொட்டகை கட்டி அதன் முன் போய்க் கரும்பு, வாழை முதலியன நட்டு நவதானியம் வித்தி வழிபடுவார்கள். இன்றும் இந்நிகழ்ச்சிகள் சிற்றுார்களில் நடைபெறுதலைக் காணலாம். அந்தக் கொட்டகையே என் திண்ணைப் பள்ளிக்குப் பதில் பல முறை புகலிடம் தந்ததுண்டு. அதற்காக நான் எந்தத் தண்டனையும் அடைந்ததாக நினைவில்லை. திண்ணைப்பள்ளி ஆசிரியர் நான் தாயற்ற பிள்ளை என்பதற்காக என்னை மன்னித் திருக்கக் கூடும்.

தாயற்ற காரணத்தாலோ தந்தையின் சிறப்பாக என் பாட்டியின் அன்பாலோ நான் சிறு வய்தில் விடாப்பிடிக் கண்டனாகவே இருந்தேன். என் சிற்றன்னை செல்லம்மாள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள். அவர்கள் நான் எந்தத் தவறு செய்தாலும் மறைத்து விடுவார்களே தவிர மனங்குமுற மாட்டார்கள். மாற்றாந்தாய்க்கு அவர்கள் ஒரு விதிவிலக்கு.

கல்வி நிலை

அந்தநாள் அரசாண்ட பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை எட்டுக் கொம்யூன்காளாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு கொம்யூனிலும் சென்ட்ரல் ஸ்கூல் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அதில் தொடக்க முதல் இறுதி வரை தமிழும் பிரெஞ்சு மொழியுமே கற்பித்து வந்தார்கள்.

நான் உருண்டோடும் கல்லைப்போல் வில்லியனுர், பாகூர், புதுவை ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் மாறி மாறிப் படித்துக் கொண்டிருந்தேன். புதுவையில் நான் நான்காம் வகுப்புப் படிக்கும் போது பாவேந்தர் தமிழ் வகுப்பு நடத்தி வந்தார்.

நான் வில்லியனுரில்தான் நிலைத்துப் படிக்கத் தொடங்கினேன். அங்கே தலைமையாசிரியராக இருந்தவர் சி.சு. கிருஷ்ணன் அவர்களாவர். அவர் தமிழ்ப் பற்றும் பிரெஞ்சுமொழி வளமும் நிறைந்தவர். எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை ஆகியோர் என் வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார்கள்.

புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனால் என்னுள் இடப்பட்ட தமிழ் வித்து வில்லியனுர் தமிழாசிரியர்களால் செடியாக மாறியது. தலைமையாசிரியர் கிருஷ்ணனால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்டது. அது முதல் எனது தமிழுணர்வு மேலோங்கத் தொடங்கியது. வகுப்புகளை மேற்பார்வையிட வரும் தலைமையாசிரியர் எங்கள் செய்யுள் வகுப்பில் முதல் இரண்டடியைச் சொல்லிப் பின்னிரண்டடியைக் கேட்பார்; நானே முதலில் சொல்ல எழுவேன். "ஏய் முந்திரிக் கொட்டை உட்கார்" என்பார் தலைமையாசிரியர். மற்ற மாணவரிடமிருந்து பதில் வராத பின்னரே என்னைக் கூறச்சொல்வார். முழுச்செய்யுளையும் பிழையறப் பாடுவேன். தமிழாசிரியரும் தலைமையாசிரியரும் என்னைப் பாராட்டுவார்கள். அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் விம்முகிறது.

அற்றை நாளில், E.S.I.C.யைப் போன்று செர்த்திபிகா என்ற தேர்வு நடைபெறுவதுண்டு. அதில் குறிப்பிட்ட வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்வுக்கு அனுப்புவர். வெவ்வேறு ஆசிரியர்கள் கண்காணிப்பில் புதுவையில் நடைபெறும் அத்தேர்வில் மொழிப் பாடம், கணக்கு , கட்டுரை, செய்யுள், இலக்கணம், சொல்வதெழுதுதல் ஆகியன எழுத்தாலும் வாய்மொழியாலும் இடம்பெறும். இதில் வெற்றி பெற்றோர்க்குச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். இந்தப் பொதுத் தேர்வெழுத நான் குறிப்பிட்ட வகுப்பிற்கும் கீழ் வகுப்பிலிருந்தே செல்ல அனுமதிக்கப் பட்டேன். ஆசிரியர்கட்கு என்மீது அவ்வளவு நம்பிக்கை. *1928இல் அத்தேர்வில் முதலாவதாக வெற்றியும் பெற்றேன்.

கீழ் வகுப்பிலிருந்தே நான் ஒருவன் மட்டும் தேர்ச்சி பெற்றதனால் என்பாட்டி, தந்தை, ஆசிரியர்கள் யாவர்க்கும் பெரு மகிழ்ச்சி. மாணவர் முதல் யாவர்க்கும் இனிப்பு வழங்கினேன்.

விடுமுறை நாட்களில் வில்லியனுர் கோவிலில் உள்ள திருக்குளமும் தெற்கே ஓடும் சங்கராபரணி ஆறும் ஆஎன்னால் என்னென்ன தொல்லைகள் பட்டனவோ? அவற்றை நினைத்துப் பார்க்கின் வெட்கமும் மகிழ்ச்சியும் விரிவான் போல் தோன்றுகிறது. அது அந்நாள் இளமைத் துடுக்கின் இனிய விருந்து.

அடுத்த நான்கு ஆண்டும் தொடர்ந்து படித்து வந்தேன். துடுக்குத்தனம் மிகுதியாக இருந்தும் படிப்பில் மட்டும் என் ஆசை வளர்ந்து கொண்டே வந்தது. காரணம் அடுத்தத் தேர்வு முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழிப் ஆாடங்கள். கணக்கு, கட்டுரை, சொல்வதெழுதல், இலக்கணம், இலக்கியம், விஞ்ஞானம் முதலிய பாடங்களைப் பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும்.

அப்பொழுது என் வகுப்பிற்குத் தனித்தனியே பிரெஞ்சு மொழியாசிரியர்கள் வருவார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் சிமோனேல். அவர் பாரிஸ் சென்று படித்த இலக்கியப் பட்டதாரி. என் வகுப்பிற்கு அவரே பிரெஞ்சு இலக்கியப் பாடங்கள் நடத்தி வந்தார். அவர் நடத்தும் பாடம் இனிமையாக இருக்கும். அவர் பிரெஞ்சுச்செய்யுளை விளக்கும் முறையைக் கேட்டுக் கேட்டுப் பிரெஞ்சுக் கவிதைகளின் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு வளர்ந்தது. அவர் அடிக்கடி 'உன் மண்டையைப். பார்த்தால் கவிஞர் Edmon Roskan சாயல் போலத் தோன்றுகிறது" என்பார்.

அவர் இன்று இல்லையென்றாலும் அவர் சொன்ன அந்தச் சொற்கள் என் காதில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நினைத்துப் பார்க்கின் அன்று நான் கவிஞனாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் தமிழக் கவிதைகள் மேலும் பிரெஞ்சுக் கவிதைகள் மேலும் எனக்கு ஈடு இணையற்றதொரு பிடிப்பு உண்டாகி இருந்தது. - 1932ம் ஆண்டு Certificate Etude primoure Elimantaire Francaise என்ற பிரெஞ்சுத்தேர்வில் வெற்றி பெற்றேன். மீண்டும் புதுவையில் சென்றுதான் படிக்க வேண்டும். அவ்வாறே புதுவை கல்வே கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

என் சிறு வயது முதலே மரக்கறி உணவென்றால் எனக்கு ஒரே வெறுப்பு. என் பாட்டியால் புலால் உணவு ஊட்டியே வளர்க்கப்பட்டவன் நான். மாதம் ரூபாய் 10க்கு எனக்கு உணவளிக்கு மாறு புதுவை கிருஷ்ணன் நாயர் மிலிட்டரி ஓட்டலில் என் தந்தை எனக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கோ ஊதியம் மாதம் 15 ரூபாய் தான். அந்த நிலையில் என்னைக் கல்லூரியில் படிக்க வைக்க அவர் என்னென்ன தொல்லைகள் பட்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கின் மிகுந்த வேதனை அடைகிறேன். அவர் தம் கடமை உணர்வை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

என் தந்தைக்குத் தெரிந்த ரொட்டிக்கடைக்காரர் வீட்டு மாடியில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடாகி இருந்தது. அந்த இடம் எனக்குப் பிடிபடவில்லை. இரண்டொரு மாதங்களில் வேறொரு உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தேன். அங்கும் நான் நிலையாக இருக்க முடியவில்லை. கடைசியாக உணவு விடுதிக்கு அண்மையில் இருந்த திரு முடி நடராச செட்டியார் வீட்டு மேல் மாடியில் ஓர் அறையில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்திருந்தார் என் தந்தை.

அந்நாளில் வெளியூரில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கட்கு இலவசமாகப் புகலிடம் தரும் அன்புள்ளம் உடையவர் திரு முடி நடராச செட்டியார். பலருக்கு உணவும் கொடுத்துப் படிக்க வாய்ப்பளித்த வள்ளல் அவர்.

திரு முடி நடராச செட்டியாருக்குப் பிள்ளைகள் மூவர். மூவரும் சிறுவர்கள்; குறும்பு நிறைந்த விளையாட்டுப் பிள்ளைகள். தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நினைத்துப் பார்க்கின் என் இளவயதுக் குறும்பை விட அவர்கள் குறும்பு மிக மிகக் குறைவானதே. இன்றும் என் பிரெஞ்சு அகராதியில் அவர்கள் ஏடுகளைக் கிழித்திருப்பதைக் காணலாம். அதனைப் பொன்னே போல் போற்றி வருகிறேன். அவர்கள் மூவரையும் தூக்கித் தூக்கி விளையாடிய நினைவு என்னுள் பசுமையாக நிலைத்திருக்கின்றது. தந்தையைப் போலவே திருமுடி சேதுராமன் அவர்களும் தமிழ்ப் பற்ற்ோடும் பண்பாட்டோடும் பிறர்க்குதவி வாழும் பெற்றியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் பேருவகையடைகிறது.

நான் கல்வே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு என் பிறந்த ஊராகிய வில்லியனுளில் இருந்து செட்டியார் பிள்ளையாண்டான் ஒரு வரும் படித்துக் கொண்டிருந்தார். பெயர் நினைவில் வரவில்லை.

எங்களுக்கென்றே இரண்டு மேசைகள் நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மாடியில் சிறு சிறு தொட்டிகளில் இரோசாச் செடிகள் பூத்துக் குலுங்கும். அப்பூக்களை இட்டு வீட்டில் கடவுளை வணங்கிய பின்னரே செட்டியார் காலை உணவருந்துவார்.

மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்; அதில் தான் இரவு உணவுக்குப் பின் திருமுடி நடராச செட்டியார் படுக்க வருவார். எங்கள் அறையை நோட்டமிடுவார். என்னோடு என் ஊர்க்காரர் ஒருவரும் தங்கியிருந்தார். ஆனால் அவர் பயின்ற கல்விக் கூடத்தில் முழுக்க முழுக்கப் பிரெஞ்சு வகுப்புகளே நடக்கும். அது Collage colonial ஆகும். இரவில் நாங்கள் படிக்கவில்லை யென்றால் கடுமையான அன்புக் கட்டளைகள் பிறப்பிப்பார். அறிவுரைகள் தருவார். எனக்கு அவர்மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. தொடர்ந்து கல்வே கல்லூரியில் பயின்றேன்.

கல்லூரியில் பிரெஞ்சு, தமிழ் வகுப்புகள் தவிர ஆங்கில வகுப்புகளும் நடக்கும். ஆங்கிலப் பாடவேளையில் வகுப்பை விட்டு மறைந்து விடுவேன். ஆங்கில வகுப்பை அசட்டை செய்ததை இன்று நினைத்து வேதனைப் படுகின்றேன். தமிழ், பிரெஞ்சு வகுப்புகள் ஒன்றைக்கூட நான் விட்டதில்லை.

1933 ஆம் ஆண்டின் இறுதியில் வில்லியனூரில் என்னுடன் படித்த முஸ்லீம் நண்பர் மஜீது தொடர்ந்து படிக்க வசதியின்மையால் வீட்டிலிருந்தே தமிழாசிரியர் தேர்வுக்குப் படிக்க எண்ணி தமிழ்ப்பாட நூல்கள் வாங்கினார். எனக்கும் அந்த நூல்களே துணைப்பாடம் ஆகையால் எனது கல்லூரித் தமிழ் அறிவை அந்த முஸ்லீம் நண்பர்க்கு அவ்வப்போது பகிர்ந்தளிப்பது வழக்கம். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உண்டாயிற்று. வியாழன், ஞாயிறு ஆகிய வாரத்தின் இரண்டு விடுமுறை நாட்களிலும் இது நிகழும்.

நினைத்துப் பார்க்கின் சாதிமத வேறுபாடுகள் வேரூன்றி யிருந்த அந்தக் காலத்திலும் என் தந்தையார் எனக்கு ஆத்தீகப் பற்றை ஊட்டியிருந்த போதிலும் எனக்குச் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய விருப்பு வெறுப்புகள் கிடையாது. எல்லா மத மாணவர்களும் என்னுடன் பயின்ற காரணத்தால் அந்தப் பொது நோக்கு ஏற்பட்டிருக்கலாம். நான் முஸ்லீம் கிருத்துவ மாணவத் தோழர்களோடு நெருங்கிப் பழகி அவர்கள் வீடுகளில் உணவும் உண்டிருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் என் தந்தைக்குத் தெரியாது. நான் தாயற்ற பிள்ளை என்பதாலும் கண்டித்தால் கோபித்துக் கொண்டு உணவுண்ண மாட்டேன் என்பதாலும் என் தந்தை தெரிந்தும் தெரியாதவர் போன்றே நடந்து கொள்வார்.

நண்பர் மஜீத் வறுமையின் காரணமாக அஞ்சல் பட்டுவாடா செய்யும் தொழிலை ஆங்கிலேயர் ஆட்சிக்குட் பட்டிருந்த சென்னை மாநிலம் விக்கிர வாண்டியில் ஏற்றார்.

அவர் படித்து வந்த அந்தத் தேர்வுக்கு இரண்டு வாரத்திற்குள் பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். எனக்கும் அத்தேர்வெழுத விருப்பம் உண்டாயிற்று. அத்தேர்வில் தமிழோடு பிரெஞ்சும் சரிபாதி கலந்திருக்கும். என் விருப்பத்தை என் தந்தையாரிடம் கூறினேன். அவர் கண்டிப்பாக மறுத்து விட்டார். மனச்சோர்வோடு புதுவைக்குத் திரும்பினேன்.

எனக்குப் புகலிடம் அளித்த திருமுடி நடராச செட்டி யார் என் மனநிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் என் மீது மிகுந்த பற்றுடையவர்; தன் பிள்ளைகளில் ஒருவனாக என்னை பெண்ணிப் பாதுகாத்தவர். மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது பரிவாக என்னை அழைத்து, நான் நேற்றிலிருந்து கவனிக்கிறேன் உன் குறும்புத்தனமும் குறுநகையும் காணவில்லையே? என்னடா உனக்குக் கவலை? உன் தந்தைக்கும் உனக்கும் தகர றா?' என்று பரிவாகக் கேட்டார். நான் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேள்.

அவன் இரவு மாடிக்குப் படுக்க வரும்போது வழக்கம்போல் என் அறையை நோட்டம் விட்டார். நான் படிக்காமல் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கட்டிலில் படுத்துக் கொண்டே என்னை அழைத்தார். 'என்னடா, நான் இரண்டு நாட்களாகக் கேட்கிறேன்: ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். என்னிடம் சொல்லக் கூடாதா? அவ்வளவு பெரிய இரகசியமோ என்றார்."

அவரது பரிவான சொற்களின் முன் என் நெஞ்சம் நெகிழ்ந்தது. யாவற்றையும் அவருக்கு விளக்கிக் கூறினேன். எனக்குள்ள பிரெஞ்சு மொழியறிவு இத் தேர்வுக்கு அதிகமானதே. ஆனால் தமிழ் மொழியறிவுக்குச் சிறிது முயன்றால் போதும் என்றேன்.

'இதற்காகவா கவலைப்படுகிறாய்; போய்ப் படு; பணம் நான் தருகிறேன்; நாளைக்கே அத்தேர்வுக்குரிய சான்றிதழ் களைத் தயார் செய்' என்றார். நினைத்துப் பார்க்கின் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென்பேன்.

பணம் கட்டும்போது சிறு சிக்கல் ஏற்பட்டது. என் தந்தை நகர மன்றத் தலைவர் முன் கையொப்பமிட்டுச் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும். ஆனால் தந்தையிடம் எப்படிக் கூறுவது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். இந்நிலையில் அதற்கும் அவரே வழி செய்தார். என்னைப் பாதுகாப்பவர் என்ற முறையில் கையொப்பமிட்டுச் சான்றிதழ் வாங்கித் தந்தார். நினைத்துப் பார்க்கின் அப்பெருந்தகையின் பேரன்பிற்கு எனதிரு கைக்கூப்பின்றி அவருக்கு நான் எதை ஈடுசெய்ய முடியும்? தேர்வுக்குப் பணம் கட்டி முடித்தேன். அடுத்து, தமிழறிவை வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பெண்ணி நடந்தேன்.

பாவேந்தர் மாணவர்கட்கு இலவசமாக இரவில் தன் விட்டில் தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். நானும் அதில் பங்குகொண்டு முறையாகத் தமிழ் பயின்று வந்தேன். பாவேந்தர் கற்பிக்கும் முறையே தனிச் சிறப்புடையதாகும். நினைத்துப் பார்க்கின் அவர் கற்பித்த முறையும் கருத்தளித்த முறையும் என்னைத் தமிழில் ஈடுபடுத்திக் கொள்ளும் திருப்பு முனையாக அமைந்தது என்று இன்றும் பெருமைப்படுகிறேன்.

முறையே இலக்கண இலக்கியங்களை அவரிடம் நன்கு பயின்றதன் காரணமாக 1934 ஆம் ஆண்டு எழுதிய B.I. தேர்வில் வெற்றி பெற்றேன். இதற்காகப் பெரிதும் மகிழ்வடைந்தவர்கள் இருவர். ஒருவர் திரு முடி நடராச செட்டியார். மற்றொருவர் எனதா சான் கவியரசர் பாரதிதாசன். இவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது. நான் மீண்டும் பிரெஞ்சுப் பட்டதாரியாவதற்கு அக்கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கேனோ தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு பிரெஞ்சு மொழியில் ஏற்படவில்லை.

வாழ்வும் பணியும்

1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் தங்கை ஆண்டாளின் நன்மைக்காகவும் சிற்றன்னை செல்லம்மாள் அவர்களின் விடாப்பிடித் துண்டுதலுக்கும் ஆட்பட்டு ஆதிலட்சுமி என்ற உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். என் தங்கைக்கும் எனக்கும் ஒரே நாளில் சேலியமேட்டில் திருமணம் நடந்தது.

என் மனைவி சிற்றுார் எழுதத் தெரியாதாள்
பொன்னைப் பொருளை அறிவாள்! புகழறியாள்
அன்னாளின் ஊக்கம் எனக்கூக்கம் ஆகிடுமோ
பின்னாள் செயலெதுவோ பேச்செடுக்க வேண்டாம்!

இரண்டாண்டுகள் வேலை கிடைக்காமல் தந்தையின் உழைப்பில் உண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். அந்நாளில் எதை மறந்தாலும் தமிழ் இலக்கண இலக்கியத் தொடர்பை மறவாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். பாரதிதாசன் பாடல் என்றால் எனக்கு உயிர். அவர் கவிதை நூல்கள் ஒவ்வொன்றையும் பன்முறை படித்து மகிழ்வேன். ' '.

1937 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15ஆம் தேதி தற்காலிகத் தமிழாசிரியர் பதவியை முன்னாள் புதுவை நகரமன்றத் தலைவர் மறைந்த இரத்தினவேலுப் பிள்ளை எனக்கு வாங்கிக் தந்தார். நான் முதலில் ஆசிரியர் பணியைத் தொடங்கியது உழவர் கரை பேட்டில் ஆகும். அப்பொழுது எனக்கு ஊதியம் 25 ரூபாய். அன்றைய விலைவாசியில் அதிலேயே மாதம் ரூபாய் பத்து மிச்சம் பிடிக்கலாம். நினைத்துப் பார்க்கி ன் அன்றைய விலைகளுக்கு இன்றைய விலைகள் தாறுமாறாய் ஏறியுள்ளன.

ஒன்பது மாதத்திற்குப் பின் அதாவது 24-9-1937 இல் நுழைவுத் தேர்வு (Concours) வந்தது. அந்நாட்களில் இன்று போன்று பத்துத் திங்கள் B1. பயிற்சியோ இரண்டாண்டுகள் ஆசிரியப் பயிற்சியோ இல்லை. இரண்டாண்டுகள் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி முடிப்பதோடு எழுத்து, வாய்மொழித் தேர்வு மற்றும் அரை நாள் வகுப்பு மேற்பார்வைக்குப் பின்னரே B.T க்குச் சமமான C.A.P. தேர்வில் வெற்றிபெற வேண்டும். அதன் பின்னரே ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்குத் துணை புரியும் தமிழ் நூல்களே கிடையாது. பிரெஞ்சு நூல்களைக் கற்றே தமிழில் விடை எழுத வேண்டும்.

இந்த C.A.P. ஆசிரியப் பயிற்சித் தேர்வில் 1940ஆம் ஆண்டு வெற்றி பெற்றேன். பல ஊர்களுக்கு மாற்றலாகி என் ஆசிரியப் பணி நடந்து கொண்டே இருந்தது. இந்த நாட்களில்தான் கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வும் தமிழ் இலக்கியங்களைப் பயில வேண்டும் என்ற துடிப்பும் ஏற்பட்டது.

எனக்கென்னவோ பாரதிதாசன் நூல்களில்தான் தனிவெறி. அவரது நூல்களைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்வேன்.அவரைப்போல எளிய நடையில் இனிய பாடல்கள் எழுத வேண்டுமென்ற உணர்வால் உந்தப்படுவேன். நினைத்துப் பார்க்கின் அந்நாட்களெல்லாம் பசுமையான நாட்களாகவே எனக்குத் தோன்றுகின்றன.

1942 ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை புதுவையை அடுத்த இரெட்டியார் பாளையத்தில் ஆசிரியப்பணி புரிந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது மதுரையிலிருந்து கோ.தா. சண்முக சுந்தரம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஆதித்தனாரால் நடத்தப்பட்ட 'தமிழன்' என்ற திங்களிதழ் வெளி வந்து கொண்டிருந்தது. அதில் பாரதியார் பிறந்த நாளுக்காக - 'பாரதி நாள் இன்றடா பாட்டிசைத்து ஆடடா" என்ற பாடலை "பாரதி நாள்” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அப்பாடலே நான் எழுதிய முதற் பாடலாகும். என் விருப்பப்படி பாடல் வெளிவந்தது. ஆசிரியரிடமிருந்து பரிசு ரூ.10-ம் பாராட்டுக் கடிதமும் வந்தன. என் புகைப்படமும் வாழ்க்கைக் குறிப்பும் கேட்டு எழுதியிருந்தார் ஆசிரியர். மறுவெளியீட்டில் என் புகைப் படமும் வாழ்க்கைக் குறிப்பும் வந்தது. அதோடு இவர் பாடல் எளிமையும் இனிமையும் மிகுந்தன; ஏதோ ஓர் இலட்சிய வெறியில் பாடுகிறார்; இவர்க்கு நல்ல எதிர் காலம் உள்ளது" என்ற தமிழன் ஆசிரியரின் பாராட்டுரையும் வந்தது.

முதற் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு என்னை மேலும் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதும் துணிவைத் தந்தது. ரங்கசாமி என்ற என் இயற் பெயரின் முதலெழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து 'ரமி' என்ற புனை பெயரில் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதலானேன். தமிழன்' ஆசிரியருக்கு ரமி என்ற புனை பெயர் பிடிக்காமற் போய் 'வாணிதாசன் என்ற புனைபெயரில் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்.

பாரதிதாசன், வாணிதாசன் பல முறை இச்சொற்களைச் சொல்லிப் பார்த்தேன். ஆசிரியர் பெயர் பாரதிதாசன்; மாணவர் பெயர் வாணிதாசன்; பாரதியும் வாணியும் கலை மகளைக் குறிக்கும் சொற்கள் தாமே, வாணிதாசன் என்ற புனைபெயரை ஏற்றுக் கொண்டு 'தமிழன்' ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றுவதென முடிவு செய்தேன். அன்று முதல் வாணிதாசன் என்ற பெயரே எனக்கு நிலைத்துவிட்டது.

எனது பாடல்களைத் தமிழன்’ பத்திரிகைக்குப் பிறகு 'பொன்னி', 'காதல்", முதலான பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. திராவிட நாடு, முத்தாரம், முரசொலி, மன்றம், குயில் போன்ற பல ஏடுகளில் எழுதியுள்ளேன். நான் அதிகமாக எழுதியது புதுக்கோட்டை பொன்னி ஏட்டில் என்பதை என் வினால் மறக்க முடியாது. பாராட்டுக் கடிதங்கள், ஊக்கக் கடிதங்கள் பலரிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்தன. நினைத்துப் பார்க்கின் அன்றைய மனப்போக்கு வேறு. அன்று கவிஞனைப் பாராட்டினார்கள், பரிசளித்தார்கள். இன்றோ கவிதை எழுதக் கேட்டு மலரை அழகுபடுத்தி விற்கின்றனர். கவிஞனைக் கடைக்கண்ணால் கூடப் பார்ப்பது கிடையாது.

நான் புதுவைக்கு அண்மையில் பணிபுரிந்த காரணத்தால் கவியரசரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. சீர்திருத்த எண்ணங்கள் அவர் தொடர்பால் ஏற்பட்டுத் தழைத்தன. அவர் நடத்தி வைக்கின்ற தமிழ்த் திருமணங்கட்கெல்லாம் நானும் அழைத்துச் செல்லப்படுவேன். திருமணமானவன் என்ற காரணத்தால் நானும் மணமக்களை வாழ்த்துவேன். என் தமிழறிவைக் கேட்டுப் பாவேந்தர் பூரித்துப் போவார். திருமண விருந்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளச் சொல்வார். என்மீது அவருக்கு அவ்வளவு பரிவு உண்டு. அவர் நடத்திய திருமணங்களில் நான் கலந்து கொள்ளாததே கிடையாது. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். நான் எழுதும் பாடல்களைக் காட்டுவேன். சில திருத்தங்கள் செய்து தருவார். அவர் திருத்திய படிகளை இன்றும் நான் உயிரினும் மேலாகப் போற்றி வருகிறேன்.

பாவேந்தர் ஒருமுறை "உனக்கு எளிய முறையில் எழுத வருகிறது. ஆனால் நடை படியவில்லை. என் கவிதைகளைப் படித்து வா என்று கூறினார். அன்று அவர் கூறியது இன்றும் எவ்வளவோ பயனுடையதாகவே தெரிகிறது. மறைந்த பாவேந்தர் என்னிடம் நேரில் சொல்லாமல் மற்றவரிடம் என்னைப் பலப்பல பாராட்டி எனக்கு ஆர்வமூட்டி வந்தார்.

ஒன்றரை ஆண்டுக்குப்பின் அதவாது 1944ஆம் ஆண்டு காரைக்காலுக்கு மாற்றப்பட்டேன். என்னோடு ஆசிரியர் சிவ. கண்ணப்பா அவர்களும் மாற்றப்பட்டார். இங்கு ஒன்றை நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். அவர் தந்தை சிவகுருநாதன் புதுவை இலப்போர்த் பெண்கள் பாடசாலையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பாடசாலை நூலகத்திலிருந்து சங்க கால இலக்கண இலக்கிய நூல்களை அவர் வாயிலாகப் பெற்று தமிழறிவை வளர்த்துக் கொண்டேயிருந்தேன்.

காரைக்காலில் பல இலக்கிய நிகழ்ச்சிகளில் பல தமிழறிஞர்களோடு நானும் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவேன். கற்றறிந்த அறிஞரோடு நாமும் கலந்து கொள்கிறோமே என்ற பயம் எனக்கு ஏற்பட்டதேயில்லை. துணிவோடு கலந்து கொள்வேன். இரவில் காரைத் தமிழன் பர்களும் நானும் தொல் காப்பிய அறிவைப் பகிர்ந்து கொள்வோம்.

பலர் என் சொற்பொழிவைப் பாராட்டினர். என் போல் பணிபுரிந்த தமிழாசிரியர் சிலர் இவரென்ன தமிழில் பெரிய பட்டதாரியா? எங்களைப் போல் B.I. தானே என்று குறை கூறியதுண்டு.

தமிழ்ப் பட்டதாரி வித்வானுக்குரிய தமிழறிவை நான் வளர்த்துக் கொண்டிருந்ததென்னவோ உண்மை, ஆனால் அவர்கள் கூறுவது போல் வித்துவான் பட்டம் நான் பெறவில்லையே என்ற ஏக்கம் என்னை உறுத்திக் கொண்டேயிருந்தது.

பல ஏடுகளுக்கும் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாலும் காஞ்சியிலிருந்து அறிஞர் அண்ணாவால் நடத்தப்பட்ட திராவிட நாடு இதழுக்கு எழுத வேண்டு மென்ற எண்ணம் காரைக்காலில் பணிபுரியும் போது தான் ஏற்பட்டது. "விதைக்கொரு செய்தி" என்ற தலைப்பில் நான்கு வெண்பாக்கள் எழுதி 'திராவிட நாடு இதழுக்கு அனுப்பியிருந்தேன். அன்றிருந்த நிலையில் என்பாடல் வெளியிடப்படுமோ என்னவோ என்ற அய்யமே என்னுள் இருந்தது. ஆனால் என்பாடல் உடனே திராவிட நாடு முகப்பட்டையில் வெளிவந்திருந்தது. அண்ணாவின் பாராட்டும் தொடர்ந்து எழுதுமாறு கடிதமும் வந்தன.

நினைத்துப் பார்க்கின் நான் அன்றடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தொடர்ந்து திராவிட நாடு, விடுதலை, புதுக்கோட்டையிலிருந்து வெளி வந்த பொன்னி முதலிய ஏடுகளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்.

1945 ஆம் ஆண்டு பாகூர்ப் பாடசாலைக்குக் காரைக்காலிலிருந்து மாற்றப்பட்டேன். என்னுள் தமிழ்ப் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற எண்ண மும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. தமிழாசிரியராகப் பணிபுரிந்தால் Entrance, Preliminary, Final ஆகிய தேர்வுகளை எழுதலாம் என்பதோடு கல்லூரியில் பயிலாமல் வீட்டில் பயின்றே தேர்வெழுதலாம் என்ற சலுகையும் இருந்தது. நான் ஒரே மூச்சில் இரவோடு இரவாகக் கண் விழித்து பயின்று ஆண்டிற்கு ஒரு தேர்வு என எழுதி 1948 ஆம் ஆண்டு வித்து வான் பட்டம் பெற்றேன். அன்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கட்கு ரூபாய் 10 ஊதியத்தோடு கூட்டிக் கொடுத்தும் வந்தது. பட்டதாரியானது, ரூபாய் பத்து கூடுதல் ஊதியம் பெற்றது ஆகிய இரட்டைப் பயனை அத்தேர்வில் நான் பெற்றேன்.

நான் வித்துவான் பட்டதாரி என்ற காரணத்தாலும் பிரெஞ்சு மொழி கற்றுள்ளேன் என்ற காரணத்தாலும் நான் பயின்ற கல்வே கல்லூரிக்கே 1948ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியராக மாற்றப்பட்டேன். அங்கே நான் கிட்டத்தட்ட மூன்றாண்டுக் காலம் என்னை இன்றுள்ள கவிஞன் நிலைக்கு மேம்படுத்திய பொற்காலமாகும். அந்த மூன்றாண்டுக் காலத்தில் கருத்து வேற்றுமையால் நான் பல தொல்லைகள் அடைந்தாலும் முன்னேற்றம் அடைந்ததே அதிகமென்பேன்.

பின்னர் நான் பல ஊர்களுக்கு மாற்றலாகி ஆசிரியப் பணி புரிந்தேன் என்றாலும் எங்கும் மனைவி மக்களை அழைத்துக்கொண்டு போய்க் குடும்பம் நடத்தியதில்லை. என் தந்தை அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சொந்த வில்லியனுர் வீட்டை இழந்து முடக்குவாத நோயோடு சேலியமேட்டிற்கே குடி பெயர்ந்தார்.

எனக்குத் தாயூரும் பாட்டியூரும் சேலிய மேடே ஆகும். அவ் ஆரிலேயே என் இளமைக் காலத்தைக் கழித்தேன். அங்கே நான் ஒரு குடிசை வீட்டை விலை பேசி வாங்கிக் குடும்பம் நடத்தி வந்தேன். வழக்கம் போலவே புதுவையிலுள்ள உணவு விடுதியிலேயே உண்டு பணி புரிந்து வந்தேன். விடுமுறை நாட்களில் சேலியமேடு வந்து போவேன்.

கல்லூரி ஓய்வு நேரங்களில் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் (கோபதி) நடத்தி வந்த கடையிலும் பாவேந்தர் வீட்டிலுமே பொழுதுபோக்குவேன். அந்த நாட்களெல்லாம் எனக்கு எவ்வளவோ பயனுள்ள நாட்களாக இருந்தன. நினைத்துப் பார்க்கின் அந்த நாட்கள் தான் என் தமிழறிவையும் கவிதையாக்கும் திறனையும் வளர்த்தன என்று கூறவேண்டும். அதற்குப் பெருந்துணை புரிந்தவர் என தாசான் கவியரசர் பாரதிதாசனே யாவார்.

28-5-1950 இல் கோயமுத்துரில் பெத்தாம் பாளையம் பழனிசாமி பலர் கூட்டுறவோடு முத்தமிழ் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். அந் நிகழ்ச்சியில் மறைந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், கே.ஆர்.இராமசாமி போன்றோர் கலந்து கொண்டனர். இரவில் ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெறும். கழகத் தோழர்களும் தலைவர்களும் பங்கேற்று நாடகம் நடத்தினர். ஒவ்வொரு நாடகத்திலும் அறிஞர் அண்ணா பங்கேற்று நடித்த வேடத்தை நினைத்துப் பார்க்கின் அண்ணாவின் ஒப்பனையும் (வேடப் பொருத்தம்) நடிப்பும் என் மனதில் பசுமரத்தாணி யெனப் பதிந்துவிட்டன.

மாநாட்டிற்குப் பாவேந்தர் அவர்களே தலைமை தாங்கினார்கள். அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் கவியரங்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் நடை பெறுகின்ற கவியரங்கத்தைப் போன்றதல்ல அது. அழகின் சிரிப்பு என்ற ஒரே தலைப்பை முன்கூட்டித் தந்திருந்தனர். ஒரே தலைப்பில் பல கவிஞர்களும் பாட்டெழுதிக் கொடுக்க வேண்டும். அப்பாடல்களில் ஆய்வாளர்கள் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவர். மாநாட்டு மன்றத்தில் பாடச் செய்வர். நானும் அக்கவியரங்கில் பங்கு பெற்றேன். வெள்ளிக் கிண்ணப் பரிசும் பாராட்டும் பெற்றேன்.

நினைத்து பார்க்கின் மாநாட்டுக்குச் சென்ற பாவேந்தர் அவர்கட்குத் துணையாக நான் சென்றதையும் அவரோடு ஜி.டி.நாயுடு இல்லத்தில் தங்கியிருந்ததையும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் எழுத பல ஏடுகள் போதா என எண்ணுகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் குறிப்படாமல் இருக்க இயலவில்லை. அதாவது ஜி.டி. நாயுடு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபோது எட்டயபுர அரச குடும்பத்தைச் சேர்ந்த பெருஞ்செல்வர் இருவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை அழைத்துப் போக வந்திருந்தனர். அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது பாரதியாரைப் பற்றிய பேச்சு வந்தது. பாவேந்தர் அவர்கள் பாரதியார் பாடலை பாரதியார் போலவே உணர்ச்சி மேலிடப் பாடிக் காட்டினார். நான் பாரதியாரைப் பார்த்ததில்லை. ஆனால் பாவேந்தர் பாடியபோது அவரது உணர்ச்சி மிகுந்த பாடலும் தோற்றமும் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டின.

படைப்பும் பதிப்பும்

நான் வித் துவான் தேர்வு எழுது முன்னரே பல தமிழ்க் கவிதைகளோடு பிரெஞ்சு மொழி இலக்கியங்களில் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்திருந்தேன். குறிப்பாக விக்டர் வியுகோவால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஆன்ழெல்லோ என்ற நாடகம் ‘காதல் உள்ளம்' எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பெற்று 'கலை மன்றம் இதழில் முழுவதும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அடுத்து மாப்பாசானின் சிறுகதையொன்றை, பெரிய இடத்துச் செய்தி' என்ற பெயரிலும் நெடுங்கதையொன்றை ‘வாழ்க்கை' என்ற பெயரிலும் மொழிபெயர்த்து ஏடுகளில் வெளியிட்டு வந்தேன். தொடர்ந்து சிறுகதை எழுதும் ஆசைகூட எனக்கு அப்போது எழுந்ததுண்டு. நினைத்துப் பார்க்கின் அந்தப் போக்கில் என்னை ஏனோ நான் மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொண்டிருந்தால் வளமான வாழ்வை அடைந்திருக்கலாம். கதைக்கு இருக்கின்ற ஆர்வம் கவிதைக்கு இன்று நாட்டில் இல்லை.

கலப்புத்திருமணம் செய்துகொண்டு சென்னையிலுள்ள மண்ணடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த என் உறவினர் பட்டாக்கத்தி இராமசாமி என்பவரில்லத்திலும் என் கெழுதகை நண்பர் ந.அறிவழகன் தங்கியிருந்த பாரி நிலையத்திலும் வித்துவான் தேர்வெழுதச் செல்லும் போதெல்லாம் தங்குவது வழக்கம். சென்னைத் தொடர்பால் பல அரிய நண்பர்கள் எனக்கின்றும் உள்ளனர். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் வித்துவான் ந.அறிவழகன், புலவர் தில்லை. தா.அழகுவேலனார், செந்நீர்க்குப்பம் ஆசிரியர் செங்கல் வராயன் முதலியோராவர்.

ஆசிரியர் செங்கல் வராயனோடு மாமல்லபுரம் சென்றிருந்தேன். பல்லவர்கள் சிற்பக்கலைக் களஞ்சியமான மாமல்லையைச் சுற்றிப் பார்க்கப் பார்க்கப் பல விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. பல அறை குறைச் சிற்பங்களின் காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்ற வினா என்னுள் எழுந்தது. அதன் விளைவே நான் எழுதிய 'கொடிமுல்லை' என்ற கவிதை நூலாகும்.

உழைக்கின்ற அரிசனங்கள் வாழ்கின்ற சேரி பெரும் பாலும் சிற்றுரர்களை யொட்டியே இருப்பன்தக் காணலாம். நான் சேலியமேடு என்கின்ற சிற்றுாரில் என் இளமைக் காலத்தைக் கழித்தவனாகையால் விளையாட்டாகச் சேரிக்கு அடிக்கடி போவேன். அவர்கள் வாழ்க்கை முறையைக் கண்டு பல முறை வாடியதுண்டு. நினைத்துப் பார்க்கின் இன்றுகூட அவர்கள் நிலை மேம்பாடடைந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் நிலையினை எண்ணியெண்ணி அவர்கள் நிலை உயர வேண்டுமென்ற வேட்கையால் எழுந்ததே 'தமிழச்சி' எனும் நூல்.

தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய இரு கவிதை நூல்களும் தான் வித்துவான் தேர்வு எழுதும் முன்னரே எழுதப் பட்டவையாகும். இவ்விரு நூல்களையும் வெளியிடுமாறு பல பதிப்பகங்கள் ஏறியேறி எனக்கும் என் அருமை நண்பர்களுக்கும் கால்கள் அலுத்துவிட்டன. நினைத்துப் பார்க்கின் அன்று நான் மக்களிடையே அதிக விளம்பரம் ஆகாத கவிஞன். பதிப்பகத்தார் வரவு செலவு பார்க்கின்ற பண்பாளர்கள். என் நூலை வெளியிட அவர்கள் தயங்கியதில் புதுமையில்லை.

என் நூலை வெளியிடச் செய்யும் முயற்சியில் நான் தளரவில்லை. தொடர்ந்து பதிப்பகப் படிகள் ஏறிக் கொண்டிருந்தேன். இறுதியாக நான் தொடர்ந்து எழுதி வந்த புதுக்கோட்டைப் பொன்னியின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் (இன்று இவர் மலேசியா தமிழ் நேசன் பத்திரிகையாசிரியர்) அவர்கள் உதவியால் புதுக்கோட்டைச் செந் தமிழப் பதிப்பத்தார் என் இரண்டு நூல்களையும் வெளியிட முன் வந்தனர். அவற்றுள்ளும் நான் தொடக்கத்தில் எழுதிய கொடி முல்லையை விட்டுப் பின்னர் எழுதிய தமிழச்சியை 1949 ஆம் ஆண்டு வெளியிட்டனர். நூலுக்கு நல்ல பாராட்டுதல்கள் கிடைத்ததால் 1950 ஆம் ஆண்டு கொடிமுல்லை என்ற நூலையும் வெளியிட்டனர். அவர்கள் என் நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதாக இருந்தனர். பொன்னி ஏடு புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு மாற்றப் பட்டுச் சீரழிவுற்றது.

மாப்பாசானின் சிறகதையொன்றைப் 'பெரிய இடத்துச் செய்தி என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தேன். அதை 1951 ஆம் ஆண்டு சென்னை செல்வ நிலையத்தார் நண்பர் அறிவழகன் தூண்டுதலால் வெளியிட்டுதவினர்.

அடுத்து என்னால் எழுதப்பட்ட இசைப்பாட்டு நூல் 'தொடுவானம்'. அதை வேலூர் திராவிடன் பதிப்பக உரிமையாளர் கிருஷ்ணன் வெளியிட்டுதவினார். தொடர்ந்து என் நூல்களையெல்லாம் வெளியிட இருந்தார். நினைத்துப் பார்க்கின் வறுமை அவர்களையும் தொடர்ந்து விட்டது போலும். முன் கூறிய செந்தமிழ்ப் பதிப்பகம், செல்வம் பதிப்பகம், திராவிடன் பதிப்பகம் ஆகிய மூன்றும் சீரழிந்தன.

பாவேந்தர் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த முல்லைப் பதிப்பகத்தின் பங்குதாரர் செல்லப்பச் செட்டியார் தனது உறவுத் தம்பி ந.பழனியப்பனோடு கூட்டுச் சேர்ந்து பாரி நிலையம் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை செல்லும் போதெல்லாம் பாரி நிலையத்தில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் பங்குதாரர் ந.பழனியப்பனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

பாரி நிலையத்திலிருந்து பங்குதாரர் ந.பழனியப்பன் பிரிந்து தன் சகலையோடு கூட்டுச் சேர்ந்து மலர் நிலையம் என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் 1954ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'எழிலோவியம்' என்ற நூலை மலர் நிலையம் வாயிலாக வெளியிட்டார். அந்நூலுக்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.க., சென்னைத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்த்தாத்தா மயிலை சிவமுத்து, பேராசிரியர் நாவலர் பசுமலை, சோமசுந்தர பாரதி, முத்தமிழ்க் காவல்ர் கி.ஆ.பெ. விசுவநாதன் முதலியோர் நல்ல பாராட்டுதலை வழங்கியிருந்தனர்.

எழிலோவியம் எனக்கு நல்ல புகழையும் பெயரையும் மக்களிடையே உண்டாக்கித் தந்தது. 1954ஆம் ஆண்டு மலர் நிலையம் என் கவிதைகளைத் தொகுத்து "வாணிதாசன் கவிதைகள்' என்ற நூலை வெளியிட்டது.

பாரிநிலையம் ஏற்பட்டது போல மலர் நிலையம் பிரிந்து வள்ளுவர் பண்ணை ஆயிற்று. அப்பெயரில் ந.பழனியப்பன் நூல் வெளியீடு செய்து வந்தார். அவர் "தீர்த்த யாத்திரை', 'இன்ப இலக்கியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய மூன்று நூல்களையும் 1959 இல் வெளியிட்டுதவினர். அதன்பின் அவருக்கும் எனக்கும் சிறு தகராறு காரணமாகத் தொடர்பற்று விட்டது. நினைத்துப் பார்க்கின் அந்த நாட்களெல்லாம் என் புகழ் ஓங்கிக் கொண்டிருந்த நாட்களாகும்.

திருச்சி அன்பக வெளியீட்டார் நான் பொங்கல் மலர்களுக்கு எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்களைத் திரட்டி 1959 ஆம் ஆண்டு 'பொங்கற் பரிசு” என்ற நூலை வெளியிட்டனர்.

வள்ளுவர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த தா.முரு கைய முதலியார் உறவினர் பலரோடு கூட்டுச் சேர்ந்து மனோன்மணி புத்தக நிலையத்தைச் சென்னையில் ஏற்படுத்தினார் அதிலிருந்து ‘'சிரித்த நுனா’, இரவு வரவில்லை', 'பாட்டுப் பிறக்கு மடா ஆகிய நூல்கள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தன.

"இனிக்கும் பாட்டு", "எழில் விருத்தம்", "பாட்டரங்கப் பாடல்கள்" ஆகிய மூன்று நூல்களும் பாரி நிலையத்தின் வாயிலாக முறையே 1965, 1970, 1972 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. தொடக்கத்திலிருந்தே பாரியின் புகழ்போல் பாரி நிலையம் சீரும் சிறப்பும் பெற்று வருகிறது. நினைத்துப் பார்க்கின் நான் சந்தித்த வெளியீட்டுரிமையாளர்களுள் பண்பும், நேர்மையும் எளிமையும் நனிமிகுந்தவர் பாரி செல்லப்பச் செட்டியார் அவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகின்றேன்.

நான் பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டுள்ளேன். முப்பது கவியரங்குகளில் பாடிய பாடல்களின் தொகுப்பே 'பாட்டரங்கப் பாடல்கள்' என்னும் நூலாகும். நினைத்துப் பார்க்கின் என்னைப் பெரிதும் ஊக்கியதும் பலர் பாராட்டைப் பெற்றதுமான பல கவியரங்கப் பாடல்கள் இன்றும் என் மனதில் மகிழ்ச்சியை ஊட்டிக்கொண்டேயிருக்கின்றன.

உட்கிடக்கையும் உணர்வும்

14.1.1952 இல் திருச்சி வானொலி நிலையத்தார் 'பொங்கல் விழா கவியரங்கிற்கு என்னை அழைத்திருந்தார்கள். கவியரங்கிற்கு மறைந்த சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். "வாழ்க இளம் பரிதி: என்ற தலைப்பில் நான் பாடினேன்.

ஆசை மனையாட்டி! அன்பே இதைக்கேள்நீ!
மூசையிலே வைத்தெடுத்த பொன்னே முளித்தகதிர்
நீர்நிலங்கள் விண்ணை நிலைத்த பொருளையெலாம்
ஆட்டிப் படைப்பதுவும் ஆக்கம் விளைப்பதுவும்
வானம் முளைத்து வரும்பரிதிச் செய்கையடி.

இல்லம் புதுக்கி எழில்புதுக்கி நீராடி
அல்லொத்த கூந்தல் அழகைப் பெருக்க
நறுநெய் தடவுக நன்றாக வாரிமுடி
புத்தாடை பூண்நீ மலர்ச்சூடு நம்விட்டுச்
சொத்தாம் குழந்தைகளைத் தூய்மைப் படுத்துகவே!

கூப்பிடு வாழ்வோர் அனைவரையும் கூப்பிடடி
காப்பெதற்கு? கார்தந்த செல்வம் விளைபொருள்கள்
சாப்பாட்டைத் தேக்காதே; சண்டை அதன்விளைவாம்.
பங்காக்கி உண்போம் பசியேது பின்னாட்டில்?

கொண்டுவா யாழைக் குழந்தைகளைப் பாடவிடு
பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும் கேட்போம்
அரசர் மடிமேல் அரும்புலவர் செந்நாவில்
ஓங்கி வளர்ந்த உயர்தமிழைப் பாடட்டும்

ஊனுயிரை மக்கள் உணர்வை வளர்த்துவரும்
தேனாம் செந்தமிழைப் பாடட்டும் கேட்போம்
உனது குரலினிமை உன்மக்கள் சொல்லில்
கனிந்துளது ஆதலினால் கண்மணிகள் பாடட்டும்.

இதுபோன்ற கவிதைச் சொற்றொடர்களைக் கேட்ட போதெல்லாம் தலைவர் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியாரவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். கவிஞர் வாணிதாசன் தமிழ் வெறியில் பாடுகிறார் எனப் பாராட்டினார்கள்.

நினைத்துப் பார்க்கின் நான் ஒன்பது கவியரங்கங் கட்குத் தலைமை ஏற்றுள்ளேன். சென்னையில் பூம்புகார்த் திடலில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. கவியரங்கிற்கு நான் தலைமையேற்றேன் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் மக்கள் வெள்ளத்திடையே "தமிழன்’ என்ற தலைமைக் கவிதையைப் பாடினேன்.

கிடைத்ததை உண்டே கிடப்பது வாழ்வின்
மடத்தனம் என்றே மனதில் நினைத்தான்
மனையறம் கண்டான்; மனைக்குறு மாட்சி
தனிமகள் கண்டான், தழைத்தது வாழ்க்கை.
அறிவைத் துணைக்குப் பலநாள் அழைத்தான்
நெறியை உணர்த்தி நெடும்புகழ் நாட்டிக்
கடலினைத் தாண்டிக் கயல்புலி வில்லை
இடமகல் அண்டையர் நாட்டின் இடையிலும்
நட்டான் தமிழன் மெய்ச்சீர்த்தியை நட்டானே!
வெற்பைக் குடைந்தெடுத்தே மேன்மை அழகுதரு
சிற்பம் படைத்தான் திகழோவியம் அளித்தான்
கார்வானை முட்டும் கலைகொழிக்கும் கோபுரமும்
தேரும் செழுந்தாது பொற்சிலையும் கண்கவரும்
ஊரும் தெருவும் உணவூட்டும் நன்செய்க்கே
ஏரியும் தாங்கலும் ஈந்தோன் தமிழனன்றோ?
கோட்டையும் பொத்தலமும் கூழக்கே ஏங்காநல்
நாட்டையும் கண்டவன் நற்றமிழன் ஆகானோ?

சங்கம் வளர்த்தான் தமிழ்வளர்த்தான் சான்றோர்க்கே
எங்கும் பொருளை இறைத்தளித்துக் காத்தவன் யார்?
மங்காப் பெரும்புகழ்சேர் மாத்தமிழன் கற்றளி
எங்கும் கிடைக்கிறதே என்னஇதன் பொருளாம்?

பூம்புகார் திடலில் மக்கள் வெள்ளத்தில் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டலும் இன்று நினைத்தாலும்
என் மெய் சிலிர்க்கிறது.

புகழ்வும் நெகிழ்வும்

நினைத்துப் பார்க்கின் எவ்வளவோ நிகழ்ச்சிகள் என் கண் முன் நிழலாடுகின்றன. 18.6.72 தென்னாற்காடு தமிழ்க் கவிஞர் மன்றம் எனக்குப் புதுவை நகர மன்றத்தில் பாராட்டு விழா எடுத்தது. அவ்விழாவை முன்நின்று நடத்திய பெருமை மன்றச் செயலாளர் என் கெழுதகை நண்பர் கவிஞர். க.பொ. இளம் வழுதியைச் சாரும். இவ்விழாவில் எனக்குக் கவிஞரேறு என்ற பட்ட மும் வெள்ளிக் கேடயமும் தந்து பாராட்டினர். விழாவில் தமிழக அறிஞர்களும் புதுவை அமைச்சர்களும் பங்கு கொண்டனர்.

புதுவைச் தமிழ்ச் சங்கமும் என்னைப் பாராட்டத் தவறவில்லை. அது புதுவை நகர மன்றத்தில் 6-5-73இல் பாவலர்மணி என்ற பட்டத்தையும் வெள்ளிக் கேடயத்தையும் எனக்களித்து என்னைப் பாராட்டிச் சிறப்பித்தது. விழாவில் புதுவை அமைச்சர்கள் நகரத் தந்தை குபேர் முதலியோர் பங்கேற்று என்னைப் பாராட்டினார்கள். நினைத்துப் பார்க்கின் இவையெல்லாம் என் தமிழ்க் கவிதைகட்குக் கிடைத்த பரிசென்றாலும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த தமிழ் அறிஞர்களில் பலர் எனக் களிக்கப்பட்ட பாராட்டைக் கண்டு களிக்காமல் அமரர் ஆயினரே என்ற ஏக்கமே என்னுள் குடிகொண்டுள்ளது. சிறப்பாக எனதாசான் பாவேந்தர்; தமிழ்மக்கள்... ஆசான். அவர்,

வீழ்ச்சியுற்ற தமிழருக்கு வலிவூட்டும் குன்றம்
மெல்லியரின் வாழ்விற்கு புரட்சிவழிப் பாட்டை
சூழ்ச்சியினால் வளர்ந்தமதக் கோட்டைக்கு வேட்டு
ஒருசிலரின் சொத்தாக இருந்ததமிழ் ஊற்றைத்
தாழ்ச்சியின்றித் தமிழ்நாட்டு மக்களெலாம் உண்ண
எளிமையொடு சுவையூட்டிச் சரிசெய்த வள்ளல்
ஆழ்கடலில் முத்தொத்த அறிவுரையை நல்கும்
எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான்

சிரிக்கின்ற அழகெல்லாம் செஞ்சொல்லால் தீட்டிச்
செந்தமிழின் நயம்விளங்கச் செய்திட்ட ஆசான்
வரிப்புலியே இளந்தமிழா எனவிளித்து நாட்டில்
வளர்கொடுமை அறியாமை வறுமையினைக் காட்டி
ஒருநாளும் தயங்காதே தமிழ்வாளைத் தூக்கே
ஒண்ட்மிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஏற்றம்
குரைப்பாருக் கஞ்சாதே எனநாளும் சொல்லும்
எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான்

இன்றில்லையே என்பாட்டைக் கண்டு களித்து வாழ்த்த என்கின்ற துயரமே தலைதூக்கி நிற்பதை நான் உணர்கிறேன்.

குறிக்கோள்

என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். சமுதாயம் சீர்திருந்த வேண்டும். ஏழை பணக்காரன் இல்லாத பொதுவுடைமை நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும். என் பாடலில் பல இடங்களில் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டிருக்கும்.

"ஓங்குக ஓங்குகவே - தமிழ்
உலகோடே உயர்வாக நிலைபெற்று நீடுழி"

"ஏங்கி மெலியும் ஏழை பாட்டாளி உழவர்கள்
இன்னல்களைந் துவாழ்வை நன்னிலை யாக்கும் தமிழ்"

"தாழ்வு உயர்வுஎனும் சாதியும் நீக்கி
சஞ்சல மில்லாத வாழ்வைப் பொதுவாக்கி
ஏழை எளியவர் இல்லாத தமிழ்நாட்டை
இன்று சமைப்போம் வெட்டிவீழ்த்துவோம் தமிழ்க்கேட்டை"

"உன்னை மறந்ததுநாளன் வாழ்வேனோ? - என்
உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே. - அமுதே
அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும்
அன்பு மனைவிமக்கள் அணைப்பை மறந்தாலும்"

"இந்த நாட்டில்
பழக்கத்தால் உயர்வு தாழ்வு
படைப்பினால் அல்ல தம்பி"

"விளைவினை மக்கள் எல்லாம்
பொதுவாகக் துய்க்கும் மேன்மை
முளைத்திடில் தமிழர் நாட்டில்
முளைத்திடும் இன்ப வாழ்வு"

இதுபோன்ற கருத்துகளும் இயற்கையின் படப்பிடிப்பும் என் பாடல்களில் ஆங்காங்கே நிறைந்திருப்பதைக் காணலாம். நான் பொருளுக்கோ புகழுக்கோ விரும்பிக் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியென்றால் நான் செல்வந்தன் என்பது பொருளல்ல. உணர்வு மேலிடும் போது என்னால் கவிதை எழுத முடிகிறது. துண்டுதலால் என் விருப்பத்திற்கு மாறாகக் கவிதைகள் எழுத நேர்ந்தால் விறுவிறுப்பாகவும் ஓட்டமாகவும் கவிதைகள் அமைவதில்லை. அது என் இயற்கைப் பண்பு.

உணர்வும் உறவும்

வயல் வெளியைச் சுற்றுவதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் கவிதை இயற்றுவதும் படிப்பதும் எனக்கு இன்பம் ஊட்டுவன. எனது கவிதைகளில் பெரும் பாலானவை நள்ளிரவில் பிறந்தவையே. எனக்கு விருப்பமானவை தனித் தமிழும் கவிதையும். நான் விரும்பாதவை மரக்கறி உணவும் பொய் பேசுவதும்,

நான் என் அய்ம் பத்தெட்டாமாண்டைக் கடந்து அய்ம் பத்தொன்பதாம் ஆண்டில் நடையிட்டுக் கொண்டிருக்கின்றேன். எனக்கு மாதரி, அய்யை, எழிலி, முல்லை, இளவெயினி என்கின்ற அய்ந்து பெண் மக்களும் நக்கீரன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருங்கிள்ளி என்கின்ற நான்கு ஆண் மக்களும் உள்ளனர். பெண் பிள்ளைகளில் முன் நால்வர் திருமணமானவர்கள். அவர்கள் வாயிலாக எனக்குப் பதினேழு பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

கவிதைத் துறையில் என் மாணவர் என்று குறிப்பிடத் தக்கவர் வித்துவான் பா.முத்து. அவரால் இயற்றப் பெற்ற கவிதை நூல் இயற்கை இன்பம்' என்பதாகும்.

இன்றைய நிலை

இன்றுள்ள என் தாய் நாட்டின் நிலையை நினைத்துப் பார்க்கின் என் நெஞ்சம் கொதிக்கின்றது. அடிமையாய் நாம் வாழ்ந்த காலத்தையும் இன்று நாமே நம்மை ஆளுகின்ற் காலத்தையும் சீர் தூக்கிப் பார்க்கின் ஏதோ ஓர் பயங்கர எதிர்காலத் தோற்றம் என் கண் முன் தோன்றுகிறது. நிரந்தரமற்ற அரசியல் போக்கும் பண்பும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்கள் பெருக்கமுமே நாட்டில் எங்கும் காணப்படுகின்றன.

விடுதலை பெற்று நாமே நம்மை இரு பத்தாறு ஆண்டுகளாக ஆண்டு வருகின்றோம். மற்ற நாடுகளைப் போன்று என்ன முன்னேற்றம் நாம் அடைந்துள்ளோம் என்கின்ற கேள்விக்குறியே தோன்றுகிறது. நம்முள் ஊறிப்போன சமுதாய ஊழல்கள்-சாதிமதப் பிணக்குகள், அறிவு விளக்கமின்மை, வறுமை முதலியன நம்மை விட்டு அகன்றதாகத் தெரியவில்லை. மாறாக அரசியல் காழ்ப்பு, லஞ்ச ஊழல், பதவிப்பித்து போன்ற நாட்டைச் சீரழிக்கும் கொடுஞ் செயல்களே இன்று தலைவிரித்தாடுகின்றன. விலைவாசி உயர்வுகள், உணவுத் தட்டுப்பாடு, வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற கொடுமைகள் நாட்டில் மலிந்து விட்டன. விடுதலை பெற்றால் நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடும் என்று அன்று பறைசாற்றப்பட்டது. ஆனால் இன்று, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியால் பெயரிடப்பட்ட ஏழைகளின் பஞ்சப்பாட்டும் பல்லிளிப்பும் கண்ணிருமே நாட்டில் மலிந்திருப்பதைக் காணலாம்.

நினைத்துப் பார்க்கின் இந்நிலை நாட்டில் நீடித்தால் எதிர்காலம் என்னாகும்? பயங்கர சூனியம் தோன்றுகிறது. நாட்டையும் மக்களையும் அரசியலையும் சீரும் சிறப்புமாக நடத்திச் செல்லும் விடிவெள்ளிகள் கட்டாயம் இனித்தோன்றியே ஆகவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
தோன்ற வாழ்த்துகின்றேன்.

விழைவும் வேண்டுகோளும்

அண்மையில் என் அய்ம்பத்தொன்பதாம் ஆண்டு தொடக்கக் கவிதை மலர் வெளியிடப்பட்டது. அதற்கென்று க.பொ.இளம் வழுதி என்னைப் பேட்டி கண்டார். என் விழைவு என்னவென்று கேட்டார்.
"சென்றதுவே என்றும் திரும்பாது;
நன்றே இனிபுரிக, நற்றமிழைத் தாய்மொழியை
ஊன்உடல்போல் ஒம்பி உலகமொழிக் கெல்லாம்
தேன்வழங்கச் செய்க, திருநாட்டு மக்கள்
பகுத்துண்டு வாழ்க, பகைநீக்கி வாழ்க;
தொகுத்துரைக்கும் நூலின் துணைகொள்க; என்றென்னும்
ஒன்றிரண்டு பெற்றே உயர்குடியின் நற்பெயரை
என்றும் நிறுத்தல் இனிது":

எனும் எனது விருப்பத்தை மக்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே என் வேண்டுகோள். மக்கள் துணை புரிவார்களாக அதுவே எனக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும் பெருமகிழ்ச்சியாகும்,

எனக்கு ஒரு பேராசை உண்டு. அதாவது,

“ஊருக்கே உழைப்பதுவும் ஊர்வாழும் மக்கள்
உயர்வுக்கே உழைப்பதுவும் நற்கவிஞர் வாழ்க்கை;
தேருக்கே அச்சாளி: திசைதிருப்ப முட்டு
தெருவெல்லாம் கொடுப்பதற்கு திரண்டதோள் வேண்டும்

காருக்கே யார்சொள்ளார் கடல்நீரை மொண்டு
கழனியெலாம் வளமாக்க; நாம்வாழும் நாட்டில்
நேருக்கு நேர்நடக்கும் அறிவற்ற செய்கை
நெறிப்படுத்த என்பாடல் வழிவகுத்தால் போதும்!

அந்தியிலே கோயிலெலாம் மணியடிக்கக் கேட்பேன்
ஆனாலும் எனதுள்ளம் அமைதிகொள்வ தில்லை
சந்தியிலே கூடுகின்ற கூட்டம்போல் இன்றித்
தமிழ்மக்கள் தாய்நாட்டின் நலம்பேண வேண்டும்.

பந்தியிலே தலைவாழை இலையிட்டே உண்போர்
பசிமீறக் கையேந்திக் கெஞ்சுகின்ற ஏழை
புந்தியிலே நிழலாடக் காண்கின்றேன். இந்தப்
போக்கிற்கெலாம் என்பாடல் வழிவகுத்தால் போதும்!

பாலுக்கே அழுங்குழவி பசிக்கேங்கு வோர்கள்
பாயின்றி இடமின்றி நிழலுறங்கும் கூட்டம்
நூலுக்கே வழியின்றிக் கைத்தறியால் வாழ்வோர்
நுணலைக் கூச்சலிட்டால்பசிநீங்கப் போமோ?
வேலுக்கே வேலெதிர்ப்பை விளைவிக்க வேண்டும்
விரைவினிலே மக்கட்கு நல்லுழைப்பைத் தூண்ட
தோலுக்கே உணர்வூட்டப் பகுத்தறிவை ஊட்ட
தூயதமிழ் என்பாடல் வழிவகுத்தால் போதும்!"

என்பதுதான்.

இறுதியாக நான் ஆள்வோரை வேண்டிக் கேட்டுக் கொள்வதொன்றுண்டு. அதாவது, "

ஆள்கின்ற நாற்காலி பொதுமக்கள் சொத்தாம்
ஆள்வோர்க்கே என்றென்றும் அதுவுரிமை ஆகா
மூளுகின்ற எதிர்ப்பிற்கோ கூச்சலுக்கோ அஞ்சி
முற்போக்குத் திட்டத்தைத் தள்ளிப்போ டாதீர்"

என்பதேயாகும். என் கவிதையைப் பற்றித் தமிழறிஞர் நாவலர் சோம சுந்தர பாரதி, தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்த் தாத்தா பேராசிரியர் மயிலை சிவமுத்து, பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி சுவநாதம், நாவலர், நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி போன்றோர்
பாராட் டியுள்ளனர்.

என் பாடல்கள் ஆங்கிலத்தில், ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பாராட்டப் பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு என்னும் ஆங்கில இதழிலும் மலேசிய ஏடுகளிலும் இலங்கை ஏடுகளிலும் என் கவிதையைப் பற்றி ஆய்வுரைகளும் பாராட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

திரைப் படங்களில் பாடல்கள் எழுதக் கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை அஃது நிலையற்றதெனக் கருதி மறுத்த துண்டு.

இலங்கை சிங்கப்பூர் தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்றுச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் என் குடும்பச் சூழல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டன. என்னைப்பற்றி இனி அதிகம் நான் சொல்ல விரும்பவில்லை. என் கவிதைச் சுவைஞர்களும் ஆய்வுரையாளர்களும் சொல்ல வேண்டியவை பல இருக்கலாம் என நான் நம்புகிறேன். அப்பொறுப்பினை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
வணக்கம்.
-----------------


This file was last updated on 17 Sept 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)