யாழ்பாணம் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்
பண்டிதர் கந்தையா இயற்றியது
cutumalai Sri puvanEsvari ammai piLLaittamiz
in Tamil Script, Unicode/UTF-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Noolaham.org for providing a scanned PDF version of this work for ebook preparation.
Our Sincere thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டிதர் கந்தையா இயற்றிய
யாழ்பாணம் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்
Source:
சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ் பிள்ளைத்தமிழ்
பண்டிதர் மு. கந்தையா அவர்கள்.
1987
சுதுமலை வெளியீடு: 1
சுதுமலை ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் கோயில் வரலாறு
வெளியீடு: 2
சுதுமலை
அச்சுப்பதிப்பு: செட்டியார் பதிப்பகம்
411/1 காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை.
யாழ்ப்பாணம்.
--------------
உ : கணபதி துணை
உள்ளுறை
முன்னுரை
|
அணிந்துரை | 5. முத்தப் பருவம் |
வாழ்த்துரை | 6. வாரானைப் பருவம் |
பதிப்புரை | 7. அம்புலிப் பருவம் |
1. காப்புப் பருவம் | 8. அம்மானைப் பருவம் |
2. செங்கீரைப் பருவம் | 9. நீராடற் பருவம் |
3. தாலப் பருவம் | 10. ஊஞ்சற்பருவம் |
4. சப்பாணிப் பருவம் | உரைவிளக்கக் குறிப்புகள் |
----------
உ
சிவமயம்
முன்னுரை
புவனேஸ்வரி பிரபாவமும் பிள்ளைத்தமிழ் அவதாரமும்
அக்கினியுஞ் சூடும் ஒன்றோ இரண்டோவெனில் அவை ஒருமையில் நிலவும் இருமை என்பது பதில்.
மலரும் மணமும் பழமுஞ் சுவையும் என்பனவும் அவ்வாறே. இவை போல ஒருமையில் இருமை
புலப்பட விளங்குஞ் சிவமுஞ் சத்தியுமாயுள்ள ஒன்றே சைவங்கண்ட பரம்பொருள் ஆன்ம சாதனை
நோக்கில் அது சக்தி வழிபட்ட சிவம். சிவாநுபவ நோக்கில் அது சக்தியை உட்கொண்ட சிவம்.
ஆன்ம சாதகர்கள் சக்தியைத் தழுவி அதன் உபகாரத்தினாலே சிவகதியில் மேலேறுவர். அநுபூதிமான்கள்
சக்தியை விடச் சிவத்தையே முதன்மையாகக் கண்டு கொண்டு அநுபூதி இன்பம் நுகர்வர்.
அத்தனைக்கே இந்த நோக்கு வேறு பாடு அமையும். இது சைவசாஸ்திர சம்மதமான உண்மையாகும்.
சூரியனிடத்திலிருந்து ஒளி விரிந்து பரந்து உலகம் இயங்கச் செய்கிறது, அது போலச் சிவத்திலிருந்து சக்தி
விரிந்து பரந்து அச்சூரியன் உட்படச் சகல படைப்புக்களையும் இயங்கச் செய்கிறது. தற்போது
பிரமுக்கியத்துவம் பெற்றிருக்கும் அணுத்துகள் ஆய்வியலாளரும் ‘ஏதோ ஒரு சக்தி' பின்னின்றியக்குகிறது
என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வகையில் முழுமைத் தோற்றமாகிய அண்டத்திற்
போலத் தனிப்பட்ட தோற்றமாகிய பிண்டத் (உடல்) திலும் அச்சக்தி ஓதப்புறோத (குறுக்கும் நெடுக்கும்)
மாகப் பரந்து வியாபித்து விளங்கும் காட்சி சைவ பாரம்பரியமான ஞானக்காட்சியில் சுவையான
ஒரு அம்சமாக அமையும்.
இக்காட்சி கைவந்த பெரியோர் காலங்கண்ட அநுபவ முதிர்வின் பேறாகத் தமது உடல்
வளாகத்தில் இச்சக்தியின் இருப்பையும் அதன் செயற்பாடுகளையும் தமக்கேயுரிய அரும்பெருஞ்
சாதனைகளாற் கண்டு அதற்குத் தம்மை ஆளாக்கி அது காட்டும் வழிவழியே முன்னேறி முடிவில்
சக்தியைத் தன்னுளடங்கக் கொள்ளுஞ் சிவத்தைச் சார்ந்து இன்புறுவர். இத்தகைய ஒரு நிலை
சிவயோகம் என்ற பெயரில் இருந்து வருதல் பிரசித்தமாகும்.
'மெய்யருளாந்'
தாயுடன் சென்று தன் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயுமதே நிட்டை யென்றா னெழிற் கச்சி யேகம்பனே.
என்ற பட்டினத்தடிகள் வாக்கை நினைவு கூர்தல் தகும்
இவ்வகைச் சிவயோக நிலை அநுபவங்களைத் தரும் மூல முதல் நூல் திருமூலரின்
திருமந்திரமாகும். உடல் வளாகத்தில் இடங் கொண்டுள்ள சிவசக்தியானது என்றென்றும் உயிர்க்குயிராய்த்
தோன்றாத் துணையாய் இருந்து அதனை நடத்தி வரும். நடத்தும் பாங்கிலேயே உயிரின் உலகியல்
மயக்கமும் படிப்படியாகக் குறைந்து வந்து ஒரு கட்டத்தில் அந்த உயிர் உலகியலை நாடுவதாகிய தன்
புறநோக்கை மாற்றி அதற்கெதிர் சக்தியாகிய தன்னை நாடும் அகநோக்காகிய திருப்ப நிலை
வாய்த்தற்கான பக்குவத் தையும் ஆக்கும். அப்பக்குவம் வாய்த்த உயிர் தனது அகவுடற்
சாதனங்களாகிய ஆறாதாரங்களின் வழியே முடிநிலைத் தானமாய் உச்சித் தொளையின் மேலுள்ள
சகஸ்ர தளத்தில் ஏறி அங்கு விளங்குஞ் சதாசிவரை அணுகி அவர் தன்மைகள் பல தனக்கும் வாய்க்கப்
பெற்றுச் சதாசிவனாகவே தோன்றுமாறு தங்கி இன்புறும்.
'சக்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்' - திருமூலர்.
திருமந்திரத்து ஒன்பது தந்திரங்களுள் நான்காந் தந்திரந் தருஞ் செய்தியின் சுருக்கம் இதுவாகும்.
இம்முடிவை விளைப்பதற்காகச் சக்தியானது முதலில் உயிரின் ஆறாதாரங்களில் முதலாதாரமான
மூலாதாரத்தின் அடியில் தூங்கிக் கிடக்குங் குண்டலினி சக்தியைத் தொழிற் படுத்தும். அதன் மூலம்
உறங்கிய பாம்பு விழித்தெழுந்து நிமிர்வது போலெழுந்து மேனோக்குங் குண்டலினி முதுகுத் தண்டினூடே
செலுஞ் சுழுமுனை நாடியின் வழி மேலேறும். இந் நிலையில் அச் சுழுமுனை தொடர்புறும் ஆதாரங்களில்
தொட்டுத் தொட்டு நிகழும் அற்புத தெய்விகத் தோற்றங்கள் அளப்பில. அவை அனைத்திற்கும்
ஆதாரமுந் தானாய் ஆதேயமுந் தானாய்க் குண்டலியோடு குண்டலியாய்க் கலந்து நின்று அச்சக்தி
பூரணசக்தி எனும் நிலையினதாகும். அப்பூரணத்தினுக்குட் பொலிந்து தோன்றும் சத்தி
மூர்த்தங்களில் ஒன்று திரிபுரை எனப்படும்.
பிரபஞ்ச விரிவின் ஒளிக் கூறுகளாகிய அக்கினி மண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம்
என்பவற்றுக்குச் சமானமாக அகத்திலுள்ள அக்கினி மண்டலம் (தொப்பூழுக்குக் கீழ்ப்பாகம்) சூரிய
மண்டலம் (கழுத்துக்கும் தொப்பூழுக்கு மிடை ) சந்திர மண்டலம் (கழுத்துக்கு மேல்) என்ற
மும்மண்டலங்களுந் திரிபுரங்கள். அவற்றை ஒருங்கே வியாபித்து நிற்குந் தன்மையால் அந்நிலையிற்
சக்தி திரிபுரை எனப் பெயர் பெறுகிறது. இத்திரிபுரை தன்னைப் பூசிப்பதற்குந் தியானிப்பதற்குமுரிய
சாதனங்களாகிய மந்திரதந்திர வடிவுகளையுந் தன்னுடனாகவே கொண்டு தோன்றுவது,
இதற்கமையும் மந்திரம் பஞ்சதசாட்சரி - (பதினைந்து அட்சரங்கள் கொண்டது) மந்திரமென்று
பெயர் பெறும் அவை திருமந்திரத்தில், புவனாபதி சக்கரம் 1 இல்,
ககராதி ஓரைந்து - க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்
அகராதி ஓராறு -- ஹ், ஸ, கஹ், ஹ்ரீம்
சகராதி ஓர்நான்கு - ஸ, க, ல, ஹ்ரீம்
எனக் குறிக்கப்பட்டுள்ளன. இப்பதினைந்தோடு 'ஸ்ரீம்' என்ற மந்திர பீஜமும் பதினாறாவதாகச் சேரும்.
இதற்கமையுந் தந்திரம் இவ்வட்சரங்களை முக்கிய அங்கங்களாகக் கொண்ட ஸ்ரீசக்கரமாகும்.
குறித்த பதினாறு பெயர் அட்சரமந்திரத்துக்குத் திருமூலர் கொடுத்துள்ள பெயர் புவனாபதி மந்திரம்.
அவ்வாறே ஸ்ரீசக்கரத்துக்கு அவர் கொடுத்துள்ள பெயர் புவனாபதி சக்கரம். இக்காரணத்தால் இவை
தொடர்பான திரிபுரை மூர்த்தமும் புவனாபதி எனும் பெயர்க்குரியதாயிற்று. புவனாபதி என்பது
புவனத்தலைவி என்ற பொருட் காரணத்தினால், புவனேஸ்வரி எனவும் வழங்கலாயிற்று. 'பதி, 'ஈஸ்வரி'
இரண்டும் தலைவி என்ற ஒரே பொருளன.
"நின்றலன் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ
மன்றது வொன்றி மனோன்மணி மங்கலி
ஒன்றெனொ டொன்றிநின் றெத்தடைந் தானே.
இங்ஙனஞ் சுழுமுனை நாடியில் நின்ற சத்தி பூரணகலையோடு பொருந்த எனது உள்ளத்திலே
பொருந்தி ஏழுலகத்தாரும் வணங்குமாறு சகஸ்ரதளத்தில் ஒன்று பட்டு மனோன்மணியாய் மங்கலப்
பொருளாய் நான் வேறு அவள் வேறு எனப் பிரித்தறிய முடியாதவாறு ஒத்து நிலைபெற்றனன். மன்று -
சகஸ்ரதளம்.
‘அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புகரியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதிகாட்டி
ஒளியுறு வித்தென்னை உய்யவுண்டாளே
கருணையால் ஒத்து விளங்குகிற சக்தி ஆனந்தமே வடிவான அழகியாவள். ஓட்டுடன்
பொருந்தியுள்ள புளியம் பழத்தைப் போலிருந்த என்னியல்பினை நோக்கிப் பக்குவம் உண்டாக்கிச்
சிவகதியைக் காட்டி அடியேனது சூக்கும உடலை ஒளிமயமாக்கி உய்யும் வண்ணம் என்னைத்
தன்னொளியில் ஒன்றாக்கிக் கொண்டாள்.
இங்ஙனம் இனித்துச் செழித்துப் பரிமளிக்கத் திரிபுரையாகிய புவனேஸ்வரியைப் போற்றி
மகிழுந் திருமூலர் இத்தேவியே மெய்ப்பொருள் அருளுந் தெய்வமென்றும் தனது மருளுற்ற சிந்தையை
மாற்றித் தெருளுறச் செய்தவள் என்றும் அதனால் அவள் சேவடியைப் போற்றுதல் ஒன்றே பயன்
தருஞ் செயலாமென்றும் தான் அதுவே செய்து கொண்டிருப்பதாகவும் உலகினரை விளித்துக் கூறிக்
களிக்கும் விதமுங் கவர்ச்சிகரமானது.
'அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே
என்பது அவர் படைக்குங் குதூகலப் படையல்.
இப் புவனேஸ்வரி யாலல்லது வீட்டு நிலத்திற் குடியேற வழி வேறறியேன் என்ற அவர்
விதப்புரையுமொன்று சிந்தனைக் கிதந் தருகின்றது.
'அவளன்றி யூர்புகு மாறறியேனே' - என்பது அது. திருமூல தேவர் உணர்த்தி வைத்த இச் சர்வ
முக்கியத் தன்மையால் புவனேஸ்வரி பிரபாவம் வியக்குமாயிற்று. இப் பிரபாவத்தில் மனதைப் பதித்துப்
பஞ்சதசாட்சரி மந்திரத்தின் மூலமும் ஸ்ரீ சக்கரத்தின் மூலமும் புவனேஸ்வரி உபாசனையில் ஈடுபட்டுப்
பலனுற்ற வித்தகச் சித்தர்கள் மெத்தப் பலர். புவனைக் கலைஞான தீபம், வாலையானந்தர் கும்மி
முதலாக அவர்கள் ஆக்கிப் படைத்த நூல்களும் மிகப் பல
மனோன்மணிக்கும் புவனேஸ்வரிக்கும் அங்கப் பிரத்யங்கங்கள் ஒன்றே. சாங்கத்தில் மட்டும்
சற்று வேறுபாடு. மனோன்மணிக்குப் பின்கரங்கள் இரண்டிலும் தாமரையும் அட்சமாலையும்.
புவனேஸ்வரிக்கு அக்கரங்களிற் பாசமும் அங்குசமும்.
இப் பிரசித்தி காரணமாக ஆலயங்களிலும் புவனேஸ்வரி வழிபாடு முக்கியத்துவம் பெறலாயிற்று.
ஹரீம் ஸ்ரீம் என்ற மந்திர பீஜங்களை மூல மந்திரமாகக் கொண்ட மந்திர மூர்த்தியாக, ஸ்ரீ சக்கர
பூசை நடை பெறும் ஆலயங்களில் புவனேஸ்வரி தோன்றி அருள் பாலித்து வருதல் கண்கூடு. சைவத்திற்
சாக்தத்தின் தலையீடோ இது என்று சந்தேகிப் பாருமுளர். அது அர்த்தமற்ற தென்பதற்குத் திருமந்திரமே
'சான்று. சைவசித்தாந்தத்தில் பராசக்தி எனப் பேசப்படும் அதே சக்தியின் மந்திர மூர்த்தமே
புவனேஸ்வரி எனத் திருமூலர் பல தடவைகளில் வற்புறுத்தி யிருப்பக் காணலாம். சில ஆலயங்களில்
முன்னைய சக்தி மூர்த்தம் அப்படியே இருக்கப் பேர் புவனேஸ்வரியென வழங்குவதும் இந்
நோக்கிலேயாம்
இப் புவனேஸ்வரி பற்றித் திருமந்திரமும் வேறு நூல்கள் சிலவுங் கூறும் உண்மை பற்றி
விசாரித்து வருங் கட்டத்தில் சில மாசங்களுக்கு முன் ஒரு தினம், நயினை அன்பர் சங்கீத பூஷணம்
திரு. நவரத்தினம் அவர்கள் நேரிற் சந்தித்துச் சுதுமலைப் புவனேஸ்வரியம்மன் பேரிற் பிள்ளைத்தமிழ்ப்
பிரபந்தமொன்று வேண்டும். கோயிலன்பர்கள் அவ்வாறு விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்கள் எனத்
தெரிவித்தார். கோயிலோடு நெருங்கிய தொடர்புற்றுள்ள திரு. இ. காசி நாதன் மூலம் அதற்கு அத்தாட்சி
கிடைக்கவும் ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. புவனேஸ்வரி பிரபாவம் பற்றி விசாரணை நிகழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு அவசரத்தில் இது முன் வைக்கப் பட்டத்தில் 'திருவருட் குறிப்பு' ஏதோ இருக்கக்
கூடும் என எண்ணத் தோன்றிற்று. இருந்தும், பாடத்துணியலாமா? என்ற வகையில் தலை தூக்கக்
கூடியனவாயிருந்த பலவித விசாரங்களுங் குறுக்கிடாமல் விடவில்லை.
பல கோணங்களில் மனசை இழுத்தலைத்த அத்தகைய விசாரங்களினிடையே, முன்னையோர்
கூறி வைத்துள்ள தெய்விக நோன்மை பற்றிய கருத்தொன்று திடீரெனத் தலை தூக்கிற்று; விசாரங்கள்
விட்டுக் கொடுத்து விட்டன.
பெருமை சிறுமை பார்க்காது எவ்வெவர் வழி பாட்டுக்கும் அவ்வவர் வழிபாட்டுத் தரத்தின்
அளவாய் அமைந்து நின்று அவரவர்க்காம் பலன் வழுவாது நல்கும் நோன்மை தெய்விக நோன்மையாதல்
பிரசித்தம்.
… … … … … … … ... 'இப்பார்
செய்யுற்றவன் மால் பூசைகொள் தேவதேவன்
வையத் தவர்செய் வழிபாடும் மகிழுமன்றே.
பெருமைக் குரியவர்களாகிய பிரமா விஷ்ணு முதலியோரின் பூசையை ஏற்றுக் கொள்ளுஞ் சிவன்
பெருமைக்கு லாயக்கற்ற சாமானிய உலகர் வழிபாட்டையும் மகிழ்ந்தேற்பன் - என்பது கச்சியப்ப
சிவாசாரிய சுவாமிகள் கருத்து.
கோழையிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யார்களவர் யாவைசொன சொல்மகிழும் ஈசனிடமாம்
குரல் நலச் செழுமையோ கவிதை உக்திப் பிடிமானமோ அவசியம் வேண்டுமென்பதில்லை. தமக்குத்
கூடுமான இசையில் அடியார் சொல்வதை யெல்லாங் கேட்டு மகிழும் ஈசனிருக்கு மிடமாம் - என்பது
சம்பந்த சுவாமிகள் அருட் பாடல்.
இது துணிவில் எப்படியோ பாடல்கள் உருவாயின. பிள்ளைத் தமிழ்ப் பிரபந்த அமைப்பில்
உருவாயிருக்கும் இப்பாடல்கள் அனைத்தும் புவனேஸ்வரி மகிமையே பேசுவனவாயிருப்பதில் ஒரு
மன நிறைவும் ஆத்மிகத் திருப்தியும் ஏற்படுகின்றது. அதுவே இப்போதைக்குப் போதியதாயமையும்.
இந்நூலில் ஏதேனும் விசேட தகைமைகள் இருப்பின் அவை தேவி புவனேஸ்வரி பேரில்
அமையும். இந்நூலால் சைவத்தமிழுலகுக்கு நேரக்கூடும் நன்மை ஏதும் இருப்பின் அது இதன் பிரேரக
கர்த்தாக்களாயுதவிய அவ்விருவரையுஞ் சாரும். அபுத்தி பூர்வமாகவோ புத்தி பூர்வமாகவோ இதனை
நேர்ந்த தவறுகள் ஏதும் இதில் இருப்பின் அவை ஆக்கியவரைச் சாரும். இடையிடையே தோன்றித்
திருத்தம் வேண்டியுள்ள எழுத்துப் பிழைகள் சில அவர் தம் பார்வைக் கூர்மைக் குறைவைச் சாரும்.
புவனேஸ்வரி மகிமையுரைக்கும் நூல் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அறிஞருலகம்
குற்றங்களைந்து குணமளைந்து இதனை ஏற்கும் என்ற திருப்தியுடன் அமைகின்றோம்.
மு. கந்தையா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அணிந்துரை
உ
சுதுமலைப் புவனேஸ்வரி அம்மை பேரில் எழுந்த பிள்ளைத்தமிழ் இப்பொழுது புத்தக வடிவில்
வெளியாகிறது இதை இயற்றியவர் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கில் மலர்ந்த பிரபந்த வகைகளில் ஒன்று, பிள்ளைத்தமிழ்.
பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ பிள்ளையாகப் பாவனை செய்து பாடுவது இப்பிரபந்தத்தின்
உத்தி முறையாகும். பாட்டுடைத் தலைவர், பாடும் புலவரின் புரவலராக இருப்பது வழக்கம். அவர்
வேந்தராகவோ, பிரபுவாகவோ அமையலாம் பல தருணங்களில் அவர் புலவரின் இட்ட தெய்வமாயும்
அமைவதுண்டு.
நமது பண்டிதரவர்களின் பிரபந்தத்தில், புவனேஸ்வரி அம்மையே பாட்டுடைத் தலைவி. இந்தப்
பாட்டுகளுக்கு மட்டுமன்றி, புவனங்கள் எல்லாவற்றுக்கும் அவளே தலைவி 'எறி தரங்கம் உடுக்கும்
புவனம் கடந்து' நிற்கும் ஒருத்தி அவள். அவளைப் பிள்ளையாய்ப் பாவனை செய்து சீராட்டுவது
இலகுவான காரியம் அன்று; மிகவும் கடினமான காரியம். அந்தக் கடினமான காரியத்தைத்தான்
கவிஞரவர்கள் அநாயாசமாக இனிது நிறைவேற்றியுள்ளார்.
பிள்ளைத்தமிழ் பாடும் புலவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டு. பாட்டுடைத் தலைவர்
உண்மையிலே குழந்தையல்லர். அவர் வளர்ந்தவர். கிழப்பருவம் எய்தியவராகவும் இருக்கலாம்;
களம் பல கண்டவராகவும் இருக்கலாம்; படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ்'
செல்வராக இருக்கலாம்; படைத் தளபதியாக இருக்கலாம்; குடியரசுத் தலைவராகவோ
முதலமைச்சராகவோ இருக்கலாம்; இல்லையேல். சாமானியமான பிரசையாக, அப்பாவிப்
பொதுமகனாகக்கூட இருக்கலாம். இவர்கள் வளர்ந்தவர்களாகவும் வாழ்க்கையிற் சில - பல
சாதனைகளை ஈட்டியவர்களாகவும் இருப்பதனால், சமுதாயம் இவர்களை ஏதோவொரு வகையிற்
கணித்து வைத்திருக்கும். இந்தக் கணிப்பீட்டுடன் இசைந்து போவதும் பிள்ளைத்தமிழ் பாடும்
புலவரின் கடப்பாடாக அமையும்
பிள்ளையை அள்ளி அணைத்துச் சீராட்டும்புலவர் மனம் போன படியெல்லாம் தாலாட்டுப்
பாடிவிட முடியாது. 'பிள்ளையுடன்' அவர் பொழியும் செல்லம் பாட்டுடைத் தலைவரின் சமூகக்
கணிப்பீட்டுக்கு ஊறு விளைத்தல் கூடாது. புலவர் கத்தி முனையில் நடக்க வேண்டும். கரணம்
தப்பினால் மரணம் தான்.
சாதாரணமான 'மனித்தப் பிறவி களான பிள்ளைகளுக்குமே இந்தப் பிரச்சினை உண்டு.
தெய்வப் பிள்ளைகளைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ?
----
2
தெய்வங்களைப் பிள்ளையாகப்பாவனை செய்து பாடப்புகும். புலவர்களுக்குச் சில வசதிகளும்
உண்டு.
தெய்வமோ காலங்களையும் இடங்களையும் கடந்தது முன், பின், மேல், கீழ் என்ற
பேதங்களுக்கும் அப்பாற்பட்டது ''விண்வெளிச் சென்றால் மேல் எது? கீழ் எது? என்றார், புலவரொருவர்.
அத்துடன் தெய்வச்செயல்கள் வியவகார உலகின் சடத்துவ விதிகளுக்கு முரண்படுவன போன்று
தோற்றம் தந்தாலும் பரவாயில்லை" இவ்வாறிருப்பது தெய்வத்தின்மீது பிள்ளைத்தமிழ் பாடுவோருக்கு
ஒரு வசதியாக அமைந்து விடுகிறது.
அத்துடன் தெய்வத்துடன் தொடர்பான புராணச் செய்திகள் பல மக்களிடையே வழங்கி
வருகின்றன. இவற்றையும் பிள்ளைத்தமிழ்களிலே சாதுரியமாக இயைவித்து விடுதல் புலவர் மரபாகும்.
பண்டிதர் கந்தையா அவர்களும் இந்த மரபினைப் பொன்னேபோற் போற்றியுள்ளார்.
“...பகை நண்பாய், பிழை சரியாய் … அமாவாசையே பூரணையாக”த் தோற்றந்தரும்படியாக
அபிராமி பட்டரின் பொருட்டு அருளிய புராணச் செய்தி முத்தப் பருவத்தில் ஐந்தாம் செய்யுளில் வருகிறது.
இந்தத் திருவருட்செயலைத் தெய்வாதிசயம் என்று விதந்து ஓதுகிறார் நமது புலவர்.
ஊரும் பேரும் இல்லாத ஒருவனாகிய சிவனும் நிரந்தரச் செந்தமிழ்ப் பித்தனானான் என்று
புலவர் பாடுகிறார். அந்தப் பித்துக்கு எடுத்துக் காட்டாக, தமிழ்ச்சங்கத்திலே புலவர் மணியாய் இறையனார்
அமர்ந்து தமிழாராய்ந்த செய்தியையும் திருஞானசம்பந்தர் முதலான நால்வர் பாட்டில் ஈடுபட்டு உவகை
கொண்ட செய்தியையும் புலவர் பேசுகிறார். இவ்வாறு இறைவன் தமிழ்ப் பித்தனாவதற்கு இடம்
கொடுத்தவள் புவனேஸ்வரி அம்மையே ஆதலால் "பார்மேவு தமிழ் வளம் பாலித்த சுதுமலைப்
பைந்தமிழ்த் திரு வருகவே' என்று வாரானைப் பருவத்திலே அம்மாள் வாழ்த்தப்படுகின்றாள்.
மற்றுமொரு பாட்டிலே "தவநிந்தை தாங்கினுஞ் சிவநிந்தை தாங்கலாச் சங்களைப் பிராட்டி"
என்று அம்மையாரை அழைக்கிறார் புலவர். (சங்களை - சுதுமலைப் புவனேஸ் வரி அம்மை கோயில்
கொண்டிருக்கும் பதியின்பெயர்). தக்கன் வேள்வியை வீரபத்திர மூர்த்தி சங்காரஞ் செய்த செய்தியும்,
சந்திரன் சாபம் பெற்ற செய்தியும் அம்புலிப் பருவத்தில் வருகின்றன "ஒ சந்திரா! நீ உடனே இந்தத்
தெய்வச் சிறுமியோடு விளையாட வரவேண்டும் இல்லையேல், என்ன நடக்குமோ, எனக்குத் தெரியாது;
தக்கன் வேள்வியைச் சாய்த்த வீரபத்திரன் யார்? வேறு யாரும் அல்லன். அவனும் அம்மையின்
சீற்றத்தின் ஓர் அம்சம் தான் ஆகவே சுணங்காமல் உடனே ஓடி வா!" இவ்வாறு பாவனை செய்து
எச்சரிக்கிறது, அம்புலிப்பருவம்.
இன்னும் பலவற்றை நாம் எடுத்துக் காட்டலாம். தாயின்றித் தவித்த பன்றிக் குட்டிகளுக்குப்
பால் ஊட்டியமை, மலையரசன் மகளாக வளர்ந்தமை, குமரகுருபர சுவாமி களின் பிள்ளைத்தமிழ்ச்
சுவையை நுகரும் பொருட்டு சின்னஞ் சிறு பெண்போலே' உருவெடுத்து வந்தமை, முதலான செய்திகள்
இப்பிள்ளைத் தமிழ் முழுவதும் விரவிப் பயின்று வருகின்றன
புராணச் செய்திகளையெல்லாம், அவ்வப்பருவத்துப் பிள்ளைச் செயல்களுடன் இயைவித்து
நடத்திச் செல்லும் பிள்ளைத் தமிழ்ப் பாட்டு மரபு, சுதுமலைப் பிள்ளைத்தமிழிலும் பேணப்படுகிறது.
3.
அந்த மரபு பேணப்படுவது மெய்யே எனினும், நூலாசிரியரின் தத்துவ நோக்கும் சமயச்
சிந்தனைப் பயில்வுமே இந்த நூலின் தனிச்சிறப்பியல்பாக முனைப்புற்றுத் தோன்றுகின்றன.
திருமந்திரமொன்று இவ்விடத்து நினைவுகூரத்தக்கது. 'அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்"
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்" என்று தொடங்குவது அந்த மந்திரம். விரிசடைக் கடவுள்
திரிபுரம் எரித்தான் என்று சொல்லுகிறவர்கள் மூடர்கள் என்ற கருத்துப்படத் திருமூலர் ஓதுகிறார். நாம்
திகைக்கிறோம். 'இவர் என்ன, புராணங்களைக் கண்டனஞ் செய்யும் சுயமரியாதைக்காரரோ?' என்று
வியக்கிறோம். மந்திரச் செய்யுளின் மிகுதிப் பகுதி நமது வியப்பையும் திகைப்பையும் தீர்த்து வைக்கிறது.
"முப்புரம் ஆவது மும்மல காரியம்" என்பது விளக்கப்படுகிறது கதைக்குப் பின்னாலுள்ள கருத்திலே
நமது கவனம் பதிக்கப்படுகிறது
பண்டிதர் கந்தையா அவர்களும் திருமூலரைப் பின் பற்றித் தத்துவக் கருத்துகளுக்கு முதன்மை
தருகிறார். பிரபந்தம் முழுவதிலும் இதற்கு உதாரணங்கள் பல காணலாம். வகை மாதிரிக்குச் சில
செய்யுளடிகளை நோக்குவோம்.
அ. 'கன்ம பந்தத்தினாற் சென்மநொந் தத்திற
கடைப்படும் உயிர்க்குலத்தைக்
கை தூக்கும் அருளினாற் கால் தூக்கி ஆடும் அக்
கருணாகரக் கடவுள் சீர்த்
தன்ம பத்தினியாகி …… "
ஆ. 'பாரும் நீரும் முதலாகப்
பகரும் நாதம் இறுவாந்தத்
துவமாறாலும் தொடுத்தியங்குந்
தொடர்பே வருக வருகவே
துரிய விளக்கே, விளக்கின் ஒளிர்
சுடரே வருக, வருகவே
இ. வீறார் ஞான யோக நிலை
சோரா திருப்பார் சுகாநுபவச்
சுவையே வருக வருகவே
துரிய விளக்கே, விளக்கின் ஒளிர்
சுடரே வருக, வருகவே"
ஈ. "கெடுத்து மலத்துயர் கேழ்கிளருயிருறு
கேதம் ஒளித்தொரு நின்
கிளர்வுறு தொழிலறி விச்சை வழிப்படு
கேண்மை படுத்தருள்வாய்..."
உ. அண்ட பிண்ட மடங்க நினை
அல்லா தில்லை நின்னினல்லால்
ஆத்மானந்தப் பேறெவர்க்கும்
ஆமா றிலையென் றருள் முகத்திற்
கண்ட காட்சி சலிக்காமற்
கண்ணார் சகஸ்ர தளமீதே
கருத்தை இருத்திக் கங்குல் பகல்
காணார் பேணும் ஆதரமீக்
கொண்ட உரவோர்க் கருள் ஞானக்
கொழுந்தே...’
மேற்காட்டிய செய்யுளடிகளிலும் பிறவற்றிலும் தத்துவ ஞானக் கருத்துகள் நேரடியாகப்
பேசப்படுகின்றன. இது ஒரு முறை.
மற்றுமொரு முறையும் உண்டு. மனவாசகங் கடந்த கருத்துகளையும், கண்டும் விண்டிட
முடியாத அநுபூதியையும் பொறிபுலன்களுக்கு வசமாகும் பொருள்களுடன் பொருத்திக் காட்டி ஒருவாறு
தெரிவிப்பது தான், அந்த இரண்டாவது முறை. மணிவாசகர் திருவாசகத்திற் கையாண்ட உத்தி
முறைகளிற் பிரதானமானது இதுவே ஆகும். திருவெம் பாவையும் திருவுந்தியாரும் அன்னைப்பத்தும்
இங்கு நினைவு கூரத்தக்கன.
‘சித்தமுஞ் செல்லாச்' சேண்மையில் உள்ளவற்றை மெய்ப்படுத்திப் புலக்காட்சி ஆக்குவதே
இங்கு நாம் பார்க்கும் கலையாக்க நெறியாகும். பாட்டியற் கலையில் ஆற்றல் வாய்ந்தோர், இந்த
நெறியில் நின்று புலக்காட்சிகளைச் சொல்லாட்சி கொண்டு நிகழ்த்திக் காட்டுவர். அவ்வாறு நிகழ்த்தும்
திறன் புலமை எனப்படும். புலமை உள்ளவர்களே புலவர் ஆவர். புலமையே ஞானமும் ஆகும்.
புலவன் நிகழ்த்திக் காட்டும் புலக்காட்சியில் இருவகைக் காட்சிகள் முதன்மையானவை.
அவை கட்புலக் காட்சியும் செவிப்புலக் காட்சியுமாகும். மெய், வாய், மூக்கு ஆகியவற்றுடன்
தொடர்புபட்ட புலக்காட்சிகளும் சில வேளைகளிற் புலவர்களால் நிகழ்த்திக்காட்டப்படும். ஆயினும்
பாட்டாகிய சொற்கலையைப் பொறுத்தவரை கண்ணும் காதுந்தான் முதலிடம் பெறுகின்றன.
கட்புலக் காட்சி, சொல் சுட்டும் பொருள்களின் நினைப்பு மூலமும் அவற்றின் வழியே தோன்றும்
உணர்வு மூலமும் நிகழும். செவிப்புலக் காட்சி சொல்லோசை மூலமும் சொற்பொருள் மூட்டி விடும்
நினைவோசை மூலமும் நிகழும்.
இவ்விருவகைப் புலக்காட்சிகளையும் மூட்டி விடுவதில் சுதுமலைப் புவனேஸ்வரி அம்மை
பிள்ளைத்தமிழைப் பாடிய பண்டிதரவர்கள் சமர்த்தராகக் காணப்படுகிறார். அவர் காட்டும் காட்சிகள்
இரண்டைக் காண்போம்.
அ. நீராடற் பருவத்தில் வரும் எட்டாஞ் செய்யுளை நோக்குவோமாக. திருமகளும்
கலைமகளுமாகிய இரு தோழியரோடுஞ் சேர்ந்து புவனேஸ்வரிச் சிறுமி நீராடுகிறாள். நீர்நிலையிலே
தண்ணீர் சுழன்று சுழித்து ஒடுகிறது. நீரைத் துழாவியும் அதில் மிதந்தும் கண்களைப் பொத்தியும்
செவிகளைப் பொத்தியும் அந்தச் சிறுமி நீராடுகிறாள். 'முகேர்' என்ற ஒலி அந்த மூன்று சிறுமிகளும்
முழுகும்போது உண்டாகிறது. - புலவர் கையாளும் சொற்கள் பின்வருவன
"சொற்படு திருமகள் கலைமகள் எனுமிரு
தோழியர் பாங்காகச்
சுரி புனல் ஆழ்ந்து துழந்து மிதந்தும்
துனை விழி செவி பொத்தி
முற்படு நீரில் முகேரெனும் ஒலி எழ மூழ்கி - "
சிறுமிகள் நீராடும் காட்சி கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் கற்பனை விருந்தாக நமக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன், 'மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்து' அவன் கழல்
பாடும் 'திருவெம்பாவையரையும்' நாம் நினைத்துக் கொள்ளுகிறோம்.
ஆ. அடுத்து, சப்பாணிப் பருவத்தில் வரும் முதலாஞ் செய்யுளைப் பார்ப்போம்.
தாமரையில் வைத்த பவளச் செப்பொன்று சற்றே திறந்திருக்கிறது. உள்ளே உள்ள முத்துகளில் ஒரு
பகுதி தெரிகிறது. அதாவது புவனேஸ்வரி சிரிக்கிறாள்; அவள் முகம் தாமரை; வாய் பவளம்: பற்கள்
முத்து. பால் வடியும் முகம்! தாமரையின் அகவிதழ் போன்ற பாதங்களை மடித்துப் பத்மாசனம் போட்டு
அமர்ந்திருக்கிறது குழந்தை. அனிச்சம் பூப்போன்ற மென்மையான சிவப்பு மெத்தையிற் செவ்வையாக
நிமிர்ந்து இருந்து கொண்டு சப்பாணி கொட்டுகிறாள் அந்தச் சிறுமி. புலவர் பாடுகிறார்.
"பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
பாதிமுத் தொளிர்வதேய்ப்பப்
பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச் சிதர்ப்
பால் வாய் குதட்டி, யாணர்ச்
செங்கமல வகலிதழ் சிவனும் இருபதமடித்
தொன்றுபத் மாசனத்திற்
சீர் திகழ் அனிச்ச செஞ் செந்தூவி அணையினிற்
செவ்வே நிமிர்ந்தமர்ந்து ….
சங்களை இருக்கை கொண் டெங்களை உருக்கும்
அனைசப்பாணி கொட்டியருளே
இந்தப் பாட்டு, சப்பாணி கொட்டுஞ் சின்னஞ்சிறு பெண்ணைச் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறது.
இவ்வாறே அருமையான புலக்காட்சிகளை நிகழ்த்தும் கட்டங்கள் பல, சுதுமலைப் பிள்ளைத்தமிழில்
உண்டு.
4
பழைய பிள்ளைத் தமிழில் வராத சில புதிய அம்சங்களும் இந்தப் பிள்ளைத்தமிழில் உண்டு.
பிரபந்தத்தில் வரும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருப்பது சுவை
பயப்பதாயுள்ளது. ஆஸ்திகப் பொலிவு, பூராய விடுப்புகள், செய்காரியகட்டி, உதுவொன்றும் போதாது,
தன்மானக் குழவி, ஆனை வருங் குதிரை வரும், நிரந்தரச் செந்ததமிழ்ப் பித்தன், நீ பழிகாரியானது,
இயந்திரக்கழுகு, இளம்பத மூரல் என்பன மேற்கூறிய தலைப்புகளிற் சிலவாகும்.
நிகழ்கால நடப்பியல் வாழ்வுத் தொடர்புள்ள குறிப்புகளும் இடையிடையே காணப்படுகின்றன.
‘சோரத்தனத்தால் மண்ணுரிமை
சுரண்டி விழுங்கி நப்பாசைத்
தோலத்தனத்தாற் போர்க்கெதிரும்
துஷ்டத் தனத்தார் தமிழ்ப் பகைஞர்
கோரத்தனம் போய்க் குடிமுழுகக்
குண்டும் பிறவுங் கொண்டெதிர்ந்து’
என்று தாலப் பருவத்து நாலாம் பாட்டுப் பேசுகிறது இதன் பொருள் வெளிப்படை.
"இஞ்ஞான்று வான்
சரித்திடித் துருத்து மின்னும்
சனியனாம் இயந்திரக் கழுகினுக் கஞ்சியோ "
என்பது மற்றொரு பாட்டின் பகுதி - இது ஹெலிகளையோ வேறு வகை விமானங்களையோ கருதியது
போலும்!
5
சுதுமலைப் புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழின் இயல்புகளிற் சிலவற்றைச் சற்றே
எடுத்துக் காட்டினோம். இந்த நூலின் மொழி நடை, பழந்தமிழ்ப் பயிற்சி அதிகம் இல்லாதவர்களுக்கு
ஓரளவு சிரமந்தரலாம். ஆயினும் சிரமப்பட்டேனும் முயன்று பயில்வோர் அதன்பொருட்டுச் செலவிடும்
நேரம், அவமே ஒளியாதென்பது திண்ணம்.
புதியதொரு பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தைப் பதிப்பிக்க முன்வந்த வெளிபீட்டாளர்களும் பாராட்டுக்கு
உரியவர்களே.
நீர்வேலி தெற்கு, இ. முருகையன்
நீர்வேலி.
15 07 - 1987
-----------------------------------------
வாழ்த்துரை
சுதுமலைப் புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழ்
ஏழாலை பண்டிதர் மு. கந்தையா யாழ்பாணம் சுதுமலையில் சங்களை என்னும் பகுதியிலே
கோயில் கொண்டருளியுள்ள அருள்மிகு புவனேஸ்வரியம்மையின் பேரிலே பிள்ளைத்தமிழ்
பாடித்தந்துள்ளார். சுதுமலைப் புவணேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் தற்போது
அமைதியிழந்தும் அல்லற் பட்டும் மரணபயங் கொண்டுமுள்ள மக்களுக்கு அம்மையின் அருளை
வேண்டி அமைதியும் ஆதரவும் நல்கும்படி இரக்கின்றது. எம்முடைய சொந்தக் குழந்தைக்குப் புதிய
ஆடைகள் அணியவும் புதிய அணிகள் புனையவும் நாம் விரும்புகின்றோமல்லவா? அவற்றை
அணிந்துள்ள குழந்தை அழகு எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. இறைவன்மீது
இறைவிமீது பிள்ளைத்தமிழ் பாடுபவர்கள் இத்ததைய உள்ளம் படைத்தவர்களாக அமைகின்றனர்.
இங்கு இறைவியைக் குழந்தையாகத் தரிசிக்கிறார் ஆசிரியர். தான் தரிசித்தது போல் மற்றவர்களையுந்
தரிசிப்பதற்கு இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் மூலம் அவர் வழிவகுக்கிறார்.
பிள்ளைத்தமிழ் இலக்கிய வடிவத்தின் தோற்றம் பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும்
கண்ணனைக் குழந்தையாகவும் பாவனைபண்ணிப் பாடிய பாடல்களிலேயே இடம் பெறுகின்றது.
குலசேகர ஆழ்வாரும் தன்னைச் கோசலையாகவும் தேவகியாகவும் பாவனை பண்ணிப் பாடிய
பாடல்களும் இத்தகையனவே. ஆனால், பிள்ளைத்தமிழ் ஒர் தனி இலக்கிய வடிவமாகச் சோழப்
பெருமன்னர் காலத்திலேயே தோற்றம் பெற்றது. ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன்
பிள்ளைத்தமிழ் முதன்முதற் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். தமிழிலே பெருந்தொகையான
பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் ஒரு சிலவே இலக்கியச் சுவையும் பத்திச் சுவையும்
கொண்டமைந்துள்ளன. அச்சிலவற்றுள் சுதுமலைப் புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழ் நூலும்
சேரும் என்பது என் எண்ணம்.
பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு
வகைப்படும். குழந்தையின் பத்துப் பருவங்களைப் பாடுவது மரபு. அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு
இயல்பாயுள்ள செயல், தன்மை, நிலை ஆகியன பாடப்படும். அவற்றுள் முதல் ஏழு பருவங்களும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றாகவே அமையும். இறுதி மூன்றும் ஆணுக்கு வேறாகவும்
பெண்ணுக்கு வேறாகவும் அமையும். ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குக் காப்பு, தால், செங்கீரை
சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில் சிறு தேர் என்ற பத்துப் பருவங்களும் அமையும்.
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கோ இறுதி மூன்றும் முறையே கழங்கு அல்லது நீராடல், அம்மானை,
ஊசல் என அமையும். சுதுமலைப் புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை,
தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்ற முறையிலே
பருவங்கள் பத்தும் அமைகின்றன. ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
பாடல்களெல்லாம் பக்திச் சுவையும் இலக்கிய சுவையும் கொண்டனவாக அமைந்துள்ளன.
ஆசிரியருடைய சைவ சித்தாந்த ஞானப் பாடல்களினூடே செறிந்து வருகின்றது சுதுமலையம்மனின்
கோயிற் சூழல்,
‘கொண்டல்மலி சோலை நற் குயில்கூவ மயிலாலும்
கோலமார் சுதுவை நகரிற்
குனிரால நீழலிற் குரவுமலி மணமறாக்
கோயிலின் மேய தேவர்"
என்று பாடப் படுகின்றது. கோயிற் சூழலை உணர்ந்தவர்க்கு உண்மை; உணராதவர் மனத்தில் உணர்வு.
செங்கீரைப் பருவத்தைப் பாடத் தொடங்கும் போது பாரதியின் பாட லடியினை அருமையாக
உபயோகித்து,
"ஆதிப் பரம்பொருனி னூக்கமிவ் வுலகாக்கம்
ஆமெனுஞ் சுருதி தேர்வார்க்
கவ்வூக்க மிவ்வா றிருக்குமென் றறிவிக்கு
மார்வங் கொலோ … … …’
என்று பாடுகிறார்.
"சீராய மகளிர்தம் பூராய விடுப்புகள்" என்று நம் நாட்டுப் பெண் பிள்ளைகளிலே
அன்னையைக் காணுகிறார் ஆசிரியர். குழந்தையின் செயலை வியக்கும் எமதூர்த் தாய் போல
''சிற்றில் விளையாடுமெஞ் செய் காரியக் கட்டி" என்று வியந்து உவகையூட்டு கிறார்" "ஏனழுதாய்
பெருமாட்டி" என்று வினவி தாலப் பருவத்தின் தன்னமகளைப் பாடும் ஆசிரியர் குழந்தைக் கோலத்தை
மலர் வண்ணங்களாலே புனையும் பொழுது,
"செங்கமலம் வியர் வரும்பச்
சேதாம்பல் இதழ் துடிப்ப
சிறுநீல மலர் மயங்கித்
தெளிதுளிநீர் முத்துருள"
என்று பாடுவது பரவசப் படுத்துகின்றது.
பருவத்தின் செயல்களையும் உணர்வுகளையும் புலப்படுத்துவதற்கேற்ற வகையிலே
பொருத்தமான சந்தங்களை ஆசிரியர் அமைத்துச் செல்கிறார். பொருள் விளங்கப் பாடல்களை
ஊன்றிப் படிப்பவர்களுக்கு இச்சந்தங்கள் நிச்சயம் விருந்தளிக்கும்.
"தெய்வ ஞானச் செழுமை நலந்
தேக்கும் மூத்த திருமகவும்" என்றும்,
"மேனைவிழி மணிவிளக்கே
மெய்யுணர்வோர் தீம்பாகே" என்றும்,
"திங்கள் துளங்கொளி பொலிசெஞ் சடையிற்
றோனார் நறுங்கொன்றை" என்றும்,
"செங்கயல் பெருவிழி நங்கையர் நடமிடு
சீர்மிகு பாணியினில்”
என்றும் வண்ணச் சுவை பயக்கப் பாடல்கள் அமைந்துள்ளன.
சுதுமலை புவனேஸ்வரியம்மை பிள்ளைத் தமிழ்
தமிழ் இலக்கியச் செழுமைக்கு மேலுமொரு பங்களிப்பாகும். சைவத்தமிழுலகம் இதன் பக்திச்
சுவையையும் சீத்தாத்தக் கனிவையும் நிச்சயம் உணர்ந்து பாராட்டும். இந்நூலின் சில நலன்களை
மாத்திரம் இங்கு சிலாகித்துக் கூற அருள் சுரந்த சுதுமலை புவனேஸ்வரி அம்மையின் அருளேயருள்.
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை, யாழ். பல்கலைக் கழகம்
23- 6- 1987.
---------------------------------
பதிப்புரை
உ
சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சர்வ மங்களங்களும் நிறைந்த தான்தோன்றி அம்பிகை.
அவள் எல்லாவிதமான மங்களங்களோடு கூடியவள். எது நலன் தருகிறதோ அது மங்களமானது.
அம்பிகையினிடத்திருந்தது உலகுக்கு வருகின்ற வாய்ப்புக்கள் அனைத்தும் நலன் தருபவைகளாம்.
தத்துவ ஆராய்ச்சி முறையாகப் பண்ணுகிற வர்களுக்குக் கேடு என்று சொல்லப்படுவதில் மறைமுகமாக
நலன் இருக்கிறது என்பது புலனாகும். பிரபஞ்சமெங்கும் நிகழ்கின்ற சகல விதமான செயல்களினின்றும்
இறுதியில் நலனே வாய்ப்பதால் அம்பிகை சர்வமங்களா எனப் போற்றப் பெறுகிறாள்.
இவ்வம்பிகை சுதுமலை மக்களையல்லாது அயற்கிராமங்களிலுள்ள மக்களையும்; மணிவாசகப்
பெருமான் திருவாய் மலர்ந்தருளியது போல், "பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி அருள் பாலித்து ஆண்டு வருவது, அவ்வூர் மக்கள் யாவோரும் முன்செய்த
புண்ணிய பலனாகும். மங்கள வடிவினளாகிய சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளின் வரலாறு,
1986-ம் ஆண்டு வைகாசி மாதம் 22-ம் திகதி அம்பாளின் தேர்த்திருவிழாத் தினத்தன்று புத்தகவடிவில்
முதல் வெளியீடாக வெளியிடும் வாய்ப்பினை, சந்திரனையும் சூரியனையும் இரு காதுகளுக்குரிய
தோடுகளாக அணிந்திருப்பவளாகிய அம்பிகை அளித்தமை யாவோருக்கும் தெரிந்திருக்கலாம்.
சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளுக்கு ஒரு 'பிள்ளைத்தமிழ்' நூல் இல்லாதது ஒரு
பெருங்குறையாக இருந்து வந்தது. இதனை, சென்ற வருட இலட்சார்ச்சனை இறுதித் தினமாகிய
ஆடிப்பூரத்தன்று நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பர் க. நவரத்தினம் அவர்களும்
சுட்டிக்காட்டினார். இந்த உந்தலை அம்பாள் கட்டளை என நினைந்து ஏழாலையை இருப்பிடமாகக்
கொண்ட பண்டிதர் மு. கந்தையா அவர்களை நாடினேன். அவர் முதிர்ச்சியுற்ற இவ்வேளையிலும்
குழந்தைபோல் உற்சாகத்துடனும் மனப் பூரிப்புடனும் அம்பாள் மீது "பிள்ளைத்தமிழ்" பாடித்தருவதற்கு
உடன் சம்மதித்தார்.
பிள்ளைத்தமிழ் இலக்கியம் தமிழ் பிரபந்தவகைகளில் ஒன்று. குமரகுருபரர் மதுரை
மீனாட்சியம்மை மீது பாடிய பிள்ளைத்தமிழ் சைவ உலகம் போற்றுகின்ற அதிசிறந்த பிள்ளைத்தமிழ்
நூலாகும். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் மக்களின் பருவ வளர்ச்சியைக் கூறுகின்றது. மக்களின்
வளர்ச்சி இறைவனின் முழுமையைக் குறிக்கும்.
பண்டிதர் மு.கந்தையா அவர்கள் குமரகுருபரரின் பிள்ளைத்தமிழுக்குச் சற்றும் குறையாத
வகையில் இந்நூலினை ஆக்கி உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இப்பிள்ளைத்தமிழ் நூலினை அச்சிடுதற்குரிய செலவை எப்படிப்பெறுவது என்ற
சிந்தனையிலிருந்த சமயம் யாழ்பாணப் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரு சிலரும் அம்பிகை அடியார்கள்
சிலரும் மனம் கோணாது தந்துதவிய நிதியின் உதவியினால் இன்று ''சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி
அம்மை பிள்ளைத்தமிழ் நூல் உங்கள் ஒவ்வொருவரினதும் கரங்களில் மலர காணும் பொழுது பத்திப்
பரவசமடையக் கூடியதாகவிருக்கின்றது.
இவ்வரிய நூலினை வாங்கியதோடு நில்லாது, அவற்றை மனனஞ்செய்து இஷ்டசித்திகள்
பெற, கடம்பப் புஷ்பத்தைக் காதில் அணிந்திருப்பவளாகிய சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள்
அருள்பாலிக்கவேண்டுமெனப் பிரார்த்திப்பதுடன் இவ்வரிய நூலின் வெளியீட்டிற்குப் பலவழிகளிலும்
உதவிய அன்பர்கள் அனைவர்க்கும் அம்பாள் திருவருள் பாலிக்க வேண்டுமெனவும் இறைஞ்சுகின்றேன்.
குறிப்பாக இந்நூலினை வெளியிடுவதற்குப் பக்கபலமாக இருந்த நயினை ச. நவரத்தினம்
அவர்கட்கும், இளைப்பாறிய ஆசிரியர் க. குமாரசுவாமி அவர்கட்கும், இக்கோயிலின் பிரதம குருக்களான
சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள் அவர்களுக்கும் எனது அன்பு நன்றியைத் தெரிவிக்கக் கடப்பாடுடையேன்.
மேலும், இந்நூல் வெளிவருவதற்குத் தங்கள் அனுசரணையை எவ்வித தடையுமின்றி வழங்கியதோடு
நில்லாமல் தங்கள் வாழ்த்துக்களையும் தெரியத்தந்த தர்மகர்த்தா சபைநீடு வாழ்ந்து இது போன்ற
அரிய செயல்களைச் செய்ய ஊக்கமளிக்கவேண்டுமென எல்லாம்வல்ல ஆதி பராசக்தியைப்
பிரார்த்திக்கின்றேன்.
இந்நூலினை மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் பதுப்பித்துத் தந்துதவிய செட்டியார்
பதிப்பகத்தார்க்கு எனது உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.
மேலும், பண்டிதர் கந்தையா அவர்கள் தொடர்ந்தும் இது போன்ற சைவப்பணியை ஆற்றச்
சாந்திமதியாகிய சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் அவருக்கு நீண்ட ஆயுளையும் சகல
செல்வங்களையும் கொடுக்கவேண்டுமென வேண்டுகின்றேன்.
சுதுமலை தெற்கு, தம்பிப்பிள்ளை காசிநாதன்
மானிப்பாய்,
19.07.1987
-------------------------------------
சுதுமலைப் புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழ்
உ
சிவமயம்
காப்பு
பிள்ளையங் கனியமுதி னென்னருஞ் சுவையினிமை
பெரியபெரு மாற்குமேலைப்
பிராட்டிக்கு மூட்டியவர் பெருமுதன்மை மற்றதன்
பேறாக மாறுகொண்டே
உள்குவார் தனைமுதலி னுள்கினவ ருள்குதற்
கூதியம் மிகவுமாக்கி
உய்வதொரு கதிதரூஉஞ் சைவஞா னப்பிள்ளை
ஒண்மலர்த் தாள்பணிகுவாம்
பள்ளமார் வெள்ளவலை யாழிக் கரைத்தோணிப்
பாய்மரக் கூம்பதென்னப்
பருமணிக் கோபுர மிலங்கியொளிர் சங்களைப்
பதிமரூஉஞ் சினகரம்வாழ்
புன்னவர மோரிருவ ரறியாப் புராதனிநம்
புவனேஸ் வரிப்பிராட்டி
புகழ்மருவு பிள்ளைத் தமிழ்க்கமையு மகிமைகள்
போதநின் றொளிரவினிதே.
----------------------------------------
1. காப்புப் பருவம்
திருமால்
'குதலை மதலைப்பிள்ளை'
சீரோதி மத்தன்முத லாவரு சிருஷ்டிகள்
சென்மசா பல்யமுறுமா
திகழ்போக நிகழ்வளவு தேகதர் மத்திற்கொர்
தீதுறா வண்ணமருளி
க்ஷீரோத திக்கணுறு தாமோத ரக்கடவுள்
செஞ்செநாப் புலவர்போற்று
செந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்
திருமால் பரிந்துகாக்க
பாரோது மறைகட்கு மறையாம் பழம்பொருள்
பராபரை தராதலத்துப்
பழமைதிகழ் சுதுவையிற் சங்களைப் பதிமேவு
பர்வதா வர்த்தனியெனப்
பேரோது மெழிலரசி யினைநாண் மனோன்மணிநற்
பெருகருட் குதலை மதலைப்
பிள்ளையென வெளிவந்தெ முள்ளமுழு தாளும்
பிராட்டிப்புவ னேஸ்வரியையே. 1
--------------------------------------------
சிவபெருமான்
'ஏகநாயகிபுவனை '
சொல்லார்ந்த சுருதிநன் மிருதிசாத் திரந்தமிற்
சொல்லுவசொ லாதவுமெலாம்
தூயோர்த நிமலமெய்த் தரிசனத் தொளியினிற்
றோன்றுவதோன் றாதவுமெலாம்
எல்லார்ந்த தன்மயத் தியையுமுழு விளைவெனும்
ஏகபரி பூரணமெனா
எவ்வுலகு மேத்துபுக ழின்புருவி னன்புமுத
லெம்பிரான் சிவன்புரக்க
அல்லார்ந்த மலமறைப் படர்த்திக்கு முள்ளாலொர்
அளைகண்டு தான் நுழைந்தே
ஆத்தும வளாகத்தி னடிமனையிற் குடிகோலு
மருளார் திரோதையாகிப்
பொல்லாத வம்மலப் புரைதீரு மெல்வையிற்
போதமெய்ப் பரையாகிநற்
போகமோ க்ஷங்களரு ளேகநா யகிபுவனை
புனிதையெம் பொற்கொழுந்தையே. 2
-------------------------------------
விநாயகர்
‘செம்மைப் பசுங்குழவி'
வேழத்து மஸ்தகம் விரிசெவியி னிணைகூர்ங்கண்
வெண்கோ டிலங்குமுந்நூல்
வியன்துதிக் கையொளிர வீறுமூ லாதார
விரிகமல பீடமேவும்
ஆழத்துப் பிள்ளையாய் ஆத்தும விலாசிகள்த
மகவளா கத்துளோங்கி
ஐம்புலக் களிறடர்த் திம்பர்வாழ் மயல்போக்கு
மைங்கரன் பதம்பணிகுவாம்
ஈழத்து யாழ்சுதுவை யேயசீர்ச் சங்கனை
யிருந்தருளு மெம்பிராட்டி
எம்மையருள் கருணையிற் செம்மைப் பசுங்குழவீ
யாயியைந் தெமதுபுன்மை
காழத்து வாதசாந் தத்திலா யிரவிதழ்த்
தண்கமல பீடமேற்றத்
தகுவனகள் கோலிநம் மகநிலவு சங்களைத்
தாயைப் புரக்கவென்றே. 3
-------------------------------------
முருகக் கடவுள்
‘நேயமுழுதாள் புவனை’
ஒன்றின்றி யொன்றுமிலை யுன்னுமவ் வொன்றுதா
னொன்றினிலு மொன்றவிலையென்
றுன்னாம லுன்னியஃ துணரா துணர்ந்துளோ
&nbp; ருயிர்க்குளுயி ராவுயிர்த்து
நின்றென்று நெறிகாட்டு நேயசிவன் மாமகிமை
நிதர்சனம தாகவந்து
நிலவுல குதித்தவடி நெடுவேற் பிரானெங்கன்
நீபமார் மார்பன்காக்க
நன்றொன்று சிவசீவ நடுவுநின் றூடாடி
நாளுநாட் சிவனுற்ற
ஞாலமயல் மென்மெல நகர்த்தியிரு வினையொப்பு
நன்குறவ ரத்தியருளிற்
சென்றொன்று மாறருள வென்றென்று மேபுறஞ்
சென்றுசென் றுவக்குமன்னை
சேயென வமைந்தெமது நேயமுழு தாள்புவனை
செம்பவள வல்லியினையே. 4
---------------------------------------------
பிரமா
‘சீர்விலாசினி'
அண்டமுத லணுவிறுதி யாமாயா பண்டங்கள்
அளவில்பல் சராசரங்கட்
கானதநு கரணங்கள் போகபோக் கியங்களா
மவைகளும் மாறிமாறி
எண்டகுபல் லூழிகள் இயற்றிடச் சேந்ததன்
உடலுறுப் புள்ளமெல்லாம்
என்னச் சிவந்தசெந் தாமரையி லேய்பிரமன்
என்றென்றுங் காக்கவினிது
கொண்டல்மலி சோலைநற் குயில்கூவ மயிலாலும்
கோலமார் சுதுவைநகரிற்
குளிரால் நீழலிற் குரவுமலி மணமறாக்
கோயிலின் மேயதேவர்
விண்டுவா தியர்பரவ வேதவே தியர்வாழ்த்த
விளங்குபொன் மஞ்சமேற்றி
விண்மகளிர் கோதாட்ட வீற்றிருந் தருள்புனை
விமலைசீர் விலாசினியையே. 5
-------------------------------------------
இலக்குமி
"சீர்த்திடப் பார்த்த செல்வி'
இம்மைக்கு வாழ்வளித் தம்மைக் கறங்கூட்டு
மேதுசா தனமாயமைந்
திருமைக்கு மொருநிலைய தாஞ்செல்வ மீந்துலகு
சீர்த்திடப் பார்த்தசெல்வி
செம்மைக் குவட்டுமுலை யேர்கடாய்க் கரியமால்
திருமறுநன் மார்பனெனநேர்
செந்தமிழ்க் கற்பனைக் குகந்தநற் காரணியெந்
திருமகள் காக்கவென்றும்
மும்மைத் தமிழ்ப்புரவு பூண்டுலவு மறிஞர்வாழ்
முதுபுகழ்ச் சுதுவைமேவி
மூவாத அன்புதந் தோவா தெமைப்பணிகொள்
முக்கணான் பன்னிமுன்னை
வேம்மைப் பவங்களற வீார் கடாக்ஷமா
வீக்ஷணத் திறைவிமேலை
விண்ணுலகு பணிவினவி மண்ணிழிய வருள்புவனை.
வித்தகப் பாலகியையே. 6
-------------------------------------
சரஸ்வதி
'உள்ளோது வெள்ளோதிமம்'
கள்ளூறு செஞ்சொலின் கவிதொறும் வாயூறு
கனிரசத் தேன்பிலிற்றுங்
கற்பனா கர்வமிகு காளிதா சன்கம்பன்
காளமுகி லாதியர்பால்
அள்ளூறு மினிமைநல மத்தனைக் கும்பரம
ஆதார பூதநானென்
றறிஞரறி வுள்ளோது வெள்ளோ திமம்அமுத
வாணிகலை யரசிகாக்க
உள்ளூறு முணர்வுக்கு முள்ளூறி வந்துவந்
துயிர்குளிர்ப் பெய்தவேறி
உடல்வளா கத்தளவு மோங்கியும் புலன்களவை
யொன்றுக்கு மெட்டாவிதத்
தெள்ளூறு மின்புண்மை தேர்குநர்க் கமுதூறு
சிவானந்த வல்லிதெய்வச்
செம்மைமலி சங்களையி லெம்மையாண் டருள்புலனை
சேயிளஞ் செல்விதனையே. 7
-------------------------------------
துர்க்கை
‘ஞானாக்னிகற்பம் '
நாதமய மாயதொல் வேதமூ லம்வீறு
ஞானாக்னி கற்பமென்ன
நாட்டுபொரு ளீட்டமுறு நீசவ ரேசர்குல
நாசப் படுத்துநல்லோர்
பாதபரி சம்பெறீஇப் பரமசிற் சுகமுறூஉம்
பரானந்த ஞானமோனப்
பக்வமுற வந்துலவு துர்க்கைநா யகிசெழும்
பதமலர்க ளேத்தெடுப்பாம்
பூதமுதல் நாதபரி யந்தம் புகுந்துலவு.
புஷ்கலை நிஷ்களசிவப்
பொன்னினொளிர் மின்னெமது புன்மைக ளகன்றிடப்
பொய்யிலா மெய்ம்மைகாட்டும்
போதநெறி காட்டியருள் பூரணா னந்தமயி
பொங்கொளிச் சங்களையமர்
பண்யமுதல் கண்யமிகு புவனைநா யகிநலம்
போற்றிப் புரக்கவென்றே. 8
-----------------------------------
சப்தமாதர்
'நற்றாயாகப் பெற்றவள்’
பட்டர்பா டற்குநற் பரிவுற் றளித்தவள்
பரியசூர்ப் பகைவேலி னெரிகொள விழித்தவன்
பாங்குறு விசுத்தியிறை வனையென்று நினைபவள்
பாய்புலியி னுரியாடை பாங்கினிற் புனைபவள்
விட்டொளிர் வெள்ளானை மீதுற்று வந்தவள்.
வீறார்ந்த கலுழனொடு விண்மேல் நிவந்தவன்
விழிசுழல் பேய்களொடு விழவுற் றயர்ந்தவள்
வீறுகெழு மிவ்வெழுவர் மெய்யருள் வேண்டுதும்
துட்டமத னைப்பொடிசெய் தூயோன்பங் குற்றவள்
தொல்லுயிர்த் தொகைக்குநற் றாயாகப் பெற்றவள்
துரியநிறை பானந்த மானதிரு வுருவினள்
தூயர்த மிதயவொளி யாயென்று மருவினள்
அட்டதிசை தன்னாணை வழிநிற்க வைத்தவள்
ஆருநிலை நிற்பதற் கரிதான மெய்த்தவள்
அளிமிகுமெய்ஞ் ஞானவெளி யாமம் பரத்தவள்
ஆயசங் களையினெம் மமுதைப் புரக்கவே. 9
முப்பத்துமுக் கோடிதேவர்
‘ஆஸ்திகப் பொலிவு'
பன்னிருவ ராதித்தர் பகர்மருத் துவரிருவர்
பண்புசால் வசுக்களெண்மர்
பரமசிவ னருளுருப் பாங்குபெ றுருத்திரர்
பத்துக்கு மேலுமொருவர்
முன்னவன் மடியாத ஆணையின னாந்தன்மை
முன்னுபய பக்திகூர
முந்தியவ ரவர்பணியின் முன்னிற்கு முப்பத்து
முக்கோடி தேவர்காக்க
மன்னுகுல மாதரார் வருபுனற் பசையறா
வளர்கூந்தல் புறமலையவெண்
வார்குறிகள் நுதலொளிர மலர்வதன நிலவொளிர
மலர்த்தட்டு வண்கையொளிர
அன்னஅசை நடைநடந் தாலயம் வலம்வரும்
அமைதியந வரதமோவா
ஆஸ்திகப் பொலிவுதிக ழணிகொள்சங் களையிலெம்
மரசிபுவ னேஸ்வரியையே. 10
----------------------------------------
2. செங்கீரைப் பருவம்
அவ்வூக்க மிவ்வாறு
ஆதிப் பரம்பொருளி னூக்கமிவ் வுலகாக்கம்
ஆமெனுஞ் சுருதி தேர்வார்க்
கவ்வூக்க மிவ்வா றிருக்குமென் றறிவிக்கு
மார்வங்கொ லோமரகதச்
சோதிப் பொலிந்தமணி மண்டபத் தணிசெய்செஞ்
சுவர்ணபூ மியில்விரித்த
தூவெள்ளை யன்னமென் செந்தூவி யணைமிசைச்
செம்பொனுட லம்புரட்டிப்
பாதிப் பிறைக்குநிக ராநுதல் பளிச்சிடப்
பங்கயச் செங்கையூன்றிப்
பச்சிளம் பதமொன் றெடுத்தூன்றி மறுபதம்
மடித்தூன்றி மனமாசிருள்.
சேதிக்கு மின்செய்முக முன்னூக்கு சேயரசி
செங்கீரை யாடியருளே.
செங்கமல தவிசிலொளிர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 1
-------------------------------------
'ஒன்றுக்கு மஞ்சலீர்'
பொங்குமுவ கைக்களி புறம்பலைய வானந்த
பூரணப் பொற்பினெழிலார்
புதுமுளை கிளர்ந்தெனப் பொற்றூவி யணைமிசைப்
பொன்முகம் நிமிர்த்துநோக்கி
எங்குமுள யாவுமிங் கெனதாட்சி யலதில்லை
யெனுமா றசைத்தசைத்திங்
கேதுமொர் கலாம்விளைத் திடுவார்கள் பெறுவதி
தெனக்கர மெடுத்தடித்தே
உங்குமெனு மொலியெழ உரப்பிக் கனைத்தச்ச
மூடுபோக் குறவுறுக்கி
யொன்றுக்கு மஞ்சலீ ரெனஅபய கரமுமங்
கொருகா லெடுத்தசைத்தே
சிங்களி லநுக்கிரஹ நிக்கிரஹ சீர்மைநிகழ்
செங்கீரை யாடியருளே.
செங்கமல தவிசிலொளிர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 2
-----------------------------------
'பூராய விடுப்புகள்'
செங்கைக ளெடுத்தெறிந் துட்குது கலிக்குநின்
செவ்விகண் டருகணைந்த
சீராய மகளிர்தம் பூராய விடுப்புகள்
சிரிப்பினா லிறுக்குமளவில்
எங்கிருந் தோவந்த தெம்மன்னை யென்னலும்
இறங்கமுக மிட்டசைத்திட்
டிங்குதா னெனலுமற் றெங்களன் னைக்கிடம்
ஏத்துசீர்ச் சகஸ்ரதளமாஞ்
செங்கமல பீடமோ சிவனமர் கயிலையோ
தில்லையோ துரியவீடோ
சிதாகாச மோவெனலுங் கோலமுக மண்டலங்
குறுக்கொடு நெடுக்குமாட்டித்
திங்களொளி யலையலைய ‘அல்ல ஆம்' எனலுமாஞ்
செங்கீரை யாடியருளே
செங்கமல பீடமமர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 3
-------------------------------------
'பூசல்தரும் மென்சிதார்'
மானச சரோவரத் தானநன் னீர்மொண்டு
மலரிட்டுப் பொடியுமிட்டு
வானுல கரம்பையர் வந்தித்து நீராட்டி
வகிர்ந்துச்சி யூதிமுத்திக்
கானஇசை பாடிமென் காரகிற் புகையூட்டிக்
களபகஸ் தூரிவாசங்
கைகொண்டு தைவந்து கனகபீ தாம்பரக்
கைக்குட்டை யுண்மறைத்து
மேனைகை யீதலும் மெத்தெனுணர் வுள்ளூர்தன்
கைத்தலங் குளிரவேற்கும்
வேளையவ ளுண்ணிலைமை பூசல்தரும் மென்சிதார்
வீழ்க்குமுலை போலும்விழிகள்
தேனுகர் வண்டெனத் திளைத்தயர வளர்செல்வி
செங்கீரை யாடியருளே
செங்கமல பீடமமர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 4
-----------------------------------------
'செய்கா ரியக்கட்டி’
முற்றுமின் பத்துளே மூழ்குநர்க் கொருமாடி
முயங்கின்ப துன்பமொக்க
முயலுநர்க் கொருமாடி முழுத்துன் பினர்க்கொர்மாடி
மும்மாடி வீடமைத்துப்
பற்றுமிக வவ்வவர் பத்யபா கங்கண்டு
பகரின்ப துன்பமோஹப்
பல்சுவை யுணாவன்னை பாகஞ்செ யண்டப்
பழங்கல மனைத்துமுருள
முற்றவெளி யிற்றிரியு மத்தனொரு காவாளி
முன்னின் றுதைத்தழித்தும்
முனியாது பல்கா லெடுத்தடுக் கிப்புத்த
முதமாக்கி யொழியாப்பெருஞ்
சிற்றில்விளை யாடுமெஞ் செய்கா ரியக்கட்டி
செங்கீரை யாடியருளே.
செங்கமல பீடமமர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 5
-----------------------------------------
'எண்ண வசமோ'
வான்விளங் குஞ்செல்வ மதிமுனைப் பிறை யென்ன
மருவுசங் களைக்கோயிலின்
வந்திருந் தொளிர்தெய்வ வளரிளங் கொழுந்துமெய்ம்
மாதவர் போததீபம்
தான்விளங் குஞ்சதுர் மறையுமன் னேயெனுந்
தாயென்ன மேயசெல்வம்
தாழுமெமை வீழா தெடுக்கவொரு சேயான
தண்ணளியி தெண்ணவசமோ
ஊன்விளங் குஞ்சிசு வொவொன்றுந்த மில்தொறும்
உவந்துசெங் கீரையாட
உற்றசுற் றஞ்சூழல் ஒக்கவித் துடனிருந்
துள்ளநெகி ழுவகையாடத்
தேன்விளங் கும்மொழியர் சூழ்சுதுவை யாள்புவனை
செங்கீரை யாடியருளே
செங்கமல பீடமமர் சங்களைப் பேரரசி
செங்கீரை யாடியருளே. 6
--------------------------------------
வேறு
நவகயிலை
மதுமலி சோலை யசைந்துகு மலரின்
மவையென மெத்தெனவே
வான்பயில் வைரிகள் வஞ்சின முற்றுதிர்
வனகளு மண்மருவும்
புதுமை மலிந்து பொலிந்துயர் தெய்விக
புனிதநி றைந்தெங்கும்
புண்ணிய வினைமகிழ் கண்ணியர் வாழ்வுறு
பொற்பமர் வைப்பாகும்
சுதுவை யெனுந்நவ கயிலை மகிழ்ந்தருள்
தூயோய் சேயேநின்
தொண்டல தெதுவுமு வந்தில மங்கது
பண்டு மறந்தறியோம்
அதுபொரு ளாவெமை யாள்புவ னேஸ்வரி
ஆடுக செங்கீரை
அங்கனை யார்மகிழ் சங்களை நாயகி
ஆடுக செங்கீரை. 7
----------------------------------
'அந்நியமலை'
மண்ணியல் மரகத வின்முடி யாட
மணிச்சூ ழியமாட்
வானுறு கதிரென ஒளிவிடு செவியிணை
வார்குண் டலமாட
பொன்னியல் முகமதி பொழிநில வாடப்
புரிமுந் நூலாட
பொற்பொளிர் மார்பும தாணியு மாடப்
பொன்னணி வடமாட
மின்னியல் மெல்லிடை யாட விளங்கொளி
விட்டொளிர் பட்டாட
மேகலை யாட வியல்கண கணவொலி
மிகுகிண் கிணியாட
அந்நிய மலையுவிர் மன்னு மனோன்மனி
ஆடுக செங்கீரை
அங்கனை யார்மகிழ் சங்களை நாயகி
ஆடுக செங்கீரை 8
--------------------
வேறு
‘தாராய் பேரார்வம்’
மங்குல் முழங்கொலி மங்கல சங்கொலி
வானார் விழியார்வாய்
காழ்த்தொலி மந்திர மறையொலி வயிரொளி
மாறா தேவீறும்
சங்களை தங்கிய எங்கள் தயாபரி
தாழா மேநாளுஞ்
சந்நிதி தரிசன முன்னிமு னணையத்
தாராய் பேரார்வம்
பொங்சுளி மல்கிய பங்கய வதனப்
பூவாய் காவாய்நாம்
போம்வழி மாறினு மாம்பயன் மருவப்
புரியாய் சுதுவைநகர்ச்
செங்கமல லத்தவி சேறும னோன்மணி
செங்கோ செங்கீரை
திருமகள் மருமகள் மருவும னோன்மணி
செங்கோ செங்கீரை. 9
------------------------------------
‘சிவனமர் வரமகள்'
இனமலி சுருதிக ளிவளைம துயிர்முத
லென்றே நன்றோதும்
இதுபொரு ளெனவது கருதின ருனதுமு
னின்றே வந்தார
கனமலி பொழில்மிகு கவினமர் சுதுவையு
கந்தாய் எந்தாய்நின்
கருணையி னழகொழு கிருவிழி யருளினு
யர்ந்தா ருய்ந்தார்புன்
மனமலி மருளின முனதருள் நிலையுற
வந்தாள் தந்தார்வம்
வளமலி கயிலைய ருளமகிழ் தேவிசு
மங்கலை தாயேவெஞ்
சினமலி விடையமர் சிவனமர் வரமகள்
செங்கோ செங்கீரை
திருமகள் மருமகள் மருவும னோன்மணி
செங்கோ செங்கீரை. 10
-------------------------------------
3. தாலப் பருவம்
'உதுவொன்றும் போதாது'
தெய்வ ஞானச் செழுமைநலந்
தேக்கும் மூத்த திருமகவும்
திகழ்செந் தமிழ்நூற் றுறைதுருவுந்
திருவார் முருகென் றொருமகவும்
உய்ய அளித்தும் உதுவொன்றும்
போதா தென்றே யுயர்காழி
உதித்த ஒருசீர் மகவினுக்கும்
உலப்பில் ஞானங் குழைத்தூட்டிச்
சைவ ஞானத் தமிழ்க்கன்றிச்
சாலா தெனுநற் றமிழ்வேதத்
தனிநூற் பரப்புந் தந்தருளித்
தகவார் தமிழுஞ் சைவமுமிவ்
வையம் வாழ வாழ்வளித்த
வாழ்வே தாலோ தாலேலோ
மருவுங் குதலைச் செங்கனிவாய்
வல்லீ தாலோ தாலேலோ 1
-------------------------------------
'நிமலஞானபூபதி”
ஓடாப் பிணிக ளோட்டெடுக்க
உருட்டுங் குளிகை யோடுருட்டி
யுடற்றும் வைத்ய பூபதிகள்
உலகோம் புறுதிப் பயனாரும்
பீடார் செல்வ வளந்தொகுத்துப்
பெருகு மறநன் னிலைவகுத்துப்
பேணுந் தரும பூபதிகள்
பிறங்குஞ் சுதுவை நகர்நல்லோர்
நீடார் பிறவிப் பிணியோட்ட
நிகரில் மருந்தென் றிருபோதும்
நேயப் பால்விட் டுரைத்தருந்தும்
நிமல ஞான பூபதியாம்
வாடாச் சீர்த்திச் சுதுவைமலை
மருந்தே தாலோ தாலேலோ
மருவுங் குதலைச் செங்கனிவாய்
வல்லீ தாலோ தாலேலோ. 2
--------------------------------------
'தன்மானக்குழவி'
தானந் தருமங் கால்நாட்டித்
தகவாஞ் சட்ட மிடைகோத்துச்
சால்பாந் தொட்டில் ஞாலவதிற்
றகுதண் ணளியாம் மெத்தையிற்றன்
மானக் குழவி தனைவளர்த்தி
மாண்பு தாயாய்த் தாலாட்டும்
மகிழ்வார் தருநன் மங்கலப்பொன்
மனைகள் தோறும் மருமலியும்
நானக் குழலார் கோயின்மணி
நாதங் கேட்கு முன்னுணர்ந்து
நாதர் பாதந் தொழுதகவால்
நவகோள் பிழைக்கும் நாளினுநல்
வானம் பொய்யாச் சுதுவைமலை
மணியே தாலோ தாலேலோ
மருவுங் குதலைச் செங்கனிவாய்
வல்லீ தாலோ தாலேலோ. 3
-------------------------------------
‘கோலப் பச்சைப் பசும்பாலர்'
சோரத் தனத்தால் மண்ணுரிமை
சுரண்டி விழுங்கி நப்பாசைத்
தோலத் தனத்தாற் போர்க்கெதிரும்
துஷ்டத் தனத்தார் தமிழ்ப்பகைஞர்
கோரத் தனம்போய்க் குடிமுழுகக்
குண்டும் பிறவுங் கொண்டெதிர்ந்து
கொன்று குதறிக் குணலையிடுங்
கோலப் பச்சைப் பசும்பாலர்
வீரத் திருவைத் தாலாட்டி
வீதி வீதி யயர்விழவின்
மிகவுள் ளுடைந்து சங்களையெம்
விமலை யருட்பே றெனவிழிநீர்
வாரத் தொழுவார் வாழ்முதலே
வாழ்வே தாலோ தாலேலோ
மருவங் குதலைச் செங்கனிவாய்
வல்லீ தாலோ தாலேலோ. 4
--------------------------------
‘தமிழ்ச்சேய் தாலாட்டு'
பொங்கு நகைநன் மென்முகத்துப்
பொலிவின் நிலவார் பத்திளைஞர்
போதுங் கல்வி புகாமுனமும்
புனிதத் தமிழிற் பித்தேறி
இங்கு மங்குஞ் சங்கமமைத்
தெங்குந் திகழ அயர்விழவில்
இன்பச் சுவைப்பா மாலைகளும்
இணையில் ஆண்டு மலர்களுமென்
றங்கவ் வவையெல் லாஞ்சூட்டி
ஆரா விருப்பின் வாழ்த்திசைத்தே
அன்னைப் பரிவு தலைக்கொள்ள
அழகு தமிழ்ச்சேய் தாலாட்டும்
மங்காப் புதுமை வளர்சுதுவை
மாண்பே தாலோ தாலேலோ
மருவுங் குதலைச் செங்கனிவாய்
வல்லீ தாலோ தாலேலோ. 5
-----------------------------------------
. வேறு
ஆனைவருங் குதிரை வரும்
மேனைவழி மணிவிளக்கே
மெய்யுணர்வோர் தீம்பாகே
வீரவீ ராங்கனையே
மிக்குவரும் போர்வெறியர்
சேனை விலவிலக்குஞ்
செல்விதிரு முன்றினிலே
சீர்வரிசை சுமந்துவருந்
தேவேந்த்ர ராஜாவெள்
னானைவருங் குதிரைவரும்
அமரர்கணம் ஆடிவரும்
அரசர்மணி முடிநிரைநின்
அடிமலர்க்கீழ்க் கிடைகிடக்கும்
தானான தற்பரையே
தாலேலோ தாலேலோ
தவமுயல்வார் சிவவிளைவே
தாலேலோ தாலேலோ. 6
--------------------------------
‘ஏனழுதாய் பெருமாட்டீ’
செங்கமலம் வியர்வரும்பச்
சேதாம்பல் இதழ்துடிப்ப
சிறுநீல மலர்மலங்கித்
தெளிதுளிநீர் முத்துருள
அங்கைமலர் பிசைந்துபிசைந்
தணிவிரலந் தளிர்சேப்ப
அழுதழுது கசிந்துருகும்
அவலமெலாம் ஏதினுக்கோ
எங்கள்குலக் கொழுந்தினுக்கிங்
கெய்தியதும் என்னேயோ
ஏனழுதாய் பெருமாட்டீ
எமக்கொருகால் இயம்பாயோ
சங்களையாய் ஈஸ்வரியே
தாலேலோ தாலேலோ
தவமுயல்வார் சிவவிளைவே
தாலேலோ தாலேலோ. 7
-------------------------------------------------
வேறு
'நின்றே மன்றாடும்’
நிலவுல கிலகுயி ரின்ப நிலையுற
நின்றே மன்றாடும்
நிமலன திடமம ரமலை தயாபரை
நீடார் மணிமாடஞ்
சுலவிய திருவொளிர் சுதுமலை யரசிநின்
சுந்தர மதிமுகநேர்
தொழுமவர் கரகம லவிணைமுன் குவிதரத்
தூநீர்க் கண்குவளை
குலவிய துளிமது சிதர்வுற அலர்வுறு
கோல மயல்மேவுங்
குளிர்மதி கருதிமு னிலைகொள நாணியுட்
கூசி மறைந்தோடுந்
தலமியல் பொழிலணி சங்களை நாயகி
தாலோ தாலேலோ
சங்குசெய் யளைமரு வெங்கள் மனோன்மனி
தாலோ தாலேலோ 8
--------------------------------
‘சைவ தயாமூலம்’
திங்கள் துளங்கொளி பொலிசெஞ் சடையிற்
றேனார் நறுங்கொன்றை
செவ்வா னத்தொளிர் நாண்மீன் கொலெனும்
தேசு பொலிந்தாரச்
சங்கமர் குழைமகிழ் சங்கரன் பங்கமர்
சைவ தயாமூலம்
தகுதிரு மூலர்ச தாசிவ னாம்நிலை
சார்வுற வருள்செல்வி
அங்கவ ரகநில வாறா தாரமும்
வீறார் தரவோங்கி
ஆயிர விதழ்செறி யம்புய பீடத்
தனமென் பெடையெனவே
தங்குந லங்கொள்ச தாசிவ நாயகி
தாலோ தாலேலோ
சங்குசெ யளைமரு வெங்கள் மனோன்மணி
தாலோ தாலேலோ. 9
--------------------------------------------
தத்துவ நாயகி
இந்திரை கலைமக ளினுமுள இகுளையர்
இந்தா வந்தார்பார்
இமயா சலபதி யிமவான் பரிசன
மீதோ நின்றார்பார்
சந்திர சூரியர் வந்து வலஞ்செயத்
தயங்கி புயங்கினர்பார்
தந்திர நெறிபயில் தருசை வசிவா
சாரியர் மேவினர்பார்
முந்தைநன் மறைமுறை முயல்சிவ யோகியர்
மூண்டெழு குண்டலியின்
முன்னெழு சுழுமுனை யூடுத வழ்ந்தொளின்
சகஸ்ர தளஞ்சாரத்
தந்தவ ருயவருள் தத்துவ நாயகி
தாலோ தாலேலோ
சங்குசெய் யளைமரு வெங்கள் மனோன்மணிப
தாலோ தாலேலோ. 10
------------------------------------
4. சப்பாணிப்பருவம்
‘புண்ணியப் பொலிவு'
பங்கயத் தில்வைத்த பவளநற் செப்பினிற்
பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
பால்வாய் குதட்டி யாணர்ச்
செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
தொன்றுபத் மாசனத்திற்
சீர்திக ழனிச்சசெஞ் செந்தூளி யணையினிற்
செவ்வே நிமிர்ந்தமர்ந்து
பொங்கொளி பரப்பியொளிர் புண்ணியப் பொலிவினிற்
பொற்கோயி லுள்வளாகம்
பூரித்த பொற்பினிற் சீரித்த ணைந்துளோர்
புந்திமகிழ் தேசுதோற்றித்
தங்குமெம தருளரசி சகலசௌ பாக்கியவதி
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 1
-----------------------------------------------------
'ஆனந்தவடிவு'
செஞ்சொல்வினை மூலமாந் தேம்பொழியு மழலையிசை
தித்திக்க ஊறுசெவ்வாய்த்
தேறல்பாய்ந் தணிமணிப் பட்டாடை யீரிப்பத்
தேவிமே னாமடிதலத்
தஞ்சமென் பார்ப்பென அமர்ந்துகஞ் சத்துமெல்
லகவிதழ் புரையுமாமை
அணியிளந் தளிர்க்கர மசைத்தசைத் தொற்றிமகி
ழானந்த வடிவுகாட்டிப்
பஞ்சொளிர் மெல்லடிப் பவளவாய்க் குறுநகைப்
பருப்பத வணங்குசூழ்ந்து
பாராட்ட மகிழ்வூட்டு மன்னைநஞ் சுதவையிற்
பர்வதா வர்த்தனிகழல்
தஞ்சமென வந்தவர்க் கஞ்சலென அருள்செல்வி
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 2
------------------------------------------
‘கல்லாத களிமழலை'
சொல்லாத விற்பன மெலாஞ்சொலித் தனதுகைச்
சுவர்ணசெம் பாவைகொஞ்சித்
தூக்கிமுத் தாடிமகிழ் வூக்குசீ ராயநடு
தூயநீ ராட்டி யணிசெய்
தில்லாத முலைமுக மெழுந்தமுத மூற்றுநிலை
யெண்ணியிரு விரலாற்பிடித்
திந்தா வெனப்பாவை யிலவித ழிடைச்செறித்
தின்பா லருத்திமகிழும்
கல்லாத களிமழலை வல்லசிற் றிடைச்சிறுமி
கற்பனையு ளொளிருமின்ப
காரணியு நீயெனாக் கவிஞர்சொல மேவியுங்
கனித்துருகு நேயநிறைசெஞ்
சல்லாத நெஞ்சினுட் செல்லா வருட்செல்வி
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 3
------------------------------------------------------
'சுதுவைநற் பாலர்'
நின்மலப் பொன்முக நிறைந்துபொலி செஞ்சோதி
நீணிலா வெறிப்பமாடே
நீள்சுடர் விளக்கொளி தழைக்குநின் சந்நிதியில்
நேர்ந்துநின் பாதமேத்திச்
சொன்மலர்ப் பத்திசெறி தோத்திரப் பாமாலை
சுதிதழுவ வோதுமேதைத்
தூயவெண் ணீற்றுமுக் குறிதுன்று நறுநுதற்
சுதுவைநற் பாலரருமைப்
பொன்மலர்க் கைமருவு பொற்றாள ஒலிவழிப்
பொலிசதியி னெதிரொலிப்பப்
பூங்கமல வுள்ளிதழ் பொருவுகைத் தலஞ்சேப்பப்
புவனையெம் புண்யவாழ்வு
தன்மயப் பேறருள் சதாசிவர் நாயகியொர்
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 4
---------------------------------------------------
'புகல்தர மலாமை'
முன்னுமுல குக்குமுப் பதினோ டிரண்டறம்
முன்புபுரி வேட்கைகூர
முன்னவ னருள்வேண்டு முதியசம் பிரதாய
முறைகருதி யோவதாஅன்று
மன்னுகுல மாதரார் வள்ளுவர் தெரித்தமுறை
வழுவாது வான்கொழுநர்தாள்
வந்தித்து வாழ்ந்திம்மை மறுமைநற் பேறுகள்
வாய்க்கவழி காட்டுமாறோ
பொன்குலவு காஞ்சியிற் பூதநா யகன்பூசை
புரிந்தனை யெனாவினாவும்
போதமிலர் பேதுறப் புனிதவாய் செவிபொத்திப்
புகல்தர மலாமைதேற்றுந்
தன்னிகரில் செங்கைகொடு சங்களைப் பெருமாட்டி
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 5
-----------------------------------------
‘நிர்மால்ய நிவேதனம்'
பட்டுடைத் தேசுமலி பஞ்சகச் சத்தினொடு
பானீற்று முக்குறியுமார்
பணிகௌரி சங்கமொடு பத்திமைக் களையுமார்
பரிவினொடு வேதாகமச்
சட்டவிதி பிழையாது சகளீ கரித்துண்மை
தவாநலச் சிவோஹமாற்றிச்
சாற்றுயர் சோடசோ பாசார முற்றத்
தரூஉஞ்சிவா சாரியர்தம்
இட்டமாம் பூசனைக் கேன்றபல னருளுசீ
ரேந்தல்சண் டீஸ்வரர்க்கா
மேதின்நிர் மாலிய நிவேதன முடித்துமே
லிருகையும் விரித்து முக்கால்
தட்டுகை யோசையொடு விட்டிசை கிளம்பவொர்
சப்பாணி கொட்டியருளே
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. 6
------------------------------------------------
வேறு
'கொங்கை தருங்குறி'
கங்கை மதிச்சடை யெங்கள் பிரானைக்
காணுவ தோர்குறியிற்
கண்டு களித்தயர் பூசையி லங்கவர்
கம்பையை ஏவுதலாற்
பொங்கி வரும்பெரு வெள்ள மடர்த்தஃ
தடித்திட வொட்டாமே
பூசனை யேற்றருள் நாதனை மார்புறப்
புல்கிடு மெல்வைதனில்
செங்கம லக்கர மங்கல வளைவடு
திருத்தோள் மீதாரச்
செய்மரு மத்தணி திருநீற் றிடையொளி
திகழிரு பொறிகளெனக்
கொங்கை தருங்குறி தங்க அளித்தவள்
கொட்டுக சப்பாணி
குங்கும மென்முலை மங்கை மனோன்மணி
கொட்டுக சப்பாணி. 7
-----------------------------------------
'பல்கிசை வண்டு'
செங்கயல் பொருவிழி நங்கையர் நடமிடு
சீர்மிகு பாணியினில்
சீருயர் மஞ்ஞைகள் நேருயர் கோபுர
சிரமிசை நின்றாட
பங்கய மாதர்கள் இங்கித மூர்தர
என்று மிருக்கைகொளப்
பார்விழை போகமு ஞானமு மல்கிய
பண்பு மவிந்தோவா
மங்கல வியவொலி பொங்கு மணித்திரு
மாடம் மலிவீதி
மல்கிய பண்ணியல் பல்கிசை வண்டு
மலர்த்தலை நின்றூதும்
கொங்கலர் சோலை குலாவிய சுதுவையள்
கொட்டுக சப்பாணி
குங்கும மென்முலை மங்கை மனோன்மணி
கொட்டுக சப்பாணி. 8
-----------------------------------------------
‘திருமணி நூலால்’
பால வியன்முக மாமதி நிலவு
பரந்து பரந்தாலப்
பட்டொளிர் முத்து வியர்த்துளி மாலை
பயின்று பயின்றாலச்
சேல்தரு கண்ணிணை கால்தரு கருணை
செறிந்து செறிந்தாலச்
செம்பவ ளத்தொளிர் திருவா யமுதத்
திருமணி நூலாலச்
சீலமி குஞ்சிவ தேசொளி வலயந்
திசைதிசை சென்றாலச்
சேர்வுறு மடியவர் சிந்தையில் வந்தொரு
சின்மய நிழலாலக்
கோல வளைச்சரி யால மனோன்மணி
கொட்டுக சப்பாணி
குங்கும மென்முலை மங்கை மனோன்மணி
கொட்டுக சப்பாணி. 9
-----------------------------------------------
'திருவாய்ச்சி யெமாய்ச்சி'
தம்பன திடமமர் உம்பர் மனோஹரி
ஞாலம ருள்தாயே
நாயகி நான்முகி நாரா யபர
ஞானவி ளக்கொளியே
அம்பண கண்ணிந லரிவைம னோன்மணி
அம்மே சுதுவைநகர்
ஆதி பராபரன் பாதி பராபரை
அம்பிகை ஈஸ்வரியே
செம்பவ ளத்திரு வாய்ச்சியெ மாய்ச்சிநற்
றிருவே மருவாருஞ்
செங்கம லத்தினள் வெண்கம லத்தினள்
சேவை மகிழ்ந்தாரும்
கொம்பன மெல்லிடை யாய்புவ னேஸ்வரி
கொட்டுக சப்பாணி
குங்கும மென்முலை மங்கை மனோன்மணி
கொட்டுக சப்பாணி. 10
---------------------------------------------
5. முத்தப்பருவம்
'சுத்தநிருத்தம்'
புத்தம் புதுப்பொற் பட்டழகும்
புனைவார் செவிக்குண் டலத்தழகும்
போர்வே லெனநீள் விழியழகும்
பொன்னார் சிறுமூக் கணியழகும்
பத்தி நிரைத்த மணியாரப்
பதக்கத் தழகும் பளிச்சிடுநற்
பாதசாலப் பதத் தழகும்
பயில்நின் தெய்வத் திருநிலைமுன்
நித்தம் நித்தம் நேர்ந்துநின்று
நீள நெடுக நினைந்துருகி
நேய விளக்கிற் கண்டிருக்கும்
நெஞ்சத் தெழிலார் நினைவரங்கிற்
சுத்த நிருத்தம் பயில்சுதுவைச்
சோதீ முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்லருட்பொற்
சுடரே முத்தந் தருகவே. 1
-------------------------------------------------
‘தங்கப் புதையல்’
பங்கப் பழனப் பள்ளவெள்ளப்
பரவைத் தலையூர் திரைவரைகள்
பல்கா லலைத்திட் டெடுத்தெறியப்
பரிந்து கரைசார்ந் தளைவகுத்துச்
சங்கம் முத்தீன் சங்களையாய்
தகைவெண் ணிலவா ரரமியத்துத்
தளவ நகைவெண் முத்துதிர்க்குஞ்
சாயன் மயிலார் தாம்பயந்த
தங்கப் புதையல் கையேந்தித்
தலையுங் காலும் முத்திமுத்தித்
தாவிக் கொழுநர் புயஞ்சார்ந்து
தம்மின் முத்தக் களரிகொளுந்
அங்கச் சுதுவைப் பேரரசி
தூவாய் முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்வருட்பொற்
சுடரே முத்தந் தருகவே. 2
--------------------------------------------------
'இதற்கா மாற்றீடு'
மோதும் புலன்க ளீர்த்தலைக்க
மொய்க்கு மெறும்புள் நாங்கூழ்போல்
மோஹ போகச் சழக்காழ
மூழ்கும் வாழ்வில் மெய்ப்பயனென்
றேது மின்மை கண்டிரங்கி
எண்ணி இதற்கா மாற்றீடிங்
கெங்கள் பிராட்டி யெனத்தேறி
யிரவும் பகலும் நின்வார்த்தை
ஓது மொழுக்கத் திழுக்காதார்
உன்பே ரருட்கே மனம்வைத்தார்
ஒருபொல் லாப்பு மறியாதார்
உணரும் உள்ளத் தொருகரவுஞ்
சூது மறியார் தொழுஞ்சுதுவைத்
துணையே முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்லருட்பொற்
சுடரே முத்தந் தருகவே. 3
-----------------------------------------------------
‘சோற்றுப் பிறங்கல்’
தாற்றுக் கதலி நிரைதாண்டித்
தண்பூம் பந்தர் பலகடந்து
சகல விதசோ பனமொளிரத்
தள்ளா டிவரும் பெருந்தடந்தோ
தோற்று சிம்மா சனக்கொலுவில்
துலங்கும் பிராட்டி திருநோக்கந்
திரும்புந் திசைதோ றெழின்மடவார்
செவ்வி முகச்சீ ரொளிபொங்க
வீற்று வீற்றுப் பெருங்கலசம்
விளங்க நிரைத்துப் பொங்கலிட்டு
வீதி பொலியத் தயிர்நெய்தேன்
மிளிரப் படைத்து நிவேதிக்குஞ்
சோற்றுப் பிறங்கற் கிடைசுதுவைச்
சோதீ முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்லருட்பொற்
சுடரே முத்தந் தருகவே. 4
-----------------------------------------------
‘தெய்வாதிசயம்'
பேற்றுக் குயர்பே றாமனையே
பிறங்கு பகைநண் பாய்த்துன்பு
பெரும்பே ரின்பாய்ப் பிழைசரியாய்ப்
பீடார் தருநின் னருண்முகத்தில்
ஆற்றில் மருவும் வியப்பென்னே
அமாவா சையேபூ ரணையாக
அன்றங் கபிரா மிப்பட்டர்
அன்பு வயிற்றிற் பால்வாருத்
தேற்றம் நிகழத் திகைத்தரசன்
தேம்ப ஏனோர் பகைமையுளந்
திகழ்நண் புளமாய்த் திசைதிரும்பத்
தெய்வா திசயச் செழுமைநலத்
தோற்றுந் திருத்தா டங்கசெவித்
துணையாய் முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்லருட்பொற்
சுடரே முத்தந் தருகவே. 5
--------------------------------------------
‘மெல்கியுருள் வெண்முத்து '
சாயும் பொழுதா கியும்பிரிந்த
தலைவன் மீளா நிலையெண்ணிக்
தாழாத் துயர்கூர் புதுவதுவைத்
தலைவி அபலை தடங்கண்ணும்
பேயும் வெருளும் பெருங்களத்திற்
பின்காட் டாது மண்காத்த
பீடார் தனயன் தாய்கண்ணும்
பெருக முதிர்ந்து கணுவெடிக்கும்
வேயின் கண்ணும் புவனையருள்
வியக்கும் பெரியோர் விழியிணையும்
மெல்கி யுருள்வெண் முத்துதிர்க்க
மிகுநீர்த் திரள்முத் துதிர்கொண்டல்
தோயும் பொழில்தா துதிர்சுதுவைத்
தொல்வோய் முத்தந் தருகவே
சொல்லார் சுதுவை நல்லருட்பொற்
கூடரே முத்தந் தருகவே. 6
----------------------------------------------
வேறு
‘பாதகமலம்’
சாதகப் பெண்பிள்ளை நீயெனத் தகவுளோர்
தம்முளுற் றுணர்ந்துமெச்சத்
தகுமவ ருயிர்வளா கத்துளுற் றவர்மயற்
சார்புமென் மெலத்தவிர்த்துப்
பேதக நிகழ்த்தியப் பொய்ச்சார்பு சார்பலால்
பெரியதோ ருண்மைதேற்றிப்
பீழைதரு மின்பமோ ஹத்துன்ப நிகழ்வினிற்
பீடையுற் றுழந்துமாயும்
நோதக வொழித்திகல் தீதற வுளத்துளே
நுணுக்கரிய நுண்ணுணர்வாய்
நூதனா னந்தமெய்ச் சாதன விளக்கமாய்
நோன்மைமிக் கோங்கியன்னோர்
பாதக மலங்கெடப் பாதகம லந்தருநள்
பவளவாய் முத்தமருளே
பார்பரவு முயிரெலாஞ் சீர்பரவ வருளன்னை
பவளவாய் முத்தமருளே. 7
--------------------------------------------
'சௌசன்ய ரஹசியம்'
கன்மபந் தத்தினாற் சென்மதொந் தத்திற்
கடைப்படு முயிர்க்குலத்தைக்
கைதூக்கு மருளினாற் கால்தூக்கி யாடுமக்
கருணாகரக் கடவுள்சீர்த்
தன்மபத் தினியாகி யாடுமவ ராட்டிசைத்
தாளமிட் டருளுகிலையால்
தாம்பத்ய வாழ்வியல் சௌசன்ய ரஹசியந்
தானே துலக்குமன்னை
வன்மமுற் றுலகினிடர் வர்த்திக்கு மசுரகுல
வஞ்சர்நெஞ் சதிரவோங்கு
வானுரு மெனாவெழுங் கோரதாண் டவரூப
வன்னிவா னுயர்தேவரும்
பன்மலர் தூய்த்தொழும் பத்மபூ ஷணிபுவனை
பவளவாய் முத்தமருளே
பார்பரவு முயிரெலாஞ் சீர்பரவ வருளன்னை
பவளவாய் முத்தமருளே. 8
------------------------------------------
வேறு
‘சிறுமண விழவு’
கந்தப் பொழிலணி மந்தா னிலநுகர்
காதற் கனிவாய்மைக்
காளையர் கன்னியர் சூழலி லோவாக்
கனிதீங் குதலையெலாம்
சிந்தும் புதுநகை வெண்முத் துதிரத்
தீம்பல தாம்பேசிச்
சிறுசோ றட்டுஞ் சிறுவிருந் தேற்றுஞ்
சிறுமண விழவார்ந்தும்
பந்தும் பாவையு மாயமு மாய்மகிழ்
பாலியர் பொய்தலெலாம்
பண்ணார் தமிழிசை நண்ணா டரங்கப்
பாங்குறு சுதுவையில்வாழ்
முந்தும் பழமறை மூல முதற்பொருள்
முத்த மளித்தருளே
முதிரும் பழமைச் சுதுவைப் பகவதி
முத்த மளித்தருளே. 9
-------------------------------------------
‘சித்தநிலாவியதிரு'
சித்த நிலாவிய திருவே யருளார்
தெய்விக நன்னிலையே
சிறுமைகள் நீங்கிப் பெருமைகள் தாங்கிச்
சிறியேம் நெறிசாரப்
பத்தியு ஞானமும் ஒத்துற வருளும்
பரம தயாபரியே
பாவன ரூபிணி பவதா ரிணியுமை
பார்வதி பரமேட்டீ
பித்துறு மன்பினர் மெத்துந லின்பப்
பேறே வீறாரும்
பிறவா நெறிநம குறுமா றருனாய்
பேரா வின்பாரும்
சத்தி முதல்பர சித்திம னோன்மணி
முத்தம ளித்தருளே
முதிரும் பழமைச் சுதுவைப் பகவதி
முத்தம ளித்தருளே. 10
--------------------------------------------
6 . வாரானைப் பருவம்
'பிள்ளைப்பிராட்டி'
பற்றும் பற்றுக் கிலக்கியமாம்
பரையே பரஞா னக்கிழவன்
பாகந் தழுவும் பசுங்குமரி
பர்வ தாவர்த் தனித்திருப்பேர்
பெற்றிச் சுதுவை முழுதாளும்
பிள்ளைப் பிராட்டி பெருநிசியிற்
பிறவே டத்தாற் புறம் போந்து
பீழை யடியார் குறைமுறைகள்
முற்றும் வினவிப் பரிகரிக்கும்
முறைமை யொன்றோ நினையறியா
மூவாப் பேதை யுயிர் தருக்கி
முடியாப் பிறவிக் கருமலியூர்
சுற்றுந் தோறு முடன்சுற்றுந்
தோன்றாத் துணையே வருகவே
துரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 1
----------------------------------------------
‘ஓதப்புறோதம்’
அவளா லன்றி யூர்புகுமா
றறியே நெனவங் கலாய்த்திருக்கும்
அருளார் மூலற் கிரங்கியவர்
ஆறா தாரஞ் சாறாக்கிப்
புவனா பதியா யெழுந்தொளிரும்
பொற்பே வருக ஓதமொடு
புறோத மாகப் புவனமெலாம்
புகுந்தூ டுருவும் புதிர்வருக
பவமா சறுக்குஞ் சிவைவருக
பரமாஞ் சிவத்தீஞ் சுவைவருக
பாரும் நீரும் முதலாகப்
பகரும் நாத மிறுவாந்தத்
துவமா றாறுந் தொடுத்தியங்குந்
தொடர்பே வருக வருகவே
துரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 2
------------------------------------------------
'சைவசித்தாந்தக் கரு '
அண்ட முதலா அனைத்துநினை
யல்லா தில்லை யாமாகேட்
டமுக்கா ருடனு மாணவஞ்சா
ராத்மா வும்நீ யாமெனவே
கொண்ட சிவாத்து விதக்கோளுக்
கொவ்வாய் செவ்வே குறித்துணயிற்
கூறு மவற்றி னதுவதுவாங்
குணமார் சித்து நீயாதல்
கண்ட சைவ சிந்தாந்தக்
கருவே வருக கருதுசிவன்
கலப்பா லுலகோ டொன்றாஞ்சீர்
காணக் காட்டுஞ் சிவைவருக
துண்டப் பிறையான் பாகமமர்
துணையே வருக வருகவே
துரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 3
---------------------------------------------
'தொன்மைக்காட்சி'
சங்கத் தமிழுக் குயிர்நிலையாச்
சாலு மன்பி னைந்திணையிற்
றழுவும் பாங்கி யிலட்சியமுந்
தாயே நீயே சரதமிது
துங்கத் திருக்கோ வையிற்பாங்கி
தொல்சீர்ப் பரையே யாமென்னுந்
தொன்மைக் காட்சித் துணிவுவழித்
துணவீ தம்மே துகளில்சீ
ரெங்கள் தமிழுக் குயிர்ப்பாகும்
இயக்கம் நீயத னிதயம்நீ
இன்பத் தமிழா லேயழைத்தோம்.
எங்கட் கருள வருகவே
தொங்குந் திருத்தா டங்கசெவித்
திருவே வருக வருகவே
துரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 4
----------------------------------------------
'முன்னின் றருளும் முதல்'
அன்னே யெனவா தரித்தழைப்பார்க்
காவா வென்ன முன்னிற்கும்
அம்மே வருக அண்ணிக்கும்
அருளே வருக அகவிடத்தின்
முன்ன அணைந்த பிறப்பினிற்போல்
மூளு மினிமேற் பிறப்பினிலும்
மோசம் புகுதா வகைபுரக்க
முன்னின் றருளும் முதல்வருக
தென்னா டரசாள் திருவருக
தேவர் பரவும் பரைவருக
தெய்வத் திருவார் தவமுனிவர்
தித்தித் தருந்துந் தேன்வருக
சொன்னா வலர்சீர் புகழ்சுதுவைத்
தொல்லோய் வருக வருகவே
அரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 5
--------------------------------------------------
‘செல்லா தெனவும் விதித்திருக்குஞ் செல்வி'
வல்லார் வல்ல வழக்கெல்லாம்
மருவு மொருசங் கற்பத்தால்
மாற்றிப் படைத்து வழக்கறுக்க
வல்லாய் வருக மற்றதுதான்
நில்லா நிலைமை நேரிதெனும்
நேயத் தழுந்தி நீள்சென்ம
நீராழியினுள் நிலை கலங்கும்
நியதிக் காளா மெந்தரத்திற்
செல்வா தெனவும் விதித்திருக்குஞ்
செல்வி வருக சென்மவெள்ளத்
தெதிர்நீச் சிட்டுக் கரைதழுவுந்
தீரர்க் கருளுந் திருவருக
சொல்லா லுரைக்க வரியசுக்
சொரூபி வருக வருகவே
அரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 6
-------------------------------------------------------
'வீர வீராங்கனைவருக’
பாரா தரிக்கும் பழவடிமைப்
பண்பும் நண்பும் பழுநியமெய்ப்
பத்தர் பத்திக் கடல்முறிப்
பரமா னந்த மலைமோத
நேரா வுதிக்கும் நிமலமுழு
நிலாவெண் மதியே வருகபடு
நீசத் தனத்தா ருயிர்ப்பகைவர்
நிம்ப சும்ப சண்டமுண்ட
வீராதிபர்வீ றடங்கவுடல்
வீர வீராங் கனைவருக
விமலை வருக பரைவருக
வீறார் ஞான யோகநிலை
சோரா திருப்பார் சுகாநுபவச்
சுவையே வருக வருகவே
துரிய விளக்கே விளக்கினொளிர்
சுடரே வருக வருகவே. 7
--------------------------------------------
வேறு
‘நிரந்தரச் செந்தமிழ்ப் பித்தன்'
சீர்மேவு மின்பச் செழுந்தமிழி னின்றொளிர்
செல்விநின் காதலாலச்
சின்மய சொரூபனாஞ் சிவனுமொர் நிரந்தரக்
செந்தமிழ்ப் பித்தனாகி
ஊர்பே ரிலாவவனு மொப்பில்சீர்ச் சங்கமே
றுயர்தமிழ்ப் புலவர்மணியாய்
உலப்பில்பன் னூலாய்ந்தி வுலகினுக் களிக்கவும்
உவமையில் களவியலெனும்
பேர்மே விலக்கண மியாக்கவங் காழிவரு
பெருஞானப் பிள்ளையாதி
பேரிசைகொ ளீரிருவர் பாட்டிற் குவக்கவும்
பேறுசெய் தீறிலன்பாற்
பார்மேவு தமிழ்வளம் பாலித்த சுதுமலைப்
பைந்தமிழ்த் திருவருகவே
பர்வதா வர்த்தனியெ னாமமார் சுதுமலைப்
பாரமேஸ் வரிவருகவே. 8
-----------------------------------------------------
‘நீ பழிகாரியானது’
கூவமதி லாழ்ந்ததன் குழவியை எடுக்குமா
குதித்ததனுள் மூழ்கு தாய்போற்
கொடியகரு மலவிருள் மூழ்குயிர் புரக்கவெழு
குதுகுதுப் புந்த மூழ்கும்
பாவன சொரூபிநீ பஞ்சமல குழுவினுட்
பகரவரு திரோதமலமாய்ப்
பழிகாரி யானதுன் பர்த்தா பகம்பறழ்ப்
பன்றிமுலை யுண்ணவூட்டும்
ஆவலா லன்றொருபுன் பன்றிப் பிணாவென
அணைந்ததினு மதிகதரமாய்
அம்மைநீ நினையிழித் தெம்மையாள் கருணையென
ஆலிக்கு மன்பர்வாழ்வே
பாவனா தீதையம் பிகைபரா பரைபுவனை
பைம்பொனின் கிளிவருகவே
பர்வதா வர்த்தனியெ னாமமார் சதுமலைப்
பாரமேஸ் வரிவருகவே. 9
---------------------------------------------------
'நிஷ்காமிய புண்யம்’
போதலர் பொன்முகப் பொலிநிலா விரிதரப்
புன்முறுவல் மின்னொளிரமுற்
பொழிவிழிக் கருணையிலை போதவார் செவிக்குழைகள்
பூசலிட் டூசலாடப்
பாதமலர் மீதொளிர் பரூஉச்சுடர்க் கிண்கிணிகள்
பயிலுமொலி கணகணெனநற்
பாவன பதப்புனித நோன்மைக் கடாததன்
பவித்திர மிலாமைமுன்னிப்
பூதல மடந்தைவெரு விப்பட படத்துடல்
புளகமெழ வியர்வியர்த்துப்
புனிதவழி நீர்தெளித் திடுமொர்நிஷ் காமியப்
புண்யமுற அடிபெயர்த்துப்
பாதலமு மீதலமும் பேதமற மிளிர்வதோர்
பாராபரத் திருவருகவே
பர்வதா வர்த்தனியெ னாமமார் சுதுமலைப்
பாரமேஸ் வரிவருகவே. 10
----------------------------------------------------
7. அம்புலிப் பருவம்
'ஒப்புமைத் திறமறியவோ'
பொங்கொளிப் படலைவிரி புதுநிலா முன்றிலிற்
பொற்றவி சமர்ந்துமேலைப்
புவர்லோக பொற்பினிற் றான்வைத்த அற்புதப்
புதிர்நுகர்ந் திருக்குமெல்வை
திங்களஞ் செல்வநின் தெரிசனங் காண்டலுந்
திருவுளஞ் சிறந்துநின்பொற்
றிருவுமொளி ருவுந்தன் தெய்வநிறை சந்நிதிச்
சேர்ந்துவிளை யாடுசகிமார்
செங்கமல மாதரிரு வோர்முகச் செவ்வியொடு
சீர்தூக்கி நேரொப்புமைத்
திறமறிய வோவனையர் முன்னருற நின்னையுந்
திருக்கைமலர் கொண்டழைத்தாள்
அங்கமல தேசுபொலி சங்களைப் பகவதியொ
டம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 1
------------------------------------------------------------
‘சிவமான விளைவுற’
சிவபாத சேவகஞ் சிவசிரோ வாஹ்யமாஞ்
சீர்மையஃ திரண்டுமுறலால்
செவ்வொளிய வேட்கருள் சிறப்புறுத லால்திகழ்
செம்மான் மருங்குறுதலால்
நவமான தண்ணளியி னாளுநா ளின்பமுற
ஞாலம் புரந்திடுதலால்
நாடவரு தலையுவா நாளெணப் படுதலால்
நம்புசிவ யோகியர்க்குச்
சிவமான விளைவுறச் சிரமிசைத் திகழ்தலால்
சேர்கலைத் தொகையொத்தலால்
செம்மைமதி நின்னுடனே மம்மையொப் புமைகண்டு
சீராட வுனையழைத்தாள்
அவமேது மிதிலுனக் காமாறி வன்னையுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 2
(இவையிரண்டுஞ் சாமம்)
------------------------------------------------------
‘விளையாட்டு வேட்கையே '
நிலையொன்றி நின்றென்று நிமலபரி பூர்ணமாம்
நிறைகலைய னம்மைநீயோ
நிலையின்றி நாளுநாள் ஒன்றொன்று குறைநிறைகொள்
நிலைமையினை யாங்கவதனால்
கலையொன் றிருப்பினுங் கருதுமிவள் தன்னுடன்
காணுமொப் புடையையல்லை
காரிரவு செய்வைநீ கருதுவா ரிரவுநிலை
காண்பினிய புரவுநிலையாம்
விலையொன் றிலாதபே றீவளிவ ளறிதியிது
வேறுபா டாயுமம்மை
வேறு வேண்டாதுதன் விளையாட்டு வேட்கையே
வேண்டியிங் குனையழைத்தாள்
அலையொன்று கருணையங் கடலாமெ மம்மையுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 3
---------------------------------------
'செம்பொனூசிச் சூட்டுச்சிட்சை’
தவநிந்தை தாங்கினுஞ் சிவநிந்தை தாங்கலாச்
சங்களைப் பிராட்டியிவள்காண்
தக்கன்புரி சிவநிந்தை தழுவுவேள் வியிலவன்
தானமிச் சித்தணைந்து
பவநிந்தை யுற்றநின் பரிசுகே டுலகறியும்
பான்மைத்து வீரபத்ரன்
பதபரிச முற்றுடல் கன்றினையிச் சுதுவையிற்
பாபகிர காட்சிவலுவாற்
சிவநிந்தை புரிநாவொர் செம்பொனூ சிச்சூட்டுச்
சிட்சைபெற் றுயத்திருந்துத்
தேவியிவள் பாவிநின் சிறுமைநோக் காதுதன்
செம்மைநோக் காலழைத்தாள்
அவநிந்தை பண்ணாம லம்மையெம் மனோன்மணியொ
டம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 4
-----------------------------------------
'நிரூபிக்கினில்லையாம் '
பார்திகழ் சிவப்பிரியை பரையிவள் பாங்குபோற்
பனிமதிய நின்பாங்கினும்
பாடலுறு மொளியுண்மை பரவலுறு மமுதுண்மைப்
பண்புசொல் லளவதன்றி
நேர்திகழ் பொருளளவு நிரூபிக்கி னில்லையாம்
நிலாவெனப் படுநினொளியோ
நிகரிரவ லிவளதொளி நேர்சொந்தம் நீகொண்ட
நிலவுமிதில் லவலேசமாம்
சேர்வுறுநி னமுதமிவள் அருளமுதி னொருசிதர்ச்
சிறுதிவலை யன்றியுங்கேள்
சிறுபயிர் வளர்க்குமஃ திவளமுது போலுயிர்ச்
சித்தமா சறத்திருத்தி
ஆர்வமுறு வீடுதவ லாவதிலை யிங்கிவளொ
டம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 5
(இவை மூன்றும் பேதம்)
------------------------------------------------------
'கடிதினகல் வாய்ப்புண்டு’
சாரிரு வினைத்துயர் தாழாது தன்செய்ய
தாளிணைகள் தஞ்சமென்றே
சரியைகிரி யாயோக நெறிவழி சரித்துவரு
சாதகர்க ளாணவப்பெருங்
காரிரு ளகற்றுமிவள் நின்னுடற் பட்டசிறு
கறையிரு ளகற்றலொன்றோ
காண்பினிய நமதன்னை சார்பினின் னுடற்கூனுங்
கடிதினகல் வாய்ப்புண்டுகாண்
நீர்மலிதென் மதுரையில் நிகரிவட் கானதிரு
நீற்றினால் நெடுமாறன்மெய்
நீடுகூன் நிமிர்ந்தகதை நீயறிதி யிங்கிவளை
நேர்தல்நிற் காதாயமாம்
ஆரெனிலு மெண்ணாம எளிசெயுமெ மம்மையுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 6
-----------------------------------------------------
'செம்பாதி விரயஞ்செய் சிரமமேன்’
சார்ந்தவர்க் குயர்சுகம் தலவிசே டத்தினாற்
சாத்யமா குதல்சரதமாம்
தண்ணிலா மதியமே சகத்திரு ளகற்றிடச்
சலியா துழன்றுமூன்று
சேர்ந்தநின் னாயுளிற் செம்பாதி விரயஞ்செய்
சிரமமேன் இங்குவந்தால்
செம்மாந் திருக்கலாந் திவ்யதம தலமெனுஞ்
சீர்த்திமிகு சங்களைதனில்
ஊர்ந்துவரு வெண்சங்க முடலுழைந் தீன்முத்த
ஒளிநிலவு மொப்பிலன்பர்
உடலளவு நீற்றினொளி நிலவுமொன் றாயியைந்
துன்சிரம மாற்றல்திண்ணம்
ஆர்ந்தமெய் யன்புவிளை வாமெங்கள் செல்வியுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 7
-------------------------------------------------------
'நிற்கொர் சந்தர்ப்பமுண்டு'
பொன்மலைச் சாரல்படர் காகமும் பொன்னாகும்
பூவிலுறு வண்டுதேனாம்
பொலிசந் தனக்காட்டிற் புன்மணமும் நன்மணம்
போந்திங் குலாவுவாயேல்
நின்னவாம் பழியெலாம் நெருப்பயல் நீராகும்
நினைக்காமி கயரோகியென்
நிந்தனைகள் போயகல வந்தனைகள் மிக்குறும்
நிகழமேல் வருநாளெலாம்
தன்மயத் திருவான அன்னைமெய்ப் பத்தனாய்ச்
சாலோகி சாமீபியாய்ச்
சகம்புகழ்ந் திடநிற்கொர் சந்தர்ப்ப முண்டிதைத்
தவறவிட் டிடாதிமதியே
அன்னமென் னடைபயிலெஞ் சின்னமென் சிட்டினுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே 8
(இவை மூன்றும் தானம்)
-----------------------------------------------------
‘இயந்திரக் கழுகு’
பெரியார்ப் பிழைத்தவின் பிழைகேடும் விளைவுமெம்
பேணுதமிழ் வள்ளுவர்சீர்ப்
பெருமறை புகன்றிடும் பெற்றிநீ யறியாய்கொல்
பிராட்டியி வள் நின்தாமசந்
தரியாள் சினத்தலுந் தாயேயிஞ் ஞான்றுவான்
கரித்திடித் துருத்த மின்னுஞ்
சனியனா மியந்திரக் கழுகினுக் கஞ்சியோ
தம்முள்நவ கோள்களொன்றிப்
புரியுமொர் கிரகசம் மேளனப் பராக்கிலோ
பொழுதுதாழ்த் தனன்நின்முனே
போதா திரானென்ன ஆதார பூர்வமாப்
புகன்றுமஃ தேற்றாளவள்
அரியாளெ மம்மைசீ ரருமையை நினைந்திவளொ
டம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 9
---------------------------------------------------
‘இனும் மறந்திருக்காய்’
சகிப்பரும் நிலையினளெ மம்மைநின் தாமசந்
தணந்துடன் வந்திலாயேல்
தாங்கருஞ் சினமோங்கி யூங்கென்ன நிகழுமோ
சாற்றகில் லோமற்றைநாள்
தகிப்பதன வெகுளியாற் றக்கன்வேள் விக்களஞ்
சாய்த்திட்ட தம்மைவிறல்காண்
சார்வீர பத்திரனு மம்மைசீற் றத்தினொரு
தனிக்கலைய தன்றவேறில்
மகிப்பட நினைத்தேய்த்த மற்றவன் வளியினும்
மறந்திருக் காய்மதியமே
மற்றுமொரு தேய்ப்புக்கு வழிசெய் திடேல்வருதி
வாராயேற் பட்டழிதிநீ
அகிப்பசையி னொயிலொளிர ஆலுமெம் மம்மையுட
னம்புலீ யாடவாவே
அன்பர்வதி சுதுவைமகி ழின்பவதி புவனையுட
னம்புலீ யாடவாவே. 10
(இவையிரண்டும் தண்டம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8. அம்மானைப் பருவம்
‘அன்னத்திரட்குளர சன்னம்'
வன்னவெண் சோதியிளிர் வான்புகழ்க் கயிலையின்
மானச சரோவரத்து
மகிழ்ந்தாடு மன்னவெண் மழவிளம் பார்ப்பினம்
வழங்குபெய ரொப்புமைதழீஇச்
சின்னவொரு வெள்ளிமலை யீதெனத் தேர்ந்திங்குஞ்
சேர்ந்துநின் றாடலேய்ப்பக்
செங்காவி மீதலர் செவ்விமிகு தாமரைச்
சிறுமுகக் குறுநடைபயில்
பொன்னந் தளிர்ப்பதப் பொற்பிளஞ் சிறுமகார்ப்
பொலிவதிக மாய நடுவே
பூங்கர மசைத்தசைத் தோங்குமொளி வலயமார்
புதுநலத் தேசுதோற்றி
அன்னத் திரட்குளர சன்னமென வெம்மரசி
அம்மானை யாடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமனை
அம்மானை யாடியருளே. 1
-----------------------------------------------------
‘அம்பவள வாய்ப்பிள்ளை '
உண்ணிலா வுவகையொளி யூங்கெழுந் தூர்வதென
உலகுபுக ழறிஞர் தம்மில்
உனையுணர்ந் தேத்துபுக ழொக்கத் திரண்டுவா
னோங்கிநின் றொளிர்வதென்ன
வெண்ணிலாப் படலைவிரி தண்ணிலா முன்றிலின்
மேவிமகி ழன்னையர்குழாம்
விம்மித மிகுந்துவிழி வாய்திறந் தாடலழ
கள்ளிக் குடித்து மாழ்கிப்
பண்ணுலா மதுகரமே னாவயர்ந் தேமாப்பப்
பாவையர் குழாமணைந்து
பார்பரவு நின்னருட் சீர்பரவப் பார்மகள்
பாதபரி சத்தினான்ற
அண்ணலா ரவசமுற அம்பவள வாய்ப்பிள்ளை
அம்மானை யாடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமணை
அம்மானை யாடியருளே. 2
-------------------------------------------------------
'தொழும்பருள மன்பலைய'
மைக்கருங் குழலலைய வான்முகத் திங்களொளி
வட்டமிட் டலையவருள்கால்
மைஞ்ஞீலக் கண்மலர் வளரொளி கிளர்ந்தசெவ்
வாய்ப்பவள வொலியொடலையக்
கைக்கணுறு வளையொலி கலின்கலி னெனாவலையக்
காதினமர் தாடங்கமெய்க்
கவினொளி மிகுந்தலையக் கன்னஞ் சிவந்தசெம்
பொன்னொளியு மலையவூடே
தொக்கமகிழ் வலையநின் தோத்திரப் பாவிசைகொள்
தொழும்பருள மன்பலையவே
சொர்ணசெஞ் சடையிலலை துண்டவெண் பிறையலையத்
தூயநீற் றொளிகொண்மார்பின்
அக்கலைய அருளலைய ஆடுமெம் மான்பன்னி
யம்மானை ஆடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமளை
அம்மானை யாடியருளே. 3
----------------------------------------------------
‘விண்ணுல கினுக்கு நன்றி'
வான்மழை பொழிந்துநல் வளநிலவு நல்கியும்
மண்ணுலகி வெண்ணலாரும்
வண்ணநுண் தாதுமு வங்களென் னென்னவும்
வகைவேறு படவளித்தும்
மேன்மைகொ ளியந்திரச் சிற்பவித் தகமூக்கும்
மின்காந்த வொளியொலியலை
வியத்தக வளித்தும்வாழ் வியல்புமேம் படுக்குமுயர்
விண்ணுல கினுக்க நன்றிப்
பான்மைபுரி கடன்வழாப் பார்மகள் தன்னவாம்
பவளமுதல் நவரத்தினப்
பரிசில்பந் துருவினிற் படைத்துமே லோச்சிடும்
பாங்கமைந் தோங்குசோபை
ஆன்ற ராயநடு தோன்றிநின் றெமதம்மை
அம்மானை யாடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமனை
யம்மானை யாடியருளே. 4
-----------------------------------------------
'உவர்களொடு நானுமொன்று’
மெத்துமருள் வித்தகப் புவனேஸ் வரிப்பிள்ளை
மேவியிச் சுதுவைமுழுதும்
மிக்குயர் போகபோக் கியமெலாந் தானாகி
விளங்குமா றுறவின் வேறே
நத்துமொளி முத்தாதி தவமணிக் குவைகளான்
நமக்காவ தேதிவையெலாம்
நமக்குதவு மளகைக்கு மமரா வதிக்குமுற
நன்றியோ டெடுத் தோச்சியங்
குய்த்துமென வொவ்வொர்குவை யொவ்வொர்பத் தாக்கிமே
லோச்சுதல் கடுப்பமேன்மை
ஒத்தியல் சிறுமகா ரொன்றிமகிழ் பந்தாட
உவர்களொடு நானுமொன்றென்
னத்தகைமை தோன்றவிளை யாட்டயர்ந் துவக்குமனை
யம்மானை யாடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமனை
யம்மானை யாடியருளே 5
----------------------------------------------------
'நிற்பித்தற் கொத்திகை'
நீடுவான் தொக்கொளிர நிலவுபே ரண்டங்கள்
நிராதார மாகநேரே
நிற்பித்தற் கொத்திகை நிகழ்த்துநாள் நிமலைந்
நிலத்தின் மேனின்றுநோக்கி
நாடுமவை யொவ்வொன்று நபஸ்தலத் துறவோச்சி
நழுவுமவை மீளமீள
நளினசெங் கரதலங் கொண்டடித் தெற்றுமெழில்
நாங்காண வோவிதெனவன்
பூடுருக நின்றுபுகல் புண்ணியத் தாயர்நின்
புன்முறுவ லொளியினுள்ளம்
பூரிக்க வாயதன் காரவா ரிக்கநிகழ்
பூசவிடு மன்பலையநின்
றாடுமனை புவனைசங் களையமர்த் தடுமம்மை
யம்மானை யாடியருளே
அம்மைக்கு மிம்மைக்கு மெம்மைப் புரக்குமனை
யம்மாளை யாடியருளே. 6
---------------------------------------------------
வேறு
‘நம்பத் மினிநிலையிலை காத்தருள்'
முத்துறு மம்மனை பவளத் தம்மனை
முதலா யினபலவும்
முடுகிய விசையின் விடவிட எழலும்
முதுநீ ருலகத்து
மெத்துறு வித்தக விஞ்ஞா னத்தியல்
வீறுப டைத்தேறும்
மேற்கியல் நாடுகள் விண்ணடி மைக்கொள
வெவ்வே றாக்கிவிட
தத்துமு பக்கிர கங்க ளெனாவெணி
நவகோள் மிகவெருவி
தம்பத மினிநிலை யிலைகாத் தருளென
நாடி யவர்க்கபய
அத்த மளித்தரு ளுத்தமி யெம்மனை
ஆடுக அம்மனையே
அரிபிர மற்குந் தெரிவரு மருளுரு
ஆடுக அம்மனையே. 7
-----------------------------------------------
‘பிரகிருதி நிலையுதுகாண்’
முத்தம் மனைநின் முகநில வொளியின்
முழுவெண் சத்துவமாய்
முளரிக் கரதல வொளிபெறு பொழுதின்
முதிர்செவ் விரசதமாய்
மெத்துறு விழியிணை யொளிபடர் போதில்
மேவிருள் தாமசமாய்
விரவுந் திரிகுண வகைகளு மொச்ச
விளங்கு திறங்காணூஉ
உத்தமர் புகழுயர் சித்தாந் தத்தி
லொளிர்பிர கிருதிநிலை
யுதுகா ணெனவொரு வர்க்கொரு வர்சொ
லுவப்புற ஓவாதே
அத்த னருட்சிவ னுத்தமி பத்தினி
யாடுக வம்மனையே
அரிபிர மற்குந் தெரிவரு மருளுரு
ஆடுக வம்மனையே. 8
------------------------------------------------------
‘குமரி- தருணி—பதிவிரதை’
துங்க வருட்டிரு மேனிகொ டெங்குந்
தோன்றித் தொழுதழுவோர்
துன்புறு குறைமுறை வினவித் தீர்த்தருள்
சுந்தரி அம்மைசிவை
பங்க மறச்சிவ யோகப் பெருநெறி
பயிலுந ரகமருவிப்
பாங்குறு குண்டலி மேனிய ளாகிப்
பகர்மூ லத்தானக்
கொங்குறு கூந்தற் குமரியு மிடையிற்
கோலத் தருணியுமாய்க்
குளிர்வுறு சகஸ்ர தளத்திற் குணமார்
பதிவிர தைப்பெயரால்
ஆங்குறு சிவனுட னணையு மனோன்மனி
யாடுக வம்மனையே
அரிபிர மற்குந் தெரிவரு மருளுகு
ஆடுக வம்மனையே. 9
-------------------------------------------
'அன்னே என்னே யிம்மாயை’
கெடுத்து மலத்துயர் கேழ்கிள ருயிருறு
கேத மொழித்தொருநின்
கிளர்வுறு தொழிலறி விச்சை வழிப்படு
கேண்மை படுத்தருள்வாய்
மடுத்துயர் தெய்விக வாழ்வென மறைதேர்
மறத்தல் நினைத்தலிலா
மாளுதல் மருவா மீளுத லறியா
வளரநு பூதிக்கே
எடுத்து நிறுத்தி யிதந்தரு மன்னே
யென்னே யிம்மாயை
இயல்சா மர்த்திய மயல்போ யறநே
ரெய்துமு பாயநெறி
அடுத்தெமை யாண்டரு ளம்மை மனோன்மனி
யாடுக வம்மனையே
அரிபிர மற்குந் தெரிவரு மருளுரு
ஆடுக வம்மனையே. 10
---------------------------------------------
8 . நீராடற் பருவம்
'தெப்பமூரன்னம்’
பூங்கமல முகஞ்செயப் பொற்குமுதம் வாய்விள்ளப்
பொலிநீல மிமைதிறக்கப்
பொருகய லுகழ்ந்திடப் பொற்பா சடைச்செழுமை
பொன்மேனி மாமைசெய்யச்
சாங்கமுந் தண்ணென்று மெல்கித் தழங்கிடுந்
தையனல் லார்தமக்குச்
சார்வாகு மின்னலஞ் சேர்வாகு மாண்பினாற்
சகம்வீழ்ந்து தழுவநல்கித்
தேங்குபுள் ளரவமுந் திரங்குமலை மீதினிற்
தெப்பமூர் அன்னரவமும்
சேர்ந்தாடு மரமகளிர் நீர்மகளிர் மழலையுஞ்
செய்துழனி யென்றுமோவா
வீங்கொலிப் பொய்கையின் மேவிக் குடைந்தம்மை
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரும் மண்ணவரும் நண்ணவரு பெண்ணரசு
வெள்ளநீ ராடியருளே. 1
-----------------------------------------------
"சைவமணம்'
சைவசன் மார்க்கர்சிவ சத்தியை வியக்திசெய்
சலசுத்தி யாதிபண்ணிக்
சந்ததம் மூழ்கித் தருப்பித்து வருதலிற்
சைவமணம் நன்றுநாறுந்
தெய்விகத் தீர்த்திகைச் சேடியர் குழாத்தினொடு
சேயடித் தளிர்பனிப்பச்
செவ்விதிற் புக்குநின் றெவ்வமில் காநதளஞ்
செங்கர மலைத்தலைத்துக்
கொய்தளிர்ப் பொன்மேனி கோலநுண் ணிடைக்கொடிக்
குழைவினொடு குழையஐதார்
கூந்தல்புற மலையமுக சாந்தமிக அலையதற்
கொழும்பவள விதழ்துடிப்ப
மெய்யொளி விளர்ப்பவிணை விழிக்கடை சிவப்பமிகு
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரு மண்ணவரு நண்ணவரு பெண்ணரசு
வெள்ளநீ ராடியருளே. 2
------------------------------------------------------
'கனகாபிஷேகம்’
சேறாடு செந்நெலங் கழனிசூழ் சுதுவையிற்
சீர்த்தசங் களைப்பதிபெறுந்
திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
சேடியர் குதூகலத்தால்
நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
நீரிடைப் புகுந்தறுத்து
திகரில்வாய் வைத்தூத மீதெழுந் துரவுபொன்
நிகர்தாது நிலவுலகுகொள்
பேறாடு பெண்ணரசி நின்மிசைப் பொழிகளின்
பேணுமவ ராவதியுளோர்
பெருமையொடு பொன்தூவி யன்னையை முழுக்காட்டு
பெரிய கனகாபிஷேக
வீறாடு விளையாட்டின் மகிழ்வாடு மெம்மன்னை
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரு மண்ணவரு நண்ணவரு பெண்ணரசு
வெள்ளநீ ராடியருளே. 3
------------------------------------------------
'மங்களார்ச்சனை"
மாயிருஞ் சங்கொலி முழக்கிமென் மலரூது
வண்டொலி யியாழிசைத்து
மண்டூக இசையாதி மலிவாத்ய வரிசையொடு
மங்களார்ச் சனைமுடித்திட்
டாயிர விதழ்ச்சுடர்க் கமலபஞ் சாராத்தி
ஆதரவி னோடெடுத்திட்
டலர்கொள்தே னானந்த பாஷ்பமோ டஞ்சலித்
தளவில்மெய்ப் புளகமார்ந்து
பாயிருங் கடலெனப் பரந்தகல் தீர்த்திகைப்
பாவைநீ தன்னிடத்திற்
படியவரு சந்தர்ப்ப மதனைநற் பயன்செயும்
பாங்குகண் டோங்குவகையின்
மேயிருந் தருளூற்றும் விமலையெம் பெருமாட்டி
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரும் மண்ணவரும் தண்ணவரு பெண்ணரசு
வெள்ளநீ ராடியருளே. 4
-----------------------------------------------------
‘வைதிகத்தின்வேர்'
பாரியல் பொன்றினும் படாதுமே லோங்குமோர்
பராபரப் பொருளாயுநீ
பரவருங் கருணையாற் பார்மீதி லுருவேற்ற
பாங்கினுக் கொப்பலிங்ஙன்
நீரியல் விளையாட்டின் நேர்படுஞ் சிறுமியர்
நிகழ்த்துவன வொப்பநீர்மேல்
நீந்தியும் நீரினுட் பாந்தியும் போந்துபிறர்
நேடவுள் ளொழித்தும்நின்கைச்
சீரியல் சிவிறிகொடு நீர்த்தாரை சிந்தியும்
செங்கைகொ டடித்தெற்றியும்
திகழுநின தெளிவரல் செப்புதர மன்றம்மை
சீர்த்துவரு வைதிகத்தின்
வேரியல் திருவான நீராடல் வாழநீ
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரு மண்ணவரு நண்ணவரு பெண்ணரசு
வெள்ளநீ ராடியருளே. 5
--------------------------------------------------
‘மோன ஞான வெள்ளம்'
கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
கருணைக்கை யேறுமுரவோர்
காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
கங்கைபுகு சுனைகளாக
உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
உலவாவின் புறுதல்சரதம்
உறுதிசால் மூலர்மொழி யிதுவாத லால்உதுசெய்
ஒப்பிலா முதல்விநீயே
தெள்ளத் தெளிந்திடச் சேர்ந்தாடு தீர்த்திகைத்
தெய்விகமு மதில்மூழ்குவார்
செல்கதிப் பேறுமினி வேறுகூறுவதென்
சிவானந்த மோனஞான
வெள்ளத் தியாமெலாம் வீழ்ந்தாட அன்னைநீ
வெள்ளநீ ராடியருளே
விண்ணவரு மண்ணவரு நண்ணவரு பெண்ணர
வெள்ளநீ ராடியருளே. 6
-----------------------------------------------
வேறு
‘துரியாநுபவத் தொல்வரவு '
நின்னீர் மையினால் நிலவுலகம்
நிகரில் பவமா யக்கடலின்
நீந்தி யமிழ்ந்தா தெடுத்தேற்றும்
நிமல ஞானநெடும்புபுணையே
சொன்னீர் மையினால் துதிக்கவராத்
துரியா நுபவத் தொல்வரவே
சுருதிக் கெட்டாச் சுகநிலையே
சுத்த மோனப் பொற்குகைக்குள்
மன்னீர் மையினார் மணிவிளக்கே
மாயாசால மயக்க றுக்கும்
மணிமந் திரமாய் ஒளடதமாய்
மதுவார் சோலைச் சுதுவைமகிழ்
பொன்னீர் மையினாய் புவனையம்மை
புதுநீ ராடி யருளுகவே
புவனங் கடந்த பூரணமே
புதுநீ ராடி யருளுகவே. 7
-----------------------------------------
வேறு
‘இளம்பதமூரல்'
சொற்படு திருமகள் கலைமக ளெனுமிரு
தோழியர் பாங்காகச்
சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
துணைவிழி செவிபொத்தி
முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
மூழ்கி யெழுந்துமயல்
முளரிப் புதுமண மளவிக் களிகொன
மூசி முகந்தார்ந்தும்
எற்படு முத்தி னிளம்பத மூரல்
இலங்க நகைத்துநகைத்
தெதிருறு மகளிரொ டிதமுறு மழலை
யிசைத்து நசைக்கமலப்
பொற்படு முகவெழில் பொங்கவெ மங்கலை
புதுநீ ராடுகவே
புதுமைப் பொலிவொளிர் சுதுவைப் பதியனை
புதுநீ ராடுகவே. 8
------------------------------------------------
'சீர்த்திடு நீர்த்திரு'
ஆர்த்திடு தண்புன லள்ளி இறைத்து
மலைத்து மலைத்துவரு
மலைகெழு நுரைமல ரங்கையி லேந்தி
அயற்கண் விதிர்த்துமகிழ்
சீர்த்திடு நீர்த்திரு வேர்த்துடல் மேற்கொள்
சிறுபுற் புதநிரைகள்
செம்பவ ளத்திரு வாயிதழ் கோலிக்
சிதைந்திட வூதியுநற்
றீர்த்திகை முழுதுஞ் சீரரு ளூற்றஞ்
சேர்ந்துறு செந்துகளுஞ்
சிசுதத் துகளுஞ் சிவமலி சைவச்
செம்மை நலங்குலவிப்
போர்த்திட நின்றருள் புவனை புராதனி
புதுநீ ராடுகவே
புதுமைப் பொலிவொளிர் சுதுவைப் பதியனை
புதுநீ ராடுகவே. 9
-----------------------------------------
‘தங்கநன் மாயை’
மங்கல நுதலிலி லங்கும ணங்கமழ்
மான்மத மும்மருவார்
மதுமலி கூந்தன் மணமு முகர்ந்தணி
வண்டெண் டிசையணையச்
செங்கம லப்பத கிண்கிணி யலையுஞ்
சிண்ணென் நுண்ணொலிவெண்
செஞ்சிறை யன்னந் தஞ்செவி யோர்த்துத்
திசைதிசை நின்றணையச்
சங்கலை செங்கைச் சரிவளை யலையத்
தாடங் கமதலையத்
தங்கநன் மாமைப் பொங்கொளி யலையத்
தவழ்புன் னகையலையப்
பொங்கலை யலையப் புவனேஸ் வரித்திரு
புதுநீ ராடுகவே
புதுமைப் பொலிவொளிர் சுதுவைப் பதியனை
புதுநீ ராடுகவே. 10
--------------------------------------------
10. ஊஞ்சற் பருவம்
'சுந்தரப்பைங்கிள்ளை'
பவளச் செழுங்காற் பரூஉச்சுடர் மரகதப்
பணிவிட்ட மார்த்ததுதழூஉம்
பல்குமணி மாணிக்க வடஞாலு மூசலிற்
பயிலுமொளி முத்தழுத்தும்
தவளத் தனித்தவிசு கொளவேறித் தையலார்
தங்கத் தெழிற்காம்புபூண்
சாமரை யிரட்டிடத் தண்கவிகை மேல்கொளத்
தளர்நுண் மருங்குலொல்கித்
துவளத் துவண்டொளிர் சுந்தரப் பைங்கிள்ளை
சுத்தசே தனமனைத்துந்
துன்றுநின் னியனலந் தோன்றநே ரெதிர்காட்டிச்
சுடர்விழிக் கருணைகாட்டிப்
புவனப் பெருந்தேவி பூதநா யகியம்மை
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 1
-----------------------------------------------------
'பூரணானந்தமயில்'
நீவித்து வான்முக டளாவுதலை யுவாவிருள்
நிரைநிரை திரைந்தொடுங்க
நிலவுலகு நீர்மூழ்கி நீற்றொளிப் பொலியெழில்
நிலவிடக் குணதிசைக்கட்
காவித்து மேலெழுங் கதிரவ னெனாவுளக்
ககனவட் டத்தினோங்கிக்
காழ்த்தபே ராணவக் கறையிரு ளகற்றிநமர்
கருதுபசு போதமாள
ஆவித்து மிக்கெழுந் தருளுசிவ போதமாய்
ஆன்மலா பத்தினோங்கும்
ஆருயிர்க் கானந்த நிலைபெருக ஆவனகன்
அறிந்தணைத் ததுகொளின்பிற்
பூலித்துப் பொங்கிமகிழ் பூரணா னந்தமயில்
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 2
----------------------------------------------------
'ஊசலாட்டிப் போற்றுமொதாருய்’
சாற்றுமொரு நால்வகைத் தோற்றத்தி னுட்படத்
தகுமேழ் வகைப்பிறப்புந்
தணவாத எண்பத்து நான்குநூ றாயிரஞ்
சாரவரு யோனிதோறும்
வீற்றுவீற் றெய்துபல விந்தைப் பிறப்பினில்
விரவுபல் லுயிர்கள்முன்னம்
மேவவரும் விதியெனும் விட்டத்தி னார்த்தஇரு
வினையாம் பழங்கயிற்றில்
தேற்றமுற யாத்தமன மாந்தனிப் பீடத்திற்
செம்மாந் திருக்கவேற்றிச்
சென்மசென் மாந்தநெறி சென்றுமீள் வகையிசைவு
செய்திருந் தூசலாட்டிப்
போற்றுமொரு தாயெனப் புலவர்புக ழருளன்னை
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 3
---------------------------------------------------
'தெய்விகப் பழையவாசனை’
கள்ளமர் பூங்குழற் சௌகந்தி வாசமொடு
கஸ்தூரித் திலகவாசங்
கருதுமுக கர்ப்பூர வீடிகா வாசமுங்
கமகமக்கக் கருதுவார்
உள்ளமர் தெய்விகப் பழையவா சனையோங்கி
உளவளா கந்துழாவ
ஊசலசை தோறுமசை யுயிர்க்கிளியு முள்ளூறு
மொப்பிவா இன்பஅன்பு
வெள்ளத் தசைந்தலைய மேவுமுக மண்டல
விளங்கொளி யுளம்படர்புன்
வியாகுல மகற்றிவெளி செய்தொளி விளக்கினொளிர்
வீறுபெற விழைவார்வரிப்
புள்ளமர் சோலைசூழ் புதுமைமலி சுதுவையாய்
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமர் புவனைநம் பேராசி
பொன்னூச லாடியருளே. 4
--------------------------------------------------
'நீயே யிரங்குதாயே '
தஞ்சமென வந்தோரை யஞ்சலென் றணைக்கவுந்
தாம்வேண்டு மவைநல்கவுந்
தகுமபய வரதமெனு மிருகரமு முன்னுறத்
தயங்குநின் திவ்யரூபம்
நெஞ்சமர வுன்னியுன் நேயத் தழுந்தியுள
நெக்குருகி நின்றுநேர்ந்து
நின்னையல தன்னையினி நினையவொரு தெய்வமிலை
நீயே யிரங்குதாயே
எஞ்சலில் நின்கருணை நோக்கினுக் கபசாரம்
ஏதெனினு மியாம்புரிந்த
தேற்புடைப் பணியாக வேன்றுகொண் டாண்டிடென்
றிரப்பவர்க் குவப்பொடருளும்
புஞ்சமார் அளியொலிகொள் பூம்பொழிற் சுதுவையனை
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 5
------------------------------------------
வேறு
'பென்னம்பெரிய பூராயம்'
கன்னங் கரிய குழன்மாமை
கதிர்விட் டெறிப்பக் கண்ணீலக்
கருவட் டுருளக் கமலமுகக்
கன்ன நிறஞ்செம் பொன்பூப்பப்
பென்னம் பெரிய பூராயப்
பிழம்பீ தென்ன மின்விசையிற்
பெயரும் வித்தைப் பெண்சிட்டுப்
பேதை யுருவின் மாமேதை
சின்னஞ் சிறுசிற் றிடைச்சிறுக்கி
செகசா லத்தின் மிகுசாலம்
சென்ற துண்டோ இந்நெறியே
கண்டீ ருண்டோ சொலுமெனநின்
அன்னை தேட ஊர்சுழல்நம்
அன்னே யாடுக பொன்னூசல்
அமுதக் குதலை மனோன்மனியெம்
அம்மே யாடுக பொன்னூசல். 6
---------------------------------------------------------
'நாளும் பொழுதுங் கேட்டுவக்கும்'
சொற்பா வியசெந்த மிழின்பச்
சுவைத்தேன் மயலிற் பித்தேறித்
தொன்மா மதுரைத் திருமலையான்
சுடர்ப்பட் டாடைமடியேறி
முற்பால் பிற்பால் தனக்கிணையில்
முழுத்தீம் புலமைக் களியகத்தே
மூழ்க்குங் குமர குருபரன்வாய்
மூவாப் பிள்ளைத் தமிழ்கேட்ட
தற்பா நயத்தீஞ் சுவையுந்த
ஞாலத் தெவர்பா வாயிடினும்
நாமம் பிள்ளைத் தமிழ்ப்பாவேல்
நாளும் பொழுதுங் கேட்டிருக்கும்
அற்பா லவர்பா லருளூற்றும்
அன்னே யாடுக பொன்னூசல்
அமுதக் குதலை மனோன்மணியெம்
அம்மே யாடுக பொன்னூசல். 7
----------------------------------------
'அண்டற்கரிய பராநுபவம்'
அண்ட பிண்ட மடங்கநினை
யல்லா தில்லை நின்னினல்லால்
ஆத்மா னந்தப் பேறெவர்க்கும்
ஆமாறிலை யென்றருண் முகத்திற்
கண்ட காட்சி சலிக்காமற்
கண்ணார் சகஸ்ர தளமீதே
கருத்தை யிருத்திக் கங்குல்பகல்
காணார் பேணு மாதரமீக்
கொண்ட உரவோர்க் கருள்ஞானக்
கொழுந்தே கோல நறுங்குஞ்சிக்
குழைநுண் மருங்கு லரும்புமுலைக்
கொம்பே இம்ப ரும்பரெலாம்
அண்டற் கரிய பராநுவத்
தமுதே யாடுக பொன்னூசல்
அமுதக் குதலை மனோன்மணியெம்
அம்மே யாடுக பொன்னூசல். 8
-----------------------------------------------
வேறு
'ஆட்டுமொருபரிசினின் றாடிமகிழ்அம்மை'
மங்கல வியாழினிசை வண்டுசெய மாங்குயில்கள்
மகிழ்வினெக் காளமூத
மாநில மடங்கலும் மலர்ப்பந்த விட்டெதிர்கொள்
வசந்தபரி சம்பயிற்றி
எங்கணு மியங்கிவரு தென்றலசை சோலையும்
எழின்மாட மாளிகைகளும்
இன்பமரு மிளநலா ரிளைஞரொ டிசைந்தாடும்
இணையிலூ சற்களரிதோ
றங்கவர்கொ ளநுபவத் தளவினுக் களவாகி
அவரின்பிற் கின்பமாகி
ஆட்டுமொரு பரிசினின் றாடிமகிழ் பான்மையா
லகிலமும் புரக்குமம்மே
பொங்கொளிச் செஞ்சுடர்ப் புண்யரூ பிணியன்னை
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 9
--------------------------------------------------
'அற்புதப்பொற்பொளிர அருளன்னை’
கருதரிய விருபதமு மொருகணமு மோவாது
கணகணென் கிண்கிணிகளுங்
கண்கரைந்துருகுமவர் கவலைப் புலம்பநு
கரித்திடு மரிச்சிலம்பும்
திருவரை திகழ்ந்திலகு செம்பட்டும் மேகலையுஞ்
சிறுகுநுண் ணிடையினொயிலுஞ்
செய்யமுத் தாரமுந் திகழ்ரத்ன ஹாரமும்
திருவொளிரு மாங்கல்யமும்
அருமைகொள் விழியிணைப் பெருகருளும் பவளவொளி
யலையிதழ்த் தவழ்முறுவலும்
அரைமதிசெய் நுதலொளியு மணிபத்ம ராகமுற்
றழுத்துதிரு முடியி னழகும்
பொருவரிய அற்புதப் பொற்பொளிர அருளன்னை
பொன்னூச லாடியருளே
பூங்கமல பீடமமர் புவனைநம் பேரரசி
பொன்னூச லாடியருளே. 10
முற்றும்
________________________________________
சுதுமலை புவனேஸ்வரியம்மை பிள்ளைத்தமிழ்
உரை விளக்கக் குறிப்பு
காப்பு
நூல் முதலில் இடம்பெறும் விநாயக வணக்கம் காப்பு எனப்படும். இப்பிள்ளைத்தமிழுக்கு வேண்டும் மகிமைகள் எல்லாம் அருளுமாறு பிள்ளையாரை வேண்டுகின்றது இக்காப்புச் செய்யுள், பிள்ளையாரைச் சைவஞானப்பிள்ளை என்றே இச்செய்யுள் குறிப்பிடுகின்றது. பிள்ளைத்தமிழ்க்குக் காப்பு வேண்டுந் தொடர்பில் அவரைப் பிள்ளை என்றே குறித்தலிற் பொருத்தமுண்டு.
சைவஞானப்பிள்ளை:- சைவங்கண்டஞான அடக்கத்தின் வடிவாகிய பிள்ளை. சைவஞானப் பிழம்பாயுள்ளது ஓங்காரம் என்ற மந்திரமுலம். அதன்வடிவே பிள்ளையார் வடிவாருயித்தல் ஒன்று. உலகு மகிழும் பிள்ளை இலட்சியத்தின் மூலமுதல் பிள்ளையார் என்பதொன்று. இவற்றால் சைவ ஞானப்பிள்ளை என்றபெயர் அவர்க்குப் பொருந்தும்.
இச் செய்யுளின் முதலடி பிள்ளையார்க்குரிய சர்வமுதன்மையைக் குறிப்பிட்டு அம்முதன்மை வாய்ந்த வகையையுங் கற்பனை வகையாற் காட்டுகின்றது. அக்கற்பனை கொடுத்து வாங்கல் என்ற ஒரு மாதிரியில் அமைகின்றது. சர்வமுதன்மை என்ற விஷயம் பெருமான் பெருமாட்டிகளுக்கே உரியது. பிள்ளையார் தம் சார்பிலான பிள்ளையினிமையை அவர்க்கு ஊட்டியவகையால் அவர் முதன்மையை அதற்குப் பிரதியாக எடுத்துக் கொண்டார் என்கின்றது இக்கற்பனை. பெற்றுக் கொண்டார் என்னாது எடுத்துக்கொண்டார் என்பதும் அவர் முதன்மையியல்பைச் சிறப்பிக்கும்.
பிள்ளையங் கனியமுது - பிள்ளையின்பமாகிய கனியமுது, பிள்ளை ஆகுபெயர். எள்ளருஞ் சுவை - எள்ளுதற்கரிய சுவை. எள்ளுதல் - இகழ்ந்து தள்ளுதல், எவ்வகையிலும் இகழ்ந்து தள்ளப்படாத ஒன்று பிள்ளையின்பச்சுவை. அது பெருமானுக்கும் பிராட்டிக்குங்கூட விலக்கல்ல என்பது குறிப்பு. ஊட்டி என்ற வினையெச்சம் கொண்டு என்ற எச்ச வினையுடன் முடியும். பெருமான் பெரியபெருமான்; பிராட்டி மேலைப்பிராட்டி என்றதனால் அவர்கள் உயர்தரமும் பெருமாற்கும் பிராட்டிக்கும் ஊட்டி என்றதனால் பிள்ளையார் மகிமையும் புலப்படும். 'உம்' இரண்டும் எண்ணும் அதே வேளை உயர்வு சிறப்புமாம்.
குறித்த முதன்மையைப் பிள்ளையார் எவ்வகையிற் பிரயோகம் பண்ணுகிறார் என்பதும் அதன் விளைவுயாதென்பதும் செய்யுளின் இரண்டாமடியிற் குறிக்கப்படுகின்றன.
ஏதொன்றை நினைப்பவருந் தன்னை முதலில் நினையும் பட்சத்தில் அவர் நினைவு முற்றமுடியப் பலன் செய்யவைப்பது பிள்ளையாரியல்பு, சிவனை நினைபவர்கூட இவரை முன் நினைந்து பின்பே சிவனை நினையவேண்டும் என்ற நியமமிருத்தல் சுவாரஸ்யமானது. பிள்ளையார் சிவனது தேரச்சறுத்த கதை பிரசித்தம், உள்குவார் - நினைவார். உள்கின் - நினையின். உள்குதற்கு - நினைவுக்கு. ஊதியம் - பேறு.
இங்ஙனம் பிள்ளையாரை முன்னினைந்து தாம் கருதியதைப் பின் நினைவார் பெறும் பயன் இருவகையாயிருக்கும். தாம் எண்ணியது எண்ணியதற்கும் மிக அதிகமாகக் (ஊதியம்மிக) கைவரப் பெறுதல் ஒன்று. முடிந்த முடிபாக 'உய்கதி' பெறுதல் ஒன்று. உய்வதொருகதி உய்வது ஒரு கதி. உய்கதி என்பது பிறவி நீக்கமும் முத்திப் பேறுமாம். ஒண்மலர்த்தாள் - ஒண்மையாகிய மலர்போலுந்தாள். ஒன்மை - ஞானஒளி. ஞானஒளியுள்ள தாளைப் பரவுதலால் அறிவொளிமிகும். அதன் மூலம் எடுத்துக்கொண்ட பிள்ளைத்தமிழில் அறிவுவளம் மிகும் என்பது குறிப்பு.
சுதுமலைச் சங்களையில் உள்ள (சுதுமலை - ஊர், சங்களை தலம்.) புவனேஸ்வரியம்மை கோயிலின் தோற்றம் பற்றிய ஒரு நோக்குக் கற்பனையுருவாகச் செய்யுளின் மூன்றாவது அடியில் இடம்பெறுகிறது. ஆழிக்கரைத்தோணி - கடலிற்
கரையொதுங்கி நிற்கும் தோணி. ஆழி - கடல். நிரந்தரக் கடலன்று; பள்ளமார் வெள்ளக்கடல். பெருமழை மிகும் மாரிக்காலத்தில் அவதானிக்கக் கூடிய ஒரு காட்சியிது. அத்தோணிக்கு ஏற்றாற் போற் பாய்மரமும் ஒன்று. கோயில் முன் கோபுரம் பாய்மரம்.
தோணி கரையொதுங்கி நிற்கிறது பிரயாணிகளை ஏற்ற. பாய்மரமுமுள்ளது. அதனால் பயணமும் விக்கினமின்றி முடியும். தோணியேறினோர் அக்கரை சேர்வர். இந்நோக்கில் புவனேஸ்வரியம்மன் கோயில் அடைந்து வழிபடுவார் பாதுகாப்பாகப் பிறவிக்கடல் தாண்டி முத்திக்கரை சேர்வர் என்ற பொருள் தொனிக்க நிற்றல் கற்பனைப் பயனாகும்.
பள்ளம் - வயல், ஆர் - நிறைந்த, அலையாழி - அலையெறிகடல், சினகரம் - கோயில்.
புவனேஸ்வரிப் பிராட்டியின் பிரபாவம் பற்றிய ஒரு குறிப்பு இறுதியடியில் வருகிறது. 'பிரமன்மால் காணாப்பெரியோன்' என்றிருத்தல் சிவனுக்குள்ள உயர்மகிமை. அது புவனேஸ்வரிக்கும் உள்ளதே. தாம்பத்ய சமத்துவம் அது. ஓரிருவர் - ஓர் இருவர்; ஒப்பற்ற இருவர்; பிரமாவும் விஷ்ணுவும், புள் அவாம் ஓர் இருவர், புள் - பறவை. அவாம் அவாவும்; விரும்பும். அன்னப்பறவை பிரமா விரும்புவது. கருடப்பறவை விஷ்ணு விரும்புவது. அவ்விருவரும் புள்ளவா மோரிருவர். புராதனி - பழையோள்.
பிள்ளையாரைப் பரவியதன் நோக்கை உணர்த்துகிறது இறுதியடியின் பிற்பகுதி. பிள்ளைத் தமிழ்ச்சுமையும் மகிமைகள் போத நின்றொளிர வேண்டும் என்பது நோக்கு.
மகிமைகள் - கவிநலம், கற்பனைநலம், சொன்னலம், பொருணலம் பக்தி நலம், சுவைநலம் என்பவை. போத - வேண்டுமளவு.
போதநின்று ஒளிர்க என்று பரவுவாம் என மேற்சேர்த்துப் பொருத்திக்கொள்க. ஏ - அசை.
-------------------------------------
1. காப்புப் பருவம்
பிள்ளைத் தமிழ் நூல் பத்துப் பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் பருவம் எனக் குறிக்கப்படும். பருவம் குழந்தையின் வளர்ச்சிப் பருவம். அப்பருவம் பற்றிய வர்ணனைகளையும் அவை சம்பந்தமான கருத்து விளக்கங்களையும் உள்ளடக்குவதால் நூற்பிரிவுகளும் பருவம் என்ற அதேபெயரால் ஆயின. குழந்தை பிறந்து மூன்றாம் மாசமுதல் 21ஆம் மாசமிறுதியான காலம் பத்துப்பருவங்களாகப் பகுக்கப்படும். இது ஒருபருமட்டானநியதி, இதில் மூன்றாம் மாசம் முதல் ஐந்தாம் மாசமிறுதியான காலப் பகுதியைக் காப்புப்பருவங் கொள்ளும்.
காப்பு காவல்! குழந்தைக்குக் கண்ணூறு, நாவூறு, நோய் நொடிகளாலும் அரிஷ்டதோஷங்களாலுந் தீங்கு நேராமல் தெய்வங்கள் காத்தருள வேண்டுங் காவல் இது. பிறந்து 31ஆம் நாள் பிள்ளைக்குக் காப்பணியும் வழக்கம் இந்நிகழ்வின் அறிகுறியாகும். காவல் வேண்டிக் கொள்ளபபடுந் தெய்வங்களில் முன்னுரிமை பெறுபவர் விஷ்ணு. சைவநோக்கில் விஷ்ணு எனப்படுவதும் சிவசக்தியின் ஒரு நிலையாகும். தேகதர்மத்துக்குப் பொறுப்பாயுள்ளது அது (விஷ்ணு சக்தி) என்ற காரணத்தால் அவ்வாறாயிற்று. அவ்விஷ்ணுவே திருமால். அவரை வேண்டுதல் செய்யும் பாடல் இப்பருவத்தின் முதலாம் பாடலாயமைகிறது. சிவன் முதலாகவுள்ள மற்ற மற்றத் தெய்வங்கள் சார்பான பாடல்கள் அடுத்தடுத்து இப்பருவத்தில் இடம் பெறும்.
(1) இம் முதலாம் பாடலில் முதல் இரண்டு அடிகளும் திருமாலின் மகிமையைப் புகழ்ந்து வேண்டுதல் செய்வதாக அமையும். பின் இரண்டு அடிகளும் அவரால் காக்கப்பட வேண்டிய புவனேஸ்வரியம்மையின் மகிமையைப் புகழ்வதாயிருக்கும். இப்பருவத்தின் அடுத்தபாடல்களும் இப்பாங்கிலேயே அமையும்.
தேகதர்மத்திற்குத் தீங்குறா தருளுதல், பாற்கடலிற்றங்குதல், செந்தமிழ்ப் பின்சென்றமை என்ற மூன்றும் இங்கு திருமால் மகிமைகளாம். பிரமன் முதல் எறும்பீறாய சகல படைப்புக்களுக்கும் தேகதர்ம பரிபாலனம் திருமாலால் நிகழும். சீரோதிமத்தன் - சீர் + ஓதிமத்தன் - அழகான அன்னவாகனத்தை உடையவன். ஓதிமம் - அன்னம். முதலா - முதலாக, சிருஷ்டிகள் - படைப்புக்கள். சென்ம சாபல்யம் - பிறவிப்பயன், உறுமா - உறுமாறு. உயிர்கள் பிறவிப் பயனடைதற்கு முன்னோடியாகத் தமது வினைப்போகங்களைச் சரிவர அநுபவிக்க வேண்டும். அதனால், அதற்கின்றியமையாத தேகம் தீங்குறாதிருக்க வைக்கவேண்டும். இந்நோக்கில் அமைந்தது, திகழ்போக ……….. வண்ணமருளி என்ற தொடர்
க்ஷீரோததி - க்ஷீர உததி, க்ஷீரம் - பால் உததி - கடல், தாமோதரன் - திருமால், உறு - உறும். செஞ்செந்நாப் புலவர் - செம்புலவர், செந்நாப் புலவர் என இரு தொடராகும். செந்நா - செவ்விய நா; செப்பமான நா. நல்லதும் இனியதுங் கூறும் நா செந்நா, புலவர் போற்றும் - புலவரால் போற்றப்படும், திருமால் செந்தமிழ்ப் பின் சென்ற கீர்த்தியைக் குமரகுருரபர் என்ற புலவர் போற்றியிருத்தல் கண்கூடு, (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.காப்புப் பருவம்: செய். 1.)
மறைகட்கும் மறையாயிருத்தல், சங்களைப்பதியில் பர்வதாவர்த்தனி, மனோன்மணி, புவனேஸ்வரியென வீற்றிருத்தல் என்பன அம்மன் மகிமைகளாம், பாரோது மறை - பார் ஓதும் மறை, பார் - உலகம். அது இங்கே உலகிலுள்ள அறிஞரைக் குறிக்கும் - உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. மறை - வேதம்; மறைந்த பொருளுடையது. அவ்வேதத்தினாலும் அம்மன் சுவரூபத்தை அளவிட்டுவிடுதல் கஷ்டம், மறைகளிலும் அது மறைவாகவேயிருக்கும். மறைகட்கு மறையாம் என்றதன் விளக்கம் இது, பராபரை - பராபரன் பார்யை- பராபரன் - மேலானவற்றுக்கும் மேலானவர். தராதலம் - தரையாகிய தலம் - பூமி. பர்வதா வர்த்தனி - பர்வத வர்த்தனி - பர்வதத்தில் வளர்ந்தவள். பர்வதம் மலை, இமயமலை. இதுவும் சுதுமலையாதலால் பெயர்ப் பொருத்தம் நன்கமையும். சங்களையிற் குடி கொண்ட அம்மனின் ஆதிப்பெயர் பர்வதவர்த்தனி, பின் காலத்தில் மாற்றம் பெற்ற பெயர் மனோன்மணி. அதனால் பினைநாள் மனோன்மணி எனப்பட்டது. இன்றைய பெயர் புவனேஸ்வரி. எனில் மூன்றும் மூவேறு தெய்வமோ எனில் இல்லை. ஒரே அம்மன் தான் பெயர் மூன்று என்பது விடை. ஆயின் பெயர் வேறுபட வந்ததேன் எனில், காலஅடைவில் நடைபெறுங் கும்பாபிஷேகங்களிற் சம்பந்தப்படுவோர் விரும்பியிட்டுக் கொண்ட காரணத்தினால் என்க. பிள்ளைத்தமிழ் பெறும் பிள்ளையாதலிற் குதலை மதலைப்பிள்ளை எனவும் சாமானிய பிள்ளை போலன்றி அருளால் தோன்றிய பிள்ளையாதலிற் பெருகருட் பிள்ளை எனவும் ஆயிற்று. இது கருவழிவந்த பிள்ளையல்ல; அருள்வழி வந்தபிள்ளை என்றபடி. பெருகும் அருள் பெருகருள். ஆரும் அணுகுதற்கரிய அருள் நாம் எளிதிற் காண வந்திருத்தலை எளிவந்த என்ற தொடர் குறிக்கும். எளிவந்த பிராட்டி; எம் உள்ளம் முழுதாளும் பிராட்டி என இருதொடராகக் கொள்க. இவ்விரு தன்மையுங் கூடப் புவனேஸ்வரி மகிமையிலடங்கும். புவனேஸ்வரியைத் திருமால் காக்க என மேற்சேர்த்து முடிக்க, எ -அசை.
(2) இப் பாடல் முற்பகுதி குறிக்குஞ் சிவன் மகிமையாவது:- சாஸ்திரங்களில் அவர் மகிமைகள் நிரம்பச் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், எவ்வளவு சொல்லியும் அவற்றுள் அடங்காதிருப்பன பல. அவ்வாறே, சிவயோகிகள் காட்சியிலே அவா மகிமைகள் நிரம்பத் தோன்றும். ஆனால், தோன்றாதனவும் பல. இங்ஙனம் சொல்லுவ சொலாத; தோன்றுவ தோன்றாத என்ற வகைகளிலுள்ளவையனைத்தும் அடங்கச் சிவனை ஏகபரிபூரணம் எனக் குறிப்பர். இங்ஙனம் எல்லாவற்றையுந் தன்னுட் கொண்டிருக்குந் தன்மையைக் குறிக்குஞ் சொல் தன்மயம் என்பது.
சொல்லார்ந்த - புகழ் நிறைந்த. சுருதி - வேதம் மிருதி மனுஸ்மிருதி முதலியன. சொல்லுவ சொல்லப் படுவன. சொலாத - சொல்லப்படாதன. எல் - பிரகாசம் ஏன்ற - இயைந்த. இன்புருவின் அன்புமுதல் - இன்பமே தன்வடிவாயிருப்பவனும் உயிர்களில் மெய்யன்பு விளைதற்குக் காரணமாயிருப்பவனும். இவையும் சிவன் மகிமைகளாகும்
பின் இரண்டடிகள் புவனேஸ்வரி உயிர்க்குயிராயிருப்பது பற்றிய விளக்கந் தருகின்றன. உயிர் என்றுண்டோ அன்றே சிவசக்தியும் அதனிடத்திலுள்ளது. ஆனால், அவ்வுயிர் இலகுவிற் கண்டு கொள்ள இடமளிக்காமல் வெகு ஆழத்தில் உள்ளது; இயல்பாக உயிரோடிருந்து அதற்கு மறைப்பை விளைக்கும் ஆணவம் என்ற மலத்தினிருப்புக்கும் அப்பால் மறைந்திருப்பது. அது காரணத்தால், திரோதை எனப்படுவது இச்சக்தி. (திரோதா - மறைந்திருப்பது, மறைத்திருப்பது) மறைந்திருக்குமிச் சுபாவம் பற்றி, கருமலத்தமைதிக்கு மப்பால் ஓர் அளைகண்டு தான் துழைந்து எனப்பட்டது. அளை - புற்று. இங்ஙனம் அங்களை (அங்கு + அளை) புகுந்திருந்த ஆசாரத் திற்கேற்பத்தானோ இங்கும் சங்களை (சங்கு + அளை) புகுந்திருந்தாள் என எண்ணத்தோன்றும் நயமுமுண்டு.
அல்லார்ந்த - இருள்மயமான. மலமறைப்பு - ஆணவ மறைப்பு. அடர்த்தி - செறிவு. அருளார் திரோதை;~ மறைத்திருந்ததும் உயிர்க்கு உறுதிப்பயன் விளைக்கவே ஆதவின் அதுவும் அருளேயாம். உயிர்க்கு உலகச்சார்பாகிய பந்தநிலைக் காலத்தில் மட்டுமே இப்படி. மேல், உயிர்க்கு மலம் விலகுந்தருணம் உயிரின் சுத்தநிலை. அப்போது உலகச் சார்புக்குப்பதில் சிவச்சார்பு ஏற்படும். அந்நிலையில் இத்திரோதை, (திரோதானசத்தி) பராசத்தியாய்விடும். திரோதையாயிருந்து உலக போகமளித்தது, பராசத்தியா யிருந்து சிவபோகம் (மோக்ஷம்) அளிக்கும். இவ்விருவகையும் பாடலிறுதியிற் குறிக்கப் பட்டுள்ளன. புரை - குற்றம். எல்வை வேளை. போதம் - ஞானம். பரை - பராசத்தி. பொற்கொழுந்தைச் சிவன்புரக்க எனமேற்சேர்த்துக்கொள்க.
(3) இச்செய்யுளின் முதலீரடிகள் ஆன்மாவின் மூலாதாரத்தில் உள்ள நாவிதழ்க் கமலத்தில் ஐங்கரன் வீற்றிருக்குந் தோற்றம்பற்றிக்கூறி அவர் உள்ளிருந்து புரியும் உபகாரம் உணர்த்துகின்றன. அடித்தளமாகிய மூலாதாரத்தில் அதி ஆழத்தில் இருத்தலால் ஆழத்துப்பிள்ளை. ஆன்மாவை யலைக்கும் ஐம்புலன்களையும் அடர்த்து அடக்குதல் அவர் செய்யும் உபகாரம்.
'பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்'
'புந்தித் தடத்துப் புலக்களிறோடப் பிளிறு தொந்தித்தந்தி'
என்பன முன்னோர் மேற்கோள்கள். வேழம் - யானை. மஸ்தகம் - தலையுச்சி. வியன் - பெரிய. ஆத்துமவிலாசி - ஆன்ம விளக்கம் உள்ளவர். ஐம்புலக்களிறு - ஐம்புலன்களாகிய யானைகள்.இம்பர் வாழ்மயல் - இவ்வுலக வாழ்வில் அழுந்தும் மயக்கம்.
அடுத்த ஈரடிகள் புவனை சங்களையி லிருந்து நமக்குச் செய்யும் உபகாரம் பற்றிக் கூறுகின்றன. உலக வாழ்வு பற்றிய எமது இழிவைப் போக்குதல், ஆன்மா பக்குவம் முதிர்ந்து கீழ்ப்பட்ட உடல் தொடர்புகள் எல்லாம் விட்டு உச்சித் தொளைக்கும் மேல் உள்ள சகஸ்ரதள பீடத்திலேறிச் சிவனை யடைந்திருக்கச் செய்வதற்கு முன்னோடியான வழிவகைகளைக் கோலுதல் என்பன அவள் அருளுபகாரங்களாம். புன்மை சிரசின் உச்சித் தாழ - இழிவு நீங்க. துவாத சாந்தம் தொளைக்குமேற் பன்னிரண்டங்குல அளவான வெளி. ஆயிரவிதழ்த் தண்கமலபீடம் - ஆயிரம் இதழ்களாக விரியும் தண்மையான தாமரைப்பீடம் அதுவே சகஸ்ரதள கமலம் எனப்படுவதும். அது சிவயோகிகளுக்கு ஏற்படுவது. அகம் நிலவும்... உள்ளே விளங்கும். புறத்தில் பசுங்குழவியாயிருந்துகொண்டே அதேவேளை அகத்திலும் விளங்கி அருள்புரியும் புவனையின் உபகாரம் இத்தகையதாம். புரக்க வென்றே தாள்பணிகுவாம் எனமுடிபு கொள்க.
(4). சிவன் மகிமை நமக்கு நிதர்சனமாம் படி வந்து நிலவுலகில் உதித்த தோற்றமே முருகக் கடவுள் என்பது இப் பாடலின் முதலீரடிகளின் சாரமாகும். 'அருவமு முருவு …..... மாகி என்ற கந்தபுராணப்பாடலில், பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு ஒரு திருமுருகனாய் வந்துதித்தனன் எனக்கூறப் பட்டிருத்தல் காணலாம். முதலடி முழுமையும் சிவன் மகிமை உணர்த்தும். சிவன் சிலருக்கு உயிர்க்குயிராயிருந்து நெறிகாட்டுவார். யாருக்கெனில், ஒரே வஸ்துவாகிய அவரில்லாமல் ஒருபொருளுமில்லை. அத்துடன் அவர் மற்றெந்தப் பொருளிலாவது ஒன்றுவதுமில்லை என்ற உண்மை விளக்கம் பெற்றவர்க்காம். அவர்களுக்கு நிகழும் உணர்வு உணராதுணரும் உணரிவு. ஒன்று இன்றி ஒன்றும் இலை. அவ்வொன்று ஒன்றினிலும் ஒன்றல் இலை. ஒன்று... ஏகப்பொருளாய சிவன். ஒன்றும் - ஏனைப்பொருள் ஒன்றும். நேயசிவன் - நேய உருவான சிவன், நிதர்சனம் -கண்ணெதிர் காணல். வடிநெடுவேல் - கூரிய நெடியவேல். நீபம் ஆர் மார்பன் - கடப்பமாலை அமையும் மார்புள்ளவன். நீபம் - கடம்பு. அது மாலைக்காயிற்று.
பின் இரண்டடிகள் புவனையின் அருளுபகாரம் பற்றித் தெரிவிக்கின்றன. சிவன் சீவன் என்ற இரண்டுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்தல். சீவனின் வாழ்க்கை மயலை மென்மெல நகர்த்துதல். அவ்வகையால் உயிரிடத்தில் இரு வினையொப்பு என்ற பற்றற்ற மனச்சமநிலையை வரத்துதல். உயிரைத் திருவருட்பற்றிற் செலுத்துதல். என்பன அதன் உபகாரங்களாம். நன்றொன்று - நன்று ஒன்றும். சிவனும் சீவனும் என்றுமே அத்துவிதப் பிணைப்பில் உள்ளவை என்பது இதன் பொருள். நடுவு நின்று ஊடாடி, ஊடாடுதல் தொடர்பூட்டல், இவ்வுபகாரத்தின் சார்பில் உயிரை என்றுமே தொடர்ந்து கொண்டிருப்பது சக்தியின் இயல்பு. 'புறம்புறந் திரிந்த செல்வமே' என்ற திருவாசகம் இதனைத் தெரிவிக்கும். இங்கும், புறஞ் சென்று சென்றுவக்கும்' எனல் காண்க. சென்றுவக்கும் - செல்லுதலில் உவப்படையும். பவளவல்லியை நீபமார் மார்பன் காக்க எனக்கூட்டுக.
(5) செய்யுளின் முதலீரடிகள் பிரமாவின் ஆசனமாகிய தாமரை சிவந்ததாயிருத்தல் பற்றிய கற்பனைக் காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறது. அது சிவந்ததேன் எனில் அவரின் உடல் உறுப்பு உள்ளம் என்ற மூன்றும்போல் தான் இருந்து விடவேண்டும் என்று என்பது காரணம், அவை சிவந்ததேன் எனில் மாறிமாறி உயிர்களுக்கான தனு கரண புவன போகங்களை உண்டாக்கிக் கொண்டிருப்பதால் என்ற காரணமும் புலப்படுத்தப் பட்டுள்ளது. அண்டம் முதல் அணு இறுதி ஆம் மாயா பண்டங்கள், சராசரங்கட்கு ஆன தநுகரணங்கள் என்பன படைக்கப்பட்டவைகள். மாயா பண்டங்கள் - மாயையிலிருந்து தோற்றும் பொருள்கள். சராசரம் - இயங்குவன, இயங்காதன இரண்டும். தநு - உடம்பு, கரணங்கள் - மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் என்பன. என்ன – போல, போலும்படியாக, ஒக்கும்படியாக.
பின்னீரடிகள் புவனை வீற்றிருக்குந் தலஅமைதியும் அங்கு அவட்கு நிகழுஞ் சீராட்டுகளும் பற்றிக் கூறுகின்றன. குயில் கூவ மயிலாடும் சோலை, ஆலநீழல், கடம்பமர மலர்வாசனை என்ற இவற்றோடு கூடியது தலஅமைதி. பரவல், வாழ்த்தல், கோதாட்டல் என்பன சீராட்டுகள். கொண்டல் - மேகம். கோலம் - அழகு. ஆர் - அமையும். குரவு - கடம்பு. விண்டு - விஷ்ணு, கோதாட்ட – சீராட்ட.
6) முதலீரடிகள் இலக்கும் மாண்புரைக்கின்றன. இவள் உலக சீர்த்திடப் பார்த்த செல்வி. உலகுயிர்கள் சீர்மையும் செழிப்புமுற்றிருக்கும் படியாகத்தன் அருட்கண்ணாற் பார்த்த செல்வி. இவள் செல்வி. இவளால் உதவப்படுவதுஞ் செல்வம். அது இருமைக்கும் ஒருநிலையதாம். இருமை... இம்மையும் அம்மையும். வாழ்வு வளமோங்க உதவுதல் மூலம் செல்வம் இம்மைக்குதவும். சிவப்பற்றுச் சார்பான அந்தரங்க சுத்தியோடு அறஞ்செய்யும் வகையால் அம்மைப் பேறான சிவலோக வாழ்வைத் தருஞ் சிவபுண்ணியத்துக்கும் செல்வம் உதவும், இருமைக்கும் ஒருநிலையது என்பதன் விளக்கம் அதுவாகும்.
இலக்குமி நாயகனான விஷ்ணுவைத் திருமறு மார்பன் என்பர் புலவர். திரு - இலக்குமி. மறுமார்பு … மறு (அடையாளம்) வுள்ள மார்பு என்ற பொருளில் இலக்குமி விஷ்ணு மார்பில் என்றும் நீங்காது (தழும்புபோல) இருப்பவர் எனக்கொள்ளுதல் சகஜம். அஃதங்ஙனமாக, திருவினால் (உழுது) மறுக்கப்படும் மார்பு என்று இத்தொடருக்குப் பொருள் கொள்ளுஞ் சார்பு தோன்றச் செய்யுள் இரண்டாமடியில் ஒரு கற்பனை நயமிருத்தல் கருதத்தகும். உழவுக்கான கலப்பை, திருவின்முலை, முலைஏர் -முலையாகிய ஏர். ஏர் - கலப்பை. கடாய் - கடாவி, செலுத்தி. அதைச்செலுத்தி அவன் திருமறு மார்பன் எனப்புலவர் செய்யுங் கற்பனைக்கு இவள் காரணமாயினள் என்கின்றது இச்செய்யுட் கற்பனை குவட்டுமுலை .. சிகரம்போல அமையும் முலை. கற்பனைக்கு உகந்த நல்காரணி.
பின்னீரடிகள் சுதுமலை மேம்பாடும் புவனைமகிமையுந் தெரிவிக்கின்றன. முத்தமிழ்ப் புரவலர்களைக் கொண்டுள்ளமை சுதுவைச்சிறப்பு. அழியாத அன்பூட்டி எம்மைப் பணிகொளல், வினைப்பிறப்பறுக்க வீறுமிக்க கடைக்கண்ணோக்கருளுதல், தன்பணிக்கு விண்ணவரையும் மண்ணிழிய வைத்தல் என்பன புவனை மகிமைகளாம். தமிழ்ப்புரவு - தமிழ்ப்பாதுகாப்பு. மேவி... அமர்ந்து. மூவாத - அழியாத, என்றும் இளம்பதமான. ஓவாது.. இடையீடின்றி, முக்கணான் பன்னி ... சிவன்பத்தினி, பவங்கள்... பிறப்புகள். கடாக்ஷம் ... கடைக்கண், ஈக்ஷணம்...பார்வை. மா...சிறந்த பணிவினவி பணிகேட்டு, வித்தகம் - சாமர்த்தியம், பாலகியைத் திருமகள் காக்க எனஇயையும்.
(7) செய்யுளின் முதலீரடிகள் இலக்கிய உலகிலுள்ள கவிதா ரசனை கற்பனைவளம் அனைத்துக்கும் சரஸ்வதிதேவியே ஆதாரம் எனவும் அவ்விளக்கத்தையும் அவளே அறிஞருள்ளிருந் துணர்த்துவள் எனவுந் தெரிவிக்கின்றன. அறிஞருள் ஓதும் வெள்ளோதிமம்' அவள். ஓதும் - சொல்லும், உணர்த்தும். வெள்ளோதிமம் - வெள்ளன்னம், கற்போருள்ளத்திற் கள்ளூறி வாயூற வைக்கத்தகுங் கவிதா சிரோமணிகள் காளிதாசன், கம்பன், காளமேகம் ஆதியர். கற்பனாகர்வம் இவர்களின் வியக்கத்தகு பண்பாகும். கள்ளூறும் - இனிமை சொட்டும். பிலிற்றும்.. தெளிக்கும். கற்பனாகர்வம் - கற்பனைக் கிறுக்கு. அள்ளூறு பினிமை - அள்ளியலைப்பதுபோலும் இனிமை.
இறுதியடிகள் இரண்டும் புவனை சிவானந்தவல்லி யாயமையுந் திறத்தை விளக்குகின்றன. சிவானந்தம் என்பது உள்ளுணர்வுக்கும் உள்ளுக்குள்ளாயிருந்து ஊறிமிதந்து மேற்பரவும் அமாநுஷிகமான ஒரு இன்ப உணர்வு. அது ஆத்தும வளாகத்தி னடித்தளத்திலிருந்து படிப்படியாக ஏறி உடல் வளாகமாகிய எற்புத்துளைகளிலும் தோல் துவாரங்களிலும் கூட. ஊர்ந்து வந்து பரவச முறுத்தும், ஆயினும் உயிரின் வழக்கமான அறிவு சாதனங்களான புலன்கள் ஒன்றினுக்குமே எட்டாததாயிருக்கும். இதனியல்பை உணர்ந்து இதைப் பெறுதற்கான வழிவகைகளைப் பின்பற்றி முயல்வார்க்கு இந்தப் புவனை என்ற சக்தி தானே வெளிப்பட்டு அவர்க்கு அமுதாயினித்து நின்று அவ்வகையிற் சிவானந்த வல்லியாவாள் என்ற விளக்கம் இப்பகுதியிற் பெறப்படுகின்றது. தெரிகுநர் தெரிந்து கொள்வார். செல்வி தனைக் கலையரசி காக்க எனக் கூட்டிமுடிவு செய்க.
(8) செய்யுளின் முதலீரடிகள் துர்க்காதேவியை பிரதிபாதிக்கும் வகையைக்கூறி அவளை ஞானாக்னி கல்ப வேதம் மெனக் காட்டுதலுடன் தேவியின் இருவேறுவகைப்பட்ட கருணைப் பிரபாவத்தையும் புலங்கொள்ள வைக்கின்றன. அசுர குலத்தை நாசமாக்குவது அவள் மறக்கருணை. நல்லோர்க்குப் பாதபரிசந்தந்து ஞானமோனப் பக்குவமுற
வைப்பது அவள் அறக்கருணை, வேதமூலம் - 'ருக்' வேதம் - மூலவேதம் எனமாறுக. 'தாம்த்வாம் அக்னிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் துர்காம் தேவீம்' என்பன போன்ற வேதமந் திரங்கள் அவளை அக்னி கல்பமென நாட்டுகின்றன. இங்கு அக்னி யென்பது பிராகிருத அக்னியன்று: ஞானாக்னியாகும். வேதமூலம் ஞானாக்னி கல்பமென்ன நாட்டும் பொருள் அசுரேசர்குலம் நாசப்படுத்தி நல்லோர் மோனப் பக்குவமுற வந்து உலவும் மூர்த்தமே துர்க்கை என்க. ஈட்டம் - தொகுதி. அசுரேசர் - நிம்பசும்பர் சண்டமுண்டர், மகிடன் முதலானோர். பரமசித்சுகம் - மேலான ஞான விளக்கத்திற் பெருஞ் சுகம். சித் - ஞானம்
பின் ஈரடிகள் புவனை தத்துவங்கள் முப்பத்தாறினும் புகுந்து அவற்றுக்குப் புஷ்டிதருமாறும் அவளே சிவன் பாகமாளுந் தலைவியாமாறுங் காட்டுகின்றன. தத்துவங்கள் முப்பத்தாறும் பிருதிவி முதல் நாதம் ஈறாக உள்ளவை. இங்கு பூதம் என்றது பிருதிவியை. புஷ்கலை - புஷ்டியானவள், புஷ்டி யளிப்பவள். நிஷ்களசிவம் - ரூபநாமங்களைக் கடந்தபரசிவம் அதுபொன், இவள் அப்பொன்னில் ஒளிரும் மின்,
பொய்யிலா மெய்ம்மை - பொய்ம்மையை இல்லையாகச் செய்து எழும் மெய்ம்மை. புவனை நாயகி நலம் போற்றிப் புரக்க வென்று துர்க்கை நாயகி பதமலர்கள் ஏத்தெடுப்பாம் என இயைபு செய்க.
(9) முதலீரடிகள் சப்தமாதர்கள் இயல்புகளைக் கூறிஅவரருள் வேண்டுவன. இவ்வடிகளின் உட்பிரிவுகள் எட்டில் மேலுள்ள ஏழிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் மாதரைக் குறிக்கும். அவர் முறையே அபிராமி, கௌமாரி, மாகேஸ்வரி, இந்திராணி, துர்க்கை, வாராகி, காளி என்போராவர், சூர்ப்பகை - குமரக் கடவுள். விசுத்திஇறை - கண்டத்தானத்திலுள்ள விசுத்தி சக்கரத்தில் தோன்றும் மகேஸ்வரன்.
பின்னிரண்டடிகள் புவனையின் பிரபாவங்கூறுவன. துரியம் ஆன்ம தியானத்தில் நேரும் நின்மலாவத்தை நிலைகள் ஐந்தில் நான்காவது.
(10) செய்யுள்முதலடி முப்பத்துமுக்கோடி தேவரை வகை தொகையாகக் காட்டுகிறது. முப்பத்துமுக்கோடி என்பது முப்பத்து மூன்று என்ற எல்லையுடைய எனப்பொருள்படும் கோடி - எல்லை. இவர்கள் ஒவ்வொருவரும் உலகம் நடை பெறற் காதாரமான தத்தம் பணிகளைச் சிவனாணைக்குப் பயந்து பக்திபூர்வமாக இயற்றுபவர்கள். 'தஸ்யபியாதபனோ பாதி' 'தஸ்யபியா பவனோவாதி' - அவன்பற்றிய பயத்தோடு சூரியன் ஒளிசெய்கிறான், அவன் பற்றிய பயத்துடன் காற்று வீசுகிறது - என வேதங் கூறுதல் காணலாம். அப்பயத்துக்கு ஏது இச்செய்யுளிற் காணப்படுகிறது. முன்னவன் மடியாத அணையன் ஆந்தன்மை முன்னி என்பதில் அக்காரணம் உண்டு. முன்னவன் தமை இயங்கும் முதல்வன். மடியாத ஆணை - சோர்வில்லாத (உக்கிரமான) ஆணை, முன்னி -கருதி.
பின்னிரண்டடிகள் சங்களைப்பதியில் நிலவும் ஆஸ்திகப் பொலிவுதரும் வழிபாட் டொழுக்கக் காட்சியொன்றை வர்ணிக்கின்றன. புனற்பசையறாக்கூந்தல் – ஸ்நானஞ் செய்த ஈரம் வற்றாத கூந்தல். ஈரப்பசுமை நீங்க முன்பே ஆலய வழிபாடாற்றுதலில் விசேட அமைதியுண்மை குறிப்பது இது. மலர்த்தட்டு - அர்ச்சனைத்தட்டு, அன்னஅசை நடை - அன்னத்தின் அசைவொக்க அசைந்து வரும் நடை. புவனேஸ்வரியை முப்பத்து முக்கோடிதேவர் காக்க என முடியும்.
----------------------------
2. செங்கீரைப் பருவம்
காப்புப் பருவத்தை அடுத்துப் பிள்ளைத் தமிழில் இடம் பெறுவது செங்கீரைப் பருவம். பிள்ளை வளர்ச்சியில் ஐந்தாம் மாசத்தின் மேல் நிகழ்வது இது என்பர். பிள்ளை உடல் புரட்டிக் கையூன்றி ஒருகால் மடித்தூன்றி மறுகால் எடுத்தூன்றி முகம் நிமிர்த்தி அசைக்கும் நிகழ்ச்சி இப்பருவத்தியல் பாயிருக்கும் அத்தோற்றம் கவர்ச்சி தருவதாய்க் கண்டோரெண்ணத்திற் பலவித கற்பனையலைகளைத் தோற்றுவிப்பதாய் இருத்தல் இயல்பு 'விடுப்புப் பிடுங்குதல்' என்ற விநோத விசாரணைக்கு, இலகுவில் ஊக்கப்படும் பெண்களுக்கு இந்நிலை மிக உகப்பாயமையும். பிள்ளையின் முக அசைவாட்டங்களின் ஒவ்வோர் அசைவையும் பிள்ளை தம்மிடம் ஏதோ கேட்பதாகவோ தாம் கேட்கும் எதனுக்கோ பிள்ளை பதிலிறுப்பதாகவோ கொண்டு அவ்வகையில் தமது கற்பனைச் சுவையைக் கட்டவிழ்த்து விட்டுப் பெண்கள் குதூகலிக்கும் உரையாடலும் இப்பருவஞ் சார்ந்த முக்கிய நிகழ்ச்சியாயமையும். பிள்ளை பேசுவதை எதிர்பார்ப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். பிள்ளை பேச்சை விரைவில் ஆரம்பிக்கச் செய்வதற்காக மறைமுகமாகப் பயிற்சி கொடுக்கும் ஒருவித்தையாகவும் இது அமைதல் கூடும். அதனால் இது செங்கீரை எனப்பட்ட தென்பர். கீர் - செங்கீர் - மொழி:-
செவ்விய மொழி செங்கீரின் திரிபுசெங்கீரை.
பிள்ளை படுத்து முகமெடுத்தசைத்தல் பற்றிய வர்ணனையும் பக்கத்துக்குப்பக்கம் குறுக்காகவும் மேலுங் கீழுமாக நெடுக்காகவும் அசைத்தல் என்ற முகஅசைவு விதங்களும் ஹும் என்று ஒலியெழுப்பும் செயலும் பற்றிய வர்ணனையும் இப்பருவப் பாடல்களிற் சிறப்பம்சங்களாக அமைதல் பொருந்தும்.
பாடல்கள் பெரும் பான்மை செங்கீரையாடியருளே எனவும் சிறுபான்மை அதற் சிறிது வேறுபட்ட தொடராலும் முடிவுறும். செவ்விய மொழிகளைப் பேசுக என்பதுபொருள்.
1. இச் செய்யுள் மூன்றாமடி செங்கீரையாடும் பிள்ளையின் தோற்ற நிலைவர்ணனை. இரண்டாமடி அந்நிகழ்வின் பின்னணி வர்னனை, முதலாமடி. இது ஏதுக்கோ? என்று எழக்கூடும் ஆசங்கைக்கு விடையா யமைகிறது.
'ஆதிப்பரம் பொருளினூக்கம்' என்பது ஒரு சுருதி. இது மஹாகவி பாரதியின் பாடற்சுருதி. காணப்படும் பிரபஞ்சம் ஆதிபரம்பொருளாய சிவனது ஊக்கத்தின் வெளிப்பாடு என்பதுபொருள். சுருதியை அறிந்தவர்க்கு 'ஊக்கம்' என்ற அது எப்படியிருக்கும் எனத் தோன்றக்கூடியது ஒரு ஆசங்கை. அதற்கு வாக்கால் விடையளித்தற்குப் பதில் செயலால் விடை யளித்தவாறாயிருக்கிறது பிள்ளையின் தோற்றநிலை என்பது முதலடி தரும் பொருள். இது யதார்த்தமாக அன்று, கற்பனையாக என்ற உட்கிடையை வெளிப்படுத்த நிற்கிறது "கொலோ' என்ற இடைச்சொல்லினை கொல்+ஓ. தேர்வார் -அறிவார். சுருதி - பாடல்.
ஒரு மணி மண்டபம், பொன்முலாமிட்ட நிலம். அன்னத் தூவியாலமைந்த மெத்தை, இது பின்ணனி எனத் தெரிவிக்கிறது இரண்டாமடி. சோதிப் பொலிந்த - சோதியாற் பொலிவுற்ற - அணிசெய் -அலங்காரமாயிருக்கும். அன்னமென் செந்தூவி அதாவது அன்னப்பறவையின் சிறகில் உள்ளிருக்குஞ் சிறுசெட்டை அணை - மெத்தை. பொன்னுடலம் – பொன்னழகு பொலியுந் திருமேனி.
பிள்ளையின் பாதிப்பிறை போன்ற நுதல் பளிச்சிடுகிறது. தாமரை போன்ற கை ஊன்றி யிருக்கிறது. பசுமை யொளிரும் ஒரு பதம் மடித்து ஊன்றியுள்ளது. மறுபாதம் எடுத்தூன்றியுள்ளது. முகம் முன்னோக்கி உந்துகிறது எனப் தோற்றநிலையைத் தருகிறது மூன்றாமடி. நிகராம் நுதல் – ஒப்பான நெற்றி. பங்கயம் – தாமரை. மனமாசிருள் - மனக் குற்றமாகிய அறியாமை. சேதிக்கும் - வெட்டியழிக்கும். செங்கமல பீடம் - தாமரை ஆசனம். சங்களையில் தேவி தாமரைப் பீடத்திலிருத்தல் கண்கூடு.
2. இப்பாடலின் முதலடி பிள்ளையின் தோற்ற நிலையை மற்றொரு பாணியில் வர்ணிக்கிறது. உள்ளுவகை பொங்கி வெளியே பாய்தலைகிறது. ஆனந்த நிறைவு என்று கருதப்படும் ஒன்றினது அழகிய இளம் முளை தோன்றுவது போன்ற காட்சி. பொன்முகம் நிமிர்ந்து அலர்ந்து சோபிக்கிறது என்பது வர்ணனை. உவகைக்களி உவகை ததும்பும் களிப்பு. ஆனந்த பூரணம் - ஆனந்த நிறைவு. எழில் ஆர் - அழகு அமைந்த.
முக அசைவு கையசைவு பற்றிய இருவித கற்பனை விளக்கங்களைத் தருகிறது இரண்டாமடி. முகத்தைச் சுழற்றி யசைத்தல் இங்குள்ள எல்லாம் என்னுடைய ஆட்சி என் பதாகவும். கையெடுத்தடித்தல் இவ்விடத்தில் சேஷ்டை பண்ணுபவர்க்கு இன்னது கிடைக்கும் என்பதாகவும் கற்பனை. இது கற்பனை மாத்திரமன்றிக் காரியாம்சத்திலும் இடம்பெற்றுள்ளதாக அறியவருகிறது. [புவனேஸ்வரியம்பாள் கோயில் வரலாறு 986 பக் 18 பிரிவு (1) பார்க்க] அலது இல்லை, என்பது இரு எதிர்மறைச் சொற்கள் ஒன்றியைந்து 'நிச்சயம் என்று பொருள் தந்தவாறு. கலாம் - கலகம் சண்டை,
சேஷ்டை' பெறுவதீது - பெறுவது ஈது. ஈது - இது; எதுவெனில் செயலிற் காட்டிய அதுவே, செந்தூவி அணைக்கு நிகழ்ந்ததே (அடி) தான் அவர்க்கும் என்றதாம்.
மூன்றாவது அடி முகத்திற் கிளம்பும் ஒலிபற்றியதோர் வர்ணனையை முதலிற் கொண்டது அவ்வொலி ஆட்களை உரப்பி அச்சமூட்டுதலாகக் (வெருட்டுதலாக) காட்டுகிறது வர்ணனை. மற்றொரு வர்ணனை கையரைவு பற்றியதாய் முன்குறித்த அச்சகத்துக்குப் பரிஹாரம் பண்ணுவதாய் அமைகிறது. ஒருகையை விரித்தபடி மேலசைத்தல் 'பயப்படாதீர்' என அபயமளித்தலாகக் காட்டப்படுகிறது. இவ்வொரேய டியிலேயே நிக்கிரஹம் அநுக்கிரஹம் இரண்டும் ஒருங்கமையும் அழகுண்டு. உறுக்கல் - நிக்கிரஹம், அபய கரமளித்தல் அனுக்கிரஹம். இரண்டுந் தெய்வமே செய்வதாகக் கொள்வது சைவஞான விளக்கத்தின் சிறப்பம்சமாகும். தமும்பேறத் தண்டிக்குந்தாயே தழும்புக்கு எண்ணெயிட்டுத் தடவுதலுஞ் செய்வள். அது போல்வது இது. இச்சைவ உண்மைப் பண்பை எடுத்துநாட்டியுள்ளது இக்கற்பனையம்சம். உங்குமெனுமொலி - உம்+ஹும் = உங்கும். இவ்விரண்டும் அச்சுறுத்து ஒலிக் குறிப்புகள் ஊடுபோக்குற உள்ளுடலெல்லாம் ஓடிப்பரவத் தக்கவாறு. ஒருகால் - ஒருதரம். சிங்கல் இல் - குறைதல் இல்லாத; நிறைவான. செங்கீரை நிகழ்விலேயே அநுக்கிரக நிக்கிரக சீர்மை நிறைவாக நிகழக் காட்டுதல் இச்செய்யுட் சிறப்பாகும்.
3. பிள்ளையை அணுகும் பெண்கள் விடுப்பு விசாரித்தல் பற்றிய வர்ணனை இப்பாடலில் இடம்பெறுகிறது. அவர்கள் விடுப்பு வினாக்கள் இரண்டு. எங்கிருந்தோ வந்தது? என்ப தொன்று அதற்கு விடை முகத்தை இறங்க அசைத்தல். அதன் மொழிப்படிவம் 'இங்குதான்' என்பது. அன்னையே உங்கட்குப் பூர்விக இடம் சகஸ்ரதளமோ, கயிலையோ, தில்லையோ, துரியவீடோ? என்பது அடுத்த விசராணை. முகத்தின் குறுக்கு நெடுக்கான அசைவுகள் அதற்கு விடை. அவற்றின் மொழிப் படிவம் 'அல்ல ஆம்' என்பது. குறுக்காக முகத்தை அசைத்தல் 'அல்ல' என்றதும் நெடுக்காக அசைத்தல் 'ஆம்' என்றதுமாகக் கொள்க.
குறித்த ஓரிடத்தில் இருப்பவராதலும், இல்லாத வராதலும் என்ற இரண்டும் இறைவனியல்பு என்கிறது சைவசித்தாந்தம். சுந்தரர் திருவெண்பாக்கத்தில், குழைவிரவு வடிகாதா கோயிலுளாயோ' என்று வினாவிக்கொண்டதில் இவ்வுண்மை லயங்கொண்டிருப்பது கண்கூடு. இப்பேருண்மையை உட்கொண்டு நிற்கும். 'அல்ல ஆம்' என்ற இத் தொடர்நயம் கருதத்தகும். எம்மன்னை அன்னையே! அண்மை விளி. சங்களன்னைக்கு - உனக்கு. முன்னிலையைப் படர்க்கையாகப் கூறியது. அது மரியாதை பற்றிய வழக்கு. திங்களந்தேசு - சந்திரனொளி விளாசுவது போலும் அழகு.
4. பிள்ளை நீராட்டல் பற்றி வர்ணித்துப் பிள்ளையைத் தாய்கையேற்கையில் அவளுக்கேற்படும் உணர்வுப் பரிமளிப்பையுந் தெரிவிக்கின்றது இச்செய்யுள். நீராட்டல் நிகழிடம் பூர்வ இருப்பிடமான கயிலாயம். நீராட்டலிற் சம்பந்தப் படுவோர் வானுலகத்து அரம்பையர். கையேற்குந்தாய் இமவான் மனைவியாகிய மேனை. கையேற்கையில் அவளுக்கு நேரும் உணர்ச்சி மெய்ப்பாட்டுக் குறிகள், கையில் மெத்தென்ற ஒரு உணர்வு ஊர்தல், முலைசிந்துதல், கண்ணீர்த் திவலை துளித்தல் என்பன. கையேற்று நோக்குங்கண் தேன் மாந்திய வண்டுபோலக் களிப்பில் திளைக்கும் எனக் காட்டப் படுகிறது. நீராட்டும் நீர் மானசம் என்ற பெயருள்ள கயிலாயத்துக்குள நீர், அது மானச சரோவரம் எனப்பட்டது. சரஸ் - குளம், சுரோவரம் - குளங்களுள் மேலானது. மலரிட்டுப் பொடியுமிட்டு என்பது ஸ்நான நீரில் வாசனைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் மலரும் ஸ்நானப் பொடியுமிட்டு வைக்கும் நாகரீக ஆசாரத்தைக் குறிக்கும். முத்தி - முத்தமிட்டு கான ஒலி கிளர இசையொலி கிளர. கானம் - இசை, குட்டையுண் மறைத்து என்பது குளிர்தாக்காப் பாதுகாப்பு விதியைக் குறித்தது. கைத்தலம் - உள்ளங்கை. உண்ணிலைமை - அன்புள்ள நிலை. பூசல்தரும் - வெளிப்படக்காட்டும். சிதர் - திவலை. முலைக்குப் பாற்சிதரும் கண்ணுக்கு நீர்ச்சிதரும் ஆம். திவலை தெறித்தலால் விழிகள் முலை போலும் என்க.
5 சங்களைப் பேரரசியைச் செய் சாரியக்கட்டியாக வர்ணிக்கின்றது இப்பாடல். சிற்றில் விளையாடுதல் - மணல் வீடு கட்டி மணற்கறி சோறாக்கி விளையாடுதல் - சிறுமியர்க்கியல்பான ஒன்று. அப்பாணியில், இவ்வரசி பிரபஞ்ச வீடு கட்டி உலகுயிர்க் குணவான இன்பதுன்ப போகங்களைச் சமைத்து ஊட்டுதல் விளையாட்டாக வர்ணனம் பெறுகிறது. அண்டங்கள் சமையற்பாத்திரங்கள் சிறுமியர் சிற்றில் விளையாடுகையில் ஆரேனுஞ் சிறுவர் தோன்றி அதைக் குழப்புங் குறும்பு விளையாடுதலுஞ் சகஜம். அதுவும் இங்கு இடம் பெறுகிறது. பராபரையின் சிற்றில் விளையாட்டைச் சிதைக்கும் நிலை பராபரனுக்கே பொருந்தும். தன்தொழிலாகிய சங்காரம் என்ற சாட்டில் அவர் அரசியின் சிற்றிலைச் சிதைக்குஞ் சிறுவனாகின்றார். உதைத்துவிட்ட உதையில் பாத்திரங்களாகிய அண்டங்கள் உருண்டோடுகின்றன. அத்துடன் முனிவுற்றுத் தன் விளையாட்டைக் கைவிட்டு விடவில்லை அரசி. மேலும் எடுத்தடுக்கி முன்போற் சிற்றில் விளையாடுகிறாள். இப்படிப் பல ஆவர்த்தங்கள் (சுற்றுகள்) ஆக இது நடைபெறுகின்றது என்கிறது செய்யுள்.
வீடுமோ மும்மாடிவீடு. வேறுபகுதியாருக்குப் பொருந்துமாறு மும்மாடியானது. முற்றும் இன்ப அனுபவத்துக்கே உரியவர் தேவர். அவர்களுக்குமேல்மாடி; சுவர்க்கம் இன்பம் துன்பமிரண்டுக்கு முரியவர் மனிதர். அவர்களுக்கு நடுமாடி. பூவுலகம். தனியே துன்பத்துக்கு மட்டுமுரியவர் நரகர் அவர்க்கென்றுரியது கீழ்மாடி; நரகம். சமைக்கு முணவும் அவ்வவர்க்கேற்ற ஏற்றபடி பத்ய பாகமாயமையும். சிற்றில் சிதைப்போனைக் 'காவாலி' என்றிருத்தல் கருதத்தகும்.
முயங்கின்ப துன்பம் – முயங்கும் இன்பதுன்பம். முயங்கும் – முயலும். அவரவர் முயன்று தேடும் நல்வினை தீவினை விளைவுகளே இன்பதுன்பம். அவற்றைப் பக்குவஞ் செய்து ஊட்டுவது சக்தியின் தொழில் உணா - உணவு. பழங்கலம் - பழம் பாத்திரம். பழமை நீண்டகாலப் பழமை. சிறுவன் முற்றவெளியிற்றிரியும் மத்தன், காவாலி முற்றவெளி - சிதாகாசவெளி. மத்தன் – ஊமத்தம்பூச் சூடுபவன். காவாலி - விறுதா விளையாட்டுக்காரன் என்பதொன்று. காபாலி என்றபெயரின் ஒலிப்பிறழ்ச்சி வடிவம் என் பதும் ஒன்று. சிவனுக்கு இரண்டும் பொருந்தும். காபாலி - கபாலந்தரித்தவன்,
'அருவரா தொருகை வெண்டலை ஏந்தி
அகந் தொறும் பலியுடன் புக்க பெருவர்’
என்னும் சம்பந்தர் தேவாரம். வெண்டலை - பிரமகபாலம்.
6. சங்களை அரசியின் மேம்பாடுகளைக் கூறி அத்தகைய பெருமாட்டி இப்படிப் பிள்ளையாய் வந்த கருணை மிகுதி எண்ணுதற்கரிதானது எனக் காட்டுகின்றன இப் பாடலின் முதலீரடிகள். இளமதியின் முளைமாதிரிச் சங்களைக் கோயிலில் விளங்கும் இளந் தெய்வக் கொழுந்து. நால்வேதங்களும் அன்னேயென அழைத்து ஆராமையுறுதற்கான அருமையுள்ளவள். மெய்த்தவமுள்ள யோகியர் ஞானியர்களின் அறிவில் விளங்குந் தீபம் அவள் என்பன தேவியின் அருமை பெருமைகள். நாம் வீழாவண்ணம் கைதூக்க வேண்டி ஒரு பிள்ளையாய் வந்தது அவளின் தண்ணளிப் பண்பாகும். அது நினைக்க வசமாகாது என்பது இப்பகுதிப் பொருள் விளக்கம். வான் - ஆகாயம். செல்வம் - ஒளிவளம். போதம் – அறிவு. சதுர்மறை - நால்வேதம், மேய - மேவிய, பொருந்திய. சேய்... பிள்ளை. தண்ணளி ...கருணை.
பின்னீரடிகள் தேவியின் இச் செங்கீரையாடல் தத்துவ நோக்கில் உலகிலுள்ள சிசுக்கள் எல்லாவற்றினதும் செங்கீரையாடலுக்கும் அவற்றின் சுற்றஞ் சூழல்கள் அதனாற் பெறும் மகிழ்வுக்கும் மூல காரணம் என்ற உண்மை விளங்க நிற்கின்றன. ஊன் உடல் சிசு - பிள்ளை. உவகையாட - மகிழ்வாட. சுதுவையாள்புவனை:- சுதுவையாள் ஆகிய புவனை எனவும் சுதுவையை ஆளும் புவனையெனவும் அமையும் இரு பொருட்சிலேடை.
7. சங்களைப் பதியின் தலமகிமை பற்றிய ஒரு விசேடத்தை விளக்குகிறது இச் செய்யுளின் முதலடி. தமிழீழப் பகைவர் வான்வழித் தாக்குதலில் அழிவு சாதனங்களை வானில் நின்று உதிர்ப்பர். சங்களையில் அவை பூச்சொரிதலளவில் இருக்குமேயன்றித் தாக்கம் விளைப்பதில்லை என்பது அவ்விசேடம். இவ்விசேடம் தலமகிமையின் பேறாகும். சமீபகாலத்தில் இவ்விசேடம் அங்கு பலருமறியக் காணப்பட்டதுண்டு (புவனேஸ்வரி அம்பாள் கோயில் வரலாறு பக். 21. பகுதி (10) பார்க்க) வான்பயில் வைரிகள் - ஆகாயவழித் தாக்குதல் நிகழ்த்தும் பகைவர். வஞ்சினம் - பகைசாதிக்கும் வன்மம். உற்று - மேற்கொண்டு. உதிர்வன - உதிர்ப்பன – சிந்துவன. பிறவினை தன்வினை வாய்பாட்டால் வந்தது. மலரினமென மெத்தென மண்மருவும் எனச் சேர்த்துக்கொள்சு.
இரண்டாமடி, புண்ணிய வினைமகிழ் கண்ணியர் வாழ்புதியாகச் சுதுவையைப் போற்றுகிறது. கண்ணியர் - மதிப்புக்குரியோர். மூன்றாமடியில் சுதுவை நவகயிலை எனப்படுகிறது. நவகயிலை - புதுக்கயிலை. கயிலை வெள்ளிமலை சுதுமலை என்பதிலும் வெள்ளிமலை என்ற பொருள் உண்டு. சுது - வெண்மை, வெண்மையைக்குறிக்கும் சுல் என்றசொல் சுதுவாய்த் திரிந்ததெனலாம். சிங்களத்தில் இத்திரிந்த ரூபமே வழக்கில் உள்ளதும் ஒன்று. இவ்வடியின் பிற்பகுதி அடியார் சங்கற்பம் ஒன்றைக் குறிக்கிறது. நின் தொண்டலது எதுவும் விரும்போம் என்பது நல்ல சங்கற்பம்.
8. இப்பாடலின் முதலடி சங்களைப்பதியில் நிகழும் ஒலிவகை விசேடங்களைக் குறிக்கிறது. மங்குல் ... மேகம். வயிர் ஒலி – கொம்புவாத்திய ஒலி. மாறாதே வீறும் - குறைவு படாமல் மிகுந்தொலிக்கும். இரண்டாமடி முக்கியமான ஒரு வேண்டுதலைக் குறிக்கின்றது, சந்நிதி தரிசனம் முன்னிமுன் அணையப் பேரார்வம் தா என்பது வேண்டுதல். சிந்தனை பிறிதின்றிச் சந்நிதி தரிசனம் பெறுவதொன்றே கருத்தாகக் கோயில் செல்லும் போக்கு விரும்பப்படும். முன்னி - கருதி. மூன்றாவது அடியில் ஒரு பிரார்த்தனை. போம் வழி மாறினும் என்றது தற்செயலாய் வழி தவறினும் என்றபடி. சன்மார்க்க நெறி. போம்வழி - போதற்குரிய வழி. ஆம் - பலன் -- சன்மார்க நெறி நின்றதற்குப் பேறாக ஆகும் பலன்.
9. இப் பாடல் ஞான விவேகமுள்ளவர்கள் தேவியின் முன்னிலையை இலகுவில் அடைவதற்காக அவள் சுதுவையில் வந்தமர்ந்தாளெனவும், அவள் கருணையினால் உயர்ந்தவர்களே உய்வடைந்தார்கள் எனவும் தேவி பிரபாவங் கூறி, சிறியோமாகிய நாமும் உனதருள் நிலைபெற ஆர்வந்தந்தருள் எனவேண்டுதல் செய்கிறது. சுருதிகள் - வேதங்கள். இனம் மலிசுருதி - இனத்தால் அதிகரித்த சுருதி. வேதங்கள் பல. அவை ஒவ் வொன்றும் ஆயிரக்கணக்கான சாகை (கிளை)களையுடையன என்பர்.
‘சாமம் ஆயிரமுடையார் சாகையும் ஆயிரமுடையார்' அப்பர் தேவாரம்.
வலம் மலி பொழில் - காடாய் மண்டிய சோலை. புன்மனம் மளி மருளினம் - எளிய மனப்பான்மை மலிதற்குக் காரணமான மயக்க முள்ளோம். புன்மை .. எளிய தன்மை. மருள் - மயக்கம்.
10. செங்கீரையாடுதலின் போது தேவி திருவடிவில் தோன்றும் அசைவுநிலைகளை வர்ணிக்கின்றது இப்பாடல். முடிமுதல் பாதம் ஈறாகக் கேசாதி பாத பரியந்த வர்ணனையாக அமைகின்றது இது. முடி, மன்னியல் மரகதவிள் முடி - மன் இயல் மரசுத வில்முடி. மன் - பெருமை. வில் - ஒளி. பெருமையுள்ள மரகதமணி யொளிவீசும் முடி. வானுறு கதிர் - ஆகாயத்தில் தோன்றும் சூரிய ஒளி. பொன்னியல் - அழகு பொருந்தும். மதாணி - மார்பிலணியும் சிறுபதக்கம். கண கண ஒலி - க்ஷண க்ஷண என எழும் ஒலி. கிண்கிணி - சதங்கை. அந்நியமலை - உயிர்க்கு வேறாய் நிற்பவள் அல்லை.
---------------------
3. தாலப்பருவம்
மூன்றாவது பருவம் தாலப்பருவம். இது ஐந்துமாசப் பிராயத்தின் மேல் நிகழ்வது. 'தால்' இசையை ஏற்கும்படி பிள்ளையைக் கேட்பது என்ற பொருளில் அமையும் தாலே லோ என்ற சொல் இப்பருவப் பாடல்களில் இடம்பெறும். தால் என்பது நாவின்பெயர். அது நாவிலெழும் ஓசைக்கு ஆயிற்று. மகிமைகளைப் பேசிச்சீராட்டுதல், பராக்காட்டுதல். என்ற இரு நோக்கிலும் தாலிசைத்தல் நிகழ்தலுண்டு. அழும் நிலையிற் குழந்தையைப் பராக்காட்டுதலும் இதிலமையும். இவ்வெல்லா அம்சங்களும் இப்பருவம் பற்றிய இந்நூற் பாடல்களிற் காண்டல் கூடும்.
1. தற்போது பிள்ளைப் பிராட்டியாயிருக்கும் புவனை சைவமுந்தமிழும் வாழ வைத்தற்காகச் செய்துள்ள அருள்மகிமைகளைப் பேசித் தாலேற்க வேண்டுகிறது இச்செய்யுள். ஞானச் செழுமைக்கென்று ஒரு மகனையும் தமிழாய்வியல் துறைக்கென்று ஒரு மகனையும் தந்தவள் அன்னை. தந்தும் அவ்வளவிற் திருப்திப்படாமல் மனித குலத்துதித்த பிள்ளையொன்றையுந் தெரிந்தெடுத்து ஞானமூட்டிச் சைவஞான விளக்கத்தைத் தெளிவாய்த் தருகில் தமிழில் தான் தரமுடியும் என்ற நிலை தோற்றுமாறு அப்பிள்ளை மூலம் 'தமிழ்வேதம்' என்ற பிரத்தியேகமான நூற்பரப்பையுந் தோற்றுவித்தார் அன்னை என அவள் மகிமைபேசப்படுகிறது.
முதலடி அன்னை சொந்த மக்களைத் தந்தது பற்றியும் இரண்டாம் மூன்றாம் அடிகள் மனிதகுலப் பிள்ளையாகிய காழிப்பிள்ளையை ஆக்கியது பற்றியும் வர்ணிக்கும்.
ஒரு மகவு ஒப்பற்ற பிள்ளை. விநாயகர் ஞானச்செழுமைக்கு ஒப்பற்ற பிள்ளை. தேக்கும் – ததும்புவிக்கும். தன்னையடைந்தாரிடத்தில் ஞானந் தோன்றித் ததும்ப வைப்பவர் விநாயகர் என்ற உண்மைக்கு ஒளவையும் ஒளவையாலாகிய விநாயகரகவலும் அறிகுறியாகும். தமிழ்நூற்றுறை – இலக்கணத்துறை, அகப்பொருட்டுறை ஆகியன. இதற்குரிய மகவு முருகப்பிரான். அவர் அகத்தியர்க்கும் நக்கீரர்க்குந் தமிழிலக்கணம் உபதேசித்ததும் இறையனார் களவியலுக்கு உரைமதிப்பீடு செய்ததும் உலகறிந்தவை. உதுவொன்றும் போதாதென்பதில் ஒன்றும் என்பது சிறிதும் என்ற பொருளில் வந்தது. உலப்பில் - குறைவில்லாத. குழைத்துக்காட்டி என்றதனால் முலைப்பாலில் எனச்சேர்த்துக்கொள்க. சைவஞானந் தமிழ்கன்றிச் சாலாது எனும்:- சாலாது - சொல்லு தற்கமையாது. எனும் - என்று சொல்லப்படுதற்கிடமாகும்.
'சுத்தாத்து மாக்களுக்குச் செந்தமிழாலன்றி நிரதிசயானந்தம் பிறவாது’ சீகாழித் தாண்டவராயருரை' திருவாசகம். தமிழாலன்றிச் சைவசித்தாந்தத்தை விளங்குதலுமருமை என்ற உண்மையையும் இதனோடு ஒட்டியுணர்க. 'சைவசித்தாந்தம், சந்தேகத்துக் கிடமில்லாமே தமிழர் ஆக்கம்' என ஜி.யு. போப் அவர்கள் கொண்டதன் காரணமும் இதுவே.
(2) பாட்டுடைத் தலைவியாகிய தேவி மலைமருந்து என்றும் அம்மருந்துப்பெயர் 'நிமலஞானபூதி' என்றும் வைத்திய பூபதிகள் உடற்பிணியோட்டுஞ் சுதுவையில் பிறவிப்பிணியோட்டும் நிமலஞானபூபதி அதுவாகும் என்றும் வர்ணிக்கின்றது இப்பாடல். உயர்தர மருந்துகள் பூபதிப்பெயரால் வழங்கல் பிரசித்தம்.
முதலடி உடற்பிணி தீர்க்கும் வைத்திய பூபதிகள் பற்றியும் இரண்டாமடி பசிப்பிணி தீர்க்கும் தருமபூபதிகள் பற்றியும் மூன்றாமடி பிறவிப்பிணி தீர்க்கும் நிமலஞானபூபதி பற்றி யும் கூறும் இயைபு கருதத்தகும். பூபதி என்ற பெயரொப்புமையால் தருமபூபதியும் இங்கு இடம் பெற்றதாகக் கொள்க. ஓரினப்பொருளை ஒரோ வழித்தொகுத்தலுஞ் செய்யுளழகமைப்பு முறைகளில் ஒன்றாகும். 'ஓடாப்பிணி யுடற்றும்' என்றபகுதி சுதுவை வைத்தியர் மாண்புரைக்கின்றது. ‘அண்ணாமலைப் பரியாரியாரைக் கண்ட நோயாளரைக் கண்டால் யமன் குதிக்கால் பிடரியிலடிபட ஓட்டமெடுப்பான் என்று நண்பரொருவர் ஒருகாற் பண்ணிய விமர்சனம் இவ்' விமர்சனக் கருவாகும். உருட்டுங்குளி கையோடுருட்டி உடற்றும் என்றது அவ்வைத்தியர்கள் நோய் தீர்க்கும் விரைவும் இலகுத்தன்மையும் புலப்பட நிற்கிறது. பீடார் செல்வம் - பெருந்தொகையான செல்வம். நீடார்பிறவி - நீளுதல் உள்ள பிறவி. நிகரில் - ஒப்பில்லாத, இருபோது - காலைமாலை; காலைச் சந்தி, மாலைச்சந்தி. குளிகை மருந்து என்ற கருத்தால் பால் விட்டுரைத்தல் கொள்ளப்பட்டது. நிமலஞானபூபதிக் குளிகைக்கு அநுபானம் நேயப்பால் என்க. நேயம் - அன்பு. வாடாச்சீர்த்தி - மங்காப்புகழ். 'மலையின்
மருந்தே பிணி தீர்க்கும்' என்பர். அதற்கேற்ப இதுவும் சுது(வை)மலை மருந்தென்ற சிறப்புக்காண்க.
(3) இச்செய்யுளின் முதலீரடிகள் மாண்பு என்ற தாய் மூலம் சுதுமலையில் தன்மானக்குழவி தொட்டிலிட்டுத் தாலாட்டப் படும் வர்ணனை உரைக்கின்றன. இவ்விரண்டடியும் முற்றுருவகம். சால்பு தொட்டில். தானம் தருமம் இரண்டும் தொட்டிற்கால். தகவு தொட்டிற் சட்டம். தண்ணளி மெத்தை. தானம் தருமம் - உம்மைத்தொகை. தானம் - தகுதியுடையாரை வரவழைத்து உபசரித்துக் கொடுத்தல். சிரார்த்தம் முதலியன.தருமம் - தகுதிவேறுபாடின்றி எல்லாரும் இலவசமாகப் பெற்றநுபவிக்கக்கூடிய வகையில் பொது நிலையங்களை ஆக்குதல். ஊருணி‘ (பொதுக்கிணறு) மடம்' நிழல் தருஞ்சோலை முதலாயின. தகவு - தகுதி; நடுவுநிலைமை. தண்ணளி - கருணை.
அடுத்த ஈரடிகளும் சுதுமலையில் மழைவளங் குன்றாதிருப்பதற்காஞ் சிறந்த காரணமொன்றைத் தெரிவிக்கின்றன. மகளிர் அதிகாலையில் துயிலெழுந்ததும் நாயகர் பாதந் தொழுதல் என்ற பண்பு அது, 'கொழுநற்றொழுதெழுவாள்' எனத்திருக்குறள் காட்டும் வழிவழிப்பண்பு அதுவாகும். நவகோள் பிழைக்கும் நாள் - நவக்கிரகங்கள் மழைபெய்தல் நிகழ்வுக்குப் பாதகமாய் நிற்கும் நாள். சூரியன் மிதுனராசியிற் புகும்நாளில் மழை பெய்யாது என்பதுபோல உள்ள சோதிட அபிப்பிராயங்கள் பிரசித்தம். 'நவ ………….. னும்' என்றதால் மழைச்செழிப்பின் சிறப்புக்குக் கீழெல்லை காட்டப்பட்டது. மருமலியும் - வாசனைமிகும். நானம் - கஸ்தூரிச்சாந்து. குழல் - கூந்தல், வானம் - ஆகாயம். அது முகிலுக்காகி மழைக்காயது. இருமடியாகுபெயர். பொய்யா – தவறாத.
(4) மண்ணுரிமை காக்கும் பாலரிடம் பொலியும் வீரத் திருவைத்தாலாட்டும் வீதி விழாவின் பரிமளிப்பும் அது விமலையாகிய புவனையின் அருட்கொடை என்ன மக்கள் போற்றும் பரிவும் உரைக்கின்றது இச்செய்யுள். சோரத் தனம் - கள்ளத்தனம். தோலத்தனம் - இயலாதாயினும் விடாது நின்று இழுபடுதல். 'நப்பாசைத் தோலத்தனம்', செய்யுள் வழக்கிற் புதியன புகுதல். குணலை - போர்க் களத்து வீரநடனம். அயர்விழவு - நிகழ்த்தும் விழா. ‘மிகவுள்....... தொழுவார்' என்றது விழா நிகழ்வைக்கண்டு மகிழும் மக்களின் பரிவுணர்வு நிலையைக் குறிக்கிறது. எப்பேறும் விமலையருளாலல்லது வருவதில்லை என்ற தெய்விக நம்பிக்கையுண்மை இதனாற் காட்டப்பட்டது. தீப்பேறு தானுந் தெய்வமறியாமல் வருவதில்லை. அப்பேற்றுக்காளாகுகையில் சித்தசலனமின்றித் தெய்வத்தையே அணுகில் அவை பெரிதும் தாக்காது போதலுடன் விமோசனமும் விரைவிற் கிடைக்கும் என்பது சைவம் போற்றுந் தெய்விகக்காட்சி. அங்ஙனமிருக்கையில் வெற்றி முதலிய நற்பேறுகள் வாய்க்கும்போதும் நம்மாலல்ல தெய்வத்தால் வந்ததெனக்கோடலும் நமது வெற்றி எனத்தருக்காது அதனைத் தெய்வத்தின் பேருக்கே அர்ப்பணித்து வணங்கலும் சைவ அறிவாசார உயர் பண்பாதல் கருதத்தகும்.
5. சுதுவைப் பதியில் தமிழ்க்கு விழாவெடுக்குஞ் சீர்மையை வர்ணிக்கின்றது இச்செய்யுள். பருவப் பொருளுக் கிணக்கமாம்படி அதுவுந் தாலாட்டு ஆகவே அமைதல் காண்க. அருமை பாராட்டுதல் என்ற வகையில் இத்தாலாட்டு அமைகிறதாகக் கொள்க. தமிழின் பேரில் இளைஞருஞ் சங்கமமைத்துத் தமிழ்விழா வெடுக்கின்றனர். பாமாலைகளும் விழாமலர்களுஞ் சூட்டித் தமிழ் என்ற குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கின்றனர் என வருதல் காண்க. புத்திளைஞர் - இளம் பாலர். போதும் கல்வி - தமிழ் விற்பத்திக்குப் போதுமான படிப்பு 'புகாமுனமும்' என்றது பாலர்களின் ஆர்வச்செழிப்பு வளத்துக்குக் கீழெல்லை காட்டுகிறது. உம் - இழிவு சிறப்பு. இங்கு மங்கும் என்றது அவரவர் ஊக்கம் எழுந்த எழுந்த பாட்டில் என்றதாம். அங்கவ்வவை யெல்லாம் - அங்கு அவ்வவை எல்லாம். அவ்வவை என்றது பாமாலை, மலர் என்பற்றிற் பலவகைகள் என்றபடி. தமிழ்சேயாகச் சிறுவர் தாயாம் நிலை தோற்ற 'அன்னைப்பிரிவு’ இடம் பெற்றிருத்தல் காண்க.
6. புவனேஸ்வரி தேவியின் சந்நிதி மகிமை தெரிவிக்கின்றது இப்பாடல். அவள் வீராங்கனை. அவள் சந்நிதியில் எத்தகை வீரமுள்ள சேனையாயினும் விலவிலக்கும். ஆனால், தேவேந்திரன் யானை, குதிரையெல்லாம் தாராளமாய் வரும். காரணம் அவை சீர்வரிசை சுமந்து வருவன, போர்வெறியர் சேனை போலப் பகைசுமந்து வருவன அல்ல. சீர்வரிசை சுமந்து வரும் என்றதனால் செல்வி இராசாத்தியாம் நிலை தோற்றப்படுகிறது. ஆனை வருதல் கற்பனையோ எனில், கற்பனையும் இல்லாததொன்றைச் சொல்லுவதல்ல என்பது அறிஞர் கருத்து. ஒருவகையால் இல்லாதது போலிருப்பினும் மற்றொருவகையால் அது உள்ளதாதலும் அமையும். புவனேஸ்வரி சந்நிதிக்கு ஆனைவந்த செய்தி உண்மையே. பேரும் இராஜன். (புவனேஸ்வரி அம்பாள் கோயில் வரலாறு பக். 14 பந்தி 3 பார்க்க) அமரர் கணம் - தேவர்கூட்டம். கிடை கிடக்கும் - வீழ்ந்து தொழுது கொண்டு கிடந்தபடியே நெடுகக் கிடக்கும். தற்பரை - மேலானவள். தானான தற்பரை – தன்னியல்பாகவே மேலானவள்.
(7) அழும் நிலையிற் குழந்தையைப் பராக்காட்டுத்தும் தாலாட்டுதலில் ஒரு அம்சமாயமையும். அப்பொருளில் அமைகிறது இச்செய்யுள். முதல் ஈரடிகள் அழுகை வர்ணனை உரைக்கும். செங்கமலம். சேதாம்பல், நீலமலர் என்பன உருவக வாய்ப்பாட்டால் முறையே, முகம், வாய், கண் என்பவற்றை உணர்த்தும். நீர்முத்து, அங்கைமலர் விரல்தளிர் என்பனவும் உருவகங்களே. சேதாம்பல் - செவ்வாம்பல். சேப்ப - சிவக்க. எங்கள் குலக்கொழுந்து என்றது எங்கள் குலம் (முன்னோர்) கருவிட்டு வளர்த்தெடுத்த கொழுந்து எனப்பொருள் தரும்.
(8) சுதுமலையரசியின் சந்நிதியில் அன்பர்கள் கைகூப்பி மெய்ம் மறந்து கண்ணீர்த்துளி பெருக்கி நிற்கும் பக்திப் பரிமளிப்பான தோற்றத்தை வர்ணிக்கிறது இச்செய்யுள். அத்தோற்றம் அந்தப்பக்கம் தலைநீட்டிய சந்திரன் வெட்கி வெருண்டோடிச் சோலையில் ஒளித்துக்கொள்ள வைக்கின்றது எனவருங் கற்பனை நயங் கருதத்தகும். அரசியின் முகம் முழுமதிபோற் பிரகாசமானதென்பது ஓருண்மை. நெருக்கமான சோலையினூடு சந்திரன் காணப்படுகையில் அது சோலைக்குள் ஒளித்திருப்பதாக எண்ணத் தோன்றுவது ஒரு காட்சி. இவ்விரண்டுக்குங் காரணகாரியத் தொடர்பு காட்டியமைத்தது கற்பனை. சந்திரன் மறைந்தோடியதேன்? நாணத்தால். நாணம் எதற்கு? தன்முன்னிலையில் நிகழ்தற்குரியதொன்று தேவி திருமுக முன்னிலையில் நிகழ்ந்ததற்காக. நாணமுற்றவர். அந்நிலையில் தன்னைப் பிறர் காண்பதைச் சகிக்காமல் ஒளித்துக்கொள்வது உலகியல். அது இச்சந்திரன்பாலும் உளதாகக் காண்டலிற் சுவையுண்டு. சந்திரன்முன் நிகழ்தற்குரியன தாமரை குவிதல், அதேவேளை குவளை விரிந்து தேன் துளித்தல், என்பன அவை சரிசுத்தமாக இங்கும் நிகழ்தல் 'கர கமலம்" கண் குவளை' என்ற உருவகங்கள்மூலம் புலப்பட்டிருத்தல் காணலாம்.
முதலடியின் முற்பாதி நடேசப்பிரான் திருநடனத்தின் தத்துவார்த்தம் விளக்குகிறது. உயிர் இகபரநிலையுறச் செய்தல் அதன் தத்துவ விளக்கமாம். இகநிலை - பந்தநிலை. பர நிலை - மோக்ஷநிலை. சிதர்வுற - சிந்த. சுலவிய – சூழ்ந்த. தவமியல் பொழில் - தலமரந் தன்மைக்கு உதவுஞ்சோலை.
(9) தேவி திருமூலரைச் சதாசிவ நிலையெய்த வைத்த மகிமையை விசேட பொருளாகக் கொண்டுரைக்கின்றது. இச்செய்யுள். 'சத்தியருள்தரச் சதாசிவனாயினேன்' - என்று திருமூலரே பாடியுள்ளார். சாதனை செய்யுஞ் சிவயோகியின் ஆத்மா சக்தியின் உபகாரத்தினால் குண்டலியின்வழியே வழி நடத்தப்பெற்றுச் சுழுமுனை வழியே மேலேறி உச்சித்தொளையின்மேல் மலரும் சகஸ்ரதளபீடத்தை அடைந்து அங்கு பிரகாசிக்கும் சதாசிவரைச் சார்ந்து, தானுஞ் சதாசிவத் தன்மை அடையும் என்பது இது பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இப்பேற்றுக்குப் பூரண உத்தரவாதி சத்தியேதான். இது இரண்டாமடியின் பிற்பகுதியால் உணர்த்தப்பட்டது. இப்படி ஆத்மா சதாசிவனைச் சாரவைத்ததும் சத்தி தன் கருமம் முடித்த திருப்தியுறச் சதாசிவரோடு தானும் அமர்ந்து சதாசிவ நாயகி என்ற பெயர்க்குரியதாகும். மனோன்மணி என்பதும் அந்நிலையில் அதற்குரிய பெயராகும். மனங்கடந்த நிலை (அமனஸ்கநிலை) யில் மட்டும் அது லபிப்பதால் சத்திமன உன்மணி - மனோன்மணி யெனப்பட்டாள்.
மேற்குறித்தவாறு குண்டலி எழுகையில் அகவுடலிலுள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களும் முன்பு போற்சோர்ந்து கிடவாது வீறுபெற்றெழும் ஆறாதாரமும் வீறார்தரவோங்கி எனப்பட்டது அதுவே. அங்கு அவர் அகம் நிலவும் ஆறு ஆதாரமும் வீறு ஆர்தர ஓங்கி என அத்தொடரைப் பதம் பிரித்துக் கொள்ளல் வேண்டும் ஆயிரம் - இதழ் செறி அம்புயம் - சகஸ்ரதள கமலம். ஆயிரம் சகஸ்ரம் இதழ் - தளம். அம்புயம் - கமலம். அங்கு சதாசிவர் பாங்கிற் சத்தி. தங்குந்தோற்றம் தாமரையில் அன்னப்பேடு தங்கியிருப்பது போலிருக்கும் என்றே அப்பேறு பெற்றோர்சொல்வர். அனமென் பெடை அன (அன்ன) பெடை - மிருது சுபாவமான அன்னப்பேடு.
இப்பாடலின் இரண்டாவது அடியில், தேவியைச் சைவ தயாமூலம் என்றிருத்தல் கருதத்தகும். தாயிற்சிறந்த தயாவான தத்துவனே - என்பது பிரசித்தமான தெய்விகப்பண்பு குறிக்கும் ஒருதொடர். தயா என்றால் தயவு, கருணை, இரக்கம் எனப்பலவாறு சொல்வர். தயா என்ற இப்பண்பே சிவன் உயிருக்கருள்புரிய முன்வருதற்குச் சிறந்த காரணமாம். அச் சூழ்நிலையை உருவாக்குவதும் உடன் நின்று உதவுவதும் சத்தி அதனால் அது தயாமூலம் எனப்படும். மனித நிலையிலும் நம்மவர் பால் ஒரு சிறு அளவிலாவது தயவு என ஒன்று இருத்தற் காரணம் சத்தியே; அது நம்மீது கொண்டுள்ள செல்வாக்கேயாம். தாய் என்ற நிலைக்குட்படும் போது நம்மிலும் அத்தயவு சாமானியத் தன்மைக்கு அதிகமாகச் சிறந்து காட்டுதல் கண்கூடு. அத்தாயின் தயவு மிகுதி தத்துவ நோக்கில், அவரை அதிட்டித்து நிற்கும் சத்தியின் தயவு மிகுதியே யாதல் உண்மை பெற்றாரைத் தெய்வமெனக் குறிப்பிடும் ஔவையார் தந்தைக்கும் முன்னாகத் தாயைச் சுட்டி 'அன்னையும் பிதாவும்' என்றதன் தாற்பரியமும் இதுவே என்க.
செய்யுளின் முதலடி சிவன் சடைக்கோல வர்ணனை தருகிறது. சடை செஞ்சடை அதிற் கொன்றைமலர். இத்தோற்றம் செவ்வானத்தில் நக்ஷத்திரம் ஒளிருந் தோற்றமாகக் காட்டப்படுகிறது. நாண்மீன் நாள்மீன் - நக்ஷத்திரம். தேசு - அழகு.
10. தேவி புவனையின் பூர்வநிலையிற் சம்பந்தப்பட்ட பேர்வழிகளும் சங்களையில் வந்து சேவிக்கும் மாண்புணர்த்துகிறது இச்செய்யுள். இகுளையர் - தோழியர் இந்திரை - இலக்குமி இந்தா வந்தார் பார்' என்பது பராக்காட்டல் வகைத்தாலாட்டு. அடுத்து வரும் ஈதோ நின்றார், உயங்கினர் பார், சிவாசாரியர் மேவினர் பார் என்பனவும் அவ்வகை. சந்திரசூரியர் உலகை வலஞ் செய்யுமுன் தேவியை வலஞ்செயவரும் நியதி குறிக்கப்பட்டுள்ளது. வந்தும் தயங்குகிறார்கள். எதனால்? தேவியின் அநுமதிக்காக. அநுமதி பெற்றே வலம்செய்தல் ஆசாரமாம். தந்திரநெறி - சிவாகம நெறி. பயில் - பூசையாற்றும். மூன்றாவது அடி முதற்பாடலிற் கண்டது போன்ற குண்டலி சம்பந்தமான சிவயோக உண்மை உணர்த்துகிறது. அங்கு சதாசிவநாயகி என்றதற்குப்பதில் இங்கு தத்துவநாயகி என்றிருத்தல் காண்க. உய – உய்ய. முக்தை நன்மறை - பழமையான நல்ல வேதம். மறை முறை - வேதமுணர்த்தும் சிவ யோக முறை.
--------------
4. சப்பாணிப்பருவம்
பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் நான்காவதாய் அமைவது இப்பருவம். பிள்ளை பிறந்து ஒன்பதாவது மாசத்தின் மேல் இது நிகழ்வதென்பர், பிள்ளை காலிரண்டும் முன் பக்கமாக மடக்கி நிமிர்ந்திருக்கத் தக்க பருவம். அத்தகைய இருக்கை நிலையின் கவர்ச்சி இப் பருவ வர்ணனைக்குப் பொருளாயமையும். இப்படி யமர்ந்திருத்தல் சப்பாணி கட்டியிருத்தல் எனப் பேச்சு வழக்கிற் காணப்படுதலின் இது பற்றித்தான் இது சப்பாணிப் பருவம் ஆயிற்றோ எனச் சிந்திக்கவும் இடமுண்டு. இனி, இத்தகைய இருக்கை நிலையில் பிள்ளை கையிரண்டையும் அகல அசைத்துத் தட்டுதலும் இயல்பாகும். கைக்குள்ள மறுபெயர்களில் பாணி என்பதும் ஒன்று. அவ்வகையில் பாணியுடன் பாணியைத் தட்டுதல் என்ற கருத்தில் சப்பாணி என்ற பெயர் வந்திருக்கலாம் எனவுந் தோற்றுகிறது. பாணி வடசொல் ஆதலால், வடமொழியில் ஒரு உபசர்க்கமாயுள்ள 'ஸ' என்பது சேர்ந்து ஸபாணி சப்பாணி யாயிற்றெனலுங் கூடும். பிள்ளையிற் கரிசனை கொள்பவர்கள் தாமும் முன்னிருந்து சப்பாணி கொட்டிக் காட்டிப் பிள்ளையைச் சப்பாணி கொட்டும்படி வேண்டுதல் இப்பருவத்து நிகழும். இது சாளை கொட்டுதல் சாளைதட்டுதல் எனவும் வழங்குவதுண்டு.
1. பிள்ளையின் இருக்கை நிலைத் தோற்றவர்ணனை யுரைக்கின்றன இச்செய்யுளின் முதலீரடிகள். தாமரையில் ஒரு சிறு பவளச் செப்பு. அச்செப்பில் பாதிமுத்துக்கள் அமைந்திருந்தது போல் பிள்ளையின் முகச்செவ்வி. தாமரை முகமண்டலம். பவளச் செப்பு வாய் பாதிமுத்துக்கள். சிறிதே தெரியும் பற்கள். பிள்ளை பத்மாசனமிட்டபடி அனிச்ச செந்தூவியணையில் நன்கு நிமிர்ந்திருக்கிறது. பால் மணங்கமமும் வாய்குதட்டலும் நிகழ்கிறது. இது இருக்கைநிலை வர்ணனை. பங்கயம்.. தாமரை. மொழிச்சிதர் - மொழிச்சிதறல் அதாவது சொல்லுருவம் நிரம்பாமொழி.யாணர். புதுமை. சிவணும்.. ஒக்கும். செவ்வே - நேராக. மூன்றாவது அடியில் இங்ஙனமிருக்கும் பொலிவைப் புண்ணியப் பொலிவு எனக் குறித்து அதனால் கோயில் உள்வளாகம் அழகிற் பொலிவதாகவும், அங்கணைவோர் அவ்வழகிற் பூரித்து மகிழ்வதாகவும் குறிப்பிடுகிறது. தேசு – அழகு. சௌபாக்கியவதி - நல்லதிர்ஷ்டப் பண்புகள் உள்ளவள்.
2. மற்றொரு வகை இருக்கைநிலையில் மற்றொரு சூழலிற் பிள்ளையை இருக்க வைத்து வர்ணிக்கின்றது இச்செய்யுள். இங்கு குறித்தசூழல் பிள்ளையின் பூர்வஸ்தானமான கயிலாயம். இருக்கையிடம் மேனை மடித்தலம். சூழ்ந்து பாராட்டுவோர் பருப்பத அணங்குகள்; மலையரமகளிர். அந்நிலையிற் சப்பாணி கொட்டியிருக்குந் தோற்றம் ‘ஆனந்த வடிவு' எனப்படுகின்றது. இறுதியடியில், தஞ்சமடைந்தோரை அஞ்சல் என அருளிப் பாதுகாக்கும் தேவியின் அநுக்கிரஹப்பண்பும் பேசப் பெறுகிறது
முதலடியில் மழலையின் இயல்பும் அதனோடொழுகும் வாய்த்தேறலும் (வீணிர்) அது தாய்மடியை நனைத்தலும் அதனுடன் அன்னக்குஞ்சு போல் பிள்ளை அமர்ந்திருக்கும் காட்சியும் இடம் பெறுகின்றன. சொல் வினை மூலம் மழலை. தேம் - இனிமை. ஈரிப்ப -ஈரப்படுத்த, நனைக்க. அஞ்சம் - அன்னம். பார்ப்பு - குஞ்சு. கஞ்சத்து - - - - ஒற்றி என்ற பகுதி சப்பாணி கொட்டல் பற்றியது. கஞ்சம் ... தாமரை. புரையும் - ஒக்கும். மாமை... அழகு மினுக்கம். ஒற்றி – தட்டி. பஞ்சொளிர் குறுநகை என்ற பகுதி பிள்ளையைப் பாராட்டும் வரையர மகளிர் பற்றியது. பர்வத அணங்கு ... வரையரமகளிர். அன்னையாய்ச் சுதுவையில் வாழும் பர்வதாவர்த்தனி கழலைத் தஞ்சமெனக் கருதி வந்தவர்க்கு அவள் அஞ்சல் என அபயமளித்தருள்வாள் என்க.
3. சிறுமியர் விளையாடல்களில் மிகச் சுவாரஸ்யமான ஒன்று பற்றிய வர்ணனை இப்பாடலில் வருகிறது. பாவையைத் தன்பிள்ளையாக வைத்துச் சிறுமியொருத்தி தன்னைத் தாய் நிலையில் வைத்துச் சீராட்டுதலில் ததும்புங் கற்பனை வளத்திற்
பொழியும் இன்பத்துக்கும் தேவியே காரணம். அக்கற்பனைக் குள்ளுஞ் சென்றிருந்த தேவி நேயமில்லாத நம்மவர் நெஞ்சில் மட்டுஞ் செல்லாள் என்ற ஒருண்மையும் அத்தொடர்பில் இடம்பெறுகின்றது. முதலீரடிகளும் சிறுமியின் கற்பனை விளையாட்டு. விற்பனம் - விசித்திரியம். சொலி - சொல்லி. சுவர்ணம் - பொன். முத்தாடி – முத்தமிட்டு. அணிசெய்து – அலங்கரித்து. அமுதம் - பால். தன் மார்பில் இல்லாத முலை விம்மிப் பால்துளிப்பதாக வைத்து அந்த இல்லாத முலை முகத்தை இரு விரலாற் பிடித்தல் சிறுமியின் கற்பனை முழு வதுக்குஞ் சிகரமாகும். கல்லாத மழலை - தன்னியல்பாயுள்ள மழலை. இன்பகாரணியும்நீ :- இது சற்று விரிவாக விசாரிக்க வேண்டியது?
பிரபஞ்சத்தில் நமக்குக் கவர்ச்சி யூட்டுபவை சகல சிருஷ்டிகளினதும் வடிவமைப்புகளிலும், அவை சம்பந்தப்பட்ட பல வேறு நிகழ்ச்சிகளிலும் உள்ள அழகு இன்பம் என்ற இரு பண்புகள். அவற்றின் தொடர்பில் அழகு என்பதென்ன? என்ற ஆராய்ச்சி அறிஞரிடையே எழுந்து பெருமளவில் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் மூலமான ஒரு உண்மை இருக்கிறது. அந்த மூல உண்மையே குறித்த ஆராய்ச்சி வினாக்களுக்கு விடையாயமையும் என அறிஞர் பலர் அபிப்பிராயந்தெரிவிக்கின்றார்கள். இத்தொடர்பில் உண்மை என்பது என்ன என்ற விசாரம் எழுதலுந் தவிர்க்க முடியாததே. சைவஞானம் ஏலவே இவ்விசாரத்துக்கு விளக்கங்கண்டு என்றுமுள்ள ஒரே வஸ்துவாகிய சிவமே உண்மை எனப்படுவது. எந்த அழகுக்கும் அதுவே மூலம். இன்பத்துக்கும் அதுவே மூலம் எனத்தெரிவித்துள்ளது.
தேவாரங்களிற் பெரும்பாலாரும் இயற்கை வர்ணகளுந் தோத்திரமானதற்குக் காரணம் (வண்டு பாட மயிலால மான்கன்று துள்ள மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறுசோலை...... ) அவற்றிற் கனியும் அற்புதமான அழகுக்கும் இனிமைக்கும் மூலம் சிவம் என்பதேயாம். காக்கைச் சிறகின் கருமை மினுமினுப்பிலும் ஓரளகுண்டு. அதன் மூலம் கண்ணனின் கரியமுகம் என்கின்றது பாரதியார் பாடல். அதுவுங் காண்க.
4. சங்களைக் கோயில் சார்ந்த பிரபல்யமான ஒருநிகழ்ச்சியின் தொடர்பில் தேவியின் சப்பாணிகொட்டுதல் நிகழ்ச்சியை வர்ணிக்கின்றது இச்செய்யுள். கூட்டுப் பிரார்த்தனையிற் சிறுவர் கைத்தாள மிசைக்கின்றனர். அத்தாளச் சதியினெதிரொலியா யிசைக்கச் சப்பாணி கொட்டியருள் என்பது இங்குள்ள வேண்டுதல். முதலடி கூட்டுப்பிரார்த்தனைச் சிறுவர் தோற்றமும் பிரார்த்தனை நிகழிடமான சந்நிதி விளக்கமுங் காட்டுகிறது. நின்மலம் களங்கமற்ற நிலாவெறிப்ப - ஒளிவீச. மாடு - பக்கம்.
இரண்டாமடி பிரார்த்தனைப் பண்புரைக்கின்றது. தோத்திரப்பாமாலை யாதலின் பாலில் அமையும் சொல் மலர் எனப்படுகிறது. சொன்மலர், பாமாலை என்ற இரண்டும் உருவகம். பத்தி - வரிசை. மலரை வரிசைப்பட அமைத்தால் மாலை. சொல்லை வரிசைப்பட அமைத்தாற் பா எனப்பொருத்தங் காணலாம். மேதை - திறமை, "பூங்கமல ------------ கை’ என்ற பகுதி சப்பாணி கொட்டும் புவனையின் கைவர்ணனை புவனை சதாசிவர் நாயகி சுதுமலைப் புவனையின் பூர்வநாமமான 'மனோன்மணி' என்பதே சதாசிவர் சத்தியென ஆகமங் கூறும்.
5. சத்தி ஒருகால் காஞ்சீபுரத்திற் சிவபூசை செய்தது பிரசித்தமான ஒரு செய்தி. அதைப்பின்னணியாகக் கொண்டு சிலர் பிள்ளையிடத்தில் ஒரு விசாரணை நிகழ்த்துவதாகவும் அதற்குப் பிள்ளை வாயாலன்றி, கையால் செவிவாய் பொத்துதல் மூலம் பதிலளிப்பதாகவும் காட்டி அங்ஙனம் பதிலளிப்பதில் ஒரு பதிவிரதா தர்ம இருத்தலை உணரவைக்கிறது இச்செய்யுள். உலகில் முப்பத்திரண்டறங்களும் நிகழ்த்துவதற்குச் சிவனருள் பெறவேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காகவோ உலகிற் பெண்கள் வள்ளுவர் சொல்லிய வண்ணம் கணவரைத் தொழுது வாழவேண்டும் என்ற நிலையைச் செயன்முறையில் உணர்த்துதற்காகவோ காஞ்சியிற் பூசை செய்தாய் என்பது விசாரணை. அதற்கு விளக்க விடையாக, கையால் செவியையும் வாயையும் பொத்தியதின் தாற்பரியம், அது வாயாற் சொல்லத் தக்கதுமன்று செவியாற் கேட்கத் தக்கதுமன்று என்ற வாறாம் என வருதல் காண்க. பதிவிரதைகள் நாயகர் பெயரே தம் வாயாற் சொல்லாமை அவர்கள் பின்பற்ற வேண்டிய பதிவிரதா தர்மம் ஆதல் தமிழ்மகளிர் பண்பாட்டம்சமாம். பொதுவில், கணவரை, 'அவர்’, என்ற சொல்லாலேயே தமிழ்ப்பெண்கள் குறிப்பிட்டு வருதல் அந்த உயர் பண்பாட்டின் வழிவழித் தொடர்ச்சிப் பழக்கமாகும். அது படிப்பில்லாதவர் வழக்கமென்பது
அவர் என்னாது பெயரே சொல்லவந்ததும் தமிழ் ஆசாரப் பிறழ்ச்சியின் பாற்படும். நிலைமை அவ்வாறாக, கணவரைப் பூசித்தலின் நோக்கத்தைச் சொல் என்றாற் சொல்வதெப்படி? இது குறித்த செய்யுட் பகுதியின் நயமாகும். சிவபூசை நோக்கமோ, வழிபாட்டு நோக்கமோ வாயாற் சொல்லப் படக்கூடாது என்ற கட்டுப்பாடு சைவப்பண்பாட்டில் இருந்து வருதலும் இத் தொடர்பிற் கருதத்தகும்.
முன்னும் உலகு - கருதப்படும் உலகு. புரிவேட்கை - செய்யும் ஆவல். கூர - மிக முன்னவன் சிவன். சம்பிரதாயம் - முன்னோரிடத்திலிருந்து அடிப்பாடாக வந்து கொண்டிருக்கும் வழக்கம். அதா அன்று - அது அல்லாவிட்டால். வான் கொழுநர் - உயர்மதிப்புக்குரிய கணவர். தாள் வந்தித்து - பாதங்களை வழிபட்டு. பொன் குலவும் காஞ்சி - பொன் அழகு குலவும் - விளங்கும். பூதநாயகன் - உயிர்களுக்கு நாயகன். எனா - என்று. போதமிலர் - அறிவிலிகள். அறிவுள்ளோர் அப்படி வினாவத் துணியார் என்பது. புனித வாய்செவி பொத்திப் புகல்தரமலாமை தேற்றும் :- புகல் தரம் - சொல்லுந் தகுதி, தேற்றும். தெளிவிக்கும் -. சொல்தற்குரிய வாயோடு செவியையுஞ் சேர்த்திருப்பதால் கேட்குந்தகுதியுமற்றது, கேட்கத்தகாதது. அதனால் தேவி செவியைப் பொத்திக்கொண் டாள் என விரிந்து நோக்குவது நயம் பேசும்.
இனி இச்சம்பவத்துக்கும் சப்பாணிகொட்டுதற்குஞ் சம்பந்தமென்ன என்பது கேள்வி. எந்தக்கையால் வாய்செவி பொத்தப்பட்டதோ அந்தக்கையால் சப்பாணி கொட்டுகே என்றே வேண்டப்பட்டுள்ளது. இதுவே சம்பந்தமாகும். அக்கை தன்னிகரில் கை எனப்பட்டிருத்தல் காணலாம். தன் நிகர் இல்கை - தனக்கு ஒப்பு இல்லாதகை அதாவது மகிமைக்குரிய கை.
6. கோயிற் பூசையில் ஒரு அம்சமான சண்டேசுர பூசையிற் பூசகர் கை தட்டுதல் ஒரு நியதி. அதில் தொடர்புபடுத்திச் சப்பாணி கொட்டுதலை வர்ணிக்கின்றது இச்செய்யுள். முதலீரடி கள் பூசகராகிய சிவாசாரியர் வர்ணனை கூறும். பஞ்சகச்சமாகக் கட்டியப் பட்டுடை, நீற்று முக்குறி, கௌரிசங்கர், பத்திமைக்களை பரிவுருக்கம் என்பன சிவாசாரியர் தோற்றப் பண்புகள். பஞ்சகச்சம் – வேட்டியைக் கொய்து உடுத்துத் தாறுகட்டும் உடுப்பு விதம். கௌரி சங்கர்- அம்மன் சிவன் திருவுருக்களைப் பதக்கத்துளிட்டு நடுவிற் கோத்திருக்கும் உருத்திராக்க வடம். இரண்டாமடியில் பூசை நிகழ்ச்சி பற்றிய குறிப்புக்கள் உள. சகளீகரித்தல், சிவோஹமாற்றுதல், சோட சோபசாரம் என்பன அவை.
சகளீகரித்தல்:- பூசகர் தம் உடலைச் சிவன் திருமேனியாகச் செய்யும் ஒரு கிரியை முறை, அதற்காக அவர் சிவசிந்தையோடு சிவமந்திரங்களைத் தமது கைவிரல் நுனிகளிற் பதித்து அவற்றினால் மந்திர உச்சாரணத்தோடு தேகத்தின் பல உறுப்புக்களையுந் தீண்டுவர். ஒவ்வோர் மந்திரமும் சிவனது ஒவ்வோர் சக்திக்கூறு. ஆதலால் இச்சகளீகரித்தல் மூலம் தமதுடல் சிவன் திருமேனியாகப் பாவனையாற் பெறும் வாய்ப்பு அவர்க்கு ஏற்படும்.
சிவோஹமாற்றல்; சகளிகரணம் முடித்த பசுமையோடு பூசகர் தன்னைச் சிவமாகவே கருதி அக்கருத்து ஸ்திரமுறும்படி தன்னைத்தானே சிவமாகத் தியானித்துத் தனக்குத்தானே மலரிட்டுப் பூசித்துக்கொள்வர். இதன் மூலம் அவர் மனிதனாகவல்ல சிவனாகவேயிருந்து சுவாமியைப் பூசிக்கும் நிலை வாய்க்கும். அதனால் சாமானியமான மனித நினைவுத் தோஷங்கள். மனிதசெயல் தோஷங்கள் கலக்காது பூசை பூரணபலன் தருவதாக அமையும்.
சோடசோபசாரம்: சோடசம் - பதினாறு பூசைக்கிரியையில் சம்பந்தப்படும் பதினாறு உபசாரங்கள் அவையாகும். ஆவாஹனம். ஆசமனம், அர்க்கியம், பாத்தியம் ஆசமனீயம், ஸ்நானம், வஸ்திரம், உபவீதம், ஆபரணம், சந்தனம், தூபதீபம், நைவேத்தியம், முகவாசம், பிரதக்ஷணம் உத்வாசனம் என்பன.
முக்குறியும் மார்பணி கெளரிசங்கமொடு எனப்பிரித்துக் கொள்க. உண்மைதவா நலச் சிவோஹம் :- பாவனையைப் பலன் படவைத்தற்குரிய உள்ளப்பான்மை உண்மை எனப்பட்டது. தவா - தவா:- நீங்காத, சிவோஹம்த - சிவ அஹம் - சிவன் நான். சகளிகரித்து:- களம் - தேகம். சகளரம் – அதேதேஹம் (அதே சிவனதே) சகளீகரி - சிவனது தேகமாகச் செய். முற்றத்தரூஉஞ் சிவாசாரியர் ஒன்றும் வழுவாமல் சிரத்தையுடன் கிரமமாக இயற்றுதல் சிவாசாரியர் இயல்பாகும். பூசனைக்கு ஏன்ற பலன்:- ஏன்ற இயைந்த சுவாமி பூசை முடிவிற் சண்டேசுரர் பூசைசெய்து சுவாமி பூசைப்பலனைப் பெறுக என்பது விதி. சண்டேசுரர் பூசைக்குச் சுவாமி நிர்மால்யங்களே நிவேதனம் ஆகும். நிர்மால்யம் சுவாமிக்குச் சாத்திக்களைந்த மாலை முதலியன. மாலை, பட்டு என்பனவற்றுடன் சுவாமியின் நைவேத்திய பாத்திரமும் அவர்க்கு நிவேதனமாம். நிர்மால்யம் என்றபெயர் அனைத்தையுங்குறிக்கும் பொதுப்பெயராய் நின்றது.
7. தேவி காஞ்சிபுரத்திற் கம்பையாற்றங்கரையிற் சிவபூசை செய்கையில் நிகழ்ந்த அற்புத மொன்றைப் பொருளாகக் கொண்டது இச்செய்யுள். சிவன் சோதனையாகப் பூசை முடி வதற்கிடையிற் கம்பை வெள்ளம் பெருகிவந்ததும் தாம் பூசித்த சிவலிங்கத்தை வெள்ளமலைக்காமல் தேவி கட்டித் தழுவிக்கொண்டதும் அதற்குவந்து சிவபெருமான் திருமேனியுடன் வெளிப்பட்டுத் தமது தோளில் தேவியின் கைவளையல் தழும்புகளும் மார்பில் முலைத்தழும்பும் பெற்றுக் கொண்டதும் பிரசித்தம். காணுவதோர் குறி - காணுதற் கிடமாகிய ஒப்பற்ற சிவலிங்கம். புல்கிடும் எல்வை - தழுவுந்தருணம். வளைவடு -கைவளைத் தழும்பு, செம்மருமம் - சிவந்த மார்பு. சிவன் மார்பிலுள்ள திருநீற்றுப்பூச்சில் இருமுலைத் தழும்புகளும் இருபொறிகள் போலிருக்கும் என்பர்.
"துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள் தோய்சுவடு
பொடிகொள் வான்தழலிற் புள்ளிபோ விரண்டு
பொங்கொளி தங்குமார் பின்னே” - திருவாசகம் அருட்பத்து 5.
சாம்பல் பூத்த தழலில் இருபுள்ளிகள் போல்வன முலைத்தழும்புகள். இதனால் மார்பு தழல் நிறம் என்றாகிறது. அதற்கொப்ப இச்செய்யுளும் செம் (சிவந்த) மருமம் என்றிருத்தல் காணலாம்.
8. கோபுர சிரத்தில் மயில்நின்றாடலும் லஷ்மி, சரஸ்வதி நீங்காதுறைதலும் வாத்திய ஒலி வண்டொலி நிறைதலும் ஆய சுதுவைச் சிறப்புகள் சில உரைக்கின்றது இச்செய்யுள். கோபுரசிரம் - கோபுரத்துச்சி. மஞ்ஞை - மயில். மயிலின் நடனப்பாணி மங்கையர் நடனப்பாணி. பங்கயமாதர்கள் இலக்குமியும் சரஸ்வதியும். இங்கிதம் - இனிமை. ஊர்தர - மிக. பார்விழை - உலகம் விரும்பும். போகமும் ஞானமும் முறையே இலக்குமியாலும் சரஸ்வதியாலும் வாய்ப்பவை. ஓவா - ஓவாத - நீங்காத. இயவொளி - இயம் + ஒலி. வாத்தியம். பல்கிசை - பல்கு + இசை. பல்குதல் - பெருகுதல். மலர்த்தலை - மலரின்கண். கொங்கலர் சோலை கொங்கு + அலர் + சோலை. கொங்கு - தேன், நறுமணம்.
9. சப்பாணி கொட்டும் நிகழ்வின் போதுகாணத்தகும் பிள்ளையின் அங்க அவயவ அசைவுகள் பற்றிய வர்ணனை கூறுகிறது இச்செய்யுள்.
பாலவியன் முகமாமதி:- முகமதி உருவகம். மா முகமதி எனமாற்றுக. மா - சிறந்த. பால முகமதி, வியன் முகமதி என முன்னுள்ள அடையைத் தனித்தனி பிரித்துக் கூட்டுக. வியர்ந்துனி முத்துமாலை :- வியர்த்துளி வரிசைப்படத் தோன்றுதல் மாலை வடிவம் தரும். அதுவும் ஒருவகை முத்துமாலையே. துளிமுத்து - துளியாகியமுத்து. திருவாயமுதம் – பிள்ளைக்கியல்பான வாயூறல்; வாய்ச்சாறு. பேச்சுவழக்கில் சாற்றுவாய் எனலும் உண்டு. அது ஒருநிலையில் நூல்போற் காணப்படுதலுண்டு. திருவாயமுதத் திருமணி நூல் அதுவாகும். சிவதேசொளி வலயம் - சிவதேசு + ஒளிவலயம். தேசு - அழகு. வலயம் - வட்டம். சின்மயம் -
ஞானவிளக்கம். ஒருவித மான் என்றபடி. கோலம் - அழகு. வளைச்சரி என்றது - சங்குத் காப்பு. வளை - சங்கு. சரி - வளையல்.
10. தேவியைப் பல்வகைப்பெயராலும் பரவித் துதித்தலாயமைகிறது இச்செய்யுள். நம்பன் – சிவன் (நாவார நம்பனையே பாடப்பெற்றோம். என்பது அப்பர் பாடல்) உம்பர் - தேவர் மனோஹரி - மனதைக் கவர்பவள். எமாய்ச்சி - எம் + ஆய்ச்சி. பொதுவழக்கில் ஆச்சி என்பது இதன் மரூஉ. ஆய்ச்சி - தாய். மரு + ஆரும் - மருவாரும். கொம்பன மெல்லிடை கொம்பு + அன் + மெல்லிடை. கொம்பு - கொடி. அன - அன்ன – ஒத்த.
-------------
5. முத்தப் பருவம்
பிள்ளையை முத்தந் தருமாறு வேண்டி வேண்டி முத்தமிடுதல் இப்பருவத்துக்குரிய இயல்பாகும். பிள்ளை பிறந்து ஒன்பதாவது மாசத்தின் மேல் இது நிகழ்வதென்பர், பிள்ளையின் தெய்வீக அருமை பெருமைகளைப் பாராட்டி முத்தம் வேண்டுதல் நிகழும். முந்தம் சம்பந்தப்பட்ட தலத்தோடொத்த பிறவர்ணனைகளும் இப்பருவப் பாடல்களில் இடம் பெறும். நவரத்தினங்களில் ஒன்றாயுள்ள முத்து என்பதும் முத்தம் எனப்படுவதுண்டு. அது வடசொல்லாகிய முக்தம் என்பது தமிழில் தற்பவமாக வந்த ரூபம். அவ்வியைபுபற்றி முத்தின் பல்வேறினங்கள் பற்றிய வர்ணனைகளும் முத்தம் என்ற சொல்லொப்புமையைச் சாட்டி அம்முத்தங்களைவிட இம்முத்தம் மேலானதெனப் போற்றலும் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களில் இடம்பெறுவதுண்டு. இன்றைய இலக்கிய உள்ளங்களுக்கு அதுபெரிதும் ஏற்காதென்றோ என்னவோ அந்த அம்சம் இப்பிள்ளைத் தமிழில் இடம்பெறவில்லை.
1. தேவியின் திருவுருவப் பொலிவழகை வர்ணித்து அவள் அன்பால் நினைவாரகத்தில் நிருத்தம் புரியும் நிலையை நினைவித்து முத்தம் வேண்டுகிறது இப்பாடல். பொற்பட்டு – பொற்சரிகையிழைத்த பட்டு. புனை - அலங்கரிக்கும். வார் – நீண்ட. பத்தி - வரிசை.
ஆரப்பதக்கம் - முத்துப்பதக்கம். மணி - அழகு. பாதசாலம் பெண்களுக்குரிய காலணிகளில் ஒன்று. நேய விளக்கு -- அன்பு விளக்கு. நினைவரங்கு -- நினைவு + அரங்கு -- நினைவாகிய நாட்டிய மேடை. சுத்தநிருத்தம் - தாளவாத்திய சகிதமல்லாமல் நிகழும் நிருத்தம்.
2. தேவியின் தலப்பெயர் சங்களை என்றிருத்தல் பற்றிச் சங்கு அளைவகுத்து முத்தீனுவது பற்றிய வர்ணனை. இப்பாடல் முற்பகுதியில் இடம் பெறுகிறது. பங்கம் - சேறு, பங்கப் பழனம் - சேற்று வயல். பழனப் பள்ளம் வயலாகிய பள்ளம், வெள்ளப் பரவை - வெள்ளமாகிய கடல். பரவைத்தலை ஊர் திரை - கடலின் கண் ஊர்வது போல் அமைந்து வருந்திரைகள். பல்கால் பலதடவை. வயிறுளைந்து - வயிறு வருந்தி. சங்கம் - சங்கு. சங்குமுத்தீனுதல் சங்களைச்சிறப்பாகும்.
பாடலின் பின்பகுதி குடும்பநிலையில் முத்தக் களரி நிகழும் ஒரு காட்சியைத்தந்து அத்தகைய நிகழ்வுக்கிடமாகும் உல்லாச புரியாகச் சுதுவையை வர்ணிக்கிறது. தகை - விளக்கம். வெண்ணிலவார் அரமியம் – வெண்ணிலா வீசும் அரமியம். அரமியம் - மாளிகை. வெண்ணிலவார் என்றதனால் இங்கு அரமியம் நிலாமுற்றத்தைக் குறிக்கும். சாயன் மயிலார் - மயில் சாயலார், மயிலின் சாயலையொத்த சாயலுடையார், பயந்த - பெற்ற. தங்கப் புதையல் - தங்கப் புதையலாக மதிக்கப்படும் பிள்ளை. தலையுங்... தாவி என்ற பகுதி அச்சாயன் மயிலாரின் குதூகலச் சிறப்பைக் காட்டுகிறது. கொழுநர் - கணவர். முத்தக் களரி – முத்தக்கோஷ்டி. களரி, கோஷ்டி என்பன கூடிமகிழ்வாடுங் கூட்டத்தைக் குறிக்குஞ் சொற்கள். துங்கம் - உயர்வு. குறித்த காட்சி சுதுவைக் குயர்வாகும் என்க.
3. இப்பாடல் சுதுவையில் தொழுவார் மகிமை உரைக்கின்றது. அவர்கள்
ஐம்புல வாழ்விற் பயனின்மை கண்டவர்கள்
அதற்கு மாற்றீடு இன்னதென அறிந்தவர்கள்
தேவிபுகழ் ஓதுமொழுக்கந் தவறாதவர்கள்
அருளுக்கே மனம் வைத்தவர்கள்
கரவுசூது அறியாதவர்கள்.
என வருதல் காணலாம். வழிபாட்டிற்கிதந்தரும் குறைந்த பட்ச அடிப்படை நியமங்களாக இவை கடைப் பிடிக்கத்தகும். முதலாமடி சாமானிய ஐம்புலவாழ்வின் சொரூபத்தை ஒரு உவமைமூலம் புலப்படுத்துகிறது. நாங்கூழ் - நாக்கிழிப் புழு. எறும்புன் நாங்கூழ் - எறும்புக் கூட்டத்தால் இழுத்தலைக்கப் படும் நாங்கூழ். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐம்புலன்கள் உயிருணர்வில் மொய்த்து ஒவ்வொன்றுத் தன் தன் பக்கம்இழுக்க உயிர் அல்லலுறும் நிலைக்கு இது உகந்த உவமையாகும். நமக்கு அப்படித் தோன்றவில்லையே என்பது தடையல்ல. நம்முணர்வு தற்சமயம் அவற்றின் மயப்பட்டி ருப்பதால் அது பெரிதாகத் தோன்றுவதில்லை. அங்ஙனம் உணர்வுகளின் மயப்பட்டு விடாமல் பிரிந்திருந்து பார்க்கும் சிவயோக நிலையும் ஒன்றுண்டு. சிவயோகிகள், நாம் புலன் மயப்படும் நிலைக்கு நேரெதிராகச் சிவன்மயப்பட முயல்பவர்கள். அம்முயல்வில் அவர்களுக்கு உபகரிக்குந் திருவருளால் புலன்களின் தொந்தரவுக்காட்சியைத் துல்லியமாக அறிவார்கள்.
"எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அலைப்புண்டலைந்த வெறுந்தமியேனை விடுதி கண்டாய்" - திருவாசகம், நீத்தல் விண்ணப்பம் 25 - என்ற மணிவாசகர் அனுபவம் அறியத் தகும்.
ஈர்த்தலைக்க - ஈர்த்து - இழுத்து. மோஹபோகச் சழக்கு - மோஹமும் போகமுமென்ற சழக்கு. சழக்கு - பொய். சழக் காழமூழ்க்கும்வாழ்வு - சழக்கு + ஆழ + மூழ்க்கும். மூழ்க்கும் - முழுகவைக்கும். மூழ்க்கும் பிறவினை. இதற்காம் மாற்றீடு எங்கள் பிராட்டி. மாறாக இடுவது. மாற்றீடு எங்கள் பிராட்டி என்றது மாற்றீடாக அமையும் ஒன்றைச் செய்யக் கூடியவள் எங்கள் பிராட்டி எனப் பொருள்படும். மாற்றீடாகிய காரியத்தை விளைக்கும் கருத்தாவாகிய பிராட்டியை மாற்றீடு என்பது காரியவாகுபெயர் வார்த்தை - புகழ். இழுக்காதார் - வழுவாதார்.
4. சங்களைப்பதியில் தேர் உற்சவத்தன்று இடம்பெறும் பொங்கல் நிகழ்ச்சி சார்பான ஒரு கற்பனையை உட்கொண்டது இச்செய்யுள். தேரிலன்று கோயில் வீதியின் பொங்கிப்
படைக்கும் வழக்கம் அம்மன் கோயில்கள் சிலவற்றில் உண்டு. படையல்கள் தேரேறும் சுவாமிக்கு நிவேதனமாதற்குரியவை. சுவாமி அவற்றை ஏற்றருளுஞ் சார்பில் அவையிருக்குமிடங்களில் தேர் நின்று நின்று செல்ல வேண்டியதுண்டு. படையல்கள் பிறங்கல்கள் (மலைகள்) என்றும் அவற்றால் தேர் தடையுண்ணும் என்றும் கற்பனைப் பாணியிற் பேசுகின்றது இச்செய்யுள். முதலடி முழுவதும் தேர் புறப்பட்டு வருதல் பற்றிய வர்ணனை. தாற்றுக்கதலி - குலை வாழை. வாழைக்குலையின் தண்டு மாத்திரமன்றிக் குலைமுழுவதும் தாறெனப்படும் வழக்குமுண்டு. (தமிழ் நாடு) பெருந் தடந்தேர் - பெரிய விசாலமான தேர். திசைதோறு - திசை தோறும் வீற்று - வீற்று. வெவ்வேறாக, தனித்தனியே. மிளிர - விளங்க. சோற்றுப் பிறங்கல் - சோற்றுமலை. பிறங்கற்கு + இடை. பிறங்கல் நிமிர்த்தமாகத் தடையுண்ணும். தொல்லோய் - பழையோய்.
5. தேவி பேரிற் பிரசித்தமான ஒரு மகிமையுரைக்கின்றது இச்செய்யுள். அபிராமி பட்டர் என்ற அன்பர் பொருட்டுத் தேவி அமாவாசையைப் பூரணையாகக் காட்டிய அற்புத மகிமை அது. அந்த அற்புதம் விளைதற்குத் தேவி சாதனமாகக் கொண்டது தன் செவியிலிருந்த 'தாடங்கம்' என்னும் அணியை: தேவி அதனைக் கழற்றி வீசிவிட அது சென்று, அன்றைய அமாவாசையிருளிலும் பூரணசந்திரனாய்ப் பிரகாசித்தல் மூலம் அமாவாசையைப் பூரணையாக்கிற்றென்பது வரலாறு. அதனை நினைவூட்டும் பாங்கில், திருத்தாடங்க செவித்துணையாய் என இப்பாடலில் தேவி விளிக்கப்பட்டிருத்தல் கருதத்தகும்.
முதலாமடி இந்நிகழ்வின் விளைவாக உணரப்படக் கிடப்பதோர் உண்மையை முன்னெடுத்துரைக்கின்றது. தேவி சந்நிதி மகிமையால், பகை நண்பாதல்; துன்பம் இன்பமதால் பிழை சரியாதல் என்பவற்றையடக்கியது அவ்வுண்மை. இம் மூன்று அம்சங்களும் செய்யுளின் இரண்டாம் மூன்றாமடிகளில் வகைவேறுபட விளக்கப்பட்டிருத்தல் காணலாம்.
அபிராமிப்பட்டர் அன்பு வயிற்றிற் பால்வார்த்தல் துன்பம் இன்பமாயின வாற்றைக்காட்டும். அமாவாசையைப், பூரணையென்பது பஞ்சாங்க பூர்வமாயுள்ள அப்பட்டமான பொய் என்று ஆலயத்தில் நின்றவர்களும் அரசனும் அவர் மேற்காட்டிய வெறுப்பு அவருக்குத் துன்பமாகவேயிருந்தது. அதே துன்பம் பிறகு பூரணசந்திரத் தோற்றத்தோடு இன்பமாயிற்று. 'வயிற்றிற் பால் வார்த்தல்' இன்பக் கிளுகிளுப்புறுதலை யுணர்த்தும் ஒருமரபுத்தொடர்.
பட்டர் எடுத்த வாக்கில், பூரணை யென்று விட்டிருக்கவும் பின் பூரணையென்றே ருசுவாய் விட்டமை பிழைசரியானவாறாம்.
ஏனோர் பகைமையுளந் திகழ் நண்புளமாய்த் திசை திரும்ப என்றது பகை நண்பாயினவாறு காட்டிற்று. பட்டர் பற்றிக் கோள் சொல்லி அன்று அரசனை அங்கு விசாரணைக்கு வரவழைத்தவர்கள் (ஏனோர்) உண்மையிற் பகைமை யுள்ளத்தோடேயே இருந்தவர்கள். முடிவில் அன்னோர் யாவரும் பட்டரிடத்திற் பயபத்தி பூண்டொழுகும் அளவுக்கு உண்மை நண்பராயினர்.
பிறங்கும் பகை - விளங்கும் பகை. துன்பு - துன்பம், பீடார் தரும் - பீடு + ஆர் தரும். பீடு - பெருமை. ஆர் தரும் - ஆரும்; பொருந்தும், ஆர்தா பகுதி, ஆர், முதல்வினை தா துணைவினை. அன்று - சம்பவம் நிகழ்ந்த நாள். அங்கு - திருக்கடவூர்க் கோயிலில் அபிராமி அம்மன் சந்நிதியில், அன்பு வயிறு – அன்பென்ற வயிறு. தேற்றம் - தெளிவு தேம்ப - வருந்த. தோற்றும் - தோன்றச்செய்யும். பிற வினை. திசை திரும்ப என்பதும் நிலைமை எதிர் மாறாதலைக் குறிக்கும் மரபுத்தொடர்.
6. முத்தம் என்னும் பெயரொப்புமை தழுவிச் சுதுவையில் நிகழும் மற்றும் சிலவகை முத்தம் பொழியுங் காட்சிகளை வர்ணிக்கின்றது இச்செய்யுள். இதனாலுஞ் சதுவையின் சிறப்புகள் சில தோற்றுதல் காண்க. அவற்றுள், புவனையின் அருட் பிரபாவத்தை யெண்ணி வியக்கும் பெரியோர் விழி முத்தஞ் சொரிதல் என்ற அம்சங் குறிப்பிடத்தகும். புது வதுவைத் தலைவி - புது மணப்பெண். மீளா நிலை - மீண்டு வருதற்குப் பாதகமாயிருக்கும் சூழ் நிலை. பெருங்களம் - போர்க்களம். பீடார் தனயன் - பீடு + ஆர் + தனயன். பீடு - பெருமை தனயன் மகன். அவன் தாய் கண் முத்துதிர்க்கும் என்றது பெருமிதக் கண்ணீர் விடுதலை வேய் - மூங்கில். வேய்க்குக் கண்ணாவது கணு. குறித்த நால்வகைக் கண் முத்துக்களில் முதல் மூன்றும் முறையே கவலைக்கண்ணீர், பெருமிதக் கண்ணீர், அன்புக்கண்ணீர் என அமையும் நயங்காண்க. போரில் வீரம் விளைத்த மகனின் தாய் விடும் பெருமிதக் கண்ணீர், செய்யுட் பொருளாயினமை,
‘இன்னாவிறலும் உளகொல் நமக்கென
மூதிற்பெண்டிர் கசிந்தழ'
எனவரும் புறநானூற்றுச் செய்யுளானும் அறியவரும். கொண்டல் - மேகம். நீர்த்திரன் முத்து - மழைத்துளி, மழைத்துளி பொழிகையில் சோலைகள் தாதுகளை மிகுதியாயுதிர்த்தல் இயல்பாகலின் கொண்டல் முத்துதிர்க்கப் பொழில் தாதுதிர்க்கும் எனக் காரண காரிய இயைபுபடக் கூறப்பட்டுள்ளது.
7. சிவயோக சாதனையாளருளத்திற் சக்தி தானே சாதனமுஞ் சாத்தியமுமாய் நின்று அவர்க்கு ஆன்ம ஈடேற்றம் வாய்க்க அருளுந்திறம் இச்செய்யுளில் விளக்கப்படுகிறது. இதுபற்றிய விபரங்கள் திருமந்திரம் நாலாந்தந்திரத்திற் புவனாபதி சக்கரம் பூரண சக்தி ஆதார ஆதேயம் முதலிய அத்தியாயங்களிற் காணப்படும். தகவுளோர் சிவயோகத் தகுதியுள்ளோர். திருமூலர் முதலியோர்.
‘சத்தியென்பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்' – திருமந்திரம்
ஆதார ஆதேயம் 45 என்ற திருமூலர் திருமந்திரம் அறியத் தகும், மயற்சார்பு - மயக்கச் சார்பு, அதாவது தேகமே தாமென மயங்கும் உளச் சார்பு, பேதகம் - மாற்றியமைத்தல் அதாவது தேகதர்மச் சார்பாயிருந்த உயிர் நிலையை மாற்றிச் சிவன் சார்பாக்குதல். சார்பலா உண்மை - அது ஏதும் பலன் தரக் கூடிய சார்பல்ல என்ற உண்மை. அதன் ஈடிணையற்ற தன்மை தோன்றப் பெரியதோருண்மை எனப்பட்டது. இன்பம் மோஹம் துன்பம் என்ற மூவித உணர்வுகளே தேகதர்மம் பற்றிய வாழ்வில் உயிர்களுக்கு அநுபவமாவன, பீடை - நோய், உடலை அசெளகரிய நிலைக்காக்கி வைக்கும் புற நோய் போல உயிரை அசௌகரிய நிலைக்காக்கும் இவைகள் ஆன்மாவுக்கு அகநோய் எனப்படும். நோதகவு - வருத்தம். நோதக வொழித்திகல் தீதற - நோதகவு + ஒழித்து+ இகல் + தீது + அற. இகல் - மாறுபாடு. இகல் தீது - மாறுபாடாகிய தீமை. அதாவது ஆன்ம உயர்வாகிய நலத்திற்கு மாறுபடுதலாம். நூதனானந்தம் - நூதன + ஆனந்தம். நூதனம் - புதுமை. முன்னறியப் படாதது. பாதகமலம் இரண்டில் முன்னையது பாதக + மலம். பின்னையது பாத + கமலம்.
8. குடும்ப வாழ்விலே சுமுகநிலை நிலவுதற் கின்றியமையாத இரகசியம் ஒன்றுண்டென்றும், அதுவும் தெய்விக வரவு என்றும் அதை நம் குடும்பங்களில் இடம் பெறுவித்தற் பொருட்டே சிவன் நடராஜாவாய் நடனமாடுகையில் சக்தி சிவகாமியாய் நின்று தாளமிட்டருள்வதாகவும் இச்செய்யுள் விளக்குகிறது. சௌசன்ய ரகசியந் தானே துலக்குமன்னை என்றிருத்தன் காண்க. சௌசன்யம் சுமுகநிலை, அச்சுமுக நிலையாவது நாயகன் பொறுப்புள்ள தலைவன் என்ற நிலையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு குடும்ப தர்மம் பற்றிய அவன் செயற்பாடுகளுக்குக் குந்தகமாகாமல், மனைவி இசைவு தந்து நிற்கும் நிலை. தாளகாரன் போக்குக்கு மேளகாரன் அமைய வேண்டு மென்பதில்லை, மேளகாரன் போக்குக்குத் தாளகாரன் பிசகாமல் அமைவதே முறை. அது போல நடராஜாவின் ஆட்டக்கதிக்கு அமைவாகச் சிவகாமியம்மை தாளமிடும் நிலை இங்கு குறிக்கப்பட்டது. சிவன் சக்தி பேரில் உள்ளனவாகச் சொல்லப்படுஞ் செயற்பாடுகள் ஒவ்வொன்றின் பண்பும் அவ்வவற்றுக்குப் பிரதியாகவுள்ள ஆன்ம செயற்பாட்டுப் பண்பாக அமைவது என்ற விளக்கம் சைவதத்துவஞான நெறியில் உள்ளது. அதில் முக்கியமான ஓரம்சத்தை விளக்குவது இதுவாகும். தன்ம பத்தினி - தர்மபத்தினி, இல்லறதர்மத்திற் பதி வழிநிற்கும் பத்தினியே தர்மபத்தினியாவாள். அந்நிலையுந் தேவி மூலமாக உலகுபெற்ற ஒன்றே என்க. கன்மபந்தம் - கன்மபல போக இச்சையாகிய சுட்டு. சென்ம தொந்தம் பிறவித் தொடக்கு. கடைப்படுதல் -கீழ்நிலையுறுதல். கைதூக்கும் - உயர்த்தும் என்ற பொருளிற் பயிலும் மரபுத் தொடர்:
மூன்றாவது அடி தேவியின் மறக்கருணை ரூபநிலையை வர்ணிக்கின்றது. வன்னி - நெருப்பு கோர தாண்டவரூபமிடும் ரூபத்திலுள்ள நெருப்பு தேவி. அந்நிலையளாவது அசுர சம்மாரத்தின் பொருட்டாதல் பிரசித்தம். உலகில் இடர்களை வர்த்தித்தல் அசுரர் செயல். வர்த்தித்தல் - விருத்தி செய்தல். வானுரும் - ஆகாயங்கக்கும் இடி, எனா - என்று. பத்மபூஷணி - பத்மத்தைப் பூஷணமாகக் கொள்பவள். பத்மம் - தாமரை.
9. தமிழினிமைப் பயில்வு பற்றிய சுதுவைச் சிறப்புரைக்கின்றது இச்செய்யுள். தமிழினிமை சிறக்கும் நிலைகள் இரண்டு இங்குக் குறிக்கப்படுகின்றன. அவற்றுள் காளையர் கன்னியர் சூழல் ஒன்று. கந்தப்பொழில் - மணமார்ந்த சோலை. மந்தா நிலம் - மந்த + அனிலம் - இளந்தென்றற்காற்று. காதற் கனி வாய்மை - காதற் கனிவின் உண்மைப் பண்பு. வாய்மை - உண்மை; அது இங்கு பண்பின்மேல் நின்றது. ஓவா - ஓவாத; இடையறாத. குதலை - காதல் மொழி. பாலியர் பொய்தல் தமிழினிமை சொட்டும் மற்றொரு நிலைக்களனாம். பொய்தல் - சிறுமகளிர் விளையாட்டு. தீம்பல இனியன பல. சிறு சோறட்டல், சிறுவிருந்தேற்றல், சிறுமணவிழா வயர்தல் என்பன சிறுமியர் பெரியவரது சரணை மேற்கொளக் காணலிற் தோன்றும் அற்புதச்சுவையை உட்கொண்டவை. ஆயம் - சிறுவர் கூட்டம். பந்தும் பாவையு மாயமுமாய் நிகழ் என்றது அவை 'தாமும் தம்பாடும்" என விளையாட்டிற் பொருந்துஞ் சுவாரசியத் தன்மை குறித்து நின்றது. ஆடரங்கு - களம்.
பாங்கு - தன்மை.
10. தேவியின் பரத்துவ நிலையைப் போற்றிப் பிறவாநெறி யருளப் பிரார்த்திக்கின்றது இச்செய்யுள். சித்தநிலாவிய திரு - அன்பருள்ளத்தில் விளங்குந் திரு. தெய்வீக நன்னிலை - தெய்வீகஞ் சிரிக்கும் நிலைக்களம். சிறுமைகள் பரியே - தேவியால் உயிர்க்கருளப்பெறும் உயர்பெரும் பேறொன்றை உட்கொண்டிருக்கிறது இப்பகுதி. சிறுமைகள் – சிறுமைப் பண்புகள், காமம், குரோதம், ஆசை, அழுக்காறு, அவா முதலாயின. பெருமைகள் பெருந்தன்மைப் பண்புகள். உளத்தூய்மை, தெய்வசிந்தனை, ஞான விருப்பு, பத்தி, விநயம் முதலாயின. நெறிசார - சன்மார்க்க நெறியைச் சார. பத்தியும் ஞானமும் பிரிக்க வராத காரண காரியத் தொடர்புடையவை. உண்மை ஞானத்தால் உண்மைப்பக்தி; உண்மைப் பக்தியால் உண்மை ஞானம். இரண்டும் பரஸ்பரம் உதவுபவை. பத்திசாராத ஞானமும் ஞானமல்ல. ஞான உணர்வில் எழாத பத்தியும் பத்தியல்ல என்பர். ஒத்துற - ஒத்து + உற; ஒருமித்து வாய்க்க. பரமதயாபரி - மேலான கருணாவதி. பாவணம் - பழுது நோ இடந்தராப் புனிதம். பவதாரிணி - பிறப்பைக் கடப்பிப்பவள். பரமேட்டி - மேல் நிலையிலிருப்பவள். மெத்தும் - விரும்பும். வீறாரும் - வீறு+ ஆகும் - வெற்றி பொருந்தும்' பிறவாநெறிப் பேறே ஆன்மிக வெற்றியாவது, நமர் - நம்மவர்.
பரசித்தி – மேலான சித்தி. மேலான சித்தியை அருள்பவளும் அவள் சித்தியால் நிகழ்பவளும் அவளே என்றபடி.
--------------------------------------------------------------
6. வாரானைப் பருவம்
வாரானை - வருதல், வருகை. பிள்ளையிடம் வருகை வேண்டும் பருவம். இது பதினோராம் மாசத்தின்மேல் நிகழ்வதென்பர். பிள்ளை தானாக எழுந்து காலசைத்துக் குறுநடை பயிலும்நிலை கவர்ச்சிகரமானது. அந்நிலையில் பிள்ளையின் நடையழகைக் கண்டு சுவைத்தற்கும் அதன் நடைப்பயிற்சியைக் கூர்ப்பிப்பதற்குமாகப் பெற்றோர் உற்றோர் முன்னின்று கைகோலி வா, வா எனக் கூறிக் கூறிக் குதூகலித்தல் இப்பருவஞ் சார்ந்த நிகழ்ச்சிப் பண்பாகும். இப்பருவப் பாடல்களிற் பக்தியுணர்வைத் தளிர்க்க வைக்குஞ் சொற்றொடர்ப் பிரயோகம் சரளமாக இடம் பெறுதல் உண்டு.
1. தேவி சங்களைப் பதியிற் புவனேஸ்வரியாயிருக்கும் நிலைக்கேற்ப யாமவேளையில் ஊர்சுற்றி அடியார் கனவில் (சில வேளை நனவிலும்) தோன்றிக் குறைமுறை விசாரிக்கும் பண்பும், சிவசக்தி என்ற நிலையில் பிறவி அலைப்பட்டலையும் உயிர்கள் பிறப்பிற் செல்லும் நெறிதோறும் அவற்றுக்குள் ளுயிராயிருந்து அவற்றை விடாது தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் நிரந்தர காருணியப் பண்பும் இச்செய்யுளால் விளக்கப்படுகின்றன. முன்னையதன் உண்மை புவனேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு பக். 19. பகுதி (5); பக்கம் 20. பகுதி (9) களாலும், பின்னையதன் உண்மை 'புறம்புறந் திரிந்த செல்வமே' என்னுந் திருவாசகத் தொடராலும் விளங்கும்.
பற்றும்பற்று (தேவியைப்) பற்றுதற்கு யோக்கியமான பற்று. இலக்கியம் - இலக்ஷியம், குறிக்கோள் பரஞானக் கிழவன் பரஞானத்துக்குரியவனான சிவன். கிழவன் பாகந்தழுவுங் குமரி என்பதிற் சொல்முரண் சுவையுந்தோறும். பர்வதாவர்த்தனி - பர்வத வர்த்தனி .. மலையுச்சியில் இருப்பவள். மலையுச்சி அண்டத்தில் கயிலை மலையுச்சி; பிண்டத்தில் சுழுமுனையின் உச்சி. பார்வதி என்ற பொருளில் உள்ளதே பர்வத வர்த்தனி எனும் நாமமும். பர்வதாவர்த்தனி என வழக்கில் வந்தது. உச்சரிப்புக்கிதங்காணும் வாயொலி அசைவு நீட்டிப்பினால், பிள்ளைப் பிராட்டி - பிள்ளை உருத்தாங்கியுள்ள பிராட்டி. பிராட்டி - தலைவி. பெருநிசி - கடும் யாமவேளை. பிறவேடம் - குழந்தையாக, குமரியாக அல்லது கிழவியாக மேற்கொள்ளும் வேடம். பிழையடியார் - துன்புறும் அடியார். பீழை - துன்பம். வினவி - விசாரித்து. பரிகரிக்கும் - நீக்கும். வினாவுமளவே பரிகரித்தலாதலுங் கூடும். முறைமை ஒன்றே - முறைமை யொன்று மட்டுமா. நினையறியா உயிர், மூவா உயிர், பேதை உயிர் எனத் தனித்தனி இயையும். சக்தி என்றுந் தன்னுடனிருக்கப் பெற்றும் அவ்விருப்பை அறியாமை உயிர்சார்ந்த குறைபாடாம். அது காரணமாகவே பேதை உயிர் எனப்பட்டதுமாம். தருக்கி - செருக்குற்று.
இதன் பின்னணியாயுள்ள சைவசாஸ்திரப் பொருளுண்மை அறியத்தரும்.
உயிரை ஈடேற்றுதற் பொருட்டு, அதற்காந் - தநுகரண புவன போகங்களை அமைத்துக் கொடுத்து அவ்வுயிர்க்குள் ளுயிராயிருந்தியக்குவது சக்தி, ஆனால், சம்பந்தப்பட்ட உயிரோவெனில், தனக்குக் கிடைத்த தநுகரணபுவன போகங்களின் செல்வாக்கினால் தானே ஒருமுதல் என்ற கருத்து நிலையை மேற்கொள்ளும். அதனால், சக்தியின் செயலென எச்செயலையுங் கொள்ளாமல் எல்லாம் என்செயலே என்ற எண்ணநிலைக்குள்ளாகும். அம்மனப் பாங்கில் அதுசெய்யும் நல்வினை தீவினைகள் முற்றமுடியப் பிறப்புக்கே காரணமாம். இவ்வகையே வினையாற் பிறப்பும் மீளப் பிறப்பால் வினையுமாய்ப் பிறப்புப் பட்டியல் நீளக்காண்பதே சாமானியமாக உயிர்பெறும் பலன். அங்ஙனம் போகும் உயிரின் போக்கு அந்நிலையில் உயிரின் போக்கை 'தருக்கு' எனப்பட்டது. எதிரிட்டுத் தடுக்காது அவ்வப்போது அதன் போக்கிற்கும் அனுசரணையாக வேண்டுமவற்றைக் கூட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது சக்தியின் பணியாகும். உயிர் இயல்பான தன் மலக்குற்றத்தினின்று அறுதியாக விடுபடும் ஒருநிலையை வருவிப்பதற்கு அப்பணியே நடைமுறைச் சாத்தியமானதும் பலன்படுஞ் சாதனமானதும் ஆம் என்பது சைவ சித்தாந்தக் காட்சி. அவ்வகையில் சக்தி தனக்குத் தோன்றாதே துணைபுரிந்திருந்து கொண்டிருக்கும் உண்மையை உணருமளவே உயிர்க்கு விமோசனமாவதும் என்க.
'தோன்றாத்துணையா யிருந்ததனன் தன்னடியோங்களுக்கே' - அப்பர் தேவாரம்
2. சக்தி புவனாபதியாய்த் தோன்றித் திருமூலர்க்கு அருளிய புதுமையை விளக்குகிறது இச்செய்யுள் முதலடி. சிவயோக சாதகர் திருமூலர். அவருக்குச் சக்தி புவனாபதியாய்த் தோன்றி அவரை ஈடேற்றின செய்தி அவர் வாக்காகத் திரிபுரைசக்கரம் (திருமந்திரம் நாலாந்தரம்) புவனாபதி சக்கரம் (ஷ) என்ற பகுதிகளில் அறியலாகும். அக்கினி, சூரியன், சந்திரன் என்ற தேக அகமுக மண்டலங்கள் மூன்றுமே திரிபுரம். அம்மூன்றையும் வியாபித்து நிற்பவள் திரிபுரை. இம்மூன்றுக்குள் சகல புவனங்களும் அடங்கும். அதனால் அவள் புவனாபதி எனப்படுவள். புவனாபதி - புவனத்தலைவி. புவனேஸ்வரி என்பதும் அதுவே. புவனேஸ்வரி என்ற பெயரே புவனை என மருவியது, புவனாபதி தனக்கருளிய செய்தியைத் திருமூலரே கூறுதலைப் பின்வருஞ் செய்யுள் காட்டும்.
"அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே"
(திரிபுரைசக்கரம். 27).
இதே திருமூலர் இதே பகுதியில் 9 ஆம் பாடலில் ‘அவளன்றி ஊர்புகு மாறறியேளே' எனக் கூறிவைத்ததுண்டு. இங்கு ஊர் என்பது மோக்ஷத்தை. இத்தொடரையே இப்பிள்ளைத்
தமிழ்ப் பாடல் முதலிற் கொண்டு விளங்குகிறது. புவனாபதி அவர்க்குப் பேறு அருளுகையில் அவரது ஆறு ஆதார சக்திகளையும் குண்டலினி சக்திமூலம் வெளிப்படுத்தி அனைத்தையுஞ் சேர்த்தே அவர்க்குப் பேறு அருளிற்று. அதுவே ஆறாதாரஞ் சாறாக்கி எனப்பட்டது. சாறு - சாரம். புதிர் - புதுப் பொருள். பவமாசு - பிறவியாகிய குற்றம். சிவை - சிவன் சக்தி. பரமாஞ்சிவம் - மேலான பொருளான சிவம். சிவம் ஒரு கனியானால் சக்தி அதன் சுவையாகும். சிவத்தீஞ்சுவை என்றது அந்தப் பிரிக்க முடியாத இயைபைக் காட்டும். பாரும் தீரும் – பிருதிவி தத்துவம், அப்பு தத்துவம், தத்துவங்கள் 35 இல் இவ்விரண்டும் அடியில் உள்ளவை. நாதம் என்ற தத்துவம் மேல் நுதியில் உள்ளது. இந்த 36 தத்துவங் கனையுந் தொடுத்து இயக்குவதாகிய தொடர்பு சாதனம் சக்தி ஆகும். அதனால் தொடர்பே வருக எனப்பட்டது.
3. புவனேஸ்வரி தேவி சக்தியென்ற தன் சுயநிலையில் சைவ சித்தாந்தக் கருவாயிருந் தொளிரும் மகிமையுணர்த்துகின்றது இச்செய்யுள். சக்தி அண்டம் முதலாக உள்ள அனைத்துப் படைப்புக்களையும் ஆக்கி அவற்றின் ஊடெல்லாம் புகுந்தொளிர்கின்றது. அதன் இருப்பினால் மட்டுமே எல்லாம் உளவாந் தன்மை எய்துகின்றன. உயிர்களுடன் சிவன் இயைபு பட்டிருக்கும் இயைபு நிலையாகிய அத்துவித இயல்பின் மூன்றம்சங்களில் ஒன்றாயுள்ள ஒன்றாதல் - கலப்பினால் துன்றாதல் -- என்ற அம்சம் இச்சத்தி வியாபகத்தில் வைத்தே விளங்கக்கூடியதாகும் அத்துடன் ஆத்மாவின் சுத்த நிலையில், அதன் இயல்பான கருவி கரணங்கள் அனைத்தும் நீங்கிய அந்நிலையில், அதற்கு அறிவும் அநுபவமும் வழங்கிக் கொண் டிருப்பதும் சக்தியேயாம். இங்ஙனம் சத்தியின் பிரயோகத்தரத்தைத் தத்துவரீதியிற் சரியாக இனங்கண்டு கூறியுள்ளது சைவசித்தாந்த மொன்றே. ஏகான்ம வாதம் போன்ற மற்றைய தரிசனங்களுக்கு வேறாகச் சைவசித்தாந்தம் தனித்துவம் பெற்றிருப்பதும் சக்திபற்றிய இக்கொள்கையாலேயாம். அதனால், சக்தி, சைவசித்தாந்தக் கருவாதல் பெறப்படும்.
மற்றைய தரிசனங்களில் ஒன்றாகிய சிவாத்துவிதக் கொள்கையை முன்னிறுத்தி, அதனுக் கொவ்வாய்' எனக் காட்டுதல் மூலம் சக்தியின் உண்மை நிலையை நிறுவுகின்றது இச்செய்யுள். முதலடி, சகல படைப்புகளும், ஆன்மாசார்ந்த சகலதோஷங்களும் மாயை சார்ந்த சத்தியின் பரிணாமமாகும் என்பது சிவாத்துவிதர் கொள்கை. அங்ஙனங் கொள்ளுதல் மூலம் உடல் உயிர் சார்பாக அசுபத்தன்மைகளும் சக்தியின் பண்புகளாக ஒப்புக்கொள்ளப்பட்டனவாய் விடும். அது சக்தி உண்மைக்குப் பொருந்தாது என்ற விளக்கம் இம்முதலடி தரும் விவரணத்தால் ஏற்படுகிறது. கேட்டு - ஆமாறு கேட்டு. அதாவது, அனைத்தும் நிலையல்லாதில்லை எனச் சொல்லப்படுமாற்றைக் கேட்டு என்பது பொருள். நீ (சக்தி) அல்லாதில்லை எனப்படுவதை நோக்கியே சிவாத்துவிதர் அங்ஙனங் கொள்வர். நீயல்லாதில்லை என்றால் நீ (சத்தி) தான் அவையொவ்வொன்றும் என்பதல்ல அதன் உண்மை விளக்கம் வேறாகும். அது இன்னது என்கின்றது செய்யுளின் இரண்டாமடி. சத்தி எல்லாவற்றினுஞ் சேர்ந்திருத்தல் என்பது அதுவதுவாய் நிற்றல் என்ற அதன் பண்பாகும் என்பது சைவசித்தாந்த விளக்கம். அதுவதுவாய் நிற்றல் - அவ்வப்பொருளின் நிலைப்புக்கும் இயக்கத்துக்கும் வேண்டுமளவு அவ்வவற்றோ டியைந்து நிற்றல், அன்றி, சக்தி தான் பரிணமித்து அவை அவையாக மாறிவிடுவதில்லை என்பது. சிவாத்துவிதக் கோள் - சிவத்துவிதக்கொள்கை. செவ்வே - நேரிதாக. சித்து - அறிவுப் பொருள். அண்டம் முதலியன போற் சடமல்ல என்பது. துண்டப்பிறை - துண்டமாகிய பிறை.
4. எங்கள் உயிர்க்குயிராயிருப்பது மட்டுமன்றி எமது மொழியான தமிழ் மகிமைக்கும் உயிர்த் தத்துவமாயுள்ளது சக்தியேயென ஒரு வகையால் விளக்குகிறது இச்செய்யுள். தமிழின் தனித்துவமான பகுதி அதிலுள்ள அகத்திணை இலக்கியமாகும். அதில் 'பாங்கி' என்ற ஒரு அம்சமுண்டு. வியவகார (நடை முறை) நிலையில் அப்பாங்கி ஒரு மனிதப் பெண்ணாதல் உண்டு. இலட்சிய நிலையில் அது சக்தி சமமாகும். தமிழர்பண்பாட்டில் லௌகீக நிலையில் உள்ளதொன்றுக்குச் சமானமான ஒன்று ஆத்மிக நிலையிலும் இருக்கக் காணுதல் பிரசித்தம். ஆத்மிக நிலை சார்ந்த அதுவே இலட்சியம் எனப்படும். ஓர் இளைஞனுக்கும் ஒரு கன்னிக்கும் இடையில் நின்று ஊடாடி முயன்று அவர்களைச் சேர்த்து வைப்பவள் பாங்கி. அதே போல ஆத்மாவுக்குஞ் சிவனுக்கும் இடையில் ஊடாடி முயன்று அவ்விரு பகுதியையுஞ் சேர்த்து வைப்பது சக்தி. இத்தன்மை ‘திருக்கோவையார்' என்ற உயர் தமிழிலக்கியத்தில் அமைந்துள்ளது. அதில் வரும் தலைவன் ஆத்மா. தலைவி பேரின்பக் கிழத்தி. பாங்கி சக்தி ஆதல் அறிஞர் காட்சியாகும்.
அன்பினைந்திணை - அகத்திணை. சரதம் - உண்மை, துங்கம் - உயர்வு. அகத்திணை யிலக்கியம் என்ற நிலையில் அதி உயர்விடம் திருக்கோவையார்க்கே உண்டு. பரை - பரா சக்தி. தொன்மைக் காட்சி - பழமையான அறிஞர் காட்சி. அக்காட்சியின் வழி வந்த ஒரு காட்சியால் துணியப்பட்டது இது என்பது, துணிவு வழித்துணிவென்பதன் அர்த்தம். இன்பத்......வருகவே என்பது, உன்னை உயிர்ப்பாகக் கொண்ட தமிழால் வருக என அழைத்தோம். ஆதலால் நீ வருதல் தப்பாது என்ற திருப்தியைக் குறிக்கும்.
5. அழைப்பார்க்கு முன்னிற்றல். அணைந்தினிமை செய்தல். நம்பிறப்பில் மோசம் நிகழாமற் காத்தல். முதலான தேவி மகிமைகளைத் தெரிவிக்கின்றது இச்செய்யுள், ஆதரித்து, அன்பால் விரும்பி. ஆவாவென்ன ஆ! ஆ! என்ற இரக்கத் தொனி காட்டும் அநுதாபத்துடன்.
‘ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே' - திருவாசகம்.
அண்ணிக்கும் - இனிமை செய்யும். அகலிடம் - உலகம், முன்னா அணைந்த - இதற்கு முன் வாய்த்த, மோசம் - பழுதான நிலைமைகள். புரக்க - பாதுகாக்க, தென்னாடரசாள் திரு - தடாதகைப் பிராட்டியாய்த் தோன்றி மதுரையில் அரசு வீற்றிருந்த திரு. தித்தித்து - சுவைத்து. அருந்துந் தேன் - அநுபவிக்கும் ஆனந்தம்; சிவானந்தம். சொன்னாவலர் - சொல் + நாவலர், சொல் - புகழ், நாவலர் – புலவர்.
6. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வழக்கப்படி ஆற்றல் சான்றவர்கள் அமைப்பது மீற முடியாதிருக்கும் விதி எனப்படும். அத்தகையதே நம் விஷயத்திற் பேசிக் கொள்ளப் படும் விதி என்பதும் உண்மை அன்பினால் தன்னையே நினைந்து மற்றவையெல்லாம் மறக்கும் நிலையுற்றவர்கள் விஷயத்தில் எந்த வல்லமையாளன் வகுத்த விதியையும் மாற்றி வழக்கறுத்து விடவல்லவள் தேவி. ஆனால், நம் விஷயத்தில்மட்டும் அந்த விதிவிலக்கதிகாரத்தைத் தேவி பிரயோகிப்பதில்லையே என இரக்கந் தெரிவிக்கின்றது இச் செய்யுள். அக்குறை தேவியைச் சார்ந்ததல்ல நம்மைச் சார்ந்ததென்றதற்கான விளக்கமும் உடன் வருதல் காண்க. நில்லாவியல்பினதான வாழ்க்கை நிலைமைகளைச் சீரானவையெனக் கொள்ளும் நேயமுள்ளோர் நாம். நீளவரும் பிறவிக்கடலில் ஆழ்ந்து நிலைகலங்க வேண்டும் நியதிக்குட்பட்டோர் நாம். ஆதல் நம்மைச் சார்ந்த குறைபாடுகளாம். இக்குறைபாடுகளை எதிர்ந்து முன்னேற நாம் தயாராகவில்லை என்ற குறிப்பும் மூன்றாமடிப் பிற்பகுதியில் தோன்ற வைக்கப்பட்டிருக்கின்றது.
சாமானிய உடலியல் உளவியல் சார்ந்த உலகியலுணர்வுகள் இச்சைகளுக்கே ஆட்பட்டவர்கள் தேவியின் விதிவிலக்கருளல் ஆகிய அருளுக்கு ஆளாதல் இயலாது என்பது இதனாற் பெறக்கிடக்கும் முடிபாகும்.
மற்றது தான் - சங்கற்பத்தால் மாற்றிப் படைத்தலாகிய அது தான், நேரிது - சிறந்தது, நேயம் - பற்று, சென்மம் - பிறப்பு, நீராழி -- கடல். எந்தரம் - எமது தரம். மற்றது தாள் எந்தரத்திற் செல்லாது எனக் கூட்டி மேற் செல்க. சென்மவெள்ளத் ....... தீரர்:- யாரெனினும் பிறவி சாரும் நோக்கத்திற் செலுத்துவதாகிய வாழ்க்கை யோட்டத்தோடு ஒரோட்டமாய் இயைந்து செல்பவர் தேவியின் விதி விலக்குபகாரமான அந்த அருளுக்குப் பாத்திரமாகார். எப்படியோ ஒருவிதத்தில் அந்த ஓட்டத்தை எதிர்த்து எதிர் நீச்சல் இடுவார் மட்டுமே அதற்குப் பாத்திரமாவர். திருஞான சம்பந்தர் வையையாற்றில் நீரோட்டத்துக்கு எதிரோட்டமாக ஏடுசெல்ல விட்ட அற்புதத்தின் விளைவாக அறிவிக்கப்பட்ட உண்மை இதுவாகும். அதைக் கூறுங் கட்டத்தில், அச் செயற் பலனை அறிவிக்குஞ் சேக்கிழார், 'இருநிலத்தோர்கட் கெல்லா மிதுபொரு ளென்று காட்டி' எனக்குறித்ததில் இப்பொருள் நயமுந் தொனித்தல் காணலாம்.
7. பக்தர்களின் பக்திக் கடலைக் கரை கடந்து பெருக வைக்கும் நிலாமதி யெனவும், வீராதிபர் வீறடக்கும் வீராங்கனை யெனவும், ஞானயோகிகளின் சுகாநுபவச் சுவை யெனவும் தேவி பிரபாவத்தைப் போற்றுகின்றது இச்செய்யுள், பழ அடிமைப் பண்பும் அதனால் வாய்க்கும் நண்பும் பொருந்தியவர்களே உண்மைப் பக்தர்களாதல் சாலும். பழ அடிமைப் பண்பு - பூர்வார்ச்சிதமாகப் பெற்றிருந்த அடிமைப் பண்பு. அடிமைப் பண்பாவது எந்நிலையிலும் அஹங்கார மமஹாரங்களுக்கு இடங்கொடாமல் நம்மை நடத்துபவன் ஒருவன் உளன் என்ற நிலைக்குத் தன்னைத் தாழ்த்தி நடக்கும் பண்பு. முன்னீடான சம்பாத்தியமின்றி அது சோபித்தலில்லை. அதனால் பழவடிமைப் பண்பு எனப்படும். பாராதரிக்கும் - உலகம் விரும்பியன்பு செய்யும். நண்பு - உறவு, சிவ சீவ உறவு. பழுநிய – முதிர்ந்த. பக்தர் – அபிராமி பட்டர் போல்வார். நேரா உதிக்கும் - நேர்ந்து - நேர்முன்னாக உதிக்கும், நிலமுழு நிலா வெண்மதி: -நிமலமதி, முழுமதி, நிலா வெண்மதி எனப் பிரிந்தியலும். நிமலம் - சாதாரண சந்திரனுக்குரிய மாயைத்தன்மை இன்மை. முழுமை தேய்தல் சுருங்கலின்றி ஒரே நிறைவாயிருத்தல். நிலா வெண்மை - மெய்ஞ்ஞான ஒளி, படு நீசத்தனம் மோசமான நீசத்தனம், நிம்பசும்பர், சண்ட முண்டர் என்போர் தேவியின் நிக்கிரஹத்துக்குப் பாத்திரமானவர்களாக அறியப்படும் அசுரர் கணங்கள், உடல் - வருத்தும்.
8. முன் நாலாஞ் செய்யுளிற் கண்ட வர்ணனையை மூலமாகக் கொண்டெழுந்த மற்றொரு வர்ணனை மூலம் சிவன் நிரந்தரத் தமிழ்ப் பித்தனாய் இருத்தலைச் சாங்கோபாங்கமாகத் தெரிவிக்கின்றது இச்செய்யுள். தமிழ் அகத்திணை இலக்கியத்துப் பாங்கி இலட்சியமா யிருப்பவள் என்றும், தமிழுக்கு உயிர்ப்பாயும் இதயமாயும் உள்ளவளென்றும் தேவியை வர்ணித்தது நான்காஞ் செய்யுள், அத்தேவி மேற் காதல் கொண்டமையினாலே தான் சிவன் தமிழ்ப் பித்தன் ஆயினான் என்கின்றது இச் செய்யுள். இப்படிக் கூறுவதும் செய்யுளுக்குரிய கற்பனை உத்திவகைகளில் ஒன்றாதல் கருதத் தகும்.
சின்மய சொரூபவனுஞ் சிவன் - ஞானமே தன் சுவரூபமாயுள்ள சிவன், சிவனும் என்பதில் உம் உயர்வு சிறப்பு. ஞான பூரணமான சிவனே செந்தமிழ்ப் பித்தனாயினமை தேவி மகிமையைச் சார்ந்ததாகும் என்க. அதுவும் நிரந்தரச் செந்தமிழ்ப் பித்தன், நிரந்தரம் --- அநவரதமும், அதற்கு ஆதாரங்களாக மூன்று சம்பவங்கள் இரண்டாம் மூன்றாம் அடிகளிற் குறிக்கப் படுகின்றன. சிவன், அப்பர் சுவாமிகள் சொல்வது போன்று, 'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறியது. இறையனார் களவியல் என்ற இலக்கணம் இயற்றியது, நால்வர் பெருமக்கள் பாடற்கு விரும்பியது என மூன்றுங் காண்க. உலப்பில் பன்னூலாய்ந்தி வுலகினுக் களிக்கவும் - உலப்பு இல் பல் நூல் ஆய்ந்து இவ் உலகினுக்கு அளிக்கவும், உலப்பு - முடிவு, ஆய்ந்து - ஆராய்ந்து. சங்கம் நிகழ்த்திய முக்கிய நிகழ்ச்சி நூலாராய்ச்சி. சங்கமேறிய புலவனாதலிற் சிவனுக்கும் அது பொருந்துவதே, இலக்கணமியாக்க - இலக்கணம் யாக்க 'தன்னொழி மெய்ம்முன் யவ்வரின் இகரந்துன்னும்' என்ற விதிப்படி 'இ'கரம் பெற்றது, யாக்க - இயற்ற, பேரிசை கொள் ஈரிருவர் பெரும் புகழ் கொண்ட நால்வர், பாடற்குவக்க - பாடற்கு + உவக்க,
இவை யெல்லாம் தமிழ் பெறும் பேறுகளாகச் செய்து வைத்த பெருமை தேவிக்கேயுரிய தெனவும் அது காரணத்தால் தமிழ் வளம் பாலித்த மகிமை அவட்குரித் தெனவும் அந்நோக்கில் தேவி பைந்தமிழ்த் திரு எனவும் போற்றுகிறது. நான்காவது அடி.
9. புவனை, சக்தி எனற தன் சுயநிலையில் 'தன்னையிழித்து எம்மை யுயர்த்தும்' பேருபகாரப் பெருங்கருணையை விதந்து போற்றுகின்றது இச்செய்யுள். இப்பாங்கில் தன்னை இழித்து உயிரினத்தை உயர்த்துதல் பற்றிய சிவன் செயலுமொன்றைக் குறிப்பிட்டு அதனைவிட இது மேலானது என ஒப்புமை மேல் வேற்றுமை புலப்படக் கூறப்பட்டிருத்தல் காண்க. ஒருபழுதும் ஒருசிறிதும் படுதற் கியைபில்லாத பரம பாவன ரூபிணியாகிய சக்தி, சைவசித்தாந்தப்படி பஞ்சமலங்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் நிலைக்காகியமை அவள் தன்னை இழித்துக்கொண்டவாறாம். அது இயல்பாகவே ஆணவ இருளில் அமிழ்ந்திருக்கும் ஆத்மாவை அந்நிலையிலிருந்து பெயர்த்து மேல் நிலையடையத் தூக்குதற் பொருட்டெனக் காட்டப்படுகிறது. இதன் சார்பிற் சைவசித்தாந்த பரமான விளக்கச் சுருக்கமொன்று இங்கு அவசியமாகும்.
உயிர் இயல்பாகவே ஆணவ இருளில் அமிழ்ந்தியுள்ளது. சக்தியும் இயல்பாகவே உயிரிடத்தில், அதனை அறியாமலே இருந்து கொண்டுள்ளது. இச்சத்தியினிருப்பு ஆணவத்தினிருப்புக்கும் அப்பாலாக வெகு ஆழத்திலுள்ளது - என்பது சைவசித்தாந்த விளக்கம். அந்நிலையில் இருக்கையில் இச்சத்தி மலசக்திகளை இயக்கி உயிர் நல்வினை தீவினைகளில் முயலவைத்து அவைகாரணமாக மீள மீளப்பிறப்பு இறப்புக் களிற் செலுத்திக்கொண்டிருக்கும். தீர்ந்தநோக்கில் இது உயிரின் நிரந்தர நன்மைக்கே யென்பதை ஆட்சேபிப்பதற்கில்லை. எனினும் தன்னியல்பாகிய பாவனப் பண்பைக்காட்டு தற்குப்பதில் சத்தி இந்நிலையில், கேடு விளைக்கும் மலசக்திகளுக்கு உதவியாய் இருத்தல் பற்றி அம்மலங்கள் நான்குடன் இதனையுஞ் சேர்த்துப் பஞ்ச மலமெனக் குறிப்பிடுஞ் சைவ சித்தாந்தம். பஞ்சமலம் -ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்: (திரோதானம் - மலத்துள் மறைந்து நின்று இயலும் நிலையிற் சத்திபெறும் பெயர்)
சத்தி மலத்தின் பின்னுள்ள இந்நிலை கற்பனைப் பாணியில் சத்தி மலத்தினுட் குதித்துவிட்டது எனப்பட்டிருக்கிறது. உயிரை மேல்நிலைக்குத் தூக்குதற்கே அதுவாதலால் அதற்குப் பொருத்தமாகக் கிணற்றுள் வீழ்ந்த தன் குழந்தையைத் தூக்குவதற்கு அதனுட் குதித்து விடும் தாய் நிலை உவம யாகக் கொள்ளப்பட்டிருத்தலைச் செய்யுளின் முதலடி காட்டும்.
உபமானம் | உபமேயம் |
கூவம் (கிணறு) | இருண்மலம் |
குழவி | உயிர் |
தாய் | திரோதானம்(சக்தி) |
கருமலம் - இருண்மலம், ஆணவம், குது குதுப்பு - ஆவல், உந்த - செலுத்த, பாவன சொரூபி - புண்ணிய சொரூபி, பகர வரும் - சொல்லப்பட வரும், திரோத மலம் - திரோ தானம் என்ற மலம். பழிகாரியானது - பழிப்புக் கிடமானது.
மூன்றாவதடியின் முதற் பகுதி, முன் குறித்தவாறு, சிவன் தன்னை இழித்த ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. பன்றிக் குட்டிகளுக்காக அவர் தான் பன்றியானது அச் செய்தி, நின் பர்த்தா - உனது கணவன். பசும் பறழ்ப் பன்றி - பசும் பன்றிப் பறழ், பசும் - மிக இளமையான, பறழ் - குட்டி, புன் பன்றிப்பிபிணா - எளிய பெண் பன்றி. பிணா -பெண், ஆலிக்கும் - மகிழ்வாற் குளிரும்.
இச் செய்யுட் கற்பனை வளம் ஒரு நோக்கில் 'பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை' என்று தேவி மகிமை தோற்றியதாகவும் அமையும்.
10. வகுகை என்ற முறையில் தேவி திருவடி பெயர்த்து வருதலில் மிளிரும் அழகுத்தோற்றம் பற்றிய வர்ணனையுட் கொண்டுள்ளது இச்செய்யுள். தேவி திருவடிகளுக்கு இதமான பரிசம் ஏற்படத்தக்கவாறு நிலம் நீர்பனிக்கப்பட்டிருக்குங் காட்சியை ஒருவித கற்பனை வகையிற் படைத்திருத்தல் இதன் கண் சிறப்பம்சமாகும். போதலர் பொன்முகம் - புதுப்பூவிரிவின் மலர்ச்சிகாட்டும் பொன்முகம். பூசல் - ஆரவாரம். ஊசலாட - ஊஞ்சல் அசைவதுபோல் ஆட. பரூஉச்சுடர் - பிரகாசம் பருமையாய்த் தோன்றும் சுடர். கிண்கிணி - சதங்கை. இரண்டாமடிப் பின்பகுதியும் மூன்றாமடியும் நிலம் நீர் பனிக்கப்பட்டிருத்தல் பற்றிய வர்ணனை உரைக்கும். இங்கு நீர் என்பது பூமிதேவியின் உடலிற்றோன்றும் வியர்த்துளி. வியர் தோன்றிய காரணம் உடற்படபடப்பு. அதற்குக் காரணம் பூமிதேவிக்கு ஏற்பட்ட அச்சம். அதன் காரணம் தேவியின் பாதங்கள் தன்னில் தீண்டுதற்குத் என்ற பூமியின் தகுதியாமளவு புனிதம் தனக்கில்லையே உணர்ச்சி என விடுவித்துக் காணுதல் மூலம் இக்கற்பனைப் பொருளுஞ் சுவையும் அநுபவிக்கப் படலாகும். எவரேனும் தேவிமுன் தன்சிறுமையை நினைந்தஞ்சுதல் உயர்ந்த ரகமான உண்மை. இதனால் ஒரு பணிவடக்கப்பண்பாகும் என்ற உண்மை பிரஸ்தாபிக்கப் படுகிறது. பாவனபதப் புனிதநோன்மை - புண்ணிய சொரூபமாகிய பாதங்களின் புனிதப்பெருமை. அடாத – பொருந்தாத. பவித்திரமிலாமை - தூய்மையின்மை. மூன்னி - நினைந்து. வெருவி - பயந்து. புளகம் - மயிர்க்கூர்ச்சு. வியர்வியர்த்து - மிகவியர்த்து. பனித்தல் - திவலைப் பிரமாணமாகத் தெளித்தல். நிஷ்காமிய புண்யம். அபுத்தி பூர்வமாக நிகழும் தெய்வசம்பந்தமான நிகழ்வுகளே நிஷ்காமிய புண்யங்களாகத் தகுவன.
திருமறைக்காட்டுச் சிவாலயத்தில் எலி ஒன்று அபுத்தி பூர்வமாக விளக்குத் திரியைத் தூண்டியதும் அதன் பெறுபேறாக விளைந்த நிஷ்காமிய புண்யம் அதன் மறுபிறப்பில் அதனை நற்பிறப்பில் விட்டுச் சிவனடியானாக்கி வீடுபேறளித்ததும் ஆகிய செய்தி யொன்று 'நிறைமறைக் காடுதன்னில்' -- என்ற சம்பந்த சுவாமிகள் தேவாரத்தில் இடம் பெற்றிருத்தல் காணலாம். இத்தகைய நிஷ்காம்ய புண்யம் சிவபுண்யம் எனப்படும். இங்கு இந்நிலவர்ணனை மூலம் சிவபுண்ணிய இயல்பும் விளக்கப்பட்டதாயிற்று. பாதலம் - கீழுலகம். மீதலம் - மேலுலகம். இரண்டுங் கூறப்பட்டதால் இவற்றின் இடைப்பட்ட மண்ணுலகமுங் கொள்ளப்படும். பேதமற - வித்தியாசமின்றி ஒரேமாதிரியாக.
-----------------------------------
அம்புலிப் பருவம்.
பிள்ளை சந்திரனிற் கவர்ச்சியுற்று அதனை விளையாட வரும்படி அழைத்தல் என்ற பொருளில்
அமைவது அம்புலிப் பருவம். அம்புலி - சந்திரன், இந் நிகழ்வுக்குரிய காலம் 13 ஆம் மாசத்தின் மேல் என்பர், பிள்ளைத் தமிழ்ப் பருவங்களிற் கற்பனா வளஞ் சிறந்து காட்டும் பருவம் அம்புலிப் பருவமாகும். 'பிள்ளைத் தமிழ்க் கம்புலி புலி' என்பது பிரசித்தம். சந்திரனை அழைக்கும் பாங்கில் நிகழ்வதாகிய உரையாடல் சாமம்,பேதம், தானம், தண்டம் என்ற நீதியுபாயப் படிமுறையில் நிகழ்வதாக அமைத்துக் கொள்ளுதல் பிள்ளைத் தமிழ் மரபு, சாயம் என்பது பிள்ளைக்குச் சந்திரனோடு சமத்துவ முண்மையைப் புலப் படுத்துஞ் சொற்றொடர்களால் அமையும் உரையாடல், பேதம் என்பது சந்திரன் நிலையை விடப் பிள்ளையின் நிலை உயர்ந்தது எனக் காட்டுஞ் சொற்றொடர்களால் அமையும். உரையாடல், தானம் என்பது பிள்ளையை அணுகுதல் மூலம் சந்திரன் தனக்கு நன் கொடையாமாறு பெறத்தகுந்தவற்றைக் கூறும் சொற்றொடர்களாலும் தண்டம் என்பது இணங்காத பட்சத்தில் பிள்ளையின் தெய்வீக இயல்பு பற்றிச் சந்திரனுக்கு நேரக் கூடும் ஆபத்துக்களைக் குறிப்பிடுஞ் சொற்களாலும் அமையும். இப்பிள்ளைத் தமிழிலும் அவை அவ்வாறே அமைந்திருத்தல் காணலாம்.
1. பிள்ளை தன் தோழியர் முகச் செவ்வியோடு சந்திரன் செவ்வியை ஒத்துப் பார்க்கும் விருப்பால் அதை அழைத்ததெனக் கூறும் சாம நிலை பற்றியது இப் பாடல். பிள்ளை சந்திரன் மேல் நோட்டம் விடுவதற்கு நேர்ந்த சூழ்நிலையைத் தெரிவிக்கின்றது செய்யுளின் முதலாமடி, நிலா முன்றிலிற் பொற்றவிசில் அமர்ந்திருந்து அண்ணாந்து வானத்தை நோக்கி அங்குள்ள அதிசயங்களைப் பார்த்திருத்தல் என்ற நிகழ்ச்சி சூழ்நிலையாக அமைகின்றது. அனைத்தையும் படைத்தவள் அவளே என்ற உண்மை புலப் படுமாறு 'தான்வைத்த அற்புதப் புதிர்' என்றிருப்பது இப்பகுதியின் விசேட கருத்தம்சமாகும். ஒளிப் பிடலை - ஒளிப் படலம், அமர்ந்து - விரும்பி இருந்து, புவர் லோகம் - பூவுலகத்துக்கு மேலுள்ள உலகம், சப்த உலகங்களில் இரண்டாவது, அற்புதப் புதிர் - அதிசயகரமான புதுமை, நுகர்ந்திருக்கும் - அநுபவித்திருக்கும். எல்வை - வேளையில், திங்களஞ் செல்வ - திங்கட் செல்வ. அம் சாரியை, திருவுளஞ் சிறந்து -திருவுளத்தில் உணர்ச்சி மிகுந்து. ஒளிர் உரு - மினுக்கமான வடிவம், சகிமார் - தோழியர் செங்கமல மாதர் - இலக்குமி, சரஸ்வதி என்ற இருவர். இலக்குமிக்காம் போது, செங்கமலம் என்றதற்குச் சிவந்த கமலம் எனவும் சரஸ்வதிக்காம்போது
செப்பமான கமலம் எனவுங் கொள்க. அறியவோ என்பது அறிதற்குப் போலும் என்ற பொருளில் நின்றது. அனையர் முன்னர் உற - அவர்கள் முன் வர, முகச் செல்வி - முக மலர்ச்சி.
2. பிள்ளை தன்னோடு சந்திரனுக்குள்ள ஒப்புமை காரணமாக அதை அழைத்ததெனக் கூறுஞ் சாம நிலை பற்றியது இச்செய்யுள். இவ்வொப்புமையைத் தோற்றுவித்தற்காக இரு விதமாகப் பொருள் கொள்ளத்தக்க சிலேடைத் தொடர்கள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.
சிவபாத சேவகம்:- பிள்ளைக்காம் போது சிவன் பாதங்களைச் சேவித்தல், சந்திரனுக்காம்போது
சிவன் பாதங்களிற் சரணடைதல்.
-: சிவசிரோ வாஹ்யம்: பிள்ளைக்காம் போது சிரோவாஹ்யம் - சிவனைச் சிரமேற் கொள்ளல். சந்திரனுக்காம்போது சிரோவாஹ்யம் - சிவனால் சிரசில் தாங்கப்படுதல். வாஹ்யம் - தாங்கப்படல், செவ்வொளிய வேட்கருள் சிறப்பு:- பிள்ளைக்காம்போது செந் நிறமுள்ள முருகனுக்கு வேல் கொடுத்தருளிய சிறப்பு. சந்திரனுக்காம் போது மன்மதனுக்குக் குடையாயிருந்து புரியுஞ் சிறப்பு. வேள் என்பது முருகன், மன்மதன் என்ற இருவரையும் உணர்த்தும் பெயர். செவ்வொளிய என்ற அடை முருகனுக்காம்போது செந்நிறம் எனவும் மன்மதனுக்காம்போது செவ்விய கீர்த்தி எனவும் பொருள்படும். ஒளி - நிறம் கீர்த்தி.
செம்மான் மருங்குறுதல்:- பிள்ளைக்காம்போது சிவபெருமான் மருங்கில் இருத்தல். செம்மான் செவ்விய மஹான் என்ற பொருளிற் சிவனுக்காகும். சந்திரனுக்காகும்போது செப்பமான மான்களங்கம் தன்னிடத்தில் இருக்கப்பெறுதல். மருங்கு - பக்கம், இடம்.
நவமான தண்ணளியில் ஞாலம் புரந்திடுதல்;- பிள்ளைக்காம்போது புதுமையான கருணையால் உலகைப் பாதுகாத்தல். தண்ணளி. கருணை. சந்திரனுக்காம்போது புதுமை யான குளிர் நிலவினால் உலகைப் பாதுகாத்தல். தண்ணளி - தண்மை + அளி, அளி - மகிழ்வு. அது இங்கு அதற்குக் காரணமாய நிலவுக்காயிற்று.
நாடவரு தலையுவா நாளெ(ண்) ணப்படுதல்:- பிள்ளைக்காம்போது அமாவாசை நாளில் விரதமநுட்டிப்போரால் சிவனோடு சேர்த்து நினைக்கப்படுதல். தலையுவா - அமாவாசை. சந்திரனுக்காம்போது அமாவாசை நாளில் நினைக்கப்படுதல். அன்று காணப்படுதல் இல்லை. அதனால் நினைக்கப்படுதல் அளவே அமையும். சிவயோகியர்க்குச் சிவமான விளைவுறச் சிரமிசைத் திகழ்தல்:- பிள்ளைக்காம்போது சிவயோகியர்களைச் சகஸ்ர தளத்தில் உள்ள சதாசிவரோடு சேர்த்து அச்சதாசிவருடன், தானும் (சிரமேல்) இருத்தல். சந்திரனுக்காம்போது சிவயோகியர்களின் சாதனை மார்க்கத்தில் இறுதிப் பயன் விளைக்கும் நிலையாக அவர்களின் சிரத்தில் 'சந்திர யோகம்' நிகழத்தக்கதாக (சந்திரன்) இருத்தல். சேர்கலைத் தொகை யொத்தல் - பிள்ளைக்காம்போது பிரசாத மந்திரத்தியானத்தில் விடகலை, அர்க்கீசகலை முதலாக உன்மனாகலை ஈறாகப் பதினாறு கலைகளாகச் சக்தி பிரிந்து நிற்றல். சந்திரனுக்காம் போது நாளொரு கலையாக ஏறியும் இறங்கியும் வரும் பதினாறு கலைகளை உடையனாதல்.
குறிக்கப் பட்ட இவ்வெட்டு வகைக் காரணங்களினாலும் அம்மை சந்திரனொடு ஒப்புமை கண்டு சீராடுதற்காக அதை அழைத்ததாகச் செய்யுள் மூன்றாமடியின் பிற்பகுதி தெரிவித்தல் காணலாம். அவம் ஏதும் - எத்தகைப் பழுதும், ஆமாறு இலை - உண்டாதல் இல்லை.
3. பிள்ளைக்கும் சந்திரனுக்கு மிடையிலுள்ள வேறுபாடுகள் சிலவற்றைக் கூறி அவையிருந்தும் விளையாட்டு வேட்கையால் உனையழைத்தாள் என்று பேதநிலை தோன்ற உரைக்கிறது இச்செய்யுள். முதலிரண்டடிகளும் வேறுபாடு தெரிவிக்கின்றன.
பிள்ளை நிறை கலையள், நீ குறை கலையன், பிள்ளை புரவு செய்பவள், நீ இரவு செய்பவன் என்பன வேற்றுமைகள். பிள்ளை நிறை கலையள், அவள் கலை என்றும் நிலை யொன்றீ நிற்பது. நிமலமானது, பரிபூர்ணமானது, நின் கலைக்கு நிலையான நிறைவென்பதில்லை. நாளுதாள் ஒவ்வொன்று குறைவதும் கூடுவதுமாகும் என்பது விளக்கம், நீ கார் இரவு செய்வை, நீ கரிதாள இரவை ஆக்குபவன். நிசிகரன் என்ற பெயர் சந்திரனுக்குண்டு. இரவைச் செய்பவன் என்பது பொருள், தினத்தைச் செய்பவன் என்ற பொருளில் சூரியன் தினகரன் எனப்படுவது போல். நீ இரவைச் செய்பவன், இவள் இரவு நிலையை நீக்கிப் புரவு செய்பவள் என்பதில் இரவு என்ற சொல்லின் சிலேடை நயங் கருதப் பட நின்றது, சந்திரன் சார்பில் இரவு இராக்காலம். பிள்ளை சார்பில் இரவு இரத்தல். தேவியருளுக்குப் பாத்திரமானவர் இலௌகிக வளங்களும் பெருகப் பெறுவர் என்பது பிரசித்தம். அதனால் அவர்கள் இரத்தல் செய்ய வேண்டியதில்லை. அதற்கெதிர் புரத்தல் செய்பவர்களாகவும் அமைவர். வேண்டியோர்க்கெல்லாம் கொடுக்குந் தன்மை புரத்தல், புரவு எனப்படும், இங்ஙனம் சிலேடை படக் கொள்ளாது சந்திரன் சார்பிலும் இரவு - இரத்தல் என்றே கொண்டு சந்திரன்
சுய ஒளி இல்லாமையால் சூரியனிடம்
இரந்தே ஒளி பெறுபவன் என்ற கருத்தைக் கொள்ளுதலும் ஆம். விலையொன்றிலாத பேறு - மதிப்பற்ற
பெரும் பேறு. வேறு நோக்காது - பிறிதெதுவுங் கருதாது. அலை யொன்று கருணைக் கடல் -- அலையடித்துப் பொங்குங் கருணைக் கடல்.
4. மற்றொரு வகையிற் பேத நிலை தோன்ற உரைக்கின்றது இச்செய்யுள். பிள்ளை சிவ நிந்தைக்குடன்படாள். நீ தக்கன் யாகத்தில் விருந்தேற்கச் சென்ற உன்செயல் மூலம் சிவ நிந்தைக்குடன்பாடு காட்டியுள்ளாய் என்பது பேதம். இப்பிள்ளை தான் சிவநிந்தைக்குடன் படாமை மட்டுமன்று தான் வதியுமிடத்தில் யாரேனுஞ் சிவநிந்தை செய்வாருளரேல் தக்கபடி தண்டிப்பித்துத் திருத்துபவளும் ஆம் என்பது. இச் செய்யுட் பொருளிற் சிறப்பம்சமாகும். இதற்கு நிதர்சனமாக நிகழ்வொன்று நேர்ந் திருத்தல் புவனேஸ்வரியம்பாள் கோயில் வரலாறு பக் 2. பந்தி 4. இனால் அறிய வரும். இந்நிகழ்விற் சம்பந்தப் பட்ட அறிஞர் சுதுமலையைச் சேர்ந்தவர். அவர் சில காலம் பரமதத்திலீடுபட்டிருந்து அம்மத மயக்காற் புரிந்த சிவநிந்தனைக்குப் பிராயச்சித்தமாகக் காய்ச்சிய பொன்னூசியால் தாமே தமது நாவைச் சுட்டுச் சிட்சை செய்து கொண்டார். அது புவனேஸ்வரியம்மன் அருளால் நடந்ததென்பதில் ஐயமில்லையாகும். அவர் அறிஞராயிருந்தும் சிவநிந்தையி லீடுபட்டதற்கு உரிய காரணந்தோன்ற, 'பாபகிர காட்சி வலுவால்' என வருதல் காணலாம். கிரக + ஆட்சி கிரகாட்சி என வடமொழிப் புணர்ச்சி மாதிரியில் அமைந்துள்ளதாகக் கொள்ளல் தகாது. கிரகவாட்சியென்பது
செய்யுளிசை நோக்கி ஓரெழுத்தொலி தொக்குக் கிரகாட்சி என நின்றதெனவே கொள்ளல் தகும். ஆட்சி என்ற வருமொழி தமிழ்ப் பதமாதலால் வடமொழிப் புணர்ச்சி விதி இதிற் செல்லுதல் தகாதாகும்.
சிவநிந்தை தழுவு வேள்வி:- தக்கன் புரிந்ததாக உள்ள வேள்வி, 'மேத பதி காதபதி' என வேதஞ் சொன்னவாறு சிவனே யாகத் தலைவன் என்றுள்ள பிரசித்தமான சிவமஹிமையைக் கீழ்ப்படுத்தவெண்ணிச் சிவனுக்குப் பதில் விஷ்ணுவை யாகபதியாகக் கொண்டதால் சிவநிந்தை தழுவியதாயிற்று. பவநிந்தை - பாவமான நிந்தை. வீரபத்ரன் - சிவனாணையினாற் தக்கன் வேள்வியை யழிக்க வந்த சிவகுமாரன் 'அவர் காலால் சந்திரன் நிலத்தோடரைக்கப் பட்டதாக வரலாறு. பதபரிசமுற்று உடல் கன்றினை என்பது அதனைக் குறிக்கும். பதபரிசம் - காற்பரிசம், காலால் நிகழ்ந்த தேய்ப்பு அவர் நிலையைப் பொறுத்து அச்செயலின் இலகுத்தன்மை புலப்படப் பரிசம் எனப்பட்டது. கால் பட்ட மாத்திரத்தே சந்திரன் உடல் கன்றினான் என்றபடி. கன்றுதல் தழும்பேறுதல். செம்பொனூசிச் சூட்டுச் சிட்சை - ஊசிச் சூடாகிய சிட்சை. சிட்சை பரிகாரம், பிராயச் சித்தம். திருத்தும் தேவியெனவும் பாவிநினைச் செம்மை நோக்காலழைத்தாள் எனவும் வருதலின் உன் சிவநிந்தைக்கொத்துப் போன அதாவது, துரோகத்துக்கு துணை போன உன் தோஷத்தையும் இவள் திருத்துவாள் என்பது தொனிப் பொருளாகக் கொள்ளப் படும். அவநிந்தை - வீணே புரியும் நிந்தை. அவம் - வீண்.
5. மேலும் பிறிதோ ராற்றாற் பேத நிலை தோன்ற உரைக்கின்றது இச்செய்யுள்.
இப்பிள்ளையிடம் அமுதுண்டு, ஒளியுண்டு. நினக்கும் அவை உண்டென்பர். ஆனால் அவ்வொப்புமை சொல்ளவுக்கேயன்றிப் பொருளளவுக்கில்லை. நிரூபிக்குமிடத்து நினதொளி இவளுடைய ஒளியில் ஒரு சிறு துளி. நினது அமுதும் இவட்குள்ள அமுதின் ஒரு சிறு துளி. உனது அமுதத் துளி சிறு பயிர் வளர்க்குமளவுக்கே உதவும். இவளது அமுதமோ எனில் உயிர்வளர்க்குந் தன்மையது; உயிரின் மாசு போக்கி அதற்கு வீட்டின்பந் தர வல்லது என்ற விளக்க விரிவும் செய்யுளில் அமைந்திருப்பக் காணலாம்.
இவள் பாங்கு போல் - இவளிடத்தில் உள்ளது போல். பனிமதியம் - பனிமதியமே என விளியாய் நிற்கும். பனி - குளிர்மை, பரவல் - போற்றப்படுதல். நேர் திகழ் பொருள். ஆராய்ச்சிக்கு நேர் பட நிற்கும் பொருளாந் தன்மை. நிரூபிக்கின் - ஏது பூர்வமாக நிரூபணஞ் செய்யின். நேர் சொந்தம் - தனது சொந்தம். லவலேசம் - அற்பம், சிறிதிற் சிறிது. லவம் - சிறிது. சிதர்ச் சிறுதிவலை - ஒரு துளியிற் பிதிர்ந்து தெறிக்கும் ஒரு திவலை. சிதர் - துளி. சித்த மாசு - சித்த மலம்.
‘சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட'-- திருவாசகம். சித்தமலமாவது, அவிச்சை, அஹங்காரம் முதலிய குற்றங்கள்.
6. பிள்ளையாகிய தேவியை அணுகுதல் மூலம் சந்திரன் பெறக் கூடிய நன்மைகளைக் குறிப்பிட்டுத் தான நிலை பற்றியுரைக்கின்றது இச் செய்யுள்.
சந்திரனுடலிற் பட்ட கறையிருளகற்றல், சந்திரனின் உடற் கூனும் நீங்கக் கூடிய சார்பிருத்தல் என்பன தானங்களாய் அமையும். செய்யுள் முதலடி இருள் நீக்குதலில் தேவிக்குள்ள மகிமையைத் தெரிவிக்கின்றது. அவளால் நீக்கப்படுவதெனப் பிரசித்தமாக அறியப்பட்ட விஷயம் ஆணவ இருள். அது ஆணவப் பெருங்காரிருள் எனப் பட்டது. இருள் வகையனைத்திலும் மிகப் பெரியதும் கடுமையானதும் என்பது பற்றி அது பெருங் காரிருள் எனப் பட்டது. சிவப்பிரகாசம் என்ற சித்தாந்த நூல் ஆணவ இலக்கணங் கூறு கையில், 'இருளொளிர நீண்ட மோஹம்' எனக் குறிப்பிட்டி ருத்தல் காணலாம். (ஆணவத்தோ டொப்பிடில் சாதாரண உலகிருள் ஒளி யென்றே சொல்லி விடக் கூடியதா யிருக்கும் என்பது இதன் பொருள். அவ்விருள் நீக்கம் தமக்கு வாய்ப்பதற்கு உரிய சாதனைகளில் ஈடுபடுவோர் சாதகர் ஆவர்.
அவர்கள் சாதனையாவது சரியை கிரியை யோக நெறிவழி சரித்தல். சரித்தல் - ஒழுகுதல். அதற்கு முன்னோடியாக இருவினைத் துயர்க்கஞ்சித் தேவி திருவடிகள் தஞ்சமென்றணுகும் நிலை வாய்க்க வேண்டும். அது முதலடி முன் பகுதியிற் குறிக்கப் பட்டுள்ளது. சாதகர் கொண்டுள்ள இருள். அருமை தோன்றப் பெருங்காரிருள் என்றதற் கெதிர் சந்திரனுடற்கறையின் எளிமை தோன்றச் சிறுகறையிருள் என்றிருத்தல் கருதத்தகும். அதற்கியைய அகற்றல் ஒன்றோ என்பதற்கு அகற்றல் ஒரு பெருங் காரியமோ என உரைக்க. அத்துடன் ஒன்றோ என்பது மாத்திரமா எனவும் பொருள் பட நிற்றல் பின் வரும் கூன்நிமிர்த்தல் சம்பவத் தொடர்பால் அறிய வரும். நெடுமாறன் கூன் நிமிர்த்தது நீற்றினால். இங்கு சந்திரன் கூன் நீங்க வேண்டியிருப்பது சக்தியாகிய தேவியால். இவற்றிடைப் பொருத்தம் என்ன என எழக் கூடும் ஆசங்கையை விலக்குகிறது நிகரிவடகான திருநீறு என்ற தொடர். 'பராவண மாவது நீறு' (பரா - சக்தி) என்கின்றது சம்பந்தர் தேவாரம், நேர்தல் - நேர்பட வருதல். ஆதாயமாம் - லாபமாகும். அளி - கருணை
7. மற்றொரு வகையில் தான நிலை உரைக்கின்றது செய்யுள். சந்திரனது நிரந்தர நியமக் கடமையாகிய உலகிருள் நீக்கம் அவன் சங்களைக்கு வந்த பின் அவன் முயல்வில்லாமலே நடைபெற வாய்ப்புண்டு எனக்கூறி இன்னின்ன ஏதுக்களால் அது சாத்தியமாதல் அமையும் எனவுந் தெரிவிக்கப் படுகின்றது. சங்களையில் மிகுத்துள்ள சங்கீன் முத்துக்களின் ஒளியும், வழிபட வரும் அன்பர்களின் உடலிற் பரவிய வெண்ணீற்றொளியும் ஏதுக்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் நன்மை விளைதனைத் தெரிவிக்கும் பரவலான உண்மை ஒன்று பாடல் முதலிற் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது. ஒரு இடத்துக்குரிய தலவிசேடங் காரணமாக அவ்விடத்தைச் சார்ந்தவர் குறை நீங்கிச் சுகமுறுதல் முதலில் என்பது அவ்வுண்மை. அப்பொதுவுண்மையை அமைத்து, சந்திரன் சங்களையிற் பெறவிருக்குஞ் சிறப்புண்மையை அதன் மூலம் சாதித்திருப்பதாகிய இப்பொருளழகு வேற்றுப் பொருள் வைப்பு என்ற அணியாகக் கொள் ளப்படும்.
சாத்தியமாகுதல் - கை கூடுதல். சரதம் - உண்மை. சகத்திருள் - உலகவிருள். உழன்று - வருந்தி. ஆயுளிற் செம்பாதி விரயஞ்செய் சிரமம் - ஆயுட் காலத்திற் சரிபாதியை விரயமாக்கும். அனுப்பு - பூர்வபக்ஷம் அபரபக்ஷம். இரண்டிலும் சந்திரன் இருள் நீக்கத்தில் ஈடுபடும் வெவ்வேறு கால அளவுகளை ஒன்று கூட்டினால் அவனது பூரண ஆயுட் காலத்தில் சரிபாதியாகும் என்க. சிரமமேன் என்றது அச்சிரமத்தை இன்னும் மேற் கொள்ளவேண்டியிருக்கும் அவசியமில்லை, அதை இனி அடியோடு விட்டு விடலாம் என்றபடி. செம்மாந்திருக்கலாம் இறுமாந் திருக்கலாம். அதாவது, கடமையென்ற கவலையின்றி மகிழ்ந்திருக்கலாம். என்பது. உடலுழைந்தீன் முத்தம் - உடல் வருந்தி ஈனுகின்ற முத்துக்கள். உடலளவு நீற்றினொளி – உடலிற் பரவியிருக்கும் நீற்றினது ஒளி. திண்ணம் - நிச்சயம். ஆர்ந்த - நிறைந்த. அன்பர் வதி சுதுவை - அன்பர்கள் வதியும் (வசிக்கும்)சுதுவை.
8. தேவியைச் சார்தலினால் சந்திரன் பெறத்தகும் நன்மைகள் மற்றும் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளதான நிலையுரைக்கின்றது இச்செய்யுள்.
தேவியைச் சார்தல் மூலம் சந்திரனுக்குள்ள பழியெலாம் மறைந்து தெய்விகம் பொலியும். அவன் பேரில் உலகு சொல்லும் நிந்தனைகள் அகல வந்தனைகள் சேரும். மேல் அவன் தேவிபக்தன் என்ற மகிமைக்குரியவனாகலாம். சாலோக சாமீப பதவிப் பேறுகளை அடையலாம் என்பன நன்மைகள். தேவியைச் சார்தலால் சந்திரன் தெய்விக பிரபையுறுவன்ப என்பது பொருத்தமான மூன்று திருஷ்டாந்தங்கள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. பொன்மலையை அணுகும் காகம் பொன்னாதல், பூவிற்படியும் வண்டு தேனாதல், சந்தனமரக்காட்டில் புள்மணமும் நன்மணமாதல் என்பன அவை. பொன்மலைச் சாரல் படர் - பேருமலைச் சாரலிற் செல்லும். காகமும் - 'உம்' இழிவுசிறப்பு.
காய்சின ஆனை உரித்தான் கனக மலைவருகே
போயின காக்கையு மன்றோ படைத்தது பொன்வண்ணமே
பொன்வண்ணத் தந்தாதி.
போத்திங் குலாக வாயேல் - போந்து இங்கு - இங்குப் உலாவுவாயாயின். நின்னவாம் பழி - உன்னைச் சார்ந்தனவாம் பழி. நின்ன – பலவின்பாற் படர்க்கைக் குறிப்பு வினையாலணையும் பெயர். தெருப்பயல் நீராகும் - அவை தம் இருப்புந் தோன்றாமல் மறையும். காமி கயரோகி என்பன சந்திரன் பேரிலாம் நிந்தனைகள். சந்திரன் வியாழபகவானுக்குச் சிஷ்யனாயிருந்த காலத்தில் ஒரு தடவை அவர் மனைவியாகிய தாரையோடு காதல் தொடர்பு வைத்திருந்தான் என்பதால் அவன் காமிக்ஷயம் என்றால் தேய்தல். தேய்தலாகிய நோய்க்காளாயிருத்தல் பற்றி அவன் க்ஷயரோகி. இதன் தமிழ்வடிவம் கயரோகி. நிகழ மேல் வரும் நாள் - மேல் நிகழவரும் நாள். சாலோகி - சம உலகில் வாழ்பவன். சாமீபி - சமீபத்திலிருப்பவன், சரியை அநுஷ்டானப்பலன். சாலோகம், கிரியை அநுட்டானப்பலன் சாமீபம் ஆதல் கருதத்தகும். சகம் - உலகம். அன்னநடை பலுஞ்சின்னச்சிட்டு என்பது அருமை. வாசகம்.
9. சந்திரன் வராமை பற்றித் தேவி சினமுறுதலாகிய தண்டநிலை பற்றி யரைக்கின்றது இச்செய்யுள். சினத்தலுந் தண்டித்தலோடொக்கும். தேவியின் சினத்தைச் சாந்தப படுத்தும் பாங்கில் அயலிலுள்ளார் கூறியனவாகவுள்ள சில் சமாதானங்களும் இடம் பெறுகின்றன. இத்தொடர்பில் காலநிலைக்கொத்த வகையில் அவற்றிலொன்று இடம் பெற்றிருத்தல் குறிப்பிடத்தகும். வான் சரிந்து இடித்து உருத்து மின்னும் சனியன் ஆம் இயந்திரக்கழுகு என்பதுஅது. வான் - ஆகாயம். சரித்து - திரிந்து. இடித்து - இடியோசை செய்து. மின்னல் – மின்னல் தோன்றிப் பளிச்சிட்டாற்போல அக்கினிக் குண்டு கக்கும். சனியன் - அழிவு காரி. இயந்திரக்கழுகு - இயந்திரம் பூண்ட கழுகு; போர்விமானம். கிரக சம்மேளனப் பராக்கு இரண்டாவது சமாதானமாயுள்ளது. கிரகங்கள் நேராக ஒருகோட்டில் நிற்கவரும் ஒருநிலை கிரகசம்மேளனம்எனப்படும். சம்மேளனம் - கூடிக்களித்தல் தாழ்த்தனன் - தாமதித்தான். நின்முன்னே போதாதிரான் - உன்முன் வராதிருக்கமாட்டான். அஃது அச்சமாதானங்களை புகன்றும் சொல்லியும்.
‘அருமை உடைய அரண்சேர்ந்தும்
பெருமை உடையார் செறின்”
என்பது பெரியார்ப் பிழைத்தலின் பிழைகேடாக வள்ளுவரால் உணர்த்தப்பட்ட ஒன்று. அக்கருத்தை
இச்செய்யுள் முதலிற் கொண்டிருத்தல் காண்க. விளைவு - பலன். பேணு தமிழ் - விரும்பப்படுந் தமிழ்.
புகன்றிடும் பெற்றி - சொல்லியிருக்குந் தன்மை. விளைவு அறியாய்கொல் என்றதும் தண்டமுணர்த்திய
குறிப்பேயாம்.
10. தேவியின் சினநிலை உக்கிரமடைந்திருப்பதாகவும் அதனால், நிகழப்போகும் பாதிப்பு மிக
மோசமாயிருக்குமெனவுந் தண்டநிலை உரைக்கின்றது இச்செய்யுள். தக்கன் வேள்வியில்
வீரபத்திரனால் சந்திரன் பெற்றதாகச் சொல்லப்படும் தண்டனையை இங்கு நினைவூட்டியிருப்பதும்
அங்கு வந்த வீரபத்திர உருவும் தேவியினது சினத்தின் ஒரு கலை யெனக் குறிப்பிட்டிருப்பதும்
மிகப் பொருத்தமாகும். அத்தண்டனைத் துயர் மீண்டும் மறுதலிக்க இடங்கொடாதே என்றிருத்தல்
குறிப்பிடத்தகும். சகிப்பரும் நிலையினன் - நின் தாமசஞ் சகிப்பரும் நிலையினள் எனப் பின்வருந்
தொடரை முன் சேர்த்துக் கொள்க. சகித்தல் - தாங்குதல். தாமசந்தணந்து - தாமம் நீக்கி. ஊங்கு -
உன்னிடத்தில். தகிப்பது அனவெகுளி - எரிப்பது போலுங் கோபம். அம்மை விறல் - அம்மையாகிய
இத்தேவியின் விறல். விறல் - நிக்கிரஹ ஆற்றல். தக்கன் யாக மூலம் சிவன் தலைமையை அவமதித்த
தவற்றை எடுத்துரைக்க அம்மை நேரிற் சென்ற போது தக்கன் அம்மையையும் அவமதித்ததனால்
அம்மைக்கெழுந்த சீற்றத்தின் விளைவே பின்விளைவுகளாம் என்பது சரித்திரம். சாய்ந்திட்டது -
அழித்தது. மகிப்பட நினைத்தேய்த்த மற்றவன் வலி - மகி- பூமி. மகிப்பட - பூமியோடு அரையுமாறு. மற்று - அசை. அவன் - வீரபத்திரன். அகிப் பகை; அகி - பாம்பு. பாம்புக்குப் பகையாளியாகிய மயில் அகிப்பகை எனப்பட்டது.
ஒயில் -சாயல். ஆலும் - அசையும். இங்ஙனங் கூறியதனால், இயல்பாகவே பாம்பைத் தன் பகையாகக் கொண்டு அஞ்சுகின்ற சந்திரன் அதற்கஞ்சாது இவளிடம் வரலாம். ஏனெனில், இவள் சாயல் பாம்பின் பகையாகிய மயிலின் சாயலாதலின், மயிலைக் கிட்ட அணுகாமை போல இவளையும் பாம்பு கிட்ட அணுகாது என்ற தொனிப்பொருள் அமைந்திருத்தலுங் காணலாம்.
--------------------------------------------
அம்மானைப் பருவம்
பண்டைத்தமிழ் நாகரிகமறிந்த பாரம்பரியமான மகளிர் விளையாடல்களில் ஒன்று அம்மானை. இக்காலத்து நடை முறையிலிருக்கும் மகளிர் பந்தாடல் போல்வது அது. பிள்ளை வளர்ச்சியின் பதினைந்தாவது மாசத்திற்கு மேல் நிகழும் நிகழ்ச்சியாக இது இடம்பெறும். முத்து, பவளம் போன்ற உயர்ந்த இரத்தினக் கற்பதித்த பந்துருவான பொருள்களை மேலெறிந்து எறிந்து ஏந்தி, ஏந்தி விளையாடும் விளையாடலாக இருந்ததாக இது பழைய நூல்களால் அறிய வருகின்றது: குமரகுருபரர் சிவஞான சுவாமிகள் போன்ற மகாமேதைகள் தாம் இயற்றிய பிள்ளைத்தமிழ்களிலும் இத்தன்மை விளக்கமுறப் பாடியிருக்கிறார்கள்.
பிள்ளைத் தமிழ்கள் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகை. எல்லாப் பிள்ளைத்தமிழ்களிலும் இடம்பெறும் பருவ நிலைகள் பத்தே. இவற்றில் முதல் ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொது. இறுதி மூன்று பருவங்களே வேறுபட்டு அவ்வவற்றுக்குச் சிறப்பாக அமைவன. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் அவை முறையே சிற்றிற்பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என அமையும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் அவை அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊஞ்சற் பருவம் என அமையும். இது பெண்பாற் பிள்ளைத்தமிழ் ஆதலின் அம்முறையே எட்டாம் பருவம் அம்மானைப் பருவமாக அமைகின்றது.
விளையாடும் பிள்ளையின் வருணனையோடு அம்மனைகளின் வர்ணனையும் அவைசார்ந்த கற்பனை வளத்துடன் இப்பருவப் பாடல்களில் இடம்பெறும்.
1. பாட்டுடைத் தலைவியாகிய புவனைப்பிள்ளை தன்னொத்த சிறுமியர் பலர் மத்தியில் அன்னத்திரட்குள் அரசன்னம்போல் நின்று அம்மனையாடுங் காட்சியை வர்ணிக்கின்றது இச்செய்யுள். கற்பனைப் போக்கில், சுதுவைக்கு அன்னம் வந்ததற்குக் காரணங் கற்பிக்கு முகமாக, சுதுமலை - வெள்ளி மலை என்ற பெயரொப்புமை பற்றி இமயத்திலுள்ள அந்த வெள்ளி மலையின் மானசவாவியை இடமாகக் கொண்ட அன்னங்கள் இங்கும் வந்திருப்பதாக வர்ணனை அமைகிறது. அம்மனையாடுஞ் சிறு மகளிர் பற்றிய வர்ணனையும் விரிவாக இடம்பெறுகிறது. முதலடியும் இரண்டாமடியின் முன்பாதியும் மானச வாவியிலுள்ள அன்னம் இங்கு வந்தவாற்றைத் தெரிவிக்கும். வான்புகழ் - சிறந்த புகழ். மானச சரோவரம்: சரஸ் - குளம். சரோவரம் - குளங்களில் மேலானது. அன்னமென்மழ இனம் பார்ப்பு - அன்னமாகிய மென்மையும் இளமையுந் ததும்புஞ் சிறு குஞ்சு. மழ என்பது இளமையென்ற பொருள்தர இருப்பதால் அடுத்துவரும் இளம் என்பதன் பொருள் சிறுமை எனக் கொள்ளலாம் - அல்லது மழ இளம் மிகவும் இளைய எனலும் ஆம். பெயரொப்புமை:- சுது - வெள்ளை என்ற நோக்கில் சுதுமலை - வெள்ளிமலை எனத் தோன்றும் ஒப்புமை. தழீஇ - தழுவி இது சின்னவொரு வெள்ளிமலை என்றது இமயத்திலுள்ளது
பெரிய வெள்ளிமலை என்ற நோக்கில். ஏய்ப்ப – ஒப்ப. செங்காலி மீதலர் செவ்விமிகு தாமரையென்பது சிறுமியர் முகவர்ணனை. செங்காலி - நீலோற்பலம், நீலோற்பலம் தன்மேல் அலரப்பெற்ற தாமரை என்றது உருவகம். கண் கள் செங்காலியாகவும். முகம் தாமரையாகவும் உருவகிக்கப் பெற்றுள்ளது. தாமரைச் சிறுமுகம் - தாமரை போலும் சிறிய முகம். பொன்னந் தளிர்ப்பதம் - பொற்றளிர் போலும் பாதம். பொன்னம் என்பதில் 'அம்' சாரி யை. சிறுமகார் - சிறு மகளிர். ஆயநடு - கூட்டத்தின் நடு, ஒளிவலயம் - ஒளிவட்டம், கையசைவு இடையீடின்றி நிகழ்வதாலமையும் ஒளிவட்டம்.
2. நிலாமுற்றத்தில் இடம்பெறும் இவ்வம்மனை ஆடலின் போது அன்னையர் உடனிருந்து ஆடலழகை ரசிப்பதாகவும் தோழியர் சீர் பாராட்டுவதாகவும் வர்ணிக்கின்றது இச் செய்யுள். முதலடி நிலாமுற்றத்து ஒளி பற்றிய கற்பனையைக் கொண்டுள்ளது. அதன் ஒளி வளம் தேவியாகிய பிள்ளையின் உள்ளத்தில் ததும்பும் உவகையொளியே மேலெழுந்து பிரகாசிப்பதாகவும் தேவியை உணர்ந்து போற்றும் உத்தமர் எல்லாரும் பாடும் புகழ் ஒருங் குற்று மேற்சென்று பிரகாசிப்பதாகவும் அமைகிறது கற்பனை. உண்ணிலா வுவகை யொளி - உள் நிலாவு (நிலாவும்) உவகை ஒளி உள்ளத்தில் விளங்குகிறது உவகையொளி. ஊங்குற்று -- ஊங்கு + உற்று - மேலிடத்திற் பொருந்தி யமைந்து. ஊங்கு மேலிடம், தம்மில் உனை உணர்ந்து - உனைத் தம்மில் உணர்ந்து நீ தோன்றி விளங்குதலைத் தம் அகத்தில் வைத்துணர்ந்து. அன்னையர் உடனிருந்து ரசிக்குமாறு இரண்டாவதடியில் வருகிறது. விம்மிதம் - ஆச்சரியம். விழி வாய் திறந்து - கண்ணாகிய வாயைத்திறந்து என்றது கண்ணே வாயாக என்றபடி, அள்ளிக்குடித்தல் எனப் பின்வருவதற்குப் பொருந்த விழி வாயாக உருவகிக்கப்பட்டது. பண் உலாம் மதுகரம் - பண்ணிசை விளங்கும் வண்டு. ஏமாப்ப - மகிழ்விற் பெருமிதமுற. பாவையர் - தோழியர்.
தேவியின் இவ்வம்மனை யாடலின் போது அவள் பாத பரிசம் தன்னிற் பொருந்துதலாற் பூதேவி அவசமுறுவதாக மூன்றாமடி இறுதியும் நான்காமடியின் முதலிரு சீருந் தெரிவிக்கின்றன. பாதபரிசத்தின் - பாதபரிசத்தினால். ஆன்ற – அமைந்த. அண்ணல் ஆர் அவசம் - பெருமையான வச மிழப்பு.
3. அம்மனையாடலின் போது தேவியாகிய பிள்ளையின் திருமேனியிற் காணும் பல வித அசைவுகளை வர்ணித்து அவற்றைக்காணுங்கால் தொண்டருளம் அன்பலையுமாறு கூறு கின்றது இச்செய்யுள்.
வாண் முகத் திங்கள் - வாள் முகம் திங்கள் - ஒளியுள்ள முகமாகிய திங்கள். ஒளிவட்ட மிட்டலைய - ஒளிவட்டத்தைத் தோற்றிக் கொண்டு அலைய. மைஞ் ஞீலம் - மைந்நீலம் போலி வகையால் மைஞ்ஞீலம் ஆயிற்று. மைஞ்ஞீலம் - கருநீலம். தாடங்கம், தேவியின் காதணிக்குரிய சிறப்புப்பெயர். தோத்திரப் பாவிசை கொள் தொழும்பர் -தோத்திரப்பா இசைத்தலைச் செய்யுந் தொழும்பர். அதாவது பாடிப் பாடித் தொழும்பு செய்வோர். நான்காமடி தேவியை ஆடும் எம்மான் பன்னி (பத்தினி) எனக் குறிப்பிடுகிறது. அதற்கியைய மூன்றாமடிப் பின்பகுதி ஆட்டவியல் அழகு வர்ணனையாக அமைகிறது. அக்கலைய - அக்கமாலையலைய. அக்கமாலை - உருத்திராக்க மாலை.
4. அம்மனை யாடலின் போது நவரத்தினப் பந்துருவான அம்மனைகளை மேல் நோக்கி எறிதல் விண்ணுலகுக்கு நன்றிக் கடன் செலுத்தலாயமைகிறது. எனக் கூறுகின்றது இச் செய்யுள். விண்ணுலகுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டுவதேன் என்பது பற்றிய விளக்கம் முதல் ஈரடிகளிலும் வருதல் காண்க. விண்ணுலகு மண்ணுலகுக் கியற்றும் நன்மைகள் நிரல் செய்யப்படுகின்றன. அவை முறையே, வான் மழை பொழிதல், நிலவு நல்கல், தாது மூலங்களளித்தல் மின் காந்த ஒளியலை, ஒலியலைகளை அளித்தல். மழை பொழிதல், நிலவு நல்கல் இரண்டும் வெயில் நல்கலையும் ஞாபகப்படுத்தும். இம்மூன்றும் உலகுயிர்களின் தோற்றம், வளர்ச்சி, அநுபவம் என்பவற்றுக்கு இன்றியமையாதனவாதல் பிரசித்தம். தாது மூலங்கள் இரும்பு, கந்தகம். செம்பு, துத்தநாகம் முதலான உலோக வர்க்கங்களும் இரேடியம் உரானியம் தோரியம் முதலாய நுண்பொருள் வர்க்கங்களும் உலோக வர்க்கங்கள் நிலத்தின் கீழ் (பூமிவயிற்றில்) இருந்து கிடைப்பனவாதல் பிரசித்தம். ஆனால் இவையும் மேலுலகிலிருந்து அணுத்துகள் பிரமாணமாக ஏழுலகக் கிரமத்தில் (கயிலாயம் முதல் பூலோகம் வரை) படிப்படியாக இறங்கி வந்து எப்படியோ பூமி வயிற்றிற் புகுந்து தங்கி அங்குள்ள அதி உஷ்ணத்தினால்
ஒன்று கூட்டி உருவாக்கப்பட்டு மீள மேல் மேல் மிதந்து வந்து நிலத்தின் கீழ் மனிதர் கண்டெடுக்கும் நிலையை எய்துகின்றன என்பர் ஞான திருஷ்டியாளர் என்ற ஒருவகை அகமுக ஆய்வியல் நிபுணர்கள். இயந்திரச் சிற்ப வித்தகம் ஊக்கும் மின் காந்தம்:- சிற்பவித்தகம் - தொழில் நுட்பத்திறன். அதனை
ஊக்கும் மின்காந்தம். மின்காந்த ஒளியொலியலை - காந்தமும் ஒளியொலியலைகளும். வியத்தக - ஆச்சரியமுற. வானத்திலுள்ள ஒளியலை 'அன்ரானா' என்ற சாதன மூலம் ஒளிப்பிழம்புகளாகித் தொலைநோக்கியிற் காணப்படும். வியப்பு இதற்கு காரணமாகும். நன்றிப்பான்மை புரி கடன் - நன்றித்தன்மை செலுத்துங்கடன். பார்மகள் – பூதேவி தன்னவாம் – கன்னவாம் - தன்ன + ஆம். தன்னிடத்துள்ளனவாம். மேன்மை அன்ற சீராயம் – மேன்மை அமைந்த சிறந்த கூட்டம்.
5. பிள்ளை புவனேஸ்வரியே நமக்குப் போகமாயும் போக்கியமாயும் வந்திருக்கையில் முத்துப்பவளம் முதலாய போக்கியங்கள் நமக்கேன் என்றெழுந்த பிரபஞ்ச வைராக்கியம் காரணமாக அம்மனை வடிவில், அவற்றை முன்பு பூமிக்குத் தந்துதவிய அளகை அமராவதி என்ற தேவபட்டணங்களுக்கு அனுப்பிவைக்கும் நோக்கில் அம்மானையாடல் நிகழ்வதாக ஒரு புதிர் தோற்றுவிக்கிறது இச்செய்யுள். அந்நோக்கிற் சிறுமியர் பலர் சேர்ந்தாடக்கண்டு உவர்களொடு நானுமொன்றென்ற எண்ணத்தாற் புவனேஸ்வரிப் பிள்ளையுஞ் சேர்ந்தாடுவதாக இதில் வருங் கருத்துச் சுவாரஸ்யமானது. மெத்தும் அருள் வித்தகம் - விரும்பப்படும் அருள் திறன். மேவி – வந்திருந்து. போகம் - அநுபவம். போக்கியம் -அநுபவப்பொருள். விளக்குமாறு உறலின் - விளக்குமாறு பொருந்துதலால். வேறே -
அவட்கு வேறாகவுள்ள. நத்தும்ஒளிமுத்து:- நந்தும் - மிகும். நமக்காவது ஏது - நமக்கு ஆகக்கிடப்பது என்ன. அளகை – குபேரன் பட்டணம். அமராவதி - இந்திரன் பட்டணம். எடுத்து ஓச்சி - அங்கு உய்த்தும்: - ஓச்சி - மேல்வீசி. உய்த்தும் - செலுத்துவோம். கடுப்ப -ஒப்ப. ஒன்றி - இயைந்து. என் அத்தகைமை என்கின்ற அத்தகைமை உவர்களோடு நானுமொன்று என்றதனாலே ஆன்மாக்களுடன் புவனேஸ்வரி (சத்தி) கலப்பினால் ஒன்றாய் நிற்றலாகிய சைவசித்தாந்த உண்மை நினைவிக்கப் பட்டதாயிற்று.
6. கீழாதாரம் மேலாதாரம் ஒன்றுமில்லாமல் விரிந்து கிடப்பது வானவெளி.
இவ்வெளியில் அநேக அண்டங்கள் பற்றுக்கோடின்றியே அமைந்து நிலைத்தளம்பாமற் சுற்றிக் கொண்டிருப்பது ஆய்வுணர்வுக்குப் பெரும் புதிராகும். ஏலவே சிருஷ்டிகாலத்தில் அவற்றை அவ்வாறு நிற்பித்தவள் தேவி. எந்நிகழ்ச்சிக்கும் ஒத்திகைபார்த்தல் என்றமுன் நிலைமையொன்று உண்டு என்றநோக்கில் தேவி கீழ்நின்று அண்டங்களை ஒவ்வொன்றாக மேல்வீசி அவை சீராக நிற்குமாற்றை ஒத்திகை பார்த்த நிகழ்ச்சியே இந்த அம்மானையாடல் என ஒருநயந்தோன்றக் கூறுகின்றது இச்செய்யுள். அத்தொடர்பில் நழுவுமவை மீளமீள அடித்தெற்றுதல் என்ற கருத்துப்பகுதி குறிப்பிடத்தகும்; மகளிர் பந்தாடற் பாங்கு அதிற்பட் டொளிர்தலின்.
நீடுவான் தொக்கு ஒளிர நிலவும் பேரண்டங்கள்:- தொக்கு - நிறைந்து, ஒளிர - பிரகாசமுற, நிலவும் - அமையும். நிராதரமாக - கீழ்மேல் ஆதாரமென ஒன்றில்லாமலே. நிரலே - நிரையாக. நிற்பித்தற்கு ஒத்திகை நிகழ்த்தும் நாள் என்றது அத்தகைய ஒருநாள் இருந்ததாகக் கருத்திற் கொண்டுரைத்ததாம். நபஸ்தலத்து உற ஓச்சி - நபஸ்தலம் - ஆகாயம். நளின செங்கரதலம்:-- நளினம் – தாமரை. கரதலம் – உள்ளங்கை. தாமரையிதழ் போற் சிவந்த உள்ளங்கை. எழில் நாம் காணவோ இது என்றது தாயராகிய இரசிகர் கூற்றாக அமைந்தது. எழில் - அழகு. காணவோ - காணச்செய்வதற்குப் போலும். இதெனவன் பூடுருக - இது என் அன்பு ஊடு உருக. ஊடு உள்ளே தாயர் புன்முறுவல் ஒளியின் உள்ளம் பூரிக்க, ஆயம் நின்று ஆரவாரிக்க நாம் காணவோ என்ற தாயார் பாராட்டை ஆமோதித்த பதிலாக அமைகிறது புன்முறுவல். ஆயம் – கூட்டம். தாயர் பாராட்டும் புன்முறுவல் ஆமோதிப்பும் நிகழக் காண்கையில் ஆயத்திற்குக் குதூகலம் நேருதல் இயல்பாதலின் அதுதோன்ற ஆயம் நன்கு ஆரவாரிக்க எனப்பட்டது. அம்மானையாடல் சார்பான ஒரு அக்களிப்பு விசேஷம் இதனால் தெரிவிக்கப் பட்டதாயிற்று.
7. பிள்ளை முத்தினால் இழந்த அம்மனையொன்றைக்கைக் கொண்டாடுகையில் பிள்ளையின் முகவாளி, கையொளி கண்ணொளிகள் அதனிடத்திற் பிரதிபலித்தல் சம்பந்தமான ஒரு கற்பனையை உட்கொண்டுள்ளது இச்செய்யுள். முகவொளி நிலவு வெண்மை. கையொளி சிவப்பு. கண்ணொளி கருமை. இந்த மூவகை நிறமும் ஒரே அம்மனையிற் பட்டுத் தோன்றுதலில் வைத்து முக்கியமான சைவசித்தாந்த உண்மையொன்று இங்கு புலப்படக் காட்டப்படும் அருமை குறிப்பிடத் தகும்.
சைவசித்தாந்தங் கூறும் தத்துவங்கள் முப்பத்தாறில் ஒன்று (24 ஆவது) பிரகிருதி தத்துவம். அது முக்குணங்களுந் தோன்றுதற்கிடமானது. முக்குணங்களில் ஒன்று சத்துவம்; அதன் நிறம் வெண்மை. ஏனையது தாமசம்; அதன் நிறம் கருமை. இங்ஙனமாதலின் மூன்று நிறங்கள் தன்னிடம் ஒக்கத் தோன்ற உள்ள முத்தம்மனை, அதே மூன்று
நிறங்களையுடைய முக்குணங்களைத் தன்பாற் கொண்டுள்ள பிரகிருதி (தத்துவ) நிலையைத் தோற்றுவதாகக் கூறுதலில் அருத்தமுமுண்டு பொருத்தமுமுண்டு. அதிலும் இத்தன்மையை இரசிகர்கள் கண்டு 'உதுகாண்' எனச் சுட்டிக் காட்டுவதாகக் கூறக் காண்டலில் இரசனைக்கும் இடமுண்டு. காணப்படுவதாகிய அம்மனையியல்பில் வைத்துக் காணப்படாததாகிய பிரகிருதி இயல்பைக் காட்டுதலில், கண்டதைக் கொண்டு காணாததை உணர்த்தல் என்ற உத்தி அமைதலுங் கருதத் தகும். முளரிக் கரதல ஒளி - தாமரை போன்ற உள்ளங்கை ஒளி. மெத்துறும் - விரும்பத் தகும். மேவு இருள் தாமசம் - இருள் மேவும் தாமசம். திரிகுணம் - முக்குணம். திறங் காணூஉ - தன்மையைக்கண்டு. பிரகிருதி உதுதான் நிலை பாணியில் உள்ள வாசகம். காண் - முன்னிலையசை. ஓவாதே --இடைவிடாமல்.
8. நவரத்தினங்கள் ஒவ்வொன்றினாலுந் தனித்தனி அமைந்த ஒன்பது வகை அம்மனைகள் மேலெழுவதால் நவக்கிரக லோகத்தில் எழுவதாகக் கூறக் கூடும் கலவர நிலை ஒன்றை உணர்த்துகிறது இச்செய்யுள். இவற்றை (இன்றைய விஞ்ஞானிகள் மேற்செலுத்தும்) உபக்கிரகங்களாகக் கருதி நவக்கிரகங்கள் தத்தம் பதவிகள் ஸ்திரமற்றுப் போய் விடும் எனக் கவல்வதாக உரைக்கப்படுகின்றது அம்மட்டிலமையாமல் நவக்கிரகங்கள் தேவியை நோக்கி இவற்றின் தாக்குதலுக்குட் படாமல் நம் பதங்களின் ஸ்திரத் தன்மையைக் காத்தருள் என வேண்டுவதாகக் கூறுமளவில், கற்பனை சிறந்து காட்டுதல் கவனிக்கத்தகும்.
முளரிச் செவ்வொளி கால் முதுநற் பதுமராகம்: பத்ம ராகம் என்பது நவரத்தினங்களில் ஒன்று. பத்மம் - தாமரை. ராகம் - சிவப்பு. தாமரைச் சிவப்பு நிறம் உள்ளது. இப்பெயர்க் காரணம் வெளிப்பட முளரிச் செவ்வொளி அடையாக்கப் பட்டது. முளரி - தாமரை, கால் - வீசும். வித்துருமம் - பவளம். வித்துருமத்த - பவளத்தைக் கொண்டுள்ளன. நவ கோள் - நவக்கிரகம். நனி வெருவி - மிகப் பயந்து. நாடி - அவற்றின் அவல நிலையை நோக்கி. அபய அத்தம் - அபயகரம்.
9. சிவயோகிகளிடத்தில் அவர்களின் மூலாதாரத்திலிருந்தெழும் குண்டலியைத் தனக்கு உடலாகக் கொண்டு மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை தொடர்ந்து முறையே குமரி, தருணி, பதிவிரதை என்ற நிலைகளில் அமைந்து சக்தி அவர்க்குப் பேறருளுந் திறம் பேசுகின்றன இச் செய்யுளின் இரண்டாம் மூன்றாம் அடிகள். பங்கமற - குற்றம் நீங்க. குற்றம் - மலக் குற்றம். பயிலுநர் - பயில்வோர். மூலத்தானம் - மூலாதாரம். மூலாதாரத்தில் அதன் நிலை குமரி. கொங்குறு கூந்தல் - நறுமணம் வீசும் கூந்தல். கொங்கு - நறுமணம். இடையில் - அநாஹத சக்கரத்தில். அங்கு தருணி; இளமைக் கோலமுள்ளவள். குளிர்வுறு சகஸ்ர தளம் - குளிர்ச்சி தரும் சகஸ்ரதளம். அங்கு பதிவிரதை. இந்நிலைகளில் நின்று ஆத்மாவைச் சகஸ்ரதளத்திலேற்றிச் சாந்தமடையச் செய்த பின் அங்கு தோன்றும் சதாசிவர் பக்கத்தில் சக்தியும் தங்கி விடும் என்கிறது பாடல். சகஸ்ரதளம் ஆன்மா பிறவித் துயராகிய வெப்பம் முற்றத் தணிந்து சாந்தியுறும் இடம். அந்நோக்கில் குளிர்வுறு சகஸ்ரதளம் எனப்பட்டது. அங்குறு சிவன் - சதாசிவர். இப்பதி விரதை நிலையே மனோன்மணியுமாம்.
தொழுதழுவோர் முன் அருளே திருமேனியாய்க் கொண்டு தோன்றி அவர்களின் குறை முறை கேட்டுத் தீர்க்கும் பரவலான தேவி மகிமை இச்செய்யுள் முதலடியிற் பேசப் பெறுதல் காணலாம். சிவை - சிவன் பத்தினி.
10. ஆன்மாவை மலத்துயர் கெடுத்துத் தனது அறிவிச்சை செயல்வழி நிற்குமாறு அதை வழிப்படுத்திச் சிவாநுபூதியில் திளைக்க வைக்கும் தேவி பிரபாவம் கூறுகின்றது இச் செய்யுள். அத்துடன் மாயாமயக்கால் துயருறும் எம்மையும் ஏற்ற உபாயத்தால் ஆண்டருள் என வேண்டுதலுஞ் செய்கிறது.
கேழ்கிளருயிர்: கேழ் - நிறம். அது இங்கே நற்பண்புக்காகும். அதன் வழி, நற்பண்பு மிகும் உயிர் என்க. பக்குவான்மா என்பது தாற்பர்யம். கேதம் - துன்பம்; பிறவித் துன்பம். நின் கிளர்வுறு ... கேண்மை படுத்து என்ற பகுதி குறிக்குஞ் சித்தாந்த உண்மை விளக்கஞ் சற்று விரிவாக விசாரிக்கத் தகும்.
உயிருக்கு அறிவிச்சை செயல்களுண்டு. ஆனால், எப்போதைக்கும் சிவனது அறி விச்சை தொழில்களினாலேயே இயக்கப்படும். இருந்தும், உயிர் மலபந்த முற்றிருக்குங் காலத்தில் இவ்வுண்மையை ஒப்புவதில்லை. ஒவ்வொன்றும் தன்னறிவு தன்னிச்சை விளைவு எனத்தன் செயல் தருக்கித்திரிந்து அதனால் வினைகளைப் பெருக்கி மாயும்.
'தனித்துணை நீநிற்க யான் தருக்கித்
தலையால் நடந்த வினைத்துனை யேனை விடுதி கண்டாய் -
என்ற திருவாசகப் பகுதி இப்பொருளுண்மையை நன்கு விளக்கும். உயிரின் அந்தப் போக்கும்
அதன் மலவீறு தேய்தற்குரியது என்ற நோக்கிற் சிவமும் எதிரிட்டுத் தடுக்காமல் அதன் பின்னணியிற் பார்வையாளன் பாங்கில் நின்று கொண்டிருக்கும். எனினும், உயிரின் இத்தான்தோன்றிப் போக்குத் திரும்பும் தருணத்திற் கண்ணாயிருக்கும். சிவத்தின்
இந்த நிலையை 'ஓடிமீள்கென ஆடல் பார்த்திருத்தல்' என்று சித்தாந்த சாஸ்திரம் வர்ணிக்கும். இப் பாடலிற் கண்ட 'கேழ் கிளர் உயிர்' என்ற பக்குவ நிலை உயிரின் திருப்பு முனையாகும். அதுவரை வினைகளைச் செய்வித்து வினைப்பயன்களை அனுபவிப்பித்து வந்ததன் மூலம் இத்திருப்பு முனையை வருவித்ததும் சிவசக்தியே. இத்திருப்ப நிலை வந்ததும் வினையே துணையாகக் கொண்டிருந்த உயிர் நிலை மாறிச் சிவசக்தியே துணையெனக் கொள்ளும் நிலையையடையும். அந்நிலையை உயிருக்குப் பேறளிக்கும் தடயமாகக் கொண்டு சிவசக்தி அதன் மேல் உயிர் தனது (சக்தியினது) அறிவிச்சை செயல் வழியே நிற்கப் பண்ணி வைக்கும்.
அருள்வாய் மடுத்து - அருளின் கண் நிலை நிற்கப் பண்ணி. மறைதேர் தெய்விக வாழ்வு - வேதம் தெரிந்துரைத்த தெய்விக வாழ்வு. அது 'மறத்தல் ... லறியா வளர நுபூதி வாழ்வெனக் காட்டப் பட்டுள்ளது.
பேராப் பிரியா ஒழி வில்லா
மறவா நினையா அள வில்லா
மாளா இன்ப வாழ்வு என அதனைத் திருவாசகமும் பேசும். இதந்தரும் அன்னே - இதஞ் செய்யும்
அன்னே. என்னே இம்மாயை - என்ன இது எம்மையிப்படி அலைக்கும் மாயை. என்னே என்பது
எம்மாற் புரிய முடியாதிருக்கிறதே இதன் விசித்திரம் என்றவாறாம். மாயையியல் சாமர்த்தியம் -
மாயையின் ஆற்றல். அயல் போயற - அயற்பட்டு ஒதுங்க. நேரெய்தும் உபாயநெறி - நேராக.
(மாயை இடைஞ்சலின்றி) உன்னை எய்தும் உபாயவழி. அடுத்து - (எமக்குச்) சேர்த்து. எமையாண்டருள்
- எம்மையும் கேழ்கினர் உயிர்கள் ஆக்கி ஆட்கொண்டருள் என்பது பிரார்த்தனை. இப்பிரார்த்தனையோடு
சுபகரமாக நிறைவுறுகின்றது அம்மானைப்பருவம்.
------------------------------------------
நீராடற் பருவம்.
பிள்ளையின் நீர் விளையாடலைப் பொருளாகக் கொண்டியல்வது இப்பருவம். இது பிள்ளை
வளர்ச்சியிற் பத்தொன்பதாம் மாசத்தின் மேல் நிகழ்வதென்பர். தலஞ் சார்ந்த நீர் நிலை வர்ணனை நீர்
விளையாடல் சார்பான கற்பனை அலங்காரங்கள் என்பன இப்பகுதியிற் பாடற் பொருளாய் அமையும்.
பிள்ளை தெய்வப் பிள்ளையென்ற பாங்கில் சமயஞ் சார்பான தீர்த்தம் பற்றிய விளக்கங்களும் இப்பருவப்
பாடல்களில் இடம் பெறுதல் வழக்கே. சைவசமயச் சிறப்பியல்பாகவுள்ள வைதிகத்தன்மையை நிலை
பெறவைக்குஞ் சாதனங்கள் அக்னி வழிபாடு, நீராடல் என்ற இரண்டுமாம். ஆலய மூர்த்திகட்கும்
தீர்த்த விழா என்ற பெயரில் நீராடல் மங்கலம் நிகழ்த்தும் வழக்கம் இவ்வைதிகப் பண்பின்
வெளிப்பாடாகும். அதனால் இவை தனித்தனி வைதிகத்தின் வேர் எனப்படும் மகிமைக் குரியன.
அக்கருத்தும் இப்பருவப் பாடலொன்றில் இடம் பெற்றிருத்தல் கருதத் தகும்.
1. முற்றிலும் நீர் நிலை வர்ணனை உரைக்கின்றது இச் செய்யுள். முதலீரடிகள்; மக்கள் நீர் நிலைகளை
விரும்பி வீழ்ந்து தழுவிக் கொள்வதற்குக் காரணமான அவற்றின் கவர்ச்சித் தன்மையை ஒரு கற்பனைப்
படையலாக அளிக்கின்றன. பெண்களுக்குரிய இயல்பான மேனியழகு, தண்மை மென்மை யியல்புகள்
நீர் நிலைகளுக்குமிருத்தல் காரணமாகவே உலகம் அவற்றை வீழ்ந்து தழுவி இன்புறுகின்றது என்பது
கற்பனை. அதற்கேற்ப, நீர் நிலை அம்சங்களாகிய தாமரை, குமுதம், நீலம், இலைகள் என்பன மகளிர்
அங்கங்களாக உருவகிக்கப் பெற்றுள்ளன. 'வீழ்ந்து தழுவ நல்கி' என்ற தொடரின் பொருளாற்றல்
குறித்த கற்பனைக்கு உயிரூட்டமாயிருத்தல் கவனிக்கத் தகும். சகம் வீழ்ந்து தழுவல் மகளிர்க்கும் நீர்
நிலைக்கும் பொதுவாகும். நல்கி - கொடுத்து. அதாவது வீழ்ந்து தழுவு வோர்க்குப் பரிச இன்பத்தைக்
கொடுத்து. அதுவும் இரு பகுதிக்கு முள்ளதொன்றே. முகஞ் செய்ய, வாய்விள்ள, இமை திறக்க என
உருவகங்கள் தொழிற்பண்படுத்துக் கூறப் படலால் நீர் நிலை உயிர்ப் பொருளாக நிறுத்தப்படுஞ்
சிறப்பு இச்செய்யுட் சிறப்பாகக் கருதத் தகும். கயல் உகழ்ந்திட - கயல் மீன் பிறழ. பொற் பாசடை
பொன் + பசுமை + அடை. பொன்னொளிரும் பசுமையான இலை. பொன் மேனி மாமை -
பொன்னொளிரும் மேனியின் கொழுமை. சாங்கமும் அங்கம் அங்கி என்ற இரண்டுமொரே வகையாக.
செய்யுளின் மூன்றாவது அடி, நீர் நிலையில் நிகழும் ஆரவாரங்களை உணர்த்துகிறது. தேங்கு
புள் அரவம் - நிறைகின்ற பறவைகளின் ஒலி. திரங்கும் அலை - திரைகின்ற அலை. அலை மீதில்
அன்னமூர்வது தெப்பமூர்தலாக வர்ணிக்கப் பட்டுள்ளது. அன்னரவம் -அன்னத்தினது ஒலி. அரமகளிர்
- தேவுலகப் பெண்கள். நீர் மகளிர் - நீரர மகளிர் என்ற ஒரு வகைத் தெய்வ சாதியார். அவர்களுக்கு
நீரே வசிப்பிடமாவது. செய்துழனி - செய்கின்ற ஆரவாரம். என்றும் ஓவா - என்றும் நீங்காத.
குடைதல் - கைகளிரண்டும் அகல விரித்து நீர்ச்செறிவை இரு பக்கமும் அலைத்தொதுக்கிக்
கொண்டு நீருள் தலையை அமிழ்த்துதல் நீர் குடைதல் எனப்படும். விண்ணவரு மண்ணவரு
நண்ணவரு பெண்ணரசு:- நண்ண + அரும் + பெண்ணரசு - நண்ணுதற்கு அரிய பெண்ணரசு.
யாரும் தம் மனம், மொழி, மெய்களில் எதனாலும் அணுகமுடியாப் பிரபாவம் தேவியின் பிரபாவம்
ஆதல் கருதத் தகும்.
2. பிள்ளை நீராடுந் தீர்த்திகை சைவ மணம் நாறும் நீர் நிலையென்பதைக் காரண பூர்வமாக விளக்கி
அதன்கண் பிள்ளை நீராடுந் தோற்றப் பொலிவை வர்ணிக்கின்றது இச்செய்யுள். சன்மார்க்க நெறி
பற்றி ஒழுகுவோர் சமயாசார முறைப்படி ஸ்நானஞ் செய்து வருதல் வாயிலாகத் தீர்த்திகை சைவ
மணம் பெறுதல் குறிக்கப்படுகின்றது. அவர்கள் சிவசிந்தனையுடன் நீரிலிறங்கித் தமது தியான
பாவனைகளாலும் சிவமந்திர உச்சாரணத்தினாலும் நீரிலுள்ள சிவசத்தியை வெளிப்படுத்தி மூல
மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சூரியனைப் பார்த்தபடி நீரைக் கைகளால் தொட்டுச் சிரசில்
மூன்று முறை தெளித்துக் கொண்டு சிவசிந்தனையில் ஒருமுகப்பட்ட மனத்துடன் நீராடுவார்கள்.
உடல் வெப்பும் அழக்கும் நீங்குதலாகிய புறமுகப் பேற்றுடன் அகவெப்பாகிய பிறவி வெப்பம் அக
அழுக்காகிய மல அழுக்கும் நீங்கத் திருவருளில் திளைத்தாடுதலாகிய பாவனையால் விளையும்
அகமுகப் பேறும் இவ்வகை நீராடலால் வாய்க்கும். நீராடி முடிவில், தேவர், ரிஷிகள், பிதிரர் பொருட்டு
அவரவர்க்குரிய மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருகையாலும் நீரை அள்ளியிறைத்தல்
தர்ப்பணம் எனப்படும். இவற்றுடன் நீரைக் கலக்கி அலைத்ததும் உடலழுக்குள் நீரிற் கலக்கச்
செய்ததுமாகிய பாவங்களின் நிவிர்த்திக்காக யக்ஷ்மன் என்ற தேவதையை நினைந்து தர்ப்பணஞ்
செய்தலுமுண்டு. இது யஷ்மதர்ப்பணம் எனப் பெயர் பெறும். இவ்வகை நீராடிய சன்மார்க்கர்
உடைமாற்றிக் கொண்டு தீர்த்திகைக் கரையிலிருந்தே சந்தியாவந்தனம், அநுஷ்டானம், சிவமந்திர
செபம், தோத்திரபாராயணம் ஆதியன செய்தலுமுண்டு. இவற்றால் தீர்த்திகை என்றுஞ்
சைவமணம் நீங்கா திருப்பதாகும்.
சக்தியை - சிவசக்தியை. வியக்தி செய் - வெளிப்படச் செய்யும். சலசுத்தி ஆதி - சலசுத்தி முதலியன.
சந்ததம் - எப்பொழுதும். தருப்பித்து - தர்ப்பணம் பண்ணி..தீர்த்திகை:-தெய்விகப் புனிதம் பெற்ற
நீர் தீர்த்தம். அத்தீர்த்தம் தேங்கியுள்ள நீர் நிலை தீர்த்திகை. சேடியர் குழாம் - தோழியர் கூட்டம்.
சேயடித்தளிர் - செம்மை+ அடி+ தளிர் - சிவந்த திருவடியாகிய தளிர். இதிலிருந்து மேல் வரும்
பகுதி பிள்ளையின் நீராடல் அழகு வர்ணனை. பனிப்ப - நடுங்க, எவ்வம் - குற்றம். காந்தளஞ்
செங்கரம் - காந்தள் மலர் போன்ற சிவந்த அகங்கை. தளிர்ப் பொன்மேனி. தளிர்ப்பசுமை தரும்
அழகிய திருமேனி கோலம் - அழகு. நுண்ணிடை - நுணுக்கமாகிய இடை. குழைவினொடு
- குழைதலுடன். குழைவினொடு குழைய - இடைக்குழைவினொடு பொன்மேனி குழைய ஐதார்
- ஐது +ஆர். ஐதாக இருக்கும். விளர்ப்ப – வெளுப்படைய. விழிக்கடை - கடைவிழி. மேனி
குழைய கூந்தல் அலைய சாந்தம் அலைய மெய்யொளி விளர்ப்ப விழிக்கடை சிவப்ப என்ற
செயவெனெச்சங்கள். ஆடியருள் என்ற முற்றுவினையுடன் தனித்தனி இயையும்.
3. நீராடல் விளையாட்டு என்ற நிலையை அநுசரித்து அதன் கண்நிகழும் விளையாட்டு
விநோதமொன்றை வர்ணணைப் பாங்கில் விளக்கித் தேவர்கள், நீராடும் பிள்ளையாகிய
தேவிக்குப் பெருமளவிற் கனகாபிஷேகம் பண்ணுதலாகிய ஒரு உயர்சிறப்பைத் தோற்றுகிறது
இச்செய்யுள். நீர் விளையாடுஞ் சேடியர் சிலர் நீரினுள் மறைந்து சென்று அங்குள்ள தாமரைத்
தண்டுகளை அறுத்து வாயில் வைத்தூத அவற்றின் உட்டுளை வழியே காற்று மேலெழுந்து
அவற்றின் அண்டகோசத்திலிருக்கும் மஞ்சள் நிறப்பூந் தாதுக்களைத் தேவிமேற் பொழியச்
செய்தல் விளையாட்டு விநோதமாகக் குறிக்கப்படுகின்றது. அப்பூந்தாதுக்களின் பொழிவே
கனகாபிஷேகக் காட்சியாதல் சுருத்திற்கினிய காட்சியாகவும் அதேவேளை தெய்வத்துக்கு
நிகழுஞ் சீராட் டாகவும் அமையத்தோன்ற வைத்தது செய்யுட் சிறப்பாகும். செந்நெலங் கழனி
- செந்நெற் கழனி. அம் - சாரியை. சங்களைப்பதி பெறுந்தீர்த்திகை, திரையாடு தீர்த்திகை
எனத் தனித்தனி இயையும். சங்களைப்பதி பெறும் என்றது சங்களைப் பதிக்குத் தகுதியாகும்
எனக் கொள்ளப்படும். தீர்த்திகைச் சீராடவிளையாடும் ... தீர்த்திகைக்கண் சீர்மை மலிய
விளையாடும். 'ச'கரஒற்று இசை நோக்கி மிக்கதாகக் கொண்டு தீர்த்திகையானது சீரால் மலியுமாறு
விளையாடும் எனலும் ஆம். இப்பொருளில் தீர்த்திகை சீராட எழுவாய்த் தொடர் முன்னைய
பொருளில் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர். நீறாடு மகரந்தம்... பொடியாகவுள்ள மகரந்தம்.
நீறு ... பொடி, துகள். மீதெழுந்துரவு ... மீது+ எழுந்து + உரவும் மேலெழுந்து பரவும். நிலவுலகு
கொள்பேறாடும்... நிலவுல குக்கமைந்த பேறாக விளங்கும். பெண்ணரசி விளி. அமராவதி சுவர்க்கத்
தலைநகர். பெருமையொடு ... பெருமிதத்தோடு. புவனேஸ்வரிக்குக் கனகாபிஷேகஞ் செய்கிறோம்
என்ற பெருமிதத்தோடு. வீறு... மிகுதி. வீறாடும்... மிகுதித்தன்மை தோன்றக் காணும் விளையாட்டின்
மகிழ்வாடும் என்றது அன்புக்குரியார் செய்யும் விநோதச் செயல்களும் தேவிக்கு மகிழ்வூட்டுஞ்
சாதனங்களாகும் என்றபடியாம்.
4. தீர்த்திகை தேவியை அர்ச்சித்துப் பஞ்சாராத்தியெடுத்து மகிழ்வதாகிய ஒரு பத்திமைத் தோற்றத்தைக்
கற்பனைச் சுவைபட வர்ணித்தல் மூலம் இயற்கையே தேவிக்கு வழி பாடாற்றிய வண்ணம் இருக்கிறது
என்ற ஞானக்காட்சியைத் தருகிறது இச்செய்யுள். முதலில் மங்களார்ச்சனைச் சிறப்பும் மேல்
பஞ்சாராத்தியும் இடம் பெறுகின்றன. அர்ச்சனை விவித வாத்திய சகித அர்ச்சனை. தீர்த்திகை-
யிலுலாவுஞ் சங்குகள் செய்யும் ஒலி சங்க வாத்தியம். மலரில் ஊதும் வண்டுகளினிசை யாழொலி.
மண்டூகம் (தவளை) முதலிய செந்துக்களின் இசை மத்தளம் முதலியன சேருங் கோஷ்டி வாத்தியம்
ஆயிரவிதழ்த் தாமரை பஞ்சாராத்தி. தீர்த்திகைப் பாவை பூசகர். மாயிரும் - மா +இரும் ... மிகப்பரிய.
யகரம் இடை வந்தது உடன்படுமெய் விதிப் பறனடையாக அமையும்.
ஆதரவினோடு... பிரியத்தோடு. மூன்றாமடியின் பின்பகுதி, தீர்த்திகைப் பாவை சந்தர்ப்பத்தை உகந்த
வகையிற் பயன் செய்துள்ளதாகக் கூறுதல் கருதத்தகும். தெய்வ அநுசரணைக்கு ஏற்ற சூழ்நிலை
யொவ்வொன்றையும் தவறவிடாமற் பயன்படுத்தும் பெரியோர் பண்பு இதன் மூலம் ஞாபகமுறுத்தப்
பெறுவதாயிற்று.
5. மேற்செய்யுளில் தீர்த்திகை சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டதென்ற பாங்கினுக் கொப்ப உரைப்பது போல் தேவியும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டதாகத் தோன்றும் ஒரு விளக்கத்தை யுட்கொண்டிருக்கிறது இச்செய்யுள். பூமியில் பிள்ளையாக உருவெடுத்திருப்பது தேவிக்கு ஒரு சந்தர்ப்பம். அதைப்பயன்படுத்தி உலகிலுள்ள பிள்ளைகள் நீர் விளையாடலின்போது செய்து கொள்ளும் லீலைகள் பலவற்றைச் செய்து மகிழ்வதாகக் கூறுதல் காண்க. தேவி தன்னுண்மை நிலையிற் பராபரப் பொருள். அதாவது மேலானவை அனைத்துக்கும் மேலான பொருள். அந்நிலையில் உலகியலாருக்குரிய இயல்புகள் ஒன்றினும் அவள் பொருந்துதலில்லை. இருந்தும் பிள்ளையாய் நீர்விளையாட வந்த அவள் செயல் 'எளிவரல்' என்ற உயர் பண்பெனவும் அது அவள் நம்பாற் கொண்ட பெருங்கருணை யெனவும் வருதல் காண்க. 'நீராடல் வைதீகத்தின் வேர்' என்ற விதப்புரையும் இச்செய்யுளிலேயே வந்திருத்தல் குறிப்பிடத்தகும்.
பரவருங்கருணை - பரவு + அரும் + கருணை. சொல்லுதற்கரிய கருணை. உருவேற்ற பாங்கு – உருவேற்ற தன்மை. இங்ஙன் - இவ்விடத்து; இச்சங்களையில், நீரினுட்பாந்தியும் பதுங்கியும். போந்து பிறர் நேட - பிறர் போந்து தேட - மற்றையோர் திரிந்து தேட. சிவிறி - நீர்நிறைத்துப் பிறர் மேல் எற்றுங்கருவி. செப்புதரமன்று - சொல்லுதரமன்று. சீர்த்துவரும் - சிறப்புற்றுவரும்.
வைதிகத்தின் வேர் :-- சைவசமயம் வைதிகசைவம் எனவிதந்துரைக்கும் நிலைக்குரியது. அந்நிலைக்கு ஆதார சாதனங்களாயுள்ளவை அக்கினி வழிபாடு, நீராடல் என்ற இரண்டுமாம். வை சம்பந்தமான அநுஷ்டானக்கிரமம் தழுவப்படாவிடத்து வைதிகத்தன்மை சைவத்துக்கில்லாதொழியும் ஆதலால் இவை தனித்தனி வைதிகத்தின்வேர் எனப்படுஞ் சிறப்புக்குரியன. வேர் - மூலம். வைதிகம் வாழ, நீராடல் வாழ வேண்டும். நீராடல் வாழ, தேவி நீராடுதல் நிகழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என்ற குறிப்பை முடிவாகத் தோற்றி நிறைவுறுகின்றது செய்யுள். ஆலயந் தோறுந் தீர்த்த விழா சிறப்பு நிகழ்ச்சியாயமைந்ததன் தத்துவப் பின்னணி இதுவாதல் குறிப்பிடத்தகும்.
6. சிவயோகநெறிவழி நிற்பாரை உள்ளத்தினுள்ள பலவேறு தீர்த்தங்களில் உடன்நின்று முழுக்காட்டி முடிவிலா ஆத்மானந்த மளிப்பவளாகிய தேவி, தானே தெட்டத் தெளிய நின்று நீராடல் புரியும் தீர்த்திகையின் தெய்வீக மாண்பைச் சொல்லவும் வேண்டுமா எனத் தீர்த்திகை மாண்புரைக்கின்றது இச்செய்யுள். தேவியின் கருணைக்கே தம்மை யொப்படைத்திருக்குஞ் சிவயோகியரிடத்தில் மூலாதாரத்தில் மூண்டெழுங் குண்டலியைச் சுழுமுனாநாடி வழிமே லேற்றுகையில் அவர்களின் சிரசிலிருந்து ஊற்றும் அமிர்தப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது அச்சுழுமுனை வழியே பாய்ந்து அதில் முக்கிய ஸ்தானங்களாகிய ஆறாதாரங்களிலுந் தேங்கும். அவையெல்லாம் உள்ளத்தினுள்ளே உள்ள தீர்த்தங்களாம். அவற்றில் மூழ்கப் பெறுவோர் புண்ணியராவர் என்கின்றது திருமூலர் திருமந்திரம்.
"மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே"
- திருமந்திரம் 2 ஆந்தந்திரம். தீர்த்தம் 4.
மறியார்வளைக்கை – சுழுமுனை. கள்ளத்த - கள்ளமுள்ள. மாயவியல் - மாயாமயக்கம். கருணைக்கை –
கருணையாகிய கை. கையேறுமன்பர் என்றது. அன்னோரைச் சக்தியின் கருணையே கைப்பிடியாகப்
பிடித்து ஈடேற்றும் என்றதனால். சுழுனை - சுழுமுனை. கடவுண்மாக் கங்கை - தெய்வகங்கை.
சரதம் – உண்மை. மூலர்மொழி இது - திருமூலர் வாக்கு இது. உதுசெய் - உந்தப்பேறு தரும்.
தெள்ளத்தெளிந்திட - தெட்டத் தெளிவாக. தீர்த்திகைத் தெய்விகம் - தீர்த்திகைக்குள்ள தெய்வ
விளக்கம் அது சொல்ல வேண்டுவதில்லையாகலின் அதில் மூழ்குவோர் செல்கதிப் பேறுஞ்
சொல்லாமலே அமையும் என்பதால் வேறு கூறுவதென் எனப்பட்டது. எனவே, அன்னை வெள்ள
நீராடுதலின் விளைவு நாமெலாம் மோனஞான இயல்பினதான சிவாநந்த வெள்ளத்தில்
திளைத்தாடுதலாகும். மோனவெள்ளத்து யாம் வீழ்ந்தாட நீ நீராடியருள் எனச் செய்யுள் முடிவு
காட்டுவதின் விளக்கம் இதுவாகும்.
7. பிள்ளையாகிய தேவியைப் புணை, தொல்வரவு, மணிவிளக்கு, மணி, மந்திரம், ஒளடதம் என வகை
வேறுபட உருவகித்து வர்ணிக்கின்றது இச்செய்யுள். நிலவுலகம் நிகரில் பவமாயக்கடலில் நீந்தியமிழ்ந்தாது
நின் நீர்மையினால் எடுத்தேற்றும் நிமலஞான நெடும்புணை :- நிலவுலகம் உலகத்துயிர். மாயக்கடல்
நிகரில் - ஒப்பில்லாத. பவமாயக் கடல்; பிறவிமயமான எவ்வாறு பெருகிவருகின்றதெனத் தோன்றாது
அலைஅலையாகப் பிறவிமேற்பிறவி வந்துகொண்டிருத்தலின் மாயக்கடல் ஆகும். நின் நீர்மை - நினது
கருணைத்தன்மை ஏற்றும் - கரையேற்றும் - நிமல பரிசுத்தமான புணை - தெப்பம் துரியாநுபவத்
தொல்வரவு:- துரியம் ஞானியர்க்கு மேல் நோக்கி நிகழும் நின்மலாத் வதைகளில் நான்காவது. அது
புருவமத்தியை இடமாகக் கொண்டு நிகழ்வது. அங்கு நிகழுஞ் சிவாநுபவம் துரியாநுபவம் ஆகும்
அதன் தொல்வரவு பழைய தொடர்ச்சியால் வரும் பேறு. சுருதி - வேதம். சுகநிலை – சுக உணர்வின்
நிலைப்பிடம். மோனப் பொற்குகை - மோனம் என்ற அழகிய குகைதியான உறைப்பு நிகழுமிடம்
என்ற கருத்தில் மோனம் குகை எனப்பட்டது. மன் நீர்மையினார் - மன்னும் இயல்புள்ளவர்.
மாயாசாலம் – (ஜாலம்) - மாயை என்ற வலை. மயக்கு அவ்வலையிற் சிக்குண்ணுவதாலாம். மயக்கம்.
மணி, மந்திரம், ஒளடதம் மூன்றும் நோய் நீக்குஞ்சாதனங்கள். மணி - நாகரத்தினம்.
8. தேவியின் நீராடலிற் பொருந்தும் நிகழ்வுகள் சிலவற்றை வர்ணிக்கின்றது இச்செய்யுள். சொற்படு கலைமகள் - சொல் படும் - சொல் தோன்றும். சொல் தோன்றுந் தெய்விக மூலம் கலைமகள்; சரஸ்வதி. சுரிபுனல் - சுழிக்குந் தன்மையுள்ள நீர். துழந்து - துழாவி. 'முகேர்' -நீரிற் குடைந்து அமிழ்ந்தி யெழுகையில் தோன்றும் ஒலி.
முளரிப் புதுமணம் - தாமரை மலரின் புதுமையான மணம். அளவி - கலந்து. முகர்ந்து - மணந்து. ஆர்ந்து - மண நலத்தை அநுபவித்து. எற்படும் முத்து:-- எல் - ஒளி, படும் - தோன்றும். மூரல் - பல். நகைத்து நகைத்து மழலையிசைத்து என்றது உடன் நிற்குந் தோழியரோடு உரையாடலின் மிகுதி குறித்து நின்றது. கமலப் பொற்படு முகம் கமலப் பொற்பு அடும் முகம் - கமலத்தின் அழகை அழிக்கும் (இல்லாததாகச் செய்யும்) முகம்.
9. நீராடல் நிகழ்வுகள் மற்றுஞ் சில கூறி இவற்றின் மூலம் தீர்த்திகை வாழ் செந்துக்களில் மட்டுமன்றி
அங்குள்ள மணல் துணுக்குகளிலுஞ் சைவச் செம்மை நலம் போர்த்திருக்கு மாறு கூறுகின்றது இச்செய்யுள்.
ஆர்த்திடும் – ஆரவாரிக்கும். அலைகெழும் நுரை - அலையிற் பொருந்தும் நுரை. விதிர்த்தும் - உதறியும்,
நீர் நுரையைக் கையாலள்ளி அயலில் உதறுதல் குழந்தைமைக்குப் பிரியகரமான ஒரு செயல்.
புற்புதம் - நீர்க் குமிழி, தீர்த்திகையில் குமிழிகள் தோன்றுதலை நீர்த்திரு - நீராகிய பெண், உடல்
வேர்த்ததனால் தோன்றுந்துளிகள் எனக் குறித்தமை காண்க. நீராடுவோர் பலர் தன்னைப்
பரிசித்ததினால் நீர்மகள் வேர்த்தாள் எனலாம். யாருந் தீண்டற்கரிய திருவாகிய தேவியில் தான்
தீண்ட நேர்ந்தமை பற்றிய அச்சத்தால் நீர்த்திரு வேர்த்தாள் எனல் அதனினுஞ் சிறக்கும். புற்புத
நிரை சிதைந்திட ஊதியும் - நீர்க் குமிழியை வாயாலூதி உடைத்தலுங் குழந்தைமைப் பிரீதிக்குரிய
செயலாகும். இச்செயல்களால் தீர்த்திகை முழுவதும் தேவியின் அருளூற்றஞ் செறிந்ததாகக்
கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அதிலுள்ள செந்துகளும் சிசுதத்துகளும் சைவச் செம்மை
தலம் விளங்கப் பெற்றனவெனல் கருதத் தகும். செந்துகள் - பிராணிகள். சிகதம் - மணல்.
சிசுதத்துகள் - மணல் துணிக்கை. தீர்த்திகையை அளாவியிருக்குஞ் சைவச் செம்மை மிகுதியைக்
காட்டுதற்குச் செந்துகளுஞ் சிசுதத்துக்களும் சிற்றெல்லையாயின. இவை சார்ந்த 'உம்' இரண்டும்
இழிவு சிறப்பு.
10. புவனேஸ்வரி நீராடும் நிகழ்வின் போது அவள் திருமேனிச் சார்பில் நிகழும் அசைவுகளை அடுத்து
வைத்துப் புனைகின்றது இச் செய்யுள். மான்மதம் - கஸ்தூரி. மரு - மணம். மருவார்தலும் மதுமலிதலும்
கூறப்பட்டமையால் மணந்து மலர் சூடிய கூந்தல் என்றதாம். முகர்ந்து எண்டிசை யணைய - எட்டுத்
திக்கிலு மிருந்து நாடி வந்தணைய. செங்கமல... நின்றலைய:- தேவியின் பாத கிண்கிணி யொலிக்கும்
'க்ஷிண்' 'க்ஷிண்' என்னும் நுண்ணொலியை அன்னம் செவி கொடுத்துக் கேட்கின்றது. அன்னம்
இசைக்கும் ஒலியும் அது போன்றதே யாதல் பற்றி; கேட்ட அன்னம் தனது இனம் நிற்கிறதாக
எண்ணித்தேவியை அணைகிறதாகச் சொல்கிறது இப்பகுதி, கிண்கிணி - சதங்கை, செவி ஓர்த்து –
செவியால் ஓர்த்து (உணர்ந்து} கொடுத்துக் கேட்டு என்ற படி, சங்கலை செங்கைச் சரிவளை -
செங்கைச் சங்கலை சரிவளை - சிவந்த கையிலுள்ள சங்கின் வெண்மை அலைகின்ற சரியாகிய
வளை சங்கு வளையல் என்றபடி. தாடங்கமது -
தாடங்கம் என்ற அது. தாடங்கம் தேவியின் காதணி. தங்க நன்மாமை - தங்க நிறமான தேக
மொழுமொழுப்பு. தவழ் புன்னகை - வாயிதழ்களில் தவழும் புன்னகை.
--------------------------------------------
ஊஞ்சற் பருவம்
பிள்ளையாகிய தேவி ஊஞ்சலில் ஏறி ஆடுவதாகிய நிகழ்ச்சிக்குரிய பருவம் இது. இது
இருபத்தொரு மாசப் பிராயத்தின் மேல் நிகழ்வது என்பர். தமிழிலக்கியப் பரப்பில் மகளிர் விளையாடலாக
இடம்பெறுவனவற்றுள் மிகப் பிரபல்யமான ஒன்று ஊஞ்சலாடல்.
"அன்னத்தின் மேலேறி யாடும் அணிமயில்போல்
பொன்னெத்த பூண்முலையீர் பொன்னூசலாடாமோ’
- திருவாசகம், திருப்பொன்னூசல் 7
என்ற மணிவாசகர் பாடல்வரிகள் ஊஞ்சல் பற்றிய இனிமை யுணர்வை என்றுந்ததும்ப வைத்துக்
கொண்டிருத்தல் கண்கூடு. உலகியல் உளவியல் சார்ந்த தத்துவ உண்மைகள் பலவற்றை அறிகுறிப்
பொருளாய் நின்றுணர்த்தல் ஊஞ்சலாடலின் சிறப்பியல்பாகும். வாழ்வில் மனிதர் ஊசலாடுகிறார்கள்.
ஊடலில் உயிர் ஊசலாடுகிறது. சிந்தனை வளாகத்தில் மனம் ஊசலாடுகிறது. இவ்வெல்லா ஆட்டங்களும்
ஓய வேண்டியவை. அதற்குச் சிறந்த வழி இவ்வெல்லாவற்றிற்கும் ஊடு புகுந்தியலுஞ் சிவசத்தியை
ஊஞ்சலாட்டிப் போற்றுதலாகும் என்ற கருத்தினாற் போலும் ஆலயங்களிலும் சுவாமிக்கு ஊஞ்சல்
விழா இடம் பெறுகின்றது. தெய்வத்தையே பிள்ளையாகப் போற்றும் பண்பாற் பிள்ளைத்தமிழ்களிலும்
இது நிறைவம்சமாக இடம்பெற்று வந்துள்ளது. சாமானிய ஊசல் வர்ணனைகளுடன் இத்தத்துவஞ்
சார்ந்த விளக்கங்களும் இப்பாடல்களில் இடம் பெறல் காணலாம்.
1. சாமானிய ஊஞ்சலியல்பை வர்ணித்துத் தேவியின் தெய்வீக மகிமைக் கேற்ற அம்சங்கள் பல அதில்
இடம்பெறக் காட்டுகின்றது இச்செய்யுள்.
பவளத்தினாற்கால், மரகதமணியினால் விட்டம், மாணிக்கத்தினால் வடம், முத்தழுத்தும் பலகை
ஆதியன ஊஞ்சலுறுப்புகள். தங்கக் காப்பிட்ட சாமரையிரட்டல், குடை நிழற்றன் என்பன தெய்வீக
உபசாரங்கள். இவ்விவரணம் முதலிரண்டடிகளில் இடம் பெறுகின்றது. பரூஉச்சுடர் மரகதம் -
பருமையாக (தூலமாக) ஒளிபரப்பும் மரகத இரத்தினம் - பல்கும் – நெருங்கும். பல்குமணி மாணிக்கவடம்
- மாணிக்க இரத்தினங்கள் பலவற்றை நெருக்கமாகக் கோத்தமைத்த வடம். ஞாலும் - தொங்கும்.
தவிசு - ஆசனம். தண் கவிகை - குளிர்மை செய்யுங்குடை. மருங்குல் - இடை. ஒல்கித் துவள - தளர்ந்து
தளர்ந்து அசைய, சுத்தசேதனம் என்பது முதல் பூதநாயகி என்பது வரையுள்ள பகுதி
தேவியின் ஊஞ்சலாடற் சிறப்புரைக்கின்றது. சுத்தசேதனம் - சுத்தநிலை எய்திய உயிர் துன்றும் -
வெளிப்பட்டுப் பொருந்தும். இயல்நலம் - தன்மை விசேடம். தேவி புறத்திற் காணுமாறு மணியூசலில்
அமர்ந்தாடும் காட்சியானது சுத்தான்மாக்கள் அகத்தில் இருந்தாடும் தன்மை விசேடத்தை
நினைவிக்கும் என்பது பொருள். பூத நாயகி - உயிர்களின் தலைவி.
2. புறத்திருள் அகற்றுஞ் சூரியன் அகற்றும் போல அகத்திருள் ஞானவொளியாய்த் தோன்றி ஆன்மலாபம்
பெற நிற்கும் உயிர் ஆனந்தமுறச் செய்யும். தேவியின் பரத்துவ மகிமை பற்றிப் பேசுகின்றது
இச்செய்யுள். 'நீவித்து என்பது முதல் கதிரவனெனா என்பது வரை சூரியன் புறவிருள் நீக்குதல்
சார்பான வர்ணனையுரைக்கின்றது. நீலித்து - நீலம் என்ற பெயரடியிற்றோன்றிய எச்சவினை.
நீலநிறமாகி என்பது பொருள். தலையுவா -- அமாவாசை. இருள் ஒதுங்க அதன் சார்பில் நிலவுலகம்
பெறும் புது மலர்ச்சி, நீர் மூழ்கி நீற்றொளிப் பொலியும் மலர்ச்சியாகக் காட்டப் படுகிறது. இவ்வகையில்
உலகுக்குச் சைவத்தோற்றம் கொடுக்கப் பட்டிருத்தல் சிறப்பாகும். குணதிசை - கிழக்குத்திசை,
காலித்து - கால் என்ற பெயரடியாற் றோன்றிய எச்சவினை. கால் கொண்டு, தோற்றி என்ற
பொருளில் நின்றது. கதிரவன் என சூரியனுக்கு ஒப்பாக. உளக்ககன வட்டத்தின் என்பது முதல்
அகற்றி என்பதுவரை சக்தியெழுந்து அகவிருள் நீக்கும் பாங்கு பேசப்படுகின்றது. உளக்ககன
வட்டம் - உள்ளமாகிய ஆகாய வட்டம். ஆணவக் கறையிருள் - ஆணவம் என்னும் கறையாகிய
இருள். நமர் கருது பசு போதம் - நம்மவர் கருதுகின்ற பசு போதம். மான - அழியுமாறு. ஆலித்து -
ஆரவாரித்து. மிக்கெழுந்து அருளுஞ் சிவபோதம் - மிகுந்தெழுந்து அருளுஞ் சிவபோதம்.
சிவபோதமாய் நிகழ்வது அருளேயன்றிப் பிறிதில்லையாம். ஆன்ம லாபத்தின் ஓங்கும் - சிவப்பேறாகிய
ஆன்ம லாபநெறியில் முன்னேறும். ஆவனகள் - ஆன்மரூபம். ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி முதலாம்
அநுபவ நிலைகள், அது கொள் இன்பில் - அந்த உயிர் பெறும் இன்பில். பூலித்து (பூரித்து) என்ற பதம்
அரிதின் வழங்குவது.
'பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ’
என்பது திருவாசகம்.
3. உயிர்கள் பிறவிகள் தோறும் வருதலும் போதலுமாகிய ஆட்டம் ஊஞ்சல் வருவதும் போவதும்
போல்வதாகிய ஒரு ஆட்டம் என்ற பாங்கில் அந்த ஆட்டத்தை நிகழ்த்தும் சக்தி உள்ளார்ந்த ஒரு
ஊசலமைப்பினைச் செய்து வைத்து உயிரை ஊஞ்சலாட்டிக் கொண்டிருப்பதாக வர்ணிக்கின்றது
இச்செய்யுள். தேவி அமைத்த அந்த ஊஞ்சல் விதி யென்ற விட்டத்தில் தொடுத்துள்ள இருவினையென்ற
பழங்கயிற்றில் மனம் என்ற பீடத்தைப் பொருந்தியுள்ள ஒரு ஊஞ்சலாகக் காட்டப்படுகிறது. உயிர்களின்
இந்தப் பிறப்பிறப்புச் சுழற்சிப் பான்மையை ஆணையின் இருவினையின் (உயிர்கள்) போக்கு வரவு
புரிய, என்று சிவஞான போதம் இரண்டாஞ் சூத்திரம் உணர்த்தியிருத்தல் குறிப்பிடத் தகும். இங்கு
ஆணை - திரோதான சக்தி. பிறப்பிறப்புச் சுழற்சி வட்டம் திரோதான சக்தியின் ஆட்சியில் நிகழ்வதென்பது
சித்தாந்தப் பொருள் நிலை. இச்சுழற்சி வட்டம் நால்வகைத் தோற்றம் ஏழுவகைப் பிறப்பு எண்பத்து
நான்கு நூறாயிரம் யோனி பேதம் என்ற அமைப்புக்களின் வழி நிகழ்வது. அதனைச் செய்யுளின்
முதலாமடியும் இரண்டாமடியின் முற்பாதியும் உணர்த்தும். தணவாத – நீங்காத. வீற்று வீற்று -
தோற்றத் துக்குத் தோற்றம், பிறப்புக்குப் பிறப்பு, யோனிக்கு யோனி வெவ்வேறாக. விந்தை -
ஆச்சரியம். விரவும் – அமையும். இனி ஊஞ்சல் அமைப்பு விளக்கம். முன்னம் மேவ வரும் விதி -
முன்னமே ஏற்பட்டிருக்கும் விதி; எப்பவோ முடிந்தது எனல் முன்னம் என்பதன் அர்த்தமாகும்.
ஆர்த்த - கட்டிய இரு வினையைப் பழங்கயிறென்பது அதன் தொடக்க மறியப் படாமை பற்றி.
தேற்ற முற - தெளிவுபட. யாத்த - இயைத்த. செம்மாந் திருக்க -உயிர் தன் இசைவுகேடு பற்றிய
கிலேசங் கிஞ்சித்துமின்றிச் சகல விதத்திலும் அட்டோ லிக்கமாகவே இருப்பதாக ஒருவகை
இறுமாப்புடனிருக்க. சென்ம சென்மாந்த நெறி பிறப்பு இறப்பு நெறி, குறித்து ஒரு பிறப்பின் முடிவை
உட்கொண்டிருப்பதாகலின் இறப்பு சென்மாந்தம் எனப்பட்டது. அந்தம் - முடிவு. ஊசலாட்டிப்
போற்றுமொரு தாய்:- போற்றல் - பேணுதல். சக்தி தாயர்ந்தன்மைப் பரிவோடு மேற்குறித்த
வகையில் உயிர்க் குதவுதலே பெத்த நிலைக் காலத்தில் உயிரைப் பேணுதலாகும். புலவர் -
ஞானிகள். அருளன்னை - அருளாட்டியாகிய அன்னை.
4. தேவியின் ஊஞ்சலாட்டில் தரிசித்திருப்பார் பெறும் பயன் எப்படியிருக்கும் எனப் பேசுகின்றது
இச்செய்யுள். தேவியின் கூந்தல் வாசமும் முகவாசமும் அவர்தம் தெய்விகப் பழைய வாசனைக்கு
விருந்தாகி அதனைக் கிள்ளி விடும் என்றும் அந்நிலையில் ஊசலிற் காணும் அசைவு ஒவ்வொன்றும்
அவர் உயிரை அசைந்தாட வைக்குமென்றும் அவ்வசைவில் உயிரானது இன்ப அன்பில் திகழுமென்றும்
வரும் விளக்கங் காண்க.
கள்ளமர் பூங்குழல் - தேன் பொருந்திய பூக்கள் அலங்கரிக்குங் கூந்தல். சௌகந்தி புன்னாகம்
என்பன தேவி கூந்தலுக்குரிய பூக்கள். சம்பகாசோக புன்னாக சௌகந்தி லசத்கசாயை நம: என்கின்றது
லலிதா சகஸ்ரம். கஸ்தூரித் திலகம் - கஸ்தூரிப் பொட்டு. கர்ப்பூர வீடிகா - தேவிக்குப் பிரீதியான
தாம்பூலம். மற்றுந் திரவியங்களுடன் பச்சை கர்ப்பூரமுஞ் சேர்த்தமைத்தல் பற்றி அது கர்ப்பூர வீடிகா
எனப் பெயர் பெறுவதாகும். கர்ப்பூர வீடிகா மோதசமாகர்ஷிதிகத்தராயை நம:என்பது லலிதா சகஸ்ர
மந்திரம். கருதுவார் - தியானிப்போர். உள்ளமர் - ஆத்மிகத்தில் அமைந்துள்ள, தெய்விகப் பழைய
வாசனை :- தெய்விகம் எவ்வுயிர்க்கும் பண்டு தொட்டே அதனதன் பக்குவத்துக் கேற்குமளவில்
உள்ளது. அது தெய்விகப் பழைய வாசனையாம் பூசை வழிபாடுகளில் புறத்தில் இடம் பெறும்
மங்கல வாசனைகள் சம்பந்தப் பட்டோரிடத்தில் இருக்கக் கூடும் தெய்விகப் பழைய வாசனையுணர்வைக்
கிள்ளி விடுவன, அகில் குங்குலியம் முதலிய நறுமணப் புகைகள் பூசை வழிபாட்டில் இடம்
பெறுவதும் நறுமணமலர் மட்டுமே அர்ச்சனைக் கேற்கும் என்பதும் இந்நோக்கில் அமைந்தனவேயாம்,
தேக்கிய புகையும் வாசத் தெருட்சியும் விருந்தின் நோக்கிற் காக்கிய திறத்தின் விம்ம'- எனவருந் தேம்
பாவணிச் செய்யுளொன்று இவ் வுண்மையைச் சுட்டியிருத்தல் கருதத் தகும். இங்கு 'விருந்தின் நோக்கு’
என்றது குறித்த தெய்விகப் பழைய வாசனையேயாதல் தகும். இப்பண்பு இனிது புலப்படுமாறு
சௌகந்தி வாசமொடு திலகவாசம் வீடிகாவாசமுங் கமகமக்கத் தெய்விகப் பழைய வாசனையோங்கி
என இச்செய்யுள்வர்ணித்தல் கருதத்தகும். உயிர்க்கிளி:- உயிரின் அருமைப்பாடு தோன்ற அது
கிளி என உருவகிக்கப்பட்டது விழைவார் - விழைவு + ஆர்- விரும்பப்படுந் தன்மைக்கமைந்த.
வரிப்புள் - வண்டு. வரிகளை உடையதும் புள் (பறவை)போல்வ'துமாதலால் வரிப்புள்.
5. ஆன்மஈடேற்றங் கருதி இரக்கத்தகுவனவற்றை உரிய முறையில் இரக்கும் உத்தமர்களுக்கு
உவந்தருளும் தேவியின் பேரருட்பண்பு இச்செய்யுளால் விளக்கப்படுகின்றது. இரத்தற் பொருளாக
இங்கு குறிக்கப்படுவன:- உன்னையல்லது யாமிரத்தற் குரியாரில்லையாதலால் நீயே இரங்கு
என்பதும் நின்னருளுக்கு அபசாரமாக நாம் புரிந்தவை உண்டேல் அவற்றை ஏற்புடைய நற்பணிகளாக
ஏற்றுக்கொள் என்பதுமாம். பொதுவில், கடவுளிடம் எதை இரப்பது எனல் முக்கியமான ஒரு
கேள்வி. எது வேண்டுமானாலும் இரக்கலாம் என்பது சாதாரணர் நிலை. உலகியல் சம்பந்தமானவற்றை
இரத்தலில் விவேகமில்லை. ஏனெனில், அவற்றைப் பெறுதலினால் நேரும் அப்போதைத் திருப்தியைவிட
அவை அழியவரும் வேளையில் நேரும் இழப்புத்துயர் பன்மடங்காயிருக்கும். வரம் பெற்றார்
என நாமறியக்கூடும் ஒவ்வொருவரும் இந்த இக்கட்டுக் காளாயிருந்தல் சரித்திரமறிந்த உண்மை.
'வரம்பெற்றார் வாழ்ந்திலர்' என்ற பழமொழியும் இதுபற்றியே எழுந்துள்ளது ஆதலின், எனவே
உலகியற் காரியங்கள் போல் அழிவெய்தும் அவலத்துக்குட்படாமல் நிரந்தரமாக நிலைத்து
நின்று ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவக்கூடியவற்றையே இறைவன் பால் இரக்க வேண்டும்
என்பது அறிவொழுக்க ஆசாரங்களால் உயர்ந்தோர் நிலை.
'யாமிரப்பவை நின்பால்
பொருளும் பொன்னும் போகமுமல்ல
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
ஒளியிணர்க் கடம்பின் உயர்தா ரோயே -
என்கின்றது பரிபாடற் செய்யுளொன்று. மேற்குறித்தன இரண்டும் இவ்வகையினவாதல் காண்க.
இனி இரக்கும் முறையாக இச்செய்யுள் தெரிவிப்பதாவது:- தேவியின் திவ்விய ரூபத்தை நெஞ்சிற்
பொருந்த நினைந்து அன்பில் அழுந்தி உள்ளம் உருகி நிற்றல். தியானிக்கும்போது தேவி அபய வரத
கரங்களுடனிருக்கும் மூர்த்தம் தியானிக்கற்பாலது. தஞ்சமென - அணைப்பது அபயகரம், தாம்
வேண்டுமவை நல்குவது வரதகரம். தாம் என்றது தஞ்சம் புகுந்தோரைக் குறிக்கும். எஞ்சலில்
என்றது எத்தனை பேர்க்கு வழங்கினுங் குறைவுபடாத என்றபடி. கருணை நோக்கு: - தன்னால்
வழங்கல் படுந் தநுகரண புவன போகங்களைப் பெற்று உலகில் வாழும் உயிர், அவற்றை நல்கியது
யார் என விசாரித்துத் என் தேவியாகிய தன் இருப்பை உணர்ந்து போற்றும் நிலைக்குப் பழுது
நேராமல் வாழவேண்டும் என்பதே கருணை தோக்கு. 'மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம்'
எனச் சம்பந்தர் தேவாரம் குறிப்பிடும் நல்வாழ்வு அதுவே. அதற்கு எதிர் மாறாக இயலும் வாழ்வில்
நிகழ்வன அபசாரம் என்ற பெயரில் அடங்கும். அரன்தன் பாதம் மறந்து செய் அறங்களெல்லாம்
வீண் செயல் என்னும் சிவஞானசித்தியார். புஞ்சமார் அளி யொலிகொள் பூம்பொழில். புஞ்சம் - கூட்டம்.
அளி வண்டு - பொழில் - சோலை.
6. முன் வாரானைப் பருவத்து முதலாஞ் செய்யுளிற் குறிப்பிட்ட, புவனேஸ்வரிதேவி ஊர்சுற்றி அடியார்
குறை முறை வினாவுதல் என்ற கருத்தின் சார்பில் எழும் மற்றொரு கற்பனை விளைவைத் தோற்றுகிறது
இச்செய்யுள். பிள்ளை ஊர்சுற்றுகிறாள். அவளைத்தேடிச் செவிலித்தாய் விசாரித்துத் திரிகின்றாள்
என்றிருக்கிறது கற்பனை செவிலித்தாய் விசாரிக்கும் பிள்ளையின் திருவுருச்சிறப்பையும் அவள்
உலாவுதலின் விசித்திரத்தன்மையையும் கூறி விசாரித்தல் காண்க.
கன்னங்கரிய... மிகக்கறுத்த. குழல் - கூந்தல். மாமை.மினா மினுப்பு, மொழுமொழுப்பு.
கதிர்விட்டெறிய ... ஒளி விட்டு வீச. கண் நீலக்கருவட்டு - கண்ணாகிய கரு நீலவட்டு. கமல முகம்
உவமை. பொன்பூப்ப. பொன்னொளிமலர. கன்ன நிறத்திற் பொன்னொளி மலர பென்னம் பெரிய -
அதிப்பெரிய பூராயப்பிழம்பு... பூராய வடிவம். பூராயம்... புரிய முடியாதது. சிட்டு... சிறுபறவை.
விரைவிற் பெயர்ந்து மறைதல் பற்றிய உருவகம். இது. வித்தை - ஆச்சரியம். பேதை உருவின்மா
மேதை - பேதை.. அறியாப் பருவப்பிள்ளை. மாமேதை - பெரும் நிபுணை. உருவிற்பேதை யாயினும்
திருவில் மேதை.
7. தேவி பிள்ளைத்தமிழிற் பிரீதி கொண்டு அது பாடினார்க் கருளும் திறத்தை ஒரு எடுத்துக் காட்டு
வாயிலாகத் தெரிவித்துப் போற்றுகிறது இச்செய்யுள். தேவி பேரில் மதுரை மீனாட்சியம்மை
பிள்ளைத் தமிழ் இயற்றியவர் பெருஞான மேதையாகிய குமரகுருபரர். அக்காலம் மதுரையில்
ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தவர் திருமலை நாயக்கர் என்ற மன்னர். அவருடைய அரச சபையிலேயே
அப்பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நடை பெற்றது. அவ்வேளை தேவி ஒரு சிறு பெண் குழந்தையாக
மன்னர் மடியிலிருந்து பிள்ளைத் தமிழ் கேட்டு ரசித்ததாக வரலாறு கூறும்.
பெருந்தே னிறைக்கும் - எனத் தொடங்கும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடல்
குமரகுருபரர் பாடற் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகப் பலருமறிந்ததொன்று.
சொற் பாவிய செந்தமிழ்:- ‘சொல்' இங்கு சொல்லினிமை மேல் நின்றது. பாவிய - பரந்த.
சொல்லினிமை பரந்தொளிருஞ் செந்தமிழ் என்க. தேன் மயல் - தேனால் விளையும் மயக்கம்.
தமிழின்பச் சுவையே தேன். திருமலையான் - திருமலை நாயக்கர். பட்டாடை மடி என்பது அரசன் மடி
என்றவாறு. இரண்டாமடி குமரகுருபரரின் பாடல் மகிமை உணர்த்துகிறது. படிப்போரை முன்னே
பின்னே அறிதற்கிடமாகாத நனினமான ஒருவகைப் புலமைக் களிப்பினுள் மூழ்க வைப்பன அவர்
பாடல்கள், தனக்கிணையில் - தனக்கு இணை இல் - தனக்கு ஒப்பில்லாத, மூவாப் பிள்ளைத் தமிழ்
- அழியாத் தன்மை வாய்ந்த பிள்ளைத்தமிழ். அழியாமை என்றது கற்றோர் உணர்வை விட்டகலாமை
எனவாம். கேட்ட நற்பாநயம் - கேட்டல் காரணமாக விளைந்த நல்ல பாநய உணர்ச்சி. நயம் இங்கு
உணர்ச்சி மேல் நின்றது. சுவையுந்த - சுவையநுபவம் மேலுந் தூண்டுதலால். சுவை அனுபவத்தின்
மேற்று. உந்த - தூண்டுதலால். இச்செயவெனெச்சம் காரணப் பொருட்டு. அற்பால் - அன்பினால்.
அவர் பால் - அவர்கள் பேரில்..
ஞாலத் தெவர்பாவாயிடினும்:- எவர் என்றது பாடியவர் தகைமை பற்றித் தயங்காது என்றபடி
நாமம் பிள்ளைத் தமிழ்ப் பாவேல் என்றது. பேர் பிள்ளைத் தமிழ்ப் பாட்டென்றாற் போதும் என்றதாம்.
8. தேவி சிவயோகியர்க் கருளும் ஞானக் கொழுந்தாயும் கவர்ச்சிகரமான பூங்கொம்பாயும்
பராநுபவத்தமுதாயும் விளங்கும் மகிமையைப்போற்றுகின்றது இச்செய்யுள். ஞானக் கொழுந்தாய்த்
திகழ்வது உரவோருக்கு. உரவோர் ...சிவயோகியர் தமது ஆத்தும சக்தி முழுவதையும் கீழ்த்தங்காது
மேலேற்றிச் சகஸ்ரதளத்திலேயே கருத்தூன்றிச் சகல கேவலப் படாமல் சுத்தாநுபவத்தில் லயித்திருத்தல்
சிவயோகியர் சிறப்பியல்பாகும். தேவியையில்லாமல் அண்டமுமில்லை பிண்டமில்லை.
தேவியாலல்லாமல் எவர்க்கேனும் ஆத்மானந்தம் நிகழ்வதில்லை என்ற சக்தி பரத்துவ நிலையைத்
தம்முளக் கண்ணிற்கண்டு கொண்டிருத்தலும் அவர்க்காம் பண்பாகும். அண்டம் - வெளியுலகம்.
பிண்டம் - உடல் முதலாய தனிப் படைப்புகள். நின்னினல்லால் - நின் மூலமாக அல்லால். ஆமா
நிலை - ஆமாறு + இலை - ஆகும் வகை இல்லை. அருள் முகத்திற் கண்ட காட்சி - திருவருட் காட்சி,
இக்காட்சி ஐம்புலக் காட்சிக்கு வேறானது. சுத்த நிலைக்கே வாய்ப்பது. சலிக்காமல் - அசையாமல்,
கண்ணார் சகஸ்ரதளம்:- கண் - இடம். இடமார்ந்த என்றதனால் விரிந்திருக்கும் சகஸ்ரதளம்
என்றாகும். கங்குல் - கேவல நிலை. பகல் - சகல நிலை. இவ்விருநிலையுங் காணார் என்றதனால்
சுத்த நிலையில் உள்ளவர் என்பது வெளி.
கோல நறுங் கொம்பு:- கோலம் – அழகு. குஞ்சி - தலைமயிர், குஞ்சியும் மருங்குலும் முலையும்
படைத்த கொம்பு கொம்பு... என அதிசய உருவகமாயிற்று. மங்குல் - இடை. கொடி இம்பர் - இவ்வுலகம்.
உம்பர் - மேலுலகம். இரண்டும் ஆகு பெயராய் அங்கங்குள்ளாரை உணர்த்தும், அண்டற்கரிய
அண்டற்கு + அரிய. பராநுபவம் - ஆத்மாநுபவம். பரன் மேலான ஆத்மாநுபவத்தின் மேற்பட்ட
பேறு வேறின்மையின் பராநுபவம் எனப்பட்டது. பராநுபவத்தமுது பராநுபவத்தின் கண் சுவைக்கப்படும்
அமுது.
9. உடலிலிருக்கும். உயிரானது கண்ணுக்கு விஷயங்களைக் காட்டி அங்ஙனங் காட்டும் வகையால்
தானும் காண்பது போல இறைவனும் உயிர்க்கு உலக அநுபவங்களைக் காட்டும் வகையால் தானும்
காண்பன். என்பது உயிர் - இறைவன் அந்யோன்ய இயைபு பற்றிய ஒருண்மை. அவ்வுண்மையை
ஊஞ்சலாடல் என்ற பொருண்மைக்குப் பொருந்த அமைத துரைக்கின்றது இச்செய்யுள். சோலைகள்,
மாளிகைகளிலும் இளம்பருவத்தினர் ஊசலாடுதலுண்டு: அனுபவம் பெறுதலுண்டு; இன்புறுதலுண்டு.
அவ்வகையில் அவர்களை ஆட்டுமாற்றால் ஆடுதலும் அநுபவிப்பிக்குமாற்றால் அநுபவித்தலும்
இன்புறுத்துமாற்றால் இன்புறுதலும் தேவியின் பரத்துவ மகிமைகளாம். அவரவர் அநுபவமும்
இன்புணர்வும் இருக்குமளவிற்களவாகித் தேவியிருந்து கொண்டிருப்பாள் என்பது கருதத்தகும்.
உலகவர் ஊஞ்சல் அமையுமிடங்களில் ஒன்றாகிய சோலையிலக்கணம் முதலடியில் இடம்
பெறுகின்றது. சோலை தென்றல் அசையுஞ் சோலை. தென்றல் வசந்தருதுவின் தண்ணிய இனிய
பரிசத்தை எங்குமுள்ளவர்கள் பெறும்படி கொண்டுலாவுவது. வசந்தத்தை, உலகம் மலர்ப்பந்தலிட்டு
வரவேற்பது. யாழிசை, எக்காள வாத்தியம் என்பனவும் வரவேற்பில் இடம் பெறும் என முதலடிப்
பொருள் அமைகிறது. வசந்தம் தோன்றுதலும் செடி கொடிகள் தருக்கள் எல்லாம் மலர் விரித்தல்
மலர்பந்தலிட்டெதிர் கொள்ளலாகிறது. யாழிசைக்கு வண்டும் எக்காள இசைக்குக் குயிலும்
வாத்தியகாரர் ஆகின்றன. மாங் குயில் - மாமரத்தின் தளிரை விரும்பிக் கோதும் குயில். பயிற்றி -
பயிலச் (உணரச்) செய்து. எழில் - அழகு. இணை இல் - ஒப்பு இல்லாத. ஊசற்களரி - ஊஞ்சற்
கோஷ்டி. அகிலமும் புரத்தல் - முழுவதையும் பாதுகாத்தல். தேவியின் அப்பாதுகாத்தலானது
ஆட்டுமொரு பரிசில் நின்று ஆடி மகிழ்தலாகிய அந்த ரீதியில் அமைவதாம் என்க.
10. ஊஞ்சலாடும் தேவியின் திருவுருவப் பொலிவழகைப் பாதாதி கேசமாக வர்ணித்து அவ்விதமான
அற்புதப் பொற்பொளிர இருந்து அருள்தல் இச்செய்யுளிற் கூறப்படுகிறது.
கருதரிய - கருது + அரிய - கருதுதல் அரிய. முதனிலைத் தொழிற் பெயர். ஓவாது - இடையறாது.
கிண்கிணி - சதங்கை. தேவியின் காற் சிலம்பு அவளை நினைந்து உருகுவாரது வாய்ப் புலம்பலொலியை
அநுகரித்திருக்கும். அநுகரித்தல் - போற் செய்தல். புலம்பநுகரித்திடும் - புலம்பு + அநுகரித்திடும்.
அரிச் சிலம்பு - அரிகள் உள்ளிட்ட சிலம்பு. அரி - சிலம்பில் உள்ளிருந்து ஒலியெழுப்பும் குறுணி
போன்ற இரத்தினத் துணுக்குகள். மேகலை - மேகலாபரணம். இடையின் ஒயில் - இடையசைவின்
ஒய்யாரம். முத்தாரம் - முத்து மாலை. ரத்ன ஹாரம் - அட்டியல். பத்மராக மணி முற்றடித்தும் முடி:
-- பத்ம ராகம் நவரத்தினங்களிலொன்று. முற்றமுத்தும் - நிறையப் பதிக்கப்பட்டிருக்கும் முடி,
அரைமதி - பாதிச் சந்திரன். அரைமதி செய் என்பதில் 'செய்' என்பல போன்ற எனும் பொருளில்
நின்றது.
தேவி பிரபாவமே கருவாகக் கொண்ட இப்பிள்ளைத்தமிழின் இறுதித் திருப்பாடலான
இது முற்றிலுந் தேவியின் பாதாதிகேச வர்ணனயாயிடம்பெற்று இதற் கோர் மங்கல நிறைவு தரும்
மாண்பு போற்றத் தகும்.
சுபம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தூய மனநிலைபெற
மூவர்க்கும் முற்பொருளாய்
முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனத்திற்கும்
நாடரிய பேரறிவாய்த்
தேவர்க்கும் முனிவர்க்கும்
சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற்பரையை வணங்குவாம்.
நன்றே வருகினும் தீதே
விளைகினும் நான்அறிவது
ஒன்றேயு மில்லை உனக்கே
பரம் எனக்கு உள்ளமெலாம்
அன்றே உனதென்று அளித்துவிட்
டேன் அழி யாதகுணக்
குன்றே அருட்கட லேஇம
வான்பெற்ற கோமளமே.
******************************************
This file was last updated on 23 Sept 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)