சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த
விருத்தாசலம் பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
virittAcalam periyanAyakiamman piLLaittamiz
of cokkalingka civappirakAca cuvAmikaL
in Tamil Script, Unicode/UTF-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
Our Sincere thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த
விருத்தாசலம் பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
Source:
விருத்தாசலம் பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்.
இஃது திருக்கைலாயபரம்பரைத் திருத்துறையூராதீனம்
சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்தது.
மேற்படி ஆதீனம் சிதம்பர சிவப்பிரகாச பண்டாரசந்நிதிகள் கட்டளையின்படி
அஷ்டாவதானம் பூவை - கலியாண சுந்தரமுதலியாரால் பார்வையிடப்பட்டு,
சென்னை. கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
விரோதி பங்குனிமாதம்.
------------
கணபதிதுணை.
சிவமயம்.
ஆக்கியோன்பெயர் முதலியன.
அத்துவித வானந்த நித்யபரி பூரண
வகண்ட சின்மய வடிவமா
யமர்விருத் தாம்பிகைத் திருவடிக் கவளடி
யடைந்துமுது கிரி யதனில்வாழ்
வுற்றிடு குமாரதே வக்குரு பரன்பொனடி
யொண்பணி விடைச்செய் தொண்ட
னோதுமிப் பிள்ளைத் தமிழ்ச்சாலி வாகனத்
துறுமா யிரத்தெண் ணூற்றோ
டொத்தபதி னொன்றான சருவதா ரிப்பெய
ருறும்வருட மானி மதியி
லோங்குமிரு பத்தைந்து தேதிசனி வாரமுட
னுறுமமர பக்க மதனிற்
சொற்றம் வைந்தான நட்சத் திரந்திதியே
துனுந்த்ர யோ தசிமுதலவாச்
சூழுமிச் சுபதினஞ் சொக்கலிங் கத்தவன்
சூட்டினான் பா மாலையே.
திருச்சிற்றம்பலம்.
--------------------------------------------
உ
கணபதி துணை.
விருத்தாசலம் பெரிய நாயகியம்மை பிள்ளைத்தமிழ்
1 -வது. காப்புப்பருவம்.
விநாயகர் துதி.
பொன்பூத்த மணிநிறப் பூவைவண் ணக்குரிசில்
போந்துவந் தித்தி ரந்தே
பொருவிறிரு முன்செய்விக டக்கூத்தி னைக்கண்டு
புகல்விலா விறந கைத்தே
தென்பூத்த திருவுளமி ரங்கியெழில் சக்கரந்
தீர்த்தர்க் களித் துலகெலாஞ்
செயவிகட சக்கரவி நாயக னெனப்பெயர்கொள்
செம்மலிரு தாடு திப்பாம்
மின்பூத்த சடைமௌலி முதுகிரிப் பரமனிரு
விழிகள்களி தூங்க வெழிலாம்
விருந்திட் டிடப்புற மிருந்திட்ட மதுதந்த
விமலிஜெக தாம்பி கையுமிற்
கின்பூத்து வாலாம் பிகைப்பிரம ராம்பிகை
யெழிற்சுந்த ராம்பிகை யெனக்
கிருதா ளளித்தபழ மலைவிருத் தாம்பிகை
இயற்றமிழ் தழைக்க வென்றே. (1)
-------------------------------------------
திருமால்.
ஏர்மேவு பாற்கடலி னாலடையி னாகணையி
லென்றுமறி துயில்கொண் டுணர்ந்
தெண்ணிலண் டத்தசர வசரவுயி ரத்தனையு
மின்புற வளித்து மருளா
னார்மேவு பக்தகோ டிகள்புரித வத்தருமை
நாடியெக் காலு நசியா
நற்பரம பதநா டளிக்குமொரு கடவுளடி
நாண்மலர் தனைத்து திப்பாஞ்
சீர்மேவு வன்னிநீ ழற்குடிகொள் பழமலைச்
செல்வர்க்கு ளின்ப வெள்ளந்
தேக்கிவழி தரவவர் புறத்தொடு புறம்படரு
திவ்ய பச்சைக் கொடியைச்செந்
தார்மேவு கூந்தன்மட மானைப் பசுந்தேனை
தளர்நடை யனப் பேட்டினைச்
சாயன்மயி லைக்குயிலை விர்த்தநா யகியைப்பொற்
றையலை யளிக்க வென்றே. (2)
------------------------------------
பழமலைநாதர்.
நறைமிகு கொன்றைகோங்கு நதிமதி தும்பைதூர்வை
நகுதலை யென்றுமோங்க - வளர்சடைக் கேற்றினர்
நலமிக னங்கன்மேனி யவுணர்பு ரங்களூழி
யடலைகள் கொண்டுதீட்டு - புண்டரக் கீற்றினர்
குறைவி றவக்குமார னயர்வறப் பந்தர்நீழற்
குளிர்புனன் மொண்டுசாலின் - மொண்டுகை நீட்டினர்
குலவர சன்னமேறு கடவுள கந்தைமாளச்
சிரநட கழ்ந்துகாரி - செங்கரத் தேற்றினர்
மறைமுத லங்கமாறும் வலதவ ரையமாற
வடதரு தங்கிஞானச் - சுடரகத் தேற்றினர்
மயிலையில் சம்பைமேவு முனிகொடு கும்பமேவு
மடமயி லென்பினூடு - முயிர்வரத் தோற்றின
ரறைகட லன்றுமேவிக் கடை டபொழு திந்திராதி
முறைசெவி கொண்டுகாரி - கண்டமட் டாற்றின
ரருள்விப சித்துதாளி னணிநிழல் பெற்றுவாழ
வருள்பழ மலைப்பரேச - னடியினைப் போற்றுதும்
நிறைசுக மென்றுதேவ ரமுதையி கந்துவீசு
நிகரில்சு வைச்சொல்பேசு - மஞ்சிறைப் பூவையை
நிதமுமுள் ளன்பினோடு பரவுமெய் யன்பர்காண
நிசதரி சனஞ்செய்மேவி - நின்றமெய்க் காட்சியைச்
சிறையளி கிண்டிநாளு மிடறுதி றந்துபாடிச்
செறிநற வுண்டுவாழ்சு - கந்தநற் றூட்பொதி
செவியவ லங்கல்சூடு செயல்செய்ய ரம்பைமாதர்
சலசமி ருந்தமாதர் - நின்றுகைக் கூய்த்தொழ
மறைதுதி கொண்டதாளின் விரைமலர் கொண்டுதூவிச்
சுரர்தின முஞ்செய் பூசை - கொண்டவற் கேற்றிடு
மலிசுக சந்தநாடு புகவருள் பொங்கர்வாழு
மதிரச செஞ்சொல்பேசு - மஞ்சுகப் பேட்டினைக்
கறையிருள் தின்றுவீசு கதிர்மணி தொங்கன்மேவு
கமழ்நறு சந்தமோடு - குங்குமச் சேற்றளை
கதிர்முலை கொண்டுலாவு மயிலைவ ளங்குலாவு
கவின்முது குன்றின்மேவு - கன்னியைக் காக்கவே. (3)
----------------------------------
ஆழத்துப்பிள்ளையார்.
ஒருகோ டிரண்டுசெவி முக்கணால் வாயைங்கை
யோடாறு மத முடையதோ
ரும்பன்மா தவர்கள்தம துளமௌன கூடத்தி
னுறுபரம வைராக்ய மாப்
பெருமைபெறு தறியிற் பிறங்கன்பு தொடர்பூட்டிப்
பிரிவற விருத்தி நாளும்
பேசரு முயிர்ப்போத கவளமிட வுண்டவர்கள்
பிரியகு றிப்பி னொழுகி
யருமையொடு விளையாடு மாழத்துப் பிள்ளையிணை
யடிமலர் தனைத் துதிப்பா
மம்பொன்மணி மாடமீ தார்த்தகொடி வெண்மதியி
னகடுகீண் டொழுகு மமுத
வருவிபாய் செந்நெற் படப்பைகள் வளஞ்செறியு
மணிமுது கிரிக்க ணமரு
மாய்மயிற் பெடையை விர்த்தாம்பிகை யெனுஞ்சேயை
யன்பொடு புரக்க வென்றே. (4)
--------------------------------
சுப்பிரமணியர்.
கள்ளாரிதழித் தொடைப்பெருமான்
கரகங்கணம்போய்ச் சடையொளிப்பக்
கரியதிருமாற் கரச்சங்கிற்
கட்டுமவன்பாய்ச் சுருட்டொளிப்ப
விள்ளவடிப்பைஞ் சிறைத்தோகை
விரிக்குமஞ்ஞைப் பரிநடத்தி
விழைகுஞ்சரியை மணம்புரிந்த
வேலோன்றிருத்தாண் மிகத்துதிப்பாம்
பொள்ளாமணிமுத் தலைகொழிக்கும்
புனிதநதிசூழ் கிடந்தொளிரும்
பொருவிலயன்மான் முதலமரர்
போந்துபார்த்துள் ளதிசயிக்கும்
தெள்ளாரமுதை வன்னிநிழற்
சேர்ந்துமுளைத்த பவளவண்ணத்
திருமாமுதுகுன் றிடைப்படர்ந்து
திகழ்பைங்கொடியைப் புரந்திடவே. (5)
---------------------------------
நான்முகன்.
அலையே றிடும்பாற் கடற்குட நிகர்த்தவளை
யதுவய றுளைந் தீன்றமுத்
தாமெனவு மதனிலெழு நிறைமதியு மெனவொளிரு
மஞ்சிறைச் செஞ்சூட் டனம்
விலையேறு குரகதங் கடவிவெள் ளைக்கமலம்
வீற்றுறு மனப் பேட்டினை
விழைவொடு மணந்தரிபொன் னுந்திமலர் வந்துலகை
விதிகடவுளைத் துதிப்பாம்
கலையேறு மதியமுது குப்பவும் படவராக்
காரிவா யிடை கக்கவுங்
கையேறு மானலறச் சிற்சபையி னடனமிடு
கடவுண்ம கிழுந் துணைவியைச்
சிலையேறு வலியவென் புன்முடியில் பூனதச்
செஞ்சிலம் படி சூட்டிளஞ்
சித்ரமயி லைக்குயிலை விர்த்தகிரி வளரிளஞ்
சேயைப் புறங் காக்கவே. (6)
------------------------------
சத்தமாதர்கள்.
நனைமலர் திசைமுக னாத்தோ றடுத்தவள்
நசிகரி தோலைக் கபாயென் றுடுத்தவள்
மதவவு ணக்குலம் வீயப் படுத்தவள்
மலிகட னீரழ லாகக் கடுத்தவள்
கனபுவி தனையொரு கோடிட் டெடுத்தவள்
கைலையை யிறையொடு மேகத் தடுத்தவ
ளெரிபுரை வேல்கொடு காவற் கடுத்தவ
ளெனுமிவ ரெழுவர்தந் தாளைப் பழிச்சுதும்
கனைகுர லுமிழனல் போலச் சினத்தெழு
கதுவிய வவுணக் குலாதிக்க தாருகன்
றனைநிகர் சூர்முதன் மாயக்ர வுஞ்சமுந்
தலைகெடத் திசைதிசை யோடச் செலுத்துவேற்
றனையனைத் தோளிட் டுலாவிக் களித்திடு
தனிமுது கிரிவளர் தாயைப் புரக்கவே. (7)
-------------------------------------
காளி.
பையரவி னுலகுமண் ணுலகுவிண் ணுலகுமொரு
பகையுறா மற்காக்க வும்
பார்முழுது நாவினை விரித்துச்செஞ் சோரிதுளி
பார்விழா மற்சுவைத் துச்
சையமென வசுரனை மடித்தலத் தேற்றிமுத்
தலைவேற் கரங்கொண்ட வன்
றடமார் பிடந்துகோ ளரியேறு கைத்திவரு
தக்கசூ ரரிகாக்க வே
துய்யநீர் பூத்தமுள் ளரைபா சிடைக்கமல
தூவித ழவிழ்ந்துபா யுந்
துதைநறவு நிறைவட்ட மலர்மனைக் குடிகொண்ட
தோகைமட வாரிருவ ருஞ்
செய்யவல் விடவிழிய தாகச் செயுந்தவச்
செவ்விநோக் கிக்கடைக் கண்
செய்தபழ மலையிடம் படருமர கதவணச்
செழியபூம் பைங்கொடியை யே. (8)
----------------------------------
இந்திரன்.
சீர்மேவு கற்பகத் தருநீழல் வைகிச்
சிறந்தவீ ரிரு கோட்டுமுச்
செவ்விய கடாம்பொழியும் வெண்கரிக டாவியிரு
டின்னுமின் விடு புயலினை
யேர்மேவு திசைதிசை துரத்திவாள் கொண்டுமலை
யிறகறுத் தெவ் வுலகையு
மேவிதரு மத்தெய்வ மதுகொடு புரக்குமோ
ரிந்திர னடித் துதிப்பாம்
நார்மேவு நதிமதி துரந்திரவி லோர்பெண்மனை
நாடித்தூ தாய்ச் சென்றது
நாடிமெய்த் தொண்டியற் றிடுமியற் பகைமனையை
நண்ணியது மதி லிலங்கைத்
தார்மேவு புயவிரா வணன்மனைவி யார்க்கின்பு
தந்ததுமு னோர்ந்து நாளுந்
தளையன்பு பூட்டிச்சிந் தைச்சிறைசெய் முதுகிரித்
தையலை யளிக்க வென்றே. (9)
---------------------------------
முப்பத்துமூவர்.
கார்மல விருளென துளமனை யகலக்
கதிர்விடு சிற்சுடரைக்
கதிர்விடு மிரசித வள்ளத் தமுது
கரங்கொடு சென்றரசின்
சீர்நிழல் வதியுங் குமரற் கூட்டிச்
சின்மய வொளிகாட்டுஞ்
சிற்பரை யைப்பழ மலைவள ரிமயச்
செல்வியை யனுதினமு
மேர்கதிர் விடுபன் னிருசூ ரியர்திசை
யெண்மரு மிசைபோய
வெண்வை ரவரு மருத்துவ ரெழுவரு
மெண்மர் வசுக்களொடுந்
தார்மிலை ருத்திரர் பதினொரு வருமொளிர்
சந்திர னிந்திரனுந்
தகுமுப் பதுமுக் கோடிபல் தேவர்க
டகவொடு காத்திடவே. (10)
---------------------------
காப்புப்பருவம் முற்றும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2-வது. செங்கீரைப்பருவம்.
மதிதவழு மிமையத் திருத்தேவி யார்முன்ன
மாற்றுந் தவப்பெற்றி யான்
மங்கலத் திருவிடை வருந்தா துயிர்த்துமண
மஞ்சள்பொற் பொடிதிமிர்த்தே
துதிமலர் கரங்கொடு கணைக்காற் கிடத்திவெண்
சுரிமுகச் சங்கின் வாசந்
துன்னுங் குளிர்ந்தநன் னீராட்டி விழிசெவி
துணைத்தாள்க ணீவி வாய்கூ
யதிவேக முடனுச்சி நீரூதி மோந்துமெல்
லாடைகொடு மெய்யொற் றிப்பி
னம்பொன்முலை மார்போ டணைத்துநீ றிட்டுநுத
லணிநிலப் பொட்டு மிட்டுத்
திதிபெறக் கொங்கையமு தூட்டவள ருங்குழவி
செங்கீரை யாடி யருளே
திகழ்பழம லைப்பதி செழிக்கவரு மென்னம்மை
செங்கீரை யாடி யருளே. (1)
---
நந்தாத செல்வச் சிலம்பரையன் மனையாட்டி
நாண்முகை தனத்தி னோர்கை
நாடிவரு டவுமோர் தனம்பிடித் தமுதுண்டு
நழுவுபான் மடி நனைப்ப
வந்தாவ லொடுசிற்றில் விளையாட நயமொழியின்
வாங்கிப்பொற் புறத் தாருவால்
வனைபாவை யிடையேற்றி மாதவிப் பந்தரிடை
மல்கும் பிணாக் குழுவொடுஞ்
செந்தார் பசுஞ்சிறைக் கிள்ளையை மணஞ்செய்து
தீங்கனி விருந்திட்டுப் பொற்
சீர்ச்சிவிகை யேற்றிமணம் வருசெயற் றற்பெற்ற
சேற்கண்ணி நோக்க வவடன்
சிந்தாகு லந்தீர வந்தாடல் புரிசெல்வி
செங்கீரை யாடியருளே
திகழ்பழ மலைப்பதி செழிக்கவரு மென்னம்மை
செங்கீரை யாடி யருளே. (2)
----
காருலாம் புரிசைசூழ் மாடமலி கூடலின்
கட்பொலிபொன் மாலை வாசக்
கங்கைபுனல் கொண்டாட்டிப் பிறைநுதற் றிருநீற்றுப்
காப்பிட்டுத் திலத மிட்டுக்
கூருலாம் வேல்விழிக் கஞ்சனந் தீட்டியிரு
கொங்கைபா நிறைய வூட்டிக்
கோதறுநல் லாடையணை மீதிட்டுச் சீராட்டு
கோதைகட் களி தூங்கநற்
சீருலா மிருகர நிலத்தூன்றி யோர்தாட்
சிலம்பலற மேனீட்டி யோர்
செம்பத கணைக்காற் கவிழ்த்தூன்றி யுடனிமிரச்
சிரமே லசைத்தா டிடுஞ்
சேருலா மண்டசர வசரசிற் றுதரவனை
செங்கீரை யாடி யருளே
திகழ்பழம லைப்பதி செழிக்கவரு மென்னம்மை
செங்கீரை யாடி யருளே. (3)
----
மருவீற் றிடுங்கமல மலர்வழிந் தொழுகுதேன்
வாரியொடு முத்த நதியின்
மல்கும்வெள் ளப்புனல் மடைக்கால் கிழித்தொழுக
வளர்செந்நெல் கதலி கமுகந்
தருவீற் றிடும்பல வளஞ்செறி விருத்தகிரி
தங்குபூங் காவின் விண்ணோர்
தஞ்சிறு பிணாக்களொடு சிறுவீடு கட்டிச்சிறு
சாதஞ் சமைத்து மலர்மேற்
றிருவீற் றிடுங்கடல் பிறந்தமதிக் கடவுளைச்
சிறியவெரு விட் டிறைஞ்சிச்
செங்கைமலர் கூய்ப்பரவி யமுதுண் டுளந்தேக்கிச்
சிறுகைதத் தாங்கி கொட்டிச்
செருவீக்கி மகிழ்வோடு விளையாடு மொருகுழவி
செங்கீரை யாடி யருளே
திகழ்பழ மலைப்பதி செழிக்கவரு மென்னம்மை
செங்கீரை யாடி யருளே. (4)
-----
முள்ளறாத் தண்கொடிப் பாசடைச் செவ்விதழ்கொள்
முளரிமா ளிகையு மதுர
முதிருநவ ரசமொழுகு மறைகிடந் தனுதின
மொலித்திடு செநாவுந் துளிக்
கள்ளறாத் தருநீழ லுறையுஞ் சுராதிபர்கள்
கைதொழுது வேட்ட வடையுங்
கைலைவரை யுஞ்சில் லெனச்சிமைய மொய்த்திடு
கவின்கொளிமை யத்தேவி யார்க்
குள்ளறா வுவகைபெற வாயமுடன் விளையாடி
யோங்குபொன் மாளிகை வளர்ந்
தோங்குமர கதவல்லி யபிராம வல்லியெனு
ளத்தட முளைத்து மலருஞ்
கிள்ளறாக் கமலபத சிவகாம வல்லிநீ
செங்கீரை யாடி யருளே
திகழ்பழ மலைப்பதி செழிக்கவரு மென்னம்மை
செங்கீரை யாடி யருளே. (5)
-----
வேறு.
முககம லத்துக்கள் கயல்க ளிரண்டு முரிப்பொ டசைந்தாட
முடிபுனை சூழிய நடுவொளிரன்னம் முன்பு கவிழ்ந்தாட
மகபதி தனுநிக ரிருபுரு வச்சிலை மகிழ்வி னிமிர்ந்தாட
மணியொளி விடுசுட் டிப்பிறை நுதலிடை மன்னி யசைந்தாட
சுககுமு தச்செவ் வாய்பன் முத்தொளி தோன்றி விரிந்தாடத்
துங்கக் கரமலர் மொய்த்திடு வண்டுகள் துள்ளி யசைந்தாட
வகவக டிடைவைத் தண்ட முயிர்த்தவ ளாடுக செங்கீரை
யருள்பழ மலையர னிடமுறை வித்தகி யாடுக செங்கீரை. (6)
----------------------------------
தண்டை சதங்கை சிலம்பு புலம்பித் ததைந்து விரிந்தாடத்
தருநிக ருங்கை வளைவைத் தாற்றிய தண்மணி யொளியாடக்
கெண்டைக ணோடிச் செவிபொற் குமிழிடு கிளர்முத் தொளியாடக்
கிஞ்சுக வாயித ழெழுநறை புனலொடு கெழுபுன் கையாடக்
கொண்டைமென் மாலை யவிழ்ந்துந ரந்தக் குஞ்சி விரிந்தாடக்
கோதறு மரகத மேனி ததும்புங் கொழுவிய வெயிலாட
வண்டையி னின்றர னாடல் களித்தவ ளாடுக செங்கீரை
யருள்பழ மலையர னிடமுறை வித்தகி யாடுக செங்கீரை. (7)
--------
பக்க மணைத்துகில் வென்னிட் டுதையாப் பதமலர் கன்றாமே
பருகுறு தேறற் சுவைப்பெரு விரலிற் படுமண் ணெண்ணாமே
கக்கிடு கோழைக் குரல்மிக விம்மிக் கம்மிப் போகாமே
கவின்முத் தெனநுண் குளிமுத் திருவிழி கட்கடை சிந்தாமே
தொக்கப சுங்கதிர் மரகத மேனித் துகள்மண் ணணையாமே
துன்னிடு பவர்கர வணைமிசை தாவித் துள்ளிப் போகாமே
யக்கர வப்பணி யற்கிரு கண்மணி யாடுக செங்கீரை
யருள்பழ மலையர னிடமுறை வித்தகி யாடுக செங்கீரை. (8)
------
வேறு.
அடல்கெழு திசைவரை பொடிபட் டெழுதுக ளசுரர்கள் விழியேற
வதிர்குரன் மைடங் கடவிடு நமனுள மஞ்சிப் பயமேற
படவர வுடனெளி வுறமண் மகளுறு பாரச் சுமைபாறப்
படிறவு ணக்குல மகளிர்வ யிற்றிடை பற்றித் தீயேற
மிடலறு மமரர்க டுயர்தீர் தீரெனு மெல்லுரை வாயேற்
மிளிர்கொக் கிருபிள வாகச் சுடர்விடு மின்வேல் கையேறத்
திடமயில் கடவுமொர் மதலையை யுதவினள் செங்கோ செங்கீரை
திகழ்பழ மலையிடை வளருமொரிளமயில் செங்கோ செங்கீரை. (9)
-----
நெஞ்சுரு கிக்கசி வுற்றவர் கட்கெதிர் நின்றா டும்பாவாய்
நேமிக் கைக்கர கக்கைக் கடவுளர் நின்று தொழுந்தோகாய்
தஞ்சுறு குமரனு ளஞ்செறி யிருளறத் தங்கு மெழிற்பூவாய்
தக்க மறைச்சிர சிற்பொலி சிற்பத சங்கரி யெம்பாவாய்
கஞ்சுக மைஞ்சு மொழிந்தவர் கண்டிடு கண்ணே வெம்பாசக்
கடன்முழு காதெனை மடன்மலர் தாணிழ லிந்தா வென்றீயுஞ்
செஞ்சுக வாய்மொழி யின்சுவை யருள்பவள் செங்கோ செங்கீரை
திகழ்பழ மலையிடை வளருமொ ரிளமயில் செங்கோ செங்கீரை. (10)
செங்கீரைப்பருவம் முற்றும்.
------------------------------------------
3-வது தாலப்பருவம்.
கன்னற் சிலைவேள் வசந்தனொடு
கடவுஞ் சிறுகா லெழுந்தசையக்
கனலின் சிகைபோற் றளிர்த்திடுதீங்
கன்னி மாவி னிழற்றுயில்செய்
பின்னற் கயவாய்த் திகிரியெனப்
பிறங்கு மருப்புப் புனிற்றெருமை
பிரியாப் பசும்புற் கறிக்கறியாப்
பேதை யிளங்கன் றுளத்துன்னிப்
பொன்னற் குடமா முலைநின்று
பொழிபா லருவி யுவட்டெறிந்து
புகுத வளர்செந் நெற்கழனிப்
பூந்தா மரையிற் கண்வளரு
மன்னஞ் சிலம்பும் விருத்தகிரிக்
கரசே தாலோ தாலேலோ
வண்ட மனைத்து மளித்திடும்பெண்
ணமுதே தாலோ தாலேலோ. (1)
---------------------------------------
ஏற்கு மணிமே கலைநுசுப்பி
லிசைந்து விரிந்து மருங்கலைப்ப
வெழிற்கை சேப்பச் சிற்றிலிழைத்
தேற்கு நாளிற் குடிபுகுந்து
சேர்த்து முத்துச் சூட்டடுப்பிற்
செவ்வூன் கழிந்த வலம்புரியிற்
செந்தே னுலைப்பெய் தரவீன்ற
செழுமா மணியி னனல்கொளுவித்
தூர்க்குஞ் சுவைமாத் தனையரிசி
சொரிந்து சிறுசோ றினிதாக்கித்
தொந்தோ மெனவங் கெதிர்நடித்துத்
துடிவிட் டோச்சிக் கைவிரித்தங்
கார்க்குந் துணைவற் கினிதூட்டு
மரசே தாலோ தாலேலோ
வண்ட மனைத்து மளித்திடும்பெண்
ணமுதே தாலோ தாலேலோ. (2)
--------------------------------------
குரும்பை நாண வரும்புமிளங்
கொங்கை குலுங்கக் கடைசியர்கள்
குறுந்தாண் மள்ளர்க் கொழுநரொடுங்
கூடித் தால மதுவருந்திக்
கரும்பு கறித்து முடைவாயோர்
கையாற் கதுவு மீயோச்சிக்
காறள் ளாடி யசைந்தசைந்து
கவின்முத் தாற்றி னீர்பாய்ச்சித்
திரும்ப வுழுதங் களறுசெய்து
செந்நெல் விதைக ணாற்றுவிடுஞ்
செய்ய வயல்சூ ழதன்புடையிற்
றெங்குங் கமுகுங் கதலிகள் பூ
வரும்பும் வளஞ்சேர் விருத்தகிரிக்
கரசே தாலோ தாலேலோ
வண்ட முழுது மளித்திடும்பெண்
ணமுதே தாலோ தாலேலோ. (3)
------------------------------------------
செறிந்து நீண்டு கறுத்துநெய்த்துச்
சேரு மணப்பூ மகரந்தந்
திமிர்ந்து நறிய நெய்தோய்ந்து
திரியு மறுகாற் குழன்மடவார்
பிறிந்து குடையு நறுமஞ்சட்
பெருநீர் பாய்ந்து செழித்தசெந்நெற்
பிறங்கும் பருதிக் கயர்வொழியப்
பெருங்கா லோச்சும் பூந்தருத்தே
னெறிந்து மணிமுத் தலைகொழிக்கு
மிணையின் முத்தா நதிவளஞ்சே
ரெழிலார் நகரி லனுதினமு
மேற்றித் துதிக்கு மென்சிறுமை
யறிந்து புரக்கும் விருத்தகிரிக்
கரசே தாலோ தாலேலோ
வண்ட மனைத்து மளித்திடும்பெண்
ணமுதே தாலோ தாலேலோ. (4)
--------------------------------------------
ஊறும் பாற்குன் றிரண்டுசுமந்
தொசியு நறும்பூங் கொம்பனையா
ரோதி முரலுஞ் சுரும்புகள்பூ
வுதிர்க்குந் தாது விண்ணதியைச்
சேறு செய்யும் பொதும்பர்தவழ்
திங்கட் கலையை முசுக்கலைபாய்
செறிகம் பலைக்கங் கொதுங்கிவயற்
செந்நெற் சூட்டின் மேய்ந்துதிரிந்
தேறு முகிற்போத் தெருமையொடு
மிழுத்துப் பிணைய லிட்டடிக்கு
மெறும்கார் மள்ள ரிடிக்குரல்கேட்
டிரிந்தோட் டெடுக்க வயன்மலர்த்தே
னாறு தடுக்கும் விருத்தகிரிக்
கரசே தாலோ தாலேலோ
வண்ட முழுது மளித்திடும்பெண்
ணமுதே தாலோ தாலேலோ. (5)
----------------------------------------
வேறு.
எழில்வெள் ளிக்கிரி யமர்பவ ளக்கிரி யிடைபடர் பைங்கொடியே
யெவ்வுயி ருஞ்செய் தவக்குறை யறவரு மிமய மடப்பிடியே
செழிமல ரடிநினை பவர்மல விருடெறு சிற்சுடர் தினமணியே
செம்மல ரயனரி கைம்மலர் குவிகழல் செல்விபொல் லாமணியே
வழிசுவை யமுதுகு மதியே நவசரம் வதிமது ரக்கனியே
வண்டமி ழோர்புகழ் கொண்ட பதாம்புய வஞ்சி யிளங்கொடியே
தழியுள மகிழ்செயு முதுகிரி மயிலே தாலோ தாலேலோ
தருணத் துதவுநல் லமுதக் கடலே தாலோ தாலேலோ. (6)
--------------------------------
உடல நடுக்குற் றுருகுவ ரிதையத் தொளிரும் விளக்கொளியே
யொப்பில் பரஞ்சுட ருக்கித முதவுறு முத்தம நற்றுணையே
சுடர்விடு மணிகள் சுமந்து துவண்டசை சுகுணப் பொற்கொடியே
துய்ய ரகத்துமென் னைய ரகத்துந் துனுமமு தச்சுவையே
வடவரை மகரத் துவச நிறுத்திய வள்ளற் கொருசேயே
வசைசொற் பழகிய வெனைநற் றமிழ்சொல வைத்த வருட்டாயே
தடமுலை தழுவக் குழைமுது கிரிவளர் தாலோ தாலேலோ
தருணத் துதவுறு மமுதக் கடலே தாலோ தாலேலோ. (7)
------------------------------
அண்டர்க் கதிபதி வெண்கரி பிளிறிட வகநா ணதின்மூழ்க
வம்புய லேறி யடர்த்தெதிர் சென்றே யமரிற் றமரினொடு
மண்டெட் டிசையிற் றலைவரு மனிகமு மலையிற் சிறகரியும்
வச்ரப் படைகொடு பிறகிட் டுடைவது கண்டு முகங்குளிராச்
சண்டற் புரைய வுணக்குல மொழியத் தடவட வரைநெரியத்
தகுவியர் வயறெரி யக்கடல் சுவறத் தனிவேற் படைதிரியாத்
தண்டத் தமர்புரி தனையனை யருள்பவள் தாலோ தாலேலோ
தருணத் துதவுறு மமுதக் கடலே தாலோ தாலேலோ. (8)
------------------------------------
வேறு.
பாவும் பல்லுயிர் பாபக் கடனீர் தோயாமே
பற்றறு முத்தர்கள் மீண்டு கருக்குழி சேராமே
தாவுந் தருமக் கொடியுல கிற்றலை சாயாமே
தகுமறை தந்திர விதிவழி யும்பாழ் போகாமே
சேவுற் றிடுபவ ரடிநினை செந்நெறி சோராமே
செம்மணி நீறு திகழ்ந்துல கெங்கணு மாறாமே
மேவுந் திருமுது கிரிமயில் தாலோ தாலேலோ.
மெய்த்தவர் நத்திடு முத்தமி தாலோ தாலேலோ. (9)
-------------------------------------------
வேறு.
தடவர வத்தணை துயில்செய் முகுந்தன் றங்காய் தாலேலோ
தசைக ளுதிர்த்தவ னசைகெட வரனுடற் பங்காய் தாலேலோ
நடமிடு தற்பர னுளநளி னத்தமர் நங்காய் தாலேலோ
நாரத னுக்கெழிற் பெண்ணுரு தந்திடு நாயகி தாலேலோ
படவர வைச்சிறு விரன்மோ திரமாய்ப் பற்றினள் தாலேலோ
பைங்கர கமலத் தொளிர்திரி சூலப் படையாய் தாலேலோ
மடன்மலர் மகளிரை விழியென முகமலர் வைத்தவள் தாலேலோ
மதிதவிழ் முதுகிரி வளர்சஞ் சிவியே தாலோ தாலேலோ. (10)
தாலப்பருவம் முற்றும்.
--------------------------------------
4-வது சப்பாணிப்பருவம்.
தேனூற் றரும்புவாய் விண்டலர் பொதும்பரிற்
செழியசெந் தளிர்கள் கொய்துஞ்
செஞ்சிறு பிணாக்களொடு மட்காற் கலம்பெய்து
சிற்றில்விளை யாட் டயர்ந்தும்
வானூற்று புயன்மகிழ் மயிற்குஞ் சனக்குஞ்சு
வகைவகைய கிளி வளர்த்தும்
வண்பூவை யொடுபேசி வாய்முத்த மிட்டுமொளி
வளர்பைங் கழங் காடியுங்
கானூற்று தொடிவிரவு காந்தண்மலர் கைக்கொண்டு
கண்பொத்தி விளையாடி யும்
கந்தமலி நெட்டித ழவிழ்க்கும்வெண் டாமரைக்
கலைமகளி னிருகை மாறித்
தானேற்று பம்பைசுற் றிடுமலர்க் கைகூப்பிச்
சப்பாணி கொட்டி யருளே
தண்முத்த நதிசூழ்ந்த முதுகிரிப் பெண்ணரசி
சப்பாணி கொட்டி யருளே. (1)
-------------------------------------------
ஐந்தொழிலு மைஞ்சத்தி யாற்பிரமன் முதலான
வைவர்க்கு மெண்ண ளவைகாட்
டைவிரல் படைத்தகை குறிப்பிட் டதைத்தெளிய
வாற்றியறி வித்தி டுங்கை
பைந்தழைய வரசடியிற் குமரனுக் கதிமதுர
பால்வாய் நெரித் தூட்டுகை
பரமனைக் கச்சியின் முலைச்சுவ டுறத்தழுவு
பங்கயச் செங்கை யவராற்
றந்தநெற் சிற்றளவை யிருநாழி யாலறந்
தனையெணான் கும் புரிகைமேற்
றமியனையு நோக்கிநீ யஞ்சலென் றிடுகையொளி
தங்குமணி கங்க ணக்கை
சந்தமக ரந்தநறை கொட்டுமலர் கொய்கையாற்
சப்பாணி கொட்டி யருளே
தண்முத்த நதிசூழ்ந்த முதுகிரிப் பெண்ணரசி
சப்பாணி கொட்டி யருளே. (2)
----------------------------------------
சேலையலை யேற்றுமொரு வேலையிடை யாலிலையிற்
செங்கண்வளர் புயன் மார்பனைச்
சேர்திருவு நான்மறைக ளோலிடு மறைக்கிழவர்
செந்நா மணிப்பீடம் வாழ்
வேலையலை செய்விழித் திருவாணி யிருபுறமு
மேவியைம் பான் முடித்து
விழுமலர் புனைந்துநுதல் கஸ்தூரி சவ்வாது
விரவிநற் றிலத மிட்டுக்
காலைமலர் குவளையிரு கட்கஞ்ச னந்தீட்டிக்
கதிர்செய்மணி மாலை பலவுங்
கவினுடல் பெறச்சாத்தி மணவறையி லழன்முனாக்
கரகநீர் விடு தந்தையார்
சாலவாழ்த் தித்தரவெம் மையர்தொட் டிடுகையாற்
சப்பாணி கொட்டி யருளே
தண்முத்த நதிசூழ்ந்த முதுகிரிப் பெண்ணரசி
சப்பாணி கொட்டியருளே. (3)
-------------------------------------
போராட்டு மசுரருடல் தசைமென்று நிணமூளை
போழ்ந்தெடுத் துத் தின்றுகைப்
புட்டுநக் கிக்கக்கி விக்கிப்புண் ணீர்மாந்திப்
புளிவாய் குதட்டும் வடிவேற்
பாராட்டு குழவியைக் கணைக்காற் குளிப்பாட்டிங்
பசிதமிட் டுச்சி மோந்து
பாற்கொங்கை சங்கிட்டுக் குவிவாய் நெரித்தூட்டிப்
பைம்பொற் குறங்கி னேற்றிப்
பேராட்டி காலசைத் துப்பாட் டிசைத்திட்டுப்
பிரியமொடு கண் வளர்த்துப்
பெய்துதுகி லணைமணித் தொட்டிலிடை யிட்டுப்
பிணித்தபொன் வட மசைத்துத்
தாராட்டு கதலிகமு கதுநாட்டி யாட்டுங்கை
சப்பாணி கொட்டி யருளே
தண்முத்த நதிசூழ்ந்த முதுகிரிப் பெண்ணரசி
சப்பாணி கொட்டி யருளே. (4)
---------------------------------
கங்கோடு பொருமலை கடற்றானை சுற்றுபுவி
காவலர்கண் முன்றி றூர்க்குங்
கப்பணப் பொற்குப்பை யோடுந்தி சைத்தலைவர்
கதிர்மணி முடித் தாமமுந்
தங்கோதை யோடவைக டலைமயங் கிடவொற்றைச்
சக்கர முருட்டி யுலவுந்
தகைப்பரிதி வெயில்விடும ணுலகுபொன் னுலகரவு
தங்குலக மெங்கு மஞ்ச
வெங்கோப மறவாணை யாழிகட வித்திக்கு
விசையஞ்செய் தெங்கோ னக
வெள்ளிவே தண்டத்து மேறித் துஜங்கட்டி
வெம்முரச மார்த்து வெற்றிச்
சங்கோல மிடவெழிற் செங்கோல் பிடித்தகை
சப்பாணி கொட்டி யருளே
தண்முத்த நதிசூழ்ந்த முதுகிரிப் பெண்ணரசி
சப்பாணி கொட்டி யருளே. (5)
-----------------------------------------
வேறு.
எம்பெரு மானடி வைத்த கருத்த ரிடற்கடன் மூழ்காமே
யெச்சம யருமுள மச்ச முறீஇத்தம தெழினூ லோதாமே
செம்பொரு ணிலையிது வெனுமுப நிடதச் செவ்வழி கோணாமே
செந்நா நின்றுரை செய்திடு சுத்தச் செந்நூல் தோலாமே
சம்புசொ லின்படி பம்பனு பவநிலை சங்கைகள் சேராமே
சகசம் துறவுப தேசித் தடிமுடி சாற்றிக் குமரன்வாய்க்
கும்பவ ளப்பா லூட்டிடு கைக்கொடு கொட்டுக சப்பாணி
கோதறு முதுகிரி யாதி பராபரை கொட்டுக சப்பாணி. (6)
--------------------------------
அரவக் கிண்கிணி யணிதாள் தத்தடி யாற்றிச் சேலாமே
யங்குமு தச்சிறு வாய்பால் சங்கிட் டணியிதழ் கன்றாமே
பிரமப் புரபொய் கைக்கரை யயில்பால் வாய்வீ ணாகாமே
பெருமா னென்பணி புயமலை பாமலர் பெய்தது சோராமே
தரமறு பதிதரும் வீடடை வித்தது தரையினி வாராமே
தண்டமிழ் நாடு தழைந்தது சைவஞ் சமணிருள் சாராமே
குரவணி காழிக் குழவியை யருள்பவள் கொட்டுக சப்பாணி
கோதறு முதுகிரி யாதி பராபரை கொட்டுக சப்பாணி. (7)
--------------------------------
வாருந் தண்பனி நீரும் பொதிமுலை வளர்சங் கிலிபரவை
வந்தணை சந்தச் சேறு திமிர்ந்திடு வன்றொண் டன்னொருகா
லூருங் கிழமிவர் பேருங் கிழமெழி லுறுநதி யுங்கிழமே
லொள்ளிய மனைவி பெருங்கிழ மென்றிகழ் வுறுசொற் புவிமாறச்
சாருஞ் *சோண கிரித்தவ னுறுபசி தணியத் தகுமன்னஞ்
சட்சுவை கறியொடு வாலாம் பிகையாய்த் தண்மலர்ப் பதநோவக்
கோரும் படிவந் தூட்டிய கரமலர் கொட்டுக சப்பாணி
கோமுது கிரியமர் வாமிம னோன்மணி கொட்டுக சப்பாணி. (8)
--------------------------------------------------------------------------
*சோணகிரித்தவ னென்பது குருநமசிவாயரை
-----------------------------
மறைகடல் தெளிய வடித்தெடு தந்திர வழிபதி கத்தோடே
மகிழ்சிவ ஞானமெ னமுது குழைத்திடு வள்ள முலைப்பாலாற்
கறையறு கழுமல மதலை வயிற்றை நிரப்பிய கைத்தாயே
கரிமுக னெழிலறு முகனை வளர்த்திடு கனசெவி லித்தாயே
யறைகுழ லிசைமலர் பிரசத் திரதத் தணியமிழ் தத்தோடே
யளவிய முதிர்கனி பொழிநறை மிக்க பெருக்கே போற்
குறையற விதழ்தே றற்சொரி குயிலே கொட்டுக சப்பாணி
கோமுது கிரியமர் வாமிம னோன்மணி கொட்டுக சப்பாணி. (9)
------------------------------------
வேறு.
வெயில்விடு கதிர்மணி பாரப் பூண்முலை
சிறுமியர் குடைபுன லார்பொற் றாமரை
விழுமடு வோடிப் பாய்தர மிக்க பெருக்கே போற்
சுரிமுக வரிவளை சூலுற் றேபெறு
மணியொளி யலகினி லாவொப் பாய்கவின்
மணமிகு கைரவ வூறற் றேனொடு மண்டும்வ யற்கோடி
செயின்மடை நடுவிடை பீறிக் கீறுமுள்
செறிமலர் கைதைத் தூறினை வேரொடு
சிதைய முறித்தலை வீசிம தன்கைவில் செழியநி றைத்தேறி
வனையுரு ளொன்றுறு தேரை யிழுத்தெழு
பரியுடல் வியர்வறக் கால்மிக் கோச்சிடு
வளமுள சோலைசெவ் வேழ மடித்து முறுக்காலைப்
பயிறெளி சாறு மிடாவிற் பாய்தரத்
தெறிதுளி மணிமுத் தாறுற் றேசெலப்
படுமலை யோதைக் கேயு ணடுக்க மெடுத்தோடி
யருகுறு தடமிள மேதி போய்விழ
வதில்வள ருறுசெவ்வ ரானெட் டேடவி
ழழகிய கதலிகள் சாய வுயர்ந்த மடற் றெங்கின்
வியன்மிட றொடிபடக் காய்மிக் கார்குலை
யுதிர்தரச் சாடிப் போய்விண் ணார்நதி
குடையும் வளஞ்செறி முதுகிரி யமர்மயில் கொட்டுக சப்பாணி
குறையறி வுடையவென் மீதிற் சீரருள்
கொழிமல ரிணைவிழி மாறற் றேயுறக்
குலவல ரடிநிழல் வீடிட் டாள்பவள் கொட்டுக சப்பாணி. (10)
--------------------------------------------
சப்பாணிப்பருவ முற்றும்.
-----------------------------------
5 - வது. முத்தப்பருவம்.
உருகி யுருகிக் கண்களினீ
ரொழுகித் துதிநாத் தழும்பேறு
மொப்பில் தவத்த ருளக்கோயி
லுறையு ஞான மணிவிளக்கே
குருகி னுருவாய் முடிதுருவுங்
கொச்சைப் பிரம னகந்தணியக்
குப்புற் றுருளக் குலவரைகள்
கோடா கோடிக் கொடுமுடியாய்ப்
பெருகி வளரெம் பெருமாற்குப்
பிரியப் பெரிய நாயகியாய்ப்
பெண்ணிற் கரசா யண்டமெலாம்
பெற்று வளர்த்துப் பெருகிடவிண்
டருவிற் பொலியும் பெருங்கருணைத்
தாயே முத்தந் தருகவே
தக்கார் புகழும் விருத்தகிரித்
தாயே முத்தந் தருகவே. (1)
--------------------------------------
கஞ்சம் பொருவு நின்னடியிற்
கண்மூன் றுடைய வெம்பெருமான்
கலவி யூடல் தணித்திடுவான்
கவிழ்ந்து வணங்கச் சிரம்பொலியும்
பிஞ்சு மதியி னமுதகலை
பெருகி யோட விதழிநறை
பெருகிப் பாய விரிந்தசடை
பிறழா தசைத்த படவரவ
நஞ்சு பிலிற்ற மானலற
நகுவெண் டலையு முடனலற
நன்னீர் மகளங் கோட்டெடுக்க
நாடி நகைக்குந் திருவாயாற்
றஞ்சத் துணைவற் கருள்புரியுந்
தாயே முத்தந் தருகவே
தக்கார் புகழும் விருத்தகிரித்
தாயே முத்தந் தருகவே. (2)
---------------------------------
அண்ட ரயன்மாற் கரியவெம்மா
னவுணர்க் கிறையா மிலங்கையர்கோ
னவிரு நவரத் தினமிழைத்த
வரிய மணிமா ளிகையதனைக்
கொண்ட காவ லாணையையுட்
குறியா தடைந்தங் கவன்மனைவி
கொங்கை புணர்ந்து மலரணையிற்
கொஞ்சு மமையத் தவன்வரவு
கண்ட பொழுதே மதலையுருக்
காட்டி மலர்வாய் குவித்தழுது
கண்ணீர் பாயக் குறம்பாடிக்
கையேற் றெடுத்து மார்பணைத்துத்
தண்ட ரளமுத் திடும்வாயாற்
றாயே முத்தந் தருகவே
தக்கார் புகழும் விருத்தகிரித்
தாயே முத்தந் தருகவே. (3)
---------------------------------
ஐந்து பொறியும் புலன்வழியி
லாமை யுறுப்பைந் தடக்குதல்போ
லடையா தடக்கி நடுநிலையி
லடுக்கு நினைப்பு மறப்பதும்போய்ச்
சிந்தை யொருங்கிச் சமனான
செய்ய தராசி னுனியதுபோற்
செவ்வே யிருந்துந் தனையருளைத்
தேர்ந்து பரையைத் திளைத்துமே
லெந்தை யடிக்கீ ழிரண்டறநல்
லின்பப் பூவை யொடுஞ்சுகித்தங்
கிறுமாந் திருக்கும் பெருந்தவத்தோ
ரேற்றித் துதித்துக் கேட்டவரங்
தந்து புரக்கு மெழில்வாலைத்
தாயே முத்தந் தருகவே
தக்கார் புகழும் விருத்தகிரித்
தாயே முத்தந் தருகவே. (4)
------------------------------
வானப் புனலுள் வாங்குமிப்பி
வரும்வெள் ளாணி முத்துநின்சேய்
வண்ணச் சிவிகை யார்த்தழகு
மாண்ட கரும்பின் முத்தமரன்
மோன நுதற்கட் டழற்படிந்து
முறிந்த கயலின் முத்தமெழின்
மூக்கிற் றூங்கித் தேய்ந்தபுயன்
முத்திந் திரன்கா லிழிவடைந்த
கூன லிளவெண் சங்கீன்ற
கொழுமுத் தெழில்வே யீன்றமுத்துங்
கொண்ட னிறத்தோன் வாயெச்சிற்
குழுமி நாறு மெழின்முத்தித்
தான மளிக்கு நின்கனிவாய்
தாயே முத்தந் தருகவே
தக்கார் புகழும் விருத்தகிரித்
தாயே முத்தந் தருகவே. (5)
-----------------------------------
வேறு.
இணையடியின் மணியிட் டிழைத்திடு சிலம்புமுறை
யிடுசிறு குரற் கிண்கிணி
யிற்றிடும் திற்றிடுமி தென்றிரங் கிடுமே
கலைக்கிசைய பட்டு வீக்கும்
பணைமுலை சுமந்தவிடை யொட்யாண முங்கரப்
பங்கயத் தேந்து கிளியும்
பைந்தரள மாலைமார் மேலுத்த ரீயமிடர்
பகல்செய்மாங் கிலிய நாணு
மிணையின்மதி முகமுமம் மதிநடு வரும்புகுறு
விளநிலாப் புன் முறுவலு
மெவ்வுயிர்க் குங்கருணை பொழிவிழியு மரகத
வெழிற்கோல நோக்கி யெம்மான்
பணையெண் புயங்கொண் டணைத்துமுத் தாடுசெம்
பவளவாய் முத்த மருளே
பழமலையின் வளர்வன்னி நிழலமர் பரன்பன்னி
பவளவாய் முத்த மருளே. (6)
-----------------------------
ஐயமுறு துடியிடை துவண்டிட வுறச்சூழு
மறுகாற் சுரும்பர் பாடு
மஞ்சிலோ திப்பனி மலைக்கரையன் மனைவிகச்
சார்த்தமுலை மலையி லாலும்
துய்யவெண் டரளவொளி மதிநிலாக் கற்றையிற்
றுளும்பமுத கலையை மானத்
தோமறு சகோரமுண வாக்கருதி யுற்றவண்
டுண்டமிட் டள்ளி யுணல்போற்
கைவலி நிலாக்கதிற் சிதறிடுந் திவலையினொர்
கதிர்முத்த நாசி நாலக்
கயல்விழி கடைப்பிறழ வருவியென வொழுகுபாற்
கதிர்முலை விரற்கை வருடப்
பையவோர் தனம்பிடித் துண்டசிறு குழவிசெம்
பவளவாய் முத்த மருளே
பழமலையின் வளர்வன்னி நிழலமர் பரன்பன்னி
பவளவாய் முத்த மருளே. (7)
------------------------------------
வேறு.
அக்க மனற்பொறி கக்க கடக்கரி
யட்ட தளைப்புனையா
வச்சுரர் மெச்சிட மட்டினு நற்கணை
யைப்புற னிட்டெழிலார்
செக்கர் சடைக்கர வைக்கொடு கட்டி
யிறுக்கி முடித்தணியாச்
செங்கட் பணிநா ணேற்றிபொன் மலையைத்
திண்டனு வாய்ப்பிடியாத்
தக்க புவித்தொழின் மிக்கிர தத்தை
நடத்தித் தருக்கினொடு
தழலெழ முப்புர நகையி னெரித்திடு
தழைசினை வன்னிநிழன்
முக்கணர் பக்க முளைத்த பசுங்கொடி
முத்தந் தந்தருளே
முத்த நதிக்கரை யிற்பொலி சிற்பரை
முத்தந் தந்தருளே. (8)
வேறு.
சிமய வெற்பன் மனையி யற்றுந் தவப லப்பெண் பிடியனாய்
செறியி சைப்பண் புறவு ரைக்குஞ் சிலசொல் கற்குஞ் சிறுகிளாய்
இமைய வர்க்கின் மனைவி யிற்சந் ததியொ ழிக்கு மிறைவியே
யிறைவர் மெச்சுங் கவுரியற்சந் ததிவ ளர்க்கு மெழிலியே
சமைவு டைத்தண் டரணி முற்றுந் தனிபு ரக்குந் தலைவியே
சதும றைக்கிண் கிணிய ரற்றும் பதநி னைக்குஞ் சதுரர்க
டமைபு ரக்குங் கருணை நற்பெண் டருக முத்தந் தருகவே
தடமு துக்குன் றிடைபொ லிப்பெண் டருக முத்தந் தருகவே. (9)
வேறு.
துன்றிருள் சென்று கிழித்திடு மதிகதிர்
சூழ்கடல் வளை புவியிற்
றுரிசற வடிமைசெய் வழிவழி யடியர்பொ
ருட்டலர் வட் டணையிற்
சென்றுழல் வண்டிசை கொண்ட குழற்றிரு
வைச்செழி வெண் கமலச்
செல்வியை யுயிர்க டொறும்பொலி ஞானத்
திருவையும் வல மிடமா
யொன்று நுதற்புறம் வைத்திடு முக்கணி
யொப்பில் பரா பரையே
யொண்டவ மில்லரு மண்டிசெய் தொண்டுள
முறுசிந் தா மணியே
முன்றவர் தேடி யளித்திடு பொற்கொடி
முத்த மளித் தருளே
முதுகிரி யதனின் முளைத்த பசுங்கொடி
முத்த மளித் தருளே. (10)
முத்தப்பருவ முற்றும்.
-------------------------------
6- வது. வருகைப்பருவம்.
அம்பொன்மணி மேகலை யசைந்திடச் செஞ்சிலம்
பார்ப்பநின் சீறடி பெயர்த்
தடியிடுந் தொறுமுன தலர்த்தகச் சுவடெழி
லரம்பையர்கள் புவி மாதர்தம்
வம்பலர்க ணோக்கிட வலம்புரியு மெந்தைமுடி
வளரிளம் பிறையு நாறும்
வண்ணூ புரத்தினொலி கற்றிடர்க் கோவசையு
மடநடை பயின் றிடர்க்கோ
செம்பொனடி கைப்பற்று தெய்வப் பிணாக்களொடு
சிறையோதி மம்பின் செலச்
சிற்றிடை யொசிந்துதள் ளாடவிழி யருண்மடை
திறந்தொழுக வென திதையமு
மம்பொன்மணி மன்றுந்த னாலய மெனக்களித்
தமரிளம் பிடி வருகவே
யண்டமுழு துங்கரு வுயிர்த்தவிர்த் தாம்பிகையெ
னழகுபூங் கொடி வருகவே. (1)
பொன்னெடு விலங்கலை வலஞ்சூழு மிருகதிர்கள்
பொழியுமனல் விட வரவின்வாய்
போராட்டி னுக்கஞ்சி நறையொழுகு செஞ்சலச
பூவிடை யொளித்தன் மானத்
தன்னிகரில் பரமன்விழி முச்சுட ரிலங்கியைத்
தன்வல மலர்க்கை வைத்துத்
தண்மதி தனைச்சடையின் வைத்ததென வையாமை
தானுணர்ந் துனது செவியின்
மின்பருதி சுடர்விடு குழைத்தோ டிலங்கவளை
மிளிர்கைகங் கண மார்த்திட
மென்குழன் முடித்தபூ நறையுண்டு களிவண்டு
மிடறுடைந் திசை பாடிட
வன்னநடை தளர்வெய்த வாயமுட னாடல்புரி
யழகிளம் பிடி வருகவே
யண்டமுழு துங்கரு வுயிர்த்தவிர்த் தாம்பிகையெ
னழகுபூங் கொடி வருகவே. (2)
-
மண்டிரத பாலாழி வயிறுளைந் தீன்ற பொன்
வனிதையும் மதுர மொழுகும்
வண்டமிழ்த் துறைபடியு மடநடைப் பிடியுநிறை
மதுவுண்ட களிவண் டறாப்
பண்டழைக் குங்கமல மனைகுடி தகத்தொண்டு
பண்ணும் பெருந் தொண்டர்தம்
பருமான தத்தடப் பூங்கோயில் குடிகொண்ட
பச்சைமர கத வல்லிவெண்
புண்டரப் பொடிவிரவு செம்புய மலைக்கணழல்
பொங்குவெங் காரி பில்கும்
புழையெயிற் றரவணி புராந்தகக் கொழுநரோடு
போந்தடியர் மிடி தீர்த்திடு
மண்டர்முனி வரரிருடி யாதியர் துதித்துபணி
யாற்றிளம் பிடி வருகவே
யண்டமுழு துங்கரு வுயிர்த்தவிர்த் தாம்பிகையெ
னழகுபூங் கொடி வருகவே. (3)
காரிரு டுலைக்குமிள ஞாயிறென வொளிவிடுங்
கதிர்மணிச் சபையி லெம்மான்
கட்கடை பிறந்தகரு ணைப்புணரி நீத்தமெழு
கடன்மடை திறந்த தேய்ப்பச்
சீறிடவ ராதமரு கங்கர முழக்கிடத்
திக்கின்மழு வெரி தாவிடச்
செங்கைமா னலரிடச் சிரமாலை கலகலெனத்
திண்டோ ணிமிர்ந் தசைத்துத்
தேறிடு புலிக்குட்டி கண்புனற் றுளிப்பவிதி
செங்கைதா ளங்கள் கொட்டத்
திருமகண் மணாளகை மத்தள முழக்கிடத்
தித்திமிதி தெய்த்தெய் யெனவே
யாரியர் சபாசென்று தோடட்ட வாடல்கண்
டமரிளம் பிடி வருகவே
யண்டமுழு துங்கரு வுயிர்த்தவிர்த் தாம்பிகையெ
னழகுபூங் கொடி வருகவே. (4)
மேடமொன் றோடொன்று பொருதுமொலி யானைபோர்
மேவொலியு மிளைஞர் கடவும்
வேகவாம் பரியினொலி வெம்பருதி தேர்பூட்டி
விடுபரிக ணாண வீர்க்கும்
மாடமார் வீதியி லுருட்டுதே ரொலியுமண
மங்கல வியத்தி னொலியு
மலியலைக் கடலொலியு மஞ்சிடி முழக்கொலியு
மாறத் தெழிக்கும் வடிவா
னாடரிய மதனைநிக ராடவரொ டூடியின்
நங்கையர்க ளணி கலனெலா
நன்மலர் கரங்கொண் டிழுத்துமறு கெறியுமொலி
நண்ணுதிரு மறு கோதைவே
றாடக மணிப்பணியி னழகுசெய்வ ளத்தநக
ரமரிளம் பிடி வருகவே
யண்டமுழு துங்கரு வுயிர்த்தவிர்த் தாம்பிகையெ
னழகுபூங் கொடி வருகவே. (5)
-
வேறு.
சோலை யொலிக்குங் குருகினங்கள்
சுரும்ப ரொலிக்குங் கமலமனைச்
சுருங்கு முகவெண் சங்கொலிக்குஞ்
சொரிதேன் குமுத மீயொலிக்குங்
காலை யொலிக்குங் குக்கிடங்கள்
கதிர்போய் விழுமேற் கடனிலவுக்
கற்றை விரிக்கு மதியைமுகக்
கமலம் வாட்டும் மாதர்நடச்
சாலை யொலிக்கு மிசைகேட்டுச்
சலசத் திருவாய்ச் சிரிப்பொலிக்குஞ்
சற்று மறிவில் லாவெளியேன்
சாற்று மிந்தத் தமிழ்ச்சொன்மலர்
மாலை யொலிக்கும் புயமடமா
மயிலே வருக வருகவே
மஞ்சார் பொழில்சூழ் விருத்தகிரி
வாழ்வே வருக வருகவே. (6)
திருவீற் றிருக்கு மகன்மார்பச்
செம்மற் புயலு முலகனைத்துஞ்
செய்யுங் கமல வட்டவணைத்
திசைமா முகனுந் தொழுதேத்து
மருவீற் றிடுமான் மதமளைந்து
வளரு முலைமா மலைசுமந்த
மகளீ ராசைக் கடல்வீழ்ந்து
மாயா வுடலச் சுகம்வேட்டுக்
கருவீற் றிருக்குங் கடிதடச்சிக்
கடல்வீழ்ந் துழலுங் கடையேனைக்
கைதந் தெடுத்து முத்தியெனுங்
கரைசேர்த் தளித்த பரன்முடிக்குக்
குருவீற் றிடுமா முடிதரித்த
கோதாய் வருக வருகவே
கோலத் திருமா முதுகிரிப்பூங்
கொம்பே வருக வருகவே. (7)
தேயா தொளிர்பொன் மங்கலமுந்
திதலை படர்ந்து செம்மாந்துத்
திரண்டு நெருங்கிப் புடைத்துவளர்
திகழ்மென் முலைக்குன் றிரண்டேந்தி
வீயா வளஞ்சேர் விண்ணிலகும்
வியன்பூ வுலகுஞ் சராசரமும்
விளங்கி யசைய வசையாத
விமலன் றானு மசைந்திடவெந்
தீயார் விடமுண் டுகந்தவரன்
செங்கை மலர்தொட் டமுக்கலின்மேற்
சிறியேன் றலைக்கே ரலர்சிலம்பு
சிலம்ப வெடுத்தேற் றழிவில்பொருள்
வாயாற் குதவு மடிபெயர்த்தென்
வாழ்வே வருக வருகவே
வையம் புரக்கும் பழமலைக்கண்
மணியே வருக வருகவே. (8)
வேறு.
ஆழி யலைநே ரெங்கள்பல
மகற்ற வருக மலைச்சிறைவிட்
டகற்றிப் புவித்தா யுதரமினி
யடையா தெழிற்றாள் தரவருக
தாழ்வி லாப்பே ரருட்செல்வந்
தழைய வருக மெய்ஞ்ஞானந்
தங்கு மெளனந் ததும்பாத
தனிப்பே ரின்பந் தரவருக
வூழி யினுங்கெட்டுலவாத
வுண்மைத் தவத்த ருளக்கோயி
லொளிரு ஞானச் சுடர்வருக
வொப்பில் விருத்த கிரியமர்ந்து
வாழி வருக மலைக்கரசன்
மதலாய் வருக வருகவே
வையம் புரக்கும் பழமலைக்கண்
மணியே வருக வருகவே. (9)
வேறு.
நினைய வரிய சுருதி முடியி
னிகழு பிரம சொரூபியே
நிகழு மறிவி லமுத முதவு
நிலவு விரிவெண் மதியமே
பனையின் வளரு மறமென் ரைவு
பதற விழுநல் லசனியே
பகரு முயிருண் மருவு மலவல்
லிருளை யடுசெம் பருதியே
யனையி னமல தவர்கள் பசிக
ளகல வருணல் லமுதமே
யடியர் தவநற் பயிர்க டழைய வருளென்
மழைபெய் யெழிலியே
வனைசெய் கமல சரணி விரைவில்
வருக வருக வருகவே
வளரு முதிய கிரியி லமர்பெண்
வருக வருக வருகவே. (10)
வருகைப்பருவ முற்றும்.
-----------------------------------
7-வது அம்புலிப்பருவம்.
செம்பொன்முடி யமரர்கள் விரும்புபாற் கடலிடை
செனித்தலாற் றிருவெ னுந்தன்
சேடியொடு கூடப் பிறத்தலாற் றற்பெறு
திருத்தாதை மரபு புவிமேற்
பம்பிடக் குலமுதல்வ னாதலாற் றன்சேய்க்குப்
பால்கொடு வளர்த்த பெண்கள்
பரிவொடுந் தழுகொழுந னாதலாற் றற்கொழுநர்
பவளவார் சடை முடியின்மேற்
கம்பமற வொளிவீசு கண்ணியென் றோவுயிர்
கலாநிதி யெனத் தெரிந்தோ
கைமே லெடுத்துன்னை வாவெனக் கூவிடக்
கடிதவமு னென்செய் தனையோ
வம்புவியி னின்போல்வ ரெவராக லால்விரைவி
லம்புலீ யாட வாவே
யரியமுது கிரியிலமர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (1)
விண்ணவர் குழாம்பிழிந் தூற்றிக் குடித்துவெளி
வீசுகோ தென்று நவகோள்
விரவும்விட வரவமுள் விழுங்கிகக் குச்சிட்ட
மென்றும்வீ ரக் கடவுள்காற்
கண்ணகப் பட்டுதேய்ப் புண்டனை குருத்தார
கமனஞ்செ யிழிவு மேற்றாய்
கயரோகி யாய்க்குறை வடைந்தனையில் விழிவெலாங்
கருதாளி தென்ன வருளோ
தண்ணறா மலர்வாய் திறந்துவா வாவெனத்
தன்கைவீ சிக் கூவினாள்
தவமென்கொ லோநீ பிழைக்குநாள் கிட்டினது
தாமத முறாது விரைவி.
லண்ணல்கண் டகமகிழ்செய் பண்ணவி மடப்பிடியோ
டம்புலீ யாட வாவே
யரியமுது கிரியிலமர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (2)
போரேறு விண்டலம் போய்ப்புகுதி யேற்பகைப்
பொங்குமா சுணம் விழுங்கும்
பொருமலை கடற்புகிற் குறுமுனிவ ருபமுனிவர்
புன்கண்வாய்ப் பட்டு மெலிவாய்
சீரேறு மெம்பிரான் செஞ்சடா டவியடையில்
செல்வியிவள் சீரடிக ளாற்
செங்குடர் குழம்பவுதை பட்டயர்வை புவியுறிற்
செறிவளை தளிர்க்கை நல்லார்
தாரேறு மார்பினும் வாயினு மறைந்துகொடு
தாழ்ந்தவசை சொல்வ ரதனாற்
றகமைபெறு சிவராச தானியிவள் பாலடையிற்
றாழ்வொன்றும் வாராது கா
ணாரேறு குடிலப் பிரான்மகிழ் பிராட்டியுட
னம்புலீ யாட வாவே
யரியமுது கிரியிலமர் பெரியநா யகியினுட
யம்புலீ யாட வாவே. (3)
கும்பஞ் சுமந்தமுக் கடமொழுகு களியானை
கொன்றதள் போர்த்த வெம்மான்
குடிலகோடீ ரம்விட் டிழியாது வாணிதிரு
கோதையர்கள் கை வருடவுஞ்
செம்பஞ்சொ டும்பனீர் கூட்டியூட் டச்சங்க
செங்கனியில் கொப்ப ளிக்குஞ்
சீரடிகள் கன்றிச் சிவந்திடச் செய்ததூஉங்
திருவுளத் தடை யாதுனை
நிம்பஞ் சுமந்தமலர் தொங்கலணி செழியர்குல
நீணிலத் தோங்க வருமோர்
நிமலிவா வென்றுமலர் வாய்திறந் துக்கூவு
நேசமென் றோ சமயமீ
தம்பஞ் சுடைத்தளென வையுறே லாயமுட
னம்புலீ யாட வாவே
யரியமுது கிரியினர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (4)
மழைக்கொங் தளக்கோதை இவளாடு முத்தநதி
மாபுண்ய மடு மூழ்கிநின்
மாறாத கயநோ யகன்றுடல் களங்கமு
மாறியெழில் வடிவு பெறலாந்
தழைக்குமுட றேய்ந்துவள ராதுமுழு மதியெனச்
சாபந் தவிர்ந் துய்யலாந்
தண்மலர்ப் பதச்*சோங்கு பற்றியெழு பவசலதி
தாண்டியெழின் முத்தி பெறலா
மிழைக்குங் கொடுந்தீமை வெம்பணிப் பகைநீங்கி
யேக்கமற் றிட வாழலா
மெங்கள்குல தெய்வமிவள் கூவினா ளிதுசமய
மேழையர் தமக் கலுவலிட்
டழைக்குஞ் சடைப்பரம ரகமுறை துரைப்பெணுட
னம்புலீ யாட வாவே
யரியமுது கிரியிலமர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (5)
* சோங்கென்பது கப்பலினை.
----------------------------------
சித்தமுரு கிக்கசியு மெங்குமர தேவனிவள்
சேவடிநன் னிழன் மேவினான்
செய்யவிப சித்திருடி மீண்டும் வராவழித்
திகழ்முத்தி பெற் றுய்ந்தன
முத்தமணி நதிமூழ்கி பெற்றனனொர் குருடன்விழி
மூடும்வினை யாளர் நின்போல்
மூவிரண் டறுவர்கொடு வினைநீங்கி நற்கதி
முயங்கினர்க ளித் தலம்போற்
சுத்தமுறு மூர்த்திதல தீர்த்தமூன் றொத்ததுநீ
சூழுலகி லியாது னக்குச்
சூழ்வினைக ளற்றுசுக முறுகால முற்றியது
தொல்கிரியென் னிதய முந்த
னத்தர்மகி ழாலய மெனக்கொண்ட வம்பிகையோ
டம்புலீ யாட வாவே
யரியமுது கிரியிலமர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (6)
விண்ணகத் துறுபல் லுடுத்திரள்கள் புவியினிடை
மிளிர்முத் தெனக் கொட்டவும்
விரிபுவித் தலைவரொடு மமரருல கத்தர்வாள்
வெட்டுணவர் பொற் றொடியினார்
தண்ணறாத் தும்பைமிலை சேனையொடு மச்சேனை
தலைவர்படை பட் டொழிந்தே
தகர்பசுங் குடர்மூளை மச்சைநிண மொடுபச்சை
தடிநாச் சுவைத்து ரிசிகாண்
வண்ணவட் டங்கொள்சே னப்பந்தர் நிழலலகை
மலிகுரவை கூத் தாடிட
வாளமர் புரிந்தெட்டு திக்குவிசை யங்கொண்டு
வண்கைலை யுங்கைக் கொள்வா
னண்ணன்மே லமரேற்ற விவள்வெகுளி கொளுமுனே
யம்புலீ யாட வாவே
யரியமுது கிரியினமர் பெரியநா யகியினுட
னம்புலீ யாட வாவே. (7)
விரிவுறும் பலகோடி யண்டமிவள் செங்கைமலர்
விளையாடு பொற் கழங்காம்
வெற்றியுள வறுகோடி சத்தியர்க ளேவல்புரி
வீறூழி யக் காரராம்
பரிவினொடு மட்டலக் குமிகள்பா கடைகள்கைப்
பற்றவிடு தாதி யர்களாம்
பகரரிய மெய்ஞ்ஞான வானந்த வமுதமிவள்
பசிதணி நறும் போசனந்
திரிவிலரு மறையின்முடி யிவளரசு செய்திடுந்
திகழ்மணிச் சிங்கா சனந்
தேக்குமரு ணவகோடி சித்தர்களு மிவள் முன்செல்
சேனா பதித் தலைவரா
மரியதொரு சிவராச தானியிவள் முனியுமுன
மம்புலீ யாட வாவே
யண்டர்புகழ் முதுகிரிப் பெரியனா யகியினுட
னம்புலீ யாட வாவே. (8)
வேறு.
சிறுவிதி தந்தைச் சிவனை யிகழ்ந்துடல்
சிந்தித் தகரானான்
றிகழளை திருடித் தமயன் மத்தடி
சேர்ந்துரல் கட்டுண்டான்
பெறுமொரு மைந்தன் சந்திதொ றும்பெண்
பித்தொடு தனியுற்றான்
பின்னொரு தனையன் குறமக டிருடிப்
பெருமலை குடிபோனான்
மறுவறு கொழுநன் கிழமலை யென்றுள
மதியேல் மதிமான்னீ
மலிமூ வுலகு சராசர மிவளுள்
மருவைந் தொழிலறிவாய்
வறுமை தவிர்த்திடு மிவளுட னாடிட
வாவம் புலிவாவே
வளர்முது கிரியுறை மயிலுட னாடிட
வாவம் புலிவாவே. (9)
ஐந்தரு நிழல்சுரர் தொழவம ரிந்திர
னாள்பட் டந்தரவோ
வகில மளித்திடு பிரம பதத்துட
னவர்தொழில் தந்திடவோ
செந்திரு மகண்மகிழ் விண்டு செயுந்தொழில்
செறிபத மருளிடவோ
செறிகயிலைக்கிரி நாயக னாக்கித்
திகழைந் தொழில்தரவோ
பந்தமில் முத்திப் பதமரு ளிடவோ
பக்குவர் பலர்நிற்கப்
பரிவொடு நினை வாவென் றனளிப்
பண்ணவி யருளன்றோ
வந்தெனை வலிதாண் மயிலுட னாடிட
வாவம் புலிவாவே
வளர்முது கிரியுறை மயிலுட னாடிட
வாவம் புலிவாவே. (10)
அம்புலிப்பருவ முற்றும்.
---------------------------------
8-வது. அம்மானைப்பருவம்.
பொங்கொளி மணிச்சுடிகை வாளர வணைத்துயில்செய்
புயன்மார் பணிந்த மணியும்
புதுமலர்ச் சோலையைந் தருநீழ லரசனமர்
பொன்னுலகின் வதி மணியையு
மைங்கனல் நடுத்தவஞ் செய்யமர ரிருடிமுனி
யவுணர்முதன் மனுட ரெவரு
மகவிச்சை யுண்டெனிற் கொண்மினென வாங்காங்
கணங்கைகொடு விட் டெறிதல்போற்
றுங்கசெம் மணிகுயிற் றியகழங் கேகத்
தொடர்ந்துநின் விழி வண்டுபோந்
தோற்றமென கருமணி குயிற்றம் மனைப்பின்
றொடர்ந்துசெல விருகை மலரேற்
றங்கமல சேடியொடு சபதமிட் டம்மைநீ
யம்மானை யாடி யருளே
..ய்த்தர்முது குன்றரிடம் வைத்திடு பசுங்கொடிபொன்
னம்மானை யாடி யருளே. (1)
கும்பஞ் சுமந்தபுனல் கொட்டல்போ லக்கடாங்
கொட்டுங் கடாக் கரியின்வாய்க்
கோதிலாச் சோற்றிரட் கவளந் திரட்டிக்
கொடுத்தலென வுங் கலைமதிப்
பம்பமு தினுக்கிரையு மமரர்க்கு வெவ்வேறு
படவமுத கலச மிடல்போற்
பதுமக் கரந்துஞ்சி வெள்ளோதி மத்திரள்கள்
படர்விண் பரந்து செலல்போற்
செம்பொன்மணி முத்திட் டிழைத்தபந் ததுவிண்
செறிந்துநிரை நிரையிற் செலச்
செறியொளி மணிப்பீட முற்றெறித னோக்கியெஞ்
சிவபிரா னதிச யிப்ப
வம்பொன்மணி வளையார்ப்ப வலர்கரங் கொண்டம்மை
யம்மானை யாடி யருளே
யத்தர்முது குன்றரிடம் வைத்திடு பசுங்கொடிபொன்
னம்மானை யாடி யருளே. (2)
கொழுந்தா மரைக்குடிகொ ளன்னமும் பேட்டினொடு
கொழுநறா வுண்டே கிடுங்
குதுகுல வனத்தைவண் டைக்கண் டழுக்காறு
கொண்டுமற் றோர் கமலம்வாழ்
வுழுங்கார்ச் சுரும்பினம் பின்றொடர்வ போலநின்
னொண்கமல கர முற்றெழு
மொண்கரு மணிப்பந்து மொளிசெய்முத் துப்பந்து
மொன்றின்பி னொன் றேகுதற்
செழுங்காத் தருக்கண்மொய்த் திடுவண்டும் விண்ணதிச்
செறியன்ன முங்கண்டு வெஞ்
சினமுற் றெழுந்துநள் ளாறென நினைந்துபோர்
செயவெட்கி மீண் டடையுமா
லழுந்தார் மணிக்கங் கணக்கரங் கொண்டம்மை
யம்மானை யாடி யருளே
யத்தர்முது குன்றரிடம் வைத்திடு பசுங்கொடிபொன்
னம்மானை யாடி யருளே. (3)
கண்ணுக்குண் மணியனைய சேடியரில் சிலரெதிர்க்
கைப்பந் தெடுத்தாட நின்
கதிர்செயம் மனைபிடித் தெதிர்வீச விடசாரி
கதுவிவல சார திரியா
வெண்ணுக் ககப்படா வம்மனையொ ராயிர
மெடுத்தெடுத் தெறிய விண்மீ
தேறிநிரை நிரையா யிருத்தனீ பெறுமண்ட
வெழினிரை யடுக் கொவ்வுமாற்
பண்ணுக் கடங்காத விசைகுறு முனிக்கையாழ்
பாடநெக் குருகு பொதியைப்
பருமலை யுதித்துதென் றற்குழவி விளையாடு
பைம்பொழிலி லம்பைந்து கோத்
தண்ணீரத விக்குவிற் குதைபூட்டி யொலிசெய்கர
மம்மானை யாடி யருளே
யத்தர்முது குன்றரிடம் வைத்திடு பசுங்கொடிபொன்
னம்மானை யாடி யருளே. (4)
தும்பேறு வெள்விடை யுகைத்தேறு மெம்பிரான்
றோற்றமு தலைந் தொழில்செயத்
தூயசெவ் வருணின்று தோற்றிமுக் குணமுயிர்த்
துரிசில்பர முல காக்கியே
சம்பேறு பரியர தொடுக்குநா ளவ்வருட்
சார்ந்தொடுங் கிடு முறைமைபோற்
சவிவிடுசெம் மணிதரள மணிகரு மணிக்கோத்து
தட்டுமம் மனைகள் விண்போய்
வம்பேறு நின்கைமலர் மாறிமா றிச்சென்று
வந்தடைய நின் கொழுநனார்
வளர்பிறைச் சடைமுடிச் சிரமசைத் தங்கைவிரல்
வளர்நாசி மீ தேறிட
வம்போ ருகஞ்சினவி வெம்போ ரிடுங்கைமல
ரம்மானை யாடி யருளே
யத்தர்முது குன்றரிடம் வைத்திடு பசுங்கொடிபொன்
னம்மானை யாடி யருளே. (5)
வேறு.
கோங்கு முகையி னெழில்கவற்றுங்
கொம்மை முலையார் கொழுநரொடுங்
கூடி யணையி லூடலினாற்
குளிர்வெண்டரளக் கோதை யொடும்
வாங்கு படச்செங் கண்ணரவின்
மணிமா லையையு மனம் வெறுத்து
வண்கை மலராற் பறித்தெறியம்
மணியைச் சிறிய குருகுதருத்
தூங்கக் குயிற்றுங் குடம்பையினுட்
சுடரிட் டிரவி லடைகிடப்பத்
துன்னம் மணிகள் விடுமொளியாற்
றூவா விகடா மரைக்குமுத
மாங்கு மலரும் வளநடுநாட்
டரசா டுகபொன் னம்மனையே
யமல முதுகுன் றிடைவளர்பெண்
ணமுதா டுகபொன் னம்மனையே. (6)
புறமுள் ளகப்பொற் சுளைக்கனிகள்
பொழிதேன் வாரி யலையெறிந்து
புக்குப் படப்பை நிறைந்துலவப்
போத விளைசெஞ் சாலியொடுந்
திறநற் கதலி மிடறொடிக்குஞ்
செங்காய்க் குலையுங் குலைத்தெங்குங்
தீஞ்சா றருஞ்செங் கரும்பினொடுஞ்
செழிய கமுகும் விண்ணளவி
மறநற் குலிசப் படையரசன்
மன்னுங் கொலுமண் டபம்பொலியு
மணித்தூண் டோறு நாடிடிமன
மகிழ வதனை யலங்கரிக்கு
மறமார் வளஞ்சே ரெழிநடுநாட்
டரசா டுகபொன் னம்மனையே
யமல முதுகுன் றிடைவளர்பெண்
ணமுதா டுகபொன் னம்மனையே. (7)
களபக் குழம்பாற் றொய்யில்வனை
கதிர்மென் முலையார் குழற்பொதியுங்
கந்த மலர்த்தேன் காமலர்த்தேன்
கவர்வாய் குடித்துக் குமட்டளிகள்
தளவ முறுவற் றையலர்கள்
தண்ணீ ராடத் தடமுலைமார்
தங்குங் கலவைக் குழம்புமணஞ்
சார்ந்தோட் டெடுத்தா றலையெறிந்து
வளநெற் பழனம் பாய்ந்துமரை
மலர்த்தா துகுத்து முப்புடைக்காய்
வாரி யெடுத்துச் சென்றுகடல்
வயிறு தூர்த்தங் கதனாழத்
தளவைக் குறைக்குஞ் செழிநடுநாட்
டரசா டுகபொன் னம்மனையே
யமல முதுகுன் றிடைவளர்பெண்
ணமுதா டுகபொன் னம்மனையே. (8)
வேறு.
செம்மலர் நின்கை யெறிமுத் தம்மனை
சேல்விழி யொளி தோயத்
திகழ்மற் றொருகைக் கருமணி யம்மனை
திருநகை யொளி கதுவக்
கொம்மைமென் முலையார் சிலர்வெண் முத்து
குயிற்றிய தென்பர் சிலர்
கொழுவிய நீல மிழைத்தன வென்றுங்
குளறுவர் நிலை யறியார்
தம்மன மொப்ப வுரைப்பர்க ளன்னிய
சமயர்கள் மெய்ப் பொருளைச்
சதுமறை தந்திர சைவந் துணிபொருள்
சாரக் கர மெவையு
மம்முதல் கொளல்போ லுறைசிவன் மகிழ்பெண்
ணாடுக வம் மனையே
யணிமுது கிரிகல் யாண சவுந்தரி
யாடுக வம் மனையே. (9)
பண்ணக லாவளி குமுர்குழ லாயெறி
பருமுத் தம்மனை விண்
படருதல் சிற்கக னந்திரு மேனி
படைத்திடு மெம்பெரு மான்
றண்ணொளி விடுமுத் தார மெடுத்தவர்
தடமார் பிடல் போலாந்
தகுபல விதமணி யம்மனை விண்ணிற்
றாவி யெடுத் தெறிதல்
கண்ணிய வுள்ளக் காதலை யோதிக்
கரும முடித்து வரக்
கைவள ரன்னங் கிளிகுயில் தூதுக்
காவிடல் மானு மல
ரண்ணிய கலைவா ணித்திரு சகியோ
டாடுக வம் மனையே
யணிமுது கிரிகல் யாண சவுந்தரி
யாடுக வம் மனையே. (10)
அம்மானைப்பருவ முற்றும்.
----------------------------------------
9-வது நீராடற்பருவம்.
செந்தார் பசுங்கிளி மொழிக்கோதை நின்னெழிற்
றிருமேனி விரி யொளியினாற்
சேயொளிய பவளக் கொடிப்பசுங் கொடியாகத்
தெண்ணிலவு விரி முத்தமு
நந்தார் மரைச்செம லருங்குமுத முஞ்சங்கு
நனியொளிய மர கதமதாய்
நாகிளவெ ளன்னங் கலாமஞ்ஞை யாமெங்கு
நாடியலை யச் சேவல்கள்
கொந்தார் குழற்பெண்கள் குடமுலை யணிந்தகத்
தூரிகற் பூர களபங்
குழையக் கரைத்தோடி காளிந்தி வாணிவிசை
கொண்டகங் கா நதியதாம்
வெந்தாரு முத்திபெறு முதுகிரிப் பெண்ணரசி
வெள்ளநீ ராடி யருளே
வித்தகர்க ணத்துமணி முத்தநதி யுற்றது
வெள்ளநீ ராடி யருளே. (1)
கைமல ரணிந்தவளை நிரைகலீ ரென்றறைக்
கரியவிழி செவ் விழியதாய்க்
காட்டிடச் செம்பவள விதழ்வெண் ணிறங்கொளக்
கற்றைக் குழற் சரியவே
மெய்ம்மறைக ணான்குநடு நாட்டேடி யுங்கண்டு
மேவொணாப் பரம னுருவின்
மேன்முத்து முத்தா யெழுந்தவா னந்தகுறு
வெயர்வை யுயிர்மேற் கருணையாற்
பொய்மலியு முலகிலுறு சரவசர வுயிரெலாம்
போந்தாடி நற் கதிபெறப்
புவியிடைக் கைமல ரெடுத்திடப் புண்ணியம்
பொலியுமணி முத்த நதியாய்
வெய்யபவ நோய்நீக்கு முதுகிரிப் பெண்ணரசி
வெள்ளநீ ராடி யருளே
வித்தகர்க ணத்துமணி முத்தநதி யுற்றபுது
வெள்ள நீராடி யருளே. (2)
குழையோ லிடும்வண்டு மலரோ லிடத்திரை
கொழித்தோ லிடுஞ் சங்கினங்
கொங்கைக ளசைந்தாட மாற்றேறு பூனதங்
கொண்டெழில் பெறச் செய்திடு
மிழையாட கேசபா சத்தினொடு சைவல
மெழுந்தாட விழி யிமைபொரூஉ
மிகுளையர்க ளோடியா டிப்பிடித் தன்னங்க
ளேந்திவிளை யாடி டச்சேல்
மழையா ரிடந்துள்ளி புயலகடு கீண்டேகி
வான்றருவொ டித் தெட்டிவிண்
மன்னுதெய் வக்கங்கை யாடிமீ ளுந்திவ்ய
மணிநதி யலைக் கரத்தால்
விழைவா லழைத்தெறியு முதுகிரிப் பெண்ணரசி
வெள்ளநீ ராடி யருளே
வித்தகர்க ணத்துமணி முத்தநதி யுற்றபுது
வெள்ளநீ ராடி யருளே. (3)
புத்தமுத முண்டுலவு தெய்வமட வாரிரு
புறஞ்சூழ்ந்து வர வெழிற்செம்
புண்டரிக வட்டவணை யொலிமாதர் கைநினது
பொன்மேனி மாசு தீர்ப்பச்
சுத்தமுறு திருமேனி பொதிகளப குங்கும
சுகந்தசந் தமு மளவளாந்
தோயங் கருங்கடற் செங்கடல தாக்கமதி
தொன்றுசெம் பருதி யேய்ப்பக்
கொத்துமலர் தேமாங் கனிக்கதலி கனியுகுங்
கொழுநறவு வயல் பாய்ந்திடக்
கொழுவிவளர் செஞ்சாலி கதிரிரவி கடவுட்குக்
குளிர்கா லெடுத்து வீசும்
வித்துரும மொத்தசடை முதுகிரிப் பெண்ணரசி
வெள்ளநீ ராடி யருளே
வித்தகர்க ணத்துமணி முத்தநதி யுற்றபுது
வெள்ளநீ ராடி யருளே. (4)
பீடுறுநல் லெந்தாய் நீ யாடுமித் துறையெம்மான்
பிட்டுக்கு மண் சுமந்துப்
பிரம்படியு முற்றவிட மிதுவெனச் சுட்டிதிரு
பெண்சகிகை காட்ட விரலால்
வாடுறு முகத்தினொடு மனநொந்து கண்கணீர்
மாலைமுத் தாக் கொட்டியே
வரவென்று கொழுணரொடு மைந்தரொடு மித்தல
மடைந்ததென் மாதவ மலோ
கூடுமுயி ரியாவைக்கு மருளால் வலச்செவிக்
கொளவைந் தெழுத் துரைத்துக்
கோதிலரி யயனமரர் குலவிடும் பொன்னகர்க்
குடியேற்றி வைப்பது மலால்
வீடுமுத வுங்கருணை முதுகிரிப் பெண்ணரசி
வெள்ளநீ ராடி யருளே
வித்தகர்க ணத்துமணி முத்தநதி யுற்றபுது
வெள்ள நீ ராடி யருளே. (5)
-
வேறு.
கொலைவாள் விழியிணை கண்டு வெருண்டுக்
குதிசேல் விண்ணேறக்
கொழுமுத் தாரங் கண்டுக மஞ்சூற்
குடவளை கரையேறத்
தலைமைக் கொழுமணி யிழைகுழை தோடுறு
தாழ்செவி யிணைகண்டே
தழையத் தழைவள் ளைக்கொடி யஞ்சித்
தண்பசு முகம்வாட
வலைபுன லாடிடு கூந்தலி னைக்கண்
டசைசை வலமோட
வண்ணிய புற்புத முலையெழில் கண்டுதன்
னங்க முடைந்தோடத்
தொலைவில் பதந்தரு புண்ணிய மடுநற்
றுறைநீ ராடுகவே
தொன்முது கிரிமணி முத்தா நதிபொற்
றுறைநீ ராடுகவே. (6)
நீர்ப்பூங் கொடிமலர் கொய்து தொடுத்திடு
இறைநறை தொடையினொடு
நேயத் தோடீட் டியசிந் துரமு
நிகழிரு கொங்கையின்மேற்
கோர்ப்பூ விற்கொடி தீட்டிய தொய்யிற்
குடைபுனல் கொள்ளைகொளக்
கொடியிடை புனைநுண் டூசு நனைந்துக்
குவிதன முதலுருவச்
சீர்ப்பொலி யழகெம் மையன் விழிக்குச்
செல்வ விருந்திடுமாற்
சேயிதழ் வெளிறக் கண்கள் சிவப்பச்
செறிசே டியர்கள்குழாங்
தோர்ப்புற வம்பிகை புண்ணிய மடுநற்
றுறைநீ ராடுகவே
தொன்முது கிரிமணி முத்தா நதிபொற்
றுறைநீ ராடுகவே. (7)
அஞ்சிறை யன்னம் பலசூழ் தரநடு
வாடு மயிற்போலு
மவிரு முடுக்கண நடுவிற் பொலிதரு
மழகுவெண் மதிபோலும்
வஞ்சியர் சூழ்தர நடுவண் முளைத்திடு
மரகத கொடிபோலும்
வாங்குங் கொடியிடை வீக்கிய மேகலை
வடிவி னொதுங்கியிட
விஞ்சிய வானவர் தானவ ரிருடிகள்
வியன்மா தவர்புவியோர்
விழைவொடு மரவோ மரவென மூழ்கிடு
மிகுபே ரொலிமேவுந்
துஞ்சலி லம்பிகை புண்ணிய மடுநற்
றுறைநீ ராடுகவே
தொன்முது கிரிமணி முத்தா நதிபொற்
றுறைநீ ராடுகவே. (8)
வேறு.
தொய்யின் முலைப்பொற் குடங்கொண்டு
தூநீர் நீந்தி விளையாடுந்
துணைச்சே டியர்மேற் பசுமஞ்சட்
சுண்ண மெறிய வறச்சேக்குஞ்
செய்ய கரையி னிளைஞருளஞ்
செறியுங் காமக் கனன்மூட்டச்
செறிநீ ரொத்தி யுதர்குழற்குத்
திவ்ய மணஞ்சேர்த் தூட்டுபுகை
துய்ய கதலிக் காடடையத்
தொங்குங் குலைக்காய் பழுத்துமிகச்
சொரிதே னருவி யாய்ந்துவயற்
சோராச் செந்நென் மிகவிளையும்
பொய்யில் தவர்சூழ் புண்யமடுப்
புதுநீ ராடி யருளுகவே
பொற்பார் விருத்தாம் பிகையனமே
புதுநீ ராடி யருளுகவே. (9)
வள்ளக் கமல மலர்மலர்த்தும்
வானா ரிரவி தனைவிரும்பா
வடிவார் பொன்னாட் டுலவுதெய்வ
மடவார் தொடுத்துச் சூட்டுநறா
வெள்ளம் பெருகம் மாலைபொதி
வியன்றோட் கொழுந ரொடும்பவனி
வீதிவரவிந் நகர் மடவார்
வெண்ணுண் டூசு மிகநனைய
வுள்ளங் கவற்றுந் தனமுதலா
முறுப்பெல் லாமும் வெளியாக
வொண்கைம் மலராற் கண்புதைப்ப
வுந்தி குதிக்குஞ் சேற்சிரகர்ப்
புள்ளு மகிழும் புண்யமடுப்
புதுநீ ராடி யருளுகவே
பொற்பார் விருத்தாம் பிகையனமே
புதுநீ ராடி யருளுகவே. (10)
நீராடற்பருவ முற்றும்.
-----------------------------
10 -வது. பொன்னூசற்பருவம்.
பாயொளி பழுத்தபவ ளக்கா னிறுத்தமிசை
பருவச்ர விட்ட மிட்டுப்
பகரருண கிரணரத் னப்பலகை நடுவிட்டு
பருவெண்முத் துத் தாம்பினாற்
றூயொளி விரிந்திட வசைத்துவிண் டருநிகர்த்
துறுவள்ளி சினை தூக்கியே
துன்னுமந் தாரமிரு வாட்சிமல் லிகைமுல்லை
தூமலர்த் தொடைக ணாற்றி
நேயமொடு கலைவாணி இசைபாட திருவிந்த்ரை
நின்றுதைந் தாட விருபால்
நெக்குருகி யன்பா லிசைத்தவிப் புன்கவியி
னீள்செவி யிடுந் தமிழ்துறைப்
போயபூங் கொடியுயிர்க டோறுநின் றாட்டுபவள்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (1)
ஐம்பான் முடித்தமலர் வண்டாட துடியிடை
யசைந்தாட வவிரு மணிமுத்
தாரமுடன் மாணிக்க மாலைவெயில் விட்டாட
வாதிசுரர் கொண் டாடவே
வம்பாரு நின்மேனி மரகதப் பாசொளி
மலர்ந்தெண் டிசைப் பரவலால்
வையமுழு தும்நினது திருமேனி யென்றுமறை
வாழ்த்துதல்வெ ளிப் பட்டதா
லம்பார் சடைப்பிரான் விழியுங் கருத்துநின்
றாவலொடு மூச லாட
வக்குநெக் கிட்டுருகு மெய்யன்ப ரேழ்பிறவி
யாழ்கட லுறா தருடதும்
பும்பாத நன்கல னளிக்கும்விர்த் தாம்பிகைப்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (2)
கூராடு வெண்பற் குழைந்துதடின் மேற்செலக்
கொடுவிழி யனற் பொறியெழக்
குதைவரிச் சிலைநா ணெறிந்துகணை கோத்துவாள்
கொண்டமர் குறித்து வெஞ்சூர்
தாராடு புயவசுரர் கூட்டமொடு போந்தமரர்
தத்தளித் தோட வெம்போர்
தாக்கவரு உற்குடர் பிளந்துசிர கரமறத்
தடியவெழு சோரி யாழிக்
காரார் பிணத்தொடறு சிரமிதப் பாய்க்கொண்டு
கரைசேர் கவந்த மாடக்
கட்டியழு மனைவியர்க டிண்டாட வங்கைமலர்
கதிர்வேல் திரித்து வெய்ய
போராடு குழவியைத் தொட்டிலிட் டாட்டுபவள்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (3)
தேங்கொளிய பொற்றே ரொடும்போர்க் கடுத்திடு
திருக்கோல முங்கண்டு வெஞ்
சினக்கோப வனலவியக் காமா னிலஞ்சீறு
சிகையென வெழுந்து படர்செம்
வாங்கொளிய குடிலகோ டீரப் பிரான்மனதும்
வளைமேரு வில்லு முருக
வளரொளி யிளம்பிறை முடிந்ததுந் தலைமாலை
வாகுற்ற துந் தோன்றிடத்
தூங்கொளி கருங்களத் தொடுபோர்க் களத்தமர்
தொடங்கினவ ருள மலமறத்
துணைபுருவ விற்கருங் கட்கணை தொடுத்தொருகை
தொடர்விற் குனித்து வெம்போர்ப்
பூங்கோல மேதிரு மணக்கோல மாயினவள்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (4)
திரையாடு பாற்கடற் றோன்றமுத முங்கைப்பச்
செங்கையமர் பைங் கிளிசொலுஞ்
சீயென வெறுப்பவுரை யாடிடும் பூங்கொம்பு
செம்மலரின் மாலை நாற்றி
விரையாட நடுவரவின் மணிகுயிற் றியபலகை
வீற்றிருந் தாடு தோற்றம்
விரிகுணக் குன்றிலிள வெயில்விரிக் கும்பருதி
வியன்மண் டலத்தை யேய்ப்பக்
கரையாடு மலைமுத்த நதிநீந்தி குமரன்வாய்க்
கையாடு பா லூட்டிமேற்
கதிகாட்டி முடியின்மல ரடிசூட்டி மதியூட்டு
கருணா கரிக் கடையனேன்
புரையாடு மிதையமல ரிடையாடு மெழின்மயிற்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (5)
பகர்மகர யாழினே ழிசைநா மகட்பாடப்
பாயொளிபொன் னூச லாடப்
பையரவ மாலைய நெக்கிக் குலுங்கவெழில்
பார்த்துள மகிழ்ந்து நகையா
வகிர்சடைச் சிரமசைத் திடநடுப் பொதிகங்கை
மங்கைதுள் ளிக் கீழ்விழ
வாவென் றழைத்துபகை மாறிகட் டித்தழுவி
வாய்முத்த மிட் டளவளாய்த்
துகிர்சடைப் பரன்முடியில் வைத்தாசி சொல்லியவர்
துன்றுசந் தேக மொருவுந்
தோகைகரு ணாகரிகல் யாணசுந் தரியெத்
தொழிற்குமுன் னின் றுதவிசெய்
புகர்முகக் கயமுனியைத் தொட்டிலிட் டாட்டுபவள்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (6)
தண்ணிலவு விரிரத்ந பலகைமீ துற்றம்மை
திருவூச லாட்ட வா டுஞ்
செவ்வியையு மதியமுத கிரணமுண் டுலவுவிண்
செறிசகோ ரப்புளாயும்
வெண்ணிலவு மறுகாற் சுரும்பா மங்கைவளர்
பைஞ்சிறைக் கிள்ளை யாயும்
பரசிவன் றிருவுருப் பலவெடுத் துன்மகிமை
ப..த்துளங் களி தூங்கிட
விண்ணு…ம மேற்றலத் தந்நலார் குடைபுனலின்
விரைகுங் குமச் சேறுதோய்
வீறுவெள் ளானைசெவ் வானையா முருநோக்கி
பெண்பிடி வெருண் டோடுமாற்
புண்ணிய பொலிமாட மலியுமுது கிரியரசி
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (7)
செழுமுலைச் சுமைபொறா திறுமிடை யெனக்குழற்
செறியும்வண் டார்த் தெழப்பொற்
செவ்வூசல் காலுதைந் தாடுமம யத்துநாச்
செல்விதன் செங்கை மலரான்
விழுமலர் பதத்துளடி பற்றியிது வெண்பிறை
வியன்சுவட தா மிதுவுமோர்
வெண்வலம் புரிகீற்ற தாமெனக் கண்டம்மை
விதிவலிய தென்று மகிழா
வழுவில்வலி யோர்செல்வர் யார்க்குமொ நாளினும்
வணங்கா முடித் தலைவியோர்
வண்கையிலை வரையுற்றுச் செங்கைவிற் குனிஞான்று
வளமுடி வணங்க லென்னோ
புழுகணித் திருவழகி முதுகிரிப் பெண்ணரசி
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (8)
நீதிவழு வாதுநற் சிவராஜ தானியாய்
நிகிலவகி லாண்ட மெல்லாம்
நெஞ்சுபறை கொட்டிடச் செங்கோல் செலுத்திகொடி
நிறுவியா ருயிர்செய் கன்மம்
பேதியா வகைபடைத் திடலளித் தற்போக்கல்
பின்மறைத் திடல் விளக்கல்
பிரமன்முத லைவர்க்கு மைந்தொழி னடத்திவரப்
பேரருட் கட் கடையினா
லீதிவற் கீதென வெடுத்தலுவ லிட்டுபின்
பிவர்கட்கு மைந் தொழில்செயு
மேகநா யகிநித்ய கல்யாண சுந்தரியிவ்
வேழைசொல் தமிழ்க் கிரங்கிப்
பூதியனு பவவடி நிழற்குடி யிருத்துபவள்
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடி யருளே. (9)
பண்ணிசைக் கும்பிழை யளிக்குமணி வண்டுமுரல்
பன்மலர் முடித்த குழலும்
பனிமதித் திருமுகமு மருள்விழியு மிருசெவிப்
பதிமணித் தோடு குழையுந்
தெண்ணிலவு முத்துமூக் குத்தியுந் திருநுதற்
செறிபட்ட முந் திலதமுஞ்
செய்யநாற் புயமுமல ரபையவர தமுமக்கை
திகழ்பைஞ் சிறைக் கிள்ளையும்
வண்ணமலர் மாலைபுனை மார்புந் திருத்தனமும்
வஞ்சியிடை யொட் டியாணமும்
வனைமே கலைப்பட்டு வீக்குடையு நூபுரம்
வனைந்திடு மலர்ப் பாதமும்
புண்ணியத் திருவழகி புனைதமிழ்க் கருளரசி
பொன்னூச லாடி யருளே
புகழ்பழ மலைப்பரம ரழகினுக் கொத்தமயில்
பொன்னூச லாடி யருளே. (10)
--------------------------------
பொன்னூசற்பருவ முற்றும்.
ஆகபருவம் பத்துக்குத் திருவிருத்தம்.100
-------------------------------------
This file was last updated on 23 Sept. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)