pm logo

பழைய கணக்கு (கட்டுரைகள் தொகுப்பு)
ஆசிரியர் சாவி

pazaiya kaNakku
(essays by cAvi)
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பழைய கணக்கு (கட்டுரைகள் தொகுப்பு)
ஆசிரியர் சாவி

Source:
பழைய கணக்கு
சாவி
சாவி பப்ளிகேஷன்ஸ்
8எ, ஏழாவது பிரதான சாலை,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28
முதல் பதிப்பு : 1984; ஐந்தாம் பதிப்பு : 1997
© பதிப்புரிமை ஆசிரியருக்கே
விலை : ரூ.75.00
அட்டை வண்ணப்படம் : கோபுலு
சித்திரங்கள் : கோபுலு
அச்சிட்டோர் : ஸ்ரீ ஸ்கந்தா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை -600 029.
Wrapper painted by : Madras Ciassic Prints (P) Ltd., Chennai-34
-------------------

சமர்ப்பணம்

வாழ்நாட்களில் என் துன்பங்கள் அத்தனையிலும் பங்கு பெற்று, என் கோபதாபங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து, இடி தாங்கியாய் நின்று இல்வாழ்க்கையை ஒளிவீசச் செய்து கொண்டிருக்கும் என் இல்லத்தரசி ஜானகிக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்.

      - சாவி
--------------

உள்ளடக்கம்

இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை
1. காந்தி தரிசனம்
2. சத்ய சபாவில் கற்ற பாடம்
3. கிங்காங் சிந்திய ரத்தம்
4. ஊரே மணக்கும் சேமியா உப்புமா
5. வ. ரா. வாக்களித்த நூறு ரூபாய்
6. எது திரட்டு? எது திருட்டு?
7. கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?
8. ‘பாலிட்டி’ தெரியுமா உனக்கு?
9. பெரியார் எனக்கு வழிகாட்டி
10. லாக் அப்பில் மசாலா தோசை
11. முதுகில் விழுந்த அடி!
12. கல்கியிலிருந்து விகடனுக்கு
13. மணியனுடன் ஒரு பயணம்
14. மறுத்துச் சொன்னபோது
15. காமராஜ் தொடங்கி வைத்த பத்திரிகை
16. நான் ஒரு பத்திரிகாசிரியனாக வர வேண்டும் பிள்ளையாரப்பா!
17. காலணாப் பத்திரிகை
18. பிரம்மசாரி காமராஜ்
19. சின்ன அண்ணாமலை மார்க்கெட்
20. பி. டி. கோயங்காவுடன்
21. குறுக்கே வந்த பூனை
22. எம். ஜி. ஆர். கோபத்துக்கு என்ன காரணம்
23. கடலூர் வேத பாட சாலையில்
24. கலைமகளுக்குத் தமிழும் புரியுமே
25. ஜெயகாந்தன் சொன்ன பதில்
26. வள்ளுவருக்கும் அவ்வளவுதானா?
27. “பொய் சொல்லாதே!”
28. ஆதித்தனாருக்குப் பெரிய மனசு
29. எழுத்துச் சண்டை ஏற்படுத்திய பரபரப்பு
30. போகிற இடமெல்லாம் ஒரு போட்டி
31. நூற்று அறுபதுக்கு மேல் நம்பரே தெரியாதா?
32. வெள்ளி மணி பிறந்த கதை
33. நீங்க என்ன வட ஆற்காடா?
34. கடன் வாங்கி கடன் தீர்த்தேன்!
35. தூக்கத்திலிருந்து தூக்கம் வரை
36. பெரியாரை சாப்பிட வைத்தவர்
37. ஏ. வி. எம். சொன்ன வார்த்தைகள்
38. நீறு பூத்த நட்பு
39. வாஷிங்டனில் திருமணம் எப்படி நடத்தினேன்?
40. சோறு கண்ட இடம்
41 முதல் சம்பாத்தியம்
42. விசநாதன் வந்துகுது
43. பகத்சிங் வாசகசாலை
44. மாமா கொடுத்த கோட்டு
45. என் முதல் பஸ் பயணம்
46.மாடி வீட்டு மாமா
47. மூன்று கால கட்டங்கள்
48. கொஞ்சம் இனிப்பு—கொஞ்சம் கசப்பு
49. ஊருக்கு வந்த குறத்தி
50. நூற்றுக்கு நூற்றைந்து
51. “வந்தேன் ஹிரண்ய கசிபு”
52. “அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா”
-------------

இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை

வாராவாரம் தொடர்ந்து சாவி பத்திரிகையில் இந்தப் பழைய கணக்கின் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தனித் தனிக் கட்டுரையாக வாசித்தபோது சுவையாக இருந்த அந்தக் கட்டுரைகள் இப்பொழுது ஒரு புத்தகமாகப் படிக்கிற போது இன்னும் அதிகமான சுவையோடு ஒரு சுயசரிதை என்கிற பரிமாணத்தில் நம் மனக் கண் முன் சம்பவங்களாக விரிகின்றன.

புள்ளி விவரங்களையும், தேதிக் குறிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போய் சம்பவங்களை அகராதி மாதிரி வரிசைப் படுத்திக் கொண்டே போனால் தான் சுயசரிதையா?

இந்தப் பழைய கணக்கும் ஒரு வகை சுயசரிதைதான்!

சாவியின் கிராமத்திற்கு ஒரு குறத்தி வருகிறாள். இளம் வயது. வசீகரமான தோற்றம். அவளிடம் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று. அவருக்கு ஓர் ஆசை எழுகிறது. அரையணா கொடுத்து பச்சை குத்திக் கொள்கிறார் சிறுவனாய் இருந்த சாவி. இந்த நிகழ்ச்சியை சாவி விவரிக்கும் போது அந்தக் குறத்தியைத் தேடிப்பிடித்து நாமும் பச்சை குத்திக் கொள்ளலாமா என்கிற ஏக்கம்தான் மேலிடுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில், அவள் போன பிறகு மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது என்று அவர் முடித்திருந்த இடத்தில் எனக்கு ஒரு சிறுகதை தெரிகிறது.

‘இரண்டும் கெட்டான் வயதில் செய்து விட்ட அசட்டுத்தனம் ஆயுள் முழுவதும் நிரந்தரமாகி விட்டது’ என்று அவர் குறிப்பிடும் பொழுது ஒரு தத்துவம் நிலைபெறுகிறது.

தன்னுடைய இளம் வயதில் ஊரைவிட்டே ஓடிவிட்ட பையனுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தை, இவர் திரும்பி வந்ததும் பல வைதீகர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டுப் பரிகாரம் செய்கிறாா். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவர், “அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா. எங்களுக்கு இது போல் சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்” என்று கூறுகிற கட்டுரையில் ஈகைச்சுவை மட்டுமல்ல, அவர்களது பொருளாதாரமும் புரிகிறது.

இதுபோல் சாவி என்கிற சிறுவன்,
சாவி என்கிற நேர்மையாளர்,
சாவி என்கிற adventurist,
சாவி என்கிற வாலிபர்,
சாவி என்கிற நுணுக்கம் தெரிந்த வணிகர்,
சாவி என்கிற நகைச்சுவையாளர்

ஒவ்வொரு பழைய கணக்கும் ஒரு சினிமாக் காட்சி போல் ஒரு ஆரம்பம் — ஒரு இனிய மோதல் — ஒரு உச்ச கட்டம் — ஒரு தீர்மானம் — ஒரு முத்தாய்ப்பு என்று முடிகிறது. இதைப் பார்க்கும் போது அவர் ஏன் சினிமாவில் கை வைக்கவில்லை என்றே ஆதங்கம் தோன்றுகிறது.

சென்னைக்கு வரும் மாமாவை சினிமா தியேட்டருக்குக் கூட்டிப் போய், முதல் வரிசையில் உட்கார வைக்கிறார் இவர். ஊருக்குப் போன மாமா மருமகனின் செல்வாக்கை கிராமம் பூராவும் சொல்லி, “என்னை முதல் வரிசையில் உட்கார வச்சான்னாப் பாரேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஒவ்வொரு சம்பவமும் ஒரு பஞ்சதந்திரக் கதை மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்படி டயமண்டு கல்கண்டு போல் சின்னச்சின்ன வடிவங்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு இனிப்புத் தோரணமாகத் தொடர்கிறது பழைய கணக்கு.

இவையனைத்தும் ‘உழைப்பே உயர்வைக் கொடுக்கும்’ என்கிற சித்தாந்தத்தைத்தான் வலியுறுத்துகிறது. Starting from the scrap என்று சொல்வார்களே, அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பழைய கணக்குகள் பயனுள்ள கணக்குகள். பயனுள்ள ஃபார்முலாக்கள்.


84, வாரன் சாலை,
சென்னை–4 கே. பாலசந்தர்
-------

பழைய கணக்கு
1. காந்தி தரிசனம்

ஆதித்தனார் ‘தமிழன்’ என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று நடத்தி வந்தார். அதில் எனக்கு உதவி ஆசிரியர் வேலை தந்தார். வருடம் 1943. சம்பளம் ஐம்பது ரூபாய்.

அப்போது கல்கி அவர்கள் விகடனில் இருந்து விலகி திரு சதாசிவத்துடன் சேர்ந்து பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த நேரம். அதில் அப்போதைய சினிமாக்களின் அதிகமான நீளத்தை (17,000 அடி) விமரிசித்து “எத்தனை அடி வேண்டும்?” என்று நகைச்சுவைக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார் கல்கி. நானும் அதிக நீளத்தைக் கேலி செய்து தமிழன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய அந்தக் கட்டுரையை மிகவும் ரசித்ததாக கல்கி என்ன நேரில் பார்த்த போது சொன்னர். அத்துடன் ‘கல்கியில் சேருகிறாயா?’ என்றும் கேட்டார். நான் சேர்ந்து விட்டேன். சம்பளம் எழுபத்தைந்து ரூபாய்.

முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதைப் படித்துவிட்டு, “இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒரு பெண் கதை எழுதுகிறாள். நீயும் அதையே செய்யாதே. கதை எழுதுவதை நிறுத்திவிட்டு அரசியல் கட்டுரை, சினிமா விமரிசனம், பயணக்கட்டுரை, ஆகாச வெடி போலப் பத்திரிகைக்குத் தேவையான விஷயங்களை எழுது” என்றார், எழுத ஆரம்பித்தேன். இவை தவிர அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சின்னச் சின்ன அனுபவங்களை ஒரு பொது நோக்கோடு நகைச்சுவை கலந்து எழுதினேன். கல்கியும் சதாசிவமும் அவற்றை மிகவும் ரசித்து ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்குக் கை கொடுக்கக் கூடிய உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள். நான் ஒரு பத்திரிகையாளனாக ஆகிக் கொண்டிருக்கிறேன் என்கிற கர்வம் எனக்குள் லேசாக வேர் விட ஆரம்பித்தது.

அது நாடு சுதந்திரம் பெற்று, தேசத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஓர் இறுக்கமான கட்டம். இந்து, முஸ்லிம்
----------------

2. சத்ய சபாவில் கற்ற பாடம்

“பக்திச் சொற்பொழிவுகள் மூலமே நாட்டு மக்களை நல்வழிப் படுத்த முடியும். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டுத்தான் காந்திஜி கூட சத்திய விரதம் மேற்கொண்டார். ஆகையால் ‘சத்ய சபா’ என்ற பெயரில் ஒரு சங்கம் ஆரம்பித்து வாரியார் சுவாமிகளைக் கொண்டு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ராமாயணம் சொல்ல ஏற்பாடு செய்யுங்ளேன்?” என்று ஒருநாள் பேச்சுவாக்கில் காமராஜிடம் கூறினேன்.

“அதை நீங்களே செய்யுங்களேன்” என்றார் காமராஜ்.

“தாங்கள் ஒப்புதல் அளித்தால் செய்கிறேன்” என்றேன்.

“நடத்துங்க. ஒரு கமிட்டி போட்டுக்குங்க. ஆனால் அந்தக் கமிட்டியில காங்கிரஸ் காரங்களைச் சேர்த்துடாதீங்க. அரசியல் கலந்துடும்” என்றார்.

எஸ். ஜி. ரத்னம் அய்யர், நல்லி ரங்கசாமி செட்டியார், லிஃப்கோ சர்மா, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற ஆத்திகம் பிரமுகர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம். அதற்கு வாரியார் சுவாமிகளும், திருமதி பட்டம்மாள் வாசனும் உபதலைவர்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள். காமராஜ்தான் தலைவர். நான் செயலாளர்.

உடனேயே, வேகமாக வேலை தொடங்கி, காங்கிரஸ் மைதானத்தில் பெரிய மேடை அமைத்து, அலங்காரப் பந்தல் போட்டு, நாற்காலிகளைப் பரப்பியாயிற்று. ஏவி. மெய்யப்பன், ஆர்ட் டைரக்டர் சேகரை அனுப்பி வாயிலில் அமர்க்களமாக முகப்பு தயாரித்து விட்டார்.

நாற்பது நாள் வாரியார் கதை. வாரத்தில் இரண்டு நாட்கள் எஸ். வி. சகஸ்ரநாமம் குழுவினரின் பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற நாடகங்கள்.

விழாவைத் துவங்கி வைக்க கவர்னரை அழைப்பதென்று முடிவு செய்தோம் அப்போது மைசூர் மகாராஜா தான் தமிழ்நாடு கவர்னராக இருந்தார். மைசூரிலிருந்து அவ்வப்போது சென்னை வந்து போய்க் கொண்டிருந்தார். கவர்னர் உத்தியோகத்துக்கான சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். நான், சகஸ்ரநாமம், லிஃப்கோ சர்மா மூவரும் காரிலேயே மைசூருக்குப் போய் மகாராஜாவைச் சந்தித்து, “காமராஜ் தலைமையில் சத்ய சபா உருவாகியிருக்கிறது. வாரியார் ராமாயணம் சொல்ல ஒப்புக் கொண்டுள்ளார். தாங்கள்தான் விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டோம். காமராஜ் மீது மகாராஜா பெரும் மதிப்பு வைத்திருந்ததால் உடனே மகிழ்ச்சியோடு ஒப்புதல் தெரிவித்தார்.

மைசூர், மகாராஜா விழாப் பந்தலுக்குள் வந்ததும் பெரிய பரபரப்பு. நாதஸ்வர இசை முழங்க பூர்ண கும்பத்துடன் அவரை வரவேற்றோம். செயலாளன் என்ற முறையில் அவரை வரவேற்று மேடைக்கு அழைத்துக் கொண்டு போனேன். மேடைக்குப் போகும் படிகளுக்கு அருகில் சென்றதும் நான் சற்று விலகி நின்ற வண்ணம் மகாராஜா அவர்களை மேலே போகச் சொல்லி கை காட்டினேன். நான்தான் முதலில் படிகளில் ஏறி அவரை மேலே அழைத்துப் போய் உட்கார வைக்க வேண்டும் என்கிற பண்பாடு எனக்குத் தெரியவில்லை.

அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலுடன் மெல்லிய குரலில், “நீங்கள் முதலில் போங்கள். பின்னோடு நான் வருகிறேன். அதுதான் முறை?” என்றார், மகாராஜா. இதை ரொம்பவும் நாசூக்காக என்னிடம் எடுத்துச் சொன்ன உயர்ந்த பண்பை நான் எண்ணி எண்ணி வியந்ததுடன் என் டயரியிலும் குறித்து வைத்துக் கொண்டேன்.

விழாவைத் தொடங்கி வைத்ததும் மகாராஜா மேடையை விட்டுக் கீழே இறங்கி எதிரில் போய் அவருக்கெனத் தனியாகப் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வாரியார் சொற்பொழிவைக் கேட்க விரும்பினார். இப்போது இன்னொரு சின்ன சங்கடம் ஏற்பட்டது. மைசூர் மகாராஜாவை மட்டும் தனியே நாற்காலியில் உட்கார வைப்பது எப்படி? அவருக்குப் பக்கத்தில் தகுதியுள்ள ஒருவரைப் பேச்சுத் துணைக்கு உட்கார வைக்க வேண்டுமே, அந்த அளவுக்குத் தகுதியும் அந்தஸ்தும் பெற்றவர் அங்கே யார் இருக்கிறார்கள்? சுற்று முற்றும் பார்த்தேன். திரு எஸ். எஸ். வாசன் அவர்களைத் தவிர அதற்குப் பொருத்தமானவர் வேறு யாரும் என் கண்ணில் படவில்லே. வாசன் அவர்களை அணுகி விவரத்தைச் சொன்னேன்.

“எனக்கு அவரிடம் பழக்கம் இல்லையே” என்று தயங்கினார் வாசன். “உங்களைப் பற்றி அவர் நிச்சயம் அறிந்திருப்பார். தயவு செய்து தாங்கள் தான் உதவிக்கு வரவேண்டும்” என்று விநயமாய் வாசன் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். என் சங்கடத்தைப் புரிந்து கொண்ட வாசன் எழுந்து வந்தார். மகாராஜா இதற்குள் அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டு முகமலர்ச்சியோடு அவரை பக்கத்தில் அமரச் சொன்னார். அன்று இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த காட்சி அந்த நிகழ்ச்சிக்கே சிகரம் வைத்தற்போல் இருந்தது.

அப்போது அவர்கள் இருவரையும் எடுத்த புகைப்படம் ஒன்று மிக அபூர்வக் காட்சியாக அமைந்து விட்டது. வாசனும் மைசூர் மகாராஜாவும் சிரித்துப் பேசும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை உதித்தது. இந்தப் படத்தைப் பெரிதாக என்லார்ஜ் செய்து சட்டம் போட்டுக் கொண்டு போய் வாசன் அவர்களிடம் கொடுத்தால் சந்தோஷப் படுவார் என்று எண்ணினேன்.

மறுநாளே அந்தப் படத்தை அழகாக ஃப்ரேம் செய்து கொண்டு வாசன் அவர்களைப் பார்க்கச் சென்றேன்.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாசன் அவர்கள், “இது எதற்கு?” என்று கேட்டார். “மிக நன்றாக வந்திருக்கிறது. வீட்டில் மாட்டி வைக்கலாம்” என்றேன்.

“நோ நோ! அதெல்லாம் கூடாது. நீ அழைத்தாய் என்பதற்காக நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். இதை என் வீட்டில் மாட்டி வைத்து, நானும் மகாராஜாவும் ரொம்ப நாள் சிநேகிதர்கள்” என்பது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? அது போலித்தனம் ஆகாதா? ஸாரி, அதை நான் விரும்பவில்லை. முதலில் இதை எடுத்துக் கொண்டு போய் விடு” என்று கண்டிப்பாகக் கூறித் திருப்பி அனுப்பி விட்டார். வாசனின் இந்தப் பண்பாடு பற்றியும் டயரியில் குறித்துக் கொண்டேன்.
------------

3. கிங்காங் சிந்திய ரத்தம்

ஒரு நாள் என் நண்பர் சின்ன அண்ணாமலை என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எப்போதும் போல் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்.

“சாவி, இன்றைக்கு நாம் மதுரை போகிறோம். இந்தாங்க நூறு ரூபாய். இதைச் செலவுக்கு வீட்டில் கொடுத்துட்டுப் புறப்படுங்க” என்றார்.

“என்ன விஷயம்?”

“அங்கே கிங்காங்-தாராசிங் சண்டை நடக்கப் போகுது. நடத்தப் போகிறவர்கள் செட்டிநாட்டைச் சேர்ந்த என் நண்பர்கள். நாம ரெண்டு பேரும் குஸ்தி சம்பந்தமான விளம்பர வேலைகளைக் கவனிக்கப் போகிறோம். மாசம் ஐந்நூறு ரூபாய் சம்பளம்” என்றார்.

நூறு ரூபாயை வாங்கி விட்டில் கொடுத்துவிட்டு, மாற்றுச் சட்டை இல்லாத நிலையில் மதுரைக்குக் கிளம்பி விட்டேன்.

அங்கே போய் ‘மல்யுத்த மலர்’ என்று ஒரு பத்திரிகை தொடங்கினேன். வாரத்தில் மூன்று நாட்கள் குஸ்தி நடக்கும். அந்த மூன்று நாட்கள் மட்டுமே பத்திரிகை வரும். ஸ்டேடியத்திலேயே அச்சிடும் பதினைந்தாயிரம் பிரதிகளும் விற்றுப் போகும்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து மல்யுத்த வீரர்கள் வந்திருந்தாா்கள. தமுக்கம் மைதானத்தில் ஸ்டேடியம் அமைத்தோம்.சீனாவிலிருந்து வந்திருந்த வாங் பக்லி என்ற குஸ்தி வீரர் மிகத் திறமைசாலி. ரெஃபரியாக இருந்து நியாயம் வழங்குவதில் வல்லவர்.

கிங்காங்கும் தாராசிங்கும் ஒருவரையொருவர் மலைப் பாம்புகளைப் போல் பிண்ணிக் கொண்டு பிடிவாதம் காட்டும் நேரங்களில் ரெஃபரி வாங் பக்லி கிங்காங் காதருகில் போய் அழுத்தமாக விசிலே ஊதுவார். அப்போதும் கிங்காங் தன் பிடியிலிருந்து தாராசிங்கை விட மாட்டார். தாராசிங் தலை முடியைப் பிடித்து இழுத்து ஃபெளல் கேம் ஆடுவார். வாங் பக்லிக்குக் கோபம் வரும். ஒரு ஜம்ப் செய்து கிங்காங் தோள் உயரத்துக்கு மேலே கிளம்பி அப்படியே தமது இரு கால்களாலும் கிங்காங்கை உதைத்துக் கீழே தள்ளிவிட்டுத் தானும் விழுவார். வாங் பக்லி அப்படி மேலே கிளம்பும்போது ஆகாயத்தில் பறப்பது போலிருக்கும். இந்த அபூர்வக் காட்சியைக் காண்பதற்காகவே பலபேர் டிக்கட் வாங்கிக் கொண்டு குஸ்தி பார்க்க வருவார்கள்.

நானும் சின்ன அண்ணாமலையும் ‘வானத்தில் பறக்கும் சீனத்து வீரர்’ என்று வாங் பக்லிக்கு ஒரு பெயர் சூட்டினோம்.

‘நண்டுப் பிடி’ என்பது சர்வதேச மல்யுத்த வகையில் ஒன்று. குஸ்தி போடும் போது எதிரியின் தலேமுடியைப் பிடித்து இழுக்கக் கூடாது என்பது விதி. கிங்காங் அடிக்கடி தாராசிங்கின் தலைமுடியைப் பிடித்து இழுப்பார். அப்போதெல்லாம் நான் ஒலிபெருக்கியில் “தாராசிங் போடுவதோ நண்டுப் பிடி. கிங்காங் போடுவதோ சிண்டுப் பிடி” என்பேன். எல்லோரும் சிரிப்பார்கள்!

“மல்யுத்தம் பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தால் மட்டும் போதாது, அதை ஒரு பரபரப்போடு நடத்த வேண்டும்” என்று நானும் சின்ன அண்ணாமலையும் விரும்பினோம். தினம் தினம் புதுப்புது உத்திகளைப் புகுத்தி வசூலைப் பெருக்குவதில் கவனம் செலுத்தினோம். இந்தக் கலையில் எங்களுக்குள்ள திறமை கண்டு கிங்காங்கே வியந்து போனார்!

ஒருநாள் கிங்காங்கைத் தனிமையில் சந்தித்து அன்று மாலை நடக்க வேண்டிய நிகழ்ச்சி பற்றி விவாதித்தோம். எங்கள் திட்டப்படி மூன்றாவது ரவுண்டில் கிங்காங் தாராசிங்கை வலுச் சண்டைக்கு இழுத்து, மேடையிலிருந்து தாராசிங்கைக் கீழே தள்ள வேண்டும். கீழே போய் விழும் தாராசிங் கோபமுற்று மேடை மீது தாவி கிங்காங்கைத் தனது இரண்டு கைகளாலும் உயரத் தூக்கித் தலைக்கு மேல் மூன்று முறை தட்டாமாலே சுற்றிக் கீழே போட வேண்டும். போட்டதும் கிங்காங் மீது அமர்ந்து அவர் நெற்றியில் ரத்தம் கசியும் அளவுக்கு அடிக்க வேண்டும். அந்த ரத்தத்தை வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்துக் குறுக்கே வரும் ரெஃபரியின் பனியன் மீது அப்ப வேண்டும். ரெஃபரி அணிந்துள்ள வெள்ளை வெளேரென்ற பனியன் மீது படியும் அந்த ரத்தம் சூரிய ஒளி போன்ற விளக்கு வெளிச்சத்தில் சுற்றி உள்ள மக்களுக்குப் பளிச்சென்று தெரியும் ரசிகர் கூட்டம் இதை உண்மைச் சண்டை என்றே நம்பிவிடும். அந்த நேரம் பார்த்து கிங்காங் எழுந்து தாராசிங்கைச் சவால் சண்டைக்கு அழைத்தால் மறுநாள் வசூல் இரண்டு மடங்கு கூடும் என்பது எங்கள் யோசனை.

கிங்காங்கின் நெற்றிச் சதை மூன்று மடிப்புகள் கொண்டது. அந்த மடிப்புகளுக்கிடையே அன்று மேடைக்குச் செல்லுமுன் ‘ப்ளே’டினால் லேசாகக் கீறிக் கொண்டார். பின்னர் அதைத் துடைத்துச் சரி செய்து விட்டார். அன்று மாலை மேடையில் கிங்காங் நெற்றியில் தாராசிங் அடித்த போது ஏற்கனவே கீறி வைத்திருந்த இடத்தில் ரத்தம் குபுகுபுவென்று பெருகியது.

நாங்கள் திட்டமிட்டபடியே தாராசிங் அந்த ரத்தத்தை எடுத்து ரெஃபரியின் பனியனில் அப்பினார். ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ரத்தத்தைக் கண்டதும் நரம்பில் முறுக்கேறிக் கூச்சலிட்டனர். போதாக் குறைக்கு கிங்காங் வேறு ரெஃபரி மீது பாய்ந்து அவர் பனியனைப் பிடித்து இழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்ட போது ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது.

பனியன அவர் அப்படிக் கிழித்துப் போட்டதும், “அடாடா! பனியனையே கிழிச்சுட்டான்யா! உண்மைச் சண்டையில்லேன்ன அப்படிக் கிழிப்பானா?” என்று அவ்வளவு பேரும் பேசிக் கொண்டு போனார்கள. அன்று வசூலான தொகை முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! பனியன் விலையோ பத்து ரூபாய்! முப்பத்திரண்டாயிரம் வசூலாகும் போது பத்து ரூபாய் பனியனைக் கிழிப்பது ஒரு பெரிய விஷயமா என்ன?
------------

4. ஊரே மணக்கும் சேமியா உப்புமா

சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது. தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை'’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

அப்போது ஒரு நாள் குண்டு ஐயர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார், அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார். காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசி காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள். குண்டு ஐயர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார். கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சிவேளை ஆகி விடுமாதலால் குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது. காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர். எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே ஏதாவது டிபன் தயார் செய்து கொள்வார். அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில் ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும் முந்திரியையும் பொன் முறுகலாய் வறுத்து அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார். தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஒட்டிச் செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார். மோர் சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும். இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால் குண்டு ஐயரின் கைவண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும். கண் முன்னே ஒரு விநாடி கிராமம் தோன்றி மறையும்.

சிறு வயதில் படிக்க வேண்டிய காலத்தில் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன். மாலையில் வீடு திரும்பியதும் அப்பாவுக்கு நான் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றின விஷயம் தெரிந்து போய் அடி வாங்குவதும், மறுநாள் சமாதானம் ஆவதும், மறுபடி இரண்டு நாட்களுக்குள்ளாகவே மனம் மாறி, பழையபடி ஊர் சுற்றுவதும் நிரந்தரமாகி விட்டது.

ஒரு சமயம் இது ஒரு உச்ச கட்டத்தை அடைந்த போது இந்தக் கட்டுப்பாடுகளை முழுவதுமாய் உதறிவிட்டு குண்டு ஐயர் மாதிரி சுதந்திரமாய்த் திரிய வேண்டும் என்கிற வெறி என்னுள் தோன்றியது.

ஒரு நாள் பள்ளிக்குக் கட்ட வேண்டிய அந்த மாத ஃபீஸ் பணத்தை அப்பா என்னிடம் கொடுத்தார். நான் பள்ளிக்கூடம் போகாமல், டிபன் பாக்ஸை எனக்குத் தெரிந்த ஒரு புத்தகக் கடையில் வைத்துவிட்டுக் கையில் இருந்த அந்தப் பணத்துடன் திருச்சிக்கு ரயில் ஏறி விட்டேன். சாவி என்கிற பத்திரிகையாளனின் முதல் பயணம் அப்போதுதான் துவங்கிற்று.
---------------

5. வ. ரா. வாக்களித்த நூறு ரூபாய்

சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் திரு எஸ். வி. சகஸ்ரநாமம் ‘பைத்தியக்காரன்’ என்றொரு நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். விதவா விவாகம் பற்றிய நாடகம் என்பதால் அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சமயம் என். எஸ். கிருஷ்ணன் சிறையில் இருந்ததால், நாடகக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் திரு சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. சகஸ்ரநாமம், என். எஸ். கிருஷ்ணனை சிறையில் சந்தித்து, “இந்த நாடகத்துக்கு வ. ரா. அவர்களைத் தலைமை தாங்கச் சொல்லப் போகிறேன். அவருக்கு இம்மாதிரி சமுதாயப் புரட்சியான கருத்துக்களில் ஈடுபாடு அதிகம்” என்றார்.

“ரொம்ப சரி; வ. ரா.வைத் தலைமை தாங்கச் சொல்வது ரொம்பப் பொருத்தம்” என்றார் கிருஷ்ணன். பைத்தியக்காரன் நாடகம் நூறு நாட்கள் நடைபெற்றது. வ. ரா.வுக்கு அந்த நாடகம் ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதால் ஏறக்குறைய அந்த நூறு நாட்களுமே நாடகத்துக்குத் தவறாமல் ஆஜராகிக் கொண்டிருந்தார். இதனால் வ.ரா.வுக்கும் என். எஸ். கே. நாடக சபைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

வ. ரா. ஒவ்வொரு நாளும் தியேட்டருக்கு முன் கூட்டியே போய் எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு முடிந்ததும் முதல் வரிசையில் ஒரு மூலையாகப் போய் உட்கார்ந்து விடுவார்.

என்னையும் ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க வரும்படி அழைத்தார் வ. ரா. நான் அவரைக் காட்டிலும் வயதில் சிறியவன் என்பதால் “டேய்! இன்று மாலை ஒற்றைவாடை தியேட்டருக்கு வந்துருடா” என்று உரத்த குரலில் உரிமையுடன் பணித்தார். அன்றே நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக வ. ரா. விடம் சொன்னேன்.

“நீ ஏன் கல்கியில் ஒரு விமரிசனம் எழுதக் கூடாது?” என்று கேட்டார். வ. ரா.

“ஆசிரியரிடம் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அதே சூட்டில் அந்த நாடகத்தைப் பற்றிய ஒரு விமரிசனத்தை எழுதி கல்கியிடம் காண்பித்தேன். கல்கி அதை அடுத்த இதழிலேயே பிரசுரித்து விட்டார். அந்த விமரிசனத்தால் நாடகம் இன்னும் பரவலாகப் பேசப்பட்டு நாடகத்துக்கு மேலும் கூட்டம் அதிகமாயிற்று.

விமரிசனத்தைப் படித்த வ. ரா. ரொம்பவும் மகிழ்ந்து போய், “உனக்கு நூறு ரூபாய் பணம் தருவதாய்த் தீர்மானம் பண்ணி இருக்கிறேன். சகஸ்ரநாமத்திடம் நூறு ரூபாய் வாங்கிக் கொள்!” என்றார். நான் எதுவும் பதில் சொல்லவில்லை. எனக்குப் பணம் தேவைதான். ஆனால் விமரிசனம் எழுதியதற்காகப் பணம் வாங்கினால் அது லஞ்சம் வாங்கியது போல் ஆகிவிடும் என்பதால் பேசாமலிருந்து விட்டேன். அதனால் வ.ரா.வையும், சகஸ்ரநாமத்தையும் அப்புறம் வெகுநாள் வரை பார்க்காமலே இருந்து விட்டேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து பேராசிரியர் கல்கி ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில், “வ. ரா. எப்படி இருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நிரந்தரமான வருமானமில்லை; ஆனாலும் அவர் முகத்தில் எதுவும் தெரிவதில்லை” என்றேன்.

“சிறுகதைப் போட்டி ஒன்றை கல்கியில் அறிவித்து அதற்கு வ. ரா.வை நீதிபதியாய் நியமிக்கலாமென்றிருக்கிறேன். அந்த வகையில் அவருக்கு ஏதாவது பண உதவி செய்யலாமே!. ஆனால் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ?” என்று. தயங்கினர் கல்கி.

“நான் வேண்டுமானல் போய்ப் பேசிப் பார்க்கட்டுமா?” என்று கல்கி அவர்களிடம் கேட்டேன். “சரி” என்று கூறிய கல்கி என்னை வ.ரா.விடம் தூது அனுப்பி, “சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க முடியுமா?” என்று விசாரித்து வரச்சொன்னர்,

வ. ரா.வைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.

“அப்படியா? தமிழ்நாட்டில் பல பேர் ரொம்ப நன்றாகக் கதை எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்தையெல்லாம் படித்துப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாயிருக்கும். ஆனால் ஒரு நிபந்தன. கதைகள் அவ்வளவையும் நானே படிக்க முடியாது. முதலில் நீ படித்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வதாயிருந்தால் நான் சம்மதிக்கிறேன்” என்றார் வ. ரா.

கல்கியிடம் இதைச் சொன்ன போது, “சரி, போட்டிக் கதைகள் வந்தவுடன் அவர் விருப்பப்படி அவற்றை எடுத்துக் கொண்டு போய் நீயே கதைகளே வாசித்துக் காட்டு!” என்றார், ஒரு மாத காலம் வ. ரா. வீட்டுக்கு தினம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை உட்பட போய்க் கதைகள் முழுதும் படித்துக் கொடுத்தேன். அந்த முப்பது நாளும் வ.ரா. வீட்டில்தான் எனக்குச் சாப்பாடு. முருங்கைக்காயைத் தோல் சீவி சாம்பாரில் போடும் புதுமையை அவர்கள் வீட்டில்தான் பார்த்தேன். வ. ரா. வுக்கு முருங்கைக்காய் சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.

ஒரு நாள் வ. ரா. என்னிடம், “டேய், இந்த நீதிபதி வேலைக்காக கல்கி எனக்குப் பணம் கொடுப்பார் என்று நினைக்கிறேன். நீதானே இவ்வளவு கதைகளையும் எனக்குப் படித்து உதவி செய்தாய். ஆகையால் அந்தப் பணத்தில் உனக்கு நான் நூறு ரூபாய் தரப் போகிறேன். ஆகையால் தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்றார். கதைகள் அவ்வளவும் படித்து முடித்ததும் கல்கி ஆசிரியர் வ. ரா.வுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்தனுப்பினர். அந்தப் பணத்தை நான்தான் கொண்டுபோய்க் கொடுத்தேன். வ.ரா. நோட்டுக்களை எண்ணிப் பார்த்து விட்டு, “என்னடா நூறு ரூபாய் குறைகிறதே?” என்றார்.

“நீங்கள் ஏற்கனவே வாக்களித்த நூறு ரூபாயை நான் எடுத்துக் கொண்டு விட்டேன். கொஞ்சம் அவசரமாகத் தேவைப்பட்டது” என்றேன்.

“நான் உனக்குப் பணம் தருவதாகச் சொன்னது உண்மை. ஆனால் நீயே அதை எடுத்துக் கொண்டது தப்பு” என்றார் வா. ரா.

பைத்தியக்காரன் விமரிசனத்துக்காக நூறு ரூபாய் அவராகவே கொடுக்க முன்வந்த போது அதை நான் வாங்காமல் இருந்து விட்டேன். ஆனால் கதை படித்ததற்காக அவர் கொடுப்பதாக வாக்களித்த பணத்தை நானே எடுத்துக் கொண்டு விட்டேன். தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்று வ.ரா. முன் கூட்டியே சொல்லி விட்டதால் அந்த நூறு ரூபாயை நானாகவே எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதி விட்டேன். ஆனாலும் அது தவறு என்பதை வ. ரா. சுட்டிக் காட்டியபோதுதான் உணர்ந்தேன். அப்புறம் வெகு நாள்வரை அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.
------------

6. எது திரட்டு? எது திருட்டு?

நான் ராஜாஜியின் விசிறி. அவரது எழுத்தும் நகைச்சுவை மிக்க பேச்சும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்குத் தவறாமல் போய் விடுவேன். குட்டிக் கதைகள், பொருத்தமான உவமைகள் மூலம் தாம் சொல்ல வந்ததை விளக்குவதில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பின் ராஜாஜியை மிஞ்சியவர் யாருமில்லை. கல்கி ராஜாஜியைப் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதுவார். அந்தப் புகழ்ச்சியில் மிகை இருந்ததில்லை. இதெல்லாமாகச் சேர்ந்து ராஜாஜியின் மீது நான் கொண்டிருந்த மரியாதை பக்தியாகவே மாறி விட்டது.

ராஜாஜியின் குட்டிக் கதைகளையும். உவமைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா. ராஜாஜி பேசும் எந்தக் கூட்டத்துக்கு நான் போனலும் குறிப்பெடுக்கத் தவறமாட்டேன். நான் குறிப்பெடுத்து எழுதியவை போக மேலும் சில உவமைகளைச் சென்னை பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குப் போய் அங்கே சேர்த்து வைப்பட்டிருந்த பழைய ஹிந்து நாளிதழ்களிலிருந்து எடுத்துச் சேகரித்தேன்.

ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் ஒரு கூட்டம். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது இந்த மாகாணத்தில் (அப்போதெல்லாம் மாகாணம்) மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்தார். ராஜாஜி எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும் அதைப்பற்றிப் பொது மக்களிடையே போய் விளக்கம் தருவது வழக்கம். விற்பனை வரிச் சட்டம் கொண்டு வந்த போது கொத்தவால் சாவடியில் கூட்டம் போட்டுப் பேசினர். மதுவிலக்கு அமலுக்கு வந்தபோது ராயபுரத்தில் போய்ப் பேசினார்.

“நான் ஏன் சேலம் போன்ற தமிழக ஓரப் பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறேன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். கிராமத்திலிருந்து வருபவர்களுக்குத் தெரியும். சாப்பிடுவதற்குக் கூழ் காய்ச்சி அதைச் சூடாகத் தட்டில் ஊற்றி வைத்தவுடன் சாப்பிடுபவன் முதலில் ஓரமாகத்தான் விரலால் தொட்டுப் பார்ப்பான். அதைப் போலவே மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு முதலில் ஒரமாக உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன்?” என்று சொன்ன உவமையை நான் இன்றும் கூட எண்ணிப் பார்த்து ரசிப்பதுண்டு.

தனி நபர் சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி எந்நேரமும் கைது செய்யப் படலாம் என்று ஒரு செய்தி பரவியது. அவ்வளவு தான்; ஆயிரக்கணக்கான் பேர் அவர் வசித்து வந்த பஸ்லுல்லா வீதியில் கூடிவிட்டனர். “காலை பத்து மணிக்கு அரெஸ்ட் பண்ணப் போருங்களாம்” என்று செய்தி பரவும். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ராஜாஜி கைதாக மாட்டார்! சாயங்காலம் இருக்கும் என்று கூட்டத்தினர் தாங்களாகவே பேசிக் கொண்டு போவார்கள். சாயங்காலத்துக்குள் மறுபடியும் திரும்ப வந்து காத்திருப்பார்கள். இப்படியே மூன்று நான்கு நாட்கள் ஒரே சஸ்பென்ஸாக இருந்தது.

இதைக் குறித்து ராஜாஜி சொன்னர் : “கிராமங்களில் வாழைத்தாரை அறுத்துப் பழுக்கப் போடுவார்கள். அதை ஒரு பானையில் வைத்து வைக்கோல் போட்டு மூடிவிடுவார்கள். தார் பழுக்க நாலைந்து நாட்கள் ஆகும். ஆனால் வீட்டிலிருக்கும் சின்னப் பயல்களுக்கு அதுவரை தாள முடியாது. அடிக்கொரு முறை உள்ளே போய் வைக்கோலே எடுத்துத் தார் பழுத்து விட்டதா என்று பார்ப்பார்கள். அதுபோல நான் கைதாகும் வரை இவர்களால் பொறுக்க முடியவில்லை!”

இம்மாதிரியான உவமைகள் பலவற்றை நான் அரும்பாடு பட்டுத் தொகுத்து வைத்திருந்தேன். என்றைக்காவது ‘ராஜாஜி உவமைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

நானும் சின்ன அண்ணாமலையும் நெருங்கிய நண்பர்கள். புத்தகம் போடும் என் எண்ணத்தை அவரிடம் கூறி அதுவரை நான் தொகுத்து வைத்திருந்த எல்லா உவமைகளையும் அவரிடமே கொடுத்து வைத்தேன்.

வெள்ளிமணிக்குப் பிறகு எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் இருந்த நட்புறவு முறிந்து விட்டதால் சிறிது காலம் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். அந்த நேரத்தில் நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த தொகுப்பை அவர் தன்னுடையதாக பாவித்துத் தன் பெயரிலேயே அப்புத்தகத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னால் பொறுக்க முடியவில்லை. உடனே என் ஞாபகத்திலிருந்தே அந்த உவமைக் கதைகள் அவ்வளவையும் மீண்டும் எழுதி நானும் புத்தகமாக அச்சடித்தேன். பேராசிரியர் கல்கி இதற்கு முன்னுரை வழங்கினர். புத்தகம் பைண்டாவதற்கு முன் அச்சிட்ட ஃபாரங்களை ராஜாஜிக்கு அனுப்பி, புத்தகம் வெளியிடுவதற்கு உரிமை கேட்டிருந்தேன். அவரும் மகிழ்ச்சியோடு எனக்கு உரிமை வழங்கிக் கடிதம் எழுதியிருந்தார்.

“அதெப்படி நீங்கள் சாவிக்கு உரிமை கொடுக்கலாம்? நான் ஏற்கனவே புத்தகம் தயாரித்தாகி விட்டது” என்று சின்ன அண்ணாமலை ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார். ராஜாஜி உடனே, “ஆயிரம் பிரதியுடன் நிறுத்திக்கொள். இரண்டாம் பதிப்பு போட வேண்டாம்” என்று எனக்கு இன்னொரு கடிதம் எழுதியிருத்தார். எனக்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ராபின்ஸன் பார்க்கில் குறிப்பெடுக்க ஆரம்பித்தது முதல் யூனிவர்ஸிடி லேப்ரரி பழைய பேப்பர்களைப் பார்த்துத் தொகுத்தது வரை எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் எழுதி “இது அத்தனையும் என் உழைப்பு. சின்ன அண்ணாமலையையும் உங்களுக்குத் தெரியும். என்னையும் தெரியும். இரண்டு பேரையும் எடைபோட்டு முடிவுக்கு வரவும் உங்களுக்குத் தெரியும்” என்று கடிதத்தை முடித்து, கூடவே நான் தயாரித்திருந்த புத்தகத்தையும் அனுப்பி வைத்தேன்.

ராஜாஜி அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு அதில் சில திருத்தங்களையும் செய்து அனுப்பியிருந்தார். ஒரு திருத்தம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒரு வாக்கியத்தில் ‘மூளை’ என்ற சொல் இடம் பெற்றிருந்தது. ராஜாஜி அதை அடித்து ‘அறிவு’ என்று மாற்றியிருந்தார்.

கூடவே அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்:

“எல்லா விஷயமும் தெரிந்தது. உன்னுடையதுதான் திரட்டு. இன்னொன்று திருட்டு.”
------------

7. கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார்?

‘கத்தரி விகடன்’ என்ற பெயரில் நான் ஒரு பத்திரிகை தொடங்கினேன். வருடம் 1937. அப்போது ஆனந்த விகடன் பொறுப்பாசிரியராக இருந்த கல்கி அவர்கள் என்னைக் கூப்பிட்டனுப்பி, பத்திரிகையாவது, மண்ணாவது. அதெல்லாம் நடத்த முடியாது. ஆனந்த விகடனில் உனக்கு உதவி ஆசிரியர் வேலை தருகிறேன். ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார்.

“சரி” என்றேன்.

“நீ இதுவரை கத்தரி விகடனுக்காக எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டார் கல்கி.

“நூற்று அறுபது ரூபாய்” என்றேன்.

“அதை நீ வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறி விகடன் ஆபீஸிலிருந்து அந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். மொத்தமாக அவ்வளவு பெரிய தொகையை நான் அதுவரை பார்த்ததில்லை. எனவே பணம் வந்த குஷியில் அன்றே ஒரு ஸில்க் ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டேன். மறுநாள் அதை அணிந்து கொண்டு அலுவலகம் போனபோது கல்கி அவர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவருக்குப் புரிந்து விட்டது!

“நேற்று கொடுத்த பணம் ஸில்க் ஜிப்பாவாக மாறிவிட்டதா? கையில் கொஞ்சம் பணம் கிடைத்தால் அதைக் “கன்னா பின்னா’ என்று செலவு செய்து விடுவதா? இதோ பார், இந்த ஸில்க் ஜிப்பாவை உடனே கழற்றி எறி. அசிங்கம். இனிமேல் நீ கதர்தான் அணிய வேண்டும்” என்றார். அன்றே ஸில்க் ஜிப்பாவைக் கழற்றி எறிந்து விட்டு கதர்ச் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டேன். அப்போது கதர் கட்டத் தொடங்கியவன் அப்புறம் ரொம்பக் காலம் (1966 வரை) கதரை விடவே இல்லை.

கல்கி அவர்கள் நீண்ட காலம் முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் வாசன், மாலி, தேவன் இவர்களெல்லாருமே முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிவார்கள். கல்கி ஆனந்த விகடனை விட்டு விலகி சொந்தப் பத்திரிகை தொடங்கிய பிறகு கூட முக்கால் கைச் சட்டைதான் அணிந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் முக்கால் கையை மாற்றி முழுக்கை ஜிப்பா போடத் தொடங்கி விட்டார். அப்போது நான் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்தேன். எனக்கும் மற்ற உதவி ஆசிரியர்களுக்கும் கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினர் என்பது புரியவில்லை. நாங்கள் அவரிடமே இதுபற்றிக் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னர்:

“நான் என்னமோ ராஜாஜியையும், டி. கே. சியையும் என் சட்டைப்பையில் வைத்திருப்பதாகப் பலர் வெளியே பேசிக் கொள்கிறார்களாம். என் சட்டையில் இருப்பதோ ஒரே ஒரு பாக்கெட். அவர்கள் இரண்டு பேரையும் என் ஒரே பாக்கெட்டில் வைத்தால் இடநெருக்கடி ஏற்படாதா? அதற்காகத்தான் இப்போது இரண்டு பாக்கெட் வைத்த ஜிப்பா போட்டுக் கொள்கிறேன்” என்றார்.

ஆத்தூரில் ஒரு காங்கிரஸ் மாநாடு. நான் அந்த மாநாட்டுக்குப் போயிருந்தேன். ஒரு பக்கமாக உட்கார்ந்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தேன். கல்கியும் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். “என்னைத் தாண்டி கல்கி போனபோது, குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சைகையால் என்ன எழுதுகிறாய்?” என்று கேட்டார்.

“குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்?” என்றேன்.

“அதையெல்லாம் மூடி வை. அப்புறம் சொல்கிறேன்” என்று கூறிவிட்டும் போய் விட்டார்.

பிறகு சொன்னர்: “இதோ பார், பேச்சைக் குறிப்பெடுத்து எழுதுவது தினப் பத்திரிகைகள் செய்யும் வேலை. வாரப் பத்திரிகைக்கு அந்த ‘ரிப்போர்ட்டிங்’ ஒத்து வராது. நீ பேசாமல் உட்கார்ந்து நடப்பதைக் கவனிக்க வேண்டும். உன் உள்ளத்தில் பதியும் சுவாரஸ்யமான விஷயங்களை மட்டுமே கட்டுரையாக எழுத வேண்டும்.”

“மறந்து போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் குறித்துக் கொண்டேன்” என்றேன்.

“நல்ல விஷயங்கள் என்றால் அது எப்படி மறந்து போகும்? மறந்து போகக் கூடிய விஷயங்கள் என்றால் அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல, பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்பதுதானே பொருள்?” என்றார்.

அவர் அன்று சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சில் வேதவாக்காய்ப் பதிந்து விட்டன. இந்தக் குறிப்பெழுதும் வேலையை அன்றோடு விட்டுவிட்டேன்.

ஒரு விஷயத்தை எழுதுவதற்கு முன்னால் அதைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் படித்து அறிந்து கொண்ட பின்னரே கல்கி பேணாவைக் கையிலெடுப்பார். ‘சிவகாமியின் சபதம்’ எழுதும்போது புத்த பிட்சுவைப் பற்றி எழுத வேண்டியிருந்தது. அதற்காக புத்த பிட்சு, ஒருவரை எங்கிருந்தோ அழைத்து வரச் சொல்லி, அவரது நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களை யெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டார். அந்தக் காலத்தில் கல்கி அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.
-----------------

8. ‘பாலிட்டி’ தெரியுமா உனக்கு?

காஞ்சிப் பெரியவர்கள், திருப்பதி போகும் வழியில் ஒரு சின்ன கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள். மெயின் சாலையிலிருந்து வயல்களுக்கிடையே உள்ள கப்பி ரோடு வழியாக அந்த கிராமத்தை அடைய வேண்டும். நான் அப்போது ‘தினமணி கதிரி’ல் இருந்தேன். சுவாமிகளைப் பார்ப்பதற்காக நானும் எம். கே. என்று அழைக்கப்படும் திரு எம். கிருஷ்ணசாமியும் (இப்போது லூகாஸ் டி. வி. எஸ்.) திரு டி. கே. தியாகராஜனும் போயிருந்தோம். எங்களைப் பார்த்ததும், சுவாமிகள் கையால் சைகை காட்டி எதிரே உட்காரச் சொன்னர்கள்.

பிறகு என்னைப் பார்த்து “எக்ஸ்பிரஸில் ‘கீ’ போஸ்ட்டில் இருக்கியோ?” என்று கேட்டுக் கொண்டே சாவியால் திறப்பது போல் அபிநயத்துக் காட்டினர். நான் பதில் ஏதும் சொல்லாமல் பரவசத்தோடு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரியவர்கள் ரொம்ப உற்சாகத்தோடு காணப்பட்டார்கள்.

“நீ அமோகமாக இருப்பே. க்ஷேமமாய் இருப்பே?” என்று வாயார வாழ்த்தினர்.

சிறிது நேரம் மெளனம்.

“பாலிட்டி என்றால் என்ன தெரியுமோ?” என்றார் சட்டென்று.

எனக்குத் தெரியவில்லை, தயங்கிவிட்டு, “ ‘பாலிடிக்ஸ்’ என்றால் தெரியும்” என்றேன்.

“நான் கேட்பது பாலிடிக்ஸ் இல்லை, பாலிட்டி” என்றார்.

விழித்தேன், அல்லது விழித்தோம்.

“மனித சமுதாயத்துக்கு மொத்தமாகச் செய்யப்படுகிற சேவைக்கு பாலிட்டி” என்று சொல்லலாம். ‘பாலிட்டி’ என்று தலைப்பிட்டு நீ உன் பத்திரிகையில் வாரா வாரம் ‘ரிலிஜனை’ப் பற்றி எழுது” என்றார், ஏறக்குறைய ஒரு கட்டளை மாதிரி.

“மதம், பக்தி இது பற்றியெல்லாம் பத்திரிகையில் எப்போதாவது வரலாமே தவிர, வாரா வாரம் எழுதுவது கூடாது என்ற கொள்கை உடையவன் நான்” என்றேன்.

சுவாமிகள் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சற்று வியப்புடன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“ரிலிஜன் எழுதினால் பத்திரிகை விற்பனையாவதில்லை. சீரியஸாக எழுதினால் ஸர்க்குலேஷன் உயராது” என்றேன்.

“பரவாயில்லை; நீ எழுது. விற்பனையாகும்.” என்றார்.

எனக்கு என் கொள்கையிலிருந்து விலகிப் போக விருப்பமில்லை.

“பெரியவா மன்னிக்க வேண்டும். என் பத்திரிகையில் நான் ரிலிஜனைப் பற்றி எழுதுவதாக இல்லை. விற்பனை பாதிக்கும்”

நான் பிடிவாதமாகச் சொன்னாலும் பெரியவர்கள் என்னிடம் ஒரு குழந்தையிடம் காட்டும் அன்பைக் காட்டிப் பேசினர்.

“அப்படியா நினைக்கிறாய்?” என்று இழுத்தாற் போல் விட்டு விட்டார்.

அப்புறம் மூவரும் பெரியவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். காரில் ஏறி கப்பி ரோடில் போய்க் கொண்டிருந்தபோது சுவாமிகள் முகாமிலிருந்த பிராமணர் ஒருவர் எங்களைத் துரத்திக் கொண்டு சைக்கிளில் வருவதைக் கவனித்தோம். அவர் எங்களிடம் ஏதோ சொல்லத்தான் வருகிறர் என்பதை ஊகித்து காரை நிறுத்தச் சொன்னுாம்.

“பெரியவர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்றார் அந்த மடத்து ஆள் மூச்சு வாங்க,

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று மூவரும் யோசித்துக் கொண்டே போனோம்.

“ரிலிஜன், கடவுள் பற்றியெல்லாம் எழுதினால் பத்திரிகை விற்காது என்று சொன்னாயே, இப்போது தினமணி பேப்பரில் தினமும் மாம்பலத்து திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி எழுதுகிறார்களே! இதனால் விற்பனை அதிகரித்திருப்பதாகக் கேள்விப் பட்டேனே!” என்றார்.

அப்போது மாம்பலத்தில் திடீர்ப் பிள்ளையார் பூமியிலிருந்து கிளம்பி தினம் ஒர் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த திடீர்ப் பிள்ளையாரைப் பார்க்கப் பெரும் கூட்டமாகக் கூடிக் கொண்டிருந்தார்கள்.

“பெரியவா நினைக்கிற மாதிரி அது ரிலிஜன் எழுதுவதால் ஆகும் விற்பனை அல்ல. தெய்வ பக்திக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஒரு பரபரப்பான செய்தியில் சஸ்பென்ஸும் சேர்ந்து கொண்டது. அதனால் விற்பனை கூடி உள்ளது. அவ்வளவுதான்”

“ஒகோ, அப்படி நினைக்கிறாயா, சரி நீ போகலாம்” என்பது போல் தலையசைத்து விட்டார்.
-----------------

9. பெரியார் எனக்கு வழிகாட்டி

பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிராமணர்களை எதிர்த்து அவர் கடுமையாகப் பேசும் போது, நான் பிராமண வகுப்பில் பிறந்தவன் என்ற முறையில் எனக்குக் கோபம் வருவதுண்டு. ஆனாலும் அவர் பேச்சில் இழையோடும் நகைச்சுவையை நான் மிகவும் ரசிப்பேன். அவர் கூட்டங்களுக்குப் போய் ஒரு மூலையில் ஒதுங்கி, பேச்சை நின்று கவனிப்பேன்.

ஆனந்தவிகடனில் ஈ. வெ. ரா. அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்காக ஒருமுறை திருச்சி பெரியார் மாளிகைக்குப் போயிருந்தேன். பல்வேறு விஷயங்கள் குறித்து பெரியார் தமது தீர்க்கமான கருத்துக்களை வெளியிட்டார். அப்போது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.

“கல்லூரி அட்மிஷன், அரசாங்க வேலை இவற்றுக்கு வகுப்புவாரி விகிதாசார ஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக வாதிடுகிறீர்களே, அது ஏன்? தகுதியின் அடிப்படையில் இவை அமைவது நல்லது இல்லையா? தகுதியுள்ளவன் முன்னுக்கு வருவதில் உங்களுக்கென்ன ஆட்சேபனை?” என்று கேட்டேன்.

“தகுதி என்ன தகுதி; வெங்காயம் நாலு தடவை திருப்பித் திருப்பி செஞ்சா எந்தத் தொழிலும் பழக்கமாயிட்டுப் போகுது. ஒரு முட்டாள் பத்து வருஷம் ஒரே தொழிலைச் செய்தால் அந்தத் தொழிலில் அவன் திறமைசாலி ஆயிடறான். அவ்வளவு தானே! ஜெயிலுக்குப் போய்ப் பாரேன். ஆங்கேயும் ஜாதி விகிதாசார அடிப்படையிலேதானே கைதிகள் இருக்காங்க...”

“உங்கள் கணக்குப்படி பார்த்தால் பிராமணர்களின் எண்ணிக்கை வெளியில் இருக்கும் அளவுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் ஜெயிலில் இல்லையே?”

“அதுக்கென்ன பண்றது? பார்ப்பான் அடிதடி சண்டை கொலை கொள்ளைக்குப் பயந்தவன். அதனால ஜெயில்ல அவங்க அதிகமா இல்லே” என்றார் பெரியார்.

பேச்சுக்கிடையில் மணியம்மையை அழைத்து, “இவங்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடு. ஆனந்தவிகடன்லேருந்து வந்திருக்காங்க” என்றார், வாய்ப்பை நழுவ விடாமல் நான் அப்போது அவரிடம் கேட்டேன். “இப்போது நான் உங்க வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறேன், பார்த்தீங்களா? போன தலைமுறையில் இப்படி நடந்திருக்குமா? நான் ஆசார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான், இதற்கென்ன சொல்றீங்க?”

“இன்றைக்கு நீ என் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறாய் என்றால் அதுகூட என் பிரசாரத்தில் ஏற்பட்ட மாற்றம்தானே? ஒரு சங்கதி சொல்றேன் கேளுங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னால என் வீட்டுக்கு ஒரு பிராமணர் வந்தார். எங்கள் குடும்பத்து நண்பர் அவர். ‘ஏதாவது தாகத்துக்கு சாப்பிடறீங்களா, ஐயா!’ என்று அவரைக் கேட்டோம். ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டார். நாங்க மேலும் வற்புறுத்தவே, சரி. கொஞ்சம் மோரும் தண்ணியும் இருந்தா தனித் தனியாகக் கொண்டாங்க என்றார், கொடுத்தோம். அந்த மோரில் கொஞ்சம் தண்ணியைச் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார். அதென்னய்யா தண்ணி சேர்த்துச் சாப்பிடறீங்க”ன்னு கேட்டோம்.

‘மோரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து விட்டால் மோர் சுத்தமாயிடும்?’னு சொன்னர்.

‘மோர் எங்க வீட்டுது. தண்ணியும் எங்க வீட்டுது. எங்க வீட்டுத் தண்ணி எங்க வீட்டு மோரைச் சுத்தப்படுத்திடுமா? என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே போயிட்டார்.“

பெரியாரைப் பார்க்க நாலைந்து பேர் கூட்டமாக வெளியே காத்திருந்தார்கள். அவர்களை உள்ளே வரச் சொல்லி, “என்ன விஷயம்?” என்று கேட்டார் பெரியார்.

“இன்னிக்கு ஐயாவுக்குக் கூட்டம் இருக்கு ஞாபகப் படுத்திட்டுப் போகலாம்னு வந்தோம்.”

“எத்தனை மணிக்கு?”

“ஆறு மணிக்கு ஐயா!”

“அப்படித்தான் ஆறு மணிக்குன்னு சொல்வீங்க. ஏழுக்குத் தான் ஆரம்பிப்பீங்க. சரி, போங்க, வந்துடறேன்.”

அந்தத் தள்ளாத நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத வயோதிகத்திலும் அவர் கூட்டத்துக்குப் போவது அவசியம்தானா என்று என்னுள் ஓர் கேள்வி எழுந்தது.

“இத்தனை வருஷமாகத் தொடர்ந்து கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு இதில் அலுப்போ, சலிப்போ ஏற்படவில்லையா?” என்று கேட்டேன்.

“நல்லா கேட்டே போ! மொத மொதல்ல நான் சின்னப் பையனா இருந்தப்போ மொதக் கூட்டத்துக்கு எவ்வளவு உற்சாகத்தோட, ஆர்வத்தோட போனேனோ, அதில் கொஞ்சம் கூடக் குறையாமல் இன்னிக்கும் போய்க்கிட்டிருக்கேன்” என்றார்.

நான் அசந்து போனேன். நான் இன்றைக்கும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்த உணர்வை எனக்கு ஊட்டியவர் பெரியார் அவர்கள்தான். உழைப்பின் அருமையை எனக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பெரியாரை ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் நினைவு கூர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
--------------

10. லாக் அப்பில் மசாலா தோசை

1942 ஆகஸ்ட் எட்டு, வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது செய்யப்பட்டு எங்கேயோ அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அடுத்து நேருஜி, படேல், ஆஸாத், காமராஜ், சத்தியமூர்த்தி எல்லாருமே கைது செய்யப்பட்டார்கள். நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு அதே சமயம் இரண்டாம் உலகப் போரும் நடந்து கொண்டிருந்ததால் ஊரடங்குச் சட்டம், இருட்டடிப்பு என்று நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

காந்திஜி கைதானதும் அங்கங்கே தலைமறைவாகியிருந்த காங்கிரஸ்காரர்கள், மகாத்மா இதைச் செய்யச் சொன்னார். அதைச் செய்யச் சொன்னர் என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

நான் அப்போது வேலைவெட்டி ஏதுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். நாட்டுப்பற்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. காந்திஜி தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார். தந்திக் கம்பிகளை வெட்டச் சொன்னார். தபாலாபீஸைக் கொளுத்தச் சொன்னார் என்று வெளியாகிக் கொண்டிருந்தன. பாரத தேவி ராமரத்னம் ரகசியமாக எனக்குச் சில துண்டுப் பிரசுரங்களை அனுப்பி அவற்றை மற்றவர்களுக்கு விநியோகிக்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த எனக்கு இது மேலும் வெறியூட்டியது. தேச விடுதலைக்கு எதையாவது செய்தாக வேண்டும். விடுதலைப் போரில் குதித்தாக வேண்டும் என்ற தீவிரம் ரத்தத்தைச் சூடாக்கியது. தந்திக்கம்பி அறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது. இதெல்லாம் நான் மட்டும் தனியாகச் செய்யக் கூடிய காரியமாய்த் தோன்றவில்லை. எனவே, பக்கத்தில் உள்ள மண்ணடி போஸ்ட் ஆபீஸைக் கொளுத்தி விடுவதென்று முடிவு செய்தேன். ஒரு தீப்பெட்டியுடன் அங்கு போனேன். பெட்டியிலிருந்த எல்லாத் தீக்குச்சிகளையும் ஒன்று சேர்த்துப் பற்ற வைத்தேன். டக்கென்று. தபால் பெட்டியினுள் அவ்வளவையும் போட்டதும் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. உள்ளே இருக்கும் கடிதங்கள் பற்றிக் கொண்டு பெரிதாகி எரிந்து அந்த போஸ்ட் ஆபீஸே தீக்கிரையாகப் போகிறது. நான் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று எனக்குள்ளாகவே கற்பனை செய்து கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தபால் பெட்டிக்குள்ளிருந்து வெறும் புகை மட்டுமே வந்தபோது பெரும் ஏமாற்றமாயிருந்தது. இருந்தாலும் என் வீரத்தை வெளியுலகுக்குப் பிரகடனப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவலில் அருகாமையிலுள்ள செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போன் செய்தேன்.

“போலீஸ் ஸ்டேஷனா? இங்கே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குத் தீ வைத்துவிட்டேன்.உடனே வாருங்கள்”என்றேன்.

“யார் நீ?” என்று கேட்டது. செக்குமேடு.

“நான் ஒரு காங்கிரஸ்காரன். தபாலாபீஸுக்கு எதிரிலேயே காத்திருக்கிறேன். உடனே வாருங்கள். கதர்ச்சட்டை அணிந்திருப்பேன்” என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வேன் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பரபரப்போடு இறங்கிய போலீசார் இரண்டு பேர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்து, “நீதான் போன் செய்தாயா?” என்று கேட்டார்கள். “ஆமாம்.” என்றேன். என்னை அப்போதே கைது செய்து அந்த வேனிலேயே ஏற்றிச் சென்றார்கள். ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கேஸ் எழுதிக் கொண்டார்கள். அதில் நான் கையெழுத்துப் போட்டதும் மசால் தோசை வாங்கிக் கொடுத்தார்கள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கு எழும்பூர் மாஜிஸ்ட் ரேட் கோர்ட்டுக்குப் போயிற்று.

“குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார் மாஜிஸ்ட்ரேட்.

ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று மேலிடத்துக் கட்டளை ஆதலால், “நான் குற்றவாளி அல்ல” என்று சொன்னேன்.

“உனக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். ‘சி’ கிளாஸ்” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘கடுங்காவல் தண்டனை’ என்று மாஜிஸ்ட்ரேட் சொன்னது எனக்கு வருத்தம் தரவில்லை. ‘சி’ கிளாஸ் என்பதுதான் மதிப்புக் குறைவாகப்பட்டது.

“எனக்கு ‘பி’ கிளாஸ் வேண்டும்” என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் வாதாடினேன்.

“அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும், அந்தஸ்து வேண்டும். உனக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?”

“கிராமத்தில் சொந்த வீடு. இருக்கிறது.”

“அது என்ன மதிப்பு பெறும்?” “இருபதாயிரம் ரூபாய்!” “கிராமத்து வீட்டுக்கு இருபதாயிரம் ரூபாயா? நம்ப முடியவில்லையே!” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

“அது என் வீடு. அதற்கு நான் போடும் மதிப்பு இருபதாயிரம்” என்றேன்.

மாஜிஸ்ட்ரேட் லேசாகச் சிரித்தார். “உன் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன். ஆனால் ‘பி’ கிளாஸ் கொடுப்பதற்கில்ல” என்று கூறி விட்டார்.

பெல்லாரி அலிபுரம் சிறைச்சாலைக்குள் நுழையும் வரை இந்த ‘சி’ கிளாஸ் மனசுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. சிறைக்குள் போனதும் அங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் ‘சி’ கிளாஸில் இருப்பதைப் பார்த்தேன். எஸ். ஏ. ரகீம், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர், கக்கன்ஜி போன்ற முன்னணி வீரர்களெல்லாம் கூட ‘சி’ கிளாஸில் முடங்கிக் கிடந்ததைப் பார்த்த பிறகுதான் சற்று ஆறுதல் ஏற்பட்டது.
--------------

11. முதுகில் விழுந்த அடி!

பெல்லாரிக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று மைல் தள்ளி அமைந்துள்ளது அலிபுரம் சிறைச்சாலே. ஹைதர் அலி காலத்தில் யானைகளைக் கட்டிப் போட்ட இடம். ‘ப்ளாக் ப்ளாக்’காக பத்துப் பதினைந்து ப்ளாக்குகள் கொண்டது, .

‘க்விட் இண்டியா’ இயக்கத்தின் போது அங்கு சென்றவர்கள் சிறைச்சாலேக்குள் தாங்களாகவே ஆளுக்கொரு வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனக்குப் புத்தக ஆர்வம் நிறைய இருந்ததால் நான் கைதிகளுக்குப் புத்தகம் விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

என்னதான் புத்தகங்கள் படித்தாலும் வெளியுலகச் செய்திகளுக்காக எல்லாருமே ஏங்கிக் கிடந்தோம். சிறைக்குள் செய்தித்தாள் வருவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் வார்டர்கள் மூலம் ரகசியமாக அவற்றைத் தருவித்தோம்.

அத்தனை ப்ளாக்குகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு தினப் பத்திரிகைதான் வரும். அதிலிருந்து தலைப்புச் செய்திகளை மட்டும் எடுத்து ஒரு சிலேட்டில் எழுதி பக்கத்து பிளாக்குக்கு அனுப்பி வைப்போம். கொடுமுடி ராஜகோபாலன் இந்த வேலையைச் செய்வார். இப்படியே அது எல்லா பிளாக்குகளையும் சுற்றி வரும். ஒவ்வொரு நாளும் அரசியல் கைதிகள் நூற்றுக் கணக்கில் சிறைக்குள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பத்திரிகைகளில் வராத சில செய்திகளைக் கொண்டு வருவார்கள். பொய்யா மெய்யா என்று தெரியாது. நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது.

“சிறைக்குள்ளிருக்கும் அரசியல் கைதிகள் சிறைச்சாலையையும் போராட்டக் களமாக எண்ணிச் செயல்பட வேண்டும். சிறைக் கம்பிகளை உடைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும்” என்று காந்திஜி கூறியதாக ஒரு செய்தி வந்தது. எங்களுக்கெல்லாம் இச்செய்தி தேனாக இனித்தது. காந்திஜி நிச்சயம் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டோம். உடனே சிறைக்குள்ளேயே கூட்டம் போட்டு சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது என்று உற்சாகத்தோடு தீர்மானம் போட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் திட்டத்தை நிறைவேற்றி விடுவது என்று ஓர் இரவு ரகசியமாகக் கூடி முடிவெடுத்தோம். நாங்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயில் வார்டர் ஒருவன் இந்த விஷயத்தை ஜெயில் சூப்பரின்டெண்டிடம் போய்ச் சொல்லி விட்டான்.

அப்போது ஹெள துரை என்பவன்தான் ஜெயில் சூப்பரின்டெண்ட். மிகப் பொல்லாதவன். பிரகாசம்காரு திருச்சி சிறையில் இருந்த போது இவன் கொட்டத்தை அடக்க ஒரு நாள் அவனைச் செருப்பால் அடித்து விட்டாராம். அதிலிருந்து இவன் காங்கிரஸ்காரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டான்.

காங்கிரஸ் கைதிகளைக் கண்டால் ‘யூ காந்தி கேப்’ என்று தலைமுடியைப் பற்றி இழுத்து அடிப்பான்.

மறு நாள் விநாயக சதுர்த்தி. முதல் நாள் இரவு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, “போன வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை சாப்பிட்டேன். இந்த வருடம் எப்படியோ?” என்று கொழுக்கட்டைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டேன்.

மறுநாள் காலை எல்லோரும் கஞ்சி குடித்துவிட்டு அங்கங்கே சிறுசிறு கும்பலாய் மரத்தடிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று திங்கட்கிழமையானதால் ஏழரை ஒன்பது ராகுகாலம். திடீரென்று நூற்றுக்கணக்கான விசில்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. சிறையைச் சுற்றிலும் ரிஸர்வ் போலீஸ் படை துப்பாக்கியுடன் அணிவகுத்து நின்றது.

“எல்லோரும் பிளாக்குக்குள் ஒடுங்க, ஜெயிலையா உடைக்கப் போறீங்க? இப்ப உங்க மண்டையை உடைக்கிறோம், பாருங்க” என்று கர்ஜித்துக் கொண்டே சிறை வார்டர்கள் எங்களைத் துரத்தித் துரத்தி விரட்டினார்கள்.

எல்லோரும் தடி அடிக்குப் பயந்து மூலைக்கு மூல பாய்ந்து ஓடிய போது எனது வலது தோள் பட்டையில் வேகமாக ஓர் அடி விழுந்தது. “அம்மாடி!” என்று சுருண்டு விழுந்தேன். அதற்குள் சிலர் என் மீது விழவே நான் இடையில் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு விழுந்த அடிகளே அவர்கள் தாங்கிக் கொண்டனர். சிலருக்கு எலும்பு முறிந்து போயிற்று. கை, கால், காது, மூக்கு இழந்த்வர்கள் பலர். இந்த லத்தி சார்ஜ் அரைமணி நேரம் நடந்தது. பிறகு அடிபட்டவர்கள் எல்லோரையும் சிறை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒரு வாரத்துக்குப் பின் சிறைக்குள் மீண்டும் அமைதி ஏற்பட்டதும் ஒருவருக்கொருவர் மெதுவான குரலில் குசலம் விசாரித்துக் கொண்டோம். என் மீது விழுந்த அடி வலது தோளுக்குக் கீழ் முதுகுப் பக்கம் விழுந்ததால் அது கொழுக் கட்டை அளவுக்குப் பெரிதாக வீங்கிப் போய் விட்டது. அதைச் சுட்டிக் காட்டி என் நண்பர்களிடம் நான் சொன்னேன்.

“பாருங்கப்பா, என் ஆசை நிறைவேறிப் போச்சு! பிள்ளையார் சதுர்த்தியன்றைக்குப் பெரிய கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்டேன், இல்லையா? இதோ பாருங்க, முதுகிலே கிடைச்சிருக்கு!”


--------------

12. கல்கியிலிருந்து விகடனுக்கு......

சூயஸ் கால்வாய்ப் பிரச்னை பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகப் பரபரப்போடு வெளிவந்து கொண்டிருந்த நேரம். அந்தப் பிரச்னை பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து “சூயஸ் கால்வாயின் கதை” என்று கல்கியில் ஒரு கட்டுரை எழுதினேன். ராஜாஜியே மகிழ்ந்து பாராட்டிய கட்டுரை அது. ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் அதைப் படித்துப் பாராட்டியதாய்க் கேள்விப்பட்டேன். அச்சமயம் கல்கி ‘சாமா’வை அவர் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய போது நான் கல்கியில் எழுதியிருந்த “மாறு வேஷத்தில் மந்திரி” என்ற நகைச்சுவைக் கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, “சாவி முழுக்க முழுக்க நகைச்சுவை எழுத்தாளராயிற்றே! அவர் எழுத்து விகடனுக்குத்தானே பொருத்தமானது!” என்றும் கூறியிருக்கிறர். மறுநாள் சாமா என்னிடம் இதையெல்லாம் சொல்லி, “வாசனுக்கு உன்னை அங்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்குமோ, என்னவோ? எதற்கும் நீ அவரைப் போய்ப் பாரேன்” என்றார்.

அடுத்த வாரமே நான் திரு வாசன் அவர்களைப் போய்ப் பார்த்தேன்.

மாடியிலிருந்தவர் கீழே இறங்கி வந்து என்னோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைகள் வளர்ச்சி பற்றிப் பேசினோம். ஆனந்த விகடன் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காகச் சில தூண்டில் வார்த்தைகளை வீசினர். தெரிந்து கொண்டார்.

“ஆமாம்; முன்பு நீ ஆனந்த விகடனில் வேலை செய்து கொண்டிருந்தாயல்லவா? அப்புறம் ஏன் விகடனே விட்டு விலகி விட்டாய்?” என்று கேட்டார்.

“நான் விலகவில்லை. நீங்கள்தான் அனுப்பி விட்டீர்கள். ஒரு நாள் நான் ஆபீஸில் தூங்கிக் கொண்டிருந்ததைத் தாங்கள் பார்த்து விட்டு என் கணக்கை அன்றே தீர்த்து அனுப்பி விட்டீர்கள்!” என்றேன்.

“அடேடே! அப்படியா?” என்று வாய் விட்டுச் சிரித்து விட்டார் வாசன்.

அடுத்த சில நிமிடங்களில் நான் மீண்டும் விகடனில் வேலைக்குச் சேருவது என்று முடிவாயிற்று.

இதில் வேடிக்கை என்னவென்றல் நான் கல்கியில் இரண்டாம் முறை வேலைக்குச் சேர்ந்து அப்போது பதினெரு மாதங்களே ஆகியிருந்தன. கல்கி பத்திரிகையின் அதிபர் திரு சதாசிவம் என்னிடம் மிகுந்த அன்பும் ஆதரவும் காட்டி மற்ற ஸீனியர் ஆசிரியர்களுக்குச் சமமான அந்தஸ்தும் கொடுத்து வைத்திருந்தார். எனவே, கல்கியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டு விகடனுக்குப் போவதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இதனால் எனக்கு உணர்ச்சி பூர்வமான சங்கடம் நிறைய இருந்தது. ஆனாலும் விகடனில் சேரும் ஆசையில் ராஜினாமாச் செய்து விட்டேன். பதினைந்து நாட்களாகியும் என் ராஜினாமா விஷயம் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருந்ததால் கடைசியில் திரு சதாசிவம் அவர்களேயே நேரில் சந்தித்துப் பேசி விடுவது என்ற முடிவுடன் அவரது அறைக்குள் போனேன்.

என்னைக் கண்டதும் அவர், “என்ன, வேலையை விட்டுப் போகப் போகிறீர்களாமே! என்ன விஷயம்?” என்று இழுத்தார்.

கொஞ்ச நேரம் மெளனம்.

“சரி, உங்கள் இஷ்டம், நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. உங்களுக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு மாதச் சம்பளம் கொடுத்தனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்று கூறி வாழ்த்தி அனுப்பினர்.

திரு சதாசிவம் அவர்களின் தாராள மனதை ஏற்கனவே அறிந்தவன் நான். அவருடைய விருந்தோம்பும் குணம், நகைச் சுவை உணர்வு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல், எழுதும் புலமை, திட்டமிட்டுச் செயலாற்றும் திறன், எடுத்த காரியத்தில் வெற்றி காணும் பிடிவாதம், பணத்துக்கு அதிக மதிப்புத் தராத இயல்பு, இவ்வளவும் ஒருங்கே அமைந்த அவரிடம் வேலை செய்வதைப் பெருமையாக எண்ணியவன். இப்போது அவரிடம் போய் வேலையை விட்டுப் போகிறேன் என்றதும், என்னிடம் துளியும் முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியோடு விடைகொடுத்தனுப்பிய பாங்கு என்னை நெகிழ வைத்து விட்டது. அப்புறமும் நான் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், “அவ்வளவுதானே, அப்புறம் என்ன?” என்பதைப் போல் பார்த்தார்.

“நான் இந்தப் பதினொரு மாதங்களில் எழுநூறு ரூபாய் போல் இந்த ஆபீஸில் கடன் வாங்கியிருக்கிறேன்” என்று இழுத்தேன்.

“சிவ சிவா! அதை நீங்கள் திருப்பித் தர வேண்டாம். அப்படியே மறந்துவிடலாம். நான் எப்போதோ மறந்தாச்சு. அப்பவே ‘ரைட் ஆஃப்’ பண்ணியாச்சு” என்றார்.

என் உள்ளத்தில் ஏற்கனவே உயர்ந்திருந்த திரு சதாசிவம் அவர்கள் அந்தக் கணத்தில் ஓங்கி உயர்ந்து விசுவரூபமாய்க் காட்சி அளித்தார். சில நேரங்களில்தான் சில மனிதர்களை அறிய முடிகிறது.
-----------

13. மணியனுடன் ஒரு பயணம்

ஆனந்த விகடனில் ‘தெற்கு வளர்கிறது’ கட்டுரைத் தொடர் எழுதுவதற்காக நானும் திரு மணியனும் ஒரு முறை நீலகிரி மாவட்டத்துக்குப் போயிருந்தோம். ஊட்டியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். அச்சமயம் அங்கே குதிரைப் பந்தய ஸீஸன். எனக்கு ரேஸ் பழக்கம் கிடையாது. உழைத்துச் சம்பாதிப்பதை ஒரு வாழ்க்கை நெறியாக மதிப்பவன் நான்.

ஆனாலும், ஒரு எழுத்தாளனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பிரசவம் பற்றிக் கூட அறிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகவே, ரேஸ் மைதானத்துக்குப் போய் அங்கே என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

“மணியன்! நான் ரேஸுக்குப் போகப் போகிறேன். நீ வருகிறாயா?” என்று கேட்டேன். பயணச் செலவுக்கென்று ஆபீஸில் பெற்று வந்த ஆயிரம் ரூபாயை என் கைப் பையில் வைத்திருந்தேன். நான் அவ்வளவு பணத்தையும் ரேஸில் தொலைத்து விடுவேனே என்ற அச்சம் பிடித்துக் கொண்டது மணியனுக்கு! “ஐயையோ அங்கே போனால் பணம் போய்விடும். பணப்பையை எடுத்துப் போகாதீர்கள். நான் அதைத் தர மாட்டேன்” என்று சொல்லி அந்தப் பையை என்னிடமிருந்து பலாத்காரமாக வாங்கி வைத்துக் கொண்டு விட்டார். நான் மெளனமாய்ச் சிரித்துக் கொண்டேன்!

“நான் என்ன சின்னக் குழந்தையா? ரேஸுக்கு வரும் சில கேரக்டர்களை ஸ்டடி பண்ணத்தான் அங்கு போக விரும்புகிறேனே தவிர ரேஸில் பணம் கட்ட அல்ல” என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொடுத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் எங்கள் சுற்றுப் பயணம் முடிந்ததும் மைசூர் வழியாகச் சென்னை திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டோம். அதுவரை மணியன் மைசூர் பார்த்ததில்லை. எப்படியும் மைசூர் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாக இருந்தார். ஊட்டி கலெக்டரிடம், “மைசூர் வரை ஜீப் அனுப்ப முடியுமா?” என்று கேட்டோம். எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தந்த கலெக்டர் கொஞ்சம் யோசித்து விட்டு, “என் அதிகாரத்துக்கு உட்படாத கர்நாடக எல்லைக்குள் நான் ஜீப் அனுப்பக் கூடாது!” என்று தயங்கியபடியே கூறினார்.

ஆனாலும் எங்கள் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், “சரி...உங்களுக்காக அனுப்பி வைக்கிறேன்” என்று அரை குறை மனதோடு அனுப்பி வைத்தார்.

மைசூர் போகும் வழியில் கூடலூரில் சில நிமிடங்கள் ஜீப்பை நிறுத்தி, காப்பி சாப்பிட்டு மீண்டும் மைசூர் நோக்கிப் பயணமானோம். சூரியன் மறைந்து லேசாக இருள் பரவத் தொடங்கிய நேரம். தூரத்தில் சாமுண்டீசுவரி மலையின் அழகிய தோற்றம் தெரிந்தது. விளக்குகள் அப்போதுதான் கண் சிமிட்ட ஆரம்பித்திருந்தன. மைசூரை நெருங்கி விட்ட குஷி காரணமாக மணியனின் குரலில் உற்சாகம் தொனித்தது. ஆனால் அந்த சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்க வில்லை. திடீரென்று மணியன் பதற்றத்தோடு கையை உதறிக் கொண்டு, “ஐயோ சாவி பணப்பையைக் காணுேமே!” என்றார்.

கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லே. கூடலூரில் இறங்கி காப்பி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜீப்புக்குள் அமர்ந்த போது கூட மணியன் கையில் பணப்பையைப் பார்த்தது நன்றாக ஞாபகம் இருந்தது.

“இங்கேதான் பையை வைத்தேன்” என்று ஜீப்பின் பக்கவாட்டில் சக்கரத்துக்கு மேலாகக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த ஒரு கித்தான் துணியை விலக்கிக் காட்டினர்.

மணியன் காட்டிய இடம் உண்மையில் ஜீப்பின் ஜன்னல் கான்வாஸ் துணியால் திரைபோல் மூடிப் பித்தான் போட்டிருந்தார்கள். ஜீப்பின் அந்தப் பகுதி அமைந்துள்ள விதம் பொதுவாக எல்லோருக்குமே அங்கே ஏதோ பை இருப்பது போலத்தான் தோன்றும். கூடலூர் வரை பணப்பையைக் கையிலேயே வைத்திருந்த மணியன் காப்பி சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஜீப்பில் ஏறிச் சிறிது தூரம் சென்றதும் பணப்பையை அந்த ஜன்னல் பை வழியாகக் கீழே விட்டிருக்கிறார். அடுத்த வினாடியே அது ரோடில் விழுந்து விட்டிருக்கிறது.

“பை போய்விட்டது” என்று மணியன் அலறியதும் வண்டியை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தோம். பை அகப்பட வில்லை. பணம் போய்விட்ட கவலை ஒருபுறம். மைசூர் பார்க்க முடியவில்லையே என்ற துக்கம் இன்னெரு புறம்!

வேறு வழியின்றி ஜீப்பை கூடலூருக்கே திருப்பி ஒட்டச் சொன்னோம். எதிரில் வந்த ஒரு காரை நிறுத்தி, “எங்களது பை கண்ணில் பட்டதா?” என்று கேட்டோம்.

“ஆமாம்; கூடலூர் அருகில் ரோடு ஓரத்தில் ஒரு பை கிடப்பதைப் பார்த்தேன். ஆனால் அதை யாரோ அங்கே வைத்து விட்டுப் பக்கத்தில் எங்கோ இயற்கைக்குப் பதில் சொல்லப் போயிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வந்து விட்டேன்” என்றார் அந்தக் காரின் சொந்தக்காரர்.

கூடலூர் நெருங்கும் வரை வழியெங்கும் மெதுவாகத் தேடிக் கொண்டே போனோம். கிடைக்கவில்லை. கூடலூருக்கே திரும்பிச் சென்று அங்கே விகடன் ஏஜெண்டிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு அன்றிரவே ஊட்டிக்குப் போய்ச் சேர்ந்தோம். ‘தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி ஜீப் எடுத்துச் செல்ல அதிகாரமில்லை; ஆனாலும் தருகிறேன்’ என்று அரை மனதோடு அனுமதித்த கலெக்டர் மனம் போலவே ஆகிவிட்டது.

“மணியன்! ரேஸுக்குப் போனால் பணத்தைத் தொலைத்து விடுவேன் என்று என்னிடமிருந்து பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே. இப்போது என்ன ஆச்சு?”என்று நான் அவரைக் கேட்கவில்லை.
-------------

14. மறுத்துச் சொன்னபோது...

தில்லான மோகனம்பாள், இவர்கள் சந்தித்தால், சினிமா விமர்சனம் போன்ற பல புதிய பகுதிகள் வெளிவந்து கொண்டிந்த விகடனின் பொற்காலம் அது.

ஒவ்வொரு வாரமும் தலையங்கம் முதற்கொண்டு எல்லாச் சிறப்பு அம்சங்களையும் பற்றி உதவி ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வதற்காக திரு வாசன் அவர்கள் விகடன் அலுவலகத்துக்கு நாள்தோறும் வந்து போவார். அப்புறம் உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பவற்றைப் படித்துப் பார்த்து மாற்றி அமைக்க வேண்டியிருந்தால் மாற்றி அமைத்து, திருத்தி, மறுபடியும் திருத்தி மெருகேற்றி அனுப்பி வைப்பார்.

ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தலையங்கம் என்ன என்பதை முடிவு செய்வதற்காக ‘எடிட்டோரியல் கூட்டம்’ கூடுவதுண்டு. நாரதர் சீனிவாச ராவ், பி. ஸ்ரீ. சிவம், ஸ்ரீதர், கொத்தமங்கலம் சுப்பு உட்பட கிட்டத்தட்ட பத்துப் பதினேந்து பேர் கலந்து கொள்வார்கள்.

பத்திரிகைக்காரர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுத்துத் தீர வேண்டும் என்று ‘வேஜ் போர்ட்’ அப்போது நிர்ணயம் செய்திருந்தது. திரு வாசன் அதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

எழுத்தாளர்கள் ‘கிரியேடிவ் பீப்பிள்’. அவர்களின் திறமை கண்டு அதற்கேற்ப எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது பத்திரிகையின் சொந்தக்காரராகத்தான் இருக்க வேண்டுமே தவிர, எங்கேயோ டில்லியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள், ‘உன் உதவி ஆசிரியருக்கு இவ்வளவு சம்பளம் கொடு’ என்று சொல்வது என்ன நியாயம்?” என்பது அவர் வாதம்.

எனவே ‘வேஜ் போர்’டின் சிபாரிசுகளே ஆட்சேபித்து அந்த வாரம் தலையங்கம் எழுத வேண்டும் என்று திரு வாசன் கூறினார். அதற்கான காரணங்களையும் எடுத்து விளக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொருவரின் அபிப்பிராயத்தையும் தனித்தனியே கேட்டுக் கொண்டு வந்தார். என்னைத் தவிர மற்ற அத்தனை பேரும் அநேகமாக வாசனின் யோசனையை ஒட்டியே தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

என் முறை வந்த போது, “நீ என்ன சொல்கிறாய்?” என்பது மாதிரி என்னைப் பார்த்தார்.

“இதற்காக ஒரு தலையங்கம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்றேன் நான். திரு வாசன் அவர்களுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை நான் சொன்ன போது மற்றவர்கள் ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கும் கூடக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஏனெனில் அப்போதுதான் நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இப்படிப் பேசலாமோ, கூடாதோ என்று பயம் இருந்தாலும் நம் கருத்தைக் கேட்கும் போது உண்மையாக என்ன நினைக்கிறோமோ அதைச் சொல்வதுதானே முறை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

நான் ‘எழுதக் கூடாது’ என்று சொன்னதும் திரு வாசன் அவர்கள் என்னைச் சற்று வியப்போடு நோக்கினார். அறையில் ஒரு கப்சிப் மெளனம் நிலவியது.

“ஏன் கூடாது என்கிறாய்?”

“வேஜ் போர்டின் சிபாரிசுகள் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அது உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள சண்டை. விகடன் வாசகருக்கு இதில் அக்கறை இருக்க முடியாது. நீங்கள் உங்கள் உதவி ஆசிரியருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட்ட வேண்டிய அவசியமும் இந்தப் பிரச்னையில் இல்லை” என்றேன்.

“யூ ஆர் ரைட்” என்று கூறிய திரு வாசன் சோபாவின் கைப்பிடியில் வைத்திருந்த தமது டவலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு சட்டென்று எழுந்து நின்றர்.

அப்போது சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் நடந்து கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் போட்டி.

“சீனிவாச ராவ்! இந்த வாரம் தலையங்கம் கிரிக்கெட் பற்றிதான். ஆஸ்திரேலிய கங்காருவும், இந்திய யானையும் என்று ஏதாவது எழுதுவாயே! அப்படி ஒரு தலையங்கம் எழுதி கம்போஸுக்கு அனுப்பி விடு. நான் அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்.
-----------------

15. காமராஜ் தொடங்கி வைத்த பத்திரிகை

துமிலன் அவர்களை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் தினமணி கதிர் ஆசிரியராக இருந்த போது நான் வேலையில்லாமல் இருந்தேன். ஒருநாள் அவர் என் விட்டுக்கு வந்து அழைத்துப் போய் எனக்கு அங்கே உதவி ஆசிரியர் வேலை போட்டுத் தந்தார். ஆனால் சம்பளம்தான் ரொம்பவும் குறைச்சல். என் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து வைக்க முடியாத சம்பளம்.

“சம்பளம் கொஞ்சம் அதிகமாக வேண்டும்” என்று சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவரைக் கேட்டேன்.

“அதெல்லாம் கோயங்கா தர மாட்டார்” என்று இவரே கூறிவிட்டார். சம்பள உயர்வை அங்கே எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அந்த உதவி ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன். அதற்குப் பிறகு வெகு காலம்வரை துமிலனைப் பார்க்கவே இல்லை. காலப்போக்கில் அவரும் கதிரிலிருந்து விலகி வேறு எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தார்.

பின்னால் நான் விகடனில் சேர்ந்து அங்கிருந்து மீண்டும் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்க இருந்த சமயத்தில் துமிலன் சும்மா இருப்பது கண்டு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

விகடனை விட்டு விலகு முன்பாக திரு காமராஜ் அவர்களுடன் கர்நாடக மாநிலத்திற்கு நான் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. “நீங்களும் என்னுடன் வாருங்களேன்” என்று துமிலனிடம் கூறி, என் சொந்தச் செலவில் அவரை அழைத்துச் சென்றேன். காமராஜர் கண்ணில் அவ்வப்போது அவர் படும்படியாக சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுத்தேன். சரியான வாய்ப்பு கிடைத்தபோது தலைவரிடம், இவர் ஒரு மூத்த எழுத்தாளர். துமிலன் என்ற பெயரில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் இப்போது வேலை ஏதும் இல்லை. அவருக்கு நீங்கள்தான் ஏதாவது...” என்று இழுத்தேன்.

“குட்டி குட்டியா வாக்கியம் எழுதுவாரே, அவர்தானே! வடக்கே நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டுக்கெல்லாம் வருவார், விகடனில் எழுதுவார். பார்த்திருக்கேன். என்னை என்ன செய்யனுங்கறீங்க?” என்றார் காமராஜ்.

“இங்கே காங்கிரஸுக்கென்று தனியே ஒரு நல்ல பத்திரிகை இல்லை” என்று ஆரம்பித்ததும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் சட்டென்று புரிந்து கொண்டு, “சரி...பார்க்கலாம்” என்றார்.

சில நாட்களில் சுதந்திரச் சங்கு என்ற பெயரில் ஒரு காங்கிரஸ் பத்திரிகை ஆரம்பிப்பதென்றும் அந்தப் பத்திரிகைக்கு துமிலனை ஆசிரியராக நியமிப்பது என்றும் முடிவானது. நான், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணய்யர், ராமண்ணு ஆகிய மூவரும் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் பத்திரிகை தொடங்கப் பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே பெரும் நஷ்டத்துக்குள்ளாகி அதை நிறுத்த வேண்டிய கட்டம் உருவானது. நான் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே சுதந்திரச்சங்கு நின்று போய் விட்டது.

அப்புறம் கதிரில் துமிலனை அவ்வப்போது ஏதேனும் எழுதச் சொல்லி அதன் மூலம் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைக்க வழி செய்யலாம் என்பது என் எண்ணம். அதை முடிந்த அளவு செயல்படுத்தியும் வந்தேன்.

துமிலன் எப்போதாவது தினமணி அலுவலகத்துக்கு ஏ. ஜி. வெங்கடாச்சாரியாரைப் பார்க்க வருவதுண்டு. அப்படியே தினமணி கதிர் எடிடோரியல் அறைக்குள்ளும் எட்டிப் பார்ப்பார். “அவர் வரும் நேரங்களில் அவரைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் பேசி முடித்து, மேட்டர் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள். என் அறைக்குள் அவர் வராதபடி நாசூக்காகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று என் உதவியாளர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.

எனது இந்தப் போக்கு பலருக்குப் புரியவில்லை. ஒருவேளை துமிலன் வருவதை நான் விரும்பவில்லை என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டார்களோ, என்னவோ? ஆனால் நான் இப்படிக் கேட்டுக் கொண்டதற்குக் காரணம் வேறு. தான் ஒரு காலத்தில் அமர்ந்திருந்த நாற்காலியில் இன்னொருவன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் யாருக்கும் மிகச் சிறிதேனும் சங்கடம் ஏற்படக் கூடும். அந்தச் சங்கடத்தை துமிலன் அவர்களுக்குத் தந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலேயே அப்படிச் சொல்லி வைத்திருந்தேன். இது பற்றி துமிலன் என்ன நினைத்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பின்னொரு சமயம் ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற என் மணிவிழாவின் போது அவரை மேடைக்கு அழைத்து, ஒரு மாலையை எடுத்து கலைஞர் அவர்களிடம் தந்து துமிலனுக்குப் போட்டு கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த வகையில் எனக்கு அவரிடமுள்ள மரியாதையைத் தெரியப்படுத்தினேன்.

நான் ‘குங்குமம்’ பத்திரிகைக்குப் போன பிறகு சில மாதங்கள் கழித்து துமிலன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு காட்டமான கடிதம் வந்தது, கதிரில் நான் இருந்தபோது, என்னைப் பார்க்கக் கூட அவரை அனுமதிக்கவில்லையாம். என் போக்கை மிகவும் கண்டித்து அவர் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு அபிப்ராயம் என் மீது தோன்றும் வகையில் அவர் மனதைக் கலைத்தவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை நான் அவரிடமிருந்து கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, அதைப் படித்ததும் அரைமணி நேரம் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

என் நிலையை விளக்கி மிகவும் பவ்யமாக நாலு பக்கங்களில் ஒரு பதிலை நான் துமிலன் அவர்களுக்கு எழுதிப் போட்டேன். அதற்குப் பின் அவரிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும் இல்லை. எனக்கும் அவருக்குமிடையே அப்புறம் தொடர்பு இல்லாமலேயே இருந்து வந்தது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் நண்பர் பி. வி. ஆர். வீட்டுத் திருமணத்துக்கு நான் போயிருந்த போது அங்கே துமிலன் அவர்களும் வந்திருந்தார். என்னைக் கண்டதும் அவரே என் அருகில் வந்து மிகவும் அக்கறையோடு என்னைப் பற்றியும், சாவி பத்திரிகையின் வளர்ச்சி பற்றியும் விசாரித்தார். என் மீது கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை அவர் மாற்றிக் கொண்டு விட்டார் என்பதை அவர் பேச்சிலிருந்து உணர்ந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. இப்போதும் இருக்கிறது.
---------------

16. நான் ஒரு பத்திரிகாசிரியனாக வர வேண்டும் பிள்ளையாரப்பா!

சென்னை நகரம் முதன் முதலாக என்னைத் தரிசித்தபோது எனக்கு வயது பன்னிரண்டு. டிராம் வண்டிகளும் ஜட்கா வண்டிகளும் முறையே நகர்ந்து, ஓடிக் கொண்டிருந்த காலம். பஸ்களை எப்போதாவது அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். சென்னை நகரம் என்பது அப்போது சில பேட்டைகள் அடங்கிய ஒரு பெரிய கிராமம்தான். இவ்வளவு கொசு கிடையது. ராக்ஸி தியேட்டர், கினிமா ஸெண்ட்ரல், வெலிங்டன், கெயிட்டி, ஸ்டார் டாக்கீஸ், பிராட்வே இந்த ஆறு தியேட்டர்களும் அப்போது என்னைப் போலவே வாலிபமாயிருந்தன.

நான் கிராமத்துப் பள்ளி வரை படித்து முடித்திருந்தேன், அந்தப் படிப்பைப் பயன்படுத்தி, பத்திரிகைகள் படித்துப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டேன். சிறு வயது முதலே பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. ஆனந்த விகடன்தான் அந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டது.

பின்னால் என் வாழ்க்கை பத்திரிகையோடுதான் இறுக்கமாக இணையப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாத நாட்களிலேயே, “நான் ஒரு பத்திரிகை ஆசிரியனாக வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று என் கிராமத்து வினாயகப் பெருமானிடம் தினம் தினம் வேண்டிக் கொண்டு தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்ட நாட்கள் என் நினைவிலிருந்து அகலவில்லை.

சென்னைக்கு முதன் முதல் வந்ததும் பவழக்காரத் தெருவில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் ஒரு வழக்கறிஞர். எனக்குள்ள பத்திரிகை ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தம் பீரோவில் அடுக்கி வைத்திருந்த விகடன் இதழ்கள் சிலவற்றை எடுத்து எனக்குப் படிக்கக் கொடுத்தார். அத்துடன் என்னிடம் இரண்டு நாலணாக் காசுகளை தந்து, “பையா, இந்தா! மூர் மார்க்கெட், ஜூ எல்லாம் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘ஜிவ்’ வென்று எழும்பி வானத்தில் சிறிது நேரம் சஞ்சரித்து விட்டுப் பூமிக்குத் திரும்பி வந்தேன். காரணம், என் வயதுப் பையனுக்கு எட்டணா கிடைப்பது என்பது அப்போதெல்லாம் அத்தனை எளிதல்ல!

அப்போது தீபாவளி முடிந்து இருபது நாட்களே ஆகியிருந்தன. சில கடைகளில் இன்னமும் பட்டாஸ் விற்றுக்கொண்டிருந்தார்கள். கையிலிருந்த எட்டணா, பட்டாஸ் வாங்கத் தூண்டிப் படாத பாடு படுத்திற்று, அச்சமயம் ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியாகியிருந்தது. விலை நாலணா. ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. எப்படியும் அந்த மலரை வாங்கிப் படித்து விட வேண்டும் என்று கொள்ளை ஆசை!

244, தங்கசாலைத் தெருதான் அப்போது விகடன் அலுவலகத்தின் முகவரி. பவழக்கார வீதியிலிருந்து செக்குமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகில் பிராட்வேயைக் குறுக்கில் கடந்து கினிமா ஸெண்ட்ரல் பக்கம் (இப்போது முருகன் தியேட்டர்) போனால் தங்கசாலை வரும் என்று வக்கீல் மாமா வழி சொல்லிக் கொடுத்தார். சொன்ன வழியைப் பின்பற்றி நடந்தே போய் விட்டேன்.

விகடன் அலுவலகம் என்பது ஒரு சின்ன வீடு. வாசலில் ஒரு பெரிய திண்ணையும் ஒரு குட்டித் திண்ணையும் இருந்தன. தெருவில் இருந்த குப்பைத் தொட்டியில் கிடந்த தாள் ஒன்று கண்ணில் பட்டது. வரப்போகும் விகடன் இதழுக்கான அச்சான பாரம் அது. மை அதிகமாகிப் போய் கசக்கி எறியப்பட்ட நிலையில் அந்தக் குப்பைத் தொட்டியில் கிடந்தது. அதை ஒழுங்காக மடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். புதையல் கிடைத்த பெருமை! அந்தக் காலத்து வீட்டு அமைப்பின்படி வாசற்படியைக் கடந்ததும் ரேழி. அப்புறம் ஒரு சின்னக் கூடம். அங்கே இரு தூண்கள். பின்பக்கம் சமையலறை.

வலது பக்கம் இருந்த கூடத்துத் தூணுக்கும் சுவருக்கும் இடையே ஒரு சின்ன மேஜை. கதர்ச் சட்டை அணிந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர்தான் திரு வாசன் என்பதை அப்போது என்னால் ஊகிக்க முடியவில்லை. பிற்காலத்தில் அவரைப் பார்த்தபோது அந்தப் பழைய முகம் என் நினைவுக்கு வந்து, “ஒகோ, இவர்தான?” என்று ஊகித்துப் புரிந்து கொண்டேன். நான் அவரிடம் நாலணாவை நீட்டி, “தீபாவளி மலர் வேண்டும்?” என்று கேட்டதும் அவர் உடனே எழுந்து போய், ஒரு மலரை எடுத்து வந்து தூசி தட்டி என்னிடம் தந்தார். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. வெளியே வந்ததும் ஆவலோடு அங்கேயே திண்ணையிலேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். புகழ் பெற்ற எஸ். வி. வி. எழுதிய கோயில் யானையை அந்தத் திண்ணையில்தான் படித்தேன்.

கல்கி, துமிலன், பூரி (துமிலன்தான் பூரி) போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் எனக்கு அப்போதே பரிச்சயம். அவர்களுடைய கட்டுரைகளும் அந்த மலரில் இடம் பெற்றிருந்தன. அடுத்த இதழ் ஃபாரத்தையும் எடுத்துப் படித்து முடித்தேன். கன குஷியோடு வீடு திரும்பியபோது போட்டோ ஸ்டுடியோ ஒன்று குறுக்கிட்டது. அதில் நுழைந்து, கையிலிருந்த இன்னொரு நாலணாவுக்கு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

வீடு திரும்பியதும், “என்னடா மூர் மார்க்கெட், போயிருந்தாயா?” என்று கேட்டார் வக்கில்.

“இல்லை. தங்கசாலைத் தெருவுக்குப் போயிருந்தேன்” என்று பெருமையோடு விகடன் தீபாவளி மலரைக் காட்டினேன். “இதற்குத்தான் தங்கசாலைத் தெருவுக்கு வழி கேட்டாயா? அசடே, இந்த மலர் நம் வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறேனே! என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?” என்றார் வக்கீல்.
-----------------

17. காலணாப் பத்திரிகை

ஒரு வழியாகக் கிராமத்தை விட்டு வெளியேறியதும் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் சேர்ந்து ஒரு வருஷம் படித்தேன். பிறகு, அந்தப் பள்ளிக்கூடத்திலேயே சில மாத காலம் வாத்தியார் வேலை பார்த்து விட்டு அதையும் விட்டு விட்டேன். அப்போது ஸைன் போர்டுகள் எழுதவும் கற்றுக் கொண்டிருந்ததால் அடிக்கடி சென்னைக்குச் சென்று தெருத் தெருவாய் அலைந்து ஆர்டர் பிடித்து வருவேன். அப்படி அலையும் போது கடை முகப்புகளில் உள்ள ‘ஸைன் போர்டு’களை யெல்லாம் ஆர்வத்தோடு நுணுக்கமாகப் பார்த்துக் கொள்வேன். பல வர்ணங்களில் பல வடிவங்களில் அமைக்கப் பட்டிருந்த அந்த விளம்பர எழுத்துக்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டிக் காதல் புரியும். “நாமும் ஏன் இதைப் போல எழுதக் கூடாது!” என்று ஒரு வேகம் உண்டாகும்.

மண்ணடி ராமசாமித் தெருவில் ஒரு மொட்டை மாடியை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு என் தொழிலை வியாபார முறையில் விரிவு படுத்தினேன். அந்த மாடிக்கு மாதம் ஐந்து ரூபாயோ என்னவோ வாடகை. விடிய விடியக் கண் விழித்து போர்டு எழுதிக் கொடுத்துப் பணம் வாங்கி சினிமா பார்த்த நாட்களை மறக்க முடியாது.

தினமும் காசு கொடுத்து சினிமா பார்க்க முடியாததால் ஓசிப் பாஸில் சினிமா பார்க்க ஒரு திட்டம் போட்டேன். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களில் முக்கியமான இடங்களில் தட்டியில் விளம்பர போஸ்டர் ஒட்டி வைக்க வேண்டும். அதற்குப் பதிலாக தியேட்டர்காரர்கள் எனக்கு சினிமா பார்க்க ‘போர்ட் பாஸ்’ தருவார்கள். இதுதான் அந்த ஏற்பாடு. வாரம் ஒரு முறை தியேட்டர்களிலிருந்து போஸ்டர் பெற்று வந்து கூழ் காய்ச்சி, தட்டியில் ஒட்டி அவற்றை எடுத்துக் கொண்டு போய் அந்தந்த இடத்தில் வைக்க வேண்டியது என் வேலை. இதை மிக உற்சாகத்தோடு செய்து வந்தேன்.

போர்டு எழுதும் தொழிலில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ‘நாடோடி’ என்று ஒரு வாரப் பத்திரிகை தொடங்கினேன். விலை காலணாதான். ஐந்நூறு பிரதிகளே அடிக்க பேப்பர் விலை, அச்சுக் கூலி எல்லாமாகச் சேர்ந்து ஐந்து ரூபாய்தான் செலவாகும். பிரதிகள் அச்சானதும் நூறு நூறாக எடுத்துக் கொண்டு போய் முக்கியமான பஸ் ஸ்டாப்புகளில், ‘நாடோடி நாடோடி’ என்று நானே கூவி விற்பேன். காலணா என்பதால் ஒரு மாலைப் பொழுதுக்குள் நூறு பிரதிகளும் காலியாகிவிடும்.

ஒரு நாள் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் வழக்கம் போல ‘நாடோடி நாடோடி’ என்று குரல் கொடுத்துக் கொண்டே என் பத்திரிகையை விற்றுக் கொண்டிருந்த போது பஸ்ஸுக்குள் இருந்து ஒருவர் கையை நீட்டி, “ஒரு நாடோடி கொடப்பா” என்று வாங்கிக் கொண்டார். பணம் வாங்கும்போது தான் அவர் என் தந்தை என்று தெரிந்தது. என் தாயாரும் அவர் அருகில் உட்கார்ந்திருந்தார். நான் ஏதோ பத்திரிகை நடத்துகிறேன் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை பஸ் ஸ்டாண்டில் கூவி விற்பதும் நானேதான் என்பதை அறிந்த போது அவர்கள் என்ன நினைத்தார்களோ, தெரியவில்லை. அங்கிருந்து அவசரமாக நழுவி அடுத்த பஸ் பக்கம் மறைந்து விட்டேன்.
----------------

18. பிரம்மசாரி காமராஜ்

“தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல பண்புகளும் பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால் அவற்றைப் போதிக்கும் நமது புராண, இதிகாசக் கதைகளைக் கதா காலட்சேபம், நாடகம் இவற்றின் வாயிலாகப் பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற யோசனையை ஒரு சமயம் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் திருவையாற்றில் வெளியிட்டார்.

காமராஜ், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, கட்சி வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் அவருடன் ஒரு முறை டெல்லி போயிருந்தேன். டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தோம். பகலெல்லாம் அவருடன் சுற்றி அலைந்த களைப்பு மேலீட்டால் நான் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டேன். சில நிமிடங்களில் என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் காமராஜ்!

“சரியாப் போச்சு. நான்தான் குறட்டை விடுகிறவன்னா நீங்க எனக்கு மேலே சத்தமா விடரீங்களே! எழுந்து போய் பக்கத்து ரூமிலே படுத்துக்குங்க. அப்பத்தான் நானும் நல்லாத் தூங்கலாம். நீங்களும் நல்லாத் தூங்கலாம்” என்று சொல்லி லேசாகச் சிரித்தார்.

மறுநாள் காலை டைனிங் ஹாலில் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது திரு பக்தவத்சலம் வெளியிட்டிருந்த யோசனையைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

“ஆமாம்; நல்ல யோசனைதான். அதற்கு என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.

“கிருபானந்த வாரியார் அவர்களைக் கொண்டு ராமாயண விரிவுரையும் எஸ். வி. சகஸ்ரநாமத்தைக் கொண்டு அரிச்சந்திரா போன்ற நீதி நாடகங்களையும் தமிழ்நாடு முழுதும் நடத்திப் பார்க்கலாம். முதலில் சென்னையில் ஆரம்பித்து அப்புறம் தமிழ்நாடு முழுதும் இதைத் தொடரலாம்.” என்றேன்.

அவர் மெளனமாக யோசிக்கலானர்.

“நானே இந்தப் பொறுப்பேற்றுச் செய்யட்டுமா?” என்று இழுத்தாற்போல் தயக்கத்தோடு கேட்டேன்.

“தாராளமாச் செய்யுங்க. ஒரு கமிட்டி அமைச்சுக்குங்க. அதில காங்கிரஸ்காரங்க யாரையும் சேர்த்துடாதீங்க” என்றார் காமராஜ்.

“அப்படியானால் முதலில் தாங்கள் எனக்குச் சில வசதிகள் செய்து தரவேண்டும். முக்கியமாக, நிகழ்ச்சிகள் நடத்த தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் தேவைப்படும்” என்றேன்.

“சரி, ராமண்ணா கிட்ட சொல்லிடறேன்; நீங்க ஆரம்பியுங்க” என்றார்.

சென்னை திரும்பியதும் இதற்காக ஒரு கமிட்டி அமைத்தேன். வீனஸ் ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்ற பெரிய மனிதர்களையெல்லாம் அதில் பிடித்துப் போட்டேன். கிடுகிடுவென்று வேலே ஆரம்பமாயிற்று. ‘சத்ய சபா’ என்று வாரியார் அதற்குப் பெயர் சூட்டினார். கமிட்டிக்கு காமராஜ் அவர்களை தலைவராக இருக்க ஒப்புக் கொண்டதுடன் முதல் கூட்டத்துக்கு வந்து சில யோசனைகளும் வழங்கினார். சகஸ்ரநாமம் நாடகங்களுக்கு டிக்கட் வைக்கக் கூடாது. எல்லோரும் இலவசமாக நாடகம் பார்க்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.

காங்கிரஸ் மைதானம் அமர்க்களப்பட்டது. ஏவி. எம். அவர்கள் முகப்பு வாயிலை அலங்கரித்துக் கொடுத்தார். வாசன் அவர்கள் ‘ஔவையார்’ படத்துக்காகச் செய்த மிகப் பெரிய பிள்ளையார் உருவச்சிலையை அனுப்பி உதவினார். காங்கிரஸ் மைதானத்தின் நுழைவாயிலில் அதை வைத்து, பக்கத்தில் ஒரு உண்டியும் வைத்தோம். அதன் மூலம் அன்றாடம் கிடைத்த வரும்படியே அன்றாடச் செலவுக்குப் போதுமானதாயிருந்தது. வாரியார் ராமாயணக் கதை நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இடை இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் சகஸ்ரநாமம் நாடகங்கள். கூட்டமாவது கூட்டம். கதை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் காமராஜ் கதை கேட்க வராதது வாரியாருக்கு ரொம்பக் குறையாக இருந்தது. நானும் தினமும் காமராஜ் அவ்ர்களைச் சந்திக்கும் போதெல்லாம், “எப்போது கதை கேட்க வரப் போகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என்னை தினமும் அழைக்கணுமா என்ன? நானே வந்துடறேன். மெட்ராஸில் இருக்கச்சே டைம் கிடைக்கிற நாளெல்லாம் வந்துடறேன்” என்றார்.

ஒருநாள் திடீரென்று காமராஜ் வருவதாக எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். கதைக்கிடையில் வாரியாரிடம் போய் அவர் காதோடு இதைச் சொன்னேன். அவருக்குப் பரம சந்தோஷம். அன்று அனுமானுடைய ஆற்றலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவர் வழக்கம் போலக் கிளைக் கதைகள், உபமானங்கள் என்று கூட்டத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்.

“தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாகச் சாதிக்கக் கூடியவர் அனுமார். காரணம்? அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள்தான் தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளைச் சரியாகச் செய்யக் கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள். அந்தக் காலத்தில் மட்டுமல்ல. இந்தக் காலத்திலும்தான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காமராஜ் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் கூட்டத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் தோன்றியது. ரொம்பவும் அருமையாக டைம் கொடுத்து, “நான் பிரம்மசாரி என்று சொன்னது யார் என்பது உங்களுக்கெல்லாம் புரிகிறது. அதனால்தான் நீங்கள் எல்லோரும் அதை ரசித்துச் சிரிக்கிறீர்கள்” என்று வாரியார் கூறியதும் அந்தச் சிரிப்பு பேரலையாக மாறியது.
--------------

19. சின்ன அண்ணாமலை

நல்ல காய்கறிகளின் மீது எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம், பத்திரிகை விற்பனைக் கடைகளையோ, காய்கறிக் கடைகளையோ எங்காவது கண்டு விட்டால் என் கால்கள் தாமாகவே அங்கு நின்று விடும். காய்கறிகளை நானே வாங்கி வந்து, நானே நறுக்கிக் கொடுத்து, அவற்றைச் சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவதில் தனிப் பிரியம். நான் வேலை இல்லாமல் இருந்த நாட்களில் எனக்குத் தோன்றிய பல யோசனைகளில் ‘கறிகாய் வியாபாரம்’ செய்தால் என்ன? என்பதும் ஒன்று. வியாபாரத்துக்கு வியாபாரம், வீட்டுக்கும் காய்கறி கிடைத்த மாதிரி இருக்குமே!

அப்போது தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் தமிழ்ப் பண்ணை அலுவலகம் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் கொட்டகை போட்டுக் கொண்டு நானும் சின்ன அண்ணாமலையும் அங்கே கட்டாத மனக்கோட்டைகள் இல்லை!

அந்த நாட்களில், ஊஸ்மான் ரோடும், துரைசாமி ரோடும் சந்திக்கும் இடத்தில் தெருவோரம் உள்ள பிளாட்பாரங்களில் சிறு சிறு வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். பாதசாரிகளுக்கும் வண்டிப் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாய் இருப்பதாகச் சொல்லி போலீஸார் அவர்களை தினமும் விரட்டி அடிப்பார்கள். அடிக்கடி போலீஸ் வான் வந்து அத்தனை காய்கறிக் கூடைகளையும் தூக்கிப் போட்டுத் கொண்டு போய்விடும்.

எனது காய்கறி வியாபார ஐடியாவை சின்ன அண்ணாமலையிடம் வெளியிட்ட போது அவர் அதை உற்சாகத்தோடு வரவேற்றர். “உடனே புறப்படுங்கள் வேலூருக்கு?” என்றார். ஒரு காரை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை வரை போய் மொத்தமாகக் காய்கறிகளை வாங்கி வந்து ஊஸ்மான் ரோடு சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்தோம்.

கறிகாய் வியாபாரிகள் தொடர்ந்து போலீஸ் தொல்லைக்குள்ளாகவே ஒரு நாள் அவர்களில் சிலர் எங்களிடம் வந்து, “இதற்கு ஒரு வழி செய்யக் கூடாதா?” என்று கேட்டனர். “நீங்க கவலைப் படாதீங்க. இன்றைக்கே ஏற்பாடு செய்யறேன்” என்று சின்ன அண்ணாமலை அவர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்து, “நீங்க இன்றே காமராஜ் வீட்டுக்குப் போய் அவரிடம் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க. அவர் ஏதாவது வழி செய்வார்?” என்றார். அப்போது எனக்குக் காமராஜரை அவ்வளவாகத் தெரியாது. ஒரு முறையோ இரண்டு முறையோ பார்த்திருக்கிறேன், அதனால் சற்று தயங்கினேன்.

“பொது விஷயம்தானே? இதற்கென்ன தயக்கம்? போய் தைரியமாப் பேசிட்டு வாங்க” என்றார் சின்ன அண்ணாமலை.

எனக்கு ஒரே பயம். ஆனாலும் நான் புறப்பட்டு விட்டேன். என்னோடு நாலைந்து வியாபாரிகளையும் அழைத்துச் சென்றேன். திருமலைப் பிள்ளை ரோடு. காமராஜ் வீடு. பிற்பகல் வெயில் நேரம். வேப்ப மரத்தில் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன.

“தலைவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாலு மணிக்கு எழுந்திருப்பார்” என்று தகவல் கிடைத்தது. அப்படியே எழுந்திருந்தாலும் உடனே எங்களைச் சந்திப்பார் என்பது என்ன நிச்சயம்? அவருக்கு எவ்வளவோ வேலைகள். அங்கேயே காத்துக் கிடந்தோம். காமராஜ் எழுந்து விட்டார் என்று தெரிந்ததும் அவரது கவனத்தைக் கவர ஒரு திட்டம் போட்டேன். என் கூட வந்தவர்களிடம், “நான் காமராஜ் என்பேன். நீங்கள் அனைவரும் உரத்த குரலில் ‘வாழ்க’ என்று கோஷம் போட வேண்டும். சப்தம் கேட்டு காமராஜ் கீழே வருவார். வந்தால் நாம் பேச வாய்ப்புக் கிடைக்கும்” என்றேன்.

“காமராஜ்..”

“வாழ்க!”

“காமராஜ்..”

“வாழ்க!”

எனது திட்டம் வெற்றி பெற்றது! கோஷம் கேட்டதும் தலைவர் கீழே இறங்கி வந்து விட்டார். என்னை நானே அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

“என்ன விஷயம், சொல்லுங்க” என்று கேட்டார் காமராஜ்.நான் பிரச்னையை விவரித்தேன்.

“இவங்களுக்குப் போலீஸ் தொல்லை தரக் கூடாது. அன்றாடம் வியாபாரம் நடந்தால்தான் இவர்கள் வீட்டில் அடுப்பெரியும். அவ்வளவுதானே? வேறே அங்கே ஏதாவது இடம் இருக்கா? இவங்க வியாபாரத்தை அங்கே நடத்த முடியுமா?” என்று கேட்டார். “பனகல் பார்க்கைச் சுற்றி விசாலமான பிளாட்பாரம் இருக்கிறது. அங்கே நடத்தலாம்” என்றேன்.

சிறிது நேரம் யோசித்தார். உடனே டெலிபோன் அருகே போனார். அப்போது கார்ப்பரேஷனில் உயர் அதிகாரியாக இருந்த சத்தியமூர்த்தி என்பவரைக் கூப்பிட்டார்.

“இத பார், சத்தியமூர்த்தி! உஸ்மான் ரோடு காய்கறி வியாபாரிகள் இனிமேல் பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு பண்ணு. ஒரு கடைக்கு இவ்வளவு காசு என்று வேண்டுமானல் கார்ப்பரேஷன்ல வசூல் பண்ணிக்குங்க. நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது. யாரிட்டே என்ன பேசனுமோ பேசிக்க” என்று சொல்லிப் போனை வைத்து விட்டார்.

“சாி. சரி நீங்க போங்க. நாளேயிலிருந்து பனகல் பார்க் பிளாட்பாரத்திலே விக்கட்டும்” என்றார் என்னைப் பார்த்து. எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். அதற்குப் பிறகு சின்ன அண்ணாமலையும் ஒரு முறை காமராஜரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தார். வந்ததும் வியாபாரிகளுக்கு பனகல் பார்க் பிளாட்பாரத்தில் வரிசையாக இடம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தினர். புதிதாக அமைந்த அந்த மார்க்கெட்டை ‘சின்ன அண்ணாமலை மார்க்கெட்’ என்று கூடச் சில நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் பெயரில் ஒரு போர்டு கூட ஏதோ ஒரு மூலையில் இருந்ததாக ஞாபகம்.

இப்போது அங்கே கார்ப்பரேஷன் ‘பக்கா’வாக ஒரு கட்டிடத்தையும் கட்டி சென்னையின் மிகச் சிறந்த காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றாக்கியுள்ளது. அந்தப் பக்கம் நான் போகும் போதெல்லாம், எனக்கு காமராஜின் குரல் கேட்கும்: “...நாளையிலிருந்து அவங்க கிட்ட போலீஸ் போகக் கூடாது.”
------------

20. பி. டி. கோயங்காவுடன்...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் டைரக்டர் திரு பி. டி. கோயங்கா என்னைப் பார்க்க விரும்புவதாக அப்போதைய மானேஜர் திரு எஸ். வி. சுவாமி மூலம் சொல்லி அனுப்பினார்.

நான் போயிருந்தேன்.

“தினமணி கதிர் பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியராக இருக்கச் சம்மதமா?” என்று கேட்டார்.

“பொறுப்பாசிரியரா, அல்லது ஆசிரியர் பொறுப்பா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“ஏ. என். சிவராமன்தான் இப்போது ஆசிரியர்” என்று இழுத்தார் திரு பி. டி. ஜி.

“என்னை ஆசிரியராகப் போடுவதாயிருந்தால் ஒப்புக் கொள்கிறேன்” என்றேன்.

“சரி பார்க்கலாம். முதலில் வேலையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்றார்.

“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆசிரியராகத்தான் ஒப்புக் கொள்ள முடியும்” என்றேன். பல நிர்ப்பந்தங்கள் காரணமாக அவரால் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய தர்மசங்கடமான நிலை எனக்குப் புரிந்தது. ஆனாலும் நான் விடவில்லை. ஏறத்தாழ ஒரு மாத காலம் தினமும் போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் ஒரு நாள் “எதற்காக என்னைத் தினமும் வரச் சொல்கிறீர்கள்? தங்களுக்கு இதில் ஏதேனும் சிரமம் இருந்தால் விட்டு விடலாமே!” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலையை ஒப்புக்கொள்ளுமுன் ஒருமுறை என் தந்தையைப் பார்த்துப் பேசி விடுங்களேன்” என்றார். அவருடைய தந்தை ராம்நாத் கோயங்கா சென்னைக்கு எப்போதாவதுதான் வந்து போய்க் கொண்டிருந்தார். ஆகவே அவரைச் சந்திப்பதில் வீண் கால தாமதம் ஆயிற்று.

“தாங்கள் தானே என்னைக் கூப்பிட்டனுப்பினீர்கள்? அப்புறம் அவரைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பி. டி. கோயங்காவிடம் கேட்டேன்.

“சும்மாத்தான். இப்போது ஜவுளி வாங்கக் காஞ்சிபுரம் போகிறோம். அப்படியே கோவிலுக்குப் போய் பெருமாளைச் சேவித்து விட்டு வருவதில்லையா? அந்த மாதிரிதான். அப்பாவைப் பார்ப்பது என்பது சம்பிரதாயத்துக்குத்தான்” என்றார்.

அவர் கூறிய உதாரணமும், பேசிய தமிழும் என்னை வியப்பில் ஆழ்த்தின. கடைசியில் ராம்நாத் கோயங்காவைப் பார்க்காமலே தான் வேலையில் சேர்ந்தேன்.

வேலையில் சேர்ந்த முதல் நாள் அன்று பி. டி. ஜி. என்னைத் தம் அறைக்கு அழைத்து, “உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு அடிக்கடி கோபம் வரும், அம்மாதிரி சமயங்களில் சத்தம் போடுவேன். எப்போதாவது நான் கோபித்துக் கொள்ள நேரிட்டால் அதை நீ பொருட்படுத்தக் கூடாது” என்றார்.

“எனக்கும்தான் அடிக்கடி கோபம் வரும். என் கோபத்தையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது” என்று பதிலுக்கு நான் சொன்ன போது அவர் சிரித்து விட்டார்!

பி. டி. ஜி. தினமும் காலை வேளையில் எம். எஸ். ஸின் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே தம்முடைய எக்ஸ்பிரஸ் தோட்டத்தில் ‘வாக்கிங்’ போவது வழக்கம். ரொம்ப வேகமாகத்தான் நடப்பார். அவர் நடக்கும் போது சில சமயங்களில் நான் கூடவே பேசிக் கொண்டு போவதுண்டு. அவர் வேகத்துக்கு என்னால் நடக்க முடிவதில்லை.

ஒரு நாள் காலை நான் அவரைப் பார்க்கப் போயிருந்த போது, “ஏம்பா, ராத்திரியெல்லாம் உன் டிபார்ட்மெண்ட்டில் விளக்கு எரிகிறதே, ஏன்?” என்று கேட்டார்.

“ஆமாம்; வேலை நிறைய இருக்கிறது. இரவில் வேலை செய்வதை உதவி ஆசிரியர்கள் கூட விரும்பவில்லைதான், ஆனாலும் என்ன செய்வது? இம்மாதிரி ரொம்ப நாள் நடக்காது......" என்றேன்.

“ஏம்பா?” என்றார்.

“இராத்திரியில் கண் விழித்து வேலை செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இராதா?” என்று கேட்டேன்.

“அவர்கள் ஸெகண்ட் ஷோ சினிமா பார்க்கப் போனல் கண் விழிக்க மாட்டார்களா?” என்று திரும்பக் கேட்டார்.

“சினிமா பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. வேலை செய்வது வேறு” என்றேன்.

“வேலை செய்வதில் அவர்கள் சினிமா பார்க்கிற அளவுக்கு ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

நான் சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தை அவர் புரிந்து கொண்டார். வேலை செய்கிறவர்களின் கஷ்டங்களை அவர் உணராதவர் அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே உதவி ஆசிரியர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் சம்பளத்தை உயர்த்திப் போடும்படி என்னிடம் சொன்னார்.

பகவன் தாஸ் கோயங்காவின் உள்ளத்தைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கக் கூடும். மேலாகப் பார்க்கும் போதும், பேசும் போதும் அவர் கடினமாகத் தோன்றினாலும் உள்ளத்தில் அவர் குழந்தை மாதிரி.

காமராஜர் இறந்த செய்தி கேட்டு அவர் எவ்வளவு துக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். அன்று என் வீட்டுக்கு டெலிபோன் செய்து “கோயங்கா பேசறேன்” என்றார். “என்ன விஷயம்?” என்றேன்.

“காமராஜ் போயிட்டாரேப்பா, தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியும்” என்றேன்.

எனக்கும் காமராஜருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அவர் அறிந்திருந்தார்.

“நீ போய்ப் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.

“பார்த்தேன். சாயந்திரமே போய் மாலை போட்டு என் இறுதி மரியாதையைத் தெரிவித்து விட்டு வந்தேன்” என்றேன்.

“அடாடா, எப்பேர்ப்பட்ட லீடர். போய்விட்டாரே” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருத்தப்பட்டார். அவர் குரலில் கனமான சோகம் தோய்ந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது.

பி. டி. ஜிக்கு எதையுமே வேகமாகச் செய்ய வேண்டும். ஐம்பது வருடங்களில் செய்ய வேண்டிய காரியத்தை ஐந்தே வருடங்களில் முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடும் அவசரத்தோடும் செயல்படுவார். அவர் மாதிரி வேகமாகக் கார் ஒட்டக் கூடியவர்களை நான் பார்த்ததில்லை. டிராபிக் ஸிக்னல்களெல்லாம் அவருக்குப் பெரிய இடையூறுகள். ஏர்போர்ட்டில் எட்டு மணிக்கு விமானம் புறப்படுகிறது என்றால் முப்பது நிமிஷங்களுக்கு முன்னால்தான் ஆபீஸை விட்டுப் புறப்படுவார். டிராபிக் ஸிக்னல்கள் எதுவும் அவருக்கு லட்சியமில்லை. அதையெல்லாம் மீறிக்கொண்டு பயங்கர வேகத்தில் போய் ஏர்போர்ட்டை அடைந்து, அங்கே உள்ள டெலிபோன் பூத்தில் புகுந்து யாருக்காவது போன் போட்டுப் பேசிய பிறகே ஓடிச் சென்று விமானத்துக்குள் செல்வார்.

டெலிபோன் செய்வதற்குச் சோம்பலே கிடையாது. விடியற்காலம், பாதி ராத்திரி எந்த நேரத்திலும் யாருக்காவது டெலிபோன் செய்துகொண்டே இருப்பார். ஒரு சமயம் இரவு பன்னிரண்டு மணிக்கு எனக்கு போன் செய்து, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.

“தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றேன்.

“இதற்குள்ளாகவா தூங்கிவிட்டாய்?” என்று அவர் கேட்ட போது சிரிப்பதைத் தவிர என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

டெலிபோன் நம்பர்கள் அடங்கிய சின்ன டயரி ஒன்று எப்போதும் அவரிடம் இருக்கும். அவற்றில் பாதி நம்பர்களுக்கு மேல் அவருக்கு மனப்பாடம்.

வேலை, வேலை, எப்போதும் வேலைதான். மேஜை மீது நூறு கடிதங்கள் இருந்தாலும் பைல்கள் இருந்தாலும், அவ்வளவையும் ஒன்று விடாமல் படித்துப் பரபரவென்று அவ்வளவிலும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட்டு விடுவார்.

பி. டி. ஜியைப் போன்ற இன்னொரு உழைப்பாளிச் சீமானை நான் கண்டதில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு மாபெரும் ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சக்தி மிக்க ரோட்டரி இயந்திரங்கள் இருக்கலாம். ஆனால் அந்த இயந்திரங்களை யெல்லாம் மீறிய சக்தி படைத்த இன்னொரு இயந்திரம் உண்டு. அதற்குப் பெயர்தான் பி. டி. கோயங்கா. அந்த மகத்தான மனித இயந்திரம் ஓய்ந்து விட்டது. ஆனாலும் பம்பாயிலுள்ள எஸ்பிரஸ் டவர் சிகரம் போல் பத்திரிகை உலகில் அவர் புகழ் ஓங்கி நிற்கும்.
----------

21. குறுக்கே வந்த பூனை

மூட நம்பிக்கைகளை அறவே வெறுப்பவன் நான். ஆயினும் மற்றவர்கள் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காகச் சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதும் உண்டு. இருந்தாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை மட்டும் என்னால் அகற்ற முடியவில்லை. நமது வாழ்க்கையில் நேர்ந்து விடும் சிற்சில சம்பவங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையில் அசையாத உறுதியை ஏற்படுத்தி விடுகின்றன.

நானும் என் மகன் பாச்சாவும் சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் ‘தமிழ்முரசு’ ஆசிரியர் திரு சதானந்தம் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகாமையிலுள்ள புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தையும் வேறு சில முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு பாரிஸுக்குப் புறப்பட்டுச் சென்றோம். பதினொரு மணிக்கு விமான நிலையத்துக்குப் புறப்படுவதாகத் திட்டம்,

“நான் என் காரிலேயே ‘ஹீத்ரு’ விமான நிலையத்தில் கொண்டு விட்டு விடுகிறேன். நீங்கள் புறப்படத் தயாராக இருங்கள்” என்று காலையில் எழுந்ததுமே கூறி விட்டார் திரு சதானந்தம்.

சரியாகப் பதினொரு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே காலடி எடுத்து வைத்தபோது என் முன்னே ஒரு பெரிய கறுப்புப் பூனை குறுக்கே ஓடியது. அதைக் கண்டதும் எனக்குச் ‘சுரீர்’ என்றது.

“புறப்படும்போதே பூனே குறுக்கே போகிறதே, சகுனம் சரியில்லையே!”என்று மனம் சஞ்சலப்பட்டது.

“அதெல்லாம் இந்த ஊரில் ரொம்ப சகஜம். பூனைகள் இப்படித்தான் அடிக்கடி குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாங்களெல்லாம் அதைப் பொருட்படுத்த மாட்டோம். இதையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என்று சதானந்தம் எனக்குச் சமாதானம் கூறிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து ஏறிக் கொள்ளச் சொன்னார்.

விமான நிலையம் போகும் வழி முழுதும் அந்தப் பூனை குறுக்கே வந்தது பற்றியே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.

“இது வெளிநாடு. இங்கேயல்லாம் சகுனம் பலிக்காது” என்று உள்ளத்தில் ஒரு வாதம் உருவாகியது. ‘எங்கேயிருந்தால் என்ன? பூனை பூனை தானே!’ என்றது இன்னொரு வாதம்.

பாரிஸ் போய்ச் சேர்ந்தோம். உலகப்புகழ் பெற்ற ‘மூலா ரூஜ்’ (Moulin Rouge) அரங்குக்குச் சென்று அன்று மாலை அங்கு நடைபெற்ற காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தச் குழ்நிலையிலும் அந்தப் பூனையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை. காலையிலிருந்து அலைச்சலும் பட்டினியும் வேதனையும் சேர்ந்து களைத்துப் போயிருந்தேன். காட்சிகளில் உள்ளம் லயிக்கவில்லை.

பாதி ‘ஷோ’ வில் சட்டென்று கண்கள் இருண்டு போய் மயங்கிக் கீழே சாய்ந்து விட்டேன். உடனடியாக டாக்டர்கள் இரண்டு பேர் வந்து பார்த்துப் பரிசோதித்தார்கள்.

“உடம்பில் சர்க்கரை குறைந்திருக்கிறது” என்றனர். உடனே தனி அறைக்கு அழைத்துப் போய் க்ளுகோஸ் தண்ணிர் கொடுத்து மயக்கத்தைத் தெளிய வைத்தனர். சற்று நேரத்துக் கெல்லாம் புத்துணர்ச்சி பெற்று விட்ட போதிலும் ‘ஷோ’ வில் மனம் செல்லாததால் ஓட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

மறுநாளே பாரிஸிலிருந்து நியூயார்க் போய் அங்கிருந்து நியூஜெர்ஸியை அடைந்தோம். பூனை குறுக்கே போனது, ‘ப்ளாக் அவுட்’ ஆனது — இரண்டு நிகழ்ச்சிகளுமே கெட்ட சகுனங்களாக எனக்கு உள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன. “என்னவோ, ஏதோ” என்று ஒரு கிலி சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது. காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் ஒரு பயங்கரச் செய்தியை டெலிபோன் அறிவித்தது.

“பம்பாயிலிருந்து சென்னை புறப்பட்ட விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் நூறு பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். அவர்களில் உங்கள் மாப்பிள்ளையும் ஒருவர்” என்பதே அந்தச் செய்தி.

நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன்தான். ஆனாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை இனி யாராலும் அசைக்க முடியாது.
-----------

22. எம். ஜி. ஆர். கோபத்துக்கு என்ன காரணம்?

நான் தினமணி கதிரில் இருந்த போது ஒருநாள் வித்வான் லட்சுமணன் எனக்கு போன் செய்து, “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். எம். ஜி. ஆர். உங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும்” என்று கூறி, தேதி நேரம் இடம் மூன்றையும் குறிப்பிட்டார். அவர் விருப்பப்படியே நான் சத்யா ஸ்டுடியோவுக்குப் போய் எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

அன்று எம். ஜி. ஆர் அவர்களின் அன்னையார் நினைவு நாள்.

“வருடா வருடம் என் அன்னையின் நினைவு நாளன்று நான் மிகவும் விரும்பும் ஒருவரை அழைத்து அவருக்குப் பாயசம் தருவேன், இந்த ஆண்டு உங்களுக்கு” என்று பாயசத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். பிறகு அவர் மதிய உணவுக்கு உள்ளே சென்ற போது கூடவே என்னையும் அழைத்துச் சென்று பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

“ஆனந்த விகடனில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று நான் எழுதும் கட்டுரைத் தொடரைப் படிக்கிறீர்களா?” என்று கேட்டார். இரண்டொரு வாரம் மட்டுமே படித்ததாகச் சொன்னேன்.

“இப்போது உங்களை அழைத்தது எதற்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“உங்கள் தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன்.”

“அதற்கென்ன, தாராளமாகச் செய்யுங்கள். ஆனால் ஒரு சின்ன நிபந்தனை. உங்கள் கேள்வி பதில் பகுதியை எப்போது வேண்டுமானலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு. நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது” என்றேன்.

“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்” என்று எம். ஜி. ஆர். உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன். அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான் மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று. ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பெரம்பூரில் ஒரு சாபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது. அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி. ஆர். தலைமை தாங்கினார். அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள். நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டார். அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன். “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு எம்.ஜி.ஆர். அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன். விழாவின்போது என் கடிதத்தை மைக்கில் படித்து விட்டார்கள். காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம். ஜி. ஆருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆகஸ்டு 14-ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3-30 மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திரும்பிப் போனார்.

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம். ஜி. ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப் போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது. எனவே எம்.ஜி.ஆர். சோவைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார். “எம். ஜி. ஆர். எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே, எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோவைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்? அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன். “இல்லை, எம். ஜி. ஆர். எதிர்பார்க்கிறார். அதெல்லாம் அவருடைய கருத்துதானே? எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்?” என்றார். வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம், “நான் எம். ஜி. ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது” என்றார் வித்வான்.

அதன்படி எம். ஜி. ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டுடியோ ஒன்றில் அவர் இருந்தார். ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார். நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாரில்லை என்பது தெரிந்தது. “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்?” என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். கடைசியில், “நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட அவர், “எதற்காக வந்தீர்கள்? ஏன் போகிறீர்கள்?” என்று என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

என் மீது எம். ஜி. ஆர். கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை. இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நாடக நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம். அல்லது சோ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதாயிருக்கலாம். இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத்தான் தெரியும்.
-----------

23. கடலூர் வேத பாட சாலையில்...

சின்ன வயசில், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல், அப்பா கொடுத்த சம்பளப் பணத்தைப் பள்ளிக்கூடத்தில் கட்டாமல் திருச்சி வரை போய் விட்டேன். அதுவரை பயணம் செய்த செலவு போக கொஞ்சம்தான் பணம் மிஞ்சி இருந்தது. திருச்சியில் ‘நகர தூதன்’ என்ற பத்திரிகை அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்து வேலை கேட்டபோது இல்லை என்று சொல்லி விட்டார்கள். அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் சென்று அங்கே கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வேத பாடசாலைக்குப் போய், “சுப்பராயன் இருக்கிறானா?” என்று விசாரித்தேன்.

“அவன் லீவுக்கு ஊருக்குப் போயிருக்கிறான். திரும்பி வர ஒரு மாதம் ஆகும்” என்று சொல்லி விட்டார்கள்.

சுப்பராயன் என்னுடைய அத்தை மகன். அந்த வேத பாடசாலையில்தான் படித்துக் கொண்டிருந்தான். எப்படியும் சாப்பாடு போடுவான் என்ற நம்பிக்கையோடு அவனைத் தேடிச் சென்றேன். முதல் நாள் பிற்பகல் சாப்பிட்டதோடு சரி; அப்புறம் பசி வயிற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கையில் ஒரே ஒரு தம்படிதான் மிச்சம். அதற்கு ஒரு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டேன். ஆமாம்; அந்தக் காலத்தில் தம்படியும் உண்டு. தம்படிக்கு ஒரு வாழைப்பழமும் உண்டு!

அப்புறம் என்ன செய்வதென்று புரியாமல் வேத பாட சாலை வாசலில் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். தூக்கம் வர மறுத்தது. பசிக்கொடுமையும் சுப்பராயன் இல்லாத ஏமாற்றமும் சேர்ந்த சங்கடம் வயிற்றைப் பிசைந்து எடுத்தது. எழுந்து எதிரில் இருந்த கோயிலுக்குப் போய், அங்கே யாரோ அடித்த சதிர்த் தேங்காய்ச் சிதறல்களைப் பொறுக்கிச் சாப்பிட்டேன். அன்றைக்கெல்லாம் அவ்வளவுதான்.

மறுநாள் காலை சற்றுத் தொலைவிலுள்ள ஆற்றுக்கு நடந்தே போய் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது மயக்கமாய் வந்தது. கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தன. கை நிறையத் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பசியை ஏமாற்றினேன்.

இன்றைக்கும் பட்டினி கிடக்க வேண்டியதுதானா? பொறுக்க முடியாத பசி காரணமாக அழுது விட்டேன். திடீரென்று பின் பக்கத்திலிருந்து ஒரு குரல்.

“சுவாமிகளே, இலை போடறதுக்கு மணி ஒண்ணுகுமா?”

சற்று துரத்தில் நாலைந்து வைதிக பிராம்மணர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய குரல்தான் அது.

“ஒகோ, எங்கேயோ சாப்பாடு போடுகிறார்கள் போலிருக்கிறது. இவர்களோடு கூடவே போனால் நமக்கும் சாப்பாடு கிடைக்குமே!” அவர்களைப் பின்பற்றி நடந்தேன். சந்நிதித் தெருவில் ஒரு வீடு. அங்கே ஏதோ விசேஷம். யாரோ இறந்து பதினாலவது நாள் சுப காரியம் நடக்கிற்து.

அந்த பிராம்மணர்கள் எல்லோரும் அந்த வீட்டுக்குள் போய் விட்டார்கள். எனக்குத் தைரியம் இல்லை. யாராவது அதட்டி, “யாருடா நீ!” என்று கேட்டு விட்டால்? தயக்கத்துடன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்கட்டில் ஓமப்புகையும், பின்கட்டில் சமையல் வாசனையும் ‘சாப்பாடு நிச்சயம் உண்டு’ என்பதை அறிவித்தன.

வாசலில் கைவண்டி ஒன்று வந்து நின்றது. சாம்பல் பூசனிக்காய், வாழை இலை கட்டுகள், பலாப்பழம், வாழைப் பழத் தார், இன்னும் என்னென்னவோ வண்டி நிறைய... இடையில் புகுந்து பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து சமையல் கட்டில் கொண்டு வைத்தேன்.

“அம்பி, இந்தா...உள்ளே போய் எண்ணெய் எடுத்துண்டு வாடா, பலாப்பழம் நறுக்கலாம்” என்றார் சமையல்காரர். கணிரென்ற குரல். வால்கிண்ணம் ஒன்றை என்னிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே மாமியிடம் எண்ணெய் கேட்டு வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அந்த மாமி என்னை எதுவுமே விசாரிக்கவில்லை. சமையல்காரர் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழம் நறுக்கிச் சுளை சுளையாகப் பாத்திரத்தில் போட்டார். ஒன்றை எடுத்து ‘இந்தா சாப்பிடு’ என்று என்னிடம் தந்தார். நாக்கில் ஒரு குடம் ஜலம் ஊறிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டு மனிதர்களில் ஒருவனாகி விட்டேன். எப்படியும் சாப்பாடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது!

பந்தி பரிமாறத் தொடங்கியதுதான் தாமதம், நானும் மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து விட்டேன். என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. வடை பாயசத்தோடு வயிறு புடைக்கச் சாப்பிட்டு முடித்தேன். “அப்பாடா! இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துக்குக் கவலை இல்லை” என்று எண்ணிக் கொண்டேன். இப்போது உண்ட மயக்கம். மெதுவாக வெளியே புறப்பட்டு, வாசல் படியைத் தாண்டும் போது ஒரு கனமான குரல் “அம்பி இங்கே வா!” என்று சற்று அதட்டலாக அழைத்தது.

என் சப்த நாடியும் அடங்கிப் போயிற்று. சரி, முதுகிலே இரண்டு அறை வைத்து, “திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து சாப்பிடுகிறாயா? யாருடா நீ?” என்று கேட்பாரோ என்று நடுங்கியபடியே அவர் அருகில் போய் நின்றேன்.

“இந்தாடா! வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லி ஒரு தட்டை நீட்டினார் அவர். அந்த வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டேன். அதில் நாலணாக் காசு இருந்தது. சாப்பிட்டதற்கு தட்சிணை!

அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் ஆண்டவன் படி அளந்து விட்டான்!
-------------

24. கலைமகளுக்குத் தமிழும் புரியுமே !

உபயகுசலோபரி, சாங்கோபாங்கம், கரதலாமலகம், சிரக்கம்பம், நிர்மானுஷ்யம் போன்ற வடமொழிச் சொற்களை ஏராளமாகப் பயன்படுத்தி ஆனந்தவிகடனில் கதை கட்டுரைகள் வெளியிட்ட காலம் ஒன்று உண்டு.

பெரும்பாலும் பிராம்மண பாஷையில் பிராம்மண குடும்பங்களை வைத்து எழுதப்பட்ட கதைகளே அதிகம் வெளியாகும். கல்கி எழுதிய தியாக பூமி கதை கூட அப்படித்தான்.

கல்கி 1940-ல் விகடனை விட்டு விலகி, சொந்தப் பத்திரிகை தொடங்கியதும், இந்தக் கொள்கையை அடியோடு மாற்றிக் கொண்டார். கதை கட்டுரைகளில் பிராம்மணக் கொச்சையைத் தவிர்த்தார். தமிழ், தமிழர் என்ற உணர்வுக்கு ஊக்கம் தந்து கதை கட்டுரைகள் எழுதினார். ‘தமிழில் பாட வேண்டும்’ என்ற ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தமிழிசை இயக்கத்துக்கு உறுதுணையாக நின்று கட்டுரைகள் எழுதி பலம் தேடித் தந்தார்.

இதனாலெல்லாம் கல்கி பத்திரிகையைத் தமிழர்கள் பத்திரிகை என்றும் விகடனை பிராம்மண சார்புள்ள பத்திரிகை என்றும் சொன்னார்கள்.

ஆனந்த விகடனுக்குப் பிறகு தொடங்கப் பெற்ற கல்கி பத்திரிகையின் ஸர்க்குலேஷன் ஒரு லட்சத்தைத் தாண்டி விட்ட போது விகடன் ஸர்க்குலேஷன் அறுபதாயிரம் எழுபதாயிரத்தைத் தாண்டிப் போக முடியாமல் ஒரு தேக்க நிலை இருந்து வந்தது.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு திரு வாசன் அவர்களை நான் சந்தித்த போது, “இதற்கு நீ என்ன காரணம் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“விகடனில் பிராம்மண பாஷை அதிகமாக உள்ளது. அதை ஒழித்துக் கட்ட வேண்டும். உபய குலலோபரிக்குச் சீட்டுக் கொடுக்க வேண்டும். பிராம்மண கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எழுதப்படும் கதைகளையும் குறைக்க வேண்டும். கார்ட்டூன்களில் வடநாட்டுத் தலைவர்கள் மட்டுமே வருகிறார்கள். தென்னாட்டுத் தலைவர்களில் ராஜாஜி மட்டுமே தலைகாட்டுகிறார். ஈ. வெ. ரா., அண்ணாதுரை போன்ற தமிழர் தலைவர்களும் இடம் பெற வேண்டும்” என்றேன்.

“விகடனை அதிகமாக வாங்கிப் படிப்பவர்கள் பிராம்மணர்கள் ஆயிற்றே! அவர்களை நாம் விட்டு விடமுடியுமா?” என்று கேட்டார்.

“நீங்கள் விகடனை எப்படி மாற்றினாலும் விகடன் வாசகர்கள் மாற மாட்டார்கள். அவர்கள் விகடனோடு பழக்கப்பட்டுப் போனவர்கள்” என்றேன்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு நான் விகடனில் சேர்ந்து வேலை செய்வதென்று முடிவாயிற்று.

அந்த ஆண்டும் வழக்கம் போல் விகடன் தீபாவளி மலர் வெளியிட்டார்கள். மலர் தயாரிக்கும் பொறுப்பை தேவனுக்குப் பிறகு ‘கோபு’விடம் ஒப்படைத்திருந்தார்கள். எப்போதும் போல் முதல் பக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்ற தலைப்பில் பத்து வரிகள் எழுதி, அதன் ப்ரூஃபை திரு வாசன் அவர்கள் பார்வைக்கு அனுப்பி வைத்தார் கோபு. ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில் சில தமிழ்ச் சொற்களும் அங்கங்கே தலைகாட்டின. உஷத் காலம், மங்கள ஸ்நானம், சரஸ்வதி தேவியின் பாதகமலம், சமர்ப்பணம் போன்ற சொற்கள் கலந்த அந்தக் கட்டுரையைப் படித்த போது நாம் தமிழ்ப் பத்திரிகைதான் படிக்கிறோமா? என்ற சந்தேகம் தோன்றியது.

திரு வாசன் அதைப் படித்து விட்டு, அதன் பக்கத்திலேயே ஒரு சிறு குறிப்பு எழுதி ‘கோபு’வுக்குத் திருப்பி அனுப்பி இருந்தார். அது:

‘Goddess Saraswathi can understand chaste Tamil tool’ என்பதுதான்.
------------

25. ஜெயகாந்தன் சொன்ன பதில்

பிராம்மண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் தான் ஆனந்த விகடனில் வெளியாகும் என்ற குற்றச்சாட்டு அந்த நாளில் உண்டு. 1957-ல் நான் விகடனில் சேர்ந்து பணியாற்றிய போது அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதையும் உணர்ந்தேன். அந்தச் சூழ்நிலையை எப்படியும் மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நல்ல எழுத்தை யார் எழுதினாலும் அவர்களுக்கு நீட்டப்படும் முதல் ஆதரவுக்கரம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்று நான் எந்தப் பத்திரிகையில் பணியாற்றினாலும் கருதுபவன்.

பார்த்தசாரதி என்ற இளைஞர் அப்போது விகடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் என்னிடம் வந்து தூசு படிந்த புத்தகம் ஒன்றைத் தந்து, “இதில் உள்ள கதைகளைப் படித்துப் பாருங்கள். ரொம்ப நன்றாக இருக்கின்றன. மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர. முன்னுரை எழுதியிருக்கிறார்” என்று சொன்னார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு பிடி சோறு.’ எழுதியவர் அப்போது பிரபலமாகாமல் இருந்த ஜெயகாந்தன்.

புத்தகத்தைப் புரட்டிய என் கண்ணில் ‘டிரெடில்’ என்ற கதை பட்டது. படித்தேன். அசந்து போனேன். ‘இந்த எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விகடனில் எழுத வைத்துவிட வேண்டும்’ என்று அன்று முதல் ஒரே குறியாக இருந்தேன்.

அப்போது ஆனந்த விகடன் நிர்வாகத்தை ஏற்றிருந்த திரு பாலு (எஸ். பாலசுப்ரமணியன்) அவர்களின் அறைக்குச் சென்று அந்த ‘டிரெடில்’ கதையைப் படித்துக் காட்டினேன். புன்சிரிப்போடு ரசித்துக் கேட்ட அவர், “நன்றாக இருக்கிறது. யார் இந்த எழுத்தாளர்? இவரை நமக்குக் கதை எழுதச் சொல்லலாமே?” என்றார்.

பின்னர் ஒரு நாள் எழுத்தாளர் கூட்டம் ஒன்றில் ஜெயகாந்தனை எனக்கு யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது, “நீங்கள் ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக் கூடாது?” என்று அவரிடம் கேட்டேன்.

“அவாள்ளாம் நம்ம கதையைப் போட மாட்டா” என்று வேண்டுமென்றே பிராம்மண பாஷையில், விகடனில் அந்தக் குறிப்பிட்ட இனத்தவரின் ஆதிக்கம் இருப்பதை எனக்கு உணர்த்துவது போல், தமக்கே உரிய பாணியில் குத்திக் காட்டினார்.

எனக்குக் கோபமோ, வருத்தமோ ஏற்படவில்லை, அவரை எப்படியாவது விகடனுக்கு எழுதச் செய்ய வேண்டும் என்பது தானே என் குறிக்கோள்?

“நான் விகடன் ஆசிரியரின் அனுமதியோடுதான் கேட்கிறேன். கதை எழுதிக் கொடுங்கள்” என்றேன்.

“சரி. பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழித்து ஜெயகாந்தனிடமிருந்து ‘ஓவர்டைம்’ என்ற சிறுகதை விகடன் அலுவலகத்துக்கு வந்தது.

பாலசுப்ரமணியன் அந்தக் கதையைப் படித்துப் பார்க்க விரும்பினர்.

“வேண்டாம். அதை அப்படியே கம்போஸுக்கு அனுப்பி விடலாம். நாமே கேட்டு அவர் அனுப்பியிருக்கும் முதல் கதை இது. இதைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதோ, அல்லது பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்று முடிவெடுப்பதோ அவரை ஊக்குவிப்பதாகாது. இது நாம் கேட்டு அவர் அனுப்பியுள்ள முதல் கதை. ஆகையால் பிரசுரித்து விடுவோம். இதற்குப் பிறகு வரும் கதைகள் சரியில்லையென்றால் திருப்பி அனுப்புவதில் தவறேதுமில்லை”என்று சொன்னேன் நான்.

புது எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இந்த முறையை எனக்குக் கற்றுத் தந்தவர் ஆசிரியர் கல்கி.

‘ஓவர்டைம்’ விகடனில் பிரசுரமாகி வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுப்பது என்று முடிவானபோது நானும் மணியனும் பாலுவிடம் நீண்ட நேரம் பேசி எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினோம். பிறகு ஜெயகாந்தன் தம் கதைகள் ஒவ்வொன்றும் ‘முத்திரைக் கதை’யாகத்தான் வரவேண்டும் என்று விரும்பினார். விகடனுக்கு வரும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து விகடன் ஆசிரியர் குழுவினர் முத்திரைக்குச் சிபாரிசு செய்வார்கள். ஆனால் ஜெயகாந்தன் தம் கதைகள் எல்லாமே முத்திரைக் கதைகளாக வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவே அவர் கதைகள் எல்லாவற்றுக்குமே முத்திரை கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

“முத்திரையைக் குத்த வேண்டியவர்கள் ஆசிரியர் குழாம். ஜெயகாந்தன் தன் கதைகளுக்குத் தானே முத்திரை குத்திக் கொள்வது எப்படி சரியாகும்?” என்பது என் வாதம்.

ஆனால், இதற்குப் பின்னரும் அவர் கதைகள் ‘முத்திரைக் கதை’களாகவே வெளியாகிக் கொண்டிருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாருக்காகவும் ஒரு பத்திரிகை தனது கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் நான் இதையெல்லாம் சொல்லத்தான் முடியுமே தவிர செயல்படுத்தும் அதிகாரம் என்னிடம் இருக்கவில்லை. எனவே ஜெயகாந்தன் விவகாரத்தில் தலையிடுவதை நான் அத்துடன் நிறுத்திக் கொண்டு விட்டேன்.
----------------

26. வள்ளுவருக்கும் அவ்வளவுதானா?

நான் ஆனந்த விகடனில் சேர்ந்தபோது அங்கே நிலவி வந்த ஒரு வழக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அப்போதெல்லாம் கதையோ கட்டுரையோ எது பிரசுரமானாலும் அதற்கான சன்மானத்தை நிர்ணயிக்க அவற்றின் நீளத்தை ‘ஸ்கேல்’ வைத்து அளந்து பார்ப்பார்கள். அங்குலத்துக்கு இவ்வளவு என்று சன்மானத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கதை இருபது அங்குல நீளத்துக்குப் பிரசுரமாகி இருந்தால் அதற்கு நாற்பது ரூபாய் என்று பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தேவன் காலத்தில் தொடங்கிய இந்த வழக்கம் தேவன் மறைந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த முறை சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

ஒரு விவாதத்தின் போது இதைப் பற்றி திரு வாசன் அவர்களுடைய மகன் திரு பாலசுப்ரமணியனிடம் கேட்டேன்.

“இது சரியான முறையாகத் தோன்ற வில்லையே! ஒரு எழுத்தாளரின் படைப்பு எவ்வளவு சன்மானம் பெற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளரின் எழுத்தின் தரத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டுமே தவிர நீளத்தை வைத்து அல்ல” என்றேன்.

“இதில் ஒரு நன்மை இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். ஒரு அங்குலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விடும் போது வேண்டியவர், வேண்டாதவர் என்கிற பிரச்னையெல்லாம் வராது. யார் எழுத்தையும் சமநோக்குடன் பார்ப்பதற்கு வசதியாகவும் ஏற்றத் தாழ்வு வித்தியாசத்துக்கு இடமில்லாமலும் போய்விடும்" என்றார். திரு பாலசுப்ரமணியன். நான் அதற்குமேல் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. சக உதவியாசிரியர்களிடம் மட்டும் வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருப்பேன்.

“ஒஹோ... அப்படியென்றால் திருவள்ளுவர். இப்போது உயிரோடு இருந்து அவர் விகடனில் குறள் எழுதினால் குறளின் நீளத்தை அளந்து அதற்குத் தகுந்தபடி அவருக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்தான் சன்மானம் கொடுப்போம் இல்லையா?”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்தது திரு பாலு அவர்கள் காதுக்கு எட்டியிருக்க வேண்டும். மறுநாளே என்னை அவர் அழைத்து “நான் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. அளந்து கொடுக்கும் முறை நியாயமில்லைதான். தரத்தைப் புரிந்து கொடுக்கும் முறையையே நாம் இனி பின்பற்றுவோம். அடுத்த இதழில் ‘வணக்கம்’ என்ற தலைப்பில் இது பற்றி எழுதி விடுங்கள்.‘இனிமேல் கட்டுறைகளை‘ஸ்கேல்’ வைத்து அளந்து சன்மானம் தர மாட்டோம். இலக்கியங்களின் தரத்தை, அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடப் போவதில்லை. தரத்துக் கேற்றபடியே படைப்புகளுக்கான சன்மானம் அமையும்’ என்று விளக்கமாக ஓர் அறிவிப்பு எழுதி விடுங்கள்” என்றார். நான் அவ்வாறே எழுதி அவரிடம் கொடுத்தேன்.

திரு பாலு அவர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டுச் சில திருத்தங்களுடன் வெளியிட்டார். அந்த வாரத்தோடு ஸ்கேல் வைத்து அளக்கும் முறை கைவிடப்பட்டது.
-------------

27. “பொய் சொல்லாதே!”

நான் பத்திரிகை உலகிலிருந்து விடுபட்டு, இடையில் ஓராண்டு காலம் குஸ்திச் சண்டையில் ஈடுபட்டிருந்தேன். நானே குஸ்தி போடுவதில்லை. போடுபவர்களைக் கூட்டி வைத்துப் போட்டி நடத்தும் வேலையைத்தான் செய்து வந்தேன். அப்போதெல்லாம் மல்யுத்தம் என்று சொன்னலே உடனடியாக ஞாபகத்துக்கு வரும் பெயர்கள் கிங்காங்—தாராசிங்தான். இருவரும் எந்த மேடையில் மோதிக் கொண்டாலும் அங்கே ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடி விடுவார்கள்.

கோயம்புத்தூரில் இந்த குஸ்தி நடக்கும்போது தமிழில் நேர்முக வர்ணனை செய்வது என் வேலை. அப்போதெல்லாம் நடு நடுவே ஏதேனும் ஜோக் அடித்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பேன்.

ஒருநாள், கிங்காங் கம்பீரமாக மேடை மீது ஏறி வந்தபோது “இதோ வருகிறது பாருங்கள் மாமிச பர்வதம்! நானுாறு பவுண்டு எடை” என்று நான் கமெண்ட் அடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள். அதைக் கேட்டதும் கிங்காங்கிற்குக் கோபம் வந்துவிட்டது. உடனே மேடையின் ஓரத்துக்கு வந்து கயிற்றின் மீது சாய்ந்து அங்கே ஓரத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து, “பொய் சொல்லாதே; நான் நானூறு பவுண்ட் அல்ல” என்று சத்தம் போட்டார். பிறகு சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து, "“நான் 396 பவுண்டுதான். நீ அதைத் திருத்திச் சொல்” என்று என்னை மிரட்டினார். அதாவது தன் எடையை அவ்வளவு கரெக்டாகச் சொல்ல வேண்டுமாம். உண்மையில் அவர் எடை 396 பவுண்ட்தான் என்பது கூடச் சந்தேகம்தான்!

ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே தாரா சிங்கிற்குத்தான் அதிகம். அவர் நம் நாட்டவர் என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. கிங்காங்குக்குச் சரிநிகர் சமானமாய் சமர் செய்யத் தக்க மல்யுத்த வீரராக விளங்கியவர் அவர் ஒருவர்தான். தாரா சிங் இல்லாமல் கிங்காங் வேறு யாருடன் சண்டை போட்டாலும் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக எடுபடுவதில்லை.

கோவையில் மல்யுத்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதெல்லாம் லலிதா பத்மினி சகோதரிகள் தவறாமல் வந்து விடுவார்கள். எனது வர்ணனையை ரசித்து மகிழ்ந்து கை தட்டுவார்கள். நான் ஜோக் சொல்லிவிட்டு அவர்களைப் பார்ப்பேன். அவர்களில் யாராவது ஒருவர் சிரித்தாலும்கூட எனக்குக் குஷி பிறந்து விடும். உடனே மேலும் மேலும் ஜோக் அடிப்பேன்!

போட்டியின் நடுவில் கிங்காங் அவ்வப்போது ‘ஃபௌல் கேம்’ ஆடுவதுண்டு. அது அவரது வழக்கம். ரசிகர்களுக்குக் கோபம் வந்தால் கையில் கிடைத்ததை எடுத்து கிங்காங் மீது வீசித் தங்கள் எதிர்ப்பையும் கோபத்தையும் தெரிவிப்பார்கள்.

ஒரு நாள் கிங்காங் அப்படித்தான் தாரா சிங்கின் தலை மயிரைப் பிடித்து இழுக்கவே, ரசிகர்கள் கூச்சலிட்டுக் கையில் கிடைத்ததை எடுத்து மேடைமீது வீசினார்கள். அந்த அளவுக்குக் கோபத்தைத் தூண்டி விட்டார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்களில் நவ இந்தியா நிருபர் ராமசாமியும் ஒருவர். ஒல்லியான உடல்வாகு. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் போனார். கிங்காங் தவறாக ஆடியதும் அவர் தம்மை மறந்து தம் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து கிங்காங் மீது குறி பார்த்து வீசினார், ஆனால் அது கிங்காங் மீது விழாமல் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது. இவ்வளவு கலாட்டாக்களுக்கும் இடையே கிங்காங் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு வழியாக அமளி அடங்கிப் போட்டி நடைபெற்று முடிந்ததும் அனைவரும் கலந்து செல்ல ஆரம்பித்தார்கள். நிருபர் ராமசாமி மட்டும் தன்னிடம் மிஞ்சியுள்ள ஒரு செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சற்றுநேரம் விழித்துவிட்டுச் செருப்பு இல்லாமலே வெறுங்காலுடன் வெளியே நடந்து போனார்.

அதைக் கவனித்துக் கொண்டிருந்த கிங்காங் தமது கர்ஜனைக் குரலில் அவரை அருகில் அழைத்தார். கிங்காங்கின் அதிகாரக் குரல் கேட்டதும் ராமசாமிக்கு சப்தநாடியும் அடங்கிப் போய் விட்டது. “நியூஸ் எடுக்க வந்த இடத்தில் நாமே நியூஸாகப் போகிறோம்” என்று நடுங்கியபடியே கிங்காங் அருகே சென்றார்.

“ஒரு செருப்பை என் மீது வீசி விட்டு இன்னொரு செருப்பை உபயோகிக்க முடியாமல் இங்கேயே விட்டுச் செல்கிறாயே, ஏன்? பயமா? இந்தா, உன்னுடைய செருப்பு. போட்டுக் கொண்டு போ...இது ஒரு விளையாட்டுதான். ஸ்போர்ட்ஸ்! இதிலெல்லாம் உணர்ச்சி வசப்படக் கூடாது” என்று சொல்லிச் செருப்பை அவரிடம் கொடுத்து அனுப்பினார் கிங்காங்.
-------------

28. ஆதித்தனாருக்குப் பெரிய மனசு

ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குப் போய் வெளியே வந்ததும் எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. எப்படி வாழப் போகிறோம் என்ற பெரிய கேள்விக் குறியோடு நாட்களைத் தள்ள வேண்டிய நிலை. எப்போதும் போலவே எனது நண்பர் தி. ஜ. ரங்கநாதன் அவர்கள்தான் எனக்குப் புகலிடம் அளித்தார்.

வை. கோவிந்தன் நடத்தி வந்த ‘சக்தி’ பத்திரிகையில் தி. ஜ ர. அப்போது ஆசிரியராக இருந்தார். அலுவலகம் பவழக்காரத் தெருவில் இருந்தது. காலையில் அங்கே போய் விடுவேன். தி ஜ. ர. பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். அவரோடு கூடவே சாப்பிடுவேன்.

ஒரு நாள் தி. ஜ. ர. சொன்னர்:

“இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? நீர் எங்கேயாவது வேலையில் சேர வேண்டும். ஆதித்தன் என்றொரு பெரிய பணக்காரர் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார், அவர் பேப்பர் ஆரம்பிக்கப் போவதாய்க் கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்க்கலாம் வாரும்.”

ஆதித்தன் அவர்களைத் தேடிப் போனோம். தம்பு செட்டித் தெருவில் வாடகைக்கு ஓர் அறை பிடித்து அங்கே ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர். தி. ஜ. ர. என்ன ஆதித்தனாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆஜானுபாகுவான உடல்வாகு. கோட் போட்டிருந்தார். சிரித்த முகம். இனிமையான நயமான பேச்சு. குரலில் கம்பீரம். பார்த்த மாத்திரத்திலேயே, மரியாதை தரப்பட வேண்டியவர்” என்ற உணர்வைத் தூண்டக் கூடிய தோற்றம்.

ஆதித்தனாருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. “தினமும் இங்கே வந்து விடுங்க” என்றார். விடுவேனா? தினமும் போனேன். ரொம்ப நேரம் பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். கல்கி எழுத்தை விமரிசிப்போம். மணி நாலு ஆனதும் ஹோட்டலுக்கு அழைத்துப் போவார். எது ஆர்டர் பண்ணினாலும் இரண்டு இரண்டாகத்தான் பண்ணுவார். இரண்டு வடை, இரண்டு ஸ்வீட், இரண்டு தோசை என்று எல்லாமே டபிள் டபிள்! அதே மாதிரி எனக்கும் டபிள் டபிள்!

நான் எற்கனவே பசியால் காய்ந்து போனவன். எனவே அந்த இரண்டிரண்டு வரப்பிரசாதமாய் அமைந்தது.

அப்புறம் இரண்டொரு மாதத்தில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீடு பிடித்து அந்த வீட்டில் ‘தமிழன்’ பத்திரிகையைத் தொடங்கினார். அதுவரை அவருடைய தமிழன் பத்திரிகை மதுரையிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. திரு கோ. த. சண்முகசுந்தரம்தான் அதன் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சம்பளம் ஐம்பது ரூபாய்.

கொஞ்ச நாள் கழித்து திரு ஆதித்தன் அவர்கள் ‘தினத்தந்தி’ ஆரம்பித்தார். “நீங்கள் இஷ்டப்பட்டால் தினத்தந்தியிலும் எழுதலாம்" என்று என்னிடம் கூறினார். தினத்தந்தி வெளியான முதல் நாள் மட்டும் நான் சின்னச் சின்ன செய்திகளை மொழிபெயர்த்துத் தந்தேன். தினத்தந்தி ஆரம்ப காலத்தில் கையால் செய்த பழுப்பு நிறக் காகிதத்தில் வந்து கொண்டிருந்தது. பி. ஸ்ரீ. யின் மகன் திரு நாராயணன் தினத்தந்திக்கு வந்து சேர்ந்தார். அவர் நட்பும் எனக்குக் கிட்டியது.

அப்போது தமிழ்ப் படங்கள் மிக நீளமாகப் பதினாறாயிரம் அடிவரை எடுக்கப் படுவது வழக்கம். அதைப் பதினேராயிரம் அடிக்குக் குறைக்க வேண்டும் என்று கல்கி தம் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். அதை ஆதரித்து ‘நாலு பேர் அபிப்ராயம்’ என்ற தலைப்பில் நான் ஒரு நகைச்சுவைக் கட்டுரையைத் தமிழனில் எழுதினேன். கல்கி அதைப் படித்திருக்கிறர். பி. ஸ்ரீ. யும் அவரது மகன் நாராயணனும் தீபாவளியன்று கல்கியைப் பார்க்கப் போயிருந்தபோது அவர்களிடம் அந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டு, சாவியை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். நாராயணன் வத்து விஷயத்தைச் சொன்னதும் நான் உடனே கல்கியைப் பார்க்கப் போய்விட்டேன்.

“தந்தியில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார் கல்கி.

“ஐம்பது” என்றேன்.

“இங்கே உனக்கு 75 ரூபாய் தருகிறேன். இங்கேயே சேர்ந்துவிடு” என்றார், உடனே சரியென்று ஒப்புக்கொண்டு மறுநாளே கல்கியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் பல வருடங்கள் ஆதித்தனாரை நான் பார்க்கவேயில்லை. அந்தக் குற்ற உணர்வு என்னுள் வெகுநாள் வரை உறுத்திக் கொண்டே இருந்தது.

பின்னர், கல்கியிலிருந்து விலகிச் சொந்தமாக ‘வெள்ளி மணி’ ஆரம்பித்து அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்பனையான போது ஆதித்தனார் ஒரு நாள் என்னையும் சின்ன அண்ணாமலையையும் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். சொல்லாமல் கொள்ளாமல் அவரிடமிருந்து நின்று விட்ட குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருந்த போதிலும் நான் நேரில் போனபோது அவர் அதைப் பற்றி எதுவுமே பேசாமல், “வெள்ளி மணி மிகப் பிரமாதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் திறமையை நான்தான் முதலில் புரிந்து கொண்டவன். கொஞ்ச நாள் பொறுத்திருந்தீர்களானால் நானே உங்களைத் தமிழனுக்கு ஆசிரியராக்கியிருப்பேன்” என்று கூறியபோது நான் வெட்கிப் போனேன். அதோடு நிற்காமல், “நான் வெள்ளி மணியைத் தமிழகம் முழுமைக்கும் விநியோகம் செய்ய விரும்புகிறேன். அந்த உரிமையை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

ஆதித்தனாருக்குத்தான் எவ்வளவு பெரிய மனது!
-----------

29. எழுத்துச் சண்டை ஏற்படுத்திய பரபரப்பு

கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறிகொடுத்தவன், அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்ததன் பயனாக, அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்து விட்டது. அது அத்தனை ஆரோக்கியமானதல்ல என்பதை நான் அறிந்திருந்த போதிலும், ஒரு மாபெரும் எழுத்தாளரைப் போலவே நமக்கும் எழுத வருகிறதே என்கிற பெருமையில் மூழ்கிப் போயிருந்தேன்.

அவருடைய ‘வீணை பவானி’ புத்தகத்துக்கு நான் பதிப்பாளர். சின்ன அண்ணாமலைக்கு எழுதித் தந்த முன்னுரை ஒன்றைப் படித்துப் பார்த்த கல்கி அவர்கள் என்ன அழைத்து, “பேஷ் ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறாய். இதைப் படித்த போது ‘நான் இதை எப்போது எங்கே எழுதினேன்?’ என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது” என்றார்.

‘விஷயமறிந்த வட்டாரத்துக்கு’ என்ற தலைப்பில் நான் ஒரு சமயம் எழுதிய நகைச்சுவைக் கட்டுரையைப் படித்த ராஜாஜி அவர்கள் என்னிடம், “நீங்க கிருஷ்ணமூர்த்தி (கல்கி) மாதிரியே எழுதரீங்க” என்று பாராட்டினார். அதை நான் கிடைத்தற்கரிய ஒரு பாராட்டாகக் கருதிப் பூரிப்படைந்தேன்.

நாளாக ஆக இது போன்று ஒருவர் பாணியைப் பின்பற்றி எழுதுவது ஓர் எழுத்தாளனின் தனித் தன்மையை அழித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல அந்தப் பாதிப்பிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டேன்.

1944-ல் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததும் எல்லோரையும் போல நானும் ஒரு கதை எழுதிக் கொண்டு போய் அவர் மேஜை மீது வைத்தேன். அப்போது கல்கி சொன்னர் :

“முதலில் நீ இந்தக் கதை எழுதும் ஆசையை விட்டுவிடு. கதை எழுதுகிறவன்தான் உதவி ஆசிரியராக வர முடியும் என்கிற பிரமை விலக வேண்டும். வெளியிலே இருந்து ஆயிரம் பேர் கதை எழுதுகிறார்கள். அவற்றிலிருந்து வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

உதவியாசிரியர் என்பவருக்கு முக்கியமாக ப்ரூஃப் திருத்தத் தெரிந்திருக்க வேண்டும். அரசியல், கலை விமரிசனம், பயணக் கட்டுரை, விகடத் துணுக்கு இதெல்லாம் எழுதத் தெரிய வேண்டும். சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுவது ரொம்ப முக்கியம். இவை எல்லாவற்றையும் விடக் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குறைத்துக் கூட்டி ‘எடிட்’ செய்யும் திறமை ரொம்ப ரொம்ப முக்கியம்.”

அன்று முதல் கல்கியின் இந்த அறிவுரையை நான் ஒரு வேத வாக்காக மதித்துச் செயல்பட்டேன்.

சொல்வதைச் செயலிலும் காட்டியவர் கல்கி. கதையை அவர் ‘எடிட்’ செய்வதைப் பார்ப்பதே ஒரு பல்கலைக் கழகத்தில் படிப்பது மாதிரி. ஒரு கதையிலோ கட்டுரையிலோ அவர் தேவையில்லாத வரிகளை, அல்லது பாராக்களை வெட்டி விடுவார். அங்கே ஒரே ஒரு வரி எழுதிச் சேர்ப்பார். பிறகு படித்துப் பார்த்தால் அந்தக் கதைக்கே ஒரு புதிய ஜீவன் பிறந்திருக்கும். அவர் எடுத்து விட்ட அந்தச் சில வரிகள் பயனற்றதாகி அந்த ஒரு வரி அத்தனை சமாசாரத்தையும் சொல்லியிருக்கும். கயிற்றின் முனையில் லூஸாகப் பிரிந்து கிடக்கும் சில நூல்களைச் சேர்த்துத் திரித்து விட்டால் அந்தக் கயிறு முழுவதும் எப்படி முறுக்கேறி ‘சிக்’கென்று ஆகிவிடுகிறதோ, அத்தகைய பலத்தை அந்த ஒரு வரி உண்டாக்கி விடும். இந்தக் கலையில் கல்கி ஒரு மாமன்னன்.

ஒருமுறை அவர் சொன்னர்: “சினிமா விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நாம் எழுதும் விமரிசனத்தைப் படித்ததும் வாசகர்கள் படத்தைப் பற்றிப் பேசுவதை மறந்து நமது விமரிசனத்தைப் பற்றியே பேச வேண்டும்.”

நந்தனார் படம் வெளியானதும் கல்கி அதற்கு ஒரு விமரிசனம் எழுதினர். விமரிசனம் வெளியானதும் எல்லாரும் படத்தை மறந்து விட்டு விமரிசனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்! அதே போல அவரது ‘தியாக பூமி’ கதை படமாக வெளியான போது விமரிசகர்களின் பேனா கல்கியைக் கொஞ்சம் கடுமையாகவே விமரிசித்தது. இவரும் விடவில்லே. அவற்றுக்குச் சுடச்சுடப் பதில் தர ஆரம்பித்தார். விமரிசகர்களும் கல்கியும் மாறி மாறிப் போட்ட எழுத்துச் சண்டை அப்போது வாசகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் காட்டிலும் சுவாரசியம் மிக்க ஒரு ‘காண்ட்ரவர்ஸி’யை நான் அப்புறம் பார்க்கவில்லை.

என்னுள் நகைச்சுவை உணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்து என்னை முதன் முதல் ஊக்குவித்தவர் கல்கி அவர்களே. ஒரு முறை கல்கி தோட்டத்தில் அவர் உலவிக் கொண்டிருந்த போது என்னை அழைத்து, “நீ ஒரு ஹாஸ்யத் தொடர் எழுத முயற்சி பண்ணலாமே. உனக்கு ஹ்யூமர் சரளமாக வருகிறதே” என்றார்.

ஓர் இன்ப அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். கல்கியே என்னைப் பற்றி இப்படி ஒரு கணிப்பு வைத்திருந்தது எனக்கு மிகப் பெரிய வியப்பாயிருந்தது.

உடனடியாக நான் எனது அந்தத் திறமையைச் சோதித்துப் பார்க்கவில்லை யென்றாலும் கல்கியின் வார்த்தை மனதின் ஒரு மூலையில் வேலை செய்து கொண்டேயிருந்தது. அந்தத் தெம்பு தான் பின்னொரு காலம் என் கற்பனையில் ‘வாஷிங்டனில் திருமண’த்தை உருவாக்கித் தந்தது. ‘வாஷிங்டனில் திருமணத்’தைப் படித்து விட்டு என்னைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். ஆனாலும் எத்தனை பேர் பாராட்டினாலும் எனக்கு ஒரு பெரிய குறை இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. அது. "நகைச்சுவையுடன் எழுது” என்று என்னை எழுதத் தூண்டிய கல்கி அவர்கள் ‘வாஷிங்டனில் திருமண’த்தைப் படித்துப் பார்க்க உயிரோடு இல்லாமல் போய் விட்டாரே என்பதுதான். யார் புகழ்ந்தாலும் கல்கி பாராட்டுவதற்கு இணையாகுமா?
--------------

30. போகிற இடமெல்லாம் ஒரு போட்டி

இரண்டாம் முறையாக நான் 1955-ல் கல்கியில் சேர்ந்த போது வாரா வாரம் உதவி ஆசிரியர்கள் எல்லோரும் கூடிப் புதிய அம்சங்கள் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவது வழக்கம். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதுமே உண்டு. பெரிய அளவில் சிறுகதைப் போட்டி ஒன்று அறிவித்து நிறைய ரொக்கப் பரிசு தரலாம் என்ற பொதுவான யோசனையை கல்கி அலுவலகத்தினர் வெளியிட்டார்கள். இதில் புதுமை எதுவும் கிடையாது. எல்லாப் பத்திரிகைகளுமே செய்யக் கூடியதுதான். எனக்கென்னவோ அப்படிச் செய்வதைவிடப் பரிசுத் தொகையைக் குறைத்து மாதா மாதம் சிறுகதைப் போட்டி நடத்தினால் அதன் மூலம் வளரும் எழுத்தாளர்களும் புதியவர்களும் நிறைய அளவில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றியது. பரிசுத் தொகை அதிகம் என்பதாலேயே சிறப்பாகக் கதை எழுத வந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த என் கருத்தை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எனவே மாதச் சிறுகதைப் போட்டி ஒன்று உடனேயே தொடங்கப்பட்டது. கதைகளும் நிறைய வந்தன. மாதா மாதம் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு நூறு ரூபாய் சன்மானம கொடுத்து வந்தோம். இந்தப் போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் இன்று புகழுடன் விளங்கும் திரு நா. பார்த்தசாரதி. இவருடைய ‘வலம்புரிச் சங்கு’ கதை கல்கி மாதச் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பெற்ற கதைதான்.

அப்புறம் சில மாதங்களுக்குள்ளாகவே நான் கல்கியிலிருந்து விலகி விகடனில் சேர்ந்து விட்டேன். அங்கே போனதுமே ‘முத்திரைக் கதை’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்று கூறினேன். நல்ல சிறுகதைகளுக்கு விகடனின் சிறப்பு முத்திரையிட்டு நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டுமென்பதே அந்தத் திட்டம். பின்னால் இந்த முத்திரை ஜெயகாந்தன் கதைகளுக்கு மட்டுமே தொடர்ந்து குத்தப்பட்டுக் கொண்டிருந்தது எனக்குப் பிடிக்காததால் அப்புறம் நான் இதில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்.

எழுத்தாளர்களுக்கு நிறைய சன்மானம் தரவேண்டும் என்ற என் ஆசையை நான் எங்கெங்கே பணி புரிந்தேனோ அங்கெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். பின்னர் ‘தினமணி கதிர்’ ஆசிரியரான போது ‘நட்சத்திரக் கதை’யை அறிமுகப்படுத்தி அந்தக் கதைக்கு இருநூற்று ஐம்பது ருபாய் சன்மானம் தருவதென்று முடிவு செய்தேன். அதைப் பார்த்துவிட்டு ஆனந்த விகடன் தன் முத்திரைக் கதைக்கான அன்பளிப்பை ஐந்நூறு ரூபாயாக உயர்த்தியது. இதை நான் அப்போது ஆசிரியராக இருந்த பத்திரிகைக்குப் போட்டியாகக் கருதவில்லை. மாறாக என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது, காரணம், எப்படியோ எழுத்தாளர்களின் சன்மானம் ரூபாய் ஐந்நூறு வரை உயர்ந்து என் அடிப்படை நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா!

கல்கியில் நான் ஆரம்பித்த ஒரு சிறிய திட்டம் இப்படிப் படிப்படியாக வளர்ந்து ஒரு சிறுகதை ஐந்நூறு ரூபாய் பெறுகிற அளவுக்கு உயர்ந்து அதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் உயர்ந்ததில் நான் அடைந்த பெருமகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவில்லை.
---------------

31. நூற்று அறுபதுக்கு மேல் நம்பரே தெரியாதா?

எனது மிக நெருங்கிய நண்பர்களுள் தி. ஜ. ரங்கநாதனும் ஒருவர். நானும் அவரும் 1936ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் சேர்ந்து வேலை பார்த்தவர்கள். சில நாட்கள் கழித்து நான் அந்த வேலையை விட்டு விட்டேன். ஆனாலும் தி. ஜ. ர. வையும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையையும் விடவில்லை.

வேலை எதுவுமில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தி. ஜ. ர. வுக்கு பளிச் சென்று ஓர் யோசனை உதித்தது.

“ஓய்! நீர் உடனே ஒரு புதுப் பத்திரிகை ஆரம்பியும். ‘கத்தரி விகடன்’ என்று அதற்குப் பெயர்” என்றார்.

“கத்தரி விகடனு!” என்று ஆச்சரியப்பட்டேன் நான்.

“ஆமாம். ஆனந்த விகடனுக்குப் போட்டி. இந்தப் பெயரில் இன்னொரு வசதியும் உண்டு, மற்றப் பத்திரிகைகளில் வரும் சுவாரசியமான விஷயங்களைக் கத்தரியால் வெட்டி இதில் வெளியிடலாம். டைஜஸ்ட் மாதிரி. பிற இதழ்களிலிருந்து விஷயங்களைக் கத்தரித்துப் போடுவதால் ‘கத்தரி விகடன்’ என்று பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும்.” என்று அவர் விளக்கினார்.

இதன் தொடர்பாக நேரக் கூடிய இன்னொரு லாபத்தையும் தி. ஜ. ர. எதிர்பார்த்தார். “‘விகடன்’ என்ற பெயரோடு இன்னெரு பத்திரிகை வெளிவருவதை ஆனந்த விகடன் வாசன் நிச்சயம் விரும்ப மாட்டார். எனவே ‘கத்தரி விகடன்’ வருவது தெரிந்ததும் உம்மைக் கூப்பிட்டு ஆனந்த விகடனிலேயே வேலை தந்தாலும் தரலாம்” என்றார் அவர்.

‘கத்தரி விகடன்’ வெளியாவது பற்றி ஹநுமானில் பெரிதாக விளம்பரப் படுத்தினேன். விளம்பர சார்ஜ் பின்னால் கொடுப்பதென்று ஏற்பாடு.

அப்போதெல்லாம் மாலை நேரங்களில் நானும் தி. ஜ. ர. வும் தம்புச் செட்டித் தெருவிலுள்ள எங்கள் ஓட்டல் அறையிலிருந்து நடந்தே சென்று ஹைகோர்ட் காம்பவுண்டுக்குள் மர நிழலில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஒரு நாள் அப்படிப் போய்க் கொண்டிருந்த எனக்குப் பின்னால் மிக நெருக்கத்தில் சைக்கிள் மணியோசை கேட்டது. ஆனந்தவிகடனில் ப்யூனாக இருந்த முனுசாமி என்பவர் சைக்கிளை நிறுத்தி இறங்கி என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

“ஆசிரியர் கல்கி உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே வந்து பார்க்கவும்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. கீழே தேவன் கையெழுத்துப் போட்டிருந்தார். தி. ஜ. ர.வின் எதிர்பார்ப்பு உண்மையாகி விடும் போல் தோன்றியது!

மறுநாள் காலை நான் விகடன் அலுவலகத்துக்குப் போய் ‘கல்கி’ அவர்களைச் சந்தித்தேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் அதற்கு ஒரு வாரம் முன்புதான் நான் வேறு பத்திரிகைகளில் பிரசுரமான எனது கட்டுரைகளின் தொகுப்போடு அவரிடம் போய் வேலை கேட்டேன். அப்போது அவர் என் கதைகளைப் புரட்டிப் பார்த்து விட்டு, “இதெல்லாம் ஒன்றும் சரியாக இல்லை. இப்போது வேலை எதுவும் இல்லை. பிறகு பார்க்கலாம், போய் வா” என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டார்.

இப்போது கல்கி என்னைப் பார்த்ததும், “நீதான!” என்று கேட்டார்.

“ஏதோ புதுப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறயாமே!”

"ஆமாம்.”

“யார் பணம் போடப் போகிறார்கள்?”

“எனக்குத் தெரிந்த பணக்காரர் ஒருவர்.”

“அவர் பணத்தை எங்கே போடப் போகிறார்? குளத்திலா”

சிறிது நேர மெளனம்.

“நீ ஏதோ கோஞ்ச நாளைக்கு முன் வேலை கேட்டாய் இல்லே? இப்போது உதவி ஆசிரியர் வேலை இருக்கிறது. வேணுமானல் சேர்ந்து கொள்ளலாம்.”

வேலை கிடைத்தால் போதும் என்று உள்ளுர அவசரப்பட்டாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் “சம்பளம்?” என்று இழுத்தேன்.

“எல்லோருக்கும் தருகிற மாதிரிதான் ஆரம்பத்தில் நாற்பது ரூபாய்” என்றார் கல்கி.

“இருந்தாலும், கத்திரி விகடனுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி விட்டன. நிறையப் பணம் செலவு செய்து விட்டார் ஒருத்தர். அவருக்கு எப்படித் திருப்பித் தருவது என்று தெரியவில்லை” என்று பொய் சொன்னேன். விளம்பரம் தந்ததைத் தவிர நான் ஒரு செல்லாக் காசும் செலவழிக்கவில்லை.

“இதுவரை எவ்வளவு பணம் செலவழித்தாய்?” என்று கல்கி கேட்டார்.

“நூற்று அறுபது ரூபாய் இருக்கும்” என்று சொன்னேன். அதுவும் பொய்தான்.

“அப்படியா? அதை நான் இங்கே ஆபீஸில் கொடுக்கச் சொல்கிறேன். கொண்டு போய் பணம் போட்டவரிடம் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.

அப்போதே விகடனில் வேலையில் சேர்ந்து கொண்டேன். சாயங்காலம் வேலை முடிந்து வீட்டுக்குப் போனதும் தி. ஜ. ர.விடம் விஷயத்தையெல்லாம் விவரமாகச் சொன்னேன். தாம் போட்ட திட்டம் வெற்றியடைந்தது பற்றி அவருக்கு ஏக சந்தோஷம். கூடவே என்னை ஒரு திட்டும் திட்டினர்.

“சுத்த அல்பமையா நீர். சொன்னதுதான் சொன்னீர். நூற்று அறுபது ரூபாய்க்கு மேலே உமக்கு நம்பரே தெரியாதா? அதிகமாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! கொடுக்கக் கூடிய இடத்தில் வாங்கியிருக்கலாம் இல்லையா?” என்று கடிந்து கொண்டார்.
--------------

32. வெள்ளி மணி பிறந்த கதை

ஆசிரியர் கல்கி தலையங்கம் எழுதுவது வியாழக் கிழமைகளில்தான். விரல்களால் கீழ் உதட்டைச் செல்லமாய்த் தேய்த்துக் கொண்டே எழுதுவது அவர் வழக்கம். அப்படி எழுதுகிறார் என்றால் கற்பனை அபாரமாக ஓடுகிறது என்று அர்த்தம்! மார்பை நிமிர்த்தியபடி மேஜை முன் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விட்டால் அவர் எதிரில் யானையைக் கொண்டு போய் நிறுத்தினாலும் அவர் கண்ணில் படாது!

அவர் தலையங்கம் எழுதும் நாட்களில் நான் காலை எட்டு மணிக்குள்ளாகவே அலுவலகத்துக்குப் போய் விடுவேன்.

எழுதுகிற தலையங்கத்தை ஒவ்வொரு ஷீட்டாக மேஜை மீது வைத்துக் கொண்டிருப்பார். இரண்டு மூன்று ஷீட் சேர்ந்ததும் அவற்றை எடுத்துக்கொண்டு போய் ஃபோர்மென் ராஜாபாதரிடம் கொடுப்பேன். பிரஸ்ஸுக்குப் போவதற்குள்ளாகவே அந்த ஷீட்டுகளைப் படித்து விடுவேன். எழுதிய மை உலர்வதற்கு முன்பே, கல்கியின் எழுத்தைப் படித்து விடுவதில் எனக்கு அப்படி ஓர் ஆர்வம். எனக்கு மட்டுமல்ல, எல்லா உதவி ஆசிரியர்களுக்குமே.

நான் நவகாளி யாத்திரை எழுதி முடித்த சில நாட்களுக்குள் கல்கியை விட்டுப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம், அல்லது துரதிருஷ்டம் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் செய்த ஒரு சிறு பிழை காரணமாக அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். (அது என்ன பிழை? அது என்ன கோபம்? என்பது எங்களிருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.) அப்படிப் பேசாமல் என்னை தண்டித்த அந்தக் கொடுமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் ராஜினாமாச் செய்து விட்டேன். ராஜினமாக் கடிதத்துடன் அவர் அறையில் போய் நின்றேன். என்னைக் கண்டதும், ஜாடையிலேயே என்னவென்று விசாரித்தார். கடிதத்தை நீட்டினேன். படித்துப் பார்த்துவிட்டு, “ம்...இது நான் எதிர்பார்த்ததுதான்” என்று கூறிவிட்டு “உன் முயற்சி கடவுள் அருளால் வெற்றி பெறுவதாக. என் வாழ்த்துக்கள்” என்று அந்தக் கடிதத்தின் கீழேயே நாலு வரிகள் எழுதி, அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு என் சம்பளக் கணக்கைத் தீர்த்துக் கொடுக்கும்படி தகவல் கொடுத்து விட்டார்.

அந்த ராஜினமாக் கடிதத்தில் அப்படி நான் என்ன எழுதியிருந்தேன்?

“சொந்தமாகப் புதிய பத்திரிகை ஒன்று தொடங்கப் போவதால் கல்கியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” இவ்வளவு தான்.

விலகுவதற்கு உண்மையான காரணம் புதிய பத்திரிகை தொடங்க வேண்டுமென்ற ஆசை அல்ல. விலக வேண்டிய நிர்ப்பந்த முடிவுக்கு வந்து விட்டதாலேயே புதிய பத்திரிகை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

கல்கியிடம் எனக்குக் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும், அவர் என்னுடன் பேசாமலிருந்த போதிலும் அவரிடம் எனக்கிருந்த பெரும் மதிப்பும் குருபக்தியும் எள்ளளவும் குறையவில்லை. அவரைப் பிரிகிறோமே என்று உள் மனம் ஓயாமல் விசும்பிக் கொண்டிருந்தது.

அன்றே அப்போதே கணக்கைத் தீர்த்துக் கொண்டு, திரு சதாசிவம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு நேராக மாம்பலத்திலுள்ள சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்தேன். கல்கியிடம் எனக்கேற்பட்டிருந்த உரசல் பற்றி சின்ன அண்ணாமலையிடம் முதல் நாள் மாலையே ஒரு மாதிரி சொல்லியிருந்ததால் நான் கல்கியிலிருந்து விலகி விட்டேன் என்ற செய்தி அவருக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை.

“அடுத்தாப்பல என்ன செய்யப்போறீக?” என்று கேட்டார்

“வெள்ளி மணி என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று தொடங்குவோம். நான் எடிட்டர். நீர் பப்ளிஷர். தமிழ்ப்பண்ணை வெளியீடாக இது வரட்டும்” என்றேன்.

இந்தச் சமயம் டெலிபோன் மணி அடித்தது. சின்ன அண்ணாமலை போனை எடுத்துப் பேசினார். அந்த முனையில் கல்கி.

“நீங்க இங்கே வந்துட்டுப் போக முடியுமா?” என்று சின்ன அண்ணாமலையைக் கேட்டார்.

அடுத்த கணமே சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கக் கிளம்பி விட்டார். அவர் திரும்பி வருகிற வரை தமிழ்ப்பண்ணையிலேயே—மசாலா தோசை தருவித்துச் சாப்பிட்டுவிட்டு—காத்திருந்தேன்.

சி. அண்ணுமலை திரும்பி வந்ததும், “கல்கி என்னய்யா சொன்னார்?” என்று கேட்டேன்.

“என்னை 'தீபம்’னு மாதப் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கச் சொல்கிறார், நீர் கல்கியை விட்டு விலகிவிட்ட செய்தியையும் சொன்னார்” என்றார்.

“அப்படியா? அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறீங்க? தீபம் ஆரம்பிக்கப் போறீங்களா, இல்லை, வெள்ளி மணி ஆரம்பிக்கப் போறீங்களா!”

“வெள்ளி மணி வாரப் பத்திரிகை. அதுக்கு நீங்க ஆசிரியர். தீபம் மாதப் பத்திரிகைதானே? அதுக்கு நான் ஆசிரியர். இரண்டுக்குமே டிக்ளரேஷன் வாங்கிடுவோம்” என்றர் சி. அ.

கல்கியின் விரோதத்துடன் வெள்ளி மணியைத் தொடங்கவோ நடத்தவோ எனக்கு விருப்பமில்லை. அவருடைய முழு ஒத்துழைப்பும் ஆசியும் இதற்கு ரொம்ப முக்கியம் என்று நான் கருதியதால், கல்கி, ராஜாஜி, டி. கே சி. மூவருடைய வாழ்த்துக்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகே வெள்ளி மணியை ஆரம்பித்தேன். அவர்கள் எழுதித் தந்த வாழ்த்துக்களை அப்படியே பிரசுரித்து, அட்டையில் டி. கே சியின் படத்துடன் முதல் இதழைக் கொண்டு வந்தேன்.

கல்கிக்கு இது ஒரு துணைப் பத்திரிகை போல் நடக்கும் என்று ஒரு குறிப்பும் அந்த இதழில் வெளியிட்டிருந்தேன்.

வெள்ளி மணிக்குத் தமிழ் வாசகர்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் கண்டதும் கல்கிக்கு என் மீது இருந்த கோபம் அடியோடு மறைந்து போயிற்று.

“பேஷ், பேஷ்! முதல் இதழே ரொம்பப் பிரமாதம் ரொம்ப காலமாக நடக்கும் பத்திரிகை மாதிரி இருக்கிறது” என்று என்னை மனமாரப் பாராட்டியதுடன் மறுநாளே என்னையும் சின்ன அண்ணாமலையையும் அழைத்துத் தம் வீட்டில் ஒரு விருந்து அளித்தார்.

பாராட்டியதோடு, விருந்து அளித்ததோடு நிற்காமல் வெள்ளி மணியை மேலும் வெற்றிகரமாகக் கொண்டு வருவதற்கு என்ன வழி என்று கவலையோடு யோசிக்கலானர். “பத்திரிகை நடத்தப் பணம் வேண்டுமே. பணத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பத்திரிகை என்றால் எப்போதும் பணத்துக்கு ஒரு பகாசுரப் பசி இருந்து கொண்டே இருக்கும். யாராவது ஒரு பணக்காரரைப் பிடித்துப் போடுங்கள். அப்போதுதான் நீங்கள் பத்திரிகையின் மற்ற வேலைகளை முழு முயற்சியோடு கவனிக்க முடியும்” என்றார்.

“யாரைப் பிடிக்கலாம்?” என்று சின்ன அண்ணாமலை கேட்டார்.

நானும் சின்ன அண்ணாமலையும் சேர்ந்து பணக்காரர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று தயாரித்தோம். அதில் திரு ஏவி. மெய்யப்பன் பெயரும் ஒன்று. மெய்யப்பன் பெயருக்கு நேராகப் பேணாவால் டிக் செய்து, “இவர்தான் சரி. இவருடன் நான் இன்றைக்கே பேசி விடுகிறேன். பிறகு நீங்கள் இருவரும் இவரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றார். நானும் சின்ன அண்ணாமலையும் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குப் புறப்படுகிற நேரத்தில் கல்கி சி. அண்ணாமலையைத் தனியாக அழைத்து “இப்போதைக்கு ‘தீபம்’ பத்திரிகை வேண்டாம். வெள்ளி மணி மட்டும் நடத்தினால் போதும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

வெள்ளி மணி பிறந்த கதை இதுதான்.
---------

33. நீங்க என்ன வட ஆற்காடா?

பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற திரு ஜி. டி. நாயுடுவின் மகன் கோபால் திருமணத்திற்கு நான் போயிருந்தேன்.

என்னைக் கண்டதும் திரு நாயுடு அவர்கள் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “நீங்கள் இன்று முழுதும் என் பக்கத்திலேயே இருக்க வேண்டும்; என்னுடனையே சாப்பிடலாம்” என்று ஓர் உத்தரவு போல் கூறிவிட்டார். அவர் பேச்சைத் தட்ட முடியாமல் நான் அன்று முழுதும் அவர் கூடவே இருந்தேன்.

சாப்பாட்டு நேரத்துக்குச் சற்று முன் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய், “வாங்க. சமையல்கட்டு வரை போயிட்டு வரலாம்” என்று என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே சமையல் ஏக தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கூடை கூடையாக அப்பளங்களைப் பொரித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நாயுடுவின் முகம் ஒரு மாதிரியாக மாறியது. விடுவிடுவென்று எல்லா அப்பளக் கூடைகளையும் குழாயடிக்கு இழுத்துச் சென்று குழாயைத் திறந்து விட்டு விட்டார். சில வினாடிகளில் அவ்வளவு அப்பளங்களும் நனைந்து ஊறிப் பஞ்சாய் அமுங்கிப் போயின. அப்புறம்தான் நாயுடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

“இவ்வளவு அப்பளங்களையும் தண்ணீரில் நனைத்து வீணாக்கி விட்டீர்களே” என்பது போல் நான் ‘த்சூ!’ கொட்டினேன்.

நாயுடு சொன்னார்:

“அப்பளத்துக்கான மாவு தயார் செய்கிற இடத்தைப் பாலக்காட்டில் ஒரு சமயம் பார்த்தேன். அதிலிருந்து எனக்கு இந்த அப்பளத்தின் மீதே ஒரு வெறுப்பு வந்து விட்டது.”

“அங்கே ஒரு ஆள் தன் அழுக்குக் கால்களால் அப்பள மாவை மிதித்துக் கொண்டிருந்தான். அந்த இடமும் சுகாதாரக் கேடான சூழ்நிலையில் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தது முதல், இனி கடையில் அப்பளம் வாங்கிச் சாப்பிடுவதில்லை” என்ற முடிவெடித்து விட்டேன். இப்போதெல்லாம் நான் அப்பளம் சாப்பிடுவதென்றால் ஒன்று அது என் வீட்டில் தயார் செய்ததாக இருக்க வேண்டும். அல்லது கி. ஆ. பெ. விசுவநாதம் வீட்டிலிருந்து வரவேண்டும். இவற்றைத் தவிர வேறு எந்த அப்பளத்தையும் சாப்பிடுவதில்லை. எனவேதான் இந்தக் கல்யாணத்தில் யாருக்கும் அப்பளம் போடக் கூடாது என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டிருந்தேன். ஆனால் என்னையும் மீறி என் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது அதனால்தான் இங்கு வந்து பார்த்தேன். பாத்தீங்களா? நான் நினைத்தது போலவே இங்கு நடந்திருக்கிறது?” என்றார்.

நாயுடுவின் பிடிவாதம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே, ஆனாலும் ஒரு கலியாணத்தில் அப்பளம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவேதான். நாயுடு குடும்பத்தினர் அவருக்குத் தெரியாமல் அப்பளத்தைக் கடையில் வாங்கி வந்து பொரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சில காலம் கழித்து, மீண்டும் நான் நாயுடுவின் பங்களாவுக்குப் போயிருந்தேன். சாப்பிட்டு முடிந்ததும் மேஜையிலிருந்த பழத் தட்டைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் தயக்கம் காட்டினேன்.

நாயுடுவே ஒரு வாழைப் பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்து, “இதைச் சாப்பிட்டு விட்டு இது என்ன ஜாதிப்பழம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

சாப்பிட்டுப் பார்த்தேன். ரொம்பவும் ருசியாக இருந்தது.

“ரஸ்தாளி” என்றேன்.

உடனே நாயுடு, “உங்களுக்கு வடஆற்காடு மாவட்டமா?” என்று கேட்டார்.

“ஆமாம்; அதெப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்றேன் நான் வியப்புடன்.

“இந்த மாதிரி என் வீட்டுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் இந்தப் பழத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்கிறேன். அவரவர்கள் தங்கள் மாவட்டதில் எந்த வகை வாழைப்பழம் கிடைக்கிறதோ அந்தப் பெயரைச் சொல்லி அது மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அந்த ருசி ஒன்றுதான் அவர்களுக்குப் பழக்கமானதால் அப்படிச் சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்கள் பழத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கு அது விளையும் மாவட்டம் தெரிந்து விடுகிறது! அதனால் தான் இப்போது நீங்கள் ரஸ்தாளி என்றதும் வடஆற்காடு என்று சொல்லி விட்டேன்” என்று கூறிச் சிரித்தார்.

“அப்படியானால் உண்மையிலேயே இது என்ன ஜாதி?” என்று கேட்டேன்.

“இது எந்த ஜாதியும் இல்லை. தனி ஜாதி. கோபால் கல்யாணத்தின் போது அப்பளத்தின் மீது குழாய்த் தண்ணிர் கொட்டியது ஞாபகம் இருக்கிறதா? தண்ணீரில் ஊறிப் போன அந்த அப்பளங்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்து மூன்றாவது நாள் வெளியே எடுத்தேன். என் தோட்டத்திலுள்ள வாழை மரங்களின் அடிப்பாகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் துளைகள் செய்தேன். அந்தத் துளைகளில் ஊறிய அப்பளங்களைப் போட்டு அடைத்தேன். ஆச்சரியப்படும் அளவுக்கு மரம் வேகமாக வளர்ந்து, பழங்கள் பெரிதாகவும் ரொம்ப ருசியாகவும் இருக்கின்றன. அந்தப் பழம்தான் நீங்கள் இப்போது சாப்பிட்டது. இப்படித்தான் நான் எதையாவது செய்யப்போக அதுவே ஒரு புதுமை கலந்த விந்தையாகி விடுகிறது. உடனே தாவர விஞ்ஞானி நாயுடு என்று உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எனக்குப் பட்டம் சூட்டி விடுகிருர்கள்” என்றார் நாயுடு.
-----------

34. கடன் வாங்கி கடன் தீர்த்தேன்!

எனக்கு என்றுமே காமராஜர் மீது அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. காந்திஜிக்கு அடுத்தபடியாக நான் மதித்த தலைவர் அவர் ஒருவர்தான். அவரோடு நான் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். அம்மாதிரி நேரங்களில் அவருடன் நிறையப் பேசி அவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய எளிமை, நேர்மை, ஏழைகளின் மீது காட்டிய கருணை போன்ற உயர்ந்த பண்புகள் அவரை உயரத்தில் கொண்டு வைத்து விட்டன. பயணங்களின் போது பேச்சு வாக்கில் என்னைப் பற்றி எப்போதாவது அவர் விசாரிப்பதுண்டு. அவரிடம் நான் என்றைக்கும் எந்தவிதமான சொந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்ததில்லை. இதை அவர் நன்கு அறிந்து கொண்டிருந்ததால்தான் என்னை அத்தனை நெருக்கமாகப் பழகுவதற்கு அனுமதித்தார்.

ஒரு நாள் அவர் என்னைக் கேட்டார்:

“என்ன, சொந்தமா வீடு கீடு ஏதாவது வச்சிருக்கீங்களா?”

“இல்லை.”

“இப்படியே இருந்தா எப்படி? நீங்க வெங்கட்ராமனைப் பாருங்க” என்றார் அவராகவே.

அப்போது திரு ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வீட்டு வசதி அமைச்சராக இருந்தார். நான் காமராஜர் சொன்னார் என்பதற்காக வெங்கட்ராமனைப் போய்ப் பார்க்கவில்லை.

ஆனாலும் ஒருநாள் அவரைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு காரணமாக ஏற்பட்டது. ‘சத்ய சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி. அதற்கு நான் செயலாளராக இருந்த போது ஒருநாள் திரு வெங்கட்ராமனைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் நிகழ்ச்சிகள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற வேண்டியிருந்ததால் அந்த இடத்தை டிராக்டர்கள் கொண்டு மேடு பள்ளம் நிரவி சுத்தப்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவரிடம் போயிருந்தேன்.

இந்த விஷயத்தை நான் அவரிடம் சொல்லப் போயிருந்த போது அவர் “வாங்க, இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுங்க” என்று ஒரு விண்ணப்பத்தாளைத் தம் மேஜை டிராயரிலிருந்து எடுத்து என்னிடம் தந்தார். பார்த்தால் ஹவுஸிங் போர்டு அப்ளிகேஷன்.

காமராஜர், ஏதோ என்னிடம் ஒப்புக்காகச் சொல்லாமல் உடனடியாக திரு வெங்கட்ராமனையும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். ஃபாரத்தை நிரப்பிக் கொடுத்தேன். சில நாட்களில் எனக்கு அண்ணா நகரில் ஒரு வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

சரி, மனை கிடைத்தாயிற்று. வீடு கட்டுவது எப்படி? என்னால் அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. காலி மனையை அப்படியே விட்டு வைத்திருந்தேன். பணம் சேர்த்து வீடு கட்டி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படாததால் நான் அந்தப் பணக்காரக் கனவைக் காண்பதே இல்லை.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மாறி தி. மு. க. பதவிக்கு வந்தது. வீட்டு வசதி அமைச்சராக திரு க. ராசாராம் பதவி ஏற்றார். அண்ணா நகரிலுள்ள தமிழ்வாணன் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு வத்திருந்த திரு ராசாராம் அங்கே என்னைக் கண்டு விட்டு, “நீர் எப்போது வீடு கட்டப் போகிறீர்?” என்று கேட்டார். என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்களில் அவரும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஏற்கனவே எனக்கு மனை ஒதுக்கப்பட்டாயிற்று. ஆனாலும் என்னால் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். “அப்படியா?” என்று கேட்டவர் தாமாகவே முன் வந்து ஹவுஸிங் போர்டு மூலம் வீட்டைக் கட்டி முடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

“முதலில் எவ்வளவு பணம் கட்ட முடியும்?” என்று கேட்டார்.

“பணமா? அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன். சிரித்து விட்டு, சரி, நீர் வாங்கி வைத்துள்ள நிலத்தின் மதிப்பையே கட்ட வேண்டிய முன் பணத்துக்கு ஈடாக வைத்துக் கொண்டு வீட்டை முடித்துத் தர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போனார். அப்புறம் சில மாதங்களுக்குள்ளாவே வீட்டையும் கட்டிக் கொடுத்து விட்டார்.

பின்னர் மாதா மாதம் என் தவணைத் தொகையைத் தவறாமல் கட்டி வந்தேன். சில மாதங்களுக்கு முன்புதான் சீட்டுக் கம்பெனி, ஒன்றில் கடன் வாங்கிப் பாக்கித் தொகை முழுவதையும் கட்டித் தீர்த்தேன்.

என் வீட்டைப் பொறுத்தவரை காமராஜர், ஆர். வெங்கட்ராமன், ராசாராம் இம்மூவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். பாக்கியைக் கட்டி முடிக்க எனக்குப் பண உதவி செய்த அந்த வங்கிக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
-------------

35. தூக்கத்திலிருந்து தூக்கம் வரை...

ஆனந்த விகடன் அலுவலகம் அப்போது பிராட்வேயில் இருந்தது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கதை. கல்கி விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த காலம். துமிலன் தேவன், நாடோடி, கதிர், மாலி, தாணு இவர்களோடு சேர்ந்து பணி புரிந்த பொற்காலம். அன்றாடம் வருகிற சிறுகதைகளை அவ்வப்போது படித்து ஒவ்வொன்றுக்கும் கதைச் சுருக்கம் எழுதி வைக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. நான் அப்போது ஒரு குட்டி உதவி ஆசிரியர்.

ஒருநாள் இரவு மினர்வா டாக்கீசில் நைட் ஷோ பார்த்து விட்டு மறுநாள் காலையில் ஏழரை மணிக்கே ஆபீசுக்குப் போய் விட்டேன். பத்து மணிக்குத்தான் ஆபீஸ் என்றாலும், படிக்க வேண்டிய கதைகள் பாக்கி சேர்ந்து போயிருந்ததால் கொஞ்சம் சீக்கிரமாகவே போய் விட்டேன். காலை வேளை, வயிற்றிலே இட்லி சாம்பார். பாஃன் காற்றில் அப்படியே தூங்கி விட்டேன். என் போதாத வேளை திரு வாசன் அவர்கள் அன்று பார்த்து ஆபீஸுக்குக் காலையிலேயே வந்திருக்கிறார். ஒவ்வொரு டிபார்ட்மெண்டாகப் போய் மேற்பார்வையிட்டிருக்கிறாா்.

என் அறைப் பக்கம் வந்தபோது நான் மேஜையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டு என்னை எழுப்பாமலே போய் விட்டிருக்கிறார். அவ்வளவுதான். அன்று பகலே எனக்குச் சீட்டுக் கிழித்து விட்டார்கள்.

இரண்டாம் முறை நான் விகடனில் சேர்ந்த போது அதன் முழு நிர்வாகப் பொறுப்பையும் வாசனின் புதல்வர் திரு பாலசுப்ரமணியன் ஏற்றிருந்தார். என் நகைச்சுவைப் பேச்சிலும் எழுத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி என்ன உற்சாகப்படுத்தியவர் பாலு அவர்கள்தான். ‘எடிடோரியல் டிஸ்கிஷன்’ அடிக்கடி நடைபெறும். என் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பிட்ட நேரம்தான் வேலை என்பது கிடையாது. சில நாட்களில் இரவு முழுதும் கூட ஆபீஸிலேயே தங்கி வேலை செய்வோம்.

எடிடோரியல் டிஸ்கஷனுக்கென்று தனியாகப் பெரிய அறை ஒன்றை ஒதுக்கி, அதில் மேஜை நாற்காலிகள் போடாமல், மார்வாரி திண்டுகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒருநாள் பாலுவிடம் சொன்னேன். மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு வேலை செய்வது எனக்குப் பிடிக்காத ஒன்று. சுதந்திரமாக இயங்குவதற்கு ஏற்றபடி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது என் கருத்து பாலு அதை அங்கீகரித்தார்.

சிந்திப்பது, எழுதுவது, ப்ரூஃப் திருத்துவது ஆலோசிப்பது என்று இப்படி மாறி மாறி ஓயாது வேலை செய்தபோது ஒருநாள் நான் பாலசுப்ரமணியன் அவர்களிடம், “உதவி ஆசிரியர்கள் களைப்படையும் போது சற்று நேரம் படுத்துத்தூங்க ஒரு சின்ன மெத்தையும் தலையணையும் இருந்தால் வசதியாக இருக்கும். அவரவர்கள் அறையிலேயே படுத்துத் தூங்கிவிட்டுப் பிறகு மெத்தையைச் சுருட்டி பீரோவுக்குள் வைத்து விடலாம்” என்றேன். அவர் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் மறுநாளே எல்லாருடைய அறைக்கும் மெத்தையும் தலையணயும் வந்து சேர்ந்து விட்டன!

ஒருநாள் நான் என் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது பாலசுப்ரமணியன் என் அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். “என்ன ஸார், தூக்கமா?” என்று கேட்டார்.

ஆமாம் நாற்பது வருஷங்களுக்கு முன் நான் இந்த, ஆபீஸில் தூங்கியதற்காகத் தங்கள் தந்தையார் என்னை வேலையை விட்டு அனுப்பிவிட்டார். தாங்களோ இப்போது மெத்தை தைத்துப் போட்டு என்னைத் தூங்கச் சொல்கிறீர்கள். இதை நான் என்னுடைய வெற்றியாகக் கருதுகிறேன்” என்றேன். சிரித்தார்!

இந்த சமாசாரத்தை நான் டி. வி. பேட்டியின் போதும் சொன்னேன். அதைக் கேட்டு விட்டு பாலு என்னை டெலிபோனில் அழைத்து, “உங்கள் நகைச்சுவை உணர்வு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நான் உங்கள். டி. வி. பேச்சை ரொம்ப ரசித்தேன். ஆபீஸில் தூங்கிய விஷயத்தை இவ்வளவு நகைச்சுவையோடு அழகாகச் சொல்லி விட்டீர்களே!” என்று பாராட்டினாா்.
------------

36. பெரியாரை சாப்பிட வைத்தவர்

அதிசய மனிதர் திரு ஜி. டி. நாயுடு 1959-ம் ஆண்டு லண்டனுக்குப் போயிருந்போது நான் விகடனில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்த நாயுடு அவர்கள் லண்டனிலிருந்து எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

“இங்கு சங்கதிகளைப் பத்திரிகைகளில் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சாமர்த்தியமாகவும் பெருமையாகவும் யாரும் விரும்பத்தக்க வகையில் வருணித்துக் கட்டுரைகள் எழுதுகின்றர்கள். ஆனால் அவர்களும் கூடத் தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய முறையில் நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மிக ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். திரு நாயுடு அவர்களின் அந்தக் கடிதத்தை இன்னமும் (ஆறு வீடுகள் மாற்றிய பிறகும் தொலைந்து போகாமல்) பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். உற்சாகம் குன்றும் போதெல்லாம் அந்தக் கடிதத்தையும் அதைப் போன்ற இன்னும் பல கடிதங்களையும் எடுத்துப் படித்துப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் பெறுவேன்.

ஜி.டி. நாயுடு லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தார். என்னை நேரில் சந்திக்க வேண்டுமென்று போனில் கூப்பிட்டார். காஸ்மாபாலிடன் கிளப்புக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு பப்பாளிப்பழங்கள் கொடுத்தனுப்பினார். அது முதல் எங்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம் வளர்பிறையாக வளர்ந்து உயர் நட்பாக மலர்ந்தது.

நான் எப்போது கோவைக்குப் போனாலும் நாயுடுவைச் சந்திக்காமல் திரும்புவதில்லை. அதேபோல் நாயுடு அவர்களும் சென்னை வரும்போதெல்லாம் என்னைக் கூப்பிட்டுப் பேசாமல் இருப்பதில்லை.

ஒரு சமயம் நான் கோவைக்குப் போயிருந்தபோது நாயுடு பங்களாவுக்குப் போன் செய்து அவரோடு பேசினேன். மறுநாள் காலை எட்டு மணிக்கு அவர் வீட்டில் சந்திப்பதாக முடிவானது. ஓட்டலிலேயே காலை டிபனை முடித்துவிட்டு அவருடைய பங்களாவுக்குப் போனேன். நான் உள்ளே நுழைந்த சமயம் அவர் ராமசாமிப் பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் பெரியாரை வழி அனுப்பி வைத்து விட்டு என்னிடம் வந்து “வாருங்கள், சாப்பிடப் போகலாம்” என்று உள்ளே அழைத்தார்.

“நான் காலையிலேயே சாப்பிட்டாயிற்று! ஓட்டலிலேயே முடித்து விட்டேன்!” என்றேன்.

“அதெல்லாம் முடியாது. உங்களை யார் சாப்பிடச் சொன்னது? எட்டு மணிக்கு உங்களை வரச் சொன்னதே நாம் இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்பதற்குத்தானே? இங்கே இட்லி, உப்புமா எல்லாம் ரெடியாக இருக்கிறது. சாப்பிடாமல் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று பிடிவாதம் பிடித்தார் நாயுடு.

“முடியவே முடியாது” என்றேன் நான்.

“அதெல்லாம் முடியாது; சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்” என்றார் அவர். நானும் பிடிவாதத்தைத் தளர்த்த வில்லை.

“லண்டனில் பெரியார் ஒருமுறை இப்படித்தான் சாப்பிட முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் அவரை நான் விடவில்லை. பெரியாரையே சாப்பிட வைத்தவன் நான்” என்றார் நாயுடு பெருமையோடு.

“அதென்ன கதை” என்று கேட்டேன் ஆவலுடன்.

“லண்டன் போயிருந்த போது நான் தங்கியிருந்த ஓட்டலிலேயே பெரியார் ஈ.வெ.ராவும் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவருக்குப் போன் செய்து, “கீழே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்து விடுங்கள், பேசலாம்” என்று சொல்லிவிட்டுக் கீழே போய் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் கீழே வத்தார். அவர் வருவதற்குள் அவருக்கும் சேர்த்து ப்ரேக்ஃபாஸ்ட் ஆர்டர் செய்திருந்தேன், அந்த ஐட்டங்களைக் கண்டதும் “நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேனே! இப்போது இன்னொரு முறை சாப்பிட முடியாது” என்றார்.

“உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணியாகி விட்டது. நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடா விட்டாலும் “பில் பணம் கொடுத்தாக வேண்டும்” என்று நான் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு அப்படியா? எவ்வளவு பில் வரும்?” என்று கேட்டார் பெரியார்.

“பதினேந்து பவுண்ட் வரலாம்” என்று சொன்னேன்.

உடனே, நம் ஊர் ரூபாய் எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு. “ஐயோ. அவ்வளவு ரூபாயா? சரி, சரி” என்று அவ்வளவு ஐட்டங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுத் தீர்த்தார். வயிற்றில் இடமே இல்லை என்று சொன்னவருக்கு அப்புறம் எப்படி இடம் கிடைத்தது என்று தெரியவில்லை! “சரி; இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார் நாயுடு.

“பெரியார் சாப்பிட்டார் என்பதற்காக நானும் சாப்பிட முடியுமா என்ன?” என்று எழுந்தேன் நான்.

“சரி. அப்படியானால் போய் வாருங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டார் நாயுடு.

காரில் ஏறி உட்கார்ந்தேன். கேட் வரை போன கார் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெற்றிகரமாக வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. இது நாயுடுவின் வேலையாகத்தான் இருக்கும் என்பது எனக்கு உடனே புரிந்து போயிற்று. திரும்பி பங்களாவுக்கே போனேன்.

“ஏன் போகலயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போல் குறும்புச் சிரிப்பு சிரித்துக்கொண்டே கேட்டார் நாயுடு.

“கேட் பூட்டியிருக்கிறதே என்ன செய்ய?”

“நீங்களே சாவிதானே! பூட்டைத் திறந்து கொண்டு போக வேண்டியதுதானே?” என்று கூறிவிட்டு பலக்கச் சிரித்தார்.

கடைசியில், இட்லியும் உப்புமாவும் சாப்பிட்ட பிறகே என்னை வெளியே அனுப்பினார்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என் மூத்த மகள் ஜெயந்தியின் திருமணத்துக்கு நாயுடு அவர்கள் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு பாக்கெட் கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். அந்தப் பரிசை என் மகள் என்னிடம் கொடுத்து “அப்பா! நாயுடு உங்களுக்குத்தான் கொடுத்திருப்பார், ஆகையால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டாள். கோலி போன்ற கண்ணாடிக் கூண்டு வடிவத்தில் அமைந்துள்ள அந்த ஜெர்மன் கடிகாரம் இன்றும் இன்னமும் இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு நாயுடு அவர்களின் நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கடிகாரத்தை எடுத்து வாஞ்சையோடு பார்ப்பேன். மெலிதான அதன் விநாடிமுள் துல்லியமாக நகரும்போது நாயுடு அவர்களே நேரில் வந்து உரையாடுவது போல், ஒரு பிரமை தோன்றும்!
--------------

37. ஏவி. எம். சொன்ன வார்த்தைகள்

வெள்ளி மணி முதல் மூன்று இதழ்களைக் கண்ட பிறகு கல்கியின் மன நிலையில் பெரும் மாறுதல் நிகழ்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. மிகுந்த உற்சாகத்தோடு, “அப்படிச் செய்ய வேண்டும்; இப்படிச் செய்ய வேண்டும்” என்று ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஏற்பட்டிருந்த இந்த மாறுதலுக்கு என்ன காரணம்?

அவருக்கும் திரு சதாசிவத்துக்கும் உள்ள ஸ்தாபன உறவில் லேசாக ஒரு விரிசல் ஏற்பட்டிருந்ததும், அந்த விரிசலின் இடைவெளி வரவர அகலப்பட்டுக் கொண்டு போன நேரத்தில், வெள்ளி மணி தோன்றியதால் வெள்ளிமணியின் எதிர்காலத்தையும் தம்முடைய எதிர்காலத்தையும் அவர் உள் மனம் அடிக்கடி ஐக்கியப் படுத்திப் பார்த்துக் கொண்டதும்தான்.

அப்போது ஏவி. எம். ஸ்டுடியோ தேவகோட்டையில் இருந்தது.

பர்ணசாலைகள் போல் சிறு சிறு குடில்கள் போட்டு எளிய முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் உலாவிய போது ஒரு சினிமா ஸ்டுடியோவில் இருக்கிறோம் என்கிற நினைப்பே உண்டாகவில்லை.

எனக்கும் சின்ன அண்ணாமலைக்கும் திரு ஏவி. எம். அவர்கள் தம் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருத்தார். முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பிதழ் வந்தபோது எங்களுக்கு அது வியப்பாக இல்லை. காரணம், முதல் நாளே கல்கி அது பற்றி எங்களிடம் சொல்லி விட்டார். “அழைப்பு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். நாம் மூவரும் அடுத்த வாரம் தேவகோட்டையில் நடைபெறும் அந்தத் திருமணத்துக்குப் போகிறோம்” என்றார்.

முகூர்த்தம் முடிந்ததும் நாங்கள் மூவரும் ராமராஜ்யா தமிழ் டப்பிங் படம் பார்ப்பதற்கு ஏவி. எம். ஏற்பாடு செய்திருந்தார். அது முடிந்ததும் ஏவி. எம். எங்களைத் தனியாகத் தம் அறையில் சந்தித்துப் பேசினார்.

“இங்கே காரைக்குடியில் என்னுடைய ராஜாஜி அச்சகம் இருக்கிறது, அதைப் போய்ப் பாருங்கள். அங்கே உள்ள அச்சு இயந்திரங்களில் எது ‘வெள்ளி மணி'க்குத் தேவைப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதை உடனே லாரியில் ஏற்றிச் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.

வெள்ளிமணியின் வளர்ச்சியில் ஏவி. மெய்யப்பன் முழு அக்கறையுடன் பொருளாதார ரீதியாக உதவ முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அவருடைய பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.

பகல் இரண்டு மணிக்கு மேல் கல்கியுடன் நானும் சி. அ. வும் ராஜாஜி பிரஸ் பார்ப்பதற்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது கல்கி என்னிடம் சொன்னர்: “சாவி, இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நான் வெள்ளிமணிக்கு வந்துவிடப் போகிறேன். ஆமாம்; பத்திரிகையை இன்னும் பிரமாதமாகக் கொண்டு வர வேண்டும்.”

எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. கல்கியின் இந்த வார்த்தைகள் என்னை உணர்ச்சி வெள்ளத்தில் திணற அடித்து விட்டன. அதைச் சமாளித்துக் கொண்டு “அப்படியா! அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்றேன்.

சில நாட்களுக்கு முன் கல்கியை விட்டு நான் விலகியது, அவர் கோபப்பட்டது. இப்போது அவரே வெள்ளி மணியில் சேர முன் வந்திருப்பது — இதையெல்லாம் எண்ணிய போது மனதுக்குள் சந்தோஷம் பொங்கியது.

சென்னை திரும்பியதுமே மௌண்ட் ரோடுக்குப் பக்கத்தில் அச்சகம் வைப்பதற்கான இடத்தைப் பிடித்து விட்டோம். அதற்கடுத்த வாரமே அச்சு இயந்திரம் லாரியில் வந்து இறங்கி விட்டது.

ஒரு நாள் கல்கி என்னைக் கூப்பிட்டனுப்பினார். “நானும் டி. கே. சி.யும் சின்ன அண்ணாமலையை அழைத்துக் கொண்டு சாந்தி நிகேதன் போகிறோம். திரும்பி வர புத்துப் பதினைந்து நாட்கள் ஆகும். இப்போது ஏவி. எம். சென்னையில் இருக்கிறார். அவரிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். இந்த வருடம் கல்கி தீபாவளி மலர் கிடையாது. ஆகையால் வெள்ளி மணி தீபாவளி மலர் உண்டு. நான் அதற்கு ஒரு கதை எழுதித் தருகிறேன்.ஏவி. எம்.மைப் போய்ப் பார், பணம் தருவார்” என்றார்.

கல்கி சாந்தி நிகேதன் புறப்பட்டுப் போனதும் நான் பாலாஜி நகரிலிருந்த திரு ஏவி. எம். அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்.

“வெள்ளி மணி ரொம்ப நன்றாயிருக்கிறது. கல்கி உங்களிடம் ரூபாய் பத்தாயிரம் தரச் சொல்லியிருக்கிறார். இப்போது ஐயாயிரம் தருகிறேன்” என்று கூறி நோட்டுக் கற்றைகளை ஒரு சின்னப் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பெட்டியை என்னிடம் தந்தார். “பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறித் தம்முடைய காரிலேயே என்னை அனுப்பி வைத்தார்.

“கையெழுத்து எதுவும் வேண்டாமா?” என்று கேட்டேன் நான்.

“உங்களைப் பற்றி கல்கி என்னிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் நவகாளி செல்லும் போது ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினராம். அந்த ஆயிரத்தில் நானுாற்றுச் சொச்சம் ரூபாயைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டதோடு பயணிச் செலவு விவரங்களையும் உடனே கணக்கெழுதிக் கொடுத்து விட்டீர்களாம். உங்களைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார். எனக்கு அவருடைய இந்த ஸர்ட்டிபிகேட் ஒன்றே போதும். உங்களை நான் நம்புகிறேன்” என்றார் ஏவி. எம்.

ராஜா ஸர் முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான கமர்ஷியல் அச்சகம் அப்போது அரண்மனைக்காரன் வீதியில் இருந்தது. வெள்ளி மணி அங்கேதான் அச்சாகிக் கொண்டிருந்தது.

பெரிதாகத் திட்டமிட்டு வெள்ளி மணி தீபாவளி மலர் முழுதும், ஆர்ட் காகிதத்திலேயே அச்சிட்டோம். வியாபாரத் திறமையோ அனுபவமோ இல்லாத காரணத்தாலும் உற்சாக மிகுதியில் எல்லாம் விற்று விடும் என்ற அசட்டு நம்பிக்கையினாலும் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டு விட்டோம்.

மலர் நன்றாகவே அமைந்தது. ஆனால் ஆயிரம் பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை. பெருத்த நஷ்டம். பாக்கி அதிகம் சேர்ந்து விடவே பணம் கொடுத்தால்தான் இனி அச்சிடுவோம் என்று கமர்ஷியல் பிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள்.

விஷயத்தைக் கல்கியிடம் போய்ச் சொன்னபோது, “ம்... அப்படியா? சரி சரி, பத்திரிகையை நிறுத்தி விடுங்கள். நஷ்டத்தோடு எத்தனை நாள் நடத்த முடியும்? ஏவி. எம் இனி பணம் தரமாட்டார்” என்று ரொம்பச் சாதாரணமாகச் சொல்லி அனுப்பி விட்டார்.

அப்படியானால் கல்கி வெள்ளி மணியில் சேரப்போகிறேன் என்று சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? அடுத்த சில வாரங்களுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விக்கு எனக்கு விடை கிடைத்தது.

ராஜாஜி அவர்களின் ஆசியோடு கல்கியும் திரு சதாசிவம் அவர்களும் சம்பந்தி ஆகிவிட்டார்கள்!

சரி, மௌண்ட் ரோடுக்கு வந்த ராஜாஜி பிரஸ் என்ன ஆயிற்று?

அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டு வடபழனி பிரஸ் என்ற பெயரில் பெரிதாக வளர்ந்து இப்போது திரு சரவணன் நிர்வாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதான் வெள்ளி மணி தோன்றி மறைந்த கதை.
------------

38. நீறு பூத்த நட்பு

பெருந்தலைவர். காமராஜூக்கு அடுத்தபடியாக அத்தனை நெருக்கமாக நான் பழகிய வேறொரு அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.

ஆனால் இந்த இரு உறவிலும் நுட்பமான வித்தியாசம் உண்டு. காமராஜிடம் எனக்கிருந்த உறவு ஒரு சங்கீத வித்வானுக்கும், அந்த வித்வானயே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரசிக விசிறிக்கும் உள்ள உறவைப் போன்றது.

கலைஞரிடம் ஏற்பட்டது நகைச்சுவை அடிப்படையில், இலக்கிய உணர்வு அடிப்படையில் எழுந்த நட்பு. நுனிக் கரும்பில் தொடங்கி அடிக்கரும்பு வரை சுவைக்கும் போது கூடிச் செல்லும் இனிப்பைப் போல் அது வளர்ந்தது. பல கூட்டங்களில், பல சந்திப்புகளில், பல பயணங்களில், பல நேரங்களில் நாங்கள் இருவரும் காதலர்கள் போல் இந்த நட்பை வளர்த்துக் கொண்டோம்.

இப்போதும் அந்த நட்பு அழிந்து போகவில்லை. இருவருமே சந்தித்துப் பேசிக் கொண்டால் தீர்ந்து போகக் கூடிய, மிக மிக அற்பமான காரணங்களால் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

இதில் வேடிக்கை என்னவென்றல், எங்களுக்குள்ளே ஏதோ தீராத பகை மூண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையற்று நிற்பது போல் சிலர் கற்பனை செய்து கொண்டிருப்பதுதான்.

அவருடைய எழுத்தாற்றல், பேச்சுத் திறமை, நகைச்சுவை உணர்வு இம்மூன்றிலும் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு. சுயநலத்தின் அடிப்படையில் நான் அந்த நட்பை வளர்த்துக் கொள்ளவில்லை, காமராஜோடு பழகிய போதும் சரி, கலைஞருடன் பழகிய போதும் சரி, எம். ஜி. ஆருடன் பழகிய போதும் சரி, எனக்கென்று இவர்களை நான் எதுவுமே கேட்டதில்லை.

காமராஜராவது ஒரு நாள் பேச்சு வாக்கில், “வீடு கீடு ஏதாவது சொந்தமாக் கட்டிருக்கீங்களா?” என்று கேட்டதுண்டு. கலைஞர் அது கூடக் கேட்டதில்லை.

கலைஞர் வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பார். “நானும் உங்களோடு வருகிறேன்?” என்பேன். “வரட்டுமா?” என்று கூடக் கேட்க மாட்டேன். அவரும், “வாங்களேன்” என்பார். அந்த “வாங்களேன்” என்ற சொல்லில் அன்பு, ஆனந்தம், ஆர்வம் எல்லாம் கலந்திருக்கும். அப்புறம் பயணம் முழுதும் நகைச்சுவை கலந்த பேச்சுதான். காமராஜ், ராஜாஜி, அண்ணா, பெரியார், வாசன், மைசூர் மகாராஜா, ஷேக் அப்துல்லா, ம. பொ. சி., எம். ஜி. ஆர். சங்கராச்சாரியார் எல்லாரைப் பற்றியும் பேசியிருக்கிறார். யாரைப் பற்றியும் அவதுாறாக, பண்பாடற்ற முறையில் தரக்குறைவாக எப்போதும் பேசியதில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் யார் யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மட்டும் வேடிக்கையாகவும் சில சமயம் சீரியஸாகவும் தமக்கே உரிய பாணியில் சொல்லுவார். அதையெல்லாம் நான் ஓர் எழுத்தாளன் என்கிற முறையில் கவனமாகக் கேட்டுக் கொள்வேன்.

நான் அவரிடம் பதவியோ, உதவியோ எப்போதும் கேட்டதில்லை. நான் அவரிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது நான் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் போடுவதற்குக் கதை, கட்டுரை!

1977 பொதுத் தேர்தலின் போது என்னை ஒரு நாள் டெலிபோனில் கூப்பிட்டு, “மாம்பலம் தொகுதியில் தி மு. க. சார்பில் நிற்கிறீர்களா?” என்று கேட்டார். நான் நேற்றுதானே ஜனதா கட்சியில் சேர்ந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியாதா?” என்று இழுத்தாற்போல் பதில் சொன்னேன்.

உடனே எனக்கு வருத்தம் தெரிவித்து, “அப்படியா சங்கதி? எனக்குத் தெரியாதே! தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தி விட்டேனே? மன்னிக்கவும்” என்று டெலிபோனில் கூறியதுடன் மிக மிகப் பெருந்தன்மையோடு ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தார். முதல் முறை அண்ணா நகர் தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்த போது அவர் என்னிடம் எதுவுமே அது பற்றிப் பேசவில்லை. ஆயினும் நானகவே அண்ணா நகரில் வீடு வீடாகச் சென்று அவருக்காக வோட்டுக் கேட்டேன். ஏறத்தாழ ஒருமாத காலம் அண்ணாநகரில் ஒரு தெரு பாக்கி இல்லாமல், ஒரு வீடு பாக்கி வைக்காமல் தினமும் நடந்தே போய் வோட்டுக் கேட்டேன். இதெல்லாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நேசத்தின் அடிப்படையில் செய்த காரியங்கள்.

கலைஞர் முதலமைச்சராயிருந்த போது வெளியூர்ப் பயணம் போகாத நாட்களில் மாலை வேளைகளில் கடற்கரை செல்வதுண்டு, மெரினா கடற்கரையில் பத்து இருபது நண்பர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். அந்த வட்டத்தில் சிற்சில சமயங்களில் நானும் கலந்து கொள்வேன் அரசியலைத் தவிர மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். அப்போதைய அமைச்சர் என். வி. என். அவர்கள் தவறாமல் வந்து விடுவார். வீட்டிலிருந்து கலைஞருக்குப் பிடித்தமான ‘நொறுக்குத் தீனி’ கொண்டு வருவார். அதை எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வார்கள். சில சமயம் நானும் ஏதாவது தின்பண்டம் எடுத்துச் செல்வேன்.

திருமதி இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்சி உத்தரவுகள் மிகக் கடுமையாக இருந்து கொண்டிருந்த நேரம். கலைஞரின் கடற்கரை வட்ட அங்கத்தினர்களை மத்திய அரசு மிகக் கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது. நான் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தைரியமாக அந்த வட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன்.

கோவை மாநாட்டுக்குப் பிறகு தி. மு. க. வின் எதிர்காலமே ஓர் பயங்கரச் சுழலில் சிக்கியிருந்தபோது, பல தலைவலிகளுக்கும் இந்திரா காந்தியின் மறைமுகமான கிடுக்கித் தாக்குதல்களுக்கும் இடையே மன அமைதியின்றி எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்சிரிப்புப் பூச்சில் வாழ்ந்து கொண்டிருந்த கலைஞர் அவர்கள் என் அறுபதாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் தி. மு. க ஆட்சி டிஸ்மிஸ் ஆகப்போகிறது. உள்ள வேதனையும் உடல் வேதனையும் சேர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்த கலைஞர் என் விழாவில் கலந்துகொள்ள முடியாத தவிப்பு, உடல் நிலை சரியில்லை வர முடியாது போலிருக்கிறது என்று கலஞர் வீட்டிலிருந்து தகவல் கிடைத்த போது கலைஞருக்கு நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். “ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி. கடமை தவறக்கூடாது. உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் வந்தே தீர வேண்டும். திரிபுரா காங்கிரஸ் தலைமை ஊர்வலத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்குக் கடுமையான காய்ச்சல் வந்து விட்ட போதிலும் அவர் கடமையிலிருந்து தவறவில்லை” என்று சுட்டிக் காட்டியிருந்தேன்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கலந்து கொண்டது மட்டுமல்ல. மிகமிக அழகாகப் பேசி எனக்குப் பெரும் மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

“அருமை நண்பர் சாவி எனக்கு இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘நேதாஜி போஸ் கடுமையான காய்ச்சல் வீசிக் கொண்டிருந்த போதிலும் கடமையில் தவறவில்லை. அதைப் போல நீங்களும் இன்று தவறக் கூடாது, என்று எழுதியிருக்கிறார்.

“ஆனால் நேதாஜி போஸ் அன்று என்னைப் போல் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நண்பர் சாவி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்” என்று கூறிய போதுதான் கலைஞரின் உண்மை நிலை புரிந்து வருத்தமுற்றேன்.

அந்த ஆண்டில்தான் என் மகன் பாச்சாவின் திருமணமும் நடந்தது. அன்று மாலை ஹேமமாலினியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர் பாச்சாவைப் பார்த்து, “பாச்சா, உன் பாச்சாவெல்லாம் இனி பலிக்காது” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு போட்டோவுக்கு நின்றுவிட்டு மறுகணமே பீச்சுக்குக் கிளம்பிவிட்டார். நான் கார் வரை சென்று வழி அனுப்பிய போது, “இன்று நீங்கள் பீச்சுக்கு வர முடியாது, இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஆமாம்” என்று பதில் கூறி விட்டேனே தவிர பீச்சுக்குப் போகாதது மனதுக்குச் சமாதானமாயில்லை.

ஏழரை எட்டு மணிக்கு மேல் கொஞ்சம் ரிஸப்ஷன் பரபரப்பு அடங்கியதும் கலியாணச் சீர்வரிசை பட்சணங்களைப் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கார் ஏறி பீச்சுக்குப் போய் விட்டேன். என்னைக் கண்டதும் கலைஞருக்கு ஒரே வியப்பு!

“எப்படி வந்தீங்க?” என்பது போல் ஒரு பார்வை. அந்தப் பார்வையிலே சொல்லொனத மகிழ்ச்சி. வாய் நிறையச் சிரிப்பு. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

என் அறுபதுக்கு வந்து பாராட்டிய கலைஞருக்கு இன்று அறுபது! அவர் பல்லாண்டு வாழ உளமார வேண்டுகிறேன்.
-----------

39. வாஷிங்டனில் திருமணம் எப்படி நடத்தினேன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் (1963-ல்) நானும் என் இனிய நண்பர் பரணிதரனும் திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். நானும் அவரும் சேர்ந்து விட்டால் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இராது. நாள் முழுதும் நகைச்சுவையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம்.

நாங்கள் இருவரும் காவேரிப் படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அதே படித்துறையில் நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய்க் காணப்பட்டார்கள். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார் பரணிதரன்.

“இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது வேடிக்கையா யிருக்கிறது?” என்றேன்.

“நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!” என்றார் அவர்.

“ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.

“ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கும். அதுவும் அம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.

அவ்வளவுதான் ; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா? அதிலிருந்து என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலேந்ததன் பயனாக என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழுநீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த என் லட்சியம், செயல் பூர்வமாக நிறைவேறப் போகிற காலம் வந்து விட்டது போல் ஒரு பிரமை. என் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்த கணமே, காவிரிக்கரை கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில், ஷேக் சின்ன மெளலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைக் காட்டிலும் ‘நம் ஊர்த் திருமணம் ஒன்றை நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்ட போது நமக்குக் கிடைக்கும் வேடிக்கையும் தமாஷூம் அமெரிக்காவில் நம் கலியாணத்தை நடத்துகிற போது அவர்களுக்கு ஏற்படலாம்’ என்று தோன்றியது. இந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான், பரணிதரனோடு இதே பேச்சுதான். நம் நாட்டில் சாதாரணமாக ஒரு கலியாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கே போய் ஆடம்பரக் கலியாணம் ஒன்று நடத்துவதென்றால் அது அத்தனை எளிதான காரியமா? கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கலியாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அத்தனை கவலை இருந்திருக்காது. கதைக்கு ‘வாஷிங்டனில் திருமணம்’ என்று பெயர் கொடுத்து விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி, வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதுகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசிவரை சஸ்பென்ஸில் வைத்திருந்து முற்றும் போடுகிறபோதுதான் என் பெயரையும் வெளியிட்டேன்.

பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாரா வாரம் திரு கோபுலுவின் உயிர்ச் சித்திரங்கள் இந்தக் கதைக்குத் தனிச் சிறப்பும் முழு வெற்றியும் தேடித் தந்தன.

இன்னொரு விஷயம்.

“இந்தத் திருமணத்தை வாஷிங்டனில் நடத்தப் போகிறேன். அங்கேதான் பொடோமாக் நதியும் அப்ராஹாம் லிங்கன் மண்டமும் டைடல் பேஸின் நீர்த்தேக்கமும் இருக்கின்றன. ஊர்வலம் செல்ல வீதிகள் விசாலமாயிருக்கின்றன. அப்பளம் உலர்த்துவதற்கு வசதியான ஆர்ட் காலரி மொட்டை மாடி இருக்கிறது. பாலிகை விடுவதற்கும் ஜானவாச ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்ற இடம் வாஷிங்டன் நகரம்தான்” என்று நான் கூறியபோது, “ரொம்ப சரி, அங்கேயே நடத்துங்கள். ஆனால் செலவையெல்லாம் ராக்பெல்லர் சீமாட்டி தலையில் போடுங்கள்” என்று எனக்கு யோசனை கூறி உதவியவர் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்தான். அவர் யோசனைப்படியே ராக்பெல்லர் செலவிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன். வாஷிங்டனில் திருமணம் எழுதுவதற்கு முன் நான் அமெரிக்காவை பார்த்ததில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த நாட்டையும் வாஷிங்டன் நகரையும் போய்ப் பார்த்தேன். திருமணம் நடந்த ஜார்ஜ் டவுன், சாஸ்திரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, பாலிகை விட்ட டைடல் பேஸின், அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி எல்லாவற்றையும் நேரில் பார்த்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. இனி அந்த மாதிரி ஒரு கதை எழுத முடியுமா? சந்தேகம்தான்.
--------------

40. சோறு கண்ட இடம்

ஒரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலம் அது. பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்போடு முடித்துக் கொண்டு விட்டேன். வகுப்பில் என்னைக் காட்டிலும் குறைந்த வயது சிறுவர்களோடு சேர்ந்து படிப்பதற்கு அவமானமாக இருந்ததே காரணம். என்னுடைய தந்தை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். நானும் அவரிடம் சம்ஸ்கிருதம் படித்தேன். படிப்புக்கும் விசித்திரன் பத்திரிகையில் சேர்வதற்கும் இடையில் ஒரு வருடகாலம் வெட்டிப் பொழுதுபோக்குதான். வில்லிவாக்கம் பிடிக்காததால் சென்னையிலேயே தங்கி எந்தக் குறிக்கோளுமின்றி திரிந்து கொண்டிருந்தேன். காலையில் எழுந்திருக்க வேண்டியது. இருந்தால் சாப்பிட வேண்டியது, இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரி நினைத்துக் கொண்டு எங்கு போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எனக்கே தெரியாமல் சுற்றிவர வேண்டியது.

அப்போது, 1932-ல் சென்னையின் முகம் வேறு மாதிரியாக இருந்தது. மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் காஞ்சி சங்கரர்ச்சாரிய சுவாமிகள் முகாமிட்டிருந்தார். அங்கே தினமும் சுவாமிகளைத் தரிசிக்க வருகிறவர்களுக்குச் சாப்பாடு உண்டு. ஒரு மாத காலம் அந்த மடத்திலேயே சாப்பிட்டுக் கொண்டு மயிலாப்பூர் வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வானத்தில் ஒட்டடை அடிப்பது போல் டிராம் வண்டிகள் தலைக்கு மேலே இரும்புக் குச்சியை நீட்டியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். வள்ளுவர் சிலையும், மக்களின் நெரிசலும், வேகம் கலந்த பரபரப்பும் அந்நாளில் கிடையாது.

டிராமில் பயணம் செய்வது குஷியான அனுபவம் என்றால் டிக்கெட் வாங்காமல் போவது. அதைவிட குஷி! நான் பிந்தைய ரகத்தைச் சேர்ந்தவன். கச்சேரி ரோடு ஷட்டில் சர்விஸில் தினமும் நாலு முறையாவது போய்த் திரும்புவேன். அந்தப் பழக்கத்தில் நெற்றி முழுதும் படர்ந்த நாமம் போட்ட கண்டக்டர் நாயுடு எனக்கு ரொம்ப வேண்டியவராகி விட்டார். சின்னப் பையன் என்று ஒரு சலுகை காட்டினார். எப்போதாவது காலணாவுக்குப் பொடி வாங்கிக் கொண்டு போய்க் கொடுக்கும் போது அவரது முப்பத்திரண்டு பற்களையும் பார்த்துவிட முடியும்!

காலையில் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போய் மடத்து யானை குளித்து முடிகிறவரை காத்திருந்துவிட்டு. அப்புறம் வெளியே போய் ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு பகல் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்து விடுவேன். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பிராமணர்கள் எல்லோருக்குமே மடத்தில் பகல் சாப்பாடு உண்டு. யாருக்கு உண்டோ இல்லையோ எனக்கு நிச்சயம் உண்டு! அது தவிர எப்படியும் ஒரு நாளைக்கு நாலைந்து முறை சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் போகாமல் இருக்க மாட்டேன். பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற பக்திப் பரவசத்தால் அல்ல. அங்கே அவ்வப்போது கிடைக்கக் கூடிய பிரசாதத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்!

விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை அவ்வப்போது ஓடி வந்து அம்மாவைத் தொட்டுக் கொண்டு திரும்பவும் விளையாடப் போய் விடுமே. அது மாதிரி எந்த நிமிடம் எதை விநியோகம் செய்து விடுவார்களோ என்ற சந்தேகம்தான். யாராவது நிறையப் பழங்கள் கொண்டு வந்து பெரியவாளிடம் தட்டோடு வைப்பார்கள். அவர் திடீரென்று ‘இதைக் குழந்தைகளுக்கு வினியோகித்து விடு’ என்று உதவியாளர்களிடம் சொல்லுவார்.

சரி, இப்படியே எத்தனை நாளைக்கு வண்டி ஒட்டுவது? படிப்பும் அதிகமில்லை. வேலை கிடைப்பதாகவும் தெரியவில்லை.

ஒருநாள் கச்சேரி ரோடில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போர்டு காணப்பட்டது. போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னை ஒரு தரம் நானே மானசீகமாய்ப் பார்த்துக் கொண்டேன். எனக்கு போலீஸ் உத்தியோகத்துக்குத் தகுந்த உயரம் இருந்தது. அது மட்டுமல்ல. என் தாத்தாவுக்கு அப்பாவோ வேறு யாரோ ஒருவர் எங்கள் குடும்பத்தில் போலீஸில் உத்தியோகம் பார்த்ததாக என் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆகவே அவரைப் போல் போலீஸ் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆர்வம் இருந்தது.

நேராக உள்ளே போனேன். போலீஸ் வேலையில் சேர வந்திருப்பதாகச் சொன்னேன்.

உடனே என்னை உட்காரச் சொன்னார்கள். பிறகு எழுந்திருக்கச் சொன்னார்கள். மார்பு அளவு, உயரம், எடை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

“எல்லாம் சரியாக இருக்கிறது. நாளை காலை எட்டு மணிக்கு வந்துவிடு தம்பி! வேலூருக்குப் போக வேண்டியிருக்கும். அங்கேதான் ட்ரெயினிங். ஆகவே, காலையில் வரும்போதே உன் துணிமணியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடு” என்றார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விடும் என்று நான் எண்ணவில்லை. “சரி. வருகிறேன்” என்று சொல்லி அவர்கள் கொடுத்த பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் மறுநாள் நான் போகவில்லை. அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்து விட்டதாலோ என்னவோ எனக்கு அந்த வேலைக்குப் போவதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. அத்துடன் மறுநாள் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் பெரிய விருந்து நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். விருந்து சாப்பாட்டை விட்டுச் செல்ல மனம் இல்லாததும் ஒரு காரணம்.

ஒருவேளை, அன்று நான் போலீஸ் உத்தியோகத்தில் சேர்ந்திருந்தால் இன்று ஒரு ‘கிராக்கி’யாக ஆகியிருப்பேனோ என்னவோ!
-------------

41. முதல் சம்பாத்தியம்

பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்டு, வேலையில்லாமல் வாடிக்கொண்டிருந்த இளம் பிராயத்தில் குடுமி வைத்திருந்தேன். முடிச்சு ரொம்ப கனமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். அந்தக் குடுமி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பெரிய இடையூறாக இருந்தது. குடுமியை எடுத்துவிட்டு மற்ற சம வயதுத் தோழர்களைப் போல் கிராப்பு வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ விரும்பினேன். ஆனால் அதற்கு வேண்டிய தைரியமோ, சுதந்திரமோ எனக்கு இருக்கவில்லை. என் அப்பா சம்ஸ்கிருத பண்டிதர். ஆசார சீலர். கிராப்பு வைத்துக் கொள்வதை மன்னிக்க முடியாத குற்றமாய்க் கருதியவர்.

வில்லிவாக்கத்திலிருந்து பெங்களுருக்கு எங்கள் கிரிக்கெட் குழு மேச் ஆடப் போயிற்று. அந்தக் குழுவில் நான்தான் விக்கெட் கீப்பர். குடுமி வைத்திருந்ததால் பெங்களுர் மேச்சில் என்னை ஒதுக்கிவிட்டு, எனக்குப் பதிலாக வேறொரு பையனை அழைத்துச் சென்றார்கள். இதனால் பெங்களுர் போகத் தடையாயிருந்த குடுமி மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அப்பா எங்காவது, எப்போதாவது வெளியூர் போகிற சமயத்தில். மொட்டையடித்துக் கொண்டு விடுவதென்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் அப்பா வெளியூர் போகிற வழியாகவும் இல்லை. இரவும் பகலும் என்னை வாட்டி எடுத்த குடுமி விசாரம் தீர்வதாயுமில்லை.

ஒரு நாள் துணிந்து குடுமியை எடுத்து விடுவதென்று தீர்மானித்தும், அதை நிறைவேற்றுவதற்குரிய பொருளாதார வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டில் ராமசாமி என்றொரு டாக்டர் இருந்தார். தினமும் அவர் டிஸ்பென்ஸரியில் போய் உட்கார்ந்திருப்பது என் பொழுது போக்கு. என்னிடம் அவருக்கு அன்பும் அக்கறையும் உண்டு. பிரியமாக எப்போதாவது நாலணா, எட்டணா காசு கொடுப்பார். என் குடுமியை அவ்வப்போது பாராட்டி ரொம்ப லட்சணமாக இருப்பதாகக் கூறுவார்.

ஒருநாள் அவர் கொடுத்த எட்டணாவை எடுத்துக் கொண்டு குடுமிக்கு விமோசனம் அளிக்க ஸலூனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.

எதிரே பாஸ்கர சாஸ்திரிகள் (அவரை ராமாயன சாஸ்திரிகள் என்று அழைப்பார்கள்) என்பவர் வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “பையா, உன்னத்தான் தேடிக்கொண்டு வருகிறேன்...” என்றார்.

“என்ன விஷயம்?” என்று கேட்டேன்.

“இன்று இரவு பெருமாள் கோவில் மண்டபத்தில் என் ராமாயண உபந்நியாசம் நடக்கிறது. வால்மீகி ராமாயணம் புத்தகம் இருக்கிறது. அந்த சுலோகங்களை நீதான் இன்று படிக்க வேண்டும். நான் அவற்றுக்கு அர்த்தம் சொல்லி உபந்நியாசம் நிகழ்த்துவேன்” என்றார்.

அவருக்கு வாடிக்கையாக சுலோகங்கள் படிக்கும் பண்டிதருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக என்னைப் படிக்கும்படி அழைத்தார்.

எனக்கு சுலோகங்கள் படிக்கும் அளவுக்குப் புலமையோ ஆற்றலோ கிடையாது. சம்ஸ்கிருதம் சுமாராகத்தான் படிக்கத் தெரியும். அவர் எண்ணுகிற அளவுக்கு வேகமாகவும் அட்சர சுத்தமாகவும் படிக்க முடியுமா என்பது சந்தேகம். நான் தயங்கினேன்

“பயப்படாதே; புத்தகம் தருகிறேன். மத்தியானமே சுலோகங்களை ஒருமுறை படித்து வைத்துக் கொள். ராத்திரி தடங்கலில்லாமல் சுலபமாகப் படித்து விடலாம்” என்று தைரியம் கூறினார்.

“சரி” என்று ஒப்புக் கொண்டு விட்டேன், இந்த நேரம் பார்த்துத் தலையை மொட்டை அடித்துக் கொண்டால் விகாரமாயிருக்கும். ராமாயணம் படிக்கிற போது குடுமியோடு படித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே, முடியெடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

ராத்திரி ராமாயணம் படிக்கப் போகிறோம் என்ற பெருமிதத்தில் அன்றெல்லாம் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.

வேலை வெட்டி இல்லாமல், வெறும் உதவாக்கரையாய், தண்டச் சோற்றுக் கடனாய் ஊர் திரிந்து கொண்டிருக்கிறேன் என்று என் தாயார் அடிக்கடி என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

அம்மாவிடம் நாளைக்கு நாலுபேர் பெருமையாகச் சொல்வார்கள், “உங்க பிள்ளை ராத்திரி ராமாயணம் படிச்சாரு, ரொம்ப நன்றாயிருந்தது” என்று. அதைக் கேட்டு அம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கும்! ஆகையால் ராமாயணம் படிக்கப் போகிற செய்தியை இப்போதே அம்மாவிடம் சொல்லி அந்த ஆச்சரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. அதை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருக்க வேண்டும் என்று பேசாமலிருந்து விட்டேன்.

மாலை ஏழு மணிக்குக் குளித்து விபூதிப் பட்டையுடன் சிவப்பழமாகப் பெருமாள் கோவில் மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். குத்து விளக்கு அருகில் உட்கார்ந்து சிக்குப் பலகை வைத்துக் கொண்டு ராமாயண சுலோகங்களைச் செவ்வனே படித்து முடித்தேன். இடை இடையே சுலோகங்களை வேகமாகப் படிக்க முடியாதபோது ராகத்தை நீட்டி ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டேன். ராமாயணம் கேட்க வந்தவர்கள் என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. குடுமி மீது இருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது!

உபந்நியாசம் முடிந்ததும் தட்டில் வெற்றில பாக்கும், தேங்காய் மூடியும் ஒரு ரூபாய் சன்மானமும் வைத்துக் கொடுத்தார்கள்.

அந்தத் தேங்காய் மூடியை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து விஷயத்தைச் சொன்னபோது அம்மா பூரித்துப் போனாள். “ஏதாவது பணம் கொடுத்தார்களா?”

“ஒரு ரூபாய் கொடுத்தார்கள். நாளை நான் டவுனுக்குப் போகவேண்டும். செலவு இருக்கிறது” என்று சொல்லி விட்டேன். மறுநாள் அம்மா தேங்காயைத் துவையல் செய்திருந்தாள்.

தினமும் அம்மா கையால் சாதம் போட்டாலும் அன்று சமையல் எனக்கு ரொம்ப ருசியாக இருந்தது. காரணம் நான் முதன் முதல் சம்பாதித்த தேங்காய் மூடியில் செய்த சமையல் அல்லவா அது?
---------

42. விசநாதன் வந்துகுது

கிராமத்தில் அப்பாவுக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலமும் பெரிய வீடும் இருந்த போதிலும் அதற்கேற்ற மாதிரி நிறையக் கடனும் பட்டிருந்தார். மாம்பாக்கத்திலேயே எங்களுடையதுதான் பெரிய வீடானதால் எங்களைப் “பெரிய வீட்டுக்காரர்” என்று சொல்வார்கள்.

என் சகோதரிகள் இருவருக்குமே ஏக தடபுடலாக, தெருவை அடைத்துப் பந்தல் போட்டு, வெளியூர் நாதஸ்வரம், நாதமுனி பாண்டு, வாணவேடிக்கையோடு கலியாணம், ஐந்து நாட்கள் ‘ஜாம் ஜாம்’ என்று நடந்தது.

வாசல் திண்ணையில் இரண்டு சந்தனக்கல் போட்டு இரண்டு வேலைக்காரர்கள் ஓயாது சந்தனம் அரைத்தபடி இருந்தனர். கலியாண வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் யாராயிருந்தாலும் மார்பில் சந்தனம் பூசாமல் போகமாட்டார்கள்!

“பந்து மித்திரர்களுடன் நாலு நாள் முன்னதாகவே வந்திருந்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேணுமாய்க் கோருகிறேன்” என்று சம்பிரதாயமாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த போதிலும் பத்து நாள் முன்னதாகவே வந்து விட்ட பந்து மித்திரர்கள் கலியாணம் முடிந்த பின்னரும் பத்து நாள் இருந்து விட்டுப் போனார்கள்! ”பெரிய வீட்டில் பெரிய தோரணையில் வாழ்க்கை அமைந்து விட்டதால் என் தந்தையார் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இல்லாமல், என்னைப் பற்றிய கவலையும் இல்லாமல் வாழ்ந்து விட்டார்.

வட்டிக்கு வட்டி குட்டி போட்டுக் கடன் பளு தாங்க முடியாத அளவுக்குப் போன பிறகு வீடு வாசல், நிலம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரிய வீட்டை விற்றுக் கடனைத் தீர்த்தது போக மிஞ்சியிருந்த பணத்தில் எதிர்மனையில் சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு குடிபெயர்ந்தோம்.

பெரிய வீடு போய்விட்ட துக்கம் எல்லோரையும் கவ்விக் கொண்டது. யாரையோ பறிகொடுத்து விட்டது போல் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். ரொம்ப நாள் வரை அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருந்ததால் அந்த இழப்பு என்னைப் பாதிக்கவில்லை. மாறக நாகரிகமான வராண்டாவுடன் கூடிய புதுவீடு பற்றிக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தேன். வாசல் படிக்கு மேல் எனக்குத் தெரிந்த இங்கிலீஷில் இரண்டு ‘எல்’ போட்டு wellcome என்று எழுதினேன்.

அப்புறம் ஏழெட்டு ஆண்டுகளே அந்தப் புது வீட்டில் வாழக் கொடுத்து வைத்திருந்தோம் கடைசியில் அதையும் விற்றுவிட்டோம். இதற்கிடையில், ஒரு சமயம் என் தாய் தந்தையர் என்னைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார்கள். அப்போது நான் சந்திரோதயம் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். சௌந்தர்யா நர்ஸரியில் ஒரு தென்னம் பிள்ளை வாங்கிப் பெற்றேர்களிடம் கொடுத்து “அப்பா இதைக் கொண்டு போய் கிராமத்தில் நம் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து விடு” என்று சொல்லி அனுப்பினேன். அப்பாவும் அதை ஊரில் கொண்டு போய் வைத்து கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். ஏராளமாய் உப்பு கொட்டினர். சுற்றிலும் பாத்தி கட்டித் தண்ணீர் ஊற்றினர். கன்று நன்கு வளர்ந்து பெரிய மரமான போதிலும் பலன் கிடைக்கவில்லை. தென்னைக்குள் வண்டு புகுந்து கொண்டு குருத்துக்களைத் கத்தரி போட்டு வெட்டிக் கொண்டிருந்தது. “இவ்வளவு பாடுபட்டு வளர்த்தேனே, ஒரு தேங்காய் கூடக் கிடைக்கவில்லையே!” என்று அப்பா சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். மரத்திலிருந்து வண்டை அப்புறப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்தார். குடைக் கம்பிகளால் குத்திக் குத்திக் கம்பிகள் கோண மாணாவென்று வளைந்து போனதுதான் மிச்சம்!

அவர் எனக்கு எழுதும் கடிதங்களிலெல்லாம் தென்னை மரம் குல போடாமல் மோசம் செய்து விட்டது பற்றியும், வண்டின் அட்டுழியம் பற்றியும் பத்தி பத்தியாய் விவரித்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் அந்த வீட்டையும் விற்றுவிட வேண்டிய நிலை வந்தபோது அப்பாவுக்குத் துக்கம் தாங்கவில்லை. பாடுபட்டு வளர்த்துப் பலன் எதுவும் பெறாத நிலையில் அந்தத் தென்னை மரத்தையும் சேர்த்து, விற்க வேண்டியிருக்கிறதே என்று குமுறிப் போனார்.

பெரிய வீடும் போய், தென்னை மரத்து வீடும் போய்விடவே அந்த வேதனையோடு என் தாய் தந்தையர் கிராமத்தில் வசிக்கப் பிடிக்காமல் சென்னைக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இதெல்லாம் பழங்கதையாய்ப் போய்ப் பல ஆண்டுகள் ஆகி விட்டன.

சில வருஷங்களுக்கு முன் ஒருநாள் நான் என் கிராமத்திலுள்ள விநாயகரைத் தரிசிக்கப் போயிருந்தேன். ஊரை நெருங்கும் போது சிறுவயதில் நான் அங்கு விளயாடியதெல்லாம் நினைவுக்கு வந்தன. ரோடு ஓரத்தில் புங்க மரத்தில் ஏறி குரங்காட்டம் ஆடியது. சிற்றேரிக் கரை, கருடகம்பம், குப்பு செட்டிக் கடை, அரசமரத்தடியில் நரிக்குறத்தியிடம் கையில் பச்சை குத்திக் கொண்டது, பெருமாள் கோயில் இடிபாடு, ‘விசநாதன் வந்துகுது பார்’ என்ற குடியானவர்களின் அன்புக் குரல் எல்லாமாகச் சேர்ந்து என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின. அக்கிராமத்துக்குள் நுழைந்து அந்தத் தென்னை மரத்து வீட்டைப் போய்ப் பார்த்தேன். வாசலில் நான் எழுதிய WELLCOME எழுத்துக்கள் அழிந்து போய் மங்கலாய்த் தெரிந்தன.

தென்னை மரத்தில் இளநீர்க் காய்கள் சந்நியாசிக் கலரில் குல குலையாய்த் தெரிந்தன.

எதிரில் பெரிய வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்து அந்த மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் தென்னை மரத்து வீட்டை எங்களிடமிருந்து விலைக்கு வாங்கிய மீசைக் கவுண்டர் நான் வந்திருப்பதை அறிந்து ஓடிவந்து நலம் விசாரித்தார். அந்த மரத்திலிருந்து ஒரு இளநீர் வெட்டி வந்து, “ஐயா, இதைச் சாப்பிடுங்க; நீங்க வெச்ச மரம்” என்று உபசரித்தார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. “அந்த வண்டு என்ன ஆச்சு கவுண்டரே?”

தேனாக இனித்த அந்த இளநீரைக் குடித்து தென்னை மரம் எங்கள் குடும்பத்திற்குப் பட்டிருந்த நன்றிக் கடனைத் தீர்த்து வைத்தேன்.
------------

43. பகத்சிங் வாசகசாலை

சேலம் ஆதிநாராயண செட்டி என்பவர் அந்தக் காலத்தில் ரொம்பப் புகழுடன் விளங்கியவர். அவர் ஒருமுறை ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் சம்பந்தமாக எங்கள் கிராமத்துக்கு என் தந்தையின் உதவியை நாடி வந்திருந்தார்.

“ஆதிநாராயண செட்டிக்கே ஓட்டுப் போடுங்கள்” என்று கலர் கலராய்ப் போஸ்டர்கள் கொண்டு வந்தார். அவை பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் அவற்றைச் சுவர்களில் ஒட்டும் வேலையை அப்பா என்னிடம் ஒப்படைத்தார். நான் முதல் முதல் பெரிய அச்செழுத்துக்களை வர்ணத்தில் பார்த்து மயங்கியது அப்போதுதான்.

எங்கள் பக்கத்து கிராமம் அக்கூர் எல்லையம்மன் கோயிலில் ஆடு கோழிகளைப் பலியிடும் பழக்கம் உண்டு. இதைத் தடுப்பதற்காகச் சென்னையிலுள்ள ஜீவரட்சக சங்கத்தார் சில போஸ்டர்கள் அச்சிட்டு அந்தக் கோயில் வாசலில் ஒட்டியிருந்தார்கள்.

“மானிடர்களே! நாங்கள் வாயில்லாப் பிராணிகள், எங்களைக் கொல்லாதீர்கள்” என்று ஆடுகளும் கோழிகளும் கொட்டை எழுத்துக்களில் முறையிட்டன!

சென்னை தங்கசாலைத் தெருவில் இருந்த தென்னித்திய ஜீவரட்சக சங்கத்துக்கு இம்மாதிரி போஸ்டர்கள் அனுப்பும்படி கடிதம் எழுதிக் கேட்டிருந்தேன். அடுத்த வாரமே என் பெயருக்குக் கற்றை கற்றையாகப் போஸ்டர்கள் வந்து சேர்ந்தன.

“விசுவநாதன், போஸ்ட்” என்று உரக்கக் கூவி அழைத்து வந்த தபால்காரர் என்னிடம் அவற்றைப் பட்டுவாடா செய்து விட்டு குடிப்பதற்கு மோர் கேட்ட போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை. சமுதாயத்தில் எனக்கொரு பெரிய அந்தஸ்து கிடைத்து விட்டது போன்ற உணர்வு உள்ளத்தில் பொங்கியது. கொட்டையான அச்செழுத்துக்களோடு எனக்கேற்பட்ட இந்த வாத்சல்ய உறவுதான் பிற்காலத்தில் நான் லைன்போர்ட் எழுத்தாளனவதற்கு அடித்தளமாக அமைந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒருநாள் திடீரென்று ஒரு பரபரப்பான செய்தி வெளியாயிற்று. பாஞ்சால சிங்கம் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்திதான் அது. அந்தச் செய்தி என்னைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு இவர்களின் வீரதீரச் செயல்கள் என்னை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீறு கொள்ளச் செய்தன. ஆனாலும் சிறு பையனாக இருந்த காரணத்தால் என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை. பகத்சிங்கிற்கு ஏதாவது செய்தே தீர வேண்டுமென்ற தீவிரம். என்ன செய்வது?.

கிராமத்தில் என் உயிர்த் தோழனை கிருஷ்ணமூர்த்தியைக் கலந்து ஆலோசித்தேன். “ஏதாவது செய்ய வேண்டியதுதான்” என்று அவன் வழி மொழிந்தான். ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இப்படியே எதுவும் செய்ய முடியாத நிலையில் ஓரிரு மாதங்கள் ஓடி விட்டன.

திடீரென்று ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி என்னை அழைத்து. “இன்று ஒரு முக்கிய சமாசாரம் உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றான்.

“என்னடா?”

“அடுத்த வாரத்திலிருந்து நான் இந்த ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரன்!” என்றான்.

“என்னடா சொல்கிறாய்? மாடி வீட்டு அய்யாவய்யர்தானே இந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்? நீ எப்படி அவரை மிஞ்ச முடியும்? நீ ஏழை வீட்டுப் பையன்தானே?” என்று கேட்டேன்.

“அடுத்த வாரம் அவர் என்னை சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறார். அடுத்த புதன்கிழமையிலிருந்து நான் அவருடைய தத்துப் பிள்ளை. அப்புறம் அந்த வீட்டுப் பெட்டிச் சாவி என்னிடம் தானே!” என்றேன்.

அதைக் கேட்ட போது எனக்கே பெரிய சொத்து வந்து விட்டதைப் போல் மகிழ்ந்தேன் நான்.

“கிருஷ்ணமூர்த்தி! நாம் பகத்சிங்குக்கு ஏதாவது செய் தாகனும்டா” என்றேன்.

”செய்துடலாம் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வா உன்னிடம் மூன்று ரூபாய் தருகிறேன்” என்றான்.

“அந்த மூன்று ரூபாய்க்கு என்ன செய்யலாம்?”

“அம்மாஞ்சி வாத்தியார் வீட்டுக்கு மேற்கே மூன்றாவது வீட்டுத் திண்ணையும் அதைச் சேர்ந்த சின்ன அறையும் காலியாயிருக்கிறது. அந்த அறையில் பகத்சிங் பெயரில் இலவச வாசகசாலை ஒன்று ஆரம்பித்த விடலாம்.” என்றான்.

அடுத்த வாரமே அய்யாவய்யர் வீட்டு கஜானா சாவி கிருஷ்ணமூர்த்தியின் கைக்கு மாறிவிட்டது! ஒருநாள் பகல் வேளை அய்யாவய்யர் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது கிருஷ்ணமூர்த்தி என்னைக் கூப்பிட்டு இருட்டான ரேழி உள்ளே போய் அறையைத் திறந்து மூன்று ரூபாய் கொண்டு வந்து கொடுத்தான்.

ஐந்தாம் ஜார்ஜ் உருவம் கொண்ட மூன்று முழு வெள்ளி ரூபாய்கள்!

அடுத்த கணமே நாலு மைல் தொலைவிலுள்ள வாழைப் பந்தலுக்கு நான் நடையைக் கட்டினேன். கடைத் தெருவுக்குப் போய் அல்லி அரசாணி மாலை, தெனாலிராமன் கதை, துளசி பூஜையின் மகிமை, வாய்ப்பாடு, பகத்சிங் படம், கொஞ்சம் கலர் சாக்பீஸ் இவ்வளவும் வாங்கிக் கொண்டு அப்படியே போஸ்டாபீஸுக்குப் போய் ஆனந்தவிகடனுக்கு ஒரு வருடசந்தா மணியார்டர் செய்து விட்டு வந்தேன். மணியார்டர் பாரம் எழுதிக் கொடுத்தவர் போஸ்ட்மாஸ்டர். ஊர் திரும்பியதும் முதலில் அந்தத் திண்ணை அறையைப் பெருக்கி, ஒட்டடை அடித்துச் சுத்தப் படுத்தினேன். எதிர் வீட்டு மாமியைக் கூப்பிட்டுத் தண்ணீர் தெளித்துக் கோலம் போடச் செய்தேன்.

பகத்சிங் படத்தை அறைச் சுவரில் ஒட்டி, அதற்கு இரு பக்கங்களிலும் ‘ஆதிநாராயண செட்டிக்கே ஒட்டுப் போடுங்கள்’ ‘பலியிடாதீர்கள்’ போஸ்டர்களையும் ஒட்டினேன்.

வெளியே வாசல் திண்ணை விட்டத்தில் கலர் சாக்பீஸால் (எழுத்துக்கு ஒரு கலர்) ‘பகத்சிங் இலவச வாசகசாலை’ என்று எழுதி முடித்தேன். அவ்வளவுதான்; வாசகசாலை அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டு விட்டது. கிருஷ்ணமூர்த்திதான் தலைவர். நான் செயலாளர். ஆரம்பித்து ஒருமணி நேரமாகியும் யாரும் புத்தகம் வாங்கிப்போக வரவில்லை. வாசகசாலை ஆரம்பித்து விட்ட செய்தியைத் தெருத் தெருவாகப் போய்ச் சொல்லிவிட்டு வந்தேன். அப்படியும் யாருமே வந்து புத்தகம் கேட்டபாடில்லை. “இலவச வாசகசாலை தான்; யார் வேண்டுமானாலும் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்” என்று தீவிரப் பிரசாரம் செய்தும் கூட ஒரு வாசகர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இது பெரிய ஏமாற்றம்!

“பகத்சிங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தோம். செய்து விட்டோம். கடமை முடிந்தது” என்ற திருப்தி கிருஷ்ணமூர்த்திக்கு.

ஊர் மக்கள் இப்படிக் கைவிட்டு விட்டார்களே என்ற மனச்சோர்வு எனக்கு.

வடாற்காடு மாவட்டம் பற்றிக் கேலியாகச் சொல்வதுண்டு. அதாவது: -

அரசனில்லாத கோட்டை.

சாமி இல்லாத கோயில்.

தண்ணீர் இல்லாத ஆறு.

அழகில்லாத பெண்கள்.

இந்நான்கும் இந்த மாவட்டத்துக்கே உரித்தான சிறப்பு என்று கூறுவார்கள்.

அத்துடன் ஐந்தாவதாக இன்னென்றும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். வாசகன் இல்லாத வாசகசாலை என்பதுதான் அது!
---------------

44. மாமா கொடுத்த கோட்டு

சின்ன வயதில் எனக்குப் பூணூல் போட்ட போது என்னுடைய மாமா (அம்மாவின் சகோதரர்) நிஜாரும் கோட்டும் தைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் காலத்தில் கோட்டு, நிஜார் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்! எனக்குச் சந்தோஷம் தலைகால் புரியவில்லை. என்னிடம் ஷர்ட்டோ பனியனே இல்லை, ஷர்ட் போட்டுக் கொண்டு அதற்கு மேல்தான் கோட் அணிய வேண்டும் என்பது மாமாவுக்குத் தெரியவில்லை. ‘சட்டை இல்லேயே’ என்று நான் சொன்னபோது, “பரவாயில்லை; அப்படியே கோட்டைப் போட்டுக்கோடா” என்று சொல்லி விட்டார் அவர். எனவே ஷர்ட் இல்லாத குறை தெரியாமல் இருக்க ஒரு வெள்ளைத் துணியை எடுத்து பாரதியார் மாதிரி உடம்பை மறைத்து அதற்கு மேல் கோட்டைப் போட்டுக் கொண்டேன். அப்போது பாரதி பாடல்களை நான் படித்ததில்லை. நம் தேசம் அடிமைப்பட்டிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் பாரதியாரிடத்தில் எனக்கு பக்தி பூர்வமான ஒரு வெறியை உண்டாக்கி வைத்திருந்தார் எங்கள் கிராமப் பள்ளிக்கூட வாத்தியார் மணி ஐயர். அப்புறம் போகப் போகத் தான் பாரதியார் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். ஒரு நாள் பாரதியார் மாதிரியே உடை அணிந்து, அவர் மாதிரியே தலைப்பாகையும் கட்டிக் கொண்டு போய் வாத்தியார் மணி ஐயர் எதிரில் நின்றபோது, “மீசை இல்லையேடா” என்று சிரித்தார்.

எங்கள் ஊரில் விசுவவாதன் என்ற பெயரில் இன்னொரு பையன் இருந்தான் என்னைக் காட்டிலும் ஒரு வயது சிறியவன். நான் பாரதியார் மாதிரி வேஷம் போட்டதிலிருந்து வாத்தியார் மணி ஐயர் என்னை பாரதி விசுவநாதன் என்றும், அவனைச் சின்ன விசுவநாதன் என்றும் அழைக்கத் தொடங்கினார்.

கிராமப் புறங்களில் நில அடமான பாங்குகள் ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலம் அது. கூட்டுறவு சொஸைட்டி என்ற பெயரில் அவை ஏழைகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து உதவி வந்தன. அதன் தலைமை அலுவலகம் வேலூரில் இருந்தது. என்னுடைய கிராமமான மாம்பாக்கத்தில் அதன் கிளை ஒன்று இருந்தது. என் தந்தைதான் அதற்குப் பொறுப்பாளர். அவருக்கு மாதச் சம்பளம் ஏழு ரூபாய்.

கடன் வாங்கியவர்கள் திருப்பித் தரும் தொகையை அவ்வப்போது வேலூர் தலைமை பாங்குக்கு அனுப்பி விடுவார். பணம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஆதலால் மணியார்டராக அனுப்பாமல் இன்ஷூரன்ஸ் கவரில் வைத்துத் தைத்து அந்தத் தையல் முடிச்சின் மீது அரக்கு ஸீல் வைத்து அனுப்புவார். அரக்கை நெருப்பில் காட்டி இளக வைப்பதும், அந்த இளகிய மெழுகைக் கவர் மீது அகலமாய் குங்குமப் பொட்டு போல் வைத்து அவற்றின் மீது ஸீலைப் பதிய வைப்பதும் எனக்குப் பிடித்தமான வேலை.

எங்கள் ஊரில் தபாலாபீஸ் கிடையாது. ஆகையால் மாம்பாக்கத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள வாழைப் பந்தல் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் போஸ்ட் மாஸ்டரிடம் அந்த ஸீல் வைத்த கவரைத் தந்து ரசீது பெற்று வர வேண்டும். வாரம் ஒரு முறை வாழைப்பந்தலுக்குப் போய் வர நாலணா கூலியாகக் கிடைக்கும். அந்த வேலையை நான்தான் செய்து வந்தேன்.

வாழைப் பந்தல் போக வேண்டிய நாட்களில் காலையில் எழுந்து, உலர்ந்த கிச்சிலிக்காய் ஊறுகாயுடன் பழையது. சாப்பிட்டு விட்டு அந்தக் கோட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அப்பா இன்ஷூரன்ஸ் கவரைக் கோட்டின் உள் பாக்கெட்டில் வைத்து கோட்டின் மீது ஒரு கயிற்றால் என் உடம்போடு சேர்த்துப் பந்தோபஸ்தாகக் கட்டி விடுவார்.

கூலியாகக் கிடைக்கும் அந்த நலணாவில் எப்போதாவது காலணா அரையணா நானகவே அப்பாவுக்குச் சொல்லாமல் செலவு செய்துவிட்டு அப்பாவிடம் திட்டும் குட்டும் வாங்கிக் கொண்ட நாட்களும் உண்டு. வாழைப்பந்தல் போய் வருவது என்றால் எனக்கு வாழைப்பழம் சாப்பிடுகிற மாதிரி. காரணம், அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த டோக்கியா கின்ஸா வாழைப்பந்தல் கடைவீதிதான்!

சில ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கை திசை மாறி, நான் எழுத்தாளனாக வளர்ந்து பத்திரிகை ஆசிரியனாகவும் ஆகிவிட்டேன். கால வெள்ளத்தின் சுழல்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து, எதிர்நீச்சல் போட்டு சிலிர்த்து நிற்கின்ற என் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றில் மறக்க முடியாதவை மறந்து போனவை எல்லாம் உண்டு. ஆனாலும் இளம் வயதில் காலணாவுக்கு கலர் பத்தாஸ் (சர்க்கரை மிட்டாய்) வாங்கிச் சாப்பிட்டது போன்ற அற்ப நிகழ்ச்சிகள் மட்டும் மறக்கவே இல்லை.

சில மாதங்களுக்கு முன், “சாவி இதழ் வைத்திருந்தால் ரூபாய் 500 பரிசு” என்று ஒரு திட்டத்தை அறிவித்து வாரம் ஒரு ஊருக்குப் போய்ப் பரிசுத் தொகையைக் கொடுத்து வந்த போது, வேலூருக்கு ஒருமுறை போயிருந்தேன். அங்கே ஒரு வீட்டில் தையல் வேலை செய்யும் ஏழைப் பெண்மணி ஒருத்திக்குப் பரிசு கிடைத்தது. நான் வந்திருக்கும் செய்தி லேசாக அக்கம் பக்கம் பரவ அந்த வீட்டில் ஒரு சின்னக் கூட்டம் சேர்ந்து விட்டது. அந்தக் கூட்டத்தில் தொண்டுக் கிழவர் ஒருவர் ஓரமாய் நின்று என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பரிசுத் தொகை கொடுத்து முடிந்ததும் அவர் என்னருகே வந்தார்.

“என்னை அடையாளம் தெரிகிறதாப்பா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லையே ... தாங்கள் யாரென்று சொன்னால் தெரிந்து கொள்வேன்” என்று நான் இழுத்தேன்.

“நான்தான் வாழைப்பந்தல் போஸ்ட் மாஸ்டர். சின்ன வயசில் நீ வந்து இன்ஷூர் செய்து விட்டுப் போவாயே. ஞாபகம் இருக்கிறதா? அந்த விசுவநாதன்தானே நீ இப்போது பேரும் புகழுமாய் இருப்பது அறிந்து எனக்குச் சந்தோஷமாய் இருக்கிறது. நீ ஒரு புகழ் பெற்ற எழுத்தாளனாக இருப்பது நம் ஜில்லாவுக்கே பெருமை! நான் இந்தத் தெருவில்தான் எதிர்வீட்டில் குடியிருக்கிறேன். நீ வந்திருப்பதாகச் சொன்னார்கள். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன் இப்போது பார்த்துப் பேசி விட்டேன், ரொம்ப சந்தோஷம்!” என்றார்.

அந்தப் போஸ்ட் மாஸ்டரின் அன்பும், அவர் கண்கள் பாச உணர்வின் மிகுதியால் பனித்திருந்ததும் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.
---------------

45. என் முதல் பஸ் பயணம்

வானம் பார்த்த பூமிகளில் வடாற்காடு மாவட்டமும் ஒன்று. வேர்க்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய்ப் பயிர் சாகுபடி அதிகம். சாகுபடி காலங்களில் தவிர மற்ற நாட்களில் விவசாயிகளிடம் பண நடமாட்டம் இருக்காது. கையில் காலணா இல்லாமலே கிராம மக்கள் காலத்தை ஓட்டி விடுகின்ற தந்திரத்தைக் கற்று வைத்திருந்தார்கள்!

வறட்சிக் காலங்களில் ஏழை மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பது, சாகுபடி காலங்களில் அந்தப் பணத்துக்கு ஈடாகக் கொல்லைகளில் விளையும் வேர்க்கடலைகளை அளந்து வாங்கிக் கொள்வது என்று ஒருவகை வட்டி வியாபாரம் அந்தக் காலத்தில் நடந்து வந்தது. அந்த வியாபாரிகளில் என் தந்தையும் ஒருவர்.

இப்படி வசூலிக்கும் வேர்க்கடலைகளே உலர்த்தி, அவற்றை மொத்தமாகக் கட்டி வைத்து, நல்ல விலை வரும் வரை காத்திருந்து, மொத்த வியாபாரி யாரிடமாவது அதிக லாபத்துக்கு விற்பார்கள். வசூல் செய்யும் கடலைக்காயை உலர்த்தி வைக்க விஸ்தாரமான நிலப்பரப்பு தேவைப்படும். எங்கள் ஊரில் அதற்குப் பொருத்தமான இடம் சுடுகாடுதான்!

என் தந்தையைப் போலவே அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட வேறு சிலரும் உலர்த்துவதற்கு அந்த மயான பூமியைத்தான் பயன்படுத்தினார்கள். இப்படி ஒரு மாத காலம் அந்த மயான பூமி முழுவதும் வேர்க்கடலை மயமாய்ப் பரந்து கிடக்கும். சவாரி வண்டிகளின் கூண்டுகளை அங்கே கொண்டு வைத்துக் கொண்டு அதற்குள் உட்கார்ந்து காவல் புரிவார்கள். தினமும் ரிலீவிங் ஸ்டேஷன் மாஸ்டர் போல் நான் போய் அப்பாவை வீட்டுக்கு அனுப்புவேன். சிறு பையனாக இருந்த காரணத்தால் இரவு நேரக்காவலுக்கு மட்டும் என்னை அனுப்ப மாட்டார்கள்.

அந்த மயானத்தை அடுத்து ஒரு ரோடு. ஆரணிக்கும் செய்யாற்றுக்கும் அந்த வழியாக ஒரே ஒரு பஸ் போய் வரும். மயானத்திலிருந்தபடியே அந்த பஸ்ஸின் வரவை ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். அதுவரை நான் பஸ்ஸில் பயணம் செய்தது கிடையாது. என்றாவது ஒரு நாள் அதில் பயணம் செய்து பார்த்து விடவேண்டுமென்று விரும்பினேன்.

ஒருநாள் அப்பாவுக்குத் தெரியாமல் களத்திலிருந்து கொஞ்சம் வேர்க்கடலையை வாரி எடுத்துத் துணியில் மூட்டை கட்டிக் கொண்டு போய் பல சரக்குக் கடையில் விற்று இரண்டணா தேற்றிக் கொண்டேன். பஸ் வருகைக்காக அந்த ரோடு ஓரத்தில் போய்க் காத்திருந்தேன் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் கையை வீசி நிறுத்தும்படி அபிநயம் செய்தேன்.

நின்றது.

“எங்கே போவனும் தம்பி?” கண்டக்டர் கேட்டார்.

“ரெண்டணா வச்சிருக்கேன். அதற்கு எங்கே கொண்டு போய் விட முடியுமோ. அங்கே விட்டுவிடு” என்றேன்.

“ஏறிக்கொள்” என்றார்.

மூன்று மைல் தொலைவிலுள்ள மாமண்டூர் கிராமம்வரை கொண்டு போய் விட்டார். ஜன்ம சாபல்யம் தீர்ந்தது. அங்கிருந்து நடந்தே திரும்பி வந்து சேர்ந்தேன். இந்த இடை வேளையில் என் அப்பா களத்துக்கு வந்து பார்த்திருக்கிறார், சவாரிக் கூண்டில் என்னைக் காணாமல் திடுக்கிட்டுப் போயிருக்கிறார். சுற்று முற்றும் தேடிப் பார்த்திருக்கிறார். “பையனுக்கு என்ன ஆபத்தோ? எங்கே போனானோ?” என்று பயந்து போய் குளம் குட்டைகளெல்லாம் வலை வீசியிருக்கிறார். கடைசியில் நான் மாமண்டூரிலிருந்து நடந்தே வருவதைக் கண்டு விட்டு “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாா்.

நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை பேசியதற்காக எனக்கு அன்று கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா? செம்மையான உதைதான்! புளியமிலாறு பிய்ந்து விட்டது. முதுகெல்லாம் ரணம்! அழுது அழுது கண்கள் வீங்கிப் போயின.

அப்பா அடித்துத் துன்புறுத்தியதால் அந்த விரக்தியில் மனம் முறிந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டே போய் விட்டேன். சென்னையை இலக்காக வைத்து என் பாதயாத்திரையைத் தொடங்கினேன். முதலில் குப்படிச்சாத்தம், (தி. மு. க. ஆற்காடு வீராசாமியின் கிராமம்) அப்புறம் கலவை, அப்புறம் ஆற்காடு-ஆற்காட்டில் உறவினர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு, இரண்டாவது கட்டமாக சென்னை நோக்கிப் பயணம்— இதுதான் என் திட்டம்.

இடுப்பில் ஒரு வேட்டி. தோள் மீது காசிப்பட்டுத் துண்டு. ஆறு மைல் தூரத்திலுள்ள கலவையைத் தாண்டி ஆற்காடு நோக்கி நடக்கிறபோது கால் வலி தாங்க முடியவில்லை. இரட்டை மாட்டு வண்டி ஒன்று போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டிக்காரர் நிம்மதியாக வண்டிக்குள்ளேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

நான் அந்த வண்டிக்காரரை எழுப்பி “நீங்க நல்லாப் படுத்துத் தூங்குங்க. நான் வண்டி ஒட்டுகிறேன்” என்றேன். அவர் சந்தோஷமாய் ஒப்புக் கொண்டார்.

எனக்கு வண்டி ஓட்டத் தெரியும். மாடுகளை அதட்டி வால்களை முடுக்கிவிட்டு வண்டியை வேகமாகச் செலுத்தினேன். மாடுகளின் சலங்கை ஒலி காதுக்கு இனிமையாக இருந்தது. ஆற்காட்டை இன்னும் ஒரு மணி நேரத்தில் அடைந்து விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம். நான் அதுவரை ஆற்காடு பார்த்ததில்லை.

இந்தச் சமயம் பார்த்துப் பின்னால் ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்ஸின் முன் சீட்டில் என் தந்தை உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்து போய் வண்டிக்குள் ஆமை போல் அடங்கிக் கொண்டேன். அப்படியும் என் சிவப்பு மேல் துண்டு (காசிப்பட்டு) என்னை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. “அதோ, அதோ பையன்!” என்ற என் தந்தையின் குரல். பஸ் நின்று விட்டது. என்னைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்த என் தந்தை என்னைக் கண்டதும் கண்கலங்கி விட்டார்.

“உன்னை அடித்தது தப்புதான். அதற்காக நீ இப்படியா சொல்லாமல் வந்து விடுவது? ஊரில் ஒரு கிணறு பாக்கி இல்லாமல் தேடிப் பார்த்து விட்டோம். நீ எனக்கு ஒரே மகன். பிள்ளைப் பாசம் கேட்கவில்லை. அன்பினால்தானே அடித்தேன்; நீ இப்படிச் செய்யலாமா? உன் அம்மா உன்னைக் காணாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். வண்டியை விட்டு இறங்கி வா. வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்தார். நான் சற்று பிகு செய்துவிட்டு அப்புறம்தான் இறங்கி வந்தேன்.

காலையில் குப்படிச்சாத்தம் பக்கமாக நான் நடந்தே போய்க் கொண்டிருந்ததை எதிரில் வந்த பள்ளிச் சிறுவர்கள் பார்த்து விட்டு என் தந்தையிடம் போய்ச் சொல்லியிருக்கிறர்கள். உடனே என் அப்பா ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு என்னைத் தேடி வந்திருக்கிறார். அப்புறம் என்ன செய்ய? நான் அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு அப்பாவோடு ஊர் போய்ச் சேர்ந்தேன். ஆசை தீர இன்னொரு பஸ் பயணம்!
--------------

46. மாடி வீட்டு மாமா

மாம்பாக்கத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள கடுகனூருக்குச் செல்ல செய்யாற்றைக் கடக்க வேண்டும். அந்த ஆற்றில் எப்போதாவது அபூர்வமாகவே வெள்ளம் வரும். சில நாட்களே ஓடும் அந்த வெள்ளம் செய்யாற்றின் ஒரு வருட அழுக்கைத் துப்புரவாக்கிவிட்டு ஓய்ந்து விடும். ஆற்று மணலில் நடந்து போய் நட்டாற்றில் ஊற்றுத் தோண்டி அதிலிருந்து அடக்கமாக வெளிப்படும் தெள்ளிய நீரில் குளித்து மகிழ்வதைப் போன்ற சுகம் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஸ்விம்மிங் பூலில் கிடைக்காது. நான் ஊற்றுத் தேக்கத்தில் மல்லாந்து படுத்துக் குளித்து மகிழ்வதற்காகவும் மாமா வீட்டு மாடி மீது ஏறிப்போய் ‘ஏரியல் வியூ’வில் பசுமையான கிராமத்து வயல் வெளிகளைப் பார்ப்பதற்காகவும் அடிக்கடி கடுகனூர் போய் வருவேன். அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு மாடி வீடுதான் உண்டு. அது என் மாமாவின் வீடு. “எங்க மாமா பெரிய பணக்காரர். மாடி வீட்டுக்காரர்” என்று மற்ற சிறுவர்களிடம் சொல்லிக் கொள்வதில் தனிப் பெருமை கொள்வேன்.

என்னிடத்தில் பற்றும் பாசமும் மிக்கவர் என் மாமா. “பையா, பையா!” என்று ஆசையோடும் அன்போடும் அழைத்துக் கொஞ்சுவார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இருவருக்குமே குழந்தைகள் இல்லாததால் மாமாவுக்கு அது பெரும் குறை. அந்தக் குறையைப் போக்க என்னிடத்தில் அளவு கடந்த பிரியம் காட்டினார். வெளியூருக்குப் போய் வந்தால் எனக்கு கிச்சிலி மிட்டாய் வாங்கி வந்து கொடுப்பார். அரிசி பெப்பர்மிண்ட்டுக்கு மேல் நான் பார்த்திராத காலத்தில் கிச்சிலி மிட்டாய் எனக்கொரு அதிசயப் பொருளாக இருந்தது.

ஒரு சமயம் பெரிய நெல்லிக்காய் அளவில் அவர் வாங்கி வந்திருந்த பெப்பர்மிண்ட்டைக் கண்ட போது எனக்கு ஏற்பட்ட வியப்பு பின்னொரு காலத்தில் தாஜ்மகாலைப் பார்த்த போது கூட உண்டாகவில்லை. அந்த மிட்டாயை வாயில் போட்டுச் சிறிது நேரம் சுவைத்து விட்டு, மறுபடி அதை வெளியில் எடுத்துத் துணியால் துடைத்துப் பத்திரமாக வைத்திருந்து, மறுநாள் எடுத்துச் சாப்பிடுவேன். இம்மாதிரி அந்த மிட்டாயை மூன்று நான்கு நாட்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்துக் கரைத்துத் தேய்பிறையாக்கிய நிகழ்ச்சி இன்றும் நினைவிலுள்ளது.

என் மீது இத்தனை அன்பு கொண்டு இத்தனை பெரிய பெப்பர் மிண்ட் வாங்கித் தந்த அந்தப் பணக்கார மாமா, பிற்காலத்தில் நொடித்துப் போனது என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

பிற்காலத்தில் நான் சென்னையில் வேலை ஏதுமில்லாமல் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது அவர் சென்னைக்கு வந்திருந்தார். அவரைத் தகுந்தபடி உபசரிக்கவோ, ஊரைச் சுற்றிக் காட்டவோ வேண்டிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை. ஆனாலும் மாமாவை ஒரு சினிமாவுக்காவது அழைத்துப் போக வேண்டுமென்று விரும்பினேன். வள்ளித் திருமணம் என்ற தமிழ் பேசும் (பாடும்) படம் அப்போது கெயிட்டி தியேட்டரில் ஒடிக் கொண்டிருந்தது. டி. பி ராஜலட்சுமி வள்ளியாகவும், வி. ஏ. செல்லப்பா வேலன், வேடன், விருத்தனாகவும் நடித்த படம் அது.

யாரிடமோ ஒரு ரூபாய் கடன் கேட்டு வாங்கிக் கொண்டு மாமாவை கெயிட்டி தியேட்டருக்கு நடத்தியே அழைத்துச் சென்றேன். தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம் டிக்கெட்டுக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் புகுந்து எட்டணாவுக்கு இரண்டு பெஞ்ச் டிக்கட்டுகள் வாங்கி விட்டேன். முதல் வரிசையில்தான் இடம் கிடைத்தது. அதாவது வெள்ளித் திரைக்கும் எங்கள் முதல் வரிசை பெஞ்சுக்கும் இடையே சோடா கலர் விற்பவர்களைத் தவிர எந்தவித இடையூறும் இல்லை. மாமாவுக்குப் பரம சந்தோஷம். கிராமத்து மனிதர். தெருக்கூத்து தவிர வேறு எதுவும் பார்த்து அறியாதவர். சென்னைக்கு அது தான் முதல் விஜயம். சினிமா என்ற பேராச்சரியத்தை அப்போது தான் முதல் முதல் தரிசிக்கிறார் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறும் போது பெரும் கூட்டம் சாடிக் கொண்டு வெளியேறிய காட்சி கண்டு மலைத்துப் போனார்.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் முதல் வகுப்பு டிக்கட் வாங்கி அவரைப் படம் பார்க்க அழைத்துச் சென்றதை மிகப் பெருமையாக எண்ணிக் கொண்டார். சினிமாவில் முதல் வகுப்பு என்பது கடைசியாகத்தான் இருக்கும் என்பது அப்பாவி கிராம வாசியாகிய அவருக்கு விளங்கவில்லை.

வீட்டுக்குத் திரும்பியதும் ரொம்பப் பெருமையோடு என் தாயாரிடம் “பையன் என்னை முதல் வரிசையில் எல்லோருக்கும் முன்னால் கொண்டு போய் உட்கார வைத்து விட்டான்” என்று சொல்லிக் கொண்டார்.

அதுதான் அதம பட்சம். கடைசி வகுப்பு என்பதை நான் அவருக்குக் கடைசி வரை சொல்லவே இல்லை. மாடி வீட்டில் வாழ்ந்த மாமாவிடம் பெரிய பெரிய மிட்டாய்கள் வாங்கித் தந்த பணக்கார மாமாவிடம் ‘கடைசி வகுப்பு டிக்கட் வாங்கி சினிமா காட்டினேன்’ என்ற ‘குட்டை’ உடைத்து அவர் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை நான்!
--------------

47. மூன்று கால கட்டங்கள்

எங்கள் கிராமத்தில் வருடா வருடம் மாரியம்மன் திருவிழா மிகச் சிறப்பாக நடத்துவார்கள். கரகம் ஜோடித்து உச்சியில் எலுமிச்சம்பழம் வைத்து அம்மனைத் தலைமேல் தூக்கிக் கொண்டு வீதிவலம் போவார்கள். தாரை, தப்பட்டை, கொம்பு வாத்தியம், மேள வாத்தியம் எல்லாமாகச் சேர்ந்து போடுகிற சத்தத்தில் ஊரே அமர்க்களப்படும்.

அம்மனுக்குப் படைக்க எங்கள் விட்டில் கூழ் காய்ச்சுவார்கள். உங்களுக்குக் கிராம வாழ்க்கை பரிச்சயமென்றால், கிணறுகளில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைக்கும் ‘சால்’ என்ற பெரிய தொட்டியும் பரிச்சயமாகி இருக்கும். அந்தத் தொட்டியைப் பளபளவென்று தேய்த்துச் சுத்தமாக்குவார்கள். கோலம் போட்டு வைத்துள்ள வீட்டு வாசலில் அதைக் கொண்டு வைத்து காய்ச்சிய கூழைக் அந்தச் சால் நிறைய ஊற்றி நிரப்பிப் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். அப்புறம் அந்தக் கூழ் முழுதும் ஏழைகளுக்கு விநியோகம் ஆகிவிடும்.

கூழ் சாப்பிடுவது என்பதை மேட்டுக் குடிமக்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஒவ்வாததாய்க் கருதினர். உழவர்களும், உழைப்பாளிகளும், ஏழை எளியவர்களும் சாப்பிடுவதற்காகவே ஏற்பட்ட தானியம் கேழ்வரகு என்பது அவர்கள் எண்ணம். அக்கிரகாரத்துக்குள் எல்லோருமே அரிசிச் சோறுதான் சாப்பிடுவார்கள். அங்கே கூழ் தலை காட்டாது. கூழ் சாப்பிட்டால், 'பாவம், கூழ் சாப்பிடுகிறர்கள்’ என்ற அனுதாபத்துக்கும் கேலிக்கும் இலக்காவார்கள். எனக்குக் கூழ் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். என் குடும்பம் அப்போது வசதியான நிலையில் இருந்தாலும் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக விழாக் காலங்களில் சாலில் கூழ் நிரப்பும் போதே என் தாய் தனியாகக் கொஞ்சம் எடுத்து வைத்து எனக்கும் என் போன்ற சிறுவர்களுக்கும் கொடுப்பார்கள். அதில் கெட்டித் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்காகவே ஆயிரம் முறை பிறப்பெடுக்கலாம். கூழ் சாப்பிட்டால் வயிறு ‘பம்’மென்று நிரம்புவதுடன் உள்ளமும் உடலும் குளிர்ந்து போகும். மாரியம்மன் மனம் குளிர்ந்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் கூழ் படைப்பதாய்ச் சொல்வார்கள். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள கடுகனூரில் என் மாமா வசித்து வந்தார். அவர் ஊரில் விழா என்றாலும் நான் நடந்து போய் கூழ் சாப்பிட்டு விட்டு, தெருக்கூத்தும் பார்த்து விட்டுத்தான் ஊர் திரும்பி வருவேன். நானாகவே விரும்பிக் கூழ் சாப்பிட்ட முதல் கால கட்டம் இது.

பின்னர் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் குன்றி, மிஞ்சி இருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்து சுகங்களும் போய் குசேலர் நிலைக்கு வந்து விட்டோம். அந்த வறுமையை விவரித்துச் சாத்தியமில்லே. என் அம்மாவுக்குக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையில்லாத காரணத்தால், இருந்த ஒரே புடவையை இரண்டாகக் கிழித்து, ஒன்று கட்டியிருக்கையில் இன்னென்றைத் துவைத்துப் போட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். இது என் குடும்பத்தின் அன்றைய வறுமை நிலைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அரிசி அப்போது எங்களுக்குக் கனவுச் சோறாக இருந்தது. கேழ்வரகு ரொம்ப மலிவு விலை என்ற போதிலும் அதை வாங்கும் சக்தி கூட இல்லாமல் கால்படி, அரைப்படி என்று குடியானத் தெருவிலிருந்து ரகசியமாகக் கடனாக வாங்கி வந்து காய்ச்சிக் குடிப்போம். வறுமையின் கட்டாயத்தால் நான் கூழ் குடிக்க நேர்ந்த இரண்டாவது கால கட்டம் அது.

முப்பது வருடத்துக்குப் பின்னர் இப்போது எனக்கு வாழ்க்கையில் போதிய வசதிகள் கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலும் நான் தினமும் சாப்பிடுவது கூழ் தான். இதற்குக் காரணம் என் விருப்பமுமில்லை, வறுமையுமில்லை. எனக்கு டயபடீஸ் இருப்பதால் அடிக்கடி எடுக்கும் பசியைத் தணிக்க அரிசிச் சோற்றைக் காட்டிலும் கூழ் கன ஆகாரமாயிருப்பதுதான். டயபடீஸ்காரர்கள் அரிசிச் சோறு அதிகம் சாப்பிடக் கூடாது என்பதால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுத்து விடுகிறது. கூழ் டயபடீஸுக்கு நல்லது அல்ல என்றாலும், கெடுதலும் அல்ல என்று டயாபடீஸ் டாக்டர் நிபுணர் திரு விசுவநாதன் சொல்கிறர். எனவே பசியைத் தவிர்க்க இது ரொம்பவும் பயன்படுவதால் கூழைக் கட்டாயமாக வேண்டிச் சாப்பிடுகின்றேன். விரும்பிச் சாப்பிட்டது முதல் நிலை. வருந்திச் சாப்பிட்டது இரண்டாவது நிலை, தெரிந்து சாப்பிடுவது இப்போது மூன்றாவது நிலை.

இந்த மூன்று கால கட்டங்களிலும் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றில் மட்டும் மாற்றமே இல்லே. அது கூழின் ருசி!
-----------

48. கொஞ்சம் இனிப்பு—கொஞ்சம் கசப்பு

காஞ்சிப் பெரியவர்களை தரிசிப்பதற்காகச் சென்ற வாரம் கலவைக்குப் போனபோது, அப்படியே என் சொந்த கிராமத்தையும் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். கிராமத்தைச் சுற்றிலும் முட்செடிகள் அமோகமாய் வளர்ந்திருப்பதைத் தவிர பெரிய மாறுதல்கள் எதையும் காண முடியவில்லை.

சிறு வயதில் நான் வசித்த அந்தத் தென்னை மர வீட்டையும் எட்டிப் பார்த்தேன். பூட்டிக் கிடந்தது. “தென்னை மரம் போயிட்டுது” என்று முருகேச கவுண்டர் சற்று வருத்தத்தோடு சொன்னபோது எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

கலவைக்குப் போகும் வழியில் கரும்புத் தோட்டங்கள் கண்ணில் பட்டன. அந்தக் காலத்தில் என் தந்தை கரும்பு சாகுபடி செய்த பழைய நினைவுகள் தோன்றி என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின.

கிராமத்து எல்லையில், எட்டியம்மன் கோவிலுக்கருகில் எங்களுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலங்கள் இருந்தன. ஆற்றுப் பாசன வசதி இல்லாததால் பெரிய கிணறுகள் வெட்டி ஏற்றம் போட்டு வயலுக்கு நீர் பாய்ச்சுவார்கள். வடாற்காடு மாவட்டம் முழுதுமே ஏறக்குறைய இப்படித்தான்.

என் தந்தை அந்த வயல்களுக்குப் பக்கத்தில் பெரிய கிணறு வெட்டி ஏற்றம் போட்டிருந்தார். அதில் ஊற்றுத் தண்ணீர் எப்போதும் சுரந்தபடி இருக்கும். கிணற்றங்கரை மேட்டில் வாழையும். அகத்தியும், முருங்கையும் ஆண்டு முழுவதும் பலன் தந்து கொண்டிருக்கும்.

ஒரு வருடம் கரும்பு பயிருட்டுப் பார்க்க விருமபினார் என் தந்தை.

நெற்பயிரைத் தவிர வேறு எதுவும் விளைந்து பார்த்திராத எனக்கு இது சற்று ஆச்சரியமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது. கரும்பு, வெல்லம், கரும்புச்சாறு இதெல்லாம் இலவசமாகச் சாப்பிடலாம் என்ற நினைப்பே இனிக்கச் செய்தது

நிலத்தை ஆழ உழுது பாத்திகள் வெட்டி கரும்புக் கணைகளைக் கொஞ்சம் முனை தெரியும்படி மண்ணில் ஊன்றி நீர் பாய்ச்சிய போது அந்தக் காட்சியைக் கண் கொட்டாமல் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் நிலத்தில் ஊன்றிய அந்தக் கரும்புத் துண்டுகள் முளைவிட்டு வளர்ந்தபோது பெரிய ஆச்சரியம் நிகழ்வதுபோல் தோன்றியது.

கரும்பு முற்றி சாகுபடிக்குத் தயாரானதும் ஒரு நல்ல நாள் பார்த்து கரும்பு வெட்டத் தொடங்கினார்கள்.

கிணற்றடியில் பக்காவாக ஒரு குடிசை போட்டு அடுத்த சில தினங்களுக்குள் நாங்கள் அந்தக் குடிசைக்குக் குடியேறினோம்.

கிணற்றுக்குப் பக்கத்திலேயே கரும்புச்சாறு பிழியும் ஆலையை நிறுவினோம்.

ஆலை இயக்கத்துக்கு இரண்டு மாடுகள் போதவில்லை. அந்த மாடுகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது மாற்றக வேறு மாடுகள் தேவைப்பட்டன. இன்னொரு ஜோடி மாடுகள் விலைக்கு வாங்கி ஷிப்ட் முறையில் வேலை வாங்கப் பொருளாதார வசதி இல்லை.

புதிதாக விலை கொடுத்து மாடுகள் வாங்குவதைக் காட்டிலும் யாரிடமாவது ஒரு மாதத்துக்கு மாடுகளை இரவலாக வாங்கிக் கொள்ளலாம் என்பது அம்மாவின் யோசனை.

கடுகனூரிலுள்ள என் மாமாவிடம் மாடுகள் ஏராளமாயிருந்தன. ஆனாலும் அப்பாவுக்கு அவரிடம் கேட்க இஷ்டமில்லை.

“நான் கேட்கட்டுமா?” என்று அப்பாவிடம் சொன்னபோது, “கேட்டுப் பார்” என்றார் அப்பா, மாமாவுக்கு என்னிடம் அளவு கடந்த அன்பு ஆனதால் நான் கேட்ட உடனேயே பதில் ஏதும் சொல்லாமல் சந்தோஷமாக மாடுகளை அனுப்பி வைத்து விட்டார்.

கரும்புச் சாற்றை இரும்புக் கப்பரையில் ஊற்றி, மணிக்கணக்கில் காய்ச்சி, வெல்லப் பாகு பக்குவ நிலைக்கு வரும் போது பொன் பதமாக அந்தப் பாகைப் பலகைக் குழியில் ஊற்றி வெல்லம் தயாரிப்பது ஓர் அபூர்வக் கலை. அந்தக் கலையில் நான் கைதேர்ந்த அனுபவசாலியாகி விட்டேன்.

கப்பரையில் எத்தனை குடம் பால் ஊற்ற வேண்டும்? பால் காயும் போது திரண்டு வரும் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும்? வெல்லப்பாகு பக்குவம் பெறும் நேரம் தெரிந்து எப்போது அதைப் பலகைக் குழியில் ஊற்ற வேண்டும்? இவ்வளவும் எனக்கு அத்துபடி.

மாங்காய், தேங்காய் இவற்றைக் கோப்பரை வளையத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொதிக்கும் வெல்லப் பாகோடு சேர்த்துப் பதமாக வேகவைத்ததும் அவற்றை எடுத்துச் சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி அடைவோம். இது கூடக் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் இனிப்புப் பண்டங்களே திகட்டிப் போகும்.

குடிசையிலிருந்து மணக்கும் அம்மா சமையலும், கப்பரையில் கொதிக்கும் வெல்ல வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைக்கும்.

இனிப்புக்கு ஒரு மாற்றாக அம்மா எனக்கும் என் தந்தைக்கும் காரமான சமையலாகவே செய்து போடுவார். பொறிக் கொள்ளு, கார அடை, அதற்குத் தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி இத்தியாதி......

நல்ல வெயில் வேளையில் சில்லென்ற கிணற்று நீரில் இறங்கி நீச்சலடித்துக் குளித்து விட்டுக் கரையேறும் போது பகாசுரப் பசி எடுத்து விடும்.

அந்தப் பசி வேளைக்கு அம்மா சமைத்துப் போடும் உணவு தேவாமிருதமாயிருக்கும். சாப்பாட்டுக்குப் பின் ஒரு தூக்கம் போடத் தோன்றும்.

இம்மாதிரி ஒரு மாதம் அல்லது நாற்பது நாட்கள் பொழுது போவதே தெரியாமல், கரும்புச் சாகுபடி வேலையில் மூழ்கி விடுவோம்.

திடீரென்று ஒருநாள் மாமா அனுப்பிய மாடுகளில் ஒன்று கீழே விழுந்து கால்களை உடைத்துக் கொண்டது. வாயில் நுரை நுரையாய்ப் பொங்கி வழிந்தது.

கரும்புச் சோகையும், அழுக்கு வெல்லப் பாகும் சாப்பிட்டதன் விளைவாய் அதற்கு நினைவு தப்பிப் போயிற்று. காலை உதைத்துக் கொண்டிருந்த மாடு அன்று மாலைக்குள் செத்துப் போயிற்று. மாமாவுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்பாவும், அம்மாவும் கலங்கிப் போனார்கள். எனக்கோ மாமாவைப் பார்ப்பதற்கே தயக்கமாயிருந்தது.

மிகமிக உற்சாகமாக, இனிமையாகத் தொடங்கிய அந்தக் கரும்புச் சாகுபடி சீசன் கடைசியில் பெரும் சோகத்தில் முடிவடைந்தது.
--------------------

49. ஊருக்கு வந்த குறத்தி

கிராமத்துப் பள்ளியில் ஆங்கிலம் கற்பதற்கு வழியில்லை. ஆங்கில எழுத்துக்களை ஆரூர் வாத்தியார் நரசிம்ம ஐயங்காரிடம் கற்றுக் கொண்டேன். அவர்தான் பஞ்சாயத்து ஸ்கூல் டீச்சர். கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆரூரிலிருந்து மாம்பாக்கத்துக்கு தினம் தினம் நடந்தே வந்து போவார். நான் அவரிடம் படித்த மாணவன் என்பதில் அவருக்குப் பெருமை அதிகம். சமீபத்தில் ஒருநாள் அவர் என்னிடம் பேச விரும்பி என் வீட்டுக்குப் போன் செய்த போது நான் வீட்டில் இல்லாமற் போனது என் துரதிருஷ்டமே.

அந்த ஆசானிடம் எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முறையில் அந்தப் பெரியவரை நேரில் சென்று தரிசித்து வணங்கி விட்டு வரும் நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறும் அவரிடம் கற்றுக் கொண்டவைதான். பிறகு பெரிய எழுத்து பாட புத்தகங்களை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதும் அவரிடம் தான்.

ஒரு நாள் எங்கள் கிராமத்துக்கு நரிக்குறவர் குடும்பம் ஒன்று வந்திருந்தது. அந்தக் குடும்பத்தினர் ஊர் ஓரத்தில் சத்திரத்துக்குப் பின்னால் மாந்தோப்பில் ‘முகாம்’ போட்டிருந்தார்கள். அவர்களில் இளம் வயது குறத்திப் பெண் ஒருத்தி மிக வசீகரமாயிருந்தாள். ஏறக்குறைய டி. ஆர். ராஜகுமாரி மாதிரி தோற்றம் உடையவள். ‘ஸெக்ஸ்’ உணர்வு இன்னதென்று புரியாத இரண்டுங்கெட்டான் வயசு என்னுடையது. அவளிடம் எனக்கு ஒரு ‘கிறக்கம்’ உண்டாயிற்று.

அவளைப் பார்ப்பதற்காகவே காலையிலும் மாலையிலும் அந்தத் தோப்புக்குப் போய் விட்டு வருவேன். அவளிடம் ஏதாவது வலியப் பேசி விட்டு வருவேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் மரத்தடியில் உட்கார்ந்து யாருக்கோ பச்சை குத்திக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட போது அவள் என்னைத் தொட்டுப் பச்சை குத்த வேண்டும் என்று அந்தரங்கமாய் ஓர் ஆசை என்னுள் எழுந்தது.

“பச்சை குத்த எவ்வளவு தர வேண்டும்?”

“ஒர்ணா குடு” என்றாள். வீட்டில் காசைத் திருடி எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்தேன். என் இடது கையில் நானே பேணாவினால் M.S.V. என்று மூன்று எழுத்துக்களை எழுதி அவற்றின் மீது அப்படியே பச்சை குத்தச் சொன்னேன். அவள் என் இடது கையை இழுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டு (ஒரு கிளுகிளுப்பு) ஊசியால் சுருக் சுருக்கென்று குத்தியபோது எனக்கு அந்த வலி தெரியவில்லை. அந்தக் குத்தலில் ஓர் இன்பம் இருந்தது. இந்த உணர்வு எனக்குப் புதிய அனுபவம். இதன் பின்னணி ஸெக்ஸ்தான் என்பது எனக்கு அப்போது விளங்கவில்லை. பிற்காலத்தில் வயது முதிர்ந்து பக்குவம் பெற்ற பிறகே புரிந்து கொண்டேன். அந்தக் குறத்தியின் பல்வரிசை, ‘கொல்’ சிரிப்பு, தொப்புள் தெரியும் இளம் தொந்தி, டப்பா தட்டிக் கொண்டு ‘லல்லல்லல்லா’ பாடி டான்ஸ் ஆடியது எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தின. அப்புறம் அவள் வேறு ஊருக்குப் போய் விட்டாள்.

அவள் போனபின் மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது. பச்சை குத்திக் கொண்டதற்குக் குறத்தியிடம் எனக்கிருந்த கிறக்கம் மட்டும் காரணமல்ல. என் இங்கிலீஷ் அறிவை அதாவது எம். எஸ். வி. என்று எழுதத் தெரிந்துவிட்ட புலமையைக் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமைந்து விட்டதும் ஒரு காரணமாகும்.

என் உடல் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல அந்த எழுத்துக்களும் என்னோடு சேர்ந்து பெரிதாக வளர்ந்து கொண்டேயிருந்தன. அப்புறம் அந்த எழுத்துக்களை நான் பார்க்கும் போதெல்லாம் அவை என்னைப் பார்த்து ‘அசடே!’ என்று அழைப்பது போலத் தோன்றுகிறது. இப்போது கூடச் சில நண்பர்கள் என் கையிலுள்ள அந்த எழுத்துக்களைப் பார்த்துவிட்டு “என்ன ஸார் இது? உங்க பேர் மறந்துவிடும் என்பதற்காகவா?” என்று ஜோக் அடிக்கிறாா்கள்.

இரண்டும் கெட்டான் வயதில் புரியாத் தனமாகச் செய்து விட்ட இந்த அசட்டுத்தனம் ஆயுள் முழுதும் நிரந்தரமாகி விட்டதை எண்ணும் போதெல்லம் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. இந்த எழுத்துக்களை யாரும் பார்க்காதபடி நான் முழுக்கை சட்டை போட்டு மறைத்துவிட முடியும். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அதை ஏன் மறைக்க வேண்டும்?

அறியாப் பருவத்தில் தெரியாத்தனமாகப் பச்சை குத்திக் கொண்டது பற்றி எண்ணும் போதெல்லாம் அந்தக் குறத்தியின் முகம்தான் என் கண் முன் தோன்றிச் சிரிக்கிறது! லல்லல்லல்லா!
----------------

50. நூற்றுக்கு நூற்றைந்து

பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரை படித்து முடித்ததும் கிராமத்தில் மேலே படிக்க வசதி இல்லாததால் படிப்பை அத்துடன் நிறுத்த வேண்டியதாயிற்று. பதினைந்து முடிந்து பதினாறாவது வயதைக் கடந்து விட்ட நிலையில், “வயதாகி விட்டதே! இனி எப்போது படிப்பது?” என்ற கவலை என்னைப் பிடுங்கித் தின்றது. அப்பாவுக்கு என் எதிர்காலம் பற்றிய கவலை இருப்பதாகவே தெரியவில்லை.

“பையனை ஏன் மேலே படிக்க வைக்காமல் இப்படி கிராமத்திலேயே வைத்திருக்கிறீர்கள்?” என்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் கேட்கும்போதெல்லாம் சரியான பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தார் என் தந்தை. வெட்டிப் பொழுது போக்குவது எனக்கே பொறுக்காமல் போகவே ஒருநாள் அம்மாவிடம் வெடித்து விட்டேன்.

“என்னை ஆரணியில் கொண்டு போய் பெரியம்மாவுடம் விட்டு விடுங்கள். நான் அங்கே படிக்கப் போகிறேன்” என்று சீறினேன்.

என் தாயாரும் என் வேதனையைப் புரிந்து கொண்டு, “அப்பாவிடம் சொல்லிப் பார்க்கிறேன்.” என்றார்.

“பையன் மேலே படிக்க ஆசைப்படுகிறன். ஆரணிக்குப் போகிறானாம். ‘இங்கே குளத்தையும் குட்டையையும் எத்தனை நாளைக்குச் சுற்றிக் கொண்டிருப்பது?’ என்று கேட்கிறான். அவனே அக்கறையாகக் கேட்கும் போது அனுப்பித்தான் பார்க்கலாமே” என்று அப்பாவிடம் சொன்னார்.

“அவனுக்கு வயதாகி விட்டது. இனி படிப்பு ஏறாது. ஆரணிக்குப் போனாலும் ஊர்தான் சுற்றுவான்” என்றார் தந்தை. “சரி. அதையும்தான் பார்த்து விடலாமே. பையனே அக்கறையோடு கேட்கிறானே! நாம் அவனைப் படிக்க வைக்கவில்லை என்ற பழி நமக்கு வேண்டாம். நாளைக்கே அனுப்பிவையுங்கள். என் அக்கா அங்கே இருக்கிறாள். அவள் பார்த்துக் கொள்வான். அக்காள் புருஷனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பையனிடம் கொடுத்தனுப்புங்கள். அவன் சாப்பாட்டுச் செலவுக்குப் பதிலாக இங்கிருந்து அரிசி மூட்டை அனுப்பி விடலாம்” என்றார்.

அப்பா ராத்திரியெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு என்னை அழைத்து, “ஆரணிக்கு அனுப்புகிறேன். அங்கே போய் ஒழுங்காகப் படிப்பாயா? பழையபடி ஊர் சுற்றுவாயா?” என்று கேட்டார்.

“ஒழுங்காய்ப் படிக்கிறேன்” என்றேன்.

“அப்படியானால் விடியற்காலம் புறப்படத் தயாராயிரு. நாளை சனிக்கிழமை. சனி விடியல் பயணத்துக்கு ரொம்ப நல்ல நேரம்” என்றார்.

விடியற்காலம் ஐந்து மணிக்கு அம்மா தயிர் சாதம் கட்டிக் கொடுத்தார். அப்பா இரண்டு ரூபாயை என்னிடம் கொடுத்து, “இதைப் பத்திரமாக வைத்துக் கொள். அவசியமாகச் செலவு செய்ய வேண்டியிருந்தால் செலவழி. வீண் செலவு செய்யாதே! நான் அடுத்த வாரம் ஆரணிக்கு வந்து உன்னை போர்டு ஹைஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். பிரம்மதேசம் சுப்பிரமணிய அய்யர்தான் ஹெட்மாஸ்டர். அவர் எனக்குத் தெரிந்தவர்தான். அவரிடம் சொல்லி உன்னை முதல் ஃபாரத்தில் சேர்த்து விடுகிறேன்” என்றார்.

நல்ல கோடை மழை பெய்து குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பியிருந்த நேரம். குளிர்ந்த வேளையில் அம்மா கொடுத்த கட்டுச் சாதத்துடன் ஆரணிக்குப் புறப்பட்டு விட்டேன்.

நீர்த் தேக்கங்களில் தவளைகள் முறை வைத்துக் கத்திக் கொண்டிருந்தன. லேசான இருள் கவ்வியிருந்தது.

அப்பா என்ன வழி அனுப்புவதற்காக இரண்டு மைல் கூடவே நடந்து வந்தார். நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொண்டே வந்தார். வழியில் இருந்த நீர்த்தேக்கத்தின் அருகில் என்னைச் சாப்பிடச் சொன்னார். கட்டுச்சாத மூட்டையை அவிழ்த்து தயிர் சாதத்தைத் தீர்த்துக் கட்டினேன். தேக்கத்தில் கையைக் கழுவிக் கொண்டேன். “போய் வா, ஜாக்கிரதை” என்று அப்பா வழி அனுப்ப வேகமாக நடந்து எட்டு மணிக்குள் ஆரணியை அடைந்து விட்டேன்.

என்னைக் கண்டதும் என் பெரியம்மாவின் கணவருக்கு ஒரே ஆச்சரியம்!

“ஏண்டா நீ மட்டும் தனியாகவா வந்தாய்? வீட்டில் சொல்லாமல் வந்து விட்டாயா?” என்று கேட்டார். அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் போவது என் வழக்கமாதலால் அவர் அப்படிக் கேட்டார்.

அப்பா கொடுத்த கடிதத்தை நான் அவரிடம் நீட்டினேன். அதைப் படித்துப் பார்த்து விட்டு, “அப்படியா சங்கதி? பலே! இங்கே படிக்க வந்திருக்கிறாயா? வா, வா ரொம்ப நல்ல காரியம். கடைசியாக உன் அப்பா உன்னைப் படிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டாராக்கும்” என்று சிரித்தார்.

பெரியம்மாவுக்கும் அவள் கணவருக்கும் என் மீது அன்பும் அக்கறையும் அதிகம்.

சில தினங்களுக்குள்ளாகவே அப்பாவும், அம்மாவும் கிராமத்தைக் காலி செய்து கொண்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டு ஆரணிக்கே குடி வந்து விட்டார்கள்.

போர்டு ஹைஸ்கூலில் எனக்குத் தனியாகப் பரீட்சை வைத்து என்னை ஃபஸ்ட் ஃபாரத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

என் வகுப்பில் படித்த கிருஷ்ணாஜி, ராமு என்ற இரு மாணவர்களும் எனக்கு நெருங்கிய தோழர்கள் ஆயினர். மூவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் பிரியமாகப் பழகினோம். சேர்ந்தே ஊர் சுற்றினோம். சேர்ந்தே நாடகங்களுக்குப் போனோம். சேர்ந்தே சைக்கிள் விடப் பழகிக் கொண்டோம். சேர்ந்தே கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டோம்!

அப்பா ஆரணியில் ராமாயண உபந்தியாசம் செய்து அதில் வரும் வரும்படியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார். எனக்குப் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டினார். நான் சைக்கிள் விடுவதையும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் பற்றிப் பல பேர் அப்பாவிடம் போய் அடிக்கடி புகார் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் தோளுக்கு மிஞ்சிய தோழனாகி விட்டதால் அப்பா என்னை முன்போல் அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தி விட்டார். ஒரு நாள் கோபமாக என்னை அழைத்து, “நீ இந்த மாதிரியெல்லாம் செய்து கொண்டிருந்தால் உன்னை வீட்டை விட்டே துரத்தி விடுவேன்” என்று மட்டும் கடுமையாக் எச்சரித்தார்.

“நான் சரியாய்த்தான் படிக்கிறேன்” என்று அப்பாவிடம் சொன்ன போதும் அதை அவர் நம்பவில்லை.

என் எதிரில் நிற்காதே போ” என்று கர்ஜித்தார்.

ஒரு வருடம் படித்து முடிந்ததும் பரீட்சை ரிஸல்ட் வந்தது. நான் கிருஷ்ணாஜி, ராமு மூவரும் மட்டும் நல்ல மார்க்குகள் வாங்கிப் பாஸ் செய்திருந்தோம். கணக்கில் எனக்கு நூற்றுக்கு நூற்றைந்து மார்க் கிடைத்தது.

அந்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் அத்தனை பேரும் அப்பாவின் உபந்நியாசத்துக்குத் தவறாமல் வருகிறவர்கள்.

நான் நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தது பற்றி அவர்களுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.

என் தந்தையிடம் போய், “சாஸ்திரிகளே! உங்க பையன் பாஸ். ரொம்ப நல்ல மார்க்குகள் வாங்கியிருக்கிறான். வகுப்பிலேயே முதலாவதாகத் தேறியிருக்கிறான்” என்று பெருமை பொங்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா அதை நம்பவில்லை. என் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யரே சொன்ன பிறகுதான் நம்பினார்.

ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும், சைக்கிள் விடப் பழகினாலும் நானும் என் தோழர்களும் படிப்பிலே ஊக்கமாக இருக்கிறோம் என்பதை எங்கள் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யர் நன்கு அறிந்திருந்தார். எங்கள் செக்ஷ்னுக்கு அவர்தான் கிளாஸ் டீச்சர். தம்முடைய செக்ஷன் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக எங்களிடம் கணக்கு உட்பட முக்கிய கேள்வித் தாள்களை முன்கூட்டியே தந்து, இதை நன்றாகப் படித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சூசகமாகச் சொல்லி விட்டார். முன்கூட்டியே அந்தக் கேள்விகள் கிடைத்து விட்டதால் நாங்கள் மூவருமே அந்தக் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டோம், பரீட்சையில் அவர் கொடுத்த கேள்விகளே வந்ததால் சிறப்பாக எழுதி, நல்ல மார்க்குகள் வாங்கி விட்டோம். இதனால் எங்கள் செக்ஷ்னுக்கு நல்ல பெயர் கிட்டியது. என் தந்தையின் மதிப்பீட்டில் நானும் உயர்ந்து விட்டேன்.
-------------

51. “வந்தேன் ஹிரண்ய கசிபு”

புரிசை நடேசத் தம்பிரானுடைய தெருக் கூத்து அப்போது ரொம்பப் பிரபலம். அந்தக் கலைஞர் அடிக்கடி பாதுகா பட்டாபிஷேகம் அல்லது ஹிரண்யவாசாப் கதைகளைத் தெருக்கூத்தாக நடத்துவார். நிறையக் கூட்டம் சேரும். அதில் நிச்சயம் நானும் இருப்பேன். பிரகலாதனுடைய கதையைத்தான் ஹிரண்ய வாசாப் என்று அறிவிப்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது ஆனால் அவருடைய நடையும், குரலும், பாவனையும். ஜிகினா பளபளக்கும் உடைகளும் அப்போது என்னை ஆச்சரியப்பட வைத்தன.

எல்லோரும் சேர்ந்து பிரகலாத சரித்திரம் தெருக் கூத்து நடத்தினால் என்ன என்று ஒரு சமயம் எங்களுக்கு திடீர் ஆசை வந்தது.

தூண்டி விட்டவன் கிருஷ்ணமூர்த்திதான். ஆளில்லாத லைப்ரரி ஆரம்பிக்க ‘டொனேஷன்’ கொடுத்தானே, அதே கிருஷ்ணமூர்த்தி.

தெருக் கூத்து நடத்தலாம் என்பது அவன் ஆலோசனை; பிரகலாத சரித்திரம் போடலாம் என்பது என் ஐடியா.

விஷயம் வெளியே தெரிந்து விட்டால் பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் உள்ளுர இருந்தது. யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக ஏற்பாடுகளைச செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் எல்லாரும் மாட்டுக் கொட்டகை ஒன்றில் புகுந்து கொண்டு பரபரப்போடு ஏற்பாடுகளைச் செய்தோம். ஏதோ வெள்ளைக்காரனுக்கு எதிரான வெடி குண்டு தயாரிக்கிற ரகசிய தேசியவாதிகள் மாதிரி கதவை மூடிக் கொண்டு, கிசுகிசுவென்று தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். கொட்டகையில் இருந்த மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்குப் போயிருந்தன. காலையில் போகும் மாடுகள் மாலையில்தான் திரும்பி வரும். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அட்டையையும் கத்தரிக்கோலேயும் வைத்துக் கொண்டு, கிரீடமும், புஜமும் தயாரித்தோம். பளபளவென்று இருப்பதற்காக ஜிகினா வேண்டியிருந்தது. சில பேர் கோயில் உற்சவப் பிரபையிலிருந்த ஜிகினாவைப் பிய்த்து எடுத்துக் கொண்டு வந்தோம். இன்னும் சிலர் சிகரெட் பெட்டியிலிருந்து ஜிகினா காகிதத்தை எடுத்து வந்தார்கள்.

காலையிலிருந்து மும்முரமாக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால் எல்லாருக்கும் நேரம் ஆக ஆகப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது என்று ஏற்பாடு.

என்னதான் ரகசியமாக ஏற்பாடு செய்தாலும் கிராமத்துப் பொடியன்களுக்கு எப்படியோ மூக்கில் வியர்த்து விட்டது. ஒவ்வொருவராக வந்து கதவைத் தட்டி, உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் எதிரில் ஏற்பாடுகளைச் செய்யும் போது கொஞ்சம் மிதப்பாகக் கூட இருந்தது.

தெருக்கூத்து என்றால் வாத்தியங்கள் வேண்டாமா?

பஜனைக் கோயிலிலிருந்து ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரா முதலியவைகளைத் தூக்கிக் கொண்டு வந்தோம். அதை ‘ஹார்மோனியம்’என்று சொல்வது கூடத் தப்பு. சுருதிப் பெட்டி; அவ்வளவுதான்.

உடைகள் ஓரளவு தயாரானவுடனேயே மேக்கப் பற்றி யோசனை எழுந்தது முன் கூட்டியே எல்லாவற்றையும் சேகரம் செய்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஒவ்வொன்றாய் முடிக்க முடிக்கத்தான் அடுத்த பிரச்சனை முன்னால் வரும்.

ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது.

மேக்கப் போட்டுக் கொண்டு விட்டால் அப்புறம் சாப்பிடுவதற்கு வெளியே போக முடியாது; விஷயம் தெரிந்து விடும். அதனால் ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும்போது மேக்கப் சாமான்களோடு வருவது என்றும் முடிவு செய்தோம். மஞ்சள், குங்குமம், பவுடர் ஒவ்வொன்றையும் ஒவ்வொருத்தர் கொண்டு வருவது என்று தீர்மானித்தோம்.

நான்தான் ஹிரண்ய கசிபு. லைப்ரரி கிருஷ்ணமூர்த்தி ஹிரண்யனுடைய மனைவி லீலாவதியாக நடிக்கப் புடவையைச் சுற்றிக் கொண்டு தயாரானான்.

விபூதியெல்லாம் பூசிக்கொண்டு சண்ட மார்க்கன் என்ற குருவாக வேஷம் போட்டுக் கொண்டவன் பெயர் ஞாபகம் இல்லை. எருமை மாட்டில் ஏறிக் கொண்டு வயல்காட்டுக்கு தினமும் போய் வரும் இன்னொரு பையனை நரசிம்மனாக்கினோம்.

தூண் கூட ‘செலக்ட்’ பண்ணியாகி விட்டது. அதன் பின் குல்தான் நரசிம்மன் பதுங்கிக் கொள்வார். தூணை நான் கதையால் ஓங்கி அடித்ததும் வெங்காய வெடிவெடிக்கும். உடனே நரசிம்ம மூர்த்தி பிரத்யட்சமாக வேண்டும்.

வெங்காய வெடி தயாராக இருந்தது. எவ்வளவோ தடவை புரிசை தம்பிரான் நாடகத்தைப் பார்த்து ரசித்திருந்தாலும் எங்கள் யாருக்குமே வசனம் ஞாபகமில்லை. ஒட்டுமொத்தமாக பிரகலாதன் கதை தெரியும். அதை வைத்துச் சமாளித்து விடலாம் என்று ஒரு அசட்டுத் தைரியம்.

நான்தான் மிருதங்கம் வாசிக்க வேண்டும். நானே ‘தொம் தொம்’ என்று மிருதங்கத்தைச் சப்தம் செய்துவிட்டு, “வந்தேன், வந்தேன் ஹிரண்ய கசிபு” என்று போய் நிற்க வேண்டும். மிருதங்கம் ஏகமாய் சுருதி இறங்கிக் கிடந்தது.

ஆறுமணி ஆன போது எங்களுக்குக் கூட பஜனை கோயில் மிருதங்கம் மாதிரியே சுருதி இறங்கிப் போய் விட்டது.

ஒரு வழியாய் கூத்தை ஆரம்பிக்கலாம் என்று எல்லாரும் தீர்மானித்த போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. எல்லா ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்து வந்ததால், வெளியே யாருக்கும் கூத்து நடக்கப் போவதே தெரியாதே, கூத்தைப் பார்க்க யாரும் வர மாட்டார்களே, ஆடியன்ஸுக்கு என்ன செய்வது என்று யோசித்தோம். எதிரே உட்கார்ந்து கொட்டுக் கொட்டென்று விழித்துக் கொண்டிருந்த பத்துப் பதினைந்து வாண்டுகள்தான் ஆடியன்ஸ்?

எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொண்டு, யாராவது வந்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம்.

அப்போது பார்த்து மாட்டுக் கொட்டகையின் கதவு தபதப வென்று தட்டப்பட்டது. எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பாடா! நம்ம கூத்துக்கு ஆடியன்ஸ் வந்து விட்டார்கள் என்ற திருப்தி.

அவசரமாகப் போய்க் கதவைத் திறந்தபோது, மந்தைக்கு மேயப் போன மாடுகள் திரும்பி வந்து நின்று கொண்டிருந்தன.
----------------

52. “அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா”

வில்லிவாக்கத்திலிருந்து தினமும் ரயிலில் பொம்பூருக்குப் போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பு வரை தமிழில் படித்துக் கொண்டிருந்த எனக்கு பெரம்பூர் ஹைஸ்கூலுக்கு மாறியதும், ஹிஸ்டரி, ஜாக்ரபி எல்லாமே இங்கிலீஷில் படிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் புரியாத காரணத்தால் படிப்பில் ஒரு வெறுப்பே வந்து விட்டது. இதனால் அடிக்கடி வகுப்புக்கு மட்டம் அடித்து விட்டு சென்னைக்குப் போய் விடுவேன். காலாண்டுப் பரீட்சை நெருங்கிய போது என் அந்தராத்மா, “நண்பனே, நீ பரீட்சையில் பெயிலாகி விடுவாய். ஆகையால் பரீட்சையில் கலந்து கொள்ளாதே” என்று புத்திமதி கூறவே, வீட்டுக்குச் சொல்லாமல் அப்பா கொடுத்த ஸ்கூல் ஃபீஸ் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சி, தஞ்சாவுர், மானாமதுரை வரை மனம் போனபடியெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியாக திருப்பாதிரிப்புலியூருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்த அளவுக்குத்தான் கையில் பணம் இருந்தது.

திருப்பாதிரிப்புலியூர் கோவிலை அடுத்த வேத பாடசாலையில் என் அத்தை மகன் வேதம் படித்துக் கொண்டிருந்தான். நான் அவனைத் தேடிப் போன சமயம் அவன் விடுமுறையில் சொந்த ஊருக்குப் போய்விட்டிருந்ததால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானேன். கையிலிருந்த காசும் தீர்ந்து விட்டது. வில்லிவாக்கத்துக்கே திரும்பிச் செல்ல நினைத்தாலும் போக முடியாத நிலை. பாடசாலைத் திண்ணையிலேயே பட்டினியோடு இரண்டு நாள் படுத்துக் கிடந்தேன். பசிக் கொடுமை பெருங்குடலைப் பிடுங்கித் தின்றது. அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமல் அழுது விட்டேன். அவ்வப்போது தண்ணீர் குடித்துப் பசியை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். சட்டைப் பையில் ஒரே ஒரு தம்படி மிச்சம் இருந்தது. கடைக்குப் போய் அதற்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பட்டினியைத் தொடர்ந்தேன்.

ஆம்; அந்தக் காலத்தில் ஒரு தம்படியும் உண்டு, தம்படிக்கு ஒரு வாழைப் பழமும் உண்டு.

இதற்கிடையில் வில்லிவாக்கத்தில் என் தாய் தந்தையர், என்னைத் தேடி எங்கெங்கோ அகலந்திருக்கிறார்கள். யார் யாருக்கோ தந்தி கொடுத்து விசாரித்திருக்கிறார்கள். நான் எங்கு போனேன் என்று தெரியாமல் அழுது புலம்பியிருக்கிறார்கள்.

“மீண்டும் மகனை உயிரோடு பார்ப்போமா?” என்று தவித்திருக்கிறார்கள். மகன் திரும்பி வந்தால் திருப்பதிக்குக் காணிக்கை செலுத்துவதாகவும் சமாராதனை செய்து பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவதாகவும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் நான் பசி தாங்காமல் கோயிலில் சதிர்த் தேங்காய் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் எனக்காக என் தாய் தந்தையர் சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் என் நிலையை விளக்கி அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். பசிக் கொடுமை தாங்காமல் போகவே அருகிலிருந்த ஓட்டல்காரரைப் பரிச்சயம் செய்து கொண்டு, அவரிடம் என் நிலைமையை விளக்கியபோது அவர் என் மீது பரிதாபப் பட்டு சாப்பாடு போட்டதுடன் கார்டு எழுதிப் போடக் காசும் கொடுத்தார். என் கடிதத்தைக் கண்ட மறுகணமே என் தந்தை, நண்பர் ஒருவரை அடுத்த ரயிலிலேயே திருப்பாதிரிப்புலியூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நண்பரோடு நான் மறுநாள் காலை வில்லிவாக்கம் திரும்பிப் போனதும் என் தாயார் பாசத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார்.

“நீ நல்லபடி வந்து சேர்ந்தாயே, அதுவே போதும். உன்னை உயிரோடு பார்ப்போமா என்றாகி விட்டது. நீ கிடைத்து விட்டால் தெய்வத்துக்கு சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளோம். எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த தெய்வம் உன்னை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது. அதனால் பிரார்த்தனையை இன்றே நிறைவேற்றி விட முடிவு செய்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது” என்றனர் என் தாய் தந்தையர்.

வீட்டில் வாழை இலைக் கட்டும், கறிகாய்களும் வந்து குவிந்திருந்தன. பின் கட்டில் சமையல் நடந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து பாயச வாசனையும், முந்திரிப் பருப்பு வறுபடும் வாசனையும் சேர்ந்து மூக்கைத் துளைத்தது. முன் கட்டில் ஊதுவத்தி மணத்துடன் பூஜை நடந்து கொண்டிருந்தது.

பதினோரு மணிக்கு எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் பிராமணர்களுக்குத் தாம்பூலம் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் ஏப்பம் விட்டபடி என்னிடம் வந்து, “சாப்பாடு பிரமாதம்டா! நீ அடிக்கடி இந்த மாதிரி காணாமல் போய்க் கொண்டிரு. அப்போதுதான் எங்களுக்கு இந்த மாதிரி சாப்பாடு கிடைத்துக் கொண்டிருக்கும்” என்றார்!
------------------
ஆசிரியர் சாவியின் நூல்கள்.
திருமணம் கோமகனின் காதல்
விசிறி வாழை தாய்லாந்து
வழிப்போக்கின் உலகம் சுற்றிய மூவர்
வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு என்னுரை கலைஞரின் முன்னுரையுடன்
வேதவித்து சாவியின் கட்டுரைகள்
கேரக்டர் சாவியின் நகைச்சுவைக்கதைகள்
பழைய கணக்கு ஆப்பிள் பசி
இங்கே போயிடுக்கிறீர்களா நான் கண்ட நாலு நாடுகள்
ஊரார் நவகாளி யாத்திரை
திருக்குறள் கதைகள்சிவகாமியின் செல்வன்


This file was last updated on 25 Sept. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)