துரை சுந்தரமூர்த்தி இயற்றிய
வீரமாமுனிவர் கலம்பகம்
vIramAmunivar kalampakam by
turai cuntaramurti
in Tamil Script, Unicode/UTF-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of
Tamil literary works and
to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
துரை சுந்தரமூர்த்தி இயற்றிய
வீரமாமுனிவர் கலம்பகம்
Source:
வீரமாமுனிவர் கலம்பகம்
ஆக்கியோன்: 'சுவைமணிக் கவிஞர்'
துரை. சுந்தரமூர்த்தி, (ஏழில்வண்ணன்)
துணைப்பேராசிரியர். விலங்கியல்துறை,
அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி, பழனி-624 601.
பதிப்புரிமை : தமிழ் இலக்கியக் கழகம், திருச்சிராப்பள்ளி-620 001. தமிழ்நாடு
முதற்பதிப்பு: 1977.
விலை : ரூ.2-50.
பிரஸ் டீலக்ஸ், 40, பர்பு ரோடு, திருச்சிராப்பள்ளி-620002
------------------
பொருளடக்கம்
பதிப்புரை | .. |
1. அணிந்துரை | 17. சித்து |
2. என்னுரை | 18. இளவேனில் |
3. கடவுள் வாழ்த்து | 19. பாண் |
4. பெற்றோர் வணக்கம் | 20. தூது (மேகம்) |
5. வாழ்த்துரைகள் | 21. தூது (நெஞ்சு) |
6. நூல் | 22. ஊசல் |
7. புயவகுப்பு | 23. மதங்கி |
8. இடும்பை போம் வழி | 24. இடைச்சியர் |
9. அம்மானை | 25. தூது (வண்டு) |
10.உரு | 26. வெறிவிலக்கு |
11. வலைச்சியார் | 27. இரங்கல் |
12. மடக்கு | 28. காலம் |
13. தூது (கிளி) | 29. தவம் |
14. கைக்கிளை | 30. சம்பிரதம் |
15. மறம் | 31. தழை |
16. களி
| 32. குறம் |
-----------------------
பதிப்புரை
கலம்பகம் பலவுண்டு. அதனை யாத்தவரும் பலருண்டு. கலம்பகம் யாத்தவரையே பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய கலம்பகம் அரிது. திருக்காவலூர்க் கலம்பகம் பாடிய வீரமாமுனிவரையே பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடப் பட்டுள்ள கலம்பக நூல் இதுவே முதன்மையாகும். தமிழன்னைக்கு அணிவித்த அணிகள் பலவற்றை வீரமாமுனிவர் முதன்முறையாக அணிவித்திருப்பதுபோல், அவரையே பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய இக்கலம்பகமும் முதன்மை யாயிற்று.
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தம் இத்தலி நாட்டை நீத்து, தமிழ்நாடு போந்து, தமிழ்மொழியைத் தம் மொழியாகப் ப யின்று, இலக்கணம், இலக்கியம், உரை நடை முதலிய அரும் பெரும் நூல்கள் பல யாத்தளித்த சீரியத் தமிழ்த் தொண்டர் வீரமாமுனிவராவர். இத்தகைய மாண்புமிக்க தமிழ்த் தொண்டரைப் பற்றிப் பாடிய இக்கலம்பகம் தமிழ் மக்கள் அவருக்குப் படைக்கும் ஓர் சிறந்த பொருத்தமான நன்றிச் சின்னமாகும்.
வீரமாமுனிவரின் தமிழ்த் திறமையும் முதன்மையும் தமிழ்மொழிக் களித்த ஆக்கமும் ஊக்கமும் சுவைமணிக் கவிஞர் துரை. சுந்தரமூர்த்தியவர் களைக் கவர்ந்தன. அதன் விளைவாக புயவகுப்பு முதலிய 26 உறுப்புகளைக் கொண்ட புதியதொரு கலம்பகத்தைப் படைத்தளித்ததற்கு தமிழ் இலக்கியக்கழகம் பெரிதும்பெருமையுடன் அவரைப் பாராட்டி நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.
தமிழுலகம், சிறப்பாகத் தமிழறிஞர் இதனைப் போற்றிப் பயனெய்துவர் என நம்புகிறோம்.
21-10-1977.} தமிழ் இலக்கியக் கழகம்.
-------------
அணிந்துரை - 1
Prof K. Arunachalam, M.A.,
Principal, & Post Graduate Professor of Zoology.
Arulmigu Palaniandavar Arts College, PALANI - 624601. Madurai Dt.
Date: 28-3-1977
"வீரமாமுனிவர் கலம்பகம் ” தமிழன்னைக்கு சுவைமணிக் கவிஞர் துரை. சுந்தரமூர்த்தி அவர்களால் புதி தாக சூட்டப்பட்ட மாலையாகும். இளங்கவிஞரின் எடுப்பான சொற்றொடர்கள், வரிக்கு வரி புதுமை மிளிரும் பாங்கு இவைகள் தமிழ் உலகுக்கு இன்றையத் தேவை. தமிழ்ப் பற்றுக்கு சமயம் தடையாக இருத்தல் கூடாது என்பதற்குக் காவியத் தலைவனும் காவிய கர்த்தா வும் எடுத்துக் காட்டு.
வாழ்க அவர்தம் தொண்டு.
வாழ்க தமிழ்.
(ஒ-ம்.) K. அருணாசலம்.
(கு. அருணாசலம்.)
----------------
அணிந்துரை - 2
உருவத்துள் அடக்க முடியாத இயல்புடைத் தான எண்ணங்களுக்கு உருக்கொடுத்து மாந்தரிடை உலவ விடுதற்கேற்ற கருவியாய் அமைவது மொழியாகும். உணர்வு நுட்பங்களைக் காலச் சிமிழில் அடைத்துப் பாதுகாத்துப் பயன் பெற யன்ற கருவி செய்யுள் என்னும் மொழி வடிவாய் அமைந்து இலங்குவதாயிற்று.
தமிழ் மொழியில் பயின்றுவரும் 'கலம்பகம் என்னும் செய்யுள் வடிவில், மேனாட்டில் பிறந்து செந்தமிழ்த் திருநாட்டில் போந்து,தெய்வத் திருத்தொண்டும், செந்தமிழ் மொழித் தொண்டும் இணைந்து வளம்பெறத் தன்னை ஈந்த தைரிய நா தர் என்னும் வீரமாமுனிவரின் புகழைப் பரவுதற்குப் பழகுதற்கினிய கெழுதகை நண்பர் திரு. துரை. சுந்தரமூர்த்தி மேற்கொண்ட முயற்சி பாராட்டற் குரியது.
வீரமாமுனிவரின் பெருமையைக் கூறும் சிறப்புப் பாயிரம்,
"மறைமொழி வாயினன், மலிதவத் திறைவன்
நிறைமொழிக் குரவன், நிகரில் கேள்வியன்
வீரமா முனியென்போன்... ..... ..... "
என விளம்புகின்றது. மொழித்துறையில் நிகழ்த்திய அரும் சாதனைகள் ஒருபுறமிருக்க, பாட்டுடைத் தலைவராய்க் கொள்ளப் பெறுதற்குத் தகுதியை அளித்திடும் சிறப்பியல்புகள் பலவும் வீரமாமுனிவர்பால் அமைந்திருந்தமை நுணுகி நோக்குவார்க்குத் தெளிவுற விளங்கும். புலமை வீரமும் சமய வீரமும் உள்ளத் தூய்மையும் செயல் முடிக்கும் திறமும் முனிவர் மாட்டு மண்டிக் கிடந்த உண்மை கலம்பகம் பாடிட விழைந்த அருமை நண்பரது மனதை ஈர்த்திருத்தல் வேண் டும்; அதன் வெளிப்பாடே இவ்வருமைசேர் அழகிய கலம்பகமாக உருப்பெற்றிருத்தல் வேண்டு மென்பது என் துணிவு.
அடிகளார் சமயப்பணி ஏற்ற காலமும் இடமும், அன்னாரிடம் அமையப் பெற்றிருந்த நுட்பமும் திட்பமும் முனைப்புடன் வெளிப்படத் தூண்டும் கூறுகளாய் அமைந்தன. 'தைரிய நாதர்' தைரியநாதர்' என்னும் பெயரால் அடிகள் சுட்டப்பெறுதற்குரிய அருஞ்செயல்களை ஆற்றும் வாய்ப்பினைத் தந்தன. இவ்வுணர்வுகள் எல்லாம் இக்கலம்பகப் பாக்களில் வெளிப்படுவதை நான் காண்கிறேன்.
"சொல்லாடி மகிழ்தற்கே மொழிகள் கற்றான்:
சுடர்காட்டும் தமிழுக்கோஉளத்தைவிற்றான்!"
"நலந்தரும் செந்தமிழ் நாடியே நாளும் நலம் விழைந்தே
உளந்தரும் பாமலர் சூட்டியே நற்றமிழ் உண்டுயிர்த்தே
வளந்தரும் தேம்பாவணி தனைப் பூட்டி மகிழ்வளித்தே
பலந்தருவாய் வீர மாமுனிவா "
என்ற கவிஞரது சொற்கள் பாட்டுடைத் தலைவர் பால் அன்னார் கொண்டுள்ள ஈடுபாட்டினைத் தெற் றெனக் காட்டும் பான்மையன.
உலகியல் அறிவினை ஊட்டி உள்ளத்தினைப் பண்படச்செய்து உயிர்க்கு உறுதி பயக்கும் உற்ற வழியினைக் காட்டும் பான்மை உயர்ந்த நூல்களின் பால் உலகம் எதிர்நோக்கும் ஒன்று.
"நலமான தேம்பாவை நாளெல்லாம் பாடி
உளமாரச் சூழ்ந்தா லுயர்வு "
என்ற நயவுரைகளால் ஆற்றுப்படுத்தும் கவிஞரது உத்தி போற்றி மகிழ்தற்குரியது.
வாழ்க்கையின் பிற துறைகளைப் போன்றே இலக்கியத் துறையும் புதுமை பல கண்டுவரும் இந்நாளில் தமிழ் இலக்கியத் துறைக்குத் தன் ஆர்வத்தாலும் அருமுயற்சியாலும் அழகூட்டும் புதிய ஒரு படைப்பைத் தந்துள்ள அன்பர் சுவை மணிக் கவிஞர் துரை. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என் பாராட்டுகளை அளிப்பதுடன் அன்னாரது வருங்கால முயற்சிகளும் வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்.
மறைத்திரு எம். எஸ். லாரன்ஸ்,
பழனிப் பங்குத் தந்தை.
-------------------
என்னுரை
முந்தி வந்து மோதும் செந்தமிழிலே காதலுற்று ஒரு கலம்பகம் பாடிட முனைந்தேன். பாட்டுடைத் தலைவனாக வீரமாமுனிவரைத் தெரிந்தெடுத்தேன். அவர் ஒரு தூய கிறித்துவ முனிவர் என்பதற் காக அவரைத் தெரிந்தெடுக்கவில்லை. இத்தலி நாட்டிற் பிறந்து தமிழகம் போந்து பன்மொழிகள் பயின்றாராயினும், சிறப்பாக அவர் தன் சிந்தையையும் செயற்றிறனையும் தமிழ் மொழிக்கே காட்டியுள்ளார் என்பதாலேயே வீரமா முனிவர்கலம்பகத்தைப் படைத்தேன்.
சமயங்களைப் பரப்புகின்ற தமிழ்ப் புலவர்கள் தேவாரம், திருவாசகம், முதலான நூல்களைப் படைத்தனர். கடவுளைப் பரவுகின்ற வெறுஞ் சொற்றொடர்கள் மாத்திரம் ஆண்டில்லை சந்த இனிமை பொங்கி வழியும் அழகான பொருள் பொதிந்த பாடல்களின் மூலமே ஆண்டவனைப் பரவுகின்றனர். மொழிப்புலமை மிக்கோரே சமயத் தொண்டாற்றிட முடியும் என்பதற்கு நாயன்மாரும் ஆழ்வார்களும் சான்றுகளாகத் திகழ் கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இராம பிரானின் பெருமையைப் பாட வந்த கம்பன் படைத்து உலாவவிட்டுள்ள இராமாயணத்தை மதச் சார்பின்றி அனைவரும் போற்றுகின்றன ரெனில் அதற்குக் காரணம் கம்பனுடைய தமிழ் தான். தமிழும் சமயமும் இரண்டறக் கலந்து நிற்கின்ற தனித்தன்மையை தமிழ்மொழியிலேயே சிறப்பாகக் காண முடிகின்றது.
தமிழ்த் தெய்வங்களும் குற்றமில்லா செந் தமிழில் பாடப்படும் கவிதைகளையே கேட்கின்றனர் என்ற கூற்றும் தமிழ்ப் புலவர்கள் நெஞ்சிலே நீக்க மற நிறைந்திருந்தமையாற்றான் தமிழ்ப் புலவர் களால் ஒரே நேரத்தில் மொழிக்கும் இறைக்கும் தொண்டாற்றிட முடிந்தது. ' செந்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்' என்று கூறக்கேட்டிருக்கிறோம்.
வீரமாமுனிவர் இவற்றையெல்லாம் நன்கு அறிந்தமையால் முதலில் மொழிப்புலமையில் தேறிட வேண்டுமென்று ஆவலுற்றார். ஈடிணை யற்றத் தமிழ்ப் புலவராய்ப் புகழுற்றிருந்த சுப்பிரதீபக் கவிராயரை ஆசிரியராக ஏற்று மிக்கத் தெளிவுடன் தமிழைப் பயின்று அம்மொழியில் சிறந்த புலமையைப் பெற்றார். மொழிப்புலமை அடைந்தபின் அதை வெளிப்படுத்துவான் வேண்டி "தேம்பாவணி" என்னும் சிறப்பு மிக்க காவியத் தையும், "திருக்காவலூர்க் கலம்பகம்," "அன்னை அழுங்கல் அந்தாதி", ''கித்தேரியம்மாள் அம்மானை ", "கலிவெண்பா”, “அடைக்கல மாலை" முதலான நூல்களையும் படைத்தார்.
இக் கவிதை நூல்களில் தமிழ் மக்கள் பலராலும் அறிந்தின்புறப்படும் நூல் தேம்பாவணி யாகும். கிறித்துவ சமயத்தோரால் மாத்திரமே போற்றப்படும் நூலன்று இந்நூல் இந்நூல் தமிழ்ச் சமயத்தார் அத்துணைப் பேர்களாலும் ஒரு மனதாகப் போற்றப்படுகின்றதெனில், காவிய நயமே அதற்குக் காரணம். வீரமாமுனிவர் யாத்துள்ள பிற கவிதை நூல்களும் தமிழ் வளம் மிக்க நூல்களேயாகும்.
கவிதை நூல்கள் படைப்பதோடு மாத்திரம் நிற்காமல் உரை நடைக்கும் பெருந் தொண்டாற்றி யுள்ளார். இவர் எழுதியுள்ள "வேதியர் ஒழுக்கம்" "வேத விளக்கம்”, " பேதக மறுத்தல்", "ஞானம் உணர்த்தல்", " திருச்சபைக் கணிதம் "
"வாமன் கதை", "பரமார்த்த குரு கதை" முதலான உரை நடை நூல்களில் அவர் காலத்தின் உரைநடைத் தமிழை அறிய முடிகிறது. "பரமார்த்த குருகதை” புதினத்தின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளது. கதையாக மாத்திரமில்லாமல் அருமையான நகைச் சுவையும் நையாண்டியும் அக்கதையிலே உள்ளன. அதனால், பரமார்த்த குருகதையைப் படைத்ததன் மூலம் தமிழ் மொழியின் முதல் கதை எழுத்தாள ராகவும் - அதுவும் நகைச்சுவைக் கதை எழுத்தாள ராகவும் - பரிணமிக்கிறார். அவர் எழுதியுள்ள பிற உரைநடை நூல்களைப் பயிலாதவர்கள் அல்லது அந்த நூல்களின் பெயர்களைக்கூட அறியாதவர்களும் பரமார்த்த குரு கதையை நிச்சயம் பயின்றுள்ளார்கள்.
இலக்கணத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு தான் மிகச்சிறப்பானது. குறிலுக்கும் நெடிலுக்கும் வரிவடிவம் தெரியாமல் தமிழ் மக்கள் மயங்கிய நேரத்திலே இவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அதன் விளைவாக குறிலும் நெடிலும் வரி வடிவம் பெற்றன. இன்று வழங்கும் குறில் வரி வடிவெழுத்தும், நெடில் வரிவடிவெழுத்தும் அவர் தமிழ்த் தாய்க்கு அளித்துள்ள காணிக்கைகளாகும். முன்னரெல்லாம் எகரக் குற்றெழுத்தும் எகர நெட்டெழுத்தும், ஒகரக் குற்றெழுத்தும்
ஒகர நெட்டெழுத்தும் மாற்றமின்றி எழுதப்பட்டன. குறில் என்று தெரிந்து கொள்வதற்காக அவ் வெழுத்துகளின் மேல் புள்ளியிட்டு வந்தனர். இந் நிலையை மாற்றி அவ்விரு எழுத்துகட்கும் வரி வடிவம் தந்துள்ளார். அவ்வாறே உயிர்மெய் எழுத்துக்களில் கொம்பிட்டு நெடில் குறில் வேற்று மைகளைப் புலப்படுத்தினார்.
“ மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்"
"எகர ஒகரத் தியற்கையு மற்றே" (தொல். எழுத்து. 15. 16.)
"தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண்
டெய்து மெகர வொகர மெய்புள்ளி ” (நன்னூல். எழுத்து. 43)
ஆக, மெய் எழுத்துக்கும் நெட்டெழுத்துக்கும் தன்மை நிலவி சந்த நிலைமையை மாற்றி வீரமாமுனிவர் தான்
எழுதிய "தொன்னூல் விளக்கத்தில்" புதிய வரைமுறைகளைப் படைத்தார்.
‘நீட்டல் சுழித்தல்
"குறின்மெய்க் கிருபுள்ளி " (தொன்னூல் விளக்கம் }
நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் முறையையும் உண்டாக்கினார்.
எழுத்துச் சீர்திருத்தம் செய்ததோடல்லாமல் தமிழ்மொழியில் அதுகாறும் கேள்விப்பட்டிராத அகராதி என்னும் மொழிநூலையும் எழுதினார்.
இவர் எழுதிய சதுரகராதி அகராதி வரிசையிற்றோன்றிய முதல் அகராதியாகும்.
இன்று தம் பெயர்களைப் புது முறையாகத் தூய தமிழிலிலே மாற்றியமைக்கும் வழக்கத்தைத் தமிழ் மக்கள் போற்றி வருவதை நாம் அறிவோம் சிலர் அதைப் புனைபெயர் என்பார்கள். கதை எழுதுகின்றவர்கள் இயற்பெயரில் எழுதுவதை விடப் புனைபெயரில் எழுதுவதையே விரும்பு கிறார்கள். புனைபெயர் வைக்கும் முறையை முதன் முதலில் வழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் வீரமாமுனிவராவார். கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி என்பதே அவருடைய இயற்பெயராகும். அதை தைரியநாதர் என்று மாற்றினார். தைரிய நாதர் என்ற பெயரில் வட மொழியாதிக்கம் இருந்தமையால் அதையும் மாற்றி தூய தமிழ்ப் பெயராக வீரமாமுனிவர் என வைத்துக் கொண் டார். தன்னுடைய பெயரில் மாத்திரம் புதுமை யைப் புகுத்தாமல் தான் படைத்த காப்பிய மக்களுக்கும் தனித்தமிழ்ப் பெயர்களையே சூட்டி யுள்ளார். "கல்லூரி" என்ற வார்த்தையையும் முதன்முதலில் படைத்தவர் வீரமாமுனிவரே
யாவார்!
இதுகாறும் எழுதியவற்றால், வீரமாமுனிவர் பலவகைகளில் முதன்மை' பெறுகிறார். முதன்
முதல் கதை எழுதியவர்; முதன்முதலில் நகைச் சுவை உரைநடைக்கு வித்திட்டவர்; புனைபெயர் வைக்கும் முறைக்கு வழிகாட்டியாக அமைந்தவர்; நெடில் குறில் சீர்திருத்தத்தை முதன்முதலில் செய்தவர்; அகராதி முதன்முதலில் கண்டவர்; எல்லாவற்றிக்கும் மேலாக வேற்று நாட்டுக்கார ராயிருந்தும் தமிழ் மொழியிலே காப்பியம் யாத்த திறம் வாய்க்கப் பெற்றவர். இப்படிப் பல முதன்மைகளைப் பெற்றமையாலும், வேற்று நாட்டாராயினும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் என்பதாலுமே அவரைப் பற்றி ஒரு கலம்பகம் பாடிட விழைந்தேன்.
கலம்பகம் :- கலம்பகம் என்னும் சொல் கதம்பம் என்னும் வடமொழியின் திரிபாகும். பலவகைப் பாட்டும் பொருளும் கலத்தலால் கலம்பகமெனப் பெயர் பெற்றதாயிற்று. கலம்ப வகை தொல் காப்பியர் கூறும் 'விருந்து' என்னும் இலக்கண வகைக்குள் அடங்குவதாகும். தமிழ் இலக்கியத் திலுள்ள 96 வகை பிரபந்த வகைகளில் ஒன்றாகும். கலம்பகத்தின் முதலுறுப்பாக மயங்கிசைக் கொச் சகக் கலிப்பா, பிறகு வெண்பா, மூன்றாவதாக சட்டளைக் கலித்துறையும் அமையும். பின்னர், புய வகுப்பு, மதங்கியார், அம்மானை, காலம், சம்பிரதம், காரி, தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் எனப் பதினெட்டு உறுப்புகள் வரும். பல்வகைப் பாடல்களும் மாறிமாறி வரும். அந்தாதித் தொடையாக அமைந்து பாட்டுடைத் தலைவனைப்
போற்றும். வெண்பாப் பாட்டியல் இவ்வாறே கூறு கிறது. வெண்பாப் பாட்டியலுக்கு முற்பட்ட பன்னிருபாட்டியலில் அம்மானை, ஊசல், களி,
மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, மேகம், சம்பிரதம், தவம், புறம், என்னும் பன்னிரண்டு உறுப்புகளே கூறப்படுகின்றன ஆக, பிற்காலத் தில் கலம்பக உறுப்புகள் பதினெட்டாக அமைந் துள்ளன. "நந்திக் கலம்பகத்தில்" பதினெட்டு உறுப்புகளும் இல்லை. "கச்சிக் கலம்பகத்தில் அவற்றினும் மிக்குள்ளன. "மதுரைக் கலம்பக "த் திலும் அவ்வாறே. ஆகலான், உறுப்புகள் கூடியும் குறைந்தும் வருவது இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
"ஒருபோகு வெண்பாக் கலித்துறை யுறமுன்
வருபுய மதங்கமம் மானைக் காலஞ்
சம்பிர தங்கார் தவங்குற மறம் பாண்
களிசித் திரங்கல் கைக்கிளை தூது
வண்டு தழைமேற் கொண்டெழு மூசன்
மடக்கு மருட்பா வஞ்சி விருத்தம்
அகவல் கலியின மகவல் விருத்தம்
வஞ்சி வஞ்சித்துறை வெண்டுறை மருவி
இடையிடை வெண்பாக் கலித்துறை நடைபெற்று
அந்தாதி மண்டலித் தாங்கலம் பகமே" (இல. விள. 812)
" வைக்கும் புயந்தவம்வண் டம்மானை பாண்ம தங்கு
கைக்கிளை சித்தூசல் களிமடக்கூர்-மிக்கமறம்
காலந் தழையிரங்கல் சம்பிரதங் கார் தூது
கோலுங் கலம்பகத்தின் கூறு" ( வச்சணந்தி மாலை )
பிற்காலத்தில் மடல், கொற்றியர், பிச்சியர், வலைச் சியர், இடைச்சியர் என்னும் உறுப்புகளும் வந்துள்ளன.
"வீரமாமுனிவர் கலம்பகத்தில்" முதலுறுப் பொடு, புயவகுப்பு, இடும்பைபோம் வழி, அம்மானை, உரு, வலைச்சியார், மடக்கு, தூது (கிளி), கைக்கிளை, மறம், களி, சித்து, இளவேனில், பாண், தூது ( மேகம் ), தூது (நெஞ்சு ), ஊசல், மதங்கி, இடைச்சியர், தூது (வண்டு,) வெறிவிலக்கு, இரங்கல், காலம், தவம், சம்பிரதம், தழை, குறம் என 26 உறுப்புகள் வந்துள்ளன.
வீரமாமுனிவர்தாம் பாட்டுடைத் தலைவராயினும், அவர் துறவியென்பதால் அகத்துறைப் பாடல்களில் அவரை நேரடியாக விளிக்காமல், ஒரு தலைவி தேம்பாவணி கற்றறிந்த ஒரு தலைவனை எண்ணித் தூது விடுவதாகவோ, இரங்குவதாகவோ பாடல்கள் வருகின்றன. பிரிவுத் துன்பம் உணர்த்தப்படும்பொழுதும் "வீரமாமுனிவர்
படைத்தளித்த நூல்களைக் கற்றறிந்த தலைவன் இவ்வாறு என்னைப் பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்து கின்றானே என்று தலைவி முறையிடுகின்றாள். கலம்பகத்தின் நோக்கம் பாட்டுடைத் தலைவனின் பெருமைகளை அந்தாதித் தொடையில் பல்வகைப் பாக்களும் விரவி வரப் பாடுவதேயாகும். உட்கருத்து பாட்டுடைத் தலைவனைப் புகழ்வதேயாகும். அந்தப் புகழ்ச்சி நேரடியாக அமையாமல் மறை முகமாகவும் அமையலாம் என்பது என் வாத மாகும்.
புதுக்கவிதை புகழ்பெற்று விளங்கும் இற்றை நாளில் தூய கவிதைகளைப் படைத்து எதிர் நீச்சலிடச் செய்வது ஒரு புரட்சியேயாகும். அவ் வகையிற் பாடப்பட்டதே ‘வீரமாமுனிவர் கலம் பகம் '. அதனால் பெரும்பாலும் விருத்தம், வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைக்கலித்துறை களாலேயே அந்தாதித் தொடையிலே பின்னியுள் ளேன். தற்போது அதிகம் வழங்கப்படாத வஞ்சிப்பா, மருட்பா முதலானவற்றை நீக்கியுள் ளேன். இக்கலம்பகத்தில் வரும் அத்துணைப் பாக் களும் மணம் வீசும் வாடா மலர்ப்பாக்களே யாகும்.
கலம்பகப் பாடல்கள் தேவர்க்கு 100 என்றும், அந்தணர்க்கு 95 என்றும், அரசருக்கு 90 என்றும், அமைச்சருக்கு 10 என்றும், வணிகர்க்கு 50 என்றும், வேளாளர்க்கு 30 என்றும் பாட வேண்டுமென்று ஒரு பழைய மரபும் உள்ளது. இந்த 'வீரமாமுனிவர் கலம்பகத்தில்' 100 பாடல்கள் வருகின்றன. தன் மொழியைப் போற்றாத தமிழ் மாந்தரிடையே
இத்தலி நாட்டைச் சேர்ந்தவர் வந்து புதுமை யைப் புகுத்தினாரென்றால் அவரைத் தேவர் வரிசையில் சேர்த்ததில் தவறுண்டோ ?
நூல்நயம் :- வீரமாமுனிவர் கலம்பகத்தில் சொன் னயம், பொருணயம், மொழிநயம், தொடை நயம் உண்டு.
முதலுறுப்பில் வீரமாமுனிவரின் தமிழ்த்
தொண்டினைச் சிறப்பாகப் பாடியுள்ளேன்.
'தாய்மொழியைக் கருதாதோர் தவழ்கின்ற நிலந்தன்னில்
தாய்மொழி தான் தமிழென்றே தடங்காட்டி உயர்ந்தோனே !
என்றும்,
.
துறந்தாயே சுகந்தன்னை தொடர்ந்தாயே பணிசெய்ய
துறந்தாயோ தமிழ்த்தொண்டைத் தொடுவானத் தெழுமீனே?
என்றும்,
அணிகண்டே பொருள் நாடி அதற்காக வருவோருன்
அணிகண்டே பொருள் நாடி அதைமாந்த விரையாரோ?'
என்றும்,
•புதுப்பாடல் எனச்சொல்லிப் பொதுப்பாடல் புனைவோருன்
மதுப்பாடல் திறமுண்டே மடைப்பாடல் பொழியாரோ?"
என்றும் அவரின் புகழ் பேசப்படுகின்றன.
கற்பனை :
விண்மீன்கள் பால்சோற்றுப் பருக்கைகளாகக் காட்சி தருகின்றன. அந்த விண்மீன்கள் பகற் போதில் மீண்டும் பிறக்கின்றன. எவ்வாறு? மலர்க்காவில் தென்றலுக்கு நடமாடும் வெண்மலர் களாக.(பாடல் 1. )
தேனெடுக்க வரும் வண்டை மலர் வாவெனத் தலையை ஆட்டி அழைக்கிறது. ஆம் ! தென்றலில் மலர் ஆடுவது அவ்வாறு தான் காட்சி தருகிறது கவிஞருக்கு. (பாடல் 14 )
மீன்களை வலையிலே பிடிக்கின்ற வலைச்சியர் விண் மீன்களையும் வலையில், பிடிப்பார்களோ? அழகியரின் கண்களில் பாயும் 'ஒளிமீன்களை'க் கயல் மீன்கள் என மருள்வார்களோ? (பாடல் 16 )
காதலியின் முகம் குளித்தெழுந்த மலர்போலே காட்சி தருகின்ற தாம்! (பாடல் 36 )
கனியை அதன்மேல் ஒட்டியுள்ள பனி தொட்டு விளையாடு கின்றது.
விண்மீன்களை மதி தொட்டு விளையாடு கின்றது. தேம்பாவணி அறிந்தோர் நெஞ்சமோ மகிழ்ச்சியால் ஆடுகின்றது. (பாடல் 43 )
வானைத் தொடுகின்ற மலையைக் கையால் அளந்து பார்க்க முடியுமா? நறுமணம்
நறுமணம் ஊட்டு வதற்காக நறுமண மலர்களுக்கு யாரேனும் மணந் தெளிப்பார்களா ? கனி பூத்துக் குலுங்கும் மரத் திற்கு நாம் கனிகளைக் கொண்டு போயா சேர்க்க வேண்டும் ? விரைந்தோடும் நதிக்கு நாமா நீர் ஊற்றவேண்டும் ? அதுபோலே வியப்பூட்டும் தேம் பாவணிக்கு நயத்தை எடுத்துரைக்க நம்மிடம் மொழி வன்மையில்லையே !
( பாடல் 47 )
பாலிலே மோரும் வெண்ணையும் நிறைந்திருக்கும். கயல் புரளும் கேணியிலே பூக்களும் மலர்ந்திருக்கும். அவற்றைப் போலே தமிழுக்குள் சமயமுண்டு என்று தேம்பாவில் உணர்த்தினை. (பாடல் 65)
அம்மானை பாடுகின்ற பெண்களில் ஒருத்தி, "புதிய பாதை அமைத்து புதுமை கண்ட முனிவன் யார் ?" என்று கேட்கிறாள். மற்றொருத்தி, "பகலைப்போல் ஒளியை வீசும் முனிவர் அவர்" என்று விடை பகர்கிறாள். "பகலைப்போல் ஒளியை வீச வல்ல முனிவர் பதிகமாகத் தேம்பாவணியை ஏன் படைத்தார்? " என்று கேட்கிறாள்."தமிழுக்கு அந்த அணி பாங்கு தரும் என்பதால் தேம்பாவணி யைப் படைத்தார்' என்கிறாள் மற்றவள். துறவியின் உறவுக்குத் தமிழ் ஆனது பார்" என்கிறாள் முதற்பெண். "துறவி என்கிறாயே, துறவிக்குறவு ஆகாதே!" என்கிறாள் இரண்டாம் பெண். "அவர் துறவிதான்! ஆனால், அவர் செந் தமிழைத் துறக்கவில்லை. அதனால் அவர் தமிழின் மேல் காட்டும் உறவில் தப்பில்லை, என்கிறாள் மற்றொருத்தி. தேம்பாவணியென்றால் தேன் வருமே! வண்டுகள் சூழ்ந்திடாவோ?" என்று கேட்கிறாள் மற்றொரு கேள்வியை. நிச்சயமாக வரும்! தேம்பாவணியைப் படித்துச் சுவைப் பவர்கள் எல்லோரும் வண்டுகள் தாமே ! " என்று விடை பகர்கிறாள் முதற்பெண். (பாடல்கள் 8,9,10)
மடக்கணி:
xxiii
மடக்கணியும் இந்நூலிற் சிறந்து விளங்குகிறது.
(1) பற்றாய்த் தமிழைப் பற்றினையே
பதித்தாய் அணியில் பற்றினையே !
2) 'உன்பா வல்லால் தேறாதே
ஒன்றும் பிறகா தேறாதே'
(3) 'நிலையாம் அணியில் பண்பலவே
நிறைத்தே மயக்கல் பண்பலவே' (பாடல். 26, 27)
(4) 'பயனைத் தருமிப் பதிகம் தான்
படிக்க வருந்நற் பதிகம் தான்
நயனம் வியக்க வருமொழியே
நல்ல தேம்பா வருமொழியே
உயரத் தாவும் சந்தப்பா
உரைக்கும் புகழ்,பா சந்தப்பா?
( பாடல். 75 ) இவை கடை மடக்கு.
(5) மலைத்தேன் தேம்பா படித்தேனே
மலைத்தேன் ! தேம்பா படித்தேனே!
(பாடல் 27) இது முழுதும் மடக்கு.
(6 'அருந்திட நெஞ்ச வாயா
லருந்திடம் தேம்பாப் பூவே
திருந்திட வேண்டித் தொண்டாய்ந்
திருந்திட உதவு மென்றே
பொருந்திட வேங்கு மென்பாப்
பொருந்திட மாக வேண்டும்'
(பாடல் 76)
இது முதல் மடக்கு.
( நெஞ்சமென்னும் வாய் கொண்டு அருந்துகின்ற இடம் தேம்பாப்பூவாகும். திருந்திடவும் தொண்டாய்ந்து இருந்திடவும் இப்பூ உதவும்.)
வண்டு உலவும் காலம். மாலையிலே தேனெடுக்க வண்டுலவும் காலம், மாலையிலே வந்து லவுவது தென்றல். சோலையிலே பறவைகள் பண்டுடைக்கும். அச்சோலையாம் நூலிலே தேம் பாவணி பண்டுடைக்கும் (பண் துடைக்கும்). வேலை யிலே பற்றில்லாமற் போனாள் தலைவி. அதனால் தலைவன் வரும் வழிமேலே கண் வேலைப் பதிக் கிறாள். (பாடல் 79) இப்பாடலில் முதல், இடை மடக்கு வந்து பொருணயம் பயக்கின்றது.
மேலே எடுத்துக் காட்டிய நயங்கள் மாதிரிக் காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக் காட்டப்பட்டவையாகும். நூல் முழுதும் நயங் கள் இருக்கின்றன. அவை நயங் கள் தானா? என்று பார்ப்பது இனி உங்கள் கடமை. அதற் காகக் கள்ளைக் குடிக்கச் சொல்கிறேனென்று குற்றம் சாட்டாதீர்கள். நான் சொல்கின்ற கள்,
'தீட்டிய தொன்னூல் மாந்தி
தினமினிக் குடியராவோம்.
ஊட்டிய களிப்பி னாலே
உனக்கினி அடிய ராவோம்
காட்டிய கதையைக் கேட்டே
கற்பனைக் கடிமை யாவோம்.
நீட்டிய தேம்பா வுண்டே
நித்தமும் தமிழுக் காவோம்.' (பாடல் 40)
என்னுரை என்ற இந்த முன்னுரையில் பாட் டுடைத்தலைவனாக வீரமாமுனிவரை ஏன் தெரிந் தெடுத்தேன் என்பதையும், கலம்பகத்தின் இலக் கணத்தைப் பற்றிய என் கருத்துகளையும், கலம்பக உறுப்புகள் எவ்வாறு பன்னிரண்டிலிருந்து பதி னெட்டாக மாறியன என்றும், வீரமாமுனிவர் கலம்பகத்தில் அவை எவ்வாறு இருபத்தாறாக விரிந்தனவென்றும், எவ்வாறு பல நயங்களும் இந்நூலிலே பல்கிப் பெருகியுள்ளன என்றும் கூறியுள்ளேன்.
நூல் உங்கள் கையிலே உள்ளது. இனி நுகர்ந்து தீர்ப்புத்தர வேண்டியது உங்கள் கடமை யன்றோ?
'வீரமாமுனிவர் கலம்பகத்தைப் பாடுதற்குத் தூண்டிவந்த பழனி, மாதா கோவில் பங்குத் தந்தை மறைத்திரு
மறைத்திரு லாரன்சு அடிகளார்க்கும், வாழ்த்துரை வழங்கிய அருள்மிகு பழனி யாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் கு. அருணாசலம், எம். ஏ., அவர்கட்கும், கவிஞர்கள் 'இன்னிசைக் கவிமணி' இளங்கம்பன், சிலேடைப் புலவர் மு.சிக்கந்தர், புலவர் பண்ணை சண்முகம் அவர்கட்கும்,நூலை முதன்முறையாக கேட்டின் புற்ற பொன்னுத் தட்டெழுத்துப் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் திரு. நா. பொன்னுப் பிள்ளையவர் கட்கும், வெளியிட முன்வந்துள்ள திருச்சி தமிழ் இலக்கியக் கழகப் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம். அன்பன்,
'சுவைமணிக் கவிஞர்' துரை. சுந்தரமூர்த்தி,பழனி.
---------------------
வீரமாமுனிவர் கலம்பகம்
கடவுள் வாழ்த்து
பாவெடுத்துத் தந்தவனே! பார்புகழும் நாயகனே!
நாவெடுத்து நான்பாட நற்றமிழைத்- தாவெடுத்தே!
வேழ முகத்தோனே! வெற்றிதர வந்தோனே!
ஆழ நயம்காட்டி யாள்.
பெற்றோர் வணக்கம்
அன்னை கிருட்டிணம்மாள் அப்பன் துரைசாமி
என்னை உருவாக்கி இன்றமிழே! - உன்னை
நலம்பாடச் செய்தாரே நன்றிங்கே வாழ்கென்
றுளமாரப் போற்றுகின்றேன் ஓர்ந்து.
ஆசிரியர் வணக்கம்
காவியப்பா வைத்தேனே காத லாகிக்
காவியப்பா வைக்கென்னை யாக்கி னேனே.
காவியப்பா துரைசாமி தூயோ னாலே
காவியப்பா வுரைப்பேனே கவிதை யிங்கே.
தாவியப்பா அடிதொழுது அடியெடுத் தேனே
தருக்கிடவே தமிழ்தந்த எந்தைத் தெய்வம்.
ஆவியப்பா எந்தனுக்கே வாழ்க எந்தாய்
ஆசானே, துரைசாமி வாழ்க நன்றே.
------------------
வாழ்த்துரைகள்
இன்னிசைக் கவிமணி இளங்கம்பன் வாழ்த்து
பூவாய் மணக்கும் புதிய தமிழ்ச் சொல்லெடுத்தே
நாவாரப் பாடுகின்ற நங்கவிஞன் - பாவாலே
அற்புதமாய்ப் பாடி அகங்குளிரச் செய்கின்ற
நற்சுந்த ரர்க்கிணையோ நான் ?
"அரியஎன் நண்பன் ; கேட்போர்
அகமதைக் கொள்ளை கொள்ளும்
விரி தமிழ்க் கலைஞன்; ஆயும்
விலங்கியல் துறைப யின்றோன் ;
விரிவுரைத் துறையில் வல்லான்
வியப்புடன் மற்றில் சொற்போர்
புரிபவன் ; புதுமை நோக்கிப்
புலமையை வளர்த்துக் கொண்டோன்.
கந்தனின் இடத்தில் நெஞ்சைக்
கனிவுடன் தந்து வப்போன்
சிந்தனை செயல்கள் யாவும்
செந்தமிழ் வளத்திற் கென்போன்
சந்தங்கள் முழங்கப் பாடும்
சால்புடைக் கவிஞன், அன்பன்
சுந்தர மூர்த்தி என்னும்
'சுவைமணிக் கவிஞன்'' வாழி"
----------
சிலேடைப் புலவர் மு.சிக்கந்தரின் சுத்தர வாழ்த்து.
சிந்தனை பாத்தி கட்டி
சீரணி வரப்பை இட்டு
செந்தமிழ் சீர்த்தி கூட்டி
செழுங்கவிப் பயிர்க்கு ழாத்தை
சொந்தமாய்ச் சேர்த்து வந்து
துய்யதோர் கலம்ப கத்தை
சுந்தர மூர்த்தி தந்தார்;
சுவைகண்டோம்; புகழு கின்றோம்.
சந்தன நேர்த்தித் தென்றல்
தவழுங்கால் அறியத் தூண்டும்.
வந்தவர் கீர்த்தி உண்மை
வரலாறு நமக்குக் காட்டும்.
முந்தையர் மரபை மூத்த
பழமொழி மொழியக் கூடும்.
சுந்தர மூர்த்தி ஆர்வம்
கலம்பகம் தொட்டுக் காட்டும்.
----------
வீரமா முனிவர் பிள்ளைத்தமிழ்" ஆசிரியர்
புலவர் பண்ணை சண்முகம் வாழ்த்து.
பழநி நகர்மிசை அழகுத் தமிழ்நடைப்
பல்கிட வேமகிழ் வோடு-முறுவல்
தழுவிடும் சொற்பொழி வோடு - நாளும்
செந்தமிழ்ப் பற்றோ டறிவியல் போதிக்கும்
சுந்தர மூர்த்திக்கன் போடு
திண்மைகொள் எண்ணமொடு வன்மை உடைய தமிழ்
வண்மைகொள் சுந்தர மூர்த்தி - உமது
நன்மை தருபணி சீர்த்தி-நாளும்
இந்நிலம் போற்றிடத் தன்னலம் எண்ணாமல்
ஏத்துவேன் நானும்மை வாழ்த்தி.
-----------
வீரமாமுனிவர் கலம்பகம் நூல்
(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)
தரவு
அகிலத்தே புகழ்நிறுத்தி அருந்தொண்டுச் செயலாற்றி
மகிழத்தான் பிறந்தானே மணிநெஞ்சப் புலவோனாம்
புகழத்தான் தமிழுக்கே புதுவாக்கம் புரிந்தோனாம்
பகலைத்தான் ஒளியைத்தான் பணிக்குவமை எனுமாப்போல்
தமிழுக்கே வடிவந்தான் தரவந்தே உயர்ந்தோனாம்
அமிழொத்தே பலநூலை அறிவாய்ந்தே வரைந்தோனாம்.
அகராதி முதலாக அரும்பாடல் புனைந்தோனாம்.
பகராத துறையில்லை; படைத்தானே புதுத்தென்றல்.
நனைந்தூறித் தமிழாற்றில் நலமெல்லாம் நுகர்ந்தோனாம்.
நினைந்தாறித் தொழுதற்கே நிலை "தேம்பா வணி கண்டோன்.
முறையாக வடிவந்தான் முதலெகர வொகரத்தை
நிறையாகச் சரிசெய்தே நெடிலாக்கம் வடித்தோனாம்.
மறப்பாரே எனவெண்ணி வருந் "தொன்னூல் விளக்க ''த்தை
திறந்தானே மணமென்றும் சிறந்தோங்கி நிறைதற்கே.
"திருக்காவ லூர" தற்கும் திருக் "கலம்ப" கமளித்தே
"திருச்சபைக் கணிதத்தை' திருத்தமுறத் தெரிந்தாக்கிக்
கலிவெண்பா " எனும்பாடல் கருத்தாழம் நிறைந்தாக்கி
தெளிவொன்றும் படி "மாலை" திறமொன்றும் "அம்மானை "
நலமொன்றித் திறமுந்தும் நயமொன்றும் தொடராக
பலமொன்றும் தமிழாலே படைத்தோனாம் பசுந்தேனாய்.
கதைக்கான தெனவாகும் கருத்தான குருபற்றி
விதைக்கான தமிழ்பூமி மீதினிலே விதைத் தோனாம்
அவனாரோ எனவெண்ணும் அழகூறும். தமிழ்நெஞ்சீர்!
தவமாக நமக்கானோன் தரமான முனிவன்றான்.
வரவேண்டும் திருவீர மாமுனிவப் பெருந்தகையோய் !
தரவேண்டும் புதுவாக்கம் சரியிந்தக் கலம்பகத்தே.
தாழிசை
1. பிறந்திட்ட வுன தூரைப் பெரிதென்றே கருதாமல்
திறந்திட்டத் தமிழ்த்தேனாய்ச்
சிறந்திட்டத் தமிழ்நாட்டோய்!
2. தாய்மொழியைக் கருதாதோர் தவழ்கின்ற நிலந்தன்னில்
தாய்மொழி தான் தமிழென்றே தடங்காட்டி உயர்ந்தோனே!
3.புதுப்பாடல் எனச்சொல்லிப் பொதுப்பாடல் புனைவோருன்
மதுப்பாடல் திறமுண்டே மடைப்பாடல் பொழியாரோ ?
4. அணிகண்டே பொருள் நாடி அதற்காக வருவோருன்
அணிகண்டே பொருள் நாடி அதைமாந்த விரையாரோ ?
5. சரக்கொன்றை சிரித்தாற்போல் தருமுந்தன் தமிழ்கண்டே
திறக்கின்ற விழிமூடா திருப்பாடல் படியாரோ?
6. துறந்தாயோ சுகந்தன்னை? தொடர்ந்தாயே பணிசெய்ய !
துறந்தாயோ தமிழ்த்தொண்டை தொடுவானத் தெழுமீனே?
7. ஏசுபிரான் தருமின்பம் எடுத்தோத வெழுந்தோனே
மாசு தராத் தமிழ்நெஞ்சாய் ! மணந்ததென்ன வியப்பாமே.
8.சமயங்கள் தழைத்தோங்க சரியான வழியென்றே
இமயத்தின் கருத்தெல்லாம் இருந்தமிழில் இசைத்தாயோ?
9.உனையீன்றோர் இடுநாமம் உயர்பெஸ்கி அதைமாற்றி
வினையூன்றும் பெயராக்கம் விளைத்தாயுன் திருவீரம்.
10. கரைகண்ட பெரியோனே கணமுன்னை நினைத்தேனே.
உரைகண்ட பதிகம்போல் உளறுமொழி பொறுப்பாயே.
----------------
அராகம்
1.கரும்படிச் சுவையெனக் கருதிட வருமடி
அரும்பிட அணிதனில் அழகுற அமைத்தனை.
2. வரிவடி தனிலுயர் மணம்பெற வுளமொடு
குறிவடி விடுங்கலை குவலயத் துணர்த்தினை
3. உனதுயிர் உறவினில் உறுத்தெழும் தமிழினை
மனமுயர்ந் தெழுந்திட மதிப்பொடு தரித்தனை
4. உரம்பெறுந் தமிழினி உனதுயிர்க் கருத்தினைக்
கரம்வரைந் தளித்திட கனமுனை மறந்தனை.
5. வரம்பெறத் துறவினை மறையென வெடுத்தனை
திறம்பெறத் தமிழினைத் தெரிந்தெடுத் தணைத்தனை.
--------
தாழிசை
1.கவியாழக் கடல்நீந்தி கனிந்தேற்றக் கவின்முத்தைப்
புவியாளு முன தணியைப் புகழாமல் இருப்போமா?
2. அழகான நலத்தேம்பா வணி தன்னைத் தமிழுக்கே
உளமாரப் புனைந்தாயுன் உயராசை புரியோமா?
3. பிறர்தேம்பா திருந்தேற்கப் பெருந்தேம்பா வனிதந்தே
மறந்தேங்கா நிலைகண்ட மனந்தன்னை அறியோமா?
4. சந்தமொடு நடமாடும் தன தான வென நாடும்
பந்தமொடு தரநாடும் பழப்பாட்டை மறப்போமா?
5. முத்தமொடு நித்தமுனை முருகாடுந் தமிழாலே
புத்தமுதம் தனைமாந்திப் புதுவூக்கம் நிறைப்போமா ?
------------
அம்போதரங்கம் (நாற்சீர் ஈரடி)
1. திடமொடு தமிழதைத் தெரிந்த முனிவனை
நடமிடுந் தனிநடை நடத்தும் முதல்வனை
2. பழமெனத் தரமுயர் வாகும் தமிழனை
உளமொடு நினைத்திட வுயர்ந்தே வருவனே.
-----------
அம்போதரங்கம் (முச்சீர்)
1. வேகமாய்ப் பயின்றோய் நீ !
2. விருப்பமாய் மலர்ந்தோய் நீ !
3. மோகமாய் உயர்ந்தோய் நீ !
4. முறுவலாய்ச் செறிந்தோய் நீ!
இருசீர்
1. தமிழும் நீ
2. தளமும் நீ
3. தரமும் நீ
4. தனியும் நீ
5. அமிழ்தும் நீ
6. அரும்பும் நீ
7. அன்பும் நீ
8. அனைத்தும் நீ
-------
எனவாங்கு (தனிச்சொல்)
துறவறம் ஏற்றே அறநெறி காட்டி
பிறவறம் பேணி உரமொடு நின்றே
தரமுயர்த் தமிழை திறமுயர் வாக்கி
பிறவுயர்க் கருத்தை வரமெனும் வாக்கால்
இனிதே நிறைத்தே அணி நீ யளித்தே
சிறுகதை தனக்கும் திறவுகோல் நீட்டி
வருங்கதைக் குருவை வளமொடு காட்டி
பலநூல் படைத்தே வள நூல் எனவே
உளநூற் கோவை உருப்பெறச் செய்தே
அந்தம் ஆதி வந்தம் மாலை
தந்தும் சிறந்தும் தனித்தும் ஒளிர்ந்தும்
முந்தும் வீரமா வீரமா முனிவனைச்
செந்த மிழாலே வந்திசைப் போமே.
------
நேரிசை வெண்பா
வந்திசைப் போமினி மாமுனி வோனுனைத்
தந்தசைச் சீர் தளை சார்தொடை - சுந்தரப்
பாமலர்க் காவிலே பார்த்தருள் செய்தணி
தாமரைக் கண்ணருள் தந்து.
-----------
கட்டளைக்கலித்துறை
தந்த தமிழழ கோலியப் பாயொளித் தண்கதிரில்
இந்தத் தமிழகப் பூதலத் தேயுறை யின்றமிழர்
சொந்த மெனவுனைச் சூழ்ந்திட லாயிடச் சொன்மழையாய்
உந்தன் திறமுயர் தேம்பா வணிச்சுவை யூட்டினையே.
-------------------
2. புயவகுப்பு
1.
ஊட்டுகின்ற பால்சோற்றின் பருக்கை போலே
உலவுகின்ற விண்மீன்கள் பிறந்தே மீண்டும்
மீட்டுகின்ற தென்றலுக்குத் தாளம் போட்டே
வெண்மலராய்த் தேன்சிந்தும் காவில், தேனீ
நீட்டுகின்ற தேனெடுத்தே சேர்க்கும் அம்மோ !
நேர்ந்தவர்க்கே தந்துவக்கும் நேர்மைக் கூட்டம்.
காட்டுகின்ற திறமெல்லாம் பன்னூல் தோய்ந்தே
கருத்தாழம் வரைந்தளித்த புயமே யன்றோ?
2.
அன்றிங்கே நீபோந்த நாளிற்றானே
ஆர்த்தெழுந்த தமிழன்னை ஆடி னாளே.
வென்றிங்கே நீதந்த தமிழிற் றானே
மின்னிடையில் அணிபூட்டிப் பாடி னாளே.
நன்றிங்கே பலபேர்கள் எழுத்தை மாற்றும்
நல்லவழி யறியாமற் போன தாலே
ஒன்றிங்கே குறிலெல்லாம் புள்ளி கண்டே
உருவில்லா நிலைமாற்றும் புயத்தைக் கொண்டோய்.
3.
கொண்டெழுந்த திறத்தாலே புதுமைக் கோலம்
குளிர்மனத்தோய்! தந்தளித்தாய் நன்றிக் கானோம்.
தொண்டெழுந்த மறத்தாலே ஓடி வந்தே.
சூழ்ந்தெழுந்த தேன்பாவில் அணியைத் தந்தாய்.
பண்டெழுந்த மறைஞான உரையி னாக்கம்
பழகுதமிழ் உறவோர்க்கே ஆன தின்றே.
கண்டெழுந்தே தொழுகின்றோம். வாழ்க வென்றே
கருத்தாழப் பொருள்வடித்தப் புயத்தைக் கொண்டோய்.
4. (வேறு)
புயந்தரும் கருத்தொரு புதையலே.
புதுவறம் அளித்திடும் படையலே.
செயந்தரும் எனுமிவன் தமிழணி
திருவரும் எனுமிவன் திருப்பணி.
வியந்திடும் மொழிநடை புரிந்ததும்
விளக்கிடும் அருள்நெறி உரைத்ததும்
நயந் தரும் தமிழிவன் தமிழினி
நறுமணஞ் செறிந்துறை புயத்தனே.
5. (நேரிசை வெண்பா)
புயமொரு தொண்டுசெய்யப் பூத்தெழுந்த தென்றே
பயமொரு தாவலில் பாய்ந்தே - அயரும் !
திருவீர மாமுனிவத் தேன் தமிழ நாட்டோய்
வருவீரே நாளெல்லாம் வாய்ப்பாய்.
6. ( கட்டளைக் கலித்துறை)
நாளெல்லாம் தொண்டென்றே நன்றினி
செய்வாரார் நானிலத்தில்?
ஆளெல்லாம் உன்போலே ஆக்கந் தரமுந்தும்
அன்பராமோ ?
தூளெல்லாம் என்றெங்கள் தொல்லை
தவிர்க்கும் துணையினியார்?
கேளெல்லாம்! நீயிருந்தால் தொண்டுன்
புயத்தே கிளர்ந்தெழுமே !
-----------------
3. இடும்பை போம் வழி
7. ( அறுசீர் விருத்தம்)
எழுந்தன புள்ளும் பாடி ;
இயம்பின முரசம் வண்டு.
அழுந்தின தொல்லை யெல்லாம்.
அரும்பின மலரின் கூட்டம்.
செழுந்திகழ் தமிழி னாக்கம்
திகழ்ந்திடும் முனிவன்றாளைத்
தொழுதிட இடும்பை போமே.
தொடங்கிடும் புதிய பாதை.
-----------------
4. அம்மானை
8. (கலித்தாழிசை)
புதியபாதை தானமைத்தே புதுமைகண்ட முனிவனார்?
மதியமாக வீசுமொளி வாய்த்தனர்காண் அம்மானை.
மதியமாக வீசுமொளி வாய்த்தனரே யாமாயிற்
பதிகமாகப் பாவணியைப் படைத்தனரேன் அம்மானை?
படைத்தவணி தமிழுக்கே பாங்குதரும் அம்மானை.
9
துறவி சேசுசபைத் தூயவீர மாமுனிவர்
உறவி லாந்ததமிழ் உள்ளம்காண் அம்மானை.
உறவி லாழ்ந்ததமிழ் உள்ளம்தா னாமாயிற்
துறவிக் குறவென்ன தோன்றிடுமோ அம்மானை ?
துறவாரே செந்தமிழைத் துறவாரே அம்மானை.
10.
தேம்பும் மாந்தருக்குத் தெம்புதந்த முனிவனார் ?
தேம்பா வணி தந்த தேன்மலரோன் அம்மானை.
தேம்பா வணியென்றால் தேன்வருமே யாமாயிற்
சோம்பா தும்பிகளும் சூழ்ந்திடுமோ அம்மானை ?
சூழ்ந்திடுவோர் தும்பிகளாய்ச் சுவைப்பவரே அம்மானை.
------------------
5. உரு
11. (எண்சீர் விருத்தம்)
அம்மானை பாடிவரும் ஆர ணங்கீர் !
அன்பான பெஸ்கிமுனி தோற்றம் பார்மின்.
பெம்மானின் நெற்றியிலே சந்த னம்காண்.
பேசுமுயர் குல்லாவும் பட்டா மம்மோ.
தம்மாடை பூவெண்மை தோற்கும் காண்மின்.
தரமான வாசனமோ புலித்தோ லாமே.
இம்மானி லந்தன்னில் இளகும் நெஞ்சோன்
இதமான தூயசைவ னானா னம்மோ.
12.
அன்பான வாசானாம் சுப்ர தீபன்
அன்போடே தந்ததமிழ் மாந்தி னானே.
முன்பான மொழியாழப் புலமை யாலே
முனைவோடே தமிழன்பன் என்றே யானான்.
பண்பான அறிவாலும் திறத்தா லும்மே
பாங்கான சாந்தசாகி பவையி லேறி
இன்பான தொண்டெல்லாம் ஆற்றி னானே
இத்தாலி பிறந்திங்கே வந்த நல்லோன்.
13. [நேரிசை வெண்பா ]
நல்லோன்; தனித்தமிழ் நல்லுரு வாமெழுத்தாள்
வல்லோன்; இலக்கணம் வந்தளித் - தெல்லோர்
மனத்திலும் நீக்கமற வந்தே நிறைந்தோன்
தினந்துதிப் போமுனைத் தேடி.
14. [ கட்டளைக் கலித்துறை]
தேடி வருகின்ற தென்றலும் பூமேல்
திருவமைத்தே
பாடி வரும்வண்டைப் பைந்தமிழ் மாந்திடப்
பார்த்தழைக்கும்.
ஆடி தனிலுரு கண்டாடும் மானினம்; ஆங்கருவி
ஓடிக் குதிக்கும்; உயிர்கள் உறவாடும்; உன்னருளே.
15. [விருத்தம்]
உன்னருள் தமிழின் மேனி
உருவினைக் காட்டும் ஆடி.
பொன்னிருள் துடைக்கு மாப்போல்
புதுவடி வெழுத்தைக் கண்டோய்!
மின்னிடை மேவு தற்கே
மேலொரு வணியும் தந்தாய்!
சென்னியிற் சூடு தற்கே
சீர்மலர்ப் பாக்கள் விண்டாய் !
-----------
6. வலைச்சியார்
16. [வேறு]
விண்தோய்ந்துயர் வாகும்மதி விருந்தே தரும் மீன்களைப்
பண்பாய்ந்திடும் சொல்லாடிடும் பாய்வலைச்சியர் பிடிப்பரோ ?
தண்பாய்க்கதிர்ப் பாயுங்கயல் சாரும்முனி வணியிலே
கண்பாய்ந்திடும் ஒளிமீன்களைக் கயலாமென மருள்வரோ?
17
கயலாமென மருள்வாளையே கதியாமென வலைச்சியன்
"மயலாலை மோதும்மனம்; வருவாயடி" என்றிடப்
புயலாங்குழல் நீவிக்கணைப் போட்டேயவள் புகலுவாள்:
செயலாலுயர்த் தேம்பாவணி செய்தால்வரு வேனையா.
18.
"ஏனோவறி யேனேவணி ஏனோவுனக் குன்னிரு
மீனாயெறிக் கண்வீச்சொரு மேலாமணி யாகுமே!
ஊனேயுறைந் துணர்வாலெழும் உயர்வீரமா முனிவரின்
தேனேயெனும் படியேவளர் தேம்பாவணி தருவனே."
19.
தருவாயணி தரமாமணி சார்வேனுனை நானைய்யா ;
திருவாமணி தேம்பாவணி தெரிந்தாயுனைத் தானைய்யா '
உருவாமெழில் கொண்டாளவள் உடனேயவன் பக்கமே
வருவாளவர் வணங்குந்திறன் மாமுனிவனே அருளுவாய்.
20. [நேரிசை வெண்பா]
அருள்விழி சிந்தும் அறிவதில் முந்தும்
பொருள்வழி தந்தும்; புதுமை - தரும்வழி
காட்டிப் புதுத்தமிழ் கண்டோர் அகராதி
நாட்டிச் சிறந்தான் நலம்.
21. [கட்டளைக் கலித்துறை]
நலந்தரும் செந்தமிழ் நாடியே நாளும் நலம்விழைந்தே
உளந்தரும் பாமலர் சூட்டியே நற்றமிழ் உண்டுயர்ந்தே
வளந்தரும் தேம்பா வணிதனைப் பூட்டி மகிழ்வளித்தே
பலந்தரு வாய்வீர மாமுனி வாபோற்றிப் பண்புறவே.
22.
பண்புறும் 'கித்தேரி யம்மாளின் அம்மானை பாடுதற்குப்
பண்வரும்; 'அன்னை அழுங்கலந் தாதி' பதம்பிடிக்கும் ;
முன்வரும் செந்தமிழ்ப் பாவங்கே; சந்தம் முரசொலிக்கும்;
பின்வரும் நல்லணி; சொல்லிசை பேசிப் பிறந்திடுமே.
23. [விருத்தம்]
பிறந்திடும் தாயாம் நாட்டின்
பெருமைக்கென் றேதும் செய்யார்;
திறந்திடும் நூலின் பக்கம்
சென்றுளம் தோய்ந்தே நில்லார்;
அறந்தரும் செய்கை தன்னை
அறிந்திட ஆவல் கொள்ளார் ;
சிறந்திடும் எண்ணம் இல்லார்
சேர்ந்துறை பூமி யம்மோ ;
24.
அம்மனைத் துதிகள் செய்யார்;
அம்,மனைத் தோட்டம் வேட்பார்
செம்மனம் வேண்டு கில்லார்;
செல்வமே நாளும் கேட்பார்.
இம்மனம் கொண்டோர் தானே
இருந்திடும் பூமி தன்னில்.
நம்மனம் தொட்டே நல்ல
நறுந்தமிழ் கண்டோன் நீயே.
-------------
7. மடக்கு
25.
நீயொரு தேனீ ! சொல்லால்
நீயொரு தேனீ வாயே.
தாயுறு மணிகண் டாயே ;
தாயுறும் மணிகண் டாயே.
வாயுருங் கவிதை தூவி
வாவுருக் க ! விதை தூவி.
ஆயிரம் பாகங் கண்டே
ஆய்ந்திடும் பாக,ற் கண்டே.
26 [ கடை மடக்கு]
கண்டே போற்றும் அருந்தேனே !
கவிநி னதல்லால் அருந்தேனே.
கற்றோர் முன்னுன் முகந்தானே
கருதும் பொருளும் உகந்தானே.
பண்டே சுற்றும் முற்றுணரே
பணிவோர் எம்மை முற்றுணரே.
பற்றாய்த் தமிழைப் பற்றினையே
பதித்தாய் அணியில் பற்றினையே.
உண்டோ கவிச்ச முத்திரமே?
உணர்ந்தே பெற்றோ முத்திரமே.
உன்பா வல்லால் தேறாதே;
ஒன்றும் பிறகா தேறாதே ;
வண்டே பாடித் தினமுருகும்;
மணக்கு முன்பா தினமுருகும்.
வருவா யெங்கள் முன்னிலையே.
வருத்தம் உன்பா முன்னிலையே,
27
நிலையாம் அணியில் பண்பலவே ;
நிறைத்தே மயக்கல் பண்பலவே ;
நினைக்கும் நெஞ்சில் வருஞ்சுகமே ;
நின்பா மாந்தி மாந்தி வருஞ்சுகமே.
கலையாம் தேம்பாத் தண்ணறவே ;
கல்லாப் பிறபா தண்ணறவே.
கருதும் அமைதி தருமகமே
கனிந்தே போற்றத் தருமகமே
தலைவா ! வீர மாமுனிவா !
தமிழும் சந்த மாமுனிவா !
தமிழைப் பாடும் அருந்ததியே
சார்ந்தோர் நெஞ்சி னருந்ததியே.
மலைத்தேன் தேம்பா படித்தேனே
மலைத்தேன்! தேம்பா படித்தேனே !
மயக்கம் தம்மைத் திருத்தாயோ?
வணக்கித் தமிழ்மீ திருத்தாயோ?
28 [வேறு] அறுசீர் விருத்தம்
திருத்தக்க மாமுனிவன் விருத்தப்பா
வடித்ததற்கே திறப்புச் செய்தான்.
பொருத்தத்தின் புதுவேகத் திருக்கம்பன்
புகுந்ததற்கே சிறப்புப் பெய்தான்.
கருத்தொத்தே வித்தாலி தரும்வீர
மாமுனிவன் காவுட் சென்றே
உருத்தொத்தே சுகப்பாக்கள் தானெடுத்தோர்
அணிகண்டே ஒருமைக் கானான்
29 [நேரிசை வெண்பா ]
ஒருமைக் குயிராகி உத்தமத் தொண்டாற்றிப்
பெருமைக் குரித்தாகிப் பேசும் - அருமைத்
திருவீர மாமுனிவா சிறுவோ ரெமக்கே
தருவீரே நல்லறந் தானே.
------------
8. தூது (கிளி)
30
நல்லறம் பேசும் கிள்ளாய் !
நலந்தரத் தூது செல்வாய்.
பல்லற நூல்கள் கற்றே
பண்பினில் உயர்ந்தோ னெந்தன்
இல்லற வாழ்வுக் கென்றே
இன்பொருள் தேடச் சென்றான்.
சொல்லுற வாகச் சொல்லி
சூழ்ந்தெனைப் பார்க்கச் சொல்வாய்.
31
பார்த்திட வந்தா ராயின்
பைந்தமிழ் முனிவன் கண்ட
மாத்தவ அணியைச் சேர்த்தென்
மனமுறப் பாடச் சொல்வாய்.
கூத்திடும் தமிழு மங்கே!
குளிர்மனம் ஆடச் செய்யும்!
சேர்த்தெனைத் தழுவு தற்கே
தேம்பாவை மாந்தச் சொல்வாய்.
32
சொல்லிடப் போகும் முன்னே
சுகமென முத்தம் தந்தேன் ;
இல்லினில் இருப்பேன் : உன்சொல்
இனியவன் காதி லேறும்.
கல்லினி கனியு மாப்போல்
காத்திடு தூது சென்றே
வில்லினிற் சீறும் அம்பாய்
விரைந்தவன் காணச் செல்வாய்.
33
காணவே செல்லும் கிள்ளாய்
கதிதரத் தமிழைக் கண்டே
பேணவே அணிகள் தந்தோன்
பேசுமூர் வரவே சொல்வாய்.
நாணமே பூசுஞ் செம்மை
நானங்கே காத்தி ருப்பேன்.
பூணத்தேம் பாவில் தோய்ந்த
புதுவணி காட்டச் சொல்வாய்.
34 [ கட்டளைக் கலித்துறை ]
சொல்லி லெழுந்திடும் வேகம் சுகத்தேம்பா தூவிடுந்தேன் ;
நல்லி ரவெழும் ஒளிமீன் நடமிடும் நத்திநமை ;
நல்ல றிஞன்வீர மாமுனி வோனடை நற்கரும்பே
எல்லி ருமெடுத்துண் டாடிட வாரும் இதமுறவே.
35 [விருத்தம் ]
இதமுறவே தூதுசென்ற பசுங்கிளியே வணக்கம்.
என்றலைவன் வருஞ்சேதி இதயத்திற் கிணக்கம்.
பதமுறவே அவன்வந்தால் வந்திடுமே தயக்கம்
பார்த்தவனைப் பேசுமுன்னே படுத்திடுமே மயக்கம்.
சதமெனையே அவன்பேச்சுக் கரும்பாக வினிக்கும்.
சந்தனத்தில் தூவு மலர்க் கண்திறந்தே பனிக்கும்
நிதமெனையே தமிழ்த்தேனின் தேம்பாவைக் களிப்பான்.
நெஞ்சினிக்கத் தேம்பாவின் அணிகாட்டிக் குளிப்பான்.
-----------
9. கைக்கிளை
36
"குளித்தெழுந்த மலர்போலே முகத்தைக் கொண்டாள் ;
குணம்பெறவே தேம்பாவின் நலத்தை யுண்டாள்.
ஒளித்தெழுந்த உணர்வுக்கோ ஆக்கம் தந்தாள்;
உயர்தேம்பா வணிபோலே உயர்ந்தே வந்தாள்.
நலந்திகழும் இவளெந்தன் நாட கத்தில்
நனிசிறப்பா லென்றெண்ணிக் காத லுற்றேன்.
கலந்துறவாய் வாழ்ந்திடவா," என்றே சொன்னான்.
கற்கண்டோ தேம்பாவை யான ளின்றே.
(ஒரு தலைவனின் கூற்று)
-------------------
10. மறம்
37
இன்றுலவும் நற்றமிழுக் குணர்வு தந்தே
இனிதுலவச் செய்தவனே பெஸ்கி யென்போன்.
நின்றுலவும் வீரமாமு னியென்ற பேரை
நீணிலத்துத் தானேற்ற வீர னம்மா !
நன்றுலவும் பலநூலை நாட்டிற் காக்கி
நடமாடச் செய்தவனும் அவனே யம்மா !
தின்றுலவும் மாந்தரெல்லாம் தெரிந்து கொள்ள
செந்தமிழுக் குணர்வூட்டி யாடச் செய்தான்.
38 [கட்டளைக் கலித்துறை]
உணர்வுந்துஞ் செந்தமிழ் உண்டென் றுணர்த்தி யுரைநடைக்கும்
மணம் தந்த செம்மல் மறுவில்லா நம்வீர மாமுனிவன் !
குணமுந்தச் சொன்ன குருவின் கதையிலே குன்றொளிபோல்
புணர்ந்தெழும் நல்ல புதுமை வளம்பல போற்றிடவே.
39 [விருத்தம் ]
போற்றிடும் புதுமைக் கெல்லாம்
புதுநெறி காட்டி னானே!
ஊற்றிடும் நீரைக் கூட
உவமையால் போர்த்தி னானே !
காற்றிடும் சேதிக் கெல்லாம்
கற்பனை காட்டி னானே.
நாற்றிடும் மூச்சைக் கூட
நயமுறத் தீட்டி னானே !
-----------------
11. களி
40
தீட்டிய "தொன்னூல்" மாந்தி
தினமினிக் குடிய ராவோம் :
ஊட்டிய களிப்பி னாலே
உனக்கினி யடிய ராவோம்.
காட்டிய கதையைக் கேட்டே
கற்பனைக் கடிமை யாவோம்.
நீட்டிய தேம்பா வுண்டே
நித்தமும் தமிழுக் காவோம்.
41
ஆகின்ற செயலுக் கெல்லாம்
ஆண்டவன் வடிவம் தந்தான்.
ஆகின்ற தமிழுக் கிங்கே
யாரையா வடிவம் தந்தார்?
போகின்ற போக்கிற் சொன்னால்
புரிந்திடா தென்றே யஞ்சி
பாகென்ற மொழிக்குள் நல்ல
பைந்தமிழ் வடிவம் தந்தான்.
42
தந்தனன் இலக்க ணத்தை !
தரமுயர் பாட்ட றத்தை!
தந்தனன் கதைவ ளத்தை !
சதுரக ராதி தன்னை !
தந்தனன் உவமைக் காக்கம் !
சந்தத்தின் எளிமைக் கூக்கம்!
வந்தனன் பரிதி போலே
மகிழ்ந்திடக் களிப்பிற் கானோம்.
-----------------
12. சித்து
43
கானிறைந்த மலர்தொட்டே தென்ற லாடும்;
கனிநிறைந்த பனிதொட்டே இலைக ளாடும்.
வானிறைந்த மீன்தொட்டே மதியு மாடும்;
வளம் நிறைந்த பாதொட்டே நெஞ்ச மாடும்.
தேனிறைந்த பூவெல்லாம் வண்டுக் காடும்.
தெளிவுற்ற சித்தருக்கோ உலக மாடும்.
ஊனுறைந்த தேம்பாவின் அணியில் சித்தின்
உயர்வெல்லாம் செய்தவற்கோ உளமே யாடும்.
44
ஆடுகின்ற நாடகமும் முடிந்து போகும்;
அரும்புவிடும் செடிகளெல்லாம் மடிந்து போகும்.
ஓடுகின்ற ஆறுகூட அமைதி யாகும்;
உருமுகின்ற இடிமழையும் அடங்கிப் போகும்.
பாடுகின்ற பண்ணெல்லாம் தொடர்வதில்லை.
பழகிவரும் உண்மைகளே பொய்மை யில்லை.
நாடுகின்ற தேம்பாவின் அணிகள் மட்டும்
நல்லசித்து விளையாட்டில் அயர்வ தில்லை.
45
அயர்வில்லா வாசானாம் சுப்ர தீபன்
அன்பொன்றித் தந்திட்டத் தமிழைக் கொண்டே
உயர்வள்ளும் புதுமைகளைப் படைத்தா னம்மா.
ஓர்முனிவன் தமிழ்வேதச் சித்த னம்மா!
பெயர்மெல்ல மாற்றிடவே புனைபே ராலே
பேசு தமிழ்ச் சித்தெல்லாம் புனைந்து விட்டான்.
நயவீர மாமுனிவன் சித்தி னாலே
நற்றமிழ்தான் நலமோங்கி வாழு தம்மா.
[நேரிசை வெண்பா]
46
அம்மா முனிவன் அருட்கை புனைந்தளித்த
செம்மா துளைமுத்துத் தேன்கவிதைக் - கிம்மா
நிலத்தென்ன கைமாறு நேர்ந்தளிப்போ மென்றே
உளத்தெண்ணி நிற்ப துயர்வோ?
47 [விருத்தம்]
உயர்ந்தோங்கும் மலைமுகட்டை கரம்கொண்டா அனுப்போம்?
ஒளிபாய்ச்சும் மலர்க்காட்டில் நறுமணமா தெளிப்போம் ?
நயந்தோங்கும் பழமரத்தில் கனிகளையா விளைப்போம்?
நதிக்காகும் நீரெல்லாம் நாம்கொண்டா நிறைப்போம்?
வியந்தோங்கும் தேம்பாவின் சுவையெல்லாம் சொல்ல
விழைந்தேங்கும் நெஞ்சேநீ மொழிக்கெங்கே போவாய்?
அயர்ந்தேங்கும் என்மனத்தே அறிவோட்டம் காட்டி
ஆடிவர வாவீர மாமுனிவப் பெரியோய்.
-------------------
13. இளவேனில்
48 [ ஒரு தலைவியின் கூற்று]
பெருகிவரும் அருவியெல்லாம் மலர்களையே நனைக்கும் ;
பேசிவரும் கிளிகளெல்லாம் இளவேனில் உணர்த்தும்.
திருகிவரும் வான்பூவும் குளிர்தூவிச் சிரிக்கும்;
சேர்ந்துவரும் தென்றலெனை யேங்கிடவே செய்யும்.
உருகிவரும் பண்பாட்டில் தேம்பாவும் ஒலிக்கும்;
உள்ளமெலாம் தலைவனுடை வரவினையே நினைக்கும்..
கருதிவரும் தேம்பாவைக் கற்றறிந்த தலைவன்
காலமறிந் தோடிவர வில்லையடி தோழி !
-----------------
14. பாண்
[ ஆசிரியம் ]
49
தோகை விரிக்கும் சுகவனக் காட்டில்
பாகை நிகர்க்கும் பைந்தமிழ் கற்றோன்
நேயன் எந்தன் நெஞ்சிற் குரியோன்
ஆயும் தமிழில் ஆழ்ந்து கிடப்பான்
"தேம்பா வணி" யைத் தேடியே இசைப்பான்.
பூம்பா வையென்னைப் புரிந்திடா திருப்பான்.
எங்களூர் பாண ! எழுதி ! என்சொல்
அங்கவர் நெஞ்சு மறியச் சொல்வாய்.
பாடும் அருவி பண்ணைக் காட்டில்
தேடும் அரிவை தேம்பு கின்றேன்.
சுப்பிர தீபன் சூட்டிய தமிழால்
நற்புற வாடி நலஞ்சேர்த் துயர்ந்தோன்;
அன்பால் "தேம்பா வணி"யைப் படைத்தோன்
பண்பால் பலவுரை யாக்கமும் செய்தோன்.
வீரமா முனிவன் விளக்கிடுந் தமிழைச்
சாரமா யறியத் தலைவனும் சென்றான்.
சென்றவன் என்னைத் தேடா திருந்தான்
என்றவன் செயலை எடுத்தே யுரைப்பாய்
எழுத்தைத் திருத்தும்" இயல்பைக்கற்றென்?
கழுத்தை நீட்டிய காரிகை துடித்தென்?
கொடுந்தமிழ்" அறிந்தென் ? கோதையை மறந்தான்!
கிடந்தலை மோதும் கேண்மையைத் துறந்தான்!
"வேதியர் ஒழுக்கம்", வேத விளக்கம் ”
"பேதக மறுத்தல்" பிறவும் அறிந்தென்?
நாத மிசைக்கும் நங்கையை மறந்தான்!
பேத மிலையோ ? பேசிடு பாணா!
"சதுர கராதி” சாற்றும் "அந்தாதி”
இதர நூல்கள் எதையும் கற்றென் ?
இருக்கும் என்னை மறுப்ப தற்கா ?
திருப்பம் வேண்டும்! சென்றுடன் சொல்வாய்!
"திருச்சபைக் கணிதம் " தேறிப் பயனென்?
"குருகதை " தெரிந்தென்? குணம்தான் இலையே !
பருவப் பாவை யுருவை யிழந்தேன்.
நெறிக்கும் புருவம் நேர்ந்த செயல்சொல்.
அழைத்து வாயென் அன்பரை
நிலைக்கும் உயிர் தான் நேயனும் வரவே.
[ அறுசீர் விருத்தம்]
50
வணக்கம் வீர மாமுனிவா!
மணக்கும் தமிழுன் வரமலவோ ?
இணக்கம் தமிழுக் குரைத்தாயே.
இன்றமிழ்த் தொண்டும் நிறைத்தாயே
குணத்திற் சிறந்த தூயோனே
குன்றின் விளக்குன் தமிழலவோ?
மணக்கும் தமிழுக் குணர்வூட்டி
வளரச் செய்த மாமலையே !
-------------
15. தூது ( மேகம் )
[ஒரு தலைவி கூற்று] [நேரிசை வெண்பா ]
51
மலைகொஞ்சும் மேகமே ! வாராய் வணக்கம்
நிலைமிஞ்சும் என்காதல் நெஞ்சி - னலைகண்டு
தேம்பா வணிநாடும் தீங்கில்லா காதலரை
நாம்பார்க்கச் செய்வாய் நயந்து.
[ கட்டளைக் கலித்துறை]
52
நயந்த வுளத்திலே நல்லறம் காட்டிடும் நற்றிறத்தோன்
இயைந்த கருவிழிப் பார்வைக் கினியவன் என்றலைவன்
வியந்தே தமிழ்ப்பொழில் தேம்பா வணியிலே மிக்குறவாய்
பயின்றே திரிபவன் பார்த்தவன் நெஞ்சில் பரிவருளே
[விருத்தம்]
53
பரிவொடு சிந்தா மணியினைக் கற்றே
பண்பல வகையொடு சேர்த்தே
செறிவொடு தேம்பா வணியினை யாக்கி
செந்தமிழ்த் தொண்டினை யூக்கி
வரிவடி வெழுத்தில் குறிவடி மாற்றி
மறைபொருள் உரைநடை காட்டி
தருமடி யாரெம் தைரிய நாதன்
தளிரடி வணங்குதல் செய்வோம்.
--------------
16. தூது (நெஞ்சு)
54
செய்திடும் செந்தமிழ்த் தேம்பா வணியிலே
நெய்திடும் சொல்வளம் நேர்ந்தநெஞ்சே! - பெய்திடும்
மாமழைக் காட்டிடை வாடுமென் காதலன்
வாவெனக் கூறு வருந்தி.
[கட்டளைக் கலித்துறை]
55
வருந்திசை நோக்கியே வாடி யிருந்திடும் மல்லிகையே !
பொருந்திசை வோடுனைப் பூங்குழல் நீவியே பூட்டிடுவேன்.
திருந்திசை காட்டும் திருக்காவ லூருக்குச் சேர்கலம்பகம்
விருந்திசை வோடுணும் காதலன் காண விரைந்தருளே.
[விருத்தம் ]
56
அருளுருவே உனையோர்நாள் அவதிக் காக்க
அடம்பிடிக்கும் சிலபேர்கள் சூழ்ந்த போது
பொருளறியா அவர் தம்மை மாற்று தற்கே
புவிமீதில் ஓர்புதுமை செய்தா யம்மா
இருளறியா விதயத்தில் சாந்தா சாகிப்
என்போரின் துணைகண்டே அவைக்க ளத்தே
அருளுறவாய் நின்றாயே ! எந்தன் கேள்வன்
அணைத்தென்னைத் தேற்றுதற்கோர் புதுமை சொல்லாய்.
57
சொல்லாடி மகிழ்தற்கே மொழிகள் கற்றாய்
சுடர்காட்டும் தமிழுக்கோ வுளத்தை விற்றாய்
நெல்லாடி மகிழ்கின்ற வயலைப் போலே
நெஞ்சினிக்கும் கருத்துக்கே விளைச்ச லானாய்!
நல்லாடி முகங்காட்டும் நட்பு ணர்வாய்
நயஞ்சேர்த்த நண்பருக்கே நண்ப ரானாய்
வில்லாடி யுதைக்கின்ற அம்பைப் போலே
வேதனை செய் என்றலைவன் காணச் செய்வாய்.
----------------
17. ஊசல்
58
வாய்த்தளித்தத் தேம்பாவில் வருஞ்சந்தம்
தொன்னூறாம் வகையைக் கண்டோம்.
காய்த்தளித்தக் கலம்பகத்தே அம்மானைப்
பாட்டெல்லாம் கனிய வுண்டோம்.
சாய்த்தொளித்தே வருமுவமை; சார்ந்துவரும்
சொல்வளமே சார்ந்து யர்ந்தோம்.
தாய்த்திருவே ! மாமுனிவா! தைரியத்தின்
நாயகனே ! ஆடீர் ஊசல் !
[வேறு]
59
ஆடுந்தமிழ் சேரும்பெயர் ஆக்குந்தனித் தமிழிலே
நாடும்படி சேர்த்தாயினி நாளும்பணி செய்வமே.
சூடும்படி தேம்பாவணி சோதித்தமிழ் முனிவனே
பாடும்படி நாளுமருள் பார்த்தேயசை
[வேறு]
60
பாவாரம் செய்தோனே ஊசல் ஆடே !
பைந்தமிழுக் கானோனே ஊசல் ஆடே !
பூவாரம் போட்டே நீ ஊசல் ஆடே !
புதுத்தமிழுக் கானோனே ஊசல் ஆடே!
தாவாரம் தனிலெல்லாம் சந்தம் பொங்க
தரமான தமிழ்கண்டாய் ஊசல் ஆடே!
நாவார நாம்பாட ஊசல் ஆடே !
நற்றமிழே! மாமுனிவா ! ஊச லாடே
61
'கல்லூரி' எனுஞ்சொல்லைக் கண்டோன் நீயே!
கற்கண்டுப் புதுப்பேர்கள் புனைந்தோன் நீயே!
நல்லூரா மேலக்கு ரிச்சி யன்னை
நாயகிக்குக் கலம்பகமி சைத்தோன் நீயே !
எல்லாரு முன்னன்பர் என்றே யாக்கி
"இஸ்மாத்தி சந்நியாசி " யானோன் நீயே !
கல்லாரும் போற்றிடவே நேர்ந்த நல்லோய் !
கனிந்திந்த வூசலமர்ந் தாட வேண்டும்.
[வேறு]
62
கனிந்ததேம்பா வணிந்தமாதை ஏலாக் குரிச்சி
கரந்து திக்க விரைந்துகோயில் செய்தோய் வாழி.
பனிந்தகண்ணீர் நினைந்துவெண்ணி பாடல் யாத்தோய்
பழந்தமிழில் நலம்விளைத்தோய் வாழ்க நீயே.
குனிந்தசென்னி தினமுமுன்னை வணங்கு மென்றும்
குமுதவிழி அமுதமொழி சாற்றும் தூயோய் !
நினைந்தநெஞ்சில் கனிந்துவந்தே ஊசல் ஆடே.
நிலவுலகில் புகழ்நிலவி ஊசல் ஆடே.
---------------
18. மாதங்கி
63
நிலவுகின்ற தமிழ்போலே ஆடுகின்ற
மாதங்கி நெருங்கி வந்தேன்.
உலவுகின்ற மலர்த்தென்றல் உன்மேனி
தழுவுகின்ற தோடி வந்தே.
நலமுரைக்கும் தேம்பாவும் கலம்பகமும்
நான்கற்றேன் நல்மா தங்கி
உளமுறைக்கும் தமிழ்ப்பாட்டை யுனக்குரைப்பேன்
உடனோடி யுளம்காட் டாயோ ?
----------------
19. இடைச்சியர்
64
ஆயவரும் நூநயம்போல் அருந்தவரும் தேனே
ஆடையுள்ள பாற்சுவையை அண்டிவந்தேன் நானே.
பாயவரும் மின்புருவக் கணைவீசும் இடைச்சி
பாலெடுத்து மோரெடுத்துப் பக்குவத்தி லுருக்கி
மேயவரும் என் நாவில் விழைவோடு தருவாய்.
விளையாடும் தேம்பாவின் அணிதந்தேன்; பெறுவாய்.
தோயவரும் மேனியிலே தேன்பாவைப் பொழிவாய்
சொல்லாடும் பெஸ்கிமுனி தருநூலைப் புரிவாய்.
65
நூலாடும் இடைப்பெண்ணே ! நூலாடும் நாவால்
நூற்றாடும் உன்கண்ணை நூற்பாவால் புகழ்வேன்.
பாலாடும் கலயத்தே மோர்வெண்ணை வந்தே
பதமாகச் சேர்கின்ற விந்தையினைப் போலே
சேலாடும் கேணியிலே சேர்ந்தாடும் பூக்கள்
சிரித்தாடும் எனுமாப்போல் தமிழுக்குள் சமயம்
ஆலோடும் மரமாகி அடருமென்றே தேம்பா
வாசானும் தேம்பாவில் அருள்வளத்தைப் பெய்தான்.
---------------
20. தூது (வண்டு)
66
பெய்யருவி சார்வரையில் பேசுதென்றல் கூடுமலர்
நெய்யருந்திப்பண்பாடும் நேர்வண்டே-மெய்யுருகி
வாடுமெனைக் காதலனும் வந்தடையத் தூதுசெல்
ஆடுமுயர் தேம்பா வணிந்து.
[விருத்தம் ]
67
அணிந்தமாலை பிழிந்ததேனை அள்ளியுண்ணும் வண்டே
அருவியோரம் தலைவனாரம் சேர்ந்தபோதை யுண்டே
பணிந்தவேலை துணிந்துகூறிப் படுந்துயரை மாற்று
பழகுதமிழ் மாமுனிவன் பரவுபுகழ் சாற்று
மணந்தநாளை நினைந்தபேதை அணிதுறந்தேன் என்பாய்.
மறந்ததில்லை தரமுயர்ந்த தேம்பாவை யென்பாய்.
அணிந்ததேம்பா வணியிலென்னை ஆற்றுகின்றே னிங்கே
அறிந்துமின்னும் பறந்துவரும் ஆவலில்லை யங்கே.
68
அருமுனிவன் இத்தாலி நாட்டிற் றோன்றி
அழகுதமிழ் நாட்டினிலே பாசம் காட்டி
ஒருமுனிவன் இவனெற பேரை நாட்டி
உலவு தமிழ்ப் பாநயங்கள் புனைந்து கூட்டி
திருமுனிவன் வீரமிகும் வாய்மை யாலே
திருவீர மாமுனிவன் ஆனா னென்றே
வருமுனிவ னடியானாம் தலைவ னுக்கே
மறுவில்லா பொன்வண்டே தூது செல்வாய்.
-----------------
21. வெறிவிலக்கு
69
செல்லேனென் றோடிவந்து தேற்றியெனைச்
சேர்ந்தநாளைச் சிந்திக் காமல்
நல்லோனென் நெஞ்சொடிய நடந்தானென்
றெண்ணியுளம் நசிந்த வேளை
பொல்லானென் வெறிவிலக்கப் பொய்மைசால
வித்தையெலாம் புரிவ தென்னே
வில்லோனென் மேனி தீண்டித் தேம்பாவை
தானீந்தால் விலகுந் தொல்லை.
[கட்டளைக் கலித்துறை]
70
தொல்லை தரவந்த தீயோரை மாற்றிச் சுகமருளி
கல்லைக் கனிவாக்கும் கற்கண்டு தேன்பாவாங் காவியத்தை
நல்லை யெனப்பேச நாட்டிலே காட்டி நலமளித்தான்
வெல்லச் சொல்வீர மாமுனிவன் தேம்பாவில் விண்டுரைத்தே
[விருத்தம்]
71
விண் தழுவும் கட்டிடங்கள் வேண்டு மென்பீர்;
விரும்புகின்ற செல்வத்திற்கே ஏங்கு கின்றீர்.
கண் தழுவும் காரிகைக்கு மாலை சேர்ப்பீர்;
காரியத்தில் சுய நலத்தைப் பூசிக் கொள்வீர்.
பண் தழுவும் பாட்டுக்கே ஆடல் காண்பீர்;
பால்தயிரில் பல்லுணவு பருகி ஓய்வீர்.
மண் தழுவும் இவையெல்லாம் சாந்தி யாமோ?
வரும்தேம்பா வணியொன்றே மாற்றம் காட்டும்!
[கட்டளைக் கலித்துறை]
72
காட்டும் நெறியெல்லாம் சாந்தமே
காய்ந்துக் கனிந்தொளிரும்;
பாட்டுத் துறையெல்லாம் பாசமே
பாய்ந்து பதமருளும்.
மீட்டும் இசைப்பாட்டாய் மீறிய
கற்பனை மேவிடவே
நாட்டும் திறத்தோனே தைரிய
நாதனே நற்றுணையே!
[கலி விருத்தம்]
73
நற்றுணையே ! நற்றேம்பா வணியீந்த தேனே!
சற்றுனையே யறிந்தேனே தண்டமிழக் காவே!
பற்றுனையே எனுங்காலை பைந்தமிழு மோங்கும்.
கற்றுனையே புரிந்தாலோ கசடெல்லா மோடும்.
[வேறு]
74
ஓடும் சந்தப் பாட்டருவி
உன்பேர்சொல்லி யோடுதுவே.
நாடும் கருத்துப் பாப்புதையல்
நல்ல தமிழுக் கானதுவே.
தேடும் இன்பம் இதிற்காணார்
தேம்பாத் தென்ற லறியாரே.
பாடும் தேம்ப வுணராரோ
பாரில் வாழ்ந்தா லென்பயனோ?
[வேறு] [கடை மடக்கு]
75
பயனைத் தருமிப் பதிகம் தான்;
படிக்க வரும்நற் பதிகம்தான்.
நயனம் வியக்க வருமொழியே!
நல்ல தேம்பா வருமொழியே.
உயரத் தாவும் சந்தப்பா
உரைக்கும் புகழ்,பா சந், தப்பா?
துயரம் தீர்க்கும் மாமருந்தே.
சுகத்திற் காகு மாமருத்தே.
[முதல் மடக்கு] (வேறு)
76
அருந்திட நெஞ்ச வாயா
லருந்திடம் தேம்பாப் பூவே.
திருந்திட வேண்டித் தொண்டாய்ந்
திருந்திட உதவு மென்றே
பொருந்திட வேங்கு மென்பா
பொருந்திட மாக வேண்டும்.
விருந்திட வந்த தென்றே
விருந்திடுந் தேம்பா வாமே!
---------------
22. இரங்கல் (தலைவி)
[நெய்தற்றிணை]
77
ஆயுமலை கடலோதை செவியிற் பாயும்;
அருமணலில் அலவனலைந் தாடிச் சாயும்.
காயுமிலை கனியுமிலை மரங்கள் காயும்;
காதலரைப் பிரிந்திங்கே நொந்தே மாயும்.
வாயுமிலை மொழியுமிலை வருவா ரில்லை.
வந்தெனையே சார்ந்திடச்சொல் வாருமில்லை.
நோயுமிலை பாயுமிலை உடலும் தேயும்;
நூற்றேம்பா வணியாய்ந்தோய் என்னை யிந்நோய்?
[பனிக்காலம்] (முல்லைத்திணை)
78
நோயுற்ற தெஞ்சேநீ துவள்வ தென்னே?
நூலறியச் சென்றாலும் வாரா னென்றா?
தாயுற்ற வென்னோவை அறியாளானாள்;
சரமுல்லை சிரித்தென்னைக் கேலி செய்யும்.
போயுற்றப் பனிக்காலம் மேனி தீண்டும்;
புதுமாலை தரவல்லான் உனரா னிஃதே.
வாயுற்றப் பண்சிந்தும் தேம்பா மாலை
வரவுற்றுத் தரவேண்டும் இந்த மாலை.
---------------
23. காலம்
79
மாலையிலே தேனெடுக்க வண்டுலவும் காலம்;
மாலையிலே தென்றலிங்கே வந்துலவும் காலம்.
சோலையிலே தேன்பறவை பண்டுடைக்கு மாமச்
சோலையிலே அணிந்தேம்பா மண்துடைக்கும் காலம்.
காலையிலே பனிவாடை மேனிபற்று மாமக்
காலையிலே தலைவனிட மேனினைவு மாகும்.
வேலையிலே பற்றேது மில்லாமற் போனாள்.
வேலையெலாங் கண்பதித்து மில்லாற்றுங் காலம்.
[நேரிசை வெண்பா]
80
காலம் நினைத்தெண்ணக் கற்பனை தானிறுத்திக்
கோலம் புனைந்தெந்தக் கொள்கைக்கும் - பாலம்
கவிதை யணைகட்டிக் காக்கும் பெருமானே!
புவியில் நிறைந்தாய் பொருந்தி.
[விருத்தம்]
81
பொருந்திடும் நெறிக ளாற்றிப்
புவியினில் தவத்தைப் போற்றி.
விருந்திடும் பெருமை நெஞ்சால்
விளைத்திடும் கவிதைக் காட்டில்.
அருந்திடும் சுரும்பு போல்யாம்
அழகுமிழ் பாக்கள் மாந்தி
இருந்திட லானோம் ஐயா!
இனியெமக் கென்ன வேண்டும்?
-------------------
24. தவம்
(விருத்தம். வேறு)
82
வேண்டுமறம் நன்காற்றித் தவத்தி லோங்கி
வேதனைகள் மாற்றுதற்கு நெறியைக் காட்டி
ஈண்டுயர்ந்தே ஈடில்லா முனிவ னாகி
இன்றேம்பா வணிபாடி இருந்த நல்லோய்;
நீண்டுயர்ந்த பணிக்கெல்லாம் உவமை யானாய் !
நெஞ்சுயர்ந்த தமிழுக்கோ அடிமை யானாய்.
பூண்டுறவு வடிவுக்கே புதுமை யானாய்;
புகன்றிடவே முடியாதுன் தவத்தி னற்றல்.
83
ஆற்றலில்லா மாந்தரெங்கும் இல்லை யென்றே
அறிவுலகம் சொன்னாலும் ஆற்றல் தன்னைப்
போற்றலில்லா வீணெறியிற் செலுத்து கின்றோர்
பூதலத்தே நிறைகின்ற விந்தை என்னே !
மாற்றமில்லா மனமுள்ளோர் முனிவர் தாமோ ?
வாழ்வதற்கே வாழுகின்றோர் மாந்த ராமோ ?
ஏற்றமில்லா செயலோட்டி தமிழ நாட்டில்
இணையில்லா தவக்கோலம் பூண்டோன் நீயே!
84
நீயிங்கே வந்துற்ற நாளிற் றானே
நெஞ்சினிக்கும் தவத்திற்கே உருவம் கண்டோம்.
பாயெங்கே எனத்தேடி மடத்தி னோரம்
பசுநெய்யில் தோய்ந்தோரே முனிவ ரென்றார்.
காயெங்கே கனியெங்கே என்றே நாடி
களித்திருந்தோர் துறவுக்கே விளக்கம் சொன்னார்
வாயெங்கே வயிறெங்கே என்றே மேனி
வலுத்திருந்தோர் கடவுணெறி கூறி நின்றார்.
85
நின்றாரின் கோலத்தைக் கண்ட தாலே
நிதமிங்கே தவமென்றால் தூற்ற லானார்.
குன்றாடும் ஒளிபோலே வீரஞ் சேர்த்தே
குணமுற்ற பெஸ்கிமுனி வந்த பின்னே
மன்றாடும் புதுத்தென்றல் மக்கள் நெஞ்சில்
வந்தாடத் துறவுநெறி பெருமை யேற்கும்.
நன்றான தவத்திற்கே வடிவம் தந்தோய்
நலம்பாடும் தமிழுக்கே உணர்வும் கண்டாய்.
86
கண்டாய்ந்த இலக்கணத்தில் புதுமை காட்டி
கற்பனைக்கும் அணிதேம்பா வடிவ மூட்டி
பண்டாய்ந்த வழிக்கெல்லாம் மாற்றங் காட்டி
பணியெல்லாம் தமிழுக்கே வடித்துக் கூட்டி
செண்டாய்ந்த சுரும்பாகித் தமிழக் காட்டில்
சித்தமுறக் களித்தோங்கி நட்புப் பாடி
விண்டோய்ந்த புகழுக்கே உரிமை யேற்று
வீரமுனி யாகவினி நின்ற நல்லோய்.
[நேரிசை வெண்பா ]
87
நல்லோன் தமிழமுத நாட்டோன் நலதேம்பாச்
சொல்லோன் நலம் நாடித் தொண்டேற்ற -வல்லோன்
துறவற மேற்றோன் சுடரொளித் தூயோன்
அறநெறிக் கானோன் அணைத்து.
--------------------
25. சம்பிரதம்
[ கட்டளைக் கலித்துறை ]
88
அணைக்கின்ற காற்றைக் கவிதைக்குள் பூட்டி அரங்கமைப்போம் ;
பிணைக்கின்ற அன்பிலே நெஞ்சத்தைத் தோய்த்துப் பிறப்பெடுப்போம்.
இணைக்கின்ற தேம்பா வணியிலே நாளும் இருந்தழைப்போம் ;
துணைக்கென்று தூய முனிவனை நாடிச் சுகம்பெறவே.
------------
26. தழை
[எண்சீர் விருத்தம்]
89
துணையிலையே எனமெலிந்த மானைப் போலே
துவன்று நடை தளர்ந்தமாதைக் காக்க வென்றே
இணையிலையே எனவுகந்தே தழையைத் தந்தே!
ஏறுநடை நாயகனே ! வாழ்க நன்றே
கணைவிழியோ காய்ந்துதிர வாடும் பேதை
கணமுனையே மறவாம லேங்குங் காலை
அணைபெறவே சுரும்பாடும் தழையு மீந்தாய்.
அணிதேம்பா சுவைபோலே வாழ்க நன்றே.
------------------
27. குறம்
[அறுசீர் விருத்தம் ]
90
நன்றினி யாகு தம்மா !
நனியினி வாட வேண்டாம் !
அன்றுனைப் பிரிந்த நல்லோன்
அண்டியே வருவா னிங்கே
என்றுளங் கூட்டிச் சொன்னேன்
இக்குறப் பெண்ணே யம்மா.
பொன்றுகில் தரவே வேண்டாம் ;
புனையணி தரவும் வேண்டாம்.
91
வேண்டிடும் பொருள்க ளெல்லாம்
விளைத்திடும் தேம்பா வொன்றே !
வேண்டியே ஒருநூல் தந்தால்
விரும்பியே ஏற்பே னம்மா.
கூண்டிடும் உணர்வுப் புள்ளை
குணமெனும் வெளியில் விட்டே
ஆண்டிடும் தலைவன் றன்னை
அகத்தினிற் சிறைப்ப டுத்தே.
[எண்சீர் விருத்தம்]
92
தேடிவரும் அருவிக்கு வழிவிட்டு நிற்கும்
தென்றலுயர் பண்ணைமலைக் குறத்தியம்மா நானே.
கூடிவரும் காலமினிக் கொண்டவனும் வருவான்,
குளிர்காற்றில் சந்தனம்போல் நற்றேம்பா தருவான்.
பாடிவரும் குறமகளைப் பார்த்தபின்னும் துயரோ ?
பண்புயரும் தேம்பாவில் அணிகண்டு மயர்வோ?
ஊடிவரும் பிரிவெல்லாம் உடனோடிப் போகும் ;
உன் காதல் உயர்வாகும் உணர்வாயே யம்மா !
93
அம்மானைத் தேடியவன் அருங்காட்டில் திரிவான்;
அம்மானை பாடுமுனை நாடியவன் வருவான்.
இம்மானின் கண்ணருவி இனிவற்றிப் போகும் ;
இதமான ஒளிப்பூக்கள் இனியங்கே பூக்கும்.
பெம்மானாம் பெஸ்கிமுனி தருந்தமிழைப் போலே
பிறக்கின்ற புத்துணர்வா லவனோடி வருவான்.
அம்மா நீ துயராற்றி மறப்பாயே துன்பம்;
சுகமான சேதிசொன்னேன் நலமாகு மின்பம்.
[ நேரிசை வெண்பா ]
94
நலமான தேம்பாவை நாளெல்லாம் பாடி
உளமாரச் சூழ்ந்தா லுயர்வு- நிலமுறைந்தப்
பச்சைப் பயிர்வளமும் பண்ணா லுயிர்பெறுமே
இச்சித் தெடுத்துண் இனி.
95
இனித்திடும் செங்கரும் பின்னூ லதனால்
முனைந்தெடுத் துண்பாய் முதலில் - நினைந்தெண்ண
நல்லதமிழ் வந்து நடத்திடும் தேம்பாவின்
வெல்லத் தமிழை விரும்பு.
[ அறுசீர் விருத்தம்]
96
விரும்பியே நீயும் வந்தால்
விளங்கிடுந் தேம்பாச் சந்தம்.
அருந்தியே நாளும் வந்தால்
அன்பறம் மீறும் கொஞ்சம்
திரும்பிய திக்கி லெல்லாம்
சிந்தனை துலக்க மாகும்
அரும்பியே உணர்வு முந்தும்
அணிநலம் ஓங்கி நிற்கும்.
----------
[14 சீர் விருத்தம்]
97
நிலவிடும் புகழுக் குரியவ ரானீர்!
நினையினி மறந்திடல் ஆமோ ?
நிதமுனைப் பாடி தமிழ்வளர்ப் போமே !
நெஞ்செலாம் நன்றியைப் பெய்வோம்.
உலவிடும் தென்றல் உன்னடை காட்டும்
உன்னருள் தேன்மலர்ப் பாட்டே.
உதவிய தொன்னூல் உரிமையி லேற்றே
உலகிடை உன்புகழ் நாட்டும்.
தலைமகன் தமிழுக் கானவன் நீயே !
தரமுடன் பேசுவோம் இன்றே.
தனிநடை தமிழுக் கழகுடன் செய்தாய்;
தாங்கரும் பாவினம் நெய் தாய்.
அலையிடும் கடலும் அருவியும் பூவும்
அன்பனே உன்னருள் கூறும்.
அதிசய விளக்கே! அருமுனி வோனே !
அகிலத்தே நினக்கிணை யாரே ?
98
யாருனைப் போலே நேர்தமிழ் மேலே
அன்புடன் பாவிசைத் தாரே ?
ஆதவன் ஒளியாய் சீர்தவ வெளியாய்
அணியினை மாட்டின தாரே ?
பாருனைப் போற்றும்; பேருனைச் சாற்றும்;
பழகிடும் நல்லற மேற்றும்.
பயின்றவர் கண்டே துயின்றவர் உண்டே
பரவச மடைந்திடக் கொண்டே
தாரணி மார்ப! காரணம் தேர்வ!
சரித்திரம் படைத்தவன் நீயே !
தமிழனே வாழ்க! அமிழ்தென வாழ்க !
சார்மழைக் கருணையே வாழ்க!
பூரண விளக்கே! பொற்புடைத் தேவே !
புனிதனே தமிழென வாழ்க !
புதுமையே வாழ்க! முனிவனே வாழ்க !
புத்துளம் காட்டியே வாழ்க !
99
வாழிய தேம்பா வழங்கிடும் அணியே
வாழிய முனிவனின் பேரே.
வணக்கமே சொன்னோம் இணக்கமே காட்டி
வந்தருள் செய்திடு வாயே.
ஆழியே போன்றோய் அழகணி சேர்த்தோய்
அகிலமே போற்றிட வாழ்க.
அறிஞரும் உன்னைப் புலவரும் பின்னை
ஆய்ந்தபின் சொல்வது மென்னை ?
நாழியின் பொழுதே! நற்றவ விழுதே !
நாடினோம் உன்புகழ் தொழுதே.
நடத்திய பாட்டில் நற்றவம் உண்டோம்
நனியினி எந்துயர் ஏதோ ?
வாழிய வீர மாமுனி வோனே !
வாழிய தமிழென வாழி !
உன்பா ! வாழிய நின்பேர் !
வாழிய கலம்பகம் வாழி !
100
கலம்பகம் கண்டே நலம்புரிந் தின்றே
கவியினை வாழ்த்திடு நன்றே.
கருத்தெலாம் கேட்டே கனிந்தருள் காட்டே
கண்மணி எங்களின் நாட்டோய்!
உளம்புகும் உன்பா பலந்தரும் என்பா
படைத்தவர் வாழிய என்போம்.
உயரிய தொண்டோய்!செயம்பல கண்டோய்!
உரிமையில் கருத்தெலாம் விண்டோய் !
நலம்புகக் கேட்போர் நாடிய வேற்போர்
நன்றினிக் கவிமழை நூற்போர்
நல்லவர் வாழ்க ! பல்லறம் சேர்க !
நாட்டினில் நலிவெலாம் தீர்க!
நிலம்புகும் செம்மை நலந்தரு முண்மை
நித்தமும் உன்னருள் நன்மை.
நின்புகழ் சாற்றும் சுந்தர மூர்த்தி
நீட்டிடும் கலம்பகம் வாழி ! !
(வீரமாமுனிவர் கலம்பகம் முற்றும்)
------------------
------------------
ஆசிரியரைப் பற்றி...
இந்நூலாசிரியர் கவிஞரான சிறந்த சுவைமணிக் கவிஞர்' துரை.சுந்தரமூர்த்தி அவர்கள் எழுத்துலகில் சிறு கதைகளின் மூலமே அறிமுக மானார். 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான சிறு கதைப் போட்டியில் இவருடைய கதை " தமிழ்ப் பெண் " வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தொடர்ந்து இவருடைய சிறுகதைகள் ‘ஆனந்த விகடன்' தினமணிச் சுடர்' (ஞாயிறு மலர்), 'தினமலர்' (ஞாயிறு மலர்) 'செய்தி' (ஞாயிறு மலர்) ஆகியவற்றில் வெளியிடப்படுகின்றன.
"பண்ணை முருகன் பாமாலை" என்ற கவிதை நூலுக்கு அடுத்த படியாக "வீரமாமுனிவர் கலம்பகம்" என்னும் நூலை, திருச்சி தமிழ் இவக்கியக் கழகத்தார் வெளியிடுகின்றனர். அச்சேறுதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இவருடைய மற்றைக் கவிதை நூல்கள்: "முத்துநகை” (காப்பியம்), “அன்னை அந்தாதி", "மேடை யில் கலைஞர்", மலர்ப் பந்தல்" ஆகியனவாகும். ஆய்வு நூல்: "இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வளம்".
திருச்சி வானொலியில் இவருடைய நாடகங்கள், மெல்லிசைப் பாடல்கள், கவிதைகள், அறிவியல் ஆய்வுகள் ஒலிபரப்பப் படுகின்றன.
தமிழார்வம் மிக்க இவர் விலங்கியல் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ஆய்வாளர்.
2-2-1941 ஆம் ஆண்டில் பண்ணைக்காட்டில் பிறந்த இவர் விலங்கியலில் எம்.எஸ்சியும், தமிழ் இலக்கியத்தில் எம். ஏயும் பயின்றுள்ளார். முறைப்படி இவருக்குத் தமிழைக் கற்பித்தவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான இவருடைய தந்தையார் திரு எஸ். ஆர். துரைசாமியாவார்கள்.
------------------
This file was last updated on 01 December 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)