கணபதி ஆசாரியாரால் இயற்றப்பட்ட
கன்னியாகுமரிப் பகவதி அம்மன் பிள்ளைத் தமிழ்
kanyAkumari pakavati amman piLLaittamiz
of kaNapati AcAriyAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Roja Muthiah Research Library, Chennai for providing a scanned PDF version of this work
Special thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of a soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கணபதி ஆசாரியாரால் இயற்றப்பட்ட
கன்னியாகுமரிப் பகவதி அம்மன் பிள்ளைத் தமிழ்.
Source :
கன்னியாகுமரிப் பகவதி அம்மன் பிள்ளைத் தமிழ்.
கோட்டாறு நீலகண்ட ஆசாரியார் குமாரரும் ஸ்ரீமத். நித்தியானந்தஸ்வாமிகள்
மாணாக்கருமாகிய கணபதி ஆசாரியாரால் இயற்றப்பட்டது.
திருவனந்தபுரம் "ஸம்ஸ்கிருதபாஸ்கர" பிரஸில் பதிப்பிக்கப்பட்டது.
1904.
நூலாசிரியர் கருத்து
மனம்வாக்கிற் கெட்டாத சிற்சத்தியாயிடினும் மன்பதைகளுய்ய வேண்டி மலையரையன் முதலோரிடத்
தவதரித்தொரு மடப்பிள்ளைபோல் வளர்தல்கருதி அவ்வவதாரத்தின் கட்பட்ட துதிகவிகளில் முதல்நின்றது
பிள்ளைக்கவியாதலால் இஃதோர் பெண்பாற் பிள்ளைத்தமிழ் பாடியவாறு, பெண்பாற் பிள்ளைக்கவியின்.
பருவ விவரம்.
1. காப்புப் பருவம் - மூன்றாமாதம் - இஃது பாட்டுடைத்தலைவரை உலகிற் காவற்
றொழில் கைக்கொண்ட திருமால் முதலியோராற் காவல் புரிவித்தலாம்.
2. செங்கீரைப் பருவம் - ஐந்தாமாதம் – இஃது செவ்விய மழலைச் சொற்களைப் பேசும் பருவம்
(கீர்) (சொல்) இப் பருவத்தின் செயல் ஒருகாலைமடக்கி ஒருகாலை நீட்டி இருகைகளையும் நிலத்திலூன்றித்
தலைநிமிர்த்து முகமசைய ஆடுதல்.
3. தாலப் பருவம் - ஏழாமாதம் - இஃது தாலாட்டும் பருவம். தாலாட்டு ஓர்வகையாக
நாவசையப் பாடும்பாட்டு (தாலு - நா)
4. சப்பாணிப் பருவம் - ஒன்பதாமாதம் - இஃது இருகரங்களையும் ஒருங்கு சேர்த்துக்
கொட்டும் பருவம்.
5. முத்தப் பருவம் - பத்தாமாதம் - இஃது முத்தங்கொள்ளும் பருவம்.
6. வருகைப் பருவம் – பன்னிரண்டாமாதம் – இஃது வருகையை விரும்பிய பருவம்.
இதனை வாரானையென்றும் கூறுவர். ஆனை தொழிற் பெயர்விகுதி.
7. அம்புலிப் பருவம் - பதினாறாமாதம் - இஃது சந்திரனை விளையாட அழைக்கும்
பருவம்.
8. அம்மானைப் பருவம் - இரண்டாம்வருடம் - இஃது அம்மானை ஆடும் பருவம்.
9. நீர்விளையாடற் பருவம் - மூன்றாம் வருடம் - இஃது நீர்விளையாட்டுச் செய்யும் பருவம்.
10. ஊசற்பருவம் - நான்காம் வருடம் - இஃதுஊஞ்சலாடும் பருவம்,
இவற்றில் ஆண்பாற் பிள்ளைக் கவியில் கடைமூன்று மொழித்து சிறுபறை, சிற்றில், சிறுதேருருட்டல்
என்னும் முப்பருவங்கள் உறழ்ந்து வருமாறுணர்க.
“”””””””””””””””””””””””””””””””””””
கன்னியாகுமரிப் பகவதி அம்மன் பிள்ளைத்தமிழ்.
உ
சிவமயம்
காப்பு - விநாயகர் துதி
“”””””””””””””””””””
பூமேவு கொன்றைச் சடாடவிக் கங்கைநீர்
புக்களைந் துயிர்ம லமெலாம்,
போகவென் றுதறியவை யாப்புறும் பாசமெம்
புடையுற்ற தென்று பற்றிக்
காமேவு சத்திசிவம் என்னுமிரு தந்தியைக்
கடவுமங் குசமு மேந்திக்
கன்மவெங் கோடையற வருண்மதம் பொழியுமைங்
கைக்களிற் றைப்பணி குவாம்,
மாமேவு கோகனக மென்னவன் னம்பொலி
வயற்கந்நி மாபுரி வளர்
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிராம
வல்லிகற் பகவல் லியைத்,
தேமேவு மதுரம் பழுத்தொழுகு மொழியென்
சிறாஅர்க ளெவ ருக்குமுதவச்
சீர்சால் கடைக்கணிப் பருள்செய் பூங்கோதையைச்
செப்புமென் கவித ழையவே. (1)
“”””””””””””””””””””””””
நூல்
முதலாவது காப்புப் பருவம்.
திருமால்.
செங்கேழ்க் கவுத்துவத் திருமணியு மெழிலா
ரணங்குமெதி ரெதிர்மின் செயத்,
திப்பியவ லம்புரியி டிக்குரல்கு முறநேமி
யூர்கோள் சிறப்ப முகிழாப்,
பங்கேரு கக்காட லர்ந்தருட் பெருமாரி
பாய்ந்து யிர்ப்பயிர் வளர்க்கும்,
பணைநெடுங் கொண்டல்வந் தினிது காக்கச்
சூற்படா தண்டகோ டிகளெலாம்.
இங்கேப யந்திடும் படிபயர் திடுமிமய
மிவளென்று திருவுரு வெடுத்
தென்குணக் குன்றிற் படர்ந்துட் குழைந்தசைந்
தேழ்வகை யரும்பி யெழில்சேர்,
சங்கேறோ லிக்கவொண் டிரைவெண் டரங்கநற்
றரளமெறி யுவரி தீரத்
தண்குமரி நகரில்வே ரூன்றித்த ழைத்தசீர்
தங்குபைங் கொடிதன் னையே. (1)
“””””””””””
பரமசிவன்.
வேறு.
எவனசர சரமெலாந் தந்திடற் காற்றலான்,
எவனுயிர்செய் வினையெலாம் பண்புறுத் தூட்டுவான்,
எவன்முடி விலவையெ லாந்துன்பறுத் தாற்றுவான்,
எவனுயிர்செய் தொழில்களோய்ந் தின்புறக் காட்டுவான்,
எவனிலகு சுடர்கண்மூன் றிங்குகண் காட்டினான்.
எவனெவணும் வடிவமோ ரெண்பெறத் தோற்றினான்
எவன்விசத சடிலமேற் கங்கையைச் சேர்த்தினான்,
எவன்மலியு மொலிகுலாந் தன்செவித் தோட்டினான்,
அவனலர்க டரினும்வீண் வம்பனைப் போக்குவான்,
அவனணிகல் பெறினுமாண் டன்பனைக் கூட்டுவான்,
அவனடிகள் பதுமநா பன்பெறக் காட்டிலான்,
அவனெனது சிரசின்மேற் றன்கழற் சூட்டினான்,
அவனிளைய சசிகுலாஞ் செஞ்சடைக் காட்டினான்,
அவன்விமல சபையுலாந் தந்தனக் கூத்தினான்,
அவனுனது தருணநாந் தஞ்செனச் சாற்றினான்,
அவனடிய ரடிகடாழ்ந் தன்புறப்போற்றுவாம்,
புவனமதில் வினவிநாங் கண்டதைக் கேட்பிரேற்,
புகல்வனிரு படிநெல்பே ணுந்திறத் தாற்செய்தாள்,
புவனையிவ ளறமெணான் கென்பத்த தாட்சியாய்ப்,
புகலிடமு மிஃதெனா மன்பதைக் கேற்பவே,
பொருசுறவ மொடுகராங் கன்றிமுற் றாக்கநீர்ப்,
புரடிரைநொய் தவிடுபாங் கெங்கும்விட் டாற்றல்போற்,
பொடிமணல் கள்சொரியநா ளும்பொலிந் தேற்றமாம்,
புணரிபடு துறையினார்ந் தெங்களுக் காக்கமாய்க்,
குவிகைபெறு நிதியெலாஞ் செங்கையிற் கூட்டுவாள்,
குறுகிவரு பகையெலாஞ் சண்டைவிட் டோட்டுவாள்,
குலமணிகள லைதொறூங் கங்கெனத் தோற்றமாண்,
குடபணில தரளமார்ங் குன்றினைத் தேற்றநீள்,
குணநிதியு மயனுமாந் தொண்டிழைத் தேற்றவார்ங்,
குழலினர மகளிர்பான் பண்படுத் தேய்ப்பமாங்,
குயில்களொடு மயில்கள்போந் தண்பெறக் கூட்டுண்மா,
குமரிநகர் மருவுபூங் கொம்பினைக் காக்கவே. (2)
“””””””””””””””””””””
விநாயகக் கடவுள்
வேறு
அங்க மெட்டுடைப் பிரணவத் தாயிர முகஞ்சேர்
சிங்கங் கைதொழத் தோன்றிய சிந்துரம் பணிவாந்
தொங்கு காதினூ டருண்மதங் கடலெனச் சூழும்
இங்கிதஞ்சிறி தெய்தநங் குமரிபா லென்றே. (3)
“”””””””””””””””””””””””
முருகக் கடவுள்
வேறு
மானும்பிடியும் விளையாடு மலையீரரறு படைத்தானை
வடிவேலெறிந்திங் கொருமாய வரைசெந்தூளா வுடைத்தானைத்
தேனும்பாலும் பொருமொருசொல் சிவசிரவண மடுத்தானைத்
திவ்யஞானத் தன்னியமெய்ச் செல்விபுகட்டக் குடித்தானை
வானும்புவியு மடிமுடிகள் வயங்காதவனை வயங்கொளியை
மயில்வாகனனைக் கவுரியுண்கண் மணியையன்பு செய்குதுமாற்
கானுங்கடலுங் காட்டியரன் களத்திற்கடுவைக் கவர்ந்துமுது,
கந்நித்தலம்வாழ் மழவிளநங் கந்நிதனைக்காத் தருளவென்றே. (4)
“”””””””””””””””””””””””
பிரமதேவர்
வேறு
பஞ்சகலை யுங்கலையெ னக்கொண்டு விகலையிற்
பகிரண்டமு ற்றுமுலவும்,
பவானியைத் திருஞான வானியையு யிர்க்கருட்
பாலிதத்த திரிசூலியை
மஞ்சுதவழ் சோலைப்ப சுந்தேன் விரைந்தோடி
மகரமும்வி ருந்தயர்க்கும்
வளமைபெறு குமரியங் கந்நிப்பிராட்டி தனைவலிது
வந்தருள் புரியுமாற்
கிஞ்சுகச் செஞ்சூட்டு வெள்ளோதி மத்தரசு
கிளருநடை வேட்டேந்துறுங்
கீர்வாணி சிரகம் பிதஞ்செயச் சாகைகள்
கிளத்திச்சகத் திரதளவெண்
கஞ்சமலர் வீற்றிருந் தகிலாண்ட கோடிகள்
கணம்படைத் தான்மாங்குரக்
கன்மபரி பாகமுற நாடுந்த யாபரன்
கடலிற்பெருங் கருணையே. (5)
“”””””””””””””””””””””
சிவச்சின்னங்கள்
வேறு
அந்தரர் வந்தார்ச் சனைபுரி வுக்கிசை
வந்தணர் முந்தோத் தொலிசெய் முழக்குறழ்,
அம்பர நன்றார்த் துணரின் மருக்கமழ்
அம்புய மென்பூப் பதயுக ளத்தியைச்
சந்திர விம்போத் தமவத னத்தியைச்
சந்தன கும்பார்ச் சுனசுத னத்தியைச்
சந்தவி யன்பாப் புகழும னத்தியைச்
சந்தத முங்காத் தினிதுபு ரக்குமால்
வந்துப ணிந்தேத் தினர்சுரர் முப்புர,
வன்கண் மொழிந்தார்த் தலினருண் மெய்க்கடல்,
மண்டியெ ழுந்தார்த் திறலெழி லக்கமும்
மந்திர பஞ்சாக் கரமுமு ருத்திகழ்
உந்தும ரன்கேழ்ச் சொருபவ னற்பொலி
யும்பொடி யுஞ்சீரத் தெழுகுரு வர்க்கமும்,
ஒண்செயி லிங்கோற், சவமும் தற்கின
மும்புனி தஞ்சேர்த் துடனொரு மிக்கவே. (6)
“”””””””””””””””””””””””””””
திருமகள்
வேறு
கொன்பொலி பராரைவெண் கோடுயர்த்துப் பைங்கொழுந்
துழாய்க்காடு மலரூஉக்
குரைசெயாள் வார்துதிச் சோனைகுடி கொண்டுசத்துவ
குணபிராறு குழியீஇப்,
பொன்பொலி யுமாருயிர்க் குக்காப் பெனப்படும்
புனிதயா றொழுகுமொண்சீர்ப்
பூநீல மாமணிக் குன்றினிற் காத்தளம்
பூவிதழுறத் துவண்டு,
மின்பொலி செழும்பவள வல்லியை யிறைஞ்சுதல்
விளைந்துமால் மீனநோக்கின்
மின்னனார்க் கரசிளங் குமரியாய் வெண்மதிய
மிருகங்க றிக்குநாற்று,
நன்பொலிக் குன்றநிரைசூழுறுங் கன்னிமா
நகரத்தினிற் றுளிர்த்து
நம்பற்கி தென்றீ ரரும்பைச்சு மைந்தவொரு
கொம்பைவந் தளிபுரியவே. (7)
“”””””””””””””””””””””””
நாமகள்
வேறு
எண்ணான்கொ டெழுநான்கு மறைமுடிவு மாகமமு
மிசைபாடு ஞிமிறாகுற
ஏடவிழ்ச கத்திரதள வெண்டாமரைப் போதினிடை
யெழுந்திடு பிரணவம்,
வண்ணாகரக் கருணிகை யுமாக நாலாறு
வலிதக்கரத்தின் வடிவாய்
மருவுகாயத் திரிநன் மணியின்மீ தானம்பொலிந்
துவாக்கி யோபதேசம்.
பண்ணார வோதிக்க னிந்தசெஞ் சண்டிடைப்
படிகத்த கடவுட்கிளிப்
பாவையை விதிக்கடவு ணாவிலுறு குயிலைப்
பழிச்சுதும் பரமேட்டியொண்,
கண்ணார மிளிர்மணியை யருண்மணியை முக்கட்
கரும்பிற் கசிந்ததேனைக்
கன்னியம் புரிசைசூழ் கன்னியம் பதியில்வாழ்
கன்னியைக் காக்கவென்றே. (8)
“”””””””””””””””””””””””””””
சத்தமாதர்
வேறு
நரையனமி வருமணங் கிடபமுற் றார்த்தவள்
நளிமயிலில் வருநுணங் கிடைக்கத் தேற்றவள்,
இரையுமட லரியுவுந் தலம்வலத் தாற்றினள்
இபநடைகொள் பவள்கழுங் கதிர்முள்கைக் காப்பினள்,
புரையிலிவ ரெழுவர்தம் பதமுளத் தேற்றதும்
பொலன்மணிக ளலைகரங் கொடுமிகத் தூற்றிடும்,
குரைகடலி னணிதுசெங் கனகமுற் றாக்கிய
குமரிநகர் மருவுநன் குமரியைக் காக்கவே. (9)
“””””””””””””””””””””””””””””
பலதேவர்
வேறு
வயிரவ ரெண்மர் மருத்துவ ரெண்மர்
பசுக்களு மெண்மர்திசை,
வானவ ரெண்மர் நிசாசரர் சூரியர்
மாழையு ருத்திரரும்,
தயிரிய வீரனி லக்கரொ டெண்மர்கள்
சரபவுருப் பெரியோன்
சசிகண வன்பல தேவரும் வந்தருள்
சந்ததமும் புரிவார்
கயிரவ மாமல ரூடின ரும்பர்கொண்
முல்லைக் காடுவழிஇக்
காமக் கொடிபடர் வாமப் புயனிரு
காதுற்றிடு மழலைக்,
குயிலினை மரகத மயிலினை மிகுகுரல்
குளிறுங் கோட்டதொடு
கோகன கத்துரு மாகன கத்தணி
குமரிக்கொ டிதனையே. (10)
காப்புப்பருவ முற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டாவது: செங்கீரைப்பருவம்
வேறு
மூவரைப் பெற்றால் வயிற்றி னிடைமூ வரையு
முடையை மூவுலகு பணிய,
மூடுமிமயா சலத்தரையன் மகளாய்ப் பொன்செய்
முளரியி லுதித்த ஞான்றில்,
மாவரைய தேவிகங்கைக் கொண்மை செய்துழி
மயிர்க்குச் செறிந்து யிரெலாம்
மருவுதிமி ரங்கண் டரற்றி னாற்போலு
மாழாந்தி டலுமன் னைமாதர்,
யாவரை விழிக்கடவு ளொளிமழுக் குந்நிலப்
பொட்டிட் டுஞான தீபம்
நன்கிதென் றாலத்தி சூழ்ந்துதந் தச்செப்பி
னழுவி னாங்கமுத முதவச்,
சேவரை நினைந்தின்ப முண்டுவளர் பைங்குழவி
செங்கீரை யாடி யருளே,
தென்குமரி நகரில்வா ழென்குமரி யம்மைநீ
செங்கீரை யாடி யருளே. (11)
“””””””””””””””””””””””
கற்றைவெண் டிங்களங் கோவைபோ னிலவுமிழ்
கழுத்தின்முத் தாரமாடக்
கார்கோளி னூர்ந்துமதி கவ்வுமா டரவனைய
கதிர்மணிச் சுடிகையாட,
ஒற்றைவெம் பருதிவட மாகியிள வெயில்காலும்
ஒள்ளரை வடங்களாட
உசனருக் கிணைசெய்வச் சிரத்தொடி களாடமெய்
யொளிர்ப சுங்கதிர்களாட,
மற்றைநாற் கோள்வளைந் தாங்குசித் ரப்பணிகொள்
மறைவெஞ் சிலம்பாடிட
வனசனா டத்தேவர்க் குரிசிலா டச்சேடன்
மடிதுயின் முகுந்தனாடச்,
சிற்றையென் றகிலாண்டர் கொடாண்டு பைங்குழவி
செங்கீரை யாடி யருளே
தென்குமரி நகரில்வா ழென்குமரி யம்மைநீ
செங்கீரை யாடி யருளே. (12)
“”””””””””””””””””””””””””””
குலகிரிக னெட்டுமா கத்தூணம் வான்முகடு
கோயின்மேற் பந்தராகக்
கோள்களொ டுநாளெலாம் பிச்சமாய்க் கோண்மூக்
குழாமாய்வி ளிம்புப்படாம்
இலகுநான் மறையுநால் வடமாக நாதாந்த
தத்துவத்தொட் டிலேறி
இரவுபக லலாவிடத்திற் சிவானந்த நித்திரை
யிசைந்த போதும்.
அலகில்கோ டாகோடி சத்தியாய் நின்றுகன்
மானுசாரத் தைநாடி
அகர்த்தத் துவாதிப்பிர புத்துவசா மர்த்தியகுணி
அணிபெறுந் திருமுகத்திற்
றிலகமென விளையாடு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை யாடியருளே
தென்குமரி நகரில்வா ழென்குமரி யம்மைநீ
செங்கீரை யாடியருளே. (13)
“”””””””””””””””””””””””””
நான்மணக் கும்பூவி லன்றிமுகிள் படியுமோ
நாகிளம் பிரமரமென
நம்பனோ தும்போது நீகோட்டு முகமலால்
கவிலுமோ சிலீமுகத்தைப்
பான்மணக் குந்தேன் வழிந்தோடு குமுதமலர்
பகருமறை வல்லிமேனை
பங்கயக் கொங்கைநீ உண்டபா வனையுமைஞ்
சத்தியாம் பாவனைகொலோ
கான்மணக் குஞ்சுண்ண மெம்பிரான் கொன்றைபுனை
மார்பிற்க மழ்ந்திடாதோ
கடிமணக் கப்பெண்டிர் பொடிமணக் கச்சென்று
கால்கொடோ றொழுகிமீனச்
சேன்மணக் கும்பொருநை ஒண்டுறை வர்அரசிநீ
செங்கீரை ஆடியருளே
தென்குமரி நகரில்வா ழென்குமரி யம்மைநீ
செங்கீரை ஆடியருளே. (14)
“”””””””””””””””””””””””””””””””””
வேறு
கடிகம ழிருதய முளரியில் விரகளி கானவி னம்பாடக்
கணபண முடியுனை நிலமகள் வயின்வினை காரண மென்றாய
முடிவறு முயிர்நிரை தமதக முறுநிதி மூதொளி கண்டேய
முனிவரர் மவுனமு ளவிர்மதி பிதிரொளி மூலமெ லிந்தாட
நடிவிது வெனுமிளிர் குருகொரு பதமொடு நாதவி தங்கூவ
நனவல துறுசக் கனவுமு துதுயிலு நாளுமி ரிந்தேக
அடியவர் மலவிருள் விடியவு தயகதிர் ஆடுக செங்கீரை
அழகிய குமரியில் வளர்களி யிளமயில் ஆடுக செங்கீரை (15)
“”””””””””””””””””””””””
மஞ்சளை யிஞ்சியை அங்குக டந்துவ ளர்ந்தே கும்பாகு
மஞ்சளை யிஞ்சியை அங்குக டந்துவ ளைந்தே கும்பாகு
குஞ்சர மங்கையி லங்குக ரும்புகள் கொண்டா டுங்கானம்
குஞ்சர மங்கையி லங்குக ரும்புகழ் கொண்டா டுங்கானம்
பஞ்சர மென்படு முன்சர ணென்றுப ணிந்தார் மென்பூவோர்
பஞ்சர மென்படு முன்சர ணென்றுப ணிந்தார் மென்பூவோர்
செஞ்சொ லரும்பிய இன்றயை மங்களை செங்கோ செங்கீரை
தென்கனி யம்பதி தங்கிய மின்கொடி செங்கோ செங்கீரை (16)
“”””””””””””””””””””””””””””
சங்கர ரின்பந டஞ்செயல் கண்டுத னந்தாவென் பாய்நீ
சந்தமி குந்தமி ழின்சுவை கண்டுத னந்தாவென் போமியாம்
செங்கர பங்கயம் இங்கணு யர்ந்தனை திண்போகந் தாராய்
செஞ்சொன் மொழிந்தனை யெங்குறை நைந்தது சிருங்காரந் தாராய்
இங்கிரு லிங்கமி சைந்திடு முன்றனை எந்தாயென் போமால்
எங்களை யுங்களில் அன்றியு ணர்ந்தனிர் எந்தாயென் பாயால்
தெங்குநெ ருங்கிய வஞ்சியர் மஞ்சுளை செங்கோ செங்கீரை
தென்கனி யம்பதி தங்கிய மின்கொடி செங்கோ செங்கீரை. (17)
“””””””””””””””””””””””””””
வேறு
பரமப் பெரியவ னருமைத் திருவருள் பங்காய் நின்றாயைப்
பகவற் குணிதனை யவனிற் பிறிதெனல் பண்டார் கண்டார்சொல்
பிரமப் பெயரவன் முதல்வர்க் குறுதொழில் பின்றாய் தந்தாயே
பிணையொப் பெனில்விழி தவர்கைப் படுமது பின்சாய் கின்றாமோ
உரமத் தியிலொரு கரம்வைத் தனரவ ருன்பா றங்காநாள்
உனையொர்ப் பவருனை அலதெப் பொழுதினும் உண்டோநங் காய்நஞ்
சிரமத் தினிலுத விடுசற் குணநிதி செங்கோ செங்கீரை
திமிரப் பகைவதி குமரிப் பகவதி செங்கோ செங்கீரை. (18)
“””””””””””””””””””””””””””
பொற்குட மெத்தனை மட்குட மத்தனை போலும்போ லாவாற்
பொற்றா மரைமுகிள் முற்றாமு கிலைமுகிட் பொலிவுநின் னெழினகரிற்
எற்குட றந்தனை நின்னிரு பாதம் இறைஞ்சித் தொழுவேனால்
இவ்வா றரிபிர மாதியர் கட்கும் இலங்குரு வீய்ந்தனையே
முற்குட நாடனி யற்றுத வத்தான் முந்நீர்த் துறைபேணி
முழுதும் பழமறை தொழுதிங் கிதமொழி மொழியவு வந்தனையே
சிற்குண முநிவர்கள் முற்கிளர் பெருநிதி செங்கோ செங்கீரை
திமிரப் பகைவதி குமரிப் பகவதி செங்கோ செங்கீரை (19)
“”””””””””””””””””””””””””””
தனுமுற் படுபொருள் உயிருக் கிவணனி தந்தாய் செங்கீரை
தனயற் கொருகுரு வெனவிப் புவிவரு தஞ்சே செங்கீரை
மனுவுக் கிருதய மலர்புக் கறிவெனும் வண்டே செங்கீரை
வனசத் திருவரு டியபொற் பதமலர் மங்காய் செங்கீரை
அணுவுக் கணுவென வணுவுற் றுறைபவர் அன்பே செங்கீரை
அனைவர்க் கனையென வருபெட் புருவறழ் அம்பா செங்கீரை
சனப்ப கைதெறு மவர்கைப் புகுமசி செங்கோ செங்கீரை
திமிரப் பகவைதி குமரிப் பகவதி செங்கோ செங்கீரை (20)
செங்கீரைப் பருவமுற்றிற்று.
“”””””””””””””””””””””””””””
மூன்றாவது: தாற்பருவம்
வேறு
சமஞ்சூழடி யர்உளநிலத்தில் விதைத்தன் பருணீர்கா லியாத்துச்
சாத்துவீகாங் குரந்துளிர்த்து நாறாய்நின் றுசம்புபட்சம்
இமஞ்சூழய் யந்திரிபென்னுங் களைகட் டறிவேஇருஞ் சினையாய்
இயமமுத லாக்கதிர் வாங்கித்த லைப்பழாமுன் னிருஞ்சைவம்
சிமஞ்சூழ்மூல மலக்கோடை தீய்ப்பக்கண்டோர் நாமினிமேற்
செய்வதென் னென்றுனுக்கிர கந்தேடும் போழ்தின் னருள்சுரந்து
கமஞ்சூற் கொண்டு தாரைபொழி கருவிமுகிலே தாலேலோ
கருணைமு திர்ந்துந் ததிமுதிராக் கன்னிக்கனியே தாலேலோ (21)
“”””””””””””””””””””””
நிலவும்பிறைசூ டியைவேண்ட நீடுஞ்சினைக்கோ ழிணர்த்தீந்தேன்
நிரப்புந்தடச் சேதாம்புயத்தில் எகினமிருப்ப நிறைமதுவுண்
டுலவுங்குருகர் இசைபாட உகைப்பமுழவே றரியினங்கள்
ஒருங்கே வீணாரவமுரலக் கருங்கட்டோகை நடமுஞற்றும்
பலவும்வளங் கண்டமையாமற் பலாரிஇமை யாவிழிவிழித்துப்
பார்த்தாங்கடைக்கே ழலர்மலர்ந்து பராரைமரங்கள் பரந்து நறை
குலவும்பொழில் சூழ்கன்னிநகர்க் குயிலேதா லோதாலேலோ
கோமளஞ்சே ரெழிற்குமரிக் கொடியேதா லோதாலேலோ. (22)
“”””””””””””””””””””””””
செக்கர்மேனி விசையைதிரு வூஞ்சலாடத் தேர்விசயன்தி
கழ்காண்டீபமு முகுந்தன்சிலை யும்பொருவாச் சிலைகுனித்திட்
டக்கிரோமந்த னையிலக்கிட் டரசவிளங் கோளரிகள்குழீஇ
அசையாதுருண்ட ஞாணேற்றி யரிச்சுண்டனைய கிள்ளூகிராற்
றொக்கியுதறி விசித்துவிசித் தொலிக்குஞ்சுரா ரோகணங்கேளா
அத்தும்புராதி கின்னரர்கள் சூழுங்கழகந்தொறு தொறும்போய்க்
கொக்கின்மௌன சாதனஞ்செய் குமரிப்பதி யோய்தாலேலோ
கோமளஞ்சேர் எழிற்குமரிக் கொடியேதாலோ தாலேலோ (23)
“””””””””””””””””””””””””””
கணைங்காலின் ஆண்வரால் உகளவுமரும்பெறற்
காமரிளவஞ் சியன்னார்
கண்ணிழலை மீனென்றுவெண் குருகர்கொத்த
வுங்கண்டுமுட்கண் ணிலாரோ
நிணங்காறசைச் சுவடுதோயு மாறாடினார்
நீணெறிக்கு மரரென்னா
நிறைநீர்த்த டாகத்தினின்று வெள்ளியசோதி
நெடுவாளை துள்ளிவான்போய்
உணங்காதுமே கந்துளைத்தமுத மோடிழிந் தொழியாத
கண்களுதவ ஒத்துளேன்
குணதிசைக் கடவுளோடி யானுமென்
றுறவுமெதிர் நீரிறைக்குக்
குணங்காலு முதுகன்னிநகர்வீற் றிருந்தபூங்
கொம்பே தாலோதாலேலோ
கோமளஞ் சேர்எழிற் குமரிக்
கொடியே தாலேதாலேலோ (24)
“””””””””””””””””””””””””””
வேறு
மந்திர கோடிகள் ஒன்றுதி ரண்டுரு வந்தனை நீமாதே
வந்தனை உன்றனை அன்றிவி ரும்பிய மந்திரம் வாழாவே
சிந்தையின் உளடுன தங்கமு ணர்ந்தவர் தென்றிசை சேராரே
செந்திரு நாமகள் என்றிரு மாதர்தி னம்புடை பேராரே
ஐந்தொழி லாளர்மு னந்துதி செய்துனை அன்றுல காள்வாரோ
அண்டச ராசரமுந் துறைகந் நியரும் பதியா மாபோற்
சந்தத மேவுப ரஞ்சுடர் மின்கொடி தாலோ தாலேலோ
சந்திர சூடர்வி ழைந்தப சுங்கிளி தாலோ தாலேலோ. (25)
“””””””””””””””””””””””””””””””””
கஞ்சனும் உன்பத கஞ்சம டைந்திலன் நீண்முடி காணானாங்
காலன்நெ டுந்தலை மீதிருகா லுமுணர்ந் திலன்மா யோனும்
நஞ்சயில் கண்டனை உன்னொரு பங்கில் உணர்ந்தினர் நல்லோர்தாம்
நந்துமு ளங்கிய தென்கும ரிப்பதி நாடுபுநா டோறும்
அஞ்சலெ னும்படி எங்கணு வந்தருள் ஆயினை கோமாதே
அன்புநி ரந்தரம் நின்கணி றந்தனம் அம்புய வண்டேபோற்
றஞ்சென வந்தவர் உஞ்சுகு மாரியை தாலோ தாலேலோ
சந்திர சூடர்வி ழைந்தப சுங்கிளி தாலோ தாலேலோ (26)
“””””””””””””””””””””””””””””””””””
விண்டொ டர்பூதவ னஞ்செல இளஞ்சிகி மீதாஏ டோரா
வெங்கத மேகொடும் அங்கக லாதுற மீவாய் சூழ்நாகம்
ஒண்டொடி யார்நிழல் சென்றுப துங்கவும் உளடெ போர்வேழம்
ஒன்றுட னொன்று நெருங்கி விழிப்பொறி ஓயாதேசோரக்
கண்டுடன் உற்கையை அஞ்சுமெனிற்கடை கண்டார் வேறா
ரோ கந்திரு வாதியர் வந்துவணங்கிய கந்நிநின் மூதூரிற்
றண்டளிர் மாவலர் இன்குரல் ஒண்குயில் தாலோ தாலே லோ
சந்திர சூடர்வி ழைந்தப சுங்கிளி தாலோ தாலேலோ (27)
“”””””””””””””””””””””””””””
எண்ணைந் தொடுமுக் கோணுறழ் கிரகமி ருந்தாய் தாலேலோ
இன்னஞ் சிறுபெண் ஆயுல கீனுமி ளந்தாய் தாலேலோ
கண்ணன் புகழ்மகி டாசுர வாதுக டந்தாய் தாலேலோ
கனகா சலதூ வித்தேர் மீதுக லந்தாய் தாலேலோ
பண்ணந் தாமறை ஊடுகி யாதிப ரந்தாய் தாலேலோ
பந்தந் தீர்வகை இங்கொரு வாய்மை பகர்ந்தாய் தாலேலோ
தண்ணந் தாமரைசூழுறு கந்நித ழைந்தாய் தாலேலோ
தாரணிப ணிநாரணி யெனவரு தாரணியே தாலேலோ. (28)
“”””””””””””””””””””””””
வித்துருமத் தூண்மிசைச் சந்திரகாந் தத்தில்வெண் ணிறத்தக டுவேய்ந்த
மேலிலிற் குலிசத்த சுவர்தொறூஉந் தற்சாயை மேவரமின் னனார்தாஞ்
சத்துருவெ னக்கறுவும் ஊடல்முன் னிலையவர் தலைக்கொண்ட காமவெறிநஞ்
சகசமலம் இவையலாற் சாதுரியம் இலையென்று சான்றோரு
ணர்த்துமாடக்
கொத்துரு அணிந்தமிர்த சாகரந னந்தலை குறித்தரெத்ந தீவுபோற்
குலமணியின் இளவெயில் எறிக்கமும் மணிமுரசு குமுறுபே ரோதைஎல்லாங்
கத்துருமு ழக்குகும ரிப்பதியில் வளர்தருங் கனியேதாலோ தாலேலோ
காலமூன் றுங்கடந் தசிவ காமி தாலோ தாலேலோ (29)
“”””””””””””””””””””””””””””
கண்ணன் உருப்பத் துத்தரு விரலொண் கையாய் தாலேலோ
காமனொ டிரதியை உதவுசெவ் வரிபிறழ் கண்ணாய் தாலேலோ
மண்ணிய விடமமு தாகுறு குமுதநல் வாயாய் தாலேலோ
மானிட மேந்திய குரலிசை யாக்கிய வாக்காய் தாலேலோ
விண்ணியல் பருதிக் கொளிதரு மவிரொளி மெய்யாய் தாலேலோ
வீரியம் வேண்டினர் போற்று றுசீரடி விமலாய் தாலேலோ
தண்ணிய குமரியை நினைபவ ரிதயா சனையே தாலேலோ
தாரணி பணிநா ரணியென வருதா ரணியே தாலேலோ. (30)
தாலப்பருவமுற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாலாவது: சப்பாணிப்பருவம்
வேறு
ஆண்மைகி டந்துசி றந்துளபுரு டோத்தம
னிவளெ னலும்
றந்தவசம தாகிவலிந்து தொடர்ந் தனுராக
முறழ்ந்த னனால்
வாண்மைகி டந்தவி ழிக்கடைதூங்கியகா
மலைப் படியீஇமாதரை
எண்வகை யாலும யர்த்திரு வாழ்
வையும் வேண்டகிலா
ஏண்மைகி டந்தத போதனர்போத
மிருந்த ஒருத்தனகோ
என்னதுக லையொன் றெய்திய மோகினி
யின்பால் மனவலியின்
தாண்மைகி டந்தது காண்மென லொப்பிய
சப்பாணி கொட்டியருளே
சலதடம ருவுமுது குமரிநகர் வளருமயில்
சப்பாணி கொட்டியருளே. (31)
~~~~~~~~~~~~~~~~
அண்டத்தின் அண்டுமூ தண்டகோ டிகளுமங்
காருயிர்த்தொ கைகண்முழுதும்
அம்புயாச னன்முதற் றேவர்முனி வரரெலா
மடிமுடிம றிந்துகீழாய்
எண்டரும் பொருள்கள்வே றெவைகளொடு நிர்த்தூளி
இடுமவன்சத் திராமால்
இங்குநம்மோ டுமற்றீடுபா ராட்டுவோர் எவருமிலை
என்றொன் றொடொன்
றொண்டொடி புலம்புறக் கைதாக்கு மாறுபோல்
உகாந்தத் தின்உருமேறொலி
உம்பர்க்க ணன்றிம்பர் காட்டுகேனி யானென்
றுரைத்திட்ட றைந்ததொக்கும்
சண்டப்பிர சண்டஉத் தண்டகைக் கொட்டிஃது
சப்பாணி கொட்டியருளே
சலசதடம ருவுமுது குமரிநகர் வளருமயில்
சப்பாணி கொட்டியருளே. (32)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருவெட்ட வெளியெனுந் திருமுற்றமதனிற்
பிருந்தாவ னதாவனத் தமர்ந்த
பெம்மான் மடந்தையொடு நாமகளு
நின்னேவல் பேணிப்பெ யர்ந்துநிற்க
ஒருவட்ட கிரிவேலி கோலிமேல் விரிபுவனம்
ஒள்ளறை குறித்தேழ்வகை
உடல்கொள் எண்பதுநான் கிலக்கபே தப்பாவை
உள்ளுறஇ ழைத்தசிற்றில்
மருவட்ட மூர்த்திவந் தூடழித்திது வேமயான
மென்றா டியாடி
மாறித்தி ரும்புமுன் பழயபடி சிட்டித்திவ்
வண்ணமுடன் உடனாடல்செய்
தருவட்டமுகி எங்குன் ஆடுகபென் றனைபோல்வ
சப்பாணி கொட்டியருளே
சலசதடம ருவுமுது குமரிநகர் வளருமயில்
சப்பாணி கொட்டியருளே. (33)
~~~~~~~~~~~~~~~~~~~~~
இடமருவு பாகரோ டரிபிரமர் முதலினோர்
எதிர்பார்த்தி ருந்தபோதும்
ஏழைபங் கோடிவந் தருள்புரியும் என்னம்மை
என்னம்மை என்னம்மைநீ
மடமுதவு மாணவம றைப்பினோர்க் கின்னருள்
வழங்காதி ருத்திகண்டாய்
மற்றுன்னை அன்றியே சிற்சத்தி என்றினி
வகுக்கவொரு சத்திஉண்டோ
தடமருவு சைவத்தினுக் குவேறாக வொருசமய
முண்டென்று சில்லோர்
சாதிப்பதென் னனக்கை கொட்டுமா றுபோற்
றண்டளிரி ளங்கரத்தாற்
குடமருவு முலையம்மை நீயின்னம் ஒருதரங்
கொட்டியருள் சப்பாணியே
குரைகடலின் அலைமோது கரைமருவு முதுவாழ்வு
கொட்டியருள் சப்பாணியே. (34)
~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
எண்ணறு சூரியர் எண்ணறு சந்திரர் எதிர்பட்டு தயஞ்செய்
திலகுவதா மெனவை கடிகம்புனை இளவெ யில்மணி வீசும்
வண்ணவி யன்பொற் றூவிகள் புனைவன் மரகதநெ டுமாடம்
மங்கையர் அங்கைப் பந்தினும் இழிவன வகைநித் திலமென்ப
கண்ணகன் ஞாலத் தரதன புரநிகர் கந்நிப்பதி மாதோ
கடவுட்சிந் தாமணி வலயம் போற்கா மர்தழீ இயின்கட்
கொண்ணறை மாமலர் கொட்டுவ தென்நனி கொட்டுக சப்பாணி
குற்றமில் நற்றவர் பற்றுறும் உத்தமி கொட்டுக சப்பாணி. (35)
~~~~~~~~~~~~~~~~~~~~
எட்டுள திசையினும் எட்டுகை வாணன திதயம்ப றைகொட்ட
ஈரைஞ் ஞூறுகை வாணனெ டுங்குட முழவினி னிசைகொட்டக்
மட்டுள ரல்லவர் ஆகியவா னவர்முனி வரர்ம கிழ்கொட்ட
வாளவுணே சர்அரக் கரகத்தில் வளர்ந்தெ ரிமலர் கொட்டத்
தொட்டம லர்க்கணை அட்டிலை யோநெறிசுட் டெழுதழ லென்னோ
சுத்தா விழியினென் முத்தணி நகையொளி சொட்டுறு மாறங்கை
கொட்டுவ தென்மறை கொட்டிட ஒருமுறை கொட்டுக சப்பாணி
குற்றமில் நற்றவர் பற்றறும் உத்தமி கொட்டுக சப்பாணி (36)
~~~~~~~~~~~~~~~~
அன்புக னிந்துள ராயசெ ழுந்தரு அணவிச் சிறிதமரூஉ
அங்கண னாருள மெனுமா ணிக்கப்பஞ் சரமதி லடையூஉ
இன்புக னிந்தசி வானந்தப் பால்உண் டுதெவிட் டெறியூஉ
என்றுந் தாரகமா கியபொரு ளுரைஇசை கெழுசிறு கிள்ளாய்
மன்பதை மாமயில் அகவக் கருணைபொ ழிந்தருள் வண்காரே
வானவர் மகுடப் பந்திக டோறும் வயங்குசி காமணியே
கொன்பொ லியும்பல சத்திக ளரசே கொட்டுக சப்பாணி
குமரியெ னக்கும ரியினிலு றைந்தவள் கொட்டுக சப்பாணி. (37)
~~~~~~~~~~~~~~~~~~
மந்தாரத் துடன்மௌவ் வல்செவந் திநல்மல்லி கைஆகிய வாம்
மலர்படி ஞிமிறு சுரும்பொடு தேனிவை மாறற்கோச் சினைகொல்
எந்தாயூ ழிநடம்ப யிலீமத் திந்திரன் ஆதியர்மெய் எம்மானு
தல்விழி எரிபடும் அடலை இரிந்திட எற்றினைகொல்
சந்தாபந் தணிஎன்கு நருக்கருள் தந்தாம் முந்தெனவே தந்தாம்
என்றுகை கொட்டினை கொல்லென அறிஞோர் சாற்றி னராற்
கொந்தார் தளிர்புரை நின்கைத் துணர்கொடு கொட்டுக சப்பாணி
குமரியெ னக்கும ரியினிலு றைந்தவள் கொட்டுக சப்பாணி. (38)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(வேறு சந்தம்.)
அக்கம்மி குப்பானும் ஒக்கவி திப்பானும் அற்புதம் உற்றார் கொலாம்
அட்டதி சைப்பாலர் சுற்றவி வட்பேர்கொளும் அப்பதிவிட் டேகலார்
மைக்கட லிற்றாழும் வைப்பை மருப்பார வைத்தசுறப் பேறனும்
மற்றிவள் சற்றீயக் கொற்றமொ டுற்சாகம் மட்டலபெற் றானகோ
செக்கர்நி றத்தாகித் தக்கனை அட்டோனுஞ் சிற்றடல் கொட்சீரியன்
செப்புமி னித்தேவர் முப்பதுமுக் கோடிசெய்ப் படுகுற் றேவலார்
கொக்குமு றித்தானும் அத்திதறித் தானுங்குக் கிபொறுத்தா ரெனாக்
கொற்றவி தப்பாணி சுற்றும திர்ப்பாணீ கொட்டுக சப்பாணியே. (39)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(வேறு சந்தம்.)
மந்தரமா மலைஒன்ற உலாவரு மத்தகெ ஜப்பாணி
வண்டுளர் சோலையி ருந்தலைநேரே ழுமற்றனு சப்பாணி
சந்தனவா விகுடைந் தரமாதர்க ணற்சல சப்பாணி
தங்குபுவோ ரொருபொன் புரையாவி சைதத்தர சப்பாணி
அந்தரமே வுவிகங்க மெலாம்வர வைக்கர சப்பாணி
அம்பிகை போல்வகை எம்பெருமா னோடுகைச்ச ரசப்பாணி
கொந்தளபா ரமடந்தை யர்நாயகி கொட்டுக சப்பாணி
கும்பசனா தியரும் பணிநாரணி கொட்டுக சப்பாணி (40)
சப்பாணிப்பருவம் முற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐந்தாவது முத்தப் பருவம்
வேறு
பனிவந்தடைய உடையுமலர்ப் பதுமாசனத்துப் பண்ணவற்கும்
பரந்தாமனுக்கும் அரியபதாம்
புயத்தாய்மடப்பைங் கிளிப்பிள்ளாய்
தனிவெண்டிங் கட்புரிசடையிற் றழைக்குமொரு சக்கிழத்தி
வந்துதாழ மகிழ்ந்துசிவன்மார்
பிற்றழும்புப டுக்குந்தனயுகளாய்
தொனிநந்தெறியும் விரிதரங்கத் துறையும் வேலாவனமுறையுஞ்
சூழலினும்போய் வதிவலெனத்
துறக்கந்தனை யுந்துறக்குமுது
முனிவர்வதியுங் குமரிநகர் முதலேமுத்தந் தருகவே
முளரித்தடத்தில் மிளிர்தளவ
முலையாய் முத்தந்தருகவே. (41)
~~~~~~~~~~~~~~~~~~~~
ஈசானந்தற் புருடமெழில் அகோரம்வாம தேவமுடன்
இலங்குஞ்சத்தி யோசாதமுமேல்
எலாமாங்குடி லையிவையாறும்
பேசாநின்ற முருகனெழின் முகமென்றி ருக்குப்பிதற்றுவது
பேணிப்பரிசோ தனைபுரிந்தாங்
கேகாதசத்தும் பிரியாமல்த்
தேசார்மஞ்சத் திருமுத்தஞ் சிறந்தோய் ஞானவமிர்தூறுஞ்
செங்கேழ்க்கவிர்ப்பூ இதழ்குவியத்
தெய்வச்சிறுமு றுவறோன்ற
மூசானந்தக் கனிவாயால் முத்தந்தருக முத்தமே
முளரித்தடஞ் சூழ்குமரிநகர்
முதலே முத்தந்தருகவே. (42)
~~~~~~~~~~~~~~~~~~~
அனாதிமாயா மூலமலம் அணுகிற்றை யோஆருயிருக்
காரேநீக்கி அளிப்பரென்னும்
அருளோர்உருவாய் அமைந்தனனால்
எனாதியானென் றிடுஞ்செருக்கை இகமின்புலவீர் புலவீரென்
றெம்மான்இவன்றன் ஒளியின்மறை
இசைத்தைந்தொழிலும் அசைத்தனை நீ
மனாதியறிதற் கரியதிரு வடிவேதுவாத சாந்தவெளி
மருவும்பரையே பரநாதவாழ்
வேவானோர் சிகாமணியே
முனாதிஉலகுக் கானகந்நி முளையேமுத்தந் தருகவே
முழுதுமுணர்ந் தோன்விழியுண்மிளிர்
முலையாய் முத்தந்தருகவே. (43)
~~~~~~~~~~~~~~~~
சோலைக்குயிற்பே டன்றெனக்காண் டோறுந்தெளிவந் தாலுமுண்மைத்
துணைச்சேவலின் மாழாந்துசெய்கை
தோன்றாதாகி மேலிலத்தே
மாலைப்பொழுது கூஉங்குரலும் மதவேள்போரு மறியாமல்
மருள்கூர்ங்கன்னிப் பதியமர்வேம்
வடிவிற்சிறிய மாதருன்னைப்
போலக்கவின் பூத்தனமென்றேப் பொருத்துகில் லேமின்பவெள்ளம்
பொங்கித்ததும்பு நின்கனிவாய்ப்
புனிதமுத்தம் வேட்டனமால்
மூலப்பழமா மறைப்பொருளே முத்தந்தரு கமுத்தமே
முழுதுமுணர்ந் தோன்விழியுண்மிளிர்
முலையாய் முத்தந்தருகவே. (44)
~~~~~~~~~~~~~~~~~
நெருக்கிக்கன் னற்காடொடித்துப் பொதிரூஉத்தரளம் நிலவெறிப்ப
நெய்தற்குமுத முகையுடைத்து
நெக்குத்தீந்தேன் உடல்சோரும்
கருக்கொண்டலைநேர் கவட்டடிச்சூற் கயவாய்மேதி கனைத்துழியுங்
காலன்பகடு துள்ளியெழுங்
கன்னித்திருவூர்க் கனங்குழாய்
மருக்கொண்முல்லைப் புறவமெலாம் மகரக்கோட்ட முத்துறழ
வாரிவாரி எறிதரங்க
வாரித்துறையின் முதுவாழ்வே
முருக்குச்சிவப்பூர் நின்கனிவாய் முத்தந்தந்தருக முத்தமே
முழுதுமுணர்ந் தோன்விழியுண்மிளிர்
முலையாய் முத்தந்தருகவே. (45)
~~~~~~~~~~~~~~~~~
மதியம்உமி ழும்திருமுத்தம் மருப்பிற்கேழல் வருமுத்தம்
மற்றுஞ்செனிக்கும் முத்தமெலாங்
கன்னிப்பதிவாழ் மடநல்லாய்
கதியநின் சீறடிமலர்க் கீழ்க்கலந்து வணங்கக்கண்டன மாற்
காலாதிகளின் ஒளிமழுங்காக்
கனலிற்புனலிற் கட்டழியாப்
புதியகதிராய் அழிவிலதாய்ப் பொருந்தும் விலைகூறரிதாகிப்
புவனமெல்லா வெயில்விரிக்கும்
பொருவில்இன் பப்பேறுதவும்
முதியஅமுதூர் நின்கனிவாய் முத்தந்தருக முத்தமே
முழுதுமுணர்ந் தோன்விழியுண்மிளிர்
முலையாய் முத்தந்தருகவே (46)
~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
உச்சிவிலோசனம் நச்சுபயோதரம் ஒண்களம்ஆனனமோ
டுபயகரந்துடை சீறடிமென்மொழி உவமைக்குடைவுறுமேற்
பச்சிளம்ஒளடதி யேபொதிர்முட்டக் கன்னன்மலர்ப்பதுமம்
பாசொளியக்கத லித்தடியிருகழை பனிவெண்மதிகூனல்
அச்சுறுவேழமருப்பு பிறழ்ங்கயல் அம்புதிஆனஎலாம்
அவைதருகுளிர் முத்தங்களுனலர்வாய் முத்தத்திணையாமோ
முச்சுடருக்கொளி தந்தபரஞ்சுடர் முத்தந்தந்தருளே
முத்தமிழ்சேர்கும ரிப்பதிநாயகி முத்தந்தந்தருளே. (47)
~~~~~~~~~~~~~~~~~
கத்துதரங்கப் பொன்னித்துறைவன் கௌரியன்முதலானோர்
காசினிஅளவுக் கோநிகர்துகினக் கனகிரியெழுவாயாத்
தத்துகுரக்கின மணையிடுசேதுத் தலம்வரைஉளவேந்தர்
சதுரங்கங்கொடு முகில்கிழிமொட்டுத் தடமான்றேர்தாவி
நத்துக்குலமுமிறும்படி சூழுஉநாணா டொறுமோயா
நல்குதிறைக்குவை அள்ளிக்கொட்டவும் நாகாதிபமெற்றூஉ
முத்துநிரைத்தமிழ் கேரளர்கோமளை முத்தந்தந்தருளே
முத்தமிழ்சேர்கும ரிப்பதிநாயகி முத்தந்தந்தருளே. (48)
~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
அஞ்சக்கரத்தி னுட்பாசவொழி வாக்கிமற்
றாங்கணும் பரமவுருவை
அணவிநீநடு நிற்றிஅய்யசுத் தாத்துவிதம்
ஆவையென்ற ழுகுசொரியுந்
தஞ்சக்கரங் கொடுபொறித் தருளினீர்மையாற்
றமியனேற்கு தவுகுருவே
சச்சிதானந்த நிலைவரவங் கடாட்சஞ்செய்
தனமென்னு அமுதமொழியே
செஞ்சக்கரப்பா ணியொடுசார்ங்க பாணிபணி
தெய்வத்திருப் பெண்பிளாய்
தேவர்க்கெலாந் தேவமாதே வர்தந்தேவ
பார்த்திவ தேவியே
கஞ்சத்தளா யாட்சிசகசீவ பரசாட்சி
கனிவாயின் முத்தமருளே
கன்னிநகர் வந்தநங் கன்னிப்பிராட்டிநீ
கனிவாயின் முத்தமருளே. (49)
~~~~~~~~~~~~~~~~
வேறு
கயமுகத்தன் அறுமுகத்தன் இருவர்மக்கள் கடுகவே
கருணைசொக்கி அருள்சுரக் கும்மறவி வைத்தகருவியே
பயநிருத்தன் வரமிரக்க நகைஉயிர்த்த பணிலமே
பவமெனச்சொல் திமிரமெற்ற இவணுதித்த பருதியே
அயனரிக்கும் அமரர்கட்கும் அகலநிற்கும் அரசியே
அடியவர்க்கும் மிடியவர்க்கும் அணவிநிற்கும் அடிமையே
சயமிகுத்த குமரியத்தை தருகமுத்தந் தருகவே
சமரிநற்ற வர்களுளத்தில் தருகமுத்தந் தருகவே. (50)
முத்தப்பருவமுற்றுற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆறாவது: வருகைப்பருவம்
வேறு
தேம்பிழிக டுக்கையங் கண்ணிமு கைநெரியூஉத்
திருப்புயப் புளகரும்பச்
சீருருத்தி ராதிமறை மணிமவுலி தண்ணெனச்
சீறடிபெயர்க் குமடவாய்
பாம்பினச் சூட்டுமுடி மீதுகண் படுநிலப்
பாவையெழின் மார்பினினது
பங்கயத் தழகொழுகு நறவச்செ ழுஞ்சுவடு
பட்டுச்சிவீ ரென்னவே
கூம்புநன் காந்தள்பற் றிடவந்த வாறெனக்
கும்பிட்டு நின்றுளேம்பாற்
கோலச்சிலம்போ டரிக்குரற்கிண்கிணிகள்
குளிறக்கு ளிர்ந்தபசிய
காம்பிணங் கும்பணைத் தோளுயர்த் திப்பெரிய
கானமாங்கு யில்வருகவே
கன்னிமா நகரிலெழு கன்னிமா மகளிர்தொழு
கன்னிநாயகி வருகவே (51)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சதூ வியுமனிச் சப்போதும் நின்னடிக்கா
மாம்பருக் கைஎன்பார்
அஃதான்று நாஸ்திக விதண்டவா தியர்மனமும்
அணுவென்று கல்லென்பராற்
கொஞ்சமுந் திருமுடியின் உலவாத ஞானக்
கொழுந்தென்பர் இவையனைத்துங்
குறிக்கொண் டுளேனிதய மலர்குளிர முத்தரிக்
கோலச்சதங் கைகொஞ்சப்
புஞ்சநிரை கன்னிமா புரியம் பலத்திற்
பொலிந்தாங் குபுதியதளவப்
புன்னகை அரும்பிமிகு தண்ணளிகள் கண்ணளி
புரிந்தெழில் புனைந்தகார்காற்
கஞ்சமலர் மீதுவரும் ஓதிமப் பேடுறழ்
கலாபமா மயில்வருகவே
கந்நிமாந கரிலெழு கந்நிமா மகளிர்தொழு
கன்னிநா யகிவருகவே. (52)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
தன்னம் பொழிலின் நெறியகுஞ்சிக்
குமரர் குழுவிச் செவ்விளநீர்
திருக்கிக் குலுக்கி உலந்தாக்கக் கண்டுபகை
தீர்க்கு நர்கொலென்றே
கன்னற் கிளவி மகளிரக
லிடமேன்மோதிக் கட்குழித்துக்
காமனெடும் போர் அடவியினுங்
காண்டாரென் றம்புயப்பு துப்பூம்
பொன்னந் தாதுமணிப் பவளச்
செங்காலு ழுதுபொ லன்சிறையிற்
போர்த்து மஞ்சணி றம்பூசிச்
சேவன்மரு ளப்புலர்ந்து வெண்பேட்
டன்னம் பொலியுங் குமரிநகர்க்
கரசே வருக வருகவே
அருள்கூர் கடைக்கட் பகவதிப்பெண்
அமுதே வருக வருகவே (53)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நுணங்குங் கேள்வித்துக் கடீர்ந்தோர்
எருத்தங் கோட்டிநொ றில்படைப்ப
நுண்பொற் றகட்டபல் லவத்தே
நுழையுங் குயிற்பஞ் சமசுரத்துக்
கிணங்கும் மடவா ரிசையுமயில்
இசையும் மதமாப் பிளிறிசையும்
ஏகீபவிக்கும் அகன்பொ ழில்சூழ்
குடகர்வ ளர்க்கும் இளங்குயிலே
கணங்கொண் மணிகள் தமைத்தாரா
கணமென் றயிர்த்துக் கணபதியும்
கலந்து மாதாமுக மதியைக்
கண்டு வெள்கிப்பு றங்காட்டும்
அணங்கு திகழுந் தென்குமரிக்
கரசே வருக வருகவே
அருள்கூர் கடைக்கட் பகவதிப்பெண்
ணமுதே வருக வருகவே. (54)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
திணிகொண் டிலங்குங் கற்பகக்காச்
சினையகு றுந்தாணறு முகையிற்
சென்றுபு டைக்கமட லவிழ்ந்து
செந்தே னோடித்தி ரைக்கரத்தே
மணிகொண் டிலங்கும் நீண்மகர
வேலைம டுப்பவான் மகரம்
மறுகுமக ரக்கோடி மாடமறு
கார்கன் னிமட நல்லாய்
துணிகொண் டிலங்குங் கிரகமண் டிலத்திற்
றாவுஞ் சுயவயி ரத்தூ
ணார்ந் துசனன் வயிரமணித்
தோன்ற லாகுந்து கின்மாடம்
அணிகொண் டிலங்குந் தென்குமரிக்
கரசே வருக வருகவே
அருள்கூர் கடைக்கட் பகவதிப்பெண்
ணரசே வருக வருகவே. (55)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீள்கைக் கொண்டல் முதற்றேவர்
நெடுநீர்க் கன்னித்து றைபடிந்து
நின்றாள் வணங்கிக் குறையிரந்த
பொழுதே நீலகிரி யனையான்
ஆள்கைக் கொண்டதி கிரியுங்கார்
அணைய களமும் வெட்டுண்டிட்
டசலம்பி ளந்தாங்க கலமகிடவாயிற்
புண்ணீ ரலை யெறியச்
சூள்கைக் கொண்டும ணிக்கறங்கிற்
சுற்றிநெடு மின்னினங் கான்று
சுழல்கட் கொடிய மறலிமுதற்
சூரர்கை வாட்டுணை சூழும்
வாள்கைக் கொண்ட சயவீரி
வருக வருக வருகவே
வாகைச் செல்வர் வளர்த்தகிளி
வருக வருக வருகவே. (56)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அயங்கல் வயிரமுதற் பொருள்வெள்
ளரிக்காய் போலக நெகிழ
ஆலால முந்தான் விடமாக
ஆகவட வைசான விபோற்
பயங்கொண் டுரறும்பண் டனும்வா
ணாசூரனு மாமிவர் கள்சத்திப்
பதாதிக் கரச உனை நினைந்த
பொழுதே உள்ளம் பதறாரோ
இயங்குஞ் சூறாவ ளிக்காற்றும்
இடியின் குலமுமின் னினமும்
ஏகீபவித் துத்திகாந் தமெலாம்
இரவியனந் தமுதித் தாற்போல்
வயங்குந் திரிசூலப் படையாய்
வருக வருக வருகவே
வாகைச் செல்வர் வளர்த்தகிளி
வருக வருக வருகவே. (57)
~~~~~~~~~~~~~~~
கரும்புக் கினிமைத ருங்கணுவில்
கரும்பே வருகமெஞ் ஞானக்
கனியே வருக ஆனந்தக்
கடலே வருகக லாமதிக்கும்
அரும்பும் அமுதக லையளித்த
அமுதே வருக அருள்நிறைந்த
அடியா ரிதயாம் போருகத்தண்
ணளியே வருகஅமர ரெல்லாம்
விரும்பும் பெரியோன் அகந்தூண்டா
விளக்கே வருக வேதாந்த
வெளியே வருக தமியநின்பால்
வேண்டுங் கருமந் தரவருக
பரும்பொற் குடத்தமதிற் குமரிப்
பதியாய் வருக வருகவே
பகவற்கு ணநாணி நாமப்
பவானி வருக வருகவே. (58)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
பனசஅமிர்து கதலிநறவு பசியகலையின் இரதமாப்
பழமுமொழுகி வழியுநனைகள் பரவிஇயலும் நதியவாய்க்
கனசகுலமோ டறுகுபுரளும் உனதுநகரின் அயலுறாக்
களிகொள்பமரம் முரலுபொழிலின் உலவுநரகணி கையர்தாந்
தினசகசரர் எழுவருவ சிசமுதறிவிய சுமுகராற்
றெரியவரிய ரெனினினழகு சிறியநவில எளியவோ
வனசமகளிர் மவுலிசரணி வருகவருக வருகவே
மகிமைதழுவு குமரிநகரி வருகவருக வருகவே. (59)
~~~~~~~~~~~~~~~~~~~~
கறையில்மதியை ஒளிசெய்வதன கமலைவருக களைகணாக்
கருதுமடியர் செனனவருண கலனைவருக கரையிலா
நிறைதணளிமல் உததிவருக நிமலைவருக நிசிசராள்
நிகமென்விழவின் மதர்கொள்சமர நிபுணிவருக நிகரிலா
துறையுமொருவன் மனதில்வதியும் உவகைவருக உறவிலார்
உறவுவருக அவனை உணரும் உணர்வுவருக உலவுறா
மறைகடுதிசெய் கமலசரணி வருகவருக வருகவே.
மகிமைதழுவு குமரிநகரி வருகவருக வருகவே. (60)
வருகைப்பருவமுற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏழாவது: அம்புலிப் பருவம்.
வேறு
கண்ணகல் விசும்பெலாந் தண்ணளி கொழித்திநீ
காமரிள வஞ்சியிவளுங்
கருணையாம் மிளிர்பெரிய தண்ணளி கொழிப்பணீ
காமாரி வியன்மாமுடிக்
குண்ணறுங் கண்ணிமேற் றாங்கவளல் மற்றிவளும்
உளடலிற் றாங்கவல்லள்
உம்பாருக் கமுதுநீ தருவைபதி மண்டிலத்
துற்றிவளு மமுதுதருவள்
பெண்ணரசி வட்குமுத் துண்டஃது னக்குண்டு
பிரவையின் உவாத்தந்து நீ
பேடைமான் இவண்முகக் கிணைசெய்வை என்றறிஞர்
பேசினர்கள் ஆதலிந்த
அண்ணலங் கன்னியுடன் நீநிகர்தி யான்மகிழ்ந்
தம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே. (61)
~~~~~~~~~~~~~~~~~~~~~
வாய்ந்தசீர் மாமனார்ஒடு செய்தகட்டு ரைமறந்து
வெஞ்சர்ப்பெய் திமாழாந்த
லைந்துழலும் வாய்மையி லியென்று மாறாத
கயரோகி யென்றும்
காய்ந்துதங் கன்னியஞ் சூழலைச் சுடுகின்ற
கள்வனீ யென்றுமொருநாட்
கருதவுங் கூடாத அவமதிய னென்றுமிரு
கட்செவிக் காளகூடப்
பாந்தளுச் சிட்டநீ யென்றுநின் இழிவெலாம்
பாராட்டிடா மலலம்மை
பண்புறுக லாபேத மென்றுகொல் வம்மெனப்
பகரவும்பெற் றாயுனக்
காந்தகைய சீரிதன் றாதலால் நீவிரைந்
தம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே. (62)
~~~~~~~~~~~~~~~~
தெளிதூங்கும் அமுதுசில தேவருக் குதவிநீ
தேய்வையென் றுந்தெவிட்டாச்
சிவஞான தெள்ளமிர்தி யார்க்குமுத வுற்றிவள்
சிவாகார மாகிநிறைவாள்
துளிதூங்கு விடநரத் தஞ்சுகிற் கின்றியது
தோகைசா யற்குவெருவுந்
தோன்றாமை நாட்சிறி தொளித்திநீ ஈங்கிவள்
சதோதய சுயம்பிரகாசி
களிதூங்கும் நீயொருக ளங்கியிவ ளகளங்கி
காசினியை வலம்வரவொரு
கனதினஞ் செலுநினக் கிவள்கலை கணத்தண்ட
கோடிகள்க டந்துவருமால்
அளிதூங்கும் இவளொடெவ் வாறுமொப் பாயல்லை
அம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே. (63)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணுதற் பெம்மான்ச டாடவித வழ்ந்துங்
கழித்தியலை வெஞ்சாபநீ
கன்னிகை ஒருத்திசர ணம்புக்கி னென்றுங்
கலாபூர ணஞ்சேரலாம்
விண்ணகத் துலாவாது வீடகத்துற்று மெஞ்ஞான
வமிர்தாய் நிறையலாம்
விளங்குசிகி யஞ்சாயல் கொண்டுபகை யோட்டலாம்
விபுதர்களையே வல்கொள்ளலாம்
மண்ணுலகில் உனதுகய ரோகமா றற்கிந்த
மாத்தலம்போ துமல்லான்
மற்றினியும் வேண்டுமோ விண்ணாறு சேறியென்
மாலாதிதே வர்க்கெலாம்
அண்ணரிய மாதரசி நினைவிளித் தனள்காண்டி
அம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே. (64)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குலமாமனுக் குமங்குருப ரற்குந்தெய்வ முதல்வனுக்
குங்கோள் செயீஇக்
குறைப்பட்டு வசைபட்ட கொடியனே மென்று
கோட்டங்கொண்டு விட்புலத்தே
வலமாகி ஓடுகின் றாய்கொலோ அம்மனருள்
வந்தால்வ ராததென்னோ
மாபாதகர்க் குமிவள் கதியுதவு பேரருளின்
மாதாவெ னக்காண்டி நீ
சலமாய நல்குரவு கடவுணிட் சேபந்தரப்
பெற்றநாளி னுண்டோ
தமியைநின் னைப்பவித் திரமாக்கு நன்னாட்டலைப்
பட்டதின்று சொன்னேன்
அலமாந்து திரியல்நீ அரசிளங் கன்னியோ
டம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலி ஆடவாவே (65)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெருமறை கள்ஓலமிட் டென்னாளு மெட்டிப்
பிடிக்கருஞ் சோதிதன்னைப்
பிரியாமல் உள்ளுறச் சிக்கெனச் சிறைசெய்வள்
பிரமாதி தேவர்க்கெலாங்
கருமறை வொழிக்கலா மும்மலச் சிறையைக்
கழிப்பள்சக ளேசர்தொழிலுங்
கண்சாடை யாய்த்தருவள் நிட்களே சர்க்கொரு
கருத்துமின் றாய்க்கழிப்பள்
உருமறையும் அருள்வடிவை என்னென்று கருதிநீ
றாய்மதியிலீ ஒள்ளொளியும்
உன்னது கொல்வெளி புக்கொளிக் குநரும்
உளரோபு விமீதிலே
அருமறையு மறிவரிய கன்னிநகர் விமலையுடன்
அம்புலி ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலி ஆடவாவே. (66)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நச்சுக்கு ரற்குமுறு கிற்கிற்றி காதிலென
நவியம்பி டித்தவன்சீர்
நலமோர் வுறாதுசிறு விதிபுரியு மகசாலை
நணுகிநாரணன் மார்பினின்
றெச்சுற்றி மிழ்ந்தெண் புலிங்கத்தி லக்குமியர்
எண்டிசையி னுந்தெறிப்ப
இடியேறு குப்புற்றெ னத்தாக்கி நின்னையும்
இருங்கழலினாற் றேய்த்தனன்
கச்சுறற் வெம்முலைப் பயிரவிக் கிறைவனுங்
கலைநான்கு காணரிதெனக்
கட்டுரைத் திட்டவனும் இவள்சிறு வர்என்றுநீ
கருதலாயோ கன்னிபால்
அச்சுற்றி டாமையழ கன்றுசொன் னேன்விரைந்
தம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே. (67)
~~~~~~~~~~~~~~~~~~~
விண்டலத் தொளிமுழுதும் முடவனா குறுமாறு
விழிபுகையும் மேதிமுகனை
விபுதரிதை யம்பறை அறைந்தசய பண்டனை
விறற்பெரிய வாணன்றனை
மண்டலத் திற்சென்னி கொய்துபந் தாடியது
மதியநீயறி யாய்கொலோ
மற்றிவள் சினம்புரியில் வேறுசர ணேதுபுகல்
வானவர்சிகா மணியெனக்
கொண்டமுக் கட்பரமன் அரிபிரமர் இவருட்
குறிப்பறிந் தொழுகுநரலாற்
கோமாட்டி முன்பெதிர் செய்வாரில் லையாருமிக்
கொற்றவட் கடிமைகண்டாய்
அண்டரும் பழமறையும் ஒலமிட நின்றவளோ
டம்புலீ ஆடவாவே
அமரநாய கர்பரவு குமரிநாய கியினுடன்
அம்புலீ ஆடவாவே (68)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
சூதப்பலநற வோடிக்கதலி வனத்துறு சுகமெல்லாஞ்
சுரபஞ்சமவில் லத்துவிருந்தயர் சுவைகண் டிருத்தின்கட்
பேதந்தெரிவரு பொழில்சூழ் கன்னிபிரிந் தகலத்தகுமோ
பிரமாதியர் பதமியாவை யுமிந்தப்பேரூர்க் கிணையாமோ
மேதக்கவரினும் மேதக்கவருணை வேண்டிய ழைத்தனளால்
விரும்பியபோது மறந்தயல்செல் லேல்செல்லேல் வெண்டிங்காள்
மாதர்க்கரசியி னோடினிதா டிடவாவம் புலீவாவே
மகபதிவழி படுபகவதி அருகேவாவம் புலிவாவே (69)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காசுறுபொன்னந் தாமரையோ னுங்ககனரும் முனிவரருங்
கண்ணகன் ஞாலத்தெண்ணரு குமரிக்கண் ணவர்துய்யத்
தேசுறுதிருமறு மார்பன்சூழ்ச்சி தெரிந்தொரு புடைநிற்கத்
திக்கவரொடு ருத்திரகணமேவல் சிரங்கொடு கடைநிற்க
ஈசனும்தண்கட் கடைநோக்கக லாதென்றுந் துணைநிற்க
என்னோபேரருண் மறுவிலரியா ரையும்எண்ணா தென்னம்மை
மாசுடையோய் நினைவாவா யென்றனள்வா வம்புலிவாவே
மகபதிவழி படுபகவதி அருகேவாவம் புலிவாவே (70)
அம்புலிப்பருவமுற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எட்டாவது : அம்மானைப்பருவம்
வேறு
செங்கே ழக்குரூஉ மணிச்சுடிகைப் படப்பாயல்
சென்றுமால் கண்படுக்குந்
திரைகடல் கடைந்தெ டுத்திட்ட நவநீதஞ்
சிறந்ததன் றூழ்த்ததெனவே
சங்கே றுழக்குகன் னித்துறையெ டுத்தமிர்த
திரளைகள் தனித்தனியவாய்த்
தைவதர்தொ கைக்குவிண் ணேவுறுந் தகையெனத்
தரளமே ஆகுமென்னப்
பங்கே ருகத்திருந் தோதிமப் பிள்ளைகள்
பறந்தெனப் பரியவிண்மீன்
பகலிற்சி றந்தெனத் தோண்முதல் நடந்தணி
படர்ந்து பலகோடிசெல்ல
அங்கே ரளத்தரசர் தொழுமிளங் கன்னிநீ
அம்மானை ஆடியருளே
அச்சதற் குடன்வரும் பச்சிளங் கிள்ளைநீ
அம்மானை ஆடியருளே. (71)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுரும்பிமிர் குழற்கங்கை நினதுசுந் தரசாயல்
தோயுமா றாலியாகிச்
சூழ்கிடந் தனளந்த வஞ்சகமு ணர்ந்துநீ
தூக்கிவிட் டெறியுந்தொறும்
திரும்பிவரு வாறுமீண் டுளதடிய ருக்குமிச்
செயலால் வேறுமுண்டோ
சிவனுதற் கட்கனல் பொடித்தவரு மந்தனைத்
தீர்க்கவொரு திறனுமின்றிக்
கரும்புச்சி லைக்கடவுள் நின்னிரு விழிக்கடை
கசிந்தொழுகுங் காமசாரங்
கடுகளவு வேண்டியே உககோடி தவமுறக்
கண்டருள்க னிந்தமுறுவல்
அரும்பும் கிளிக்குதலை பொழிகுமரி அம்மனீ
அம்மானை ஆடியருளே
அச்சுதற் குடன்வரும் பச்சிளங் கிள்ளைநீ
அம்மானை ஆடியருளே. (72)
~~~~~~~~~~~~~~~~~~~~~
எண்ணான் குபேரறம் வளர்த்துச் செவந்தநின்
இருகரத்தெ ற்றிமார்பத்
தெல்லையள வுஞ்செய்ய மணியாகி விடமுண்
டினித்தவர் கிறங்குமையுண்
கண்ணாரும் நிழலிற்ப டிந்திந்திர நீலமாய்க்
கதிர்த்தரளம் ஆகுமாலோ
கனிமுறுவல் இளநிலாத் தோய்ந்துநின் னம்மனை
கலந்தவாற் றிவதெவனோ
தண்ணார்ம திக்கொழுந் தொடுமின் பிழம்புந்
தயங்கினாங் கிருமருங்குந்
தாதியர்கள் ஆனமலர் மாதர்களு நின்கைச்சமர்த்
தறியவேண்டி உழல்வார்
அண்ணாந்து முகமலர் தாலழகு சொரியநீ
அம்மானை ஆடியருளே
அச்சுதற் குடன்வரும் பச்சிளங் கிள்ளைநீ
அம்மானை ஆடியருளே. (73)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிக்கொரா யிரகரங் களுமிகவொ டுக்கியே
விண்மணிமு தற்கொன்பது
வெங்கோளு மஞ்சிநின் கன்னிநகர் வலமாய்
விலகியயல் ஓடினர்களாற்
செக்கர்மா ணிக்கங் குயின்றிட்ட தாதியாத்
திகந்தம்வில்லெ றிக்குமொன்பான்
தெய்வரெத் தினமிட்டி ழைத்தவம் மனையெலாஞ்
சேட்செல எடுத்தெறிந்து
தொக்குவன தொல்லைநீ நிருமித்த அண்டத்
தொகைக்குமொவ் வொன்றுசுடர்கள்
தூக்குவன நேருமாற் சகசீவர் முழுதுஞ்
சுறுக்கொள ரௌத்திராகாரத்
தக்கடவுள் பிறரையம் மனையாடு மாறுபோல்
அம்மானை ஆடியருளே
அச்சுதற் குடன்வரும் பச்சிளங் கிள்ளைநீ
அம்மானை ஆடியருளே. (74)
~~~~~~~~~~~~~~~~~~~~
பேராறு மம்பரம டந்தைக்கு மின்னற்
பிழம்பினையு ருட்டிவடமாய்ப்
பின்னுமிழை கோத்திடா தன்னைநீ சூட்டிப்
பிறங்குமா றொக்குமொருகாற்
காராரு மகவேந்தன் உடல்முழு தாகுபல
கண்டிறந்தொக் குமொருகாற்
கார்வண்ணன் மணியாழி உருளுமியல் காட்டிக்
கறங்குமிய லொக்குமொருகாற்
றேராரு மாழைச் சகட்டிற் றெழுந்தூளி
சென்றுகுல கிரியெட்டையுஞ்
செய்யகன காசலமெ னப்புரிய வானினெழு
செல்லொலியொ டுங்கவிமிரும்
ஆராரு மோதைகட லோதையெதிர் குமரியிறை
ஆடியரு ளம்மானையே
அம்பொன்மலை வில்லிபுணர் செம்பவள வல்லிநீ
ஆடியரு ளம்மானையே. (75)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செஞ்சுடர்க் குருவிந்த மாமணியின் அம்மனை
செறிந்தெழுக திர்க்கற்றைபாற்
சீறாட ராக்கோள் உலைந்துமாழ் கின்றது
தெரிந்துவா மதிநகைநிலா
விஞ்சப்பொ ழிந்தனைய வெண்டரள அம்மனை
விளங்கமே விண்முழுதுமாய்
வில்வேள் தனக்குமண வினைகருதி இளவரசு
வேலைவாய் முரசமெற்றக்
கொஞ்சுங் கிளிப்புரவி அணிவகுத் தேகுங்
குலாட்டைக் குமரிநகர்வாழ்
கோமாட்டி யின்னமொரு தரநின்கண் மலைபோற்
குவித்திட்ட அம்மனையெலாம்
அஞ்சுவன் னச்சுரும் பொருகாற் பறந்தென்ன
ஆடியருள் அம்மானையே
அம்பொன்மலை வில்லிபுணர் செம்பவள வல்லிநீ
ஆடியருள் அம்மானையே (76)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாதனமி ரண்டிரண் டும்பரு வமாகிச்
சமாதியாற் றனைஅறிந்து
தலைவனைக் கூடிப்பிர போதக்கருக் கொண்டு
தானேயி ருந்துமுற்றி
பேதனமெ னும்பெரிய வேதனை கடந்து
சிவமுத்தன் பிறந்தபோதே
பிறவுமொரு பேறுவேண் டாதுயிர்த் தாய்கெட்ட
பின்பந்த அருமகாருக்
கோதனமெ னுஞ்சிவா னந்தவ மிர்தூட்டிச்
சுகாதீத நித்திரையுற
உண்மையில் வளர்த்திடுஞ் செவிலிநீ அல்லாமல்
உண்டுகொல் உகாந்தமுடிவில்
ஆதனமெ னக்கன்னி நகர்வீற் றிருந்தகுயில்
ஆடியருள் அம்மானையே
அம்பொன்மலை வில்லிபுணர் செம்பவள வல்லிநீ
ஆடியருள் அம்மானையே. (77)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
இரணிபருவ மாகத்த ரிசொலி
ஏய்ந்திடும் ஞெகிழமணிந்
தியோசனை கோடித்திட்பக டாகமெடுத்
தம்மனை குயில்வார்
தரணியிலள வறுபயிர விகாளிகள்
சாமுண்டி களோடு
சண்டிகைமுத லாய்நின்ற ளவீரியர்
தாமும்வியப் பெய்தக்
கரணிதமொன் றின்பின் னோன்றம்ம
கணத்தி லனந்தம்விசை
காட்டும்ப ரிசட்டாங்க முநாஞ்சில்
கலந்ததை யோங்காரத்
தரணிடுகன் னிப்பதிவா ழம்பிகை
ஆடுகவம் மனையே
அகணிதலோ கசராசர ரஞ்சனி
ஆடுகவம் மனையே (78)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குசலந்தரு புலமையினோ டாக்கங்
கொள்குநர் வம்மென்றே
கூவுதல்லாற் சங்கநி திப்பெயர்
கொள்வது வேறுண்டோ
சசலத்தீம் பால்ஒழு குறுசுரபித்
தாட்கவை அடியெல்லாந்
தரளமிமைக் குஞ்சீரிய கன்னித்
தலம்வா ழென்னம்மே
கிசலச்சீ றடிபோற்றிச் சதமுனை
கெழீஇய தடக்கையுடைக்
கிளர்பல சூதனன் ஆதியர்சூழுங்
கேழொளி விடுசெம்பொன்
அசலச்சிந் தாமணியுட் கற்பகம்
ஆடுகவம் மனையே
அகணிதலோக சராசர ரெஞ்சனி
ஆடுகவம் மனையே. (79)
~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
தளவொளி தருமவள் மகிழ்வர உலகுச
மைத்தனன் அம்மானைத்
தாரைநெ டுங்கதிர் வேலுடை யான்முறை
சார்ந்திடும் அம்மானைத்
துளக்குறு கோடீரத் துக்குமிழி துதைந்
தெழும் அம்மானைச்
சூடிக் கான்வழி ஓடிச் சாடு
சுடீரிய அம்மானை
மளமள இரைகென் றேந்திக் கந்தரம்
மீதினில் அம்மானை
வாசுகிவி டம்வைத் தேதினம் வாகனம்
ஆக்கினன் அம்மானை
அளவறும் இவர்முதல் வாக்குத்த லைமகள்
ஆடுகவம் மானை
அழகிய குமரியில் வளர்களி இளமயில்
ஆடுகவம் மானை (80)
அம்மானைப் பருவமுற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்பதாவது : நீராடற்பருவம்
வேறு
வண்டிரையும் நெடுநாணி வில்லியையெ ரித்திட்டமன
வலியையறி வோமெனமற்றுநீ
காமக்க டாட்ச மொருதுளி பொழியும்
வாரிதியி னலைபுரண்டே
கண்டிரையும் மறையுமறி வரியபர மேசர்படு
கவலைக்கி லக்குமுண்டோ
காமப்பெ ரும்பேய்பி டித்தாட்டு மாட்டமோர்
கடுகளவுதணிய விலையே
கொண்டிரையெ னாப்பெரிய சிவஞான அமிர்திற்
குழைத்திட்ட குழவிமுடிமேற்
குளிரப்பொ றித்தசெந் தாமரை கர்ப்பக்
குழற்சைவலக் கொத்தெழ
வெண்டிரையு வட்டுபொரு நைத்துறைகு டைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
வெள்ளிமலை ஞற்கிருபொன் மலையு தவுகன்னிநீ
வெள்ளநீ ராடியருளே. (81)
~~~~~~~~~~~~~~~~~~~~
பாதாந்த கேசத்தினுக் கறல்ஒதுங் கிப்பணிந்து
படியிற்படி யவும்பனி
வெண்ணிலாத் தரளமுந் தந்தபந் திக்குடைந்
துபணிலத் துருளவும்
நாதாந்த நூபுரக்கீழ் மௌவ்வன் முகையென்ன
நணுகுகொந் தார்சதங்கை
நரலைக்கு லைந்துகரை தன்னில்லை மோதவெழில்
நளினமொன்றி யாண்டுமலமக்
காதாந்தம் ஒடுகட் கயலுக்கு மாழ்கிமிகு
கயன்மடைக்க யலொதுங்கக்
காமர்சூழ் வள்ளைநாம் வள்ளையல் லேமென்று
காசுறழ் செவிக்கலமர
வேதாந்த சித்தாந்த துறையிலிந் தித்துறையில்
வெள்ளநீர் ஆடியருளே
வெள்ளிமலை ஞற்கிருபொன் மலையுத வுகன்னிநீ
வெள்ளநீர் ஆடியருளே. (82)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முக்கரண தூய்மைவேண் டினர்படியு மிமகிரி
முகட்டொழு குபாகீரதி
முதல்புண் ணியநதிக ளியாவும்வந் தன்னைநீ
மூழ்கிப்புனி தமாக்கெனத்
தக்கபடி கைகூப்பி நின்றனன் நின்றன
சரோசமுகி ளானவெல்லாந்
தன்முகடு படுமுன்வெள் குற்றுடைந் தனசில
சலித்துநாண் மலருதிர்ந்த
புக்கவரும் ஓதிமப் பேடெலாம் இருகரைப்
பொங்கரிற்புக் கொளிப்பப்
போகாமல் அரசவண் டூசலாடக் கலவை
புள்புலால் கமழுமீனம்
மிக்கவர் களைச்சார்ந்த பேதையர்க் கிணைகமழ்
வெள்ளநீர் ஆடியருளே
வெள்ளிமலை ஞற்கிருபொன் மலையுத வுகன்னிநீ
வெள்ளநீர் ஆடியருளே. (83)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாகனமெ னாவந்து வெண்டோட் டுநறைகமழ்
மலர்ப்புண்ட ரீகமுடனே
வம்பவிழ் சகஸ்த்திர தளத்தன பாரகமலி
வயநேமிவ டிவுதிகழுங்
கோகனக மும்பக்கம் வருகின்ற சேடியர்மருங்
கெலாங்குறு கநிற்பக்
கோமாட்டி நின்னாதனங் களிருமலரு மாமென்றவர்
கள்கைம்ம லர்கொடே
மோகன சுராசரியை யேந்தமிளிர் நாகமணி
முழுதுறவி ளக்கமேந்த
முள்ளரைக் கமலங்கள் உள்ளன வெலாநின்
முகத்தொழுகு மழகையேந்த
மேகனகம் மகிழவவிர் கன்னிநகர் அன்னைநீ
வெள்ளநீர் ஆடியருளே
வெள்ளிமலை ஞற்கிருபொன் மலையுதவு கன்னிநீ
வெள்ளநீர் ஆடியருளே (84)
~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
தன்னந்தனி சேசமைபல மஞ்சுகமாய் மௌனஞ் சாதிப்பத
தமையாங்க மடம்பொறி யடங்கமுழங் கத்தசநா தப்பணிலம்
இன்னம்உறங் காதருள்வெள் ளம்எழுந்திட் டெழுந்திட்ட லையெறியூஉ
இதயாம்போ ருகம்விகசித் திரக்கத்தீந் தேன்மிகப் பிலிற்றும்
பென்னம்பெரி யோன்உளத் தடத்திற்பிரியா விளையாட் டியைவோய்நீ
பேணிக்குழு வும்அரமக ளீர்பிரியம் பூப்பப்பிர மரஞ்சூழ்
பொன்னங்க மலத்தன்ன மன்னாய் புதுநீராடி யருளுகவே
புராரிக் கரியதி ருக்குமரி புதுநீராடி யருளுகவே. (85)
~~~~~~~~~~~~~~~~~~~
மருநெய்க் கூந்தற்கா டுவிரிந்த கிலுமார்பிற் சாந்துநழீஇ
மணங்கொண் டவர்போல் எண்டிசையு மணக்கப்புதி யமணமகளீர்
இருணைத் திடுசெம் மணிக்கோவை யிழைபோயிந்திர கோபம்போல்
இலங்கவ சந்தன்வரக் குறைந்தஇருநீர் நிலையைக் கடந்திரையீஇக்
கருணைத்த லைவர்நகக் குறிகண் டெழுந்தகாமப் பெருவெள்ளம்
கஞலுந்தடஞ் சூழ்கன்னி நகர்கண்ணே கண்ணில்வரு பாவாய்
பொருனைத் துறைவர்க் கரசிபொங்கப் புதுநீராடி யருளுகவே
புராரிக் கரியதி ருக்குமரி புதுநீராடி யருளுகவே (86)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு
ஓராயிரவெங் கிரணம்போற் சிவிறிநீர் புக்குவா மதிதான்
உடைந்ததோ வன்றுவாம திக்கேஉ டைந்ததம்போ ருகம்போலும்
ஆராவதன மலமரச்செங் கரங்களுழக் கியலத்தகக் காலடித்தும்
நெளிந்துமறிந் துமலாந்தறன் முக்குளித்து விளையாடூஉப்
பேரானந்தப் பேறுழக்கும்பேதை மடவார் குழுஉக்கண்டுபி ணைத்துப்புகுங்
கண்ணிணை மீட்கப்பெறா மல்இளை ஞோர்பெருந் தகைவேள்
போரால்நந் துங்குமரி அன்னாய் புதுநீராடி யருளுகவே
புராரிக் கரியதிருக் குமரிபுது நீராடிய ருளுகவே (87)
~~~~~~~~~~~~~~~~
வேறு.
திணிபுய மழவுமிழ் அரசிள மரியேறி
தயஞ்சென்றூ தச்சிந்தையை
யன்றிக் கண்ணெ னும்வண் டுஞ்சீர்
சால்நடை யனமும்
கணிகையர் இரதிக தைத்தேன் இன்சுவை
கனிமொழி அஞ்சுகமும்
கடைமுறை யேவியலங் கற்கொடு வரல்
காணா தவர்காண
மணிமுறு வற்றூ திதழ்விட் டேவிவயங்
குநிலாக் கற்றை
மதியந் தேயந லித்ததை அல்லால்
மறுவுண்டோ வென்னும்
அணிதிகழ் குமரிப் பதிவளர் மின்கொடி
ஆடுகநன்னீர் ஆடுகவே
அழகுத ழைந்த கல்யாண சவுந்திரி
ஆடுகநன்னீர் ஆடுகவே. (88)
~~~~~~~~~~~~~~~~~~~~
வம்பவிழ் கொன்றைப் புதுநறை சென்றொரு
மணிவண்டு ளர்வதென
வரநதி அகடொரு மதிகுடை குவதென
வனசக்கோ யிலிலோர்
செம்பொன் அலமரல் எனஅயன நாவொரு
சிலைநுதல் திகழ்வதெனச்
செங்கால் ஓதிமம் ஒன்றமு தத்தடம்
ஊடுதிளைப் பதெனக்
கொம்பொன் றதிலுல கேந்திய கேழற்
கோலம் போற்செய்த
குன்றமும் மதிலுஞ் சிகரமும் மாடக்
கோடிசெயும் மதரடியும்
அம்பொன் நகுங்கு மரிப்பதி அம்பிகை
ஆடுகநன்னீர் ஆடுகவே
அழகுத ழைந்தகல் யாணச வுந்தரி
ஆடுகநன்னீர் ஆடுகவே (89)
~~~~~~~~~~~~~~~~~~
வன்னச் சாந்திற் கரிகள் வழுக்கு
மகுடம் பறிபோய்
வரமணி யின்றொகை நீராஞ் சனமாய்
மாணர சிளமைந்தர்
கன்னற் சிலையான் வெம்போர் கண்டது
கனவுபலித் ததெனாக்
காரிகை யார்பூங் கோதைக ழித்தெறி
காட்சியினான் மகிழ்வார்
தன்னை மறந்தனர் பனிநீரோ டைசறுக்
கினர்நீத் திசைவார்
சந்தன வாவிகு டைந்திவை மாதர்த
னத்தன என்றிரைவார்
அன்னம் பொலிகும ரிப்பதி நாயகி
ஆடுகநன்னீர் ஆடுகவே
அழகுத ழைந்தகல் யாணச வுந்திரி
ஆடுகநன்னீர் ஆடுகவே. (90)
நீராடற்பருவமுற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்தாவது: திருஊசற்பருவம்.
வேறு.
மன்னுசத முனைகொண்ட வச்சிரத்தூ ணிறீஇவண்
கதிர்க்கற் றைவீசும்
மாணிக்கவிட் டம்பொருத் திப்பரிந்தீன்ற வாளரா
மணிகள் கோத்துறை
மின்னொழு குவடம்வீக்கி அரதநப்பொற் பாவைவியன்
மணிவிளக் கமேந்த
மிளிர்பதும ராகத்த பலகைமீப் புக்குபுளங்
கிழைப்பைங் கேழொளி
துன்னுமர கதவல்லி ஒன்றுநின் றாடல்போற்
றுடியிடைகடு கிநுடங்கத்
துத்திப்ப ணாமுடிபொ றுத்தபூமா தரசுசூ
டப்புனைந் துநீண்ட
சென்னிமு டிஎன்னமிளிர் கந்நிநகர் அன்னைநீ
திருவூசல் ஆடியருளே
செந்திருவ ணங்குமெழில் அந்திருவ ணங்குநீ
திருவூசல் ஆடியருளே. (91)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேல்கெழு தடக்கை வீரியன் றனாது கலாபியை
விளங்கி ழைச்செய்யாள்
விருந்தை யம்படலைக் கணவனைச் சீதவெண்
மதிக்கடவுண் மாமகனைச்
சூல்கெழு பாணிதுணை வியையாண் டுந்தேடினர்
எனைத்தும் பாசொளியாய்ச்
சுடர்விடு தெய்வக் கிள்ளையே அயுததோ
டவிழ்கஞ்சம் வீற்றிருந்து
பால்கெழும் மந்தமா ருதமசைக்கும் பரிசுபோற்
பயப்பயவிபு தர்பாவையர்
வடந்தொட் டாட்டவுங் கணிகை மாதரிற்ப
தாகைகள் எல்லாம்
சேல்கெழு குமரிப் பதிவளர் இறைவி
திருவூசல் ஆடியருளே
செந்திருவ ணங்குமெழில் அந்திருவ ணங்குநீ
திருவூசல் ஆடியருளே. (92)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
வானந்த மேபந்தர் ஆகமதி கதிராடி
ஆகமலி வுறுதாரகை
மற்றுமப் பந்தரிற் புஞ்சமாகத் தூணமாக
வாகமவ ரிசைகள்
தானந்தம் இல்லாத அருள்விட்டம் ஆகமிளிர்
சதுர்மறை வடங்களாகச்
சத்தியர்கள் தாதியர்கள் ஆகஅரிபிர மர்தலைதாங்
கிநின்றேத் தும்ஒண்சீர்
மோனந்தம் ஆசனமதா யூசலாடுமுழு முதல்வி
மறைவல்லி புதல்வி
முக்கணர்க் குறுகாம வல்லிகன் னித்தலம்
முளைத்தசெம் பவளவல்லி
ஆனந்த வல்லிதிரு அபிடேகவல் லியினி
தாடியருள் பொன்னூசலே
ஆணிக்கு வில்லிதொழு மாணிக்க வல்லிநீ
ஆடியருள் பொன்னூசலே. (93)
~~~~~~~~~~~~~~~~~~~~
விஞ்ஞான கதிரொளிபு காதடரும் ஆவரணம்
மேலிட்ட பந்தராக
விளங்கு துவிதாசார மிருதூணமா கவபிமான
மொருவிட் டமாகப்
பொஞ்ஞான விடயகோடி களாய்முத் தூடுபோயுற்ற
ஆசைவடமாய்ப் பூட்டியே
பெண்மயற் பலகையிற் புக்குப்பொ ருந்தியுயிர்
நிரைகள் எல்லாம்
எஞ்ஞான் றுமசைவறா தெண்கணன் மிருத்துபதம்
ஏறிநின்றூ சலாடும்
என்பர்நீ வினைவழி அசைத்திடா யெனிலேதும்
இல்லையிது வாய்மைகண்டாய்
அஞ்ஞான திமிரமற ஒளிசெயிள மிரவிநீ
ஆடியருள் பொன்னூசலே
ஆணிக்கு வில்லிதொழு மாணிக்க வல்லிநீ
ஆடியருள் பொன்னூசலே. (94)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
மஞ்சுறழ் சோலைப்புது மலர்முழுதும் வானுறழ்கற் பகமலராகும்
வழிதருபா லும்விபுதர் கள்சுரபியின் மடுவினினின் றிழிவதுபோலும்
விஞ்சுறுகை லைச்சாரலினுல வியமிருகமதஞ் சாலுங்கலவை
விளிகின்றுழி யினுநன்றியை மறவாமேலோர் சூழந்திருநகரில்
வஞ்சியர்வேந் துசெயுந்தவ மகிமையில்வந்துபரிந் துவதிந்தனளால்
வஞ்சியருக் கரசென்று தயாசலம் ஏறுபுதோறும் வாலொளியோன்
அஞ்சலிசெய் குமரிப்பதி நாயகி ஆடுகஊச லாடுகவே
அகமுகமு டையவர்முக முகமுடையவ ளாடுகஊச லாடுகவே. (95)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
முகிலாண்டபு வியாடரங்காக ஐம்பொறிகள்
முழவாக மூடமதிசேர்
முன்னைவினை நட்டுவர்கள் ஆகமாயாகபட
நாடகம் முடிப்பதறியார்
நகிலாண்ட பெட்போகமே பரிசிலாய்ச்சீவர்
நகுகுரங்காட் டமிடுவார்
நாமுமினியிந் துக்கநடமொழி யவானந்த
நடமொன்றி யற்றவென்றே
துகிலாண்டு வந்தமாலாதியர் களியாவருந்
துதிசெய்து நின்றிடவுநிர்த்
தொந்தனைத் தொந்தமென் றாடிடும்படிமிகத்
தொந்தரவு செய்துமற்றவ்
வகிலாண்ட ரோடும்வா தாடிநடமாடுநீ
ஆடியருள் திருவூசலே
அன்னநடை மின்னரசியென் னவருகன்னிநீ
ஆடியருள் திருவூசலே. (96)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறு.
சாமளமே கந்துயிலும் மண்டபத்தே
தண்பவளக் கால்நான்கு நிறுத்திநாப்பண்
ஓமளவும் வயிரவிட்டம் இணைத்துச்செகேழ்
ஒண்கனகவ டம்பூண்ட பலகைமீதில்
ஆமளவும் மறைதுதிப்ப வாணிமாதும்
ஆரணங்கும் நின்றயலில் வடந்தொட்டாட்டக்
கோமளஞ்சேர் கன்னியரே ஆடிரூசல்
குமரிக் கோதையரே ஆடிரூசல். (97)
~~~~~~~~~~~~~~~~~~~
நிலவுமிழும் அரவின்மணிச் சுடிகைஆட
நெருங்குமணிக் கலனாடக் குழைகளாட
உலவுமதர் விழிமாதர் நடனமாட
உம்பரெல்லா மகிழ்ந்துவகைக் கடல்நின்றாடப்
பலவுமியந் தொனியாடப் பல்லாண்டோதை
பரந்துலகங் கொண்டாடப் பதாகையாடக்
குலவுமெழிற் கன்னியரே ஆடிரூசல்
குமரிநகர்க் கோதையரே ஆடிரூசல். (98)
-----------
பொருதுவினை கடந்துய்யும் படிக்குஞானப்
பொருள்தருவீர் அருள்தருவீர் ஆடிரூசல்
எருதுநடத்திய பெருமானடி யர்தம்பான்
இரக்கம்வைத் தின்புதவுறுவீர் ஆடிரூசல்
வருதுயரம் எமக்ககற்றி நோயில்லாத
வாழ்வுபெற வரம்புரிவீர் ஆடீரூசல்
கருதுபயன் தந்தருள்வீர் ஆடீரூசல்
கன்னிநகர்க் கன்னியரே ஆடீரூசல் (99)
---------
ஞாலமெல்லாம் படைத்துடையீர் ஆடீரூசல்
நலஞ்செய்வள்ளைக் கொடியிடையிர் ஆடீரூசல்
சீலகுணக் குன்றுள்ளீர் ஆடீரூசல்
சிவஞான மன்றுள்ளீர் ஆடீரூசல்
சாலஎன்னுள் ளந்தெருள்வீர் ஆடீரூசல்
சந்ததிக்கின் மொழி அருள்வீர் ஆடீரூசல்
காலமெல்லாம் வாழ்ந்திருப்பீர் ஆடீரூசல்
கன்னிநகர்க் கன்னியரே ஆடீரூசல். (100)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கன்னியாகுமரிப் பகவதி அம்மன் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
சற்குருநாதன் றிருவடிகள் வாழ்க
ஆக விருத்தம்- 100.
___________________________________________
This file was last updated on 5 October 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)