கவிஞர் சிவதாசன் இயற்றிய
குறுக்குத்துறைக் கலம்பகம்
(அருஞ்சொல் விளக்கமுடன்)
kuRukkuttuRaik kalampakam
of kavinjar civatAcan with notes
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy, Chennai for providing a scanned PDF version of this work
Special thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of a soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
குறுக்குத்துறைக் கலம்பகம்
[அருஞ்சொல் விளக்கமுடன்]
Source :
குறுக்குத்துறைக் கலம்பகம்
[அருஞ்சொல் விளக்கமுடன்]
ஆக்கியோன் : வித்துவான் தி. சு. ஆறுமுகம் [கவிஞர் சிவதாசன்]
திருநெல்வேலி நகர்.
பொருளுதவியவர் : திரு. அமிர்தலால் கேசவ்ஜீ ஜோஷி அவர்கள்
தெப்பக்குளத் தெரு, நெல்லை நகர்
1973, உமா அச்சகம், திருநெல்வேலி - 6
---------------
உயர்திரு. அமிர்தலால் கேசவ்ஜி ஜோஷி அவர்கள்
(நேரிசை வெண்பா-இரதபந்தம்)
பொன்மனை மக்களெல்லாம் பொய்யிலாச் சுற்றமார்ந்த
பன்மருமொன் றாயடர்ந்து பாரினிலே-நன்மைமிகுந்
தூழ்கனிய அத்த முயர்க இசைசூழ்க
வாழ்க அமிர்தலால் மன்.
(இதற்குரிய சித்திரத்தை அடுத்த பக்கத்திலும் விளக்கத்தை 61 ம் பக்கத்திலும் காண்க)
'வாழ்க அமிர்தலால் மன். (இரதபந்தம் - நேரிசை வெண்பா)
சாத்து கவி
இன்மொழியரசு இன்னிசைக்கவிமணி இளங்கம்பன்
வள்ளுவரகம், பழனி P.O., 1-1-1973
(நேரிசை வெண்பா)
பண்டையநாள் கல்விப் பசுமை நலம்பொலிய
கண்டை நிகர்த்த கலம்பகத்தை - வண்டமிழில்
ஆறுமுகம் தந்தாள ஆறுமுகம் தந்தனனாம்
வேறுமுக மன்விள்ள வோ.
குறுக்குத் துறைவாழ் குமரன் அருளாம்
பெருக்கில் களிக்கும் பெரியோன் உருக்குமுயர்
பாவுதிர்க்கும் ஆறுமுகம் பண்ணமுதைப் பெய்வதுவும்
பூவுலகில் மாவியப் போ.
எண்ணச் சிலிர்ப்பூட்டும் எங்கள் கவியரசன்
வண்ணச் சரபகவி வந்துதித்த - புண்ணியம்சேர்
நெல்லைச் சிவதாசன் நெய்த கலம்பகத்துச்
சொல்லைப்பார் தோன்றும் சுடர்.
எத்திறத்தும் போற்ற இயலா எழிலேந்தி
அத்தன் அழகன் அறுமுகனின் - புத்தெழிலைச்
சித்திநலம் கொண்ட சிவதாசன் நாம்வியக்கச்
சித்திரத்தில் வைத்ததன்றோ சீர்.
தேவர்க்கு நூறாய்த் திகழும் மரபதனால்
பாவர்க்க மாண்பு பரிசளிக்க - யாவர்க்கும்
கன்னலைப்போல் தந்த கலம்பகத்தால் ஆறுமுகம்
பன்னலமுங் கொண்டுவப் பான்.
வள்ளுவரகம் அன்பகலா
பழனி இளங்கம்பன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அணிந்துரை
1. வித்துவசிரோன்மணி செந்தமிழ் வித்தகர் புலவர் பெ. சுப்பையா
தமிழ் மனை, 269, பெரிய தெரு, திருநெல்வேலி - 6
"அருள்வாய் திருவுரு மாமலையா யுன்றன்
சரண்களே என்றுந்தஞ் சம் “
இக்குறள் வெண்பா குறுக்குத்துறைக் கலம்பகத்துள் ஒரு பாடல். இறைவனாம் முருகன் இணையடிகளே
தஞ்சம் என்று கூறும் பகுதி நெஞ்சை உருக்குவதாகும். மனிதன் அடைய வேண்டும் பேறு இவ்வொன்றுதானே?
இந்நூலில் ஏழு சித்திரக் கவிகள் உள்ளன, படிக்குந்தோறும் படிக்குந்தோறும் இன்புறத் தக்கன.
ஆசிரியர் கூறும் பொருள் விளக்கம் மெச்சத் தகுந்தது. கலம்பகம் நம்மைக் கலங்க வைத்து விடுமோ என்று
கவலை வேண்டுவதில்லை.
இந்நூலை ஒரு விதைக்கு ஒப்பிடலாம். ஏன்? வேர், இலை, பூ, காய், கனிகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டு
விதை சிறு வடிவில் காட்சியளிக்கின்றது. எளிய நடையும் உயர் நோக்கும் உடையது இந்நூல்.
தொடுந்தோறும் நீர் ஊறும் மணற்கேணியன்ன, ஆயுந்தொறும் பொருள் சுரக்கும் இயல்புடையது;
எளியார்க்கு எளியது. அரியார்க்கு அரியது, அழகின் அமைப்பு. ஆனந்த ஊற்று. யாப்பின்
இலக்கணம், அணிக்குச் சான்று, ஆன்ம ஆக்கம், அற நிலையம். பொருட் பேழை இன்பத் தேக்கம்.
அஞ்ஞான மயக்கங்களுக்கு மருந்து. கடவுளைக் காட்டும் விளக்கு: இறைக்காதலை ஊட்டும் இன்னமுது.
‘ஒரு முகத்தான், ஞானம் நல்கும் குளிர் முகத்தான் குற மின்னை ஆளக் கிழவனென வரும்
முகத்தான்', மயிலேறும் ஆறுமுகத்தான் ஆகிய முருகபிரான் புகழை - மாந்தர் சிந்தையுள் இனிக்கத்
தீட்டித் தருமுகத்தான் சிவதாசன் எனும் ஆறுமுகம் அவர்கள் தம் அறிவு நலத்தானும், புலமை வலத்தானும்
இக்கலம்பக நூலை யாத்திருக்கிறார்கள். இவர்கள் குறையாப் புகழையும், குன்றாப் பெருமையையும்,
நிறை பொருளையும், நீடிய நல்வாழ்வினையும் பெறத் திருமுருகன் அருள் புரிய வேண்டுகின்றேன்.
(நேரிசை வெண்பா)
சித்திரச் செய்யுளெலாம் செம்மாந்து செந்தமிழில்
வித்தார மாக விளம்பியே - இத்தரையில்
ஆறுமுக னார்செய்த அன்புக் கலம்பகத்தைக்
கூறுவார்க் கில்லையே கூற்று.
ஆசுகவி யென்றே அழைத்துவக்க அன்பரெலாம்
தேசுடனே பட்டம் தெரிவித்தார் - ஈசுவரன்
எந்தை முருகனடி ஏத்தும் ஆறுமுகன்
சந்தமார் நூல்செய்த போது.
நெல்லை-67 அன்பன்
1-1-73 பெ.சுப்பையா
-------------------------
அணிந்துரை
2. ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்
ஸ்ரீகாசிமடத்து அதிபர், ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்,(தஞ்சை ஜில்லா), 2-1-1973
குறுக்குத்துறைக் கலம்பகம்- அருஞ்சொல் - விளக்கமுடன்- வித்துவான் தி. சு. ஆறுமுகம் (கவிஞர் சிவதாசன்)
எழுதிய நூல் வரப்பெற்றுள்ளது. நல்ல முயற்சி. உலக நூல் ஓதிக் கொன்னே கழிக்கும் மக்கட்குரிய நூல்
யாத்திடாமல், நல்வழிப்படுத்தும் இறைவன் நூல் யாத்த கவிஞர் சிவதாசன் பாராட்டுக்குரியவராவர்.
சித்திர கவிகள் என்றால் என்ன என்று கேட்டுச் சித்திர கவிகள் அமைந்துள்ள படங்களைப்
பார்த்துக் காட்சிப்பொருளாகவே ஓரளவு கல்வி கற்றவர்களும் கருதும் இந்நாட்களில் ககர வருக்க
மோனை (6), அட்ட நாக பந்தம் (27). காதைகரப்பு (37), மாலைமாற்று (58), இரதபந்தம் (59), கோமூத்திரி
(63), முரசபந்தம் (68), எட்டாரைச்சக்கரம் (70), சுழிகுளம் (72), சதுர்நாகபந்தம் (92), தகரவர்க்கம் (94)
முதலிய சித்திர கவிகள் சிறப்பாகப் பாடப்பெற்று உரையுடனும் படத்தில் வரைந்தும் காட்டப் பெற்றுள்ளன.
இது கற்றோர்க்கேயன்றி மற்றையோர்க்கும் பெரும்பயன் விளைவிக்கும்,
சம்பிரதம் என்ற உறுப்புக்குரிய இருபாடல்களும் சுவையாக உள்ளன. அறுபத்தைந்தாவது
பாடலில் பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் தொனிப்பொருளில் அமைத்திருப்பது சிறப்புடையதாகும்.
பழைமையை மிகப் போற்றி எழுதப்பெற்ற இப்பிரபந்தம் காலத்தொடு கற்பனை கடந்த முருகப் பெருமான்
பேரில் பாடப் பெற்றதாகலின் பலகாலும் பயிலப்பெறும் பெற்றியதாக அமைந்துள்ளது, புலவரை
விளித்துப்பாடிய தொண்ணூற்றெட்டாம் பாடல் இவரது மனக்கருத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாகும்:-
"புலவீர் திருவுரு மாமலை தன்னைப் புகழ்ந்திடுவீர்
வலவே லவனின் பெயர்களைப் பாடி வழுத்திடுவீர்
இலவே றுதுணை இவனல் லதினி எனவுணர்வீர்
கலவீ ரொருவே றுதெய்வ முமது கனவிலுமே"
இந்நூலாசிரியர் இதுபோன்று பன்னூல்கள் யாத்துப் புகழ்பெறுக என்று செந்திலாண்டவன்
திருவருளைச் சிந்திக்கின்றோம்.
சுபம்.
-------------------
3. எஸ், என், தி.சொ,முருகதாச சுவாமி
கௌமார மடாலயம் , திருவாமாத்தூர் P.O., விழுப்புரம் வழி, 4-1-1973
(நேரிசை வெண்பா)
திருவுரு மாமலைப்பேர் செப்பநெல்வே லிக்கண்
வருதாம் பிரவருணி உண்பேர் - மருவுமுயர்
ஆற்றினடு வாழ்வேள்மேல் ஆறுமுக னாரன்பாற்
சாற்று கலம்பக நூல் சால்பு.
எத்திறப்பா வுஞ்சேர்ந் திலங்கு கலம்பகத்திற்
சித்திரப்பா மெத்தவே செப்பினார் - உத்திமலி
விற்பனர்நம் ஆறுமுக மெய்ப்புலவர் நெல்லையவிர்
சிற்பரவேள் நற்பத் தியர்.
இரட்டைப் புலவர் இயற்கலம்ப கஞ்சொல்
தரத்தரென்ற சொல்லதனைத் தன்னொர் - உரத்தால்நம்
ஆறுமுக னார்வென்றார் ஆன்ற கலம்பகஞ்சொல்
பேறுபெற்றார் வாழ்க பெரிது.
நெல்லைப் பதியுதித்த நீள்புகழ்வண் ணச்சரபர்
எல்லையின்றிப் பாடியபாட் டேற்றகுகன் - நல்லதமிழ்ப்
பாவலனாம் ஆறுமுகன் பாடுதமிழ்ப் பாக்களையின்(று)
ஆவலுடன் ஏற்றுவக்கின் றான்.
அன்புள்ள
தி. செ. முருகதாச சுவாமி
--------------------
சாத்து கவி
4. தவத்திரு. சுந்தர சுவாமிகள்
ஆதீன கர்த்தர், கெளமார மடாலயம், சின்னவேடம்பட்டி, கோயமுத்தூர்-6, 5-1-1973
(நேரிசை வெண்பா)
திருநெல்லை யூரில் திகழ்பொருநை நாப்பண்
மருவுகுறுக் குத்துறையில் மன்னும் - குருபரனுக்(கு)
உற்ற கலம்பகநூல் ஓதினான் ஆறுமுகம்
கற்றசிவ தாச கவி.
கலம்பகத்துக் காமுறுப்புங் கற்றோர் வியக்கும்
நலமிக்க சித்திரப்பா நன்றாய்ப் - புலமைச்
சிவதாசன் ஆறுமுகம் செய்தளித்தான் கற்றுப்
பவநாசம் நீங்கிடஅன் பர்.
ஆறுமுகச் செவ்வேள் அமர்ந்தகுறுக் குத்துறைக்கு
வேறுபல பாவினங்கள் விண்டளித்த - ஆறுமுகம்
தக்க கலம்பகநூல் சாற்றினான் பல்லாண்டு
மிக்கநலம் பெற்றுயர்க வே.
அன்புள்ள
சுந்தர சுவாமிகள்
---------------
5. திரு. தமிழழகன்
சென்னை-21, 6-1-1973
"திருநெறிய தமிழ்", "தெய்வத்தமிழ்' என்றெல்லாம் நம் தாய்மொழியைச் சிறப்பாகப் பேசுவது,
வழிவழி வந்த நம் மரபுகளுள் ஒன்று, அம்மரபு நம் அன்னை மொழி என்பதாலேயே உயர்த்திப்பேசுகிற
வெறும் உயர்வுநவிற்சியன்று. காலங்காலமாகக் கவிதைக் கருவூலமாய்க் கருத்துக் களஞ்சியமாகத்
தெய்வம் தெளிந்தும் தெளிந்தோர்ப் பேணியும் அறிவுடைப் பெருமக்களால் யாக்கப்பெற்ற நூல்கள்
எண்ணிலாதவை நம் தமிழ் மொழியில் உண்டு என்பதனால் ஏற்பட்ட உண்மை உரைதான் அது.
அத்தகு நூல்வரிசையில் மெத்தவும் சிறந்ததாய்த் தமிழ்க் கவிதைத் தருவில் பக்திக்கனியாகப்
பழுத்திருக்கும் பிரபந்த இலக்கியந்தான் கவிஞர் சிவதாசன் எனப் பெறும் வித்துவான் திரு. தி. சு. ஆறுமுகம்
அவர்களால் இயற்றப்பெற்று வெளிவரும் குறுக்குத்துறைக் கலம்பகம் எனும் தெய்வமணங்கமழும் இந்நூல்
ஆகும், இதன் ஆசிரியர் தெய்வத்திருவுடைய கவிஞர் பெருமான் என்பது இந்நூலின் வாக்குமணிகளிலிருந்தே
தெளிவாகப் புலனாகிறது.
அத்துடன் இக்கலம்பகத் திருத்தலமும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று, பொதுவாக எந்த இடத்தையும்
அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகைச் சிறப்பு நோக்கியே உயர்வாகக் கூறுவது ஆன்றோர்தம்
கொள்கை. அவ்வாறு முச்சிறப்புக்கும் உரியதாய்த் திருவுருமாமலை எனும் பெயர் பெற்றுத் திருநெல்வேலியின்
கண் திகழும் குறுக்குத்துறையம்பதியைக் கோவிலாகக் கொண்ட குமரப்பெருமானைப் பாடல்
தலைவனாக ஏற்று பாடப்பெற்றுள்ளது இந்நூல்.
தமிழ்த் தெய்வம் ஆகிய முருகன் தமிழ்க் கலம்பகத்தால் தலைவனாகப் போற்றிப் பாடப்பெற்றுள்ளமை
தகுதி வாய்ந்த பொருத்தம் தானே.
இந்நூலின் சிறப்புக்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, ஆசிரியர் கலம்பக இலக்கணத்திற்கேற்ப
இந்நூலை இயற்றியதோடும் அமையாது, இக்காலப் புலவர்களால் பெரும்பாலும் கையாளப் பெறாத
மாலைமாற்று, வினாவுத்தரம், வருக்க எழுத்துச் செய்யுள், வருக்க மோனைச் செய்யுள், காதை கரப்பு
போன்ற சொல்லணிகளையும், சக்கரம், அட்டநாகம், சதுர்நாகம், கோமூத்ரீகம், சுழிகுளம், இரதம்,
முரசம் போன்ற சித்திரக் கவிதைகளையும் நூலில் இடையிடையே கையாண்டு கவிதை புனைந்திருக்கும்
கவின்பெறு நேர்த்தியை அவற்றுள் ஒன்றாகக் கூறலாம்.
தற்காலத்தில் இவை போன்ற சொல்லணிகளும் சித்திரக் கவிகளும் வேண்டுமா என்று வினா எழுப்பப்
பெறுவதும் உண்டு. இதற்குக் காரணம் இவ்வகைக் கவிதைகள் திறமை இல்லாதவர்களால் கையாளப்
பெறும்போது, கவித்துவமே மாய்ந்து வெறும் சொற்கூளங்களாய் ஆகிவிடுகின்றன என்பதுதான்.
ஆனால், இவ்வணிகள், கருவிலேயே திருவுடைய கவிஞர் பெருமக்கள் வாக்கில் வெளிவரும்போது,
மொழியின் நுட்பம், அழகு, நளினம், செறிவு இவை அனைத்தையும் புரிந்து கொள்ள மிகமிக உதவுகின்றன
என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையைப் படிகமாக நமக்கு எடுத்துக் காட்டும்
முறையில், பாடல்களும் அற்புதக் கவிதைச் சித்திரமாகவே அமைந்து, அழகுக்கு அழகு செய்வதுடன்,
பொருளுக்குப் பொருளும் புனைந்து, சுவை கூட்டுவனவாகவே உள்ள பெற்றிமையைக் காண்கிறோம்
இந்நூலில்.
அணி இலக்கணத்தின் நோக்கமும் அதுதானே. அந்நோக்கம் இந்நூலில் முழுமையாகவே நிறைவேறியுள்ளது
என்று நிச்சயமாகக் கூறலாம்.
இவ்வாறு தெய்வத்திற்கும் தீந்தமிழுக்கும் ஒருசேர எழுப்பப் பெற்றுள்ள கலம்பகமாம் இச்சொற்கோவில்
காலத்தையும் வென்று கனகமகாமாளிகையாய்க் கருத்துக் கோபுரத்தின் கலச கும்பங்களோடு கவிதை
வானில் நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
"பாடும் பணியே பணியாய் அருள்வாய்" என்றவாறு பரமனைப் பாடிப் பாடிப் பனுவல் புரிவதையே
குறிக்கோளாகக் கொண்ட இதன் ஆசிரியர் கவிஞர் சிவதாசன் அவர்கள் அவன் அருளாலேயே அவன்
தாள் வணங்கும் அருளாளர் என்பதும் அவர் நம்முடனேயே இருந்து அமுதசுரபி என அவர் தரும்
கவிதைகளை அருந்தும் பேறு நாம் பெற்றுள்ளோம் என்பதும் திருவருளுக்கினிய தெய்வத் தொண்டர்கள்
தாம் நாம் என்பதையே மெய்ப்பிப்பதாக உள்ளது- உண்மையில் கொடுத்து வைத்தவர்களே நாம்
எல்லோரும்.
கவிஞர் பெருமான் இதுபோல் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எல்லா நலமும் பெறுவதோடு தெய்வப்
பணிக்கும், மொழிப் பணிக்கும் திகழ் ஒளிவிளக்காய் நின்று நிலவத் திருவருள் வேண்டும் என்று
துணைபுரி தேவதேவியாம் அன்னை உமாதேவியின் திருவடிகளை மனப்பூர்வமாக இறைஞ்சுகின்றேன்,
(நேரிசை வெண்பா)
கொஞ்சும் தமிழாற் குறுக்குத் துறைக்குகன்மேல்
செஞ்சொற் கலம்பகநூல் சேவித்தார் - நெஞ்சுகொள
அன்பர் சிவதாசன் அன்னவர்தம் நூற்பயனாய்
இன்பம் திருவருமே இங்கு.
துய்ய குறுக்குத் துறையார் கலம்பகத்தை
உய்ய வெளியிட் டுதவினார். வையமும்
ஏத்தவே நெல்லை இலக்கிய வட்டத்தார்
காத்துவேள் செய்க கனிவு
6-1-73 அன்பன்
"கவிதாலயம்" தமிழழகன்
சென்னை-21
---------------
6. அருட்கவி ஸ்ரீ சாதுராம் சுவாமிகள்
ஸ்ரீ வைஷ்ணவி ஆலயம் , வட திருமுல்லைவாயில், தங்கல்: நெய்வேலி
சென்னை- 600062, 10-1-1973
ஸ்ரீ வைஷ்ணவி துணை
சாற்றுக் கவிகள்
(கட்டளைக் கலித்துறை)
நெல்லைத் திருவுரு மாமலை என்ன நிகழ்குறுக்குச்
சொல்லைத்தன் முன்கொள் துறைச்சுப் பிரமணிச் சுந்தரற்கு
நெல்லைக் கவிஞர் சிவதாசன் நேர்ந்த கலம்பகத்தைப்
பல்லைப் பிடித்தொரு கைபார்க்க இல்லைஆள் பார்மிசையே.
வித்துவான் ஆறு முகம்சிவ தாசன்நெல் வேலியின்கண்
ஒத்துவான் போற்ற உறைகுறுக் குத்துறை ஒப்பிலிபேர்
வைத்துவான் பேரருள் வாய்த்து வனைந்த கலம்பகச்சீர்
வித்துவான் பண்டிதன் அல்லாதார் மெச்சி வியக்கரிதே.
சித்ர விசித்ர கவியாம் மிறைக்கவிச் சிற்றிலக்ய
மித்ரன் எனும்படி எண்ணாகம் நானாகம் மேவுபந்தம்
சைத்ர ரதபந்தம் கோமூத்ரி எட்டாரைச் சக்ரமுர
சத்ரஞ் சுழிகுளம் வாய்ந்த கலம்பகம் ஆமிதுவே
வாழிவித் வான்திசு ஆறுமுக னார்செய் வண்தமிழ்கள்
வாழி கவிஞர் சிவதாச னாமன்னார் மாதர் நெல்லை
வாழி அமிர்தலால் கேசவ்ஜி ஜோஷி வழங்குதவி
வாழி குறுக்குத் துறைவேள் கலம்பகம் வாழியவே.
அருட்கவி
ஸ்வாமி ஸாதுராம்
--------------------------------
நூலாசிரியன் நுவல்வது......
பேரன்புடையீர்,
வணக்கம். திருமுருகன் திருவருளால், குறுக்குத் துறைக்குரிய நான்காவது நூலாகக் 'கலம்பகம்'
இப்போது வெளிவருகிறது. முதலாவது நூல் பிள்ளைத்தமிழ் 19-10-71லும், இரண்டாவது நூலாகிய
குறவஞ்சி 16-8-72லும் மூன்றாவது நூலாகிய கொச்சகக்கலிப்பா 22-11-72லும் வெளிவந்தன, முறையே
அவற்றிற்குப்பொருளுதவிய வள்ளல்கள் உயர்திரு A.K. ஜோஷி சேட் அவர்களுக்கும், உயர்திரு A.
சண்முக சுந்தரம் B. A. அவர்களுக்கும், உயர்திரு T. K. கணபதி (உமா அச்சக அதிபர்) அவர்களுக்கும்
எனது உளம் நிறைந்த நன்றியை அன்றும், இன்றும் என்றும் தெரிவித்துக் கொள்ளும் கடப்பாடுடையேன்.
நிற்க, இக்கலம்பகம் இலக்கண மரபிற்கு வழுவமல் யாக்கப்பட்டுள்ளது. சிற்றிலக்கிய வகையில்
கலம்பகம் யாப்பது கடினம். அதில் நால்வகைப் பாக்களும் பாவினங்களும் விரவி வரல் வேண்டும்.
புயவகுப்பு, மதங்கு, அம்மானை முதலிய 18 உறுப்புகள் அமையப் பாட வேண்டும். அகப் பொருளும்
விரவி வரவேண்டும். அந்தாதித் தொடையில் அமைய வேண்டும். அம்முறையில் தவறாது எளியேன்
இதனை யாத்துள்ளேன். இடையிடையே சித்திரக் கவிகள் பலவும், சிலவற்றிற்குச் சித்திர விளக்கத்துடன்
இணைத்துள்ளேன். கண்டதைப் பாடிக் கவியெனப் போற்றிக் கனம் கொண்டாடி வரும் இந்நாளில்
இத்தகைய கவிதைகளைப் போற்றிக் கொண்டாடுபவர்கள் மிகமிகச் சிலரே. அத்தகைய பெருமக்களின்
அன்பும் ஆசியும் அடியேனுக்கு உண்டு என்பதை யான் திண்ணமாக அறிவேன்.
நிற்க, சித்திர கவிகளுள் சரியானவாறு எதுகை மோனைகள் அமையவில்லை என ஒரு நண்பர் கூறினார்.
"அப்பாடல்கள் யாவற்றிலும் எதுகை மோனைகள் அமைந்துள்ளன. நேரடியான எதுகை 'மோனைகள்
இல்லா ஒரு சில இடங்களில் இனவர்க்க எதுகை மோனைகள் அமைத்துள்ளன" என்பதை அறிஞர்
அறிந்து கொள்வர். மேலும், திரு தமிழழகன் அவர்கள் தம் அணிந்துரையில் கூறியவாறு இப்பாடல்களில்
பொருள் நயத்தையும் எளிமையையுமே கருத்திற் கொண்டபடியால் எதுகை மோனைகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விழைகின்றேன்.
எதுகை மோனைகளில் அமையாப் பாடல்கூடச் செந்தொடை எனும் விகற்பத்தில் அமையும் என்பதை
அறிஞர் அறிவர்.
முதற்கண் வெளி வந்த பிள்ளைத் தமிழ் நெல்லைச் சந்திப்பு தருமையாதீன மடத்தில் முறையாக
அரங்கேற்றம் செய்யப்பட்டது. இரண்டாவதாகிய குறவஞ்சி, நெல்லை நகர் ஸ்ரீ காந்திமதியம்பாள்
திருக்கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டு முறையாக அரங்கேற்றப்பட்டது.
மூன்றாவது நூலாகிய கொச்சகக் கலிப்பாவும் மேற்படி ஊஞ்சல் மண்டபத்திலேயே வெளியிடப்பட்டு
அரங்கேற்றம் நடைபெற்று வருகிறது. இவ் வகையில் ஆவன செய்து அடியேனுக்கு ஊக்கமளித்து
உதவி வரும் நெல்லை இலக்கிய வட்டத்தலைவர் புலவர் திரு. ம. சிவசம்பு அவர்களுக்கும் செயலர்
கவிஞர் மு. சு. சங்கர் அவர்களுக்கும் நான் பெரிதும் நன்றிக் கடப்பாடுடையேன். இவ்விருவர்தம்
ஆதரவும் உயர்திரு. A.K. ஜோஷிசேட் அவர்களின் மூத்த புதல்வர் திரு. A. ஹரிபிரசாத் அவர்களின்
தூண்டுதலுமே என்னை இப்பணியில் ஈடுபடுத்தின.
மற்றும், பிள்ளைத்தமிழ் நூல் அச்சேறப் பொருளுதவிய வள்ளல் உயர்திரு, அமிர்தலால் கேசவ்ஜீ ஜோஷி
அவர்களே இக்கலம்பகம் அச்சேறவும் பொருளுதவியுள் ளார்கள். அவர்கள் எளியேன் மீது காட்டும்
அன்புக்கும் ஆதரவுக்கும் நாயேன் என்ன கைமாறு செய்ய இயலும்? எல்லாம் வல்ல முருகப்பெருமான்
அன்னார் தமக்கு நீண்ட ஆயுளையும் நல்ல வாழ்நாளையும் வேண்டும் வளங்களையும் தந்து
குடும்பத்தோடும் சுற்றத்தோடும் நீடுவாழ அருள் புரிய வேண்டுமென அவனடி இறைஞ்சி வேண்டிக்
கொள்வதே யான் செயற்பாலதாம்.
அடுத்து, இந்நூலுக்குச் சாத்துகவிகள் வழங்கியருளிய இன்னிசைக்கவி மணி பழனி இளங்கம்பன்
அவர்கள், திருவாமாத்தூர் தி. செ. முருகதாச சுவாமி அவர்கள், கோவை கௌமாரமடாலய ஆதீனகர்த்தர்
தவத்திரு. சுந்தரசுவாமிகள், வடதிருமுல்லைவாயில் அருட்கவி ஸ்ரீ சாதுராம் சுவாமிகள் ஆகிய
பெரியோர்களுக்கும் அணிந்துரைகள் வழங்கிய புலவர் திரு. பெ. சுப்பையா அவர்கள், திருப்பனந்தாள்
காசி மடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக் குமாரசுவாமித் தம்பிரான் அவர்கள், சென்னை கவிஞர்
திரு. தமிழழகன் அவர்கள் ஆகிய பெரியோர்களுக்கும் எளியேன் அன்னார்தம் அடிபணிந்து நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நிற்க, எளியேனின் இப்பணி குறித்து என்னைப் பாராட்டிக் கௌரவித்த பெருமக்களுக்கும் இவ்வமயம்
என் நன்றியறிதலைக் கூறிக் கொள்வது ஏற்புடைத்தாம். நெல்லைமாவட்டத் தமிழாசிரியர் கழகத்தார்
9-4-72ல் அடியேனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். வீரவநல்லூர் தலபுராண வசனம்
ஆக்கியுதவியமைக்கு மேற்படி வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோவிலார் 15-12-72-ல் வெளியீட்டு
விழா நடாத்தி இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை, துணை ஆணையாளர் உயர்திரு. M. A. முருகேசன்
B A. B.L., அவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்திப்பாராட்டினர். திருப்புடைமருதூர் ஸ்ரீ நாரம்புநாத
சுவாமி திருக்கோவில் தைப்பூச விழாவில் 191-73 அன்று அம்பை நகர் வள்ளல் திரு, சிவ. ராம. அ. நடராஜ
முதலியார் அவர்களும் சமயப்பரப்புநர் திரு. தே. ம. பூதலிங்கம் அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசிப்
பரிசளித்துக் கௌரவித்தனர். இது குறித்து, நெல்லை மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தாருக்கும் ஸ்ரீ
பூமிநாத சுவாமி திருக்கோவில் அதிகாரிகள் அனைவருக்கும் அம்பை திரு. நடராஜ முதலியார்
அவர்களுக்கும் திரு. பூதலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தொடர்புடைய அன்பர் அனைவருக்கும் என்
உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.
மேலும் யான் கூற என்ன இருக்கிறது? எனக்குப் பல்லாற்றானும் இப்பணியில் உதவி வரும் பெரியோர்களும்
அன்பர்களுமாகிய உயர்திரு. A. K. ஜோஷி சேட் அவர்கள், அன்னார் தம் புதல்வர்கள், புலவர் ம. சிவசம்பு
அவர்கள், கவிஞர். மு. சு. சங்கர் அவர்கள், உமா அச்சக அதிபர் T.K.கணபதி அவர்கள் ஆகியோருக்கு
என் நெஞ்சு நிறைந்த நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.
எதற்கும் பற்றா எளியேனை இச்சிறு பணிக்கு ஆளாக்கிய இறையருளை எண்ணி வியந்து இறைஞ்சி
அன்பர்களுக்கு வணக்கம் கூறி முடிக்கின்றேன்.
4. பகத்சிங் தெரு, திருநெல்வேலி அன்பன்
13-3-1973 தி.சு.ஆறுமுகம் (கவிஞர் சிவதாசன்)
~~~~~~~~~~~~~~~~~
இக் கலம்பக நூல் 7-7-1973, இரவு 8 மணியளவில், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்
ஆனிப் பெருந்திருவிழாவில் அமைந்த அருள்மிகு காந்திமதியம்பாள் கலையரங்கில்
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் வெளியிடப்பட்டது.
அவ்வமயம் அருள்மிகு வாரியார் அவர்கள் நூலாசிரியர் தி. சு. ஆறுமுகனாருக்குப்
பொன்னாடை போர்த்தியும் "செழுங்கவிச்செம்மல்" எனப் பட்டம் அளித்தும் பாராட்டினார்கள்.
இங்ஙனம்,
இலக்கிய வட்டத்தார், நெல்லை-6.
~~~~~~~~~~~~~~~~~~~~~
குறுக்குத்துறைக் கலம்பகம்
உ
குமரகுருபரன் துணை
பாயிரம்
1. (கணபதி காப்பு – நேரிசை வெண்பா)
சீரார் பதிநற் றிருவுரு மாமலைமேல்
ஏரார் கலம்பக மேபாட - ஓரானைக்
கன்றி னிருபதத்தைக் கானார் மலர்தூவி
நன்று மனத்தணிவம் நாம்.
2. (முருகன் காப்பு - கட்டளைக் கலித்துறை)
நாக மடுத்திடு மேனி நமலனின் நன்னுதற்கண்
ஆக மெடுத்தவன் ஆறு முகத்தவன் அந்தரத்தார்
நாக மடுத்தவன் றானிக் கலம்பகம் நல்கிடுவான்
தோக மடுத்திடு பேதை யெனதுளம் தோன்றிநின்றே.
3. (சிவபிரான் காப்பு - கட்டளைக் கலித்துறை)
அருவுரு வானவன் அம்பலத் தாடிடும் அண்ணலவன்
வெருவறு மாறென் மனத்திடை யன்புடன் மேவிடலால்
வருமொரு தீதெது முண்டோ சிறியேன் வழியறிந்து
திருவுரு மாமலை மீது கலம்பகம் செப்பிடவே.
4. (சக்தி காப்பு- அறுசீராசிரிய விருத்தம்)
அண்ட மெல்லாம் பம்பரம்போல்
ஆட்டி வைப்பாள் அருட்சக்தி
சண்ட முடையே னெனினுமெனைத்
தள்ளா தருளைப் பொழிவளெனத்
தண்ட னிட்டே அவளடிகள்
சார்ந்தே நின்றிக் கலம்பகத்தைத்
தொண்ட னறையத் துணிந்தேனே
தொல்சீர்க் குறுக்குத் துறைமீதே.
5. (கலைமகள் காப்பு - அறுசீராசிரியம் – வேறு)
கவிபொழி வாணர்க் கெல்லாம்
கரங்கொடுத் துதவி செய்யும்
சவிபொழி மாது நல்லாள்
சதுர்முகன் தேவி தன்னின்
துவிபொலி பாதம் போற்றித்
திருவுரு மாம லைக்கே
கவிபொலி வாரு மிந்தக்
கலம்பகம் பகர்வன் மாதோ.
6. (அடியார் காப்பு - எழுசீராசிரிய விருத்தம்)
சங்கமு தல்வ னாயநக் கீரன்
சந்தமார் திருப்புகழ் தந்த
துங்கமு றுஞ்சீ ரருணகி ரியுடன்
துகளறு குமரகு ருபரன்
புங்கமு றுமிவர் போன்றமெய் யடியார்
பொற்பத மென்சிரங் கொண்டே
பொங்கமு றுங்க லம்பக மிதனைப்
புனைந்திட வேதுணிந் தேனே.
7. (அவையடக்கம் – எண்சீராசிரிய விருத்தம்)
புகழோங்கு பேரறிஞர் பலரும் முன்னர்ப்
புனைந்தளித்த கலம்பகங்கள் பலவற் றுள்ளும்
திகழோங்கு மொன்றிரண்டில் நுனிப்புல் மேய்ந்த
சிறியவனென் சிந்தையுறு மாவ லாலே
இகழோங்கு மென்பதறிந் திடினு மிந்த
எளிமைசேர் கலம்பகத்தை யிசைத்த லந்தோ
திகழோங்கு வான்சுடர்கள் தம்மைக் கண்டே
சிற்றுயிர்மின் மினியொளிரும் செய்கை யாமே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
நூல்
1. (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)
(எட்டிடித் தரவுகள் 2)
கார்பூத்த உடலமுறுங் கரிமுகனின் பின்னவனே
நீர்பூத்த செஞ்சடையன் நுதல்விழிக்கண் வந்தவனே
பரணிதனக் கடுத்துளநற் பைங்கிளிமார் பேணிடவும்
சரவணமார் பொய்கையினில் தங்கிவளர்ந் தோங்கியவா
சக்தியருள் கொண்டுதிரு சண்முகமு மானவனே
பக்தியுடன் பணிவார்க்குப் பரிந்தருளைச் செய்பவனே
வடிவேலு மெடுத்தவனே வரைமுகட டுத்தவனே
கடிகடம்ப மாலையணி கந்தனெனுந் திருமுருகா
மண்ணகமும் விண்ணகமும் மருண்டுதலை நடுங்கிடவே
எண்ணவொணா இன்னலெலாம் எத்தனையோ புரிந்தலைந்த
சூரபது மனையவனின் சுற்றமுடன் தொலைத்தழித்தும்
ஆரபரி வோடவனை அணிமயிலுஞ் சேவலுமாய்க்
கொண்டு மயிலேறியந்தக் குக்குடத்தைக் கொடியுயர்த்திக்
கண்டுமொழி மாதரிரு கவின்புறமும் நின்றிலங்க
அருள்வதனம் ஆறுடனே ஆறிரண்டு விழிகளுடன்
மருள்தவிரத்து மாநிலத்தை வாழவைக்கும் மதலாய்கேள்
(ஈரடித் தாழிசைகள் 6)
மூவருமாய் மூவருக்கும் முதல்வனுமாய் அண்டமெலாம்
யாவருமாய் யாவினுமாய் இலங்குசிவன் தனக்கிறைநீ
போதகுரு நாதனெனப் பொலிந்தவனே உன்றனிரு
பாதமல ரலதொருவர் பாலடையேன் தலைவணங்கேன்
விண்கொண்ட தேவதைகள் வேணவையுண் டாமெனினும்
கண்கண்ட தெய்வமுன்போல் கண்டதுண்டோ சுந்தரனே
அண்டமெலா மாக்கியரு ளளித்துபுரந் தழிப்பதுநீ
கண்டவிளை யாட்டெனின்யான் சழறுவதோ நின்பெருமை?
உலகுயிர்க ளனைத்தினுமே உள்ளவனாய் உள்நிறைந்தே
இலகிடுமுன் புகழ்தனையே எளியனெடுத் தோதுவதோ
அங்கிங்கென் னாதவிதம் எங்குமொளி வடிவினனாய்த்
தங்கியுள சண்முகநின் தாள்வணங்கி உய்ந்திடுவேன்
(ஈரடி அராகங்கள் 4)
உளனென இலனென உரைத்திட நிறைந்தனை
அளவருந் திருமறை அறிந்திட அரியைநீ
எவரெவர் தமதுளம் இசைவுறத் தொழுதிட
அவரவர் உளப்படி அருளுவை யுருவுடன்
நிலமெனப் புனலென நெருப்பெனச் செறிந்தஅ
நிலமென விசும்பென நிறைந்தருள் புரிந்தனை.
அனலளி கதிரவன் அமுதளி மதியவன்
அளவில வுடுக்கண மனைத்தினும் நிறைந்தனை.
(பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள் 4)
பிறந்திலைநீ யிறந்திலைநீ பெரியவன்நீ சிறியவன்நீ
துறந்திலையிவ் வுலகியல்நீ தொடருமொரு குணமிலைநீ
அண்டமெலாம் படைத்திடுவான் அயனென்பர் அவ்வயனோ
தண்டனையுன் பாலடைந்து தனிச்சிறையில் வாடியவன்
அழுகிவிழும் மாங்கனிக்காய் ஆண்டியெனச் சென்றையென்பர்
விழுக்கனியாம் ஞானமென மெய்யறிவர் அறியாரோ?
குன்றாத நித்தியனாம் குணக்கடலாம் நின்னையந்தோ
குன்றவனென் றோதுவதேன் குறைமதியர் காண்பாய்நீ.
(நாற்சீர் ஈரடி அம்போதரங்கள் 2)
இச்சையுங் கிரியையும் இருசா ரணிந்தனை
விச்சையும் ஞானமும் விரும்பி யளிப்பைநீ
இருவினை யுருவமும் இன்பமுந் துன்பமும்
திருவொடு வறுமையும் சேருவ துன்னருள்
(முச்சீர் ஓரடி அம்போதரங்கள் 5)
அலைகடற் பதியி லமர்ந்தனை
அணிபரங் கிரியில் செறிந்தனை
ஆவிநன் குடியை அடைந்தனை
ஏரகம் நிறைந்து சிறந்தனை
பழமுதிர் சோலை படர்ந்தனை
குன்றுதோ றாடி மகிழ்ந்தனை
(இருசீர் ஓரடி அம்போதரங்கள் 8)
விண்ணில் பிறந்தனை
மண்ணில் உறைந்தனை
கண்ணில் நிறைந்தனை
பண்ணில் ஒளிர்ந்தனை
அசுரர் ஒழித்தனை
அமரர்க் கருளினை
அயிலும் எடுத்தனை
மயிலும் அடுத்தனை
(தனிச் சொல்)
அதுகண்டு
(ஆசிரியச் சுரிதகம்)
சரவண நின்னடி சரணம் அடைந்துள்ளேன்
தருணம் அறிந்துநீ தடுத்தெனை ஆளுவாய்
கதியுனை யல்லது காணிலேன் நின்னையே
துதிபுரி ஏழையென் துன்பம் தவிர்த்திடு
திருவுரு மாமலைத் தேவனே
அருளொடு மெனையாள் அணிவடி வேலே.
2. (நேரிசை வெண்பா)
வேலனைச் சக்தி விமலையாம் பார்வதி
பாலனை மங்கையிரு பாங்கனைக் - கோலத்
திருவுரு மாமலைத் தேவனை நெஞ்சே
கருவற வாழ்த்தாய் கனிந்து.
3. (கட்டளைக் கலித்துறை)
கனிந்தவன் பாத கமலம் வணங்கல் கடனுனக்கே
முனிந்துனைத் தள்ளா தருளுவ தன்னான் முழுக்கடனே
புனைந்திடு சீர்கொள் திருவுரு மாமலைப் புங்கவனை
நினைந்திடு வேறு நினையேல் எனதரும் நெஞ்சகமே.
4. (அறுசீராசிரிய விருத்தம்)
அகமது கனிந்து நின்றே அங்கமும் புளக மார
முகமெலாங் கண்ணீர் சோர முருகனின் புகழைப் பாடின்
இகமதில் நல்வாழ் வாகும் எளிதிலே வீடும் வாய்க்கும்
சுகமுறச் சேர வாரீர் திருவுரு மாம லைக்கே.
5. (எண்சீராசிரிய விருத்தம்)
மாமலைகள் நீர்சொரிந்து தாமவனைப் போற்றும்
மரங்களெலாம் மலர்தூவிச் சிரங்களசைத் தேற்றும்
காமலியும் புட்களெலாம் கரைந்துருகி யேத்தும்
கடலதுவோ முழக்கமுடன் கரம்தூக்கிப் போற்றும்
நீமலைத லேன்மனமே தாமதஞ்செய் யாதே
நீடுவடி வேலனையே நாடுபுகழ் பாடு
மாமலியுந் திருவுருமா மலைமுருகன் தன்னின்
மலரடிகள் நாடுபவர்க் கிலையிடரே கண்டாய்.
6. (நேரிசையாசிரியப்பா - ககரவருக்கமோனை)
கண்டவர் வைத்த கண்ணினை யெடாஅது
காணவே யீர்த்திடுங் கவின்பெறு வடிவினன்
கிட்டுவார் மீண்டும் எட்டியே காமல்தன்
கீழடிப் படுத்தும் கிருபை நிறைந்தவன்
கும்பிடும் அடியார் கொள்துய ரெல்லாம்
கூர்வடி வேலால் கொய்தருள் செய்பவன்
கெண்டை விழியாள் கிளிமொழி வள்ளியின்
கேள்வன் தேவ குஞ்சரி நாதன்
கைத்தல மோடு கண்களீ ராறன்
கொண்மூ சூழ்திரு வுருமா மலையன்
கோல மயிலவன் கோதிலாக்
கௌரியின் பாலனே கலியுகத் தேவே.
7. (நேரிசை வெண்பா)
தேவர் குறைதீர் திருவுரு மாமலையின்
தேவனே என்றுந் துணையாவான் - மேவுந்
திரிமூர்த்தி யென்பார் சிறிதருளார் சும்மா
திரிமூர்த்தி யென்றே தெரி.
8. (பஃறொடை வெண்பா)
தெரிவையர் மீதும் சிறுவர்கள் மீதும்
உரிய பொருள்மீது முள்ள - பிரியமதில்
எள்ளள வேனும் இவன்பால் செலுத்துவையேல்
உள்ளதுயர் போமென் றுணராயோ - பள்ளமதைத்
தேடிவிரை நீராய்த் திருவுரு மாமலையை
நாடிவிரைந் தோடுவாய் நன்கு.
9. (புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்)
(முதலடி)
குடர்பசி யால்துடித் திடவுமை யார் நகிற்
குடங்களை யீர்த்திட உயர்ந்தன
கொடியிடைக் கார்த்திகை அரிவையர் மார்பிடைக்
குலவியன் னார்பிடர் அணைத்தன
குமுதமென் வாய்திறந் தழுதிடுங் கால்சர
வணமிசை காலுடன் அசைந்தன
குலநவ வீரரைக் குணமுடன் கூடியுங்
குலவிடுங் கால்துடி துடித்தன
(இரண்டாமடி)
இடர்பட நான்முகன் தனைச்சிறை யேவின
எளிதினில் யாவையும் படைத்தன
எரிவிழி யான்விரும் பியவிதம் ஞானமுத்
திரைகுவித் தோதிட உயர்ந்தன
எதிருறு மாமலை பிளந்தன நீரற
எறிதிரை வாரியை வடித்தன
இகலிய சூரனைத் தடிந்தன யானையின்
எழிலுயர் பாவையை மணந்தன
(மூன்றாமடி)
படர்சுபந் தோகையை அணைத்துயர் கோழியுட்
படுகொடி வானுற உயர்த்தின
பசுந்தினை யார்புன முறுமொரு பாவையம்
பிணைமகள் மார்பினைத் தழுவின
பலகலை யார்தமிழ் தனைக்குறு மாமுனி
பணிவுட னேற்றிடப் புகட்டின
பருவலி பூதம தொழித்திடக் கீரனும்
பகர்முரு காற்றினை அணிந்தன
(நான்காமடி)
தொடர்புற மாபுகழ் பரவிய சீரரு
ணகிரியின் பாடலும் அணிந்தன
துகளறு மூங்கையன் குருபர னோதிய
சுடர்கலிப் பாவையும் அணிந்தன
தொடைகமழ் தீந்தமிழ் மணமுடன் மாநறுங்
கடம்பணி மாலையும் சுமந்தன
திருவுரு மாமலை மருவிய வேலவன்
திறல்மிகும் ஆறிரு புயங்களே.
10. (குயிலை வேண்டுதல் - நேரிசை வெண்பா)
கள்ளிருக்கும் பூந்தார் கடம்பணி வேலனுமென்
உள்ளிருக்கும் காதல் உணரானோ - புள்ளிருக்கும்
மாவார் திருவுரு மாமலையான் இங்குவரக்
கூவாயோ நீகுயிலே கூவு.
11. (அம்மானை – கலித்தாழிசை)
கூவுகுயில் சோலைக் குறுக்குத் துறையானும்
மேவினான் வேடனென மொய்வனத்தே அம்மானை
மேவினான் வேடனென மொய்வனத்தே யாமாயின்
பாவித்தோர் கொக்கேனும் பற்றினனோ அம்மானை
தாவியுமோர் கொக்கவித்தான் சட்டியில்கா ணம்மானை.
12. (மதங்கியார் - பதினான்குசீராசிரிய விருத்தம்)
மானை யொக்கு மாறு கண்கள்
மருள நோக்கி யுலகினை
மயங்க வைத்துக் காளை யர்தம்
மனங்க வர்ம தங்கியே
தேனை யொக்குந் தமிழி லேநீ
சீர்கு றுக்குத் துறையுறுந்
தேவைப் பாடி வாள்சு ழற்றிச்
சுற்றி யாடும் போதிலுன்
தானை யேகுலுங்க மாரன்
சேனை யேகுலுங்குமுன்
தாள்கு லுங்கு மாயி னென்றன்
பாழ்ம னங்கு லுங்குமே
கூனை யேய்தனங்கு லுங்க
குலைந டுங்கு மாவியே
கோல மாது நீய டங்கிக்
கொஞ்ச மிங்க ருள்வையே.
13. (கலிவிருத்தம்)
கொஞ்சுமட மாதரகல் நஞ்சுவிழி, தீயுள்
பஞ்சுநிக ராகவுனை யுஞ்சுடுமென் நெஞ்சே
மஞ்சுசரி திருவுருவ மாமலையின் வேலன்
தஞ்சமென வந்தவனின் கஞ்சவடி சேரே.
14. (இரங்கல் - கட்டளைக் கலிப்பா- இறுதி மடக்கு)
சேர வந்தில ரேஉரு மாமலை
நாதரும் நிசி யோஒரு மாமலை
கூர யில்தரி கோலம யூரவர்
கூடி லாரலர் கூறினர் ஊரவர்
ஆர அன்புட னேகுற மாதரை
அண்மி னார்வெறுப் பானது மா தரை
ஈர மில்மனத் தார்தமை நாடியே
இவ்வ ணந்தளர்ந் தேனுயிர் நாடியே
15. (தவம் - அறுசீராசிரிய விருத்தம்)
நாடி யடவி நலித்தலைந்து
நாளுங் கனிகா யிலையருந்தித்
தேடிக் கதியைத் தவம்புரிந்து
தேய மெங்கும் திரிவீர்காள்
ஓடிக் குறுக்குத் துறையடைந்தே
ஒருகா லுருகிக் குகன்புகழைப்
பாடிப் பணிந்து நீர்விரும்பும்
பான்மை யாவும் பெறுவீரே.
16. (கட்டளைக் கலித்துறை)
வீரமுடன் தவமாண்பின னாயும் விவேகமின் றிக்
கோரமு டன்புவி யாண்டவச் சூராம் கொடியனையே
மாரகம் மேவ அருள்செய் திருவுரு மாமலையன்
சீரடி தான்மன மாயை அவித்துநற் சீர்தருமே.
17. (கைக்கிளை - மருட்பா)
மேதினி மேலடி மேவின மொய்குழல்
மீதினி லார்மலர் வாடின - மாதினியாள்
கண்க ளிமைத்தன காண்பா யெனவேதான்
பெண்ணிவள் திருவுரு மாமலை
மண்ணகத் தாளிது திண்ணமென் நெஞ்சே.
18. (மதங்கியார் - எண்சீர் ஆசிரிய விருத்தம்)
நெஞ்சுகவர் திருவுருமா மலையின் வீதி
நின்றாடும் மதங்கியரே கொண்டோர் கும்பம்
நஞ்சுமிழும் ஓரரவை நலமோ டாட்ட
நானிலத்தே கண்டவருண் டாயின் நீரோ
கொஞ்சுமிரு கும்பமதைக் கொண்டே யிங்கண்
கோலமுறும் அரைப்பாம்பைக் குலைய ஆட்டும்
மிஞ்சுதிறம் யாமென்றும் அறியோம் போதும்
மெல்லியலீர் எம்ஆவி மெலியு மாமே.
19. (மேகவிடுதூது- கலிவெண்பா)
மாமேகங் காளும் மனமிரங்கு வீரே நீர்
தாமேயென் இன்னல் தணிக்கவலீர் - காமேவும்
மாண்பார் திருவுரு மாமலையில் வேலவரைக்
காண்பீரேல் யான்கொண்ட காதலெலாங் - கேண்மையுறச்
சாற்றுவீர் நல்ல சமய மறிந்திடுவீர்
போற்றுவார் கூடிடுங்கால் போகாதீர் - சாற்றுந்
திருவா வடுதுறையர் செய்வழி பாட்டில்
பெருமாவல் கொண்டவரப் பெம்மான் - ஒருபோதும்
அவ்வேளை தன்னில் அணுகாதீர் நும்மிடத்தே
செவ்வேள் செவிகள் திருப்பாரே - எவ்வனமார்
தோகைய ராமிருவர் சூழ்வர் இரவினிலே
ஆகையா லப்போதும் அண்டாதீர் - மாகைலை
நாதனருள் நாதர் நலிவுறா வேளையினில்
மாதென் மயக்கமெலாம் மாண்பாக - ஓதிநீர்
இங்கண் வரச்செய்வீர் இன்றேல் அணிகடம்பத்
தொங்கல் தரச்சொல்வீர் தூது.
20. (நற்றாயிரங்கல் - கொச்சகக் கலிப்பா)
தூதடருங் கான்தனிலும் துகளடரும் மாலையினும்
ஆதவனின் கடுமையிலே அஞ்சாமல் தான்துணிந்து
மாதலமாந் திருவுருமா மலைவேடன் பின்னாலே
போதயரும் மெல்லடியாள் போயதுதான் எவ்வாறே?
21. (தழை - தோழி கூற்று - கட்டளைக் கலித்துறை)
வாறார் திருவுரு மாமலை மேவிய வள்ளியனே
காரார் குழலி விரும்புந் தழையோ கரமளித்தாய்
நேரா துறக்கமே நின்றும் புரண்டும் நிலைகுலையும்
பேராள் உயிர்தனை யன்றோ கொடுத்தனை பேரளியே.
22. (வண்டு - வெளிவிருத்தம்)
அளியே திருவுரு மாமலைதான் அண்டுவையோ
-யானுந்தோணேன்
எளியேன் படுதுயர மெல்லாம் இயம்புவையோ
-யானுந்தோணேன்
துளியே னுமருள் புரிந்தே திரும்புவையோ
-யானுந்தோணேன்
ஒளியேர் மலருள்தே னுண்டே உறங்குவையோ
-யானுந்தோணேன்
23. (நேரிசை வெண்பா)
தோணாத மந்திரங்கள் சொல்லுவ தேனெளியீர்
காணாத ஊரெலாங் காணுவதேன் - கோணாமல்
மாண்பார் திருவுரு மாமலையைச் சேர்ந்தங்கே
காண்பீர் திருமுருகன் கால்.
24. (இன்னிசை வெண்பா)
கால்சேர்ந்தார்க் கென்றும் கனிந்தருள் வேலவனின்
வேல்சேர்ந்தால் தீரா வினையுண்டோ ஓர்கால்
திருவுரு மாமலையைச் சேர்ந்தா லதுவே
மறுபிறவி நோய்தீர் மருந்து.
25. (வலைச்சியார் - பதினான்கு சீராசிரிய விருத்தம்)
மருந்து போல்வடித் தெடுத்த இன்சொலை
அளந்து பேசிடும் வலைச்சியீர்
மகிமை சேர்ந்ததி ருவுரு மாமலை
மறுகில் மீன்களோ விலைசொனீர்
திருந்து நும்மதி தனிலே தானிரு
செங்க யல்களும் புரளுதே
தோகை யீரிரு தடிவ ரால்களும்
துணியி னுட்புறம் தெரியுதே
இருந்து கொஞ்சமத் துணியை நீக்கிடும்
இன்னும் ஆவியுந் துடிக்குதே
யாது வேண்டுமச் சள்ளை மீன்தனக்
கென்ம னத்தினுக் கிசைந்ததே
பொருந்து மாறிவண் நீர்ம திச்சுற
வினையு மென்றனுக் கருளுவீர்
புரளும் அஞ்சனக் கண்க ளார்வலை
போட வோஇது போதுமே.
26. (இரங்கல் - பன்னிருசீராசிரியம் - இறுதிமடக்கு)
போதார் சோலை வருந்தேனே
பிரியர் அணைந்தால் வருந்தேனே
பிணைந்தே குலவும் அஞ்சுகமே
பேதைக் கிரவும் அஞ்சுகமே
தீதார்ந் தேனைங் கணையாலே
தெளியேன வரிங் கணையாலே
தேனார்ந் திடுமென் மருவலரே
தேம்பு மெனையேன் மருவலரே
மாதார் பங்கன் விழியாரும்
மகரால் நீரென் விழியாரும்
மாண்பார் பொருநைத் திருவுருமா
மலைய ரன்புத் திருவுறுமா
காதா றிரண்டு முடையாரே
கனிந்தென் துயரு முடையாரே
கரிமான் மீதன் புள்ளாரே
கலங்கு மென்னன் புள்ளாரே
27. (சித்திரகவி - அட்ட நாகபந்தம்)
(இன்னிசை வெண்பா)
ஆரார் சடைய னனற்க ணுறுசேயை
மாறா துறுவான மாமலை யாண்டியை
நாடிநினை யாமோச நாசரை யம்மசனி
கூடி யிடுமே குறை.
28. (வேற்றொலி வெண்டுறை)
குறையுடலா யங்கமெலாங் கொடுநோயே
கொண்டலையுங் கொடிய ரேனும்
இரையெனவே தசையுண்டும் எத்தனையோ
இழிதொழில்செய் ஈன ரேனும்
இறையெனவே திருவுருமா மலையானை
என்றுமவ ரேற்றி வாழின்
அவர்தாமே யாம்வணங்கும் ஆண்டவரும் ஆவாரே
அல்லாதா ரெவரேனும் அவர்திரும்பிப் பாரோமால்.
29. (கார்- பதினான்கு சீராசிரிய விருத்தம்)
ஆல முண்ட கண்ட மென்ன
அம்க ருக்கும் காலமே
அம்பு தம்சி லம்பி னுச்சி
அணி வகுக்கும் காலமே
தாலம் விண்ட அரவொ டுங்க
இடியி டிக்கும் காலமே
தண்ண மருவி கல்லு ருட்டி
நீர்கொ ழிக்கும் காலமே
மேல டர்ந்த வாடைக் காற்று
மேனி வாட்டும் காலமே
மேவு மாரன் அம்பெ றிந்து
மெய்து ளைக்கும் காலமே
நீல மண்டு வானில் வான
வில்முளைக்கும் காலமே
நீள்கு றுக்குத் துறைய ரின்றி
நோமி குங்கார் காலமே.
30. (இதுவுங் கார்- பஃறொடை வெண்பா)
காலன் அணுகாமல் காக்கும் ஒளிவடி
வேலர் திருவுரு மாமலையில் -சால
இடியும் புலம்பும் இரும்பை புலம்பும்
நொடியும் புலம்பும் ஞிமிறும் - வடியருவி
நீரும் புலம்பும் நெஞ்சும் புலம்புமே
காரும் புலம்பிடுங் கால்.
31. (குறம் - எண்சீராசிரிய விருத்தம்)
காலமெனும் மூன்றினையுங் கண்டுரைப்பே னம்மே
கணித்தகுறி தவறாது கண்டிடுவா யம்மே
பாலமுதம் வேண்டுகிலேன் பழையதுதா அம்மே
பழந்துணியா தாயினும்நீ பரிவுடன்தா அம்மே
வேலமுதுன் கண்ணாழி வெளிப்படுதே யம்மே
விசனமொழி வரைந்திடுவான் விரைவுடனே யம்மே
சீலமுறும் ஆவடுதண் துறையருமே போற்றுந்
திருவுருமா மலைக்குறத்தி திறமறிவா யம்மே.
32. (எண்சீராசிரிய விருத்தம் - வேறு)
மேனி சிவந்தானும் ஞானி யவன்தானும்
மூவர் சிறந்தானும் தேவர் புரந்தானும்
ஏனல் மிடைத்தானும் மானை யடைந்தானும்
ஏறு மயிலானும் கூறு மயிலானும்
ஆனி யிலன் தானும் ஈனில் குலன்தானும்
ஆறு முகத்தானும் ஆவல் மிகத்தானும்
கூனி நடித்தானும் ஊனம் விடுத்தானும்
குறுக்குத் துறையானும் குமர இறைதானே.
33. (காலம்-இரவுக்குறிவிலக்கல்)
(கட்டளைக் கலித்துறை)
தானத் திருவுரு மாமலை வீரா தடமறிந்து
கானத் திருவுரு மாநதி தன்னைக் கடப்பதனால்
மானத் திருவுரு மாது மனமே மயங்கிடுமால்
வானத் திருளுரு வேநீ யினியும் வரலொழியே.
34 (சம்பிரதம் - பதினான்குசீராசிரியவிருத்தம்)
ஒழித்தசுரக் குலந்தனை யும்பர்பா லருள்புரிந்த
உன்னதன்கு மார வேலன்
உறைந்தருளுந் திருவுரு மாமலையை வணங்கியான்
உற்றிடுசம் பிரதம் சொல்வேன்
அழித்திந்தப் பிரமனை யவன்மனைவி யறுதலியை
அம்பட்டன் அணையச் செய்வேன்
அரிதன்னைப் பயமடையச் செய்குவேன் பெண்ணாக்கி
அழகுமகன் பெறவுஞ் செய்வேன்
பழித்திடுமா றவன்றனை மீனாமை சிங்கமாய்ப்
பன்றியாய்ப் படைத்தும் விடுவேன்
பாரிலலை விண்டுவுக் குருவமிலா தாக்குவேன்
படருருவம் அரியுங் கொண்டு
செழித்துயர்ந் தாலுமொரு செப்பினி லடைத்தவனின்
தேகமதைக் கருப்பு மாக்கித்
தேவாதி தேவனத் திருமாலே எனஅலையும்
தாதர்பால் தந்தி டுவனே.
35. (இதுவுமது)
தந்தமா தங்கமதைத் தழையருந்தச் செய்குவேன்
தழைத்துவரும் நெற்க திரிலே
தரமாக நவமணிகள் தமைவரப் பண்ணுவேன்
தாமரையில் குவளை தருவேன்
சந்தனமும் பால்குடிக்கச் செய்குவேன் காற்றுக்குச்
சரியான காலும் அளிப்பேன்
சலியாமல் எலிமீது யானைவரப் பண்ணுவேன்
வானத்தை ஓட்டை யிடுவேன்
கந்தனுறை திருவுரு மாமாலையில் வாழ்பவர்க்
கரியசெய லேது முளதோ
கரும்போடும் எறும்பிதனைக் களிறாக்கு வேனேழில்
கண்ணைவா யாக்கி விடுவேன்
சந்தமுறெம் மாதரையும் சதுராகக் கதிரவனைச்
சுற்றியுருண் டாடச் செய்வேன்
சங்கரனுக் குபதேசம் செய்குகனே தலைவனெனச்
சரணமடைந் துய்கு வேனே.
36. (சந்திரனைப் பழித்தல் - வெண்கலிப்பா)
வேனலுறும் வெயிலெனவே நிலவெரிக்கும் விண்மதியே
ஏனுனக்கிப் புன்மதியே இரவினுள்செல் வெண்மதியே
தண்ணெனுஞ்சீர்ப் பாற்கடலில் தழைத்தெழுந்தா யெனினுமந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் தரங்குலைந்த வெண்மதியே
பெண்ணுடனே நீபிறந்தும் பிரிவடைந்து துயரமுறும்
பெண்ணெனையே வாட்டுவதும் பெறுந்திறமோ வெண்மதியே
சிவன்தலையில் நின்றதனால் செருக்கடைந்து நின்றேநீ
தவனனென மனத்திடையே தருக்கினையோ வெண்மதியே
மகிமையுறு திருவுருமா மலைமுருகன் சிவனருளும்
மகனெனநீ கண்டிலையோ மதிகுலைந்த வெண்மதியே
என்னகமே கவர்முருகன் எடுத்துனையே சிவனணியும்
பன்னகத்தின் வாயிலிட்டுப் பதங்குலைப்பார் வெண்மதியே
பெண்ணென்றால் பேயெனினும் பரிந்திடுமே வெண்மதியே
வண்ணமழி வாய்விடு வாது.
37. (சித்திரகவி – காதைகரப்பு - இன்னிசை வெண்பா)
(நற்றாயிரங்கல்)
வாது நனியாயின் வாழாள் வருநய
மேதாகுந் தீயென்றை யேலுறுதி யந்தோ
செயலாமே வேடர் திதியாகப் பாயம்
படர்கந்தா வந்துகளி பார்த்து.
[குறிப்பு: இக்கவியில் ஈற்றுச்சீர் நீக்கி, இறுதியிலிருந்து ஒன்றுவிட்டு ஒன்று
எழுத்தெடுத்துச் சேர்ப்பதாலாகும் செய்யுள் வருமாறு:-
(குறள் வெண்பா)
கந்தா கடம்பா கதிர்வேலா செந்திலுறை
யெந்தா யருள்வா யினிது.]
38. (மறம் - எண்சீராசிரிய விருத்தம்
பாராளும் நும்மரசன் திருமு கத்தைப்
பாவைதனை வேண்டியிவண் விடுத்த தாலே
சீராகத் தலையெடுத்து விட்டான் என்றும்
சிரஞ்சீவி யாகவேதான் இருப்பான் தூதா
பேரான திருவுருமா மலையில் வாழும்
பெம்மானின் அருளடைந்த வேங்கை நாங்கள்
நேரான இளவரசுக் கேற்ற வாறு
நீசென்றவ் இளவாலைப் பெண்கேட் பாயே.
39. (மறம்- பதினான்கு சீராசிரிய விருத்தம்)
கேட்டு நீயுன் காவ லன்சொல்
ஏற்றுச் சிந்தி யாமலே
கிறுக்கல் ஓலை யோடு நாடிக்
கேடு தேடும் தூத!நீ
வேட்டு வந்த மறவர் வஞ்சி
வியன்கு றுக்குத் துறையிலார்
வேலின் மீது படரு மன்றிது
அரசின் மீது படருமோ
நாட்டு மன்னர் கோடி முன்னர்
நாடி வந்து பட்டதை
நானெ டுத்துச் சொல்வ தோஇந்
நாடு னக்குச் சொல்லுமே
ஓட்டு வாருன் தலைய றுத்துக்
காட்டு வாருன் அரசிடம்
ஓங்கும் எம்சி றார்கள் கண்ணி
லுறுமுன் ஓடிப் பிழையடா.
40. (வஞ்சித் தாழிசை)
அடாதனவுஞ் செய்தேநீ
அடம்பிடிப்ப தேனோதான்
படரொளிவேல் பரம்பொருளும்
பரிவுடையார் மடமனமே 1
கண்டவர்கள் விண்டதெலாம்
கண்டிருந்தும் அவர்மிசைநீ
கொண்டதெவன் ஐயமிதே
அண்டிடுவார் மடமனமே 2
திருமுருகர் வருமளவும்
ஒருகுறையும் எண்ணாமல்
திருவுருமா மலைநினைந்தே
வெருவறவாழ் மடமனமே 3
41. (தவம் -கொச்சகக்கலிப்பா -மடக்கு)
மனங்கனிந்து திருவுருமா மலையடைந்து திருவுருமா
கனங்குறைந்து வணங்கிடவே கண்டகுறை வணங்கிடவே
தினங்கனிந்து மருள்வானே தொடரயமன் மருள்வானே
வனங்களுறைந் திருப்பீரே வந்துமனந் திருப்பீரே.
42. (இன்னிசை வெண்பா)
பீர்கொள்ள வேண்டாங்காண் போய்க்குறுக் குத்துறையில்
நீர்கொள்ளா வாறருளும் நீர்கொண்ட தண்பொருறை
முங்கி யொருக்கால் முருகா எனவுரைப்பின்
தங்கிடு மோபிறவி தான்?
43. (கட்டளைக் கலித்துறை)
தானவ ரின்படை யுட்சென் றவரைத் தடிந்துமனம்
வானவ ரின்படை யும்படிச் செய்தோய் வனிதையிரு
மானவ ரின்படை யுட்சேர் திருவுரு மாமலையாய்
நானவ ரின்படை யுட்புகா தேக நயந்தருளே.
44. (குறள் வெண்பா)
அருள்வாய் திருவுரு மாமலையா யுன்றன்
சரண்களே என்றுந்தஞ் சம்.
45. (களி – அறுசீராசிரிய விருத்தம்)
தஞ்சமடை வார்க்கருளுந் திருவுருமா
மலைவணங் குங்களிய ரேயாம்
எஞ்சலிலா மதுவுண்டும் மதிமயங்கோம்
என்னெனிலோ இராம காதை
கஞ்சனையே பெற்றெடுத்த வீமனணை
காதலியாம் இராமன் தங்கை
மஞ்சணிந்த சீதையிடம் நாலுமுகத்
தாறுமுகம் மதத்தல் தானே.
46. (இதுவுமது - பதினான்குசீராசிரியவிருத்தம்)
மதத்தனம் குடியாலே யாம்மட்டு மெனக்கூறி
மயங்கிடீர் மகித லத்தீர்
மயிலேறும் முருகனும் மட்டாருந் திருவுரு
மாமலையில் குடியுங் கொண்டான்
கதத்தலும் விடுங்கேளீர் கடவுளர் யாவருளும்
குடிகொள்ளார் எவரு முளரோ
கவ்வையுரை யீர்நீரும் கவ்வைகொள் வீர்தேவர்
கனிந்துசுரை பானங் கொண்டார்
விதத்தலும் அல்லவே வியனுலகில் யாவர்தாம்
வெறியேறும் சாதி விடுத்தார்
விரைமலர்கள் தோறுமளி வயல்களிலெல் லாஞ்சேறு
விரும்புகனி தோறுஞ் சாறே
மிதத்தலும் செய்மாலின் பெயர்மாலி மாதவன்
மேலுமவன் மௌலி கொண்டான்
மேதினியெ லாமொரு வகைநாற்றப் பொருள்களால்
மிளிருவதும் காண்கி லீரோ.
47. (இதுவுமது -எண்சீராசிரியவிருத்தம்)
கண்டடருந் திருவுருமா மலையே சென்றேன்
களியனேநீ வேண்டுவதென் என்றார் கந்தர்
மண்டிடவே சாலியருள் செய்யு மென்றேன்
மாடுகட்டி யுழுபதுயிர் செய்யென் றாரே
வண்டயருங் கொங்கென்றேன் வடபா லென்றார்
வயிறாருங் குந்தியென்றேன் மாண்டா ளென்றார்
தொண்டியென்றேன் கிழக்கேகாண் என்றி யம்பிச்
சுடர்முருகர் மெளலிதனைச் சூட்டினாரே.
48. (கையுறை-தோழிகூற்று-எழுசீராசிரியம்)
நார்மிகுந் தார்பதி திருவுரு மாமலை
நாடனே நீதரு நீலமணி
சீர்மிகுங் காவிரி மேட்டிடைக் கண்டதேல்
சேவிடை யாய்ச்சிவ னைத்தாங்கும்
ஏர்மிகு சீரடி காணவே ஏனமாய்
ஏகிடு மன்றியும் வேலனிடம்
பேர்மிகு சூரனைக் கொல்லெனத் தன்னிரு
பெண்களைக் காட்டிப்ப ணிந்திடுமே.
49. (ஊசல் - எண்சீராசிரிய விருத்தம்)
பணிவாருங் கொம்பினிலே அணியூசல் மாட்டிப்
பாடலென எதையெதையோ பாடிமனம் போலே
துணிவாக ஊசலிலே துள்ளியசைந் தாடும்
தோகையரே எனதுள்ள வூசலசைத் தீரே
தணியாது நீர்பெருகுந் தண்பொருநை யோரம்
தரந்தரமாய் வெண்ணொளிசேர் தரளங்கள் சேரும்
அணியாருந் திருவுருமா மலைவாழும் வேலன்
அவன்புகழைத் தான்பாடி ஆடீர்பொன் னூசல்.
50. (நேரிசை வெண்பா)
ஊசலென ஆடவுயிர் உற்றவரும் வாடியழ
வாசலிலே ஊராரும் வந்தடைய -பேசுவதுந்
தீர்ந்திடு முன்னே திருவுரு மாமலையைத்
தேர்ந்திடு முன்னித் துணிந்து.
51. (கட்டளைக் கலித்துறை)
துணிந்தவர்க் குண்டோ துயரும் குறுக்குத் துறைதனையே
பணிந்தவர்க் குண்டோ பயமும் முருகனின் பாதமலர்
அணிந்தவர்க் குண்டோ அழிவே அவனரு ளன்பினிலே
பிணிந்தவர்க் குண்டே அழிவிலா வீடெனும் பேரிடமே
52. (வண்டு- வஞ்சிவிருத்தம்)
பேரிடருங் கண்டுசென்று பேதமில்
சீரிடமாந் திருவுருவ மாமலை
யாரிடமென் பாடுரைத்து மீளுவீர்
வாரிடறிப் போயிடாதீர் வண்டரே.
55. (இயலிடங்கூறல்-பதினான்குசீராசிரியம்)
வண்டு காட்டிடும் மாத ரார்விழி
மாரி காட்டிடும் பூங்குழல்
வாணு தல்பிறை காட்டும் காட்டிடும்
முல்லை யேயவர் புன்னகை
செண்டு காட்டிடும் கொங்கை யேமுகச்
சோதி காட்டிடும் தாமரை
தேனெ னும்மொழி கிள்ளை காட்டிடும்
செந்து வர்துடி காட்டுமே
விண்டு காட்டிடும் தோளை அம்பணத்
தண்டு காட்டிடு மேதொடை
வேக மான்குளம் பல்குல் காட்டிடும்
மெல்லி டைத்துடி காட்டுமே
மண்டு சீர்குறுக் குத்து றைவரை
கண்ட மாதரின் மெய்ந்நலம்
வாயி னாற்சொலப் போகு மோவுயிர்
வாடி நோகுதென் பாங்கனே.
54. (சித்து-பதினான்குசீராசிரியம்-வேறு)
பாங்கடருந் திருவுரு மாமலையின் சித்தரேம்
பாலமுரு கனைவ ணங்கப்
பரிவுடனே சித்துபல பாலித்தான் எம்திறம்
பகரஎளி தாகு மாமோ
ஓங்கரனுக் கங்ஙனே உடனேரும் மாதங்கம்
உண்டுபணி காட்டி வந்தோம்
உண்மையுட னிருப்பையே ஒளிர்பொனா யாக்கியவன்
உளமகிழு மாறு தந்தோம்
நாங்களினுங் கரியைமா தங்கமெனக் காட்டுவோம்
நற்கஞ்ச மதனில் பொன்னை
நலமாகக் காட்டுவோம் நம்புநீ இரும்பைமே
லாம்பொன்னுங் காட்டி விடுவோம்
வீங்கடலுங் கொண்டயாம் வெண்கலைக்கொண் டாளிடம்
பொன்கலை வழங்கப் புரிவோம்
வல்லிரும்பு தனைப்பொனும் வெள்ளியுமா யாக்குவோம்
வலிகண்டு பதந்த ருவையே.
55. (மன்மதனைப் பழித்தல்-சிந்தடி வஞ்சிப்பா)
பதங்குலைந்திடு மாரமன்மத பரமசிவனின்
கதம்பொறுத்திட வலியிலாதவ கணைதொடுத்தெனை
வாட்டியேயுயிர் வம்புசெய்தனை சிவபிரான்றனின்
நாட்டமேவரு வடிவேலனை நாவலர்புகழ்
தேட்டமேவிய குறுக்குத்துறைத் தேவதேவனை
என்மனங்கவர் கூரயிலனை ஏறுமயிலனை
நன்கறிந்திலை
மன்மத னென்னும் பெயரால்
மன்னும் மதமே கொண்டனை நீயே.
56. (நாரைவிடுதூது – இணைக்குறளாசிரியப்பா)
மன்னும் மதமே கொண்டலை மாரன்
என்னை வருத்தினன்
தென்றலும் வந்தென் தேகம் துளைத்தது
வானில் வெண்ணிலா வந்தென்
மேனியைச் சுட்டது
ஏனிவர் வேலவர் இன்னும் வந்திலர்
நீயோ பேட்டினை நீங்கா தேகுவை
பேடும் நின்னைப் பிரிந்தன் றிலதே
அவரோ இஃதும் அறிந்திலர்
கான்படு கண்ணியில் மான்படு வதுபோல்
யான்படும் பாடே எல்லாம் அறிகுவை
எனவே நீயுந்
திருவுரு மாமலை செல்குவை யாயின்
பொருநைத் துறையர் கண்டு
என்பா டனைத்தும்
அன்னவர் நெஞ்சில் அழுந்திடக் கூறி
என்னிடம் விடுப்பாய்
வாரா திருப்பின்
தாரா யினுமே தந்திடக் கூறு
மங்கை யென்துயர் கண்டனை
செங்கால் நாராய் சிறிதருள் வாயே.
57. (நிலைமண்டில ஆசிரியப்பா)
வாயவன் புகழவே வலம்வரக் கால்களே
ஏயுமிக் கண்ணவன் எழிலுரு காணவே
கரமோ குவிந்திடச் சிரமோ வணங்கிடக்
காதோ குகன்புகழ் கேட்டு மகிழ்ந்திட
அல்லா லவைபெறும் நல்லா றெதுவே
எல்லாம் வல்ல இறைவன் முருகன்
மகிழும் திருவுரு மாமலை நாடி
அகிலத் தீரே அனைவரும் வருவீர்
திருவா வடுதுறை யார்தினந் தோறும்
அருமா மறையுடன் அவண்புரி பூசையும்
சிறப்பாய் நடாத்தும் திருச்சா றனைத்தும்
விருப்பாய்க் கண்டே விமலனைப் போற்றி
உறுப்பே கொண்ட உறுபய னடைவீர்
பிறப்பறுத் தாள்வான் பேணியத் தேவே.
58. (சித்திரகவி-மாலைமாற்று-குறள் வெண்பா)
வேதாமா கா நாதா வேலாவா நீவாலா
வேதாநா காமாதா வே
(குறிப்பு:-ஒரு செய்யுளைத் தலைகீழாகப் படித்தாலும் அதே செய்யுள் வருவது மாலைமாற்று எனப்படும்.)
59. சித்திரகவி - இரதபந்தம் - நேரிசை வெண்பா)
மாதுறையைத் தேடிவாழ்வாய் மாசிலாவா றென்மனமே
தீதுனைத்தான் சேர்வதிலை யாலறிவாய் - போதணிந்தாள்
வேலெனுமக் கண்பிடியாள் வள்ளிவடி வாளிலகு
வாலவடி வேலனை வாழ்த்து.
60. (கிள்ளை விடுதூது- பன்னிருசீராசிரியம்)
(இறுதிமடக்கு)
வாழ்த்திக் குகனை வாதத்தாய்
வறிதே கடிந்தாள் வாதத்தாய்
வாரா மலிருந் தாரேனோ
வந்தா லென்னைத் தாரேனோ
ஆழ்த்தித் துயருள் விடுத்தார்வாய்
அல்லல் கூறி விடுத்தார்வாய்
அணிசேர் குறுக்குத் துறையாரே
அன்போ டிவண்வந் துறையாரே
பாழ்த்த மனமும் துணிந்தாலும்
பலனுண் டிலையே துணிந்தாலும்
பருகி மடிவேன் இனியாரே
பாரி லென்பால் இனியாரே
காழ்த்த மனமுந் திரிவாரோ
கான மயின்மேல் திரிவாரோ
கனிந்தென் னுள்ளத் திருப்பாயே
கடிதே அவரைத் திருப்பாயே
61. (சுரும்பு - கட்டளைக் கலித்துறை-முதன்மடக்கு)
பாயுந் தலையணை யும்பொரு நைத்துறைப் பாலகரால்
பாயுந் தலையணை யும்பெருந் தீயாய்ப் படுகிறதே
பாயுந் தலையணை யும்விருப் பில்லேன் படுத்துழன்றேன்
பாயுந் தலையணை யும்போது நீங்கிப் பகர்சுரும்பே.
வா
கு ல ளி
ள் ளி வ டிவா
வ ள் யா டி பி ண் வள
ணி ந் தா ள் வே லெ னு ம க்
த போ ய் வா றி ல யா லை தி வ ர்
ன மே தீது னை த் தா ன் சே
ம ன் றெ வா லா சி மா
டி வா ழ் வா ய்
தே த் யை
து
மா றை
59வது செய்யுள்
இரதபந்தம் - நேரிசை வெண்பா.
62. (இடமணித் தென்றல் -அறுசீராசிரியம்)
பகரமிகு பேதாய் நீ பதறுவது
மேனோதான் பரிந்த ருள்செய்
குகரமரும் திருவுருமா மலைநாட்டில்
நம்மிருவர் குடியா யுள்ள
சிகரமவை யிரண்டுமிகச் சேர்ந்தொன்றி
யுன்றனது சீர்நகில்கள்
நிகரமையும் என்றுணர்வாய் நீள்பகலுந்
தங்குவனோ நிற்பி ரிந்தே?
63. (சித்திரகவி - கோமூத்திரிபந்தம் - கலிவிருத்தம்)
தேவ ருந்துதி சீருரு மாமலை
ஆவ லுங்கொடு சேரணி வேலனே
நீவ ருந்ததி சூருறு மாறிலை
பாவ முங்கெடு மேரணி வேடனே.
தேவருந்துதிசீருருமாமலை ஆவலுங்கொடு சேரணிவேலனே
நீவருந்ததி சூருறுமாறிலை பாவமுங்கெடு மேரணிவேடனே
63 வது செய்யுள்
கோமூத்திரி பந்தம் - கலிவிருத்தம்
64. (தலைவி இடங்கூறல்- வினாவுத்தரம்)
(நேரிசை வெண்பா)
ஏற்றமுறு மால்மனையார்? இக்குவிலான் மன்மதனும்
ஏற்றிடாத தென்னே? இவுளிதனைச்- சாற்ற
வருவதெது? மஞ்சை வழிமறிப்ப தென்னே?
உறுவிடையே நம் தலைவர் ஊர்.
65. (பாண்மறுத்தல்- நேரிசையாசிரியப்பா)
ஊர் திரு வுருமா மலையர் என்பால்
மார்பங் குனியார் மாசிலா என்மனை
யறத்தைக் குலைத்தும் அனைமார் கழிமன
லருத்தங் கொளவும் வருங்கார் திகைப்பிடப்
பசியைப் பசியெனப் பாரா தயரவும்
பிரிந்தெனை நீங்கிப் பிறர்மனை யேகிக்
கருமனக் காமக் கடல்புரட் டாசியர்
காசிலா வணிகம் கவினுறச் செய்து
காசினுக் கேற்பக் கலந்துற வாடி
வருவார்க் கின்பம் வழங்குவே னென்று
பெரிதும் ஆனி புரிந்தவர் பாலே
வைகா சிங்கென வழிப்பறி செய்யும்
வஞ்சகத் தார்பால் வாழ்ந்தவர்க் காகத்
துணிவுட னென்பால் தூதுசொல் பாண!
இனியான் யாசித் திரையே
தேடினு மவரைச் சேர்வதெந் நாளே?
66. (இரங்கல் -கலித்தாழிசை)
நாளை வருவேன் என்றவர் வந்திலர்
நாளை யென்பதும் நானறி யேனே
வேளை யறியா மனனே
நாளை வருவார் திருவுரு மாமலைக் கொழுநர் தாமே.
67. (முல்லைகண்டிரங்கல்)
(பஃறொடை இன்னிசைவெண்பா)
கொழுநனை விட்டலர் கொண்டளியை நோக்கித்
தழைகணீர் சிந்தியருந் தாதுகைத்து நிற்றலால்
வெண்டளவே என்போல் விசனமுற்றாய் உன்னையான்
கண்டளவே தேறினேன் காண்பாய் நீ யாவும்
திருவுரு மாமலைவாழ் செல்வர்போ லென்னைப்
பொருபவர் யாரேயிப் போது?
68. (சித்திரகவி -முரசபந்தம் -வஞ்சிவிருத்தம்
போ து மே தி ட மே து வா
வா து மே ய வ மே து யா
யா து மே வ ய மே து தி
கோது மே தி ட மே து கா
68 வது செய்யுள்
முரச பந்தம் - வஞ்சிவிருத்தம்.
போது மேதிட மேதுவா
வாது மேயவ மேதுயா
யாது மேவய மேதுதி
கோது மேதிட மேதுகா.
69. (அம்மானை -கலித்தாழிசை)
கான்மான் மகளைக் கலந்ததல்லால் மாமலையர்
வான்யானை யோடும் மகிழ்ந்தனர்கா ணம்மானை
வான்யானை யோடும் மகிழ்ந்தனரே யாமாயின்
கான்விலங்கோ கந்தர் கழறுவா யம்மானை
ஆனையு டன்பிறந்தா லாகாரோ அம்மானை.
70. (சித்திரகவி-எட்டாரைச்சக்கரம்)
(நிலைமண்டிலஆசிரியப்பா)
மானைத் தொடர்ந்தே தினைப்புனம் நாடியே
போனவர் தேடிவா டுதிமனந் துடித்தும்
வள்ளி தன்னுற வேதினம் விரும்பியும்
துள்ளுபொன் மயிலதி னேறியங் கோடிடும்
மாதலம் போற்றிடு வளமார் துறையரை
யேன்தினம் நனியும் நீவிரும் பினையே.
70 வது செய்யுள்
எட்டாரைச் சக்கரம் நிலைமண்டில ஆசிரியப்பா.
71. (குறள் வெண்செந்துறை)
விரும்பித் திருவுரு மாமலை யான்பால்
நெருங்கிச் சேர்ந்திடு நீசவென் னகமே.
72. (சித்திரகவி - சுழிகுளம்- வஞ்சிவிருத்தம்)
அகமதி லாமா மோடி
கடிதுற வேபூ ணேமா
மதுமலி தாமா பூமா
திறலிலை யேதா வேலா.
73. (இடைச்சியார் - எண்சீராசிரியவிருத்தம்)
வேலாரு மிருகரிய விழியால் பேசி
வித்தார மகாவிரு கரங்கள் வீசி
பாலாரு மொழிகாட்டிப் பசப்புங் காட்டிப்
பருத்தவிரு குடப்பாலை பகரும் நீங்கள்
சேலாருந் தண்பொருநை சேருந் துய்ய
திருவுருமா மலையெங்குந் திரிந்தா லுந்தான்
ஏலாதும் பாலினையே எவர்க்கும் விற்க
இவண்நீங்கி யேகிடுவீர் இடைச்சி யாரே.
74. (பிச்சியார்- பன்னிருசீராசிரியவிருத்தம்)
யாரே நும்மைப் பெருமையுடன்
இனிதே காண்பர் பிச்சியரே
ஏனோ இந்தத் தவவேடம்
யாவும் விடுத்தே துறந்தீரோ
காரே யனைய கூந்தலினைக்
கலைந்தும் கண்ணால் பிணிக்கின்றீர்
கனமார் பணிகள் விடுத்தாலும்
கவினார் முகத்தால் வெட்டுகின்றீர்
சீரே குறிக்கும் செங்கலையே
தரித்து மொயிலாய் நடைபோட்டுத்
திரளுங் கும்பம் வெளிக்காட்டிச்
சிறுவ ரெம்மை யிழுக்கின்றீர்
பாரே துதிக்குந் திருவுருமா
மலைசேர் வீதி மருங்கெல்லாம்
பதுங்கிப் பதுங்கி நடக்கின்றீர்
பரிந்தெம் ஆவி தருவீரே.
75. (நேரிசை வெண்பா)
வீரவடி வேலா வியனா வடுதுறைசெய்
சீரதிகங் கொண்ட திருக்குமரா - மாரன்
வருவழியுன் கூர்வேலை வைத்தெனைக் காப்பாய்
திருவுரு மாமலையாய் தேர்ந்து.
76. (தலைவன் கூற்று -கட்டளைக்கலித்துறை)
தேர்ந்தருள் செய்வார் திருவுருமா மாமலைச் சீர்மறுகில்
கூர்ந்ததி வேக முடன்பரி தூண்டுங் குலவலவா
ஆர்ந்ததி யோசை யுடன்செல் பொருநை யடர்பெருக்கே
நேர்ந்தவி சார முறுகணீர் காட்டிடும் நேரிழைக்கே.
77. (கிள்ளைவிடுதூது-தரவு கொச்சகக்கலிப்பா)
நேரிலவர் பாலடைந்து கூறிடற்கே கூசிடினும்
யாரிடத்து மூலமாயும் எடுத்துரைத்தா லாகாதோ
சந்தமுறு திருப்புகழைச் சாற்றியருள் அருணகிரி
அந்தமுறுங் கிளியாக அவர்புயத்தே யமர்ந்திருப்பார்
அவர்கண்டு
திருவுரு மாமலைச் செல்வரால் யானே
உறுதுயர் தன்னை யுரைத்தருள் கிளியே.
78. (ஊசல் - எண்சீராசிரியவிருத்தம்)
கிளியுமொரு கொம்பினிலே கின்னரம்போல் பாடக்
கிளரொளிசேர் ஊசலிலே கிருபையுடன் நாடிக்
களியுடன் நின் னிருமருங்கும் காரிகையர் மிளிரக்
கவினடரும் ஈராறு கருணைவிழி யொளிர
நளினமல ரிருபாதம் நான்றழகோ டாட
நான்மறையும் அவைதொடர்ந்து நலிந்தலறி வாட
துளியருளைச் சிதறியிந்தத் தொல்லுலகை யாட்டுந்
திருவுருமா மலைவேலா திகழ்ந்தூச லாடே.
79. (காலமயக்கு -தோழிதேற்றல் -பன்னிருசீராசிரியம்)
ஆடிடு மாமயிலாருறை திருவுரு
மாமலை நாட்டினிலே
ஆரிருள் கூடிடுங் காரது நாடியும்
ஆளனும் வந்திலரே
ஏடியி தேயவர்க் கேயற மாவென
ஏங்கிடு மேந்திழையே
ஈதிலை யேகொடுங் காரென நீயினும்
ஏனுணர்ந் தாயிலையே
மூடிக மேறுவி நாயகர் மேவியவ்
வானிலு லாவிடலால்
மேனியை மேகமென் றேமத நீரினை
மாரியென் றெண்ணினையே
கூடிய பேரிடி யேயவர் தாமிடும்
ஓலமென் றேயறிவாய்
கூறிய வாறிவண் நாயகர் மேவிடு
வார்துய ரேதணியே
80. (இரங்கல் - எண்சீராசிரியவிருத்தம்)
தணியாத மயலானேன் திருவுருமா மலையர்
தயவோடு வந்தெனது தாபமழித் திலரே
பணியாக அவராகம் படர்ந்தாலும் சுகமே
பாதையுறுங் கல்லாகப் படுத்தாலும் நலமே
குணியாத வடிவேலாய்க் கரமேவின் குணமே
கோலமயி லாய்வடிவங் கொண்டாலும் சுகமே
துணியாதவ் வாறெதுவுந் தீயவுரு பெறலால்
தீராத துயரால்கண் ஆறானேன் சகியே.
81. (தலைவன் கூற்று - நேரிசைவெண்பா)
ஆறாச் சுகந்தருமிவ் வாயிழையாள் வாய்மலரின்
மாற நறுமணம்போல் மாந்ததுண்டோ - சீரார்
திருவுரு மாமலையர் தேயமெங்குஞ் சுற்றி
மருவலர்மொய் வண்டே வழுத்து.
82. (கட்டளைக்கலித்துறை)
வழுவா வகையில் திருவுரு மாமலை வடிவழகைத்
தொழுவா ரெவருந் துயரடை வாரோ தொடர்வினைக்குக்
கழுவா யவனடி யல்லது வேறு கதியிலையே
புழுவா யுறினும் மறவேல் அவனிரு பொற்பதமே.
83. (வெறிவிலக்கல் - எழுசீரா சிரியவிருத்தம்)
பொற்கொடி தனையே வருத்திடுங் கொடிய
பெருஞ்சுர மாமிதை யுணரா
மற்கொடி தினியும் பாயச மளித்தே
மருகிடச் செய்வதும் நலமோ
நற்குணர் குறுக்குத் துறையுறை யமலர்
நாடுறு மருத்துவர் வரினே
நிற்குமோ சிறிதும் நேரிழை யிவள்கொள்
நெடுஞ்சுர மேமறைந் திடுமே.
84. (தழை- அறுசீராசிரியவிருத்தம் - தோழிக்கூற்று)
திடுமெனப் புனத்தி னுள்ளே தழையுடன் நுழைந்து யானே
விடுமொரு கணைப்புண் ணோடு மானிவண் வந்த தோசொல்
லிடுமென வினவும் வீர! எழில்குறுக் குத்து றைமான்
படுமொரு புண்ணை யாற்றும் பண்புறு தழையீதாமோ?
85. (கைக்கிளை - கட்டளைக்கலித்துறை)
தழைக்கும் வளஞ்சேர் திருவுரு மாமலைச் சாரலிலே
குழைக்குங் கொடியொன் றிருதனி ரோரிலை கொண்டதலால்
மழைக்கும் பலுமீர் குவளையுங் காந்தளும் மாணரும்பும்
அழைக்குங் குமுதமுங் கொண்டே கியதென் அகம்பிணித்தே
86. (எழுதஅரிதென்றல் - பன்னிருசீராசிரியம்)
பிணிக்குக் கண்ணா ரருள்நோக்கும்
புயமார் கடம்பின் நறுமணமும்
புனையும் முடிகள் விடுசுடரும்
புனிதத் திருவாய் தருமொழியும்
பணிக்கை யணையும் வேலொளியும்
பணிசேர் மார்பின் திருவொளியும்
பாதத் தடிசேர் அனைத்துலகும்
படத்திற் சிறிதுங் காணேனே
கணிக்கு மளவில் லாவளஞ்சேர்
கவினார் குறுக்குத் துறைவாழும்
கந்தர் வடிவந் தனைமுழுதும்
காட்ட வொணுமோ படமெழுதி?
திணிக்கும் பிறவி தனையென்றுந்
தொண்டர்க் கெழுதா வேலவரைத்
தீட்ட முனைந்த எளியேனின்
சிறுபுன் மதியைப் புகல்வேனோ?
87. (நேரிசையாசிரியப்பா)
சிறுபுன் மதியேன் செய்வதும் அறியேன்
திருவார் குறுக்குத் துறைவே லாநின்
திருவடிப் புணையால் பிறவிக் கடலினைக்
கடக்கத் துணிந்தேன் காப்பதுன் கடனே
வாழ்வாம் கடலுள் வழியறி யாமல்
பாழ்போ கவெனைப் பணித்துவி டாதே
வாழ்வினுந் தாழ்வினும் வருமெந்
நாளினு முனைமற வாநெஞ் சருளே.
88. (நேரிசை வெண்பா)
அருளாங் கனிபழுத்தால் ஆங்கெறியா ரோகல்
மருள்வார் கலிதீர்க்கும் மாண்பார் -பொருளே
குறுக்குத் துறைவாழ் குமரனே யென்னை
நெருக்கும் பிறவிதனை நீக்கு.
89. (கட்டளைக்கலித்துறை)
நீக்க மறவே நெருங்கி யுனதடியில் நின்றுயரும்
ஆக்க முறவே அடியேன் தனக்கருள் ஆறுமுகா
நோக்க முடனுனை நாடும் அடியரின் நோவழித்துத்
தேக்க முறுசீர் திருவுரு மாமலைச் சேவகனே.
90. (தூது- கலிவெண்பா)
சேவலே யான்படுந் துன்பமெலாங் காணாயோ
ஆவலே கொண்டேன் அவரணைய - மேவிய
நின்புகழ் தன்னை நிகழ்த்திடவு மாகுமோ
என்புகழ்வ தென்றே அறியேனே - அன்புடையாய்
கொண்டை யசைத்துநீ கூவிக் குரலெழுப்பின்
அண்டமெலாந் துள்ளி யதிராவோ - மண்டொளிரும்
செங்கதிரோன் தன்னைச் சிறகடித்து நீகூவின்
இங்கெழுந்தே நாட இசையானே- புங்கமுறும்
நீகூவக் கேட்கின் நெருங்கும் வினைகளெலா
மேகூவி யோடி மறையாவோ - மாகூரார்
வேலைப் பிடித்தார்நீ வாய்திறந்தே கூறிடும்
பாலைப் பழிக்குமொழி பாராரோ-சேலாருந்
திண்பொருநை மேவுந் திருவுரு மாமலையர்
கண்பொறாஅ வேளையே கண்டறிந்து - பெண்பிறந்த
என்பாடு கூறியென் இன்னல் தவிர்த்திடவே
அன்போ டவரை யனுப்பு.
91. (இரங்கல் -பதினான்குசீராசிரியம்)
புங்கமு றுங்குக ரன்பினை நம்பியென்
புந்திய ழிந்துடல் மெலிந்தேனே
பெண்ணெனக் கொஞ்சமும் எண்ணில ரன்னவர்
கன்மனந் தன்னையென் புகல்வேனே
துங்கமுறுங்குறுக் குத்துறை தங்கிய
சுந்தர ரன்றொரு புனம்நாடி
சுந்தரி யென்றுகு றத்தியொ ருத்தியைச்
சொந்தமு டன்சுகித் திருந்தாரே
இங்கவர் வந்தெனைக் கொஞ்சிய ணைத்திட
இன்னமு மென்னம வுனந்தானோ
என்னிலு மன்னவன் எந்தவி தந்தனில்
இன்னலங் கொண்டவ ளதுகாணேன்
பங்கமு றும்படி என்னைம றந்தது
பண்பல என்பதும் அறியாரோ
பந்தமி கழ்ந்திடு கந்தரை யெண்ணுவ
தின்னமும் நன்றல சகிமாதே
92. (சித்திரகவி - சதுர் நாகபந்தம் - நேரிசை வெண்பா)
தேவனே சேந்தா திருமுருகா தாட்சேர்பு
மேவடியேன் நோவதா மாதாவே - நோவையே
தீராயோ ராதியே தேசேறு சேயையே
ஓராயோ நீயே யுரை.
93. (தூது-சிந்தியல் வெண்பா)
உரைசேர் திருவுரு மாமலையில் வாழும்
பரைசேய் திருமுருகர் பால்நீ - வரைமயிலே
சொல்லியே வாராயோ தூது,
94. (நற்றாயிரங்கல் – தகரவர்க்க நேரிசைவெண்பா)
தூதோது தத்தைத்தீ தோதூதித் தீதேதோ
தேதாதைத் தீதேதோ தூதத்தை - தீதேதோ
தொத்தித் ததைத்ததே தித்தி ததிதுதித்துத்
தத்தைத் துதைத்தே தா.
95. (குறம்- எண்சீராசிரியவிருத்தம்)
தாவியலை கள்திரண்டு தடங்கரையில் மோதுந்
தண்பொருனை தாரெனவே வண்பெருக்கோ டோடும்
காவியடர் நீர்ச்சுனைகள் மேவிவனப் போங்கும்
காக்களிலே தீங்குயில்கள் பாக்களிசைத் தாரும்
மேவியசீர் ஆவடுதண் துறையருமன் றாடம்
விருப்புடனே புரிவிழவுஞ் சிறப்புகளும் ஓங்கும்
தேவியென எம்குலத்து வள்ளிதனைக் கொண்ட
சீர்முருகர் சேருருமா மலைக்குறத்தி யம்மே
96. (இதுவுமது- எண்சீராசிரியவிருத்தம்- வேறு)
சீர்முருகர் சேருமுரு மாம லைதனில்
செல்வியேநீ கொண்டதுண்மைக் காய்ச்ச லல்லடி
கார்முருகுக் கூந்தலேநீ கந்த ரைமுனம்
கண்டதனால் கொண்டதொரு காமக் காய்ச்சலே
நீர்பெருகு மாறுகண்ணில் நீவ ருந்திடேல்
நிச்சயமாய் நாளையவர் நாடி வருவார்
தார்பெறுவாய் பாரவருத் தாம தஞ்செயார்
தாட்டிகமாம் என்குறிநீ கேட்டி டாயமே.
97. (நேரிசை வெண்பா)
கேட்டினை விட்டே கிருபைசேர் வேலவன்
மாட்டினி யேனும் வருவீரே - பாட்டில்
திருவுரு மாமலையின் சீர்கூறு வீரேல்
வெருவினை யேதுபுல வீர்
98. (கட்டளைக் கலித்துறை)
புலவீர் திருவுரு மாமலை தன்னைப் புகழ்ந்திடுவீர்
வலவே லவனின் பெயர்களைப் பாடி வழுத்திடுவீர்
இலவே றுதுணை இவனல் லதினி யெனவுணர்வீர்
கலவீ ரொருவே றுதெய்வ முமது கனவிலுமே.
99. (எண்சீராசிரிய விருத்தம்)
கனவினிலு முனைமறவேன் கந்தா என்றன்
காதலினை யினுமுணர விலையோ சொல்வாய்
மனதிலுனை வரித்ததன்பின் மகிழ்ந்து நீதான்
வந்தெனையாட் கொளவிலையேல் மதிப்பார் யாரே
தினமினிய சாறுபொலி நெல்லை தன்னுள்
திருவுருமா மலையுறையுந் தேவ தேவா
நினதினிய நிழலதிலே நிலைத்து வாழும்
நேரமதே எனக்கினிய நேரங் கண்டாய்.
100. (பன்னிருசீராசிரிய விருத்தம்)
காண்பேன் நினது வடிவமொன்றே
காணேன் பிறிதே கதிர்வேலா
கலங்க எனையே நீவிடுத்தால்
கண்டார் பழித்தே நகையாரோ
பூண்பே ணுனது கடம்பினையே
பூணேன் பொன்னும் மணியேனும்
பொழிலார் குறுக்குத் துறைநாதா
பிழையென் புரிந்தேன் பெருமானே
மாண்பார் நினது மலரடிக்கே
மறுவில் தொண்டு புரிவதலால்
மறந்தே பிறவும் நினையேனே
மனம்நீ யிரங்கி யருளாயோ
வீண்பார் மவுன மினுமேனோ
வியனா ருலகந் தூற்றவெனை
விடுப்பா யோகொண் டணைப்பாயோ
வேறே கதியும் அறியேனே.
101. (நேரிசைவெண்பா)
அறியாமல் யாதும் அடிமையான் தீது
புரியா நின் றாலும் பொறுத்துச் - சிறியேனை
வந்தாள் திருவுரு மாமலை மன்னும்வேற்
கந்தா திருமுரு கா.
(சுபம். நூல் முற்றும்)
சரவணன் திருவடியே சரணம்
-------------------
குறுக்குத்துறைக் கலம்பகம்
அருஞ்சொல் விளக்கம்
(எண்கள் பாட்டெண்களைக் குறிக்கும்)
பாயிரம்
1. ஏரார் - அழகுபொருந்திய, ஓர் ஆனை - ஒப்பற்ற யானை, கான் - மணம்
2. நாகம் - பாம்பு. அந்தரத்தார் நாகம் - தேவர்களின் யானை (தெய்வானை), தோகம் - சிறுமை
3. வெருவருமாறு - அச்சம் நீங்குமாறு
4. சண்டமுடையேன் - கொடுமையுடையவன்
5. சவி - அழகு, துவி - இரண்டு
6. துகளறு - குற்றம் நீங்கிய. பொங்கம் - பொலிவு
நூல்
1. பரணிதனக் கடுத்துளநற் பைங்கிளிமார் - கார்த்திகைப் பெண்கள், ஆரபரிவோடு - நிறைந்த
அன்போடு, குக்குடம் - கோழி, செறிந்த அநிலமென - நிறைந்த காற்று என, விசும்பென - வானம் என
, உடுக்கணம் - நட்சத்திரக் கூட்டம், குன்றவன் - குன்றிலுள்ளவன் என்றும் குறைந்தவன் என்றும்
பொருள் கொள்க.
2. கருவற - பிறவி நீங்க
3. முனிந்து – சினந்து; புங்கவன் – தூயவன்.
4. புளகமார - மயிர்ச்கூச்செறிய
5. கா மலியும் - சோலைகளில் நிறைந்திருக்கும்;
மா மலியும் - செல்வம் நிறையும்
6. ஈர்த்திடும் - கவர்ந்திடும், கொண்மூ - மேகம்
7. சும்மா திரி மூர்த்தி - சும்மா அலைகின்ற மூர்த்திகள்.
9. ஈர்த்திட - இழுத்திட, குலநவவீரர் - கூட்டமாகிய
நவவீரர், இகலிய - மாறுபட்டுப் போரிட்ட; தடிந்தன - கொன்றன.
10. கள்ளிருக்கும் - தேனிருக்கும், புள்ளிருக்கும் மா -
பறவைகள் நிறைந்திருக்கும் மாமரங்கள்
11. புள்ளேனும் - பறவையாயினும், கொக்கு - கொக்கு என்றும் மாமரம் என்றும்
பொருள் கொள்க, சட்டி - சட்டி என்றும் சஷ்டி என்றும் பொருள் கொள்க.
12. தானை - ஆடை, தாள் - பாதம், கூனையேய் - கூனையைப் போன்ற.
13. அகல் - அகன்ற, மஞ்சு - மேகம், கஞ்சமலர் - தாமரை போன்ற பாதம்.
14. மாமலை - தலத்தின் பெயராகவும் பெரிய மலை என்றும் கொள்க,
மயூரவர் - மயில் வாகனர், ஊரவர் - ஊர்மக்கள்,
குறமாதரை - குறப் பெண்ணை, மாதரை - பெரியபூமி,
நாடி - விரும்பி, உயிர்நாடி - உயிர்த்துடிப்பு.
16. மாரகம் மேவ - மரணமடைய.
18. "ஒரு கும்பம் (குடம்) கொண்டு ஒரு பாம்பை ஆட்டுவர். நீரோ இரு கும்பங்கள்
கொண்டு அரைப்பாம்பை (அல்குலை) ஆட்டுகிறீர்" என்ற நயம் காண்க.
19. காமேவும் - சோலைகள் பொருந்திய, கடம்பத் தொங்கல் - கடப்பமாலை.
20. தூது அடரும் - சிறு கற்கள் அடர்ந்த, துகள் - மணல், போது அயரும்
மெல்லடியாள் - மலர்கள் கண்டு மயங்கும் மெல்லிய பாதங்களை
உடைய பெண்.
21. வாறு ஆர் - பேறுகள் நிறைந்த; ஒளிர்மலர் - ஒளியும் அழகுமுடைய மலர்.
22. அளியே - வண்டே,
23. தோணாத - (பொருள்) விளங்காத, கோணாமல் - மனங்கோணாமல்.
25. மறுகில் - வீதியில்; மதிதனில் இருகயல்கள் - மதி போன்ற முகத்தில் கயல் போன்ற
இருகண்கள், வரால்கள் - வரால் மீன்கள் என்றும் தொடைகள் என்றும் பொருள் கொள்க
ஆவி துடிக்குதே - மீனின் ஆவியும் எனது ஆவியும் என்று கொள்க, இருஞ்சள்ளை - பெரிய சள்ளை
மீன் என்றும் பெரிய அல்குல் என்றும் கொள்க அஞ்சனக் கண்களார்
வலை கண்கள் (துவாரங்கள்) நிறைந்த கரியவலை என்றும்
மையணிந்த கண்களாகிய பெரிய வலை என்றும் கொள்க.
26. போதார் - மலர்கள் நிறைந்த, வருந்தேனே - வரும் தேன் வண்டே.
வருந்தேன் - வருந்த மாட்டேன், அஞ்சுகமே - கிளியே,
அஞ்சுஉகமே - ஐந்துயுகமே, ஐங்கணையாலே - ஐந்து மலர்ப் பாணத்தால்,
இங்கு அணையாலே - இங்கு வந்து சேராவிடின், மருஅலரே –
மணமுடைய மலரே, மருவலர் - மருவவில்லை, விழியாரும் –
நெற்றிக் கண்ணில் பொருந்திய, நீரென் விழியாரும் - கண்ணீர் என்
விழிகளில் நிறையும், அன்புத் திருவுருமா - அன்பாகிய பேறு கிடைக்குமா,
உடையார் - உடையவர், உடையார் - உடைக்க (நீக்க) மாட்டார்,
கரிமான் - யானையாகிய தெய்வானையும் மானாகிய வள்ளியும்,
உள்ளார் - உள்ளவர், என்னன்புள்ளார் - என் அன்பை எண்ணார்.
27. ஆர் ஆர் சடையன் - கொன்றை மலர் நிறைந்த சடையையுடைய சிவபிரான்,
மாறாதுறு வான மாமலை - வானம் (மழை) மாறாது பொருந்திய திருவுரு
மாமலை, அம்ம! - வியப்பிடைச் சொல், சனி - சனிபகவான், கூடியிடுமே
குறை - சேர்ந்து தீங்கினைச் செய்வான்.
இச்செய்யுள் அட்டநாக பந்தம் என்னும் சித்திர கவியாம். எட்டு நாகங்கள்
ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. செய்யுளானது ஒவ்வொரு நாகத்தின்
தலையினின்றும் ஆரம்பித்து உடல் வழியே சென்று வாலின் நுனியில்
போய் முடிகின்றது. சித்திரத்தில் கண்டு நயமுணர்க.
29. அம் - அழகு (இங்கு அழகிய வானைக் குறிக்கும்), அம்புதம் - மேகம்,
சிலம்பு - மலை, தாலம் விண்ட- நாக்கு பிளவுப்பட்ட, தண் அம் அருவி –
குளிர்ந்த அழகிய அருவி, நீலம் மண்டு வான் - நீல நிறம் நிறைந்த வானம்,
நோ மிகும் - துன்பம் மிகுகின்ற.
30. இரும்பை - பெரிய விஷப்பையுடைய பாம்பு, நொடியும் - நொடி தோறும்,
ஞிமிறு - வண்டு.
31. வேலமுதுன் கண்ணாழி - வேலாகிய அமுது உன் கண்ணாகிய கடலில்.
32. ஏனல் மிடைந்தான் - தினப்புனத்தை நெருங்கியவன், கூறும் அயிலான் –
புகழ்ந்து கூறப்படும் வேலையுடையவன், ஆனியிலன் - தீங்கு இல்லாதவன்,
ஆனி - ஹானி, கூனிநடித்தான் - வள்ளியிடம் கிழவனாகக் கூனி நடித்தவன்,
குமர இறை - குமரக் கடவுள்.
33. தானத் திருவுருமாமலை - சிறந்த ஸ்தானமாகிய திருவுருமாமலை,
தடம் - வழி, கானத் திருவுரு மாநதி - காட்டிலுள்ள பெரிய நீள நதி,
மானத் திருவுரு மாது - மானமும் அழகிய உருவமும் உடைய தலைவி,
வானத்து இருள் உருவே - வானத்தின் இருள் மிகுதியில்.
34. அழித்து இந்தப் பிரமனை - பிரமனென எழுதி அதை அழித்து, அறுதலி -
வெண்மையான ஆடை அணிந்தவள், அம்பட்டன் - அழகிய பிராமணனாகிய
பிரமன், பயம் - பால். இங்குப் பாற்கடலைக் குறிக்கும், அழகு மகன் –
அழகிய அரிகர புத்திரன், செப்பினில் - செப்பினுள்ளே எனவும்
வார்த்தையில் எனவும் கொள்க, தாதர் - வைணவ அடியார்.
35. தந்த மாதங்கம் - நீ என்னிடம் தந்த பெரிய தங்கம் எனவும் தந்தங்களையுடைய
யானை எனவும் கொள்க, நவமணிகள் - நவரத்தினங்கள் எனவும் புதிய
நெல்மணிகள் எனவும் கொள்க; தாமரையில் குவளை - தாமரைக் கொடியில்
குவளைமலர் எனவும் தாமரை போன்ற முகத்தில் குவளை போன்ற கண்
எனவும் கொள்க. காலும் அளிப்பேன் - கால்களைக் கொடுப்பேன் எனவும்
கால் (காற்று) எனும் பெயரை அளிப்பேன் எனவும் கொள்க, எலி மீது யானை –
எலி மீது யானை எனவும் பெருச்சாளி மீது விநாயகக் கடவுள் எனவும் கொள்க,
வானத்தை - ஆகாயத்தை எனவும் வெண்மையான நத்தை (வால் நத்தை)
எனவும் கொள்க; கரும்போடுமெறும் பிதனை - கரும்பில் ஓடும் எறும்பு இதனை
எனவும் கரும்போடு வரும் எறும்பி (யானை) தனை எனவும் கொள்க, கண்ணை
வாயாக்கி - கண்ணை வாயாக ஆக்கி எனவும் கண் என்னும் ஏழனுருபுக்குச்
சரியான வாய் எனும் ஏழனுருபாக ஆக்கி எனவும் கொள்க, சந்தமுறு –
அழகுடைய, எம் மாதரை - எமது பெண்களை எனவும் - எமது பெரிய பூமி
எனவும் கொள்க.
36. இரவினுள் - இராத்திரியினுள் எனவும் யாசித்தலினுள் எனவும் கொள்க,
தவனன் - சூரியன் பன்னகம் - பாம்பு, பரிந்திடும் – அன்புகாட்டும்.
37. நீ வராமல் வாது மிகுதியும் செய்யின் என் மகள் வாழாள். அதனால் உனக்கு
வரும் நயம் ஏதாகும்? தீய்ந்துபோ என்று நீ கூறின் உறுதியாக அந்தோ அவள்
செயற்பட்டு விடுவாள். வேடர்களிடம் பாதுகாப்பாகப் பாய்ந்து சென்ற அழகிய
கந்தனே நீ வந்து பார்த்து அவளோடு கூடிக் களிப்பாயாக. திதி - பாதுகாப்பு,
அம்படர் - அழகு படர்ந்த, செயல் ஆம் - செயற்பட்டு விடுவாள், என்றையேல் –
என்று நீ கூறினால்.
38. திருமுகத்தை - ஓலையை எனவும் அழகிய முகத்தை எனவும் கொள்க,
தலையெடுத்து முன்னேறி எனவும் தலையை எடுத்து எனவும் கொள்க,
சிரஞ்சீவி - சாகாமல் வாழ்பவன் எனவும் சிரத்தைச் சீவி (வெட்டி)
விட்டவன் எனவும் கொள்க, வேங்கை - புலி, இளவரசு - இளவரசன்
எனவும் இளமையான அரசமரம் எனவும் கொள்க, இளவாலை –
இளமையான ஆலமரத்தை.
39. வேட்டு - விரும்பி மணம் பேசி, வஞ்சி வேலின் மீது படருமன்றி அரசின் மீது
படருமோ இந்த வஞ்சிக்கொடி வேலமரத்தின் மீது படருமன்றி அரசமரத்தின்
மீது படருமோ எனவும் இந்தப்பெண் வேலவன் மீது படருவாளேயன்றி வேறு
அரசர் மீது படருவாளோ எனவும் கொள்க.
41. திருவுருமாமலை - குறுக்குத்துறை, திருவுருமா கனம் - செல்வம் நல்ல உருவம்
இவற்றால் அடைந்த பெரிய கர்வம், கண்ட குறைவு அணங்கிட – வாழ்வில்
கண்ட குறைபாடுகள் இறந்து பட, கனிந்தும் அருள்வான் - கனிந்து அருள்
புரிவான், மருள்வான் - அஞ்சுவான்.
42. பீர் - அச்சம், நீர் கொள்ளாவாறு - ஜலதோஷம் பிடியாதவாறு.
43. தானவரின் படை - அசுரர்களின் சேனை, தடிந்து - கொன்று, வானவரின்பு
அடையும்படி- தேவர்கள் இன்பம் அடையுமாறு, இரு மானவரின் படையுள் –
மான்போன்ற வள்ளி தெய்வானை ஆகிய இருவரின் சயனமெத்தையுள், நான்
அவரின் படையுள் - நான் பெண்களின் கூட்டத்துள். இச்செய்யுள் திரிபு
அணியாம்
45. களியர் - கட்குடியால் மயக்கேறியவர்கள், எஞ்சலிலா - குறைவிலாத. கஞ்சன்
- கம்சன் எனவும் பிரமன் எனவும் கொள்க. கஞ்சம் - தாமரை, வீமன் - தருமன்
தம்பி எனவும் திருமால் (வீ -பறவை, மன் - இறைவன்) எனவும் கொள்க. ராமன்
- ஸ்ரீ ராமன் எனவும் சந்திரன் (ரா -இரவு, மன்-இறைவன்) எனவும் கொள்க.
நாலுமுகத்தாறு முகம் - வெட்கிக் கவிழ்ந்த முகமுடைய ஆறுமுகக் கடவுள்
எனவும் நான்கு முகமும் ஆறுமுகம் ஆகப் பத்து முகமுடைய இராவணன்
எனவும் கொள்க.
46. கதத்தல் - கோபித்தல், கவ்வை - பழிச்சொல். மிதத்தல் – பாம்பணையில்
மிதத்தல், விதத்தல் - மிகுத்துக் கூறல், விரைமலர் - மணமலர், இப் பாடலில்
வரும் குடி, முருகு, மட்டு, கவ்வை, சுரை, பானம், வெறி, சாதி, அளி, சேறு,
சாறு, மாலி, மாதவம், மெளலி, நாற்றம் என்பன ‘கள்’ எனப் பொருள்படும் பல
சொற்களாம், அவற்றிற் குண்டான இயற்பொருளும் ''கள்'' எனும் சிறப்புப்
பொருளும் கொண்டு செய்யுள் நயத்தை நுணுகி அறிந்து கொள்க.
47. சாலி - கள் எனவும் நெல் எனவும் கொள்க. கொங்கு - மது எனவும் கொங்குநாடு
எனவும் கொள்க, குந்தி - கள் எனவும் பாண்டவரின் தாய் எனவும் கொள்க,
தொண்டி - மது எனவும் பாண்டி நாட்டுத் துறைமுகம் எனவும் கொள்க. மெளலி
- கிரீடம் எனவும் கள் எனவும் கொள்க.
48. நார் மிகுந்தார் - அன்புமிகுதியுமுடைய முருகர், காவிரிமேடு - ஸ்ரீரங்கம்,
சேவிடை - சிவந்த எருது, ஏனம் - பன்றி, இரு பெண்கள் – அமுதவல்லி,
சுந்தரவல்லி அதாவது மறுபிறப்பில் தெய்வானை வள்ளி.
49. பணிவாரும் - கீழ்வளைந்த, எனதுள்ளவூசல் - எனது உள்ளமாகிய ஊஞ்சலை,
தரளங்கள் - முத்துக்கள்.
52. வாரிடறி - நீளமாய் வழி தவறி, வண்டரே – வண்டே.
53. மாரி - மேகம், வாணுதல் - ஒளிமிக்க நெற்றி, செண்டு - பந்து, செந்துவர் -
செம்பவளம், துடி - உதடு, விண்டு - மூங்கில், அம்பணத் தண்டு - வாழைத்
தண்டு, வேகமாக ஓடும் மானின் குளம்பு அல்குலைக் காட்டிடும், துடி –
உடுக்கை
54. உடனேரும் மாதங்கம் - உடனே நேரக்கூடிய பெரிய தங்கம் எனவும் உடலில்
பாதி மாதின் அங்கமாக எனவும் கொள்க. பணி - பண்ணி (செய்து) எனவும்
பாம்பு எனவும் கொள்க, இருப்பையே ஒளிர்பொனாய் - இரும்பை ஒளி மிக்க
பொன்னாக எனவும் இருப்பிடத்தை ஒளி மிக்க பொன் மலையாக
(கைலைமலை) எனவும் கொள்க, கரியை மாதங்கமென - அடுப்புக் கரியைப்
பெரிய தங்கமாக எனவும் யானையை யானையாக எனவும் கொள்க,
கஞ்சமதனில் பொன்னை - பித்தளையில் தங்கத்தை எனவும் தாமரையில்
இலக்குமியை எனவும் கொள்க. இரும்பை மேலாம் பொன் - இரும்பை உயர்ந்த
பொன் எனவும் பெரிய விஷப்பையுடைய ஆதிசேடன் மேலிருக்கும் இலக்குமி
எனவும் கொள்க, வீங்குஅடல் - உயர்ந்த வலிமை, வெண்கலை
கொண்டாளிடம் பொன் கலை - வெள்ளைக் கல்லை வைத்திருப்பவளிடம்
தங்கக்கல்லை எனவும் வெண்ணாடை அணிந்த கலைமகளிடம் அழகிய
கலைகள் எனவும் கொள்க. இரும்புதனைப் பொனும் வெள்ளியுமாய் –
இரும்பைப் பொன்னும் வெள்ளியுமாக எனவும் பெரிய புதனை (யடுத்து)
வியாழனும் வெள்ளியுமாக எனவும் கொள்க. வலி - வல்லமை, பதம் – பொருள்,
தருவையே - தருவையாக.
55. பதம் - சீர், கதம் - சினம், நாட்டம் - கண், தேட்டம் - செல்வம், மன்னும்மதம் –
நிலைபெற்ற மதம்.
56. பேட்டினை - பெண் பறவையை, கான் - காடு, தார் - மாலை
57. வாயவற் புகழ - வாய் அவனைப் புகழ, ஏயும் - பொருந்திய, திருச்சாறு –
திருவிழா
58. வேது ஆமா - நீ வெம்மையைச் செய்யலாமா? கா - என்னைக் காப்பாயாக,
நாதா - நாதனே. வேலா - வேலவனே, வா நீ - நீ என்பால் வருவாயாக, வாலா -
அறிவுடையோனே, வேதா - வேதநாயகனே, நாகா - இளமையோனே.
மாதாவே - தாய் போன்றவனே, கொண்டுகூட்டு :- "நாதா வேலா வாலா வேதா
நாகா மாதாவே வேது ஆமா? நீவா கா” எனக் கூட்டுக.
59. மா துறையை - சிறந்த குறுக்குத் துறையை, போதணிந்தாள் வேலெனுமக்கண்
பிடியாள் வள்ளி - மலரணிந்தவளும் வேல் போன்ற கண்களையுடையவளும்
பெண் யானை போன்ற நடையுடையவளுமாகி வள்ளி நாச்சியார், வடிவாள்
இலகு வால வடிவேலனை - அழகுடைய அவ்வள்ளியுடன் இலகுகின்ற
இளமையான வடிவேலனை, சேர்வதிலையால் - ஆல் அசை நிலை,
இரதபந்தத்தில் செய்யுளைக் காணும் முறை:-
தேரின் இடது சக்கரத்தினின்று தொடங்கி மேலேறி வலது சக்கரத்திலிறங்கி,
அடித்தட்டின் வலது நுனியிலேறி அத்தட்டின் இடப்புறமாகச் சென்று, அதற்கு
மேற்றட்டின் இடது நுனியினின்று வலப்புறமாகச் சென்று: இவ்வாறு மாறி மாறி
ஒவ்வொரு தட்டாக ஏறி உச்சிக்குச் சென்று, அங்கிருந்து நடுவழியாக நேரே
கீழிறங்கி வரவும்.
செய்யுளின் சிறப்பு :-
இச்செய்யுளின் நான்காவது அடியிலுள்ள எழுத்துக்கள் முதல் மூன்றடிகளிலும்
ஏறு வரிசையில் மறைந்து கிடப்பதாம்.
(நூலின் முதற்கணுள்ள நன்கொடையாளரைப் பற்றிய இரத பந்தச் செய்யுளுக்கும் இதே
முறையைக் கொள்க)
60. வாதத்தாய் - கிளியே வா எனவும் வாதம் புரியும் தாய் எனவுங்கொள்க,
இருந்தார் ஏனோ - ஏனோ (வராமலிருந்தார், தாரேனே - தரமாட்டேனோ,
விடுத்தார்வாய் - விடுத்தாரிடம்; கூறிவிடுத்தார் வாய் - கூறிவிட்டு ஓய்வு
பெறுவாய், இவண் வந்து உறையாரே - இங்கு வந்து தங்காரே. துணிந்தாலும் –
துணிவு பெற்றாலும், துணிந்து ஆலும் - துணிவு கொண்டு விஷத்தை, இனியாரே
- இனிமேல் யாரே, இனியார் - இத மானவர், திரிவாரோ- மாறுபடுவாரோ,
திரிவாரோ - அலைவாரோ, உள்ளத்து இருப்பாயே, உள்ளத்தில் இருக்கும் நீயே,
திருப்பாயே - திருப்புவாயாக.
61. பாய் உந்து அலை அணையும் - பாய்ந்து செலுத்துகின்ற அலைகளையுடைய,
பாயுந்தலையணையும் பாயும் தலையணையும், பாய் உந்தலை அணையும்
விருப்பில்லேன் - பாயைச் சுருட்டிவைத்துவிட்டுத் தங்கும் விருப்பம் இல்லேன்,
பாய்உன் தலையணையும் போது நீங்கி - உன் தலை சேரும் மலரை
விட்டுப்பாய்ந்து செல்வாயாக, சுரும்பே - வண்டே.
62. பகரம் - அலங்காரம், நகில்கள் - தனங்கள், நிகர்- இணையாக.
63. ஆவலுங்கொடு - ஆவல் கொண்டு, வருந்ததி - வரும் பொழுது, சூருறுமாறிலை
- பயம் பொருந்து மாறில்லை, ஏரணி - அழகு பொருந்திய.
இச்செய்யுள் கோமூத்திரிபந்தம் எனும் சித்திரக் கவியாகும். இச்செய்யுளின்
முதலிரண்டடிகளையும் ஒரே வரியாக எழுதி அடுத்த இரண்டடிகளையும் ஒரு
வரியாகக் கீழே எழுதிமுதல்வரியின் முதலெழுத்திலிருந்து ஓரெழுத்து விட்டு
ஓரெழுத்தாய் கீழும்மேலுமாகச் சென்றுகொண்டே இறுதியை அடைந்து பின்னர்
2வது வரியின் இடது மூலையிலிருந்து அதே போல் மேலுங்கீழுமாக இறுதி
வரை சென்றால் அதே செய்யுள் அமையுமாறு காண்க.
64. இச்செய்யுள் நான்கு வினாக்களாலானது. அந்நான்கு வினாக்களுக்குமுரிய
விடைகளை ஒன்று சேர்த்தால் திருவுருமாமலை எனத் தலத்தின் பெயர் வருதல் காண்க.
மாலின்மனைவியார் - திரு, இக்குவில் - கரும்புவில், மன்மதன் ஏற்றிடாதது;
என்ன - உரு, இவுளி - குதிரை, இவுளியைச் சாற்ற வரும் சொல் எது - மா, மஞ்சு – மேகம், மஞ்சை
வழிமறிப்பது எது - மலை.
65. மார்பம் குனியார் - நெஞ்சு இரங்கார், கழி - மிகுதி, வருங்கார் - வரும்
கார்காலம், புரட்டாசி - புரள் தாசி, ஆனி - ஹானி (தீங்கு), வைகாசிங்கென –
வை காசு இங்கு என, இப்பாடலில் பன்னிரு மாதங்களின் பெயர்களும்
தொனிப்பொருளில் வந்தது காண்க.
67. இப்பாடலின் முதலிரண்டடிகள் முல்லைக் கொடிக்கும் தலைவிக்கும்
சிலேடையாக அமைந்தவை.
கொழுநனை விட்டு - செழிப்பான அரும்புகள் விட்டு எனவும் கணவனை விட்டு
எனவும் கொள்க; அலர் கொண்டு - மலர்கள் உடைத்தாய் எனவும் பழிச்சொல்
கொண்டு எனவும் கொள்க, அளியை நோக்கி - வண்டுகளை எதிர்பார்த்து
எனவும் கருணையை எதிர்பார்த்து எனவும் கொள்க. தழைகணீர் சிந்தி – நீங்கள்
தழைகளைச் சிந்தி எனவும் தழைத்து வரும் கண்ணீரைச் சிந்தி எனவும் கொள்க,
அருந்தாது கைத்து - அரிய மகரந்தம் சிந்தி எனவும் சாப்பிடாமல் மனக்கசப்
படைந்து எனவும் கொள்க, வெண்டளவே - வெண்முல்லையே, ஆயும் –
ஆனாலும், பொருபவர் - போரிடுபவர்.
68. இப்பாடல் முரசபந்தம் எனும் சித்திரக்கவியாம் தலைவி இரங்கல். போதுமே –
எனை வாட்டியது போதும், திடம் எது - அதைத் தாங்கும் திடம் எனக்கு ஏது, வா
- வருவாயாக, வாதுமே - நீ புரியும் வாது, அவமே - அவமாகும், துயா – துய்யனே
மேவு அயமே - பொருந்திய நல்வினை, யாது - யாதுளது, துதி - உன்னைத்
துதிப்பதில் கோதும் ஏது - செய்த குற்றம் யாது, இடம் ஏது - வேறு புகலிடம்
யாதுளது, கா - எனைக் காப்பாயாக.
இச்சித்திரத்திலுள்ள நான்கு அடிகளையும் முதலில் தனித்தனியே இடமிருந்து
வலமாக நேராக வாசித்துக் கொள்ளவும். தவிர இடது பக்கம்
மேல்மூலையிலிருந்து ஆரம்பித்துக் கீழேநடுவில் இறங்கி மேலேறி வலது பக்கம்
மேல் மூலையில் முடியும் நெடுவாரினுள் முதலடி மறைந்து கிடப்பதையும், இடது
பக்கமுள்ள சதுரவாரினுள் வலப்புறமாகச்சுற்றி இரண்டாவது அடி மறைந்து
கிடப்பதையும், வலது பக்கமுள்ள சதுரவாரினுள் இடதுபுறமாகச் சுற்றி
மூன்றாவது அடி மறைந்து கிடப்பதையும், இடது பக்கம் கீழ்மூலையிருந்து
ஆரம்பித்து மேலே நடுவிலேறி இறங்கி வலது பக்கம் கீழ் மூலையில் முடியும்
இரண்டாவது நெடுவாரினுள் நான்காவது அடி மறைந்து கிடப்பதையும் காண்க.
69. கான்மான் - காட்டுமான், வான்யானை - தேவலோகத்து யானை ஐராவதம்,
கான்விலங்கோ - காட்டு மிருகமோ, ஆனையுடன் - யானையுடன் என்றும்
விநாயகருடன் என்றும் கொள்க.
70. இப்பாடல் எட்டாரைச் சக்கரம் எனும் சித்திரக் கவியாம். வாடுதி - வாடுகிறாய்,
நனியும் – மிகவும். இச்செய்யுள் ஒரு சக்கரத்தில் எட்டு ஆரைகள் உடையதாய்
ஆரை ஒன்றுக்கு அவ்வாறெழுத்துக்களாய் நடுவே "தி" எனும் எழுத்து நின்று
குறட்டின் மேல் "தேடுவேலனை மனனே" எனுந்தொடர் நின்று சூட்டின்
(வெளிவட்டம்) மேல் 32 எழுத்துக்கள் நின்று விதிப்படி எட்டாரைச் சக்கரமாதல்
காண்க. "வள்ளியை நாடிச் செல்வானை நீ ஏன் விரும்பினை?" என இச்செய்யுள்
பொருள் தரினும், தலைவி வேலனை மறக்கவொண்ணாள். எனவே குறட்டின்
(குடம்) மேல் 'தேடு வேலனை மனனே" எனக் கரந்தமைத்த நயம் காண்க.
சித்திரத்தில் செய்யுளைக் காணும் முறை;-
வெளி வட்டத்தின் (சூட்டின்) இடப்புறம் நடுவே ஆரம்பிக்கும் ஆரை (கால்) யிலிருந்து நேரே
வலப்புறமாய் எதிரேயுள்ள ஆரையும் சேர்ந்து முதலடியாகவும், அதற்கு வலப்புறமுள்ள ஆரையும்
அதன் எதிர் ஆரையும் இரண்டாம் அடியாகவும், அதற்கு வலப்புறமுள்ள ஆரையும் அதன் எதிர்
ஆரையும் மூன்றாவது அடியாகவும், அதற்கு வலப்புறமுள்ள ஆரையும் அதன் எதிர் ஆரையும்
நான்காவது அடியாகவும், முதல் அடி ஆரம்பித்த இடத்திலிருந்து வலப்புறமாக வெளிவட்டம்
முழுவதும் கடைசி இரண்டு அடிகளுமாகச் செய்யுள் மறைந்து கிடக்கும் முறை காண்க.
71. நீசவென்னகமே - என் நீச மனமே.
72. இப்பாடல் சுழிகுளம் எனும் சித்திரகவியாம். வேலா - வேலவனே. பூமா –
பூமானே, அகமதி லாமாமோடி - உன் நெஞ்சில் பிணக்கு ஆகுமா, கடிதுறவே
பூணேமோ - விரைவில் நாம் உறவு கொள்ளோமா, மதுமலிதாமா – தேன்
நிறையும் கடப்பமாலையுடையவனே, திறலிலையே - உன் பிரிவைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை, தா - நின் அருளைத் தருவாயாக.
இதிலுள்ள நயம் :-
முதலடியின் முதலெழுத் திலிருந்து நேரே கீழே இறங்கி வலப்புறமாக வட்டமான
பாதையின் வழியே சுற்றிக் கொண்டே வந்தால், முதலடியின் ஐந்தாவது
எழுத்தில் முடிந்து செய்யுள் முழுதும் உள்ளே மறைந்து கிடக்கும் நயம் காண்க.
73. வித்தாரமாக – அகலமாக. பசப்பு - பாசாங்கு, சேலாரும் – சேல்கள்
(கெண்டைகள்) நிறைந்த, ஏலாது - இயலாது, இவண் - இவ்விடம், இரு
குடப்பால் - இரு குடங்களிலுள்ள பால். இரண்டு குடம் போன்ற நகில்களின்
பால் எனவும் பொருட்படுதல் காண்க.
74. பிச்சியர் - பிச்சு (பித்து) பிடித்தவர். பணிகள் - நகைகள்; கவினார் - அழகு
நிறைந்த, செங்கலை - சிவந்த ஆடை, பரிந்து - இரங்கி.
75. வியன் - பெருமை பொருந்திய, மாரன் - மன்மதன்.
76. பரிதூண்டும் - குதிரையைச் செலுத்தும், வலவா - தேர்ப்பாகனே, ஆர்த்து –
நிறைந்து, நேரிழைக்கு நேர்ந்த விசாரத்தால் பெருகும் கண்ணீரைப் பொருநைப்
பெருக்கே காட்டிவிடும் என்பதாம்.
77. சந்தமுறு - சந்த ஓசை மிகுந்த, அந்தமுறு - அழகு நிரம்பிய.
78. கின்னரம் - ஒரு வாத்தியக் கருவி, களியுடன் - மகிழ்ச்சியுடன், நான்று –
தொங்கி, அவை தொடர்ந்து - அப்பாதங்களைத் தொடர்ந்து.
79. கார் அது - அந்தக் கார்காலம், ஆளன் – தலைவன். ஏடி - பெண்ணே,
மூடிகமேறு - மூஷிகத்தில் ஏறும், இவண் - இவ்விடம்.
80. பணியாக - ஆபரணமாக. அவராகம் - அவர் தேகம், துணியாது –
ஆலோசியாமல், கண் ஆறானேன் - கண்ணீர் ஆறாகப் பெருகலானேன்.
81. ஆறாத - தீராத, மாந்த துண்டோ - அனுபவித்ததுண்டோ, மருவலர் மொய் –
மணமிக்க மலர்களில் மொய்க்கும்.
83. பெருஞ்சுரம் - பெரிய காய்ச்சல், கொடிது - கொடுமையாக, பாயசம் – பாயாசம்
எனவும் பாய் அசம் (பாயும் ஆடு) எனவும் கொள்க, மருத்துவர் - வைத்தியர்
எனவும் தலைவன் எனவும் கொள்க.
85. குழைக்கும் - குழைந்து கொண்டிருக்கும். இப்பாடல் பூங்கொடிக்கும்
தலைவிக்கும் சிலேடையாம். கொடி - பூங்கொடி எனவும் கொடி போன்ற
தலைவி எனவும் கொள்க. இரு தளிர் - இரண்டு தளிர்கள் எனவும், தளிர்
போன்ற இரு பாதங்கள் எனவும் கொள்க. ஓரிலை - ஓர் இலை எனவும் ஆலிலை
போன்ற வயிறு எனவும் கொள்க, மழைக்கும்பல் - மழைத் துளிகள் எனவும்
மேகக் கூட்டம் (கூந்தல்) எனவுங் கொள்க, ஈர் குவளை - இரண்டு குவளை மலர்
எனவும் குவளை போன்ற இரு கண்கள் எனவுங் கொள்க, காந்தள் - காந்தள்
மலர் எனவும் காந்தள் போன்ற கரம் எனவும் கொள்க, மாணரும்பு –
மாண்புடைய அரும்புகள் எனவும் அரும்பு போன்ற மாண்புடைய நகில்கள்
எனவும் கொள்க, குமுதம் - குமுதமலர் (அல்லி) எனவும் குமுதம் போன்ற வாய்
எனவும் கொள்க இச் செய்யுள் இல்பொருளுவமையணி.
86. கண்ணார் - கண்ணில் நிறைந்த, பணிக்கை - பணிகள் நிறைந்த கை, பணிசேர் –
ஆபரணங்கள் பொருந்திய
87. புணையால் - தெப்பத்தால், பணித்து விடாதே - நியமித்து விடாதே.
88. ஆங்கு - அம்மரத்தில், மருள்வார் - மயங்குபவர்கள்.
89. தேக்கமுறுசீர் - நிலைபெற்றுள்ள பெருமை.
90. மண்டொளிரும் - நிறைந்து பிரகாசிக்கும், மா கூர் ஆர் - மிகவும் கூர்மை
பொருந்திய, கண் பொரா - தூங்காத.
91. புங்கம் - தூய்மை, புந்தி - புத்தி, துங்கம் - தூய்மை, இன்னலம் - இனிய
நலங்கள். பங்கம் - அவமானம் அல்லது அழிவு.
92. இப் பாடல் சதுர் நாகப் பந்தம் எனும் சித்திரகவியாம்.
93. சேந்தா - செந்நிறமானவனே, தாட்சேர்புமேவடியேன் - உன் தாள்களில்
சேர்தலைப் பொருந்திய அடியேன். நோவது ஆமா தாயே எனப் பிரிக்க,
நோவையே தீராய் - துன்பத்தைத் தீர்ப்பாய், ஓர் ஆதியே - ஒப்பற்ற
ஆதிதேவனே, தேசு ஏறு சேய் ஐயே - ஒளிமிக்க மகவாகிய ஐயனே. ஓராயோ –
என் நிலையை உணரவில்லையோ.
இப்பாடலின் சித்திரத்தில் நான்கு நாகங்கள் பின்னிக் கிடக்கின்றன. ஒவ்வொரு
நாகத்தின் தலையிலிருந்து ஆரம்பித்து உடல் வழியே சென்று வாலின்
இறுதியோடு செய்யுள் முடிவடைவதைக் காண்க
93. உரைசேர் - புகழுரை சேர்ந்த, பரைசேய் - பார்வதியின் குழந்தையாகிய, வரை –
மலை,
94. இச்செய்யுள் முழுவதும் தகரவர்க்க எழுத்துக்களால் ஆனது.
தூதுஓது - தூதுசொல்லிய, தத்தை - கிளியின் தீதோ - குற்றமோ, தூதி –
தூதுசென்ற பெண்ணின், தீது ஏதோ - குற்றம் எதுவோ, தே - (படைக்கும்)
தெய்வமாகிய, தாதை - பிரமனின் – தீது ஏதோ குற்றம் என்னவோ, தூ –
தூய்மையான, தத்தை - கிளிபோன்ற என்பெண், தீது ஏதோ தொத்தி – தீமை
எதையோ பற்றிக் கொண்டு, தித்தி - இன்பத்தை, ததைத்ததே - சிதைத்து
விட்டது, ததி - எப்போதும், துதித்து - உன்னை வணங்கி, தத்தை - ஆபத்தை.
துதைத்ததே - மிகுதியாக்கிக் கொண்டது, தா- (எனவே நின்னருளைத்)
தருவாயாக.
தூது சென்ற கிளி, பெண் ஆகியோரின் தவறோ? அவளைப் படைத்த பிரமனின்
தவறோ? தெரியவில்லை. என் பெண் எப்போதும் உன்னையே எண்ணி
இன்பத்தை இழந்து துன்பத்தில் வாடுகிறாள். வந்து அருள்புரிவாயாக - எனத்
திரண்ட பொருள் கொள்க.
95. தடங்கரை - பெரியகரை, தாரென - மாலையென, பொருநை நதி கோவிலைச்
சுற்றி மாலையெனக் கிடத்தல் காண்க, காவி - குவளை மலர், வனப்பு - அழகு.
96. கார் முருகுக் கூந்தலே - மேகம் போன்ற கரிய நிறமும் மணமும் பொருந்திய
கூந்தலையுடையவளே, தாட்டிகமாம் - பெருமையுடைய
97. வெருவினை - அஞ்சவேண்டிய வினை
98. வலவேலவன் - வெற்றிவேலன், கலவீர் – சேராதீர். சாறுபொலி –
திருவிழாவால் பொலிவு பெறும்
100. மறுவில் - குற்றமற்ற, வியனார் - பெருமை மிக்க.
(முற்றும்)
------------------
குறுக்குத்துறைக் குறவஞ்சி நூல் வெளியீட்டு விழா
உ
குமரகுருபரன் துணை
இடம் :- ஸ்ரீ காந்திமதிஅம்பாள் திருக்கோவில்,
ஊஞ்சல் மண்டபம், திருநெல்வேலி.
காலம்- 16-8-1972 புதன்கிழமை, மாலை 6-30 மணி
திரு. சி. சுப்பிரமணியன் M. A. (பாராட்டுநர்), புலவர் சி. காசிவிசுவநாதன் (பாராட்டுநர்),
வித்துவான் திரு. கா. மாயாண்டி பாரதி, M.A., M.O.L. (விழாத் தலைவர் &
நூல் வெளியீட்டாளர்), சிவமணி புலவர் ம. சிவசம்பு (வரவேற்புரையாளர்),
கவிஞர் சிவதாசன் என்ற புலவர் தி. சு. ஆறுமுகம் (நூலாசிரியர்),
திரு. A. சண்முகசுந்தரம் B.A. (நூல் அச்சேறப் பொருளுதவியவர்),
திரு. ப. இலக்குமணன் (அறங்காவலர் தலைவர்- பாராட்டுநர்),
கவிஞர் மு. சு. சங்கர் (விழா நிர்வாகி),
திரு. V.T.A. சேவுகப் பாண்டியன் (கோவில் நிர்வாக அதிகாரி - தொடக்கவுரையாளர்).
------------
குறவஞ்சி நூல் பற்றிய அறிஞர்
பெருமக்கள் பாராட்டுக்கள்
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்தம் வாழ்த்துரை:
குறுக்குத்துறைக் குமரன் மீது அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பாடிய ஆசிரியர் தி. சு ஆறுமுகம் அவர்கள்
அதனைத் தொடர்ந்து "குறுக்குத்துறைக் குறவஞ்சி" என்ற அருமையான நூலைத் தமிழுலகத்திற்கு
இயற்றித் தந்துள்ளார். மரபு வழுவாக் கவிதை வளமும், பக்தி மணமும் செறிந்திருப்பதை இந்நூலைக்
கற்போர் உணர்வர். இறைவனைப் பாடும் தொழில் பூண்ட ஆசிரியர், வித்துவான் தி. சு. ஆறுமுகம்
அவர்களுக்கு எல்லா நன்மைகளும் பெருக திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
குன்றக்குடி, இங்ஙனம்
4-6-1972 குன்றக்குடி அடிகள்
------------------
2. தவத் திரு சுந்தர சுவாமிகள்தம் சாத்துகவிகள்:
(நேரிசை வெண்பா)
கட்டியக் காரனுலா காணும்பெண் மோகினி
தட்டிலாப் பாங்கி தனிக்குறத்தி - வெட்டுசிங்கன்
சிங்கியெனும் பாத்திரங்கள் சேர்த்திக் குறவஞ்சி
இங்குகுறுக் குத்துறைக் கே.
சிவதாசன் ஆறுமுகன் செப்பினான் செவ்வேள்
எவராலும் போற்றும் எழிற்சேய் - உவமானம்
இல்லாத வேலப்பன் எல்லார்க்கும் மேலப்பன்
நல்லாடல் சேர்த்து நயந்து.
கௌமார மடாலயம், கோயம்புத்தூர் - 61 சுந்தரசுவாமிகள்
31-5-1972 ஆதீனகர்த்தர்
--------------------------------------------------------------------------------------------------
3. திரு முருக கிருபானந்த வாரியார் தம் முன்னுரை.
"புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி, அவியகத்துறைகள் தாங்கி
ஐந்திணை நெறியளாவிச் சவியுறத் தெளிந்து தண் என்று ஒழுக்கம் தழுவியது சான்றோர் கவி"
என்று கம்ப நாடர் கழறுகின்றார்.
இத்தகைய புலவர்மரபில் வந்தவர் வித்துவான் திரு தி. சு. ஆறுமுகம் (கவிஞர் சிவதாசன்)
அவர்கள். இவர் பல நூல்கள் எழுதித் தமிழுக்குஞ் சைவத்துக்கும் உதவி செய்துள்ளார். சிறந்த
பண்பும், பரந்த மனமும், வாய்மையும், தூய்மையும் படைத்தவர். இவர் பாடும் பாடல்கள் தேன்
போல் தித்திக்கும் இன்சுவையுடையனவாய், எத்திக்கும் மதிக்கத் தக்கனவாய், பத்திக்கும்
முத்திக்கும் வழிசெய்வனவாய் விளங்குகின்றன. இவர் பாடியுள்ள குறவஞ்சி மிகவும் எளிமையான
நூல். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. இந்நூல் நடை யழகும் தொடையழகும் கொண்டு
விளங்குகின்றது.
(நேரிசை வெண்பா)
தூய குறுக்குத் துறைக்குற வஞ்சிநூல்
ஆய புகழ்மிகுந்த ஆறுமுகன் - சேயருளால்
தித்திக்கச் செப்பினான் சித்திக்கு வித்தாகும்
எத்திக்கும் ஏத்து மினிது.
சென்னை அன்பன்
21-6-72 கிருபானந்தவாரியார்
-------------------------------------------------------------------------------------------
4. திரு. கீ. இராமலிங்கனார் அவர்களின் அணிந்துரை:-
‘நுண்பெரும் புலமை, முன்னைக் காலத்தோடு முடங்கி விட்டது. அவ்வரு நிலையையணுகுவார்
இந்நாளில் எவருமிலர்' எனும் ஏசற்பேச்சை இக்கவியரசர் அவர்கள் பொய்மைப் படுத்தி
விட்டார்கள். முத்தமிழும் விரவிய இவ்விலக்கியப் பூஞ்சோலையுட் புகுந்து இன்பமுறும்
பேறு, இக்காலத்துத் தண்தமிழ்ச் சுவைஞர்களுக்கேயன்றி, இனிவரும் நெடுங்காலத்துத் தமிழ்ப்
பாங்குணர்வுடையார் பலருக்குங்கூட, இவ்வினிய நறு நூலால் இலங்கு தேனூற்றாகத் திகழ்ந்து
வருமென்பது திண்ணம்.
சென்னை கீ. இராமலிங்கம்
6-6-72
--------------------------------------------------------------------------------------------------
5. திரு. அ. மு. பரமசிவானந்தம் M.A.அவர்களின் அணிந்துரை:-
வித்துவான் தி. சு.ஆறுமுகம் தமிழுள்ளம் வாய்ந்த நல்ல கவிஞர். இறைவன் உயர்பதம் பாடிப்பாடி
உளம் மகிழ்பவர். குறுக்குத்துறைக் குமரன் பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் இன்று குறவஞ்சி
பாடுகிறார். குறவஞ்சி நெல்லை நாட்டுக்கே உரிய சிறப்பினைப் பெற்றது. நெல்லைத்
தலைநகர் வாழ் நம் ஆசிரியர் குறுக்குத்துறைக் குறவஞ்சி பாடியுள்ளார். குறவஞ்சி இலக்கண
மரபுக்கேற்ற வகையில் பல்வகை அணிகளும் பாங்குறப் பொருந்தப் பாடியுள்ள ஆசிரியரின்
திறம் பாராட்டுக்குரியதாகும்.
தமிழ்க் கலை இல்லம் அ. மு. பரமசிவானந்தம்
சென்னை 20-5-1972
-------------------------------------------------------------
6. இசைமணி கா.சங்கரனார் அவர்களின் அணிந்துரை.
கவிஞர் தி.சு.ஆறுமுகம் அவர்கள் முத்தமிழில் உயர்ந்த அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்கள்
என்பதை இந்நூலில் இயற்பாவினங்களும். இசைப்பாவினங்களும் நாடக உருக்களும் நிறைந்து
காணப்படுவதின் மூலம் தெள்ளிதின் விளங்கிக் கொள்கின்றோம். முத்தமிழில் ஆர்வமுடையவர்கள்
மட்டுமன்றி மற்றையோரும் எளிதிற் கற்று இன்புறுமாறு இனிய எளிய நடையில் இந்நூலை
ஆக்கித் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்துள்ளார்கள் அவர்கள் பணி பாராட்டுக்குரியது. அவர்கள்
தொண்டு சிறப்பதாகுக.
வடக்கு ரதவீதி கா.சங்கரனார்
திருநெல்வேலி-6 30 – 6 - 72
-------------------------------------------------------------
7. பாலகவி R.A. பிரமநாயகம் பிள்ளை
(அறுசீராசிரிய விருத்தம்)
வள்ளல் முருகன் திருப்புகழை
மனதிற் கொண்ட பரவசத்தால்
தெள்ளத் தெளிந்த புலவருளம்
திகட்டும் படியாய்ச் சொல்லினிய
பிள்ளைத் தமிழைச் செய்தளித்தார்
பெருமைக் குரிய ஆறுமுகம்
கொள்ளை யின்பக் கவிமுழுதுங்
கூர்ந்து படித்தேன் உணர்விழந்தேன்.
உன்னும் நினைவிற் செயன்மொழியில்
உணர்வற் றுறங்கும் போதினிலும்
கன்னற் பாகிற் செந்தேனில்
கனிகள் கலந்த சுவையன்ன
மன்னும் இனிய செந்தமிழால்
வள்ளல் உருமா மலையன்மேல்
சொன்னான் அரிய குறவஞ்சி
தோன்றல் புலவர் ஆறுமுகம்.
(நேரிசை வெண்பா)
நன்றே புரிந்து நயனிலதை நானிலத்தில்
அன்றே மறந்திங் கரியதமிழ் - ஒன்றே
உயிரெனக் கொண்ட உறுதி படைத்த
வயிரமன ஆறுமுக! வாழ்.
25, மேட்டுத்தெரு பாலகவி
நெல்லை நகர் R.A. பிரமநாயகம் பிள்ளை
16-8-72
------------------------------------------------------------------------
8. தி. செ. முருகதாச சுவாமி
(குறள் வெண்பா)
குறுக்குத் துறைவேள் குறவஞ்சி நூலின்
சிறப்புக் கவியிதுவாந் தேர்.
(நேரிசை வெண்பா)
குறுக்குத் துறைவேள் குறவஞ்சிப் பாடல்
பொறுக்கு மணியாய்ப் புகன்றான்-செறுக்ககலுஞ்
சிந்தைத் தெளிவார் சிவதாசன் ஆறுமுகன்
விந்தைத் தமிழுயர்வா மே.
பிள்ளைத் தமிழ்முன்பு பேசிக் குறவஞ்சி
கள்ளைப்போ லின்று கழறினாய் - கிள்ளைத்
தமிழ்த்தண்ட பாணிமுனம் சாற்றுமவை யின்பில்
அமிழ்த்தவெளி யாம்வகைசெய் வாய்.
கெளமாரமடம் நின்றன்
திருவாமாத்தூர் தி. செ. முருகதாச சுவாமி
20-10-72
-------------
9. சு உமைதாணுப்பிள்ளை
(நேரிசை வெண்பா)
குறுக்குத் துறைக்குமரன் குற்றங் குறைகள்
பொறுக்கும் அவனையே போற்றும் - கிறுக்கன்எம்
ஆறுமுக மேதையை வாரியார் ஆய்ந்ததற்பின்
வேறுமுக மன்என் விளம்பு
அள்ளுந் தமிழில் குமரன்மேல் ஆறுமுகம்
பிள்ளைத் தமிழைப் பரிந்தளித்தான் - வெள்ளையாய்
கற்றாருங் கல்லாருங் காலமெல்லாம் வாயாரப்
போற்றிப் பரவிட வே.
குறுக்குத் துறையிற்கண் கோயில்கொண் டான்மேல்
சிறக்கக் குறவஞ்சி செய்தான் - உருக்கமுடன்
பக்திச் சுவைசொட்டப் பாடுகின்ற ஆறுமுகம்
எக்காலம் வாழ்க இனிது.
தேரூர், அன்பு
நாகர்கோவில், சு உமைதாணுப்பிள்ளை
21-10-72
--------------------------------
10. வித்துவான் சு. ஆறுமுகம்
அன்பு கெழுமிய ஐயா,
வணக்கம். நலம் விழைதலும் அதுவே, நீங்கள் அருள் கூர்ந்து அனுப்பிய "குறுக்குத் துறைக் குறவஞ்சி'
நூல் பெற்றேன். நும்தம் பாநலமும் நாநலமும் சுவைத்து மகிழ்ந்தேன். சென்னையில் நீங்கள் பாடிக்
காட்டியவாறுபோல பாடக்கேட்டு இன்புறும் அவாவுடையேன். - திருவருள் கூட்டுவிப்பின்
விரைவில் அப்பேறு பெறுவேன். உங்கள் தாளாண்மையும் வேளாண்மையும் மேலும் மேலும்
சிறக்கப் பன்னிருகைப் பெருமான் பதம் இறைஞ்சி நிற்கின்றேன்.
ஈஸ்வரபுரம் தெரு அன்பன்
கோட்டாறு, நாகர்கோவில்-2 வித்துவான் சு. ஆறுமுகம்
27-10-72
-----------------------------
11. வித்துவான் பா.சந்திரசேகரன் பிள்ளை
அன்புகெழுமிய நண்பர் அவர்கட்கு,
வணக்கம். நலம் விழைவதும் அஃதே. தாங்கள் ஆக்கிய குறுக்குத்துறை குமரன்பிள்ளைத் தமிழ்,
குறுக்குத்துறைக் குறவஞ்சி ஆகிய இரு புத்தகங்களும் கிடைக்கப் பெற்று, ஊன்றிப் படித்தேன்.
தொடை நயமும், நடை நயமும், சொல் நயமும், புராணக் கருத்துகளும் மிளிரக் கண்டேன்.
தங்களைப் போன்ற அருட்கவிஞர்கள் ஒரு சிலரே இம்மண்ணில் தோன்றுகின்றனர். செந்திற்
கந்தவேள் சகல நலங்களும் அருள்வானாக.
வீரராகவபுரம் தெரு செஞ்சொற்செம்மல்
திருச்செந்தூர் வித்துவான் பா.சந்திரசேகரன் பிள்ளை
6-11-1972 தலைமைத் தமிழாசிரியர்
--------------------
12. எழில் முதல்வன்
நன்றியும் வாழ்த்தும்
கவிசிவ தாச உங்கள் கவிமலர்ச் சுவடி பெற்றேன்
புவிமன்ன னாயி ருந்தால் பொன் நூறு பரிச ளிப்பேன்
நவநவ மான இன்பம் நல்கிடும் பிரபந் தங்கள்
தவரும் லின்னும் பாடித் தருதமிழ் வளர்த்து வாழ்க.
மாநிலக் கல்லூரி அன்பன்
சென்னை-5 எழில் முதல்வன்
2-11-1972 தமிழ்த் துணைப் பேராசிரியர்
------------
13. கவிஞர் ப. சிவராமகிருஷ்ணன்
குறுக்குத் துறைவாழ் குமரனுக்குக்
கொஞ்சும் தமிழில் குறவஞ்சி
சிறக்கப் பாடி மயங்கவைத்துச்
செந்த மிழன்னை சிரிக்கவைத்தாய்
மறக்க முடியா ராசப்பர்
மரபில் நின்றே பேசிவிட்டு
மறக்கச் செய்தாய் அன்னவரை
மக்கள் உன்னை என்னசொல்வார்!
தேனைக் குழைத்தே சொல்லிணைத்துத்
தேடற் கரிய பொருளணைத்து
ஊனை உருக்கும் கவிகோர்த்து
ஓசை யின்பம் மிசைபோர்த்து
ஞானக் கடலோன் குறவஞ்சி
நாட்டிற் களித்தாய் திறமிஞ்சி
ஏனைக் கவிஞர் இதைப்பார்த்தால்
எழுதுங் கவியைச் சிதைப்பாரே.
29 பிள்ளைமார் தெரு | கவிஞர் ப. சிவராமகிருஷ்ணன்
அருப்புக்கோட்டை 21-10-72
------------------------------------------------------------------------------------
14. கோவை. இளஞ்சேரன்
அன்பார்ந்த கவிஞரே,
வணங்கி மகிழ்கின்றேன். நலம் நலமே பொலிக. தாங்கள் அன்புகந்தனுப்பிய பிள்ளைத்தமிழ்,
குறவஞ்சி எனும் இரு நூல்களும் கிடைக்கப் பெற்றேன். அவ்வப்போது பார்த்துச் சுவைத்து
இரு நூல்களையும் நாகைத் தமிழ்ச் சங்க மறைமலையடிகளார் நூலகத்தில் இணைப்பேன். தங்களது
தமிழ்த் தொண்டு சிறக்கவும், தக்க புகழ் பெறவும் தாங்கள் நீண்ட வாணாள் பெற்றொளிரவும் நாகைத்
தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சார்
பிலும் என் சார்பிலும் பாராட்டி வாழ்த்துகின்றேன். வணங்கி அமைகின்றேன்.
நாகப்பட்டினம் அன்பன்
2-1-1972 கோவை. இளஞ்சேரன்
2003-ஐப்பசி 17.
---------------------------------------------------------------------------------------------------------
15. புலவர் ம.முத்தரசு
குறுக்குத் துறைக்குற வஞ்சிக் கிழவ!
பெருக்கெடுத் தோடி வருங்கவி யருவியே
கன்னித் தமிழின் கவிதைக் காவல
நன்னர் நெஞ் சுடையோய் நறுந்தமி ழமுதாய்
ஆக்கிய நன்னூல் பெற்றேன் கற்றேன்
தேக்கிய இன்பச் சுவைகள் உண்டேன்
அன்னைத் தமிழுக் கணிசெயு மாறு
பேறு பெற்றனை நூறாண்டு வாழ்ந்து
பேரும் புகழும் பெறுகநீ நன்றே.
தளவாய்புரம் தங்களன்புள்ள
27-11-1972 புலவர் ம.முத்தரசு
-----------------------------
16. சு. அரங்கசாமி
செஞ்சொல் வளம்பொருளும் விஞ்சு இசைநயமும்
சேர்ந்து கலந்தகுற வஞ்சியே - மனம்
ஆர்ந்து நிறைந்த தெழில் மிஞ்சியே - தினம்
ஆறுமா முகன் வீறுபேர் புகழ்
கூறு வோர்பயில் மாறு முத்தமிழ்
குயின்ற பக்திநூல் தன்னையே - அன்பில்
குழைத்துக் கொடுத்தசெயல் நன்மையே.
முன்னைத் தமிழ்மரபு தன்னைத் தினம் நினைந்து
முருகனெழில் சிறக்கக் கூட்டிடும் -அருள்
முனைப்பு முளைக்க வழிகாட்டிடும் - குறம்
முற்று மோதிநான் பெற்றி டும்பொருள்
கற்ற வர்மனத் துற்ற செம்பொருள்
கவினார் திருவுருமா மலைவளம் - காக்கும்
கந்தனைப் பற்றுமோர் கலையுளம்.
தமிழாசிரியர் இன்னணம்
புதியம்புத்தூர் தங்கள் அன்பு மாணவன்
12-10-1972 சு. அரங்கசாமி
---------
17. ஆ.சுந்தரம்
செந்தமிழ்த் தெய்வம் செந்தூர் முருகன்
திருப்பெயர் கொண்ட செம்மல்தாம்
யாத்த குறுக்குத் துறையின் பிள்ளைத் தமிழும்
குறவஞ் சியும்யான் கிடைத்திடப் பெற்றேன்
அன்புக் கடலே ஐயா நுமது
முன்னாள் மாணவன் முனைந்தவை கற்றேன்
பயின்றேன் பலகால் பக்தி நிறைபொருட்
சுவைதரும் பாங்கில் திளைத்தேன் தேறி
வண்டமிழ்க் காவியப் புலவோய் நின்றன்
தண்டமிழ்த் தொண்டுகள் சாலவும் ஓங்குக
வெற்றி வேலவன் விமலன் அருளால்
கொற்ற மோங்கிடக் குவித்தனன் கரமே.
இரயில்வே காலனி அன்பு மாணவன்
பொன்மலை ஆ.சுந்தரம்
திருச்சி-4 } 28-11-72
--------
18. க. சிவசங்கரன்
பேரன்புடையீர்,
தாங்கள் அனுப்பிய பிள்ளைத்தமிழ், குறவஞ்சி ஆகிய இரு நூல்களையும் படித்தேன். எடுக்க
எடுக்க அமுது கிடைக்கும் அமுதசுரபி போன்ற தங்கள் நூல்களைப் படித்து இறும்பூதெய்தினேன்.
இது போன்று பல நூல்களை எழுதி என் போன்றாரும் படித்துணரச் செய்யும் தங்கள் கவித்திறனும்
ஆயுளும் நீடுபெற ஆறுமுகமும் ஒருமுகமாய்த் திகழும் அமுதவேலவன் துணை செய்யட்டும்.
தருமபுரி-2 அன்பு
2-11-72 க. சிவசங்கரன்
--------------
19. வித்துவான் பு. தியாகராசன்
கவிஞர் சிவதாசன் கண்டெடுத்த பிள்ளைக்
கவித்தமிழைக் கேட்டினித்தேன் கானக் குறத்தி
கவிமகன்பால் காதல் இசைபாடக் கேட்டுச்
செவியினித்து நின்றேன் திளைத்து.
சிவப்பிரகாச வித்தியாலயம் அன்புடன்
தச்சநல்லூர் வித்துவான் பு. தியாகராசன்
11-11-72 தலைமையாசிரியர்
--------------
20. ந. டேவிஸ் முத்துசுவாமி
அன்பார்ந்த ஐயா அவர்கட்கு,
தாங்கள் அனுப்பிய குறவஞ்சிப் பிரதிகள் கிடைக்கப் பெற்றேன். இனிமை எளிமை
கருத்து நயம் மிகச் சிறப்புற்றிருக்கக் கண்டேன். தாங்கள் எடுத்துக் கொண்ட பணி மேன்மேலும்
சிறப்புற்றோங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
பேரன் புரூக் உயர்நிலைப் பள்ளி, சுரண்டை. ந. டேவிஸ் முத்துசுவாமி
1-12-1972 தமிழாசிரியர்.
--------------
21.தி. செ. முகம்மது அபூபக்கர்
(நேரிசை வெண்பா)
சீரார் குறுக்குச் செழுந்துறை சேர்குறம்
யாரார் மனத்தும் இனிதொலிக்கும் - பேரார்
சிவதாசன் ஆறுமுகன் சிந்தைகனிவிக்கும்
தவத்தாசன் வாழ்க தழைத்து.
அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, ஏர்வாடி இங்ஙனம்
தி. செ. முகம்மது அபூபக்கர்
தலைமைத் தமிழாசிரியர்
2-12-1972.
--------------
22. வித்துவான் C. சிங்காரவேலன், தமிழ்ப் பேராசிரியர் மன்னம்பந்தல்
அன்புடைப் பெரியீர்,
வணக்கம். நலம். தாங்கள் அனுப்பித்தந்த குறுக்குத்துறை பற்றிய இருகவிதை நூல்களையும்
பெற்றுக் கொண்டேன். பிள்ளைத் தமிழும் குறவஞ்சியும் போன்ற அரிய இலக்கிய வகைகளை
இப்போது யார் மகிழ்வுடன் பின்பற்றிக் கவிதை இயற்றுகிறார்கள்! மனம் போன போக்கிலெல்லாம்
சொற்களைக் கோலம் போட்டுப் பிரசார பலத்துடன் மகாகவிகள் ஆகிவிடுகிறார்கள். யாப்பறியாப்
புலவர்களால் தமிழ்த்தாய் படும் வேதனை விளம்புந்தரத்ததன்று. “மரபுநிலை திரியாத மைந்தர்களும்
தனக்கு இன்னும் இருக்கிறார்கள்" என்று தமிழன்னை நினைந்து இன்புறக் கூடிய நிலை உள்ளது.
தங்களுடைய பாட்டுக்கள் நன்றாக அமைந் திருக்கின்றன. பிற பிறகு, நன்றி
அன்பன்
9-12-72 சொ. சிங்காரவேலன்
A.V. C. கல்லூரி , மாயூரம்
--------------
23.மதுரை S. சோமசுந்தாம், திருக்கருகாவூர்
உயர் திரு அண்ணா அவர்கட்கு,
சோமு வணக்கம் பல. நலம் நலமறிய அவா. இப்பவும் பக்தி நிறைந்த தங்களது மூன்று
பாடல் புத்தகங்கள் (பிள்ளைத் தமிழ், குறவஞ்சி, கொச்சகக் கலிப்பா) கிடைக்கப் பெற்றேன். மிக்க
மகிழ்ச்சி கொண்டேன். முருகன் அருளால் என் இசை அரங்குகளில் பாடச் சித்தமாய் இருக்கின்றேன்.
முருகன் அருளும் தங்கள் அன்பும் ஆசியும் இருக்கும் என்று நம்புகின்றேன்.
இசைமணி இல்லம் இப்படிக்குத்
திருக்கருகாவூர், தஞ்சாவூர் R. M. S. தங்கள் அன்புள்ள
7-12-72 மதுரை சோமு.
--------------
24. "சிவகாசி முரசு” - எனும் தமிழ்த் திங்களிதழ்
(15 - 11 - 1972) 19-ம் பக்கத்தில் வெளியான பாராட்டுரை:-
"தமிழ்ச் செய்யுட் துறையிலே குறவஞ்சி எனும் அம்சம் காப்பியத்திற்கு நிகரானது எனலாம்.
இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் ஒருங்கிணைந்த வகையில் இயற்றப்படும் இத்துறைக்கு
அவசியமான திறமை அசாதாரணமானது தான். நெல்லையி லுள்ள குறுக்குத்துறை, குமரவேளுக்குரிய
திருத்தலங்களுள் ஒன்று. ''குறுக்குத்துறை குமரன் பிள்ளை தமிழ்'' என்றொரு நூலை முன்பே
இயற்றியுள்ள இந்நூலாசிரியருக்குக் குறவஞ்சி பாடுவது அரிதானதல்ல. ஆனால் நூலில் பொதிந்துள்ள
நயமும், இசையின்ப மும், உளக் கிளர்ச்சி தரும் நிகழ்ச்சிக் கோர்வைகளும் அவரது அரும் புலமையை
வெளிப்படுத்தி, நமக்கு அவர் மீது உள்ள அறிவுத் திட்ப மதிப்பீட்டை அதிகரிக்கின்றது. சமய
இலக்கிய வரிசையில் நல்லதொரு இடத்தை வகிக்க வேண்டிய இந்நூல், இலக்கிய ரசனையற்ற
சமயவாதிகள் அல்லது சமய ஈடுபாட்டின்பமற்ற இலக்கியவாதிகள் ஆகியோரும் படித்து இன்புறத்
தக்கதாக அமைந்துள்ளது".
--------------
25. பம்பாய்த் தமிழ்ச் சங்க வெளியீடாகிய "ஏடு" எனும் மாத இதழின்
(1972, டிசம்பர், 15) பாராட்டுரை:-
வைதாரையும் வாழ்விக்கும் அருளாளனாக விளங்கும் முருகனின் புகழ் பாடும் நூல்கள் பலபல.
இசையோடு தமிழ் பாடும் எவரும் முருகனின் திருப்புகழினைப் பாடவாய்ப்புள்ளவர்கள். அவ்வகையில்
அண்மையிலே நெல்லை நகர் வித்துவான் திரு. தி. சு. ஆறுமுகம் அவர்கள். இனிய தமிழ்ப் பாடல்களினால்
அமைந்த குறுக்குத்துறைக் குமரன் பிள்ளைத்தமிழ் என்ற நூலையும் குறுக்குத்துறைக் குறவஞ்சி என்ற
நூலையும் வெளியிட்டுள்ளார்கள். பக்தி உணர்வையும், கவிதை மரபையும், இனிய சொல்லாட்சியையுங்
கொண்டு அமைந்துள்ள இந்த இரு நூல்களும் சமய நெறி அன்பர்களுக்கு குறிப்பாக முருகனடியார்களுக்கு
பெரிதும் பயனுடையதாக அமையும்.
--------------
இந்நூலாசிரியரின் நூல்கள் - அச்சேறியவை
1. முத்துராமலிங்கம் மும்மணிமாலை
2. குறிக்குத்துறைக்-குமரன் பிள்ளைத் தமிழ்
3. குறுக்குத்துறைக் குறவஞ்சி
4. குறுக்குத்துறைக் கொச்சகக்கலிப்பா
5. வீரைத் தலபுராண வசனம்
6. குறுக்குத்துறைக் கலம்பகம்
அடுத்து வருபவை :
1. குறுக்குத்துறை-சிலேடை வெண்பா
2. குறுக்குத்துறை-பதிற்றுப்பத்தந்தர்தி
3. குறுக்குத்துறை-கலித்துறையந்தாதி
4. திருமுருகன் திருநூறு
5. திருவுருமாமலை -இருபது, பொன்னூசல், பொற்சுரும்பு
6. வேய் நாதகர் சதம்
7. கழை முத்தர் கலிவெண்பா
8. காந்திமதி இரட்டை மணிமாலை
9. கணநாதன் கலிவெண்பா
10. பணநாதன் நான்மணிமாலை
11. வேணியூர் வணிகன்
12.ஆட்டனத்தி வெண்பா
13. மஞ்சள் விடு தூது
14. தனிப்பாடல்கள் முந்நூறு
மற்றும் பல.
--------------
This file was last updated on 4 Oct. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)