pm logo

ஞானரத்தினக் குறவஞ்சி
ஞான ஆனந்தக்களிப்பு & திருமெய்ஞ்ஞான சரநூல்களுடன்
(பீர் முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லா எழுதியது)

njAnarattinak kuravanjci
by pIr mohamad sahib oliyullA
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஞானரத்தினக் குறவஞ்சி
ஞான ஆனந்தக்களிப்பு & திருமெய்ஞ்ஞான சரநூல்களுடன்
(பீர் முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லா எழுதியது)

Source:
பிஸ்மில்லா ஹிர்றஹ்மா னிர்றஹீம்
"ஞானரத்தினக் குறவஞ்சி"
தற்கலை
மெய்ஞ்ஞான சொரூபராகிய காமிலொலி ஆரிபு பில்லாஹ்
பீர் முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியது.

இதில் ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக்களிப்பு,
திருமெய்ஞ்ஞான சரநூல் ஆக இம்மூன்றும் சேர்ந்திருக்கின்றன.

சென்னை - திருவல்லிக்கேணி,
ஹாஜீ M. A. ஷாஹுல் ஹமீது & ஸன்ஸ், அவர்களுடைய முயற்சியால்,
சுத்தமான பழைப பிரதிக்கிணங்க சீர்திருத்தி, தங்களது
ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
சுத்தப் பதிப்பு.
1947 அணா 5
S. H. Press, Madras, P. I. O. No. MS 178. D. 25-11-1947,
-------------

ஞானரத்தினக் குறவஞ்சி.

கொச்சகக் கலிப்பா.

பொன்னுலகு பொருந்துமனப் பொருளறியத் தனமறிய
மின்னுலகில் மெஞ்ஞானம் விளங்கக்குற வஞ்சிதனை
உன்னாமத் தன்னினைவி லுன்னியுதிப் பொருள்நான் காயத்
தன்னிரையைத் தன்னினைவாய்த் தரிப்பதுவே காப்பாமே.

கண்ணிகள்.

ஆதிக்கு முன்ன ரநாதியு மென்னடி சிங்கி அது
அந்தக் கருகுழி முந்த விருளரை சிங்கா.       1

யாய்வந்த வரும்பொரு ளேதடி சிங்கி அது
சோதியி லாதி சொருபா யெழுந்தது சிங்கா.       2

சோதியி லாதி சொருபான தெப்படி சிங்கி அது
வேதமாய் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா       3

முப்பொரு ளென்றுநீ முன்சொன்ன தாரடி சிங்கி அது
அப்பனு மாயு மாதையாம் நாமடா சிங்கா.       4

எப்படி யுலகத்தி லிப்படி யுருவானோம் சிங்கி அது
அப்பன் தன்னட்புக் கொப்பிய தாயாலே சிங்கா.       5

பராப ரத்தினிற் பஞ்சவன்ன மேது சிங்கி அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா.       6

ஒன்றுக்கு ளைவர்க ளுண்டான தெப்படி சிங்கி அது
வொன்றோடே யொன்றாக வோடி யினைந்தது சிங்கா.       7

மூலக் குகைக்குள்ளே முச்சுட ரேதடி சிங்கி அது
நாதத்தி லைம்பூத மன்பா யுதித்தது சிங்கா.       8

மூலக் குகையென்னுங் கோட்டைக் கரசர்யார் சிங்கி அது
முப்பொருளொன்றாய் முடிந்த நினைவடா சிங்கா.       9

மூலக் கிழங்கு முளைத்திட மெவ்விடஞ் சிங்கி அது
நாதத்தி லான நடுநிலை யல்லவோ சிங்கா.       10

முன்னே முனையாய் முளைத்திட மெவ்விடம் சிங்கி அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா.       11

பின்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி அது
பெண்ணானு மாகப் பிறந்த தலமடா சிங்கா.       12

இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி அது
இந்த வுடலுக் குபிராதி மூலமே சிங்கா,       13

இந்த வுடலுக்குக் குயிர்வந்த தெப்படி சிங்கி அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா.       14

இந்த உடலுக் குயிரெங்கே நின்றது சிங்கி அது
அந்தர மாயண்ட மாக்கொடி நின்றது சிங்கா.       15

இந்த வுடற்கனி யெந்தக் கொடிக்கனி சிங்கி அது
முந்திய தொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா.       16

மாக்கொடி யென்பதை மானிட ரென்சொன்னார் சிங்கி அது
மட்டி லடங்காத மாதலி மாவடா சிங்கா.       17

எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி அது
வெல்லா முடிந்த பொருள் வழியடா சிங்கா.       18

முன்னே யறிவா லறிவகை யென்னடி சிங்கி அது
முச்சுடர் மூன்று முடலுயிராத்துமா சிங்கா.       19

பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி அது
பேதக மற்ற பெருவெளி யானது சிங்கா.       20

ஆசை கொண்டு நம்மை யாட்டுவ தாரடி சிங்கி அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா.       21

ஆசை பாசபல னனுபோக மாரடி சிங்கி அது
அங்கம் பொருந்திய பங்குமண் ணல்லவோ சிங்கா.       22

தன்னை யறியுந் தலமேது சொல்லடி சிங்கி அது
நண்ணிடை யான நடுநிலை யல்லவோ சிங்கா.       23

என்ன விதமாகத் தன்னை யறிவது சிங்கி அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா.       24

இறையை யறிவது மெப்படிச் சொல்லடி சிங்கி அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா.       25

தன்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா       26

என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி அது
ஒன்றைப் பொருத்தி யொடுங்கி யிருப்பது சிங்கா.       27

என்ன விதமாக வொன்றைப் பொருந்தலாம் சிங்கி அது
எல்லா மறந்து மிருளா யிருப்பது சிங்கா.       28

ஒன்றென்று சொன்ன வுயிர்நிலை யென்னடி சிங்கி அது
னா அதிப்பல முன்னால் நினைவடா சிங்கா.       29

கன்னி யெழுந்து கலந்திட மெவ்விடஞ் சிங்கி அது
முன்னி யெழுந்த வுயிர்நிலை யல்லவோ சிங்கா.       30

ஏங்கும் பாந்த பெரும்பொரு ளென்னடி சிங்கி அது
அங்கிங்கு மெக்கு மகண்ட பெருவெளி சிங்கா       31

அன்று மின்றுமழியாப்பொரு ளென்னடி சிங்கி, யுரு
கண்ணையு மூட விருளழி யாப்பொருள் சிங்கா.       32

ஆங்கார வுடலுக்கு மணிதா ளென்னடி சிங்கி அது
ஒங்கார மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா.       33

ஆணியாய் வந்த வரும்பொரு ளென்னடி சிங்கி முன்
தாணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா.       34

இந்தப் பொருள்வந்த தெந்தவழியடி சிங்கி அது
அந்தக் கதிர்மதி வந்த வழியடா சிங்கா.       35

கத்த னொலிவு கலந்திடமெவ்விடம் சிங்கி வழி
யத்த நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா.       36

உற்ற பொருளுக்கு குயிரெழுத் தென்னடி சிங்கி
நற்சர வாடு நடுநிலை யல்லவோ சிங்கா.       37

எட்டெழுத் தாக வெழுந்த வெழுத்தென்ன சிங்கி அது
மட்டிலடங்கா வடிவட்ட கோணமே சிங்கா.       38

அஞ்செழுத் தாக வமைந்த வெழுத்தென்ன சிங்கி அது
அஞ்சும் பொருந்திய வாகாய வட்டமே சிங்கா.       39

அன்பத் தோரட்சர மறியநீ சொல்லடி சிங்கி அது
வஞ்ச மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா.       40

கற்பக வாசி கலந்திட மெவ்விடஞ் சிங்கி அது
உற்பன மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா.       41

சத்தம் பிறந்திடுஞ் சற்குரு வேதடி சிங்கி அது
உற்ற சுவாச முயிர்நிலை யல்லவோ சிங்கா.       42

கண்டு தொழுஞ்சிவ காரண மேதடி சிங்கி நம்மை
யுண்டு படுத்திய வுள்ளொளி வானதே சிங்கா.       43

எப்படிக் கண்டே யிறையை வணங்கலாம் சிங்கி அது
நட்புடன் ரண்டு நடுநிலை காண்பது சிங்கா.       44

நடுநிலை யானதை நாடுவதெப்படி சிங்கி அது
நாட்டர் தேட்ட மோட்ட மாட்ட மொன்றாகினால் சிங்கா.       45

தேட்டமு நாளுந் திருந்துவ தெப்படி சிங்கி அது
திருவைப் பொருந்தி யொருமித் திருப்பதே சிங்கா.       46

ஒருமித்திருக்கின்ற வோரிட மெவ்விடம் சிங்கி அது
வொன்றா மிரவும் பகலு முதிப்பிடம் சிங்கா.       47

இரவும் பகலு மொன்றான தெவ்விடஞ் சிங்கி அது
வெப்பொழுது மிருளா யிருப்பது மூளையே சிங்கா.       48

இரவும் பகலும் பிறப்பிட மெவ்விடம் சிங்கி விகுளி அது
அதித்துன்னி வந்த தடிமூலம் சிங்கா,       49

இரவும்பகலு மெழுந்திட மெவ்விடம் சிங்கி அது
ஏகாந்த வுன்னல்வந் தேறிய தாமறை சிங்கா.       50

இரவும்பகலும் பிரிந்திட மெவ்விடம் சிங்கி அது
வெழுந்தறு கோண மிடம்வலம் வாசியே சிங்கா.       51

இரவும்பகலும் நின்றாடிய தெவ்விடம் சிங்கி அது
வெழுந்து நின்றாடுஞ் சுழிமுனை மண்டலம் சிங்கா       52

இரவும் பகலு மிருப்பிட மெவ்விடம் சிங்கி அது
வீராறு மோடிய வோரான நான்காட சிங்கா.       53

இரவும் பகலு முதிப்பிட மெவ்விடம் சிங்கி அது
வேறுமெட் டங்குல மிருவிழி நடுநிலை சிங்கா.       54

இரவும் பகலென றென்னதைச் சொல்லலாம் சிங்கி அது
இரவு பகலிட பின்கலை வாசியே சிங்கா.       55

இடகலை பின்கலை யென்னதைச் சொல்லலாம் சிங்கி அது
இடகலை சந்திரன் பின்கலை சூரியன் சிங்கா.       56

என்னத்தை சொல்லலாம் சந்திரன் சூரியன் சிங்கி அது
இடவலமாக வெழுந்தோடு மூச்சடா சிங்கா.       57

சந்திரன் சூரிய னொன்றான தெவ்விடம் சிங்கி அது
கலையும் பொருந்து நடுச்சுழி மூலையே சிங்கா.       58

என்னத்தி லேபால மேறிநின் றாடுது சிங்கி அது
உன்னுக்குள் வாசி நடனப் புரவிமேற் சிங்கா.       59

என்ன விதமாக வெடுத்துநின் றாடலாம் சிங்கி அது
ஏற்றவு மாற்றவு மிணங்கிநின் றாடிப்பார் சிங்கா.       60

மாற்றிப் பிடிக்க மருந்தென்ன சொல்லடி சிங்கி அது
மாளாமல் மாண்டு மறந்து மிருப்பதே சிங்கா.       61

அட்ட கஜங்க ளறிந்திட மெவ்விடம் சிங்கி அது
எட்டு விதமா யெழுதும் பலனடா சிங்கா.       62

உற்ற ஞானப்பொரு ளுத்தியாய்ச் சொன்னதார் சிங்கி அது
அது உத்தமர் பீருமு ஹம்ம துரைத்தது சிங்கா.       63

ஞானரத்தினக் குறவஞ்சி முற்றுப்பெற்றது.
--------------------

2. ஞான ஆனந்தக்களிப்பு.

தீன் தீன் முஹம்மது தீனே-எங்கள்
தீனெங்கள் தீனெங்கள் தீனெங்கள் தீனே
தீன்தீன் முஹம்பது தீனே

தீனபி யன்ன குருவாய்த் - திசை
      ஆயிரத்தெட்டும் ஜபறூத்தி லாடித்
தானொளி தான்கண்டு கூவ- இறை
      தானவ னாசையால் நோக்கியே பார்க்க
ஆன புகழிறை யாசை-அந்த
      அன்னத்தின் மீதி லப்போர் உறிக்கத்
தானே சுடராய் வழிந்து -கடற்
      றன்னிற் றறித்தானைக் கண்டுகொண்டேனே       (தீன்)

தன்னாசை யால்வந்த நாதம்- அவன்
      றானே கடலுபி ரோதிய வேதம்
அன்ன தெவையும் படைத்து-வகை
      யாவு முருவுக் குயிராய்ச் சமைத்துப்
பின்னா லேவந்து பிறக்கப்-பல
      கோல மெடுக்கப் பிரபலஞ் செய்து
மின்னிய மங்குல முன்ன-இந்த
      மேதினி நிறெந்தானைக் கண்டுகொண்டேனே       (தீன்)

வானத்தின் மேகம் பொழிய-இந்த
      வையகத் தானிய மெங்கும் நெளிய
ஊனினான் மாதா பிதாவும்- அவ
      னுதிரமே நாதமா யோசை முழங்கி
ஆணோடு பெண்ணு மிணங்கி-வந்த
      வாசையி னவெனொளி வாசந் துலங்கித்
தானத்தில் வந்து தரித்தே-உருத்
      தானெடுத் தானையான் கண்டுகொண்டேளே       (தீன்)

அந்தக் கருவிந்து நாதம்- அதில்
      அன்னை யுதிரமுங் கூடின சூதம்
அந்தக் கருவைந்து பூதம்-அது
      ஐந்தெழுத் தாகுமே யோதிய வேதம்
விந்துக்குள் ளே தழல் நீதம்-அது
      வீசும் புகையிலே யோடுஞ் சுவாசம்
அந்தக் குதிரைமே லேறும்-நந்தம்
      ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே       (தீன்)

உறுபுக ளாயிரத்தெட்டையு மொட்டி
      உச்சித மாளிகை கட்டி- அதில்
வச்சிரத் தால்வளை பூட்டி - வளை
      சரியாமல் நரம்பெல்லாங் கபிராகக் கட்டி
மச்சு வீட் டுலகிற் பிறந்து-கொலு
      மண்ட பத்துக்குள் ளேதானா யிருந்தே
வைச்சுக் கையிற்சூட்ச மாட்டும் -நம்மை
      வகுத்த குதாவையான் கண்டுகொண்டேனே       (தீன்)

கண்டதுங் கேட்டது மல்ல அங்குக்
      கருதி முடிந்த தலங்களு மல்ல
அண்டமும் பிண்டமு மல்ல-நல்ல
      அகார வுகார சிகாரமு மல்ல
மண்டல மூன்றுக்கு எல்ல-மறை
      வாக நின்றிடும் வாசியு மல்ல
அன்றாதி யெங்கு நிறைந்து-நம்மை
      ஆளும் ரஹ்மானை கண்டுகொண்டேனே       (தீன்)

கண்டதுங் கேட்டதுந் தானே- அங்குக்
      கருதி முடிந்த தலங்களுர் தானே
அண்டமும் பிண்டமுந் தானே-நல்ல
      அகார வுகார சிகாரமுந்தானே
மண்டல மூன்றதுர் தானே -மறை
      வாக நின்றிடும் வாசியுந் தானே
அன்றதி யெங்கு நிறைந்து -நம்மை
      ஆளும் ரஹ்மானைக் கண்டுகொண்டேனே       (தீன்)

ஊத்தைச் சடலம் படைத்து-உலை
      யாமலே யுப்புக் கடலைப் புகட்டி
வார்த்தைப் பசப்பிவிட்டு வைத்து-வகை
      யாகவே யொன்பது வாசலு மிட்டு
ஆத்துமா வென்றும்பேர் வைத்து-ஐந்து
      பேரையு மொன்றாக வாடவும் வைத்துக்
காற்றைப் பிடித்தே யடைத்தே-ஆர்க்குங்
      காணாமல் நின்னைக் கண்டுக்கொண்டேனே       (தீன்)

ஓதிய வோங்காரக் கோட்டை-யதி
      லொன்பது வீதி யொழுங்கான தோட்டஞ்
சாதிக்குதிரைதான் வேகஞ்-சவு
      தாரிமேற் கொண்டு நடத்தினா னீதம்
வீதிக்கு வீதி குதிரை - விட்டு
      வேடிக்கை யாகப் பரியை நிறுத்தித்
பாதமில் லாப்பரி யேறும் - நம்மைப்
      படைத்த பிரானையான் கண்டுகொண்டேனே       (தீன்)

கொள்ளைக் குதிரைகள் கோடி-அவன்
      கோட்டை யழிக்க வருகுமே யோடி
வெள்ளைக் குதிரைமே லேறி - வீதி
      தப்பா மற்சுற்றிப் பரியை நிறுத்திக்
கள்ளனைக் காவலறை வைத்துத் தானும்
      கள்ளனுக் குள்ளே கலந்தே யிருந்து
உள்ளுற்றுக் கோட்டையை யாளும் நமக்
      குள்ள பிரானையான் கண்டுகொண்டேனே       (தீன்)

உச்சிக்கு நேரே கிழக்கே-நந்த
      மூருக்கு மேலே பெருவெளி தன்னிற்
பச்சைப்பு றவந்து மேயும்-அதைப்
      பாங்குடன் மெல்லப் பழகிப் பிடித்துக்
கச்சைக் கயிற்றாலே கட்டிக்-கலி
      மாவுடன் தேனைக் கலந்து புகட்டி
அச்சமில் லாக்கூட்டி லடைத்து-நந்தம்
      ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே       (தீன்)

உள்ளக் கடலுக்குமேலே-அதி
      லோங்காரமொன் றீமான் வட்டத்துக் குள்ளே
வெள்ளைப்பு றாவந்து மேயும் - அதை
      மெல்லப் பிடித்து விதனப் படாமல்
கள்ளக் கயிற்றாலே கட்டிக்-கலி
      மாவெழுத் தாலே கரைத்துப் புகட்டி
அல்லா திருக்கூட்டி னின்ற - நந்தம்
      ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே       (தீன்)

இன்லென் றெழுத்ததைப் பற்றி - இரு
      வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்
கொல்லன் றுருத்திக்கொண் டூதி-நல்ல
      கோலமாய் மூலக் குகையை யெழுப்பி
வில்லின்மேல் ஞானம்வை யேற்றி- வெகு
      வேகமா யொன்பது வாச லடைத்து
அல்ஹம்தி லொன்றாகி நின்ற-நந்தம்
      ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே       (தீன்)

கோலமா மூலக் குகையைப்-பல
      கோடிசெய் விந்தைக் கடலுக்குமேலே
மேலொளி வாலைந்து கோட்டை-நடு
      வோங்காரமொன் றீமான் வட்டத்துக் குள்ளே
நீலமாய் நின்றதை விட்டு-அதை
      நீங்காத பச்சைநி றத்தையும் விட்டுச்
சீலமாய் நின்ற தெளிவைத்-திற
      மாகக் குதாவையான் கண்டுகொண்டேனே       (தீன்)

ஒன்றுக்கு ளைவர் பிறந்து-இந்த
      உலகத்தை யாண்டே யிருந்தே யிறந்து
ஒன்றையு நால்வரிழந்து - அந்த
      வொன்றையே நால்வருங் கொலுவிற் திறந்து
பண்டுள்ள நீதஞ் செலுத்திப்- பர
      மைந்துமப் போதங்கொன் றாநிறுத்தி
அன்று மின்று மென்று முள்ள-நந்தம்
      தியை நன்றாகக் கண்டுகொண்டேனே       (தீன்)

நூறு நூ றாயிரங் கோடி-காலம்
      அறிவெல்லா மானந்தக் களிப்பாகப் பாடிப்
பாரெல்லாந் தீனவ ரறிய - என்றன்
      வாக்கு மனதுடன் வையகர்க் குரைத்தேன்
பாருள்ள தீன்குலத் தோர்க்கு - இறை
      பாரக் கடலைக் கடுகினைப் போலே
பீரு முஹம்மது சேஞ்சோன்-மிகப்
      பிரியமா யுரைத்திட்டேன் ஆமீன் ஆமீன்       (தீன்)
-------------------

3. திருமெய்ஞ்ஞான சரநூல்.

எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

பொன்னான மெய்ஞ்ஞான சரநூலென்னும்
புகழ்பெரிய சாஸ்திரத்தின் புதுமைதன்னை
இந்நிலத்தி லறியாத மாந்தகர்க்கெல்லா
மெடுத்துரைக்கும் பரிசுதனை யியம்பக் கேண்மோ
முன்னான சாஸ்திரமாங் குசக லத்தின்
முன்னிலையிற் றடியென்ற பெருமை தோன்றக்
கன்னல்ரசச் செந்தமிழின் கவிதை யாகக்
கருத்துறையான் கவலலுற்றே னுலகத் தோரே (1)

உலகவர்க்குச் சரநூலை யொழிப்பில்லாம
லோதும்வகை யேதெவே யுவந்து கேளாய்
நிலைகருமம் நிலையாது நெறியாய்க் கூறும்
நீடுழி வாழ்வாசு நிலைப்ப தோடு
விலங்குவதும் வருங்காலஞ் செல்கா லங்கள்
வியனுறவே நிகழ்காலம் மரண காலம்
கலைபெரிய வின் நூலின் காரணத்தின்
காட்சிதனைக் கருதிப்பார் காணுந் தானே (2)

கருநிலையிற் றறித்தகனற் பொறியின் காட்சி
கதித்துலவும் வாயுவொடு கலந்தொன் றாகி
உருவெடுத்தே யுபிரென்று முடலைச் சூழ
வோடிவருஞ் சாரமாக வுடலுக்குள்ளே
திருநிலையி லைவரையும் பிரியா நாடித்
திசைவாயு திரிகோணமறுகோ ணத்திற்
சுருக்குலைவ தாமசை நூற் சொருகும் வாறாய்ச்
சுழன்றுவரும் ராட்டினத்தின் சுழலைப் போலே (3)

சுழன்றுவரும் மிருகலையு மொன்றே ரண்டாய்
சொல்லுகிற விடகலைசந் திரனே யாகும்
உழன்றுவரும் வலைகலைசூ ரியனே யாகும்
ஒருமித்த விருகளைதான் சுழினைத் தீயாம்
எழும்பிவருஞ் சரமொன்றின் விதமே யஞ்சு
மியல்பாக வியம்புகிறேனறிந்து பாராய்
வளம்பெரிய வாயுவுதான் மேலே நோக்கி
வந்தோடும் நாழிகையொன் றோய்ந்தி டாதே (4)

நாழிகைதா னொன்றரையாய்ப் பூமி யோடு
நலமான கீழ்த்திசையே நளின மாக
நாழிகைதா னொன்றேகால் மூக்கந் தண்டின்
நடுவாக வோடுமது வப்புத் தானே
நாழிகைமுக் காற்பக்க விளிம்பு பற்றி
நன்றாக வோடுமது தேயு வாகும்
நாழிகையா காசமரை நடுவ தாக
நாடாம் லோடுமடா நாளிற் பரே (5)

நாழியொன்றுக் கரையாகக் கலையொன் றுக்கு
நடக்குமினி யறுகலையில் நத்தும்போது
நீனாம லிருகலையுஞ் சேர்ந்தே யோடும்
நிலையாது சுழி முனையே நெருப்பு மாச்சு
நாழிகைதா னொன்றிற்குச் சரத்தி னோட்டம்
நடக்குமடா முந்நூற்றோ டறுப தாக
நாளொன்றுக் கிருபத்தோ ராயி ரத்து
நாடுமறு நூறுசரம் நடக்கும் பாரே (6)

பாரப்பா திங்கள் வெள்ளி புதனே மூன்றும்
பக்குவமாய் விடிகாலஞ் சந்தர னோடும்
சேரப்பா ஞாயிறோடு சனிசெவ்வாயுஞ்
செங்கதிரோ னோடுமடா விடியுங் காலம்
வாரப்பா வினியொருநாள் வியாழன் மட்டும்
வளர்பிறைக்குச் சந்திரனே வளர்ந்தங் கோடும்
கூரப்பா தேய்பிழைக்குச் சூரி யென்றான்
குதிக்கொண்டே போடுமடா கோணந்தானே (7)

தானான வாரமது வேழுஞ் சொன்னேன்
தப்பிவருஞ் சரத்துடைய பயனைக் கேளாய்
வேனான ஞாயிறிலே சரமே தப்பில்
வியாதியது மெய்தனிலே வளரும் பாராய்
ஆனான திங்களிலே சரமே தப்பில்
அறுதியினா லவர்காலம் முடிவு மாகும்
காணுலவுஞ் செவ்வாயிற் சாமே தப்பிற்
கலக்கமுறும் பெரியவொரு கலக மாச்சே (8)

ஆச்சப்பா புதனதிலே சரமே தப்பில்
அபாயமடா தொடுத்தவகை பலியா தப்பா
நீச்சப்பா குருவாரஞ் சரமே தப்பில்
நிலையாது பொருட்சேதம் நினைந்த வெல்லாம்
சூட்சமமாய்ச் சுக்கிரனிற் சரமே தப்பிற்
சொல்லுகிரேன் மக்களுக்குச் சேதமாகும்
தாழ்ச்சியடா சனிவாரஞ் சரமே தப்பில்
தனக்குமொரு தத்துவந்து தப்புந்தானே (9)

தப்பாக விருகலையுந் தவறி யோடிற்
றனக்குவருஞ் சனிதோஷந் தடையில்லாமல்
ஒப்பாக வொருபுறத்தி லொருநா ளோடில்
ஒருமூன்று வருடத்தி லிருந்துபோவான்
அப்படியே யொருபுறத்தி னாளா றோடில்
ஆறாகு மாதமடா வறுத்திக்காலம்
செப்புகிறேன் சந்திரனி லிரவே யொன்றுஞ்
செங்கதிரோன் பகலொன்று மியங்கிற்றானால் (10)

ஆனாலு மருளான யோகி யாவான்
அவன்பெருமை யெவராலு மறியொண்ணாச
போனசர மீளாமற் சுழலு மாகிற்
போகுமடா வொருமூன்று மாசத் அள்ளே
நாணாம லிருசாமு மொன்றா யோடில்
நாற்பதாம் நாளிலன்றோ நலனைக் காண்பான்
போனசரம் மீளாமற் மேலே வாங்கிற்
பொய்யல்ல வறுதியென்று மறிந்து பாரே (11)

அறிந்துகொள்ளச் சொல்லுகிறேன் னின்னுங் கேளா
யப்பப்பா சந்திரன்றா னியங்கும்போது
சிறந்தமனை குடிபுகுதத் தனம்பு தைக்கச்
சேராமலிருந்தவரைச் சேர்த்துவைக்க
விரைந்தோறும் விஷமிறக்க விதைவி தைக்க
வேந்தர்களைத் தெரிசிக்கக் கேள்விசெய்யப்
பிறந்தப்பிள்ளைப் பேர்குறிக்கப் பிணியுந் தீர்க்கப்
பிரியமுடன் வியாபாரம் பலவுங் கொள்ள (12)

கொள்ளமணக் கோதயரை நாட்குறிக்கக்
கொடிதான் பகைவரிடங் கொழுகிச் செல்ல
வெள்ளமடா கீழ்க்கிணறு வெட்டிக்காண
வேந்தர்முத லமைச்சருக்குத் தூதனுப்ப
அள்ளியிரு கையாலு மைய மீய
வாகுமடா வீத்தனையுஞ் சந்தரன் மீது
தெள்ளியதோர் சூரியன்றா னியங்கும்போது
தீர்க்கமாய்ச் செய்வகையைச் செப்பக்கேளே (13)

செப்பக்கே ளரண்மனைக ளம்ப லங்கள்
சிறப்புடைய மாளிகைகள் சித்ரகூடம்
ஒப்பரிய சித்ரபடா மொளிர்விதான
முடைமைவகை மருந்துவகை யாவுஞ் செய்யக்
கப்பலடா கடல்மேலே பயணம் பண்ணக்
கடிதான பேய்பூத மலகை யோடச்
செப்பணியு முலையாளைச் சேர்ந்து வாழச்
செயமாகப் படைபொருத வழக்கு ரைக்க (14)

உரையான மந்தரமுத லேதுஞ் செய்ய
வொழுங்காகக் கலையோதச் சரங்க ளுன்னத்
திருவான தேவர்முதற் பெரியோர் மற்றத்
தேவரையுர் திருமுன்னே வாவழைக்க
குருபாதம் பணிந்துமுப தேசங் கேட்கக்
கொள்ளையிடப் பதியேறக் குளிக்க நீரில்
தருகாத பூமியுள்ள தனமெடுக்கத்
தம்பனமே செய்யநல மாகும் பாரே (15)

பாடியவோ ரிருசரமு மியங்கும் போது
பலியாது சுழிமுனையே பழியு மாச்சு
ஆடியவோர் சரமோடும் புறத்தைத் தானே
யதிகமதாய் பூரணமென் றுரைக்க லாச்சு
சாடியவோர் சரமோடாப் புறத்தைத் தானே
சாற்றுகிறேன் சூனியமென் றறிதற் காகத்
தேடிமிக வந்தொருவ னுன்னைக் கேட்டாற்
றீர்க்கமாய்ச் சொல்குறியைச் சொல்லக் கேளே (16)

சொல்லக்கேள் கெற்பனியாள் கெற்பந் தன்னிற்
சூலாணோ பெண்ணோவென் றுன்னைக் கேட்டால்
வல்லகலை சூரியனில் வலமே கேட்கில்
வளர்ந்திருக்கும் பாலகன்றா னாணே யாகும்
அல்லவவன் சூனியத்தி னின்று கேட்கி
லாணாகு மதன் கால மற்றுப் போகும்
நல்லகலை சந்திரனிற் பூர ணந்தான்
நாரியின்சூல் பெண்ணென்று நாட்டுவா யே (17)

நாட்டிடுவாய் சூணியத்தி னின்றே கேட்கில்
நாரியின் சூல் பெண்ணதுவு நமனைச்சேறும்
நாட்டிலின்ன மாதினுக்கு மதலை யுண்டோ
நன்றாகச் சொல்லுமென்றே யொருவன் கேட்கில்
கூட்டியதோர் பூரணமே குழந்தையுண்டு
கொடியதான சூனியமே குலமற் றுப்போம்
தீட்டியநாள் சூரியனுந் திங்கண் மாது
தீர்க்கமதாய் நீ யெவர்க்குஞ் செப்ப லாமே (18)

செப்பியதோர் கருவகைதா னேதன் றாலுஞ்
செயமாமோ குறைவாமோ வென்று கேட்கில்
தப்பாது சூரியனிற் பூர ணந்தான்
தப்பிவிட்ட நாளாகுஞ் சூனி யத்தில்
மெய்பான சந்திரனின் மெதுவாய்ச் செரும்
வேறாகுஞ் சூணியத்திற் கரும மெல்லாம்
ஒப்புடனே காணாத முதலைக் கேட்கி
லுடன்வருமே பூரணச்சந் திரனிற் றானே (19)

சந்திரனிற் சூணியமும் பிரயா சந்தான்
சார்ந்துபோஞ் சூரியனிற் பூர ணந்தான்
எந்திரமாஞ் சூரியனிற் சூனி யந்தா
னெத்தேச காலமில்லை யிழந்துபோச்சு
சந்திரனில் யாத்திரைசெய் வோர்க்கு மேற்குந்
தப்பினதாற் றங்கடங்க டமக்கே யாச்சு
உந்திவருஞ் சூரியனிற் கீழ்வடக்கு
முற்றவகை தப்பினதா லுனக்கா காதே (20)

உனக்காகச் சூரியனிற் பயணம் போக
வொற்றையடி மூன்றுதரம் வலது காலால்
இனிதாகக் குதித்தன்றோ தத்திப் போத
லியல்பாகு மிருசரமு மொன்று மாகில்
தனக்குள்ள விருகாலு மொன்றாய்க் கூட்டித்
தத்திப்போ மூன்றுதர மூச்சு டக்கித்
தனையல்லான் மற்றொருவ ரறியொண்ணாது
தங்காம ணிரைத்துவரும் படையைக் கண்டால் (21)

படைபொறுத்தச் சந்திரனிற் கச்சை கட்டிப்
பரிவுடனே சூரியனிற் பாய்ந்து சொல்லச்
சடுதிவரும் படையானார் சந்தர னாகிற்
சறுகுலதாய்ப் பின்பரித்து முன்னே செல்ல
அடவுடனே சுழிமுனை தா னியங்கு மாகி
லகலாம லிருகானுங் கூட்டி யொன்றாய்
இறைகாணா நிலைபிரியா திருந்து மூச்சை
பெழும்பிநின்று மேனோக்கி யெற்று வாயே (22)


ஏற்றிவாய் சூரியனில் மாற்றுன் என்னை
யேறிடுவாய் பூரணத்தி லெதிரி பட்டான்
ஒற்றை யடா சூரியரண யாது யாகு
முத்தமியாள் சந்திரனு மொஞாண் டாகும்
ஒற்றநிலை கைக்கருவு மாண்பா லப்பா
வோடிவருஞ் சந்திரனி வொருபெண்ணாகும்
வித்தையடா வுடலுக்கு வடைந்த வாவி
வெளிகழன்று வெறுங்கூடாம் விதத்தைக் கேளே (23)

விதமாக வுடலுக்கு எடைந்த மூச்சு
விருத்தியோடு சூஸ்திரமா யிருக்கும்போது
இதமாக வீராறங் குலமெ யோடு
மிருநான்கு வக்குலமே யேறு முள்ளே
துதியாகப் பேசுகையிற் பதினா றோடுந்
துடியாக விருநான்கு தொடுத்துள் ளோறும்
கதிநடையி லிருப்பதுபோய்ப் பத்து மீளும்
கடும்வேலைக் கறுநான்கின் முந்நான் கோறும் (24)

முன்னேறுஞ் சண்டையிலே யாறா றோடின்
மூவெட்டு லங்குலமே முறையிற் செல்லும்
கண்மூடிச் சயனமிடி லாறெட் டோடிக்
கடுகிவரு மையாறு கருதிப் பாராய் உன்னி
உன்னி யோடுகையி லொன்ப தாறி
லொன்றுக்குப் பாதியடா வுயர வேறும்
இன்முலையாள் சேர்க்கையிலே யெட்டெட்டோடி
யென்மூன்று வங்குலமே யேறும் பாரே (25)

பாரப்பா வில்விதத்தா லாவி யெல்லாம்
பறந்தோடிப் போறதினாற் பிராணன் போச்சு
நீரப்பா கால்வயிறே யருந்த வேண்டும்
நித்தியமு மரைவயிறே யமுத ருந்தல்
நேரப்பா முப்பாகந் தினமொன்றுக்கு
நித்திரையை நெடுநாளினிறுத்திப் போடு
சீரப்பா வறுகோணத் தெழுந்த வாய்வைச்
சிந்தையிலே யுள்ளடக்க விதத்தைக் கேளே (26)

விதமென்ன வொழியாம லோடி நாடி
வீசிவரு மோரெழுத்தை விளம்பிக் கொண்டு
இதமான வாசனை யெழுத்தைக் கேட்டே
என்னனவும் பிசகாமற் சாதினூன்றி
ஒதுறவே வாய்திறந்தா லொழுகிப்போச்சு
ஓகோகோ சாமதனை யொன்றாய் மாட்டி
மாதிரத்தின் வாய்மூடி மனதிற் பூட்டி
வாசித்தால் மரணகலை சாகா தப்பா (27)

சாகாது தவறாம லோடும் நாடி
சரமென்று தப்பிவிடிற் சற்றே போச்சு
வாகாக வோரெழுத்தா லிழுத்து மூச்சை
வாசித்து வெளிவீச வழக்க மாகும்
ஓகோகோ வெளிமூச்சுக் கிருக்கா லோதே
உத்தமனே யொருமூன்று நாளிற்றேறு
பாகமதாயொருபதுநூ றாபிரந்தான்
பழக்கமதாய்க் கொண்டுவச மணையே நாளில் (28)

நாளுக்கு நாட்பழக்க மதிக மாக
நடந்தேறு நாதத்தை நன்றாய்ச் சூட்டி
வேழத்தெத் தும்பியிலே கட்டொண்ணாது
விதமென்ன சலையதையே விரும்பிக் கொள்ளு
நாளுக்கு நாளாவி வளர்ந்தே யேறும்
நலமான சுத்திதனைச் செய்து கொள்ளு
ஊழுழி காலமெல்லாமுண்டே நானு
முருகவர்க்கு விந்நூலை யோதி னேனே (29)

ஓதுகின்ற சரமதனை யுலகத் தோர்க்கு
மொளியாம லுரைத்த வித முவந்த பேர்க்கு
வேதகுல வரவாஞ்சி பேர னான
வேந்தரென்னும் சிறுமலுக்க ரீன்ற பாலன்
நீதமிலா திந்நூலைப் பொய்யென்னாமல்
நிலைநிறுத்தப் பீர்முஹம்ம தென்பேன் யானே
வேதமெனுமெய்ஞ்ஞான சரநூ லென்றே
விளம்பினேன் கவிமுப்ப தாக முற்றே (30)

திருமெய்ஞ்ஞான சரநூல் முற்றிற்று.
--------------------

ஞான நடனம்.

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

செந்தா மரைமலர் வெண்டா மரைமலர் செந்தே னின்றுறி
வந்தே யமுது கனிந்தே தம்ருவது மன்னா நின்னாம
உந்தே ணுந்தி யுயர்ந்தே பிசைந்தன னோர்பொரு ளேயருளே
வந்தே நின்றொழில் தந்தே யருள்புரி வரமே ஹூஹூஹூ       (1)

அமரர் சிகாமணி அஹூமதி லுறைவுள வட்சர மேகுருவே
சுமலய மாகிய சுழிமுனை தனிலொரு சுடரொளி வானவனே
இமையவர் கூடிவளைந்துஸூஜூதிடு மிறையவ னேநீதான்
சமையம தாமினிறுஹினின் நின்றுள தானவ ஹூஹூஹூ.       (2)

அச்சர மாயுள வன்பதை வாங்கி யணிந்ததைத் தேடியபின்
உச்சர மாகிய வுச்சி திறந்தொரு வோசைநி றைந்தொளிவாய்ப்
பச்ச முகுந்துள பாலக ரப்பனைப் பாரறி யம்படியே தற்சொரு
பச்சுடர் காண வரம்புரி தானவ ஹூஹூஹூ.       (3)

ஒன்றொடிரண்டு மொன்றாகநின்றாடிய வுற்பன மேபரமே
இன்று நீ விண்டது கண்டு மகிழ்ந்திடு வெனிறை யானவனே
தொண்டர் தமக்கொரு மந்திர மாமணி தோன்றிய துய்பவனே
மண்டலமீதி லெனக்கொரு தொழிலருள் வல்லவ ஹூஹூஹூ.       (4)

தாமரை ரண்டி லிருந்துறவாடிய தாபர மேகுருவே
பூமது வாகிய வாசமி லோசை புரிந்தே யிருபவனே
தேனமு துங்கனி வாயமுதுண்டு திருந்திய செம்மதியால்
நீவரும் யானறி யும்படி யேதரு வாய்நீ ஹூஹூஹூ.       (5)

கலைமுறுக்கி யெழுப்பி யிருத்திக் காக்ஷியென் கல்பினுளே
பாலகன் கண்டிட நின்றொழில் தந்தருள் பாருபராபரனே
போலம தாலமென் றெயொரு வூஞ்சலிலோதுவ னேகலிமா
ஏலம லேலமென் றேநின்றாடிய பாவபீனே ஹூஹூஹூ.       (6)

காத வழிக்கொளி கத்தூரி வீசிய காரண நன்னபிதான்
ஆதாய மானதொழிலி லருள்புரிந் தாடிய மெய்ப்பொருளே
பூதாய மானவேதமதாய் புகழ்தனை நியருள்வாய்
சாதகமுன்னே பெழுதி வருத்திய தானவ ஹூஹூஹூம்.       (7)

நின்றதிரண்டு றக்க அத்திலொன்று நிசப்படநின்றிருமுன்
அன்றது றூஹில் வணங்கியுன் னாசையாசரித் தேனதனால்
இன்றது போதுமென் றேயிருந்தேனினியென் சொலச் சொல்லும்நீ
ஒன்றது தந்தெனை ரக்ஷித்தேயாளுவை யோ துவ ஹூஹூஹூ       (8)

பங்குபங் காகநின் முடிய பாவனை தன்னிலுந் தன்ளாதே
யென்கோனநின் சரணஞ்சரணமிளி யைம்மிற ஸூலுல்லா
உன்கை பிடித்தே யோது நஸீஹத்தை யுற்றுற வாகவினம்
என்கைபிடித்துநீ யக்கரை சேர்த்தரு ளென்பீரே ஹூஹூஹூ.       (9)

மானது மீனது தானது வாகியமணிமந்தி ரப்பொருளே
தீன திலே கலிமாவதி லேசெறி வாகிய காரணமே
யீனமில்லாதொரு தானமதாகியயின்புறு மன்பனேநீ
யானுன தடிபணிவிடையினி லானேன்யா ஹூஹூஹூ       (10)

ஞானநடனம் முற்றிற்று.
----------

This file was last updated on 6 Nov 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)