pm logo

புலவர் சுந்தர சண்முகனார் எழுதிய
செந்தமிழ் ஆற்றுப் படை

cenntamiz ARRuppaTai
by cuntara caNmukanAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புலவர் சுந்தர சண்முகனார் எழுதிய
செந்தமிழ் ஆற்றுப் படை

Source:
செந்தமிழ் ஆற்றுப் படை
(ஆசிரியர் குறிப்புரையுடன்)
புதுவைக் கல்விக் கழக வெள்ளி விழாக் கவியரங்கேற்ற நூல்.
ஆசிரியர்: புலவர் சுந்தர-சண்முகனார்.
கல்விக் கழகம், புதுச்சேரி,
முதற் பதிப்பு: 15-5-1951
விலை அணா 8.
சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுவை,
--------------

பதிப்புரை.

'செந்தமிழாற்றுப் படை ' என்னும் இந்நூல், தற்காலத் தேவைக்கேற்றவாறு, திருவாளர் - வித்துவான், சுந்தர சண்முகனார் அவர்களால் புதுமுறையில் இயற்றப் பெற்று, நமது கல்விக்கழகத்தின் வெள்ளிவிழாவில் அறிஞர் முன்னிலையிலே அரங்கேற்றமடைந்து வெளிவரும் ஒரு புது நூலாகும்.

தமிழருக்குத் தம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்கவேண்டிய உணர்ச்சியைத் தூண்டி, அதன்பால் அவர்தம் ஆர்வத்தை எழுப்பி, அதனைக் கசடறக் கற்றுப் போற்றி வளர்க்க இந்நூல் அவர்க்குத் துணைபுரியும் என்று நம்புகிறோம்.

எல்லாத் தமிழரும் இதனை ஏற்றுப் பெற்று ஆதரிப்பரேல் கல்விக்கழகத்தின் தொண்டு ஒருவகையில் பயன் தந்ததென்று மனமிக மகிழ்வோம். வாழ்க செந்தமிழ்!

புதுவை ரா. தேசிகன்
கர-வைகாசி அமைச்சர், கல்விக் கழகம்.
1951, மே,
---------------------
சிறப்புப் பாயிரம்,

பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளசை கிழார், உயர் திரு.
ச. சோமசுந்தர பாரதியார், M. A., B. L. அவர்கள் அருளியது.

"சுதை இயற்கவி சுந்தர சண்முகர்
புதுவைப் பாவலர் புதிது புனைந்துள
அதுலச் 'செந்தமிழ் ஆற்றுப் படை` வெகு
மதுரமார் தமிழ் வாய்மைக் கவிதையாம்;
சதுரம் வாய்ந்தது தமிழோடும் வாழ்கவே"

குறிப்பு.- சுதை = அமிழ்து. அதுலம் = இணையின்மை. மதுரகவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனக் கவி நான்கு வகையுள் ஒன்று.

      நாவலர், ச. சோமசுந்தரபாரதி.
-------------------
சிறப்புரை.

பேராசிரியர், கவியரசு, உயர்திரு. அரங்க. வேங்கடாசலம் பிள்ளையவர்கள் அருளியது

எந்தம துள்ளத் தென்றும் ஒளிரும்
சுந்தர சண்முகத் தூமணி வழங்கிய
அஞ்சுடர்ச் செந்தமிழ் ஆற்றுப் படையினைக்
கண்டேன்! உள்ளம் களித்தெழ மகிழ்ந்தேன்!
இஃதிப் பிறவியில் எய்துமோர் நல்வினை !
எத்துணை ஆழ்ந்தது! எத்துணை அகன்றது !
எத்துணை உயர்ந்தது! என்பன உணர்ந்தேன் !
தமிழனை ஆற்றுப் படுப்பது! தமிழனை (அன்னை)
தன்பால் ஆற்றுப் படுப்பதாம் தகவல்
இருமை நெறியாம் இறும்பூ துணர்ந்தேன்!
பாலுண் சிறுவன், பசித்தழும் குழந்தையை
அன்னைபால் ஆற்றுப் படுத்தலவ் வன்னையை
அதன்பால் ஆற்றுப் படுத்தலும் ஆதலின்
மும்மை நெறியாம் உண்மையும் கண்டேன்!
இந்நூன் மாண்பெலாம் எடுத்து விரிப்பின்
சிறப்புரை என்னும் உறுப்பினில் அமையா (து)
ஒருதனி நூலா விரிவது மேவிடும்!
தமிழுல கத்தீர்! அமிழ்தமாம் இதனை
எவ்வெவர் தாமும் எய்திட எண்ணி
ரித்து விளக்கிப் பரப்பல்நும் அருளே!
பள்ளி மாணவர் பலரும் பயனுறல்
கல்வி நெறியினர் காட்டுபே ரருளே!

      கவியரசு, அரங்க-வேங்கடாசலம் பிள்ளை.
----------------

முன் மொழி.

செந்தமிழாற்றுப் படை யென்னும் இந்நூல்,'ஆற்றுப் படை' என்னும் நூல் வகையைச் சாரும். ஆற்றுப் படை யென்பது: ஒருவரிடம் சென்று நன்மை பெற்று வரும் ஒருவன், வழியில் எதிர்ப்படுந் தன்னொத்த மற்றொருவனை நோக்கி, 'யான் இன்னாரிடஞ் சென்று இன்னின்ன பொருள்கள் பெற்று வருகிறேன் ; நீயுஞ் செல்லின் பெறலாம்' என்று மொழிந்து, அவனை அவரிடம் வழிப்படுத்தி (வழிகூட்டி) அனுப்புவதாகும். ஆறு = வழி; படை- படுத்தல். தொல்காப்பியப் புறத்திணை - 38-வது நூற்பாவில்,

"கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்"

என ஆற்றுப்படை இலக்கணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரையாசிரியர் எழுதியுள்ள உரை :

"ஆடன் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற் பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்' என்பதாகும்.

கூத்தர், பாணர், பொருநர், விறலி யென்னும் நால் வகையாரிடத்தேயே, ஒருவரை யொருவர் ஆற்றுப் படுக்கும் வழக்கம் இருந்தது என்பது மேற்கூறிய வாற்றான் புலப்படுகிறது. அங்ஙனமாயின் இந்நால்வ ரல்லாத பிறதிறத்தார், ஒருவரை யொருவர் ஆற்றுப்படுத்த லாகாதோ? என்ற வினாவிற்கு விடைவேண்டும். தொல்காப்பியர் காலத்தில் இந் நால்வரே, அரசர்களிடமும், வள்ளல்களிடமும் தாமறிந்த கலைகளைக் காண்பித்துப் பரிசு பெற்று வந்திருக்கலாம். ஆதலின், அவர்கள் குறுகிய மனப்பான்மையின்றி, தாம் பெற்ற வின்பத்தைத் தம்மைச் சேர்ந்தோரும் பெற வேண்டும் என்னும் பரந்த நோக்கங்கொண்டு ஒருவரை யொருவர் ஆற்றுப்படுத்தி வந்திருக்கலாம். அதனை யுணர்ந்த தொல்காப்பியர், 'இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்ற நியதிப்படி ஆற்றுப்படை யிலக்கணம் அமைத்திருக்கலாம். அது அக்கால நாட்டு நிலை.

மக்கள் நிலை எக்காலத்தும் ஒரே நிலையில் இரா தன்றோ? நாளாவட்டத்தில் - பிற்காலத்தில் வேறு சில தேவைகளைக் குறித்து வேறு சிலரும இத்துறையில் ஈடு படலாமன்றோ? எடுத்துக்காட்டாகத் திருமுருகாற்றுப் படையையே எடுத்துக்கொள்வோம் - ஓரன்பன் மற்றோ ரன்பனை முருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்ததாக நக்கீரரால் பாடப்பட்ட நூல் அது. காலவா ழியுருளவுருள, திருத்தணிகையாற்றுப்படை, திருப்பாணாற்றுப்படை போன்ற சிலவும் தோன்றின. சங்க இலக்கியங்களாகிய பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற நூற்களிலும் ஆற் றுப்படைக் கருத்தமைந்த தனிச் செய்யுட்கள் உண்டு ஆயினும் பத்துப்பாட்டுள் உள்ள ஐந்து ஆற்றுப்படை நூற்களே பெருவாரியாக மக்களால் அறியப்பட்டு வருகின்றன. அவற்றைப்பற்றிச் சிறு குறிப்புக்கள் வருமாறு:

1 திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகளை யுடையது. ஓரன்பன் மற்றோரன்பனை முருகக் கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தியதாக நக்கீரர் என்னும் புலவரால் பாடப்பட்ட இந்நூலைப் புலவராற்றுப்படை என் றும் வழங்குப.

2. பொருநராற்றுப்படை. இது 248 அடிகளையுடையது. ஒருபொருநன் மற்றொரு பொருநனை, மன்னன் கரிகாற் பெருவளத்தானிடத்தே ஆற்றுப்படுத்தியதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டது.

3. சிறுபாணாற்றுப்படை: இது 269 அடிகளையுடையது. ஒரு பாணன் மற்றொரு பாணனை, மன்னன் நல்லியக் கோடனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டது.

4. பெரும்பாணாற்றுப்படை: இது 500 அடிகளை யுடையது, ஒருபாணன் மற்றொரு பாணனை, தொண்டைமான் இளந்திரையனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக, கடியலூர் உருத்திரங் கண்ணனாராற் பாடப்பட்டது. சிறு பாணாற்றுப் படையினும் மிக்க அடிகளையுடையதாதலின் இது பெரும்பாணாற்றுப்படை யெனப்பட்டது.

5. கூத்தராற்றுப்படை: (மலைபடுகடாம்) இது 583 அடிகளையுடையது. ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை, நன்னனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாக, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாராற் பாடப் பட்டது. இதனை மலைபடுகடாம் என்ற பெயராலேயே அழைத்து வருகின்றனர் அறிஞர்.

மேற்காட்டப்பட்ட ஐந்தனையும் இருவகையாகப் பிரிக்கலாம். யாரிடம் ஆற்றுப்படுத்தினரோ அவர் பெயரால் அமைந்தது திருமுருகாற்றுப்படை. யாரை ஆற்றுப்படுத்தினரோ அவர் பெயரால் அவர் பெயரால் அமைந்தவை பின்னைய நான்கும். இவ்விருவகைகளையும் சேர்ந்ததன்று இச்செந்தமிழாற்றுப்படை, இரண்டு மமைந்த மூன்றாம் வகையாக மொழியலாம் இதனை. எவ்விதம்?

செந்தமிழாற்றுப்படை யென்பது-தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுப்பதாகும். அஃதாவது -எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருக்குந் தாயிடஞ் செல்லாக் குழந்தையைத் தூண்டித் தாயிடம் அனுப்பும் விந்தை யாகும். இங்கே ஆற்றுப்படுப்பதும் தமிழனை; ஆற்றுப் படுக்கும் இடமும் தமிழ்த்தாய். எனவே, தமிழர், தமிழ்த் தாய் என்ற இரண்டிற்கும் பொதுவாகத் தமிழாற்றுப் படையென்னும் பெயர் அமைந்துள்ள தன்றோ? (பாண் என்பது பாணரைக் குறிப்பது போல், தமிழ் என்பதும் தமிழரைக் குறிக்கும்)

இந்நூலுள், பிறமொழி, பிறமொழியினர், பிறநாடு என்பவற்றினின்றும், தமிழ்மொழி, தமிழர், தமிழ் நிலம் என்பவை தனித்துப் பிரிக்கப்பட்டு விதந்து பேசப்பட்டுள்ளன. ஏனிந்தக் குறுகிய நோக்கம்? என்று வினவலாம் சிலர். சிறு பிரிவுக்கும் இடமின்றி, உலக முழுவதும் ஒருநாடாய், ஒருதலைவனுக்குட்பட்ட ஆட்சியாய், மக்களனைவரும் ஓரினத்தராய், உலகத்தின் குடி (பிரஜை) என்று சொல்லிக்கொள்ளும் பெருமைக்குரிய நிலை வர வேண்டும் என்ற விருப்பம் அடியேனுக்கும் உண்டு. ஆனால் அந்நிலை உலகில் என்றும் வரவே வராது என்பது திண்ணம் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் உண்டு. ஏன்? பாட்டன், தகப்பன் ஈட்டிவைத்துள்ள சொத்துக்கள் தன் தம்பிக்குக் கிடைக்கப் பெறாமல், குடும்பத்தில் மூத்தவனாகிய தனக்கே கிடைத்துவிடக் கூடாதா என்று எண்ணமிடுகிறான் அண்ணன், தகப்பனும், பிள்ளைகட்கு எழுத்துமூலமாகச் சொத்துரிமை வழங்கும்போது, பிள்ளைகள் சொத்தை உரிமையாக்கிக் கொண்ட பிறகு தன்னைக் காப்பார்களோ, மாட்டார்களோ என்றையுற்று, தன் பெயருக்கென ஒருபகுதியை ஒதுக்கிக் கொள்கிறான். மைந்தனும், தந்தை எப்போது தொலைவான், தொலைந்தால் விருப்பம்போல் சொத்தைக் கையாளலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். மன்னன் ஷாஜஹானை (பூசா சஃ ஆனை) அமுக்கிவிட்டு, அவன் மகன் ஔரங்கசீப் அரசைப் பறித்துக்கொண்டது உலக வரலாறன்றோ?

இத்தகைய வஞ்சகவுலகில் பிறரை எப்படி நம்புவது? நம்பியவரையுந்தான் போதாதோ? அதனாலேயே, துப்பாக்கியுரிமை வைத்திருப்பவரைப்போல, தமிழன் தற்காப்புக்காகத் தமிழ்மொழியினையும், தமிழ் நிலத்தினை யும் காத்துக்கொள்ளவேண்டியது கடமை என்பதைப் பலபட விரித்து வற்புறுத்துகின்றது இந்நூல். இக் கருத்தை மறுப்பவர் பிறராயின், அவர் மறுப்பில் பொருளுண்டு என்று வரவேற்பேன். மறுப்பவர் தமிழராயின், அவர் அடியேனை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை யென்று அவர்மேல் இரக்கப்பட்டு அமைதியுறுவேன்.

வணக்கம்.
பைந்தமிழ்ப் பதிப்பகம்       சுந்தர - சண்முகன்,
புதுச்சேரி 1 - 5-51
----------------------

செந்தமி ழாற்றுப்படை.

தமிழ் வாழ்த்து
[நேரிசை வெண்பா]

தமிழிற் கலைகள் தழைத்திடச் செய்தும்
தமிழரெல் லோருந் தமிழை - யமிழ்தாய்க்
குழைவொடு கற்றுங் கொடுக்கின் முதன்மை
தழைவொடு வாழுந் தமிழ்.

வேண்டுகோள்
(நிலை மண்டில வாசிரியம்)

கன்று தனக்குக் கற்றுக் கொடுப்பா
ரென்று மில்லை யீன்றது மான்பாற்
சென்று நேடிச் செம்பா லருந்தும்.
தமிழர் பலர்க்குத் 'தமிழ்மொழி கற்பீர்

அமிழ்த மருந்தின ராவீ' ரென்று       5
பன்முறை கதறினும் பாரார் திரும்பி
நன்முறை யாமோ நாட்டு வீரே!
தமிழ னொருவன் றன்னோ ரன்ன
தமிழ் னொருவனைத் தமிழ்கற் பதற்கா

ஆற்றுப் படுப்பதை யறியின் மற்றையோர்       10
தூற்றி நகைப்பர் துப்பிலாத் தமிழனை.
அதனான்,
நன்ன ரனைவரும் நந்தமிழ் கற்றே
என்னூல் தேவை யிலதாக்க வேண்டுவல்.
விடுதலை பெற்றதும் விடுதலைப் பாடல்

விடுதலை பெற்று விடுதலைப் போன்றே.       15
ஆயினும்,
பின்னூற் றாண்டில் பிறங்கு மக்கட்
கிந்நூற் றாண்டை யெடுத்து விளக்கும்
அந்நூ லாமிவ் வாற்றுப் படையே.
---

குறிப்புரை: தமிழ்வாழ்த்து- ஒருவனுக்குப் 'பணங்கிடைக்க வேண்டும்' என்று வாழ்த்த விரும்பினால் அப்படி வாழ்த்தாமல், அவனை நோக்கி, 'நீ தொழில் செய்க' என்று தூண்டுவதுதானே, அவனுக்குப் பணங் கிடைக்க வாழ்த்தியதாகும். அதுபோல, தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!" என்று மட்டும் வாயால் வாழ்த்திக்கொண்டே யிராமல், தமிழ் வளர்வதற்குக் காரணங்களான (1) தமிழில் விஞ்ஞானம் பொருளாதாரம் முதலிய பல துறைகளையும் கொண்டுவந்து மொழியை விரிவுசெய்தல் - (2) பலரும் தமிழை நன்றாகப் படித்துத் தேர்ச்சிபெறல் (3) இரண்டுஞ் செய்ததனோடமையாது, தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் தமிழ்க்கே முதன்மையளித்தல் என்னும் மூன்றினையும் முயன்று செய்தால் தமிழ் தானே வளருமன்றோ?

வேண்டுகோள் - 1-6- அஃறிணைப் பொருளாகிய கன்று கூட பிறந்தவுடனே தானே தாய் மடியைத் தேடிப் பாலுண்டு மகிழ்கின்றது. உயர்திணைப் பொருளாகிய தமிழர் பலர், எவ்வளவு தூண்டியும் அமிழ்தத் தமிழை யருந்தாமல் காலத்தைக் கொல்கின்றனர்.

12-15- தமிழ் கற்காத பெரும்பான்மையான தமிழரைத் தமிழ்கற்று அதற்கு முதன்மையளிக்க வேண்டு மென்று தூண்டுகின்ற இந்நூல், எல்லா மக்களும் அங்ஙனம் செய்தபின் தேவையில்லை. அஃதாவது, இந்தியா விடுதலை பெறுவதற்குமுன், 'என்று தணியுமிந்த சுதந்திரதாகம்' என்று பாடிய விடுதலைப் பாடல், விடுதலை பெற்றுள்ள இப்போது தேவையில்லை யன்றோ?- இது போலவே அஃதும்.

14-15- நாடு விடுதலை பெற்றதும் விடுதலைப் பாடல், பாடப்படுவதிலிருந்து விடுதலை பெற்று விடுவதைப் போல. இங்கு விடுதலை என்னும் ஒரே சொல் ஒரே பொருளில் பின்பின் தொடர்ந்து வருதலின், இது 'சொல் பொருள் பின் வருநிலை அணி' எனப்படும்.

16-18- இந்நூற்றாண்டின் வரலாற்றைப் பின் னூற்றாண்டினர் அறிவதற்கு உதவும் இந்நூல்.
---------

நூல்
(நேரிசை யகவல்)

தமிழ் மகன் நிலை

சீரார் மகவு செழிக்க வயிற்றிட
மீரைந்து திங்க ளிருக்க வீந்து
மேறத் தாழ விருபத்தைந் தாண்டு
சோறு நல்கியுஞ் சூழ்ந்தோம்பியபின்

மைந்தன் பாற்கைம் மாறினை நோக்கு       5
மந்தச் சொந்த வன்னை போலாது,
ஈரைம்ப தாண்டுக ளிருந்து வாழினுங்
கூரை யாயினுங் கூழே யாயினு
மளித்துக் கைம்மா றணுவு நோக்காது

தாயினுஞ் சிறந்துள தமிழ்நா டதனிற்       10
சேயாய்ப் பிறந்த செந்தமிழ் மகனே!
சிறந்த செல்வச் செழிப்பெலா நீத்துப்
பிறந்தது போலவே யிறந்தொழி வோர்போ
லெத்துணை மொழிகற் றெத்துணைப் பட்டம்

மெத்தவே பெற்று மேலாய்ச் சிறக்கினு       15
மிளமைக் காலைபோ லிறக்கும் வேளையும்
வளர்தமிழ் பேசும் வண்டமிழ் மைந்தா!
அறுசுவை விருந்தி லமுது துறந்தென,
தருகடி மணத்தில் தாலி மறந்தென,

தமிழர்க் குரிய தனிநிகழ்ச்சி தம்மில்       20
தமிழ்க்கிடந் தாராத் தண்டமிழ் மதலாய்!
மலையுங் காடு மடுவுமாய்த் திகழு
முலகந் தட்டையென் றோதினோர் புரையத்
தமிழிற் கலையிலை. தமிழிசை யிலையெனத்

தமிழுண ராது தாழ்த்துந் தமிழா!       25
நெய்யின் சுவையும் நீங்கா மணமும்
பெய்து முணராப் பித்தளை போல
மாசி றமிழின் மாண்பு மினிமையும்
பேசியு மறியாப் பெற்றி யோனே!

பயந்தரு சுவையார் பைந்தமிழ் நறவை       30
நயந்தனை யாயி னவிலுவன் கேண்மதி!

வாழ்க்கை வங்கம்

ஆழ்க்கு மன்பதை யாழி யதனுள்
வாழ்க்கை யாகிய வங்க மிவர்ந்து
செல்லுழி நேருஞ் செல்ல லொன்றோ?

மதுவுண் டதனொடு மாவெறி தாங்கி       35
மதம்பிடி மீகான் மனமெனும் பித்த
னியக்கு நாவா யியக்க மென்சொலல்!
உயக்கு பசிமீ னுறுபிணிக் கராக்கட்கு
வகைசெய் தென்பயன்? வஞ்சக் குதிராம்

பகையெனு மரக்கப் பாறை யடர்த்துக்       40
கோடி கோடியாய்க் குவிக்குங் கொன்றே.
கொள்ளை யூதியக் கொடுங்கா லொருசார்;
வெள்ளச் சுழியா வேணவா மறுசார்;
தன்னல வுரகந் தலைவிரித் தேறும்;

உன்னவு மம்மா வுயங்குமா னெஞ்சம்!       45
இவ்வரு நிலையி லென்றன் வாழ்க்கைச்
செவ்விய கலத்தைச் செலுத்துங் காலை
எவ்வகை யின்பமு மெட்டி யாயின.
இன்புகட் கிடையொரு துன்ப மாற்றலாம்;

துன்புகட் கிடையோ ரின்ப மினிக்குமோ?       50
பாலொடு கலந்தநீர் பருக வினித்திடும்
நீரொடு கலந்தபா னீர்நிக ரன்றோ?
அதனான்,

நிலைத்த வின்பம்

நீங்கா வுவகை நேடுங் குறியுடன்
யாங்கணுஞ் சுழன்றே யாரையு முசாவினேன்.

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்       55
றல்ல னீத்த வுவகை நான்' கென்
றாசிரி யர்தொல் காப்பிய ரருளிய
ஆசிரி மொழியினை யறிந்தே னறிஞரால்.
செல்வந் தன்னாற் சேரு முவகைகள்

செல்வந் தன்னுடன் செல்வம் என்னும்;       60
புணர்ச்சி யுவகை புணரா நின்றவர்
வணக்கு பிணிமூப்பு வரினென் செய்வர்?
விளையாட் டுவகையும் விளம்பி னற்றே.
இம்மூ வுவகையு மென்று மெங்கு

மம்மா வடைத லரிதே யரிதே!       65
ஆயின்
கல்விப் புலமைக் கரைகண் டுற்றவ
ரல்லும் பகலு மனைத்திடந் தனிலும்
நூனயந் தன்னை நுண்ணிதி னுணர்ந்து
தேனிய வுவகையிற் றிளைக்க வியலுமா

லென்று தெளிந்தே னின்றமிழ் கற்றேன்       70
துன்று சுவையெலாந் துய்க்கின் றேனே.
நன்றுநன் றுவகை நவிலுந் துணைத்தோ!
இதுநீ தேரி னிரியா யரைநொடி
மதுவுண் பறவைபோன் மாந்தி மகிழ்வாய்.

அத்தமி ழணங்கி னருமையும் பெருமையு       75
மெத்தகு திறத்தவென் றியம்புவன் றோழா!

தமிழ்த் தொன்மை

முட்டையோ புள்ளோ முதல தென்று
திட்டமா யுரைக்கத் தெரியா தாயினும்
மன்னி முதன்முதன் மக்கள் பேசிய

கன்னி மொழிநங் கன்னித் தமிழே.       80
மன்பதைத் தோற்றம் மாதமிழ் நிலத்தி
லென்பதை யுரைக்கி னிறும்பூ தென்ன!
நன்று சான்றும் நவிலுவன் மாதோ.
அமெரிக் காவிலோ, ஐரோப் பாவிலோ,

ஆப்பிரிக்காவிலோ, ஆத்திரே லியாவிலோ       85
மக்க ணெருக்கம் மண்டி யிருத்தல்
தக்க வாசியத் தரையி லன்றோ?
எப்பொருள் மிகமிக வெவ்வழி யிருக்குமோ
அப்பொருட் டோற்ற மவணே யன்றோ?

மண்ணுக் குள்ளே மறைந்த தொன்மைச்       90
சிந்து நாகரிகம் செந்தமி ழினத்தவர்
சிந்து நாகரிகச் செல்வமே யன்றோ?
தமிழ்த்தொன் மைக்குந் தக்கசான் றுண்டால்,
இமிழ்நீர் வரைப்பி லெதற்கு மிலாத

மென்மையு மினிமையு மேவிய வொலிநயம்       95
தொன்மை தமிழ்க்குத் துளக்குங் காட்டாம்.
மென்மை யன்றி மென்சிறார்ப் பேச்சில்
வன்மை தோன்ற வழிதா னுண்டோ?
தமிழ்மொழி முதன்முத றரணியிற் பேசிய

வமிழ்தத் தமிழரு மவர்க்கொப் பன்றோ?       100
அதாஅன்று,
ஒருசொல் பலபொரு ளுணர்த்தலுந் தமிழின்
பொருவி றொன்மையைப் புலனாக் கும்மே.
மாம னெனுமுறை மகவிடங் கூறின்
மாமனென் றழைக்கு மற்றை யோரையும்.

ஆமொரு பெயரை யாதித் தமிழர்கள்       105
பாமர நிலையில் பல்பொருட் கிட்டனர்.
அதாஅன்று,
அமெரிகா வாதியா மயனாடு கள் பல
ஆயிர மாண்டுமு னறியாமை யளற்று
டோயப் பெற்றுத் துஞ்சிய துண்மை.

அறிவுக் கெட்டா வையா யிரமேற்       110
செறியு மாண்டாய்ச் செந்தமிழ்த் தேமொழி
இயலிசை கூத்துக்க ளின்னபிற பெற்று
வயங்குவ துலக வரலா றன்றோ?

தமிழ்ச் சிறப்பு

அமிழ்தெனு மொலியுட னமைந்த வினிமையே

தமிழ்ச்சிறப் பிற்குத் தன்னிகர் கரியால்!       115
தானறி மொழிகளுள் தமிழ்க்கிணை யிலையெனு
மூனமி லுண்மையை யுரைத்தா னொருகவி.
எம்மொழி யினுமிலா வினிய ழவ்வொலி
நம்மொழி யுற்றது நனிசிறப் பாமே !

தனித்தியங் குஞ்சீர் தமிழினுக் குண்டு       120
இனித்திடக் கன்னலி லியாதிட வேண்டும்?
நுனித்துணர்ந் தாலிந் நுட்பந் தெரிதரும்.
தாய்மொழி தற்கிலை, தான்பன் மொழிக்குத்
தாய்மொழி யாகியுந் தானழி வுறாத

தாய்மொழி கன்னித் தண்டமிழ் கண்டாய்!       125
ஆய்வுறி னிணையிதற் காதி முதல்வனே!
வண்டமிழ்ச் சுவைநுகர் வாய்ப்பிலா தோரே
அண்டமு வீடு மவாவித் திரிவர்.
உனது மொழிப்பெய ரொருவர் வினவின்

'இனிமை யென்றுநீ யியம்பலாந் தடையிலை;       130
கன்னற் சுவையினைக் கழறுவா யென்றிடின்
நன்னர்த் தமிழ் 'என நவிலலாந் தவறிலை.
அணியும் பொன்னு மமைந்த வியைபென
இனிமையுந் தமிழு மிணைந்துள மாதோ.

தமிழ் வளர்ச்சி

பணியுங் கோயிலாப் பள்ளி தனைச்செய       135
எணினார் பாரதி யிந்நூற் றாண்டில்.
அரசி யாந்தமி ழன்னை தெய்வமா
அரண்மனை யனைத்து மருந்தமிழ்க் கோவிலா,
அரசியல் வினையெலா மார்வழி பாடா,

அரசியற் சிறப்பெலா மருமைசால் விழவா,       140
அரசுறு குடியெலா மன்புள வடியரா,
அரசமர் புலவோ ரருட்குர வோரா,
அரசர் ஓம்பு மறநிலைத் தலைவரா
யரசியல் வகுத்தே யாண்டன பூந்நாள்.

இந்தியா முழுமையு மிமய வரம்பன்       145
செந்தமிழ் கொண்டே சிறக்க வாண்டா
னென்பதை யவன்பே ரியம்பு மன்றோ?
தமிழரைக் கனக விசயர் தாழ்த்தச்
சுமைக்கல் சேரனாற் சுமக்க நேர்ந்ததே.

தமிழ்தீ தெனச்சொன தகவிலி யொருவனை       150
உமிபோற் புடைத்தே யுழக்கினர் கீரரே.
அரச ரழியினு மருந்தமிழ்ப் புலவோ
ரொருசொட்டுக் குருதி யுள்ள வரையிலு
முயிர் தந்து காப்ப ருயர்தமி ழென்றே

அயர்வின் றுணர்ந்த வதியமா னௌவைக்       155
குயிர்தரு நெல்லி யுவந்தளித் தானரோ.
காதலி வழங்கீடுங் கலவி விருப்பாற்
காதற் பணிபுரி காதலன் மான
மோசி கீரற்கு முன்னொரு சேரன்

வீசினன் சிவிறி வியன் றமிழ் விருப்பால்,       160
வேந்தருங் கழகம் வீற்றிருந் தருளி
மாந்தினர் தமிழ்த்தேன் மடுத்து மடுத்தே,
இவ்வணந் தமிழை யியம்பொண வகையில்,
பெருநிதிக் கிழவன் பிள்ளை யிலாம

லருமையிற் பெற்றவோ ராராக் காதற்       165
சேய்போ லோம்பினர் செந்தமிழ் மன்னர்;
தாய்போற் போற்றினர் தமிழ்ப்புல வோரித்
தொல்கதை நிற்குச் சொல்வத னோக்கம்
மல்கு தமிழினை மகிழ்ந்துநீ யெற்போற்

பயின்று தேர்ந்து பன்னூற் சுவையினை       170
அயின்று தமிழ்மே லாராக் காதல் புரிந்து
பண்டைய புலவோ ருறழவும். தெரிந்த
விருபா னூற்றாண் டினராம்

இக்காலத் தமிழ்ப் பெரியோர்

பாவலர் சோம சுந்தர பாரதி,

நாவலர் வேங்கட சாமி நாட்டார்,       175
மறைமலை யடிகள், மாகதி ரேசர்
முறைவல் சுப்பிர மணியப் பிள்ளை,
ஞானியா ரடிகள், நற்சாமி நாதர்,
உமாமகே சுவரர், உயர்சேதுப் பிள்ளை,

மீனாட்சி சுந்தரர், மிகுவேங் கடாசலர்.       180
கலியாண சுந்தரர், கவிசுப்ர மணிய
பாரதி, கவிமணி, பாரதி தாசர்,
சிதம்பர நாதர், சீர்சச் சிதானந்தர்,
தமிழிசை காத்த தகவா ரணாமலை

யாதி யாந்தமி ழறிஞ ரியையவு       185
மாதித் தமிழ்க்குவல் லரணிட வேண்டலே.

செந்தமிழன்னை

ஆகா வொன்றியா னறைய மறந்தே
னேகா ததனை யியம்பக் கேணீ!
செந்தமிழ் நாட்டுள சீர்கேடு கள்பல

வந்தென் னெஞ்சுள் வருத்தின வோரிரா.       190
வருத்தந் தன்னொடு வானிலா முற்றத்
தொருத்தனாய்ச் சென்றே யுலவினன், நின்றேன்.
என்றன் கலக்க மிளநிலா கண்டு
நின்று நகைப்பதாய் நினைத்து முணுகினேன்.

வருத்தம் பொறாதோ, வைவே னென்றோ,       195
சிரித்த வெண்மதி சென்றது முகிலுள்.
மயங்கிய மனம்போன் மங்கியது வானம்.
இந்நிலை கண்ட எழில்விண் மீன்சில
கண்சிமிட் டாலென் கதையைப் பேசின.

இருந்தேன், கிடந்தேன், எண்ணினே னவண்பல,       200
மருந்தொன் றறியாது மாழ்கிப் போனேன் .....
தொழில்கிடை யமையா றோலு மென்புமா
யெழில்குறை மகற்கோர் தொழில்கிடைத் தாலென,
சிந்தா மணியுஞ் சிலம்பு மேகலையும்

நந்தா வளையு நல்ல குண்டலமும்       205
திருக்குற ளடியுந் தொல்காப்பியத் திருவு
மெட்டுத்தொகை யாரமும் பத்துப்பா மாலையும்
இன்ன பலவு மியைந்த செந்தமி
ழன்னையென் னுளக்கட் களித்தனள் காட்சி.

விழுந்தேன் றாளில் விம்மினன் சேய்நா       210
னெழுந்தேன் கைகுவித் திறைஞ்சினன் றாய்முன்.
பான்மதி நோக்கிப் பயில்சக்ர வாகமாய்
வான்கதிர் நோக்குறு வண்டா மரையா
யன்னை வழங்கு மருணோக் கிற்குங்

கன்னன் மொழிக்குங் காத்திருந் தேனால்.       215
தாயின் முகக்குறி தானே யுணர்த்திற்று
சேயின் கடமைகள் செப்பொணா தாமென.
அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்ததை முகமே காட்டு மன்றோ?

கடன்மடை திறந்தெனக் கழறினள் பிற்பல       220
விடலாய்! அனைத்தும் விளம்புவன் செவிசாய்

அன்னையின் அறிவுறூஉ

மொழியின் இழிநிலை

'மக்கா லென்னை மறந்தனிர் நீவிர்
தக்க தோவிது தமிழர் பண்போ?
கோவிலிற் குலவினேன் குளத்திற் றள்ளினீர்,

அரண்மனை யாண்டே னகழியில் வீழ்த்தினீர்       225
திருமணங் கண்டேன் றெருவி லோட்டினீர்,
பள்ளியுட் பறந்தேன் கிள்ளினிர் சிறகை,
பேச்சிலு மெழுத்திலு மூச்சை யழுத்தினிர்.
அதனால்,
அடுப்பங் கரையி லரிவைய ராட்சியில்

தடுப்பே யின்றித் தங்கிப் பிழைக்கிறேன்,       230
தாய்மையை மதிக்குந் தகவு நந்தமிழ்த்
தாய்மா ரிடத்தி றழைப்பதைக் காணலாம்.
தாய்மனை யிருந்து தம்பிதன் கணங்கனை
அழைத்து வந்தாலு மரிவை யொருத்தி

யுழைப்பாள் மகவினு முற்றவந் நாய்க்கே.       235
எனவே,
சேலை யுடுக்குந் திருவுரு வங்களே
சால எற்குச் சார்பா யினவால்
தாய்மைக்குஞ் சேலைக்குந் தங்கிய பொருத்த
மாய்வுறி னம்மா வழகி தழகிதே!

நாடா ளாடவர் நயந்தனர் பிறமொழி       240
வீடாள் பெண்டிர் விழைந்தன ரென்னையே
வீடா ளுருவம் நாடாள வந்தால்
வாடா மலராய் வாழ்வன் யானே.
ஒருகால்,
வீடா ளுருவத்தின் விளங்கு முடையினை

நாடா ளுருவம் நன்கு கொளினும்       245
வாடா மலராய் வாழினும் வாழ்குவல்!
தாய்மையை வளர்ப்பதவ் வுருவு தானன்றோ?

வளர்க்குங் காரணம்

இன்னு மதலா யியம்புவ னிற்கே
என்னை வளரென வியம்புவ தென்னெனின்

என்ற னலத்தை யிம்மியுங் கருதிலேன்.       250
நீரைத் தூய்மையாய் நிறையத் தேக்கென
நவில்வது நீரி னன்மைக் கேயோ?
பயிரை வளர்த்துப் பாதுகாப் பாயெனப்
பகர்வது நிற்கோ பயிர்க்கோ பகராய்!

உடலோம் புவது முயிரோம்ப வன்றோ?       255
எனையோம் பென்றது நினையோம் பென்றதே.
தாய்மருந் துண்பதுஞ் சேய்நலக் கன்றோ?
என்னிடந் தன்னி லின்னொருத்தி யமரி
னுன்னைக் காப்பளோ வுன்பின்னைக் காப்பளோ?

மாற்றாந் தாய்கள் மாநில மீது       260
கூற்ற யமைவதைக் குறிக்க வேண்டுமோ.

ஒற்றுமை நாடகம்

போலி யொற்றுமை புகலுவர் புல்லோர்
சாலவு நெஞ்சிற் சாக்கடை யோடும்.
எடுத்துக் காட்டோ வின்னு மீவேன்:

இராமன் முடிசூட்டை யேற்றாள் கோசலை,       265
பரதற் கேயெனப் பகர்ந்தனள் கைகயி.
இயற்கை யிதுதான்! இயற்கை யிது தான்!
செயற்கை சின்னாட் சென்றதுஞ் சென்றிடும்.
நாட்டிலே யொற்றுமை நடிப்பவர் பல்லோர்

வீட்டிலே யதனை வேலியிட் டொதுக்குவர்.       270
ஓரடி மண்ணிற் கொன்பதி னாயிரம்
வெண்பொற் காசுகள் வீணா யழுது
பிறவிப் பகையாவர் பிறப்பொரு மித்தோர்.
ஊரிலே சிவன் கோவி லிரண்டாம்;

இரண்டு சிவனு மேகுவர் கடற்கே.       275
எங்கள் சிவன்முந்தி யெங்கள் சிவன்முந்தி
யென்றே யிரண்டு திருக்கோவி லாரும்
நின்று பொருது நீதிமன்று செல்வர்.
எந்தச் சிவன்முந்தி யேகினா லென்ன

வென்றே யுணர்ந்திடு மியல்பிலா மாக்கள்       280
எம்மொழி தனைக்கொண் டியாரியாண் டாலும்
பொம்மைகள் போலப் புரிவ ரொற்றுமை.
ஒற்றுமைப் பொருளை வேற்றுமை யாக்கினர்;
வேற்றுமைப் பொருளை யெற்றுமை யாக்கினர்.

இதுதா னொற்றுமை யிலக்கண வழகோ?       285
மொழிபுரி யாத முதற்காரணத்தா
னிந்தியிற் பேசு மெழிற்படக் காட்சிக்
கேகாப் பல்லோ ரேதும் புரியா
வடமொழி தன்னாற் சடங்கது செய்வது

மடமையுட்-டேர்ந்த மடமை யன்றோ?       290
பிறமொழி தன்னைப் பிழையற வெழுதுவோ
ரென்னைப் பிழைபட வென்று மெழுதுவர்.
இதற்கெது காரண மெண்ணிப் பாரே!
எனவே,
தமிழ்நா டதனி றமிழ்மொழி கொண்டே

எல்லா நிகழ்ச்சியு மியற்றிடல் வேண்டும்       295
தமிழ ரனைவருந் தமிழ்மொழி கற்றுப்
பிழையற வெழுதவும் பேசவும் வேண்டும்.

பழுது பார்ப்பவர்

ஐயகோ மைந்தா வறையவொன் றுளதால்
வையகந் தன்னி லென்னை வளர்க்கத்

தலைப்பட்டுள்ளனர் தான்றோன்றி கள்சிலர்       300
குளிக்கப் போய்ச்சேறு கொண்டவர் புரைய.
பாங்குறு ஞாலம் பரவி மிளிரு
மாங்கில மிருபத் தாறெழுத்துடையதாம்.
எழுத்துப் பெருக்க மென்னிடை யுளதாம்.

அச்ச தடிக்க வலுப்புற் றென்னைப்       305
பழுது பார்க்கப் பாடு படுவர்.
இன்றியமை யாதவை யென்னெழுத்தெல்லாம்
நன்று விளக்குவ னாடி யோர் நீ!
பயிறரு மாங்கிலப் பண்புறு மொழியி

லுயிருண்டு மெய்யுண் டுயிர்மெய் யாங்கில.       310
என்னிட மெல்லா மன்னி யுள்ளன.
தமிழினு மாங்கில மெய்யே மிகுதி !
உயிர்குறை வாலவ் வுலக மொழியுட்
குறினெடில் தனித்தனி குறிப்பது தொல்லை.

'வடமலை' யென்பதை 'வாடாமாலை' யென்ப;       315
'வாடாமாலை' யை 'வடமலை' யென்ப.
ஆங்கிலக் குறைவி னழகு புரிந்ததோ?
தமிழெழுத்து மிகுதியின் றகுதி தெரிந்ததோ?
'திருமுருகு' என்பதைத் தெரிய வெழுதி

னைந்துயிர் மெய்யா லமையுந் தமிழில்.       320
அங்கிலந் தன்னி லதனை யெழுத
வைந்துயி ரெழுத்து மாறுமெய் யெழுத்து
மாகப் பதினொன் றமைக்க வேண்டுமா
லுயிர்மெய் யில்லா வுண்மைக் குறையால்.

அச்சுக் கோப்பவர்க் கல்ல றருவது       325
மெச்சுமங் கிலமோ, மேன்மைத் தமிழோ?
தமிழி லுயிர்மெய் தானிலை யென்றா
லச்சுக் கோப்பதி னல்ல லுடனே
பக்கமு நீளும் பணச்செல வாகுமே.

இக்குறை நீக்கவே யிருந்தமிழ் முன்னோர்       330
தக்கநன் முறையி றமிழெழுத் தமைத்தனர்.
நுட்பமிஃ துணரார் நுவலுவர் குறைபல,
செருப்பிற் கேற்பச் செதுக்குவ ரடியை.
பழுது பார்ப்பவர் பைந்தமி ழெழுத்தைக்

கூட்டியுங் குறைத்து மாற்றியும் புதுக்கினால்       335
நாட்டினர் நன்மையை நசுக்குவ தாகும்.
எழுத்தே யறியா ரெண்ணிறந் தோருளர்;
அரைகுறை யாக வறிந்தோ ரொருசிலர்:
முற்று முணர்ந்த மூதறி ஞர்சிலர்.

அனைவரை யுஞ்சம னாக்குவ தென்று?       340
எம்முறை யெழுத்தா வியற்றலாந் தொண்டு?
புதுமுறை யோர்க்குப் புரியுமோ பழநூல்?
பலவித மாகப் பழந்தமிழ் நூற்கள்
செல்ல லுற்றன, சிலவே யுள்ளன.

அவைதமைக் கற்கு மாற்றலும் போமிப்       345
புதுமுறை மொழியால், புகலுவீர் நல்விடை !
பழைய நூற்களைப் பரவையி லிட்டுப்
புதியதா யச்சுப் புரிவதென் றாலும்
பொருளுங் காலமும் போமே வறிதாய்.

தொல்லையைக் கைவிடின் தொல்லைகை கூடுமே.       350
நல்ல பஞ்சை நனைத்துச் சுமப்பதோ !
எழுத்திங் ஙனமே யிருக்கலாம் பழுதிலை.
பழுத்த கலையெலாம் பரப்பலே வளர்ச்சியாம்.

எதிர்காலத் தமிழகம்

என்னுயிர் தமிழ்மொழி என்னுட றமிழ்நிலம்,

நன்னர் மொழிபற்றி நவின்றிட் டேனினி       355
நாடு குறித்தும் நவில்வே னொருசில.
மக்க ளனைவரும் மகிழு வண்ணம்
தக்கசீர் திருத்தந் தான்செய வேண்டும்.
எதிர்கா லத்தே யென்றமி ழகத்தில்

ஏழை செல்வ னென்னும் பிரிவினை       360
வீழ வேண்டும் விளம்பி னன்கு.
அனைவருஞ் செல்வரா யனைவரு மேழையாய்
நனிதிகழ் வாழ்வையே நாடுமென் னுள்ளம்.
எவரு மெல்லா வின்பமு மெய்தலா

லெவருமென் னாட்டி லிரும்பெருஞ் செல்வராம்!       365
எவர்க்குந் தமக்கென வேது மின்மையா
லெவரு மேழையா யிருக்கற் பாலரே!

இரப்பவர் புரப்பவ ரென்னுஞ் சொற்களைத்
தமிழ்மொழி நின்றுந் தகர்க்க வேண்டுமே.

ஏழை யில்லெனி னிரப்பவ ரேது?       370
இரப்பவ ரில்லெனின் புரப்பவ ரேனோ?
அதாஅன்று,
வைரந் தன்னினும் வண்பசும் பொன்னே
மதிப்பிற் குரியதா மன்ன வேண்டுமால்.
வெள்ளியைப் பொன்னினும் விலைமதிக்க வேண்டும்.

வெள்ளி யிரும்பினும் விலைகுறை வுற்றிடும்.       375
இரும்பின் மதிப்பே யெவற்றினு மிக்கதாம்
அங்ஙன மாயி னனைத்துப் பொறிகளு
மிரும்பினா லன்றோ வியங்கு கின்றன
இரும்பு விலையேறி னென்னா முலகம்

என்று மயங்க லிம்மியும் வேண்டாம்.       380
இரும்பே சிறந்த தென்றதி னோக்கம்
இப்போ துள்ள விரும்பு விலையினும்
வெள்ளி யின்விலை விரைவிற் குறைய,
அதனினும் பொன்னு மதனினும் வைரமும்

படிப்படி யாகப் பாரிற் குறைதலே!       385
பொன்னும் வைரமும் புனைவதைத் தவிர
என்ன நன்மையை யீந்திடு கின்றன?
இரும்போ பற்பல வியங்கு பொறிகளைத்
தரும்பொரு ளானதிற் றனிமதிப் புடையதே !

உழைத்துழைத் திந்த உலகிற் குதவாது       390
தழைத்த வுருவெழில் தாங்கிய செல்வன்,
உழைத்துழைத் திந்த உலகிற் குதவி
கிழித்த கந்தையுங் கிடைக்கா வுழவ
னென்னு மிருவரை யீண்டு நிறுத்துவம்,

முன்னவன் வைரம்,பின்னவ னிரும்பு.       395
அழகிய பொருளா லாக்க மாமோ?
உழைக்கும் பொருளா லூதிய மோவுரை?
ஆயிரக் கணக்கி லமுங்கிக் கிடக்கும்
அணிக டம்மை யடலா ரிரும்பாய்

மாற்றிப் பொறிகளை நாட்டி லேற்றித்       400
தொழிற்கூடங்கள் தொடங்க வேண்டுமே.
உழவருந் தொழிலரு முயர்ந்தோ ராவர்
உண்டுகளித் திருப்போ ருடும்புக ளாவர்.
பெற்ற தாயாம் பெருநில மங்கையா

னுற்றுழைக் கின்றே னுங்கட் கென்றும்.       405
சுற்றிச் சுற்றிச் சுடர்கதி ரொளியைப் பெற்றுப்
பெற்றுப் பேருணா விளைக்கிறேன்,
உழையா மல்யா னொருநிலை கொள்ளி
னிரவுபக லேது? இன்பமு மேது?

என்னைக் கண்டு முழையா மனிதன்       410
றன்னைக் கண்டியான் றாங்காது நகுவல்.
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகு'மென் றென்மகன்
திருவள் ளுவனுந் திருவாய் மலர்ந்துளான்.
அதா அன்று,

என்ற னாட்டி லெழினீதி மன்றமும்       415
துன்று காவ றோய்நிலை யங்களு
மிருத்தல் வேண்டா. இருந்தன வோமுன்?
கலகங் கொள்ளை காண வாழ்க்கை
யுலகங் கொள்ளி னொழிந்திடு மன்னவை.

குற்ற வாளியைக் கொள்ளுஞ் சிறைகள்       420
குற்ற மிழைப்போர் குறுகா மையினால்
தொழிற்சா லைகளாய்த் துலங்கிட வேண்டும்.
உருவந் தவிர ஒன்று மின்றித்
திருக்கோவி லென்றுந் திறந்திருக்க வேண்டும்.
அதாஅன்று,

சாதி சமயச் சழக்குகள் வேண்டா.       425
ஓதி னொருகுல மொருமதம் வேண்டும்,
அன்னவை தமிழ்க்குல மழகிய தமிழ்மத
மென்னலுந் தவறாம்; இரண்டையு மிணைத்துத்
'தமிழர்' என்னுந் தனிப்பெய ராலே

மொழிதலே நலமாம் முழுப்பொருத் தமுமாம்.       430
இம்முறை யாக வெனனுயி ருடலாஞ்
செம்மைத் தமிழையுஞ் சிறந்த நாட்டையும்
வளர்த்திடு வீரேல் வண்டமிழ் மக்களே
உலகத் தேயுயர்ந் தோங்கி வாழ்விரே !

என்றே, செந்தமி ழன்னை செப்பினள் கரந்தாள்.       435
ஆன்பிரி வுற்ற வருங்கன் றென்ன
யான்விழிப் புற்றே னியாரையுங் காணலன்;
அனைத்துங் கனவென் றறிந்தே னாங்கே.
கனவினி லன்னை கழறிய வனைத்தும்

நனவாக் குதலே நங்கடன் றோழா!       440
தமிழறி யாதார் தமிழ்த்தொண் டாற்றல்
நீந்தத் தெரியாது நீரிறக்க லன்றோ?
இடனின்றி யோவிய மெவண்தீட் டுவதோ?
முதலின்றி வணிகம் முற்றுப் பெறுமோ?
அதனான்,

சென்று தீந்தமிழ் தேருந் திறனும்       445
நன்று நிற்கே நவிலுவ னண்பா!
(ஐயாற்று அரசர் கல்லூரி)
ஆறு முழங்கி யருளலா லிலங்கைக்குச்
சோறு வழங்கிய சோணாட்டதனுள்,
ஐயாற் றுவள மமைந்த நற்றிரு

வையாற் றினிலே வணிகொள் காவிரிக்       450
காவிரி கரையிற் காண்பாய் கல்லூரி.
ஆற்றுநீ ருளத்தை யாற்ற வீர்த்திடும்,
வெள்ளி மீன்க டுள்ளிவிளை யாடும்.
கள்ளமில் காளையர் வெள்ள நீந்துவர்,

முந்தையோர் தம்மை முன்னு முறையில்       455
தந்திரப் புரோகிதர் மந்திரம் ஓதுவர்.
பட்டிக் காட்டான் யானைகண் டாலெனப்
பார்த்து நின்று பறிபோ யுள்ளம்
அன்ன வற்றிற் கடிமை யாகாதே

அரசர் கல்லூரி யடைந்து கற்பாய்!       460
அதாஅன்று.
[அண்ணா மலைப் பல்கலைக் கழகம்]
செல்வப் பயனைச் சிறக்க வுணர்ந்து
பல்கலைக் கழகம் பல்கலைச் செய்தோன்
வந்த பிறவிசை வளர்ப்போர் நடுவண்
செந்தமி ழிசைக்குச் சிற்பி யானோன்

பெரும்புகழ் மலையன் பெயர் அண்ணாமலை       465
தருகழ கத்தினுந் தமிழ்மொழி பயிலலாம்.
அதாஅன்று,
[காந்தை-தருமபுரம்-கல்லூரிகள்]
தமிழ்வேந் தாண்ட தஞ்சை யருகி
லமிழ்தினு மினிய தமிழ்மொழி வளர்க்கக்
கரந்தைத் தமிழ்ச்சங்கங் கண்ட காவலன்

உமாமகே சுரக்கதி ருதவ மலர்ந்து       470
ஆவடுதுறை அடிகளின் அருள்பெறு கலூரியும்,
தருமபுரக் கலூரியுந் தக்கவாந் தமிழ்க்கே.
அதாஅன்று,
[மயிலந் தமிழ்க் கல்லூரி]
இலக்கியங் கற்போர் இலக்கியங் கோதையும்,
காவடி யெடுப்போர் காவடி முழக்கும்,

அணிவிழாக் காண்போ ரணிவிழாக் கலியும்,       475
காளைக ளோட்டுங் காளைகள் கறங்கும்,
கவலையிறைப்போர் கவலைப் பேச்சும்
மோடார் காரின் முழக்கோ டிரட்டுஞ்
சீரார் மயிலச் சேயோன் பிறங்கலில்

செந்தமிழ்க் கொண்டல் சிவஞான பாலையர்       480
தந்தகல் லூரியுந் தங்கிப் பயிலலாம்.
அதாஅன்று,
(திருப்பதிக் கல்லூரி)
ஆயிர மாயிர மாண்டுக ளாக
வண்டமிழ் நாட்டின் வடவெல்லை யாகத்
திகழ்திருப் பதியாந் திருப்பதி தனிலும்

மகிழ்தரு கலூரி மாதமிழ்க் குண்டு.       485
(திருப்பனந்தாள் -- மேலைச் சிவபுரி)
திருப்பனந் தாளமர் திறவோர் கலூரியும்,
மேலைச் சிவபுரி மேவுகல் லூரியும்
நூலைக் கற்றற்கு நுவலி னேற்றவே.
அதா அன்று,
[பிற விடங்கள்]
இந்நூற் றாண்டி லேற்றங் கொழிக்கத்

தமிழர் நாட்டின் றலைநக ராயுள       490
சென்னை நகரஞ் சென்றுங் கற்கலாம்.
மன்னவர் மாறர் மன்னி வளர்த்த
முன்னைய மதுரையு மொழியிற் றக்கதே.
கடல்சார் புதுவைக் கல்விக் கழகமும்

நந்தமிழ் நாட்டுள நற்கழ கங்களுஞ்       495
செந்தமிழ் பயிலச் சேர்துணை யாமே.
உன்னிலைக் கேற்ப வோரிட முற்றே
நன்னர்த் தமிழை நயந்து கற்பின்
பின்னர்ப் பேறு பேசுந் தரத்ததோ !

கன்ன றின்னக் கைக்கூலி வேண்டுமோ?       500
இன்பம் பெற்றிடி னெனக்கோ வளிப்பாய்?

வாழ்வு சிறக்கும்

நூறாட் டைய னொள்ளை விழியன்
சோறே சோறெனச் சோரு மிரவலன்
இளமையுங் கண்க ளிரண்டுஞ் செல்வ

வளமையும் பெற்ற வாழ்வு கடுப்பத்       505
திருவள்ளுவர் தந்த திருக்குறள் பெறுவாய்!
பெருநூற் பிறவும் பிறங்க வறிவாய்!
வாழத் தெரிந்து வையம் சிறப்பாய்!
ஆயின்,

நன்றியுணர்வு

ஏற்றிய ஏணி தீ யேற்றி விடாதே

கடத்திய கலத்தைக் கடத்தி விடாதே       510
தீட்டிய மரத்திற் கூர்தீட்டாதே
குரவர்க்கெதிராய்க் கோலா டாதே
குலத்தைக் கொல்லுங் கொம்பா காதே
தமிழ்நிலம் பிறப்பகம், தமிழ்மொழி தாய்மொழி

தமிழர் சூழலுள் தங்கியது வாழ்வே, அதனான்,       515
தமிழ்நிலம் தமிழ்மொழி தமிழர் தம்மைக்
கைப்பா யெணாதே! காட்டிக் கொடாதே!
செந்தமிழ் நம்பெருஞ் செல்வம்
நந்தமிழ் வளர்ப்போம் நாம்வளர் வோமே!
---------------

குறிப்புரை :--

1-11. வயிற்றில் பத்து மாதமே இடந் தந்து, சில்லாண்டே உணவளித்த தாய், பின் பிள்ளையிடம் பதிலுதவி நாடுகிறாள். தமிழ்நாடோ, மக்கட்குப் பல்லாண்டு உறையுளும் உண்டியுந் தந்தும் பதிலுதவி எதிர் பார்ப்பதில்லை; ஆதலின் அது தாயினுஞ் சிறந்தது.

12-17. மனிதன் பிறப்பிலும் இறப்பிலுஞ் சமனே; வாழ்வு தாழ்வுகள் இடையில் வருவனவே. அதுபோல இடையில் எத்துணை மொழி கற்றாலும், தமிழன் இளமையிலும், இறக்கும் முன் மனைவி மக்களிடத்தும் தமிழ்தானே பேசுகிறான்?

23-புரைய = ஒப்ப.

26-29 நெய்யைத் தான் பெற்றும், அதன் சுவையைப் பித்தளை சுவைப்பதில்லை; அதுபோல, தமிழைத் தாய் மொழியாகப் பேசப்பெற்றும் சிலர் அதன் நூல்நயம் முதலியவற்றை அறியவில்லை.

32-48. இப்பகுதியில் வாழ்க்கை கப்பலாக உருவகஞ் செய்யப்பட்டிருத்தலின் உருவக அணி. வங்கம் = கப்பல்; செல்லல் = துன்பம். மீகான் = கப்பலோட்டி. நாவாய் கப்பல். கரா = முதலை. வேணவா = பேராசை. கொடுங்கால் = கொடிய காற்று. உரகம் = பாம்பு. கலம் = கப்பல். எட்டியாயின = எட்டி விலகின; எட்டிக்காய்போலாயின.

52-54 - உவகை = மகிழ்ச்சி. உசாவினேன் = வினவினேன்.

55-56- இது தொல்காப்பியப் பொருளதிகார மெய்ப் பாட்டியலில் உள்ள சூத்திரம். இங்குச் செல்வம் முதலிய வற்றிற்குள்ள வேற்றுமை விளக்கப்படலின் இது வேற்றுமை யணி.

58- ஆசுஇரி மொழி = குற்றம் நீங்கிய மொழி.

60 - செல்வம் = பொருட்செல்வம்; சென்றுவிடுவோம்.

61 - புணரா நின்றவர் = புணர்ந்தவர்.

66 - கல்விப் புலமைக் கரைகண்டு உற்றவர் = கல்வியின் எல்லையை முடியக்கண்டவர்; கல்வியாகிய கற்கண்டைச் சுவைத்தவர்.

73-74 - இரியாய் = (தமிழைவிட்டுப்) பிரியமாட் டாய். மதுவுண்பறவை = தேனுண்ணும் வண்டு. இதனை, 'தாதுண்பறவை பேதுறல் அஞ்சி' என்னும் அகநானூற்றுக் களிற்றியானை நிரைப் பாட்டாலு முணர்க. வண்டும் பறத்தலின் பறவை யெனப்பட்டது.

81 - மன்பதை = மனித சமுதாயம்.

84-92 எப்பொருள் எங்கே மிக்குள்ளதோ அவ்விடமே அது ஆதியில் தோன்றிய இடம் என்பது கண்கூடு, எனவே, மக்கள் மிக்குள்ள ஆசியாவே முதலில் மனிதன் தோன்றிய இடமாம். அதிலும், தோண்டியறியப்பட்ட சிந்து நாகரிகமே தொன்மையது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு; அது பழந் தமிழ் நாகரிகமே.

91-92- சிந்து நாகரிகம் - சிந்து வெளிநாகரிகம்; தமிழர் சிந்திய நாகரிகம்.

94-100- குழந்தைகளுக்கு மென்மையாகத் தவிர வன்மையாகப் பேசவராது - தமிழோ மென்மொழி, எனவே, உலகில் முதலில் தோன்றிய குழந்தை மனிதன் பேசிய மென்மொழியே தமிழ்மொழி என்பது
பெறப்படும்.

101-106 - குழந்தைக்கு மாமன் என்றதைக் கற்றுக் கொடுத்தால், எல்லோரையும் அச்சொல்லால் அழைக்கத்
தொடங்கும். அதுபோல் அக்குழந்தை மனிதன் முதலில் அறிந்த ஒரு சொல்லால் பலபொருளை அழைத்து வந்தான்.

107 - 113- அமெரிக்கா ஏறத்தாழ 450 ஆண்டுகட்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு நாகரிகமுற்றது. தமிழ்நாடு 5000 ஆண்டுகட்கு முந்திய நாகரிகமுடையது.

108 - அளறு - சேறு.

114 - 115- தமிழ் தமிழ் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே யிருந்தால், அமிழ்து - அமிழ்து என்னும் உச்சரிப்பு உண்டாகு மன்றோ? கரி = சாட்சி.

116 - 117. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்' என்றார் கவி சுப்பிரமணிய பாரதியார்.

118 - 119 - 'ழ' என்ற இனிய உச்சரிப்புடைய எழுத்து தமிழ் தவிர வேறெம் மொழியிலும் இன்று. ஆனால் பிரஞ்சு மொழியில், 'G' என்ற எழுத்தை 'ழ' என்ற உச்ச ரிப்புப்போல் ஒலித்தாலும், 'ழ' என்ற உருவம் தமிழுக்கே உரியதாயிருத்தல் போல, 'G' என்ற உருவம் பிரஞ்சுக்கே யுரிய சிறப்புருவம் அன்று ஆங்கிலத்திற்கும் உரியதல்லவா அது?

120 - 121- பிறவற்றை இனிக்கச் செய்யும் இயல்புடைய கரும்பை இனிக்கச் செய்ய அதனுடன் மற்றொன்றைக் கலக்க வேண்டுமா? தமிழ் இயங்குவதற்குப் பிறமொழி இன்றியமையாததா? தமிழில் பிறமொழி கலப்பவர், கருப்பஞ் சாற்றில் கனிச்சாற்றைக் கலந்து, இரண்டின் இயற்கைச் சுவைகளையும் கெடுத்தவராவ ரன்றோ?

127-128 - தமிழைச் சுவைக்க அறியாதோரே சுவர்க்கமும், முத்தியும் நாடுவர்.

129-134- கன்னல் = கரும்பு. நமது மொழிக்கு = 'இனிமை' என்னும் பெயரையும், கரும்பின் சுவைக்கு தமிழ்' என்னும் பெயரையும் பரிமாறிக் கொள்ளலாம். இரண்டும் ஒன்றே. பொன் வேறன்று - அதனால் செய்யப்பட்ட நகை வேறன்று - அது போன்றதே தமிழும் இனிமையும்.

135 - 136 'பள்ளித்தலமனைத்துங் கோயில் செய்வோம்' என்றார் சுப்பிரமணிய பாரதியார்.

137-144 - தமிழ் தெய்வமாக உருவகஞ் செய்யப் பட்டுள்ளது. இது உருவக அணி.

145 - 149 - இமய வரம்பன் - இமயமலையைத் தன் வடவெல்லையாகக் கொண்டாண்ட சேரன். இவன் தமிழ் மொழியைப் பொது மொழியாக வைத்து இந்தியா முழுமையும் ஆண்டதையும், இவன் மகன் சேரன் செங்குட்டுவனால் வடநாட்டு மன்னர் கனக விசயர் கல்சுமந்ததையும் சிலப்பதிகாரத்தில் பரக்கக் காணலாம். சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - வாழ்த்துக் காதை - உரைப் பாட்டு மடையில், இளங்கோவடிகள் நேரிற் கண்டதை எழுதியுள்ள --

"குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை" என்று செல்லும் பகுதியை ஆய்க.

150 - 151 - தமிழைத் தாழ்த்திய ஒருவனை, நக்கீரர் என்னும் புலவர் தாக்கினார் என்பதை, ஆரியம் நன்று தமிழ்தீ தென வுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனா ராணையினாற் செந்தமிழே தீர்க்க சுவாகா' என்னுஞ் செய்யுள் குறிக்கின்ற தன்றோ?
152 - 160 - அதியமான் நெடுமான் அஞ்சி யென்னும் அரசன், நீண்டநாள் வாழச்செய்யும் நெல்லிக்கனியை ஒளவையார்க் களித்ததையும், சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறை என்னு மன்னன், மோசிகீரன் என்னும் புலவர்க்கு விசிறி விசிறியதையும் (91 - 50) புற நானூற்றில் காண்க.

174 - 184 - சுப்பிரமணியப்பிள்ளை = சட்ட நிபுணர் (எம்.எல்.பிள்ளை). ஞானியார் = திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள்.வேங்கடாசலர் = கரந்தைக் கவியரசு கவிமணி தேசிக விநாயகர். சிதம்பரநாதர்= டாக்டர். (அ.சி.) A.C.செட்டியார். அண்ணாமலை = ராசா.சர். அண்ணாமலை செட்டியார்.

193 - 199 இயற்கையாய் நிகழ்ந்த நிலா, விண் மீன்களின் செயல் செயற்கையாகக் குறித்தேற்றிச் சொல்லப்பட்டதால், இது தற்குறிப்பேற்ற அணி.

202-203- தொழிலில்லாதவனுக்குத் தொழில் கிடைத்தாற்போல் தமிழன்னை என் முன் தோன்றினாள் என்று கூட்டிப் பொருள் முடிவு செய்க.

204-207- இங்கு சிலேடையணி யமைந்துள்ளது. சிந்தாமணி = ஒரு தமிழ் நூல்; ஒராபரணம். சிலம்பு = சிலப்பதிகாரம் என்னும் நூல்; காற்சிலம்பு அல்லது ஒலிக்கின்ற மேகலை = மணிமேகலை என்னும் நூல்; ஓராபரணம். நந்தாளை = வளையாபதி என்னும் நூல்; வளையல், குண்டலம்- குண்டலகேசி என்னும் நூல்; ஒராபரணம், திருக்குறள் அடி = ஒரு நூல்; அழகிய சிறிய திருவடி. எட்டுத்தொகை ஆரம் = எட்டுவகையான மாணிக்கங்கள் கோக்கப்பட்ட மாலை; நற்றிணை முதலிய எட்டுத் தொகை நூற்கள். பத்துப் பாமாலை = பத்துவகை மலரால் தொடுக்கப்பட்ட மாலை; திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாட்டு நூற்கள்.
212-சக்கரவாகம் என்னும் பறவை சந்திரன் ஒளியில் மகிழுமாம்.

218-219- 'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்' என்னுந் திருக்குறள் இங்கு அமைக்கப்பெற்றுள்ளது.

224-228- இங்கெல்லாம் தமிழ் மொழியின் இடத் தைப் பிறமொழிகள் பெற்றுள்ளன.

229-247- ஒருபெண், தன் சேயைக் காட்டிலும், தாய்வீட்டிலிருந்து தம்பியுடன் வந்த நாயையே முதலில் கவனிக்கத் தொடங்குவாள் என்றால், அவளது தாய்மைப் பற்றை என்னென்பது! நாடாளும் ஆடவர் தாய்மைக்கே முதன்மையளிக்காது பிறவற்றிற்கே யளிக்கின்றனர். அதனால்தான் வீடாளும் பெண்டிர் யாங்களாயினும் தாய்மையை மதிப்போம் என்கின்றனர்போலும்! தாய்மைக்கும் சேலைக்கும் எவ்வளவு பொருத்தம்! பெண்கள் நாடாள வந்தாலாவது அல்லது பெண்களின் உடையை ஆண்கள் அணிந்து ஆளத்தொடங்கினாலாவது ஒருவேளை தாய் மொழிக்கு முதன்மையளிக்கப்படுமோ? சுணங்கன் = நாய்

255- 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்', 'உடம் பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்னும் திருமூலர் திருமந்திர அடிகளை ஈண்டு ஒத்திட்டு நோக்குக.

259-261- பின்னை - பின்வந்து குடியேறியவரை, தன் தாய்க்குப் பின்வந்த மாற்றாந்தாய், தனக்குப் பின் அவளுக்குப் பிறந்த பிள்ளையையே பேணுவதுபோல, தமிழ் சென்றபின் ஆட்சிசெய்யும் அயல்மொழிகள், தமிழரினும் அம்மொழியினர்க்கே ஆக்கம் அளிக்கும் என்பதை, தாயிழந்த பத்து வயதுச் சிறுவனும் அனுபவவாயிலாக அறிவானன்றோ?

273 - பிறப்பொருமித்தோர் - சகோதரர்கள்.'பங்காளிக்குப் பல்லில் விடம்' என்பதை இங்கு நினைவுசெய்து கொண்டால் போதும்

274-278- மாசிமக விழாவிற்காகக் கடலிற்குச் சுவாமிகள் போகும்போது, முன்பின் செல்லுதலைக் குறித்து நடத்தப்பட்ட போர் நீதிமன்றம்வரை சென்றது சில ஊரினர்க்குக் கண்கூடு.

286-290- சில கிழவர்கள், புரியாத இந்தி சினிமாவிற்குப் போகவேண்டாம் என்று இளைஞர்களைத் தடுக்கின்றனர். அவர் வீட்டுத்திருமணத்திலும், அவர் ஊர்க்கோயிலிலும் ஐயரால் முழக்கப்பெறும் வடமொழி, அயருக்கும் ஐபருக்கும் எந்த அளவு புரிந்திருக்குமோ/

291-293 ஆங்கில முதலிய அயல் மொழியில் பட்டம் பல பெற்ற பல்லோர், தமிழில் தவறின்றி ஒரு பக்கம் எழுத அறியாதிருப்பது யார் செய்த தீவினையோ!

313-318 ஆங்கில உயிரெழுத்தில் தமிழைப்போல் குறில் நெடில் இல்லை, அருணாசலத்திற்கும் A-யில் தொடங்க வேண்டும். ஆறுமுகத்திற்கும் A-யில் தொடங்கவேண்டும். எல்லப்பனுக்கும் E-யில் தொடங்கவேண்டும். ஏகாம்பரத் திற்கும் E-யில் தொடங்கவேண்டும். இக்குறையால், Vada- malai என்பதை, வடமலை, வாடாமாலை என்று இருவித மாகவும் படிக்க வேண்டிவருகின்றது. இது பல சமயங்களில் தொல்லை தருகிறது.

319-333 'திருமுருகு' என்னுந் தமிழ்ச்சொல்லை, Thirumuruhu என ஆங்கிலத்தில் எழுதும் முறை, த் இ ர் உம் உர் உக் உ - எனத்தமிழில் எழுதுவது போன் றதாகும். ஆங்கிலத்தில் உயிர்மெய் யில்லாததால் ஓர் உயிர் மெய் யெழுத்தை அச்சுக்கோப்பதென்றால் இரண்டெழுத்துக்களை யெடுத்து இரண்டுமுறை கோக்கவேண்டும். காலமும் வீண்; பக்கமும் நீளும். தமிழிலோ அவ்வளவு தொல்லை யில்லையன்றோ? எனவே அச்சுக் கோப்பதற்கு எம்முறை யெளிது?

342-353 எழுத்துக்களைப் புதிதாக மாற்றினால், பிற்கால மக்கட்கு வீட்டிலுள்ள பழம் நூற்கள் பயனற்றன வாகிவிடும். புதிதாய் அச்சிடுவதால் பொருளாதாரம் பாதிக்கப் படுமன்றோ? மேலும், நாட்டில் எழுத்து அறிந்தவர், அறியாதவர் எனப் பலதிறப்பட்ட மக்கள் உள்ளனர். இவர் களையெல்லாம் ஒருவழிப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி, பஞ்சை நனைத்துச் சுமந்த கதையாகுமன்றோ?

350-தொல்லை - இருபொருள் (1) பழையமுறை; (2) தொந்தரவு.

360 - 367- எதிர்காலத் தமிழகத்தில் ஏழை பணக்காரன் என்ற பிரிவினையே இருக்கக்கூடாது. நாட்டுச் சொத்துக்கள் எவருக்கும் எள்ளளவும் தனியுரிமையாகாமல் எல்லோர்க்கும் பொதுவாமாறு மக்களும் அரசாங்கமும் ஒத்து ழைக்கவேண்டும்.

368-371- இரப்பவர் = பிச்சைக்காரர். புரப்பவர் பிச்சைக்காரரைக் காப்பாற்றுபவர். இச்சொற்கள் தமிழ் மொழியைவிட்டு நீக்கப்படல் வேண்டும். அப்படியென்றால் நாட்டில் பிச்சைக்காரரே இல்லாதபடி அனைவர்க்கும் தொழில் மூலம் பிழைப்பிற்கு வழிசெய்யவேண்டும். பிற நாட்டினர் நம்மைநோக்கி, அச் சொற்களிரண்டும் உங்கள் மொழியில் இல்லையே யென்று குறை கூறினால், அந்நிலை யெங்கள் நாட்டில் இல்லையாதலால் யாங்களும் அவற்றை மறந்தோம் என்று பதில் சொல்லலாமன்றோ
372 - 401 - உழைக்காமையால் தொப்பையுந் தொந்தியுமாய்ப் பளபளப்புடன் வாழும் உருவங்கள் போன்றது வைரம். கண்கவர் காட்சியைத் தவிர இவற்றால் கட்டாயப் பயன் என்ன? வெயிலில் நின்று உழைத்துக் கறுத்த உருவங்கள் போன்றது இரும்பு. இவற்றால் பெறும் பயன் மிகப்பல. எனவே உலோகங்களுள், பொறிகளையியக்கும் இரும்பே மதிப்பிற்குரியது. இவ்வுணர்ச்சி மனத்தில் தோன்றினால், நகைப்பித்தும், நகையில்லாதாரைக் கண்டு நகையாடும் செல்வரின் நகையாடற்குரிய செயலும் மக்கள் மன்றத்தில் விடைபெற்றுக் கொள்ளுமன்றோ ? எனவே, மனைவி மக்கள்மேல் நகையெனும் பெயருடன் கிடக்கும் ஆயிரக்கணக்கான ரூபாக்களைத் தொழிற்சாலை முதலியனவாக மாற்றி நாட்டின் வருவாயை வளர்க்கவேண்டும்.

402-403- 'உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்- உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்னும் சுப்பிரமணிய சுப்பிரமணிய பாரதியார் பாடலொடு இதனை ஒத்து நோக்குக.
404 - 414- பூமி தன்னைத்தானேயும் ஞாயிற்றையும் (சூரியனையும்) சுற்றிக்கொண்டே யிருப்பதால்தான், இரவு பகலும், மாத ஆண்டுகளும் உண்டாகின்றன. சூரிய வெப்பம் பலபகுதிகட்கும் கிடைக்கப்பெற்று உணவுப் பொருள்கள் விளைகின்றன. இயற்கையே நமக்கு உழைத்து உதவும் போது நாம் ஏன் சோம்பித் தூங்க வேண்டும். இலம் என்று ...நல்லாள் நகும்' என்னும் இக்குறள் திருக்குறள் பொருட் பால், உழவு என்னும் அதிகாரததில் உள்ளது. சுடர்கதிர் = சூரியன். அசைஇ - சோம்பி

416 - 422- காவல் தோய் நிலையம் = போலீசு இலாகா. மக்கள் ஒற்றுமையாயிருந்தால் நீதிமன்றமும், ஒழுக்கங் குன்றாதிருகதால் போலீசு இலாகாவும் தேவையில்லை. இவ் விலாக்காக்களில் வேலை பார்ப்பவர்கள் நாட்டிற்கு வருவாய் தரும் வேறு வேலை பார்க்கலாமன்றோ? துலங்கல் = விளங்கல்.

423 - 424 - மனிதன் கோவிலில் திருடித்திருடித் தெய்வத்தைப் பங்கப்படுத்துகிறான். இந்நிலை கூடாது. கடவுளுக்கு ஏன் கற்பனை ஒப்பனை (அலங்காரம்). அவரது திருவுருவம் மட்டும் இருநதால் திருட்டுக்கும் இடமில்லை. வழி படற்கும்போதுமானது. ஆதலின் கடந்த கடவுளைப் பூட்டிட்டுப் பூட்டி நம் அறிவையும் பூட்டிக்கொள்ளாமல் இரண் டையும் திறந்தேயிருக்கச் செய்யவேண்டும்.

425 - 430 - சழக்குகள் = தாழ்மைகள். ஒன்றே குலம் -ஒருவனே தேவன் என்ற அடிப்படையில், தமிழ்க்குலம்- தமிழ்மதம் என்ற இரண்டு தொடர்கள்கூடா. குலம்- மதம் இரண்டையும் இணைத்துத் தமிழர் என்ற சொல்லாலேயே சொல்லவேண்டும். நீ என்ன சாதியென்ற கேள்விக்கும், என்ன மதம் என்ற கேள்விக்கும் தமிழன் என்ற பதிலே வரவேண்டும்.

441 - 442- நீர் இறக்கல் = பிறரைத் தண்ணீரில் இறக்குதல். தமிழ்ப்புலமை சாலாதார், எழுத்தாலும் பேச்சாலும் பிறர்க்குத் தமிழ்பயிற்றல், தனக்கே நீந்தத தெரியாதவன், நீந்தத் தெரியாத மற்றொருவனை நீரில் இறக்குதல் போலாகும். இந்நிலையில் நாட்டில் சிலர் மேய்கின்றனர்.

447 448 - முன்னொருகாலை இலங்கையையாண்ட பரராசசிங்க மன்னனது வேண்டுகோளுக்கிணங்கி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதுவையில் வாழ்ந்த சடைய வள்ளல் இலங்கைக்கு மிகுதியான < உணவுப்பொருள் அனுப்பிய செய்தியைப் பாராட்டி அம்மன்னன் எழுதிய

இரவு நண்பகல் ஆகிலென்? பகலிருளறா விரவாகிலென்?
      இரவி யெண்டிசை மாறிலென்? கடலேழுமேறிலென்? வற்றிலென்?
மரபு தங்கிய ய முறைமைபேணிய மன்னர்போகிலென்? ஆகிலென்?
      வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கைகாரண மாகவே
கருது செம்பொனின் அம்பலத்திலொர் கடவுணின்று நடிக்குமே;
      காவிரித்திரு நதியிலேயொரு கருணை மாமுகில் துயிலுமே;
தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமானிய சேகரன்
      சங்கரன்தரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே

என்னும் தனிப்பாடல் செய்யுளை நோக்குக.

449 - 451 - வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் என்னும் ஐந்தாறுகள் அண்மையிலுள்ள நகரம் திருவையாறு. காவிரி = ஓர் ஆற்றின் பெயர்; சோலை விரிந்து சூழ்ந்த கா - சோலை, விரி = விரிந்த.

455 - 56 - முந்தையோர் - முன்னோர். முன்னுதல் - - நினைத்தல். தந்திரம் = நூல். இறந்துபோன முன்னோரின் நினைவுச் சடங்காக, நூல் பல கற்ற புரோகிதர் மந்திரஞ் சொல்வர்.

457 -'பட்டிக்காட்டான் யானை கண்டாற்போல' என்பது தமிழ்மக்கள் பலரிடை வழங்கப்படும் பழமொழிகளுள் ஒன்று.

462 - பல்கலை = (இருபொருள்) பலகலைகள்; பல்கல் +ஐ = பல்கலை = அஃதாவது -வளர்ந்து பெருகுவதை.

467-472- கரந்தைத் தமிழ்ச்சங்கத்தாரால் நிறுவப் பட்ட புலவர் கல்லூரி, இதுபோழ்து தருமபுரத்து அடிகளால் ஓம்பப்பெற்று வளர்ந்து வருகிறது.

473- 481 - இப்பகுதியில் சிலேடைகள் உள்ளன இலக்கியம்- இலக்கு இயங்கு ஓதை - முறையே பொருள்: தமிழிலக்கிய நூற்கள்; குறிக்கோள் (இலட்சியம்) பொருந் திய் ஓதை. காவடி = அன்பர் எடுத்தாடுங் காவடி சோலை யடியில். அணிவிழா = அழகிய திருவிழா; காண்போர் அணி = காண்பவர் கூட்ட அணிவகுப்பு. காளைகள் = காளை மாடுகள்; காளைபோன்ற இளைஞர்கள். கவலை = நீரிறைக்குங் கருவி; மனக்கவலை, மோடார்கார் = ஊர்ந்து செல்லும் வாக னம்; மோடு ஆர் கார் = உச்சியில் உள்ள மேகம். கலி- கறங்கு = ஓசை. பிறங்கல் = மலை. கொண்டல் = மேகம். சேயோன் = முருகன்.

482-484-'வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து' என்னுந் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தை நோக்குக. திருப்பதி ஆம் திருப்பதி திருப்பதி என்னும் அழகிய ஊர். திருப்பதி = திருவேங்கடம்.

486-487- திருப்பனந்தாள் அடிகளாரால் ஒரு தமிழ்க்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. செட்டிநாட்டு மேலைச் சிவபுரியிலும் ஒரு தமிழ்க் கல்லூரியுண்டு.

492-93- மன்னவர் மாறர் = பாண்டிய மன்னர்கள்

494 - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுவையினின்றும், கடற்கரையிலுள்ள பிரஞ்சிந்தியப் புதுச்சேரியை வேறுபடுத்திக் காட்டற்காக, 'கடல் சார் புதுவை' எனப் பட்டது.

502- நூறாட்டையன் = நூறு வயதினன்.

503 - சோறே சோறு என = (இருபொருள்) சோறோ சோறு என்று; சோறே மோட்சம் என்று. சோறு = உணவு; மோட்சம். இரவலன் = பிச்சைக்காரன்.

511-513 - இப்பகுதியுள், தீட்டிய மரத்தில் கூர் பாய்தல்,''குருவினிடமே கோலாட்டம் போடுதல்,'குலத்தைக் கெடுக்கும் கோடாரிக்காம்பு' என்னும் பழமொழிகள் முறையே அமைந்திருப்பதை நோக்குக.
------------


This file was last updated on 8 Nov 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)