pm logo

நான் கண்டதும் கேட்டதும்
உ.வே. சாமிநாதையர்

nAn kaNTatum kETTatum
u.vE. cAminAtaiyer
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நான் கண்டதும் கேட்டதும்
உ.வே. சாமிநாதையர்

Source:
நான் கண்டதும் கேட்டதும்
ஆசிரியர்: மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர்
இரண்டாம் பதிப்பு
சென்னை: கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
வெகுதான்ய ௵ ஆனி ௴
Copyright Registered]
1938
விலை அணா 6
-------------------
நான் கண்டதும் கேட்டதும் : பொருளடக்கம்
1. தமிழ் தந்த வளம்
2. வறுமைப்புலி
3. விதியின் திறம்
4. லாடு லட்டுச் சுமை
5. பங்கா இழுத்த பாவலர்
6. பரிவட்டத்தியானம்
7. மானங்காத்த மைந்தர்
8. பரம்பரைக் குணம்
9. வெங்கனூர்க் கோயிற் சிற்பம்.....
10. மருதபாண்டியர்
11. முள்ளால் எழுதிய ஓலை
12. "டிங்கினானே"
சிறப்புப் பெயரகராதி
----------------------

முகவுரை

இளமைக்காலந் தொடங்கி நான் கண்டும் கேட்டும் அறிந்த வரலாறுகளை எழுதவேண்டுமென்று பல அன்பர்களும் பத்திரிகாசிரியர்களும் அடிக்கடி என்னிடம் வற்புறுத்திக் கூறுவதுண்டு. தமிழ் நூலாராய்ச்சியிலேயே பொழுது போக்கிவரும் எனக்கு அவர்களுடைய விருப்பத்தை முற்றிலும் நிறைவேற்ற இயலாதாயினும் அவ்வப்போது என்னுடைய நினைவுக்கு வருவனவற்றை எழுதிச் சிலசில தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டுவரத் தொடங்கினேன். அங்ஙனம் வெளியிட்டவற்றைத் தமிழ்நாட்டினர் விரும்பிப் படிக்கிறார்களென்றும், மேலும் மேலும் அத்தகைய வரலாறுகளை வெளியிட வேண்டுமென்றும் அன்பர்கள்கூறி ஊக்கமளித்தார்கள். அங்ஙனம் ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளே வேறு பத்திரிகைகளிலும் அப்படியே வெளியிடப்பட் டன. பள்ளிக்கூட மாணவர்கள் பொருட்டு வசன புத்தகங்களை எழுதுபவர்கள் அக்கட்டுரைகளிற் பலவற்றைத் தங்களுடைய புத்தகங்களில் சேர்த்துக்கொள்ள விரும்பி என்னுடைய உடம்பாடு பெற்றுப் பதிப்பித்தனர். இதனால் அக் கட்டுரைகளில் அநேகருக்கு விருப்பம் இருப்பதையறிந்தேன்.

இவ்வாறு வெளியிடப்படும் கட்டுரைகளைத் தொகுத்து வகைப்படுத்திச் சில புத்தகங்களாக வெளியிட்டால் தமிழ் நாட்டார் அவற்றை ஒருங்கே படித்து மகிழ்வதற்கு அனுகூலமாக இருக்குமென்று என்னுடைய மெய்யன்பர்கள் பலர் தெரிவித்தார்கள். அவர்கள் விரும்பியபடியே வெளியிட்ட கட்டுரைத் தொகுதிகளில் முதலாவதாகும் 'நான் கண்டதும் கேட்டதும்' என்னும் இப்புத்தகம்.

இதன்கண் பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியுள்ளன. தனிப்பாடல்கள் சிலவற்றைப்பற்றிய வரலாறுகள் சில; சரித்திர சம்பந்தமானவை சில. இங்ஙனமே சங்கீத வித்துவான்களைப் பற்றிய வரலாறுகளையும்,ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உபந்யாஸங்களையும், பெரியார் வரலாறுகளையும், பிறவற்றையும் புத்தக உருவங்களில் வெளியிட்டிருக்கிறேன். அவ்வப்போது தனித்தனியே வெளிவந்த விஷயங்களாதலின் இவற்றுள் ஒன்றிற் காணப்படும் சில செய்திகள் வேறொன்றிலும் காணப்படலாம்.

இத்தொகுதியிலுள்ளவற்றில், 'பரிவட்டத்தியானம்' என்பது சுதேசமித்திரன் வருஷ அனுபந்தத்திலும், 'பரம்பரைக்குணம்', 'டிங்கினானே' என்னும் இரண்டும் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், 'முள்ளால் எழுதிய ஒலை' என்பது தினமணி பாரதிமலரிலும் மற்ற எட்டும் கலைமகளிலும் வெளிவந்தவை.

மேற்கண்ட பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தங்கள் பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதவேண்டுமென்று விரும்பியதே இம்முயற்சிக்குத் தூண்டுகோலாயிற்று. ஆகலின், அவர்கள்பால் மிக்க நன்றியறிவுடையேன்.
தமிழ்மக்கள் இவற்றைப் படித்து இன்புறுவார்களானால் அதுவே எனக்கு ஒரு பெரிய ஊதியமாகும்.

தியாகராஜ விலாஸம்       இங்ஙனம்,
திருவேட்டீசுவரன்பேட்டை,       வே.சாமிநாதையர்.
8-7-1938.
------------------

நான் கண்டதும் கேட்டதும்
1. தமிழ் தந்த வளம்

தமிழ்நாட்டிலுள்ள சைவமடங்கள் பல. அவை பண்டைக் காலந்தொட்டே மேன்மேலும் விருத்தி யாகிக்கொண்டு வந்தன. பல இடங்களில் நிலங்களையும் கிளைமடங்களையும் பெற்ற ஸ்தாபனங்கள் பல உண்டு. அவ்வக்காலத்தே மடங்களில் தலைமை வகித்தவர்களுடைய பேராற்றலாலும் அவர்கள்பால் உபதேசம் முதலியன பெற்றுக்கொண்ட துறவிகளின் நன்முயற்சியாலும் மடங்களுக்கு நிலங்களும் பலவகைப் பொருள் வருவாய்களும் சேர்ந்தன.

தங்கள் தங்கள் ஞானாசிரியரிடத்தில் உள்ள பக்திமேலீட்டால் தமிழ்நாட்டிலும் பிறவிடங்களிலும் உள்ளவர்களைத் தம்முடைய கல்வியாற்றல் முதலியவற்றால் வசப்படுத்திப் பொருள்பெற்றுத் தம் ஆசிரியர்களுடைய திருவடியில் அர்ப்பணஞ்செய்த தம் நலங்கருதாத தம்பிரான்கள் பலருடைய முயற்சிகளால் அம்மடங்கள் வளம் பெற்ற வரலாறுகள் பல உண்டு.

திருவாவடுதுறையாதீனத்தைத் தமிழுலகம் நன்கறியும். அவ்வாதீனத்திற்கு அடியார்களாக இருந்த தம்பிரான்கள் பலர் மேற்சொன்ன முறையில் நிலங்கள் முதலியன பெற்று அவற்றை ஆதீனத்துக்கு அர்ப்பணம் செய்துள்ளார்கள். ஸ்ரீ சிவஞானயோகிகளும் ஸ்ரீ கச்சியப்பஸ்வாமிகளும் சென்னை, காஞ்சீபுரம் முதலிய இடங்களில் தாம் பெற்ற பொருள்களை இங்ஙனம் ஆசிரியர்களுக்கே உரியனவாகக் கொடுத்துவந்தார்கள்.

சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு அவ்வாதீனத்தில் இத்தகைய தம்பிரான் ஒருவர் இருந்தார். அவருடைய பெயரேனும் அவர் காலத்திலிருந்து ஆதீனத் தலைவருடைய பெயரேனும் இப்பொழுது தெரியவில்லை.

அத்தம்பிரான் தமிழ்க்கல்வியில் மிகவும் தேர்ந்தவர்; இனிய செய்யுட்களை அழகிய கற்பனைகளோடு பாடும் வன்மையுடையவர்; வடமொழியறிவும் இசைப் பயிற்சியும் உள்ளவர் ; ஞானாசிரியர்பால் அளவிறந்த பக்தியும் திருவாவடுதுறை யாதீனத்தின் அபிவிருத்திக்கு உரியவற்றைச் செய்வதில் ஊக்கமும் நிரம்பியவர்; சிவபூஜா துரந்தரர்; தோற்றப் பொலிவும் துறவொழுக்கம் தவறாத தூய்மையும் அவருடைய சிறப்பை அலங்கரித்து விளங்கின.

ஆதீனத்தின்பாலுள்ள அபிமான மிகுதியினால் அங்கே நடைபெறும் சிவபூஜை மகேசுவர பூஜை முதலியன மிகவும் சிறப்பாக இருக்கவேண்டு மென்னும் எண்ணத்துடன் அவர் பல இடங்களுக்கும் சென்று தம்முடைய பலவகை ஆற்றல்களினால் அங்கங்கே உள்ள ஜமீன்தார்களையும் செல்வர்களையும் நட்பினராக்கிக்கொண்டு அவர்கள் மனங் கனிந்து கொடுப்பனவற்றை ஏற்று ஆதீனத்திற் சேர்த்து வந்தார். சென்ற இடங்களில் அவருடைய கல்வியாற்றலும் கவிவன்மையும் யாவரையும் தம் வசமாக்கின. அவரது தோற்றப் பொலிவு கல்லாரையும் அவர்பால் ஈடுபடச் செய்தது. திருவாவடுதுறையாதீனம் சைவப்பயிர் தழையும் இடமென்று அவர் வாயிலாக அறிந்த மக்களுக்கு அவ்வாதீனத்திற் பக்தி பெருகுவதாயிற்று. 'இந்தத் தவமுனிவரே சிவகணத்துள் ஒருவரைப் போலத் தோற்றும்போது இவரைப் போன்ற பலரும் அவர்களுக்கெல்லாம் ஆசிரியராக ஒரு ஞானதேசிகரும் இருந்து விளங்கும் திருவாவடு துறை இந்த உலகத்தில் வந்த கைலாஸம் போலவே இருக்கவேண்டும்' என்று ஜனங்கள் எண்ணினார்கள். பலர் திருவாவடுதுறை சென்று ஞானாசிரியரைத் தரிசித்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு களித்து மீண்டு வந்து தம்முடைய விம்மிதத்தைப் பிறருக்கும் தெரிவிக்கலானார்கள். இங்ஙனம் அத்தம் பிரானுடைய முயற்சி பல்கி நலம் பயப்பதாயிற்று.

திருவனந்தபுரத்தில் அக்காலத்தில் இருந்த அரசர் கல்வியாளர்களிடத்தில் பேரன்பு பூண்டு அவர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளலென்று அத் தம்பிரான் கேள்வியுற்றார். அவ்வரசர்பாற்சென்று பழகி வரவேண்டுமென்றெண்ணி அவர் திருவனந்தபுரம் போய்ச்சேர்ந்தார். அவருடைய வரவையறிந்து அங்கே இருந்த சைவச்செல்வர்கள் சிலர் அவரை வணங்கி உபசரித்தார்கள். அந்த ஸம்ஸ்தானாதிபதி வடமொழியிலும் இசையிலுமே விருப்பமுடையவ ரென்றும் தமிழ் வித்துவான்களை அவர் பார்த்தலரி தென்றும் தம்பிரான் அவர்கள் மூலமாக அறிந்தார்; ஆயினும் சிவகிருபையினால் எவ்வாறேனும் அவ்வரசரைப் பார்த்துவிட்டே தாம் செல்லவேண்டு மென்ற உறுதி பூண்டார்; எவ்விதமாகப் பார்க்கலா மென்று யோசிக்கலானார். அங்குள்ளவர்கள் அது நிறைவேறுவதரிதென்று சொல்லிவிட்டார்கள்.

இங்ஙனம் சிலகாலம் அவர் திருவனந்தபுரத்திலேயே காத்துக்கொண்டிருந்தார். சைவர்கள் அவரை மிக்க பயபக்தியோடு ஆதரித்து வந்தனர். ஒருநாள் அரசர் தம்முடைய குலதெய்வமாகிய ஸ்ரீ பத்மநாபஸ்வாமியைத் தரிசிக்கும் பொருட்டுப் புறப்பட்டார். அவருடைய வரவை முன்னரே அறிந்த தம்பிரான் அன்று எவ்வாறேனும் மன்னரைக் காணவேண்டுமென்ற துணிவு கொண்டு அவர் வரும் வழியில் தக்க கையுறைகளுடன் நின்றனர். அரசர் அவ்வழியே வரும்போது அவருக்கு முன் வரும் சேவகர்கள் தம்பிரானைக் கண்டார்கள்; அவருடைய நெற்றியிலும் மேனியிலும் உள்ள திரு நீறும் காதிலிருந்த ஆறுகட்டி சுந்தர வேடமும் மார்பில் விளங்கிய கௌரீ சங்கரத்தோடு கூடிய ருக்ராட்சமாலையும் ஜடாபாரமும் நீண்ட தாடியும் மீசையும் கடுங்காவி உடையும் அவர்களை அஞ்சச் செய்தன. வழக்கமாக வழியிலுள்ளவர்களை விலக்குவது போல அவரை விலக்க அவர்கள் பயந்தார்கள்.

அரசர் தம்பிரானைக் கண்டார்; தம்பிரானது தோற்றப் பொலிவில் ஈடுபட்டு நின்றார்; அதுதான் சமயமென்றெண்ணிய தம்பிரான் கையுறைகளை மன்னரிடம் அளித்தார்; எதிர்பாராத அவருடைய சயலுக்கு அரசர் வியந்து அருகிலுள்ளவர்களைக் கொண்டு அவரை யாரென்று விசாரிக்கச் செய்தார். அப்பொழுது அவர் இசையோடு பின்னுள்ள பாடலைச் சொன்னார் :

(எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)
"மாறிடத் துலவு வேற்படை வஞ்சி
      மன்னவ செந்தமிழ் மயில்யாம்
கூறுமூ வேந்தர் திருமுடி துளக்கக்
      குலவினோம் நின்குலத் தொருவன்
ஆறுசேர் சடையா னவைமுனம் நம்மை
      அணிசெய்தா னாரியப் பொதுப்பெண்
சீறுமென் றுணர்ந்தாய் நீயிவண் மதியாய்
      திருமுனி மலயமே குதுமே.

(இதன் பொருள்:- போரில் பகைவர்கள் கூட்டத் திடையே உலாவுகின்ற வேலாயுதத்தையுடைய வஞ்சிமாநகரத்துக்கு அரசே! நாம் செந்தமிழாகிய பெண்; முன்பு நாம் சேரசோழ பாண்டியர்களாகிய மூவரும் தம் தலைவணங்க மகிழ்ந்திருந்தோம்; அவர்களுள் உன்னுடைய குலத்தில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் கங்கைசேர்ந்த சடை முடியையுடைய சிவபெருமானது திருமுன்னர் அழைத்துச்சென்று நம்மை அழகுபெறச் செய்தார். இத்தகைய பெருமையும் உன்குலத்துக்கு உரிமையும் உடைய எம்மை ஆரியமாகிய பொதுமகள் கோபிப்பாளென்று எண்ணி இங்கே எம்மை மதியாமலிருக்கின்றாய்; ஆதலின், இனி எம்மை வளர்த்த அகத்திய முனிவருக்குரிய பொதியின் மலைக்குப் போய்விடுகிறோம்.

திருமுடி துளக்க - சிரக்கம்பம் செய்யவென்றும் பொருள் கொள்ளலாம். அணிசெய்தானென்றது கைலை மலையில் சேரமான் பெருமாணாயனார் திருக்கைலாய ஞானவுலாவை அரங்கேற்றியதைக் குறிப்பித்தவாறு.)

தனக்குரியவளாகிய மங்கை ஒருத்தி தன்னைப் புறக்கணித்துப் பொதுமகளோடு நட்பு பூண்ட ஒரு கணவனை நீங்கித் தன் பிறந்த வீடு சென்று விடும் வழக்கத்தை நினைவிற்கொண்டு இச்செய்யுள் செய்யப்பட்டது. ஆரியத்தைப் பொதுமகளென்றது பரதகண்டத்திலுள்ள நாடுகள் எல்லாவற்றிற்கும் அது பொதுவாகி வழங்கிவருதல்பற்றி. சொல் லமைதியால் இழிவுடையது போலத் தோற்றினும் பொருளமைதியால் மிக்கவியாபகத்தை யுடைமையை அது புலப்படுத்தி நின்றது.

தம்பிரான் தாம் பல நாளாகக் காத்திருப் பதைக் கூறிவிட்டு இச்செய்யுளின் பொருளை விரித்துரைத்தார் ; அரசருக்குப் புலப்படும் வண்ணம் வட மொழித் தொடர்களாலும் விஷயங்களை விளக்கினார். செய்யுளின் பொருளை உணர்ந்த அரசர் தம்பிரானுடைய சாதுர்யத்தை அறிந்து மகிழ்ந்தார். தமிழைப் புறக்கணித்தது தவறென்பது அவர் மனத்துக்குப் புலப்பட்டது.

அரசர் அவருக்கு வேண்டியவற்றை அளித்து உபசரிக்கும்படி அருகில் நின்ற உத்தியோகஸ்தர்களிடம் கட்டளையிட்டுவிட்டு ஸ்வாமிதரிசனம் செய்யச் சென்றார். தரிசனம் செய்த பிறகு அரண்மனைக்கு வந்து கவனிக்க வேண்டியவற்றை முடித்துக் கொண்டு தம்பிரானை அழைத்துவரச் செய்தார்.

தம்பிரான் அரசரைக் கண்டார்; அவருடைய சம்பாஷணையால் தமிழ்மொழியின் வளப்பத்தை அரசர் அறிந்ததல்லாமல் சேரர்கள் தமிழை வளர்த்த வரலாற்றையும் நன்றாகக் கேட்டுத் தெளிந்தனர். பின்பு, தம்பிரான் திருவாவடுதுறையின் பெருமையைப் பலபடியாக எடுத்துரைத்தார். அவருடைய அறிவின் திறத்தையும் தூய்மையையும் அரசர் உணர்ந்த தன்றி அவ்வாதீனத்தின்பால் மிக்க நன்மதிப்பை வைக்கலானார். அவ்வாதீனத்திற்குச் செய்யப் படும் உதவிகளெல்லாம் சிவபூஜை மகேசுவர பூஜைகளிலும் பல அறச்செயல்களிலும் பயன்படுகின்றன வென்றும் அம்மடத்தினது விருத்தியானது ஊருணி நீர் நிறைந்ததற்கொப்ப உலகுக்குப் பயன்தரு மென்றும் தம்பிரானுடைய வார்த்தைகளால் அரசர் அறிந்தார். தம்பிரான் சிலகாலம் அரசருடைய ஆதரவில் அங்கேயே இருந்து தமிழ்நயத்தை இயன்றவரையில் எடுத்துக் காட்டினார்.

பிறகு தம்பிரான் திருவாவடுதுறை செல்ல எண்ணி அரசர்பால் விடைபெறுதற்கு விருப்பங் கொண்டார். அதுகாறும் அத்தகையவர்களோடு பழகியறியாத அரசர் அவருடைய தூய்மையில் ஈடுபட்டமையால் அவரைப் பிரிவதில் சிறிது மனம் வருந்தினார். அப்பால் பலவகையான பொருள்களை உதவினார் ; பட்டுக்களும், பீதாம்பரங்களும், பூஜைக்கு வேண்டிய வெள்ளிப் பாத்திரங்களும், பிறவும் வழங்கினார்; அவருக்கு ஒரு பல்லக்கு அளித்து அதனைச் சுமப்பவர்களுக்குரிய அடித்தூண் சம்பளத்துக்கு வேண்டும் பொருளையும் ஈந்தார்; " நீங்கள் அடிக்கடி இங்கே வந்து போகவேண்டும்" என்று கூறி விடையளித்தார்.

தாம் பெற்ற பொருள்களோடு தம்பிரான் திருவாவடுதுறை வந்து யாவற்றையும் ஞானாசிரியர் திருமுன் காணிக்கையாக வைத்துப் பணிந்தார்; "இவை தமிழ் தந்த வளம் " என்று சொல்லித் திருவனந்த புரத்தில் நிகழ்ந்தவற்றை விரிவாகச் சொன்னார்.

அத் தம்பிரானும் திருவனந்தபுரம் அரசரும் பூதவுடம்பை நீத்தனராயினும், தமிழ் தந்த வளங்கள் இன்றும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உரியன வாக விளங்குகின்றன.

[இவ்வரலாற்றை முதலில் எனக்குச்சொன்னவர் திரிசிரபுரம் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள்.]
-----------------

2. வறுமைப் புலி

மதுரைப் பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரில் சங்கர சிந்தாமணிப்புலவரென்ற கவிஞர் ஒருவர் இருந்தார். செம்பாகமான கவிகளை எளிய நடையில் இயற்று வதில் அவர் வல்லவர். அவருடைய உள்ளம் கல்வி யறிவினால் உவப்புற்று நிறைவடைந்ததெனினும் அவர் இல்லம் வறுமைக்கே இருப்பிடமாக இருந்தது. தம் தாய் தந்தையர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியவர்கள் வறுமையால் மிக்க தளர்ச்சியை அடைந்து துன்பப்படுவதை அறிந்து அந்நிலையை அவர் மாற்ற நினைந்தார்.

ஆனாலும், பிறரிடத்துத் தம் வறிய நிலையை எடுத்துக் கூறி உதவி பெறுவதற்கு அவர் மனம் துணியவில்லை. அவருடைய நிலையைக் குறிப்பினால் அறிந்து உதவிபுரியும் பிரபு ஒருவரேனும் அவ்வூரிலும் அயலிடங்களிலும் அக்காலத்தில் இல்லை.

எவ்வாறேனும் பசிப்பிணியைப் போக்கிக் கொள்ளத்தானே வேண்டும்? பிறர்பாற் சென்று கேட்பதற்கு அவர் நாணம் கொண்டாரெனினும், உறவினர் படும் பசித்துன்பத்தினைப் பார்க்கையில் உண்டான இரக்கம் அந்நாண வுணர்ச்சியை வென்றது. பிறருடைய நலத்தின் பொருட்டு எத்தகைய முயற்சியையும் செய்யலாம் என்ற நினைவு அவருக்கு உண்டு. அருமையறியாதவர்களிடம் சென்று துன்புறுதலை அவர் விரும்பவில்லை. எனவே, தமிழ்ப் புலவர்களை உள்ளுவப்போடு பாராட்டி ஆதரித்து உதவி புரிவோர் யாரென்று விசாரித்து வந்தார்.

போடிநாயக்கனூரில் அக்காலத்தில் இருந்த ஜமீன்தார் தமிழ்ப் பயிற்சியும் தமிழ்ப் புலவர்களை எப்பொழுதும் உடன் இருக்கச்செய்து அவர்களுடன் சல்லாபம் செய்யும் தன்மையும் உடையவரென்று அவர் கேள்வியுற்றார். அன்றியும் புலவர்களை உயிர் நண்பர்களாக எண்ணி அவர்களோடு பழகும் இயல்பு அந்த ஜமீன்தாரிடம் நன்றாக அமைந்திருந்த தென்றும் அறிந்தார். அவரிடம்சென்று தம் வறுமை நோயைப் போக்கிக் கொள்ளலாமென்று அந்த வித்துவான் எண்ணி ஒருநாள் புறப்பட்டுப் போடி நாயக்கனூர் சென்றார்.

அவர் சென்ற சமயம் ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு ஜமீன்தார் பழனிக்குத் தம் பரிவாரங்களுடன் போயிருந்தார். புலவர் தாம் பேராவலோடு ஜமீன்தாரைப் பார்க்கவந்தும் உடனே காணக்கிடையாமைக்கு வருந்தினர். ஜமீன்தாருடைய உயர்குணங்களைப் பின்னும் பலபேர் வாயிலாக அங்கே கேட்டு இன்புற்றார். அவ்வாறு கேட்கக் கேட்க அப்பிரபுவை விரைவிற் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகரித்தது. ஜமீன்தார் பழனியிலிருந்து திரும்பிவரும் காலத்தில் அவரை எதிர்சென்று காணலாமென்று நினைத்தார். ஜமீன்தார் பரிவாரங்களுடன் திரும்புங்காலத்தில் அவ்வாறே சென்று இடைவழியில் சந்தித்தார்.


வித்துவான்களோடு நட்புமுறையிற் பழகிவரு கேள்வியுற் பவரென்று ஜமீன்தாரைப்பற்றிக் கேள்வியுற்றிருந்த புலவர் தம்முடைய வறுமை நிலையைச் சமற் காரமாகத் தெரிவிக்கவேண்டுமென்று நினைந்து, அவர் முன் ஓடிச்சென்று, "கூ,கூ, புலி துரத்தி வருகிறது" என்று கூவினார். அவருடைய செயலைக் கண்டு திடுக்கிட்ட ஜமீன்தார், "என்ன ஐயா, பய முறுத்துகிறீர்? நீர் யார்? புலி எங்கே?" என்று கேட்டார். புலவர், "ஐயோ! பாழும் புலி துரத்துகின்றது. அதைக் கொன்று என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று மீண்டும் ஓலமிட்டு விட்டு,

"பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு
வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து
மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற
தையாதென் போடை யதிபா புலவர்க் கருணிதியே"

என்ற பாடலைக் கூறினார். ஜமீன்தார் தமது சாதுர்யத்திற்குத் தக்க பரிசும் உபசாரமும் அளிப்பாரென்று புலவர் நம்பினார்.

ஜமீன்தார் ஒரு வினாடி நேரம் பேசாமல் இருந்தார்; பின்பு அருகில் இருந்த ஒரு வேலையாளை அழைத்து அதிகாரத் தொனியில், 'இந்த மனுஷரை அழைத்துச் சென்று பாதுகாப்பில் வைத்திருந்து நாம் ஊர் வந்து சொல்லியனுப்பும்போது நம்மிடம் அழைத்து வா' என்று கட்டளையிட்டார். பிறகு ஜமீன்தாரின் உத்தரவுப்படியே புலவர் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய மனநிலை அப்பொழுது எவ்வாறிருக்கும்!

'ஐயோ! வஞ்சகர்கள் இந்த ஜமீன்தாரைப் பற்றி இல்லாத குணங்களை யெல்லாம் ஏற்றிக் கூறி நம்மை ஏமாற்றி விட்டார்களே! இவர் நமது செய்யுளைக் கேட்டுச் சந்தோஷிக்கக் கூடுமென்றல்லவோ சொன்னோம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போலவன்றோ ஆயிற்று! இவர் சிறந்த அறிவாளி யென்றும் குறிப்பறிந்து கொடுப்பவரென்றும் நம்மிடத்திற் சிலர் சொன்னார்களே. அந்த இயல்பு இவரிடம் சிறிதும் காணப்படவில்லையே. நம்முடைய செய்யுளைக் கவனிக்கவில்லையே. முகமலர்ச்சியையும் காணோம்; இன்சொல்லையும் காணோம். நம்மை என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ தெரிய வில்லை. முன்பின் தெரியாமல் இவரிடம் வந்து அகப்பட்டுக் கொண்டோமே. நம்முடைய வறுமைக்கு அஞ்சி இவரிடம் வந்தது தேளுக்குப் பயந்து பாம்பின் வளையிற் கைவிட்டது போலாயிற்றே. நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நம் தாய் தந்தையர் முதலியவர்கள் என்ன செய்வார்களோ தெரியவில்லை. கடவுளுடைய சித்தம் எப்படியோ?' என்று நினைந்து நினைந்து ஏங்கினார்.

அவரை அழைத்துச் சென்ற வேலையாள் அவ ரைத் தனியாக ஓரிடத்தில் இருக்கச்செய்து சரியான வேளைகளில் உணவு அளித்து வந்தான். ஒருவரும் அவரோடு பேசவில்லை. அவர் தூக்குத்தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் குற்றவாளியைப்போல் உயிர் உடம்பு உள்ளம் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தார். ஜமீன்தார் தம் அரண்மனை வந்து சேர்ந்தார். கவனிக்கவேண்டிய காரியங்களை யெல்லாம் கவனித்துவிட்டு ஆஸ்தான மண்டபத்தில் வந்து அமர்ந்தார். பின்பு புலவரை அழைத்துவரும்படி உத்தர விட்டார்.

சிறிதுநேரத்தில் வாடிய முகமும் நடுங்கிய உடம்பும் கந்தைத்துணியும் கொண்ட வறுமைத் திருக்கோலத்தோடு புலவர் ஜமீன்தார் முன்னே நிறுத்தப்பட்டார். அவர் தம் கண்களால் ஒருமுறை அந்த ஆஸ்தான மண்டபத்தின் இயற்கையைப் பார்த்தார். ஜமீன்தாரின் இருபக்கத்திலும் கத்தி, தடி, துப்பாக்கி முதலிய ஆயுதங்களையுடைய சேவகர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். யாவரும் வாய்பொத்திக் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றனர். ஜமீன்தாரோ மீசையை முறுக்கிக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் கோபக்குறிப்பே தாண்டவமாடியது. இவற்றை யெல்லாம் பார்த்த புலவருக்குச் சிறிதளவு இருந்த தைரியமும் போய்விட்டது. உடம்பெல்லாம் அச்சத்தால் வேர்த்தது.

ஜமீன்தார் ஒரு கனைப்புக் கனைத்தார். அருகிலிருந்த உத்தியோகஸ்தரைப் பார்த்து, "நாம் பழனிக்குப் போய்விட்டு வருகையில் நமக்கும் பிறருக்கும் பயமுண்டாகும்படி வழிமறித்து, 'கூ! கூ' என்று சத்தம்போட்ட மனுஷ்யர் இவரல்லவா?" என்றார். அவர், ''ஆம்'' என்றார். ''ஐயா! நீர் அப்படிச் செய்யலாமா?" என்று புலவரை
நோக்கி ஜமீன்தார் கேட்கவே, புலவருக்கு நா எழவில்லை. தம்முடைய கருத்தைச் சொல்ல ஆரம்பிக்கையில் வார்த்தைகள் குழறி வந்தன. ஒரு புலியைக் குறித்துச் சொல்வதற்குமுன் 'கிலி' அவ ரைப் பிடித்துக்கொண்டது.

கடைசியில் ஒருவாறு துணிந்து குழறிக்கொண்டே, ''எஜமானவர்கள் வேட்டையாடித் துஷ்ட மிருகங்களைக் கொன்று ஜனங்களைக் காப்பாற்றும் மகாவீரரென்று தெரிந்த மையால் இந்தப் புலியையும் கொல்லவேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டேன். வறுமையைப் புலியாக உருவகப்படுத்தித் தமிழருமையறிந்த துரையவர்கள் சந்தோஷிக்க வேடிக்கையாகச் சொன்னேனே யொழிய, யாருக்கும் அச்சமுண்டாக்க வேண்டுமென்பது என் கருத்தன்று. இவ்வாறு உருவகம் செய்து கூறுதல் முன்னோருடைய வழக்கம்.அப்படி ஏதாவது நான் செய்தது பிழையாகத் தோற்றினால், அதனைப் பொறுத்தருள வேண்டும்" என்று வணக்கத்துடன் தெரிவித்துக்கொண்டார்.

ஜமீன்தார், ''செய்ததைச் செய்துவிட்டுப் பொறுத்தருள வேண்டுமென்றால் முடியுமா? திடீரென்று புலி துரத்துகின்ற தென்றால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? உமக்குச் சிறிதேனும் சம யோசிதம் தெரியவில்லையே. நமது முன்னிலையில் இன்னபடி பேசவேண்டுமென்பது தெரியாதா?" என்று கடுமையான குரலில் கூறிவிட்டு அருகில் நின்ற ஒருவேலைக்காரனை நோக்கி, "இந்த மனுஷரு டைய மேல்துணியைப் பிடுங்கி என் எதிரேவை" என்றார். பல தையல்களோடும் முடிப்புக்களோடும் அழுக்கோடும் புலவரது வறுமை நிலையைப் புலப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துணியை அவன் வாங்கிச் சுருட்டி எதிரே இருந்த ஒரு மேஜையின்மேல் வைத்தான். மருந்திட்டு வைத்திருந்த துப்பாக்கியொன்றை ஜமீன்தார் கையிலெடுத்து வைத்துக்கொண்டு, "அந்த மனுஷரை இப்படி நேரே கொண்டுவந்து நிறுத்துங்கள் " என்றார். புலவர் தமக்கு ஆயுட் காலம் முடிந்து விட்டதென்றே நிச்சயித்து விட்டார். இந்த வறுமையினால் துன்புறுவதைக் காட்டிலும் இறந்து போதல் ஒரு வகையில் நல்லதென்றெண்ணி னார்; தம் முதிய தாய் தந்தையர்களையும் இளைய மனைவி மக்களையும் பிற உறவினர்களையும் நினைந்து கண்ணீர் வடித்தார்.

துப்பாக்கியுடன் இருந்த ஜமீன்தார், ''ஓய் ! உம்மைப் புலியா துரத்துகிறது? அந்தப் புலியை இதோ சுட்டுக் கொன்று விடுகிறேன் பாரும்'' என்று சொல்லிக்கொண்டே, தம் எதிரில் இருந்த கந்தைத் துணியை நோக்கிச் சுட்டார். படீரென்ற சத்தம் கேட்டது; துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து அந்தக் கந்தைத் துணியை எரித்து விட்டது; புலவர் ஒன்றும் தோற்றாமல் சிறிது நேரம் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

ஜமீன்தார் புலவர் அருகிற் சென்று அவர் முதுகைத் தட்டிக் கொடுத்து, "இதோ உம்மைத் துரத்திய புலி இறந்துவிட்டது. இனி அந்தப் புலியால் உமக்கு அச்சம் இராது" என்று சொல்லி ஓர் ஆசனத்தில் இருக்கச் செய்து நல்ல ஆடைகளை வருவித்து அணிந்து கொள்ளச் செய்தார். பின்பு அவருடைய உள்ளம் பூரிக்கும்படி உயர்ந்த உபசாரங்களையெல்லாம் செய்தார்.

வறுமைப்புலியின் அச்சம் நீங்கிய புலவர் சில காலம் அங்கேயிருந்து புதிய புதிய செய்யுட்களைப் பாடி ஜமீன்தாரை உவப்பித்தும் பலவகை உபசாரங்களைப் பெற்று உவந்தும் வந்தார். சிலநாள் சென்ற பின்பு தம் ஊரிலுள்ள உறவினர்கள் தம் நிலையையறியாமல் வருந்துவார்களென்பதைக் கூறி ஜமீன்தாரிடம் விடைபெற்றுப் பல மாதங்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களும் தக்க ஸம்மானங்களும் வழங்கப் பெற்றுத் தம்மூர் வந்து சேர்ந்து கவலையின்றி வாழ்ந்து வருவாராயினர். அக்காலத் துக்குப் பின்பும் அடிக்கடி ஜமீன்தாரிடம் சென்று சம்பாஷித்து இருந்துவிட்டு வருதல் அவரது வழக்கமாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை யறிந்தவர்கள் அந்தப் பிரபுவினது பெருந்தன்மையை மிகவும் பாராட்டினார்கள்.
[இச்சரிதத்தையும் பாடலையும் சொன்னவர் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன் ஊற்றுமலை ஜமீன்தாராக விளங்கிய ஸ்ரீ ஹிருதயா லய மருதப்பத் தேவருடைய ஆஸ்தான வித்துவான் கள் நால்வருள் ஒருவரான புளியங்குடி முத்துவீரம் புலவர் என்பவர்.]
----------------

3. விதியின் திறம்

நமது நாட்டில் ஆங்காங்கு வழங்கும் தனிப் பாடல்கள் பல. அவற்றைப் பாடிய புலவர்கள் பலருடைய வரலாறுகள் சொல்வாரற்று மறைந்து போயின. சில தனிப்பாடல்கள் இயற்றிய புலவர்களைப்பற்றியும் அவற்றின் சந்தர்ப்பங்களைப் பற்றியும் கர்ணபரம்பரையாக அங்கங்கே சில சில செய்திகள் மட்டும் அப்பாடல்களோடு வழங்கி வருகின்றன. என்னுடைய இளமைக்காலத்தில் அத்தகைய செய்திகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். சில தனிப்பாடல்கள் சம்பந்தமான வர லாறுகள் மிகுந்த வியப்பை உண்டாக்கும். அவற் றுள் ஒன்று வருமாறு:-

”மூவேந்தரு மற்றுச் சங்கமும் போய்' விட்ட காலத்தில் தமிழ் நாட்டில் ஒருசமயம் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது புலவர்களை ஆதரிக்கும் பிரபுக்கள் அரியராயினர். கொள்ளைக் கூட்டங்கள் அதிகரித்தன. புலவர்கள் வறுமையின் மிகுதியால் தாம் கற்ற கல்வியையே வெறுத்துப்பேசும் நிலைமைக்கு வந்து விட்டனர்.

அக்காலத்தில் ஒரு புலவர் தம்மை ஆதரிப்பாரின்றி வருந்தினார். அவர் சிவபக்திச் செல்வம் நிரம் பியவர்; வேறொரு தொழிலும் செய்ய அறியார்; ஆதலின் எங்கேயாவது சென்று ஜீவனம் செய்யலா மென்னும் நினைவுடன் தம் இல்லாளோடு அவர் வீட்டை விட்டு அயலிடத்துக்குப் புறப்படலானார்.

புலவரும் மனைவியும் ஒரு காட்டின் வழியே செல்ல நேர்ந்தது. அக்காட்டில் சிலர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் புலவரையும் அவர் மனைவியையும் கண்டு நெருங்கி வந்தார்கள். அவர்களுடைய தோற்றம் அஞ்சத்தக்கதாக இருந்தது. அக்கூட்டத்தினரைக் கண்ட புலவருடைய மனைவி பயந்து, "சகோதரர்களே, என்னையும் என் கணவரையும் காப்பாற்றுங்கள். நாங்கள் ஜீவனத்துக்கு வழியில்லாமல் வேறு இடங்கள் சென்று பிழைக்கலா மென்றெண்ணி வருகிறோம். உங்களைக் கண்டால் நல்ல புண்ணியசாலிகளென்று தோன்றுகிறது '' என்று சொல்லி அழுதாள். சகோதரர்களென்று அவள் அழைத்ததை அக்கூட்டத்தில் இருந்து ஒருவன் கேட்டு மனமிரங்கி அவ்விருவரையும் பார்த்து, "நீங்கள் பயப்படவேண்டாம். உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம். நீங்கள் இனிமேல் எங்களோடே இருக்கலாம். எங்களுடைய சகோதரியையும் சகோதரி புருஷரையும் போல உங்களை நாங்கள் பார்த்து வருவோம். எங்களுக்கு வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்குதருவோம்.எங்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும் " என்றான்.

புலவர்:- அப்படியே செய்கிறேன். நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?

அவன்:- நாங்கள் திருட்டுத்தொழில் செய்வோம்.

புலவருக்கும் அவருடைய மனைவிக்கும் அப் பொழுதுதான் அவர்கள் கள்வரென்று தெரிய வந்தது. புலவர் சற்று நேரம் யோசித்தார்.

கள்வர் தலைவன்:-என்ன யோசிக்கிறீர்? எங்களுக்குள் ஒரு தருமம் இருக்கிறது. ஏழைகள் வீடுகளிலும் தருமவான்கள் வீடுகளிலும் போய் நாங்கள் திருட மாட்டோம். பிறருக்குக் கொடாமல் தாமும் உண்ணாமல் பணத்தைச் சேர்த்து வைத்திருக்கும் லோபிகள் வீட்டிலேதான் திருடுவோம். நல்லவர்கள் வீட்டிற்கு நாங்கள் திருடப்போனால் அபசகுனங்கள் உண்டாகும். கன்னம் வைக்கும்போது தேள் கையில் கொட்டும். அப்பொழுது நாங்கள் பயந்து திரும்பி விடுவோம்.

கள்வர்தலைவன் திருட்டுத் தொழிலைப்பற்றி வேறு சில செய்திகளும் சொல்லி நிறுத்தினான்.

புலவர் 'இதுவும் சிவன் செயல்போலும்!’ என்று எண்ணி வேறு வழி இல்லாமையால் அவர்களோடு இருக்க உடன்பட்டார். கள்வர்கள் அவ் விருவருக்கும் காட்டுக்குள் ஒரு தனி இடம் அமைத்துக் கொடுத்து வேண்டியவற்றை அளித்து ஆதரித்து வந்தார்கள். தீத்தொழிலை உடையவர்களானாலும் அவர்களுக்கு இருந்த அன்புடைமையை நினைந்து நினைந்து அப்புலவர் வியந்தார்; நாளடைவில் நல்லுபதேசம் செய்து அவர்களைத் திருத்திவிடலாமென்று அவர் எண்ணினார்.

ஒருநாள் கள்வர்தலைவன் புலவரையும் திருட வரும்படி அழைத்தார். 'குரங்குக்கு வாழ்க்கைப் பட்டால் மரம் ஏறாதிருக்கமுடியுமோ?" முன்பே வாக்குக் கொடுத்தபடி செய்ய வேண்டியவராதலின் புலவர் அதற்கு இணங்கினார்.

பக்கத்திலிருந்த ஊரிலுள்ள ஒரு ஜமீன்தாரு டைய அரண்மனையில் அன்று திருட எண்ணிக் கள்வர் சென்றனர். புலவரும் உடன் சென்றார். சென்ற கள்வர்கள் ஜமீன்தாரின் அரண்மனையை அடைந்து ஒருபக்கத்திலே கன்னமிட்டுப் புலவரை உள்ளே போய் உளவறிந்துவரச் செய்தனர்.

கன்னமிட்ட துவாரத்தின் வழியே புலவர் நுழைந்து உள்ளே சென்றார். அவர் சென்ற இடம் அரண்மனையின் அந்தப்புரமாக இருந்தது. அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய மஞ்சத்தில் ஜமீன்தாரும் அவர் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். நிலைக்கண்ணாடிகளும் அழகிய விளக்குகளும் வேறு பல அலங்காரப் பொருள்களும் அவ்விடத்தை அழகு செய்து விளங்கின. அவற்றைக் கண்ட புலவர் வியந்து இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தார்; பிறகு அந்த மஞ்சத்தின் கீழே புகுந்து மறைவாக இருந்து என்ன செய்வதென்று யோசிக்கலானார்.
.
இரவின் நான்காம் ஜாமத்தில் ஜமீன்தாரும் அவர் மனைவியும் விழித்துக் கொண்டனர். ஜமீன்தார் தமிழ்ப் பயிற்சி மிக்கவர்; தமிழ்நயம் கண்டு இன்புற்றுப் பொழுது போக்கும் இயல்புள்ளவர். அவர் மனைவியும் தமிழன்பு மிக்கவள். விழித்துக்கொண்ட அவ்விருவரும் ஒருவரோடொருவர் பல விஷயங்கள் பேச ஆரம்பித்தார்கள். சில நேரத்திற்குப்பின் இருவரும் சேர்ந்து நூதனமாக ஒரு செய்யுளை இயற்றலானார்கள்.

ஜமீன்தார் முதல் இரண்டடியை ஒரு வினாவாக அமைத்தார். அவர் மனைவி அவ்வினாவுக்குரிய விடையை அமைத்துப் பின் இரண்டடியையும் பூர்த்தி செய்ய முயன்றாள்.

புலவர் கீழே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் காதில் அத்தமிழ்ச் செய்யுள் இனிமையோடு புகுந்தது. கள்வருக் கிடையே இருக்கையில் தமிழ் நூல்களைப்பற்றி நினைக்கச் சமயம் ஏது? ஆதலின், தமிழுக்கு அலந்திருந்த அவர் மனம் அப்பொழுது ஒரு புதிய உணர்ச்சியை அடைந்தது. உடனே அவர் அவ்விருவர் சம்பாஷணையிலும் ஒன்றிவிட்டார். ஜமீன்தார் சொன்ன செய்யுளின் முற்பாதிக்கு ஏற்ற பிற்பாதி அநாயாசமாக அவருக்குத் தோற்றியது. அதைச் செவ்வையாக மனத்துக்குள் அமைத்துக் கொண்டார். தமக்கு அப்பொழுது உண்டான ஊக்கத்தில் அவர் தாம் களவுசெய்ய வந்திருப்பதையும் மறைவாக இருப்பதையும் மறந்தார். ஒரு சபையில் தமக்குக் கொடுக்கப்பட்ட ஸமஸ்யையை முடிக்கவேண் டிய நிலையில் இருப்பதாக எண்ணினார். ஜமீன்தார் தாம் முடித்த முற்பாதியை மீண்டும் மனைவிக்குச் சொல்லிக் காட்டினர். உடனே புலவர் தாம் முன்பே மனத்துள் முடித்து வைத்திருந்த பிற்பாதியைத் தொடர்ந்து கீழே இருந்தபடியே கூறினார்.[1]

ஜமீன்தார் திடுக்கிட்டார். அவர் மனைவி சரேலென்றெழுந்து வேறிடஞ் சென்றாள். ஜமீன்தார், ''யார் அங்கே?" என்று அதட்டிக் கேட்டார். புலவர் தம்முடைய நிலை இன்னதென்பதை அப்பொழுதுதான் உணர்ந்தார்; மெல்ல வெளியே வந்து உடல் நடுக்கத்தோடு நாக்குழற அவர் தம்முடைய வரலாற்றை உரைக்கலானார்.

ஜமீன்தார் முதலில் கோபம் கொண்டவராக இருந்தாலும், தமிழ்ச்சுவை யறிந்தவராதலின் புலவர் தமது வரலாற்றைக் கூறிக்கொண்டு வரவர அவர் மனம் இளகியது. பசிப்பிணியே புலவரை அந்நிலைக்குக் கொண்டுவந்த தென்பதை நினைத்து நினைத்து அவர் மிகவும் மனம் இரங்கினார்.

புலவர்:- ஏதோ ஊழ்வினை வசத்தால் இந்த ஸங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டேன். நான் முன்பே உயிரைவிட்டிருப்பேன். தமிழை மறந்து விட்டு உயிர் தரித்திருப்பதில் என்ன பயன் இருக்கிறது? என்னுடைய மனைவியொருத்தி இருக்கிறாள். அவளுக்காக உயிர் வைத்திருக்கிறேன். என்செய்வேன்! என்னை எஜமானவர்கள் காப்பாற்றவேண் டும். அன்றியும் மற்றொரு வரம் அருளவேண்டும். என்னோடு வந்திருக்கும் கள்வர்கள் சில நற்குணங்களை உடையவர்கள்; லோபிகள் வீடுகளிலேதான் அவர்கள் திருடுவார்கள். இன்று தவறி இங்கே வந்துவிட்டார்கள். இதுவரையில் எங்களை அவர்கள் பாதுகாத்து வந்தார்கள். அவர்களை இப்பொழுது எஜமானவர்கள் துன்புறுத்தாமல் விட்டு விடவேண்டும். என்னால் அவர்கள் அகப்பட்டு வருந்தலாகாது.

புலவருடைய நன்றியறிவின் மிகுதியை ஜமீன் தார் உணர்ந்தார். அவருடைய மனம் அதிகமாக இரங்கியது.

"ஐயா! நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். உம்முடைய நண்பர்களை நான் ஒன்றும் செய்யேன். இதோ என்னுடைய பொக்கிஷ அறையைக் காட்டுகிறேன். அங்கே உள்ளவற்றில் உமக்கு வேண்டிய வற்றை எடுத்துக்கொண்டு போய் உம்முடைய நண்பர்களுக்கும் கொடுத்துச் சௌக்கியமாக இரும் '' என்று சொல்லி ஜமீன்தார் புலவரை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அவ்வறையில் பல வகையான ஆடையாபரணங்கள் நிறைந்திருந்தன. முளைகளில் முத்துமாலைகளும் ரத்தினமாலைகளும் பொன்மாலைகளும் மாட்டப்பட்டுத் தொங்கின. கொடிகளில் உயர்ந்த பட்டுப் பீதாம்பரங்கள் இருந்தன். அவைகளை யன்றிக் கீழே சில பெட்டிகளும் காணப்பட்டன.

ஜமீன்தார், ''இவற்றுள் எதுவேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்" என்றார். அங்கே இருந்தவற்றைக் கண்ட புலவர் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார். இன்னதை எடுத்துக்கொள்வதென்று தோற்றவில்லை. 'யாவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கத் தக்கதாக இருக்கவேண்டுமே' என்று யோசித்தார். சில சில ஆபரணங்களைக் கையால் தொட்டுப் பார்த்தார். சிலவற்றை எடுத்து நோக்கினார். பித்துப்பிடித்தவர்போல ஒரு நாழிகை ஒன்றும் தோன்றாமல் இப்படிநின்று பிறகு முடிவில் ஒரு பெட்டியைக் காட்டி, இதை எடுத்துப் போகிறேன்'' என்றார்."அப்
படியே செய்யும் " என்று சொல்லிவிட்டு ஜமீன்தார் அதன் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டார். புலவர் மற்றொரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டார். அதை இருவரும் கன்னவாசல் வரையில் தூக்கி வந்தனர். அவ்வாசலுக்குள் பெட்டி செல்லவில்லை. அதையறிந்த ஜமீன்தார் சில ஆயுதங்களை எடுத்து வந்து அந்தத் துவாரத்தைப் பெரிதாக்கினர். வெளியே பெட்டியைக் கொணர்ந்து புலவர் தலையில் தூக்கிவைத்தார். புலவரே, ஞாபகம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டால் கூசாமல் என்னிடம் வந்துவிடும். எப்பொழுது உமக்கு வரமுடியுமோ அப்பொழுது வாரும். சௌக்கியமாக இங்கேயே இருக்கலாம். இந்த இடம் உம்முடைய இடமே. இதோ அந்தப்பெட்டியின் திறவுகோல் இருக்கிறது '' என்று சொல்லி ஒரு திறவுகோலை அளித்து விடை கொடுத்தனுப்பினார்.

உள்ளே சென்றவர் நெடுநேரமாகியும் வாராமையினாலும் உள்ளிருந்து ஏதோ பேசும் குரல் கேட்டமையாலும் புலவர் அகப்பட்டுக் கொண்டாரென்று பயந்து கள்வர்கள் ஓடிப்போய் விட்டனர். வெளியில் வந்த புலவர் அவர்களைக் காணவில்லை. ஆதலின் அவர் 'இன்றைக்கு நல்ல லாபம் நம்மால் உண்டாயிற்றென்று கள்வர்கள் ஸந்தோஷப் படுவார்கள். அவர்களைத் திருத்துவதற்கு இது நல்ல சமயம்' என்று எண்ணிக்கொண்டு பெட்டியின் பாரத்தைப் பொருட்படுத்தாமல் ஊக்கத்தோடு அதனைச் சுமந்துகொண்டு தம்முடைய உறைவிடத்துக்கு வந்தார். அவருடைய நிலை என்ன ஆகுமோ என்றெண்ணிய அவர் மனைவி அவரது வரவை மிக்க ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாள். புலவர் மகிழ்ச்சியோடு தள்ளாடித் தள்ளாடிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வருவதைக் கண்ட அவளுக்குப் போன உயிர் வந்தது; எதிர்சென்று அவர் தலையிலிருந்து பெட்டியை இறக்கினாள். அதைக் கீழே வைத்துவிட்டு நிகழ்ந்தவற்றை யெல்லாம் அவர் சொன்னார். அவர் மனைவி கேட்டு வியப்புற்றாள்.

அந்தப் பெட்டியில் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றனவோ என்று பார்க்கவேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்தது. ஆதலின் திறவு கோலைக்கொண்டு புலவர் திறந்து கைவைத்துப் பார்த்தார். முத்தும் இரத்தினங்களும் பொன்னும் ஆடையும் அதில் நிரம்பியிருக்குமென்று அவர் நம்பியிருந்தார். பாவம்! அப்பெட்டி முழுவதும் உப்பு நிறைந்திருந்தது. புலவருக்கு உண்டான வருத்தத்துக்கு எல்லையில்லை; "எவ்வளவு சிரமப் பட்டுத் தூக்கிவந்தேன்! வேறு பெட்டியை எடுத்து வந்திருக்கலாகாதா? ஜமீன்தார் நினைத்திருந்தால் அங்கேயே என்னைக் கொன்றிருக்கலாம்! அவர் எவ்வளவு அன்புடன் பேசினார் ! தம்முடைய பொக்கிஷத்தை அவரே திறந்து காட்டி 'எதைவேண்டு மானாலும் எடுத்துக்கொள்' என்றாரே; சில முத்து மாலைகளையோ பொன்மாலைகளையோ எடுத்துவந்தே னில்லையே. சில பட்டாடைகளையாவது மூட்டை கட்டி எடுத்து வந்திருக்கலாகாதா! என்னுடைய துரதிர்ஷ்டம் இப்படியா வந்து முடியவேண்டும்?' என்று பெருமூச்சுவிட்டு வருத்தமுற்றார். அவர் மனைவியும் வருந்தினாள்.

அப்பால் சிறிது நேரம் கழிந்தபின்னர், அவர் மனைவி, "இனி வருத்தப்படுவதில் என்னபயன்? இந்த உப்பைக் கீரைக்கு வைத்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி அதில் சிறிது கையிலெடுத்தாள். என்ன ஆச்சரியம்! அது வாண உப்பாக இருந்தது. ''இது நல்ல உப்புக்கூட அன்றே! வாண உப்பாக இருக்கிறதே!" என்றாள். புலவருடைய மனம் எப்படி யிருந்ததென்பதை வார்த்தைகளால் சொல்ல முடி யுமோ? கொஞ்ச நாழிகை அவர் மௌனமாக இருந்தார். பிறகு அவருடைய உணர்ச்சி,

நாடெலாஞ் செந்கெல் விளையினும் நாட்டின்
      நதியெலாம் நவமணி தரினும்
காடெலாம் ஆடை காய்க்கினும் மேகம்
      கனகமே பொழியினும் மடவாய்
ஆடலே புரியும் அம்பல வாணர்
      அவரவர்க் கமைத்ததே யல்லால்
வீடெலாம் கிடந்து புரண்டுருண் டழினும்
      விதியலால் வேறுமொன் றுளதோ?'

என்ற செய்யுளாக வெளிப்பட்டது. விதியின் திறத் தையன்றி அவர் வேறு எதை நினைந்து ஆறுதலடைய முடியும் ?
---
[1] அச்செய்யுள் இப்பொழுது என் ஞாபகத்துக்கு வரவில்லை.
--------------------

4. லாடு லட்டுச் சுமை

இராமநாதபுரம் ஜில்லா [1] வேம்பத்தூர் வாசியான சிலேடைப்புலி பிச்சுவையரைப் பற்றிப் பலர் கேட்டிருப்பார்கள். அவர் வியக்கத் தக்கவண்ணம் அதி விரைவில் கவிபாடும் ஆற்றலையுடையவர். திருவாவடுதுறையில் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரவர்களிடம் பாடங்கேட்டவர். இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ பாஸ்கரஸேதுபதி அவர்களால் மிகவும் ஆதரிக்கப் பெற்றவர். அவரிடம் சுப்பையரென்னும் ஓரிளைஞர் அடிக்கடி வந்து பாடங் கேட்டு வந்தார். பிச்சுவையர் வெளியூருக்குப் போகையில் சுப்பையரையும் அழைத்துச் செல்வ துண்டு.
அக்காலத்தில் ஊற்றுமலையில் ஜமீன்தாராக இருந்தவர் ஹிருதயாலய மருதப்பத்தேவர் என்பவர். அவருடைய கல்வியறிவும் ஆற்றலும் நற்குணங்களும் மிக உயர்ந்தவை. தமிழ் வித்துவான்களிடத்திலும் ஸங்கீத வித்துவான்களிடத்திலும் அவருக்கிருந்த அன்பு யாவராலும் மறக்க இயலாதது. வீண்காலம் போக்காமல் காலவரையறைப்படி ஒழுங்காக எல்லா வேலைகளையும் திருத்தமுறச் செய்வார். தம்முடைய ஜமீன் ஸம்பந்தமான வேலைகளையும் மற்றக் காரியங்களையும் அவ்வப்போது செய்வதால் உண்டாகும் அயர்ச்சியை அவர் தமிழ் நூலாராய்ச்சியால் ஆற் றிக் கொள்வார். தினந்தோறும் காலையில் 8-மணி முதல் 10-மணிவரையிலும் மாலையில் 2-மணி முதல் 4-மணி வரையிலும் புலவர்களைக் கொண்டு நல்ல தமிழ்நூல்களை வாசிக்கச் செய்து கேட்பதும் அப் புலவர்கள் அங்கங்கே கூறும் நயமான பொருள்களை யறிந்து உவப்பதும் தாமே எடுத்துக் கூறுவதும் அவருக்கு இயல்பு. இதற்கென்றே தம்முடன் சில புலவர்களை வைத்து ஆதரித்து வந்தார்.

ஊற்றுமலை ஜமீன்தார்களுக்குக் குலதெய்வமாகிய நவநீத கிருஷ்ண ஸ்வாமியின் ஆலயம் அவ்வூரில் இருக்கிறது. அங்கே நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக நடைபெறும். பெரிய கோயில்களுக்கு நடைபெறுவன போன்ற பார்க்கலாம். அதற்குரிய சிறப்புக்களை அங்கே நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி. அந்தக் கோயிலின் நைவேத்தியங்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங் குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யிற் செய்யப்படுவன. ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தனக் கல்லளவு இருக்கும். இவ்வளவு விசேஷமான நைவேத்தியங்களை ஒவ்வொரு நாளும் அங்கே காணலாம். உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஹிருதயாலய மருதப்பத்தேவர் புலவர்களிடம் காட்டும் அன்பைப் பலவகைகளில் அறியலாம். அவரவர்களுக்கு உரிய சம்மானங்களை அளிப்பதோடு நவநீத கிருஷ்ணனுடைய பிரசாதத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுக்கும் வரையில் அளிக்கச் செய்வார். சில சமயங்களில் புலவர்களுக்குப் பக்ஷியங்களைக் கொடுத்தனுப்புவதும் உண்டு.

நவநீதகிருஷ்ணஸ்வாமியின் உத்ஸவத்துக்கு ஒரு சமயம் பிச்சுவையர் சுப்பையரையும் உடன் அழைத்துக்கொண்டு ஊற்றுமலை போயிருந்தார். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க அன்பு உண்டு. அவருடைய சாதுரியமான செய்யுட்களைக் கேட்டுப் பொழுதுபோக்குவதில் ஜமீன்தார் சலிப்படைவ தில்லை. உத்ஸவம் நடந்த பிறகு பிச்சுவையர் தம் ஊருக்குப் புறப்பட்டார். வழக்கப்படி அவருக்கு அளிக்க வேண்டிய சம்மானங்களை அளித்த ஜமீன்தார், "உங்களுக்கென்று இரண்டு மூன்று நாள் பிரசாதங்களை எடுத்துவைக்கச் சொல்லியிருக்கி றேன். அவற்றைக்கொண்டுபோய் உங்கள் குழந்தை களுக்குக் கொடுக்கவேண்டும் " என்றார். பிச்சுவையரிடம் அவை கொடுக்கப்பட்டன. அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொள்ளுகையில் இளைஞராகிய சுப்பையர், "நான் எடுத்து வருகிறேன்" என்று சொல்லி வாங்கிக் கொண்டார். சுமை சிறிது பெரிதாகவே யிருந்ததால் சுப்பையர் அதைத் தம் தலையில் வைத்துத் தூக்கிவந்தார்.

வழியில், பிச்சுவையர் சிறிது தங்கிச்செல்ல நேர்ந்தது; "நீ முன்னே போ; நான் சற்று நேரத் தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி இவரை முன்னே அனுப்பினார். இவர் சிறிது தூரம் சென் றார். நடந்துவந்ததனாலே களைப்பு ஏற்பட்டது; பசியும் உண்டாயிற்று. இவர் உடனே பக்ஷிய மூட்டையைக் கீழே வைத்தார். அதன் மணம் இவர் மூக்கைத் துளைத்தது; நாவில் நீர் ஊறிற்று. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே மூட்டையை அவிழ்த் துச் சிறிது சிறிதாகப் பக்ஷியத்தைச் சுவை பார்க்கலானார். அதன் சுவை இவரைத் தன் வசப்படுத்தி விட்டது. பின்னால் பிச்சுவையர் வருவாரென்ற நினை வேயில்லாமல் ஒரே ஞாபகத்தோடு அந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்.

சிறிதுநேரம் சென்றது. "என்னடா பண்ணுகிறாய்?'' என்ற குரலைக் கேட்டவுடன் சுப்பையர் திடுக்கிட்டார். இவர் பக்ஷியங்களை ஊக்கத்தோடு தின்றுகொண்டிருக்கும் காட்சியைப் பிச்சுவையர் பார்த்து வியந்தார்; "என்னிடம் சொன்னால் நான் வேண்டாமென்றா சொல்லுவேன்?" என்று கேட் டார் அவர்.

சுப்பையர் :- நான் என்ன செய்வேன்! கால் வலித்தது; பசியும் உண்டாயிற்று. இப்படிச் செய்வதைவிட வேறு வழியேது?
பிச்சுவையர், "அதற்காக இப்படி வழியிலே மூட்டையைப் போட்டுக்கொண்டா தின்னவேண்டும்? சரி, மூட்டையைத் தூக்கு' என்று சொல்லிக் கொண்டே அதனைக் கட்டிச் சுப்பையரிடம் கொடுக்கலானார்.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்றுகொண்டே,"இச்சுமையைப் பிச்சு வையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?' என்றார். ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது. பிச்சுவையர், 'நீ செய்யுள்கூடச் செய்வாய் போலிருக்கிறதே!" என்று பின்னும் வியப்புடன்

சுப்பையர்:- எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதந் தான்.
பிச்சுவையர்:- சரி; அப்படியானால் உன் கையிலுள்ள பக்ஷியத்தைத் தின்று பூர்த்திசெய்துவிட்டு அந்தச் செய்யுளையும் பூர்த்திசெய்.
சுப்பையர் அங்ஙனமே பூர்த்தி செய்தார். அந்தச் செய்யுள் வருமாறு:-
(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)

எச்சகமும் புகழ்படைத்த தென்னூற்று மலைமருதப்
      பேந்த்ரன் போற்றும்
நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய
      லாடு லட்டு
வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக
      வருந்தும் வேளை
இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும்
      இயல்பு தானோ.
(இவ்வரலாறு பிச்சுவையரவர்களால் அறிந்தது.)
-----
[1] இவ் ஆரைப்பற்றிய செய்திகளைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தின் முகவுரை முதலியவற்றால் அறியலாம்.
---------------

5. பங்கா இழுத்த பாவலர்

சிலருக்குச் சிலவகையான ஆற்றல்கள் எளிதில் அமைந்து விடுகின்றன. அத்தகைய ஆற்றல்கள் வேறு சிலருக்கு மிகமுயன்றாலும் சிறிதும் அமைவதில்லை. செய்யுளியற்றும் ஆற்றலும் அவ்வகையானதே. சிலர் யாப்பிலக்கணம் முதலியவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தாலும், இனிய ஓசையை யுடைய செய்யுட்களைப் பிழையின்றி இயற்றுவதில் தடுமாறுகிறார்கள். பிறர் செய்யுட்களிலுள்ள பிழைகளை எடுத்துக்காட்டும் இயல்புடைய சிலர் பிழையற்ற சில பாடல்களையேனும் இயற்றும் ஆற்றலை அடைந்திலர். வேறு சிலரோ இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை ஆராயாவிடினும் மனத்தில் தோற்றிய கருத்துக்களை அழகுபெற அமைத்துச் செய்யுள் செய்து விடுகிறார்கள்.

இந்நாட்டில் தம்முடைய மனக்கருத்தைச் செய்யுளில் அமைத்து விரைவில் வெளியிடும் ஆற் றல் வாய்ந்த பல புலவர்கள் இருந்து புகழ்பெற்று விளங்கியதுண்டு. காளமேகத்தைப் போன்ற ஆசு கவிகள் பலர் இவ்வகையில் தலைசிறந்து விளங்கியவர் ஆவர். அவர்களுடைய செயல்களும், பலவகையான செய்யுட்களைப் பாடிய வரலாறுகளும் யாவ ராலும் விருப்பத்துடன் கேட்டு இன்புறற்கு உரியன.

சற்றேறக்குறைய இருபத்தேழு வருஷங்களுக்குமுன்பு வேம்பத்தூரில் இருந்தவரான முன்னே கூறிய சிலேடைப்புலி பிச்சுவையரென்னும் வித்துவான் சௌந்தரியலகரி யென்னும் நூலைத் தமிழில் இயற்றி யாவராலும் மிகவும் பாராட்டப்பெற்று விளங்கிய கவிராச பண்டிதருடைய பரம்பரையில் உதித்தவர்; இராமநாதபுரம் ஸ்ரீ பாஸ்கர சேதுபதியவர்கள் விருப்பத்தின்படி ஒருமணி நேரத்தில் பன்னிரண்டு சிலேடைகளைப் பாடி [1]அம்மன்னர் வழங்கிய ஐயாயிரம் ரூபாய் ஸம்மானத்தைப் பெற்றவர். அவருடைய குமாரர்களுள் மூத்தவர் மகாதேவ பாரதி என்பவர்; அவரும் விரைவிலே செய்யுள் இயற்றுவார். இப்பொழுது மதுரையில் அவர் சௌக்கியமாக வாழ்ந்துவருகிறார். அவரைப்பற்றிய வரலாறு ஒன்று வருமாறு:

காலஞ்சென்ற ஸ்ரீ பா. இராஜராஜேசுவர சேதுபதி மன்னரவர்கள் ஏறக்குறைய 25- வருஷங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் மிகவும் சிறப்பாக நவ ராத்திரி விழாவை நடத்தினார்கள். அவர்களுடைய குலதெய்வமாகிய ஸ்ரீ ராஜராஜேசுவரிக்கு நித்திய நைமித்திகங்கள் அலங்காரங்கள் முதலியன மிகவும் மேன்மையாக நடைபெற்றன. மன்னரவர்கள் விருப் பத்தின்படி இந்நாட்டின் பலபாகங்களிலிருந்து ஸம்ஸ்கிருத பண்டிதர்களும் தென்மொழிப் புலவர்களும் ஸங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். நாள்தோறும் தமிழ் வித்துவான்கள் அம்பிகை விஷயமாகப் பல செய்யுட்களை இயற்றிக் கூறிச் செவிக்குணவை அளித்தார்கள். வடமொழி வித்துவான்கள் தேவி விஷயமாகவுள்ள வடமொழித் தோத்திரங்களையும் வேறு சுலோகங்களையும் எடுத்துச் சொல்லிப் பிரசங்கம் செய்தார்கள். வாய்ப்பாட்டி லும், வீணை, புல்லாங்குழல், பிடில், மிருதங்கம் முதலிய வாத்தியங்களிலும் வல்ல சங்கீத வித்துவான்கள் ஊக்கத்தோடு தங்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி யாவரையும் மகிழ்வித்து வந்தார்கள். எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் அனுபவித்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது.

அந்த விழாநாட்களிலெல்லாம் வித்துவான்களுடைய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் இனிய சங்கீதத்தையும் கேட்பதிலேயே மற்ற ஜனங்களுக்குப் பொழுதுபோயிற்று. மன்னரர்களும் அவ் வித்துவான்களுக்கு ஏற்ற வசதிகளை அமைத்து ஆதரித்து வந்தனர்.

அப்போது ஒருநாள் பாஸ்கர சேதுபதியவர்களின் மாப்பிள்ளையவர்களது மாளிகையில் பல வித்துவான்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அநுபவத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினர்.
அப்பொழுது காலை 9-மணியிருக்கும். இயல்பான காற்று இல்லாமையால் அதிக வெப்பமாக இருந்தது. அம்
மாளிகையில் பெரிய பங்காக்கள் இருந்ததைக் கண்ட நான், "பங்கா இழுப்பவன் இல்லையோ?'' என்று கேட்டேன். உடனே அக்கூட்டத்திலிருந்த மகாதேவ பாரதியார் திடீரென்றெழுந்து அங்கிருந்த பங்காவின்கயிறு கட்டியிருந்த நிலைக்கு அப்புறம் விரைந்து சென்றார். நிலையின்மேலுள்ள துராவத்தின் வழியாக வெளியில் விடப்பட்டிருந்த கயிறு முடியப்பட்டிருந்தது. சென்ற பாரதியார் எழும்பி அந்த முடிச்சை எட்டிப் பிடித்துக் கொண்டார். பங்காக்காற்றை அனுபவிக்க அறிந்த அவர் அதனை இழுக்கும் முறையை அறியாமல், எப்படியாவது பங்காவை இழுத்து விரைவில் வெப்பத்தைப் போக்க வேண்டுமென்பதை எண்ணி அவசரமாக அந்தக் கயிற்று முடிச்சைக் கையில் பிடித்து இழுத்தார். அது கீழேவந்தது; பின்பு மேலே போயிற்று. அதைப் பிடித்துக்கொண்டிருந்த பாரதியார் அதை விட்டுவிட்டால், மறுபடியும் பிடித்து இழுக்க நேரமாகுமென்றெண்ணி அதுமேலே போகும்பொழுது அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே தாமும் மேலே எழும்பிப்போனார். நிலை மிக உயரமானது; அவரோ மெல்லிய தேகத்தையுடையவர். இப்படிக் கீழே வருகையில் இழுத்தும் மேலே போகையில் மேலே உடன் சென்றும் தம்மையே மறந்து பங்காவை இழுத்துக்கொண்டிருந்த அவரது நிலைமையை யாவரும் கண்டு வியப்புற்றனர். பின்பு பங்காக்காரன் வந்துவிட்டான். அவன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு வழக்கம் போல் முடிச்சை அவிழ்த்துக் கயிற்றை நெடுகவிட்டு இழுக்க ஆரம் பித்தான். மகாதேவ பாரதியார் அவனுடைய செய் லைச் சிறிதுநேரம் கூர்ந்து கவனித்துவிட்டு எங்களை நோக்கிவந்தார்; "உயர்குலத் தோன்றலும் கவிஞருமாகிய நீர் இவ்விதம் செய்யலாமா? உமக்கு முன்பு பழக்கம் இல்லையே!' என்று கேட்டேன். அவர் உத்ஸாகத்தோடும் உவகையோடும், "பங்கா இழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே " என்று பாட்டாக விடையளித்தார். அந்த அடி ஒரு கட்டளைக்கலித்துறையின் ஈற்றடியாவதற்கு ஏற்றதாக இருத்தலை அறிந்து, "பாட்டைமுடித்துச் சொல்லவேண்டும்" என்றேன். உடனே அவர் சற்றும் தயங்காமல்,

"கொங்கார் பொழில்புடை சூழ்முக வாபுரிக் கொற்றவனாம்
மங்காத சீர்த்தி வளர்பாற் கரமுகின் மாப்பிளையின்
சிங்கார மாளிகை யிற்புல வோர்க்குச் சிரத்தையுடன்
பங்கா இழுப்பதேன் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே"

என்ற கட்டளைக்கலித்துறையைச் சொல்லித் தமது பரம்பரைப் பெருமையை விளக்கினார். அங்கிருந்த யாவரும் அவருடைய ஆற்றலையும் வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த அன்பையும் வியந்து பாராட்டினார்கள். அன்று மாலை ஸ்ரீ இராஜ ராஜேசுவர சேதுபதியவர்கள் வீற்றிருந்த சபையில் இந்த நிகழ்ச்சியை நான் தெரிவித்தபோது அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். மகாதேவ பாரதியார் பங்கா இழுக்கும்போது கீழேவருவதும் கயிறு மேலே செல்கையில் தாமும் மேலே செல்வதுமாகிய அந்தக்காட்சி இன்றும் என் கண்முன் நிற்கின்றது.
---
[1]. அம்மன்னரவர்கள் செய்த நன்றியை மறவாமைக்கு அடையாளமாகப் பிச்சுவையர் தம் குமாரர் ஒருவருக்குப் பாஸ் கரையரென்ற பெயரையும், அந்த நிதியைக்கொண்டு வாங்கிய நிலத்திற்குப் பாஸ்கரன்செய் என்ற பெயரையும் இட்டனர்.
-------------

6. பரிவட்டத் தியானம்

செந்தமிழ் நாடாகிய பாண்டிவள நாட்டிற்குரிய பொதியில் மலையும் தாமிரபரணி நதியும் திருநெல்வேலிச் சீமையிலே விளங்குகின்றன. அருவிகளும் சோலைகளும் நிறைந்த மலைகள் அந்நாட்டின் இயற்கையமைப்பை மிகவும் அழகுபடுத்துகின்றன. மற்ற நதிகளைப் போலல்லாமல் தாமிரபரணி நதியானது அச்சீமையினருக்கு மட்டும் உரிமையாக விளங்குகின் றது. அந்நதியின் இருகரைகளும் பலவகை வளங்களையுடையன. நவ கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் வேறுபல ஸ்தலங்களும் அங்கே தக்க இடங்களில் அமைந்து இலங்குகின்றன. அந்நதியானது கடலொடு கலக்கும் இடத்திலேதான் முத்து உண்டாகின்றது. அதன் கரையிலுள்ள ஊர்களில் தலைமைபெற்று விளங்குவது திருநெல்வேலி நகரமாகும்.

அந்நகரத்தில் இருந்த சைவர்களுடைய மிகுதியையும் அவர்களுடைய ஒழுக்கம் முதலியவற்றையும் கண்டு இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய ஸ்ரீ சாமிநாத தேசிகரென்பவர், 'திருநெல்வேலி யெனுஞ் சிவ புரத்தன்' என்று கூறும் முகத்தால் அதனைச் சிவ புரமென்று பாராட்டியிருக்கின்றார். அந்த நகரின் பெருமைக்கு முக்கிய காரணமாக இருப்பவை ஸ்ரீ காந்திமதி ஸமேத ஸ்ரீ அனவரத நாயகர் திருக்கோயிலும் தாமிரபர்ணியாற்றில் அமைந்துள்ள பல துறைகளுமேயாகும். அவ்வாற்றின் மேல்கரையிலே குறுக்குத் துறையென்ற ஒரு துறை இருக்கின்றது. இத்துறைக்கு வடபாலுள்ள மற்றொரு துறையாகிய சிந்துபூந்துறை யென்பது நகரத்திற்குத் தூரத்தில் இருப்பதாலும் இத்துறை அருகில் இருப்பதாலும் இப்பெயர் இதற்கு உண்டாயிற்றென்பர்.
இத்துறையில் ஆற்றின் இடையில் திருவுருமா மலையென்ற சுப்பிரமணிய ஸ்தலம் ஒன்று உள்ளது. அங்கே உயரமான பெரிய பாறையொன்றில் முருகக் கடவுளின் திருவுருவம் அமைந்திருக்கிறது. அப் பாறையே திருவுருமாமலையாகும். பண்டைக் காலத் தில் திருச்செந்தூரில் பிரதிஷ்டை செய்யும்பொருட்டு ஆண்டவன் திருவுருவத்தை அப்பாறையிலிருந்து சிலையெடுத்து ஒரு சிற்பி இயற்றினானென்றும் அப்போது அவ்வுருவத்தைப் போலவே அப்பாறையிலேயே பின்னும் ஓர் உருவத்தை அமைத்தானென் றும் சொல்வார்கள். அக்காரணத்தால் அது திருவுரு மாமலையென்று வழங்கப்படுகின்றது. பூஜைகளும் திருவிழாக்களும் திருச்செந்தூரில் எவ்வளவு சிறப்பாக நடைபெறுமோ அவ்வளவு சிறப்பாக அங்கே நடைபெறும். அவ்வாலயத்திற்கு அர்ச்சகர்களும், வைதிகர்களும், பரிசாரகர்களும், ஓதுவார்களும், கவிராயரும் உண்டு. அங்கே எழுந்தருளியுள்ள முருகக் கடவுளின் மீது பல வித்துவான்கள் பல தனிச் செய்யுட்களையும் பிரபந்தங்களையும் அப்பொழுது அப்பொழுது இயற்றியிருக்கின்றனர்.

அவ்வாலயத்தைச் சார்ந்து ஒரு பெரிய மண்டபம் இருக்கின்றது. தினந்தோறும் அந்நகரிலிருந்தும் பக்கத்துள்ள ஊர்களிலிருந்தும் சைவவேளாளர்கள் வந்து ஆற்றில் நீராடி அம்மண்டபத்தில் பார்த்திவ பூஜை, உடையவர் பூஜை, ஏட்டருச்சனை முதலியன செய்துவிட்டுத் தத்தம் இடங்களுக்குச் செல்வது வழக்கம். அதற்காக மேடைகளும் (சேமங்களும்) பூஜை செய்வோர் இருப்பதற்கு உரிய இடங்களும் அபிஷேகமான தீர்த்தம் காலிற்படாமல் ஓடுவதற்குரிய சிறு கால்வாய்களும் அங்கே அமைக்கப் பட்டுள்ளன. பூஜை செய்பவர்களுக்குரிய பணி விடை புரிதற்குச் சில தவசிப்பிள்ளைகள் அங்கே இருப்பார்கள்; வழக்கமாக அவ்விடம் பூஜை செய்ய வருபவர்களுடைய ஆடைகளை முதல் நாளே வாங்கித்தோய்த்து உலர்த்தி வைத்திருந்து மறுநாள் ஸ்நானம் செய்தவுடன் அவர்களிடம் கொடுப்பார்கள்; பூஜைக்குச் சந்தனம் அரைத்துத் தருவார்கள் ; பத்திரபுஷ்பங்களை எடுத்துவந்து ஆய்ந்து தட்டங்களில் உரிய இடத்தே வைத்திருப்பார்கள். சைவர்கள் தாமிரபரணியில் நீராடிப் பூஜையை அம் மண்டபத்தில் முடித்துக் கொண்டு திருவுருமாமலை ஆண்டவனைத் தரிசித்துப் பின்பு தங்கள் வீடு செல்வார்கள். எளியவர்கள் முதலிய யாவரும் இங்ஙனம் செய்வர்; பெண்பாலாரும் அங்கே வந்து பூஜை செய்வதுண்டு. பழைய காலத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் பல சைவர்கள் திருவுருமாமலைக் கோயிற் பிரசாதங்களாகிய, [1]இலைவிபூதி, புஷ்பச்செண்டு முதலியவற்றைக் கைக்கொண்டு தடிப்பான சந்தனம் பூசிய மார்பும் ருத்திராட்ச கண்டிகள் அணிந்த கழுத்தும் விளங்க மிகவும் பரிசுத்தமான தோற்றத்துடன் வருவதைப் பார்க்கலாம். அக்காட்சி யாவரையும் வசீகரிக்கும்.

சற்றேறக்குறைய நூறு வருஷங்களுக்கு முன் ஒருநாள் சைவப்பிரபுவாகிய செட்டியார் ஒருவர் குறுக்குத்துறைக்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு அங்குள்ள மண்டபத்திற் பூஜை செய்யத் தொடங்கினார். பூஜைப் பாத்திரங்கள் யாவும் வெள்ளியால் அமைந்தனவாக இருந்தன. அவையும், பூஜைக் கோயில், சரிகைக்கரையிட்ட உயர்ந்த பட்டுப் பரி வட்டங்கள் முதலியவையும் அச்செட்டியாரின் செல்வ மிகுதியைப் புலப்படுத்தின. பழவகைகள், தேன், பன்னீர், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ முதலியவற்றோடு கலந்த சந்தனம் முதலிய அபிஷேக திரவியங்களும் புஷ்பங்களின் மிகுதியும் அருகிலுள்ளோர் நாசிகளையும் கண்களையும் கவர்ந்தன.

செட்டியாருக்கு அருகில் ஓர் அபிஷிக்தர் (சைவகுரு) பூஜைசெய்ய வந்து அமர்ந்தார். அவர் தம்முடைய பழைய பிரப்பம்பெட்டியிலுள்ள மூர்த்திகளை வெளியில் எடுத்துவைத்துக் கொண்டு உள்ளே இருந்த கந்தைப் பரிவட்டத்தை நனைத்து உலர்த்தினார் ; அவரிடம் பூஜைப் பாத்திரங்கள் முதலியவை அதிகமாக இல்லை. அவரும் பூஜை செய்ய ஆரம்பித்தார்.

தம் அருகிலுள்ள செட்டியாரது பூஜையிலிருக்கும் பொருள்களின் சிறப்பை அவர் பார்த்தார்; பலவகையான பரிவட்டங்களும் பாத்திரங்களும் அந்தப் பூஜையை அலங்கரித்திருத்தலை நோக்கினார். தம்மிடம் கிழியாத பரிவட்டம் ஒன்றாவது இல்லையே யென்ற வருத்தம் அவருக்கு அதிகமாக உண்டாயிற்று.

செட்டியார் அர்ச்சனையை மிக விரிவாக நடத்தினார். அபிஷிக்தரோ அர்ச்சனை முதலியவற்றைச் செய்துவிட்டுத் தியானம் பண்ண ஆரம்பித்தார். அவர் மனம் செட்டியாருடைய பரிவட்டங்களிலே போய் நின்றது. 'இவ்வளவு பரிவட்டங்களை இவர் வைத்திருக்கிறாரே ; நமக்கு ஒன்று கொடுப்பாரா? நம்முடைய ஸ்வாமிக்கு இவற்றுள் ஒன்று சாத்தக் கிடைக்குமா?' என்று எண்ணினார். 'கேட்டா லல்லவா கொடுப்பார்? இப்பொழுது கேட்கலாமா, வேண்டாமா?' என்று பின்பு யோசித்தார். கேட் பதற்குத் துணிவு உண்டாகவில்லை. நேரிற் கேளாவிடினும் தம் விருப்பத்தைக் குறிப்பாகப் புலப்படுத்த நினைந்தார். அவர் தமிழ்ப்புலமை நன்கு வாய்ந்தவராதலின் தம் கருத்தைச் சிவபிரான்பால் தெரிவிப்பதைப்போல ஒரு செய்யுள் செய்து செட்டியாரின் காதிற் படும்படி சொல்லலாமென்று நிச்சயித்தார். தியானம் செய்வதற்குரிய காலத்தில் அச் செய்யுளை இயற்றினார். பின்பு துதி செய்யவேண் டிய சமயத்தில் வழக்கம்போலவே தேவார முதலியவற்றைச் சொல்லி அவர் துதித்தார்; அப்பால் 'சிவபெருமானே! நான் இவ்வளவுநேரம் துதித்தும் அவற்றைத் தேவரீரது திருச்செவியில் ஏற்றுக் கொள்ளாமைக்குக் காரணம் யாதோ? நல்ல பரி வட்டமில்லாமல் யானைத்தோலை அணிந்து கொண்டிருக்கிறோமே, என்ன செய்வதென்ற வருத்தமோ? அல்லது இங்கே பூஜை செய்யும் செட்டியாரவர்களிடமுள்ள பரிவட்டத்தில் நினைவோ? தேவரீருடைய திருவுள்ளம் அங்ஙனம் இருக்குமாயின் அதை அவர் கொடுப்பார்; கவலையுற வேண்டாம்' என்ற கருத்தை யமைத்து இயற்றிய
(அறுசீர்க்கழி நெடிலடியாசீரிய விருத்தம்)

"நரிவட்ட மிடுங்களத்தி லந்தகா சுரனைவென்ற
      நம்பா செம்பொற்
கிரிவட்டத் தனத்துமையாள் பங்காளா வெளியன்மொழி
      கேளா தேனோ
கரிவட்டத் துரிபுனைந்த குறையோநஞ் செட்டியார்
      கையின் மேவும்
பரிவட்டந் தனினினைவோ வேண்டுமென்றா லவரதனைப்
      பாலிப் பாரே ''

என்னும் செய்யுளைச் செட்டியாருடைய காதில் தெளிவாக விழும்படி மெல்ல இசையோடு சொன்னார். இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டு, 'செட்டியார் கவனிக்கிறாரா?' என்று கடைக்கண்ணால் நோக்கிக் கொண்டே தியானித்த வண்ணமாக இருந்தார்.

செட்டியார் அப்பொழுது தியானம் செய்து கொண்டிருந்தாலும் அவர் காதில் அபிஷிக்தர் கூறிய செய்யுள் நன்றாகப் பட்டது. ஒருவாறு தமிழ்ப் பயிற்சியுடையவராதலின் அவர் அச்செய்யுளின் பொருளை அறிந்து கொண்டார். அது சிவ பெருமானை விளித்துச் சொல்லப்பட்டாலும் தாம் கேட்டு நல்ல பரிவட்டத்தைக் கொடுக்க வேண்டு மென்பதே சொன்னவருடைய கருத்தென்பதையும் உணர்ந்தார்.

செய்யுளைச் சொல்லிய அபிஷிக்தர், செட்டியார் அழகிய பரிவட்டத்தை மனமுவந்து அளிப்பா ரென்று ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்தார்; அவர் வேறு எதையேனும் எடுப்பதற்குக் கையை அசைத்தால், தமக்குக் கொடுப்பதற்காகவே ஒரு பரிவட்டத்தை எடுக்கக்கூடுமென்று எண்ணலானார்.

தம் அருகிலுள்ளவருக்குத் தம் கருத்தைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அதற்கு அவர்செய்த உபாயத்தையே தாமும் செய்யவேண்டுமென்றும் செட்டியார் எண்ணி ஒரு செய்யுளை இயற்றத் தொடங்கினார். செய்யுளியற்றும் பயிற்சி மிகுதியாக அவருக்கு இல்லாமையால் நெடுநேரமாயிற்று; அவர் தியானத்திலிருப்பதாகவே அருகிலிருந்தவர்கள் நினைத்தார்கள்.

செட்டியார் ஒருவாறு செய்யுளொன்றை முடித்து துக் கண்ணைத் திறந்தார். திறந்தவுடன் அபிஷிக்தர் மீண்டும் ஒருமுறை தாம் இயற்றிய பாடலை அவர் கேட்கும்படி கூறினார். செட்டியாரும் ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினார். ஆனால் வழக்கப்படியே சொல்லவேண்டிய துதிப்பாடல்களைச் சொல்லித் துதிக்கும் பொறுமை அவர்பால் இல்லை; தாம் இயற்றிய விடைச் செய்யுளை அபிஷிக்தருக்குத் தெரிவித்து விடவேண்டுமென்னும் வேகம் அதிகமாக இருந்தது; அதனால் அபிஷிக்தர் தம் செய்யுளைச் சொல்லி முடித்த அடுத்த நிமிஷத்திலேயே அவரைக் காட்டிலும் உரத்ததொனியில் செட்டியார் தாம் இயற்றிய செய்யுளைச் சொல்லலானார்; அது வருமாறு:

"கொத்தாருங் குழலுமையாள் வாழும் பங்கிற்
      கோமானே யெளியன்மொழி கொள்ளா தேனோ
அத்தார்க ளாணையென தைய னாணை
      அம்மைமே லாணையுய ரண்ட ராணை
பத்தார்க ளாணையுன்றன் பாதத் தாணை
      பண்டாரந் தொண்டைகட்டப் பாடிப் பாடிச்
செத்தாலு மெலும்பெலும்பாய்த் தேய்ந்திட் டாலுந்
      தேவரீ ருடைமையொன்றுஞ் செலவி டேனே."
[ அத்தார் - அத்தான்மார். பத்தார்கள் - பக்தர்கள் ]

இந்தச் செய்யுளே அந்தச் செல்வருக்கு இருந்த தமிழ்ப் பயிற்சியின் அளவை வெளிப்படுத்துகின்ற தன்றோ?
பரிவட்டம் கிடைக்குமென்று ஆவலாக எதிர்பார்த்திருந்த அபிஷிக்தர் இந்தப் பாடலைக் கேட் டார். தாம் தொண்டை கட்டப் பாடிப்பாடிச் செத் தாலும் செட்டியார் பரிவட்டம் தரமாட்டாரென்பதை அறிந்தார்; 'இந்தக் கிருபண சிகாமணி கொடுத்தாலும் அதை நம்முடைய ஸ்வாமிக்குச் சாத்தல் கூடாது என்று எண்ணிக்கொண்டு பூஜையை விரைவில் முடித்துவிட்டு ஸ்வாமியையும் அவருடைய கந்தைப் பரிவட்டம் முதலியவற்றையும் தம்முடைய பெட்டியில் அடக்கம் செய்து எடுத்துக்கொண்டு புறப்பட்டு அவர் போய்விட்டார்.

-------
[1]. விபூதிப் பிரசாதத்தை அருச்சகர்கள் பன்னீரிலையில் வைத்துக்கொடுப்பார்கள். அதனால் இலைவிபூதியென்று அது வழங்கும்.
------
செட்டியார் தம் பரிவட்டத்துக்கு நஷ்டமில்லை யென்ற ஆறுதலையும் பெரிய காரியத்தைச் சாதித்து விட்டோமென்ற திருப்தியையும் அடைந்தார்.
-----------------

7. மானங் காத்த மைந்தர்

சில சில ஊர்களில் பரம்பரையாகவே கவிஞர்கள் இந்நாட்டில் இருந்துவருகிறார்கள். அவ்வூர்களுள் வேம்பத்தூரென்பது ஒன்று. அது மதுரைக்குக் கிழக்கேயுள்ளது. சங்ககாலமுதல் இன்றளவும் அவ்வூரில் கவிஞர்கள் இருந்து வருகின்றனர். அங்கே உள்ள சோழியப் பிராமணர்களுள் இளைஞர்களும் எளிதிற் செய்யுட்கள் இயற்றும் ஆற்ற லுடையவர்கள். வேம்பற்றூர்க் குமரனாரென்னும் சங்கப்புலவர் அவ்வூரினரென்றே கருகப்படுகின்றார். அவ்வூர்ச்சோழியர்களிற் பலர் பண்டைக்காலத் தில் வேறு வேறிடஞ்சென்று தங்கள் தங்கள் கல்வி மிகுதியையும் வருத்தமில்லாமல் செய்யுட்கள் இயற் றும் வன்மையையும் புலப்படுத்தி அங்கங்கேயுள்ள அரசர், பிரபுக்கள் முதலியோரால் நன்கு மதிக்கப் பெற்று விளைநிலம் முதலியவற்றை அடைந்து வாழ்ந்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் இருந்த ஊர்கள் வீரசோழன் அல்லது வீரை, தென்காசி, கீழைப்பாவூர், வல்லநாடு, இருப்பையூருணி, திரு நெல்வேலி, கரிவலம்வந்த நல்லூர், கற்குளம்,பனை யூர், குறுங்காவனம் அல்லது குறுங்களாவனம் முதலியனவாம்.

வேம்பத்தூராருள் ஒருவராகிய பெருமாளையரென்னும் ஒரு வித்துவான் திருநெல்வேலியிலிருந்த சைவ வேளாளப் பிரபுக்களின் பேராதரவால் அந்நகரத்தில் வசித்துவரலானார். வரன்முறையாக இலக்கிய இலக்கணங்களைப் பயின்ற அவர் நெல்லையப்பர் விஷயமாக ஏதேனும் நூல் இயற்றவேண்டுமென் றெண்ணினார். அவருடைய அன்பர்களும், அவருக்கு ஆதரவளித்த பிரபுக்களும் பிரபந்தமொன்று செய்தால் நலமாயிருக்கும் என்று விரும்பினர். அங்ஙனமே சில தினங்களில் அவர் நெல்லை வருக்கக்கோவை என்னும் பிரபந்தத்தை இயற்றி முடித்தார். மொழிக்கு முதலாகும் உயிரெழுத்துக்களிலும் உயிர் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி அகப் பொருட்டுறைகளை அமைத்துப்பாடுவது வருக்கக் கோவையாகும். பாம்பலங்காரர் வருக்கக்கோவை, மாறன் வருக்கக்கோவை முதலியன அவ்வகை யைச் சார்ந்தவை.

நெல்லைவருக்கக்கோவை இயற்றி நிறைவேறியவுடன் பெருமாளையர் அதனை அரங்கேற்ற எண்ணினார். பலரால் நன்கு மதிக்கப்பட்ட பண்டிதராதலின் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவேண்டு மென்றெண்ணிய அன்பர்கள் அதற்கு வேண்டுவன் செய்தமைத்தார்கள்.பெருமாளையரும் தாம் இயற் றிய அந்நூல் சிறப்பாக அரங்கேற்றி முடியுமென்ற உவகையில் ஆழ்ந்திருந்தார்.

திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ சாலிவாடீசுவரப் பெருமான் ஸந்நிதியில் அரங்கேற்றுதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரங்கேற்றும் நாள்வந்தது. உள்ளூராரையன்றி அயலூர்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்திருந்தார்கள். பெருங்கூட்டத்தினிடையே பெருமாளையர் இருந்து அரங்கேற்றத் தொடங்கினர். அவருடைய மனம் மிக்க ஊக்கத் தோடு இருந்தது. அவருடைய மாணாக்கருள் ஒருவர்,

"தேரோடும் வீதியெலாஞ் செங்கயலுஞ் சங்கினமும்
நீரோ டுலாவிவரும் நெல்லையே - காரோடும்
கந்தரத்தரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு"

என்னும் காப்புச்செய்யுளை வாசித்தனர்.

இதை வாசித்தவுடன் கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, "இக்கவியில் ஓர் ஆட்சேபம் இருக்கிறது " என்று சொன்னார். பெருமாளையருக்கு, "எடுத்தவுடனே அபசகுனம்போல இந்த மனிதன் ஏதோ சொல்லுகிறானே?" என்ற எண்ணம்வரவே அவருடைய ஊக்கம் தளர்ந்துவிடது. ஆட்சேபஞ் செய்தவர், 'வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவிவரும் என்று பாடியிருக்கிறீரே; வீதியில் கயலும் சங்கினமும் நீரோடு ஓடுகின்றனவா?" என்றார்.

பலகாலமாக ஜமீன்தார்கள் பிரபுக்கள் தமிழ்க் கவிஞர்கள் முதலியவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்துவந்த பெருமாளையர், ஆட்சேபஞ் செய்தவருக்கு விடை கூறுவதைப் பற்றி யோசிக்க வில்லை. அப்பொழுது, முதன்முதலாக அரங்கேற்றத் தொடங்கின நூலுக்கு இறங்குதுறையில் நீத்து ஆனதுபோல ஆட்சேபம் உண்டாயிற்றே! நம்முடைய நன்மதிப்புக்கு இழுக்கு வந்துவிட்டதே!' என்ற எண்ணம் அவர் நெஞ்சில் தோன்றி வருத்தத் தொடங்கியது. அதனால், எல்லாவற்றையும் சிறிது மறந்து திசைமயக்கம் அடைந்தவர்போல் அவர் சிறிதுநேரம் இருந்தார். ஆட்சேபத்துக்குரிய சமாதானம் சொல்ல இயலாமல் அவர் விழிப்பதாகவே அங்கிருந்தவர்கள் யாவரும் எண்ணினார்கள்.

பெருமாளையருக்குச் சிறிது நேரம் கழிந்தபிறகு தான் நாம் இன்ன நிலையில் இருக்கிறோம் என்ற நினைவு வந்தது. தம்மேல் அவமதிப்பு அதிகமாகும்படி அவ்வளவுநேரம் மெளனமாக இருந்துவிட்டதற்கு வருந்தினார். அவருக்கு அந்நூலை அரங்கேற்ற மனம் இடந்தரவில்லை. ஆகையால் அவர், "கடவுளுடைய கிருபை இப்பொழுது பூரணமாக என்னிடம் இல்லையென்று தோற்றுகிறது. அதனால், அரங்கேற்றத்தை இப்பொழுது வைத்துக்கொள்ளாமல் பின்பு வைத்துக் கொள்ளலாம்" என்று சபையில் சொல்லிவிட்டு மனவருத்தத்தோடு வீடு சென்றனர்.

வந்திருந்த யாவரும் தத்தமக்குத் தோற்றியவாறு பலவிதமாக எண்ணிக்கொண்டு சென்றனர். தமக்கிருந்த நன்மதிப்புக்கு ஒரு பெருங்குறைவுவந்து விட்டதென்று பெருமாளையர் எண்ணி எண்ணி வருந்தினர்; அவருடைய மனப்புண் ஆறவேயில்லை. சில காலத்துக்குப் பின்னர் அவருக்கு ஒரு குமாரர் பிறந்தார். குமாரர் பிறந்த சிலவருஷங்களுக்கப் பால் பெருமாளையர் இறந்தனர்.

பெருமாளையருடைய குமாரர் உரிய பருவத்தில் அவ்வூரிலுள்ள வித்துவான்களிடத்தில் தமிழ்க்கல்வி கற்றுவந்தார். "குலவிச்சை கல்லாமற் பாகம் படும் " என்பதற்கேற்ப அவருக்குத் தமிழறிவு விரைவாகப் பெருகலாயிற்று. தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் நல்ல பயிற்சியைப் பெற்று விளங்கினார்; கவி இயற்றுவதிலும் பிரசங்கம் செய்வதிலும் மிக்க ஆற்றலை யடைந்தார். ஒரு நாள் தம் வீட்டிலுள்ள சுவடிகளை எடுத்து அவர் பரிசோதித்து வருகை யில் நெல்லைவருக்கக்கோவை கிடைத்தது. அது தம் தந்தையாரால் இயற்றப்பெற்றதென்றறிந்து அவர் அதைப் படித்துப் பார்த்து இன்புற்றார். அந்நூல் இருப்பதாகவே அதுகாறும் அவர் அறியவில்லை. அக்காலத்தில் அவருடைய தாயார் இருந்தனர். அவரிடம் அதைப்பற்றி விசாரிக்கலானார்:

குமாரர்: அம்மா! அப்பா இயற்றிய நூல் ஏதாவது உண்டா?
தாயார்: ஒரு புஸ்தகம் எழுதினார்; அதை எழு தியது முதல்தான் அவருக்குச் சந்தோஷமே இல்லாமற் போயிற்று.
குமாரர் : அந்தப் புஸ்தகந்தானா இது?

குமாரர் தாயாருக்குக் கையிலிருந்த சுவடியைக் காட்டினார்.
தாயார் : ஐயோ! அந்தச் சுவடியை நீ ஏனப்பா எடுத்தாய்? உன்னுடைய தகப்பனார் அதனால் அடைந்த வருத்தம் போதாதா? அதை ஆற்றிலாவது கிணற்றிலாவது போட்டுவிடு; அதுதான் உன் தகப்பனாரைக் கெடுக்க வந்த சனியன்.

குமாரர்: என்ன அம்மா! அப்படிச் சொல்லுகிறாயே? அப்பா எவ்வளவு அழகாக இதை இயற்றி யிருக்கிறார்! இந்த அருமையான நூலை இவ்வளவு கேவலப்படுத்திப் பேசலாமா? தோஷமல்லவா?
தாயார் : தோஷமா! எங்களுடைய சந்தோஷ மெல்லாம் போனதற்கு இதுதானே காரணம்?

குமாரர் : எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்தப் புஸ்தகம் உங்களை என்ன பண்ணியது?
தாயார்: அது பழைய கதை ; அதைப்பற்றி அந்தக் காலத்தில் துக்கப்பட்டது போதாதென்று இப்பொழுது வேறு சொல்லி வருத்தப்படவேண்டுமா?

குமாரர்: எதுவாயிருந்தாலும் சொல்லி விடு. எனக்கு இந்தப் புஸ்தகத்தைப் படித்து எல்லோருக்கும் பாடஞ் சொல்லிப் பரவச்செய்ய வேண்டுமென்ற ஆசை தோன்றியிருக்கிறது. இதை எப்போது அப்பா இயற்றினார்? எங்கே அரங்கேற்றினார்?

தாயார் : அரங்கேற்றமா ! அதைப்பற்றிச் சால்லுகிறேன், கேள்: நீ பிறப்பதற்கு முன்பே இதை அவர் பாடினார். அரங்கேற்றத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். அரங்கேற்றம் ஆரம்பிக்கும்போது எவனோ ஒருவன் முதற்பாட்டே தப்பு என்றானாம். அவ்வளவுதான். உடனே அவருக்கு மானத்தால் மனம் ஓடிந்து போய்விட்டது. அதன்பிறகு அவருக்குப் பழையசந்தோஷம் வரவேயில்லை. அரங்கேற்றமே நடக்கவில்லை. அந்தச் சுவடியையும் அவர் மூலையிலே போட்டுவிட்டார்.

குமாரர்: முதற்பாட்டிலே என்ன தப்பு? ஏதாவது ஞாபகம் இருக்கிறதா?
தாயார் : அவர் ஒன்றும் பேசவே இல்லை. யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் ; அதுதான் என் காதில் விழுந்தது: வீதியெல்லாம் மீனும் சங்கும் நீரோடு ஓடுமா என்று அவன் கேட்டானாம்; இது தான் ஞாபகம் இருக்கிறது.

குமாரர் ஒருவகையாக ஆட்சேபம் இன்னதென்பதை ஊகித்து அறிந்தனர்; பிறகு முதியவர்களிடம் விசாரித்தும் தெரிந்துகொண்டார். அவர் மீண்டும் மீண்டும் அந்த நூலைப் படித்துப் படித்து இன்புற்றார். எவ்வாறேனும் தம் தந்தையாருக்கு இருந்த இகழ்ச்சியை நீக்கிவிட வேண்டுமென்ற உறுதியை மேற்கொண்டார். அந்த நூலைத் தாமே அரங்கேற்றி அதில் யாதொரு பிழையும் இல்லை யென் பதை எடுத்துக்காட்டவேண்டுமென்று எண்ணினார்.

அவர் விரும்பியபடி நெல்லையிலுள்ள அன்பர்கள் முயற்சியினால் ஸ்ரீ அனவரத்தான நாயகர் சந்நிதியில் அரங்கேற்றுவதற்காக ஒரு பெரிய சபை கூட்டப்பட்டது. [1]முதற்பாட்டுக்கு அவர் அர்த்தம் சொல்லத் தொடங்கினார்; "இது பிழையுள்ள தென்று முன்பு ஒருவர் ஆட்சேபிக்க, என் தந்தை யார் மனவருத்தத்தால் அரங்கேற்றவில்லை யென்று கேள்வியுற்றேன். இதில் ஒருவிதமான பிழையும் இல்லை. வீதியெல்லாம் தேரோடும் ; செங்கய லும் சங்கினமும் நீரோடு உலாவிவரும் ;

இத்தகைய நெல்லையெனப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வளவு அருமையான நூலை இயற்றிய என் தந்தையாருக்கு இந்த ஆட்சேபத்துக்கு விடை தெரியாமல் இருப்பதற்கு நியாயமில்லை. 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்' என்பதற்கேற்ப மிக்க மானமுடையவராதலின் எல்லாவற்றையும் மறந்து துன்பக்கடலில் ஆழ்ந்தார். ஆட்சேபித்த பொருமைக்காரர் யாரோ தெரியவில்லை; அந்த ஒருவருடைய சயலால் அக்காலத்தில் இருந்த பலரும் இந்நூலின் அருமை பெருமைகளை அறிந்து இன்புறக்கூடவில்லை. என்செய்வது!'' என்று சொல்லிவிட்டு மேலே நூல் முழுவதற்கும் விரிவாகப் பொருள் கூறி நன்றாக அரங்கேற்றி முடித்தார். அந்நூலின் சுவையில் ஈடுபட்டவர்கள், "இதுகாறும் இந்த நூலை அறியாமல் இருந்தோமே" என்றெண்ணி இரங்கினார்கள். மிக்க முதுமையை யுடையவர்கள், "இவ்வளவு அரியநூலைச் செய்தும் அதை நாங்களெல்லாம் தெரிந்து இன்புறவும் அதனால் உண்டாகும் பயனைப் பெருமாளையர் அடையவும் இயலாமற் போயிற்றே!" என்று வருந்தினர். "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? முன்னே முளைத்த காதினிலும் பின்னே முளைத்த கொம்பு வலிதென்பதற்கு இலக்கியம் போன்றவர் இந்த இளைய வித்துவான்" என்று அவரை வித்துவான்கள் பலர் கொண்டாடினர். யாவரும் மகிழ்ந்து பல பெருஞ்சிறப்புக்களை அவருக்குச் செய்தனர்.

அவர் தம் வீட்டிற்கு வந்தார். அவருடைய தாயார், அரங்கேற்றம் நன்றாக நிறைவேறியதையும் தம்குமாரர் சிறப்படைந்ததையும் முன்பே அறிந்த வராய் எல்லையில்லாத உவகையுடன் அவர் வரவை எதிர்நோக்கி யிருந்தார். வரும்போதே குமாரர். "அம்மா! அப்பாவுக்கு இருந்த குறையை நீக்கிவிட் டேன்" என்று சொல்லிக்கொண்டு வந்தார்.
''என் சிங்கமே! இப்பொழுது அவர் இருந்து சந்தோஷமடையக் கொடுத்துவைக்கவில்லையே!" என்னும் பொழுதே தாயாரின் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பமும் துக்கக்கண்ணீரும் கலந்து சிந்தின.
---
[1] இச் செய்யுளின் பிற்பகுதியின் பொருள் வருமாறு:- கார் ஓடும் - கருநிறம் பரவிய கந்தரத்தர் - திருக்கழுத்தை யுடையவரும், அந்தரத்தர் - ஞானாகாயத்தையே திருமேனியாகக் கொண்டவரும், கந்து அரத்தர் - பற்றுக் கோடாகிய செம்மைநிற முடையவரும், அம் தரத்தர் - திருமுடியில் நீரைத் தாங்கியவரும், சுந்தர் அத்தர் . முருகக்கடவுளின் தந்தையாரும், அம் தாத்தர் - அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான், காப்பு - காவல் புரிந்து வீற்றிருக்கும் இடம். நெல்லை காப்பென்று முடிக்க.
அத்தலத்துக்கு உரியதாக அடியேன் இயற்றும் நூல் இனிது முடியும் வண்ணம் பாதுகாத்தருள்வரென்பது கருத்து.
அந்தரம் - ஆகாயம்; கந்து - பற்றுக்கோடு; அரத்தம் - சிவப்பு; அம் - நீர், அழகு; தரம்-தகுதி.
இந்தப் பொருள் என்னுடைய ஆசிரியர் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் முன்பு தெரியவந்தது.
-----
[இந்த அரியசெய்தியை எனக்குச் சொல்லியவர் சேலத்தைச் சார்ந்த சாருவாயென்னுமூரி லிருந்த கதிர்வேற்கவிராயரென்பவர்.)
------------

8. பரம்பரைக் குணம்

மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. மணிமேகலையின் முகவுரையில் *** இவற்றுள் மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றைப் பிரதிகளிற் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போகிய பாகங்களையெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகு கெட்டு மாசுபொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவள் அணிந்துகொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே என்று எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன; சிவஸ்தலங்களும் விஷ்ணுஸ்தலங்களும் சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப்போல் தமிழ்த்தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன். அது சிவகங்கை ஸம்ஸ்தானத்தை சார்ந்தது. புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும் இடத்திலிருந்து சிலமைல் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து நான் பெற்ற ஏட்டுச் சுவடிகள் சில. அவற்றை எனக்கு உதவியவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்னும் ஓர் அன்பர்.
அவருடைய பரம்பரையானது தமிழ்வித்துவான்களுடைய பரம்பரையாதலின், பல அரிய தமிழ்ச் சுவடிகள் பல நூற்றாண்டுகளாகச் சேகரித்து அவர் வீட்டிலே பாதுகாக்கப் பெற்றிருந்தன. அவருடைய முன்னோர்கள் பல ஸம்ஸ்தானங்களில் யானை முதலிய பரிசுகளும் மானியங்களும் பெற்றவர்கள். அவர் வீட்டின் பக்கத்தில் பழைய காலத்தில் யானை கட்டிய கல்லையும் பழைய சிவிகையையும் பார்த்திருக்கிறேன். அங்கே கலைமகளும் திருமகளும் ஒருங்கே களிநடம் புரிந்தனர்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர் நல்ல செல்வர். அவரோடு நான் பழகிய காலத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றிய பல வரலாறுகளை எனக்குச் சொல்லியிருக்கிறார். தம்முடைய சொந்த அனுபவங்கள் பலவற்றையும் சொன்னதுண்டு. அவற் றுள் ஒன்று வருமாறு:

ஒருநாள் எங்கேயோ நெடுந்தூரமுள்ள ஓரூருக்கு ஒரு கலியாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும் ஊருக்குத் திரும்ப எண்ணி ஒரு வண்டிக்காரனிடம் வண்டி பேசி அமர்த்திக்கொண்டார். இரவு முழுதும் பிரயாணம் செய்யவேண்டி யிருந்தது. வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்; அன்றியும், "ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து விடுமாகையால், எனக்கு நாளைக் காலையில் சாப்பாடு போட்டு அனுப்பவேண்டும்" என்றும் தெரிவித்துக் கொண்டான். அவ்வாறே செய்விப்பதாக அவர் உடன்பட்டார்.

இராத்திரியில் வண்டி புறப்பட்டது. கவிராயர் அதிற் படுத்துக்கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. வண்டிக்காரன் ஆனந்தமாகத் தெம்மாங்கு முதலியவற்றைப் பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான். காளைகள் வேகமாகச் சென்றன. பாட்டுக்களைக் கவிராயர் கேட்டுப் பாராட்டிக் கொண்டே வந்தார். பின்பு வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப நிலையைப்பற்றி விசாரித்தான். அவர் தம்முடைய குடும்ப வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்:-

"நான் இருப்பது மிதிலைப்பட்டிதான். எங்கள் முன்னோர்களெல்லாம் பெரிய வித்துவான்கள். அவர்கள் எவ்வளவோ நூல்களைச் செய்திருக்கிறார்கள்; பல இடங்களில் பரிசுகள் பெற்றிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சேலத்தைச் சார்ந்த ஒரூரில் இருந்தனர். அக்காலத்தில் தாரமங்கலம் கோயில் திருப்பணிகள் செய்த கட்டியப்ப முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று வந்தனர். அவர்களில் ஒருவராகிய அழகிய சிற்றம்பலக் கவிராயருக்கு இந்த மிதிலைப்பட்டி என்னும் கிராமமானது அக்காலத்தில் இந்தப் பக்கத்தில் ஜமீன்தாராக இருந்த வெங்களப்ப நாயக்கரென்பவராற் கொடுக்கப்பட்டது. அது சம்பந்தமான சாஸனம் எங்கள் வீட்டில் இருக்கிறது. இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்து பல வகையான பரிசுகளை எங்கள் முன்னோர்கள் பெற் றிருக்கிறார்கள். மருங்காபுரி ஜமீன்தாரிடமிருந்தும் பலவற்றை அடைந்திருக்கிறார்கள். சிவகங்கையிலிருந்தும் அப்படியே கௌரவம் பெற்றிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் தமிழருமை அறிந்த அரசர்களும் ஜமீன்தார்களும் இருந்தார்கள். அவர்கள் வித்துவான்களை ஆதரித்தார்கள். அதனால் வித்துவான்களும் பிரபுக்களைப் போலவே கவலையில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். எங்களுக்கு இப்பொழுது ஜீவனாதாரமாக இருப்பதும் எங்கள் குடும்பத்தில் லக்ஷ்மீ கடாக்ஷம் குறையாமல் இருக்கும்படி செய்வதும் அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த கிராமமே. அவருடைய அன்னத்தைத்தான் இப்பொழுது நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.என்ன, கேட்கிறாயா?''

ஆமாம், சொல்லுங்கள் ” என்றான் அவன்.

"வெங்களப்ப நாயக்கர் செய்த பல தர்மங்களும் அவருடைய புகழும் இன்றும் நிலைத்திருக்கின் றன. அவரால் ஆதரிக்கப்பெற்ற பரம்பரையினராகிய நாங்களும் பிறரும் நல்ல நிலையில் இருக்கிறோம். அவருடைய பரம்பரையோ இருந்த இடம் தெரியாமற் போய்விட்டது. எங்கள் முன்னோர்களைப் போன்ற எவ்வளவோ பேர்களுக்கு அவர் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் பரம்பரையினர் கொடுத்துக் கொடுத்துப் புகழைச் சம்பாதித்தனர். ஆனாலும் பிற்காலத்தில் அக்குடும்பத்திற் பல பிரிவுகள் உண்டாயின ; செல்வமும் குறைந்து விட்டது. வெங்களப்ப நாயக்கருடைய பரம்பரையினர் யாரேனும் இப்போது எங்கேயாவது இருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை. அவர்களுடைய நிலை எப்படி இருக்கின்றதோ! கால சக்கரமானது
இப்படி மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்லிக்கொண்டே வந்த அவர் அயர்ச்சி மிகுதியால் தூங்கிவிட்டார்.

விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது. வீட்டை அடைந்த கவிராயர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டார். தம்முடைய வேலைக் காரனை அழைத்து வண்டிக்காரனுக்குப் பழையது. போடும்படி சொன்னார். அப்பொழுது வண்டிக்காரன் "எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் போய் வருகிறேன்.உத்தரவு கொடுங்கள்" என்று சொன்னான். அவர், "நீ ஊர்போய்ச் சேர்வதற்கு அதிக நாழிகை யாகுமே. சாப்பிட்டு விட்டுப் போ" என்று வற்புறுத்தினார்.

வண்டிக்காரன் : "இல்லை; இப்பொழுது எனக்குப் பசி இல்லை. போகும் வழியில் தெரிந்தவர்கள் வீட்டில் சாப்பிடுவேன்.
கவிராயர், "சரி; இதோ வாடகை ரூபாயை வாங் கிக்கொண்டு போ" என்று சொல்லி ரூபாயைக் கொடுக்க ஆரம்பித்தார்.
"ரூபாய் தங்களிடமே இருக்கட்டும். நான் போய் வருகிறேன்" என்று பணிவோடு அவன் சொன்னான்.

கவிராயர் திகைத்துவிட்டார்; அவன் அதிக வாடகை விரும்பக்கூடுமோ வென்று எண்ணினார்.

"நான் பேசினது மூன்று ரூபாய்தானே?" என்று அவர் கேட்டார்.

"இது கிடக்கட்டும் ஐயா! நான் போய் வருகிறேன். தாங்கள் வேறு ஒன்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது" என்று கம்பீரமாக வண்டிக்காரன் சொன்னான்.

'ஏனப்பா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லையே!'' என்று இரக்கத்தோடு அவர் கேட்டார்.
"ஐயா! நேற்று இராத்திரி உங்கள் முன்னோர்கள் கதையைச் சொல்லி வந்தீர்களே! அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் பரம்பரையிற் பிறந்தவன் அடியேன். ஏதோ தலைவிதி இப்படி என்னை வண்டியோட்டச் செய்தது. 'என்ன செய்தாலும் கொடுத்ததை மட்டும் வாங்கக்கூடாது. என்று பெரியவர்கள் சொல்வார்கள். எங்கள் முன்னோர்களால் கொடுக்கப்பட்டவைகளில் ஒரு துரும்பையாவது உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள என் மனம் சிறிதும் துணியவில்லை. மன்னிக்க வேண்டும். இவ்வளவாவது தங்களுக்கு நான் உபயோகப்படும்படி கடவுள் கூட்டிவைத்தது என் பாக்கியந்தான்" என்று சொல்லிவிட்டுக் கவிராயர் மேலே பேசத் தொடங்குவதற்குள் வண்டியை அவன் ஓட்டிக் கொண்டே போய்விட்டான்.

கவிராயருடைய மனம் அவனுடைய கம்பீரத்தையும் வெங்களப்ப நாயக்கர் பரம்பரையின் பெருமையையும் அவனுடைய நிலையையும் நினைந்து இரங் கியது. அவர் கண்களில் நீர் ததும்பியது.

இந்த வரலாற்றைப் பிற்காலத்தில் எனக்குக் கூறும் பொழுதுகூட இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தைச் சொல்லுகையில் அவர் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன ; நாத் தழுதழுத்தது.

உயர்ந்த பரம்பரையில் பிறந்தவர்களுடைய கம்பீரமும் உதாரகுணமும் எக்காலத்தும் அழியாதவை. "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே'' என்ற அருமையான வாக்கியத்திற்கு இந்த வரலாற்றை விட வேறு சிறந்த உதாரணம் கிடைக்குமோ?
------------------

9. வெங்கனூர்க் கோயிற்சிற்பம்

கற்பனைக் களஞ்சியமென்றும் கவிதாசார்வ பௌமரென்றும் அறிஞர்களாற் பாராட்டப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளின் பெருமையை அறியாதவர் தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரார். அவருடைய கவிமாலைகளைப் புனைந்து தமிழ் நாட்டாருடைய நினைப்பில் இருந்துவரும் தலங்களுட் சிறந்தது திருவெங்கையென மருவிவழங்கும் வெங்க னூராகும். [1]மந்திரிக்கோவையென்று புலவர்களாற் சிறப்பித்துப் புகழப்படும் கோவையொன்றும் உலா வொன்றும் கலம்பகமொன்றும் அலங்காரமொன் றும் அத்தலவிஷயமாகச் சிவப்பிரகாச ஸ்வாமிகளாற் பாடப்பெற்றுள்ளன. அது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரும்புலியூர்த் தாலூகாவிலே உள்ளது.

அத்தலத்திலுள்ள கோயிற்சிற்பம் மிக அருமையாக அமைந்துள்ளது ; "கருப்ப இல்லிற் கிணை யில்லை யென்னும் திருவெங்கை '', ''வல்ல கோலுக்கு வல்லவண்ணாமலையார்கட்டு கோயில்" என்று திருவெங்கைக் கோவையிலும், "மல்லலுறச் சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப், புந்தி மகிழற் புத வணித்தா - முந்தையோர், செய்யுள்போற் செய்த திருக்கோயில் ” என்று திருவெங்கையுலாவிலும் அக் கோயில் பாராட்டப்பட்டுள்ளது. அதன் [2]வரலாறு வருமாறு:-
துறைமங்கலமென்னும் ஊரில் பண்டகுலத்தில் லிங்கப்ப ரெட்டியாரென்னும் பரம்பரைச்செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பப் பெயர் வல்லகோலென்பது. அவருக்கு அண்ணாமலை ரெட்டி யாரென்றும், நீலகண்ட ரெட்டியாரென்றும் இரண்டு குமாரர்கள் உண்டு. அவருள் அண்ணாமலை ரெட்டியாரே திருவெங்கைக்கோயிலைக் கட்டியவர்.

அவர் கல்வியறிவொழுக்கமும் சிவபக்தியும் உடையவர்; தமிழ் நூற்பயிற்சியும் தமிழ்ப் புலவர்களிடத்தில் பேரன்புமுள்ளவர்; சிற்றரசர் போன்ற பெருமதிப்புடையவர்; சிவப்பிரகாச ஸ்வாமிகளிடத்தில் அளவற்ற பக்தி பூண்டு பலவகையில் அவரை ஆதரித்து வந்தவர்; அவருக்காகப் பல இடங்களிற் பல வசதிகளைச் செய்துகொடுத்தவர். அவற்றுள் அவருக்காகக் கட்டுவித்த நடைவாவிகள் மிகவும் சிறந்த வேலைப்பாட்டுடன் இக்காலத்திலும் காண் போர் கண்களைக் கவர்ந்து விளங்குகின்றன. மனிதர்களைப் பாடாத வீறுபெற்ற அப்புலவர் பெருமானுடைய அருமைத் திருவாக்கினால் உள்ளங்குளிர்ந்து புகழ்ந்த பெருமையை உடையவர் ரெட்டியார் ;

" .... ....வினவினர்க்குப்
பண்டை யறத்தின் படிவமிது வென்னவுருக்
கொண்டஇலிங் கையன் குலமைந்தன் - உண்ட
படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம்
குடிதாங்கி நல்லிசைமேன் கோதை-முடிதாங்கு
கல்வி யுறுநில கண்டன் துணைவனவர்ச்
செல்வி யுறையுந் திருமார்பன்
* * *

இலையென்றல் கேட்டவுமின் னாதென் றிரப்போர்
நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன்...
* * *

வந்துதன்சீர் பாடுநரை மண்மீதி லங்நிலையே
இந்திரன்றா னாக்கு மியல்பினான்....
* * *

........... .......... மண்புலவர்
தம்மைவிழி காக்குந் தகவி னிமைபோலச்
செம்மை பெறக்காக்குஞ் சீருடையோன்....
* * *
வேலியறஞ் செய்ய விளைத்துக் கரும்பயிலக்
கூலி கொடுக்குங் குலத்தோன்றல் "

என்று அக்கவிஞர்பிரான் அவருடைய புகழைப் பல படப் பாடியுள்ளார். ஸ்வாமிகள் தாம் துறவியாக இருந்தும், "எம் குடிதாங்கி" என்று நாவாரக் கூறி வாழ்த்தும் பெருமை வாய்ந்த அண்ணாமலை ரெட்டியாருடைய புகழை வேறு எம்மொழிகளால் சொல்ல முடியும்?

அண்ணாமலை ரெட்டியார் தமக்கு உரிய கிராமங்களுள் ஒன்றாகிய வெங்கனூரில் இருந்துவந்தார். அப்பொழுது ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதமிருந்து விருத்தாசலம் சென்று பழமலை நாதரையும் பெரியநாயகி யம்மையையும் தரிசித்து வருவது அவர் வழக்கம். இந்த நியமத்தில் என்றும் தவறாமல் அவர் நடந்துவந்தார். இடையில் ஓடும் வெள்ளாற்றில் அளவு கடந்த வெள்ளம் வந்துவிட்டமையால் ஒரு பிரதோஷத்தன்று அவரால் விருத்தாசலத்துக்குப் போக இயலவில்லை. ஆதலின், மிகவும் மனமுடைந்தவராகி வருந்தினர். அன்றிரவு அவருடைய கனவில் பழமலைநாதர் தோன்றி, வெங்கனூரில் இன்ன அடையாளமுள்ள இடத்தில் ஒரு கோயில் அமைத்து அங்கே சிவலிங்கத்தையும் மற்ற மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடுக வென்று கட்டளையிட்டு மறைந்தருளினார். இந்தச் செய்தியை, 'சிவபெருமான் வெங்கையிலே வாசம் செய்தலை விரும்பினார்.

வாமபாகத்திலுள்ள பெண் ஆசையையும் சுந்தரமூர்த்தியாரது பொன்னைத் திரு முருகன் பூண்டியிலே பறித்த பொன்னாசையையும் பெற்ற திருவுள்ளத்தில் மண்ணாசையும் உண்டாயிற்று. ஆதலின் தேவர்களும் விரும்பும் சிறப்பை அளிக்கக் கருதி, முன் மாவலிபாற்சென்று மண்ணை இரந்த திருமாலைப்போல் குறுகியவுருவங் கொண்டு யாசியாமல் இயல்பான உருவத்தோடே கனவிற் சென்று இரந்து பெற்றனர்" என்று அழகுபெறச் சிவப்பிரகாச ஸ்வாமிகள் கூறியுள்ளார்:

"வெங்கை நகரிருப்பு வேண்டியே-பங்குபடு
பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம்
மண்ணாசை தானு மருவுதலால்-விண்ணாசை
கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண்
டெள்ளுங் குறியவுரு வின்றுபோய்த் - தெள்ளும்
கனவு நனவுபோற் காட்டியிரந்து '" (வெங்கையுலா.)

விழித்தெழுந்த அண்ணாமலைரெட்டியாரோ சிவ பிரானது திருவருட்டிறத்தை எண்ணிப் பரவசராய் மனமுருகினார் ; பிறகு சிவபெருமானாற் குறிக்கப் பெற்ற இடத்தை அடைந்து கண்டார்; சிவாலயம் அமைப்பதற்கு உரியவற்றைச் செய்ய ஆரம்பித்தார்; நர்மதை நதியிலிருந்து பாணலிங்கம் வருவித்துத் தனியே பிரதிஷ்டை செய்வித்து ஒவ்வொருநாளும் தரிசனம் செய்துகொண்டு வந்தார்.

அக்காலத்தில் வடதேசத்தில் உண்டான பஞ்சத்தால் பல சிற்பிகளும் அவர்களுடைய. தலைவனும் அங்கிருந்து தென்னாட்டை நோக்கி வந்தனர். அவர்கள் திருவெங்கை வழியாகச் செல்லுகையில் அவர்களுடைய வருகையை அறிந்த அண்ணாமலை ரெட்டியார் தாம் மேற்கொண்ட சிவாலயத் திருப்பணியை அவர்களைக்கொண்டு செய்விக்க எண்ணினார். தமது கருத்தை அவர் அவர்களிடம் கூறவே, அவர்கள் பஞ்சகாலத்தில் அத்தகைய பேருதவி
கிடைத்ததை எண்ணி மிகமகிழ்ந்து உடன்பட்டு ஆலயத்தைக் கட்ட ஒப்புக்கொண்டார்கள்.

சிற்பிகள் வெங்கனூரிலுள்ள திருக்கோயிலை விதிப்படி ஊக்கத்தோடு கட்டிவந்தனர். உணவு முதலியவற்றிலும் பிறவற்றிலும் அவர்களுக்கு யாதொரு குறையும் நேராதபடி எல்லாவற்றையும் அண்ணாமலை ரெட்டியார் செய்வித்தனர். அவருடைய அன்புடைமையினால் சிற்பிகள் அதிக மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் கடமைகளை நன்றாக நிறைவேற்றி வந்தார்கள். ஒவ்வொருநாளும் அவர் சிவாலயத்திருப் பணியை மேற்பார்த்து வருவார். சிற்பிகளுக்கு ஏதேனும் குறையுண்டோவென விசாரித்து அறிந்து அதனை நீக்குவார். அவர்களுடைய தலைவன் இடை விடாமல் தாம்பூலம் போடுவதையறிந்து அவனுக்கு ஓர் அடைப்பைக்காரனை அமைத்து அவன் வேலை செய்யுங் காலத்திலும் மற்றச் சமயங்களிலும் தாம் பூலம் உதவிவரும்படி செய்வித்தார். பிற இடங்களில் பெறுதற்கரிய உபசாரங்களை அங்கே பெற்ற மையினால் அத்தலைவனுக்கு மேன்மேலும் வேலையில் ஊக்கம் உண்டாயிற்று.

ஓரிடத்தில் பாவுகற்களின் உட்புறத்தில் சிற்பிகளின் தலைவன் சில சிற்பங்களை அமைத்துக் கொண்டிருந்தான்; சாரம் போட்டுக்கொண்டு அதன் மேற் படுத்தபடியே அண்ணாந்து பார்த்துச் சிற்றுளியால் நுட்பமான வேலைகளை மனவொருமையோடு செய்து கொண்டிருந்தான். அடைப்பைக்காரன் கீழே நின்று அடிக்கடி வெற்றிலை மடித்து அவனுக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தான். ஒருநாள் வழக்கம்போல் அண்ணாமலை ரெட்டியார் சிற்பிகள் செய்து கொண்டிருக்கும் வேலைகளைப் பார்க்க வந்தார். அவர்கள் தங்களுடைய ஆற்றலால் கல்லைச் சித்திரிக்கும் அருங்கலைத் திறத்தை உணர்ந்து மகிழ்ந்தனர். பிறகு அவர்கள் தலைவன் இருந்த இடத்தில் மெல்லப் புகுந்தார்; தம் வரவை அவன் அறிந்தால் அவனுடைய வேலை தடைப்படுமென்று ஓசைப் படாமல் சென்றார். சாரத்தின் மேலிருந்த சிற்பிகளின் தலைவன் படுத்தபடியே அண்ணாந்து திருப்பணி புரிந்தானாதலின் அவர்வந்ததை அவன் கவனிக்கவில்லை. அப்பொழுது அவன் வழக்கம்போலவே தாம்பூலம் போட்டுக்கொள்ளவேண்டி இடக்கையைக் கீழே நீட்டினான். அவனுக்குத் தாம்பூலம் கொடுப்பவன் அந்தச்சமயத்தில் அயலிடம் சென்றிருந்தான். சிற்பி தாம்பூலத்திற்காகவே கையை நீட்டினா னென்றறிந்த அண்ணாமலை ரெட்டியார் தமக்கு அருகில் நின்று கொண்டிருந்த தம் அடைப்பைக்காரன் தமக்கு அப்பொழுது கொடுத்த தாம்பூலத்தை வாங்கிச் சிற்பியின் கையிற் கொடுத்தார். சிற்பி கீழ்நடப்பது ஒன்றையும் அறியாமல் தன்னுடைய கைவினை யிற் கண்ணாக இருந்தானாதலின் வழக்கம்போலத்தன் அடைப்பைக்காரனால் தரப்பட்ட தாம்பூலமென்றே எண்ணி அதை வாயிலிட்டு மென்றான். அது மிக உயர்ந்த வாசனைப் பொருள்கள் சேர்த்து அமைத்த தாதலின், மெல்லுகையில் பரிமளம் உண்டாயிற்று. அவன், அது தனக்குக் கொடுக்கப்படும் வெறும் வெற்றிலையும் சீவலுமாக இராமல் வாசனைத் தாம்பூலமாக இருத்தலை உணர்ந்து திரும்பிக் கீழே நோக்கினான். ரெட்டியார் மீண்டும் சிற்பி தன் கையை நீட்டும்பொழுது கொடுப்பதற்காகத் தாம்பூலத்தை மடித்து வாங்கி வைத்துக்கொண்டு நின்றார்.

அவரைக்கண்டசிற்பி திடுக்கிட்டான்; அவனுக் குண்டான வியப்பிற்கும் அச்சத்திற்கும் எல்லையே யில்லை; உடனே கீழே குதித்தான்; ரெட்டியாருடைய காலடியில் விழுந்து வணங்கினான்; "கருவிலே திருவுடைய செல்வச்சீமானும் சிவபெருமானைப் பிரத்தியட்சமாகக் கனவிற்கண்ட சிவபக்த சிகாமணியு மாகிய நீங்கள் இங்ஙனம் செய்யலாமா? என்பாற் பெரிய அபசாரத்தை ஏற்றிவிட்டீர்களே!" என்று மனந்தடுமாற வாய்குழறக் கூறினான். கலைவல்லாருடைய கலைத்திறத்தை மதிப்பதில் ஒப்பற்றவராகிய ரெட்டியார், "நான் ஒன்றும் தவறுசெய்ய வில்லையே ; தாம்பூலம் போட்டுக் கொள்ளாவிட்டால் ஊக்கம் குறையுமென்று கருதியே கொடுத்தேன்" என்றார்.

சிற்பி :- தாங்கள் வந்ததை நான் தெரிந்து கொள்ளவில்லை. அடைப்பைக்காரன் தான் தருகிறானென்று நினைத்தேன். தாம்பூலத்தின் உயர்ந்த பரிமளம் என்னைக் கீழே பார்க்கச் செய்தது. எவ்வளவோ அடியார்களுக்கும் வறியாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தங்கள் திருக்கரம் இந்த வேலையையா செய்வது ! நான் இடக்கையையல்லவா நீட்டிவிட்டேன்!

அண்ணாமலை ரெட்டியார்:- குற்றமுள்ள வேலை யொன்றும் செய்யவில்லையே. உம்முடைய கைகள் புண்ணியம் பண்ணிய கைகளல்லவா? சிவபெருமா னுக்கு ஆலயம் நிருமிக்கும் புண்ணியத் தொழிலை அவை பலமுறை செய்து பயின்ற பெருமையை உடையன என்பதை நான் அறியாதவனா? அக்கைகளால் அமைக்கப்படும் சிற்பம் நெடுங்காலம் மறையாமல் நிற்பதாயிற்றே! அந்தக்கைக்கு நான் தாம்பூலம் கொடுப்பதனால் ஒரு குற்றமும் உண்டாகாது. உம்முடைய ஊக்கமும் இடையிலே தடைப்படக்கூடா தென்றுதான் அங்கனம் செய்தேன்.

சிற்பி :- பஞ்சத்தினால் வருந்தி வந்த எங்களை அருஞ்சுரத்தில் தனி மரம்போல் ஆதரித்த தங்களுடைய உபகாரம் மிகவும் பெரியது. அதனோடு தாங்கள் செய்த இந்தச் செயலானது தங்கள்பால் என்னை ஒரு பெரிய
பெரிய கடனாளியாக ஆக்கிவிட்டது. தங்களையும் தங்கள் அருஞ்செயலையும் ஏழுபிறப்பிலும் மறவேன். தங்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் ! என்னுடைய முழு ஆற்றலையும் கொண்டு எனக்குத் தெரிந்த சிற்பவகைகளை யெல்லாம் காட்டி இந்தக் கருப்பக்கிருகம் முதலிய வற்றை அமைப்பேன். எனக்குத் தெரிந்தவற்றைத் தங்களுக்குரிய இந்த இடத்தில் அமைக்க நான் எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும். எங்களுக்கு ஆகாரத்தையும் உடையையும் அளித் தலே போதும். இனிமேல் கூலியே வாங்கமாட் டோம்.

பிறகு அவன் ரெட்டியாருடைய அனுமதி பெற்றுக் கருப்பக் கிருகம் முதலியவற்றைப் பிரித்து விட்டு மீண்டும் சிறப்பாக மிகவும் அரிய பல சிற்பங்களோடு அமைத்தான். வெறுங்கூலிக்குச் செய்யா மல் அன்புக்குச் செய்த பணியாதலின் அவை மிக அழகாக அமைந்திருக்கின்றன. ஆலயம் கட்டி முடிந்தவுடன் [3]கும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற்றது. அண்ணாமலை ரெட்டியார் பலமுறை வற் புறுத்தியும் சிற்பி கூலிபெற மறுத்துவிட்டான். ஆயினும், தக்கபரிசுகளை அவனுக்கும் மற்றச் சிற்பி களுக்கும் ரெட்டியார் அளித்து அவர்களை மிகவும் பாராட்டினார்.

காவியப் புலவர்களை ஆதரித்துக் காத்த பெருந்தகைமையுடைய [4]அண்ணாமலை ரெட்டியார் ஓவியப் புலவர்களையும் ஆதரிக்கும் இயல்பை இவ்வரலாறு நன்கு விளக்குவதோடு யாரிடத்தும் எளியராயிருக்கும் அவருடைய உயர்ந்த ஸௌலப்யத்தையும் தெரிவிக்கின்றது. அவருடைய அன்பின் பயனாகவே சிவப்பிரகாசருடைய சொற் சிற்பங்களும் வெங்கனூர்க் கோயிற் கற்சிற்பங்களும் நின்று நிலவுகின்றன.
---
[1]. கோவைகளுள் திருச்சிற்றம்பலக் கோவையை அரசென் றும், திருவெங்கைக்கோவையை மந்திரியென்றும் கவிஞர்கள் கூறுவர்.
[2]. நான் பெரும்புலியூர்த்தாலூகாவிலுள்ள இடங்களிலிருந்து இளமையில் படித்துக்கொண்டுவந்த காலத்தில் இவ்வரலாற் றைச் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்கள் மூல மாகக் கேட்டேன். இதனைச் சிறிது வேறுபடுத்தியும் வேறு தலங்களோடு சார்த்தியும் கூறுவாரும் உளர்.
[3]. கும்பாபிஷேகம் நடைபெற்ற காலம் சாலிவாகன் சகாப்தம் 1545 (கி. பி. 1622)-ஆம் வருஷமென்று தெரிகிறது.
[4]. இவருடைய பரம்பரையோர் வெங்கனூரில் மேற்கூறிய ஆலயப்பணியைச் செய்துகொண்டும் நித்திய நைமித்திகங்களைச் செவ்வனே நடத்திக்கொண்டும் வாழ்ந்து வருகிறார்களென்று கேள்வி யுற்றிருக்கிறேன்.
-------------

10. மருத பாண்டியர்

சிவகங்கை ஸம்ஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருக சேர்வைகாரர் என்று ஒருவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆகரித்துப் பலவகையான பரிசுகளை வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு சல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்ப இயற்றியுள்ள பல தனிப்பாடல்களும் அங்கங்கே வழங்கிவருகின் றன. அவர் சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருடர்கள் பயம் முதலியன இல்லையென்று சொல்வார்கள். அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.

அவர் தெய்வபக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்துவரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்துவந்தார்; பல ஸ்தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்ன மரங்களிற்சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களை அவர் கட்டியிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பெற்றன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழேயுள்ள சாரம் வெங்களப்ப நாய்க்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்குமுன் கட்டப்பட்டது. அவற்றைக் குறித்து, "மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்க ளப்பன்'' என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கிவருகிறது. அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை 'எங்களப்பன்' என்று சொல்லி வந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தம குணங்களும் குடிகளுக்கு அவர்பால் இருந்த அன்பும் புலப்படும்.

காளையார்கோவிலிலுள்ள மிகவும் பெரியதான யானைமடு என்னும் தீர்த்தத்தையும் செப்பஞ்செய்து நாற்புறமும் அவர் படித்துறைகள் கட்டுவித்தார்; அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது வெகுதூரத்திலிருந்து செங்கற்கள் வர வேண்டியிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்கவைத்து ஒருவர் கைமாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும் வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.

ஒரு சமயம், காளையார் கோவிலுக்கு ஒரு தேர் மிகவும் பெரியதாக அமைக்கவேண்டுமென்று கருதி அவர் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றை யெல்லாம் சேகரித்து முடித்தார். அத்தேரின் அச்சுக்கு ஏற்றதான பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்கும் செய்தி அனுப்பி விசாரித்து வந் தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரே மிகப் பழையதும் பெரியதுமான மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப்படுத்தலாமென்று எண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினார்.

உத்தரவு பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்ட முயன்றார்கள். அப்பொழுது அதனைக் கேள்வியுற்று, அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வந்த ஆதி சைவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியார், அந்த மரத்தை வெட்ட வேண்டாம். வெட்ட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டே வேகமாக ஓடிவந்து தடுத்தார். "ராஜாக் கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?' என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அப்போது குருக்கள் மிக்க ஆத்திரம் அடைந்து, 'மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று மறுபடியும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் பயந்து வெட்டாமல் நிறுத்தி விட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்கு அறிவித்தார்கள்.

கேட்ட மருத பாண்டியர் ஆச்சரியமடைந்து, 'ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லி யிருக்கும்பொழுது அதை யாரேனும் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்? நாமே போய் நேரில் இதை விசாரித்து வர வேண் டும் என்றெண்ணித் தம் பரிவாரங்களுடன் சென்று திருக்கோவிலின் முன்பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரசாதங்களை வாங்கி அணிந்து கொண்டார்.

அப்பால் பாண்டியர், "கோயிற் காரியங்கள் குறைவில்லாமல் நடந்து வருகின்றனவா ?" என்று விசாரித்தார். பின்பு அவர்களை நோக்கி,"இங்கே உள்ள குருக்களில் யாரோ ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்தாராமே. நம்முடைய கட்டளையை மீறின அவர் யார்? இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா?'' என்று கேட்டார். அவர்கள்,"இதோ, இப்பொழுது தான் மகாராஜாவுக்கு அவர் பிரசாதங்கள் கொடுத்தார். மகாசமுகத்துக்கு அஞ்சி மதுரைக்கு அவர் போய்விட்டார் " என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.

புஷ்பவனக் குருக்கள் தமக்கு என்ன துன்பம் வருமோ வென்று பயந்து மருத பாண்டியருடைய அதிகாரத்துக்கு உட்படாத எந்த இடத்திலேனும் போய் வசிக்கலாமென்று கருதி, முன்னமே பேசி வைத்திருந்த ஒரு வண்டியில் ஏறி மதுரைபோய்ச் சேர்ந்து விட்டார்.

மருதபாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓர் அபயநிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். அபயநிருபம் என்பது பழைய காலத்தில் குற்றவாளிகளுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்துக் கொண்ட பகைவர்களுக்கேனும், "நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது'' என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப் போக்குவதற்காக எழுதப் படுவது.

அந்நிருபத்தைக் கண்ட புஷ்பவனக் குருக்கள் ஏதோ ஒருவிதமாக ஆறுதலடைந்து திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு கின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு அவரை இருக்கச்சொல்லி, "அந்த மருத மரத்தை வெட்டக்கூடாது என்று நீர் தடுத்த துண்டா?'' என்று கேட்டார்.

குருக்கள்:- ஆமாம், மகாராஜா!
பாண்டியர்:- காளையார் கோயில் தேர்வேலைக்கு உபயோகப்படுத்துவதற்காக நாம் அதை வெட்ட உத்தரவு செய்திருக்கும்போது நீர் தடுக்கலாமா?
குருக்கள் :- சில தக்க காரணங்கள் இருந்தமையினாலேதான் நான் அவ்வாறு தடுத்தேன்.

உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோ வென்றும், குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோ வென்றும் கவலையுற்று அவ்விருவர்களுக்குள் நடந்த சம்பாஷணையை மிகுந்த ஆவலோடு கவனித்து வந்தார்கள்.

பாண்டியர்:-என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.
குருக்கள்:- இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது ; மதுரை ஸ்ரீ சுந்தரேசுவரர் பொன்னையாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையை யாற்றில் போட்ட பொழுது புஷ்பமாக மாறிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி மூன்று
நாயன்மார்களும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்துகொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவைபோன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வரு கிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் ஒவ்வொருநாளும் வந்து வந்து வையையில் நீராடிவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு செல்லுகிறார்கள்.

வையையில் எப்பொழுதும் ஜலம் நிறைய ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் சிறிதளவு ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற் றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.

இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களை மருத பாண்டியர் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொதுஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்து கொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.

"இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரிய பயனை மகாராஜா அறிந்திருந்தால் இவ்விதமான உத்தரவு பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டி விட்டால் அயலூர்களிலிருந்து பிரார்த்தனைகளைச் செலுத்தும் பொருட்டு ஸ்நானம் செய்துவிட்டு வரும் கருப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற் காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸம்ஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த மரந்தான் வேண்டு மென்பதில்லை. இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது ஜனங்களுடைய தாபத்தையெல்லாம் போக்கி அவர்களுடைய உள்ளத்தை மிகவும் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப்போல் விளங்கி வருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் அதிகமாக என்னுடைய மனத்திலே பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பது, மகா ராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?" என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.

பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, "ஹா! ஹா!" என்று தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். "மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது" என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கி விட்டது.

பராமுகமாகவே கேட்டுக்கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களை அப்போது நேரே பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண் டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதைப் பாண்டியர் உணர்ந்து, ''சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம்மிடம் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்கள்பால் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்'' என்று கூறினார்.

மருத மரம் வெட்டப்படாமல் நின்றது; குருக்கள் அச்சம் நீங்கினார்; காளையார்கோயில் தேருக்கு வேறொரு மரம் வந்து உதவிற்று.
[அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கத்தேவரவர்களும், குன்றக்குடி மடத் தில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையவர்களும் இந்த வரலாற்றை எனக்குச் சொன்னார்கள்.]
----------------

11. முள்ளால் எழுதிய ஓலை

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது '' - குறள்.

இதற்கு முந்திய வரலாற்றிற் கூறப்பட்ட மருதபாண்டியரைப் பற்றிய பல செய்திகள் அங்கங்கே கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்றன.

அவர் பரோபகார சிந்தையும், சிவபக்திச் செல்வமும், புலவர்களை யாதரிக்கும் இயல்பும், தம் குடிகளைத் தாய்போல் காப்பாற்றும் தகைமையும் வாய்ந்தவர்.

அவருடைய முன்னோர்கள் அந்த ஸம்ஸ்தானத்து அதிபதிகள் அல்லர்; ஆயினும் அவருக்கு முன்பு இருந்த அரசருடைய உயிரை அவர் புலி வாயினின்றும் காப்பாற்றியதனாலும், இணையற்ற வீரராக இருந்ததனாலும் அந்த ஸம்ஸ்தானத்தின் தலைவராக அவர் பின்பு ஆக்கப்பட்டார்.

அவருடைய ஆஸ்தானத்தில் 21 தமிழ் வித்து வான்கள் இருந்தார்களென்பர். சவ்வாதுப் புலவர், முத்துவேலுப் புலவர் முதலிய பலர் அவரைப்பற்றிப் பாடிய செய்யுட்கள் இப்பொழுதும் வழங்குகின்றன. அவரால் அப்புலவர்களுக்கு அப்பொழுதப்பொழுது சுரோத்திரியமாக விடப்பட்ட கிராமங்கள் உண்டு.

அவருடைய வீரப்பிரதாபமும், கொடைப் புகழும் புலவர்களாலே பலவாறு பாராட்டப்பெற்றவை. சில வருஷங்களுக்கு முன் வரையிலும் சிவகங்கையைச் சுற்றிய இடங்களில் கிராமந்தோறும் அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் கதை கதையாக முதியவர்கள் சொல்லி வந்ததுண்டு.

மருதபாண்டியர் தம் இறுதிக் காலத்தில் வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார். பகை வீரர்கள் பலமுறை அவரைப் பிடிக்க எண்ணி முயன்றனர். அவர்களுடன் போராடியும், தந்திரமான செயல்கள் புரிந்தும் பாண்டியர் அவர்கள் கையில் அகப்படாமலே இருந்தார். ஒரு சமயம் அவர் தம் ஸம்ஸ்தானத்தைச் சார்ந்த திருக்கோஷ்டியூ ரென்னும் தலத்தில் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார்.அவருடைய வலக்கையில் ஒரு சிலந்தி உண்டாகி அவரை வருத்தியது. அதனால் அவர் சிறிது துன்புற்று அங்கே இருக்கையில், "பகைவருடைய காலாட்கள் தேடி வருகிறார்கள்; இந்த ஊர் எல்லைக்குள் வந்து விட்டனர்' என்ற செய்தியை ஓர் அந்தரங்க வேலையாள் அவரிடம் வந்து தெரிவித்தான்.

அவன் கூறியதை மருகபாண்டியர் கேட்ட வுடன் வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைச்சிலந்தியை இறுகக் கட்டிக்கொண்டார். தம்முடைய குதிரையை வருவித்து அதன்மேலேறிக் குதிரைக் காரனையும் உடனழைத்துக்கொண்டு புறப்பட்டார். கையிலுள்ள வளரி ஒன்றுதான் அவருடைய தனித் துணையாக இருந்தது. அவ்வாயுதம் மரத்தாலேனும் இரும்பினாலேனும் வெண்கலத்தினாலேனும் செய்யப் பட்டிருக்கும். அதை வீசுவதன்மூலம் பலரை ஒரே தடவையில் கொன்றுவிடும் ஆற்றல் மருதபாண்டியருக்கு உண்டு.

மருதபாண்டியர் குதிரையின்மேல் வருவதை அறிந்த விரோதிகள் அவரை வளைந்து கொண்டனர்; அப்பொழுது மாலைக்காலம். தம்மை வளைந்து கொண்ட வீரர்கள் மேல் தம் வளரியை வீசியெறிந்து பாண்டியர் கலக்கினார். அதை எறிவதும் அதுபட்ட வீரர்கள் வீழ்வதும் அவர்களை வீழ்த்தி நெடுந்தூரத்தில் விழுந்த அவ்வாயுதத்தை அவரிடம் குதிரைக் காரன் கொணர்ந்து கொடுப்பதுமாகச் சிறிதுநேரம் போர் நிகழ்ந்தது. எதிர்த்த வீரர்களை மருதபாண்டியர் சின்னபின்னமாக்கினர். அவர்களை யெல்லாம் சிதைத்து வேகமாகக் குதிரையை அவர் செலுத்த லானார். பின்னே வந்த சிலர் மேலும் மேலும் அவரைத் துரத்தினர். அவர்கள் கண்ணிற்கும் கைக்கும் அகப்படாமல் இரவெல்லாம் குதிரையை மனோவேகத்தில் அவர் விட்டுக்கொண்டு போனார்.

விடியற்காலையில் ஒரு கிராமத்தை அவர் அடைந்தார். இரவுமுழுவதும் உணவில்லாமையாலும் பிடிக்க வந்தவர்களோடு போராடியதாலும் அவருக்கு அதிகமான பசியும் தாகமும் உண்டாயின. பிறகு அவர் அவ்வூர் அக்கிரகாரத்தை நோக்கி வந்தார். அங்கே ஒரு கூரைவீட்டின் வெளியே சில குழந்தைகள் நிற்க ஒரு கிழவி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவ்வீட்டின் முன்னே பாண்டியர் தம் குதிரையை நிறுத்தினார்.

கிழவி தலையை நிமிர்ந்து பார்க்கையில் மருத பாண்டியருடைய கம்பீரமான தோற்றம் அவள் மனத்தில் அன்பை உண்டாக்கியது; உடனே அவள், 'யாரப்பா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள். "அம்மா! பசியும் தாகமும் என்னை மிகவும் வருத்துகின்றன. ஏதாவது இருந்தால் போட வேண்டும்" என்றார் பாண்டியர். அவருடைய குரல் இரவில் அவர் அடைந்த களைப்பை விளக்கியது. 'இராத்திரி தண்ணீரில் போட்டுள்ள பழைய சோறுதான் இருக்கிறது; வேண்டுமானால் போடுகிறேன் அப்பா!' என்று அன்பு கனிந்த வார்த்தைகளில் அக்கிழவி விடையளித்தாள். "ஏதாயிருந்தாலும் எனக்கு இப்போது அமிர்தமாகும். மற்றொரு சமாசாரம்: நான் இராத்திரி முழுவதும் பிரயாணம் செய்து தூக்கமே யில்லாமல் கஷ்டமடைந்தேன். ஆகையால் உண்டபிறகு மறைவாக ஓரிடத்தில் இந்தக் குதிரையைக் கட்டிவிட்டு நான் படுத்துத் தூங்கவேண்டும்; அதற்கு இடம் கிடைக்குமா?" என்றார். ''இதுதானா பெரிது ! இந்த வீட்டிற்குப் பின்னே ஒரு கொட்டகை இருக்கிறது. அதன் பக்கத்தில் குதிரையை நீ கட்டிவிட்டுப் படுத்துத் தூங்கலாம். இன்றைக்கெல்லாம் தூங்கினாலும் யாரும் எழுப்பமாட்டார்கள். குதிரைக்கு ஏதாவது தீனி கொடுக்கிறேன் '' என்று சொல்லிவிட்டு அவள் அன்போடு பழையதும் பழங்கறியும் மருதபாண்டியருக்கு இட்டாள். அவற்றை உண்ட அவரது பசி அடங்கியது. அந்த உணவு ராஜ போஜனத்திலும் சிறந்ததாக அவருக்கு இருந்தது. உண்ட பிறகு அந்தக் கிழவி கொடுத்த ஓலைப்பாயொன்றை விரித்துக் குதிரைச் சேணத்தையே தலையணையாக வைத்துக்கொண்டு அவர் அக்கொட்டகையில் படுத் துக்கொண்டார். கணநேரத்தில் தூக்கம் வந்து விட்டது. மெய்ம்மறந்து நெடுநேரம் அவர் தூங்கினார். குதிரைக்காரனும் உண்டுவிட்டு ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

மருதபாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான். அந்தக் கூரைவீட்டில் உண்ட உணவும் உறங்கிய உறக்கமும் அவர் உடலுக்கு ஒரு புதுவன்மையையும், உள்ளத்திற்கு ஒரு புதிய உணர்ச்சியையும் அளித்தன. அவர் மனத்தில் நன்றியறிவு பொங்கி வழிந்தது. தமக்கு அன்போடு உணவுதந்த அந்தக் கிழவிக் குரிய கைம்மாறாக இந்த உலகத்தைக் கொடுத்தாலும் ஈடாகாதென்று அவர் கருதினார்.

''அம்மா ! '' என்று கிழவியை அழைத்தார் மருதபாண்டியர். கிழவி வந்தாள். "உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? இந்தக் குழந்தைகள் யார்?' என்று அவர் கேட்க, "அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காக என்னுடைய பிள்ளைகள் போயிருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய குழந்தைகள் " என்றாள் கிழவி. "உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்'' என்று பாண்டியர் சொல்லவே கிழவி, "இங்கே ஏடேது? எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கி றார்களோ, தெரியாதப்பா' என்றாள். உடனே அவர் குதிரைக்காரனை அழைத்து அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையையும், பக்கத்தி லிருந்த வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டு வரச்சொன்னார். அவன் கொணர்ந்து கொடுத்தான். அந்த முள்ளைக்கொண்டு அவ்வோலையில் அவர் ஏதோ எழுதலானார். கிழவி அவர் எழுதுவதை வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றாள். மருத பாண்டியர் அந்தக் கிராமம் அக்கிழவிக்குச் சுரோத் திரியமாக விடப்பட்டதென்று எழுதிக் கையெழுத் திட்டார். பிறகு முள்ளாலெழுதிய அந்தத் தர்ம சாஸனத்தைக் கிழவியின் கையிலே கொடுத்து,
"அம்மா! சிவகங்கை ஸம்ஸ்தான அதிகாரிகளிடம், இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் உண்டாகும்'" என்று சொல்லிவிட்டு அவர் குதிரை மேலேறிக் குதிரைக்காரனையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்.

பழையதுபோட்ட கிழவி தன்குமாரர்கள் ஊரிலிருந்து வந்தபிறகு அவர்களைக்கொண்டு அவ் வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காட்ட எண்ணினாள், ஆனால் சிலநாள் கழித்து அந்த ஸம்ஸ்தானத்தை விரோதிகள்! கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினாள்.

மருதபாண்டியரை அப்பால் பகைவர்கள் பிடித் துச் சிறையில் வைத்தனர். சிலகாலம் சென்ற பிறகு அவருடைய அந்தியகாலத்தில், "உம்முடைய விருப் பம் யாது?" என்று பகைவருடைய முக்கிய அதிகாரிகள் கேட்டார்கள். "நான் சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ, எந்த எந்தப்பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்யவேண்டும்; இதுதான் என் பிரார்த்தனை; வேறு ஒன்றும் இல்லை' என்று அவர் வேண்டிக் கொண்டார். நன்றியறிவின் மிகுதியால் எழுந்த அவருடைய இறுதிவிருப்பத்தை விரோதிகள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள்.

மருதபாண்டியர் வழங்கிய பொருள்கள் உரிய வர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன வென்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள ஓலையைக் காட்டினால் ஏதாவது கிடைக்கலாமென்ற நம்பிக்கையினால் அதனை அனுப்புவித்தாள் ; தான் இருந்த [1]கிராமத்தைச் சுரோத்திரியமாகப் பெற்றாள். தன் வீட்டிலே பழையது உண்ட வீரர் மருதபாண்டிய ரென்பதை அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள். முள்ளாலெழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக்கண்டு அவள்வியந்தாள்; மருதபாண்டியருக்கு இருந்த நன்றியறிவை நினைந்து உருகினாள்; அவருடைய முடிவையறிந்து அவள் அடைந்த வருத்தத்திற்கு எல்லையேயில்லை. கையிற் சிலந்தியைக்கட்டிய
கட்டுடன் வீட்டிறப்பிலுள்ள பனையோலையையும் வேலி முள்ளையும் ஏடெழுத்தாணியாகக் கொண்டு முகமலர்ச்சியுடன் மருதபாண்டியர் எழுதிய காட்சி யைத் தன் மரணகாலம் வரையில் அக்கிழவி தன் மனத்திற் பதித்துவைத்து வாழ்த்தினாள். அங்ஙனம் அவள் செய்தது ஆச்சரியமில்லை யல்லவா?
----
[1]. இக்கிராமத்தின் பெயர் இப்பொழுது 'பழஞ்சோற்றுக் குரு நாதனேந்தல்' என்று வழங்குகின்ற தென்பர்.
----
[இவ்வரிய செய்தியை எனக்குக் கூறியவர்கள் இராமநாதபுரம் ஸம்ஸ்தானத்து வடமொழி வித்துவானும் திருக்கோஷ்டியூர் வாசியுமான ஸ்ரீ சாமிநாத சாஸ்திரிகளும், அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தாரும் மருத பாண்டியருடைய அரண்மனையையே தம்முடைய இடமாகக்கொண்டு இருந்தவருமான ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவருமாவர்.]
----------------

12. "டிங்கினானே !"

திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி அறியாத தமிழறிஞர் இரார். பிள்ளையவர்கள் நூற்றுக் கணக்கான மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லியும் பல நூல்களை இயற்றியும் தமிழுலகத்துக்கு ஒப்பற்ற உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய விரிவான வரலாறானது தனியே எழுதி வெளியிட்டுள்ள அவர்கள் சரித்திரத்தினால் நன்கு விளங்கும்.

அவர்களிடம் நான் பாடங் கேட்டுவந்த காலத் தில் சவேரிநாத பிள்ளை யென்ற ஒரு கிறிஸ்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். அவர் பிள்ளை யவர்களிடம் மிகுந்த அன்புடையவர்; பிள்ளையவர்கள் ளுடைய இறுதிக்காலம் வரையில் உடனிருந்து வந்த வர். பிற்காலத்தில் அவர் காரைக்காலில் தமிழ்ப் பண்டிதராக இருந்து புகழ்பெற்றார்.

பிள்ளையவர்கள் மாயூரத்திலே பல வருஷங்கள் இருந்தார்கள். அவர்களுடைய வீடு ஸ்ரீ மாயூரநாத ஸ்வாமி யாலயத்தின் தெற்கு வீதியில் இருந்தது. பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல் முதலியவற்றை இயற்றியவரான வேதநாயகம் பிள்ளை மாயூரத்தில் அப்போது முன்ஸீபாக இருந்தனர். பிள்ளையவர்களும் அவரும் அடிக்கடி சந்தித்துப் பழகுவதுண்டு. அக் காலத்தில் வேதநாயகம் பிள்ளை மாயூரத்திற்கு அருகிலுள்ள கூறைநாட்டில் சாலியன் சத்திரத்தில் இருந்து வந்தார்.

ஒருநாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரி நாத பிள்ளையை ஏதோ ஒரு காரியமாக வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அவ்விதம் சென்ற சவேரி நாதபிள்ளை இரவில் நெடுநேரமாகியும் திரும்பி வரவில்லை. பிள்ளையவர்கள் இரவு 12-மணிவரையில் விழித்திருந்தார்கள்; அப்பால் என்னிடம் சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்ளச் சென்றார்கள். பின்பு நான் அவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். இரவு இரண்டு மணிக்கு மேல் அவர் வந்தார். "ஏன் இவ்வளவு நேரம் ஆயிற்று?' என்று நான் கேட்க அவர், "எல்லாம் காலையில் விரிவாகச் சொல்லுகிறேன்; இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது" என்று சொல்லி உடனே படுத்து உறங்கிவிட்டார்.

வழக்கம் போலவே விடியற்காலையில் எழுந்த பிள்ளையவர்கள், "சவேரிநாது வந்து விட்டானா?" என்று என்னைக் கேட்டார்கள். ''இரண்டு மணிக்கு வந்தார்" என்று நான் சொல்லிக் கொண்டிருக் கையிலேயே சவேரிநாத பிள்ளை எழுந்து வந்தார். பிள்ளையவர்கள் அவரை நோக்கி, "என்ன அப்பா! ராத்திரி வெகுநேரம் வரையில் உன்னைக் காண வில்லையே; என்ன காரணம்?" என்று கேட்டார்கள். உடனே அவர் பின்வருமாறு சொல்லலானார்:-

"இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசை யாகி விட்டது. நேற்று முன்ஸீப் அவர்களிடம் சென்றபோது அவர்கள் எங்கேயோ வெளியே போயிருந்தார்கள். வீட்டிற்கு வருகையில் இரவு ஒன்பது மணியாயிற்று. பிறகு அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பினேன். அப்பொழுது மணி பதினொன்று இருக்கலாம். மையிருட்டாக இருந்தது.

சிறிது தூரம் வந்தேன். வழியிலுள்ள பெரிய மைதானத்திற்கு அருகில் வந்தபோது திடீரென்று காலில் ஏதோ தட்டியது; கட்டையாக இருக்கலா மென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஏதோ ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாக இருந்ததால் எனக்கு உடனே சிறிது பயம் ஏற்பட்டது. சற்றுநிதானித்து நின்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சப்தம் செய்யவில்லை. அவர்களுள் இருவருடைய உடம்புகளே என் காலில் தட்டுப்பட்டன வென்று அப்போது தெரிய வந்தது. 'இவர்கள் எதற்காக இங்கே மரங்கள்போல அசைவில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்?' என்று யோசித்தேன். மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து, 'வழி விட வேண்டும்' என்று பயத்தோடும் விநயத்தோடும் வேண்டிக்கொண்டேன். அதே சமயத்தில் மனத்துக்குள்ளே, 'ஏதாவது நல்ல வழி விடவேண்டும்!' என்று கடவுளையும் பிரார்த்தித்தேன்.

"நான் யாரை வேண்டிக் கொண்டேனோ அவர் திடீரென்று எழுந்திருந்து என் வாயைப் பொத்தினார்; உடனே அருகில் இருந்த மற்றொரு வர் எழுந்திருந்து என் உச்சந்தலையில் ஒரு கையை யும் மோவாய்க் கட்டையில் ஒரு கையையும் வைத்து அழுத்தினார். எனக்கு நடுக்கமெடுத்தது ; 'இனிமேல் [1] ஐயா அவர்களிடம் சென்று அவர்களைப் பார்ப்பது சந்தேகந்தான்' என்று முடிவு பண்ணிக்கொண்டேன். என் மார்பு பட படவென்று அடித்துக்கொண் டது. உடம்பெல்லாம் வேர்வை வெள்ளத்தில் மூழ்கியது.

"வாய் விட்டுக் கத்தலாமென்றாலோ வாயைத் திறக்க முடியவில்லை. 'இனி என்ன செய்வது?' என்றெண்ணினேன். என்னைப் பிடித்திருந்தவர்கள் கருணை புரிந்தாலொழிய விடுதலைபெற வேறு வழியில்லை யென்று புலப்பட்டது. ஆகையால், என் தலையை அழுத்தியவருடைய மோவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டுக் கொள்வது போல ஒரு பாவனை செய்தேன். அவருடைய ய கைகள் நெகிழ்ந்தன.'ஐயா! நீங்கள் யார் ? என்னை ஏன் தடுக்கிறீர்கள் ?' என்றேன். அதற்குள் மற்றொருவர் எழுந்து என் காதில், முட்டாளே! பேசாதே; பாரத கதை நடக்குது' என்று சொல்லி விட்டு, என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். 'நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை' என்ற ஆறுதல் எனக்கு உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன்.

அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். 'மனிதர்கள் நடக்கிற சாலையில் பாரத கதை நடக்கிறதாவது! இவர்கள் ஊமைகளாக ஏன் உட்கார்ந்திருக்கிறார்கள்?' என்று எண்ணி அங்குமிங்கும் பார்த்தேன். இந்த இருண்ட இடம் எவ்வளவு மயக்கமாக இருந்ததோ அவ்வளவு மயக்கமாக என் மனமும் இருந்தது.

சிறிது நேரங் கழித்து ஒருவருக்குந் தெரியாமல் மெல்ல எழுந்து நின்று சுற்றிலும் நோக்கினேன். ஒரே ஜனக் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தைத் தாண்டிச் செல்வது அசாத்தியமென்று நிச்சயித்து எங்கே பாரதம் நடக்கிறதென்று ஓசைப் படாமல் நின்றுகொண்டே கவனித்தேன்.

சாலையின் வடபாலுள்ள வெளியிடத்தில் ஒரு மேடை காணப்பட்டது. பெரிய விளக்கொன்று அங்கே எரிந்தது. அந்த வெளிச்சத்தால் இருவர் அம்மேடையில் இருந்து ஒருவரை யொருவர் நோக்கி எழும்பி எழும்பி ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததாக மட்டும் தெரிய வந்தது. ஒருவர் கையில் உடுக்கையும் மற்றொருவர் கையில் பம்பையும் இருந்தன. அவர்கள் என்ன சொல்லுகிறார்களென்பதை அறிந்து கொள்வதற்கு இயன்றவரையில் முயன்று கவனித்தும் ஒன்றும் தெரியவில்லை. பின்னும் நின்றபடியே கவனித்தேன். ஏதோ பாட்டுப்போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனோடு இடையிடையே 'ஆமாமா!' என்ற சத்தமும், உடுக்கையின் ஒலியும், பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கேட்டன. அந்த முழக்கங்களுக்கு முன்னும் பின்னும் என்ன கூறப்படுகின்றன வென்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன். `பீம்சேன் மவராசா மவராசா, மவராசா' என்றார் ஒருவர். 'ஆமாமா!' என்று மூன்று முறை முழங்கினார் வேறொருவர் தொடர்ந்து உடுக்கையும் பம்பையும் ஒலித்தன. 'மவா ராசா, மவராசா, மவராசா' என்றார் முதல்வர். 'ஆமாமா!' என்றார் பின் பாட்டுக்காரர். 'மரத்தேப்பூ, மரத்தேப்பூ, மரத்தேப்பூ' என்று உத்ஸாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக் கொண்டே கர்ச்சனை செய்தார் பிரசங்கியார்.

"பின்பாட்டுக்காரர், 'ஆமாமா' என்று மூன்று முறை முழங்கினார்; அப்பால் உடுக்கையின் ஓசையும், பம்பையின் முழக்கமும் எழுந்தன.

"இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர், 'டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே' என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கி விட்டார். ஜனங்களெல்லோரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை பாரதமென்று, 'பீம்சேன் மவராசா' என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்குமேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை. யோசித்துப் பார்த்தேன்; தலைவலி யெடுத்ததைத் தவிர ஒரு பயனையும் காணவில்லை.

"இவ்வண்ணமே மேலும் நிகழ்ந்தவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கூட்டம் கலைவதற்கு நெடுநேரம் ஆயிற்று. கதை ஒருவகையாக முடிந்த தென்பதைக் கூட்டம் கலைந்ததனால் அறிந்து கொண்டேன். சிறைச்சாலையிலிருந்து விடுபட்டவனைப்போல் வேகமாக நடந்து வரலானேன். வரும்பொழுது ஒருவரோடு பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம், 'ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான்' என்பதென்று தெரிய வந்தது. அவ்வாக்கியத்தை எனக்கு விளக்கிய அந்தப் பாரதரஸிகர், 'இதுகூட உனக்குத் தெரியவில்லையே!' என்று என்னை நோக்கி இரங்கிக் கூறினார். 'இந்தக்கதைக்குத் தானா இவ்வளவு கூட்டம்! ஐயா அவர்கள் புராணப் பிரசங்கத்துக்கு இத்தனை ஜனங்கள் வருவதைக் காணோமே. இந்த நாகரிக காலத்திலும் ஜனங்கள் அறிவுநிலை இப்படி இருக்கிறதே!' என்று வியந்து கொண்டே வந்து சேர்ந்தேன்.”

இதைக்கேட்ட பிள்ளையவர்களும் நாங்களும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அன்றுமுதல் சில வாரங்கள் வரையில் அங்கே வருபவர்களுக்கெல்லாம் இந்த 'டிங்கினானே' வரலாற்றைப் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.
---
[1] ஸ்ரீ பாடு மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களை அவர்களுடைய மாணாக்கர்களும் அன்பர்களிற் சிலரும் இங்ஙனம் சொல்லுவது வழக்கம்.
--------------------
கேசரி அச்சுக்கூடம், சென்னை
------------


This file was last updated on 12 Nov. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)