புதியதும் பழையதும்
உ.வே. சாமிநாதையர்
putiyatum pazayatum
u.vE. cAminAtaiyer
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
A raw text file was generated using Google OCR and the text was subsequently corrected for any OCR errors.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புதியதும் பழையதும்
உ.வே. சாமிநாதையர்
Source:
புதியதும் பழையதும்
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சாமிநாதையர் எழுதியது
(இரண்டாம் பதிப்பு)
சென்னை: கேசரி அச்சுக்கூடம்
Copyright Registered]
1939 [விலை அணா ஒன்பது
-----------------------
பொருளடக்கம்
முகவுரை
1. என்ன வேண்டும்?'
2. 'தலைமுறைக்கும்போதும்!'
3. சங்கராபரணம் நரசையர்
4. அவன் போய்விட்டான்
5. வண்டானம் முத்துசாமி ஐயர்
6. கல்யாணப் படித்துறை
7. திருக்குறளால் வந்த பயன்
8. கண்ணீர் துடைத்த கரம்
9. சிறந்த குருபக்தி
10. "ஸ்வாமி இருக்கிறார்''
11. ஏழையின் தமிழன்பு
12. "நான் சாமியாராக இருக்க மாட்டேன்
13. திருக்கடங்கின எழுத்தாளர்
14. அகத்தைக் காட்டும் முகம்
15.தர்ம சங்கடம்
16. ஆளுக்கேற்ற மதிப்பு
17. மாம்பழப் பாட்டு
18. பிறை முழுமதியானது
19. கிணற்றில் விழுந்த மிருகம்
20. சிறைநீக்கிய செய்யுள்
--------------------
முகவுரை
கணபதி துணை
பத்திரிகைகளில் நான் வெளியிட்டுவந்த வரலாறுகளுட் சிலவற்றைத் தொகுத்து, "நான் கண்டதும் கேட்டதும்" என்னும் பெயருடன் சில அன்பர்கள் விரும்பியபடி முதலில் வெளியிட்டேன். அப்புத்தகம் தமிழன்பர் பலருக்கு உவப்பைத் தந்ததென்பதை அறிந்து அதைப்போன்ற மற்றொரு தொகுதியாகிய இதனை 1936-ல் முதன்முறையாக வெளியிட்டேன். இதில் இருபது வரலாறுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் முதல் ஐந்து வரலாறுகளும் ’கலைமகள்’ என்னும் தமிழ்ப்பத்திரிகையில் வெளி வந்தவை; சிறந்த குருபக்தி, ஏழையின் தமிழன்பு, திருக்கடங்கின எழுத்தாளர்,
தர்மசங்கடம், மாம்பழப்பாட்டு என்னும் ஐந்தும் திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தில் உள்ளவை பழையன ; ஏனைய பத்தும் புதியனவாக எழுதப்பட்டவை. இங்ஙனம் இப்புத்தகத்திலுள்ள வரலாறுகளின் தொகுதி புதியதென்றும் பழையதென்றும் இரண்டு வகையாகும். ஆதலின், 'புதியதும் பழையதும்' என்னும் பெயர் இதற்கு வைக்கப்பட்டது.
பலகலாசாலைத் தலைவர்களும் பிறரும் இப் புத்தகத்தைத் தங்கள் தங்கள் கலாசாலைகளில் பாடமாக வைத்து எனக்கு ஊக்கமளித்து வருவதை மிகவும் பாராட்டுகின்றேன்.
என்னுடைய நினைவிலுள்ள பல் வரலாறுகளை இங்ஙனமே நல்லுரைக் கோவை என்னும் பெயருடன் நான்கு பாகங்களாக வெளியிட்டிருக்கின்றேன்.
தியாகராஜ விலாசம்" இங்ஙனம்,
திருவேட்டீசுவரன்பேட்டை வே. சாமிநாதையர்.
21-7-39
-------------------------
புதியதும் பழையதும்
1. 'என்ன வேண்டும்?'
தமிழ்நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள்ளே பூமி தேவிக்கு ஹ்ருதய கமலமென்று சிறப்பிக்கப் பெறுவது திருவாரூர். சிவபெருமான் புற்றிடங்கொண்டு பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கப் பெற்றதாகிய பெருமையை உடையதும் அதுவே. அங்கே திருக்கோயிலில் ஸ்ரீ முசுகுந்த சக்கரவர்த்தியால் தேவலோகத்திலிருந்து கொணர்ந்து பிரதிஷ்டை செய்யப்பெற்ற ஸ்ரீ தியாகேசப்பெருமான் விளங்குகிறார். அம்மூர்த்திக்குத்தான் ஏனைய மூர்த்திகளைக் காட்டிலும் சிறப்புக்கள் அதிகமாக நடப்பதுண்டு; நாள் தோறும் பூஜைகளும் அவ்வப்போது திருவிழாக்களும் மிக விரிவாக நடைபெறுவது வழக்கம். [1]திருவந்திக் காப்பு அத்தலத்தில் ஸ்ரீ தியாகேசர் சந்நிதியில் தொன்றுதொட்ட விசேஷமுடையது.
சிவபக்தர்கள் அந்தத் தரிசனத்தைச்செய்து இன்புறுவதற்கு ஆவலுற்றிருப்பார்கள். இந்தச் சிறப்பினால் ஸ்ரீதியாக ராஜப்பெருமானுக்குத் திருவந்திக்காப்பழகர் என ஒரு திருநாமம் வழங்குகின்றது.
தஞ்சாவூரில் இருந்த [2]சரபோஜிமன்னர் ஒருமுறை திருவாரூர் சென்றிருந்தார். அங்கே அவருக்கு அரண்மனை முதலியன உண்டு. அவர் ஸ்ரீதியாகேசர்பால் ஈடுபட்டவர் : திருவாரூருக்குச் செல்லும் காலங்களில் திருவந்திக்காப்புத் தரிசனம் செய்து உள்ளமுருகி இன்புறுவார். ஒருநாள் அங்ஙனம் தரிசனம் செய்யும்போது திருவந்திக்காப்பு மிகவும் சிறப்பாக நடை பெற்றது. தீபாராதனைக் காலத்தில் பலவகையான உபசாரங்கள் முறைப்படி நிகழ்ந்தன. பலவகையான வாத்தியங்கள் முழங்கின.
வாத்தியப் பணிவிடை செய்பவர்களுள் சின்னத் தம்பியென்ற ஒரு நட்டுவன் இருந்தான். அவன் எப்பொழுதும் விபூதி ருத்திராட்ச தாரணம் செய்து கொண்டு விளங்குபவன்; ஸ்ரீ தியாகேசப் பெருமானுக்குச் சுத்தமத்தளம் வாசிக்கும் தொண்டு பூண்டவன் ; சிறந்த பக்திமான்.
சரபோஜிமன்னர் தரிசனம் செய்கையில் உபசாரங்களுள் ஒவ்வொன்றையும் கவனித்துவந்தார். அவர் கவனித்து வருதலை யறிந்த வாத்தியக்காரர்கள் தாம் நாள்தோறும் இயல்பாக வாசிப்பதைக் காட்டிலும் தம் திறமையை அதிகமாக அன்று காட்டி ஊக்கத்தோடு வாசிக்கலானார்கள். முன்னே கூறிய நட்டுவனும் சுத்தமத்தளத்தை வாசித்து வந்தனன். அவன் ஸ்ரீதியாகராஜமூர்த்தியின் திருவடியில் ஈடுபட்டவனாதலின் தன் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு வாசித்தான். மற்றவர்களைப்போல் அரசரை உத்தேசித்து அதிக ஊக்கமுடையவனாக அவன் காணப் படவில்லை. அவனுடைய உள்ளத்திலிருந்த பக்தி முகத்திலே புலப்பட்டது. வேறுயாதொன்றிலும் நினை வில்லாமல் ஒன்றுபட்டமனத்தோடு அவன் வாசித்து வருவதை மன்னர் கவனித்தார். அவன் வாசிக்கும் வாத்திய லயமும் அவனுடைய அன்போடு கூடிய மனோலயமும் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அவனது தோற்றப் பொலிவையும் இயல்பாகவே அத் தொண்டில் அவன் ஈடுபட்டு நிற்பதையும் உணர்ந்து அவர் மனங் குளிர்ந்தார்; 'இந்த மூர்த்திக்குச்செய்யும் உபசாரங்களில் யாருக்குத்தான் பக்தி பிறவாது !மிகவும் பரிசுத்தனாக விளங்குகின்ற இவனுடைய பணி விடை நமது மனத்தை அதிகமாகக் கவர்கின்றது என்று எண்ணி மெல்ல அந்த நட்டுவனது அருகிற் சென்றார். யாவரும் அஞ்சி விலகி வழிவிட்டு நின்றனர். நட்டுவனோ தன் கண்ணைத் திறவாமலே வாசித்துக்கொண்டு நின்றான். தானாக அவன் கண்ணைத் திறந்து வாத்தியத்தை நிறுத்தும் வரையில் அவனுடைய வாத்திய வாசிப்பிலும் தோற்றத்திலும் சரபோஜிமன்னர் தம்மை. மறந்து ஈடுபட்டனர் ; அவருக்கு அவன் வாசிப்பு ஒவ்வொரு நிமிஷத்திலும் இன்பத்தை விளைவித்தது.
வாசிப்பதை ஒருவகையாக நட்டுவன் பூர்த்தி செய்தபின்பு தியாகேசப்பெருமானைக் கும்பிடுவதற்காகக் கண்ணைத் திறந்தான். தனக்கு அருகில் அரசர் நிற்பதை யறிந்து திடுக்கிட்டான். அவனது உடல் பயத்தால் நடுங்கியது.உடனே அரசர், "சும்மா இரு, அப்பா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
நட்டுவனுக்கு மனம் கலங்கியது. அருகிலிருந்த வாத்தியக்காரர்களும் பிறரும் அவனையும் மன்னரையும் விழித்த கண்மூடாமல் பார்த்துக்கொண்டே நின்றனர். 'இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே!' என்று சிலர் எண்ணினர். நட்டுவனுக்குப் பேச நா எழவில்லை. அவன் தன் மனத்திலுள்ள கருத்தை வெளியிட அஞ்சுவதை உணர்ந்த சரபோஜி மன்னர், உனக்கு எது வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்; பயப்படாதே" என்றார். உடன் இருந்தவர்கள் எதை அவன் கேட்பானோவென்று கூர்ந்து கவனித்து நின்றனர்.
நட்டுவன், "எங்களையெல்லாம் பாதுகாத்து வரும் மகாராஜா அவர்களே! அடியேனுக்கு ஒரு வரங கொடுக்க வேண்டும். ஸ்ரீ தியாகேசப்பெருமானுடைய மகா சந்நிதானத்தில் திருவந்திக்காப்பு வேளையில் அடியேன் என்றும் இந்தப் பணிவிடையையே செய்து கொண்டிருக்கும்படி கட்டளையிட வேண்டும்; இதுவே எனக்குப் போதுமானது. இதையே நான் என்றைக்கும் செய்து வாழும்படி அருள் புரிய வேண்டும்" என்று கைகுவித்துக் கொண்டே சொன்னான். அவனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்பெருகியது.
சரபோஜியரசர் சங்கீதப் பயிற்சி மிக்கவரென் பதையும் பல சங்கீத வித்துவான்களையும் வாத்தியக் காரர்களையும் தம் ஆஸ்தானத்தில் இருக்கச்செய்து பாதுகாத்து வருபவரென்பதையும் அந்த நட்டுவன் நன்கு அறிந்தவன்; ஆதலின் தஞ்சைக்கே தன்னை அழைத்துச் சென்றுவிட்டால் ஸ்ரீ தியாகேசப்பெருமான் பணிவிடையினால் வரும் ஆனந்தத்தை இழக்க நேருமேயென்று அவன் எண்ணிக் கலங்கினான்; அவ்வரசருக்குத் தன்பால் உண்டான அருள் தியாகப்பெருமானது பிரிவை உண்டாக்கித் தனக்குத் துன்பத்தைக் கொடுத்தால் என் செய்வதென்று அஞ்சினான்.
அவன் அரசரிடம் கூறியவற்றைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். அரசருக்கு அவனுடைய தீவிரமான பக்தி நன்கு புலப்பட்டது.
"உன்னுடைய இஷ்டம்போல் சௌக்கியமாக இந்தப் பணிவிடையையே செய்துகொண்டிரு. பெருவள்ளலாகிய ஸ்ரீதியாகேசரைத்தவிர னுடைய பணிவிடையை ஏற்றுக்கொள்ளும் யோக்கி யதையுள்ள பிரபு வேறு யாரும் இல்லை. உன் பாக்கியமே பாக்கியம்!" என்று சொல்லி அவனை நன்றாகப் பாதுகாக்கும்படி தேவஸ்தானத்தாருக்கு உத்த ரவு செய்தார். அன்றியும் அவனை ஒருமுறை தம் அரண்மனைக்கு வருவித்து உயர்ந்த சம்மானங்கள் செய்து, "உன்னுடைய பணிவிடைக்கு எத்தகைய தீங்கும் வாராமல் இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்வோம் " என்று சொல்லி யனுப்பினார்.
இந்த நிகழ்ச்சியை அறிந்தவர்கள், "பெரிய புராணத்தில் திருவாரூர்த் திருக்கூட்டச் சிறப்பைப்பற்றிக் கூறும் பகுதியிலுள்ள, [3]'கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறல்' என்பதை இவனிடம் கண்டோம்'' என்று சொல்லிச்சொல்லி அவனைப் பாராட்டினார்கள்.
---
[1] சாயங்கால பூஜை.
[2]. இவருடைய வரலாற்றைச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் என்னும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.
[3]. கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறல் - இறைவன்பாற் கூடிய அன்பினால் அவனை வணங்கும் இன்பத்தையன்றி முத்தியின்பத்தையும் வேண்டாத வீரம்.
-----------------------
2. 'தலைமுறைக்கும் போதும்!
தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்தில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு தனவந்தர் இருந்தார். அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு. பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர். அவற்றிற்குரிய வழிகளை யறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார். வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார். பயிர்த்தொழி காட்டுவார். பயிர்த்தொழிலில் பேரூக்கமும் பயிற்சியும் உடையவர். 'தொழு தூண் சுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர். ஆனால், கல்வியில் அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை. மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை. யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை. வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லாவித இன்பத்தையும் அளித்தன.
இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது. உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக் கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள். அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக் கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார். பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானால் வரவழைக்கலா-மல்லவா?
நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த நிச்சயித்தார்.
ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று வழங்கப்படுவார்கள்; வையைச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர். இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சி யுடையவர்கள். எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள். சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய [1]ஸ்ரீ மகாவைத்திய நாதையரவர்களுடைய தாய் வழியில் முன்னோர்கள். வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற் றும் வன்மையும் உடையவர்கள். அவர்கள் ஸ்வரம் பல்லவி முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள். சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள் ; விபூதி ருத்ராட்சங்கள் அணிபவர்கள். திருவை யாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தனியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர் விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.
---
[1]. இவருடைய சரித்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது.
-----------
ஒருசமயம் தஞ்சாவூர் ஸம்ஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற ஒரு முகம்மதிய சங்கீத வித்துவான் வந்திருந்தார். அவர் இந்துஸ்தானி சங்கீதம் பாடி அரசரையும் பிறரையும் உவப்பித்தார். அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, "இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாடமுடியுமா ?" என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களைக் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், 'இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயற்சிசெய்து பார்ப்போம் '' என்றார்கள். அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள். அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்புற்று, "நாங்கள் எவ்வளவோ சிரமப்பட்டு, தக்க ஆசிரியரிடம் பல வருடங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக்கொண்டார்களே! இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோன்றுகின்றது!" என்று கூறி மிகவும் பாராட்டினரென்று சொல்வார்கள்.
இத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடைய வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக் கேட்க ஆவல்கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர். அவர்களுடைய பெருமை எங்கும் பரவி யிருந்ததாதலின் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களைப் பார்த்துவிட்டாவது போகலா மென்று பலர் வந்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்திருக்கிறார்கள் என்பது அவருடைய நினைவு.
முகூர்த்ததினத்தின் மாலையில் பாட்டுக்கச்சேரி நடந்தது. ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டம் அமைதியாகவிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டு எஜமான் அந்தச் சமயத்தில்தான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறு சுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்து வந்தார். உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியனவற்றையும் செவ்வனே அமைக்கு மாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக்கொண்டும், அடிக்கொருதரம் சங்கீதக் கச்சேரி நடக்குமிடத் திற்கு வந்து கூட்டத்தையும் பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக்கொண்டும் காற்றாடிபோல் சுழன்று கொண்டிருந்தார். உண்மையில் அவருக்குக் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாதாதலின் அவருக்கு அதில் புத்தி செல்லவில்லை.
ஆனை, ஐயா ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர். பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் போட் டுப் பாடினர். அங்கிருந்தோர்கள், 'இதுவரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடு பட்டனர். அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக்கடலில் மூழ்கியிருந்தனர்.
அப்பொழுது ஒரு தூணருகில் நின்று கொண்டு எஜமான் கவனித்தார். அவர் தம் மூக்கின்மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்பிற்குரிய ஒலியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனத்தில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின. வரவரக் கண்கள் சிவந்தன. இரண்டுதடவை தூணில் தட்டினார். அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரிய வில்லை. திடீரென்று பலத்த குரலில், 'வித்வான்களே, நிறுத்துங்கள் உங்கள் சங்கீதத்தை. இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்து விட்டீர்களோ! நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்' என்று கர்ஜித்தார். யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினால் குத்தினதுபோல் இருந்தது. 'இவர்களைப் பெரிய சங்கீத வித்வான்களென்று பொறுக்கியெடுத்தார்கள்! இதற்குத்தான் முதலிலேயே கலியாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன். இருக்கிறவர்க ளெல்லாம் பிடுங்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாமே!" என்று மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தார் பிரபு.
சங்கீதம் நின்றுவிட்டது. அப்போது ஆனை, ஐயா அவர்களுக்கிருந்த மனநிலையை யாரால் சொல்ல முடியும்? அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்க ளெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள். அவர்கள் உடனே கலியாண வீட்டினின்றும் வெளியே போனார்கள். கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவ்விருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அளவற்ற வருத்தத்த அடக்கிக் கொண்டவர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின. அப்பால் நேராக அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளைத் தரிசித்தனர்; தரிசித்தபோதே ஓவென்று கதறி விட்டார்கள். உடன்வந்தவர்களெல்லாம் அசைவற்று நின்றனர். ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியினால் அடியிற்கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்:
.
இராகம் : புன்னாகவராளி; தாளம்: ஆதி.
(பல்லவி)
போதும் போதும் ஐயா - தலைமுறைக்கும் (போதும்)
(அனுபல்லவி)
மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே (போதும்)
(சாணங்கள்)
1. .அரியென் றெழுத்தையறி யாத மூடன்றன்னை
ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்றுமறியாதவன்றனை
அரிய விஜய னென்றும்
அறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்
தானக் கர்ண னென்றும்
அழகற்ற வெகுகோரத் தோனை யேமிக
அங்கஜனே யென்றும் - புகழ்ந்தலைந்தது (போதும்)
2. காசுக் காசைகொண்டு லுத்தனைச் சபைதனில்
கற்பக தருவென்றும்
கண்தெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
பிறங்கரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்ன மிடான் றன்னைப்
பெரிய தர்ம னென்றும் புகழ்ந்தலைந்தது (போதும்)
3. அறிவில் லாதபெருமடையாத மருகினை
அல்லும் பகலும் நாடி
அன்னை உமாதாச னுரைக்கும் பதங்களை
அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும் பேய்க் காளா யுலகினில்
அற்பரைக்கொண் டாடித் - திரிந்தலைந்தது (போதும்)
இந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத்திரங்களைச் செய்துவிட்டு அவ்வூராரிடத்தில் விடை பெற்றுக்கொண்டு அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். அதற்குப்பின் தெய்வ சந்நிதானத்தில் அன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லை யென்பர்.
(இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ மகாவைத்தியநாதையரவர்கள்.]
உமாதாசரென்பது ஆனை யென்பவரது முத்திரை. அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கீர்த்தனத்திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.
------------
3. சங்கராபரணம் நரசையர்
சங்கீதக்கலை தமிழ்நாட்டில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர்கள் சிறந்தவர்களாவர். அவர்களுடைய அரசாட்சியில் கர்நாடக சங்கீதப்பயிற்சி மிக விரிவடைந்தது. சங்கீத வித்துவான்கள் அதிகமாயினர். தமிழ்நாட்டாருக்குச் சங்கீத விருந்து மிகுதியாகக் கிடைத்தது. அவர்கள் தங்கள் ஸம்ஸ்தானத்தில் சிறந்த பல சங்கீத இரத்தினங்களை ஒத வைத்துப் போற்றி ஆதரித்து வந்தார்கள். அதனால் தஞ்சை அக்காலத்தில் இசைக்கலையின் அரசிருக்கையாக விளங்கியது.
வித்துவான்களுடைய ஆற்றலையறிந்து போற்றுவதும் வரிசையறிந்து பரிசளிப்பதும் பட்டமளிப்பதும் ஆகிய பலவகைச் செயல்களால் அம்மகாராஷ்டிர மன்னர்கள் பல வித்துவான்கள் மனத்தைக் கவர்ந்தனர். சங்கீதத்தில் ஒவ்வொரு வகையில் தேர்ச்சி பெற்ற பல வித்துவான்கள் அவ்வரசர்களால் அளிக்கப்பட்டனவும் தங்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துவனவுமாகிய பட்டப் பெயர்களை யுடையவர்களாக இருந்தனர். [1]வீணைப் பெருமளையர், பல்லவி கோபாலையர், இரட்டைப்பல்லவி சிவராமையர் அல்லது சஞ்சீவி சிவராமையர், சல்லகால் கிருஷ்ணையர், [2]கனம் கிருஷ்ணையர், த்ஸௌகம் சீனு வையங்கார், தோடி சீதாராமையர் முதலிய பல பிரபல வித்துவான்களை உத்ஸாகப்படுத்தி விட்டவர்கள் தஞ்சை ஸம்ஸ்தானாதிபதிகளே. இவர்களுக்கும் வேறு பலருக்கும் ஆசிரியராகிய பச்சைமிரியன் ஆதிப்பையரென்னும் இணையற்ற சங்கீத வித்துவானை ஆதரிக்கும் புண்ணியமும் அவர்களுக்கு இருந்தது.
அவர்களுள், அருங்கலை வினோதராக விளங்கிய சரபோஜியரசர் காலத்தில் [3]நரசையரென்னும் சங்கீத வித்துவானொருவர் இருந்தார். ஆற்றலில் அவர் ஏனைய வித்துவான்களுக்குச் சிறிதேனும் குறைந் தவரல்லர். ஒருநாள் அரசர் முன்னிலையில் பெரிய சபையில் அவருடைய வினிகை நடைபெற்றது. அப்பொழுது அவர் மிக விரிவாகச் சங்கராபரண ராகத்தை ஆலாபனஞ்செய்து பல்லவி கற்பனை ஸ்வரம் முதலியன பாடி வரலானார். முறைப்படியே அதனைப் பாடிவருகையில் அரசரும் சபையோரும் அதில் மிகவும் ஈடுபட்டார்கள். அவர் இனிமையாகப் பாடப்பாடச் சபையில் இருந்த யாவரும் ஒன்றுபட்டு மனமுருகினர்; இதுகாறும் சங்கராபரணத்தை இப்படிக் கேட்டதேயில்லை!' என வியந்து பாராட்டி னார்கள். அரசர் அவருடைய ஆற்றலை யுணர்ந்து
மகிழ்ந்து பலவகைப் பரிசுகளை அளித்ததோடு 'சங்கராபரணம் நரசையர்' என்னும் பட்டப் பெயரையும் வழங்கினார். அக்காலமுதல் அவர் அப்பெயராலேயே அழைக்கப்படலாயினர். எங்கேனும் சங்கீத வினிகை நடத்தினால் அங்குள்ளவர்கள் முதலில் அவரைச் சங்கராபரணம் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்கள். இதனால் அவருடைய ஆற்றல் மேன்மேலும் விளக்கமடைந்தது.
---
[1] இவரைப்பற்றிய வரலாறொன்றை, உடையார் பாளையம்' என்ற கட்டுரையிற் காணலாம்.
[2]. இவருடைய சரித்திரம் தனியே வெளியாகியிருக்கிறது.
[3]. நரஸிம்ஹையரென்பதன் திரிபு.
ஒருசமயம் நரசையருக்கு எதிர்பாராதவண்ணம் பெருஞ்செலவு நேர்ந்தமையால், அதற்காகக் கடன் வாங்கவேண்டியிருந்தது. தமக்கு வேண்டிய பொருளைத் தருவாரை அவர் காணவில்லை.
அக்காலத்தில் [4]கபிஸ்தலத்தில் இருந்த இராமபத்திர மூப்பனாரென்பவர் சங்கீதரஸிகராகவும் சங்கீத வித்தவான்களுக்கு ஒரு பெருநிதியாகவும் விளங்கிவந்தார். அம்மூப்பனாரிடம் பொருள்பெற எண்ணிய நரசையர் கபிஸ்தலம் சென்று அவரைக் கண்டார் மூப்பனார். மூப்பனார் வித்துவானை உபசரித்துப் பாராட்டி அளவளாவினர். நரசையர் அங்கே சிலதினம் இருந்தார். பிறகு ஒரு நாள் மெல்லத் தமக்குப் பொருள் வேண்டியிருத்தலைப் பற்றிக் கூறலானார்.
நரசையர் : எதிர்பாராத விதத்தில் எனக்குச் செலவு நேர்ந்துவிட்டது. ஒருவரிடம் சென்று பொருள்கேட்க என்மனம் நாணமடைகிறது. என்ன செய்வதென்று யோசிக்கையில் தங்கள் ஞாபகம் வந்தது. தங்களிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு பின்பு கொடுத்துவிடலாமென்று வந்தேன
இராமபத்திர : கடனாவேண்டும்? எவ்வளவு வேண்டும்?
நரசையர்: எண்பது பொன்.
இராமபத்திர: கடன் வேண்டு மென்கிறீர்களே; எதையாவது அடகு வைப்பீர்களா?
நரசையர்: (சிறிதுநேரம் யோசித்துவிட்டு) அப்படியே வைக்கிறேன்.
இராமபத்திர: எதை வைப்பீர்கள்?
நரசையர் : ஓர் ஆபரணத்தை.
இராமபத்திர: எங்கே? அதை எடுங்கள் பார்க்கலாம்.
நரசையர்: அந்த ஆபரணத்தைக் கண்ணால் பார்க்க முடியாது; காதாற் கேட்கலாம்; எக்காலத்தும் அழியாதது; இன்பத்தைத் தருவது, என் உடைமையாகிய சங்கராபரண ராகமே அது. அதையே நான் அடகு வைக்கிறேன். தங்களிடம் பெற்றுக் கொள்ளும் பொன்னைத் திருப்பிக் கொடுக்கும் வரையில் அதை எங்கும் பாடுவதில்லையென்று உறுதி கூறுகிறேன்.
இராமபத்திர : அப்படியானால் உங்களுக்கு வேண்டியது தருகிறேன்.
---
[4] இவ்வூர் தஞ்சை ஜில்லாவில் பாபநாசத்துக்கருகில் உள்ளது.
மூப்பனார் நரசையரிடம் ஒரு கடன் பத்திரம் வாங்கிக்கொண்டு எண்பது பொன்னை அளித்தார். அத்தொகையை வாங்கிக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் சென்று செய்யவேண்டிய காரியங்களை நிறை வேற்றினார். அதுமுதல் எவ்விடத்தும் அவர் சங்கரா பரணத்தைப் பாடுவதை நிறுத்தியே விட்டார். எங்கேனும் வினிகைகளுக்குச் சென்றால் வேறு ராகங்களையும் கீர்த்தனைகளையுமே பாடிவந்தார்.
அக்காலத்தில் கும்பகோணத்தில் அப்புராய ரென்ற ஒரு செல்வர் இருந்தார். அவர் கம்பெனி யாரிடம் பெரிய உத்தியோகம் பார்த்துவந்தார். தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டிடங்களின் தொடர்புடையவராதலின் அவர் உபய ஸம்ஸ்தான திவானென்னும் சிறப்புப்பெயரால் வழங்கப் பட்டார். அக்காலத்திலிருந்து வாலீஸ் என்னும் துரைக்குப் பிரியமானவராக இருந்ததுபற்றி வாலீஸ் அப்பு ராயரென்றே யாவரும் அவரை அழைப்பார்கள். கும்பகோணம் ரெட்டிராயர் அக்கிரகாரத்தில் குளத் தின் வடகரையில் அவருடைய வீடுகள் உள்ளன.
அவருடைய வீட்டில் ஒரு கலியாணம் நடைபெற்றது. அந்த வைபவம் பலவகையாலும் சிறப்புடையதாக இருக்கவேண்டு மென்றெண்ணிய அவர் அதற்குரியவற்றைச் செய்தனர். சங்கீத வினிகையொன்று நடத்த வேண்டுமென்றும் அதற்கு மிகவும் சிறந்த வித்துவான்களை அழைக்க வேண்டுமென்றும் நிச்ச யித்தார். அங்ஙனம் அழைக்கப்பட்டவர்களுள் சங்கராபரணம் நரசையரும் ஒருவர்.
குறிப்பிட்ட ஒரு காலத்தில் நரசையருடைய வினிகை நிகழ்ந்தது. ராயர் அவருடைய ஆற்றலைப் பற்றி நன்றாக அறிந்தவராதலின், 'உங்களுக்குப் பட்டம் அளிக்கச்செய்த சங்கராபரணத்தைப் பாட வேண்டும்" என்று விரும்பினார்; உடனிருந்த அன்பர்களும் வேண்டிக்கொண்டனர்.
நரசையர் : தாங்கள் க்ஷமிக்கவேண்டும்; அதனை இப்போது பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்.
ராயர் : ஏன் ?
நரசையர் : அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். அக்கடனைத் திருப் பிக்கொடுத்த பிறகுதான் அதைப் பாடவேண்டும்.
ராயர்: என்ன ஆச்சரியமாக இருக்கிறது? ராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை. யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள்? சொன்னால் நாம் உடனே அதனைத் தீர்த்துவிடுவோம்.
வித்துவான் சங்கராபரணத்தை அடகுவைத்த வரலாற்றைக் கூறினார். உடனே ராயர் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் தக்க ஒருவர்பால் அளித்து, அவற்றை மூப்பனாரிடம் கொடுத்து விட்டு அவரிடமிருந்து கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கி வரும்படி சொல்லி அனுப்பினார். அன்று நரசையர் வேறு ராகங்களையே பாடினார்.
ராயரிடமிருந்து சென்றவர் இராமபத்திர மூப்பனாரிடம் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறினார். மூப்பனார் மிக மகிழ்ந்து அந்தத் தொகையோடு பின்னும் சில தொகையை எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்து அப்புராயரையும் நரசையரையும் கண்டார். அவரைக் கண்டவுடன் அப்புராயர், "பணம் வந்து சேர்ந்ததா? விடுதலை யோலை எங்கே?'' என்றார்.
இராமபத்திர : ராயரவர்களும் சங்கீத சிகாமணியாகிய நரசையரவர்களும் என்னுடைய செயலை அடி யோடே மறந்துவிடவேண்டும். அவர்கள் என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமாயினும் கேட்டுப் பெறும் உரிமையுடையவர்கள். அவர்களைப் போன் றவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்? அவர்கள் பணம் வேண்டுமென்றால் உடனே கொடுத்திருப்பேன். 'கடனாக வேண்டும்' என்று அவர்கள் கேட் டது எனக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கியது. விளையாட்டாக அடகுண்டாவென்று கேட்டேன். அவர்கள் சங்கராபரணத்தை அடகுவைத்தார்கள். அன்றுமுதல் இன்று வரையில் அதனை எங்கும் பாடியதாகக் கேட்டிலேன். இதனால் அவர்களுடைய உயர்ந்த குணமும் உண்மையும் புலப்படுகின்றன. இந்தத் தொகை எனக்குரியதன்று. அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களிடம் கொடுத்து விடுங்கள். இதையல்லாமல் இவ்வளவு நாள் சங்கராபரணத்தைச் சிறை செய்ததற்கு அபராதமாக நான் கொடுக்கும் இந்தத் தொகையையும் தங்கள் திருக்கரத்தாலேயே அவர்களுக்கு வழங்கவேண்டும். இதோ விடுதலை ஓலையும் தந்துவிட்டேன்.
மூப்பனாருடைய அன்புடைமை அப்பொழுது யாவருக்கும் வெளியாயிற்று. "கடன் பெற்றவர் கடனைத் திரும்பிக் கொடுப்பதையும் கடன் தந்தவர் வட்டியுடன் பெற்றுக் கொள்வதையும் உலகத்தில் கண்டிருக்கிறோம். கடன் வாங்கினவர் திருப்பிக் கொடுத்தால், "கொடுத்தவர் அதைப் பெற்றுக்கொள்ளாமல் பின்னும் தொகை சேர்த்துக் கொடுப்பது புதுமையிலும் புதுமை" என்று யாவரும் வியந்தார்கள்.
மறுநாள் கலியாணப் பந்தலில் நரசையருடைய வாக்கிலிருந்து அமுத தாரையைப்போல, விடுதலை பெற்ற
சங்கராபரணராகம் வெளிப்பட்ட காலத்தில் கேட்ட யாவரும் பதுமைகளைப் போலத் தம்மை மறந்து ஸ்தம்பிதமாயினரென்று கூறவும் வேண்டுமோ?
அக்காலமுதல் நரசையர் வாலீஸ் அப்பு ராயருடைய ஆஸ்தான வித்துவானாக விளங்கி வரலானார்.
---------------
4. 'அவன் போய்விட்டான் '
வித்துவான்களை ஆதரித்துப் பாதுகாத்து வந்த ஸம்ஸ்தானங்களுள் ஒன்றான தஞ்சாவூர் அடைந்திருந்த புகழ் மிகவும் பெரியதென்று தமிழ் நாட்டிலும் பிறநாட்டிலும் உள்ளவர்கள் அறிவார்கள். போஸல வம்சத்தினராகிய மகாராஷ்டிர மன்னர்கள் அருங்கலை விநோதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உதாரகுணமும் கலைவல்லாரை அவர்கள் ஆதரித்துவந்த இயல்பும் வித்துவான்களுடைய கூட்டங்களில் இன்றைக்கும் வழங்கப்படுகின்றன. மகாராஷ்டிர மன்னர்களுடைய சபாமண்ட பம் எப்பொழுதும் வித்துவான்கள் நிறைந்ததாகவே இருந்தது. தங்கள் தங்கள் திறமையைக் காட்டிப் பெருமையையும் பட்டங்களையும் அடைவதற்கு உரையாணியாக அச்சபை விளங்கிற்று. வித்துவான்கள், அங்கே பாடிப் பரிசுபெற்ற செய்தியைத் தம்முடைய கௌரவத்திற்குச் சிறந்த அறிகுறியாகக் கூறி மற்ற இடங்களிற் சென்று பெருமையை அடைவார்கள்.
அந்தச் சம்ஸ்தானத்தில் மிகவும் சிறப்பாக இருந்த அரசர்களுள் சரபோஜி அரசர் ஒருவர். அவருடைய காலத்தே தான் தஞ்சை ஆங்கிலேயர் பால் ஒப்பிக்கப் பட்டது. அவருக்குப் பின்பு அவருடைய புதல்வராகிய சிவாஜி இருந்தார். அவரும் வித்துவான்களை ஆதரித்துவந்தார்; சங்கீத ரஸிகராகிய அவருடைய காலத்திற்குப்பின் அவருடைய மருகராகிய ஸகா ராம் ஸாஹேப் என்பவர் ஒருவாறு ஆதரித்தனர். பின்பு தஞ்சைச் சம்ஸ்தான நிலையே மாறிவிட்டது.
சிவாஜியரசரால் ஆதரிக்கப்பெற்ற வித்துவான்களில் ஆதி மூர்த்தி ஐயர் என்பவர் ஒருவர். அவர் இளமை தொடங்கியே முறையாக இசைப்பயிற்சி செய்து தேர்ந்தவர். பச்சைமிரியன் ஆதிப்பையருடைய சிஷ்யராகிய பல்லவி கோபாலையரிடத்தும் கனம் கிருஷ்ணையரிடத்தும் அவருடைய தமையனார்களாகிய சுப்பராமையர் சுந்தரமையர் என்பவர்களிடத்தும் சிக்ஷை சொல்லிக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மூன்றுமொழிகளிலும் ஆயிரக்கணக்கான கீர்த்தனங்கள் அவருக்குப் பாடம் உண்டு. எவ்வளவு பெரிய வித்துவான்களுடைய சபையிலும் இயற்றியவர்களுடைய அமைப்பு மாறாமல் வர்ணசுத்தமாகவும் இனிமையாகவும் கீர்த்தனங்களை அவர் பாடுவார்; பல்லவி பாடுவதிலும் விரிந்த மனோபாவத்துடன் கற்பனை ஸ்வரங்களைப் பாடுவதிலும் வல்லவர்; கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை மிகவும் நன்றாகப் பாடுவார்; நல்லொழுக்க முடையவர்; அடக்கமாக இருப்பார்; சிவாஜி மன்னருடைய சபையில் அவர் பிரகாசமுற்று விளங்கினார். மகா வைத்தியநாதையர் பலகாலமாக வழங்காமலிருந்த 72-மேளகர்த்தா ராகமாலிகையை மெட்டு அமைத்துத் தஞ்சைச் சம்ஸ்தானத்திற் பாடும்போது, பாடியது பொருத்தமாக உள்ளதென்பதைத் தேர்ந்து கூறுதற்கு ஆதிமூர்த்தி ஐயரே தகுதியானவரென்றெண்ணி அங்ஙனமே நியமிக்கப் பட்டார். என்னுடைய தந்தையாராகிய வேங்கட சுப்பையரவர்களுக்கும் அவருக்கும் இளமை தொடங்கிப் பழக்கமுண்டு. கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை அவர் பாடினால் கிருஷ்ணை யர் பாடுவதைப்போலவே யிருக்குமென்று என் தந்தையார் கூறியுள்ளனர்.
தம்மிடம் காட்டிய அபிமானத்தை யறிந்து சிவாஜி மன்னரிடத்தில் ஆதிமூர்த்தி ஐயர் அன்பு டையவராகி யிருந்தார். அருமையறியாதவர்களிடத்திற் பழகுவதற்கு அவருடைய மனம் பொருந்தாது. சிவாஜி மன்னர் காலத்திற்குப் பிறகு அவர் தஞ்சாவூரிலேயே தெற்கு வீதியில் வராகப்பையர் சந்தில் மேல்சிறகில் தமக்குரிய வீடு ஒன்றில் வசித்து வந்தனர். வேறு பிரபுக்களிடம் சென்று பழகுவதை அவர் விரும்பவில்லை.
சற்றேறக்குறைய ஐம்பது வருஷங்களுக்கு முன்பு நான் கும்பகோணம் காலேஜில் இருந்த காலத்தில் சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு முதலிய பழைய நூற்சுவடிகள் தஞ்சைச் சரசுவதி மஹாலில் இருக்குமோ என்று தேடியறிய எண்ணினேன். அதற்காக ஒரு முறை தஞ்சைக்குப் புறப்படுகையில் என் தந்தையார், ஆதிமூர்த்தி ஐயர் அங்கே இருப்பாரென்றும் அவரைப் பார்த்து க்ஷேமத்தை விசாரித்துவிட்டு வரவேண்டுமென்றும் சொல்லி அவர் இருக்கும் இடத்தையும் தெரிவித்தனர். தகப்பனார் பலமுறை அவரைப்பற்றிக் கூறியிருந்த மையின் அவரைப் பார்க்கவேண்டுமென்னும் ஆவல் எனக்கும் இருந்தது.
தஞ்சையில் நான் ஆதிமூர்த்தி ஐயருடைய வீட்டை விசாரித்துத் தேடிக்கொண்டு பிற்பகல் இரண்டு மணிக்கு அங்கே சென்றேன். வெளிக்கதவு திறந்திருந்தது. உள்ளேயிருந்து வெளியில் ஒருவரும் வரவில்லை; ஆதலின் விசாரிப்பதற்கு இயலாமல் அங்கே சிறிது நேரம் இருந்தேன். அப்பால் உள்ளே இருந்து ஒரு முதிய பிராமணர் வெளியில் வந்தார். ஆஜாநுபாகுவான அவர் தம்கையில் ஒரு செம்பில் ஜலம் வைத்துக்கொண்டிருந்தார். அவருடைய தலைமயிர் முழுவதும் நரைத்திருந்தது. நான்கு மாதங்களாக க்ஷவரம் செய்து கொள்ளவில்லை யெனத் தோற்றியது. ஓர் அழுக்கு வஸ்திரத்தைத் தட்டுடையாகக் கட்டிக்கொண்டிருந்தார். அவருடைய தோற்றம் எல்லாவற்றையும் வெறுத்து இருக்கும் துறவியின் தோற்றத்தைப் போல இருந்தது. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். "சங்கீத வித்துவான் ஆதிமூர்த்தி ஐயரவர்களைப் பார்ப்பதற்காக வந்தேன். அவர்கள் வீடு இதுதானோ ?" என்றேன். அவர் ஒருமுறை என்னை விழித்துப் பார்த்தார்; பிறகு, "ஆதி மூர்த்தியா! அவன் போய்விட்டானே " என்றார்.
நான் சற்று நிதானித்தேன்; பிறகு, "அவர்கள் இப்போது இருக்கிறதாகக் கேட்டுத்தான் வந்தேன். என்னுடைய தகப்பனாரவர்கள் அவர்களுடைய க்ஷேமலாபத்தை விசாரித்து வரவேண்டு மென்று சொன்னார்கள்' என்றேன்.
அவர்:- நீர் யார்? யாருடைய பிள்ளை?
நான்:- உத்தமதானபுரம் வேங்கடசுப்பைய ரவர்கள் பிள்ளை.
அவர்:- ஓ, அப்படியா? வேங்கடசுப்பையர் சௌக்கியமாக இருக்கிறாரா?
நான் :- ஆம், சௌக்கியமாகவே இருக்கிறார்கள்.
அவர்:- நீர் என்ன செய்கிறீர்?
நான்:- கும்பகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருக்கிறேன்.
அவர்:- என்ன சம்பளம்?
நான்:- ஐம்பது ரூபாய்.
அவர்:- அப்படியா! வேங்கடசுப்பையர் பாக்கிய சாலிதான். ஆதிமூர்த்தி போய்விட்டான் என்று நீர் அவரிடம் போய்ச் சொல்லும். சிவாஜி மகா ராஜா எப்போது இறந்து போனாரோ அப்போதே அவனும் இறந்து போய் விட்டான்.
நான்:- "தாங்கள் பேசுவதைப் பார்க்கையில் தாங்களே ........" என்று கொஞ்சம் இழுத்தேன்.
அவர்:- ஆம் ஐயா! நான் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதானே? இறந்ததற்குச் சமானந்தானே? எப்பொழுது என் வித்தைக்கு வினியோகம் இல்லையோ அப்பொழுது எனக்கு என்ன கௌரவம்? அருமை தெரியாதவர்களுக்கு நடுவில் நடைப்பிண மாக இருப்பதுதானே இப்போது கண்டது? எனக்குச் சங்கீதம் தெரியுமென்பதை வெளியில் சொல்ல வேண்டாம். என்னுடைய சங்கீதம் துருப் பிடித்துப் போய்விட்டது. தங்களைத் தாங்களே வித்துவான்களாக மதித்துக் கொண்டு புதுப்பேர்வழிகள் கிளம்பி விட்டார்கள். அவரவர்கள் பாடுவதைக் கேட்பதற்கு ஏற்ற பிரபுக்களும் இருக்கிறார்கள்.
இப்போது எல்லோரும் வித்துவான்கள், எல்லோரும் பிரபுக்கள். இந்தக்காலத்திலே என்னை யார் ஐயா மதிக்கின்றார்கள்? நான் ஒருவன் இருக்கிறேனென்று யார் நினைக்கிறார்கள்? யார் இங்கே வருகிறார்கள்? ஏதோ அத்திபூத்தாற்போல நீர் வந்தீர். வேங்கட சுப்பையருக்கு மட்டும் பழைய அபிமானம் இருக்கிறதுபோலத் தோற்றுகிறது. அவருக்கு என் அருமை தெரியும்? அவர் அருமை எனக்குத் தெரியும். அவர் இப்போது யாதொரு குறையுமில்லாமல் சௌக்கியமாக இருக்கிறாரா?
நான் :- சௌக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அவசியம் பார்த்துவிட்டு வரவேண்டு மென்று சொன்னார்கள். தங்களுக்குக் குமாரர்கள் இருக்கிறார்களா?
அவர்:- ஒருவன் இருக்கிறான்; இப்போது மைசூரில் ஆஸ்தான வித்துவானாக இருக்கிறான், வேங்கடசுப்பையரை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவேண்டும். உமக்குச் சங்கீதம் தெரியுமா?
நான் :- சிலவருஷங்கள் அப்பியாசம் செய்தேன். தமிழ் கற்றுக் கொண்டபின்பு அதிகக் கவனம் செலுத்த முடியவில்லை.
அவர்:- அடடா! என்ன காரியம் செய்தீர்? அதை ஏன் ஐயா விட்டுவிட்டீர்? அப்பியாசம் பண்ணினால் கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை யெல்லாம் வேங்கடசுப்பையரிடம் கற்றுக் கொண்டிருக்கலாமே!
நான்:- இப்பொழுதும் சில தெரியும். ஆனாலும் தங்களைப் போன்ற மகாவித்துவான்களுக்குமுன் பாடுவதற்கு எனக்குத் தைரியமில்லை.
இங்ஙனம் சிறிதுநேரம் பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிறகு விடை பெற்றுக்கொண்டு சென்று என் தந்தையாரிடம் நடந்தவற்றைத் தெரிவித்தேன்.
.
வித்துவான்கள் அருமை தெரிந்து ஆதரிப்பவர்களை மறவாமல் நினைப்பதற்கும், அருமையறியாதவர்கள் நடுவில் இருப்பதை வாழ்வாகக் கருதாமைக்கும் ஆதிமூர்த்தி ஐயருடைய இந்த வரலாறே சிறந்த உதாரணமாகும். அவருக்குச் சிவாஜி மன்னரிடத் தில் இருந்து பேரன்பை நான் நினைந்து நினைந்து உருகினேன். [1]"இனிப் பாடுநருமில்லைப் பாடுநர்க் கொன் றீகுநருமில்லை" என்று சொன்ன ஔவை யார் மனநிலையும்,
[2] "பூமா திருந்தென் புவிமா திருந்தென்ன பூதலத்தில்
நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் னாவலர்க்குக்
கோமா னழகமர் மால்சீதக் காதி கொடைமிகுத்த
சீமா னிறந்திட்ட போதே புலமையுஞ் செத்ததுவே''
என்று கூறிய ஒரு புலவருடைய மனநிலையும் இன்ன படி இருந்திருக்குமென்று ஆதிமூர்த்தி ஐயருடைய நிலையைக் கண்டு ஒருவாறு அறிந்துகொள்ளலா மன்றோ?
----
[1]. புறநா னூறு, 283.
[2]. படிக்காசுப்புலவர் இயற்றியது. பூமாது - திருமகள். சீதக் காதி- சையத் அப்துல் காதரென்ற முகம்மதியப் பிரபு ; இவர் காயற்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர்.
------------------
5. வண்டானம் முத்துசாமி ஐயர்
உண்மையான கல்விமான்கள் யாவரையும் உலகம் அறிந்துகொள்வதில்லை. உருவத்தைக் கண்டும் வெளி ஆடம்பரங்களைக் கண்டும் புலமையை வரையறுக்க முடியாது. வறுமை நிலையிலே பிறந்து வளர்ந்த புலவர்கள் பலர் பின்பு அரசரோடு அரியாசனத்தில் ஒருங்கு வீற்றிருக்கும் பேறுபெற்றார்க ளென்று பண்டை வரலாறுகளால் அறிகிறோம். வீண் ஆடம்பரத்தினாலும் அறிவுக்கு யாதோர் இயைபுமில்லாத உலகியற் பயிற்சியாலும் பலர் அறிவாளிகளாக மதிக்கப்படுகிறார்கள். அவ்விரண்டு மில்லாத பல உண்மையறிவாளிகள் ஏனைய மனிதர்களோடு ஒருங்கு எண்ணப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுட் சிலர் அறிவற்றவர்களாகவும் கருதப்படுவதுண்டு; சிலர் சிலகாலம் புறக்கணிக்கப் பட்டுப் பின்பு கல்விமான்களாக மதிக்கப்படு கிறார்கள்.
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வண்டானம் என்னும் ஓர் ஊரில் முத்துசாமி ஐயர் என்ற ஒரு ஸ்மார்த்தப் பிராமணர் இருந்தார். இவர் வடம வகுப்பைச் சேர்ந்தவர்; குறிய வடிவினர்; சிவந்த மேனியர்; எப்போதும் குனிந்துகொண்டே யிருப் பார்; அகன்ற நெற்றியையும் விசாலமான கண்களையும் உடையவர்; எதிலும் உவப்பையாவது வெறுப்பையாவது காட்டமாட்டார். இவர் பிறரோடும் அதிகமாகப் பேசுவதில்லை; பாடங் கேட்பதிலும் கேட்டவற்றைச் சிந்திப்பதிலுமே காலம் போக்குவார்; எப்போதும் தனித்தே இருப்பார்; பாடங்கேளாத சமயங்களில் தோட்டங்களிலுள்ள மரத்தடியிலும் நீர்த்துறைகளிலும் ஆற்று மணலிலும் தனியே எதனையேனும் அமர்ந்து மண்ணிலும் மணலிலும் எழுதிக் கொண்டே யிருப்பார்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன் இவர் திருவாவடுதுறை மடத்துக்குப் பாடங்கேட்க வந்தார். அப்போது இவருக்குப் பிராயம் 22 இருக்கும்.
அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் மேல கரம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் ஆதீனகர்த்தர்களாக இருந்தார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் [1] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த மடத்தில் ஆதீன வித்துவானாக இருந்துகொண்டு பல மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லிவந்தார்கள். அப்போது பாடங்கேட்டவர்களுள் யானும் ஒருவன். மாணவர்களுக்கு உரிய சாப்பாட்டு வசதி முதலியவைகளெல்லாம் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்த ரவர்களால் நன்றாக அமைக்கப் பெற்றிருந்தன. இதனால் மாணாக்கர்கள் யாதொரு கவலையுமில்லாமல் ஊக்கத்தோடு பாடங் கேட்டுவந்தனர்.
----
[1]. இவர்களுடைய சரித்திரம் 2 பாகங்களாக வெளியிடப் பட்டிருக்கிறது.
-----
புதியவர்களாகப் பாடங்கேட்க வருபவர்கள் பிள்ளையவர்களிடம் முன்னமே பாடங்கேட்டு வருபவர்களிடம் முதலில் கேட்பது வழக்கம்.
ஆதிகுமரகுருபர ஸ்வாமிகள் மரபினரும் பிற்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்துத் தலைமையை வகித்தவருமான ஸ்ரீ குமாரசாமித் தம்பிரானென்பவர் அப்போது பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டு வந்தார். அவர் பிறந்த ஊர் வண்டானம். அவருக்கும் முத்துசாமி ஐயருக்கும் முன்னமே பழக்கம் இருந்தமையால் அவரிடமே முத்துசாமி ஐயர் படிக்க லானார். ஊரிலிருந்தபொழுதே நிகண்டையும் சில பிரபந்தங்களையும் படித்திருந்தவராதலின் தமிழ்ப் பயிற்சியில் இவர் சிறந்து விளங்கினார். இரவிலும் பகலிலும் யாவரும் உண்டபின்பு உண்ணும் விடுதிக்கு இவர் தனியே சென்று பிறரோடு கலவாமல் உண்டு வருவார். இவர் உடுப்பது அழுக்கான ஆடையே.
இவர் இவ்விதம் பரமசாதுவாகவும் நாகரிக மில்லாதவராகவும் இருத்தலைக் கண்ட மாணவர்களுக்கும் பிறருக்கும் இவரிடம் நன்மதிப்பு உண்டாகவில்லை. இவரைக் கண்டால் யாவரும் பரிகாசம் செய்வார்கள்; 'வண்டானம் வந்தது, போயிற்று என்று அஃறிணையாகவே இவரைப்பற்றிப் பேசுவார்கள். இப்படி ஒருவர் இருப்பது ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கேனும் பிள்ளையவர்களுக்கேனும் தெரியாது.
எவரேனும் சிலேடையாகப் பேசினால் இவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகும்; அப்பொழுது இவர் முகத்திற் சிறிது மலர்ச்சி காணப்படும். இவர் ஏதாவது பேசின் அது சிலேடை டயாகவே இருக்கும். ஒரு நாள் மாணாக்கராகிய ஒரு தம்பிரான் இவரைப் பார்த்து, 'வண்டானம் இப்பொழுது என்ன செய்கிறது ?" என்று நகைப்புடன் கேட்டபொழுது, இவர் சினமுற்று, "நீங்கள் சிவப்புத்தேள் " என்று சிலேடை யாகப் பேசியதைக் கேட்டிருக்கிறேன். சிவனாகிய தேவனெனவும், சிவப்பு நிறம் பொருந்திய தேளென வும் அத்தொடர் இரண்டு பொருள்படும். இவர் வார்த்தையால் யாருக்கும் கோபமுண்டாகாது. இவ்வாறு இவர் கூறிய சிலேடைகள் அளவிறந்தன. ஒருநாள் இவரை நோக்கி, "வாரும், இரும், படியும் " என்றபோது, 'வாரும் இரும்பு அடியுமா!' என்றார். மற்றொரு நாள் ஒருவரை 'வேஷ்டியைத் துவைக்கின்றீரோ? என்று கேட்க வந்த இவர், [2]"கலையைச்சிலையிற் கலையாமல் தோயத்திற்றோய்த்துத் துவைக்கின்றீரோ?'' என்றார். வேறொருநாள் ஒருவர், "உண்டு வந்தீரோ?" என்று வினவின பொழுது, "உண்டு உவந்தீரோவா?" என்று பிரித்துக் கூறிச்சிறிது மகிழ்ச்சிகொண்டார்.
----
[2]. ஆடையைக் கல்லில் கலையாமல் நீரில் தோய்த்துத் துவைக்கின்றீரோ வென்பது இதன் பொருள்.
---------
ஒரு நாள் சாப்பாட்டு விடுதியின் சுவரிற் பின் வரும் பாடல் மாக்கல்லால் எழுதப்பட்டிருந்தது:-
"இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணரு க் கடி சிலிட யாதுமிலை யெனலாற்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடஞ் சொன்மீன்."
(இதன் பொருள்:- இந்தத் தரும் சாலையில் இராத்திரியிலும் பகலிலும் சமைத்துப் பிறருக்கு இடுவதற்காக மடத்திலிருந்து வரும் அரிசிமுதல் மோர்வரையிலுள்ள பொருள்களைப் பெற்றுக்கொண்டு (உண்ண வருகின்ற) பிராமணர்களுக்கு (உணவளிப்பதற்கு) ஒன்றுமில்லை யென்று (இங்குள்ளோர்) சொல்லுவதால், (இச்செய்தியை) அழகிய சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லுங்கள்.அரி - அரிசி, மதிதம் - மோர், அடிசில்-உணவு.)
அங்கே சென்று உண்டுவந்த ஒரு மாணாக்கர், சுவரில் இச்செய்யுள் எழுதியிருந்ததைக்கண்டு ஞாபகப் படுத்திக்கொண்டு பிற்பகலிற் பிள்ளையவர்கள் பாற் பாடங்கேட்பதற்காக வந்திருந்த தம் நண்பர்களிடம் தனித்துச் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தார். பிள்ளையவர்கள், "என்ன பேசிக்கொண்டி ருக்கிறீர்கள்?" என்று கேட்க அவர் அவர்களிடத்தும் சொன்னார். கேட்ட அவர்கள், "இதனை யார் செய்திருக்கக் கூடும்?" என்று ஐயமுற்று அவ்விடுதியில் உண்பவர்களுள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு ஆராயத் தொடங்கினார்கள். அப்பொழுது குமாரசாமித் தம்பிரான், "என்னிடம் பாடங்கேட்டு வரும் வண்டானம் எழுதியிருக்கலாம். அது பெரும்பாலும் அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம். தனக்கு ஆகாரம் சரியானபடி கிடைப்பதில்லை யென்று சில சமயங்களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்கவேண்டும் என்றார்.
"அவரைப் பார்க்கவேண்டும்; இங்கே வருவிக்க வேண்டும் " என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள்.
உடனிருந்தவர்களுக்கு அவரை எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வரவேண்டு மென்ற ஊக்கம் உண்டாயிற்று. சிலர் விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் அவர் அகப்பட வில்லை. அப்பால் ஊருக்கு வடபாலுள்ள தோட்டத்தில் ஒரு மரத்தடியில் அவர் ஏதோ யோசனை செய்து கொண்டிருத்தலைக் கண்டார்கள். அப்பொழுது பிற் பகல் இரண்டுமணி இருக்கும். கண்டு அழைக்கையில் அவர் விரைவில் எழவில்லை. சென்றவர்கள், "ஓய்! உமக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. வாரும். பிள்ளையவர்கள் அழைக்கிறார்கள்" என்று கூறி அவரைப் பிள்ளையவர்களிடம் அழைத்து வந்தார்கள்.
அவர் யாதுமறியாதவராய் அழைத்தது எதற்காகவோ வென்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் அவரை இருக்கச்செய்து, "இந்தப் பாடலைச் செய்தவர் யார்?" என்று அன்புடன் கேட்டபொழுது அவர், "நான் செய்யவில்லை * என்று கூறிவிட்டார். அப்பால் ஒருவரை உண்ணும் விடுதிக்கு அனுப்பி அப்பாடலை யாரெழுதிய தென்று விசாரிக்கச் செய்ததில் அப்பாடலின் விஷயத்தை அறியாத சமையற்காரர், "ஏதோ ஒருநாள்
வண்டானம் வந்து சிறிதுநேரம் நின்று எழுதிக் கொண்டிருந்தது '' என்றார். விசாரித்தவர் வந்து அதனைப் பிள்ளையவர்களிடம் சொன்னார். சொன்னவுடன் அவர்கள் பின்னும் அவரை வற்புறுத்திக் கேட்கையில், "சரியாக நடந்துகொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?'' என்றார். குமாரசாமித் தம்பிரான், "நீ அகாலத்திற் போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது என்று சினத்துடன் சொல்லுகையில் பிள்ளையவர்கள் "சும்மா இருக்கவேண்டும் " என்று கையமர்த்தி விட்டு, "இதனால் இவரே இதனைச் செய்தவரென்று தெரிகின்றது. இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும்பொழுது இதற்குமுன் இவர் பல
பாடல்கள் செய்து பழகி யிருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்கவேண்டும் " என்றார்கள்.
பின்பு விசாரித்ததில் தாம் யாதொன்றும் செய்ததில்லையென அவர் அஞ்சிக் கூறினார். "உமக்குப் பாடுகிற பழக்கம் உண்டென்பதை இப் பாடலே தெரிவிக்கின்றது. செய்திருந்தாற் சொல்லும் என்று பின்னும் பிள்ளையவர்கள் முதுகைத் தட்டிக்கொடுத்து வற்புறுத்திக் கேட்டார்கள். அப்பால் அவர், தாம் முன்னமே செய்திருந்தவற்றுள் சாதாரணமான சில பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல ஆரம்பித்தார். கேட்டுக்கொண்டிருந் தவர்களுக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அப்பால்சிறிது ஊக்கமுற்ற முத்துசாமி ஐயர் தாம் இயற்றிய திரிபு, யமகம், சிலேடை முதலியனஅமைந்த சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினார். தமது ஊருக்கு அருகிலுள்ள பசுவந்தனை யென்னும் தலத்தைப்பற்றித் தாம் இயற்றிய 'பசுந்தையந்தாதி; என்பதிலுள்ள சில பாடல்களையும், பின்பு சந்தங்கள் வண்ணங்கள் முதலியவற்றையும் சொன்னார். அவை சுவையுடையனவாக இருந்தன. பிள்ளையவர்கள் சுப்பிரமணிய தேசிகரவர்கள்மீது இயற்றியுள்ள [3]'துங்கஞ்சார்' என்ற கீர்த்தனத்தின் மெட்டில் தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கீர்த்தனம் ஒன்றையும் சொன்னார்; "உச்சஞ்சார் வண்டானத்துறை பிச்சுவைய தயாநிதியே என்ற அதன் பல்லவிமட்டும் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது.
அவர் சொன்ன செய்யுட்களைக்கேட்ட பிள்ளை யவர்கள் அவரைப் பார்த்து மிகவும் வருந்தி, "இப்படி ஒருவர் இருப்பது இதுவரையில் நமக்குத் தெரியவில்லையே! இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை இவர் கட்டிக்கொண்டு தமிழ்ச்சுவையை யறிந்த இந்த ஊரில் ஏனென்று கேட்பாரில்லாமல் எல்லாரும் பரிகசிக்கும்படி இருப்பது மிகுந்த வருத்தத் திற்கு இடமாக இருக்கிறது. உங்களுடைய அலட்சி யத்துக்கு இடையில் இவர் இவ்வளவு சுவையுள்ள செய்யுட்களைப் பாடினாரென்றால், நீங்கள் அன்புடன் ஆதரித்து வந்திருப்பின் இன்னும் எவ்வளவு பிர காசிப்பார்? இவர் சாதுவாக இருக்கிறாரென்று நீங்கள் புறக்கணித்ததால் தமிழையே புறக்கணித்தவர் களாகி விட்டீர்கள்.
---
[3]. இதனை ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்திற் காணலாம்.
----
இனி இவருடைய அருமையை நன்கு அறிந்து பாராட்ட வேண்டும். படித்தவர்களைப் படித்தவர்களே அறிந்து கொள்ளாவிட்டால் வேறு யார் அறியப் போகிறார்கள்? [4]சந்நிதானத்திற்கும் அறிவிக்கவேண்டும் " என்று மனங்கனிந்து கூறினார்கள். அருகிலிருந்த மாணவர்களுக்கெல்லாம் அப்பொழுதுதான் முத்துசாமி ஐயரின் கல்வித் திறன் நன்றாக விளங்கிற்று. தாங்கள் அவர்பாற் காட்டிய அவமதிப்பை நினைந்து இரங்கினார்கள்.
---
[4]. மடத்தில் ஆதீனத்தலைவர்களை இவ்வாறு வழங்குதல் மரபு.
----
பிள்ளையவர்கள், "சந்நிதானம் உமது செய்யுட்களைக் கேட்டால் மிக்க திருப்தியை யடையும். ஆதலின் வஸ்திரங் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் விஷயமாக ஒரு செய்யுள் செய்யும்" என்றார்கள். அவ்வாறே ஐந்து நிமிஷத்தில் அவர்,
"மாசாரக் கவிநுவல்வோர் குறைகடமை யடியோடே
மாற்ற வெண்ணித்
தூசார நிதியழண வடிகடா றெரிந்துபெறத்
துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற்
றிருக்கின் றேற்கின்
றுசார மளித்தருள்சுப்பிரமணிய தேசிகமெய்
யறிஞ ரேறே'
என்னும் செய்யுளைச் சொல்லிக் காட்டினார்.
(இதன்பொருள்:- சுப்பிரமணியதேசிக ! உண்மை அறிவுடையாருள் மேம்பட்டவ! மிக்க சுவை பொருந்திய செய்யுட்களைக் கூறுபவர்களுடைய குறைகளை முற்றும் ஒழிக்க நினைந்து உடை, ஹாரம்,பொருள், உணவு என்பவற்றை அடிகள் வழங்குதலை யறிந்து யானும் ஒன்றைப் பெறத் துணிந்து வந்தடைந் தேன். ஆதலின், வறுமை யென்னும் கொடிய நோயால் மிக்க துன்பத்தை அடைந்திருக்கும் எனக்கு இன்று ஆடை வழங்கியருளல் வேண்டும். சாரக்கவி - சுவையையுடைய செய்யுள், தூசு ஆடைஆ ஆரம்- ஹாரம், ஏசு ஆர-ஏசுதல் பொருந்த, ஆசாரம் - ஆடை.)
இதனைக்கேட்ட பிள்ளையவர்கள் மிக மகிழ்ந்து, "சந்நிதானத்தினிடம் இவரை அழைத்துச் சென்று இப்பாடலைச் சொல்லிக் காட்டுவித்து இங்கே நிகழ்ந்தவற்றையும் தெரிவிக்கவேண்டும்" என்று என்னிடம் சொன்னார்கள். அப்படியேநான் அவரைத் தேசிகரவர்கள்பால் அழைத்துச்சென்று நிகழ்ந்த வற்றையெல்லாம்கூறி அச்செய்யுளைச்சொல்லச்செய் தேன். கேட்ட தேசிகரவர்கள் அப்பாடலின் சுவை யையறிந்து இன்புற்றதோடு சரிகைக் கரையுள்ள இரண்டு ஜோடி வஸ்திரங்களை அளித்து, 'உடுத் துக்கொண்டு பிள்ளையவர்களிடம் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அப்படியே அவர் பிள்ளையவர்களிடம் வந்தார். கண்ட யாவரும் மகிழ்ந்தார்கள்.
அதுமுதல் மாணாக்கர்கள் அவரிடம் பிரியத்துடன் நடக்க ஆரம்பித்தனர்; அவரும் எல்லாரோடும் பேசிப் பழகி வந்தார். நூல்களிலுள்ள பாடல்களைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், முதலாவது இது; இரண்டாவது இது; ;இதில் இன்ன பாகம் சுவையுடையது' என்று கூறுவார். செய்யுட்களின் சுவையை அறிந்து தரம் கூறுதலில் அவர் வல்லவராக இருத்தலை நான் பன்முறை கேட்டறிந்திருக்கிறேன்.
பிள்ளையவர்கள் காலத்திற்குப் பின்னரும் சில காலம் அவர் திருவாவடுதுறை மடத்திலிருந்து பாடங் கேட்டனர். பின்பு தம்மூருக்குச் சென்றார். பல பிரபுக்களையும் ஜமீன்தார்களையும் கண்டு அவர்கள் மீது பாடி அவர்களை உவப்பித்தும், பழைய நூல்களில் உள்ள சுவையை எடுத்துக் காட்டியும் காலங்கழித்து வந்தார். இடையிடையே சிலசமயம் திருவாவடு துறைக்கு வந்து செல்வதுண்டு.
நான் கும்பகோணத்திற்கு வேலையாகச் சென்ற பின்பு ஒருசமயம் திருவாவடுதுறைக்கு வந்து தேசிக ரிடம் செல்லும் சமயத்தில், உள்ளே செல்லச் சமயம் பார்த்துக்கொண்டு வாயிலில் நின்ற அவரைப் பார்த்து,
இன்னும் கலியாணம் இல்லையா?'" என்றேன். அவர் [5]கலியாணம் இல்லை கலியாணம் இல்லை "என்றார். அந்த விடையில் 'மணமாகவில்லை' என்ற பொருளும் 'பணம் இல்லை' என்ற பொரு ளும் சிலேடையாக அமைந்திருக்கின்றன.
----
[5]. கலியாணம் - விவாகம், பணம்.
----
ஊற்றுமலை ஜமீன்தாராக இருந்த ஹ்ருதயாலய மருதப்பத் தேவரிடம் ஒருசமயம் அவர் சென்று ஜமீன்தார் விஷயமாகச் [6]சில செய்யுட்களைப் பாடிக்காட்டித் தமக்கு விவாகம் ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஜமீன்தார், "நீர் முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன் என்றார். இவர் தம்மூர் சென்று சிலகாலங் கழித்து வந்து தமக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டதென் றும் பொருளுதவி செய்யவேண்டுமென்றும் கூறினார்.
---
[6]. இச்செய்யுட்கள் ஹ்ருதயாலயமருதப்பத்தேவர் பிரபந்தத் திரட்டிற் காணப்படும்.
-----
ஜமீன்தார்:- எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்?
முத்துசாமி ஐயர் :- நானூறு ரூபாய் தருவே னென்றீர்கள்.
ஜமீன்தார்:- இராதே; அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே.
முத்து:- (அச்சங்கொண்டவர்போல)முந்நூறு தருவேனென்றீர்கள்.
ஜமீன்தார்:- அப்படியும் சொல்லவில்லையே.
முத்து:- இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்.
ஜமீன்தார்:- என்ன, பொய் சொல்லுகிறீரே!
முத்து :- இல்லை! நூ நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.
ஜமீன்தார்:- பின் எதற்காக நானூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?
முத்து:- நான் உள்ளத்தைத் தானே சொன்னேன். நீங்கள், "நான் நூறு தருவேன்" என்று சொல்லவில்லையா? முன் (நான் வந்தபொழுது) [7]நூறு தருவதாகச் சொல்லவில்லையா? இரு (காத் திரு); நூறு தருகிறேனென்றதும் பொய்யா?
இவ்வாறு உடன் உடன் சாதுரியமாக விடை பகர்ந்ததைக் கேட்ட ஜமீன்தார் வியந்து தாம் வாக்களித்த நூறு ரூபாயோடு மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக அளித்தார்.
1887- ஆம் வருஷத்திற்குப் பின் முத்துசாமி ஐயரை நான் பார்க்கவில்லை. அக்காலத்திற்கூடத் தாமாக ஒருவரிடம் பேசாமையும், வலிந்து ஒருவரிடம் பழகாமையுமாகிய பழைய இயல்புகள் அவரிடம் காணப்பட்டன. இத்தகைய அறிஞரிடம் உல கியலறிவு இல்லாமையே அவரைப் பிரகாசிக்கச் செய்யவில்லை; ஆனாலும், தெரிந்தவர்கள் அவரைப் பாராட்டிக்கொண்டுதான் இருந்தார்கள்.
[7]. சிலேடையில் தந்நகர றன்னகர பேதம் இல்லை; அன்றியும் பேச்சில் இத்தகைய பேதம் காணற்கரியது.
----------
6. கலியாணப் படித்துறை
சற்றேறக்குறைய 60 -வருஷங்களுக்கு முன்பு திருவாவடுதுறையில் சுப்பராயக் குருக்கள் என்று ஓர் ஆதிசைவர் இருந்தார். அவருடைய மனைவி விவாகமான சில வருஷங்களுக்குப்பின் இறந்து விட்டாள். அதுமுதல் சுப்பராயக் குருக்கள் தனியாகவே இருந்து வந்தார். அவர் திருவாவடுதுறை ஸ்ரீ கோமுத்தீசுவரர் திருக்கோயிற் பூஜகர்.
திருவாவடுதுறை ஆதீனத்துத் தலைவர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்யும் பொழுதெல்லாம் ஸ்வர்ண புஷ்பமாக அரைக்கால் ரூபாய் முதல் ஒரு ரூபாய் வரையில் சமயத்திற்கு ஏற்றபடி அளிப்பது வழக்கம். திருவிழாக் காலங்களில் அவருக்கு அதிகமான வரும் படியும் கிடைக்கும். இப்படியே அவ்வப்போது கிடைத்துவந்த பணத்தைச் சுப்பராயக் குருக்கள் சேர்த்து வைத்தார். கோயிற்பிரசாதத்தை எடுத்துக் கொண்டு வந்து தாமே ஏதேனும் வியஞ்சனம் செய்தாவது பிறர் வீட்டில் வாங்கியாவது உண்டு சுகமாக வாழ்ந்து வந்தார்; ஆதலின் அவருக்குப் பணச் செலவே இல்லை. அவரிடத்திலிருந்த பணம் ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் வளர்ந்தது. எல்லாரும், "சுப்பராயக் குருக்களுடைய பணம் குட்டிபோட்டுக் கொண்டிருக்கிறது" என்று சொல்லிக் கொள்வார்கள்.
கோயிலிலே பூஜை செய்வதும் பிரசாதத்தை உண்பதும் ஒழிந்த நேரங்களில் சீட்டாடுவதுமே அவருடைய பொழுதுபோக்காக இருந்தன. இப்படியே பல வருஷங்கள் இன்பமாகக் கழிந்தன. ஆயிர ரூபாய்க்குமேல் அவரிடம் பொருள் சேர்ந்தது. அவருக்கு 58 பிராயம் ஆயிற்று. நெடுங் காலமாக உழைத்தவராதலின் உடலில் தளர்ச்சி உண்டாயிற்று. அடிவயிற்றில் வீக்கம், காலில் வீக்கம் முதலியனவும் இருந்தன. அக்காலத்தில் அவருடைய உறவினர்களிற் சில முதிய கிழவிகள் அவரைக்கண்டு, "இப்படியே இருந்து நீ செத்துப் போனால் உன் பேரைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? பெண்டாட்டியா? பிள்ளையா? உனக்கு ஒரு வரும் இல்லையே! பொன்காத்த பூதமாக இருக்கியே. நாளைக்கு எவனாவது கொள்ளி வைத்துவிட்டு நீ எவ்வளவோ சிரமப்பட்டுச் சேர்த்த பணத்தைக் கொள்ளை கொண்டு போகப் போகிறான்! இப்படி வீணாக நீ பணம் சேர்ப்பதில் என்ன பிரயோசனம்?" என்றார்கள். வேறு சிலர், "உன்னைம் போன்ற பைத்தியக்காரனை நாங்கள் பார்த்ததே இல்லை. கைந்நிறையப் பணம் வைத்துக்கொண்டு தனிமரம் போல நிற்கிறாயே. வீடு நிறையப் பெண்டு பிள்ளைகளோடு இருக்கவேண்டாமா? பிள்ளைகள் இல்லாவிட்டால் பாதகமில்லை. ஒரு பெண்டாட்டி யாவது இருக்கக் கூடாதா? எவ்வளவோ பெண்கள் கிடைப்பார்களே. பேசாமல் ஒரு பெண்ணைப் பார்த்துக் கலியாணம் பண்ணிக்கொள், எத்தனை காலம் இந்தக் கோயிற்சோற்றைத் தின்பாய்? வாய்க்கு ருசியாக ஒரு குழம்பு, கறி இவைகளோடு பெண்டாட்டி ஒருத்தி சமைத்துப் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உனக்கென்ன குறை? பணம் இல்லையா ? வீடு இல்லையா?" என்றார்கள்.
அதுவரையில் கலியாணத்தைப் பற்றிக் கனவிலும் நினைத்தறியாத குருக்களுக்கு அவர்களுடைய உபதேசத்தால் சிறிது சபலம் உண்டாயிற்று. ''எனக்கு யார் பெண் கொடுப்பார்கள்?" என்று கேட்டார் அவர்; "நன்றாயிருக்கிறது! உனக்கா பெண் அகப்படமாட்டாள்! அன்றாடங் காய்ச்சிக் ளெல்லாம் பெண்டாட்டியோடு வாழ்கிறார்களே! உனக்கென்ன குறைச்சல்! இந்த நிமிஷத்திலே நூறு பெண்கள் உன் காலில் வந்து விழுவார்கள். நீதான் சம்மதிக்க வேண்டும்" என்று சொன்னார்கள் அவர்கள்.
"இவ்வளவு வயஸுக்குமேல் எனக்குக் கலியாணம் எதற்கு?"
''எதற்கா? நீ கீழே படுத்துக்கொண்டால் உனக்கு யார் கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்? கையும் காலும் திடமாக இருக்கிறவரையில் மாமா, சிற்றப்பா, பெரியப்பா என்று எல்லோரும் வருவார்கள்; பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். கொஞ்சம் தலையிலே பற்றுப் போட்டால் வெந்நீர் கூட ஒருவரும் வைத்துக் கொடுக்கமாட்டார்களே. தெரியாமலா தாய்க்குப் பின் தாரம் என்று சொல்லுகிறார்கள்? ஒரு பெண்கட்டையிருந்தால் சமைத்துப் போடவும், வீட்டைப் பார்த்துக்கொள்ளவும் எவ்வளவு அனுகூலமாக இருக்கும்? வீட்டுக்கு லக்ஷ்மீகரம் உண்டாக்குகிறவள் பெண்டாட்டியல்லாமல் வேறு யார்?"
"நான் இப்போது கலியாணம் பண்ணிக் கொண்டால் பணம் அதிகமாகக் கேட்பார்களே?''
"அதனால் என்ன? பணத்தை யாருக்காக நீ சேர்த்து வைக்கிறாய்? நாளைக்கு யாரேனும் ஒருவன் கொண்டுபோவதைவிட ஒரு பெண்ணை உத்தேசித்து நீயாக ஒருவனுக்குக் கொடுப்பது குறைவா?'
இப்படியே பலர் பலவிதமாகப் பேசிக் குருக்களுக்குக் கலியாண ஆசையை மூட்டிவிட்டார்கள். அவருக்கு அந்த ஆசை யிருப்பதை அறிந்த சில ஆதிசைவர்கள் தங்கள் தங்கள் பெண்களை அவருக் குக் கொடுக்க முன்வந்தார்கள்; ஒருவரை யொருவர் முந்திக்கொண்டனர். அவர்களுள் ஒருவர் ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதனைக் கொடுத் தால் தம் பெண்ணைக் கலியாணம் செய்து தருவதாக உறுதி கூறினார். குருக்களும் இசைந்தார். நிச்சய தாம்பூலத்தைத் தம்முடைய வீட்டில் சிறப்பாக நடத்த வேண்டுமென்பது குருக்களுடைய எண்ணம்; கலியாணத்தையும் தம் வீட்டிலேயே நடத்த வேண்டு மென்று சொல்லிப் பெண் வீட்டாரது உடம்பாட்டைப் பெற்றார்.
ஒரு நாள் விடியற்காலத்தில் நிச்சய தாம்பூல முகூர்த்தமும், பிறகு கலியாண முகூர்த்தமும் நடத்த ஏற்பாடாயிற்று. அன்று கோயில் வாத்தியக்காரர்கள் குருக்களின் விருப்பப்படி வந்து வாசித்தார்கள். சில உறவினர் வந்திருந்தனர். கஞ்சனூரிலிருந்து புரோகிதரும் வந்திருந்தார். குருக்கள் தம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடியே வருவோரை முக மலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்து உள்ளே போகும்படி சொல்லிக்கொண்டிருந்தார். நின்றும் நடந்தும் உபசரிக்கும் சக்தி அவரிடம் இல்லை ; உடல் அவ்வளவு தளர்ந்திருந்தது. காலில் சிறிது வீக்கம் இருந்தது; கடைவாய் வெந்திருந்தது; தலைமயிர் நரைத்து அவருடைய முதுமையைப் பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது.
அப்பொழுது கோட்டூர்ச் சுப்பிரமணிய ஐய ரென்ற ஒரு கனவான் அவர் வீட்டு வழியே மடத்திற் குச் சென்று கொண்டிருந்தார். அவர் திருவாவடுதுறை மடத்திற் பழக்கமுடைய செல்வர்; திருவாவடுதுறையிலுள்ளார் யாவராலும் நன்கு மதிக்கப்படுபவர். அவர் வீதிவழியே செல்லும் போது சுப்பராயக் குருக்களது வீட்டில் ஒரு நாளும் இல்லாத வாத்திய கோஷமும் ஜனக்கூட்டமும் இருப்பதைக் கவனித்தார்; "இவர் வீட்டில் என்ன விசேஷம் நடக்கிறது?' என்று எண்ணிக்கொண்டே அவ்வீட்டில் நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட குருக்கள் இருந்தபடியே, "வரவேண்டும்; வரவேண் டும்; உள்ளே போய்ச் சந்தன தாம்பூலம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி உபசரித் தார்.
சுப்பிர :- இங்கே என்ன விசேஷம்?
குருக்கள் :- இன்றைக்கு நிச்சயதாம்பூல முகூர்த்தம். தாங்கள் இருந்துபோக வேண்டும்; கலியாணத்தையும் நடத்திவைக்க வேண்டும்.
சுப்பிர:-யாருக்குக் கலியாணம்?
குருக்கள்:- எனக்குத்தான்; தாங்கள் நடத்தி வைக்க வேண்டும்.
சுப்பிரமணிய ஐயர் குருக்கள் கூறியதை நம்பத் துணியாமல்,"உமக்கா?" என்று கேட்டார்.
"ஆமாம்'' என்றார் குருக்கள்.
சுப்பிரமணிய ஐயருக்கு முதலில் மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று; அடுத்த நிமிஷத்தில் அது பெருங்கோபமாக மாறியது; அவரை அறியாமலே அவர் கை சுப்பராயக் குருக்கள் கன்னத்தில் அறைந் தது; "சீ! கிழட்டுப் பிணமே! உனக்குக் கலியாணம் வேண்டியிருக்கிறதா? எழுந்திருந்து நடக்கக் கூடச் சக்தியில்லையே! நீ கலியாணம்
செய்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்? அநியாயமாக ஒரு பெண்ணைக் கெடுக்கத் துணிந்தாயே! எந்தப் பைத்தியக்காரன் உனக்குப் பெண்ணைக் கொடுக் கத் துணிந்தான்? அந்தப் பேராசைக்காரனுக்குப் பணம் பெரிதாகப் போய்விட்டது போலிருக்கிறது. உனக்குக் கொடுப்பதை விட எங்கேயாவது ஒரு பாழுங் கிணற்றில் அந்தப்பெண்ணைத் தள்ளி விடலாமே. கலியாணம் பண்ணிக் கொள்கிறேனென்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? இனிமேல் உனக்குப் பெண்டாட்டி எதற்கு?" என்று மேலும் மேலும் கோபத்தோடு பேசினார்.
குருக்கள் நடுங்கிப் போய்விட்டார். சுப்பிரமணிய ஐயர் உள்ளே நுழைந்து, 'யார் இவனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்தான்? இந்த அக்கிரமம் தெய்வத்துக்கு அடுக்குமா? அவன் இன்றைக்கே இங்கிருந்து ஓடிப்போக வேண்டும். இல்லையானால் தக்கபடி தண்டனை கிடைக்கும் '' என்று கர்ஜித்தார். புரோகிதரைப் பார்த்து, "இதுதான் வேதாத்தியயனத்தின் பலனோ? இங்கே இருந்தால் இனிமேல் உம்மை யாரும் எதற்கும் கூப்பிடாதபடி செய்து விடுவேன், ஜாக்கிரதை; ஊருக்குப் போய்விடும்” என்று அதட்டினார் ; வாத்தியக்காரர்களை நோக்கி, "இப்போதே ஓடிவிடுங்கள்; ஒரு நிமிஷமாவது இங்கே தாமதித்தால் பண்டார சந்நிதிகளிடம் தெரிவித்து உங்கள் வாயில் மண்ணைப் போட்டு விடுவேன் " என்று வது துரத்தினார்.
அதனோடு நில்லாமல் வெளியில் வந்து நடுவீதியில் நின்றுகொண்டு, 'கூகூ! அக்கிரமம்! அக்கிரமம் ! பழி ! பழி ! '' என்று கைகளைத் தூக்கிக் கொண்டும் மேலாடையை எடுத்தெறிந்து கொண்டும் குதித்துக் குதித்துக் கூவினார். அவருடைய சப்தத்தைக் கேட்டுப் பலர் அங்கே வந்து கூடிவிட்டனர்; "என்ன? என்ன? யாராவது கிணற்றில் விழுந்து விட்டார்களா? தீப்பிடித்துக் கொண்டதா?" என்று ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
"சுப்பராயக் குருக்கள் கலியாணம் செய்து கொள்ளப்போகிறாராம். அநியாயமாக ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பாழாகப் போகிறது. அக்கிரமம்! அக்கிரமம்!" என்று சுப்பிரமணிய ஐயர் பெருங் கூப்பாடு போட்டார்.
இந்தக் கலவரத்தில் நிச்சய தாம்பூல முகூர்த்தத்திற்கு வந்த உறவினர்களும் பெண்ணைக் கொடுக்க வந்தவரும் பிறரும், "பெற்றோம், பிழைத்தோம்" என்று தங்கள் தங்கள் ஊருக்குப் போய் விட்டார்கள். குருக்கள் கலியாணமும் நின்றது ; ஓர் இளம்பெண்ணுக்கு நேரவிருந்த விபத்தும் நீங்கியது.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் சில காலம் வரையில் குருக்களுக்கு மன வருத்தம் சிறிது இருந்தது. பிறகு யோசிக்க யோசிக்கத் தாம் கலியாணம் செய்துகொள்ளாமல் இருந்ததே நன்மை யென்பதை அவர் உணர்ந்தார். அயலிடங்களில் முதிர்ந்த பிராயத்தினர் இளம்பெண்களைக் கலியாணம் செய்து கொண்டு படும் பாடுகளும், தம்முடைய இளைய மனைவியருக்கு அடிமையாகித் தமக்கு யாதோர் உரிமையு மின்றிச்சிறைப்பட்டு இருக்கும் பல கணவர்களுடைய துன்பங்களும் அவருடைய நினைவுக்கு வந்து அவரது சபலத்தை அடியோடு மாற்றிவிட்டன. அப்பால் ஒரு முறை நான் அவரைக் கண்ட காலத்தில் தெளிவடைந்த அறிவோடு அவர் என்னை நோக்கி, "சுப்பிரமணிய ஐயர் கலியாணத்தைத் தடுத்தது மிகவும் நன்மையாயிற்று; அது வரவரத்தான் எனக்குத் தெரிகிறது" என்று சொன்னார். தாம் எவ்வளவோ நாட்கள் சிந்தித்து முடிவுகண்ட அந்த உண்மையை அவர் அப்பொ ழுது வெளியிட்டார். அவருடைய வார்த்தைகள் பிறர் மதியீனத்தால் அகாலத்தில் மணஞ்செய்து கொண்டு படும் துன்பங்களை அறிந்ததனால் எழுந் தவையென்றே நான் உணர்ந்தேன்.
பிறகு சுப்பராயக் குருக்கள் தம்மிடமிருந்த பொருளைச் சில அன்பர்களுடைய அறிவுரையின்படி திருவாவடுதுறையில் காவிரிநதியில் ஸ்நானம் செய்யும் கட்டத்தில் ஒரு படித்துறை கட்டுவதற்கு உதவினார். வேறு சிலரிடம்பெற்ற தொகையையும் கொண்டு அப்படித்துறை அக்கிரகாரத்தாரால் கட்டப்பட் டது. படித்துறையைச் சார்ந்து ஒரு மண்டபமும் உள்ளது. படித்துறை கட்டப்பட்ட பிறகு குருக்களுக்கு இருந்த மகிழ்ச்சி மிக அதிகம். "நம்முடைய வாழ்வில் ஒரு நல்ல காரியத்தைச் செய்தோம்" என்ற திருப்தியுண்டாகி அவருக்கு இல்லற இன்பத்தைக் காட்டிலும் அது பெரிய மகிழ்ச்சியை விளைவித்தது.
முற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின்பு நான்கு வருஷங்களே சுப்பராயக் குருக்கள் வாழ்ந்திருந்தார். இச்செய்தியை அறிந்தவர்கள் அப்படித்துறை யைப்பற்றிப் பேசும்போது 'கலியாணப்படித்துறை ' என்று குறிப்பது வழக்கம். சுப்பராயக் குருக்களுடைய பொருளுதவியால் கட்டப்பட்ட படித்துறை இன்றும் அவருடைய பெயரை நினைவுறுத்திக் கொண்டு பயனளித்து வருகின்றது.
------------------
7. திருக்குறளால் வந்த பயன்
சரசுவதி மகால் தஞ்சாவூர் அரண்மனையில் என்னும் பெயர் பெற்ற பழைய புத்தகசாலை ஒன்று உண்டு. அங்கே உள்ள ஏட்டுச்சுவடிகளையும் அச்சுப் புத்தகங்களையும் பார்க்கும்பொருட்டு ஒவ்வொரு நாளும் பலர்சென்று வருவார்கள். சரபோஜி அரசர் அமைத்த பல தர்மங்களுள் இப்பொழுது மிக்க பயனுடையதாக விளங்குவது அந்தப் புத்தகசாலை. அதில் அம்மன்னர் காலத்தில் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. தென்மொழி, வடமொழி, தெலுங்கு, மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் உள்ள சுவடிகள் அங்கே உண்டு. சங்கீதம், பரதசாஸ்திரம், வைத்தியம், சோதிடம், கஜசாஸ்திரம், அசுவ சாஸ்திரம் முதலிய பலவகைக் கலைகளுக்குரிய நூற்சுவடிகளும் இருந்தன. அந்த அந்த வகையில் தேர்ச்சி பெற்ற புலவர்களைக் கொண்டு அந்நூல்களை வருவித் துச் சரபோஜி மன்னர் தொகுத்து வைத்தார். அப் புத்தக சாலையில் தமிழ் நூல்கள் பல சேகரிக்கப் பட்டதற்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியை நான் சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அது வருமாறு:-
சரபோஜி மன்னர் ஒரு முறை காசியாத்திரை சென்றார். அப்பொழுது கல்கத்தா நகரத்தில் இருந்த ராஜப் பிரதிநிதியைக் காண எண்ணினார். அவரைப் பார்க்க வேண்டியதற்குரிய அநுமதியை முன்னரே பெற்று ஏற்ற கையுறைகளுடன் சென்று கண்டார்.
அந்த ராஜப் பிரதிநிதி தமிழ் நாட்டிலுள்ள ஓர் அரசர் தம்மைப் பார்க்க வருவதை அறிந்து தமிழ்நாட்டின் சிறப்புக்களை விசாரித்து வைத் துக் கொண்டார். அவர் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இன்புற்றவர். அது தமிழ்நாட்டில் உண்டான சிறந்த நூலாதலின் தமிழ் மூலநூலைப்பற்றிச் சரபோஜி யரசரிடம் கேட் டுத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணியிருந்தார்.
சரபோஜியும் ராஜப்பிரதிநிதியும் வழக்கம் போல ஒருவருக்கொருவர் செலுத்தவேண்டிய மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ராஜப்பிரதிநிதி தஞ்சை யரசரைப் பார்த்து, "தமிழ்நாட்டில் உண்டான திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை நான் படித்து இன்புற்றதுண்டு. அதன் தமிழ்மூலத்தைப்பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆதலின் சில செய்யுட்களைச் சொல்ல வேண்டும் என்றார்.
அரசர் அதுகாறும் தமிழின்பால் கவனங் கொண்டவரல்லர். தம் அரண்மனையில் சிலபுத்தகங்கள் உள்ள ஒரு சிறிய புத்தகசாலை இருப்பதை மட்டும் அறிந்திருந்தனர். பிரயாண காலத்திலும் வடமொழி, மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் தேர்ச்சி பெற்ற வித்துவான்களையே உடன் வைத்திருந்தார். அவருடைய தாய்ப்பாஷை மகாராஷ்டிர மாதலின் திருக்குறளைப்பற்றி அந்தச் சமயத்தில் தாமாகவேனும் அருகிலுள்ள வித்துவான்கள் வாயிலாகவேனும் அறிந்து சொல்லும் நிலை அவருக்கு இல்லை. இன்னது செய்வதென்று அவருக்கு முதலில் தோன்றவில்லை. மிகக்கூரிய அறிவுடையவராதலின் அரசர் அப்பால் ராஜப்பிரதிநிதியை நோக்கி, "என் னுடைய புத்தகசாலையில் இதைப்போல ஆயிரக் கணக்கான தமிழ் நூல்கள் இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் நான் தெரிந்துவைப்பது முடியாத காரியம். தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் ஊர் போய்ச்சேர்ந்தவுடன் அந்தப் புத்தகத்தை அனுப்புகிறேன்'' என்றார். ராஜப்பிரதிநிதி, "இதைப் போல எவ்வளவு தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின் றன?" என்று கேட்டார். "எவ்வளவோ இருக்கின்றன. ஊர் போனவுடன் அவற்றின் நாமாவலியையும் அனுப்புகிறேன் ' என்றார் அரசர். ராஜப் பிரதிநிதி அங்ஙனமே செய்யலாமென்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.
தாம் அரசராகவுள்ள நாட்டுக்குரிய மொழியில் கவனம் செலுத்தாதிருந்தமை பெருங்குறை யென்பது அதன்பின்னரே சரபோஜியரசர் மனத்திற் பட்டது; 'இனி அங்ஙனம் இருத்தல் கூடாது; தமிழ்ச்சுவடிகளைத் தொகுத்துத் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து வரவேண்டும்' என்ற உறுதியை அவர் மேற்கொண்டார். ஆதலின் தஞ்சாவூருக்கு மீண்டவுடன் எங்கெங்கே தமிழ்ப்புலவர்கள் உள்ளார்கள் என்பதை அறியத் தலைப்பட்டனர். தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் விலை கொடுத்து வாங்கித் தொகுத்தார். அப்பொழுது ஒவ்வொரு நூலிலும் பல பிரதிகள் கிடைத்தன. திருக்குறளில் எத்தனையோ சுவடிகள் வந்து குவிந்தன. தமிழ் வித்துவான்களுடைய பரம்பரையில் பிறந்தவர்கள் பலர் தங்கள் முன்னோரால் சேர்த்து வைக்கப்பட்ட சுவடிகளைப் பயன்படுத்த வகையறியாமல் இருந்தனர். அவை இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பது அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அதனால் பலர் பதினெட்டாம் பெருக்கிற் காவிரியாற் றிலே சுவடிகளை விட்டும், அவற்றை நெய்யில் தோய்த்து விதிப்படி ஆகுதி பண்ணியும் அழித்து வந்தனர். தங்கள் வீட்டிலுள்ள சுவடிக் குவியல்களை வேறு வகையிலே பலர் குறைத்து வந்தனர். அத்தகைய சமயத்தில் சரபோஜியரசர் செய்த முயற்சிகளால் அச்சுவடிகளுக்கு மதிப்பும் உயிரும் உண்டாக ஆரம்பித்தன. தங்கள் வீட்டிற் சுமை யாகக் கிடந்த சுவடிகளுக்கு விலை கிடைப்பதென்றால் யார் விடுவார்கள்? பலர் பல சுவடிகளைக் கொடுத்து விலைபெற்றார்கள். அக்காலத்தில் ஒரு சுவடியை ஏட்டிலெழுதவேண்டுமானால் நூலின் அளவுக்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட கூலி உண்டு. தஞ்சைப் புத்தகசாலைக்கு அரசர் புத்தகங்கள் வாங்கு கின்றாரென்பது தெரிந்தவுடன் அவற்றின் விலைகள் ஏறின. நான்கு ரூபாய் விலைமதிப்புள்ள புத்தகம் நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது. தமிழ்ப் புத்தகங்களை வாங்கியதோடன்றி அவற்றிற்கேற்ப மற்றப் பாஷைகளிலுள்ள புத்தகங்கள் பலவற்றையும் அரசர் வாங்கித் தொகுத்தார்.இதனால் சரசுவதி மகால் ஒரு பெரிய புத்தகசாலை யாயிற்று.
தமிழ் நூல்களைச் சேர்ப்பதற்கும் அவற்றின் சம்பந்தமான காரியங்களைக் கவனிப்பதற்கும் சில வித்துவான்களை அரசர் நியமித்தனர். அங்ஙனம் நியமிக்கப்பட்டவர்கள் கோடீச்சுரக்கோவை, திருவிடை மருதூர்ப் புராணம் முதலிய நூல்களை இயற்றிய கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகரும், காரைக்குறிச்சி வேலாயுத உபாத்தியாயர், திருவேங் கடத்தா பிள்ளை, சுப்பராயக் கவிராயர், வேங்கடாசலம் பிள்ளை முதலியோரும் ஆவர்.
தாம் வாக்களித்தபடியே சரபோஜியரசர், திருக்குறட் பிரதியையும், தமிழ் நூல்களின் நாமாவலியையும் ராஜப்பிரதிநிதிக்கு அனுப்பி மகிழ்வித்தார்.
அந்தக் காலத்தில் தமிழ் வித்துவான்களல்லாத சிலர் அந்தப் புத்தகசாலையிலுள்ள ஏட்டுப் பிரதிகளை ஜாப்தா பண்ணி வைத்திருந்தனர். அதனை நான் பிற்காலத்தில் பார்த்ததுண்டு. 'சிவமயம் நாலடியார், கணபதிதுணை நாலடியார், ராமஜயம் நாலடியார்' என்றும், 'நன்றாக குருவாழ்க குருவே துணை நாலடியார்' என்றும் புத்தகங்களின் பெயர்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. அதைப்பார்த்த சாதாரண ஜனங்களும் தமிழறிவில்லாத வேறு பலரும், "இத்தனை நாலடியாரா? இவ்வளவையும் எப்படி வித்துவான்கள் படிக்கிறார்கள்?" என்று ஆச்சரியமுற்றார்கள். ஏட்டில் எழுதுபவர்கள் தங்கள் தங்கள் மதக்கொள்கைக்குத் தக்கபடி கணபதி துணை யென்றும், சிவமயமென்றும், ஜிநாயநம: என்றும், பிறவாறும் முதலில் எழுதி விட்டுப் பிறகு நூற்பெயரை எழுதி யிருப்பார்கள். இடையே முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் இரா. ஆதலின் அவற்றைக் கண்டு ஜாப்தா செய்தவர்கள் தமிழறிவு இல்லாமையால் அவற்றைப் புத்தகப்பெயராக எண்ணிச் சேர்த்து எழுதிவிட்டார்கள்.
பின்பு தஞ்சையில் நீதிபதியாக இருந்தவரும் வடமொழி தென்மொழிகளிற் பயிற்சியுடையவருமாகிய பர்னல் துரை யென்பவர் அந்த ஜாப்தாவின் விசித்திர அமைப்பை அறிந்து வியப்பும் வருத்தமும் அடைந்தார். அவர் தக்க வித்துவான்களைக் கொண்டு ஒழுங்கான ஜாப்தா ஒன்றை எழுதச்செய்தார்; சில ஏட்டுச் சுவடிகளைக் காகிதத்தில் எழுதுவித்தார்; அங்கனம் செய்வித்த பிரதிகளைத் தம் நாட்டுக்குச் செல்லுகையில் உடன் கொண்டு சென்றார்.
சரபோஜியரசர் காலத்திற்குப் பின்பும் பர்னல் துரை வந்ததற்கு முன்புமாகிய காலத்தில் அப் புத்தகசாலையிலுள்ள நூல்களிற் பலவற்றைப் பலர் இரவலாக வாங்கிச்சென்று திருப்பிக் கொடாமல் இருந்து விட்டனர். அங்ஙனம் போன நூல்கள் பல. பர்னல் துரையின் கருத்து இதன்பால் செலுத்தப் பட்டபிறகே இத்தகைய குறைபாடு நீங்கி ஒழுங்கு ஏற்பட்டது. இன்றும் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் சரசுவதி மகாலில் காணப்படுகின்றன.
-------------
8. கண்ணீர் துடைத்த கரம்
பல ஆண்டுகட்கு முன் இத்தமிழ் நாட்டின்கண் ஓரூரில பெரிய செல்வரொருவர் வசித்துவந்தார். முன்னோர் தேடிவைத்த செல்வம் மிகுதியாக இருந்தமையால் தாமே உழைத்துச் சம்பாதிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போயிற்று. இன்ப நுகர்ச்சியிலேயே அவர் விருப்பம் மிக்கவரானார். சிறிதேனும் வருவாயில்லாத சிலர் அவருக்கு நண்பர்களாயினர். அவர்களால் அவருக்கு ஒரு பரத்தையின் தொடர்பு உண்டாயிற்று. நாளடைவில் அது முதிர்ந்தது. அவர் அப்பரத்தைக்கு விருப்பமுள்ள பொருள்களைத் தேடியளித்தும் அவளுடைய மனங்கோணாமல் நடந்தும் வந்தார். அந்தப் பழக்கத்தினால் தம்முடைய மனைவியினிடத்தில் அவருக்கு அன்பு ஒழிந்தது. நீராடி உண்பதற்குமட்டும் வீட்டுக்கு வருவார்; உண்ட பின்பு தம்மிடமிருந்த குதிரையின் மீதேறிக்கொண்டு விரைவாகப் பரத்தை வீடு சென்று அங்கே மற்றக் காலங்களை உல்லாசமாகக் கழித்து வருவார். அவர் தம்முடைய மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதே யில்லை. இங்ஙனம் பல வருஷங்கள் சென்றன.
இவ்வாறு அவர் இருப்பினும், அவருடைய மனைவி கற்பொழுக்கம் உடையவளாதலின், அவள் அவருக்கு விருப்பமான பலவகை உணவுகளை ஆக்கிக் காலதாமதமின்றி இடுவதிலும் பின்னும் வேண்டியவற்றைச் செய்வதிலும் சிறிதும் தவறிய தில்லை. 'எல்லாம் நம் ஊழ்வினையின் பயனே' என்று கருதி, 'இனி எப்பொழுதேனும் நல்லகாலம் உண்டாகும்படி அருள் செய்யவேண்டும்' என்று தன் குலதெய்வத்தை வேண்டி வந்தாள்.
அவர்கள் இங்ஙனம் இருப்பதை அம்மங்கை நல்லாளுடைய தந்தையார் அறிந்து மிகவருந்தினார்; தம் புதல்வியின்பால் மாப்பிள்ளைக்கு அன்புண்டாகும் படி செய்வதற்கு உரியவழி யாதென்று யோசித்து வந்தார். குதிரையின் மீது ஊர்ந்து செல்வதில் தம் மருகருக்கு விருப்பமிருப்பதை யறிந்து மிகச் சிறந்த தும் உயர்ந்த லக்ஷணங்களை யுடையதுமாகிய ஒரு குதிரையை வாங்கி அவருக்கு அனுப்பினார். அதனைப் பெற்ற மருகர் மகிழ்ந்து அக்குதிரையை உபயோகித்து வரலானார். பரத்தையின் வீட்டுக்குச் செல்லும் வேகம் அதனால் அதிகரித்தது.
குதிரையை மாமனாரிடமிருந்து பெற்ற சந்தோஷத்தால் அவருக்குத் தம்முடைய மனைவியிடம் சிறிது அன்புண்டாயிற்று. ஆதலின், அதற்கு முன்பெல்லாம் உண்டவுடன் புறப்பட்டுப் பரத்தை வீட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக்கொண்டிருந்த அவர் அதுமுதல் உண்டபிறகு சற்றுநேரம் இருந்து மனைவியாற் கொணர்ந்து வைக்கப்படும் தாம்பூலத்தைத் தரித்துக்கொண்டு செல்லலானார். அவருடைய மனைவியாகிய பெண்மணியும் அந்த அளவில் அதிக மகிழ்ச்சியை அடைந்து, 'கடவுள் கண்திறந்து பார்க்கும் காலம் வந்துவிட்டது' என்று நினைத்திருந்தாள்.
அந்தச் செல்வர் சிலகாலமாகத் தம்முடைய வீட்டில் தாம்பூலம் தரித்து வருவதைப் பரத்தை உணர்ந்தாள். அவர் வாயின் சிவப்பு அவளது கண்ணிற் சிவப்பை உண்டாக்கியது; 'எதனால் இந்த மாறுபாடு உண்டாயிற்று?' என்பதை அவள் ஆராய்ந்தாள்; மாமனார் விடுத்த குதிரையினால் அவரது உள்ளம் சிறிது மாறிக் குழைந்திருப்பதை அறிந்து, 'இந்தக் குதிரையை ஒழித்தற்கு வழிதேட வேண்டும்' என்று துணிந்தாள்.
சில நாட்கள் சென்ற பிறகு, அந்தப் பரத்தை தனக்குக் கடுமையான தலைவலி வந்ததாகச் சொல்லித் துடி துடிக்கலானாள். சாதாரணமாக இடும் மருந்து எதனாலும் அது நீங்கவில்லை. பிறகு அவளுக்குப் பழக்கமானவனும் அவள் கருத்தறிந்து நடப்பவனும் அவளாற் கொண்டாடப் படுபவனுமாகிய ஒரு வைத்தியன் வந்தான்; பார்த்தான்; "சரி, சரி! இந்தத் தலைவலிக்கு இந்த உலகத்திலுள்ள ஒரு வைத்தியனுக்கும் மருந்து தெரியாது. எங்கள் பாட் டனார் ஒருவருக்குத்தான் தெரியும். அதை அவர் இறந்து போவதற்குமுன் எனக்கு ரகசியமாகச் சொல்லியிருக்கிறார்" என்று பீடிகை போட்டான்; பிறகு, "இந்தத் தலைவலி மிகவும் பொல்லாதது. சென்ற வருஷம் அடுத்த ஊரில் ஒருத்திக்கு வந்தது. என்ன என்னவோ வைத்தியம் செய்து பார்த்தார்களாம்; கடைசியில் ஒன்றும் பலியாமல் அவள் இறந்து போய்விட்டாள். அப்புறந்தான் எனக்குத் தெரியவந்தது. முன்பே தெரிந்திருந்தால் அந்த உயிரைக் காப்பாற்றியிருப்பேன்” என்று பிரசங்கஞ் செய்தான்.
அருகில் இருந்தவர்கள், 'அதெல்லாம் இருக்கட்டும்; என்ன மருந்து போடவேண்டும்?" என்று கேட்டார்கள். அப்பரத்தைக்கு அன்பராகிய முற்கூறிய செல்வரும் அங்கே வருத்தத்துடன் வந்து ஓரிடத்தில் இருந்தார்.
''மருந்தா? அழகான ஒரு நல்ல குதிரையின் முன்னங்காலில் ஒன்றைக் குளம்புக்கு அருகில் வெட்டி அந்த ரத்தத்தைத் தடவினால் இது நீங்கும்" என்று வைத்தியன் சொன்னான். அருகில் இருந்தவர்கள், "குதிரையின் காலை வெட்ட யார் சம்மதிப் பார்கள்? வேறு மருந்து இருந்தால் சொல்" என் றார்கள். ''அதைத் தவிர வேறு மருந்தே இல்லை " என்றான் வைத்தியன்.
"குதிரைக்கு எங்கே போவது?" என்று தாய்க் கிழவி அழுதாள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செல்வர் அங்கே நிகழ்வனவெல்லாம் சூழ்ச்சி யென்பதை அறியாதவராகி, "குதிரைக் கென்ன பஞ்சம்? இதோ என் குதிரை இருக்கிறதே. இதன் காலை வெட்டி ரத்தத்தைத் தடவுங்கள்' என்றார்.
தாய்க்கிழவி, "ஐயோ! மெத்த அழகான குதிரையாயிற்றே! அதன் காலை வெட்டலாமா!" என்று இரங்குபவளைப்போலக் கூறினாள். "இவளைக் காட்டிலும் குதிரையா பெரிது?" என்று சொல்லி விட்டுத் தாமே வாளை எடுத்தார் செல்வர். உடனே அருகிலிருந்து ஒரு வேலையாள் அதனை வாங்கிக் கொண்டு சென்று அவ்வழகிய குதிரையின் காலை வெட்டி ரத்தத்தைக் கொணர்ந்தான்.
அந்த ரத்தம் பரத்தையின் தலையில் தடவப் பெற்றது; சிறிது நேரங் கழித்து அவள் தலைவலி நீங்கியவளைப்போல எழுந்தாள். அவளுடைய மாய வலையில் அகப்பட்ட செல்வர் பழையபடியே அவளோடு அளவளாவி வந்தார். அழகிய குதிரை உயிர் நீத்தது.
தன் தந்தை கொடுத்த குதிரையின்மேல் தன் கணவர் ஏறி வாராமைக்குக் காரணத்தை ஆராய்ந்த அச்செல்வருடைய மனைவி உண்மையை விசாரித்து உணர்ந்தாள்.பரத்தை செய்த வஞ்சகச் செயலால் அக்குதிரை மடிந்ததென்பதை அவள் ஒரு நாள் அறிந்தாள்; மிக்க மனவருத்தத்தோடு இருந்தாள்.
அன்று அவளுடைய கணவர் வழக்கப்படி வந்து நீராடிய பிறகு தலையைக் குனிந்துகொண்டே உண் டார். அப்பொழுது அவ்வுத்தமி மனவருத்தம் தாங்க மாட்டாத நிலையை அடைந்தாள். அவள் கண்களி லிருந்து நீர்த்துளிகள் நிலத்தில் விழுந்தன. அது கண்ட செல்வர் மேலே நிமிர்ந்து தம் மனைவியின் முகத்தைப் பார்த்தார். வசீகரிக்கும் தன்மையை யுடைய அம்முகத்திலுள்ள அழகிய கண்களிலிருந்து நீர் வழிந்தது. அம்முகத்தைப் பார்ப்பதைப் பல வரு ஷங்களாக ஒழிந்தவராதலின் தம்மையறியாமலே அவருக்கு இரக்க உணர்ச்சி உண்டாயிற்று. இருந்தபடியே மெல்லத் தம் இடக்கையினால் அவள் கண்ணீரைத் துடைத்தார்.
அந்தத் தண்ணரினைப்பெற்ற அம்மங்கை நல்லாள் அக்கரத்தைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு மேலும் மேலும் விம்மி விம்மி அழுதாள்; அழுது கொண்டே, "இந்த அருமையான மலர்க் கரத்துக்கு ஏதேனும் தீங்கு உண்டானால் என்ன செய்வேன்! இதுவும் குதிரையின் காலல்லவே!" என்று கதறினாள். அந்நங்கையின் நிலை செல்வருக்கு மிக்க இரக்கத்தை உண்டாக்கியது. அவள் கூறிய சொற்கள் அவருடைய இதயத்திற் பாய்ந்தன ; அவ்வார்த்தைகளால் அவருக்கு ஞானோதயமானதுபோல் உண்மை விளங்கியது. அதுவரையில் அத்தகைய உத்தமியைப் புறக்கணித்தது பிழையென்றும், வஞ்சகத்தினால் குதிரையைப் பரத்தை கொல்லச் செய்தாளென்றும் அறிந்துகொண்டார்; "மதிமோசம் போனேன்! உன்பாற் சிறிது அன்பை உண்டாக்கிய குதிரையின் காலுக்கு வந்த மோசம் உன் கண்ணீரைத் துடைத்த இந்தக் கைக்கும் வரும். ஆதலின் வருமுன் காப்பதே நலம்" என்று கூறித் தம் மனைவியை உவப்பித்தார்.
அக்காலமுதல் அவ்விருவருடைய இல்வாழ்க்கையும் இன்பம் மலிந்து விளங்கியது. அச்செல்வருடைய மாமனார் குதிரை காரணமாக அவ்விருவரிடையே அன்பு உண்டாகவேண்டுமென்று எண்ணினார்; அவர் நினைத்தபடி அக்குதிரை உயிரோ டிருந்து அவரிடையில் அன்பு வளரக் காரணமாகா விடினும், தன் உயிர் கொடுத்து அவ்வன்பு வளர்வதற்குக் காரணமாயிற்று.
இந்த வரலாற்றை அறிவிக்கும் பாடல் ஒன்று வருமாறு
"காமாயுதக்கண்ணி கோபம் பொருள்என்றன் கண்பனி நீர்
சீமான் கரத்திற் றுடைக்கரி தேசெக மேழமெச்சும்
கோமான் கரத்திற் குனிசிலை ராயன் குகன் சிலம்பில்
மாமாவின் காலல்ல வேமன்ன வாவுன் மலர்க்கரமே "
(காமாயுதம் - கருங்குவளை மலர். காமாயுதக்கண்ணி யென்றது பரத்தையை. மா மா - பெரிய குதிரை.]
இது தன் கண்ணீரைத் துடைத்த கணவரைப் வார்த்து மனைவி கூறியது.
-------------------
9. சிறந்த குருபக்தி
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்த மாணவர்களுள் சுந்தரம் பிள்ளையென்ற ஒருவர் அவரிடத்தில் மிக்க பக்தி உள்ளவராக இருந்தனர். அவருக்கு ஏதேனும் குறையிருக்கின்ற தென்பதை அறிவாராயின் எவ்வாறேனும் முயன்று அதனைப்போக்க முற்படுவார். அவரை யாரேனும் சற்றுக் குறைவாகப் பேசுவதைக் கேட்டால் அவரோடு எதிர்த்துப்பேசி அடக்கி அவரைத் தாம் செய்ததற்கு இரங்குமாறு செய்துவிடுவார்; உலக அனுபவம் மிக உடையவர்; சாதுர்யமாகப் பேசவல்லவர்; இன்ன காரியத்தை இன்னவாறு செய்யவேண்டுமென்று யோசித்து நடத்தும் யூகி. அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. அவருடைய நல்ல குணங்கள் அந்நண்பர்களை அவர் சொற்படி எந்தக் காரியத்தையும் இயற்றுமாறு செய்விக்கும்.
பிள்ளையவர்கள் ஒருசமயம் சென்னையிலுள்ள காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடமிருந்து திருத்தணிகைப் புராணத்தை வருவித்துத் தாமே பிரதி செய்து கொண்டு பொருளாராய்ந்து படித்து வருவாராயினர். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறு படலத்திற் சிலபாகத்திற்குச் செவ்வனே பொருள் புலப் படவில்லை. அதைப்பற்றி இயன்றவரையிற் பலரிடமும் சென்று சென்று வினாவினார்; விளங்க வில்லை. பின்பு, சிவதருமோத்தரமென்னும் நூலின் உதவியால் அப்பகுதியின் பொருள் விளங்கு மென்று ஒருவரால் அறிந்தார். உடனே அந்நூல் எங்கே கிடைக்குமென்று விசாரிக்கத் தொடங்கினார்; இன்னவிடத்திலுள்ளதென்பதுகூட அப்போது துலங்கவில்லை.
பின்பு பலவகையாக முயன்று வருகையில் அது திரிசிரபுரத்திலுள்ள ஓர் [1]அபிஷேகஸ்தரிடம் இருப்பதாகத் தெரியவந்தது. அவரிடம் சென்று தம்மிடம் அதனைக் கொடுத்தாற் பார்த்துக்கொண்டு சில தினங்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாகப் பிள்ளை யவர்கள் பலமுறை வேண்டியும் அவர் கொடுக்க வில்லை. வேறு தக்கவர்களைக் கொண்டும் கேட்கச் செய்தார். அம்முயற்சியும் பயன்படவில்லை; கேட்குந் தோறும் ஏதேனும் காரணங்களை அவர் கூறிக் கொண்டே வந்தார்; அது பூசையிலிருக்கிறதென்றும், அதனை அப்பொழுது எடுக்கக்கூடாதென்றும், அதனுடைய பெருமை மற்றவர்களுக்குத் தெரியாதென்றும் அதிலேயுள்ள ரகசியக் கருத்துக்கள் எளிதிற் புலப் படாவென்றும் பலபடியாகச் சொல்லிவிட்டார். பல முறை கேட்கக்கேட்க அவருடைய பிடிவாதம் பலப் பட்டு வந்தது. பொருள் தருவதாகச் சொன்னாற் கொடுக்கக் கூடுமென்று நினைத்த பிள்ளையவர்கள் தக்க தொகை தருவதாகவும் புத்தகத்தைச் சிலதினங்களில் திருப்பிக் கொடுப்பதற்காகத் தக்க பிணை தருவதாகவும் சொல்லிப்பார்த்தனர். எந்த வகையிலும் அவர் இணங்கவில்லை.
---
[1]. சைவ குரு.
----
பிள்ளையவர்களோ தம் முயற்சி சிறிதும் பயன்படாமையை யறிந்து மிகவும் வருந்தினர். 'புத்தகம் எங்கேயாவது இருக்குமோ வென்று தேடி யலைந்து வருத்தம் அடைந்தோம். இந்த ஊரிலேயே இருப்பதாகத் தெரிந்தும் கைக் கெட்டியது வாய்க்கெட்டாமலிருக்கிறதே! அந்தப் பிடிவாதக்காரருடைய நெஞ்சம் இளகாதா ?" என எண்ணி எண்ணி நைந்தனர்.
ஒருநாள் அவ்வெண்ணத்தினால் முகவாட்டமுற் றவராகி இருந்த ஆசிரியரைப்பார்த்த மேற்கூறிய சுந்தரம்பிள்ளை அவரருகிற்சென்று வணக்கத்தோடு நின்று, "இவ்வளவு கவலைக்குக் காரணம் என்ன ?” என்றனர். தாம் திருத்தணிகைப் புராணம் படித்துக்கொண்டு வருவதையும் அதிலுள்ள அகத்தியன் அருள்பெறு படலத்திற்குப் பொருள் புலப் படாமலிருப்பதையும் சிவதருமோத்திரம் இருந்தால் அந்தப் பாகத்தின் பொருளை எளிதில் அறிந்து கொள்ளலாமென்று கேள்வியுற்றதையும் அந்நகரில் உள்ள அபிஷேகஸ்தர் ஒருவரிடம் அந்நூல் இருப்பதாக அறிந்ததையும் பலவகையாக முயன்றும் அதனை வாங்க முடியாமையையும் அவர் சொன்னார். சுந்தரம் பிள்ளை,"அப்பிரதி அவரிடத்தில் இருப்பது உண்மையாக இருந்தால் எப்படியும் கூடிய விரைவில் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஐயா அவர்களுக்கு அதைப்பற்றிச் சிறிதேனும் கவலை வேண்டாம்" என்று சொல்லிப் போயினர். தாம் பலவாறு முயன்றும் கிடையாத அப்புத்தகம் சுந்தரம் பிள்ளைக்கு மட்டும் எவ்வாறு கிடைத்து விடுமென்று அவர் எண்ணி யிருந்தனர்.
இப்படியிருக்கையில் ஒருநாள், மேற்கூறிய தேசிகருடைய வீட்டிற்கு எதிரே தக்க பிரபு ஒருவர் இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியொன்றில் வந்து இறங்கினார். முன்னால் ஒரு சேவகன் வந்து தேசிகருடைய வீட்டின் இடைகழியில் நின்று அந்தவீடு இன்னாருடைய வீடுதானோவென்று மெல்ல விசாரித்தான். உள்ளே இருந்த ஒருவர், "ஆம்; நீர் யார்? அவரை ஏன் தேடுகிறீர்? வந்த காரியம் யாது?'' என்றார். அவன், இன்ன பெயருள்ள ஐயா அவர்கள் உள்ளே இருக்கிறார்களா? அவர்களோடு தான் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டுமென் றான். அவர் விரைவாக அவனை அணுகி, "அப் பெயருள்ளவன் நானே. சொல்லவேண்டியதை நீ சொல்லலாம்" என்றார்.
அவர்களிருவரும் இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையில், வேறொரு சேவகன் உயர்ந்த ரத்தின கம்பளம் ஒன்றை எடுத்துவந்து அவ்வீட்டுத் திண்ணையின்மேல் விரித்தான். மற்றொருவன் ஒரு திண்டைக் கொணர்ந்து சுவரிற் சார்த்தினன். முன் கூறிய பிரபு திண்ணையின்மேல் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து திண்டிற் சாய்ந்தவண்ணம் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார். திண்ணையின் கீழே உயர்ந்த ஆடையையும் உடுப்புக்களையும் தரித்து அவற்றிற்கேற்பத் தலைச்சாத்தணிந்த த வேலைக்காரர்கள் சிலர் வரிசையாகக் கைகட்டி வாய் பொத்தி அந்தப் பிரபுவின் முகத்தை நோக்கிக் கொண்டே வணக்கத்துடன் நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் உள்ளே நின்று பேசிக்கொண்டிருந்த சேவகன் சரேலென்று வெளியே வந்துவிட்டான்.
அந் நிகழ்ச்சியை இடைகழியில் வந்து நின்று கண்ட தேசிகர் வாயிற்படியின் உட்புறத்தினின்று தெருப்பக்கத்தை நோக்கினர். அப்போது, யாரோ தக்கவரொருவர் பரிவாரங்களுடன் வந்திருக்கின்றனர். வந்தது நம்மைப் பார்ப்ப தற்கோ? வேறு யாரைப் பார்த்தற்கோ? தெரிய வில்லை; எல்லாம் சீக்கிரம் தெரியவரும். இப்போது இந்தப் பிரபுவினிடம் திடீரென்று நாம் போவது நமக்குக் கௌரவமன்று; அழைத்தாற் போவோம்' என்றெண்ணி உள்ளே சென்று ஓரிடத்திலே பலகை யொன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டே இருந்தனர்.
அவர் அப்படியிருக்கையில் முன்பு அவரோடு பேசிக்கொண்டிருந்த சேவகன் மீட்டும் மெல்ல உள்ளே சென்றான். தேசிகர் உள்ளே போயிருப்பதை யறிந்து அழைக்கலாமோ, ஆகாதோ வென்னும் அச்சக் குறிப்பை ஒருவாறு புலப்படுத்திச் சற்றுநேரம் அடி ஓசைப்படாமல் நின்றான்; பிறகு கனைத்தான். அப்பொழுது அவர், "ஏன் நிற்கிறீர்?"
என்று வினவ அவன், "எசமானவர்கள் உங்களுடைய சமயத்தைப் பார்த்துவரச் சொன்னார்கள்'' என்றான். அவர் மிக்க பரபரப்புடன் எழுந்து நின்று, "உள்ளே அழைத்து வரலாமே" என்றார். அவன், "அவர்கள் இப்போது ஆசௌசமுள்ளவர்களாக இருத்தலால் உள்ளே வரக்கூடவில்லை; திண்ணையிலேயே இருக்கிறார்கள்" என்று மெல்ல உரைத்தான்.
உடனே அவர், "அப்படியா! நானே வந்து பார்க்கிறேன்; வருவதனாற் குற்றமில்லை" என்று சொல்லிவிட்டு ருத்திராக்ஷகண்டி முதலியவற்றை அணிந்துகொண்டு வெளியே வந்து பிரபுவைப் பார்த்தனர். அவர் அஞ்சலிசெய்து இருக்கும்படி குறிப்பித்தனர். தேசிகர் அப்படியே இருந்து பிரபுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது பிரபுவுடன் வந்த ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவரைப் பார்த்து ரகசியமாகத் தேசிகர், "இவர்கள் யார்? எங்கே வந்தார்கள்?" என்று மெல்லக் கேட்டார். அவர், "எசமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தாயார் முதலியவர்களோடு சிதம்பர தரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதரையும் தாயுமானவரையும் ரங்கநாதரையும் தரிசனம் பண்ணிக்கொண்டு மூன்று நாளைக்குக் குறையாமல் இங்கே தங்க வேண்டுமென்று கண்டோன்மெண்டி லுள்ள பங்களா ஒன்றில் இருந்தார்கள். அப்படி யிருக்கும்போது தாயாரவர்களுக்குச் சுரங்கண்டது. எவ்வளவோ செலவிட்டு வைத்தியர்களைக் கொண்டு தக்கவைத்தியம் செய்தார்கள்; ஒன்றாலுங் குணப்பட வில்லை.நேற்று அவர்கள் சிவபதம் அடைந்துவிட் டார்கள். உடனே தகனம் முதலியவற்றை நடத்தினார்கள். தம்முடைய ஊரில் அவர்கள் இறந்திருந் தால் இன்னும் எவ்வளவோ சிறப்பாகக் காரியங்களை நடத்தியிருப்பார்கள். என்ன செய்கிறது! எல்லாம் தெய்வச் செயல்ல்லவோ? நம்முடைய செயலில் என்ன இருக்கிறது! இன்று காலையில் சஞ்சயனமும் நடந்தது. சில விவரங்களை விசாரிப்பதற்கு நினைந்து தக்கவர்கள் யாரென்று கேட்டபொழுது
சிலர் உங்கள் பெயரைச் சொன்னார்கள். அதனாலே தான் நேரே இங்கு விஜயம் செய்தார்கள். வேண்டிய பதார்த்தம் விலை கொடுத்தாலும் அவ்விடத்தைப் போல இங்கே அகப்படக்காணோம். பண்ணி வைக்கக்கூடிய தக்கவர்களும் அவ்விடத்தைப் போல இவ்விடத்தில் கிடைக்கமாட்டார்களென்று தோற்றுகிறது. எல்லாம் நேற்றுப் பார்த்து விட்டோம். அதனாலே இன்று இராத்திரி புறப்பட்டு ஊருக்குப்போய் மேற்காரியங்களை யெல்லாம் நடத்த இவர்கள் கருதுகிறார்கள்'' என்றார்.
கேட்ட தேசிகர், "இந்த ஊரில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்; பணம் மட்டும் இருந்தால் எதுதான் அகப்படாது? இவ்வூரிலுள்ள தச்சர், தட்டார், பாத்திரக் கடைக்காரர் முதலிய எவ்வகை யாரையும் நான் அறிவேன்; அபரக்கிரியை செய்தற்கும் தக்க இடம் இருக்கிறது. பணம் மட்டும் என் கையில் இல்லையே யல்லாமல் எதுவும் இந்த ஊரில் எனக்கு எளிதில் நடக்கும். ஒருவிதமான யோசனையும் பண்ணவேண்டாம். இவ்விடத்திலேயே செய்து விடுவதாக நிச்சயித்துவிடச் சொல்லுங்கள்" என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர். கேட்ட அவர், "செலவைப்பற்றி எசமான் சிறிதும் யோசனை பண்ண வில்லை. பதார்த்தங்களை வாங்கி வருவதற்கும் வேண் டிய பேர்கள் இருக்கிறார்கள். ஸமுகத்திற்கு ஓர் எண்ணமிருக்கிறது. சிவதருமோத்திரமென்று ஒரு புஸ்தகம் இருக்கிறதாம்; இந்தச்சமயம் அதைப் படித்துக்கொண்டே பொழுதுபோக்க வேண்டுமென்பது
தான் அவர்கள் கருத்து. முன்பு பிதா எசமான் அவர்கள் சிவபதமடைந்தபொழுது கூடச் சில பெரியோர்கள் சொல்லத் தெரிந்து எங்கிருந்தோ வருவித்து அந்த நூலைத்தான் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்களாம். அது கிரந்தமாக இருந்தால் உதவாதாம்; தமிழாகவே இருக்கவேண்டுமாம்; இதற்காகவே அங்கே போகவேண்டுமாம்" என்று சொல்லிக் கொண்டேவந்து, பின்பு மெல்ல, "இங்கேயே இருந்து முடித்துக்கொண்டு போகலாமேயென்று சிலர் எவ்வளவோ சொல்லியும் காதில் ஏறவில்லை. இந்தப் புஸ்தகத்தைப் படிக்காமற்போனால் என்ன?' என்று இரகசியமாகச் சொன்னார்.
அப்போது தேசிகர் அந்தப் பிரபுவை நோக்கி, "சிவதருமோத்திரம் என்னிடம் தமிழிலேயே உள்ளது. வேண்டுமானால் உபயோகித்துக் கொள்ளலாம். உங்களைப்போன்ற பிரபுக்களுக்கல்லாமல் பின்னே வேறு யாருக்குத்தான் கொடுக்கப் போகிறேன்?' என்றனர்.
நின்றவர் உடனே பிரபுவின் நோக்கத்தை அறிந்துவந்து அபரக்கிரியைக்குரிய எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதித் தரும்படி அவரைக் கேட் டனர். தேசிகர் உள்ளேயிருந்து ஏடு எழுத்தாணிகளைக் கொணர்ந்து விரிவாக ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனர். "ஊரிற் செய்தால் இன்னும் அதிகச் செலவாகும்" என்று பிரபுவைச் சேர்ந்தவர் சொல்ல, "இவ்வளவு செலவு செய்பவர்களே இந்தப் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்?' என்று தேசிகர்
சொன்னார். கேட்டபிரபு, "நீங்களே இருந்து எல்லா வற்றையும் நடத்துவிப்பதன்றி வாங்கவேண்டியவற் றையும் உடனிருந்து வாங்கித்தரவேண்டும்'' என்று சொல்லி அஞ்சலிசெய்து உடனே எழுந்து சென்று வண்டியில் ஏறினர். பக்கத்தில் நின்றவர், "நான் எப்பொழுது வரவேண்டும்?" என்று கேட்கவே தேசிகர், "கருமாதியின் ஒருவாரத்திற்குமுன் வந்தாற் போதும்; பரிஷ்காரமாக எல்லாவற்றையும் வாங்கிவிடலாம்"
என்று சொல்லி வேகமாகச் சென்று பிரபுவைநோக்கி, "க்ஷணம் தாமஸிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்ச் சிவதருமோத்திர ஏட்டுப் பிரதியை எடுத்து வந்து அவர் கையிற் கொடுத்து, "இந்தப் புஸ்தகத்தை முன்னமே கொடாததற்காக க்ஷமிக்க வேண்டும்; தங்களைப் போன்றவர்களுடைய பழக்கம் எனக்குப் பெரிதேயல்லாமல் இந்தப் புஸ்தகம் பெரிதன்று. குறிப்பறிந்து உபகரிக்கும் பிரபு சிகாமணிகளாகிய தங்களுக்கு என்போலியர்கள் தெரிவிக்க வேண்டியது என்ன இருக்கிறது?” என்று வண்டியைப் பிடித்துக்கொண்டே நின்று சொல்ல, அந்த பிரபு, "எல்லாம் தெரிந்துகொண்டோம்; அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை" என்று சொல்லி ஐந்து ரூபாயை அவரிடம் சேர்ப்பித்தார். வண்டி அதிவேகமாகச் சென்றது. நின்றவர்கள் வண்டியின் முன்னும் பின்னுமாக ஓடினார்கள். அக்காட்சி களையெல்லாம் பார்த்த தேசிகர் மிக்க மகிழ்ச்சியுடை யவராகி வீட்டுக்குள்ளே சென்றனர்.
ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, "இது சிவதருமோத்திரம்" என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். அவர், "இப்புத் தகம் எங்கே கிடைத்ததப்பா ?" என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, "உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? மீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாமற் போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லி யனுப்பவில்லை ?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, "அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புத்தகம் முழுவதையும் ஒருவாரத்திற்குள் பிரதி செய்துகொண்டு என்னிடம் கொடுத்துவிடக் கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதிசெய்வது ஒருவருக்கும் தெரியவேண்டாம் " என்றார். அவர் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு தம்மிடம் அப்பொழுது படித்துவந்த மாணாக்கர்களிடத்தும் நண்பர்களிடத்தும் பத்துப் பத்து ஏடாகக் கொடுத்து ஒருவாரத்துக்குள் எழுதித் தரவேண்டுமென்று சொல்லி, எஞ்சிய ஏடுகளை தாமே கைக்கொண்டு எழுதுவராயினர். ஏழு தினங்களுள் புத்தகம் எழுதிமுடிந்தது. எட்டாவது தினத் தில் ஒப்பிட்டுக்கொண்டு சுவடியை சுந்தரம்பிள்ளைக்கு அனுப்பிவிட்டார். அப்பாற் சிவதருமோத்திரத் தைப் படித்துத் தணிகைப் புராணப்பகுதியிலுள்ள அரிய விஷயங்களை அவர் அறிந்து தெளிந்தனர்.
முன்பு சேவகவேடம் பூண்டவராகிய ஒரு நண்பரிடம் சுந்தரம்பிள்ளை சிவதருமோத்திரச் சுவடியையும் ஒரு பவுனையும் கொடுத்து அவற்றை அத் தேசிகரிடம் சேர்ப்பித்து வரும்படி சொல்லியனுப்பினர். அவர் சென்று தேசிகரைக் காணவே தேசிகர் மகிழ்வுற்று, "வரவேண்டும்! வரவேண்டும்!” என்றுகூறி வரவேற்றனர். சேவகவேடம் பூண்டவர் பவுனையும் சுவடியையும் அவர் கையிற் கொடுத்து விட்டு, "ஊரிலேயே போய்த்தான் கருமாதி செய்ய வேண்டுமென்று உடனிருந்த பந்துக்கள் வற்புறுத்தினர். அதனால் எல்லாரோடும் புறப்பட்டு எசமான வர்கள் ஊருக்குப்போய் விட்டார்கள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகக்கூடவில்லையே யென்று அவர்கள் வருத்தமுற்றார்கள். சீக்கிரத்தில் உங்களை அவ்விடத்திற்கு வருவிப்பார்களென்று எனக்குத் தோற்றுகிறது " என்று சொல்லி அஞ்சலி செய்து போய்விட்டார். தேசிகர் அதனைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாராயினும் பவுன் கிடைத்ததை நினைந்து சிறிது சமாதானமடைந்தார்.
பிள்ளையவர்கள் அப்பால் வேறொருவரால், நிகழ்ந்தவற்றை யெல்லாம் அறிந்து வியப்புற்றுச் சுந்தரம் பிள்ளையின் அன்புடைமையை எண்ணி மகிழ்ந்தார்.
தாம் செய்த இந்தத் தந்திரத்தைக் குறித்துப் பிள்ளையவர்கள் என்ன சொல்வார்களோ வென்று அஞ்சிச் சுந்தரம் பிள்ளை சில தினங்கள் வாராமலே இருந்துவிட்டார். அது தெரிந்த பிள்ளையவர்கள் வர வேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியனுப்பினர். அப்பால் சுந்தரம் பிள்ளை வரவே பிள்ளையவர்கள் அவரை நோக்கி, "என்ன அப்பா! இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டனர்; சுந்தரம் பிள்ளை, "பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு. மெனின்” என்னும் திருக்குறளை அனுசரித்து அடியேன் நடந்தேன். இதனால் யாருக்கும் ஒருவிதமான துன்பமும் இல்லையே. ஏதோ செய்தேன். அச்செயல் ஐயாவுக்குக் குற்றமாகத் தோற்றினால் பொறுத்துக் கொள்ளவேண்டும்" என்று கூறினர்.
பிற்காலத்தில் பிள்ளையவர்கள் சுந்தரம் பிள்ளையினுடைய சிறந்த குருபக்தியையும் சமயோசித புத்தியையும் பலரிடம் அடிக்கடி பாராட்டிப் புகழ்ந் ததை நான் கேட்டிருக்கிறேன்.
------------------
10. "ஸ்வாமி இருக்கிறார்"
ஏறக்குறைய 45 - வருஷங்களுக்கு முன் கும்பகோணத்தில் அரசாங்கக் கலாசாலையில் உள்ள ஆசிரியர்களும் மாணாக்கர்களும் தாகம் தீர்த்துக்கொள்ள அவர்களுக்குத் தீர்த்தம் கொடுக்க, 'கோபாலையர்' என்ற ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காவிரியில் ஜலம் உள்ள காலத்தில் அந்த ஜலத்தை எடுத்துவந்தும், ஜலம் இல்லாத காலத்தில் ஊற்றுப் போட்டு இறைத்து ஜலம் கொணர்ந்தும் சால்களிற் கொட்டி விளாமிச்சைவேர் முதலியன போட்டு வைப்பார். தினந்தோறும் முதல் நாளில் எஞ்சி யிருந்த தீர்த்தத்தை வெளியே கொட்டிப் பானைகளை நன்றாக அலசிச் சுத்தம் செய்துவிட்டு அவற்றிலே புதிய தீர்த்தத்தை ஊற்றி வைப்பார்; பானைகளின்கீழே நல்ல மணலை நிறையப் பரப்பி வைப்பார்; தமக்குக் கிடைக்கும் வருவாயை நினைந்தே அவர் அங்ஙனம் செய்துவந்தார்.
அவர் முகத்தில் ஒருநாளும் சந்தோஷத்தைக் காணமுடியாது. எப்பொழுதும் கடுகடுத்த முகத் தோடே இருப்பார். அவருடைய உடம்போ மிக மெலிந்திருக்கும்; அவருக்கு எப்போதும் உள்ள வயிற்று வலியினால் அது பின்னும் மெலிந்துவந்தது. அவருக்கு யாருடனும் பேசுவதில் விருப்பம் இருப்பதில்லை. பேசினாற் கடுமையாகவே பேசுவார். ஆனால் தவறின்றி ஒழுங்காகவே தம்முடைய வேலையைப் பார்த்து வந்தார்.
அப்படியிருந்து வரும்போது ஒருவருஷம் கோடைக் காலத்தில் ஒருநாள், அந்தக் காலேஜில் தத்துவ சாஸ்திர ஆசிரியராக இருந்த கள்ளிக் கோட்டை நாராயணசாமி ஐயரென்பவர் அந்தப் பிராமணரிடம் தீர்த்தம் வாங்கிப் பருகினபோது அதில் ஒருவகையான கெட்ட நாற்றம் உண்டா யிற்று; உடனே அவர் தீர்த்தம் கொட்டுபவரைப் பார்த்து,"என்ன ! இந்தத் தீர்த்தத்தில் ஏதோ நாற்றம் அடிக்கிறதே!" என்று கேட்டார்.
தீர்த்தம் கொட்டுபவர், "நான் என்ன செய்வேன்; ஸ்வாமி இருக்கிறார்!" என்றார்.
நாராயணசாமி ஐயர் கும்பகோணம் வந்து சில காலமே ஆயிற்று; ஆதலின் தம்மை அவர் அவ மதிப்பதாக நினைத்தார். தாம் கேட்டதற்கும் அவர் கூறியதற்கும் என்ன சம்பந்தமென்பது அவருக்கு விளங்கவில்லை. அவர், "நாம் கேட்கிறோம்; இந்த வயிற்றுவலிக்காரர், 'நான் சரியாகத்தான் பார்த்துக் கொட்டி வருகிறேன்; அநியாயமாக நீங்கள் பழி கூறுகிறீர்கள்; ஸ்வாமி இருக்கிறார்; அவர் இப்படிப் பழி கூறுபவர்களைக் கவனித்துக்கொள்வார்' என்ற பொருள்படும்படி பேசுகிறாரே " என்று எண்ணினார்; உடனே சற்றுச் சினம் அடைந்து,"என்ன ஐயா! தண்ணீர் நாற்றம் நாறுகிறதென்றால் ஸ்வாமி இருக்கிறாரென்று சொல்லுகிறீரே. நல்ல தீர்த்தமாக நீர் கொட்டக்கூடாதா?" என்று சிறிது கடுமையாகக் கேட்டார்.
மீண்டும் அவர், "என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்; ஸ்வாமி இருக்கிறார்! என்மேல் தப்பு ஏது?" என்றார்.
நாராயணசாமி ஐயருக்கோ கோபம் அதிகரித்தது. மீண்டும் ஏதோ கேட்க அப்பிராமணர், "ஸ்வாமி இருக்கிறார்!" என்றே கடுமையான தோற்றத்தோடு சொல்லிவந்தார். இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கையில் நான் அங்கே வந்து, "என்ன சமாசாரம்?" என்று நாராயணசாமி ஐயரைக் கேட்டேன். அவர் பொங்குகின்ற கோபத்தோடு, "இந்தத் தீர்த்தம் ஒரு கெட்ட நாற்றம் அடிக்கிறது. நான், ஏன் இப்படி யிருக்கிறதென்று கேட்கக் கேட்க, இந்த மனிதர் ஸ்வாமி இருக்கிறா ரென்று சாபமிடுகிறார். இவரை இன்றைக்கே விலக்கி விடவேண்டும்" என்று உரத்த குரலிற் சொன்னார். இருவருக்கு மிடையில் நிகழும் வாக்கு வாதத்திற்குக் காரணமான விஷயம் இன்னதென்று எனக்கு முற்றிலும் விளங்கிவிட்டது. அவ்விருவர் மீதும் குற்றமில்லை யென்பதை நான் உணர்ந்தேன். தத்துவ சாஸ்திர ஆசிரியரை மெல்ல நோக்கி, "கோபித்துக் கொள்ள வேண்டாம். காவேரியிற் சில இடங்களில் மணலுக்கடியே களி இருக்கும். அங்கே ஊற்றுப் போட்டு ஜலம் எடுத்தால் அது கும்பி நாற்றம் காறும். இந்த ஊரில் முக்கியமான கோவில் கும்பேசுவரர் கோயிலல்லவா? கும்பி யென்பதற்கும் கும்பேசுவர ரென்பதற்கும் சிறிதளவு ஒற்றுமையிருப்பதால் சிலர் கும்பியைக் கும்பேசுவரரென்று சங்கேதமாகச் சொல்வார்கள் ; ஸ்வாமி யென்றும் சொல்வதுண்டு. இந்த ஊரிற் பலர் இப்படியே சொல்லுவார்கள். இவர், கும்பி இருக்கிறது, அதற்கு நானென்ன செய்வேனென்ற கருத்தோடு ஸ்வாமி யிருக்கிறாரென்று சொன்னாரே யொழிய உங்களை அசட்டை செய்யவில்லை. தெய்வம் தண்டிக்க வேண்டுமென்பது இவர் கருத்தன்று” என்று விளக்கிச் சொன்னேன். நாராயணசாமி ஐயருடைய கோபமெல்லாம் மாறி விட்டது; அடக்க முடியாத சிரிப்பு உண்டாயிற்று. தண்ணீர் கொடுப்பவரை ஏற இறங்கப் பார்த்தார்; அடபாவி! ஈசுவரனுடைய அழகிய பெயரை இப்படியா உபயோகப் படுத்துவது! உன்னுடைய வார்த்தைக்கு இதுவா அர்த்தம்?" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
"எல்லாருந்தான் சொல்லுகிறார்கள்; நான் சொல்லக் கூடாதா?" என்று அந்தப் பிராமணர் சமாதானம் சொன்னார்.
"சரி சரி! கும்பியில்லாத இடமாகப் பார்த்து நாளை முதல் தீர்த்தம் கொண்டு வந்து கொட்டும் என்று சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் சென்றோம்.
----------------
11. ஏழையின் தமிழன்பு
மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கண்டதேவியென்னும் தலத்தின் புராணம் இயற்றுவதற்குத் தேவகோட்டை நகர வைசிய கனவான்களால் அழைக்கப்பெற்று ஒரு சமயம் சுப்பு ஒதுவாரென்பவரோடும் மாணாக்கர்களோடும் வேலைக்காரர்களோடும் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பட்டுக் கோட்டையைக் கடந்து போகும்பொழுது சூரியாஸ்தமனமாயிற்று. தங்குவதற்கு ஓர் இடமும் அகப்படவில்லை. செல்லச் செல்ல ஊரொன்றும் காணப்படவில்லை. அப்பால் 6-மணிக்குமேல் ஒரு சிறிய கிராமத்தை அடைந்தனர். அங்கே சமையல் செய்வதற்கு இடம் அகப் படுமாவென்று விசாரித்தபொழுது அவ்விடத்தில் இருந்தவர்கள் அக்கிரகாரத்திற்குப் போகலா மென்று சொன்னார்கள்.
சந்தித்தவர்களை விசாரித்துக் கொண்டு அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரே வீடு இருந்தது. அதுவும் மிகவும் சிறிய பனையோலைக் குடிசை. அங்கேபோய் உடன்வந்த வேலைக்காரர்களைக்கொண்டு சமையல் செய்வதற்கு இடம் அகப் படுமோ வென்று கேட்கச் சொன்னார்; ஒருவர் சென்று விசாரித்தார். அந்த வீட்டில் ஆண்பாலார் ஒருவரும் அப்பொழுது இல்லை. சில குழந்தைகளோடு கணவனுடைய வரவை நோக்கிக்கொண்டே திண்ணையிலிருந்த ஓர் இளமங்கை பல ஆண் பாலார்களின் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து, "அதற்கு இங்கே சௌகரியப்பட மாட்டாது என்று சொல்லித் திடீரென்றெழுந்து கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.: பிள்ளை யவர்கள் உடன் வந்த வண்டிகளை அவ்வீட்டின் முன் புறத்திலுள்ள களத்தில் அவிழ்த்து விடச் சொல்லிவிட்டுச் சிலரோடு சென்று சிறிது தூரத்திலிருந்த ஊருணியொன்றைக் கண்டுபிடித்து அதில் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டனர். சந்திரன் நன்றாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அவர் மீண்டும் மேற்கூறிய களத்திற்கு வந்து சமையல் செய்துகொள்வதற்கு வேறு ஒருவித வழியும் இல்லாமையை அறிந்து படுக்கையை விரிக்கச் சொல்லிப் பொறுக்கமுடியாத பசியோடும் உடன் வந்தோருடைய பசியை நீக்கக்கூடவில்லையே யென்ற வருத்தத்தோடும் படுத்துக்கொண்டனர். மற்றவர்கள் யாவரும் பக்கத்திலிருந்து தம்முள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்படியிருக்கையில் அங்கேயுள்ள வீட்டுக்காரராகிய பிராமணர் உணவுப்பொருள்கள் முடிந்த ஒரு மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு மிகவும் வேகமாக வந்து தம்முடைய வீட்டின் கதவைத் தட்டினர். அதுதெரிந்த பிள்ளையவர்களுடைய மாணாக்கர்கள் அவ்வந்தணரை வற்புறுத்தி அழைத்தார்கள். அவர், 'இவர்கள் யாரோ? அன்னம் போடவேண்டு மென்று ஒரு வேளை கேட்டால் நாம் இவ்வளவு பேர்களையும் எப்படி உண்பிப்போம்!' என்று அஞ்சி விரைவாக உள்ளே சென்றார்; சென்று தம் மனைவியை ஒரு கூடையை எடுத்துவரச் செய்து தாம் கொணர்ந்த தானியத்தை அக்கூடையிலே கொட்டி, "இன்றைக்கு யாரோ நல்லவர் முகத்தில் விழித்தேன். போன இடங்களில் ஏதோ கிடைத்தது. எல்லாம் தேவியின் திருவருள். இரண்டு நாள் வரையில் நமக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லை ” என்று சொல்லி மனைவியை மகிழ்வித்தார். பின்பு தம்முடைய நியமத்தை முடித்துக்கொண்டு மத்தியான்னமே நீரிற் சேர்த்திருந்த அன்னத்தை யுண்டார். அப்பால் ஒரு கவலையுமில்லாமல் பனையகணிக் கட்டி லொன்றை ஆரற்சுவர் சூழ்ந்த அந்த வீட்டு உள் முற்றத்திலே போட்டு அதிலே படுத்துக்கொண்டனர். படுத்தவர் தமக்கு இரண்டு நாள் ஆகாரத்துக்குக் கவலையில்லை யென்ற பெருமகிழ்வினால்,
(விருத்தம்)
[1]உனதுசரற் காலமதி யனைய மெய்யும்
உடல் குழைந்த பிறைச்சடையுங் கரங்க ணான்கும்
அனவரத முறும்பய வரத ஞான
அருட்பளிங்கு வடமொடுபுத் தகமு மாக
நினைகிலர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்ஙன்
நிறைந்தபசுந் தேனுமடு பாலுந் தூய
கனியுமென மதுரம்விளைந் தொழுகு பாடற்
கவிதைபொழி வதுகயிலைக் கடவுள் வாழ்வே' (சௌந்தரியலஹரி)
என்னும் செய்யுளை இசையோடு பாடினர்; வேறு சில பாடல்களையும் சொல்லி இன்புறுவாராயினர். ---
[1]. இதன் பொருள்: "கயிலைமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இன்பவாழ்வை அளிப்பதற்குக் காரணமான தாயே! உனது சரற்கால சந்திரன் போன்ற திருமேனியையும், வளைந்த உருவத்தையுடைய பிறையை யணிந்த திருமுடியையும், எப்பொழுதும் அபயவரதம், ஞானமும் அருளும் தோற்றுகின்ற ஸ்படிக மாலை, புத்தக மென்பவற்றையுடைய கரங்களையும் நினைந்து வாழ்த்தி வணங்காதவர்கள், நிறைந்த செவ்வித் தேனும் காய்ச்சிய பாலும் சுத்தமான பழமும்போலச் சுவை உண்டாகித் ததும்பும் இனிய பாடல்களாகிய கவிதையைப் பொழிவது வாறு?'' மேலே கண்ட உருவத்தில் அம்பிகையைத் தியானிப்பவர்கள் இனிய கவிகளை இயற்றும் ஆற்றலை அடைவார்களென்பது கருத்து.
------
அப்பாட்டுக்கள் அப்புலவர் பெருமானுடைய பக்கத்திலிருந்த மாணாக்கர்களுடைய காதில் விழவே அவர்கள், "இவ்வீட்டு ஐயர் தமிழ் படித்தவர் போலே காணப்படுகிறார். இப்பொழுது, 'உனது சரற்காலம்' என்னும் பாடல் முதலியவற்றைச் சொல்லுகிறார்'' என்றார்கள். கேட்ட பிள்ளையவர்கள், அவரை எப்படியாவது இங்கே அழைத்துவந்து அந்தப் பாடல்களை என் முன்னே சொல்லச் செய்யுங்கள் என்று சொன்னார். அவர்கள் அவ்வாறே சென்று அவ்வீட்டின் கதவைப் பலமாகத் தட்டி உள்ளே இருந்தவரை அழைத்தார்கள். அந்தணர் முன்னமே கூட்டத்தைக் கண்டு பயந்தவராதலின் உடனே வெளியே வரவில்லை. இவர்கள் சமையல் செய்து போடும்படி நம்மைத் தூண்டக்கூடும்; நாம் என்ன செய்வோம்!' என்றெண்ணி, "காலைமுதல் அயலூருக்கு அலைந்து சென்று இப்பொழுதுதான் வந்து கிடைத்த ஸ்வல்ப ஆகாரத்தை உண்டு களைத்துப் படுத்திருக்கிறேன். என்னால் இப்பொழுது ஒன்றுஞ் செய்யமுடியாது " என்று உள்ளே இருந்த படியே கூறினார்.
அவர்கள், ”ஐயா, நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். எங்கள் எசமானவர்கள் உங்களுடைய பாடல்களைக் கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். இங்கே யிருந்து சொல்லுகிற பாடல்களை அங்கே வந்து சொன்னால் அவர்கள் திருப்தியடை வார்கள்" என்று சொன்னார்கள்.
"நான் பாடும் பாட்டைக் கேட்டு இந்த நடுக் காட்டில் மகிழக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படியானால் வருவதற்கு என்ன ஆட்சேபம் இருக்கிறது?' என்று சொல்லிக் கொண்டே பிராமணர் விரைந்து வந்து கதவைத் திறந்தார்; திறந்தவர் தமது பனைய கணிக்கட்டிலையும் கையில் எடுத்துக்கொண்டு பிள்ளையவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தக் கட்டிலைப் பக்கத்திற் போட்டுக்கொண்டு அதன்மேல் இருந்தார். பக்கத்திலுள்ளவர்கள் பாடல்களைச் சொல்லும்படி அவரிடம் சொன்னார்கள். உடனே அவர் தாம் முற் கூறிய செய்யுளை மற்றொரு முறை சொன்னார். அதன் பின்னுள்ள செய்யுட்களையும் சொன்னார்.
அவற்றைக் கேட்ட அக் கவிநாயகர், "நீங்கள் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்கவே அவர், "நான் யாசகம் பண்ணப் படித்திருக்கிறேன். தமிழ்வித்துவானாக இருந்த என்னுடைய தகப்பனார் எனது இளமையில் சொல்லிக்கொடுத்த சில நூல்களிலுள்ள பாடல்கள் எனக்கு ஞாபக முண்டு. அவற்றை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். படிக்கவேண்டுமென்றாலோ புத்தகங்கள் இல்லை. என் வீட்டிலிருந்த புத்தகங்களை யெல்லாம் யாரோ வாங்கிக்கொண்டு போய்விட்டனர். அவற்றை அவர்கள் திரும்பக் கொடுக்கவில்லை. யாரிடத்திலேனும் சென்று பாடம் கேட்பதற்கும் நேரம் இல்லை. சூரியோதய முதல் அஸ்தமனம் வரையில் வயிற்றுப் பிழைப்புக்கே அலையவேண்டி யிருக்கிறது. அப்படி யாரிடத்திலாவது சென்று புத்தகம் வாங்கிப் படிக்கலாமென்றாலோ, என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னைப் பார்த்தால் அவர்களுக்குப் படிப்பவன்போலவே தோற்றாதே. எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து எங்களுக்கு இந்தப் பக்கங்களில் மகமை உண்டு. அறுப்புக் காலங்களில் களங்களுக்கு நான் சென்று காத்திருந்து கிடைக்கும். தானியங்களை வாங்கிவருவேன். என்னுடைய நாட்களெல்லாம் இப்படியே போகின்றன. இந்த நிலையில் தெரிந்தவற்றையாவது ஓய்ந்தவேளையிற் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். இந்தமட்டிலாவது தேவி அனுக்கிரகம் இருப்பதைக் குறித்து மகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தேன். தமிழ்ப்பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய்ப் பாடங்கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப் பக்கத்திற் பாடஞ்சொல்லத் தக்கவர் யாருமில்லை; சொல்லக்கூடியவர்கள் இருந்தாலும் சுலபமாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக் கொடுப்பார்கள். என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம்போடும்பொழுது அவர்களை அண்டி நான் கற்கவேண்டிய நூல்களை எவ்வாறு கற்க முடியும்?
"மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ்வித்துவான் இருக்கிறாராம்; ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சிலவருஷம் வைத்திருந்து அவர்களை நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்திற் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை அடைவார்க ளென்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப்போல் இக் கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப் புண்ணியவானிடத்திலே போய்ப் படிக்க அவா இருக்கிறது. அதற்கும் முடியவில்லை. எனக்குக் [2]கால்விலங்கு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த லக்ஷணத்திலே சில குழந்தைகளும் பிறந்து விட்டன. நான் இவர்களைப் பாதுகாப்பேனா? அவரிடத்திற் போய்ப்படிப்பேனா ? சாணேற முழஞ் சறுக்குகிறதே! நான் என்ன செய்வேன்! அந்த மகானை ஒருமுறை இந்தக்கண்களாற் பார்த்துவிட்டாவது வரலாமென்று முயன்றாலோ அதற்கும் முடிய வில்லையே! என்னுடைய நிலைமை ஒன்றும் சொல்லக் கூடியதன்று" என்று சொல்லிவிட்டுப் பின்னும் தம்முடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லலாயினர் ; பக்கத்திலிருந்த மாணாக்கர்களில் ஒருவர் அது தான் நல்ல சமய மென்றெண்ணி அவருடைய சமீபத்தில் வந்து முதுகைத்தட்டி அவர் செவியிற் படும் படி ரக்கியமாக, "இங்கே படுத்திருக்கும் இவர்களே நீர் சொல்லிய பிள்ளையவர்கள் ; கண்டதேவிப் புராணம் அரங்கேற்றுவதற்காக இப்பொழுது போகிறார்கள் " என்று சொன்னார்.
---
[2]. கலியாணம் ஆகியிருக்கிறதென்று பொருள்.
---
உடனே ஹாஹா வென்று அவர் துள்ளி எழுந்தார். அவருடைய வியப்பு அவரைச் சில நிமிஷ நேரம் மௌனமாக இருக்கச் செய்துவிட்டது; "நான் என்ன புண்ணியஞ் செய்தேனோ! இந்த இடம் என்ன மாதவம் செய்ததோ !" என்று ஆடிப் பாடித் திகைத்து ஒன்றுந் தோன்றாதவராய் நின்றார். நின்றவர், "இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லி விட்டு ஓடினார்; அவர் ஓடியதற்குக் காரணம், விரைவிற் சமையல் செய்வித்து எல்லோருக்கும் ஆகாரம் பண்ணுவிப்பதற்கு அரிசி முதலியவற்றை எங்கேனும் வாங்கி வரும் எண்ணமே. அப்பொழுது உடன் இருந்தவர்கள் அவருடைய நிலைமையையும் அன்பின் மிகுதியையும் கண்டு வியந்தனர்; "இவருக்கு நாம் சிரமம் கொடுக்கக்கூடாது. இந்த அகாலத்தில் வறியவராகிய இவர் எங்கே போவார்? என்ன பொருளை இந்நேரத்தில் இவ்வூரில் இவரால் தேடிக் கொண்டு வருதற்கு முடியும்?" என்று அவரைப் பின்தொடர்ந்து ஓடிச்சென்று தடுத்தார்கள். அவரிடம், "உங்களுக்கு வேண்டிய பொருள்களை நாங்கள் தருகின்றோம்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறி அவரை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வந்து வேண்டிய பாத்திரங்களையும் அரிசி முதலியவற்றையும் கொடுத்தார்கள். அவர் அவற்றை எடுத்துச் சென்று தம் மனைவியையும் துணையாகக் கொண்டு விரைவிற் சமையல் செய்து பிள்ளையவர்களையும் மற்றவர்களையும் உண்பித்தார்.
அப்பால், மகிழ்ச்சி மேலீட்டால் இராமுழுதும் நித்திரை செய்யாமலே இருந்து தமக்குப் பல நாளாகச் சில நூல்களிலிருந்த ஐயங்களைக் கேட்டுக் கேட்டு நீக்கிக்கொண்டார். காலையில் பிள்ளையவர்கள் புறப்பட வேண்டுமென்று சொல்லவே அந்தணர் ஒரு வேளையாவது தம்வீட்டில் ஆகாரம் செய்து போக வேண்டுமென்று சொல்லி அதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்தார். அக்கவிஞர் கோமானும் அதற்கு உடன்பட்டு அன்று பகற் போசனத்தை அவரில்லத்திற் செய்துகொண்டு புறப்பட்டார். புறப்படுகையில் அவ்வேழையன்பர் பிரிவாற்றாது கண்ணீர்விட்டு வருந்துவாராயினர். அதைக்கண்ட பிள்ளையவர்கள் தம்முடன் வருவதில் அவருக்கு விருப்பம் இருத்தலை யறிந்து அவருடைய குடும்பப் பாதுகாப்பிற்குப் போதிய உணவுக்குரிய பொருள்களை வாங்கிக் கொடுக்கும்படி பொருளுதவி செய்துவிட்டு அவரை யும் உடனழைத்துச் சென்றனர்; சில மாதம் அவரை உடன் வைத்திருந்து படிப்பித்து அப்பால் ஊருக்கு அனுப்பினார்.
பிற்காலத்தில் அவர் வருடந்தோறும் திருவாவடுதுறை வந்து சில மாதம் இருந்து வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டு அறிந்துகொண்டும், மடாதிபதிகளிடம் பரிசு பெற்றுக்கொண்டும் செல்வார்.
-----------
12. "நான் சாமியாராக இருக்கமாட்டேன் ”
திருப்பதி முதலிய ஸ்தல யாத்திரை செய்பவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு எவ்வளவோ
கஷ்டப்படுகிறார்கள்; சிலர் தங்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தரிசிக்க முடிவதுமில்லை. ஆனால்
அவர்கள் விரும்பாமலே, தங்கள் தங்கள் அங்கவீனங்களையும் வறிய நிலைமையையும் சாமர்த்தியங்களையும் விளம்பரப்படுத்திக் காட்டும் யாசகர்களுடைய தரிசனம் கிடைப்பது தவறுவதில்லை. எந்த ஸ்தலத்திலும் இந்த யாசகர்களின் காட்சிகள் உண்டு. உலகத்தில் மனிதர் அங்கங்களில் எத்தனை விதமான கோணல்கள் உண்டோ அத்தனை கோணல்களுக்கும் ஸ்தலங்கள் காட்சிச்சாலையாக இருக்கின்றன. உண்மையாகவே
துன்பப்படும் பிச்சைக்காரர்கள் ஒருபுறம் இருக்க, நன்றாக இருக்கும் தங்கள் உடம்பிலுள்ள அங்கங்களை விகாரமுள்ளவைபோலச் சில தந்திரங்களால் தோற்றச்செய்து பணம் பறிக்கும் வஞ்சகரான சோம்பேறிகளையும் அவ்விடங்களிலே பார்க்கலாம்.
பலவித ஆசனங்களைப் போட்டுக்கொண்டு தங்கள் யோகசக்தியை நம்மேல் அன்புவைத்து நமக்குக் காட்டுபவர்களைப் போன்றவர்களும், முள்ளின் மேற் படுத்திருப்பவர்களும், ஆணிகள் அறைந்த பாதக் குறடுகளின்மேல் நடப்பவர்களும், தலைகீழாக நிற்பவர்களும், இப்படிப் பலவிதமான கடின காரியங்களை நாம் வீசியெறியும் தம்படிகளை உத்தேசித்துச் செய்து காட்டுபவர்களும் நம்மைக்காட்டிலும் ஸ்தலங்களில் அதிகப்
பற்றுடையவர்களாகத் தோற்றுகிறார்கள்.
இத்தகைய தொழிலாளிகளுள் இருவர் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் தம்முடைய தொழிலை நடத்தி வந்தனர். பல ஜனங்களும் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தார். அவருடைய திருமேனியை விபூதியும் ருத்திராட்சமும் முற்றும் மறைத்து அலங்கரித்தன. அவருடைய சடை மிகப் பெரிதாக இருந்தது. மீசையும் தாடியும் அப்படியே இருந்தன. அவருக்கு எதிரே மற்றொருவர் மிகுந்த பயபக்தியோடு நின்று கொண்டிருந்தார். உட்கார்ந்திருப்பவர் குருவாகவும் நின்றுகொண்டிருப்பவர் சிஷ்யராகவும் தோற்றினர். சிஷ்யர், தம்முடைய கையில் சேகண்டி (ஜயகண்டி) ஒன்றைத் தட்டிக்கொண்டும், இடையிடையே சில சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டும் இருந்தார்: "இந்த மகான் கொல்லிமலையில் பத்துவருஷ காலம் பச்சிலையை மட்டும் உண்டு நிஷ்டை புரிந்து வந்தார். பிறகு பொதிகைமலையில் இரண்டு வரு ஷம் ஆகாரமின்றிச் சமாதியில் இருந்தார். இப்பொழுது இமயமலைக்குப்போக எண்ணி வந்தார். அதற்குள் இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்வாமியின் உத்தரவுப்படி இங்கே சிலகாலம் தங்கிச்செல்ல உத்தேசித்திருக்கிறார். இவருடைய தவத்தின் வன்மையால் இவரிடம் விபூதிபெற்றுப் பலவகையான வியாதிகளைப் போக்கிக் கொண்டவர்கள் பலர். நான் பொதிகைமலையில் இவருக்குச் சிஷ்யனானேன். அது முதல் இக்குருநாதரைவிட்டுப் பிரிய எனக்கு மனம் வரவில்லை. இவர் எவ்விடத்திற்கும் போய்ப் பிக்ஷை பண்ணுவதில்லை. பணம் காசிலும் இவருக்கு விருப்பமில்லை. நான் பாலோ பழமோ இவருக்கு வாங்கிக் கொடுத்து வருகிறேன். நீங்கள் ஏதாவது கொடுத்தால் இந்த மகானுக்கு உபயோகப்
படுத்துவேன் " என்று பிரசங்கம் செய்வார்; சமயங்களில், "இவர் ஒரு பெரிய மலையில் ஸ்வாமியின் உத்தரவுப்படி ஒரு கோவில் கட்டப்போகிறார். அதற்காக யாரிடமேனும் போய் யாசகம் செய்வதற்கு இம்மகான் விரும்பவில்லை. இந்த ஸ்வாமியின் சந்நிதானத்தில் கிடைத்ததைக்கொண்டு எண்ணியதை முடித்துக் கொள்ளலாமென்று துணிந்து இவர் இங்கே உட்கார்ந்துவிட்டார். கனவான்கள் எவ்வளவு சிறியதொகை கொடுத்தாலும் அதனால் உண் டாகும் புண்ணியம் அனந்தம்” என்று கூறுவார்.
அந்தச் சாமியாரோ ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டே உட்கார்ந்திருப்பார். சிஷ்யர் அவர் முன்புள்ள விபூதியைச் சிலருக்கு எடுத்துக் கொடுப்பார். அவ்வழியே போகிறவர்களிற் சிலர் தம்படியோ காலணாவோ அரையணாவோ போட்டுச் செல்வார்கள். கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மீள்பவர்களிற் சிலர் தம் கையிற் கொண்டுவரும் பிரசாதங்களில் தேங்காய்மூடி, பழம், நனைத்த கடலை, அரிசி முதலியவற்றையும், காப்பரிசி, மாவிளக்குமா, வடை முதலியவற்றையும் போட்டுச்செல்வார்கள். அவர்கள் சென்றவுடன் சரேலென்று சிஷ்யர் அவற்றை யெடுத்துச் சுற்றிலும் பார்த்துக்கொண்டு தின்று விடுவார். அப்படித் தின்னும்பொழுது வாய்க் கருகில் சேகண்டியை வைத்துக்கொண்டு முழக்குவார்; தின்றவுடன் சேகண்டியை அடிப்பதை நிறுத்திவிட்டுப் பழையபடியே
பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விடுவார்.
இப்படிச் சிலநாள் சென்றன. அருகில் ஒருவரு மில்லையென்பதை அறிந்த காலங்களில் சாமியார் கண்ணைத் திறந்து பார்ப்பார்; அப்பொழுது தம்முடைய சிஷ்யர் செய்துவருவதைக் கவனித்து வருவார். தமக்கு எவ்வளவு பசியாக இருந்தாலும் தாம் அதை அடக்கிக் கொண்டிருக்கத் தம் சிஷ்யரோ கிடைக்கும் பிரசாதங்களில் தமக்கு ஒன்றுகூட வையாமல் உடனுடன் தின்றுவிட்டு ஏப்பம் விடுவதைப் பார்க்க அவர் மனம் பொறுக்கவில்லை. இனி இப்படியே இருப்பது தகாதென்று எண்ணினார்.
ஒரு நாள் இரவு பத்துமணிக்கு வழக்கம்போல் சாமியார் எழுந்திருந்து தம்முடைய போலிச் சடையையும், மீசை தாடி முதலியவற்றையும் கழற்றி ஒரு மூட்டையாகக் கட்டிச் சிஷ்யரிடம் வேகமாக வீசி யெறிந்தார்; எறிந்து விட்டு, "இனிமேல் நான் சாமியாராக இருக்க மாட்டேன். நாளை முதல் நீ தான் சாமியாராக இருக்கவேண்டும்; நானே சிஷ்யனாக இருப்பேன்" என்று கோபத்தோடு கூறினார். சிஷ்யர், “ஏன்?” என்று கேட்டார்.
சாமியார் : ஏனா ? உன் திருட்டுத்தனம் எனக்குத் தெரியாதென்ற நினைக்கிறாய்? சிஷ்யனென்று பேர் வைத்துக் கொண்டு வருகிற தேங்காயையும் பழத்தையும் வடை முதலியவைகளையும் உடனுக்குடன் வாயிலடைத்துக் கொள்கிறாயே ; ஏதடா இவன் உட்கார்ந்திருக்கிறானே, இவனுக்கும் சிறிது கொடுக்கலாமென்று நினைத்தாயா? இவ்வளவும் உனக்குக் கிடைப்பது என்னாலே யல்லவோ? என் கண் முன்னே அவ்வளவையும் நீ தின்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எனக்கோ சிரமம் அதிகம். ஒருவரும் பாராதபடி அதிகாலையிலேயே இங்கே வந்து உட்காரவேண்டும். எப்போதும் கண்ணை மூடிக் கொண்டும், கை கால்களை அசைக்காமலும் இருக்க வேண்டும். இவ்வளவுக்கும் கிடைக்கும் பங்கோ மிகவும் குறைவு. நீயோ ஒருவிதமான வருத்தமும் இல்லாமல் எல்லாவற்றையும் கொண்டு போகிறாய்; அவ்வப்போது பசியையும் தீர்த்துக் கொள்ளுகிறாய். இந்தப்படி என்னால் இருக்க முடியாது.
சிஷ்யர்; உன்னை மோசம் செய்யவில்லையே. கிடைக்கும் பணத்தில் பங்கு தருகிறேனே.
சாமியார்: பணம் தந்தால் போதுமா? மற்றவை யெல்லாம் உனக்கு மட்டும் சொந்தமா? இனிமேல் நான் சாமியாராக இருக்கவே மாட்டேன்; சிஷ்யனாகத்தான் இருப்பேன்.
உண்டு ருசிகண்ட சிஷ்யருக்குத் தம் உத்தியோகத்தை விட மனமில்லை. ஆதலால் அவர் சாமியாரை எதிர்த்துப் பேசினார். வாய்ச் சண்டை முதிர்ந்து கைச்சண்டையாயிற்று. அந்தச் சண்டையினால் உண்டான ஒலியைக் கேட்டுச் சிலர் அங்கே வந்து தடுக்கத் தொடங்கினர்; அவர்கள் சண்டையின் காரணத்தை அறிந்து வியந்தனர். சாமியாரும் சிஷ்யரும் பிறகு ஒருவரை யொருவர் பிரிந்து போய் விட்டனர். அவர்கள் இருந்த இடத்தில் வேறொரு பிச்சைக்காரன் குடிபுகுந்தான்.
---------------------
13. தருக்கடங்கின எழுத்தாளர்
மகா வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் நாகபட்டினப் புராணம் இயற்றி வருகையில் அதனை எழுதி வந்தவர் முத்தாம்பாள்புரம் (ஒரத்த நாடு) கோபால பிள்ளை யென்பவர். மாணாக்கராக அக்கவிஞர் பெருமானிடம் வருவதற்குமுன்பு இவர், முத்தாம்பாள்புரம் தமிழ்க்கலாசாலையில் உபாத்தி யாயராக இருந்து சிறந்த கவிஞராக விளங்கிய நாராயணசாமி வாத்தியாரென்பவரிடம் பாடங் கேட்டவர்; நல்ல இயற்கை அறிவுடையவர். பனையேட்டில் எழுதுவதில் இவருக்கு மிக்க ஆற்றல் உண்டு. இயல்பாகவே, 'எழுதும் வன்மை நமக்கு அதிகம்' என்று இவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
அப்படி யிருக்கையில் ஒருநாள் பிள்ளையவர்களுடைய வீட்டு விசாரணையைப் பெரும்பாலும் வகித்து வந்தவரும் அவரிடத்தில் மிக்க அன்புடையவருமாகிய வைத்தியலிங்கம்பிள்ளை யென்பவர் அவர் சயனித் திருக்கையில் மாணாக்கர் கூட்டத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தார்; கோபாலபிள்ளையை, விரைவாக எழுதுவதிற் சமர்த்தரென்று பாராட்டினார். அதனைக்கேட்ட கோபாலபிள்ளை,"எல்லாம் சரிதான். ஐயா அவர்கள் என்னுடைய கை வலிக்கும்படி பாடல் சொல்லுகிறார்களில்லையே" என்று விடை பகர்ந்தார். அந்தச் சமயம் இவர் எவ்வள்வோ மெல்லப் பேசியும் சயனித்திருந்த பிள்ளையவர்களுடைய காதில் இவருடைய சொல் விழுந்தது. உடனே எழுந்து வந்தால், தாம் சொல்லியதைக் குறித்துக் கோபாலபிள்ளை நாணமும் அச்சமும் அடைவாரென்று நினைத்துச் சிறிது நேரம் படுக்கையிலேயே படுத்திருந்துவிட்டு அப்பால் அவர் எழுந்து வந்தார்; பாடஞ் சொல்லுதல், நூல் எழுதுவித்தல்
முதலியன வழக்கம்போல் நடைபெற்றன.
பின்பு ஒருநாட் காலையில் வழக்கப்படியே அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்கள் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தனர். எழுதவேண்டிய ஏடும் கையுமாகக் கோபாலபிள்ளை வந்தார்; இவருடன் வேறு சில மாணாக்கர்களும் செய்யுள் செய்வதைக் கவனிக்கும் அன்பர்களும் வந்து வேறு வேறிடத்தில் இருந்து வழக்கப்படியே கவனித்துக் கொண்டிருந்தார்கள். அக்கவிஞர்பிரான் அப் புராணத்தில் மேலே நடக்கவேண்டிய பகுதியின் வசனத்தைப் படிக்கச்சொல்லிக் கேட்டுவிட்டு உடனே செய்யுள் செய்யத் தொடங்காமல் ஒரு நாழி கைவரையில் யோசனை செய்து மூக்குத்தூளைப் போட்டுக்கொண்டு கையைய் உதறிவிட்டுப் பாடல் சொல்ல ஆரம்பித்தார்.
பிள்ளையவர்கள் மூக்குத்தூளை அபூர்வமாக உப யோகிப்பது வழக்கம். அதைப்போட்டுக்கொண்டு தொடங்கிவிட்டால் யாதொரு தடையுமின்றிப் பாடல்களைக் சொல்லிக்கொண்டே செல்வார். அப்போது பக்கத்திலுள்ளவர்களெல்லாம் அன்றைக்கு மிக்க வேகமாகச் செய்யுட்கள் இயற்றப்படுமென்று அறிந்து கொள்வார்கள்.
ஆரம்பித்த அவர் ஓய்வின்றிச் சொல்லிக் கொண்டே சென்றார். அன்று நடந்த பகுதி மேலே சொன்ன புராணத்தில் சுந்தரவிடங்கப் படலம். அது கற்பனை நிரம்பிய பாகம். எழுதின வரும் கையோயாமல் எழுதிக்கொண்டே சென்றார். தொடங்கிய காலம் காலை 7-மணி; 10- மணி வரையிற் சொல்லிக்கொண்டு வருவதும், 10- மணிக்கு, மேலே பூஜை செய்வதற்காக எழுந்து ஸ்நானத்திற் குப் போய்விடுவதும் அவருக்கு வழக்கம். மிக விரைவாக அவர் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே சென்றமையால் எழுதுபவராகிய கோபால பிள்ளைக்குக் கையில் நோவுண்டாயிற்று. 'எப்பொழுது பத்து மணியாகும்' என்று எதிர்பார்த்திருந்தார். 10-மணி யாகியும் ஸ்நானத்திற்கு எழாமல் அவர் பாடல்களைச் சொல்லிக்கொண்டே போனார்.
அப்பொழுது தவசிப்பிள்ளை வந்து ஸ்நானத்திற்கு எழவேண்டுமென்று குறிப்பித்தான். சரியென்று சொல்லிவிட்டு, எழாமல் மேலும் செய்யுட்களை அக் கவிஞர் சொல்லிக்கொண்டே வந்தார். மணி பதினொன்றும் ஆகிவிட்டது. கோபால பிள்ளைக்கு வலக்கைச் சுண்டுவிரலின் பின்புறத்திலும் இடக்கைக் கட்டைவிரலின் நுனியிலும் ரத்தம் குழம்பி விட்டது. வலி அதிகமாயிற்று; இவரால் வலி பொறுக்க முடிய வில்லை. தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினால் நிறுத்துவாரென்று நினைந்து ஏட்டைக் கீழே வைத்துவிட்டு இடக்கையை வலக்கையாலும் வலக்கையை இடக்கையாலும் தடவிக்கொண்டும் பிடித் துக்கொண்டும் குறிப்பாகத் தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினார். பிள்ளையவர்கள் அதனைக் கவனியாதவர்போல் பாடல்களைச் சொல்லி வந்தார். கோபால மணி பதினொன்றரை ஆகிவிட்டது. பிள்ளையோ வாய்விட்டுக் கூறுவதற்கு நாணிப் பல்லைக் கடித்துக்கொண்டே எழுதிவந்தார். பக்கத்தில் இருந்த மாணாக்கர்களில் அநேகர் பதினொரு மணிக்கே எழுந்து சென்றுவிட்டார்கள். அப் புலவர் சிகாமணியோ செய்யுள் சொல்லி வருவதை நிறுத்தவே யில்லை. மணி பன்னிரண்டு ஆயிற்று. அதன்பிறகு சிறிதளவேனும் தம்மால் எழுதமுடியாதென்று உணர்ந்த கோபால பிள்ளை ஆசிரியர் சிறிது யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென எழுந்து கையிலே உள்ள ஏடுகளை யெல்லாம் சேர்த்து ஒரு கயிற்றாற் கட்டி எழுத் தாணியை உறையிற் செருகிவிட்டு எல்லாவற்றையும் அவருக்கு முன்னே வைத்துச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி எழாமலே கிடந்தார். அவர் கோபால பிள்ளையைப் பார்த்துவிட்டு, "தம்பி! ஏன் இப்படி? என்ன செய்தி? எழுந்திரு” என்றார்.
கோபால: இனி என்னால் எழுதவே முடியாது. என்னைப்போல் எழுதுகிறவர்கள் யாருமில்லை யென்றிருந்த எண்ணம் எனக்கு அடியோடு இன்று நீங்கி விட்டது. இது கிடக்க; ஐயா அவர்களுடைய பெருமையை இன்றுதான் உண்மையில் அறிந்து கொண்டேன். தேவரீர் எந்தத்தெய்வத்தின் அவதாரமோ, எந்தப் பெரியோர்களுடைய அம்சமோ யான் அறியேன்! இவ்வாறு செய்யுள் செய்யும் ஆற்றலை யாரிடத்தும் நான் கண்டிலேன்; கேட்டுமிலேன். இன்றைக்கு நடந்த பாகம் சாதாரணமானதன்றே! இதனை வேறு கவிஞர்கள் செய்வதாக இருந்தால் எத்தனையோ நாள் பிடிக்குமே. அது யாதொரு வருத்தமுமின்றி விரைவாகப் பாடப்பட்டதே! இனி இந்தப் பணியை அடியேன் பலநாள் சென்றபிறகு தான் செய்யமுடியுமென்று தோற்றுகிறது. இடையிலே நிறுத்திவிட்டேனென்று கோபித்துக் கொள்ளக்கூடாது; க்ஷமிக்கவேண்டும்.
பிள்ளையவர்கள், "என்ன அப்பா! உனக்குச் சிரமமாயிருக்கிற தென்பதை முன்னமே தெரிவித்திருந்தால் நான் நிறுத்தி யிருப்பேனே. இது மிகவும் சிறந்த பகுதியாக இருந்ததனால் மத்தியில் நிறுத்த மனம் வரவில்லை. முன்பே மனத்திற் செய்துகொண்ட ஒழுங்கு பின்பு தவறிவிடுமேயென்று நினைந்து சொல்லி வந்தேன். நீ ஸ்நானம் செய்துகொண்டு வரலாம்” என்று இவரை யனுப்பிவிட்டுத் தாமும் ஸ்நானம் செய்யப் போய்விட்டார். பக்கத்திலிருந்த சிலரால் அச்செய்தி மாயூரத்திலும், அயலூர்களி லும் பரவலாயிற்று. கேட்ட யாவரும் விம்மிதமுற்று வந்து பிள்ளையவர்களைப் பார்த்து மிகவும் பாராட்டிச் செல்வாராயினர்.
முகம் வாடி மிகுந்த சோர்வோடு கோபால் பிள்ளை அங்கே யிருந்தனர்; பிற்பகலில் வந்த மேற் கூறிய வைத்தியலிங்கம் பிள்ளை இவரை நோக்கி, "ஏன் இப்படி இருக்கிறீர்?" என்று கெட்டு நிகழ்ந்த வற்றை அயலாரால் தெரிந்துகொண்டு இவரைப் பார்த்து, " என்ன! உம்முடைய கோட்டம் இன்றைக்கு அடங்கிற்றாமே? கையில் வலியுண்டாகும்படி ஐயா அவர்கள் பாடல் சொல்லுகிறார்களில்லையே யென்று அன்றைக்குச் சொன்னீரே! அன்றைத் தினம் நீர் சொன்னது எனக்கு மிக்க வருத்தந்தான். துள்ளின மாடு பொதி சுமக்கும் " என்று சொன்னார். அந்தச் சமயத்தில் அங்கே வந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள், "தம்பி, அவனை ஒன்றும் சொல்லவேண்டாம். அவன் நல்ல பிள்ளை. மிகவும் வருந்துவான் ” என்று சொல்லி அவரை அடக்கினார். அப்பால் கோபால பிள்ளையின் கைவலிதீரப் பல நாள் சென்றன.
இயல்பாகவே பிள்ளையவர்களிடத்தில் பக்தி யுள்ளவராக இருந்த கோபால பிள்ளைக்கு அந்த நிகழ்ச்சிக்குப்பின் அவர்பால் அளவிறந்த மதிப்புண் டாயிற்று. உண்மையில் அவரை ஓர் அவதார புருஷ ரென்றே நினைத்து அச்சங்கொண்டு ஒழுகி வருவாராயினர்.
---------------
14. அகத்தைக் காட்டும் முகம்
பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நகரத்தில் இருந்த ஓர் அரசன் அறநெறி வழுவாது செங்கோல் செலுத்தி வந்தான். அவன் தன்குடிகளுடைய குறைகளை நேரில் அறிந்து அவற்றை நீக்கும் இயல்பினன்; தன் நகரத்திலுள்ள பல இடங்களுக்கும் நாட்டிலுள்ள பிற ஊர்களுக்கும் அடிக்கடி சென்று சென்று குடிகளுடைய க்ஷேமலாபத்தை விசாரித்துப் பின்னும் அவர்களது நல்வாழ்வுக்குரிய காரியங்களை இயற்றி வந்தான். அறிவிற் சிறந்த அமைச்சர்கள் அவன் கண்களைப்போல் இருந்து உதவி செய்துவந்தனர்.
தன்னுடைய நகரத்தை அவ்வரசன் சுற்றி வரும் காலத்தில் வீதிகளில் உள்ளவர்கள் அவனைக் கண்டு எழுந்து மரியாதை செய்து முகமலர்ச்சியுடன் அவன் கண்ணிலே படும்படி நின்று அவனது புன்னகையை எதிர்நோக்கி நிற்பார்கள். அவர்களுடைய முகமலர்ச்சியினால் அவர்களது அகமலர்ச்சியை யறிந்து அரசன் மிக்க மகிழ்ச்சியை அடைந்து வருவான்.
இங்ஙனம் இருக்கையில் ஒருநாள் மன்னன் நகரத்தின் கடைவீதி வழியே தன் வண்டியில் ஊர்ந்து சென்றான். அங்குள்ள வியாபாரிகளெல்லாம் வழக்கம்போல எழுந்து நின்று முகமலர்ந்து தம் அன்பு தோன்ற அவனுக்கு மரியாதை செய்தார்கள். அவர்களுக்குள் சந்தனக்கட்டை வியாபாரஞ் செய்துவந்த செட்டியார் ஒருவர், எழுந்து நின்றாரேயன்றி அரசனை முகமலர்ச்சியோடு பார்க்கவில்லை. அவருடைய முகம் வாடியிருந்தது; அரசனைக் காணும்பொழுது அவருடைய பார்வையில் ஏதோ வெறுப்புக் குறிப்பு இருந்தது.
வேந்தன் செட்டியாரது முகச்சோர்வினால் அவரது உள்ள நிலை வேறுபட்டிருக்கிறதென்று உணர்ந்தான்; செட்டியாரது கண்பார்வை அவரது கருத்திலேயுள்ள குறையை வெளியிட்டது; தன்னைப் பார்ப்பதில் செட்டியாருக்கு ஏதோ வருத்தம் உண்டாவதாகப் புலப்பட்டது. அதனைக் கவனித்துக் கொண்டே சென்ற அரசன் மறுநாளும் அவ்வீதி வழியே வரலானான். அன்றும் செட்டியாருடைய முகமும் பார்வையும் முன்போலவே இருந்தன. இப் படியே சில நாள் கவனித்தபோது செட்டியாருடைய மனத்தில் ஏதோ ஒரு கவலை இருக்கவேண்டுமென்று அரசன் நினைத்தான்; ஆனால், அதற்குக் காரணம் இன்னதென்பது அவனுக்கு விளங்கவில்லை.
அச் செய்தியை அரசன் தன் மந்திரிகளுள் மிகக் கூரிய அறிவுடைய ஒருவனிடம் சொன்னான். அவ்வமைச்சன் கேட்டு, "மகாராஜா! இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் அச்செட்டியாரது கவலையின் காரணத்தை ஆராய்ந்து சொல்லி விடுகிறேன்.முடியுமானால் அவர் முகத்திலும் மலர்ச்சி உண்டாகும்படி செய்வேன்" என்று உறுதி கூறினான்.
பின்பு ஒருநாள் அமைச்சன் தன்னை ஒருவரும் அறிந்துகொள்ள முடியாதபடி மாறு வேடம் பூண்டு சந்தனக்கட்டை வியாபாரியின் கடைக்குச் சென்றான். செட்டியாரை நோக்கி, "செட்டியாரே! நான் அயலூர். ஒரு மருந்துக்காகச் சந்தனக்கட்டை வேண்டியிருக்கிறது. நல்ல கட்டைகளாக வேண்டும். நான் பலஊர்களில் விசாரித்தேன். என் மனத்துக்குத் திருப்தியான சரக்கே கிடைக்கவில்லை. சிலர் உங்களிடம் கிடைக்குமென்று சொன்னார்கள். அதனால் இங்கே வந்தேன் " என்றான்.
செட்டியார்: அப்படியா! தங்களுக்கு எவ்வளவு கட்டை வேண்டுமானாலும் தருகிறேன்.
அமைச்சன் : உங்களிடம் எத்தனைவிதமான சந்தனக் கட்டைகள் இருக்கின்றன?
செட்டியார்: இந்தத் தேசத்திலுள்ள எல்லா வகைகளும் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அதிகமாகச் சேகரித்து வைத்திருக்கிறேன்.
செட்டியார் தம்மிடமுள்ள கட்டைகளைக் காட்டினார்.
அமைச்சன்: இவ்வளவு கட்டைகளும் உங்களுக்கு வியாபாரமாகுமா? நீங்கள் மிக அதிகமாக முதல் போட்டு வியாபாரம் செய்வதாகத் தோன்றுகிறதே.
செட்டியார்: இவ்வளவையும் ஒரு காரியத்திற்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன். நல்லகாலம் வர வில்லை; வந்தால் இத்தனையும் பணமாய்விடும்.
அமைச்சன்: எந்தக் காரியத்தை உத்தேசித்து வைத்திருக்கிறீர்கள்?
செட்டியார், பக்கத்தில் பார்த்துக்கொண்டு மெல்லப் பேசத்தொடங்கினார்: இந்நகரத்து ராஜ குடும்பத்தில் யார் இறந்தாலும் சந்தனக்கட்டையாலேயே தகனம் செய்வார்கள். இந்தவிஷயம் இரண்டு தலைமுறையாக எனக்கு அனுபவம். இப்பொழுது இருக்கும் அரசருடைய பாட்டனார் இறந்த காலந்தான் நான் கடைவைத்த முதல் வருஷம். கையில் பணம் இருந்தமையால் ஆரம்ப முடுக்கில் கண்கால் தெரியாமல் சரக்கை வாங்கிக் குவித்துவிட்டேன். கடை வைத்த ஆறுமாதம் வியாபாரமே சுகமாக இல்லை. பைத்தியக்காரத்தனமாக ஏன் இத்தனை கட்டைகளை வாங்கிக் குவித்தோம்' என்று வருத்தப்பட்டேன். நல்லவேளையாக அடுத்த இரண்டாவது மாதத்தில் அந்த ராஜா இறந்துபோனார். தகனத்துக்காகச் சந்தனக்கட்டைகளைக் கடைகளிலெல்லாம் வாங்கினார்கள். போதவில்லை. அப்பால் என்னிடமிருந்த அத்தனை சரக்கையும் வாங்கிக்கொண்டார்கள். இப்படி, முதல் வருஷத்திலேயே எனக்கு அதிக லாபம் கிடைத்தது. பிறகு இந்த மகாராஜாவின் தகப்பனார் பட்டத்துக்கு வந்தார். அவருக்குத் தேக அசௌக்கியம் ஏற்பட்டது. நான் முன்பே அனுபவப்பட்டவனாதலால் மறுபடியும் கடைநிறையச் சரக்கு வாங்கிக் குவித்தேன். நான் எதிர்பார்த்தபடியே அந்த ராஜா இறந்துபோனமையால் கட்டைகளெல்லாம் செலவாகிவிட்டன.
"இந்த ராஜ பரம்பரையில் நாற்பது பிராயத்துக்குமேல் யாரும் இருப்பதில்லை. இந்த ராஜாவுக்கு இப்போது நாற்பது பிராயம் நடக்கிறது. பழைய அநுபவத்தால், இந்த ராஜாவுக்கு உபயோகப்பட வேண்டுமென்று முன்புபோல மிகுதியான கட்டைகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ராஜாவுக்கோ ஜலதோஷங் கூட வந்ததாகத் தெரிய வில்லை. தினந்தோறும் இந்தத் தெரு வழியே போகிறார். அவரைப் பார்த்தால் நல்ல சௌக்கியத்தோடு இருக்கிறாரென்று தெரிகிறது. எனக்கு அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை " என்று சொல்லி முடித்தார்.
அமைச்சன் தன் மனத்துக்குள், 'அட படு பாவி! உன் எண்ணம் இதுவா?' என்று எண்ணிக் கொண்டான்; பிறகு சில சந்தனக்கட்டைகளை வாங்கிக்கொண்டு சென்றான். இந்தச் செய்திகளை அவன் அரசனிடம் சொல்லவில்லை.
சில நாட்கள் சென்றன. அரசனுக்குப் பிறந்த நாள் வந்தது. அப்பொழுது அமைச்சன் தன் இஷ்டப்படி செலவுசெய்ய உத்தரவுகொடுக்க வேண்டு மென்று அரசனிடம் வேண்டினான் ; மிக்க அறிவும் முன் யோசனையும் உள்ள அவன் செய்வன யாவையும் உசிதமாகவே இருக்குமென்னும் துணிவினால் "உம் இஷ்டப்படியே செய்யலாம் " என்று மன்னன் உத்தரவிட்டான்.
அரசனது பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறுதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சன் செய்ய ஆரம்பித்தான். பிறந்த தினத்தன்று அரசனும் அவனுடைய உறவினர் யாவரும் சந்தனத்தைலத்தில் ஸ்நானம் செய்யவேண்டுமென்றும் அதற்காக மிகவும் அதிகமாகச் சந்தனக்கட்டைகள் வேண்டுமென்றும் முரசறைவித்தான். பலர் தம்மிட முள்ள சந்தனக்கட்டைகளை விலைக்குக்கொடுத்தனர். சந்தனக்கட்டை வியாபாரியாகிய முற்கூறிய செட்டியாரது கடையிலுள்ள சிறு துரும்புகூட விலைபோயிற்று. அதனால் அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே யில்லை; தமக்கு வந்த லாபத்தின் மிகுதியினால், அரசன் பிறந்த தினத்தன்று ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்தார்.
அரசன் அன்று மாலை ஊர்வலமாக வந்தான். அப்போது அமைச்சன், "இன்றைக்குச் செட்டியாரைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் " என்று சொன்னான். அப்படியே அரசன் செட்டியாரது கடைக்கு அருகில் வரும்போது அவரைக் கவனித்தான்; என்று மில்லாதபடி அவருடைய முகம் பிரகாசமாக இருந் தது. அவரை யறியாமலே அவர் கரங்கள் தலை மேலே குவிந்தன ; "மகாராஜா இன்னும் தீர்க்காயு ளோடு வாழ்ந்திருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும். இப்படியே பல பிறந்தநாள் உத்ஸவம் நடக்கவேண்டும் " என்று வாழ்த்தினார். அவருக்கிருந்த உத்ஸாகத்தினால் அவருடைய வாழ்த்து அரசன் காதில் விழுமளவு பலமாக இருந்தது. அதற்கு முன்பெல்லாம்
அரசனுக்கு விஷமாக இருந்த செட்டியாருடைய பார்வை அன்று அமிர்தம்போல இருந்தது.
ஊர்வலம் முடிந்தபிறகு, அரசன் அமைச்சனை நோக்கி, "ஏன் இன்றுமாத்திரம் அந்தச் செட்டியார் சந்தோஷமாக இருந்தார்?" என்று கேட்டான்.
அமைச்சன் : இனி எப்போதும் அப்படியே இருப்பார். மகாராஜாவினுடைய திருமேனிக்குத் தீங்கு ஒன்றும் வரக்கூடாதென்றும், நீடூழி காலம் வாழவேண்டுமென்றும் கடவுளைப் பிரார்த்திப்பவர்களுள் அவரே முதன்மையானவராகிவிட்டார்.
இங்ஙனம் கூறிவிட்டு அமைச்சன் அரசனிடம் செட்டியாருடைய பழைய எண்ணத்தையும் அது மாறியதையும் அரசனுக்குக் கோபம் வாராதபடி சொன்னான். அமைச்சனுடைய அறிவின் திறத்தை அறிந்த அரசன் அவனை மிகவும் பாராட்டினான். அன்றுமுதல் செட்டியாரது முகத்தில் உண்டான மலர்ச்சி மாறாமலே இருந்தது.
------------------
15. தர்ம சங்கடம்
திருவாவடுதுறை மடத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களுக்குப் பல தமிழ் நூல்களைப் பாடஞ்சொல்லி வந்தனர். ஒரு சமயம் திருநாகைக் காரோணப்புராணம் தொடங்கப் பெற்றது. அக்காலத்தில் ஆதீனகர்த்தராக இருந்த மேல கரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையிலே பாடம் நடைபெற்று வந்தது. அப்புராணத்தின் ஒரு பகுதியாகிய தலவிசேடப் படலத்தில் பிரளயகால வர்ணனை நடந்துவருகையில் திருவாலங்காட்டு அப்பா தீட்சிதரென்பவர் வந்தார். அவர் வடமொழியில் புகழ் பெற்று விளங்கிய ஸ்ரீ அப்பைய தீட்சிதரது பரம் பரையினர்; வியாகரணத்திலும் சைவ சாஸ்திரங்களிலும் நல்ல பயிற்சியுடையவர். அவரிடத்தில் எத்தனையோ சிஷ்யர்கள் திருவாவடுதுறை மடத்து உதவியாற் படித்துப் பெரிய வித்துவான்கள் ஆனதுண்டு.
மாணாக்கர் படிக்கும் பகுதியை அங்கே வந்த தீட்சிதர் கவனித்துக் கேட்பாராயினர். அங்ஙனம் கேட்டு வருகையில் அவர் ஒவ்வொரு பாடலிலுமுள்ள விஷயத்தை என்ன காரணத்தாலோ ஆட்சேபித்துக்கொண்டே வந்தார். பிள்ளையவர்கள் சுருக்கமாக விடை கூறினர்; சமாதானம் சொன்னார்; அவற்றைக் கவனியாமல் தீட்சிதர் மீட்டும் மீட்டும் ஆட்சேபம் செய்து வந்தனர். அதனால் அப்புலவர் பெருமானுக்கு அதிருப்தி உண்டாயிற்று. அதனையும் பாடம் தடைப்படுதலையும் கவனித்த சுப்பிரமணிய தேசிகர் அவர் வந்த காரியத்தை விசாரித்து முடிவு செய்து விடைகொடுத்து விரைவில் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, "பாடம் நடக்கலாம் " என்றனர்.
வழக்கம்போலவே பாடம் நடைபெற்றது. பாடம் முடிந்தபின் பிள்ளையவர்கள், [1]திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகள் இருந்தால் இந்தப் பாகத்தைக் கேட்டு மிகவும் சந்தோஷிப்பார்கள். இங்கே இப்போது அவர்கள் இல்லாதது ஒரு குறையே என்று சொல்லிக்கொண்டே தம்முடைய வீடு சென் றார்.
---------
[1]. திருவாலங்காடென்பது திருவாவடுதுறைக்கு மிகவும் சமீபமாகவுள்ள ஒரு சிவஸ்தலம்.
----------
தியாகராஜ சாஸ்திரிகளென்பவரும் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர் ; சில சாஸ்திரங்களிலும் வேதத்திலும் வல்லவர்; அலங்கார சாஸ்திரத்தில் நிபுணர் ; இசையிலும் கவிகள் இயற்றுவதிலும் நல்ல ஆற்றலுடையவர்; வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்; இங்கிலீஷ் முதலிய வேறு பாஷைகளிலும் அவருக்குப் பயிற்சியுண்டு; சில காலம் புதுக்கோட்டையில் வேலையாக இருந்தவர். அவர்செய்யும் பிரசங்கங்கள் மிகுந்த சுவையுடை யனவாயிருக்கும். சிவகதை பண்ணுகிற வழக்கமும் அவருக்கு உண்டு. சாதாரணமாகப் பேசிக் கொண் டிருக்கும்பொழுதே கேட்பவர்கள் வேறு விஷயத்தில் மனத்தைச் செலுத்தாமல் இன்புற்றுக் கொண்டே யிருக்கும்படி அவர் செய்வார். மேலே கூறிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சின்னப்பட்டம் பெற்றது தொடங்கி வடமொழி நூல்களை அவருக்குப் பாடஞ் சொல்லி வந்ததன்றிப் பல சாஸ்திரங்களுடைய நுட்பங்களையும் பல வடமொழிக் காவியங்களின் கருத்துக்களையும் அலங்காரப் பகுதிகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஓய்வுநேரங்களில் தெரிவித்து அவரை உலகத்திற்கு மிகப்பயன்படும்படி செய்தவர். தேசிகருடைய முக்கியமான வடமொழி வித்தியாகுரு அவரே. அவர் பிள்ளையவர்களிடத்தும் பேரன்புடையவர்.
அப்பா தீட்சிதர் வந்து சென்றதற்கு மறுநாள் பாடம் நடைபெற்றபொழுது, மேற்கூறிய தியாக ராஜ சாஸ்திரிகள் புதுக்கோட்டையிலிருந்து திருவாலங்காட்டுக்குப் போய் விட்டு உடனே திருவாவடு துறை ஆதீனகர்த்தரைப் பார்ப்பதற்காக மடத்திற்குத் தம் சிஷ்யர்களுடன் தற்செயலாக வந்தார்.
அவர் உள்ளே வந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் சாஸ்திரிகளோடு சிறிதுநேரம் சம்பாஷித்தனர். அப்பால், "நேற்று நடந்த பாகத்தைச் சாஸ்திரிகளவர்களுக்குப் படித்துக் காட்டிப் பொருள் சொல்லலாமே " என்று தேசிகர் பிள்ளையவர்களிடம் சொன்னார். அவ்வண்ணமே நாலைந்து செய்யுட்கள் ஆயின. ஒவ்வொரு பாடலின் பொருளையும் கேட்கும்போது சாஸ்திரிகள் ஆனந்தமடைந்து, "உங்களைப்போல் பாடுகிறவர்கள் யார் இருக்கிறார்கள்? இவ்வளவு அழகாகக் கற்பனை அமைக்கும் சக்தி உங்களுக்குத்தான் இருக்கிறது. தமிழிலே பழக்கமில்லாத எனக்குக்கூட இந்தப் பாடல்களின் பொருள்கள் நன்றாக விளங்குகின்றன. சிறந்த கவித்துவமென்பது இதுதான். பூர்வஜன்மத்தில் நீங்கள் கம்பராக இருந்திருக்கவேண்டும்" என்று பிள்ளை யவர்களை மிகவும் பாராட்டினார்.
சுப்: இந்தப் பாடல்களில் ஏதேனும் குற்றம் காணப்படுகிறதா?
தியாக: இந்தப்பாடல்கள் சஞ்சரிக்கிற இடங்களிலே கூட ஒரு குற்றமும் இராதே. அப்படியானால் இவற்றில் எப்படி யிருக்கும்? நிர்த்தோஷமான வாக்கு.
சுப்: இவற்றில் ஏதாவது குற்றமிருக்கிறதென்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
தியாக: அவனை மகா அயோக்கியனென்றும் துஷ்டனென்றும் மூர்க்கனென்றும் மகா அகங்காரி யென்றும் சொல்வேன். அப்படிச் சொன்னவன் யார்?
சுப்: உங்களுடைய குருவே!
தியாகராஜ சாஸ்திரிகள், "அப்படியா!" என்று நடுநடுங்கி உடனே எழுந்து இரண்டு கைகளையும் தலைமேற் குவித்துத் திருவாலங்காடு உள்ள திசையை நோக்கிக் கண்ணை மூடிக்கொண்டு, "ஹரஹர மஹாதேவா! சிவ சிவா! என்னுடைய பதற்றமான வார்த்தைகளை க்ஷரிக்கவேண்டும். ஆசார்ய மூர்த்தே!" என்று சொல்லிக்கொண்டும் கண்ணின் கருவிழிகளை மேலே செலுத்தித் தியானித்துக்கொண்டும் நின்றார்.
சுப்: (புன்முறுவல் கொண்டு) சாஸ்திரிகளே! இருக்க வேண்டும். இவ்வளவுதூரம் நீங்கள் மனத்தைச் செலுத்துவீர்களென்பது நமக்குத் தெரியாது. ஏதோ நடந்ததைச் சொல்லவேண்டியிருந்தமையால் சொல்லும்படி நேர்ந்தது. பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களிடத்திற் படித்துக் காட்டித் தங்களுடைய சந்தோஷத்தைப் பெறவேண்டு மென்பதே நமது கருத்து; ஆகையினால்தான் இங்ஙனம் செய்யலாயிற்று.
தியாகராஜ சாஸ்திரிகள், "சந்நிதானம் இப்படிப்பட்ட தர்ம சங்கடமான விஷயத்திற் கொண்டு வந்துவிட்டதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே ! இனிமேல் இப்படிப்பட்ட சங்கடத்தில் என்னை இழுத்துவிடக் கூடாது
என்று சொல்லிக் கொண்டே யிருக்கையில் நேரமாய் விட்டபடியால் எல்லோரும் விடைபெற்று எழுந்து சென்றார்கள். முதல் நாள் மிகுந்த வருத்தமடைந்து கொண்டே யிருந்த மாணாக்கர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி
பெரியதோர் ஆறுதலை விளைவித்தது.
-------------------
16. ஆளுக்கேற்ற மதிப்பு
புதுச்சேரியிற் பல வருஷங்களுக்கு முன் ஒரு பிராமணர் இருந்து வந்தார். அவர் மிகவும் வறியவர். தம்முடைய வைதிக
நெறி தவறாமல் அவர் ஒழுகிவந்தார். இறைவனிடத்தில் உறுதியான அன்புடையவராதலின் வறுமையின் துன்பம் அவர் உள்ளத்தை மெலியச் செய்யவில்லை. பிறரிடம் சென்று சென்று யாசகம் செய்து வாழும் துணிவு அவர்பால் இல்லை. ஆயினும், அவருடைய தூய்மையான ஒழுக்கத்தையும், அன்பு நிலையையும் அறிந்த சில பிரபுக்கள் அவருக்கு வேண்டியவற்றைக் குறிப்பாக அறிந்து உதவிபுரிந்து வந்தார்கள். அதனால் அவ்வந்தணருக்குக் குடும்பக் கவலை உண்டாக வில்லை. அவர்களுள் ஒருவர் அவ்வந்தணரைத் தெய்வம்போல மதித்து வந்தார்; "தாங்கள் எந்தச் சமயத்தில் எது வேண்டுமாயினும் கேட்கலாம். அப் பொருளைத் தருவதற்கு நான் முன் வருவேன்" என்று சொல்லி யிருந்தார். அவ்வந்தணரும் தமக்கு ஏதேனும் வேண்டுமாயின், வேறு யாரிடத்தும் கூறாமல் அச்செல்வரிடத்திலே சென்று சொல்லி வாங்கிக் கொள்வார்.
"இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு"
என்பது பொய்யா மொழியன்றோ?
அந்தணருக்கு ஒரு புதல்வன் இருந்தான். அவனுக்கு உபநயனம் செய்யும் காலம் வந்தது. அது செய்வதாயின் தக்க பொருள் வேண்டும். அந்தணரோ பொருளில்லாதவர். ஆயினும் தமக்குக் கற்பகம்போல் இருக்கின்ற பிரபுவினிடம் கூறி உபநயனத்தை நடத்தி முடிக்கலாமென்ற தைரியம் அவருக்கு இருந்தது.
ஒரு நாள் இவ்விஷயத்தை அவ்வுபகாரியிடம் சொல்ல எண்ணி வேதியர் புறப்பட்டார். அப்பிரபுவின் வீட்டுக்கருகே போய்ச் சேர்ந்தனர். அப் பொழுதுதான் அச் செல்வர் தம்முடைய இரட்டைக் குதிரை வண்டியில் ஏறி வெளியிலே புறப்பட்டுக் கொண்டிருந்தார். வண்டி வருவதை அந்தணர் பார்த் தார்; 'இது சரியான சமயமன்று' என்றெண்ணி வழியைவிட்டு விலகி நின்றார்.அவர் நிற்பதைக் கண்ட கனவான் சட்டென்று வண்டியை நிறுத்தச் செய்து அவரைப் பார்த்து, "ஏன் இங்கே நிற்கிறீர்கள்? எங்கே போகவேண்டும்?" என்று கேட்டார். அவர் போகும் இடம் தெரிந்தால் தாமே அவரை அங்கே கொண்டு விடலாமென்பது அவ்வுபகாரியின் கருத்து. அந்தணர், "தங்களைத் தேடித்தான் வந்தேன்; அப் பால் ஓய்வான காலத்தில் வந்து விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன்'' என்றார்.
பிரபு : அப்பால் என்ன? இப்பொழுதே சொல்லுங்கள். எது வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்.
அந்தணர் : என்னுடைய குமாரனுக்கு உபநயனம் செய்யவேண்டும். அதன்பொருட்டே தங்களைப் பார்த்துப் போக வந்தேன்.
பிரபு : இதுதானா பெரிது? அதற்கு எவ்வளவு செலவாகும்?
அந்தணர்: நூறு ரூபாய் செலவாகும்.
பிரபு : இதோ, இந்த வண்டியிலே ஏறுங்கள்; வழியிலேயே வாங்கித் தருகிறேன்.
அந்தணர் பிரபுவோடு வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி போய்க்கொண்டிருந்தது.
அந்தணர்: தாங்கள் எனக்கு அப்போதப்போது செய்துவரும் உபகாரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ! நூறு ரூபாயைச் சம்பா திப்பதற்கு என்னால் இயலவில்லை. யாரிடமாவது கடனாக வாங்கலாமென்றாலோ என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னிடம் என்ன சொத்து இருக்கிறது? என் காதில் இருக்கிற இந்தக் கால்ரூபாய்க் கடுக்கனைத் தவிர எனக்கு வேறொன்றும் இல்லை. வேறு வழியில்லையென்று துணிந்து உங்களை நாடி வந்தேன்.
பிரபு : அது கிடக்கட்டும், உங்கள் கடுக்கன் கால் ரூபாயா பெறும்? இப்போது ஒரு வேடிக்கை பாருங்கள்; உங்கள் கடுக்கனைக்கொண்டே நூறு ரூபாய் வாங்கித் தருகிறேன்.
பிரபு தம்முடைய காதிலிருந்த வைரக் கடுக்கனைக் கழற்றி வைத்துக்கொண்டார்; பிராமணருடைய கடுக்கனைக் கழற்றித் தரச்செய்து அவற்றைத் தம் காதில் அணிந்துகொண்டார். பிறகு வண் டியை நேரே ஒரு காசுக்கடைக்கு ஓட்டச் செய்தார்.
வண்டி காசுக்கடை வாசலில் வந்து நின்றது. பிரபு அதிலிருந்தபடியே கடைக்காரரை அழைத்துத் தம் காதிலிருந்த பிராமணருடைய கடுக்கனைக் கழற் றிக் கொடுத்து, "இதோ இவற்றை வைத்துக் கொண்டு நூறு ரூபாய் தாரும்" என்றார். கடைக்காரர் பேசாமல் அவற்றை வாங்கிக்கொண்டு நூறுரூபாய் தந்தார். பிரபு வண்டியை விடச்செய்தார். வண்டி சிறிது தூரம் சென்றது.
பிரபு : பார்த்தீர்களா உலகத்தை? உங்கள் காதில் இருந்த கால்ரூபாய்க் கடுக்கன்களே நூறு ரூபாயை வாங்கித் தந்தன. இருநூறு கேட்டாலும் அவன் கொடுத்திருப்பான். ஆளுக்கேற்றபடி ஒரு பொருளுக்கு மதிப்பு உண்டாகிறது.
அந்தணர் : இவ்வளவு அவசரமாகக் கொடுக்க வேண்டியதில்லையே.
பிரபு, "எந்தத் தருமத்தையும் நினைத்தபொழுதே செய்துவிடவேண்டும். மனம் எப்போதும் ஒரு நிலையில் இராது. அதனால் இப்படிச் செய்தேன் '' என்று சொல்லி அந்த நூறு ரூபாயையும் அந்தணர் கையிற் கொடுத்தனுப்பினார். சிறிதேனும் மதிப்பற்ற தம் கடுக்கன் நூறு ரூபாயைத் தரச்செய்த உலக இயல்பை வியந்துகொண்டே அந்தணர் தம் வீடு சென்றார்.
பிரபு தாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று பார்க்கவேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்; வந்து நூறு ரூபாயைக் காசுக் கடைக்காரருக்கு அனுப்பிவிட்டு அந்தணருடைய கடுக்கனைத் திரும்ப வருவித்தார். பிறகு அந்தணரைக் கண்டு "உங்கள் கடுக்கன். என் காதில் அணிந்துகொண்டனவாதலின் மீண்டும் தாங்கள் அணிவது தக்கதன்று. அன்றியும் நான் கொடுத்த நூறுரூபாய்க்கு அவையல்லவா ஈடு? அவற்றை நான் திருப்பித் தரமாட்டேன் '' என்று சமத்காரமாகக் கூறிவிட்டு அவற்றிற்குப் பிரதியாக ஒரு ஜோடிப் புதிய கடுக்கனை வருவித்து அவர் காதில் அணிவித்தார்.
மறையவர் அப்பிரபுவின் வண்மை விளையாட்டையும், இவ்வளவையும் செய்விக்கும் இறைவனது அருள் விளையாட்டையும் எண்ணி எண்ணி மனமுருகினார்.
(இவ்வரலாறு என்னுடைய தமிழாசிரியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது.)
-----------------------
17. மாம்பழப் பாட்டு
பட்டீச்சுரமென்னும் தலத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தம் மாணாக்கர்களோடு சிலகாலம் இருந்து வந்தார்கள். அங்கே இருந்த வேளாளச் யென்பவர் செல்வராகிய ஆறுமுகத்தாபிள்ளை அக்கவிஞர்பிரானை அன்புடன் ஆதரித்து வந்தார். பிள்ளையவர்களோடு உடனிருந்தவர்களிற் சுப்பையா பண்டாரமென்பவர் ஒருவர்.அவருடைய ஊர் திருவிடைமருதூர். ஆறுமுகத்தா பிள்ளைக்கு அவர் மைத்துனர்; தமிழிற் சிறிது பயின்றவர்; தமிழிற் பிற்காலத்தனவாகிய பாடல்கள் சிலவற்றை மனனஞ் செய்து வைத்திருப்பவர்; அப் பயிற்சியையே ஆதாரமாகக் கொண்டு தம்முடைய வறுமைத் துன்பத்தை மாற்றிக்கொள்ளுவார்; பல பல ஜமீன்தார்கள் முதலியோர்களிடம் போய் அவர்கள் நோக்கம்போலவே நடந்து அவர்களுடைய நிலைமையை அறிந்து பழைய பாடல்களை அவர்கள் பெயருக்கு மாற்றிச்சொல்லியோ, வேறு பாடல்களைச் சொல்லியோ அவர்களை மகிழ்வித்துப் பரிசு பெற்றுக் காலங்கழிக்கும் இயல்பினர்; தோற்றப் பொலிவுள்ளவர் ; பிள்ளையவர்களையன்றி வேறு யாரையும் மதியாதவர்; தைரியசாலி ; பிள்ளையவர்களுடைய காரியங்களைக் கவனித்துக்கொண்டு வருபவர். பாடம் கேட்கும் வழக்கம் மட்டும் அவருக்கில்லை; அதில் அவருக்குப் பிரியமுமில்லை.
ஒருநாள் பகற்போசனத்திற்குப் பின் பிள்ளை யவர்களுடன் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கூறிய சுப்பையா பண்டாரத்தை நோக்கி மைத்துனரென்ற முறைமையால் ஆறுமுகத்தா பிள்ளை, "சுப்பையா, நீ பலரிடம் சென்று சென்று புதிய பாடல்களை இயற்றிப் பாடிப் பரிசுகள் பெற்று வருவதாகச் சொல்லுகிறாயே; அதனை நாங்கள் தெரிந்துகொள்ளும்படி இன்று கும்பகோணம் போய் நம் [1]தியாகராச செட்டியார்மீது ஏதாவது ஒரு பாடலியற்றிப் பரிசுபெற்று ஐயா அவர்களுக்குப் பிரியமான மாம்பழங்களை விலைக்கு வாங்கி வர முடியுமா?" என்றனர். அதனைக் கேட்ட பிள்ளையவர்கள் ஆறுமுகத்தா பிள்ளைக்குத் தெரியாதபடி, முடியுமென்று சொல்லும் வண்ணம் குறிப்பால் பண்டாரத்தைத் தூண்டினார். வெறு வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தாற் சொல்ல வேண்டுமா?
---
[1]. இவர் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர்;மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் முறையாகப் பாடம் கேட்டவர்.
----
உடனே சுப்பையா பண்டாரம் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, "அவசியம் செட்டியாரிடம் போய்ப் பாடல் செய்து சொல்லிக் காட்டி மகிழ்வித்துப் பரிசுபெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன் " என்றார்.
ஆறு : ஒரு நாளும் முடியாது.
சுப்: ஏன் முடியாது? ?
ஆறு: உனக்குப் படிப்பில்லையே!
சுப்: எனக்குப் படிப்பில்லை யென்பதை நீர் கண்டீரா? எவ்வளவோ இடங்களுக்குப் போய்த் திரவியம் சம்பாதித்து வருகிறேனே ; படிப்பில்லா விட்டால் முடியுமா? ?
ஆறு : படிப்பில்லாத இடமாகப் பார்த்துத்தான் நீ போய்வருகிறாய். எனக்கும் பிறர்க்கும் அது நன்றாகத் தெரியுமே.
சுப்: தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு என்பதுபோல் என் படிப்பை நீர் மதிக்கவில்லை.
ஆறு : செட்டியாரிடம் போனால் உன்னுடைய படிப்பு நன்றாக வெளியாகும்.
சுப்: அவர் என்ன செய்வார்?
ஆறு: உன் நரம்பை எடுத்துவிடுவார்; வெளியே கிளம்பவொட்டார்.
சுப்: நான்தான் அவர் நரம்பை எடுத்து விடுவேன். அவரிடத்தில் கொஞ்சமேனும் எனக்கு அச்சம் இல்லை.
ஆறு : ஏன் அச்சமிருக்கும்? சிறிதாவது படிப்பிருந்தாலல்லவோ படித்தவர்களிடத்தில் அச்சமுண்டாகும்? மகா மூடனாக இருக்கிற உனக்கு மகா பண்டிதராகிய அவரிடத்தில் எப்படி அச்சம் உண்டாகும்? நீ மாத்திரம் அவரிடம் போய் ஒரு பாடலைச் சொல்லுவாயாயின் உன் சரக்கு வெளியாகும்.
சுப்: நீர் இப்படிச் சொல்வது என்னுடைய கௌரவத்திற்கு மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆறு: உனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? இருந்தாலல்லவோ அது குறையுமென்று நீ கவலைப் படவேண்டும்?
சுப் : இருக்கட்டும்; நீர் என்ன செய்யச் சொல்லுகிறீர்?
ஆறு: செட்டியார்மீது ஒருபாடல்செய்து பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வரவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீ மனுஷ்யனேயல்ல.
சுப்: நீர் என்ன சொல்லுகிறது? அப்படிச் செய்யாவிட்டால் நான் மனுஷ்யனல்லவென்று நானே சொல்லுகிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் புறப்படுதற்குத் தொடங்கினார்.
அதனைக் கண்ட ஆறுமுகத்தாபிள்ளை வழக்கம் போலவே நித்திரை செய்யப் போய்விட்டார். அப்பொழுது, ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அவர் நன்றாகத் தூங்கிவிட்டாரா வென்பதை அறிந்துவரச் செய்தனர்; தூங்கிவிட்டாரென்று தெரிந்துகொண்டு அக்கவியரசர் தியாகராச செட்டியார்மீது புதிதாக ஒருபாடலை இயற்றி எழுதுவித்து எழுதிய ஏட்டைச் சுப்பையா பண்டாரத்தினிடம் கொடுத்தனர் ; "இப்பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக் கொண்டு சென்று தியாகராசுவினிடம் நீர் செய்த தாகவே சொல்லிக் காட்டிப் பணம்பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள்ளே வந்து விடும். அவன் என்ன சொன்னாலும் பயப்படாமல் எதிர்மொழி சொல்லும்; இதன் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டுபோம்" என்று சொல்லிவிட்டு அங்கே நின்ற மாணாக்கராகிய சரவணபண்டார மென்பவரை அவருடன் போய் வரும்படி அனுப்பினர்; அந்தப் பாடலின் பொருளை நன்றாக அவருக்குப் போதித்து அனுப்பும் வண்ணம் எனக்குக் கட் டளையிட்டனர். பின்பு தாம் வழக்கம்போலவே சிரம பரிகாரஞ் செய்துகொள்ளத் தொடங்கினர்.
சுப்பையா பண்டாரம் அப்புலவர் பிரான் சொன்னபடி என்னிடம் அச்செய்யுளின் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டார்; பிறகு சட்டை முதலியன தரித்துக் கையிற்கொலொன்றை எடுத்துக் கொண்டு அந்தப் பாடலை நெட்டுருப்பண்ணிக் கொண்டும் பொருளைச் சிந்தித்துக் கொண்டும் சரவண பண்டாரத்துடன் புறப்பட்டார்; தைரியமுடையவராகி ஊக்கமுற்றுக் கும்பகோணம் சன்று தியாகராச செட்டியாருடைய வீட்டையடைந்து விசாரித்தார். செட்டியார் இல்லை யென்பதை அறிந்து அந்த வீட்டு வெளித் திண்ணையிலே இருந்தார்.
செட்டியார் காலேஜில் பாடம் சொல்லிவிட்டு நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்தனர். வந்தவர் திண்ணையிலிருந்த பண்டாரத்தை நோக்கி ஆவலோடு, "ஐயா அவர்கள் வந்திருக்கிறார்களா?' என்று வினவவே சுப்பையாபண்டாரம்,
"வர வில்லை நான்மட்டும் இங்கே ஒரு காரியமாக வந் திருக்கிறேன்" என்றார். செட்டியார் வேகந் தணிந்து, ஆனால் "இங்கே இரும்; வந்துவிடுகிறேன் " என்று சொல்லி உள்ளே சென்று உத்தியோக உடைகளைக் களைந்துவிட்டு வேறு மடியொன்றைத் தட்டுடையாக உடுத்திக்கொண்டு விசிறியும் கையுமாக வெளியே வந்து அமர்ந்தனர்; பின்பு, 'நீர் இவ்வளவு படாடோபமாக வந்த காரியமென்ன? வேறு யாரையே னும் பார்க்கவந்தீரா? ஐயா அவர்கள் ஏதாவது சமாசாரம் சொன்னதுண்டா?" என்று கேட்டார்.
சுப்: இல்லை ; நான் உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறேன். வந்தது ஒரு காரியத்தை உத்தேசித்து. உங்கள்மீது ஒரு பாடலும் செய்துகொண்டு வந்தேன். தனியே எங்காவது சென்றால் இந்த வேஷத்தோடுதான் நான் போவது வழக்கம் ; ஐயா அவர்களுடன் வந்தால் சாதாரணமாக வருவேன்.
தியாக: பாடல் செய்துகொண்டு வந்திருக்கிறே னென்று சொல்லுகிறீரே! உமக்குப் பாடல் செய்கிற வழக்கமுண்டோ?
சுப்: ஏன் இல்லை? நான் செய்யுள் செய்வேனென்பது உங்களுக்குமட்டும் தெரியாது. பல இடங் களுக்குப் போய்ப் போய்ப் பாடிப் பாடிப் பரிசு பெற்று வருவது எனக்கு வழக்கம். என்னுடைய காலக்ஷேபத்திற்கு அதுதானே வழி? இது பலருக்கும் தெரியுமே.
தியாக: நீர் வெளியிடம் சென்று யாசகம் பண்ணிக் காலக்ஷேபம் செய்கிறீரென்பது மட்டும் தெரியும். பாடல் செய்துகொண்டுபோய்ச் சம்பாதித்து வருவது இதுவரையில் எனக்குத் தெரியாது. பாடுவதென்றாற் படித்திருக்க வேண்டுமே.
சுப்: ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேன் சிலரைப்போல நான் பறையறைந்து கொண்டு திரிகிறதில்லை.
தியாக: படித்தவர்களெல்லாம் படித்திருக்கிறோ மென்று சொல்லிக்கொண்டுதான் திரிகிறார்களா? நீர் சொல்வது நன்றாக இல்லையே. படித்திருந்தால் எப்படியும் பிறருக்குத் தெரியுமல்லவா? உம்மிடத்திற் புஸ்தகம் இருத்தலை நான் ஒருபொழுதும் கண்டதில்லையே.படிப்பிற்குரிய அடையாளத்தையும் உம் மிடம் இதுவரையில் நான் காணவில்லை. பிள்ளையவர்களோடு வந்து ஆகாரம் பண்ணிப் போவதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மதிப்புத் தான் உமக்கு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல நீர் படித்துக் கொண்டிருந்ததையாவது பாடங் கேட்டதையாவது நான் இதுவரையிற் பார்த்ததுமில்லை ; கேட்டதுமில்லை. அந்த விஷயம் இருக்கட்டும். நீர் செய்துகொண்டு வந்ததாகச் சொன்ன பாடலைச் சொல்லும்; கேட்போம்.
சுப்:
புண்ணியமெல் லாந்திரண்ட வடிவென்கோ குறுமுனிவன்[1]
பொதிய நீத்திங்
கண்ணியதோர் வடிவென்கோ தமிழிலுள் பலகலைகள்
அனைத்துங் கூடி
நண்ணியதோர் வடிவென்கோ பின்னுமெந்த வடிவமென
நாட்டு கோயான்
மண்ணியமா மணியனைய தியாகரா சப்புலவன்
வடிவந் தானே.
-------
[1]. குறுமுனிவன் அகத்தியன். கண்ணியது நினைத்தது. மண்ணிய - சுத்தம் செய்த.
--------------
தியாக: (புன்னகைகொண்டு) இதனை இன்னும் ஒருமுறை சொல்லும்.
சுப்: நல்லது அப்படியே. (பாடலை மறுபடியும் சொன்னார்.) எப்படியாவது என் பாடலை உங்கள் காதிற் போட்டு நன்மதிப்பைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்றே இங்கு வந்தேன்.
தியாக : இருக்கட்டும்; இந்தப் பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும் செய்து கொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாட வருமா?
சுப்: ஏன் வராது? நானே தான் செய்தேன்.
தியாக: இதனை ஐயா அவர்கள் இயற்றிய பாடலென்றே நிச்சயிக்கிறேன். எதற்காக இதை உம்மிடம் பாடிக் கொடுத்தார்கள்?
சுப்: நீங்கள் இந்தவிதம் சொல்வது எனக்கு மிகவும் மானக் குறைவாக இருக்கிறது.
தியாக: நீர் செய்ததுதானா? உண்மையைச் சொல்லும்.
சுப்: அதில் என்ன சந்தேகம்?
தியாக: பொருள் சொல்லுவீரா?
சுப்: திவ்வியமாகச் சொல்லுவேன்.
தியாக: முழுவதற்கும் சொல்லவேண்டாம். இதிலுள்ள 'என்கோ' என்பதற்கு மட்டும் பொருள் சொன்னாற் போதும். சொல்லும்.
சுப்: அதற்கு, என்பேனோ வென்பது பொருள்.
தியாக: 'என்கோ' என்னும் சொற் பிரயோகத்தை வேறு எந்த நூலில் எந்த இடத்திற் கண் டிருக்கிறீர்? சொல்லும்.
சுப்: இடம் ஞாபகமில்லை.
தியாக: இடம் தெரியாதபோது நீர் இந்தச் சொல்லை அறிந்தது எப்படி? எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
சுப்: நீங்கள் செய்யும் செய்யுட்களில் அமைக்கிற சொற்களுள்ள இடங்களெல்லாம் உங்களுடைய ஞாபகத்தில் இருக்குமா? பழக்கத்தினாலே வந்து விடுமல்லவா?
தியாக: வீண் பேச்சை இப்பொழுது நீர் பேச வேண்டாம். இந்தப் பாடலை எதற்காக அவர்கள் செய்தனுப்பினார்கள்? சொல்லும்.
சுப்: திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்களே. நான்தான் பாடிவந்தேன். வந்த காரியத்தைக் கேட்டு முடித்து அனுப்பக்கூடுமானால் அனுப்புங்கள் ; இல்லையானால் முடியாதென்று சொல்லி விடுங்கள்.
தியாக: சரி. இதில் 'என்கோ' என்பதில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது? ஓகாரம் என்ன பொருளில் வந்தது? சொல்லும்.
சுப்: நீங்கள் பாடிய பாடல்களிலுள்ள சொற்களுக்கெல்லாம் இலக்கணம் சொல்லுவீர்களா?
தியாக: வீணான தைரியப் பேச்சினால் ஒரு பயனும் இல்லை காணும்! இந்தச் செய்யுள் நீர் பாடி யது அன்றென்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டேன். நீர் என்ன சொன்னாலும் நம்பேன் ; இந்தமாதிரி பாடுகிறதென்றால் எவ்வளவு படித்திருக்க வேண்டும் தெரியுமா?
சுப்; படிக்காமலே கம்பன் காளிதாஸன் முதலியோர் பாடவில்லையோ?
தியாக: அவர்கள் படிக்கவில்லையென்பதை நீர் கண்டீரா?
சுப்: வரகவியென்று சிலர் இப்பொழுதும் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் படித்தா பாடுகிறார்கள்? அருமையான வார்த்தைகளெல்லாம் அவர்கள் வாக்கிலே காணப்பட வில்லையா?
தியாக: இவ்வளவு பேச்சும் நீர் படிக்கவில்லை யென்பதை நன்றாக அறிவிக்கின்றன. இருக்கட்டும். இந்தப் பாட்டை நீரே செய்ததாகச் சத்தியம் செய்வீரா!
சுப்: இதோ செய்கிறேன்; எந்த மாதிரியாகச் செய்ய வேண்டும்?
தியாக : துணியைப் போட்டுத் தாண்டவேண் டும்; அது செய்வீரா?
சுப்பையா பண்டாரம், "இதோ தாண்டுகிறேன்'' என்று சொல்லித் தமது அங்கவஸ்திரத்தைக் கீழே குறுக்கே போட்டுவிட்டார். தியாகராச செட்டியார் நடுநடுங்கி அவர் கையைப் பிடித்துக் கொண்டு, "நீர் சத்தியஞ் செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நான் நினையேன். துணியைத் தாண்ட வேண்டாம். நீர் வந்த காரியம் இன்ன தென்று சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறேன். வீணாக ஏன் பொய்சொல்லுகிறீர்?' என்று நயமாகக் கேட்கவே, பண்டாரம் நிகழ்ந்தவற்றை யெல்லாம் உள்ளபடியே சொல்லி விட்டார்.
செட்டியார் உடனே பழக்கடை சென்று மிகவும் உயர்ந்தனவாக ஐம்பது மாம்பழங்களை விலைக்கு வாங்கினார்; அவற்றை இரண்டு தென்னங் குடலைகளில் அடக்கி ஒரு குடலையைச் சுப்பையா பண்டாரத்துடன் வந்த சரவண பண்டாரத்தினிடத்தும் மற்றொன்றை ஒரு கூலியாளிடத்தும் கொடுத்து உடன் செல்லும்படி சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அந்த இருவரும் தமக்குப் பின்னே வரச் சுப்பையா பண்டாரம் அவர்களுக்கு முன்னே விரைவாகப் பட் டீச்சுரம் வருவாராயினர்.
பட்டீச்சுரத்தில், ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் நித்திரை கலைந்து எழுந்து, 'பண்டாரம் கும்பகோணஞ் சென்றாரா?'' என்று விசாரித்து விட்டுப் பாடஞ் சொல்லத் தொடங்கினர்; தொடங்கினாலும் பாடஞ் சொல்லுவதில் அவருக்கு மனம் செல்லவில்லை ; சுப்பையா பண்டாரத்தின் விஷயத்தில் அவருக்குக் கவலை உண்டாயிற்று; "தியாகராசு சுப்பையாவை என்ன செய்கிறானோ? என்ன கேள்விகள் கேட்கிறானோ? சும்மா விடமாட் டானே! சுப்பையா விழிக்கக் கூடுமே!" என்று எங்களிடம் சொல்லிக்கொண்டேயிருந்தார்.அப்பால், சூரியாஸ்தமனத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு, வழக்கப்படி அவ்வூரின் தெற்கேயுள்ள திருமலை ராயன் ஆற்றங்கரைக்குச்செல்லாமற் கும்பகோணத் திற்குச் செல்லும் வழியை நோக்கி வடக்கேசென்று அங்குள்ள ஒரு குளக்கரையில் சுப்பையா பண்டா ரத்தின் வரவை எதிர்பார்த்து வடதிசையை நோக்கிக் கொண்டே நின்றனர். நானும் உடன்சென்று அருகில் நின்றேன்.
சுப்பையா பண்டாரம் வரவில்லை. பிள்ளையவர்களுக்கோ கவலை அதிகமாயிற்று; "யாராவது வருகிறதாகத் தெரிகிறதா? பாரும்'' என்றார். பார்த்து நான், ஒன்றும் தெரியவில்லை " என்றேன். 'பார்த்துக்கொண்டே
நின்று யாராவது கண்ணுக்குத் தோற்றினால் உடனே சொல்லும் என்றார். அங்ஙனமே நான் வடதிசையை நோக்கி நிற்கையில் மூன்று உருவங்கள் முதலில் கண்ணுக்குத் தோற்றின.
நான் : மூன்று உருவங்கள் தோற்றுகின்றன.
மீ: அவர்களாக இருக்குமோ? சரவண பண்டாரம் மிகவும் உயரமுள்ளவனாதலால் அதைக் கொண்டு கண்டுபிடிக்கலாமே.
நான்: மூவரில் ஒருவருடைய உருவம் மட்டும் உயரமாகவே தெரிகிறது; அவர் சரவண பண்டார மாகவே இருக்கலாம்.
மீ : பின்னும் நன்றாகக் கவனியும். தலையில் ஏதேனும் இருப்பதாகத் தெரிகிறதா?
நான்: (அவர்கள் நெருங்க நெருங்க) ஒருவர் தலையில் ஏதோ ஒரு குடலை தெரிகிறது. வேறொருவர் தலையிலும் ஒரு குடலை காணப்படுகிறது.
மீ : சுப்பையா பண்டாரம் வருகிறாரா?
நான் : வருகிறார்.
அவர்கள் வருவதை நோக்கிச் சுப்பையா பண்டாரத்தோடு பேசவேண்டுமென்ற ஆவலுடன் அக் கவிநாயகர் நிற்கையில் பண்டாரம் வேகமாக அருகில் வந்து, "என்ன ஐயா? உங்களை நான் பரமசாதுவென்று எண்ணியிருந்தேன். பெரிய ஆபத்திலே கொண்டுவந்து விட்டீர்கள். என்னை அவமானத்துக்கு உள்ளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே. நீங்கள் இவ்வளவு செய்வீர்களென்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. அந்த மனுஷ்யர் புலிபோல என்னை உறந்துவிட்டாரே" என்றார்.
மீ: என்ன? என்ன?
சுப்: என்னவா? நீங்கள் பாடல்செய்து கொடுத்தீர்களே ! அந்தப் பாடலை என்னுடைய சக்திக்கு ஏற்றபடி செய்துதர வேண்டாமா? அதில் நீங்கள் செய்ததாக நினைக்கும்படி ஏதோ அடையாளம் வைத்துப் பாடிவிட்டீர்களே. நான் பாடிக் காட்டும் பொழுது, 'என்கோ' என்பதற்கு என்ன அர்த்தம்? இந்தப் பிரயோகம் எந்த நூலில் இருக்கிறது? இலக்கணமென்ன?' என்று பல கேள்விகளைக் கேட்டு அந்த மனுஷ்யர் உபத்திரவம் செய்து என் பிராணனை வாங்கிவிட்டார். நான் சத்தியம் பண்ணிக்கொடுப்பதாகச் சொல்லியும் அவர் நம்பவில்லை.
மீ: அப்பால் நீர் எப்படி அவனிடமிருந்து தப்பி மாம்பழம் வாங்கி வந்தீர்?
சுப்: பிற்பாடு சொல்லுகிறேன். அதை இப்பொழுது சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
இவ்வாறு சொல்லுகையில் அவர் முகம் மிகுந்த கோபக்குறிப்போடு இருந்தது. பிள்ளையவர்கள் அந்நிலையை உணர்ந்து, "சரி; வீட்டுக்குப் போம்'' என்றனர்.
சுப்பையா பண்டாரம் தமக்குப் பின்னே வந்த இருவருடனும் வீட்டிற்குச் சென்றார். திண்ணையிலிருந்த ஆறுமுகத்தா பிள்ளை அவரைக் கண்டு, "என்ன சுப்பையா! போய் வந்தாயா? என்ன குடலைகள்? மாம்பழக் குடலைகளா? செட்டியாரைப் பார்த்தாயா? புதிய பாடல் சொன்னதுண்டா? அவர் பழம் வாங்கிக்கொடுத்தாரா? கௌரவத்திற்காக நீயே சொந்தப் பணத்தைக்கொண்டு வாங்கி வந்தாயா? உண்மையைச் சொல்' என்று அவசரமாகக் கேட்டார்.
சுப்: ஒரு பாடல் செய்து சொல்லிக் காட்டியே செட்டியாரை மகிழ்வித்தேன். அவரே நேரில் பழக் கடைக்கு வந்து பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அவர் அனுப்பிய ஆளே இவன்.
ஆறு : உண்மையில் செட்டியார் உன்னுடைய பாடலை உத்தேசித்துப் பழம் வாங்கிக் கொடுத்திருந்தால் அவரைப்போல அறியாதவர்கள் இல்லை யென்று நான் உறுதியாகச் சொல்வேன்.
சுப்: என் காரியம் ஜயமாய் விட்டதென்று இவ்விதம் சொல்லலாமா? உம்மைப்போல் என்னைப் பற்றி எல்லோருமே தவறாக எண்ணுவார்களா? உம்முடைய கருத்துக்கு விரோதமாக எண்ணுபவர்க ளெல்லாம் தெரியாதவர்களா?
பின்னும் இப்படியே இருவரும் மேன்மேலும் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கையில் பிள்ளை யவர்கள் வந்தனர்; வந்து, "தம்பி, இவரை விட்டுவிடுங்கள், கோபத்தோடு இருக்கிறார்" என்று பொல்ல அவர் எழுந்து வேறிடம் சென்றார். எல்லாரும் தத்தம் இடம் சென்றார்கள். பின்பு அந்த மாம்பழங்களை எல்லாரும் வாங்கியுண்டு திருப்தியுடன் சுப்பையா பண்டாரத்தை வாழ்த்தினார்கள்.
மறுநாள் தியாகராஜ செட்டியார் பாடல்பெற்ற சந்தோஷத்தினால் பட்டீச்சுரத்துக்கு வந்து பிள்ளையவர்களை நோக்கி, "என்ன? நேற்றுப் பெரிய வேடிக்கை செய்து வீட்டீர்களே !" என்று சொல்லி விட்டு எல்லா விஷயங்களையும் விரிவாகச்சொன்னார்; கேட்டு யாவரும் சுப்பையா பண்டாரத்தின் இயல்பை நினைந்து நகைத்தார்கள்.
--------------
18. பிறை முழுமதியானது
பாண்டி நாட்டில் [1]சூரைமா நகரமென்னும் சிவஸ்தலத்தில் ஒரு சிற்றரசன்[2] வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பும், தமிழ்ப்பயிற்சியும், புலவர்களிடத்துப் பெருவிருப்பமும் உடையவன் ; இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றவன்; தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடந் தேடிச் சென்று போற்றி அளவளாவிவரும் இயல்பினன்.
-----
[1]. இது சூரைக்குடியென வழங்கும்.
[2]. இவன் பெயர் விசுயாலயனென்று சூரைமாநகர்ப் புராணம் கூறும்.
--------
ஒருசமயம் தமிழ்நாட்டிலிருந்த சில புலவர்கள் சேர்ந்து சிவஸ்தல யாத்திரை செய்துகொண்டு வந்தனர். அங்கங்கே உள்ளவர்கள் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஆவனவற்றைப் புரிந்து வந்தார்கள். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றபடி சென்றவிடங்களெல்லாம் அவர்களுடைய சொந்த ஊரைப் போன்றிருந்தன ; அவர்களோடு பழகியவர்கள் யாவரும் உறவினரைப்போலவே பேரன்பு வைத்து ஆதரித்தார்கள். தமிழ்ப்புலமை யோடு, கற்றதனாலாய பயனாகிய தெய்வபக்தி யும் அவர்கள்பால் சிறந்திருந்தமையின் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களிடத்தில் பெரு மதிப்பு உண்டாயிற்று.
சிவஸ்கலங்களுக்குச் செல்வதும், அந்த அந்த ஸ்தல விசேஷங்களைக் கேட்டு ஆராய்ந்து அறிவ தும், சிவதரிசனம் செய்து மனமொழி மெய்களால் வணங்கி இன்புறுவதும், அங்கங்கேயுள்ள பிரபுக்க ளிடத்தும் வித்துவான்களிடத்தும் பழகுவதும் ஆகிய செயல்கள் அப்புலவர்களுடைய யாத்திரையின் பயனாக இருந்தன. ஆதலின் அவர்கள் மிக்க உவப் போடு யாத்திரை செய்துவந்தார்கள்.
இங்ஙனம் வருபவர்கள் பாண்டி நாட்டிலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்புத்தூர் என்னும் திருப்பதியை அடைந்தார்கள். அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம் ஸ்ரீதளீசுவர ரென்பது. அது திருத்தளியா னென்று வழங்குவதும் உண்டு. அத்தலத்திலே சிவபெருமான் ஒருசமயத்தில் நடனம் புரிந்தருளினரென்பது சூரைமாநகருக்கு புராண வரலாறு. அது அருகில் உள்ளது.
புலவர்கள் சிவதரிசனத்தின் பொருட்டு ஸ்தல யாத்திரை செய்துவருவதைச் சூரைமா நகரில் இருந்த அரசன் அறிந்தான். அவர்களைக் கண்டு பேசி மகிழ வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவர்கள் திருப்புத்தூருக்கு வந்திருப்பதை யறிந்து எங்ஙனமேனும் அவர்களை அழைத்து உபசரிக்கவேண்டும் என்ற எண் ணம் அவனுக்கு எழுந்தது. சிவஸ்தல யாத்திரையாக வந்தவர்கள் தன்னைப் பார்ப்பதொன்றையே கருதி வாராரென்பதை அவன் உணர்ந்தான். சூரைமாநகரும் ஒரு பழைய [3] சிவஸ்தலம். ஆதலின் அவர்கள் சிவதரிசனம் செய்யும்பொருட்டு வரக்கூடுமென்று முதலில் எண்ணினான். பிறகு, ஒருகால் தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுக்கே செல்லும் நோக்கம் உடையவர்களாக இருப்பின் என் செய்வதென்ற ஐயம் உண்டாயிற்று; 'அப்படியாயின் அவர்கள் சூரைமாநகருக்கு வரமாட்டார்களே. என்ன செய்யலாம்!' என்று யோசித்தான்; அவனுக்கு வேறு வழி யொன்றும் தோற்றவில்லை.
----
[3]. இது தேவாரம் பெற்ற ஸ்தல மன்று.
-----
பிறகு, தான் தமிழில் விருப்பமுடையவனென்பதை ஒருவகையாகப் புலப்படுத்தினால் அவர்கள் வரக்கூடுமென்று நினைத்தான். ஆதலின் திருப்புத்தூர்ச் சிவபெருமான் நடனம் செய்த வரலாற்றைப் பற்றி ஒரு வெண்பாவை இயற்றி அதனைத் தன் அமைச்சருள் ஒருவனிடம் கொடுத்து, "திருப்புத்தூருக்குச் சென்று அங்கே வந்துள்ள புலவர்களிடம்
கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு வருக" என்று விடுத்தான். அமைச்சன் அங்ஙனமே சென்று புலவர்களைக் கண்டு வணங்கி அரசன் கொடுத்த கவியை அவர்களிடம் அளித்தான். அளித்து, 'இந்தச் செய்யுள் எங்கள் அரசர் இயற்றியது. உங்களைக் கண்டு அளவளாவ வேண்டுமென் ற பெருவிருப்பத்தோடு அவர் இருக்கிறார். எங்கள் நகரம் அருகில் இருக்கிறது. அதுவும் ஒரு பழைய சிவஸ்தலம் " என்றான்.
அவன் அளித்த செய்யுள் வருமாறு:-
(வெண்பா)
"பிறந்த பிறப்பாற் பெறும்பேறு பெற்றேம்
மறந்து மினிப்பிறக்க வாரேம் - சிறந்தமதி
சேர்த்தானைப் புத்தூர்த் திருத்தளியா னைப்புவனம்
காத்தானைக் கூத்தாடக் கண்டு,"
(இதன் பொருள்: சிறந்த மதியைத் தன் திருச்சடை யிலே அணிந்தவனை, திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதளீசுவரனை, உலகத்தைப் பாதுகாப்பவனைத் திருநடனம் இயற்றியருளிய காலத்தில் தரிசித்து, யாம் பிறந்த (இம் மனிதப்) பிறவியாற் பெறும் பயனை அடைந்தோம்; இனி மறந்தும் பிறப்பை அடையேம்.)
புலவர்கள் செய்யுளைப் பார்த்தார்கள்; "இந்தப் பாட்டில் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந் துள்ளன. ஆயினும் ஒரு குற்றம் இருக்கிறது. இறைவன் திருச்சடையிலுள்ள பிறையைச் சிறந்தமதி யென்று சொன்னது சரியன்று. சிறந்தமதி யென்பது முழுமதியைக் குறிக்கும். இறைவன் அணிந்திருப்பது முழுமதி அன்று ; பிறையே" என்று சொன்னார்கள்.
அவர்கள் கூற்றைக் கேட்ட அமைச்சன் துயருற்றவனாகித் தன் அரசன்பால் ஏகிப் புலவர்கள் கூறியதை உரைத்தான். அமைச்சன் எதிர்பார்த்தபடி அரசன் துயரப்படவில்லை; அதற்கு மாறாக அவனது முகத்தில் மகிழ்ச்சிக் குறிப்பும் மலர்ச்சியும் உண்டாயின. 'நம்முடைய அறிவின் திறனைக் காட்டுவதற்கு ஏற்ற சமயம் வந்தது' என்று அவன் உள்ளுக்குள்ளே மகிழ்ந்தான்.
உடனே அரசன் மந்திரியை நோக்கி, "நீ மீண்டும் திருப்புத்தூருக்கு இன்று மாலையிற் செல்வாயாக. சென்று தமிழ்ப் புலவர்கள் சிவதரிசனம் செய்யச் செல்லும் காலத்தை அறிந்து அவர்களுக்கு முன் செல்க. அப்பொழுது அவருக்குமுன் தீபத்தைக் கைக்கொண்டு வழிகாட்டிச் செல்லும் வேலையாள் கோயில் வந்தவுடன் அத்தீபத்தைக் கீழே வைப்பான். அதனை உடனே நீ எடுத்துக் கொள்ளிவட்டத்தைப்போலச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து அவர்கள் சொல்வதை அறிந்து இங்கே வா '" என்று கூறி விடுத்தான்.
அமைச்சன் திருப்புத்தூர் சென்றான். மாலை நேரத்தில் புலவர்கள் தரிசனம் செய்யப் போகும் சமயமறிந்து உடன் போனான். அரசன் கூறிய படியே அவர்களுக்குமுன் தீவட்டியை எடுத்துக் கொண்டு ஒரு வேலையாள் வழி காட்டி ஏகினான்; ஆலயம் வந்தவுடன் அவன் அத்தீவட்டியைக் கீழே வைத்தான்.உடனே அமைச்சன் தன் அரசனது கட்டளையின்படி அதனை எடுத்துச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து நின்றான்.
அங்கே இருந்த பிறர் யாவரும் அமைச்சனுடைய செயலைக் கண்டு வியந்தார்கள்; அமைச்சனை அறிந்த சிலர், "இங்கே வந்து இப்படி இவர் செய்ததற்கு யாது காரணம்? இவருக்கு ஏதாவது சித்தப்பிரமை உண்டாகி விட்டதோ!" என்று இரங்கினர். இந்த நிலையிற் புலவர்கள் அமைச்சன் செயலைப் பார்த்தனர். நுண்ணறிவாளர்களாகிய அவர்களுக்குச் சூரைமாநகரின் அரசனது தந்திரம் புலப் பட்டது. அவர்களுக்கு அளவில்லாத வியப்பு உண்டாயிற்று; "ஆஹா! என்ன நுண்ணறிவு! இறைவன் சுழன்று நடனம் புரிகையில் அந்தவேகத்தினால் அவன் சடாபாரத்திலுள்ள பிறையானது வட்டமாகிய முழுமதியாகத் தோற்றுமென்ற பொருளை, இந்தத் தீவட்டியைச் சுழற்றி வட்டமாகத் தோற்றும்படி செய்து புலப்படுத்தின இவ்வமைச்சன் செயலை வியப்பேமா! நாம் கூறிய குறையை இக்குறிப்புச் செயலால் நீக்குவித்த அரசரின் நுண்மதியை வியப்பேமா ! இத்தகைய அரசர் பெருமானை முன்பே நாம் பாராதது பெரும்பிழை" என்று கூறித்தம்முள் மகிழ்ந்தார்கள்; அப்பால் அமைச்சனை நோக்கி,
"[4] கற்றவர்கள் புகழ்விசயா லயத்தேவன் பாடிவிடு
கவியுள் யாதும்
குற்றமிலை குற்றமிலை குற்றமிலை கருத்துணராக்
கூற்று குற்றப்
பெற்றிநினை யற்கநினை யற்கநினை யற்கவெனப்
பேசு நீபோய்
மற்றவனைக் காணும் விருப் புடையம் நாம் என்பதுவும்
வகுத்தி" என்றார்.
(இதன் பொருள்: கற்ற புலவர்கள் புகழ்கின்ற விசயால் யர் பாடிவிடுத்த கவியிலே சிறிதேனும் குற்றமிலை; இது முக்காலும் உண்மை. நாங்கள் முன்பு கூறிய கூற்று உண்மைக் கருத்தை உணராத குறையினாலெழுந்தது. அங்ஙனம் கூறிய எம் குற்றத்தை நினைக்கவேண்டாம், நினைக்கவேண்டாமென்று நீ போய் அவரிடம் சொல்க. அன்றியும் நாங்கள் அவரைக் காணும் விருப்பம் உடையோ மென்பதையும் கூறுக.)
----
[4]. சூரைமாநகர்ப் புராணம், சங்கப்புலவர் பூசித்த படலம், 35. இப்புராணம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் கள் இயற்றியது.
---
அமைச்சன் மகிழ்ச்சி தாங்காமல் விரைந்து போய்ப் புலவர் கூறியவற்றை அரசனிடம் தெரிவித்தான். அரசன் பள்ளங்கண்ட நீரைப்போலத் தன் பரிவாரங்களுடன் புவவர்களை அழைக்கப் புறப்பட்டான். புலவர்களும் அரசனைக் காணப் புறப்பட்டார்கள். இருசாராரும் இடைவழியிலே சந்தித்து மகிழ்ந்தனர்.
பிறகு அரசன் புலவர்களைச் சூரைமாநகர்க்கு அழைத்துச் சென்று சில காலம் உபசரித்து வைத்திருந்து சல்லாபம் செய்து இன்புற்றான்.
[சூரைமாநகர்ப் புராணத்திலுள்ள செய்திகளையும், நான் கேட்டிருந்த சில செய்திகளையும் கொண்டு இவ்வரலாறு எழுதப்பட்டது.)
------------------
19. கிணற்றில் விழுந்த மிருகம்
கும்பகோணத்திற்கு வடகிழக்கே காவிரிக்கு வட கரையில் கருப்பூர் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அது சத்திரம் கருப்பூரென்றும் வழங்கும். அங்கே திருப்பனந்தாளிலுள்ள காசி மடத்துக்குரிய மடம் ஒன்று உண்டு. அது வசிப்பதற்குரிய நலங்களெல்லாம் அமைந்தது. காசி மடத்துத் தலைவராக இருந்த ஸ்ரீ குமாரசாமித் தம்பிரானவர்கள் 1883- ஆம் ௵ தம்முடைய பரிவாரங்களுடன் அந்த மடத்திலே வந்து சில மாதங்கள் தங்கி யிருந்தனர். அருகிலே காவிரியும், சோலைகளும் இருப்பதால் அவ்விடம் மிக்க வசதியாக இருக்கும்.
குமாரசாமித் தம்பிரான் சிறந்த தமிழ் வித்துவான். ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவரிடத்திற் சிலர் தவழ் நூல்களைப் பாடங் கேட்டு வந்தனர். வடமொழி வித்துவான் ஒருவரும் அவருடன் இருந்து வந்தனர். அவரிடமும் சிலர் வட மொழி நூல்களைப் பயின்று வந்தனர். கருப்பூர் மடத்தில் தம்பிரானவர்கள் இருந்தகாலத்தில் நாள்தோறும் கும்பகோணத்திலிருந்து பிரபுக்களும் வித்துவான்களும் சென்று சென்று அவரைப் பார்த்துச் சல்லாபம் செய்து விட்டுப் போவார்கள்.
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த வித்துவானாகிய பழனிக்குமாரத் தம்பிரானென்பவரும், தெய்வ சிகாமணி ஐயரென்ற தமிழ் வித்துவானும், வேறுசிலரும் குமாரசாமித் தம்பிரானவர்களது விருப்பத்தின் படி அங்கே சென்று சிலகாலம் இருந்தனர். வட மொழி தென்மொழி நூல்களைப் படிப்பதும்,பாடஞ் சொல்வதும், ஆராய்வதுமாகிய காரியங்களாலும் பிரபுக்களுடைய சம்பாஷணையினாலும் எல்லோருக்கும் பொழுது இனிமையாகப் போய்க்கொண்டிருந்தது.
கருப்பூர் மடத்திற்கு முன்புறத்தில் பெரிய கிணறு ஒன்று உண்டு. மடத்துக்குரிய காளைகளை வண்டிக்காரர்கள் அந்தவழியே ஓட்டிச்சென்று தண்ணீர் காட்டிவிட்டு மீட்டும் ஓட்டிப்போவது வழக் கம். அதற்கருகில் மடத்தைச் சார்ந்த தாழ்வாரங்கள் உண்டு. அத் தாழ்வாரங்களில் பாடம் கேட்பவர் களும் படிப்பவர்களும் இருந்து தமிழ் வடமொழி நூற்பொருளைப்பற்றிய சம்பாஷணைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
நான் கும்பகோணம் காலேஜில் இருந்த கால மாதலின் அடிக்கடி கருப்பூருக்குச்சென்று காசிமடத் துத் தலைவரோடு சல்லாபம் செய்து இன்புற்றுச் செல்வேன்; நான் அவருடன் தமிழ் பயின்றவன். ஒரு நாள் அங்ஙனம் போயிருந்த காலத்தில் முற் கூறிய தாழ்வாரத்தில் பழனிக்குமாரத் தம்பிரான், தெய்வசிகாமணி ஐயர் முதலியவர்களோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அங்கே வடமொழி தென் மொழி பயில்பவர்களிற் சிலரும் உடன் இருந்தார்கள்.
அப்பொழுது மடத்து வடமொழி வித்துவானிடம் ஸம்ஸ்கிருத பாடமும் பிறரிடம் தமிழ்ப்பாடமும் கேட்டுவந்த ஒருவர் அங்கே வந்து திடீரென்று, "அடடா! ஒரு மிருகம் கிணற்றில் விழுந்துவிட்டதே!" என்று கைகால்களை உதறிக்கொண்டு சொன்னார்; மிரள மிரள விழித்தார். கேட்ட நாங்கள் திடுக்கிட் டோம். மடத்துக் காளைகளுக்குள் ஏதாவதொன்று கிணற்றில் விழுந்திருக்குமோவென்று நாங்கள் எண்ணினோம். ஆதலின் உடனே தாழ்வாரத்திலிருந்து குதித்துக் கிணற்றண்டை ஓடிப்போய் உள்ளே பார்த்தோம். அதற்குள் ஒன்றும் விழுந்த அடையாளம் தெரியவில்லை ; நீர்க்குமிழி ஒன்றும் தோன்றவில்லை; "மடத்து மாடுகள் மிகவும் பெரியவைகள் அல்லவா? அவற்றுள் ஒன்று விழுந்தால் தலையாவது கொம்பாவது தெரியுமே" என்றார் ஒருவர்; "கிணறு பெரியது. அது விழுந்து அமிழ்ந்திப் போயிருக்கலாம்'' என்றார் வேறொருவர்; "ஐயோ பாவம்! அந்த மாடு விழுந்தது பெரிதல்ல; அதை வெளியிலே எடுப்பது தான் மிகவும் சிரமம்!'' என்றார் மற்றொருவர். அந்தக் கலவரத்தில் அருகில் இருந்தவர்களும் கூடி விட்டார்கள். வண்டிக்காரர்கள் எந்தக் காளை விழுந்த தென்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் காளைகள் இருந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்.
அந்த நிலையில் நாங்கள் கிணற்றை உற்றுநோக்கியபடியே இருந்தோம். ஒன்றும் தோற்றவில்லை. எங்களிடம் சமாசாரத்தைச் சொன்னவரைப் பார்த்துத் தெய்வசிகாமணி ஐயர், "எங்கே ஒன்றும் காணவில்லையே!" என்றார். அவரும் எங்களுடன் இருந்து கிணற்றுக்குள்ளே பார்த்துக்கொண்டிருந் தார்; உடனே, "அதோ அதோ! தெரிகிறது" என்றார். நாங்கள் கூர்ந்து கவனித்தோம். ஒன்றையும் காணவில்லை. அப்பொழுது ஒரு சிறிய ஓணான் ஜலத்திலிருந்து மெல்லக் கிணற்றுச் சுவரில் தத்திக் தத்தி ஏறிக்கொண்டிருந்தது. தெய்வசிகாமணி ஐயர், "எங்கே ஐயா தெரிகிறது? ஒணானல்லவா தெரிகிறது?" என்றார்.
"அதைத்தான் சொன்னேன்" என்று அம் மாணாக்கர் கூறினார்.
தெய்வசிகாமணி ஐயருக்குக் கோபம் உண்டாயிற்று. சொன்னவர் அவரைக்காட்டிலும் பிராயத்திற் பெரியவராயினும் அவர் அந்த வித்தியார்த்தியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார்; "முட்டாளே! இவ்வளவு பேரும் வீணாகக் கலங்கும்படி செய்துவிட்டாயே. மிருகம் விழுந்துவிட்ட தென்று கையை உதறிக்கொண்டு நீ சொல்லும் பொழுது எங்களை யெல்லாம் தூக்கி வாரிப்போட் தே! ஏதாவது மடத்துக் காளை விழுந்திருக்கு மென்றல்லவா ஓடிவந்தோம்! இவ்வளவு நேரம் இடித்த புளி மாதிரி சும்மா இருந்துவிட்டு இப்போது ஓணானைக் காட்டுகிறாயே!" என்றார்.
எங்களைக் குழம்பச்செய்த அந்த ஸாது, "ஓணான் மிருகமல்லவா?'' என்று கேட்டுக் கொண்டே உள்ளே ஓடினார்; அங்கிருந்து அமரத்தை எடுத்து வந்து மிருக வர்க்கத்தைப்பற்றிச் சொல்லும் பகுதியைப் பிரித்து, "இதோ பாருங்கள்; மிருக வர்க்கத்தில்தானே ஓணான் சொல்லப்பட்டிருக்கிறது?" என்று சொல்லி அப்பகுதியைக் காட்டினார். அவர் தாம் பெற்ற அறையைக் கூடப் பொருட்படுத்தவில்லை; அமரத்தை எடுத்துக் காட்டுவதில் அவருக்கு வேகம் அதிகமாக இருந்தது. கோபம் தெய்வசிகாமணி ஐயருக்குப் பின்னும் அதிகமாயிற்று;
"நீ முட்டாளிலும் வடிகட்டின முட்டாள். உன்னுடைய அமரத்தை இந்தக் கிணற்றிலே போடு. ஓணான் விழுந்து விட்டதென்று சொல்லி யிருந்தால் இவ்வளவு தூரம் பயம் நேர நியாயம் இல்லையே. எங்கேயாவது பேசும்பொழுது ஓணானை மிருகமென்று சொல்வதைக் கேட்டிருக்கிறாயா? படித்துவிட்டால் மட்டும் போதுமா? உலக இயல்பும் தெரிந்து பேசவேண்டாமா? உன்னால் உன் படிப்புக்கு அவமதிப்பு; உனக்குச் சொல்லித் தந்த ஆசிரியருக்குக் கெட்ட பெயர்; உன்னைக் காப்பாற்றும் இந்த மடத்திற்கும் அகௌரவம்" என்று மேலும் மேலும் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தார்.
உடனிருந்த சிலர் தெய்வசிகாமணி ஐயரை நோக்கி, ''போதும்; இவ்வளவோடு அவரை விட்டு விடுங்கள். இன்ன இடத்தில் இவ்வாறு பேசவேண்டு மென்று அவருக்குத் தெரியவில்லை. இனிமேலே கற் றுக்கொள்வார்'' என்று கூறிச் சமாதானம் செய்தார்கள்.
இந்தச் செய்தியை அப்பால் குமாரசாமித் தம்பிரானவர்கள் கேட்டு மகிழ்ந்து புன்னகைகொண்டதோடு அங்கே வருவோர்களிடமும் சிலநாள் வரை யில் சொல்லிவந்தனர்.
---------
20. சிறை நீக்கிய செய்யுள்
திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கர் அரசாட்சி செய்துவந்த காலத்தில் திருநெல்வேலிச் சீமையை வடமலையப்பப் பிள்ளையனென்பவர் (கி.பி. 1620-1676) பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தார். அவருடைய அதிகாரத்தின் பெருமையினால் தென்பாண்டி நாட்டில் குடிகள் யாவரும் சுகமாக வாழ்ந்து வந்தனர். அவரைப் பிள்ளைய னென்றே பெரும்பாலும் வழங்குவர். அவர் தெய்வ பக்தி மிக உடையவர். அவரால் இயற்றப்பட்ட தருமங்களும், தேவாலயத் திருப்பணிகளும், பிற அருமைச் செயல்களும் பல புலவர்களுடைய செய்யுட்களில் மணியைப் போல அமைக்கப்பட்டு அவருடைய புகழை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் சிறந்த கல்விமானாக இருந்தார். தமிழிலே நிறைந்த புலமையுடையவர். மச்சபுராணம், நீடூர்த் தலபுராணம் முதலிய சில நூல்களை அவர் இயற்றி யிருக்கிறார். தமது சிறந்த புலமைக் கேற்பப் புலவர்களுடைய பெருமையையும் அவர்கள் இயற்றும் செய்யுட்களின் அருமையையும் அறிந்து அவர்களை மதித்துப் போற்றிப் பாதுகாக்கும் தன்மையுடையார். புலவர்களிடத்தில் பேரன்புடையவராக அவர் இருந்தமையால் அவரைச் சார்ந்த பலருக்கும் அங்ஙனமே புலவர்களிடத்தில் அன்பு உண்டாயிற்று. அவர் காலத்து உத்தியோகஸ்தர்களிற் பலர் சிறந்த தமிழ்க் கல்விமான்களாக விளங்கினார்கள்; "மன்னவனெப் படி மன்னுயிரப்படி என்பது உண்மை யன்றோ?
அக்காலத்தில் தென்திருப்பேரை என்ற விஷ்ணு ஸ்தலத்தில் உள்ள தலவகார ஸாமவேதிகளாகிய ஸ்ரீ வைஷ்ணவர்களுள் நாராயண தீக்ஷித ரென்னும் ஒரு வித்துவான் இருந்தார். பல வருஷங்களுக்குமுன் சுந்தர பாண்டியரென்னும் அரசர் பல ஊர்களில் வசித்த நூற்றெட்டுத் தலவகார ஸாமவேதிகளாகிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் குடும்பத்தைத் தென்திருப்பேரையில் அமைத்து அக்குடும்பத்தினருக்கு வீடுகளும் நிலங்களும் வழங்கினாரென்பர்; அந் நூற்றெட்டுக் குடும்பத்தின் வழி வந்தவர்கள் இன்னும் அவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
முற்கூறிய நாராயண தீக்ஷிதரென்பவர் அப் பரம்பரையில் வந்தவரே. அவருக்கு நிலம் வீடு முதலிய சொத்துக்கள் இருந்தன. அவர், தம்முடைய குலவொழுக்கத்திற்கேற்ற கடமைகளைச் செய்தும், தமிழ்நூல்களைப் படித்து இன்புற்றும், செய்யுளியற்றியும், தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதரென்னும் திருநாமமுள்ள திருமாலைத் தரிசித்து மகிழ்ந்தும் வாழ்ந்து வந்தார்.
இங்ஙனம் இருந்த காலத்தில், தீர்வை வசூலிக்கும்பொருட்டு வடமலையப்பப் பிள்ளையனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஒரு வன்னெஞ்சர், தென்றிருப் பேரையிலிருந்த ஸ்ரீவைஷ்ணவர்களிற் சிலர் தீர்வை செலுத்தவில்லை யென்ற காரணத்தால் அவர்களைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து சிறையிலிட்டார். அவர்களுள் நாராயண தீக்ஷிதரும் ஒருவர். அவர்கள் தாம் வரிகொடாமைக்குக் காரணங்களை மிகவும் பணிவாகக் கூறி, இயன்ற காலத்திற் செலுத்தி விடுவதாக நயந்து கேட்டுக்கொண்டும் அவ்வதிகாரியின் மனம் இளகவில்லை. ஒரே பிடிவாதமாகச் சிறையிலிட்டுக் காவல் வைத்துவிட்டார். அச்சிறைக் கூடம் இருந்த தெருவிற்கு இப்போதும் காவற்புரைத்தெரு என்னும் பெயர் வழங்கி வருகிறதாம்.
சிறைப்பட்ட நாராயண தீக்ஷிதர், 'நம்முடைய பிராரப்த வினையின் பயனாக இந்தத் துன்பம் வந்தது' என்று எண்ணி ஏங்கினார். சுதந்தரமான வாழ்க்கையும், நாள்தோறும் அதுவரை செய்துவந்த குழைக்காதர் தரிசனமும் அவருக்கு அப்பால் இல்லாதனவாயின. 'நாம் எவ்வளவோ நயந்து கல்லும் கரையும்படி கேட்டுக்கொண்டும் இந்தக்கொடியவன் இரங்கவில்லையே! இனி என் செய்வோம்! எல்லாத் துன்பத்தையும் நீக்கிப் பாதுகாக்கும் குழைக்காதரே நமக்குக் கதி. இந்தக் கொடியவனிடம் செய்துகொண்ட விண்ணப்பம் இவன் காதில் சிறிதும் ஏறவில்லை; இனிமேல்
குழைக்காதர் காதில் ஏறும் வண்ணம் விண்ணப்பம் செய்வதுதான் முறை என்று தெளிந்தார். அது முதல் ஒவ்வொரு நாளும் குழைக்காதர் விஷயமாக மனமுருகிச் செய்யுட்கள் சிலவற்றை இயற்றித் திருப்பித் திருப்பி வாயாரச் சொல்லிப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். அவரைப் பார்த்து உடன் இருந்தவர்களும் சில செய்யுட்களை இயற்றத் தொடங்கினார்கள்.
நாராயண தீக்ஷிதர் ‘குழைக்காதர் பாமாலை` என்று பெயரிட்டுத் தம்முடைய செய்யுட்களை முறையாக அமைத்து வந்தார். 'குழைக்காதரைப் பிரிந்திருக்கும் கொடிய காலமும் வந்ததே!' என்று அவர் எண்ணி எண்ணி நைந்தார்;
" கன்றுக் கிரங்கிய கற்றவைப் போலக் கருணையுடன்
என்றைக் கிரங்குவ ரோவறி யேனெழு பாருழய்யக்
குன்றைக்கவிகை யெனத்தரித் தோர்குழைக் காதரையான்
சென்றெப் பொழுது தொழுவதும் பாவங்கள் தீர்வதுமே"
என்பது பாமாலையிலுள்ள முதற் பாட்டு. இதில், "குழைக்காதரை யான் சென்று தொழுவதும் பாவங்கள் தீர்வதும் எப்பொழுது!" என்று அவர் உள்ளந் துடித்துப் பாடியிருக்கின்றார்.
சிறை வாழ்க்கையை மேற்கொண்டு ஒரு மாத காலம் ஆயிற்று. ஒரு வழியும் தோன்றவில்லை ;
[2]" திங்களொன் றுகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி
எங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின்
சங்கழங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்
பொங்குதென் பேரைப் புனிதர கருணைப் புராதனனே ''
என்று குழைக்காதரை நினைந்து இரங்கினார். தம்முடைய ஊரில் பெருமாள் சந்நிதியில் நான்மறை முழக்கமும் திவ்யப்பிரபந்த முழக்கமும் கடல் முழக்கம்போல நிறைந்து விளங்குமென்பதை அவர் எண்ணிக்கொண்டு, 'அந்தத் திவ்ய சப்தங்களைக் கேட்டு ஈடுபடாமல், இங்கே அழுகையொலியும் சிணுங்குஞ் சத்தமும் அதிகாரத்தொனியும் கேட்டுத் துன்புறும் தலைவிதி நமக்கு நேர்ந்ததே!' என்று புலம்பினார். 'குழைக்காதர் அருள் செய்வார், அருள் செய்வார்! இன்றைக்குள் ஏதாவது நன்மை ஏற்படும்; நாளைக்குள் அநுகூலம் உண்டாகும் என்று எண்ணி எண்ணி ஏமாந்தார்; பிறகு,
[3]"இன்றகும் நாளைக்குள் நன்றதம் என்றிங் கிருப்பதலால்
ஒன்று கிலும்வழி காண்கில மேயுன் உதவியுண்டேல்
பொன்றாமல் நாங்கள் பிழைப்போம் கருணை புரிந்தளிப் பாய்
அன்று ரணந்தொழ நின்றாய்தென் பேரைக் கதிபதியே'
என்று குழைந்து நைந்தார்.
வடமலையப்பப் பிள்ளையன் நல்ல நீதியுடையவ ரென்றும், தமிழன்புடையவரென்றும் அறிந்த வராதலின் தாமும் பிறரும் சிறையில் இருப்பதை அவர் அறிந்தால் அவரால் நன்மையுண்டாகுமென்ற நினைவு தீக்ஷிதருக்கு உண்டாயிற்று; அப்பொழுது, அவருக்குத் தெரிவிப்பவர் ஒருவருமில்லையே!' என்ற எண்ணம் அடுத்தாற்போல் தோற்றியது, உடனே,
[4]"வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே
விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்பாற்
கள்வா அருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே"
என்று கதறினார்.
இப்படிச் சிலநாள் கழிந்தன. புதிய செய்யுள் இயற்றி மனங்கரைந்து பாடுவதும், முன்பே இயற்றியுள்ள பாடல்களைப் பாடிப் புலம்புவதும் நாராயண தீக்ஷிதருடைய வழக்கமாயின. அந்தச் சிறைக்கூடக் காவலதிகாரி தமிழறிவுடையவர். ஒருநாள் நாராயண தீக்ஷிதர், "வள்வார் முரசதிர் கோமான்" என்ற செய்யுளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவ்வதிகாரியின் காதில் அது பட்டது. 'நம்முடைய எசமான் பெயர் இந்தப்பாட்டில் அமைந்திருக்கிறதே! உள்ளே இருப்பவர் தமிழ் வித்துவான் போலத் தோற்றுகிறார்' என்று எண்ணினார். தமிழ்ப்புலவர்களுக்கு மரியாதை செய்வதும், அவர்களுக்குக் குறைவு வாராமற் பாதுகாப்பதும் பிள்ளையனுக்கு உவப்பான காரியங்களாதலின், அதிகாரி உடனே பிள்ளையனிடம் சென்று தமிழ் வித்துவானொருவர் சிறையில் இருப்பதையும் அவரைப் பற்றித் தமது பாட்டிற் கூறிப் புலம்புவதையும் சொன்னார்.
அவர் சொன்னதுதான் தாமதம்; தண்டமிழ் வாணர் துயரத்தைக் கேட்கப்பொறாத வடமலையப்பப் பிள்ளையன் எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டு உடனே தம் குதிரை மீதேறிக்கொண்டார்; சிறைக் கூடத்தை நோக்கி விரைந்து வரலானார்.
சிறிது நேரத்திற்குள் குதிரை சிறைவாயிலில் வந்து நின்றது. பிள்ளையன் சிறைக்கூடத்தைத்திறக் கச் செய்து உள்ளே சென்றார்; அப்பொழுதும் குழைக்காதர் திருவடிகளைத் தியானித்துக்கொண்டு பாட்டுப் பாடியவண்ணமே கண்ணுங் கண்ணீருமாக அங்கே யிருந்த புலவரைக் கண்டார். அவருடைய நிலை பிள்ளையன் நெஞ்சில் உருக்கத்தையும் கண்ணில் நீரையும் உண்டாக்கின ; 'குழைக்காதரை நினைந்து தமிழ்க்கவியால் முறையிடும் இந்தப் புலவர் பெருமானைப்பற்றி இதுகாறும் அறிந்து கொள்ளவில்லையே! நாம் தமிழறிந்ததனால் என்ன பயன்? இவர் எவ்வளவு நாட்களாக இங்ஙனம் துன்புறுகின்றாரோ?' என்று மனம் வருந்தினார்; அவரை நோக்கி அவர் வரலாற்றை வினவினார் ; அவரது வாய்மொழியால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டார்.
பிள்ளையன் உத்தரவினால் பல வண்டிகள் சிறை வாயிலில் வந்து நின்றன. நாராயண தீக்ஷிதரும் அவருடன் இருந்த வேறு தமிழறிஞர்களும் அவற்றில் ஏறிக்கொண்டனர். பிள்ளையன் தீக்ஷிதரையும் பிறரையும் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்; அவர் கொடுக்கவேண்டிய தீர்வையை மன்னித்ததோடு, அவர் நிலங்களை யெல்லாம் இறை யிலி நிலங்களாகச் செய்துவிட்டார்.
தீக்ஷிதர் பாடிய பாமாலையைப் பிள்ளையன் கேட்டார். அப்புலவருடைய மனம் எவ்வளவு வருந்தி நைந்திருக்க வேண்டுமென்பதை அச்செய்யுட்கள் நன்றாக எடுத்துக்காட்டின. அதுகாறும் அறுபத்தைந்து பாடல்கள் இயற்றப்பட்டிருந்தன. பிள்ளையன் தீக்ஷிதரைப் பார்த்து,"இந்நூலை முற்றும் பாடி முடிக்க வேண்டும் " என்று விரும்பினார். அப்படியே அப்புலவர் பின்னும் முப்பத்தைந்து செய்யுட்களை இயற்றி நூறு பாடலாகப் பூர்த்தி செய்தனர்.
தாம் சிறைக்கூடத்திலிருந்து முறையிட்ட முறையீடு குழைக்காதர் காதில் விழுந்தமையால் அப்பெருமான் பிறர் காதுகளிலும் விழும்படி செய்து சிறைத் துன்பத்தை நீக்கியருளினாரென்று தீக்ஷிதர் உறுதியாக நம்பினார். அதனால் சிறையிலிருந்து விடுதலை பெற்றபின்பு பாடிய செய்யுட்களில் குழைக்காதர் தம் துன்பத்தைப் போக்கியருளியதாகச் சொல்லி யிருக்கிறார். விடுதலைபெற்ற நிலையில் பாடிய முதற் பாட்டிலேயே,
"ஆடகச் சேவடியாலெம தாவி யளித்தனை [5]கார்க்
கோடகப் பாவிகள் வாராமற் காத்தனை"
என்று குறிப்பித்திருக்கின்றார். இதில், 'கார்க்கோடகப் பாவிகள்' என்றது, தம்மைச் சிறையிட்ட அதிகாரியையும் அவரைச் சார்ந்தவர்களையுமே யென்று தோற்றுகின்றது.
இந்தப் பாமாலை தென்றிருப்பேரை முதலிய டங்களில் பலரால் மிக்க பக்தியோடு பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அங்ஙனம் செய்வதனாற் சில துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாவதாகச் சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன். பள்ளிக்கூடத்திலும் முன்பு இது பாடமாக இருந்து வந்தது.
----
[1]. இப் புத்தகம் முழுவதும் தனியே குறிப்புரையுடன் என்னால் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளது.
குன்று - கோவர்த்தனகிரி. கற்றா - கன்றையுடைய பசு கவிகை - குடை. தரித்தோர் - தாங்கினவர்.
[2]. எங்கள் தம்பால். சத்தசாகரம் ஏழுகடல். புராதனன் பழையவன்.
[3]. பொன்றாமல் -கெடாமல். ஆரணம் - வேதம்.
[4]. வள்வார் - வலிய தோலையுடைய. கருணையையுடைய புள் வாகனா, களிறழைத்த புள்வாகனா வென்று கூட்டுக. புள்-கருடன்.
[5]. கார்க்கோடகப் பாவிகள் கார்க்கோடகனென்னும் பாம்பைப்போன்ற துஷ்டர்கள்.
----
[நான் கும்பகோணம் காலேஜில் இருந்தபோது தென் றிருப்பேரையினராகிய ஸ்ரீ வைஷ்ணவரொருவர் அங்கே படித்துக் கொண்டிருந்தார். அவருடைய பரிசாரகர் ஒருநாள் வழக்கம்போல் இரண்டாம் வேளை உணவு கொண்டுவந்து அவருக்காகக் காத்திருந்தார். அப்போது அவர் தம் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு மிக்க கவனத்தோடு படித்துக்கொண்டிருந்தார். அவருடைய கருத்தைக் கவர்ந்த அப்புத்தகம் யாதாக இருக்கலாமென்று வியந்து,"என்ன புத்தகம் ?" என்று நான் கேட்டேன்; அவர் "குழைக்காதர் பாமாலை; தெய்விக சக்தியுடையது" என்றார். அதிலிருந்து சில பாடல்களைச் சொல்லச் செய்து கேட்டேன். அவர் சொல்லிவிட்டு அந்நூல் உண்டான வரலாற்றையும் சொன்னார். அவ்வரலாறு என் மனத்தை உருக்கியது. அக்காலத்திலேயே பாமாலை அச்சிடப்பட்டிருந்தது. அதன் பிரதியொன்றை அவர் அளித்தார். அது திருத்தமாக இல்லாமையால், நான் விரும்பியபடியே பிறகு அப்புத்தகத்தின் எட்டுப் பிரதிகள் சிலவற்றையும் வருவித்துக் கொடுத்தார். சிலகாலத்திற்கு முன்பு இது சம்பந்தமாக நான் வினாவியபோது சில செய்திகளைத் தென்றிருப்பேரை அபிநவ காளமேகம் ஸ்ரீமான் அனந்த கிருஷ்ணையங்காரலர்கள் அன்புடன் தெரிவித்தார்கள்.]
Kesa ri Printing Works, Hadras.
This file was last updated on 12 Nov. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)