pm logo

செம்மொழிப் புதையல் -- பாகம் 1
சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி


cemmozip putaiyal, part 1
auvai turaicAmi piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

செம்மொழிப் புதையல் -- பாகம் 1
சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி

Source:
செம்மொழிப் புதையல்
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
திருவள்ளுவர் ஆண்டு : 2037
உரிமை : ஆசிரியர்க்கு
விலை: ரூ. 100.00
மணிவாசகர் வெளியீட்டு எண்:1349
-----------
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்

அவ்வை துரைசாமிப்பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம்
எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.

புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ-உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டுச் சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை.

நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத்-தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு.

இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில்-உரமுடையான்
தன்கடன் தாய் நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு.

பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன்
பாயாத ஊருண்டா? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்!
------------

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி : வாழ்க்கைக் குறிப்பு


சங்கத் தமிழையும் சைவத் திருமுறைகளையும் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் போற்றி வளர்த்து அரிய நூல்களுக்கு உரை வளங் கண்டு வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி உரைவேந்தராக நிலைத்த புகழ் கொண்டவர் பேராசிரியர் ஒளவை துரைசாமி.

தென்னார்க்காடு மாவட்டத்தில், ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுாரில், சுந்தரம் பிள்ளை, சந்திரமதி அம்மையார் இணையருக்கு 1902-ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் இரட்டையருள் ஒருவராகப் பிறந்தார் ஒளவை துரைசாமி. இவருடைய தந்தையார் தமிழ்ப்பற்று மிக்கவர். மயிலம் முருகன் குறித்த இசைப் பாடல்களை வாய்மொழியாகப் பாடி எழுதினார் என்பர்.

“ஒளவை துரைசாமி அவர்கள் பிறந்த 'ஒளவையார் குப்பம்'-செல்லும் வழி” என்று குறிக்கும் நினைவு நடுகல், மயிலம் தாண்டி கூட்டேரிப்பட்டுக்கு முன்னால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்குத் திரு என்னும் அடைமொழி சேர்ந்தது போல், இவருக்கும் ஒளவை என்னும் ஊர்ப்பெயர் அடைமொழியாக இணைந்து ஒளவை துரைசாமி என்னும் பெயர் விளங்குவதாயிற்று.

உள்ளூரில் தொடக்கக் கல்வி கற்றுத் திண்டிவனம் அமெரிக்கன் ஆர்க்காடு பணிமன்ற உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அப்போதே இவர் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்தார் என்பது நினைக்கத்தக்கது. கல்லூரிக் கல்வியை வேலூர் ஊரிகக் கல்லூரியில் சில திங்களே பயின்றார்.

இளமையிலேயே தமிழார்வம் பூண்டு, தமிழ்ப்பணியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முனைந்தார். ஆனால், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ எனும் கூற்று இவர் வாழ்க்கையில் மெய்யாயிற்று. அதனால் திங்களூதியம் பெறும் பணி தேடும் சூழ்நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் 'உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ வேலையை விருப்பமில்லாமல் இவர் ஏற்க வேண்டியதாயிற்று. எனினும், அவர் நினைவெல்லாம் தமிழாகவே இருந்தது. அல்லும் பகலும் அன்னைத் தமிழையே எண்ணியிருந்தார். அதனால் அமர்ந்த பணியிலிருந்து நீங்கி தமிழ்ப்பணியிலேயே முழுமையாகப் பங்கு பெற்றார்.

கரந்தையில் தமிழவேள் உமாமகேசுவரன் அரவணைப்பில், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் ஆகியோரிடம் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் முதலியன கற்றுத் தேர்ந்தார். மேலும் சைவ சமய மெய்யியற் கல்வியையும் கற்றுத் தெளிந்தார். 1930-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார்.

முதலில், வடார்க்காடு மாவட்டக் கழகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது, திருக்குறள், சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடர்ந்து தம் இல்லத்திலேயே நடத்தினார். இது, தமிழார்வலர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், இவருக்குப் பெரும் புகழையும் தேடித் தந்தது. பேரறிஞர் அண்ணா, காஞ்சியிலிருந்து இங்கே வந்து, இந்த இலக்கிய வகுப்பில் பங்கு கொண்டு, ஒளவை துரைசாமியின் பேருரையைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார் என்பர்.

பின்னர், சேயாறென்னும் திருவத்திபுரத்தில் இவர் பணிபுரிந்தபோது, புலவர் கோவிந்தன் ஒளவையிடம் தமிழ் கற்றுப்பின்னாளில் சட்டப்பேரவைத் தலைவராக விளங்கியதைத் தமிழுலகம் நன்கறியும்.

ஒளவை துரைசாமி-உலோகாம்பாள் திருமணம் சிறப்பாக நடந்தது. இல்லற வாழ்க்கை இனிதே விளங்கியதன் பயனாக மக்கட் செல்வங்களான திருவாளர்கள் ஒளவை நடராசன், ஒளவை திருநாவுக்கரசு, ஒளவை ஞானசம்பந்தன், டாக்டர் மெய்கண்டான், டாக்டர் நெடுமாறன், திருமதியார் பாலகுசம், மணிமேகலை, திலகவதி, தமிழரசி ஆகியோர் பிறந்து இன்றும் சிறந்து விளங்குகின்றனர். வடார்க்காடு மாவட்டத்தில் காவிரிப்பாக்கம், செங்கம், போளூர் முதலிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒளவை பணியாற்றினார். பின்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். தொடக்கத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியிலும் சில காலம் பணியாற்றினார்.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திடுமென மறைந்ததும் முன்னரே அவர் விரும்பிக் கேட்டது போல மணிமேகலையில் உள்ள சமயப் பகுதிகளுக்கும், தருக்கப் பகுதிகளுக்கும் நுண்ணிய நல்லுரை வரைந்து பெரும்புகழ்பெற்றார். இதற்காகப் பவுத்தசமய, வடமொழி நூல்களைக்கற்றுத் தெளிந்தார்.

உரை எழுதுவதில் சிறந்து விளங்கிய புலமைக்காக, இவரை ‘உரைவேந்தர்' எனத் தமிழுலகம் போற்றிப் புகழ்ந்தது. யசோதர காவியத்துக்கு இவர் வரைந்த உரை அறிஞர் பெருமக்களின் பாராட்டினைப் பெற்றது. ஒளவை துரைசாமியின் உரைத்திறத்தையும், தமிழ்ப்புலமையையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைத் தம் தமிழ்த் துறையில் இணைத்துக் கொண்டு மகிழ்ந்தது. அப்போது, சைவ இலக்கிய வரலாறு என்னும் அரிய நூலை இவர் தமிழுக்குப் புதிய வரவாக வழங்கினார். அதற்குப் பிறகு ஐங்குறுநூற்றுக்குப் பேருரை எழுதினார். ஞானாமிர்தம் எனும் சைவ சமய நூலுக்கும் விளக்கவுரை கண்டார்.

உரை வளம் வழங்குவதில் வல்லவரான ஒளவை துரைசாமி, தமிழே வாழ்வெனக் கொண்டு, அது குறித்தே சிந்திப்பதும், செயலாற்றுவதுமாகத் தம் வாழ்நாளை இனிதே கழித்தார். இவர் தமிழ்ப் பணிக்கு மாணிக்க மகுடமாகப் புறநானூற்றுக்கு இவர் வரைந்த ஒப்பற்ற உரை மிளிர்ந்தது. பிறகு நற்றிணைக்கு நல்லுரை கண்டார். பதிற்றுப்பத்துக்குப் பாங்கான உரையும் கண்டார். இவர் பொன்னுரைகள் தமிழுலகத்திற்குப் பெருமை சேர்த்தன. அதன் அருமை உணர்ந்து தமிழுலகம் உரைவேந்தரை உச்சிமேல் வைத்துப் பாராட்டியது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி ஆகிய முப்பெருங் காவிய ஆராய்ச்சிகளை முதலில் எழுதிய பெருமையும் இவரைச் சாரும்.

நாளும் நற்றமிழ் வளர்த்து, தமிழ்த் தொண்டிலேயே திளைத்திருந்த இவரை, மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ்ப் பேராசிரியராகச் சேர்த்துக் கொண்டது. உரை வரையும் பணி அங்கும் தொடர்ந்தது. ஒய்வுக்குப் பிறகு அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் வேண்டியபடி 'திருவருட்பா’ முழுமைக்கும் தெளிந்த நல்லுரை எழுதியிருப்பது, உரையுலகுக்கே உரைகல்லாக விளங்குகிறது.

மாவட்ட ஊர்ப்பெயரும் கல்வெட்டும் குறித்த ஆய்வுக்காக, இந்தியப் பல்கலை நல்கைக் குழு, இவரைப் பேராசிரியராக அமர்த்திக் கொண்டது. அவ்வமயம், தமிழகம் ஊரும் பேரும் குறித்த வரலாற்று ஆய்வுத் தொகுதியைப் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக் குறிப்புக்களோடு பேரறிஞர் ஒளவை உருவாக்கினார். உரையாசிரியர் விரிவுரை வரைவதோடு, மேடையில் உரையாற்றுவதிலும் சிறந்த நாவலராக விளங்கினார்.

ஒளவை துரைசாமி, வடமொழி நாடகமான மத்த விலாசத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து ஒளவைத் தமிழ், மதுரைக் குமரனார், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப்புலவர் திருவள்ளுவர், நந்தா விளக்கு, சிவஞானபோதச் செம்பொருள், பண்டைச் சேரமன்னர் வரலாறு முதலான நற்றமிழ்க் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘An Introduction to the Study of Tirukkural’ என்னும் ஆங்கில நூலையும் இவர் படைத்தார்.

பேராசிரியர் ஒளவை துரைசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலக்கண நுணுக்கம், சிந்தனை வளம், கல்வெட்டுக்களைக் காட்டித் தெளிய வைப்பது முதலிய நலங்களால் இவர் உரையை உலகம் புகழ்ந்தது. ஒளவை மூதாட்டியார் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ எனக் கேட்ட பாடலை நாம் அறிவோம். ஆனால், தமிழுலகம் 'சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று ஒளவை துரைசாமி அவர்களிடமே கேட்டுப் பெற்றது என்று முத்தமிழ்க் காவலரின் வாழ்த்துரை சொல்கிறது.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்ப்பில், தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில், ஒளவை துரைசாமிக்குக் கேடயம் பரிசாக வழங்கியபோது, மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்திருந்து, 'தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு, நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும். எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!' என்று முழங்கினார்.

ஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் திகழ்ந்த திருமதி டாக்டர் இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ப் புலமைச் சால்பும் அம்மையார் உரைகளில் இன்றும் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் புரட்சித் தலைவர் அவர்கள், ஒளவை.துரைசாமி அவர்களுக்கு நிதி வழங்கிச் சிறப்பித்தார்.

தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந்துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளரென்று உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், ‘சிறந்த பேச்சாளர்கள்' (1947) என்னும் நூலில் நூலாசிரியர் மா.சு.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

தமிழே தம் வாழ்வாகக் கொண்டு அல்லும் பகலும் புலமைப் பணியாற்றிய அருந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் ஒளவை துரைசாமி, 1981-ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள் 2-ஆம் நாள், மதுரையில் தமது 78ஆம் அகவையில் இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும், தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நாம் நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம். கன்றும் உதவும் கனியென்பது போல நம் துணைவேந்தர் ஒளவை நடராசன் நின்ற சொல்லராக நீடு புகழ் நிலவப் பணியாற்றுவதும் மகிழ்வைத் தருகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று பழந்தமிழ் நூல்கள் பாராட்டுவது போல மேடைதொறும் உரைவேந்தர் மகனார் துணைவேந்தர் என்று ஒளவை நடராசனாரைப் பாராட்டுவது உலகத் தமிழர்கள் அறிந்ததாகும்.
---------------

தொகையுரை : இலக்கியமாமணி பி.வி. கிரி

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள், காலங்காலமாய் எழுதிக்குவித்த செம்மொழிச் செல்வங்களெல்லாம் இன்று காணக்கிடைக்கவில்லையே என்று ஆய்வாளர்களும், தமிழார்வலர்களும் வருந்துகின்ற நிலையை அறிந்தேன். இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற ஆவல் பலர் உள்ளங்களிலும் எழுவது இயல்புதானே?

உரைவேந்தரின் திருமகனார் துணைவேந்தர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள், தந்தையாரின் கட்டுரைகளையெல்லாம் நாம் தேட வேண்டுமே என்று தம் நெடுநாளைய எண்ணத்தை ஆர்வத்தோடு என்னிடம் தெரிவித்தார்கள்.

‘அவற்றையெல்லாம் தேடி எடுப்பது சற்றுக் கடினமான செயல் என்றாலும், அதனைத் தாங்கள்தான் செய்ய வேண்டும்' என்று அன்போடு வேண்டினார்கள். பின்னர் உரைவேந்தரின் கட்டுரைகளைத் தேடித் தொகுக்கும் பணியில் அயராது முயன்றேன்.

உரைவேந்தரின் கட்டுரைத் தேனைப் பருகப் போகிறோமே என்று உளம் மகிழ்ந்து ஒரு வண்டாக நூலகமெனும் பூங்காக்களுள் நுழைந்தேன். ‘கொங்குதேர்வாழ்க்கை' என்பதற்கு அப்போதுதான் பொருள் புரிந்தது. சில இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. என்றாலும் மனம் சோராமல் மறைமலையடிகள் நூலகத்துக்குச் சென்றேன். அங்கே அந்தத் தமிழ்ப் புதையல் இருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உரைவேந்தரின் திருவுருவத்தை நான் நேரில் கண்டதில்லை. ஆனால், அந்த அழகிய எழுத்துக்களிலே அவர் திருவுருவத்தைக் கண்டேன். காலையில் கட்டுச்சோற்றுடன் தமிழ்க் கடலாம் மறைமலையடிகளின் திருப்பெயரால் அமைந்த அரும் பெரும் நூலகத்துக்குச் சென்று, அங்கேயே மாலைவரை இருந்து உரைவேந்தரின் அரிய கட்டுரைகளைத் தாங்கிய பழம் பெரும் இதழ்களைக் கண்ணுறும் பேற்றைப் பெற்றேன். இப்பணி ஒரு திங்களுக்கு மேலாக நாள்தோறும் நடந்தது.

‘தமிழ்ப் பொழில்’, ‘செந்தமிழ்’, ‘செந்தமிழ்ச் செல்வி' முதலான இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது, உரைவேந்தரின் உரைச் சித்திரங்கள் மிளிரக் கண்டேன். காலப்போக்கில் அவர் எழுதிய மலையளவுக் கட்டுரைகளெல்லாம் எங்குச் சென்று மறைந்தனவோ தெரியவில்லை. ஆனால், அந்த அரிய கருவூலங்கள் சிலவாவது கைக்குக் கிடைத்தனவே என்ற மனநிறைவே அப்போது ஏற்பட்டது. எல்லாவற்றையும் பொறுமையாக, பெருமையாகப் படியெடுத்து அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்து, டாக்டர் ஒளவை நடராசன் அவர்களிடம் அளித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தம் அருமை மகன் டாக்டர் அருளிடம், “தாத்தாவின் கட்டுரைகளைப் பார்த்தாயா, அறிஞர் கிரியின் அயராத முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எனக்குப் பெருமிதமாக இருந்தது.

பின்னர், அவற்றையெல்லாம் இலக்கியம்-சமயம் - சமுதாயம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பகுத்தும் தொகுத்தும் வைத்தோம்.

கால வெள்ளத்தில் கரைசேர்ந்த அந்தக் கட்டுரை மணிகளையெல்லாம் திரட்டி ஒருசேரச் சேர்த்து, நூல் வடிவமாக்கினோம். அந்த அரிய கட்டுரைகளின் ஓர் அழகிய வடிவம்தான் இந்த நூல். உரைவேந்தரின் உரைச் செல்வங்கள் காலக் கல்வெட்டாகும்; அந்தந்தக் காலக் கலை, வாழ்க்கை, நாகரிகம், மொழி, நடை, இலக்கியக் கூறுகளைப் படம்பிடித்துக் காட்டும் பண்பாட்டுப் பெட்டகம் அது.

உரைவேந்தரின் உரைக்கோவைக்குச் 'செம்மொழிப் புதையல்' என்று பெயரிட்டேன். இதனை விரும்பி ஏற்று வெளியிடும் புகழ் வாய்ந்த மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் நன்றி என்றும் உரியது. தமிழுலகம் இந்நூலை ஏற்றுப்போற்றிப்பயன்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தொகுத்த நிரலும் முயற்சியும் சுட்டிக்காட்டிய வகையில் இத்தொகையுரை அமைகிறது.

-----------

முகப்புரை : டாக்டர் அருள் நடராசன்
(உரைவேந்தர் ஒளவை அவர்களின் பெயரன்)

கால வெள்ளத்தால் கரையாதது; கல்வெட்டுகளால் நின்று நிலவுவது இயற்கைச் சீற்றங்களினால் இடருறாதது இலக்கியமேயாகும். இல்லையென்றால், காலத்தால் மூத்த திருக்குறள் இந்த ஞாலத்துக்கு இன்று வரை பயனளிப்பதாக நிலவுமா? சங்க இலக்கியங்களில் நமது வாழ்வுச் சரிதையைக் கண்டின் புறத்தான் முடியுமா? அந்த வகையில் புதையலாகத் தேடித் தொகுத்து உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள் எழுதியிருந்த கலையோவியங்களின் கலம்பகமாகச் ‘செம்மொழிப் புதையல்’ என்ற நூல் வடிவெடுத்துள்ளது.

எங்கள் மரபுக்கும் குடும்பத்துக்கும் மாறாப் புகழ் வளர்த்த எங்கள் அருமைப் பாட்டனார் உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பொழிலிலும், பிற இதழ்களிலும் எழுதிய கட்டுரைகள் இங்கே இப்போது தொகுக்கப்பெற்றுள்ளன. உரைவேந்தர் என் தாத்தா ஒளவை துரைசாமி அவர்கள் தமிழுக்காகவே வாழ்ந்தவர். தன்னேரிலாத தனிப்பெரும் பேராசிரியர் என்பதை உலகு நன்கறியும். கரந்தையில் தன் வாழ்வு தொடங்கிய நாள்தொட்டுக் காலையில் பயில்வது, மாலையில் எழுதுவது என்ற வரன்முறை வகுத்துக் கொண்டு இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்கள். தமிழிலக்கியங்களைப் போலவே ஆங்கிலத்திலும் பல்வேறு துறை நூல்களைத் தாம். பயின்று மகிழ்ந்ததை அறிவு, உழைப்பு, உலக வரலாறு என்றெல்லாம் கட்டுரைகளாக எழுதியிருப்பதைக் கண்டு பெருமிதமடையலாம். ‘என் கடன் தமிழ் செய்து கிடப்பதே’ என்னும் நோக்கில் அவரது வாழ்க்கை அமைந்தது. கட்டுரைகள், வரலாறுகள் எழுதத் தொடங்கி உரை எழுதுவதில் ஒவாப் புகழ் நாட்டித் தமிழுலகில் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்தார். ஒளவை அவர்களின் சிந்தனை, சொல், செயல் எல்லாமே தமிழ் வளர்ச்சியாக மலர்ந்தன. அவர் ஆற்றிய தமிழ்ப்பணிக்குத் தமிழுலகம் தலை வணங்கியது. என்றோ எப்போதோ ஒளவை எழுதியிருந்த அந்தத் தமிழ்ச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று என் தந்தையார் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள் என்னைத் தூண்டி வந்தார். அப்பணியை நிறைவேற்ற அவர் நினைவுக்கு வந்தவர் இலக்கியமாமணி எழுத்துச்செம்மல் பி.வி.கிரி அவர்களாவார். திரு பி.வி.கிரி அவர்கள் விடாமுயற்சியும், கடின உழைப்பும், செய்வன திருந்தச் செய்யும் திறமும் வாய்ந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழார்வமிக்க தலைசிறந்த எழுத்தாளர். தமிழ்நாட்டரசின் 'தமிழரசு’ இதழில் பணியாற்றி எழுத்துலகில் தனித்திறம் பதித்த மூத்த எழுத்தாளர். இன்று தம் 69ஆம் ஆண்டு அகவை நிரம்பிய நிலையில் 69 நூல்களை எழுதியுள்ளார்.

என் தந்தையார் அவர்கள் தம் எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, அந்தப் பணியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று, என்னை நாடோறும் வலியுறுத்தி, ஒளவை துரைசாமி அவர்களின் கட்டுரைகளைத் தேடித் தொகுப்பது, இலக்கியமாமணியோடு இணைந்து செய்யும் பெரும்பணி என்ற தனியுவகையோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தோம். அரிதின் முயன்று, நூலகங்களுக்கெல்லாம் சென்று பழைய இதழ்களைத் தேடி எடுத்து, படிப்படியாய்க் கட்டுரைகளையெல்லாம் படியெடுத்து வந்து மணிவாசகர் பதிப்பகத்தாரிடம் வழங்கினோம்.

இதுகாறும் நாங்கள் திரட்டிய கட்டுரைகளை முறையாகத் தொகுத்து, அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவதென, திரு.பி.வி.கிரி முடிவு செய்துள்ளார். அதன்படி, 'செம்மொழிப் புதையல்' என்னும் நூல் இன்று வெளிவருகிறது. தாத்தாவின் கட்டுரைகளிலே தனித்தமிழ் நடை, அரிய சொல்லாட்சி இடைமிடைந்த புலமை வீறு, மொழியழகு, சிந்தனை வளம், உரை காணும் திறம் ஒருசேரப் பொலிவதைக் கண்டு மகிழலாம். அறிவு,

உழைப்பு, வரனென்னும் வைப்பு, பிறப்பொக்கும் சிறப்பொவ்வா, யாதும் வினவல் என்னும் இருபது கட்டுரைகள் இந்நூலை அணி செய்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு வகையில் சிறப்புற்றுத் திகழ்கின்றது. எல்லாக் கட்டுரைகளும் இலக்கிய மேற்கோள்களுடன் மேலைநாட்டு அறிஞர் பெருமக்களின் குறிப்புக்களுடன் மிளிர்கின்றன. எல்லாவற்றுக்கு மேலாக அந்தக் கட்டுரைகளில் தம் கருத்தினை ஒளவை அவர்கள் உறுதியுடன் நிலை நிறுத்தும் பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

உரைவேந்தர் ஒளவை அவர்களின் கட்டுரை நடை இனித்த தனித் தமிழில் இலங்குவதாகும். ஒருமுறைக்குப் பன்முறை ஆழ்ந்து தோய்ந்து படித்தாலன்றிப் பொருள் எளிதில் புலனாகாது. மெய்வருத்தக் கூலிதரும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். பொதுவாய்ப் பொருள் விளங்காத இடமெல்லாம் எழுதியவர் பிழையென்று எண்ணிச் சிலர் நிறைவடைவார்கள். தமக்கே முயற்சியும் திறனும் குறைவாயிருப்பதாற்றான் சில தொடர்கள் விளங்கவில்லை என்று படிப்போர் எண்ண வேண்டுமென்று என் இளம் பருவத்தில் பத்து வயதை நான் எட்டிய நிலையில் என் பாட்டனார் நகைபட விளக்கிக் கூறியது என் நினைவில் இப்போது நிற்கிறது. ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றிருந்தாலும் எமர்சனையும் தி குவின்சியையும் எடுத்த மாத்திரத்தில் படித்துப் பொருள் தெரியாமல் இளைஞர் தடுமாறுவது இயல்பு. நூற்றிலே ஒருவருக்குத்தான் அவை தெளிவாக விளங்கும் என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே, செம்பொருட் செறிவுடையதாய் செந்தமிழ்ப் பொலிவுடையதாய் விளங்கும் இக்கட்டுரைகளில் தோய்ந்து முயன்று படித்தல் வேண்டுமென்பதால் ‘செம்மொழிப் புதையல்' என்று பெயரை இந்நூலுக்கு அமைத்தோம்.

“என் போக்கில் யான் அறிந்ததை எழுதலை என் கடனாகக் கொண்டே உரை விளக்கங்களையும் பொருண்மைத் திறங்களையும் தொடர்ந்து வரைந்தேன். காலநிலை மாற, கருத்துக்களும் புது மாற்றத்தைப் பெறும். எனவே, என் நூல்களைச் சில ஆண்டுகள் கழித்து, மீள்பதிப்புக் கொணர்தலையும் நான் விழைந்தேனில்லை.

வெளியிட்ட தமிழ் நூல்களைக் கற்று விளங்கித் தெளிவு பெறும் அறிவுடைமையும் தமிழகத்தில் முறையாக அமையவில்லை. இந்நிலையில் அறிஞர் எழுதல் ஒரு சுமை, பதிப்பது ஒரு சுமையாகும். விளங்கிப் பயில்வோருக்காக எளிமை எள்ளல்கள் பெருகி வரும் நிலையையும் நான் காண்கிறேன். வாழ்வில் வறுமையில் வருந்திப் பின்னர் முதுமையில் பெருமை பெற்றதாகப் பேசி, இலக்கியப் பரிசிலைக் காட்டி என் குடும்பத்தார் நாட்டுடைமைப் பலன் பெற விழைவதும் நகைப்பிற்குரியதாகும். வளம் தேடியபோது வாய்க்காததை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுவதொன்றே என் கடன். எவரேனும் எந்நாளேனும் படித்துப் பயன்பெற்றால் நலமாகும் என்ற நிறைவோடுதான் இலக்கியப் பணியில் வாழ்கிறேன்” என்று உரைவேந்தர் ஒளவை அவர்கள் அந்நாளில் ஆற்றிய உரைத் துணுக்கை இங்கே இணைப்பது தக்கதென்று கருதுகிறேன். எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரியின் சோர்விலாத உழைப்புக்கும் இக்கருத்து பொருந்துவதாகும்.

இந்நூலில் மலர்ந்துள்ள 'உலக வரலாறு' என்னும் கட்டுரை, அறிவியல் நோக்கில் ஆராயப்படுகின்றது. இன்றைய நிலையில் அவை பழங்கருத்துக்களாகவே அமையும். ஊழ், வெல்லத்தக்கதே என்று 'ஊழ்வினை' கட்டுரையில் உறுதிப்படுத்துகின்றார். எனினும் அறுபதாண்டுக்கு முன்னர் ஒளவை அவர்களுக்கிருந்த அறிவியல் நாட்டமும், ஆங்கிலப் பயிற்சியும் நினைக்கத்தக்கன. 'சங்ககாலத் தமிழ்மகன்,' தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்ந்தவன் என்றும், பழந்தமிழ் மகளிரின் பெருமையினைத் 'தமிழ் மகளிர்' என்ற கட்டுரையில் திண்ணிய சான்றுகளுடன் வரைந்துள்ளார்.

ஏட்டில் இல்லாத இலக்கியம், எது? அதுதான் பழமொழிகள். இந்தக் கட்டுரை, இதுவரை சில பழமொழிகள் குறித்துத் தவறாகத் தெரிந்ததை மாற்றித் தெளிவூட்டுகின்றன. வாணிகம் செழிக்க வேண்டுமானால், நான்கு மந்திரங்களைக் கடைப்பிடித்தாலே போதும் என்று கூறி, அந்த நான்கு மந்திரங்களை நம் மனத்திலே பதிய வைத்துள்ளார்.

'வெற்றிலை வாணிகர்' குறித்தும், ‘உரிமை வாழ்வில் இலக்கியப் பணி'யையும் ஆய்வுரையாக எழுதியுள்ளார். உரை எழுதுவது ஒரு தொழிலா? என்ற ஒரு வினாவை எழுப்பி, அதற்கு விடை தரும் வகையில், 'உரையனுபவம்’ என்னும் கட்டுரையில் தம் புலமை நுணுக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தமிழுக்குப் பிற சமயத்தாரும் தொண்டாற்றியதைக் காட்டும் வகையில், 'சமண முனிவர் தமிழ்த்தொண்டு’, ‘இசுலாம் செய்த இனிய தொண்டு ஆகியவை குறித்த கட்டுரைகள் நூலுக்கு அணி செய்கின்றன. தத்துவஞானத்துக்கு அறிவியல் பாங்கு இன்றியமையாது வேண்டப்படும் என்னும் கருத்தை 'விஞ்ஞானமும் தத்துவஞானமும்' என்னும் கட்டுரையில் காணலாம்.

இவ்வாறாக, என் தாத்தாவின் ஒளிவீசும் ஒவ்வொரு கட்டுரை மணியும் நன்கு கோக்கப்பட்டு அழகிய தமிழ் மாலையாக இந்நூலினைப் புலமை மணம் கமழுமாறு தொகுத்து வழங்கிய எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் பெரிதும் நன்றி பாராட்டுகின்றோம்.

தமிழகத்தில் தமிழ்ச் சுரங்கமாகத் திகழும், பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நிறுவிய மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாகத் தாத்தாவின் 'செம்மொழிப் புதையல்' நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்நூலைத் தமிழக மக்களுக்கு வழங்குவதில் இறும்பூதெய்துகிறோம்.

இந்த நூலை மகிழ்ச்சியுடன் வெளியிட முன்வந்த பதிப்புச் செம்மலின் அருமைத் திருமகன் செயலாண்மைச் செம்மல் திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம், குணக்குன்று என்று எந்தையார் பரிவோடு அழைத்து மகிழும் மேலாளர் திரு. இராம. குருமூர்த்தி ஆகிய இருவரைப் பாராட்டி மகிழ்கிறோம். தமிழுலகம் தமிழ்ப் புதையலைப் பெற்று, அறிவு நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

-----------

ஆசிரியர் பிரான் ஒளவை
கோமான் ம.வி. இராகவன்
(நாடறிந்த நல்லாசிரியர் - ஒளவை அவர்களின் தலைமாணவர்)

இருபதாம் நூற்றாண்டு நம் தாய்மொழியாம் தமிழ்மொழி மறுமலர்ச்சியுற்று மாண்பு பெற்ற காலம். இந்நூற்றாண்டின் தம் நலமும், தம் முன்னேற்றமும் கருதாது தமிழின் மறுமலர்ச்சியே குறியாக அல்லும் பகலும் அயராதுழைத்த நல்லிசைப் புலவர் பெருமக்கள் பல்லோராவர். அவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் உரைவேந்தர் என்று புலவருலகம் ஒரு சேரப் புகழ் கூறும் செந்தமிழ்ச் செல்வராகிய ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வளர்த்த தனிப் பெருமைக்குரிய மதுரையம் பதியில் கல்லூரிப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பிள்ளையவர்கள் மறைவைக் கேட்டுத் திடுக்குற்றேன். ஈரம்மலிந்த என் விழிகளோடு என் நினைவும் ஐம்பதாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது.

தெரிந்தெடுத்த அருந்தமிழ் ஆசிரியர்.

நாற்பதாண்டு கட்குமுன் பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியர் நான் தகுதி வாய்ந்த தமிழாசிரியரைத் தேடி அலைந்து கொண்டிருந்த தமிழார்வம் கொண்ட இளைஞன். உடற்பிணியின் குறுக்கீட்டால் என் ஆங்கிலப் பயிற்சி இடையில் தடைப்பட்டது. பிணியினின்றும் விடுபட்டபின் விட்ட ஆங்கிலப் பயிற்சியைத் தொட்டுத் தொடர விருப்பமின்றித் தமிழ் பயிலத் தொடங்கினேன். புலவர் சிலரை அடுத்துச் சிறுநூல்கள் பலவற்றைப் படித்து முடித்த நான் பெருங்காப்பியங்கள், சங்கத் தொகை நூல்கள், பேரிலக்கணங்கள் ஆகிய பெருநூல்களைத் தொடர்ந்து பயின்று பல்கலைக் கழகப் புலவர் (வித்துவான்) தேர்வு எழுத விரும்பினேன். அதுபோது அருகிலிருந்த புலவர்களுள் எவரையும் அப்பெருநூல்களைப் பாடம் சொல்லுவதற்குரிய தகுதி வாய்ந்தவராக என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, ஓராண்டுக் காலம் வறிது கழிந்தது. காலக் கழிவை எண்ணிக் கவன்றிருந்த நிலையில் என் நல்வினைப் பேறாகப் பிள்ளையவர்கள் சேயாறு கழக உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமைத் தமிழாசிரியராக வந்து சேர்ந்தார்கள் (1931).

பணியேற்ற சில நாட்களுக்குள்ளேயே பிள்ளையவர்களின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலுற்றது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், நகர அறிஞர்களும் அவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலானார்கள். ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான் ஊக்கம் பெற்று அவரை நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர் பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந் திருப்பது கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்.

பூவேத்தப் பழஞ்சைவப் பயிர்விளைத்த புகழ்ப்பிள்ளை
நாவேத்தத் திருவோத்தூர் நயந்தேற்றா ரருள் செய்வென்

வரைசாமி யரங்கமென மகிழ்ந்தாடு மனத்தவனே!
துரைசாமி! அருந்தமிழன் சுவைகனிந்த புலவ! கேள்

உலகுவளை கடல்மடுத்த வொருமுனியு மாற்றாமே
விலகு தமிழ் வியன்கடலை வியப்புறுமா றுண்டனை நீ!

உற்றுயர்வான் கலையனைத்து முரைகுற்ற மூன்றுமறக்
கற்றுயர்வான் வருமவர்க்குக் கற்பகம்போனின்றனை நீ!

சொல்வன்மை யஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்
வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணி நீ!

கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையு
மிம்பருனைப் போலெவர்மற் றினிதறிந்தார்? எடுத்துரைத்தார்?
----------
பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி
நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ!

குன்றளிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோ
லின்றளிக்குந் தலைவனி யெனலு நினக்கிசையேயோ!

அஃதான்று

ஓயா தொழுகுஞ் சேயாற் றடைகரை
விளங்கு மோத்துர் வியனக ருயர்நிலைப்
பள்ளி மாணவர் கள்ள மின்றி
யாற்றிய தவத்தி னாசிரி யத்தொழில்
ஏற்றவர் தம்மட மாற்று மொண்புலவ!
சிறியேன் தமிழிற் பேரவாக் கொண்டு
சிலரை யண்மி யிலக்கிய விலக்கணஞ்
சிறிது பயின்றுளேன்; செம்மல் நின்றிறங்கேட்
டரியவை யறிவா னார்வமுற் றடைந்தனென்
குலனருள் வாய்ந்த குரவ! எற் கிரங்கி
யொல்காப் பெருமைத் தொல்காப்பியமொ
டேனை யைவகை யிலக்கண நூல்களும்
பல்காப் பியங்களும் பரிந்தனை பயிற்றிப்
பல்கலைக் கழகம் நல்கும் ‘வித்துவான்'
பீடுறு பட்டம் பெறவெற் கருண்மதி
அருளுவை யாயின் பொருளிலாச் சிறியேன்
காலந் தன்னிற் சீல! நீ புரியும்
ஞாலந் தன்னினுஞ் சாலப் பெரிதாம்
நன்றி யிதனை யென்று
மறவா துள்ளி மகிழ்ந்து வாழ்த்துவனே.'

என்னும் பாடலை இயற்றி எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை பிள்ளையவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே சிறிய சாய்வு மேசையின் முன் அமர்ந்து ஏதோ குறிப்பெடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். நான் வணக்கம் கூறி முன்னே நின்றேன் அவர் நிமிர்ந்து பார்த்து, இருக்கப் பணித்து, என்னைப் பற்றி உசாவலுற்றார். நான் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எடுத்துச் சென்றிருந்த பாடல் தாளை அவரிடம் கொடுத்தேன். அவர் பாடலை ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு, 'இது யார் எழுதித் தந்தது?’ என்று கேட்டார். ‘நான் இயற்றியதே’ என்றேன். பழகிப் பண்பட்ட பண்டிதர் பாடலாக இருப்பதால் கேட்டேன். இதில் என்னைப் பலவாறு சிறப்பித் திருக்கிறீர்களே, அச்சிறப்புக்களை என்னிடம் எவ்வாறு கண்டீர்கள்?’ என்றார். நான் அவர் அறியாமலே அவரைப் பல நாட்கள் ஆராய்ந்ததையும், அவ்வாராய்ச்சியில் கண்டவற்றுள் சிலவே அவை என்பதையும் எடுத்துரைத்தேன். அதனை அடுத்து ‘நீங்கள் யார் யாரிடம் என்னென்ன நூல் படித்திருக்கிறீர்?' என்று வினவினார். நான் பாடங்கேட்ட புலவர்களையும், அவர்களுள் ஒவ்வொருவரிடமும் படித்து முடித்த நூல்களையும் வரிசையாகக் கூறினேன். உங்கள் தகுதியையும், உணர்ச்சியையும், வேட்கை விருப்பத்தையும் இப்பாடலிலிருந்தே உணர்ந்து கொண்டேன். உங்களுக்குப் பாடம் சொல்லுவதில் மகிழ்ச்சியே. நல்ல நாள் பார்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

நான் நாள் பார்த்துக் கொண்டே வந்துள்ளேன். இன்று நல்ல நாளே என்றேன். அவர் 'அப்படியானால் இன்றே தொடங்கிவிடுவோம்’ என்று கூறி, ஒரு தாளில் சில பாடல்களை எழுதி என்னிடம் தந்து, இப்பாடல்களைப் படியுங்கள். ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கும் பொழுது முதலில் இவற்றைச் சொல்ல வேண்டும் என்றார். அப்பாடல்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியார், பரிமேலழகர் ஆகிய புலவர் பெரு மக்களுக்கு வணக்கம் கூறுவனவாக இருந்தன. நான் முன்னமே இயற்றியிருந்த,

முத்தலை நெடுங்கடல் முழுது முண்டலர்
புத்தமிழ் துகுபொழில் பொதிய மேவிய
வித்தக முனிவரன் வளர்த்த மெல்லியல்
முத்தமிழ்க் கிழத்தியை முடிவ ணங்குவோம்.

என்னும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை முதலிற் கூறிப் பின் அப்பாடல்களையும் படித்தேன். முதலில் திருக்குறளை எடுத்துக் கொள்வோம் என்று கூறி, தம் புத்தகத்தையே கொடுத்து உரைப்பாயிரத்திற்கு வியப்புறும் வகையில் விளக்கம் கூறியபின், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் உரையையும் பிறர் உரைவிகற்பங்களையும் தமக்கே உரிய தனிமுறையில் தடைவிடைகளால் தெளிவாக விரித்து விளக்கி முடித்தார். அன்று முதல் நிழல்போல் அவரை நீங்காமல் உடனிருந்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அரிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றையும் முறையாகப் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு எழுதி முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவனாகத் தேறி, சென்னையில் உள்ள மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்ந்து, முப்பது ஆண்டுகட்குமேல் தொடர்ந்து பணி யாற்றினேன். இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின் அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை.

உழைப்பால் உயர்ந்தவர்

பிள்ளையவர்கள் உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஒயா உழைப்பினால் உருவானது, அவர் இன்றைக்கு எண்பதாண்டுகட்கு முன் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல வேறு இன்னல் இடையூறுகட்கிடையில் உழைத்துப் படித்து இண்டர்மீடியட்டில் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கி, தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தாராமையால் நகராண்மைக் கழகத்தில் நலத்துறைக் கண்காணி (Sanitary Inspector) யாக வாழ்வைத் தொடங்கினார். இயற்கையில் அறிவும், ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது. அவர் நகராண்மைக் கழகப் பணியை விடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அடுத்து, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு வேங்கடாசலம்பிள்ளை போன்ற பெரும் புலவர்களிடம் அருந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திருந்தக் கற்றுத் திறமான புலமை பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வில் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்றார். பின்னர் வட ஆர்க்காடு மாவட்டக் கழகத்தில் தமிழாசிரியராகச் சேர்ந்த சில ஆண்டுகள் பல உயர்நிலைப் பள்ளிகளில் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். பின்னர், திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரியர் பதவியேற்றுச் செந்தமிழ்ப் பணிபல சிறக்கச் செய்தார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை அவரை அழைத்து அமர்த்திக் கொண்டது. அங்கு அமர்ந்த அவர், கல்வெட்டு ஆராய்ச்சியிலும், மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் பங்கு கொண்டு பயனுள்ள பணிபல புரிந்தார். இறுதியாகச் சங்கமிருந்து தமிழ் வளர்த்த மதுரையம்பதி பிள்ளையை வரவேற்றது. அங்கு அவர் தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பதவியினின்று ஒய்வு பெற்றாரேயன்றிப் பணியினின்றும் ஒய்வு பெற்றாரில்லை. பதவி ஓய்வைப் பயன்படுத்திக் கொண்டு செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார்.

ஆசிரியத் துறையில் பிள்ளையவர்கள் எய்திய இவ்வுயர்வு இயல்பாக அமைந்த வளர்ச்சியே ஆகும். ஆசிரியருக்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும் அவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன. பிறவியாசிரியாராகிய அவர் அத்துறையில் தமக்கென்று தனிமுறை ஒன்றை வகுத்துக் கடைப்பிடித்து, அப்பண்புகளைப் பேணி வளர்த்துக் கொண்டார்; அவ்வளவே. அவர் சிலர் போலத் தாம் உலகியல் வாழ்வில் உயர்வதற்கு வேண்டும் வசதிகளைப் பெற விரும்பியிருப்பாராயின், ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த தேர்ச்சிக்கும், தமிழ் மொழியில் அவருடைய ஆழ்ந்தகன்ற புலமைக்கும் அரிய ஆராய்ச்சி அறிவுக்கும் எம்.ஏ. (M.A.) பி.எச்.டி. (Ph.D.) போன்ற பயன்தரும் பட்டங்கள் பலவற்றை எப்பொழுதோ எளிதில் பெற்றிருக்கலாம். தம்மைப் பற்றிய நினைவே, தம்முன்னேற்றம் பற்றிய சிந்தனையே சிறிதும் இன்றி, தாம் குறிக்கொண்ட தமிழ்த் தொண்டுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கருத்தாயிருந்தார் அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த நாள் தொட்டு அவர் அதற்காக அயராது உழைத்தார். அவர் உழைப்பை உடனிருந்து காணும் வாய்ப்புப் பெற்றிருந்த நான் அதனை இன்று நினைக்கினும் அது என்னை நின்று நடுங்கச் செய்கிறது.

பள்ளியில் பாடம் நடத்தும் நேரம் நீங்க மற்ற நேரத்தில் ஒரு கணமும் ஓயாமல் ஒழியாமல் உழைத்தார். பள்ளியை விட்டு வீடு வந்ததும் திண்ணையில் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்து விடுவார். படிப்பதிலும், ஆராய்வதிலும், குறிப் பெடுப்பதிலும் சுற்றுப் புறத்தை மறந்து சுறுசுறுப்பாக ஈடுபட்டு விடுவார். அப்பொழுது அவர் குடியிருந்த வீட்டில் மின் விளக்கு வசதி இல்லை. இரவில் எண்ணெய் விளக்கின் முன்இருந்து நெடுநேரம் வரையில் எடுத்த குறிப்புகளைக் கொண்டு கட்டுரை, ஆய்வுரை, மறுப்புரை, நூலுரைகள் எழுதுவார். அவர் எப்பொழுது உறங்குவார், எத்தனை நேரம் உறங்குவார் என்பவை யாருக்கும் தெரியா. விடியற்காலம் விழித்துப் பார்த்தால் விளக்கின்முன் அமர்ந்து விரைவாக எதையோ வரைந்து கொண்டிருப்பார். விடிந்தபின் பள்ளி செல்லும் வரையில் அதே உழைப்பு அல்லென்றும் பகலென்றும் பாராமல், ஊனும் உறக்கமும் நினையாமல் பிள்ளையைப் போலத் தமிழுக்காகப் பேயுழைப்பு உழைத்தவர்களை நான் கண்டதில்லை. ஒய்வு என்பது இன்னதென்று அறியாத ஒர் அற்புதப் பிறவி அவர். அவர் மேற்கொண்ட முயற்சியில் அவருக்குத் துணை செய்யும் அறிவும் ஆற்றலும் பண்பும் வாய்ந்த புலவர்களோ, அன்பு கொண்டு ஆதரவு காட்டும் செல்வர்களோ இல்லாத அக்காலத்தில் புறங்கூறப் புல்லறிவினோர் பலர் இருந்தனர். பிள்ளையவர்கள் பிறர் துணை நாடாமல், புல்லறிவாளரின் பொறாமையையும் புறங்கூறுதலையும் பொருட்படுத்தாமல், தமக்குத் தாமே முயன்று பண்படுவதில் முனைந்து உழைத்தார். அன்று அவர் உழைத்த அவ்வுழைப்பே பின்னர் அவரைப் பண்டை உரையாசிரியர்கள், வரிசையில், அவர்களோடு சரியாசனத்தில், ஏற்றி, 'உரைவேந்தர்' என்று புலவருலகம் புகழ் கூறும் உயர்நிலையை எய்துவித்தது.

எளிமையில் வளமை

பழந்தமிழ்ப் புலவர்க்ளின் பண்பட்ட வாழ்க்கை சங்கத்தமிழ் நூல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசில் வாழ்க்கையினராயினும் வரிசைக்கு வருந்துவோராகவும், மண்ணாளும் மன்னரைப் போன்ற மாண்புடையவராகவும், தளர்வறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்தனர். அவர் வாழ்வு எளிமையில் வளமை கண்ட வாழ்வு. வாழ்வில் எளிமை; சிந்தனையில், சொல்லில் செயலில், உயர்வு; இதுவே பிள்ளையவர்களின் பெருமை. நான் பழகிய காலத்தில் பிள்ளையவர்கள் குடும்பம் மிகச் சிறியதொன்றே. அந்நாளில் தமிழாசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவு. வேறு வருவாய்க்கும் வழியில்லை. எனவே, பிள்ளையின் வருவாய் அச்சிறிய குடும்பத்தையும் செம்மையாக ஒம்புதற்குப் போதியதாக இல்லை. எனினும் அவர் குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு நேர்மை தவறாமல் நிமிர்ந்து வாழும் நெறியாளராக விளங்கினார். எளிய உடையையும் எடுப்பாக உடுக்கும் கலை அவருக்குக் கைவந்திருந்தது. கவலைக் குறியின்றிக் களை தவழும் முகத்தோடு கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சீரிய பண்பு அன்றோ அவர் பால் சிறப்பாக அமைந்திருந்தது. எந்நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துகளை மாற்றிக் கொள்ளவோ அவர் இணங்கியதில்லை. அதனால் இடுக்கண் நேர்ந்த பொழுது நடுக்கமுறாமல் அதனை நகைமுகத்தோடு ஏற்று நலியச் செய்யும் மிடுக்குடைமை அவரது சிறப்பியல்பாகும். வாழ்விலும் பிறரோடு பழகும் முறையிலும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினா ரெனினும் ஏக்கழுத்தும் பீடு நடையும் கொண்ட ஏற்றம்மிக்க தோற்றம். அவருக்குப் பிறவிப் பேறாக வாய்த்திருந்தது.

அடக்கமும் அஞ்சாமையும்

பிள்ளையவர்கள் கடல் போன்ற கல்வியினராயினும் அவரிடம் தருக்கோ, தற்பெருமையோ தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும் நன்னடக்கையிலும் அவர் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவர். அவரைப்போல ஆரவாரத்தில் ஆர்வம் காட்டாமல், பாராட்டையும் புகழையும் எதிர்பாராமல், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கொள்கையைக் கடைப் பிடித்து அமைதியாகத் தமிழ்ப்பணியில் ஆழ்ந்திருந்தவரைக் காண்டல் அரிது. நீர் தளும்பாத நிறைகுடம் போல ஆரவாரமின்றி அமைந்தொழுகிய பிள்ளையவர்கள் அறியாத ஒன்றும் உண்டு. அதுவே அச்சம். பழந்தமிழ்ப் புலவர்களைப் போலவே அவர், அச்சம் அறியாத ஆண்மையர். அவையஞ்சாமை அவருக்குக் கருவிலே வாய்ந்த திருவாகும். தாம் உண்மை என்று கொண்டதை எவரிடையிலும் வன்மையோடு நிலைநிறுத்தும் உறுதியும், தவறு என்று கண்டதை அதற்குரியார் யாராயிருப்பினும் தயை தாட்சணியமின்றி அஞ்சாமல் அழுத்தமாக மறுத்துக் கூறும் துணிவும் உடையவர் அவர் வாதிடுவாரையும், வல்வழக்காடு வாரையும் வாயடங்கச் செய்யாமல் வணங்கிப் போனதை அவர் வாழ்வில் காண முடியாது. ஆயினும் மாறுபட்டோரிடம் பகைமை பாராட்டி மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளும் இழிகுணம் அவரிடம் இடம் பெற்றதில்லை. அவர்களிடம் அன்பு காட்டி நண்பு கொண்டு பண்பாகப் பழகும் பான்மை அவரது மேன்மையாகும்.

செய்ந்நன்றி மறவாச் சீர்மை

செய்ந்நன்றி மறவாது போற்றும் சீர்மையிலும் பிள்ளையவர்கள் பண்டைப்புலவர்களோடு ஒப்பவைத்து மதிக்கத்தக்க உயர்வுடையவர். அவர்பின் எய்திய உயர் நிலைக்கு அடிகோலிய ஆசிரியப் பெருமக்களாகிய நாவலர், நாட்டார், கரந்தைக் கவியரசு ஆகியோரிடம் அவர் கொண்டிருந்த பற்றும் வைத்திருந்த மதிப்பும் அளவிடற்கரியவை. அவர்களுடைய கல்விச் சிறப்பையும் பாடம் சொல்லும் திறத்தையும் அவர் உணர்ச்சி பொங்கப் பாராட்டிப் பேசியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர்களை ஒவ்வொரு நாளும் பாடம் தொடங்கு முன், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்கட்கு வணக்கம் கூறும் பாடல்களோடு அவர் தமிழ் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக் கூறும் பாடலையும் சேர்த்துச் சொல்லுமாறு பணித்திருந்தது அவர் அந்நிறுவனத்தினிடம் கொண்டிருந்த நன்றியறிவுக்குச் சான்றாகும். கர்ந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட உமாமகேசுரம் பிள்ளையை அவர் தம் நினைவில் நிலையான இடம் தந்து. மறவாது போற்றி வந்த மாண்பை அவர் நண்பர்கள் நன்கு அறிவர்.

புலமை நலம்

பிள்ளையவர்களின் புலமை பள்ள நீர்க்கடல் போன்று அளந்தறிதற்கரிய ஆழமுடையது; விரிந்தகன்ற வானம் போன்று வரைந்துணர்தற்கரிய பரப்புடையது. அசைக்கலாகாத மலை போன்று அலைக்கலாகாத திட்பம் வாய்ந்தது. எந்த நூலையும் மேற்போக்காகப் படித்து முடிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. படித்தது போதுமென்று விடுத்திராமல் பல நூல்களையும் பலமுறை பயின்று நயங்கண்டு பயன் கொள்ள முயல்வது அவர் இயல்பு; அரிய நூற்பொருள்களையும் துருவியாராய்ந்து கடிதிற் கண்டு நெடிது போற்றுவது அவர் சிறப்பு. சங்கத்தொகை நூல்கள், திருக்குறள், பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களும், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், சைவ சாத்திரங்கள் ஆகிய சமய நூல்களும், தொல்காப்பியம், பிரயோக விவேகம், வீரசோழியம், இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி, யாப்பருங்கலம் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றிற்குப் பண்டையாசிரியர்கள் கண்ட உரைகளோடு அவருக்கு மனப்பாடம். இலக்கியத்திலும் இலக்கணத்தில் அவருக்கு ஈடுபாடு மிகுதி. தொல்காப்பியத்தில் அவருக்குள்ள தேர்ச்சியும், அதன் பல்வேறு உரைகளில் அவர் அரிதில் முயன்று பெற்றுள்ள பயிற்சியும், ஆராய்ச்சியும் நான் அறிந்து அனுபவிக்கும் பேறு பெற்றவை. இலக்கியங்களுள் சிறப்பாகச் சங்கத்தொகை நூல்களிடத்தும், திருக்குறளிடத்தும் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். முற்காலக் காப்பியங்களுள் சிந்தாமணி யும், பிற்காலக் காப்பியங்களுள் கம்பராமாயணமும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. சிந்தாமணியின் தமிழ்ச் சுவையையும், கம்பராமாயணத்தின் கவிச் சுவையையும் அவர் தெவிட்டாமல் நுகர்ந்து திளைப்பவர்.

பிள்ளையவர்களின் புலமை ஒரு நெறிக்கு உட்பட்டதன்று; பல துறைகளில் பாய்ந்து பரவியது. இலக்கியம், இலக்கணம், சமயம், அளவை, வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு துறைகளுள் ஒவ்வொன்றிலும் தனித்தனிப் புலமை பெற்றவர் பலர் இருக்கக் கூடும். ஆனால், பிள்ளையவர்களைப் போல அவ்வனைத்தினும் ஆழ்ந்தகன்ற புலமை பெற்றவர் அரியராவர். அவர் எடுத்துக்கொண்ட நூல் எதுவாயினும் அதனைப் படித்தறிவதோடு அமையாமல் தம் நுண்மாண்நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை உணர்வதில் ஆர்வமும் முயற்சியும் உடையவர்; பிறர் கடுமையானவை என்று கருதிக் கைவிடும் நூல்களைக் கைக்கொண்டு பொறுமையாகப் பலகால் பயின்று பயன் கண்டு மகிழும் பண்புடையவர். அவர் புலமை பழமையினின்றும் மலர்ந்து புத்தொளிகானும் புதுமையது. பிறர் சிலரைப் போலப் பழைய நூல்களையும் உரைகளையும் பழித்து ஒதுக்குவதும், புதுமை மோகத்தால் மரபோடு மாறுபட்ட பொருந்தாத புதுக்கருத்துகளைப் புகுத்திப் போலிப்புகழ் பெற முயல்வதும் ஆகிய புன்மைக்குணம் அவரிடம் இல்லை. அவ்வாறே புதுமைக்கு இடங்கொடாமல் பழமையையே பற்றி நிற்கும் பிடிவாத குணமும் உடையவர் அல்லர். அவர் தம்மிடம் பாடங்கேட்கும் மாணாக்கர்களைப் பாடம் தொடங்குமுன் பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்ற பண்டை உரையாசிரியர்கட்கு வணக்கம் கூறும் பாடல்களை ஒதுமாறு வற்புறுத்தி வந்தது அவர்களிடத்தும் அவர்களுடைய உரைகளிடத்தும் அவருக்கிருந்த பற்றையும் மதிப்பையும் விளக்குவதாகும். ஆனால், அவர் வேறு சிலர்போல உழுத சால் வழியே உழுது செல்லும் இழுதை நெஞ்சினர் அல்லர். அவர் பண்டையாசிரியன்மாரின் கருத்துகளோடும் உரைகளோடும் மாறுபட்டுப் புதுக் கருத்துகளையும் உரைகளையும் கண்டு கூறத் தயங்கியதில்லை. ஆனால், அத்தகைய இடங்களில் அவர்கள் அவ்வாறு கருதியதற்கும் உரை கூறியதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து கண்டு அவற்றின் பொருத்தத்தைத் தெளியத் தெரிந்து கொண்டு, பின்னர் அவர்களைக் குறை கூறாமலும், அவர்களுடைய கருத்துகளையும் உரைகளையும் இகழ்ந்து விலக்காமலும், அவற்றிற்கு மாறாகத் தாம் கொள்ளும் புதுக்கருத்துகளையும் காணும் உரைகளையும்கூறி அவற்றின் சிறப்பைக் காரணம் காட்டி விளக்குவது வியப்புக்குரிய அவரது சிறப்பியல்பாகும். இங்ஙனம் பழமைக்கு அமைதி கண்டு புதுமைக்கு வழிகோலும் பிள்ளையவர்களின் புலமைத் திறம் பிறரிடம் காண்டற்கரிய தொன்று.

பிள்ளையவர்கள் பெரும்புலவர் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், மகாவித்துவான் மு. இராகவையங்கார், திரு.வி.க., சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, கா. நமசிவாய முதலியார் முதலிய பெருமக்கள் நான் பிள்ளையவர்கள் மாணவன் என்பதால் என்னிடம் அன்பு கொண்டு மதிப்பும் மரியாதையும் காட்டிப் பழகியதொன்றே அவர்கள் பிள்ளையவர்களிடம் கொண்டிருந்த நன்மதிப்புக்கு உற்ற சான்றாகும். பிள்ளையவர்களின் ஆக்கம் கண்டு ஆற்றாது அழுக்காறு கொண்டோர் சிலர் இருந்தனர்; எனினும் பெரும்புலவர் பலரும் அவர் புலமை வளம் கொண்டு அவரைப் போற்றவே செய்தனர். பிள்ளையவர்கட்கும் அவர்களிடம் பெருமதிப்பு உண்டு. ஆனால், யாரிடமும் தம்மைத் தாழ்ந்தவராகக் கொண்டு பணிந்தொழுகும் தாழ்வு மனப்பான்மை பிள்ளையிடம் காணப்படாத ஒன்று. எவரிடமும் சரிநிகர் சமானமாகவே பழகுவது அவர் தனிச் சிறப்பாகும்.

நல்லாசிரியர்

பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியர் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள் படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல; பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. ‘குலன், அருள், தெய்வங் கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை, நிலம், மலை, நிறைகோல், மலர்நிகர் மாட்சியும், அமைபவன் நூல் உரை ஆசிரியன்’ என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னூல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள் இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர். ஆசிரியராவார் மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனிமதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றியமையாத அடிப்படைப் பண்பு அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருந்திய உச்சரிப்பு, அரிய கருத்துகளையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவை அனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப் பண்புகள் மாணவர்களை அவரிடம் "அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு” பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாணவர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும் அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை.

பாடம் சொல்லும் முறை

பிள்ளையவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பாட போதனையில் அவர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனிப் பொருளுணரச் செய்வதினும் கருத்துகளை அவர்கள் உள்ளத்திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே சிறப்பாகக் கருதி, அதற்கேற்பக் கற்பிக்கும் முறையை மேற்கொண்டார். சிறப்பாக, செய்யுட்பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும், கருத்து விளங்க, நிறுத்த வேண்டும் இடங்களில் நிறுத்தி, இடத்திற்கேற்ப எடுத்தும் படுத்தும், வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையோடு படித்துக் காட்டுவார். அவர் படிக்கும் பொழுதே பாட்டின் திரண்ட கருத்து மாணவர்களின் மனத்திரையில் முழு உருவம் கொண்டு. தெள்ளத்தெளியப் பதிந்துவிடும். கருத்து விளக்கத்தின் துணையால் பாடலில் உள்ள சொற்கள் பலவற்றிற்கும் மாணவர்கள் தாமே பொருள் உணர்ந்து கொள்வர். அவர்கட்குப் பொருள் விளங்காத அருஞ்சொற்கள் எவையேனும் இருப்பின் கேட்டறிந்து, அவற்றிற்கு மட்டும் பொருள் கூறுவார். பொதுவாக இலக்கண பாடம் என்றால் மாணவர்கள் மருண்டுமயங்கி அஞ்சி விலக்குவது வழக்கம். ஆனால், பிள்ளையவர்கள் இலக்கணம் கற்பிக்கும் இனியமுறை, மாணவர்கள் அதனை விரும்பிக் கேட்டுத் தெளிந்து மகிழச் செய்யும், பிள்ளையிடம் பயின்ற மாணவர்கள் பிற பாடங்களினும் இலக்கணத்திடமே மிக்க ஆர்வம் காட்டியதை நான் கண்டு வியந்திருக்கிறேன். உரைநடைப் பாடம் கற்பிப்பதிலும் அவர் தனி முறையைக் கையாண்டார். பாடத்தின் மையக் கருத்தைக் குறித்துக்காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் விளக்கப்பட்டுள்ள அதன் கூறுகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறி, மாணவர்கள் உணர்ந்து உளங்கொள்ள வேண்டிய சிறப்புச் செய்திகளை நினைவுறுத்தி முடிப்பார். இதனால் மாணவர்கள் கேட்ட பாடத்தில் தெளிவும் மன நிறைவும் பெறலாயினர்.

பல்கலைக் கழகத் தேர்வு குறித்துப் பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டுப் பயன்கொண்டவர் பலர். அவர்களுள் முதல்வனாகும் பேறு எளியேற்கு வாய்த்த வாழ்வாகும். பேரிலக்கிய இலக்கணங்களைப் பாடம் சொல்லுவதில் பிள்ளையவர்கள் உவகையும் உற்சாகமும் உடையவர்; தாம் பலகால் பயின்று அரிதில் ஆய்ந்து கண்ட அரும்பொருள் நுட்பங்களைத் தம்மை அடுத்த மாணவர்கள் வருத்தமின்றி அறிந்து பயனடையுமாறு பரிந்து வழங்கும் வள்ளன்மை வாய்ந்தவர். அவர் மாணவர்களை நுனிப்புல் மேயவிடாமல், நூற்பொருளை நுனித்து ஆயவும், ஆய்ந்து அறிந்தவற்றை அஞ்சாமல் பிறர்முன் எடுத்துரைக்கவும், பயிற்சியும் துணிவும் பெறச் செய்வார். அவர் இன்ன இடத்தில் இன்ன நேரத்தில்தான் பாடம் சொல்லுவது என்னும் வரையறை வைத்துக் கொண்டதில்லை. மாலையில் உலாவச் செல்லும் பொழுதும், சொற்பொழிவாற்ற அயலூர்களுக்கு வண்டிப் பயணம் செய்யும்பொழுதும், உடன் தொடரும் மாணவர்கட்கு உரிய இலக்கிய இலக்கணப் பாடப்பகுதிகளில் உள்ள அரிய கருத்துகளை அளவளாவும் முறையிலேயே எளிதில் உணருமாறு எடுத்துக்காட்டிச் செல்வது அவர் வழக்கம்.

மாணவர்களின் தகுதியும் தரமும் தெரிந்து, அவர்கள் மனம் கொள்ளுமாறு பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் தனித் திறமை வாய்ந்தவர். ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பதம்பதமாகப் பொருள் கூறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. முதலில் எடுத்துக் கொண்ட நூல் எந்த வகையைச் சார்ந்ததென்பதை எடுத்துக்காட்டி, அதனை அணுகும் முறை, பயிலும் விதம், பொருள் காணும் நெறி, ஆயுள் அடைவு, நயம் காணும் திறம் ஆகியவற்றை விளக்குவார். பின்னர், பாடல் பயிலும் இடத்தைச் சுட்டி, பாடலின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் கூறி, அருஞ்சொற்கள், தொடர்களுக்குப் பொருள் விளக்கம் செய்வார். அரிய இலக்கண அமைதிகள், வரலாற்றுச் செய்திகள், புராணக்கதைகள் ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். சொல் நயம், பொருள் நயம், செய்யுள் நயங்களை மாணவர்கள் உணர்ந்து சுவைக்கச் செய்வார். சில நாட்கள் தொடர்ந்து இம்முறையில் பல பாடல்களை நடத்திப் பின்னர், எஞ்சிய பாடல்களை நாடோறும் சிலவாக மாணவர் களையே இம்முறையில் படித்துப் பொருளறிந்து வரச் செய்வார். அவ்வப்பொழுது அவர்களைச் சோதித்து, குற்றம் குறை காணின் குறித்துக் காட்டித் திருத்தம் செய்வார்; படித்த பாடல்களுக்கு அவர்கள் கண்டவாறு விரிவுரை எழுதிவரச் செய்தும், தலைப்புத் தந்து அப்பாடல்களின் பொருளைத் தழுவிக் கட்டுரை வரைந்து வரச்செய்தும் படித்துப் பார்த்துத் திருத்தித் தருவார்.

தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதில் பிள்ளையவர்கள் பேரார்வம் கொண்டவர். அவர் அவற்றைப் பாடம் சொல்லும் முறை, மாணவர்களை அவற்றிடம் ஆழ்ந்த பற்றுக் கொள்ளச் செய்யும். தொல் காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது தேர்வுக்குரிய ஒர் ஆசிரியன் உரையை மட்டும் விளக்குவதோடு அமையாது பிற ஆசிரியர்களுடைய உரைகளையும் உடன் வைத்து ஒருங்கு விளக்குவார். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், இலக்கண விளக்கச் சூறாவளி ஆகிய தொடர்புள்ள பிற நூல்களையும் சேர நடத்துவார். நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், சிவஞான முனிவர் ஆகியோர் தாம் உரை கண்ட இலக்கிய; சமய நூல்களின் உரைகளில் தந்துள்ள இலக்கணக் குறிப்புகளை எடுத்துக்காட்டி இனிது விளக்கம் செய்வார். உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட உரை கண்டுள்ள இடங்களில் மாறுபாட்டுக்குரிய காரணங்களை நுணுகி ஆராய்ந்து முடிவு கூறுவார். தொல்காப்பியப் பகுதிகள் பற்றிப் பிற்காலப் புலவர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள ஆய்வுரைகளையும் நூல்களையும் படிக்கச் செய்து, அவர்கள் கொண்ட கருத்துகளின் வன்மை மென்மைகளைக் காரண காரியத்தோடு விரிவாக விளக்கிக் காட்டுவார். பின்னர், தனித்தனித் தலைப்புகளில் ஆய்வுரைகள் எழுதி வரச் செய்து படித்துத் திருத்தம் செய்வார். இம்முறையால் மாணவர்கள் தாம் பாடம் கேட்ட நூல்களில் ஐயம், திரிபு, அறியாமையின்றித் தெளிவும் தேர்ச்சியும் பெறலாயினர். மாணவர்கள் ஒவ்வொரு நூலையும் நூற்பகுதியையும் ஆசிரியரிடம் பாடம் கேட்டே அறிவதினும் ஆசிரியர் வழிகாட்ட, அவ்வழி நின்று தம் முயற்சியால் தமக்குத் தாமே பல்வேறு நூல்களையும் பகுதிகளையும் ஊன்றிப் பயின்று தேர்ந்து தெளிவும் திறம்பெற அவர்கட்குப் பயிற்சியளிப்பதையே சிறப்புப் பணியாகக் கருதினார். ஒரு நூலில் தேர்வுக்குரிய பகுதியை மட்டும் படித்தறியச் செய்வதோடு அமையாது, மாணவர்களை அந்நூல் முழுவதையும், அதனோடு தொடர்புடைய பிற நூல்களையும் படித்தறியுமாறு வற்புறுத்துவது அவர் வழக்கம்.

பிள்ளையவர்கள் தம்மிடம் புதியராகப் பயிலவரும் இளமாணவர்கட்குத் தம்மிடம் பயின்றுவரும் முது மாணவர்களைக் கொண்டு பாடம் சொல்ல வைப்பார். அவர்கள் பாடம் சொல்லும் பொழுது உடனிருந்து கவனித்து, தவறும் இடங்களில் திருத்துவார். புதியனவாக வெளிவரும் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்களைப் படித்து, மாறுபட்ட கருத்துக் காணும் இடங்களைக் குறித்துவரச் செய்து, அவை பற்றி விரிவாக விவாதித்து, அவற்றிற்கு மறுப்புரை எழுதி வரப்பணிப்பார். அதனைத் திருத்திப் படி எடுப்பித்து இலக்கிய இதழில் வெளியிடச் செய்வார். அவர் இவ்வறு செய்வது அவ்வாசிரியர்களிடம் அழுக்காறு அல்லது பகைமை காரணமாகவோ, அவர்கள் கருத்தை மறுத்து அவர்கட்கு இழுக்கு உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டோ அன்று; பிறர் கருத்துகளை ஆயவும் ஆய்ந்து கண்டதை விளக்கி அழுத்தமாக எழுதவும் தம் மாணவர்கட்குப் பயிற்சியளிக்கும் அருள்நோக்கமே அதற்குக் காரணம் ஆகும். இதனால் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியும் உடையராய், எந்நூலையும் தாமே பயின்றறியும் தனித்திறம் பெற்றதோடு தாம் அறிந்ததைப் பிறர் அறியுமாறு விளக்கிச் சொல்லும் சொல்வன்மையும், விரித்து எழுதும் எழுத்தாற்றலும், துணிவும் உடன் பெற்றனர்.

நூலாசிரியர்

பிள்ளையவர்கள் இணையற்ற போதகாசிரியர் மட்டுமல்லர்; ஈடற்ற நூலாசிரியருமாவர். தம் கோள் நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர். தமிழ் மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறை செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே. அவ்வொரு சிலருள் பிள்ளையவர்களும் ஒருவராவர். அவர் செய்யுள் இயற்றுவதில் ஆர்வம் கொண்டிலர். அதனால் அவர் செய்யுள் நூல் ஏதும் இயற்றவில்லை. ஆனால், அவர் அவ்வப்பொழுது புனைந்த பாடல்கள் பல உண்டு. அவை யாப்பமைப்பிலும், சொல் நலம், பொருள் வளம், ஓசை நயங்களிலும் சங்கச் சான்றோர், இளங்கோவடிகள், திருத்தக்க தேவர் ஆகிய பழந்தமிழ்ப் பாவலர்களின் பாடல்களை நினைப்பூட்டும் சிறப்பினவாகும். பிள்ளையவர்கள் உரைநடை நூல்கள் இயற்றுவதிலேயே பெரிதும் ஈடுபாடுடையவர். அவர் தமக்கென்று தனி உரைநடை ஒன்றை இனிது அமைத்துக் கொண்டார். அது சொல் அழுத்தமும், பொருள் அழகும், மிடுக்கும் பெருமிதமும் வாய்ந்தது. கதைகள், பாட நூல்கள், எளிய இலக்கியத் திறனாய்வுகள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் அவர் பொழுதைப் போக்கவில்லை. அருந்தமிழ்ப் புலவர்களும் தனித் தமிழ் மாணவர்களும் படித்துப் பயன் கொள்ளத் தக்க இலக்கிய, இலக்கண, சமய வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டார். இவ் வகைகளில் அவர் படைத்துத் தந்துள்ள பயன்கெழு நூல்கள் பலவாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய பேரிலக்கியங்கள் பற்றி அவர் எழுதியுள்ள சீரிய நூல்கள் அவரது இலக்கிய ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுவன. திருவள்ளுவர், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள் . முதலியவற்றில், வரலாற்றுத் துறையில் அவரது ஆராய்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தறியலாம். மத்தவிலாசப் பிரகசனம் இவரது மொழிபெயர்ப்புத் திறனுக்கு விழுமிய சான்று. இவையே அன்றி, அவர் இயற்றிய இலக்கண சமய ஆராய்ச்சி நூல்கள் இன்னும் பலவாம். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய களம், பல்வேறு தமிழ் இதழ்களில் அவ்வப்பொழுது வரைந்து வெளியிட்ட கட்டுரைகள், ஆய்வுரைகள், மறுப்புரைகள் எண்ணில.

உரையாசிரியர்

பிள்ளையவர்கள் பழந்தமிழ்ப் பேரிலக்கியங்கள் பலவற்றிற்கும் யசோதர காவியம், மணிமேகலை ஆகிய காப்பியங் கட்கும் விளக்கவுரை வரைந்து வெளியிட்டு, புலவருலகம் பண்டை உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து, ‘உரைவேந்தர்' என்று புகழ் கூறும் உயர்நிலையை எய்தியமை அனைவரும் அறிந்ததொன்று. தமிழறிஞர் அவர் ஆக்கிய உரை நூல்களைப் படித்து உரை நல்கியதை ஆய்ந்து, அறிந்து, சுவைத்து, அதன் அருமை பெருமைகளைப் பாராட்டி வருகின்றனர். ஆகவே, நான் இங்கு அவர் உரை நல்கியதை உரை காண முற்பட்டு என் குறையறிவைப் பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. பிள்ளையவர்கள் உரையாசிரியராவதற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முனைந்திருந்த காலத்தில் மாணவனாக அவரோடு உடனிருக்கும் வாய்ப்புப் பெற்றிருந்ததால், அதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பையும், உரைகண்ட சிறப்பையும் மட்டும் அறிந்தவாறு அமைவேன்.

உரையாசிரியப் பண்பு பிள்ளையவர்கட்குக் கருவிலே வாய்த்த திரு. அதற்கான இயல்பூக்கம் உரம் பெற வளர்ந்து, அவர் புலவரானதும் திறம்பெறச் செயல்படத் தொடங்கியது. அதன் பயனாக அவர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண உரைகளிடம் அடங்கா ஆர்வமும், அவற்றை ஆக்கிய ஆசிரியர்களிடம் ஆழ்ந்த பற்றும், அளவற்ற மதிப்பும் உடையவரானார். இலக்கிய நூலாயினும் இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். அவ்வுரையாசிரியர்கள் நூல்களை அணுகும் முறை உரைகாணும் நெறி, உரை வகுக்கும் திறம் ஆகியவற்றை அறிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை உடனே பிழையுரை என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரைவகுத்திருப்பதற்குரிய காரணத்தைக் கண்டறிந்தார். அக்காரணம் அவ்வாசிரியர் காலத்தில் மட்டுமன்றிப் பொதுவாக எக்காலத்திற்கும், சிறப்பாக இக்கால் வழக்குக்கும் பொருந்தாதாயின் பொருத்தமான புத்துரை காண முயன்றார். முன்னோரின் ஆய்வுரைகளைக் காய்தல், உவத்தலின்றி நடு நின்று நெடிது ஆராய்ந்தார். இலக்கிய இலக்கண உரைகளை அன்றிச் சிவஞானபோத மாபாடியம் போன்ற சமயச் சார்பான சாத்திரப்பேருரைகளையும் பலமுறை படித்துத் தெளிவுற விளக்கம் கண்டார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களை மரபறிந்த வடமொழி வல்லுநரின் துணை கொண்டு விரும்பிப் பயின்றார். அவை பதசாரம் கூறும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. ஆங்கில மொழியில் உள்ள சட்டங்களையும், அவற்றின் விளக்கங்களையும், நடுவர்களின் முடிவுரைகளையும் பெற்றுப் படித்தார்; சட்ட நூற் புலவர்களும், நீதிமன்ற நடுவர்களும் சட்டவிதிகட்கு விளக்கம் காணும் முறையையும் நடுவர்கள் முடிவு கூறும் திறனையும் தெளிவு பெற அறிந்தார். வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச்சமய அறிஞர்களை அடுத்துக்கேட்டு அறிந்து கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும், கல்வெட்டுக்களையும், அவை பற்றிய விளக்க நூல்களையும் பெற்றுப் படித்து ஆராய்ந்து, தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும், வரலாற்றுச் செய்திகளை வகைப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பல்லாண்டுகள் முயன்று பழந்தமிழ் நூல்கட்கு நயம்பட உரைகாணும் பண்பும் பாங்கும் உரமும் திறமும் பெற்றார்.

பிள்ளைவர்கள் முதன் முதலாக உரையெழுதி வெளியிட்டது திருஞானசம்பந்தர் அருளிய திருவோத்துர்த் தேவாரத் திருப்பதிகமாகும். அதனோடு ஞானாமிர்தம் என்னும் சமய நூலுக்குத் தெளிவுரை எழுதி வந்தார். பின்னர் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய 'ஐங்குறுநூறு’ என்னும் நூலுக்கு உரையெழுதத் தொடங்கினார். அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து அறிந்து கொண்டு அதற்கு விரிவான விளக்கவுரை வரைந்து முடித்து, அதன் முதற்பகுதியை. அச்சிடுவித்து வெளியிட்டார். பின்னர் மற்றப் பகுதிகளும் வெளியிடப்பட்டன. சொற்பொருள், சொல்நயம், சொல் பொருள் நயங்கள், இலக்கண விளக்கம், அகப்பொருள் அமைதி என்னும் அடைவு முறையில் அமைந்த அவ்வுரை புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. அதனை, அடுத்துப் பதிற்றுப்பத்து நூலுக்கு உரையெழுத முற்பட்டார். சேரர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள இலக்கியப் பகுதிகளையும் தென்னாட்டையும், சிறப்பாகத் தமிழகத்தையும், தமிழரசர்களையும், அவர்களுள் சேர மரபினரையும் பற்றி வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும், கல்வெட்டுக்களையும் விரிவாக ஆராய்ந்து விளக்கவுரை எழுதி வெளியிட்டார். பதிற்றுப்பத்திற்குப் பின்னர், புறநானூற்றுக்குச் சிறப்புரை வரைவதில் ஈடுபட்டார். பல ஏடுகளைக் கொண்டு ஆய்ந்து குறைப்பாடல்களாக இருந்தவற்றை இயன்ற வரை நிறைவு செய்துகொண்டு முழு நூலுக்கும் விழுமிய விரிவுரை எழுதி முடித்தார். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிக் குறிப்பைச் சேர்த்துப் பதிப்பித்து இரு பகுதிகளாக வெளியிடுவித்தார்.

அதனை அடுத்து வெளியிட்ட உரைநூல் மணிமேகலை. பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் முன்னரே மணிமேகலையின் முற்பகுதிக்கு உரையெழுதி வைத்திருந்தார். அந்நூலின் பிற்பகுதி புத்த சமயத் தத்துவங்களும், வேறு பல சமயங்களின் மாறுபடும் கோட்பாடுகளும், அளவை நூல் நுட்பங்களும் அடங்கியதாக இருத்தலின் அதற்குப் பொருள் கண்டு தெளிவது எத்தகையோர்க்கும் எளிதாக இல்லை. எனவே, அதனை முடிக்க யாரும் முன்வரவில்லை. செயற்கரிய செய்யும் சீரியராகிய பிள்ளையவர்கள் அப்பகுதிக்கு உரைகண்டு முடிக்க உறுதி கொண்டார். புத்த சமய நூல்களையும், பிற சமய நூல்களையும் முயன்று பெற்று முறையாக ஆய்ந்தார். அச்சமயங்கள் பற்றிய வடமொழி நூல்களை அம்மொழி வல்லுநரின்துணை கொண்டு படித்தறிந்தார். அளவை நூற்செய்திகளை ஐயமற ஆய்ந்து தெளிந்தார். பின்னர் அப்பகுதிக்குத் தெளிவான விளக்கவுரை எழுதி முடித்து அவ்வுரை நூலை வெளியிடச் செய்தார். அவ்வுரையின் உதவியால் இன்று யாவரும் மணிமேகலை நூல் முழுவதையும் படித்துப் பயன்பெறுவது எளிதாகியுள்ளது. மணிமேகலை உரைக்குப் பின்னர் அவர் நாட்டம் நற்றிணையின்பால் சென்றது. பல்லாண்டுகட்கு முன் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தம் புலமையே துணையாக, அவர் காலத்தில் கிடைத்த அருகிய ஆதாரங்களைக் கொண்டு நற்றிணைக்குச் சிற்றுரையொன்று எழுதி வெளியிட்டிருந்தார். பிள்ளையவர்கள் தம் மாணவர்கட்கு நற்றிணைப் பாடம் நடத்தியபொழுது அவ்வுரையின் குறைபாடுகளைக் கண்டு, அந்நூல் முழுவதையும் நன்கு ஆராய்ந்து அரிய குறிப்பு எடுத்திருந்தார். அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நூல் முழுவதற்கும் விளக்கமான விரிவுரை எழுதி முடித்தார். அண்மையில் அஃது இருபகுதிகளாக வெளியிடப்பட்டது. பிள்ளையவர்களின் முன்னைய நூலுரைகள் அனைத்திலும் இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது பிள்ளையவர்கள் மாணவர்கட்குப் பாடம் சொல்லும் பொழுது ஒவ்வொரு நூலுக்கும் விரிவான விளக்கக் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட உரைகள் யாவும் பெரிதும் அக்குறிப்புகளின் விரிவே ஆகும். அகநானூறு, குறுந்தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றுக்கும் அவர் அரிய குறிப்புகள் வரைந்து வைத்திருந்தார். அவை இன்னும் உரைவடிவு பெற்றில. அவையும் உரைவடிவில் வெளிவருமாயின் தமிழ் மொழியின் வளம் செழிக்க உதவும். பிள்ளையவர்களின் புலமைப்பணி அவர் ஒய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது. ஒய்ந்திராமல் பொள்ளாச்சி வள்ளல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் உதவியால் திருவருட்பா நூலுக்கு விரிவுரை எழுதினார். தமிழ் அறிஞர்களின் துணையும், தமிழ்ச் செல்வர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்றிருந்தால் அவர் தமிழ்மொழியின் செழிப்புக்கு இன்னும் பல சிறப்புத் தொண்டுகள் செய்திருக்கக் கூடும். அதற்குரிய ஆர்வமும் அளவிறந்த ஆற்றலும் அவருக்கு உண்டு.

பேச்சாளர்

பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், பேச்சு வன்மை ஆகிய மூன்றும் ஒருவரிடம் ஒருங்கு அமைவது அரிது. இவற்றுள் ஒன்று இருப்பவரிடம் ஏனை இரண்டும் இருப்பதில்லை. ஆனால், பிள்ளையவர்களிடம் இம் முத்திறனும் ஒருசேர முழுமையாக அமைந்திருந்தன. பேச்சு வன்மை ஒரு கலை; பெறுதற்கரிய கலை. அது பிள்ளையவர்களுக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர் விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு தம் பேச்சுத் திறனைப் பேணி வளர்த்துக் கொண்டவர். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற் பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர் விவேகானந்தரின் உரைகளைப் பலமுறை படிக்க வேண்டும் என்று அவர் தம்மாணவர்கட்குக் கூறுவதுண்டு. கவர்ச்சியான தோற்றம், அவைக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழுத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் ஆகிய பேச்சாளர்க்கு இன்றியமையாத அமைதிகள் அனைத்தும் பிள்ளையவர்களிடம் இயல்பாகவே இனிது அமைந்தன. பேச்சுக்குரிய பொருள் இலக்கியம். இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அது பற்றிய செய்திகளையும் கருத்துகளையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாது - காரணகாரியத் தொடர்பமைய நிரல்படத் தொகுத்து, பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, அவையோர் 'அருமை' 'அருமை’ என்று பெருமை பேசுமாறு உரையாற்றும் திறமை பிள்ளையவர்களின் தனியுரிமையாகும். சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மாண்துழைபுலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே. பேச எடுத்துக்கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது. ‘கால் பணத்திலே கல்யாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை’ என்னும் பீடிகையோடு அவர் கம்பனின் சொற் சுருக்கத்தையும் கவிநயத்தையும் எடுத்துக்காட்டி விளக்கி அவையோரைச் சுவைக்கச் செய்வார். அவர் பேசச் செல்வதற்கு முன் பேச்சுக்குரிய பொருள் பற்றிச் சிந்தித்துச் சிறு குறிப்பு ஒன்றை வரைந்து கொள்வது வழக்கம். அக்குறிப்பை உரை நிகழ்த்தும் இடத்திற்குக் கொண்டு செல்லமாட்டார். ஆனால், அங்கு நிகழ்த்தும் உரை முற்றிலும் அக்குறிப்பை ஒட்டியே அமைந்திருக்கும். இது கொண்டு இவருடைய சிந்தனைத் தெளிவையும், நினை வாற்றலையும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களிடம் அன்பு

பிள்ளையவர்கள் மானவர்களிடம் பேரன்பு கொண்டவர். இவர் மாணவர்களை 'ஐயா, ஐயா' என்ற அக மகிழ்ச்சியோடு அன்பொழுக அழைக்கும் இன்ப ஒலி இன்றும் என் செவிகளில் இனிது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் இவர் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர். அதற்கேற்ப அரிய நூல்களையும் ஐயம் திரிபு அறியாமைக்கு இடமின்றி அருமையாகப் பாடம் சொல்வார். தாம் அரிதில் வருந்திச் சேர்த்த தமிழ் வளத்தைத் தம்மாணவர் வருந்தாமல் எளிதில் பெறுமாறு வாரி வழங்குவார். தாம் முயன்று வரைந்து வைத்துள்ள அரிய நூற்குறிப்புகளை மாணவர்கட்குக் கொடுத்துப் பயன்பெறச் செய்வார். தாம் பாடம் கேட்ட நூல்களைப் பிறர்க்கு முறையாகப் பாடம் சொல்லவும், கட்டுரை, ஆய்வுரைகள் வரையவும் அறிஞர் அவையில் அஞ்சாமல் அடக்கமாக உரையாற்றவும் மாணவர்கட்குப் பயிற்சியளிப்பார், தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களை அறிமுகப்படுத்தி வைப்பார்.

மாணவர்களின் ஆக்கத்தில் அவர் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாக என்னைப் பற்றிய சில செய்திகளை இங்குத் தந்துரைப்பது தவறாகாது என்று கருதுகின்றேன். நான் பிள்ளையவர்களிடம் மாணவனாக அணுகியபொழுது ம. விசயராகவன் என்னும் பெயருடையவனாயிருந்தேன். அது என் பெற்றோர் எனக்கு இட்டு அழைத்த பெயர். நான் மாணவனாக அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, "உங்கள் பெயரில் ஒரு மாற்றம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இராகவனுக்கு அடைமொழி எதற்கு? விசயம் இன்றி 'இராகவன்' இல்லை. ஆகவே, உங்கள் பெயரை அடைமொழியின்றி 'இராகவன்' என்று மாற்றிக் கொள்ளுங்கள்; ‘இராகவன்' என்னும் பெயர் எத்துணைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. பாருங்கள்" என்றார் நான் ஆசிரியரின் அன்பு ஆசையை அருளாணையாக ஏற்று அவ்வாறே மாற்றிக் கொண்டேன். அன்று முதல் என் பெயரை ‘ம.வி. இராகவாசாரியன்' என்று எழுதி வரலானேன். அதனைக்கண்ட பிள்ளையவர்கள் மீண்டும் ஒரு நாள் என்னை அழைத்து,"‘உங்கள் பெயரில் இன்னும் ஒரு மாற்றத்திற்கு இடம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; 'ஆசாரியன்' என்பதற்குப் பதிலாக 'ஐயங்கார்' என்பதை இணைத்துக் கொள்ளுங்கள். ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார்களோடு நீங்கள் ம.வி. இராகவையங்காராக இருங்கள்" என்றார். அதனைக்கேட்டு நான் உணர்ச்சிப் பெருக்கால் உடல் வேர்த்துப் போனேன். அன்று தொடங்கி என் பெயரை அவர் விரும்பியாறே அமைத்துக் கொண்டேன். அவர் என்னை அழைக்கும் பொழுதெல்லாம் 'ஐயங்கார்' என்றே அழைத்து அதனை ஆட்சி பெறச் செய்தார்.

பின்னர் நான் 1936ஆம் ஆண்டே வித்துவான் இறுதி நிலைத் தேர்வு எழுத விரும்பி, அதனைப் பிள்ளையவர்களிடம் கூறி அனுமதியும் ஆசியும் வேண்டினேன் அவர், ‘ஏன், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கலாகாதா? அடுத்த ஆண்டு, தேர்வு எழுதுவீரானால் முதல் வகுப்பில் தேறி அதற்குரிய பரிசு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றார். அப்பொழுது என் குடும்பநிலை அதற்கு இடந்தருவதாக இல்லாததை எடுத்துக்கூறி, 'நான் மூன்றாம் வகுப்பில் தேறினால் போதும், அன்பு கூர்ந்து அனுமதி தாருங்கள்.' என்று வேண்டிக் கொண்டேன். அவர் என் நிலைக்கு இரங்கி, 'அப்படியானால் சரி. இந்த ஆண்டே எழுதினாலும் முதல் வகுப்பில் தேறும் தகுதி உங்களுக்கு உள்ளது. கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்' என்று ஆசி கூறி அனுமதியளித்தார். அவ்வாண்டே தேர்வு முடிவும் தினத்தாள்களில் வெளிவந்தது. நான் முதல் இரு வகுப்புகளில் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, மூன்றாம் வகுப்பில் தேறியவர்கள் வரிசையை மட்டும் பார்த்தேன் அதில் என் பதிவெண் இடம் பெறவில்லை. எனவே, தேர்வு பெறவில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். அன்று மாலை சிறிது வருத்தத்தோடு பிள்ளையவர்கள் இல்லத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சியோடு, வாருங்கள். உங்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன். தங்களுக்கு என் பாராட்டுக்கள். இனிப்பு எங்கே? வெறுங்கையோடு வந்திருக்கிறீர்களே, என்ன? என்றார். அவர் கூற்று என்னைத் திகைப்புறச் செய்தது. நாணத்தால் நாக்குழற 'நான் தேர்வு பெறவில்லை. உங்கள் சொல்லைக் கேளாததன் விளைவு என்றேன். 'தேர்வு பெறவில்லையா? யார் சொன்னார்?’ என்று கூறியவாறே உள்ளே சென்று இந்து பத்திரிகையை எடுத்து வந்து முதல் வகுப்பில் தேறினவர்களின் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றிருந்த என் பதிவெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘இது உங்கள் எண்தானே? மறந்து விட்டீர்களா?' என்றார். நான் வியப்பினால் விம்மிதமுற்றேனெனினும், தவற்றுக்கு நாணினேனாய், 'நான் மூன்றாம் வகுப்பையே எதிர்பார்த்தேன், அதனால் பிற தேர்வு வரிசைகளைக் கவனிக்கவில்லை' என்றேன். அவர் முதல் வகுப்பில் தேறியிருப்பது மட்டும் அன்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றிருக்கிறீர்கள். இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது: என்று கூறி, கற்கண்டு வாங்கிவரச் செய்து உடனிருந்த அன்பர்களுக்கு வழங்கினார். பிள்ளையவர்கள் மாணவர்களிடம் கொண்டிருந்த அன்புக்கும், அவர்கள் தேர்ச்சியிலும் உயர்விலும் அவருக்கு இருந்த அக்கறைக்கும் இந்நிகழ்ச்சி ஒன்றே சிறந்த சான்றாகும் அன்றோ?

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு உயர்நிலை எய்தியோர் பலர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் ஆவார். புலவர் கோவிந்தன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த நாளிலிருந்தே பிள்ளையவர்களின் அன்புக்குரிய அருமை மாணவராக அமைந்தார். பிள்ளையவர்களிடம் தனித்தமிழ் பயின்ற மற்ற மாணவர்களும் சிறப்புறத் தேறிப் பட்டம் பெற்று உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதிப்போடு பணியாற்றி வருகின்றனர். பிள்ளையவர்களின் மாணவர்கள் அனைவரிடத்தும் அவருக்குரிய தனி முத்திரையைக் காணலாம். அவர்கட்குப் புலவருலகில் மதிப்பு உண்டு.

இவ்வாறு தம் உழைப்பினாலும் தாம் உயர்ந்ததோடு தம்மை அடுத்தோர் பலரும் உயர்ந்து உய்ய உதவி வந்த ஒப்புரவாளராகிய பிள்ளையவர்கள் மறைந்தது பெரும் அவலம் தருகிறது. புலமை யாலும் தகுதியாலும் உரைவேந்தரின் திருமகனாகத் திகழும் துணைவேந்தர் ஒளவை நடராசன் நாளும் புகழ்வளர மிளிர்வது எனக்கு ஆறுதலை அளிக்கிறது. மகனறிவு தந்தையறிவன்றோ தமக்கென வாழாது தமிழே உயிர்ப்பாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்த அவர் திருப்புகழ் வளமை குன்றாத கன்னித் தமிழே போல இன்னும் பல்லாண்டுகள் மன்னுதல் உறுதி.

“கற்றவர்தாம் கண்ணீர்க் கடல்மூழ்கச் சாய்ந்து தமிழ்
உற்றகடல் மூழ்கி ஒளிதததே - பெற்ற நிலம்
எங்கும் ஒளிசெய்திருந்ததுரை சாமியெனும்
பொங்கு தமிழ்ச்சுடரிப் போது.”
------------

தமிழ்வீறு முதிர்ந்த வீர!
தமிழாகரர் ந.ரா. முருகவேள்


சங்கநூற் பெரும்புலவ! சைவநூற்
      கலைச்செல்வ! தமிழர் போற்றும்
துங்கமிகு காப்பியங்கள் மூன்றனுக்கும்
      ஆய்வுநூல், சுருக்க நூல்கள்,
நன்குமிகத் தொகுத்தளித்து நலஞ்செய்த
      பேராசான்! நனிசிறக்க
ஐங்குறுநூற் றெழில் மிகுத்த அரும்பொருள்கள்
      விரித்துரைத்தோய்! ஐய! வாழி!

'கேட்டாரைப் பிணிப்பதுடன் கேளார்க்கும்
      வேட்கை' மிகக் கிளர்ச்சி ஊக்கம்
ஊட்டாநின் றறிவுவிருந் துதவுமுயர்
      பேச்சாள! உரன்சி றந்தோய்!
நாட்டார்ஐ யாஅவர்கள் நல்லுரையின்
      குறைநிரப்பும் நலம்செ றிந்த
ஆட்டான்நீர் ஒருவரெனின், அரியநின்
      புகழ்நலன் யாம் அளப்ப தெங்ஙன்?

எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ்,
      சிவநெறியென் றிரண்டும் எங்கும்
முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
      தமிழ்வீறு முதிர்ந்த வீர!
ஒழுக்கநெறி இழுக்காதோய்! உரைப்புமிகு
      கொள்கையினாய்! உவந்தே யாங்கள்
அழைக்கமகிழ்ந் திவண்போந்த அதற்குநினக்கு
      எம்நன்றி அளவொன் றின்றால்!
-----------
"செம்மொழிப் புதையல்" பொருளடக்கம்
1 அறிவு
2 உழைப்பு
3 வரனென்னும் வைப்பு
4 பிறப்பொக்கும். சிறப்பொவ்வா
5 யாதும் வினவல்
6 மையீரோதி மடநல்லீரே
7 பொருண்மொழி
8 உலக வரலாறு
9 ஊழ்விளை
10 சங்ககாலத் தமிழ்மகன்
11 தமிழ் மகளிர்
12 ஏட்டில் இல்லாத இலக்கியம்
13 வாணிக மந்திரம்
14 வெற்றிலை வாணிகர்
15 உரிமை வாழ்வில் இலக்கியப் பணி
16 உரையனுபவம்
17 ஆதனார்
18 சமண முனிவர் தமிழ்த் தொண்டு
19 இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு
20 விஞ்ஞானமும் தத்துவஞானமும்
---------

"செம்மொழிப் புதையல்"
1. அறிவு

அறிவாவது சொல்வாரது இயல்பு நோக்காது சொல்லப் பெறும் பொருளின் பயனோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வதாம். சொல்வார் தாம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், நட்டோர், பகைவர் எனப் பல்வகை- யினராதலோடு, முக்குண வயத்தராதலானும், இவருள் ஒவ்வொருவரிடத்து ஒவ்வொன்று ஒரோ வழிக் கேட்கப்படுதலானும். அவரது இயல்பு நோக்காமை வேண்டும் என்பது புலப்படும். அன்றியும், வேண்டப்படுவது பொருளேயன்றிப் பிறிதன்று. ஆகவே, “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னும் தமிழ்மறை துணியப்பட்டது. படவே, சொல்வாரது இயல்பு நோக்கிப் பொருளின் பயன்காணாது ஒழிதல் அறியாமை என்பதும், அதனாலெய்தும் பயன் துன்பமே யென்பதும் பெறப்படுகின்றன. இவ்வுண்மை கீழ்க்காணும் பொருட்கதையில் விளங்குதல் காண்க.

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பருதியஞ் செல்வன் கீழ்க்கடல் முகட்டில் எழுமுன், வெள்ளி முளைப்ப விடியல் வந்தது; ஓதல் அந்தணர் பாடினர்; கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; இருஞ்சேற்றகன்வயல் முட்டாட்டாமரைத்துஞ்சி, வைகறைக் கட் கமழும் நெய்தலூதி, எற்படக் கண்போல் மலர்ந்த காமர்சுனை மலரை அஞ்சிறைவண்டின் அரிக்கண மொலித்தன. இவற்றினிடையே, முகையவிழ்ந்த முருக்கலரொன்றை வண்டினஞ் சூழ்வந்து முரலாநிற்ப, "ஐயகோ! ஐயகோ!!" எனும் அழுகுரலொன்று, அவ்வலர்க்கீழ் விளங்கிய அழகிய தளிரிடையெழுந்து, கேட்போர் செவிப்புலம்புக்கு, அவர் தம் மனத்திடை அருளூற்றெழச் செய்தது. இங்ஙனம், எவ்வுயிர்க்கும் இன்பக் காட்சி நல்கும் இளஞாயிறு தோன்றுங்காலைத் தோன்றிய துன்பக் காட்சி ஆண்டுற்ற உயிர்ப் பொருளனைத்தும் மருளச் செய்தது. யாண்டும் அமைதி நிலவிற்று. சிறு சுரும்புந் தேனாடிற்றன்று. புனையாவோவியம் கடுப்ப யாவும் போந்தனவாக, மீட்டும் அப்புலம்பிசை கல்லும் புல்லும் கனிந்துருக எழுந்தது. ஒசையியலுணர்ந்தாருளராயின், அது, இறந்துபடுநிலைக்கண் பல்பொறிப் பூச்சியொன்றிடும் மெல்லிசை யாமென வுணர்வர். மற்று, யான் அவ்வறிவிலேன் ஆதலின், நெடுங்காலந் தாழ்த்துப் பின்னரே யுணர்ந்தேன். உணர்ந்தேன், அவ்வோசையை நுனித்துக்கேட்குமவா மீக்கொண்டேனாக, ஆண்டெழுந்த பொருண்மொழி பின் வருமாறு கேட்டேன். அது,

"இருநிலம்புரக்கும் இறைவ! எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் இயவுள்!! இச்சினைகளை யான் ஈண்டு இட்டிறத்தல் ‘ஒல்லுமா! ஆ! இவை தோன்றிய நாழிகைகூட இன்னும் கழிந்ததின்றே! அந்தோ! இதற்குள் யான் இறக்கின்றேனே! இன்னாதம்ம வுலகம், இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே என்றெல்லாம் பெரியோர் கூறுதல் உண்மையே! இறைவ! இறத்தற்குப் பணித்த நீ எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யளித்தல் எற்றுக்கோ? இது முறைகொல் யான் இறந்துபடின், இவ்வருமந்த சினைகளைப் புரக்கவல்லுநர் யாவர் கொல்லோ? உயிர்க்குணவளித்தற்கு நீ உளையெனினும், ஒரு பற்றுக்கோடு மின்றி உயிர் நீத்தற்கன்றே என் உளம் உளைகின்றது! அந்தோ! ஏ! உலகே! என்னே நின் இயற்கை!! உனைத் துறக்கும் நிலைக்கணுற்ற என் உள்ளத்தை இங்ஙனம் தளைசெய்தலே நின் பண்புபோலும்!! நன்று! நன்று! அம்மவோ! புலன்கலங்க பொறிகலங்க நெறிமயங்குகின்றதே! அறிவு அழிகின்றதே! ஆவியும் அலமருகின்றதே!! ஐயகோ! யாரொடு நோகேன், யார்க்கெடுத் துரைப்பேன்! ஆசா கருளினர் யார்கொலோ. ஆ.!..." என்பது.

இங்ஙனம் கூறிப் புலம்பிக்கொண்டிருக்கும் பல்பொறிப் பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) ஒன்றினருகே பச்சிலைப் புழுவொன்று போந்து, இவ்வுரைகேட்டு எரியிடையிழுதென இனைந்து நின்றது. கண்ட அப்பூச்சி “உடைகலப்பட்டோர்க்கு உறுபுணை தோன்றி யாங்கு, இடர்ப்படும் என் முன்றோன்றிய அன்னாய்! வாழி! ஆருயிர் அலமர அழுது சாம்புவேனுக்கு நீ ஓர் உதவியருளல் கூடுங்கொல்லோ! உற்றுழி உதவுதல் உரவோர் கடனாதலின், உன்னைக் காண்டலும், உதவி நாடிற்று என் உள்ளம்” என்றலும், புழுவும் “பிறருறு விழுமம் துடைத்தல் சால்பெனப் பெரியோர் கூறுவர். அவர் வழி நிற்றல் கற்பவை கற்பதின் அழகு. ஆதலின், நின்மாட்டு எய்திய துன்பம் யாது?

“கடல்பாடவிந்து தோணி நீங்கி
நெடுநீ ரிருங்கழி கடுமீன் கலிப்பினும்.”

இயன்றன செய்தற் கிடையேன். கூறுக” என்றது.

இக்கூற்று பூச்சின் செவிப்புலம்புக்கதும், அது ஒருவாறு மனந்தேறி, “பைந்தழை வாழ்க்கை பரித்தோய்! ஆவியோ நிலையிற் கலங்கியது. அது என் யாக்கையின் அகத்ததோ புறத்ததோ அறியேன். இந்நிலையில் இறைவன் எனக்கு இப்பச்சிளஞ்சினைகளை யருளியுள்ளான். அவற்றையும் அறிவிலியாய யான் இம் முருக்கிலையிலிட்டுள்ளேன். அவற்றை எனக்குப்பின் களைகணாய் நின்று புரப்பார் ஒருவரையும் காணாது மறுகுகின்றேன். இவற்றையருளிய இறைவர்க்கு அளித்தல் கூடும் என்பது உறுதியே எனினும், என் உள்ளந் தடுமாறுகின்றது. ஆகலின், உற்றாரின்றி யுயங்கும் என் முன் ஒருதனித்தோன்றிய நீயே களைகனாய் நிற்பாய் கொல்! அங்ஙனம் நிற்றல் உனக்கு அரிதன்றன்றே. அன்றியும், ஆவி துறக்கும் நிலையிலிருக்கும் என்னுடைய இப்புல்லிய வேண்டுகோளை மறாது ஏற்றருள்க. இது நினக்குப் பேரறமாகும்,” என்றது.

புழு:- ஆம். பேரறமே. ஆயினும் இவற்றை யான் புரத்தல் யாங்ஙனம்? இவையும் என் இனத்தைச் சார்ந்தன வல்லவே!

பூச்சி:- சாராமையால் வரும் குற்றமொன்றுமில்லை. யான் கூறும் உணவை மட்டில் நீ அருத்தியொடு அளித்துவரின், ஒருவகை இடையூறும் நேராது. இது முற்றும் உண்மை.

புழு:- அற்றேல், உரைத்தருள். நின் உடல் நிலையும் குன்றி வருகின்றது. காலம் தாழ்த்தற்க.

பூச்சி:- கூறுவல், செடிகளின் இளந்தளிரும் பனிநீரும் தாம் அவற்றிற்குத் தக்க உணவாம். வேறு எவையேனும் அளிக்கப்பெறின், அவை உண்ணாது இறந்துபடும். ஆகலின் இக்கூறிய உணவை...யே...அ...

என்று கூறிக்கொண்டே உயிரை விடுகின்றது.

கண்டுகலங்கிய புழுவிற்கு அச்சினைகளையும், அவற்றிற் கெனப் பணிக்கப்பெற்ற உணவையும் நினைத்தொறும் உள்ளம் நெக்குருக, நினைவு தடுமாறலுற்றது. இது இயற்கையே. செத்தாரைக்கண்டு சாவாரும் வருந்துதல் இயல்பன்றே! தாந்தாமும் தம் ஆற்றலறிந்தன்றோ ஒவ்வோர் பணியை ஆற்ற முன் வரல் வேண்டும். எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கன்றோ நிற்க, செயக்கடம்பூண்ட பணியை யெவ்வாற்றானும் செய்து முடித்தலும் வேண்டுமன்றோ. இறந்ததனை எண்ணுதலால் இனிப் பயன் யாதேனும் எய்துமோ? மெய்வருத்தம் பார்த்தல், பசிநோக்கல், கண்டுஞ்சல், செவ்வியருமை பார்த்தல், அவமதிப்புக் கொள்ளல் ஆகிய இவற்றைக் கரும்மே கண்ணாயினார் கண்ணாரன்றே. சிறுசினை புரக்கும் பெரும்பணி மேற்கொண்ட புழு ஒருவாறு தேறி, “ஐயகோ! இவற்றை யான் எங்ஙனம் புரத்தல் கூடும்? இளந்தளிரும் பணி நீரும் எவண் கிடைக்கும்? கிடைப்பினும் யான் எவ்வாறு கொணர்வேன்? இச்சினைக்குட் பிறங்கும் பூச்சிகள் பறக்குந் தன்மைய; யான் அவ்வினத்தைச் சாரேன். இயற்கையான் மாறுபட்டயான் புரத்தற்கு உடன்பட்டேனே! என்னே என் அறிவிருந்தவாறு இவற்றினின்றெழும் பூச்சிகள் சின்னாட்களிற் பறந்தெழுமே, அஞ்ஞான்று யான் அவற்றை எவ்வாறு அடக்குதல் கூடும் ஆ என்ன காரியம் செய்தேன் ஆய்ந்திடும் உணர்வொன்றில்லார் அலமால் இயற்கை அம்மா!’ எனப் பெரியோர் கூறுதல் எத்துணை யுண்மையுடைத்து,” என வீழ்ந்து சோர்ந்து, பின்னர்ச் சிறிது தெளிந்து, "இனியான் இங்ஙனம் வருந்துதல் கூடாது. இதனை முன்னரே நன்கு ஆராய்ந்திருத்தல் வேண்டும் 'விழையாவுள்ளம் விழையுமாயினும்... தற்றக வுடைமை நோக்கி, மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல்’ என்பர் நல்லிசைச்சான்றோர். கழிந்தன பற்றிக் கலங்கு துயருழத்தல் என நலத்திற்கே கேடுதரு மொன்றாகலின், செய்தல் மேற்கொண்ட இப்பணியை, அறிவின் மிக்கார் பொருளுரை கேட்டுத் தக்கன தேர்ந்து செய்வல். இதுவே யான் இனிச் செயற்பாற் றன்றிப் பிறிதொன்று மன்று” எனத் தேர்ந்து நின்றது. அக்காலை, தேனூண்சுவையினும் ஊனுண் சுவையே உயிரினும் விரும்பிவாழும் பூஞை ஒன்று ஆயிடைப் போதந்தது. கண்டபுழு அதனை யளவளாவித் தான் மேற்செயற்கேற்ற விரகினையறிய அவாக்கொண்டது. கொள்ளினும், அதன் உளத்தச் சிறிது நாழிகைக்குள் அப்பூஞை தன் வேண்டுகோட்குச் செவி சாய்க்காது, தனக்கும். தன்னுழைக் கையடையாத் தரப்பெற்ற சினைகட்கும் ஊறிழைக்கினு மிழைக்கும் என்னும் ஓர் எண்ணம் எய்த அது அம்முயற்சியைக் கைவிட்டது.

கைவிடலும், போன வெஞ்சுரம் புளியிட வந்தாங்கு, மறைந்திருந்த வருத்தம் மீட்டும் அதன் மனத்தே தோன்ற, அது சிறிதுதேறி, தன் மனக்கியைந்த அறவுரை கூறும் ஆற்றலுடையார் இனியாவருளர் என்னுமோர் ஆராய்ச்சியைப் பின்னரும் செய்தல் தொடங்கிற்று. அவ்வுழிக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தென, வானிற் பறந்துழலும் வன்சிறைப்பருந்தொன்று அதனருகே சென்றது. இதனை யப் புழுக்காண்டலும், தன் மனத்திற் பலதிறப்பட்ட எண்ணங்களைக் கொண்டது. அவற்றுள், “இப்பருந்தினும் அஃகி யகன்றவறிவுடையார் யாவருளர்? மனத்தானும் எண்ணற்கியலாத சேணிற் பறத்தலும், ஆண்டிருந்தே, மண்மீதியங்கும் திற்றிகளை (ஈண்டுத் தின்னற்குரிய சிற்றுயிர்களை யெனக் கொள்க)க் கண்டு, அவற்றின்மேற் குறிபிழையாது ஞெரேலெனப் பாய்ந்து படிந்துண்டலுமாய உயரிய செயல்களைச் செயல்வல்லார் வேறொருவருமில ரன்றே! ஆகலின், இதனிடை, யான் எனக் காவனவற்றை யுசாவி யறிகின்றேன்” என்பது மொன்றென்க.

இங்ஙனம் எண்ணி முடிவுசெய்து கொள்ளும் அப்புழு விருந்த புலத்திற் கயலிருந்த வயலொன்றில் வேறு பருந்தொன்று வாழ்ந்து வந்தது. அதற்கும் அப்புழுவிற்கும் நெருங்கிய நட்பு முண்டு. அந்நட்புரிமை யேதுவாக, புழு, அப்பருந்தினை வரவழைத்துத் தான் அச்சினைகளை வளர்க்கு மாற்றைத் தெரிந்து கோடலை நாடி நிற்ப, செல்வக்காலை நிற்பினும் அல்லற்காலை நில்லா மாட்சியமைந்த கேண்மைசால் பருந்தும் காகதாலியமாகப் புழுவைப் பார்த்துச் செல்வான் வந்தது. வரக்கண்ட புழுவும் கழிபேருவகை கொண்டு, “அன்பு கெழுமிய நண்பே வருக. இன்பங்கனியும் நின்முகங்கண்டும் யான் இன்பமின்றி யிருத்தலை யறிதியோ? இங்ஙனமிருக்கு மெனக்கு ஒரு மாற்றுக்கூறல் வல்லை கொல்லோ?” என்றது.

பருந்து:-அறிவல். மற்று நின்னையுற்ற துன்பம் ஒன்றுண்டென அறிந்தனனேயன்றி அது இத்தன்மைத்து, இவ்வேது வுடைத்து என்பவனவற்றை யறியேனாகலின், மாற்றுக்கூறல் யாங்கனம் இயலும்?

புழு :- நன்று. கேட்டிசின். எனக்கு நின்னொப்ப உயிர்த் தோழமை பூண்ட சேடப்பூச்சி (வண்ணாத்திப்பூச்சி) யொன்று ஈண்டுச் சின்னாட்களுக்கு முன் வாழ்ந்து வந்தது. அதன் வழியெச்சமே ஈண்டு நீ காண்குறும் பச்சிளஞ் சினைகள். இவற்றை அதுதான் இறக்குங் காலத்து ஈன்று, என்னையும் புறந்தருமாறு பணித்தது மன்றி, இவை குடம்பை தனித்தொழியப் பறந்தேகு நாள்காறும் தற்குணவளித் தோம்புதல் செய்யுமாறும் கூறியகன்றது. அவ்வோம்படையேற்ற யான் அங்ஙனம் செய்யுமா றறியாது அலமருகின்றேன்.

பருந்து:- என்னை?

புழு :- அவ் வாற்றினை யான் அறியேனாகலின்.

பருந்து:- என் அறியாய்?

புழு :-அப்பூச்சியோ பறக்குமியல்பிற்று; மற்று, யானோ . ஊர்வனவற்றைச் சார்ந்த புல்லிய புழுவானேன். பறப்பனவற்றை ஊர்வன புரத்தல்,

“பாய்திரைப் புணரி பாடவிந் தொழியினும்,
காய்கதி ரிரண்டுங் கதிதிரி யோடினும்,"

கூடாது என்பது உண்மையன்றோ. அது பற்றியே இம்மயக்கம் எய்தியது.

பருந்து:- மயங்கல் வேண்டா. நுனித்து நோக்கின், இவற்றைப் புரத்தலும், ஏற்ற வுணவு கொடுத்தலும் நின்னா லெளிதிற் செயற்பாலன வென்பதே தோன்றுகின்றது. அன்றியும், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, நினைத்தொறும் நினைத்தொறும் இம்முடிபே எய்துகின்றது.

புழு :- உய்ந்தேன் உய்ந்தேன்!! கூறுக.

பருந்து:-கூறுவல். தடையுமின்று. மற்று, யான் கூறுவனவற்றை நீ உள்ளவாறே யுட்கொள்ளுவாயோ வென்றையுறுகின்றேன். எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அன்றி யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருளின்கண் மெய்ப் பொருள் காண்டல் கூடும் என்னும் உறுதி நோக்கு (Faith) நின்னுழை யுளதானாலன்றி, என் மொழியின் உண்மைப் பொருள் புலனாகாது. இந் நோக்கின்றிக் கேட்டல் அரங்கின்றி யாடல் புரிவாரது நோக்கினோடொக்கும்.

புழு :- ஆம். சார்ந்ததன் வண்ணமாதலே மனவியல்பு. எந்நோக்கங் கொண்டு எப்பொருணோக்கப்படுகின்றதோ, அந்நோக்கிற் கமைந்தே அப்பொருளுந் தோன்றும். ஒருவனைக் குற்றமுடையனே யெனக்கருதி நோக்குவார்க்கு அவன் குற்றமுடையனாகவும், அல்லனெனக்கருதி நோக்குவார்க்கு அல்லனாகவும் தோன்றல் கண்கூடன்றோ! நிற்க, யான், அவ்வுறுதிநோக்கு உடையேன், வெளிப்படையாகக் கூறின், நீ கூறுமனைத்தையும் கூறியாங்கே நம்புவல். இது உறுதி.

பருந்து:- உறுதியாயின், கூறுவல்: முதற்கண் நீ இவற்றிற்கேய்ந்த வுணவு யாதென நினைக்கின்றனை? நின் உளத்தில் தோன்றுவனவற்றை மட்டிற் கூறுக.

புழு :-(நினைத்து) யாதாகும்? பனித்திவலையும் பைந்தேனுமாம்! ஆ!

பருந்து:- அல்லவே. அவற்றிற்கேற்கு முணவை நீ மிக்க எளிதிற் கொணர்தல் கூடுமே. அன்றியும், அது இவ்வனைத்தி னும் மிக்க அண்மையிற் கிடைத்தற்பாற்றன்றோ!

புழு :- (திகைத்து) என்னருகில், எளிதில், பெறக்கூடியது இம் முசுக்கொட்டையிலை யன்றிப் பிறிதொன்றுமிலையே. பருந்து:-ஆம் ஆம்! நன்று சொன்னாய் நீயே அவ்வுணவை நன்கு உணர்ந்து கொண்டனை. இம் முசுக்கொட்டை யிலைகடாம் அவற்றிற்குத் தக்கவுணவாவன.

புழு :- (சினந்து) ஏ என்னே நின் மடமை!! இவற்றையன்றோ அது தருதல் கூடாதென வன்புறை செய்தது. முகநகவொன்று மொழிதலும், பின்னர் மற்றொன்று செய்தலும் அறனல்ல. அதனால் விலக்கப்பட்ட வுணவையே யளிக்குமாறு கூறல் நின் அறிவுடைமைக் கழகன்று; அமைதியுமன்று.

பருந்து:- அன்பே பொறுத்தருள். இனிய உளவாக, இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந்தற்று என்பதை நினைத்தருள்க. நிற்க, இவற்றின் தாய்ப்பூச்சி இவ்வுண்மையினை யறியாது. அது பெரும்பேதை, அன்றியும் யான் கூறுவனவற்றை யுறுதி நோக்குடன் கேட்பலெனக் கூறி, கூறக்கேட்டலும், உண்மை நோக்காதொழிதல் நின் உயர்வுக்குக் குறையன்றோ! அறிவும், அமைந்த நம்பிக்கையும் அமைவுறினன்றோ வுண்மை தெள்ளிதாம்.

புழு :-ஒ! அற்றன்று. என் செவிப்புலனாம் பொருள் பலவற்றினும் அமைவுறும் உண்மைப்பொருள் காண்டலே என்னியல்பு. உறுதிநோக்கும், உண்மை நம்பிக்கையும் உடையாரின் மிக்கார்த்தேரின், யானலதில்லை இவ்வுலகத்தானே என்பதை மீட்டும். நினக்கு வற்புறுத்துகின்றேன். அறிக!

பருந்து:- அறிவதென்! நின்சொல்லின் வலியின்மையை நின் சொற்களே நன்கு காட்டுகின்றன. யான் கூறும் உணவுப் பொருளையே நீ முதற்கண் ஏலாதொழியின், பின்னர்க் கூறப்போவனவற்றை நீ எங்ஙனம் ஏற்றல் அமையும்? நிற்க, இப்பச்சிளஞ் சினைகள் பொரித்தலும் என்னாமென நினைக்கின்றனை? இதனையேனும் உண்மையாகக் கூறுதி.

புழு :- என்னாம்! விதையொன்று போடப் பதமொன்று விளையுங் கொல்! ‘பண்டு செய்வினையலாற் பரவுதெய்வமொன் றுண்டெனில், தான் பயன் உதவ வல்லதோ’ என்னும் செம்பொருளையும் தெளிக. ஆகலின், சேடத்தின் சினை சேடமா மேயன்றிக்கீடமாகா.

பருந்து:-அற்றன்று. சேடத்தின் சினை சேடமாகாது முதற்கட் கீடமே யாம். உண்மையைக் கூறின், அவை பொரித்தலும், நின்னொப்பப் புழுக்களாமே யன்றி நீ நினைத்துக் கூறும் வண்ணாத்திப் பூச்சிகளாகா. நீ இவ்வுண்மையை ஏலாதொழியினும் ஒழிக. உண்மை பின்னர்ப் புலனாம். யான் சென்று வருவல்.

இங்ஙனம் கூறிக்கொண்டே பருந்து சேணோக்கிச் சிவ்வென்றெழுந்து பறந்து சென்றது. அன்றியும், ஆண்டேயிருந்து, புழுவிற்கு உண்மையுணர்த்தும் வகையாற் கலாய்த்தற்கு அப்பருந்து விரும்பிற்றன்று. ‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையராயினும், சான்றோர், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பர் பெரியார். ஆகவே, பருந்தும் கலாய்த்துப் பழியெய்தற்கு அஞ்சி யகன்றதென்க.

இங்ஙனம் விழுமிய நட்புக்கடம்பூண்ட பருந்து பிரிதலும். புழு மிக்கதோர் மருட்சிகொண்டு, செய்தொழிலறியாது திகைத்து அருகுகிடக்கும் சினைகளைக் காண்டலும், கண்ணிருகுத்தலும், பன்முறை யவற்றைச் சூழ்வரலும் செய்து கொண்டு வரும். இடையிடையே பருந்துகூறிய மொழிகளை எழுத்தளவாய் ஆயும்; பொருட்பயனைப் பன்முறையும் சூழ்ந்து நோக்கும்; தன் யாக்கைப் பண்பையும், பூச்சியின் பொலிவையும் மனத்தா னொப்பு நோக்கும். அதுகாலைப்பின் வருமாறும் நினைக்கும். அது:

"மாந்தர் இனத்தியல்பதாகும் அறிவு" என்பது தமிழ்மறை. இதுபற்றியன்றே, உயர்ந்தோர் கூட்டமே யுறவாய்க் கொண்டுழலும் இப்பருந்தும் மிக்க அறிவமைதியுடையதா மென்றெண்ணிக் கெட்டேன் ஒருகால், அது இம்முறை நெடிது சேணிற் பறந்திருக்கும், அதனாற்றான் இக்கலக்கம்! ஆ என்ன அலகைத் தன்மை உலகத்தோர் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகை யென்று எண்ணப்படுமன்றோ ஆ உயிர்க் கூட்டத்துள், உயர்ந்தாரோடு கூடி வாழ்வனவும், கூடி வாழ்வதாகத் தம்மை யுயர்த்திக்கூறிக் கொள்வனவுமாய பலவுயிர்கள் முடிவில் எத்துணைப்பேதைமையும் கொடுமையும் உடையவாய்த் தோன்றுகின்றன. என்ன உலகம் பெறுதற்கரிய யாக்கை தமக்கு எய்திற் றென்றால், அது கொண்டு அறிவும் ஒழுக்கமும் அமையப்பெற்று, தக்கவின்ன, தகாதனவின்னவென ஒக்க வுன்னி, ஒப்பனவற்றைக் கோடலன்றோ யாவர்க்கும் ஒரு படித்தாய் வேண்டப்படுவது.

“கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பால் நிலத்துக் காங்கு.”

ஆகுமன்றோ, இஃது ஒர் உயிர்க்கு எய்தாவிடின் அதன் பொலிவு கூர் யாக்கை. நிற்க. இப்பறவை அவ்விசும்பைப் படர்ந்து சென்று செய்யும் தொழில் யாது கொல் நெடுங் காலமளவும் இஃது ஆண்டுப் பறந்து கொட்புறுதலின் உட்கிடையென்னோடி இதனொடு அங்கு உரையாடி நல்லறிவு கொளுத்தவல்லார் யாவரோ? இவ்வனைத்தும், எண்ணுந் தோறும் மயக்கத்தை யன்றோ தருகின்றன. என்ன இறும்பூது பயக்கும் வாழ்வுகாண் இதன் வாழ்வு!" என்பது.

இங்ஙனம், அது, நினைத்தவண்ணம் பண்டேபோற் றன் சினைகளைச் சூழ்வந்து காவல் புரிந்து வந்தது. அதுபோது, பருந்தின் மெல்லிசைமட்டிற் புழுவின் செவிப்புலனாகலும், அது, முன்னைக் களிப்பின்றெனினும், சிறிது தேறி, நோக்கக் குழையும் என்பதற்கஞ்சி, இனிமை தோன்ற ஒருவண்ணம் எதிர்நோக்கி நின்றது. பருந்தும் வந்தது. இரண்டன் நட்பும் நகுதற் பொருட்டன்றாகலானும்.

“இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பக லமையமும் இரவும் போல
வேறுவே றியல வாகி மாறெதிர்ந் துள.”

என்னும் பொருளை இவை நன்குணர்ந்தவை யாகலானும், முன்னர் நிகழ்ச்சியிற் புழுவின் சினத்தை யறவே மறைய ஒன்றோடொன்று சிறிது அளவளாவிப் பின் வருமாறு மீட்டும் அவை சொல்லாடல் தொடங்கின.

பருந்து:- யான் கூறுவனவற்றை, முன்னரே கூறியுள்ளவாறு, உறுதிநோக்கும், ஒப்பன கொள்ளும் உளமும் கொண்டு கேட்பையேற் கூறுவல்.

புழு :- ஆயின், அவை என்னிடத் திலவென வெண்ணுதி போலும் நன்று நன்று ஆ கேள்வியிலா தெய்தும் எவ்வகைப் பொருளையும் உறுதிநோக்குக் கொண்ட, உளத்திற்கோடலே என்னியல்பென யான் கூறியிருக்கு மது நின் நினைவின்கணில்லை கொல்லோ

பருந்து:- “உணர்ந்தன மறக்கும், மறந்தனவுணரும்" என்பர் பெரியோர். இனி மறவேன்; பொறுத்தருள்க. நிற்க, யான் முன்பு கூறியன நின்னையும், நின் சினைகளையும் பற்றிப் பொதுவாக வுணர்ந்தன; இற்றைஞான்று கூறப்போவது நின்பொருட் டுணர்ந்த சிறப்புப் பொருளாகும். அது, சுருங்கக் கூறின், நீயும் ஒருபகல் அப்பூச்சியே யாதல் வேண்டும் என்பது.

புழு :- என்னை கூறினை? ஏ, மடப்பருந்தே நிறுத்துக நின் சொற்பொழிவினை! நின்னொடு நிமிர்ந்தஞேயம் இப்பயனைப் பயக்கும் நீர்மைத்தாயின், என் கூறுவது. பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும் ஆலால நீர்மைத்தே நின்னன்பு என்பதே சாலப் பொருந்துவது. பொலிவு, திட்பம் முதலியவில்லா யாக்கையேன் என எண்ணி இன்னணம் என்னை இழித்துக் கூறுவான் செய்த கூற்றேயிது. அறிந்தேன். நின் தன்மையை யான் இன்றே உணர்ந்தேன். நீ பெருங்கொடியை அறிவிலி! திருத்த வியலாத் தீயை பேதை!! நாணின்றி என் முன்னிற்றல் நின் மாண்பிற்கே குறைவாம். இனி எனக்கு நின் பொங்கு சோறும் வேண்டா: பூசாரித்தனமும் வேண்டா. போதும் போதும்!!

இவ்வண்ணம் கூறிய புழுவின் நெஞ்சுசுடு நெடுமொழி வன்சிறைப்பருந்தின் மனத்துத் தினைத்துணையும் சினத் தீ கொளுத்திற்றின்று. என்னை, வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை யாகலின். மற்று, அது, அதன்மனத்துத் "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று" என்னும் தெய்வத் திருவள்ளுவப் பயனை யெழச் செய்து, உறுவது தேராப் புழுவின்மாட்டு இரக்கமும், அதன் அறியாமைக்குக் கவற்சியுமே தோன்றச் செய்தது. வேறு என் செயும் அது அப்புழுவினை, "அன்ப, நீ வெகுண்டு கூறுவனயாவும் வெளிற்றுரைகளே. ஒருபுடை, அவை, நீ இச்சினை மாட்டுப் பூண்டொழுகும் பேராதரவின் உறுதியைப் புலப்படுத்துகின்றன வெனினும், ஆன்ற கேள்வியாற்றோட்ட செவியை யல்லை யென்பதைக் கர்ட்டாது கழியவில்லை. என் சொற்களை நீ ஏற்றுக் கொள்ளாயெனப் பண்டே யான் கூறினேனன்றோ," என்று கூறிற்று.

புழு :-ஆம். யான் கேட்பனவற்றில் உறுதிப் பொருளைக் காண்டல் கூடும் என்னும் நோக்கத்துடன் ஏற்றுக் கொள்வ லென்பதைப் பண்டு கூறியதே யன்றி, இன்றும் கூறுகின்றேன், இனி என்றும் கூறுவேன். உரைப்பார் உரைப்பனவற்றை யுரைத்த வாற்றா னுட்கொள்ளு மியல்பினை யுடையார்க்கு, அவர் உண்மை கலந்தவற்றைத் தாமே யுரைத்தல் வேண்டும். ஒரு வாற்றானு மியைபில்லாத வொன்றை யியைத்துக்கூறின் யாவர் தாம் ஏற்பர். நிலையாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடையாதல் போல, இயைபில்லனவற்றை யியைபுடையவாக்கிக் கூறலும், கூறக்கேட்டலும் புல்லறிவாண்மை யாதலோடு கடையாதலும் தோன்றிற்றன்றே. நண்ப! சேடப்பூச்சிகளின் சினை பொரியின் கீடங்களாக மாறுமென்பதும், கீடங்களுந் தம் இயங்குதற் றன்மை நீங்கிப் பறத்தற்றன்மையினை யெய்து மென்பதும் முற்றிலும் பொருந்தாக் கூற்றுக்களே. இவற்றோரன்ன புன்மொழிகளை நீ யாண்டு, யாங்ஙனம், கேட்டற்குத் துணிந்தனை? இவை யொல்லுமோ வென்பதை நீயே ஆய்ந்து நோக்குக. அங்ஙனமாதல் ஒருகாலும் முடியாதன்றோ!

பருந்து:- இனி வேறு கூறல் எனக்கு இயலாது. வேண்டுமேல் யான் அறிந்தவற்றைக் கூறுவல்; கேள்: யான் வயல் வழியும், வானாறும் படர்ந்து கொட்புறும் பான்மையேன். அங்கனம், படருங்கால், இடையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காணாது செல்வது இல்லை. அவற்றுள் ஒவ்வொன்றும் நினைவுவல்லார் நெஞ்சும் கடந்து நிற்குந்தன்மைத்து. அவற்றைக் கண்ணுற்றுத் தெளிந்தயான் இவ்வாறு நிகழ்தலுங் கூடுமெனத் துணிந்தேன். ஒர் குறுகிய எல்லைக்கணியக்கமும், தான்வாழும் இலையன்றிப் பிறகண்டறியாமையுமுடைய நினக்குப் பிறவனைத்தும் அரியவும், இயைபில்லவும், முடியாதவுமாகவே தோன்றும், கிணற்றுத்தவளை புணரியியல்பை யறியுங்கொல்!

புழு :- அந்தோ ஆய்ந்திடு முணர்வுதன்னை நினக்கு அவ்வயன் படைத்திலன்கொல் அவனைக் காண்பனேல், அற்றதலை போக, அறாததலை நான்கினையும் பற்றித்திருகிப் பறிப்பேன்! அறிதியோ!! இக்கூற்று இத்துணையுறுதியுடைத்து; உண்மை யுடைத்து என்பனவற்றையுமோ யான் அறியேன் ஆ!! இத்துணைக்காலம் இவ்வுலகிடைப்பிறந்துழன்ற யான் ஈதறியாது ஒழிவலோ என்னே நின்மடமை என் பசிய நெடிய வுடலையும், எண்ணிறந்த கால்களையும் நோக்கும் இவற்றை நேரிற் கண்டும், எனக்கு இவ்வுடனிங்குமென்பதும், பல்வகை வண்ணமமைந்த புத்துடலொன்று எய்து மென்பதும் எத்துணை இழித்தக்க மொழிகளாகின்றன. இஃதறியாமையே பேதமை யென்பது. கூறுவோர்க்கு உணர்வு குன்றினும், கேட்போர்க்கும் அது குன்றுங் கொலோ?

பருந்து:- (சினந்து) என்னை கூறினை? “யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்னும் பொய்யில் மொழியினை மறத்தியோ? என்னை நீ மதியிலி யென்பது உண்மையே. கல்லா அறிவில் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுதலுண்டுகொல்! இதனைச் சிறிதேயு மறிந்திருந்தும், யான் இவ்வுண்மையைக் கூறியவந்தனனன்றே! நின் அறிவுக் கெட்டாதவற்றை வற்புறுத்திக் கூறநினைத்தலும், அது பற்றி நின்னுழை யெய்தலும் என்னிலைக்கு ஏற்பனவல்லவன்றோ! வானோக்கி யெழுங்கால் என்வாய்வழி வரும் இன்னொலி கேட்டோர்க்கு இன்பம் பயந்து, எனக்கு மதுவழியேயோர் சிறப்பினையும் நல்குதல் ஒருதலை. இது கிடக்க, நீ இனியேனும் வருவனவற்றையும், பிறர் கூறுவனவற்றையும் ஒன்றிய வுள்ளமொடு ஏற்றுக்கொள்க.

இவ்வாறு, புழுவின் புன்மொழிகள் பலவும் பருந்தின் செவியிற் புக்கும் அது வெகுளாது, நானாது, அன்புடை நன்மொழி கூறலும், புழு தன் அறியாமைக்கும், அதனாற் சினந்து பிதற்றிய மொழிகட்கும் உளம் வெள்கி, "அதற்கு நீ கூறும் அந்நம்பிக்கையும் உறுதி நோக்கும் என் மாட்டில வெண்பாயோ? என்றது.

பருந்து:- உளவேல், இத்துணை நெடுமொழிகள் பிறக்குங் கொல்லோ!

புழு :- அற்றேல், அவ்வுறுதி நோக்கு என்னுழை யுண்டாதற்கு யான் செய்யக்கடவதென்? அன்பு கூர்ந்து கூறுக.

இங்ஙனம் அமைதிசான்ற வுரையாடல் இடைநிகழுங் காலத்துப் பருந்து சேட்புலம் படர்ந்தது. புழுவும் தன்னைப் பன்முறையும் நோக்கி, அச்சினையிருந்த முருக்கிலையைச் சூழ்வந்து கொண்டிருப்ப, அவ்விலையைத் துளைத்துக்கொண்டு ஏழெட்டுப் பச்சிலைப் புழுக்கள் அங்குமிங்கு மியங்கத் தொடங்கின. அவை யாண்டிருந்து போந்தன? அவை அச்சினைக்கணின்று போந்தனவே! போதரக்கண்ட புழுவின் புந்தியிற் கலக்கமும் மானமுங்கலந்து தோன்றின: கண்ணகன் ஞாலம் கொட்புறல் செய்தது; உடல் சுமந்து நிற்கும் தன்னையே மாயமோ வென்றெண்ணிற்று. பருந்து கூறிய மொழி யொவ்வொன்றும் அதன் உளத்துத் தோன்றிற்று. இன்னணம் பருந்தின் முதலுரை யுண்மையாதல் காண்டலின், மற்றதும் அவ்வாறாதல் கூடுமெனும் துணிபும் உடனெய்திய எய்தலும், அது பட்டபாடு யாராற் கூறப்படுந் தகைத்தாம்!!

பின்னர் நாட்கள் சில சென்றன; பரந்தவில் வுலகிற் றோன்றும் பொருளினானாம் காட்சியறிவைப் பருந்து உடனுடன் புழுவிற் குரைத்தலும், உண்மையாய்தலும் இரண்டிற்கும் மரபாயிற்று. புழுவும் தன்னினங்கட்குத் தனக்கு நேரவிருக்கும் நிகழ்ச்சியையும், அதுவே யவற்றிற்குமா மென்பதையும் அறிவுறுத்தும்; உறுத்தினும், அதனையவை ஏலாதே யொழிந்தன. புழுமட்டிற்றான்றன் மெய்ந்நட்புக்குரிய பருந்துழைக் கண்ட மெய்ப்பொருள் நிகழ்தற் கேற்ற காலம் எய்திற்றாக, பகல்செய் மண்டிலம் பனிக்கடல் முகட்டெழ, பறவை யின்னிசைபாட, சுரும்புந்தேனும் சூழ்ந்தார்ப்ப, கடிக்கமலம் வாய்விள்ள, பூச்சியினம் பொலிவெய்த, புழுவினங்கள் குழீஇ மறுக, இப்புழுவும் பூச்சியாயிற்று; யாக்கையும் காலொடுமிதக்கும் கவினெய்திற்று இயங்கியவுடல் பறத்தல் செய்தது; இருமருங்கும் சிறகுகளெழுந்தன; அவற்றின்கட் பல்வகைய வொளிதெறிக்கும் வண்ணங்கள் தோன்றியழகு செய்தன.

இவ்வண்ணம், அழகுதிகழப் புத்துடல் பெற்றுப் பூந்தேனுண்டு பொலிவுகூர் சுற்றமொடு புரிந்து வாழ்ந்த சேடப் பூச்சி, பின்னர்ச் சின்னாட்களுட்டன் னின்னுயிர் நீங்குங் கால மெய்தலும், எண்ணரு மின்பங்கனிய, “இம் மறுவின்று விளங்கும் மாயிருஞாலத்து, அறிவு வளர்க்குமாற்றா னமைந்த பொருள்கள் மிகப்பலவுள; அவற்றையாய்ந்து கோடலறிவின் கடன்: அதற்கு இன்றியமையாத வுறுப்பாவது உறுதிநோக்கே (Faith). அதனை அதனருளாலே யடையப்பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! இனி எவை வரினும் வருக. யான் விண்ணகம் படர்குவல்" என்றெழுந்து சென்று விண்ணில் மறைந்தது.
-----
* (கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியினின்று வெளிவந்த பஞ்சாபகேசன் என்னும் கையெழுத்துத் திங்கள் வெளியீட்டின்கண் முன்னர் வெளிவந்ததோர் மொழிபெயர்ப்பு. ஆங்கில நூற் கட்டுரைகளுள் அமிழ்ந்து திளைத்த நிலையில் இக்கட்டுரை ஆங்கிலம் தழுவிய தமிழாக்கமாக அமைந்தது) -
---------

2. உழைப்பு

“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்குரைத் தோரும் தாமே
அழாஅல்தோழி அவர் அழுங்குவர் செலவே...”
      - குறுந்தொகை: 135

நற்குணமும் நற்செய்கையும் சிறந்த நங்கையொருத்தி, அறிவும் ஆண்மையும் பெருகிய தோன்றல் ஒருவனை மணந்து இல்லறம் பூண்டு வந்தனள். ஒருநாள் அவன், தான் செய்வதற்குரிய வினையொன்று குறித்துத் தன் மனையின் நீங்கிச் செல்லவேண்டியவனானான். மணந்தநாள் தொட்டுத் தன் கணவனைப் பிரிந்தறியாத அந்நங்கைக்கு இது தெரியின், அவள் பெருவருத்தம் எய்துவள் என்பதை அத்தோன்றல் எண்ணினன். உண்மைக் காதல்வழி யொழுகுவார்க்குப் பிரிவுபோலப் பெருந்துன்பம் தருவது பிறிது கிடையாது. "இன்னாது இனனில்லூர் வாழ்தல், அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு" என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். அதனால் தன் கருத்தினை, அவன், அவளது தோழிக்கு உரைத்து, பின்னர் மெல்லத் தன் மனையாட்குத் தெரிவிக்குமாறு பணித்தான். அவளும் அதற்கு ஒருவாறு உடன்பட்டு, காலம் வாய்த்த போது அவனது கருத்தினைப் பைய வுணர்த்தினாள். கேட்டாளோ இல்லையோ, நங்கைக்குப் பெருந்துயர் உண்டாகிவிட்டது; கண்ணீர் விட்டுக் கதறியழத் தொடங்கினாள். அவளை ஆற்றுவிக்கத் தொடங்கிய தோழி, "நங்காய், கணவன் சொல்லைக் காப்பது மனைவிக்குக் கடன். அவர் ஒருநாள் சொன்னது ஒன்றுண்டு. அது நினக்கும் தெரிந்ததே. அஃதாவது: 'ஆடவர்க்குத் தாங்கள் செய்யும் வினையே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவரே உயிர். அவர்க்கு உயிராகிய வினைமேற் சென்றால்தானே, அவர் நினக்கு உயிராக இருத்தல்கூடும்; நீ அழுதால் அவர் வினைமேற்செல்வதைக் கைவிடுவரே. அதனால் ஏதமன்றோ விளையும், "என்றனள். அது கேட்ட அந்நங்கையும் தேறி அவன் பிரிவை ஆற்றித் தனக்குரிய அறத்தினையும் ஆற்றிவந்தனள்.

இச்சிறிய பாட்டினைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சான்றோராவர்.

இவ்வாறு வினை மேற் செல்ல நினைந்த தலைமகன் ஒருநாள் மாலைப்போது வரக்கண்டு, "ஆ. இப்போது நம் காதலி நம் மனையகத்து விளக்கேற்றி அதன் முன் நின்று, 'இன்னும் காதலர் வந்திலரே' என்று நினைக்கும் போது அன்றோ?" என்று தனக்குள் நினைத்தான். நினைத்தவன், இம்மாலை,

‘உள்ளினேன் அல்லனோ யானே, உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.”
      - நற்றிணை 3

எனத் தனக்குள் நினைந்து இனைந்தான் என இளங்கீரனார் கூறியுள்ளார். இவ்விரு செய்யுட்களையும் நோக்குவோமாயின், நமக்கு ஓர் உண்மை புலப்படும். அஃதாவது, ஓர் ஆண் மகனுக்கு அவன் செய்தற்குரிய வினைதான் உயிர்; அதனை முடித்த வழியுளதாகும் இன்பம் காதலின்பம் போல்வது என்பதாம்.

வினையென்பது நாம் செய்யும் செய்கையாகும். ஒவ்வோருயிரும் உலகில் தோன்றும்போதே வினை செய்வதற்கென்றே பிறக்கின்றது. வினையே ஒருவன் எய்தும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாவது. இன்பத்தையே எவ்வுயிரும் பெற விரும்பும்; துன்பத்தை விரும்பும் உயிர் எதுவுமில்லை. துன்பம் என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் உள்ளம் சுளிக்கும்; சொல்லுதற்கும் நாக்குக் கூசும். இன்பத்தைத் தரும் வினையே யாவரும் விரும்பும் தொழிலாகும். அதனால்தான் இன்பம் தரக்கூடியதனை நல்வினை, நற்செய்கை என்றும், துன்பம் தருவதனைத் தீவினை, தீச்செய்கை என்றும் சொல்லுகின்றோம்.

இனி இவ்வினையைச் செய்யும்பொழுது நம் உடலும் உயிரும் பெரிதும் பாடுபடுகின்றன. இவ்விரண்டும் ஒருங்கே கூடிச் செய்யாத வழி, எந்தத் தொழிலும் நடைபெறுவது இல்லை. எத்தொழிலைச் செய்வதாயினும் இவை உழைக்க வேண்டியிருக்கின்றன. உயிர் உடலொடு கூடியிருப்பது இவ்வுழைப்புக்கே; இவ்வுழைப்பால், உயிர் உடல்படும் துன்பமனைத்தையும் தான் படுகிறதென்றாலும், உயிர்க்கு உடலின்மேல் உள்ள பற்றினால் உழைக்க உழைக்க, அதற்கு அதன்மேல் பற்று மிகுகின்றது; "துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்"எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே, உடலோடு கூடி வாழும் ஒவ்வோருயிர்க்கும் உழைப்பு இயல்பாக அமைந்திருப்பதை அறிகிறோம். ஆனால், இவ்வுயிர்களுள் மக்களுயிர்மட்டில், ஏனை உயிர்களை விடச் சிறிது மேம்பட்டதாகும். தன் உழைப்பால் ஆண்டவன் படைப்பில் உள்ள ஏனை உயிர்களையும் உயிரில் பொருள்களையும் முறையே அடிமையாகவும் உடைமையாகவும் ஆக்கிக் கொள்ளற்கு வேண்டிய உரிமை மக்களுயிர் பெற்றிருக்கிறது. ஆதலாற்றான் இன்று மனிதன் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய பூதம் ஐந்தும் தான் விரும்புமாறு அமையச் செய்கின்றான். நிலத்திற்குள் நுழைந்து குடைந்து செல்கின்றான். நீரின் மேலும் கீழும் நிமிர்ந்து செல்கின்றான்; காற்றை ஏவல் கொள்ளுகின்றான்; விசும்பில் பறந்தேகுகின்றான். சுருங்கச் சொன்னால், மனிதன் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக விளங்குகின்றான் என்னலாம்.

மனிதன் இத்துணை ஏற்றமுடையவனாக இருத்தற்குரிய உரிமை அவன்பால் நிலைத்திருக்க வேண்டுமாயின், அவன் சலிப்பின்றி உழைத்தல் வேண்டும். உழைப்பினால் அவன் உடல் தூய்மையடைகிறது. அதனால் அவன் உள்ளம் ஒளிபெறுகிறது; அப்போது ஆண்டவன் அவற்கு அருளியுள்ள உரிமை கதிர்விட்டுத் திகழ்கின்றது. அதுவழியாக அவன்பால் உயரிய எண்ணங்களும், உலவாத இன்பமும் உண்டாகின்றன. மக்களுட் சிலர், அவ்வுரிமையைக் காத்துக்கொள்ளும் வலிகுன்றியிருக்கின்றனர்; உரிமையை நிலைப்பிக்கும் உழைப்பினை நெகிழ்த்துச் சோம்பலுறுகின்றனர். சோம்பல் உடலைக் கெடுக்கின்றது; அதனால் உயிர் மடங்குகின்றது; உரிமை நிலவும் உள்ளம் மடிகின்றது. ஆகவே, சோம்பல் மடிமைக்கு உயிரை இரையாக்கி, உள்ளத்தே இருளையும் உயிர்க்கு இறுதியையும் விளைவிக்கின்றது. ஒரு பெரியாரது உடன்பிறந்தார் இறந்துபோனார் என்பது கேள்வியுற்று, வேறொரு பெரியார் அவரை நோக்கித் "தங்கள் தம்பி எவ்வாறு இறந்தார்?" என்று கேட்டதற்கு, அவர், "அவன் உழைத்தற்கு இன்றி இறந்தான்" என்றாராம். ஆகவே, உழைப்பின்றிச் சோம்பியிருப்பவன், விரைவில் தன் உயிரை இழக்கின்றான்; அவன் உள்ளத்தே, உயிர்க்குத் தீங்கு செய்யும் தீய எண்ணங்களும் அறியாமையுமே குடிகொள்ளும் என அறியலாம்.

இன்று நாம் அழகிய நகரங்களையும், பெரிய பெரிய மாட மாளிகைகளையும், பசும் கம்பளம் விரித்ததுபோலத் தோன்றும் பரந்த பண்பட்ட வயல்களையும் காண்கின்றோம். காடழிந்து நாடாகியிருக்கிறது; கருங்கடலில் பெருங்கலம் செல்கின்றது; கம்பியின்றியே தந்தி பேசுகிறது; விரைவில், ‘'கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்" என நம் நாவரசர் பாடியதை நாமும் பாடப்போகின்றோம். இவையாவும் உழைப்பின் பயனன்றோ! "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" எனப் பட்டினத்தடிகள் உரைத்தது உண்மை மொழியன்றோ உழைப்பின்றி உடல் சோம்பி, உயிர் ஒய்ந்து ஒடுங்கியிருக்கும் ஒருவனைப் பாருங்கள் அவன் உள்ளத்தில் ஒளியில்லை. அதனை அவலம், கவலை, கையாறு, அழுங்கல், ஆசை, வெகுளி, அழுக்காறு முதலியன சூழ்ந்து அரிக்கின்றன; அவனும் உருக்குலைந்துமெலிகின்றான். அவனை ஏதேனும் ஒரு தொழிலைச்செய்ய விடுவோம்: உடனே, அவனது உடலும் உயிரும் ஒருப்பட்டு அத்தொழிற்கண் உழைக்கத் தொடங்குகின்றன. அவன் வன்மை முழுவதும் அத்தொழிலை முடித்தற் கண் ஒன்றிவிடுகின்றது. அவன் உள்ளத்தை யலைத்த அழுக்குணர்வுகளனைத்தும் அகலப்போய் எங்கேயோ மறைந்து போகின்றன. அவன் மனிதன், மனிதனாக வயங்குகின்றான். அவனது உள்ளம் பேரொளி விட்டு மிளிர்கின்றது; அவ்வழுக்குணர்வுகள் அவ்வொளியின்கண் புகைந்து எரிந்து புத்தொளி செய்கின்றன. ஆகவே, ஒருவனது உள்ளத்தைத் தூய்மை செய்வதற்கு உழைப்பே சிறந்த மருந்தாக இருக்கிறதென்பது எளிதில் விளங்குகிறது.

நாம் வாழும் இம்மண்ணுலகு ஆதியில் ஞாயிற்றிலிருந்து போந்தது என்றும், அன்றுமுதல் இன்று வரையில் சுழன்று கொண்டேயிருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். இதனை இவ்வாறு சுழல்வித்த பரமன் கருத்து யாதாகல் வேண்டும்? இடையறாது சுழலும் சுழற்சியினால் நாம் வாழும் மண்ணுலகு, விண்ணுலகில் வட்டமாக இயன்று, பல விகார உருவங்களைப் பெற்று, முடிவில், இற்றைய உருண்டை வடிவத்தைப் பெற்றிருக்கிறது. சுழலலாவது நின்றுபோமாயின், இந்நிலவுலகம் யாதாய் முடியும்? ஒருசார் பகலும் மற்றைய பகுதி இருளுமாய் எவ்வுயிரும் வாழ்தற்கின்றி, எப்பொருளும் நிலைபெறுவதின்றிக் கெட்டழியுமென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ அளித்தக்க இம்மண்ணகம், இடையறவின்றிச் சுழன்றுழலும் உழைப்பினால்தான் இதன்பால் முறை திரும்புதலும், நேர்மை கோடுதலும் பிற தீமைகளும் இலவாயின; விகாரங்கள் நீங்கிச் சீரிய இவ்வுருவமும் அமைவதாயிற்று.

குலாலனதுழைப்பும், அவனது தண்ட சக்கரமும் மனிதன் உணவட்டு உண்ணத்தொடங்கிய நாண்முதல் அறிந்தனவாகும். சமய நூல்களும் இலக்கண நூல்களும், அவனையே அவன் செய்யும் வினையையும், வினைக்குரிய கருவி கரணங்களையும் அடிக்கடி எடுத்துக்காட்டித் தம் அறிவுப் பொருளை வழங்குகின்றன. அச்சக்கரத்தின் நடுவில் வைக்கப்படும் மண்திரளைப் பாருங்கள்! அதனிடத்தில் ஏதேனும் பாண்டவமைப்புக்குரிய வடிவமுளதோ? அழகிய உருவமும் திருந்திய வடிவமுமுடைய மட்கலங்கள் அச்சக்கரத்தின் சுழற்சியால் பிறக்கின்றன. அஃது இல்லையாயின் அக்குலாலன் மட்கலன்களை யாக்குதல் கூடுமோ? எத்துணைத் தொழிற்சிறப்பும், உலையாவுழைப்பு முடையனாயினும் அவன் யாதுசெய்ய முடியும்? அவன் செய்ய முயலும் கலங்கட்கு அழகும் வடிவும் அமையுங்கொல்! இயற்கையுலகும், சக்கரத்துணையில்லாத குலாலனைப்போல, ஓய்ந்து ஒடுங்கி நிற்குமாயின் அதன் பயன் என்னாய் முடியும்! அவ்வாறு செய்யாது சலிப்பின்றி, உழைக்குமாறு அருளிய ஆண்டவனை எப்போதும் வணங்குவோமாக.

உழைத்தலின்றிச் சோம்பிக் கிடக்கும் ஒருவன் எத்துணைப் பொருணலங்கள் உடையனாயினும், அவற்கு அவை ஒரு பயனையும் செய்யா. சகடசக்கரமின்றிக் கையற்று நிற்கும் குலாலன்பால் உள்ள மண்திரள் போல, உழைப்புச் சிறப்பில்லாத ஒருவனும் வெறுந்தசைப் பொதியும் சிறப்பில் பிண்டமுமாவதல்லது பிறிதில்லை. குலாலனை மகனாகவும், அவனது சக்கரத்தை உழைப்பாகவும் கொண்டு நோக்குக. உழைப்பு உயர்வு தரும்; உழைப்பாளி உலகாள்வான். ஆகவே, உழைப்புப் பெற்றவன் உறுதிபெற்றவனாகின்றான். உயிர் வாழ்க்கையின் உறுதிப்பயன் அவன் பாலேயுளது. உயர்வு வேண்டுவோன் உழைப்பு வேண்டுக. கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கைகலந்து கலித்தோடுகின்றன. இடைப்பட்ட மாண்பொருளை வரன்றி யேகும் உழைப்பு வன்மையால் அவை கலித்துச் செருக்குகின்றன. அழுக்கும், மாசும், குப்பையும், கூளமும் அவற்றின் நெறியிற் பட்டு அலைத்துக் கொண்டேகப்படுகின்றன. கால் காலாய் வயலிடைப்படிந்து உரமாகித் தாம் பரவும் நிலப் பரப்பைப் பசும் புல்லும், நறுமலரும் கண்கவர் வனப்புமுடைய வண்பொழிலாக்கும் சிற்றாறுகளின் மாண்டொழிலை என்னென்பது! அவற்றின் தெண்ணீர் உண்ணீராகிறது. அது சுமந்து கொணர்ந்த அழுக்குகளும் அவற்றோரன்ன மாசுகளும் மாய்ந்து போகின்றன. இதனாலன்றோ, "உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே" எனக் குடபுலவியனாரும் பாண்டியன் நெடுஞ்செழியற்குப் பாடியறிவுறுத்தினார். இத்தகைய நீர் யாறே உழைப்பெனவறிக.

பல திறமாய், பல்வகைப் பொருள்களையாக்கி, நாடுகளை நாடா வளமுடையவாகச் செய்து, மக்களை இன்பமும், பொருளும், அறமும், வீடும் இனிது எய்துவித்து, அவர்தம் வாழ்க்கையின் பெரும்பயனை நுகர்விப்பது உழைப்பேயாகும். ஆகவே, உழைப்பே உயிர் என அறிகின்றோம். உயிர் உடலோடு கூடி வாழ்க்கை நடத்துந்தோறும், அதன்பால் பேரின்பம் பெறுதல்போல, உழைப்பாளியும் உழைக்குந்தோறும் உவட்டாத பேரின்பமும் ஊக்க மிகுதியும் பெறுகின்றான். ஆண்டவன் திருவருள் அவன் உள்ளத்தே ஊறுகிறது. உயர் நோக்கும், ஒள்ளறிவும், பெருந் தன்மையும் அவன்பால் உளவாகி யோங்குகின்றன.

நோன்மை, துணிவு, முயற்சி, அறிவுப் பேற்றின்கண் ஆர்வம், தன்குற்றம் தேர்ந்து கடிதல் முதலியன இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகும் நல்லறங்கள். உணர்த்த உணர்வதிலும், இவற்றை நாமே நம் உழைப்பு வாயிலாக உணர்ந்து நன்னெறிகளிற் செலுத்துவதே நம் உயிர் வாழ்க்கையாகும். உழைப்பு வாயிலாக இவற்றை நாம் உணர்தல் வேண்டும். நோன்மை என்பது எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும், அவற்றிற்கு அழியாது, அவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்து மேற்கொள்ளும் தன்மையாகும். அங்ஙனம் மேற் கொள்ளுதற்குரிய துணையாகும் மனத்திட்பமே துணிவு என்பது. துணிந்தவழி, இடையில் வந்து தகையும் இடையூறுகளால் உள்ளமுடையாமல், செய்வினையைக் கடைபோக உழைத்து வெற்றிகாணும் திறம் முயற்சியாகும். அதன்கண் அறியாதனவற்றை அறிந்தாற்றும் விரகு வேண்டியிருத்தலின், அறிவறியும் ஆர்வம் வேண்டுவதாயிற்று. அவ்வார்வத்தால், முதற்கண் தாமே தேர்தலும் பிறர் காட்டக் காண்டலும் ஆகிய இரு நெறிகளால் தம் குற்றத்தைக் கண்டு அதனைக் கடிவதும், செய்த குற்றத்தை இனிச் செய்யா வகையில் தம்மைப் பாதுகாத்து, அடுத்த முறையில் நன்காற்றல் வேண்டும் என்னும் நற்பண்புடையனாவதும் உழைப்பாளிக்கு இன்றியமையாதனவாகும். இப்பண்புகளைக் கைக்கொண்டு உழைப்போர்முன், வான்றோய் மலையனைய பேரிடர்கள் வந்து நிற்கும். "நற்செயலுக் கன்றே நானூறு இடையூறு." ஆயினும் உண்மை யுழைப்பாளியோ, ஏனையவற்றால் வரும் "இன்பம் விழையான்; இடும்பை இயல் பென்பான்; துன்பம் உறுதல் இலன்." கருமமே கண்ணாக உழைக்கும் அவன், "மெய் வருத்தம் பாரான்; பசி நோக்கான்; கண் துஞ்சான்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளான்; செவ்வியருமையும் பாரான்; அவமதிப்பும் கொள்ளான்." சுடச் சுடரும் பொன்போல், அவன் உள்ளம் துன்பங்கள் தொடர்ந்து போந்து சுடச்சுட, ஒட்பமும் திட்பமும் பெற்று ஓங்கி யொளிரும். நிலவுலகினும், அவன் புகழே ஓங்கிப் பொன்றாது நின்று நிலவும், அத்துன்பங்களும் "எரி முன்னர் வைத்துறு போலக் கெடும்.”

இலண்டன் நகரத்தில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் என்னும் பெருங்கோயில் உலையாவுழைப்பின் உருவுடைப் பயனாகும். அதனை யெடுத்தற்கு முயன்ற சர் கிறிஸ்தபர் ரென் என்பார், கணிதநூல், வானநூல், சிற்பநூல் முதலியவற்றிற் பெரும் புலமையும் வினைத்திட்பமும் உடையர். ஆயினும், அவர் இதனைக் கட்டியமைத்தற்கு முயன்ற காலத்து உளவாகிய இடையூறுகட்கு அளவேயில்லை. உரோம் நகரத்துச் செயின்ட் பீட்டர்ஸ் பெருங் கோயில் போலவே இக்கோயிலையும் எடுத்தல் வேண்டுமென எண்ணி முயன்ற அவர்தம் எண்ணம் துார்ந்து போமாறு, அரசியற் பேரதிகாரிகளும் சமயப் பணியாளரும் பிறரும் மண்ணள்ளி எறிந்த வண்ணமே இருந்தனர்; பொருளுதவி புரிவோர் இருளில் மறைந்தனர்; கிறிஸ்தபருக்கும் இடுக்கண் பல அடுக்கி வரலாயின. ஆயினும் என்? "மடுத்தவாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து" என்ற திருவள்ளுவப் பெருமொழிபோல, அவ்விடையூறுகளும் இடர்ப்பட்டுத் தாமே யழிந்தன. கதீட்ரல் கண்கவர் வனப்பும் மண்மகிழ் தோற்றமும் பெற்று இன்றும் நின்று நிலவும் பெருஞ் சிறப்புடன் திகழும் செம்மை யெய்திற்று. இன்றும் அதனைக் காண்போர், "பெரியார்" எனப் பொறித்துள்ள பெரும் பெயரைக் காணுந்தோறும், நம் கிறிஸ்தபரின் வினைத்திட்பம், முயற்சி முதலிய வினைமாண்புகளை நினைந்து பாராட்டா நிற்கின்றனர்.

திருவும் கல்வியும் சிறந்து விளங்கும் நாடுகளுள் இப்போது அமெரிக்க நாடு எத்துறையிலும் ஈடுமெடுப்புமின்றி விளங்குவதனை நாம் அறிகின்றோம். இதன் உண்மையினை யுணர்ந்து கண்டு உரைத்த கொலம்பஸ் என்னும் பெரியாரை மேனாட்டவர் அனைவரும், நம் நாட்டவருட் கற்றவரும் நன்கறிவர். நம் நாட்டிற்குப் புதுநெறி யொன்று காணப்புகுந்த அப்பெரியார் அவ்வமெரிக்க நாட்டினைக் கண்டறிந்தனரா யினும், அதனை முதலிற் காண்டற்கண் அவர் உற்ற இடுக்கண் உரைக்குந் தரமுடையதன்று. புதுநெறி காண்டல் கூடுமென்ற எண்ணம் அவர் உள்ளத்திற் புகுந்த நாள் முதல், புதுப்பெரு நாடாகிய அதனைத் தம் கண்களாற் காணுந் துணையும், அவரை, அவமதிப்பு, அச்சுறுத்தல், அறியாமை, இகழ்ச்சி, ஏமாற்றம், வசைவு, கொலை, அச்சம் முதலிய பல செயல்கள் பல்லாற்றாலும் அரித்து அலைத்தன. நாட்டின் காட்சியை யெய்துதற்கு இரண்டொரு நாழிகை யிருக்கும்போதும், அவர் சென்ற வங்கத்திலிருந்தோர் அவரைப் பற்றிக் கொலை செய்துவிடவும் துணிந்தனர்: மலைபோல் அலையெழுந்து முழங்கும் மறிகடல், முன்னே கிடந்து, மருட்சி விளைவித்தது; பின்னே அவரது நாடு நெடுந்தொலைவிற் கிடந்து, வறிதே திரும்பின் அவரை இகழ்ந்தெள்ளி இன்னற் , படுத்தற்கு எதிர்நோக்கியிருந்தது; அருகில் சூழ விருந்தோர் மடித்தவாயும், வெடித்த சொல்லும், கடுத்த நோக்கும் உடையவராய்த் தீவினையே சூழ்ந்து கொண்டிருந்தனர்.

கணந்தோறும், நிலையின்றிப் புரளும் அலைகள் அவர்தம் கலத்தைச் செலவொட்டாது தடுத்தற் கெழுந்தன போல வெழுந்து அலைப்ப, அவற்றிடையே ஒடுங்கா வுள்ளமும் கலங்காக் கொள்கையு மல்லது பிறிதில்லாத அவர் மனத் திட்பம், அவ்வலைகளின் தலையை மிதித்தேகியது; விரிகடலைச் சுருக்கிற்று; நெடும்போது குறும் போதாக, நீர்க்காற்று நிலக்காற்றாக, பகல் மாய, இரா வணுக, வினை முடிவின் துனைவு மிக, அமெரிக்கப் புது நாட்டின் அடைகரை புலனாயிற்று, அடர்த் தற்கெழுந்த அலைகள் அவரைத் தலைமேற் சுமந்து தாலாட்டின; வன்காற்றாய் மடித்தற்கு நின்ற கடற்காற்று, மென்காற்றாய் அவர் மெலிவு தீர்த்து மகிழ்வித்தது, ஈதன்றோ வினைமாண்பு! என்றும் பொன்றாத இன்பவிசை நல்கும் - வினையினும், உழைப்பினும் ஏற்றமுடைய தொன்று உண்டுகொல்! இல்லை! இல்லை! எஞ்ஞான்றும் இல்லை!

இனி இவ்வுழைப்பினை நம் பண்டைச் சான்றோர் ஆள் - வினையென்றே வழங்கி யிருக்கின்றனர். உள்ளத்தின் ஆட்சி வழி நிற்கும் உடல் புரியும் வினை உழைப்பாதலால், அதனை ஆள்வினை யென்றது எத்துணை அழகுடைத்து! காண்மின், அவ்வாள்வினையே ஆடவர்க்கு உயிர் என்பதனால், ஆடவனை ஆண்மகன் என்றல் எத்துணை அறிவுடை மொழி! காண்மின் ஆண்மக்களே! உங்களது ஆண்மை, ஆள்வினையே, அயரா, உழைப்பே, அதனையுடைய நீவிர் என் செய்கின்றீர்கள்? அயர்ந்து உறங்குகின்றீர்கொல்? உறங்கன்மின்; உறங்குதல் உய்வற்றார்க்கே உரியது, ஓய்வு உலையா உழைப்புடையார்க்கே உரியது. உழைப்பவர் ஓய்வு கோடற்குரியர், ஓய்வுற்றவர் உறங்குதற் குரியர்; உறங்குவோர் மீட்டும் உழைத்தற்கு உடற்கும் உள்ளத்திற்கும் உரந்தருபவராவார். உங்களது உறக்கம் மீட்டும் உழைத்தல் வேண்டி உங்கட்கு ஊக்கம் செய்தற்கமைந்தது; அதற்குரிய போது இரவுப்போதே, ஆகவே, பகற்போது உழைப்புக் குரியதாகும். உழைப்புக்குரிய அப்பகற்போது உறங்குதற்குரிய தன்று; அதனால் பகற்போதில் நன்கு உழைமின்.

உலகம் விரிந்து கிடக்கின்றது; இதன்பால் உயரிய பயன் உளது; உழைப்பவர் அப்பயனை நுகர்தற்குரியர்; உலகையளித்த ஒருவன் உங்கட்கு உடம்பு நல்கியுளன்; அவ்வுடம்பினை உலகில் இயக்கி உறுபயன் பெறுதற்குரிய உறுகருவியாக உங்கட்கு, அவன் உள்ளத்தையும் உதவியுளன், உள்ளத்தால் உள்கியவழி உழைத்தற் குரிமையும், ஆற்றலும் உங்கள்பால் உள என்பது விளங்கும். அவற்றை வெளிப்படுத்தல் உங்கள் கடன். ஆற்றலும் உரிமையுமுடைய நீவிர் உழைக்குமிடத்து, எங்கெங்கு முறை பிறழ்ச்சி தோன்றுகின்றதோ, அஃது உங்கள் உயிர்க்கிறுதி பயக்கும் உறுபகையாதலின், அங்கங்கு முறைமையை நிறுவுதல் வேண்டும்; நெல்விளையும் வயலிடத்துப் புல் முளைய விடுவிர்கொல் துரும்பாயினும் விரும்பி பீட்டுமின் பருத்தியின் பஞ்சு காற்றிற் பறக்கும் புன்மைத்தாயினும் விடாது பற்றுமின், ஈட்டுமின்; பாங்குற நூன்மின்; அஃது அற்றம் மறைக்கும் ஆடையாகுமே; "அணியெல்லாம் ஆடையின் பின்.” உழைப்பிற்கு “ஊறு செய்வன பிறவும் சிலவுள. அவை அறியாமையும், மடமையுமாகும். அறிதற்க்ரிய அமைதி பெற்றும், அறிய வேண்டுவனவற்றை அறியவிடாது, மருட்சியும் அச்சமும் பயப்பித்துச் செய்வினை சிதறுவித்தலின், அறியாமை உழைப்பிற்கு ஊறு ஆகும். அறிவுடையோர் அறிவுறுப்பவும், ஆற்றற்குரிய வினையும் உரிமையும் அருகில் இருப்பவும், ஆள் வினைக்கண் கருத்தை இருத்தாது, மடிமைக்கண் மடிந்து கிடப்பித்தலின், மடமையினைத் தகர்த் தெறிதலும் ஆண்மகற்கு அறமாகும். அதனைச் செய்யவேண்டு மென்பது ஆண்டவன் ஆணை. "இன்று", “இப்பொழுது", “இக்கணம்” என்று வழங்கும் காலமே, அதனை அயராது ஆற்றற்கமைந்த அருமைக் காலமாகும். அயர்ந்தவழி இரவு வந்துவிடும்; அக்காலத்தில் எவரும் உறங்குவரே யன்றி உழைத்தலைச் செய்யார்.

எல்லா வகை உழைப்பும் ஏற்றமுடையனவாகும்; அவற்றுள் கையால் உழைக்கும் உழைப்பில் கடவுட்டன்மையுண்டு எனக் கார்லைல் என்னும் பெரியார் கவினக் கூறுகின்றார்; இக்கட்டுரைக்கண் அடங்கிய கருத்துகளை வழங்கிய பெரும் புலவரும் அவரே. உழைப்பு உலகேபோல் பரந்த பண்பினையுடையது; இதன் உயர்வு வீட்டுலகின் உச்சியிலுளது. முதற்கண் உடலிலும், பின் மூளையிலும், முடிவில் உள்ளத்திலும் ஒன்றியுலவிப் பயன் உறுவிக்கும் உழைப்பே, கெப்ளர் கண்ட கோணிலைக் கணக்கும், நியூட்டன் நிகழ்த்திய நெடும் பொருளாராய்ச்சியும், அறிவியற்கலைகளும், ஆண்மைச் செயல்களும் இன்னுயிர் வழங்கி இசை நடும் இயல்பும் யாவும் தோற்றுவித்த ஏற்றமுடையது. ஆதலால், ஆண் கடன் இறுக்கும் மாண்புடை மக்காள்! உழைப்பே ஆண்டவன் உருவெனவுணர்மின். அதற்கு அழியாது ஆற்றலே அவனது திருப்பணியென அறிமின்; பரந்த உலகில் சிறந்தோங்கிய பெருமக்கள் கண்டுணர்ந் துரைத்த முதுபொருளும் இதுவேயாம்.

உழைப்பினை வெறுத்து நொந்துரைக்கும் ஒருவன் உளனோ? உளனாயின், அவனை அது செய்ய வேண்டாவென உரைமின். ஒடுங்கிக்கிடக்கும் அவன் முன் சென்று, "அன்ப, ஒடுங்குதல் ஒழிக. இதோ, உன்போல் உழைத்த தோழர்கள் உயர்நிலை யுலகத்தில் இன்பஞ் சிறந்து இனிதே உறைகின்றனர். அவர்களன்றோ ஆங்கே இன்புறுகின்றவர்; பிறர் எவரும் இலரே இந் நிலவுலகினும், உழைப்புநலத்தால் உயர்ந்த வரன்றோ, மக்கள் மனநிலத்தில் மன்னி, வானவரும் முனிவரரும் போலக் காலங்கழியினும் கோலங் கழியாது என்றும் நின்று நிலவுகின்றனர்", எனத் தெருட்டித் தெளிவுறுத்துமின்.
------------

3. வரனென்னும் வைப்பு

உடம்பொடு கலந்து தோன்றும் உயிர்த்தொகையுட் சிறப்புடையவென உயர்ந்தோரான் உணர்த்தப்பெறும் மக்களுயிர்க்கு உறுதிப்பொருளெனப் பெரியோர் வகுத்துக் கூறும் நால்வகைப் பொருள்களுள் வீடென்பதும் ஒன்று. அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து எனப் பெரியோர் கூறுவர். கூறினும், அது இவ்வுலகம் போல் அழிதன்மாலைத்தாய இன்பத்தினைத் தராது, எஞ்ஞான்றும் குன்றா வின்பம் தரும் பேருலகமெனவும், அதனை நாடியே உயிர்கள் நிற்றல் வேண்டுமெனவும் நம் ஆன்றோர் கூறுவதனோடு அமையாது, அவ்வுலகநாட்டம் உயிர்கட்கு இயற்கையிலே அமைந்துளதென்றும், அது, ஆயும் உணர்வுடையார்க்கே புலனாமென்றும் கூறினர்; கூறுகின்றனர். அக்கூற்றினை ஒருவாறு ஆராய்ந்து கண்ட வழியே, ஈண்டுக் கூறப்பெறுகின்றது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து, சவியுறத் தெளிந்து, தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கான்யா றொன்றின் அடைகரையின்கண், வெயினுழைபறியாக் குயினுழை பொதும்ப ரொன்றிருந்தது. அதன் கண் எண்ணிறந்த புள்ளினம், மண்ணுறு வாழ்க்கைக்கு மாண்புறுத்தும் செவிச்சுவையமுதம் கேட்போர் செவிப்புலம் வளம் பெற அளித்து வாழ்தர, அவ்வினத்து ளொன்றாய இன்னிசைச் செம்புளொன்று பெடையுடன் கிளைமல்க அவ் வடைசினைப் பொதும்பருள், பெற்றதுகொண்டு, பேரறம் நேர்ந்து, பெறலரும் இன்பமே துய்த்து வந்தது. அதனால், அது, எங்கெழிலென் ஞாயிறு என்னும் - இறைவனருளா லெய்தும் இதனைச் செம்பகம் என்றும் வழங்குப.

நெஞ்சிறுமாப்பும், பழியஞ்சி யீட்டும் பொருளின்ப முடைமையின், வழியெஞ்சா வான்பொருளும் உடையதாயிற்று. ஆகவே, அதற்கு இனி வேண்டற்பால தென்னாம்? ஒன்றுமில்லை யன்றோ!

நிற்க, ஒருநாள், இச் செம்புள்ளின் வாழ்க்கைத்துணையாய், ஒத்தவுணர்வும் பான்மையு முடையதாய், துணைச்சேவற்கு ஒருவாற்றானு முயர்வுதாழ்வில்லாக் கவினுங் காட்சியு முடையதாய் விளங்கிய பெடைப்புள், தன் கூட்டகத் தமர்ந்து, பார்ப்புக்கட்கு உணவாவனவற்றை யளித்து உவந்திருக்கையில், பகல்செய்யும் செஞ்ஞாயிறு பாவையிற் படிய, பைய இருள் வந்து பரவ, இன்பத்தெண்கால் இடைவந்துலவ, அருகோடிய அருவிக்க ணெழுந்த சிறுதிரை பொருதுவீழ்தலின் எழுந்த விழுமிய வோசையாங்கணும் பரவ, விரிகதிர்மதியம் விண்ணகத் தெழுந்து, மண்ணக மடந்தையின் மயக் கொழிப்பதுபோலத் தன் ஒண்கதிர் பரப்பிற்று. அது காலை, அப் பார்ப்புக்களு ளொன்று, தன் சிறுதலையை நீட்டி, அன்புகளிையும் ஆய்முக நோக்கி, "அன்னாய்! வாழி! நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய இத் தெண்ணீர்யாறு செல்லிடம் யாதுகொல்” என வினவ, கேட்ட தாய்ப்புள், விடையறியாமையின், விளம்பல் கூடாது, குறுநகை காட்டி, “மக்காள்! யான் அறியேன். கலின் எனக் கலிக்கும் தூக்கணங்குருவியையாதல், கட்புலங்கதுவா விட்புலம் படரும் வானம்பாடியை யாதல் கேட்டல் வேண்டும். ஆண்டுத் தோன்றும் கோட்டெங்கின் குலைமீது அவை ஒருகால் வந்தமரினும் அமரும். அது போழ்து நீவிர் மறவற்க. நீவிர் கேட்டதும், அதனோரன்ன பிறவும் அறிதலாம் என்று கூறி, வானம்பாடியின் வள்ளிசையைத் தன் மென்குரலால், வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் இசைப்ப, குரீஇக்குஞ்சுகள் குளிர்ப்பெய்தி, “வானம்பாடிகொல் இக் கானம் பாடியது” என்றெண்ணலாயின.

மற்று, அவ் வானம்பாடும் வண்குருகு, தன் மெல்லிசை கொண்டு, காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும் குளனும், வேறுபல் வைப்பும், ஊரும் நகரமும் உறைதரும் இல்லமும், ஊறுசெய் விலங்கும், ஊனுண் வேட்டுவர் விரிக்கும் கண்ணியும், பிறவும் மெய்பெற விசைத்தல் மரபு. அதனையொரு காலேனும் அருகமர்ந்து நன்கு கேட்டறியா இச் செம்புள், பாடுங்கால், அவ் விசைப்பொருள் முறையிற் சிறிது பிறழ்தலும் குறைதலுமாயின. இழுக்குடைய பாட்டாயினும், இசை நன்றாயின்மை கொண்டு பேருவகை மீதுரத் தாமும், தம் அன்னையொப்ப, மெல்லிசை மிழற்றல் தொடங்கின. இங்ஙனம் குரவராயினார் செய்யும் செய்வினையை மக்களாயினார், நுணுகி நோக்கி, அம்முறையே செய்தல் உயிர்த்தொகையுட் சிறந்து விளங்கும் இயல்புகள் பலவினுளொன்று. இதுவே, ஏனையறிவுவளர்ச்சிக்கும் பிறவற்றிற்கும் ஒருதலையாக வமைந்த அடிப்படை யென்பது கல்வியாளர் கோள். இதனை யீண்டுரைப்பிற் பெருகும்.

வெள்ளி முளைத்தது; விடியல் வந்தது; பறவை பாடின; பல்லுயிரும் பரவுக்கடன் செய்தன; விழுந்த ஞாயிறும் எழுந்தது; மென்காற்று வீசலுற்றது; பூநான்கும் பொதுளி வெறி திசை நான்கும் போய்உலவ, சுரும்பு தோைர்ந்தன. சேக்கையுளுறங்கிக் கிடந்த செம்புட்குஞ்சுகள், உறக்க நீங்கி, ஒருபுடை வந்து, உவகை கூர்ந்தன. அதுபோது, தாய்ப்புள், தன் செல்வச் சிறு குஞ்சுகளின் மருங்கமர்ந்து, தன் மெல்லிசையைத் தொடுத்து, யாற்றுநீர்ச்செலவின்மேற் பாடிற்று. அக்காலை கரையாக் கல்லும் புல்லும் கனிந்துருகின. சுருங்கக்கூறின், அவ்விசை யின்பத்தால்,

“மருவியகால் விசைத்தசையா; மரங்கள்மலர்ச் சினைசலியா;
கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்தோடா;
பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்ந்தொழியப் புனல்சோரா;
இருவிசும்பின் இடைமுழங்கா; எழுகடலும் இடைதுளும்பா.”

எனுந் தீங்கவியே அமையும். -

இங்ஙனம் சிறந்தோங்கிய இசையொன்றில், அப் புள் வீறுற்றதே யொழிய, அதனுளத்தில், சிறுகுஞ்சு வினவிய பொருள்மாத்திரம் புலனாயிற்றன்று. ஆயினும் தானும் தன்பார்ப்புக்களும் ஒருபகல் அவ்வாறு செல்லிடம் சேறல் வேண்டு மென்னும் திப்பிய வுணர்வொன்று அதன் நெஞ்சத் தகலாது நிலவுவதாயிற்று. இவ்வாறு நாட்கள் பல சென்றன. அப்புள்ளும் யாற்றுநீர்ச்செலவு பொருளாகப் பாடி வந்தமையை நீக்கிப் பிறிதோர் இடமொன்றனை நாடிப் பாடுதல் தொடங்கிற்று. அக்காலை அவ்விடமே, இவ்வாறு செல்லிடமாம் என்பது அதற்குத் துணிபாயிற்று. இவ்விடத்தைக் கேட்குந்தொறும் அப் பார்ப்புக்களும் தம் தாய்ப்பறவையை, அதனைக் குறித்த வினாக்கள் பல நிகழ்த்தாது ஒழிவதின்று.

நிற்க, இவ்விடம் யாதாக விருக்கலாம்? சிலர் இதனை நாம்யாண்டிருந்து போந்தோமோ ஆண்டையது என்பர். வேறு சிலர் நாம் இனிச் செல்லுமிடம் யாது அது வென்பர். சிலர், இத்தகைய இடமே இல்லை யென்பர். வேறு பலர் நாமும் பிறவும் நீங்கியதும், நீக்கமற இனிச் சேருவது மாய இடம் என்பர். இதுபற்றிக் கூறற்பாலன ஒருவாறு கோடற்பால வல்ல வென்பது காட்சி யொன்றையே அளவையாக் கொள்வார் துணிபு. மற்று, நாம் காண்டல், கருதல், உரை யென்னு மூன்றையும் அளவையாக் கொள்ளும் பான்மையே மாகலானும், அவற்றானாராயுங் காலத்து, உளத்திற் றோன்றும் சில வுணர்வுகளும், உணர்ந்தோர் பலர் கூறிய உரைகளும் அப்பெற்றித்தாய இடமொன்றுண்டென்பதனை வலியுறுத்துகின்றன. ஆயினும், அதனை ஒருவாறு நாம் காண்டற்குமுன் அறியாவுலகம் என வழங்குவோம். முதனூலாரும் இவ்வாறே வழங்குகின்றார். அன்றியும், இவ்வுலகைப் பற்றி, இருண்ட வுணர்வுகளே அப் பறவையின் உணர்வுட் கலந்து கிடந்தன.

இனி, அத் தாய்ப்புள், தானே தனித்தமர்ந்து, அவ்வுலகு பற்றிய வுணர்வுகள் தன் மனத்தெழுந்தோறும், இசைத்துக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்தூற. உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகிக் களிக்கும். இக் களியாட்டினைப் பின்னர் அது, தன் பார்ப்புக்கள் காணவும் கேட்கவும் செய்தயர்தல் தொடங்கிற்று. இங்ஙனம் செய்தற்குக் காரணம் யாதாகும்? அப் பார்ப்புக்களும் இதனைத் தொடர்வனவல்லவோ? அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ? அது போலும் காரணம்!

இவ் வண்ணம் நாட்கள் சில சென்றன. ஒருநாள் அக் குஞ்சுகளு ளொன்று, ஆய்முகநோக்கி, அவ் வுலகு யாண்டுள தென்று கேட்ப, அது, “அவ்வுலகம் உண்டென்பது உண்மை: மற்று, யான் அஃது உறுமிடம் அறியேன். ஆகலின்,
----
“I may call it the Unknown Land."
-------------
அவ்விடத்தை யான் கூறுதல் கூடாது" என்றது. என்றலும், அவற்றுட்டலைக் குஞ்சு முன்னின்று, "இவ் யாறு செல்லுமிடம் யாது, அது அவ் அறியாவுலகம்!" என்றது .இது உண்மை கொல்? அன்று. அவ் யாறு, மறுவில்மானவர் மலிந்த மூதூர் வெறிது சேறல் விழுப்பமதன்றென மலைபடுபொருளும் கான்படு செல்வமும் தலைமணந்துகொண்டு, பெருநகரடைந்து, கால்வழிச் சென்று, வயலிடைப் படர்ந்து, அதன்கண் விளையும் பைங்கூழ் வளர்த்து, வணிகர் மரக்கலம் அணிபெற மிதப்ப, மங்கையர் குடைந்து மாணலம் புனைய, புரிநூல் மார்பர் அருங்கடனாற்ற, மீனுண்குருகும், துண்டில் வேட்டுவரும், திண்டிமில்வாழ்நரும் செல்வம் மீக்கொளப் பரந்து சென்று, கோனோக்கி வாழுங் குடியனைத்தும் வானோக்கலின், அதற்கின்றியமையாப் பெருமழை பிறக்கும் பெருந்திரைப் புணரியைப் புணரும்! இப்புணரியோ அறியா உலகெனப்படுவது பகலின் பான்மையும் இரவின் எழிலும் புள்ளினத்துக் கொருபொலிவும் மாவினத்துக்கொருமாண்பும் வயங்கத் தருவனவாக, இவையனைத்தும் தந்த வொருவன், இவை செல்லிடமொன்றைச் செய்யாது விடுவனோ?

இது நிற்க, "அன்னாய் அறியாவுலகின் அழகினைக் கூறுவதால் ஆகும்ப்யன் யாதுகொல் அதனைப் பலகாலும் பாடிப் புகழ்தல் எற்றுக்கு?" என்று தொடங்கிய ஒரு குறும்புள். "தேனுாற்றெடுப்ப மணநாறும் பூம்பொழிலகத்தைவிட்டு நாம் வேறிடம் சேறல் என்னை? மென்றளிரும் நறுமலரும் மிகைபடச் செறிந்த கூடொன்றாக்கி, நாம் ஏன் என்றும் ஈண்டே வாழ்தல் கூடாது? வான்குயில்க ளிசைபாட வரிவண்டு பாண்மிழற்ற, மான்கன்று பயின்றுள்ள, பல்லுயிரும் பொலிவெய்த விளங்கும் இவ்விளமரக்காவினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ? ஆருயிரன்னாய்! நாம் வேறிடஞ்சேறல் வேண்டா. இதுபோது, சிந்தாமணி தெண்கடலமிர்தம் தில்லையானருளால் வந்தாலிகழப்படுமே முயற்சியின்றியே பெரும் பயன் எய்துதற்குரிய இடம் அதுவாயினும், யான் இவ்விடம் விட்டுப் பெயரேன். ஒழிக. இனி வேறுபுலஞ் சேறல். பைந்தாட் கோரையும், பசிய தளிர்நிறைந்த புதலும் மிக்க இவ் வடைகரையினும் இனிதுகொல் அவ் அறியாவுலகம் ஆகலின், அன்னாய்! இனிப்பாடுதலொழிக! பாடுதற்கு உளம் ஒருப்படுதலும் ஒழிக!" என்றது.

பின்னர் அத்தாய்ப்புள், தன்மனத்துப் பலவேறுவகைப்பட்ட எண்ணங்கள் படர்ந்தெழுந் தடங்க, வெய்துயிர்த்து, வேறு கூறா தொழிய, மற்றொரு சிறுகுருகு கூறும். அது, ‘இறுத்த இருள் கெட, யாண்டும் இளங்காலும், இன்னொலியும் எழ, பொன்னுருக்கென்ன இளவெயில் பரப்பி, விடியலிற் கீழ்க்கடலின் முகட்டெழும் இளஞாயிற்றினைக் காணாய்! தெண்ணிரின் திரையிடை, அச்செஞ்ஞாயிற்றின் செங்கதிர்கள் தவழ்தலும், ஆண்டுப் பல் வண்ணங்கள் தோன்றி மிளிர்தல் காணாய்! வரிக்கெண்டையும் பருவராலும் நண்பகலொளியில் மின்செய்து மறைதலும், இளந்தளிர்கள் ஒளிதெறித்தலும் பிறவும் காணாய்! தண்டென்றல் தளிரசைப்ப, பார்ப்புக்கள் கிளைபடர்ந்து இசைபாட, புதுமலரின் மணம் பரவ, காலையணிந்து பகலெல்லாம் ஒளியின்றியிருந்த கவினனைத்தும், மாலையிற்றுவர முடித்துத் தோன்றும் இயலணங்கின் எழிற் செவ்வியை மறத்தலும் கூடுமா? ஈண்டாயினும், ஆண்டாயினும், யாண்டாயினும் அமர்க. வெண்மதியின் தண்கதிர்கள் பைந் தழைகளின்மீது பரவி, கலித்தோடும் அருவிநீரில் ஆடல் பயின்று, பூங்காவை வானமாக்கி, கான்யாற்றை, அத்திங்கட் புத்தே ளுர்ந்து செல்லுந் தேர்வழியாக்க, விளங்கும் இரவுப் பொலிவை நினைத்தொறும் நெஞ்சம் வேறோரிடத்தையும் நினைக்குங் கொல் திண்கலமும் சிறுநாவாயும் செல்வுழிச்செல்வுழி யெழும் ஒய்யெனும் ஓசை நம் உறக்கம் கெடுப்ப, நெடுந்தருவின் பைங்கிளை படர்ந்து பாடலை நம் இனம் பயில, இன்பக்காட்சியே யாண்டும் இலங்கும் இந் நிலத்தினும் அவ் அறியாநிலம் அழகுடைத்தோ?

"துஞ்சுவது போல இருளி, விண்பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்(டு)
ஏறுவது போலப் பாடுசிறந்(து) உரைஇ
நிலநெஞ்(சு) உட்க ஒவாது சிலைத்தாங்(கு)
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்.”

நாம் நம் படையமை சேக்கையைப் படர்ந்து, ஒன்றோடொன்று புல்லி இருக்கின் கார்செய்பணிப்பும் கலங்குதுயர் செய்யாதாக, எழுந்த வெம்மையால் இன்பம் மிகும் இவ்விரும் பொழிலினும், நீ கூறும் அப்பூம் பொழில் ஏற்றமுடைத்தாமோ? ஆதலின், அன்னாய் வேறுபுலம் முன்னுதலை விட்டொழித்து, இப்புலம் பற்றிய இன்னிசையே மிழற்றுதி!’ என்றது.

பின்னர், அத்தாயாய செம்புள், இங்ஙனங்கூறிய தன் செல்வக்குஞ்சின் பெருஞ்சொற்களைக் கேட்டு, ஒருவாறு, உளத்தைத் திருத்தி, “செல்வங்காள் இனி நீவிர் விரும்பிய வண்ணமே வேறொரு பாட்டே பாடுவல். போற்றிக் கேண்மின் என்று ஒரு மெல்லிசை, பொருள் செறியப் பாடுதல் தொடங்கிற்று. அப்பொருள்:

“பரந்த உலகிடைத் தோன்றிய யாவும் தன் பொறிபுலன்களின் வழியே மனத்திற்குக் குன்றாவின்பமும், அச்சமறியா வியல்பும் நல்கத் தான் பெற்றுவாழ்ந்தமையும், அவ் வாழ்க்கையில் நாட்பல செல்ல, தனக்கு உள்ளிருந்தே, இஃது நின்னிடமன்று என வோர்பொருண்மொழி யெழுந்திசைத்தமையும்; அம்மொழி, பின் பலமுறையும் இசைப்பக் கேட்ட தான், ஒருகால் உவகையும், ஒருகால் வெறுப்பும், பலகாலும் கேட்டற் கொருப்படாது சேறலும் கொண்டிருந்தமையும்; இருக்கையில், தான் வாழுமிடமே மேதக்க இடமாவது, அதனை நீங்குதல் அறவே கூடாது என்னும் உவகையுணர்வு தோன்றினமையும்; பின்னர்த்தன் மனக்கினிய துணைப்பறவை போதந்து, காதல் செய்து களித்துக் கலந்தமையும்; அதுகாலை, அம்மொழிப் பொருள் பன்முறையும் எழுந்து, ஊன்கலந்து, உடல்கலந்து, உயிர்கலந்து, பின்னர் உணர்வுங் கலந்து ஒரோவோசையாய் உருவெங்குங் கலந்துநின்றமையும்; அக்கலப்பே, தன் துணைப்புள்ளிற்கும் நிகழ, இரண்டும் உளங்கலந்து இக்கான்யாற்றடைகரை யடைந்து, சிற்றிற் சமைத்துச் செவ்விய வாழ்க்கை நடாத்தி வந்தமையும் பிறவுமாம்.

இதனைக்கேட்ட பார்ப்பினுள் ஒன்று, "அற்றேல், அன்னாய்! நீ பண்டே யிருந்த இடம் யாண்டையது? அருகுளதாயின், யாம் அனைவரும் ஆண்டே படர்ந்து, இன்பந்துய்த்து இனிது வாழலாமே!” என்றது. எனவும், தாய்ப்புள் உளங்கலங்கி, ஆருயிர்ச் செல்வமே! அதனையெங்குளதென்பேன் அறியாவுலக மென்டேனோ அன்றி மிகமிகச் சேய்மையிலுள்ளதோர் விண்ணிடம் என்பேனோ யாது கூறுவேன்! யான் அறியேன்.

ஆயினும், அன்றெழுந் திசைத்த பொருண்மொழி இன்று மெழுந்து ஈர்கின்றது. அது அன்றிட்ட ஆணையை மேற் கொண்டடங்கிய யான் இன்று விடுத்தல் கூடுமோ? அயராவின்பத்திற்றிளைத்திருந்த அன்றே அவ்வாணையை யேற்ற யான், இளமையும், அதனானாம் இன்பமும் இழந்த இந்நிலையிற் கொள்ளாதொழிதல் முறையோ? ஆகவே, என் அருமைச் செல்வங்களே! அவ் அறியாவுலகம் யாண்டமைந் திருப்பினும் இருக்க. நாம் அனைவரும் அதனைநோக்கிச் செல்வம். வம்மின் யான் கூறுவது உண்மையே என்னும் உறுதிநோக்கங் (Faith) கொண்டு ஒருப்படுமின்’ என்றது.

என்றலும், “நீயும் எம்மொடு வருதியன்றே. ஆயின், யான் இன்னே வருவல்” என்று மிகச்சிறியதோர் பார்ப்பு விளம்பித் தன் தாயிசைத்த தனியிசையிற் றானுங் கலந்து பாடல் தொடங்கிற்று.

இன்னணம், சொல்லாடலாலும் இசையாலும் பொழுது கழிய, “வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நிழற்செய்யவும், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்குபெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்’ மாலை வந்தது. வரக்கண்ட தாய்ப்புள், தன் பார்ப்புக்களைத் தமித்துவிட்டு இரைதேடுவான் சென்றிருப்ப, அவற்றுளொன்று அண்மையிலோடிய அருவியின் மருங்குநின்ற புதற்கணமர்ந்து, அருவியின் கலிப்பும், அடைசினை யசைதலி னெழு மார்ப்பும் கேட்டலும் களிமீக்கூர்ந்து, அங்கு மிங்கு மோடியோடித் தன்னல்லிசை கொண்டு இன்னிசை மிழற்றத் தொடங்கிற்று. அக்காலை அது இசைக்க முயன்ற இசைகள் பலவும் இயைபுபடாதொழிய, இறுதியிற் றன்றாய் பாடிய அறியாவுலகவிசையை இயக்கிப்பார்க்க, அது நன்கனம் கைவரவுவந்து அதனையே எடுத்தும் படுத்தும் இனிது பாடிக் கொண்டிருந்தது.

"ஆ! யாழோ! குழலோ!! இன்றேன் பெருக்கோ!!! என்பெலாம் உருக்கும் இன்னிசை மிழற்றவல்லது யாதுகொல்! ஆ! தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் கலியா, நீண்ட பொருப்பினின்றும் இழியும் அருவிக்காலும் நதிகளும் புரண்டு துள்ளா; எப்பொருளையும் தன்வயமாக்கி, உள்நிறை யுயிரும் மெய்யும் உருக்குகின்றதே!’ எனப் புகழ்வது போலும் இழித்தக்க கூறிக்கொண்டே புறவமொன்று ஆண்டு அதனருகே வந்தது. இது புறங்குன்றி கண்டனையதேனும் மூக்கிற் கருமையு முடைத்து; அன்றியும் ஒண்மை யுடையம் யாம் என்னும் வெண்மை தலை சிறந்தது. எக்குடிகெடுக்வோ, எதனலம் தூற்றவோ ஈண்டு இஃது வந்துளது. இதனியல்பறியாச் சிறுசெம்புள், தான் கேட்ட இதன் பொய்யுறு புகழ்ச்சியை மெய்யுறு புகழ்ச்சியென் றெண்ணி, பெரிதும் முயன்று பாடலும், இம்மடப்புறவம், தன் சிறுதலையைப் பையத்துளக்கி, ‘நன்று, நன்று, யானும் பல விடங்கட்குச் சென்றுளேன். பல இன்னிசைகளாற் றோட்கப் பெற்று முளேன். ஒருகால், மக்களகத்துப் போற்றி வளர்க்கப் பெறும் பேறும் பெற்றுளேன். எனவே, இசைநலங் காண்டலிற் சிறந்த வன்மை பெற்றுளேன் என்பது நன்கு தோன்றும். யானறிந்தவளவில், ஆணையிட்டுக் கூறுவேன், நின்னொப்பார் ‘ நல்லிசை வல்லார் மக்களினும் இலர். ஆயினும் ஒன்று, நின்னாற் பாடப்பெறும் பொருள்கள் யாவை? அவை யான் இது காறுங் கேட்டனவல்லவே!!’ எனச் சிறிது சுளித்து வினவிற்று.

குறும்புள்:- ஆ. அவை யாவும் அறியாவுலகு பற்றியன.

புறவம் :- எவை? அறியா...

குறும்புள்:- அவை அறியா வுலகின் அழகு, இன்பம், வாழ்க்கையியல்பு, அதனையடையுமாறு முதலியவற்றைக் கூறுவன?

புறவம் :-(நகைத்து) அது அறியாவுலகாயிற்றே! அதனைப் பற்றி நீ அறிந்ததியாங்ஙனம்? அம்மம்ம முற்றாக் காயெல்லாம் முழுத்த கேள்வி வல்லவாயிருக்கின்றன. காடும் செடியும் அவாவறுத்தல் மெய்யுணர்தல் முதலியன செய்கின்றனவே! மெய்யாக, யான் இவற்றை யறிதல் வேண்டும். மூத்து முதிர்ந்த முதுமை மிக்க யான், அவ்வுலகினையறிந்து ஆவன செய்துகோடல் வேண்டுமே! நன்று! அறியாவுலகமென்று நீ கூறுவது யாது? யாண்டுளது? அருள்செய்து கூறுக.

குறும்புள்:- யான் அறியேன். (உணர்வுகலங்கி) ஒருநாள் நாங்கள் அவ்வுலகினுக்குச் சேறல்கூடும் என்பதையன்றி வேறு ஒன்றும் யான் அறியேன்.

புறவம் :- நன்று. அறிந்தேன். பேதையோர் பேதையோர் என நூல்கள் கூறுகின்றன. அவர் யாவர், யாண்டுளர் என ஆய்ந்துகொண்டே வருதல் என் இயற்கை. அன்பே இன்று கண்டேன். நின்மாட்டே அந்நூல்களின் கூற்று வாய்மையாதல் கண்டேன். நீயே அதற்குத் தக்க சான்று. ஆகவே, நீவிற் அறியாவுலகிற்குச் செல்லும் செலவு மேற்கொண்டுள்ளீர். ஆற்றுப்படையின்றியே போலும் அப்பெற்றித்தாய செலவு நீ நயந்தனிராயின், நும் நன்னர் செஞ்சத்து இன்னசை வாய்ப்ப, முன்னிய யாவையும் இன்னே பெறுக! யான் வருவல் என்று கூறிக் கொண்டே பறந்து சிறிது செல்ல, அக் குறும்புள், விருதுப்பட்டிக்கு விரைந்து போங் கலியைக் குறுக்கிட்டு உறுவிலை கொடுத்து வாங்கியாங்கு, “நிற்க சிறிது தாழ்த்தல் வேண்டும். நன்று, தாங்கள் கூறியது யாது? என் அறிவு மயங்குகின்றது” என்றது.

புறவம் :- அறியாவுலகத்திற்கு அமைந்துள்ள நூந்தம் செலவு மேதக்கதே. ஆயினும், இடைப்பட்ட எனக்கும் உனக்குமே அச் செலவு செய்தற்கேற்ற நெறி தோன்றாது போலும்.

குறும்புள்:- ஓ, அதனை விடுக. அவ்வுலகுபற்றிய உம்முடைய கோள் யாது? அதனை யேனும் கூறுக.

புறவம் :- என்னை? ஏ துரும்பே! என்னையோ இகழ்கின்றனை. நன்று! உன்னொத்த சீரிய இசைப் புலமையும், நுட்பமும் திட்பமுமமைந்து அறிவுமுடைய எவ்வுயிரேனும் அறியாத ஒன்றின்மாட்டு வெறிதே நினைந்து சாம்புங்கொல் வேண்டின், நீ நின்னையே கொள்ளலாம். உன்னைப்போல், வாளாது பொழுது கழிப்பதாயின் என்னையும் கொள்ளலாம். ஒன்று கூறுவேன்; யாவருக்கும் ஒல்லுவ தொல்லும் என்பதே சிறந்தது. மிகுத்துக் கூறல் மிக்க ஏதமே தரும்.

குறும்புள் :- அற்றேல், நீர் அவ் வறியாவுலகிற்குப் போகீர் போலும்!

புறவம் :- ஒருகாலும் இல்லை. முதற்கண், யானுறையு மிடம், முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கத் தவா வளப்பமும், விழைவு விடுத்த விழுமியோர்க்கும் விழைவு தோற்றுவிக்கும் விழுப்பமும் வாய்ந்தது. ஆகலின் யான் வேறிடம் விரும்பேன். மேலும், பெற்றது கொண்டு பெறும் பேறே பேறெனப் படுவது. இரண்டாவதாக, கேட்கப்படுவன யாவும் வாய்மைய என எளிது ஆராயாது கொள்ளும் நூம்மோரன்னோர் போலும் சிற்றறிவுடையேன் யானலன். அன்றியும், நீர் கூறும் உலகமொன்று உண்டென்பதையேனும் யான் எங்ஙனம் அறிவது?

குறும்புள் :- என்னை ஈன்றோர் எனக்கு அருளினர்.

புறவம் :-ஈன்றோர்களோ கூறினர் அங்ஙனமா அற்றேல், நீ மிகமிகச் சீரியதோர் பறவையே! நின் ஈன்றோர் கூறுவனவற்றைக் கூறியவாறே உளங்கொளும் நீர்மை வேண்டற்பாலதே அவர்கள் ஒருபகல், நீ செஞ்ஞாயிற்றைச் சென்று சேர்ந்து வாழ்தலுங் கூடும் என்பராயின், நீ ஆமென்றே கொள்ளுவாய் போலும்!

குறும்புள் :-(சீறியது போல்) ஈன்று புறந்தந்த என் குரவர் ஒருபொழுதேனும் என்னை வஞ்சித்ததின்றே!

புறவம் :-என்னை, யென்னை வெகுளுவதென்னை? என்னை செய்தி நின்பெற்றோர் நின்னை வஞ்சித்தனர்; வஞ்சர் என்று ஒருவரும் கூறிற்றிலரே! அவர், நின்னை வஞ்சித்திலராயின், ஒன்று கூறுவேன், அவர் பேதையரே. அன்றேல், பொருளறியாதாரே. நூம்மோரன்னோர் மாட்டு ஒன்றுகூறல் விழைவோர், உண்மையில், உளநேர்ய் கோடல் உலகியல், 'ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர் போஒமளவும் ஓர் நோய்.' நிற்க, அவர் கூற்று வஞ்சனையின்பாற் படுவதோ, பொருளறியாமையின்பாற் படுவதோ, நீயே ஆராய்க. உலகியலும் உண்மையறிவு மிலரோடு உள்ளோர் உரையாடல் ஒருவாற்றானும் ஒல்லாதாகலின், யான் சென்று வருவல். வாழ்க! வாழ்க!! (மறைகின்றது.). இங்ஙனம் அம் மடப்புறவங் கூறிய சொற்களாற் றன் உண்மையறிவு கலக்கங் கொண்ட குறும்புள் ஒரு வாறு தெளிதற்குள், அது கட்புலங் கடந்தது.

மறுபகல், வேனில் வெப்பமும், வெவ்விய காற்றும், இலவாக, தன் தன்மையிலோர் திரிபுண்மையைக் காட்டிற்று. நீனிற வானம் மானிறங் கொள்ளக் கொண்மூவினம் விண் முடின. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வள்ளுறை சிதறித் தலைப்பெயல் பெய்ததாக, கரைபொரு திரங்கும் கான்யாறுவான் யாறொப்பப் பெருக்கிட்டோடி, குளிர்ப்பு மிகுதலும், உறைந்து பட, மாமேயல் மறந்தன; மந்தி கூர்ந்தன; பறவைபடிவன வீழ்ந்தன; கறவை கன்றுகோ ளொழிந்தன; குடாவடி உளியம் முதலியன பெருங்கல் விடரளையிற் செறிந்தன. ஆமா நல்லேறு சிலைத்தன; காற்றுற் றெறிதலால் மயிலினம் வீற்றுவிற் றோடின. இடம்பெற வமைந்த குடம்பைகள், பறவையும் பார்ப்பும் உறையுளின்றொழிய, நிலம்பட வீழ்ந்தன. வரனெனும் வைப்பில் உரங்கொண்ட அன்பு பூண்ட செம்புள்ளின் சேக்கைமட்டில் ஊறொன்றின்றி இனிதிருந்தது. அதனுழை யிருந்த குஞ்சுகள் இவ் வனைத்துங் காண்டலும், பெருவியப்புற்று, பகலோன் கரந்தனன்; பனி மிகுந்துளது என்கொல் எனும் எண்ணந் தலைக்கொண்டிருப்ப, ஒன்று, "பெருவானம் விரிகதி ரின்றியும், முகிற்குலம் பரவப்பெற்றும் உளது! தெண்ணீர்யாறு மண்ணீர்மையுற்று அசைவின்றி யுளது பகலவன் ஒளியே யின்றிப், பார்முற்றும் பசிய இருள் செறியப்பெற்றுளது என்னோ” என்றது.

மற்றும் ஒன்று:- நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை இவ்வுலகு உடைத்தன்றோ!

தாய்ப்புள்:- (நகைத்து) ஆம்! ஆயினும், விரிகதிர்ச் செல்வனை நாம் நாளை காண்டல் கூடும். இஃதுண்மை! நிற்க, இக்காலத்துப் பகற்பொழுது குன்றிவருதலை நீவிர் அறிந்திலீர் போலும்! இன்றெழுந்த புயலே இப்பகற் பொழுதினைக் குறைத்தது; ஆதலாற்றான், செஞ்ஞாயிற்றின் வெங்கதிரும், இம் முகில்வழி நுழைந்து வெயிலெறித்தல் கூடாது போயிற்று. இதுகிடக்க. இத் தலைப்பெயல் நம் குடம்பை முற்றும் ஈரஞ்செய்திற் றின்றாகலின், உள்ளே வம்மின் குளிர்ப்பு நீங்க, யான் அப் பெரும் பெயர்ச் செலவின்மேற் பாட்டொன்று பாடுகின்றேன். பேதையிர், நீவிர் இப் பகற் பொழுதே என்றும் காண்டல் கூடு மென நினைக்கின்றீர்கொல்லோ?

இந் நிலவுலகின் காட்சிநலனைத் தூக்கி யுரைத்த சிறுபுள் முன்போந்து, "அன்னாய்! யான், பண்டு, என்றும் காண்டல் கூடு மென்றே எண்ணினேன், நினைத்தேன்; மற்று, இன்றே யான் அதன்கண்ணும் திரிபுண்மை கண்டேன். ஆயினும் யான் அதற்கு இனி அஞ்சேன் பருதி பரவை படிய, கருமுகில் பெரு மழை பொழிய, வானங் கருக, கான்யாறு பெருகின் வரும் நோய்தீர் மருந்தும் அறிந்துளேன். அது, நாம் அடைய விரும்பும் அறியாவுலகின் ஆய்ந்த நல்லிசை. கேட்ட தாய், உவகை கிளர்ந்தெழ, நுனிக்கொம்ப ரேறி, கேட்கும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் உள்ளிட்ட யாவும் மெய்பணிக்கும்வண்ணம், தேம்பிழிபோலும் இன்னிசை மிழற்றிற்று. அதுகாலை, அதனோடு சேவற்புள்ளும், சிறுபுள்ளும் ஒத்திசைத்து உவகைத்தேன் சுவைத்தன. யாவும் ஒத்திசைத்தன வெனினும் ஒன்றுமட்டில் அந்தோ உளம் ஒருப்படாது, உவகையுங் கூராது வெறுத்த நோக்கொடுநிற்ப, இசைப்பெருக்கு நின்றது. நிற்றலும் அது, ஏனைச் சிறுபுட்களை விளித்து, "இவ்விசை, இதனினும் பத்தடுத்ததாம், அதனுட் கூறப்பெறும் உலகுபற்றிய யாவும் உள்ளவாறு உணரப்பெறின்" என்றது. இவ்வாறே, பிரிவு காரணமாகத் துயருற் றிருந்த பெடைச்சிறுபுள்ளொன்று, நகைத்து, "அதனைப் பற்றி நாம் மிகைபட வுணர்வேமாயின், ஈண்டை நலத்தான் நமக்கு மனவமைதி யுண்டாகா தன்றோ!" என்றது. இவற்றைக் கேட்ட மற்றொன்று, “ஆம், நாம் அவ்வுலகுசார்பாக ஒன்றும் அறிந்திலே மன்றோ உண்மையில், அங்ஙனமோர் உலகு உண்டென்பதை யேனும் எங்ஙனம் அறிதலாம்?" என்றலும், மற்றொரு பெடைப்புள், "அன்று, அங்ஙன மொன்று உண்டென்பதை நாம் நன்கு உணர்கின்றோம். யாதோ? நம் அன்னை கூறிய உள்ளொலி என்னுள் எழுந்திசைத்தது! யான் உணர்ந்தேன்" என்று கூறிற்று.

இக் கூற்றினைக் கேட்ட தலைக்குஞ்சு, "உன்னுள் எழுந்திசைத்ததாக நீ நினைத்தனைகொல்லோ அது தானே ஆ இவையாவும் வெற்றுரைகளே. இங்ஙனம் நின்னைக் கூறுமாறு நம் அன்னை கூறினாள்போலும் அம்மம்ம! நீ கூறுவனவும், அன்னை கூறுவனவும் பிறவும் வீண் பொருளில் யாப்புக்களேயன்றிப் பிறிதில்லை. நுண்ணிய கேள்வியறிவு மிகினும் இயற்கையறிவு கூடினன்றோ அது மாட்சி பெறும் யானும் அப்புல்லறிவே மேற்கொண் டிருப்பின், அவ் வுள்ளொலி என்னுள்ளு மெழுந்திசைத்த தென்பேன். இனி யான் அவ் வுலகு சேறும் செலவையும் நினையேன். சேறற்கு உடன்படலும் படேன். செல்க" எனச் சிறிது வெகுண்டுரைத்தது.

“இஃதன்று நீ நிற்குமிடம்’ என்பது பொருளாக வமைந்த நல்லிசை யொன்றை எடுத்திசைத்தவண்ணம், குடம்பையின் புறத்தே தாய் வர, அகத்திருந்த பார்ப்புக்களுட் சில, தாய் பாடி யதையே தாமும் பாடத் தொடங்கின. அந்நிலையில், அத் தாய்ப் புள்ளின் உள்ளும் அவ் வொலி யெழுந்தது. எழவே, மறுமுறையும், அது அந் நல்லிசையையே தொடங்கி, “இழுமெனோதையின் அருவி யிரங்கலும், மருங்கு கரை கொன்று கான்யாறு சேறலும், விண்ணகங் கடந்து கொண்மூ வேகலும், மால்வரை துளங்கக் கால்பொரு தோடலும், விரிகதிர்ப்பருதி பரவையின் மறைதலும் எப்பொருள் நாடிச் செய்கின்றன. இதற்குக் காரணமாவது, அவற்றி னகத்தெழுந்து, “இஃது அன்று நீ நிற்குமிடம்” என் றொலிக்கும் அருளொலி யன்றோ யாற்றொடு கூடுக முகிலொடு மொழிக காலினை வினவுக! நீவிர் செல்லிடம் யாதென்று அறியாவுலகமே! வரனெனும் வைப்பேயன்றோ! 'நீ செல்லிடம் யா தென வெயிலவனை விளித்துக் கேண்மின். அவன் சேறுமிடனும் அப் பெறலரும் உலகே! குறித்த நாள் வருங்கால் நாம் அனைவரும் ஆண்டுப் படர்குவம்" என முடித்தது.

இவ் விசைவயப்பட்டு மனந்திருந்திய அத்தலைக்குஞ்சு, “அன்னாய்! அன்னாய்! நீ கூறுவது வாய்மை கொல்லோ யான் கொள்ளுமாறு யாது? அவ் வுலகம் உறுமிடம் யாண்டையது? அருள் செய்க," எனக் கசிந்தழுது, தன் தாய்முக நோக்கி, தனக்கு அம் மடப்புறவங் கூறிய அனைத்தும் முறையும் பொருளும் வழாது விளம்பிற்று. விளம்புங்காறும் அமைதிகொண்டேற்ற அச் செம்புள், “அருமந்த செல்வமே! அலமரல் வேண்டா, யான் வேறோர் நல்லிசை யிசைப்பல் கேட்டி" என்று தொடங்கித் தான் பண்டே யகன்ற உலகியலைப்பற்றிக் கூறல் தொடங்கிற்று.

அங்ஙனம், அவ்விடத்தினின்றும் அது அகன்றஞான்று, தான் ஏன் அகறல் வேண்டுமென்று நினைத்ததுண்டோ எனின் இன்று; செல்லுமிடம் இற்றென அறியாமே, பணிவும், உறுதிநோக்கும், நீங்குத னலத்திற்கெனும் திண்ணிய வெண்ணமும் ஆய இவையே அதன் உளப்பொருளா யமைந்திருந்தன. பெருங்கடலுலகிற் பிரிந்து வருநாள், அச் செலவுக்குரிய காரணப் பொருளை யுணர்த்துவாரேனும், “இஃதன்று, அது நின் நெறி" எனக் கூறுவாரேனும், அது கண்டதுண்டோ வெனின், அன்று. அஞ்ஞான்று, அம் மடப்புறவம் கண்டிருத்தல் கூடுமாயின், அது தானும் இவ்வாறு கூறற்பாலதாமோ? இவை யனைத்தும் ஆராயாது போந்த அச் செம்புள் தானும் பின்னர் உரிய நலத்தைத் துய்க்கா தொழிந்ததோ? அதனை யங்ஙனம் சேறல் செய்யுமாறு ஊக்கிய பொருளாய உள்ளொலி யாதாம்? அதுவே திருவருள் என்பது. அப்பறவை, அக் கான்யாற் றடைகரை யடைந்த நாளே உண்மையை ஒருவாறுணர்ந்தது. ஏனெனின், ஆண்டுத் தான் அது சின்னாள்வரைத் தங்குதல் விழைந்தது. பின்னரே, அதன் காதற் றுணைப்பறவை போதந்ததும், வாழ்க்கையின்பம் நுகர்ந்ததும் பிறவும் நிகழ்ந்தன. அன்பர்களே! அது போது, காதற் சேவலொடு கலந்து அது குடம்பை யமைக்கும்போது, தன்வயிற் பின்னர்த் தோன்றுவனவாய பார்ப்புக்கட்கென அக் குடம்பையைச் சமைக்கும் ப்ோது, அம் மடப்புறவங் கண்டிருக்குமேல், எத்துணை இகழ்ச்சி செய்திருக்குங்கொல்லோ! பிற வாப் பார்ப்புக்கட்குங் கூடமைத்தல் பேதைமை என் றெள்ளியிருக்குங் கொல்லோ! அன்றி, “எதிர்வினை யறிதல் யாங்ஙனம்? நீ இங்ஙன் செய்தல் வீண் பொருளில்யாப்பே, இஃது அறிவுடையார் தொழிலன்று" என்றெல்லாம் விரித்துரைத் திருக்குமோ! யாதோ? நிற்க, இச் செய்கைக்கெல்லா மாவதோர் காரணத்தையேனும் ஆராயாது அது செய்தது வஞ்சனையோ? அன்று. இவையனைத்தும் அத் திருவருளின் செயலே யாம் கூடமைத்துச் சேவலோடு கூடி வாழ்க்கைச் சாகா டுகைத்தற்கு, இதற்குப் பாங்கா யமைந்தது அவ்வுள்ளொலி யாய திருவருளன்றோ அதன்வழி நின்றதனாலன்றோ, அருமந்த பார்ப்புக்கள் பெற்று, அயராவின்பத்தில் அது திளைத்திருந்தது! இது காலை அது, தன் செல்வங்கட்குச் செல்வக்காலத்தும் அல்லற் காலத்தும் கோடற்பாலனவாய் உறுதிப் பொருள்களை யுணர்த்தற்கேற்ற அறிவமைதி பெற்றதோ? இன்றோ? "இவை யனைத்தும் பொருளில் புணர்ச்சி, கட்டுக்கதை, புலவர் புரட்சி". என்றெல்லாம் பிதற்றிய அம் மடப்புறவையே வினவுமின், அவ்வுள்ளொலி யதனை வஞ்சித்ததோ வென்று. அன்றியும், அச் செம்புள், “செல்வங்காள் எங்கு, ஏன் சேறல் வேண்டுமென்னும் ஆராய்ச்சியின்றி, இன்னே ஒருப்படுமின். இக்காலை யாம் அறிந்திலோமாயினும், மற்றொருகாலை யறிதல் கூடும்" என்றும், "பணிவும் (Obedience) அறிவும் (Faith) பண்பட்ட காலத்தன்றே, மெய்யுணர்வும், பொருணலமும், விளங்கத் தோன்றலும் காட்டப்பெறுதலும் உளவாம்," என்றும் கூறியதனை அப்புறவம் உணரல் முடியாது போலும்!

பின்னர் நாட்கள் சில சென்றன. காரும் கூதிரும் நீங்கின. மழையும் பனிப்பும் மிகுந்தமையின், வரனென்னும் வைப்புப் பற்றிய நல்லிசை, அவற்றிடை, ஏந்திசையும் தூங்கிசையுமாகிப் பின்னர்ச் செப்பலோசையாய், இசைக்குந்தொறும் கேட்டவை மெய்சிலிர்ப்பவும், கண்ணிர் வாரவும், ஊன்கலந்த உயிர்கலந்து, உளங்கலந்து உடலமெல்லாம் உவட்டாநிற்கும் தேன்கலந்து,
---
பணிவு - வாவென வருதலும் போவெனப் போதலும் என்னும் கேள்விப்பயன். அறிவு - நல்லதன்கண் நலனும், தீயதன்கண் தீமையும் காண்டல் கூடும் என்னும் உறுதிநோக்கினைப் பயப்பது.
------------

தித்திக்கும் தன்மையிற் சிறந்தது. இஃதுண்டாதற்குக் காரணம், என்னையெனின், அவை உண்மை யறிந்தன; அவ்வுண்மையையுணர்ந்தன; அவ்வுண்மையை உறுதி யெனவும் கொண்டன. ஆகலாற்றான், அவை ஆண்டை யின்பத்தையும் ஈண்டேயுணரலாயின.

நிற்க, ஒருநாள், சிறுகுஞ்சுகள் குடம்பையினின்றும் வெளிச் சென்றிருப்ப, அவற்றின் உளங் கலங்குதற் கேதுவாய பேரொலியொன்று அருகே யெழுந்தது. எழ, பேரச்சங்கொண்டு, அவை தம் கூடடைந்தன. கூடு அக்காலை, நிலைகுலைந்து, தளர்ந்து, நீரால் நனைப்புண் டிருந்தது. இருப்பினும், அவை, ஒன்றை யொன்றிறுகப்புல்லிச் சிறிது போது கிடப்ப, ஆய்ப்புள் இல்லாமை தெரிந்தது. எதிர் நோக்கிய கண்கள் பூத்துப்போயின; மனம் பெருந்துயர் பூண்டது. என் செய்யும்!

பின்னர் அவை, கூட்டினின்றும் வெளிப்போந்து, நோக்கு மிடந்தொறும் தம் தாய்ப்பறவையைத் தேடிச்சென்று, தளர்வும், களைப்பும் மீதுர, ஈன்றாரைக் காணாது ஏக்குற்ற நெஞ்சம் துயர்ந்து சாம்ப, காண்டல் கூடுமோ கூடாதோ என்னும் எண்ணம் ஒருபுடை யலைப்ப, பெரும்பேதுற்றகாலை சேறும் நீரும் கலந்து சிறிய நீர்நிலையும், சுற்று மோங்குத லில்லாப் புதலும் உள்ளதோர் துன்பநிலையம் அவற்றின் முன்னர்த் தோன்றிற்று. கூர்ந்து நோக்கியகாலத்து, பறவைச் சிறகும் சிறுமயிரும் சாம்பிய வோசையும் ஆண்டுத் தோன்றின. கண்ட குஞ்சுகள். வேணவா மீக்கொள, அங்குச் சென்று, இறந்த தொன்றும், இறக்கப் போவதொன்றுமாய இரண்டு புட்களைக் கண்டு, இறக்கப்போவது தம் யாயாதல் உணர்ந்து, பட்டதை என் கூறுவது படுவதைக் கண்ட தாய்ப்பறவை, செல்வங்காள் "எழுமின் சென்மின்| திருவருளின் காரியமாய உள்ளொலி உந்தம் உளத்தும் இன்னே எழுந்திசைக்கின்றது. சென்மின் சென்மின் பணிமின் படருமின் தாழ்த்தற்குச் சிறிது போதும் இன்று! இன்பநாட்டமே கொண்மின்!!" என்றது. எனக்கேட்ட குறும் புட்குழாம், "என்னை? எந்தை யாண்டுளார்! ஐயகோ! அன்னாய்! அன்னாய்!” என்று அலறிக் கூயின. "அமைமின்! அமைமின்! யாங்கள் ஆண்டு உம்மோடு சூழ விருத்தல் முடியாது; கூடாது. இனி..." என்று கூறிக்கொண்டே தன் தலையைக் கீழே சாய்த்து, வரனென்னும் வைப்பில் முளைத்தது.

நிற்க, இதனை யீண்டு உரைத்துக்கொண்டே செல்லின் பெருகும்.

திருவருள் கைகூட்டுமாற்றினை வாழ்க்கைமுகத்தான் உணர்த்த வுணர்ந்த பறவைக்குஞ்சுகள், இன்பவுலகை யெண்ணித் தாமும் பேரறம் நேர்ந்து, அப் பேருலகினை யடைதல் வேண்டி முடித்தனவாக, பலவும் பலவேறு நெறியிற் படர்ந்து சென்றன. அவை யாண்டுச் செல்கின்றன வென்றேனும், ஏன் செல்லுகின்றன வென்றேனும் ஒருவரேனும் கட்டுரைத்தல் கூடாது. கனவிற் கண்டன வொப்ப, தம் தாய்நினைவும், தம் பண்டைக் கூட்டி னுறைவும் பின்னர் அவற்றின் புலத்துத் தோன்றலும் மறைதலுமாயின. பெற்றதுகொண்டு பேரின்பந் துய்க்குங் காலத்துத் தம் தாய்நினைவு தோன்றிச் சிறிது மயக்கலும், அவை பின்னர்த் தெளிதலும் ஆய இன்னோரன்ன பல நிகழுங்காலத்து, ஒன்று கூறியது, ‘இதனினும் சிறந்ததோர் இன்பவுலகாதல் வேண்டும் நம் தாய் படர்ந்த வுலகம். அன்னதேயாக, அங்ஙனம் நம் தாய் கூறியதும் உண்மையே போலும்” என்பது.
----------

4. பிறப்பொக்கும் : சிறப்பொவ்வா

வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணதெய்த இரு தலையுமெய்தும் என்னும் செம்பொருளுணர்ந்து, அந்நடுவணதாய பொருளீட்டல் கருதித் திரைகடல்வழியும், மைவரைவழியும் பல நாடுகளுக்குச் செல்லும் மக்கள் உளராதல்போல, சிற்றுயிர்களுள் தேன் தேடிப்பலதிசைகளுக்குஞ் செல்வன பலவுள. அவற்றிற்குத் தேன் எனவும், அளியெனவும், வண்டெனவும், கரும்பெனவும் பலபெயர்கள் உண்டு. நிற்க, ஈண்டுத் தேன் தேடிச்சென்ற் வண்டொன்றின் வரலாற்றினையே யான் கூறத்தொடங்குகின்றேன்.

புதுத்தளிர் தோன்ற, பூக்கள் மலர, நறுமணம் எங்கும் நன்கு பரவ, மலையாநிலம் மருங்குவந்தசைய, யாண்டும் இன்பமே இலகித்தேனாறும் இளவேனிற்காலத்து முதுபகலொன்றின் பிற்பகலில், தேனியொன்று நறுந்தேன் வேண்டிக் காவும், சோலையும், கவின்பூந்துருத்தியும் புக்கு, ஆண்டாண்டு மலர்ந்து வயங்கும் பூத்தொறும் சென்று, கொளற்கரிய தேன் மிகைப்படக்கொண்டு, அதனாலெழுந்த உவகையால் விரைந்து எழுந்து, தன்கூடு நோக்கிச் செல்லத் தொடங்கிற்று. ஆயினும், அதுபோது, அது பூவியல் நறவம் மாந்திப் புந்தி மயக்குற்றிருந்தமையால், வழியறியாது மேலெழுந்து சென்று, அருகிருந்த ஒர் பேரகத்தின் மேற்சாளரத்தினுடே அதன் உட்புறம் அடைந்தது.

அக்காலை அப்பேரகத்தின்கண் ஏதோ ஒருசிறப்பு நடைபெற்றது: இனியவும் மணமிக்கவுமாய பண்டங்கள் பல மலிந்திருந்தன. மிகப்பலமக்களும் கூடியிருந்ததோடமையாது சொல்லாடலாலும், இசைக்கருவிகளாலும் பிறவற்றானும் பேரோசையும் செய்வாராயினர். இவற்றைக்கண்ட தேனீயின் கருத்தில் அச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், பண்டங்களின் சுவையும் மணமும் அதனை வெளியே கவிடாது ஒருபுடைத் தகைந்தன. தகையவே, தேனியும் நறுமணப்பண்டங்கள் வைத்துள்ள தட்டொன்றின் புறத்தேதங்கி, அவற்றின் மணத்தை நுகர்ந்தும் சுவையைத் தேர்ந்தும் சிறிதுபோது கழித்து நிற்க, "ஆ! இதோ பார். தேனீ! தேனீ!" எனக்கூறிக்கொண்டே சிறுவர் இருவர் அதனருகேவந்தனர். இச்சொற்களைக் கேட்ட அவ்வியும், உடனே அச்சத்தால் உடல் நடுங்க வெளிச்செல்வான் முயன்று ஒருசாளரத்தின் மேற்பாய்ந்தது. பாவம்! அதன் கதவு கண்ணாடியாலாயதாகலின், அக்களிவண்டு அதனையுணரவியலாது மயங்கி, ஆடியில் மோதுண்டு கலங்கிக் கீழேவீழ்ந்து, பின்னர்ச் சிறிது தேறி, சாளரச்சட்டத்தின் கீழ்ப்புறத்தே தான் மயக்கத்தாலும் அச்சத்தாலும் இழந்த மனவமைதியும் வன்மையையும் மீட்டும் பெறற்பொருட்டு விழுந்து கிடந்தது.

நிற்க, இதனைக்கண்ட சிறுவர்களிருவரும் அருகேபோந்து, இதைப்பற்றிய ஒரு சொல்லாடல் நிகழ்த்துவாராயினர்.

சிறுவன் :-தங்காய்! இதுதான் தேனி. இதனைத் தொழில்புரி தேனி என்பதும் வழக்கு. இதன் இருதுடைகளுக்கு மிடையிலுள்ள மெழுக்குப் பையினையும் காண். ஆ! என்ன ஊக்கமும் உழைப்பு முடையது இது தெரியுமா!

சிறுமி :- அண்ணால் மெழுக்கையும் தேனையும் ஆக்குவது -

இத்தேனி தானோ?

சிறுவன் :-ஆம். பூக்களின் உள்ளிருக்கும் இனியதேனை இது அவற்றின் உட்சென்று கொணர்கிறது. முன்னொரு நாள் நாம் நம்பூம்புதரின் அகத்தும் புறத்தும் "கம் கம்" என எண்ணிறந்த ஈக்கள் மொய்த்து இசைத்தது கண்டோ மன்றோ அவை அங்குமிங்கும் பறந்து திரிந்ததைக் கண்டு நகைத்தோமல்லவா? இளந்தளிர்களின் மீது இவை படருங் காலத்து இவற்றின் மெய்யழகு நம் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளவில்லையா? நிற்க, இது இன்று காலையில் தேனிட்டுங் காலத்தும் யான் பார்த்ததுண்டு. இதற்குத் தேனிட்டலொன்று தான் தொழிலெனல் ஆகாது.

இதனொடு வேறுபல காரியங்களும் இது செய்தல் வேண்டும். தேன் கூடு கட்டுதல், அதனை யழகு செயல் முதலிய எல்லாக் காரியங்களையும் இதுதான் செய்தல் வேண்டும். இது பற்றியேதான் இது தொழில்புரி தேனி என்றழைக்கப் பெறுதலும் காண்க. பாபம்! பாபம்!!

சிறுமி :- தொழில்புரிதேனி என்பது யாது? அண்ணா தாங்கள் "பாபம்! பாபம்!" என்று இதன்மாட்டு இரங்குவதேன்!

சிறுவன் :- ஏன் தெரியாது? நம் அத்தான் நேற்று நமக்குச் சொன்னதை மறந்துவிட்டாய் போலும்: தம்மைச் சிறிதும் ஒம்பாது பிறர்நலமே யோம்பி யவர்க்கே ஆட்பட்டுச் சிறு தொழில் புரியும் மக்களனைவரும் இரங்கற்பாலரே! அவர் வகையின் பாற்படுவதே இத்தேனியுமாகலின், யான் இதன் மாட்டும் மனமிரங்கல் வேண்டிற்று. இவ்வீக்களுக்கு அரச ஈ ஒன்றுளது. அதனை ஈயரசி யென்பதுவே பெரு வழக்கு. அது ஒரு சிறுதொழிலும், செய்யாது, எஞ்ஞான்றும் தொழிலீக்கள் அமைத்த கூட்டின்கண்ணே இருந்து, அவை கொணரும் தேனையுண்டலும், கொணர்ந்த ஈக்கட்கு வேறுபணி பணித்தலும், தான்பயந்த சிற்றிக்களைப் புரத்தலும், இவற்றோரன்ன பிறவுமே செய்து கொண்டுவரும். அதற்கு வேண்டும் சிறுபணிகளை, மருங்கிருந்து ஆர்க்கும் வண்டுகள் செய்யாநிற்கும். இவற்றிற்கு வேறாக வெற்றிக்கள் பலவுள. அவை ஒரு தொழிலும் செய்யாது வீணே அங்குமிங்குந் திரிந்துகொண்டிருப்பவை. ஏனையவை யாவும் இவ்வியைப்போன்று தேனிட்டிப் பிறவற்றிற்களித்தலோடு, அவற்றிற்காம் சிறுதொழிலைப் புரிபவையே யாகும். இக்கூறியவற்றை நம் அத்தான் அறிவாரேல் அவரால் நகைத்து அடங்குதல் முடியாது.

சிறுமி:- ஆனால், இச்செய்திகள் அத்தானுக்குத் தெரியாவோ?

சிறுவன் :- இல்லை. அவருக்குத் தெரியும் என்று யான் - நினைக்கவில்லை. தெரியுமாயின், அவர் இவற்றைப் பிடித்தலும் பிடித்துத்துன்புறுத்தலும் செய்யாரன்றே. யான் எவ்வாறு அறிந்தேனெனின், எனக்கு நம் சோலைக்காவலன் கூறினான். நிற்க, நெருநல் அவர் கூறியவற்றை நோக்கினையா? இவ்வுலகில், அரசர், அரசியார் என உயிர்களுட் சிலரிருத்தல் இயற்கைக்கே மாறானதாம்; எல்லாரும் ஒரே அச்சாக இருப்பதே இதற்குப் போதிய சான்றாம்; இயற்கையிற் றோன்றும் ஒவ்வொரு பொருட்கும் பிறப்பினால் ஒருவகை வேறுபாடும் இன்றாம்; எனவே, அரசர் எனவும் அரசியரெனவும் இருப்பவர் நடுநிலை வரம்பைக் கடந்தவரே யாவராம்.

சிறுமி :-ஆனால், இவற்றை உய்த்துணர்ந்து கோடல் இவ்விக்களுக்கு இயலாதென யான் நினைக்கின்றேன்.

சிறுவன் :- நினைப்பதென்ன உண்மையிலே அது அவற்றிற்குக் கிடையாதுதான். சோலைக்காவலன் கூறியவற்றை மட்டில் இத்தொழிலீக்கள் கேட்டிருக்குமாயின், எத்தகைய சினங் கொண்டிருக்கும்! நீயே நினைத்துப்பார்!!

சிறுமி :- அவன் கூறியதென்ன?

சிறுவன் :- அரசியையும் ஆட்பட்டொழுகும் சிற்றிக்களையும் சீர் தூக்குங்கால் பிறப்பினால் அவற்றிற்கிடையில் ஒருவகை வேறுபாடும் இல்லை. பிறப்பும் தோற்றமும் ஒன்றே. எனினும் இவ்வேறுபாட்டைத் தருவன உண்டிவகையும், உறையுளின் தன்மையுமேயாம். இச்சிற்றிக்களை வளர்க்கும் பெடை வண்டுகள், சிலவற்றிற்கு ஒருவகை உணவும், வேறு சிலவற்றிற்கு ஒருவகை உணவும்; சிலவற்றிற்கு ஒரு வகைக்கூடும், வேறு சிலவற்றிற்கு வேறுவகையான கூடும் தருகின்றன. அதனால் சில ஈயரசிகளாகவும், சில தொழிலீக்களாகவும் மாறுகின்றன. இக்கருத்தே நெருநல் நம் அத்தான் மேன்மக்களையும் தொழில் மக்களையும்பற்றிக் கூறியவற்றுள் அமைந்து கிடந்தது. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்.” என்பது தமிழ்மறை. நிற்க, உண்ணுங்காலம் ஆயிற்று. வா, போகலாம்.

சிறுமி :- அண்ணால் சிறிது நில்லுங்கள். யான் இவ்வியை வெளியே விடுத்துவருகிறேன்.

இங்ஙனம் கூறிக்கொண்டே, அச்சிறுமி தன் கைத்துணியால் அதனைப் பையவெடுத்து அருளொழுக நோக்கி, “அந்தோ ஏ! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி! குழவிப்பருவத்தே உன்னை வளர்த்தோர் உனக்கு உண்டியும் உறையுளும் உயர்ந்தன கொடுத்திருப்பரேல், ஆ! இன்றுநீயும் ஒரு ஈயரசியாக இருப்பாயன்றோ! என்ன இழிந்த நிலையை உனக்கு அவர் தந்துள்ளார்: அறிதியோ? கிடக்க, நீ இனி வெளிச் சென்று, உன்வானாள் முற்றிலும் மெழுகு செய்தலிலும், தேனிட்டலிலும் செலவிடல் வேண்டும். செல்க. செல்க. நீ மேற்கொண்ட சிறுதொழில் சீர்த்தொழிலாமாக!" என வாழ்த்தி, சாளரத்தின் புறத்தே விடுத்தனள். வெளிப்போந்த வண்டு, கழிபேருவகைகொண்டு தன் வழிச்செல்கை தொடங்கிற்று.

ஆ! என்ன இனிய்மாலைக்காலம்! காட்சிக்கினியமாலைக் காலம்! காதலர்கூடிக் கலந்துரையாடும் மாலைக்காலம்! இங்கனம் இளவேனிலின் முதுமாலை, மன்னுயிர்க்குப் பேரின்பம் பயந்து இனிதாய்த் தோன்ற, அத்தொழிலிக்குமட்டில் அத்தன்மையின் மாறுபட்டுத் தோன்றிற்று. அதன் மனம் ஏதோ ஒர் பொருளாற் பற்றப்பெற்றுத் துயர்பூண்டிருந்தது; அடிக்கடி அது ஒருவகையுணர்ச்சியால் நாணி மிக வருந்தத் தொடங்கிற்று. இவ்வாறு வருத்தமும் துயரமும் மயங்கிய உள்ளமொடு அது தன் கூட்டை - பணிசெய்து கிடப்பதே தன்னறமாகும் என்னும் கொள்கையுடன் அன்று காலையில் விட்டுப்பிரிந்த தன் கூட்டை அடைந்தது. அடைதலும், அடக்கலாகா வெறுப்பும் வெகுளியும் அதன் உள்ளத்துத் தோன்ற, அது தான் கொணர்ந்த தேன்பையை நெகிழ்த்தெறிந்து, மனம் சலிப்படைய, “எல்லாவுயிரினும் கடைப்பட்டேன் யானே காண்" என அறைந்தது.

அக்காலை, அங்குச் சிறுதொழில் செய்துகொண்டிருந்த - மற்றொரு தொழில் இதனைக் கேட்டு, "என்னை செய்தி? என்னே நின் செய்கை யிருந்தவாறு வெறிமிக்க வேங்கையின் தேன் உண்டனைகொல்லோ அன்றி அக்கொடிய பச்சிலைப்புழு நம் கூடுகளில் தன் முட்டையிட்டுளது பற்றிச் சினங் கொண்டனையோ? என்னை காரணம்?’ என வினவிற்று. அதற்கு இது, “நீ கூறிய யாதேனும் வேண்டுங் காரணமாகாது. ஐயோ பாவம்! அவையென் செய்யும்? தாந்தாமுன் செய்தவினையைத் தாமே துய்ப்ப தல்லது பிறர் செய்வதென்?" எனவிடையிறுப்ப, அது, "பின்னர் என்னையோ காரணம். உரைத்தி" என மீட்டும் வினவ, இது கூறும்:- "இல்லை. அன்ப! இன்று காலையிற் சென்ற யான் மிக்க சேணிற் சென்றேன். சென்றவிடத்து யான், இதுகாறும் கேட்டறியாதனவெல்லாம் கேட்டேன். கேட்டவற்றின் கருப்பொருள் “நாமெல்லோரும் இழிதொழில்புரியும் இழித்தக்க உயிர்களாவோம் என்பதே.”

இவ்வுரை அதன் செவிப்படலும், அது திடுக்கிட்டு, "நீ இதுகாறும் அறியாத இதனை உனக்கு உணர்த்தியவர் யாவர்?” எனக் கேட்ப, இது சாலவெகுண்டு, உண்மையை யுணர்த்துபவர் யாவராயினுமென்! யான் இன்று அறிந்தது முற்றிலும் உண்மையே. இதுமட்டில் உறுதியே." என்றது.

எனவே, அது, “ஒரு காலும் நீ கூறியது உறுதியுடைத்தன்று. பேதைச்சிற்றுயிரொன்று இங்ஙனம் பிதற்றியது கொண்டு, பிழைபட்டொழுகுதல் பெருந்தகைமையேயன்று. நீ இழித்தக்கோய் என உணர்வுணர்த்தினாரா லுரைக்கப்பட்ட அச்சிறு பொழுது காறும் நீ அப்பெற்றியை யல்லை யென்பதை நீயே நன்கறிவாய். ஆகவே, அவர் உரைத்தாரென நீ கூறும் உரை வெற்றுரையென்பதனினும் வெளிற்றுரையெனவே யான் கூறுவேன். இனி இதைப் பற்றிக் கூறுதலும் அறமாகாது." எனக் கூறிக்கொண்டே தான் முன்னர்க் குறைபடவிட்ட காரியத்தைச் செய்யத் தொடங்கிற்று. -

எனினும், இவ்வுரைமுழுவதும் செவிடன் காதில் ஊதப்பெற்ற திவவொலியே போலப் பயனின்றி யொழிந்தது. ஆனால், இதுமட்டில், தன்னொத்த ஈக்கள் பலவற்றை ஒருங்கழைத்துத் தான் தேன்றேடிச் சென்றவிடத் தறிந்தவை யனைத்தையும் தெளிவாகக் கூறிற்று. கேட்டவற்றுட் சில பெருவியப்பும், சில பெருங்கலக்கமுங் கொண்டன; முடிவில் அவ்வீக்குழாத்தி னிடையில் ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று.

பின்னர்ச் சில ஈக்கள் எழுந்து, உண்மையில் தாம் பிறப்பினால் ஒப்பானவை யெனினும், தம்மை அரச ஈக்கள் நடாத்து முறை இழிவானதே யெனவும், அது தம்மையடிமைப்படுத்துவ தொன்றெனவும், அதனை விரைவிற் போக்குவது முதற்கடன் எனவும் முடிவு செய்தன. இடையிற் சில ஈக்கள் முன்வந்து தாம் தொடங்கிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கித் தம்மை உரிய நெறியில் நடத்துவதற்கேற்றவர் அச்சிறுவர் தம் அத்தானே யாவர் எனவும் கூறின. அதுபோது, வேறு சில எழுந்து, முன்னர்க் குறிக்கப்பெற்றவரே தலைவராயின், அவர் தம்மை ஒருங்கே யரசஈக்க ளாக்குதலோ டமையாது தம் கூடுகளையும் செவ்வனம் புரந்து, தமக்கு ஒரு மேதக்க சிறப்புரிமையும் தந்தருள்வாரெனவும் வழிமொழிய, ஒக்கும் ஒக்கும் என்னும் பேரொலி கம்மென அக்குழாத்திடை யெழுந்தது."

ஆ! இதுவும் தகுமா? யாவரும் சிவிகையூரத் தொடங்கின், அதனைக் காவுவார் யார் இந்நிலையில், சிறிது நாள் முதிர்ந்த தொழிலியொன்று, அக்கூட்டத்திடைத் தன் தலையை நீட்டி, “பிறர் நலத்துக்கெனத் தொழில் புரியும் ஈக்களனைத்தும் அரச ஈக்களாக மாறின், நன்று! நன்று!! அவற்றிற்கு ஆம்பணியைப் புரிபவை யாவோ?" என்றது. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுவரோ? நண்ணாரன்றே! ஆகலின், அவ்விக்க ளனைத்தும், இதனைக் கேட்டதும் சாலவெகுண்டு, மதியிலி எனவும், தன்னுரிமை யறியாத் தறுதலையெனவும் கூறி, “நாம் அனைவரும் அரசாக்க ளாகுங்கால், இற்றைப் போது அரசு பூண்டிருப்பனவும், அவற்றின் வழித்தோன்றல்களும் தாம் உள்ளளவும் நமக்குப் பணிசெய்து கிடக்கலாமே!” என்றன. என்றலும், அவ் ஈ மறுமுறையும் எழுந்து, "அவற்றிற்குப் பின்னர் அத்தொழிலை மேற்கொள்ளுவோர் யார்" எனக் கேட்ப, கம், கம் என்னும் பேரொலி ஆங்கு மிக்கெழுந்தது. உடனே, அதுவும் தன் நாவையடக்கிக் கொண்டது.

மற்றொரு ஈ எழுந்து, "அன்புடையீர்! எனக்கு முற்பேசிய ஈக்கு நிகழ்ந்த வசை அழகற்றதாகும். அது நமக்குட் பிளவையுண்டுபண்ணினும் பண்ணும். பண்ணுங்கால், நாம் கைக்கொண்ட இயக்கம் வெற்றிபெறாது. நம் கொள்கைக்கு மாறாகவுள்ள, பழைய நிலையிலே தம் வாணாளைச் செலவழித்தார்க்குப் புதிய கொள்கைகளும், உணர்ச்சிகளும், இயக்கங்களும், பிறவும் வெறுப்பைத் தருவனவாகலின், அவ்வெறுப்பை யுடையவரையும் நம் இயக்கத்திற்குக் கொணர்தல் இன்றியமையாது.

"நிற்க, தேனிட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில் களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவையிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

"என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றிவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்" என்றோர் சொற்பொழிவு செய்தது.

இடையில், முன்னர் வசைபெற்றுச் சென்ற தொழிலி மறுமுறையும் எழுந்து, "நாம் அனைவரும் இன்றுவரைத் தொழிலீக்களாகவே உள்ளோம். அற்றாகவின், நமக்கு இவ்வியக்கத்தால் ஒரு வகைப்பயனும் எய்துதல் முடியாதென நினைக்கிறேன்" என்றது.

என்றலும் எழுந்தன. ஈக்கள். புகைப்படலம் போலத் திரண்டெழுந்து கம் கம் எனப் பேரொலி செய்து, தம் சினத்தை எவ்வெம்முறையில் அதற்குக் காட்டுதல் கூடுமோ அவ்வம் முறையில் காட்டின. காட்டக் கண்டஞ்சிய அது முன்போலவே தன் இருப்பிடம் அடைந்தது. அடைதலும், பகலவனும் மறைந்தனன், பறவைப்பாட்டு அடங்கின; எங்கும் இளையிருள் பரந்தது; நீலவானத்து நித்திலம் பதித்தாற்போலக் கோல மீனினம் தம் சிற்றொளி பரப்பின; பிற்பகல் முற்றும் குழப்பத்திடையுழந்த ஈக்கள் தத்தம் கூடடைந்து உறங்குவவாயின. பின்னர் அவ்விரவு முற்றும் வேறு குழப்பமின்றி யொழிய யாண்டும் அமைதியே தலைசிறந்து நின்றது.

வெள்ளி முளைப்ப, விடியல் வந்தது; தாமரையிற் றுஞ்சிய காமர் வண்டினம், கட்கமழும் நெய்தலுக்குச் சென்று, தாதுதிப் பின்னர், கண்போல் மலர்ந்த காமர்சுனைமலரை யடைந்து ஒலி செய்யா நிற்ப, முன்னாள் நிகழ்ந்த குழப்பத்தில் ஈடுபட்ட ஈக்கள் மட்டில் ஒருங்கு கூடி மீட்டும் தம் நிலைமையையும், அதற்கேற்ற முறைகளையும் பன்னிப்பன்னிப் பேசத்தொடங்கின. வேறு சில, கூடுகளில், அரசியர் ஏவிய பணிகளை இனிது செய்து வந்தவை, இக்குழப்பத்தைப் பற்றியேனும், அதனிடையே நிகழும் விரிவுரைகளையேனும் ஒரு பொருளாக நினையாது தம் தொழிலிலே தம் கருத்தைச் செலுத்தி நின்றன. நிற்க, குழப்பத்திற் கலந்த ஈக்குழாத்தினிடை நிகழ்ச்சிகள் பல நிகழ, முதிரா ஈக்களிற் சில முனிவு மீதுாரக் கொண்டு, அதனால் தம்மையும், தம் மனத்திண்மையையும் இழந்து, பெருங்கலக்கத்தை விளைவிக் கும் நிலைமையெய்தின. அதுபோது, இக்குழப்பத்திற்கு முதற்காரணமாகவிருந்த ஈ அவற்றின் முன்னர், "அன்பர்களே! நீங்கள் கைக்கொண்ட இயக்கம் நன்மை பயக்கக் கூடியதே. எனினும், இடையிலிருக்கும் ஒரு பொருளை நீங்கள் எண்ணாது போய்விட்டீர்களே! அப்பொருள் தான் எதுவெனின், நீங்கள் அனைவரும் முதிர்ந்து விட்டமையன்றோ? நான் முதிர்ந்த உங்களை எவ்வாறு இனி அரச ஈக்களாக மாற்றுவது, கூடாதன்றோ. ஆயினும், நாம்கொண்ட இயக்கத்தின் வெற்றிக் கடையாளமாக யாதானுமொரு புதிய முடிபை எய்துதல் வேண்டும். என் அறிவிற்கெட்டிய முடிபொன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். பிறகு உங்கள் விருப்பம்போற் செய்யுங்கள்" என்றது. உடனே, அவ்வீக்களனைத்தும் ஒருபடியாக நீ கூறுகின்றவற்றை யாங்கள் மிக்க விருப்புடன் ஏற்றுக் கொள்ளுகிறோம். சொல்லியருள்க" எனப் பேரொலியிட்டுக் கூறின. கூறலும், அது புன்னகை தவழும் இன்முகங்கொண்டு, "அன்பர்களே! நாளின் முதிர்ந்த நமக்கு இனி அரசியர் வேண்டுவதில்லை. நாம் அனைவரும் இன்றிருப்பது போலவே தொழிலீக்களாகவே யிருப்போம்; நாம் இனி ஒருவருக்கு அடிமைப்பட்டு அவர்கள் காலாலிடும் ஏவலைத் தலையாற் செய்தல் வேண்டா. நாமார்க்கும் குடியல்லோம்! நலமே வாழ்வோம். நம்மைக் கேட்பவர்க்கும், தூய வீரத்தோடும் “யாம் யார்க்கும் குடியல்லோம். யாதும் அஞ்சோம்’ எனவே, நாம் இனிக்கூறுவோம். இதுவே என் சிற்றறிவிற கெட்டிய முடிபாகும். யான் கூறியவற்றில் குற்றங்களிருந்தாற் பொறுத்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டு, இம்மாட்டோடு என் சிறிய விரிவுரையை நிறுத்திக்கொள்ளுகிறேன், என்றது. எனவே, வண்டினம் முற்றும் கம்மெனும் இசை செய்து "இது தகும். தகும் தகும்!!" என உடன் பட்டன. பின்னர், அவைகள் ஒருங்கே திரண்டு தாம் இனித்தமித்து வாழ்தற்கேற்ற இடம் நிறுவுதற் பொருட்டு மறுமுறையும் ஒரு கூட்டம் கூடின. இதுபோது இவற்றிற்குத் தலைமைபூண்டு இயல் நெறியிற் செலுத்த வல்லதாய ஒன்றும் வரவில்லை. ஆகவே, அக்கூட்டத்தில் ஒருவகைக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இலவாயின. என் செய்வது இதுவும் உலகவியற்கையே!!

நிற்க, இடம் நிறுவுதற் பொருட்டு நிகழ்ந்த இக்கூட்டத்திடை, "ஒன்று எழுந்து, காட்சிக்கினியவும் கள் நிறைந்தவுமான மலர்கள் செறிந்துளதும், இதோ நம்முன்னர்த் தோன்றுவது மாய சோலையே நாம் இனிது வாழ்தற்கேற்ற இடமாகும்" என்றது; மற்றொன்று எழுந்து, "அச்சோலையினும், அதற்குச் சிறிது சேய்த்துள்ள வயலே இனிதாகும். சோலைக்கு வருவாரும், வருவனவும் பலவாதலானும், காற்றும் எஞ்ஞான்றும் விரைவுடன் மோதியலைத்தலானும் நமக்கும், நம் கூடுகட்கும் தீங்குவிளையினும் விளையும்." என்றது; வேறொன்று, "நன்கனம் அமைத்துள்ள வீடொன்றின் கூரையே மேற் கூறப்பட்ட விரண்டினும் நன்றாகும். அன்றியும் அது நம்மை மழைக்காலத்தில் இனிது "காக்கவல்லதாகும்” என்று சொல்லிற்று. நான்காவதாக, வேறொன்று, "பழுமரமொன்றின் கொழுவிய கிளையே நல்லது" என, மற்றொன்று, மலை முழைஞ்சினையும், வேறொன்று கற்பாறையையும் குறித்தன. இங்ஙனம், ஒவ்வொன்றும் தன்தன் கருத்திற் புலனாய இடங்களைக் கூறிச் சென்றனவே யொழிய, உறுதியான இடம் ஒன்றேனும் குறிக்கப்பெறவில்லை. அன்றியும், ஒன்று கூறியது மற்றொன்றின் கருத்துக் கொவ்வா தொழிந்தது.

இவ்வண்ணம் ஈக்கள் ஒன்றுக் கொன்று முரணிய கருத்துக் கொண்டு, கலாய்த்து நிற்பக் காலமுஞ் சென்றது; பிற்பகல் எய்திற்று. அதுபோது, அத்தேனீ இவ்வியக்கத்துக்குக் காரணமாயிருந்த அத்தேனீ - வேறோரீயினை நோக்கி, ‘என்னே உங்கள் அறிவின்மை யிருந்தவாறு! உங்களைக் காணும்தோறும் என் உளத்தில் வெகுளி யெழுகின்றதேயன்றி விருப்புண்டாகின்றதில்லை. எத்தகைய அறிவுள்ள சிற்றுயிரும் இவ்வண்ணம் வீணே காலத்தைக் கழிக்காது. அந்தோ! இதனை அறிவின்மை யென்பதா? அறியாமை யென்பதா?" என, அது சாலவும் சினந்து, என்னை கூறினை? ஏ, அறிவிலி! உனக்கு ஈயரசு பெறவேண்டும் எனும் எண்ணம் உளது போலும்! அறிந்தேன். அறிந்தேன். இன்றேல், நீ என்னை இங்ஙனம் கேட்டல்கூடுமா? நிற்க, யாங்கள் காலத்தை வீணேகழிப்பதால் உனக்கு உண்டாகும் இழவென்னை? யாங்கள் எதையேனும் செய்கிறோம். அது பற்றி நீ வெகுளுதல் எற்றுக்கு? நீ உன் காரியத்தைப் பார்த்துக் கொள்க.” என்றறைந்தது.

இத்தகைய மாற்றத்தை எதிர் நோக்காது பெற்ற அத்தேனீ, மனமுளைந்து, தனக்குண்டான மானத்தையும், இழிவையும், உன்னியுன்னிப் பெரிதும் வருந்தத் தொடங்கிற்று. அப்போது, தான் அக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்தமையையும், அதனால் தனக்கே துன்ப மெய்தினமையையும் அது எத்துணையோ அடக்கிக்கொள்ள முயன்றது. மற்று, அம்முயற்சியாற் பயனொன்று முண்டாயிற்றன்று. ஆகவே, அது மற்ற ஈக்களின் முக்த்தைக் காணுதற்கே வெட்கி, சிவ்வென் றெழுந்து பூம்புதரொன்றை யடைந்து, பண்டேபோல் தேன்றேடத் தொடங்கிற்று. புதர்க்குட் புகுந்து, ஆண்டு அழகு ஒளிர மலர்ந்து நின்ற மலரொன்றின் உட்புகுந்து, தான் இதுகாறும் கண்டறியாத சுவையும், மிகுதியுமுடைய தேனுண்டு களித்தது. ஆ" இது போதன்றோ அது களிவண்டென்னும் பெயர்க்கு இலக்காயிற்று! அது இதுபோது கொண்ட களிப்புக்கு ஒர் எல்லையுமின்று! அது தன் வாணாளி லோர்நாளிலேனும் இதுபோன்ற களிப்பினை யடைந்த தின்றெனின் வேறு கூறுவதென்னை வேட்கை முற்றுங் காறும் நறவமுண்டு, வேண்டுவனவும் உடன்கொண்டு தன் கூடு நோக்கி, என்றும் அறியாத ஒருவகைப்பற்று, அன்று அதன் மனத்தை ஈர்ப்ப, அது விரைந்தெழுந்தது. எழுதலும், அதன் முன்னர், பண்டு தான் கேட்டறிந்தனவற்றை முதன் முதலுரைப்பக் கேட்ட முதிர்ந்தவண்டு போதந்தது. கண்டதும், அதற்குப் பெரு நாண் எழுந்து அறிவை மயக்க, அருகிருந்த மலரொன்றிற்குச் சென்று மறைந்தது. ஆயினும் அம்முதிர்வண்டு, நடந்தனவற்றைக் குறிப்பாக வுணர்ந்தும், ஒன்றும் தெரியாததையொப்பக் கூர்த்த நோக்கத்தோடு, "என்கொல்! நீ ஏன் இங்கு வந்தனை? உனக்கு உற்ற தென்னை? நீ வந்திருப்பாய் என யான் ஒருகாலும் நினைத்ததின்றே! ஓ! உன் உழைவண்டுகள் யாண்டுள? அவற்றை நீ பிரிதற்கேய்ந்த காரணம் யாதோ? கூறுதி” என வினவிற்று.

இதைக்கேட்ட அக்களிவண்டு, பெரிதும் நாணி, "யான் அறியேன்; சோலையின் புறத்தே யான் அவற்றைப் பிரிந்து போந்தேன் ஆதலின்" என்றது.

மு. வண்டு:- அவை யாது செய்துகொண்டிருக்கின்றன?

க.வ :- க-லா-ய்-க்-கி-ன்-ற-ன-போ -லு-ம்

மு.வ :- (விரைந்து.) என்னோ காரணம்?

க.வ :- தாம் இனிச்செய்ய வேண்டுவனபற்றி.

மு.வ :- ஆ! என்ன அருந்தொழில் புரிதல் நேர்ந்தன! நன்று! இளவேனிற்காலத்து இனிய காலையில் மேற்கொள்ளப் பட்டதன்றோ இத்தொழில் நன்று! நன்று! செய்கறிய செய்வதன்றோ பெரியோரது தொழில்!

க.வ - :- எள்ளுதல் வேண்டாம் .ஏ! அன்னாய்!! இனியும் இன்னணம் இழித்துக்கூறற்க. என்னைப் பொறுத் தருள்க. இனி யான் செய்ய வேண்டியவற்றையும் பணித்தருள்க. ஒன்று மட்டில் கூறுகின்றேன்; யான் முன்னர்ச் சென்றிருந்த ஞான்று இயற்கையின் இயல்பையும், நம்மனோரின்றன்மையையும் பற்றிக் கேள்வியுற்ற உரை முற்றிலும் வாய்மையாகவே தோன்றிற்று; எனினும், நாம் அவ்வுரைவழி நிற்பான் முயலுங்காலத்து, வீணே கலாய்த்தலும் வெறுத்தலும் செய்தல் நேர்கின்றதேயன்றிப் பெரும் பயனொன்றும் பெறுமாறில்லை. என்னை?

மு.வா :- நிற்க, நின் வயதென்னை.

க.வ :- (இளமைத் தன்மையொடு நாண்மீக்கொள) ஏழு நாட்களே.

மு.வ :-என் வயதென்னை யறிதியோ?

க.வ :- பல திங்களாம்போலும்.

மு.வ :-ஆம். ஆம்! பல திங்கள் முதிர்ந்து உளேன். நீ கூறிய துண்மையே. யான் நாள் முதிர்ந்த ஒரு வண்டே நிற்க. வருக நாம் இருவரும் பொருது பார்ப்போம்.

க.வ :-ஓ! ஓ!அது கூடாது; கடவுளாணையாக அது ஒரு காலும் கூடாது. யான் கட்டிளமையுடைமையின் பயனாய வலியுடையே னாகலின், நினக்கு ஊறு இழைக்கினும் இழைப்பன்.

மு.வ :-எனவே, நம்மிருவருள் வன்மையற்ற எளியன் யானன்றே. அற்றாக, இளமையும் வன்மையு மிக்க நின்னை என் மாட்டு அறிவுரை கேட்கத்துண்டியது யாது கொல்? இஃது ஓர் வியப்பையன்றோ தருகிறது!

க.வ. :-அற்றன்று. மெய்வன்மைக்கும் அறிவின் வன்மைக்கும் தொடர்பொன்று மின்று. யான் நின்மாட்டறிவுரை கேட்பான் துணிந்தது நீ அறிவுடையை என்பதை யான் நன்குணர்ந்தமையே யாகும். யான் அஃதில் லேனாகலின், இதுபோது இழித்தக்க நிலையை யெய்தியுளேன்.

மு.வ :- முதுமையும் இளமையும் - வன்மையும் மென்மையும் - அறிவும் அறியாமையும் - ஆ! ஏனோ ஒத்த பிறவியும், ஒத்த நிலையும் பொருளாகக் கிளர்ச்சிசெய்த வண்டுகட்கு? எனினும், வருந்தற்க. நாம் இவற்றை யோர் ஒழுங்கிற்குக் கொணர்தல் கூடும். நிற்க, இனி நாம் இருவரும் ஒத்து வாழ்தலாமா? என்னை நின் கருத்து?

க.வ :-என் இன்னுயி ராணையாக, யான் - இன்றே, ஏன்! இன்னே உடன்படுகின்றேன். நாம் வாழ்தற்கு இடம் யாது? .

மு.வ :-அஃதன்று நான் முதற்கண் வேண்டுவது. நம் இருவர்க்கும் கருத்துக்கள் முரணாங் காலத்து இடைநின்று தகுதி நோக்குவார் யாவராதல் வேண்டும்.

க.வா :- நீயே! என்னெனின் நீயே முதுமையும், அறிவின் திண்மையும் உடையை.

மு.வ :- நன்று, நல்லுணவாய தேன் நாடிச் சென்று கொணருநர் யாவராதல் வேண்டும்?

க.வ :- யான். யானே!

“இளைஞன் வலியன் ஏவின செய்யும்
உளையா முயற்சியன் ஒருவன் யானே.”

மு.வ :- மிகவும் நன்று. ஆகவே, நீ என்னை இதுபோது அரச ஈயாகவும் நின்னைத் தொழிலியாகவும் கருதிவிட்டனை யன்றோ?

க.வ :- ஆம் ஆம்.

மு.வ :-என்னே நின் அறியாமை இது முடிபாயின், நமது பண்டையகூட்டுக்கும், நாம் பேணிநின்ற. அரச ஈக்கும் நேர்ந்த குறை யாதோ? அன்றியும் நம் இருவர்மாட்டே, ஒருவர் தலைவராக ஒருவர் ஏவலிளைஞராதல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்றோ, ஆகவே, பல்லோர்கூடிய கூட்டத்துள் இவரன்ன தலைவராவா ரொருவர் வேண்டப்படுவதனை உரைத்தலும் வேண்டுமோ?

இதனைக் கேட்டலும் அவ்வீக்கு நல்லுணர்வு தோன்ற, அது மிக்க உவகை பூத்துத் தன் ஏனைய இனங்களை நோக்கிச் சிவ்வென்றெழுந்தது. அதுபோழ்து, ஏனைய ஈக்களெல்லாம் குழப்பம் செய்துகொண்டேயிருந்தன. அவற்றுட் சிலமட்டும் தம் வன்மையும், எழுச்சியும் குன்றாதிருந்தனவே யன்றிப் பிறவனைத்தும் குன்றிப் பசியால் வருந்தின. சிறிது பொழுது கழிதலும், சில தம் வழக்கப்படியே தேன் தேடச்சென்றன; சில தம் கூட்டை யடைந்தன.

இங்ஙனம் இவை பெருகுழப்பங் கொண்டு உழலாநிற்ப, இளமையும் ஊக்கமும் மிகுதியாக்கொண்ட பல ஈக்கள் புடைசூழ, அம்முதிர்வண்டு, நறுந்தேன்கொண்டு ஈயரசியிருந்த வெழிற் பெருங்கூட்டைச் சென்றடைந்தது. ஆண்டுக் காவல் புரிந்து நின்ற சிற்றியொன்று, அதனையுட்புக விடாது தகைந்தது.

அவ்வண்டு அதனைக் காரணம்வினவ, அது தன் ஈயரசி பிறந்துபட்டதாகவும், அதற்காங்கடன்கள் நடைபெறுவதாகவும், ஆண்டு ஏனைய ஏகுதல் கூடாதெனவும் கூறிற்று.

கூறலும், அக்களிவண்டு, உளங்கலங்கி, "ஐயோ! எவ்வாறு இறந்தனர் நம் அரசியார்! ஆ!நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்னருயிர்த்தே மலர்தலை யுலகம் ஆ! இனி நமக்குத் தலைமை தாங்கி நம்மை நன்னெறியில் நடாத்துவார் யாவரோ ஏ!காவல! நம் அரசியார் இறந்தது. உண்மையோ கூறுக."என இணைந்து கூறலும், அது, “ஆம். ஆம். இன்றுகாலை கூட்டைக் காக்கும் ஈக்களுட் சில வெளிச்சென்றிருந்த பொழுதை நோக்கி, இளமைமிக்க ஈயரசியொன்று, வெளிப்போதல் கூடாது எனினும், போதந்து, நம் அரசியொடு கலாய்த்துக் கொன்று விட்டது" என்றது.

முடிவில் அக்களிவண்டு தன் அரசி சாதற்கு அடிப்படையாக நின்றது தானே என்பதையும், தன்னா னிகழ்ந்த குழப்பத்தின் பயனே இது வென்பதையும் நினைத்தொறும் அதன் நெஞ்சு அதனைச் சுட்டது; பின்னர் அம்முதிர்வண்டு களிவண்டை நோக்கி, “ஈயரசுகட்கே ஒத்தநிலைமையின்று; அவை பிறப்பினால் ஒத்தன வேனும் தம் தொழிலாற்றான் சிறப்படைகின்றன: ஆதலின், பிறப்பொத்த தோற்றத்தேம் எனினும் சிறப்புறு தொழிற் செய்து உயர்வுபெறுதலன்றோ அமைவுடைத்தாம்"என்றது.

நெஞ்சு சுட வருந்திய அவ்வண்டும் பின்னர்த்தன் தொழினாடி மலர் வனம் புக்கது. யாண்டும் அமைதியே நின்று விளங்கிற்று.
----------

5.யாதும் வினவல்

செங்கைமாத்து வடக்கில் உள்ளது தென்மலை. மலைச்சாரலில் காடு பசுந்தழை போர்த்து இனிய காட்சி தருகிறது. புதர்களில் பல வகைப் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றன. தென்றல் மெல்லென வீசுகின்றது. நண்பகல் வெப்பத்தால் வெம்பி வியர்த்த செல்வமக்கள் இம் மென்காற்றின் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி யடைகின்றனர். மாலை மணி மூன்றுக்கு மேலாகியதனால் வெயிலின் வெப்பமும் சிறிது தணிந்து வருகிறது.

கானத்தின் அருகே ஓடும் காட்டாறு சிறிது அகலமாகவே உளது. செக்கர்ச் செவேரெனப் பரந்து விளங்கும் செம்மணல், சிவந்த புடவை யொன்றை நீட்டிப் புரளவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் கரையில் தென்னைகள் ஓங்கி நின்று குலைகள் தாங்கிக் காற்றில் மெல்ல அசைகின்றன. கரையருகே அழகிய ஊரொன்று தோன்றுகிறது. அதன்கண் மிகவுயர்ந்த மாடி வீடொன்று காணப்படுகிறது. அதன் பின் புறத்தே ஆற்றிற்குக் காலடிப்பாதை வருகிறது. அவ்வழியே மங்கையர் இருவர் வருகின்றனர்.

ஒருத்தி மாந்தளிர் போன்ற நிறமுடையவள். அவளது பின்னிவிட்ட கூந்தல் இடைமறையுமளவு நீண்டிருக்கிறது. பொன்னில் கல் வைத்திழைத்த வில்லையொன்று அவள் குழலில் இருந்து நல்ல அழகு செய்கிறது. கைவளைகள் கண்கவரும் வனப்புடையன. நீல நிறங்கொண்ட அவளது புடவையில் நித்திலம் தைத்தது போன்ற பூவேலைகள் இருந்து பொலிகின்றன. அவளருகே செல்பவள் இத்துணைச் சிறப்புடையளாக இல்லை. ஒத்தயாண்டினளாயினும், ஒப்பனையும் ஒழுக்கமும் நோக்கின், முன்னையவட்கு, நிலையில் தாழ்ந்தவளென்றே இவள் தோன்றுகிறாள். மணிநிறம் கொண்ட இவளது உள்ளத்தின் நேர்மையை, முகம் இனிது புலப்படுத்துகிறது. இவளை அடிக்கடி, அவள் “தோழி, தோழி" என்கிறாள்; அவளை இவளும் "அன்னாய்"என அழைக்கிறாள். ஆகவே, அவளை நாம் தலைவியென்றும், இவளை அவட்குத் தோழி யென்றும் வழங்குவோம்.

தலைவியும் தோழியும் ஆற்றிடைக்குறைக்குச் செல்கின்றனர்.அதனை துருத்தி (an island in the bed of a river) யென்றலும் மரபு. அங்கே, மா, வேம்பு, ஆல், தென்னை முதலிய மரங்கள் அழகுறத் தழைத்துப் பூத்துக் காய்த்து நலம் கனிந்திருக்கின்றன. புதர் தன்பால் செறிந்த பூவால் நறுமணம் கமழ, தென் காற்று மெல்ல வந்து தளிர்களை இனிதசைப்ப, தரை முழுதும் அறுகுபடர்ந்து பசுங்கம்பலம் விரித்ததுபோல் இன்பம் செய்கிறது. கிள்ளையும் புறவும் குயிலும் பூவையும் இசைபாடும் இவ் வினிய விடம் இவ் விருவர் மனத்தையும் வேறிடம் பெயராதவாறு பிணித்து விடுகிறது. “அன்னாய், இங்கே சிறிதே அமர்வோமே என்ன இனிய இடம்;” என்கின்றாள் தோழி.

தலைவி:-என்னை யாதும் வினவல். தோழி, இன்பமுடைய வர்க்கே இயற்கைக் காட்சியும் இன்பமளிக்கின்றது.

தோழி :-இதற்குத்தான் “கெட்டார்க்கு நட்டாரோ இல்" என்று சான்றோர் கூறுகின்றனர். அதுகிடக்க; ஏன் இவ்வாறு பேசுகின்றாய்? இயற்கை யாவர்க்கும் பொது. வாழ்க்கையில் இன்பமுடையார்க்கேயன்றி, அதனை இழந்தார்க்கும் அஃது இன்பம் வழங்குவதில் இழுக்குவது கிடையாது.

தலைவி:-அப்படித்தான் அறிவுடையோர் கூறுகின்றளர். ஆனால், என்னளவில் அது மாறுபட்டிருக்கிறது.

தோழி :- அப்படியானால், இதோ! இங்கே தோன்றும் தென்மலையும், செழுங்கானமும், சேயாறும் உங்கட்கு இன்பம் செய்யவில்லையோ?

தலைவி :- இவற்றைக் காணும்போது என் உள்ளம் திகீர் என்று கலங்குகின்றது. மானினம் துணையொடு கூடிச் செல்வதும், பறவைகள் தத்தம் துணையோடிருந்து பாடி மகிழ்வதும் எனக்கு வருத்தம் செய்யுமே என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது.

தோழி :- (மருண்டு) அன்னாய், நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. தலைவர் உடன் இருக்கும்போது இவையெல்லாம் உனக்கு இன்பத்தைத் தானே செய்யும்? அவரை விட்டுத் தனியே வந்திருப்பதனால் இவ்வாறு பேசுகின்றாயோ?

தலைவி :- தோழி, இனி, தனியேதானே இருக்கவேண்டும். இப்போது உன்னோடு தனியே இருப்பது தனிமையாகுமா?

தோழி :- (பின்னும் மருண்டு) அன்னாய், உன் கருத்தை விளக்கமாய்ச் சொல், எனக்கு உன் பேச்சு சிறிதும் விளங்கவேயில்லை.

தலைவி :- நேற்று நம் காதலர் பேசியதில் இருந்து அவர் நம்மைப் பிரிந்தே போவர் என்று அறிகின்றேன். அது முதல் என் நெஞ்சம் இவ்வாறு துயரடையத் தொடங்கிவிட்டது.

தோழி :- (சுட்டிக்காட்டி) அதோ, நம் தலைவர் வருகின்றார். நீ அப் புதரிடையே மறைந்துகொள். நான் அவருடன் பேசி இதன் உண்மையை அறிகின்றேன்.

தலைவி :- நல்லது; அப்படியே செய். (மறைதல்)(தலைமகன் வருகின்றான் தோழி பூப்பறிப்பதைக் காண்கின்றான்; அவள் அருகே வருகின்றான்.)

தலைவன்:- (நெருங்கி) தோழி, நீ இங்கே என்ன செய்கின்றாய்?உன்னோடு தலைமகள் வந்தாளே எங்கே?

தோழி :- (கையாற் காட்டி) அதோ தோன்றும் புதர்க்குப் பின்னே பூப்பறிக்கப் போனார்கள். அழைத்து வரலாமே. (போக ஒருப்படுதல்)

தலைவன்:- (தடுத்து) வேண்டா. நில் நில். உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். அன்றும் நீ தானே துணை செய்தாய்?

தோழி :- (தலைகுனிந்து தனக்குள்ளே) தலைமகள் சொன்னது போல், இவர் தன் பிரிவைத்தான் இப்போது நம்பால் சொல்வார்போல இருக்கிறது. இருக்கட்டும்.

தலைவன் :-ஒன்றுமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு உயிராவது எது? தெரியுமோ?

தோழி:-ஐயனே, யானோ பெண்.எனக்கு அது தெரியாதே.

தலைவன்:-(முறுவலித்து) “வினையே ஆடவர்க்கு உயிர்."அதாவது, புகழ்தரக்கூடிய வினையைச் செய்வது தான் ஆண்மகனுக்கு உயிர். உயிரென்பது உயிரொத்த கடமை.

தோழி:-ஆமாம். இருக்கலாம். அதனை எனக்குச் சொல்வதால் பயன்?

தலைவன்:- அந்தக் கடமையைச் செய்ய யான் போக வேண்டும். சில நாட்களே பிரிந்திருக்க வேண்டும். என்ன சொல்கின்றாய்?

தோழி :- இதைத்தான் எனக்குச் சொல்ல விரும்பினீர்களா? அப்படியானால், இதனோடு வேறொன்று சொல்வார்களே? அது உங்கட்கு நினைவிருக்குமே.

தலைவன்:-(திடுக்கிட்டு) என்ன அது? எனக்கு நினைவில்லை.

தோழி:-எனக்கு நினைவிருக்கிறது: “வினையே ஆடவர்க்குயிரே, மனையுறை வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரே"என்று சொல்வார்களே.

தலைவன்:-(மகிழ்ந்து) ஆமாம். மகளிர் தம் கணவனை உயிர் போலக் கருதி ஒழுகுவதுபோல, ஆடவர் தாம் செய்ய வேண்டிய வினையை உயிர்போல் கருதிச் செய்ய வேண்டும். இதுதானே அதன் கருத்து.

தோழி:-ஏன்? அதற்கு உள்ள பொருளை உள்ளபடியே......

தலைவன்:-(இடைமறித்து) நான் சொல்வது தவறேர்?

தோழி:-...ஆடவர்க்கு வினையே உயிர்; அவர்தம் மனைவியர்க்கு அவரே உயிர். அவர் பிரிந்தால், அவர்தம் மகளிரும் உயிர் பிரிவர். இதுதானே உண்மைப் பொருள்!

தலைவன்:-எப்படியோ போகட்டும். இன்று யான் தலைமகளோடு இனிதிருப்பதற்கு அன்று நீ செய்த
-------- text (corresponding to printed page 106) missing here!! ----------

வெற்றி பெற்றீர்களோ என ஐயுற்றுப் பிதற்றுவர்; இவ்வாறு பலப்பல சொல்லிப் பழிப்பர்.

தலைவன் :- ஏன்? நீங்களும் மனையிலுள்ள பிறரும் அவ்வாறு அலர் உண்டாகாதவாறு செய்யலாமன்றோ?

தோழி :- உலைவாயை மூடலாம்; ஊர்வாயை மூடலாமோ?

தலைவன் :- உண்டோ , முயன்றால் முடியாப் பொருள்?

தோழி :- என்ன சொல்கின்றீர்கள்.

“செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்
பொய்யாதல் யான்யாங்கு அறிகோம் மற்று ஐய!
அகல்நகர் கொள்ளா அலர் தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகன் அல்லை மன்ற இனி."

(கலி - 19)
தலைவன் :- (முறுவலித்து) தோழி! நீ ஏன் வெகுள்கின்றாய்?

தோழி :- ஐய! நீங்கள் அன்று செய்தவற்றையும் இன்று செய்வதையும் பார்க்கின் இப்போது அவை . எல்லாம் பொய்யே என்பது வெளிப்படை. பொய்கூறி ஒழுகுபவன் மகனா (மனிதனா)?

தலைவன் :- நீ தலைமகள்பால் கொண்ட காதலால் இவ்வாறு பேசுகின்றாய். நான் அதற்கு மகிழ்கின்றேன். ஆனால் -

தோழி :- "ஆனால்" என்பது என்ன?

தலைவன் :- வினை செய்ய வேண்டியவிடத்து அதைச் செய்யாது விடுபவன் மனிதனாகான். 'செய்யத் தக்க செய்யாமையானுங் கெடும்; அல்ல செய்யவும் கெடும்.' இது நீ அறியாததல்லவே! மேலும் காதலரைப் பிரிந்து ஒரு காரியம் செய்து வந்த வழி, அவர் காதல் மாண்புறுமே தவிர, வேறு ஒன்றும் உண்டாகாது. நான் சென்று வருகின்றேன்.

தோழி :- (நெடிது நினைந்து) ஐய,
-----------

“செல்இனி, சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அறமாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல்; வினவில்
பகலின் விளங்கும்நின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு”

இனி நீ செல்க, சென்று அங்கே செய்யும் வினையை முடித்துக்கொண்ட பின்பே இங்கிருந்து வருவோரைப் பார்த்து அன்பு இல்லாமையால் என்னால் துறக்கப்பட்ட தலைமகள் நலத்தை அறிவீர்களோ? என்று வினவுக; வினைமுடியு முன்பு அவர்களை வினவ வேண்டா. வினவில், சூரியன்போல் தலைமை கொண்டு விளங்கும் உமது தலைமை சிதைந்துவிடும். வேறு வகையால் கெடுதற்கில்லாத உமது செய்வினையும், முடிவடையாதபடி அவலம் உண்டாயினும் உண்டாகிவிடும்.

தலைவன் :- ஏன்? எனக்கு விளங்கச் சொல்.

தோழி :- என் தோழி நின் பிரிவாற்றாது, இறந்தாலும் இறந்து விடுவாள். - (புதர் மறைவிலிருக்கும் தலைவி வெளிப்படுகிறாள்)

தலைவ்ன் :- இதோ, திருமகள் வருகின்றனளே.... (சென்று இரு கைகளையும் பற்றி) - நீ எப்போது இங்கு வந்தாய்?

தலைவி :- காதல, இதுவரையும் என் தோழி சொன்னதைக் - கேட்டீர்களா?

தலைவன் :- இனி அதை நினையேன். உலகு முழுவதும் ஒருங்கு வருவதாயினும் இனி உன்னைப் பிரியேன். வா. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புறலாம்.

இயற்கைக் காட்சி இன்ப ஊற்று.
------------

6. மையீரோதி மடநல்லீரே

"மையிரோதி மடநல்லிரே, மையிரோதி மடநல்லீரே" என்று மொழிந்து வாய்வெருவும் இம்மட நல்லாள் யாவள்? இவளது மலர்முகம் வாடியுளது; மழைக்கண் நீர் துளிக்கின்றது; வாயிதழ் மெல்ல அசைகின்றது; மெய்யிலும் சிறிது தளர்ச்சி புலனாகின்றது. இவளை உற்று நோக்குவோம். இவளது மனத்தே பெருந்துயர் நின்று அலைக்கின்றது; இவள் அடிக்கடி மருண்டு நோக்குகின்றாள்; ஆம், அவளது உள்ளத்தே அச்சம் பிறந்திருக்கிறது; என்னோ காரணம்?”

இவ்வாறு தம்மனத்தோடு சொல்லாடி வரும் இப்பெரியார் உடையாலும் நடையாலும் சிறந்த சான்றோர் போலத் தோன்றுகிறார். இவர் பின்னே செல்வோம். அதோ தென் மலையின் அடியில் நிற்கும் பாறைமீது ஏறி நிற்கிறார். பகலவனும் உச்சிகடந்து மேலைத்திசையை நோக்குகின்றான். வெயிலின் வெப்பமும் மிகுதியாக இல்லை. காடும் பசுந்தலை பரப்பி வெண் பூ விரிந்து நறுமணம் கமழ்கின்றது. மானினம் புல்மேய்ந்து மகிழ்ச்சி மிகுகின்றன. கிள்ளையும் புறாவும் கூட்டங் கூட்டமாய்ப் பறந்து திரிகின்றன. தினைப்புனங்களிலும் கதிர்கள் பால்கட்டிச் சின்னாளில் முற்றும் பக்குவத்தேயுள்ளன. இதோ, இச்சான்றோர் மலையடியின் மேற்றிசையில் உள்ள தினைப்புனத்தே தம்கட் பார்வையைச் செலுத்தி ஊன்றி நோக்குகின்றார்; ஏன்? நன்று, நன்று. அப்புனத்தருகே நிற்கும் வேங்கை மரத்தின் அடியில் வீற்றிருக்கும் உருவம் யாது? தெய்வமோ? பெண்ணோ? தெரிந்திலதே! ஆம், பெண்ணே: அவள் என்ன செய்கின்றாள்?
★-★-★-★
இதோ இச்சான்றோரும் அவளிருக்கும் திக்கு நோக்கியே செல்கிறார், இவர் ஏன் அவள் அறியாவண்ணம் புதர்களிடையே பதுங்கிப்பதுங்கிப் போகின்றார். அம்மங்கை யருகே செல்கிறார் போலும். அவளோடு ஏதேனும் சொல்லாட விரும்புகின்றனரோ? அற்றன்று; அவள் பேச்சொலியைக் கேட்கும் அளவிலிருக்க வேண்டுமென்று கருதுகின்றார் போலும். இன்றேல், இவர் அப்புதரடியில் அமர மாட்டாரன்றோ? என்ன நடக்கின்றது, காண்போம், நெஞ்சே, நீ ஒன்றும் வேறாக நினையாதே; சால்பு குன்றத் தகுவனவற்றைச் சான்றோர் செய்யார்.
★-★-★-★
“மையிரோதி, மடநல்லீரே” என்று மொழிந்த அம்மன்னவன் இதனையறிந்தால் என்ன நினைவான்? 'மையிரோதி' என்று அழைத்த அம் மணிமொழி இன்னும் என் செவியகம் நிறைய ஒலிக்கின்றதே! மட நல்லீரே என்ற அவரது மாண்பு என் மனத்தே அவரை உருப்படுத்தி விட்டதே! அவரது வாய்மை காணமாட்டாத என் தாயது தாய்மை என்ன பயனுடையதாம். மேனி மெலிகின்றேன்; வேறொன்றும் நினை வில்லேன். ஏதுக்கு என் தாய் இவ்வாறு அவ்வேலனை வேண்டுகின்றாள்.'

"வினவின் என்னையோ அவனை?" என்றொரு சொல்லெழுகின்றது. மேலே கூறியவாறு தானே பேசிப்புலம்பிய மங்கை சுற்று முற்றும் நோக்குகின்றாள், வாடிய முகம் மலர்கின்றது; பணித்த கண் அருள் வழிகின்றது; விளர்த்தவாய் நாவால் நீர் சுலவப் பெறுகின்றது. திணைப்புனத்தின் உள்ளிருந்த பெண்ணொருத்தி, தினைத்தாளை விலக்கிக் கொண்டு வேங்கையடிக்கு வருகின்றாள். இவள் யார்? பொறுப்போம்; இவர்கள் பேச்சிலிருந்துதான் இவளை இன்னாளென அறிதல் வேண்டும்.

★-★-★-★
“தோழி, முடிந்து போயிற்றோ? என் தாய் இனி என்ன செய்யப் போகிறாளாம்? உள்ளதன் உண்மையை உள்ளவாறு காணும் அறிவுபெற்றும், மக்கள் அதனைச் செவ்வே பயன் கொள்ள அறியாது அலமரு கின்றனரே!இவர்கட்கு அறிவுச்சுடர் உண்டாகுமோ? அஃது உண்டாகு நாள் என்றோ தெரியவில்லையே" என்கின்றாள். வேங்கையடியில் வீற்றிருக்கும் மெல்லியல்.

தோழி :- அம்மா, நாமே அவனை வினவினால் என்?

மெல்லி :-(அச்சத்தோடு) அவனையா? அந்த வேலனையா?அவனை என்னென்று வினவுவது? -

தோழி :- முருகனது வேல் அவன் கையிலுள்ள வேல். அவன் ஆடும் வெறியாட்டு அம் முருகன் பொருட்டு. அவ்வேல் அறிவின் வடிவம், ஆகவே, அவனுக்கு நல்லறிவும் உளதாயிருக்கும். அதனால், அவனது அறிவு வெளியாகுமாறு நாமே அதனை வினவுவோமே?

மெல்லி :-எப்படி வினவுவது?

தோழி :- எப்படியா? அப்படித்தான்?

மெல்லி :- எனக்கு விளங்கவில்லையே?

தோழி :- ஏன் விளங்கவில்லை? அன்று நடந்ததை நினைவில் கொண்டு மறைந்த சொற்களால் அவனை வினவுவது.

மெல்லி :-(மயங்கிய பார்வையுடன்) என்று நடந்ததை?அதனை நன்றாகத் தான் சொல்.

தோழி :-அன்று நாம் தட்டை கொண்டு குருவியோட்டி விளையாடி யிருந்தோமன்றோ?

மெல்லி :-ஏன், நாம் இன்றும்தான் அவ்வாறே செய்கின்றோம்.

தோழி :- அன்று நம் தட்டை முறிந்து போகவே, இதோ இம்மூங்கிற் புதரிலிருந்து மூங்கிலொன்றை யறுத்துத் தட்டையொன்று செய்தோமே, அஃதேனும் நினைவிலிருக்கிறதோ?

மெல்லி :-(புன்முறுவலுடன்). ஆம். பெரு முழக்கம் செய்து கொடிய ஓசையை உண்டுபண்ணிற்றே, அந்தத் தட்டை செய்தோமே, அன்றா?

தோழி :-அதனால் தானே நாம் அதை “வெவ்வாய்த் தட்டை”என்றோம்.

மெல்லி :-அதனாலா, அன்றன்று; அதனைச் சுழற்றிய மாத்திரையே, தினைப் புனத்தில் படிந்த பறவைகள் அனைத்தும் பறந்து ஓடிவிட்ட தோடு, தினைமணிகள் பலவும் சிதறிவிட்டன.

தோழி :-எதனாலோ ஒன்று. அப்போது நாம் அந்த வேங்கை மரத்தின் கவட்டில் கட்டின பரண் மீது இருந்தபோது என்ன நடந்தது?

மெல்லி :- வண்டினம் வந்து பொன்னிறம் கொண்ட பூவில் தேன் உண்டு இன்பமாக முரன்றது. நாம் அதன் இன்பவோசையைக் கேட்டு அதன் மீது கருத்தைச் செலுத்தி நின்றோம்.

தோழி :-அப்போது நாம் திடுக்கிட்டுச் சட்டெனப் பின்புறம் . திரும்பினோமே, ஏன்?

மெல்லி :-(நாணித் தலை கவிழ்கின்றாள்)

தோழி :-"மையிரோதி,மடநல்லீரே"என்றொரு காளை நம்மை அழைத்தானன்றோ? அவன் ஏன் நம்மை "மையிரோதி மடநல்லிரே" என்றான். அதனை யறிவாயோ?

மெல்லி :-நம் பின்நின்ற அவர் கண்ணிற் பட்டது நம் கூந்தல். அதனால் அவ்வாறு அழைத்தார்? இது தானே காரணம்?

தோழி :- இதனை துணுக்கமாக அறிந்து கொள்ளும் உனக்கு இன்னும் நான் என்ன சொல்வது?

மெல்லி :- இல்லை யில்லை. இது தான் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. அது கிடக்கட்டும் நீ சொல்.

தோழி :-அப்போது அவன் நம்மை என்ன கேட்டான்?

மெல்லி :-கெடுதி வினவினார்.

தோழி :- அது தெரியாதா? என்ன சொல்லித் தம் கெடுதி வினவினான்?

மெல்லி :-யான் எய்த அம்புபட்டுப் புண் மிகுந்து பெருந் துயர் கொண்டு யானை யொன்று தன் உயர்ந்த மருப்பு விளங்க இப்புனத் தருகே வந்த துண்டோ? என்றார்.

தோழி :- அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் குதித்து நாற்புறமும் ஓடிவர, அவன் சிறிது நேரம் கழிந்தபின் சென்றானன்றோ?

மெல்லி :-தோழி, அவரது சாந்தணிந்த மார்பும், வில் சுமந்த தோளும், தனித்திருந்த நம்மிடத்தே அவர் சொல்லாடிய தகைமையும் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டன. அவர் சொல்லிய சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன. அவர் பொருட்டு நாம் வருந்தும் இவ்வருத்தத்தை அன்னை இன்னும் அறியவில்லையே. இதற்கொரு வழியுமில்லையா?

தோழி :-அதற்குத்தான் தக்க வழிதேடப்படுகிறதே? அதற்குள் நீ ஏன் துயர்கின்றாய்?

மெல்லி :- வேலனைக்கொண்டு வெறி யயர்கின்றனளே அன்னை; இதுவோ வழி.

தோழி :- அதுதான் என்று நம் தாயும் நினைக்கின்றாள். அவ்வேலனும் அவட்குத் தக்கவாறு தான் கூறியுள்ளான்.

மெல்லி:- என்ன அது?

தோழி :- என்னவா? "எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்து அறிவல்" என்று கூறியுள்ளான்.

மெல்லி :- (திடுக்கிட்டு) உண்மையாகவா? வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா? வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது?

தோழி :- இப்படித்தான் வேலன் கூறுவான். அறியா மாக்கள் அதனை உண்மை யென்று கருதுவர், இன்றும் அதைத் தான் நம் தாயும் கேட்கப் போகின்றாள்.

மெல்லி :- இன்றும் அதைத்தானே சொல்லப் போகின்றான்?

தோழி :-ஆமாம். ஆனால், இன்று யானும் வேலனைக் கண்டு ஒன்று கேட்கப் போகிறேன். என் கேள்வியால் வேலன் பொய்ம்மையும், நம் ஒழுக்கத்தின் மெய்ம்மையும் விளக்கமடையப் போகின்றன.

மெல்லி :-எப்படி? எனக்கு அதை விளங்கச்சொல்.

தோழி :- வேலன் இன்று நம் தாயிடம் முருகன் நம்மை அணங்கினன்; என்பானாயின், வெறி கொள்வேல'உனது இறைவன், மத மிக்க வேழத்தின் மெய்யில் ஊடுருவத் தன் அம்பைச் செலுத்தி, பின் அதன் அடிச் சுவடுபற்றி வேட்டம் செல்லுமோ? என வினவக் கருதுகின்றேன். வினவின் என்?

மெல்லி :-(முறுவலித்து) வினவின் என்னாம்? யானை வேட்டம் புரிந்து வந்த வீரன் ஒருவனை நாம் நமக்கு இறைவனாகக் கொண்டுள்ளோம் என் தெரிந்து கொள்வான்.
★-★-★-★
தோழி ஏன் சிறைப்புறத்தை நோக்குகின்றாள். அங்கே ஏன் வேலிக்கண் படர்ந்துள்ள தழைகள் அசைகின்றன. நல்லது. அங்கிருந் தொரு வல்விற் காளை என் மேற்குத் திசை நோக்கிச் செல்கின்றான். அவன் ஏதோ தனக்குள் சொல்லிக் கொள்கின்றான்; அவன் பின்சென்று கேட்போம்.

காளை:- இனி, நமக்கும் இம் மெல்லியல் நல்லாளுக்கும் உண்டாகிய ஒழுக்கம் அவள் தாய்க்கும் தமர்க்கும் புலனாகி விடும். ஆகவே, இவளை இனி இங்கே தலைக்கூடல் அரிது. ஆகவே, இனிச் சான்றோரைச் செலுத்தி வரைந்து கொள்வதே கடன்.

ஆ, இதோ இச்சான்றோரும் நம்முடன் வந்து அவன் சொல்லிக் கொள்வதைக் கேட்டு மகிழ்கின்றார். இவர் என்ன சொல்லுகின்றார் பார்ப்போம்.

சான்றோர்:- இவ்வில்வீரன் செய்த முடிவே சிறந்தது. இவன் இம் முடிவிற்கு வரக் காரணம் யாது? இத் தோழியின் நல்லுரையன்றோ? இவளது அறிவுடைமையை என்னென்பேன், இத்தலை மகன் சிறைப்புறம் நிற்பதை யுணர்ந்து அவன் இம் முடிபு செய்யுமாறு பேசிவிட்டாள். அதுமட்டோ, தலைமகட்கும் ஓராற்றால் தேறுதல் கூறிவிட்டாள். கற்புடை மகளிர் கணவனையல்லது பிற தெய்வங்களையும் மனத்தாலும் நினையார். வேலன் முருகன் அணங்கினான் என்றவழி, தலை மகள் அம் முருகனை வணங்கல் வேண்டிவரும். அஃது அவள் கற்பு நெறிக்கு மாறாகும். அதனின்றும் இவள் அவளைத் தப்புவித்துவிட்டாள். வெறியும் விலக்கியாகி விடுகிறது. நல்லது, நாம் இன்று இங்கே வந்ததும் நன்றே யாயிற்று. இவளது செய்கை ஏனைமகளிர்க்கு நன்னெறி காட்டும் நயமுடையது. ஆகவே, இதனைப் பாட்டிடை வைத்துத் தமிழுலகில் நிறுவுவேன்.”
★-★-★-★
சான்றோர், தம் உடைமடிப்பில் இருந்து ஓர் ஓலை நறுக்கும் எழுத்தாணியும் எடுக்கின்றார், மரத்தடியில் அமர்ந்து. தாம் கருதியதனை எழுதுகின்றார். இவர் எழுதிக் கொண்டிருக்கட்டும். நாம் அம்மகளிர் இருக்குமிடம் செல்வோம்.

தோழி :- அதுமட்டுமா, நம் தாயும் நமக்கும் தலைமகனுக்கும் உண்டாகிய தொடர்பை யறிந்து கொள்வாள். பின்பு, நம் கற்பு நெறிக்கும் இழுக்கு உண்டாகாதே.

மெல்லி :- தோழி, நீ செய்வது நன்றே. இப்போதே விரைந்து சென்று அதனைச் செய்.

தோழி :-நன்று. அவ்வாறே செய்கின்றேன். (போதல்)
★-★-★-★
மெல்லியலும் தன் நல்லகம் புகுகின்றாள்; தோழியும் கண்மறைவில் சென்றுவிட்டாள். இச்சான்றோர் தாம் எழுதியதை முடித்துக் கொண்டு படிக்கின்றார்; அதனைக் கேட்போம்;

"அம்ம வாழி தோழி நம்மலை
அமையறுத் தியற்றிய வெவ்வாய்த்தட்டையின்
நறுவிரை யார மறவெறிந் துழுத
உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல்
பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி
ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவீ
வேங்கையங் கவட்டிடை நிவந்த விதணத்துப்
பொன்மரு ணறுந்தா தூதுந் தும்பி
இன்னிசை யோரா விருந்தன மாக;
மையீ ரோதி மடநல் லிரே
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த வுயர்மருப் பொருத்தல்நும்
புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச்
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை யாடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை
சாந்தா ரகலமுந் தகையும் மிகநயந்
தீங்குநாம் உழக்கும் எவ்வ முனராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்மிறை யணங்கலின் வந்தன் றிந்நோய்
தணிமருந் தறிவல் என்னு மாயின்,
வினவி னெவனோ மற்றே, கனல்சின
மையல் வேழ மெய்யுளம் போக
ஊட்டி யன்ன வூன்புர ளம்பொடு
காட்டுமான் அடிவழி யொற்றி
வேட்டஞ் செல்லுமோ நும்மிறை யெனவே.”
      - (அகம், 388)
★-★-★-★
பாட்டின் நலம் காண்டல்

இதன்கண் "அம்மவாழி" யென்பது தொடங்கி, "இருந்தனமாக" (9) என்பது வரை, மெல்லியல் நல்லாள் வல்விற்காளையாகிய தலைமகன் கெடுதிவினவி வருங்கால் இருந்தநிலை விளக்கப்படுகின்றது. இங்கே அவர்கள் மூங்கில் அறுத்து 'வெவ்வாய்த் தட்டை" செய்து. அதனால் புனத்திற் படிந்த குருவிகளை ஒப்பின செய்தி, "அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்," (2) "பெருவரையடுக்கத்துக் குருவியோப்பி" (5) என்ற அடிகளால் குறிக்கப் படுகிறது. அக்குருவிகளை ஒப்பியதற்குக் காரணம் கூறுவதற்காக, “உளைக் குரல் சிறுதினை கவர்தலின்" (4) என்கின்றார். அத்தினையின் அருமையை உணர்த்தும் பொருட்டு, அத்தினைப்புனம் ஆங்கிருந்து சந்தன மரங்களை முற்ற எறிந்து, அவ்விடத்தையும் அரிதின் உழுது பயிர் செய்யப்பட்டதென்கின்றார். இதனை “நறுவிரை யாரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை" என்று பாடியுள்ளார். வந்து படிந்த குருவிகளும் ஒன்றிரண்டல்ல. பல என்றற்கு “கிளையமல் குரீஇ" என்கின்றார்.

இனி, இத்தினைப் புனமிருந்த இடம் தென்மலையின் சரிவு; தினைமுற்றும் காலம் வேங்கை மலரும் காலமாகும். அப்போது தான் அப்புனம் காக்கப் படுதல் வேண்டும். தினைப்பயிரும் மிக வுயரமாக வளர்ந்திருந்தது. ஆகவே, புனங்காத்தற்கு அமைக்கும் பரண் மிக வுயர்ந்திருக்க வேண்டியதாயிற்று. இக் கருத்தெல்லாம் தோன்றவே, இச் சான்றோர், “ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவி, வேங்கையங் கவட்டிடை நிவந்த இதணத்து’ என்று குறிக்கின்றார்.

இனி, பரண்மீதிருந்த நங்கையர், குருவியோப்பி, பரணருகே மலர்ந்து மணக்கும் வேங்கை மலரிற் படிந்து தாதுதும் தும்பியின் இன்னிசையில் கருத்தைச் செலுத்தி யிருந்தனரன்றோ? இன்றேல், அங்கே வல்விற் காளையைக் கண்டிருப்பர். அதனால்தான் தோழி, "தும்பி இன்னிசை ஒரா இருந்தனமாக” என்கின்றாள்.

இனி, "மையிரோதி" என்பதுமுதல், "போகலுறுமோ மற்று" என்பதுவரை வல்விற்காளை வழங்கிய சொற்களாகும். புனம் நோக்கி வந்தவன் எதிரே தம் கரிய குளிர்ந்த குழலைக் காட்டித் தம் இளமை நலம் இலக நின்றனர் இம்மகளிர். கெடுதி வினவிவருவோன்,அவர் முன்வந்து நின்று செவ்வியறிந்து கேட்கும் அத்துணை மனவமைதியிலனாவான். வேறு ஒசை செய்யின், அவர் அஞ்சுவர். அவன் கண்ணெதிரே தோன்றுவது அவர்தம் கரிய குழலே. அதனால், "மையிரோதி மடநல்லீரே" என்கின்றான். அது கேட்ட அம்மடவார் திடுக்கிட்டு அவன் முகநோக்கினர். அவருள் தலைவியின் கூரிய பார்வை அவனுக்கு வருத்தத்தைச் செய்தது. அதனை ஓராற்றால் மறைத்துக் கொண்டு, "யான் எய்த பகழியால் புண் மிகுந்து எழுந்த துயரத்தோடு வந்த யானை யொன்றைக் கண்டீரோ” என்று கேட்கலுற்று, "நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து, எவ்வமொடு வந்த உயர் மருப் பொருத்தல் நும் புனத்துழிப் போக லுறுமோ” என்கின்றான், தன் அம்பினை "நொவ்வியற் பகழி"என்றதனால், தன் அம்பின் வன்மையும், அவளது பார்வையின் கடுமையும் சுட்டினான், “பாய்ந்தெனப் புண் கூர்ந்து"என்றதனால், அம்பு குறிவர்ய்த்து நோய் செய்ததும், தான் வேட்கையுற்று வேதனை யுற்றதும் கூறினான். "எவ்வமொடுவந்த உயர்மருப் பொருத்தல்" என்று கூறவே, சினம் மிகுந்து வாராது, புண்ணுற்றெய்திய ஆறாத்துன்பத்தால் வந்தது யானை என்றும், ஆயினும் அஃது உயர் மருப்புடைய பேர் யானையென்றும், தான் தலைவியைத் தலைக்கூட வேண்டுமென்னும் வேட்கை நோயால் வெய்துற்று வந்த செய்தியும் சுட்டியிருக்கின்றான். தான் வந்தது போல, யானையும் வந்ததுண்டோ என்றற்கு, "நும்புனத்துழிப் போகலுறுமோ” என்று வினவினான்.

இவ்வாறு கேட்டவன் நெடிது நில்லாது சிறிது நேரத்திற்குள் கழிந்தான்; அவனோடு வந்த வேட்டை நாய்கள் விலங்குகளின் நடமாட்டமறிந்து சினங்கொண்டு குரைத்துக் குதித்து ஓடத்தலைப்பட்டன. அதனால் அவனும் அவற்றின் பின்னே விரைந்தேக வேண்டியவனானான்; இன்றேல், சிறிது நெடித்தே சென்றிருப்பன். இக்கருத்தை, “சினவுக்கொள்ளுமலி செயிர்த்துப் புடையாடச் சொல்லிக்கழிந்த வல்விற்காளை” என்று குறிக்கின்றார்.

இதுகாறும் பண்டு நிகழ்ந்தது கூறிய தோழி, இனி, நிகழ்வது கூறத்தொடங்கி, தங்கள் நிலையும், தாயது நிலையும் கூறலுறுகின்றாள்:

“வல்விற்காளை, சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை.”

தாய் தன் மகளது எவ்வம் உணராளாயினள்; அதனால் அன்புடைய அவளது நல்ல நெஞ்சம் மயங்குவதாயிற்று; வேலனைக் கொண்டு வெறியெடுக்க நினைக்கின்றாள் என்பது இதனால் தெரிகிறது.

இனி வெறியாடும் வேலன் கூறுவதை முன்னறிந்து,

"அன்னை தந்த முதுவாய் வேலன் எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் தணி மருந்து அறிவல்" என்பன, அவ்வாறு கூறுவானாயின், நாம் தலைவன் கெடுதி வினாவி வந்து தலைப் பெய்ததைக் கூறி "வினவின் எவனோமற்றே? கனல் சின மையல் வேழமெய்யுளம் போக ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோதும் இறை எனவே” என்று மொழிகின்றாள்.

"நும்மிறை வேட்டம் செல்லுமோ?" என்றால், அவன் "அவ்வாறு செல்வோன் நம் இறை" என்று உணர்வான்.

ஊன் படிந்து உதிரம் வாரச் செக்கர்ச் செவேலெனச் சிவந்து தோன்றும் அம்பினை "ஊட்டியன்ன ஊன்புரள் அம்பு" என்று பாடியுள்ளாரே, இப்புலவர் யாராக இருக்கலாம்? ஊன்மிகப் பற்றிப் புரளும் அம்பினை, ஊன் ஊட்டியது போன்ற அம்பு என்கின்ற இவர் "ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை" (அகம் 68) எனப்பாடிய புலவரான அவரோ என்னும் நினைவு பிறக்கிறதன்றோ? அவரே தான் இதனைப் பாடியவரும். அவர் பெயர் ஊட்டியார் என்பது.
--------

7.பொருண்மொழி

யான் சிறிது நாட்களுக்குமுன் ஒரு ஆங்கில நூலைப் படித்து வருங்கால், இத்தலைப் பொருள்பற்றிய சொற்பொழி வொன்று அதன்கண் இருக்கக் கண்டேன். அதனையான் நுணுகிப் படித்து வருங்காலத்தில், சில நுண்பொருள்கள் அமைந் திருப்பதையுணர்ந்து அதன் உட்பொருளைத் தமிழில் எழுதின் பலர்க்கும் பயன்படு- மென்றெண்ணினேனாகலின், இதுபோது எழுதுவேனாயினேன்.

பொருண்மொழி யென்பது பழமொழியைப் போல் நுண் பொருளை யகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும் நன்மொழியாகும். இது நம் தமிழ் நூல்களில் “பொருளுரை" யென்றும் “பொருண்மொழிக் காஞ்சி" யென்றும் வழங்கப் பெறுகின்றது. *[1]"பொய்யில் புலவன் பொருளுரை யென்று சீத்தலைச் சாத்தனாராலும், 'மூதுரை பொருந்திய"என்ற சூத்திரத்துள்"பொருண்மொழிக்காஞ்சி" யென்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க. பொருண்மொழிக் காஞ்சியாவது, "எரிந்திலங்கு சடைமுடி முனிவர், புரிந்து கண்ட பொருண்மொழிந்தன்று"[2](பு-வெ-மாலை 271) என்பர். பொருண்மொழி யென்றதொடர் பொருளை மொழிதல் எனவிரியும் வேற்றுமைத் தொகையாகும். மொழி, முதனிலைத் தொழிற்பெயர். பொருளாவது முனிவர்கள் விரும்பிக் கண்டு தெளிந்த உண்மையென்பதாகும்.
-----
[1]. மணி.22-6/
[2]. பு.வெ.மாலை'சூ.12.

----------

இதன்கண் முனிவராவார் 'சடைமுடியுடையராய் உயர்ந்த வொழுக்கமும்' உலகினையும் அதற்கு முழுமுதலாகிய இறைவனையும் ஒப்பக்காணும் ஞானக் கண்ணுமுடையராய், மக்கட்கு வேண்டிய அறிவு நூல்களும் பிறவும் ஆக்கித்தரும் பேரருள் உடைய பெரியோராவர் என்பது அறிஞர் முடிபு. இவர்தம் அறிவும் ஆற்றலும் ஏனையர்க்குள்ளன போல்வன அல்ல. சுருங்கச் சொல்லின், மக்களுட் கற்றோரினும் சிறந்த கல்வியறிவும், ஒழுகலாறும் உடையோர் என்பது மிகையாகாது. ஆகவே, முனிவர் பெருமக்கள் நம்மனோர்க்கு அறிவுகொளுத்து மாற்றால் உரைப்பனவே பொருண் மொழியென்பது அறிஞர் கொள்ளும் கொள்கையாயிற்று.

இப்பொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும், சுருங்கியும் வருதல் நம் நூல்களிற் காணலாம். சுருங்கி வருதலே பெரும்பான்மை- யெனினும், சுருங்கியே வருதல் வேண்டுமென்ற வரையறையின்மையால் பெருகியும் வருதல் இயல்பாயிற்று. இவை எத்துணைச் சுருக்கமாயிருக்கின்றனவோ அத்துணையும் பொருட் பெருக்கமுடையவாதல் கண்கூடு. எடுத்துக்காட்டாக, திருக்குறள் ஒன்றே யமையும். சின்மென் மொழியால் விழுமியபொருளைத் தன்னகத்தே யுடைத்தாய் ஒவ்வொரு திருக்குறளும் அமைந்தி, ருத்தலும், தொட்டனைத் தூறும் மணற்கேணியைப் போலக் கற்றனைத்துறும் பொருளாழமுடைமை சிறத்தலும் கொண்டு பொருண் மொழியாதலில் எவ்வகையினும் முற்பட்டிருக்கின்றது. இத்திருக்குறளை ஒரு பெரியோர் “கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றனர் என்ப. இவ்வியல்பே பொருண்மொழிக்கண் இருத்தல் வேண்டு மென்பது ஆங்கிலப் பெரியோர்களின் முடிபுமாகும். பொருண் மொழிக்கண் வரும் பொருள் தத்தம் மனத்தின்கண் முளைத்துத் தோன்றிய பழுத்த எண்ணங்களாகவும், பரந்த உலகில் நிலவும் பொருள்களைப் புலமையாற் கண்டு ஆராய்ந்து தெளிந்த முடிபுகளாகவும் இருத்தல் வேண்டுமென்பதும், அவை ஒரு சில சொற்களாலாகிய சொற்றொடர்களாயிருத்தல் வேண்டு மென்பதும், அவை யாராயும் தோறும் பயன்தருவனவாயிருத்தல் வேண்டுமென்பதும் பொருண்மொழியியல்புகளை யாராயும் ஆங்கிலப் புலவர்களின் கொள்கை. சுருங்கச் சொல்லின், பனையளவினவாய பொருளும் முடியும் ஒருங்கே திணிக்கப் பெற்றுத் தினை யளவிற்றாய சொற்றொடர்க்கண் விளங்குவது பொருண்மொழியின் உயிர்நிலையென்பர்.[1]
---
1. *"The essence of aphorism is the compression of a mass of thought and observation into a single saying.” - John Morley.
-----
இங்ஙனம், சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முடைமையால், இதனைப் பொன்னேபோற் புலவர்களும் மற்றவர்களும் போற்றி ஒழுகுகின்றனர். பெருங்காப்பியத்துட் சிறந்து விளங்குஞ் சிந்தாமணிபாடிய திருத்தக்கதேவரும் திருக்குறளாய பொருண் மொழிக்கணிருந்து சில கொண்டு தம், நூலின்கண் வைத்திழைத்து அழகு செய்து கொள்வாராயினர். அவற்றுள், [2]“தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் - அழுதகண்ணிரும் அனைத்து’ [3] “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும், எஃகதனிற் கூரிய தில்’ என்பன அடங்கும்.
----
[2]. திருக்குறள் - 828.
[3]. குறள் - 759.
----
இவற்றுள், முதற்கண்ணதாய பொருண்மொழியை,

[1]. “தொழுத தம்கையினுள்ளுந்துறு முடியகத்துஞ்சோர
அழுதகண்ணினுள்ளும் அணிகலத்தகத்தும் ஆய்ந்து
பழுதுகண்ணரிந்துகொல்லும் படையுடனெடுங்கும் பற்றா(து)
ஒழிகயார் கண்ணும்தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே.”

என்ற பாட்டிலும், இரண்டாவதனை.

[2]. “செய்கபொருள்யாரும்செறுவாரைச்செறுகிற்கும்
எஃகுபிறிதில்லையிருந்தேயுயிருமுண்ணும்
ஐயமிலையின்பமறனோடவையுமாக்கும்
பொய்யில்பொருளேபொருள்மற்றல்லபிறபொருளே.”

என்ற பாட்டிலும் அமைத்துக் கொண்டிருத்தலும் புலப்படும். ------
[1]. சிந். 89. [2]. சிந், 497,
----
விநாயக புராணம் பாடிய ஆசிரியரும் திருக்குறளின் பொருட்பாலே தம்புராணம் பாடுந்தொழிற்கு வாய்த்தபொருளும் கருவியுமாகக் கொண்டது, இப்பொருண்மொழி நூற்கட்கிடந்து அணிசெய்தலே யன்றித் தொழிற்கண்முட்டறுக்கும் துணைக் கருவியாதலும் வலியுறுத்தும். இவ்வாறு இவை பயன்படுதலோடு அமையாது இடையூறுகளால் கலங்கித் திகைப்பார்க்குக் கலக்கந்தீர்க்குமருந்துமாய் உண்மைப் பொருளறிதற்குதவி செய்தல் குறித்தே பேக்கன் என்னும் புலவர் பெருமகனார் இவை அணியாதலே யன்றித் தொழில்முட்டிறுத்தும், கலக்கத்திடைத் தெளிவுபிறப்பித்தும் நலம்செய்கின்றன என்னும் கருத்துறக் கூறினர். [3]. இப்பேக்கன் என்பவரே பிறிதோரிடத்தில் இப்பொருண்மொழிகளை உப்புங் கழிகட்கு ஒப்புமை கூறி, கழியிடத்து உப்பினைப்பெற்று, வேண்டுமிடத்துக் கலந்து சுவையாக்கிக் கோடல்போல், இவற்றினிடத்து மெய்ப்பொருள் கண்டு வேண்டுமிடத்துத் துணைசெய்து கொள்ளலாமென்றார்.
---
[3]. “These wise sayings, said Bacon, the auther of some of the wisest of them, are not only for ornament but for action and business, having a point or edge, whereby knots in business are pierced and discovered. And he applauds Cicero’s description of such sayings as salpits, that you may extract salt out of them and sprinkle it where you will” - John Morley. -
------------
‘முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" என்பது நற்றிணைக்கண் வருவதோர் (355) பொருண்மொழியாகும். இதனை ஆசிரியர் திருவள்ளுவனார் “பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர்" என்ற குறளின்கண் (50) பெய்து கொண்டனர். மேலும், “நீரின் றமையா வுலகம் போலத், தம்மின் றமையா நந்தயத்து” என்ற அதன் கனநீரின்றமையாது உலகம் என்பது ஒரு பொருண்மொழி (நற்.1) இதன்னயும் திருக்குறளில் “நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு என்னுங் குறளின்கட் (குறள்.20) பெய்து கொண்டனர்.

இந்நற்றிணைப் பாட்டில் “தாமரைத் தண்டா துரதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை" “எனவருவது ஒரு பொருண் மொழியாகும். இதன் பொருள் - தாமரைத்தாதினையும் சந்தனத்தாதினையும் ஊதி அச்சந்தனம்ரத்திற் செய்த வள்ளத்துள் வைத்தவிடத்து அவை இடத்து நிகழ்பொருளும் இடமுமாயியைந்து தம் பெருமைபுலப் படுத்தினாற்போல உயர்ந்தோர்

தம்மிடத்தே வைத்து கேண்மையும் பெருமை புலப்படுத்தி விளங்கும் என்பது. இதனை மணிவாசகப் பெருந் தகையார் தம் திருக் கோவையாரின்கண், “சீரிய லாவியும் யாக்கையு மென்னச் சிறந்தமையாற், காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கமலங் கலந்த, வேரியும் சந்தும் வியறந் தெனக் கற்பில் நிற்பரன்னே, காரியல் கண்டர்வண் டில்லை வணங்கு மெங்காதலரே, ‘ என்ற திருப்பாட்டில் (301) அமைத்துக் கொண்டனர். இவை போலும் பொருண்மொழியாட்சிகள் பலவாதலின் இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

இப்பொருண்மொழிகள் புலவர் பெருமக்கள் இயற்றும் நூல்களின் இடையிடையே கிடந்து உலகியலில் மக்கள் ஒருவரோடொருவர் கூடியும் பிரிந்தும் ஒருங்கியைந்தும், பிற நிகழ்ச்சிகளைக் கண்டும். உணரும் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கைச்சாகாடு உகைக்கும் மகன் அவ்வாழ்க்கைக்குரிய மாண்புகளையுணர்ந்து வல்லனாயிருப்பின், அது ஊறின்றாகி ஆற்றை யினிது சென்று பயன்தருவதாகும்; அதனையறியானாயின், அவ்வாழ்க்கை துன்பநிலையமாய் மிகப்பல நோய்களைத் தலைத்தலைத்தருவதாய் முடியும். இவ்வியல்பு பற்றியே உலகியலறிவினை வளர்க்கும் பொருண் மொழிகள் மிக்க இன்றியமையாதனவாய- மைந்திருக்கின்றன. வாழ்க்கை அரம்பும் அல்லலும் கரம்பும் செறிந்திருத்தலால், இன்னோரன்ன பொருண்மொழிகளைக் கிடந்தன கிடந்தாங்கே எடுத்துக்கோடல் வேண்டும். அவற்றின்கண் ஒராராய்ச்சியும் வேண்டாவாம். இந்நலம் குறித்தே, இவை நாமறியும் பலவுண்மைகளுள், ஒன்றை விலக்கியாதல், வேறொன்றைத் தழுவியாதல், ஒருண்மையின் ஒருபுடையைவிலக்கியாதல், மற்றொருபுடையை மிகைபட விரித்துரைத்தாதல் செல்லாது எத்தகைய கட்டுப்பாட்டிற்கும், நிலைக்கும், ஒழுங்கிற்குந்தக அமைந்திருத்தல் வேண்டும் என்பர். ஆதலால், இவை மக்கள் வாழ்விற்கெனவமைந்த விதிகள் என்பது மிகையாகாது.

இதுகாறும் நாம்பொருள்மொழிகளாவன இவையென்றும், அவை பொதுவகையிற் படுமாறு இதுவென்றும், அவற்றின் பொதுவியல்பும் அறிந்தோம். இனி இவற்றால் நாம் பெறும் அறிவியல்பையும், இப்பொருண்மொழிகள் பயன்படு மாற்றையும் ஒருசிறிது காண்பாம்.

அறிவாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ள வாறே யுணர்தல்" என்பது. இது மக்கள் தோன்றும்போதே உடன் தோன்றி அவரைத் தொழிற்படுத்துகின்றது. நாம் பெற்றதும் பெறுவதுமாகிய அறிவின் இயல்பினை ஆங்கிலப் பெருமக்கள் நால்வகைப்படுத்துத் தலைமை, கடைமை, இடைமை முதலிய ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கின்றனர். ஒருவன் தன் இயற்கையறிவினால் பொருளியியல்புணர்ந்து பெறுவது தலையாய அறிவு என்றும், ஏனை மக்களின் ஒழுக்கநெறிகளில் நின்றும் அவரோடு பயின்றும் அவ்வாறே பொருள்களையுணர்ந்தும் பெறுவது அதனிற் குறைந்த சிறப்பினையுடைய அறிவாமென்றும், மூன்றாவது பல நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிக்கண் மனத்தைச் செலுத்திப் பொருள்களை யாராய்ந்து தெளிந்து பெறுவதாய அறிவு என்றும், இவற்றிற் கடையாய அறிவாவது நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் கற்றதுணையே பெறுவது என்றும் கூறுவர். [1]இப்பாகுபாட்டின் கட் பொருண்மொழிகள், மூன்றாம் பகுதிக்கண் அமைந்து, உண்மையொன்றின் ஒரு சார் இயல்பினை நமக்குணர்த்தி ஏனையவற்றை ஆராயுமாறு செய்யவல்லனவாகின்றன.
--------
[1]. * “It has been said that our knowledge is this; that we know best, first, what we have divined by native instinct; second what we have learned by experience of men and things; third what we have learned not in books, but by books - that is, by the reflections that they suggest; fourth, last and least what we have learned in books or with masters. The virtue @f an aphorism comes under the third of these heads; it conveys a portion of a truth with such point as to set us thinking on what remains.’ - J. Morley.
----------------

இம்மூன்றாம் பகுதிக்கட்படும் அறிவு உலகில் மக்களையும் பிறபொருள்களையும் கண்டும் பழகியும் உணர்ந்தும் பெறப் படுதலால், இதனை வாழ்க்கையறிவு என்றல் பொருந்துவதாம். இது ஒருவன் நல்வாழ்க்கைக்குத் துணைசெய்யும் அறிவுப் பொருள் நிறைந்த மொழியாம். ஒருவன் கற்பதும், கற்றாரோடு பழகுவதும் எல்லாம் உலகில் நல்வாழ்வு நடாத்தி நலம் பெறுதற் பொருட்டேயாம். ஆகவே, அவன் கற்கும் நூல்களுள் இப் பொருண்மொழிகள் இடம் பெறாவாயின், அவையும் அவற்றைப் படிக்குங்காற் கழிந்த பொழுதும் பயன்படாதொழிவனவேயாகும். ஆகவே, இப்பொருண்மொழி ஒவ்வொரு நூலிலும் அமைதல் இன்றியமையாதாம்.

நாம் வாழும் இக்காலமும், நம்மனப் பான்மையும் புதிய வுணர்ச்சியும் ஒழுக்கமும் கொண்ட முன்னேற்ற மென்னும் பொருளால் இழுக்கப்பெறுகின்றன. "ஒரு ஊரின்கண் ஒரு அரசன் இருந்தான் - என்று தொடங்கும் சுவடிகள் மறைகின்றன; இன்னயாண்டில் இத்திங்களில் இந்நாளில் இந்நிகழ்ச்சி" நடைபெற்றதென்னும் முறை எழுந்து நிலவுகின்றது. எப்பொருளைக் கேட்பினும், எப்பொருளைக் கற்பினும், அப்பொருளைக் கேட்டவாறோ, கற்றவாறோ உணர்த லின்றிப் பல்வகையினும் ஆராய்வதும், முடிபுகூறுதலுமே எங்கும் விளங்கித் தோன்றுகின்றன. இங்ஙனமே நம்பண்டை வரலாறும், அறிதல் வேண்டுமென்னும் அவா நாகரிகமும் எங்கும் எல்லோரு மனத்திலும் எழுந்துலவுதலைக் காண்கின்றோம். இவ்வுணர்ச்சி மிக்குஎழும் இக்காலத்தில், ‘பண்டை வரலாற்றாராய்ச்சியும், பொருளியல்புணர்ச்சியும், அரசியல் கிளர்ச்சியும் விரவிச் செல்லும் இக்காலத்தில், மக்களியல்பையும் ஆராய்தல் வேண்டுமென்பது கூறாமலேயமையும். மக்களியல்பு பொருண்மொழிக்கண் அடங்கி பருத்தலால், அவ்வாராய்ச்சி பொருண்மொழி யாராய்ச்சியே-யாயிற்று.

இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் பொருண் மொழிகளைக் கூறவல்லவர் ஒருவர் வேண்டுமன்றே. அவர்யார்? அவரே நம்புலவர் பெருமக்கள். அவரே, உலகில் நாம் வாழ்வினியல்பையுள்ளவாறேயுரைக்கும் ஆற்றல் படைத்தவராவர்; சில உண்மைகளையும் மெய்ம்மைகளையும் எடுத்துரைக்கும் சிலரினும், இவர்கள் போற்றற்குரியர். புலவர்களின் செயல் நிலைவனப்பும் தூய்மையும் நிறைந்தது. சரித்திரங் கூறுதல், ஒழுக்கநெறியமைத்தல், அரசியலாராய்தல், சொற்பொழிவு செய்தல் ஆகிய இவையாவும் ஒருவனது உலகியலறிவின் திட்பநுட்பத்துக்கேற்ப வமைந்தனவாம். ஒழுக்கநெறியும், சரித்திர் முறையும், அரசியல்வாதமும், அவர்தம் கல்வி, கடைப்பிடி முதலியவற்றிற்கேற்ப மக்களால் மதிக்கப்படுவனவாம். மற்று, எளியதாய உரை நூல் எழுதும் ஒருவன், ஒன்றிரண்டாய பொருண்மொழிகளைத் தன் நூலிடையே தொடுப்பனேல் அவன் முனிவரையொப்பக் கருதப்படுகின்றான். இதுவே அப்பொருள்கட்கும் இதற்குமுள்ள வேறுபாடு. .

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க என்ப மாதோ.”
      -- (நற். 116) என்றும்,

“நெடிய மொழிய கடிய ஆர்தலும்
செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர்
புன்க ணஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வமென் பதுவே”
      -- (நற். 210) என்றும்,

“தீயும் வலியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ.”
      -- (நற். 294) என்றும்

வரும் பொருண்மொழிகளால், இவற்றை யாக்கிய பெரியோர்களும் நல்லிசைச் சான்றோர் வரிசையுள் இடம் பெறுவராயினர். இத்தகைய பொருண்மொழிகள் இலவாயின், இராமாயணமும் சிந்தாமணியும் பிறவும் நின்றுநிலவுதல் யாங்ஙனம் அமையும்?. மேனாட்டார் ப்ளுடார்க் (Plutarch) என்பவரை மிக மேம்படவுரைப்பது, கதை கூறுவதினும் மக்களையும் அவர்தம் பண்பினையும் வெளிப்படுத்துவதே சீரிய கருத்தாய்க் - கொண்டமையே யென்பர். இளங்கோவடிகள், ‘அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவது உம், உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பது உம், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதி காரமென்னும் பெயரால், நாட்டுவதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" (சிலப்பதிகம்) என்று தொடங்கினமையும் இக்கருத்தே பற்றியென்க.

பொருண்மொழி யிடையிடை விரவிய நூல்கள் சிலவே ஆங்கில நாட்டில் உள்ளனவென்றும், அவை எத்துணை மிகுதிப் படுகின்றனவோ அத்துணை ஒழுக்கமும் உயர்வும் மக்கட்குன் டாகுமென்றும், இவற்றில் முற்பட்டு விளங்குவன நம்நாட்டு மொழிகளே யென்றும் ஜான்மார்லி என்பவர் 1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் எடின்பர்க் என்ற நகரத்தில் செய்த சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். அவர் நாட்டில் ஒரு கிறித்தவ ஆசிரியர் சூதினால் தம்கைப்பொருளிழந்து, கடன் வாய்ப்பட்டு அது தீர்க்கும் ஆற்றலிலராய் அமெரிக்காவிற்கு ஒடிப் போய் மக்கட்கெனச் சிலபொருண்மொழி நிறைந்த நூலொன்றை “சிலசொல்லிற் பலபொருள்கள்” (Lacon or Many things in few words) என்ற பெயரிட்டு 1820-ஆம் ஆண்டில் வெளியிட்டார் என்றும், அந்நூற்கண் உள்ளன பொருளுரையாகாது பொய்யுரை (உள்ளிடில்லாத உரை, வெற்றுரை) யாக இருந்தமை கண்டு தாம் தீயிட்டெரித்துவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பொருண்மொழி புணர்த்துக்கூறல் தமக்கு அணியாகக் கொண்டிருத்தல் வேண்டு மாயினும் அவை பெரும்பான்மையும் மக்கட்கு வேண்டும் பொதுவுண்மைகளையே யுணர்த்துகின்றன.

“இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமு மறுவின் றெய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்"
(அகம்- 66) என்றும்,

“அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஆன்றலும் நாளும்
வருந்தா வுள்ளமோ டிருந்தோர்க் கில்லெனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர்.”
(அகம் - 173) என்றும்,

‘நெறியி னிங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென் றறியல் வேண்டும்”
(சிலப்-10) என்றும்

“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் அதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே”
(புறம் - 195) என்றும்,

“செல்வத்துப் பயனே யீதல்,
துய்ப்பே மெனினே தப்புந பலவே.”

என்றும் வருவனவற்றாலறிக.

மக்கள் நாடோறும் இயற்றும் குற்றங்களையும் நலங்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்குதலையும், போற்றுதலையும் செய்யும் பொருண்மொழிகள் நிறைந்த நூல்கள் வேண்டும். ஆங்கிலேயர்கள் மக்களின் ஒழுக்கங்களையும், அவர் செய்யும் பிழைகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துக்காட்டும் பொருண்மொழிகளைப் புணர்த்தற்கு கதை வடிவங்களையே கருவியாகக் கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பான்மையும் எளிய நடையில் வழுவில்லாத இனிய தீஞ்சொற்களாலாக்கப்பட்டுப் பேரிலக்கியங்கட்குள்ள அமைதி நிரம்பிமிளிர்கின்றன. நம் நாட்டில் அம்முறையைக் கையாடல் வேண்டிச் சிலர் புனைகதைகள் எழுதுகின்றனர். அவற்றுட் பெரும்பான்மையை மக்களின் ஒழுக்கக்கேடுணர்த்தும் பொருண் மொழி புணர்த்தலில் அமைந்தனவாயினும், அம்மொழிகட்குரிய சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமுமின்றி, வழுவெல்லாம் நிறைந்து உலவுகின்றன. "முருகன்" என்னும் கதை நூலொன்று இவ்வாண்டில் சென்னைப் பல்கலைக் கழக வகுப்பிற்குப் பாடமாக அமைந்துள்ளது. அதன்கண் மக்கள் வாழ்வு பெறுவதும், நடைப்பிறழ்ச்சியால் கேட்டிற்குள்ளாகி வருந்துதலும், உழவுத் தொழிற்கு வேண்டும் பொருண் மொழிகளும் நிறைந்திருக்கின்றன. மற்று, அதன் சொன்னடை மிகத் தாழ்ந்த நிலையில் உளது. நூலெழுதப்புகுவோர்.

--
“Plutarch’s aim was much less to tell a story than as he says ‘to decipher the man and his nature" - Studies in Literature P.66.
-----------

எம்மொழியில் எழுதவிரும்புகின்றனரோ அம்மொழியில் - இயன்றவாறு பிழையின்றி விளங்க எழுதுதல் வேண்டும். சொற்றொடர்களில் இலக்கண வழுக்கள் அமைந்திருத்தல் ஒருபுடை நிற்ப, "ஒருவள்” முதலிய இலக்கண வரம்புகடந்த சொற்கள் பல விரவியிருத்தல் கற்பார்க்குக் கேடுபயக்கும் தன்மையதாகின்றது. நிற்க, உரை நூல்களிற் காணப்பெறும் பொருண்மொழிகள் எண்ணிறந்தனவாகலால் ஒருசிலகூறி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்காகாது. புத்தகஞானமேயுடையவர்கள் விடயங்களை யாராயும்போது தமது சொந்த நிலையையிழந்து அப்புத்தக நிலையையே பெற்று ஆராய்வார்கள். ஒரு தேசத்தின் இயல்பினை அத் தேசத்திற்குச் சென்று திரும்பினோர் கூறக்கேட்ட அறிவு எவ்வாறு வலியுடையதாகுமோ அவ்வளவுவலியே புத்தகஞானமே யுடையோன் ஆராய்ச்சியிற்படும் பொருளுமாகும். புத்தகமே கற்றோன் காணும் பொருண்மை பல்லிழந்தோன் தன் வாயிலமைத்துக் கொள்ளும் போலிப் பல்லைப்போல் மனத்திற் பதிகிறது. தாமே தம்சொந்த அறிவினால் அறிந்ததோ இயல்பாகவேயமைந்த அவயவம் போல் மனத்தில் வலுப்பட்டு நிற்கிறது” - தி. செல்வக் கேசவராய முதலியார்.

“காமுகனாவானொருவன் ஒரு வனிதையிடத்து அன்புடை யன் என்பது அவள் ஒக்கலைக் கண்டுழி நிகழும் அன்பின் அளவு பற்றியே அறியப்படும்.” - சிவஞானயோகிகள்.

“மானமாவது தன்னிலைமையிற் றாழாமையும், தெய்வத்தாற் றாழ்வுவந்துழி உயிர்வாழாமையுமாம்."

"உயிர் நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவே - பரிமேலழகர்"

சில ஆங்கிலப் பொருண்மொழிகள்:

1. நுண்ணறிவோர் இழைக்கும் தவறுகளும், அறிஞர் செய்யும் ஆரவாரமும், நல்லோர் பிழைக்கும் குற்றங்களும் ஆகிய இவையாவும் சேரநிகழ்வது கிளர்ச்சியே.

Follies committed by the sensible, extravagances uttered by the clever, crimes perpetrated by the good, that is what makes revolution.

2. மக்களின் மடமை நோக்கி மிக்க சினங்கொள்ளுதல் மடனெனப்பட்ட யாவையும் - ஒருங்கே யழைத்துக் கொள்ளும் செயல்களுள் மிக்கதொன்றாம்.

Excessive anger against human stupidity is itself one of the most provoking of all forms of stupidity.

3. இன்பமன்று அறிஞர் வேண்டுவது; துன்பத்தினீக்கமே. அவர் தேடிச்செல்வதும் அதனையேயாம்.

Not pleasure but freedom from pain. is what the sensible man goes after.

4. தனக்கு முன்னிருந்தோன் ஒருவற்கு ஒப்பாகக் கருதில், அவனின் இரட்டித்த ஆற்றலுடையனாதல் வேண்டும்.

To equal a predecessor one must have twice his worth.

5. செய்தற் கெளியதாயினும் ஒன்றைச் செய்தலுறுபவன், அதனை அரிதென்றும், அரியதாயின் எளிதென்றும் கருதிப்புகுதல் வேண்டும்.

What is easy ought to be entered upon as though it were difficult, and what. is difficult as though it were easy.

இதுகாறும் கூறியவாற்றால், பொருண்மொழியென்பது தமிழ் நூல்களில் பொருண்மொழிக் காஞ்சியென்னும் துறைப் பகுதியுள் அடங்குவதென்பதும், அது சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் பெற்று நூல்கட்கு அணியாதலேயன்றித் தொழில்முட்டறுக்கும் கருவியாமென்பதும், பொருண் மொழிகட்கு ஆங்கிலேயர்கூறும் இலக்கணம் இதுவென்பதும், ஒருவன் கற்றற்குரிய பொருள்களுள் இவற்றைக் கற்றல் அவன் வாழ்க்கைச் சாகாடுகைத்தற்கண் இன்றியமையாது வேண்டப்படுமென்பதனால், இவை மக்கள் வாழ்விற்கெனவமைந்த விதிகளாம் என்பதும், அறிவாவது இஃதென்பதும், அது நால்வகைப் பாகுபாடுபெறும் என்பதும், அப்பாகுபாட்டின்கண் பொருண்மொழியாலெய்தும் அறிவு மூன்றாம் பாகுபாட்டிலடங்குமென்பதும், இம்மொழிகள் மக்களின் மனப் பான்மையையுள்ளவாறு காட்டும் இயல்பின என்பதும், ஆராய்ச்சியே பொருளாகச் செல்லும் இக்காலத்தில் பொருண்மொழிகளைக் கற்று மக்களின் மனப்பண்பாராய்தலும் வேண்டுமென்பதும், மனப்பண்பு கண்டு உணர்ந்து கூறும் பொருண்மொழியாட்சியால் ஒருவன் நன்கு மதிக்கப்பெறுவன் என்பதும், நம்நாட்டு இலக்கியங்கள் மக்களின் பொதுவாய பண்பினை யுணர்த்துகின்றனவென்பதும், இக்கால உரை நூல்களிற் சில, மக்களின் சிறப்புப் பண்பினையுணர்த்தினும் வழுமலிந்துள்ளனவென்பதும், ஏனையுரை நூல்களிற் சில பொருண்மொழிகள் இவற்றையும் உணர்த்துகின்றனவென்பதும் பிறவும் கூறப்பட்டனவாம்.
----------

8. உலக வரலாறு

நம் கட்புலனாம் இவ்வுலகின் தோற்றம், வடிவு முதலியவற்றை ஆராய்ந்தறிந்த பேரறிவாளர்கள் மிகப்பலர் எனினும், அவருட்சிறந்துநின்றார் கொண்டது உலகு ஒரு உருண்டை வடிவாயபொருள் என்பது. அது, வடிவில் உருண்டையெனினும், எண்ணரியபருமனும், ஒளிதெறிக்கும் இயல்பும் பொருந்தி, அளப்பரிய ஆகாயமென்னு மளக்கரில் மிதக்கும் பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் செறிந்த ஒரு திப்பியப் பொருளாகும். இன்னும் அதனைக் கூர்ந்து நோக்கின், அது, ஒரு நாரத்தம் பழத்தையொத்து, மேலுங்கீழுந்தட்டையாய், இருமருங்கினும் அச்சுக்கள் நிறுத்த அவை உட்சென்று நடுவில் கூடுமென நினைத்தற்கு ஏதுவாய், அவ்வச்சின் வழியாகவே சுற்றுகிறது எனக் கருதுவதற்கும் இடனாயிருக்கிறது.

இவ்வாறு, இது சுற்றுவதனால், இதன் எப்பாகம் ஞாயிற்றின் முன் வருகிறதோ, அப்பாகம், அஞ்ஞாயிற்றின் ஒளி பெற்றுப் பகற் காலத்தைப் பெறுகிறது அக்காலை, மற்றைப் பாகத்திலிருள் பரவ இராக்காலம் நிகழும். நிற்க, இது பெறும் ஒளிக்குக் காரணமாயது ஞாயிறு என்பதென்னையெனின், அது ஒரு ஒளிநிறைந்த அழற்பிழம்பு என்பர். அதனிடத்திலிருந்தே இவ்வுலகு தோன்றிற்றெனவும் கூறுவர். வேர்க்கடலை, மொச்சை முதலியவற்றைத் தீயிலிடுங்கால், அவை வெப்பத்தால் வெடிப்ப, அவற்றினின்றும் விதைகள் மிகுந்த விரைவுடன். வெளிக்கிளம்பலொப்ப, அஞ்ஞாயிறென்னும் அழற்பிழம்பின் கண் வெடித்து விரைந்தெழுந்த பொருள்களுள் ஒன்று இது எனவும் கூறுவர். இன்னணம் ஞாயிற்றினின்றும் வெளிப் போந்த பொருளாம் இப்பூமிக்கும் இஞ்ஞாயிற்றுக்கும் ஒரு கட்புலனாகாத் தொடர்புண்டு. அத்தொடர்பு ஒன்றையொன்று பற்றியே நிற்கும். விளங்கக்கூறின், ஞாயிறு பூமியைத் தன் மாட்டிழுத்தலும், அப்பூமி அதனை யிழுத்தலுமாய தொடர்பு. இதனை வடமொழியாளர் ஆகர்ஷண சக்தியென்பர். மேனாட்டார். Attraction of Gravitation (அட்ராக்ஷ னாவ் கிராவிடேஷன்) என்பர். அன்றியும், ஒர் யாண்டில் நிகழும் கார், கூதிர், முன்பனி, பின்பணி முதலாய பருவங்கள் தோன்றுதற்கும் அச்சுற்றே காரணமெனவும் கூறுவர்.

இக்கூறிய கொள்கையே பெரும்பாலார் கொண்ட தெனினும், இதற்கு முரணாயினாருமுளர். இதிற் சிறிது வழுவியாருமுளர் எனவுங் கொள்க. இவர்களுட் பண்டைய முனிவர்களும் ஒரு சாராராவர். இவர்க்குள், சிலர் இப்பூவுலகு ஒரு சமனானவெளி யென்றும், இதனைத் தாங்கும் பலதிண்ணிய தூண்கள் பல இதன்கீழே யுளவென்றுங் கூறுவர். சிலர் இதுவொரு பேரரவின் முடியிலிருக்கிறதென்றும், வேறுசிலர், ஒரு அடல்மிக்கயாமையாலிது சுமக்கப் பெறுகின்ற தெனவுங் கூறுவர். இவர்கள் கூறிய துண், அரா, யாமை முதலியன நின்று தாங்கற்கு உரிய இடம் என்னெனக் கடாயினார்க்கு விடையிறுத் தலாகாமையின், அவை கொள்ளற்பாலனவல்ல வென்க.

பிராமணர்கள், விண்ணுலகு மண்ணுலகைச் சார்ந்து மேனிற்கிறதெனவும், இவற்றினிடையில் நீரிடைத்தவழும் மீனினம் போல், ஞாயிறும் திங்களும் வானிடை மிதந்து கிழக்கு மேற்காகச் சென்று. தத்தமக்குரிய காலத்திறுதியில் உலகு விளிம்பை (Horizon) யடைந்து, முடிவில் தத்தம் முறைப்படித் தோன்றுமிடத்தையடையுமெனவும் கூறுவர்.

நிற்க, புராணிகர்கள், இப்பூமியொரு தட்டைச் சமவெளி யென்றும், இதனைச் சுற்றிப் பாற்கடலைத் தலைக்கொண்ட எழுவகைக் கடல்களும், அவற்றினிடையில், மேருமுதலாக எழுவகை மலைகளுமிருக்கின்றன வென்றுங் கூறலோடமையாது, சூரிய சந்திர கிரகணங்களாவன இராகுவென்னும் பேரரவு சிலகாலங்களிற்றோன்றி அவற்றுளொன்றை விழுங்குங் காலமே எனவுங் கூறுப.

அபுல்காசன்அலி யென்னும் பேரறிவாளரொருவர் தம் நாட்டு வல்லார் உரைகளைக் கற்றுத் தம் நுண்ணறிவிற்குத் தோன்றிய சிலவற்றைத் தாம் எழுதியுள்ள "பொன்னிலமும் மணிச்சுரங்கமும்" (Mourondge-ed-dharab, or The golden meadows, and the mines of precious stones) என்னும் உலக வரலாற்றுட் கூறுமாறு:-

"இப்பூவுலகு ஒரு தனிப்பெரும் பறவையாகும். இதன் தலையே மெக்கா, மெதினா என்னும் நகரங்கள். பாரசீகமும் இந்தியாவும் அதன் வலச்சிறகாகவும், காக் (Gog) என்ற நாடு இடச்சிறகாகவும், ஆப்பிரிக்கா அதன் வாலாகவும் அமைந்துள்ளன. இன்றையப்போது நாம் வாழும் இப்பூவுலகின் முன்பு, வேறொரு உலகிருந்தது. அதுதோன்றி ஏழாயிரம் ஆண்டுகளே இருந்தது. அதனை இப்பூப்பறவையின் குஞ்செனினும் பொருந்தும். தோன்றியிருந்த அது, இடையில் நிகழ்ந்த வெள்ளம், நிலநடுக்கம் முதலாய இடையூறுகளால் இன்னல்வாய்ப் பட்டிறந்தொழிய இது தோன்றிற்று. இங்ஙனம், பூவுலகம் தோன்றியழிதல் இயற்கையே. அவற்றிற்குரிய காலம் எழுபதினாயிரம் ஹஸரோவம் ஆகும். ஒரு ஹஸரோவமென்பது பன்னீராயிர மாண்டுகளாம்..."

இக்காலக் குறிப்பும், வரையறையும் இவர் தம்மோடிருந்த பிராமண நண்பர்களொடு கலந்து செய்ததாதல் இந்நூலாற் றெரிகிறது.

இந்நூலாசிரியரைப் பற்றிய குறிப்புக்கள்:- இவரது தந்தை ஆல்கான்; அவர் தந்தை அலியென்பார்; அவர் தந்தை அப்துர் ரஹிமான்; அவர் தந்தை அப்துல்லா; அவர் தந்தை மசௌடல் அதெலி. இவரை யாவரும் மசௌடி யெனவே யழைப்பர். பிறகு இவரது அறிவைகுறித்து, இவர்க்குக் “குத்புதீன்" என்னும் பட்டமும் அக்காலத்தார் அளித்தனர். எனினும், இவர் அப்பட்டப் பெருமையையும் கருதாது லாஹேப் அர்ரசௌ (பரம்பொருளின் தூதனுடைய தோழன்) என்னு மொருதாழ்வான (அக்காலத்தார் கருத்து) பட்டத்தையே யேற்றனர்.

நூற்குறிப்பு:-

இது உலகின் தோற்ற முதல் இந்நூல் எழுதியகாலம் வரையிற் கூறும் வரலாறாகும். இவரது காலம் மோதிபில்லாவின் கிலாபத் காலம். அதாவது ஹிஜிரா 336.

இதுகாறும் கூறிய கொள்கைகளும் இன்னோரன்னபிறவும் பூவுலகைப் பொருத்தமட்டில் மிகப்பல உண்டு. ஒவ்வொரு கொள்கைக்கும் அதனையாய்ந்தறிந்த பெரியோர்கள், அவ்வக் காலத்துக்கேற்பப் பலசில காரணங்களும், கரிகளும் காட்டியே நின்றனர்.

இனி, ஞாயிறு முதலிய வானுலகப் பொருள்களைப் பற்றி அவர்கள் நினைத்தவற்றைப் பார்ப்போம்.

ஞாயிற்றின் பிறப்பு முதலியவற்றைக் கூறவந்த பேரறிஞர்களும் பலரே. அவர்கள் ஒவ்வொருவரும் காட்டிய சான்றுகள், அவரொத்த அறிஞர்களை மயக்குந் தன்மையவாய் நிற்ப, அவரவர் தத்தம்மாலியன்றவளவு பிறப்புக் கூறினர். அங்ஙனங் கூறினார் தொகையைத்துக்கி நோக்குங்கால், அவர்கள் மூன்று வகையுளடங்குவர். ஒருவகையார் மிகப் பண்டைக் காலத்து அறிஞர்களாவார். அவர்கள், ஞாயிறு ஒரு அளத்தற்கரிய அழலாழி (Wheel of fire) யென்பர்; ஒரு சாரார், ஒரு பளிங்கொத்த வொளிதெறிக்கும் (Transparent) கண்ணாடி அல்லது உருண்டை வடிவிற்றாய பளிங்கு என்றனர்; மூன்றாம் பிரிவினர், கல்லும் இரும்பும் கலந்து, பேரழல்வாய்ப் பட்டுருகி, ஒளிகாலும் தன்மைவாய்ந்த ஒர் அரும்பெரும் பொருள் என்பர். இவருட் டலையாயவர், அனக்ஸாகொரஸ் (Amaxagorus) என்டார். அன்றியும், இவர் விண்மீன், திங்கள் முதலிய வானப் பொருள்களனைத்தும் மண்ணினின்றும் தெறித்தெழுந்த கற்களெனவும், அவை ஒவ்வொன்றிற்குமுள்ள வானிடைத் தொடர்பு (அல்லது தன்வயங்கோடல்) Attraction of gravity) வயப்பட்டு, விரைந்து சுற்றிச் செல்லும் இயல்புடைமையின் பயனாகத் தீக்கொண்டு ஒளியிடுகின்றனவென்றுங் கூறுவர்.

இவர் இத்தகைய ஆராய்ச்சி முடிவை உரோம (Rome) தேயத்துமக்களுக்கு வெளியிட்டகாலை, அவர்கள் இதனையேற்றற்கு மறுத்ததோடமையாது, இவரையும் தம் நாட்டினின்றுந் துரத்தி விட்டாராதலின் இதனை நாம் நன்கு ஆய்தல் வேண்டிற்றில்லை. அன்றியும், பண்டைக் காலத்து உரோம தேயத்து மக்கள் தமக்கு ஏற்காதகொள்கை, எண்ணம் முதலியவற்றை ஒருவர் வெளியிடுவரேல் அதனை மறுக்கும் வகையால் அவரை வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுதல் மரபெனவும் கொள்க.

நிற்க, வேறுசிலர், மண்ணினின்றும் அழற் பொருள்கள் பல மேலே கிளர்ந்து சென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற்றிரிந்து நிற்பத் தற்செயலாக அவை ஒன்று கூடி ஒரு பேரழற் பிழம்பாயின; அப்பிழம்பே இஞ்ஞாயிறு, அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிறந்தனவே) ஒன்று கூடாது, தனித்தோ, தம்போன்ற சில கூடித் திரண்ட சிறு பிழம்புகளாகவோ விண்மீன்களெனத் திகழ்கின்றன; இவைகள், காலம் நீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழை வந்துசேர, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.

சிலர், நம்கட்புலனாம் ஞாயிற்றின்முன் வேறோர் ஞாயிறு இருந்ததெனவும், அது ஒரு காலத்துத் தன் ஒளிமுழுதும் ஒழிந்துமறைய, ஒரு திங்கள்காறும் உலகம் ஒளியின்றியிருந்தது; அப்போழ்தே, இஞ்ஞாயிறு தோன்றிற்று எனவுங் கூறுவர். வேறுசிலர், ஞாயிறு என்பது ஒர்பெறலரும் சீருஞ்சிறப்பு மமைந்து, பேரழகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்தலுங்கூடுமென்றும் கூறி, அப்பேரகத்தின் மீது ஒரு வகைத்தான ஒளி, வெப்பம், நீர் முதலியவும் வேறு பிறவும் கலந்த மேகபடலம் சூழவுளதென்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுலகுபெறும் ஞாயிற்றொளியெனவும் கூறுப இவருட்டலையாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.

இம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகாணுமாதலால், இதனை யிம்மட்டினிறுத்தி, இனி, இந்நிலம், ஞாயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தம் நிலையிற்றிரியாது கொட்புறும் தன்மையையும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில், நம் நாட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.

ஞாயிற்றின் இயற்கையைப் பற்றிப் பல வேறு வகைப்பட்ட ஆசிரியர்கள் கூறியவற்றையும், அவற்றோரன்ன பிறவற்றையும் நாம் ஆராய்ந்து கொண்டே செல்லின், இத்தலைப் பொருள் முற்றுப் பெறல் அரிதாமாகலின், அவ்வாராய்ச்சியை இம் மட்டினிறுத்தி, இக்கட்டுரைத் தொடக்கத்திற்கூறிய பூமியின் சுழற்சியைப் பற்றிச் சிறிது நோக்கிப்பின் அதன் வரலாற்றை யாராய்வோம்.

மேல் நாட்டில் பழங்காலத்தில் லெய்டென் (Leyden) என்னும் பல்கலைக் கழகமொன்றில், பேராசிரியராய் வான்புடிங் காப்ட் (Wompuddingcoft) என்பாரொருவரிருந்தார், அவர் ஒரு பேராசிரியனுக்குள்ள அமைதிமுற்றும் நிரம்பப் பெற்றவரெனினும் தேர்தல் (Examination) காலங்கள் அறிந்து சோர்துயில் கொள்வார். அதனால், அவர் மாணவர்கள், கற்றற்றிறம் சிறிதும் களியாட்டயர்தல் பெரிதும் பயின்றுவிளங்கினர்.

ஒருநாள், இவர் மாணவர்க்கு நிலவுலகைப் பற்றிய ஓர் விரிவுரை நிகழ்த்துமமையத்து, வாளி (Tub or bucket) யொன்றிற்றண்ணிர் கொண்டு, ஏந்தியகையராய் அதனை நீட்டிய வண்ணம் நேரே பிடித்துச்சுற்றினர். சுற்றுங்கால் வாளியிலிருந்த நீர் கீழே வீழாது, அதனிடத்தேயே நின்றது. இதனை ஒர் காட்டாகக் கொண்டு, அவர் பின்வருமாறுதன் மாணவர்கட்குக் கூறுவாராயினர்.

"இவ்வாளியே பூமியாகவும், அதன் நீரே கடலாகவும் நீட்டிப் பிடித்த கையே பூமிக்கு ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பாகவும், என் சென்னியே ஞாயிறாகவும் கொள்க. யான் வாளியைச் சுற்றுங்காலெழுந்த விரைவின் பயனாக, எங்ஙனம் அதன் கணிருந்த தண்ணீர் கீழே விழாது நின்றதோ அங்ஙனமே இப்பூவுலகு சுற்றும் நேர்மையால் அதன்கணுள்ள கடனீரும் இருந்த வண்ணமே நிற்கின்றது, என அறிக. யான் சுற்றும் நெறியினின்றும் உடனே நிறுத்தினாலும் அவ்வாளியே யாதர்னு மொன்றால் தடைபெற்றாலும் அதனிர் கைவழியே என் தலை மிசைவிழும். இது உண்மை. இங்ஙனமே, பூமியும் தன் விரைந்த சுழற்சியினின்றும் யாதானுமொன்றாற்றகையப் பெறின், கடனீரும், அதன் பயனாக ஞாயிற்றின் மீது விழும், விழினும் ஞாயிற்றின் வெம்மையும், ஒளியின் மிகுதியும் எவ்வாற்றானுங் குறைபடா வென்பதைச் சிறிதும் மறவற்க. என்னை: ஞாயிற்றின் வெம்மைக்கு இம்மண் சூழ்ந்த கடனிர் ஆற்றாதாகலின் என்க."

இதனைக் கேட்ட மாணவர்களுளொருவன், தன் ஆசிரியருரைத்த பொருள் எத்துனையுறுதியுடைத்து, எனக்காண்டல் வேட்கை மீதுர்ந்து, வாளியைச் சுற்றி நின்ற. ஆசிரியரதுகையை இடைநின்று தடுத்தான். தடுக்கவே அவ்வாளி நீர் அவர் உடல் முழுதும் வீழ்ந்து நனைத்தது, வாளியும் கீழ்வீழ்ந்தழிவுற்றது. ஆசிரியர்க்கும் அடக்கலாகா வெகுளிபிறந்தது. முகங்குருதி பாய்ந்து செக்கர்ச்செவேரெனச் சிவந்தது. உடனே கண்கறுப்ப வீசை துடிப்ப, அவரது மடித்தவாயினின்றும், வெடித்த சொற்கள் பல வெளிவந்தன. கண்டார் மாணவர்கள். கண்டாரது கருத்தில் பேரச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், மறுபுடை, வாளி நீர் பாய்ந்தும், தங்கள் ஆசிரியர் முகம் தன்னொளி கெடாதிருந்தமை கண்டு, இன்னணமே கடனீர் விழினும், ஞாயிற்றின்றன்மை திரியா தென்பது முண்மையே எனமனந்தேறிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாணவரது அறியாமைக் குறும்பு ஒரு புடைத் தோற்றமாயினும், நாம் நுணுகிநோக்கி அறியக்கிடப்பன பலவுள. அவை உயர்ந்தோர் தம் உண்மையறிவானாராய்ந்து காணும் அரியபொருள்களை, இயற்கை நங்கையும் உடன் கொள்ளாது. அவை தாமே முதிர்ந்து வருந்துணையும் வேறாய் நிற்பளென்பதும்: இன்னோரன்ன அரிய பொருள்கள் அறிவுடையோர் மனக்கண்ணிற்றோன்றி, அவரான் வெளியிடப் பெறுங்கால், அவற்றையேற்கும் ஆற்றலில்லாப் பிறமக்கள் - இயற்கை நங்கையின் இளஞ்சிறாராய இம்மக்கள் - ஏற்காதொழிவதன்றி, அவற்றையும், வெளியிடுவோரையும் மிகப்பல இடையூற்றுக்குள்ளாக்கித் துன்புறுத்துவரென்பதும்; இதனாலெய்தும் குறை அவ் அறிஞர்களதோ, மற்று, அவர்கள் கண்ட பொருள்களதோவென்பார்க்கு அது அவ்விரண்டிடத்து மன்றாய் இயற்கையின் பாற்றாமெனக் கோடல் வேண்டுமென்பதும்; இவ்வியற்கை நங்கைதான், அவை வெளி வருங்கால், மக்கள் அவற்றை யெளிதிலறிந்து ஏற்காவண்ணம் மயக்குவதோடு அமையாது, அவ் அறிஞர்களுக்கு இன்ன விழைக்குமாறு அவர்களைத் தூண்டுதலும் செய்வாளென்பதும், இங்குக்கூறிய இரண்டு குணங்களின் வயப்பட்ட இவடன் மாயையே மேலே நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் காரணமாமென்பதும்; தம் உடற்கும் வாளிக்கும் இடை நின்ற கையே ஞாயிறு பூமி முதலியவற்றின் இடைநிற்கும் தொடர்பென்றும், இத்தொடர்பே உலகம் நின்று நிலவுவதற்கு இன்றியமையாப் பொருளென்று மவர் கூறியது உண்மையேயாம் என்பதும்; இதனை அவ்வாசிரியர் வெளியிடுதலுமியல்பே யென்பதும்; இடைநின்ற தொடர்பு தடைப்பட்டழியுங் காலத்துத் தன் மாட்டிழுக்கும் தன்மைத்தாய ஞாயிறு தன் தன்மை திரியாது நிற்குமென்பதும் இன்னோரன்ன பிறவுமாம்.

இக்கருத்து மெய்க்கருத்தேயென மேனாட்டுப் பெரும் புலவர்கள் அனைவரும் உடன்பட்டனர்; இன்றும் உடன்படுகின்றனர். அவர்கள் "நிலத்துக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பு ஒர் காலத்து அழியும்; அவ்வழிவால் நிலம்.தன்நிலை பெயர்ந்து ஞாயிற்றின் கட் பட்டழியும்.” என்பதையே இன்னும் எதிர்நோக்கி நிற்கின்றனர். மற்று, அவர்தம் நோக்கத்திற்கு மாறாக, இம்மண்ணுலகு தன் தொடர்பை இழத்தலின்றித்தன் நிலைமை மாறாமையும் பெற்று விளங்குகிறது. இவ்வியற்கைப் புலவர்களுடைய கொள்கைகள் முற்றுப் பெறுநாள் எந்நாளோ! இது காரணமாக எழுந்த கொள்கைகளும் புலவர்களும் விண் மீன் தொகையினும் பலரே. என் செய்வர் தாம் ஆய்ந்தறிந்த உண்மைப்படி உலகம் தன் தொடர்பு கெட்டாலன்றோ அவர்கள் மனம் அமைதிபெறும்! இன்றேல், இப்புலவர்களையும் இயற்கையையும் ஒன்றுவிக்கும் சந்தாம் தன்மையுடைய புலவர்களேனும் வரல் வேண்டும்; அவர்களும் வந்தாரிலர்!!

ஆகவே, தாம் கொண்ட உண்மைப்படி உலகம் நடை பெறாமைகண்ட அவர்கள் உலக நடைப்படித் தம் முண்மைகளைச் செலுத்தி நோக்கினர். அது கொண்டே மேற்போந்த பேராசிரியரும் "பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு கெடின், அவை அக்கேட்டிற்குக் காரணமாயவற்றைத் தொடராது, ஒன்றானொன்று அழிந்தொழியு மெனினும், இவ்வுலகம் ஞாயிற்றைச் சுற்றி வருதலென்பதுண்மை"யென ஆண்டுக்கூறாது கூறிப்பின்னரோ ரமயத்தினன்கு விளக்கினர். அது முதற்கொண்டு, உலகம் பகலவனைச் சுற்றி வருகிற தென்பதும், அச்சுற்றுக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பும் நெறியும் சுற்றும் பொருளைச்சார்ந்தனவென்பதும் முடிந்த முடிவுகளாயின.

உலகின் தோற்றம்

மேற்கூறியவாற்றான் மண், ஞாயிறு முதலிய உலகங்களின் பொதுவியல்புகண்ட அன்பர்கள் அவற்றின் தோற்றத்தைக்கான அவாவுவரன்றே! அவ்வவாவும் அறிவின்பாலதேயாம். ஆயினும், உலகின்றோற்றத்தைக் காண்டல் செல்லும் நாம் முதற்கண் நம் தோற்றத்தை யறிவோமாவென்பது வினா. அவ்வினாவிற்குப் போதிய விடையளிக்கவல்ல முடிபுகள் இதுகாறும் கிடைத்தில கிடைப்பதுமரிதே. அற்றேல், நம் நாட்டுப்பண்டைய முனிவர்களும், பெரியோர்களும் கண்டாய்ந்தவை என்னாயவோவெனின், அவை அவரவர்கள் கொண்டுசென்ற அறிவின்றிண் மைக்கேற்ப அமைந்துள்ளனவேயன்றி, எல்லாமக்களானும் கொள்ளப் பெறவில்லை. இன்னணமே பிறநாட்டார் கூறிய முடிபுகளும் அமைந்துள்ளன என்க. எனவே, இருதலையும் தூக்கி நோக்குங்கால் ஒரு வகை முடிவும் பெறுதல் அரிதாகின்றது. இத்தனையும் நோக்கியோ நம் நாவரையரும் "வந்தவா றெங்ஙனே? போமாறேதோ? மாயமாம் பெருவாழ்வு" எனத் திருவாய்மலர்ந்தது!

இங்ஙனம் நம் தோற்றமே மாயமெனின், நாம் நின்று நிலவும் உலகின் தோற்றமும் மாயமேயாம். ஆயினும், நம் நாட்டுப் பெரியோரது கொள்கையோடு பிறநாட்டுப் பெரியோர்களது கூற்றுக்களை நோக்கி மனத்தான் ஆராய்வோம்.
----------
continued in part 2
This file was last updated on 11 July 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)