pm logo

செம்மொழிப் புதையல்
சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி, part 2


cemmozip putaiyal
auvai turaicAmi piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

செம்மொழிப் புதையல் - பாகம் 2
சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி

Source:
செம்மொழிப் புதையல்
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
திருவள்ளுவர் ஆண்டு : 2037
உரிமை : ஆசிரியர்க்கு
விலை: ரூ. 100.00
மணிவாசகர் வெளியீட்டு எண்:1349
-----------

9. ஊழ்வினை

திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் படிப்பதில் இந்நாளைய நன்மக்கட்குப் பேரீடுபாடு உண்டாகியிருக்கிறது. அரசியலறிஞர் முதல் பள்ளிச் சிறார்கள் ஈறாக அனைவரும் இந்நெறியில் ஒத்த கருத்துடையராக இருக்கின்றனர். உலகிற்கே நல்லறமுரைத்த வள்ளுவர்பால் மக்கட்கு நன்மதிப்பு உண்டாகியிருப்பது நல்வாழ்வுக்கு அறிகுறி. நினைவு, மொழி, செயல் என்ற மூன்று துறையிலும் உரிமை திகழ மக்கள் வாழ்ந்த காலம் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் வழங்கிய காலம்; அத்தகைய காலம் இப்போது வந்திருப்பதால், மக்கட்குத் திருவள்ளுவரிடத்தே இத்துணையீடுபாடு தோன்றிய தெனலாம்.

இதற்கு முன்னெல்லாம், நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் இந்நாட்டில் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும் பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால் வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப்பருவத்தே, தாய் தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையைமாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண் மையைக் கைதுவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல "நாமமது தமிழரெனக் கொண்டு" உயிர் வாழ்ந்தனர். “தாய் நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றி விட்டதே இந்த அந்நிய மொழிக் கல்வி" யென அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை.

இவ்வாறு உண்டாகிய மன மாசு இன்னும் நீங்கவில்லை; அடிமையுணர்வு அகலவில்லை; சென்ற இருநூறு ஆண்டுகளாக மெல்ல மெல்ல உடையைப்பற்றி, உடலைப்பற்றி, உதிரத்தைப் பற்றி, உயிரைப் பற்றிப் பிணைத்துக் கொண்ட அடிமைப் பண்பு நீங்கி விடுமா? வந்தது போல இல்லாவிடினும் ஒளிவர நீங்கும் இருள் போல விரைய நீங்காதன்றோ? உரிமை வாழ்வுபெற்று இயலும் நாம் உள்ளத்தாலும் உரையாலும் செயலாலும் இன்னும் அந்த அடிமைப் பண்பு நீங்காதேயிருக்கின்றோம். அதனால் தூய உரிமைக் கண்கொண்டு எழுதப் பெற்ற திருவள்ளுவரை நாம் அடிமைக் கண்கொண்டு காண்கின்றோம். அதுதான் இப்போது நம்மால் செய்ய முடிகிறது.

இந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் பல பகுதிகள் தெளிவாய் விளங்கவில்லை. பல ஐயங்கள் உண்டாகின்றன. பல புதிய கருத்துகளைப் புகுத்திப் பார்க்கின்றோம். உண்மைக் கருத்துகள் சிலவற்றை உண்மைக்கு மாறாகக் கொள்கின்றோம். இவை யாவும் இயல்பாக உண்டானவை. உரிமை ஞாயிறு தோன்றுங்கால் இத்தகைய கலக்கங்கள் உண்டாவது இயல்பு.

திருவள்ளுவரது திருக்குறள் ஊழ் என்றொரு பகுதியைக் கொண்டுளது. அஃது அறத்துப்பாலின் இறுதியில் பொருட் பாலுக்கு முன்னர் இருக்கிறது. அதனை அங்கே கொணர்ந்து திருவள்ளுவர் வைப்பானேன், என்பது ஒரு கேள்வி. இது நெடுங்காலமாக நின்று நிலவும் பழமையான கேள்வி. திருவள்ளுவர் இதனைக் கூறியிருப்பாரா? ஊழையும் உப்பக்கம் காண்டல் கூடும் என அறிவுறுத்தும் திருவள்ளுவர். "ஊழிற் பெருவலியாவுள" என அதற்கும் பெருமை பேசும் இப்பகுதியைக் கூறுவாரா? என்பன போன்ற சில கேள்விகள் இப்போது புதியனவாய் எழுகின்றன. நெருப்பிற் புகை தோன்றுவது போல நற்சொல் நற்செயல்களில் தீமை தோன்றுவதும், தீச்செயல்களில் நன்மை தோன்றுவதும் இயற்கையெனப் பகவற் கீதையில் வியாசர் கூறுவதுபோல் பழமையில் தீமையும் புதுமையில் நன்மையும் உண்டாகலாமாதலால் இப் புதுக் கேள்விகளால் நன்மையும் விளையும் என்ற உறுதியால் இவற்றை மேற்கொண்டு மதித்து ஆராய்வது அறிஞர்க்குக் கடன். அதுபற்றி இச் சிற்றாராய்ச்சி இங்கே செய்யப்படுகிறது. நல்லறிஞர்கள் ஆராய்ந்து நலங் கொள்வார்களாக.

திருவள்ளுவப் பெருமான் வழங்கிய திருக்குறளின் அடிப்படையான கருத்துகள் யாவையென முதற்கண் காண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும்.

"இருள்சேர் இருவினையுஞ் சேரா" "எனைப்பகை யுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்" என்றும், "எழு பிறப்பும் தீயவை தீண்டா" "எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்," "இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா" என்றும், "மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று," "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக் கருத்துகளை எடுத்தோதுகின்றன.

இம் மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழுலக வாழ்வுக்கும் காரணம்; நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர் தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் "வானோர்க்கு உயர்ந்த உலகம்" என்றும், “வரன் என்னும் வைப்பு" என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் "புத்தேளுலகம்" “தாமரைக்கண்ணான் உலகு" "மேலுலகம்" என்று, சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது.

இவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். "வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப்புணை பிறிதில்லை” (புறம்) யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை" (நற்) என வினையுணர்வும், "சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின், மறக்கு வென்கொல் என்காதலன் எனவே" (நற்) "இம்மை மாறி மறுமையாயினும், நீயாகிய ரெங்கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" (குறுந்) “இம்மை யுலகத்திசையொடும் விளங்கின மறுமை யுலகமும் மறுவின் றெய்துப" (அகம்) என மறுபிறப்புணர்வும் "வாராவுலகம் புகுதலொன்றெனப் படை தொட்டனனே குரிசில்" (புறம்), "தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்" (புறம்) என மேலுலக வுணர்வும் சங்கச் சான்றோர்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறே மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தும் இம்மூவகையுணர்வும் குறிக்கப்பெறுகின்றன. வடநூல்களிலும் வேதங்கள் தவிர ஏனை எல்லா நூல்களிலும் இவை கூறப்படுகின்றன. உலகாயதம் ஒழிந்த ஏனையச் சமயங்கள் யாவும் இவற்றை மேற் கொண்டுள்ளன. ஆதி வைதிகம் ஒழிந்த இந்திய சமயங்கள் பலவற்றிற்கும் வினையுணர்வு அடிப்படை எனத் தெளிய உணர வேண்டும்.

வினை யென்பது யாது? மனம், வாய், உடம்பு என்ற கருவிகளின் இயக்கமும் இயக்கமில்லாமையும் வினையென்று கூறப்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வினையாகும். உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு. இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான் என்றால் கட்டுதல் வினையும், பெரிய கோயில் செயப்படு பொருளுமாகும். அதனால் அவன் அடைந்த பயன் இன்பமாம். இப்படியே ஒவ்வொரு வினைக்கும் செயப்ப்டு பொருளும் பயனும் உண்டு. தொடக்கத்தில் சமய நூல்கள், செய்கையை வினையென்றும், செயப்படுபொருளைக் கன்மம் என்றும் கூறின. ஒரு செயல் செயப்பட்டபோதேயன்றிச் செயப்படாத போதும் வினையெனவே நின்றதனால் பின்வந்த சமய அறிஞர்கள், செய்யப்படும்போதும் படாதபோதும் செயப்படுபொருள் உள்ளடங்கியிருப்பது கண்டு, செயலையும் செயப்படு பொருளையும் ஒருங்கு கூட்டி வினையெனவும், கன்மமெனவும், இன்பமும் துன்பமுமாகிய பயன்களை வினைப்பயன் என்றும், கன்ம பலன் என்றும் வழங்கினர்.

ஒருவினை செயப்படுங்கால் அதனால் விளையும் பயனும் உருவர்கிறது. அவ்வினை செயப்பட்டதும் பயனும் உருவாகி இன்பமோ, துன்பமோ நல்குகிறது. சில வினைகள் முடிந்தபின் சிறிது காலங்கழித்துப் பயனைத் தருகின்றன. இவையெல்லாம் நாம் உலகியல் வாழ்வில் நாளும் காணும் காட்சியாகும்.

இவ்வினைக் குறிப்பு வேதங்களில் காணப்பட வில்லையென அவற்றை யாராய்ந்த அறிஞர் கூறுகின்றனர். ஆயினும், அவ்வேதங்களிற் குறிக்கப்படும் மந்திரங்களைப் பிழை சிறிதுமின்றி ஒதினால் கருதிய பயன் விளையுமெனப் பிற்காலவைதிகர்கள் கூறுவர். மந்திரங்களை வாயால் பிழை சிறிதுமின்றி ஒதுவதும் வினையே யென்பது நன்கு தெளிய வேண்டியதென்று. எனவே, தமிழ் நூன்முறைப்படி எல்லா நாட்டு எவ்வுயிரிடத்தும் வினையுணர்வு உண்டு என்பது தேற்றம்.

இனி மந்திரங்களை ஒதுங்கால் அவற்றின் பயன் அருவாய் உருவாகிறது. அம்மந்திரங்களை விதிப்படி யோதி முடித்தவழி, மந்திரப்பயன் உருவாகி ஒதுவோர் விரும்பிய பயனை நல்குகிறது. அருவாய் உருவாகும் மந்திரப்பயனை அதிருஷ்டம் என வட நூல்கள் ஒதுகின்றன. இவ்வேதங்களைத் தொடர்ந்து நிற்கும் சங்கிதைகள் இவ்வினையியல்பை வற்புறுத்தாவிடினும் நல்வினை செய்பவன் துறக்கவுலக இன்பமும், தீவினை செய்பவன் நிரயத் துன்பமும் பெறுவர் என்று இசைக்கின்றன. இதனால் வினையுண்டென்பதும் மறு பிறப்புண்டென்பதும் பிறவும் பிற்கால வைதிகர்களுக்கும் உடன்பாடானமை தெளிகின்றோம்.

செய்வினையின் முடிவில் நிற்கும் வினைப்பயன் உடனே வந்தெய்துவதும், காலங்கழித்து வந்தெய்துவதும் உண்டெனக் கண்டோம். வினை முடிவில் எய்தக்கூடிய பயன், வினை முடிந்த சிறிது காலத்திற்குப்பின்னர் வந்து எய்துவானேன்? ஏன் உடனே எய்துவதில்லை? என்பன முதலிய ஐயங்கள் எழுதுவதற்கு இடமுண்டு. வினை நிகழுங்கால் அருவாய் உடன் பிறக்கும் அதிருஷ்டம், தனக்குரிய பயனை விளைவித்தற்குரிய பக்குவம் எய்த வேண்டியிருக்கிறது. வினையைச் செய்தவர், அதற்குரிய பயனை நுகர்தற்குரிய காலம் வரும்வரையில், அதிருஷ்டம் பக்குவம் பெற்றுக் கொண்டு வரும். பக்குவமானவுடன் தன் பயனை அந்த அதிருஷ்டம் நுகர்வித்து விடும். செய்வினையின் பயனைச் செய்தவர் பெறுதற்குரிய அதிருஷ்டம் பக்குவப்படுவதைச் சார்ந்திருக்கிறது. அதிருஷ்டமும் செயப்படு பொருள் போல வினையிடத்தே தோன்றுவதால் தமிழ் நூலார் கூறும் வினைக்கண் அடங்கிநிற்கும்.

ஒருவினை (அதிருஷ்டம்) பக்குவப்படுவதற்குள் வேறுபல வினைகள் வந்து சேர்ந்துவிடும். இவற்றில் பக்குவப்பட்டவை இப்பிறப்பிலேயே பயனை நல்கும். எஞ்சியவற்றை நுகர்வது குறித்து மறுபிறப்பு வந்து சேர்கிறது. வினைப்பயன்களின் கூறுபாட்டிற்கேற்ப மறுபிறப்பில் புல் முதல் தெய்வமீறாகப் பல்வகையுடம்புகள் தோன்றுகின்றன. இதனால் எடுக்கும் பிறப்புகளும் பலவாகின்றன.

பிறவிதோறும் எடுக்கும் உடம்பு கருவியாகக் கொண்டே வினைப் பயன்களை நுகரவேண்டும். நுகருந் திறம் உடம்பு தோறும் வேறுபடும். அதற்கேற்பச் சில பயிற்சிகள் உண்டள்கிக் குணம் போல ஒன்றிவிடும். அவையே அவ்வுடம்புகருவியாக வினைப்பயன் நுகர்வதற்கு வாயிலாய்ச் செயற்படுகின்றன. இவற்றை வாதனை என்பர். தமிழ் நூல்கள் வாதனையை அவா என்று குறிக்கும். பக்குவமெய்தி நிற்கும் வினைப்பயன் வாதனையின் வாயிலாக உயிரை வந்து அடைகிறது. வினைகள் பக்குவப்படுவதற்குரிய காலமும் பயன்களின் அளவும் அவ்வினைகளின் வன்மைகளைச் சார்ந்திருக்கின்றன. சில வினைகள் பக்குவமுற்றுப் பயன் நல்குங்கால் வேறான சில வினைகளும் பக்குவமெய்தி நிற்கலாம். அற்றுள் வலியதனால், மெலியது பக்குவமெய்திருப்பினும் பற்றுக்கோடாகிய வாதனை யில்லாமையால் கெட்டழியும். சீவன் முத்தன் ஒருவன், தன் உடம்பளவாய் நிற்கும் வாதனையைப் (அவாவை) பற்றி வந்து அடையும் வினைப்பயனை நுகரும்போது, பக்குவ மெய்தியிருக்கும் ஏனை வினைகட்குப் பற்றுக்கோடாகாதபடி வாதனைகளைத் தன் பால் நிலையா வண்ணம் அறுத்து விடுகின்றான். அதனால் அவன் வினைத் தொடர்புகளின் நீங்கி வீடுபெறும் திறம் பெறுகின்றான்.

நம் நாட்டு அறிவு நெறிச் சமயங்கள் பலவும் இறைவன் உலகம் உயிர் என்ற மூன்று பொருள்களையும் கண்டிருந்தன. கடவுள் என்ப தொன்றுண்டு என்பதைத் தொடக்கத்தில் வற்புறுத்தாத நையாயிகரும் சாங்கியரும் பின்னர் அதனை யுணர்ந்து மேற்கொண்டனர். பிரமப் பொருள் ஒன்றேயுளது; ஏனை உலகம் உயிர் என்பன பொய்யென்று கொண்ட பிரம வாதிகளும், விவகார மென ஒரு நிலை வகுத்து அதன்கண் இம்மூன்றும் உண்டெனக் கொண்டு சமயப்பணி புரிந்தனர். இம்மூன்றனுள் இறைவன் உயிர் என்ற இரண்டும் அறிவுடைப் பொருள் என்றும் பிறவெல்லாம் அறிவில்லாதவையென்றும் கூறுவர். வினையும், வினைப்பயனும் வாதனையும் ஆகியயாவும் அறிவில்லாதவை.

அறிவில்லாத வினைப்பயன் அறிவில்லாத- வாதனையைப்பற்றுக் கோடாகக் கொள்வதும், இன்பமும், துன்பமுமாகிய வினைப்பயன்களை உயிர்கட்கு நல்குவதும் கூடா. அறிவுடைய உயிரை அறிவில்லாத வினைப்பயன்கள் வந்து எய்துவதற்கு அறிவுடைய இறைவன் வேண்டப்படுகின்றான். அவன் உலகைப் படைத்து அவரவர் செய்த வினைப் பயன்களை அவரவரோடு கூட்டி நுகரச்செய்வதும் அந்த இறைவன் வேலை என்று கண்டனர். அது பற்றியே தொல்காப்பியரும் கடவுளைப் "பால்வரை தெய்வம்” என்றார். உலகுயிர்களைக் கடந்து நிற்கும் நிலையில் இறைவனைக் "கடவுள்" என்றும், அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நிலையில் "தெய்வம்" என்றும் தொல்காப்பியரை யுள்ளிட்ட தமிழ் நூலார் கூறினர்.

இனி வடநூலாருள் யோக சமயத்தார் இவ்வினைகளைச் சுக்கில கன்மம், கிருஷ்ண கன்மம், சுக்கில கிருஷ்ண கன்மம், அசுக்கில கிருஷ்ண கன்மம் என நால்வகைப்படுத்திக் கூறுவர். சுக்கில கன்மம் நல்வினை; கிருஷ்ண கன்மம் தீவினை; இரண்டுமிலாத வினை அசுக்கில கிருஷ்ண கன்மம். இறுதியிற் கூறிய அசுக்கில கிருஷ்ண கன்மத்தையே செய்பவன் வீடு பெறுபவன் என்பதும் அவன் அது செய்வதால் அவனுடைய புத்தி தத்துவத்திற்கிடந்து அவனையடைவதற்குப் பக்குவ முற்றுவரும் முன்னைவினைகள் (அவாவென்று தமிழில் கூறப்படும்) வாதனையாகிய பற்றுக்கோடு இல்லாமையால் கெட்டுப்போம் என்பதும் யோகநூலார் கொள்கை.[1]
-----
[1]. வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV-17
-----------

ஒரு மனிதனுடைய நினைவு, சொல், செயல்களால் கன்மமென்னும் நுண்ணிய பொருள் உண்டாகிறது. அவனுடைய விருப்பு வெறுப்புகள் பசைபோல் ஊறி அக்கன்மத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு சீவ பதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு, பல பிறவிகளிலும் ஈட்டப்படும் கன்மம் சீவனைச் சூழ்ந்துகொண்டு கன்ம சரீரமாகிறது. பிறப்பு மாறுங்கால் சீவன் கன்ம சரீரத்தோடே நீங்கும் இன்ப துன்பங்களை ஒப்ப நோக்கி நுகரும் மேலோர்க்கு அக்கன்மம் முதிர்ந்து உதிர்ந்தொழியும்; அல்லாதவர்.பால் அக்கன்மம் பெருகி வெண்மை கருமை முதலிய "இலேசியம்" பெறும். ஐவகைச் சீலங்களிலும் சிறிதும் பிழையின்றி யொழுகும் சான்றோர் புதிய கன்மங்களைச் செய்யாமையால் முன்னைக் கன்ம பலங்கள் முற்றும் நுகர்ந்து கழிந்தபின் உடம்பின் நீங்கி உலகத்து உச்சியில் வாழும் வீடுபெற்று முத்தர்களோடு கூடி இன்புறுவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. புத்த சமயம் ஆன்மா உண்டென்பதை மேற்கொள்ளா தொழியினும் வினையும், மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகுகிறது. யோகர்கள் போலப் புத்தர்களும் வினையை நலம் பயப்பன, தீங்கு பயப்பன, இரண்டும் பயவாதன என நால்வகைப்படுத்து இறுதியிற் கூறிய வினைவகையால் ஏனை வினைகளெல்லாம் கெடும் என்பர்[#] வினைகட்கெல்லாம் இச்சையே காரணம். இச்சையை நீக்கியவன், அறியாமை வெறுப்பு ஆசை முதலியவற்றைக் கெடுத்துப் பிறப்பறவுயரும் பெரியோனாவன். அவன் முன்னை வினைப்பயன்களை மட்டில் இப்பிறப்பில் நுகர்வான். அவன் வினைத் தொடர்பால் கீழ்நிலை எய்தான். அவன் அருக பதம் பெற்ற பரமேட்டி எனவுரைக்கின்றனர்.
----
[#] அத்தி சாலினி பக். 89.
--------------
இவ்வண்ணம் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள் பலவும் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டுள்ளனவாயினும் உலோகாயதம் ஒன்றுதான் இவற்றைக் கொள்ளவில்லை. உலகாய தருள்ளும் சுசிட்சித சாருவாகர் என்போர் ஆன்மா என ஒன்று உண்டெனக்கொண்டு அதுவும் இறக்குங்கால் உடம்போடே அழிந்துவிடுகிற தென்பர். ஆசீவகருள் வினையும் மறு பிறப்பும் பிறவுமாகிய கொள்கைகளை ஏற்பதிலர்.

இவர்களை அஜிதகேச கம்பளர் என்பர். ஆசிரியர் திருவள்ளுவர் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகும் கொள்கையினர் என்பதை முன்பே கண்டோம்.

ஒருவருடைய நினைவு, சொல், செயல்களாகத் தோன்றும். வினைப்பயன் பழுத்து நிற்கும் நிலையில் ஊழ்வினை என்று கூறப்படுகிறது. ஊழ்த்தல் என்பது “இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்” என்றும் “தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே” (புறம்) என்றும் சான்றோர் வழங்குவதால் ஒரு வினைச் சொல்லாதலைக் காண்கிறோம். இதன் பொருள் பயனுண்டாக முதிர்தல் என்பதும் அறிகின்றோம். மலர்ந்து மணமாகிய பயன் நல்கும் பூ, ஊழ்முகை (நற். 115) என்றும், கனிந்து பயன்படும் பழத்தை ஊழுறுபழம் (அகம். 117) என்றும் சான்றோர் வழங்குகின்றனர். இதனால் ஊழ்வினை யென்பது முதிர்ந்து பயன் நல்கும் வினை என்று பொருள்படுமாறு இனிது விளங்குகிறது.

பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்திவிடுமேயன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல்போல் வினை ஊழ்த்தல் தன்பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப்பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கணிக்கு அஃது இயற்கையமறமாதல்போல ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கையறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலிமிகப் பெரிது என்பதுபற்றி ஆசிரியர் ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்.

பழுத்து வரும் பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியால் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, "ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றனர். ஊழையும் ஊழ்க்காது கெடும் என அதன் வினையால் கூறாமல், ஊழையும் ஊழ்க்காவாறு இடையூறு செய்வர் என்பது தோன்ற, உப்பக்கம் காண்பர் என்று ஆசிரியர் கூறுவது நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஒடுவதை இயற்கை யறமாகக் கொண்டதண்ணீரும் இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல்போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர்கட்கு இயல்வதொன்றாயிற்று. ஆகவே, ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்தும் நல்குவதில் பெருவலி இயற்கை யறமாக வுடையதென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின. இது பற்றியே,

“சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.”

என்ற திருக்குறளும் தோன்றுவதாயிற்று. சான்றோரும் வினை பெருவலியுடையதாயினும், வெல்லத்தக்கது; கெடுத்தற்குரியது என்றெல்லாம் பேசுவராயினர்.

(அருந்தமிழ் உரைவளங்கண்ட பெருந்தமிழ்ப் பேராசிரியர் ஒளவை அவர்கள் இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் பன்னெறிச் சமயப் பனுவல்களில் தோய்ந்த நிலையில், மணிமேகலைக்கு உரைகண்ட திளைப்பில் திகழ்ந்தபோது இக் கட்டுரை எழுதினார். 1954-ஆம் ஆண்டு மயிலம் திருப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மணி விழா மலரில் வெளிவந்த இக் கட்டுரையைப் பேராசிரியரது நான்காம் ஆண்டு நினைவாக வெளியிட்டுப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.)
---------------

10. சங்ககாலத் தமிழ்மகன்

பண்டைநாளில் வாழ்ந்த தமிழ்மகன் என்னாது சங்ககாலத் தமிழ்மகன் என்றே தலைப்பு அமைகிறது. பண்டைக்காலம் என்பது ஒரு காலவெல்லைக்குள் அடங்காது பரந்த பண்பினதாய் இருக்கிறது. சங்ககாலம் என்ற வழி, முற்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சங்கம் இருந்து தமிழ்த் தொண்டாற்றித் தனிப்பெருஞ் சிறப்பெய்தியிருந்த காலம் என்ற உணர்வு நம் உள்ளத்தில் எழக் காண்கின்றோம். ஆயினும் இச் சங்ககாலம், இத்துணை ஆண்டுகட்கு உட்பட்ட காலம், மேற்பட்ட காலம் என எண்ணிட்டுக் காண முடியாத நிலையில் உள்ளது. சங்கத்தின் உண்மையையே ஐயுறுவோரும், ஐயுற்றுச் சங்கமென்பதே இருந்ததில்லையென்போரும், உண்டென்போரும், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னென்போரும் பின்னன்போரும் எனப் பல திறத்தராய் ஆராய்ச்சியாளர் உளர். மற்று, நம் செந்தமிழ் மொழிக்கண் பழைய நூல்கள் பல சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன. அவ்விலக்கியங்கள் தோன்றி நிலவிய காலமே சங்க காலமாம் என்ற பொது எல்லையை ஈண்டுக் கால வெல்லையாகக் கொள்கின்றேன். அவ்விலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என மூவகையாய் இயலுகின்றன. இவை எழுந்து வளர்ந்த சிறந்த காலம், சங்க காலம் இன்றேல், இவை சங்க இலக்கியம் எனப்படா.

பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். இதன்கண் திருமுருகாற்றுப்படை முதலாகக் கூத்தராற்றுப்படை ஈறாகப் பத்துப் பெரும்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுள் இயற்கையின் இனிய காட்சி இனிது காட்டப்பெறுகிறது. அக்காட்சியைக் காட்டும் கட்டுரைகள் இலக்கணவரம்பு கடவாது, உள்ளம் கொள்ளத்தக்க அளவில் நின்று இன்பம் சுரப்பிக்கும் திறம் எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது தருகின்றது. இதனால் கல்வியின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார்கள். தமிழ்மன்னன் ஒருவன் தன் கோல் நிழலில் மக்களை நோக்கி,

“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாதுஅவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்.”

என்று வற்புறுத்துகின்றான். ஒரு பெரியவர், வாழ்நாள் மிகுதியாகிய வழியும், தமக்கு நரையோ திரையோ உண்டாகாமல் இருந்தார். அது கண்ட அறிஞர் சிலர் அவரை நோக்கி, இதற்குக் காரணம் என்னை என வினவினர். அவர்கட்கு அவர், "என் மனைவி, மக்கள் முதல் அனைவரும் என் கருத்திற்கேற்ப ஒழுகும் இயல்புடையவர். வேந்தனும் அல்லவை செய்வதிலன். சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்றார். எனவே, சான்றோர் இனத்தனாய், கல்வியறிவு சிறந்து நிற்பது தனக்கு இன்றியமையாதது என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் இனிதறிந்து ஒழுகிய திறம் நாம் காண்கின்றோம்.

சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்வில், உடல் வளர்ச்சி கருதா உயிர் வளர்ச்சியொன்றே கருதி, கல்வி பயின்று அறிவுபெற ஆர்வம் கொண்டான் என்பவர் அவனது இயல்பை அறியாதவராவர். உடல் உரம்பெறுவதற்கேற்ற ஆள்வினைக்கண் அவனது உள்ளம் அழுந்திப் பயிற்சி பெற்றிருந்தது. வாளேந்திப் போருடற்றிச் செய்வன செய்தல் தன் கடன் என்பதை அவன், தாயால் இளமையிலேயே வற்புறுத்தப் பெறுகின்றான். நீரில் நீந்துதல், யானை குதிரை முதலிய இவர்ந்து செல்லுதல், வாட்பயிற்சி, விற்பயிற்சி முதலியன பயின்றிருந்தான். இதனை நன்குணர்ந்த கம்பனும், இராமன் வாயில் வைத்து, "மதிதரு தனயரும் வலியர்கொல்" என்று வினவுகின்றான். உடல் வளர்ச்சிக்குப் படைப் பயிற்சியும், அறிவு வளர்ச்சிக்குக் கல்வியும் வேண்டுவனவாம் என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் நன்கு அறிந்திருந்தான். உடல் வன்மையால் மனத்திட்பமும் வினைத்திட்பமும் பிறக்கும் என்பது அவனது உள்ளக்கிடை. வீரமகனொருவன், மனக்கினிய மகளொருத்தியை மணம் புணருங் காலத்தே, அரசனது போர்ப்பறை முழங்கக் கேட்டான். ஒருத்தியை மணந்து நுகரும் இன்பத்திலும், தன் நாட்டிற்கு உற்ற இடர் நீக்குதலால் உளதாகும் இன்பம் பெரிதெனக் கருதி மணத்தைத் தள்ளிவைத்துப் போர்க்குச் செல்கின்றான்.

"விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற்
சுணங்கனி வனமுலை யவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ,
ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை யெஃக மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குரிசில்.”

என்று பரணர் கூறுகின்றார்.

இவ்வண்ணம் கல்வியறிவும், உடல் வன்மையும் ஒருங்கு பெற்றுத் திகழும் தமிழ் மகனுக்குத் திருமணம் செய்விக்கும் எண்ணம் இந்நாளில், பெற்றோர்க்கு அமைகின்றது. அந்நாளில் அங்ஙனம் இல்லை. தக்கோனாய் மணப்பதம் பெற்ற மகன், தன் மனம் விரும்பும் மாண்புடைய மகள் ஒருத்தியைத் தானே தேர்ந்து காண்கின்றான். அவளது மனவொருமையைப் பல நெறிகளால் ஆராய்கின்றான். கற்பின் திண்மையைக் களவில் ஒழுகிக் காண்கின்றான். பின் தன் களவு நெறி உலகறிய வெளிப் படுத்துகின்றான். "அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்" என்றே ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கின்றார். பின்னர், பெற்றோர் மணத்திற்கு இயைந்து மணம் புணர்விக்கின்றனர்.

மனைவாழ்க்கையின் மாண்பு குறித்து அவன் செய்யும் திறம் மிக்க வியப்புத் தருவதாகும். தான் நடத்தும் வாழ்க்கை தன் நலமே குறித்த வாழ்வாதல் கூடாது. ஈதலும் இசைபட வாழ்தலுமே மனைவாழ்க்கை, தன் வாழ்வு ஏனை எவ்வகை மக்கட்கும் ஏமம் பயக்கும் வாழ்வாதல் வேண்டும். தான் ஈட்டிய பொருளைத் தானே நுகர்தலின்றிப் பிறர்க்கும் பயன்பட வாழவேண்டிய தமிழ்மகன் பொருள் ஈட்டல் கருதிக் கலங்கள் ஏறிக் கடல் கடக்கின்றான். செல்பவன் தன் மனைவியின் பிரிவாற்றாமை கண்டு தெருட்டு முகத்தால் வாழ்வின்
---------
குறிக்கோளை நன்கு வற்புறுத்துகின்றான். அவன் பிரிந்தவழி, அதனை அவன் மனையுறையும் மகளிர் பேசிக்கொள்வதால் நாம் இனிது அறியலாம்.

"அறந்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஆன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்.”

என்றும்,

"அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனைஇழை.”

என்றும் பொருளைக் கருதித் தமிழ்மகன் வாழ்ந்திருக்கின்றான். இவ்வண்ணம் தானும், தன் நாட்டு மக்களும் பொருட் குறைபாடின்றி இனிது வாழ்தல் வேண்டும்; நாட்டில் வறுமை தோன்றின், (நாட்டவர் மனத்தே நல்ல எண்ணங்கள் வற்றிவிடும்;) நல்லறிவு மாயும் என்று அஞ்சி, அவன், “செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கட் செல்வம்" என்று பிறர்க்கென வாழ்தலைப் பொருளாகப் பேணி வாழ்ந்து வந்தான்.

தான் ஈட்டிய பொருளைத் தானும் ஏனைத் தமிழ்மக்களும் பிறரும் பெற்று இன்ப வாழ்வு நடத்த வேண்டும் என விரும்பும் அத் தமிழ்மகனுக்கு வேறொரு கடமையும் உண்டாகின்றது. நாட்டுப் பகைவரால் உண்டாகும் கேடும் அச்சமும், வாழ்க்கையின்பத்தைச் சிதைக்கும் என்ற எண்ணங் கொள்கின்றான். அதனால், தன் நாட்டிற் காவல் குறித்துப் போர் செய்தற்கும், பிற வினை செய்தற்கும் அவன் உள்ளம் கொண்டு, அது குறித்து வினை செய்வதும் கடமை என்பதை உணர்கின்றான். தான் இளமையிற் பெற்ற கல்வி, நாட்டின் நலம் கருதிச் செய்வன செய்தற்குப் போதிய துணை செய்யாமை கண்ட வழி, நிரம்பிய கல்வி பெறுவதும் கடன் என்று தெளிகின்றான். ஒரு கால் ஒரு தமிழ்மகன் கல்வி குறித்துப் பிரிந்திருந்தபோது, அவன் பிரிவாற்றாது வருந்திய அவன்றன் மனைமகளிர், வாடைக் காற்றை நோக்கிக் கூறுவாராய், “ஏ, வாடைக்காற்றே,

தமியோர் மதுகை தூக்காய் தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காளை
கைத்தொழு மரபின் கடவுட் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின்

நீ, கரிகாலனோடு வாகையென்னுமிடத்தே ஒன்பது வேந்தர் ஒன்றுகூடி எதிர்த்தபோது, அவனால் அலைப்புண்டு தம் கொற்றக்குடை இழந்த அந்தப்

“பீடில் மன்னர் போல
ஒடுவை மன்னால் வாடைநீ எமக்கே.”

என்கின்றனர். இங்கே, தமிழ்ம்கன் மேற்கொண்ட கல்வியை, “கைதொழு மரபின் கடவுட்சான்ற செய்வினை" என்கின்றனர். அரசு முறையாயினும், வாழ்க்கை முறையாயினும் அவ்வதற்கு வேண்டிய கல்வியறிவு இல்வழிச் சிறவாது என்பதற்காகக்,

“காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறின் றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றா னாயின், வைகலும்
பகைக்கூழ் அள்ளல்பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.”

என்று இளந்திரையன் கூறுகின்றான்.

நாட்டின் காவல் குறித்துப்போருடற்றி உயிர்கொடுப்பது நல்வினையென்றும், அவ்வாறு உயிர்கொடுத்துப் புகழ் கொள்வாரே சிறந்தோர் என்றும் தமிழ்மகன் கருதியிருந்தான். அக்கருத்தை அவனேயன்றி, அவன் மகளிரும் இனிதறிந்து இருந்தனர். பகைவருடன் போருடற்றச் சென்ற தமிழ்மகன் - ஒருவன்றன் மனைமகளிர்,

“நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்”

என்று பேசிக் கொள்கின்றனர். இந்நெறியில் மகளிர் வீரத் தீ எரிய நிற்கும் உள்ளமுடையராதல் சங்ககாலத் தமிழ்மகள் இயலறியும் நெறியிற் புலப்படும்.

மனைவாழ்க்கையில் பொருளிட்டல், கல்வியறிவு பெறுதல், வினைசெய்து நாடுகாத்தல் முதலியன செய்தொழுகும் தமிழ் மகன் மகப்பேறு குறித்து மகிழ்கின்றான். மக்களை யில்லாத வாழ்க்கையை விரும்புவதிலன். "மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லை தாம்வாழும் நாளே” என்று கூறுவன். பெற்ற மக்கள் தம் குடியின் உயர்ச்சிக்கு உழைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றான். அன்ன மக்களைப் பெற்றோரை வாயார வாழ்த்தி மகிழ்வன்.

"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற் கமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பயந்தனை.”

என்று பாராட்டுதலைக் காண்க.

இனி, இவனது உள்ளத்தே கடவுள் உணர்ச்சி வீறுபெற்று நிற்கின்றது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” என்று கருதி வாழ்பவன். இவன் ஆண்டவனை வழிபட்டு வேண்டுவன மிக்க வியப்புத் தருவனவாம். சங்க காலத்தே ஏனை. நிலத்து மக்கள் வேண்டியன வேறு. பிறர் அழிவதையும், பிறர் ஆக்கம் கெடுவதையும் பொருளாகக் கருதி ஆண்டவனை வேண்டினர் பிறர்; தமிழன்,

&mnsp;     “யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமு மல்ல,
அருளும் அன்பும்அறனும் மூன்றும்.”

என்றும்,

“யாமும் எம் சுற்றமும் பரவுதும்,
ஏம வைகல் பெறுகயாம் எனவே.”

என்றும் வேண்டுகின்றான்.

இங்ஙனம், சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்க்கையைத் தனக்கேயன்றிப் பிறர்க்கும் தன் நாட்டின் நலத்துக்கும் எனக் கருதிச் செலுத்தி, வழிபாட்டை மறவாது, மேற்கொண்டு, அவ்வழிபாட்டிலும் தன் வாழ்வின் குறிக்கோள் கை கூடுதற்கு ஆக்கமாகும் அருள், அன்பு, அறம் என்ற மூன்றுமே விரும்பியிருந்த நிலையை, இற்றைநாளில் மக்கள் அறிந்து நலம் பெறுவாராக!
----------

11. தமிழ் மகளிர்


பண்டை நாளைத் தமிழகத்தில் மகளிரது நிலைமையை அறிந்துகொள்வது மிகவும் நன்று. மக்கட் படைப்பில் ஆடவர் பெண்டிர் என்ற இருபாலார்க்கும் உடலமைப்பில் சிறிது வேறுபாடு உண்டேயன்றி நினைவு, சொல், செயல், அறிவு என்ற கூறுகளில் வேற்றுமை கிடையாது. உடலமைப்பு வேறுபாடு மக்கட் பேற்றுக்கும் மக்களினப் பெருக்கத்துக்கும் ஏற்ற வகையில் துணைபுரிகின்றது. அதனால் உலகியல் வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் ஒன்றற்கொன்று இன்றியமையாத் துணையாதலை நாம் காண்கின்றோம். புறத்தே சென்று வாழ்க்கைக்கு வேண்டும் உண்டி, உறையுள் முதலியன நாடி நல்கும் வகையில் ஆடவர் சிறந்து நிற்றலின் அவரது உடற்கூறு ஏனைப் பெண்டிரது உடலினும் வலி மிக்கதாகின்றது. மகப் பெறுதலும் அவற்றை வளர்த்தலும் ஆகிய செயல்வகைகளில் பெண் மகளிர் ஆடவரது துணைமையைப் பெரிதும் நாடுதலின் ஆடவர்நிலை சிறிது உயர்வதாயிற்று. இன்னோரன்ன காரணங்களால் மக்களுலகில் பெண்டிரது நிலை சிறிது அடங்கிய தன்மைத்தாக உளது. இந்த நிலைமையினைப் பழங்கால மக்களில் சிலர் நன்கு உணர்ந்து கொண்டு மகளிரைத் தங்கள் நலனுக்காகப் படைக்கப்பட்டவரெனக் கருதி ஒழுகினர்.

நம் தமிழகம் பண்டை நாளில் பிற நாடுகளோடு தொடர்புற்று, வாணிகம் முதலிய துறைகளில் சிறந்து விளங்கியபோது, மேலை நாடுகளில் கிரேக்கரும் யவனரும் எகிப்தியரும் பாரிசேயரும் பாபிலோனியரும் பிறரும் மதிப்புடைய நாகரிகம் கொண்டு விளங்கினர்; அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகளும் அரசியல் நெறி முறைகளும் அறிவுரைகளும் இன்றும் மேனாட்டவரால் பாராட்டப்படும் தகுதி படைத்துள்ளன. அவர்களுடைய வாழ்வில், மகளிர் நிலை ஆடவர்க்கு அடிப்பணி புரியும் துறையிலேயே இருந்தது. எரோடாட்டசு முதலியோர் குறிப்புகளால் ஆண் மக்களால் ஈட்டப்படும் பொருள் வகையுள் ஒன்றாகவே மகளிர் கருதப்பட்டமை தெரிகிறது. மக்களைப் பெறுதலும் வளர்த்தலும் குடும்பத் தொழில்களைச் செய்தலுமே அவர்கட்குச் சிறந்த பணிகளாகக் குறிக்கப்படுகின்றன. எகிப்தியர்கள் மகளிர் பலரை மணந்துகோடல் மரபாகக் கொண்டனர். தொடக்கத்தில் அஃது அரசர்பால் தோன்றி நாளடைவில் யாவர்க்கும் எய்துவதாயிற்று.

இசுலாம் சமயம் பரவிய பின் எகிப்து மன்னர் மகளிர் பலரை மணத்தல் கடமையாகக் கொண்டனர். ஒருவன் தான்கொண்ட மனைவியர் பலரும் அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் தனக்குக் கிடைத்த செல்வமாகக் கருதினான். அவர் அனைவருடைய உழைப்பும் குடும்பத்துக்குப் பொருள் வருவாயாக இலங்கிற்று. வென்ற வேந்தர் தோற்றோர்டால் பெறப்படும் திறைப் பொருளாக மகளிரைப் பெறுவது அந்நாளைய இயல்பு. வேந்தரைக் காணச் செல்லும் தலைவர்களும் செல்வர்களும் இளமகளிர் பலரை அவர்கட்குப் பரிசுப் பொருளாகவும் வழங்கினரென எகிப்து நாட்டு வரலாறு கூறுகிறது. இம்மனைவியர்க்கு வேறாக இற்பரத்தையராக நூற்றுக் கணக்கில் மகளிரைத் தொகுத்து வைத்தல் மேலை நாட்டு அரசர் செயல்முறையாக இருந்திருக்கிறது. இவ்வழக்கம் கிரேக்கர் யவனர் முதல் பாபிலோனியர் கிசியர் ஈறாக எல்லோரிடையும் இருந்துளது. அரபியர் மாத்திரம் இத்துறையில் ஓரளவு உயர்ந்த நோக்கம் கொண்டனர். ஆண் மக்களைப் போலப் பெண்ம்க்களும் அரசியல் வகைகளிலும் போர்த் துறையிலும் சிறந்த பங்கு கொண்டனர். முறை புரிதல். படைக்கலம் பயிறல், படைத்தலைமை தாங்கல் முதலியவற்றில் மகளிர் ஆடவரையொப்ப விளக்க முற்றனர். அறிவாராய்ச்சி, இசை, கூத்து, இலக்கியப் புலமை, இனிய சொல்வன்மை என்ற நலம்பல வற்றில் மகளிர் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். ஆடவர் அனைவரும் மணம் புரிந்துகோடல் இன்றியமையாதது; மண்மாகாமை ஓர் ஆடவனுக்கு இழிவையும் பழிப்பையும் நல்கிற்று. மக்கட் பேற்றுள் ஆண்மகப்பேறு கடவுள்பால் பெறலாகும் பேரருளாகக் கருதப்பட்டு வந்தது.

மேலைநாட்டுப் பாலை நிலப்பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் பெண் மக்களைப் பெருஞ்சுமையாகவும் வேண்டாப் பொருளாகவும் கருதினர். பழந்தமிழரிடையே நிலவிய நிரைகோடல் என்ற போர்த்துறைபோல, பாலை நில மறமக்கள் பகைவருடைய மகளிரைக் கவர்ந்துகோடலும் பின்பு அடிமைகளாக அவர்களை மேற்கொண்டு நடத்தலும் செய்து வந்தமையின், அவர்கட்கு மகப்பேற்றுள் பெண்களைப் பெறுதல் வெறுப்பையும் அச்சத்தையும் விளைவித்தது. பெண்ணினத்தின் பெருக்கத்தைக் குறைப்பது கருதிப் பெண் மகவுகளைத் தாம் வழிபடும் தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்வதும் ஒருசில மக்களிடையே ஒழுகலாறாக இருந்தது.

அந்நாளில் நமது நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்களும் கிரேக்க யவன எகிப்தியர்களைப் போலப் பெண்களை மகப்பெறுங் கருவியும் கணவனுக்கு மனைக்கண் இருந்து பணி புரியும் அடிமையுமாகவே கருதினர். ஒருவன் பல மகளிரை மணத்தல் விலக்கப்படவில்லை; அரசர் ஐந்து மகளிரை மனைவியராகக் கொள்ளலாம். அவர்கட்கு மேலும் மகளிரை வேந்தர் வரைந்து கொள்வர்; ஆயினும் அவர்கள் மனைவியராகும் தகுதியின்றி உரிமை மகளிர் என்ற பெயரால் நிலவுவர். முதல் மனைவியிருக்க வேறொருத்தியை ஒருவன் மணக்க விரும்பின், முதல் மனைவியின் இசைவைப் பெற்றுத் தான் மணந்து கொள்வான். இவ்வழக்கு மேலை நாட்டிலும் இருந்தது. ஆபிரகாம் என்பவன் சாரா என்ற மனைவி யொருத்தி இருப்பவும் அவளது இசைவு பெற்று இரண்டாம் மனைவியாக ஆகர் என்பவளை மணந்து கொண்ட வரலாறு இதற்குச் சான்று பகருகின்றது.

ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும் பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதிப் பணிபுரிய வேண்டும் என்றும், மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்பவாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும், மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன் சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அவற்றிற்கு இரையாக்க வேண்டுமென்றும், தன் கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின் அவள் மூன்று திங்கட்கு உயரிய ஆடையணிகலனின்று வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது. கணவன் சொல்வழியடங்கியொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம் என யாஞ்ஞவல்கியர் இயம்புகின்றார்.

கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அடிகளையோ உடல் முழுவதுமோ நீராட்டி அந் நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாளும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவாள் எனவும் அத்திரி யென்பார் அறிவிக்கின்றார். மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லையாகலான், கணவனுக்கு அடங்காதொழுகுபவள் இறந்தால் இன்பவுலகு எய்தாள்: எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும் என்று வாசிட்டநூல் வற்புறுத்துகின்றது. கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உண்வு தரப்பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள் என ஆங்கீரசர் கடிகின்றார்.

மேலை நாட்டவரைப் போல நம் நாட்டு வட மொழியாளரும் மகளிரை உடைமைப் பொருளாகவே கருதினர். ஏனைப் பொருள்களைப் போல மகளிரையும் சூதாடு பணையமாகவும், விற்கவும் ஒற்றிவைக்கவும் கூடிய பொருளாகவும் மதித்தொழுகினர். இதற்கு இதிகாசங்களும் புராணங்களும் மிகப் பல செய்திகளைச் சான்று காட்டுகின்றன. உயிர்க்கு இறுதி நேரும் காலத்தாயின், சான்றோர் இழிக்கத்தக்க செயல்களைச் செய்தாயினும் உயிர் உய்தல் வேண்டும் என்பது அந்நாளைய அறமாகலின், அந் நிலையில் மகளிர் அறமல்லன. செய்யினும் அவர் விலக்கப்படார். மணமான மகளிர்க்குப் பதி விரதமே சிறந்த அறம். தன் கணவனையன்றிப் பிறர் தம்மைத் தொடினும் தம்பாற்படினும் தம்மை விரும்பினும், மனைவியாவாள் அவர்களை மனத்தால் விரும்பாமையே பதிவிரதத்தின் பண்பு. கணவன், ஆண்மையிழப்பினும் அறிவு திறம்பினும் வேறு நாடேகினும் பெருநோய் எய்தினும் மனைவியாயினாள் வேறோர் ஆடவனை மணந்துகொள்ளலாம். கொண்ட கொழுநன் குடிவழி யெஞ்சும் நிலையில் மனைவி வேறொருவனைக் கூடி மகப் பெறுவது குற்றமின்று என்றொரு கொள்கை பண்டை நாளில் இருந்தமைக்கு இதிகாசமாகிய பாரதம் ஏற்ற வரலாறொன்றைச் சான்று கூறுகிறது.

இனி, மேலைநாட்டு ஆங்கிலரிடையே மகளிர் இருந்த நிலையை நோக்கின் அஃது ஏனை மேலை நாடுகளினின்று வேறுபட்டதாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் அரச மகளிர்மட்டில் அரசிகளாக முடி சூடிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். கிறித்து சமயம் பரவிய பின்பே அந்நாட்டில் ஒருவன் பல மகளிரை மணக்கும் இயல்பு நீங்குவதாயிற்று. நெடுங்காலம் வரையில் மகளிர்க்கு அந்நாட்டவர் கல்வி நல்கவில்லை. சமயத்துறையில் தாபத மகளிர்க்கு லத்தீன் மொழி கற்பிக்கப் பெற்றமையின், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே தாபத மகளிர் சிலர் லத்தீன் மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்தனர். ஏனை யாவரும் மகளிர்க்கு மணமும் மகப்பேறுமே வேண்டப்படுவன என்ற கொள்கையிலே ஊன்றி நின்றனர்.

மணமாகுமுன் ஒருத்திக் கிருக்கும் உரிமை முற்றும் மணத்திற்குப் பின் அவளுடைய கணவன்பால் சேர்ந்து ஒன்றிவிட்டன. மக்களைப் பேணுதல் கல்வி கற்பித்தல் முதலியன பற்றிய உரிமைகள் தந்தையிடமே இருந்தொழிந்தன. வரலாற்றுக் காலம்தொட்டு ஆங்கில நாட்டவரிடையே கணவற்கு வேறாக மகளிர்க்கு எவ்வகைச் சொத்துரிமையும் இல்லாமலே இருந்து வந்தது; கி.பி. 1882-இல் தான் மகளிர்க்குச் சொத்தில் உரிமை வழங்கப் பெற்றது. அரசாளும் வேந்தன் மக்களுள் மகளிர்க்கு அரசியல் உரிமை பண்டையிருந்தது; ஆயினும் அம் மக்களுள் ஆண் மக்கள் இருப்பின், அவர்க்கே முதலுரிமை நிலவிற்று. சென்ற 1918-இல் தான் மகளிர்க்கு வாக்குரிமை வழங்கினர்; அதன் பிறகே ஆங்கில மகளிர் பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றனர். அமெரிக்கர் 1920-இல் அவ்வுரிமையை மகளிர்க்கு வழங்கினர். உயரிய கல்வியும் கலையும் பெறுதற்கேற்ற வாய்ப்பும் ஆங்கில நாட்டு மகளிர்க்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் உண்டாயிற்று. இவர்களையெல்லாம் நோக்கின் பண்டை நாளைத் தமிழ் மகளிரின் நிலை பெரிதும் வியத்தற்குரியதாக விளங்குகிறது.

பழந்தமிழ் மக்களிடையே ஆடவர், பெண்டிர் என்ற இருபாலார்க்கும் பிறப்பு, அறிவு, ஒழுக்கம் முதலிய கூறுகளில் வேற்றுமை காணப்படவில்லை. ஆண் மக்களை யொப்பவே பெண்மக்களும் பேணப்பட்டுள்ளனர். கூர்த்த அறிவுடைமையே மக்களில் வேற்றுமை காட்டிநின்றது. திருவள்ளுவரும் அறிவறிந்த மக்கட் பேற்றையே சிறந்த பேறாக எடுத்துரைக்கின்றார். அதற்குக் காரணம், ஆணாயினும் பெண்ணாயினும், மக்கள் தம்மினும் மிக்க அறிவுநலம் உடையராயினும் உலகிலுள்ள மன்னுயிர்க்கெல்லாம் வாழ்வு இனிதாம் என்பது கருத்து. அதனால் ஆடவர் பெண்டிர் இருபாலாரும் திருந்திய கல்வி பெறுவதில் வேறுபாடின்றி- யொழுகினர். புெண் மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர் “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான என்று தெரிவிக்கின்றார். கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவொழுக்கம் கற்பு என்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், “உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை” என்றும், வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர், அவற்றை “எழுதாக் கற்பு” என்றும் குறிப்பதே இப்பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.

மகளிர்க்குக் கல்வியறிவின் திணிநிலை யொழுக்கத்தைக் கற்பெனவாள ஓதாமல், “செயிர்தீர் காட்சிக் கற்பு” என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர். மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற்றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின் ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது. ஆண் மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்தபோது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,

“விளையாடு ஆயமோடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்.”

என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தகுவதாம். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது இருவரும் கூடியே அதனைச் செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கினர். அவளது துணைமையின் சிறப்புணர்ந்து மேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.

பழந்தமிழர் குடியில் கல்விப் பேற்றில் ஆணும் பெண்ணும் ஒத்த உரிமை பெற்றுள்ளனர். மண்ணாளும் வேந்தர்க்குரிய நீதி நன்னூல் பலவும் பெண்களும் கற்றிருந்தனர். பிறந்த குடியின் பெருமையையும் புகுந்த குடியின் தொல்வரவையும் மகளிர் நன்குணர்ந்து குடிப்பெருமை குன்றாத வகையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். கணவனும் மனைவியும் உலகியல் வாழ்க்கைக்கு ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் துணை வராதலின், கணவன்பால் காணப்படும் குறையை மகளிரும் மகளிரது குறையைக் கணவனும் நன்கு உணர்ந்து குணம் பேணி வாழ்கின்றனர். கணவன்பால் பிழை காணுமிடத்து அன்புடைய நன்மொழிகளால் தாய் போல் கழறிக்கூறி நீக்கியும், நலம் காணுமிடத்து மகிழ்ச்சி கூர்ந்தும், மகளிர் நடந்து கொள்வது சிறந்த அறமாகக் கருதப்படுகிறது. ‘தாய் போற் கழறித் தழி இக்கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப’ எனத் தொல்காப்பியனார் சுட்டிக் காட்டுகின்றார். கொண்ட கணவன்பால் ஒருகால் பிழை தோன்றக் கண்ட அவன் மனைவி தீவிய இனிய கூரிய சொற்களால் அவனைக் கழறினாளாக, அதனால் அவன் நெஞ்சு வருந்தினான்; அந் நிலையில் அவ்விருவர் வாழ்க்கையின் நலம் பேணி நின்ற நங்கை யொருத்திபோந்து, அவனைத் தெருட்டி அவனைக் கழறிக் கூறிய மனைவியின் உரிமைச் சிறப்பை எடுத்துக் காட்டலுற்று,

“ஒண்டொடி மடமகள் இவளினும்,
நுந்தையும் யாயும் கடியரோ நின்னே” [1]

என்று கூறியதாக ஆசிரியர் ஓரம்போகியார் உரைக்கின்றார்.

இல்லிலிருந்து அறம் புரிந்து ஒழுகுமிடத்துக் கணவன், பொருள் செய்தல், போர்வினை முதலிய மேற்கொண்டு சேறல் ஆகிய கடமை காரணமாகப் பிரிந்து செல்லவேண்டின், காதல் வழிநிற்கும் பிரிவுத் துன்பம் தோன்றி மனைவியின் மனத்தை வருத்துவது இயற்கை. காதலுக்கும் கடமைக்கும் இடையே நிகழும் போரில் கடமை வீழ்ச்சியுறின் அது காதல் வாழ்க்கையில் நல்குரவையும் வெறுப்பையும் விளைவித்துத் துன்பம் பயக்கும் என்பதைப் பழந்தமிழ்க் கணவனும் மனைவியும் நன்கு உணர்ந்திருந்தனர். கணவன் பிரியுங்கால் வற்புறுத்தும் சொற்களையே பற்றுக்கோடாகக் கொண்டு பிரிவுத் துன்பத்தை ஆற்றி மனைக்கண்ணே தாம் செய்வனவற்றை முட்டின்றிச் செய்தொழுகுவதே மனையுறை மகளிர்க்கு மாண்பும் கற்புமாம் என்பது தமிழ்மரபு.

மனையின்கண் வாழும் மகளிர் தாம் பெற்றமக்கட்கு மொழி பயிற்றும் முதற்கல்வி நல்கும்போதே அவர்களிடத்தே நல்லொழுக்கம் வேரூன்றி வளரச் செய்தல் தம் கடன் என்பதை உணர்ந்து ஒழுகுகின்றனர். விளையாடும் பருவத்தனான தன் மகனை நோக்கின ஒரு தமிழ்த்தாய், அவன் தந்தைபால் உள்ள குணநலங்களையும் குறைகளையும் எடுத்தோதி, குணங்களைக் கொண்டு குறைகளைக் கைவிட வேண்டுமென்று கற்பிக்கப் புகுந்த,

செம்மால்,
வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறி என் வாய்க்கேட்டு ஒத்தி,
r>       -- (ஐங், 98.)

என்று முன்மொழிந்து, கணவன் போர்வல் மறவன். என்றும், போரையும் அதற்குரிய அறம் பிழையாது செய்து வெற்றி கொள்வதில் வீறுடையன் என்றும் கூறுவாளாய்,

“கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும.”

என்றும், இவ்வாறே அவனுடைய நடுவு நிலைமை, ஈகைச் சிறப்பு ஆகியவற்றையும்,

“பால்கொள லின்றிப் பகல்போல் முறைக்கு ஒல்காக்
கோல்செம்மை யொத்தி பெரும.”

என்றும்,

“வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி பெரும”

என்றும்.

கூறுவது இன்றைய தாயர்க்கு நல்ல படிப்பினையாகும். இவ்வியல்பு பற்றியே, பொன்முடியார் என்ற சான்றோர், ஒருதாய் தன் மகனுக்குக் கடமையுணர்வு நல்கும் கட்டுரை வடிவில்,

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

என்று கட்டுரைக்கின்றார்.

இங்ஙனம் தம் குடியில் வாழும் மக்கள் கடமையுணர்வும் நல்லொழுக்கமும் கொண்டு சிறத்தல் வேண்டுமெனக் கருதும் தமிழ் மகளிர், தாம் வாழும் நாட்டின் நலத்தையும் தம் நெஞ்சில் கொண்டு, வாய்த்த போதெல்லாம், “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க” “விளைக வயலே வருக இரவலர் “பசி இல்லாகுக பிணி சேண் நீங்குக” “வேந்து பகை தணிகயாண்டு பல நந்துக” “அறம் நனி சிறக்க அல்லது கெடுக அரசு முறை செய்க களவு இல்லாகுக” “நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக!” “மாரி வாய்க்க வளம் நனி சிறக்க” என விழைந்து வேண்டுவர்.

மகளிருடைய மனைவாழ்வில் கணவனது காதலுள்ளம் தன்னின் நீங்கி வேறு மகளிர்பால் செல்லுமாயின், அம்மகளிர்க்கு அதனினும் மிக்க வருத்தம் தருவது. வேறு கிடையாது. உலக நாடுகளில் எங்கு நோக்கினும் மகளிர்க்குரிய இவ் வியல்பு ஒன்றாகவே உள்ளது, மேலை நாடுகளிலுள்ள எகிப்து, அபிசீனியா முதலிய நாடுகளிலும் கீழ் நாட்டுச் சீனம் சப்பான் நாடுகளிலும் உள்ள மகளிர் எப்போதும் கணவனுடைய மன நிறைவையே குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவர். சில நாட்டு மகளிர் தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவற்கு உவகை தருகிறதா என்பதை அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வர். அதனால், கணவனது காதலன்பு பிற மகளிர்பால் செல்லாது. காத்தொழுகுவதை அவர்கள் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். உருசிய நாட்டுப் பழங்குடி மக்களும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியரும் ஆடவரினும் மகளிரைத் தாழ்ந்தவராகக் கருதி ஒழுகுபவராயினும், அவர் நாட்டு மகளிர்க்குக் கணவன்பால் பரத்தைமை தோன்றின் பெரிதும் வருந்துவதை அவர் நாட்டு வரலாறு கூறுகின்றது. சுமேரியா நாட்டில் மகளிரிடையே பரத்தைமை யொழுக்கம் பெரிதும் பரவியிருந்தது; எனினும், மனையறம் பூண்ட மகளிர் கணவன் பரத்தனாவது காண மிகவும் அஞ்சியொழுகுகின்றனர்.

மேலே காட்டிய பழங்குடிகளோடு எவ்வகையிலும் பிற்படாத தொன்மை வாய்ந்த தமிழ் மகளிர் விலக்கல்லராகலின், கணவனது பரத்தைமை மனையுறையும் மக்களுக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தன்னைக் கொண்ட கணவன் தன்னையொழியப் பிறமகளிரைக் கனவினும் கருதாத பேராண்மையுடையனாகப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், “பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” என்ற திருக்குறள் அமைந்திருக்கிறது. கணவன்பரத்தனாயின் அது தனக்குச்சிறுமை பயப்பதோடு தன் குடிக்கும் பழி தரும் என்ற கருத்தால் தமிழ் மகளிர்அவன் உள்ளம் அந்நெறியிற் செல்வதை விரும்பவில்லை. “பூவோரனையர் மகளிர், வண்டோரனையர் ஆடவர்” என்ற கருத்தொன்றும் அந்நாளில் மக்களிடையே நிலவியிருந்தது. என்றாலும் மகளிருள்ளம் கணவனது காதல் பிறமகளிர்பால் பரவுவதைச் சிறிதும் உடன்படவில்லை.

இப்போது பழனியென வழங்கும் ஊர்க்கு முன்னாளில் திருவாவி நன்குடி என்றும் பழங்காலத்தில் பொதினி யென்றும் பெயர்கள் வழங்கின. அதனருகே ஆய்க்குடி யென்ற ஓர் ஊருளது; அதன் உண்மைப் பெயர் ஆவிகுடி என்பது. அதனைத் தலைநகராகக் கொண்ட அப்பகுதியில் ஆவியர் என்பார் வாழ்ந்தனர். அதனால் அதனை வையாவி நாடு என்பர்; பண்டை நாளில் அங்கே பெரும்பேகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். அவனை வையாவிக் கோப்பெரும்பேகன் என்பது வழக்கம்; அவனுடைய மனைவி பெயர் கண்ணகி என்பது. ஒருகால் அவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர் புண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு மனக்கவலை பெரியதாயிற்று. பேகன் அருள் உள்ளம் படைத்த பெருந்தகை; காட்டில் வாழும் மயில் ஒன்றுக்குப் போர்வை யித்த புகழாளன்: “படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்” என்று சான்றோர் அவனைப் பாராட்டுவது வழக்கம். அவனுக்கு அரிசில் கிழார், கபிலர், பரணர் என்ற சான்றோர் பலர் இனிய நண்பராவர். கண்ணகி அவர்கட்குப் பேகனது பரத்தைமையைச் சொல்லி அவனை அந்நெறியினின்றும் நீக்குமாறு முயன்றாள். ஒருகால் அவள் மனைக்குப் போந்த பரணர் என்ற நல்லிசைச் சான்றோர்க்கு,

“எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வியங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூரானே”[1]

என்று முறையிட்டனள். அவர்களும் அவளது வேண்டுகோட்கு இணங்கி, பேகனைக் கண்டு “வேந்தே, நீ மனையறம் மாண்புறச் செய்தல் வேண்டும்; நீ இன்றிரவே நின் மனையுறையும் கண்ணகிபால் சென்று அவள் எய்தி வருந்தும் துயரத்தைப் போக்கியருளல் வேண்டும்” என்பாராய்,

“அறஞ் செய்தீமே அருள்வெய் யோய்என
இஃதுயாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தே ரேறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே.”
      -- புறம், 144.

என்று வேண்டினர். அவனும் அவ்வண்ணமே செய்து அறவாழ்க்கையில் நிலை பெறுவானாயினான். அவனது வையாவி நாட்டின் புகழ் விசய நகர வேந்தர் காலம் வரைத் தமிழகத்தில் சிறந்து நின்றது: அக் காலத்தில் வையாவி வையாபுரி எனச் சிதைந்து பெரும் பிறிதாகி மறைந்தது. நிற்க, கோவலன் மனைவியாகிய கண்ணகியார் தம் கணவன் சிலம்பு திருடிய கள்வன் என்று பழி தூற்றப்பட்டுப் பாண்டி வேந்தனால் கொலையுண்டான் என்பது கேட்டு அதனால் தம் செல்வக் குடிக்குண்டான புகழ் மாசுபடுவது நினைந்து வேந்தன் முன்சென்று வழக்குரைத்த வரலாறு நாடறிந்த தொன்று.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் போர் மறத்துக்குப் பெயரும் மாண்பும் பிறங்கப் பெற்றவர். கிரேக்க, பாபிலோனிய எகிப்திய மகளிரைப் போலத் தமிழ் மகளிர் போர்ப் புகழைப் பெரிதும் விரும்பினர். போரில் புறங்கொடுத்துக் குடிக்குப் பழி விளைத்தான் தன் வயிற்றிற் பிறந்த மகன் எனின் அவளது மறவுள்ளம் சிறிதும் பொறாது. போருக்குச் சென்றிருந்த இளையோன் ஒருவனைப் பற்றி அவன் தாயிடம் போந்து பொய்யாக, “அன்னாய், நின்மகன் பகைவர் தொடுத்த போரில் முகுது தந்து ஓடினன்” என்று ஊரவர் அலர் கூறினர்; அது கேட்டதும், அவன் தாயின் மறவுள்ளம் கொதித்தது; “ஊரவர் கூறுவது உண்மையாயின், அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிப் போர்க்களம் சென்று அங்கே இறந்து கிடக்கும் வயவர் உடலங்களைப் புரட்டிக் காணலுற்றாள். அவற்றின் இடையே, முதுகிற் புண்படாது முகத்திலும் மார்பிலும் புண்பட்டுச் சிதைந்து வேறுபட்டுக் கிடந்த அவன் உடம்பினைக் கண்டு பேருவகை கொண்டாள். இதனைக் காக்கை பாடினியார் என்ற பெருமாட்டி,

“முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின், உண்டஎன்
முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇக்
கொண்டவாளொடுபடுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணுஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.”

என்று பாடிக் காட்டுகின்றார். வேறொருத்தியின் தந்தை முன்பொருகால் நடந்த தும்பைப் போரில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான்; அவள் கணவன்.முன்னாள் நடந்த கரந்தைப் போரில் நிரைகாவலில் உயிர் கொடுத்தான். மறுநாள் போர் நிகழ்ச்சி தெரிவிக்கும் பறையோசை கேட்டதும் தன் ஒரு மகனையும் போர்க் கோலம் செய்து வேற்படையைக் கையில் தந்து செருமுகம் செல்க என விடுத்தாள்; இதனை,

“இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே.”

என்று சான்றோர் எடுத்துரைக்கின்றனர்.

இவ்வாறு தம்முடைய மனைக்கண் உள்ள ஆடவர் போரில் மறம் குன்றாது பொருது புகழ் பெறுதலை விரும்பும் தமிழ்மகளிர் போரிற் புண்பட்டுவரும் வயவர்க்கு மருத்துவம் செய்வதில் மிக்க மாண்புறுகின்றனர். கிழிந்த புண்களைத் தைத்தலும் மருந்திடுதலும் இனிய பண்ணில் இசைபாடுதலும் மருத்துவத் துறையில் கையாளப்படுகின்றன. புண்ணுற்ற மறவர்க்கு மருத்துவம் செய்யப்பெறும் மனைகளைப் பேய் முதலிய தீக்கோள் வந்து தாக்காவண்ணம் மனையிறைப்பில் ஈர இலையும் வேப்பிலையும் செருகப்பட்டிருக்கும். பெரும் புண் உற்றவர் உள்ளம் உலகியல் தொடர்பில் விடுதலை பெற்றுத் துறக்கவின்பத்தில் நாட்டம் கொள்ளுமாறு காஞ்சிப்பாட்டுகள் இனிய முறையில் பாடப்படும்.

போர்த்துறையிலும் பிறவற்றிலும் புகழ்மிக்கு விளங்கிய காதற் கணவன் இறந்துபடின், அவன் பிரிவாற்றாத தமிழ்மகளிர் அவனுடனே உயிர் துறப்பதுண்டு. கணவனோடே தாமும் உயிரிழந்தால் மறுபிறப்பில் அக்கணவனுக்கே மனைவியாய்ப் பிறத்தல் கூடும் என்று பண்டைத் தமிழ்மகளிர் நினைந் தொழுகினர். “இம்மை மாறி மறுமையாயினும், நீயாகியர் எம்கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று மகளிர் கூறுவதாகச் சான்றோர் பாடுவது இதற்கு ஏற்ற சான்றாதல் காண்க. இதனால் இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தில் காதலன்புடைய மகளிர் உடன் வீழ்ந்து உயிர்கொடுக்கும் செயலை மேற்கொண்டனர். உயிர்கொடுப்போருள் மிக்க இளமை நலம் படைத்தவர் தீப்பாய்தலை விரும்பாத சான்றோரும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்தது கண்ட அவன் உயிர்க்காதலியான பெருங்கோப் பெண்டு அவனுடைய ஈமத்தியில் தானும் வீழ்ந்து சாதலுக்குத் துணிந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர் அவளை விலக்கி அறிவுரை பல கூறுவராயினர். அவர்களை வெகுண்டு,

“பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுக தில்ல எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.”

என்று பெருங்கோப் பெண்டு அவலித்து அரற்றினாள். உயிர்கொடுக்கும் ஆற்றல் இல்லாமையாலோ சான்றோர் பலர் விலக்கியதனாலோ கணவனை இழந்து உயிர் தாங்கியிருப்போர் கைம்மை நோன்பு மேற்கொண்டு கணவனுக்கு வழிபாடு செய்து ஒழுகுவர். இதனைத் தும்பையூர்ச் சொகினனார் என்ற சான்றோர்,

“அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை -
உயர்நிலை யுலகம் அவன்புக ஆர
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே.”

என்று குறிக்கின்றார்.

கொழுநனையிழந்த குலமகளிர் மேலே குறித்தவாறு உடனுயிர் விடுதல், கைம்மை மேற்கொளல் என்ற இரண்டனுள் ஒன்றனை மேற்கொள்வரேயன்றி மறுமணம் செய்துகொள்வது இலர். பழந்தமிழ் மகளிர் மறுமணம் செய்துகொள்ளற்குப் பண்டைப் பொருளிலக்கண நூலார் விதிக்கவும் இல்லை! மறுமணம் செய்து கொண்ட வரலாறும் தமிழ் நூல்களில் இது காறும் காணப்படவில்லை. இம்மையிற் பிரிந்த கணவனை மறுபிறப்பில் பெறலாம் என்ற கருத்துநிலவும் சமுதாயமாதலின், பழந்தமிழிரிடையே மறுமணம் நிகழ்தற்கு வாய்ப்பு ஏது?

“அலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.”

என்ற முல்லைப் பாட்டு இதற்குத் தக்க சான்றாகும். களவு நெறியில் காதலுற்றுக் கற்பு நெறியில் மணம் செய்து கொண்டு கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் ஒழுகும் மக்களாதலின் மறுமண நிகழ்ச்சி பழந்தமிழர் வாழ்வில் இடம் பெறாதாயிற்று.

மணந்து கொண்ட கணவன் போர் முதலியவற்றால் இறுதி எய்தாது முதுமையெய்துங்கால், அவன் உள்ளத்தே இதுகாறும் நுகர்ந்து போந்த நுகர்ச்சிகளில் உவர்ப்பும் வெறுப்பும் பிறந்து துறவு மேற்கொள்ளும் வேட்கையையுண்டுபண்ணும். இக்கருத்தையும் செயலையும் காணும் சான்றோர் அவர்க்கு வீடு பேற்றுக்குரிய மெய்யுணர்வையும் தவத்தின் செயல் முறையையும் அறிவுறுத்துவர். அதனால், அவர்கள் தமக்குத் துணையாகிய மனைவியுடன் துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து, அவா அறுத்து, யான் எனது என்ற செருக்கற்று, அறிவு நூல்களைக் கண்டு செம்பொருளாகிய கடவுளின்ப வாழ்வுக்கு உரியராவர். இதுபற்றியே தொல்காப்பியர், “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்று வற்புறுத்தினர். இறத்தல் என்றது வயது முதிர்தல்.

ஒருவனுக்கு ஒருத்தி யென்ற முறையில் தமிழ் மக்கள் உலகு இணைப்புண்டிருந்தமை பழந்தமிழ் நூல்கள் உரைக்கும் உண்மையாகும். ஆயினும், அந்நாளில் நாடுகட்கிடையே அடிக்கடி நிகழ்ந்த போர்களால் ஆண் மக்கள் தொகை குறைந்தது; போரில் ஈடுபடாமையும் பாதுகாக்கப் படுதலுமாகிய செயல்களால் மகளிர் தொகை மிகுந்தது. பெண்டிரைக் கொல்லலாகாது என்பது பழந்தமிழர் போரறம். இதே நிலை மேலைநாடுகளிலும் நிலவியதால், மிகுந்து நின்றமகளிரை மனைவியாகவும் உரிமை மகளிராகவும் கொள்வது அவர்கள் நாட்டு வேந்தர்கட்கும் செல்வர்கட்கும் ஒராற்றால் கடமையும் மரபும் ஆயின. அந்தச் சூழ்நிலையே தமிழ் நிலத்தும் இருந்தமை யின், மிகை மகளிரைப் பரத்தையரெனக் குறிப்பாராயினர். பரம்- என்ற சொல் மிகுதியென்று பொருள்தருவது. இம்மகளிர் உலகில் வாழ்தற்குரியராதலால், அவரது வாழ்வுக்கு வேண்டுவன உதவுவது ஆண்மையுடைய ஆடவர்க்கு அறமாகும். அவ்வாறு உதவுமிடத்தும் உதவி பெறுமிடத்தும் இருதிறத்தார்க்கும் தொடர்புண்டாக, அதன் வழியாகத் தோன்றிய மகளிர் பரத்தையராய்ப் பெருகினர்.

ஒருவன் ஒருத்தியை மணந்து வாழ்ந்து வருங்கால் அவள்பால் மகப்பேறு இல்லையாயின் வேறொருத்தியை மணந்து கொள்வது அவர்க்கு அமைவதாயிற்று. இரண்டாம் மனைவியைப் ‘பின் முறையாக்கிய பெரும் பொருள் வதுவை’ என்று தொல்காப்பியர் குறிக்கின்றார். இருவர்க்கு மேலும் மனைவியர் உளராயின் அவரைக் காமக் கிழத்தியரென வகுத்து முறை செய்தனர் பண்டைத் தமிழர். நாளும் பெருகிவந்த மிகை, மகளிர் தாம் இனிது வாழ்தற்குரிய பொருள் வேண்டி ஆடல் பாடல் அழகு என்ற துறைகளில் பயிற்சி பெறத் தொடங்கினர். அவருள் பொருள் ஒன்றே கருதி அதனைத் தருவோர் யாவராயினும் வரையறையின்றித் தமது பெண்மையை விற்று ஒழுகினோர் வரைவில் மகளிராகக் கருதப்பட்டனர். எஞ்சிய பரத்தையர் தம்மை நயந்த ஆடவனது காதலன்பு ஒன்றே குறிக்கொண்டு ஒழுகினமையின் அவரைக் காதற்பரத்தைய ரெனப் பிற்காலத்தார் பெயர்குறித்தனர். அவரைச் சில ஆட்வர் தாம் உறையும் ஊரகத்தே இருத்தி மனைவியரைப் போலப் பேணினர். அவ்வாறு பேணப்பட்டோர் இற்பரத்தையர் எனப் படுவராயினர். ஏனையோர் பரத்தையர் சேரிக்கண் உறைந்தமையின் அவரைச்சேரிப் பரத்தையரெனவும் பரத்தையர் எனவும் உரைத்தனர். இற்பரத்தையர் காப்பியக் காலத்தில் உரிமை மகளிரெனவும் குறிக்கப்பட்டனர். இவ்வகையில் தமிழ் மகளிர் பண்டை நாளில் குலமகளிரெனவும் பரத்தையரெனவும் இருகூறாய் இருந்தமை தெளியப்படும்.

ஒருவன் மனைவியான குலமகள் வயிற்றில் பிறக்கும் மக்களுக்கே அவனது உடைமையில் உரிமையுண்டு; பரத்தையர்க்குப் பிறக்கும் மக்கட்கு அவ்வுரிமை இல்லை. இதனை,

“யாணர் ஊரநின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்
புன்மனத் துண்மையோ அரிதே; அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் இலமே’[1]

என்று சான்றோர் கூறுவதால் இனிதறியலாம்.
----
[1]. நற். 330
-------------
மணவாழ்க்கை இயலில் மகளிர் இவ்வாறு இரு வேறு வகையில் இயன்று வாழ்ந்தனராயினும், இயல் இசை கூத்து முதலியவற்றிலும், அறிவு அரசியல் முதலிய துறைகளிலும் ஒத்த உரிமை கொண்டிருந்தனர். அதனால் அரசியற் குறிப்புகளும் அறிவு நிலைபெற்ற இலக்கியங்களும், தமிழ் மகளிரின் சால்பினை ஒரு வேற்றுமையும் தோன்றாதவாறு குறித்துள்ளன. ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியார், நப்பசலையார் எனப் பல மகளிர் நல்லிசைப் புலமைத் துறையில் சிறப்புற்று விளங்குகின்றனர். ஒளவையாரும், நச்செள்ளையாரும் அரசர்கட்கு அரசியற் சுற்றமாயிருந்து அறிவுரையும் அறவுரையும் நல்கியுள்ளனர்.

மகளிர்க்குரிய இச் சிறப்பும் உரிமையும் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் இருந்துள்ளன. அக் காலத்தே வடவார்க்காடு மாவட்டத்துப் படைவீட்டுத் தலைநகராகக் கொண்டதொரு சிற்றரசு சிறந்து நின்றது. அவ் வரசினர் தம்மைச்சம்புவராயர் என்று குறிப்பர்; அவர்கள் சோழப் பேரரசின் கீழ்ப் பெருமை பெற்றவர். அவருள் எதிரிலிச் சோழ சம்புவராயன் என்பவன் ஆட்சிக் காலத்தில் வந்தவாசிக்கு அண்மையில் உள்ள தெள்ளாறு என்ற ஊரில் கண்டன் இளங்கண்ணன் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனுடைய மனைவி கருணையாட்டி கற்பால் தான் வாழும் ஊரவர் தன் குடியைப் புகழுமாறு வாழ்ந்து வந்தாள். இளங்கண்ணன் ஒரு நாள் கட்குடியால் அறிவு மயங்கி ஊரவர் பலரை வைதான் என்று குற்றங்கண்ட “மகாசபையார்" ஊர்வாரியத் தலைமை பூண்ட கருணையாட்டிக்கு முறையிட, அவர் “கணவனென்றும் பாராது ஏழுநாள் திருமூல நாயனார்க்கு விளக்கேற்றுமாறு" பணித்து, அதனை "அவன் பெண்டாட்டி என்ற பரிசு முட்டாமே விளக்கேற்றி"த் தமது கடமையை ஆற்றினார் என்பது வரலாறு. இதனால், ஊர்வாரியங்களில் தலைமை தாங்கும் உரிமை மகளிர்க்கும் வழங்கப்பட்டிருந்தது தெளிவாகிறதன்றோ?

இந் நிலையில் மேலைநாட்டு ஆங்கிலேயரும் பிறரும் அமெரிக்க நாட்டவரும் இந்த நூற்றாண்டில்தான் மகளிர்க்கு அரசியல் உரிமை தந்தனர். இதை நோக்கின் பழந்தமிழ் மகளிர் ஏனை உலக நாடுகளில் வாழ்ந்த மகளிரை நோக்க - மிக உயர்ந்த நிலையில் வைத்துத் தமிழரால் மதிக்கப் பெற்றமை, இதனால் இனிது விளங்கும். இன்னோரன்ன செய்திகளை மறந்தமையால் இடைக்காலத் தமிழ்மக்கள் மகளிரை அடிமையாக்கி இருளில் கிடத்தித் தம்மையும் குருடராகவும் ஊமையாகவும் செவிடராகவும் கெடுத்துக் கொண்டனர். தமது நாடு, மொழி முதலியவற்றின் வரலாறு துறந்து மறந்து கெடும் ஒரு சமுதாயம் நாளடைவில் கெட்டு அடிமைச் சேற்றில் அழுந்தும் என்பதற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயம் தக்கதொரு எடுத்துக்காட்டாக விளங்குவதைத் தமிழகம் நன்கு உணர்தல் வேண்டும். அவ்வுணர்வு தமிழ் வாழ்வு தழைப்பதற்கு ஆக்கமும் அரணுமாம் என்பது உறுதி.
----------------

12. எட்டில் இல்லாத இலக்கியம்

பழமொழிகள்

நம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கியங்கள் நிலவுகின்றன. அவை பொருள் செறிந்த சிறு சிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளாகும். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் ஏட்டில் எழுதப்பட்டுக் கற்றவர்களால் பாராட்டப்பட்டும், ! இலக்கிய வகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டும், தமிழ்ப் பெரியோர்களால் போற்றப்பெற்றும் வருகின்றன. அவைகளைப் பழமொழி என்பதோடு முதுமொழி என்றும் மூதுரை என்றும் சான்றோர் வழங்குவர்.

‘அப்பனைப்போலப் பிள்ளை’, என்பது நாட்டில் வழங்கும் பழமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியரே தம் தொல்காப்பியத்தில் 'தந்தைய ரொப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்," என்று கற்பியல் சூத்திரம் ஆறில் குறித்துள்ளார். “கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா," என்பதொரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர் “வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு அழியும்நோய் கைம்மிக அணங்காகியதுபோல, " (கலி) என்று கூறியிருக்கின்றார். "இறைக்கிற ஊற்றுத்தான் சுரக்கும்," என்பது மற்றொரு முதுமொழி. இதை நம் திருவள்ளுவர் "மறைப்பேன்மன் யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்," என்று தமது திருக்குறளில் அமைத்து வழங்கி யிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியமாகிய இம்முதுமொழிகளை உயர்ந்த மணிகளாகக் கருதி தாங்கள் எழுதிய இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள்.
---
[*] 16-1-49-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது.
-----------

இப்பழமொழிகள் நுட்பமும் சுருக்கமும் எளிமையுமாகிய இனிய நலங்களை யுடையவாகும். இவைகளைக் கண்ட தொல்காப்பியர் இவைகளையும் செய்யுள் வகையில் ஒன்றாக எடுத்து நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் என்றிவை விளங்கத்தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு “வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப," என்று இலக்கணம் கூறியுள்ளார். மேலும் அவர் "முதுமொழி என்ப," என்றதனால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறியலாம்.

இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை. இவற்றில் பொய்யோ, புனைந்துரையோ கிடையா. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொரு, வரைக் கேட்டு யாதேனும் ஒன்றைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சியாகவும், அதையே கொடுத்தவர் கேட்டு வாங்கும்போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பதும் உண்மை நிகழ்ச்சியாம். இதுவே “கேட்கிறபோது பசப்பு, கொடுக்கிறபோது கசப்போ," என்ற பழமொழியாக வழங்குகின்றது. இதனை இப்போதும் காண்கின்றோம். 2000 ஆண்டுகட்கு முன்பு விளங்கியிருந்த பாலை பாடிய பெருங் கடுங்கோ என்பவர் "உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம், கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல், பண்டும் இவ்வுலகத் தியற்கை அஃது இன்றும், புதுவதன்றே புலனுடை மாந்தீர்," (கலி) என்று பாடியுள்ளார்.

இந்த முதுமொழிகளிடத்தே உண்மையும் தெளிவும் இருப்பதுகொண்டே சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு முன்றுரை யரையனார் என்ற சான்றோர் ஒருவர் 400 பழமொழிகளை எடுத்து ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயர்வைத்து ஒரு நூல் பாடியிருக்கின்றார். அது பதினெண் கீழ்க்கணக்கு என்ற நீதிநூல் தொகையில் ஒன்றாய் இருக்கிறது. மேலும், இப்பழமொழிகள் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், கைத் தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகளிலும் அமைந்திருக்கின்றன. "குலங்கெட்டவரோடு சம்பந்தம் செய்தாலும் குணம் கெட்டவரோடு சம்பந்தம் செய்யக்கூடாது.” "செத்த பிணத்தையும் சீரிட்டழு," முதலியன சமுதாயத்தில் வழங்குவன.

“பணமில்லாதவன் பிணம்" “பணம் பத்தும் செய்யும்," முதலியன பொருள் பற்றி வழங்கும் பழமொழி. "கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?" "திரைகடலோடியும் திரவியம் தேடு, முதலியன வாணிகத்தில் வழங்கும் முதுமொழி கள். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்," "உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறுபோட வேண்டியதில்லை,” என்பவை முதலியன தொழில் சார்பாக நிலவும் மூதுரைகள். "விதைப் பழுது முதற்பழுது," "பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்," என்பவை முதலியன உழவுபற்றி வழங்கும் உலகுரை. “அவனே “அவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்பது மேல்”, "இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தபின் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றார் போல, என்பன சமயம்பற்றி வழங்கும் பழமொழி. “தோட்டிமுத்ல் தொண்டை மான் வரை, என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும் "டில்லிக்கு ராசாவானாலும் தல்லிக்குப் பிள்ளை," யென்பது விசயநகர வேந்தர் காலத்தும் முகம்மதிய வேந்தர் காலத்தும் நிலவிய அரசியல் பற்றியும் "நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமை போகாது," "பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்," என்பவை முதலியன மேனாட்டவர்காலத்து அரசியல் பற்றியும் உண்டாகி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்தபின் தேர்தலுக்கு நின்று ஒட்டுப் பெறுபவர்களைப் பற்றி "ஒட்டுக்குப் போனாயோ ஒடுவாங்கப் போனாயோ!" என்பது முதலிய பழமொழிகள் உண்டாகியிருக்கின்றன.

இந்தப் பழமொழிகளை நோக்குவோமாயின், பழங்காலக் குறிப்புகளில் பல காணப்படுகின்றன. இடைக்காலப் பாண்டி வேந்தருள் 12, 13-நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்புசெய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு. அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற் பணிசெய்யும் சிவப்பிராமணர்களும் வயிராகிகளும் இருப்பர். அப்போது திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் இருந்து வந்தான். சூறையாட வந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயில் சொத்துக்களைக் காக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர்செய்து வாணாதிராயரைத் தோற்றோட்ச் செய்து தானும் புண்பட்டு வெற்றி பெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணையாற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டெர்ன்று கூறுகிறது. (P.S. ins. 380) இந்த வயிராகிகளுக்கு வீரமுஷ்டி என்று பெயர் வழங்கும். கோயில் பணிசெய்பவருள் வயிராகிகள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று காத்த செய்திகள் பல கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவ்வரலாற்றை "உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி," என்ற பழமொழி குறித்து நிற்கிறது.

பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து போவராயின், அவர்களுடைய பெயரையும் அவர் பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதை நீராட்டிப் பலபேர் செல்லகூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்தக் கல்லைக் கல் நின்ற வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து அதைத் தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். இதை “ஒலிமென் கூந்தல் ஒண்ணுதலரிவை, நடுகல் தொழுதுபரவும்," எனப் புறநானூறு முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே "கல்லென்றாலும் கணவன்," என்ற பழமொழி உண்டாயிற்று. மேலும், கொல்லை களிலும் வயல்களிலும் கதிர்முற்றிவரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆள்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்துவது வழக்கம். அதனைப் புல்லாள் என்பர். அதனிடத்தில் வீரச் செய்கை ஒன்றும். இல்லையாயினும் துலையில் வருபவர்க்கும் இரவில் வருபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஒரளவு காவலாவதுபற்றி அப்புல்லாளை நிறுத்திவைப்பர். இவ்வாறே போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரையும் புல்லாள் என்பது வழக்கம். இதைச் சான்றோர் “புல்லாள் வழங்கும் புள்ளலை வைப்பின் புலம்," என்று பதிற்றுப்பத்தில் குறித்திருப்பதைக் காணலாம். தன்னைக் கொண்டவன் நேரிய வீரமில்லாத புல்லாளாயினும் அவனையும் கணவனாகக் கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு வகுத்துரைக்கும் முறை. இம்முறை இரண்டையும் சேர்த்துக் "கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்,” என்ற பழமொழிதோன்றி வழங்கி வருவதாயிற்று.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்பது ஒரு பழமொழி. மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற அவள் கணவனான கோவலனைக் கள்வன் என்று கொலைத் தண்டனைக் கொடுத்தான் பாண்டியன். அதனையறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் "கள்வனல்லன்," என்பதை நிலை நாட்டினாள். கோவலன் கள்வனென்ற பழியில்லாதவனானான். பாண்டியன் தான் செய்தது குற்றமென்று உடன்பட்டுக் கீழே வீழ்ந்து உயிர்விட்டான். அவனுடைய மதுரை நகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் வேரற்றுப் போயிற்று. இதனையறிந்த வேந்தனான சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கல்கொண்டு வந்து கண்ணகிக்கு வடிவம் செய்து, கோயிலமைத்து வழிபாடு செய்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி தோன்றுவதாயிற்று. இதனை வற்புறுத்துவதற்கு வேறொரு செய்தியுண்டு. கொங்கு நாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில், நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். பொள்ளாச்சித் தாலுகாவிலுள்ள ஆனைமலை என்னும் ஊர்க்குப் பழங்காலத்தில் நன்னனுர் என்றே பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. (Annual Report on South Indian epi, Madras No. 214 of 27-28) அவ்வூரில் அவனொரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான். அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்த மரம் இருந்தது ஆற்றங்கர்ை. ஒருநாள் ஒரு செல்வனுடைய மகள் ஆற்றில் குளிப்பதற்குச் சென்றாள். அவள் குளித்துக் கொண்டிருக்கையில் நன்னனுடைய மாமரத்திலிருந்து நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்துகொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அவள் எடுத்துத்தின்றாள். அதைக் கண்ட காவற்காரன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கக் கொடியவனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அதையறிந்த-

அப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் 81-யானைகளும் தந்து அவளைக் கொலைசெய்யாது விட்டுவிடுமாறு வணங்கி வேண்டினான். நன்னன் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றுவிட்டான். அவனை அன்றுமுதல் சான்றோர் "பெண்கொலைபுரிந்த நன்னன்," என்று புறம் பழித்தனர். அவன் மரபினரையும் இகழ்ந்தனர். அந்த நன்னன் வழியும் பின்பு அழிந்து போயிற்று. இது முதல் "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி நிலை பெற்று வருவதாயிற்று.

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்,” என்பதொரு மூதுரை. இயல், இசை, நாடகம் என்ற பிரிவில் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து ஆரியக்கூத்து என இரு வகைப்படும். “ஆரியம் தமிழெனும் சீர்நடம் இரண்டினும்," என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடுவோர் ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர்போல் கயிற்றின்மேல்நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் எனக் குறுந்தொகையில் பெரும்பது மனார் பாடிய பாட்டில அறிகின்றோம். அவர்கட்கு வேந்தரும் செல்வரும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர். அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தம் ஆரியநாட்டிற்குச் செல்வர். தமிழ்க்கூத்தர்க்கு நிலம் விடுவது வேந்தர்க்கும் செல்வர்க்கும் மரபு. பின்பு தமிழ்க்கூத்தரும் ஆரியக் கூத்தாடத் தொடங்கினர். அதற்குரிய பரிசிலாகப் பொன்னும் பொருளும் பெறுவதையே விடுத்து நிலம் பெறுவதையே தமிழ்க்கூத்தர் விரும்பினர். தமிழ்க்கூத்தர் இவ்வண்ணமே பரிசில் பெற்று வாழ்ந்த திறத்தைக் கும்பகோணத்து நாகநாத சாமிகோயில் கல்வெட்டும், திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. (Annual report No. 90 of 32 and No. 120 of 1925) அதனால் தமிழ்க்கூத்தர் ஆரியக்கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணிபெறும் நாட்டமே யுடையராயினர். அதுபற்றியே "ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்,” என்ற பழமொழி வழங்கி வருவதாயிற்று. -

திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று சிவஞானப் பாலுண்டது முதல் “அழுத பிள்ளை பால் குடிக்கும்.” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில் பெரியபுராணத்தில். திருஞானசம்பந்தர் புராணத்திலும் திருநாவுக்கரசு புராணத்திலும் கலந்து பாதியளவுக்குமேல் இருப்பதால் "பிள்ளை பாதி பெரியவர் பாதி" என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு, ஆயுள் முழுதும் பயன்பட்டுவரும் சிறப்புபற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக் கொண்டு, "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும், கற்றவர், கல்லாதவர் என்ற இருதிறத்தாருக்கும் கம்பராமாயணம் இலக்கிய இன்பம் தருவதுபற்றி “கல்வியிற் பெரியவர் கம்பர்,” என்ற பழமொழியும், கம்பராமாயணம் தவிர வேறு நூல்களைக் கல்லாதவரும் கவிபாடும் பாவலராக விளங்குவதுபற்றிக் "கம்பர் வீட்டுக் கற்றுத்தறியும் கவிபாடும்," என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன. கற்றுத்தறி = கற்றுவரும் மாணவன். இது பின்பு கட்டுத்தரியென மருவிவிட்டது; ஏடுகளிலும் கட்டுத் தரியென்றே காணப்படுவதாயிற்று. அதனால், "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன்பாட்டைக் கெடுத்தான்," என்ற பழமொழியும் மெய்யுரையாய் நிலவுவதாயிற்று.

இவ்வாறு இலக்கியத்துறை பற்றியும், இசை நாடகம் பற்றியும், "விருத்த வைத்தியம் பாலிய சோதிடம்," என மருத்துவம், சோதிடம் முதலிய துறை பற்றியும் பழமொழிகள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நவிலும் நயம்பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக்கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளருள் ஒருவரான Charles. E. Gover. M.R.A.S. என்பவர் "உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் சிறப்பாகத் தமிழில்மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவைகளை வெளியிட்டுப் பொதுமக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்துகொள்ளவும் செய்வது பழுத்தபுலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக் கும் தகுதியாம்" என்ற கருத்தமைய, -

“There is a great mass of (thoughts) ready to hand in Tamil and Telegu folk-literature, especially in the former. To raise these to public estimation, to exhibit the true products of the Dravidian mind would be a task worthy of the ripest scholar and the most enlightened government (Introduction to folk songs of southern India printed in 1871) என்று கூறியிருப்பது அறிஞர் கருதத்தக்கது.
----------

13.வாணிக மந்திரம்

வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக்கூடிய தொழில் என்று பலரும் கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக்கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தரமானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவதாயிற்று. இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட்களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர்களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்பவராயினர். வேலைகிடைக்காதவன் வெற்றிலை பாக்குக் கடையேனும் வைத்து வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் நடக்கத் தலைப்பட்டது.

சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவிழ்வதும், எழுவதும் இயற்கையென்று மக்கள் கருதுகின்றார்கள். "முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை," கெட்டவரும் இல்லை" என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (25ஆம் ஆண்டுவிழா) பொன்விழா (50ஆம் ஆண்டு விழா) மணி விழா (80ஆம் ஆண்டுவிழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று இப்படி விழாக்கள் நடத்த இயலுகின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை.

செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் "நல்ல காலம்" என்றும், "நல்ல யோகம்" என்றும், வீழ்ச்சி யுண்டானால் "திசை கெட்டுப் போயிற்று," "கிரகம் சரியா யில்லை" என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர்களாகக் கருதிக்கொள்வது இயல்பாக் இருக்கிறது. விதியென்றும், வினை யென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெருவழக்கு, விதிவினைகளின்மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்கு நமது பெரியோர்கள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும் அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ, வினையே" என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் அறிவுறுத்த உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவதுதான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாயத்தில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பாரதமாய் விரியும்.

வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றைமாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை. நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள், பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டுவிடுவாரானால் ‘சூதாட்டத்தில் எப்படி வெற்றி தோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை" என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவருக்கும் தெரிந்த செய்தி, வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று. வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்துவிட்டன.

நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒரு முறை நமது நாட்டு வாணிகத்தைப் பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங்குறையை எடுத்துக் கூறினார். நம் நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனையும் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மோசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா?

மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதைகளையும் மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்து விடுகிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும், கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு கசம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரைகசத்துக்கு மிகுவதில்லை; எழு கசச் சீலையென்பான் அளந்தால் அது ஆறரைகசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனத்தில் வாணிகம் என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவில்லாதவர்களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய்விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் இவர்களில் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டுவதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வரவில்லை. உள்நாட்டில் இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பெருவாரியாகப் புகுந்து வெளி நாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவகேட்டை விளைவித்திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்த இழிசெயல் பெருத்த தீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவு பெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகர் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது.

இந்த நிலை நமது நாட்டு வாணிகத்துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை, ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அதைச் சிறிதும் நம்பாமல் முக்கால் ரூபா, அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிது போது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ பதினான்கணாவுக்கோ வாங்கிக்கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தமது சொல் பொய்படுவதையோ அதனால் தமது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை, வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொதுமக்கள் வையாமைகண்டு “ஒரே விலை" என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்; ஆயினும் ஒரே விலைக்கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதை நெகிழவிட்டார்; ஒரே விலை என்பாரிடத்தும் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால், நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்ப்ல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்.

நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமையாலும், வாங்கும் பொதுமக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவது கண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்து விட வேண்டும்; பேரம் பேசக்கூடாது’ என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒரு கடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சொன்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்கடை முதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத் தொடுத்த" செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது." இப்படியே மிளகுப் பொதியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மண்ணைக் கலந்தும் நமது நாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டுவந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றொரு பெரிய நகரம் உள்ளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்து வந்தது. பல செல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டுகட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹெர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில் அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார்.

டெயிலர் (H.Teylor) முதல்வராய சிறிது காலம் அதன் நடைமுறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும் நாணயத்துக்கும் மாசு உண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அதைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணுதற்கென்று ஒருசில "மந்திரங்களைக்" கண்டுபிடித்தார். அதைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் "உபதேசித்து" அதை மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனத்தில் வேரூன்றிய "மந்திரம்", விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று, ஊதியம் மிகுந்தது; விழும் நிலையிலிருந்த நிலையம் 200000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிகமாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன்பால் மிக்க நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது.

அப்படியானால் அந்த "மந்திரம்" யாது என அறிய வேண்டுமன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்புடுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

1. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்குமானால், அதை ஆராய்ந்து, "இது உண்மையான பொருள் தானா?” என்று முதலில் பார்க்க வேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாகவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது. உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்க வேண்டும்.

2. ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேண்டும். இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனத்தில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப் பட்டுச் சீரழியும்.

3. நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும். நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும்.

4.நமது இந்தச் செய்கையால் எல்லோருக்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணிய பொருள்களை ஒருவர் ஒரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பவரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்கு வோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப்பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகின்ற மக்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான் உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றார்.

இந்த “நான்கு மந்திரமும்" உரிமைகொண்டு வாழும் உலக நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பத்ால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச் செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதை களல்லர்; அதனால் அவர்கள் இந்த "நால்வகை மந்திரங்களையும்" கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார் களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும் என்பதற்கு ஐயமேது?
------------

14. வெற்றிலை வாணிகர்

புதுக்கோட்டைப் பகுதியில் வெள்ளாறு ஒடுகிறது. அதன் இரு கரையிலும் உள்ள நாட்டுக்குக் கோனாடு என்று சங்க காலத்தில் பெயர் வழங்கிற்று. இடைக் காலத்தில் விசயாலயன் இராசராசன் முதலிய சோழ வேந்தர் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் காலத்தில் முதல் இராசராசனது 18-ஆம் ஆண்டுக்குப் பின் இக் கோனாட்டுக்கு இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்று பெயர் உண்டாயிற்று. ஆனாலும் பழம் பெயரை மறவாதபடி, கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்றே அது கூறப்பட்டு வந்தது.

இந்த நாட்டில் அந்தக் காலத்தில் விளங்கிய பேரூர்களில் திருநலக் குன்றம் என்பது ஒன்று. இப்போது அது குடுமியான் மலை என்ற பெயருடன் நிலவுகிறது. இதனருகே காப்புக்குடியென்பது ஒர் ஊர். அந்த நாளில் வாழ்ந்த வேந்தர்கள், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களுக்கு நீர் வளம் பொருந்திய ஊர்களைக் கொடுப்பது வழக்கம். அதற்குப் பிரமதாயம் என்று பெயர்; அது பிரமதேயம் என்றும் மருவி வழங்கும்.

தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கட்டிய இராசரர்ச சோழனுக்குப் பின் அவன் வழியில் முதற் குலோத்துங்கன் என்னும் வேந்தன் ஆட்சி புரிந்தான். அவன் சுமார் 880 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1070 முதல் 1120 வரையில் ஆட்சி செய்தான். இந்தக் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு அவனுடைய ஆட்சியில் இருந்தது. மேலும், அக் காலத்தில் நாட்டின் பரப்பைக் கணக்கெடுத்தவர், கோனாடு இருபத்து நான்கு வட்டகைப் பரப்புடைய தெனக் கணக்கிட்டனர்; இதை அப் பகுதியில் காணப்படும் கல் வெட்டுக்கள் உரைக்கின்றன.

இந்தக் கோனாட்டில் திருச்சிராப்பள்ளி வழியாகவும், தஞ்சை வழியாகவும் வெற்றிலை வாணிகர் வந்து வியாபாரம் செய்வர். மலைநாட்டிலிருந்து குதிரை வாணிகரும் வந்து குதிரை வியாபாரம் செய்தனர். தஞ்சை மாநாட்டு மன்னார்குடிக் கல்வெட்டால் மிளகு வாணிகரும் பிறரும் மலை நாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் வந்து போன செய்தி தெரிகிறது. இவர்களிற் பலர் விற்றற்குரிய பொருள்களைப் பெருந் தொகையாகக் கொணர்ந்து ஒரிடத்தே பண்டகசாலை நிறுவி அதன் கண் தொகுத்துச் சிறிது சிறிதாக ஊர்களுக்கு அனுப்பினர். இவர்களைப் போலவே இந் நாட்டு வணிகர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து வாணிகப் பொருள்களை வருவிப்பதும், இந் நாட்டுப் பொருள்களை வெளிநாடுகட்குக் கொண்டு செல்வதும் உண்டு.

இவ்வாறு, வணிகரது போக்கு வரவில். இடைச் சுரங்களில் ஆறலைகள்வரது குறும்பும் இருந்து வந்தது. அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலை இவ்வணிகர்க்கு நேரிட்டது. அவர்களைக் காக்க வேண்டிய கடமை அந் நாளை அரசர்க்குண்டென்பதைச் சங்க நூல்களே கூறுகின்றன. அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப் பொருள் வெளவும் கள வ்ேர் வாழ்க்கைக், கொடியோர் இன்றவன் கடியுடை வியன் புலம்’ என்பதனால், வழிப் போக்கர்க்கு ஊறுண்டாகா வண்ணம் பழைய நாளைத் தமிழ் வேந்தர் காவல் புரிந்தமை விளங்குகிறது. என்றாலும், வணிகர் செல்லும்போ தெல்லாம் அரசனது படையைக் கொண்டேகுவது வணிகர்க்குப் பல சமயங்களில் இடுக்கண் விளைத்தது. சில சமயங்களில் அரசியற் படையின் உதவி கிடைப்பது அரிதாகும். அதனால் வணிகர் தாமே படைகளை வைத்தாளும் உரிமை பெற்றுப் படையும் கொண்டிருந்தனர். இம் முறை அந் நாளில் மேனாடுகளிலும் இருந்தது. ஐரோப்பியர் நம் நாட்டில் வாணிகம் செய்ய வந்தபோது தமது செலவிலேயே படைகளை வைத்தாண்ட செய்தியை நம் நாட்டுச் சரித்திரமே கூறுகிறதல்லவா? பகை பெரிதானபோதே அரசர் முன் வந்து தாங்கள் பெரும் படை கொண்டு பகைவர் குறும்புகளை அடக்கினர்.

இந் நிலையில் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டில் வணிகர் பலர் வாழ்ந்தனர். அவருள் வெளிநாட்டு வணிகரும் இருந்தனர். அவருள் தெலுங்கு நாட்டினர் பலர். அந் நாட்டில் வாணிகம் செய்து வந்தனர். தெலுங்கு நாட்டில் கோகழி யைஞ் துறு, திரிபுர தளம் மூன்று லக்ஷம் என நாடுகள் பெயர் பெற்று விளங்கின. அந்நாடுகளிலிருந்து வந்து வாணிகம் செய்தோர் தங்களை ஐஞ்னூற்றுவர், ஆயிரவர் எனக் கூறிக் கொள்வர். தெலுங்கு நாட்டிலிருந்து வந்து கோனாட்டில் வாணிகம் செய்தோருட் சிலர் தங்களை ஆயிரவர் என்று கூறிக் கொண்டனர். அவருள் கிராஞ்சி மலை கிளிய னின்றான் திருமலை சகஸ்ரன் என்பவன் ஒருவன். கிராஞ்சி மலை யென்பது கிரெளஞ்ச மலை யென்பதன் திரிந்த பெயர். கிழிய நின்றான் என்பது கிளிய நின்றான் எனத் திரிந்து போயிற்று. ‘கிளியனூர் எனத் தொண்டை நாட்டில் ஊர்கள் இருப்பதை நோக்க இக் கிளியன் என்பது, ஒர் இயற்பெயராக இருக்கலாமெனக் கருதுதற்கும் இடந் தருகிறது. கிராஞ்சி மலை இப்போது குண்டுர் மாவட்டத்தில் உள்ளது. குண்டுர் மாவட்டத்துக்குக் குண்டுரின் பழம் பெயர் குமட்டுர் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. வடுக நாட்டுக் கிராஞ்சி மலையில் தோன்றிக்கிளிய நின்றான் என்னும் வணிகன் மகனாய்க் கோனாட்டில் வந்து வாணிகம் செய்த திருமலை, சகஸ்ரம் என்னும் குடியைச் சேர்ந்தவனாவன். சகஸ்ரன், ஆயிரவன் என்னும் பொருள் தருவது.

தெலுங்க நாட்டு வணிகனான திருமலை சகஸ்ரன் கோனாட்டில் வாணிகம் செய்கையில், அருளாளன் சகஸ்ரன் என்ற வேறொருவனும் வந்து வாணிகம் செய்தான். அவனது ஊர் வேத கோமபுரம்; அதனால் அவன் வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரன் என்று வழங்கப்பட்டான். இவனது வேத கோமபுரமும் தெலுங்க நாட்டில் உள்ளதோர் ஊர். இவ் ஆரவர் பலர் சோழ நாட்டில் ஆடுதுறைப் பகுதியில் தங்கியிருந்தனர். அதனால் அப்பகுதி விக்கிரம சோழச் சதுர்வேதி மங்கலத்து வேத கோமபுரம் என்று பெய ரெய்தியிருந்தது (A.R. 366 of 1907). முதல் இராசராசனுடைய அரசியற் சுற்றத்தாருள் இராசேந்திர சிம்ம வள நாட்டுக் குறுக்கை நாட்டுக் கடலங்குடி வேத கோமபுரத்துத் தாமோதர பண்டன் என்ற ஒருவன் (Ep. Indi XXII. பக். 54). எனவே, கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டிலேயே வடுக நாட்டு வணிகர் பலர் தமிழ் நாட்டிற் புகுந்து வாணிகம் செய்தனரென்பதும், வேதியர்கள் கோயில்களிலும் அரசியலிலும் பணிபுரிந்தன ரென்பதும் தெரிகின்றன.

பணி மேற்கொண்ட நாட்டவரும் பிறரும் மீண்டும் ஒருங்கு கூடி 'கோவிராச கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு கூம்சு -வது (முப்பத்தாறாவது) இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு நாட்டோம். திருநலக் குன்ற முடைய மகா தேவர்க்கு இந் நாட்டுப் பிரமதேயம் காப்புக்குடி, கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனும், வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரனும் இவ் விருவரும் இந் நாட்டில் வந்திறங்கின வெற்றிலைக்குத் தரகு கொண்டு முப்பத்தாறாவது முதல் இத் தேவர் அடைக்கா யமுதுக்கு ஆட்டு (ஆண்டு) முப்பதினாயிரம் பாக்கும் வெற்றிலைக் கட்டு எழு நூற்றைம்பதும் இவ் விருவரும் இவர்கள் வர்க்கத்தாருமே சந்திராதித்தவல் (சந்திராதித்தர் உள்ள வரையில்) இடக்கடவராகவும். இது நாட்டோமும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ் நூற்றுவருமே இது நிலை நிறுத்தக் கடவோமாகக் கல்வெட்டு வித்தோம் (P.S. No. 125) என்று திருநலக் குன்ற முடையார் கோயில் முன் மண்டபத்துக் கீழ்ப்புறச் சுவரில் கல் வெட்டுவித்தனர்.

இவ் வேற்பாட்டின்படி இரண்டாண்டுகள் கழிந்தன. சகஸ்ரர் இருவருக்கும் முன்னர் இருந்த சிறப்புப் பண்டு போல் உண்டாகவில்லை; வருவாயும் குறைந்தது. புதியராய்த் தோன்றிய வணிகருள் சிறுத் தொண்ட நம்பி யென்பான், தான் முன்னர் நிகழ்ந்த உடன்படிக்கையில் கலந்து கொள்ளாதது பற்றித் தனக்குள்ளே வருத்த முற்றான். கைக் கோளர் தலைவரும் பழியிலித் தலைவரும் சொன்னதை ஏற்காது போனது பெருங் குறையாகத் தோன்றிற்று. பின்பு ஒரு நாள் அவர்களைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்கள் நாட்டுத் தலைவர்களுக்குத் தக்க முறையிற் சொல்லிச் சிறுத்தொண்ட நம்பியின் வேண்டுகோளை ஏற்குமாறு செய்தனர். சோழ வேந்தன் ஆணைபெற்று, தானைத் தலைவரும் நாட்டவரும் கூடித் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் வருவித்து ஆராய்ச்சி செய்தனர். திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டு மளவிற் செம் பாகத்தைச் சிறுத் தொண்ட நம்பி ஏற்றுக் கொள்வது தக்க தெனத் துணிந்தனர். சிறுத்தொண்ட நம்பியும் அதற்கு இசைந்தான். பின்பு, முன்பு கல் வெட்டின திருமலையும் அருளாளனும் இவ்விருவரும் செம் பாகமும், தாமோதரன் சீகிருஷ்ணனான சிறுத் தொண்ட நம்பி செம் பாகமும் கொண்டு திருநலக் குன்றத்திலே இருந்து பரிமாறித் திருநலக் குன்றமுடையார்க்கு இப்படியா லுள்ளது செலுத்தக் கடவார்களாக' என முன்பு வெட்டின கல் வெட்டின் கீழ் பொறித்தனர்.

இது நிகழ்ந்த சில ஆண்டுகட்குப் பின் வெற்றிலைப் பாக்கின் விலை உயர்ந்தது. அதனால் திருமலை முதலிய தரகர்கட்கு வருவாய் மிகுந்தது. ஆகவே, நாட்டில் முன்னர் நிகழ்ந்தது போன்ற பூசல்கள் உண்டாதற் கேற்ற குறிகள் வணிகரிடத்தே உண்டாயின. நாட்டுத் தலைர்கள் அவற்றை முன்னறிந்து ஆராய்ந்து தரகு விகிதத்தை உயர்த்தக் கருதினர். அவர் கருத் தறிந்த வேந்தன் முதற் குலோத்துங்கன், தனது ஆட்சியின்சயஅ - ஆம் ஆண்டு முதல் (நாற்பத்தெட்டாம் ஆண்டு முதல்) உயர்த்துக் கொள்க என்று ஆணை யிட்டான். மிக்குவரும் வருவாய்க்குச் செலவினமும் கண்டு, நாட்டவர் கூடி, வெற்றிலைத் தரகர் மூவரையும் கூட்டி, 'இக் கல் வெட்டுப் படியுள்ள அடைக்கா யமுதும் இலை யமுதும் இடக் கடவார் திருமெய்ப் பூச்சுக்கு சயஅ-வது முதல் திங்கள் ஒன்றுக்கு ஐந்து திராமமாக ஆண்டுக்கு அறுபது திராமம் இறுக்கக் கடவார்களாகக் கல் வெட்டுவித்தோம்’ என்று முடிவு செய்து வேந்தற்குத் தெரிவித்தனர். வணிகர் மூவரும் அவ்வாறே செய்து வருவாராயினர். கோனாட்டில் வெற்றிலை வாணிகத்தில் குழப்பமும் கலகமும் இலவாயின.

நிற்க, மேலே கூறிய திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனும் கோனாட்டில் இருந்து வாணிகம் செய்து பெருஞ் செல்வத் தலைவர்களாய் விளங்கினர். ஏனை வணிகர் பலரும் இவ் விருவர்க்கும் அடங்கியே இருந்தனர் ஆயினும், பொன்னாசைமக்களைச்சும்மா இருக்கவிடாதன்றோ? திருமலையும் அருளாளனும் ஒருவரின் ஒருவர் மிக்க செல்வம் ஈட்ட விரும்பித் தம்மிற் போட்டியிட்டு மாறுபடுவாராயினர். ஈர் பேனாகிப் பேன் பெருமாளாயிற் றென்பது போல, இம் மாறுபாடு முறுகிப் பெருகிப் பெரும் பகையாய் முற்றிவிட்டது. இரு வரிடையேயும் போரும் பூசல்களும் மிகுந்தன. இருவருடைய படைகள் அடிக்கடி போரிடத் தலைப்பட்டமையின், வாணிகப் போக்கு வரவு ஆறலைக் கள்வரால் அலைப்புண்டது. இவ்விருவரும் வெற்றிலையும் பாக்கும் கொணர்ந்து வாணிகம் செய்பவர்கள். இவர்களுடைய செயலால் கோனாட்டில் வெற்றிலை பாக்குப் பஞ்சம் பெரிதாயிற்று. இவர்கள் பால் வெற்றிலை பாக்கு வாங்கி விற்கும் சிறு வணிகர் பெருந் துன்ப முற்றனர். சில காலங்களில் வெற்றிலை பாக்குக் கிடைப்பது அரிதாகவே, கோயில் காரியங்களும் முட்டுப்பட்டன. வேறே வணிகர் சென்று வெற்றிலை பாக்குக் கொணர்தற்கு அஞ்சினர்.

சில நாட்களுக்குப் பின் வேற்று நாட்டவர் சிலர் இவர்களால் சீர் குலைந்த வெற்றிலை வாணிகத்தை நடத்தலுற்றனர். கோனாட்டு வணிகருட் சிலர் அவர்கட்குத் துணை செய்தார்கள். வணிகர் பலராகவே அவரவரும் கட்டுப்பாடின்றித் தாந்தாம் வேண்டியவாறே விற்பனை புரிந்தனர். அதனால் கோயிலுக்குச் சேர வேண்டிய தரகும் குறையலுற்றது. அது கண்ட திருநலக்குன்றத்துக் கோயிலதிகாரிகள் புதுவராய்த் தோன்றிய வெற்றிலை வாணிகரை ஊக்கி, வேண்டும் வசதிகளைச் செய்து கொண்டார்கள். சுருங்கச் சொல்வோமாயின் வெற்றிலை பாக்கு வாணிகம் பழைய வடுக வாணிகர் கைவிட்டுப் புதியராய் வந்த வணிகர் கைக்கு மாறிப் போவதாயிற்று. ஆயினும், திரு நலக்குன்ற முடையார் கோயிலுக்குரிய வருவாய் செம்மை பெற வில்லை. இதனை எண்ணுவோரும் அருகினர். ஊரிரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போலக் காப்புக்குடி வெற்றிலை வணிகர் இரண்டு பட்டுக் கலகம் புரிய, அயல் நாட்டு வணிகர்க்கு ஆக்கம் பெருகிற்று. உண்ணாட்ட வருக்குச் சலுகை குறைந்தது. திருநலக் குன்றமுடையார் கோயிற்குரிய தரகு வருவாயும் நாட்டவர் வருந்தும் அளவுக்குக் குன்றிப் போயிற்று.

இதற்கிடையே, நாட்டிலுள்ள நல்லோருட் சிலர், கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் கண்டு நிகழ்வது முற்றும் நினைவுறக் கூறினர். இருவர் உள்ளமும் உண்மையை ஒர்ந்து கண்டன. சான்றோர் சிலர் கூடி இருவரையும் சந்து செய்வித்தனர். இருவரும் ஒற்றுமை கொண்டு வெற்றிலை வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஆயினும், புதியராய் வந்து தோன்றிய வணிகர் முன்- இவ்விருவரது வாணிகமும் சிறக்கவில்லை. வணிகரிடையே பொறாமையும் பூசலும் போரும் உண்டாயின. அவரவர் பக்கலிலும் ஆட்கள் பலர் மாண்டனர்.

அந் நாளில் இக் கோனாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநா டென்ற பெயரால் சோழ வேந்தர் ஆட்சியிலிருந்த தென முன்பே கூறினோம். அக் காலத்தே இந்நாடு பொற் கோயிற்படையும் பழியிலிப் படையும் என இரு படைகளின் காவலில் இருந்தது. இவ்விரண்டற்கு முரிய தலைவர் இருவரும் காவற்றலைவராய் இருந்தனர். இவ் விருவரும் தொடக்கத்தில் நடுவு திறம்பாது நின்று நாட்டு மக்கட்கு இவர்களால் ஊறுண்டாகா வண்ணம் பாதுகாத்து வந்தனர். புதியராய்த் தோன்றிய வணிகர், தானைத் தலைவர் இருவரையுங் கண்டு, 'வடுக வாணிகர் பூசலால் நாட்டிலுண்டான வெற்றிலை பாக்குக் குறையை நாங்கள் முன்னின்று நீக்கி நற் பணி புரிந்தோமாதலால், எங்கட்கு இனி இந் நாட்டில் இடமில்லாதவாறு செய்தல் முறையாகாது' என வேண்டிக் கொண்டனர். அவர் செயலின் நலந் தேர்ந்து தலைவர் இருவரும் அவர்கள் வாணிகத்துக்குச் சலுகை தரத் தொடங்கினர். ஆனால், அவர்கள் திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டிய தரகினைக் குறைத்தே செலுத்தினர். கிராஞ்சி மலைத் திருமலையும் வேத கோமபுரத்து அருளாளனும் தாம் செய்த தவற்றுக்கு வருந்திக் கோனாட்டுத் தலைவரிடத்தும் கோயிலாரிடத்தும் முறையிட்டனர். பெருஞ் செல்வர்களாதலால், சகஸ்ரர் இருவரும் வாணிகத்தால் ஊதியம் பெருகினும் சிறுகினும் திருநலக் குன்ற முடையார்க்குரிய தரகு குறையாமலே ஆண்டுதோறும் செலுத்தி வந்தனர். புது வாணிகர்க்கு அஃது இயலாதாயிற்று. இவற்றையெல்லாம் எண்ணிய தலைவர்கள் செய்வது தெரியாது திகைப்புற்றுத் தஞ்சை மாநகர்க்குச் சென்று சோழ வேந்தன் முதற் குலோத்துங்கன் திரு முன் முறையிட்டனர். வேந்தர் பெருமான் கோனாட்டுப் படைத் தலைவர் இருவர்க்கும் திருநலக் குன்ற முடையார் கோயிலதிகாரிகட்கும் திருமுகம் விடுத்து 'உண்மை யாராய்ந்து தரகர்களை நிறுவி முறை வழங்குக’ என்று ஆணை பிறப்பித்தான். திருமுகம் கோனாட்டுத் தலைவர்பால் வந்து சேர்ந்தது.

திரு முகம் வரக் கண்ட கோனாட்டுத் தலைவர்கள் எதிரெழுந்து வரவேற்று வேந்தனை வாழ்த்தி, பொற் கோயில் கைக்கோளர் மூன்று படைத் தலைவரையும் பழியிலிப் படை ஐஞ்ஞூற்றுவர் தலைவரையும் ஏனைத் தலைவர்களையும் திருநலக் குன்றத்து மகா தேவர் கோயிலினுள்ளால் ஒருங்கு கூட்டி ஆராயத் தொடங்கினர். அரசியலாணைப்படி முதற்கண் திருநலக்குன்ற முடையார் கோயிற்கு ஆண்டு தோறும் வேண்டியிருக்கும் வெற்றிலை பாக்குத் தரகு கணக்கிடப் பெற்றது. ‘ஆண்டொன்றுக்கு அடைக்காய் அமுதுக்கு முப்பதினாயிரம் பாக்கும் எழுநூற்றைம்பது கட்டு வெற்றிலையும்’ வேண்டியிருப்பது தெளிவாயிற்று. மேலும், இவற்றை முன்பெல்லாம் திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனுமே கொடுத்து வந்தார்களென்பதைக் கோயிற் கணக்குகள் தெரிவித்தன; அவ்விருவருடைய கணக்குகளும் அவ்வாறே குறித்திருந்தன.

பின்னர், இந் நாட்டில் இனி வந்திறங்கும் வெற்றிலை பாக்குகட்குத் தரகு செலுத்தி வாணிகம் செய்யும் தலையுரிமை நல்குவது பற்றி ஆராய்ச்சி நடந்தது. தானைத் தலைவர் இருவரும் அவர்தம் துணைவரும் புதியராய்த் தோன்றிய வாணிகர்சார்பாகப் பேசினர். அவர்களால் மேலே கண்ட தரகினைத் தர இயலாமை விளங்கிற்று. திருமலையும் அருளாளனும் வழக்கம் போலத் தாங்கள் செலுத்துவதாக உடன்பட்டனர். அதனால், கூடியிருந்த மகா சபையார். ‘இனி, இந்த நாட்டில் வந்திறங்கும் வெற்றிலைக்குத் தரகு கொண்டு கிழிய நின்றான் திருமலையும் அருளாளன் சகஸ்ரனும் இவர்கட்குப் பின் இவர்கள் வருக்கத்தாரும் இடக்கடவர்களாக’ என்று தீர்மானித்துச் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தார்கள். வேந்தர் பெருமான், தனது ஆட்சி ஆட்சி யாண்டு முப்பத்தாறாவது முதல் இங்ஙனமே நடைபெறுக’ என்று கல்வெட்டித் தருமாறு பணித்தான். மேலும், இதனைக் கோனாட்டாரும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ்னுாற்றுவரும் நிலை நிறுத்தக் கடவ ரென்றும் ஆணை பிறப்பித்தான்.
----------

15. உரிமை வாழ்வில் இலக்கியப் பணி

உரிமை வாழ்வென்பது பொது வுலகில் ‘சுதந்திர வாழ்வு’ என்று வழங்கும். இந்த வாழ்வு பெறுவதற்கு நம் நாட்டவர் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே முயலத் தொடங்கி, இந்த நூற்றாண்டின் இந்த ஆண்டு வரையில் பெரிய போராட்டத்தைச் செய்து வெற்றி பெற்றனர். இத்தகைய வெற்றி, உரிமைப் போருடற்றி வெற்றி பெற்ற நாடுகள் எவற்றிலும் இதுகாறும் உண்டானதே கிடையாது. ஏனை நாட்டவரால் எய்துதற்கரியதாகிய இத்தகைய வெற்றிகொண்டு விளங்கும் நமக்கு வேறு எவருக்கும் இல்லாச் சிறப்பு உண்டாகிறது. மேலும், நம் நாட்டிலும், இறந்த ஆண்டுகளில் வாழ்ந்தவர்களிலும், எதிர் காலத்தில் தோன்றுகின்றவர்களிலும் இன்றைய நாம் நல்ல பேறுடையவர்கள் என்பதையும் நினைவு கொள்ளவேண்டும். உரிமைப் போர் நிகழ்ந்த காலத்தில் உடனிருந்து கண்டு, அஃது எதிர்பாராத வகையில் வெற்றி தரவும் கண்டு இன்புறு கின்றோமாகையால், நாம் பெற்ற பேறு தலைசிறந்த பேறு என்பதில் தடை ஏது?

உரிமை வாழ்வு எய்தப் பெற்று இன்புறுகின்ற நமக்கு இவ்வாழ்வு உரியது தானா? புதிது பெற்றதொரு வாழ்வா? என்று சிறிது எண்ணமிட்டுப் பார்க்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு காண்பவர்க்கு, ‘தமிழ் நாட்டவர்க்கு இது புதிதன்று; முந்நூறு நானூறு ஆண்டுகட்கு முன்பு வரையில் தமிழ் நாட்டவர் உரிமை வாழ்விலே உறைந்தவர்’ என்பது நன்கு விளங்கும். ‘தமிழராகிய நமக்கு இறந்த உரிமை வாழ்வு மீள உயிர் பெற்று வந்திருக்கிறது’ என்றே எண்ண வேண்டும்.

பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவு ஆகிய ஐந்தும் உரிமை வாழ்வுக்குச் சிறந்த உறுப்புக்களாகும். அவரவரும் தத்தமக்குரிய நெறியில் நின்று நெஞ்சால் நினைப்பவற்றைச் சொல்லுதற்குத் தடையில்லாமை பேச்சுரிமையாகும். நெறியில் நிற்கும் போது நில்லாதார் செய்யும் நீர்மை யற்ற செயல்களை எடுத்தோதித் திருத்துவதற்கும் நெறியிடையுண்டாகும் இடையூறுகளையும் இடையீடுகளையும் எடுத்தோதி விலக்குதற்கும், நலங்களை எடுத்தோதிப் பாராட்டுதற்கும் பேச்சு நிகழும். அவ்வாறு நிகழும் பேச்சுக்களை வழங்குதற்கு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமை யுண்டு. அப்பேச்சுரிமை யில்லாத வாழ்வு உரிமை வாழ்வாகாது.

கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை வழிபடுவது கடனென்றும் கருதி அவரவரும் வேறு வேறு சமய நெறிகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சமய நெறிகளும் பலதிறப்படுகின்றன. அவர்களுக்கு அந் நெறியில் வழிபட்டு வாழ வுரிமை யுண்டு. இது வழிபாட்டுரிமை. அவ் வுரிமையைக் கெடுத்து, யாவரும் ஒரு நெறியையே கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்தி நிறுத்துவது உரிமை வாழ்வுக்குப் புறம்பானதாகும். அவரவர்க்கும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் வழிபாட்டுச் சமய நெறியைப் பிறர்க்கு எடுத்தோத உரிமை யுண்டு. பிறரைத் தம் நெறியைக் கைவிடுமாறு வற்புறுத்துவது உரிமைப் பணியாகாது.

உடைமைக்கும் உடையவனுக்கும் உள்ள உரிமையால், உடைமையின் பயனை உடையவன் நுகர்தற்கண் அவனுக்கு அச்சமுண்டாதல் கூடாது. உழைப்பவனுக்குத் தன் உழைப்பால் விளையும் பயனை நுகர்தற் குரிமை யுண்டு; அந் நுகர்ச்சியில் அவனுக்குத் தடை யுண்டாகுமோ என அச்ச முண்டாதல் கூடாது. இவ் வகையால் அவரவர் உரிமையில் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் உரிமை வாழ்வுக்குத் தீதாகும். இம் முறையில் அரசியல் முறைகளும், அவற்றைச் செயற்படுத்தும் வினையாளர்களும் மக்கட்கு அச்சம் பிறவாத வகையில் அமைவதே அச்சம் இல்லாமை யாகும்.

உரிமை வாழ்வுடைய நாட்டில் வறுமை யுண்டாகுமானால், அஃது அவ் வுரிமையை யழித்து நாட்டைச் சீரழித்தவிடும். ‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு’ என்றதும் இக் கருத்தையே வற்புறுத்துகிறது. வறுமையறவே இல்லாத உரிமை வாழ்வில், ஒரு வேலையும் இன்றிச் சோம்பித் திரிபவர் இல்லையாவர்; அவரோடு, உழைப்பார் உழைக்க, அவர் உழைப்பின் பயனை உறிஞ்சி யுண்டு உயிர்வாழ விரும்புவோர் ஒழிந்துபோவர். ‘யான் வாழ ஏனோர் எனக்கு அடிமையாக எனும் ஊன அறிவு’ ஓரிடத்தும் ஒரு சிறிதும் இராது.

ஒப்புரவு என்பது உரிமை வாழ்வுக்கு அழகு தருவதாகும். நாடுகளுக்கிடையே நிலவும் ஒப்புரவு, வறுமையும் அச்சமும் போக்கி, உரிமை வாழ்வில் ஊறிப் பெருகும் இன்பத்தை நுகரப் பண்ணும், நாட்டு மக்களிடையே விளங்கும் ஒப்புரவு, மக்கட் சமுதாயத்தில், வேற்றுமைசெய்யும் பிளவுகளைப் போக்கி, ஒற்றுமை நிறுவும் மனப்பண்பினை, வளர்க்கும். ஒப்புரவு என்பது ஒருவருக்கொருவர் வேண்டுவன வுதவி யொழுகும் ஒழுக்கமுறை; ‘ஒப்புரவொழுகு’ என்பது ஆத்திசூடி மக்களை ஒருவர்க்கொருவர் ஒன்றாகப் பிணித்து ஒருமை யுறுவிப்பதும், நாடுகளை ஒன்றோ டொன்று நீங்கா வகையில் ஒன்றுபட்டு வாழ வைப்பதும் ஒப்புரவென்னும் ஒள்ளிய அறம் ஒன்றேயாகும்.

மேற்கூறிய பேச்சுரிமை முதலிய ஐவகை யுறுப்புக்களையும் கொண்டு, பிற நாட்டவரது ஆட்சியின் கீழன்றித் தன்னாட்டவராளும், ஆட்சியில் வாழும் வாழ்வு உரிமை வாழ்வுக்கு உருவாகும். இன்று நாம் எய்தி இருக்கும் உரிமை வாழ்வு இத்தகைய தாகும். இந்த உரிமை வாழ்வு பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் தமிழகத்தில் இருந்ததென்பதைச் சங்க நூல்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தைத் தமிழரே ஆண்டனர்; அவரது தமிழ் மொழி அரசியல் மொழியாக விளங்கிற்று. தமிழர்கள் அத்தமிழ் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர். அவர் வாழ்வில் இவ்வுறுப்புக்கள் ஐந்தும் குறைவின்றியே இருந்தன. அதனால் அவர்கள் காலத்து இலக்கியங்கள் இவ்வைந்தும் வளம் பெறத் தக்க கருத்துக்களை எடுத்துக் காட்டின.

முதற்கண் பேச்சுரிமையைக் காணலாம். தமிழகத்தில் சங்க இலக்கியக் காலத்தில் நிலவியது முடியாட்சியே யன்றிக் குடியாட்சி யன்று. ஆயினும், முடியாட்சி, தான்தோன்றி யாட்சியாய் இல்லாமல், குடிகளின் மனக்கருத்தைத் தழுவிச் செல்லும் இயல்பு பெற்றிருந்தது. இதனால், அரசியலில் உரிமை அறிவுடையவர்க்கே இருப்பதாயிற்று. பாண்டி வேந்தன் ஒருவன், ‘ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது, அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்றான். திருவள்ளுவரும், ‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன், அடிதழீஇ நிற்கும் உலகு’ என்றார். குடிகளாவார் கற்றாரும் கல்லாரும் என இரு திறப்படுவர். அவருள், கல்லாதவர் கற்றவர் வழி நிற்பவராகையால், அரசியலின் செம்மைக்குக் கற்றறிந்த அறிவுடையோர் பொறுப்புடைய ராயினர். அப்பொறுப்பு, அரசியலில் வேண்டுவன எடுத்தோதற்கு வாய்ப்பளித்தது. சான்றோர் பலரும் பொறுப்புணர்ந்து தமது பேச்சுரிமையை நெகிழ விடாது செய்வன செய்து சிறப்புற்றனர்.

நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், பாண்டி நாட்டை ஆண்டு வந்த காலத்தில், ஒருகால் நாட்டில் உணவுப் பொருள் விளைவு குறைந்தது. உணவில் வறுமை யுண்டாயிற்று. வேந்தன் துறக்க இன்பம் வேண்டி வேள்வி செய்வதிலும், பெருஞ் செல்வம் ஈட்டிப் பிற வேந்தரோடு போர் செய்வதிலும், வேறே நல்ல புகழ் பெறக் கருதி அதற்குரிய செயல்களிலும் பெரிதும் ஈடுபட்டிருந்தான். உணவு முட்டுப்பாட்டைச் சிறிதும் உணராது, அதனை எடுத்தோதுபவர்களை இகழ்ந்து நின்றான். உணவுப் பொருளை மிகுதிப் படுத்துவது குறித்து வேந்தன் கருத்துச் செலுத்தா திருப்பதைக் குடபுலவியனார் என்னும் சான்றோர் கண்டார். அவரோர் அறிவுடைய சான்றோர் என்பதும், அவர்க்கு அரசியலில் பொறுப்புண் டென்பதும் வேந்தன் முதலாயினார்க்குத் தெரியும். அவர் வந்து வேந்தனைக் கண்டபோது, வேந்தன் அவர் சொல்வது கேட்க இசைந்திருந்தான். அவர்,

மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே.
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே

என்று சொல்லி, நீர் கொண்டு நிலத்தை வளம் படுத்துவது உயிர்களைப் படைப்பதாகும் என்ற கருத்தை வேந்தன் மனத்தில் பதியவைத்தார். ‘ஏனை நாடுகளைப் போலப் பாண்டி நாடு பேராறுகளையுடைய தன்றே; இதனை நீர் வளமுடைய தாக்குவது எங்ஙனம்? என்று எண்ணாமை கருதி, நம் நாட்டில் உள்ளவை பெரிதும் புன்செய்களாகும்.

வித்திவா னோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட் குதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது, வல்லே
நிலன் நெளிமருங் கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளதோர் இவண் தள்ளா தோரே

என்றார். இதனால், புன்புலம் பயன்படாத, பள்ளப் பாங்கு நோக்கி நீர்நிலை யமைப்பின், அந்த நீர் நன்புலம் பெருகிப் பெரு நலம் விளைக்கும் என்று வற்புறுத்தினார். அன்று குடபுலவியனாரது பேச்சு நலம், இன்று பாண்டி நாடு நீர் நிலைகளால் மிகுந்து ஓரளவில் உணவுக் குறைவின்றி யமைதற்கு ஏது வாயிற்று.

சோழ நாட்டை உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழ வேந்தருள் கிள்ளி வளவன் என்பவன் ஒருவன். இவன் முடிவில் குளமுற்றத்து நடந்த போரில் வீழ்ந்து இறந்ததுபற்றிப் பிற்காலத்தார், இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று கூறுவர், இக் கிள்ளிவளவன் ஆட்சியில் “குடிதழீஇக் கோலோச்சும் இயல்பு” குறைவ தாயிற்று. பிற வேந்தருடன் போர் செய்து வென்றி பெறுவதால் உண்டாகும் விளக்கமே, வேந்தன் கருத்தை விழுங்கிக்கொண்டது. உழு படையினும் பொரு படையே வலி யுடையதெனச் சோழன் கருதிவிட்டான். இதனால் குடிகட்கு வருத்தம் மிகுந்தது. இதனை எடுத்துரைக்கும் உரிமையுடைய சான்றோர் கருத்தில் அச்சம் குடிகொண்டது. அக் காலத்தே வெள்ளைக்குடி யென்னும் ஊரினரான நாகனார் என்னும் சான்றோர் தோன்றி இக் கிள்ளிவளவனைக் கண்டார். “வேந்தே, பொருபடை தரும் வெற்றி குடிகளின் உழுபடையால் விளைவதாகும்; குடிகளின் மன வியல்பை நீ நன்கறிதல் வேண்டும் அவர்கள்,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்
வேந்தரையே பழிப்பர்.

அதுநன் கறிந்தனை யாயின் நீயும்,
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்,
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே

என்று அறிவுறுத்தினார். வளவன் அறிவு தெளிந்து செய்வன செய்தான். பிறகு நாடு நாடாயிற்று.

பாண்டி நாட்டை யாண்ட வேந்தருள் அறிவுடை நம்பியென்பவன் ஒருவன். இவன் பெயரளவில் அறிவுடைய நம்பியே தவிரச், செயலில் அறிவுடைந்த நம்பி யாவன். இவன் ஆட்சிக் காலத்தே, இவன் இன்பத் துறையில் மிக எளியனாய் ஒழுகினான். இவனைச் சூழ்ந்திருந்த அரசியற் குழுவினர் நீர்வழிக் கோரை போல இவன் எண்ணப்படியே ஒழுகினார்கள். நாடு வேந்தனுக்கேயுரியது; அதனால் அதன்கண் விளைவன அவனுக்கே உரியவை; அவற்றை அவன் விரும்புகிறபடியே செய்ய உரிமையுண்டென்று சொல்லிக் குடிகளைக் பலவகையிலும் அலைக்கத் தொடங்கினர். அதனால் நாட்டில் மக்களுக்கு மிக்க வருத்தமுண்டாயிற்று. அதனை யறிந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர், வேந்தனை யணுகி, “வேந்தே, நின் பட்டத்து யானைக் கெனத் தனியே நிலம் விடப்பட்டிருக்கிறது. அதன்கண் விளையும் நெல் அதற்குரியதே. அதனை விளைத்து நெல் லாக்கிக் குற்றி யரிசி யாக்கி, கவளம் கவளமாகத் தரின், அந்நெல்லுணவு அதற்குப் பன்னாளைக்கு உணவாகும். அந்நிலம் யானைக்குரியதே; அதனால் அவ் யானையை அந் நிலத்தே விட்டு மேய விடுக என்று சொல்லிவிட்டால் என்னாகும்? நூறு வேலி நிலமாயினும், அதன் வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும். அதுபோல, நீயே சென்று நில வருவாய் கொள்ளத் தொடங்கின் நாடு பாழ்படும்; அது செய்யற்க’ என்ற கருத்தமைய,

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகுவத னினும் கால்பெரிது கெடுக்கும்.
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானைபுக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

என்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேச்சுரிமையின் நயமறிந்து சான்றோர் அவ்வப்போது வேந்தர்க்குத் தகுவனவற்றை அறிவுறுத்தி வந்ததனால் தமிழகம் பல நூறாண்டு வரையில் தலைமை குன்றாதிருந்தது. கோவலன் கொலையுண்டதறிந்து, அறிவுபேதுற்று அலமரலுற்ற கண்ணகியார் மதுரை மூதூரில் பெருந்தெருவே செல்பவர், “அரசன்பால் தவறிருப்பவும் அதனை எடுத்துரைக்கும் பேச்சுரிமை பெற்ற சான்றோர் எடுத்துரையாது போயினரே, இம் மூதூரில் சான்றோர் இல்லையோ? என்பாராய்,

“சான்றோரு முண்டுகொல் சான்றோரு முண்டுகொல்,
ஈன்றகுழவி எடுத்து வளர்க்கு றூ.உம்,
சான்றோரு முண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்”

என்று கதறினார்.

இனி, இரண்டாவதாக வழிபாட்டுரிமையைக் காண்போம். கடவுள் வழிபாட்டில் தமிழகம் மக்கட்கு நெடுங் காலத்துக்கு முன்பே பேருரிமை வழங்கியிருந்தது. பல்வகையான தெய்வங்களை வழபடும் இயல்பு தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகிறது. குறிஞ்சி முதலிய நிலத்தவர் முருகன் முதலிய தெய்வங்களை வழிபட்டனர். வைதிகம், பெளத்தம், சைனம் முதலிய சமயங்கள் வந்து படர்ந்திருந்த காலத்தும், தமிழ் நாட்டில் வழிபாட்டுரிமைக்குத் தடை யுண்டான தில்லை. சங்க நூல்களில் பரிபாடல் என்பது முருகனையும் திருமாலையும் மக்கள் வழிபட்ட நலத்தை எடுத்தோதுகின்றது. பெயர் வகைகள் வேறுபட்டன வாயினும், கடவுட்டன்மை பொதுவாதலால், அவரவர் வழிபாடுகளும் இறைவனொருவனையே சுட்டும் என்பது பழந் தமிழர் கருத்து.

ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரேரய்
எவ்வயி னோயும் நீயே நின் ஆர்வலர்
தொழுதகை யமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவ லாளனும் நீயே
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே.

என்றும்,

பகைவர் இவர்இவர் நட்டோ ரென்னும்
வகையுமுண் டோநின் மரபுஅறி வோர்க்கே.”

என்றும் வருவன காண்க. இவ்வாறே முருகனை வழிபடுவோர் ‘நீயே வரம்பிற்றிவ் வுலகம்’ என முருகனையும், கொற்றவையைப் பரவுவோர் கொற்றவையையும், முழுமுதற் கடவுளாக வழிபட்டமையின், வழிபாட்டு வகையில் வேறுபட்டுக் காய்தலும் பொருடற்றலும் செய்திலர்.

இந் நிலை இச் சங்க காலத்தை யடுத்து வந்த இளங்கோவடிகள் காலத்திலும் தன்மை திரியாதே இருந்தது. சிலப்பதிகாரத்தில் இந்திர வழிபாடும், திருமால் வழிபாடும், முருகவேள் வழிபாடும், கொற்றவை வழிபாடும் நிகழ்வது காண்கின்றோம். சைனத்துறவி.பால் அருகனை வழிபடுந் திறமும் நன்கு காணப்படுகிறது.

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமமல்லது நவிலாது என்நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்.

என்ற இளங்கோவடிகள், சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே, ‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே, கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே’ என்றும், ‘பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே, நாராயணாவென்னா நாவென்ன நாவே’ என்றும் பாடுவது போதிய சான்றாகும்.

இனி, இதனை யடுத்து வந்த மணிமேகலை யாசிரியர் காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம், வைதிகம், பெளத்தம், ஆருகதம், நியாயம், சாங்கியம், வைசேடிகம், யோகம், மீமாஞ்சை முதலிய பல சமயங்கள் இருந்தன என்பது வெளிப்படை. இவ்வாறு சமயங்கள் பல இருந்தன வெனினும், அவை தம்முள் போரிட்டுக் கொண்டு ஒருவர் ஒருவர் வழிபாட்டுரிமைகளைப் பறித்துக் கொண்டதாக வரலாறு கிடையாது.

இனி, இதனை அடுத்துவந்த திருமூலர், காரைக்காலம்மையார் முதலியோர் காலத்தில் பல சமயங்களில் நிலவின. சமயப் பூசல் காணப்படவில்லை. இவற்றிடையேயும் ஒற்றுமை காண்பதற்கு முயற்சி செய்யப்பட்டுளது. திருமூலர்,

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனுமாமே

ஆன சமயம் அது.இது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி;
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே

என்பது காண்க.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமண் சமய முன்னேற்றத்தால் சமயப் பூசல் உண்டாயிற்று. வழிபாட்டுரிமைக்குத் தடை பிறந்தது. நடு நாட்டில் பல்லவ வேந்தனும் பாண்டி வேந்தனும் பாண்டி நாட்டில் நெடுமாறனும் சமயப் பூசலில் தலையிடுகின்றனர். சமயப் போர் சமண் சமயம் ஒன்றோடுதான் நடந்திருக்கிறது. ஏனைச் சமயங்கள் எல்லாம் இருந்த வண்ணமே இருந்திருக்கின்றன. சமண் சமயத்தைத் தாக்கிப் பேசும் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களும் திருமங்கையாழ்வார் முதலியோர்களும் ஏனைச் சமயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதனையடுத்து வந்த நூற்றாண்டுகளில் சமய வேறுபாடுகள் நாட்டில் நிலவின வாயினும், தமிழ் நாட்டு அரசியலாளர் இச் சமயங்கட்கு இடுக்கண் விளைக்க வில்லை. அவ்வச் சமயத்தவர்க்கும் வேண்டும் உரிமைகளை வழங்கியிருக்கிறார்கள். முதல் இராஜராஜன் போனார்த் திருமலையி லிருக்கும் சமண் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், லெய்டன் கிரான்டு எனப்படும் சாசனங்களால் பெளத்தர் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், அவன் பின் வந்த சோழர்களுள் மூன்றாம் இராஜராஜன்.

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க

என்றும், மூன்றாம் இராஜேந்திரன், “சமஸ்தஜகதேக வீர” என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் ‘ராஜ பரம மாகேஸ்வர ராஜ நாராயண சகல சமய ஸ்தாபக” என்றும், பாண்டி வேந்தருள் மாறவன்மன் சுந்தர பாண்டியன், ஒரு குடை நீழலிரு நிலங் குளிர,

மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க,
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் இயலுடுன் பரவ

என்றும், சடையவன்மன் சுந்தரபாண்டியன்,

ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோர் ஐவேள்வி யாறங்க முடன்சிறப்ப
அருந்தமிழும் ஆரியமும் அறுசமயத் தறநெறியும்
திருந்துகின்ற மனுநெறியும் திறம்பாது தழைத்தோங்க

என்றும் கூறுவதும் பல்வகைச் சமயங்களும் தத்தம் உரிமை குன்றாது நிலவியிருந்தன என்பதற்குச் சிறந்த சான்று பகர்கின்றன.

இனி, அச்சம் என இழிவாகப் பேசப்படுவது, செய்தற்குரிய அறங்களைச் செய்தற் குண்டாகும் அச்சமே. பழி பாவங்கட்கு அஞ்சும் அச்சம் அற மெனவும், ஏனைய அறங்களைச் செய்தற்கு-

அஞ்சும் அச்சம் குற்றமெனவும் அறநூல்கள் கூறுகின்றன. குற்ற மான அச்சம் இருத்தல் கூடாது என்பது அறவோர் துணிபு. இதனால் தான், ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்றார் திருவள்ளுவர். பாரதியாரும் அச்சம் தவிர் என்றார்.

உரிமை வாழ்வில் அவரவர் உரிமைக்குக் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் இருத்தலாகாது. பெரும்பான்மையோர் கருத்து மேலோங்கும் வகையில் சிறுபான்மையோர் உரிமை பறிக்கப் படுமென்னும் அச்சம் அச்சிறுபான்மையோர்க்கு உண்டாகக் கூடாது. இவ்வாறே வலியோர் மெலியோரை நலிவதாலும், செல்வர்கள் வறியோர்களை வருத்துவதாலும், வலிமிக்க நாட்டவர் அது குறைந்த நாட்டவரை அடர்ப்பதாலும், இடஞ் சிறிதென்று பிறர் மண்ணைக் கவரும் பெருநசையாலும் உரிமை வாழ்வுக்கு ஊறுண்டாகும். அதுபற்றி மக்கட்கு அச்ச முண்டாதல் ஒருதலை. வலியோராலும் செல்வர்களாலும் உண்டாகும் அச்சம், அரசியலின் செவ்விய நேர்மையால் நீங்கும். பண்டைத் தமிழ் வேந்தர், செல்வரென்றும் வலிய ரென்றும் கருதி ஒரு சிலர்க்குச் சலுகை மிகத் தருதலும், வறியரென்றும் மெலியவ ரென்றும் கருதி ஒரு சிலரைப் புறக்கணித்தலும் இலர். இதனால் உண்டாகும் பொருள் வேந்தர்க்கு இம்மை மறுமை இருமையும் கெடுக்கும் என்பது அவர் கருத்து. ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள் செய்வார்க்கப்பொருள், இம்மையும் மறுமையும் பகையாவதறிதியோ’ (கலி. 14) என்றும், அல்லற் பட்டாற்றாதழுதகண்ணிரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றும் எடுத்தோதுவது காண்க. இதனால், எளியவர்கள் தமக்கு வலியவரால் துன்ப முண்டாயின், அவர்முன் அச்ச மின்றிக் கண்ணறப் பேசும் காட்சியுடையராய் இருந்தனர். சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் தாமப் பல்கண்ணனா ரென்னும் சான்றோரும் வட்டாடினர். அப்போது மாவளத்தான், தன் செல்வச் செருக்கால் சினங்கொண்டு தான் ஆடிய வட்டினால் பல்கண்ணனாரை எறிந்து வருத்தினான். அவர், அவன் செல்வச் சோழ வேந்தன் தம்பி யென்றும் பாராது, சிறிதும் அச்சமின்றி,

‘நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்,
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐய முடையேன்
ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர். மற்றிது
நீர்த்தோ நினக்கு?’

என வெறுப்பக் கூறினார். ஒருகால், குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திரு மாவளவன், மதுரைக் குமரனார் தன்பால் வறுமை யுற்றுத் தாழ்ந்து இரக்கின்றா ரெனக் கொண்டு அவரை இகழ்ந்தான். அவ்விகழ்ச்சி பொறாத குமரனார், அரச னெனக் கருதி யஞ்சுவது சிறிது மின்றி,

“மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படுஉ மோரே
சீரூர் மன்ன ராயினும் எம்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னோரே’

என்று கூறித், தமது உரிமையை நிலை நாட்டினார்.

மண்ணசை குறித்தும், வலி மிகுதி குறித்தும், பண்டை வேந்தர் பிற வேந்தரொடு போர்தொடுத்தனர். அவருள், பாண்டி வேந்தரும், சேர வேந்தரும் பெரும்பாலும் போருடற்ற வேண்டியிருந்தது, இடஞ் சிறித்ென் றெழுந்த மண்ணசை குறித்தே யாகும்.

‘வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்,
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது,
இடஞ் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா வுள்ளத்து ஓம்பா ஈகை,
கடந்தடு தானைச் சேர லாதன்’

என்பதனால், சேரனும்,

‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வவ்வலின்,
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்’

என்பதனால் பாண்டியனும் இடச் சிறுமை காரணமாகப் போருடற்றினமை துணியப்படும். படவே, கொடியும் முரசும் கொற்ற வெண்குண்டயும், பிறர் கொளப் பொறாது போருடற்றும் இயல்பு சோழருக்கே உண்டென்பது பெறப்படும். இவ்வகையால் மூவேந்தர்க்கும் அடிக்கடி போருண் டாயினவெனக் கொள்ளலாம். போர்த் துறையில் ஊர்களைச் சூறையாடுதலும் எரிபரந்தெடுத்தலும் உண்டு. இவ்வகையால் உயிர்க்கேடும் பொருட் கேடும் மிகுதல் முறை. இதனால் மக்கட்கு அச்சம் பெரிதாம். அரசியலில் உரிமைபெற்ற சான்றோர் வேந்தர் கருத்துக்கு இயைய வேண்டுவனவற்றைச் சூழ்ந்துரைப்பாராயினும், போரால் நேரும் கேடுகளை அவர்கள் உணராமல் இருந்ததில்லை. போர் முடிவில் வெற்றி பெற்ற வேந்தர்க்கு அப்போரால் நிகழ்ந்த கேடுகளை ஓவியம்போற். காட்டிப் போர்மேற் செல்லும் அவர்கள் உள்ளத்தை மாற்ற முயன்றதும் உண்டு.

‘பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
உள்ளம் அழிய ஊர்க்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர்ப் பனிக்கும் பாழா யினவே,’

என்றும்,

‘அழல்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன் றோர்காலை
நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே’

என்றும் எடுத்தோதியிருப்பது அவரது உரிமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

போரில் படையேந்தி நின்று வெற்றிபெற விரும்பும் மறவர் உயிர் கொடுத்தற்கு அஞ்சுவது கிடையாது. அஞ்சாமை யல்லது துணை பிறிதின்றி நின்று விளக்கமுறும் விரனொருவன் மனைவியைக் கண்ட பெருந்தலைச் சாத்தனார், நின் கணவன் போர் வீரரை ஏறட்டு நின்று வருக என அழைத்தான்; பாம்புமிழந்த மணிகண்டும் அதனை நெருங்குதற்கு மக்கள் அஞ்சுவதும் போலப் பகை வீரர் அனைவரும் அஞ்சினர் என்பார்,

‘தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப்
மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே.’

என்று கூறுகின்றனர். பெற்ற தாயொருத்தி போருக்குச் சென்ற ஏனை வீரரெல்லாரும் வந்தும் தன் மகன் நெடிது வாராமை கண்டு, நெஞ்சில் அச்சமோ அவலமோ கொள்ளாமல்.

‘எல்லா மனையுங் கல்லென் றனவே
வேந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே.”
-- (புறம் - 296)

என்று கூறுகின்றாள். போரில் அணி வகுப்புற்று நிற்கும் வீரன் ஒருவன் வேந்தன் தன்னை முந்தச் செலுத்தாமைக்கு வருந்தி,

‘எமக்கே கலங்கல் தருமே, தானே
தேறல் உண்ணும் மன்னே, நன்றும்
இன்னான் மன்ற வேந்தன் இனியே,
நோரர் ஆரெயில் முற்றி
வாய் மடித்து உரறிநீ முந்துஎன்னானே.”

என்கின்றான். இவ்வாறு பண்டை உரிமை வாழ்வில் திளைத்த தமிழ் மக்கள் அச்சம் இலராய் வாழ்ந்த செய்திக்குச் சான்றுகள் பலவுண்டு. இல்லையானால் நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளி தொழிலாண்ட உரவோர் எனும் பெயரை எய்த முடியுமா?

உரிமை வாழ்வுக்கு அடுத்த உறுப்பாவது வறுமையின்மை; வறுமை நிலை ஒரு நாட்டின் உரிமை வாழ்வைக் கெடுத்துச் செல்வமுள்ள நாட்டுக்கு அதனை விரைவில் அடிமையாக்கிவிடும் ‘வறியார் இருமை அறியார்’ என்பர். வறுமையுள்ள நாடு அறிவு ஒழுக்கங்களில் நலம்பெறாது; செல்வத்தைப் பெருக்கும் துறைகளான கைத்தொழில் வாணிபம் உழவு முதலிய செயல் வகைகளில் சீர் பெற முடியாது. நாட்டில் செல்வர் சிலரும் வறியார் பலருமாக இருத்தற்குக் காரணங்காண வந்த திருவள்ளுவர் தவமுடையார் சிலரும் அஃது இல்லார் பலருமாதல் காரணம் எனக்கருதி, சிலர் பலராகிய காரணம் நோற்றார் சிலர்பலர் நோலாதவர்’ என்றார். எனினும் அதனை அவ்வாறே சொல்லி நெகிழவிட இக்காலநிலை. ஒருப்படாது. இக்காலம் உழைப்பில்லாமை வறுமைக்குக் காரணம்; உழைப்பில்லாதவர் ஒருவரும் இருத்தலாகாது. உழைப்பவர் உழைத்தற்கு நாடு வேலை தர வேண்டும். அவ்வேலையை நாட்டு மக்கள் நடத்தும் அரசியல் நேரிய முறையில் கண்டு அமைத்து உழைப்பாளிகட்டு உதவ வேண்டும் என்பது இன்று நிலவும் கொள்கையாகும்.

வறியவர் முன்னைத் தவம் இல்லாராயினும், இவ்வுலகில் வாழ்தற்கு உரிமையுடையவர். அதற்கு வேண்டும் பொருளை அவர் பெறாவாறு தவமில்லாமை இடைநின்று ஊழ்வினை வடிவாய் நின்று தடுக்குமாயின், முன்னைத் தவமுடைமையால் செல்வம் பெற்றவரும் பெறுதற்குரிய வலியும் ஆற்றலுமுடைய வரும், வறியவர் வேண்டுவன நல்கி வாழ்வித்தல் அறமெனக் கருதினர். திருவள்ளுவர் முதலிய சான்றோர் இக்கருத்துக்கு ஆதரவு தந்தனர். ‘சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்’ என்பது திருக்குறள். அதுவே, ‘வறியார்க் கொன்று ஈவதே ஈகை’ என்றும், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை யுயிர்க்கு’ என்றும் அறவுரை வழங்கிற்று. செல்வமும் அதனைச் செய்தற்கு வேண்டும் வலியும் பெற்ற திருவாளர், இரப்போர்க் கீதல் சிறப்பென்றும், ஈயாமைக் கேதுவாகிய வறுமை இழிவென்றும் கருதி வஞ்சினங் கூறும் போது, ‘புரப்போர் புன்கண்கூர, இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே’ என்றும், மெல்லிய லரிவை நின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவா குகயான் செலவுறு தகவே’ (குறுந், 137) என்றும் கூறுவது காணலாம்.

இவ்வண்ணம் வறியாரது வறுமை தீர்த்தற்கண் பேரார்வங் கொண்டு தம் முயிரையே யளித்த வள்ளல்கள் வரலாறு சங்க இலக்கியங்களில் மலிந்து கிடக்கிறது. வேள்பாரி உயிரிழந்ததும் குமுணன் தலையிழக்க நேர்ந்ததும் வறுமைக்கடலை ஈகையாற் கடக்கக் கருதியதனாலேயாம்.

கொங்கு நாட்டில் ஈரோட்டுக் கருகில் உள்ள ஈஞ்சூருக்குப் பண்டை நாளில் ஈர்ந்துர் என்பது பெயர். அந்த ஊர்க்குத் தலைவன் ஒருவன் கோயமான் என்னும் பெயருடன் விளங்கினான். அவன் தன்பால் வருவார்க்கு வேண்டும் பொருளை நிரம்பத் தரத்தக்க செல்வ முடையனல்லன். ஆயினும், இல்லையெனச் சொல்லி உள்ளது மறைத் தோதி மறுக்கும் சிறுமையும் அவனிடம் கிடையாது. அதனால் அவனை நாடி இரவலர் சென்ற வண்ணம் இருந்தனர்; அவனும் இயன்ற அளவு அவர்கட்கு உதவி வந்தான். அதற்குச் செல்வம் ஏது? அவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன். அவன் வாழ்ந்த நாட்டுக்குரிய முடிவேந்தன் சேரமான் குட்டுவன் கோதை யென்பவன். அவ்வேந்தன் பொருட்டு இக்கோயமான் படையேந்திப் போர் பல செய்து அதனால் பொருள் பெற்றான். அவ்வாறு பெற்ற பொருளே அவன் கொடைக்கு ஆக்கமாயிற்று. போர்க்குச் செல்வதும் வென்றியொடு பொருள் பெறுவதும் அவன் செயல்களாயின. அன்றியும், இரவலர் வறுமை காண அவன் பொறான். வறுமையில்லாமை நாட்டிற்கு அழகு என்றும், வறுமை தீர்த்தற்குப் பயன்படாத செல்வரது செல்வம் நிலத்துக்குப் பொறை யென்றும் கோயமான் எண்ணியிருந்தான். இவனைக் கோனாட்டு எறிச்சிலுர் மாட்லன் மதுரைக் குமரனார் ஒரு கால் சென்று கண்டார். அவனது மனப் பண்பைத் தெளிந்தார். ஈர்ந்துார் கிழானான கோயமான்,

‘நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே...
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ, முதுவாய் இரவல!
யாம் தன்இரக்குங் காலைத் தான்எம்
உண்ணா மருங்கு காட்டித்தன்னூர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்
திருந்திய நெடுவேல் வடித்திசின் எனவே.’

என்று பாடியுள்ளார். இதன் கண், ‘வறியார் வறுமை கண்டதும், கொல்லனையழைத்து, பார் இவர் வயிற்றை எடு அந்த வேலை; வடி அதன் வாயை கொடு அதைக் கையில்; செல்வேன்; செல்வரை வெல்வேன்; பொருள் மிகக் கொள்வேன்; இவர் வறுமையைக் கொல்வேன்’ என்பான், ‘எம் உண்ணாமருங்கு காட்டித் தன்னுரர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே என்பது கருதத்தக்கது.

இத்தகைய மனப்பான்மை வறுமை மிக்க வழித் தீநெறியில் மக்களைச் செலுத்தி உரிமை வாழ்வுக்கு ஊறுசெய்யும். ஆதலால் உரிமை வாழ்வு வறுமை யில்லாமைக்குரிய வழி பலவும் ஆக்கிக் கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்குவது இலக்கியங்கட்கு ஏற்ற பணியாகும்.

இனி, இறுதியாக ஒப்புரவாண்மையைக் காண்போம். உலகில் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கும் பெருஞ்செயல் இந்த ஒப்புரவேயாகும். ஆதலால்தான் திருவள்ளுவர், ஒப்புரவைக் காட்டிலும் சிறந்த செயல் விண்ணுலகினும் மண்ணுலகினும் பெறலரிது என்றார். ஒருவர்க்குத் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருளெல்லாவற்றையும் தாமே படைத்துக் கொள்வது இயலாது. தம்மிடத்து இல்லாதவை பிறரிடத்திருக்கும்; பிறரிடத்தில்லாதன தம்பால் இருக்கலாம். இருவரும் தம்பால் உள்ளவற்றைப் பகுத்தளித்து இல்லாதவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இச்செயலை வளம்படுத்துவது. ஒப்புரவாகும். ஒரு தனிக் குடும்பத்துக்கு இவ்வொப்புரவு இன்றியமையாதவாறு போல ஒரு நாட்டுக்கும் இது வேண்டப்படுவதாகும். இவ்வொப்புரவு வாணிகத்தின் பெயரால் நிலவுவதாகும்.

பண்டைநாளில் குறிஞ்சி நிலத்துப் பொருள் மருத நிலத்தவர்க்கும், நெய்தல் நிலத்துப் பொருள் முல்லை நிலத்தவர்க்கும் மாறிமாறி இயங்கியது ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டேயாகும். இவ்வாறு மாறுவது அவ்வந்நிலத்து மக்கள் தத்தம் தேவைக்குரிய பொருளைப் பெறுதற்கு வாயிலாதலால் திணை மயக்கம் என்ற பெயரால் தொல்காப்பிய முதலிய நூல்கள் அமைதி கூறின. பிற்காலத்துப் புலவர் தாம் பாடிய நூல்களில் திணை மயக்கம் கூறுவதைக் கடமையாகக் கொண்டனர்.

இத்திணை மயக்கத்தால் ஒரு நாட்டவர் பிற நாடுகட்குக் கலத்தினும் காலினும் சென்று மிக்கவற்றைத் தந்து இல்லாதவற்றைப் பெற்றுச் சிறந்தனர். பண்டைத் தமிழர் இதன் இன்றியாமையை யுணர்ந்தே பன்னூறாண்டுகட்கு முன்பே மேலை நாட்டவரோடும் கீழை நாட்டவரோடும் பண்டமாற்றிப் பெருஞ் செல்வம் தேடிக் கொண்டனர் என்பதை வரலாறு கூறுகிறது. இவ்வகையால் பிறநாட்டுப் பண்டங்களும் பிற நாட்டு மக்களும் காவிரிப்பூம் பட்டினத்தில் நிறைந்திருந்த காட்சியை, சிலப்பதிகாரம், எடுத்தோதுகின்றது. முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கந் தவா வளத்ததாகி, அரும்பொருள் தரூஉம் விருந்தின்தேயம், ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம், கலத்தினும் காலினும் தருவன ரீட்ட” நிறைந்திருக்கும் காட்சி இதனால் நன்கு புலனாதலைக் காணலாம்.

பட்டினப்பாலை யென்னும் நூல்,

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்.’

ஆகிய பொருள்கள் நிறைந்திருந்தன என்றும், இவ்வழியால், ‘மொழி பல பெருகிய பழிதீர் தேயத்து புலம் பெயர் மாக்கள் கலந்தினிது’ உறைந்தனரென்றும் கூறுகின்றது.

இங்ஙனம் ஒப்புரவு வாயிலாக வாணிகமும் வேற்று நாட்டவர் கூட்டுறவும் பெருக, நாடு செல்வமும் நாகரீகமும் சிறந்து மேன்மையெய்திற்று. இன்டக்காலத்தே அலைகடல் நடுவுள் பல கலம் செலுத்தி, தொடுகடல் முதலிய நாடுகளோடும் இராசேந்திரன் முதலிய சோழர்கட்கும், கலிங்கம் ஈழம் கடாரம் முதலிய நாடுகளுடன் பாண்டியர்கட்கும் தொடர்புண்டானது இந்த ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டெழுந்த சிறப்பேயாகும்.

இதுகாறும் கூறியவாற்றால், குடி தழுவிய முடியாட்சி நிலவிய பண்டை நாளில், உரிமை வாழ்வுக் குறுப்பாகிய பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை, ஒப்புரவாண்மையாகிய ஐந்தும் சிறப்புற்றிருந்தமை இனிது விளக்கமாகும். இன்று நாம் எய்தியிருக்கும் உரிமை வாழ்வு முடியாட்சியின்றிக் குடியாட்சியில் நிலவும் உரிமைவாழ்வாகும். இவ்வாட்சியில் நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமையுண்டு. நாட்டில் உண்டாகும் நலந்தீங்குகட்கு நாட்டு மக்களே பொறுப்புடையராகின்றனர். அப்பொறுப் புணர்ச்சியை மக்கட்கு எழுப்பி நல் வாழ்வு வாழ்விக்கும் பண்பு இலக்கியங்களில் இடம் பெற வேண்டும்.

பேச்சுரிமை, அச்சமின்மை என்ற இரண்டையும் நம் தமிழிலக்கியங்கள் நன்கு வற்புறுத்துவதைச் சங்க இலக்கிய முதல் எல்லா இலக்கியங்களும் எடுத்துணர்த்துகின்றன. சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், கந்த புராணம் முதலிய இடைக் கால நூல்கள் அரசியற் பகுதிகளைக் கூறுமிடத்து விரியக் கூறியுள்ளன. ஒப்புரவாண்மையிலும் இடைக்கால நூல்கள் சிறிது கருத்துச் செலுத்தியிருக்கின்றன. கட்டியங்காரனோடு நட்புற்றான் போல ஒழுகலுற்ற விதைய நாட்டு வேந்தனான கோவிந்தன், நட்புக் கறிகுறியாக,

கட்டியங் காரனோடு காவலன் ஒருவனானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் விளைவகூறின்,
ஒட்டலன் இறைவன் சொன்னி நாதுமவல்ல என்னக்
கொட்டினான் தடங்கண் வள்வார்க் குளிறிடி முரசமன்றே

என்பது அதனைக் காட்டுகிறது. இவ்வொப்புரவுவகை மிகவும் பெருகிச் சாதி சமய சமுதாய வேறுபாடுகளையும் மக்களிடையே நிற வேற்றுமை முதலிய தீமைகளையும் போக்குதற்குத் துணை புரியுமாறு இலக்கியங்கள் பணிபுரிய வேண்டும்.

நாட்டில் வறுமையைப் போக்குதற்குரிய நெறியில் கருத்தைச் செலவு செய்த இலக்கியங்கள் இல்லையென்றே கூறலாம். செல்வ வாழ்வின் சிறப்புக்களையும் சீர் கேடுகளையும் எடுத்தோதிய இலக்கியங்கள் உண்டு. “எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே, இல்லாருமில்லை யுடையார்களு மில்லை மாதோ” என்றான் கம்பன். ஆனால், எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தற்குரிய நெறிமுறைகளை வகுத்தும் விரித்தும் கூறவில்லை. ஓரளவு நாட்டில் நிலவியிருந்த ஓவியம், இசை கைத்தொழில் வாணிபம் காட்டினவே யன்றி, அவற்றை யமைக்கும் நூல் வகைகள், செயல்முறைகள் முதலியவற்றை யறிதற்குத் துணை செய்யாவாயின. இக்குறை முற்காலத்து இலக்கியங்களில் சிறிதும் பிற்காலத் திலக்கியங்களில் பெரிதுமாகக் காணப்படுகிறது. இனிவரும் இலக்கியங்கள் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’ எய்துதற்கு வேண்டும் கருத்துக்களை விரிவாக எடுத்து வழங்க வேண்டும்,

வழிபாட்டுரிமைக் கேதுவாகிய சமய வுரிமை குறித்துத் தமிழிலக்கியங்கள் பெரும் பணி புரிந்துள்ளன. ஊர்தோறும் பெருங் கோயில்களும் அக்கோயில்கட்குப் பெரும் பொருளும் உண்டானதற்குச் சமய இலக்கியங்களின் பணியே காரணமென்பது வெளிப்படை. கோயில்களைப் பெரும் பொருள் நிலையங்களாகவும் கலை நிலையங்களாகவும் செய்தது சமய இலக்கியமே. அரசரது அரசியற் பயன் கோயில்கட்குச் செய்யும் திருப்பணியிலே ஒன்றி நின்றது. சைவத் திருமுறைகளும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடவுட் கொள்கையை நிலை நாட்டிக் கடவுள் வழிபாட்டில் மக்கள் கருத்து மீதுர்ந்து செல்லுமாறு செய்தன. சமயச் சார்பாயெழுந்த புராணங்கள் மக்களது வழிபாட்டுரிமைக்குத் தீங்கு செய்தன. கோயில்களில் சாதி வேற்றுமை மொழி வேற்றுமைகளைப் புகுத்தின. ஆண்டு தோறும் நம் நாட்டுக் கோயில்கட்கு இரண்டு கோடி ரூபாய் வருமானமாகும். மக்கள் தரும் கொடையும் பிறவும் சேர்ந்து நான்கு கோடி ரூபாய் செலவாகிறது, இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் ஒரு சமுதாயத்தின் நலத்துக்குப் பயன்படுகிறது. எஞ்சிய தொகை வெளிநாட்டுப் பொருட்கும் பிறருக்கும் செலவாகிறது. கோயிலில் உள்ள ஆண்டவனை வழிபடுதற்கு எல்லார்க்கும் உரிமையுண்டு; எல்லாரும் ஆண்டவள் அருளுக்கு உரியவர் என வழிபாட்டுரிமையை வற்புறுத்தி, வேறுபாடில்லாத வழி பாட்டை உண்டு பண்ணுதற்கு இலக்கியங்கள் துணை செய்ய வில்லை. அரசியலாளர் முற் போந்து சட்டவகையில் பாதுகாப்பளித்த பின்பே வழிபாட்டுரிமை எல்லார்க்கும் வாய்ப்பதாயிற்றென்பது யாவரும் அறிந்தது. திருப்பாணாழ்வார் வரலாறும் திருநீலகண்ட யாழ்ப்பானர் வரலாறும் வழிபாட்டுரிமைக்கு வழிகாட்டியா யிருந்தும், இலக்கியங்கள் இவ்வுரிமையை உணர்ந்து நன்கு வற்புறுத்தா தொழிந்தது மறைக்க முடியாத உண்மையாகும்.

ஆகவே, இன்று நாம் எய்தி இன்புறும் உரிமை வாழ்வில் எழும் இலக்கியங்கள், இதுகாறும் கூறிப் போந்த பேச்சுரிமை, வழிபாட் டுரிமை, வறுமை யின்மை, அச்சமின்மை, ஒப்புரவாண்மை என்ற பொது வறங்களை வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்தும் பெரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணியைச் செம்மையாகவும வெற்றியுண்டாக்கு முறையிலும் செய்வதற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்ளத்தில் வேரூன்றியிருக்க வேண்டிய கொள்கையொன்று உளது. அஃதாவது தங்கள் மொழி நிலவும் நாட்டின்பால் அயரா அன்புடைமையாகும். அந்த அன்பு அவர்கள் நெஞ்சில் எழும் ஒவ்வொரு நினைவிலும், வாயில் எழும் ஒவ்வொரு சொல்லிலும், எழுதும் ஒவ்வொரெழுத்திலும் விளங்குதல் வேண்டும். கம்பன் கருத்து முற்றும், கோசல நாட்டையும் இலங்கை நாட்டையும் கவ்விக்கொண்டு கிடந்தது; கச்சியப்பர் கருத்து வேறுலகத்தில் உலாவிற்று. திருத்தக்க தேவர் கருத்து ஏமாங்கத நாட்டிலும் அதனைச் சூழ்ந்த நாடுகளிலும் திரிந்தது. கொங்கு வேளிர் கருத்து, தமிழகத்தைத் தொடவே இல்லை. இடைக்காலத் தெழுந்த திருத்தொண்டர் புராணம் தமிழ் நாட்டையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்த தெனினும், கயிலாயத்தையும் பிறவற்றையும் அது கைவிடவில்லை. சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாகிய இரண்டுமே தமிழகத்தை விடாது நின்றன. அதனால், தமிழகத்தின் பழங்கால நிலையினை ஓரளவிலேனும் நாம் உணர்ந்து கோடற்கு உதவியாயின. ஏனைய யாவும் யாம் மேலே கூறிய தாய்மொழி நிலவும் தாய் நாட்டன்பு விளங்கித் தோன்றும் வீறு நிறைந்த நினைவும் சொல்லும் எழுத்தும் உடைய வல்ல வாயின. இதன் விளைவு தமிழகம் உரிமை யிழந்து அடிமை யுற்று வருந்தும் நிலைமையைப் பயந்தது.

தாய் நாட்டன்பின் இன்றியமையா இயல்பினை, மேலை நாட்டவர் நன்குணர்ந் திருந்தமையால் ‘உரிமை வாழ்வே’ உயிர்வாகக் கருதுகின்றார்கள். எட்மாண்டு பர்க் (Edmund Burke) என்பவர், மக்கட்குத் தம் பெற்றோர்பால் உண்டாகும் அன்புக்கடுத்த நிலையில் உள்ளது அவரது தாய் நாட்டின்பால் உண்டாகும் அன்பே யாகும் என்றார். மாதா பிதா குரு தெய்வம் என்பது திருந்தி, மாதா பிதா நாடு குரு தெய்வம் என விளங்குதல் வேண்டும். இந்த அன்பு நம்மவரிடத்தே நன்கு வேரூன்றும் பொருட்டு இலக்கியம் செய்யக் கூடிய பணி இது வென்பாராய், நம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தரவர்கள் தாம் எழுதிய Essays in Constitution Making என்ற நூலில் கூறியதனை உங்கட்குக் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

Our literature and art must take up the land for the subject of their treatment. Not the laudation of this or that figure or incident of history or mythology - for history or mythology may divide and antogonize - but the praise of the land of India must fire the artistic ambition of the poets and Painters of modern India. When we remember what poets like Gray and Thomson and Wordsworth and Burns have done to make their Countries dear to their people, we have a right to look to our poets to do smilar work for our Country. Landscape painting did much to spread the love of the land among the peoples of Europe. What Corot did in France and Gainsborough in England to make the scenery of their Country a delightful memory, Indian painters are now expected to do for the Indian scene.
----------------

16. உரையனுபவம்

தமது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம். திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலை சிறந்தனவாகும். அவற்றுள், தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும் சொல்லும் உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும் - சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர் அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய். தமிழ் மரபோடு வடநூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத் தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது.

“வள்ளுவர் மெய் யன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் -
தண்டமிழின் மேலாம் தரம்.”

என்பது அவ்வெண்பா, இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியம், தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் பெருமக்கள். எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது.

மேலும், பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கு உரை எழுதியிருக்கிறார் என்றாலும் அது திருக்குறள் உரை போல வளமும், வனப்பும், திட்பமும், நுட்பமும் செறிந்தில்லை அதனால் அந்த உரை பரிமேலழகர் உரைதானோ? என்று ஐயுறுவாரும் உண்டு. நிலைமை இப்படி இருப்பதால் தான் பரிமேலழகர் உரை என்றால் யாவரும் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கிறார்கள் - இந்த வெண்பாவில் “தெள்ளு பரிமேலழகர் செய்த உரை” என்பது திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே என்று பலரும் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்போடு விளங்குவதால் தான் பரிமேலழகர் உரையின் அழகு காண்பதில் அறிஞர்களுக்குப் பெரும் விருப்பம் உண்டாயிற்று.

அதனை நோக்குவோம்:“செவிக் குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பது ஒரு திருக்குறள். செவிக் குணவாகிய நல்ல அறிவுடைக் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பில்லாத போது, வயிற்றுக்கு உணவு தரவேண்டும் என்பது இதன் பொருள். இதற்குப் பரிமேலழகர் செவிக் குணவாகிய கேள்வி யில்லாத பொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்று உரை கூறுகின்றார்.

இனி இந்த உரையிற் கருத்தைப் புகுத்திப் பரிமேலழகர் அழகு செய்வதைக் காண்போம். திருவள்ளுவர் செவிக்குணவு என்பது எதனை? செவிக் குணவாவது கேள்வி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்குத்தரப்படும் என்றால், செவிக்குணவு இருக்கும்போது வயிற்றுக்கு உணவு தரப்படாது என்று தெரிகிறது. உணவு எனப்படுவதால் செவிக்குணவு போல வயிற்றுணவும் யாவருக்கும் வேண்டத்தக்கது; செவிக்குணவு தந்து கொண்டே வயிற்றுணவு கொண்டாலென் எனின், வயிற்றுணவினும் செவிக்குணவு சுவைமிகுந்தது ஆகையால், இரண்டையும் சமமாக்குளதற்குப் பரிமேலழகருக்கு விருப்பம் இல்லை. அவர் வயிற்றுணவை விடச் செவி உணவு சிறந்தது என்பாராய்ச் “சுவை மிகுதியும் பிற்பயத்தலுமுடையது கேள்வி, அது உள்ள பொழுது வயிற்றுணவு அறிஞர்களால் விரும்பப்படாது ஒழிகிறது என்று பரிமேலழகர் கண்டு, இதனால் தான் திருவள்ளுவர் செவிக்குணவு இல்லாத போது. வயிற்றுக்கு உணவு தரப்படும் என்றார் எனக் குறிக்கின்றார். இனி, செவிக்குணவு இல்லாத போது தரப்படும் வயிற்றுணவையும் “சிறிது ஈயப்படும் என்பது எவ்வாறு பொருந்தும் என்று ஒரு கேள்வியை மாணவன் பரிமேலழகரிடம் கேட்கிறான். அதற்கு விடை கூறும் பரிமேலழகர், வயிற்றுணவு மிகுமானால் இடையூறு உண்டாகும் என்று நினைக்கிறார். ஆகவே, அவர் வயிற்றுணவு பெரியதாய வழி - வயிற்றுணவு மிகுமானால் - அது நோயும், காமமும் விளைவித்தலின் திருவள்ளுவர் ‘சிறிது’ என்பதுதான் பொருத்தம் என்று பரிமேலழகர் கூறுகிறார். இது கேட்ட மாணவன். “சிறிது” என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவுகிறான் அவனுக்குப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். ‘அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு’ என்று சொல்லுகிறார். பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும், தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றிற்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல “ஈயப்படும்” என்று சொல்வது பொருத்தமா? என மாணவன் கேள்வி கேட்கிறான். இக் கேள்வியை நினைத்துப் பார்த்த பரிமேலழகர் அது பொருத்தம்தான் என்பாராய். “ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது” என்று கூறுகிறார். அது எவ்வாறு பொருந்தும் என்றால், உணவு மிகுமானால் வயிறு காமமும் நோயும் உண்டு பண்ணுவதால்தான் ‘ஈயப்படும்’ என்று சொல்லுதல் பொருந்தும் என்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு குறட்பாவுக்கும் அழகொழுகத் தருக்க நெறியில் உரை எழுதும் பரிமேலழகர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைச் சூழவுள்ள நாட்டில் வாழ்ந்தவர், அவர் காலத்தில் மூன்றாம் இராசராசனும், மூன்றாம் இராசேந்திரனும் சோழ நாட்டை ஆண்டனர். திக்கன் என்ற விசயகண்ட கோபாலன் காஞ்சிபுரப் பகுதியில் நாடு காவல் புரிந்தான். அந்நாளில் வாழ்ந்தவர் பரிமேலழகர், திரிபுவனச் சோழனான ஆனைமேலழகர் (கல். IV 852) நச்சினார்க்கினியர், வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகர் (கல். IV 854) முதலிய சான்றோரின் தூய தமிழ்ப் பெயர்கள் பின்னாளில் மறைந்து வீழ்ந்தன. அவ்வீழ்ச்சி நீர்வளமும், நிலவளமும் பொருந்திய ஊர்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும்.

இப் பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டுகின்றார்கள். பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொது வகையில் நோக்கினால் பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ, உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல், “பாவெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ நூலில், பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி” என்றொரு பழம் பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மேற்கொண்டதோடு வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும்.

பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது. படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு செய்யும் செயல்வகையில் ஒன்று, அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுன் முதல் வகையை அரும் பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். - உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துக்களை வினா - விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூற வேண்டும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்பவைத்து நோக்கும் போது உரைகாரர் வழி வழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல். நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையே மறவாது கடைப்பிடித்த தொன்றே, பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும் அவர் உரைக்கு அழகையும் தருகிறது.

எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு. நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற்போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்றுமொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது. அன்றியும், கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால், இவ்விழி நிலை உண்டாயிற்று. இக்கருத்துடை யாரே வழி வழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந்நிலைமை மேன் மேலும் ஆதரவு பெற்று வளர்ந்து வருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, “ஏன்? எப்படி?” என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால், கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே, அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றி பெற்றுள்ளார். எனினும், அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடை செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அது பற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை.

எடுத்தோத்து என்பது எடுத்து ஒதப்படும் பாட்டும் அதன் கருத்துமாகும். இதனை எடுத்துரை என்பது வழக்கம். பொறுப்பவர்க்குப் புகழுண்டாகும்: பொறாது ஒறுப்பவர்க்கு ஒரு நாளை இன்பமேயாம் என்ற கருத்தை,

‘ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”

என்ற குறட்பா எடுத்துரைக்கின்றது அதனால். இது எடுத்தோத்து அல்லது எடுத்துரை ஆகும். இங்ஙனம் எடுத்தோதப்படும் உரையில் “ஒரு நாளை இன்பம்” என்பதும் “பொன்றுந் துணையும் புகழ்” என்பதும் விளக்கப்பட வேண்டுவன. அதனை விளக்கும் பரிமேலழகர், “ஒரு நாளை இன்பம்”, அந்நாள் ஒன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்’ என்று கூறுகிறார். “பொன்றுந்துணையும் புகழ்” என்பதில் பொன்றுதல், இறத்தல்; பொறுத்தார்க்கு இறக்கும் துண்ையும் புகழ் என்பது கருத்தாய்ப் பொருள் குற்றமாகிறது; புகழ் நிற்குமிடம் உலகமே தவிர புகழைச் செய்பவரல்ல: அவர் இறந்து போனாலும் புகழ் இறந்து போவதில்லை. இதனை விளக்குதற்குப் பரிமேலழகர் ஒரு சூழ்ச்சி செய்கிறார். புகழுக்கு ஆதாரம் உலகம் என்று காட்டி, “ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றுமாகலின், ஏற்புடைய உலகம் என்னும் சொல் வருவித்துரைக்கப்பட்டது” என உரைத்து, “பொறுத்தார்க்கு உலகம் அழியும் வரைப் புகழ் நிற்கும்” எனக் குறட்பாவின் எடுத்துரையை விளக்கம் செய்கிறார். எடுத்துரை, விதியும் விலக்குமென இரண்டாகப் பிரிந்து, பொதுவும் சிறப்பும் என வகைப்பட்டு, எய்தாதது எய்துவிப்பது, எய்தியது விலக்குவது எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுவது, எய்தியது விலக்கிப் பிறிது வகுப்பது. எய்தியது இகந்து படாமைக் காப்பது எனப் பல கூறுகளாகப் பிரிந்து செல்வது “விதியெல்லாம் எய்தாததனை எய்துவிப்பதும், ஒரு கால் எய்தி ஒருகால் எய்தாதா கற்பாலதனை அவ்வழியும் இகந்து படாமற் காத்து நியயமாக எய்துவிப்பதும், ஈரிடத்து எய்தற்பாலதனை ஒரு மருங்கு மறுப்பதும் என மூவகைப்படும்” என மாதவச் சிவஞான முனிவர் முதலாயினோர் கூறுவர்: அவற்றைக் கருத்திற் கொண்டுரைப்பது, (உரை காண்பது) உரைகாரர் மரபு: ஆயினும் அவற்றை விரித்துரைப்பதற்கு இங்கு இடம் இல்லை.

இலேசு என்பது எடுத்துரைக்கும் கூற்றில் வேண்டாத சொற்களைப் பெய்தலும், வேண்டுவதைத் தொகவைத்தலும். முறை பிறழ்ந்து உரைத்தலும் எனப் பலதிறமாக வரும். அவற்றால், பாட்டைப் பாடும் புலவற்கு உள்ளத்தில் ஒரு குறிப்பு உண்டு: அது ஆராய்ந்து காணத் தக்கது என்பது இலேசின் குறிக்கோள்.

“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”

என்ற குறட்பா நல்லொழுக்க முடையவர்க்குத் தீய சொற்களைச் சொல்வதென்பது ஆகாத தொன்று என உரைக்கின்றது. தீய சொற்களைச் சொல்வதைத் “தீய வாயாற் சொலல்” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “தீய சொலல்” என்றாலே தீய சொற்களை வாயினாற் சொல்லுதல் என்று பொருள்பட நிற்பதால். “வாய்” என்ற சொல் இலேசு. இந்த இலேசினால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பு யாது? எனக் காணலுற்று “வாயாற் சொலல்” என்றால் ஏன்? எனக் கடாவிக் கொண்டு “வாய் என வேண்டாது கூறினார். நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு” என உரைக்கின்றார். இலேசினால் பொருள் கொள்ளப்படும் இம்முறை வட மொழியிலும் உண்டு என அறிவிக்க “இதனை வட நூலார் தாற்பரியம்” என்று கூறுவர் எனப் பரிமேலழகர் உரைக்கின்றார்.

உத்தி என்பது நூல் உரைக்கும் ஆசிரியன் கைக்கொள்ளும் அறிவு நெறி, அறிவுப் பெருக்கத்துக்கும் நுண்மைக்கும் ஏற்ப அது விரிந்து செல்லும் என்று இலக்கணப் புலவர் இயம்புவர். ஊழ் என்ற பகுதியில்,

“நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.”

என்ற குறட்பா வருகிறது. இதனைக் கிடந்தபடியே கொள்ளின் இக்குறட்பா செல்வம் பெற முயல்பவர்க்கு நல்லவை தீயவையாம். தீயவை நல்லவையாகும் என்று பொருள் பட்டுத் தெளிவில்லாமல் கெடுகிறது. இது எடுத்தோத்து, இலேசு என்ற இரண்டாலும் விளக்கம் பெறாமல் உத்தியை நாடி நிற்கிறது. “அதிகார முறை” என்ற உத்தியால் தீயூழ் வயப்பட்டார் செல்வம் செய்யுங்கால் நல்லவை யெல்லாம் தீமையாய் முடியும்: நல்லூழ் உற்ற போதில், தீயவை செயினும் நல்லவையாய்ச் செல்வம் எய்துவிக்கும் என உரை செய்யப்படுகிறது.

இவ்வாறு எடுத்துரை. இலேசு, உத்தி என்ற நெறிகளில் உத்தி வகை, இலக்கணவமைதி காட்டல், தருக்க நெறியில் விளக்கம் கூறல், வினாக்கட்கு விடை வழங்கல், கருத்துரை தருதல் என வருவன பலவற்றையும் நினைவிற் கொண்டு திருக்குறட்குப் பொருள் விளக்கம் செய்கிறார் பரிமேலழகர்.

“செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.”

என்பது குறட்பா. அதன்கண், ‘செய்து ஏமம் சாராச் சிறியவர்” என்ற தொடர் பரிமேலழகரது இலக்கண அறிவை ஈர்க்கின்றது. “ஏமம் சாரா” என்ற தொடர் சிறியவர் என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? ‘புன்கேண்மை’ என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? என்று ஒரு மயக்கம் உண்டாகிறது. அதை எண்ணிய பரிமேலழகர் “ஏமம் சாராச் சிறியவர்” என்று இயைப்பது உண்டு; அது கூடாது. “சிறியவர் என்பதனைக் கொள்ளின் செய்து என்பது நின்று வற்றும்” என உரைக்கின்றார். உரை எழுதும்போது இத்தகைய குற்றம்படக் காண்பது முறையாகாது. இதைக் கருத்திற் கொண்டு, “இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்” என்பதொன்றே பரிமேலழகர் நன்கு எண்ணி எழுதுகிறார் என்பது விளங்கும்.(817)

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.”

என்பது வேறொரு குறட்பா. இதன்கண் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று வெகுளியை மறத்தல் வேண்டும் என்பது. மற்றொன்று அதனால் தீயவை பிறக்குமென்பது. இவ்விரண்டிற்கும் ஒரு தொடர்பு காட்டினாலன்றி, இரண்டும் ஒரு குறட்பாவில் கூறுதற்கு ஆகா. கூறப்பட வேண்டுமாயின் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். தொடர்பில்லாத இரண்டு கருத்துக்கள் ஒரு குறட்பாவில் கூறப்படா என்பது உரை மரபு. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு காணும் போது வெகுளியை மறவாவிடத்து தீமை உண்டாகும் என இரண்டிற்கும் காரண காரியத் தொடர்பு கண்டு, மறத்தல் வெகுளியை அதனால் வரும் என்பதை ஏதுவாகவும் நிறுத்திப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். அது அவரது உரைக்கு ஏற்றமும் அழகும் தருகிறது.

“கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்:”

எனச் சில குறட்பாக்களைத் திருவள்ளுவர் வினா வடிவில் தருகின்றார். உரைகாரன் அதற்கு விடை கூறவேண்டும். அது உரை மரபு. “பயன் என்கொல்” என்பதற்கு விடை கூறும் பரிமேலழகர் “பயன் இல்லை” என்று கூறல் வேண்டும். இங்ஙனம் கூறுபவர் “என் கொல்” என்பதைப் பற்றிக் கொண்டு. இதன்கண் “எவன்” எனும் வினாப் பெயர் “என்னென்றாய் ஈண்டு (பயன்) இன்மை குறித்து நின்றது” என்கின்றார்.

“செவியிற் சுவையுணர வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.”

என்ற இக்குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் பயன் இல்லை என்றல் வேண்டும்; ஆனால், அவர் அதனை, “செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையில் இரண்டும் ஒக்கும்” என்கின்றார். இவ்வாறே.

“உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.”

என்ற திருக்குறள் உரையில் நட்பால் பயனும், பிரிவால் இழப்பது ஒன்றுமில்லை என்று சொல்ல வரும் பரிமேலழகர் “அவர் மாட்டு நொதுமற் றண்மையே அமையும்” என உரைக்கின்றார்.

இனித் திருவள்ளுவர் பெர்துவாக உரைக்கின்ற சில கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே உரைகாரர் கடன் என்ற உண்மையைக் கடைப்பிடித்துப் பரிமேலழகர் விளக்குகின்ற திறம் இனிது தோன்றுகிறது.

“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”

என்ற குறளில் “யாம் மெய்யாக் கண்டவை” எனச் சிலவற்றைப் பொதுவகையாற் கூறுகின்றார் திருவள்ளுவர், அவை யாவை? எனக் கேட்கும் மாணவருக்கு விடை கூறுவது உரையாசிரியர் கடன். இக்கடமையை அறிந்தாற்றுகின்ற பரிமேலழகர், உரையின்கண் “மெய்யாக் கண்டவை, ஆகமங்கள் என உரைக்கின்றார்” அது எங்ஙனம் எனும் வினாவிற்கு விளக்கம் எய்தும் பொருட்டு, தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகளின்மையின் அவற்றையுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள் என்று தெரிவிக்கின்றார். ஆகமங்களை மெய்ந் நூல்கள் என விளக்கக் கருதும் பரிமேலழகர், ஆகமங்களை உரைத்த ஆசிரியர்களை, பொருள்களை உள்ளவாறு உணர வல்லவர் என்றும், உண்ர்ந்தவற்றை உரைக்க வல்லவர் என்றும் அவரே இறைவர் என்றும் தெரிவிக்கின்றார். ஆகமங்களை அவர் ஏன் எழுதினார் என்பதற்குக் காரணமும் காட்டுகின்றார். உலகத்து மக்கள் மேல் உண்டான அருள் உணர்வால், அவர்கள் உறுதி எய்தும் பொருட்டு இந்த ஆகமங்கள் எழுதப்பட்டன என விளக்கும் வகையில் “அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டு” என்கின்றார்.

இனி பொய்யாமை, கொல்லாமை ஆகிய இரண்டு அறங்களை வற்புறுத்துகின்ற திருவள்ளுவர்,

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.”

என உரைக்கின்றார். இக்குறளைக் கேட்கும் மாணவன் உள்ளத்தில், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்ற ஐயம் எழுகிறது. திருவள்ளுவரே, முதன்மையைக் கொல்லாமைக்கு வைத்து அதற்குப்பின் பொய்யாமையை வைத்து உரைக்கின்றார் என்று சொல்வது ஒருவாற்றால் விடையாகும். அதன்கண், காரணம் காட்டப்படாமையால், காரண காரிய முறையில் வைத்து உரைப்பது உரைகாரர் கடமையாகிறது. அதனால், பரிமேலழகர் “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” எனவும், ! “யாமெய்யாக் கண்டவற்றுளில்லை” எனவும் கூறினாராகலின், இரண்டறத் துள்ளும் (கொல்லாமை, பொய்யாமை) யாது சிறந்ததென்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமைப் பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்றென்றார்; முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாகலின், அதனைப் “பின்சார நன்றென்றது”. நன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற, அது திரிந்து வருதலான் என உணர்க’ என எழுதுகிறார். இதனை இந்நாளைய சீர்த்த இலக்கிய விமர்சகர்கள் (Advanced literary Critics) Logical interpretation with psychological Segeence என்று கூறுகின்றனர்.

இனி, “மெய்யுணர்தல்” என்ற பகுதியில் மெய்ப் பொருளுக்குச் செம்பொருள் என்ற பெயர் குறித்து,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”

எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “செம்பொருள்” என்பதை விளக்க வந்த பரிமேலழகர் “தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் அதனை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றிலும் கலந்து நிற்கிற முதற்பொருள் என்றார் என உரைக்கின்றார். இது ஒரு சமய சாத்திரம் படிக்கின்றோமோ என நம்மை மருட்டி இன்பம் செய்கிறது. இனி,

“வாய்மை யெனப்படுவது யாதெனின். யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்ற குறட்பா உரையில், “எனப்படுவது” என்பதற்கு “என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது” எனப் பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். “எனப்படுவது” என்பதற்கு, “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று பொருள் கூறுதல் பொருத்தமா? என்று வினா எழுப்பிய மாணவனுக்கு விடை கூறுகிறார் பரிமேலழகர். வழக்கில், ஊர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உறையூரை எடுத்துக்காட்டி, “ஊரெனப்படுவது உறையூர்” என்றாற் போல என உரைக்கின்றார். நூல் உரை காண்பவர் இலக்கணத்தையோ, வேறு நூற்களையோ காட்டாமல் வழக்கினை எடுத்துக் காட்டுவது முறையாகுமா? எனின்,

“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டாக லான.”

என்று தொல்காப்பியம் வழக்கினைக் காட்டுவது நேரிது எனக் காரணத்தோடு கட்டுரைக்கின்றது. ஆகையால் “என்று சிறப்பித்துச சொல்லப்படுவது” என்று, வழங்குதல் பொருத்தமே என உய்த்துணர வைக்கின்றார் பரிமேலழகர்.

ஒரு தலைவரின் கீழ் பணிபுரிபவன் தன்னை அவர் ஐயுறத் தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடாது; ஐயம் பிறந்து விடுமானால், பிறகு தெளிவிக்க ஒருகாலும் ஆகாது என்ற கருத்துப்பட,

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது”

என்று திருவள்ளுவர் கூறுகிறார் “கடுத்தபின் (ஐயம் தோன்றிய பின்) தேற்றுதல் யார்க்கும் அரிது” என்பது எவ்வாறு பொருந்தும் என மாணவன் கேட்கின்றான். இங்ஙனம், ஐயம் தெளிவு பெற வேண்டுங்கால் உரைகாரர்கள் இலக்கணம், வழக்கு, ஏது, எடுத்துக்காட்டு என்ற நான்காலும் விளக்கம் செய்வர். இங்கே நான்கனுள் இதனை எடுத்துக்காட்ட்ால் விளக்கம் செய்கின்றார் பரிமேலழகர். “கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழி யெல்லாம் நினைக்கப்படுதலின் தேற்றுதல் யார்க்கும் அரிது” என எடுத்துக்காட்டினால் உரைக்கின்றார்.

பரிமேலழகரது உரையிற். காணப்படும் பல்வேறு அழகுகளில் அரிய சொல்முடிவு காட்டி இலக்கண அமைதி கூறுவது ஒன்று. “கவ்வையாற் கவ்விது காமம்” என்ற குறட்பா வில் “கவ்விது” என்பது சவ்வையென்னும் சொல் அடியாக வந்தது; ஆனால், அங்ஙனம் வருதற்குத் தமிழ் இலக்கணத்தில் இடமில்லை; செய்யுளினும் வழக்கு வலியுடைத்து என்பது பற்றி, “செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்” என்று பரிமேலழகர் உரைப்பது இலக்கணப் புலவர்க்கு வியப்பும் இன்பமும் தருகிறது. காரணம் என்ன எனின், செவ்வை உடையதனைச் செவ்விது என்றல் தொல்காப்பியர் மரபு. “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி அவ்வியல் நிலையல் செவ்விது என்ப,” என்பது தொல்காப்பியம். அதை நினைவிற் கொண்டு பரிமேலழகர், “செவ்விது” என்றாற் போல என உரைக்கின்றார். இவ்வாறே ஒரு குறட்பாவில் “புலப்பாயாக” என்பது “புலத்தி” என்று வராமல் “புலத்தை” எனவருகிறது. அவ்வாறு வருதற்குச் சொல்லியல் காண்கின்ற பரிமேலழகர், தமிழ் மரபு காணாது புதியதொரு சூழ்ச்சி செய்கின்றார். புலத்தை என்பதன் ஈற்றெழுத்தைப் பிரித்து விகுதி என்று பெயரிட்டு. அதற்கு மேற்கோளாகக் கலித்தொகைப் பாட்டில் ஒன்றைப் பற்றிக் கொண்டு “புலத்தை என்புழி ஐகாரம். கடம் பூண்டு ஒருகால் நீவந்தை, என்புழிப் போல முன்னிலை வினை விகுதி” என உரைக்கின்றார்; விகுதி யென்று நிறுத்தி இலக்கணம் காண்பது தொல்காப்பியர் காலத்திலோ வள்ளுவர் காலத்திலோ மரபன்று. பரிமேலழகரே மேற்கொண்டுரைப்பது புது மரபு; பல்லவர் காலத்திற்குப் பின் வந்த இலக்கணப் புல்வர் செயல் வகை.

வடமொழி முதலிய மொழிகளின் மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்து ஆங்காங்கு அவ் வேற்றுமையை எடுத்துரைத்து மகிழ்விப்பதிலும் பரிமேலழகர் சிறப்புடையவர். தன் உயிரைக் காக்க வேண்டி வருமிடத்து, ஒருவன் மானம் கருதல் ஆகாது என்பது வடநூல் மரபு. “இன்றியமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்” என்று திருக்குறள், வடநூல் மரபுக்கு மாறுபட நிற்பது காண்கிறார் பரிமேலழகர். ஆதலால் “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க” என்ற வடநூல் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலை உடைமையையும் தூக்கி, அவை செய்யற்க” என்பதாம் என உரைக்கின்றார். இவ்வாறே,

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”

என்ற திருக்குறளில் தமிழ்மரபின் தனி இயல்பை விளக்குகின்றார்.

இனி அக்காலத்தில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு எழுதுவது மரபாகலின், திருக்குறள் உரையின்கண், சில இடங்களில் பரிமேலழகர் முன் எழுதியதை மறந்து தவறுதலும் செய்கின்றார்.

“நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.”

என்பது திருக்குறள். இதற்குத் தாம் ஓர் உரை வகுத்துக் கொண்டு, பிறர் கூறும் உரையை மறுத்து ஒதுக்குகின்றார். பரிமேலழகர் இதற்குப் பிறர் கூறும் உரை, “நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாள்” என்பது. இதன்கண், “நாளென ஒன்று” என்பதற்கு “நாள் என்பது ஒன்று” எனப் பொருள் பிறரால் உரைக்கப்படுகிறது. இவ்விடத்து “என” என்ற சொல் “என்பது” எனப் பொருள்படுகிறது. (1) ‘என’ என்பது ஒர் இடைச்சொல்லேயன்றி பெயர்ச்சொல் அன்று என்பது பரிமேலழகர் கொள்கை. அது (என) “என்பது” எனப் பொருள்படக் கூடாது. (2) ஒன்று போல் காட்டி என்பதற்கு “ஒரு பொருள் போலத் தோன்றி” என்று பொருள் உரைக்கப் பட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதில் பொருள் சிறப்பு இல்லை என்பது பரிமேலழகர் கொள்கை. “வாளது” என்றவிடத்து “அது” என்பது குற்றியலுகரம் அன்று. ஆகவே, பரிமேலழகர் கருத்துப்படி “அது உணர்வார்” என புனராது முறைப்பட வர வேண்டுமாயின் “அஃதுணர் வார்ப் பெறின்” என வருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் இதற்கு பிறர் கூறுவது பொருந்தாது என்ற கருத்துப்பட “என” என்பது பெயரன்றி. இடைச்சொல் ஆகலானும், “ஒன்று போற்காட்டி” என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின்மையாலும், “அது” என்பது குற்றியலுகரம் அன்மையாலும், அஃது உரையன்மை அறிக என்று பரிமேலழகர் மறுக்கின்றார்.

இனி பரிமேலழகர் கருத்தை ஆராய்வோம். “என” என்னும் சொல் இடைச்சொல்லேயன்றி பெயர்ச் சொல் அன்று எனப் பரிமேலழகர் கருதுவது தொல்காப்பியத்திற்கு முரண் ஆனது. ‘என’ என்னும் இடைச்சொல் பெயர்ப் பொருளிலும் வரும் என்ற கருத்துப்பட “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலத்தே, என என் கிளவி” (தொல். இடை - 10) என்று தொல்காப்பியம் கூறுகிறது. அடுத்து “ஒன்றுபோல் காட்டி” என்பதற்கு ஒரு பொருள் போலக் காட்டி என்றதில் பொருள் சிறப்பில்லை என்கிறார். ஆனால், அவர் இல்லை என்பதற்குத் தக்க காரணம் கூறாமையால் அவர் உரை செல்லாதாகிறது.
------
மூன்றாவதாக "வாளது” என்பதிலுள்ள "அது" என்னும் சொல் குற்றியலுகரமன்று எனக் காட்டி மறுப்பது, அவர் பிறிதொரு இடத்தில் உரைத்த உரையையே மறுக்கிறது. அதாவது "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புண்ண துணர்வார்ப் பெறின்” என்ற குறட்பாவின் உரையில் "புண்ண துணர்வார்" எனப் புணர்ந்ததற்கு, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என உரைத்தார் பரிமேலழகர், அவரே, “நாளென ஒன்று போல் காட்டி" என்ற திருக்குறள் உரையில் ‘வாளது’ என்ற விடத்து, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது" என்று தானே கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்வது உரை முறைமையன்று.

இனி ஒரிடத்தில் எழுவாய் பயனிலையைத் தெளிய நோக்காமல் தடுமாறுகின்றார் பரிமேலழகர்.

"வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.”

என்ற திருக்குறட்கு ‘'மிசைவான்" என்பது எழுவாயும் ‘'வேண்டுங் கொலோ" என்பது பயனிலையும் ஆகும். அதனைத் தெளியாமல் "இடல் வேண்டும்" என்பதை எழுவாயும் பயனிலையுமாகக் கொண்டு "மிசைவான் புலம் வித்தில்லாமலே வினையும்" எனப் பொய்யுரை புகலுகின்றார். இக்குறட்பாவை உண்மை நெறியில் நின்று நோக்குவோமாயின் விருந்தோம்பி மிக்சில் மிசைபவன் (தன் பால்) உள்ளது வித்தே ஆயினும் விருந்திற்கு இடுவதே தவிர, புலத்திற்கு இடவிரும்பான் என்பது நேரிய பொருளாம்.

இங்ஙனம் ஒரு சில தவறுகள் ஆங்காங்கே காணப்படினும் பழமையிற் புதுமையும், தருக்கத்தில் இலக்கணமும், விளக்கத்திற் சுருக்கமும். நூல் வழக்கொடு உலகியலும் புகுத்தி நுண்மையும் மாண்பும் அழகும் தெளிவும் பரிமேலழகர் உரைக்கென்றமைந்த சிறப்புக்கள் என்பது யாவரும் நினைவிற் கொள்ளத் தக்கது.
----------

17. ஆதனார்

சோழன் கரிகாலன், சோழன் கரிகாற் பெருவளத்தான் கரிகால் வளவன் என்றும் கூறப்படுவன். இவனைப் பாடிய சான்றோர்கள். சங்க இலக்கிய முதல் தல புராணங்கள் வரையில் மிகப் பலர் உள்ளனர். கரிகாலன் சங்க இலக்கிய காலத்தவனாதலால், அக் காலத்துச் சான்றோர்களையே இங்கே வரைந்து கொள்வோம்.

சங்க இலக்கியங்களிற் காணப்படும் சான்றோர்களில் சோழன் கரிகாலனைப் பாடியவர் எண்மராவர். அவர்கள் முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணானார் வெண்ணிக் குயத்தியார், கழாத் தலையார், நக்கீரர், மாமூலனார், பரணர், கருங்குழ லாதனார் என்போராவர்.

ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பொருநராற்றுப்படை பாடிச் சிறப்பித்துள்ளார். பொருநன் ஒருவன் சோழன் கரிகாலனிடம் சென்று, அவன் தந்த பெருஞ் செல்வத்தைப் பெற்று வருபவன், வேறொரு பொருநன் தன் எதிர் வரக் காண்கின்றான்; அவன் வறுமை மிகுந்து வாடியிருக்கின்றான்; அவனுக்குத் தான் கரிகாலனைக் கண்ட திறமும், கரிகாலன் பிறப்பு வரலாறும், கொடை நலமும், பிறவும் எடுத்தோதி, அவனையும் கரிகாலனிடம் சென்று வேண்டுவன பெற்று வறுமைப் பிணி நீங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றான்.

இதன்கண் கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்றும், இவன் பிறக்கும்போதே தந்தை இறந்ததனால் அரசுரிமையுடன் பிறந்தான் என்றும், இளமையிலே அரசு கட்டிலேறினானென்றும் ஆசிரியர் கூறுகின்றார்.

"இதனை. ... ... ... வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்,
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி

-----------
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமால் கலிப்ப”

ஆட்சி செய்ய லுற்றான் என்றும், நாடாளுதற் குரிய நலம் பலவும் கரிகாலனுக்குக் கருவிலேயே திருவாய் வாய்த்திருந்தன; அதனால் காலை ஞாயிறுபோல் உலகு புகழும் காட்சியுடைய னானான என்பது தோன்ற,

"பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தான்
னாடு செகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப"

விளங்கினா னென்றும் வருவனவற்றாற் காணலாம்.

மேலும், கரிகாலன் அரசுகட்டி லேறிய சின்னாட்கெல்லாம் சேர பாண்டியர் இருவரும் துணைவர் பலருடன் கூடிக்கொண்டு, கரிகாலனை வீழ்த்தக் கருதிச், சோழ நாட்டு வெண்ணி யென்னுமிடத்தே போருடற்றினர். அப்போரில் மிக்க இளையனாயிருந்த கரிகாலன், துணை வந்தோர் படை துறந்தோட, பாண்டியன் பருவந்து பின்னிட, சேரன் மார்பில் தைத்த வேல் முதுகு புண் செய்ய, நாணி வாள்வடக்கிருந்து உயிர் துறக்கப், பெருவென்றி யெய்தினான். இது,

"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளிமொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெருவேந்தரும் ஒருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்.
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்."

என வருவது காண்க.

இனி, கரிகால் வளவனுடைய ஆட்சி நலத்தை முடத்தாமக் கண்ணியார் மிகச் சுருங்கிய சொற்களாற் காட்டுகின்றார்.

"மண்மருங்கினான் மறுவின்றி
ஒருகுடையான் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்"

என்பது கரிகாலன் ஆட்சி நலம் காட்டும் குறிப் பாகும். கரிகாலன், தன்னைப் பாடிப் பாராட்டும் பரிசில ராகிய பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலியோர்க்கு வேண்டும் பொன்னும், பொருளும், தேரும், களிறும், ஊரும், நாடும், நல்கி யூக்கினான். இதனைப் பெருவளம் பெற்றுவரும் பொருநன் கூற்றில் வைத்து,

"எரியகைந்த வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்களில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே.

என்று விரியக் கூறியுள்ளார்.

முடிவில் கரிகாலனுடைய காவிரி நாட்டு விளை நலம் கூறி முடிக்கும் முடத்தாமக் கண்ணியார்,

"குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடு கோடகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.”

என்று இயம்புகின்றார்.

இவ் வண்ணம் பொருந ராற்றுப்படையால் கரிகால் வளவனைச் சிறப்பிக்கும் முடத்தாமக் கண்ணியார் பெண்பால ரென்று கருதுவோரும் உண்டு, வெறி பாடிய காமக்கண்ணியார் போல, வளைந்து கிடக்கும் தாமத்தை முடத்தாமம் என்று பாடிய நலங்கண்டு சான்றோரால் முடத்தாமக் கண்ணியார் என வழங்கினர் போலும் என்றும் கூறுவர். இவர் பெயர் உறுப்பால் வந்த தென்றும், இவர் பெண்பாலா ரென்றும் கூறுவாரும் உளர். என்பர், திரு.உ.வே.சாமிநாதையர்.

இனி, ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலனைப் பட்டினப்பாலை யென்னும் பாட்டைப் பாடிச் சிறப்பித்தவர். இதன்கண், கரிகாலனுடைய மறம் வீங்கு பல் புகழும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் விரித்துப் பாராட்டிக் கூறப்படுகின்றன. கரிகாலனை ஒருகால் அவன் பகைவர் ஒரு சூழ்ச்சியாற் கைப்பற்றிச் சிறை செய்து திண்ணிய காப்பும் காவலும் அமைத்திருந்தனர். ஆயினும், அவன், அவர் செய்த சூழ்ச்சியினும் மிக நுண்ணிய சூழ்ச்சி செய்து சிறைக்கோட்டத்தினின்றும் தப்பிச் சென்று, தன்னகரை யடைந்து, அரசுரிமை யெய்தினான் என்பது வரலாறு. இதனை உருத்திரங் கண்ணனார்,

‘... ... ...•கூருகிர்க்

கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப், பிறர்,
பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொண்று
பெருங்கை யானை பிடிபுக் கரங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான்.

என்று குறித்துள்ளார். பின்னர், அவன் தன்னை இவ் வண்ணம் சூழ்ச்சியாற் சிறை செய்த பகைவர் மேற்சென்று, அவருடைய

உகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப்
பேய்க்கண் ணன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கி.”

அவருடைய ஆர்களைப் பெரும் பாழ் செய்தும் அமையானாய்,

‘மலையகழ்க் குவனே கடல்துர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற்றுவ னெனப்'

பெருமறஞ் செருக்கி மேம்பட்டான். அது கண்ட ஒளியர் பணிந்தொடுங்கினர்; அருவாளர் தொழில் புரிந்தொழுகும் தொழும்பராயினர்; வடவர் வாடினர்; குடவர் கூம்பினர்; தென்னவர் திறலழிந்தனர்.

இந் நிலையில் சோழ நாட்டின் இடையிலும் எல்லையிலும் வாழ்ந்த பொதுவரும் இருங்கோவேளிரும் குறும்பு செய்தொழுகினராக, அவர்களை யடக்கி, அவர்கள் இருந்துகொண்டு குறும்பு செய்த காடுகளை அழித்து நாடாக்கி, அந் நாடுகள் வளம் பெறக் குளந் தொட்டு, பகைவர்களால் உறையூர்க் குண்டான கேடுகளைப் போக்கித் திருத்திப், பண்டுபோல் கோயிலும் அரணும் ஏற்படுத்திப், பவைர்க் கஞ்சிச் சென்ற பழங்குடிப் பெருமக்களைக் குடிநிறுத்திப் போர் நேரில் பொருவே மல்லது, ஒருவேம்’ என்ற சிறப்புரை கிளந்து திகழ்ந்தான், கரிகாலனாகிய செங்கோல் வளவன் என்று இனிது மகிழ்ந்து பாடுவாராய், நம் கண்ணனார்.

“புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்
கரடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநீறீஇப்
பொருவேமெனப் பெயர் கொடுத்து
ஒருவேமெனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன்னெயில்
மின்னொளி யெறிப்ப.'

வீறு பெற்று விளங்கினான் என்று பாடுகின்றார்.

இனி, கரிகாலனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் கூறுகின்ற கண்ணனார், காவிரி கடலொடு கூடும் கூடலாகிய துறைமுகத்தின்கண்,

'வைகல்தோறு மசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
வான்முகந்த நீர்மலைப் பொழியும்,
மலைப்பொழிந்த நீர்கடற் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி’

வேந்தனுடைய புலிப்பொறி பொறிக்கப்பட்டு மலைபோலக் குவிந்து கிடக்கும் என்கின்றார். நகர்க்குள் நுழைவோமாயின், அங்கே,

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி’

காணுங் கண்ணுக்கு இனிய காட்சி வழங்குகின்றன என்பர். அன்றியும், இந் நகர்க்கண்,

'வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கல்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்'

காட்சி மலிந்திருக்கிற தென்பர்.

இங்ஙனம் கரிகாலன் மாண்பும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பும் கவினுற எடுத்தோதும் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் நல்கினான் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. கல் வெட்டொன்றும் அதனை வற்புறுத்துகிறது. கடியலு ரென்பது இவர தூர். உரத்திரன் என்பது இவர் தந்தை பெயர். கண்ணன் என்பது இவரது இயற் பெயர்.

இனி, சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டி வேந்தன் ஒருவனும் வேளிர் பதினொருவரோடு கூடிப் பெரும் படையொடு வந்து, வெண்ணியிடத்தே, பொருது கரிகாலனுக்கு ஆற்றாராய்க் கெட்டபோது, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருது, புண்பட்டு, மானம்பொறாது, அவ் வெண்ணியிடத்தே வாள் வடக்கிருந்து உயிர் துறந்துபோது, அந் நிகழ்ச்சியை நேரிற் கண்ட சான்றோர் வெண்ணிக் குயத்தியாராவர். அக் காலத்தே கடலில் அடிக்கும் காற்றைப் பயன்கொண்டு கலஞ் செலுத்தும் விரகினை முதற்கண் கண்டவர் சோழர் என்றும், அச் சோழர் வழிவந்தவன் கரிகாலன் என்றும் புக முண்டாகியிருந்தது, கரிகாலனொடு பொருது தோற்ற முடிவேந்தர் இருவருள் பாண்டியன், வெற்றியும் தோல்வியும் ஒருவர்க்கே புரியவல்ல; வென்றி யெய்தினோர் தோற்றலும், தோற்றோர் வெற்றி யெய்துதலும் மாறி வருவது இயல் பென்று தெளிந்து, தன்னாட்டிற்குச் சென்றது போலாது, மார்பிற் புற்ைத் துருவி முதுகிற் புண்ணுண்டானதற்கு நாணிச் சேரலாதன் தான் தோல்வி பெற்ற போர்க்களத்தின்கண்ணே வாள்வடக்கிருந்து உயிர் துறந்ததும், அது கேட்ட அவனுடைய தானைச் சான்றோர் சிலர் உயிர் துறந்ததும் சிறந்த மற நெறியாகத் தோன்றாமை கண்டார். மறத்தின் நீங்கா மானமாவது தன்னை வென்றோனைக் காலங் கருதியிருந்து, வாய்த்தவுடன் அவனை வென்று விளங்குதலாகும்; இதனை யுணரர்து வடக்கிருந்த சேரலாதன் கரிகாலனைவிடச் சிறந்தவனாதல் இல்லையென அவன் உள்ளந்தெளியுமாறு வற்புறுத்தினார், அதனை,

‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்த நின்னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.'

என்று பாடியிருத்தல் காண்க.

வெண்ணிக் குயத்தியாருடைய இயற்பெயர் தெரிந்திலது. வெண்ணி யென்பது தஞ்சை மாநாட்டில் (ஜில்லாவில்) உள்ளதோர் ஊர்; இவ் வூரிற்றான் கரிகாலனது வெண்ணிப் போர் நிகழ்ந்தது; இங்கேதான் பெருஞ் சேரலாதன் வாள் வடக்கிருந்தது. பண்டை நாளில் கலஞ் செய்யும் வேட்கோவருட் சிறந்தார்க்கும் குயம் என்னும் சிறப்பினை வேந்தர் நல்கி விளக்கமுறு வித்தனர். அத்தகைய சிறப்புடையவர் இவர் என்பது விளங்கக் குயத்தியார் எனப்படுவா ராயினர். இச்சிறப்புப் பெயரால் இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று.

இனி, கழாத்தலையார் என்னும் சான்றோர் சேரமான் பெருஞ்சேரலாதன் வாள்வடக்கிருந்து உயிர் துறந்த தறிந்து பெருவருத்தத்தால் கையற்றுத் தன்னை யொத்த வேந்தன் தன் மார்பு குறித்து எறிந்த வேல் புறத்தே ஊடுருவிப் புண் செய்ததற்கு நாணி மறத்தகை மன்னனான பெருஞ்சேரலாதன் வாள் வடக்கிருந்து உயிர் துறந்தான். இனி, எங்கட்கு நாட்கள் அவன் இருந்த நாளிற்போல இனிது கழியா.' என்று புலம்பியுள்ளார். அதனை,

‘மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநா ளமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன் ஈங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.'

என அவர் பாடியிருப்பது காண்க.

கழாத்தலையார் சேர மன்னர்களில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும், பெருஞ்சேரலாதனையும் பாடியிருத்தலினாலும், ஏனை வேந்தர்களைப் பாடினா ரெனற்கு வேண்டும் இவர் பாட்டுக்கள் தொகை நூல்களுட் காணப் படாமையாலும், இவர் சேர நாட்டின ரெனக் கருதற்கு இடமுண்டாகிறது. கையெழுத்தப் பிரதியொன்றில் இவர் பெயர் கழார்த்தலை யெனக் காணப்படுகிறது. அதுவே உண்மைப் பாடமாயின், இவர் கழார் என்னும் ஊரினராக எண்ணலாம். அக் கழாரும் சேரநாட்டு ஊராதலும் கூடும். -

நக்கீரனார், பரணர், மாமூலனார் ஆகிய மூவரும் சோழன் கரிகாலனை நேர்முகமாக வைத்துப் பாடினாரில்லை. ஆயினும், அவர்கள் தாந் தாம் அவ்வப்போது பாடிய பாட்டுக்களில் ஒவ்வோரிடத்தில் கரிகாலனைக் குறித்துப் பாடியிருக்கின்றனர். தலைவன் தனக் குரிய வினை குறித்துப் பிரிந்து சென்றானாக, .” தலைவி அவன் பிரிவாற்றாது உடல் மெலிந்து வருந்துவளோ என அவள் தோழி நினைந்து கவலையுற்றாள்; அது கண்ட தலைவி, தோழி! 'செல்வம் கொணரச் சென்றுள்ள நம் காதலர் வினைகுறித்துப் பிரிவதற்கு யான் வருந்தவில்லை; கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிச் செய்யும் விழாவுக்கு வந்துவிடுவாராயின் நன்று. என்று கூறுகின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் நக்கீரர் கரிகாலனைச் சிறப்பித்து, செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால், வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன, நல்லிசை வெறுக்கை தருமார்' (அகம். 141) என்று பாடியுள்ளார்.

தலைவன் பரத்தையொடு கூடிப் புனலாடி வந்தானாக, அவனுக்குத் தோழி வாயில்மறுப்பவள், 'நீ பரத்தையொடு புனலாடினாயென்று சொல்லுகின்றனர்; அதனை நீ மறைத்தாலும் ஊரில் உண்டாகிய, அலர் பெரிது.' என்கின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் பரணர், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டிய இருவரும் வேளிர் பதினொருவரும் தொலைந்து கெட வென்றதனால், அவனுடைய அழுந்துரார் வெற்றி விழாக் கொண்டாடி யெடுத்த ஆரவாத்தினும் பெரிது அந்த அலர் (அகம். 246) என்று பாடியுள்ளார். மேலும், பரணர் கரிகாலனுடைய வெண்ணிப் போர் வென்றியோடு, வாகைப் பறந்தலை யென்னுமிடத்தேயும் கரிகாலன் ஒன்பது வேந்தரைவென்று மேம்பட்டான் என்பாராய்,

'விரியுளைப் பொலிந்த பளியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நன்பக' லொழித்த
பீடில் மன்னர் (அகம். 125)

என்று குறித்துள்ளார். ஆகவே, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் வாகைப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் செய்து வெற்றி பெற்றுள்ளான் என்பது பெறப்படும். இதன் கண், 'வெருவரு தானையொடு வேண்டு’. புலத் திறுத்த, பெருவளக் கரிகால்’ என்றதனால், இந்த வாகைப் பறந்தலை பாண்டி நாட்டின் கண்ணதாம்.

பாண்டி நாட்டில் வாகைக் குளம் என்றோர் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உளது. வாகைக் குளமே வாகைப் பறந்தலையாயின், கரிகாலன் தென் பாண்டி நாட்டின் கிழக்கிலுள்ள வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் அவற்குத் துணைவந்த குறுநிலமன்னர் எண்மரையும் நண்பகற்போதில் தம்குடை யொழித் தோடுமாறு செய்தான் என்பது துணிபாம். பின்பு அங்கிருந்து மேற்கு நோக்கித் தாமிரபரணிக் கரை வழியே கரிகாலன் சென்றிருத்தல் வேண்டும். மாமூலனார் கரிகாலன் வெண்ணிப்போரில் எறிந்த வேல் சேரலாதன் மார்பிற் பட்டு உருவி முதுகிற் புண் செய்ததற்கு நாணி வடக்கிருந்துயிர்துறந்த போது, சான்றோர் பலர் மேலுலகிற்கு அவனொடு செல்ல விரும்பித் தாமும் உயிர் விட்டனர் என்கின்றார். இதனை,

“.................... ... ... ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண்ணாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செவீஇயர்
பெரும்பிறி தாகி யாங்கு.” (அகம். 55)

என்பது காண்க, இதனால் சேரலாதன் வெண்ணியிலேயே வடக்கிருந்தா னென்பது 'அழிகள மருங்கின் வாள்வடக்கிருந்தென" என்பது கொண்டு தெளியப் படுகிறது. படவே, வெண்ணிக் குயத்தியார் சேரலாதன் வடக்கிருப்பது கண்டு பாடியது நன்கு வலியுறுகிறது.

இனி, இறுதியாகக் காணப்படுபவர் கருங்குழ லாதனார் என்பவராவர். இவர் கரிகாலன் பாண்டியனையும் சேரலாதனையும் குறு நிலத் தலைவரான வேளிர் பலரையும் வென்று சிறந்து விளங்குவதைப் பாராட்டிப் பாடியுள்ளார். ஆதனால் ஆதன் என்பன தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவாகப் பயில விளங்கும் பெயராயினும், சேர வேந்தர் பலர் சிறப்பாக அவற்றை மேற்கொண்டிருத்தலால், இவர் சேரர் குடியில் தொடர்பு உடையரெனக் கருதுதற்கும் இடமுண்டு.

கரிகாலன் வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் வேளிரையும் வென்று தென் பாண்டி நாட்டுள் மேற்றிசை நோக்கிச் செல்லலுற்றானாக, அங்கே அவனை எதிர்த்த பகைவர் ஊர்களெல்லாம் தீக் கிரை யாயின. சென்ற விடமெல்லாம் அழு விளிக்கம்பலை' (அழுகுரல்) மிகுவ தாயிற்று. நாட்டில் நற் பொருள் விளைதற்கும் இருத்தற்கும் இடமில்லையாமாறு அழிவுவினை நடைபெற்றது. இவற்றைக்கண்ட ஆதனார் கரிகாலனை யடைந்து அழிவு நிகழாவிடத்து இருக்கும் நாட்டு நிலையையும், நிகழ்வதனால் உண்டாகிய கேட்டையும் அவற்கு உரைத்து, அவன் உள்ளத்தில் அருள் நிலவச் செய்ய வேண்டுமெனக் கருதினார். சோழன் கரிகாலன் புலவர்களை வரவேற்று, அவர் புலமை நலத்தை யோர்ந்து வேண்டும் பரிசினல்கும் பான்மை யுடையவன். அதனால் அவர் அவனை எளிதிற் காணமுடிந்தது. சோழனைக் கண்டு, வளவ, களிறு ஊர்ந்து அவற்றைச் செலுத்துதற்கு ஏற்ப இயன்ற முழந்தாளும், கழலணிந்து உரிஞப்பட்ட அழகிய திருவடியும், அம்பு தொடுக்கும் திறனும், இரவலர்க்கு அள்ளி வழங்கும் வளவிய கையும், கண்ணாற் காண்பார்க்கு விளங்கத் தோன்றும் வில்லும், திருமகள் தனக்கேயுரிமை பூண்டு விளங்கும் மார்பும், பெருங்களிற்றையும் பொருது பெயர்க்கும் பெருவன்மையும் கொண்டு விளங்குகின்றாய். நின் உள்ளத்தே சினத்தை யெழுப்பிப் போரில் ஈடுபடச் செய்யும் பகை வேந்தருடைய நாடு நல்ல நீர் வளம் பொருந்தியது. தண்புனல் பரந்து வந்து வயலிடத்து மடையை உடைக்குமாயின், அந்த உடைப்பை மண்பெய்து அடைத்தால் . அடைபடாமை காணும் உழவர் நீரில் மேயும் மீன்களைப் பிடித்து உடைப்பி லிட்டு மண்ணிட்டு அடைப்பர். இத்துணைப் பெரும் பயன் விளைவிக்கும் நாடு, இர வென்றும் பக லென்றும் எண்ணாமல் ஊர்களைத் தீக் கிரையாக்கி ஊரவர் வாய்விட்டரற்றி யெழுப்பும் அழுவிளிக்கம்பலை மிக்கெழச் சூறையாடுதலை விரும்புகின்றாய்’ என்ற கருத்தமைய,

களிறுகடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ணொளிர் வரூஉங் கவின் சாபத்து
மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல்மண் மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பிற் பிறர்அகன் றலைநாடே!

என்ற பாட்டைப் பாடினார். கரிகாலன் அவர்க்கு முற்றுட்டாகச் சில ஊர்களும் பொருளும் நல்கினான் என உணர வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில், கரிகாலன் தன்னைப் பாடி வரும் புலவர், பாணர் பொருநர், முதலியோர்க்கு நல்ல பல ஆர்களையும் அவ் வூர்களையுடைய நாடுகளையும் தருபவன் என்பதை முடத்தாமக்கண்ணியார் கூறியிருப்பது காண்க.

பின்னர், சோழன் கரிகாலன் பாண்டி நாட்டினின்றும் நீங்கித், தன் சோழ நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் கழிந்த பின் விண்ணுலகம் சென்றான். இதற்கிடையே ஆதனார்க்கும் கரிகால் வளவனுக்கும் நட்பு மிகுந்தது. அவன் இறந்த செய்தி கேட்ட ஆதனார் சோழநாடு சென்றார். கரிகாலன் இல்லை. அவன் மகளிரும் தம் இழை முற்றும் களைந்து கூந்தல் களைந்த தலையராய் இருந்தனர். அக் காட்சி ஆதனார்க்கு மிக்க வருத்தத்தைச் செய்தது. அக்காலை அவர் பகைவேந்தர் மதில்களைப் பொருளா எண்ணாது எளிதிற் கடந்து செல்வதும், பாணர் முதலிய இரவலர்க்கு வேண்டுவ நல்கி ஆதரவு செய்வதும், தன் மகளிரொடு கூடி வேள்வி யந்தணர்களைக் கொண்டு வேள்வி பல செய்வதும், ஆகிய இவற்றால் விளையும் பயனை நன்கறிந்த அறிவுடையோன் சோழன் கரிகாலன்.

‘அறிந்தோன் மன்றஅறிவுடை யாளன்
இறந்தோன் தானே அளித்திவ் வுலகம்,
அருவி மாறியஞ் சுவரக் கடுகி
பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த வாயத்துப் பயனிரை தருமார்
பூவாட் கோவலர் பூவுட னுதிரக்
கொய்து கட்டழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந்தனரே.' (புறம். 224)

என்று பாடி வருந்தினார்.

இவ் வண்ணம் சோழன் கரிகாலன் இறந்த பின்பு அவன் பிரிவாற்றாது கையற்று வருந்திய சான்றோர் வேறு யாவரும் காணப்பட வில்லை. ஆதனார் ஒருவரே காணப்படுகின்றார். இந்த ஆதனார் சங்கத் தொகை நூலிற் காணப்படும் சான்றோருள் ஒருவரான கருங்குழலாதனார் என முன்பே கண்டோம். இவர் இயற்பெயர்க்குமுன் கருங்குழல் என்றொரு தொடர்மொழி நின்று சிறப்பிக்கின்றது. அதற்கும் ஆதனார்க்கும் உள்ள இயைபு ஒன்றும் விளங்கவில்லை.

இருபத்திரண்டு யாண்டுகட்குமுன் பள்ளியூரில் இளம் பூரணர் உரையுடன் புறநானூற்றுக் கையெழுத்துப்படி யொன்றும் என் நண்பர் ஒருவர்பால் இருக்கக்கண்டு அதனையும் புறநானூற்று அச்சுப் பிரதியையும் ஒப்புநோக்கி வேறுபட்ட பாடங்களை யான் குறித்துக் கொண்டது நண்பர் பலரும் அறிந்தது. அக் குறிப்புகளுள் கருங்ழலாதனார் என்பது கருங்குழலாதனார் என்று இருக்கிறது. எங்கேயோ மூலையில் கிடந்த இக் குறிப்பு ஒரு சில நாட்களுக்கு முன்பே கிடைத்தது. கருங்குழலாதனா ரென்பது கருங்குழலாதனார் என்ன எழுதப்படுதற்கியைபுண்டு, இதனை யாராய்தல் வேண்டுமென எண்ணி மேலும் முயலுமிடத்து, கருங்குளம் என்பதோர் ஊரென்பது தெரிந்தது. தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்றோர் ஊர் இருக்கிறது. அதனை அவ்வூர்க்கல் வெட்டுக்கள் 'கருங்குள - வளநாட்டுக் கருங்குளம்' என்று கூறுகின்றன. ஆகவே, கருங்குளம் என்ற ஊருண்மை தெள்ளிதாயிற்று.

இனிக், கருங்குளத்துக்கும் ஆதனாருக்கும் தொடர் பென்னையென்று காண்டல் வேண்டியதாயிற்று. அவ்வூர்க் கல்வெட்டொன்று அதனைக் 'கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம் (A.R. No. 269 of 1927-28) என்று குறிக்கிறது. கரிகால் சோழனுக்கும் ஆதனார்க்கும் தொடர் புண்டென்பது அவர் அவனைப் பாடிய பாட்டுக்களால் தெளிவாகிறது. ஆகவே, கருங்குளத்துக்கும் கரிகாற் சோழனைப் பாடிய ஆதனாருக்கும் தொடர்பு உள தாதல் எளிதாம். ஆகவே, கருங்குளவாதனார் காலத்தே அக்கருங்குளம் அவன் பெயரால் கரிகாற் சோழநல்லூராகப் பெயரிடப் பெற்று ஆதனார்க்கு அவனால் முற்றூட்டாக வழங்கப்பட்டிருக்கு மென்பது பொருந்தாதொழியாது. கருங்குளத்துக்கு உரியவராகிய ஆதனார் தென் பாண்டி நாட்டுக் கருங்குளவாதனார் எனப்படுவது இயல்பாம்.

இதனை இறுதியிற் குறிப்பது குறித்தே கரிகாலனது தென் பாண்டி நாட்டு வரவும், ஆங்கு அவனைச் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு ஊர் வழங்கியதும் இக் கட்டுரையிடையே வற்புறுத்தப்பட்டன. பாண்டி நாட்டில் கரிகாலனைப் பாடியவர் கருங்குளவாதனார்; அவர்க்கு அவன் அளித்தவூர் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம். ' இக் கருங்குளத்திலுள்ள இராச சிம்மேச்சுரத்திற்குத் திருவாங்கூர் மன்னரும் திருப்பணி செய்துள்ளனரென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 287 of 1927-28) கூறுவது பற்றி அவ்வூர்க்குச் சேரர் தொடர்பும் உண்டென உணரலாம், என்பது முடிபாம்.
-----------

18. சமண முனிவர் தமிழ்த் தொண்டு

நம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய நெறியின் வளர்ச்சியினை வரலாற்று முறையால் ஆராய்கின்றவர், இவ்வளர்ச்சி குறித்துச் சமண முனிவர் செய்துள்ள தொண்டுகளைக் காணாதுபோக முடியாது. தமிழ் வளர்ச்சிக்கெனச் சிறந்த தொண்டு புரிந்து தமிழ் மக்களைவிடச் சமண முனிவரே தலை சிறந்து நிற்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அவர் செய்த தொண்டினை ஒரு சிறிது ஆராயின், அவர் தொண்டு முற்றும் தம் சமய நெறியினைத் தமிழ்நாட்டில் நிலைபெறுவித்தற்குச் செய்த சமயத் தொண்டாகவே தோன்றுகின்றமையின், அதனைப் புலப்படுக்கும் குறிப்பால் இக்கட்டுரை எழுதப்பெறுகின்றது.

1. சமண முனிவர் வரலாறு

சமண முனிவர் என்பவர் சைன சமய வொழுக்கத்தை மேற்கொண்டு, துறவிகளாய், நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் சிறந்து, வினைத்தொடர்பு கெடுமாறு முயலும் சான்றோராவர். இது பண்டைக் காலத்தில் வடநாட்டில் தோன்றிய புதுச் சமயம் என்று சிலர் கூறுவர். சமயக் கலையில் வல்லுனராகிய இராதாகிருட்டினன் என்னும் பேராசிரியர், “இஃது இந்திய நாட்டிற்கே உரித்தாகிய வைதிக சமயத்திலிருந்து புதிதாய்க் கிளைத்த சமயம்" என்கின்றார். இச் சமயம் வடநாட்டில் சைன சமயம் என்றும், தென்னாட்டில் சமண சமயம் எனவும் வழங்கப்பட்டது. சைனருள், இல்லறத்தோர் சிராவகர் என்றும், துறவு பூண்டு இன்பத்து விருப்பும், துன்பத்து வெறுப்பும் இலராய் இரண்டனையும் ஒப்ப மதித்தொழுகும் சான்றோர் சமணர் எனவும் கூறப்பவர். இவர்கள், புத்த சமயத்தை நாடெங்கும் பரப்புதற்குரிய பெரு முயற்சியினைச் செய்த பேரரசப் பெருந்தகையாகிய அசோக மன்னராலும் நன்கு மதிக்கப் பெற்றவர்கள். இச்சமணர்கள் நம் தமிழ்நாட்டிற் புகுந்து தம் சமய நெறியினைப் பரப்பியதனால், இவர்களது சமயமாகிய சைன சமயம் இவர்கள் பெயரால் சமண சமயம் என வழங்கப்படுவதாயிற்று.

2. சமண முனிவர் வரவின்கண் தமிழ் இருந்த நிலைமை

தமிழ்நாட்டில், ஆதியில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்; அவர்கள்பால் தனித் தமிழே நிலவியிருந்தது. பின்னர், வட நாட்டு மக்கள் தமிழ்நாட்டிற் குடி புகுந்தனர். அவர் வழங்கிய வடமொழியும் அவரோடு போந்து தமிழ்நாட்டில் இடம் பெற்றது. வடவரும் தமிழரும் வாழ்க்கையில் ஒருங்கு இயைந்து உலவத் தொடங்கியதும், வடமொழியும் தமிழிடைக் கலந்து வழங்கப் பெறுவதாயிற்று. சமணர் தமிழ்நாட்டிற் புகுந்த காலத்துத் தமிழரிடை வடவர் வழக்கும், வடமொழி வழக்கும் நிலவியிருந்தன. தமிழ் மக்களின் மனப்பான்மையும், வடவர் வழக்கினையும், வடமொழி வழக்கினையும் மேற்கொண் டொழுகுதற்கண் பேரார்வமும், பேரூக்கமும் கொண்டு இருந்தது.

நம் நாட்டிற்குப் புதியராய், புது வழக்கும், புது வொழுக்கும், புது மொழியும் உடையராய்ப் போந்த மேனாட்டு மக்களின் கூட்டுறவால், நம் நாட்டவர்க்கு அவர் மொழி வழக்கினும், நடையொழுக்கினும் வேட்கையும் விழைவும் பெருக, அதனால் நம் நாட்டு மொழி நிலை தாழ்வுற்றதன்றோ? அங்ஙனமே, வடவர் கொணர்ந்த மொழி வழக்கினையும், நடையொழுக்கினையும் கண்ட தமிழர் அவற்றின்பால் எழுந்த வேட்கையால், தமிழ் வளர்ச்சியிற் கருத்தூன்றாது தாழ்ந்தனர். வடவரது வைதிக சமயக் கோட்பாடுகளை மேற்கொண்டனர். வடவரது வடமொழி உயர்ந்தோர்க்கல்லது உணர்த்தப்படா தென்னும் வடவர் வகுத்த முறையால், இக்காலத்து ஆங்கிலம் போலத் தமிழரிடம் முதலிடம் பெறாதாயிற்று. ஆனால், வடமொழியைத் தமிழொடு விரவிப் பேசும் நெறியினை மட்டும் கைவிடாது பேணிவந்தனர். அதனால், வடசொல் விரவாத தனித் தமிழ் நூல்கள் அருகின; வடசொல் விரவிய நூல்கள் கூடிய அளவிற் பெருகின. இலக்கணங்களும் வட சொற்கள் தமிழொடு நடைபெற்று இயலுதற்கு இடம் வகுத்து அமைப்பவாயின. “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியம் கூறுவதாயிற்று.

இவ்வறு வடவர் கூட்டுறவால், தமிழர் தம் தாய்மொழி வளர்ச்சிக்கண் ஊக்கம் குறைந்திருப்பதையும், வடமொழிக்கண் விருப்பும், வைதிக சமயக் கதைகளில் வேட்கையும் மிக்குற்றிருப்பதையும், சமண முனிவர் தெளிய வுணர்ந்தனர். தமிழர், வைதிக சமயப்பற்று மிகுந்து அதுபற்றிய கதைகளைக் கேட்டு, அவற்றிற்கு வேறாக வரும் சமண சமயக் கருத்துக்களையும் கதைகளையும் மேற்கொள்ளுதற்குத் தாழ்த்தனர். இவ்வாறு தம்பால் வேறுபட்டு நிற்கும் தமிழர் கூட்டுறவைப் பெறுதற்குரிய நெறியில் சமண முனிவர் முயல்வாராயினர். தமிழர்க்கு வடநூற் கதைகளில் விருப்பு மிக்கிருந்தமையின், தாமும் வடநூற்களையும், வடநூல் மரபுகளையும் தமிழின்கட் கொணருமுகத்தால் தமிழர் ஆதரவைப் பெறலாயினர். இந் நெறிக்குப் பெருங் கருவியாக விளங்குவது இளஞ் சிறார்க்குக் கல்வி பயிற்றுவிக்கும் பெருந் தொண்டேயாகும் என்று உணர்ந்தனர். அதனால் தாம் தங்கியிருந்த பள்ளிகளில் கூடங்கள் அமைத்து, அவற்றுள் இருந்து சிறுவர்க்குக் கல்விக் கொடை புரியலாயினர். அந்நாள் தொட்டே கல்வி பயிலும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் என வழங்கப்படுவவாயின.

3. . தமிழ்த்தொண்டு

சமண முனிவர்களின் தொண்டு தேவார காலத்துக்கு முன்னையதும், பின்னையதும் என இருவகைப்படும். தேவார காலத்தும், அதற்கு முன்னரும் இருந்த சமண முனிவர் பெருங் கல்வியும், அறம் உரைக்கும் அமைதியும் நிரம்பித் துறவறமே சீரிதாக மேற்கொண்டு இருந்தனர். இவர்கள் நெறியினைத் கடிந்து வாதுபுரிந்த சைவப் பெரியோர்களான ஞானசம்பந்தர் முதலியோர் இவர்களின் பெருங் கல்வியினையும், அறவுரை களையும் சுட்டி இருக்கின்றனர். "அமணரும் குண்டரும் சாக்கியரும் நயமுக உரையினர்", “ஒதியும் கேட்டும் உணர் வினையிலாதார் உள்கலாகாததோர் இயல்பினையுடையார்" என்றும், இவர்கள், அறம் உரைத்த பெருமையினை, “பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் அறவுரை", “அறங்காட்டும் அமணரும் சாக்கியரும்", "கடுமலி உடலுடை அமணரும் கஞ்சியுண் சாக்கியரும், இடும் அறவுரை" என ஞானசம்பந்தப் பெருமான் கூறியருளியிருக்கின்றார். இவற்றால், தேவார காலத்திற்கு முன்னர் இருந்த சமண முனிவர் தம் சமய அறங்களை மக்களுக்கு உணர்த்துவதே தமது கடனாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிய விளங்குகிறது. அக்காலத்திற்கு முன்னர் இருந்த தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுட் சமண முனிவர் செய்தனவாகக் காணப்படுவன யாவும் அறநூல்களேயாக இருக்கின்றன. நாலடியார், அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம் முதலிய பலவும் அறம் கூறுவனவேயாகும்.

அக்காலத்தே அவர்கள், வரலாறு கூறும் தமிழ் இலக்கியங்கள் மிகச் செய்திலர் ஒன்றிரண்டு செய்தாராயினும் அவை தமிழ் வளங் கெழுமியவாய்த் தமிழர் மனத்தைக் கவ்வுவனவாய் இல்லை. அவர்கள் உலக வாழ்க்கையில் வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் மிக்கு இருந்தமையின் தமிழர் வாழ்க்கையில் நிலவிய அகப்பொருள் நலங்களும், புறப்பொருள் துறைகளும் நெடுநாள்காறும் அவர்கள் மனத்தில் இடம்பெற்று, அவர்கள் அறிவை ஏவல் கொள்ளவில்லை. அதனால், அவர்கள் தமிழ் மொழியின் இலக்கணத் துறையிற் புகுந்து, அதன் பகுதிகளுள் ஒன்றாகிய செய்யுளியலில் பெருந்தொண்டு புரிவாராயினர்.

கற்றவர் கல்லாதவர் என்ற இருதிறத்தார்க்கும் அறவுரை வழங்குமிடத்தும் உரையும் பாட்டுமே மிக வேண்டற்பாலன. இவற்றுள் முன்னதைவிடப் பின்னையதே கல்லாதவரையும் எளிதிற் பிணிக்கும் வாய்ப்புடையதாகும். ஆகவே, அதற்குரிய செய்யுளியலில் பெரும்பாடுபட்டுப் பல புதுநெறிகளையும் இயல்களையும் காண்பாராயினர். யாப்பருங்கல விருத்தியுரையிற் காட்டப்பெற்றுள்ள செய்யுளியல் நூல்களுட் பல, சமண முனிவராற் செய்யப் பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாகும். இசை நூலும் நாடக நூலும் காமம் பயக்கும் சிறுமையுடையவை என்பது அம்முனிவர்களின் கருத்து, அதனால் அத்துறையை நெகிழ்ப்பதோடு அவ்விசை நாடகங்களில் பற்றுண்டாகாமையும் வளர்த்து வந்தனர். தமிழர் தாமும், தம் தமிழையே மறந்து, வடநூற் கதைகளிலும், வடவர் வழக்க வொழுக்கங்களிலும் வேட்கை மீதூர்ந்து நின்றமையின், அவை பேணற்பாடின்றி இறந்தன.

தொல்காப்பிய நூலுட் காணப்படாத பாட்டினங்கள் இவர்கள் செய்த செய்யுளியல்களிற் காணப்படுகின்றன. இவ்வாறு பழைய தமிழ் நெறிகளைப் புதுநெறியிற் கொணர்தற்கு முயன்று பெருந்தொண்டு புரிந்த இப் பெரியோர்கள் இசை, நாடகங்களிலும் தம் கருத்தைச் செலுத்தியிருப்பின் நம் தமிழ் மொழியில் எத்துணையோ இசை நூல்களும் நாடக நூல்களும் தோன்றியிருக்குமே இசை நூல்களுட் சில இவர்களால் இயற்றப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனை உண்மையெனத் துணிதற்குரிய சான்றுகள் கிடைத்தில்.

தொடக்கத்தில் தம் சமய நெறிகளை மக்கட்கு உரைப்பதே பொருளர்க்கிக் கொண்டு தமிழ் நாடெங்கும் திரிந்து சமண் பள்ளிகளையும், சமண் பாழிகளையும் இவர்கள் நிறுவி வந்தனர். அவை யாவும் அறநிலையங்களாக இருந்தனவேயன்றி, அறிவுச் சுடர் வழங்கும் தமிழ் நூல் நிலையங்களாக இல்லாமையால், தேவாரப் பெரியோர்கள் காலத்தில், இவரது தொண்டு இவர்கட்குப் போதிய அரண் செய்யாதாயிற்று. சமயப்போர் நிகழ்ச்சிகளில், இவர்கட்குப் போதிய படையாகக் கூடிய தமிழ் நூல்கள் இல்லை. அதனால் இவர்கள் எளிதில் வெல்லப் பெற்றனர். தமிழிலக்கணங்களாக, இவர்கள் செய்த அவிநயம், இந்திரகாளியம், பரிமாணம் முதலியவை சமய நூல்களாகவோ &B அறநூல்களாகவோ பயன்படவில்லை.

தேவார காலத்தில் இச் சமண முனிவர்களுக் குண்டாகிய தோல்வி இவர்கட்குப் பிற்காலத்தில் அழியாப் புகழைப் பயப்பதாயிற்று. இவர்கட்குத் தம் தொண்டில் இருந்த குறைபாடுகள் நன்கு புலனாயின. தமிழர் கூட்டத்தில் நிலவிய சமய நூல்களைப் பயின்று, அவற்றைப்போல இலக்கியங் களையும், சிறு நூல்களையும் செய்யத் தொடங்கினர். இளஞ் சிறார் முதல் பெரியோர் ஈறாகப் பலர்க்கும் பயன்படத்தக்க தமிழ் நூல்களை இயற்றத் தலைப்பட்டனர். தமிழ்த் தொண்டினைத் தம் சமயத் தொண்டிற்குக் கருவியாகக் கொள்ளும் கருத்தினராகலின், இளைஞர்க்கென இயற்றிய சின்னூல்களிலுந் தம் சமயக் கருத்துகளைப் புகுத்து மிடமறிந்து புகுத்தித் தம் கருத்து முற்ற நினைந்தனர்.

சிறுவர் கற்கும் கணக்கியல் வாய்பாடுகளில், தம் சமயக் கருத்தை நுழைத்தற்கு இடமில்லாமையால், அவற்றிற்குக் காப்புச் செய்யுள் யாத்து, அதன்கண் சமயவுணர்வைப் புகட்டினர். "வன்மதிமுக்குடையான்மலரடிதொழ, நெல்லணி லக்கம் நெஞ்சினில் வருமே" என்பது நெல்லிலக்கவாய் பாடு. "அருகனை அமலனை அசலனையடிதொழ, சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” என்பது சிறுகுழி வாய்பாடு. இவ்வாறு கல்வி பயின்று வரும் சிறுவர்கட்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தற்குத் தோற்றுவாயாக நிகண்டுகள் செய்யத் தொடங்கினர். இவர் காலத்துக்கு முன்பிருந்தவை நூற்பா வடிவில் பெருநூல்களாக இருந்தன. அவை, இசையொடு விரவி, புதுப்பாவினத்திற் செய்யப்படின் கற்பார்க்கு ஊக்கம் மிகும் என்று கருதினர். அதனால் அவர்கள் சூடாமணி நிகண்டு முதலிய நூல்களைச் செய்தனர். இதன்கண்ணும் தம் சமயக் கருத்துக்களை வேண்டுமிடங்களிற் காட்டியிருக்கின்றனர். காப்புச் செய்யுள், "முடிவில் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி"ச் செய்தது உலகறிந்தது. பகவன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமிடத்து, "பகவனே ஈசன்மாயோன் பங்கயன் சினனே புத்தன்” எனத் தொகுத்துரைத்தனர். பன்னிரண்டாவது தொகுதிக் கண், "சொல்வகை எழுத்தெண்ணெல்லாம் தொல்லைநாள் எல்லையாக, நல்வகையாக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை, வெல்வினை தொடங்கச்செய்து வீடருள்வோன் தாள் போற்றி” செய்கின்றார். பின்னர், நானிலங்கள், நால்வகையங்கங்களை விரித்துக் கூறலுறுவார், இடையே, சமண் சமயக் கருத்தாகிய நாற்கதி வகையினை நுழைத்து, "நாற்கதி உம்பர் மக்கள் சொல்லிய விலங்கினோடு நரகர்" எனக் கூறினர். இவ்வாறே சைவர்கள் கூறும், சிவனுக்குரிய எண்வகைக் குணங்களைக் கூறுமிடத்து, அருகனுக்குரிய எண்வகைக் குணமும், இறைவனுக்கு ஆகாவெனத் தம் சமய நூல்கள் விலக்கிய எண்வகைக் குற்றங்களையும் கூறியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நிலவிய தொல்காப்பியம் மிக விரிந்து பரந்த நூலாய்க் கிடந்தமையின், அதனைச் சிறுவர்கள் எளிதில் கற்றற்குரிய நிலையில் சின்னூலும் நன்னூலும் இயற்றியிருக்கின்றன. சின்னூல் செய்த குணவீரபண்டிதர் என்னும் பெரியார் வடநூன் மரபுகளை ஒரு சிறிதே தழுவி, தம் சமயப் பொருட்குரிய வணக்கங் கூறிச் செல்லுகின்றார். நன்னூல் செய்த பவணந்தி முனிவர் சுருங்கிய சிலவாய சொற்களால் மிக அழகியதாக இதனைச் செய்துள்ளார். இதன்கண், இவர்தம் சமயக் கருத்தைக் காப்புச் செய்யுளிற் காட்டியதோடு நில்லாது, எழுத்தின் இலக்கணத்திலும் புகுத்தியிருக்கின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார் “எழுத்தெனப்படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப" எனத் தொடங்கினரேயன்றி, எழுத்தாவது இஃது என இலக்கணங் கூறிற்றிலர். அவ்விலக்கணங் கூறப்புகுந்த பவணந்தியார், "மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து" என்று மொழிகின்றார். இதன்கண் "அணுத்திரள் ஒலி" என்றது சமண் சமயக் கருத்து. இதனையே எழுத்துக்களின் பிறப்புக் கூறுமிடத்தும், ‘'நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத்திரள்" எனச் சிறுவர் மனத்தில் நன்குபதியக் கூறியிருக்கின்றார். இத்துறைக் கண் ஆசிரியர் தொல்காப்பியனார், “அகத்தெழு வளியிசை அரில்தப நாடி, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே; அஃதிவண்துவலாது எழுந்து புறத்திசைக்கும், மெய்தெரி வளியிசை அளவு நுவன்றி.சினே" என்றே கூறினர். தொல்காப்பியர் கூறியதனையே அவிநயனாரும், குண வீரபண்டிதரும், புத்தமித்திரனாரும் கூறினர். இதனாலும் பிற்காலச் சமண முனிவர்களின் கருத்துத் தம் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்குக் கருவியாதல் வேண்டும் என்பது தெளிவாகும். இதனையறிந்தே இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகர், "மொழிக் காரணமாம் நாதகாரியவொலி எழுத்து" எனக் கூறினாராதல் வேண்டும்.

இனி, இவர்கள் செய்தருளிய இலக்கியங்கள் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என இருவகைப்படும். இவற்றுள், சிற்றிலக்கியங்கள் பலவும் அந்தாதி, கலம்பகம் முதலாகப் பலதிறப்படும். அவை யாவும் சமயப் பொருள்களையும், சமண் சமயச் சான்றோர்களையும் புகழ்ந்து பாடும் சின்னூல்களாகும். திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி முதலியவை சமண் சமயத்தினர் பெரிதும் போற்றிப் படிக்கும் தீவிய செந்தமிழ் நூல்கள். நரிவிருத்தம் போலும் கதைச் செய்யுள் நூல்களும், மேருமந்தர புராணம், யசோதர காவியம் போல்வனவும் சமண் சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் விளக்கும் நற்றமிழ் நூல்கள்.

சிந்தாமணி முதலாகக் கூறப்படும் பெருங்காப்பியங்களும், சூளாமணி முதலாகக் கூறப்படும் சிறுகாப்பியங்களும் தமிழ் மொழிக்குப் பொதுவாக வைத்துக் கூறப்படுவன. சிறு காப்பியமைந்தனுள், மேலே காட்டிய யசோதர காவியமும் ஒன்றெனக் கூறப்படும்.

சிறுகாப்பியமைந்தும் தமிழ்மொழிக்குரிய பொதுக் காப்பியங்களாகக் கருதப்படும் செந்தமிழ் நலம் சிறந்தவையாயினும், இவை யாவும் சமண் சமயக் கருத்துக்களையே முற்றும் கூறிச் செல்கின்றன. இவற்றுள் சூளாமணி என்பது தலையாயது. இதனை இயற்றிய பெரியார் தோலாமொழித்தேவர். இவர் பெயரும், சீவக சிந்தாமணி செய்த திருத்தக்கதேவர் பெயரும் இயற்பெயரல்ல என்று கருதுகிறேன். இவர்களைப்போலத் தமிழ்த் தொண்டு புரிந்த சமண முனிவர் பெயரெல்லாம் வட மொழிப் பெயராகவே இருக்கின்றன. குணவீரபண்டிதர், அமுதசாகரர், மண்டலபுருடர், வாமதேவர் என்பன பலவும் வடமொழிப் பெயர்களே. ஆகவே, இவர்கள் தமிழ் நூல் பயின்று, தமிழ் வேட்கை மிகுந்து, தமிழர்போலத் தாமும் தமிழராகவே இயைந்து நிற்கும் தமிழ் நல மிகுதியால், தம்மைத் தமிழ்ப் பெயரால் திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர். என்பவராகக் கூறினாராதல் வேண்டும். இவர்கட்குப் பலவாண்டுகட்குப் பிற்போந்த கான்ஸ்டான்டினஸ் பெஸ்ச்சி என்பாரும், தமிழ்த் தொண்டுபுரியும் சால்பு எய்திய வழித் தம்மை வீரமாமுனிவர் எனக் கூறிக்கொண்டது, என் கருத்திற்கு ஆதரவு தருகின்றது. இவ் வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் காவியமும், தொன்னூல் என்னும் இலக்கணமும் பிறவும் செய்து தமிழ்த் தொண்டு புரிந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி யென்பது பெருங்காப்பிய மைந்தனுள் தலையாயது. ஏனை நான்கனுள் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் என்னும் சைவரும், மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் என்னும் தமிழரும் எழுதினர். ஏனை இரண்டும் இறந்துவிட்டன. இவற்றுள் மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களைத் தன்பாற் கொண்டது. சிலப்பதிகாரத்தும் சமண் சமயக் கருத்துக்கள் காணப்படும். ஆயினும் சமயத் தொண்டிற்கும் தமிழ்த் தொண்டிற்கும் ஒத்த இலக்கியமாய் விளங்குவது சீவகசிந்தாமணியே யாகும்.

சூளாமணி, சமண் சமயத்தவ்ரும் ஏனைச் சமயத்தவரும் ஒப்பப்போற்றும் தகுதியுடையதாய் இருக்கிறது. இதனை எழுதிய ஆசிரியர், தமிழ்நாட்டில் நிலவிய புறச்சமயப் பெர்ருள்களையும் சமயப் பொருளையும் கற்று, தம் சமய நூல்க்ளிலும், புறச்சமய நூல்களிலும் ஒத்தவாய் உள்ள கதைப் பகுதிகளைக் கண்டு, அவற்றைத் தமிழ் மக்கட்கு உணர்த்தி அவர் தம் ஆதரவு பெறுவதை நாடிய நல்லறிஞராவர். இதனால், இவர் எழுதிய இந்நூல் இன்றுகாறும் நன்கு போற்றப் பெற்று வருகிறது. சீவகசிந்தாமணியும் இப்பெற்றித்தாய்ச் சைவர் ஒருவரால் உரைகாணவும் பெற்றிருக்கிறது. .

தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியின்கண், திவிட்டன், விசயன் என்ற இரண்டு அரச குமாரர்கள் வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் வரலாறு வைதிக சமயநூற் கதைகளுள் வரும் வரலாற்றைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இடையிடையே சமண் சமயக் கருத்து விரவி நிற்கிறது. எனினும், சிந்தாமணி போல, வைதிக சமயநெறி நிற்பவரும் விரும்பத்தக்க அத்துணை உவமநலம் உடையதன்று என்றே கூற வேண்டும்.

கண்ணன் கடல்வண்ணன் என்றும், பலராமன் வளை வண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். ‘பால்நிற உருவிற் பனைக் கொடியோனும், நீல்நிற உருவின் நேமியோனும் என்றிரு பெருந்தெய்வமும் உடனின்றாங்கு (புறம் ௫௰௮) என வரும் திவிட்டனைக் கண்ட மகளிர், "கடலொளி மணிவணன் கனவினில் வந்தெமது, உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான்" (குமார ௰௨) என்றும், விசயனைக் கண்டவர் "வார்வளை வண்ணன் எம் மனத்துளான் பிறர், ஏர்வளர் நெடுங் கணுக்கு இலக்கமல்லனால்" (௰௬) என்றும் கூறினார் என்பர். இதனால் நிறமொத்தல் கூறியவாறாம்.

கண்ணன் கஞ்சன் விடுத்த குவலயா பீடத்தை அடர்த்தான்; திவிட்டன் அச்சுவகண்டன் விடுத்த சிங்கத்தை வாய்பிளந்தான். கண்ணன் பெருகி வந்த மழையைத் தடுப்பது குறித்துக் குன்றினை யெடுத்துக் குடையாகப் பிடித்தான்; திவிட்டனும் புலவர் ஒதிய வரலாற்றிற்கேற்பக் கொடிமாசிலை என்னும் குன்றத்தை யெடுத்துப் புகழ் நிறுவினான்.

“எரிமணி கடகக்கை இரண்டு மூன்றியப்
பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்
தருமணி நெடுவரை யதனை ஏந்தினான்
திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே”

(அரசு ௲௮௰௨) எனச் சூளாமணி கூறுகிறது.

கண்ணன் பின்னைப் பிராட்டியை மணந்தான்; திவிட்டன் சுயம்பிரபை என்னும் வித்தியாதர மகளை மணந்தான். கண்ணன் சிசுபாலனை ஆழி யெறிந்து வென்றான்; திவிட்டன் அயக்கிரீவனை ஆழி யெறிந்து வென்றான். இவ்வாறு திவிட்டன் செயல் பலவும் கண்ணன் செயல்களோடு ஒத்திருத்தலை,

“கோடிசிலை யெடுத்தான் கோளிமாவாய் போழ்ந்தான்
ஆடியல் யானை அயக்கிரீவனை அடித்தான்
வீடின் மணியருவி வெண்மலையும்
கைப்பிடித்தான் வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.”

“வலம்புரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான்,
சலம்புரி சண்டை தலைபணிப்புக் கண்டான்,
பொலம்புரி தாமரையாள் பொன்னாகம் தோய்ந்தான்,
கலம்புரிவண்டடக்கைக் கார்மேக வண்ணனே" (சுயம் ௱௱௮)

என்ற பாட்டுக்களால் இனிது காணலாம்.

இனி, இப்பெரியோர்களுள் திருத்தக்கதேவர் ஏனையோரைக் காட்டிலும் உலகியலில் மிக்க தேர்ச்சி யுடையவராக விளங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் தாம் பரப்பக் கருதும் சமயப் பொருள் குறித்த இந்த நூல், தமிழ்நாட்டில் பரவியிருக்கும் சமயப் பொருளைப் புறங்கூறுவதாயிருப்பினும், தம் சமயப் பொருளையே நிரல்படக் கூறுவதாயிருப்பினும், தமிழர்களால் ஆதரிக்கப்படுவது இல்லையாம் என்பதை நன்கு உணர்ந் திருந்தனர். அம் மதிநுட்பத்தால், தமிழ்நாட்டிற் பயின்றிருந்த வைதிக சமயக் கதை நிகழ்ச்சிகளை இந்நூற்கண் உவமமுகத்தாற் பயில வழங்கியுள்ளார். அதனால் இந்நூல் சமயக் கொள்கையால் வேறுபட்ட தமிழர் பலராலும் ஆதரிக்கப்பெற்ற தென்பது நாட்டில் வழங்கும் கதைகளால் நாம் அறிகின்றோம். இவ்வியல்பினைக் கடைப்பிடியாமையாற்றான், தேம்பாவணி, சீறாப்புராணம் முதலியன தமிழரிடையே நன்கு வழங்காதிருக் கின்றன போலும். இவ்வியல்பினை மூன்று இயல்களாற் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

தேவர் காலத்தே, தமிழர் தேவர்கள் இமையா நாட்டம் உடையரென்றும், அவர்கட்கும் அசுரர்கட்கும் பகைமையிருந்து வந்ததென்றும், அதனால் தேவர்கள் அடிக்கடி துன்புற்றன ரென்றும், தேவர்கள் திருமாலின் உதவியால் கடல் கடைந்து இனிய அமுதம் பெற்று மகிழ்ந்தனரென்றும் கேட்டிருந்தனர். அந் நிகழ்ச்சிகளைத் திருத்தக்கதேவர் தாம் சமயத் தொண்டு குறித்துப் - சீவி.க.சிந்தாமணியின்கண் குறித்திருக்கின்றார். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொல்லக் கருதி அமைச்சரோடு சூழ்ந்த காலத்தில் அமைச்சருள் தருமதத்தன் என்பான் கூற்றில் வைத்து, "இறங்கு கண்ணிமையார் விழித்தேயிருந்து, அற்ங்கள் வவ்வ அதன்புறம் காக்கலார்" (௨௱௪௰௮) என்றும், தேவர்கள் கடல் கடைந்து அமுது பெற்ற செய்தியை, பதுமுகன் கோவிந்தையை மணந்து கூடிக் கூறும் நயப்புரையில், "தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர், தாம்பாற் படுத்த அமுதோ" என்றும், அக்கடல் நாகம் கயிறாகக் கொண்டு கடையப்பட்டதென்பதை சீவகன் காந்தருவதத்தையை மணந்த காலையில், கட்டியங்காரனது ஏவலால், அச்சீவகனை எதிர்த்த வேந்தர் அவனால் அலைப்புண்ட செய்தியை விளக்குதற்கு உவமையாக நிறுத்தி, “அருவரை நாகஞ்சுற்றி ஆழியான் கடையவன்று, கருவரை குடையப்பட்ட கடலெனக் கலங்கி வேந்தர்... உடையலுற்றார்" (௮௱௰௨) என்று கூறுகின்றார்.

இரண்டாவதாக, முருகன் தாமரைப்பூவில் தோன்றியவன் என்றும், அவன் மலைநாட்டுக்குரிய கடவுள் என்றும், அவன் ஏந்திய வேல் வலி சிறந்தது என்றும், அவன் ஆடவரிற் பேராற்றலிலும் பேரழகிலும் மேம்பட்டவன் என்றும் தமிழர் சமயவுலகு கூறிப் பாராட்டி வந்தது. இச் செயல்களைத் திருத்தக்க தேவர், “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” (௩௱௰௬) என்றும், “தாமரை அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” (௬௱௯௰௪) என்றும், "மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ" (௲௬௱௰௧) என்றும், "அமருள் ஆனாது, ஒக்கிய முருகன் எஃகம் ஓரிரண்டனைய கண்ணாள்" (௲௨௱௬௰௧) என்றும், “செம்பொற் கடம்பன் செவ்வேலும்” (௲௬௭௯௰௪) என்றும், "கதம்பனே முருகன் வேற்போர்" (௲௬௱௮௰௧) என்றும், "திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன்தான்" (௮௱௰௨) என்றும், “வள்ளல் மாத் தடிந்தான் அன்ன மாண்பினான்" (௲௨௰௬) என்றும், "முந்து சூர்தடிந்த முருகன் நம்பி என்பார்" (௨௲௫௱௪௰௮) என்றும், இவை போலப் பிறவாறும் கூறிச் சிறப்பித்திருக்கின்றார். இவற்றை இடங்கூறி விளக்கலுறின் கட்டுரை விரியும்.

இனி, சிவபெருமானைக் கூறுமிடத்துப் "போகமீன்ற புண்ணியன்" (௩௱௬௨) என்றும், "காரியுண்டிக் கடவுள்" (௬௱௭௰) என்றும், “அறவாழி யண்ணல்” என்றும், பிறவும் கூறியும் பாராட்டுவர். பரமன் கண்ணுதலால் காமனைக் காய்ந்த செய்தி "கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரிப்பட்ட காமன்" (௲௩௱௰௧) என்பதனாலும், புரமெரித்த வரலாற்றினை, “கடிமதில் மூன்றுமெய்த கடவுள்" (௲௮௭) என்பதனாலும், "கணையெரி யழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்" (௨௲௨௱௪௬) என்பதனாலும், மங்கை பங்கினனாய் நிற்கும் நிலையினை, "பிறையணி யண்ணல் கொண்டபெண்ணொர்பால் கொண்ட தொத்தார்" (உதடுளகள்) என்பதனாலும் பிறவாற்றாலும் புகழ்ந்துள்ளார்.

இனி, திருமால், பரமன் புரமெரித்த காலத்தில் அம்பாயின செய்தியை, “போகமீன்ற புண்ணிய னெய்த கணையேபோல், மாகமீன்ற மாமதியன்னான் வளர்கின்றான்" (காசு) என்றம், அவற்குக் கருடப்புள் ஊர்தியென்பதை, "ஆழியான் ஊர்திப்புள்" (சாசசு) என்றும், அவன் சக்கரப்படை யுடையன் என்பதனை இதனாலும் பெறவைத்தும், திருமால் கண்ணனாய்த் தோன்றிய காலத்து, பாரதப் போரில் சங்கோசை எழுப்பிய செய்தியை, "செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவங் கொண்ட, சங்கு" (அாமக) என்றும், கண்ணனைக் கோறற்குப் போந்த குவலயாபீடமென்ற யானையை அவன் அடர்த்த நிகழ்ச்சியினை, "மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள், கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச், செல்வன் போன்றனன் சீவகன்"(கூாஅசை) என்றும், திருமால் இராமனாகிய காலத்து, அவன் மராமரமேழும் எய்த வில் வன்மையை, "மராமர மேழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லன் என்பது இசையலாற் கண்டதில்லை" (தசுாசகை) என உவமித்தும் மகிழ்கின்றார்.

மேலும், ஈண்டுக் கூறிய சிவபெருமானும், திருமாலும், தாம் பரவும் அருகமூர்த்தியே எனவும், அவ்விருவரையும் பரவுவோர், அருகனைப் பரவுதல் வேண்டும் என்பார்,

"மலரேந்து சேவடிய மாலென்ப மாலால்

அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுவார் அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுமேல் இலரே மலரெனினும் ஏத்தாவா றென்னே

"களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவனென்ப, அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல், விளியாக் குணத்துதி நாம் வித்தாலாறென்னே" (துசுனசி.கெ) என்று மொழிந்திருக்கின்றார்.

இனி, இவர் காட்டி மகிழ்விக்கும் தமிழ் நூற் சொல்லாட்சிகளும், தமிழர் வழக்கவொழுக்கங்களும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின், இஃதோர் பெரும் பரப்பினதாகும்.
-
இவ்வாறு, தம் சமயப் பொருளை முற்ற விரித்துரைக்கும் பெருங்காப்பியம் பாடத் அதனைத் தமிழ் நாட்டவர் பெரிதும் விரும்பியேற்றுப் பேணத்தக்க விரகு அறிந்து அமைத்த அமைதி, அவரது தமிழ் மாண்புலமையினை நன்கு விளக்குகின்றது. மேலும், இவர் காட்டிய நெறியினை இவர்க்குப் பின் வந்தோர் கடைப்பிடித்திருப்பரேல், சமயப் பூசல்களும், பிற தீமைகளும் உளவாதற் கேதுவில்லையாகியிருக்கும்.

இதுகாறும் கூறியவாற்றால், சமணமுனிவர் சைன சமயத்துச் சான்றோர் என்பதும், அவர்கள் நம் தமிழ்நாட்டில் தம் சமய நெறியை உணர்த்தப் புகுந்தபோது, தமிழர், இப்பெரியார்கட்குப் பல ஆண்டுகள் முன்பே வந்த வடவர் கூட்டுறவால் தம் தமிழ்ச்சமய நெறி மறந்து, வடவர் சமயக் கொள்கையிலும், வடநூன் மரபுகளிலும் வேட்கையுற்றுத் தம் தமிழ் வளர்ச்சியைக் கருதாது நின்றனர் என்பதும், ஆயினும் சமண முனிவர்கள் தேவார காலம் வரையில் தமிழ்த் தொண்டு புரிதற்கண் ஊக்கங் கொள்ளாதிருந்தனர் என்பதும், பின்பு அக்காலத்து வாதங்களில் தோல்வியுற்றதன் பயனால், தமிழ்த் தொண்டு புரியது தொடங்கி, சின்னூல்களும் பெருநூல்களும் செய்தனர் என்பதும், இலக்கணங்களின் சில புதுநெறிக் கருத்துக்களைப் புகுத்தியும், தாம் செய்த நூல்களுள் வேண்டுமிடங்களில் தம் சமயக் கருத்துக்கள் நுழைத்தும் சமயத் தொண்டு விரித்தனர் என்பதும், அதுவே நம் தமிழுக்குப் பெருந் தொண்டாயிற்றென்பது பிறவுமாகும். இந்நெறியைக் கைப்பற்றிய பின் வந்த கிறிஸ்தவப் பெரியார்களும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். இக்காலத்து ஏனைச் சமயத்தவர்களும் இம்முறையை மேற்கொள்வார்களாயின், தங்கள் சமயநெறி வளம் பெறுவதோடு நம் தமிழ் மொழியும் சிறப்பெய்தும் என்பது உறுதி.
---------------

19. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு

நாம் வாழும் இவ்வினியநாடு இந்திய நாடு என்பதில் நமக்கு இன்பம் எழுகின்றது. இதன்கண் வாழும் நாம் அனைவரும் இந்தியர் என்று எண்ணும்போது, நம் உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சி எழும்பியரும்புகிறது. நமது சமயம், வாழ்க்கை முறை, ஒழுக்கம் என்பனவற்றை நினைந்து எழுதும்போது நம்மையறியாத உவகை கனிந்து ஊறுகிறது. இத்துணைச் சிறப்புக்கு முதலிடமாய், நாம் இருந்து வாழ்தற்குத் தாயகமாய் விளங்கும் நம் இந்திய நாடு ஒருவகையில் வருத்தத்தையும் நல்குகின்றது, நம் கூட்டத்தில் சமயக் காய்ச்சல், வகுப்புப் பூசல், உயர்வு தாழ்வு, தீண்டுதல் தீண்டாமை முதலிய தீக்கோள்கள் நின்று நாம் பெறும் வாழ்க்கை யின்பத்தைச் சிதைக்கின்றன. பிற சமயங்களும், பிறசமயத்தவர்களும் செய்துள்ள நன்மைகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில்நின்று காண வொட்டாது, இவைகள் மறைக்கின்றன; மறைத்தனவர் என்பதைப் பற்றி இனி நினைப்பது பயனில் செய்கையாகும், மறைக்காதிருக்குமாறு செய்தலே செய்யற்பாலதாகும்.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காண்பதே நம் அறிவின் கடமையாகும். உயரிய பொன் மிகத்தாழ்ந்த மண்ணொடு கலந்து காணபபடுகிறதன்றோ? மிகவுயர்ந்த பாலும் ஒரோ வழித் தீமைபயக்கக் காண்கின்றோமல்லமோ? நன்பொருள் இழிந்தோரிடத்தும், இழிபொருள் உயர்ந்தோரிடத்தும் பெறுகின்றோம்; கெடுபொருள் நண்பர் வாயிலும், நன் பொருள் பகைவர்பாலும் கிடைக்கின்றனவே! இவற்றையுட்கொண்டு, நம் திருவள்ளுவப் பெருந்தகை, "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என மொழிந்தது பொய்யா மொழியன்றோ! இவ்வுண்மையைக் கற்பதும், பிறர்க்குக் கற்பிப்பதும் செய்யும் நாம், பிற சமயத்தவர் செய்த நலங்களையறிந்து பாராட்டுவது நமக்குக் கடமையாகும். நம்மிலும், ‘'சீறாப்புராணம்" என்னும் தீவிய செந்தமிழ்க் காவியமும், "நாகூர்ப்புராணம்" என்னும் நலஞ் செறி புராணமும் பெற்ற தமிழறிஞர், இசுலாம் சமயத்தவர் நம் தமிழ்க்காற்றிய பெருந் தொண்டினை யறிந்து மகிழும் பெருந்தகைகளாதலின், அவர்கள், இச்சமயத்தவர் நம் இந்திய நாட்டிற்கே செய்துள்ள பெரும் பணிகளைத் தெரிந்து போற்றும் சிறப்புடையவர் எனக் கருதுகின்றேன்.

இசுலாம் சமயத்தவர் முசல்மான்கள் எனவும், மகமதியர் எனவும் நம் நாட்டில் வழங்கப்பெறுவர். அவர்கள் மேற் கொண்டிருக்கும் இசுலாம் சமயமும் முகமதியமதம் என்றும் கூறுப்படும். இச்சமயம், புத்தசமயம், சமணசமயம்போல, இந்து சமயத்தினின்று முளைத்த கிளைச் சமயமன்று; இது, சிறிது காலத்துக்கு முன்பு நம் நாட்டிற்குப் போந்து பரவிருக்கும் கிறித்தவ சமயத்துக்கும் முன்னர் நம் நாட்டிற்குப் போந்து சிறப்பெய்திய சமயமாகும். நம் நாட்டுச் சமய நூல்களுட் கூறப்படும் அறுவகைப்பட்ட அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச் சமயம் என்ற சமயத் தொகைவகை விரிகளில், இஃது இடம்பெறாமைக்கும் இதுவே காரணமாகும். இதற்கும் கிறித்தவ சமயத்துக்கும் முதற்சமயம் யூதசமயம் என்று கூறுப. அவ்யூதசமயம், இந்தியநாட்டிற் பிறந்து தழைத்த சமயமன்று; அதனால், அதனைப்பற்றி நம் நாட்டுச் சமயக் க்ணக்கர்கள் ஆராய்ச்சி செய்திலர். பிற்காலத்துப் போந்த சமயப் புலவர்களும் அவ்வராய்ச்சியினைச் செய்யாதொழிந்தனர், செய்திருப்பாராயின், நம் சமூகத்தில் பிரிப்பின்றி வாழும் சைனர், புத்தர் முதலியவர்களைப்போல, இச்சமயத்தவர்களும் நம்மொடு பிரிப்பறக் கலந்துகொண்டிருப்பர். ஆனால், இதற்கு வேறு காரணம் கூறுபவரும் உண்டு. ஆயினும் அஃது அத்துணைச் சிறப்பாக இல்லை. அதனையும் பின்னர்க் கூறுவோம்.

இசுலாம் என்பது ஒருதெய்வக் கோட்பாட்டைக் கடைப் பிடியாகவுடைய பெருஞ் சமயமாகும். புறச்சமயங்களையும் பலதெய்வக் கோட்பாடுகளையும் எவ்வகையிலும் ஏலாதது; பரம் பொருள் ஒன்றைத் தவிரப் பிற எவற்றையும் வணங்குதற்கு மக்களைப் பணியாத பண்பு மேம்பட்டது; கிறித்தவ சமயமும் இந்நிலையில் இதனோடு ஒத்த இயல்புடையது. இவையிரண்டற்கும் தாய்ச்சமயமாக இருந்த யூதசமயம்போல, இவையுணர்த்தும் இயவுள், ஏனைத் தெய்வங்கள் உளவெனும் எண்ணுதற்கும் இடந்தராத உயர்கடவுள் என்னின் அது மிகையாகாது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்றே உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசிவாழ்தல் எல்லோரும் செய் கடனாம்” என்றே மெய்ம்மைநெறியை உலகில் வற்புறுத்திய பெருநெறி இதற்கே உண்டு. எத்திறத்து மக்களையும் உயர்வு, தாழ்வு இன்றி ஒப்ப எண்ணியொழுக வேண்டும் என்ற உயர்நெறியில் ஒப்பற்ற சமயம் இசுலாம் சமயமே. கடவுளின் அருட்கண்ணின்முன் மக்கள் வேற்றுமையில்லை என்ற செந்நெறியை உலகில் நிறுவி, யாவரும் அதனைக் கடைப்பிடித் தொழுகச் செய்த முதற்பெருமை இதற்கே உண்டு.

இச்சமயம், பண்டைக் காலத்தில், கிறித்து பிறந்த சுமார் அறுநூறு யாண்டுகட்குப்பின், அரபிய நாட்டிற் பிறந்த மகமது என்ற பெருமகனாரால் முதன்முதலாகக் காணப்பெற்றது. அக்காலத்து, அவ்வரபிய நாட்டுமக்களிடையே பொருந்தாச் செய்கைகளும், திருத்தாக் கொள்கைகளும் பலவாய் மலிந்து, உருவ வழிபாட்டின் பெயரால், அந்நாட்டிற்குப் பேரிழிவினைச் செய்து வந்தன. அருள் வள்ளலாகிய இப்பெரியார் அவற்றைக் கண்டு உளம்பொறாது இச்சமய வுண்மையினைக் கண்டு, அம் மக்களை நல்வழியில் தெருட்டித் திருப்பவெண்ணினார். அவர் முயற்சி தொடக்கத்தில் அவரது அருமையுயிர்க்கே இன்னலை விளைவிக்கத் தொடங்கிற்று. அவர்கள் விளைத்த தீமையினைப் பொறாத அவர், முடிவில், அந்நாட்டின் சீரிய நகரங்களுள் ஒன்றாகிய மெக்கா நகரைவிட்டு நீங்கி மெதினா என்னும் நகருக்குச் சென்றார். அதற்குள் அந்நாட்டவருட்பலர், அவர் தெருட்டியசமயக் கொள்கையை மேற்கொண்டு, அவர் காட்டிய நெறியில் ஒழுகத்தலைப்பட்டனர். அவர்கட்குமகமதியர் என்றும், அப்புதிய சமயத்திற்கு மகமதிய சமயம் என்றும் பெயர்கள் முறையே வழங்கலாயின. மெக்காவை நீங்கி, அவர், மெதினாவுக்குச் சென்ற நிகழ்ச்சி, இன்னும். இஜிரா என்று வழங்குகிறது. அவர் வழங்கிய அருமை மொழிகள், “குர்ஆன்” என்னும் பெயருடைய அருமறையில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. மகமதியர்கள், அம்மொழிகள் பரம்பொருள், மகமது நபியின் வாய்வழியாக வழங்கியவை என்று கருதுகின்றனர்.

இந்துக்கள், தங்கள் நான்மறைகளை ஆண்டவனே அருளினான் என்றும், அதனால் அவனுக்கு "வேதங்கள் மொழிந்தபிரான்" எனப்பெயரும் கூறுபவராகலின், அவர்கட்கு இதன்கண் புதுமையொன்றும் தோன்றாது. "அருள்நெறி" யாகிய அச்சமயமும், அருள் நெறியை உணர்த்தும் இயல்பு பற்றி "இசுலாம்" சமயம் என்றே வழங்கப்பெற்றது. இச் சமயம் வளர வளர, அரபியர் இடையில் இருந்த தீநெறிகளும் தீயொழுக்கங்களும் நீங்கின; அவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரெனவுணர்ந்து தம்முள் ஒற்றுமையுண்டு பண்ணிக் கொண்டனர். தங்கட்குப் பெருநலம் செய்த இச்சமயவுணர்வை நிலவுலகில் யாண்டும் பரப்ப வேண்டுமென்ற வேட்கைமிக்கு, ஒரு நூறு யாண்டுகளுக்குள், பாரசீகம், துருக்கித்தானம், ஆப்கனித்தானம் என்ற இன்னோரன்ன நாட்டுமக்கள் அனைவரையும் மகமதி சமயத்தவராக்கிக் கொண்டனர். பாரசீகரும், நம் இந்திய நாட்டின் வடபகுதியில் அக்காலத்து மல்கியிருந்த ஆரியர்களைப் போல, தீயினைக் கடவுளாகக் கருதி வழிபடும் வழக்குடையராயிருந்தவர்கள். அவர்களுட் சிலர், இம்மகமதிய சமயத்தைமேற் கொள்ளாதவராய், இந்தியநாட்டுட் புகுந்து குடியேறினர். மகமதியரும் நெடுங்காலம் வரையில், இப் பாரசீகருடனும், தார்த்தருடனும், ஏனைய வடபுலத்தவருடனும் போர் நிகழ்த்திய வண்ணமேயிருந்தமையின், நம் இந்திய நாட்டில், இப்பொழுதைக்குச் சுமார் தொள்ளாயிரமாண்டு கட்குமுன் வரமாட்டாது நின்றனர்; பின்னரே, அவர்கள் நம் இந்திய நாட்டிற்கு வரலாயினர்.

இவர்கள், இந்நாட்டிற்கு வருதற்கு முன்பே பாரசீகருட் சிலர் போந்து குடியேறி விட்டனர் என்று முன்பு கூறியுள்ளோம். அவர்கட்கு முன் வேறுபல நாட்டினரும் வந்து இங்கே குடிபுகுந்திருந்தனர். அவர்கட்கும், மகமதியர்கட்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. முன்னே வந்தவர்கள் தம் சமய வுணர்வை நாட்டிற் பரப்பவேண்டுமென்ற நோக்கமுடைய வரல்லர்; இவர்கட்குப் பின்னர்ப் போந்த ஐரோப்பியரும் அவ்வாறு வந்தவரல்லர்; இவர்கள் மட்டில் சமயத் தொண்டினைக் குறிக்கோளாகக் கொண்டு வந்தனர் என்பது பல சான்றுகளால் விளங்குகின்றது. மேலும் இவர்கட்கு முன்னே போந்தவர், நம் நாட்டிற் குடி புகுந்து வாழ்ந்திருந்த ஏனை மக்களோடு கூடி, ஒருமையுற்று, அவர்கட்குரிய ஒழுக்கம், வழிபாடு முதலிய நெறிகளைத் தாமும் ஏற்று, இந்தியரோடு இந்தியராய் இயைந்திருந்தனர். அவர்கள் யவனர், ஸ்கிதியர், மங்கோலியர், பார்த்தியர் முதலிய பலராவர். அவர்கள் நாட்செல்லச் செல்ல, இந்துக்களுள் இந்துக்களாய், தம் பெயர், மொழி, சமயம், ஒழுக்கம், உடை, மனப்பான்மை என்ற பலவற்றினும் ஒன்றிவிட்டனர். கிறித்து பிறப்பதற்கு இரு நூறுயாண்டுகட்கு முன் இந்நாட்டிற்குப் போந்த கிரேக்க தூதர் ஒருவர், இந்நாட்டிற் பலவிடங்களுக்குச் சென்றார். அவர் தந்தை 3 à N c N G2 (Dion) என்றும், அவர் பெயர் ஹீலியோ டோரஸ் (Helio dorus) என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு சமயம் வடநாட்டிலுள்ள திருமால் கோயில் ஒன்றிற்குச் சென்று, அவரை வழிபட்டு, அம்மட்டில் நில்லாது, ஒரு "கோபுரமும்" எடுப்பித்தார். பின்னர், அவர் ஒரு வைணவ பாகவதராய், திருமாலை வழிபட்டு வந்தார். இவரைப் பின்பற்றிப் போந்தவர் பலரும், இவ்வண்ணமே வழிபாடு செய்வது வேற்றுநாட்டு மக்கட்கும் இயைந்ததாகும் என்று கருதினர். இச்செய்தி பேஸ் நகரி (Bas nagar) லுள்ள துணிற் செதுக்கப் பெற்றிருக்கும் கல்வெட்டினால் நமக்குத் தெரிகின்றது.

மகமதிய, சமயத்தினர், நம் நாட்டிற் புகுந்தபோது, இக்கருத்து நம் நாட்டில நிலவியிருந்த- தாயினும், இவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை. இசுலாம் சமயம் கூறும் "அல்லா" திருமாலின் பல்வேறு பிறப்புக்களுள் ஒன்றாம் என்றும், இச் சமய வுண்மைகளை யுலகிற்கு வழங்கியருளிய மகமது பெருமானைத் திருமாலடியாருள் ஒருவரென்றும் கூறி, இந்துக்கள் இவர்களைத் தம்முள் ஒருவராக இயைத்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். வடமொழியுள் வல்லுநர், “அல்லோப நிஷத்" என்றொரு நூலை யெழுதி, மகமதிய வேந்தருட் சிறந்தவரான அக்பர் என்ற பெயர் கொண்ட அரசர் பெருமானை, “அவதார மூர்த்தி" என்றும் சொல்லத் தொடங்கினர். ஆயினும், மகமதியர், இவை, தம் சமயக் கருத்துகட்கு முரணாதல் கண்டு, இவற்றை அறவே ஏலாராயினர். அவர்கள், இந்துக்களாற் செய்யப்படும் “சடங்கு"களையும் உடன் பட்டிலர். “பல தெய்வ வழிபாடு செய்பவர் தூயரல்லர்; தூயதல்லாத யாதும் காபாவில் புகுவதும் தீது" என்று குர்ஆன் மொழிவதை அவர் விடாது போற்றினர்.

இவ்வாறு, திண்ணிய சமயவுணர்வினைக் கொண்டிருந்ததனால், இவர்கள், நம் நாட்டிற் புகுந்து குடியேறிய பின்பும், தமது வழக்கம், ஒழுக்கம், பெயர், மொழி என்ற பலவகையிலும் இந்துக்களிற் பிரிந்தே யிருந்து வரலாயினர். ஒரே நாட்டிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த போதும், அவர் இந்நாட்டவரோடு கலப்பின்றியே இருந்தனர். இவ் வேறுபாட்டை நீக்கிக் கலப்பையுண்டு பண்ணும் துறையில் எம்முயற்சியும் பயன்படாது போயிற்று. இந்திய நாட்டிற்புகுந்து குடியேறி வாழ்ந்துவரும் இந்திய மகமதியர் அனைவரும், தம் சமயவுணர்வு நெகிழாது போற்றி வந்தனர். அதனால், அவர் தம் உள்ளம், அவரது சமயம் பிறந்த நாட்டையே நாடி நிற்பதாயிற்று, நாடோறும், அவர்கள் செய்யும் கடவுள் வழிபாட்டிலும், தொழுகையிலும் அவர்தம் முகம் அரபியநாட்டு மெக்காவையே நோக்கி நிற்கிறது; அவர்தம் மனப்பான்மை, ஒழுக்கமுறை, ஆட்சிமுறை, சமயக் கல்வி ஆகியயாவும் அரேபியா, சிரியா, பாரசீகம், எகிப்து என்ற இந்நாட்டு இயல்பினவாகவே இருக்கின்றன. இவர்களுடைய சமய மொழி, சமய சகாப்தம், இலக்கியம், ஆசிரியன்மார், அடிகண்மார், கோயில்கள் என்ற யாவும் ஒரே வகையாகவே இருக்கக் காண்கின்றோம். இவர்கள், இந்நிலவுலகில் எப்புறத்தில் வாழினும், இவையெல்லாம் ஒரு பெற்றியவாய் இருப்பது காணப்படுமே தவிர அவ்வந்நாட்டு எல்லைக்கு அகப்பட்டு, ஆங்கே அடங்கி ஒடுங்கியிருத்தலைக் காண்டல் அரிது.

இவர்தம் வருகைக்கும், இவர்கட்கு முன்போந்த ஏனையோர் வருகைக்கும் இருந்த வேறுபாடுகளுள் மேலே காட்டியது தலைசிறந்ததாகும். இதனோடு ஒப்பப் பிறிதொரு வேறுபாடும் உண்டு. நம் நாட்டிற்கு வந்த மகமதியர்கள், ஆயிரத்து இருநூறு முதல் ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுவரையில், அரசியல், சமூகவியல் என்ற எல்லாவற்றிலும், போர்த்திறமும் நாடோடிகளாய் நிலையின்றித் திரியும் திறமுமே நிரம்பக் கொண்டிருந்தனர். பாசறையிற் றங்கும் அரசர் தானைபோலவே, மகமதிய அரசியற் றலைவர்களும் ஆங்காங்கு இருந்து வந்தனர். ஒரு நிலையாய்த்தங்கி, நாடு நகரங்களைச் சீர்செய்து, அரசியலின் நிலைமையை நிறுவி, நாடுகாத்தல், தீயரை யொறுத்தல் ஆகிய செயல்களோடு சமூகத்துறையிலும் நலம் பல செய்யத் தொடங்கியது பிற்காலத்தில்தான் நிகழ்வதாயிற்று. கலப்பு மணம், சமயக் காய்ச்சலின்மை, ஒத்தவுரிமை முதலிய பல நன்மைகளும் பின்னரே உண்டாயின.

உயர்ந்தோர்களிடத்தில் ஒருகுறை உண்டாகுமாயின், அது விரைவில் உலகறியப் பரந்துவிடும். அவ்வண்ணமே, ஒருவன் செய்த குற்றம் உலகறியத் தோன்றி நிலைபெறுமாயின், அவன் பால் ஒருவகைச் சிறப்புண்டென்பது துணிந்துகொள்ளலாம். அம்முறையே, மகமதிய மன்னர்கள் காலத்துச் சிறுசெயல்கள் சில, இந்திய நாட்டு வரலாற்றுச் சிறு நூல்களுட் காணப் படுமாயின், அவற்றைக் கொண்டே, அவர்பால் அமைந்திருந்த பெருமை இனிது உணரப்படுகின்றது. தன் உயிரைக் கொல்லுதற்குப் போந்த அரசபுத்திரன் ஒருவனைப் பொறுத்து வீரனாக்கிச் சிறப்பித்த ஆண்டகை பாபர் வேந்தரை அறியாதார் யாவர்? இந்து சமயத்தவரையும் மகமதிய சமயத்தவரையும் ஒப்பமதித்து உயர்நலம் புரிந்த அரசர் பெருந்தகையான அக்பரை அறியாதவர் அறிவு பெறாதவர் அல்லரோ? அப்பெருந்தகைகள் ஆற்றியுள்ள நலம் பலவும் எழுதப்புகின், இக்கட்டுரை வரம்பின்றி விரிவதல்லது அவர்தம் புகழ்நலம் அடங்கிவிடும் என எண்ணுவது சிறுமையன்றோ? இந்நலமனைத்திற்கும் அடிப்படையாகவுள்ளது இசுலாம் சமயத்தின் இயல்பே என்பதை மறத்தல் ஆகாது.

இந்தியநாட்டின் தென்பகுதியாகிய நம் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடைவேந்தர் மூவருள் சோழர்கள் காலத்தில், நிலப்படையுடன் கடற்படையும் இருந்து நாடுகாத்துவந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததாகும். ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய’ இராசராசன் முதலிய சோழமன்னர்கள், கடற்படை கொண்டு சென்று பகைப்புலங்களை வென்றனர். அவர்கட்குப் பின் வந்த சோழமன்னர்கள் வீழ்ச்சியடையவே, கடற்படையும் கெட்டழிந்தது. பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் அவர்கள் காலத்திற்குப்பின் கிடைப்பது அரிதாகியது. ஆயினும் இக்கடற்படையும், பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் இம் மகமதிய மன்னர் பெருமக்களால் மறுவலும் உண்டாயின.

நம் இந்தியநாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்த சமய காலத்தில் ஏனை நாடுகளிற் பரவி அவற்றோடு சீரிய தொடர்பு பெற்றிருந்தனர். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தொடர்பை நெகிழ்த்து, தம் நாட்டெல்லைக்குள்ளேயே அடங்கியமைந்து விட்டனர். அதனால், இந்நாடு தன்னிலையில் அடங்கி, பிறவற்றோடு தொடர்பின்றித் தனிப்பதாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இசுலாம் சமயத்தவரின் பெருந்துணையால், அத்தொடர்பினை மீட்டும் நம் நாடு பெற்றது; ஆயினும் அத்தொடர்பு பண்டே யிருந்தது போன்றில்லை. புத்த சமய, காலத்தில் நம் நாட்டவர் வேறு நாடுகட்குச் சென்றதுபோல, இக்காலத்தில் செல்வது ஒழிந்தனர். பல ஆயிரக்கணக்கினரான வேற்று நாட்டுமக்கள் நம் நாட்டிற்கு வரத்தொடங்கினர். மகமதிய சமயத்தவர் மாத்திரம் வேறு
-----------
நாடுகட்குச் சென்று வருவவதை மேற்கொண்டிருந்தனர். இவர் தம் அரசியல், பதினெட்டாம் நூற்றாண்டில் தளர்ச்சியடைந்து வீழ்வுற்றது நாம் அறிவோமன்றோ? அதுவரையில், வட மேற்குக் கணவாய்களின் வழியாகப் பொகாரா, சாமல்கண்டு, பால்கு, குராசான், கிவாரிசும், பாரசீகம் என்ற நாடுகளிலிருந்து மக்கட் கூட்டம் நம் நாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அந்நாளில் ஆப்கானித்தானமும் டில்லி வேந்தரின் ஆட்சியில்தான் அடங்கியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜஹாங்கீர் என்னும் மன்னரது ஆட்சிக் காலத்தில், நம் இந்திய நாட்டிலிருந்து போலன் கணவாய் வழியாக ஆண்டுதோறும் 14000 ஒட்டகச் சுமையளவினவாய பொருள், கந்தகார், பாரசீகம் என்ற நாடுகட்குச் சென்றன. “மேலைக்கடற் கரையில் இருந்த பட்டினங்கள் (Sea ports) வெளிநாட்டுக் கடற் போக்கு வரவுக்கு வாயில் திறந்திருந்தன. கீழைக்கடற்கரைப் பட்டினங்களுள், மசூலிப்பட்டினம் ஆயிரத்து அறுநூற்றேழாம் ஆண்டுவரைக் கோலகொண்டாவை யாண்ட சுல்தான்களுக்கு உரியதாயிருந்தது. அதற்குப் பின்பே அது முகலாய வேந்தர்கட்கு உரியதாயிற்று. அப்பட்டினத்திலிருந்து, இலங்கை, சுமித்திரை, சாவகம், சீயம், சீனம் என்ற நாடுகட்கு வாணிபம் பேணி, வங்கங்கள் பல சென்ற வண்ணமிருந்தன என முகலாயராட்சி (Moghul administration) என்ற நூல் கூறுகின்றது.

வட நாட்டில் முகலாய முடிமன்னர்களின் ஆட்சி நிலவிய காலம் இருநூறுயாண்டுகளேயாகும்; ஆயினும், அக்காலத்தில் நம் நாட்டிற்கு உண்டாகிய நலங்கள் பலவாகும். பல வேறு வகை மொழி வழங்கும் நாட்டிற்கு அரசியல் மொழி யொன்று பொதுவாக வேண்டப்படுவதாயிற்று. அஃது அந்நாட்டு மொழிகளுள் ஒன்றாயின், பிறமொழி பேசுவோர் கூட்டத்து அமைதி உண்டாகாது எனவுணர்ந்து, இம்மன்னர்கள் தமது பாரசீக மொழியினையே அரசியல் மொழியாக வகுத்தனர். பின்னர் அது பலர்க்கும் தாய்மொழியாம் நிலைமையினையும் அடைவதாயிற்று. அதனால் ஆட்சிமுறையும் நாணயச் செலாவணியும் ஒரு முறையாய் நடைபெறலாயின. இன்றும், கச்சேரி, ஜில்லா, தாலுகா, பிர்க்கா, தாசில்தார், உசூர் என வழங்கும் சொற்கள் பலவும் அவர்தம் ஆட்சிநெறியின் ஒருமை முறையினை விளக்கும் அடையாளங்களாகும். நாட்டு மக்களிடை ரெக்டா எனப்படும் இந்துத்தானிமொழி வழங்கி வந்தது.

இவர்கள் காலத்தில், விந்தவரைக்கு வடக்கிலுள்ளநாடு, பல சிற்றரசர்க் குரிமையுற்று, பல சிறு நாடுகளாகப் பிரிந்து, எப்பொழுதும் போரும் பூசலும் நிகழும் அமர்க்களமாயிருந்தது, அவர்களையடக்கி, அரசிற்குரிய அமைதி பெறுவித்ததோடு. அவர் தம் நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவுவித்தனர். தம் சமயத்தை நாட்டில் பரப்புதல் வேண்டும் என்ற கருத்து இவர்தம் மனத்தில் மிக்கிருப்பினும், அரசு கட்டில் ஏறி மக்கட்கு நலம் செய்வதும் சிறப்புடைப் பணியாகலின், இவர்கள் அத்துறையினும் சீரிய அறமே புரிந்து போந்தனர். அந்நாட்டில், பெரும்பாலும் ஒரு நெறிப்பட்ட ஆட்சிமுறையும், பொது மொழியும் நிலவச்செய்த இப்பெருமக்களின் திருப்பணியால், இடந்தோறும் மொழி, உடை முதலியவற்றில் வேறுபட்டுக் கிடந்த இந்திய மக்கள், தவ சமூகவொழுக்கம், உடை முதலிய அவற்றுள்ளும் ஒருமை நெறியை மேற்கொண்டனர். நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவவே, மக்கள் தம் தாய்மொழியிலும் மிக்க பயிற்சிகொண்டு சிறந்த இலக்கியங்கள் செய்தனர். இன்பமும், அமைதியும் உரிமையும் நிலவும் நாட்டில்தான் உயர்ந்த இலக்கியங்களும், அரிய கருத்துக்களும் பிறக்கும் என அறிஞர் கூறுவர். இவர்கள் காலத்தில் இவை மிகப் பெருகி நாட்டிற்குச் சிறப்பு நல்கின. தான் அடைந்த முதுமையினைத் தான்பெற்ற மகனுக்கு நல்கி, அவனது கட்டிளமையைத் தான் பெற்று மகிழ்ந்த அரசர்கள் இந்துக்களில் இருந்தனர். தம் வரலாற்றினைத் தாமே வரைந்த அரசர் பாபர் பெருமான். நாட்டில் வழங்கிய நாணயங்கள், சகடக்கால் போல் மக்கள் கையகத்து நில்லாது பெயரும் நீர்மையவாயினும், அவர்களால் காதலித்துப் போற்றப்படும் இயல்பறிந்து அவற்றின் வழியாக அறத்தைப் பரப்பி நிறுவிய அறிவுநலம் இவர்கள்பால் இயல்பாகவே அமைந்து கிடந்தது. ‘நல்லது செய்வது ஆண்டவனுக்கு அளவிறந்த உவப்பைத் தருவது; நடுநிலை திறம்பாது நன்னெறியிற் சென்றோர் கெடுவதிலர்; கெட்டார் என யாம் கேட்டதுமில்லை” எனப் பொறித்த நாணயங்கள் இவர்கள் காலத்தில் அறநெறி வழங்கி மக்களை அறிவுடையராக்கின. “அயின் அக்பரி” என்ற அரசியல் நூல் அக்பர் என்னும் அரசர் பெருந்தகை காலத்தில் பிறந்ததென்பது சிறுமகாரும் அறிந்த செய்தி யாகும்.

போர்த்துறையில் பலதிறமானபயிற்சிகளும், நாகரிகத்தில் சிறப்பும், கல்வியில் பெருமாண்பும் நல்கிய இவர்தம் காலத்தில், கைத்தொழிலும், சிற்பமும் பிறவும் உலகு புகழ் உயர்வு பெற்றன. இந்திய சீனக்கைவேலை யமைப்புக்கலந்த இந்துசாரசன் கைத் திறங்கள் நாட்டில் வளம் பெற்றன. புதிய புதிய சிற்பத் தொழில்கள் அரசர் ஆதரவு பெற்றன. "புகை முகந்தன்ன மாசில் தூவுடை" எனவும், "நோக்கு நுழைகல்லா நுண்மையபூக் கனிந்து, அரவுரியன்ன அறுவை எனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் செய்துதவியது போன்ற நுண் வினையுடைகளும், மெல்லிய பட்டாடைகளும் இவர்கள் காலத்தே வளம்பெற்று உலகு புகழும் ஒண்பொருளாய்ச் சிறந்தன. கம்பளிகளும், பின்னல்களும், கின்காப் (Kin Khab) என்பனவும், “நுரைகவர்ந்தன்ன மென்பூங்கம்பல"ங்களும் புகழ்வோர் புலவரையிறந்து விளங்கின.

இந்த இசுலாம் சமயப் பெருமக்களால் நம் நாட்டில் விளைந்த நலங்கள் பலவும் எளிதில் கண்டு கோடற்கென ஒருவாறு திரட்டித் தந்து இக்கட்டுரையினை முடித்துக் கொள்ளுகின்றாம்.

1. சோழ வேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின் கெட்டழிந்திருந்த கடற்படையும் பிறநாட்டுக் கூட்டுறவும் பண்டேபோல் மீட்டும் தோற்றம் பெற்றுச் சிறந்தன.

2. விந்தியவரைக்கு வடக்கில் உள்ள நாட்டில், இவர்தம் வினைத்திட்பம், ஆட்சி நெறி, நன்மனப் பண்பு என்பவற்றால் அமைதியும் இன்பமும் நிலவுவவாயின.

3. தாம் வென்று அடிப்படுத்தி நாடெங்கும் ஒரு தன்மையும், ஒருநெறியும் பொருந்திய ஆட்சிமுறை இவர்கள் காலத்தே நாட்டில் நடைபெறுவதாயிற்று.

5. உயர் வகுப்பினருள் சமய வேற்றுமையிருந்ததெனினும், சமூகவொழுக்கம், உடை முதலியவற்றில் மக்கட்கிடையே ஒற்றுமை யெய்தி யிருந்தது. சமய வேற்றுமையும் காய்ச்சலும் பூசலுமாய் மாறியது பேரரசப் பெருந்தகைகள், காலத்தில் இல்லை,

5. இந்துத்தானியென்றும், ரெக்டா என்றும் கூறப்படும் மொழி பொதுமொழியாயிற்று; அரசியற் பொதுமொழி பாரசிக மொழி.

6. அவ்வந்நாட்டுத் தாய்மொழிகள், அமைதியும் இன்பமும் நிலவியதன் பயனாய் வளம் பெற்றன. வரலாறு கூறும் நூல்களும், அரசியல் நூல்களும் நல்லிடம் பெற்றுத் திகழ்ந்தன.

7. பல தெய்வக் கொள்கையும் வழிபாடும் கூறும் சமய நெறிகட்கிடையே ஒரு தெய்வக் கொள்கையும் வழிபாடும் அறிஞர் மனத்துள் வேரூன்றி விளங்கின. அதனால், சில சமயங்கள் சீரிய திருத்தம் அடைந்தன.

8. போர்முறையிலும், நாகரிக வளர்ச்சியிலும் பல்வகை நலங்கள் இவர்களால் நம் நாடு பெற்றுச் சிறப்படைந்தது.

9. இந்துசாரசன் கைத்திறங்களும், சிற்பத் திறங்களும் பெருமக்களின் ஆதரவு பெற்றன. பொன்னும் மணியும் செறிந்த நுண்மாண்கைவினைகள், இவர்கள் காலத்திற் பெற்றது போல் பிற எக்காலத்தும் மேம்பாடு பெறவில்லையெனின், அஃது இறப்பப் புகழும் புகழ்ச்சியாகாது.

10. பட்டினும் பருத்தியினும் ஆய உடைவகைகள் நெய்தலும், கம்பல நெசவும் பிறவும் இந்த இஸ்லாம் சமயத்தவர் நம் இந்திய நாட்டில் செய்த இனிய தொண்டினால் மேன்மையடைந்தன.

இக்கூறிய நலங்கள் அனைத்திற்கும் உரியராய் விளங்கும் இப்பெருமக்களின் நற்புகழ் இந்நிலவுலகில் என்றும் நின்று நிலவுக என வாழ்த்தி இக்கட்டுரையை இவ்வளவில் நிறுத்துகின்றோம்.
-------

20. விஞ்ஞானமும் தத்துவஞானமும்

---
The Unity of Philosophical Experience by E. Gilson, P.III. pp.223–95.
தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமையுரையின் ஒரு பகுதி.
-------
இக்காலம் நுணுகிக் காணும் விஞ்ஞானத்துக்குச் சிறப்பளித்து அதனாற் பெறலாகும் அறிவியல் நலங்கட்கு முதன்மை தந்து நிலவும் காலமாகும். விஞ்ஞானத்தால் விளக்கப் படும் பொருள்களே உண்மை யெனவும், கொள்ளத்தகுவன எனவும் கருதுவது இக்காலத்தில் சிறப்பியல்பு. சிவமாகிய கடவுட் பொருள் விஞ்ஞான முறையில் காணப்பட்டாலொழியக் கொள்ளத்- தகுவதன்றெனவும் இக்காலம் கருதுவதுண்டு. அறிவென்பதுகூட விஞ்ஞான முறையிற் பெறுவதுதான் சிறப்பு என்று இக்காலத்தவர் கருதுகின்றனர். இவர்கட்கு முன்னணியில் நிற்பவர் இமானுவேல் காண்டு (Immanuel Kant) என்பாரும், அகஸ்தே காந்தே (Augustine Conte) என்பவருமாவர். இவ்விருவரும் தத்தங்கொள்கை வகையில் பெரிதும் வேறுபாடு உடையவராயினும் "அறிவாவது விஞ்ஞான முறையிற் பெறப்படும் அறிவே” என்ற வகையில் ஒத்துள்ளனர். விஞ்ஞான முறை அறிவாவது நியூட்டன் (Newton) கண்ட அறிவியல் முறைப்படி அறியவேண்டியவற்றை அறிவதாகும். உலகியற் பொருளொன்றை விஞ்ஞான முறையில் அறிவதென்பது, குறித்த பொருளின்பால் பிற பொருட்குள்ள தொடர்புகளைக் கணக்கியல் வாய்பாட்டாற் கண்டறிவதென்பர்.

சிவமாகிய செம்பொருள் உலகியற் பொருள்களுள் ஒன்றாக வைத்து விஞ்ஞான முறையிற் காணக்கூடியது அன்மையின் அச்செம் பொருள் அறியக் கூடியதன்று; ஆகவே, அதனைப்பற்றிப் பேசுவது வீண் செயல் என்பது அவர் கொள்கை. ஆயினும், உலகியல் நிகழ்ச்சிக்கு அத்தகைய செம்பொருளொன்று உளதாக வைத்துச் செய்வன செய்ய வேண்டியிருக்கிறது எனவும், எனவே, அது நம்மால் வகுத்துக்கொள்ளப்பட்ட தொன்றே தவிர, அறிவியல் ஆராய்ச்சியால் அறிந்து கொள்ளக்கூடிய ஒன்றன்று எனவும் காண்டு (Kant) என்பவர் கூறுகின்றார். காந்தே (Conte) என்பார் வேறு வகையில் தமது நாவன்மையைச் செலுத்தி இந்த முடிவுக்கே வந்துசேர்ந்தார்.

இவர்தம் கொள்கைகளுள் காண்டென்பாரைப் பின்பற்றி ஜெர்மனி நாட்டில் பால்சென் (Paulsen) வைசிங்கர் (Vaishinger) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில், ரினோவியர் (Removier) முதலியோரும், அமெரிக்காவில் லியோன் பிரன்சிக் (Prof Leon Brunschvieg) முதலியோரும், காந்தேயைப் பின்பற்றி இங்கிலாந்தில் ஜான் ஸ்டுவர்ட்மில் (John Stuart Mill) ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbart Spencer) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில் எமில் லித்ரே ("Emile Littre") எமில் டர்க்கீம் ("Emile Durkheim") முதலியோரும் நாட்டிற் பரப்பலுற்றனர்.

புதுமையில் மக்கட்கு விழைவும் வியப்பும் உண்டாதல் இயல்பு. விஞ்ஞானிகள் இங்ஙனம் புது முறையில் தமது பேச்சு வன்மையும் எழுத்து வன்மையும் கூட்டிக் கடவுட் கொள்கையைத் தாக்கத் தொடங்கியதும், விஞ்ஞானம் காட்டும் புதுமைகள் கண்டு வியப்பால் விழுங்கப்பட்டுக்கிடந்த மக்களது உள்ளம் நிலைகலங்கிற்று. விஞ்ஞானத் துறையின் நோக்கத்தை நுணுகிக் காணும் திறம் இழந்தவர். அவர் கொள்கைகட்கு இரையாயினர். உலகியற் பொருள்களின் ஆக்கக் கூறுகளும், அவை, தம்மில் இயைந்து அமைந்திருக்கும் அமைதியும், அவற்றின் ஊடே நிலவும் ஒழுங்கும் கண்டு எப்படி யமைந்துள்ளன என்று கண்டறிவதே விஞ்ஞானத்தின் முழுத்த நோக்கமாகும். பொருள்களின் தோற்றம், நிலை, கேடு ஆகியன உண்டாதல் எங்ஙனம் என்று கண்டு, அவை ஏன் அங்ஙனமாயின என்று காணாது போதலால், விஞ்ஞானத்தாற்பெறும் உலகியலறிவு முழுத்த அறிவாகாதென்பதை மக்கள் அறிந்திலர்.

பொருள்களின் ஆக்க அமைதிகளை ஆராயுங்கால் புதிய புதிய அறிவும் அவ்வழி அவற்றால் உண்டாகும் இன்பமும் அவரது ஆராய்ச்சியறிவை மழுப்பி விடுவதால், விஞ்ஞான அறிவு ஒருமருங்கு பற்றியதாக இருத்தலை விஞ்ஞானிகள் தாமும் அறியாதொழிகின்றனர். மேலும் அவர்கட்குக் கடவுளாகிய செம்பொருள் விஞ்ஞான நெறியில் ஆராயத்தக்க பொருளாக இல்லை. விஞ்ஞான நெறியிற் காணப்படும் பொருளின்கண் ஊடுருவி நிற்கும் இயற்கையே முழுமுதலாகிறது. அதனைக் காட்டும் பொருள்களின் ஆக்க அமைதிகட்கு உரிய காரணத்தை (ஆக்கமும் அமைதியும் ஏன் உண்டாயின எனக் காணும் காட்சியால் அறிதற்கெழும் உரிய காரணத்தை) நோக்கும் நிலையில் நாம் இருத்தலால் அவர் கருத்தை ஏற்கின்றோமில்லை. நீர் எப்படி யுண்டாகிறதென விஞ்ஞானத்தைக் கேட்பின், அஃது இரு கூறு நீர்க்காற்றும், ஒரு கூறு நெருப்புக்காற்றும் கூடி நீருண்டாகிறது என்றும்; இவ்வாறு ஏன் உண்டாக வேண்டும் என்றால், விஞ்ஞானம் விடை தராது.

பொருள்களின் ஆக்க அமைதிகண்டு ஏன் என்னாது எப்படியென வினாவிச் சேரல் விஞ்ஞானத்தின் குறிப்பு. எப்படி யென்னாது ஏன் என வினாவிச் செல்வது தத்துவ ஞானத்தின் குறிப்பாகும். இதனை மேனாட்டார் மெய்யியல் (Philosophy) என்பர். விஞ்ஞான தத்துவ ஞானமும் தத்தமக்குரிய எல்லைக் கண் நிற்குமாயின், உண்மை யறிவு விளக்கமுறும், இவ்விரு ஞானங்களும் தம்முள் மாறுகொண்டு ஒன்றனையொன்று கெடுத்தற்கே முயன்றுள்ளன. உலக வரலாறு காண்போர், தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் விஞ்ஞானிகள் பலர் பெருங்கேட்டுக் குள்ளாகியதைக் காண்பர். விஞ்ஞானிகள் பலர் நாடு கடத்தப்பட்டதும், உயிர்க்கொலை செய்யப்பட்டதும் வரலாற்று நூல் வாய்விட்டரற்றுகிறது. கால வேறுபாட்டால் தத்துவஞானம் செல்வாக்குக் குறையலுற்றதும், விஞ்ஞானம் செல்வாக்குற்றுத் தத்துவஞான எல்லைக்குள் புகுவதாயிற்று, தன்னெல்லைக்குட் படாத செம்பொருளை விஞ்ஞானம் தேடியாராய்ந்து “அற்புதமோ சிவனருளோ அறியேன்” என அலமருகிறது.

தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் வேறு வேறு குறிப்பின வாயினும், தத்துவ ஞானத்துக்கு விஞ்ஞானமும் இன்றி யமையாது வேண்டப்படும். உண்மை வழிநின்று கடவுளுண்மை காணும் நெறி, தத்துவ ஞான நெறியின் வயப்பட்டு இயலுவது. ஆதலால், தத்துவ ஞானியொருவர் ஒன்றனைப்பற்றிப் பேச வருமுன் அது பற்றி விஞ்ஞானி யாது கூறுகின்றார் என்பதை முதற்கண் காண்டல் வேண்டும் என்பர். ஒரு பொருளின் ஆக்கம் எங்ஙன மாயிற்றென்பது கண்டால் அஃது அங்ஙனம் ஏன் ஆயிற்றெனக் காணுமாற்றால் உண்மைத் தன்மை யுணால் கூடும் என்று சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் (Sir James Jeans) என்பார் கூறுகின்றார். விஞ்ஞானக் காட்சியிற் செல்லுமிடத்து மிக்க விழிப்போடு செல்லவேண்டும். சிறிது அயர்ந்தவிடத்து, விஞ்ஞானம் தத்துவஞான எல்லைக்குட் புகுந்து மயக்கத்திற் செலுத்திவிடும். பின்னர், தத்துவ ஞான நெறியிற் காணும் பொருள்கட்கு விஞ்ஞான நெறியில் விளக்கங் காணச் செலுத்தி உழல்விக்கும் விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் ஒருங்குடையராகிய சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் 1930-ஆம் ஆண்டில், தத்துவஞானப் பொருட்கு விஞ்ஞான விளக்கங் கூறத் தலைப்பட்டு முடிவில் “அற்புத பிரபஞ்சம்" (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார்.

இப்பிரபஞ்சம் அற்புதமானது என்றதற்கு ஒரு விஞ்ஞானி வேண்டுமா? மக்கள் நாகரிகமின்றி விலங்கு போல் வாழ்ந்த காலத்தேயே இவ்வுலகம் அற்புதமானது என்பது அறியப்பட்டது. விஞ்ஞானத்தின் கருத்து பிரபஞ்சத்தின் அற்புதத் தன்மையை மாற்றி விளங்கவைப்பதாகும். அத்துறையில் முயன்று அஃது எவ்வளவோ விளக்கத்தைத் தந்திருக்கிறதன்றோ இந்நாளில் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் தாமஸ் ஆக்வினாஸ், அரிஸ்தாத்தல், பிளேடோ முதலாயினோர் அறியாத உண்மை களை நன்கு அறிந்துள்ளான். அவர்கட்குப் பெருமயக்கத்தைத் தந்த உலக நிகழ்ச்சிகட்கு இக்கால விஞ்ஞானம் தெளிவுடைய விளக்கந் தந்துள்ளது. இங்ஙனமிருக்க, விஞ்ஞானிகள் இவ்வுலகம் அற்புதமான தென்பாராயின், அவர் கூற்று நன்கு சிந்திக்கத்தக்கதொன்றாம். சிந்தித்தவிடத்து உண்மை புலனாகிறது. தத்துவநெறியிற் காண்பனவற்றை விஞ்ஞானமாகக் கருதி அதற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் கூறப்புகுவதே அவர் செய்யும் தவறு. அதனால் அவர்கள் உலகம் அற்புதமானது என்று கூறவேண்டியவராயினர். தத்துவ ஞானக் காட்சிப் பொருள் விஞ்ஞானக் காட்சிக்கு அகப்படாமையின், விஞ்ஞானம் அதனைக் காண்டற்குத் துணை செய்யாதாயிற்று என்பதே அவர் கூறுவதன் கருத்தாகும். மேலும், விஞ்ஞான முறையிற் காணப்படும் கொள்கைகள் ஒரு நிலைமையனவல்ல. காலஞ்செல்லச் செல்லப் புதுக்காட்சிகளால் மாறுபடுவன. "குறைபாடு உள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது" என்பர் திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர். மேன்மேலும் வளர்ந்து சிறத்தலால் குறைபாடுடைய விஞ்ஞானம், ஒரு முடிவு கண்டு முற்றி நிற்கும் தத்துவஞானத்தோடு இயையாதாகலின் பிரபஞ்சத்தின் அற்புத நிலைமையை விளக்காதாயிற்று.

"வந்தவாறு எங்ஙனே போமாறேதோ, மாயமாம்பெரு வாழ்வு" என்றார் நம் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர்போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக்கூறி "இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்ததுதற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது”[1]. * என்று சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் உரைத்தார். தற்செயல் (Accident) விளக்கமில்லாத சொல்லாதலின், "வந்தவாறு" காண்டற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்.

பின்பு அவர், ஐன்ஸ்டன் (Einstein) ஹிசன்பர்க் (Heisenberg) திரா அக் (Dirac) @av Guogi (Lematre) லூயி-தெ-புரேக்ளி (Louis-de-Broglie) முதலாயினர் கண்ட பெளதிக வுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவ ஞானமென்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண் பிரபஞ்சம் ‘கடசக்கரர் எந்திரெமனச் சுழல்வது’[2] எனக் காண்கின்றார். முடிவில், இது ‘படைக்கப்பட்டதே’ என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும்[3] இதனைப் படைத்தோன், ஒவியம் வல்லானொருவன் தான் தீட்டும் ஓவியக்கிழிக்குப் புறம்பே நின்று ஒவியத்தை எழுதுவதுபோல, காலம், இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்துகிறது என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார்.

பிரபஞ்சவட்டமெனவும், சங்கற்பசிருட்டியெனவும் இவர் கூறுவன மேனாட்டுச் சாக்ரடீசு முதலிய தத்துவ ஞானிகட்கும் நம் நாட்டுப் பெளக்கர மெழுதிய புட்கரர் முதலிய சிவஞானிகட்கும்[4] முன்னிருந்த முன்னோர்கள் கண்டனவாகும். இவை பல நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு உரைத்திருப்ப வும், சுற்றிப்போயும் சுங்கச்சாவடிக்கே வந்தது போல, புதிய புதியவாக விஞ்ஞான நெறியில் நுணுகிச் சென்று நுணுக்கரிய நுண்ணுணர்வு காணும் ஐன்ஸ்டன் முதலாயினோர் இந்த முடிவையே கண்டுரைக்கின்றார்கள் என்பது சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் கூறுவதனால் விளங்குகிறதன்றோ?
-----
[1]. The Mystrious Universe p. 11-22.
[2]. காஞ்சிபுராணம் - காப்பு.
[3]. Ibid p. 182.
[4]. பெளஷ் 1:43,
--------------
இனி, ஜூலியன் ஹக்ஸிலி (Julian Huxley) என்பார் உலகில் உயிர்களின் தோற்ற வரலாற்றை யாராய்ந்து கூறிச் செல்லும் கூற்றுக்களில் A.H. காம்ப்டன் (A.H. Compton) கூறுவனவற்றிலும், விஞ்ஞானமும், தத்துவஞானமும் தம்முள் மயங்கிப் பலதலையான முடிவுகண்டு அலமருவது நன்கு புலனாகும். அன்றியும், அணுவைப்பற்றிய ஆராய்ச்சி தோன்றி அவர்களது மயக்கத்தை மிகுதிப்படுத்துகிறது. பெளதிக ரசாயன அணுக்களின் கூட்டுறவால் உண்டாகும் பொருள்களினிடையே உயிரணுக்கள் நிலவுகின்றன. இந்த உயிரணுக்கள் எங்ஙன முண்டாயின எனக் காணும் விஞ்ஞானிகள் பெருமயக்கமுற்று நிற்கின்றனர். இதுகாறும் ஒரு விஞ்ஞானியும் உயிரணு வொன்றைப் படைத்தது கிடையாது. உயிரணுவென்பது பெளதிக அணுவோடு கூடியே யிருக்கிறது. அவ்வணுவின் பெளதிகப் பகுதிக்கு வேறாக யாதும் அதன்கண் இதுகாறும் காணப்பட வில்லை. பெளதிகப்பகுதியின் வேறாக உயிர்த் தன்மை, அதன்பால் எங்ஙன முண்டாயிற்றென ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முடிவும் காணாது மயங்குகின்றனர். மேலும், அணுத் திரள்களின் இடையே, புரோடான்ஸ் (Protons), எலக்ட்ரான்ஸ் (Electrons), நீயூட்ரான்ஸ், (Newtrons), ஃபோட்டான்ஸ் (Photons) என்ற அணுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் காண முடியவில்லை. இவ்வாறு விஞ்ஞானம் காட்டும் காட்சிகள் பல நமது உண்மைக்கே விளக்கம் புலப்படுத்தாமல் உள்ளன. இன்னோரன்னவற்றால் மயக்கமும், தத்துவஞானமும் பண்டை நாளில் செய்த தவறுபற்றி அதன்பால் காழ்ப்பும் கொண்டு, கடவுளாகிய செம்பொருளுண்மை கண்டு மேற்கொள்ளாது, Blind Evolution எனவும், Clear sighted Orthogenesis எனவும் பிறவும் சில விஞ்ஞானிகள் கூறுவது பற்றி கூறுவதுபற்றி, கற்ற அறிஞர்கள் மயங்கி யொழிதல் கூடாது.

----------
உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள்
வழங்கிய நூல்கள் பட்டியல்

1. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
2. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
3. ஐங்குறுநூறு உரை
4. புறநானூறு உரை
5. பதிற்றுப்பத்து உரை
6. நற்றிணை உரை
7. ஞானாமிர்தம் உரை
8. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்பதிப்பு
9. சிலப்பதிகாரம்
10. மணிமேகலை
11. சீவகசிந்தாமணி ( சுருக்கம்
12. சூளாமணி
13. சிலப்பதிகார ஆராய்ச்சி
14. மணிமேகலை ஆராய்ச்சி
15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
16. யசோதர காவியம் - மூலமும் உரையும்
17. தமிழ் நாவலர் சரிதை - மூலமும் உரையும்
18. சைவ இலக்கிய வரலாறு
19. நந்தா விளக்கு
20. ஒளவைத்தமிழ்
21. தமிழ்த்தாமரை
22. பெருந்தகைப் பெண்டிர்
23. மதுரைக்குமரனார்
24. வரலாற்றுக் காட்சிகள்
25. சேர மன்னர் வரலாறு
26. சிவஞானபோதச் செம்பொருள்
27. ஞானவுரை
28. திருவருட்பா - உரை
29. பரணர் - (கரந்தை)
30. தெய்வப்புலவர் திருவள்ளுவர் - (கழகம்)
31. Introduction to the story
of Thiruvalluvar
32. தமிழ்ச் செல்வம்
----------

This file was last updated on 14 July 2023
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)