pm logo

திருநெல்வேலி இ. சங்கரன் இயற்றிய
"திருநெல்லைத் திருப்பணிமாலை"

tirunellait tiruppaNi mAlai
by tirunelvEli i. cangkaran
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to the author for for providing a printed copy of this work. and for
the permission to publish this version as part of Project Madurai collections.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation
of a soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருநெல்வேலி கம்பாபாதசேகரன் இ. சங்கரன் இயற்றிய
"திருநெல்லைத் திருப்பணிமாலை

Source:
திருநெல்லைத் திருப்பணிமாலை
(திருவாவடுதுறை ஆதீன சமய பரப்புநர் திருநெல்வேலி
கம்பாபாதசேகரன் இ. சங்கரன் இயற்றியது)
திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோவிலின் 418 ஆம் ஆண்டு தேரோட்ட விழா மலர்
வெளியிட்டோர்:
கம்பன் இலக்கியப் பண்ணை, 2-97H, ஆனந்தவல்லி அம்மன் கோயில் தெரு,
(மீனாட்சியம்மன் கோயில் அருகில்), ஆரல்வாய்மொழி-வடக்கூர், குமரி மாவட்டம் - 629301.
வள்ளுவம் 2054 ம்ளு நள்ளி மதி 17 வரு. நாள் (02-07-2023)
க.ஆ. 1137       ஓம்       விளைநலம் 199
-----------------
ஓம் - விநாயகர் துணை

திருநெல்லைத் திருப்பணிமாலை
(திருநெல்வேலி கம்பாபாதசேகரன் இ. சங்கரன் இயற்றியது)

பாயிரம்
(அறுசீர் விருத்தங்கள்)
பொள்ளாப் பிள்ளையார்

உருவமது உளபடாது உருவான ஓங்கார வதன எந்தாய்
திருநெல்லைத் திருத்தளியின் திருப்பணிகள் செய்தவரை நினைவு கூரும்
திருப்பணிநற் பாமாலை பாடிடவே திருவருளை வேண்டி அடியேன்
கருணைமதப் பொள்ளாத பிள்ளைஉந்தன் கழல்மலரை தொழுது பணிந்தேன் (1)

கைப்பாணி தவிர்த்த பெருமாள்

கழைவனத்து திருத்தளியின் திருப்பணியை கருத்துடனே அமைத்துக் கூறும்
பழனநெல்லைத் திருப்பணிநற் பாமாலை பாரோர்கள் நினைந்து போற்ற
எழில்அமைந்த செப்புமன்றில் எழுந்தருளி தேவியர்கள் இருவர் பக்கம்
தழுவிநிற்கும் கைப்பணி தவிர்த்தபெரு மாள்மலர்த்தாள் தொழுது நிற்பாம் (2)

நெல்லையப்பர்

நெல்லைநகர் பெருங்கோயில் திருப்பணிகள் நிலைக்கசெய்த அறவோர் சீர்த்தி
சொல்லுகின்ற திருப்பணிநற் பாமாலை தொல்புவியில் சிறந்து விளங்க
கல்லார்க்கும் கற்றவர்க்கும் கருணைபுரி கவின்நெல்லை நாதன் கழலை
நல்மலரால் அருச்சித்து வழிபட்டேன் நானிலத்தோர் நயந்து ஏற்க. (3)

வடிவம்மை

வரைக்காட்டு திருத்தளியின் திருப்பணிகள் வகையாய் செய்தார்
வரலாற்றுப் பாமாலை வையகத்தார் நன்றியுடன் நாளும் நினைக்க
குரைகடலின் விடம்அதனை களம்நிறுத்தி உயிர்காத்த விமலை அன்னை
வரையரையன் திருமகளாம் வடிவம்மை விரைமலர்தாள் மனதில் வைத்தேன் (4)

நெல்லை கோவிந்தன்

எத்திசையும் புகழ்கொண்ட திருநெல்லைத் திருப்பணிகள் செய்த தொண்டின்
வித்தகப்பா மாலையிது எந்நாளும் வையகத்தில் தழைத்து ஓங்க
பத்துருவம் எடுத்தானை உவணத்துப் பரியானை மாறன் போற்றும்
முத்தமிழ்ப்பா உவந்தநெல்லைக் கோவிந்தன் முளரியந்தாள் போற்றி செய்வாம். (5)

பிட்டாபுரத்தம்மை

வல்அரண்சூழ் நெல்லைநகர்ப் பெருங்கோயில் திருப்பணிகள் வனப்பாய் செய்த
நல்மனத்தார் பெருமைகூறும் பாமாலை நலஞ்சிறந்து தழைத்து ஓங்க
எல்லைகாக்கும் எண்தோளீ வீரபத்ரை வடமேற்கில் தளிகொள் கொற்றி
நெல்லைசெல்வி பிட்டுநுகர் செண்பகத்தின் தேம்மலர்தாள் போற்றி செய்வாம் (6)

ஐயனார்-பூதத்தார்

கரும்பனைவீ ரஐயனார் தடிவீரன் காரியாரை நயினார் குளத்து
கரைஅமர்ந்த ஐயனாரை பூதரோடு கைஎடுத்துத் தொழுது பணிந்தேன்
திருநெல்லைத் திருத்தளியில் திருப்பணிகள் செய்தவரின் பெருமை கூறும்
திருப்பணிநற் பாமாலை தழைத்தோங்கி திசைநிறைந்து என்றும் சிறக்க (7)
------------------------------------------------------------
நூல்


வரைவனத்து பொள்ளாத கணபதிக்கு அட்டமிநாள்
      முழுக்கு ஆட்ட
நிரைவிளக்கு ஏற்றநெய்யை வேண்டவளர் கோன்கூத்தன்
      பெரியன் வழங்க
நிரைப்பசுவும் காலசந்தி கொழுக்கட்டை படையலுக்கும்
      நிவந்தம் அளித்தார்
வரைபுயத்து மாறவர்மன் குலசேகர பாண்டியனே அன்னவரை
      நினைவில் வைப்பாம் (1)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியர் பொள்ளாப் பிள்ளையாருக்கு அட்டமி தோறும் திருமுழுக்கிற்கும், விளக்கு ஏற்றவும் வேண்டவளர்ந்த கோன், கூத்தன், பெரியன் என்ற சகோதரர்களிடம் பசுக்களை வழங்கினான். மேலும் காலசந்தியில் கொழுக்கட்டை படைக்கவும் நிவந்தம் வழங்கினார்.
-----------------------------------------

வேணுவன பொள்ளாத கணபதிக்கு இடைநாழி பொலிய அமைத்தான்
பேணுமலை நாட்டுவீரம் அழகியப்பேர் பாண்டியனே அங்கு முன்றில்
மாணமண்ட பத்தைமுதல் சடையவர்மன் வீரபாண்டி வேந்தர் அமைத்தார்
மானாபர ணமூவேந்த வேளானே மோதகத்தை பொடைக்கச் செய்தான் (2)

பொள்ளாப்பிள்ளையார் சந்நிதியில் அர்த்தமண்டபத்தை மலைநாட்டு மந்திக்கோடு வீரம் அழகிய பாண்டியன் அமைத்தான். முகப்பு மண்டபத்தை சடையவர்மன் வீரபாண்டியர் அமைத்தார் மோதகம் படைக்க உய்யவந்தான் மானாபரண மூவேந்த வேளான் அடைக்கலம் கொடுத்த பெருமாள் ஏற்பாடு செய்தார்.
-------------------------------------------

பாடுவாரின் மகள்துயரை நீக்கியவன் பாலையர்க்கு புடவை ஈந்தான்
நாடுவார்க்கு இன்னமுதன் நெல்லைநகர் நெடுங்கோயில் உறையும் ஒற்றைக்
கோடுபொள்ளாப் பிள்ளையாரின் சந்நிதியில் குறைவிலாது சந்தி தீபம்
நீடுபுகழ் காலிங்க ராயரெனும் நல்லானே ஏற்றச் செய்தார். (3)

ஓதுவாரின் மகள் துயரை நீக்கியவரும் பெண்களுக்கு புடவைகள் வழங்கியவரும், நாடுபவர்க்கு இனிய அமுதமும் ஆகிய நெல்லையப்பர் கோயில் உள்ள பொள்ளாப் பிள்ளையார் சந்நிதியில் சந்தி தீபம் ஏற்ற திருநெல்வேலி உடையார் காலலிங்கராயர் ஏற்பாடு செய்தார்.
------------------------------------------


எட்டுதிசை புகழ்நெல்லை திருக்கோயில் பொள்ளாத பிள்ளை யார்க்கு
அட்டமிநாள் திருமுழுக்கு ஆடிடவே நெய்வழங்க பசுக்கள் அளித்தும்
மட்டமுதக் கொழுக்கட்டைப் படையலுக்கும் சந்திதீபம் ஏற்றும் பணிக்கும்
முட்டாத பெருங்கீர்த்தி விக்கிரம பாண்டியனே நிவந்தம் அளித்தான் (4)

பொள்ளாப் பிள்ளையாருக்கு அட்டமிதோறு அபிடேகத்திற்கு நெய்வழங்க பசுக்களையும் சந்தி விளக்கிடவும் படையலுக்கும் விக்கிரம பாண்டியன் நிவந்தம் அளித்தார்.
-------------------------------------

உள்ளத்தால் நினைவாரின் இடர்களையும் பொள்ளாத பிள்ளை யார்க்கும்
ஒள்விளக்கிற் குநெய்வழங்க தன்மபாலன் ஏற்பாடாய் நிவந்தம் அளித்தான்
உள்ளமுடன் கைக்கோளார் சேனாபதி நிவந்தங்கள் உவந்து அளித்தார்
வெள்ளஞ்சூழ் புவியோரே அன்னவர்கள் திருப்பணியை நினைவில் கொள்வாம் (5)

தன்மபாலன் பொள்ளாப் பிள்ளையார்க்கு விளக்கு ஏற்ற நெய் வழங்கிட நிவந்தம் அளித்தான். கைகோளார் சேனாபதியும் நிவந்தங்கள் வழங்கினார்.
--------------------------------------

செப்புமன்றில் அமைந்துள்ள சந்நிதியில் சேவைதரு இளைய பிள்ளை
கைப்பாணி தவிர்த்தார்க்கு திருப்பள்ளி எழுச்சிக்கு அரிசி தரவும்.
தப்பா,சந் திதீபநெய்க்கும் சுத்தவல்லி வணிகரிடம் நிவந்தம் அளித்தார்
ஒப்பில்லா முதல்சடைய வர்மன்னாம் வீரபாண்டி வழுதி வேந்தே (6)

தாமிரசபையில் உள்ள கைப்பாணி தவிர்த்தபெருமாளாகிய முருகனுக்கு திருப்பள்ளி எழுச்சிக்கு அரிசி வழங்க நிவந்தமும், சந்தி தீபத்திற்கு நெய் வழங்கிட சுத்தவல்லி வணிகரிடம் நிவந்தமும் அளித்தார் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனே ஆவார்.
---------------------------------------

கலைக்கூட செப்பரங்கில் வீற்றிருக்கும் கைப்பாணி தவிர்த்த வேற்கு
மலைநாட்டு தேவிசீத ரப்பிள்ளை மங்காத தீபம் வைத்தார்
மலைபுயத்து முதல்சடைய வர்மன்கு லசேரனாம் வழுதி வேந்தன்
நிலையாக திருப்பள்ளி எழுச்சிக்கு நிவந்தங்கள் வகுத்து அளித்தார் (7)

மலைமண்டலம் மலையான் குன்றத்து தேவி சீதரப் பிள்ளை நந்தாவிளக்கு வைத்தார். முதலாம் குலசேகர பாண்டியன் திருப்பள்ளி எழுச்சிக்கு நிவந்தம் அளித்தார்.
---------------------------------------

ஆறுமுகன் திருவாசி மயிலுடனே ஒரேகல்லில் அழகாய் அமைத்து
ஆறுமுகம் வலம்வந்து கண்டுதொழ தேவியுடன் அமையச் செய்தார்.
கூறுசெகம் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் ஆண்டில்
வீறுபெறு திருத்தோளர் வடமலையார் அவர்பணியை நினைவு கூர்வாம் (8)

கி.பி. 1642இல் வடமலையப்ப பிள்ளை திருப்பணி ஆறுமுக நயினார் சந்நிதியை அமைத்து, ஒரே கல்லில் ஆறுமுக நயினார், மயில், திருவாசி ஆகியவற்றை அமைத்தார். இச்சந்நிதியில் ஆறுமுகங்களையும் சுற்றிவந்து தொழும் வண்ணம் அமைந்துள்ளது.
----------------------------------------------

ஆயிரத்து தொளாயிரத் துபதினாறில் அமாவாசை அடிகள் நெல்லைக்
கோயிலிலே திருப்பணியாய் ஆறுமுகன் சந்நிதியைத் திறந்து மேற்கு
வாயிலையும் திறந்துவைத்து சட்டிநாளில் அருச்சனைகள் இலட்சம் செய்தும்
நேயமுடன் கணபதியை யும்அமைத்தார் அன்னவரை நினைவு கூர்வாம் (9)

கி.பி. 1916இல் மூடிக் கிடந்த ஆறுமுக நயினார் சந்நிதியை அமாவாசை அடிகள் திறந்து வைத்து வழிபாடுகள் நடத்திடச் செய்தார். மேற்கு வாயிலையும் திறந்து அங்கு பதினொரு கடைகளைக் கட்டி அதன் வருவாயில் ஆறுமுக நயினார்க்கு இலட்சார்ச்சனையும் நடத்தச் செய்தார். மேற்கு முகமாக சட்டி விநாயகரையும் நிறுவினார்.
----------------------------------------------------

செகத்தாண்டு ஆயிரத்து தொளாயிரத் தைத்தினிலே தாள வட்டம்
தகவுடைய கங்கைமுத்து மாணவராம் பிச்சாண்டி செதுக்கி வைத்தார்
முகம்ஆறு உடையநாதன் சந்நிதியில் முனைந்தமைத்து நெறியாய் தாளம்
திகழசூத்தி ரமாய்அமைத்தார் அன்னரை தினம் நினைந்து நன்றி கூர்வாம் (10)

கி.பி. 1919இல் மதுரை கெங்கைமுத்து பிள்ளையின் மாணவர் பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி தாளச் சக்கரத்தை வரைந்து அதனைக் கல்லில் சிற்பமாக வடித்து ஆறுமுகநயினார் சந்நிதியில் நிறுவினார்.
-----------------------------------------------------

கருமாறி கரைஅருகில் கந்தனுக்கு சந்நிதியை எழியாய் அமைத்தார்
பெருமையுடை காலைநகர் பூமானாம் வடமமைலயார் மற்றும் பின்னர்
திருப்பணிகள் அமாவாசை அடிகளாரே திருத்தமுறச் செய்தார் அவர்கள்
அரும்பணியை உள்ளத்தில் மறவாது வைத்தென்றும் நன்றி கூர்வாம். (11)

வடமலையப்ப பிள்ளை கருமாறி தீர்த்தக் கரையில் முருகனுக்கு சந்நிதி அமைத்தார். அதன் பின் அமாவாசை அடிகள் மீண்டும் திருப்பணிகளைச் செய்தார்.
--------------------------------------------

மருதஞ்சூழ் கழனிநிறை வளம்தழைக்கும் மாண்புடைய நெல்லை வடக்கில்
செருக்குடைய வீரசத்தி பிட்டுநுகர் கொற்றியான பிடாரி பத்ரை
திருத்தளியில் முதல்அடுத்த மாறவர்மன் விக்கிரம பாண்டி மன்னன்
திருப்பணிகள் பலசெய்தான் புவிபுரக்கும் தென்னவனை நினைவில் வைப்பாம். (12)

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கு திசையில் கோயில் கொண்டுள்ள பத்திரகாளியாம் பிட்டாபுரத்தம்மைக்கு பல திருப்பணிகள் செய்தார்.
------------------------------------------

மழவராய அரியணையில் அமர்ந்தருளும் உலகமுழு துடையாள் நாதன்
வழுதிரண்டாம் மாறவர்மன் சுந்தரனார் அதிகாரி பெரிய கூத்தர்
எழில்உருவை வடிவமைத்து பசும்பொன்னும் செந்நெல்லும் உவந்து அளித்தான்
விழுப்பத்த ரையனான வண்டாரும் தாருடைய வள்ளல் தானே (13)

இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் அதிகாரியான மிழலைக் கூற்றத்து அரும்பொருள் உடையான் திருச்சிற்றம்பலம் உடையார் உடைய நாயனார் விழுப்பந்தரையன் அழகிய சிற்றம்பலம் உடையார் செப்புப் படிமத்தை வடித்து நெல்லையும் பொன்னையும் நிவந்தமாக வழங்கினார்.
---------------------------------------

சொல்லாரும் இவையார்ந்த பொருநையவள் செல்கதியில் வளஞ்செய் நல்லூர்
நெல்லையுறை அனவரத நாதர்க்கு நாளுமிசை இசைப்பார் வாழ
இல்லமுடன் நிலங்களையும் முட்டாத நிவந்தங்கள் உவந்து அளித்தான்
வல்லமைசேர் முதல்சடைய வர்மகுல சேகரனாம் வழுதி வேந்தே (14)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியார் அனவரத நாதர் சந்நிதியில் தினம் இசை இசைப்பாருக்கு வீடும், நிலமும் நிவந்தங்களும் வழங்கினார்.
----------------------------------------

இரலைமழு பிடித்தகையன் அருள்பெற்ற குடமுனிவன் தொழுத நெல்லை
நரசிம்ம பட்டரிடம் அனவரத நாதருக்கு வேதம் ஓத
உரனுடைய கோனேரின் மைகொண்டானின் உரிமைஆண்டு எட்டில் செய்ய
நிரல்முறையில் தேவாங்கன் தம்பிராட்டி நிவந்தங்கள் உவந்து அளித்தார் (15)

கோனோரின்மை கொண்டான் காலத்தில் தேவாங்கன் தம்பிராட்டி அனவரதநாதர் சந்நிதியில் வேதம் ஓதுபவர்களுக்கு நிலத்தை நரசிம்மபட்டரிடம் வழங்கினான்.
------------------------------------------

மாறவர்மன் சுந்தரனாம் பூபாலன் ஆட்சியிலே பதியில் மாது
ஏறமரும் அனவரத நாதருடை பூந்தோட்டம் புரந்த வற்கும்
தேறுபூர ணையில்வேதம் ஓதுவார்க்கும் ஈசுவர தேவ னுக்கும்
மாறுபடா தானங்கள் விருப்புடனே உவந்தளித்தார் பெற்றி நினைவாம் (16)

மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் பதியிலா மாது அனவரத நாதருடைய பூந்தோட்டத்தை பாதுகாத்தவருக்கும், பௌர்ணமி அன்று அத்யானம் செய்யும் ஈசுவர தேவனுக்கும் நிவந்தம் வழங்கினாள்.
------------------------------------------

வரைகளிலே கீர்த்திகொண்ட கயிலையிலே இமயவல்லி வலக்கை தோன்றும்
பரணியாறு வளங்கூட்டும் வேணுபுர அனவரத நாதர் மற்றும்
விரைகுழலி அம்மைக்கும் திருமுழுக்கு நடாத்திடவே ஒழுங்கு செய்தார்
உரைபெருகு நல்இரங்க கிருட்டிணராம் வீரப்ப செம்மல் தானே. (17)

இரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அனவரதருக்கும் வடிவம்மைக்கும் திருமஞ்சனம் நாளும் நடந்திட ஒழுங்கு செய்தார்.
----------------------------------------

வெதிர்அடியில் முளைத்தெழுந்து வெளிப்பட்ட இலிங்கருக்கு
மதிதோறும் அந்திதீபம் மகிழ்ந்துவைத்து இடையாது
அதிஒளிசெய் விளக்கினையும் அமைத்திட்டார் வளவர்தம்
முதிர்தலைகொள் வீரபாண்டி மீனவர்தம் குலவேந்தே. (18)

சோழன் தலைகொண்ட வீரபாண்டியர் மூல மகாலிங்கருக்கு சந்தியா தீபம் நந்தா விளக்கு நிறுவினார்.
--------------------------------------

அரவணையில் அடிமுடியை குடகுணங்கா அமைத்துமகிழ் கிடக்கை கொண்டு
உரத்துமறு வைசந்திமாலை ஒளிரவிழி திறந்துவிண்ணை நோக்க வலக்கை
சிரப்பக்கம் நீளஇடக்கை பரிசருளும் நிலைகொள்மால் சந்நி திமுதல்
இராசராசன் எழிலுடனே அமைத்திட்டான் அன்னவரை நினைவு கூர்வாம். (19)

நெல்லைக் கோவிந்தன் சந்நிதியை முதலாம் இராசராசன் காலத்தில் நிறுவப்பட்டது. (நெல்லையேடு)
------------------------------------

கழைசூழ்ந்த வனத்தினிலே கண்டெடுத்த முத்தருக்கு
கழைக்குழலில் இசைவார்க்கும் கோவிந்தன் அரவணையில்
விழைவுடனே கிடந்தபிரான் வழிபாடு நடத்திடவே
பிழையில்லா இருவர்பற் பனேரியிலே நிலம்அளித்தார். (20)

நெல்லைக் கோவிந்தர்க்கு பூசை நடத்திட பற்பனேரியைச் சேர்ந்த இருவரிடம் நிவந்தம் வழங்கப்பட்டது.
----------------------------------------

சடாதரீசன் சந்நிதியில் மாலைதீபம் வாடாத விளக்கு வைத்து
தடைபடாத நிவந்தங்கள் குலோத்துங்க வளவர்கோன் உவந்து அமைத்தார்
தடந்தோளன் மாறவர்மன் சுந்தரனே தினப்படியும் மாலை தீபம்
நடைமுறையாய் நடந்திடவே வழிசெய்தார் அன்னவரை நினைவில் கொள்வாம் (21)

முதலாம் குலோத்துங்க சோழன் சடாதரீசர் சந்நிதியில் சந்தியா தீபம், நந்தா விளக்கு ஏற்ற நிவந்தம் வழங்கினார். இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சடாதரீசருக்கு தினப் பூசைக்கும், சந்தியா தீபத்திற்கும் நிவந்தம் வழங்கினார்.
----------------------------------------------

அறுகுமானை மதிஅரவை நீர்நெருப்பை அருகுவைத்து அருளும் ஈசன்
பெறும்புகழ் நெல்லைதளி சடாதரீசர் சந்நிதியில் நந்தா தீபம்
பொறுப்புடனே மலைநாட்டு மேல்மனையின் உருத்திரப்பேர் பிள்ளை வைத்தார்
நிறைவான அவர்செய்த நற்பணியை மனம்வைத்து போற்றி செய்வாம். (22)

மலைமண்டலம் மலையமாம் பிராமணரில் மேல்மனை நாராயணன் உருத்திரப் பிள்ளை சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் நந்தா விளக்கு வைத்தார்.
---------------------------------------------

மலைஎடுத்த வல்லரக்கன் நரம்பிழைத்த இசைக்கேட்டு நாளும் வாளும்
நிலைப்பெயரும் தந்தருளும் சொக்கருக்கு நேர்த்தியான அந்தி சந்தி
நிலைத்தீபம் முதலடுத்த மாறவர்மன் சுந்தரனே ஏற்றச் செய்தான்
நிலையான நிவந்தங்கள் மழவராயர் நிறைவுடனே செய்து வைத்தார் (23)

இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சொக்கருக்கு அந்தி சந்தி விளக்கு வைத்தார். காவடி சங்கரன் அழகிய பெருமாளான மழவராயர் தாம் வழிபட்டு வந்த இலிங்கத்தை ஆஸ்ரயலிங்கமாக இக்கோயிலில் எழுந்தருளுவித்த சொக்கருக்கு நிவந்தம் அளித்தார்.
--------------------------------------

சங்கரனாம் அழகியபெ ருமாள்வணங்கும் சொக்கருக்கு அன்பு கொண்டு
செங்கோலாட் சிசெய்தமுதல் மாறவர்மன் சுந்தரனார் நாளும் பூசை
பங்கமற நடாத்திடவே பள்ளியறை கூடத்து அமைந்து உள்ள
மங்கலமாம் மழவராயன் அணையிருந்து மனமுவந்து ஆணை யிட்டார் (24)

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காவடி சங்கரனாம் அழகிய பெருமாள் வழிபட்டு பின்னர் கோயிலில் நிறுவிய சொக்கருக்கு தினபூசை நடத்திட பள்ளியறை கூடத்தில் அமைந்துள்ள மழவராயன் அணையில் அமர்ந்து நிவந்தம் அளிக்க ஆணையிட்டான்.
---------------------------------

தவளநீற்றன் மான்மழுவன் பிறைமுடியன் ஏனமுடன் புள்ளும் காணா
பவளநிறம் பாதிபச்சை பாகத்தான் பண்ணைவள நெல்லைக் கோயில்
அவனியாண்டு ஆயிரத்தைந் நூற்றைந்தில் பெரியதேவர் நாச்சி யாரை
உவப்புடனே ஐம்பொன்னால் வார்த்திட்டார் கூத்தன்வா ளிபிள்ளை தானே (25)

கி.பி. 1505இல் கூத்தன்வாளி பிள்ளை நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் ஐம்பொன் படிமமாக வடித்து அமுதுபடி, சாத்துபடி முதலியவற்கு நிவந்தம் வழங்கினார். படிமத்தின் எடை 165 துலாம், விலை 13162 பொன் ஆகும்.
---------------------------------------

முதலடுத்த மாறவர்மன் சுந்தரனார் ஒன்பதான ஆட்சி யாண்டு
மதுரதமிழ் யாப்பினங்கள் பலதந்த முதல்வரான சம்பந் தருக்கு
அதிஅழகு தளியுடனே சிலைவடித்தும் பூசைக்கு நிவந்தம் அளித்தார்
மதுரோத அரையான்பூ வனானவேணா டுடையாரை நினைவு கூர்வாம் (26)

இரண்டாவது மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் மதுரோதய நல்லூர் அரையன் பூவனான வேணாமுடையார் நெல்லை நகரின் மேற்கு திசையில் திருஞானசம்பந்தருக்கு கோயில் எடுத்து ஐம்பொன் படிமமும் வடித்து அளித்து பூசைக்கு நிலமும் மனையும் வழங்கினார்.
--------------------------------------

திருநெல்லை மாநகரின் குடதிசையின் திருத்தளியில் தமிழின் சீர்த்தி
நெருப்பாலும் புனலாலும் என்பாலும் நிலைநிறுத்தும் புகழி வேந்தர்
திருச்சந்தி படையலுக்கு நிவந்தத்தை அனவரதன் உவந்து அளித்தான்
பெருமைநிறை அவர்பணியை மனம்வைத்து எந்நாளும் நினைவு கூர்வாம். (27)

அனவரதன் என்பார் திருஞான சம்பந்தர் சந்நிதியில் சிறுகால சந்திக்கும் படையலுக்கும் நிலம் வழங்கினார்.
------------------------------------------

சங்கிலிமார்த் தாண்டவர்மன் நாயன்மார் செப்புசிலை வடித்து அமைத்தார் செங்கோல்ம டத்தடியார் சிவபாத சேகரராம் திருப்ப ணியாண்டார்
பங்கமில்லா நாயன்மார் கற்சிலையை வரிசைபெற திருத்தி அமைத்தார்
துங்கமிகு அவர்கள்செய் திருப்பணியை தொழுதேற்றி மனதில் வைப்பாம். (28)

செயதுங்க நாட்டு வென்று மண் கொண்ட பூதல வீர மார்த்தாண்ட வர்மன் நாயன்மார்களின் செப்புப் படிமத்தை வார்த்தார். விழா எடுக்கவும் ஏற்பாடு செய்தார். சிவபாத சேகரனார் திருப்பணியாண்டார் நாயன்மார் கற்சிலையை ஒழுங்கு முறையில் வரிசை படுத்தினார்.
நாயன்மார் செப்புப் படிமம் 17280 பொன் ஆகும்.
----------------------------------

விற்புருவ வடிவம்மை வழிபாடு நடத்திடவே
பொற்புயத்து மாறவர்மன் பொன்னின்நல் லபெருமாளே
அற்புடனே நிலம்அளித்தார் அவனியோர்கள் அவருடைய
பெற்றிதனை பெருமையுடன் கொண்டாடி நினைவோமே (29)

திருநெல்வேலி பெருமாள் ஆட்சியில் மாறவர்மன் பொன்னின் நல்ல பெருமாள் வடிவம்மைக்கு பூசைகள் நடத்திட மானாபரணப் பேரியில் நிலம் வழங்கினார்.
----------------------------------

தருமலிந்த மலைநாட்டு வீரசங்கி லியார்சந்தி தீபம் வைக்க
அருங்கொடையை உவந்தளித்தார் முதல்இராசேந் திரசோழன் நிவந்தம் அளித்தார் தருகைநீண்ட சொன்னமயில் உடையாரே அமுதுக்கு நிவந்தம் அளித்தார்
பிரமபுரி உடையார்க்கு திருப்பணிசெய் பெரியாரை நினைவில் வைப்பாம் (30)

மலைநாட்டு சங்கிலி வீரமார்த்தாண்ட வர்மன் சந்திவிளக்கு வைக்க நிவந்தம் வழங்கினார்.
முதல் இராசேந்திரசோழன் நிவந்தங்கள் அளித்தார். சொன்ன மயில் உடையாரே அமுதுக்கு நிவந்தம் அளித்தார்.
------------------------------

பெருகிவரு வைகைவெள்ளம் தடுத்திடவே மண்சுமந்த இறைவன் வாழும்
திருநெல்லைத் திருத்தளியில் பூசைக்கு அமுதுபடி தீபம் மற்றும்
திருமாலை சாத்துபடி மெல்லடகு தினம்வழங்க நிவந்தம் தந்தார்
இரண்டாவ துமாறவர்மன் சுந்தரபாண் டியன்என்னும் வமுதி வேந்தே. (31)

இரண்டாவது மாறவர்மன் சுந்தரபாண்டியன் நெல்லை கோயிலுக்கு அமுதுபடி, தீபம், திருமாலை, சாத்துபடி, வெற்றிலை பாக்கு தினமும் வழங்கிட நிவந்தம் வழங்கினார்.
------------------------------------

தகவுடையார் வாழ்நெல்லை திருக்கோயில் நண்பகலின் பூசை என்றும்
நிகழ்த்திடவே கட்டளைக்கு வீரமிகு கட்டபொம்மு பெற்ற மகனார்
செகவீர ராமபாண்டி கட்டபொம்மு நிவந்தங்கள் உவந்து அளித்தார்
செகம் போற்ற சிவஞானப் பட்டர்தாம் அதனைபெற்று பணியை செய்தார். (32)

வீரபாண்டிய கட்டபொம்மு மகன் செகவீரராம பாண்டியன் கட்டபொம்மன் நெல்லையப்பருக்கும் வடிவம்மைக்கும் உச்சிக் கால பூசை கட்டளைக்கு நிவந்தங்களை சிவஞானப் பட்டரிடம் வழங்கினார்.
--------------------------------

நெல்லைநகர் வடிவம்மை பகல்முழுக்கு நடத்திடவே முத்து வீரர்
நல்நிவந்தம் அளித்திட்டார் சடையவர்மன் சுந்தரனும் நிவந்தம் அளித்தார்
நல்மாது தரணிமுழு துடையாளும் சிறுகால சந்தி செய்யும்
நல்லோர்க்கு நிலம்அளித்தார் அன்னார்செய் நற்பணியை நினைவு கூர்வாம் (33)

இரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் வடிவம்மைக்கு பகல் அபிடேகத்திற்கு நிவந்தம் அளித்தார்.
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் நிலத்தை நிவந்தம் அளித்தார் பதியிலா மாது தரணி முழுதடையாள் நிவந்தம் அளித்தார்.
----------------------------------

திருநெல்லை நாயனார்க்கு நல்லெண்ணெய் காப்பிற்கு நிவந்தம் அளித்தார்
திருநிறைதோள் முதல்மாற வர்மகுல சேகரனாம் வழுதி வேந்தே
திருச்செல்வர் சேதிராயர் எம்மண்ட லம்கொண்டான் பூந்தோட் டத்தை
பெருமையுடன் ஏற்படுத்தி அதற்கான பெரும்நிவந்தம் உவந்து அளித்தார். (34)

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் எண்ணெய் காப்பிற்கு நிவந்தம் வழங்கினார்.
அதிகாரி நல்லபெருமாள் சேதிராயர் எம்மண்டலம் கொண்டான் எனும் பூந்தோட்டத்தை அமைக்க நிவந்தம் அளித்தார்.
------------------------------------

கல்லானை கரும்புண்ண செய்சித்தன் உறைகின்உற நெல்லைக் கோயில்
நல்பட்ச அட்டமிநாள் முழுக்காட்ட நெய்வழங்க பசுக்கள் வழங்கி
நல்இரவு வழிபாடு நடந்திடவே நிலங்களையும் நிவந்தம் அளித்தார்
வல்லமைசேர் மாறவர்மன் குலசேக ரபாண்டியராம் தென்னர் வேந்தே. (35)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியர் அட்டமி தோறும் திரு முழுக்காட்டிட நெய் வழங்க பசுக்களையும் அர்த்தசாம பூசைக்கு நிவந்தங்களையும் அளித்தார்.
-------------------------------------

திருநெல்லை உடையார்க்கு நண்பகலில் மறைஓத நிவந்தம் சந்தி
திருவிளக்கு ஏற்றவீர மார்த்தாண்ட வர்மன்தான் நிலத்தை அளித்தான்
கிருட்ணமுத்து வீரப்பன் மிருகசீரி டமுழுக்கு நடத்தச் செய்தான்
திருப்பரணி திருவமுதி பெருமனூர்கோ லவாமனனே படைக்கச் செய்தான் (36)

சங்கிலி வீரமார்த்தாண்ட வர்மன் உச்சிக்கால பூசையில் வேதம் ஓதிடவும், சந்தி விளக்கு வைக்கவும் நிவந்தம் அளித்தான். இரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மாதந்தோறும் மிருகசீரிடத்தில் திருமுழுக்கு நடத்திட ஏற்பாடு செய்தான்.
பெருமனூர் கோலவாமனன் ஆபத்சகாய பட்டர் பரணி நாளில் அமுதுக்கு அரசன் வழங்கிய நிலத்தை நீர் வார்த்து வழங்கினார்.
-------------------------------------

நன்னகராம் வேய்வனத்து உடையாரின் திருத்தளியில் காஞ்சி கொண்டான்
என்றசந்தி பெயர்பொலிய நின்றாடி, கோனேரின் மைகொண்டான் இருவர்
மன்னிடவே வைத்தார்கள் பராக்கிரம பாண்டியனார் அழகி யனிடம்
நன்மனத்தால் அமுதுபடி கறியமுது படைத்திடவே நிவந்தம் அளித்தார். (37)

பெயர்பொலியு நின்றாடுவான் கண்டியத்தேவனும், கோனேரின்மை கொண்டான் சுந்தர பாண்டியனும் "காஞ்சி கொண்டான்" சந்தியை வைத்தார்கள்.
பராக்கிரம பாண்டியன் அமுதுபடி கறியமுதுபடி வழங்கிட அழகியாளிடம் நிவந்தம் அளித்தான்.
----------------------------------

கன்னிபுரி வேணுவனம் பிரமபுரி சாலிநகர் நெல்லூர் நெல்லை
தென்காஞ்சி நல்லூர்தென் தில்லைகுல சேகரமங் கலம்என் றுகூறு
நன்னகரில் உறைசிவனார் திருத்தளியில் குலசேகர ரசந்தி விளக்கு
குன்றாசீர் கோனேரின் மைகொண்டான் குறைவறவே நிறுவி வைத்தார் (38)

கோனேரின்மை கொண்டான் சுந்தர பாண்டியனே குலசேகரன் சந்தி தீபத்தையும் நிறுவினார்.
-----------------------------------

திருவேணு புரத்தார்க்கு ஐப்பசியின் அவிட்டபூசை நடத்தச் செய்தார்
பெருமையுடை வாணகோவ ரையன்என்பார் புரட்டாசி மூல நாளில்
உருத்திரத்தை சுந்தரபாண் டியர்சிறுகா லசந்திமறை ஓதச் செய்தார்
ஒருநெறிய மனங்கொண்டு இப்பணிகள் உவந்துசெய்த அவரை நினைவாம்.(39)

வாணகோவரையன் ஐப்பசி மாதம் அவிட்டநாள் பூசை நடத்த தானம் வழங்கினார். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியர் புரட்டாசி மூலநாள் சிறுகால சந்தியில் உருத்திரம் ஓதிடச் செய்தார்.
-----------------------------------------

எட்டுகால சந்திவைத்து பால்வழங்க நற்பசுக்கள் தானம் அளித்தான்
மட்டில்லா புகழ்நல்ல பெருமாளாம் சேதிராயர் என்னும் நல்லார்
முட்டாது இராமவர்மன் தன்பேயரில் சந்திதனை நிறுவி வைத்தார்
கட்டான தீபம்அர்த்த தமண்டபத்தில் கைக்கோளர் ஒருவர் வைத்தார் (40)

அதிகாரி நல்ல பெருமாள் சேதிராயர் எட்டு கால சந்தி அமைத்தார் பசுக்களையும் வழங்கினார்.
வென்று மண் கொண்ட பூதல இராமவர்மன் "இராமவர்மன் சந்தி" யை ஏற்படுத்தினார். கைக்கோளார் ஒருவர் அர்த்த மண்டபத்தில் விளக்கு வைத்தார்.
-------------------------------------------

மருப்பாற்று மாளிகையில் பள்ளியறை மழவராய அணையில் அமர்ந்து
பெருமையுடை உலகமுழு துடையாளுடன் இருக்கத்தன் பிறந்த நாளாம்
திருவிசாக நாள்அமுது படைத்திடவே நிவந்தமாக காணி அளித்தார்
திருவணைந்த முதலடுத்த சடையவர்மன் குலசேக ரபாண்டி வேந்தே. (41)

இரண்டாவது சடையவர்மன் குலசேகர பாண்டியன் கோட்டாற்று அரண்மனையில் மழவராய அரியணையில் தம் மனைவியார் உலகு முழுதுடையாளுடன் அமர்ந்து தன்னுடைய பிறந்த நாளான திருவிசாகத்தில் திருவமுது படைக்க நிவந்தம் அளிக்க ஆணையிட்டார்.
---------------------------------

சித்திரையில் மூலநாளில் உருத்திரத்தை ஓதிடவே நிவந்தம் அளித்தார்
முத்துநாட்டு முதல்சடைய வர்மனான சுந்தரனே மழவ ராயர்
சித்தராம்சொக் கருக்குசத யநன்னாளின் அமுதுக்கு நிவந்தம் அளித்தார்
கத்துகடல் சூழ்உலகில் அவர்கொடையை கருத்துடனே நினைவில் வைப்பாம் (42)

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சித்திரை மாதம் மூல நாளில் உருத்திரம் ஓதிட நிவந்தம் அளித்தான்.
சங்கரன் அழகிய பெருமாள் மழவராயர் சொக்கருக்கு சதய நாளில் அமுது படைக்க நிவந்தம் அளித்தார்.
----------------------------------

சித்திரையில் சதயநாளில் அமுதுக்கு கண்டியதே வஅதி காரி
பத்திகொண்டு நிலம் அளித்தார், சித்திரையின் மான்தலைநாள் முழுக்கு ஆட்ட
உத்தமராம் மழவராய சொன்னமயில் உடையாரே நிவந்தம் அளித்தார்
இத்தரையில் பத்தியுடன் திருப்பணிகள் செய்தவரை நினைவில் கொள்வாம். (43)

அதிகாரி கண்டியத் தேவர் சித்திரை மாதம் சதய நாளில் திருவமுதுக்கு நிவந்தம் அளித்தான்.
மழவராய சொன்ன மயில் உடையார் சித்திரை மாதம் மிருக சீரிட நாளில் திருமுழுக்காட்ட நிவந்தம் அளித்தார்.
------------------------------------

தேங்குபுனல் மணத்தசடை பிஞ்ஞகனார் தேவிதனை பாகம் கொண்டு
மூங்கிலிலே முளைத்தமுத்து மாலிங்கர் கருவறையில் ஆத்தி ரேயன்
ஓங்குமனம் கொண்டவராம் சேத்தல்தான் ஒளிகுன்றா நுந்த விளக்கு
பாங்குடனே ஏற்றிடவே ஏற்பாடு செய்தவரை நினைவில் கொள்வாம் (44)

ஆத்திரேயன் சேந்தன் மூல மாலிங்கர் கருவறையில் நுந்தா விளக்கு ஏற்றிட ஏற்பாடு செய்தார்
-------------------------------------

கருவறையில் விளங்கிடவே வரதண்ண தண்டல்நா யகன்ஏற் பாடும்
திருநெல்லை நாயனார்க்கு எட்டுகால சந்திக்கு நிலமும் அளித்தார்
திருத்தளியில் அனந்தலிலே நின்றுபோன பாவாடை சாற்ற பூவை
தருதற்கு இளையாழ்வான் வீரபாண்டி தமிழ்வேந்து நிவந்தம் அளித்தார். (45)

வீரசாமி தேவர் தண்டல் நாயகன் வரதண்ண தண்டல் நாயகன் கருவறையில் விளக்கு ஏற்றவும், எட்டு கால சந்திக்கு நிலமும் அளித்தார்.
இளையாழ்வான் வீரபாண்டியன் அனந்தலிலே நின்று போன பாவாடை சாற்றவும் மலர்கள் தரவும் மீண்டு நடத்திட ஏற்பாடு செய்தார்.
----------------------------------------

கோனேரின் மைகொண்டன் சுந்தரனாம் பாண்டியன்பூந் தோட்டம் அமைத்தார்
தேனார்சொல் சூர்யதேவர் தரணிமுழு துடையாள்பூந் தோட்டம் அமைத்தார்
ஞானநிறை பொன்னம்ப லவன்கழுநீர் வளர்த்தளிக்க நிலத்தை அளித்தார்
மானிலத்தோர் அவர்கள்செய் மலர்த்தொண்டை மனம்வைத்து நன்றி கூர்வாம்.(46)

கோனேரின்மை கொண்டானே "சுந்தர பாண்டியன் நந்தவனம்" அமைத்தார் சூர்யதேவர் மேற்பார்வையில் "தரணி முழுதுடையாள் நந்தவனம்" அமைத்தார். திருநெல்வேலி பொன்னம்பலம் கட்டினார் செங்கழுநீர் வளர்க்க பத்து போர்களை ஏற்பாடு செய்து சொக்க நாயகன் ஞானம் பெற்றானிடம் நிவந்தம் அளித்தார்.
----------------------------------

திருவேணு புரத்தளில் வடிவாளின் திருப்பள்ளி எழுச்சி வேளை
திருஞானம் ஓதிடப தினொருவரை நியமித்து மனையும் நிலமும்
பெருந்தோளன் முதலடுத்த மாறவன்மன் சுந்தரனாம் பாண்டி வேந்தாம்
அருந்தமிழார் பொதிகைநாடன் கொற்கையனே அருங்கொடையாய் நிவந்தம் அளித்தார் (47)

இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் வடிவம்மை சந்நிதியில் திருப்பள்ளி எழுச்சியில் திருஞானம் ஒத பதினொரு பேரை நியமித்து மனைப்புறமும், திருஞானப் புறமும் அளித்தான். அதனை ஆளுடையார் ஆனந்தக் கூத்தனுக்கு நிவந்தம் அளித்தார்.
---------------------------------------

திருவிதாங்கூர் இரவிவர்மன் நண்பகலின் பூசைவேளை வேதம் ஓத
பெரும்நிவந்தம் அளித்திட்டார் சுந்தரகோ ளரிதொண்டை மானே இரவு
அரியவேதம் ஓதபூவைத் தரச் செய்தார் நண்பகலில் வேதம் ஓத
திருவிளக்கு ஏற்றவீர மார்த்தாண்ட வர்மன்தான் நிவந்தம் அளித்தார். (48)

திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மன் உச்சிக்கால பூசைக்கு வேதம் ஓதிட நிவந்தம் அளித்தார். மலைமண்டலம் சுந்தர கோளரி தொண்டைமான் உச்சிக்கால பூசையில் வேதம் ஓதிடச் செய்தார். வீரமார்த்தாண்ட வர்மன் அர்த்தசாம பூசையில் வேதம் ஓதிட பூ வழங்க ஏற்பாடு செய்தார். உச்சிக்கால பூசையில் வேதம் ஓதவும், தீபம் ஏற்றவும் நிவந்தம் அளித்தார்.
---------------------------------

உலகுய்ய வந்தபெரு மாள்என்பான் வெள்ளிதட்டு கடாரம் அளித்தார்
தலைக்கோலி நக்கன்ரா சேசுவரர் புயங்கத்தார் நிலத்தை அளித்தார்
பலபணிகள் மறைக்காட்டு ஆழ்வாராம் கங்கநாட்டார் உவந்து அளித்தார்
தலம்புகழும் நெல்லைதளி திருப்பணிகள் புரிந்தவரை நினைவு கூர்வாம். (49)

உலகுய்ய வந்த பெருமாள் வெள்ளித் தட்டும், கடாரமும் அளித்தார். தலைக்கோலி நக்கன் ராசேசுவரர் புயங்கத்தார் நிலம் அளித்தார். மறைக்காட்டு ஆழ்வராம் கங்க நாட்டார் பல பணிகள் செய்தார்.
---------------------------------

மாறவர்மன் சுந்தரனாம் பாண்டியரே அணிமணிகள் பலவும் அளித்தார்
ஏறுபுகழ் அழகம்பெ ருமாள்இருவே ளைபாலுக்கு நிவந்தம் அளித்தார்
வீறுதோளர் அதிவீர ராமபாண்டி பொற்கிண்ணம் ஒன்று அளித்தார்
கூறுகுல சேகரத்தார் சண்டிக்கு நெல்பொன்னை உவந்து அளித்தார். (50)

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியர் அணிமணிகள் வழங்கினார் அழகம் பெருமாள் திருப்பள்ளியெழுச்சிக்கும் அர்த்தசாம பூசைக்கும் பால் வழங்க நிவந்தம் அளித்தார்.
அதிவீரராம பாண்டியர் அமுதுக்கு பொற்கிண்ணம் வழங்கினார். குலசேகர புரத்தார் ஆதிசண்டீசருக்கு பொன்னும் நெல்லும் வழங்கினார்.
-----------------------------------

முருகனுக்கும் தேவியர்க்கும் ஆரல்நாள் தேர்விழாவை நக்கன் செய்தார்
திருஞானம் பெற்றார்க்கு திருவிழாவை வேணாடு உடையார் செய்தார்
திருத்தொண்டர் விழாவைவீர மார்த்தாண்டன் சிறப்புடனே செய்தார், கூத்தர்
திருவிழாவை விழுப்பத்த ரையர்செய்தார் இவர்கள்தம் பணியை நினைவாம். (51)

நக்கன் அழகிய பெருமாள் இருமுடி தவிர்த பெருமாள் முருகனுக்கும், தேவியருக்கும் கார்த்திகை நாளில் தேர் விழாவை ஏற்பாடு செய்தார். மதுரோதய நல்லூர் அரையன் பூவனான் வேணாடுடையார் சம்பந்தருக்கு விழா எடுத்தார்
செய்துங்க நாட்டு வென்று மண் கொண்ட பூதல வீர மார்த்தாண்ட வர்மன் நாயன்மார்களுக்கு விழா எடுத்தார்
அதிகாரி மிழலைக் கூற்றத்து அரும்பொருள் உடையான் திருச்சிற் றம்பலம் உடையார் உடைய நாயனார் விழுப்பத்தரையர் அழகிய சிற்றம்பலம் உடையார்க்கு விழா எடுத்தார்.
------------------------------------

திருமேனி பிரியாதாள் ஆவணியில் நாடகத்தை அமைத்தார் மேலும்
பெரும்பள்ளி யறைநாச்சி யார்தை ஆனி விழாவில்நா டகத்தை அமைத்தார்
திருவுடையார் ரூபவிச்சா தரருக்கும் தாரைசின்னம் முழக்கு வார்க்கும்
பெருநிவந்தம் அளித்தவர்கள் மூவரையும் பெருமையுடன் நினைவில் வைப்பாம். (52)

திருமேனி பிரியாதாள் ஆவணி விழாவில் நாடகம் நடத்தினார் பெரும்பள்ளி நாச்சியார் தை மாதம் ஆனி மாதம் நடைபெறும் விழாவில் நாடகத்தை நடத்தினார் . எழு திருவுடையாள், ரூபவிச்சாதர பல்லவராயர் மற்றும் தாரை, சின்னம் முழக்குவார்க்கு நிவந்தம் அளிக்கப்பட்டது.
-----------------------------------

இந்துநதி அணிசடையன் உமைபாகன் இசைநடைகொள் விடையன் நாளும்
சிந்துபூந்து றையிலிருந்து திருமஞ்ச னநீர்எடுத்து வருசா லைதனை
பந்தியாக கற்பாவி சீர்செய்தார் பண்பார்ந்த அரிய நாதர்
சிந்தையுடன் அவருடைய திருப்பணியை தினம்நினைந்து நன்றி கூர்வாம். (53)

அரியநாத முதலியார் திருக்கோயிலுக்கு திருமஞ்சன நீர் எடுத்து வரும் சிந்துபூந்துறையிலிருந்து திருக்கோயில் வரை உள்ள சாலையை கற்பாவி சீர் செய்தார்.
------------------------------

அகநாழி அடுத்தநடை மாளிகையை விக்கிரம பாண்டிய பெயரால்
பகருமுதல் மாறவர்மன் குலசேக ரவழுதியே தேர்ந்து அமைத்தார்
பகர்இசைத்தூண் மணிமண்ட பத்தைவீர சங்கிலிமார்த் தாண்டன் அமைத்தார்
புகழ் கொண்ட அன்னவரின் திருப்பணியை பணிவுடனே நினைவில் வைப்பாம். (54)

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கருவறைக்கு அடுத்த சுற்றை விக்கிர பாண்டியன் திருநடை மாளிகையை அமைத்தார். சங்கிலி வீர மார்த்தாண்ட வர்மன் இசைத்தூண் மணிமண்டபத்தை அமைத்தார்.
--------------------------------

புவியாண்டு ஆயிரத்து அறுநூற்றைம் பத்துநான்கில் சிவந்தி யப்பர்
கவின்சிலைகொள் நெடுங்கொடிம ரமண்டபத்தை கவனமாக சீராய் அமைத்தார்
அவனியாண்டு ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஏழாம் ஆண்டு
உவமையிலா சங்கிலிமண் டபம் அமைத்தார் வடமலையார் என்றும் வேளே. 55

கி.பி. 1654-இல் சிவந்தியப்ப நாயக்கர் சிற்பங்கள் நிறைந்த கொடிமர மண்டபத்தை அமைத்தார். கி.பி.1647-இல் வடமலையப்ப பிள்ளை சங்கிலி மண்டபத்தை அமைத்தார்.
----------------------------

சந்தனமும் அகில்தேக்கும் சண்பகமும் செந்தமிழும் மணத்த குன்றம்
தந்தசெப்பு நதிசிந்து பூந்துறையில் அம்மையப்பன் தைபூச விழாவில்
வந்தமர்ந்து திருத்தமாடும் மண்டபமும் ஊஞ்சல்மண் டபமும் அழகாய்
சிந்தைநிறை சேரகுளம் பிறவிபெரு மாள்பிள்ளை உவந்து அமைத்தார். 56

கி.பி. 1635 இல் சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளை தைப் பூச மண்டபத்தையும், ஊஞ்சல் மண்டபத்தையும் அமைத்தார்.
-----------------------------------

சரண் அடைந்த சிறுவனுக்கா கூற்றுதைத்த சங்கரனாம் நெல்லை உடையார்
அரன்அளித்த இருநாழி நெற்கொண்டு வேள்குலத்தார் வழியாய் நல்ல
அறன்வளர்த்த இறைவி இறை வன்தளிமுன் அம்பலமாம் மண்ட பத்தை
திரிசிரபு ரசிவராம காசிஎன்பார் சீருடனே கட்டி வைத்தார். 57

திரிசிரபுரம் சிவராம காசியா பிள்ளை இறைவன் இறைவி கோயிலின் முன் உள்ள மண்டபத்தை அமைத்தார்
--------------------------------

அவனியாண்டு ஆயிரத்த றுநூற்றைம்பத் தாறில்வெங் கடகி ருஷ்ணன்
பவளநிற நெல்லைநாதன் இளவேனில் மண்டபத்தை அகழி சூழ
கவடுமரம் மணத்தமலர் செடிகொடிகள் பலகொண்ட சோலை அமைத்து
புவனிமகிழ் இளவேனில் விழாவினையும் பொலியுடனே நடக்கச் செய்தார். 58

கி.பி. 1656 இல் மகமதிசுகானின் அதிகாரியை வெங்கடகிருஷ்ண முதலியார் வசந்த மண்டபத்தை அமைத்து வசந்த விழாவையும் நடத்தினார்.
-----------------------------------

திசை எல்லாம் புகழ்பரவும் வேய்வனத்து திருக்கோயில் மதிலை மஞ்சு
அசைந்தலைய உயரமாக எடுப்பித்தும் அகலமான இரண்டாம் சுற்றும்
விசயதோளன் மாறவர்மன் குலசேக ரபாண்டியனே அமைத்தும் மதிலை
இசைந்தகுல சேகரனின் மதில்எனவே இவ்வுலகு என்றும் போற்றும். 59

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் திறைப் பொருட்களைக் கொண்டு திருமதிலை கட்டினார். இரண்டாவது திருச்சுற்றையும் சீர் செய்தான். இவன் அமைத்த மதில் குலசேகரன் மதில் என அழைப்பார்கள்.
-------------------------------------

நெல்வயல்சூழ் வளநகரின் திருக்கோயில் வெளிச்சுற்றில் கீழ்மேல் சுற்றும்
நல்முறையில் தெற்குசுற்றும் வடமலையாம் நரபதியும் வடக்கு சுற்றை
வல்லதிரு மலைக்கொழுந்து பெரியோனும் அகலமாக அமையச் செய்தார்
தொல்லுலக மாந்தர்கள் எல்லோரும் அன்னவரை நினைவு கூர்வாம்.. 60

இறைவன் திருக்கோயிலின் வெளிச் சுற்றின் வடக்கு சுற்றை வடமலையப்ப பிள்ளையின் மைத்துனர் திருமலைக் கொழுந்து பிள்ளை மற்றும் பொதுமக்கள் அமைத்தார்கள். கிழக்கு, தெற்கு, மேற்கு சுற்றை வடமலையப்ப பிள்ளை அமைத்தார்.
-----------------------------

நஞ்சுதனை அமுதாக்கி உயிர்க்காத்த நற்றாயாய் என்றும் கன்னி
அஞ்சுசபை நடஞ்செய்தான் கூறுடையாள் ஆனைமுகன் குமரன் தன்னை
கொஞ்சிமகிழ் நெல்லைநகர் வடிவாளின் வெளிச்சுற்றை சீராய் அமைத்தார்
நெஞ்சுநிறை தளவாய்அ ழகப்பருடன் திருமலையப் பபிள்ளை சேர்ந்தே. 61

இறைவியின் சந்நிதியில் வெளிச் சுற்றில் தளவாய் அழகப்ப முதலியார் தெற்கு, மேற்கில் முக்கால் பாகத்தை அமைத்தார். திருமலையப்ப பிள்ளை மேற்கில் கால்பாகமும் வடக்கு சுற்றையும் அமைத்தார்.
--------------------------------

தகர்த்துபொடித் துதைத்து எரித்துகிள்ளி உரித்துகுத்தி பிளந்து வீரம்
மிகப்புரிந்த கழைவனத்தன் திருத்தளியில் விண்தழுவும் சிகரம் அமைத்தார்
செகத்தாண்டு ஆயிரத்த றுநூற்றாறில் ஈழில்சிற்பம் நிறைந்து விளங்க
உகந்தமைத்தார் அன்னவரின் திருப்பணியை உள்ளத்தால் நினைவு கூர்வாம் 62

கி.பி. 1606 இல் நெல்லையப்பர் திருக்கோயிலின் இராச கோபுரத்தைத் கட்டினார்கள்.
------------------------------------

தவராசர் திருமூலர் யோகநெறி சக்கரத்தில் உறையும் தேவி
குவடரையன் செல்வமகள் வடிவாளின் கோபுரத்தை வளப்பாய் அமைத்தார்
அவனியாண்டு ஆயிரத்த றுநூற்றிருபத் தாறினிலே விண்ணை முட்ட
உவந்தமைத்தார் அவர்கள்தம் பெரும்பணியின் சிறப்புதனை நினைவு கூர்வாய் 63

கி.பி.1626-இல் இறைவி திருக்கோயில் இராசகோபுரம் கட்டப்பட்டது.
-------------------------------------------

போராழித் தெய்வத்தேர் ஏறிசென்று ஒன்னலர்தம் ஊரை எரித்த
காராரும் வேய்வனத்து உறைசெல்வர் ஆனிகேட்டை நாளில் ஓடும்
தேரைசீராய் ஆயிரத்த றுநூற்றைந்தில் வைகாசியிலே ஓட்டம் பார்த்தார்
பேராரும் திருப்பணியாண்டார்இதனை நன்கொடைகள் கொண்டு அமைத்தார். 64

கி.பி. 1604 இல் சிவபாத சேகரர் திருப்பணியாண்டார் நன்கொடைகள் பெற்று திருத்தேரை சீர்செய்தார். ஆனி மாதம் கேட்டை நாளில் ஓடும் திருத்தேரை வைகாசி மாதம் வெள்ளோட்டம் நடத்தினார்கள்.
-----------------------------

தேர்அச்சு ஸ்காட்லாந்து நாட்டினிலே ஓர்அச்சாய் வார்த்து அமைத்தார்
தேர்அகலம் நீளமிரு பத்தெட்டு அடி,உயரம் முப்பத் தைந்தும்
சீரான ஒப்பனையில் எண்பதடி, சக்கரங்கள் எட்டு கொண்டும்
தேர்எடையோ நானூற்று ஐம்பதுடன் கொண்டதுவே நெல்லைத் தேரே. 65

திருத்தேரின் அச்சுகள் ஸ்காட்லாந்தில் ஒரே அச்சாக வார்க்கப்பட்டது. தேரின் அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் 35 அடி கொண்டது. அலங்கரிக்கப்பட்ட பின்பு 80 அடி உயரம் ஆகும். எட்டு சக்கரங்களைக் கொண்டது. 450 டன் எடை கொண்டது. திருவாரூர் ஆழித்தேரை விட எடை கூடிய தேர் இதுவாகும்.
------------------------------------

நகசிலையும் மாலம்பும் புவித்தேரும் நகழாமல் சிரித்து எரித்த
பகவன்நெல் லைதளியிலே தைமாத அமாவாசை பத்ர தீபம்
செகத்தாண்டு ஆயிரத்து எண்ணூற்று நான்கில் முதலே
புகழுடைய கோடகநல் லூர்சுந்த ரஅடிகளாரே துவக்கி வைத்தார். 66

கி.பி. 1864-ல் கோடிகநல்லுர் சுந்தர அடிகள் பத்ரதீப விழாவை முதன்முதலில் தொடங்கி வைத்தார். அவ்விழா 1864-இல் தை மாதம் திங்கட்கிழமை அமாவாசை திருவோண நாளில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலட்சதீபம் நடைபெறும்.
-------------------------------------

சித்தத்தை ஒருநெறியில் மனம்வைத்தார் சிந்தையிலே ஒளியாய் விளங்கும்
பித்தனை பெம்மானாம் நெல்லை சிவன் பெருங்கோயில் இறைவி இறைவன்
சித்திரையின் உத்திரநாள் திருமுழுக்கு திகழ்ந்திடவே மலைசூழ் நாட்டு
உத்தமவிக் கிரமகாமன் சேரசோழன் வளமுடனே நிவந்தம் அளித்தார். 67

மலைநாட்டு விக்கிரம காமன் சேரசோழன் இறைவி இறைவனுக்கு சித்திரை மாதம் உத்திர நாளில் திருமுழுக்கிற்கு நிவந்தம் அளித்தார்.
----------------------------------

நீராழி மண்டபமும் கீழ்புறமும் துறைசைவளர் மடத்தார் அமைத்தார்
பேரார்ந்த தருமைமடம் தெற்குமேற்கு வெங்கடகி ருட்ணன் அமைத்தார்
சீருடை தா னப்பமுத லிவடக்கும் கீழ்பக்கம் செப்பம் செய்தார்
வாரமுடன் பொற்றாம ரைக்குளத்து படித்துறையும் வனப்பாய் அமைத்தார். 68

பொற்றாமரைக் குளத்தில் நீராழி மண்டபமும், கீழ்புறமும் திருவாவடு துறை ஆதீனமும், தெற்கு புறம் தருமை ஆதீனமும், மேற்கு புறம் வெங்கடகிருஷ்ண முதலியாரும், வடக்குபுறம் தானப்ப முதலியாரும் அமைத்தார்கள். படித்துறையும் சீர்செய்யப்பட்டது.
-------------------------------------------

கற்கனியும் வாசகத்தை மொழிந்தவரை உழவாரப் படைகொண் டவரை
விற்புருவ பரவைமகிழ் சுந்தரரை ஆட்கொண்டார் நெல்லை தளியின்
பொற்கமல வாவிமீண்டும் சீர்செய்தார் அமாவாசை அடிகள் துணையா
கற்பூர சிவசூர்ய பெரியாரே அன்னவரை நினைவு கூர்வாம். 69

பொற்றாமரைக் குளத்தை அமாவாசை அடிகளின் துணையுடன் கற்பூர பணிவிடை சிவசூர்ய பெரியார் செப்பனிட்டார்.
--------------------------------

பவளநிற பண்ணவனாம் பாசுபதம் பார்த்தனுக்கு வழங்கு நாதன்
உவமைஇல்லா திருநெல்லைத் திருத்தளிக்கு வெள்ளித்தேர் உவந்து செய்தார் புவனியாண்டு ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்றில் ஆலவாய்
கவடில்லா சண்முகசுந் தரப்பட்டர் மனைவியான கோம தியாளே. 70

கி.பி.1933-இல் மதுரை சண்முகசுந்தர பட்டரும், கோமதியம்மாளும் வெள்ளித்தேரை நெல்லைக்கோயிலுக்கு செய்து வைத்தார்கள். இத்தேர் ஸ்ரீமுக வருடம் வைகாசி மாதம் 3-ஆம் தேதி உத்திர நாள் தசமி திதி சனிக்கிழமை (3-7-1933) அன்று வீதிஉலா வந்தது.
-----------------------------------

உலகாண்டு ஆயிரத்தெண் நூற்றெண்பத் தேழில்நெல் லைநகர் தளியில்
மலைமத்தாய் அரவுநாணாய் பாலாழி கடையஆலம் காளம் படர
உலையாமல் உயிர்காக்க சிவன்உண்ட பிரதோட வேளை பூசை
நலமுடனே மகாராச பிள்ளைநன்கொ டைபெற்றுசெய் தவரை நினைவாம். 71

கி.பி. 1887இல் பிரதோட வழிபாட்டை மகாராச பிள்ளை என்பார் நன்கொடை பெற்று செய்வித்தார். வள்ளிநாயகம் பிள்ளை மனைவி சண்முகத்தம்மாள் வெள்ளியால் பிரதோட நந்திவாகனம் செய்திட 300 ரூபா வழங்கியுள்ளார்கள்.
-------------------------------------

ஆயிரத்து எழுநூற்றைம் பத்தொன்றில் லாலுகான் சாய்பு என்பார்
வேயிருங்கா குமரருக்கு நாட்பூசை திருமுழுக்கு படையல் நடாத்த
தூயமனம் கொண்டுதானம் அளித்திட்டார் நிலைகொண்ட அவர்செய் பணியை
நேயத்தால் நன்றியுடன் அன்னவரை நினைந்துநாளும் போற்றி செய்வாம். 72

கி.பி. 1751 இல் லாலுகான் சவான் சாய்பு நெல்லை நகர் மேற்கில் உள்ள வேணுவன குமரருக்கு தினபூசையும் திருமுழுக்கும் படையலும் நடந்திட நிவந்தம் வழங்கினார்.
---------------------------------

வில்கல்சொல் கொண்டுசாரும் தொண்டருக்கு விருப்புடனே கருணை செய்த
அல்குழலி வடிவுடையாள் பாகத்தான் நெல்லையிலே பொன்னால் தேரை
நல்லபூமி ஆண்டிரண்டா யிரத்தொன்ப துஐப்பசியில் ஓட வைத்தார்
நல்லன்பர் உதவிடவே அமைத்திட்டார் இப்பணியை நினைவு கூர்வாம். 73

கி.பி. 2009இல் ஐப்பசி மாதம் 16ஆம் நாள் திங்கட்கிழமை (2-11-2009) தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.
-----------------------------

செகத்தாண்டு ஆயிரத்து அறுநூற்று எண்பத்து இரண்டில் தளியில்
பகல்பூசை நடாத்திடவும் ஆயிரத்து எழுநூறில் இரவு பூசை
பகர்ந்திடுநல் அன்னதானம் நடந்திடவும் வழிமுறையை செய்தார் உலகு
புகழ்முத்து வீரப்ப நாயக்கர் அவர்செய்த பணியை நினைவாம். 74

கி.பி. 1682இல் உச்சிகால பூசை நடக்க நிலமும் கி.பி. 1700இல் அர்த்த சாம பூசைக்கும், அன்னதானத்திற்கும் பழையபேட்டையை நிவந்தம் அளித்தார். இரங்க முத்து வீரப்ப நாயக்கர் என்பார்.

பிழைத்தது பொறுத்தல் பெரியவர் கடனே.- கம்பன்
--------------------------------

அருஞ்சொல் விளக்கம்

கழை, வரை, வேணு, வெதிர், வேய் – மூங்கில்; செகத்தாண்டு, அவனியாண்டு, புவியாண்டு - ஆங்கில வருடம்; தகர்த்து - தக்கன் வேள்வி தகர்த்தது; பொடித்தது - மன்மதனை பொடி செய்தது; உதைத்து - யமனை உதைத்தது; எரித்து - திரிபுரத்தை எரித்தது; கிள்ளி - பிரமன் தலையை கிள்ளியது; உரித்து - யானையை உரித்தது; குத்தி - அந்தகாசுரனை சூலத்தில் ஏந்தியது; பிளந்தது - சலந்தரனை பிளந்தது; உவணம் – கருடன்; பிட்டுநுகர் - பிட்டுப் படையல்; வரைபுயம் – மலை போன்ற தோள்; செப்பு மன்று - தாமிர சபை; செப்புநதி – தாமிரபரணி; பெரியகூத்தர் - பெரிய நடராசர்; அனவரத நாதர் – மூலமகாலிங்கம்; மெல்லடகு - வெற்றிலைப் பாக்கு; இசை ஏறுபரி - இசைக்கு தகுந்த நடை தந்தி; சடாதரீசர் – குபேரலிங்கம்; பூரணை – பௌர்ணமி; இரலை – மான்;
குடதிசை – மேற்குத்திசை; பிரமபுரி, கன்னிபுரி – திருநெல்வேலி; நண்பகல் – உச்சிக்காலம்; சிறுகாலசந்தி - காலை வழிபாடு; சந்தி – பூசை காலம்; அந்தி – மாலைக்காலம்; மருப்பாறு - கோட்டாறு; முத்துநாடு – பாண்டிநாடு; மான்தலை நாள்-மிருகசீரிடம்; அனந்தல் – பள்ளிஎழுதல்; பாவாடை – நடைவிரிப்பு; திருஞானம் ஒத - திருமுறை ஓத; அகநாழி - அர்த்த மண்டபம்; கவடு மரம் - கிளையுடை மரம்; ஒன்னலர் – பகைவர்; குடக்குணக்கா - கிழக்கு மேக்கா; மறு - ஸ்ரீவசலம்; பெரியதேவ முதலியார் - நெல்லையப்பர் செப்புத் திருமேனி; நாச்சியார் - வடிவம்மை செப்புத்திருமேனி; அழகிய சிற்றம்பலம் உடையார் - பெரிய சபாபதி செப்புத் திருமேனி; கைப்பிணி தவிர்த்த பெருமாள் - தாமிரசபை முருகன் பெயர்.
---------------
துணை நூல் பட்டியல்
South Indian Inscription Vol-V
நெல்லையப்பர் கோவில் - பு.பா. உமாமகேசுவரி
நெல்லை கையேடு, செப்பு பட்டயங்கள், கல்வெட்டு - இதழ்
-------------

This file was last updated on 28 Nov. 2024.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)