pm logo

ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்
பாகம் 3 (பாடல்கள் 401-814)


takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum, part 3 (verses 401-814)
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
We thank Mr. Rajendran Govindasamy for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

takkayAkap paraNi by oTTakkUttar
mUlamum uraiyum [part 3, verses 401-814]

Source:
கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய
தக்கயாகப்பரணி - மூலமும் உரையும்.
இவை சென்னை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி
உ. வே. சாமிநாதையரால்
பல பிரதிகளைக்கொண்டு பரிசோதித்து நூதனமாக
எழுதிய பலவகைக் குறிப்புக்களுடன்
சென்னை கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
சுக்கில ௵ தை ௴
Copyright Registered ] 1930 [ விலை ரூ. 4-0-0
additional source “2015.370369.Takkayaakapparandi-Mulamum” of digital library of india taken from archive.org. This is the second edition of the book published in 1945.
---------
உள்ளடக்கம்
1. கடவுள் வாழ்த்து (1-9)
2. கடைதிறப்பு (10-47)
3. காடுபாடியது (48-102)
4. தேவியைப் பாடியது (103- 119)
5. பேய்களைப் பாடியது (120 - 135)
6. கோயிலைப் பாடியது (136 - 221 )
7. பேய்முறைப்பாடு (222- 244 )
8. காளிக்குக் கூளி கூறியது (245 - )
9. கூழடுதலும் இடுதலும் (728 - 777)
10. களங்காட்டல் (778 - 799)
11. வாழ்த்து (800 - 814)
-----------------

தக்கயாகப்பரணி
8. காளிக்குக் கூளி கூறியது (245-727).

401. யானை யானசில பாய்புரவி யானசிலவா
      ளடவி யானசில தேரசல மானசிலநேர்
சேனை யானசில நிற்பவெவ னிற்பதெனவிச்
      செல்லு நாலணியி லுந்தலைவ ரானசிலவே.

வாளடவியாகையாவது ஆயுதவனமாகை; அவை யானைமேல் வில்லும் குதிரைமேல் வாளும் தேர்மேற் பலபடையும் ஆளின்கரத்து வில்முதற் படைகளுமாகை. வாளென்பது கூர்மையும் சோதியும் வார்த்தையும் பிறவுமான பலபொருள் ஒருசொல். சேனைக்குச் சேனாபதிகளும் தாமே யென்றறிக.

இதனாலேயறிக, ஈசுவரபத்தர் வேண்டியபொழுதே வேண்டியவடிவு கொள்வரல்லது கர்ப்பக்கிரகத்திற் புக்குப் பிறவாரென்பது.
----------

402. அங்க ணாரணர் பயோததியு மில்லைமகனா
      ரம்பு யாலயமு மில்லையவர் கட்கரியராம்
எங்க ணாயகர் திருக்கயிலை வெற்புமுளதோ
      வில்லை யோபிற புலங்களை யியம்புகிலமே.

அங்கணென்பதற்கு அவ்விடமென்பது பொருளன்று; அழகிய கண்ணென வுணர்க. பயோததி - பாற்கடல். மகனாரென்றது பிரமாவை; இங்குச் சொன்ன உபசாரம் இழித்துரை; இவர் பெரிதும் கருமம் செய்து வந்தார் தேர்த்தொண்டனாராக. அம்புயம் - தாமரை.

அவர்கட்கு அரியராமெங்கணாயக ரென்றது இப்போது இக்கதை சொன்ன பேயின் கூற்றென வுணர்க. ஸ்ரீ கயிலாசம் உளதோ இலதோவென்று சிவத்துரோகம்படச் சொல்லியது ஆளுடைய பரமேசுவரியுடைய அடிமைப்பேயென வுணர்க.
----------

403. காலெ ழுந்தபொழு தோகட லெழுந்தபொழுதோ
      கனலெ ழுந்தபொழு தோகயிலை யாளிகடகம்
மேலெ ழுந்தபொழு தும்பிரம ரண்டகடகம்
      விண்டு டைந்தில பெருந்திகிரி வெற்புடையவே.

கால் - மகாவாதம். கடல் எழுகையாவது பிரளயோததியாகி எழுகை. கனல் - வடவாமுகாக்கினி. கயிலையாளி - மகாதேவர்; "ஊராளி" என்றாற்போல. கடகம் - படை. மேலெழுகையாவது அடங்கிக் கிடந்தது கிளர்கை. பிரமரண்டகடக மென்பது பிரமாண்டப் பெரும்படை அனைத்தும்; பெருந்திகிரிவெற் பென்றது எல்லைச் சக்கரவாளத்துக்கும் அப்பாலைச் சக்காவாளத்தை யெனவுணர்க.
----------

404. புத்தர் போதியரு கந்தர்க ளசோகுதிருமால்
      புகுது மால்சத மகன்சுர தருக்கள்பொருளோ
எத்த ராதலமு நீழலிடு மேழ்பொழிலுநே
      ரெழுவி லங்கல்களு நேரடி யெழுந்திடறவே.

எ-து : வீரபத்திரதேவருடைய பெரும்படை எழுந்து புறப்பட்டபொழுது அப்படைகளின் ஸ்ரீபாதங்கள் இடறவே [1]ஸர்வக்கிஞருடைய மகாபோதியான அரச விருட்சங்களும் அருகபரமேஷ்டிகளுடைய திருநிழலான அசோக விருட்சங்களும் திருமாலான விஷ்ணுதேவர் தமக்கொன்றுற்றால் ஒதுங்குதற்கு இடமான வடவிருட்சங்களும் இந்திரனுடைய இட்டத்தைப் பிரசாதிக்கும் பஞ்ச தருவான கற்பக விருட்சங்களும் இவையெல்லாம் ஒருபொருளல்ல; எல்லா லோகங்களிலும் நிழலிடவல்லனவா யிருக்கும் [2]ஏழு சோலைகளும் நேராய்ப் போயின; சத்தகுல பருவதங்களும் நேராய்ப் போயின. எ-று.

-----
[404-1] ஸர்வக்கிஞர் - புத்ததேவர்; எல்லாமறிந்தவ ரென்பது இதன் பொருள்; இதுபற்றியே அவரை "முழுதும் பொய்யின் றுணர்ந்தோன்" என்பர்; மணி. (௨௫ : ௪௫) 25 : 45.
[404-2] "ஏழுடையான் பொழில்.” திருச்சிற். (௭) 7.
----------

405. விண்ணில் வந்தமழை யும்பனியு மெவ்வடவியு
      மிடைய வந்ததளி ருந்துணரும் வெற்பினடுவேழ்
மண்ணில் வந்தமண லும்பொடியும் வீரனவனோர்
      வடிவின் வந்தகழு துங்குறளு மானபரிசே.

விண் - ஆகாசம். எவ்வடவியும் மிடையவந்த தளிரும் துணருமென்பது எல்லாக் காட்டிலும் மிடையும்படி வரப்பட்ட முறியும் பூங்கொத்துக்களு மென்றவாறு. வெற்பின் நடுவேழ் : ஏழ்வெற்பின் நடுவென மொழிமாறிக் கூட்டுக. மண்ணில் வந்த மணலென்பது பூமியணுவினால் வந்த மணலென்றவாறு. பொடியென்பது மணலால் வந்த தூளி. வீரனவனோர் வடிவில்வந்த வென்றது வீரபத்திரதேவருடைய திருமேனியில் ஒருறுப்பிற் பிறந்தவென்றவாறு.

எனவே, பேயும் பூதமும் இவையெல்லாமாயின. இதன்கருத்து : வீரபத்திரதேவர் முப்பத்திரண்டுறுப்பினும் ஒருறுப்பிற் பிறந்தன இவையெல்லாம்; இவைகளில் ஒருபூதமும் ஒருபேயுமே தனித்தனி எல்லாமாகவல்லன; அழிந்தனவென அஞ்சவேண்டாமென்பது பொருள்.
----------

406. பூத மும்பழைய வாமனன் வளர்ந்ததனையும்
      புடைபெ யர்ந்தெழ வளர்ந்துபெயர் போனகழுதின்
சாத முங்கழு தெனும்பெயர் தவிர்ந்தனநிணத்
      தசைமி சைந்துடல் விசும்புபுதை யத்தணியவே.

பூதங்களும் புராண வாமனரூபன் வளர்ந்த அளவும் வளர்ந்து குறளென்னும் பெயர் தவிர்ந்தன. வாமனனைப்போலக் குறளாகி நெடியவானமை உவமை. இது சம்பிரமம். புடைபெயர்ந்தெழ வளர்ந்தென்றது [1]அட்டம் வளராது நெட்ட நெடுமை கொண்டன வென்றவாறு. இனிப் பசாசுகளும் நெய்யுடைய மாங்கிசத்தைத் தின்று தடித்து ஆகாசமெல்லாம் தாமாயின; நெடுமை வளர்ந்து அட்டமும் வளர்ந்தன.

இதன் கருத்து பூதம் பேயாயின வென்பது.

-----
[406-1] அட்டம் - குறுக்கு; "அட்ட மாளித் திரள்வந் தணையு மண்ணா மலையாரே” (தேவாரம்); "அட்டமே செல்வார்" (திருவிளை. மண்சுமந்த. (௪0) 40); இது கொங்குநாட்டு வழக்கு.
----------

407. கார டங்கியன தாரகை யடங்கியனகோள்
      கதிய டங்கியன மூவர்சிலர் தேவர்ககனத்
தூர டங்கியன பின்னுமெழு கின்றவனிகத்
      துள்ள டங்கியன வுள்ளபதி னாலுலகுமே.

கோள் கதியடங்கியன - நவக்கிரகங்கள் செலவொழிந்தன; கதி - செலவு. மூவர்சிலர் தேவர் ககனத்தூரடங்கியன - பிரமலோகமும் விஷ்ணுலோகமும் புரந்தரலோகமுமாகிய ஆகாசத்து ஊர்களான பிரமபுரமும் வைகுண்டமும் அமராபுரமும் அடங்கியன. இப்படிப்பட்டுப் பின்னையும் எழுகின்ற வீரபத்திரதேவர் தந்திரத்தினுள்ளே அடங்கியன சதுர்த்தசபுவனமும்.

எனவே படை உலகங்களின் அப்புறத்தும் சென்றனவென உணர்க.
----------

408. வானு மின்றிமக ராலயமு மின்றிநடுவேழ்
      மண்ணு மின்றிவட வானலமு மின்றியனிலந்
தானு மின்றியற நின்றதனி மூலமுதல்வன்
      றன்னை யொத்ததினி யென்னையிது தானைநிலையே.

வானென்றது பரமாகாசமான அவ்வியத்தத்தை. மண்ணென்றது பிருதுவி அங்கிசத்தை. வடவானல மென்றது இவையெல்லாம் போனாலும் போகாத வடவாமுகாக்கினியை. அனிலந்தானு மென்றது சொல்லப்பட்டவை யெல்லாவற்றுக்கும் பிராணனான வாயுவை.

இவையெல்லாமின்றிக் கெட்டுப்போக வீரபத்திரதேவர் திருப்படை எழுச்சியாய் நின்றபடி : சகமெல்லாம் கெட்ட காலத்திலும் கெடாதே நிற்கும் மூலமாய் அவிகாரியாய்ப் பிரமாணப் பிரமேயரகிதமாய் ஏகமாய்ச் சத்தாய்ச் சிச்சுரூபசிவமாத்திரமான மகாதேவர்தாமே நிற்கும் தன்மை போல் இப்பெரும்படை தானலது பிறிதொன்றின்றி நின்றது.

எனவே மகாதேவரை ஒத்தது படை; படையை ஒத்தார் மகாதேவ ரென்றவாறு.
----------

வேறு.

409. கொண்டகோடிசத கோடிகூளிகள்
      குளிக்கவன்றவை தெளிக்கவே
அண்டகோடிக ளநேககோடிகளு
      முடையநீர்சுவறு மடையவே.

கொண்டகோடி யென்றது ஒருகோடி ஒன்றாகக்கொண்டு எண்ணப்பட்ட ஒன்று பத்து நூறு ஆயிரம் பதினாயிரம் நூறாயிரம் பத்துநூறாயிரங் கோடியென்றவாறு. சதகோடி யென்றது நூறுகோடியை யல்ல; பல கோடியை.

இவையிற்றுக்குக் குளிக்கநீர் போதா, தெளித்துக் கொள்ளவே ஆம். அப்பொழுது அண்டகோடிகளிலுள்ள அநேககோடி சலாங்கிசங்கள் அடையச் சுவறி வற்றிப்போயின; அடைய - எல்லாம்.
----------

410. மலைகள்வாரியன வேழுமுக்கியவை
      விக்கியுடுவொடு மடுத்தெடுத்
தலைகொள்வாரிதிக ளேழுநக்கிநட
      மாடியையைகழல் பாடியே.

மலைகள் வாரியன - மலைகளை வாரிக்கொண்டன. ஆடி, பாடி யென்பவற்றை ஆடியன பாடியன வெனக்கொள்க.

எ-து : குலபருவதங்க ளேழையும் நட்சத்திரங்களையும் ஒக்க எடுத்து முக்கிவிக்கினவாறே திரைவிரிகட லேழும் தண்ணீர் குடித்து விக்குகை தீரப் போதாமையாற் சிறிது நக்கிப் பின்னையும் அதிலடங்காமையால் உடம்பை அசக்கி ஆடின; பின்னைப் பரமேசுவரி ஸ்ரீபாதங்களைப் பாடின. எ-று.

இவை பரமேசுவரி பக்கல் நின்றும் படைபோன பேய்களென வுணர்க. ஆடியென்றது கூத்தல்ல; விக்கினதற்குப் பரிகாரமாக உடம்பை அசக்கிக் கொடுத்தது. ஐயைகழல் பாடுகையாவது தாங்கள் பிழைத்ததற்குப் பரிகாரம். [1]ஐயை - ஆரியை, இதன் பொருள் உயர்ந்தோ ளென்பது; ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகதமென்னலுமாம். ஐயர்கழலெனப் பாடம் சொல்லுவாரு முளர்.

-----
[410-1] "ஐயைகளிறு" (தாழிசை,(௧௭0) 170) என்பதனுரை இங்கே அறியற்பாலது.
----------

411. எயிறுவெட்டுவன சக்ரவாளமுத
      லேழ்பொருப்புமெட் டெண்பணிக்
கயிறுகட்டுவன வண்டகோடிபுனை
      கையகாலன கழுத்தவே.

எ-து : சக்கரவாள வெற்பும் குலபருவதங்க ளேழும் ஆகிய எட்டுப் பருவதங்களையும் ஓரொன்றுக்கு ஒவ்வொன்று கொண்டு நாகராசா வங்கிசம் எட்டுமாகிய கயிற்றாற் கட்டி இவையே ஆபரணமாகக்கொண்ட கைகளையும் கால்களையும் கழுத்துக்களையும் உடையன, பூதபசாசுகள். எ-று.

கை அண்டகோடி புனைதலாவது மற்றை உறுப்புக்களை ஒப்பிக்கவல்ல கைகளால் உலகம் அடங்கக் கட்டியொப்பித்த லெனவுணர்க.

எயிறு வெட்டுவன வென்னுஞ் சொல்லை இடமறிந்திட்டுக் கொள்க. பணி - பாம்பு. பாம்பு கயிறு, மலைகள் மணி, அண்டகோடிகள் பாம்பாற் கட்டுண்பன. கை கால் கழுத்துக்களின் ஒப்பனை அண்டகோடிகளென உணர்க.
----------

412. படம்பெறாமணி விசும்பிழந்துலகு
      பகல்பெறாபவன மடையவோர்
இடம்பெறாவெளி யிழந்துநடுவுடு
      வெழப்பெறாககன மெங்குமே.

எ-து : நாகங்களின் படங்களெல்லாம் மாணிக்கங்களைப் பறியுண்டிழந்தன. ஆகாசமின்றி உலகங்கள் ஆதித்தியன் எங்கும் எழப்பெறா. காற்றும் அவ்வண்ணமே. நட்சத்திரங்களும் அவ்வண்ணமே. எ-று.

பவனம் - காற்று.
----------

413. இடுமிடும்பத யுகத்துவீழ்கதியி
      லேழ்பிலங்களு மிறங்கவே
விடும்விடுங்கர தலத்தெழுந்துகிரி
      சக்ரகிரிகிழிய வீழவே.

பதயுகம் - காலிரண்டு. அவையிடுந்தோறும் ஏழ்பாதாளங்களும் கீழ்வீழும்; கைவீசுந்தோறும் மலைகளெழுந்து போய்ச் சக்கரவாளகிரியைப் பிளந்து அப்புறத்துப்போய் விழும்.

விடுகை - வீசுகை.
----------

414. விட்டகுலகிரிக ளெட்டுமும்பர்திசை
      யானையெட்டும்விழ வீழவே
சுட்டவிழியிலெழு கடலும்வற்றியெழு
      தீவுமொக்கநிலை சுவறவே.

விட்ட குலகிரிகளென்றது உலோகத்தைவிட்ட குலகிரிக ளென்றவாறு; உலோகத்தை விடுதலாவது மிகவும் உயர்தல். விழவீழ்தல் - பொன்றக் கெடுதல். சுட்டவிழி யென்றது இவையிற்றைச் சுட்ட கண்ணென்றவாறு.

அவ்விழியாலே கடலும் தீவுகளும் பொடிபட்டன.
----------

415. சங்குநேமியொ டுறங்குமேகமு
      மிறங்குமேகமுந் தப்புமே
பொங்குநேமியுடன் வேவவெந்துபொரு
      பொரியுமேசகல கிரியுமே.

உறங்குமேக மென்றது விஷ்ணுபகவானை; மேகம்போல்வானை மேகமென்றது. சங்கும் நேமியுமென்றது அவன் படைகளை. இறங்குமேகமு மென்றது மேகத்தையல்ல; இறங்கும் ஏகமுமென்க; ஏகம் - ஒன்று; ஒன்றுமென்றவாறு; ஆகாசத்தினின்றும் இழிவனவற்றுள் ஒன்றும் தப்பாதென்றவாறு. பொங்குநேமி - சக்கரவாளம். பொருபொரியு மென்றது அனுகரணவோசை; இரட்டைச்சொல்லு. சகலகிரியும் - எல்லாமலைகளும்.
----------

416. விழும்விழுஞ்சிலா தலநிலம்பகிர்ந்
      துரகர்விடர்நடுவு வீழவே
எழுமெழும்பணா மணிகளவ்வழியி
      னிரவிகள்வருவ தென்னவே.

எ-து : எடுத்தெறியக் கீழே விழுமலை பாதாளத்தின் முழைகளின் நடுவே வீழ அவை விழுந்த நாகராசாக்கள் படத்தின் மாணிக்கங்கள் எழுந்தோறும் அப்பாதாளத்தினின்றும் எழுகின்ற ஆதித்தர்களைப் போன்றன. எ-று.
----------

417. கரங்களால்ரவிகள் யாவரும்பெரிய
      கால்களாலுரிய கங்கையுஞ்
சிரங்களாலரசு பணியுமாகிமுதல்
      பூதநாதர்பலர் செல்லவே.

கரங்களென்பது கதிர்க் கிரணங்களுக்கும் கைக்கும் பெயர். பூதநாதர் கைகளும் ஆதித்த கிரணமும் ஒக்கும், சோதியாலும் நீளத்தாலும். அன்றியும் ஆயிரம் கரதலத்தால் ஆதித்தரெனக் கொள்ளலுமாம்; ஆயிரங்கைகளை யுடைய பூதங்களுமுள. கால்களாற் கங்கையெனவே சகசிரபத கங்கையு முண்டு. பணியரசு ஆயிரந்தலை யுடையது. பூதநாதர் - கணநாதர். முதலென்றது மகாதேவர் திருநாமம்; அது பூதங்களின் மேற்செல்லின் லகரம் றகரவொற்றாதல் வேண்டும்; முதற்கண்ணெனினும் அவ்வாறாதல் வேண்டும்; ஆதலால் முதலினுடைய பூதநாதரென வுணர்க. ஒருதலையும் ஆயிரங்கையும் ஆயிரங்காலும், ஆயிரந்தலையும் இரண்டுகையும் இரண்டுகாலும் உடையவான பூதங்களுமுள; [1]சகசிரபாகு அர்ச்சுனனுக்குத் தலை ஒன்று; திரிசிராவுக்குக் கை இரண்டும் கால் இரண்டும். ரவிகள் யாவரு மென்றதனாலே [2]பன்னிருவர் ஆதித்தரும் பன்னீராயிரம் கைகளுங் கொண்டு தோற்றினாருமுளரென்க. [3]கங்கைகளில் சகசிரமுகமும் திரிபதாமுகமும் ஆயிரம்காலுங்கொண்டு தோற்றினாருமுளர். உரியகங்கை யென்றதனால் கங்காதேவியையே கொள்க, உயர்திணையாக; [4]"கங்கையாளோ வாய்திறவாள்" என்பதை உணர்க. நாகங்களில் எட்டு வடிவும் எண்ணாயிரம் தலையும் கொண்டாருமுளரென வுணர்க.

-----
[417-1] சகசிரபாகு அர்ச்சுனன் - கார்த்தவீரியார்ச்சுனன்;
"ஆயிரந் தடக்கை யானினைஞ்ஞான்கு கரமும் பற்றி, வாய்வழி குருதி சோரக் குத்திவான் சிறையில் வைத்த, தூயவன்” (கம்ப. நிந்தனை. (௫௮) 58),
"அன்னவன் றளாவறிந்தவா யிரந்தோ ளருச்சுனன்." உத்தரகாண்டம், கார்த்தவீரியார்ச்சுன. (௧௮) 18.
[417-2] இந்நூல் (௭௮, ௧௪௧) 78, 141 -ஆம் தாழிசைகளையும் அவற்றின் உரைகளையும் பார்க்க.
[417-3] "கங்கை, துறைகொ ளாயிர முகமுஞ் சுழல" (கல்லாடம், (௧௮ : ௮-௯) 18 : 8-9)
"கங்கையாகிய அழகிய பெரியாறு ஆயிரமுகமாகக்கடலிலே சென்றாற் போல.” மதுரைக். (௬௯௬ - ந) 696 - ந.
[417-4] சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருவோண காந்தன்றளி.
----------

418. [1]விழவிடுங்கிரிகள் கீழுமுள்ளபில
      மேழுமூடுருவ வீழவே
எழவிடுங்கிரிகள் சூழுமண்டமுக
      டேழுமூடுருவ வேறவே.

எ-து : கீழேவிட்ட மலைகளும் இன்னும் வீழாநின்றனவல்லது இருந்தனவில. மேனோக்கி எழுந்த மலைகளும் இன்னும் கீழேவிழுந்தனவில்லை; ஏறாநின்றன. எ-று.

இது விசைப்பெருமைக்கு அளவில்லாமையை உணர்த்தியது. சூழுமண்டமென்றதனால் எல்லா அண்டங்களையும் கொள்க.

-----
[418-1] "எழாதவாறும்" ((௩௬௪) 364) என்னும் தாழிசையும் அதன் பொருளும் இதனுடன் ஒப்புநோக்கற்பாலன.
----------

419. ஓமகூடகிரி நின்றெடுத்தெறிய
      வண்டகூடமுரு விப்புறத்
தேமகூடமொடு சித்ரகூடமெரி
      கனககூடமென வெரியவே.

எ-து : தட்சனுடைய யஞ்ஞாலயமாகிய ஓமகூடமான மலையை எடுத்தெறிய அது பிரமாண்ட கூடத்தை உருவிப்போக மேனின்ற ஏமகூட பருவதமும் சித்திரகூட பருவதமும் இவ்வெரியினகத்தில் பொற்பருவதகூடம் எரிந்தாற்போல வெந்து போயின. எ-று.

உருவி - உருவ. இருகனககூடமென்று பாடஞ் சொல்லின் இரண்டும் பொன்னாற் சமைக்கப்பட்டன வென்க. ஏமகூடம் இந்திரன் விடாயாற்றி மலை. சித்திரகூடம் அவனுடைய ஓலக்க மலை. ஏமம் - பொன்.
----------

420. எயிறிரண்டருகு வெண்பிறைக்கிவை
      யிரண்டுடுத்தொடைகொ லென்னலாய்
அயிறிரண்டனைய பல்லொழுங்குக
      ளலங்குசோதியொ டிலங்கவே.

எ-து : இரண்டெயிறுகளான இரண்டு பிறைக்கு இரண்டு நட்சத்திரத் தொடை போன்றனவாகி, உலகத்தின் வேலாயினவெல்லாம் ஒக்கத் திரண்டு கூடியவற்றையொத்த பல்லொழுங்குகள் சோதியையும் கூர்மை யையும் உடையவாய் விளங்கித் தோன்ற. எ-று.
----------

421. மாகமேயனையர் தம்மகோதரமு
      மெம்மகோததியு மாயமேய்
மேகமேயனைய ராகமேகடவுண்
      மேருவேயனைய ரூருவே.

எ-து : இப்பெரும்படையாளர் மகாவயிறு ஆகாசத்தையொப்பர். எல்லாக்கடலையும் குடிக்கவல்ல மேகங்களையொப்பர், மார்பும் கண்டமும் கையும் முகமும். தெய்வீகமேயான மகாமேருவேயனையர், தங்கள் துடைகள். எ-று.

மக உதரம் = மகோதரம் - பெருவயிறு. மகோததி - கடல். மேகம் மேயாதாதலால் மரபுவழுவென்பார்க்கு அஃதன்றென்க; "இலங்க லாழியினான்களிற் றீட்டம்போற், கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை.” ((௩௨) 32) சிந்தாமணி.
----------

422. உடுத்தநேமிகிரி நெரியவொருவர்நக
      முருவுமேயுலகு வெருவுமே
எடுத்தசூலமொடு காலபாசமினி
      வீசயாதும்வெளி யில்லையே.

எ-து : சகத்தைச் சுற்றிய சக்கரவாள பருவதம் நெரிந்து போகும்படி ஒரோவொருவர் கைகளில் உகிர்களே உருவாநின்றன; இதற்கு வெருவா நின்றன லோகமெல்லாம். இக்கைகளால் எடுக்கப்பட்ட சூலம் வீசவும் அச்சூலத்தாற் கொலையுண்பாரைக் காலபாசம் சென்று கட்டவும் வெளியிடம் இனி இல்லை. எ-று.
----------

423. ஒருவரேயகில லோகமும்புதைய
      வேறுவேறுடம் புடையரே
இருவரேதெரிய வரியர்தாமிவரை
      யெங்ஙனேதருவ ரென்னவே.

எ-து : இப்பெரும்படையுள் ஒரோவொருவரே இவ்வுலகமெல்லா வற்றையும் ஒக்கப்புதைக்கும் உடம்பையுடையர், ஈசுவரன் இவர்களை எங்ஙனே படைத்தானென்றுசொல்லும்படி. எ-று.

இருவரேதெரிய அரியரென்றது மகாதேவரை; அவரை அன்புடையவ ரெல்லாருமறிவர்; பிரமவிஷ்ணுக்களே அறியாரென்றவாறு. இதன் கருத்து, கர்விகளுக்குத்தெரிய அரியரென்றவாறு. அன்றிப் பௌத்தர் அருகரைக் கொள்ளலுமாம்.
----------

424. கொண்டகோலமிவை யாகவண்டசத
      கோடிகோடிநிரை தானையில்
வண்டகோளகை வளாகமொன்றினு
      ளடங்கிநின்றன மடங்கியே.

எ-து : இது தந்திரத்தின் கோலமாக, நூறுகோடி ஒன்றாகப் பெருக்கிக்கொண்ட கோடிக் கணக்குடைய பெரும்படை இவ்வண்ட கோளகை ஒன்றிலே அடங்கியன. எ-று.

அண்டவளவு நூறுகோடி ஒன்றாகவந்தகோடி யெனவுணர்க.
----------

425. எங்ஙனேயிறைவ ருலகுபொதிவடிவ
      மெவ்வுடம்பினு மடங்குமா
றங்ஙனேயவர்கள் விசுவரூபமு
      மடங்கிநின்றபடி யதனிலே.

அநேககோடி அண்டங்களில் அடங்காப்பெரும்படை ஒருபிரமாண்டத்தில் அடங்கும்படி எங்ஙனேயென்னின், ஈசுவரன் வடிவொன்றிலே இப்பிரபஞ்சமான சர்வபதார்த்தங்களும் அடங்கிநின்றபடியே இதற்கு ஒப்பென வுணர்க.

எங்ஙனம் அங்ஙனமென்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி. "எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குதிர்" ((௪௨௫) 425) என்பது சிந்தாமணி; எங்ஙன மென்னும் சொல் இவ்வாறே வளையாபதியிலு முண்டு.
----------

426. சாய்வதின்மையி னெருக்கிமேருமுத
      றாமுநின்றவவர் தாணிலந்
தோய்வதின்மையி னிடங்கிடந்தபடி
      தோயுமேலவையு மாயுமே.

பூதபசாசப் பெரும்படைகளெல்லாம் யுத்தோன்முக உச்சாக பரவச ராதலின் திருமேனி ஒன்றிற் சாயாமையாலே மகாமேரு முதலான பருவதங்கள் நின்றன. ஸ்ரீகயிலாசத் தொடக்கத்தன கொள்க.

ஸ்ரீ பாதங்கள் தரையில் தோயாமையால் பூதபசாசுகளையும் தெய்வசாதி யெனக்கொள்க.
----------

427. நிலத்தினும்பல பிலத்தினுஞ்சுரபி
      நிலையினுந்திகிரி மலையினுஞ்
சலத்தினுங்கன கலத்தினும்புடை
      யடங்கிநின்றதுயர் தானையே.

சுரபிநிலை யென்றது சுவர்க்கலோக மென்பாரும் [1]கோலோக மென்பாருமுளர். கனகலமாவது தட்சன் யாகம் பண்ணுகிற தானத்துக்குப் பெயர். புடையடங்குகையாவது செறிவு.

-----
[427-1] கோலோகமென்பது சிவலோகத்தின் மேலுள்ளதென்று புராணங்கள் கூறும்; இதனியல்பு, சிவதருமோத்திரத்துள்ள கோபுரவியலாலும், காசிகாண்டத்துள்ள "விளங்கு நம்முலகின் மேலாம்" ((௨ : ௨௯) 2 : 29) என்னும் செய்யுளாலும் அறியலாகும்;
சங்கநூல்களில் ஆனிலையுலகமென்று வழங்கப்படும்; "மேனிலை, ஆனிலையுலகத்தானும்" (புறநா. (௬ : ௬-௭) 6 : 6-7);
"பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந், தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் - சென்னிதன், மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த், தானுலக மண்ணுலகா மன்று" (தொல். புறத். சூ. (௩௫) 35 – ந. மேற்.) என்பவற்றா லுணர்க.
----------

வேறு.

428. ஊழியேறுகட னீரண்ட கோளகையுடைத்
      தும்பர்நீரொடு கலந்தனைய தொக்குமுடனே
பாழியேறுதிணி தோள்வீர பத்ரகணமும்
      பத்ரகாளிகண மும்படை யெழுந்தபடியே.

ஊழியேறுகடல் - உகாந்த காலத்தில் ஏறுகடல். பாழி - வலிமை. பத்திரகாளி கணமென்றது படைத்துணையாகப்போன தேவிபடையென வுணர்க.
----------

தேவியின் படைச்செயல்கள்.

429. கார்முகக்குமிர வென்னவிருள் குஞ்சிவிரிவார்
      கடன்முகக்குமகல் வாயன கபாலமுடையார்
பார்முகக்குமுரு [1]முக்கழு நிரைத்தபடையார்
      பலமுகக்குமுத வாயிறைவி பைரவர்களே.

கார்முகக்குமிரவாவது மழைக்காலிருள் இராத்திரி; இஃது ஒருவர் தலைமயிர்; இப்படிக்கொத்த தலைமயிர்களை விரித்தே வருவார். கடல் முகக்கும் வாயென்க. அகலம் கடலோடொக்கும்; எனவே ஆழம் ஏழ் கடலுடனும் ஒக்குமென்க; எனவே பிரமகபாலமென வுணர்க. பார்முகக்கும் - பூமியிற்பதணத்தை முட்டஉருவிப் புறப்பட்டுப்போகக் குத்தியெடுக்கும். எனவே ஆகாசகமனரெனக் கூறியவாறாயிற்று. பாரினை முகக்கினும் முகக்கவல்ல ரெனினும் ஆம்.

-----
[429-1] "பருமுக்கப்பினரே" என்றார் முன்னும்; (௯௮) 98.
----------

வேறு.

430. [1]பாரப் பணைமுலைக் கொலையினுஞ் சிலபுரூஉப்
      பங்கத் தினுமடுப் பனவடுப் பகவினுங்
கூரப் புறவமுல் லைம்முகை நகையினுங்
      கொல்லுகை தவிரா விறைவிசா கினிகளே.

புரூஉப்பங்கம் - புருவமுரிவு. வடுப்பகவென்றது மாவடுவின் வகிர்; வடுவென்னும் பலபொருளொருசொல் இடம்பற்றி மாவடுவுக்காயிற்று. இது கண்ணிற்குப் பெயரானது அன்மொழித்தொகை. மடுப்பன வென்றது காமச்சுவாலையை மடுப்பனவெனத் தந்திரவுத்தி கொள்க. புறவம் - சிறு காடு.

-----
[430-1] இதன் கருத்துக்கள் இந்நூல், (௮௧) 81 -ஆம் தாழிசை முதலிய மூன்றிலும் வந்துள்ளன.
----------

வேறு.

431. வெளிபடப்பட முகிழ்த்தெயி றெறிக்குநிலவார்
      விழிபடக் [1]குழை சுடச்சுட ரெறிக்கும்வெயிலார்
அளிவளர்த்தன வெறிக் [2]குழ லெறிக்குமிருளா
      ரறுமுகத்ரிபுர பயிரவி [3]யகம்படியரே.

நகைகளால் நிலவும் குழைகளால் வெயிலும் குழல்களால் இருளும் உண்டாக்குவார் இவர்.

குழைசுட - குழைகாய. அளிவளர்த்தன குழலென்றது வண்டினங்களுக்குக் குழல் செவிலித்தா யென்றவாறு.

-----
[431-1] இந்நூல் (௨௨) 22, (௩௬) 36 ம் ஆம் தாழிசைகளில் இக்கருத்து வந்துள்ளது.
[431-2] "அளகபாரவிரு ளருளுமாதர்கடை திறமினோ" என்றார் முன்னும்; (௨௫) 25.
[431-3] அகம்படியர், இந்நூல் (௯௫) 95 - ஆம் தாழிசையிலும் கூறப்படுகின்றனர்.
----------

432. அடவியாகிவரு வாரசல மாகிவருவா
      ரமரராகிவரு வாரவுண ராகிவருவார்
புடவியாகிவரு வார்புணரி யாகிவருவார்
      புவனநாயகிதன் [1]யாமள புராதனர்களே.

அசலம் - மலை. புராதனரென்றது புமான்களை.

-----
[432-1] "புவனிவா னடையவோர் பவனிபோ துவர்களே, புகலுகோ மளவியா மளபுரா தனர்களே.” அஞ்ஞவதைப். (௧௩௭) 137.
----------

433. [1]இடிபொறாமலொரு பாலதிர்வர் சாகினிகளே
      யெரிபொறாமலொரு பானகுவர் [2]டாகினிகளே
படிபொறாமலொரு பால்வருவர் யோகினிகளே
      பகருமாறரியர் நாயகி பதாகினிகளே.

இடிபொறாமல் - இடியைப்பொறாமல். அதிர்தல் - ஆரவாரித்தல். நகுகை - அட்டகாசம் செய்கை. டாகினிகளெனத் தமிழில் மொழிமுதலாகா அவ்வெழுத்திடுதற்குக் காரணம் சந்தியிசைவஞ்சி யென்பாரும், சருவஞ்ஞகவி யென்பாரும் இகரமுமுண்டு செய்யுளாதலின் தொக்கதென்பாரும் அத்தொகை மனத்ததென்பாரும் பிறகூறுவாருமுளர்; நல்லதுணர்க. படிபொறாமல் வருகையாவது பூமிதான் பாரம்பொறாதென்று ஆகாசமே வருவாரென்பது. பதாகினி - கொடிப்படை.

-----
[433-1] "உருகுவா சகமெலா முடையர்சா கினிகளே, யுயிரெலாம் விழியினா லயில்வர்யோ கினிகளே, பருகியா ரமிர்தையா டுவர்கண்மோ கினிகளே, பகருமா றரியர்நா யகிபதா கினிகளே.” அஞ்ஞவதைப். (௧௩௫) 135.
[433-2] டாகினிகள் - இடாகினிகள்; "வெண்ணி லாநகை யாளை விடாதவர், எண்ணில் கோடி யிடாகினி மாதோ.” இரணியவதைப்பரணி, (௧0௪) 104.
----------

தேவர்கள் இந்திரனுக்குத் தெரிவித்தல்

வேறு.

434. இப்படையோடுமையன் மகராலயத்தில்
      ரவிபோலெழுந் தருளுமென்
றப்படையோடுநின்ற சுரர்சென்றுதங்க
      ளரசற்கிசைத்த பொழுதே.

சுரர் - தேவர்கள். அரசன் - இந்திரன்.
----------

இந்திரன் கூற்று.

435. ஆவபுகுந்தப்ரத்த மறியாதடுப்ப
      தறியாததேவ ரெதிர்தன்
பாவமனங்கவற்ற வறிவின்மைகொண்டு
      சிலவச்ரபாணி பகர்வான்.

ஆவ - அந்தோ. பிரத்தம் - பிரமாதம்; அது தேவி கோபம். அடுப்பதறியாமை - பவிஷ்யம் போகாமை. பாவம் மனங்கவற்ற - தேவேந்திரன் பூருவசன்மத்திற் செய்தபாவம் படக்கடவகாலம் அவன் மனத்தைப் பற்றிக்கவற்ற. அறிவின்மை யென்றது ஸ்ரீயின்மிகுதி. வச்சிரபாணி - தேவேந்திரன்; இஃது அன்மொழித்தொகை.
----------

436. பேதைமணந்தகௌரி யழையாமலிங்கு
      வருவாளிகழ்ந்து பெரிதுந்
தாதைமுகங்கொடாது விடுவானமக்கு
      முலகுக்குமென்கொ றவறே.

இதன் பொருளறிக.
----------

437. முகடுதகர்ந்துசிந்த முரிசக்ரவாள
      கிரியேபிடித்து முகிலெண்
பகடுமெழுந்துபெய்யு மகராலயங்க
      ளவைசெய்வதியாவர் பணியே.

முகடென்றது உலகமுடிமுகட்டை; மோட்சத்தல மென்றுமாம். எழுந்தென்பதற்கு முன்பும் சிந்தவென்பதைக் கூட்டிக்கொள்க. எனவே பகடுமெழுந்து சிந்தப்பெய்யு மகராலயங்களென வுணர்க; மகராலயம் - கடல்.

அவையும் என்பணியன்றோ செய்வன வென்றவாறு.
----------

438. தரையையகழ்ந்துதின்று கடலேழுநக்கி
      வடமேருவாதி தடமால்
வரையைவளைந்துதின்னும் வடவானலத்தின்
      வலியேநமக்கு வலியே.

தரை - பூமி. பூமியைத் தின்றால் அக்கடல் தண்ணீராகக் குடிக்கப் போதாதென்றபடி. நமக்கு மாத்திரம் போலும் இத்தனை வலி யென்றவாறு. வலியே யென்றதில் ஏகாரம் வினாவல்ல; தேற்றேகாரம்.

இதன்கருத்து, வடவாமுகாக்கினி இதுகேட்டுத் தானே வருதல்.

இஃது ஈசுவரனை அஞ்சின நினைப்பு.
----------

439. அடியடையப்பறித்த குலபூதரங்க
      ளழியாகவூழி யறையும்
படியடையப்பிதிர்க்கு மொருவாதராச
      னவனிற்கயாது பகையே.

பறித்தவென்றது பறிக்கப்பட்டவென்னும் சொல்விழுக்காடென வுணர்க. பூதரம் - மலை. குலபூதரங்கள் - குலபருவதங்கள். அழி - வைக்கோல்; "ஆளழி வாங்கி யதரி திரித்த" ((௨௬ : ௨௩௩) 26 : 233); இது சிலப்பதிகாரம்; "உழுது நோன்பக டழிதின் றாங்கு" ((௧௨௫ : ௭) 125 : 7); இது புறநானூறு. படியடையப் பிதிர்க்கு மென்றது பிருதுவி முழுவதும் பொடியாக்கு மென்றவாறு. மலையை அறையும் பூமியைப் பிதிர்க்கும் வாதராசனென்க. அவனென்றது சுட்டுப்பெயர்.
----------

440. மாயிரநேமியாதி மலைசுட்டுவேலை
      நிலைசுட்டயின்று மடியா
ஆயிரமானவெய்ய கதிராறிரண்டு
      மெவனேவல்செய்வ தவரே.

மாயிரமென்பது புறமானமுகம்; எனவே உலகப்புறச்சக்கரவாள மெனவுணர்க. வேலைநிலை யென்பது வற்றாக்கடல். ஆயிரமாவது இங்கே பன்னீராயிரம். காரியத்தால் ஆதித்தரென வறிக. அயின்று மென்றதில் உம்மைக்கு வடியச் செய்த பின்பும் என்பணி செய்வாராவ ரென்பது பொருள்.
----------

441. உம்பருமேனையோரு மலிமத்திலிட்ட
      வுரகம்பிடிக்கு மமுதத்
தம்பமமைந்துடம்பு சலியாதுநின்ற
      தனிமன்னன்யாவர் தமரே.

ஏனையோர் - அசுரர். உரகம் பிடித்தலாவது சந்திரனென்னும் அமுதத்தம்பத்து அராப் பிடிக்கலாயதென்பது; பிணித்தென்னும் பாடமுமுண்டு. அமைந்தென்றது தானாகச்சமைந் தென்றவாறு. தனி மன்னனென்றது ராசாவென்னும் பெயரைத் தனித்துடைய னென்றவாறு. இது வேதசத்தம்; இராசாவென்னும் பெயர் [1]நிகண்டுவிலுமுண்டு.

-----
[441-1] நிகண்டென்றது வடமொழி நிகண்டை; இராசா வென்பதன் பரியாயப்பெயர் தமிழ் நிகண்டுகளிலு முண்டு; “விதுநில வல்லோன் வேந்தன் றண்ணவன்" (பிங்கலந்தை (௨௨௫) 225), “விதுவொடு குமுத நண்பன் சுதாகரன் வேந்த னாலோன்.“ சூடாமணி (௧ : ௫௯) 1 : 59.
----------

442. பருதிபடப்பரந்து புகைகண்கடப்ப
      வுலகங்கண்மூடு பகுவாய்
நிருதிசெருக்குறிக்கி னுளரேதெரிக்கி
      னினியென்படைக்கு நிகரே.

எ-து : ஆதித்தியன் பட்டுப்போம்படி புகைபுறப்பட்டு உலகவிடமெங்கும் கடந்துசெல்ல அங்காந்தவாயினுடன் தென்மேலை மூலைக்குக் கர்த்தாவான நிருதியே பூசல்பொர நினைந்தானாயின் ஆராயுமிடத்து ஆருளர், என்படைக்கு மாறுபட்டு நிற்பார்? எ-று.

கண்ணும் வாயும் புகையுமென்பாருமுளர். செருக்குறிக்கினென்றது குணமிக உடையன், கோபமிலனென்றவாறு.
----------

443. மதுநுரைவார்கடுக்கை யொருகண்ணிசூடி
      மழுவாள்வலத்து வரநம்
பதினொரு தேவரேறு பதினொன்றுமேறி
      னுலகங்கள்யாவர் பரமே.

மதுநுரை - தேன்மிகுதியின் பொங்கல். கடுக்கை - கொன்றைப்பூ. நம் பதினெரு தேவரென்றது ஆலகாலம் உண்ணாதே நம்முடனே அமுதம் உண்டவர்க ளென்றவாறு. எனவே மகாதேவர் நம்முடனுண்ணலாம் பேறிலரென்றபடி.
< the sentence with grantha characters were left out >
----------

444. சொற்பலசொல்லியென்கொ லுயிர்வீசுபாசம்
      விடுகாலன்யாவர் துணையே
பற்பலகோடியண்ட மொருதண்டிலெற்றும்
      யமராசன்யாவர் படையே.

[1]காலனாவான் யமதூதர்க்கு நாயகம் செய்வான். பற்பலவென்றது வல்லெழுத்துறழ்ச்சி. பற்பலகோடியண்டம் ஒரு தண்டிலெற்றுகை ஓரடியிலகப்படுத்துகை; ஓரடியிலகப்படுத்துகையாவது வலையுள் அகப்பட்ட மச்சியசாதிபோல யமதண்டின் கீழ் உலகம் அகப்படச்செய்கை யெனவுணர்க.

தாரகாம்யம், [2]தேவாசுரம், ராமாயணம், மகாபாரதம்போலப் பலநாட் கூடி இறப்பதல்லது உலகம்பேர்ந்துபோமன்று யமராசன்வேணுமென வுணர்க.

-----
[444-1] காலன் கூற்றுவனென்றும் கூறப்படுவான்; இவனை யமராசனுடைய ஏவலாளனென்பர்; “தருமனு மடங்கலும்“ (பரி. (௩ ; ௮) 3 : 8) என்பதன் உரையைப்பார்க்க; “தருமராசற்கா வந்த, கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே” தேவாரம்.
[444-2] “தேவாசுரம் ராமாயண மாபாரத முளவென், றோவாவுரை யோயும்படி யுளதப்பொரு களமே" (கலிங்கத். (௪௫௯) 459) எனத் தேவாசுர முதலியவை இப்படியே ஒரு சேரக் கூறப்பெற்றிருத்தல் காண்க;
“உயிர்த்தொகை ... எண்கொள" (சிலப். (௨௭ : ௮-௧0) 27 : 8-10 ) என்பதன் அரும்பதவுரையையும் அடிக்குறிப்பையும் பார்க்க.
----------

445. கருடரியக்கர்சித்தர் கடிபூதநாதர்
      நிசிசரர்தான வர்கள்கிம்
புருடர்முதற்குலத்த பதினெண்பதாதி
      புடையேபரந்த படையே.

கடி - பேய். நிகிசரர் - ராட்சதர். தானவர் - அசுரர். கிம்புருடர் - கந்தருவராசர்; இதனைக் காதம்பரியிற் கண்டுகொள்க. பதாதிகள் நம்படை யென்க.
----------

446. முனிவருமாழியானு மிமையோரும்யானு
      மிளையோனுநிற்க ரவிமுன்
பனிவருமென்னவிங்கு வருகின்றதென்கொ
      லொருசூலபாணி படையே.

முனிவர் - ரிஷிகள். ஆழியான் - விஷ்ணு. சூலபாணி - மகாதேவர்.

இப்பாட்டின் கருத்து : மகாதேவர் தாம்வாராதே வீரபத்திரதேவரை ஏவுவதென்னென்பது.
----------

447. வறுமையெவன்கொலென்க ணொருதன்படைக்கு
      வலியாவதென்கொ லிமையோர்
சிறுமையெவன்கொலென்னை மதியாதுசேனை
      விடுவானெவன்கொல் சிவனே.

வறுமையெவன்கொலென்க ணென்றது மகாதேவர் தமக்கென ஓருடலும் உடையரல்ல ரென்றவாறு. மகாதேவர் தாமும் வரப்பெற்றிலோ மாகாதேயென்று இன்னாமையை யுடையவனாயினான் தேவேந்திரன்.

முன்னில், "முகடு தகர்ந்து சிந்த” ((௪௩௭) 437) என்னும் பாட்டுத் தொடங்கி, "முனிவருமாழியானும்" ((௪௪௬) 446) என்னும் பாட்டு இறுதியாகக் கூறப்பட்ட நீரும் நெருப்பும் காற்றும் ஆதித்தனும் சந்திரனும் நிருதியும் ருத்திரரும் காலபாசமும் யமதண்டமும் பதினெண் கணங்களும் மகாதேவர்க்கும் உள. அவை கங்கையும் நெற்றிக்கண்ணும் மூச்சிற்காற்றும் வலக்கண்ணும் இடக்கண்ணும் ஸ்ரீபாதமுயலகனும் ரிஷபமும் காலக்கடப்பும் திரிசூலமும் பதினெண் கணங்களுமெனக் கொள்க.

இனிச் சொல்லப் புகுகின்றது மகாதேவர் தாழ்வும் தன் ஏற்றமுமென வுணர்க.
----------

வேறு.

448. யானாள்பதி யமராபதி யீமந்தன தெனதேழ்
கானாள்குல கிரிதன்மலை கயிலைச்சிறு கறடே.

எனவே என்னிற் பெரியாரும் தன்னிற் சிறியாரும் இல்லை யென்றவாறு.

ஈமம் - சுடுகாடு. இப்பாட்டிற் கானென்றது இசையை; கானமென்னும் ஆரியச்சொல் சிதைந்த தென்பாரும் அம்மென்னுஞ்சாரியை அழிந்த தென்பாருமுளர்; அவை பொருளல்ல. கானெனப் பிராகிருத பாஷையிலும் கௌட பாஷையிலும் செவிக்குப் பெயர்; எனவே கானாள் குலகிரி யென்றதற்குக் கீர்த்தியையுடைய மலையென்பது பொருள். கறடென்றது கல்லென்பதற்கும் போதாதென்றவாறு.
----------

449. குலவெண்பணி யானேபணி கொள்வேனணி கொள்ளும்
பலவெண்பணி யவையுஞ்சிலர் விடுதந்தன பண்டே.

குலவெண்பணி யென்றது அட்டமகாநாகங்களை; இது [1]முன்சொன்னோம். இவை எனக்குப் பணிசெய்வன வென்றவாறு. ஈசுவரன்றான் ஆபரணமாகக்கொண்ட வெண்பணி வெறும்பாம்பென்றவாறு. அவையும் தாருகாவனத்தில் ரிஷிகளாலே அக்கினிகோத்திரத்துப் பிறப்பித்து விடப்பட்டன; எனவே அதற்கு முன்பு ஒன்றுமில்லை யென்றவாறு.

-----
[449-1] முன்னென்றது இந்நூல் (௯௯) 99 - ஆம் தாழிசையுரையை.
----------

450. சுரும்பூத விழும்பேயொடு சூழ்பூத மவற்கைம்
பெரும்பூதமு மெல்லீரு மெனக்கேபடை பெரிதே.

சுரும்பூத விழுகை யென்றது பேய்களின் மென்மையைச் சொன்னவாறு. ஐம்பெரும் பூதமாவன : பிருதுவி அப்பு தேயு வாயு ஆகாசங்க ளெனவுணர்க. இவை பூதங்களினெதிர். எல்லீருமென்றது தேவர்களை. இவர் பேய்க்கெதிர். இப்பாட்டு எதிர்நிரனிறை.
----------

451. கோலந்தரு தருவின்குளிர் குழைநீழல் விடேன்யான்
ஆலந்தரு வறுநீழலி னிடைவைகுவ தவனே.

கோலம் - அழகு. விடேன்யானென்றது யான் வீற்றிருப்பதும் விளையாடுவதும் கற்பக விருட்சத்தின் நிழலிலேதா னென்றவாறு. ஆலம் - வட விருட்சம். இதற்கு, [1]"பூல்வே லென்றா வாலென் கிளவியொ, டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே" என்பது விதி. வறுநீழலென்றது நிழல் கொடுப்பதல்லது மற்றொன்றும் கொடுக்கமாட்டா தென்றவாறு. வைகுவதென்றது எங்கும்போய் இரந்துண்டுவந்து வைகுமிடம் அது வென்றவாறு.

-----
[451-1] தொல். புள்ளி. சூ. (௮0) 80.
----------

452. எண்கூறவ னொருபேருரு வதனிற்கனன் முதலேழ்
திண்கூறு மெனக்கேபடை யென்கொண்டுகொல் செருவே.

அட்டாங்க மூர்த்தியென்பது மகாதேவர் பெயர். அது பெயர்மாத்திரமேதான். அவை எட்டினும் வெறும் பாபாத்துமாவாய் நிற்பதொன்று; மற்றை ஏழு கூறுமாவன பஞ்சமகா பூதங்களும் சந்திராதித்தரு மென்பன; இவ்வேழு கூற்றுப்படையும் என்னுடையன வென்றவாறு. செரு - யுத்தம். என்கொண்டென்றது தாம்பிடிக்கும் ஆயுதமும் தம்முடையனவல்ல வென்றவாறு. எனவே லோகத்து வத்துக்களெல்லாம் பஞ்சபூத சமவாயமென்பதுணர்க.
----------

453. வானேறுரு மெனதாயுத மவனாயுத மழுவாள்
யானேறுவ தயிராபத மவனேறுவ தெருதே.

எ-து : ஆகாசத்தில் உருமேறான வச்சிராயுதம் எனது ஆயுதம். ஈசுவரனுக்கு ஆயுதம் மழு. அன்றி எனக்கு வாகனம் அயிராபதமென்கிற யானை. ஈசுவரனுக்கு வாகனம் வெறும் எருது. எ று.

எனவே, முன்னிற்பாட்டில் மகாபூதமஞ்சும் சந்திராதித்தரும் எனக்குப்படை; தனக்குப்படையும் இல்லை; தானும் வெறும் ஆன்மாவே யென்ன நினைத்து இப்பாட்டில் அவன் மகாதேவருடைய திருக்கையில் மழுவும் ஏறும் வாகனமான எருதும் கண்டறியு மயக்கத்தால் நினைத்து மற்று மழுவான ஆயுதமும் இவையிற்றில் ஒன்றல்ல, ஒமமந்திரத்தாற் பிராமணர் விடுவித்த பகைப்படை யென்றானென்றவாறு. மழுவை வாளென்றதன்று; ஆள்யான் - ஆளுகிறயானென்றவாறு. மழு வாளன்றென்று ஆட்சேபஞ் சொல்லலுமாம். எனவே மழு ஏந்தும் மழுவென வுணர்க; அஃது இருப்புக்கட்டிபோலும் நெருப்புக்கட்டி யென்றவாறு. எருதென்றது எருதையன்று; தருமரூபமென்பது. தருமம் வெளுத்திருத்தலாலும் வஸ்துக்களில் வலிதாதலாலும் தருமத்தின் மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான்.

இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தருமவாகனன் யுத்தஞ்செய்யவல்லனல்ல னென்றவாறு.
----------

454. என்கண்ணினி லிவையாயிர மெதிராய்வரு மீசன்
தன்கண்ணினின் முக்கண்ணினி யார்கண்ணதுதாழ்வே.

இவையாயிரமென்றது விபரீதமின்றி அழகுடையன வென்றவாறு. முக்கண்ணென்றது விபரீதமுடையனவாய் ஒன்று குளிர்ந்தும் ஒன்று சுட்டும் ஒன்று யோகத்தைப்பற்றி அக்கினிச்சுவாலையாய் விலங்காதே மேனோக்கியும் நிற்பன வென்றபடி.

எனவே தன்கண்களின் அழகுரைத்தவாறு.
----------

455. எம்மின்னுயி ரனையீர்படை யெல்லாமுடன் வரநீர்
வம்மின்னென விடைநல்கின னிதுவாசவன் வகையே.

'எம்மின்னுயிரனையீர்' என்றது முதன்மைச்சொல். இனி யாகபலமுண்ணத் தனியேவந்தீர்! நீங்கள்போய் நும்படைகளுடனே வருகவென்று விடைகொடுத்தான் தேவேந்திரன். இஃது இவன்கூற்று. மற்று இனி அப்படையுடன் அவர்கள் வந்தவாறு சொல்வான் றொடங்கினர்.

இனிப் படை யெழுச்சி.
----------

தேவர்கள் படையெழுச்சி.

வேறு.

456. சிகரக்குலக்கிரிகள் சிதரத்தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக்களிக்களிறு மறுகக்கடற்கரசன் வரவாரவே.

எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக்களித்த சுறாக் [1]களிறுகள் ஒழுக்கறாதுவராநிற்க வருணராசன் வந்தான். எ-று.

ஒருதிரையால் ஒரோவோர் சுறாவென்றதனால் நீளமுடைமையும், பருவதங்களையுந் தகர்க்குந்திரையுடனே வருகின்ற சுறவென்றதனால் வலியுடைமையும் பெறப்பட்டன. ஒருதிரைக்கொருசுறா வென்னும்படி வருதலைப்பிடித்து வாரவென்னுஞ் சொல்லிட்டது; வார - ஒழுக.

சுறாவாகலிற் பின்வருவன முன்வந்தன, பட்டன அறியா.
-----
[456-1] களிறு - ஆண் சுறா; "கரியுஞ் சுறவுங் கேழலுங் களிறே" (பிங்கலந்தை, (௨௫௫௬) 2556), "கரியொடு சுறவு பன்றி களிறெனக் காட்ட லாமே.” சூடாமணி. (௩ : ௩௨) 3 : 32.
----------

457. கலகக்கனற்கொடிகள் ககனப்பரப்பிலெரி கதிரூடுபோய்
உலகக்கவிப்படைய வுருகக்கடைக்கனலு முடனேறவே.

கலகக்கனற்கொடிகளாவன தூமகேதுக்கள்; அவை அட்டரூப தூமகேது வென்பன; எட்டுத்திக்கிலும் உற்பாதகாலங்களில் தோன்றக்கடவன அவை; பின்னும் அக்கினிமூலமாய்த் தூமகேதுவாய் நரகாக்கினியாய் முதலுங் கடையுமின்றி நித்தமாயுமிருப்பன. அவை : "அவீசி கூர்மி அவ்வியக்தி ..... அராளகி மிசிரகேசி விசுவரூபி க்ஷாத்ரி இத்தியேவா அஷ்டம காச்சுவாலாக்கினி தூமகேது:”; இது மகாசாத்திரப் பிராகிருதமாகதம்.

இவை எட்டுநெருப்பும் புறப்பட்டு ஆகாசத்துச் சோதிமண்டலாக்கினியுடன் ஊடுருவிப்போய் உலகத்தின் கவிப்பான பிரமாண்டப்புறத்துப் பரமாகாசம் உருகும்படியாக யுகாந்த காலத்தில் அக்கினியான ஊழித்தீயுடன்கூடி ஒக்கவந்து படைஏறின வென்றவாறு.

கலகம் - நரகம்; கேட்டுக்கும் பெயர். எரிகதிரென்றதை ஆதித்தனென்பாருமுளர்; அதற்கு இஃது இடமல்ல. உலகக் கவிப்பென்னும் பெயர் சக்கரவர்த்திகள் தாம்படைத்த திரிசொல்லென வுணர்க. பண்டு நம்பிகாளியார் கடற்குப்பெயர் மழுவென்றிட்டு எறிதலும் கூர்த்தலும் திரைத்தலும் உடையதென்றார்; அது போலுமிதுவென்க.
----------

458. பலவெற்பெடுத்தடவி பறியப்பறித்துநதி பலவாரிநீர்
விலகிப்புடைப்பவிட விவைகைப்படுத்தனிலன் விளையாடவே.

பறியப் பறித்தல் - வேரோடும் பறித்தல். விலகுதல் - எறிதல். புடைப்பவென்றதை நீர்தான் தன் விசையாற் புடைப்பவெனக் கொள்க. விடவென்றது விட்டென்னும் எச்சவீறு திரிந்ததென்பாரு முளர்; விடவி வை யெனப்பிளந்து, விடவி - விருட்சம், வை - வைக்கோல்; இவையெல்லாம் தனதுகைப்படுத்து வாதராசன் விளையாடி வரவென்றுகொள்க. அனிலம் - காற்று; அதனையுடையவன் அனிலன்; வினைக்குறிப்புச் சொல்லு.
----------

459. தொழின்மிக்கசெக்கரெரி சுடரிட்டெரித்துலகுசுடுவார்கள்போல்
எழின்மிக்கிரட்டியறு வருமொக்கவர்க்கர்தம ரதமேறவே.

தொழின்மிகுகை - சாதிலிங்கம் ஊட்டின சிவப்புப்போல்கை. செக்கர் - சிவப்பு. எரிசுடர் - நெருப்பு; வன்னத்தாலும் ஒப்பர். உலகு சுடுவார்கள் போலென்றது உகாந்த காலத்துத் தங்களையேபோல வென்றவாறு. எழில் - அழகு. இதில் மிகுகையாவது போர்க்கோலங்கொள்கை. இது வேதத்தில் ஆதித்தன்நிற்கும்படி சொல்லும் பிரகாரமென அறிக. இரட்டியறுவர் - பன்னிருவர். ஒக்கவென்றது ஒருவர்க்கொருவர் உற்சாகித்தா ரென்றவாறு. அர்க்கர் - ஆதித்யர். தமரதமென்றது, "தமரத்னவாடை" என்றாற் போன்றது; தமதென்னும்பாடம் சொல்லுவார் அறியார்.
----------

460. குமுதப்பரப்புமிதழ் குவியப்பனிப்பதொரு குளிர்கூருமால்
அமுதக்கதிர்க்கடவுள் ரவிகட்கிரட்டிதனி யறைகூறவே.

குமுதவிதழ் குவிகைக்குக் காரணம் சீதமிகுதி. அமுதக்கதிர்க்கடவுள் - சந்திரன்; அமிர்தகிரண னென்பது அவன்பெயர். தனியென்னுஞ் சொல்லிற்குப் பன்னிருவரையும் என் சீதத்தாலே வெல்வேனென்பது கருத்து.
----------

461. எரிகக்குமுக்கணின ரிடியொக்குமுக்குடுமி யெறிவேலினோர்
செருவிற்குருத்தெதிர்வர் சிலமுத்தெருத்தர்பதினொருதேவரே.

எரிகக்கு முக்கணினரென்றது நிக்கிரகமல்லாது அனுக்கிரகிக்கமாட்டாத கண்ணினரென்றவாறு. முக்குடுமியெறிவேல் - சூலப்படை. முத்தெருத்த ரென்றதனால் மகாதேவர் வாகனம் [1]இளமை நீங்காததென வுணர்க.

எனவே பதினொருவரும் ஈசுவரனைச் சாரக் காட்டும் வேடத்தரென உணர்க.

-----
[461-1] "மழலைவெள்ளே றணியடிகள்”, "பைங்கணதொரு பெருமழலை வெள்ளேற்றினர்”, "மழலையேற்று மணாளன்" (தேவாரங்கள்); "வெண்ணார் மழவிடையை மேல்கொண்டு.” ஆதியுலா, (௩௪) 34.
----------

462. மறவைத்தனித்திகிரி வளையொத்திரட்டைநிதி வரவாளிலே
பறவைக்கழுத்தில்வரு மரியொத்தியக்கர்குல பதிபோதவே.

மறம் - வெற்றி. வை - கூர்மை. தனித்திகிரி - திருச்சக்கரம். வளை - சங்கு. இவ்விரண்டிற்கும் உவமை பத்மநிதியும் சங்கநிதியும். ஆளென்றது [1]நரனென்னும் பெயருடைய யக்ஷனை. ஏறிப்போதுவான் வைசிரவணன். நரனுக்கொப்புக் கருடாழ்வான்; வைசிரவணனுக்கொப்பு ஸ்ரீ விஷ்ணுக்கள்.

-----
[462-1] "இருநிதிக் கிழவ னியக்கர் வேந்தன், வடதிசைத் தலைவ னரவா கனனே" (பிங்கலந்தை, (௧௯௫) 195); நரவாகனனென்னும் பெயர்க்காரணம் இப்பொழுதுதான் விளங்கிற்று.
----------

463. அரிகட்குவைத்தவெழு நரகக்குலப்பகுதி யணியேழினோ
டெரிகட்பணைத்தபட ரெருமைப்பகட்டின்மிசை யமனேறவே.

அரிகளாவார் ஆவடதரென்பார் சிலர்; அதற்குக் காரணம் அரிகுலத்தினாரென்பது. இன்னம் அரிகள் புத்தியாகர்ஷணப் பொருளை அரிப்பரென்பார் சிலர். இனி அரிகளாவார் விஷ்ணுக்களென்பாரு முளர்; கள்ளென்பது பன்மை அடைசொல். எழுநரகப்பகுதி - நரகபாலராய் நரகிற் புக்காரை வியசனப்படுத்துவார் தொகுதி. இவரில் எழுபதிற்றேழு நூற்றுத் தொண்ணூறு வெள்ளத்தார் பிரதானர். இவருள் ஒருத்தர்க்கு ஒரு வெள்ளம் சேனையுண்டு. இதனை ஆருணகாண்டமானவேதத்திற் கண்டு கொள்க. இவர்களுடன் கூடவந்தான் யமராசன். எரிகண் - எரியுங்கண். படர் - தறுகண்மை.
----------

464. முடியிட்டுமுட்டவரு முதுகற்குவட்டுமலை முதல்காறும்வீழ்
இடியிட்டுவெட்டுவன வெரியிட்டுருக்குவன வினமேகமே.

எ-து : பூமியிலேநின்று சென்று தம்முடைய சிகரங்களான பல தலைகளாலே தங்களை முட்டுதற்கு வருவனபோலும் மலைகளைக் கீழ் அடி ஊசிவேரளவும் விழப்பட்ட இடியுருமேற்றினாலே வெட்டவல்லனவாய் அங்குப்பிறந்த அக்கினியினாலே உருக்கவல்லவுமா யிருக்கும் மேகங்கள் இனமினமாகப் புறப்பட்டுப் படையெழுந்தன. எ-று.

வருமென்றது [1]வாராமரபின வரக்கூறுதலென வுணர்க.

கிடாய்போல முட்டவருமலையைக் கிடாயை வெட்டுவதுபோல வெட்டிக்கொன்று பட்டபின்பு கிடாயைச் சுடுவதுபோல உருக்குவன வெனவுணர்க.

-----
[464-1] தொல். எச்ச. சூ. (௨௬) 26.
----------

465. கரியைத்தொகுத்துழுவை கஞலப்பெருக்கியுயிர் கவர்யாளியோ
டரியைப்பரப்பியதி ரருவிக்குலக்கிரிக ளணிகூரவே.

எ-து : தம்பக்கலுள்ள யானைகளைத் திரட்டிப் புலிகளை நெருங்கப் பெருக்கிப் பிராணிகளைக் கொள்ளை கொள்ளவல்ல யாளிகளுடன் ராசசிங்கங்களையும் பரப்பி அருவியாலே முழக்கவல்ல பருவதகுலங்கள் அணிவகுத்து யுத்தத்துக்குச் சிறப்படைய. எ-று.

பெருக்கியென்றது நெல்லைப் பெருக்கியென்றாற் போலத் திரட்டி யெனவுணர்க.
----------

வேறு.

466. தொக்கமேக மாகவெளி சுற்றுமோடி மூடிவன
      துர்க்கம்யாவும் வேவவெரி துற்றுவேறு மேறுகொடு
மிக்ககோடு கோடிபல வெற்பநேக பாகைபட
      வெட்டிவாரி வாரிவர விட்டுவீசி மேல்விழவே.

எ-து : முன்னம் என்னாற் சொல்லப்பட்ட மேகமெல்லாம் திரண்டன; திரண்டு ஆகாசவெளியைச் சுற்றும்போய்மூடி வனதுர்க்க முதலாகக் கொண்டு நிரைத்து உலகிற் கோடுகளெல்லாம் வேவ நெருப்பைச் செலுத்தி முற்பட இடித்துப் பின்னை வேறுபட்ட உருமேற்றுக்களாலே மிக்க கவடுகளையுடைய கோடிக்கணக்கான பலமலைகளை வென்று அநேகம் பிளவுபட வெட்டிச் சமுத்திரசலத்தை வாரிவிட்டு மேலே வீசி மேல்விழ. எ-று.

எனவே வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்க மென்னப்பட்ட மூன்று அரணங்களையும் மேகங்களே அழித்தன வென்றவாறு.

அநேகம் பாகை யென்றன விரண்டும் ஆரியச்சொல்; ஒன்றல்லவை பலவென்பது தமிழ்நடை யெனவுணர்க.
----------

467. பைத்தசோதி யாறிருப திற்றுநூறு காயவிரை
      பச்சைவாசி நாலிருப திற்றுமேலு நாலுறழ
அத்தசால மீரருகு மத்ரசாலம் வீசிவர
      வர்க்கத்வாத சாதிபரி ரட்டியாறு தேர்விடவே.

எ-து : சோபித்தசோதி பன்னீராயிரமும் உஷ்ணஞ்செய்யக் கடுப்பினையுடைய பச்சைவன்னக் குதிரைகள் எண்பத்துநாலும் பொருதுவரக் கைகளின் விசாலம் இரண்டருகும் ஆயுதப் பரப்புக்களை வீசிவர ஆதித்தர் பன்னிருவரும் பன்னிரண்டு தேர்களை மேல்கொண்டு வரவிட. எ-று.

பைத்தசோதி யென்றதனைப் பசுமைநிறமெனக் கொள்வாருமுளர்; அது பொருளன்று; ஆதித்தர் சிவந்தல்லதிரார்; [1]"பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப" என்பது கொள்ளாராயின், "மலைதோன்றப் பைத்தக மெரிப்பவும்" என்பது கொள்வாராக; இது குண்டலகேசி. அத்தம் - கைகள். அத்தசாலமென்றதில் சாலமென்றது விசாலமென்பதனைத் தலைக்குறைத்தவாறு. அத்திரசாலம் - அத்திரக் கூட்டம்.

-----
[467-1] பொருந. (௬௯) 69.
----------

468. சுத்தஞான போதர்கழல் சுட்டியானை தோறுமிடு
      தொட்டிதோறு மேறியிடை தொட்டகார்மு காசனியர்
அத்தசாம கோடியென நிற்பராவ நாழிகையி
      லப்புமாரி தூவிவரு மட்டலோக பாலகரே.

சுத்தஞான போதர் - மகாதேவர். சுட்டுதல் - நினைத்தல். இந்நினைவுக்குச் செயப்படுபொருள் கழல்; கழலென்றது வீரக்கழலை.

எ-து : மகாதேவருடைய வீரக்கழலை நினைத்துத் திக்கயமான எட்டானைகளின் முதுகிலிட்ட இலகடவிசியிலேறி இடையே பிடித்த வில்லென்னும் இடியுருமேற்றொலியை யுடையராய்ப் பொருளுடைய சாம வேதத்துத் தனுர்வேத கோடியைப்போல நிற்பர், பிறகு கட்டின ஆவ நாழிகையிலுண்டான சரவருஷத்தைத் தூவிப் பொருதற்கு வரும் எட்டு லோகபாலகர்களும். எ-று.

எனவே லோகரட்சையும் தனுர்வேத வில்வலியும் அவர்கள் பெற்றது, அட்ட மூர்த்தத்தை நினைத்தென வுணர்க. தொட்டியென்றது தொட்டி மாளிகை போல்வதென்றவாறு.
----------

469. முற்றுமேரு வாதிகளை முக்கவாரி யூழியெரி
      முத்தனீல மோலியென முட்டவோத மீதெரிய
மற்றையால காலவெரி வர்க்கலோக கோடிசுடு
      மத்தசாக ரேசனொடு மச்சராசன் மேல்வரவே.

மேருபருவத முதலான எல்லா மலைகளையும் முழுக்கும்படியாக முற்பட்ட உகாந்தப் பிரளயாக்கினி ஈசுவரனுடைய திருச்செஞ்சடையென அழகுபெற. எனவே ஊழித்தீயில் ஆடியருளுமிடத்துப் புகைசுற்றிச் செஞ்சடை கருஞ்சடையாயது உவமை; புகை கடல்; சடை நெருப்பு. இப்படியே தீ கடலோதநீர்க்கறுப்பு முட்டும்படி மேலெரிய. மற்றை ஆலக்கால வெரியாவது அக்கடலிற் றோன்றிய ஆலத்தைப் போன்ற வடவாமுகாக்கினி. மற்றையென்னுஞ் சொல்லால் முன்னை ஆலமும் வடவையும் கடலோடும் சம்பந்தமுடையன வெனவுணர்க; ஆலக்காலென்பதில் ககரம் தொக்கது. வர்க்கலோககோடி சுடுதலாவது லோககோடிவர்க்கங்களைச் சுடுகை. அன்றியே வர்க்கம் பசாசுமாம்; தீயென்பாருமுளர். மத்தசாகரேசன் - உன்மத்தனாகிய கடலரசன்; அவன் வருணராசன். அவனுடனே அக்கடலில் மச்சியராசனும் மகாதேவருடைய பேய்ப்படைமேலே யுத்தோன் முகனாகி வந்தான்.
----------

470. தக்கன்யாக சாலைவினை தப்பமாடு சாமரைகள்
      தைப்பவீசி மீதுவிரி சத்ரசாயை தோயவுடன்
மக்கள்யானை சூழவர மற்றைநாலு கோடுடைய
      மத்தயானை யேறிவரும் வச்ரபாணி வாசவனே.

யாகசாலையினது தொழில் தப்புதலால் தேவேந்திரன் ஈசுவரன்மேற் படையெடுத்து வந்தானென்பது இதன் கருத்து. தைப்ப - தைக்கும்படி; தைப்ப வீசி வரவென இயைக்க. சத்திரம் - குடை. மக்களாவார் வயாந்தகனும் சயந்தகனும் வசந்தனும் விசித்தனு முதலாயினார் சசிதேவிமக்கள்; இனி உருவசி முதலாயினார் மக்கள் ருசியும் ருசிதனும் உத்தமாங்கதனும் ருதியும் பூமியு முதலாயினார் நாற்பத்தொன்பதின்மர் உளர். அந்தப் புராணம் விஷ்ணுபுராணத்திற் கண்டுகொள்க. மற்றை நாலுகோடென்றது பிறயானைகளுக்கு இரண்டு கொம்பென்பதை நினைந்து; [1]"மற்றை யென்னுங் கிளவி தானே, சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே" என்பதனால் உலகத்தில் யானைகளையன்றித் திக்கயங்கள் எட்டும் இதன்திறமென வுணர்க. வச்சிரபாணி வாசவனென்றது இந்திரன் வச்சிரபாணியாய் வந்தானென்றவாறு; யுத்தத்துக்குரிய பெயர் இது.

-----
[470-1] தொல். இடை. சூ. (௧௬) 16.
----------

வேறு.

471. அங்கண்வாசவற் கிளையவாசவற்
      காகவாகவஞ் செய்கபோயெனத்
தங்கள்சேனையின் பின்புநின்றதன்
      றானையேவினன் சக்ரபாணியே.

எ-து : முன்பு புறப்பட்ட தேவேந்திரனுடைய தம்பியான உபேந்திரனுக்குப் படைத்துணையாய் யுத்தஞ் செய்கவென்னத் தங்கள் தந்திரத்துக்குப் பின்னேநின்ற கடைக்கூழைத் தந்திரத்தை ஏவியருளினான் மகாவிஷ்ணு. எ-று.

தங்களென்றது ஸ்ரீ பலதேவரையும் சேனாபதியாழ்வாரையுமெனக் கொள்க.
----------

472. சக்ரபாணியுட னேசகத்ரயந்
      தருதசப்பிதா மகர்கடம்மொடும்
பக்கமாமுனி கணத்தர்தம்மொடுங்
      கூடிநின்றனன் பத்மயோனியே.

எ-து : விஷ்ணுக்களுடனேகூடப் பத்துப்பிரமாக்களான தன்மக்களும் தன்பக்ஷமான ரிஷிகளும் கூட நின்றான் பிரமா. எ-று.

பத்மயோனியென்றது பிறந்தவழிக் கூறல்; அதுதான் இருபெயரொட்டு ஆகுபெயர்.
----------

வீரபத்திரதேவருடைய படைகளின் செயல்.

473. உம்பரும்பெரும் படையுமிப்படி
      யுடன்றுநிற்கமற் றவரையூடறுத்
தெம்பெரும்படைத் தலைவரானகும்
      போதராதிக ளிரைத்துமண்டியே.
உம்பராவார் இந்திராதி பிரமாதி தேவர்களும் விஷ்ணுக்களும். பெரும்படையென்றது அரிப்பிரமாதித் தம்பபரியந்தம் பிரபஞ்ச வத்துக்களெல்லாவற்றையு மெனக்கொள்க. உடன்று - கலகித்து. எம்பெரும் படையென்றது இது சொல்லுகின்ற பசாசின் வார்த்தை யெனவுணர்க. கும்போதராதிகளாவார் : கும்போதரர், குண்டோதரர், மகோதரர், விசித்திரகர்ணர், வியாக்கிரமுகர், சிங்கமுகர், கசகர்ணர், பட்சபாட்சர் முதலாயினார்; இவர்கள் பூதகணநாதராகிய யூதபதிகளென வறிக. இரைப்பென்றது போர்செய் யோசையை.
----------

வேறு.

474. அருக்ககனப் பரப்படையப் புயத்துறவிட் டடைத்தே
உருக்குமெரிப் பிழப்பொளிபுக் குழிப்புகவிட் டுளைத்தே.

மகாதேவர்க்குப்பின்பு லோகத்தில் உயர்ந்த பொருளாயுள்ளது ஆகாச மொன்றுமே. அஃது அரூபியாகும்; இஃது எல்லாச் சமயிகளுக்கும் ஒக்கும்; அரூபமென்கை புத்தர்க்கும் ஒக்கும்; ஆதலால் ஆகாசத்தை அருவென்றார்; எனவே அல்லாதன வெல்லாம் உருவாயின. இந்த ஆகாசம் தேவர்கட்கு வாசத்தானமாகி மச்சியத்துக்குச் சலம்போலவும் பட்சிகட்கு ஆகாசம் போலவும் எளியோர்க்கு ஈசுவரன் போலவும் அவர்கட்கு நின்றுபலஞ்செயலான இடங்கொடுப்பதென நினைத்து அதற்கு மலைதேடி மலைகிடையாதாகப் பூதகணநாதர் தங்கள் திருப்புயங்களையிட்டு அதனை அடைத்துப் பின்னை ரூபமுடைய வத்துக்களெல்லாவற்றையும் ஒக்க உருக்கவற்றான அக்கினிச்சுவாலையைத் தொடர்ந்து சென்று அவை அஞ்சியோடிப் போகத் திகந்தங்களிற் புகும்படி கதறிக் கர்ச்சித்தார்.

இது சிங்கநாதம் பண்ணுகை. இவ்வோசைக்காற்றில் அக்கினி அவியும். திருத்தோளால் அடைப்பர் பரமாகாசத்தையுமென வுணர்க.
----------

475. தனித்துரகத் [1]தடத்தெரியைத் தழைத்தெரியச் சமைத்தே
பனிப்பரவைப் பரப்பினிடைக் கடைக்கனலைப் பழித்தே.

எ-து : தனியே ஒன்றாகிச் சமானமின்றி இருக்கும் குதிரைத் தடத்து நெருப்பான வடவாமுகாக்கினியை எரிந்து அவிந்து எரிந்து திரிவதனை எரிந்தே போம்படி சமைத்துப் பின்னை ஏழாகி எழுகடலிலும் இடைக் கிடந்து ஓமம் பண்ணும் உகாந்தாக்கினிகளை உஷ்ணமில்லையெனப் பழித்து விட்டு. எ-று.

எனவே முன்புசெய்த சிங்கநாதவாதமே சென்று இவையிற்றை அழித்ததென வுணர்க.

வடவாமுகாக்கினியென்பது பெட்டைக்குதிரையின் முகம்போலும் ஓர் அக்கினி குண்டத்திலிருத்தலாற் பெற்ற பெயர். வடவைத்தீயைத் தனியென்றது ஊழித்தீ ஏழாயினவற்றைக் கருதி; [2]அக்கினிதேவனுக்கு நாக்கு ஏழென்பது வேதம்; "ஸப்தஜிஹ்வா" என்பது சாமவேதம்.

-----
[475-1] தடவு - ஓமகுண்டம்; "வடபான் முனிவன் றடவினுட் டோன்றி" (புறநா. (௨0௧ : ௮) 201 : 8); இச்சொல், தட தடாவெனவும் வழங்கும்.
[475-2] "உதவகன் றனஞ்சயன்வசு வெழுநா.” திவாகரம்.
----------

476. செயிர்த்துதரத் தெரிச்சுரர்பொற் சிகைக்கதுவச் சிரித்தே
உயிர்ப்பிலிணைக் குருக்களையிட் டுருக்கிநகத் துரைத்தே.

எ-து : கோபித்துத் தங்கள் வயிறுகளில் அக்கினி சென்று சுடர்விட்டு மேலைப்பிரமாண்ட முகட்டளவும் நின்ற தேவர் தலைகளைக் கதுவிச் சுடும்படி சிரித்தருளிப் பின்னை மூக்கிரண்டிலுண்டாகும் அக்கினிச் சுவாசங்களாலே சுக்கிர பிரகஸ்பதிகளை ஒக்க உருக்கி வெள்ளியும் பொன்னும் ஒக்க உருக்கினால் எத்தனைமாற்றுப் போதுமென்று உரைத்தறிவாரைப்போலத் தங்களின் ஒருவிரலின் உகிரில் உரைத்துப் பார்த்து. எ-று.

சிரிப்பு - அட்டகாசம். ஓருகிரென்றது இணைக்குருக்க ளென்றதனாற் பெற்றதென வுணர்க. வெள்ளி அசுரகுரு. வியாழம் தேவகுரு; எனவே அசுரரும் அசுரேந்திரரும் ஒக்க யுத்தம் செய்தாரென வுணர்க.
----------

477. திறத்தவுணக் கணத்துருவச் செறித்துகிரைப் பறித்தே
புறத்திகிரிப் புகக்குருதிப் புதுப்புனல்கொப் புளித்தே.

எ-து : பதின்மூன்று திறத்தினராய்க் கூட்டங் கூட்டமாக நின்ற அசுரருடைய உடம்புதோறும் திருக்கைகளின் உகிர்களைச் செறித்து அவ்வுகிர்களை வாங்கி நரம்புவிட்டு ரத்தம் வாங்கி வாய்க்கொண்டு அவர்களுடைய ரத்தம் அமுதமுண்ணாத உடம்பிலுதிரமாதலால் ரசமின்றி யிருத்தலின் சக்கரவாள வெற்புக்கு அப்புறம்போக உதிரத்தைக் கொப்புளித்து உமிழ்ந்து. எ-று.

உருவச்செறித்தென்றது அசுரர் உடம்பின் அருமையை நினைத்தென வுணர்க. புறத்திகிரி யென்றது மொழிமாற்று. அன்றியும் மலையும் மலையைச் சார்ந்த இடமுங் குறிஞ்சியென்றதுபோலவும் கொள்க. அவ்வளவும் [1]கொப்புளித்தலாற் பயன் பூதகண நாதருடைய தீர்க்காயுத்தன்மை; இது வைத்தியசாத்திரப்பொருள்.

-----
[477-1] ஒருவன் உமிழ்நீர் அவன் மேலே வீழ்ந்தால் விரைவில் அவனுக்கு மரணமுண்டென்றும் அது தூரத்திற் சென்று வீழ்ந்தால் அவனுக்குத் தீர்க்காயு வுண்டென்றும் ஆயுர்வேதம் கூறும்.
இவை, "தப்பாது வாய்நீர்தான் றாக்கித்தன் மேல்விழினே, ஒப்பாகத் தனுமறையி னொழிந்திடுவன் மதியாறிற், செப்பாகத் தானிருக்கச் சேர்ந்தநிழ லலைந்திடினும், அப்பாகேள் சாவுநிச மறிந்துகற்பங் கொண்டிடே”,
"உண்மைகேள் வாய்நீரை யுமிழ்ந்திடவே நோயுள்ளோன், றண்மையாத் தூரம்போய்த் தாக்குமெனிற் சாவில்லை" (குணவாகடத்திரட்டு, (௪௮, ௫௮) 48, 58) என்பவற்றால் அறியலாகும்.
----------

478. கொதித்துவணக் கொழுப்பரிபொற் கொடிக்குமுறக் குமைத்தே
கதித்துரகக் கழுத்தின்முடிக் கவர்ப்படையக் கழித்தே.

எ-து : கருடபகவானான, ஸ்ரீவிஷ்ணுவினுடைய உத்தமத் துவசமான பட்சிமாராசன் குரல்விடும்படி அவனைக் குமைத்துப் பின்னை அவனுக்கு உணவான நாகராசாக்களையும் சிறிது கோபித்துக் கழுத்துக்களிற் பலதலைப்பரப்புக்களை அடைய வெட்டிக் கழித்து. எ-று.

கொதிப்பு - மிக்ககோபம். கொழுப்பு - ஸ்ரீ; ஆகு பெயர்; ஸ்ரீ : அரிக்கு வாகனமும் துவசமுமாக விருத்தல். குமுறுதல் - வாய்விடாது உள்ளே முரலுதல். முடிக்கவர்ப்பு - பல பணத்தலைகள்.
----------

479. கலத்தமிர்தப் பரப்படையக் கவுட்புடையிற் கவிழ்த்தேழ்
பிலத்துருவப் பிளப்பிடியப் பிடித்துதிரப் பிதிர்த்தே.

அமிர்தகலசங்கள் நாகலோகத்திற் பண்டு கருடன் கொண்டுபோய் வைத்தன; அவை ஆயிரங்கோடி அமிர்தகலசம்; ஒரு பிலத்துவாரத்தில் வைத்தன; கீழ்விழவிழ இரட்டியிரட்டியாக ஏழ்பிலத்துவாரத்திலும் வைக்கப்பட்டன. அவையெல்லாம் ஒருபூதநாதருடைய கொடிற்றின்புடை புக்கனவென வுணர்க. உதிரப் பிதிர்த்தலாவது நாகத்தவர் இருப்புச் சுவரவை ஏழும் ஒருதிரளையாகத் திரட்டிப் பின்னைப் பரமாணுக்களாகப் பிதிர்த்தல்.
----------

480. அரக்கருரத் தரத்தமடுத் தழுக்கையெயிற் றரைத்தே
புரக்ககனப் பொருப்பர்களைப் பொடித்தெரிகட் பொரித்தே.

அரக்கர் - இராக்கதர். உரம் - நெஞ்சு. அரத்தம் - உதிரம். மடுத்தல் -குடித்தல். அழுக்கு - உடம்பு. எயிறு - பல். புரக்ககனப் பொருப்பராவார் வித்தியாதரர்; புரமென்றது மலைமேல் அன்னவூர் இன்னவூரென்று நாமமிட் டிருப்பனவற்றை; அவை சண்டிசிங்கபுரம் பௌத்தபுரம் முதலியன.

பொடித்தும் கண்நெருப்பிற் பொரித்தும் தின்றாரென்பது.
----------

481. கனத்தகளக் கொளுத்திலறக் களிற்றணியைக் கடித்தே
இனத்தகுறைப் பிறக்கமெயிற் றெதிர்ப்பவயிற் றெடுத்தே.

கனம் - பாரம். களம் - கழுத்து. கொளுத்து - மூட்டுவாய்க் குரல்வளை.

எ-து : குரல்வளை அறும்படியாகக் களிற்றணிகளைக் கடித்துப் பின்னை அந்த யானையினத்தின் உடற்பெருமையான மாங்கிசங்களை வாயிற்பல்லினாலே வந்து எதிர்க்கும்படி நின்றெடுத்து. எ-று.

எயிறென்றதைக் கடித்தற்கும் எதிர்த்தற்கும் ஒக்கக்கொள்க. இவை வித்தியாதர யானைகள். கனத்தகனக் கொளுத்தென்று பாடஞ் சொல்லுவாரு முளர்; கனம் - மேகம், கனக்கொளுத்து - மேகக் கொளுத்து; அன்றியேயும் கனத்தகளமென்று கொண்டு, கனம் - இரும்பு, களம் கழுத்து; இரும்பு போன்ற கழுத்தென்றலுமாம்.

இதன்பயன் யானைக்கழுத்தறக் கடித்தல் அருமையென்பது.
----------

482. அழித்தமதிக் கதிர்க்குளிரிட் டருக்கருருப் பவித்தே
விழித்தவெயிற் ப்ரபைக்கனலைப் பனிப்ரபையிட் டவித்தே.

எ-து : உண்டு அழிவுண்ட சந்திரகிரண சீதங்களாலே ஆதித்தியருடைய உஷ்ணத்தை அழித்துப் பின்னை ஆதித்தியர் பக்கலில் வெயிற்சோதியைச் சந்திரனுடைய நிலாச்சோதியாலே அழித்து. எ-று.

உருப்பு - உஷ்ணம். பனிப்பிரபை - நிலா.
----------

483. தகட்டுமுடிப் பசுக்கள்வசுக் களைத்தழுவிச் சமைத்தே
பகட்டினொடித் துருத்திரரைத் திருக்கைமுடப் படுத்தே.

தகடு - மின்னும் பொன். பசுக்களென்றது ஓரிடத்திலும் வெற்றிக்கீர்த்தி யில்லாரென்றும் [1]ரிஷிகளாலே சாபப்படுவாரென்றும் கூறியவாறு. வசுக்கள் - அட்டவசுக்கள்; அவர்களைத் தழுவிச் சமைத்தலாவது தழுவலிலே சமைந்தது அவர்கள் பலமென்பது. பகட்டினொடித் தென்றது சந்துகளில் ஒடித்தென்றவாறு. பகடென்பதை எருதாக்கி, ஏகாதச ருத்திரர்களுடைய எருதுகளை ஒடித்து அவற்றின் கால்களென்ன அவர்கள் கைகளையும் ஒடித்தென்பாரு முளர்; இன்னென்பதை உவமையாக்குக. திருக்கையென்றது ஆட்சேபம்.

-----
[483-1] வசுக்கள் ரிஷிகளாலே சாபப்படுவாரென்பதை, வி. பாரதம், குருகுலச் சருக்கம், (௬௧) 61 -ஆம் செய்யுள் முதலியவற்றாலுணர்க.
----------

484. தடுத்தகுலப் பொருப்பைமுடித் தடத்துடையத் தகர்த்தே
உடுத்தொடையற் றழைத்துநிலத் துழைப்பவுதைத் துகைத்தே.

தடுத்தகுலப்பொருப் பென்றது எதிரேவந்து போகாதேயென்று தடுத்துப் பூசல்செய்த மலைகளை. முடித்தடம் - மலைக்குவட்டிடம். உடுத்தொடை - நட்சத்திரலோகம்; இதனை நட்சத்திரமாலை யென்பாரு முளர். அழைத்தல் - கதறுதல். உழைத்தல் - வியசனப்படுதல். உகைத்தல் - ஓட்டுதல்.
----------

485. குனித்தகளத் தளக்குதிரைக் குளப்படியைக் குறைத்தே
பனிப்பகையைப் பனிச்சுடர்விட் டெறிப்பனபற் பறித்தே.

குனித்தல் - வளைத்தல்; இது முகத்தின் தொழில்; கால்கொண்ட தொழிலுமாம். களம் - கழுத்து. தளம் ஏழு; இது பஞ்சாரூடபத்திரதளம்; இது மாகதம். குளப்படி - குளம்பினையுடைய அடி. பனி - சீதம். பனிப்பகை - சீதசத்துரு; ஆதித்தியன். பனிச்சுடர் - சந்திரன்.

ஆதித்தியனை நிலாப்போலச் சோதிவிடும்பற்களைப் பறித்தா ரென்றவாறு; "பகல்குன்றப் பல்லுக்குத்தோன்" ((௪) 4) ; இது திருக்கோவை.
----------

486. சுமப்பனதிக் கயத்துடனத் திசைச்சுரரைத் துணித்தே
தமப்பனடிக் கழுத்தடையத் தனிப்பகழித் தறித்தே.

சுமப்பன வென்றதில் லோகங்களை யென்னுந் தந்திரவுத்தி கண்டு கொள்க. திசைச்சுரரென்றது திக்குத்தேவரை. அத்தேவர்களைச் சுமப்பனவல்ல திசைக்கயம். உடனென்றதனால் அத்தேவர்கள் ஏறிவந்த யானைகளையும் அவ்வியானைகளுடனேகூடத் தேவர்களையும் ஒக்கத் துணித்தாரெனக் கொள்க. தமப்பனாவான் பிரமன்; தட்சனைச் சொல்லுவாரு முளர்; அது பொருளன்று; யானைக்கும் தேவர்க்கும் தமப்பன் பிரமன். அடிக்கழுத்தெனவே நான்குதலைக்கு அப்புறம் அறுக்கும்படியைக் கூறியது. [1]தமப்பன் - அப்பன். தனிப்பகழி - ஓரம்பு. பகழிதறித்தென்றது மூன்றாம் வேற்றுமைத் தொகை; [2]வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

-----
[486-1] "தாய்மார் மோர்விற்கப்போவர் தமப்பன்மார் கற்றாநிரைப்பின்பு போவர்" (பெரியாழ்வார் திருமொழி, (௩. ௧ : ௯) 3. 1 : 9); தமப்பனென்பது புறப்பொருள் வெண்பாமாலை யுரை முதலியவற்றிலும் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலும் பயின்று வருகின்றது.
[486-2] தொல். தொகை. சூ. (௧௪) 14.
----------

487. நிழற்கடவுட் சுடர்த்தொகையைத் திரைத்துநிலத் தரைத்தே
தழற்கடவுட் டடக்கைகளைத் தறித்துமழுப் பொறித்தே.

நிழல் - குளிர்ந்த சோதி. நிழற்கடவுட் சுடர்த்தொகை - சந்திரன். திரைத்து அவனை நிலத்து அரைக்கை : சந்திரன் நெடியனாதலின் அவனை மடித்துக்கொள்ள வேண்டியிருந்தது; நிலத்தரைத்ததற்கு அடையாளம் களங்கம். தழற்கடவுள் - அக்கினிதேவன்; [1]தடக்கைகளைத் தறிக்கையாவது ஏழுகைகளையும் தறித்தல். மழுப்பொறித்தலாவது நின்றகைகளின் குறைகளில் மழுவைப்பொறித்து மாகேசுவரனாக்குகை; வெறும் சாம்பலாக்குகையுமாம்.

-----
[487-1] "வெய்யவ னங்கி விழுங்கத் திரட்டிய, கையைத் தறித்தானென் றுந்தீபற, கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற." திருவாசகம்.
----------

488. இனத்தமரர்க் கிறைக்குயிலைப் பிடித்திறகைப் பறித்தே
பனத்தியைவிட் டசட்டுவசிட் டனைப்பசுவைப் பறித்தே.

எ-து : [1]இந்திரன் அஞ்சிக் குயிலாய்ப்போக அதனையறிந்து கொண்டு இறகினைப் பறித்தார். பின்னை அருந்ததிப் பிராட்டியைவிட்டு அவளுடனே வசிட்டனையும் போகவிட்டார், சுரபியைப் பறித்து. எ-று.

இதன்கருத்து : சுரபி வேறாய்விடிற் பால் அக்கினிகோத்திரப் பரப்புக்குப் போதாது; அஃது இன்றியொழியின் அவன் உண்ணானென்பது; அவன் வழியொழுகும் சுரபியைப் பறித்ததனாற் பயன் இது. இனி அருந்ததிப் பிராட்டியது பலம் அவனுக்குப் பலமென்ப துணர்க.

-----
[488-1] "மயிலா யிறக்கி னயிர்ப்பிக்கும் வறுங்க ணென்று வாசவனார், குயிலா யிறந்த கதைபாடக் கோலக் கபாடந் திறமினோ" என்றார் முன்னும்; ((௪௪) 44);
"புரந்தர னாரொரு பூங்குயி லாகி, மரந்தனி லேறினா ருந்தீபற, வானவர் கோனென்றே யுந்தீபற.” திருவாசகம்.
----------

489. அகத்தியனைத் தமிழ்ப்பொதியிற் குகைப்புகவிட் டடைத்தே
இகத்தியெனப் புலத்தியனைத் துடிக்கவடித் திழுத்தே.

அகத்தியனது பொதியின்மலையைப் புலவர்களிருப்பென நினைத்துப் போருக்கு வருவாரில்லையென எண்ணினர். குகைப்புகவிட்டென்றது மெத்தெனக் கொண்டுபோய் விட்டாரென்றவாறு. அடைத்தது ராட்சதர் அநியாயம் செய்யாமைப்பொருட்டு. இகத்தி - கடத்தி; என்றது சக்கரவாளத்தைக் கடக்கவென்றபடி. துடிக்க இழுத்து அடித்தது, ராட்சதரைப் பெறுமவனென உட்கொண்டு. இழுத்தல் - சக்கரவாளத்துக்குப் புறம்பாக இழுக்கை.
----------

490. இகற்றருமற் கெடுத்தகொடித் தடுத்திறைவற் கெடுத்தே
பகற்சுடரிற் [1]பகற்கிருகட் பரப்பிருளைப் படுத்தே.

இகல் - பகை. தருமன் - யமராசன். அவன்கொடி எருமைப் போத்து. இறைவன் - வீரபத்திரதேவன். இவற்குக் கொடியாக எடுத்தலாவது இடபசாதியோடு ஒத்து ஒவ்வாமாத்திரம் நோக்கி யெனவுணர்க. பகற்சுடரிற்பகற்கு - ஆதித்தியர் பன்னிருவருள் ஒருவனாகிய பகனென்பவனுக்கு. இவன் பெயர் பகவனென்றும் பகவானென்றும் வழங்கும்.

கண்ணைப்பறித்தா ரென்பது பொருள்.
-----
[490-1] இந்நூல், (௪௫) 45 - ஆம் தாழிசையைப் பார்க்க.
----------

491. சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துகுப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.

சலம் - கடல்; அதற்கரசு வருணன். தளைத்தல் - பிணைத்தல். ஒரு சுறாவிற்குக் கலமுத்தென வுணர்க.
----------

492. அடுத்தகுலப் பொருப்பையிருப் புலக்கைபிடித் தடித்தே
எடுத்தனகற் பகப்பொழில்கட் கடைக்கனலிட் டெரித்தே.

அடுத்தகுலப்பொருப்பென்பன, மகாமேருவையும் ஸ்ரீ கயிலாசத்தையும் விட்டுப் பகையடுத்தனவாகிய ஏனைக் குலப்பொருப்புக்களென வுணர்க. பொழிலென்றதில் ஐகாரம் தொக்கது. எடுத்தனகற்பகப் பொழிலென்றது குலபருவதத்தில் விளையாட்டுக்குப் பண்ணின கற்பகச் சோலையை. கட்கடைக்கனல் கடைக்கட்கன லென்க; என்றது தங்கள் திருக்கண்களின் கடைக்கண் நெருப்பை.
----------

493. குலப்பரவைப் பரப்படையக் கடைக்கனலிற் குடித்தே
சிலப்பரசைத் திருப்பரசுக் களிற்சிதையத் துடைத்தே.

குலப்பரவை - லவணசமுத்திரமும் மற்றவையும். கடைக்கனலின் : இன் ஐந்தாம் வேற்றுமை; ஒப்பின்கண் வந்தது; வடவாமுகாக்கினியைப் போலே கடலை வற்றக்குடித்தா ரென்பது. சிலப்பரசென்றது மகாமேருவை. அதனை ஒன்றுஞ் செய்யாதே தேவர்களிருப்பான சிகரங்களைத் திருக்கைகளின் மழுக்களால் அழியத் துடைத்தாரென வுணர்க; தேவர்கள் இருந்த இடங்களைச் சுத்திசெய்தா ரென்றபடி. பரசுக்களின் : இன் மூன்றாம் வேற்றுமை ஆனென வுணர்க.
----------

வேறு.
494. வேவினுள்வயின் வேவதீதெனப்
பாவகன்றகர் சுடாதுபற்றியே.

பாவகன் - அக்கினிதேவன். தகர் அவன் கொடி. பற்றியென்றது கிடாயினது பெருமையால்; அழித்துச் சொன்னவாறு.

இது வேகுமாயின் வேவது உதராக்கினியிலென்று அதனைத் தின்றாரென்றவாறு.

இதன்கருத்து, அக்கினிதேவன் ஏறியும் கொடியாக்கியும் வேவாததொன்று நம்வயிற்று நெருப்பினிலல்லது வேவாதென்பது. [1]ஈதென்றது செய்யுண்முடிவு.

-----
[494-1] தொல். உயிர்மயங்கு. சூ. (௩௬) 36 - இளம். ந. பார்க்க.
----------

495. ஏழுமானையும் ரவியிழக்கவுள்
வாழுமானையு மதியிழக்கவே.

ரவி - ஆதித்தன். ஏழுமான் - அவன் குதிரை ஏழும்.
----------

496. செம்பொடிப்புரத் திக்கயங்களைக்
கொம்பொடித்தடிக் குருகுதுற்றியே.

செம்பொடி - சிந்தூரம். புரம் - உடம்பு. இது யாளிமுகப் பூதகணத்தின் செயல். [1]யாளி யானையின் கொம்பிற் குருகுதின்கை பண்பு. குருகு - குருத்து. திக்கயங்களை விட்டார்.

-----
[496-1] "ஆளி நன்மா னணங்குடை யொருத்தல், மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்" (அகநா. (௩௮௧ : ௧-௩) 381 : 1-3);
"வீழ்ந்துசெற் றுந்நிழற் கிறங்குவே ழத்தின்வெண் மருப்பினைக், கீழ்ந்துசிங் கங்குரு குண்ணமுத் துதிருங்கே தாரமே" (தே. திருஞான.);
"குவட்டு மால்கரிக் குருகுதே ரரிபுலிக் குவையுண், டுவட்டி யுந்திடு திரைப்புனல்" (கந்த. ஆற்றுப். (௧௪) 14),
"கடங்க லிழ்ந்திடு கரிக்குரு குண்ணு மடங்கல்.” கந்த. தகரேறு. (௧௧௭) 117.
----------

497. தருமனோளியோ டிவுளியைத்தகர்த்
தெருமையோரொரோ புகழ்கெடுத்துமே.

தருமன் - யமராசன்; எருமைப் போத்துக்களையே யானையும் குதிரையுமாகக் கடவுவனென்ப துணர்க. ஒளி - யானைப்பந்தி; ஆகுபெயர். எருமை யோர் ஒரோ புகழ் கெடுத்தென்றது எருமைமுகப் பசாசகணங்களின் பிரபஞ்சச்செயல் சொன்னவாறு. இப்பிரபஞ்சம் எருமைப் பிரளயத்தை நோக்கிற்று. எருமை : [1]"பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம், மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன" என்பதனால் அஃறிணையிடத்துத் தொழிலிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லெனக் கொள்க.

-----
[497-1] தொல். கிளவி. சூ. (௫0) 50.
----------

498. வருதியென்றுபே யூர்திவௌவியே
நிருதிதன்னையே நிலைநிறுத்தியே.

எ-து : நிருதியே! வருதியென் றழைத்து எங்கள் இனத்தை எங்களுடன் விடுகவென்று அவனூர்தியைத் தாங்கள் வௌவிக்கொண்டு அவனை அத்திசையிலே போய் நிற்கச் சொன்னார். எ-று.

வருதியென்றது வாவென்றவாறு. இவன் பேயை ஏறித்திரிவான். ஈசுவரனுடைய படை நினக்கு ஆகாதென்றபடி.
----------

499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன்வாகனங் களைமடக்கியே.

இருள்கடலென்றது இருண்டகடல் இருளுகின்றகடல் இருளுங்கடலென முக்காலமும் ஏற்கும்.

இக்கடலைக் கலக்கி வருணன் வாகனமான சுறாவினத்தைப் பிடித்து
உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித் தின்றாரென வுணர்க.
----------

500. ஆர்வமாளுநா ரணரநேகர்தம்
[1]மார்வமாளுமா நௌவிவவ்வியே.

ஆர்வம் - சினேகம். ஆள்கை - ஆளுதல்; பிறவியைப் பொருளாக நினைத்தல். மாநௌவியென்றதை மா நௌவியெனப் பிரித்து, மா - ஸ்ரீ, நௌவி - மான்கன்றென்று பொருள் கொள்ளலுமாம்; பிரியாது சொல்லலுமாமென வுணர்க.

-----
[500-1] மார்பம், மார்வம் மார்வெனவும் வழங்கும்; இது, "மார்வத்துக் கண்ணினீர் வாரப் பிறர்கொள்ளும், ஆர்வத்துக் கன்றே யடியிட்டாள்" (விக்கிரமசோழனுலா, (௧௩௩) 133);
"கூர்விலங்குந் திரிசூலவேலர் குழைக்காதினர், மார்விலங்கும் புரிநூலுகந்த மணவாளனூர்" தே. திருப்பிரமபுரம்);
"கான்மடங்கா மார்வத்தார் காண விரும்பினர்மேல், நான்மடங்கா மார்வத்தார் நாடு" (திருவேங்கடமாலை, (௪௫) 45) என்பவற்றா லுணரலாகும்.
----------

501. நாமராசியை யுதிர்த்துரோணிதன்
சோமராசியள கஞ்சுலாவியே.

நாமம் - பெயர்; பயமென்பாருமுளர்; இதற்கு அம் சாரியை; நாம ராசியென்றது பெயர் மாத்திரமல்லது காணவொண்ணாத ராசி யென்றுமாம். இராசிகளைக் கோவைகுலைத்து நட்சத்திரங்களைச் சூட்டாகக்கட்டி யென்றவாறு. ரோணிதன் சோமராசியென்றது உரோகிணியின் முகத்தை; சந்திரனையல்ல.
----------

502. சேயமாதிரத் தேவர்தேவிமார்
மாயமேகலா பாரம்வாரியே.

சேயமாதிரம் - தூரிய திக்கு. தேவர்தேவிமார் - சசி சுவாகா முதலாயின தேவிமார். மாயமென்றது ஆட்சேபம்; மாயம் - பித்தளை. சசி சுவாகா வென்னுந் தெய்வப் பெண்களுக்குப் பித்தளையாலே மேகலாபாரமென்பர்; இதை வைத்தியசாத்திரத்திற் கண்டுகொள்க.
----------

503. மையலான்மிகுந் தக்கன்மக்களாந்
தையலாரையுந் தாலிவாரியே.

தக்கன் மக்கள் : இது பெயரினுந் தொழிலினும் பிரிந்த ஆணொழிமிகு சொல்.
----------

504. என்னமாமியென் றியாகபன்னியைக்
[1]கன்னபூரமுங் காதுமள்ளியே.

என்னமாமியென்றது மகாதேவர் மாமியல்லை யென்றவாறு. கன்னபூரமென்றதற்குக் காதிற்செருகும் பூ முதலாயின வெல்லாங் கொள்க. அள்ளுகையாவது காதறச் செய்கை.

-----
[504-1] "கன்ன பூரங் கலந்தசெங் கண்ணியே.” வி. பாரதம், குருகுலச். (௧௧௧) 111.
----------

505. பாபதண்டிதன் பசுவைவிட்டதன்
யூபதண்டுகொண் டோடவெற்றியே.

பாபதண்டி, பசுப்படுப்பா னென்பாரும் குயவ னென்பாரும் சித்திரசேன னென்பாரும் வசிட்டபகவா னென்பாருமுளர். வசிட்டன் உபாத்தியாயன். சித்திரசேனன் எடுத்துக் கைநீட்டுவான். குயவன் வதை பண்ணுபவன்.

பாபதண்டி யென்றதற்குப் பொருள் இங்கே தக்கனென்பது; அக்கினிதேவ னென்பாருமுளர். பசுவென்றது யாகப்பசுவை; சுரபியையன்று. யூபதண்டு - யாகத்தம்பம்; ஓமத்தறி. இதுவே கோலாகப் பசுவை அடித்தார்களென்றவாறு.
----------

506. விவிதமுத்தழன் மீதுவெய்யநெய்
அவிதவிர்த்துநீர் பெய்தவித்துமே.

விவிதம் : வி - அழகு, விதம் - வேறுகூறுபடுதல்; விதம்விதமென்றுமாம். முத்தழல் : தக்ஷிணாக்கினி, காருகபத்தியம், ஆகவனீயம். வெய்யநெய் - வேண்டற்பாடுடைய நெய். அவி - அவிர்ப்பாகம். தவிர்த்தல் - சிந்துதல். நீர்பெய்தலென்றதை இடக்கரடக்கிச் சொன்னாரென்பாரு முளர்.
----------

507. பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய்
மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவே.

பொய்ப்பருந்தாவது யாகத்துக்குச் செய்த பருந்து. கால் - காற்று, பண்ணினகால், பரணின்கால்; பிறவுமுணர்க. மெய்ப்பருந்து - பருந்துதான்.
----------

508. எடுமடாநமக் கென்றுசென்றுபுக்
கடுமடாவெலா மறவருந்தியே.

எடுமென்றது செய்யுமென்னும் முற்றல்ல, அடாவென்றது ஒருமை யாதலால்; நமக்காகச் சோறடாத இம்மடாக்களை எடுமெனப் பொருள்படு மாயின் செய்யுமென்பதுமாம்; நமக்கு அடுப்பனவல்ல வென்றுமாம்; பிறவுமுணர்க. அடாவென்பது அழித்துரை. இவ்வுரையைச் சொல்லார், இவர்கள் ஸ்ரீபூதகணநாதரும் ஸ்ரீபசாசகணநாதரு மாதலால்.
----------

509. புக்கபூதவே தாளயூதமே
தக்கன்யாகமிப் படிசமைக்கவே.

யூதம் - பெரும்படை.
----------

வேறு.

510. மாலைநாக மார்பர்மேக மாகிநின் றிடிப்பவான்
மேலைநாகர் கீழைநாகர் போன்மயங்கி வீழவே.

எ-து : நாகராசாக்களைத் தோரணமாலை யாகவிட்ட மார்பினையுடைய ஸ்ரீபூதகணங்கள் மேகங்களாகிநின்று தெழித்து உரப்பிச் சிங்கநாதம் செய்ய மேகங்களின் இடிப்புக் கேட்ட பாதாளத்து நாகராசாக்கள் பயப்பட்டு விழுமாறுபோல, மேகபதத்துக்கு மேலுள்ள தேவர்கள் மயங்கிக் கீழேவிழ. எ-று.

நாகம் : "நாகத் தன்ன பாகார் மண்டிலம்" ((௩௬௭ : ௧) 367 : 1); இது புறநானூறு; "நாகநீ ணகரொடு நாகநா டதனொடு" ((௧ : ௨௧) 1 : 21); இது சிலப்பதிகாரம்.
----------

வீரபத்திர தேவர்
இறந்தவர்களை உயிர்ப்பித்து மீட்டும் பொரச்செய்வித்தல்.

511. விழுந்த நார ணாதிகட்கு மீளவாழு நாள்கொடுத்
தெழுந்துபோர் தொடங்குகென்று குன்றவில்லி யேவவே.

எ-து : இதற்குமுன்பு விஷ்ணுக்களும் அவர் முதலான தேவர்களும் பூத பசாச யூதபதிகளால் விழுந்து பட்டுப்போக வீரபத்திரதேவரான கணநாதர் விஷ்ணு முதலான தேவர்களெல்லோர்க்கும் வாழ்நாள் கொடுத்து இன்னும் யுத்தம் செய்யு மென்றருளிச் செய்ய. எ-று.

இதன்கருத்து : [1]உயிர்பெய்து கூத்தாட்டுக் காண்டல். என்னைப் போன்றவர்களும் விஷ்ணுவாதிகளும் ஒப்பர் பூதகணநாதர்க் கெனவறிக; மத்தியான்ன ஆதித்தியன் எல்லாப் பிராணிகட்கும் ஒக்க நிற்குமாப்போல.

-----
[511-1] இந்த அரிய வாக்கியம் பின்புள்ள தேவாரத்தை நினைப்பித்து இன்புறுத்துகின்றது :
"ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே
      யடக்குவித்தா லாரொருவ ரடங்கா தாரே
ஓட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே
      யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே
      பணிவித்தா லாரொருவர் பணியா தாரே
காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே
      காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.”
----------

யுத்தம்.
வேறு.

512. சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன
சரமுஞ் சரமுந் தறிப்பவே.

சிரம் - தலை. சிரமுஞ்சிரமும் செறிந்தன வென்றது இரண்டு திறத்துப் படைவீரர் தலைகளும் தம்மிற் பொருந்தின வென்றவாறு. சரமுஞ்சரமும் தறிப்பவென்றது அம்பும் அம்பும் தம்மிற்பிணங்கி அறுப்புண்ண வென்றவாறு.
----------

513. கனமுங் கனமுங் கனைத்தன
சினமுஞ் சினமுஞ் சிறக்கவே.

கனம் - மேகம். கனைத்தல் - கருவித்தல். ஈசுவரன் படையில் மேகங்களாகப் பூதங்களே வடிவு கொண்டன. [1]முன்னே யானையும் தேரும் படையும் மற்றும் எல்லாமாகப் பூதபசாசுகள் தாமே வடிவு கொண்டன வென்றதை யறிக.

-----
[513-1] முன்னேயென்றது, இந்நூல், (௪0௧) 401 -ஆம் தாழிசையை.
----------

514. கடையுங் கடையுங் கலித்தன
தொடையுந் தொடையுந் துரப்பவே.

கடையென்றது அப்புக்கடையை. தொடையென்றது அம்பு தொடுக்குந் தொடையை. துரத்தல் - செலுத்துதல்.
----------
515. தாருந் தாருந் தழைத்தன
தேருந் தேருந் திளைப்பவே.

தார் - தூசிப்படை. தூசிப்படைக் கிலக்கணம், துன்னூசியின் முகம் போல நேர்ந்து நெடுகி இடைபரந்து கடைதிரண்டு பரந்து சுழன்று வெளிப்பட்டிருத்தல்.

தூசிப்படைகள் தம்மிற்பொருது தழைத்தன வென்றவாறு.
----------

516. தோலுந் தோலுந் துவைத்தன
கோலுங் கோலுங் குளிப்பவே.

தோல் - யானை, வட்டணைக்கிடுகு. கோல் - அம்பு, ஆளெறிகோல்.
----------

517. தோளுந் தோளுந் தொடங்கின
தாளுந் தாளுந் தரிப்பவே.

தொடங்கின - போர் தொடங்கின. தரிப்பவென்றது கால் தளராதே நிலைநிற்ப வென்றவாறு.
----------

518. கிரியுங் கிரியுங் கிடைத்தன
கரியுங் கரியுங் கடுப்பவே.

கிடைக்கை - மாறுபடுதல்.
----------

519. தலையுந் தலையுந் தகர்த்தன
சிலையுஞ் சிலையுஞ் சிலைப்பவே.

தகர்த்தல் - தம்முள் முட்டுதல். தகர்ந்தனவென்று பாடஞ் சொல்லுவாரு முளர். சிலையாவது வில்லல்ல; மலையடிவாரப் பாறை. சிலைத்தல் பொருதலும் பொருந்தலும் சத்தித்தலுமாம்.
----------

520. குடையுங் குடையுங் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே.

கொழித்தல் - கோபகோஷ ஆரவாரம் செய்தல்; இது குடைத்தொழிலல்ல; அரசத்தொழில்; குடை : ஆகுபெயர்.
----------

வேறு.

521. மடிந்தன குவலய வலயமே
இடிந்தன குலகிரி யெவையுமே.

குவலயம் - பூமி. வலயம் - வட்டம். எவையென்றது யாவையென்பதல்ல; எவையாயதுமல்ல; [1](யவையென்னும் ஆரியச்சொல் பிராகிருத பாஷையுடன் மருவி எகரமேறித் தமிழதாயது.)
-----
[521-1] "உயர்வற வுயர்நல முடையவன் யவனவன்" (திருவாய்மொழி, (க. க : க) 1. 1 : 1) என்பதில், 'யவன்' என்பதற்கு உரையாசிரியர்கள் எழுதிய விசேடவுரைகள் இங்கே அறியற்பாலன.
----------

522. அற்றன வெழிலியொ டசனியே
வற்றின வெழுபெரு வாரியே.

எழிலி - மேகம். அசனி - உருமேறு. அற்றன வெழிலியொ டசனியே யென்றது மேகங்கள் இடிக்கை தவிர்ந்தன வென்றவாறு. வாரி - கடல்.
----------

523. உதிர்வன வெழிலியு முடுவுமே
அதிர்வன புடவிக ளடையவே.

உதிர்வன வென்றது அவ்விரண்டன் உடம்புகளை.
----------

524. நெரிந்தன மாசுண நெற்றியே
இரிந்தன மாசுண மெவையுமே.

மாசுண - தூளியுண்ண; இது பூமியில் விழுந்த வஸ்துக்களால் எழுந்த தூளியென வுணர்க. நெற்றியென்றது ஆகாசத்தை. மாசுணம் - பாம்பு.
----------

525. அழுந்தின குலகிரி யடையவே
விழுந்தன திசைபல மிதியிலே.

திசைவிழுகையாவது சரீரங்களால் மறைகை.
----------

526. சிதைவது சூழ்வரு திகிரியே
புதைவது சிலைகொல் பொருப்புமே.

சூழ்வருதிகிரி - சக்கரவாள பருவதம். அது சிதைதற்குக் காரணம் அதனைக் கடந்து சிலர் போனமையும் போனாரைத் தொடர்ந்து சிலர் போனமையும். புதைவது சிலைகொல் பொருப்புமே யென்றது மேல் இந்திரதனுவைச் சென்று முட்டிப் பொருகின்ற மலைகள் பூமியிற் புக்கழுந்திப் புதைந்து போயின வென்றவாறு; உம்மை மிகை. அன்றியே, சிலை - தாழ்வரை, பொருப்பு - சிகரமென்னின் உம்மையும் பொருள் பெற்றதென வுணர்க.
----------

527. பறிந்தன வடவிகள் பலவுமே
மறிந்தன பலகுல மலையுமே.

பலகுலமலை யென்றது சத்தகுலபருவதங்களையல்ல; தத்தம் குலமலைகளை; அவை செம்மலை கருமலை நெடுமலை குறுமலை யென்பனபோல்வன.
----------

528. பெருத்தன வமரர் பிணங்களே
பருத்தன பூத பசாசமே.

மென்று பருத்தன வென்று தந்திரயுத்தி கொள்க.
----------

529. அயின்றன வெருவையொ டலகையே
பயின்றன பிணமவை பலவுமே.

அயிலல் - தின்றல். எருவை - பருந்து. அலகை - பேய். பயிலல் - பழகுதல். அவையென்றது பருந்தையும் பேயையும். இதற்கு முன்பு தேவர்கள் பிணத்துடன் அவை பயப்படாதே பழகிய அத்தனையேயென உணர்க.
----------

530. முழங்கின முகிலென முரசமே
தழங்கின வெதிரெதிர் சங்கமே.

எதிரெதிரென இரண்டு படைக்கும் ஒக்கக்கொள்க. முகிலை முரசிற்கும் சங்கிற்கும் ஒக்கக்கொள்க; முகில்போல ஒலிபடைத்தன. தழங்கின – நடுங்கி யொலித்தன.
----------

வேறு.

531. மாகலக்கமூள் வாரணங்கண்முன்
பாகலப்பசா சுகள்பரக்கவே.

மாவென்றது குதிரைக்கும் யானைக்கும்பெயர். மூளுதல் - பொருதல். வாரணம் - யானை. [1]பாகலம் யானைக்குப்பகையாகிய வெதுப்பு நோய்; அஃது அசாத்திய வியாதி. அதுதானும் ஒருபசாசசாதியின் பிறப்பு.
-----
[531-1] இந்தநோயின் பெயர் கூடபாகலமென்றும் வழங்கும்;
"அயர்ந்தனன் விழுந்த கோவை யச்சுதன் பரிவோ டேந்திப், புயந்தழீஇ யெடுத்து வாசப் பூசுநீர் தெளித்து மாற்றப், பயந்தரு கொடிய கூட பாகலந் தணிந்து மெல்லக், கயந்தெளி வுற்ற தென்னக் கண்மலர்ந் தழுத லுற்றான்"
(வி.பாரதம், பதின்மூன்றாம் போர்ச். (௧௫௯) 159);
"கால கூட மென்னும் வெந்நோய்" (பெருங். (௫. ௩ : ௧௨௯) 5. 3 : 129) என்று காணப்படுதலால், இந்நோயின் பெயர் காலகூட மென்றும் வழங்கப்படுமென்று தெரிகிறது.
----------

532. வெள்ளிவாய்மதிக் குடைவிளிந்தவோர்
கொள்ளிவாய்நெடும் பேய்கொளுத்தவே.

வெள்ளியென்றது வித்தியாதர லோகமான இரண்டுசேடியில் வெள்ளியம் பெருமலையை. வெள்ளிவாய் : வாய் - இடம். மதிக்குடை : மதிபோலுங் குடையை யுடையாரென உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; வித்தியாதர ராசாக்கள். விளிதல் - கெடுதல்.

ஒரு கொள்ளிவாய்ப் பேய்க்கு அமர்ந்தது இரண்டு வித்தியாதர லோகமும்.
----------

533. விரவிவெள்ளியிற் றெரிவிபஞ்சியிற்
புரவிவெள்ளமுற் றும்புரட்டவே.

எ-து : வித்தியாதர லோகத்தையொத்து ஆராயப்பட்ட கந்தருவ ராச்சியத்திற் குதிரைவெள்ளத்தை யெல்லாம் புரட்ட. எ-று.

இதுவும் ஒருகொள்ளிவாய்ப்பேய் கொளுத்தியதென வுணர்க.

வெள்ளியின் : இன், உவமையின்கண் வந்தது. விபஞ்சி - யாழ்.

'விரவிவெள்ளிவெற்பற' என்பதொரு பாடமுண்டு. இதற்கு வெள்ளி வெற்பற அதனோடு விரவிக் கந்தருவரையும் வென்றாரென்பது பொருள்.
----------

534. மாக்கணங்கொள்படை வானநாடரைத்
தாக்கணங்குக டரைப்படுப்பவே.

மாவென்றது குதிரையையும் யானையையும். இவற்றையே படையாகக்கொள்ளும் வானநாடர் சித்தரும் யட்சருமென வுணர்க; இதனால், அவை சித்தாசுவமெனவும் யட்சேபமெனவும் வழங்கும்; ஹர்ஷசரிதாதி காவியங்களிற் காண்க. இவர்களைத் தீண்டியே கொல்லவல்ல பசாசுகள் கொன்றனவென வுணர்க. இவை மந்திரசாதனம்வல்ல யட்சரும் சித்தருமான பசாசுகள். யட்சராவர் ஆலின்கீழிருக்கும் மந்திரசாதகர்; யட்சவாசமென்பது ஆலின்பெயர். அன்றியே யட்சமென்பது நாய்க்கும் மந்திரத்துக்கும் பெயர்; இவர்கள் சேவகமுந் திறமும் உடையாரெனக் கொள்க. சித்தராவார் ஆலிற்கோயிலிலுள்ள மகாகாளியின் மந்திரசாதகர்; சித்தார்த்தக மென்பது ஆலின்பெயர். இதனை யாமளத்திலுணர்க.
----------

இறந்த தேவர்களைப் பிரமா மீட்டும் படைத்தல்.

535. அடப்படப்பொறா தமரர்தம்படை
படப்படப்ரசா பதிபடைக்கவே.

எ-து : பூதபசாசகணங்கள் கொல்லத் தேவர்கள் கூட்டம் படக்கண்டு சகிக்கமாட்டாது தேவர்கள் சாவச்சாவப் பிரமா மீண்டும் மீண்டும் படைக்க. எ-று.
----------

பூதகணங்களின்செயல்.
மலைகளையழித்தல்.

வேறு.

536. பள்ளிக் குன்றும்விற் குன்றுமொழி யச்சிறகறுப்புண்டுபாழ்
வெள்ளிக் குன்றுபொற் குன்றுகற் குன்றடைய வீழவே.

பள்ளிக்குன்று - ஸ்ரீ கைலாசபருவதம். விற்குன்று - மகாமேரு. [1]பாழ்வெள்ளிக் குன்றென்றது ஈசுவரன் இல்லாத மலையென்றவாறு; அது வித்தியாதர லோகத்துள்ளது. பொற்குன்று - பொன்படும் மலை; இந்திரன் விளையாடுவதொரு செய்குன்று.

இப்பாட்டுக் கவிச்சக்கரவர்த்திகள் வாக்கல்ல வென்பாருமுளர்.
-----
[536-1] இந்நூல், (௩௭௧) 371 -ஆம் தாழிசையில் உள்ள "பாழ்வெள்ளிவெற்பு" என்ற பகுதியும் அதனுரையும் இங்கே அறியற்பாலன.
----------

வேறு.

537. வெள்ளிக் குலக்குன்று பொற்குன்று கல்லின்
      விழுக்குன் றெனப்பட்ட குன்றியாவும் வீழக்
கிள்ளிச் சிறைப்பார முகிரிற் கிடப்பக்
      கிளர்ந்தும்பர் கோமானை மானங் கெடுத்தே.

கல்லின் விழுக்குன்றென்றது உணவு விளைத்தலானும் கெறுவம் விளையாமையானும்; பிறவுமுணர்க. கிள்ளியென்னும் வினையெச்சமும் கிளர்ந்தென்னும் வினையெச்சமும் கெடுத்தென்னும் வினையெச்சத்தைக் கொண்டு முடிந்தன. மானம் - கெறுவம்; அளவுமாம்; "தத்த மானந் தரத்துறை போகிய, விச்சைக் கொற்ற வினைய ராகி”; இஃது உதயணன் கதை.

இதன்பயன் இந்திரன் வச்சிரமும் பூதங்களின் உகிரும் ஒக்குமென்றது.
----------

538. பொற்பூ டறக்கற்ப கக்காடு சாடிப்
      புகுந்தும்பர் கோன்முன்பு பூதப் பிரான்மார்
வெற்பூ டறப்போய் வெறுங்கைக ளாலே
      விழுத்தோகை யான்வாகை வென்வேலை வென்றே.

பொற்பு - பொலிவு.

பிள்ளையார்மேல் உவமை சொல்லாமல் வெறுங்கைகளாலே வெற்பூடறவிழுத்தென இயைத்துப் பொருள்கொள்க; பிள்ளையாரைக் கொள்ளின் இகழ்கையாம்.
----------

539. குமிழ்க்குங் குவட்டேழு குன்றும் பிலத்தே
      குளிப்பக் குறும்பூத மொன்றே குமைத்துத்
தமிழ்க்குன்றின் வாழுஞ் [1]சடாதாரி பேர்யாழ்
      தழங்குந் திருக்கைத் தருக்கைத் தவிர்த்தே.

அகத்தியன்கை விந்தபருவதம் ஒன்றையே குமைத்தது. இங்கு ஒரு பூதம் ஏழு பருவதங்களையும் குமைத்தது.

தமிழ்க்குன்று - பொதியில்மலை. தருக்கு - கெறுவம்.

இதனாற்பயன் யாழ்வாசிக்கவல்லது அத்தனையே அகத்தியன்கை யென்க.
-----
[539-1] அகத்தியமுனிவர் யாழ் வாசித்தலிலும் வல்லுநரென்பது இங்கே அறியற்பாலது; இதனை, "மன்னு மகத்தியன்யாழ் வாசிப்ப" (திருக்கைலாய ஞானவுலா (௨௪) 24) என்பதும் நன்கு புலப்படுத்துகின்றது.
----------

540. கட்டிக் குறங்கைக் குறங்காலு மோதிக்
      காதுஞ் சிறைக்கை களைக்கைக ளாலே
மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூத
      மல்லர்க் கடந்தானை மானங் கெடுத்தே.

குறங்கு - மலையடிவாரம்; "வானம் வாய்த்த வளமலைக் [1]கவாஅன்" ((௮௪) 84); இது சிறுபாணாறு. சிறை - சிறகு. சிறகுக்குக் கையென்பதைக் கொடுத்தது கோழிப்போரில் 'ஒருகை பறந்தபடி' என்னும் வழக்குண்மையின். மட்டிக்கை - தேய்த்தல். மல்லர்க்கடந்தான் - மல்லரை வென்றான்; [2]"உயர்திணை மருங்கி னொழியாது வருவதும்" என்பதனான் ஒழிந்துவந்த ஐகார வேற்றுமை; இதற்கு உதாரணம் 'மகற்பெற்றான்' என்பது.
-----
[540-1] குறங்கும் கவானும் தொடையின் பரியாயப்பெயர்கள்.
[540-2] தொல். தொகை. சூ. (௧௫) 15 – இளம். ந. பார்க்க.
----------

541. அலங்கற் பணைத்தோ ளிணைக்குன்றி னொன்றா
      லடற்பூத மொன்றேழை யாகண்ட லன்றன்
விலங்கற் குழாமாரி போய்நீறு நீறாய்
      விழப்பண்டு கன்மாரி வென்றானை வென்றே.

அலங்கல் - பூமாலை. பணைத்தல் - பெருத்தல். இணை - இரண்டு. ஏழை -ஏழுமலையை; ஏழையாகண்டல னென்று கூட்டாதொழிக. 'ஏழை எடுத்து' என ஒருசொல் வருவிக்க. ஆகண்டலன் - தேவேந்திரன்.

ஏழுமலையை ஒருபூதம் ஒருகையா லெடுத்தது; ஸ்ரீ கிருஷ்ணதேவர் கன்மாரி காத்தருளியது ஒருகையால் ஒருமலையை எடுத்தருளிய அத்தனையே.
----------

542. புடைக்கால மற்றொத் துருக்குண்ண வேழ்பொற்
      பொருப்புங் கனற்கட் கடைச்சுட்ட பூதங்
கடைக்கால மெக்குன்ற முஞ்சுட் டுருக்குங்
      கடுங்கோள்க ளீராறு நாணக் கலித்தே.

புடைக்கால மற்றொத்தென்றது யுகாந்தகாலமின்றி நடுவே புகுந்த காலமொத் தென்றவாறு. கடைக்காலம் - யுகாந்தகாலம். கடுங்கோள்கள் - ஆதித்தியர்கள்.
----------

543. கைந்நாக மேமேயு மாநாக நாகக்
      கணங்கூட வாரிக் கவுட்கொண்ட பூதம்
மைந்நாக வெற்பொன்றை யுந்தன் வயிற்றே
      மறைக்குங் கடற்கோனை மானங் கெடுத்தே.

கைந்நாகம் - யானை. கைந்நாகமே : ஏகாரம், பிரிநிலை ஏகாரம். மாநாகம் - பெரும்பாம்பு. கைந்நாகமே மேயு மாநாகமாவது ஆடு குளகுமேய்ந்தாலென யானைகளையே மேயும் பாம்பெனவுணர்க. நாகம் - மலை. கணம் - கூட்டம்.

எ-து : [1]யானையையல்லது மேயாத மகாநாகங்கள் பலவற்றையுடைய பருப்பதங்களின் கூட்டங்களை ஒருகொடிற் றடக்கியதொரு பூதம் பண்டு தேவேந்திரனுக்கு அஞ்சி ஒளித்த மைநாக பருவதமான மலையைத் தன் வயிற்றிலே அடக்கிய மகாசமுத்திர ராசனை லச்சைப்படுத்தியது. எ-று.

எனவே கடல்வயிறு மைநாக பருவதமான [2]மரகதமலை ஒன்று தங்க இடம் போந்ததத்தனையே; மகாதேவர் பூதகணத்து ஒரு பூதத்தின் ஒரு கொடிறு மகாபருவதங்கள் பலவற்றையும் கொண்டு அடக்கியதென்றவாறு.
-----
[543-1] "புழுங்குவெம் பசியொடு புரளும் போரரா, விழுங்கவந் தெதிரெதிர் விரித்த வாயின்வாய், முழங்குதிண் கரிபுகும்" கம்ப. தாடகை. (௧௧) 11.
[543-2] மைநாகமலை மரகதநிறமுடைய தென்பதை, "குழிதர வாய்ம டுத்துக் குறையற நாரந் தெவ்விப், பழிதபக் கறுத்து மீட்டும் விண்ணெழீஇப் படருந் தோற்றங், கழிதுய ரொருமை நாகங் கனவரைக் கிளர்ச்சி யோர்வான், வழியனுப் பிடவெ ழுந்த மாநீலப் பாறை போன்ற" (திருநாகைக் காரோணப் புராணம், திருநாட்டுப் படலம், (௧௨) 12) என்ற செய்யுளும் வலியுறுத்தும்.
----------

544. சோரிக் கடற்சாடி யிற்குன்ற மொன்றைச்
      சுழற்றித் துழாய்வெண் ணிணந்துய்த்த பூதம்
பாரித்த பௌவங் கடைந்தார்க ளென்னும்
      பராவின்மை தேவா சுரர்க்குப் பணித்தே.

சோரி - உதிரம். கடற்சாடி - கடல்போலுஞ்சாடி; கடலும் அதுவே, சாடியும் அதுவே யென்னலுமாம். வெண்ணிணம் உதிரக்கடற்கு அமுதம். துய்த்தல் -உண்டல். பாரித்தல் - பரத்தல். பெளவம் - கடல். பராவு - புகழ். தேவாசுரர் - தேவர்களும் அசுரர்களும். பணித்தல் - கொடுத்தல்.

இதன்கருத்து : கடல் கடைகை பெருமையல்ல; இச்சாடியில் உதிரங் கடைதல் பெருமை.
----------

545. மேலாழி யார்வெள்ளி வேதண்ட லோகம்
      விழிக்கே யுருக்குண்ண வெள்ளஞ்செய் பூதம்
பாலாழி யுந்தாழ வவ்வாழி வைகும்
      பரந்தாம னுந்தாழ வுட்பள்ளி கொண்டே.

மேலாழியார் - வித்தியாதர சக்கரவர்த்திகள்; மேல் - வித்தை. வேதண்டம் - மலை.

உருகின வெள்ளிமலை பாற்கடலை வெல்ல அதில் உறங்கின பூதம் பாற்கடலிற் பள்ளிகொள்ளுகிற விஷ்ணு பகவானை வென்றதென்பது கருத்து.
----------

546. சென்றெட்டு வெற்பும் பணிப்பத் துணிப்பச்
      செயிர்த்தெண்மர் கணநாத ரினமிண்டு சிகரக்
குன்றெட்டு மிட்டெண் டிசாதேவ ரேறுங்
      கொல்யானை யெட்டும் விழக்குத்து வித்தே.

சென்று - திகந்தங்களினளவும் சென்று. பணிப்பவென்றது வீரபத்திரதேவர் அருளிச்செய்ய வென்றவாறு. துணிப்ப : வினையெச்சம். செயிர்த்தல் - கோபித்தல். எண்மர் கணநாதராவார் : சருவன், ருத்திரன், பசுபதி, ஈசானன், பவன், உக்கிரன், மகாதேவன், மஹிமனென்பவர்கள்; விழவென்றது திக்குப் பாலகர்களைக் குறித்தது. எட்டுமென்னும் உம்மை முற்றும்மை.

பசாசகணங்களை வீரபத்திரதேவர் பணிப்பவென்று எச்சங் கொடுக்க.
----------

547. தம்பூத ராதிக ளொடுங்கூடி யாடித்
      தயிராக வயிரா கரக்குன் றிளக்கிக்
கும்போத ராதிகள் குடித்துத் தடித்துக்
      கொள்ளாத வச்ரகா யங்கொண்டு கொண்டே.

தம்மென்றது திக்குப்பாலகர்களைக் குறித்தது. பூதரம் - மலை. ஆதிகளென்றது மற்ற இரத்தினமலைகளை. இதனாலே வயிரபருவதமான வச்சிரபருவதம் தேவேந்திரனுடைய ஆயுதமெனவறிக.

வச்சிரபருவதத்தைத் தயிராக்கிக் கும்போதரரென்னும் பூதகணநாதர் முதலாக எல்லாரும் அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிரசரீரம் பெற்றார். அது வேண்டற்பா டல்லாமையாற் கொள்ளாத வச்சிரகாய மென்றார். அன்றியே தயிராற் குடிப்பதொரு மருந்துண்டு; வச்சிரகாய மென்பது; தயிரன்று மோரெனக் கொள்க. அது [1]தக்கிர மென்னப்படும் சிக்கென்ற மோருக்குப் பெயர்.

கூடியாடியென்றது விளையாட்டிற் கொள்கையும் பொருள்.
-----
[547-1] "ஸர்வ வ்யாதீ ஹரம்தக்ரம்" என்பது மனுஸ்மிருதி.
----------

548. தீவாய் வயிற்றிண்பொருப்பிட் டுருக்கிச்
      செவ்வாய் தொறுங்கொண்டு கொண்டும்பர் சென்மார்
வாய்வாய் தொறுங்கொப்பு ளிப்பார் களிப்பார்
      மழுவாளி யார்சார மாணியென வந்தே.

எ-து : கொள்ளிவாய்ப் பேய்களின் வாய்தோறும் மலைகளை யிட்டுருக்கி அம்மலை நீராயினவாறே கொள்ளிவா யல்லாதன அவையிற்றை வாய்தோறுங் கொண்டுகொண்டு சென்று யாக களத்தில் நின்றும் பிழைத்துப்போகும் தேவர்கள் வாய்தோறுங் கொப்புளித்து விளையாடுவார், ஈசுவரனுடைய [1]சாரமாணிகளைப்போல. எ-று.

எனவே வாமிகள் சுரையை வாயிலேகொண்டு பிராமணர் முகந்தோறும் கூசக்கூச உமிழ்ந்தவகை போல்வது இது.
----
[548-1] சாரமாணிகள் - விதூஷகர்; பரிகாசகர்.
----------

549. அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே
      லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்
மலைகொன்று [1]பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
      [2]வரராச ராசன்கை வாளென்ன வந்தே.

அலைகொன்று - அலையாற்கொன்று. கங்கையை வாராமல் அடைத்தலாவது வெள்ளத்திற்குச் சிறைகோலுதல்; இது தேவர்கள் தொழில்.

எ-து : தேவர்களால் எடுத்து அடைக்கப்பட்ட மலைகளை நடுவிட்டுப் பிளந்து கங்கையை வரவிடும் பூதமானது பண்டு காவேரியைக் கிழக்குநோக்கிப் போகவொட்டாது தடுத்த சையபருவதத்தை நடுவறவெட்டிய சோழன் ராசராசனுடைய திருக்கையிற் பிடித்தருளின வாள்போன்றது. எ-று.

[3]கண்டனென்றது சிறப்புப்பெயர். இதனை இயற்பெயரென்று மயங்காதொழிக. ராசராசனென்பது இயற்பெயர்.

-----
[549-1] "சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ, வழியிட்ட வாள்காண வாரீர்.” இராசராச சோழனுலா.
[549-2] "உடுத்த திகிரி பதினா லுலகு, மடுத்த வரராச ராசன்.” இராசராச சோழனுலா.
[549-3] கண்டனென்பது இராராச சோழனுக்குச் சிறப்புப் பெயரென்பதைப் பின்னுள்ளவைகளும் புலப்படுத்தும் :-
"கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக், கொண்ட தொருசுவடு மேல்கொண்டு”,
"வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்”,
"ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகந், திருமகள் போலத் திளைப்பாள்”,
"கண்டனை மேதினியாள் காந்தனை" (இராசராச சோழனுலா);
"கண்டன் பவனிக் கவனப் பரி”,
"தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொற் றுலாத்திடைவண், டுழுகின்ற தார்க்கண்ட னேறிய ஞான்றி னுவாமதிபோய், விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலையில்வந், தெழுகின்ற ஞாயிறொத் தான்குல தீப னெதிர்த்தட்டிலே”,
"களிக்குங் களிறுடைக் கண்டன் வந்தான்”,
"பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே.” ஓட்டக்கூத்தர் பாடல்.
----------

550. மின்வெள்ளி பொன்கொல் லெனச்சொல்லு முப்போர்
      விலங்கற் குழாமோர் விழிச்சுட்ட பூதம்
பொன்வெள்ளி யெஃகென்ன வானத் துலாமுப்
      புரஞ்சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே.

மின்னென்றதனை ஆகுபெயராக்கிப் பொன்னென்பாரும் பொன்னல்ல இரும்பென்பாருமுளர்; அவை பொருளல்ல; மின் வெள்ளி - மின்னும் வெள்ளி, மின்போலும் வெள்ளியென மின்னென்றதனை வெள்ளிக்கு அடையாக்குக. பொன்னென்றதனை இரும்பென்றுகொண்டு அதற்கு, [1]"பொன்புனை பகழி செப்பங் கொண்மார்”, [2]"தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று" என்பவற்றை மேற்கோள் காட்டுவாருமுளர்; அது பொருளன்று. கொல்லென்றது இரும்பை;
வழக்கிடத்துள்ள கொல்லென்பதை யுணர்க. எஃகு - இரும்பு. முப்புரஞ்சுட்டவீரர் - மகாதேவர். பொலிதல் - ஒத்தல். மேலே பொலிந்தே யென்றது இஃது ஒருகண்ணாலே சுட்டதாதலால் மகாதேவரிலும் வலியதென்றவாறு.
-----
[550-1] குறுந்தொகை, (௧௬ : ௨) 16 : 2.
[550-2] குறள், (௯௩௧) 931.
----------

பூதகணங்களின் பிறசெயல்கள்.

551. பொங்கக் களிற்றீ ருரிப்போர்வை கொண்டும்
      புலித்தோ லுடுத்தும் படுத்தும் புயத்தே
சிங்கப் பசுந்தோல்கொ டேகாச மிட்டுஞ்
      செய்யப் பெறாவல்ல பஞ்செய்து சென்றே.

பொங்க - ஈசுவரனிலும் மிகைப்பட. ஈருரி - உதிரமறாவுரி; ஈர் - ஈரம். சிங்கப்பசுந்தோ லென்றது, பண்டு இரணியனைச் சங்கரித்த சிங்க ரூபத்தைச் சிம்புளாய் இறாஞ்சிக்கொண்டு உரித்தருளிய தோலால் ஏகாசமிட்ட கதையை நினைந்து; [1]"சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந் தொழநிற்பீர்" என்பது திருப்பாட்டு.

அரசனல்லாதோர், முடியைத் தலையில் வைக்கவும் சிங்காதனத்தே ஏறவும்பெறார்; அதுபோல, கொல்வார், உடுக்கவும் போர்க்கவும் பெறார். செய்யப்பெறா வல்லபம் சிவத்துரோகம்; அது வீரபத்திரதேவர் திருமுன் இவர்கள் கொண்டவேடம்.
-----
[551-1] சுந்தர. தே. திருப்பரங்குன்றம்.
----------

552. சங்கும் பொலன்கற்ப கக்காவு மாவுஞ்
      சதுர்த்தந்தி யுஞ்சர்வ முந்தேரும் வாரிப்
பொங்குங் கடற்கே புகப்போக வீசும்
      பூதந் தபோவாரி கோதம் புரைத்தே.

பொலன் - பொன். மா - குதிரை. போக - கடலின் நடுவே புக. தபோவாரி - துர்வாச மகாமுனி. கோதம் - குரோதம்.

இது பண்டு மகாமேரு சிகரத்தில் மானச தடாகத்தில் அகமருஷண பாதாளயோகம் பண்ணின துர்வாசர் எழுந்துநின்று தேவேந்திரனைக் கண்டு உபசாரமாக ஒருபுட்பமாலை கொடுப்ப இந்திரன் வாங்கப்புக்குமளவில் அவன் அயிராபதம் அதனை வாங்கிக்கொண்டு காலிலும் நெற்றியிலும் அடிக்க ரிஷி கோபித்துச் சாபமிட்ட கதை. இவைசுட்டிப்போலும் அமிழ்து கடைந்தது.

[1]"புரையுயர் பாகும்”; அவ்விருடி கோபத்திலும் பெரிதாயிற்று ஸ்ரீ பூதகணநாதருடைய கோபம்.
-----
[552-1] தொல். உரி. சூ. (௪) 4.
----------

553. நீரின்றி யேசென் னெருப்புண் டறுத்தும்
நெருப்பின்றி யேநீரை நேரே குடித்துங்
காரின்றி யேநின் றிடிக்கின்ற பூதங்
கடற்குங் கனற்குங் கடுங்கௌவை கண்டே.

நீரை நேரே குடித்து நெருப்பைத் தின்னுமிடத்து நெருப்பு அவ்வியாதிகளைக் கெடுக்கும்; [1] நீர் வியாதிகளை உண்டாக்கும்; ………. என்றது வாகடம்; தோயம் - நீர். காரின்றியே நின்றிடிக்கின்ற வென்றது, கடல் கார்காலத்து ஓசைமிகுமென்பதை நினைத்து. கௌவை - துக்கம்.
-----
[553-1] "நிழனீரு மின்னாத வின்னா" (குறள். (௮௮௧) 881) என்பதையும் அதன் விசேட வுரையையும் பார்க்க.
----------

554. மஞ்சூடு வேவக் கொளுத்துங் கனற்கண்
      மாநாக மோரெட்டு மட்டித் தவற்றின்
செஞ்சூடி காகோடி சிந்தப் பறித்துச்
      சிறைப்புட் குலங்காவ லன்சீர் சிதைத்தே.

மஞ்சு - மேகம். ஊடுவேகல் - உள்ளுறவேகை. கனற்கண்ணென்றது [1]திட்டி விஷத்தை.

மாநாக மெட்டுமாவன [2] முன்னே சொன்னோம்.

இவையிற்றைப் பிடித்துக் கொன்று இவையிற்றின் தலையின் சூடி காகோடிகளான மாணிக்கங்களைப் பறித்தாரெனக் கொள்க. இது ஸ்ரீ பூதகணநாதர் கருடபகவானை வேண்டற்பாடு கெடுத்தது.
-----
[554-1] திட்டிவிஷம் - கண்ணில் விஷமுடைய பாம்பு. இது நஞ்சு விழியரவு, அழற்கணாக மெனவும் கூறப்படும். இதன் விழிக்கு எதிர்ப்பட்டன அழியும்.
இதனை,
"திட்டி விடமுணுஞ் செல்லுயிர் போனால்" ((௯ : ௪௯) 9 : 49),
"திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி" ((௧௧ : ௧00) 11 : 100),
"திட்டி விடமுணச் செல் லுயிர் போயதும்" ((௨௧ : ௪0) 21 : 40),
"அழற்க ணாக மாருயி ருண்ண" ((௨௩ : ௬௯) 23 : 69),
"நஞ்சுவிழி யாவி னல்லுயிர் வாங்கி" ((௨௩ : ௮௪) 23 : 84)
எனவரும் மணிமேகலை யாலும்,
'புத்தன் திருஷ்டி விஷமாய்ப் பிறந்த ஜாதகத்து ………. கண்விழிப்பிற் பிராணிகள் சாமென்றறிந்து தன்கண் விழியாதே கிடந்தமையின்' எனவும்,
'நீ திருஷ்டி விஷமான காலத்து ………. அதற்கஞ்சி விழியாது கிடந்தது என்னோ'
எனவும் வரும் நீலகேசி விருத்தி சமய திவாகரத்தாலும்,
"கண்கிழித் துமிழ்விடக் கனலரா வரசு" (தாடகை. (௧0) 10),
"திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை” (கும்பகர்ண. (௮0) 80)
எனவரும் கம்பராமாயணச் செய்யுட்களாலும் அறியலாகும். நாக அரசர்களுள் ஒருசாரார் (ஸிந்தவம்ச அரசர்) திருஷ்டி விஷகுல திலகரெனச் சிறப்பிக்கப்படுவர் (Epigraphia Indica, Vol. III. p. 232 பார்க்க.)
[554-2] முன்னே யென்றது இந்நூல், (௯௯) 99 ஆம் தாழிசையுரையை.
----------

555. கட்டுக்கொள் பொற்றேரின் ஞாயிற்றை யுந்தண்
      கதிர்க்கோளை யும்பாரி டஞ்சென்று கௌவிச்
சுட்டுக்கொல் கூசிக்கொல் விட்டும் பிடித்துந்
      தொடர்ந்திராகு கேதுக்கள் சீலந் தொலைத்தே.

கட்டுக்கொளென்றது சோதிச்சக்கரத்தினுடனோ நுகத்தினுடனோ மகாமேருவுடனோ கட்டுக்கொண்டவென்றவாறு. தண்கதிர்க் கோள் - சந்திரன்; சந்திரனுக்கு விமானமல்லது தேரில்லை. பாரிடம் - பூதம். சுடுவது ஆதித்த மண்டலம்; கூசுவிப்பது சந்திரமண்டலம்.

ராகு கேதுக்களுக்கு விடுவதும் பற்றுவதும் உண்டென்னும் பொருளுணர்க.
----------

556. மக்கா ணுமக்கம்ம தாய்காணும் யாநீர்
      மறந்தீர்க ளென்றென்று வஞ்சப்பெ ணங்குப்
புக்காண் முலைக்கண்க ளாலாவி யுண்டப்
      பொய்ம்மாய னார்செய்தி போகப் புணர்த்தே.

மக்கள் மக்காளென்று விளியேற்றது. [1]"அம்மகேட் பிக்கும்.” மக்களென்றது தேவாசுர சாதிகளையல்ல. வஞ்சப் பெண்ணாவாள் மாயா சத்தி. இவள் போலும் மாகேசுவராதிகள் மகானென்னு மூலப் பிரகிருதிக்குப்பின் எண்ணுஞ்சத்தி. இது நையாயிக சித்திக்கும் ஒக்கும். மக்காளென்றது பொய்யே பூதப்பசாசுகளுக்கு.

பண்டு பூதனையென்னும் பசாசின் முலைநஞ்சை ஸ்ரீ கிருஷ்ண பகவான் அமுதுசெய்து கொன்றருளினபடி கூறியது.
-----
[556-1] தொல். இடை. சூ. (௨௮) 28.
----------

வேறு.

557. எயிறார வாயார மிடறார வொருகாலு மெரிதீயறா
வயிறார வாறாத வடவாற விமையோரை வரவாரியே.

வடவு - மெலிவு. ஒருகாலும் எரி தீயறாவென்றது எல்லார்க்குமொக்கும்; பேய்க்கு மிக்கிருக்கும்.
----------

558. அரிதின்று போரென்று கோனஞ்ச வமிர்தோடு மமிர்துண்டெழுங்
கரிதின்று பரிதின்று தேர்தின்று முளிகூளி களிகூரவே.

கோன் - தேவேந்திரன். அமிர்தோடு மமிர்துண்டெழுங் கரியென்றது சமுத்திரம் கடைகின்ற காலத்து அமிர்தத்தோடும் அதனை உண்டு எழுந்த அயிராபதத்தை. தேரென்றது ஆதித்தர் தேர்களையும் விமானங்களையும். முளிதல் - உலர்தல்.
----------

தேவர்கள் இறந்து பேய்களாதல்.

559. தேரில்லை கரியில்லை பரியில்லை யிவைநிற்க தேவென்பதோர்
பேரில்லை சுரராசன் விடுசேனை பேய்தின்று பேயாகியே.

தேவென்பதோர் பேரில்லை யென்றது மனுஷ்ய சாதியிலும் தேவர்களுடைய நாமம் இட்டாரையும் கொன்றன பேய்களென்றவாறு. பேயல்லது இல்லையாகையும் பொருள்; தேவெல்லாம் பேயாகையுமாம்.
----------

வேறு.

560. பரந்தர னார்படை யூழியி லாழியை யொத்தது
பாயெரி கொன்று படுங்கடல் போற்குறை பட்டது
புரந்தர னார்படை வந்து படும்படு மும்பர்கள்
பூதமும் வேதா ளங்களு மாயே புகுதவே.

எ-து : ஈசுவரனாருடைய படை பரந்து யுகாந்த காலத்துச் சமுத்திரத்தை ஒத்தது. தேவேந்திரனுடைய படை வடவாமுகாக்கினியாற் குறைபட்ட சமுத்திர சலத்தை ஒத்தது. பின்னைப் படும் தேவர்களெல்லாரும் பூதபசாசுகளாய்ப் பிறந்து ஈசுவரன் படையிற் புகுந்தனர். எ-று.
----------

561. தந்தடி தின்றனர் தந்தலை மூளை விழுங்கினர்
தத்த முரத்துகு மாறு தடுத்து மடுத்தனர்
சிந்தடி வன்குற ளாலல கைக்குல மாகிய
தேவர் பிறப்பு மிறப்பு மிலாதவர் செத்தே.

தடி - மாங்கிசம். உரம் - மார்பு. யாறு - உதிரயாறு; ஆகுபெயராக்கலுமாம்; தந்திரயுத்தியுமாம். சிந்தடிவன்குறள் - பூதம்; சிந்தடி - சிற்றடி, வன்குறள் - வலியகுறள்; இங்கு முதற்பெயராய்ப் பொருள்படுவது. வன்குறளென்பதே சிந்தடியையுடையது. ஆலென்றது ஒடுவென்னும் வேற்றுமை. இதனை, [1]"யாத னுருபிற் கூறிற் றாயினும், பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்" என்பதனாற் கொள்ளாதே அம்பால் வீழ்ந்தான் அம்பொடு வீழ்ந்தா னென்பதுபோலக் கொள்க. குறளாலலகைக் குலமாகியவென்றதனை உம்மைதொக்கத்தாக்கிப் பூதமும் பேயுமானாரென்றலுமாம். இங்குப் பிறப்பாவது கர்ப்பக்கிரகம் புகுதல், "சிந்தடி வன்குற ளோடலகைக்குலமாகிய" என்று பாடஞ் சொல்லின் உம்மைதொக்கது செய்யுள் விகாரமெனவுணர்க. செத்து - ஒத்து.
-----
[561-1] தொல். வேற்றுமை மயங்கு. சூ. (௨௩) 23.
----------

562. ஆடாவிழியிணை காகமிருந்து பறிப்பன
வடிபடி தோயா தனகத நாய்க ளலைப்பன
வாடா மிஞிறிமி ராமுடி மாலை துகைப்பன
வல்வா யெருவைகள் வானோர் பெருமிதம் வாழியே.

கதம் - வலி. வாடாமாலை, வண்டு இமிரா மாலை : கற்பகமாலை; "ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை, நீடிரும் பித்தை நிவப்பச் சூடி”; [1]பாணாறு. எருவை - கழுகு. பெருமிதம் - வேண்டற்பாடும் கருவமும், [2]"பெருமை பெருமித மின்மை சிறுமை, பெருமித மூர்ந்து விடும்.”
-----
[562-1] பெரும்பாணாற்றுப்படை, (௪௮௧ – ௨) 481 - 2.
[562-2] திருக்குறள், (௯௭௯) 979.
----------

வேறு.

563. போர்த்தே ரிவுளி தின்றாளும் பாகு மிசைந்து பூட்டழிந்தே
தேர்த்தே ரென்ன வரும்பேய்த்தேர் தேவ ருலகிற்றிரியுமால்.

போர்த்தேரென்றது [1]ஐ ஒடு கு இன் அது கண் ணென்னும் இவ்வாறென்னும் ஆறுருபுமேற்கும். இவுளி - குதிரை. ஆள் - வீரபுருஷர்; தேராட்களென்னும் வழக்குணர்க; ஆளுதல் தெரிதலுமாம். பூட்டழிகையாவது குதிரையும் ஆளும் பாகனு முதலானவெல்லாம் அழிகை. என்ன - என்று சொல்ல. பேய்த்தேர் - தேர்ப்பேய்.
-----
[563-1] தொல். புணர். சூ. (௧௧) 11.
----------

564. அமையோ மென்னுமலகையினந் தின்றுவிடாப்பண் டமிர்துண்ட
இமையோ ரிமையாப் பேயாகி யிந்த்ர லோகத் தீண்டுவரால்.

அமையோமென்றது பசி அடங்கி அமைந்திலோமென்றவாறு. அமிர்துண்ட இமையோரென்றது ஆட்சேபம். ஈண்டுதல் - நிறைதல். ஆல் : அசைச்சொல்.
----------

வேறு.

565. முடைகமழ்ந்து தசையிழந்து முதுநரம்பொ டென்புமாய்
அடையவிந்த்ர லோகமும் பசாசலோக மாகவே.

முடைநாறுகையும் உடம்பின் மாங்கிசமின்றி யொழிகையும் பழநரம்பும் பழுவென்பு மாகையும் பேய்க்கு லட்சணம்.

இந்திரலோகம் பசாசலோகமாகையாவது பொன் இரும்பாகை.
----------

566. முடையழுங்கி யமிர்தநாறி யழகமைந்த மொய்ம்பினால்
அடையவும் பசாசலோக மிந்த்ரலோக மாகவே.

உண்டுபருத்துச் சம்பிரமித்த அதனாலே பொல்லா நாற்றம் நீங்கியும் தேவர்களுடைய சரீரத்தையே பலகால் விழுங்குதலால் அமிர்தம் நாறியும் தேவர்கள் அழகால் நிறமும் தேவர்கள் பெற்ற வலியால் வலியும் பெற்றன பேய்களெனவறிக.

இஃது இரும்பு பொன்னாகை; ரசவிசேஷம்.
----------

பிரமா பின்னும் படைத்தலும் அமர்மூளுதலும்.

வேறு.

567. பின்னையும் பிதாமகன் படைக்கப் பேரமர்
முன்னையி னெழுமடி முடுகி மூளவே.

பிதாமகன் - பிரமன்.

இவன்படைப்பது முன்னைத்தேவர்கள் ஆன்மாவிற்கே சரீரம் கொடுப்பது. இப்பொருள் அருகர்க்கும் ஒக்கும்; பௌத்தர்க்கும் சிறிது ஒக்கும். சுத்த சைவரான மாகேசுவரர்க்கு ஆன்மாப்பிறக்கின் சிவலோகத்திற் பிறத்தலல்லது முன்புள்ள சரீரமே வருகை பொருளல்ல. ஆதலால் அவர் சமயசித்தாந்தம் இந்திரஞால மெனவறிக.
----------

568. பித்த வானவ ரெங்கே பிழைப்பது
மொய்த்த பூதம் வயிற்றெரி மூண்டவே.

பித்தவானவரென்றது அவிர்ப்பாக முண்கைக்குப் பித்தேறிச் செத்துச் செத்துப் பிறந்த வானவர்களென்றவாறு.
----------

569. மேலுங் கீழும் வெளிப்பட வான்விடுங்
கோலுங் குந்தமு மேவிளை கொள்ளியே.

வானென்றது தேவர்களை; பிறந்தவழிக்கூறலான ஆகுபெயர். ஆயுதம் விட்டபொழுது மேலுங்கீழும் மறைந்தன. அது கீழ்நின்றார்க்கு மேல் மறைகை; மேனின்றார்க்குக் கீழ் மறைகை. அவை வெளிப்படுகையாவது ஆயுதங்களைப் பூதபசாசகணங்கள் வாரிக்கொள்கை. கோல் - அம்பு. குந்தம் - ஆளெறிகோலும் தோமரமும் ஈட்டியும் சவளமும் தொந்தமும் விட்டேறும் பிறவுமெல்லாம் கொள்க. விளைகொள்ளியாவது வயிற்றின் மூண்ட நெருப்பை விளைக்குங் கொள்ளி. அவையிற்றை விழுங்கினார், அக்கினியைப் பிரச்சுவலிப்பிக்க; விளைகொள்ளி; வினைத்தொகை; [1]"மண்டு மெரியுண் மரந்தடிந்திட் டற்றால்" என்பதையுணர்க.
-----
[569-1] புறப்பொருள் வெண்பாமாலை, (௧) 1.
----------

570. விட்ட தேரெலாம் வாரி விழுங்கவோ
இட்ட பேருத ரத்தீ யெரிவதே.

இதன் பொருளுணர்க.
----------

571. புக்க வேழம் பொரியப் புகைபுறங்
கக்க வேழு பொழிலுங் கதுவவே.

எ-து : தேவர்களுடைய யானைகளெல்லாம் பூதபசாசுகளின் வயிற்றிற் புக்கன; அவ்வயிற்றிற் றீயாலும் யானைகளுடைய உடம்பின் நெய்யாலும் அவ்யானைகள் பொரிய வாயாற் புறப்பட்ட புகை ஏழுலோகத்தையும் புகப்படுத்த. எ-று.

அகத்தீடு இது. பொழில் சோலையல்ல; பூமி.
----------

572. இரிந்த தப்புற மிந்திர னேவலால்
விரிந்த தீயடை யச்சென்று விம்மவே.

எ-து : தேவேந்திரன் ஏவலாற் புறப்பட்ட அக்கினியெல்லாம் ஈசுவரனது படையான பூதகணநாதருக்கு அஞ்சி இரிந்தோடிப்போய் லோகத்துக்கு அப்புறஞ்சென்று விம்மின. எ-று.
----------

573. சேனை யெல்லாந் திரிய விழுந்தன
ஆனை யெல்லா மணியணி யாகவே.

திரியவென்றது முன்பு விழுந்தபடி யெனவுணர்க. அணியென்றது படைவகுப்பை.
----------

574. ஆழ மெட்டுங்கொ லவ்வயி றெண்டிசை
வேழ மெட்டும் புகப்புக வீழவே.

கொல் : ஐயம்.
----------

575. வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்றுவீழ்ந்
தாழ்ந்த தண்ண லயிரா பதமுமே.

அண்ணலென்றதற்கு இந்திரனைக் கொள்ளலுமாம்; அண்ணல் அயிராபதமென்னலுமாம். ஆழ்ந்ததென்றதனால் வயிற்றின் பெருமையை யுணர்க.
----------

576. மெய்ய டங்கவெந் தார்சிலர் விண்ணவர்
கைய டங்கிய செந்தீக் கதுவவே.

கையடங்கிய தீ சாரூபம்பெற்ற பூதங்களின் கைகளிற்றீயெனக் கொள்க.
----------

577. சோற்றுப் பாவகன் வெந்தனன் சூழ்திசை
வேற்றுத் தேவ ரெழுவரும் வேவவே.

பாவகன் - அக்கினிதேவன். சோற்றைப் பாகம்பண்ணுமவனெனக் கொள்க. சோற்றுப்பாவகன் : [1]"ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும், வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத், தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி" என்பதனாற் கொள்க. வேற்றுத்தேவர் : அல்வழி; "அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ், சொல்லிய பண்பி னியற்கை யாகும்”; இச்சூத்திரத்திற் சொல்லியவென்ற இலேசாற்கொள்க; "வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படா" ((௧௪ : ௧௨௪) 14 : 124); சிலப்பதிகாரம். எழுவராவார் அல்லாத திசையிற்றேவர்கள்.
-----
[1] தொல். குற்றியலுகரப். சூ. (௬) 6.
----------

578. சாலத் தீயி லரக்க ருபாதிகள்
ஆலத் தீயி லறவெந் தவியவே.

அரக்கர் - இராக்கதர். உபாதி - சரீரம். ஆலத்தீ - விஷாக்கினி. இதுவும் சாரூப்பியபதம்.
----------

579. அடைய வெந்தனர் துவாதசா தித்தரும்
உடைய வெங்கதிர் தம்மை யுருக்கவே.

இதுவும் சிவாக்கினி.

தம்மையென்றது ஆதித்தியர்களை; "ஏனை யிரண்டு நெடுமொழிக் கென்ப" என்பதனாலுணர்க.
----------

580. தடஞ்செ யேகா தசரைத் தனித்தனி
முடஞ்செய் தேயவர் முத்தெருத் தெற்றியே.

இதன் பொருளுணர்க.
----------

581. திங்க டண்மையிற் றேரோ னவிந்தனன்
தங்கள் வெம்மையிற் றண்மதி வேவவே.

இதன் பொருளுணர்க.
----------

582. கால்கொ ளுத்துமச் செந்தீக் கடவுளும்
மேல்கொ ளுந்தகர் வீழ்ந்துழி வீழவே.

இதன் பொருளுணர்க.
----------

583. ஏறு தூக்கு மிடியெரி தீந்தவர்
ஆறு தூக்குமம் மேக மடங்கவே.

ஏறு - எறியுந்தொழில். தூக்குதல் - செய்தல். இடியெரி : உம்மைத்தொகை. ஆறென்றது நீரை. தூக்குகை - மேனின்றும் கீழ்நாற்றுகை.
----------

584. காந்த மூளத் திருக்கட் கதிர்க்கெதிர்
போந்த வெல்லாப் பொருப்பும் பொரியவே.

காந்த - காந்துதலைச்செய்ய. மூள - மூளுதலைச்செய்ய. கட்கதிர் - சந்திராதித்தாக்கினிகள். எல்லாப்பொருப்பு மெனவே சூரியகாந்தாதி யெல்லாங்கொள்க.
----------

585. எப்புத் தேளு மிடுமெப் பணிகளும்
வெப்புத் தீயில் விரவி யெரியவே.

எப்புத்தேளும், எப்பணிகளும் : வினாமுதற்சொல். புத்தேள் - தெய்வம். இடுதல் - விடுதல். பணி - பாம்பு; ஆபரணமுமாம். வெப்புத்தீ - வெப்பென்னுந் தீப்பெயர். அது மூன்றுகாலையுடைத்து.
----------

586. அனிக மாய்வரு மாகண்ட லன்விடு
முனிக ணத்தர்த முத்தழல் மூழ்கவே.

அனிகம் - படை. ஆகண்டலன் - இந்திரன். முனிகணம் - ரிஷிகள் கூட்டம். இதனை ஆகண்டலன் விடும் அனிகமாய் வருகின்ற முனிகணத்தரெனக் கூட்டிக்கொள்க. முத்தழல் - உதராக்கினியும் கோபாக்கினியும் சிவாக்கினியுமென வுணர்க.
----------

587. விரிமு கக்கட லேழ்பெரு வெள்ளமும்
பரிமு கத்தொரு செந்தீப் பருகவே.

திரைவிரிமுகமென்பது பெய்துகொள்க. பரிமுகத்தொருசெந்தீ - வடவாமுகாக்கினி.

இப்படி முகமுடைய பூதங்களுள்ளன. பூமியிலுள்ளனவாயின எல்லாம் கடலிலுள்ளனவாயின எல்லாம் பொன்னுலகத்துள்ளனவாயின எல்லாம் பிசாசப்பிறப்பினும் உளவெனவுணர்க. இப்பொருள் வேதவியாச மதம்; அசிதாகமத்திற் சாதனகாண்டத்திற் கண்டுகொள்க.
----------

588. வேட்டுத் தீவர விட்டன காட்டுவெங்
காட்டுத் தீயின மூண்டு கதுவவே.

வேட்டு - அக்கினிகோத்திரத்தைச் செய்து. விட்டனவற்றையெனச் சாரியையும் வேற்றுமையும் ஒக்கத்தொக்கன. காட்டுவெங்காட்டுத்தீ - பாலை நிலத்துள்ள காட்டுநெருப்பு.
----------

589. பெருக வெந்தன செந்தீப் பிழம்பெழ
உருக வெந்தன தாரகா லோகமே.

தாரகா லோகம் - நட்சத்திர லோகம்.

அவ்வுலகமெல்லாம் படையாய்ப்போய் வெந்தன.
----------

590. முன்ன முன்ன வடைய முளியுமால்
பின்னை யாரவர் கையிற் பிழைப்பரே.

எ-து : ஈசுவரன் படையான பூதகணம் நினைக்க நினைக்கப் படை அடையக்கெடும். பின்னை யார் அவர் கையிற் பிழைப்பார்? எ-று.

முளிதல் - வெந்துபோதல். பின்னை - பின்பு.
----------

தேவர்களைப்பத்துப்பிரமரும் மீளப்படைத்தல்.

591. பாவ காரப் பதின்மரும் யாவரும்
வேவ வேவப் படைத்தனர் மீளவே.

பாவகாரப் பதின்மராவார் தசப்பிரமர்கள்.
----------

பத்திரகாளியினது படையெழுச்சி.

வேறு.

592. படைத்துவிட்டசுரர் சேனையைத்தலைவி
பத்ரகாளிபடை கண்டுபண்
டடைத்துவிட்டபடி யன்றியேயிறைவர்
முன்புநின்றனபின் பாகவே.

எ-து : பிரமர்களாலே படைத்துவிடப்பட்ட தேவசேனையைக் கண்டு இந்தச் சகத்காரணியான ஸ்ரீ மகாகாளியுடைய தந்திரமான பூதபசாசங்களெல்லாம் முன்பு வீரபத்திரதேவருடைய பூதம் வகுத்தபடியன்றி அப்படைக்கு முதற்றூசியாக முன்னேநின்று கைக்கொண்டு தேவர்களைப் பொருதற்கு ஏற்றுக்கொண்டன. கொள்ளவே வீரபத்திரதேவர்படை மகாகாளிபடைக்குப் பின்னே நின்றன. எ-று.

பத்துப்பிரமர்களும் இதற்கு முன்புபட்டபடைக்குப் பத்துப்படி படைத்தாரெனவுணர்க. இதுபோலும் தேவிபடை முன்வந்து கலத்தற்குப் பொருள்.
----------

593. மோகமோகினிகள் யோகயோகினிகள்
யாகசம்மினிகண் முலைவிடா
நாகசாகினிகள் வீரபைரவிக
ணாதசாதகர்க ணண்ணியே.

எ-து : பிராணிசாலங்கட்கு மோகங்களைப்பண்ணும் மோகினிகளும் ஒன்றோடொன்று சம்பந்தம் பண்ணுகின்ற சிதானந்த யோகத்துக்குக் கர்த்தரிகளான யோகினிகளும் யாககாரியமான வேதோத்தேச அவிர்ப்பாக மந்திரகாரணிகளான சரசுவதிகளும் அனுபோக காமசுகம் விடாத சுவர்க்கபோக ராசப்பெண்களும் இவர்களெல்லோருக்கும் தலைவிமாரான பைரவ வேஷதாரிகளும் ஓங்கார உங்கார சப்தப்பிரதானமான நாசக்கிருதமான மௌனஞானிகளுமாகிய ஆரணசடங்கமான மகா தந்திரம் வந்து கூடின. எ-று.

முலையென்றது காமானுபோகத்தை; [1]சகத்திரவேதி யென்னும் அதன் பெயராலுணர்க; இதற்குக்காரணம், ஓருறுப்பு சருவாங்கத்திற்கும் ரோமபுளகித கம்பித சுகானுபோகத்தைக் கொடுத்தலே; இன்னும் சுவர்க்கவேதி யென்றும் குயத்திற்குப்பெயர். சம்மினிகள் - சர்மினிகள். நாகம் - சுவர்க்கம்.
-----
[593-1] சகத்திரவேதி யென்பதன் இயல்பு, இந்நூல், (௨௮) 28 - ஆம் தாழிசை யுரையாலும் அறியப்படும்.
----------

594. யானையாளிபரி யேதிதேர்களென
வெண்ணில்கோடிபல பண்ணியிச்
சேனையாளென வநேகபூதமொடு
செய்தபேய்களொடு செல்லவே.

யானையாளியென்றது ஒருமிருகமென்பாரும் யானையும் யாளியுமென உம்மைத்தொகை யென்பாருமுளர். யாளியென்பது படையின் சுகாசன வாகனங்களின் பெயர். யாளி வாகனமாதற்கு, [1]"யாமாமாநீயாமாமா யாளீ" என்பது மேற்கோள்; இது திருமாலைமாற்று. ஏதி - ஆயுதம். வாளென்பாருமுளர். சேனை - படையினது சமூகம். ஆள் - வீரபுருடர்.
-----
[594-1] திருஞா. தே. சீகாழி.
----------

வேறு.

595. கொண்டதிருக்கோ லங்களிருக்கும்
படியடியோமே கூறவிருப்பேம்
அண்டமனைத்துஞ் சூழவரும்பே
ராழிகளாமே யாழியவர்க்கே.

எ-து : நாயகியுடைய மாயாதந்திரம் கொண்ட திருக்கோலங்கள் இருக்கும்படி யாங்களோ சொல்லச் சமைந்திருப்பேம்! ஈது எங்களால் முடியாது. இந்தச் சகதண்ட முழுதும் சூழ்ந்துகொண்ட சக்கரவாளபருவதங்கள் இப்படையில் ஒருவர் கையில் ஓராழியாம். எ-று.

எனவே கையோடுகூடின காலத்துச் சக்கரமாம்; விரலோடுகூடின காலத்து ஆழிமோதிரமாம்.

கூறவிருப்பேமென்றது சொல்லுதற்கு வீற்றிருப்பேமென்னும் நயமுமாம்; வாணாளின் அற்பத்தைச் சொல்லிற்றுமாம்.
----------

596. உலகுவகுப்பா ருலகுதொகுப்பா
ருலகுபடைப்பா ருலகுதுடைப்பார்
அலகுவகுப்பா ரகிலகலைக்கூ
றடையவிடுப்பா ரவளடியாரே.

உலகு வகுத்தலாவது சுர நர மிருக கிருமிசாதி யோனிகளாக ஆன்மாக்கள் செய்தவினைகள் தோறும் சரீரம்படைத்தலும் பிறவும். உலகு தொகுத்தலாவது யோனியும் யோனிபேதாபேதங்களும் சாதியும் சங்கரசாதியும் தொழிலும் திரட்டுதல். உலகு படைப்பாரென்றது அவாந்தர யுகாந்தங்களிலும் லோகத்தை மீளமீளப் படைப்பாரென்றவாறு. உலகு துடைப்பாரென்றது லோகமெல்லாவற்றையும் அழிப்பாரென்றவாறு. அலகு வகுப்பாரென்றது அளவில்லாத லோகத்தை அளவிடுவாரென்றவாறு. அகிலகலைக்கூறடைய விடுப்பாரென்றது சதுசட்டி கலைஞானமான அறுபத்துநான்கு கலைஞானங்களுக்கும் வினாவுத்தரம் சொல்லுவாரென்றவாறு. இவையெல்லாம் செய்வார் மகாகாளியான பரமேசுவரியுடைய அடியாரென்றவாறு.

ஏயென்றது தேற்றேகாரம்.

எனவே பிரமா விஷ்ணு ருத்திர மகேசுவர சதாசிவாதி தேவர்களும் பிறர் எல்லாரும் அவளடியாரென்றவாறு. இதனைப் பிரமயாமளத்திற் கண்டு கொள்க.
----------

பத்திரகாளியின் படைகள் தேவசேனைகளோடு பொருதல்.

வேறு.

597. பொய்யானையு மாளு முடன்றுபொரா
மெய்யானையு மாளும் விழுங்கினவே.

பொய் : ஆதிதீபம்; ஆளுக்குங் கொள்க. உடன்று - கோபித்து. பொரா - பொருது. இவை இரண்டு வினையெச்சமும் விழுங்கினவென்றதனோடு முடிந்தன.

இப்பாட்டில் விசேடம் மெய்யைப்போலப் பொருதனவென்பது.
----------

598. பொய்யாளியி லாளிடு மெஃகிடைபோய்
மெய்யாளியொ டிற்றனர் விஞ்சையரே.

எ-து : பொய்யாளியை வாகனமாக ஏறின வீரர் எறிந்தவேல் மார்பிடைப்புக்குப் புறப்பட்டுப்போக மெய்யானயாளிமேலேறிய வித்தியாதரருங்கெட்டு வீழ்ந்தார். எ-று.

இப்பொருள் ஸ்ரீ அரிவம்சத்திற் கண்டது; பொய்யான மரத்தால் அமைத்த சிங்கத்தையுணர்க.

போயென்னும் வினையெச்சம் செய்தென்பதாயினும் செயவென்பதாகக் கொள்க.
----------

599. பொய்த்தேரணி முட்ட வெறும்பொடியாய்
மெய்த்தேரணி யற்றனர் விண்ணவரே.

தேரணிமுட்ட - தேரொடு தேர் தாக்க.
----------

600. பொய்வாரி பரந்து புகப்புரளும்
மெய்வாரி பிறங்கி விசும்புறவே.

பொய்வாரி - பொய்க்கடல்; ஆவது ஈசுவரிபடை. புரளல் - இரு கரையும் புரண்டுவருதல். பிறங்கள் - பெருத்தல்; இது விளக்கு அவி தொழில்.

மெய்க்கடல் பொய்க்கடலைக் கண்டு பின்னோக்கிச் சுருண்டு சென்றது; விசும்புற்றான் வருணராசனென்றபடி.
----------

601. பொய்வந்த பதாதியு ளாவிபுகா
மெய்வந்த பதாதி விழுந்தறவே.

பதாதி - பெரும்படை. இப்படைக்குள் ஆவி புகுகையாவது இவர்கள் ஆவியைக்கொள்கை; இது 'நின்பிராணனைக்கொள்கின்றேன்' என்னும் வழக்கு. மெய்வந்த – மெய்யேவந்த : ஏகாரம் தொக்கது.
----------

602. பொய்யாயுத வாயுமிழ் பொங்கழலால்
மெய்யாயுதம் யாவையும் வெந்தறவே.

உமிழ்தல் - புறப்படவிடுதல். ஆயுதவாய் ஆயுதத்துவாயெனக் கொள்க; மகரவொற்று இயல்புகணத்துக்கண் அத்துக்கொண்டது.
----------

603. பொய்ந்நின்ற பதாகினி தந்ததுபோய்
மெய்ந்நின்ற பதாகினி மெய்கெடவே.

பொய்யேயென்னும் ஏகாரம் தொக்கது. பதாகினி, ரத கச துரக பதாதிகளும் படைவகுப்பும் பிறவுமெனவுணர்க. தந்ததென்றது படர்க்கையிலும் செல்லும்; 'கண்டது' என்னும் பாடத்திற்குச் செய்ததென்று பொருள்கொள்க. மெய்க்கண்ணென ஏழாவது தொக்கது.
----------

பட்சிசாதிகணங்களின் செயல்.

வேறு.

604. நுங்கள் கூறுகொன் றீரினி நொய்யகூ
றெங்கள் கூறெமக் கேவிடு மென்னவே.

இது பட்சிசாதிகணங்கள் உரைத்தது.

அவைதாம் பசாசகணங்களை நோக்கி, 'நீங்கள் நும்முடைய கூறான மாயாசக்தியையுடைய தேவாசுரரைக் கொன்றீர்; இனி நொய்யபடை எங்களுக்காம்' என மேற்கொண்டன வென்றவாறு.

இதனை, 'உங்கள் கூறுகொன் றீரினியுள்ள கூறு' என்று பாடஞ்சொல்லின், தமிழன்று.
----------

605. [1]பானி லாவைப் பசுங்கதிர்க் கொத்தொடு
மேனிலாவுஞ் சகோரங்கண் மேயவே.

பானிலா - பால்போலும் நிலா. பசுங்கதிர் - பச்சைக்கதிர்; பசுமை நிறத்திற் சென்றதன்று; இளமையிற் சென்றது. சகோரம் - நிலாமுக்கி.

இதன்கருத்து, சந்திரனை நிலாமுக்கியான பூதகணங்கள் உட்கொண்டன வென்பது. இவையும் ஈசுவரனது படையான பேய்க்கணத்தே புள்ளீ டென்னும் பசாசகணம்.

இதனை வைத்தியசாத்திரத்தில் யோகமணிமாலையில் பாலக்கிரியையி லுணர்க. இது மந்திரவாதம்.
-----
[605-1] இத்தாழிசை முதல் "திருடனிந்திரன்" ((௬௧௨) 612) என்னும் தாழிசை யிறுதியாக உள்ளவற்றிற் சகோரம் முதலிய பறவைகளின் இயற்கையைக் கவி புலப்படுத்தி யிருத்தல் அறிந்து இன்புறற்பாலது.
----------

606. கோனம் போதரங் கும்போ தரம்புக
வானம் பாடியே கூடி மடுப்பவே.

கோன் - தேவேந்திரன். அம்போதரம் - கடலும் மேகமும்; பலபொரு ளொருசொல். கும்போதரம் - கும்பம்போலும் உதரம்; உதரம் - வயிறு; வானம்பாடி - சாதகப்புள்.

இவையும் பேயினமென வுணர்க, கும்போதரமென்றதனால்.
----------

607. [1]ஏறு மேறு மலைகளெல் லாம்புக
வேறு வேறு கபோதங்கண் மேயவே.

ஏறுமேறுமலைகள் - ஏறுகின்ற ஏறுகின்ற பருவதங்கள். கபோதங்கள் - மாடப்புறா.
-----
[607-1] மாடப்புறாச்சாதிகள் பருக்கைக் கற்களை உண்ணுவனவாதலின் பூதகணங்களாகிய மாடப்புறாக்கள் தம்முடைய தகுதிக்கேற்ப மலைகளை உண்டனவென்றார். இதுபற்றியே மாடப்புறா தூதுணம்புறாவென வழங்கப்படும் : தூது - பருக்கைக்கல்; "ஒண்டூதை யுண்புற வீர்மறந் தார்." மறைசையந்தாதி, (௨௫) 25.
----------

608. பதங்கர் வெங்கதிர் பன்னிரண் டாயிரங்
கதங்கொ ணீலிகைக் கிள்ளை கவரவே.

பதங்கர் - துவாதசாதித்தியர். கதம் - வலி. நீலி - துர்க்காபரமேசுவரி. கிள்ளை - கிளி.

இவள் திருக்கையிற்கிளி தெய்வக்கிளியாதலின் தெய்வக்கதிரல்லது கொறியாதென்பது. கதிரென்றவிடத்துக் கிளிசென்று பாய்கை தொழில்; [1]ஆதித்தனைப் பழமென்று பாய்ந்த ஸ்ரீ அனுமானை நினைக்க.
-----
[608-1] "செழும லர்த்திரு வனையதாய் செழுங்கனி நாடிப், பழுவ முற்றிடப் பசியினாற் பதைபதைத் திரங்கி, அழுதரற்றிய பாலக னன்னைமுன் னுரைத்த, பழநமக்கிது வாமெனப் பரிதிமேற் பாய்ந்தான்." இராமாயணம், உத்தரகாண்டம், அனுமப். (௧௨)12.
----------

609. யூத நாயக ரோடுர கேசரை
வேத நாயகி தோகை விழுங்கவே.

உரகம் - பாம்பு.

எ-து : பாம்புப்படைக்குத் தலைவரான யூதபதிகளோடு நாகராசரைப் பரமேசுவரியுடைய மயில்கள் விழுங்கின. எ-று.
----------

610. முன்ன ரம்பினு முத்தர் மிடற்றினுங்
கின்ன ரஞ்சுரர் நெஞ்சங் கிழிக்கவே.

முன்னரம்பென்றதைச் சத்தசுரமாக்கித் தமிழால் எழுநரம்புமான அவையிற்றில் முகநரம்பென்பாரும் 'முந்நரம்பு' எனப்பாடங்கொண்டு வலிவு மெலிவு சமனெனத் தமிழிலும் மந்த உச்ச ஸமமென ஆரியத்திலும் வழங்கப்படும் [1]மூன்று தானத்திலுமுள்ள ஓசையென்பாரும் தேவசாக வித்தியாதர கந்தருவமான திரிவித தந்திரமென்பாரும் உளர். இப்பாடந் தவிர மென்னரம்பினு முத்தர்மிடற்றினு மென்பதொரு பாடமுமுண்டு; அது விலக்கல்ல; மென்னரம்பு - மெல்லியநரம்பு. முத்தர் மிடறு - சாம வேத ஓசை; முத்தராவார் மகாதேவர்; "முத்தன்முத்தி வழங்கும்பிரான்" ((௧௨௭) 127); இது திருக்கோவை. [2]அவர் மிடறுபோலும் இசையைக் காட்ட வல்லதென வுணர்க. கின்னரம் - கின்னரமிதுன பட்சிகள்; இவைபோலும் ஏமப்புள்.

இவை தாம்வல்ல சத்தியாலே [3]எஃகுச்செவித் தேவர்களுடைய நெஞ்சைக்கிழித்துக் கொன்றனவென்பது பொருள். இது [4]கானவேட்டுவர் இசைபாடி மிருகங்களை அழைத்துக் கொன்றாற்போல்வதெனக் கொள்க; [5]"கள்ளமூப்பி னந்தணன் கனிந்தகீத வீதியே, வள்ளிவென்ற நுண்ணிடை மழை மலர்த் தடங்கணார், புள்ளுவம்ம திம்மகன் புணர்ந்தவோசை மேற்புகன், றுள்ளம் வைத்த மாமயிற் குழாத்தினோடி யெய்தினார்;" இதனையுணர்க; இது சிந்தாமணி. [6]காட்டவீணையும் [7]சரீரவீணையும் ஒக்கக்காட்டின சிலபட்சிகள். இதனாற் பாடவல்லாரும் மாகேசுவரர்; ஆடவல்லாரும் அவரேயென உம்மைக்கண் வந்தது.
-----
[610-1] "மூவகையியக்கம்" என்பர்; சிலப். (௮ : ௪௨) 8 : 42.
[610-2] மகாதேவர் மிடறு சாமவேத ஓசையை யுடையதென்பது,
"சங்கணி குழையினர் சாமம் பாடுவர்" (திருஞா. தே.),
"சாமம்போற் கண்டத் தானை”,
"பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே யாடினார்”,
"சாமவேத கந்தருவம் விரும்புமே”,
"பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்" (திருநா. தே.), "சங்கரா சாமவேத மோதீ" (சுந்தர. தே.),
"சாமகண்டா வண்டவாணா" (திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா, கோயில், (௩) 3),
"மாமலர்த் தெரியலான் மணிமிடற் றிடைக்கிடந்த சாமகீதம்" (சீவக. (௨0௩௮) 2038),
"தங்கண்ட, மீதுல ராத சாம வேதமார்ப் பவர்போல்" (திருவிளை. மாமனாக. (௨௩) 23) என்பவைகளாலும் அறியலாகும்.
[610-3] எஃகுச்செவி மூவகைச் செவிகளுள் முதன்மையான செவியென்பர்; மூவகைச் செவிகளாவன : தோற்செவி, மரச்செவி, எஃகுச்செவி யென்பன; "எஃகுநுண் செவிகள் வீழச், செம்மையிற் கனிந்த காமத் தூது விட்டு" (சீவக. (௨௭௧௮) 2718) என்பதையும் அதனுரையையும் பார்க்க.
[610-4] கானவேட்டுவர் இசைபாடி மிருகங்களை அழைத்துக் கொல்லுத லுண்டென்பது, "அசுணங் கொல்பவர் கைபோ னன்றும், இன்பமுந் துன்பமு முடைத்தே" (நற். (௩0௪ : ௮ – ௯) 304 : 8 - 9) என்பதனாலும் நன்கு புலனாம்; அசுணமா - இசையறிவதொரு விலங்கு.
[610-5] சீவக. (௨0௩௯) 2039.
[610-6] காட்டவீணை - மரத்தாற் செய்த வீணை.
[610-7] சரீரவீணை யென்பது பாடுவோருடைய சரீரமே. இதன் இயல்பைச் சிலப்பதிகாரத்து மூன்றாவது அரங்கேற்று காதையில் (௨௬) 26 – ஆம் அடியாகிய, "யாழுங் குழலுஞ் சீரு மிடறும்" என்பதில், மிடறுமென்றதற்கு உரையாசிரியர்கள் எழுதிய விசேடவுரைகளால் உணர்க.
----------

611. சக்ர மாய்ச்சென்று சக்ரவா கங்களே
விக்ர மாயுத வெள்ளத்தை வெட்டவே.

எ-து : சக்கரவாகப்பட்சி ஆணும் பெண்ணும் தம்மிற் பிரியாவாதலால் வாயலகுகோத்து உடம்பு தழுவிச் சக்கரம்போல் வினைசெய்யவற்றா யிருத்தலால் சக்கரமாகி விஷ்ணுவின் ஆயுதங்களின் பரப்பு அடையப் போம்படி வெட்டித் துரந்தன. எ-று.

விக்கிரமன் - திரிவிக்கிரமன்; விஷ்ணுக்களின் திருநாமம். விக்கிரமன் ஆயுதம் : இதன்முடிபு அறிக. இதனை விக்கிரமாயுதமெனத் தமிழாலேயும் முடிக்கலாம். விஷ்ணுக்கள் ஏவலே உயர்ந்து நின்றதென்றவாறு. இங்குப் பிணமொத்துநிற்றல் தசப்பிரமர்கள் படைத்த படைப்பெருமை யெனவுணர்க.
----------

612. திருட னிந்திர னுய்ந்து திரியுமோ
கருட னாயிரங் கண்ணுங் கவரவே.

இதன் பொருளுணர்க.
----------

பத்திரகாளி வாளியேவுதல் முதலியன.

613. ஆளி யேறி யகிலாண்ட நாயகி
வாளி யேவி யுலகை வளைப்பவே.

இதன் பொருளுணர்க.
----------

614. எக்க வந்தமு மெப்பிண முங்கிரி
ஒக்க வந்தொரு வாளிக் குதவவே.

இதன் பொருளுணர்க.
----------

615. பூமிவட்டமும் போரெரி வட்டமு
நேமி வட்டமு நேரொத்து நிற்கவே.

இதன் பொருளுணர்க.
----------

616. கொன்ற தன்றிமை யோர்பிணங் கூளிகள்
தின்ற சீர்தந் திருவுள்ளஞ் சேர்த்தியே.

எ-து : இப்பிரபஞ்சத்தைப் பத்துப்பிரமர்கள் ஒருவர்க்கு ஒன்பது கோடியாகப் படைக்கப்படைக்க மாயாதேவி அவையிற்றைக் கொன்ற படிக்கல்ல தாம் பூஷித்தது; இப்பிரமர் படைப்பெல்லாம் படப்படப் பட்டபிணங்களை அற்பமும் தோற்றாதபடி பிசாசகணங்கள் அடங்கத்தின்ற படிக்கே திருவுள்ளஞ் செய்து. எ-று.

சீர் -அழகு. சீரமென்று பாடஞ்சொல்லிற் பேயின் பசியடங்கியதில் திருத்திகொள்கை யென்க. தன்றிருவுள்ளமெனின், தேவியின் திருவுள்ள மெனக்கொள்க.
----------

வேறு.

617. புங்கவாளி யொன்றினாற் புரத்ரயஞ் சகத்ரயஞ்
சிங்கவாளி யொன்றினா லிருவருஞ் சிதைப்பவே.

புங்கமாவது அம்பின் கடைக் கவைத்தலை, கண். இதனையுடைய வாளியான அம்பொன்றினாலே திரிபுரதகனம் பண்ணினார் மகாதேவர்; சிங்கவாளி யொன்றேவிச் சகத்திரயங்களை விநாசஞ் செய்தருளினாள் தேவி; திரிபுரங்களோ சகத்திரயங்களோ பெரியன? தெரியாவென வுணர்க. சிங்கவாளி யொன்றென்றதனால் சிங்கமும் ஆளியுமொன் றென்னலுமாம். அன்றியே சிங்கத்திலேறிவந்த ஆளியொன்றினாலே சகத்திரய விநாசம் பண்ணியருளினா ளென்றுமாம். இப்பாட்டில் வாளியொன்றினா லென்பதே பொருள். புங்கவாளி : வாளி - அம்பு; சிங்கவாளி : ஆளி - ஊர்தி. இருவரு மென்றது தாயுந்தகப்பனு மென்றவாறு. இதற்குக் கடாப்புகுதின் விடை : [1]"உறுபசியொன் றின்றியே யுலகடைய வுண்டனையே" என்பதும், [2]"பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்" என்பதும். தாயுந் தந்தையும் மக்களைக் கொல்வாரோ வெனின், [3]"ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச், சான்றார் முகத்துக் களி" என்பது விடை.
-----
[617-1] சிலப். (௧௭) 17 : "அறுபொருள்.”
[617-2] திருவாய்மொழி, (௫. ௪ : ௧) 5. 4 : 1.
[617-3] திருக்குறள், (௯௨௩) 923.
----------

வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்.

வேறு.

618. இப்படிப் பட்ட பின்னு மிமையவர் படைகண் டையர்
அப்படை யின்ன நின்ற தென்கொலென் றருளிச் செய்ய.

அருளிச்செய்தவர் வீரபத்திரதேவர். பொருதவள் துர்க்காபரமேசுவரி யல்லள்; மாயாதேவி. பொருதுவென்ற படையும் பொய்ப்படை யென்பது. இதுவே இதுகாறும் சொல்லிப்போந்த தெனவுணர்க.

இந்திரஞாலங் காட்டின சிலபூதம்.
----------

கணநாதர் விண்ணப்பஞ் செய்தல்.

619. படப்பட வயனு மக்கள் பதின்மரும் படையா நின்றார்
விடப்பட வணியோ யென்று விண்ணப்பஞ் செய்யக் கேட்டே.

அயன் - பிரமா. மக்கள் பதின்மர் - தசப்பிரமாக்கள். விடப்பட வணியோய் - விடத்தையுடைய பணியையே அணியாக உடையோய்.
----------

வீரபத்திரதேவர் செயல்.

620. சீறிய சினத்தீ யுண்ணத் திரிபுர மெரித்த நாளில்
ஏறின திருத்தேர் நின்று மிழிந்தன னெங்கள் வீரன்.

எங்கள் வீரனென்றது படைத்துணைபோன பேய் தேவிக்கு விண்ணப்பஞ் செய்கிறபடி; வீரன் - வீரபத்திரதேவர்.
----------

வேறு.

621. மாணெனெண்மரு நான்முகத்தன மூகைசூழ வமைந்ததோர்
ஞாணென் மஞ்சன மென்கொல்காரண நாரணாதிக ணாசமே.

எண்மர் - அட்டகணநாதர். நான் முகத்தன - ரத கச துரக பதாதி யான படைகள். மூகை - படைக்கூட்டம்.
----------

622. காடுபோகு சடாமுடிக்கபி டேகமண்ட கபாலமே
ஊடுபோக வநந்தகோடி சகத்ரதாரை யொழுக்கவே.

அண்டகபாலத்தை அண்டகபாடமென்னலுமாம்.
----------

623. செய்யகைத்திரு நாணணிந்தருள் செய்கெனத்திரு மங்கலந்
துய்யதும்புரு நாரதாதிகள் வேதவீணை தொடங்கவே.

திருநாண் - திருமங்கலநாண். வீரப்பெண்ணைத் திருக்கலியாணம் பண்ணுகை அன்றல்ல; வென்றி கொண்டநாளைச் சுட்டிற்று. தும்புருநாரதர் களம்பாடு பொருநர்; "வேதாநாம்ஸாமவேதோ . . . . . ஸ்மி" [1]ஸ்ரீ கீதை.
-----
[623-1] ஸ்ரீ கீதை - பகவத்கீதை; "வேதாநாம்" என்பது, (௸) மேற்படி கீதையில் (௧0) 10 - ஆவது அத்தியாயத்தில் (௨௨) 22 - ஆவது சுலோகத்தின் பகுதி.
----------

வீரபத்திரதேவர் போர்க்கோலம் கொள்ளுதல்.

624. [1]பொதியில்வாழ்முனி புங்கவன்றிரு வாய்மலர்ந்த புராணநூல்
விதியினால்வரு தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே.

தும்பைமாலை சூடினார் வீரபத்திரதேவர்.
-----
[624-1] இத்தாழிசையில், 'அகத்திய முனிவரருளிச் செய்த பழைய நூலின் விதிப்படி ஸ்ரீ வீரபத்திரதேவர் அதிரப்பொருதற்குத் தும்பைமாலையை அணிந்தருளினர்' என்னுமுகத்தால் தமிழ்மொழிக்கு அகத்திய முனிவர் பரமாசாரிய ரென்பதை இந்நூலாசிரியர் விளக்கியிருத்தல் போற்றத்தக்கது.
----------

625. கச்சியிற்சுர சூதசீதள பல்லவங்கன லிற்கலித்
துச்சியிற்பனி வீசுகண்ணியின் வெண்ணிலாவை யொதுக்கவே.

கச்சி - காஞ்சீபுரம். சுரசூதம் - தேவலோகத்தின் மா. கலித்தல் - ஒலித்தல். உச்சி - திருமுடி. பனிவீசுகண்ணி - பாலசந்திரன்.
----------

626. மாறில்பேரொளி வட்டமிட்டு வரம்பிலாமறை மாநிறுத்
தீறில் [1]காலமு ஞாலமுங்கொடு செய்ததேர்மிசை யேறியே.

மாறில்பேரொளி - சந்திராதித்தர். வட்டம் - தேருருளை. மா - குதிரை. ஈறில்காலம் - காலந்தான். ஞாலம் - பூமி.

ஈசுவரனுக்குத் தேர் இது.
-----
[626-1] "உலகு மூழியுங் கொண்ட மைந்ததோர், இலகு வைதிகத் தேரி லேறியே" என்றார் முன்னும்; தாழிசை, (௩௩௭) 337.
----------

627. கால்பிடித்து நிவந்ததேர்தம காணியாய்வழி வந்துமுட்
கோல்பிடித்து வலஞ்செய்தேறி விரிஞ்சனேகுசை கொள்ளவே.

கால் பிடித்தலாவது தேர்க்கால் பிடித்தல்; சந்திராதித்தர் இருவரையும் இரண்டு உருளையாகப் பிடித்தல். நிவத்தல் - பரத்தல்.

எ-து : தேர்க்குப் பாகனாகிக் குசைக்கயிறும் முட்கோலும் பிடித்துப் பாகுசெலுத்துகை பிரமாக்களது காணியாதலின் ஒருபிரமா வந்து புகுந்து திருத்தேரைப் பிரதட்சணமும் நமக்காரமுஞ் செய்து முட்கோலும் வடிகயிறும் கைக்கொண்டேறினான். எ-று.

இப்படி ஒருபிரமா தன்பதமிழக்குங் காலத்திலே, ஸ்ரீகயிலாசத்தே யிருந்து பிரமபதம் வேண்டியிருப்பார் பலருளரன்றே, அவர்களிலே ஒருவன் பிரமாவாகக்கடவன். அவன் வந்து இப்படிச்செய்வான். இக்கதை வேதத்திலும் மகாபாரதத்திலுங் கண்டுகொள்க. விரிஞ்சன் - பிரமா.
----------

628. மாகமேவரு மூரிறக்க விளைந்தநாளில் வளைந்ததோர்
நாகமேகொல் பினாகமேகொ லிடத்திருக்கையி னண்ணவே.

இதன் பொருளுணர்க.
----------

629. புரங்கொலம்புகொல் வந்துவந்திடை
போனபோன புராணர்பொற்
சிரங்கொ லம்புகொ லென்கொலொன்று
வலத்திருக்கை திரிக்கவே.

எ-து : விஷ்ணுக்கள் அம்புக்கோலாகவும் அக்கினிதேவன் அம்பின் இரும்பாகவும் மகாவாதராசன் இறகாகவும் ஞானிகள் கோபம் இரும்பிற் கூர்மையாகவுங் கொண்டு திரிபுரதகனம் பண்ணின அம்புகொல் இஃது எனவும் அன்றியே பிறந்து பிறந்து மரித்துப்போன பழையோர் பலருளரன்றே, அவர்களுடைய தலைகளைக் கொல்லும் அம்புகொலெனவும் வேறியாதெனவும் ஆராயும்படி வலத்திருக்கையில் ஓரம்பு வந்துநின்றது; அதனை அத்திருக்கை திரித்தருள. எ-று.

இராசாக்கள் தாம் மதித்தவீரராயவர்க்குப் படை வழக்கத்துறை ஈது; இதனை,
[1]"மொய்த்தபூண் மறவேந்த, னொத்தவர்க்குப் படைவழங்கின்று" என்பதனாலறிக. மகாதேவர்க்கு வீரபத்திரதேவர் மதிப்புடைய சாமந்தர். ஒத்தவர்க்கென்பதன் பொருளுணர்க.
"அடையார் முனையகத் தமர்மேம் படுதற்குப், படைவழங் குவதோர் பண்புண் டாகலின், உருவி லாள னொருபெருங் கருப்புவில், இருகரும் புருவ மாக வீக்க" ((௨ : ௪௨ – ௫) 2 : 42 - 5); இது சிலப்பதிகராம்;
"ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப, வையிலை யெஃக மவைபலவு - மொய்யிடை, யாட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான், வாட்குடி வன்க ணவர்க்கு" ((௬௪) 64); இது வெண்பாமாலை.
இதில் வீரபத்திரதேவர் இப்படை [2]இப்படிப்பட்ட பின்னும் உண்டான காரணமென்னென்று கேட்டதனால், தாழ்வு இங்குப் புகுந்ததெல்லா முணர்ந்தருளி அம்புவரக்காட்டினார் மகாதேவர், சருவக்கிஞராகையின்; பிறவுமுணர்க.
-----
[629-1] புறப்பொருள்வெண்பாமாலை, (௬௪) 64 - பி-ம்.
[629-2] இந்நூல், (௬௧௮) 618 - ஆம் தாழிசை.
----------

630. ஏனமெய்தன சிங்கமெய்தன கற்கியெய்தன வெண்ணிலா
மீனமெய்தன வாமையெய்தன வாவநாழிகை விம்மவே.

ஏனமெய்கையாவது : பூமிதேவி பண்டு பாதாளத்திலே வீழ விஷ்ணு பகவான் அநந்தசயனம்விட்டு ஸ்ரீவராக ரூபங்கொண்டு பூமியை எடுத்தருளி இரணியாட்சனான அசுரனைக் கொன்றருளி மிக்க ஆங்காரத்துடனே சங்காரகாரியமும் தானே செய்யவேணுமென்று நினைப்ப, மகாதேவர் கிராத வேடங்கொண்டு அப்பன்றியையெய்து கொன்றருளி [1]அதன் கொம்பைச் செவ்வகத்திப்பூவாகச் சாத்தியருளின கதை.

சிங்கமெய்தனவென்றது : இரணியவதை பண்ணின காலத்தில் வீரகெறுவமிக்கு ஸ்ரீ நாரசிங்கரூபம் அட்டகாசம் பண்ணித் தனது சிங்கநாதமும் பண்ண மகாதேவர் சிம்புளாக இறாஞ்சி எடுத்தருளின ரென்னுங் கதையுடன் மாறுபடாதோ வெனின், மாறுபடாது; சிம்புளாவது பிராணவதம் பண்ணாததொரு பட்சியாதலால் அவ்வடிவு கொண்டு வந்து வதை செய்தலரிது; இதற்கு, "பறந்து சிம்புள் பையென வைத்தலுங், கயலேர் கண்ணி துயிலேற் றெழவே, யுயிர்பிரிந் துறாமையி னுறுபுட் போக" என்பது மேற்கோள்; இஃது உதயணன் கதை. பின்னையும், அந்தச்சிங்கம் மகாமேருவின் முழையினின்றும் புறப்பட்டு மீண்டும் ஆங்கார ஆரவாரஞ் செய்யத் திருவேடுவராய்க் கொன்றா ரென்பது; இதனை ஸ்ரீ வாதுளமென்னும் ஆகமத்திற் கண்டுகொள்க.

கற்கியென்றது கலியுகாந்தத்தில் வருவதொரு குதிரையன்றோ வெனின், [2]கிழமைபோல யுகங்களும் வருவன போவன வெனவுணர்க.

எண்ணிலா மீனமென்றது பலமீனையல்ல; ஒருமீனே நீளத்தாலும் பெருமையாலும் எண்ணிலாததென வுணர்க. அதுதானும் உகந்தோறும் வருவதுண்டு. அன்றியே எண்ணிலாவென்றதனை எல்லாவற்றினும் ஒக்கக் கூட்டிக் கொள்கை உத்தமம்.

ஆமை பண்டு கடல் கடைகிற காலத்து மந்தர பருவதத்தைத் தாங்க முதுகுகொடுத்துக் கடல்புக்கு உறங்கினதன்றி விஷமஞ் செய்ததில்லை யன்றே; அதனைக் கொன்றவாறு எப்படியென்னின், அமுதத்தை அசுரர் உண்ணாதபடி வஞ்சிப்பப் பிறர்மாட்டார்; இவ்வாமையான மாயனே வேணுமெனநினைத்து மோகினிவடிவங் கொள்கவெனக் கொள்ளாது உறங்கியே யோகஞ்செய்ய அசுரரை வஞ்சிப்பான் பொருட்டு அதனைக் கொன்றருளிய தெனவுணர்க. அவ்வாமையின் ஓடுபோலும் திருமுடியிலுள்ளது.

இவையெல்லாம் அம்புகள்; எய்தனவென்னுந் தொழிலாற் பெற்ற பொருட்பெயர்.

இவ்வம்பெல்லாம் முதுகில் ஆவநாழிகையில் வந்துபுகுந்து நிரம்பின வென்றவாறு.

இனிப் பத்துப்பிறவியில் ஐந்துபிறவியைக் கழித்து ஐந்து பிறவியை விடுவானேனெனின், அவைதாம் 'வாமன பரசுராம ஸ்ரீராம பலபத்திரதேவ ஸ்ரீகிருஷ்ண' என்பனவன்றே; இப்படி மனுஷ்யப் பிறவியாதலால் அறிவுண்டாய்க் கெருவமின்றியே இருத்தலாற் கொன்றிலரென வுணர்க.
-----
[630-1] "புகழா வாகைப் பூவினன்ன, வளைமருப் பேனம்" (பெரும்பாண். (௧0௯ – ௧0) 109 - 10) என்பதில், பன்றிக் கொம்பிற்கு அகத்திப்பூவை ஆன்றோர் உவமை கூறியிருத்தல் இங்கே அறியற்பாலது.
[630-2] "கழிந்துவளர் கிழமையி னொழிந்த வூழி" என்பது மாடலம்; 126 -ஆம் பக்கம் பார்க்க.
----------

631. பிடித்த வில்லி னெறிந்த நாணொலி
யண்ட பித்தி பிளந்துபோய்
வெடித்த வோசையி லப்பு றத்வனி
போல மேலெழ விம்மவே.

எ-து : பண்டே படைவழக்கத்தாலே வந்துபுகுதப் பிடித்த வில்லி னாணை ஜயகோஷம் பண்ணி ஏற்றியவோசை அண்டங்களின் அடுப்பமும் அடுக்கும் பிளந்து பிளந்த ஓசையின் பிரதித்துவனிபோலே அப்புறத்திலே செல்ல விம்மியது. எ-று.

"ப்ரதித்வனி" என்றே பாடமிடலுமாம்.
----------

632. சூல மோபுவ னங்க ளுக்கு
முகுந்த னாதி சுரர்க்குமாய்
கால மோவென வந்த தந்தில்
கணிச்சி யுங்கனல் காலவே.

எ-து : சூலமோ? அது சூலமல்ல. லோகத்துக்கும் விஷ்ணுவாதி யாகவுள்ள தேவர்கட்கும் மாயக்கடவ காலமென்று சொல்ல வந்தது, பண்டேயுள்ள பரசுவான சூலம் நெருப்பைக் கக்கி. எ-று.

மாய்காலம் - மாயுங்காலம், மாய்க்குங்காலம்; 'மாய்காலமானது' என்பது வழக்கு. அந்தில் : அசைநிலை. கணிச்சி கனல்கக்குதற்குக் காரணம் துணைபெற்றே னென்பது.
----------

633. புனைந்து வந்த மதிக்கு முன்பு
பயந்த வேலை பொறாமையால்
நினைந்து வந்தமு தஞ்சொ ரிந்தென
மாலை வெண்குடை நிற்பவே.

புனைதல் - ஒப்பித்தல். பொறாமை - பிரிதற்குப்பொறாமை. தாய் வந்த வரவுபோன்றது இது. மாலை வெண்குடைக்கு உவமை பாற்கடலன்று; இஃது அபூதவுவமை. எனவே பாலசந்திரன் பிறந்தது லவணசமுத்திரத் தெனவுணர்க.
----------

634. அமைய நிற்கு மலங்க லேறு
பிறங்க வெண்கொடி யாடுமால்
இமைய வெற்பு மதன்க ணின்று
மெடுத்த கங்கையு மென்னவே.

அமையநிற்றலாவது லோகத்துக்குப் பொருந்தநிற்றல்; இது தர்ம ரூபமாய் விகாரவேறுபா டின்றியே வலிதாயிருத்தல். அலங்கலாவது வாகன சுசிரூஷை பண்ணும் உபகாரப் பிரதானமான மாலை. பிறங்க – பெருக்க. வெண்கொடி யென்றது, தர்மரூபம் வெளுத்திருத்தலால். மாலென்றும் ஆலென்றும் இரண்டுமாம்; மாலென்னிற் பெரியவென்றும் ஆலென்னில் இடைச்சொல் லென்றும் ஆகும்.

பகீரதனென்னும் ராசேந்திரன் தன் வங்கிசத்தரான சகரர் அறுபதினாயிரவரைச் சுவர்க்கமேற்றுதற்குத் தவஞ்செய்து ஆகாசகங்கையை இழிச்ச அஃது இமவான்மேல் வீழ அம்மலைப்பரப்பும் அழகுங்கண்டு அது கீழேவிழாதொழிய மீண்டும் அவன் தவஞ்செய்து ஆகாசத்தேபோக எடுத்துவிட அக்கங்கை இமவானினின்றும் ஆகாசத்தேபோவது போன்றது ரிஷபத்துவச வர்ணம்.

இதில் பண்புவமை முதலாயின வெல்லாங்கொள்க. அதன்கணென்றது சுட்டுச்சொல்லிற் சாரியையும் வேற்றுமையுருபும் வந்தன.
----------

தேவர்கள் வலியழிதல்.

635. வாச வன்றச நூறு கண்ணு
மறைந்து பேரிருண் மண்டவே
கேச வன்றகை மௌலி போயிருள்
கெட்ட கேடு கிடக்கவே.

வாசவன் - தேவேந்திரன். தசநூறு - பத்துநூறு; ஆவது ஆயிரம்.

எ-து : தேவேந்திரனுடைய சகசிர சட்சுவும் வெறியோடிக் குருடாயின. அன்றியே மகாவிஷ்ணுவினுடைய திருமுடியில் ரத்தினங்கள் இருண்ட கெட்டகேடு கிடக்க. எ-று.

தச நூறு : இது கிரந்தமுந் தமிழுங் கூடியவாறு; "தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள்" ((௧௧௫) 115); இது நெடுநல்வாடை.
----------

636. சடைகொல் வெம்மழு வாய்கொ லுண்டு
புனற்பெ ருந்தகை சாயவே
கடைகொ றீகொள் கரங்கொல் வவ்வி
யிருந்த வத்தி கரிந்தவே.

முன்னிற்பாட்டில் இன்னதனால் இன்னது கெட்டதென்று உணர்தலாகாததை இப்பாட்டிற் கண்டுகொள்க, தொடர்நடைச் செய்யுளாதலின்.

எ-து : சடைகொல்லோ மழுவின் வாய்கொல்லோ வாரியுண்ண வருணராசன் சாய்ந்து போயினான்? திருக்கண் மலரோ திருக்கையோ வௌவிக்கொள்ள வருணராசன் இருந்த அத்தியான எழுகடலும் கரிந்தன? எ-று.

கடையென்றதற்குத் திருக்கண் மலர்க்கடையைச் சொல்லலுமாம்; உகாந்த காலக்கடை யென்னலுமாம். சடை புனல்கண்டுழி வவ்வும். திருக்கையில் நெருப்பும் அப்படியே. [1]"கொல்லே ஐயம்”.
-----
[636-1] தொல். இடை. சூ. (௨0) 20.
----------

637. திங்கண் மண்டில மேற வெந்து
களங்க மல்லது தீயவே
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற
விழுங்கி யொத்து மழுங்கவே.

எ-து : முன்னிற்பாட்டிற் கூறிய திருச்சடையின் சிவப்பாலும் திருக்கையின் நெருப்பிற் சோதியாலும் சந்திரமண்டிலத்தில் வெண்மையற்றுக் களங்கம் பிறச்சுவலித்தது. பின்னை ஆதித்திய மண்டிலத்திற் சோதி ஆதித்தனை ராகு முற்றவிழுங்கிச் சருவக்கிரகணம் பண்ணியதுபோற் கறுத்தது. எ-று.

ராகுவென்ன மேகமறைவிற் சோதி மிகக் கெடாதெனவுணர்க. வெங்கண் மண்டிலம் - ஆதித்தியன்; குணப்பெயர்.
----------

638. கொட்ட வூத வெடுத்த பல்லிய
மைந்தும் வந்திறை கொள்ளவே
இட்ட வெண்குடை வீசு சாமரை
யாவும் யாரு மிழக்கவே.

இறை - கூட்டமும் பெருமையும். யாவும் யாருமிழக்க வென்னவே எல்லா ராசபரிச் சின்னங்களையும் எல்லாரும் இழந்தாரென வுணர்க.
----------

639. சூட வென்று வகுத்த தும்பை
புராரி சேவடி தோயவே
வீட வென்று வகுத்த தும்பை
சுரேசர் மௌலி மிலைச்சவே.

புராரி - ஈசுவரன். மிலைச்சுதல் - சூடுதல். இவன்படையொடு தாம் பொருது பிழைக்கவொண்ணா தென்று நினைத்து மரணமே வெற்றியாக எண்ணி [1]அதிரப்பொரு தும்பை சூடினார் தேவர்களென்றவாறு.
-----
[639-1] "வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம், வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா, தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்த னொச்சி, அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப், பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர், செருவென் றதுவாகை யாம்.” பழைய செய்யுள்.
----------

640. விட்ட வூர்தி யனைத்து மும்பரை
வீசி வந்தன விம்மவே
தொட்ட வாயுத முற்று மற்றவர்
கைது றந்தடி சூழவே.

ஊர்தி - வாகனம். விட்டவூர்தி - பூசலுக்கு எதிர்பொரவிட்ட வாகனம். தொட்ட - தீண்டின. ஆயுதமெல்லாம் ஈசுவரன் படையிலேவந்து கூடுதற்குக் காரணம் மாயையினுடைய சத்தியென வுணர்க. அடி - ஈசுவரனது ஸ்ரீ பாதம்.
----------

641. போகை யேயென வைன தேயனு
மன்ன முங்குடி போகவே
கூகை யேமிடை காக மேயவர்
கொடி மிசைக்குடி கொள்ளவே.

போகையேயென – புறப்பட்டுச் செல்லுவதே காரியமென்று.

எ-து : விஷ்ணுக்களின் துவசமும் பிரமாவின் துவசமுமான பட்சிகள் பறந்து போயின. பின்னைக் கொடிக்கோல்களின்மேற் கூகையுங் காக்கையுமாகிய உற்பாதபட்சியான மூதேவிகள் வலமும் இடமும் சென்றும் மேய்ந்தும் குடிகொண்டன. எ-று.

"கனவே போலவு நனவே போலவு, முன்னிய தன்றியென் னுள்ளக நடுக்குறக், கருநிறக் காக்கையும் வெண்ணிறக் கூகையும், இருவகை யுயர்திணைக் கேந்திய கொடியொடும், வெருவந்த தோற்றத்தா லுருவின் பலகூளிக், கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும், பறையன்ன விழித்தகண்ணாள் பிறையன்ன பேரெயிற்றாள், கூடன்ன பெருமுலையா ளிடைகரந்த பெருமோட்டா, ளிடியன்ன பெருங்குரலா டடிவாயாற் றசைப்புறத்தாள், கடலன்ன பெருமேனியாள் காண்பின்னாக் கமழ்கோதையாள், சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய வகலல்குலாள், மழையுமஞ்சும் வளியும் போலுஞ், செலவினா ளொருபெண்டாட்டி, தலைவிரித்துத் தடக்கைநாற்றி, மறனெதிர்ந்து மாறுகொண்டறியா, வறிவுக் கிம்முறை நானிவ் வளவன்றே, பூவிரல் காட்டி நீறுபொங்கத்தன், கைகளா னிலனடித் தூரையிடஞ் செய்து, காடு புகுதக் கண்டே னென்னுங், கவலை நேசமோ டவல நீந்தினாள், அன்றது மன்றவ் வதிகமான் றாய்க்கு.” இது தகடூர்யாத்திரை.
----------

இந்திரன் போர்தொடங்கல்.

642. பின்வ ருஞ்சுட ராழி யானடு
வாக மீதுப்ர தானராய்
முன்வ ருஞ்சுர ரோடு மிந்திரன்
வந்து தோமர முட்டவே.

எ-து : மகாவிஷ்ணுக்கள் மத்தியத்துநிற்ப மேன்மேலே பிரதானராகி வருகின்ற படைக்கெல்லாம் முன்னேவருகின்ற தேவர்கள் சேனையோடேகூடத் தேவேந்திரனும் கொடிப்படை முதற்றூசிக்குக் கர்த்தாவாகிவந்து தோமரப்போர் செய்யத் தொடங்கினான். எ-று.
----------

வேறு.

643. புரண்டு மின்னுநெடு நாணு டங்குவன
மேக ராசிபொழி யப்புறத்
திரண்டு வில்லுமென விந்த்ர சாபமுடன்
யந்த்ர சாபமு மிறங்கவே.

எ-து : நெடுநாள் புரண்டு புரண்டு நுடங்கி விடாதனவாகிய மின்னுடனே மேகராசிகள் மழைபொழிய வானத்து இரண்டுவில்லும் பிறச்சுவலிப்பது போலத் தேவேந்திரன் வில்லும் வீரபத்திரதேவர் திருக்கைக் கொற்றவில்லும் ஒக்கவளைந்தன. எ-று.

யந்திர சாபமென்றது மகாமேருவை; இதன்பயன் பின்னும் நெடுநாள்
நின்று தொழிற்படுகை.
----------

திருமாலின் போர்.

644. சேய கண்கனன் முராரி தங்கள்கடல்
செல்க வென்னவது சென்றதால்
நாய கன்பரசு பாணி வேணியொரு
நாக நாவினை நனைத்ததால்.

சேயகண் - சிவந்தகண்; நீளிய கண்ணுமாம். முராரி - விஷ்ணுக்கள். தங்கள் கடலென்றது பாற்கடலை. அதற்கடையாளம் ஒன்றாதலால் அது வென்னும் பெயரும் சென்ற தென்னும் வினையும் ஒன்றாயின. ஆல் : இடைச்சொல். நாயகன் - ஈசுவரன். பரசுபாணி - பரசுவென்னும் ஆயுதத்தைக் கையிலே யுடையவன்; இஃது அன்மொழித்தொகை. வேணி - சடை. நாகம் - பாம்பு.

பாம்பின் நாக்களவும் பாற்கடலின் அளவும் ஒக்கும்; ஆழத்தின் அளவு நாக்கின் அடுப்பத்தின் அளவு.
----------

645. படப்ப டப்பெரும் பரவை யாயிரம்
பள்ளி மாலெதிர் பரப்பினான்
விடக்க ருங்கணின தையர் கைத்தொடி
விழித்த தன்றவையும் வேவவே.

எ-து : முன்புவிட்ட திருப்பாற்கடலை ஒருபாம்பு தன் நாக்கை நனைத்து ஒழிக்க விஷ்ணுபகவான் அதற்கு லச்சித்துக் கோபித்து ஈசுவரனையும் படையையும் அகப்படப்பிடிக்க ஆயிரம் பாற்கடலைப் படைத்துவிட அவையும் ஈசுவரனது திருக்கையிலுள்ள [1]திட்டிவிஷமாகிய ஒரு மகா நாகமானது தன்கண்ணாலே நோக்க அப்போதே வெந்தன. எ-று.

பள்ளிமாலென்றது உறங்கும் மயக்கினா னென்றவாறு; அன்றியே உறங்கும் பெரியோ னென்றுமாம். ஐயர் - மகாதேவர்; அழகினையுடைய ரென்றுமாம்.

கைத்தொடி யென்றது முன்கைக்கடக வளையலாக விட்டபாம்பை யென உணர்க; "பொன்னெடு மலையைப் பன்னிரு வடங்கொடு, புணரியைக் கடைந்தநாட் புணர்த்த பன்னக, வரசன்வாய் நெரித்தவ னணிவா லுய்த்திடப், பற்றி வளையெயிற் றானெடு முன்கையிற், கடக மாயினாற் சங்கரன் றன்னை, யந்நெடு மாலே யடியிணை காண்பா, னன்னமே முடிதொடு மன்னம்.” இதனை யுணர்க. இதிற் பாம்பின் வாலும் தலையும் முடிந்திட நீளம் போதாமையின் வாயை நெரித்து வாலைப் புகவிட அது வாலைக் கடித்துக்கொண்டு கங்கணமானது. ஆதலால் ஈசுவரன் ஆக்கினையை அஞ்சி வாய்விடமாட்டாது கண்ணிட்டுப் பார்த்தே ஆயிரம் பாற்கடல்களையும் வற்றுவித்ததென வுணர்க.
-----
[645-1] திட்டிவிஷமென்னும் பாம்பினது இயல்பை, இந்நூல், 554 -ஆம் தாழிசையின் அடிக்குறிப்பா லுணர்க.
----------

646. வைய முண்டுதனி துஞ்சு மாலைவர
மாய னார்விலக நாயனார்
ஐய முண்டுதரு மம்ப ணித்தருளு
மாதி யால்பொரு தழித்ததால்.

வையம் - உலகம். ஆல் - பள்ளிகொண்டருளிய ஆலவிருட்சம்; ஐ : இரண்டாம் வேற்றுமை. மாயன் - விஷ்ணுக்கள்; ஆர் : இடைச் சொல். விலக - எறிய. நாயனார் - மகாதேவர். ஐயம் - பிச்சை. ஆதி யால் - முதல் ஆல்; இது ஈசுவர சாங்கியத்திற்கண்ட பொருள்; மூலப் பிரகிருதியான பிரதானப் பொருள்.
----------

647. ஆழி மாயன்விட வாதி வானவன்மு
னாட கச்சிறகி னருகுபுக்
கூழி மாருத மிரண்டு பாடும்வர
வூடு சென்றதவ னுவணமே.

ஆழிமாயன் - விஷ்ணுக்கள்; ஆழியை மாயன் விடவென்றதல்ல; ஆழிமாயன் உவணத்தை விடவென்றவாறு. ஆதிவானவன் - வீரபத்திர தேவர். ஆடகம் - பொன். ஊடு - நடுவு. அவனென்றது ஆழிமாயனை; இயற்பெயர்ப் பின்னர்ச் சுட்டுப்பெயர் வந்தது. உவணம் - கருடன்.

வீரபத்திரதேவர்முன் யுகாந்தகாலத்து மகாவாதம் இரண்டுபாலும் கருடன் இரண்டுசிறகிலும் புக்கு வீசினதென்றவாறு. இது மகாவாதம் புக்கதென்றதல்ல; சிறகின் விசைக்கால் ஊழிக்காலை ஒத்ததென்பது பொருள்.
----------

648. இறகு தீயவுயிர் தீய வீயுமதன்
வெற்று டம்புலகி னெல்லையின்
பிறகு தீயென வெழுந்து வீழ்ந்திட
வுயிர்த்த தையர்விடு பெற்றமே.

எ-து : மகாவிஷ்ணுக்களால் விடப்பட்ட கருடபகவானுடைய இறகும் பிராணனும் ஒக்கத்தீய மிருதித்த அவனுடைய களேபரம் உயிரின்றிச் சக்கரவாளவெற்பின் அப்புறத்து ஒரு நெருப்புப் பிண்டமென்ன விழும்படி ஐயர் விட்ட பெற்றம் நிசுவாசத்தை விட்டது. எ-று.

எனவே [1]முன்னிற்பாட்டிற் கூறிய பிச்சையின் பெருமை இதுவென வுணர்க.
-----
[648-1] முன்னிற்பாட்டென்றது, 646 - ஆம் தாழிசையை.
----------

649. சக்க ரப்படை முகுந்த னேவவது
தானு மெங்களிரை தானெனா
நக்க ரப்படை சடாட விப்புடையி
லுண்ட றுத்ததொரு நாகமே.


முகுந்தன் - விஷ்ணுக்கள்.

அச்சக்கரத்தைச் சடையிலிருக்கும் ஒருபாம்பு விழுங்கிற்று.

இது பாம்புக்கு இரும்பு இரையாகை; மண்ணுணியென்னும் பெயராலுணர்க; இரும்பு மண்ணின் காரியமே. இரும்பு பிருதுவி யல்லவென்று கொள்வாரும் விஷ்ணுக்கள் சக்கரமாவது வாயுசத்தி யென்பாரும் பிற கூறுவாரும் உளர். நக்கர் - மகாதேவர். அப்பு - நீர். அடைசடாடவி - அடையுஞ் சடாடவி; வினைத்தொகை.
----------

650. ஆல மொன்றுமமு தென்று பண்டமுது
செய்யு மையர்பணி யன்றியே
சூல மொன்றுதனி சென்று மற்றவன்
மணித்து ழாய்முடி துணித்ததே.

ஆலம் - நஞ்சு.

எ-து : நஞ்சொன்றையுமே அமுதமாக அமுது செய்தருளும் மகாதேவர் அருளிச் செய்யாமலிருக்கச் சூலமொன்று திருத்துழாய்த் திருமுடியைச் சிதைத்துக் கொண்டுபோயிற்று. எ-று.

[1]தலையொடு போகக் கடவது ஈசுவரன் திருவுளமன்றாகையின் தானே போய்ச் செய்தது.
-----
[650-1] இந்நூல் 726 -ஆம் தாழிசையின் உரையைப் பார்க்க.
----------

இந்திரன் படையையேவுதலும் அவை அழிதலும்.

651. வளையு மாழியு மருங்கு பற்றியதொ
ரிந்த்ர நீலகிரி மறிவதொத்
திளைய வாசவன் விசும்பி னின்றும்விழ
வெரிசி னந்திருகி யிந்த்ரனே.

வளை - சங்கு. ஆழி - சக்கரம். மருங்கு - இருபக்கம். இந்திரநீல கிரி உபேந்திரனென்னும் இளைய இந்திரனுக்கு ஒப்பு.

அவன்றானும் விஷ்ணு சக்தியாதலால் ஆகாசத்தினின்றும் வீழ்ந்தான்; விஷ்ணுக்களது திருமுடியறவே அவன் சத்தியற்றதென்பது இதன் கருத்து.

இனி இந்திரன் கோபித்துச் செய்தது.
----------

652. மேக வெள்ளநதி வெள்ள நூறுகென
வும்பர் நாயகன் விளம்பினான்
மாக வெள்ளநதி கொண்ட தோர்சடை
வளைந்து கொண்டதவை வற்றவே.

உம்பர் நாயகன் - தேவேந்திரன்.

எ-து : தம்பி பட்டதற்குக் கோபித்த இந்திரன், மேகவெள்ளத்தில் ஆறுகளான வெள்ளங்களெல்லாம் சென்று ஈசுவரனை வளைந்துகொள்க வென்ன, திருச்சடைதான் பண்டே ஆகாசகங்கையை வௌவியதாதலால் ஆகாசத்தினின்றும் வந்த வெள்ளங்களை வற்ற வௌவியது. எ-று.
----------

653. மெத்து வேலைகளை வச்ர பாணிவர
விட்ட போதரி விரிஞ்சரைக்
குத்தும் வேல்கொறலை வெட்டும் வாள்கொலெயி
லெய்யு மம்புகொல் குடித்ததே.

மெத்துதல் - நிரம்புதல். வேலைகள் - கடல்கள். வச்சிரபாணி - தேவேந்திரன்.

எ-து : முன்புவிட்ட மேகங்களைத் திருச்சடை வௌவக்கண்டு மிகக் கோபித்து உலகத்துள்ள சமுத்திரங்களை யெல்லாம் ஈசுவரன்மேல் ஏவப் பண்டு விஷ்ணுக்களைக் குத்தின வேலோ பிரமாவின் தலையை வெட்டின வாளோ திரிபுரதகனம் பண்ணின அம்போ அக்கடல்க ளெல்லாவற்றையும் வற்றக் குடித்தது? எ-று.

இதன் கருத்து : மூன்றாயுதங்களும் பண்ணின காலத்திலுங்கூட நீர்தோய்க்கப் பெற்றனவில்லை தெய்வீகமாதலால்; அன்றியேயும் எல்லாக் கடல்களும் வேணும் நீர்தோய்க்குமிடத்து.

கொல்லென்னும் ஐயத்தாற் கடல்கள் வற்றினவாறு தெரிந்ததில்லை யெனவுணர்க.
----------

654. வளைந்து வந்தன புரந்த ரன்குல
விலங்க லைப்பணி மதாணியோன்
விளைந்து வந்தன வெறும்பொ டித்தனது
கைப்பொ டிச்சிறிது வீசவே.

பணிமதாணியோ னென்றது பாம்பான பேரணிகல ஆரங்களை யுடையா னென்றவாறு.

இந்திரன் விட்ட பருவதங்கள் ஈசுவரன் விட்ட திருநீற்றால் வெறும் பொடியாயின வென்றவாறு.

வெறும் பொடி யென்றது ஸ்ரீ மந்திரஸம்ஸ்கார மில்லாத பொடியை. எனவே ஸம்ஸ்காரப்பட்ட பொடி எளிதிற் சத்துருசயம் பண்ணு மென்றவாறு.

இதன் கருத்து : பருவதங்களும் பரமாணுவின் திரட்சியேயென அறிந்த அறிவினது சக்தி எறிந்தவாறு; இஃது ஆருகதருக்கும் ஒக்கும்; இது மணி மந்திர ஔஷதம்.
----------

655. காடு கொண்டபடை கொண்டு வந்தசுர
ரீசன் விட்டதொரு கற்பகக்
கோடு கொண்டதனை யும்ப டைப்பையு
மடக்கி நின்றதவர் கொன்றையே.

காடுகொண்டபடை - விருட்சக்கூறுகள்; வல்லி சசியாதிகளெல்லா மெனவுணர்க.

இவையெல்லாம் வேதாகமஞ் சொன்னபடி அமைத்தது விஷ்ணு சக்தி; இவையிற்றைக் கொண்டுவந்த தேவேந்திரன் இவையிற்றுக்கு ராசாவான கற்பக விருட்சத்தையும் காட்டையுங் கொண்டுவந்து தந்திரமாக ஈசுவரன்மேலே விட இவை யெல்லாவற்றையும் அவருடைய திருக்கொன்றை தன்னிழற்கீழே அடக்கிக்கொண்டு நின்றது.

சுரரீசன் : தமிழ்முடிவு.
----------

656. இடிப்பெரும்படை யெரிந்து மண்டிவர
விண்ட லத்தரச னேவினான்
அடிப்பெருங்கடவு ளூழி யீறுதொறு
மாடு மஞ்சன மவித்ததால்.

மண்டுதல் - மிக்கு மேற்சேறல். விண்டலத்தரசன் - இந்திரன். அடிப்பெருங்கடவுள் - மகாதேவர்.

அவர் உகாந்த காலத்தில் ஆடியருளுந் திருமஞ்சனமான யுகாந்தாக்கினி
நீர் அவையிற்றை அவித்ததென்றவாறு. மகாதேவர்க்கு நீர் மற்றையவர்க்கு நெருப்பு.
----------

657. வச்சி ரப்படையு மிந்தி ரன்படையில்
வந்த தாலதனை வல்லவன்
முச்சி ரப்படையும் வேறு செய்திலது
நீறு செய்ததெதிர் முட்டியே.

வச்சிராயுதத்தைத் திரிசூலம் எதிரே முட்டிப் பொடியாக்கிற்
றென்றவாறு.

வல்லவன் - மகாதேவர்; இதற்குத் தேவவல்லவ னென்றும் எல்லாரினும் வலியனென்றும் எல்லார்க்கும் பிராணவல்லப னென்றும் சுவாமி யென்றும் பொருள். உம்மை சிறப்பு; வச்சிராயுதத்தையும் நீறாக்கித் தென்றவாறு.
----------

வேறு.

658. நிலத்தை யேவ நிசிந்தனு மோரடித்
தலத்தை யேவினன் முற்றுந் தகரவே.

எ-து : தேவேந்திரன் பூமியெல்லாவற்றையுந் தந்திரமாக மகாதேவ ரெதிரே ஏவினான். அதற்கு மகாதேவர் தம்முடைய ஸ்ரீபாதத்தொன்றை ஏவியருளினார். எ-று.

நிலத்தை யேவியதற்குக் காரணம் தேவர்கள் கால் நிலந்தோயாமையும் அதனாற் காரியமில்லாமையு மெனவுணர்க. நிலத்தை யேவுகையாவது பிருதுவி யங்கிசத்தை யெல்லாம் ஏவுகை. ஓரடித்தலத்தை யேவியது மண்ணாங்கட்டிக்கு உள்ளங்காலை ஏவினதொத்தது. முற்றுந்தகர - நிலமுழுதுங்கெட.
----------

659. ஓத மேவ வொருகுறும் பூதத்தை
நாத னேவின னாவை நனைக்கவே.

எ-து : பின்னைத் தேவேந்திரன் சலாங்கிச மெல்லாவற்றையும் ஏவ ஈசுவரன் நின்னுடைய நாவினை நீர்கொண்டு நனையென்று ஒருகுறும் பூதத்தை ஏவியருளினார். அதுவும் அப்படிச் செய்தது. எ-று.
----------

660. தீயை யேவச் சிரித்தொரு கொள்ளிவாய்ப்
பேயை யேவின னெங்கள் பிரானுமே.

சிரித்தென்றது நிலத்தினும் நீரினும் பெரிதோ நெருப்பென்றவாறு. எனவே நெருப்பு ஸ்ரீ மாயை யின்றியே எரியாது; உஷ்ணமே யுள்ளது. எங்கள் பிரானென்றது வேண்டாவினைக் கேடுசெய்தார் எங்கள் நாயகனா ரென்றவாறு; வெறும்பேயானும் விலக்கலாவதற்குக் கொள்ளிவாய்ப் பேயை ஏவினாரென்றபடி. உம்மை, தாமும் அப்படிச் செய்தா ரென்பது.
----------

661. காற்றை யேவ வுயிர்ப்பதொர் கட்செவிக்
கூற்றை யேவின னைய குறளனே.

கட்செவி - பாம்பு. கூற்றென்றது கூற்றைப் போல்வதற்குப் பெயர். ஒரு மாத்திரையாவது ஓருகம் இம்பாம்புக்கு; இவ்வுயிர்ப்பின் பெயர் உகாந்தாக்கினிச் சுவாசம். ஐயகுறளன் - அழகியகுறளன்; இது வீரபத்திர தேவர் பெயர். ஐயர்குறள னென்னும் ரகரவீற்று வேறு பாடத்துக்குப் பொருள் : ஐயர் - மகாதேவருடைய, குறளன் - வீரபத்திரதேவ ரென்பது; குறளென்றது குறுமையை யன்று. 'ஐயர் குறளன்' என்றதில் ரகரங் கெடவும் இலக்கணமுண்டு.
----------

662. வானை யேவ வயப்புய மாம்பெருஞ்
சேனை யேவின னெங்கணுஞ் செம்மவே.

எ-து : இந்திரன் ஈசுவரன்மேலே ஆகாசத்தை யேவ அஃதடங்கி அழிய ஈசுவரன் தன் திருத்தோள்களை யேவி யருளினான். எ-று.

எனவே வெளியடங்கியது. ஆகாசத்துக்கு வெளியே வலி; [1]"மாநிலஞ் சேவடி யாகத் தூநீர், வளைஞரல் ..… தீதற விளங்கிய, திகிரி யோனே.”
-----
[662-1] "மாநிலஞ் சேவடி யாகத் தூநீர், வளைநரல் பௌவ முடுக்கை யாக, விசும்புமெய் யாகத் திசைகை யாகப், பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக, வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய, வேத முதல்வ னென்ப, தீதற விளங்கிய திகிரி யோனே." நற்றிணை, கடவுள்.
----------

தேவர்களும் பிறரும் அழிதல்.

663. அண்டர் யாவரு மாழி கடைந்துபண்
டுண்ட வாரமு தோடு மொருங்கவே.

அண்டர்கள் - தேவர்கள். ஆழிகடைந்து பண்டுண்டவா ரமுதென்றது மகாமேருவை மத்தாக்கி வாசுகியைக் கடைகயிறாக்கிச் சந்திரனைத் தூணாக்கி விஷ்ணுக்களை மத்துக்கு அடைகல்லான ஆமையாக்கித் தேவர்களும் அசுரர்களும் கூடிப் பலகாலும் வருந்திப் பிரயத்தனம் பண்ணிப்பெற்ற அமுதென்றவாறு.
----------

664. அமுதில் வந்த வயிரா பதமவர்
குமுத வாயுமிழ் நஞ்சிற் குளிப்பவே.

அவரென்றது பூதகணங்களை. குமுதவாய் : உவமைத்தொகை; குமுதம் ஆரவார மென்னலுமாம். நஞ்சென்றது அவர் வாயிற் புறப்பட்ட பருஷ வாக்கியங்களை. அபருஷ வாக்கியம் அமிழ்து.
----------

665. பாற்க டற்படு பாய்மாப் படுபுனற்
காற்க டற்சுழி யுள்ளே கரப்பவே.

பாற்கடலிற் பட்ட பாய்மாவாவன : பண்டு ஒரு ரிஷி அசுவங்கள் மேய்வன கண்டு தன்கையைத் தட்டித் துரத்த அவற்றுட் சில குதிரை கடலைக் கடந்து போயின. அவையிற்றை யாவன மென்பாரும் தெறசி யென்பாருமுளர். அவையிற்றிற் சில பாற்கடலிலே விழுந்தன. அவையிற்றை நாராயண பகவான் புறப்படவிடுத்தான். அவை சுவேதாசுவங்கள். அவையிற்றின் வழியின அர்ச்சுனன் தேர்பூண்ட குதிரைகளென்பர். இதனைச் [1]சாலிகோத்திரத்திற் கண்டுகொள்க. அன்றியே இந்திரன் குதிரைகளும் அவையிற்றிற் பிறந்தனவென்று சொல்வாருமுளர். காற்கடல் - காற்றுக் கடல்.
-----
[665-1] சாலிகோத்திரம் - சாலிகோத்திர முனிவராற் செய்யப்பட்ட ஒரு நூல்; இது குதிரைகளின் இலக்கணங்களைக் கூறுவதென்றும், இம்முனிவர் குதிரைகளின் உள்ளத்தையறிந்து செலுத்துதலில் வல்லவெரென்றும் கூறுவர்; "கூந்தன் மாவுள மறிதலிற் சாலிகோத்திரனோ.” நைடதம், கலிநீங்கு. (௧0) 10.
----------

666. அங்க ணாயகி யங்கியி லுள்ளன
தங்கள் காறங்கை தாங்கண்ட வண்ணமே.

அங்கண் - அவ்விடம்; இது வேற்றுமைச் சொல்லல்ல; வேற்றுமை யிடப்பொருள்; அவ்விடத்துக் கண்ணென்பது; அத்துச்சாரியையும் ஏழாமுருபுந் தொக்கன; அவ்விடத்து ஓரிடத்தோரிடத் தெனப் பொருளாக்குக. நாயகியாவாள் மகாகாளி. அவளுடைய அங்கியாவன நவகுண்டப் பிரயோகாக்கினி. அவை காமரூபம், மலயசம், கோலகிரி, களாட்டகம், சேர்காரம், சியேனம், சாலாதரம், பூரணகிரி, பராபரபீடம்; அவையிற்றின் அதிவேகமாகிற நவாக்கினியாற் பரிவிருதமான மண்டலம். அவ்வக்கினியிற் பூதகண நாதர் தாங்களே காலாலும் கையாலும் பாய்ந்து பிசைந்து கண்டபடி பொடியாக்கினா ரென்றவாறு. இவ்வக்கினி வேதத்தில் யாமளாக்கினி.

இப்பாட்டிற்கு வேறொரு பொருள் உரைப்பர். அது : தேவர்கள் கால்களையுங் கைகளையுந் தறித்துத் தேவியுடைய அக்கினி குண்டத்திட்டா ரென்பாருமுளர். அதுபோலும் மாங்கிச யாகம். இரண்டிலும் நல்ல துணர்க.
----------

667. வேற்றுக் கோட்டிப் பதினொரு விண்ணவர்
ஏற்றுக் கோட்டி னுயிர்க்கழு வேற்றவே.

வேற்றுக்கோட்டி யென்றது ராசாவில்லாத தன்னரசு நாட்டிற் கோட்டிபோலக் கர்த்தாவில்லாத கன்மவாதக் கோட்டி யுடையராகித் தாமும் ருத்திரமூர்த்திகளாகி வேறுபட்ட ஆத்தானம் உடைய ரென்பது. ஏற்றுக் கோட்டினுயிர்க் கழுவேற்றவே யென்றது அவர்தாம் உடைய ரிஷபங்களின் கொம்புகளே கழுவாக உயிர்க்கழு வேற்றினார் பதினொருவரையு மென்றவாறு. எனவே மகேசுவரதேவர் கீர்த்திகளாயும் ருத்திர வாகனங்களாயும் உள்ள கோவை வதை பண்ணிற்றிலர்.
----------

668. உக்கு நின்றன ரும்ப ருடம்புதாம்
புக்கு நின்ற நிலைவிடப் போகவே.

உகுதல் - கெடுதல். புக்குநின்ற நிலையாவது ஆன்மாச் சென்று பிறந்த தேவசரீரம்.
----------

பின்னும் பிரமன் சேனையை வகுத்தல்.

669. உய்ய லாமென வும்பர் பிதாமகன்
மய்ய லாற்பின்னுஞ் சேனை வகுக்கவே.

உம்பர் - தேவர்கள். பிதாமகன் - பிரமா.

உம்பர் சேனையைப் பின்னும் படைத்தான் பிரமா வென்றவாறு.
----------

மீள அமர் தொடங்கல்.

670. வகுத்துச் சேனையை வானவர் கோமகன்
தொகுத்து விட்டமர் மீளத் தொடங்கவே.

இதன் பொருளுணர்க.
----------

இந்திரன்விட்ட படைகள் அஞ்சியோடல்.

671. தேர்த்தட் டாயன் றுடைந்தது தேர்ந்துகொல்
பார்ப்புத் தேள்பயத் தோடு பறந்ததே.

எ-து : தேவேந்திரன் தனக்குப் படையான பிருதுவியை முன்னே ஏவ அது பண்டு திரிபுர தகனத்துத் திருத்தேர்த்தட்டாகி ஈசுவரனைத் தாங்கமாட்டாது உடைந்ததை நினைந்தோ, பயப்பட்டு முன்பு நிற்கமாட்டாது பறந்தது? எ-று.

பார்ப்புத்தேள் - நிலத்தெய்வம்.
----------

672. பண்டு மாண்மகன் றன்செயல் பார்த்தவோ
மண்டு மாழிக ளென்கொன் மறிந்தவே.

மாண்மகன் - [1]பிராமணப்பிள்ளை.

எ-து : அவனழ அவனுக்கு அவன் முற்றத்திலே பாற்கடலை யழைத்துக் கொடுத்தருளின பழங்கதையை நினைத்தோ, இந்திரன் வரவிட்ட கடலேழும் பயப்பட்டு மீள மறித்துப்போயின? எ-று.

முன்பு பிருதுவியையும் அதன்பின்னர் அப்புவையும் படையாக விடுத்தான் இந்திரன்.
-----
[672-1] பிராமணப்பிள்ளை யென்றது உபமன்னிய முனிவரை; அவருக்குப் பாற்கடலளித்தமை, "பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான்" (திருபல்லாண்டு, (௯) 9), "அத்தர் தந்த வருட்பாற் கடலுண்டு, சித்த மார்ந்து தெவிட்டி வளர்ந்தவன்" (பெரிய. திருமலை. (௧௫) 15) என்பவற்றா லறியலாகும்.
----------

673. ஊழித் தீயுவந் தாடுவ தோர்ந்ததோ
பாழித் தீநடு வென்கொல் பனிப்பதே.

ஊழித்தீ - யுகாந்தகாலத்துத்தீ. பாழி - பெருமை. பனித்தல் - நடுங்குதல்.

இந்திரன் அக்கினியையும் ஏவினான்.
----------

674. உயிர்ப்ப வர்க்குநா மென்பதை யுள்ளியோ
செயிர்ப்பு மாருதம் பேர்ந்து திரிந்ததே.

எ-து : இந்திரன் விட்ட காற்றுக் கோபம் நீங்கி மீண்டது, ஈசுவரனது உச்சுவாச நிசுவாசமல்லனோ யானென்று நினைத்தோ? எ-று.
----------

675. தம்மை மாய்க்குந் தழற்பிழம் பென்பதோ
வெம்மை மாறி விசும்பின்மின் மீண்டவே.

மாய்த்தல் - மின்னுடைய சோதியைப் பிரகாசியாமல் அடக்குதல். அது பஞ்சமகாசத்தத்தில் கொடியடக்கம்போல வெனவுணர்க. தழற்பிழம்பு - மகாதேவர்; ஆகுபெயர்.

இந்திரன் ஆகாசத்து மின்களையெல்லாம் படையாக ஏவினானென்பது.
----------

676. ஐயர் வேணி யரவமங் காப்பவோ
வெய்ய நாயிறுந் திங்களு மீண்டவே.

எ-து : படையாக ஆதித்திய சந்திரர்களை ஏவினான். அவை ஈசுவரன் திருமுடியிற்பாம்பு வாய் அங்காக்கப் பயப்பட்டு மீண்டன. எ-று.

அங்காத்தல் : ஒருசொல்.
----------

677. உழைக்கும் பண்டை யுதைநினைந் துட்கியோ
இழைக்குங் கூற்ற மெதிரா திரிவதே.

இழைத்தல் - இந்திரன் படையாகச்செய்தல். இரிவது - இரிந்தோடல்.
----------

678. வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்பு தானுள தென்றோ வகன்றதே.

தானவர் அகன்றது அம்பு உளதென்றோ வென்க.
----------

679. அரிய வீழ்ந்த வருஞ்சிறை யுள்ளியோ
திரிய வீழ்ந்தன வெல்லாச் சிலம்புமே.

இதன் பொருளுணர்க.
----------

680. அருந்து மாழியி லாலமுண் டாரென்றோ
பொருந்து மேகங்கள் போர்விடப் போவதே.

எ-து : மேகங்கள் தாம் உண்ணுங் கடலில் நஞ்சுண்டாரென்று கொண்டோ, பொருந்திய போரை விட்டுப் போவது? எ-று.

இவையும் இந்திரன் விட்ட மேகங்கள்.

எனவே இந்திரன் கடல் கடைந்து நஞ்சுண்டாக்க ஈசுவரன் அதனை அடக்கினானென்பது.
----------

681. எட்ட நிற்கி னுரிப்பரென் றெண்ணியோ
விட்ட மாதிர வேழங்கண் மீண்டவே.

விட்டமாதிரவேழங்கள் - இந்திரன் விட்ட திக்கசங்கள்.
----------

இந்திரன் முதலியவர்கள் படல்.

682. கூறு மேகக் குலிசா யுதன்பட
ஏறு மேகத் துருமே றெறியவே.

ஏகன் குலிசம் ஆயுதனெனப் பிரித்துக்கொள்க. எனவே ஒருவனான வச்சிராயுதனென்பது பொருள்.

இந்திரன் தானேறப்பட்ட மேகத்தின் உருமேற்றாலே படவென்றவாறு.
----------

683. காய்ந்தி ரண்டு கதுப்பினுந் தன்கடாய்
பாய்ந்து பாவகப் பாவி பதைக்கவே.

கடாய் - கிடாய். பாவகன் - அக்கினிதேவன்.
----------

684. சட்டத் தென்னவன் றன்கடா வேந்தனை
வெட்டிக் கூறிரண் டாய்விழ வீழ்த்தவே.

சட்ட - கடுக; திசைக் கொடுந்தமிழ்ச்சொல். [1]தென்னவன் - தருமராசன்.
-----
[684-1] தென்னவனென்பது இராவணனுக்கும் கூற்றுவனுக்கும் பாண்டியனுக்கும் பெயர்; இது, "தென்னவற் பெயரிய" (மதுரை. (௪0) 40) என்பதன் விசேடவுரையாலும் அறியலாகும்.
----------

685. குருதி யூற்றிக் குடித்திடு கூளியால்
நிருதி யூற்ற மிழந்துயிர் நீங்கவே.

எ-து : தன்ரத்தத்தை ஊற்றியுண்ட தன்வாகனமான பேயாலே நிருதி வலியிழந்து மரணமெய்த. எ-று.
----------

696. முகர வாயன் வருணன் முதியவன்
மகர போசன மாயுடன் மாயவே.

முகரம் - ஆரவாரம். எனவே திரையவியினும் மீன்பாய்ந்து ஒலி அடங்காக் கடலென்பது. முதிய வன்மகரமென்றது மகரவாகனத்தின் பழமையைக் கூறியவாறு. போசனம் - உணவு.
----------

687. மலைம ருப்பெறி மாருத மார்புதன்
கலைம ருப்பிற் கழியக் கிழியவே.

மலைமருப்பு - மலைக்கொடுமுடி. மாருதம் - காற்று. கலை அவன் வாகனம்.
----------

688. பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்
ஆழி யீரப் பிறையிரண் டாகவே.

பாழி - பெருமையும் வட்டமும் யுத்தமும்; "பாழி யற்றுச் சாரியை யோட்டி" எனவும், "பரந்த பாழி மற்றவன் காட்ட" எனவும் வருவன உதயணன் கதை; [1]"பாழித் தோண்மனி சற்குப் பணியுமே.” பரிப்பதோராழி யென்றது ஆதித்த சக்கரத்தையல்ல; சந்திரனுக்குச் சக்கரம் இல்லை; விலைச்சக்கரம் சந்திரனை எறியாது; அஃது ஈசசக்கரமென வுணர்க.

எனவே முன்னிற்பாட்டில் வாகனங்களே பகையானதுபோல இதிலும் பரிக்கிற சக்கரமே சந்திரனை இரண்டு பிறையாக்கிய தென்றவாறு.
-----
[688-1] சூளாமணி, சீயவதை. (௬௪) 64.
----------

689. மாறு கூர்வட கீழ்த்திசை வானவன்
ஏறு மார்பந் திறப்ப விறப்பவே.

மாறு கூர்தல் - மகாதேவருடைய சிவநாமத்துக்கு மாச்சரியம்போல ஈசானனென்னும் பெயரைக்கொண்டு ஸ்ரீகைலாசத்துக்கு மாறாக வடகீழ்மூலையைக் கைக்கொண்டு தருமரூப ரிஷபவாகனத்துக்கு மாறாகப் பாபரூப ரிஷபவாகனமான காரெருதைக் கைக்கொண்டு நிற்றல்.

இவன் ஏறின ரிஷபமே இவன்மார்பைக் குத்தித் திறந்தது.
----------

வேறு.
690. அங்கிகண் மூவருநே ரட்ட வசுக்களுநேர்
எங்குள தேவருநேர் கின்னரர் யாவருநேர்.

அங்கிகள் மூவராவார் : தட்சிணாக்கினி, காருகபத்தியம், ஆகவநீயம்; வாருணாக்கினி .......… அக்கினி யென்பாருமுளர். நேரென்றது தேய்ந்துபோனா ரென்றவாறு.
----------

691. இந்த்ர முராரிகணேர் யமவரு ணாதிகணேர்
சந்த்ர திவாகரர்நேர் தாரகை யாவையுநேர்.

இதன் பொளுணர்க.
----------

692. மண்டல மடியிடநேர் தோளிட மாதிரநேர்
விண்டல முடியிடநேர் விண்ணவ ரேயினிநேர்.

மண்டலம் : அல்வழி; பெயர்கொளவந்தது. மாதிரம் - திக்கு. விண்டலம் : அல்வழியும் வேற்றுமையுமாம். விண்ணவரே இனிநேரென்றது விண்டலம் நேரானபடி கண்டால் தேவர்கள் சமானராவார் ஸ்ரீ பூதகணநாதர்க் கென்றவாறு; இது குறிப்பு.
----------

திருமால் பொர வருதல்.

வேறு.

693. பொக்கந் தவிர்வியாழன் சுக்ரன் போல்வீழப்
பூகண் டகர்கோவோ டாகண் டலன்மாயத்
தக்கன் றலையானார் பக்கம் படைபோதச்
சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்வந்தே.

பொக்கம் - செறிவு. சுக்கிரன் - வெள்ளி. பூகண்டகர்கோ - அசுரேந்திரன்; பூ - பூமி, கண்டகம் - முள்; முட்போல்வார் அசுரர். ஆகண்டலன் - தேவேந்திரன். மாய்தல் - இறத்தல். தக்கன் - தட்சன். தலையானார் - இவன் முதலாயினா ரெல்லாரும். பக்கம் படை போதவென்றது பிரமாக்கள் பலரும் தந்திரமாகிவர வென்றவாறு. சதுரானனனாவான் பிரமா; சதுரம் ஆனனன். வெள்ளமென்றது பிரம்மாக்களின் பெருமை. தானென்றது விஷ்ணுக்களை;பரந்தாமப் பொருள்.

தேவாசுர மந்திரிகளும் தேவாசுர ராசாக்களும் மாய்ந்தபின்னைப் பிரமவர்க்கத் தொடக்கத்துடன் விஷ்ணுக்கள் வந்தாரென்றவாறு.

பொக்கந் தவிர்கையாவது மேதையாயும் ஈசுவரனுடன் செறிவு தவிர்ந்தானென்பது.

தட்சனும் வேண்டினபடி படைக்கவல்லார் சிலரும் உடனே போதப் பிரமாக்களும் போத விஷ்ணுக்களும் போந்தா ரென்றவாறு.

சுக்கிரன்போல வியாழனும் வீழ்கையாவது மேதையாயும் கண்ணிரண்டும் உடையனாயும் மகேசுவரச்செறிவு தவிர்கைக் குற்றமுளதாயிற்று.
----------

694. காரிற் றுளியாலோ ரசனிக் கதழேறுங்
கடலிற் றிரையாலோர் வடவைக் கனன்மாவும்
பாரிற் றுகளாலோர் படநா கமுமாகப்
பரமன் பூரிக்கப் பிரமன் பாரித்தே.

துளியாலோரசனியாவது உருமேற்றின் கணக்கிறந்தமை. கதழ் - வலி. வடவைக்கனன்மா வென்றது குதிரைமுக உவமை. பாரிற்றுகளாலொரு படநாகமுமாதல் கணக்கில்லாத பாம்பாகை. இங்குப் பரமனாவான் விஷ்ணுமூர்த்தி. பிரமன் - பிரமா.

மாயனாதலால் இந்திரஞாலங் காட்டுவதைப் போலத் திருமால் படைக்கப் பிரமா படையை வகுத்துப் பரப்பினானென வுணர்க.
----------

695. சதுரா னனவெள்ளஞ் சூழத் தான்முற்றுந்
தந்த்ரங் களுமெல்லா யந்த்ரங் களுமுட்கொண்
டெதிரா யவியக்கண் டீரை வரையுங்கொண்
டிறையோ னெதிர்சென்றான் மறையோ ரிறையோனே.

எ-து : பிரமாவெள்ளஞ்சூழ விஷ்ணுக்கள்தாமே எல்லாத் தந்திரங்களும் எல்லா யந்திரங்களும் உட்கொண்டு எதிராய் அவிந்துபோகத் தசப் பிரமாக்களையுங் கொண்டு ஈசுவரனெதிரே பின்னையுஞ் சென்றான். எ-று.
----------

696. சாதித் தழலாமுத் தொகையு முக்குடுமிச்
சத்திப் பிழையாமே குத்தித் தனிநெற்றிச்
சோதித் தழலிற்பண் டெரிமுப் புரமொப்பச்
சுட்டுக் ககனத்தே விட்டுத் துகள்செய்தே.

எ-து : விஷ்ணுக்களாற் சாதிக்கப்பட்ட அசனி உருமேற்றுத் தழலும் வடவாமுகாக்கினியும் படநாக விஷாக்கினியுமான மூன்றுதொகையும் ஈசுவரன் தனது திருக்கையிற் றிருச்சூலத்தின் மூன்று தலையாலும் குத்திப் பண்டு திரிபுரத்தைத் திருநெற்றித் தனித்திருநயனத்தாலே எரித்தாற்போலச் சுட்டு ஆகாசத்திலே தூளி போம்படி செய்தருளி. எ-று.

சாதித்தழல் - சாதித்த அழல்; விகாரம்.
----------

பிரமர்கள் அழிதல்.

697. பத்துத் தலையோடும் பதின்மர்க் குந்தத்தம்
பறியா வுயிர்போகப் பதுமத் திறைவற்குங்
கொத்துத் தலைநாலுங் கலனா கியமுன்னைக்
குறளைத் தலையாகக் கொளைவிற் குனிவித்தே.

எ-து : தசப்பிரமாக்கள் தலைகளுடனே அவர்கள் உயிர்போம்படி பறித்துப் பிரமாவினுடைய தலைநாலும் ஒருக்காலே போம்படி ஒருதொடையில் ஓரம்பால் அறுத்தருளி. எ-று.

கலனாகிய முன்னைக் குறளைத்தலை யென்றது தேவாசுர யுத்தத்தில் அமராபதியிற் புகுந்தகாரியம்; அசுரர் படைவீடான சோணிதபுரத்திற் சென்று குறளை சொன்ன தலையை அறுத்துப் பாத்திரமாகக்கொண்டு பிச்சைபுக்கருளின கதை; இது மகாப்பிரதமாகேசுவரம்.
----------

திருமால் வீரபத்திரதேவரெதிர் செல்லுதல்.

698. செந்தா மரையோனைக் கிளையோ டுயிர்வவ்வித்
திருமால் வருகென்றெம் பெருமா னறைகூவத்
தந்தா மரையுந்திப் புதல்வன் கொலையுண்ணத்
தரியா ரிவரென்னக் கரியா ரெதிர்சென்றே.

எ-து : பிரமாவை மக்கள் பதின்மருடன் கொன்றருளி இனி விஷ்ணுவே வருகவென எங்கள் ஈசுவரன் அறைகூவியருள, மகனை இழந்த விஷ்ணுக்கள் இனித்தரிப்பரோ வென்ன ஈசுவரனெதிரே தனியே சென்றார். எ-று.

இப்பாட்டில், 'எம்பெருமான்' என்றது பேயின் கூற்றென்றறிக.
----------

வேறு.

699. பொருதரங்கம் வீங்குசி லம்படை சேவடிப்
புரையடங்க வூன்றவி ழுந்தது மேதினி
இருவிசும்பு தூர்ந்தற வுந்திய மோலியி
னிடைகழிந்து கூம்பின தண்டக பாலமே.

எ-து : விஷ்ணுக்களுடைய சிலம்படை சேவடியான ஸ்ரீ பாதத்தைப் பொருது நிற்கும் தரங்கமானவை ரேகைக்கீற்றுப்புரையில் அடங்க உச்சாகித்து யுத்தத்திற்கு ஊன்றப் பூமியெல்லாம் விழுந்து போயிற்று. திருமுடிக்கு ஆகாசம் வெளி தூர்ந்தற அண்டகபாலம் இன்றிக்கூம்பியது. எ-று.

எனவே திருவடிக்குப் பூமியும் திருமுடிக்கு அண்டகபாலமும் அளவு சுருங்கின வென்றவாறு.
----------

வேறு.

700. தம்பொன் மகுட மண்ட கோளகை
சங்கு திகிரி சந்த்ர சூரியர்
செம்பொ னறுவை குன்ற வேதிகை
சென்ற திரும னின்ற கோலமே.

எ-து : விஷ்ணுக்களுடைய திருமுடிக்குப் பொன்முடி அண்ட கோளகை. திருக்கைக்குச் சங்குசக்கரம் சந்திராதித்தர். திருவரைக்குப் பீதாம்பரம் சக்கரவாளபருவதம். இப்படியே ஈசுவரனெதிரே சென்ற திருமால் நின்ற கோலம். எ-று.
----------

701. எங்கு முலகு நுங்கு தீயென
வின்று கனல நின்ற நீரொரு
பங்கு பெறுக விங்கு தானிது
பண்டு மறையி லுண்டு பார்மினே.

இது முடிவில் விஷ்ணுக்கள் ஈசுவரன் ஸ்ரீபாதத்துக்குள்ளே புகுகையைப் புலப்படுத்தியது; இது வேதப்பொருள்.
----------

திருமாலுக்கும் வீரபத்திரதேவருக்கும் யுத்தம்.

வேறு.

702. என்று போதுமொரு புட்கொடி யெடுத்துமொருபே
ரிடப நற்கொடி யெடுத்துமிரு வர்க்குமிருதேர்
குன்று போல்வன விசும்புகெட மேல்வருபெருங்
கொண்டல் போல்வன புகுந்தன கொடிப்படையொடே.

புட்கொடி யென்றது கருடத்துவசத்தை. அது பஞ்சவன்னமா யிருத்தலால் ஐவனக்கொடியெனப் பாடஞ் சொல்லுவாரு முளர்.

குன்றென்ற உவமை திண்ணெனலுக்கு; மேகவுவமை செலவுக்கு.
----------

வேறு.

703. தண்டுழாய் மார்பர்சங் கொன்றுமே யூதவுந்
தமனியக் கொன்றையார் தந்திருத் தேர்மிசைப்
பண்டுமால் வரவரக் கொண்டநா ளிடுமிடும்
படைவிடா வலகில்சங் கிடைவிடா தூதவே.

தமனியம் - பொன். மால்வரவரவென்றது விஷ்ணுக்கள் பலராதலால், படைவிடா - பூசல் விடாத.
----------

வேறு.

704. நின்ற வில்லிகொடி யிற்கருட னார்த்தபொழுதே
நிமிர்சி றைக்கருட லோகமுட னார்த்ததெழவே
குன்ற வில்லிகொடி மேலிடப மொன்றுகுமுறக்
கோவு லோகமக லோகமடை யக்குமுறவே.

நின்றவில்லி : வீரபத்திரதேவர்க்கு எதிரே பொருதற்குநின்ற வில்லி யென்பது வேண்டப்பாடு. குன்றவில்லி - மகாதேவர். கோவுலோகம் - பசு லோகம். மகலோகமென்றது யக்ஞக்ஷேத்திரத்தை. குமுற - பிரதித்துவனி எழ.
----------

705. நேமி யங்கிரி நெரிந்தது முரிந்ததிடையே
நின்ற மேருகிரி யெக்கிரியு மெக்கடலுநேர்
பூமி கம்பமு மெதிர்ந்தன வுதிர்ந்தனவுடுப்
பொருபுராரிய முராரியு முடன்றபொழுதே.

நேமியங்கிரி - சக்கரவாளபருவதம். எக்கடலு நேரென்றது எல்லாக் கடலும் நேராயினவென்றவாறு. எதிர்கையாவது பிரதித்துவனி உண்டாகுகை. உடு - நக்ஷத்திரம். புராரி - மகாதேவர். முராரி - விஷ்ணுக்கள். உடலுதல் - பொருதல்.
----------

706. சந்தி ராதிகளொன் பதின்மரிரு பத்தெட்டுநா
டார காகணித ராசிசோ திச்சக்ரமென்
றிந்தி ராதிகள் விமானமொரு முப்பத்துநா
லிருவர் தேரினு மடிந்தனகொ லெங்குமிலவே.

ஒன்பதின்மர்க்கு ராகுகேதுக்கள். நாள் இருபத்தெட்டுக்கு [1]அபிசித்து. தாரகாகணிதம் - தாரக அகணிதம்; கணக்கில்லாதன. ராசி பன்னிரண்டு. சோதிச்சக்கரம் - துருவசக்கரம். இந்திராதிகள் விமானமொரு முப்பத்து நான்கு : யசமான விமானமுங் கூட்டுக.
-----
[706-1] அபிசித்து - ஓர் உபநட்சத்திரம்; சோதிட நூல்களிற் காண்க.
----------

707. ஞால நேமிதிரை நேமிவரை நேமியிவையே
நடை சுழன்றிடை சுழன்றன சுழன்றிலதுதங்
கால நேமிரத நேமியிரு காலுமுடுகக்
கடவுள் வீதியில் விசும்பிடை படக்கடுகியே.

ஞாலம் - பூமி. திரை - கடல். வரை - மலை. தம் காலநேமி யென்றது ஈசுவரன் ஆக்கினையாகிய காலசக்கரமான சோதிச்சக்கரத்தை யெனவுணர்க. இரதநேமி - சந்திராதித்தியசக்கரம்; நேமியாகியகால். கடவுள் வீதி - தேவலோக வீதி.
----------

708. வேற நேகவித தாரகை யநேகமிடையே
வீசு மாருத மநேகமினன் மேககுலமே
ஆற நேகமிர தங்களு மநேகமவர்தா
மார்ப தங்களெதிர் நீறுபட வேறுபடவே.

தாரகை - நட்சத்திரம். மாருதம் - காற்று. மினல் - மின்னு. ஆறு - வழியுங் கங்கையும். இரதம் - தேர். பதம் - வழி.
----------

709. எம்ம் பாய்புரவி யிற்றெமது தேருமிறுமே
லிடப மாய்வர வெழுந்துசும வீரெங்களுக்
கம்ம் பாய்வருகி லீர்சிலை புகுந்துபிடியீ
ரஃதுபோலுமினி யெம்மொடுறு மும்மதுறவே.

இதன் பொருளுணர்க.
----------

710. புனலன் மேனியி னிசிந்தன்விடு மம்படையவும்
புரைய டங்குமினி யப்பரசு பாணி புரைதீர்
அனலன் மேனியின் முகுந்தன்விடு மம்படையவே
மாத லாலவர் வலந்தெரிவ தம்மவரிதே.

புனலன் - விஷ்ணுக்கள். நிசிந்தன் - ஈசுவரன்; ஆராயவரிய னென்றவாறு; இப்பொருள் : யோகி போகி யென்பன முதலாயின கொள்க. புரையடங்குகை - புரையுள்ளே செறிகை. பரசுபாணி புரைதீரனலன் - சிவன். முகுந்தன் - விஷ்ணுக்கள். வலம் - வெற்றி. [1]"அம்மகேட் பிக்கும்.”
-----
[710-1] தொல். இடை. சூ. (௨௮) 28.
----------

711. மாயோன் விடும்விடும் பகழி செய்யவெரிமேல்
வந்து வந்தடைய வெந்துபொடி யாய்மடியவே
சேயோன் விடும்விடும் பகழி மாயனுதகத்
திருவு டம்புபுக மூழ்கியுரு வச்செருகவே.

[1]மாயோன் - திருமால்; கரியோனென்றது. சேயோன் - ஈசுவரன். மாயோன் - மாயன், சேயோன் - சேயனென்றுமாம். உதகம் - சலம்.
-----
[711-1] மாயோனென்றதற்கு இப்படியே கரியோனென்று பொருளெழுதினர் பரிமேலழகர்; பரிபாடலுரை.
----------

712. அறும றும்பிரமர் நாரணர்க பாலநிரைபே
ரார மார்புடைய வீரர்திரு மேனியருகே
யுறுமு றும்பகழி வெந்துபொடி யானபடிகண்
டுள்ள பஞ்சவா யுதங்களையு மொக்கவிடவே.

நிரையாரமென்றது வினைத்தொகை; நிரைத்த நிரைக்கும் நிரையா நின்றவென மூன்றுகாலமுங் கொள்க.
----------

வீரபத்திரதேவர் அருளிச்செய்தல்.

713. தண்டு தோள்வளை கழுத்துநுதல் சாபம் விழிவாள்
சக்ர மானன மெனத்தேவர் தானவர்களைப்
பண்டு நீரமு தருத்துமுரு வத்திலிவையே
பஞ்ச வாயுதமு மல்லதிவை யென்னபடையே.

வளை - சங்கு. நுதல் - நெற்றி. சாபம் - வில்லு. ஆனனம் - முகம். தானவர் - அசுரர். அருத்துதல் - ஊட்டுதல்.
----------

714. சங்க மெங்கள்குழை வில்லெமது சக்ரமெமதே
தண்ட மெங்கள்யம தண்டமழு வின்சாதிவாள்
பொங்கு கண்ணவிவை யைம்படையு மெங்களுடனே
போது மெங்ஙன மினிப்பொருவ தென்றபொழுதே.

குழை - காதிலிடுஞ் சங்கத்தோடு; இதுவுமன்றியே இயலிசை நாடகச் சங்கம் இருப்பது எங்கள் குழையிலென்றுமாம்; குழையையுடையது செவி. வில் - சோதி, மகாமேருவென இரண்டிலுங்கொள்க. சக்கரம் : அவர் சக்கரம் சங்காரச்சக்கரம், ஈசுவராக்கிஞை; இவையன்றியே சக்கரம் கொடுத்தருளினான் ஈசுவரனென்னுங் கதையையுணர்க. எங்கள் யமதண்ட மென்றது எம்மால் எளிவரவுபட்டவன் யமராசனென்னுங் கருத்து. மழுவின்சாதி வாளென்றது இருப்புச்சாதி யென்றவாறு. மழு வேதயாகத்திற் பிறந்தது.
----------

திருமால் அருளிச் செய்தல்.

வேறு.

715. பொருமம்பு சிலைகொள்வ தில்லையிவ் வுலகையும்
பொருபினா கத்தையு மொருபெரும் பன்றியாய்
இருகொம்பி னொருகொம்பி னுதியினான் மறியவிட்
டிறமிதிப் பனின்மதிப் பொழிகவென் றிகலவே.

விஷ்ணுக்கள் அருளிச்செய்தது.

மதிப்பு - அவமதிப்பு; குறிப்புச்சொல்.
----------

யுத்தம்.

வேறு.

716. கொம்பி ரண்டுமுக மொன்றுநடை நாலுமுதுகுங்
கூறி ரண்டுபட வீழ்புடவி நீறுபடவோர்
அம்பி ரண்டெயிறு மின்றிவெறு மோரெயிறுகொண்
டடைய வெட்டுதலு மாதியுரு வெய்தியரியே.

எ-து : இரண்டுகொம்பும் முகமும் காலும் முதுகும் ஒரோவொன்று இவ்விரண்டு கூறுபடவே பதினாலுகூறுபட்டுப் பாதிவிழவும் வீழ்கிறபொழுது அவற்றின் பெருமையாற் பூமி பொடியாய்ப்போகவும் ஓரம்பும் இரண்டெயிறுமின்றியே ஓரெயிறான [1]கோணமொன்றைக்கொண்டு வெட்ட விஷ்ணுக்கள் பின்னைத் தம் பண்டை வடிவைக்கொண்டார். எ-று.

இன்றி ஆதியுருவெய்தியென்க.
-----
[716-1] கோணம் - தோட்டி; "கோணந் தின்ற வடுவாழ் முகத்த.” மதுரை. (௫௯௨) 592.
----------

717. மண்ணு நீபுனலு நீயனலு மாருதமுநீ
மதியு நீரவியு நீயவை யனைத்தும் வழிபோம்
விண்ணு நீயென வகண்டமும் விழுங்க வரிவாய்
விட்ட விட்டவவ னைம்படையு மீளவிடவே.

மாருதம் - காற்று. அனைத்தும் வழிபோம் விண்ணென்றது வத்துக்களுக்கு இடம்கொடுக்கும் ஆகாசமென்றவாறு. மகாபூதங்களைந்தும் பஞ்சாயுதம். விட்டவிட்ட ஐம்படையாவன விஷ்ணுக்களால் விடப்பட்ட படைகளிற் பண்டுவிட்டவை (விழுந்தன), இப்போது மாயை காட்டினவென்றவாறு.
----------

718. நின்று நின்றுபடை யைந்துமவை யைந்தின்வழியே
நெடிய மாயன்விட நாயகன் விலக்கிவிடலுஞ்
சென்று சென்றுபதி னாலுலக மும்புகவிழச்
செய்ய வாயுமிட றும்புரை யறச்செருகவே.

இதன் பொருளறிக.
----------

வேறு.

719. சிங்கமுங் கற்கியும் பன்றியுஞ் செற்றவன்
றிரியநீர் செல்கெனச் சென்றுமால் சினவெரிச்
சங்கமுஞ் சக்ரமுந் தண்டமுங் கட்கமுஞ்
சாபமும் பொடிபடத் தகனமே ககனமே.

கற்கி - குதிரை. செற்றவனென்றது ஈசுவரனை. கட்கம் - வாள். சாபம் - வில். தகனம் - பொடி; அணுவுக்கும் பெயர்.
----------

720. பாரெழுந் நதியெழும் மலையெழும் மலைவயிற்
படுவெழுந் நடுவெழுங் கடலெழும் பகுவிதக்
காரெழும் மினலெழும் மெனவருங் கனலெழக்
கண்டுமே ருவரையிற் கடவுள்கங் கைவிடவே.

பாரெழும் . . . . . . எனவருங் கனல் : பாரெழும் - பூமிகெட்டுப்போம்; நதி முதலியவற்றோடும் இங்ஙனமே கூட்டிமுடிக்க. படுவெழுகையாவது சுனையும் ஆறுகளும் வற்றுகை. கடலெழுகையாவது கடலும் வேகை. பகுவிதம் - ஏழுவிதம்.
----------

721. மேல்விசும் புடையவுங் கீணிலங் கரையவு
மிடைவிலங் கலிறவுங் குலவிலங் கலெவையுங்
கால்பறிந் திளகவுங் கடல்கரந் தொழுகவுங்
கடவுள்யா றுபதினா லுலகமுங் கவ்வவே.

விசும்புடைய - ஆகாசம் கட்டுக்குலைய. விலங்கலிற – விலங்குதல் இன்றியொழிய. குலவிலங்கல் - சத்தகுலபருவதங்கள். கடவுள் யாறு - கங்கை. கவ்வ - கதுவ.
----------

வேறு.

722. அப்பெரும்புனலி லவ்வரி வராகவுருவிட்
டாமை யாயுல களந்தவடி வாயதுவும்விட்
டொப்பரும்பழைய சேல்வடிவு கொள்ளவிறையோ
னொருசுறாவடிவு கொண்டெதி ருடன்றுகளவே.

அப்பெரும்புனல் - கங்கை.
----------

723. பூத மைந்துமிரு கோளும்யய மானனுமெனப்
புகலு மெங்களை விழுங்குக புகுந்துனதுடற்
பேத மைந்தமளி யுந்தெளியு மோதமுமுடன்
பின்னு மன்னுயிரு முண்டுயி ருயப்பெறுதுமே.

இதன் பொருளுணர்க.
----------

724. கொண்டு வாபொர விறப்பன பிறப்பினிவிடாய்
கொய்த கொய்தநின் முடிப்பழைய கோவைகுறியாய்
தண்டு வாள்வளை தனுத்திகிரி யென்னுமொருநிற்
றவிரு மைம்படையு மையதிரி யத்தருதுமே.

பஞ்சாயுதங்களையும் திரியத் தருகின்றோம். அவையிற்றைக்கொண்டு பொரவாவென்றவாறு.

இறப்பன பிறப்பினிவிடா யென்றது சாகக்கடவனவான பிறப்புக்களை இன்னம் விடாயென்றவாறு. கொய்தகொய்த நின் முடிப்பழைய கோவை குறியாயென்றது எங்கள் தோண்மாலை முதலாயினவற்றைக் காணா யென்றவாறு. ஒரு நிற்றவிருமைம் படையுமென்றது நீ தனியாகத் தாம் தவிர்ந்த பஞ்சாயுதங்களையு மென்றவாறு.
----------

725. என்று மேருதர னைம்படையு மீயநெடியோ
னெறிய வூதைவிழ மோதிவர வெய்யமழுவாள்
ஒன்று மேயவை யனைத்தையு மொருக்கநெடியோ
னுள்ள ழிந்துதலை யைச்சிலையில் வைத்துளையவே.

மேருதரன் - ஈசுவரன். நெடியோன் - விஷ்ணுக்கள். ஊதை - காற்று, விழ – தாழ; மகாவாதம் தாழவென்றவாறு. உளைதல் - ஒதுங்குதல்.
----------

726. விதைக்கு மப்பகழி விற்பொருநன் வைத்தமுடியான்
மிகவ ளைந்துகுதை போய்நெகிழ விண்ணுறநிமிர்ந்
துதைக்கு மத்தலை யெழுந்துகுதை கவ்வியதுவா
னுற்ற சந்த்ரனையும் ராகுவையு மொக்குமெனவே.

குதை - நாணி.

நாணி ராகுவையொத்தது. விஷ்ணுக்கள் திருமுகம் சந்திரனையொத்தது.

எனவே விஷ்ணுக்களை ஒருநாளுந் திருக்கையாற் கொல்லார். பண்டுங்கொன்றார் கணநாதரே. இப்போது திரியென்று சொல்லுதலாற் கணநாதரும் கொன்றிலரென வுணர்க.
----------

727. இன்ன வாறமரர் யாகபல முண்டபடியென்
றிறைவி யைத்தொழு திருந்தழுத பேய்க்கிதனைநீ
சொன்ன வாறழகி தென்றருளி வென்றருளுமத்
தொல்லை நாயகனை நாயகி நினைந்துதொழுதே.

இதன் பொருளுணர்க.
----------

8. காளிக்குக் கூளி கூறியது முற்றிற்று.

---------------


9. கூழடுதலும் இடுதலும். (728-777)

மகாகாளி களங்காண்டல்.

728. எண்ணு தற்கரிய கூளிபுடை சூழவிடையோன்
யாக சாலைபுக வான்மிசை யெழுந்தருளியெங்
கண்ணு தற்கடவுள் வென்றகள மென்றுமுடியக்
கட்டு ரைப்பதென நின்றிறைவி கண்டருளியே.

கூளி - பேய். வான் - ஆகாசம். இறைவி - மகாகாளி.
----------

729. சுமக்கு நாகநம தாதலி னதற்கினிமுதற்
சுரர்பி ணத்தொகை சுமப்பதரி தாகுமவைகொண்
டெமக்கு நீர்கடிது கூழடுமி னென்றலுமகிழ்ந்
தியாளி யூர்திமுது கூளிக ளெனைப்பலவுமே.

யாளியூர்தி - துர்க்காபரமேசுவரி; ஆகுபெயர். முது கூளிகளென்றது பண்டு கூழ்சமைத்த பேய்களை யெனவுணர்க.
----------

கூழடுதல்.

வேறு.

730. மலைகளுண் மறுவே றுண்ட
மலைகளும் வான யானைத்
தலைகளு மடுப்புக் கொள்ளீர்
கடுப்பிலத் தாழி யேற்றீர்.

மலைகளுள் : ஸ்ரீ கைலாசம் மகாமேரு முதலாயின தவிரவென்பது; மறுவேறுண்ட மலைகள் - சிவத்துரோகப்பட்ட மலைகள். வானயானைத் தலை - அயிராபத முதலான திக்கசங்களின் தலைகள். அத்தாழி - யானையின் வயிறுகள்.
----------

731. அழிந்தன கற்பந் தோறுந்
தொடுத்தன நகுசி ரத்திற்
கழிந்தன கபால மாலை
குருதியிற் கழுவிக் கொள்ளீர்.

இதன் பொருளுணர்க.
----------

732. இரவிகள் பல்லுந் தத்த
மீரறு தேரி லவ்வேழ்
புரவிகள் பல்லுங் குத்தித்
துகளறப் புடைத்துக் கொள்ளீர்.

இதன் முடிவுணர்க.
----------

733. வானவர் பல்லும் வானோர்
மன்னவர் பல்லு மெல்லாத்
தானவர் பல்லுந் தீட்டி
யரிசியாச் சமைத்துக் கொள்ளீர்.

எல்லாத்தானவரென்றது அசுரேந்திரரும் தயித்தியரும் பிறருமெனக் கொள்க.
----------

734. செருமுடி சுரேச ரோடு
த்ரிவிக்ரமன் வீழ வீழ்ந்த
பெருமுடி யுரல்க ளாகப்
பிறங்கிய வரிசி பெய்யீர்.

செருமுடி - செருவை முடித்த, செருவொடு முடிந்த, செருவால் முடிந்த, செருக்கண் முடிந்த. சுரேசர் - இந்திரர்கள். திரிவிக்கிரமன் - மகாவிஷ்ணு பகவான்.
----------

735. அசலமே யனைய திக்கி
லானைக்கோ டனைத்தும் பொற்பூண்
முசலமே யாக முப்பத்
திரண்டையு முறித்துக் குத்தீர்.

அசலம் - மலை. பொற்பூண் - கிம்புரிகள். முசலம் - உலக்கை.
----------

736. எத்திசை யானை யீரெண்
செவிகளுஞ் சுளகா யீண்டக்
குத்திய வரிசி யெல்லா
முரியறக் கொழிக்க வாரீர்.

இதன் பொருளுணர்க.
----------

737. இற்றைநா ளமரர் சோரி
திணுங்கிய தின்னம் பெய்ய
அற்றைநாட் குருதி பெய்த
முகில்களை யழைத்துக் கொள்ளீர்.

குருதிபெய்த முகில்கள் - இந்திரன் ரத்தவருஷம் பெய்வித்த மேகங்கள்.
----------

738. தனித்தனி வயிறு வீங்கக்
குடித்துட றடித்தீர் நீரும்
இனித்தனித் திங்கு மெங்கும்
பிணமலை யருவி பெய்யீர்.

இதன் பொருளுணர்க.
----------

739. தாங்குகைக் குரிய வானைத்
தடவரை யருவிச் சோரி
வாங்குகைத் துருத்தி கொண்டம்
மிடாக்களிற் சொரிய வாரீர்.

தாங்குகைக்குரியவானை - உலகத்தைத் தாங்குகைக்குரிய திக்கசங்கள். தடவரையருவிச்சோரி : உவமைத்தொகை. அம்மிடாக்கள் - திக்கசங்களின் வயிறுகள்.
----------

740. துளிபடு கடாயா னைக்கைத்
துணிபடு சோரி வாரி
முளிபடு முடம்பின் முன்னைப்
பொரிவற மூழ்கி யேறீர்.

சோரிவாரி - உதிரக்கடல். முளிதல் - உலர்தல்.
----------

741. தேனிண ரலங்கன் மௌலித்
தேவர்தா னவரு டம்பிற்
றூநிண வெள்ளைக் கோவை
யெடுத்தெடுத் தரையிற் சுற்றீர்.

மெளலி - முடி.
----------

742. சுருதியுந் தவிர யாகந்
தொடங்கிய சுரேசர் தங்கள்
குருதியின் குழம்பு கொண்டு
குங்குமச் செச்சை கொட்டீர்.

சுருதி - வேதம். உம்மையால் அப்படிச் செய்யாராயினும் வேதப்படி செய்யவேண்டு மென்றவாறு. செச்சை - மெய்ப்பூச்சு.
----------

743. குடர்முடி செறியக் கட்டிக்
கோவையாச் சேர்த்துத் தேவர்
சுடர்முடி கடக சூத்ர
முடம்பெலாந் தொடக்கிக் கொள்ளீர்.

குடர்முடி செறியக்கட்டி யென்றது மூன்றாம் வேற்றுமைத்தொகை; சுடர்முடி : வினைத்தொகை. முடிகடக சூத்திரம் - முடியும் கடகவளையும் கட்டிய சூட்டுப்பணிகளும்.

குடராலேமுடிந்து செறியக்கட்டியது, தேவர்களுடைய திருமுடிச்சூட்டை யெனவுணர்க.
----------

744. யாமினி யுண்ணுங் கூழிற்
கீரலை யிட்டு வைத்துத்
தாமரை மொட்டிற் செய்த
தனிப்பெருஞ் சூட்டுக் கட்டீர்.

இதன் பொருளுணர்க.
----------

745. அரசுள வநந்த கோடி
யசோகுள வமர ரிட்ட
முரசுள முகுந்தன் மூங்கிற்
சார்ங்கமுண் டவற்றின் மூட்டீர்.

அநந்தகோடி யென்னுஞ் சொல்லை அரசிலும் அசோகிலும் முரசிலும் மூங்கிலிலும் கொள்க.

இனி நெருப்பெங்குத்தென்று கேட்கச் சிலபேய் சொல்லுவன.
----------

746. எள்ளிவாய் மடங்கிக் கைக
ளிழந்தெரி கரிந்து போன
கொள்ளிவாய்ப் பேயை மாட்டி
யவற்றிலே கொளுத்திக் கொள்ளீர்.

எள்ளி - இகழ்ந்து; இகழ்ந்தது ஈசுவரனை. வாய்மடங்குகை - இட்டதெல்லாம் தகைக்குந்தொழில் மடங்குகை. எரி - அக்கினிதேவன். கரிதல் - ஈசுவராக்கிஞையான அக்கினியாலே கரிந்துபோகை. கொள்ளிவாய்ப் பேயை மாட்டுகையாவது விற்கொடுகூட்டி யென்றவாறு; அடுப்பிலே மாட்டாது அழலிலே மாட்டாயென்னும் வழக்குணர்க.
----------

747. இருந்தலை யுலைக ளெல்லாம்
பொங்கின துங்க யானைப்
பெருந்தலை வாரி வைத்த
வரிசிகள் பெய்ய வாரீர்.

இதன் பொருளுணர்க.
----------

748. எருவையும் பருந்து மோச்சித்
தக்கனார் யாக சாலைச்
சுருவையுந் தோளுங் கொண்டு
துடுப்பெனத் துழாவிக் கொள்ளீர்.

"தொடித்தோட்கை துடுப்பாக, வாடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவன்" ((௩௪ – ௬) 34 - 6); மதுரைக் காஞ்சி.
----------

749. மாறின மடுத்த செந்தீ
மலைச்சிற கடுத்துப் பற்றி
யேறின மிடாக்கள் வெந்து
சமைந்தன விழியப் பற்றீர்.

மலைச்சிறகு கைபிடிசீலை.
----------

750. சேத்தன தூர்தி கொண்டான்
றிருநெற்றிக் கண்ணில் வெந்து
பூத்தன மலைகள் வாங்கிப்
புண்டரம் புடையிற் றீட்டீர்.

சே - ரிஷபம். அதனை ஊர்தியாகக் கொண்டோன் ஈசுவரன். புண்டரமிடுகை யாவது சோறு சமைந்த மிடாக்களுக்குப் பிவாயமிடுகை.
----------

பேய்கள் காளிக்குக் கூழ் படைத்தல்.

751. எரிகல னிமைக்குங் கோலத்
திறைமக ளமுது செய்யப்
பரிகலம் பண்டை யண்ட
கபாலமாம் பற்றி வாரீர்.

பண்டையண்ட கபாலமாவது பிரமாண்ட கபாலம்; அன்றி ஈசுவராண்டமான அண்டகபாலமுமாம்; அதுவே அழிவுபடாததுவும் அமலமா யிருப்பதுவுமா மெனவுணர்க.
----------

752. பிரமனைப் பண்டு பெற்ற
பெருந்திரு வமுது செய்யப்
பரமனைப் பாடிப் பாடிப்
போனகம் படைக்க வாரீர்.

விஷ்ணுவே மகாகாளி யெனவுணர்க. பரமன் - ஈசுவரன்.
----------

753. சாகினி கணமு முள்ள
சம்மினி கணமு மெல்லாம்
யோகினி கணமும் பக்கத்
துண்பன வூட்ட வாரீர்.

இதன் பொருளுணர்க.
----------

754. கொடுத்தத னமுதந் தானுங்
கொண்டன ளிறைவி யீண்டுப்
படுத்த[1]பா வாடை யோடும்
பரிகலம் பேரப் பற்றீர்.

கொண்டனளிறைவி யென்றது திருவுள்ளத்திற் கொண்டருளினாள் தேவி யென்றவாறு.
-----
[754-1] "பதம்பெற் றார்க்குப் பகல்விளக்கும் பாவா டையுமாக் கொள்ளீரே." கலிங்கத்துப். (௫௪௮) 548.
----------

755. கமலத்தோன் கையில் வீழ்ந்த
கமண்டல நிறைந்த தண்ணீர்
அமலைக்குத் தூய தெண்ணீ
ராரமு தாக்கி வாரீர்.

வீழ்ந்தகமண்டலமென்றது பிரமா வீழ்கிறபொழுது சோர்ந்து விழுந்த குண்டிகை யென்றவாறு. அமலை - மலமில்லாதவள்.
----------

756. கதக்களி றெட்டும் பட்ட
களந்தொறுங் கும்பஞ் சாய்த்த
மதப்புதுத் தயிலந் தோய்ந்த
மணிமுத்துப் பிளவுங் கொள்ளீர்.

எட்டுமென்ற உம்மையால் திக்கசங்க ளெல்லாமெனக் கொள்க. கும்பம் - யானை மத்தகம்; சினைமுதற்கிளவி.

மத்தகத்தின் முத்தே பிளவு.
----------

757. உந்தியின் முகுந்தன் முன்னா
ளுயிர்த்ததா மரையு மீரைந்
திந்திர தருவுந் தந்த
விலைச்சுரு ளெடுத்துக் கட்டீர்.

உயிர்த்தல் - புறப்பட விடுதல். ஈரைந் திந்திர தருவாவன [1]பத்துக் கற்பக தருக்கள்; அவை பண்டே உண்டாக்கப்பட்டன.
-----
[757-1] பத்துக் கற்பக தருக்களாவன : ((௧)1) மத்தியாங்கம், ((௨)2) தூரியாங்கம், ((௩)3) பூஷணாங்கம், ((௪)4) மாலியாங்கம், ((௫)5) தீபாங்கம், ((௬)6) கிருகாங்கம், ((௭)7) சோதிராங்கம், ((௮)8) போசனாங்கம், ((௯)9) பாசனாங்கம், ((௧0)10) வஸ்திராங்க மென்பனவாம்; இவை முறையே திவ்யஸாரமாகிய நானாவித பானங்களையும், நானாவித வாத்தியங்களையும், அநேகவித ஆபரணங்களையும், அநேகவித மாலைகளையும், அநேகவித இரத்தின தீபங்களையும், பிராஸாத மண்டபாதிகளையும், சந்திராதித்தருடைய ஒளிகளையடக்கும் ஒளியினையும், நானாவகை ரஸத்தனவாகிய நான்குவகை உணவுகளையும், வேண்டிய கலங்களையும், விசித்திர வஸ்திரங்களையும் கொடுக்குமென்பர்; இது ஸ்ரீபுராணத்திற் கண்டது.
----------

758. மாயவன் சங்கு சுட்டு
வடித்தநீ றடைக்கா யோடு
நாயகி யமுது செய்ய
நாமினிப் படைக்க வாரீர்.

இதன் பொருளுணர்க.
----------

759. என்றுகொண் டலகை யெல்லா
மிமையவர் பிணங்கொண் டீண்டக்
குன்றுகொண் டட்ட கூழ்நங்
குடிமுறை பகுக்க வாரீர்.

குன்று - தேவர்கள் பிணக்குன்று.
----------

கூழிடுதல்.

வேறு.

760. அண்டர் பொன்னெயில் வட்டமுட்ட
நெருங்கு பேய்பெற வட்டகூழ்
குண்டர் பொன்னெயில் வட்டமுட்ட
முகந்த ளந்து கொடுக்கவே.

அண்டர் - தேவர். பொன்னெயில் வட்டம் - சுவர்க்கம். தேவர்கள் இறந்து பேய்களானார்கள்.

எ-து : சுவர்க்கத்திலுள்ள தேவர்களாகிய பேய்களுக்கு ஆருகதருடைய பொன்னெயில் வட்டமாகிற வட்டிலில் முகந்து கூழ் வாரும். எ-று.

ஒருபேய்க்கு ஒருவட்டில் கூழ்வார்க்கினும் போதாது. இஃது ஒருபேயினுடைய வயிற்றின் பெருமையும் பசியின் பெருமையுமெனக் கொள்க. ஆருகதருடைய [1]பொன்னெயில் வட்டந்தனக்கு அளவு அஞ்சுநூறு யோசனை நீளமும் அகலமுமெனக் கொள்க.

முற்றுமுணர்க.
-----
[760-1] இந்நூல், 372 - ஆம் தாழிசையையும் அதன் உரையையும் பார்க்க.
----------

761. மைந்து கூர்நில நீர்நெ ருப்பு
வழங்கு மாருத மாகமென்
றைந்து பூதமு முண்ண வுண்ண
வடுங்க ளோடு மிடுங்களே.

மைந்து - வலி, கூர்தல் - மிகுதல்.

மண் நீர் கனல் காற்று ஆகாச மென்னப்பட்ட ஐந்து மகாபூதமும் உண்ண மதுவுடனே கூடக் கூழ்வாருங்கோ ளென்றவாறு.

[1]பிருதிவி பிரமா; அப்பு விஷ்ணு; அக்கினி ருத்திரன்; வாயு ஈசுவரன்; ஆகாசம் சதாசிவன். [2]எனவே பஞ்ச முகூர்த்தங்களும் தேவிக்குத் திருவாசல் காக்கும் ஐந்து பேய்கள்; இதனைப் பிரமயாமள முதலிய நவயாமளங்களிலுங் கண்டுகொள்க. எனவே பூதங்களின் கர்த்தாக்களான ஐவரும் தேவிக்கு அஞ்சுபேயென வுணர்க.
-----
[761-1] "வானு மிறைவன் சதாசிவனு மீச னுமியங்கு மாருதமும் வாளெ ரியுமும்ப னாமரனும் வார்பு னலும்வெங்க ணாகணையி, னானு நிலனும்பி தாம கனுமாக வருமைந்து பூதம்.” மோகவதை. (௧0௫) 105.
[761-2] இந்நூல், 113-ஆம் தாழிசை யுரையைப் பார்க்க.
----------

762. நீல முண்ட முகிற்கு ழாமென
நின்ற பேயிது நிற்பதோர்
ஞால முண்ட வயிற்றி ரைப்பை
யடக்கு மின்க ணடக்கவே.

இது விஷ்ணுதத்துவமான பிரதான பிசாசென வுணர்க.
----------

763. நின்ற லைப்பன நான்மு கத்தொரு
பேய் மடுப்ப நிணம்பெய்கூழ்
தன்ற லைப்பொலி மண்டை யிற்சத
கோடி சாடிகள் சாய்மினே.

பிரமாவினுடைய மண்டைதானே அவனுக்குப் பரிகலமென வுணர்க.
----------

764. பேயி ரங்க விரந்து வந்த
திருந்த கூழது பெய்ம்மினோ
ஆயி ரங்க ணிழந்தபேயை
யருத்தி தீர விருத்தியே.

பேயிரங்க : பேயுமிரங்கவென உம்மைதொக்கது. அருத்தி - ஆசை.
----------

765. எயிறி ழந்து நிலாவி ழந்தும்
விலாவி ழந்து மமர்ந்தபேய்
வயிறி ழந்தில வின்ன மின்ன
மருந்து கூழ்புக வார்மினோ.

இவர் சூரியசந்திரர்.
----------

766. இழந்த வாள்விழி போன பின்னை
யிறந்து வந்து பிறந்தபேய்
அழுந்த வாயி லநந்த கோடி
மடாவெ டுத்து மடுக்கவே.

இவன் ஆதித்தருட் பகன்.
----------

767. நெய்யி ழந்தது பாலி ழந்தது
நீள்பெரும்பசி தீருமோ
கையி ழந்து பிறந்த பேயிது
கோடி சாடி கவிழ்க்கவே.

இவன் அக்கினிதேவன்.
----------

768. மாய்கு டிக்கு நிமித்த மாக
மகட்பெ றுந்திரு மாமடிப்
பேய்கு டிக்க வநேக கோடி
மடாவெ டுத்தவை பெய்ம்மினோ.

இவன் தட்சன்.
----------

வேறு.

769. இதுபகு வாய்த்து வயிற்றினி
லிப்பே ருலகு விழுங்குபேய்
மதுவொடு மண்ட கடத்தடா
மடுக்க வெடுக்க வெடுக்கவே.

இதன் பொருளுணர்க.
----------

வேறு.

770. அடிக்க வடிக்கவெழு மருகப் பேய்கட்கும்
புத்தப் பேய்கட்கு மண்ட கபாடக்கூழ்
பிடிக்கப் பிடிக்கவுறும் வயிறு பழம்படியே
பெருகுக பெருகுகவாய் பருகுக பருகுகவே.

இதன் பொருளுணர்க.
----------

வேறு.

771. இப்படிக் கழுத்தே கிட்ட
விரைத்தபுத் தப்பேய் மண்டை
கைப்பிடி பெறும்பே யோடு
கலந்தொரு கலத்தி லுண்டே.

ஒருகலத்தில் உண்கை நிதானம்.
----------

பேய்கள் கூழ்குடித்து வாழ்த்தல்.

வேறு.

772. தாராக வண்டந் தொடுத்தணிந்தார்
தமக்கிடம் போதத் தமனியத்தாற்
[1]சீராச ராசீச் சரஞ்சமைத்த
[2]தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே.

இதன் பொருளுணர்க.
-----
[772-1] சீராச ராசீச்சரம் - தஞ்சைப்பெருவுடையார் கோயில். 'சீராசராச புரஞ்சமைத்த' எனவும் பாடம்.
[772-2] தெய்வப்பெருமாள் - முதல் இராசராச சோழதேவர்.
----------

773. நீடிய வெண்டிசை நீழல்வாய்ப்ப
நேரிய தெக்கிண மேருவென்னப்
பீடிகை தில்லை வனத்தமைத்த
[1]பெரிய பெருமாளை வாழ்த்தினவே.

நீடிய பீடிகை யெனக்கூட்டுக; நீடிய தில்லை யென்னில் திருச்சிற்றம்பலத்தின் பழமை தோன்றாது.

இவன் ஸ்ரீபீடங்கண்ட பெரிய பெருமாளெனவறிக.
-----
[773-1] பெரிய பெருமாள் - இரண்டாங் குலோத்துங்க சோழதேவர்; "பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி, இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை." குலோத்துங்க சோழனுலா.
----------

774. பிரட்டனை யேபட்டங் கட்டழித்துப்
[1]பேரே ழரையிலக் கம்புரக்க
இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட
[2]விராசகம் பீரனை வாழ்த்தினவே.

பிரட்டனையே : ஏகாரம் இடைச் சொல்லாக்கிக் களைக. இரட்டன் - வல்லான்.
-----
[774-1] இங்கே ஏழரை யிலக்கமென்றது இரட்டபாடியை; சோழவரசர்களின் மெய்க் கீர்த்திகளிலும் சாஸனங்கள் முதலியவற்றிலும் பயின்று வரும் "இரட்டபாடி யேழரை யிலக்கம்" என்பது இதனை வலியுறுத்தும்.
[774-2] இங்கே இராசகம்பீர னென்றது இப்பரணி பாட்டுண்டாரான இரண்டாம் இராசராச சோழதேவரை. இவர் காலத்துச் சாசனங்களிலும் பிற்காலத்தார் சாஸனங்கள் முதலியவற்றிலும் காணப்படும் இராஜகம்பீர வளநாடு, இராஜகம்பீர நல்லூர், இராஜகம்பீர சதுர்வேதிமங்கலம், இராஜகம்பீரன் மலை, இராஜகம்பீரன் திருவீதி, இராஜகம்பீரன் மண்டபம், இராஜகம்பீரச் சம்புவராயன், இராஜகம்பீரச் சேதிராயன், இராஜகம்பீர மாராய னென்னும் பெயர்களே இதற்குத் தக்க சான்றுகளாகும்.
----------

775. அழிவந்த வேதத் தழிவுமாற்றி
யவனி திருமகட் காகமன்னர்
வழிவந்த [1]சுங்கந் தவிர்த்தபிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.

அவனிதிருமகட்காக - பூமிதேவி ஸ்ரீ தேவிகளுக்காக. மன்னர் வழிவந்த சுங்கந்தவிர்த்த - ஸ்ரீ பரதாழ்வான் முதலாக வந்த சுங்கந்தவிர்த்த.
-----
[775-1] சுங்கந்தவிர்த்த பிரான் - முதற் குலோத்துங்க சோழதேவர். இது,
"தொல்லை, மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - யறத்திகிரி, வாரிப்புவனம் வலமாக வந்தளிக்கு, மாரிற் பொலிதோ ளபயற்கு" (விக்கிரம சோழனுலா),
"புவிராச ராசர் மனுமுதலோர் நாளிற், றவிராத சுங்கந் தவிர்த்தோன்” (குலோத்துங்க சோழனுலா),
‘. . . சுங்கந் தவிர்த்தோன் - சுங்கந்தவிர்த்த பெருமாள் குலோத்துங்க சோழதேவர்' ((௸) மேற்படி உலா, உரை),
"கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி, யுலகைமுன் காத்த வுரவோன்" (இராசராச சோழனுலா), என்பவற்றாலும்
"சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழதேவர்" என்று சாஸனங்களில் இவர் பெயர்க்குமுன் அமைந்துள்ள விசேடணத்தாலும் அறியலாகும். இவர் மகனார் விக்கிரம சோழதேவர். அவர் மகனார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவர். அவர் மைந்தர் இரண்டாம் இராசராச சோழதேவர்.
----------

776. செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு
வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்
மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே.

[1]இப்பரணி பாடினார் ஓட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப்பரணி பாட்டுண்டார் விக்கிரம சோழதேவர்.
-----
[776-1] இதனால் விக்கிரம சோழதேவர் மீது ஒட்டக்கூத்தர் கலிங்கப் போர் வெற்றியைக் குறித்து ஒரு பரணி பாடியிருத்தல் கூடுமென்று தெரிகிறது; இதனுடன், "விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப், பெரும்பரணி கொண்ட பெருமாள் - தரும்புதல்வன், கொற்றக் குலோத்துங்க சோழன்" (குலோத்துங்க சோழனுலா), "தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப், பரணி புனைந்த பரிதி - முரணிப், புரந்தர னேமி பொருவ வகில துரந்தரன் விக்கிரம சோழன்" (இராசராச சோழனுலா) என்ற பகுதிகளும் ஒப்பு நோக்கி யாராயற்பாலன.
----------

777. முன்றிற் கிடந்த தடங்கடல்போய்
முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை
மன்றிற் [1]கிடங்கண்ட கொண்டன்மைந்தன்
மரகத மேருவை வாழ்த்தினவே.

எ-து : விஷ்ணுக்கள் கடலிலே யோகநித்திரை கொண்டருளும் வரைச் சூரபன்மாவைச் சுட்டித் தேவசேனாபதிப் பிள்ளையார் கடலைக் கலக்கிப் புறப்படவிடக் கடலிற் சிலுகற்றது; இன்னம் அக்கடலை எனக்கே தரவேண்டுமென்று திருச்சிற்றம்பலத் திருமுற்றத்திலே வரங்கிடக்க மீண்டும் அக்கடல் பெற வரங்கொடுத் தருளினான்போலத் திருச்சிற்றம்பலத்திலே கிடந்து இடங்கெடாமே வரமும் பெற்றதாக இடமும் விரிந்ததாகப் பின்னையும் அக்கடலிலே போகவிட்ட குலோத்துங்க சோழதேவர் மைந்தராகிய சொக்கப் பெருமாளான ராசராச தேவரை வாழ்த்தின. எ-று.

கடல் போல்வானைக் கடலென்றது. மரகத மேருவைப் போல்வானை மரகத மேருவென்றது.
-----
[777-1] (பி-ம்.) 'இடங்கொண்ட'.
----------
9. கூழடுதலும் இடுதலும் முற்றிற்று.

---------------

10. களங்காட்டல் (778-799).

இறைவன் எழுந்தருளல்.

778. ஒருமருங்குடைய மூலநாயகியொ
டொற்றை வெள்ளைவிடை யூர்திமேல்
இருமருங்குமறை தொழவெழுந்தருளி
யிராசராசபுரி யீசரே.

மூலநாயகி யென்றது மூலப்பிரகிருதியான மாயாசத்தியை.
----------

779. யாக நாயகரொ டேனை வானவ
ரிறந்து பேயொடு பிறந்தவா
றாக நாயகி தனக்குணர்த்திவர
வன்னை முன்னைமுனி வாறியே.

யாக நாயகராவார் பிரமா முதலாயின ரிஷிகள்.
----------

சிவபெருமான் தேவிக்குப் பேய்களைக்காட்டல்.

வேறு.

780. நெடுநில மளந்து கொள்ள
வளர்ந்துதா ணீட்டு நாளில்
இடுநிழல் போல நின்ற
விப்பெரும் பேயைப் பாராய்.

இவர் திருமால்.

நிழலென்றது . . . . . ; அன்றியும் ராசாக்கிஞைக்குப் பெயராம்.
----------

781. பொன்முக மொன்று பண்டு
போனது புகுதப் பொன்றித்
தன்முக மைந்தும் பெற்ற
சதுமுகப் பேயைப் பாராய்.

இவன் பிரமா.

பஞ்சவத்திரனென்பது பிரமாவின் முதற்பெயர்.
----------

782. அங்குநின் றேவல் செய்யு
மமரரே யலகை யாக
விங்குநின் றரசு செய்யு
மிந்திரப் பேயைப் பாராய்.

இவன் இந்திரன்; பிசாசேந்திரன்; பண்டு அமரேந்திரன்.
----------

783. விடுபுகை யுயிரா தேங்கி
வெங்கன லுயிர்ப்ப வென்றும்
படுபுகை வடிவங் கொண்ட
பாவகப் பேயைப் பாராய்.

இவன் அக்கினி.

புகையிராதேங்குகையாவது அக்கினியான தன்மை தவிர்தல்; அக்கினியாகிற் புகையுயிர்க்கும்.
----------

784. விசும்பினு நிலத்து முள்ள
வுயிர்பண்டு விழுங்கி யின்று
பசுந்தசை மிசையா நின்ற
தென்றிசைப் பேயைப் பாராய்.

இவன் யமராசன்.

பண்டு உயிருண்கின்ற காலனே ஊன்தின்னவேண்டி யிருந்த தென்பது.
----------

785. சாயைமேற் கொண்டு நின்ற
சாயையே போல வின்று
பேயைமேற் கொண்டு நின்ற
தொருகரும் பேயைப் பாராய்.

இவன் நிருதி.
----------

786. தன்னகத் தங்கி யிங்கு
வயிற்றுத்தீ யாகத் தாங்கும்
பன்னகப் பாசம் வீசுங்
குடதிசைப் பேயைப் பாராய்.

இவன் வருணன்.
----------

787. வாயுவே யாய பண்டை
வடிவற மாய்ந்து பெற்ற
ஆயுவே வடிவ மான
வழிபசிப் பேயைப் பாராய்.

இவன் வாயு.
----------

788. வளரிளங் கொங்கை மங்கை
நங்கையர் வனப்புக் கேற்ற
கிளரொளி வனப்புத் தீர்ந்த
கெடுமதிப் பேயைப் பாராய்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் தட்சன் மக்களென வுணர்க. கெடுமதிப் பேயென்ற நிதானமுணர்க.
----------

789. கருத்துப்பே யேற வேறுங்
கழிபசி யுழப்ப தோர்முத்
தெருத்துப்பே யேறி நின்ற
விப்பெரும் பேயைப் பாராய்.

இவன் ஈசானன்.
----------

790. விடைவல னேந்தி வந்து
வெண்பிறை மலைந்து சூலப்
படைவல னேந்தி மாய்ந்த
பதினொரு பேயைப் பாராய்.

இவர் ஏகாதச ருத்திரர்கள்.
----------

791. ஓரிரு சுடரு மன்ன
யோகமே போகப் போகா
ஈரிரு மறையுந் தேடு
மெண்பெரும் பேயைப் பாராய்.

சந்திராதித்தரைப்போலும் யோகமாவது : இவர்களைப்போலே யிருக்கும் நாதவிந்துக்கள்; அன்றியேயும் சாமயோகமென்பதொரு யோகமுண்டு. அஃது அட்டாங்கயோகம். அதனை யோகாஞ்ஞபதத்திலும் சாங்கியயோக சாத்திரத்திலும் கண்டுகொள்க. இவர் தேவயோகிகள். இது மகாபாரதத்திலுமுண்டு. வேதந்தேடுகையாவது அட்டவசுக்களாய்ச் சைவயோகிக ளென்றும் ஆதாரதேவ ரென்றும் அட்டமகா சித்திகர்த்தாக்க ளென்றும் வேதஞ்சொன்னபடி யுணர்க. எண்பெரும்பேய் - அட்டவசுக்கள்.
----------

792. ஆயுநூ லாயும் பண்டென்
றரும்பசி நோய்க்குத் தங்கள்
பேயுநூல் கேட்க நின்ற
மருத்துவப் பேபைப் பாராய்.

இவர்கள் அச்சுவினிகள்.

ஆயுநூல் - ஆயுர்வேதம். ஆய்தல் - ஆராய்தல். தங்கள்பேயுநூல் கேட்க நிற்றல் - தங்கள்பேயும் பசிநோய்க்கு மருந்து கேட்க நிற்றல்.
----------

793. அணங்குநீ வணங்கா யாக
வன்றிகழ்ந் ததற்குத் தானே
வணங்கியே நன்று நிற்கு
மாமடிப் பேயைப் பாராய்.

இவன் தக்கன்.
----------

தேவி முனிவுதீர்ந்து அருளிச்செய்தல்.

794. அவ்வகை யிறைவர் காட்ட
வமரர்மேன் முனிவு தீர்ந்து
மைவகை நெறிந்த கூந்தன்
மலைமக ளருளிச் செய்வாள்.

இதன் பொருளுணர்க.
----------

795. நின்முத லாகத் தோன்று
நெடியமான் முதலா வுள்ளோர்
என்முத லாக மாய்தற்
குறுவதெ னிறைவ வென்றே.

இதன் பொருளுணர்க.
----------

796. தணிந்தரு ளிறைவ யானுந்
தணிந்தன னென்று தாளிற்
பணிந்தன ளிறைவி நிற்கப்
பரனும்புன் முறுவல் செய்தே.

இதன் பொருளுணர்க.
----------

சிவபெருமான் தக்கனுக்கு மோத்தைத்தலையருளல்.

797. மிக்கன பேசித் தம்மை
வேள்வியி லிகழ்ச்சி செய்த
தக்கனை முதிய மோத்தைத்
தலைபெற வருளிச் செய்தே.

இதன் பொருளுணர்க.
----------

தேவர்கட்கு உயிருமுடம்பும் அவர்கள் பதவிகளும் அருளல்.

798. ஒழிந்தவா னவர்கட் கெல்லா
முயிருந்தம் முடம்பு நல்கி
அழிந்தவா னுலகுந் தங்கள்
பதங்களு மளிப்பக் கொண்டே.

இதன் பொருளுணர்க.
----------

தேவர்கள் வாழ்த்தி விடைபெற்றுச் செல்லுதல்.

799. குலங்கொண்ட வமர ரெல்லாங்
குனிசிலை வீரன் றன்னை
வலங்கொண்டு விடையுங் கொண்டு
போயினார் வாழ்த்தி வாழ்த்தி.

இதன் பொருளுணர்க.

10. களங்காட்டல் முற்றிற்று.

---------------

11. வாழ்த்து (800-814).

800. இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.
-----
[800] (பி-ம்.) 'கிடந்தென’, 'கிடந்தோன்'
----------

801. வில்லவன் வில்லர் மகோதை விடாதவோர்
வல்லவன் வல்ல பிரான்மகன் வாழியே.
-----
[801] (பி-ம்.) 'வல்லவன் வல்லபன் மானதன் வாழியே'
----------

802. குறுகு முடுக்கு மிலங்கு பொலன்கொடி
மறுகும் வகுத்த பிரான்மகன் வாழியே.
----------

803. தென்னவர் தென்மது ராபுரி சீறிய
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே.
----------

804. தில்லை வனங்கட வுள்செறி கற்பக
வல்ல வனம்பெற வந்தவன் வாழியே.
----------

805. மீனவன் மீனவ ரேக விடுபடை
மானதன் மான பராயணன் வாழியே.
-----
[805] (பி-ம்.) 'மீனதன் மீனவ ரேக'
----------

806. ஆனிரை தந்ததி லைம்மடி மும்மத
மானிரை தந்த பிரான்மகன் வாழியே.
----------

807. பார்தரு வார்பெற மாறில் பசும்பொற்
றேர்தரு மாபர கேசரி வாழியே.
-----
[807] (பி-ம்.) 'தேர்தருவார் நரகேசரி'
----------

808. கூட மெடுத்த குளத்தொடு கோபுர
மாட மெடுத்த பிரான்மகன் வாழியே.
----------

809. கோயின்மு னேழ்நிலை கொண்டதொர் கோபுர
வாயில் வகுத்த பிரான்மகன் வாழியே.
-----
[809] (பி-ம்.) 'கொண்டொரு கோபுர'
----------

810. எண்டரு திக்கினிற் றில்லையி னெல்லையின்
மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே.
-----
[810] (பி-ம்.) 'எண்டிசை தொக்கன தில்லையின்'
----------

811. இறையவ னிராச புரந்தர னேத்தும்
மறையவர் வாழி மகத்தவர் வாழியே.
-----
[811] (பி-ம்.) 'புரந்தர னேழ்புவி’; 'மறையவர்வாழி சுராசுரர் வாழியே’, 'மறையவர் வாழி சுராதியர் வாழியே'
----------

வேறு.

812. வாழிய மண்டல மால்வரை
      வாழி குடக்கோழி மாநகர்
வாழிய வற்றாத காவிரி
      வாழி வரராச ராசனே.
----------

வேறு.

813. ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
      ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குந் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே
      கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே.
----------

814. வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை
      வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும்
வாழி திசைக்கப் புறத்து நாற்கவி
      வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே.
-----
[814] (பி-ம்.) 'தமிழ்ச்சொற் றெரிந்ததொன் னூற்றுறை'
----------

11. வாழ்த்து முற்றிற்று.
தக்க யாகப்பரணி மூலமும் உரையும் முற்றுப்பெற்றன.


--------------------
[பின் வருஞ்செய்யுள், தக்கயாகப் பரணி மூலமும் உரையும் உள்ள ஏட்டுச் சுவடியின் இறுதியில் எழுதப்பட்டிருந்தது.]

சீர்குரோ தனவருடம் புரட்டாசி முதற்றேதித்
      திங்க டன்னிற்
காருலவுஞ் சீகாழிச் சிதம்பரநா தம்முனிவன்
      கருணை யாலே
பார்புகழுந் தெட்சயா கப்பரணி தனைமுகித்திப்
      பதியி னன்றாய்
ஏர்பெறுந்தா ழிசைகளையு முரைதனையும் பெரியதம்பி
      யெழுதி னானே.
---------------

[மூலமட்டும் உள்ள ஏட்டுச்சுவடிகளில் அதிகமாகக் காணப்பட்ட தாழிசைகள்.]

1. அருண்ஞான குருபீட மடிவாழி யடியார்க
      ளடிவாழியென்
இருளான பழிமாற விகலான வழிமாற
      விசைவாழியே.

இது கடவுள் வாழ்த்தில் எட்டாந் தாழிசையின் பின்பு காணப்பட்டது.
----------

2. எரிபுக் கனவே டிறைவன் சடையிற்
      பிறையொத் தனவை கையிலிட் டனவுங்
கிரிபுக் கனவக் கிரிசூ ழருவி
      கிழியாத கடங்கள் கிழித்தறவே.

இது 211-ஆம் தாழிசையின்பின் காணப்பட்டது.
-----
[(௨) 2.] (பி-ம்.) 'கிழியாதககங்கள்'
----------

3. குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய
மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே.

இது வாழ்த்தில் 811-ஆம் தாழிசைக்குப் பின் காணப்பட்டது.
----------

4. மலையாழி கடந்த பெரும்புகழ்
      மகட்காயவன் வஞ்சியன் மனுமுறை
தலையாழி கடந்த பெருந்தகை
      தவிராத புரந்தரன் வாழியே.

இது வாழ்த்தின் இறுதியிற் காணப்பட்டது.
----------

திருச்சிற்றம்பலம்.

5. பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
      தாம்பல ரேம்பலித் திருக்க
வென்னெடுங் கோயி னெஞ்சுவீற் றிருந்த
      வெளிமையை யென்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத் திளமயி லனையார்
      விலங்கல்செய் நாடக சாலை
யின்னடம் பயிலு மிஞ்சிசூழ் தஞ்சை
      யிராசரா சேச்சரத் திவர்க்கே.

திருச்சிற்றம்பலம்.

( கருவூர்த் தேவர் திருவிசைப்பா; தஞ்சை இராசராசேச்சரம் )

---------------
வீரபத்திரதேவர் துதி

6. "ஆளு டைத்தனி யாதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள்சி ரத்தை நிலத்திடை வீட்டிய
வாள்ப டைத்த மதலையைப் போற்றுவாம்.”
    (திருச்செந்தூர்ப் புராணம்.)

-----------


This file was last updated on 28 Nov. 2024
Feel free to send your comments to the webmaster (pmadurai AT gmail.com)