pm logo

திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்
ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம் இயற்றியது


tiruttaNikai murukan piLLaittamiz
by vEngkaTAcupramaNiyam
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2024.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்
ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம் இயற்றியது

Source:
திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்
ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம் இயற்றியது
ஸ்ரீ குமார தருவமர் திருக்கைத் திருப்புகழ்ச் சங்கம்,
15, தணிகாசலம் பிள்ளைத் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5
1964
முதற்பதிப்பு - ஜனவரி 1964
திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ். ரூ.1/50
(உரிமை பெற்றது)
வாசு பிரஸ், 65, பெரிய தெரு, சென்னை-5
----------------

பொருள்
1. ஸ்ரீகாஞ்சி காமகோடிபீட ஜகத்குரு அருளிய ஸ்ரீமுகம்
2. ஸ்ரீ சிருங்கேரிபீட ஜகத்குரு " "
3. முன்னுரை
4. சான்றுரைகள்
5. நூல் :-
காப்பு வாரானை
செங்கீரை அம்புவி
தால் சிற்றில்
சப்பாணி சிறுபறை
முத்தம் சிறுதேர்
6. குறிப்புரை
7. பிழைத்திருத்தம்
8. பாட்டு முதற் குறிப்பகராதி
-----------

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ மடம்
காஞ்சீபுரம் [முத்திரை]
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீமுகம்.

தமிழ் மொழியிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் பிள்ளைத்தமிழும் ஒன்று.விநாயகர், முருகன், உமாதேவி முதலியோர் மீது பிள்ளைத்தமிழ்கள் உண்டு. கவிஞர்கள் தம்மை ஆதரித்த அரசர் கள்மீதும், உபகாரிகள்மீதும் நன்றியறிவின் காரணமாகப் பாடிய பிள்ளைத்தமிழ்களும் உண்டு.

பாட்டுடைத் தெய்வத்தையோ, அரசனையோ, உபகாரியையோ சிறு குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில் அவர்களது செயல்களைப் பலபடப் பாராட்டுவர். ஆடவருக்கும், மகளிருக்கும் காப்புப் பருவத்திலிருந்து அம்புலிப் பருவம் வரை உள்ள ஏழு பருவங் களும் உண்டு. பாக்கியுள்ள மூன்று பருவங்களில் சிற்றில், சிறுபறை, சிறுதேர்ப்பருவங்கள் ஆடவருக்கும், அம்மானை, நீராடல், பொன்னூசல் பருவங்கள மகளிருக்கும் உரியனவாகும்.

முருகக் கடவுளுக்குச் செந்தமிழ்ப் பரமாசாரியன் என்ற ஒரு பெயர் உண்டு. அந்தப் பரமாசாரியன்மீது குமர குருபரரும், பகழிக் கூத்தரும் பிள்ளைத்தமிழ் இயற்றியுள்ளனர். இதர ஸ்தலங்களில் கோவில் கொண்டுள்ள முருகன்மீது இயற்றிய பிள்ளைத் தமிழ்களும் உண்டு.

திருத்தணிகை மலையில் வீற்றிருந்தருளும் முருகன்மீது வித்வான் ஸ்ரீ வேங்கடசுப்பிரமணியன் இயற்றிய பிள்ளைத்தமிழ் எனும் நூல் பார்வையிடப்பட்டது. முன்னோர்கள் முறையை அனுசரித்து, எளிய நடையில் பக்தி ததும்பப் பாடியுள்ளார்.

காப்புப் பருவத்தில், புலியும் பசுவும் பகைமை மறந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்துகொண்டுவர, மலை நெகிழக் கண்ணன் குழல் ஊதிய தாகக் கூறிய பகுதியும், "என்னில் எனக்கு இனியானென மேவும் இறையே என்று கூறிய பகுதியும், முருகனை "சச்சித் சுகமென உற்றுத் திகழ்தரு சண்முக சுந்தரனே" எனக்கூறிய பகுதியும் சிறந்து விளங்குகின்றன.

நூலை இயற்றிய ஸ்ரீ வேங்கடசுப்பிரமணியத்திற்கும், நூலைப் படிக்கும் பக்தர்களுக்கும் எல்லா நலன்களும் இனிது உண்டாக ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திர மௌலீசுவரரைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றோம்.

யாத்ராஸ்தானம்: கல்யாணபுரம்,        நாராயணஸ்மிருதி
சோபகிருது அதிககார்த்திக
பகுளதிரயோதசி
-----------------

ஸ்ரீ ஜகத்குரு மஹாசமஸ்தானம், சாரதாபீடம், சிருங்கேரி
ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீமுகம்
ஸ்ரீ ஈ.வே.வேங்கடசுப்ரமண்யம்,
15, தணிகாசலம் பிள்ளைத் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5

தங்கள் லெட்டரும் திருத்தணிகை பால முருகன்பேரில் தொடுக்கப்பட்ட பிள்ளைத்தமிழ்ப் புஸ்தகமும் கிடைக்கப்பெற்று ஸ்ரீ மஹா சந்நிதானத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கலியுகவரதரான ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமியின் பால்ய லீலா வைபவங்களை நல்ல தமிழில் பத்தி ரசத்துடன் அழகாக விவரித்திருக்கிறீர்கள். பாலர் முதல் எல்லோரும் அதை அநுபவித்துப் படித்துப் பலன் அடைய லாயக்காக இருக்கிறது. பத்தி ததும்பும் இந்த நூலை எல்லோரும் படித்து, பத்தி பெருகி, ஆஸ்திகம் வளர ஸ்ரீமஹாசந்நிதானம் ஆசீர்வதித்து அருளியது.

ஸ்ரீ ஜகத்குரு மஹா சமஸ்தானம்,)       தங்கள்
சாரதா பீடம், சிருங்கேரி, கடூர்(மைசூர்) 30-12-1963       N. லக்ஷ்மீநாராயண சாஸ்திரி
      ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மஹா ஸ்வாமிகளின் அந்தரங்கக் காரியதரிசி.
-----------------

முன்னுரை

வேலுமயிலுந் துணை
“ வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி
* *
"வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே.''

என்ற ஸ்ரீ அருணகிரிநாதரின் அருள்வாக்கின்படி பயன் அடைந் தோர் எண்ணற்றவர். சித்திகளும் பல்வகைப்பட்டன. ஆயி னும் 'செல்வத்துட்செல்வம் செல்வன் கழலேத்துஞ் செல்வம்' ஆகும். இந்தச்சங்கத்தில் மூவர் இச்செல்வம் பெற்றனர். சங்கத் தின் முதல தலைவரான, ஸ்ரீ ந.சுப்பிரமணிய அய்யர் திருப்புகழ் கற்ற பயனாகப் பல பாடல்கள்
டல்கள் பாடித் 'திருத்தணிகைப் பிர பந்தத் திரட்டு' என்ற நூலை இச்சங்கத்தின் மூலம் 1924-ஆம் ஆண்டில
டில அச்சிட்டு வெளியிட்டார். பின்னர், இச்சங்கத்தின் பஜனைகளில் இசைப் பணியாற்றி வந்த ஸ்ரீ .சங்கரய்யரும் ஸ்ரீ R.சோமசுந்தர அய்யரும் இப்பேறு பெற்றனர். ஸ்ரீ சங்கர அய்யர் தணிகேசன்மேல் 108 அருமையான கீர்த்தனைகள் ஓர் ஆண்டில் இயற்றி முடித்துத் திருத்தணியில் முருகன் சந்நதியில் பல பெரியோர்முன் அவற்றைப் பாடி நிறைவிழாக் கொண்டாடி னார். ஸ்ரீ R.சோமசுந்தர அய்யர் காமாக்ஷியம்மன்மேல் திருப் புகழ் போன்ற சந்தப்பாக்கள முதலான பாடி 1930-ஆம் ஆண்டில் காமாக்ஷி திருப்புகழ்" என்று தொகுத்து வெளியிட்டார். அதனால் அவர் 'காமாக்ஷி தாஸர்' என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்.

திருப்புகழ் கற்ற பயன் இத்தன்மைத்தென்றால், தனது இல்லத்துக்கு வள்ளிமலை சாமி சச்சிதாநந்தா அவர்கள் அடிக் கடி வந்து, திருப்புகழ் பாடக் கேட்ட பயனாக, சிறுவராக இருக் கையிலேயே, ஸ்ரீ S. V. சேதுராமன் பாடத்தொடங்கி இன்று அருண் மாரியாகப் பாடி வருவது உலகறிந்த விஷயம்.

யான் திருப்புகழைக் கற்கவில்லை. முறையாகக் கேட்டும் பழகவில்லை. ஆனால் சுமார் ஐம்பது ஆண்டுகளாக என் தந்தை யார் திருப்புகழ் அரசு ஸ்ரீ ஈ. வே. வேங்கட ராவ் அவர்கள் இடைவிடாது வாரந்தோறும் ஞாயிறன்று நடத்தி வரும் பஜனைகளின் திருப்புகழ் முழக்கமும், அவ்வமயம் அவரும் ஸ்ரீ ந. சுப்ர மணிய அய்யரும் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விளக்க உரைகளும் என் தந்தையாரிடம் அடிக்கடி வந்து எம்பெருமானாம் முருகனைப் பாடிப் பரவி அளவளாவிய திருப்புகழ்ச் சாமி சச்சிதாநந்தா, திருப்புகழ் மணி,M.கணேசய்யர், R.சுப்பையர், கிருபாநந்த வாரியாரி, தேவாரம் கந்தசாமி பிள்ளை, மீனாக்ஷி (மாணிக்க முதலியார்).T.V.சீதாராமய்யர் முதலான பெரியோர்களின் அமுதன்ன மொழிகளும், பல அலுவல்களிடையே கேட்டுங் கேட்காமலிருந்த, என் செவியினுள்ளும் ஊடுருவிப் புகுந்து, உள்ளத்தைத் தொட்டு, உணர்வைத தூண்டியதாலும், திருத் தணிகேசன் இவ்வெளியனென்பாலுந் திருவருள் பாலிக்கக் கொண்ட கருணையாலும்,

உள்ளத்துள் ஊறும் உணர்வே யுனதருளாம்
வெள்ளத்தில் யான்வாழ வேண்டுவனே--வள்ளிமகிழ்
வேளே ! தணிமருவி விண்ணோர் பணியுமுன
தாளே துணையென் றனக்கு.

என்ற ஒரு வெண்பாவை முதன் முதலாகப் பாடினேன். இதைத் தணிகை மணி, திருவ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்களிடம் காண்பித்தபோது, 'பாட்டு நன்றாக இருக்கிறது, இவ்வாறே பாடுங்கள்' என்று என்னை ஊக்குவித்தார். இங்ஙனம் தொடங்கிய யான் பாடிய பாக்களை ஸ்ரீ தணிகை மணி, ஸ்ரீ கி.வா.ஜகந் நாதய்யர், வித்வான்
வித்வான் ஸ்ரீ இராஜ.சிவ. சாம்பசிவ சர்மா அவர் களிடம் சென்று காட்டி வருவது என் வழக்கம். இப்பெரியோர் களின் நல்லாசியில் என் தமிழ் வளம் பெற்றது என்று நன்றிப் பெருக்குடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் பயனாக முதலில் இச்சங்க நாயகனாம் திருத்தணிகேசன்மேல் (பருவத்துக் கொரு பாடல் கொண்ட ) ஒரு பிள்ளைத்தமிழ் இச்சங்கத்தின் 40-ஆம் ஆண்டு (1957) மலரிலும், (36 வெண்பாக்கள் கொண்ட) வேலவன் புகழ் மாலை அந்தாதி 41-ஆம் ஆண்டு (1958) மலரி லும், வெளியிடப் பெற்றன. 1959-ஆம் ஆண்டு ஜூன் மீ முதல் வாரம் ஓர் இரவில் (சுமார் 2 மணிக்கு) அரசடி கற்பக விநாயகர் என்னை தன் கரத்தாலெடுத்துக்கொண்டு ஏதோ அமு தூட்டும் கனவு கண்டேன். 16-6-59 அன்று என் தந்தையார் 80-ஆம் ஆண்டு நிறைவு பெற்று இனிதிருந்தார். 20-6-59 அன்று நடுநிகியில் (விநாயகர் தோற்றமளித்த அதே நேரத்தில்) யான் விழிப்புற்றது திடீரென்று அப்பொழுது என் தந்தையார் உடல் நிலை மிகவுங் கவலைக்கிடமானதற்குத் தக்க சிகிச்சையளிக்க வசதியாக இருந்தது. மறுநாள் விநாயகர்மேல் ஒரு சந்தப்பாவும் பழநிமலை முருகன்மேல் ஒரு வாரானைப் பருவப் பிள்ளைத் த் தமிழ்ப்பாவும் வந்தன. சந்தப்பாவை வழியில் படித்துப்பார்த்த் நண்பர் ஒருவரின் தந்தையாருக்கும் கவலைக்கிடமான உட நிலை சரிப்பட்டது. இதனையறிந்த என் நண்பர் ராவ் சாகேப் திரு நல் முருகேச முதலியார் அப்பாடலை அச்சிட்டு அரசடி கற்பக விநாயகர் கோயிலில் கயப்பாக்கம் திரு சோமசுந்தரம் செட்டியாரின் சொற்பொழிவுடன் இலவசமாக விநியோகித்தார். பழநிமலை முருகன் பிள்ளைத்தமிழ் (பருவத்துக்கொரு பாடல்) டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை முதலான சான்றோரின் மதிப்புரை களுடன் சங்கத்தின் 42-ஆம் ஆண்டு (1958) மலரில் வெளியிடப் பெற்றது. அதன் பின் திருத்தணிகைச் சண்முகன் திருப்பள்ளி யெழுச்சியும் அவ்வாண்டிலேயே வெளியிடப் பெற்றது.

சந்தத் தமிழூட்டிய கந்தன் என்பாற் பின்னும் காட்டிய கருணையை என்னென்று சொல்வேன்! 1960-ஆம் ஆண்டு ஆகஸ்டு மீ" நான் அலுவலகத்திலிருந்து ஓய்வுபெறவேண்டியிருந் தது. என் தொழிலகத்தில் ஓய்வுச் சம்பளம் இல்லாதபடியால், மேற்கொண்டு என்ன செய்யலாமென்று தெரியாமல் கவலைமிக் கிருந்தேன். 30-12-59 அன்று வைகறையில் இந்தச் சங்கநாயக ராம் திருத்தணிகேசர் என் கனவில் தோன்றி 'அழகு மணக்கும்' என்ற முத்தப்பருவப் பாடலை எடுத்துக்கொடுத்துப் பாட வைத் தார். பொருளைவேண்டியான் பட்ட கவலையைத் தீர்க்காமல், தன் னைப்பற்றிப் பாடச் செய்த முருகபிரானின் விளையாட்டை வியந்து விழிப்புற்றேன் உடனே அப்பாடலை நினைவு படுத்திக் குறித்துக்கொண்டேன். இரண்டு தினங்களுக்குப் பின்னர், அதே நேரத்தில் செந்தாமரைப் போதன்ன மேனியராய் விநாயகர் என் கனவில் தோன்றி இரண்டு செங்கனிகளை என் கரத்திலளித்து மறைந்தார். கனவில் தன்னைப் பாடவைத்த 'இகபர சௌபாக்ய மருளும்' பெருமாள் எனக்கு அலுவலகத்தில் மேற்கொண்டு ஓராண்டு பணியாற்ற வாய்ப்பை உதவியதுடன் 2 ஆண்டுகளாகப் பல சான்றோர்பாற் சென்று, கந்தம் பெருமானின் அருமை பெருமைகளைப் பல பிரிவுகளில் பல அரிய கருத்துக் களடங்கிய கட்டுரைகளும் கவிதைகளும் பெற்று, அடியேன் தொகுத்த "கநதன் மலர்" என்ற தெய்வமணங் கமழும் நூலை அவ்வாண்டிலேயே, என் தந்தையாரின் 80-ஆம் ஆண்டு நிறை விழா மலராக, வெளியிடும் பேற்றையும் பெறுமாறு ருளினார். கனவில் வந்த முத்தப் பருவப் பிள்ளைத் தமிழ்ப் பாவைத் திரு தணிகை மணி அவர்கள் கேட்டுப் பிள்ளைத்தமி ழைப் பருவத்துக்கொரு பாடலாகப் பாடத் தூண்டினார். ஆனால் எனது உழுவலன்பர் வித்வான் திரு சாம்பசிவ சர்மா பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் பாடும்படி அன்புக் கட்டளையிட்டார்.வந் தால் பாடுகிறேன்' என்று சொன்னேன். அவரும் 'வந்தபோது பாடுங்கள், போதும்' என்றார். பிள்ளைத் தமிழில் அவ்வப்போது வந்த 100 பாக்கள் 1961-ஆம் ஆண்டில் நிறைவு பெற்றன. என் பாக்களை முதலில் என் தந்தையார் கேட்டு மகிழ்வர். 'ஆனால் என்னவந்தது இன்றைக்கு, எங்கே படித்துக்காட்டு' என்று இப் பிள்ளைத் தமிழ் இனிது முடியும் வரையில் என்னைத் தூண்டியது எனது தாயார் திருமதி நஞ்சம்மாள் அவர்களேயாம். ஆகவே, இந்நூலின் பயனை அப் பெருமாட்டியின் நல் நினைவுக்குப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்.

பண்ணவிழ் செஞ்சொற் றிருப்புகழ் ஓங்கும் படியுயர்ந்த
தண்ணறுங் கல்வத் தணிகைவேள் பிள்ளைத் தமிழியம்பென்
றெண்ணரும் ஊக்கம் அளித்தநஞ் சம்மை எனதருந்தாய்க்
குண்ணிறை நன்றிப் பணியென இந்நூல் உலவிடுமே.

அமுதன்ன திருப்புகழ் 16000, கந்தரந்தாதி, திருவகுப்பு, கந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலான அருளமழை பொழிந்தஸ்ரீ அருணகிரிப் பெருந்தகையார் தம் பாடலை 'அடியேனுரைத்த புன் சொல்' என்று குறிப்பிட்டுள்ளார் எனின் இச்சிறுநூல் எத்தன் மைத்து என்று சொல்வதெப்படி என எனக்குத் தெரியவில்லை. சொற்றொடரோ, அடியோ, முழுப்பாவேயோ பாட்டுடைத் தலை வனாம் தணிகை நாயகனே எடுத்துக்கொடுக்க வந்த பாக்களன்றி என் சொந்தப்பா ஒன்றுமில்லை யாகையால், குணமெல்லாம் அப் பெருமானுக்கே உரித்தாகும். குறைகள் அடியேன் அப் பெருமான் கொடுத்தவற்றைச் சரிவரக் கொள்ளாததால் ஏற்பட் டனவாம். அவற்றைக் கண்ணுறும் பெரியோர்கள் தயை கூர்ந்து என்னிடம் தெரிவித்தால், மறுபதிப்பில் திருத்தி வெளிப் படுத்தும் கடப்பாடுடையேன் என்பதைப் பணிவுடன் தெரி வித்துக் கொள்கிறேன்.

இந்நூலுக்குச் சான்றுரைகள் வழங்கியுதவிய தணிகைமணி திரு வ.சு.செங்கல்வராய பிள்ளை,M.A., வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகந்நாத அய்யர்,M.A.,திரு அ.மு.பரமசிவானந்தம், M.A., M.Litt., குகஸ்ரீ திருமுருக கிருபானந்தவாரியார் ஆகிய பெருந்தகையாளர்க்கும், அரிய குறிப்புரை எழுதியுதவிய ஸ்ரீ சாம்பசிவ சர்மா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்தும் வகையறியேனாய் அன்னார்கட்கு எல்லா நலன் களையும் எப்பொழுதும் யாண்டும் அளித்தருளுமாறு திருத்தணி கேசன் திருவடிகளைச் சிந்தித்து வந்திக்கின்றேன்.

செவ்விய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய 'வாசு பிரஸ்' நிலையத்தார்க்கும், புத்தகத்தின் மேல் அட்டையினையும் உள்ளுறை படங்களையும் சீரிய முறையில் அச்சிட்டு உதவிய 'நியோ ஆர்ட்பிரஸ்' நிலையத்தார்க்கும், அட்டையில் திகழும் திருத் தணி கேசரின் பிளாக்கினை' உதவிய திருவல்லிக்கேணி குலாயல் பிரஸ்' உரிமையாளர் திரு காளத்தி நடேச முதலியாருக்கும், இந்நூல் பல்லாற்றானும் செம்மையில் வெளிவரற்குக் காரணமா யிருந்த 'மதுரமித்திரன்' ஆசிரியர் திரு ந. சுப்பிரமணிய அய்யர் உளமார்ந்த நன்றி எஞ்
முதலான நண்பர்களுக்கும் என்ஞான்றும் உரித்தாகுக.

இறைவன் அருளாட்சியில் மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகள் மிகவும் அற்பமாக இருக்கலாம். இப்பனுவலும் சிறு பிரபந்தங் களில் ஒன்றேயாம். ஆயினும் பல இன்னல்களிடையே என்னைப் பாடவைத்து 'இன்பமே யென்னாளுந்துன்பமில்லை'
என்ற மனப்பான்மையை சிறிது அளித்ததுடன் பல்வேறு இடைஞ்சல்களையும் மீறி இந் நூல் வெளிவரக் கருணை செய்துதவிய திருத் தணிகேசன் திருவடியையும், அருளாசி நல்கியுதவிய தவநிறை ஜகத்குரு மஹாசந்நிதானங்களின் சரணங்களையும் வாழ்த்தி வணங்கிப் பணிவுடன் அமைகிறேன்.

"ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்கச் செவ்வேள்
ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் யடியா ரெல்லாம்."

சென்னை-5) ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம்,
1-1-1964) காரியதரிசி
ஸ்ரீ குமார தநுவமர் திருக்கைத் திருப்பீபுகழ்ச்சங்கம்.
------------------

திருத்தணிகேசர் துணை

மதிப்புரை
ஸ்ரீ வ.சு.செங்கல்வராய பிள்ளை M.A., அவர்கள் உதவியது

"தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந் தலம்போல்
வரையிடங்களிற் சிறந்ததித்தணிகை மால்வரையே'' - எனவும்

"மந்தரத்தினு மேருமால் வரையினும் மணிதோய்
கந்தரத்தவன் கயிலையே காதலித்தது போல்
சுந்தரக்கிரி தொல்புவி தனிற்பல வெனினும்
இந்தவெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சியுண டெமக்கே' - எனவும்

முருகவேளாலேயே பரராட்டப் பட்டதலம் திருத்தணிகை. இத்தலத்தில், அப்பெருமான் 'மின்போலும் இடைமடவார் இரு மருங்கும் வீற்றிருப்ப. வேல்கைக் கொண்டே, அன்பே ஓர் உரு வாக அருள் சுரந்து' நிற்கின்றார் இவரது திருவடியைக் கன விலும் மறவாது "இறைவனடியாரெவரோ அவர்தம் குறைவில் புகழே குறிக்கும் நிறை குணத்து விச்சைசெறி விப்பிரனார்" திருப்புகழ அரசு' என்று முருகனடியார்களால் போற்றப்படும் தவநெறிச்சீலர் திருவாளர் ஈ. வே. வேங்கடராவ் அவர்கள். "மகன் தந்தைக் காற்றுமுதவி இவன்தந்தை யென்னோற்றான் கொல் என்னுஞ் சொல்'' எனும் பொய்யாமொழியார் திருவாக் குக்கு இலக்காவார் இவரது மூத்த மகனார், அன்பர் திரு ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம் அவர்கள் இவரும் தந்தையாரைப் போலவே, தணிகையெம் பெருமானிடத்துத் தணியாத காதல் கொண்டவர். தந்தையைப்போலவே, அருணகிரியாரின் அமுத மொழிகளில் ஆசைகொண்டவர் 'அகதியெனதுள் மதிலு நட மிடும் அருளின் நிறைவெனு முருகனே[*] எனவரும் அவர் வாக்கு இதற்குச் சான்றாம். அதனால் இவர் தமது உள்ளத்தில் திருப்புகழ் ஆதிய அருணகிரியாரின் செவ்விய மொழிகள் ஊறி, ஊறி, அதன் பயனாக இறைவன் திருவருள பெரிதும் நிரம்பப் பெற்று, அழகிய சந்தப்பாக்களைப் பாடும் திறத்தினைக் கைவரப்பெற்றனர். இவர் அருணகிரியாரின் வாக்கினைத் தழுவி முருகவேளுக்கு, அவனரு ளால், பலவித சந்தங்களில் நூற்றுக்கணக்கில்
பாடல்களைப் பாடியுள்ளார்.
---
[*] இந்நூலில் 57-ஆம் பாடல்
----

'ஆசைக்கோர் அளவுண்டோ' என்னும் பழமொழிக்கேற்ப, இதனுடன் நில்லாது, முருகவேளின் அடியார்களது வரலாற்றைக் குறிக்கும் பாமாலை[#] ஒன்றும் இயற்றியுள்ளார். அம் மட்டோ. திருத்தணிகேசன் மீது இப் பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியுள்ளார்.
---
[#] கந்தன் மலர் 201-210 பக்கங்களைப் பார்க்கவும்
---

இதற்கு முன்னரே, கந்தப்ப தேசிகர் அருளிய, பிள்ளைத்தமிழ் ஒன்று தணிகைக்கு உண்டு- ஆயினும் இப் பிள்ளைத்தமிழுக்குத் தனிச் சிறப்பு ஒன்று உண்டு. அஃதியாதோ வெனின், தணிகைத் தலத்தைப் பற்றிய அரிய விஷயங்கள் பலவும், தணிகேசரைப் பற்றிய அரிய விஷயங்கள் பலவும் இந் நூலில் காணக் கிடைக்கும். இந்நூலின் சிற்றாராய்ச்சிபோன்ற குறிப்புக்கள் சிலவற்றைக் காட்டுவாம்.

1.அப்பர் சுவாமிகள் அருணகிரி நாதர் முதலான அருளாளர் அருஞ் சொற்றொடர்கள்
மிளி ரும் பாக்கள் - 3, 32, 36, 38, 40, 45, 51, 55, 59, 67, 68,72, 73, 81, 84, 88, 93, 100.
2. இயற்கை வர்ணனை -- 6, 11, 31, 43, 52, 68, 80.
3. கந்த புராண, தணிகைப் புராண வரலாறுகள் -- 7, 10, 15, 17, 21, 22, 28, 34, 37, 39, 40,
42, 49, 52, 53, 60, 62, 65, 69, 78, 82, 83, 85, 86, 90, 92, 93, 94, 95, 97, 98.
4.சந்த அழகு -- 6, 8, 9, 10, 79.
5.சம்பந்தர் லீலை -- 25, 44, 49, 52, 57, 60, 82.
6. செங்கீரை இலக்கணம் -- 11.
7. சொல்லழகு -- 26, 41.
8. திருத்தணிகை :
ஆபத்சகாயர் 20, 53, 73.
ஆடிக்கிருத்திகை தெப்பம் 56.
ஆதிதணிகாசலம் 7, 18, 19.
ஐராவதம் 35.
கிரிவலம், தீர்ததங்கள் 67.
ஏழுசனை 31.
தல ஐதிஹ்யம் 7.
கோயிலின் அமைப்பு 20, 53.
தலத்தில் பூசித்துப் பேறு பெற்றவர்கள் 5, 24, 28, 29, 31, 43, 52.. 54, 68, 86.
தலத்தின் பேர்கள் 45.
தலமூர்த்தியின் அணிதவழ் கோலம் 20, 89.
தலமூர்த்தியின் ஆராதனை 36.
தலமூர்த்தியின்மேனிப்பூச்சு 67.
தலத்தைத்தொழுதலின் சிறப்பு 45,55,80
தொண்டைநாட்டின் நடு 95.
நந்தியாற்றின் வரலாறு 1, 43.
மலைவர்ணனை 54.
விசயராகவர் தளி 1.
வீராட்டேசுரர் 4, 69,

9. திருவிளையாடற் புராண வரலாறுகள் 37, 49, 57, 52, 60, 62, 64, 65, 70, 90.
10. தோத்திரப்பாடல் 95.
11. நவக்கிரகங்களின் பேர்கள் அடங்கிய பாடல் 82.
12. நவரத்தினங்களின் பேர்கள் அடங்கிய பாடல் 98.
13.பழநிப்புராண வரலாறு 57, 78, 90,
14. மந்திரங்கள் மிளிரும்கள் 9,28.

15. முருகபிரான்:-
அங்கவர்ணனை, கமல ஒப்புமை 18, 58, 71.
அடியார்கள் பெயர், வரலாறுகள் 37, 40, 52, 54, 60, 69.
அணிகள் 13
அருள் 18, 40, 68, 77, 84.
ஊர்திகள் 95.
குழல் இசை பயிலல் 60.
தமிழ்வளர் வேள் 24, 25, 29, 31, 33, 37, 44, 49, 59, 60, 83, 86, 90, 93, 95, 99.
திருநடனம் 18, 57, 81.
திருநாமங்கள் 94.
நவவீரர் 10, 34, 64, 70, 85, 91, 97, 98.
படைகள் 39, 45, 64,
பதாகை 96.
பலதலங்கள் 27, 51, 79.
வடிவம் 10, 14, 16, 18, 26, 28. 41, 51, 59, 96, 99, 100.

16. யோகம் 46.
17. வடமொழிச் சொற்கள் நிரம்பிய பாடல் 59.
18. வேலை மயிலைக் கடை க் கண்ணை நினைக்க வரும் பயன்கள் 77.
----------------
பிரமதேவன் உலகிலுள்ள அழகுகள் ஒவ்வொன்றிலுமிருந் தும் ஒருதிலம் எடுத்து உருவாக்கின நங்கை
திலோத்தமை என்பர். அதுபோல, முருகவேளின் பல பிள்ளைத்தமிழ்களி லுள்ள பல அழகுகளையும் இப் பிள்ளைத்தமிழ் ஒன்றிலேயே ஆசிரியர் அமைத்துள்ளதை நாம் கண்டு களிக்கிறோம்.

பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவம் பாடுவதில்தான் புல வரின் திறமையைக் காணவேண்டுமென்று ஆன்றோர் கூறுவர். இப் பிள்ளைத்தமிழில் ஒவ்வொரு பருவத்திலும் ஆசிரியரின் சொல்லாட்சி, பொருளாட்சித் திறத்தையும், பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிநலனையும் நாம் வியந்துமகிழ லாம். அப்பர், அருணகிரிநாதர் முதலான பெரியோர்களின் அருஞ்சொற் பிரயோகங்களும் ஆங்காங்கு மிளிர்கின்றன. தணிகையில் தமிழ்மொழி நிலைத்து வளர்வதையும் பல பாடல்கள் குறிக்கின்றன.

முருகன் திருவருளால் இந்நூல் எழுந்ததாதலின் இந்நூலின் சிறப்பெலாம் அவ்விறைவன் திருவருளுக்கே உரியதாகும். ஆதலின் இந்நூலைத் தமிழகம் ஆதரித்துப் படித்து இன்புற்றுத் திருத்தணிசேகர் திருவருளகூடிட இம்மை மறுமைப் பெரு வாழ்வை அடைவதாக.

உள்ளத் துவகை உறத்தணிகை வேலவற்குப்
பிள்ளைத் தமிழொன்று பேசினர்-நள்ளு
குணவேங் கடசுப் பிரமண்யர் கூர்ந்து
தணவாத காதல் தழைத்து.

சென்னை 1,1 6-11-61 }               வ.சு.செங்கல்வராயன்.
----------------------

சிறப்புப் பாயிரம்
ஸ்ரீ கி.வா.ஜகந்நாத அய்யரவர்கள் உதவியது

செந்தமிழ் நயமும் பக்தி வளமும் பொருந்தப் புலவர்கள் பாடும் இனிய பிரபந்தங்களுள் பிள்ளைத்தமிழ் ஒன்று. பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாக வைத்துப் பத்துப் பருவங்களி லும் அக்குழந்தை விளையாடும் விளையாட்டு வகைகளை வருணித் துப் பாடுவது வழக்கம். ஏனைய தலைவர்களைப் பற்றிப் பாடும் போது அவர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடவேண்டும். அது மேட்டுமடையில் தண்ணீர் பாய்ச்சுவதுபோன்றது. ஆனால், என்றும் இளையபிரானும் ஈடில்லாப் பேரழகனும் ஆகிய முருக னைக் குழந்தையாகப் பாவித்துக் கற்பனை செய்யவேண்டிய அவ சியம் இல்லை. அவன் எப்போதும் குழந்தைக் குமரன். ஆகவே அவனைப் பிள்ளைத்தமிழ்பாடிப் பரவுவது இயல்பானது; அது பள்ளமடையாக இருக்கும்.

அருணகிரிநாதப் பெருமான் வாய் மலர்ந்தருளிய திருவாக் கிலே ஊறி, அதிலே மிதந்து, அதையே உணவாகவும் மூச்சாக வும், மருந்தாகவும், விருந்தாகவும் நுகர்ந்த பெருமக்களுக்கு முருகன் அருளும் செந்தமிழ் நலமும் எளிதிலே கைவரப்பெறும். இந்த உண்மையான கருத்துக்குச் சான்றாகத் திகழ்வது, இந்தத் திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்.

இதனை இயற்றியவர் திருப்புகழ் அரசாகிய திரு வேங்கட ராவ் அவர்களின் புதல்வராக விளங்கும் இளவரசு, முருகனை வழிபடுவதென்பது இவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிப் போன செயல். மனத்தால் சிந்தித்து, வாயினால் திருப்புகழைப் பாடி, உடம்பால் வழிபாடு செய்துவரும் இந்த இளவரசர் முரு கன் பக்தி உணர்ச்சி விஞ்சிப் பல பாடல்களைப் பாடும் வழக்கத்தைப் பெற்றார். திருப்புகழில் பலகாலம் ஈடுபட்ட உள்ளமும் நாவும் உடையவராகையால் எளிதிலே சந்தப்பாடல்களைப்பாடும் திறமை வரை வந்து சார்ந்தது. முருகனுடைய திருக்கோலத் தையும், வீரத்தையும், ஈரத்தையும் கல்வி கேள்வி அநுபவங் களால் உணர்ந்தவராதலின் பாடுவதற்குரிய கருத்துக்கள் இவ ருடைய உள்ளத்தில் ஊற்றுப்போலப் பெருக்கெடுக்கின்றன. சந்தப்பா வடிவமும் கந்தப்பிரான் பெருமையும் இணைந்து சொல்லும் பொருளும் இழைந்து பாடும் ஆற்றலில் வல்லவ ரானார். பல சந்தப்பாடல்களும் வேறு பாடல்களும் பாடிய இவ்வன்பர் இப்போது திருத்தணிகை முருகன் திருவருள் உந்த, இந்தப் பிள்ளைத் தமிழைப்பாடி நிறைவேற்றியிருக்கிறார்.

பழம் புலவர் பாடிய பிள்ளைத்தமிழ்கள் பலவற்றை முருகன் ஏற்று அருள் புரிந்திருக்கிறான். ஆயினும் புதியரோஜாப் பூவைப்போல இந்தப் பிள்ளைத்தமிழும் அவனுடைய திருவடிக்கு அலங்காரமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

பிள்ளைத் தமிழுக்குரிய இலக்கணங்கள் இதில் குறைவற நிரம்பியுள்ளன, பக்தியின் மெருகு இதற்குப் பொலிவூட்டுகிறது. அழகிய பட்டாடையினிடையே சரிகை வேலைப்பாட்டைப் போலே அருணகிரிமாமுனிவரின் அமுதச் செஞ்சொல் தொடர் களை அங்கங்கே வைத்து நெய்திருக்கிறார். கருத்துச் செறிவும், சொல்வளமும், இனிய வருணனையும் விரவி விளங்குவது இந்தப் பிள்ளைத்தமிழ்.

முன்பே திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய பழைய பிள்ளைத்தமிழைக்கொண்ட திருத்தணிகேசன் இந்தப் பிள்ளைத் தமிழில் புதிய இளமுருகனாக, வற்றாத அமுதப் பிழம்பாக விளங்குகிறான். தமிழுக்கும் எல்லை இல்லை; அவன் புகழுக்கும் எல்லை இல்லை; புலவர் கூட்டமும் இந்தக் காலத்தோடு நின்று போயிற்று என்று சொல்லும்படி அமைந்துவிடவில்லை. ஆகவே, முருகனை எவ்வளவு பாடினாலும், பாடப் பாடப் புதுமை நயம் பொலியும் என்பதை இத்தகைய நூல்களைப் படித்தவர்கள் உணர்வார்கள்.

செந்தமிழ்த் தெய்வமாகிய முருகன் இதனை இயற்றிய புல வருக்கு இன்னும் பேராற்றலும் பெரும் புலமையும் தந்து, இன் னும் பல்வேறு வடிவங்களில் தன்புகழைப் பாட்டுவித்துக்கொள்ள வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

அருணைமா முனிவன் வாக்கினில்-ஆழும்
      அன்பினன், திருப்புகழ் அரசின்
மருவிய தவத்தால் வருமகன் உயர்வேங்
      கடசுப்பி ரமணிய மைந்தன்
திருவருள் உந்தத் தணிகைவே லவன்மேல்
      திகழ்பிள்ளைத் தமிழினைப் பாடி
வருபுல வோர்கள் பத்தர்கள் வாழ்த்த
      மாட்சிபெற் றேவிளங் கினனே.

கந்தன்றன் அருளும் திருப்புகழ் ஆதிக்
      கவினுறு நூல்களிற் பயில்வும்
முந்திய மனத்தன் ஆதலின் இந்த
      மொழிசுவைப் பனுவலைத் தந்தான்,
செந்தமிழ் நாட்டுப் புலவரும் இறைவன்
      திருவடி போற்றடி யாரும்
இந்தநன் னூலை யாதரித் தோதி
ஏற்றந்தந் துயருக, வாழி !

காந்தமலை கல்யாணநகர் }       கி.வா.ஜகந்நாதன்.
8-11-61
--------------------------------

பாராட்டுரை
திரு அ. மு. பரமசிவானந்தம், அவர்கள் M.A., M.LITT., உதவியது

எனக்கு அன்று (8-12-62) ஏதோ பெருஞ்செல்வம் வரப் போவதாகக் கனாக்கண்டேன். அன்று விடிந்ததும 'என்னவரும்?" என்னவரும்?' என்ற வினாவிலேயே அன்றைப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தேன். மாலை ஐந்து மணிக்கு அந்தச் செல்வம் செல்வத்துள் செல்வம்-செல்வன் கழலேத்தும் செல் வம் வந்து சேர்ந்தது. கொண்டுவந்தவர் திரு வேங்கடசுப்பிர மணியம் அவர்கள். ஆம்! அவர்கள் முருகனுடைய அருட் பிரசாதமாகிய திருநீற்றையும் பஞ்சாமிர்தத்தையும் கொடுத்த தோடு, சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாகத் தாம் பாடிய தணிகை முருகன் பிள்ளைததமிழைப் பாடிக் காட்டினார்கள். நான் என்னை மறந்திருந்தேன். இதனினும் மேலான செல்வம் வேறு உண்டோ!

எத்தனையோ பிள்ளைத்தமிழ் நூல்கள் படித்திருக்கிறேன். இறைவனே இறைவியோ வந்து அருள் வழங்கிய நூல்களும் சில. அவற்றொடு ஒத்து நோக்கும் வகையில் - ஒரு சிலவற்றில் விஞ்சும் வகையில் - இப்பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளது. முருகனது விளையாடல்களையெல்லாம் - அன்பர்களுக்கருளும் நெறிகளை யெல்லாம் அவர் பாடிக்காட்டும்போது கசிந்து கண்ணீர் மல்கி னேன். முருகனைப்பாடிய முந்தையோர் வாய்மொழிகளெல் லாம் அப்படியே பல இடங்களில் எடுத்தளாப்பெற்றிருக் கின்றன. சிறப்பாக அம்புலி, சிற்றில் பருவப் பாடல்கள் என்னைப்பற்றி ஈர்த்தன. இந்தப் பிள்ளைத்தமிழ் அச்சேறிவெளி வரின் முருகன் அடியாருக்கு-தணிகையைத் தஞ்சம்புகுந்த அடியாருக்கு நன்மை உண்டு. ஆசிரியரை அப்பணியினை மேற்கொள்ளுமாறு தூண்டினேன்.

ஆசிரியர் சிறந்த முருக பக்தர் - வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர். எனவே
மரபினர். எனவே அவருக்கு இத்தகைய பாடல்கள ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவருவதில் சிறப்பில்லை. எனினும் உலகம் இப்பாடல்களைப் பயின்று சிறப்படைய வேண்டும். ஆசிரியர் வயதில் என்னினும் மூத்தவர்; அவரை வாழ்த்தல் இயலாது. எனவே, அவர்வழி முருகன் புகழ் இன் னும் சிறப்பதாக என்று கூறி அமைகின்றேன்.
தமிழ்க்கலை இல்லம்,

சென்னை-30       அன்பன்,
9-12-62       அ. மு. பரமசிவானந்தம்
-----------------

முருகா
அணிந்துரை
குகஸ்ரீ திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் உதவியது

மூவர்க்குந் தேவர்க்கும் முதல்வன் முருகன்: இம்மை நலங்களை வள்ளி மூலமாகவும், மறுமை நலங்களைத் தெய்வ யானை மூலமாகவும், வீடுபேற்றை வேலின் மூலமாகவும் வழங்கும் வரதன். எனவே, செம்மைநலத்தொடு வந்திப்பார்க்கு மும்மை கலமும் அருள்மூர்த்தியென்று மறையாயிரங்களும் அறைகின்றன.

இத்தகைய இளம்பூரணனை இறுதிவரை உறுதியுடன் பல்லாண்டு வழிபடும் பரம பக்தர் திருப்புகழரசு வேங்கடராவ். களாக அடியேனுடன் தொடர்புடையவர்கள். சீலமிகுந்த இப் புனித மெய்யடியாரின் தவப்புதல்வர் திரு வேங்கடசுப்ரமண்யம் அவர்கள்.

உயர்ந்த கவிநலங்கனிந்த ஞானந்தருவாக விளங்குபவா. இந்த அற்புத ஞானததருவில் பலப்பல இனிய கனியமுதமான கவிப் பழங்கள் உதிர்கின்றன. அப்பன் அருளைக் கொள்ளைக் கொள்ளு
பிள்ளைத்தமிழ் என்ற தீங்கனி இப்போது உதிர்ந் துள்ளது. பண்டைப் புலவர்களின் அமுதவாக்கேபோல் இது சுவை பொதிந்து உண்டாரின் பவப்பசியை மாற்றுகின்றது.

கணிகள் நிறைந்த கவின்கனிந்து
      கருணைக் குன்றாய் கலிதீர்க்கும்
தீணிகை முருகன் மகிழ்பிள்ளைத்
      தமிழைத் தந்த தவசீலன்
பணிவுந் துணிவும் படைத்துயர்ந்த
      பரம பக்த புனிதசிகா
மணியாம் புகழ்வேங் கடசுப்ர
      மணியன் இனிய மறையவனே.


சென்னை 2,       அன்பன், கிருபானந்தவாரி.
30-10-63
-----------------------

சங்க ஸ்தாபகர் சாமி சச்சிதானந்தா, தலைவர் முதலான அடியார்கள் சங்கத்தில் ஸ்ரீ அருணகிரி ஜயந்தி)
கி. வா. ஜகந்நாத ஐயர், தலைவர், 'மதுரமித்திரன்' ௩. சுப்ரமணிய ஐயர், P. V. துரைசாமி ஆச்சாரி, காரியதரிசி, S. காளிரத்தினம்
--------------
ஸ்ரீ குமார தநுவமர் திருக்கைத் திருப்புகழ்ச் சங்க நாயகராம்
திருத்தணிகேசர் அடியவர் இச்சையில் எவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே." -- திருப்புகழ்.
--------------

திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்

வேலுமயிலுந்துணை
காப்பு

தெள்ளுதமிழ்ச் செம்மல் திருத்தணிகை வேல்முருகன்
பிள்ளைத் தமிழ்பாடிப் பேணுதற்கென்-உள்ளமதில்
அஞ்சலென வந்துதவும் ஆபத் சகாயனிரு
கஞ்சமலர்த் தாளருளுங் காப்பு.

I. காப்புப் பருவம்


திருமால்

உலகி லெங்கணும் உவண மேல்வரும்
      உத்தமன்புரு டோத்தமன்,
உலகளந்தவன் துளவ ணிந்தவன்,
      உழுவை ஆனுடன் ஒன்றிட
மலைநெ கிழ்ந்திடக் குழலிசைத்தவன்,
      மலையை யுங்குடை யாக்கினன்,
மலைவ ளைத்தவன் மகிழு மைத்துனன்,
       மதியுடன் கதிர் நோக்கினன்,
வலனு யர்ந்ததொர் கரிதளர்ந்திட
        மடுவில் வந்துயிர் காத்தவன்,
மலரின் நங்கையின் தவமுகந்தணை
        மகிபன், யாவையுங் காப்பவன்,
குலவு நந்தி நதிக்கரை வளர்
        கொண்டல் மாலரி நாரணன்
குவல யம்புகழ் தணிகை மேல்வளர்
        குழகை இன்பொடு காக்கவே!               (1)

சிவபெருமான்

பாதி மாலுற மாதுமைக்கொரு
        பாதிதந்தும் நிறைந்ததோர்
பண்ப னென்றுறை சோதியானவன்,
        பஞ்சபூதமு நாடரும்
ஆதி நாதனி ராமயன்,பொலன்
        அம்பலத் தணியாக நின்
றாடி யைந்தொழில் ஆற்றுவானவம்
        ஆக்கு நம்பவம் மாற்றுவான்,
வேதம் நான்கிலு மேவுமெய்ப்பொருள்
        வெஞ்சமன்பட வார்கழல்
வீசிநின்றொரு பாலன்வாழ்வுற
        மேவினான் விடையேறினான்,
தாதை கான்முளை தாயுமான
        தயாபரன் சிவ சங்கரன்
தாதவிழ்செழுங் கல்வ மால்வரைச்
        சண்முகன்றனைக் காக்கவே !        (2)

உமாதேவியார்

3 பேரா நந்தப் பெருக்காகிப்
       பிரியா அன்புச் செருக்காகிப்
பெரிய புவன மனைத்தினையும்
       பெற்றுத் தன்னுள் வளர்த்தருளித்
தீரா வினையெல் லாந்தீர்த்துத்
        திருவாம் முத்தி யின்பளித்துத்
திளைக்கு ஞான சத்தியெனச்
        சிவனா ரிடத்தில் ஒருபாதி
ஏரார் பச்சை யெழிலுறநின்
        றிலங்குங் கவுரி உமையம்மை,
என்றும் இளையன், தென் தணிகை
        இறைவன், இணையில் மழவடிவாம்
சீரார் பருவ மருவிமகிழ்
        செல்வன், குழகன், வடிவழகன்,
தேவர் சிறைதீர் முருகனெனுஞ்
        சேயைப் பரிந்து காத்திடவே

விநாயகர்

4 அருமறைகள் ஓமென்று முதலில் நடுமுடிவிலும்
        அகலாதி றைஞ்சி நாட,
அகிலபுவ னங்க ளுந் தன்னுள் ளடங்கி நின்
        றமைவோடி யங்கி வாழத்
திருவுளங் கொண்டிலங் கறிவாகியெங்கணுந்
        திளைத்துமன வாக்குமெட்டாச்
சிற்பரவெ ளிக்குளே நித்யநடனத்திலே
        திகழுமா நந்த நிறைவாம்
தருணியுமை பங்கனும் அட்டகா சஞ்செய்து
        தழுவநிறை மோன முரைசெய்
சண்முகன் தணிகைவேள் என்மனந் தன்னிலுந்
        தகைமையங் கருணைகாட்டி
மருவுமழ வடிவாகி வகையாக விளையாடி
        வளர்ந்திலகி ஓங்கும் வண்ணம்
வரதகர கடவிகட தடபார வெம்பவள
        வாரணங் காத்தருள்கவே! 4

பிரமன்

5 பரவை மீதறி துயில்கொள் மாயனின்
        பதுமவுந்தியில் அவத ரித்தவன்,
பரவு பொன்னிற மேனி, நான்முகன்,
        பதுமமீ திருந் துலகையாக்குவன்,
கரையி லாததோர் கடலெ னாவளர்
        கலையெ லாமுணர் புநிதை வெண்ணிறக்
கமலமேல்வளர் தவளமேனிவெண்
        கலையணிந்தவள் மருவுவாக்கினன்,
வரமு யர்ந்த நான் மறைபகர்ந்தவன்,
        மகித லம்புகழ் தருபிதாமகன்,
வலனு லாங்கொடி ஊர்தி அன்னமாய்
        மருவிவந்துதன் பணியைநோக்குவன்,
தரையிலேழ்பவ வினைத விர்த்தருள்
        தணிகைநாயகன் தமியன்
நெஞ்சிலுந் தயைமிகுந்ததோர் முருகெனாவளர்
        தகைமைகண்டதை இனிதுகாக்கவே! 5

வயிரவர்

6 வியனுலகு மாநிலமும் வெருவரு சங்கை
        விபரீத மாம்பேய்கள் ஓடவினையாம்
வெந்துபட வந்துதுணை நல்கியுயிர் காத்து
        வீடுதவு நீதியொடு காசிதனில் வாழும்
வயிரவனு டுக்கைமணி மூவிலைவை வேலும்
        மறைகமழ்க பாலமுடன் மேவிஎகின் ஏறி
வலமருவு வடுகனுயர் லலிதைநுதற் பொட்டில்
        வருமதலை நற்கேத்ர பாலனவன் காக்க,
குயில்கூவ மழலைமொழி பேசுகிளை யெங்கும்
        கொஞ்சிவிளை யாடமலர் தூவியணி
விஞ்சுங் குளிர்சோலை மருவுபெடை யோடு மயிலாடக்
        கூடிவரு மானினமும் ஓடிவிளையாடக்
கயல்தாவி வரவண்டு பயந்திரியல் கண்டு
        கடிநறவை யூட்டியழை காவிமலர்
காணக் கடிமதிலின் மீதுநகு மதியமெழு தணிகைக்
        கந்தனெனு மதலையென தன்பில் வளர்ந்திடவே!        (6)

வீரபத்திரர்

7 மேதகுவ ரங்கள்பல நல்குசிவ னுக்கு முதல் ஆகுதியினை
      வேதவிதி சொற்றபடி வேள்வியில ளித்திடம றுத்துவசையால்
கோதுபுரி ஆணவஅ ழுக்கில்மித மிஞ்சிவளர் தக்கன்முடியைக்
      கொய்தபொழுதுங்கருணை காட்டியொரு மைமுகம் அளித்த பெருமான்,
மேதினியில் நீர்மலிசு வேதவனம் வாழ்வுறும் கோரவடிவாம்
      வீறிலுயர் தருவீர பத்ர இறை ஓகைகொடு காப்புதவவே,
ஆதிதணி காசலம மர்ந்தமுரு கன்குழகென் சிந்தையதிலே
      ஆறுமுக மானபொரு ளாகவளர் வானதனில் ஐயமிலையே!        (7)

சப்தமாதர்கள். கங்காதேவி, கார்த்திகைமாதர் முதலானவர்கள்

8. சகல உலகுமிக மகிழ இகலவுணர்
       சரிய, வரை நெரிய, ஆர்த்தெழு
சலதிகிழிய அயில் கடவி அமரர்சிறை
       தவிர மயிலில்வரு பார்த்திபன்,
முகர ஞிமிறுதிரள் குரவு கமழ அணி முருகன்,
        அழகுதணி மேற்றிகழ் முதல்வன்,
எனதுசிலை மனதும் நெகிழவளர்
        முருகின் வகையுரைசெய் வாக்கினைப்
புகரில் நியதிகொடு புவன மிலகஅருள்
        புநித எழுமகளிர், சாத்தனம்
புவியில் வினைகள்தவிர் மகர சலதிபொரு
        புகழொ டுலவுந்தி, கார்த்திகை
மகளிர் அறுவர், மறை முநிவர், வகையமரர்,
        மருவி மகிழடியர், நோக்கினில்
மகிமை குலவுதிரு முருகொ டருணகிரி
        மதுர மொழி யுநனி காக்கவே!        8

பஞ்சாக்ஷரம், சடாக்ஷரம், விபூதி, உருத்ராக்ஷம், வள்ளியம்மை, தேவசேனையம்மை
.
9 பவன நுகர்பனக(ம்) முடியு மதிரநடை
        பயிலு மயிலில், அயில் வேற்படை
பரிதி யுமிழ்கொடியு மருவி வலமதுறு
        பரமன், நிகரரிய சீர்த்தியன்,
அவனி தனிலினிய தமிழில் வளர் தணிகை
        அதனை விரவியருள் ஆட்சிசெய்
அழகன், அறுமுகவன், எளிய எனையுமருள்
        அதிபன் முருகுபகர் வாக்கினைச்
சிவய, சிவயநம,சிகர, நமசிவய,
        சிவய வசியுயர்ச டாட்சரத்
திருவில் நிறைகுமர நமவும் மருவடியர்
        தினமும் அணியுருதி ராட்சமும்,
தவள எழில்பொலிய அலகில் துணையுதவு
        தகைமை குலவுதிரு நீற்றுடன்
தருவின் இபவநிதை நிறையும், வனமருவு
        சவரி தவமுநனி காக்கவே!        9

நவவீரர், முப்பத்துமுக்கோடி தேவர் முதலானவர்.

10 சுடர்க்கு மதியுடு வகைக்கு முயர்கதிர்
        தனக்கு மொளியினை அளிக்கும் வடிவினன்,
சுழுத்தி நிகழ்விலும் உயிர்க்கு ளுணர்வென
        நிலைத்து நிலவிடு சுகத்தின் நிறைவினன்,
தொகுத்த நறுமலர் வடிக்கு நறவினும்
        இனித்து நசைவளர் இசைக்கும் இனியவன்,
துதித்து வழிபடு சுரர்க்கு முநிவரர்
        தமக்கு மடியவர் தமக்கும் எளியவன்,
படிக்கு ளுயர் தமிழ் நிலைத்த புகழ்பெறு
        திருத்தணியில் மகபதிக்கும் அதிபதி,
பருத்த மரகத மயிற் கடவி யொரு
        நொடிக்குளுலகினை வலத்தில் வருபவன்,
பதிக்கும் மறையுரை விரித்த குருபரன்,
        வனத்தொர் குறமகள் அணைத்த புரவலன்,
பணிக்கு ளெனதுளம் நிலைக்க அவனருள்
        மணத்தகுழகது தழைத்து வளர்வதைக்
கடற் கருணைவிழி உமைச் சரணபரி
        புரத்தினவமணி அளித்த மகளிரொர்
கணத்தி லுதவிய இலக்க ரதர்,
        விறல் செழித்த நவமணி சுபுத்ரர், தகவுரு
கணத்தர், பதினொரு உருத்திரர்களிரு
        மருத்வர், கதிரினர், வசுக்கள், சுரர்வகை,
கனத்த சதுர்மறை வகுத்த நெறிவளர்
        வசிட்டர் முதலருள் பழுத்த இருடியர்,
அடற்கயிலைமலை இறைக்கொர் பரியென
        நிலைத்த புகழ்பெறு விடைக்கரசு,
வரும் அரிட்டமதையகல் நலத்தின் உடுவினம்,
        நவக்கிரகமெழு தினத்தினதிபர்கள்,
அகத்யர், புலிபணி, இனித்த தமிழ்பயில்
        அருட்புலவர், புகழ்உரைத்த முநிவரும்
அகத்தில் நிறைமகிழ் சுரப்ப வழிபடு
        தவத்தின் நிறைநனி புரக்க விழைகுவாம்.        (10)
-------------------

2. செங்கீரைப் பருவம்.

11 மருவடிவின் அழகொழுக,முக்கமல முயரமணி
        வலயமுயர் தோளுமுயர,
வண்முழங் கையைவிண் முகட்டிற் பதித்தருள்
        வழங்குகர விரலிலொன்றைத்
தருண அமு துதவுமா றிதழினிடை வைத்ததில்
        சதுர்மறையின் மழலையூறத்
தகவிற் சுவைத்துமணி மார்புடன் உந்தியந்
        தடத்தினைச் சிறிதுயர்த்தி,
அருணமணி வகைகுலவும் அரைவடஞ் சரிந்திசை
        அருவியிட, முன்பின்னாக
அணிதவழ முழங்காலை அம்புவியில் வைத்தசைந்
        தஞ்சலென அடியை நாட்டித்
திருமலிய அருள்பெருக விளையாடல் புரிமுருக
        செங்கீரை யாடியருளே !
சிந்தையவிழன்பர்சேர் தென் தணிகை இன்பனே !
        செங்கீரை யாடியருளே !        1

12 பங்கய னாடக் கலைமகள் ஆடப்
        பாற்கடல் மீதுதுயில்
பரமனுமாடத் திருமகள் ஆடப்
        பார்வதி யோடாடும்
புங்கவ னாடக் கணபதி யாடப்
        பூதரம் எட்டாடப்
புவியொடு வானிலு மேவிய யாவும்
        போற்றிம கிழ்ந்தாடப்
பைங்கடல் வீரம கேந்திர மாடப்
        பகையுளம் வெந்தாடப்
படியினில் ஏரார் சரவண மீதோர்
        பங்கய மீ தாடி
அங்கையில் வேலுட னாடிய பாலக!
        ஆடுக செங்கீரை!
அழகிய தணிகை வளர்குண மணியே!
        ஆடுக செங்கீரை!        2

13 பைங்கன கக்கழல் தண்டை சதங்கை
        பகரணி கலனாடப்
பண்கமழ் நான்மறை நாளு மிறைஞ்சிப்
        பரவிடு சரணாடச்
செங்கதிர் கொஞ்சிய அரைவட மாடத்
        திருமலி உந்தியுடன்
சேர்ந்தெழு மார்புமுந் நூலுடனாடத்
        திகழ்தரு புயவரையில்
தங்கிய நீபம தாணியு மாடத்
        தண்குழை வகையாடத்
தங்கச் சுட்டியு மகுடமு மாடத்
        தகவுயர் முகமாட
அங்கையை முன்வைத் தாடிய குழகா !
        ஆடுக செங்கீரை!
அஞ்சல ளித்தருள் தென்தணி வித்தக!
        ஆடுக செங்கீரை!        3

14 பத்தித் துறையிற் பழகிடு மடியார்
        பரவிப் பரவ சமாம்
பண்பினில் மேலிடும் அன்புது ளும்பிப்
        பரவும் புனலாகப்
புத்திச் சததள மலரக் கடிதோய்
        போதம ரும்பவெழும்
பொன்னங் கதிராய் அதில்விளை யாடும்
        புகழ்சேர் பொருளானோய்!
எத்திக் கிலுமோர் இணையிலி எனவாழ்
        இளையோய்! எனையாள
என்னிலெ னக்கினி யானென மேவும்
        இறையே! மழகளிறாம்
சித்திக் கணபதி துணைவரு முருகா!
        செங்கோ செங்கீரை!
தென்றணி காசல நின்றச டானன !
        செங்கோ செங்கீரை!        4

15 மகதிவி ழைந்ததில் மறையுடன் ஏழிசை
        வளர்முநி வரர்முன் செய்
மகமதில் அங்கியில் அன்றுவ லன்கிளர்
        வடிவொடெ ழுந்துலகிற்
சகலரும் அஞ்சிட வந்துல விப்படர்
        தருமொரு தகர்கடவித்
தரையுட னும்பர்த மக்கப யந்தரு
        சரவண பவகுகனே !
மிகவுயர் சம்புவின் மகிமைய றிந்திட
        வினவிய நாரதர்தம்
விழைவுறு பண்பையு கந்துரை செய்தருள்
        விதரண! குருபரனே!
திகழ்தரு பைங்குற மகளணை திண்புய!
        செங்கோ செங்கீரை!
திருமலி யுந்தணி மலையுறை சுந்தர !
        செங்கோ செங்கீரை!        5

16 சிற்றணு வுக்கணு வாயதனசைவிற்
        செறிவுறு திறனாகித்
தேசத் தொடுநீள் காலமு மணுகாத்
        திருவளர் நிறைவாகிப்
பற்றற நிற்குமெய்ஞ் ஞானியர் உணர்விற்
        பரவிய சுகமாகிப்
பாடிப் பரவச மாயுரு கடியவர்
        பண்புக் கெளியதுமாய்
நற்றமி ழிற்புகழ் பூதியெ லாஞ்சொல்
        நாதற் கருள்முருகாய்
நர்மற் றடியவர் வாழத் துணை தரு
        நாதனுமாய் வருவோய் !
செற்றெதிர் வேலையை வற்றவை வேலவ!
        செங்கோ செங்கீரை !
சீரிற் பொலிதணி வாழ்நிர்க் குணமணி !
        செங்கோ செங்கீரை        6

17 அடல்வரை எட்டையும் ஒன்றாய்ச் சேர்த்திட்
        டடிமுடி முடியடியாய்
அழகுற மாற்றிய மைத்துக் கங்கை
        அடைத்துக் கதிர்மதியின்
டமதி ரண்டையு முறைமுறை மாற்றி
        எழுகடல் களுமொன்றாய்
இயங்கிட வைத்துப் பாதல மதனில்
        இகல்சேர் மேருவெனும்
வடவரை யதனை நிலைபெற வைத்து
        மகிழ்விளை யாட்டிலெலாம்
மண்ணினில் யார்க்குந் துன்பம தொன்றும்
        வந்தடை யாதவிதம்
திடமுற மேவித் திளை தரு சேயே!
        செங்கோ செங்கீரை !
சீரார் தணிகை ஏரார் முருகே!
        செங்கோ செங்கீரை!        7

18 களிவளர் வதனந் தனிலவிழ் அன்பு
        கமழ்ந்துசி றந்தாடக்
கண்பனி ரண்டில் அரும்பிடு கருணை
        கசிந்துவடிந்தாட
மிளிர்தர யாவுந் தன்வடி வாகிய
        மேனியில் முருகாட
வீறுயர் ஆறிரு தோளினில் ஓங்கும்
        வென்றிபொ லிந்தாடத்
தளிர்பொரு கையில் வண்மையொ டபயம்
        தங்கிவ ளர்ந்தாடத்
தாளிணை மலரில் பேரருள் வாரி
        ததும்பி வழிந்தாட
அளிதவழ் மலரில் நடமிடு முருகா
        ஆடுக செங்கீரை!
ஆதி திருத்தணி மேவி நிலைத்தவ!
       ஆடுக செங்கீரை!        8

19 வேயுறுப சுந்தோளு மாகுமர நன்கார
        வாழியென வெஞ் சோதி நீள்
வேலுதவு கந்தா,வி சாக,சுக சிந்தான
        மேதகுசு யஞ்சோதியே!
நேயஎனை வந்தாளெ னாவிழையு நெஞ்சோடு
        நீடுதினை யங்கானிலோர்
நேரிழைத வஞ்சேர வாழ்வதுதெ ரிந்தோடி
        நீதியொட ணைந்தாள்குகா!
மாயமிகு வெஞ்சீயம் ஆயிரமு கந்தோளின்
        வார்சிலையி ரண்டாயிரம்
மாமுடிக ளுஞ்சாய, மாநிலம கிழ்ந்தாட
        வாகைபுனை யுந்தோளனே!
ஆயிரமு கஞ்சேரும் வானதிதருஞ்சேய!
        ஆடியருள் செங்கீரையே!
ஆதிதணி இந்த்ராதி காணமரு வுந்தேவ!
        ஆடியருள் செங்கீரையே! 9

20 பண்ணுலாந் தமிழ்வளர, மறைவளர, வளர்பண்பு
        பரவிநின் றுலக முய்யப்
படிமீதி லடியார்கள் புகழ்பரவி வளரன்பு
        பரிமளித் தின்ப மோங்கத்
தண்ணுலாஞ் சரவணப் புனலோங்க வாவியில்
        தருணசெங் கல்வ மோங்கத்
தவிலதிரு மதிலணைய முகில்குலவு கோபுரந்
        தழைதரத் திகழ் கோயிலில்
கண்ணெலாங் கருணையென முகமலர ஓர்கரங்
        கதிர்வேலை ஏந்த வொருகை
கவினுயர் குறங்கினில் அமைய நின் றகிலமுங்
        காத்தருளு மெய்த்தெய்வமே![*]
அண்ணலாம் ஆபத்ச காயர்துணை வருசேய!
        ஆடியருள் செங்கீரையே!
அழகார்தி ருத்தணிகை யமர் ஞானசத்திதர!
        ஆடியருள் செங்கீரையே!

[*] 'திருத்தணிகேசன் திருவடிவம்.
-------------

3. தாலப் பருவம்.

21 செங்கையி ரண்டினில் அங்கியெடுத்தணை
        சேயே! தாலேலோ!
திருவளர் பவனமு மருவிய ணைத்திடு
        தேவே! தாலேலோ!
கங்கையில் வந்துதி ளைத்தும கிழ்ந்தெழு
        காவே! தாலேலோ!
கடிகமழ் கமலச் சரவண மருவிய
        கந்தா! தாலேலோ!
மங்கல சோதிவளர்த்திடு கார்த்திகை
        மைந்தா! தாலேலோ!
மலைமகள் அணை தர ஓர்திரு வடிவையு
        வந்தாய் ! தாலேலோ!
சங்கர னார்புகழ் புங்கவ மணியே!
        தாலோ! தாலேலோ!
[*]சமர்தணி யத்தணி மலையுறை தற்பர !
        தாலோ! தாலேலோ!        1

[*] சூரனைச்சமரிலட்டுக் கலாமறத் தணிகையில் வந்தருளினார்.
------------

22 கஞ்சனு மறியாச் செஞ்சொலின் உரையைக்
        கண்ணுத லுக்குரை செய்
கான்முளை யேதிரு மான்மரு கோனே!
        கருணைப் பேருருவே!
பஞ்சில னற்பொறி போலிரு வினையைப்
        பவமதை யுங்களையும்
பரமதயாநிதி! குமரச டானன!
        பண்புட னிந்திரனோர்
மஞ்சும யிற்பரி மாவென மருவியு
        வந்திட அதிலேறி
மறமலி வஞ்சவுண் விழவொரு வைவேல்
        வாங்கிய செவ்வேளே !
தஞ்சமெ னக்கடி தஞ்சல ளித்தருள்
        தலைவா! தாலேலோ!
சமர்தணி யத்தணி மலையுறை தற்பர !
        தாலோ ! தாலேலோ! 2

23 பந்தமு டன்பழ வினையற அருள்சிவ
        பாலா! தாலேலோ!
பார்வதி வந்தமு தந்தர வளர்சம்
        பந்தா! தாலேலோ!
கந்தமி குங்குளிர் நீபம கிழ்ந்தணி
        கந்தா! தாலேலோ!
கார்மலி புனமட மானிறை கவரவு
        கந்தாய் ! தாலேலோ!
அந்தமி லாதரு ளாய்நட மாடிடும்
        அதிபா! தாலேலோ!
ஆறுமகா முகம் ஆறிரு தோளுடை
        அழகா! தாலேலோ!
சந்தத மடியார் சிந்தையி லகலாத்
        தலைவா ! தாலேலோ!
சந்தத் தணிகையில் வந்துற் றருள்குக!
        தாலோ! தாலேலோ!        3

24 சீர்மலி ஆறிரு தோளுடை யோனே
        தேவர்த மக்கிடர் தீர்
சேவக! என்னுயிர்! நாயக! என்னைச்
        சேர்ந்தணை என்றுருகிக்
கார்மலி சாரலில் ஓர்புன மேவிக்
        கருதரு தவமருவும்
கன்னியின் மயலது முன்னிலி ழுக்கக்
        கடுகி நடந்தவனே !
நாரதர், குறுமுநி, மகபதி, நந்தி,
        நாமகள், நான்மறை யோன்
நாகமி ராகவன், நாரணர், முக்கண்
        நாதரு மேபுகழத்
தாரணி தனிலுயர் பூரண கிரிவாழ்
        தலைவா! தாலேலோ!
சந்தத் தமிழ்வளர் கந்தப் புரவல!
தாலோ! தாலேலோ!        4

25 பரிதியு மறையத் திகிரியை வீசிப்
        பற்குன னுக்கொரு தேர்ப்
பரியது கடவித் தருமமும் உரைசெய்
        பைம்புயல் அரிமருகே!
கரிமுக விகடக் கணபதி துணையிற்
        களிமிகும் இளையோனே!
கறுவிடு கரிவத் திரனுர மிடியக்
       கதிரயில் விடுவோனே!
திரிபுர மெரியக் குறுநகை யுதவித்
       திகழ்சிவ னருள் சின்னம்
சிவிகையும் விருதுந் தாளமு மேவிச்
        செந்தமிழ் வளர் சேயே !
தருபிடி இடமுற் றகமகிழ் குகனே !
        தாலோ! தாலேலோ!
தணிகையி லிணையற் றுயர்குரு மணியே!
        தாலோ! தாலேலோ!        5

26 கண்ணே ! கண்ணின் மணியே! மணியிற்
        கவினுறு காட்சியதே !
"கண்ணே" என்றுமை யம்மைகு ழைந்து
        களித்தணை யுங்குழகே !
பண்ணே ! பண்ணின் இயலே! இயலிற்
        பரவியெ ழும்பொருளே!
பண்ணேன் ஓர்தவம் எனினுமெ னக்கும்
        பரிவுடன் அருள் முருகே!
விண்ணே! விண்மணி வகையே! விண்ணையும்
        மீறிவி ளங்கொளியே!
விண்ணிற் பெரிதே எனினும் அணுவிலும்
        மேவிய நுண்ணசை வே!
தண்ணேர் பிணைவிழி வள்ளிம கிழ்ந்தணை
        தலைவா! தாலேலோ!
சந்தம் தருபுகழ் முந்துந் தணிமகிழ்
        தலைவா! தாலேலோ!        6

27 திகழ்தரு கச்சிப் பதிவெண் ணாவல்,
        செம்பொற் சபையருணை,
சீகா ளத்திஇ டைக்கழி எண்கண்,
       செங்கோ டெட்டிகுடி,
புகழ்மிகு படைவீ டாறுவி ராலி,
        புகலூர், சேய்ஞ்ஞல்லூர்,
போரூர், வள்ளிம லைப்பதி,சிக்கல்,
        புகலிப் பதிகதிரை,
பகரரு செய்ப்பதி, வேளூர்,குன்றைப்
        பதியவி நாசியெனப்
பாரிற் பலதல மேவிக் கதிதரு
        பண்போ டன்பருளம்
தகவுயர் தலமா யதில் நட மாடுந்
        தலைவா! தாலேலோ!
சந்தந் தருபுகழ் முந்துந் தணிமகிழ்
        தலைவா ! தாலேலோ!        7

28 கலைமகள் மலர்மா திருபுற மருவிக்
        கவரியை வீசிவிழை[#]
கவுரியின் வதனச ரோருக மலரக்[$]
        காணவெ ழுங்கதிரே!
வலிகிளர் புகர்மா முகனமர் தனிலே
        வாங்கிய திகிரியினை
மார்பிடை அணியென ஏந்திப் பரிவுடன்
        மாற்குத வுங்குகனே!
தலமலி தீர்த்தம் பலவினு மூழ்கிச்
        சரவண நமவென்று
சாரும கோரர் தவநிறை பயனாய்த்
        தழைதரு புங்கவனே!
குலமணி மயின்மேல் வலமுறும் இயல்சேர்
        குணமணி! தாலேலோ!
குறைதவிர் தணிகை மணியெனும் இணையில்
        குருபர! தாலேலோ!        (8)

[#] ஸசாமர ரமாவாணீஸவ்யதக்ஷிணஸேவிதா-லலிதா ஸகஸ்ர நாமம்.
[$] ஸுப்ரமண்ய ஸகஸ்ர நாமத்தில் கடைசி நாமம்.
-----------

29 சங்கையெலாமற வோதியுணர்ந்துப ராவிடுமன்பர்கள்
        தந்துணை யாகவு லாவிய தாளோனே !
சங்கரனாதிரை நாயகன்வந்துகு லாவிம கிழ்ந்தருள்
        சண்முக! வீறுயர் ஆறிரு தோளோனே!
அங்கணொராயிர மாகவிரிந்தழ கானசிகண்டியில்
        அம்பொனின் மாமலை போல்வரும் ஏரானே!
அம்புவிவாழவும் வானவர்வெஞ்சிறை தீரவுநீதியொ
        டன்றலை மீதம ராடிய வேலோனே!
குங்குமமேனிசி வந்திடவந்தணை மான்மகள்குஞ்சரி
        கொஞ்சிடு வாழ்வென வேவளர் கோமானே!
கும்பம காமுநி நாடிய பைந்தமிழ் ஓதிய பண்பொடு
        குன்றிடம் யாவிலும் வாழ்வுறு சீமானே !
சங்கினமாமணி பேரியதிர்ந்தணி யார்மதில்சூழ்தரு
        தண் தணி மேவிய சேவக! தாலேலோ!
[#] சங்கரி நான்முகன் நாரதனந்திவ லாரிசலாமிடு
        சங்கரி மாதுமை பாலக! தாலேலோ!       9

[#]சங்கு + அரி : சங்கமேந்திய திருமால்
----------

30 ஒருமழ கரிவந் தெதிர் நின்றாட,
        உயர் திரு மாலுருக,
ஒப்பறு முக்கட் பெருமா னுள்ளம்
        உவந்துநெ கிழ்ந்தசையக்
கருமுகில் பொருகுழ லசையச் செவியிற்
        கவினுறு தோடசையக்
கட்கய லசையத் துகிரித ழசையக்
        கடிமலர் முகமசையத்
தருணவ ளம்பெறு தனமசை யத்துகில்
        தவழ்மே கலையசையச்
சரிவளை யசையக் கைத்தல மசையத்
        தன்மடி மிசைவைத்துப்
பரிவுடனு மையாள் தாலாட் டிக்குழை
        பாலா ! தாலேலோ!
பவமறு தணிவாழ் சிவகுரு மணியாம்
        பாலா! தாலேலோ!        10
--------------

4. சப்பாணிப் பருவம்

31 மரகதத் துகில்விரித் தவிர்மலர்ப் பந்தரில்
        வனதுகிர்க் கனிகள்மின்ன
வளர்வடத் தருவினீள் விழுதுபொற் றூணதாய்
        வயங்கவை மாலைவெயிலில்
விரியுமந் தாரையின் கொந்துவெண் கவரியாய்
        மேவுசந் தனத்தென்றலில்
விரைதருகடம்பில்வண் டுண்டதேன் தெறித்ததில்
        விதிர்த்தபன் மணிவிளக்காய்
வரிசைபகர் கிள்ளையொடு குயிலிசைத் தழைக்கவரு
        மயிலோடு பெடையாடிடும்
வண்காவில் ஏழுசுனை யமைத்துமுநி வரரேழ்வர்
        மருவுகன் னியரேழ்வரும்
தருபூச னைக்குமகிழ் பரிபூர ணக்குழக !
        சப்பாணி கொட்டியருளே !
தமிழ்வாழ வைத்துதவு தணிகாச லத்தலைவ!
        சப்பாணி கொட்டியருளே !        1

32 'குப்பாச வாழ்வினிற் கூத்தாடும் ஐவரின்
        கூட்டினால் ஆட்டமிக்குக்
குறியொன்று மில்லாது திரிகின்ற பேருமுன்
        குரைகழலின் நினைவுமாறா
தெப்போது மேவிநிலை நின்றுயரு மாறுவந்
        திணையற்ற துணை புரியவே
இயல்வேலு டன்கலப மயின்மீதெ ழுந்துகந்
        தெதிருற்ற ழைக்குமுருகா!
அப்பா ! திருத்தணிகை ஐயா ! தமிழ்க்கினிய
        அண்ணால்! எனக்குழறியே
அன்பாலி றைஞ்சுமவர் தம்பாவம் யாவையும்
        அன்றேது ணித்தருளவே
தப்பாத பனிரெண்டு மலரன்ன கைகொண்டு
        சப்பாணி கொட்டியருளே !
சற்போத மெய்த்தணிகை வெற்பார் தனித்தலைவ!
        சப்பாணி கொட்டியருளே!        2

33 வசைதவிர் இமையோர் வானிடை வந்து
        மருமலர் மழைபொழிய,
மணமரு விக்குற மானொடு வாரண
        மகள்வல மிடமேவ,
நசைதரு பிரமா நாரணர் புகழ்
        நாதனு ளங்குளிர,
நான்மறை வண்டமிழ் நன்னெறி ஓங்க,
        நானில் மிகவாழ,
அசைவறு தடமால் வரை துக ளாக,
        அலைசெறி கடல்குமுற,
அடலவுண் நெஞ்சுபி ளக்கச் சமரில்
       அனல்வடி வேல்கடவிக்
குசைநெகிழ் வறியா மயில்விடு மிறைவா !
        காட்டுக சப்பாணி!
கொற்றவ! உற்பல வெற்புறை தற்பர !
        கொட்டுக சப்பாணி! 3

34 நலமிக்க சிவனுக்கொர் இடமுற்ற சத்தியின்
        நாதச்சி லம்புதிர்த்த
நவரத்ன மவையுற்ற மகளிர்க்கு மைந்தராம்
        நவவீர ருக்குள் முதல்வன்
மலையொத்த புயவெற்றி புனைகொற்றவீரனை
        வன்சூர பன்மனிடமோர்
வகைமிக்க உரைசெப்பு முயர்தூதி னிற்சென்று
        வாவெனப் பணிக்கும் அரசே!
அலைமிக்க மணிமுத்த மெறிகரைச் செந்திலில்
அழகான மயின்மீதிலே
அணிமிக்க நடமிட்டு மகிழ்வுற்று வந்துநின்
       றஞ்சல்தரு வேற்குமரனே!
சலமிட்டு வழிபட்ட அடியர்க்கு வந்தவா!
        சப்பாணி கொட்டியருளே !
தரணிக்கு ளந்தமில்[*] தணிகைக்கு கந்தவா!
        சப்பாணி கொட்டியருளே! 4

[*] கற்பசித் : கல்பமெலாம் நிலைபெற்றிருப்பது தணிகை
----------

35 [$]வரமோங்கு கோயிலைத் தூரத்தி லேதொழுது
        மலைவலம் வரத்தெற்கிலேர்
வளர்சோலை நடுவிலேழ் சுனைகண்டு மேலேகி
        வடதிசையில் நந்தியாறு
தருவளங் கண்டுமலை யடிவந்து சரவணத்
        தண்புனலில் மூழ்கியேறித்
தடவரைப் படிநடு வடக்கினிற் பிரமசுனை
        தனை நின்று பேணிமலைமேல்
அருள் கமழ இந்த்ர நீ லச்சுனையொர் தெற்கிலே
        அமைவதை நோக்கி வழிபட் டதன்மேலை
நாகநா ரணர்சுனை அகத்தியர்
        அருஞ்சுனை நார தர்சுனை
தரிசித்து மகிழன்பர் அர்ச்சித்து விழையின்ப!
        சப்பாணி கொட்டியருளே!
தணிவெற்பிலிணையற்ற புகழ்பெற்று வளர்பொற்ப
        சப்பாணி கொட்டியருளே ! 5

[$] தல அமைப்பும் தீர்த்தங்களும்
------------

36 சங்கின மணிவகை மங்கல முழவம்
        தவில்துந் துமியார்ப்பச்
சல்லரி பேரித டாரியு மதிரச்
        சச்சரி லயமுதவச்
செங்கையில் வேய்ங்குழல் வீணையு மேந்தித்
        திகழ்விஞ் சையர்பாடச்
சிற்றிடை மடவார் அணிநட மாடத்
        தேவர்கள் மலர்சொரியப்
பொங்கும ணங்கமழ் தூபமொ டேமணி
பொன்னின் விளக்கேற்றிப்
பூசுரர் பூசனை செய்திட அன்பர்
புகழத் திகழ்குழகா!
கொங்கவிழ் உற்பல வெற்புறை கொற்றவ!
கொட்டுக சப்பாணி!
குகனென் பவர்மன மகிழ்கொண் டுறைபவ!
கொட்டுக சப்பாணி!        6

37 எட்டுட னேழெட் டருள்விளை யாட்டில்
        எழில்மது ரைப்பதிவாழ்
இறைவர் அகப்பொரு ளுக்குயர் கீரன்
        இயம்பிய உரை நிறையைச்
செட்டியர் மகவென வந்துவி ளக்கிச்
        செந்தமிழ் வளர்சேயே!
சீரலை வாய்வரும் ஊமை பாடச்
        செய்தருள் புங்கவனே!
முட்டையெ னப்பெயர் செப்பியொர் கானில்
        முரட்டுப் புலவரிடம்
முதுதமிழ் பெற்றத னிற்குறை கண்டோர்
        முருகவிழ் கவிபகர்வோய்!
[*]கொட்டிய மேல்வரு முக்கணர் குமரா !
        கொட்டுக சப்பாணி!
குறைதவிர் தணிமீ துறைசர வணனே !
        கொட்டுக சப்பாணி!        7

[*] கொட்டியம் = எருது.
------------

38 கச்சித் திருவுமை இச்சித் தொருபெயர்
        கந்தனெ னத்தந்து
கட்டித் திலகமு மிட்டுக் குழைவுறு
        கான்முளை யாமுருகே!
பச்சைப் புயலரி மெச்சத் தகுபொருள்
        பரமற் கன்றுரைசெய்
பண்புக் குருபர ! பண்சொற் றிடுசம்
        பந்த!சு கந்தருவோய்!
சச்சித் சுகமென வுற்றுத் திகழ்தரு
        சண்முக சுந்தரனே !
சத்தத் திரைகடல் வற்றப் பொரவல
        சத்திய யிற்கரனே!
கொச்சைக் குறமகள் அற்புக் கருள்குக!
        கொட்டுக சப்பாணி!
கொற்றத் தணியெழில் வெற்புக் கிறையவ !
       கொட்டுக சப்பாணி!        (8)

39 தருணத் திளமதி வளரத் திரைநதி
        சர்ப்பமு முற்றேர்செய்
சடையர்க் கிடமுறு குடிலைச் சிவை தரு
        சத்திய யிற்படையால்
வெருவித் திணறவுண் அலைவெற் புடனற
        வெட்டியி கற்சூரும்
விழையத் தகுபெரு வடிவிற் றிகழ்குக!
       வெற்றிம யிற்பரிமேல்
வருகொற் றவ!குற மகளைத் தழுவிட
        மத்தமதக் கரியை
வனமுற் றிட அழை, மயலிற் பெரியவ!
        மட்டவிழ் வெட்சியுடன்
குருகுக் கொடிவிழை புயநற் புரவல!
        கொட்டுக சப்பாணி!
குணமிக் கவர்பணி தணிகைச் சரவண !
        கொட்டுக சப்பாணி! (9)

40 பூவியல் சரவணப் பொய்கையில் தவழ்கையால்,
        பூமனை யறைந்தகையால்,
பூவின்மிசை ஆக்கல்செய் கையினால், அரன்வினவு
        பொருளினை உணர்த்துகையால்,
மேவலன் சூர்வீழ வேல்வாங்கு கையினால்,
        வியன்மயில் நடாத்துகையால்,
விண்ணரசி மாங்கல்ய ரக்ஷைதரு செங்கையால்,
        வினைப்பவ மகற்றுகையால்,
நாவலன் கீரனுக் கருள்கையால், அருணகிரி
        நாவில்வேல் பொறித்தகையால்,
நங்கைமுரு கம்மைதன் கைதந்த கையினால்,
        நலமல்கு குஞ்சரியுடன்
கூவுகுயில் மொழிவள்ளி மேவிய செழுங்கையால்
        கொட்டியருள் சப்பாணியே!
கோளறு திருத்தணிகை வாழ்வென நிலைத்தகுக!
        கொட்டியருள் சப்பாணியே! (10)

இப்பாடலே இந்நூலின் காரணமாக முதலில் வந்தது. விவரங்களை முன்னுரையிற் காண்க.
------------------

5. முத்தப்பருவம்

41 அழகு மணக்குங் குளிர்வதனம்,
        அன்பு மணக்கும் விழிநளினம்,
அருநான் மறையின் பொருளிதழில்
       அரும்ப மணக்கும் புன்முறுவல்,
புழுகு மணக்குந் திருநீறு
       பொலிய மிளிரும் கத்தூரிப்
பொட்டு மணக்கும் நுதலோங்கும்
        புகழே மணக்கும் புயமதனைத்
தழுவி மணக்குங் கடம்புவரந்
        தந்து மணக்குங் கரம்வென்றி
தழைத்து மணக்கும் வேலருளே
        ததும்பி மணக்குந் தருணசரண்
முழுது மணக்குந் திருமேனி !
        முருகா! முத்தந் தருகவே!
முத்தி மணக்குந் தென் தணிகை
        முதல்வா! முத்தந் தருகவே! (1)

42 ஆரல் மகளிர் தருமுலைப்பால்
        அறஞ்சேர் உமையாள் திருமுலைப்பால்
அருநான் மறையாம் ஓரமுதம்
        அன்பர் தமிழாம் ஆரமுதம்
தீரச்சுவைத்து நுகர்ந்ததன்பின்
        தினையம் புனத்து வள்ளிதருந்
தேனைத் தெவிட்டா தருந்தியுமோர்
        தீராத் தாகங் கொண்டருவி
நீரைச் சிறிது பருகவழி
        'நீயே காட்டென்' றிறைஞ்சியவள்
நிறையைக் கண்டு கொண்டணையும்
        நேயங் காட்டு மணவாளா
சீரிற் பிறங்கு தென்தணிகைத்
        தேவே! முத்தந் தருகவே!
சிவனார் புகழ மறைபகருஞ்
        சேயே! முத்தந் தருகவே! (2)

43 தென்னங் குலைக்காய் சரிந்திரியத்
        தேமாங் கனிவிண் டதனிரதம்
சிந்திப் பெருகிக் கழனியெலாந்
        தித்தித் தோட வளர்கதலி
மன்னும் வேலி யெனக்கன்னல்
        வளரக் கண்டு செந்நெல்பொரு
வண்பொற் பழன மல்கவரும்
        வரஞ்சேர் பொன்னி நதிபோலத்
தன்னை நினைப்போர்க் கிருபயனுந்
        தருமோர் நதியைத் தணிமலையைச்
சார்ந்து வரச்செய் துதவுகெனத்[*]
        தவஞ்செய் நந்திக் கருள் குகனே !
முன்னை வினையெல் லாந்தீர்க்கும்
        முருகா! முத்தந் தருகவே!
மூவா முதல்வா ! காவிமலை
        முருகா! முத்தந் தருகவே! (3)

[*] தணிகைப் புராணம்.
----------------

44 வீதி யெங்குந் தோரணமும்
        மேலாம் மகர கேதனமும்
விழவுந் திருவும் வளரெழிலும்
        வீறு மதுரைப் பதியிலெதிர்
வாது புரியும் மாறமணர்
        மாய, மாறன் பிணிதீர,
மதுரங் கனிந்த தமிழ்பொழிய
        வந்த ஞான சம்பந்த!
கோது செறியும் வினையேற்கும்
        குணமே புரியக் குறுகியருள்
கோனே! வானோர் குறைதீர்த்த
        குழகே! உமையாள் குலவியணை
தாதை மகிழப் போதமுரை
        தநயா! முத்தந் தருகவே!
தமிழார் தணிகைப் பதிவாழும்
        தலைவா ! முத்தந் தருகவே!       (4)

45 கணிகவரை, மூலாத்ரி, காவிமலை, பூர்ணகிரி,
        அகோரகை வல்யப்ரதம்,
கற்பசித், மும்மூர்த்தி மலை,நார தப்ரியம்,
        கவினார்செ ருத்தணிகைவான்
பணியுமிந் திரனகரி, ப்ரணவார்த்த நகரெனப்
        பற்பலதி ருப்பெயருடன்
'படிக்குயிர்' எனத்திகழ் திருத்தணி யதிற்புகழ்
        படிப்பவ ருவந்திருப்போர்
எணவருந் தூரத்தி லேனுமதனைத்தொழுவர்
        எண்ணுவோர் துதிப்போரெலாம்[*]
எவ்வெவை நினைக்கினும் அவ்வவை அளித்தருளி
        இன்புதந் தோங்குமுருகா!
மணிமொழித் தமிழ்பரவி வளர் தணிக் கிறைவநின்
        மணிவாயின் முத்தமருளே !
வண்சுடர்ப் பரிதியுமிழ் ஒண்கொடிக் குழக நின்
        மணிவாயின் முத்தமருளே!        (5).

[*] தலமகிமை - தணிகைப் புராணம்,
-------------

46 முன்னர் நாடி சுத்திசெய்து
        முறுகு ப்ராணா யாமத்தால்
மூலாதார மலர்விரிய
        முகிழ்க்குஞ் சுழுனை விழிப்புறவே
பின்னும்பழகி, மேலோங்கிப்
        பீடார் சகஸ்ர தளத்துமதி
பிரியா துதவும் அமுதுண்ணல்
        பெரியோர் தமக்கும் அரிதரிதால்,
நின்னன் பொன்றில் நிலைபெற்று நீயே
        நானாய் நானீயாய் நிகழும்
பெருவாழ் வுற இன்ப
        நிறைய வந்தாண் டருள்வோனே !
தன்னந் தனியிற் குறவியணை
        தலைவா ! முத்தந் தருகவே!
சந்தத் தமிழ்சேர் தென் தணிகைத்
        தலைவா! முத்தந் தருகவே! (6)

47 கஞ்ச முகத்தில் முழுமுத்தம்,
        கண்ணிற் பனிரண்டுயர்முத்தம்,
கன்னத் தினிலாறிருமுத்தம்,
        கனிவா யினில்மூ விருமுத்தம்,
அஞ்சற் கரத்தா றிருமுத்தம்,
        அகன்ற மார்பில் ஓர்முத்தம்,
அம்பொற் புயத்தா றிருமுத்தம்,
        அழகார் உந்திக் கொருமுத்தம்,
தஞ்சத் தருள்சே வடிமலரில்
        தகவார் இரண்டு முத்தமெனத்
தழுவிக் கவுரி அளித்து மகிழ்
        தநயா ! எனையாளினியோனே !
செஞ்சொற் குறமின் முத்துகந்த
        சேயே! முத்தந் தருகவே!
தெய்வத் தணிகை மலைவாழுந்
        தேவே! முத்தந்தருகவே!        (7)

48 சசி சூரியர் பலகோடிகள் தருபேரொளி வீசித்
தவழ்மாமணி மலைபோலொரு தங்கக்கரி மாமேல்
நசை யோடெழில் அலைவாய்வரு நாதா ! சிவபோதா!
நறுநீபம் தணிநாயக! [*]ஞாங்கர்ப் படை வீரா !
வசிநீள் கதை வளைநேமிவில் மருவும்புய மாயன்
மலர் மாதொடு தருபைங்குற மங்கைக்கினி யோனே !
முசியாதருள் குமரா சுவை முத்தந் தனையருளே!
முருகார் தணிமுருகா சுவை முத்தந் தனையருளே! (8)

[*] ஞாங்கர் = வேல்
---------

49 எத்திக்கிலு முற்றுத்திகழ் எழின் மாமயின் மீதே
ஏறிக்கதிர் வேல்தொட்டவுண் இரியப் பொருவீரா !
சத்திக்கொரு சற்புத்திர! தகவோடனல் நீர்மேல்
சந்தத்தமிழ் முந்தத்திரு மதுரைக்குறு தலைவா!
தித்தித்திடும் அமுதத்தொடு தேனுக்கினி தென்றோர்
சிறுமான்மகள் இதழூறிய செஞ்சொற்கயர் சேயே!
முத்திக் கொரு வித்தேயொரு முத்தந்தனை யருளே!
முருகார்தணி முருகா நிறை முத்தந்தனை யருளே! (9)

50 மதிவ ளர்க்குஞ் சடையர்மெச்சும்
        மதலை ! முத்தந் தருகவே!
மரகதப்பைம் பரிநடத்தும்
        மகிப! முத்தந் தருகவே!
கதிர யிற்கொண் டவுணழிக்குங்
        கடவுள்! முத்தந்தருகவே!
கடைய னெற்குங் கதிய ளிக்குங்
        கருணை! முத்தந்தருகவே!
பதியெனக்குஞ் சரியணைக்கும்
        பரம! முத்தந்தருகவே!
பவமறுத்துள் ளொளிவளர்க்கும்
        பரிதி! முத்தந்தருகவே!
சததளச்சண் முகவ முத்தந்
        தருக, நித்தந் தருகவே!
தணிகை வெற்பின் தலைவ!முத்தந்
        தருக, நித்தந்தருகவே! (10)
--------------------

6. வாரானைப் பருவம்.

51 வானெலாம் பொன்னாக நீலஅலை மாணிக்க
        வயலெனச் சுடர்தெறிப்ப
வந்தெழுஞ் செஞ்சுடர்ப் பரிதிபல சதகோடி
        மருவிவளர் செஞ்சோதியாய்க்
கானுலாம் மரகதக லாபச்சி கண்டியிற்
        கைபுனைந் தியற்றொணாத,
கண்கொளாக் கவின்பெறு வனப்பினிற் சிவமணங்
        கமழவந் தருள்குழகனே !
தேனுலாம் பதுமவய லாவினன் குடிபழநி
        செந்திலம் பதியேரகம்
தென்பரங் குன்றுபல குன்றுபழ முதிர்சோலை
        செய்ப்பதிவி ராலிகதிரை
மானுலாம் வள்ளிமலை வேளூரி டைக்கழியின்
        மருவுசெவ் வேள் வருகவே!
வண்டமிழ்நிலைத்தபுகழ்கொண்டுயர் திருத்தணிகை
        வளர்ஞான வேள்வருகவே! (1)

52 கானாறெ லாங்கிளை விரித்தோட வானருவி
        கவின்விரித் தார்த்து வீழக்
காருலாம் சந்தன வனத்தூடு தண்மணங்
        கமழவரு தென்றல் வீச
மானோடு மயிலாடு காமருவு புள்ளினம்
        வண்ணங்கள் பயில்சாரலில்
வானோடு பொருதெழும் தென்பொதிகை முநிபுகழ
        வண்டமிழ் விரித்தசெல்வ!
கூனோடு மாறான கொள்கையது மாறவுங்
        கூடலிறை மாறனுறுநோய்
குன்றிடவு மங்கையர்க் கரசியின் சிந்தைகுளிர்
        கொள்ளவும் வந்த குழகே!
வானாடு வாழ்வரு சேனாபதிப் பெருமை
        மாறாத வேள்வருகவே!
வண்டமிழ் நிலைத்தபுகழ் கொண்டுயர் திருத்தணிகை
        வளர்ஞான வேள்வருகவே! (2)

53 [*]அங்கையினில் அரதனக் கலசத்தி லேநிதம்
        அன்போடு கங்கை நீர்கொண்
டத்தனுக் கபிடேக மாறாது செய்திடும்[#]
        ஆபத்ச காயனுடனே
கொங்குதரு புகழருண கிரிவீர பத்திரர்
        கொற்றநவ வீரரினனும்
கூடிமகிழ் கூரவோர் ஆறுமுக மாகிவட
        கோணமரு வுங்குமாரா!
திங்களணி ஏகம்பர் குமரேசர் வலமிடம்
        சேர,இரு மகளிரிடையே
திகழ்முருக! பஞ்சாட்சரப் படிகடந்துநின்
        தெரிசனை கண்டயாரும்
தங்கள்வினை தீர்ந்துநல மெய்தவருள் தந்திலகு
        தணிகை நாயகன் வருகவே!
சாலோக முதலோங்கு சாயுச்ய முந்தரும்
        தணிகை நாயகன் வருகவே! (3)

[*] கோயிலின் உள்ளமைப்பும் மூர்த்திகளும்; [#] தணிகைப் புராணம்
-------------

54 ஒப்பேது மற்றபுகழ் செப்பருண கிரிநாதர்,
       உயர்சிதம் பரசுவாமி,
ஒண்கச்சி யப்பமுநி, கந்தப்பஐயர், திரு
        ஓங்கிசைவளர் தீட்சிதர்,
வெப்பான நோய்தவிர் தொட்டிக்க லைப்புலவர்,
        விறற்சிதம் பரமுநிவர், சொல்
விஞ்சருட் பிரகாசர், பாம்பன் நல் அடிகள்,ஸ்ரீ
        வித்தைவளர் சுப்ரமண்யர்,
வைப்பான புகழையச் சிட்டவர், வள்ளிமலை
        வள்ளல், மற் றவர்கள் நெறியில்
வளரன்பர், எந்தைபுகழ் அரசு[*]முதல் அப்பாலும்
        மருவியடி சாருமெவரும்
தப்பாமல் உய்திபெற வைத்தாளு மெய்ய! தென்
        தணிகை நாயகன்வருகவே!
சாலோக முதலோங்கு சாயுச்ய முந்தரும்
        தணிகை நாயகன் வருகவே! (4)

[*] திருப்புகழ் அரசு ஈ. வே. வேங்கட ராவ்.
------------

55 தென்பாலு யர்ந்தகரு முகடுமா லாகவட
        திக்கிலுறை வரைவேதனாய்த்
திகழுமிடை நடுவிற்பி றங்குமால் வரையதே
        சிவனெனவு மேவியோங்கிப்
பொன்போலி லங்குதணி[#] மும்மூர்த்தி மலையெனப்
        பொலியவதில் வந்தைந்து நாள்
பூசித்திருந்தவர் நினைந்ததோ டுயர்வான
        போகமும் வீடுமுறவே
அன்பாயு கந்தருள்வ னெனவள்ளி யம்மையின்
        அகமகிழ அன்றுரைத்தங்
கழகான மயிலேறு குழகாக வீற்றிருந்
        தருள் ஞான சத்திதரனே!
இன்பாக எங்கு நின் றிலகறிவ தென்றுநிறை
        இளைய! செவ்வேள் வருகவே!
ஏரான 'கன்மலிந் தோங்குகழு நீர்க்குன்றின்’
        இறைவ! செவ்வேள் வருகவே! (5)

[#] மலையமைப்பும் மகிமையும் - தணிகைப் புராணம்.
-----------

56 நீல விசும்பு செம்மை பெற,
        நிலனுஞ் செம்மை பெற, வன்பர்
நெஞ்சங் குளிர,மாலைவெயில்
        நீடு மேலை வாயில்வழிக்
கோல மகுடங் குளிர்வதனங்
        கூர்வேல் சேவற் கொடிமஞ்ஞை
கொடையங் கரம்பொன் மணியணிகள்
        குலவு மழகாய் இருவருடன்
சாலக் குழைந்து தழைந்திறங்கித்
        தகவார் வலங்கொண் டரும்படிகள்
தமினின் றிறங்கிச் சரவணத்தில்
        தங்கும் புணையிற் சிறந்துலவி[*]
ஞாலத் தாடிக் கிருத்திகை நாள்
        நயக்கும் செம்மல்! வருகவே!
நலஞ்சேர் தணிகை வரை மருவும்
        நாதா! வருக! வருகவே! (6)

[*] ஆடிக்கிருத்திகை தெப்ப உற்சவம்.
---------

57 உழுவை யதளுடை அணியு மிறையவர்
        உமையும் அணைதரு புதல்வனே !'
உலக முழுதுமொர் நொடியில் மயின்மிசை
        உலவி வலமுறு முதல்வனே !
மழையின் இகலற மலையொர் குடையென
        மருவு திறலரி மருகனே!
மழையை யொழி [†]அரி திணறி யடிபணி
        வகையில் வளையெறி குமரனே!
அழகு பெறுதிரை அலகில் திரையென
        அரிய துடிபயில் குழகனே !
அகதி யெனதுள் மதிலு நடமிடும்
        அருளின் நிறைவெனு முருகனே !
வழுதி நலமுற அரிய தமிழ்சொல மதுரை
        வருகுக! வருகவே!
வரிசை தருதணி வரையி லிணையிலி
        வருக! சரவண ! வருகவே! (7)

[†]அரி=இந்திரன்
----------

58 அருண, தருண, கருணை பொழியும்
        அழகின் வதன நளினமே!
அகில முழுது மிலகி யுலவ
        அருளும் விழிகள் கமலமே!
அரிய மறையின் மவுன வசனம்
        அவிழு மிதழ்கள் பதுமமே !
அமையு மபய வரத முதவும்
        அரிய கரமென் முளரியே!
குரவு கமழ முருகின் இனிமை
        குலவு சரணம் வனசமே !
குழையு மடியர் மனதில் மருவு
        குகநின் நிறமு மலரதே!
அருளின் நிறைவு கமழ மலரும்
        அழக! குமர! வருகவே!
அரிய தணிகை வரையின் இணையில்
        அதிய! வருக! வருகவே! (8)

59 சத்யோ ஜாதம் வாம மகோரம்
        தத்புரு ஷம்மீசம்
தம்மொ டதோமுக[*] மாகவி ளங்கும்
        சங்கர சண்முகனே !
நித்யா நித்திய வஸ்துவி வேக
        நிலைமுத னான்கான
நெறியினி லகலா ஞானியர் நெஞ்சில்
        நின்றருள் நிற்குணனே !
வித்யோ பாசகர் பூசனை செய்யும்
        மேருவின் மையமதாம்
விந்துத் தானத் தறுகோ ணத்தில்
        மிளிர்சுப் பிரமணியே!
தத்வா தீதம னோலய இன்பத்
        தனிமுதல்! வந்தருளே!
தணிகையி லிணையிலி' எனவளர் குணதர!
        சரவண! வந்தருளே (9)

*"ஐந்து முகத்தோ டதோமுகமும்--தந்து
திருமுகங்களாறாகி"        -கந்தர் கலிவெண்பா
------------

60 எழுத மொழியநினை வுறவும் அரியதெனும்
        எழிலின் முருகவிழும் இளையனே !
எழிலி நிறவன்மலர் வனிதை மகிழ்மருக!
        இணையில் இபமுகவன் இளையனே !
குழைகள் பொருபனிரு விழிகள் பொழிகருணை
        குலவு மதிதவழும் வதனனே!
[*]குவடு நெகிழவளர் தளிரில் மிளிருலவை
        குலவ இசைபரவு குழலனே !
அழலின் விழியவுணர் மடிய அமரர்சிறை
        அகல அமர்பொருத அயிலனே !
அருண கிரிபுகழ அடியர் வினையகல
        அழகின் நடநவிலும் மயிலனே!
வழுதி பிணியகல இனிய தமிழ்வளர
        மதுரை வருகுழக வருகவே!
மறைகள் முழவமென அதிரு தணிகைவரை
        மருவு சிவகுமர வருகவே! (10)

[*]தணிகையில் முருகபிரான் குழல் வீணை முதலிய இசைத்து
மகிழ்ந்த வினோதம்.
----------------

7. அம்புலிப் பருவம்.

61 அமுதநில வுதவுமிள மதியநீ யெனிலிந்த
        அறுமுகன் ஆரருளெனும் -
அமுதமழை பொழிபனிரு கருணை விழி நளினமுயர்
        அண்ணலென் றெண்ணி விழையாய்!
உமையணைய இடமுதவு சிவன் விழிகள்மூன்றினில்
        ஒன்று நீ யெனிலிந்த வேள்
உமைமகிழ அரனுதல் விழியிலறு பொறிவடிவில்
        உற்றதொரு பொற்பனன்றோ !
பமரவளி திரளநறை நிறைகுவளை யவிழவரு
        பனிப்பாரு நீயென்னிலிப்
பாலன்வன மான்விழிப் பானல்மட லவிழவரு
        பாநுவென் றுணர்ந்து கொள்வாய்!
அமைதியுடன் இமையவர்கள் புகழ்குமர னிவனுட
        னம்புலீ யாடவாவே!
அரியதமிழ் விரவுதணி வரையினிறை அழகனுட
        னம்புலீ யாடவாவே! (1)

62 வரைமீது லாவலால், வானதியொ டொன்றலால்,
        வாரி[#]நந் திடவெழுதலால்,
மருவுமறு[@] முகத்தினால் உடுவினத்தினிலொன்று
        மகிழ்கொள்ள வருபெருமையால்,
தரைமீது மதுரையம் பதியினிற் பாண்டியர்
        தங்குலத் தொருமுதல்வனாய்த்
தண்ணளி வழங்கலால், நண்ணரிய சம்புவின்
        தலைவளைவு பெறநிலவலால்,
[*]ஒருமானி ளங்கன்றெ டுறைதலால், அரியகலை
        ஓங்கவரு வண்மை யதனால்,
உன்றனக் கிவன்சமம் என்றுணர்ந் துகந்துவந்
        தோடிவிளை யாடிமகிழ
அருநான் மறைக்குளுயர் பொருளான இவனுடன்
        அம்புலீ யாடவாவே!
அம்புவியி லுர் தணிகை யம்பதியின் இறைவனுட
        னம்புலீ யாடவாவே! (2)
------
[#] நந்துதல் = பொங்குதல், குறைதல். [@] மறுமுகம் ; அறுமுகம்.
[$]உரோகிணி; கிருத்திகை.
[*] மதியின் முகத்தில் மான்கன்று. முருகன் வள்ளியாகிய மான்கன்றொடுறைவன்.
-----

63 வளமிகுந் தமிழிலம் புலிப்பெயர் வாய்ந்துமொரு
        மானைவதனத்துகந்தாய்,
வனவேங்கைஎன்றுநின் றொருமுல்லை நகைவள்ளி
        மானையன் றுகந்தோனிவன்;
எளிஞரும் தனிகரொடு களிபெறும் படி நிலவும்
        இதமிகும் தருணமதிநீ,
எளிதின்வந் தெவரெவரும் நலமுறும் படியருளும்
        இதமிகும் சரணனிவனாம்;
பளிதவெண்பொடியணியும் அரனெடுஞ்சடையிலணி
        பரிவுகொண் டுயர்வுபெறுவாய்,
பரசிவன் மகிழ்மருவி மவுலியும் பணியவிழை
        பரிவுகண் டுயர்வனிவனாம்;
அளியினங் குலவுகுர வணிசெழுங் குழகனுடன்
        அம்புலீ யாடவாவே!
அம்புவியி லுயர்தணிகை யம்பதியின் இறைவனுட
        னம்புலீ யாடவாவே! (3)

64 பரிதிதரு மொளிசிறிது கொண்டிரவில் வந்துலாம்
        பனிமதிய நீ, இந்தவேள்
பரிதிபல சதகோடி தவழ்வடிவன், நீள் கதிர்ப்
        பரிதியுமிழ் கொடியை விழைவோன் ;
கரியதொரு முகில்வரவு மறை திங்கள் நீ, இவன்
        கனையிடிக் காரூர் தியும்
கன்றவளை வீசிமது ராபுரியில் நல்வளம்
        கமழ்தரச் செய்தகுமரன்;
தரளமொன் றேயுனது மணி,இவன் ஒன்பதாம்
        தகவின்மணி தருகன்னியர்
தந்த நவ வீரர்க்கொர் தலைவனுயர் கனகமணி
        தவழ்கலப மயில்வாகனன்,
அருளுத்தி உமையமுது தருமதலை இவனுடன்
        அம்புலீ யாடலாவே!
அலகில்புகழ் பெறுகல்வ மலைமருவு செல்வனுடன்
        அம்புலீ யாடவாவே! (4)

65 ஆடக வரைவலம் வருமிள மதிநீ,
        ஆடக வரைநெரிய
அன்றொரு செண்டெறி திண்புய னிவனோர்
        ஆடக மேனியவன்;
வீடென ஒன்றுமி லாதகல் வானில்
        வெம்பித் திரிவிதுநீ,
வீடிரு மூன்றுடை யானிவன் யார்க்கும்
        வீடருள் வீறுடையான்;
ஏடவிழ் நான்மறை வாழ்த்திமை யோரில்
        எழில்மதி நீயொருவன்,
ஈடுயர் வில்லான்' எனமறை நான்கும்
        இறைஞ்சிடும் ஒருவனிவன்;
ஆடிய மயின்மிசை ஆடிடும் இவனோ
        டாடுக அம்புலியே!
அழகு திருத்தணி மலையுறை சித்தனோ
        டாடுக அம்புலியே! (5)

66 தகர அம்பர மருவி நின்றணி
        தவழ் நடம்புரி தாளினான்,
தரையில் அன்பர்கள் எவரும் நாடிய
        தருகை யோடுயர் தோளினான்,
மகர குண்டல மிடைத ரும்ப்ரபை
        வளர்மு கங்குளிர் நோக்கினான்
மறைய ருந்தமிழ் வகைமி குங்கலை
        மவுன முங்கமழ் வாக்கினான்,
அகில மெங்கணு முயர்சி கண்டியில்
        அணிவ லங்கொளும் சீரினான்
அரவு கண்டயர் மதிய நின்படர்
        அகல இன்னருள் கூர்வனால்
வகைமி குந்துணை தருவன் இவனிடம்
        வருக, அம்புலி வருகவே!
வரமெ லாந்தரு தணிகை நாயகன்
        மகிழ அம்புலி வருகவே! (6)

67 வாணிக்கும் ஓர்வியப் பானசொல் லழகனிம்
        மதலையுயர் குதலைமொழியால்
வண்கலையெ லாமோங்க வருமிவன் நின்கலை
        வளமுறச் செய்தலரிதோ!
கோணிக்கு னிந்து நலி மதியமே,நின்வழிக்
        கொற்றவன் கூனிமிரவே
கூடல்வரு சேயிவன், பவரோக வைத்தியன்,
        குலவுமுன் பிணிதவிர்ப்பான்,
மாணிக்கு வில்லியயர் நல்லழகின் வடிவனிம்
        மதலை நிட் களங்கன தனால்
மருவுமுன் முகமறுவை மாற்றவல, சந்தனம்*
        வழங்குவா னிதுவாய்மைகாண் !
ஆணிப்பொன் மயிலேறு மாணிக்கம் இவனுடன்
        அம்புலீ யாட வாவே!
ஐராவ தங்குலவு தணிமேவு கந்தனுடன்
        அம்புலி யாட வாவே! (7)

[*] தணிகேசன் திருமேனிப் பூச்சு. இதனை உட்கொளப் பவரோகமுந் தீரும் என்று பெரியோர் கூறுவர்.

68 வானமுகில் தருவைந்து மணிசுரபி யிருநிதியின்
        வண்கொடைக் கையானிவன்,
மாமுநிவர் இருவர்மக வானரவு விடைமூவர்
        மகிழஅருள் செய்தனன்காண்!
தேனினிய இன்பவன மான்மொழியும் விட்டிவன்
        செவியுற்ற முருகாறுடன்
செஞ்சொற் றிருப்புகழ்த் தமிழமுத முதலெலாந்
        தினந்தோறு நீகேட்கலாம் ;
வேனிலணு காதுமுகில் வீறடவி நீடுமலை
        வீழருவி கானாறெழில்
விஞ்சுகிளி கொஞ்சுபொழில் மணிமாடமுயர்கூடம்
        வேறுபல் லிடமெங்கணும்
ஆனதனி மந்த்ரமயில் மீதுவரு சுந்தரனோ
        டம்புலீ யாட வாவே!
அந்தண்மறை வேள்விவளர் தென் தணிகை வேலவனொ
        டம்புலீ யாட வாவே! (8)

69 கானிலொரு முட்டையாம் பெயர்மருவு கள்வனோ,
        காரெருமை ஓட்டிளைஞனோ,
கட்செவிமு கட்டினெதிர் கவியஞ்சு விரகனோ,
        கவின்மதுரை வளர்மூங்கையோ,
மானுலவும் ஏனலிற் கோல்கொண்டு கிழவேடம்
        மன்னிவன மகள் மிச்சிலை
வாயார வுண்டுமயல் தீராத காளையோ,
        மதிப்பிலுயர் தேவர்புகழ
வானிலகுமதியென்னை அழைப்பதென்றெள்ளிடேல்
        மன்னுமிம் மகவழுதலால்
வரையெட்டு மேழ்கடலும் வன்சூர பன்மனும்
        மனமிடிந் தழுதல் கண்டாய்!
ஆனில்வரு நக்கன்வின [#]வோமினுரைசொற்றவனொ
        டம்புலீ யாட வாவே!
ஆதிமுடி வற்றதணி மீதுவளர் கொற்றவனோ
        டம்புலீ யாட வாவே! (9)
------
[#] தணிகை- பிரணவார்த்த நகரம்.
-----------

70 வரைக்குற்ற கிழவனென் றிகழற்க, இவனென்றும்
        மாறாத இளைஞனுன்னின்
வண்கதிர்ப் பரிதிதன் பகைவனையும் வீட்டினோன்
        மகிழ்கின்ற தலைவன்; அன்றோர்
செருக்குற்ற தக்கன்மக முற்றவியை உண்டுமதி
        தேய்மதிய மே, தக்கனைச்
சிதைத்திட்ட விறல்வீர பத்திரற் கிளையனிச்
        சிறுவனுயர் மயில்வாகனன்;
மருக்கொற்ற வாகைவேல் வாங்கியேழ் கடல்வற்ற
        வந்தஇம் மகவழைப்ப
வரமறுத் தாலுனை அம்மயில் சினந்துதன்
        வாவுதாட் பணிக்கீயுமால்,
அருக்கர்க்கும் ஒளிதரும் திருக்கைவே லழகனுட
        னம்புலீ யாடவாவே!
அம்பொலந் தணிமருவும் உம்பர்தம் தலைவனுடன்
        அம்புலீ யாடவாவே! (10)
-----------------

8. சிற்றிற் பருவம்

71. கொந்தவிழ் கடம்பினீ ழற்சரவ ணப்போது
        கொஞ்சிக்கு லாவுகமலம்,
கொன்றையணி வேணிதனில் மேவியர னாருளங்
        குளிரவிளை யாடுபதுமம்,
மைந்துமயி லேறிநட மாடுநளி னங்கவுரி
        மார்பிற்றி ளைக்குமுளரி,
மஞ்சினற் கஞ்சல்தரு கஞ்சம்,வெஞ் சூரனும்
        வாழ்த்தவரு பங்கேருகம்,
சந்தமறை முந்துதமிழ் அன்பருள முங்கமழ்
        தண்டையம் புண்டரீகம்
தமியேம மைத்துமகிழ் சிறியமணல் வீடிது
        சரியவந்து தைத்தனன்றோ!
சிந்துரமு கற்கிளைய நம்பஇச் சிற்றிலைச்
        சிதையாது கந்தருள்கவே!
தென் தணிகை வெற்பிலுறை கந்தஇச் சிற்றிலைச்
        சிதையாது வந்தருள்கவே! (1)

72 மந்திரம றைச்சிலம் பலம்புசே வடிகொடெம்
        வல்வினை யகற்றலரிதோ!
வானோங்க வருபாத பங்கயத் தாலெமது
        வாழ்வோங்க வைத்தலரிதோ!
அந்திபக லற்றிலகு தண்கழல்கொ டெங்களுக்
        கமைதிதந் துதவலரிதோ!
ஆடுமயி லேறிநட மாடுசர ணாலெமக்
        கஞ்சல்தந் தாளலரிதோ!
சந்தமுயர் புகழ்வேய்ந்த தாள்கொடெம் நாவினிற்
        றமிழின்பம் ஊட்டலரிதோ!
தமியேம் அமைத்தசிற் றிலமழிய வருவதுன்
        தாண்மலர்க் கோர்பெருமையோ!
செந்துவர் இதழ்க்கவுரி மைந்தவெம் சிற்றிலைச்
        சிதையாது கந்தருள்கவே!
தென் தணிகைவெற்பிலுறை கந்தவெம்சிற்றிலைச்
        சிதையாது வந்தருள்கவே! (2)

73 நாகமே சிலை நாணு மாகவுற் றமர் தரும்
        நக்கன் முடி முதுகுடலெலாம்
நையவில் பிரம்புகல் லாலடித் தோர்க்குமோர்
        நலநல்கு சிவன்மைந்தனே!
காகமொரு காதுவிழி' யோடுறவி டுத்தருள் செய்
        கார்மேனி கோகுலத்தில்
கயிற்றாற் பிணித்துமத் தாற்புடைத் தோரையும்
        காத்துதவு மான்மருகனே !
ஆகுவா‘கனனங்கள் ஆகுலம கற்றியருள்
        ஆபத்சகாய னிளையோய்!
அவனிக்கொர் ஆறுதலை யாகவரு நீயிவண்
        அழித்தற் கிறங்கலழகோ!
சீகர நி லாவுமுன பாதமலரா லெமது
        சிற்றிற்சி தைத்திடேலே!
சேய்தணி மேல் நின்ற நேயவறி யேமெங்கள்
        சிற்றிற்சி தைத்திடேலே! (3)

74 மறந்த வேதன் செருக்கல்ல,
        மாயப் பொருப்பேழ் கிரியல்ல,
மாயா அவுணன் உரமல்ல,
        வானோர் நலியுஞ் சிறையல்ல,
இறைஞ்சும் அடியார் இடரல்ல,
        எதிரும் மகவான் முடியல்ல.
இன்சொற் கீரன் படரல்ல,
        இருகூன் மாறன் மருளல்ல,
பிறந்த பயனென் றுன்துணையே
        பேணிக் குழைந்து வாழாது
பிழைத்தே மெனினும் நின்னன்பிற்
        பிழையேம் களியாட் டொன்றிதுவென்
றறிந்து புரத்தல் நின்கடனால்
        அறியேஞ் சிற்றில் அழியேலே!
அணியார் வரைசூழ் தணிவாழ்வே !
        அறியேஞ் சிற்றில் அழியேலே ! (4)

75 தவஞ்சேர் கங்கைப் புனலாட்டித்
        தண்பூந் துகிலால் நனிதுவட்டிச்
சந்தத் திருநீ றிட்டுநலந்
        தருசந் தனத்துப் புகைகாட்டி,
உவந்தோர் கதிரே ஆரதியாய்
        ஓங்கச் சுற்றி முலையமுதம்
ஊட்டிக் கலன்கள் பூட்டியுமை
        உலகிற் களிக்க உனைவிட்டால்,
பவஞ்சேர் வினைதீர்த் துன்றனருள்
        பாலிக்காதெம் சிற்றில்லைப்
பதத்தா லுதைத்தா கத்திலுமண்
        படுமாறுலவல் அழகாமோ!
சிவன்சேய் எனவந் தருள் சேயே !
        சிறியேம் சிற்றில் சிதையேலே !
செய்யா ! தணிகை முருகையா !
        சிறியேம் சிற்றில் சிதையேலே ! (5)

76 வருத்தா தெவர்க்கும் நலமேசெய்
        வாழ்வே ! பிறவிப் பிணிதீர்க்கும்
மருந்தே! பெருந்தே வர்க்குமருள்
        வழங்கும் ஞான மணிவிளக்கே!
[#]உருத்தே சமர்செய் வெஞ்சூரன்,
        உளமும் வியந்த அருள்வடிவே!
உயிர்காத் துதவும் உறுதுணையே
        உருத்தால் வேறோர் புகலுண்டோ!
கருத்தா லுயர்ந்த திருப்புகழ்சொல்
        கருணை அருண கிரிநாவில்
கனவில் நனவில் நடமாடிக்
        களித்தின் பூட்டிக் கதியுதவும்
திருத்தா ளிணைத்தா மரையாலே
        சிறியேம் சிற்றில் சிதையேலே !
செய்யா ! தணிகை முருகையா!
        சிறியேம் சிற்றில் சிதையேலே ! (6)
--------
[#} உருத்தல் கோபித்தல். கடைக் கண்ணியல் வகுப்பு. (7)
---

77 வேலை மயிலைக் கடைக் கண்ணை
        விழைவோர் அளகா புரிக்கரசும்
விண்ணோர்க் கரசும் பணிபுரியும்
        மேலாம் அரசாள் வரம்பெறுவர்,
காலன் தனையும் வென்றிடுவர்,
        கலக்கும் பகையொன் றவர்க்கில்லை,
கவினும் தமிழும் கலைபலவுங்
        கதியாம் வீடும் பெறுவரெனில்,ழீ
சாலச் சிறந்த கழலாலெம்
        தலைகீ தயன்கை எழுத்தழியத்
தயைசெய் யாதெம் மணல்வீடுஞ்
        சரியக் குறுகல் சரிதானே!
சேலின் விழிமா துமை சேயே!
        சிறியேம் சிற்றில் சிதையேலே!
செய்யா! தணிகை முருகையா!
        சிறியேம் சிற்றில் சிதையேலே !

78. பின்ன தந்தன் கனியுண்ணப்
        பெரிதுங் கோபித் தோடிய நீ
பின்னும் அவனை ஓர்கானில்
        பேணி யழைத்த துரைத்தேமோ?
தன்னந் தனியிற் குறவியிரு
        தாளை வருடி மிச்சிலையுந்
தகையா தருந்தி மால்மிக்குத்
        தளர்ந்து நின்ற துரைத்தேமோ?
கன்னம் வைத்து, நள்ளிரவில்
        கவர்ந்து சென்ற துரைத்தேமோ?
கடையேம் செய்த பிழையாதோ!
        கந்தா! கருணாகரனே! நின்
சின்னஞ் சிறிய பொன்னடியால்
        சிறியேம் சிற்றில் சிதையேலே !
செய்யா ! தணிகை முருகையா !
        சிறியேம் சிற்றில் சிதையேலே ! (8)

79 பழநிம லைப்பதி, புகலிய லைப்பதி,
        பணிவரை, செய்ப்பதி, கதிர்காமம்,
பரிமயில் வெற்புயர் குருமலை, சிக்கலொர்
        பரகிரி,நற்பழ முதிர்சோலை,
மழைதவழ் பற்பல வரைகள், வனப்பிணை
        மகள்வளர் வெற்பரன் மருவூர்கள்,
மறைமுடி, பத்தர்கள் உள நடு,பொற்குர
        மருவடி யிற்றிகழ் முருகோனே!
எழுபுவ னத்தையு மகிழவ ளித்தருள்
        இளைய எனத்தொழும் எளியேமுக்
ட ருற முற்படல் நினது மலர்க்கழல்
        இணையத னுக்கொரு நெறிதானோ!
அழகு திருத்தணி மலையி னடித்தவ’
        அமைஎம சிற்றிலை அழியேலே!
அடல்புனை வெற்றியின் அயில்விழை கொற்றவ!!
        அமைஎம சிற்றிலை அழியேலே! (9)

80 பில்குஞ் செந்தேன் கமழ்பைந் தாதின்
        பெருமை விரிக்குஞ் சுரும்பார்ப்பப்
பேரார் மதின்மேல் மருவுந் திங்கள்
        பின்னும் அழைப்ப, மகிழ்ந்து நகுங்
கல்வங் கொஞ்சுங் கணிகக் கிரியைக்
        கண்டோர் அடைந்தோர் நினைந்தோருங்
கருதும் யாவும் பெறநின் றருளுங்
        கந்தா! நந்தி நதிக்கரையில்
மல்குங் காவில் பொன்மண் ணெடுத்தோர்
        மணிவீ டமைத்துன் வார்கழலில்
மலருந் தமிழும் புனைந்தன் பமுதம்
        வட்டித் துனக்கின் பளித்துண்போம்;
செல்வங் குலவுந் தணிகைக் குழகா!
        சிறியேம் சிற்றில் சிதையேலே !
சீரார் ஈரா றுயர்தோள் வீரா!
        சிறியேம் சிற்றில் சிதையேலே ! (10)
------------

9. சிறுபறைப் பருவம்

81 குரைகழ லுக்கணி தருமிரு சரணம்
        கொட்பவிழ் கலைகமழுங்
குடைநட னம்பயில் குழக! செழுங்கதிர்
        கொஞ்சிவ ரக்கூவி
விரிசிறை வாரண மிளிர்தரு கேதன !
        வெற்றிமி டுக்குடனே
வெங்கல பப்பரி மேல்வரு செவ்வயில்
        வேலுவ! விஞ்சுகொடைக்
கரதல! ‘எண்குண பஞ்சர'! குஞ்சரி
        கன்னிவ னக்குறமான்
கண்டணை காவல! தொண்டர்கள் மேவிய
        கதியென நின்றருள்கூர்
குருபர ! நாரணர் புகழ்பரி பூரண!
        கொட்டுக சிறுபறையே !
கொற்றவ நற்றணி யுற்று நிலைத்தவ!
        கொட்டுக சிறுபறையே ! (1)

82 திகழ்கதிர் வடிவில் அருள்விழி கொஞ்சத்
        திருமரு மதிவதனச்
சேயே! புந்தியி னிறையறி வாள !
        செழுமறை தருபொருளைப்
பகரென வெள்ளிவ ரைக்கிறை வினவப்
        பரிவுட னுரைகுருவே!
பைங்கடல் மீதெழு சூரற அசனிப்
        படையயில் வேல்கடவும்
புகழ்மிகு பன்னிரு புயவரை உடையோய்!
        பூதர மெட்டதிரப்
பொங்கர வலறிப் படவரு பச்சைப்
        புரவியில் வலமருவும்
குகநவ கோளறு தமிழ்தரு பாலக!
        கொட்டுக சிறுபறையே !
கொற்றவ! நற்றணி யுற்று நிலைத்தவ!
        கொட்டுக சிறுபறையே ! (2)

83 விண்டலத்துந்துபி, வலம்புரி, இயம்பல,
        விண்டுவின் சங்குசார்ங்கம்,
விமலனங் கைத்துடி பிநாக நா தத்தையும்
        மீறும் உங் காரவொலியால்,
மிண்டியெதிர் வன்சீய முகவன்முடி ஆயிரம்
        வீறுதோ ளீராயிரம்
விண்டடங் கப்பணித் தடல்வச்சி ரப்படை
        வீசிநின் றட்டகுமரா!
வண்டமிழ்ப் பயிரோங்க வந்துதவு கொண்டலே!
        மாறிலாக் கருணைமழையே!
மலைமங்கை யணைதந்து மகிழ்மைந்த! குககந்த!
        மயில்மன்ன ! அயில்மன்ன ! நின்
முண்டக மலர்க்கரங் கொண்டுகனை தொண்டக
        முருகியம் முழக்கியருளே!
மொய்ம்மலர்த் தணிமருவு செய்யநற் றொண்டக
        முருகியம் முழக்கியருளே ! (3)

84 அம்மையுமை தந்தவேல் கொண்டவுணை வீட்டிவென்
        றமரர்சிறை மீட்டிடுகையால்,
அத்தன்வினவப்பொரு ளுணர்த்திடுகையால்
        அன்புக்குகந்தருள் கையால், வள்ளி
வம்மினென்றழைத்துலகுவாழவைத்தருள்கையால்,
        மாறன்கூன் நிமிர்த்திடுகையால்,
மழைவரச்செய்கையால், வெயிலிடர் தவிர்கையால்
        மாமயில் நடாத்திடுகையால்,
தும்மிக்கு மார நம' என நினைந் திட்டுணத்
        துணையுதவி நல்கிடுகையால்,
சுருதிமறை வேள்விகாத் தருள்கையால், நற்றமிழ்
        தோன்றிவள ரச்செய்கையால்,
செம்மைதவழ் கையனாம் மெய்யனே! செய்யனே !
        சிறுபறை முழக்கியருளே!
செங்கட் பசுங்குவளை யம்பொற் சிலம்பனே!
        சிறுபறை முழக்கியருளே ! (4)

85 பாற்றின நாய் நரி பேய்கொடி யாடிப்
        பசியற, வெங்குருதிப்
பரவையி லவுணர்க வந்தமி தப்புறப்
        பன்மணி முடிசிதற,
நாற்றிசை வானிடை வாண்மழு வல்விலின்
        நாணெழு மொலிபரவ,
நவையறு மொன்பது வீரரு மீள்தர,
        நானில மகிழ்கூரப்
போற்றிசெய் விண்ணவர் மலர்மழை பொழியப்
        பொலங்கதிர் வேல்கடவிப்
புகர்முக னழிவுறப் பூதர முடையப்
        பொருதெழு திண்புயனே!
கூற்றையு தைத்தவர்[*] போற்றிடு வித்தக !
        கொட்டுக சிறுபறையே!
யறைகுரு குறைதவிர் தணிமலை யுறைகுரு பரமணி !
        கொட்டுக சிறுபறையே !
-----------
[*] வீராட்டகாசேச்வரர் (5)
-------

86 திக்குட னெட்டுக் குலகிரி யாடிச்
        சிதறக் கடல்கதறச்
சேடனி றைஞ்சச் செகதல மஞ்சச்
        செற்றெழு சூரிரியப்
பக்கரை யிட்டம ணித்தவி சுற்றதொர்
        பைம்பரி மிசையேறிப்
பரிதியை மீறிய ஒளிதவழ் வைவேற்
        படைதொடு செவ்வேளே!
நக்கன்மு குந்தன்வி ரிஞ்சன்வ லாரி
        நந்திய கோரனரா
நாரத னுயர்குறு முநிபுகழ் நாயக!
        நற்றமிழ் வித்தகனே !
குக்குட நற்கொடி யுற்றெழு கொற்றவ!
        கொட்டுக சிறுபறையே!
குறைதவிர் தணிமீ துறைகுரு மணியே!
       கொட்டுக சிறுபறையே! (6)

87 வென்றி மதக்கரி மாவின
       ழைப்பென வெம்பிடி நனிபிளிற,
விரிகட லொலியென விரகுடை மங்கையர்
        வெம்பி யுளந்தளர,
மன்றலி லோங்கொலி யெனவரு மறையோர்
        வரிசைபெறக் குழும,
மஞ்சொலி யென்றெழில் மயில்நட மாடிட
        வண்டமிழ் இசைதானென்
றொன்றும னத்துட னன்பர்கள் கூடிட,
உயர்மறை நாதமென
உம்பர்தி ரண்டிட, வீறுயர் துடியின்
       ஒலியென அவுணருளங்
குன்றிட மலர்பொரு பன்னிரு கைகொடு
       கொட்டுக சிறுபறையே !
குறைதவிர் தணிமீ துறைகுரு மணியே!
கொட்டுக சிறுபறையே! (7)


88 கடிமலர் பச்சிலை உளமொட ளித்திரு
        கழலை வழுத்துவர் இடர்தவிரக்
கடுகிய வர்க்கருள் கணபதி யைத்துணை
        கருதி வனத்திடை அழையிளையோய்!
மடலெழு திக்குற மகள்மயல் மிக்கக
        மகிழ்வொ டணைத்தருள் சரவணனே !
மடவரல் கற்பக வநிதையி டத்தினில்
        மருவி யணைத்தப னிருபுயனே !
'அடியவர் இச்சையி லெவையெவை யுற்றன'
        அவைகள னைத்தையு மருள்பவனே!
அடலவுண் வெற்புட னழியவ னற்கதிர்
        அயிலை விடுத்தமர் புரிபவனே !
முடிபணி யத்திரள் சுரர்சிறை யைத்தவிர்
        முனைவ! முழக்குக சிறுபறையே !
முருகவிழ் நற்றமிழ் பரவுதி ருத்தணி
        முருக! முழக்குக சிறுபறையே !       (8)

89 ஆர்கழல் தண்டைசி லம்படி யர்க்குயர்
        அஞ்சல ளிப்பமென,
அரைவட முடைமணி யசையம றைப்பொருள்
        அமையத் தமிழணிசெய்
மார்பிடை யாடக வில்வத ளத்தொடை,
        மரகத வறுகோணம்
மருவும தாணிமுந் நூலுட னக்கநன்
        மாலையு மிளிரவளர்
சீர்தரு தீபவ லங்கல்ம ணக்கச்
        செவியணி குழைவெயிலில்
திகழ்மதி வதனத் தாரருள் நிலவச்
        செம்பொற் கடகபுயக்
கூர்வடி வேலுட னாடிய பாலக!
        கொட்டுக சிறுபறையே!
கொற்றவ! தணிகைச் சுப்பிர மணியா!
        கொட்டுக சிறுபறையே !       (9)

90 இழுமென வுற்றிழிமணியரு விப்புனல்
மழமுழ வத்தியல் பயில்வன மிக்குயர்
இமயம லைக்கிறை வளருமை பெற்றணை
    இறைவ! முழக்குக சிறுபறையே!-என
    திறைவ! முழக்குக சிறுபறையே!

இணையறு கற்பக மொருகை முகத்திப
வரசடி யர்க்கிடர் தவிர்விக டற்கிணை
இளவலெ னப்புவி வலமரு வித்திகழ்
    இயவுள்! முழக்குக சிறுபறையே!-உயர்
    இயவுள்! முழக்குக சிறுபறையே !

மழைநிகர் பொற்பினன், மலைநெகி ழக்குழல்
இசைவள ரச்சுதன் உலகள விற்கழல்
வளர்குறள், உத்தமன், நரவரி மெச்சிய
    மருக! முழக்குக சிறுபறையே!-திரு
    மருக! முழக்குக சிறுபறையே!

மருளய னச்சுறு தளைபுனை வித்தெழு
புவனம தைப்படை தொழில்மரு விச்சதுர்
மறைமுடி செப்பரு மவுனம ரற்குரை
    மகிப! முழக்குக சிறுபறையே!-சுரர்
    மகிப! முழக்குக சிறுபறையே !

அழல்விழி மைக்கரி முகவவுண் வெற்புடன்
அமரில் விழப்பரி மயில்கட விக்கதிர்
அயில்விடு வெற்றியில் மிளிர்தரு பொற்புய
    அழக! முழக்குக சிறுபறையே!-தனி
       அழக! முழக்குக சிறுபறையே !

அணிமது ரைப்பதி யிறைய னகப்பொருள்
உரைதெளி வித்தருள் குழக! அகத்தியர்
அகமகி ழத்தமிழ் பகர்புகழ் பெற்றுயர்
    அதிப! முழக்குக சிறுபறையே!மொழி
    யதிப! முழக்குக சிறுபறையே !

மொழிகுழ றத்தொழு துருகி யருட்புகழ்
பரவிநி னைப்பற நினைபவர் கட்புனல்
முழுகிய வர்க்கிரு பயனு மளித்தருள்
    முதல்வ! முழக்குக சிறுபறையே!- முழு
    முதல்வ! முழக்குக சிறுபறையே!

முகடுப லப்பல அணிதொடை யொத்திரு
புறமுயரத்திகழ் அழகுதிருத்தணி முனைவ!
குறப்பிணை ஒருபிடி யுற்றணை
       முருக! முழக்குக சிறுபறையே !-எழில்
    முருக! முழக்குக சிறுபறையே !        (10)
------------------

10. சிறுதேர்ப் பருவம்.

91 பங்கயச் செங்கைவிர லுக்கிடை யராமுடி
        பதித்ததன் வால் சாட்டையாய்ப்
பாராதி புவனமோர் பம்பரமெ னக்கொண்டு
        பற்றிச்சு ழற்றியாவும்
மங்கலவி யோமத்தி லேசுழன் றகலாது
        வாழவருள் விளையாட்டினில்
மாறாது கருணைபொழி யீராறு கண்ண,என்
        மதலையென் றுமையெடுத்துத்
தங்கமணி மடிமீது வைத்துச்சி மோந்துமுலை
        ததும்பமுது தந்துமகிழுஞ்
சரவணப வாநந்த! முருகசிவ னார்கண்ட
        சச்சிதா நந்தகுருவே!
திங்களொடு கதிருமிரு சக்கரமெ னக்கொண்ட
        சிறுதேரு ருட்டியருளே !
செகதலம் புகழ்கல்வ வரையிடந் திகழ்செல்வ!
        சிறுதேரு ருட்டியருளே! (1)

92 புரந்தரனும் வந்துநின் றிரப்பவிரு தண்செவிப்
        பொற்குண்ட லந்தந்தகைப்
புகழ்வேய்ந்த கர்ணனெதிர்போரில்விடுவெங்கனல்
        மொங்கராக் கணைவிசயனின்
சிரங்கொளக் குறுகுமுன் தேரினைய ழுத்தியோர்
        சிறுநொடியி லுயிர்காத்தருள்
திறல்விண்டு கணையெனச் சிலையான சிலையினிற்
        றிகழமண் மகள் தேரெனப்
பரிந்துவர மேவுசிவ னாரிடம் சூர்பெறும்
        படர்வையம் 'இந்த்ர ஞாலம்'
பரவுதந் திரவிகல் கண்டதனை நில்லெனப்
        பணித்தவண் நிற்கவைத்துத்
திருந்துலகு வாழவருள் புரிந்து தணி வாழ்குமர!
        சிறுதேரு ருட்டியருளே !
தேவர்பணி தருசெய்ய! மூவர்புகழ் தருமெய்ய!
        சிறுதேரு ருட்டியருளே ! (2)

93 அஞ்சவரு வன்சமனி றைஞ்சிவிழ அன்றுதைத்
        தங்கணொரு பாலனுயிர்காத்
தருள்சங்க ரன், புவன மலறவரு கடல்விடமு
        மமுதமென் றுண்டபரமன்
கொஞ்சி அயன் அறியாத பொருளை நீ யறிவையோ?
        கூறெனச்', 'சீடனிலையைக்
கொள்க'வென்றத்தனையிருத்தியவனெஞ்செலாம்
        குளிரமெய்ப் பொருள்விரித்தோய்!
தஞ்சமென் றடிபரவு மன்பர்பவ ரோகமும்
        தவிர்வைத்ய நாதசாமீ!
தரைமீது 'சிவலோக' மென்றிலகு தணிகையில்
        தங்கிநிலை நின்றவேளே !
செஞ்சொலின் தமிழ்வளர வந்துகந் தருள்குழக!
        சிறுதேரு ருட்டியருளே!
தேவர்பணி தருசெய்ய! மூவர்புகழ் தருமெய்ய!
        சிறுதேரு ருட்டியருளே ! (3)

94 கந்தகுக ! சண்முக! குமாரபன் னிருபுயா!
        காங்கேய! கார்த்திகேயா !
கவுரிநந் தனமுருக ! சிவன்மைந்த! குருபரா!
        களிற்றிளைய! வேள் !விசாகா!
சிந்துரமின் வள்ளிமண வாள !மயில் வாகனா!
        திருமருவு மார்பன்மருகா!
திகழ்ஞான சத்திதர ! விறல்வார ணக்கொடிய!
        செந்தமிழ்க் குழகவழகா !
முந்துமறை புகழ்சுப்ர மண்ய,வக் கினிபுத்ர!
        முத்தரித யத்துணிறைவே!
முருகுகமழ் சரவணா ! வரமுதவு கரதலா
        முரணவுணும் வாழ்த்துமிளையோய்!
சிந்தையவிழ் அன்பர்சேர் தென் தணிகை யின்பளே
        சிறுதேரு ருட்டியருளே !
தேவர்பணி தருசெய்ய ! மூவர்புகழ் தருமெய்ய!
        சிறுதேரு ருட்டியருளே! (4)

95 அவனியொடு வானெலாம் வெருவவரு தகரேறி
        அனைவர்க்கு மபயமருள்வாய்!
அடல்வெள்ளையானையாம்
        பிணிமுகமி வர்ந்து வந்தன்பருக் கருளுதவுவாய்!
உவகைகொண் டோங்கார மயிலிலோர் நொடியினில்
        [#]உலகெலாம் வலமருவுவாய்!
உம்பர்கோன் மயிலாக வரவிவர்ந் தவுணிரிய
        உற்றுத்து ரத்திமகிழ்வாய்!
தவமிக்க சூருரம் பிளப்ப அவன் மாறிவரு
        தடக்கொற்ற மயில்கடவுவாய்!
சம்புதரு 'மனவேக' மாமணித்தேரில்வரு
        தனிஞான சத்திதரனே !
சிவமணங் கமழவளர் தமிழ்புகன் றருள்குழக!
        சிறுதேரு ருட்டியருளே !
திருமல்கு தொண்டைநில நடுமருவு தணிமுருக!
        சிறுதேரு ருட்டியருளே ! (5)
--
[#] சிவபிரானிடம் மாங்கனிபெற முருகபிரான் உலகைச் சுற்றி வந்த வரலாறு.
-- பழநிப் புராணம்.
----
96 கனகம் பிறங்கு மகுடஞ் சிறந்து
        கதிர்வீசி ராறுகுழையின்
கவினார் முகங்கள், நவரத்ன வங்கி,
        கமழ் நீப மாலை, பரிசை
கனவச் சிரம்பொன் வசிதண்டு சேவல்
        கமலங் கணிச்சி மணிவில்
கதிர்வேல் குடாரி கணையை விழைந்து
        கடவும் புயங்கள் மிளிர
'மனவேக' மான அணிதே ரிலேறி,
        வளர்கோடி சூர்யவடிவாய்,
வருகோல வீர சிவபால் னென்று
        மகிழ்தேவர் வீறுகூறச்
சினவே லெறிந்து சமர்மே வுகந்த!
        சிறுதேரு ருட்டியருளே!
திகழ்காவி யம்பொன் வரைவாழ் சுயம்பு!
        சிறுதேரு ருட்டியருளே !        (6)

97 மறமலி மூவா யிரவரு முறையே
        மாய்ந்துங் கஞ்சனருள்
வரமத னாலுயிர் பெறுவது கண்டயர்
       வல்வில் விசயனெதிர்
அறுமுக வடிவா யுற்றவ ரொருமித்
தடல்வயி ரவர்படையால்
அங்கழி வாரென் றோதிய குமரா
        அரிமாமு கன்மாயம் !
செறிபடை யால்நவ வீரர்கள் முதலோர்
        திரைகடல் மீதுதயத்
திகிரியி லடைபட் டயர்வத கற்றும்
        திறல்வடி வேல்வீரா!
உறுதுணை யெனவே நிலைபெறு குகனே!
        உருட்டுக சிறுதேரே !
ஒப்பறு தணிவாழ் சுப்பிர மணியா!
        உருட்டுக சிறுதேரே!        (7)

98 வரை நங்கை உமையினிரு பாதச்சி லம்பிலுதிர்
        மாணிக்கம் வைடூரியம்
மரகதந் துகிர்புட்ப ராகநித் தில நீலம்
        வயிர நற் கோமேதகம்
தருமகளிர் மகிழவரன் நோக்கருள வந்திலகு
        தநயராம் நவவீரர்தம்
தலைவனென் றணிபுரவி தேர்கரி பதாதிசூழ்
        தர நின்று பணிபுரியவே
திரைபொருங் கரைகுலவு செந்தில்வந் தமர்க்குமுள்
        தெவ்வினுக் கோர் தூதெனத்
திறல்வீர வாகுவைப் பணித்துச் சயந்தனைச்
        சிறையினில் தேற்றிவரவோர்
திருவுளத் தருள்புரியு முருகமுத் தமிழ்விரக!
        சிறுதேரு ருட்டியருளே!
திகழ்ஞான சத்திதர ! தணிகாசலத் திறைவ!
        சிறுதேரு ருட்டியருளே ! (8)

99 அலகில்வெண்கலமணியி லெழுகலன்கலனொலியில்
        அருமறையி னிசைபரவவே,
அசை தருங் குருகுபகர் கொடிவிழைந் தழையமரர்
        அடியர்கண் டகமகிழவே,
குலமிகுந் தெணவரிய குரகதம் கடியதொரு
        குசைதவிர்ந் துலவுமளவில்
குவலயந் தனில்மிகுதி புழுதிகண் டருணனொளி
        குறையமண் டிருளிரியவாங்
கிலகிவிண் டலமுகடு மருவிநின் றுயர்கனக
        இரதமொன்றி னில்மாரனின்
எழிலுநின் றயரழகின் வடிவில்வந் தருள்குழக!
        இணையறுஞ் சரவணபவா!
சிலையிடம் பலவுளுயர் தணிகையங் கிரிமுருக!
        சிறுதேரு ருட்டியருளே !
சிவமணங் கமழினிய தமிழ்புகன் றருளிளைய !
        சிறுதேரு ருட்டியருளே ! (9)

100 பேராயி ரம்பரவி விண்ணவர்பொன் மலர்மாரி
        பெய்ய, மறை யதிர, அடியார்
பேணிநின் றுருகிவிழி நீர்மல்க, முநிவரர்
        பிரிவிலா இன்பமெய்தக்
காரூர்தி, சசிதேவி அன்னவா கனனயன்,
        கலைவாணி, கருடவூர்தி,
கமலை, வெள் விடையேறி, கவுரியும் புகழவோர்
        கலாபத் தனித்தேரிலே,
ஏராரி ளம்பரிதி நூறாயி ரங்கோடி
        எழுந்ததென வருமுருகனே !
இருடிகளிர் வணை நித்ய கல்யாண மூர்த்தியாய்
        இருநிலம் வாழவருள் நின்
சீரோது செஞ்சொல்தந் தாளவென் நெஞ்செனும்
        சிறுதேரு ருட்டியருளே !
தென் தணிகைவாழ்கந்த நங்கையுமையாள் மைந்த !        (10)
        சிறுதேரு ருட்டியருளே!

திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ் முற்றிற்று
-----------------------------

குறிப்புரை
வித்துவான் ஸ்ரீ இராஜ.சிவ.சாம்பசிவ சர்மா அவர்கள் உதவியது


காப்பு: ஆபத்சகாயன் - தணிகைத்தலவிநாயகர். கஞ்சமலர் தாமரைமலர்.

1. உவணம் -கருடன்; புருடோத்தமன் - நம்பி; துளவு - துளசி உழுவை - புலி; ஆன் - பசு ; கதிர-சூரியன்; 'பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணுக' -நறதிணை. கரி- கஜேந்திரன் என்னும் யானை; நந்திநதிக்கரைவளர் கொண்டல் -தணிகையில், அருகில் ஓடும் நந்தியாற்றின் தென்கரையிலுள்ள விசயராகவப் பெருமாள்.
2. பவம்- பிறப்பு;சமன் - யமன்; கல்வமால்வரை - செங்கழு நீர்மலர் மலர்கின்ற தணிகைமலை. தாதை - யாவர்க்கும் தந்தை; கான்முளை வள்ளாள மன்னனுக்குப் பிள்ளையாயது, திருவிளை யாடலில் விருத்த குமார பால்னானது, பட்டினத்தடிகளுக்கு மகனாம் மருதவாணராக வந்தது முதலான வரலாறுகள்; தாய்- திரிச்சிராமலை மீதுள்ள சிவபெருமான் தாயுமாய் வந்து செட்டிப் பெண் பிரசவத்தில் உதவியதும், திருவிளையாடலில் பன்றிக் குட்டிகளுக்குத் தாயாக வந்து பாலூட்டியதும் குறிக்கும்
3. அன்புச் செருக்கு - அன்பு செய்தலினாலுண்டாகும் பெருமிதம்; குழகன் - இளமையுடையோன், தென் தணிகை தென் - அழகு.
4. தருணி பருவப்பெயர்; அட்டகாசம்-வீராட்டகாசம்; கடம்- மதம்; தடபார-விசாலமான, கனமுடைய ; வாரணம் -யானைமுகக் கடவுள்.
5.பரவை - திருப்பாற்கடல; அறிதுயில் - யோகநித்திரை.
6.வயிரவர்பலருள் இங்கு நால்வர் குறிக்கப்பட்டனர். எகின்- கேத்ரபாலன்-க்ஷேத்திரபாலபைரவர்.
7. மைம்முகம்- ஆட்டின் முகம்.
8. ஞிமிறு-வண்டில் ஒருவகை; முகர-உறிஞ்ச; சலதி - கடல்; திருமுருகு-திருமுருகாற்றுப்படை ; அருணகிரி மதுர மொழி - திருப்புகழ்.
9. பவனம் நுகர் பனகம - காற்றினை உண வாகக் கொள்ளும பாம்பு; தவளம் - வெண்மை; தரு- கற்பகதரு; இபவநிதை - ஐராவதம் வளர்த்த தேவசேனை; சவரி - வேடர் மகள் வள்ளி. நாய்;

14. சததளம் -நூற்றிதழ்த்தாமரை; என்னிலும் இனியான் ஒருவனுளன்'-(அப்பர்), கந்தரலங்காரம் 47. ஒப்பு.
15.படர்- துன்பம்; தகர்-ஆடு. கடவி - செலுத்தி ; - தகரேறுபடலம் (கந்த புராணம்); விதரண - மேன்மைக் குணமுடையவனே.
16 நற்ற மிழிற் புகழ்பூதி - திருப்புகழ், கந்தரனுபூதி,
17. முருகன் திருவிளை
புகழ்பூதி-திருப்புகழ், யாடல்கள் - கந்தபுராணம்.
18. அளி - தேன்வண்டு ; அளிதவழ் மலரில் நடமிடு- அன்பு விளங்கும் அடியவர் இதயமலரில் நடன மிடும்.
19. தேவி முருகருக்கு வேலருளியது - (கொம்பனையார்- திருப்); சீயம் - சிங்கம், சிங்கமுகாசுரன்; ஆயிரமுகத்து நதி - கங்கை (வேளைக்காரன் வகுப்பு).

22.கஞ்சன் - பிரமன்; செஞ்சொல்- பிரணவம் (ஓம்); கண்ணு தல்- சிவன்; கான்முளை-மகன், முருகன் ; காரணமாகிய இருவினையையும் அதன் காரியமாகிய பிறப்பையும் போக்கும் மேலான கருணையாளன் என்பது அறிதற்பாலது: மஞ்சு - மேகம்; மயிற் பரிமா - மயிலாகிய குதிரை; வைவேல் - கூர்மையையுடையவேல்; இந்திரன் மயிலானது - சூரபன்மன்வகைப்படலம் -கந்தபுராணம். 23. நிறை - கற்பு. 24. தணிகையிற் பூசித்துப் பேர் பெற்றவர் கள்.
25. சிவனருள் சின்னம் மேவி வளர்சேயே- அருணகிரி நாதரை ஒப்ப, இப்பிள்ளைத்தமிழ் நூலாசிரியரும் திருஞான சம்பந்தரைச் சுப்பிரமணியத்தின் அபராவதாரம் கொள்ளும் கொள்கையுடையவர்.
28. புகர்மாமுகன்-யானை முகன், தாரகாசுரன்; திருமாலுக்குச் சக்கரத்தை அருளியது (நாரணர் அருள்பெறு படலம் 22. தணிகைப்புரா) என் ற
29. மான் மகள் - மால்+மகள்.

32. 'குப்பாச வாழ்வினிற் கூந்தாடும் ஐவரின்'- (கந்தரலங்காரம் 14)
34 உற்பலம்: நீலோற்பலம். 35. பொற்ப - அழகையுடைய வனே, மலையையுடையவனே எனலுமாம்.
37. செட்டியர் மகன்- உருத்திரசன்மன்; முரட்டுப் புலவன் - பொய்யாமொழிப்
- புலவர்- (பத்தித்தரள - திருப்)
38. சத்சித்சுகம் -சச்சிதானந்தம். குடிலை வியக்தமாயை - குடிலையோகினி (கமலமாது-திருப்)
39. சூர பன்மன் முருகபிரானை வியந்து புகழ்தல் - கோலமா மஞ்ஞைமீது.. (கந்தபுரா)
40. முருகன் கைத்திறம் கூறல்; அருணகிரி நாவில் வேல் பொறித்தது (விந்துப் புளகித - திருப்) கோளறுகுகன் - சேயவன் புந்தி'- கந்தரந்தாதி.

42. ஆரல்மகளிர் - கார்த்திகைப்பெண்கள்.
43. இச்செய்யுள் -
காய்மாண்ட தெங்கின பழம்வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீற வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப்பழங்கள் சிந்தும்
என்னும் சீவகசிந்தாமணி (31)ச் செய்யுளோடு ஒப்பு.
44. கேதனம் கொடி. 45.தணிகைக்குரிய பெயர்களைத் தொகுத் துக் கூறியுள்ளது. கணிகவரை - க்ஷணிகாசலம்,நினைத்தக் கணத் தில் அடியவர் வேண்டும் வரம் நல்கும் மலை. மூலாதரி-மூல காரணனாம் சிவபெருமானே முருகவேளை மூலகாரணனாக உபா சிக்கும் கிரி. காவி- நீலோத்பலமலர். 'புவிக்குயிராகுந் திருத் தணி-' (மருக்குல-திருப்) 'தூரத்தொழுவார்வினை சிந்திடும்' -(வாருற்றெழு திருப்)
46. நீயே நானாய் நான்நீயாய் - நீவேறெனுதிருக்க நான் வேறெனுதிருக்க' (நாவேறு - திருப்) ஒப்பு.
47 கவுரி அங்கத்திற் கொருமுத்தமாக அளிக்க, முருகன் வள்ளியின் முத்தத்தை கந்தவன் எனல் எளிமையைக் காட்டிற்று.
48.சசி-சந்திரன்.

51. 'தமிழ்த்ரயநீடுந்திருத்தணி',(பெருக்கவுபாயம் - திருப்)
53. "தணிகையென் றெருகாலோதிற்... சாயுச்சிய மடைவர்தாமே' (39-கலம்பகம், திருத்தணிகைச் சந்நிதிமுறை),
54. கச்சியப்ப முநிவர் - தணிகைப் புராணம் முதலிய பாடியவர். தணிகை ஆற்றுப்படை பாடித் தமது சீடர் கந்தப்ப தேசிகரின் குன்ம நோயைப் போக்கினவர். கந்தப்ப ஐயர் (கந்தப்ப தேசிகர்) தணிகை உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ் சந்நிதிமுறை, தணிகா சலபுராணம் முதலிய பாடியவர்.தீட்சிதர் (முத்துஸ்வாமி தீட்சிதர்) சங்கீதமும் மூர்த்திகளுள் ஒருவர். தணிகேசர் அருளால் பாடத் தொடங்கி பல பலகிருதிகள் பாடியவர். தொட்டிக்கலைப்புலவர். (சுப்பிரமண்ய முநிவர்) திருத்தணிகைத் திருவிருத்தம் பாடி ஒரு வருடைய அந்தகத்தன்மையைப் போக்கினார் என்ப. காஞ்சி சிதம்பர முநிவர். சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ் பாடியவர். அருட்பிரகாசர். (இராமலிங்க சுவாமி கள்) திருவருட்பா பாடியவர். பாம்பன் அடிகள். (ஸ்ரீகுமர குருதாச சுவாமிகள்) முருகபிரானையே வழிபட்ட திடவிய தவசி. அருண் கிரிநாதரைக் குருவாகக் கொண்டு, அவர் பேரை ஒவ்வொரு பதிகத்திலும் வைத்துப்பாடியவர். குமாரஸ்வாமீயம், சுப்ரமண்ய வியாளம், தகராலய ரகஸ்யம் முதலிய இயற்றியவர் ஸ்ரீவித்தை வளர் சுப்ரமண்யர். (ஸ்ரீ ந.சுப்ரமண்ய அய்யர்) இச்சங்கத்தின் முதல் தலைவர்.திருத்தணிகைப் பிரபந்தத் திரட்டு, சுப்ரமண்ய தத்துவம், ஸ்ரீ வித்யாவிமர்ச நூல்கள் பல இயற்றியவர். புகழை அச்சிட்டவர் (திரு வ.த.சுப்பிரமணி பிள்ளை) அரும்பாடு பட்டுத் திருப்புகழ்ப்பாக்களைத் தேடி ஆய்ந்து, தொகுத்து முதன்முதலில் அச்சிட்ட புண்ணியர். வள்ளிமலை வள்ளல் (திருப்புகழ்ச்சாமி சச்சிதாநந்தர்) முதன்முதலில் திருப்புகழைப் பரப்பி வளர்த்த தூயர். திருப்புகழ் அடியார்களுடன் 1917ஆம் ஆண்டில் திருத் தணிப்படி விழாவைத் துவக்கி வைத்துத் தொடர்ந்து நடத்திய வர். இச்சங்கத்தை அவ்வாண்டில் ஸ்தாபித்தவர்.
55. "அஞ்சு வைகல் இவ் வகன்கிரி நண்ணியெம அடிகள்
தஞ்சம் என்றுளத் துன்னியே வழிபடுந் தவத்தோர்
நெஞ்ச கந்தனில் வெஃகிய போ கங்கள நிரப்பி
எஞ்சல் இல்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார்." (கந்தபுரா) 'கன்மலிந் தோங்குகழுநீர்க்குன்று'-(அப்பர்)
57. உழுவை-புலி. அதள் - தோல். துடிநடனம்: சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும் - சிலப்பதிகாரம்.
59. சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்க ளோடு அதோமுகமும் கூடி ஆறுமுகங்கொண்டருளிய அறுமுக சிவம் என்பது. இதனால் சிவனுக்கும் முருகனுக்கும் பேதமில்லை என்பதாம். தணிகையில் இணையிலி - (கொந்துவார்-திரும்).

61. பமரவளி- பமரம் + அளி ரீங்கார சத்தமிடும் தேன் வண்டு. விழிப்பானல் - கண்களாகிய நீலோற்பலம்; பாநு சூரியன்.
62.தலை வளைவுபெற - தலைவணங்க.
64. கலாபம். மயில் தோகை. இங்குக் கலபம் என நின்றது.
65. ஆடகம் பொன்; விது - சந்திரன்.
66. தகர அம்பரம்
66. தகர அம்பரம் - தகராகாசம், - இருதயமுமாம்.
67. மாண் + இக்கு + வில்லி மன்மதன். 68. வானமுகில் கையான், (புயவகுப்பு) ஒப்பு;தேனினிய
எவையெவை....வென்றன" ......முருகாறு........

"வள்ளி
சன்னலும் அமுதுந தேனுங் கைக்குமின் தீஞ்சொல மாற்றித
தன்னிகா புலவன் கூறுந் தமிழச்செவி தாழத்துக கேளா
அந்நிலை மனங்க ளிப்புற ற்றுமுகம் படைத்த கோமான்.
-- (காளத்திப் புராணம் - சிவப்பிரகாச சுவாமிகள்)

69. இப்பாட்டின் முதல் அடி, முறையே பொய்யாமொழிப் புலவரெதிரில் வேடனாகவும், ஒளவையார்முன் இடைப் பையனாகவும், குணசீலர்க்காகத திருச்செங்கோட்டில் பிரதிவாதி பயங்கரனுக்கெதிரில் மாடுமேய்க்கும் சிறுவனாகவும், மதுரையில் உருத்திரசன்மனாகவும் முருகபிரான் வந்தருளியதைக் குறிக்கும். மகவழுதலால் சூரபன்மனும மனமிடிந்தழுதல் -(கந்தரலங் காரம்- 5) ஒப்பு

73 - சிவபெருமான் தன்னை முடியில் வில்லால் அருச்சுனனும், முதுகில் பிரம்பால் பாண்டியனும், உடலெலாங் கல்லால் சாக் கியரும் அடித்தும் அவர்கட்கருளினார். காகமொருவிழி... 'காது மொருவிழி காகமுற' (பாதிமதி-திருப்) ஒப்பு. சீகரம் ஸ்ரீகரம். - கன்னமிட்டு கவர்ந்து சென்றது. 'நீர் கங்குற்போதில் ஈங்கு வந்திடுவ தொல்லாது'-(கந்தபுரா - வள்ளி -162.) ஒப்பு.

81. கொட்பு - சுழற்சி; குடைநடனம் - 'படைவீழ்த் தவுணர் பையுள் எய்தக் குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும்'-(சிலப்பாதி காரம்).
82. நவக்கிரகங்களின் பெயர்களமைந்த பாடல்; அசனி- இடி.- 83. தொ
83. தொண்டகம் - முருகனுகந்தபறை. முருகனுகந்தபறை.
84. தும்மும் காலத்தில் மார நம' எனின் முருகன் உதவி அருள்வன் (கந்தரந்தாதி 97)
85. பாறு + இனம் =பாற்றினம் - கழுகுக் கூட்டம்; கொடி - காக்கை; கவந்தம் - முண்டம்.
86. பக்கரை. சேணம்.
88."கடிமலர்பச்சிலை வழுத்துவர் இடர்தவிர" என்பது விநாயகர் சிறப்பு. 'கணபதியைத்துணை கருதி அழை'-

"முருகோட்டந் தரப்பாயும் மும்மதமு முற்றெடுப்ப முரிவிற் கோட்டும்
ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு முதுகளிறா வுலவக் காட்டப்
பருகோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் தினைப்புனத்தின பரண்மேற் கொண்ட
குருகோட்டும் பெடையணந்த குமரகோட் டத்தடிகள் குலததாள் போற்றி'
-- (காஞ்சிப்புராணம்)
மடலெழுதிக்.. 'எயினர் மடமானுக்கு மடலெழுதி மோகித்து'........ (சமரமுக-திருப்), அடியவரிச்சை..... அருள்பவன் (குருவியெனப் பல-திரும்).
89. இச்செய்யுள் தணிகேசனின் அணிகலன்களைக் கூறுகிறது
90. இச்செய்யுள் மூவடிமேல் வைப்பு: பொருட்செறிவும் அரிய சந்தமும் அமைந்தது: மொழி குழறத்தொழு.. கட்புனல் முழுகி (சீர்பாத வகுப்பு).

91. அராமுடியை விரலுக்கிடையில் பதித்து, அதன் வாலைச் சாட்டையாகக்கொண்டு பூமி முதலான உலகங்களைப் பம்பரமாகக் கொண்டு மங்கலமாக வாழ அருள் செய்பவன் முருகன் எனல் முருகன் அருளால் உலகங்கள் நடைபெறுகின்றன. (க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்) -ஒப்பு.
92. விண்டு - விஷ்ணு, திருமால்; கணை - அம்பு ; சிலை -மலை, மேருமலை;சிலை-வில்; படர்-பரந்த; வையம். தேர்.
94. முருகனை முப்பத்திரண்டு நாமங்களால் விளிக்கிறார்.
95. 'மனவேகம்' சூரசம்ஹாரத்தின்பொழுது முருகன் ஊர்ந்த தேரின் பெயர்.
96. முருகபிரானின் படைக்கலன் கலன்கள்- 'வீறுகேதனம்'-கந்த புராணம். போரில் இலக்கருள் ஒருவனாம் விசயனுக்கு முருகவேள் உதவியது - (கந்தபுரா).
98.நவமணிகளின் பெயர்கள்; தெவ்- பகை.
99. அசைதருங் குருகுபகர்கொடி விழைந்தழைய செ சழுமணிக் கொடிகள் என்னும கைகளை நீட்டியந்தக் கடிநகர் கமலச்செங்கண் ஐயனை ஒல்லை வா என்று அழைப்பன" (கம்பர்) ஒப்பு; நலிவு செய்வாரை அழித்து நலஞ் செய்தமையைக் காட்டிய வாறாம்.
100. பேராயிரம்-சகஸ்ரநாமம்: நின் சீரோது செஞ் சொல் தந்தாள என் நெஞ்செனும் சிறுதேருருட்டியருளே என் பது வேண்டுகோள்.
-----------------

பாட்டு முதற்குறிப் பகராதி

பாட்டு -பக்க எண் பாட்டு -பக்க எண் பாட்டு -பக்க எண்
அங்கையினில் 31 குரைகழலுக் 46 பாற்றின 48
அஞ்சவரு 53 கொந்தவிழ் 41 பில்குஞ் 46
அடல்வரை 11 சகல உலகு 5 பின்னதந்தன் 45
அம்மையுமை 48 சங்கின 22 புரந்தரனும் 52
அமுதநிலவு 36 சங்கையெலா 18 பூவியல் 24
அருணதருண 34 சசிசூரியர் 29 பேராநந்தப் 2
அருமறைகள் 3 சத்யோஜாதம் 34 பேராயிரம் 56
அலகில் வெண் 56 சிற்றணு 11 பைங்கனக் 9
அவனியொடு 54 சீர்மலி 15 மகதிவிழைந் 10
அழகுமணக்கும் 25 சுடர்க்குமதி 6 மதிவளர்க்கும் 30
ஆடகவரை 38 செங்கையி 14 மந்திரமறை 42
ஆர்கழல் 50 தகர அம்பர 39 மரகதத் 20
ஆரல் மகளிர் 26 தருணத்திள 24 மருவடிவின் 8
இழுமென 51 தவஞ்சேர் 43 மறந்தவேதன் 43.
உலகிலெங் 1 திக்குட 49 மறமலிமூவா 55
உழுவையத் 33 திகழ்கதிர் 47 முன்னர்நாடி 28
எட்டுட 23 திகழ்தரு 17 மேதகுவரங் 5
எத்திக்கிலும் 29 தெள்ளுதமிழ் 1 வசைதவிர் 21
எழுதமொழிய 35 தென்பாலு 32 வரமோங்கு 22
ஒப்பேது 32 தென்னங்குலை 26 வருத்தா 44
ஒருமழகரி 19 நலமிக்க 21 வரைக்குற்ற 41
கச்சித்திரு 23 நாகமே 42 வரைநங்கை 55.
கஞ்சமுக 28 நீல விசும்பு 33 வரைமீது 36,
கஞ்சனுமறியா 14 பங்கயச் 52 வளமிகுந் 37
கடிமலர் 50 பங்கயனாடக் 8 வாணிக்கும் 39
கண்ணேகண் 17 பண்ணுலாந் 13 வானமுகில் 40
கணிகவரை 27 பத்தித்துறை 9 வானெலாம் 30
கந்தகுக க 53 பந்தமுடன் 15 விண்டலத் 47
கலைமகள் 18 பரவை மீதறி 3 வியனுலகு 4
கனிவளர் 12 பரிதியுமறையத் 16 வீதியெங்கும் 27
கனகம் பிறங்கு 54 பரிதிதரு 38 வென்றிமத 49
கானாறெலாங் 31 பவன நுகர் 6 வேயுறுபசுந் 12
கானிலொரு 40 பழநிமலை 45 வேலை மயிலை 44
குப்பாச 20 பாதிமாலுற 2
----------------------------

KANDAN MALAR
APPRECIATION BY Dr. C. P. RAMASWAMI AIYAR

Dear Sri Venkatasubramaniam,
               DELISLE, OOTACAMUND,
January, 11, 1962
Let me thank you sincerely for sending me a fresh copy of your 'Kandan Malar' which I have read with great interest and appreciation

It is a very fine idea of yours to collate the tributes of homage and adoration to Skanda (Karthikeya, as He is termed in North India) and to compile a volume depicting the various aspects of His divine powers and mercy. As His Holiness Sri Sankaracharya of Kamakoti Peetam has pointed out, this manifestation of the Paramatman is an embodiment of Samarasa.

This publication brought out in connection with the 80th birthday of your father, the great Bhakta, Sri Venkata Rao, is both timely an useful.

You have succeeded in obtaining contributions from wellknown experts in the field like Tiruppugal Mani and Sri R.P. Sethu Pillai which are of permanent value. I was also greatly interested in the contri- butions made by your father himself and by scholars like Dr. Varada- rajan, Sri Chengalvaraya Pillai, Sri Jagannathan and others. I read with special interest Sri Balasubramaniam's account of the various Subramania sanctuaries or Kshetras in the south of India.

I congratulate you on your enterprise and convey to you and to your revered father my tribute of good wishes and sincere appreciation.

Yours sincerely,
C. P. RAMASWAMI AIYAR.
---------------------

EXTRACTS FROM A FEW PRESS REVIEWS
THE HINDU, (May 14, 1961.)

*** Durai Rangaswami derives the origin of Skanda from Kandazhi' (Liberator from bondages), Shankara Narayanan brings out the psychic meaning of the six-faced Lord and his heroic deeds in killing the Demon force. Sri Kripananda Vari, in a short and sweet essay, points out the six qualities of Skanda-Felicity, Fullness, Immortal Youth, Limitless Energy, Protection from Evils, and Spiritual Splendour synthesised. Tiruppugal Mani, K. V. Jagannathan, R. P. Sethu Pillai and such savants and devotees have made illuminating contributions to the Malar bringing out the splendour of Skanda's beauty, power and grace. Devotees of Skanda must study this worthy Souvenir. -YOGI SHUDDHANANDA BHARATÍ.
THE MAIL, (November 25, 1961)
*** It is a sumptuous feast to the emotions and the intellect of the Skanda bhaktas.
--------------

திருத்தணிகை முருகன் பிள்ளைத்தமிழ்
ஆசிரியர்: ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம்

இந்நூலில் தணிகைத் தலத்தைப் பற்றிய விவரங்கள் பலவும், தணிகேசரைப்பற்றிய விவரங்கள் பலவும் காணக் கிடைக்கும். அம் முருகப் பெருமானது திருவிளையாடல்கள் பலவும் விவரிக்கப்பட்டுள்ளன. அப்பர், அருணகிரிநாதர் முதலான அருளாளரின் அருஞ்சொற் பிரயோகங்களும் ஆங்காங்கு மிளிர்ந்து விரவும்படி அமைந்துள்ளது இந்தச் செந்தமிழ் நூல்.        விலை ரூ.1.50

கந்தன் மலர்

கந்தப்பெருமானது கழல், திருநாமங்கள், வடிவம், பெருமை, அழகு, கருணை, கோயில், வேல், புகழ், கலை, முதலான பல தலைப்புக்களில் திருவாளர்கள் திருப்புகழ்மணி, தணிகைமணி, கி.வா.ஜ., மு.வ., கிருபானந்தவாரியார், அ. மு. பரமசிவாநந்தம், ரா. பி. சேதுபிள்ளை பலசான்றோர்கள் உதவிய தேனினிய கட்டுரைகளையும்கவிதை களையும் தன்னகத்தே கொண்டு தெய்வமணங்கமழ மலர்ந் துள்ளது இந்தச் செந்தமிழ்நூல். இது பல பத்திரிகைகளில் நன்கு விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர்திரு டாக்டர் சி. பி. ராமஸ்வாமி அய்யர் அவர்களும் சிறந்த பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்கள். கந்தன் அடியார்க்கு வழிகாட்டியாகவும் தமிழன்பர்களுக்கு இன்பம் தருவதாகவும் பயன்படத்தக்க நூல் இது. விலை ரூ.3.00
கிடைக்குமிடங்கள் :
ஈ. வே. வேங்கடசுப்ரமண்யம், காரியதரிசி, ஸ்ரீ குமார தநுவமர் திருக்கைத் திருப்புகழ்ச் சங்கம்
முஸபர் ஐ பதிதூர் கத்ரு, 15, தணிகாசலம் பிள்ளைக்தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை 5

S. I. S. S. WORKS PUBLISHING SOCIETY (TIN.) LTD.
1/140, BROADWAY, MADRAS - 1
Wrapper Printed at Neu Art Press, Madras -2.
------------------------


This file was last updated on 8 Dec. 2024
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)