pm logo

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
எழுதிய "சதமணி மாலை"


catamaNi mAlai
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998 -2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
எழுதிய "சதமணி மாலை"


Source:
நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இ ந் நூல் திருக்கயிலாய பரம்பரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத் தர்மகர்த்ததுவம்
பதினெட்டாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்
வெளியிடடருளியது
பதிப்பகம்: ஸ்ரீஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்
சுபானு ௵, 1944
பதிப்புரிமை, விலை ரூ. 5.
---------------------

முருகன் றுணை.
ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் திருவடிவாழ்க.
காப்பு.

ஞான மாமத, யானை மேவுறின்
மான மாயையஞ் சேனை யோடுமே.       1

பாயிரம்.

சிவனையு முயர்குரு தேவன் றன்னையு
முவகையோ டடிதொழு துரை செய் கிற்பன்யா
னவையொரு சிறிதுமின் ஞான தீக்கைக
ளவைமன மொருங்கிய வறிஞர் கேண்மினோ.       2

நூல்.
இவை சுவாயம்பு சூத்திரப் பொருள்.

மன்னிய வுயிர்மல மாயை வல்வினை
யென்னுமும் மலமற விருஞ்சி வத்துவந்
துன்னிய பயனொடுந் தோன்று ஞானமோர்
தன்னிகர் பரசிவன் றனாதி டத்தினே.       3

இயம்பிய ஞானமோ ரிருவ கைப்படும்
பயன்றரு மபரமும் பரமு மென்னவே
நயந்தரு கலைகளே யபர ஞானமா
முயர்ந்திடு பரஞ்சொலி னுணர்வென் றோதுவார்.       4

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்.

படைப்புறு பொழுதுகொள் பரம னாருயிர்க்
கடுத்துள பயன் குறித் தைம்மு கங்களா
னெடுத்துரை செய்தன னினிது தூய்தென
நடக்குறு முயர்கலை ஞான மென்பவே.       5

இது பராக்கிய சூத்திரப் பொருள்.

சிவநில முளைத்துயர் சிறப்பு ணர்த்திவெம்
பவமறு மருந்தெனப் பட்டு நன்கமை
சுவையொடு முடிவுறிற் சுகமளித்தரு
ணவையக லினையவிஞ் ஞானங் கொள்கவே.       6

இது மதங்க சூத்திரப் பொருள்

சாருறு தருபந் தன்னாற் றருமியங் கோரிடத்துக்
காரண மதனாற் றோன் றுங் காரிய மோரிடத்துக்
காரிய மதனான் மூலக் காரண மோரிடத்துச்
சீரிய வுரையாற் சில்ல தெரிவவர மோரிடத்து.       7

இது விசுவசாரோத்திரச் சூத்திரப்பொருள்

அழிந்திடா மாயைமூல வசேதன வுலகந் தோன்றி
வழங்கையால் யாவுங் காணும் வலியொடு நிறைந்தோனாகி
யெழுந்தொழி யாது நின்றாங் கிலங்குறு கருத்தாவாக
மொழிந்திடு பதியதற்கு மொழிந்திடப் படுவ னன்றே.       8

இது பராக்கிய சூத்திரப் பொருள்

கெடுத்திடா துயர்ந்த ஞானக்கிரியையாம்வாழ்வொருத்தர்
கொடுத்திடா துடையான் யாவன் கூறிலிங்கனையன்றானே
தடுத்திடா வலியிரண்டுந் தரித்துள னாகி யெங்கு
மடுத்துறு மீசனென்ன வறிந்திடப் படுவ னன்றே.       9

இவை மதங்க சூத்திரப் பொருள்

பதிய திட் டானந் தன்சீர்ப் பரையெனப் பட்ட சத்தி
முதிரொளிப் படிவ மாக மொழிந்தவச் சிதாகா சத்தில்
விதிர்விதிர்ப் பின்றி நின்று விளங்குறு மூர்த்தி மானாத்
துதிகொளப் பதிதா னென்பர் தோமினூல் வாய்மை கண்டோர்.       10

விண்டகன் மறைப்பு டைத்தாய் மேலதாய் நுண்ணி தாகி
யெண்டிசை முகம டைந்து முதனடு விறுதி யின்றி
யுண்டெனு மளவாய் நீங்கா வொருபெருஞ் சாந்த சத்தி
பண்டுப சரிக்கப் பட்டுப் பதிக்குரு வென்ன நிற்கும்.       11

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்

உருவறி வரிதாந் தன்மை யுடைமையா லமலன் றானே
மருவிய வுருவாய் நின்று வகுக்குமெச்செயலுஞ்செய்வன்
விரவிய வவன்ற னாது வினையதிங் கிவ்வா றன்றி
யொருவரா லுதவப் பட்ட வுருவினாற் செய்வ தன்றாம்.       12

இவை கிரண சூத்திரப் பொருள்

சத்தியின் வேறென் றெண்ணச் சார்கரணமுமீங் கில்லை
சித்தின் வே றாய சித்தாம் சத்தியுந் தெரியினில்லை
யித்திற மதனா லந்த வேகமாங் கரணந் தானே
வைத்தபல் வினையான் ஞானக் கிரியையின் மருவி நிற்கும்.       13

உருவிலி யாயுங் கால முதவுறு பயன் கண் டாங்கு
மருவறு மிறைவன் றானும் வடிவில னாயிருந்தும்
விரிவுறு முலக மாக்கும் விளங்குதன் னிச்சை யாலென்
றொருவிய மலமுடைப்பே ருணர்வின ருரைப்ப ரன்றே.       14

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்

சத்தனோ டுத்தி யுத்தன் றகும்பிர விருத்த னென்ன
முத்திற மருவு மீசன் மொழிந்தவவ் விறைக்கப் பேதஞ்
சத்திதன் பேதந் தன்னாற் றானுப சாரமாக
வைத்ததென் றுரைப்பர் சீர்சான் மறையொடா கமநூல் வல்லோர்.       15

இது பராக்கிய சூத்திரப் பொருள்

ஏரிய னிமித்த மீச னெனும்பெய ருடையா னென்ப
காரியந் தொறுப்பு ணர்ந்து காணுறப் படுவ தீண்டுச்
சீரிய துணைய தென்னத் திகழ்தரு நுண்ணி தாகி
யோரியல் புற்று நிற்ப துபாதான காரணந் தான்.       16

இவை மிருகேந்திர சூத்திரப்பொருள்

பற்பல வடிவ மெய்தப் படும் பொரு ளெவையுந் தோன்றி
நிற்புறு மவைய வத்தா னிகழ்மதி யுடைய வேது
முற்பெறு வனவே யாமிம் முறைமையா லுணர்வின் மிக்க
பொற்புறு மிறைவ னாகப் பொருந்துவ னொருவனன்றே.       17

படைப்பது முலக மெல்லாம் பாதுகாத் தளித்த லும்பின்
துடைப்பது மறைத்த றானுந் தொல்லைய மலங்கள் யாப்பு
விடுப்பது மாகு மிவ்வைம் பயன்படு வினைக ளெல்லாம்
தடுப்பில னாமொ ருத்தன் றன் பெருந் தொழிலென் றோர்வாய்.       18

ஒடுங்கிய பொழுதும் பாச மொழிப்பவர்க் கொழித்திட்டன்றி
விடுந்தகை யினரை விட்டு வினையினர் வினைபா கஞ்செய்
தடங்கிய மாயா சத்தி தோன்றுதற் கமைத்தி யாவும்
படும்படும் முறையி ருப்பப் பார்த்துளன் பரம னன்றே .       19

வேறு.

அன்னியனிவ் வுடம்புதனக் கழிவிலன் சிற் றறிவாளன்
பின்னமல மொடு புணர்வோன் பெரிய வியா பகன சடன்
துன்னுறு தன் வினை நுகர்வோன் சொல்லியவல் வினைமுதல்வன்
றன்னைநிகர் வுறுமிறைவன் றனையுடையன் பசுவென்பான்       20

புகலிலினி யனாதிமலம் புருடர்பசுத் துவமென்று
பகருறுவ ரறிவறிந்தோர் பாசமென வுரைத்ததுதான்
விகலமுறு மாயையெனும் விதைமுளைக்குத் தவிடுமிபோற்
றகவுணர்க வெனவிளம்புஞ் சைவமெனப் படு நூலே.       21

உரைத்தமல மெவ்வுயிர்க்கு மொன்றாகி யநாதியாய்ப்
பொருத்தமுறும் பெரிதாகிப் புகலருமான் மாக்கடொறு
மிருத்தலுறு வனவாகி யிருந்துதங்கா லாந்தத்திற்
றரித்தலற வகல்வனவாஞ் சத்திபல வுடைத்தம்மா.       2      2

இறைவனுயர் சத்தியா யெவ்வுயிர்க்கு மருள் செய்யப்
பெறுசிவைதான் மலதருமம் பின்றுடருஞ் செயலதனை
யுறுதலினாற் பாசமென வுபசரிக்கப் படுமெனவே
யறைதருவ ரமலனரு ளாகமநூ னெறிகண்டார்.       23

செப்புறுமிச் சிவசத்தி திரோதாந்த மாணவத்தின்
பற்பலவாஞ் சத்திகளைப் பரிணாமிப் பித்துளதா
மெப்பொழுதுஞ் சிவமென்னு மிருங்கதிரால் விடுப்பிக்கு
மப்பொழுதிங் கருள்புரிவ தாகுமென வறைகுவரால்.       24

இவை விசுவசாரோத்திர சூத்திரப் பொருள்

குண்டலியாஞ் சத்திதான் கொடுமாயை வினை கடமைப்
பண்டு தொடர்ந் துளதென்பர் பகருமதன் காரியங்கள்
விண்டகல வருநாத விந்து முத லனவென்னக்
கண்டுரைசெய் தனர்ஞானக் கலை முழுதுங் கற்றுணர்ந்தார்       25

வேறு.

வந்த வைகரி மத்திமை யோடுபை
சந்தி சூக்குமை தானெனப் பட்டிடு
நந்து வாக்கொரு நான்கு நவிலிலவ்
விந்து மாயை விருத்தியென் றோதுவார்.       26

உலக வித்தவி நாசியொன் றாயுள
திலக லுற்ற விபு நுண் ணியதுதான்
கலைக டப்ப தநாதி கருதுறிற்
றொலைவ தற்ற சுதந்தரி குண்டலி.       27

இது மிருகேத்திர சூத்திரப்பொருள்

உரை செய் மாயை யசிவ மொருமுதல்
கரும மன்னதி கார முடிவுள
விரித லின்றி மறைப்ப திறப்பறப்
பரவு சத்திகள் பல்வகை யுள்ளதால் .       28

இது கிரண சூத்திரப் பொருள்

சுத்த மாமத்து வாவிற் கிறைவனா
மெய்த்த வேர்ச்சிவ னென்பர் விழுமியோர்
அத்தனாகு மனந்த னசுத்தமாய்
வைத்த மாயையின் மன்னவ னாகுமால்.       29

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்

சாரு மாயை தனிற்கலை காலமு
நேரும் வித்தை யிராக நியதியுங்
கூரு மூலங் குணம்புத்தி யோடகங்
கார சித்தம் பொறிபுலன் பூதமும்.       30

இது விசுவசாரோத்திரப் பொருள்

பரக்கும் புண்ணிய பாவ வடிவமா
யிருக்குங் கன்ம மிதுமுத் திறத்ததாந்
தரிக்குஞ் சாதியொ டாயு ணுகர்வென
வுரைக்குங் கன்ம முறாவிட மில்லையே.       31

இவை மிருகேந்திர சூத்திரப் பொருள்

அதிட்டஞ் சூக்கும மாதலாற் செயலினா லதுதா
னுதிக்குந் தன்மையாற் கருமமிவ் வுடலுதிப் பதற்கும்
திதிக்குங் காரண நுகர்வுமா மிவ்வினை தெரியில்
விதிக்குந் தாபமாஞ் சாதன மூன்றொடும் விரவும்       32

அடுத்துப் பொய்மெயிற் றோன்றலான் மறவற வடிவாந்
துடைப்பிற் பாகமுற் றிடும்பயன் கொண்டிடத் தோன்றும்
படைப்பிற் பத்திநின் றிடும்பெரு மாயையைப் பார்க்கின்
முடிக்கப் பட்டிடா தது நுகர்ந் திடாவிடின் முடிவில்.       33

இவை சுவாயம்பு சூத்திரப்பொருள்

மலத்தின் யாப்புறீஇ யிருந்துள வாருயிர் மறித்து
நலத்த தீக்கையான் முத்தனு மாமென நவில்வர்
நிலைத்த வன்னவ னவத்தைமூன் றுளனென நிற்குந்
தொலைத்த கேவலன் சகலனற் சுத்தனென் றன்றே.       34

நித்த னில்லவாங் குணந்தொழி லுடையவ னிகலன்
கத்த னன்மையன் வியாபகன் சேதனன் கருதிற்
சுத்தி செய்திடப் படுபவ னுணர்த்துறச் சுடர்வான்
சத்த னென்கிலன் பசுவென விளம்புவர் தக்கார்.       35

இல்லை யம்மல மென் றுரை செய்வையே லென்கொல்
சொல்லு போகமுற் றழுந்துதல் சுத்தனா மென்னி
லல்லல் கூருமப் போகமின் றவர்க்கென வறைவர்
புல்லர் தம்மின மகன்றுள நல்லிசைப் புலவர்.       36

இவை மிருகேந்திர சூத்திரப் பொருள்

ஞான மெய்த்தொழி ஒருவசை தன்னிய நவில
வான வப்பசு விடத்தினி லென்றுமுண் டாமான்
மான முத்தியி னிறைமுகங் கெட்டிடு மாற்றாற்
றானெ னப்புகன் றறைகுவர் மெய்ந்நெறி தவத்தர்.       37

உகந்த ஞானமங் கென்றுமுண் டேனுமவ் வுணர்வு
திகழ்ந்திடாமையின் மறைத்திடப் படுயெனத் தேர்வாய்
பகர்ந்த தாலவன் வீடள வாய்வசப் படுவ
னகன்ற வோர்மறைப் புடையவீ ரியன்றனக் கன்றே.       38

பாச மின்மையிற் பரவசம் பகர்வதன் றுவக்காற்
பேசி லன்ன திங் கியல் பெனின் முத்தனாம் பெயர்தா
னாசின் முத்தன் மாட் டில்லையா மென்ன நன் கறைவ
ரீசனல்கிய சைவதந் திரமுணர்ந் திருப்போர்.       39

இவை கிரண சூத்திரப் பொருள்

பாச மாமல மநாதியே யுற்றிடும் பரிசா
லூச லாடுயிர் சிற்றுணர் வுடைய தென் றுணர்க
வீச னாகிய சிவன் மல மநாதியின் மையினாற்
றேசு லாவுறு முற்றுணர் வளனெனத் தெரிப்பர்.       40

ஆதி யாயின வென் றுரைக்கப்படு பான்றோ
ரேது வேண்டுறப் படுமிரு வர்க்குசென் றிங்க
னோத லாலவர்க் கசுத்தமுஞ் சுத்தமு முருவ
நீதியாமென வறைகுவ ரறிவறி நெறியார்.       41

தெளிந்த தேது கொண் டொளிதரும் பளிங்குதான் செம்பு
களிம்ப தேதகொண் டடைந்தது காரண மங்கு
விளங்கு மாறிலை பெங்ஙன மங்ஙனம் விளம்பி
வளந்த காரண மிலைசிவ மோடுயிர்க் கன்றே.       42

இவை பராக்கிய சூத்திரப் பொருள்

கலைமுதல் வியனிலங் காறு மாயின
விலகுறு முயிர்க்குறு கருவி யென்பராற்
பலபல நுகர்வினால் வேறு பட்டவை
யலகறு முயிர் தொறு மமைவ வாகுமே.       43

எங்கணும் வழக்கொருங் கீறு றாமையா
லிங்கவை யொன்றல வென்பர் வேறுறீஇத்
தங்கினு மொருபொருட் டருவ வாகுமாற்
பொங்கொளி விரிசுடர்ப் பண்டம் போலவே.       44

இது கிரண சூத்திரப் பொருள்

முத்தியின் பொருட்டுயிர் முன்பு டம்புறு
மத்தடை. யுட லுறா தாயி னில்லையா
மெய்த்தனி வீடுடன் மேவு றாவிடி
னுய்த்துள வுணர்வுமின் றுயிர்தனக்கரோ.       45

இது சுவாயம்பு சூத்திரப்பொருள்

ஈசன திச்சையா லிசையு மொண்கலை
காசுடை யவனவி காரி யென் றுமுன்
பேசிய பசுவினை யென்றும் பேசுவர்
மாசற விளங்கிய மதிஞ ராயினார்.       46

இவை பராக்கிய சூத்திரப் பொருள்

இருவினை யானிறை யிறைவ னாலுடன்
மருவுவ தலதணு வலிய னன்மையாற்
புரையுறு வினையொடு புணர்ச்சி தன்றனால்
வருவதை யுடையதன் றெனவ குப்பரால்.       47

பசுத்துவ மறைத்திடப் படுஞ்சிற் சத்தியா
னிசைத்திடு முயிர் தனக்கிலைசு தந்தர
பசித்துறு கருமமாங் காத லாலம்
திசைத்திடு பவன்றனை யாவாவு மென்பவே.       48

இவை மிருகேந்திர சூத்திரப்பொருள்

இச்சையின் வலியுள னீச னாதலா
லச்சிவன் வினையினை யடைவிக் கின்றவ
னிச்செய லலதுவே றில்லை யென்னுமா
முச்சுடர் விழியுடை முதல்வ னாகமம்.       49

காதுறு விடயம் வைகரி விகற்பொடு
போ துறு மத்திமை போம்வி கற்புறு
மோ துபை சந்தியிங் குரைத்த வற்றினுக்
கேதுவ தாமிவ ணிறுதி நின்றதே.       50

உலகினை முழுவது முணர்த்துஞ் சத்தமென்
றிலகிய புலவர்தா மிசைப்ப ரன்னதை
யலதொரு பொழுதுமிங் கறிவுண் டாகுவ
திலைதிக ழுயிர் தனக் கென்று தேர்கவே.       51

இவை சுவாயம்புவ சூத்திரப் பொருள்

இத்தலை யுணர்வெலா மியைந்து நின்றிடுஞ்
சத்தமோ டிலகவச் சத்தம் யாவுமே
மெய்த்துறு நிலையினின் மிக்க பந்தமாய்
வைத்திடு முயர்மறை மன்னு யிர்க்கரோ.       52

போகமே விழைவுறு புருட னென்பவன்
மோகமார் மாயைதான் முதன்மண் ணீறென
வாகுமா தத்துவ மனைத்துங் கொண்டவண்
டீர்கலா நுகர்வினை நுகருஞ் சென்றரோ.       53

தொலைத்திட வரியவாஞ் சுகதுக் காதிய
விலக்கண நுகருதற் கியைந்த வன்னவை
பலிப்புறும் வகைசெயப் படுமு ணர்ச்சியான்
விலக்கரும் வினையினான் மேவி யுண்ணுமே.       54

ஆகமுங் கரணமும் விடய மானதும்
போகமுண் பதற்கரும் புருடற் காகுநின்
றேகுமுன் வினையினா லென்றி யம்புறும்
பாகுமென் மொழியமர் பாக னாகமம்.       55

மாயையை யடைந்தியன் மலம றைப்பவ
னாயு று மனுமிகு மாசை யாளனாய்ப்
போயுகு மாயையின் போக மெய்துவ
னாயிடைத் தன்மைய னாக மேவியே.       56

போத்துறு விடயியைப் புணர்கு டும்பிதான்
கேத்திரி சரீரியென் கின்ற பேரொடு
வாய்த்துள சகலனென் றிசைப்பர் மாடையி
னார்த்துள வணுவினை யறிஞர் தாமரோ.       57

தீதிருட் சத்திதன் செய்கை மீட்சியா
லாதிநற் சத்தியி னகற்சி யிற்பெரும்
போதமெய்க் கிரியைக டி கழ்த்தும் பொற்புற
மூதுயிர்க் குலகுரு வாகு முன்னவன்.       58

சத்திமன் னியகுறி யொருவர் தம்மிடை...
முத்தியின் விழைவுள முனிவு டம்பினிற்
பத்தியிங் குயர்சிவ பத்தர் பாலெழின்
மெய்த்திறம் விதித்திடும் விதியி னேயமே.       59

இவை மதங்க சூத்திரப் பொருள்

அறிவில னாயினு மவற்குச் சத்திவீழ்
வுறுதலாற் றன்னிடை யுறுமுணர்ச்சியான்
மறிவுறு மவாவினிவ் வாறு புத்திதான்
செறிவுறுங் காரண மின்றிச் செப்பினே.       60

விரத்தனாம் விவேகிபா லறிவி ருப்புறு
மிருத்தியி னறிவுறு மவாவு ளான்றனைக்
கருத்தழி பவக்கடல் கடத்து வானொடு
பொருத்திநின் றியக்குறும் பொருவி லீசனே.       61

இருவர் தம் மிடத்தினு மிறையி யக்குவ
னருளருள் செய்பவற் கடங்கு நற்செயல்
பரிவொடு மருள்செயப் படும வற்கவர்
மருவரும் யோகமோ வரிது மண்ணினே.       62

இது சுவாயம்புவச் சூத்திரப் பொருள்

குருவை நண்ணிநற் றீக்கையி னாற்குலைந்
தொருவு பந்த முடைய வவனிவன்
மருவி நின்மல னாய்த் துயர் மாய்த்துக்
திரிவ றுஞ்சிவ சாயுச்சி யத்தையே.       63

இது சர்வக் ஞா நோத்திரப் பொருள்

தத்து வத்தின் தளைப்படு கின்றவ
னெத்திறத்த தரும மிசையினுஞ்
சித்த நற்சிவ தீக்கையி னாலலான்
மெய்த்து கட்டு விடுப்பது வேறிலை.       64

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்

தாவில் கத்துரு சத்தி யுயிர்க்கிறை
வீவில் சத்தியி னித்த வியாபியா
மாவ வித்தை மறைத்தலின் மன்னருண்
மேவ ருத்தத் ததுவிளங் காதரோ.       65

இவை பராக்கிய சூத்திரப் பொருள்

நிறைந்த ஞான நிலையுள னாயினு
மிறந்து தானிடை யீடின்றிக் காண்கில
னறிந்து ளானோரிடத்தினி லாதலாற்
செறிந்துளான் சிற்றறிஞ னெனவவன்.       66

தெரிய ஞானஞ் சிறிதிற் சிறிய தாப்
பெரிது தன்னிற் பெரிதென நிற்குமெப்
பரிசி ருந்துள தப்பரி சாவதா மிருளின் வைகு
மெரிசுட ரென்னவே.       67

இது நிசுவாச காரிகா சூத்திரப் பொருள்

அறிவ னாகுவன் சத்தி யடுத்திடிற்
செறிவு நானெனிற் செப்பிய சீவனிங்
கறிவி லானென் றறையப் படுவனோர்
மறிவு மால மயக்குள னென்னவே.       68

இவை கிரண சூத்திரப்பொருள்

குரவன் முன்றுயில் கொள்ளுமா ணாக்கனை
யுரிய கோலி னுணர்த்துவ னீசனுந்
துரிய போகத் துயில்பெறு வான் றனை
யரிய சத்தியி னாலறி விப்பனால்.       69

மருந்தி னாற்றலின் மிக்க வலிவரும்
அரந்தை நோயிற் றவர்க்கது போ லிறை
பொருந்து சத்தி பொருந்தி லளவிலா
திருந்த வாற்ற லிசையு முயிர்க்கரோ.       70

இது பராக்கிய சூத்திரப்பொருள்

அகன்றுள சுதந்தரத்தா லரன திட் டிக்கப் பட்டு
மிகுந்துள வினையாற் போக மிசைபவ னெனினு மென்றும்
புகுந்துள பசுத்து வத்தாற் பொருந்துவன் யாச்கை தன்னிற்
றிகழ்ந்துள சிவத்து வத்தாற் சேர்குவன் முக்தி யான்மா.       71

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்


நித்திய வியாபகத்த தாகியே நின்ற
வச்சிற் சத்தியி னிடமா யுற்றோ னாயினுந் தான ருந்தச்
சித்தியின் பொருட்டு நண்ணுந் திகழ்தரு பாச வத்தை
மெய்த்துள சாம்பவத்தை வேறொன்றா லாற்ற நண்ணான்.       72

இது சாலோத்திரச் சூத்திரப் பொருள்

உருவள விலவ டைந்த வுலகினுக் கொன்றே யாகிப்
பரசிவ மயமா யாண்டும் பரந்ததாய் விமல மாகித்
திரிவறு சாந்த மாகித் திகழ்வுறு கின்ற ஞானம்
பொருவறு நுகர்வு வீடு புரிகுவ தாகி நிற்கும்.       73

இது விசுவாச காரிகா சூத்திரப் பொருள்

நிருமல மாகி மேலாய் நிகழ்ந்தெரி வெம்மை போலப்
பிரிவில் தாகி யொன்றாய்ப் பெரும்பரா பரையாய் நின்ற
வொருசிவ சத்தி தானே யுயிரொடு பரசி வத்தைத்
திரிவற வுணர்த்தி யன்ன திகழ்வுறச் சந்திப் பிக்கும்.       74

இது மிருகேந்திர சூத்திரப் பொருள்

சங்கரன் விமல ஞானஞ் சாற்றிலத் தியக்கந் தானன்
றங்கனு மான மென்ப தன்றுரை யன்றென் றாலு
மிங்குறு பொருளெ வற்று மென்றுநின் றிலங்கு மென்னுந்
திங்களங் கண்ணி வேய்ந்த செஞ்சடைப் பகவ னூலே.       75

இது சுவாயம்புவச் சூத்திரப் பொருள்

பரந்துமே னிலைவிளக் காகும் பந்தனை
யிரிந்துபோம் படிவிடுத் திடுதல் செய்வதும்
பொருந்துமே லாஞ்சிவ பதம் பொருந்துறத்
திரிந்திடா தருள்வதும் தீக்கை யாகுமால்.       76

இவை மதங்க சூத்திரப் பொருள்

செப்பரி தாகிய தீக்கை மாமொழி
மெய்ப்பொருண் மலவலி விடக்கெடுப்பது
யொப்பறு ஞான நல் குவது மென்னுமா
லப்பர னருளிய வாக மங்களே.       77

தான முற் றுரைத்திடா தரன் சத்தாகிய
ஞானமெய்ச் சத்தியா நவின்ற தாரருண்
மேனிநற் குரவனால் விளங்கு மன்றியே
யூனெடுத் திடுமுயிர்க் கொளிர்வ தன்றரோ.       78

இது தேவியாமள சூத்திரப் பொருள்

என்றுட லலனென விருந்த தன்னையே
மின்றிக ழறிவெனும் விதியிற் காண்குவ
னன்றவன் மிளிர்வுறு சாந்த னாகுவ
னின்றள வவாவினை நீக்கு யெங்குமே.       79

இது மதங்க சூத்திரப் பொருள்

தீக்கையா மனலினாற் றீம லத்தினா
னீக்கமா யதன் வலி நிகழப் பட்டிடுந்
தாக்கினானறைபெருஞ் சத்தி யோடவற்
காக்குறா முத்தியை யயலொன் றென்பவே.       80

இது சுவாயம்புவச் சூத்திரப்பொருள்

இம் முறை யோகினான் மிசையெ னப்படும்
செம்மைகொள் கேவலஞ் சேர்ந்து ளானிவன்
மைம்மலி யநாதிய பலமி லாமையால்
வெம்மைகொள் பிறவியின் மீண்டி டானரோ.       81

இவை நிசுவாச காரிகா சூத்திரப் பொருள்

சாக்கிரந் தன்னிலே சகல பாவமும்
போய்க்குவி வுறுமெனிற் சுழுத்தி போலவே
மீக்கிளர் வடையுமெய்ஞ் ஞான மன்னதாற்
காக்குறு முப்பதங் கட்கு மாவியே.       82

சங்கர னாகிய தபனன் சத்தியாம்
பொங்கொளி யால்வலி புரிந்த சித்தெனு
மங்கணின் மறைப்பொரீஇச் சத்தி யாதியோ
டிங்குயர் சிவன்றனை யிசைந்து காணுமே.       83

இவை சுவாயம்புவச் சூத்திரப் பொருள்

உற்கைகொள் கரமுடை யொருவன் காணுபு
தற்பொருள் பினையது தனைவிடுத்தல் போ
னிற்குறு குணர்வினோன் ஞேயங் கண்டுபின்
முற்புக லுணர்வினை முழுது நீப்பனால்.       84

மனமொரு பரசிவ தத்து வத்தினி
னினைவுறும் விரிவற வொடுங்கி நிற்குமே
வினைவுறும் வுணர்வெனப் பட்ட யாவையும்
பினையில் குறாநிலை பெயர்ந்து போகுமே.       85

தரை முதலிய பல தத்து வங்கடந்
துரைமன மிறந்துபற் றொன்று மின்றிவாழ்
பரமனின் பருவுறு பவனன் முத்தனென்
றரவணி கடவுணூ லறையு மென்பவே.       86

வசையுறு பவநெடு வழியு றாதுமீ
மிசையுறு சிவத்துவம் விளங்கப் பட்டிவ
ணசைவறு சுடரென வமைதி பெற்றவ
னிசையுறு நலனெலா மியற்றி னானரோ.       87

இது தேவிகா லோத்திரச் சூத்திரப் பொருள்

மந்திரந் தியானமே வணக்கம் பூசனை
தந்திர மிவையிலை சாற்றுங் காலிவ
ணிந்தையி லொருதனி ஞேய மெய் தலாற்
பந்தமோ டறிதரப் படுவ தில்லையே.       88

இவை விசுவாச காரிகா சூத்திரப் பொருள்

கடுநடை யடையினுங் கால்வி சும்பினை
விடுகுவ திலையது போல மேவியே
யடைவரு ஞேயமுற் றழுந்து நெஞ்சினோன்
விடயமோ டுழலினு மதைவி டானரோ.       89

இந்திய நிலையினெங் ஙனமித் தேகிகள்
சிந்தனை தடையறச் செல்லு மங்கன
மிந்திய நிலை கடந் திலங்கு மெய்ப்பதத்
துந்துறு மறிஞர்த முளமு மோடுமால்.       90

அழகுறு பசுமுத லயமுத் தாரை யொன்
றிழிவுறு பொழுதுகண் ணிமைமட் டங்கணை
விழுமள வெனினுமெய்ப் பரத்தின் மேவினோன்
பிழைபடு கொடியவெம் பிறப்பின் மீண்டிடான்.       91

கரும்பசு பாவனை கடந்து நீங்கியே
பெரும்பதி பாவனை பெற்று நிற்பதே
விரும்புறு செலவலான் விமலன் மாட்டுறு
மிருஞ்செல வவன்றனக் கெத்தி றத்தினாம்.       92

இது சுவாயம்புவச் சூத்திரப் பொருள்

புனிதனில் வைத்துள போக போத்துரு
வெனுமிவற் கில்லையாற் போத்து ருத்துவக்
தனியதி காரியாந் தன்மை மெய்ப்பதி
வினையொடு படுத்தலென் றிவை விளம்பினே.       93

இவை கிரண சூத்திரப் பொருள்

வருவிட சத்திதான் மந்திரங்களா
லொருவிட விடங்கெடா தொழிதல் போலுமாற்
புருடன திருண் மலம் பொன்று மாறுமென்
றருவிட முண்டவ னாகமஞ் சொலும்.       94

அளவில பவமுத லாய வல்வினை
யுளவென வருவதாங் கரும மொள்ளெரி
கொளுவிய விதையெனக் குலைபு முண்டுபின்
களைவன விவ்வுடற் கரும மென்பவே.       95

தோன்றியு மொண்கலன் சுழலு நேமியைப்
போன்றிடும் விடாது முன் புணர்ந்த வாதனை
யீன்றிடு மிவ்வுட றானு மென்பரா
லான் றுள வாகம நூல றிந்துளோா.       96

இவை தேவியாமளச் சூத்திரப் பொருள்

உடைந்திட வுறுகட முள்ளிருந்தொளி
விடுஞ்சுட ரெங்கணும் விளங்கு மாறுபோ
னெடுந்தகைப் பெறுமுட னீங்க வெங்குமெவ்
விடங்களு மொளிருமான் மாநின் றென்பவே.       97

தெரிந்தவிஞ் ஞான நன் குறத்தி கழ்த்துக
பொருந்துநம் பத்தர்கட் கென்றும் போற்றுக
வருந்தியு மலைதரு மடவரால் பொருள்
கரந்தொழி கள்வரைக் கருதிக் காத்தல் போல்.       98

வேறு.

பரமன் நூல்கள் பலவினுந் தேர்ந்து தேர்ந்
தருமை ஞான மறியத் திரட்டிய
பெருமை நூலின் பெரும் பொருள் கொள்ள வெங்
கருமி தானதி காரிய லானரோ.       99

சாற்று மேன்மைச் சதமணி மாலையைப்
போற்றி யோதிப் பொருடெரி கிற்பவர்
மாற்றி மூல மலத்தை யெப்போதினுந்
தோற்று ஞானச் சுடரினைக் காண்பரே. 100

சதமணிமாலை முற்றும்.
ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் திருவடிவாழ்க.
----------------------

This file was last updated on 26 Feb 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)