துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விளக்கக் குறிப்புரையுடன்
pazamalai nAtar piccATana navamaNi mAlai
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு - 5
Source:
1) சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்.
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978.
2) துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய்
மலர்ந்தருளிய "பிக்ஷாடன நவமணிமாலை"
இது திருமயிலை - வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் செய்த உரையுடன்
வீரசைவாசார விற்பன்னராகிய செ. நாகி செட்டியாரவர்களால் பார்வையிடப்பட்டு
சென்னை குருபசவா அண்டு கம்பெனி லிமிடெட் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
1931 விலை அணா 21
---------------
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
கருப்பக்கிளர் சு, அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
பிச்சா அடனம் : பிச்சா-பிச்சை, அடனம்-ஏற்றல். நவமணிமாலையாவது ஒன்பது வகை மணிகளைப் போன்ற உயர்ந்த செய்யுட்களால் செய்யப் பெறுவது. இஃது எண்ணாற் பெற்ற பெயர். ஒன்பது வகையான செய்யுட்களாற் பாடுவதும் உண்டு. முன்னாளில் சிவபெருமான் தாருகாவன முனிவர்களின் தருக்கையடக்கும் பொருட்டு ஆடையற்ற திருக்கோலத்துடன் அவர்தம் மனைக்குப் பிச்சை யேற்கச் சென்று அவர்தம் மனைவியர் கற்பைக் குலைத்து முனிவர்களின் தருக்கையடக்கினார் என்பது புராணக் கூற்று, அதனை அடிப்படையாக வைத்து இந்நாளில் நடைபெறும் பிச்சாண்டவர் விழாவைக் கண்ட அடிகளார் இப் பாடல்களைப் பாடினர். இதனில் இடக்கரடக்கல்கள் உள்ளன.
நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண்
டங்குற்று மென்றுகில் போக்கினள் வெற்றரை யாகியந்தோ
இங்குற் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற்
றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே. (1)
1. நற்பலி-நல்ல பிச்சை. மென்துகில்-மெல்லிய ஆடை. வெற்றரை-ஆடையில்லாத அரை.
தாழ்ந்தனள்-விடையின்மையிற் கீழ்ப்பட்டாள். தோற்றவர் வென்றவரை வணங்குதல் இயல்பாகலின் வணங்கினாள். தனக்கும் வெற்றவரை யென்பதுணர்ந்து தலைகுனிந்தாள். பிச்சாடனரைப் பிரிய மனமின்றித் தங்கினாள். தாழ்தல்-கீழ்ப்படுதல். வணங்குதல், குனிதல், தங்குதல்.
---------
குன்றா முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான்
தன்றா மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து
நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னறுநுதலாய்
என்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே, (2)
2. குன்றா முதுகுன்றுடையான்-எக்காலத்தினுங் குறைவுபடாத பழமலைநாதர்: குன்றாகிய பழமலைநாதர்; அருள் குன்றாதவனுமாம். வளங்குன்றாத முதுகுன்றுமாம். இலாத வெண் கோவணத்தான் என்பது ஆடையற்றவன் என்னும் பொருளைத் தருவதாய் “கழிந்த பற்றுடை வசிட்டன்” என்றாற்போல நின்றது. இரண்டத்தனை சிறுமையைக் குறித்தற்குக் கூறும் எண்ணளவை; இரண்டாகிய அவ்வளவு. கோடி-கொள், புதிது. என்றிட்டாள்-ஒரு சொல்.
---------
இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந்
தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள்
செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டாய்
எப்பாத் திரத்தலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே. (3)
3. எப்பாத்திரம்-சற்பாத்திரம், அசற்பாத்திரம், பிட்சபாத்திரம் முதலியன. தப்பா-தவறாத.
பலிகொண்டு-பிச்சையேற்று. செப்புஆர்-செப்புக் கிண்ணம் போன்ற. பணை-பருத்த.
---------
வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி
ஓட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம்
வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல்
யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே. (4)
4. உமை-உம்மை. உமாதேவி. வீடு-இல்லம். வீடுபேறு, ஆட்டினின் பால்இது வேண்டுவை கொல்லென என்று மாறுக.
---------
மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற்
கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான்மிடற்றில்
நீண்ட வுகிருறுத் தாதணை வேனென்று நீர்தலையைத்
தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே. (5)
5. மாண்ட எலும்பு-மாண்டுபோன நான்முகர் பலருடைய எலும்பு. மிடறு-கண்டம். உகிர் உறுத்தாது-நகம் தாக்காமல். தலையைக் கிள்ளும் தன்மையை உடையவர் என்பதை உணராமல் இவர் சொல்லை நம்பினளே இவளுடைய அறியாமை இருந்தவாறென்னேயென்று நகுதலை நகைத்தது என்க.
---------
வானோர் தொழுநின் பலிப்பாத் திரத்தை வனைந்ததுநீ
தானோ வெனச்சக் கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி
யானோர் குயவன்மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப
நானோ வொருசிற் றிடைச்சியென் றாளந் நறுநுதலே. (6)
6. வனைதல்-செய்தல். சக்கரம், மட்சக்கரம், கண்ணாகிய அரம். சக்கு-கண். குயத்தி-குயச்சாதிப் பெண். கொங்கைகளையுடைய பெண், இளமையுடைய பெண், அல்குற்றேரையுடைய பெண், குயவன் என்பதற்கும் ஏற்ற பெற்றி சிறிது விகற்பித்து இப்பொருள் கொள்க. முதுகுன்று இறைஇயம்ப-பழமலையார் விடைகூற, பழமலைநாதர்கூற. சிற்றிடைச்சி-சிறிய இடையினையுடையவள், சிறிய இடைச்சாதிப் பெண். ஓர்-அறி, ஒரு
---------
பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தில்
அங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென
எங்கையில் வந்த தெமதாக லேவழக் கென்றுசெட்டி
மங்கையர் தங்கட் கிருங்கூ டலிலிட வைத்தனரே. (7)
7. வண்டு-வளையல். பங்கயம் அன்ன-தாமரை மலரையொத்த. செட்டி மங்கையர் தங்கட்கு என்பது இனி வைசியப்பெண்களாய்ப் பிறக்கும் முனிமனைவியர்களாகிய தங்கட்கு எனவும் பொருள் தோன்ற நிற்கின்றது. கூடல்-புணர்தல்-மதுரை.
---------
நீருக்குத் தக்க சடையார் முதுகுன்றர் நேடியுங்கள்
ஊருக்குட் பிச்சையென் றுற்றோமுண் டாயி னுரைமினென
வாருக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர்
யாருக்குக் கிட்டு மதுசோறு நீர்கொளு மென்றனரே. (8)
8. ஊருக்குள் பிச்சை-நகரத்தின்கண் பலி; மற்றொன்று இடக்கரடக்கல். அதற்கு ஊரு-தொடை. மற்றொருவர்-உமா தேவியார்; தங்கணவர்; அது யாருக்குக் கிட்டும்-அவ்வூருக்குட் பிச்சை எவர்க்குங் கிட்டாது. சோறு நீர்கொளும்-அவ்வுண்மையைச் சொல்லுகிறோம் நீர் ஏற்றுக்கொள்ளும்; சோற்றையும் நீர் ஏற்றுக்கொள்ளும். அதற்கு உளர் மற்றொருவர் யாருக்குக் கிட்டும் அது சோறும் நீர் கொளும் என்பதனை மற்றொருவர் அதற்கு உளர் யாருக்குக் கிட்டும் அது சோறு நீர்கொளும் என மாற்றிப் பிறர் எவர்க்குங் கிடையாது உமக்கே கிடைக்கும் அவ்வூர்க்குட் பிச்சையையும் சோற்றையும் நீர் ஏற்றருளும் என்று மற்றொரு பொருளுங் கொள்க.
---------
முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச்
சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில்
வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள்
விழுங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே. (9)
9. சழங்கல்-சரிதல். பகற் போது விழுங்கும் அன்னங்கொள்வாய் என்று வேண்டினள். எனவே இராப்போது
மனையில் மனம் வழங்குவன் என்றாள் என்பது குறிப்பெச்சம்.
-----------------
பிக்ஷாடன நவமணிமாலை
திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் செய்த உரை
Source:
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய
பிக்ஷாடன நவமணிமாலை
இது திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் செய்த உரையுடன்
வீரசைவாசார விற்பன்னராகிய செ. நாகி செட்டியாரவர்களால் பார்வையிடப்பட்டு,
சென்னை குருபசவா அண்டு கம்பெனி லிமிடெட் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
1931 விலை அணா 21
சிவாசார மாலா ஸங்க்யா -4
----------
சிவமயம்
பழமலை நாதர் பிக்ஷாடன நவமணி மாலை
கட்டளைக் கலித்துறை
நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண்
டங்குற்று மென்றுகில் போக்கினள் வெற்றரையாகியந்தோ
விங்குற் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற்
றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே. 1
(பதவுரை) நம் - நமது , குற்றம் - குற்றங்களை யெல்லாம், தீர்க்கும் - ஒழிக்கும், பழமலை நாதர்க்கு - விருத்தாசலத்தின் கண்ணெழுந்தருளிய பரமசிவனுக்கு, நல் - நல்ல, பலி - பிக்ஷான்னத்தை, கொண்டு - (கையிலெடுத்துக்) கொண்டு, அங்கு உற்று - (அவர் வந்து நின்ற) இடத்தை யடைந்து, மென் துகில் - (தான் உடுத்திருந்த) மெல் லிய வாடையை, போக்கினள் - நீங்கினவளாகிய வொருத்தி, வெற்ற ரையாகி - நிருவாண கோலமாய், அந்தோ - ஐயோ, இங்கு உற்றனை - (மாதர் இருக்கும்) இவ்விடத்தில் (என்) வந்தாய், என - என்று கேட்டலும், எம் - எமது, பெருமான் - பெருமிதம் வாய்ந்த கடவுள், இ - இந்த, இரு - பெரிய, நிலத்தில் - நிலவலகத்தின்கண், தம் - தமது, குற்றம் - பிழைகளை, பார்க்குமவர் உளரோ - உய்த்துணர்ந்து ஆராய்வா ருண்டோ ? என -( இருந்தாற் சொல்ல வேண்டும்) என்று கேட்டலும், தாழ்ந்தனள் - (அவள் தன்னை நோக்கிப் பார்த்தவிடத்து தனக் கெய்திய நிருவாண கோலங் கண்டு மிகவு மனம் வருந்தி முகமானது நிலம் பார்க்கத்) தாழ்ந்து நின்றனள், (எ - று).
(விசேடவுரை ) தாழ்ந்தனள் எனவே, இவண் இவள் நிருவாண மடைந்தது இவள் காம விகாரத்தானென்க ; இதுமட்டோ , வளை கழறல், குழல் சரிதல், குறு வெயர்வு பொடித்தல், விளையாட்டொ ழிதல், பாலுண வொறுத்தன் முதலிய பிறவு மன்ன; வந்துழி வந்து ழிக் காண்க. அந்தோ வென்பது இரக்கக் குறிப்பு.
பார்க்குமவர் - இணைமொழி. குற்றங்களென்பது காமம், வெகுளி, மயக்கமென்னும் முக்குற்றங்களை ; ஆணவாதி மலபந்தமாகிய குற்றங்களெனினு மமை யும். பிச்சை புக்குண்பார் பிச்சை யேற்குமிடத்து வாசற்படி கட வாமை யேற்றல் வேண்டுமென்பது சம்பிர தாயமாகலி னன்றே "வாசற்படி கடந்து வாராத பிச்சைக்கு" என்றார் பிறரும். தங் குற்றம் பார்க்குமவருளரோ வென்பதனை "ஏதிலார் குற்றம் போல் " என்னும் திருக்குறளானும் காண்க. மஹானென்னும் வடசொல் மானெனத் திரிந்து நின்றது. இதனைத் தற்பவமென்ப. உளரோ வென்னும் ஓகாரம் - எதிர்மறை. ஏகாரம் - ஈற்றசை. (1)
----------
குன்றா முது குன் றுடையா னிலாதவெண் கோவணத்தான்
றன்றா மரைக்கை விரன் மூன்று காட்டித் தனங்குறித்து
நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னறுநுதலா
யென்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே. 2
(ப-ரை) குன்றா -(வளத்தானென்றும்) குறைவுபடாத, முது குன்று உடையான் - பழமலைவாணனும், இலாத - இல்லாமையாகிய, வெண் - வெண்ணிறமுள்ள, கோவணத்தான் - கோவணக்கீளுடைய வனுமாகிய கடவுள், தாமரை - தாமரையைப் பழித்தாலன்ன, தன் - தனது, கைவிரல் - மூன்று - மூன்றினை, தனம் - தனத்தை, குறித்து - குறிப்பாக, காட்டி - காண்பித்து, நன்று ஆக - (உனக்கு) நன்மை உண்டாகக் கடவது (என்று வாழ்த்தி), இத்தனை - இவ்வளவு, பிச்சை. 'பிக்ஷான்னம், உண்டோ - (கிடைப்பது) உண்டோ , நறு - (மணம்) வீசுகின்ற, நுதலாய் - நெற்றியினை யுடையாளே, சொல் என்றான் - சொல்லென்று கேட்டலும் (அதற்கு அவள்), இரண்டு அத்தனை - (அங்ஙனங் கேட்ட பிக்ஷான்னம்) இரண்டத்தனை, உள - உண்டு, கோடி - (வேண்டினையேல்) பெற்றுக் கொள்ளக்கடவாய், என்று : என்று சொல்லி, இட்டனள் - (பிச்சை) இட்டாள், (எ - று).
(வி-ரை) இரட்டுற மொழிதலென்னுந் தந்திர வுத்தியாற் றனத்தைக் குறித்துக் காட்டிய குறிப்பு நோக்கம் பற்றி, இத்தனை பிச்சை யுண்டோ வென்றமையான் எண்ணிக்கைக்கு இரண்டத்தனை யுளவாகலின் வேண்டினையேற் பெற்றுக் கொள்ளக்கடவாயென்று பிச்சையிட்டனளெனப் பொருள் உரைத்துக் கொள்க. குன்றா வென்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சக் கிளவி. குன்றாவெனவே நீர்வளம், நிலவளம், குடிவளம் மிகுந் துடையதெனப் பெற்றாம். கோடியெனற்பாலது எவல் வினைமுற்றுக் கிளவி. என்றானிரண்டத் தனையென்புழி யென்றானென்பதனை யெனவெனக் கொண்டது, "வினைமுற்றே வினையெச்சமாகலும் " என்னும் நன்னூல் வினையியற் சூத்திரத்தானமைக்க. இலாத வெண் கோவணத்தானெனினுந் திகம்பரனெனினு மொக்கும். "தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ'' என்ற தூஉம் இக் கருத்தே பற்றி யென்க. உண்டோ வென்னும் ஓகாரம் - ஐயம். ஏகாரம் - ஈற்றசை. (2)
----------------
இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னை முனந்
தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள்
செப்பார் பணை முலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டாய்
எப்பாத்திரத்திலுமிட்ட றியாய் கொன் முன்னென்றனரே. 3
(ப-ரை) தாழ் - தாழ்ந்திருக்கின்ற, குழலாள் - கூந்தலை யுடைய மாதானவள், இ - இந்த, பாத்திரம் - பிக்ஷா பாத்திரத்தை, தலை கீழா - தலைகீழாக, பிடித்தனை - பிடித்துக் கொண்டிருக்கின்றாய், என்னை - யாது காரணம்பற்றியோ, முனம் - (இதன்) முன்னரே, தப். பாப் பலிகொண்டு - எப்போதாயினும் இல்லங்கடோறுஞ் சென்று பிச்சை புக்குண்டு, அறிந்திலையோ - அறியமாட்டாயோ? என - (சொல்லவேண்டும்) என்று கேட்டலும் (அதற்கவர்), செப்பு ஆர் - கலசம்போலும், பணை - பருத்து விம்மிய, முலையாய் - தனபாரங்களினை யுடைய மாதே, நிலத்து - பூமியினிடத்தில், பலி பிக்ஷான்ன த்தை, சிந்தியிட்டாய் - சிந்தும்படியாக விட்டனை, எ - எவ்வகைப்பட்ட, பாத் திரத்திலும் - பாத்திரத்திலாயினும், முன் - இதன் முன்னர் (எப்போ தாயினும்), இட்டு அறியாய் கொல் - இட்டறியமாட்டாயோ, என்ற னர் - என்று விடைகூறினர், (எ - று).
(வி-ரை) இது பாத்திரம் அறிந்து பிச்சை போ டென்றபடி ; பாத்திரம் தலைகீழா வென்றமையான் பிரமகபால மென்பது பெற்றாம். தப்பாவென்பது ஈறுகெட்ட வெதிர்மறைப் பெயரெச்சக் கிளவி. கொல்லென்பது ஈண்டையப் பொருட்டு. இட்டறியாய் கொன் முன்னென்றதனை முன்னிட் டறியாய் கொலென மாற்றுக. ஏகாரம் முன்னையது தேற்றம், பின்னையது அசைநிலை. (3)
------------------
வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி
யோட்டினை நீதொடலாமோ வெனவுமை யுந்தொடலாம்
வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்றவைகொல்
யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென் றனரே. 4
(ப-ரை) அனம் - அன்னத்தை, வேட்டு - (கொடுக்க) விரும்பி, மாது - மாதானவள், கை - கையை, தாழ்த்திட - தாழ்த்துப் (பிச்சை) யிடுதலும் (அதனைக் கண்டு ), மா - பெருமையுடைய - முதுவெற்பர் - பழமலைவாணர், பலி யோட்டினை - பிக்ஷா பாத்திரத்தை, நீ-, தொடலாமோ - தீண்டற்பாலதோ, என - என்று கேட்டலும் (அங்ஙனம் கேட்டதற்கு அவள்), உமையும் - உம்மையும், வீட்டி னில் - வீட்டின் கண், யான் - நான், தொடலாம் - தீண்டலாம், என - என்று விடை கூறுதலும், அவர் - (அங்ஙனம் பிச்சை யேற்றிட) வந்தவர், இது - இத் தொழிலினையோ, வேண்டுவை - (நீ) விரும்புகின்றனை, யாட்டின் - (ஒரோவொருவன்) யாட்டினது, இன் - இனிய, பால் என - (வேண்டும்) என்று கேட்டலும், மூலமுமாம் என்பது - (கொம் புங் குளம்புந் தவிர) சமூலமு மாமென்னும் பழமொழி போலு மிருக் கின்றது, என்றனர் - (நீ கூறியது) என்று விடை கூறினர், (எ - று).
(வி-ரை) வேட்டனமெனவே - வேள், தனம் எனப் பிரித்து, வேளை மிரட்டுந் தனமெனவும், அல்லதூஉம் வேளைத் தொய்யிலில் எழுதிய தனமெனவும் பொருள் அமைத்துக் கொள்க. வேள் தனமெனற் போலது வேட்டன மென்றாயதனை, ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய "ணளவென்புள்ளி முன் டண வெனத்தோன்றும்" என்னும் தொகைமரபுச் சூத்திரத்தானமைக்க; அல்லதூஉம், வேட்டனவெனவே கொண்டு விரும்பியவற்றையெனப் பொருள் கூறுவாருமுளர். கொல்லென்பது அசை. ஏகா ரம் - ஈற்றசை, யாட்டினின்பாலென மூலமுமாமென்பது பழமொழிமேல் வைத்துக் கூறிய தென்க. ஓட்டினை மாத்திரந்தானோ. தொடப்படும்? உம்மையும் யான் தொடலாமென்பதனை யுவமேயப் பொருளாக்கி, அதன் உவமானம் யாட்டினின் பாலென மூலமுமா மென்பதனாற் பெற்றாம். வீட்டினில் உமையுந் தொடலாமென்பது அந்தப்புரத்துத் தனியிடத்தில் உம்மை நான் தொடலாம் என்றும், மோக்ஷநிலையில் உம்முடன் ஐக்யமாவேன் என்றும் பொருள் தொனித்தல் காண்க.
இனி, ஆசிரியர் தொல்காப்பியரும் சுருங்கச் சொல்லல் வனப்பி னால் "ஆவோடல்லது யகாமுதலா " வெனக் கூறிய கருத்துணர்ந்து, உரையாசிரியரும், நச்சினார்க்கினியரும், உரையிற்கோடலென்னுந் தந்திரவுத்தியாற் பிறவுயிரொடு யகரமொழிக்கு முதலாய் வரினும் அவை வடசொற்றிரிபென மறுத்ததோர்ந்துணராது, அவரினுமிக நுண்ணுணர் வுடையார்போலும் புதுவிதி கற்பித்தார் ஆசிரியர் பவணந்தியாராகலின் இதனை வல்லோரிடங் கேட்டுணர்க.
--------------
மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற்
கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான் மிடற்றி .
னீண்ட வுகிருமத் தாதணை வேனென்று நீர் தலையைத்
தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே. 5
(ப-ரை) மாண்ட - சருவ சங்காரகாலத்தில் தகிக்கப்பட்ட, எலும்ப - என்பு மாலையை, அணி - அணிந்த, கோலமொடே - கோலத் துடனே, பலி - பிக்ஷையை, வாங்கிடுதற்கு - கையிலேற்று உண்பதற்கு, ஈண்டு - இவ் வுலகத்தின்கண், வரும், முதுகுன்று உடை. யீர் - பழமலைவாணரே, யான் - நான், உமை - உமது, மிடற்றில் - கண்டத் தானத்தின்கண், நீண்ட--, உகிர் - நகக்குறி, உறுத்தாது - படாது, அணைவேன்-, என்று-, நீர்-, தலையை -(எமது ) சிரத்தை , தீண்ட - தொடுதலும், உமது-, பலிப் பாத்திரம் - பிக்ஷா பாத்திர மானது, சிரிக்கின்றது , என் - என்ன காரணம் பற்றியோ? (எமக்கு அறியச் சொல்லும்), (எ - று).
(வி-ரை) இது காம விகாரத்தால் தலைவி தானே வியந்து உரைக் ததென்க. அரிபிரமாதியர் அங்கமே மாலையாகலின் மாட்சிமைப் பட்டதென்பார் மாண்டவென்றார் எனினும் அமையும். "நூன்முக முப்புரிமார்பிலிருவாங்க மொருங்குடனேந்திய வொருவ'' என்றார் கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரும். உமதென்பது உமை யெனவாறன் விபத்தியிரண்டன் விபத்தியா மயங்கி நின்றது. என் சிரிக்கின்றதே யென்ற விலே சானே யெமக்கு அறியச் சொல்லுமென வருவித் துரைக்கப்பட்டது. நகக் குறி, பற்குறி முதலியவற்றைக் காமநூலிற் காண்க. ஏகாரம் முன்னையது தேற்றம், பின்னையது அசைநிலை. தலையைத் தொடல், கையறைதல், தீர்த்தம் வாய்ப்பெய்தல், புத்தகத்தைத்தொடன் முதலியன ஆணைக் குறியேயாமென்க. இவரது பிக்ஷா பாத்திர மானது நகு வெண்டலை யாகலின் அந் நயந்தோன்ற எம்மிடற்றில் உகிர் ஊன்றிக் கபாலம் கைக்கொண்ட இவர் உம்மிடற்றில் உகிர் ஊன்றார் போலும் என்று நகுவதாக இங்ஙனம் கூறினார் இவ்வா சிரியருமென்க.
------------
வானோர் தொழுதின் பலிப்பாத் திரத்தை வனைந்தது நீ
தானோ வெனச்சக்கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி
யானோர் குயவன் மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப
நானோ வொருசிற்றிடைச்சியென் றாளந் நறுநுதலே. 6
(ப-ரை) வானோர் - (முப்பதிற்று மூன்று) தேவர் கணங்கள், தொழும் - வணங்கும், நின் - உன், பலிப் பாத்திரத்தை - பிக்ஷா பாத் திரத்தை, வனைந்தது - செய்தது, நீ தானோ -, என - என்று கேட்டலும் (அதற்கு அவர்), சக்கரம் - (குலால) சக்காத்தை, சுழற்றத் தகும் - சுழற்றுதலுக்குத் தகுந்த, குயத்தி - குலாலப் பெண் ணே நீ யாவாயாயின், யான் - நான், ஓர் - ஒரோவொரு, குயவன் - குலாலனாவது, மெய் என்றே - மெய்யேயாகும் ஈதென்று, முது குன்று இறை - பழமலைவாணர், இயம்ப - சொல்லுதலும் (அதற்கு, அந்தறு - அம் (மணம்) நாறுகின்ற, நுதல் - நெற்றியினையுடைய பெண் ணானவள், நானோ-, ஒரு - ஒரோவொரு , சிற்றிடைச்சி - குலாலப் பெண்ணன்று, முல்லை நிலத்து இடைப் பெண்ணேயாம், என்றாள் - என்று விடை கூறினள், (எ - று).
(வி-ரை) சக்கரம் சுழற்ற வென்பதனை அரம், சக்கு, சுழற்ற வெனப் பிரித்து, அரம் போல் இராவுதற்றொழில் செய்யும் கண்ணை வலையா வீசுகின்ற வெனவும், குயத்தியெனவே கொங்கையை யுடை யா ளெனவும், குயவனெனவே கொங்கையை யணைபவனெனவும் சிற்றிடைச்சி யெனவே சிற்றிடையை யுடையாளெனவுங் கொண்டு கூட்டிப் பொருள் உரைத்துக் கொள்க. நறுநுதலெனற்பாலது பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த விடாத அன்மொழித் தொகை. இது நிற்க, ஒரு சாரார் அன்மொழித் தொகையை ஆகு பெயரெனக் கொண்டு மயங்கினாராலெனின், அற்றன்று, அவாவற் றினியல்பு தெரிந்திலரெனவே கூறி மறுத்தார் தொல்காப்பியச் சூத்திர விருத்தியுரைகாரர் அதனாற்காண்க. அம் மண நாறுகின்கிற நெற்றியினையுடைய பெண்ணாவா ளென்புழி அவ்வென்னுஞ் சுட்டுச் சொல்லெஞ்சிற்று. சட்சு என்னும் வடசொல் சக்கெனத் திரிந்து நின்றது. முப்பதிற்று மூன்று தேவர் - பன்னொரு உருத்திரர். இரண்டு அச்சுவனி தேவர், பன்னிரண்டு சூரியர், எட்டு வசுக்கள், "நால்வேறியற்கைப் பதினொரு மூவரோடு" என்றார் பிறரும். தானென்பதும், ஏகார மிரண்டும் அசை. (6)
-------------
பங்கய மன்ன விழியார் முது குன்றர் பாத்திரத்தி
லங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென
வெங்கையில் வந்த தெமதாக வேவழக் கென்று செட்டி
மங்கையர் தங்கட் கிருங்கூடலிலிட வைத்தனரே. 7
(ப-ரை) பங்கயம் அன்ன - தாமரைப் பூவைப் பழித்தால ன்ன, விழியார் - கண்ணினையுடைய மடவார் , முது குன்றர் - பழ மலைவாணரது, பாத்திரத்தில் - பிக்ஷா பாத்திரத்தில், 'அம் - அழகிய, கையில் - கையினின்றும், ஐயமொடு - பிக்ஷான்னத்தோடு, வண்டு - வளை, வீழ - (கழன்று) விழுதலும், ஐய - ஐயரே, நல்கென - (அதனைத்) தரல்வேண்டுமென்று கேட்டலும் (அதற்கு அவர்), எம் - எமது, கையில் - கையின்கண், வந்தது - வரப்பெற்றது, எமதாக - எமக்கு உரிமையதாக, வழக்கு என்று - வழக்கமாகுமென்று, செட்டி மங்கையர் தங்கட்கு - மங்கைப் பருவத்து வசிய மடவார்க்கு, இரும் கூடலில் - நான் மாடக்கூடலென்னும் பெரிய மதுரை மாநகரத்தில், இடவைத்தனர் - இடும்படியவர்க்குக் (கொடாது) வைத்துக் கொண்டனர், (எ - று).
பங்கயமெனற்பாலது வடசொற்றிரிபு. பங்கமாகிய சேற்றி னிடத்திற் பிறப்பினை யுடையதெனவே, பல பூக்களுக்காமெனினும் ஈண்டியோக ரூடியாற்றாமரைக்கே கொண்டது ; பூக்களுட்டலைமை விதற்காய நோக்கம் பற்றி யென்க. இது முள்ளி யென்றாயவாறு போலும். இக் கூடல், மதுரை, துவாதசாந்தம், கடம்பவனம், திருவாலவா யென்னும் பல திருநாமமுடையன. அப்புராணக் கூற்றான் இவற்றை யுணர்க.
வண்டெனற்பாலது வளையல், அறுகான் முத லிய பல பொருள் குறிக்கும் ஒரு சொல். மடவாரென்பதனை மடப் பத்தினையுடையாரென்பார் பேராசிரியர் ; கற்பின் வரலாற்றினை யுடையாரென்பார் பரிமேலழகியார். இவற்றாற் சொன்னோக்க மன்றி பொருணோக்கந் திரிபிலவென்க. வண்டு வீழ்தலைப் பற்றி மேலைச் செய்யுளின் கண் அதன் நியாயம் விரித்துரைக்கப் பட்டதாக லின் அதனை மீண்டு விரித்தில மென்க. ஐயவென்பது அண்மை விளி. ஐய வெனற்பாலது தலைவவெனினு மொக்கும். இடவைத்தன ரென்பதனைத் திருவிளையாடற் புராணத்தில் வளையல் விற்ற படலத் தாற் காண்க. (7)
---------------
நீருக்குத் தக்க சடையார் முது குன்றா நேடியுங்க
ளூருக்குட்பிச்சையென் றுற்றோமுண்டாயினுரைமினென
வாருக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர்
யாருக்குக் கிட்டு மது சோறு நீர்கொளு மென்றனரே. 8
(ப-ரை) நீருக்குத் தக்க - கங்கையாறு புனைந்த, சடையார் - சடைமுடியாரும், முது குன்றர் - பழமலைவாணருமாகிய கடவுள், நேடி - (நீங்களிருக்குமிடம்) தேடிவந்து, உங்கள் - உமது, ஊருக்குள் - ஊரின்கண், பிச்சையென்று , உற்றோம் - அடைந்தோம், உண்டாயின் - (பிச்சை) உளதாயின், உரைமின் என - (உண் டென்று) சொல்லுதல் வேண்டுமென்று கேட்டலும் (அதற்கு அவர்), வாருக்குத் தக்க - கச்சினை யணியத்தக்க, முலையார் - முலையினையு டைய மாதரார், அதற்கு உளர் - அங்ஙனம் பிச்சை போட விருக்கின்றார் கள், மற்றொருவர் யாருக்குக் கிட்டுமது - அவரொழிந்த கச்சினை யணியாத சரிந்த முலையினையுடைய மாதருக்கோ கிட்டுவதாந் தொழில், நீர்-, சோறு கொளும்-சோற்றினை (விரும்பி வந்தீராகலின் அதனைப்) பெற்றுக் கொள்ளும், என்றனர் - என்று விடை கூறினர், (எ - று).
(வி-ரை) வாருக்குத்தக்க முலையாரெனவே தளர் முலை யார்க்கு வாரினாற் பயனின்றெனவும் இளமுலையார்க்கே பயனுண் டெனவும் போதரும்; இதனை ஆசிரியர் மேல் வருஞ் செய்யுளிற் சழங்கு முலை முதியாளெனவும் கூறியதே போன்ற சான் றென்றுணர்க.
இனி, ஊருக்குள் - தொடைக்கு உள்ளீடாயிருப்பதாம் அல்குற்ற டத்தை யெனவும், பிச்சையென்றுற்றோம் - அதனை யடைதலே பிச்சை யென்றடைந்தோ மெனவும், வாருக்குத்தக்க முலையா பதற்குளர் - கச்சினை யணியத்தக்க முலையினையுடைய விலைமாதர் இருக்கின்றார்களெனவும், மற்றொருவர் யாருக்குக் கிட்டுமது அவரொழிந்த கற்பினை வாய்ந்த குலமாதருக்கோ அந் நலங்கிட்டுவதாக தன்மைத் தெனவும் உடனிலைச் சிலேடையாகப் பொருள் கொள்க. இனி, உடனிலைச்சிலேடையாவது ஒரு செய்யுள் இருவகையாய்ப் பொருள் கொண்டு நிற்பதென்க. வாருக்குத்தக்க முலையாரென்றதனால் யாவரும் அங்ஙனமன்றோ? கணிகை மாதரையே கூறியதெற்றுக்கோ வெனின், இவர் பொருளீட்டும் பலர்க்குங் கோலங்காட்டி வருவாராகலின் விலைமகளென்பாராகலானும், இவர் தங் கொண்கனுக்கே காட்டி வருவாராகலின், குலமகளென்பாராகலானும், அங்ஙனம் மிகுதிபற்றி யிங்ஙனங்கூறிய தென்றுணர்க. வாருக்குத்தக்க முலை யாரென்பதனை வாரினையணியத்தக்க முலையாரென்பது "யாத னுருபிற்கூறிற்றாயினும் '' என்னும் நன்னூற் பெயரியற் சூத்திரத் தானமைக்க. மற்று - வினைமாற்றின்கண் வந்தது. கிட்டுமது - இணைமொழி. ஏகாரம் -
ஈற்றசை. (8)
------------------
முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வாச்
சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில்
வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள்
விழுங்கு மனம்பகற்போது கொள்வாயென்று வேண்டினளே. 9
(ப-ரை) முழங்கும் - சத்திக்கின்ற, துடியொடு - உடுக்கை யைக் கையிலே கொண்டு, பிச்சையென்றே - பிச்சை வேண்டுமென் றே, முதுகுன்றர் - பழமலைவாணர், வர - வருதலும், சழங்கு முலை - சரிந்த தனபாரங்களையுடைய, முதியாள் - நற்றாயானவள், என் - எவ் வகைப்பட்ட, பலி - பிக்ஷான்னம், என - வேண்டுமென்று கேட் டலும், தம் - தமது, மனையில் - மனையின் கண் , வழங்கும் - பகிர்ந் துண்ணப்படும், அனம் - அன்னம், என்றனர் - என்று கேட்டனர் (அதற்கு), வளர் - (அழகு) வளர்கின்ற, முலையாள் - முலையினை யுடைய பெண்ணானவள், புறம்போந்து - வெளியே வந்து, விழுங் கும் - (யாவரும் கொள்ளப்பட்ட, அனம் - அன்னத்தை, பகற் போது -, கொள்வாயென்று - கொள்ளக்கடவாயென்று , வேண்டினள் - வேண்டிக் கொண்டனள், (எ - று).
(வி-ரை) வழங்கு மனமெனவே - நடமாடும் அன்னம் போல் வாளை யெனவும், பகற் போது கொள்வா: யென்றமையான் அதனை யிராக் காலத்திற் பெற்றுக் கோடியெனவுங் கூட்டுக. இம் முது குன்று விருத்தகிரி, பழமலையெனப் பல திருநாமமுடையன. அப் புராணத்தானறிக. அன்னமெனற்பாலது அனமெனத் தொகுத்தல் விகாரம் பெற்று நின்றது. எவனென்னும் வினாவினைக்குறிப்பு: முற்றுக்கிளவி என்னெனத் திரிந்து நின்றது.
ஏகாரம் முன்னை யது தேற்றம், பின்னையது அசை நிலை.
--------
நூற் சிறப்பு
பிச்சா டன நவ ரத்தின மாலையைப் பீடுபெறத்
தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரனாம்
பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனித
னற்சார்பு சார்ந்த சிவப்பிரகாச நவமணியே.
பிக்ஷாடன நவமணிமாலை மூலமும் உரையும் முற்றிற்று.
-------------
This file was last updated on 6 Feb. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail,com)