pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 12
அத்திகிரிப் பெருந்தேவித்தாயார் மாலை.

attakirip peruntEviyAr mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 12)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 12
அத்திகிரிப் பெருந்தேவித்தாயார் மாலை..

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----

அத்திகிரிப் பெருந்தேவித்தாயார் மாலை.

காப்பு.
திருக்கச்சிமேவுபெருந் தேவித்தாய்தாண்மேல்
உருக்கத்தமிழ்மாலை யோதத் - திருக்கருணை
வாரிமாறன்பதமே வாழ்த்தியுந்ததென்குருகைக்
காரிமாறன்பதமே காப்பு.

நூல்
பூவிற்சிறந்ததம்போருகப்பூமணம் பூத்துயிர்க்குங்
காவிற்சிறந்ததுகற்பகக்காவெனக்கற்றுணர்ந்தோர்
பாவிற்சிறந்தது நம்பெருந்தேவியைப்பன்னிடும்பா
நாவிற்சிறந்ததவள்பேர்நவின்றிடுநாவென்பவே.       (1)

அருந்தேவியன்பிற்றலைப்பிரியாதவடியர்முன்னர்
வருந்தேவிவானவர்மண்ணவர்வேண்டும் வரங்களெல்லாந்
தருந்தேவிதந்தித்தரணிச்சநார்த்தனன்றன்றுணையாம்
பெருந்தேவிதன்புகழ்பேச நெஞ்சேயென்றும் பேணுதியே.       (2)

அத்திகிரிப்பதிவாழமரேசனன்பாந்துணைவி
நத்திகிரிக்கரநான்குடையாணளினாதனையாள்
அத்திகிரிகொளிவ்வண்டமெலாம்பெற்றளிக்குமகா
சத்திகிரீசைபுகழ்பெருந்தேவிசரணெனக்கே.       (3)

கச்சித்திருப்பதி வாழ்கனகாம்பரைகாதலுடன்
மெச்சித்திருப்புகழ்பாடுநர்க்காக்கும் விமலை விண்ணோர்
உச்சித்திருப்பொறியாம்பெருந்தேவிதன்னொள்ளடியை
இச்சித்திருப்பதுநெஞ்சேநம்பேற்றுக்கிலக்கணமே.      (4)

வரத்திற்சிறந்தபெருந்தேவியன்னை வடிவவொளி
சிரத்திற்றிருவுத்திநெற்றியிற்சுட்டி செவிக்குழைகள்
உரத்திற்பெருமணிமாலையொண்காலணியூற்றுமொளித்
தரத்திற்புகுந்து தரிசித்தல் கண்ணின்றரமலவே.       (5)

அளியின் கடலையழகின்கடலையறக்கடலைக்
களியின் கடலைக்கலையின் கடலைக்கற்புக்கடலைத்
தளியின் கடலன்ன தந்திகிரிப்பெருந்தேவியென்னும்
ஒளியின் கடலையுளக்கடல்வைத்துவக்கின்றனமே.       (6)

அவிப்பாத்திரருமறவோருமந்தமிழாரியத்தின்
கவிப்பாத்திரருங்களிக்குநின் கீர்த்திக்கரும்பிரதஞ்
செவிப்பாத்திரத்தின்மடுத்துண்டுநாளுந்திளைக்கும் வண்ணம்
புவிப்பாத்திரர்தொழுந்தாட்பெருந்தேவிபுரிந்தருளே      (7)

புலிவாயினின்றும் புல்வாயைப்புரப்பதுபோற்பொறியின்
வலிவாயினின்றும் வதைக்குமறலிதன்வாயினின்றுங்
கலிவாயினின்றுமெனைக்காத்தளித்திகடவுளர்கள்
பொலிவாயிற்கோயிற்பெருந்தேவித்தாயெனும் புண்ணியையே.(8)

சருப்பத்தின்வாய்கொடவளையைக்காத்திடுந்தன்மையென்னக்
கருப்பத்தில்வந்து பிறந்து குடும்பமென்காட்டழலின்
உருப்பத்தினையுமெளியனைக்காத்தியுயர் புலவர்
விருப்பத்தின்மேவும் பெருந்தேவிநாமவிசித்திரையே.(9)

காயமயக்கமுங்காரிகையார்தங்கலவிதனில்
நேயமயக்கமுநேமிமயக்கமுநேடுபொருண்
மாயமயக்கமுமாகுமலினங்கண்மாயவருட்
டோயமளித்தருள்வாய்பெருந்தேவிசுகோதயையே.       (10)

வரற்குமரற்கும்வளர்பூதங்கட்கும்வகுக்கும்பஞ்ச
சரற்குந்தகட்புலியாதிகட்குந்தடித்ததண்ட
தரற்குநின்னன்பர்கள் சற்றுமஞ்சாரித்தரணியில்வாழ்
நரர்க்குஞ்சுரர்க்குமருள்பெருந்தேவிநளினமின்னே.      (11)

கண்டென் கெனோகன்னற்பாகென்கெனோகதித்தோங்குமிக்குத்
தண்டென்கெனோதழைவாழைபலாமாத்தருக்கடரும்
பண்டென்கெனோபசும்பாலொடுதேனென்கெனோவமுதத்
துண்டென்கெனோபெருந்தேவிநின்னாமச்சுவையினையே.       (12)

செவிக்குமமுத நற்சிங்வைக்குந்தெவிட்டாவமுதங்
கவிக்குமமுதங்கடிந்தோர் மனங்களிகொள்ளமுதம்
புவிக்குமமுதம்பொன்னாட்டவர்க்கென்றும்புத்தேளமுதங்
குவிக்கும்புகழ்ப்பெருந்தேவிகல்யாண குணகணமே.       (13)

மணியென்கெனோவிம்மகிதலத்தோர்க்குவயங்குமுத்து
மணியென்கெனோமம்மர்மாரியைமாய்த்திடவந்தசித்த
மணியென்கெனோமந்திரமென்கெனோமெய்ம்மதிதருங்கண்
மணியென்கெனோபெருந்தேவியென்சூடாமணியினையே.       (14)

பூவைநிகர்த்தமென்சொல்லாள் பொன்னாடுபுகழ்தருவின்
காவைநிகர்த்தகரத்தாள் கண்ணாடிக்கபோலத்தினாள்
பாவைநிகர்த்தபடிவத்தினாள் பதுமப்பதத்தாள்
மாவைநிகர்த்தவிழிப்பெருந்தேவியை வாழ்த்துநெஞ்சே.       (15)

போதனத்தாற்கும்புருகூதனாதிப்புலவர்கட்கும்
மாதனத்தாற்கும்வருணாதிகட்குமறலியெனுஞ்
சோதனத்தாற்குந்துறவோர்க்குமாந்தர்க்குஞ்சுத்தசித்த
சாதனத்தார்தொழுநம்பெருந்தேவிசரணியையே.       (16)

எல்லாவுலகமுமின்புறவேண்டி முன்னீன்றவளாம்
எல்லாவுலகுக்குமென்றுமெவணுமிரட்சகையாம்
எல்லாவுலகத்தவர்க்குநியாமகையாமியங்கும்
எல்லாவுலகும் புகழ்பெருந்தேவியிறையவளே.       (17)

விரத்தியில்லார்கட்குமெய்ஞ்ஞானங்கூறல் வியர்த்தமென்றே
தரத்தியல் சாத்திரஞ்சாற்றுமதனாற்சகத்துக்கெல்லாங்
குரத்தியெனுநீயது நன்குவாய்த்திடுங்கொள்கை சொல்லிப்
புரத்தியெனைப்புண்ணியம்பெருந்தேவிபொற்பூமகளே.      (18)

பொறிக்கள்வர் நின்பூசனைக்கேயுரியபொருளைச்செந்நாய்
கொறிக்கொண்டுபோவதெனக்கொடுபோவர்குறித்திடுநன்
னெறிக்கொண்டுநின்றுன்றிருப்பணிசெய்துநிதமுமுய்யக்
குறிக்கொண்டுகாத்தருள்வாய் பெருந்தேவிகுணக்குன்றமே.      (19)

புகுவழிமாயையிற்போந்திட்டுநல்லபொல்லாதவெனப்
பகுவழிக்கன்மரிபந்தின்பநட்டுப்படர்குடும்பச்
செகுவழிக்கானத்திரிகின்ற வென்னைத்திதித்தருடுன்
பிகுவழியோர் புகழெம்பெருந்தேவியிலக்குமியே.      (20)

மனைநிலைஞானவசுவெரிக்காவிடின்மற்றுமற்றும்
வினைநிலை வீயாவரிதாள்கொளுத்தாவிளைநில தத்திற்
சினைநிலைப்பூடுசெழிப்பெனச்செய்வன செய்தருள்வாய்
அனைநிலை நீங்காப்பெருந்தேவித்தாயாமருணிதியே.       (21)

கருப்பூரமின்றியுமப்பேழையவ்விரைகால்வதென
விருப்பூர்மனைநசையின்றியும் வாசனைவீறிநிற்கும்
நெருப்பூர்துகிலினதை நீத்தருடி நிமிர்ந்ததந்திப்
பொருப்பூர்சினகரம்வாழ்பெருந்தேவிபுராதனையே.       (22)

நின்கதைகேட்குநியமநின்னாமநிதமுரைத்தல்
நின்பலிநிட்டைநின்றோத்திரநின்பணிநேசமென்றும்
நின்வழிபாடுநினக்காப்பொருள்சுகநீத்தலிவை
நின்னளிக்காரணமாம்பெருந்தேவிநிருமலையே.       (23)

புராதனை பொன்மகள் பூமகள்மாமகள் பூங்கமல
வராதனை வாரிசக்கண்ணிமணிவண்ணன்வண்மணிசேர்
உராதனை நங்கள் பெருந்தேவியுய்வின்கண்ணூக்கமிலாக்
கிராதனையாளும்பரமகல்யாணிக்ருபாகரியே.       (24)

வேதனையீன்றவளே வேழவெற்புறைவித்தகியே
வேதனை செய்யும்வினைப்பகையாலும் விறற்பொறியின்
சாதனையாலுந்தளர்வேனையின்னுந்தளரும்வண்ணஞ்
சோதனை செய்தல்பெருந்தேவியன்னாய்சுகிர்தமன்றே.       (25)

ஒலவட்டத்துவரோதவொலியலுடுத்திருக்கும்
ஞாலவட்டத்தினுநல்லின்பவீட்டினுநாயடியேன்
காலவட்டத்தென்றுமெம்பெருந்தேவிகளித்துநினக்
காலவட்டப்பணி செய்துய்யும் வண்ணமருள் புரியே.       (26)

பாக்கியவானச்சுதன்மாவைப்போலப் பழுத்தவுள்ளந்
தேக்கியவன்புடன்றே மலர்கொண்டு தினந்தினமும்
ஆக்கியமாலைநின்னம்புயத்தாளிலணிந்துயவே
வாக்கிய நல்லருள்செய்பெருந்தேவிவரோதயையே.       (27)

அந்தரங்கப்பனிப்பாற்கடறன்னையரிதின்விட்டு
வந்தரங்கப்பெருங்கோயிலும் வாரணவெற்புமுறை
தவித்தாயாா மால அக
அந்தரங்கப்பணி செய்துய்யும் வண்ணமருள் புரியே.       (28)

சோகாந்தகாரத்தொடுகடனீத்தபின்றோகையர்கள்
மோகரந்தகாரமுன்னீர்மூழ்குமூடனுமோனமுற்ற
எகாந்தசீலரிறைஞ்சுநின் பாதமிறைஞ்சியுவான்
மாகாந்தநாட்டில்வைப்பாய் பெருந்தேவிமறைக்கொழுந்தே.       (29)

வானத்தில்வையத்தில் வாழ்வோர்கள் வந்து வணங்குஞ்சந்நி
தானத்திற்சந்ததநின்பணிசெய்து தழைக்கும் வண்ணம்
ஈனத்தின்மிக்கவெளியேற்கிரங்கியினிதருள்வாய்
ஞானத்தின்மிக்கோர்புகழ் பெருந்தேவிநயாசலையே.      (30}

கர்த்திற்சிரத்திற்றொழுதிறைஞ்சாதகயவர்கட்கும்
மரத்திற்குமாவிற்கும்வேற்றுமையொன்றுமதிக்ககிலேன்
வரத்திற்சிறந்தோர்புகழ்பெருந்தேவியிம்மானுடமாந்
தரத்திற்சிறந்த பிறப்புமந்தோதவத்தாழ்வுற்றதே.       (31)

சேராதனமுதலாகவெண்ணெண்வகைசேர்வளமுந்
தீராதனமடவார்நசை மண்ணசைசெம்பொனசை
வாராதனகநல்வைகுந்தவாழ்வும்வழுத்திநினை
ஆராதனம்புரியார்க்கத்திமாமலையம்புயையே.      (32)

அந்திகிரிப்புவிபோற்றருளாளனருளுஞ்சங்கஞ்
செந்திகிரிப்புயஞ்சேர்ப்போனருளுந்திகழுமொற்றை
வெந்திகிரித்தேரவர்போலொளிர் முத்திவீடுமெய்துந்
தந்திகிரிப்பெருந்தேவி திருவருள் சார்ந்திடினே.       (33)

பொருள்வருநல்லபுவிவருமெண்வகைப் போகமவருந்
தெருள்வரும்பத்திமைச்செல்வம்வருநற்றிருக்குரவன்
அருள்வருமன்னதனாலழியாதவமுதம்வரும்
இருள்வருகூந்தற்பெருந்தேவி சீர்த்தியிசைப்பவர்க்கே.       (34)

எவ்வழியெண்ணிலிருணரகங்களிரித்தொழிக்கும்
அவ்வழிதன்னையடியேற்கிரங்கியறைந்தருள்வாய்
செவ்வழியோர்தொழுஞ்சேவடியாய் சிறைத்தேன்கணங்கள்
செவ்வழிபாடும்பொழிற்கச்சிவாழ் பெருந்தேவியன்னே       (35)

தனுவாதியாற்செய்பவக்கழுவாயினைச்சாற்றிடுங்காற்
றனுவாதியாற்றானது செய்துகோடறகுதியென்று
மனுவாதியர் சொல்வர்செய்துய்யவுள்ளமகிழ்திமறை
மனுவாதியாற்றொழுமெம்பெருந்தேவிமலர்மகளே.      (36)

பவர்க்கந்தரும்பவமென்று பன்னூல்கள்பணித்திருந்துங்
கவர்க்கமுதலிருபானான்கின் மூலங்கவற்றமின்னார்
சுவர்க்கம்விரும்பித்துயர் தேடுமென்மதிச்சூனியத்தைச்
சுவர்க்கந்துதிபெருந்தேவிநிற்கென்னென்று சொல்குவனே.       (37)

ய்யாதியரசனில்யௌவனமங்கையரின் பமையல்
வியாதிவருத்தவிளமைக்குமூப்பினைவிற்கவெண்ணுங்
கியாதியறிவினனெவ்வாறுநின்பதங்கிட்டியுவேன்
தயாதிகுணமுடையாய்பெருந்தேவிசரோருகையே.       (38)

வருத்தும் பிணிநிலைக்கேற்றபடிநல்வயித்தியர்கள்
திருத்துஞ்சிகிச்சையிற் சீர்த்துஞ்சிறுத்துஞ்செறுக்குந் துன்பைப்
பொருத்தும்பவங்கட்குப்போக்கைவிதித்தனர்போற்றகிலேன்
மருத்துன்றடியடைந்தேன்பெருந்தேவிமலர்மகளே.       (39)

போதகநீராட்டினும் பின்னுந் தூளியைப்போர்த்தலென
ஓதகநீக்குமுபாயமியற்றினுமுற்று மற்றும்
பாதகஞ்செய்தலின் வீணாநினதருள்பார்த்து நிற்பன்
சாதகமென்னப்பெருந்தேவியன்னாய்தயை புரியே.      (40)

அதிகாரியானவடியேனஞ்ஞானத்தனன்னதனால்
உதிகாரியமெனும்பாவங்களொட்டற்றொழியகில்லா
விதிகாரியமதியே பாவ்வோறவெட்டிவிடும்
அதிகாரிகைகொள்பெருந்தேவியன்னதருள்புரியே.       (41)

பத்தியமாவுண்பவர்க்குப்பிணிபருக்காதடியேன்
நித்தியமாகநியமவொழுக்கத்தினின்று மெல்லத்
தத்தியந்தத்துவஞானமடையத்தயை புரிவாய்
சத்தியகாமிப்பெருந்தேவித்தாயாஞ்சரோருகையே.       (42)

ஐந்துபொறியையவித்து மரிவையராசையற்றும்
நந்துகருமபலனைவிடுத்துநவையொழித்தும்
முந்துசரணாகதி செய்துமுய்குவர்மொய்கருணைச்
சிந்துவெனும் பெருந்தேவியெளியனென்செய்குவனே.       (43)

நத்தியிழைத்தகழுவாய் பலவு நின்னல்லடியிற்
பத்தியிலாதவர்க்கென்னோபயக்கும்பரமபத
முத்தியடையமுயல்வோர்க்கருளுமுதல்விநின்பாற்
பத்தியளித்தருள்வாய்பெருந்தேவிபராபரையே.       (44)

எவர்நின்குணத்தன்பும்பாதத்திதயமுமேயவைப்போர்
அவர்கழுவாய்களனைத்தும் புரிந்தவராருயிரைக்
கவர்சமன்றன்னையுங்காணாரவர்பதக்காதறந்தாள்
தவர் துதிபாதப்பெருந்தேவித்தாயெனுந்தாக்கணங்கே.      (45)

மங்கையைமன்னரைமாதா பிதாவை மறையவரைச்
சங்கையறக்கொல்லறன் குருபன்னியைத்தான் முயங்கல்
கொங்கைக்குடித்தல் முதலகுற்றங்களைக் கொல்லுநஞ்சாம்
நங்கைக்கரசிபெருந்தேவி நாமநவில்வதுவே.       (46)

சீருற்றநின்றிருநாமங்கள் செப்புந்திறத்தினரை
நேருற்று நின்றதுநின்மலராக்கிடுநீர்மையென்னச்
சூருற்றிடுகன்மயோகஞ்செய்யாது தொடுகடல்சூழ்
பாருற்றகீர்த்திப்பெருந்தேவித்தாயெனும் பண்ணவியே.      (47)

தோலடியன்னநடையாரிரதித்துணைவன்மலர்க்
கோலடியுண்டுங்குவிகொங்கைமங்கையர்குத்திரக்கண்
வேலடியுண்டுமிளைத்த சிறுவனின் வேதமுடி
மேலடிவாழ்த்தியுய்வான் பெருந்தேவி விழைந்தருளே.       (48)

முப்பொருணீர்மையொர் முட்டின்றிமுற்றுமுறையினுள்ளங்
கைப்பொருளென்னக்கடையேனிதயக்கண் கண்டுணர
எப்பொருளும்பெற்றளிப்பவளேயிருக்கின்றலையார்
அப்பொருள்வேட்கும் பெருந்தேவியன்னாயருள்புரியே.       (49)

எண்கூடெனுநின்னிடம் வைத்திக்குன்றிறைவிதனைப்
பண்கூடெனும் பசும்பாப்பாடியேத்திப்பணிதியெனிற்
புண்கூடெனுமிப்புரநீக்கிமுத்திப்புரத்தில்வைப்பள்
கண்கூடெனவிதைக்காண்டிகவலலென்காதனெஞ்சே.       (50)

வாரணமாமலைவாழ்பெருந்தேவிமலரடியை
ஆரணவாணருமந்தரவாணருமன்பறிவிற்
பூரணபூதரும்போற்றிட நீயங்ஙன்போற்றகில்லாக்
காரணமென்மன்னே நீயெனக்கதைக்கட்டுரையே.       (51)

திலத்தினினெய்யெனத்தீக்காலம்விண்பு விசேருமெவ்வெத்
கலத்தினுமத்தலஞ்சார்ந்தபொருளினுஞ்சார்ந்துறைவாள்
நலத்தினுயர்பெருந்தேவி பொன்றாப்பதநல் கடியைப்
புலத்தினுழல்மனனேயென்றுஞ்சிந்தித்துப்போற்றுதியே.       (52)

மைப்பட்டகூந்தற்பெருந்தேவிவண்புகழ்வாழ்த்தலொரீஇச்
சைப்பட்ட வேனையர்தம் புகழ்வாழ்த்த றடையொன்றின்றிக்
கைப்பட்டகாமரமிழ்தைக்கமரிற்கவிழ்த்துவிட்டுப்
பைப்பட்டபாம்பின் பழிநஞ்சயின்றிடும்பான்மையதே       (53)

நெய்யிடுந்தோறுநெருப்பவியாதந்த நீர்மையென்ன
மையிடுங்கண்ணியர்மையனுகர்தொறுமாய்தலில்லை
செய்யிடுசெந்நெற்பயிரோங்குங்கச்சித்திருப்பதிவாழ்
கையிடுகங்கணமாதேவியஃதுகடிந்தருளே.       (54)

கறையடிமாமலைவாழ்பெருந்தேவியென்கற்பகமே
தறையடித்தாலெனத்தப்பாமலெற்குச்சரமநின்றன்
உறையடிச்சேவையுறுமோவுறாதோவெனவெனுள்ளம்
பறையடிக்கின்றது நின்றிருவுள்ளப்பரிவென்னையே.      (55)

குறவருமஞ்சிடுங்குன்றக்கொடுமுடிகொள்கழையில்
உறவருதேனைமுடவனுற்றுண்டிடவுன்னலொக்கும்
அறவருங்காணவரியநின் சேவையையான் விரும்பல்
துறவருவந்துதொழும்பெருந்தேவிசுகோதயையே.      (56)

மகரக்கொடியோன் மலர்க்கணைமாரிவருத்தவந்த
திகரக்களையுடன் சென்மக்களையையுந்தீர்த்தருள்வாய்
தகரக்கருங்குழற்றாயேதசிரக்கைத்தந்திகிரிச்
சிகரச்சிநகரம்வாழ்பெருந்தேவிதிருமகளே.       (57)

சத்தியஞ் சாந்தம்பொறைசுகதுக்கச்சமத்துவமுட்
சுத்திபொறிவெற்றி சூழ்ந்திடும் பூதத்துரோகமின்மை
பத்தியிவைகொணின்பத்தர் பெருமைபகர்வதற்குச்
சத்தியிலேனெனையாள்பெருந்தேவிதயாபரையே.       (58)

அயலவர் துக்கங்கண்டாற்றாமையன்பர்கட்கன்பு செய்தல்
மயலவர்கேண்மை மறுத்தனெஞ்சுன்னுழிவைத்தலிந்தச்
செயலவராநின்னடியார்பெருமைகள்செப்பரிதாற்
கயலவிர்கட்பெருந்தேவியன்னாய் பொற்கராம்புயையே.       (59)

வீறங்கவேதச்சிரத்தினுமெட்டுவிதங்களெனக்
கூறங்கயோகியருள்ளத்தும் வாழ்நின்குரைகழலிற்
றேறங்கமானபுளகாதியுற்றுத்தினமிரண்டோ
டாறங்கந்தோயப்பணிவேன் கரிகிரியம்மனையே.      (60)

வாசனை வாய்ந்தவனமாலைமார்பில் வயங்கிருடி
கேசனை நின்னைக்கிளருளத்தான் மிக்ககேண்மையொடும்
பூசனை செய்யுமடியேனைப்புல்லிப்பொரும்விடய
வாசனைதீர்த்தருள்வாரணமாமலை வானவியே.       (61)

மும்மையுலகமுதல்விமுக்காலமுமோர் தலைவி
இம்மை மறுமைப்பயனையளிக்குமிறைவிநம்மை
எம்மையுமாட்கொளுமெம்பெருமாட்டியிபமலைவாழ்
அம்மையெனும் பெருந்தேவியிதனையறிதிநெஞ்சே.      (62)

தருக்கறுத்துச்சன்மச்சக்கரம்வற்றாத்தகவு செய்யுஞ்
செருக்கு கறுத்துச்செல்லறீராமைசெய்து தெறுமவித்தைத்
திருக்கறுத்தன்பர்தஞ்சிந்தையிற்செம்பொருடேருணர்வாம்
பெருக்களித்தாளும்பெருந்தேவியெங்கள்பெருந்தனமே.       (63)

தாமக்கருங்குழற்றையலர் தாய் தந்தை சாருறவோர்
ஈமக்கடமுடைப்போரிவ்வுடற்கேயியைந்தவராம் கள்
நாமக்கடற்புவியீர் கேண்மினென்மொழிநாளுநங்க
சேமக்கருத்துடையாள்பெருந்தேவியென்சிற்பரையே       (64)

தேவப்பிரமவிராசமுனிவருந்தேவர்களும்
ஓவப்படிவவுமையாதியருமுலகினரும்
மேவப்பகட்டுக்கிரிக்கோயிலிற்கொலுவீற்றிருக்குங்
காவப்பன்காந்தையைக் கண்டென்றன்கண்கள் களித்தனவே.       (65)

என்னிலையும்மறந்தில்லத்துமோகவிருளிற்சிக்கிச்
சின்னிலைக்காலம் பொருடேடலாதிச்செயல் புரிந்தும்
புன்னிலைப்போகம்புசித்து முறங்கியும் போக்கியன்னாய்
நின்னிலையும்மறந்தேன்பெருந்தேவியென்னீர்மையென்னே       (66)

மன்னாவுடம்புமனைவிமதலைமனைபொருட்கண்
மன்னாசைவைத்து மரணமறந்து மதிமயங்கி
இன்னாவியற்றுமிவ்வேழைக்கிரங்கியினிதினுய்யப்
பொன்னாசிகூறுதிபோதகவெற்புறைபொன்மகளே.      (67)

தாரந்தருபவள் சந்ததியூர்திதனம்பலபூண்
ஆரந்தருபவளம்புவியாளதிகாரமுடன்
வீரந்தருபவள்வெற்றிதருபவள் வேதவிழுச்
சாரந்தருபவடந்திகிரிப்பதித்தம்மனையே.       (68)

யோகத்தினவ்வவ்வருணாச்சிரமத்தொழுகுபலப்
பாகத்தை நோக்காதியற்றலினெய்தும்பயன்களினும்
மோகத்தை நீத்துநினையெண்ணிடும் பயன் முக்கியமாம்
மாகத்தை நண்ணியமாதங்கமாமலை மன்னவியே.       (69)

தீராதசன்மஞ்செறுத்தமுதம்பெறுஞ்சிந்தையர்கட்
காராதவன்புடனின்றிருநாமமனவரதஞ்
சோராதநாவிற்சொல்லன்றி வேறொரு சூழ்ச்சியில்லை
ஓராதவுள்ளத்துறையாக்கரிகிரியுத்தமியே.       (70)

விஞ்சியவாயுள்குடும்பிக்கிருப்பினும் வீண்மிகவும்
எஞ்சியவாயுளிரதியிலார்க்கின்பவீடளிக்குங்
ெ கொஞ்சியநின்னடியேனுடைக்காலத்தின்கூறுதனைப்
பஞ்சியல் பாதப்பெருந்தேவிசெய்திபயன்படவே.       (71)

அந்தியகாலமணித்தாகலினென்றனாசையெல்லாம்
நந்தியஞானவயிராக்கியமெனுநாந்தகத்தான்
முந்தியறுக்குமுயற்சிதந்தாளுதிமூவுலகும்
உந்தியகீர்த்திப்பெருந்தேவித்தாயெனுமுத்துங்கையே.       (72)

பரணியெனபவப்பஞ்சரம்பூரிக்கும்பாவிநின்னைச்
சரணியையென்றடைந்தேனென்சழக்கைச்சமித்தருள்வாய்
அரணியிலங்கியெனவெங்குமார்ந்துறையம்மனையே
தரணிபுகழுஞ்சநாதநபுண்யசரித்திரையே.       (73)

சாத்திரச்சக்கினர்சால்புறும் யோகந்தருமுணர்வாம்?
நேத்திரரென்னவடியேனினதுநிலையறியும்
பாத்திரனல்லேனெனினுநின்பாதப்பணியளித்தாள்
தாத்திரியோர்புகழும்பெருந்தேவிசநாதனையே.       (74)

கோதேவிளைக்குமுட்கூடார்குறும்புங்குலைத்தருள்வாய்
தீதேவிளைத்துப்புறந்திரிசேரலர் தீய நட்புங்
பூதேவிநீளையுடனெம்பிரான்கட்புரிந்திருக்குஞ்
சீதேவிசீர்த்திப்பெருந்தேவித்தாயெனுஞ்சின்மயையே.       (75)

ஈயாரிரக்கமிலாதாருயிர்கட்கிடும்பை செய்வார்
ஆயாரருங்கலையாயார்நின்னபரருச்சனைக்குச்
சேயாரிணக்கத்தைத்தீர்த்தருள்வாய்பெருந்தேவியன்னா
தூயாரிதய சுகந்தநளினசுகாசனையே.       (76)

வையத்தின்மையல் வருத்தாமலுங்கடை வைகலென்னை
ஐயத்தின்பையுளணுகாமலுமென்னகமலரின்
மையத்தினுமறைவாணர்வழுத்துநல்வாரணமாச்
சையத்தினுமுறையும் பெருந்தேவிதயை புரியே.      (77)

வானோக்கியோங்கியவாரணமாமலை மாமகளே
சேனோக்கியதிருக்கட்பெருந்தேவியென்சிற்பரையே
பானோக்கிநிற்கின்றபாலனினின்னருட்பார்வை யென்செங்
கோனோக்கிநிற்பனெனதியல்பெற்குக்கொடுத்தருளே.       (78)

பொறிவழியோடிப்புலன்மேயுமென்மனப்பூசல்வண்டு
குறிவழிவந்துன் குரைகழற்கோகனகத்தினின்றும்
வறிவழி தேனுண்டு வேட்டைகடீர்ந்து விரும்பிநின்னை
நெறிவழியுன்னவருள்வாய்கரிகிரிநின்மலையே.       (79)

மாயையின்மம்மர் மருவிக்குணம்பொறிமன்னுதன்மச்
சாயையடைந்தென்றன்றன்மைத்தருமந்தவிர்ந்துபவ
நோயையடைந்ததைத் தீர்ப்போர்களின்றி நுடங்கு
சேயையளித்தல்பெருந்தேவியாதினுஞ் சீரியதே.       (80)

செடியார்வினையின்றிறத்தன் சினத்தன்றெருள்கொளுநின்
அடியார்பெருமையறியாவவலனரும்பொருணூல்
படியார்பகுப்பினனாகுமெற்பாலிக்கும்பாரநிற்கே
கடியாரளகப்பெருந்தேவியாங்கருணாலயையே.       (81)

நின்னைச்சரணவரணமடைந்திடுநிட்டையிலான்
றன்னைச்சனனமரணாதிதாபந்தணக்ககில்லா
அன்னைத்திறப்பெருந்தேவிநின்பாதத்தடைக்கலமாம்
என்னைப்பகரவையெய்தாவிரகொன்றிழைத்தருளே.       (82)

சீரியதேசிகன் சீரருளின்றித்தெறும்பொறியைப்
போரியனெஞ்சத்தைப்போதத்தடக்கிடப்புந்தி செய்வோன்
பூரியன்றேசிகனேவலிற்போதகப்பூதரம் வாழ்
ஆரியவர்க்கத்தரசியவற்றையடக்குவனே.       (83)

புரந்தரனாதியர்போற்றுநின் பொன்னடிப்போதைநெஞ்சில்
நிரந்தரமெண்ணியுநின்னன்பர்பாதநிருமலநீர்
உரந்தரவுண்டுமென் னோவாப்பவப்பிணி யோவவெற்கோர்
வரந்தரவெண்பெருந்தேவியன்னாய்பத்தவற்சலையே.      (84)

ஒத்துமை மறைப்பொருளோர்ந்தோர்களுநன்குணர்வரிய
ஆத்துமதத்துவமத்தத்திலங்காமலகமெனப்
போத்துமதியற்கும் போதருமோபுவிபூத்தலொடு
காத்து மறைக்கும் பெருந்தேவித்தாயே கருணை செய்யே.       (85)

தாவர சங்கமமானசரீரந்தனைத்தமியேன்
மூவரவின்னுமெடுக்கினுமுக்குணமோகவிருள்
மாவரவென்னை மறைக்காது நின்னைவழுத்திநிற்க
மாவரமீந்தருள்வாய் பெருந்தேவிமலர்மகளே.       (86)

ஈனவொழுக்கோரிணக்கம்பெறாதுமிழுக்குறுந்துன்
மானவொழுக்கினர்மாடடையாமலுமன்னு நல்ல
ஞானவொழுக்கங்கணல் குதிநால்வாய்நகத்தலைவி
தானவொழுக்கத்தவரேத்துஞ்சத்தியசங்கற்பையே.       (87)

வெருவந்ததுன்பமுமின்பமுந்தாமேவிளைதல்கண்டுந்
தெருமந்தசிந்தையனாய்த் தீவினைகளைச்செய்து செய்தென்
அருமந்தகாலத்தையந்தோவழித்தவறிவிலியாம்
பெருமந்தனைக்காத்தருள்பெருந்தேவிப்பிராட்டியன்னே.       (88)

ஆதிக்கமலையகளங்கையாவினுமாய்ந்து பரிச்
சேதிக்கவொண்ணாத்திருமாலுரத்துறை செல்வியெற்குப்
போதிக்கத்தக்கனபோதித்துன் மாயையைப்புந்தியெஃகால்
வேதிக்கச்செய்தருள்வாய் வேழமாமலை வித்தகியே.      (89)

விண்ணேறுமாப்புகழ்நம்பெருந்தேவிவியனியற்கை
மண்ணேறுமாட்சிவடிவழகாகுமகோததிக்குக்
கண்ணேறு தன்னைக்கழிப்பான்கவிகாள் கடிதுவம்மின்
பண்ணேறுபாவினிற்பல்லாண்டு பாடிப்பரவுதுமே.      (90)

கபநாமநோய் கண்டங்கண்டுகவற்றுங்கடைப்பொழுதுன்
சுபநாமஞ்சொல்லித்துதித்துநின்றேயிந்தத் தொல்லைவினை
நிபநாம நீசவுடனீத்திட நீநினைத்தருள்வாய்
இபநாமமாமலைவாழ்பெருந்தேவியிறையவளே.       (91)

ஆற்றுப்பெருக்கிற்சுருக்கிற்பெருக்கஃகலாற்றகில்லா
வூற்றுக்கடலினுறுபேறிழவினிலுள்ளமென்றும்
வேற்றுக்குணமடையா நின்றமர்குணவீற்றினுக்குத்
தோற்றுத்தொண்டாகவருள்பெருந்தேவிசுகாநந்தியே.       (92)

பூத்திரணின்றும் பொறிவண்டுதேனைப்புசிப்பதெனச்
சாத்திரசாரந்தனைக்கொளுநின்றமர்தாளிணையை
நேத்திரங்கண்டு நிருமலமாமவர் நீள்புகழைச்
சோத்திரங்கேட்டும் பெருந்தேவியுந்திடுஞ்சூழ்ச்சிசெய்யே.       (93)

விளக்கினில்வீந்திடும் விட்டிலொவ்வாதுவியனுலகைத்
துளக்கிடுமாயையுருவாகுந்தோகையர் துச்சவின்பங்
கொளக்குறியாநின் குலவடியார்குழுக்கூடியுய்வான்
கிளக்குறுங்கேண்மை தந்தாள் பெருந்தேவிக்ருபாகரையே.       (94)

கானத்து வேடர் தங்கானத்தின்மான்கணங்கட்டமுறும்
ஈனத்தையெண்ணியவைபோல்வவிட்டுநின்னெண்ணில் புகழ்க்
கானத்தைக்கேட்டுக்களிக்கு நின்னன்பரைக்காதலித்துய்
ஞானத்தைத்தந்தாள்பெருந்தேவிபாற்கடனந்தனையே.      (95)

வீட்டின்கணெண்ணமுமானாபிமானமும்விட்டுவிளை
யாட்டுறுபாலனிலல்லலொழிந்தகத்தும்புறத்துங்
காட்டுறுநின்னைக்கருதும் பெருமதிக்கண்ணுடையோர்
மாட்டுறும் வண்ணமருள் பெருந்தேவிமநோகரையே.       (96)

நயக்கும்பயனல் குவதாய்முயற்சியினண்ணரிதாய்
இயக்குமவன்குருநின்னருளூதையியக்கமைந் து
பயக்குமுடலம்பிகொண்டும் பவக்கடல் பாயகிலான்
துயக்குந்துரோகியன்றோ பெருந்தேவிசுகோதயையே.       (97)

புருடார்த்தசாதனமாமிப்புரம் பொன்று முன்னர்மும்மைப்
புருடார்த்தநீக்கிப்புகற்கரிதாகப்புகல்முடிவாம்
புருடார்த்தசித்திக்குரியகுணங்களைப் பூரித்தெவ்வெப்
புருடார்த்தமுந்தந்தருள்பெருந்தேவிபுரந்தருளே.      (98)

புதைத்த மண்டோண்டப்புனறோன்றுமாபோற்புகுந்திடையிற்
புதைத்தவஞ்ஞானத்தைப்போக்கியென்போதம் புனிதமொடு
கதைத்த நல்லானந்தந்தோன்றி விளங்கக் கருணைசெய்வாய்
புதைத்தபொன்னே பெருந்தேவியன்னே புண்டரிகமின்னே       (99)

முத்தமிழ்வல்லமுதிர்ஞானிகணின்முளரியந்தாள்
புத்தமிழ்தென்னப் பெருந்தேவியன்னாய் புனைகவிபோல்
இத்தமிழ்மாலையினிய தன்றேலுமிரும்பிறவிப்
பொத்தமிழ்வேனைப்புரப்பான் மகிழ்ந்துபுனைந்தருளே.       (100)

வாழ்க திருக்கச்சிவாழ்க விபமலைவாழ்கவெம்மான்
வாழ்கநந்தாய்பெருந்தேவிதிருமுகமார்பமுந்தி
வாழ்கவரதாபயநல்குமத்தநல்வாரிசங்கள்
வாழ்கதிருவடித்தாமரையென்மனவாக்கினுமே.       (101)

மன்னும் புகழ்க்கச்சிவாழ் பெருந்தேவிதன் மாண்டியை
உன்னுந்தமிழ்த்தொடை நூறுமிராமாநுசவுரவன்
பன்னுஞ்சரோருகபாதந்தொழுதுய்யும் பள்ளிகொண்டா
என்னும்மியற்பேரெதிராசதாசனியம்பினனே.       (102)

பெருந்தேவித்தாயார் மாலை முற்றிற்று.
-------------------