பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 13
திருச்சுகனூர் அலர்மேன் மங்கைத்தாயார் மாலை
tiruccukanUr alarmEn mangkaittAyAr mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 13)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 13
திருச்சுகனூர் அலர்மேன் மங்கைத்தாயார் மாலை.
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
திருச்சுகனூர் அலர்மேன் மங்கைத்தாயார் மாலை
காப்பு.
வண்மைத்திருச்சுகனூர் வாழலர்மேன் மங்கைத்தா
யொண்மைத்திருவடிமே லோர்சதமா - முண்மைத்தாஞ்
சொன்மாலை சூட்டநெஞ்சே தொல்குருகைத்தண்வகுள
நன்மாலைமாறன்றாணம்பு.
நூல்
மணிமேவியவாரிதிமகிமாந்தரும்வானவரும்
பணிமேவியபாதலரும்பணிநின்பதாம்புயமேன்
திணிமேவியவுட்சிலைபூத்தெந்நாளுந்திகழ்ந்திடச்செய்
அணிமேவியசுகனூரலர்மேன் மங்கையம்மனையே. (1)
வஞ்சகவல்வினைவித்திட்டுமாயைவண்ணீர் மடுத்து
விஞ்சகங்காரம்விளைத்துப்பிறவிவிழுநல்கும்
நெஞ்சகச் செய்யினின்பத்திப்பைங்கூழ் நிலை நிற்கும் வண்ணம்
அஞ்சகப்புன்களை போக்கலர்மேன் மங்கையம்மனையே. (2)
காற்றிற்கறங்குகறங்குதலென்னவெக்காலமும்வீண்
பேற்றிற்றிரியுமென்பேதை மனத்தை நிற்பேணுமன்பாம்
ஊற்றிற்றிளைப்பித்துயர்நியா சநிட்டையுதவிமுத்தி
ஆற்றிற்செலுத்தியருளலர்மேன் மங்கையம்மனையே. (3)
கோற்றேனொழுகும்பொழிற்சுகனூர்வாழ்குலவிளக்கே
காற்றேனுமோர் நிலைநிற்குமதினுங்கடுகிநெஞ்சங்
கூற்றேயெனவெனைக்கொல்லுமதுசெய்கொடுமைதனை
ஆற்றேனடக்கியருளலர்மேன் மங்கையம்மனையே. (4)
அலையேனுமோர்காலடங்கியுமோர்காலடங்கலிலா
நிலையேயுமென்னுள நிச்சலுமோர் நிலைநிற்றலின்றிப்
புலையேய் வழியே புகுமினியானப்புலைவழிபோய்
அலையேனளித்தெனையாளலர்மேன் மங்கையம்மனையே. (5)
துன்பக்கடலிற்சுழற்றிச்சுழற்றித்துறுத்திடுஞ்சிற்
றின்பக்கடற்கேயியைநெஞ்சையென்றுமினித்தெழும்பே
ரின்பக்கடற்கணினிதாடும்வண்ணமிசைவி நல்ல
அன்பக்கயத்தர் தொழுமலர்மேன் மங்கையம்மனையே. (6)
அலகைச்செயலினலையுமென்னெஞ்சநின்னன்பர்தமை
உலகைத்திருத்தவுதித்தவரென்றுணராதவர்பாற்
பலகைத்திடுஞ்செயல் பண்ணுமவர் தம்பதப்பெருமை
அலகைத்தெரித்துத்திருத்தலர்மேன் மங்கையம்மனையே. (7)
நவைநவை நெஞ்சகநாடொறுஞ்செய்தலினண்ணுகின்ற
குவைகுவையாம்பவக்கூட்டமிவ்வண்டமுங்கொள்ளகிலா
சுவைசுவையென்றெனைத்தோற்பையிடுதி யென்சொல்குவல்யான்
அவையவைத்தன்னதடக்கலர்மேன் மங்கையம்மனையே. (8)
கடிப்போதில்வாழயன் கற்பம்புசித்துங்கழிவில்பவ
நொடிப்போதிற்செய்யவலதாமென்னெஞ்சத்தினோன்மையென்னே
பிடிப்போதகநடைப்பெண்ணணங்காமெம்பிராட்டிநின் றன்
அடிப்போதடைந்தேனருளலர்மேன் மங்கையம்மனையே. (9)
அல்லவை செய்தெனக்காகாததாகியலையுமனம்
நல்லவை செய்து நலம்பெறு நாளென்று நண்ணிடுமோ
பல்லவையோர்சொல்சுகாச்சிரமத்துறை பார்க்கவியே
அல்லவைத்தன்னதடக்கலர்மேல்மங்கையம்மனையே. (10)
குடக்குங்குமமூலைக்கோகனகாய்சுகக்கோப்பதியாய்
கடக்குஞ்சராதியடக்குவனல்லகருமஞ்செய்யத்
தொடக்கும்பொழுதற்கூறு செய்தே நிற்குந்துட்டநெஞ்சை
யடக்குந்திறமென்னருளலர்மேன் மங்கையம்மனையே. (11)
விடத்தை முறிக்குமருந்துண்டெவரும்வியக்கவயத்
தடத்தைப்பொன்னாகச்சமைக்குங்குளிகைகடாமுமுண்டு
வடத்தையிலைவயிற்றெம்பெருமாட்டியென் வஞ்சநெஞ்சின்
அடத்தையடக்குவதென்னலர்மேன் மங்கையம்மனையே. (12)
பகத்தையுந்தன்றொழிலால்வென்றெழிலிளம்பாவையர்தம்
பகத்தையுங்கச்சுப்பறம்பையுமெண்ணி யவர்பணைத்தோட்
சுகத்தை விரும்பித்தொலையா நரகத்திற்று மென்னெ ஞ்
சகத்தைத்திருத்தியருளலர்மேல்மங்கையம்மனையே. (13)
கனைக்குங்கடற்புவிகண்ணுஞ்சுகப்பதிக்காரணியே
நினைக்குங்கருவியெனத்தந்தநெஞ்சகநின்னையென்றும்
நினைக்கும்படி நிருமித்தென்னையின்னுமொர் நேரிழையாம்
அனைக்கும்பியண்டாதருளலர்மேன் மங்கையம்மனையே. (14)
சித்துப்பொருளாமெனக்களி நெஞ்செனச்செப்புசட
வத்துப்பொருளென்வழி படராதவகையெனைநின்
சொத்துப்பொருளெனைக்காத்தனினக்குச்சுகிர்தமன்றோ
அத்துப்பதபங்கயவலர்மேன் மங்கையம்மனையே. (15)
பந்தமுமோக்கமும்பார்க்கினென்னெஞ்சகப்பண்பினிற்கும்
பந்தமுறாததைப்பக்குவஞ்செய்தனின் பாரமதாங்
கந்தமும்பூவுமெனவெம்பிரான்கட்கலந்திருக்கும்
அந்தமுமாதியுமில்லலர்மேன் மங்கையம்மனையே. (16)
புனலுறுபங்கத்தையப்புனல்கொண்டறப்போக்குதல்போல்
உனலுறுமுள்ளத்தினுற்ற நவையையவ்வுள்ளங்கொண்டே
கனலுறு தூசெனக்கண்டருளன்பாகசட்டையருள்
அனலுறுத்தித்துடைத்தாளலர்மேன் மங்கையம்மனையே. (17)
தடித்தினுஞ்சஞ்சலஞ்சாலவும் வாய்ந்து தகாப் புலனே
பிடித்ததையேயெண்ணிப்பேராது நிற்கின்றபேதைநெஞ்சை
வடித்தென்வய நிற்கும் வண்ணஞ்செய்வாயென்றுன் வாரிசநேர்
அடித்துணையண்டைகொண்டேனலர்மேன் மங்கையம்மனையே. (18)
சாத்துவிகவகங்காரத்திற்றோன்றியுஞ்சாத்துவிகம்
நீத்துவிக்கடவிராசததாமதநேர்ந்த வித்தைக்
கூத்துவிகற்பங்கொளுநெஞ்சை நின்னடி கூடி நிற்க
யாத்துவிகசிதஞ்செய்யலர்மேன் மங்கையம்மனையே. (19)
பத்துப்பொறியையுமாளுந்தலைமைப்பராக்ரம
ரமத்தின் சித்துப்பொருளென்னையுமங்ஙனாளச்சிந்திக்குமதன்
பித்துப்பொடித்துப்பிரபஞ்சவாழ்க்கையைப்பேணித்துய்க்கும்
அத்துப்புர வொழித்தாளலர்மேன் மங்கையம்மனையே. (20)
உபலமனமிவ்வுலகவுஞற்றிலுழைத்துழைத்து
விபலமடைந்ததினியேனுநின்னடி வீழ்ந்திறைஞ்சிச்
சபலமுறுமோவுறாதோவறியேன்றயை புரிவாய்
அபலமில்லாச்சுகனூரலர்மேல்மங்கையம்மனையே. (21)
வியர்த்தவினையேவிரும்பிவிரும்பிவெறுப்பிலதாய்ப்
பெயர்த்தும்பெயர்த்துமது தனையேயென்றும் பேணிநின்று
மயர்த்துமயர்த்துவருந்துமென்பேதைமனத்துக்கென்றும்
அயர்த்தலிலைகொலருளலர்மேன் மங்கையம்மனையே. (22)
அறன்கடையானதென நூலறையவறிந்திருந்தும்
பிறன்கடை நிற்பவட்பேணிவருந்துமென்பேதைநெஞ்சத்.
திறன்கடையானதித்தீக்குணந்தீர்த்துத்திருமியென்றும்
அறன்கடையெண்ணாதருளலர்மேன் மங்கையம்மனையே. (23)
நின்னைப்பெறின் மனனேயென் குறையின நேர்ந்தென்செய்யேம்
என்னப்பராங்குசமாமுனிசொற்றவியலின்மனந்
தன்னைப்பெறிலெற்குன்சாயுச்சியமுத்திதான்கிடைக்கும்
அன்னத்துவசன்றொழுமலர்மேன் மங்கையம்மனையே. (24)
நின்புகழ்பாடி நிருத்தமிட நின்னிமலவுரு
இன்புறவெண்ணியிறைஞ்சிடலாதியியற்றிடவிப்
புன்புரம்வேண்டலினன்னதைமொய்த்திடும்புன்கணெலாம்
அன்புடனீக்கியருளலர்மேன் மங்கையம்மனையே. (25)
சூரணங்கைத்தருமந்நோய்கடம்மைத்துடைக்க வொண்
காரணமுண்டெனிலககாரணத்தையுங்கட்டுரையாய்
நாரணனாகத்தினண்ணுநங்காய் நினை நம்பிநின்றேன்
ஆரணம்போற்றித்தொழுமலர்மேன் மங்கையம்மனையே. (26)
எளியேன் முறைகேட்டிரங்காயெனினுலகெங்கணுநிற்
கிளியேயியையுமியைந்தாலுநானின்றனெண்ணின்வணம்
அளியேனெனிலென்னை செய்வலதுவென்னகச்செயலே
அளியே திருவுருவாமலர்மேன் மங்கையம்மனையே. (27)
ஒல்லியியற்றினுமொல்லாதென்றோதினுமுள்ளநிலை
சொல்லிவிடுவனென்றொல்லைவினையிற்றொடர்ந்தபவ
வல்லியறுத்தெனை வைகுந்த நாட்டின்கண்வாழவைப்பாய்
அல்லிமலர்க்குழலாயலர்மேன் மங்கையம்மனையே. (28)
கடுங்காலதூதுவர்போலவெருட்டிக்கடுகடுத்து
நெடுங்காலமென்னைநெருக்கிய நோய்களுநீர்மைகொண்டு
பிடுங்காலம் வந்ததுவேண்டினனின்னை விளம்பவற்றை
அடுங்காலமிஃதேயருளலர் மேன்மங்கையம்மனையே. (29)
சரணவரணப்பெருமையறிந்ததலைவிநின்னைச்
ஈரணமடைந்தவெனைக்கைவிடுதாருமமன்றுன்
சரணகமலமென்னெஞ்சக்கமலந்தயங்கவமைத்
கரணமெனநின்றளியலர்மேன் மங்கையம்மனையே. (30)
சீர்க்குணயோகஞ் சிறந்ததயாபரையென்று செப்பும்
பேர்க்குரித்தானவளாயெனக்கென்றும் பிராப்பியையாய்
கார்க்குரித்தானநின்பாலன்றியென்றனலிவையெல்லாம்
ஆர்க்குரைப்பேனருளாயலர்மேன் மங்கையம்மனையே. (31)
நம்பியவென்னையெந்நாளும்பிணியினடுநடுங்கி
வெம்பியழுங்கவிடுதலறமெனவேண்டுதியேற்
பம்பியபாவக்கடனின்றுமென்னைப்பரிந்தெடுக்கும்
அம்பியனையவராரலர்மேன் மங்கையம்மனையே. (32)
சேயின் சிறுமையைத்தீர்த்திடுவானதைச்சேர்ந்தொறுக்கும்
நோயின்றகவுக்க நு குணமுண்டதை நோக்கல்பெற்ற
காயின் செயலெனிற்றண்ணருளாற்சகந்தந்தளிக்கும்
ஆயின் கடனென்னருளலர்மேன் மங்கையம்மனையே. (33)
அண்டப்பிணிகுடர்வாதமிருமலுக்காகரமாங்
கண்டக்கபாமயக்காரணந்தன்னைக்கழித்தருள்வாய்
துண்டப்பிறைக்குளத்தாய்சுகனூரெஞ்சுடர்க்கொடியே
அண்டக்குலாதிபன் போற்றலர்மேன் மங்கையம்மனையே. (34)
கபவர்க்கநோய்நெடுங்காலம்வருத்திக்கவற்றுமதைச்
சுபவர்க்கம்யாவுஞ்செயவல்ல நின்னருளாற்றுடைத்தாள்
நிபவர்க்கஞ்சொற்றதை நீக்காவிடுதனியாயமன்றால்
அபவர்க்கமார்க்கமருளலர்மேல்மங்கையம்மனையே. (35)
கொடுநோய்க்குவாற்குங்குமைக்குங்குசுமக்கொடுங்கணையான்
விடுநோய்க்கும் வீணே மனத்தையெப்போதும் விடாது பற்றித்
தொடுநோய்க்குஞ்சூர்க்கட்சுடுமுகத்தொன்னமன்றூதுவர்வந்
தடுநோய்க்குமஞ்சாதருளலர்மேன் மங்கையம்மனையே. (36)
குற்றஞ்செய்யாதெற்றிருத்தியென்னாற்பணிகொள்ளுதியேற்
குற்றங்கள் கோடிநினக்குறுமோ நற்குலமறைகள்
குற்றங்கள் கூறிடுமோவெனைக்காக்கக்குறித்திருக்கும்
அற்றம்வரவிலையோவலர்மேல்மங்கையம்மனையே. (37)
பொறுக்கவொண்ணாப்புரை செய்தாரையுநீ பொறுத்தளித்தாய்
பொறுக்கவொண்ணாப்பிழை செய்தவனென்றெனைப்புந்திதனில்
வெறுக்கவிடுக்கவிரகில்லை நந்தம்வியனுறவோ
அறுக்கவொண்ணாது நம்மாலலர்மேன் மங்கையம்மனையே. (38)
இப்பவநீங்கிடினெப்பவம் வாய்க்கு மெனவறியேன்
இப்பவத்தே நீயிரங்கியருளாயெனினெதிரும்
அப்பவத்தல்லலுக்காற்றேனகமுமழுங்கியஞ்சும்
அப்பவப்பாகொடிதாமலர்மேன் மங்கையம்மனையே. (39)
அடியேனெடுத்தவயனமநந்தமவற்றிலென்றுந்
துடியேனுநின்னைத் துதித்திலனாகுந்துதித்திருக்கிற்
கடியேய்பிறவிகழியாதிராது கவலையுற்றுன்
அடியேயடைந்தேனருளலர்மேன் மங்கையம்மனையே. (40)
எடுத்தபிறவிகள்யாவும்பதராயிழுக்கினவித்
தொடுத்தபிறவியின் காலமும் வீணேதொலைந்ததிங்ஙன்
விடுத்தனையாயினென்செய்குவல் யானென்விதியறியேன்
அடுத்தனனின்னையருளலர்மேல்மங்கையம்மனையே. (41)
அத்திரவின் பத்தடியேனழுந்தியலையச்செய்நின்
மித்திரனென்ன நினைக்குமின்றோநினைவேண்டிநிற்கு ம்
புத்திரவாற்சல்லியமென்வினையைநின் பொங்கருளாம்
அத்திரத்தாலறுத்தாளலர்மேல்மங்கையம்மனையே. (42)
எத்தனைகாலமெளியேனிறைஞ்சியிரங்கினுமெண்
ணத்தனையேனுமந்தோவென்றிரங்கியருளகில்லாச்
சித்தனைநின் கொண்கனையெற்கருளோர் சிறியதினை
அத்தனை செய்யச்செய்வாயலர்மேன் மங்கையம்மனையே. (43)
அகிலாண்டவாவியளகமதிமுகமாடகநூற்
றுகிலாண்ட சிற்றிடைத்தோகாய் சிறியனைத்தொண்டுகொண்டாள்
முகிலாண்ட சோலைத்திருச்சுகனூர்ச்செம்முளரிமின்னே
அகிலாண்ட நாயகியேயலர்மேன் மங்கையம்மனையே. (44)
மோக்கத்திலிச்சையிலனாயடியன்முரணவித்தைத்
தூக்கத்திருக்கின்றனனந்தவிச்சையைத் தோன்றுவித்தெற்
காக்கத்திருவுளங்கொள்வாய்சுகப்பதிக்கற்பகமே
ஆக்கத்திருமகளேயலர்மேன் மங்கையம்மனையே. (45)
என்னேயென்சை தந்நியமோக்கவிச்சையெழாமலன்றோ
கொன்னே கழிந்தன்றி துகாறுங்கோகனகாதனம் வாழ்
பொன்னேயது வினியேனும்பயன்பெறப்புந்திசெய்வாய்
அன்னேயருட்கடலேயலர்மேல்மங்கையம்மனையே. (46)
குடும்பத்தைப்பூண்கட்டிக்கொள்ளுமெனக்கதன்கோளறுத்து
பிடும்பத்ததியில்லை நீயேநமையென்றும் விட்டொழியாக்
கடும்பத்தநோக்கிச்சுகப்பதிவாழ்கமலாயதனை
அடும்பத்திரவருள்செய்யலர்மேல்மங்கையம்மனையே. (47)
பின்னையுநின்னன்பனையும் விதியினினேர்ந்தடை யும்
முன்னைமுத்தத்துவஞானமுண்டாக்கிமுறைப்படியே
என்னைநின்றொண்டரினத்தொடுஞ்சேர்த்தியெல்லாவுயிர்க்கும்
அன்னையெனும் பின்னையேயலர்மேல்மங்கையம்மனையே. (48)
தத்துவஞானமடையாத்தமோகுணத்தன்னெனினுந்
தத்துவஞானிகள்சார்புறுத்தித்தமியேனையவர்
சொத்துவமாக்கியவரபிமானத்திற்றொண்டுகொண்டாள்
அத்துவமேனிப்பொன்னேயலர்மேன் மங்கையம்மனையே. (49)
சிலங்கு பறவைமிகு சடரேனு நம்விண்டுசித்தர்
இலங்குமருளினிலெய்தாத முத்தியுமெய்துமென்ப
இலங்குங்கடையனையன்னோர்கருணையிற்காத்தருள்வாய்
அலங்குமணியணியாயலர்மேன் மங்கையம்மனையே. (50)
பாதவமாயினுநின்னடிக்கன்பு செய்பண்புடைய
மாதவர்கைதொடின்கண்பார்க்கின் மாயைமயக்கமென
ஓதவநீங்கியுயர்வீடடையுமெனவுரைப்ப
ஆதவர் நேர்குழையாயலர் மேன்மங்கையம்மனையே. (51)
அசித்துறவான்வருமஞ்ஞானநின்னையண்டாதவணம்
விசித்தெனை நாடொறும் வீழ்கதியிற்றள்ளி வீண்பயனே
புசித்திடச்செய்யுமென்செய்கேனதை நின்றன் பொங்கருளாம்
அசித்துமித்தென்றனையாளலர்மேன் மங்கையம்மனையே. (52)
சொற்றவஞ்ஞானமென் றொன்மைக்குணங்களைத் தொட்டழித்து
வெற்றமுற்றென்றும் விவிதப்பிறவியில் வீழ்த்தியங்ஙன்
பெற்றவருக்கதிநானென்றெண்ணச்செயும்பெற்றியதை
அற்றென்றுனையடைவேனலர்மேன் மங்கையம்மனையே. (53)
தேகத்தில் வேறெனுஞானமெனக்குச் செனித்ததுண்டேல்
ஏகத்தனிமுதல்போகிசுதந்தரனென்றெண்ணுவேன்
பாகத்தப்புத்தியைப்பாற்றிடுவாய் பணிப்பாதவத்தான்
ஆகத்துறையமலாயலர்மேன் மங்கையம்மனையே. (54)
சேடத்துவமதிசேர்ந்திடுமேலதைத்தீயர்கள்பால்
வீடத்துவமா வினியோகித்தென்றும்விபலமுறுங்
கூடத்துவத்தைக்குலைத்தெனைநின்னன்பர்கூட்டநிறீஇ
ஆடத்துவநினதேயலர்மேன் மங்கையம்மனையே. (55)
உயிரபகாரஞ் செய்தூழிதொறூழியுண்டாலுமறாச்
செயிரனைத்துஞ் செய்து தீப்புலத்தற்பரனாய்த்திரிவேன்
வயிரவினையறுத்தென்னைநின் பாதம்வணங்கச்செய்வாய்
அயிரநற்பாகனையாயலர் மேன்மங்கையம்மனையே. (56)
நன்றுநின்பாதத்தை நண்ணியுய்வானல்கியவுடல்கொண்
ஒன்றுமிலாமற்கிடந்தவென்றுர்த்தசைக்குற்றிரங்கி
டென்று நின்னுள்ளக்குகப்பாங்கருமமெனைத்துஞ்செய்யா
தன்றினனானேனருளலர்மேன் மங்கையம்மனையே. (57)
ஆறுகடக்கவருளம்பிபற்றியதன்கரையை
யேறுதலின்றியிருங்கடலெய்துவரென்ன நினக்
கூறுசெய்தேனுமுயநின்றிருவுளத்துன்னிமுத்தி
ஆறுநடத்தியருளலர்மேன் மங்கையம்மனையே. (58)
பிறவிப்பெருங்கடனீந்தக்கொடுத்தவிப்பிண்டமதைப்
பிறவிப்பெருங்கடற்கேயுடலாக்குமென்பேரவித்தை
அறவிப்பிரமந்தொலையவருள் செய்யணிச்சுகனூர்
அறவிப்பிரர்தொழுந்தாளலர்மேன் மங்கையம்மனையே. (59)
அநாதியென்றாரண நூலாதிசொல்லுமவித்தையினான்
மநாதிசெய்யெண்ணற்ற புண்ணிய பாவமரபின்வணம்
வநாதிபலபிறப்பும் பிறந்தெய்த்தவிவ்வஞ்சகனுக்
கநாதிநல்வீடளித்தாளலர்மேன் மங்கையம்மனையே (60)
இறந்துமுன்சென்றவினிச்செல்பவோராவியற்கையினாற்
பிறந்தபிறவிகடோறுமுத்தாபப்பெருங்கனலின்
வறந்தனனங்ஙன்வறந்துஞ்சிறிதும் வருத்தமிலேன்
அறந்த விராச்சுகனூரலர்மேன் மங்கையம்மனையே. (61)
கருப்பஞ்சனனமிளமைநல்யௌவனங்காழ்முதுமை
விருப்பறுசாக்காடிருளாமவத்தை விளைவித்தென்றும்
உருப்பவுறுவற்பரம்பரையுண்பித்துறை பிறவி
அருப்பமொழித்தருள்வாயலர்மேன் மங்கையம்மனையே. (62)
அனந்தவரந்தை கடகாகரமாமயனக்கடலில்
அனந் த விதத்துமழுந்தாவணநீயனுதினஞ்செய்
அனந்தமுயற்சியையுந்தடுத்தென்னையலையவித்தை
அனந்தலொழித்தருள்வாயலர்மேன் மங்கையம்மனையே. (63)
பிறந்தபொழுதுன்கடைவிழிநோக்கினைப்பெற்றிருக்கிற்
சிறந்த நற்சாத்துவிகனாய்விஞ்ஞானச்சிறப்பினனாய்த்
துறந்தநிலையினனாய்முத்திச்சிந்தையைத்துன்னி நிற்பன்
அறந்தலை நின்றவர்போற்றலர்மேன் மங்கையம்மனையே. (64)
உண்மைமதியுதியாதாயினல் வீடுறு தலிலை
உண்மை நன்னூலினுபதேசந்தன்னினவ்வுண்மை மதித்
திண்மையுண்டாகுமெனச்செப்புபவச்சிறந்தமதி
அண்மையுண்டாகவருளலர்மேன் மங்கையம்மனையே. (65)
சாத்திரஞானம் பிறத்தலருமைதவத்துயராஞ்
சாத்தியமானது மன்றுபதேசத்தடத்தின்வரு
மேத்தியஞானம்விளைத்தெனைக்காத்திமுன்மேய்த்து கந்த
ஆத்திரளானுரத்தாயலர்மேன் மங்கையம்மனையே. (66)
என்னிலை தேகம் பொறியுள் பிராணனிலங்குபுத்தித்
தொன்னிலைக்கென்றும்விலக்கணமாகுமெனத்துணிப்
இந்நிலையென்றுமெனக்குவிளங்காதியற்றிநிற்கும்
அன்னிலைநீத்தாளுதியலர்மேன் மங்கையம்மனையே. (67)
ஞானந்தனையொழிந்துந்தோன்றலினெனை ஞானநன்னூல்
ஈனந்தவிர்ந்தசுயம்பிரகாசனெனவுரைக்கும்
ஏனந்தவிர்ந்தென்றுமிந்நிலைநிற்கவெனக்கருள்வாய்
ஆனந்தவாரிதியேயலர்மேன் மங்கையம்மனையே. (68)
சுகவுருவாகவிருத்தலினென்னைச்சுடர்மறைகள்
தகவுறுமானந்தத்தன்மையனென்னுமத்தன்மையென்றும்
உகவுறுமாயையொழித்தெனக்கந்நிலையுற்று நிற்க
அகமகிழ்ந்தின்னருள்செய்யலர்மேல்மங்கையம்மனையே. (69)
எப்போழ்தினும்யானிருத்தலினித்தியனிவ்வுடலம்
எப்போழ்துஞ்சேர்தல் பிறத்தலொழிதலிறத்தலென்ப
ஒப்போ தரியசுகப்பதியாயிவ்வுடலம்விடும்
அப்போதென்முன்வந்தருளலர்மேன் மங்கையம்மனையே. (70)
இருக்குமிதயகமலவிருக்கையிருந்தெழும்பிப்
பொருக்கெனப்போதல்வருதல் புரிதலிற் போற்றுமெனை
அருக்கணுவென்பவதைக்கண்டுதேறவருள்புரிவாய்
அருக்கர்பலரொளியாயலர்மேன் மங்கையம்மனையே. (71)
மணியாதியோருழிநின்று மொளியின் மலர்தலெனத்
திணியாரிதயத்திருந்துந்தெருட்சியிற்றேகமுறும்
பிணியாதியானன்குதேர்ந்திடும் பெற்றிபிறங்கச்செய்வாய்
அணியார்சுகப்பதியாயலர்மேன் மங்கையம்மனையே. (72)
விழியாதிகட்குக்கடாதிகள்போல் விளங்காமையினா ல்
இழியாப்பொறிகளுக்கெட்டான்வியத்தனன் றென்றுரைப்ப
கழியாதநானிந்தக்காட்சியைக்கண்டுகளித்திருக்க
அழியாப்பதவியருளலர்மேன் மங்கையம்மனையே. (73)
ஏண்ணாரசித்தோடியையுஞ்சசாதியமென்றுணர
ஒண்ணாமையிற்றானசிந்தியனென்றெனையோ துவராற்
றிண்ணார்ந்தவிந்நிலை தேர்வித்தெனையுண்ட தீநிரயம்
அண்ணாத்தல் செய்யவருளலர்மேன் மங்கையம்மனையே. (74)
சொல்லாரசித்துப்பொருள்போலவயவத்தின்றொகுதி
இல்லாமையினாலவயவமில்லானெனவுரைப்ப
வில்லாருணர்வுருவேனென்னுமீது விளக்கிடுவாய்
அல்லார்குழன்மணத்தாயலர்மேன் மங்கையம்மனையே. (75)
ஏய்ந்தவசித்தின்விகரிக்கையின்றியிருத்தலினால்
வாய்ந்தவிகாரமிலானென்பவிவ்வுரை வாய்மையதே
தோய்ந்தவெனது சதைகவுருவந்துலங்கச்செய்வாய்
ஆய்ந்தவரேத்திப்பு கழலர்மேன் மங்கையம்மனையே. (76)
ஏதிப்படையெரிநீர் வாயுவெய்யிலிவ்வாதியினாற்
சேதித்தலாதிச்செயலென்கட் சேராத்தெளிவுதந்து
நீதித்தருமநிறுத்திநின்பூசனை நிட்டைதந்தாள்
ஆதிக்கமலவணையலர்மேல்மங்கையம்மனையே. (77)
சாக்கியராவியையவ்வச்சரீரத்தனையதென்ப
தூக்கினதுமுரணாகுஞ்சுருதிக்கத்தோமதரி
னீக்கியெனையாளுதிநிகமாந்தநிகழ்த்தனந்த
ஆக்கியையேசுகனூரலர்மேன் மங்கையம்மனையே. (78)
ஊனாச்சிரயவுடனேடியென்று முழலுமெனை
ஞானாச்சிரயனென நவில்வாரதைநன்குரைத்தென்
நானாச்சிரமமுநாம்பிநசிக்கச்செய்நான்மறையின்
ஆனாச்சிரத்துறைவாயலர்மேன் மங்கையம்மனையே. (79 )
வித்தானஞாதாவெனவெனைக்கூறலின் வேட்கையுறுங்
கத்தாவுந் துய்த்திடும் போக்தாவுமாயினன்கண்ணுமிந்தச்
சத்தானசாரவிடயத்தைச்சாற்றுதிதாசருள்ள
அத்தாணியார்ந்துறைவாயலர்மேன் மங்கையம்மனையே. (80)
நீக்கவரியவிலக்கணமாகுநியாமியத்தோ
டோக்கமுறுதாரியஞ் சேடமென்னுமுவையுளத்திற்
றேக்கிடும்வண்ணந்தெளிந்திடச்செப்புதி தீனசனர்க்
காக்கமளித்தருள்செய்யலர்மேன் மங்கையம்மனையே. (81)
நன்று செய்சேடத்துவத்தொடுஞாதுர்த்துவமடியற்
கொன்று மிலக்கணமென்றோத்துரைக்குமுரைத்தபெற்றி
நின்று தமியனினையிக்களேபரநின்றெழும்பும்
அன்றுநினைக்கவருளலர்மேன் மங்கையம்மனையே. (82)
நிலக்கணிலவிநினைநினைப்போரை நிகழ்த்துமுத்தித்
தலக்கணுறுவிக்கத்தண்சுகனூர்வாழ்தலைவியென்றன்
லக்கணமுற்று மிலங்கச்செய்தின்னாவிடர்ப்பிறவி
அலக்கணறுத்தருள்வாயலர்மேன் மங்கையம்மனையே. (83)
ஈட்டுடனெத்தனைகான்முறைசொல்லினுமென்னையென்று
கேட்டுரையொன்றுகிளக்கினினக்குறுங்கேதமென்னே
காட்டுதனாட்டுதல் வீட்டுதலென்னுங்கருமவிளை
யாட்டுடையாய்சுகனூரலர்மேன் மங்கையம்மனையே. (84)
பாவிகளிற்றலையாயவெனக்கருள்பண்ணவெண்ணிற்
றாவிகனின்னொடுசெய்து தடுக்கச்சமைபவரார்
நாவிகமழ்குழலாய் நாகவேதண்டனாயகியே
ஆவிகட்காவியெனுமலர்மேல்மங்கையம்மனையே. (85)
திருக்காணிலயஞ்சினஞ்சேர்களஞ்சியஞ் சென்மவித்தாஞ்
செருக்காணிவேசமென்சிந்தைநின் சேவடி சேரச்செய்தென்
கருக்காணிநீக்கிநின்காற்காணிவாழக்கருணை செய்தாள்
அருக்காணியானபொன்னேயலர்மேன் மங்கையம்மனையே. (86)
ஒண்மையிலௌபாதிகத்தாயுஞ்சேய்க்குற்றமுற்றுரையாள்
கண்மைகருத்துவள்காழ்த்த பல்லண்டங்கள் கண்டளிக்குந்
திண்மைபெறுநிருபாதிகவன்னை செயலிதுவோ
அண்மையினென்னையளியலர்மேன் மங்கையம்மனையே. (87)
பேதைப்பிராகிருதத்தாயுந்தன்சுதன் பெற்றிகளைத்
காதைக்குஞ்சாற்றலடன்னுளடககிச் சமித்திடுவள்
கோதைக்குழலப்பிராகிருதத்தன்னை கொள்கையிதோ
யாதைச்சொலவல்லனிற்கலர் மேன்மங்கையம்மனையே. (88)
துன்பிழைத்தாரையுந் தூர்த்தர்களென்று துரத்திவிடா
தின்பிழைத்தாயிரக்கக்கடலே நின்னிணையடிகட்
கென்பிழைத்தேன்பிழைத்தேனாயினுமென்னிடர்க்கிரங்கி
அன்பிழைத்தாட்கொள்ளுதியலர்மேன் மங்கையம்மனையே (89)
தூக்கவொண்ணாததுசொல்லவொண்ணாதது தூண்டியென்னாற்
போக்கவொண்ணாததுநின் கொண்கன்மாயை புரியுமையல்
காக்கவொண்ணாததிற் கட்டுண்டயர்க்குமெனைக்கசடன்
ஆக்கவொண்ணாதருள்வாயலர்மேன் மங்கையம்மனையே. (90)
போதன்புராரிபுரந்தரன் பொன்னுலகோர்தபனன்
சீதன்முனிவர் செயிக்கவொண்ணாததிறலுடைநின்
னாதன் செய்மாயைநவிலவற்றோவதனடபொழிக்க
வாதன்றரமோவருளலர்மேன் மங்கையம்மனையே. (91)
முக்குணமுள்ளது மோகஞ்செய்விப்பதுமொய்ந்நரகும்
புக்குணச்செய்வது போர்ப் பொறிநீத்தவர் புந்தியையும்
நெக்குணச்செய்வதம்மாயையதுதனை நீக்கவல்ல
அக்குணந்தந்தருள்வாயலர்மேன் மங்கையம்மனையே. (92)
ஈதிசெய்நோய்களைமுற்றுமொழித்தலெழிலிலையேற்
பாதிமுக்காற்பங்களவேனும் போக்கப்பரிந்திடுதல்
நீதியநீதியம்மட்டுஞ் செய்யாது நிராகரித்தல்
ஆதிபராபரையேயலர் மேன்மங்கையம்மனையே. (93)
சங்கற்பஞ்செய்யிற்றவறாது சங்கற்பஞ்சற்றுமிலை
இங்கற்பனென்செய்வனின்றனிரக்கமிருங்கடலாஞ்
சிங்கற்பகுதியதன்றுமறந்திறந்தீனசனர்க்
கங்கற்பகம்போலருளலர்மேன் மங்கையம்மனையே. (94)
சத்தியசங்கற்பையென்றுநின்றாளிற் சரணடைந்து
நத்தியநாயடியேனெண்ணமொன்று நவையின்றியே
சித்தியடையச்செயினின்பெருமைசெகந்திகழும்
அத்தியளித்தோனுரத்தலர்மேன் மங்கையம்மனையே. (95)
நீவேண்டி நின்னுளத்தேநினைந்தாலந்நிமிடமென்றன்
பாவேண்டிய பொருள் யாவும் பலிக்கும்பகருங்கற்பக்
காவேண்டுவ நல்குங்கம்புருவாதிக்கடவுணிதி
ஆவேண்டுவநல்குமேயலர்மேன் மங்கையம்மனையே. (96)
உடற்சுகமுண்மையுயிர்ச்சுகமுன்னையுனவுதிக்குங்
கடற்சுகம்யானொன்றுங்கண்டிலனிப்பகல்காறும் பச்சை
உடற்சுகம்வாழ்பொழிலோங்குஞ்சுப்பதியுத்தமிநின்
அடற்சுகவீடெய்தலென்றலர்மேன்மங்கையம்மனையே. (97)
எக்காலக்கண்ணுமெனைப்போன்றபாவிகளில்லையென்று
முக் கான்மொழிந்தனனுண்மைநின் சந்நிதிமுன்னர்நின்று
கைக்காமலென்னைநின்காற்றொண்டுகொள்ளக்கருணை செய்யும்
அக்காலமென்றருளாயலர்மேல்மங்கையம்மனையே. (98)
முற்றாவியற்கைப்பொருளுமுண்டோவிம்முழுமகனைக்
கற்றாவெனவிரங்கிக்காத்துயிர்ககணங்காக்கு நின்றன்
நற்றாயின்றன்மையிந்நானிலத்தோர்கண்டு நம்பச்செய்தி
அற்றார்க்கருந்துணையேயலர்மேன் மங்கையம்மனையே. (99)
சேகரவானவர்சேர்சுகனூருறைசெல்வி நற்பாற்
சாகரநந்தனிநின்றனித்தண்ணளிச்சாகரத்தோர்
சீகரநல்கியென்காரியஞ்சித்திக்கச்செய்குணங்கட்
காகரமானவளேயலர்மேன் மங்கையம்மனையே. (100)
வாழ்கதிருச்சுகனூர்வாழ்கவையத்துவானவர்கள்
வாழ்கசதுமறைவாழ்கபதின்மர்தம்வண்மறைகள்
வாழ்கவடத்திருவேங்கடத்தெந்தை மலரடிகள்
வாழ்கநந்தாயலர்மேன் மங்கையென்றுமென்மாமனத்தே. (101)
அலக்கணறச்சுகனூரலர்மேல்மங்கையன்னை பதத்
திலக்கணப்பாவினமாலையொருசதமிந்தியங்கொள்
புலக்கணநீத்தவிராமாநுசகுருபொன்னடிசேர்
விலக்கணங்களெதிராசதாசன் விளம்பினனே. (102)
அலர்மேன் மங்கைத்தாயார்மாலை முற்றிற்று.
---------------
This file was last updated on 25 Jan. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail,.com)