பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 14
அரங்கநகரன்னை யடைக்கல மாலை
arangka nakarannai yaTakkala mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 14)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 14
அரங்கநகரன்னை யடைக்கல மாலை
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
அரங்கநகரன்னை யடைக்கல மாலை
ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:
காப்பு.
சீராரரங்கநகரன்னை சேவடி சேர்த்தும்வணம்
நாராரடைக்கலநன்மாலையொன்றுநவில்வதற்கிப்
பாரார் புகழெம்பராங்குசமாமுனிபாதமலர்
ஏரார்நின்பாங்கரிருத்திப்பரவுதியென்னுளமே.
நூல்
பொய்கையாழ்வார்
திருக்கச்சிவெஃகாப்பதிவந்தபொய்கைத்திருமுனிவன்
உருக்கக்கலையென்னுளத்தொளிர்ந்தோங்கவுவத்தியென்றுன்
கருக்கச்சளந்தீர்கழற்சரண்புக்கனன்காமர்வளப்
பெருக்கத்தொளிருமரங்கநகரன்னைப்பெண்மணியே. (1)
பூதத்தாழ்வார்
பூத்திகழ்காக்கடன் மல்லைவருமுனிபுங்கவன் வெண்
பாத்திகழ் நூலென்னுளத்திற்படியப்பணித்தியென்றுன்
மாத்திகழ்வாரிசமாணடி மன்னிமறைபுகுந்தேன்
ஒத்திகழார் சேரரங்கநகரன்னையுத்தமியே. (2)
பேயாழ்வார்
மயிலைப்பதிவந்தமாமுனிவன் கலைமன்பொருளாம்
வெயிலைப்பொழிந்தென்றும் வீடாவவித்தைவினையிருள்செய்
துயிலைத்துடைத்தியென்றுன்றுணைத்தாட்சரண்டுன்னினனால்
அயிலைப்பொருங்கண்ணரங்கநகரன்னையாரணியே. (3)
திருமழிசையாழ்வார்
ஆழிதருங்கலையாகுமழிசையடிகணன்னூற்
பாழிபெறும்பொருளென்னுளத்தென்றும் படர்ந்து நிற்க
வாழியருள்செய்தியென்றுன்மலரடி வந்தடைந்தேன்
வீழியிதழ்கொளரங்கநகரன்னைவித்தகியே. (4)
மதுரகவியாழ்வார்
கோளூர்முனிவன்குருகூர் முனிமேற்குறித்தகலை
வாளூர்பொருளென்மனமன்னிநிற்கமகிழ்தியென்றுன்
தாளூர்சலசச்சரணடைந்தேனுயிர் தாங்குமொன்பான்
கேளூரரங்கநகரன்னையாங்கிருபாகரையே. (5)
நம்மாழ்வார்
உண்மையுலகினரோரநம்மாறனுகந்துரைத்த
திண்மைநன்னூல்களென்சிந்தையிற்றேங்கிடச்செய்தியென்றுன்
ஒண்மையடியையு வந்தடைந்தேனுலகோர்ப்புரக்கும்
வண்மையரங்கநகரன்னையாகும்வராநநையே. (6)
குலசேகராழ்வார்
கொல்லிநகர்வந்த கோமுனிவன்கலை கொண்டபொருள்
புல்லியென்னெஞ்சிற்பொலியக்கருணைபுரிதியென்றுன்
அல்லிமலரடியண்டைகொண்டேன்மறையந்தமுறை
வல்லியரங்கநகரன்னையாம்பத்தவற்சலையே. (7)
பெரியாழ்வார்
பரத்துவஞ்செய்து நற்பஞ்சவன் பொற்கிழிபார்ப்படுத்த
உரத்துவவில்லிபுத்தூர்க்கோன்கலையென்னுளத்துநிற்கத்
திரத்துவஞ்செய்தியெனநின்சரண்சரண்சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்கநகரன்னைத் தற்பரையே. (8)
கோதைநாயகித்தாயார்
திருக்கோதைநாயகி செய்ந்நூலென்சிந்தையிற்றேக்குவித்தென்
கருக்கோதை நீக்கக்கருணை செய்வா யென்றுன்கான்மலரின்
மருக்கோதை சூடிமறைபுகுந்தேன்மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாயவரங்கநகரன்னையிந்திரையே. (9)
திருமங்கையாழ்வார்
விற்கலைவந்தபரகாலமாமுனிவேந்தனருள்
நற்கலையென்னுளநாடொறுநண்ணநயத்தியென்றுன்
அற்கலைத்தோட்டுமடிச்சரண்புக்கனனாரணமா
நற்கலையோங்குமரங்கநகரன்னை நாயகியே. (10)
தொண்டரடிப்பொடியாழ்வார்
விப்பிரநாராயணமுனியேந்தல் வின்கலைகள்
பப்பிரதப்பொருணாளுமென்னெஞ்சிற்பதித்தியென்றுன்
சுப்பிரசன்னத்துணையடியிற்சரண்டுன்னினனால்
அப்பிரமேயவநகவரங்கநகரன்னையே. (11)
திருப்பாணாழ்வார்
முனியூர்தியூர்ந்தெம்முகுந்தன்முன்வந்தமுனித்தலைவன்
கனியூர்சுவைக்கலையென்னுளநிற்கக்கணித்தியென்றுன்
பனியூர்திருமலர்ப்பாதத்தடைந்தனன் பக்கியிறைத்
தனியூர்தியூருமரங்கநகரன்னைத்தாக்கணங்நே. (12)
ஸ்ரீமந்நாதமுனிகள்
நாதமுனிகளெனுமெம்மடிகணளினமலர்ப்
பாதமுவந்து பணிந்துய்யும் வண்ணம்பணித்தியென்றுன்
சீதமுளரித்திருவடியிற்சரண்சேர்ந்தனனால்
வேதமுழக்கத்தரங்கநகரன்னை வித்தகியே. (13)
உய்யக்கொண்டார்
புலஞ்செயிர்த்தோங்கியவுய்யக்கொண்டார்புகழ்பூத்தொளிர்ந்து
பொலஞ்செயடிகளென்புந்திவைத்தேத்தப்புரிதியென்றுன்
நலஞ்செய்திருவடிநண்ணினனல்லவர் நாளுநண்ணி
வலஞ்செய்யரங்கநகரன்னையாகும் வரோதயையே. (14)
குருகைக்காவலப்பன்
கூறுபுகழ்க்குருகைக்காவலப்பன் குறிக்கொணிட்டை
தேறுமெனக்குஞ்சிறந்தோங்க நீயருள் செய்தியென்றுன்
நாறுமலரடிநண்ணினன்சீர்த்தியிஞ்ஞாலமெலாம்
வீறுமரங்கநகரன்னைவே த விளக்கொளியே. (15)
நம்பிகருணாகரதாசர்
நம்பிகருணாகரதாசவள்ளறன்னல்லொழுக்கங்
கும்பியுழைக்குமெனக்கும்வரநின் குரைகழலை
நம்பியடைந்தனனாளும்பிறவிரலையுற்றோர்க்
கம்பியனையவரங்கநகரன்னையம்புயையே. (16)
ஏறுதிருவுடையார்
ஏறுதிருவுடையாரென்றுரையெம்மிருநிதிக்குப்
பேறு தருமவன்பால்வருநேயப்பெருக்கின் வளந்
தேறுமெனக்குமளித்தியென்றுன்பதந்தேர்ந்தடைந்தேன்
நாறுமலர்ப்பொழினண்ணுமரங்கநகரன்னையே. (17)
திருக்கண்ணமங்கையாண்டான்
தூயதிருக்கண்ணமங்கையாண்டானெஞ்சுரநதிதன்
நேய்வடிகளடியினுறுமன்பினீத்தமிந்தத்
தீயனுற்றுய்யநின் சேவடி சேர்ந்தனன்றெய்வமயிற்
சாயலரங்கநகரன்னையாகுந்தயாபரையே. (18)
வானமாமலையாண்டான்
மறையோர் புகழ்வானமாமலையாண்டான்மகிழ்தருதன்
இறையோனுழிக்கொண்ட வீரமடியற்குமீதியென்றுன்
பொறையோங்குதாளிற்புகல்புகுந்தேனைம்புலனைவென்ற
நிறையோர்நிலவுமரங்கநகரன்னை நின்மலையே. (19)
உருப்பட்டூராச்சான்பிள்ளை
பேணுமுருப்பட்டூராச்சான்பிள்ளைப்பேர்ப்பெருந்தகைதன்
மாணுறுமாரியன்பாற்கொண்டநிட்டைமரபெனக்கும்
பூணுறும் வண்ணம் புரிதியென்றுன்றாட்புகல்புகுந்தேன்
சேணுறு சோலையரங்கநகரன்னைச்செந்திருவே. (20)
சோகத்தூராழ்வான்
சோகத்தூராழ்வான்சுகநிலை நிட்டைதுடியிடையார்
மோகத்தூரெற்குமுரணற்றுண்டாகநின் முண்டகத்தாள்
ஆகத்தூடுய்த்தின்றடைக்கலம்புக்கனனையவெள்ளை
நாகத்தூர்தித்தலைவன் போற்றரங்கநகரன்னையே. (21)
கீழையகத்தாழ்வான்
கீழ்வானெழுபகல்போலொளிர்வண்புகழ்க்கீழையகத்
தாழ்வானெனத்தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந்தயை செயநின்னைச்சரணடைந்தேன்
வாழ்வாரரங்கநகரன்னையாகும்வதானியையே. (22)
மேலையகத்தாழ்வான்
மேலையகத்துறையாழ்வானெனயான் வியந்துதிரு
மாலையகத்தமறைத்தமிழ்பாடிமகிழும்வளத்
தாலையளித்தியெனநின்சலசச்சரணடைந்தேன்
சோலையகத்தவரங்கநகரன்னைச் சுந்தரியே. (23)
மணக்கானம்பி
திருமணக்கானம்பிசேவடிசிந்தையிற்சேரச்செய்தென்
கருமணக்காகரமாங்காமநோயைக்களைதியென்றுன்
மருமணத்தாளின்மறைபுகுந்தேன் மணிவண்ணனெம்மான்
திருமணக்காந்தையரங்கநகரன்னைச் செய்யவளே. (24)
திருவல்லிக்கேணிப்பாண்பெருமாளரையர்
பெருக்கத்திருக்கைரவக்கேணிப்பாண்பெருமாளரையர்
தருக்கத்தவாளந்தணந்தநடையெற்குஞ்சார்கவென்றுன்
திருக்கத்திகைக்கழலிற்சரண் சேர்ந்தனன்றேர்வரிய
இருக்கத்தையானவரங்கநகரன்னையின்பவைப்பே. (25)
சொட்டைப்பூசிச்செண்டலங்காரதாசர்
சொட்டைப்பூசிச்செண்டலங்காரராரியன் றூவடி யில்
நெட்டைப்பேரன்புற்றநிட்டையெனக்குநிகழ்கவென்றுன்
மட்டைச்செய்தாமரைமாணடிபுக்கனன்மன்னனந்த
முட்டைப்பெற்றாளுமரங்கநகரன்னைமுன்னவளே. (26)
கோமடத்துத்திருவிண்ணகரப்பன்
குருவிண்ணகர்தருவானெனுங்கொள்கைகொள்கோமடத்துத்
திருவிண்ணகரப்பன்சேவடியேத்துந்திறம்பெறநின்
மருவிண்ணளவுமரையடிமேவினன்வையகத்துப்
பெருவிண்ணரங்கநகரன்னையாஞ்சுப்பிரசன்னையே. (27)
உலகப்பெருமாணங்கை
நல்லொழுக்கத்துலகப்பெருமாணங்கை நண்ணுநிட்டை
புல்லொழுக்கேற்கும்புகுமாகருணைபுரிதியென்றுன்
எல்லொழுக்கிண்டையிணைத்தாளடைந்தனனென்றும் பொன்னி
நல்லொழுக்காருமரங்கநகரன்னை நப்பின்னையே. (28)
ஸ்ரீபுண்டரீகாக்ஷதாசர்
சீரார்ந்த நற்புண்டரீகாக்கதாசந்தந்தேசிகன்பால்
நாரார்ந்தொழுகுநடையெற்கு நண்ணநயத்தியென்றுன்
ஏரார்ந்த விண்டையிணைத்தாளிலில்லடையெய்தினனாற்
பாரார்ந்தகீர்த்தியரங்கநகரன்னைப்பார்க்கவியே. (29)
ஸ்ரீஆளவந்தார்
ஆளவந்தாரெம்மடிகளடியாமருத்தவைப்பென்
நாளவந்தீரமனமஞ்சிகம்வைத்து நன்றுறநின்
நாளவந்தாமரை நற்றாண்ணுகினனண்பர்பவ
மாளவந்தாளுமரங்கநகரன்னை மாநிதியே. (30)
திருவரங்கப்பெருமாளரையர்
திருமான்முனஞ்செந்தமிழ்மறைபாடுந்திருவரங்கப்
பெருமாளரையரெனப்பாடியாடுநற்பேறெனக்கு
வருமாறுன்றாளின் மறைபுகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்கநகரன்னையாகுந்தயாம் புதியே. (31)
சொட்டைநம்பி
கையொழியா நன்னடைச்சொட்டைநம்பி தன்கான்மலரைப்
பொய்யொழியாதவென் புந்திவைத்தேத்தப் புரிதியென்று
மெய்யொழியாவன்பர்மேவு நின்றாட்சரம்மேவினனான்
மையொழியாக்கண்ணரங்கநகரன்னைமைதிலியே. (32)
அரசுநம்பி
அகந்தூயனாமெம்மரசுநம்பிப்பெரியோனடியை
உகந்தூதியமெனவுன்னிடவுள்ளமுவத்தியென்றுன்
சுகந்தூங்குதாளிற்றுனைந்தடைந்தேனற்றோறுப்புரப்பால்
நகந்தூக்குநாரணனண்ணுமரங்கநகரன்னையே. (33)
தெய்வத்துக்கரசுநம்பி
அவாநிலை நீத்தவடிகடெய்வத்துக்கரசு நம்பி
சுவாநிலையேற்குந் துணைநிற்கவன்புசுரத்தியென்று
தவாநிலைத்தாபதர்தாழுநின்றாளிற்சரணடைந்தேன்
உவாநிலைத்துண்டத்தரங்கநகரன்னையொள்ளொளியே. (34)
பிள்ளைக்கரசுநம்பி
பிள்ளையரசுநம்பிப்பெரியோன்கழல்பேணிநின்றிவ்
வெள்ளையறிவனும் வீடுபெற்றுய்யநின் வீங்குமொளிக்
கொள்ளையடிச்சரண்கூடினன் பேரண்டகோடிக்கெல்லாந்
தள்ளையரங்கநகரன்னையாஞ்சத்யசங்கற்பையே. (35)
சிறுபுள்ளுடையார்
செருக்காற்றிற்செல்லாச்சிறுபுள்ளுடையார்திருவடியிற்
பெருக்காற்றிற்பீடுறும் பேரன்பு நாளும்பிறங்கவென்றுன்
இருக்காற்றினரெண்ணிணையடிக்கில்லடையெய்தினனால்
அருக்காற்றுப்பொன்னேயரங்கநகரன்னையக்கரையே. (36)
திருமாலிருஞ்சோலைதாசர்
சீரார் திருமாலிருஞ்சோலைதாசர்தஞ்சீர்த்திகளை
நாராரென்னா வினவிற்றியுய்வானருணல் குதியென் உகள்
றேரார்நின்றாள்களிலில்லடையெய்தினனீர்ம்பொழிற்கட்
காராரரங்கநகரன்னையாங்கருணாலயையே. (37)
வங்கிபுரத்தாய்ச்சி
தெருள்சேர்ந்தவங்கிபுரத்தாய்ச்சிநிட்டையைச்சேர்ந்தொழுகி
மருள்சேரென்றோற்றத்தை மாற்றிடவுள்ளமகிழ்தியென்றுன்
பொருள்சேர்கழலிற்புகல்புகுந்தேன் பொழில்பூத்தளிக்கும்
அருள் சேரரங்கநகரன்னையாகுமகளங்கையே. (38)
பெரியநம்பிகள்
அருங்கலைக்கேள்விப்பெரிய நம்பிக்குத்தன்னாரியன்பால்
ஒருங்கலில்பேரன்புதித்தாங்கெனக்குமுதிக்கவென்றுன்
பிருங்கமிமிரம்புயத்தாளடைந்தனன் பெட்குமின்னின்
மருங்குலரங்கநகரன்னையாமங்களாகரையே. (39)
திருக்கோட்டியூர் நம்பி
திருக்கோட்டியூர்நம்பிச்செம்மற்குத்தன்றிருத்தேசிகன்பாற்
றிருக்கோட்டுமன்பு செழித்தாங்கெனக்குஞ்செழிக்கவென்றுன்
தருக்கோட்டுந்தாளிற் சரண்புகுந்தேன்மெய்ச்சதுமறையோர்
திருக்கோட்டியோங்குமரங்கநகரன்னைச்செஞ்சுடரே. (40)
பெரியதிருமலைநம்பி
பெரியதிருமலை நம்பியெனுமெம்பெருந்தகைதன்
அரியதிருவருட்காளாகும்வண்ணமருடியென்றுன்
ரியசரணடைந்தேனுனையோராவுளத்தினர்கட்
கரியவரங்கநகரன்னையாமம்புயாதனையே. (41)
மாறனேர் நம்பி
குற்றமிலாமாறனேர் நம்பிதன்குரவன்கழலில்
அற்றமிலாவன் படைந்தாங்கியானுமடைகவென்றுன்
சுற்றமிலார்துணையாமடியிற்சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்கநகரன்னைச்சிற்பரையே. (42)
திருக்கச்சிநம்பி
திருக்கச்சிநம்பியடிகட்குத்தந்திருத்தேசிகன்பால்
அருக்கச்சுதவன்பமைத்தாங்கெனக்கு மமைத்தியென்றுன்
கருக்கச்சளங்கழற்றுங்கழற்கையடைகண்டனன்சீர்ப்
பெருக்கத்தரங்கநகரன்னையாகும் பிராப்பியையே. (43)
திருமாலையாண்டான்
திருமாலையாண்டானெனுஞ்செம்மலுக்குத்தன்றேசிகன்பாற்
பெருமாலையாக்கியபெற்றியினெற்கும்பிறப்பியென்றுன்
மருமாலைத்தாளின்மறைபுகுந்தேன்மனமாசறுத்தோர்
கருமாலை நீக்குமரங்கநகரன்னைக்காரணியே. (44)
ஆளவந்தாராழ்வான்
ஆழ்வானறிவின்றலைநின்றொழுகுமெம்மாளவந்தார்
ஆழ்வானுக்காரியன்பாலானவன்பெற்குமாகவென்றே
ஏழ்வான் பிறப்புமிரிக்கு நின்றாட்சரணெய்தினனிற்
றாழ்வார்க்கருளுமரங்கநகரன்னைச்சற்குணியே. (45)
வானமாமலையாண்டான்
திருவானமாமலையாண்டான்றெருணடைச்செல்வமெற்கும்
வருவான குடியென்றுன் மரைத்தாளின்மறைபுகுந்தேன்
பெருவானவர்பெறும்பேற்றையடியவர்பெற்றுவக்கத்
தருவானரங்கநகரன்னையாகுஞ்சநாதனையே. (46)
தெய்வவாரியாண்டான்
அமலனெனுந்தெய்வவாரியாண்டான்றன்னடி யிணையாங்
கமலமென்னுள்ளக்கமலம்வைத்தேத்தக்கணித்தியென்றுன்
நிமலவடிகளினீழலடைந்தனனித்தியர்சேர்
விமலவரங்கநகரன்னையாரணவேத்தியையே. (47)
ஈசனாண்டான்
இலங்கெழின்மேதைகொளெம்மீசனாண்டாற்கிறைவனுழித்
துலங்கெழிலன்பு சுரந்தாங்கெனக்குஞ்சுரக்கவென்றுன்
கலங்கெழுதாள்களிற்கையடைபுக்கனன்காயம் வையத்
தலங்கெழுசீர்த்தியரங்கநகரன்னைத்தற்பரையே. (48)
ஜீயராண்டான்
சிதஞ்செய்பஞ்சேந்தியச்சீயராண்டாற்குத்தன்றீர்த்தனுழி
இதஞ்செய்யும்பத்திமையேய்ந்தாங்கெனக்குமியைகவென்றுன்
பதஞ்செய்பதங்களைப்பற்றினன்பத்தர்கள் பாவமெலாம்
அதஞ்செய்யரங்கநகரன்னையாமருளார்கலியே. (49)
திருக்குருகூரப்பன்
தன்னாரியன்பாற்றிருக்குருகூரப்பன்றானடைந்த
இன்னாவறுமன்பெனக்குமுண்டாக விழைத்தியென்றுன்
பொன்னாரரத்தவம்போருகத்தாளிற்புகல்புகுந்தேன்
கொன்னாரரங்கநகரன்னையாகுங்குசேசயையே. (50)
திருமோகூரப்பன்
தேசிகன்பானந்திருமோகூரப்பன் சிறந்துகொண்ட
ஆசிலதாமன்பெனக்குமுண்டாகவருடியென்றுன்
ஏசிகறாள்களிலேன்றடைந்தேனெண்ணிருக்கெசுர்நற்
கோசிகமேத்துமரங்கநகரன்னைக்கோமளையே. (51)
திருமோகூர் நின்றான்
நீடுறுசீர்த்திருமோகூர் நின்றானெனுநின்மலன்றன்
பீடுறுநன்னடையின் பெருக்கெற்கும் பெருகவென்றுன்
தோடுறுதோடகத்தாட்சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலையரங்கநகரன்னைப்பண்ணவியே. (52)
தெய்வப்பெருமாள்
தெருதித்தெய்வப்பெருமாட்பெருந்தகை சீரடியைப்
பொருணிதியென்னவென்புந்திவைத்தென்றும்புகழுமன்பு
மருணிதியாமெற்கும்வாய்க்கவென்றுன்னை மறைபுகுந்தேன்
அருணிதியானவரங்கநகரன்னையற்புதையே. (53)
வகுளாபரண சோமயாஜியார்
மதியார்வகுளவணிச்சோமயாஜி தன்மாண்டியே
நிதியாயென்னுள்ள நிறுவியுய்வானின்னிறைதவர்க்குக்
கதியாங்கழல்களிற்கையடைப்புக்கனன்கற்றவர்கள்
துதியாரரங்கநகரன்னையாகுஞ்சுடர்க்கொடியே. (54)
திருக்குருகூர் தாசர்
சீரார்த்திருக்குருகூர்தாசரென்னுமெந்தெய்வமணிக்
கேரார்தன்னாரியன் பாலேய்ந்தநிட்டையெனக்குமுற
வாராரருள்செய்தியென்றுன் கழலின்மறைபுகுந்தேன்
தேரார்தெருவாரரங்கநகரன்னைச்சின்மயையே. (55)
திருமாலிருஞ்சோலைதாசர்
திருமாலிருஞ்சோலை தாசரெனுந்தெய்வத்தேநுதன்சீர்க்
குருமாமணியுழிப்பெய்யன்புப்பால் வெள்ளக்கோலமெற்கும்
வருமாறுன்வாரிசமாமலர்த்தாளின்மறைபுகுந்தேன்
திருமாமணிப்பூணரங்கநகரன்னைச் சேமவைப்பே. (56)
வடமதுரைப்பிறந்தான்
வடமதுரைப்பிறந்தானென்னும் வண்மைமணிமலைக்குத்
திடமதுரைத்தவன்றேமன்புவதை செழித்தலென
மடமலியெற்குமளித்தியென்றுன்றாண்மறைபுகுந்தேன்
நடமலிந்தோங்குமரங்காரரங்கநகரன்னையே. (57)
ஆட்கொண்டி
ஆட்கொண்டியென்னுமடிகௗடிகளகத்தில்வைத்தென்
சேட்கொண்டதீவினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட்கொண்டதாமரைத்தாளடைந்தேனம்பிச்சார்ந்தவரை
ஆட்கொண்டருளுமரங்கநகரன்னையம்புயையே. (58)
அம்மங்கி
மறைகொண்டமாண்பொருண் மன்னுளத்தம்மங்கிவள்ளலினெந்
சிறைகொண்ட தீவினை தீர்வானடியர்செயுஞ்செயிர்கள்
பொறைகொண்ட நின்புண்டரீகப்பொற்பாதம்புகல்புகுந்தேன்
நறைகொண்டபூம்பொழினண்ணுமரங்கநகரன்னையே. (59)
இராஜபுரோகிதர் நாதமுனிகள்
பொன்னித்துறைவன்புரோகிதன்பொங்கெழிற்பொன்னடியென்
சென்னிக்கணியெனச்சேர்ந்துய்யுமாறருள்செய்தியென்றுன்
உன்னித்துறவோர்தொழுந்தாளடைக்கலமுற்றனன்மால்
பன்னிப்பிரியையரங்கநகரன்னைப்பார்க்கவியே. (60)
இராஜமகிஷி திருவரங்கத்தம்மன்
ஆத்தியந்தாரனற்றாரமரங்கத்தம்மன்னொழுக்கஞ்
சாத்தியமாகவெற்கென்றுன்சலசச்சரணடைந்தேன்
எத்தியமாமறைக்கெட்டாப்பரம்பொருளேயினிதாம்
வாத்தியவோதையரங்கநகரன்னைமாமருந்தே. (61)
எம்பெருமானார்
எம்பெருமாற்கென்றுமின்பணி செய்திதயத்துகக்கும்
எம்பெருமானாரிணையடியேயெனக்கென்றும் பொன்றாச்
சொம்பெரும்பேறென்று துன்னக்கருணைசுரந்தருள்வாய்
நம்பெருமாணமணவாட்டியரங்கநகரன்னையே. (62)
மலைகுனியநின்றார்
இனியகருத்துடனின்சொலெவர்க்கு மிசைக்குமலை
குனியநின்றார் தங்குரைகழல்கூடியென்கோதறுப்பான்
நனியருள்செய்தியென்றுன்கழனண்ணினனாரணற்குக்
கனியனையாயெம்மரங்கநகரன்னைக் கண்மணியே (63)
ஆரிய ஸ்ரீசடகோபதாசர்
தன்மவுருவாரியச்சீசடகோபதாசரெனும்
நின்மலபாநுவினெஞ்சிருணீங்கியின்நீடுகன்மச்
சன்மமொழிக்கநின்றாட் சரண்புக்கனன் சார்ந்தவர்க்குப்
பொன்மலைபோலுமரங்கநகரன்னைப்புண்ணியையே. (64)
அணியரங்கத்தமுதனார்
அணியரங்கத்தமுதப்பேரடிகளடிகள் பவப்
பிணியரங்கப்பிடித்துய்வானருளென்றுன்பெட்குமொன்பான்
மணியரங்கத்தண்டைமாணடிபுக்கனன்மாதவிகள்
நணியரங்கத்து நடஞ்செய்யரங்கநகரன்னையே. (65)
திருவாய்த்தலமுடையார்
திருவாய்த்தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்
கருவாய்த்தலமரனீங்கவருள்செய்துகாத்தியென்றுன்
மருவாய்த்திலங்குமரையடிபுக்கனன்மாணுருவாய்
அருவாய்த்திகழுமரங்கநகரன்னையம்புயையே. (66)
கூரத்தாழ்வான்
இசையோங்கு கூரத்திறையெம்மடிகளிணையடியில்
நசையோங்கியுய்யநயந்திருக்காதிய நான்மறையின்
மிசையோங்குநின்னடிமேவினனல்குதிமெய்ப்புகழெண்
டிசையோங்கரங்கநகரன்னையாகுஞ்சிந்தாமணியே. (67)
முதலியாண்டான்
ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறைமுதலி
யாண்டானெனையென்றுமாள்வானருடியென்றஞ்சிறைத்தேன்
பாண்டான்முரல்பதுமப்பதம் பற்றினன்பாரளப்பான்
நீண்டான்மகிழுமரங்கநகரன்னை நீரசையே. (68)
அருளாளப்பெருமாளெம்பெருமானார்ஜீயர்
அம்புவிபோற்றருளாளப்பெருமாளெனுமடைகொள்
எம்பெருமானாரிணையடியென்பவகீர்க்குமென்று
நம்புறுநன்மன நண்ணநின்றாளைநயந்தடைந்தேன்
வம்பவிழ்சோலையரங்கநகரன்னை மாமணியே. (69)
வடுகநம்பி
மைந்தாரைந்தாநெறிமாண்பினனாமெம்வடுகநம்பி
கந்தார் நடையெற்குக்கை கூடநின்றன் கருணைகொள்வான்
பைந்தார் புனைநின்பதஞ்சரண்புக்கனன்பாயும் பொன்னிச்
சிந்தாரரங்கநகரன்னை வேதச்சிரப்பொருளே. (70)
திருக்குருகைப்பிரான் பிள்ளான்
சீரார் திருக்குருகைப்பிரான் பிள்ளான்றிருவடியில்
நாரார்மனநலநண்ணிடநீயருணல்கிடென்றுன்
தாரார்சலசச்சரணத்துணையிற்சரணடைய ந்தேன்
ஏராரரங்கநகரன்னையாமெம்மிறையவளே. (71)
அநந்தாழ்வான்
கனந்தாழ்பொழிற்றிருவேங்கடமாமலைக்கண்ணனுக்குத்
தினந்தாழ்ந்துதேமலர்க்கண்ணித்திருப்பணிசெய்துவந்த
அனந்தாழ்வானிட்டையளித்தியென்றுன்றாளடைந்தனனற்
சனந்தாழரங்கநகரன்னையாகுஞ்சரணியையே. (72).
எழுபத்துநான்கு சிங்காதனாதிபதிகள்
சீரியஞானவெழுபத்துநான்குசிங்காதனராம்
ஆரியர்தங்களருட்கிலக்காகவருடியென்றுன்
வேரிமரைபுரைமென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்
நாரியரதனமேநல்லரங்கநகரன்னையே. (73)
எழுநூறு உத்தமாச்சிரமிகள்
சத்தமனெங்களெதிராசமாமுனிதாளடைந்த
உத்தமமாமாச்சிரமிகளோரெழுநூற்றுவர்கள்
தத்தமநிட்டைதமியேற்குறநின்சரணடைந்தேன்
புத்தமுதொத்தவரங்கநகரன்னைப்புங்கவியே. (74)
பன்னீராயிரவரேகாந்திகள்
கதியார்பன்னீராயிரவரேகாந்திகள் காற்றுணையென்
விதியாறொழுகெம்மிராமாநுசமுனிவேந்தனருட்
மதியாரநின்னை மறைபுகுந்தேன்வையமையலற்றோர்
நிதியாமரங்கநகரன்னையாகுநியாமகையே. (75)
எழுநூற்றுவர் அம்மையர்கள்
எம்மையுமாட்கொளுமெம்பெருமானாரிணையடிசேர்
அம்மையரோரெழுநூற்றுவர்நிட்டையடியனுக்கும்
ம்மைவரநின்னிணையடிக்கில்லடையெய்தினனாற்
செம்மையரங்கநகரன்னையாகிய தேசிகையே. (76)
திருவரங்கத்தமுதனார்
திருவரங்கத்தமுதாந்தெள்ளியன் செய்தசெந்தமிழ்நூல்
கருவரங்கத்தினங்கற்றுய்யுமாறெனைக்காத்தியென்று
மருவரங்கத்தநின்மாணடியிற்சரண்வந்தடை ந்தேன்
தெருவரங்கத்தவரங்கநகரன்னைச்செந்திருவே. (77)
எம்பார்
கம்பார்களத்தியர்காதலிக்குந் தீக்கருமமொழிந்
தெம்பாரடிகளையெண்ணியுய்வானெற்கருடியென்றுன்
வம்பார்வனசமலர்த்தாட்சரணவரணமுற்றேன்
அம்பாரரிக்கண்ணரங்கநகரன்னையற்புதையே. (78)
பராசரபட்டர்
தேக்கும்புகழெம்பராசரபட்டர்திருவடியென்
வாக்குமனமும்வழுத்திநினைக்கும்வரம்பெறநின்
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச்செகமனைத்துங்
காக்குமரங்கநகரன்னையாங்கமலாலயையே. (79)
அழகியமணவாளதாசர்
வெண்மணிப்பிள்ளைப்பெருமாளையங்கர் நின்வே ந்தன்றன்பேர்
நண்மணித்தாசரைநண்ணியுய்வானுளநள்ளிருடீர்
விண்மணியேநின் விரையார்மலர்க்கழல்வேட்டடைந்தேன்
ஒண்மணிமாலையரங்கநகரன்னையுத்தமியே. (80)
சீராமப்பிள்ளை
ஆராமப்போதாலலங்கலணிந்தென்னகத்திருத்திச்
சீராமப்பிள்ளையைச்சிந்திக்கச் செவ்வருள் செய்தியென்றுன்
மாராமத்தாளின்மறைபுகுந்தேனன்மரபடியர்
நாராமப்பூவைநயக்குமரங்கநகரன்னையே. (81)
நஞ்சீயர்
வெஞ்சீயமெண்ணிடுவேழத்தின் வேண்டார் வெருவவந்த
நஞ்சீயர் நற்கழனாடொறுநாடிநயக்கவெற்கு
நெஞ்சீதியென்றுநின்னீரசத்தாட்சர ணேர்ந்தடைந்தேன்
மஞ்சீயன்முத்தவரங்கநகரன்னைமாணிக்கமே. (82)
நலந்திகழ் நாராயணச்சீயர்
நலந்திகழ் நாராயணச்சீயர்நற்கழனண்ணியுவான்
பொலந்திகழ்நின்னடிப்புண்டரிகத்திற்புகல்புகுந்தேன்
வலந்திகழ்வன்னிவளர்ப்போர்வழுத்து மலர்மகளே
நிலந்திகழ்ந்தோங்குமரங்கநகரன்னை நிச்சலையே. (83)
நம்பிள்ளை
சொல்லவரியசொல்லார்ந்த நம்பிள்ளை துணையடியாற்
கல்லவரியபிறவியைக்கல்லக்கருதிவந்துன்
வல்லநற்றாளின் மறைபுகுந்தேன்மறைவாணர் தொழும்
நல்லவரங்கநகரன்னையாநளினாம்பகியே. (84)
ஸ்ரீசேனாபதிஜீயர்
சேணோங்குநல்லுரச்சேனாபதியெனுஞ்சீயரடி
கோணோங்குமென்னுளங்கொண்டுய்யநீயருள்கூர்தியென்றுன்
பூணோங்குதாளிற்புகல் புகுந்தேன்சிறைப்புட்கணத்தின்
பாணோங்குசோலையரங்கநகரன்னைப்பண்ணவியே. (85)
பெரியவாச்சான்பிள்ளை
மாண்டகுணத்தெம்பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்டவரன்புபுனைந்துய்யநின்கழல்புக்கடைந்தேன்
தூண்டலிலாதசுடர்விளக்கேதுகடீர்வளங்கள்
நீண்டவரங்கநகரன்னையாகுநிரஞ்சனையே. (86)
இராமாநுசாசாரியர்
எந்தை நம்பிள்ளை சுதனாமிராமாநுசாரியன்றாள்
சிந்தையில்வைத்தெளியேனுய்யநீயருள் செய்தியென்றுன்
முந்தை மறைமுடித்தாளிலடைக்கலமுந்தினனோர்
நிந்தையுமில்லாவரங்கநகரன்னை நித்தியையே. (87)
வடக்குத்திருவீதிப்பிள்ளை
நீடுமெய்ஞ்ஞானநெறிநின்றொழுகுநன்னிட்டைகள்கை
கூடும்வடக்குத்திருவீதிப்பிள்ளை குரைகழலே
நாடு நலம்பெறநின்னடிநண்ணினனான்மறையும்
நேடுமரங்கநகரன்னையாகு நிராமயையே. (88)
சிவிக்கரைப்பிள்ளை
மாவளமோங்குஞ்சிவிக்கரைப்பிள்ளைமலரடிச்சீர்
நாவளமோங்கநவிற்றியென்சன்மத்தின்ஞாட்பறுப்பான்
பூவளமோங்கிப்பொலியுநின்றாளிற்புகல்புகுந்தேன்
காவளமோங்குமரங்கநகரன்னைக்கற்பகமே. (89)
வேல்வெட்டிப்பிள்ளை
மால்வெட்டியென்றன்மனத்தையெப்போதும் வளர்கருணை
வேல்வெட்டிப்பிள்ளை விழுத்தாணிறுத்தும்விரகுபெற
நூல்வெட்டியோர்தொழுநின்றாளடைந்தனனோற்பவர்க்கு
மேல்வெட் டிக காட்டுமரங்கநகரன்னை விண்ணவியே. (90)
ஈயுண்ணி மாதவப்பெருமாள்.
இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப்பிள்ளையென்றுந் திருநாமம்
எங்குநிறைபுகழீயுண்ணி மாதவனின்னருளாற்
றங்குமென்சன்மந்தவிர்ப்பானினது தயைபெறநின்
கொங்குண்மலரடிகூடினனன்பர்கள்கூட்டுணுஞ்சீர்
பொங்குமரங்கநகரன்னையாங்கடற்புத்திரியே. (91)
ஈயுண்ணி பத்மநாபப்பெருமாள்பிள்ளை
சுரக்குமளிப்பத்மநாபப்பெருமாடுணையடியென்
பரக்குமனத்திற்பதித்துய்யநின்னைப்பணிந்தனன்யான்
கரக்குஞ்சராசரம்யாவையுமீளவுங்கண்டவற்றைப்
புரக்குமரங்கநகரன்னையாமணிப்பூடணையே. (92)
நாலூர்ப்பிள்ளை.
இவர்க்குக்கோலேசர், கோலவராகப்பெருமாள், இராமாநுஜதாசர் என்றுந் திருநாமம்
சீரார்நாலூர்ப்பிள்ளைசேவடி யேத்தியென்றீவினையின்
வேரார்வம்வெட்டி விரத்திவழிநின்று வீடடைவான்
ஏரார்நின்னிண்டையிணையடியிற்சரணெய்தினனாற்
காரார்பொழில் சூழரங்கநகரன்னைக் கண்மணியே. (93)
நாலூராச்சான்பிள்ளை.
இவர்க்கு நாலூர்தேவப்பெருமாள்பிள்ளையென்றுந் திருநாமம்
நாலூராச்சான்பிள்ளைநற்பதநண்ணிநளிர்ந்ததென்றற்
காலூர்தியைப்புறங்கண்டண்டர் யாவருங்காண்பரிய
மேலூர்புகநின் விழுத்தாளடைக்கலமேவினனற்
சேலூர் திருக்கண்ணரங்கநகரன்னைச்செந்திருவே. (94)
நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர்
கடுவிற்கொடிதாக்கவற்றுமிருவினைக்கட்டறுத்த
நடுவிற்றிருவீதிப்பிள்ளைநற்றாணண்ணிநான்பிறவி
வடுவிற்றொழிய நின்வண்மலர்த்தாளின்மறைபுகுந்தேன்
அடுவிற்புருவவரங்கநகரன்னையம்புயையே. (95)
பின்பழகியபெருமாள்ஜீயர்
பின் பழகார்ந்தபெருமாளென்சீயர்பெருமைபுகழ்ந்
தென்பழங்கண்ணிரித்தீறினல் வீட்டின்ப மெய்தவெண்ணி
இன்பழநேர்நின்னிணைத்தாளிலில்லடையெய்தினனாற்
றென்பழனஞ்சூழரங்கநகரன்னைச்சின்மயையே. (96)
ஏறுதிருவுடையார்தாசர்
ஏறுதிருவுடையார்தாசர் சீர்த்தியிசைத்திதயத்
தேறு திருக்கையிரிப்பான் கருணையிழைத்தியென்றுன்
வீறு திருப்புகழ்வேய்ந்தநின்றாண்மறைமேவினனால்
நாறு திருமலர்ச்சேக்கையரங்கநகரன்னையே. (97)
வானமாமலைதாசர்
தாரணியோர்புகழும்வானமாமலைதாசர்பதம்
ஏரணிநெஞ்சத்திருத்தியுய்வானருளீதியென்றுன்
தாரணிதாளிற் சரணடைந்தேனுயிர் தங்குலக
காரணியாகுமரங்கநகரன்னைக் கற்பகமே. (98)
திருக்குருகூர்தாசர்
வானேய்புகழ்க்குருகூர்தாசர்நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணியுய்வானருள் செயல்வேண்டுமென்றுன்
தேனேய்செழுங்கமலத்தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய்தனீத்தாளரங்கநகரன்னையுத்துங்கையே. (99)
நயினாராச்சான்பிள்ளை
ஞானவொழுக்கநயினாராச்சான்பிள்ளை நல்லடியென்
ஈனவொழுக்கமற்றெண்ணியுயநீயிரங்கிடென்றுன்
மோனவொழுக்கர்தொழுந்தாளடைந்தனன் முத்திநெறிக்
கானவொழுக்கர்க்கருளுமரங்கநகரன்னையே. (100)
வாதிகேசரியழகியமணவாளச்சீயர்
தேவாதிகேசரி நின்கொழுநன்பெயர்ச்சீயர்புகழ்
ஓவாதிசைத்துய்யநீதிருவுள்ளமுவத்தியென்றுன்
தேவாதியர் தொழுஞ்சேவடியிற்சரண்சேர்ந்தனன்யான்
ஓவாதிருக்கோதரங்கநகரன்னையொண்மணியே. (101)
பரகாலதாசர்
பக்குவநெஞ்சப்பரகாலதாசர்பதத்துணையென்
சக்குவக்கக்கண்டு தாவங்கணீங்கத்தயை புரியென்
றிக்குவட்டிண்டையடியினிலில்லடையெய்தினனெண்
டிக்குவக்குஞ்சீரரங்கநகரன்னைச்செல்வவைப்பே. (102)
சீரங்காசாரியர்
தெருளார் செழுநடைச்சீரங்காசாரியர் சேவடியென்
இருளாரிதயத்திருத்தியுவானீயிழைத்தியென்றுன்
பொருளார் பூம்புண்டரிகப்பொற்பதத்திற் புகல்புகுந்தேன்
அருளாரரங்கநகரன்னையாமநந்தாக்கியையே. (103)
அழகியமணவாள நயினார்
நல்லவரேத்துநின்னாதன்றிருப்பெயர் நண்ணயினார்
பல்லவபாதம்பணிந்துய்யவன்புபணித்தியெற்கென்
றெல்லவர்போலொளிரிண்டையடிச்சரணெய்தினனூல்
வல்லவர்வாழ்த்து மரங்கநகரன்னை மாமணியே. (104)
பிள்ளைலோகாசாரியர்
அண்ணன் முடும்பைலகாரியன்கலையார்பொருளென்
திண்ணன்னுளத்திற் றிகழ்த்துவிப்பாயென்றுன்சேவடியாங்
கண்ணன்மலர்களிற்கையடைபுக்கனன் காந்துமணி
வண்ணன்மகிழுமரங்கநகரன்னை வான வியே. (105)
கூரகுலோத்தமதாசநாயன்
சாந்தகுண னங்கள்கூரகுலோத்தமதாதர்பத
காந்தமென்னெஞ்சக்கரும்பொற்கவரக்கணித்தியென்றுன்
சேந்தகமலத்திருவடியிற்சரண்சேர்ந்தனன்செங்
காந்தளங்கையாயாரங்கநகரன்னைக்காஞ்சனமே. (106)
விளாஞ்சோலைப்பிள்ளை. இவர்க்குநலந்திகழ் நாரணனென்றுந் திருநாமம்
விஞ்சியயோகிவிளாஞ்சோலைப்பிள்ளைவிரையடியென்
நெஞ்சினில்வைத்துத்துதித்துய்யும் வண்ண நினைத்தியென்றுன்
கஞ்சவடிகளிற்கையடைபுக்கனன்காதரரை
அஞ்சலென்றாளுமரங்கநகரன்னையாந்திருவே. (107)
மணப்பாக்கத்து நம்பி
ஊக்கத்துடன்றன் குரவனையுன்னுமுளத்துமணப்
பாக்கத்து நம்பிபதந்தொழுதுயப்பணித்தியென்றுன்
ஆக்கக்கழலிலடைக்கலம்புக்கனனன்பர்மனத்
தேக்கத்தை நீக்குமரங்கநகரன்னையின்பவைப்பே. (108)
கொல்லிகாவலதாசர். இவர்க்குக்கோட்டூர் அழகியமணவாளப்பெருமாளென்றும் பெயர் ஆவலறுத்தோர்க்கருளுங்குணநிதியானகொல்லி
காவலதாசர்கழறொழுதுய்யக்கணித்தியென்றுன்
பூவலர்பாதம்புகல்புகுந்தேன் புன்மை போக்குமறை
நாவலரேத்துநலத்தாயரங்கநகரன்னையே. (109)
கோட்டூரண்ணர்
வண்மைக்கோட்டூரண்ணர்வாரிசத்தாளைவழுத்தியென்றன்
தண்மைச்சனனந்தவிர்ப்பானுளத்தெண்ணித் தாழ்வொன்றில்லா
உண்மைச்சுருதித்தலைவாழ்நின்றாளிலுவந்தடைந்தேன்
ஒண்மைக்கருணையரங்கநகரன்னையுத்தமியே. (110)
திருக்கண்ணங்குடிப்பிள்ளை
கண்ணங்குடிப்பிள்ளைகண்ணருளாலென்கடுவினையைத்
திண்ணங்குடியெவணெனும் புகுவிக்குஞ்சிந்தையனாய்
வண்ணங்குடி கொணின்வண்பதமெய்தினன்மாசறுத்தோர்
எண்ணங்குடிகொளரங்கநகரன்னையிந்திரையே. (111)
திருப்புட்குழிச்சீயர்
திருப்புட்குழியமர் சீயர்திருவடிசேர்ந்துபெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவநீக்கநினைத்துநின்றன்
திருப்புட்கரச்சேவடிச்சரண் சேர்ந்தனன் சீதமதித்
திருப்புட்கரிணியரங்கநகரன்னைச்செய்யவளே. (112)
திருவாய்மொழிப்பிள்னை
திருமலையாழ்வார் திருவாய்மொழிப்பிள்ளைசேவடியென்
கருமலைநன்மருந்தாவெண்ணிவாழக்கணித்தியென்றுன்
மருமலிதாளின் மறைபுகுந்தேன்றொண்டர்மாமனத்தின்-
பொருமலை நீத்தாளரங்கநகரன்னைப்பொன்மகளே. (113)
மணவாளமாமுனிகள்
மாட்சிக்குணத்தெம்மணவாளமாமுனிமணடியைப்
பூட்சிக்குரியவென்புந்தியில்வைத்துப்புனிதமுறக்
காட்சிக்குரியநின்காற்சரண்புக்கனன்காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியாயரங்கநகரன்னையச்சுதையே. (114)
அஷ்டதிக்கஜங்கள்
உண்டிக்குடைக்குழல்வேன்றொழுதுய்யவுவத்தியென்றுன்
எண்டிக்கிபங்களெனுமெண்மராரியரிண்டையடி
அண்டக்குலத்தாயரங்கநகரன்னையற்புதையே.
தொண்டக்குலந்தொழுந்தூவடியிற்சரண்டுன்னினனால் (115)
[*] நானெறிப்பட்டகுரவர்பலரவர்நாமம்வண்சீர்
நூனெறிகண்டுநுவன்றுநிற்சார்ந்திடுநோன்மையிலேன்
ஏனெறிகாறுமியம்பிநினைச்சரணெய்துமெனை
மேனெறியுய்த்தாளரங்கநகரன்னை மெய்ப்பொருளே. (116)
----
[*] (1) ஆச்சிரயணகுருபரம்பரை. (2) இரகசியகிரந்தகுருபரம்பரை.
(3) திவ்வியப்பிரபந்தவியாக்யான குருபரம்பரை.
(4) ஸ்ரீபாஷ்ய சுருத ப்ரகாசிகாகுருபரம்பரை.
----
சிருட்டி முதலிதுகாறுமெடுத்தசெனனந்தொறும்
மருட்டிவருமனமாதியிற்செய்தவழுவறுத்தெற்
றெருட்டிப்பணிகொளெனப்புகல்புக்கனன் செய்யவருட்
டிருட்டிவைத்தாடியரங்கநகரன்னைச்செய்யவளே. (117)
தெருட்கடல் செய்மதித்திண்மையைத்தேய்த்துத் தெறுமவித்தை இருட்கடல்வற்றவிழைத்தியென்றுன்னையிரந்தடைந்தேன்
அருட்கடலேயெனையாளுதியாரணத்தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்கநகரன்னைப்பூமகளே. (118)
ஒருகாலெனப்பலகாலுளத்தார்த்தியுவட்டலினின்
இருகாற்கமலத்திடைச்சரண்புக்கனனேன்றெனைநின்
பெருகாரருட்கிலக்காக்கனினக்குப்பெருமையதாம்
முருகார்குழலாயரங்கநகரன்னை முன்னவளே. (119)
ஊக்கத்தொடுநின்னுபயவடிகளினுற்றவன் பின்
ஓக்கத்தொடுசரண்புக்கவென்மீதுன்னுளமிரங்கிக்
காக்கக்கருதிடினின்பேர்கருணைக்கடலெனலாம்
ஆக்கத்துணைவியரங்கநகரன்னையம்புயையே. (120)
குற்றமென நூல் குறிக்கின்றயாவைக்குங்கொள்கலனா
யுற்றவெளியனையோம்புமவரிவ்வுலகுதனில்
நற்றவர்போற்றுமரங்கநகரன்னை நாயகியே.
அற்றவனாய்நின்னடியிணையம்புயமண்டைகொண்டேன் (121)
புறவொன்று தன்பாற்புகுவேடன்றன்னைப் புரந்து துண்டல்
உறவொன்றுகொண்டு நின்னொண்கழலிற்சரணுற்றடைந்தேன்
துறவொன்று தூயவர் நெஞ்சத்தொளிருஞ்சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்கநகரன்னை நாயகியே. (122)
கண்டுமுனிவரன்கட்டுரையின்படிக்கையடைநிற்
கண்டுபுகுந்தோனெவனாயினுமவற்காத்தனன்றாம்
விண்டுகைசோரவிடறீதுமெய்யின்பவீடளிக்கும்
விண்டுவின்பன்னியரங்கநகரன்னைவித்தகியே. (123)
அறத்திற்கடைப்பட்டவாதனின்பாதவரணடைந்தேன்
அறத்திற்குறவிலனாயினுநீயெனையாதரித்தல்
அறத்திற்சிறந்தவறமென நூல்களறைந்து நிற்கும்
அறத்திற்கருந்துணையாகுமரங்கநகரன்னையே. (124)
பல்வழியானும்படர்படச்சன்மப்பரவைக்கும்
அல்வழிகாட்டியடியனைக்கூத்துக்களாட்டி நிற்கும்
வல்வழிமாயையைமாய்ப்பானினைச்சரண் வந்தடைந்தேன்
நல்வழிசேர்த்தியரங்கநகரன்னைநாயகியே. (125)
பிறவிப்பிணிக்குப் பெரும்பீரடைந்ததைப்பேர்த்திடுநின்
அறவிப்பிரர்தொழுமம்புயத்தாளிணையண்டை கொண்டேன்
மறவிப்பிரமமொழித்துனையேத்தும்வரமருள்வாய்
துறவிப்பிரியவரங்கநகரன்னைத் தூயவளே. (126))
பிறப்பினையெண்ணவென்னெஞ்சந்திடுக்கிட்டுப்பீரடையும்
இறப்பினையெண்ணவிதயம்விதிர்விதிர்த்தேங்கிநனி
விறப்பினை நண்ணுமதனானினைச்சரண்வேட்டடைந்தேன்
சிறப்பினை நல்குமரங்கநகரன்னைச்செய்யவளே. (127)
பத்தியிலாதவன் பாமரன்பாதகன்பற்றுமனச்
சுத்தியிலாதவன் சொல்கவிச்சொற்பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாளநின்முண்டகத்தாளின் முயன் றடைந்தேன்
நத்தியெற்காத்தனலமாமரங்கநகரன்னையே. (128)
போற்றி திருமுகம் போற்றிகருணை பொழிதிருக்கண்
போற்றிபுன் மூரலதரங்களங்குழை பூண்டகன்னம்
போற்றிவரதாபயகரமுந்திபொலியுரம்
போற்றியரங்கநகரன்னை பொங்கொளிப்பொன்னடியே. (129)
வாழியரங்கமதவளமன்னதில்வாழ்முகுந்தன்
வாழியரங்கநகரன்னை நாளும்வளர்கருணை
வாழியிருமறையாழ்வார்களாரியவர்க்கமென்றும்
வாழியெதிபதிதிப்பியவாணையிவ்வையகத்தே. (130)
வைப்பாமரங்கநகரன்னை தாளில் வயங்குசத
முப்பான்கவியாலடைக்கலமாலை மொழிந்தனனால்
ஒப்பாரிலாவைணவர்பதமுள்வைத்துவப்பவர்பாற்
பப்பார்பரிவினன்பள்ளிகொண்டானெனும்பாவலனே.
அரங்கநகரன்னை யடைக்கலமாலை முற்றிற்று.
---------------------
This file was last updated on 02 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)