பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 15
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப்பரஞ்சுடர் மாலை.
tiruvallikENip pArtacAratip paranjcuTar mAlai
(paLLikoNTAn piLLai pirapant tiraTTu - part 15)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பள்ளிகொண்டான் பிள்ளை
இயற்றிய பிரபந்தத் திரட்டு - பாகம் 15
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப்பரஞ்சுடர் மாலை.
Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு
இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப்பரஞ்சுடர் மாலை.
காப்பு.
மாமாலை நீக்கியருள் வண்பார்த்தசாரதிமேற்
பாமாலையொன்று பகரநெஞ்சே
நீமாக் குணவாளமாமுனிவர் கொண்டாடுநங்கண்
மணவாளமாமுனிதாள் வாழ்த்து.
மாமணிமாலையுர மன்பார்த்தசாரதிமேற்
பாமணிமாலை பகரநெஞ்சே - கோமணிபோல்
வாதூர்குதிட்டிமத வல்லிருடீரெல்லின்வந்த
பூதூர்முனிவரன்றாள் போற்று.
புவிமாலை நீத்தோர் புகழ்கண்ணன்றாளிற்
கவிமாலை நெஞ்சேகழறச் - செவியார
மாறன்புகழமுதே மாந்திவளர்மெய்ஞ்ஞான
மாறன் மலரடியே வாழ்த்து.
நூல்
அகரப்பொருளாயமைந்தோயனைத்துமமர்பவனே
உகரப்பொருளொடுமல்லியங்கேணியுறைபவனே
மகரப்பொருளென்மனத்தென்றும் வாழமகிழ்தி நல்லோர்
பகரப்பொருள்பெறும்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (1)
உயிர்க்குயிராயதனூறுநினாதென்றுணர்பவனே
மயிர்க்குழிதோறுமருவும் பல்லண்டவகுப்பினனே
செயிர்க்குழிச்சிந்தையைச் செவ்வேதிருத்திச்சிறந்தபத்திப்
பயிர்க்குழியப்பணிப்பாய்பார்த்தன்பாகபரஞ்சுடரே.(2)
நித்தியவத்து நிகாய நிகிலமுநேர்ந்து நிற்குஞ்
சத்தியசத்தப்பொருளே சதாநந்தத்தன்மையதாம்
முத்தியதரின் முயன்முன்னமீதிமுதிர்ந்தபெரும்
பத்தியகத்துப்பயில் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (3)
மறைகேட்டுவக்கின்றமாப்பாற்கடற்கண்மகிமடந்தை
குறைகேட்டுவந்த குணக்கடலே கொடியேன் குறையும்
இறைகேட்டருடியியற்குடக்கூத்தினெடுத்தபெரும்
பறைகேட்கவெற்றியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (4)
கீரக்கடல் வந்து தேவர்கள் வாழ்த்தக்கிளாந்தவரைப்
போரக்கருணைபுரிந்தேயது குலம்போந்து திமின்
நாரக்கருளவருதுமென்றோயென்னலிவகற்றும்
பாரக்கடனினதேபார்த்தன்பாகபரஞ்சுடரே. (5)
நற்குணப்பூணணிதேவகி குக்கியினன்கமைந்த
சிற்குணப்பீளையுரோகணிதன்வயிற்சேர்த்தவனே
முற்குணப்பாவனமூடன்மும் மோகத்தை மோசனித்தாள்
பற்குனப்பேர்கொண்டபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே.(6)
புண்ணியமோருருக்கொண்டன்னதேவகிபொன்னகட்டில்
நண்ணியவீரறுதிங்களிருந்தவநாளுநல்லோர்
எண்ணியநின்னடியேத்தித்தொழவெற்கருளிருக்கின்
பண்ணியலல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (7)
ஆவணிமாதமபரபக்கத்தட்டமிதிதியிற்
பூவணிரோகணிப்பொன்னாளிலிப்புவிபோந்துதித்தாய்
தாவணியென்மனச்சஞ்சலந்தீர்த்திதகைப்புலவோர்
பாவணிதிண்புயப் பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (8)
ஆழிசங்கந்தமைக்கண்டஞ்சியன்னையவையொளித்தி
ஊட ழிமுதல்வவெனவொளித்தாயடியேனுளமோர்
நாழிகையேனுநின்னற்றாடொழுதுய்நலமளித்தாள்
பாழியந்தோளுடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (9)
பெற்றார்தளைவிடத் தந்தைகை மீதகிப்பிச்சமன்ன
வற்றாநதியும் வழிவிடநந்தன்மனைபுகுந்தோய்
செற்றாரிற்செல்லல் செயுந்தீவினை தனைத்தீர்த்தருள்வாய்
பற்றார் பயங்கரபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (10)
கஞ்சநிற்கொல்பவன்வேறுளனெற்றுமியாதிக்கத்தி
வஞ்சவெனவான்கரந்தபெண்மாயை வரவிடுத்தோய்
நெஞ்சநெகிழ்க்குநெடுந்துயர் நீக்கநினைத்தருள்வாய்
பஞ்சசரனன்னபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (11)
பூதனை மாய்த்தவகன்றொடுபாலரைப்போந்தொளித்த
போதனைமுன்னம்புரந்தவபுந்திழுக்கிற்கும்
வேதனைவீயவிழைந்தருள் வேட்டவர்வேட்டனதப்
பாதனைபோலருள்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (12)
பகாசுரன் கேசியரிட்டன் பிரலம்பன்பண்டிநின்றோன்
அகாசுரனாதியர்ச்செற்றோயடியகைத்துறையும்
அகாசுரனல்லலசுரனிவர்ச்செற்றருள்புரிவாய்
பகாசுரவைரிபின்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (13)
இணைமருதாகவெனவிட்ட சாவமியக்காற
அணையுரலோடுமணைந்தம் புயவடியாலளித்தாய்
கணையெனக்காய்ந்துகவற்றுங்கையாற்றைக்கடிந்தருள்வாய்
பணைவளவல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (14)
முஞ்சாரணியமுதிர்தீத்திரளுண்டு முன்னிரையோ
டஞ்சாயரையுமஞ்சேன்மினென்றோம்பியவையபொறிப்
பஞ்சாகுலங்களும்பாறப்பணித்தருள்பற்றலர்க்குப்
பஞ்சானனமன்னபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (15)
மடப்பிடியாயர்மடந்தையர்வத்திரம்வவ்விமுன்னர்க்
கடப்பினிலேறியது நற்கதிபெறக்கண்டவனே
கடப்பரிதாமென்கருக்கடல்வற்றக்கடைக்கணித்தாள்
படப்பையராவணையாய் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (16)
காட்டுவன்றீயைக்கணத்தினுண்டாயரைக்காத்தவனே
சூட்டுவன்னாகத்தின்மீது நடித்த துணையடியாய்
வாட்டுமென்ரன்மவருக்கமொழித்தருள் மாமறைநற்
பாட்டுமன்னல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (17)
நீண்டுவளர்ந்தவரையேழ்தினமாநிரைபுரப்பான்
பூண்டுநின்றாயைம்பொறிவெல்லுமாற்றைப் புரிந்தருள்வாய்
மாண்டுறுமைந்தனைத்தக்கணையாய்மறையோற்களித்தாய்
பாண்டுபயந்தருள்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (18)
நந்தனைக்கொண்டோரசுரன்புனற்கிறைநாட்டினுய்க்க
முந்தனையோனைக்கொணர்ந்தோயிம்மூடனுமுத்திபெறச்
சிந்தனைசெய்திதிருவல்லிக்கேணியசேர்ந்தவன்பர்
பந்தனைதீர்ப்பவபாரத்தன்றன்பாகபரஞ்சுடரே. (19)
கோவமொடாயரைவவ்வியவிஞ்சையக்கோளரவின்
சாவமொருவிடத்தைவந்ததாட்டாமரைத்தலைவ
சாவமொழியிற்சவட்டுந்துயரைத்தணத்தியன்பர்
பாவமொழிப்பவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (20)
வந்தனஞ்செய்யாதிகழ்காழியனை வதைத்துமணச்
சந்தனந்தந்தவக்கூனிக்குச் சந்தத்தனுவளித்தோய்
உந்தனலேறாமுறுவலொரீஇயென்னுளத்தை நின்பாற்
பந்தனஞ் செய்தருள்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (21)
கஞ்சனும் விட்டகளிறுங்களிற்றைக்கடவிவந்த
வஞ்சனுமல்லருமவானுறச்செய்தவவல்வினையேன்
நெஞ்சநெகிழ்வுற்று நின்னை நினைக்க நினைத்தருள்வாய்
பஞ்சவர் தூதுவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (22)
சீரதர்தேர் தெருள் சேரக்குரூரனச்சிந்துவினுந்
தேரதன்மீதுந்தெரியநின்றோயென்றிருக்கறுத்தாள்
நீரதமூரும்பொழிலல்லிக்கேணி நிகழமலா
பாரதபண்டனப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (23)
மாத்துப் பிதழியர்மத்திமமத்திமமன்னியங்கை
கோத்துப்பரதக்குரவைசெய்தோயென்குறைமுடித்தாள்
ஒத்துப்பயிலல்லிக்கேணியுறைபற்றவர்க்குப்
பாத்துப்பருகிடும்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (24)
சேணியன்றந்தபொற்சேலையுடுத்து நற்செல்வநல்ல
வாணியவற்குவழங்குங்கருணைமகோததியான்
பூணியறுன்பம்பொருக்கெனப்போகப்புரிதிவல்விற்
பாணியனாகியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (25)
மணவாசிகை நல்குமாச்சுதன்மாமீமலர்க்கணிறீஇக்
குணவாளநின்குலம்வாழ்கவென்றாசிகொடுத்தவனே
தணவாதவென்சன்மசாகரம்வற்றத்தயை புரிவாய்
பணவாளராப்பகைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (26)
அருத்தியொடுக்கிரசே நற்கணிமகுடங்கவிப்பான்
மருத்தினைக்கொண்டு சுதன்மையை மண்மிசைவைத்தவனே
விருத்தியடையென் வினைத்துயர்வீயவிழைந்தருள்வாய்
பருத்திவர்தோளுடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (27)
காலயவனற்கடிவான்முசுகுந்தற்கண்டவற்குக்
காலவினையொன்றுமில்லாக்கதிதந்தகற்பகமே
ஓலமிடுமென்னுறுவலொழித்தியுயர்மகவான்
பாலனெனப்படும் பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (28)
குண்டினமாபுரநங்கையுருப்பிணியைக்கொணர்ந்து
வண்டினமார்காத்துவரைப்பதியில்வதுவைசெய்தோய்
தொண்டினனெஞ்சத்துயர்துடைத்தாள்சுடராழி தொட்டுப்
பண்டினனைப்புதைத்தாய் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (29)
அம்பரமீதிலகிதனெனக்கொண்டழுத்தியவச்
சம்பரனைப்பிரத்யும்நனைக்கொண்டு சதித்தவனே
அம்பரமென்னவகை துயர் தீர்த்தியடற்சிலைசேர்
பம்பரமொய்ம்புடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (30)
சாம்பவனோடமர்செய்தவன்வாழ்த்துந்தகை மணியுஞ்
சாம்பவதியுமவன்றரக்கொண்ட சநார்த்தனனே
தீம்பரினென்னைத்தெறுந்தீ வினையைச்செகுத்தருள்வாய்
பாம்பரிவைப்பதியாம்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (31)
நத்தியமாமணிசத்ராசித்துக்கன்பினல்கியவன்
சத்தியபாமாமணிதரக்கைப்பற்றுந்தத்துவவென்
தத்தியலையுமனநிலைநிற்கத்தயை புரிவாய்
பத்தியமைந்தோர்க்கருள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (32)
சரதநினைப்பெறவெண்ணியமுனைத் தடங்கரைக்கண்
விரதமியற்றியகாளிந்திதேவியைவேட்டவனே
வரதநினைமனம்வைத்து வழுத்தியு வண்ணஞ்செய்வாய்
பரதகுலோத்துங்கப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (33)
சித்திரமாருமவந்திக்கிறையவன் செல்வியெனும்
மித்திரவிந்தையைத்தேரிற்கொணர்தந்து வேட்டவனே
குத்திரமாரென்கொடுவினைதீரக்குறித்தருள்வாய்
பத்திரவில்வண்மைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே.(34)
குண்டைகளோரேழ்தழுவியயோத்தியர்கோன்மகளாங்
கெண்டைவிழிச்சத்தியைமணஞ் செய்தருள் கேசவனே
தண்டையணியுநின்றாடொழுதுய்யத்தயை புரிவாய்
பண்டைமறைபுகழ்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (35)
கீர்த்திபெறுகேகயர்கோன் பயந்தகிளிமொழிசீர்ப்
பூர்த்திபெறும்பத்திரைமாதை மன்றல் புரிந்தவனே
ஆர்த்தியடியனையார்த்தவசித்தினடியறுத்தாள்
பார்த்திவர்போற்றிடும்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (36)
நீர்கெழுமாவளமத்திரதேயநிருபனருள்
வார்கெழு கொங்கையிலக்குமணையை மணந்தவநின்
சீர்கெழுசேவடிசிந்தைவைத்தேத்துந்திறனளித்தாள்
பார்கெழுகீர்த்தியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (37)
அரணாறழித்தடலார்நரகன்பதியண்மிவிட்ட
முரணானதண்டைமுறித்து முரனை முனிந்தவனே
சரணாகதனென்றன் சன்மவிடாயைத் தணித்தருணற்
பரணாயதவுரப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (38)
மத்தத்துயர்நரகற்செற்றவன்றன்மதலைபக
தத்தற்குத்தாமமுடிதரித்தாய் சரண்சார்தமியன்
பத்தர்க்கெளியவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே
சித்தத்திருந்து தினந்தினநின்றிருச்சேவைதந்தாள் (39)
மணப்பாரிசாதங்கொணர்ந்து மகிநட்டுமா வருணன்
வணப்பாற்குடையுமதிதிகுழையும் வழங்கியவா
கணப்பாதகத்தைக்கழித்தாளனின் கடன்காளியன்றன்
பணப்பானடித்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (40)
சொன்னயமார்பதினாறாயிரந்தொகைத்தோகையரை
அன்னவெண்பெற்றவுருக்கொடுவேட்டருளச்சுதனே
இன்னலிரித்தென்மனநினையெண்ணவிசைத்தருள்வாய்
பன்னநுமக்கொடிப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (41)
மருமணிக்கூந்தலம்மாணிழையார் தம்மனைதொறும்புக்
கிருமணிக்கண்கண்டொருமுனிநாரதனேன்றுதொழுங்
கருமணிவண்ணகடையனைக்காத்திகவுத்துவப்பேர்ப்
பருமணிமார்பத்தபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (42)
வயங்செழுவாகுறுவாணனை வென்றவன் மாமகளை
முயங்கவநிருத்த மூர்த்திக்கருளியமுன்னவனே
மயங்கமதிதருமாயையை மாற்றுதிமாற்றலர்க்குப்
பயங்கரனாகியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (43)
நதிபதிநாதனரலைக்கண்வவ்வியநல்லிடத்தை
விதிபதி விண்ணோர் வியன்புனைவற்கொண்டுவேய்சிகர
மதிபதிமாடத்துவரைப்பதிசெய்துமன்னியதிற்
பதிபதியேயெனையாள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (44)
தீயசராசந்தனைச்செகுவித்தவன்சேட்சிறையின்
மேயசராசன வேந்தர்களேகவிடை கொடுத்தோய்
ஆயசராமரணாதிகணீக்கியடியனையாள்
பாயசராசரத்தாய்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (45)
வைவளர்வேலைவர்செய்ராயசூயமகமுகத்துக்
கைவளரக்கிரபூசனை கொண்டருள் கார்வணனே
மைவளரென்மனமாயையை மாய்த்தருள்வாரிதியிற்
பைவளர் பாம்பணையாய் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (46)
மாசுபதிசாலுவனைவிமானத்தைமாவரத்தைத்
தேசுபதிதிண்ணகரைச்செயிர்த்துச்சிசைத்தவனே
ஆசுபதியென்னகவகநீக்கியருளரன்பாற்
பாசுபதம்பெற்றபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (47)
அண்டர்களேத்து நின்னம்புயத்தாள்களிலன்புடனின்
றொண்டர்கடொண்டன்சொலுமுறை கேட்டென்றுயர்
துடைத்தாள் த ண்டகரத்தந்தவக்ரனுந்தம் பியுஞ்சாய்ந்தொழியப்
பண்டமர்செய்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (48)
காவன் மிதிலைப்பகுளாச்சுவனற்கலைச்சுருத
தேவன்றிகழ்தத்துவந்தேறச்செப்பியசிற்பரனே
பூவன்னநின்பதம்புந்தியில்வைத்தெற்புரத்திமறைப்
பாவன்னப்பாகன் பணிபார்த்தன்பாகபரஞ்சுடரே. (49)
தத்தவநீங்கநின்றாள்களையுள்ளச்சரேரருகங்கொள்
உத்தவர்க்குண்மைப்பொருளுபதேசித்தவுத்தமனே
சொத்தவநீக்கிப்புரக்குங்கடமைசுவாமியதே
பத்தவதாரபரபார்த்தன்பாகபரஞ்சுடரே. (50)
சத்துவவுத்தவர்கேட்ட வினாவிடைதந்துமுனந்
தத்துவவெண்ணிடைச் சந்தேகந்தீர்த்திட்டதற்பரனே
தத்துவமாவெற்சவட்டும்வினையைத்தவிர்த்தருள்பேர்
பத்துடனொன்றுளபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (51)
ஏறுபடுகொடியான்வரமெய்தும்விருகனென்போன்
நீறுபடும்படியான விரகு நினைத்தவனே
மாறுபடுமென்மனநோயொழியமகிழ்குழுமிப்
பாறுபடுபடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (52)
கதக்கணன் காசிநகர்க்காவலனவன்காதலாஞ்
சுதக்கணன்கூளிதொலைந்தோடநூறுஞ்சுதரிசனா
சுதக்கணத்தென்னுளந்தோயாதருள் செய்துருவனைநற்
பதக்கணமைத்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (53)
திருவருமார்பநினையன்றியென்னைச் சிறந்தளிப்போர்
ஒருவருமில்லையென்னூழ்வினைக்கூட்டமொழித்தருள்வாய்
வெருவருதோற்றப்பவுண்டரிகற்செற்றிம்மேதினியின்
பருவரனீத்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (54)
அணித்தடைந்தற்றையழனையடியில்வைத்தன்பு செய்த
மணித்தடங்காதற்குந்தம்பிக்குமுத்தியின் வாழ்வளித்தாய்
கணித்தடங்காவென்னுளக்கம்பலையைக்கழித்தருள்வாய்
பணித்தடங்காப்புகழ்ப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (55)
வசுபாலனஞ் செய்துவானோர்க்கவியீமகத்தினுற்ற
வசுபாலனநடைவாணுதற்காடைவளர்த்தியவா
சிசுபாலனுக்குந்திருவடிதந்தருள்செல்வநிரைப்
பசுபாலன வெனையாள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (56)
சங்கசூடன் கோவியர்ச்சிறைகொள்ளச்சவட்டியுச்சி
அங்கமணியறுத்தண்ணற்கடியுறையாகவைத்தோய்
சிங்கமெனப்பாய்ந்தொறுக்கும் வினையைச்செகுததருள்வாய்
பங்கயநேத்திரபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (57)
தீஞ்சாலிப்பண்ணைதிகழல்லிக்கேணிச்சிரீதரவிண்
ணீஞ்சாலிமேகநிறத்தாய் கெஞ்சத்துயர் நீங்கவரு
ளாஞ்சாலிதந்தாளகற்றவகற்றவறாப்புடவை
பாஞ்சாலிக்கீந்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (58)
கோவகத்தோங்குகுன்றக்குடையாய்கொழுமாமறையின்
பாவகத்தோங்கும்பரமநிற்பாடப்பணித்திகற்பக்
காவகத்தேமகிழ்சா ரூர்கரியவன்காண்டவ த்தைப்
பாவகத்தேவற்கருள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (59)
துணைக்காலவேற்றுமைதோன்றிடநாடொறுந்தோன்றிமறை
இணைக்காலிலாதவிரதனையென்மறைத்தோயெனையாள்
கணைக்காலகேயநிவாதகவசக்கருதலர்ச்கோர்
பணைக்காலனாகியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (60)
கங்கைமசன்முன்சழறிய கட்டுரைகாத்திடுவான்
செங்கையிற்றேசுதிகழாழியேந்திய சேவச பொய்ச்
சங்கை கடந்து தபுக்குமவித்தைதபுத்தெனையாள்
பங்கயனேத்தும்பதபார்த்தன்பாகபரஞசுடரே. (61)
வல்லிக்குறுகிடையாளொடுமைவர்மனந்தெரிந்து
நெல்லிக்கனிமரமேறநினைந்தவநித்தமெனைப்
புல்லிக்கவற்றும்புகர்வினை போக்குதிபோந்தமுதர்
பல்லிக்கண்வாழ்ந்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (62)
அக்கயபாத்திரத்தன்னத்தை மோந்தரனார்கலையான்
புக்கயமாடும்பொழு துதரக்கனல் போக்கியவா
செக்கயரெண்ணிறசிதையுமென்னெஞ்சநின் சீரடியார்
பக்கல் பயிலச்செய்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (63)
இச்சைச்சுடுநஞ்சிலஞ்சியினை வர்க்கிறுதியின்றி
மிச்சைச்சுயோதனன் விட்டவெங்கூளியைவெல்விரகா
கொச்சைச்சிறியற் குறிக்கொண்டுகாத்திகுலவடியர்
பச் ச்சைச்சுரதருவே பார்த்தன்பாகபரஞ்சுடரே. (64)
பரித்தாமன்விட்டபகழியினுத்தரைபண்டிதன்னுட்
கரித்தாமமானகருவுக்குயிர்தந்தகாற்கமலா
எரித்தாமமென்னவெரிக்குமென்னின்னலிரித்தருள்வாய்
பரித்தாமக்குக்கியபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (65)
தொண்டு செயாவகை தொல்லைவினைப்பயன்றூண்டவந்து
மண்டுமனத்துயர்மாற்றிடுவாய்மறைவேதியற்கு
விண்டுமுன் மீளாப்பதம்புக்கமைந்தரை மீட்டுவந்து
பண்டுகொடுத்தவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (66)
அத்தத்தெடுத்தவ்வறிஞர்குசேலரவலயின்று
சித்தமகிழ்ந்து கிருவெட்டுநல்நியசிற்பானே
நித்தநினை நினைத்துன்மலர்ப்பதநீழல்வைப்பாய்
பத்தனெனப்படும் பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (67)
பார்ப்பார் கஞ்சாவத்திற்பச்சோந்தியாகியோர் பாழ்ங்கிணற்றின்
நீர்ப்பானிலவு நிருகுககருள்செய்த நின்மலனே
போர்ப்பாலதுன்பினைப்போக்கியருளுதிபொற்புகழைப்
பார்ப்பாற்படைத்தவனாம் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (68)
வராதீனமென்னடியார்க்கென்றவநித்தர்வாழ்வை குந்த
புராதீனர்ச்காக்கும்புத்தேட்டருவேமணப்பூங்கமலக்
கராதீனனெண்ணங்கை கூட்டுதியுள்ளங்கசியும்பத்த
பராதீனனான வபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (69)
விதிநிலைபெற்றநின்வேக நெறியைவிழைந்தொழுசா
மதிநிலை பெற்றவிம்மண்ணை படியனின்மாமலர்த்தாள்
கதிநிலையென்றடைந்தேன்காத்தருளெக்கடவுளர்க்கும்
பதிநிலையானவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (70)
உன்னியுமேத்தியுமுன்றாள் வணங்கியுமோவலின்றித்
துன்னியத்துக்கமுந்தோலாத்துணுக்குந்தொடர்ந்தெனுழி
மன்னியகாரணமாக்கீதை சொன்மலர்வ வாய்திறந்து
பன்னியருளுதிபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (71)
ஒருகானின்னாமமுரைக்கிற்பவங்களொழியுமென்
அருகாமறைகளனந்தமுங்கூறுமல்லும்பகலும்
உருகாநின்னாமமுரைத்துமவையொழியாவிதமென்
பருகாரமுதனையாய்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (72)
எண்ணேயு நெய்யெனவெப்பொருட்கண்ணுமிருப்பவனே
கண்ணேகருணைக்கடலே நீயென்னுளக்கண்ணிலையோ
உண்ணேர்ந்தொறுக்குமுறுவற் குழாந்தனையோர்ந்திலையோ
பண்ணேபண்ணின் சுவையே பார்த்தன்பாகபரஞ்சுடரே. (73)
ஆற்றுந்துயரளித்தாணிற்கறமாமடைமழைபோல்
ஊற்றுந்துயரமொறுக்கின்றதென்னையுறமெலிந்தேன்
போற்றுந்தமியனைப்போற்றியருடிபொருந்தலரைப்
பாற்றுந்திறலுடைப்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (74)
எற்றுந்துயர்செய்தொறுத்தலெவர்க்குமினிமையதே
மற்றுந்தவறன்றவரவர்க்கேற்பனவாய்ந்து செய்
முற்றுந்தகுவது மூவா முதல்வமுற்றுந்துறந்தோர்
பற்றும்பதயுகபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (75)
எல்லாமுணர்பவயாவுமுறைபவயாவுஞ்செய்ய
வல்லாய்நினக்கென்வருத்தம்வரைந்திடல் வண்மையன்றோ
அல்லாவிடினின்றிருவருட்கஃதிலக்கானதன்றோ
பல்லாரமார்பொளிர்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (76)
பிரமமெனப்படும் பேரின்பசாகரப்பேரநல்ல
சரமநெறிசார்பவர்க்கருளும் பரந்தாமவென்றன்
சிரமமறும்பகல் சேய்த்தண்மைத்தென்று தெரியகிலேன்
பரமதயாநிதியேபார்த்தன்பாகபரஞ்சுடரே. (77)
வெய்யத்தின் வெய்தென்வினையது தன்னால் விளைபயனை
நொய்யரினொய்யவனோற்ககிலேனின்றனோன் கழல்சேர்
செய்யவடியடைந்தேன்றிருவுளளச் செயலெனையோ
பையரவப்பள்ளியாய் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (78 )
ஏகனெனவுமநேகனெனவுமிலங்கமலா
மூகனெனத்துயர்மூழ்குமென்னெண்ணமுடித்தருள்வாய்
ஊகனெனவாநிரை மீட்டற்கூக்கியவுத்தரன்றேர்ப்
பாகனெனவந்தபார்த்தன்றன்பாகபரஞ்சுட ரே. (79)
எத்தனைகாலுமிடைவீடிலாமலிடரெனும்பேர்க்
கொத்தனைத் துங்குடி கொண்டு குமைக்கக்குழைந்து நிற்குஞ்
சித்தனை வேறோர்களைகணிலாதசிறுவனையிப்
பத்தனையாளுதிபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (80)
திக்கியலாகியதேவாதிதேவவென்றீயமனப்
பொக்கியல்போக்கிப்புகல்புகுவித்துப்புலைப் பிறவி
சிக்கியவென்னைத்திதித்தருள் வேதத்திருவுருவப்
பக்கியம்பாகநற்பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (81)
முழுவந்தரைத்துணைபற்றிய மூடரின்மூடனென்பில்
புழுவந்திற்புல்லியன் பொல்லாவொழுககன்பொறுக்கவொணா
வழுவந்தமில்லவனேனும் பொறுத்தென்றன்வல்வினையாம்
பழுவந்தனைப்பறித்தாள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (82)
இயங்குதிணையியங்காத்திணையென்னுமிருவகையா
யுயங்குமுயிர்களினாயேனொருவனுணர்வவிந்து
மயங்குபு செய்தமறநீக்கியென்றுமலிபிறவிப்
பயங்குடிபோகப்பணிபார்த்தன்பாகபரஞ்சுடரே. (83)
நடைப்படுமிவ்விளையாட்டு விபூதிநடிப்பவருட்
கடைப்படுவேனிற்கடைப்பிடித்துய்யக்கடைக்கணித்தாள்
துடைப்பவதொன்று தொடர்ந்தவினையின்றொடர்புகொண்டு
படைப்பவகாப்பவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (84)
உடையவளீயிவ்விபூதியிரண்டை தியிரண்டையுமோர்ந்து நினை
அடையடியேற்கு நினக்கு முறவினமைதியுண்டு
தடையறத்தாங்குங்கடனினதாகுந்தயங்கிடுமைம்
படையமர்நாற்புய பார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (85)
விரிபவநோய்க்கு மருந்தேயந்நோயை விளைவிதையை
அரிபவனேயம்புயாதனவந்தணனாயிரங்கணய
அரிபவனாதியர்க்கும்மரியாயென்னகத்துயரும்
பரிபவமுந் துடைத்தாள் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (86)
அரிதேர் மறையுமறியவென்றாய்ந்தோரறையமலா
அரிதேர் மலர்ப்பொழிலல்லிக்குளத்தவராக்கவர்ந்து
நெரிதேரை தன்னிலை நேர்ந்தேனைக்காத்தி நெருப்பிறைபாற்
பரிதேர்முதற்பெற்றபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே.(87)
ஈண்டிய வெவ்வினையால் வந்திகல் செயிடரிரிப்பான்
வேண்டியநல்கு நின்றாளடைந்தேனிடர்வேலைதனைத்
தாண்டியடியனந்தாமமடையத்தயைபு ரிவாய்
பாண்டியன் பெண்கொண்டபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (88)
வட்டப்பரவையின் வற்றாது நாளும்வளருமென்றன்
துட்டப்பவப்பிணிதொட்டுக்கவற்றறொலைத்தருள்வாய்
சட்டப்படித்துட்டரைச்செற்று மும்மைச்சகத்தும்வெற்றிப்
பட்டப்பெயர்கொண்டபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (89)
சத்தியஞ் சத்தியஞ் சத்தியநின்றாட்சரணடைந்தேன்
தத்தியலையிற்றடுமாறுளத்தை நின்றான்மலரின்
மெத்தியவன்புடன்மேவவருள்செய்வியன்மனையின்
பத்தியவல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (90)
வெம்பிவெருட்டும்பவவீரை தாண்டிடவேண்டி நின்றாள்
அம்பியையன்னையுருப்பிணிநங்கை முன்னாய்ந்து பற்றி
நம்பியுளவென்னடலையை நீக்குதிநாண்மலர்க்காப்
பம்பியவல்லிக்குளப்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (91)
கருப்பதநீக்கிக்கனிவோரைக்காத்தருள் கண்ணகரி
மருப்பதஞ்செய்தவவென்றாயுருப்பிணிமங்கைமுன்னின்
திருப்பதஞ்சேர்ந்துபுகல் புகுந்தேனென்றிருக்கறுத்தாள்
பருப்பதநற்குடையாய் பார்த்தன்பாகபரஞ்சுடரே. (92)
சரணாகதியின்றருமமறிந்ததலைவநின்றாள்
அரணாகநம்பியுருப்பிணிநங்கையென்னன்னைமுன்முக்
கரணாகவமற்றடைந்தேனருள் செய்கவுத்துவவா
பரணாகதாதரபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (93)
உவரோதஞாலத்தொருதுணையில்லாவுனதடியேன்
இவரோதிமநடையன்னையுருப்பிணியிந்திரைமுன்
தவரோகைகொண்டுதொழுந்தாளடைந்தேன்றயை புரிதி
பவரோகபண்டிதபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (94)
முன்னவ நீ முன்னின்முற்றாவினையில்லை மொய்த்துவரை
மன்னவநின்றாளுருப்பிணித்தாய் முன்மறைபுகுந்தேன்
என்னவமானமுமேக்கமுநீக்கியென்னெண்ணமொன்றும்
பன்னவமாகாதருள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (95)
கராமுகஞ்செற்றுக்களிறொன்று காத்தருள் கண்ணநின்றால்
குராமுகப்பூங்குழலென்றாயுருப்பிணிக்கோதை முன்னித்
தராமுகத்தேசரண்சார்ந்தேனெனது தனிமனுவைப்
பராமுகஞ்செய்யாதருள்பார்த்தன்பாகபரஞ்சுடரே. (96)
சங்கயல்வாவியல்லிக்குளச்செல்வநின் சேவடியிற்
றிங்கள்வதனவுருப்பிணித்தாய்முன்னர்ச்சிந்தையன்பு
பொங்கவடைக்கலம்புக்கனனென்னைப்புரந்தருள்வாய்
பங்கயனேத்தும்பதபார்த்தன்பாகபரஞ்சுடரே. (97)
நீதாவல்லிக்குளநாதாநின்றாளினிகிலசகந்
மாதாவுருப்பிணிநங்கைகரியாமறைபுகுந்தேன்
தாதாவென்சன்மந்தவிர்த்தருள்வாய் தண்ணந்தாமரைப்பூ
பாதாபஞ்சாயுதபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (98)
நலதேவகிநந்தனதாயுருப்பிணிநங்கைமுன்னர்ப்
பலதேவர்போற்றுன்பதஞ் சரண்புக்கனன்பத்தர் தங்கள்
குலதேவவென்னைநினதடியார்குழுக்கூட்டுவிப்பாய்
பலதேவன் பின்னவபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (99)
தேவவிபூடணதேவகிதேவி சிறுவபவத்
தாவவிபாவரிச்சார்பைத்தணக்கச்சமைந்தகதிர்த்
தீவவிபாகரநின்னடியார்பணிச்செல்வந்தந்தாள்
பாவவிமோசனபார்த்தன்றன்பாகபரஞ்சுடரே. (100)
வாழியல்லிக்குளம் வாழியருச்சுனன்மாவலவன்
வாழியனந்தவலாயுதன்வாழியுருப்பிணித்தாய்
வாழிநஞ்சாத்தகியாழ்வான் பிரத்யும் நவண்பெயரோன்
வாழியநிருத்தவள்ளலெஞ்ஞான்றுமிவ்வையகத்தே. (101)
கயற்பெயர்செய்புடை சூழல்லிக்கேணிக்கடிநகர்வாழ்
மயற்பெயர் கீதையுரைத்தாற்குநூறுசொன்மாலையென்றும்
அயற்பெயர்த்தேவறியாப்பள்ளிகொண்டா னெனவறையும்
இயற்பெயரானமமெதிராசதாசனியற்றினனே. (102)
பார்த்தசாரதிப் பரஞ்சுடர் மாலை முற்றிற்று
--------------------
This file was last updated on 02 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)