pm logo

விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது

vivEka cintAmani
(moolam verses with urai)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading, correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்

Source:
விவேக சிந்தாமணி - மூலமும் உரையும்
சரஸ்வதி புத்தகசாலை
19/1. செட்டியார் தெரு, கொழும்பு.
விலை ரூபா.1-00
குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு.
------------

விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்


உ - கடவுள் துணை
கடவுள் வணக்கம்
நேரிசை வெண்பா

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

(இதன்பொருள்) திருவண்ணாமலைக் கோவிலினுள்ளே எழுந்தருளியிருக்கின்ற விநாயகக் கடவுளைப் (பக்தியோடு) கைகளால் வணங்கினால், சகல துன்பங்களும் நீங்கும்; வலிய ஆணவமலச் சேட்டையும் ஒழியும்; இம்மையில் தாய் வயிற்றில் கருதரித்துப் பிறப்பதற்குக் காரணமாய் நின்ற பிராரத்வ வினையும் அகலும்: இப்பிறப்பில் தேடப் பட்ட ஆகாமிய வினைகளு போகும் நற்குணம் அதிகமாகும் என்றவாறு.
----------

நூல்
அறுசீரடி யாசிரிய விருத்தம்

ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே.       1

(இ-ள்) ஆபத்துக்கு உதவாத பிள்ளையும், அரிய பசிக்கு உதவாத சாதமும், தாகவெப்பத்தைத் தீர்க்காத தண்ணீரும், வறுமை யறியாமல் (அதிக செலவு செய்யும்] மனைவியும், கோபத்தை அடக்காத அரசனும், ஆசிரியன் உபதேசித்த மொழிகளைக் கொள்ளாத மாணாக்கனும், பாவங்களைத் தீர்க்காத தீர்த்தமும், [ஆகிய] இந்த ஏழினாலும் பயன் இல்லை எ -று.
-----

பிள்ளைதான் வயதில்மூத்தால் பிதாவின் சொற்புத்தி கேளான்
கள்ளினற் குழலரள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய்பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்.       2

(இ - ள்) மைந்தரும் வயது முதிர்ந்தபின் தந்தை சொற்புத்தி கேளார்கள்; மதுமலர் கூந்தலையுடைய மனைவியரும் முதிர்ந்தபின் தம் கணவனை, மதிக்க மாட்டார்கள்; மாணாக்கனும் தெளித்து குற்றமறக் கல்வியைக் கற்றுக் கொண்டபின் ஆசிரியரைத் தேடான்; நோய்கள் தீர்ந்த பிள் உலகத்திலுள்ளோர் யாவரும் வைத்தியரைத் தேடார்கள். எ -று.
----------

குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள்பூசி மிகுமணம் செய்தா லுந்தான்
அக்குலம் வேற தாமோ அதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லால் குலந்தனிற் பெரிய தாமோ.       3

(இ-ள்) புனுகுப்பூனை (வசிக்கத்தக்க ] கூண்டினில் நாயைப் பிடித்து அடைத்து வைத்து, மென்மையான மஞ்சள் முதலியவைகள் பூசி அதிக வாசனை ஊட்டினாலும் அது ஜாதியில் வேறாகுமோ? அதனிடம் புனுகு உண்டாகுமோ? நாய் நாயே அல்லாமல் வேறு பெரிய ஜாதியாகுமோ? ஆகாது எ-று.
--------

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழிட் டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியி னோடு கடும்பசி யாகுந் தானே.       4

(இ-ள்) யாவரும் ஒப்பத்தக்க முக மலர்ச்சியோடு உபசாரஞ் செய்து உண்மையான மொழிகளைப்பேசி, உப்பு இல்லாத கூழை வார்த்தாலும் (அது) உண்பவர்க்கு அமிர்தமேயாகும். மா-பலா-வாழை முதலிய முப்பழ வர்க்கங்களோடு பால்சோற்றை அன்பில்லாமல் முகங்கடுத்து ஒருவருக்கு இடுவாராகில் அவை உண்பவருக்கு உள்ள பசியினும் மிக்க பசியை உண்டாக்குமல்லாமல் தணிக்காது எ - று.
--------

கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக்கடலிற் பெய்யுங் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த வேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலையிலாக் கீயமாட்டார்.       5

(இ-ள்) மேகக்கூட்டங்கள் கதிர்விட்ட சிவந்த நெற்பயிர்கள் நீரின்றி வாடக்கண்டும், அங்கு நீர் பொழியாது பொங்கும் அலைகள் வீசா நின்ற சமுத்திரத்தினிடத்துப் பெய்யும் தன்மைபோல, உலகத்தில் மதிக்கத்தக்க தனம் படைத்தவர்கள் அதிக நிதியுடையவருக்கு ஈவர் அல்லாமல் நிலையிலாது வாடினோர் முகம் கண்டு கொடுக்க மாட்டார்கள் எ - று.
-------

ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும் உண்டேல்
சாலவே பட்சியெல்லாம் தம்குடி யென்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி
ஆலிலை யாதி போனால் அங்குவந் திருப்பார் உண்டோ.       6

(இ-ள்) ஆல விருட்சத்தில் இலை-பூ-காய் இனிமை தரும் பழம் முதலியவைகள் இருந்தால், மிகுதியாகப் பல பட்சிகளும் தமது இருப்பிடம்போலக் கூடிவாழும், அந்த ஆல விருட்சத்தின் இலை முதலியவை நீங்கி மரம் பட்டு நிற்கில் ஒரு பட்சியும் சேராது. [ அது போல] மிகுந்த செல்வம் இருந்தால் அளவற்ற பேர்கள் வந்துகூடி வந்தனம் செய்வார்கள்; செல்வம் இல்லையேல் ஒருவரும் கூடார்கள் எ-று.
----------

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பா
      லிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
      விரும்பார்கள் அறிவொன் றில்லார்
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால்
      புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே
      கோடிசெம்பொன் சேவித் தீவார்.       7

(இ-ள்) செல்வத்தினிடத்தே அதிக விருப்பங் கொள்பவர்கள், காமத்தினிடத்தே மூழ்கிப் புரள்பவர்கள்; அருளாகிய செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பார்கள். கொஞ்சமும் அறிவில்லாதவராக ஆசிரியரிடத்தும் கடவுளிடத்தும் அந்தணர்களிடத்தும் அரசர்களிடத்தும் ஒரு பொருளும் கொடுக்கக் கோரார்கள். கோடி செம்பொன்னாயினும் தன்னைப் பாதரட்சையால் சிட்சிப்பவர்க்கே ஆசையோடு வந்தனஞ் செய்து கொடுப்பார்கள் எ - று
---------

தண்டாமரையி னுடன்பிறந்தும் தண்டேன்நுகராமண்டூகம்
வண்டே கானத் திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி யிருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங் குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றாரே.       8

(இ-ள்) தவளையானது தன்னுடன் பிறந்து வளர்ந்து இருக்கும் குளிர்ந்த தாமரையிலுள்ள தேனை உண்ண அறியாது; காட்டிலிருந்த வண்டுகளோ வந்து அந்தத் தாமரையின் மதுவை உண்டு களிக்கும். அதுபோல நெடுநாள் பழகியிருக்கினும், நல்லோர் அருமையை அறிவிலார் அறியார்; கற்றவர் அறிந்து களித்து அங்கு உறவாடித் தம்மோடு கலப்பர் எ - று.
---------

கலி விருத்தம்
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர தாகுமோ.       9

(இ-ள்) [முன்னமே பிரயாசையால் கூடுகட்டி வசித்திருந்த] ஒரு தூக்கணம் பட்சி, வீண்காலம் கழித்துத் திரிந்து வசிக்க இடமின்றி மழையில் நனைந்து வருத்திய ஒரு வானரத்தைக் கண்டு என்னைப்போல் ஓர் இருப்பிடம் செய்துகொள்ளலாகாதா என்றவுடனே குரங்கு சினந்து அதன் கூண்டைப் பிய்த்து எறிந்தது. [அதுபோல] ஞானமும் கல்வியும் நிறைந்த ஞான நூற்களை அறிவில்லார்க்கு உரைத்திடில் துன்பமே உண்டாகும் எ - று. [இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது]
------------

தலைவன் தலைவியைப் புகழ்தல்

அறுசீர் விருத்தம்
வண்டுமொய்த் தனையகூந்தல் மதனபண் டார வல்லி
கெண்டையோ டொத்தகண்ணாள் கிளிமொழிவாயினூறல்
கண்டுசர்க் கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர்மா முனிவர்க்கெல்லாம் அமுதமென்றளிக்கலாமே.       10

(இ-ள்) வண்டுகள் மொய்த்திருந்தது போன்ற கூந்தலையும், கயலையொத்த கண்களையும், கிளிமொழியை யொத்த சொல்லையுமுடைய மன்மத பொக்கிஷம் என்னும் பெயரையுடைய கொடி போன்றவளின் வாயின் ஊறல் பார்த்து சர்க்கரையோ, தேனே, பழத்தொடு கலந்த பாகோ அறியேன். (ஆயினும்) தேவர் முனிவர்களுக்கெல்லாம அமுதம் என்று கொடுக்கலாம். எ - று.
---------

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன விவேக முள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னி லென்று இலவுகாத் திடுங் கிளிப்போல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரித தாகும் அம்மா[#].       11

(இ-ள்) கற்பக விருட்சத்தை அடுத்த காகமும் அமுதம் உண்ணும். மிகுதியான அறிவு உள்ள வேந்தரைச் சேர்ந்த எளியரும் வாழ்வடைவார்கள். இலவ மரத்தின் காயைப் பார்த்துப் பழுக்கும் என்று காத்திருந்து அபலம் அடையும் கிளியைப்போல அற்ப ரைச் சேர்ந்தோர் இவ்வுலகில் வாழ்வது அரிதினும் அரிதாகும் எ-று.
---
[#] அம்மா என்பது வியப்பிடைச் சொல்.
--------------

எண்சீரடி ஆசிரிய விருத்தம்
ஆல கால விடத்தையும் நம்பலாம்
      ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
      கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
கால னார்விடு தூதரை நம்பலாம்
      கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலைகட்டிய மாதரை நம்பினால்
      தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.       12

(இ-ள்) ஆலகால விஷம், ஆறு, பிரசண்ட காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லத்தக்க வேங்கைப்புலி, யமனால் விடும் தூதர்கள், கள்ளர், வேடர், மறவர் இத்யாதி பேர்களையும் நம்பலாம். [ஆனால்] சேலைகட்டிய வேசியரை [நம்பொணாது] நம்புவரேல் தெருவில் நின்று தியங்கித் தவிப்பார்கள் எ - று.
----------

அறுசீரடியாசிரிய விருத்தம்
சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர்
அங்கதைக் கொய்துவிட்டால் அழுகச்செய்தந்நீர் கொல்லும்
துங்கவண்கரையிற் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டார் இப்படித் தயங்கு வாரே.       13

(இ-ள்) சங்கு போலும் வெள்ளைத் தாமரைக்குச் சூரியனும் தண்ணீரும் பிதா மாதாக்களாக இருக்கினும் அந்தத் தாமரையைக் கொய்து விடில் அந்நீரே, அதனை அழுகச் செய்து கொல்லும்; கரையில் விடில் சூரியன் காய்ந்து கொல்வான். [அது போல] தங்கள் நிலைவிட்டுப் பெயர்ந்தவர்கள் இவ்விதம் வருந்துவார்கள் எ - று.
------

எண்சீர் விருத்தம்
நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்
      நற்றமிழை எழுதவெழுத் தாணி யாமோ
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி
      பெரியவிளக் கேற்றிவைத்தால் வீடதாமோ
தாய்வார்த்தை கேளாத சகசண் டிக்கென்
      சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மாட்டான்
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்
      எழுபிறப்பி னுங்கடையாம் இவன்பி றப்பே.       14

(இ-ள்) நாயினது வாலை (எழுத்தாணி இலக்கணப்படி) அள வெடுத்து நீட்டித்தீட்டினால் நல்ல தமிழ் எழுத்துக்களை எழுதும் எழுத் தாணியாகுமா? பேய்கள் வாழும் சுடுகாட்டைக் கூட்டித் தள்ளிப் பெரிய விளக்கை ஏற்றி வைத்தாலும் அது வாசம் செய்வதற்கு உரிய வீடாகுமா? தாய்மொழி கேளாத சகசண்டிக்கு எவ்விதம் உரைக்கினும் உலோப குணத்தை விடமாட்டான். கொடுப்பவரையும் கொடுக்க வொட்டான். தானும் கொடான் இவன் ஜன்மம் எழுவகைப் பிறப்பினும் கடைப்பட்ட ஜன்மமேயாகும் எ - று.
-----------

அறுசீர் விருத்தம்
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந்தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யேசாகிறேன் என்பாள் பொய்யே
அம்பினும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தை யாளை
நம்பின பேர்க ளெல்லாம் நாயினும் கடையா வாரே.       15

(இ - ள்) தியங்குவாள் விழுவாள் மேல் விழுந்து அழுவாள் (உரித்தானவள் போல) எச்சிற் றம்பலத்தையும் உண்பாள் (உன்னுடனே கூட) இறப்பேன் என்பாள் (இவையாவும்) பொய்யே. (இவ்வித ஜாலங்கள் அமைந்த பல தந்திரங்களையுடைய) அம்பைப் பார்க் கிலும் கொடிய கண்களையுடையவளும் எண்ணமுடியாத சிந்தையுடைய வளுமான விலைமாதை நம்பின பேர்கள் எல்லாம் (மலம் உண்ணும்) நாயினும் கீழ்ப்பட்டவரே யாவார். எ - று.
---------

எண்சீர் விருத்தம்
கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும்
      கேள்வியில்லா அரசனால் உலகம் பாழாம்
துற்புத்தி மந்திரியால் அரசுக் கீனம்
      சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கீனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்
      நன்மைசெய்யத் தீமையுடன் நயந்து செய்வார்
அற்பரோ டிணங்கிடில் பெருமை தாளும்
      அரியதவம் கோபத்தால் அழிந்து போமே.       16

(இ-ள்) மங்கையருக்குக் கருப்பத்தால் அழகு குறையும் [நியாய முறை] வினவாத அரசனால் உலகு பாழாகும் இராஜாங்கத்துக்கு துர்ப்புத்தியுள்ள மந்திரிகளால் அரசுக்குக் கெடுதியுண்டாகும். அறிவில்லார்க்கு நல்ல புத்திகளைச் சொன்னாலும் கேளார். நன்மை செய்பவருக்கு உடனே தீமையையே பாராட்டிச் செய்வார். இவ்விதமான அற்பர்களோடு கூடினால் பெருமை குறையும். கோபத்தினால் அருமை யாகிய தவங்களும் சிதைந்து போகும் எ - று.
----------

அறுசீர் விருத்தம்
தன்னுடன் பிறவாத் தம்பி தனைப்பெறத் தாயார் தந்தை
அன்னிய ரிடத்துச் செல்வம் அரும்பொருள் வேசி யாசை
மன்னிய ஏட்டின் கல்வி மறுமனை யாட்டி வாழ்க்கை
இன்னவாம் கருமம் எட்டும் இடுக்கத்துக்கு உதவாதன்றே.       17

(இ - ள்) உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தையர், மற்றவரிடத்துள்ள செல்வம் அரும்பொருள் இச்சை கொண்ட வேசியர் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை இந்த எட்டு வகைகளும் துன்பம் வருங்காலத்துக்கு உதவாது அல்லவா?
------------

ஒரு விரகமுற்றோன் கூறியது

எண்சீர் விருத்தம்
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
      உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
      இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
      பின்னை ஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
      சகிக்கமுடி யாதுஇனியென் சகியேன் மானே.       18

(இ-ள்) ஆறாவது ராசி கன்னி, மூன்றாவது நாள் செவ்வாய், பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம், இருபத்தெட்டாவது வருடம் ஜெய, இருபத்தொன்பதாவது ஆண்டு மன்மத [கருத்து] கன்னியே! உன் செவ்வாயைக் கேட்டேன், ஓர் உத்தரம் சொல்வாய்; கேட்டபடி கொடுப்பாயாகில் ஜெயம் பெறுவாய். வேறுமறுமொழி சொல்ல வேண்டாம். மன்மத வேதனை இனி என்னால் சகிக்க முடியாது மானே எ-று.
-----------

ஒரு ஸ்திரியின் முகத்தையும் கரத்தையும் வியந்து கூறல்

எழுசீரடி யாசிரிய விருத்தம்
தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
      தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்பு வின்கனி யென்று
      தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி
      மலர்க்கரங் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
      புதுமையோ இதுவெனப் புகன்றான்.       19

(இ-ள்) தேனை உண்ணத்தக்க வண்டுகள் அந்த மதுக்களை யுண்டு மயங்கிக் கிடந்ததைக் கண்ட (ஒரு பெண்) அதை நாவற் பழம் என்று விசாலமாகிய தனது கையில் எடுத்துப் பார்த்தாள். அவ் வண்டு (அவள் முகத்தின் அழகால்) ஆகாயத்தின் கண்ணுள்ள சந்திரன் வந்தது என்று நினைத்து அதனால் அவள் கரமாகிய தாமரை மலர் மூடிக்கொள்ளுமென்று பயந்து பறந்தது. பின்பு அம்மங்கை பறந்து போனது வண்டோ பழமோ அல்லது யாது புதுமையோ என்று ஐயமுற்றுச் சொன்னாள் எ-று.
--------

எண்சீர் விருத்தம்
கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்
      கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்
      ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
      பேசாம லிருப்பவனே பேய னாகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்ப னாகும்
      பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே       20

(இ-ள்) மதிக்கத்தக்க நல்ல சாஸ்திரங்களைக் கல்லாதவன் மூடன்; அளவறிந்து பேசாதவன் கசடன்; ஒரு தொழிலும் இல்லாதவன் மூதேவி; ஒன்றுக்கும் உதவாதவன் சோம்பன்; மரம்போல வணங்காது அறிவுடையோர் முன்பாக நின்று பேசாமலிருப்பவனே பேயன்; (அன்பின்றி) அன்பு போல் காட்டித் தழுவுகின்றவன் பசப்பன்; பசியாளருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாம் எ-று.
-----------

அறுசீர் விருத்தம்
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கைபோல் வீரங்குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே.       21

(இ-ள்) பொறுப்பதற்கு அரிய தரித்திரம் ஒருவனுக்கு வந்தால் சபையில் செல்ல வெட்கமாம். வேங்கை புலிபோல் உள்ள வீரமும் குறையும். விருந்தினரைப் பார்க்கவும் வெட்கம் உண்டாம். புட்பக்கொடி போன்ற இடையையுடைய தனது மனைவிக்கும் பயப்பட வேண்டிவரும். அற்பர்களுக்கும் இணங்கிப் போகும்படி செய்யும். மேன்மேலும் வளரத்தக்க அறிவு குறையும். உலகமெல்லாம் பழித்தற்கு இடமுண்டாகும் எ - று.
----------

கலி விருத்தம்
அரும்பு கோணிடில் அதுமணம் குண்றுமோ
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்
நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்வோம்.       22

(இ-ள்) புஷ்பத்தின் அரும்பு கோணலாய் இருந்தாலும் அதன் மணம் குறையுமோ? குறையாது. கரும்பு கோணலாய் இருந்தாலும் வெல்லமும் பாகுமாகும்; இரும்பு கோணலானால் பெரிய மதயானை யையும் ஜெயிக்கலாம்; தேக நரம்புகள் கோணிடில் (நிரியாண காலம் ஒருவர்க்கு எய்திடில்) நாம் அதற்கு என்ன செய்வோம் எ-று.
---------

வேசி தன் தோழியை வினவுதல்

அறுசீர் விருத்தம்
[*]அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மைகேட்பேன் உரைதெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையே புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கிப்
பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வதேனோ.       23

(இ-ள்) தாய்போலுங் கருணையுள்ள பாங்கியாகிய தரும குணமுள்ள பெண்ணே! உன்னிடத்தில் ஓர் உண்மை கேட்கிறேன்; அதைத் தெளிந்து சொல்ல வேண்டும். [அதாவது] என்னிடத்தில் கலவியை விரும்பினவர்கள் எனக்கு ஓர் இன்பத்தைக் கொடுத்துப் பொருளை யும் கொடுத்து, எனது மலர்போன்ற காலில் வீழ்கின்றார்கள். இதற்குக் காரணம் யாதோ? எ - று.
------

[*] பொம்மெனப் பணைத்துவிம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையி னாளே கூறுவேன் ஒன்று கேண்மோ
செம்மையில் அறஞ்செய் யாதார் திரவியம் சிதற வேண்டி
நம்மையுங் கள்ளுஞ் சூதும் நான்முகன் படைத்த வாறே.       24

இ-ள்) பொலிவாகிப் பருத்து விம்முதலுற்று வலிமையுள்ள மன்மதனையும் மயங்கச் செய்யும் வட்ட வடிவமான ஸ்தனத்தையுடை யவளே! ஒன்று சொல்கிறேன் கேட்பாயாக. செம்மையில் தருமம் செய்யாதவர்கள் பொருள்களெல்லாம் சிதறுதலடையும் பொருட்டே நம் போன்ற வேசியரையும் கள்ளையும் சூதாட்டத்தையும் பிரமதேவன் படைத்து இருக்கிறான் எ-று.
---
[*]இக்குறியிட்டுள்ள 23 - 24வது செய்யுள் ஒரு தொடர்.
--------------

பொன்னொடு மணியுண்டானால் புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியில் மணமும் செய்வார்
மன்னரா யிருந்த பேர்கள் வகைகெட்டுப் போவாராகில்
பின்னையும் ஆரோ என்று பேசுவார் ஏசுவாரே.       25

(இ-ள்) பொருளும் புகழும் [ஒருவனுக்கு] உண்டானால் அவன் புலையனாயினும் தன் சுற்றத்தானென்று புகழ்ந்து கொண்டு உயர்ந்த ஜாதியிலும் மணம் முடிப்பார்கள். அரசராயிருந்தவரும் யாதொரு வழியுமின்றிக் கெட்டுப் போவார்களாகில் அவரை யாரோ என்று இகழ்ச்சி பேசுவார்கள் ஏசுவார்கள் எ - று.
------------

கலி விருத்தம்
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே       26

(இ - ள்) வேதம் ஓதுகின்ற அந்தணர்க்கு ஒரு மழை; நீதிநெறி தவறாத அரசர்க்கு ஒரு மழை, அழகிய கற்பிற் சிறந்த மங்கையர்க்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு மாதத்திலும் மூன்று மழை என்று சொல்லும்படி வருஷிக்கும் எ - று.
--------------

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை
புருஷணைக் கொன்ற பூவையருக்கு ஓர்மழை
வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.       27

(இ - ள்) (தற்காலம்] அரிசிவிற்பனை செய்கின்ற பிராமணர்களுக்கு ஒருமழை, நியாயந் தவறிய இராஜாக்களுக்கு ஒரு மழை, கணவனைக்கொன்ற பெண்களுக்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு வருஷத்திலும் மூன்றுமழை என்று சொல்லும்படி பொழிகின்றன எ-று.
---------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனியசொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் இல்லை தானே.       28

(இ-ள்) சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்விய க்ஷேத்திரங்களை மிதியாதான் பாதமும், சிவபெருமானுடைய பாதத்தை வணங்காதான் தலையும், யாசிப்பவர்க்குக் கொடாதான் கைகளும் இனிமையான சொற்களைக் கேளாதான் செவியும், தங்களை இரட்சிக்கின்றவர்கள் கண்களிலிருந்து ஜலம் ஒழுகப்பார்த்தும் உயிர் கொடாதான் தேகமும் இருந்தும் பயனென்ன? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் பயனில்லை எ-று.
-------------

தன்னுட லினுக்கொன் றீந்தால் தக்கதோர் பலம தாகும்
மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யிலே வியாதி யாகும்
மன்னிய உறவோர்க் கீந்தால் வருவது மயக்க மாகும்
அன்னிய பரத்துக் கீந்தால் ஆருயிர்க் குதவி யாமே.       29

(இ-ள்) தன் தேகத்துக்கு ஒன்றைக் கொடுக்கில் அதற்குத்தக்க பலமுண்டாகும், மின்னலைப்போல் அன்பைக் காட்டி மறைக்கும் இயல்புள்ள வேசையர்க்கு கொடுத்தால் தேகத்தில் பிணி உண்டா கும், பொருந்திய உறவினர்க்குக் கொடுத்தால் பணமயக்கமே வருவதாகும், அன்னியருக்குக் கொடுத்தால் சார்ந்த உயிர்த் துணையாகும் எ - று.
------------

எழுசீர் விருத்தம்
படியி னப்பொழு தேவ தைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
      பழிந மக்கென வழிம றித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடும தக்குவ டெனவ ளர்த்திடு குஞ்ச ரத்தையும் நம்பலாம்
      குலுங்கப் பேசிந கைத்திடுஞ்சிறு குமரர்தம்மையும் நம்பலாம்
கடையி லக்கமும் எழுதி விட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்
      காக்கை போல்விழி பார்த்திடுங்குடிகாணி யாளரை நம்பலாம்
நடைகு லுக்கியும் முகமி னுக்கியும் நகைந கைத்திடும் மாதரை
      நம்பொ ணாதுமெய் நம்பொ ணாதுமெய் நம்போ ணாதுமெய் காணுமே.       30

(இ - ள்) உலகத்தில் உண்டபொழுதே கொல்லத்தக்க கொடிய விஷத்தையும் நம்பலாம் பழியைக் கருதாமல் ஒரு வணிகனை வழி மறித்துக் கொலைசெய்த பழையனூர் நீலியையும் நம்பலாம், கொடிய மும்மதங்களையுடைய மலைபோல வளர்ந்திராநின்ற யானையையும் நம்பலாம். குலுங்கப் பேசிச்சிரித்து ஏமாற்றும் யௌவனச் சிறுவரையும் நம்பலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயனத்தைக் காட்டாமல் மோசவகையாய்த் தான் எழுதிவைத்த கட்டுத்தொகையைக் காட்டி வஞ்சிக்கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியையுடையதாயிருந்து கூரிய பார்வையுடையதான காக்கையைப் போலப் பயிரிடுங் குடிகளுக்கு யாதொரு ஆதாயமும் கிட்டாதபடி கட்டிக்காக்கும் காணியாட்சி யுடையவரையும் நம்பலாம்; நடக்கும் போதே குலுக்கியும் முகத்தை மஞ்சள் முதலியவற்றால் மினுக்கியும் பற்கள் தெரிய நகைத்தும் திரிகின்ற விலைமாதர்களை நம்பக்கூடாது. உண்மை, உண்மை, உண்மையே எ - று.
-------------

கலி விருத்தம்
வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமிழ் இருந்திடிற் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடில் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடில் பெரிய சண்டையே.       31

(இ-ள்) வண்டுகள் இருந்தால் தேனை யுண்ணும்; அழகிய தமிழிருந்தால் புலவர் கூட்டத்தினர் உறவுண்டாம்; குண்டுணிகள் இருந்தால் கோள்களே மிகுதியுண்டாம்; பெண்கள் பலர் கூடியிருந்தால் பெரிய சண்டை சச்சரவுகள் உண்டாகும் எ று.
-----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கற்புடைய மாதர் கொங்கை கவரிமான் மயிரின் கற்றை
வெற்புறு வேங்கை யின்தோல் வீரன்கை வெய்ய கூர்வேல்
அற்பர் தம் பொருள்கள் தாமும் அவரவர் இறந்த பின்னே
பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மை தானே.       32

(இ-ள்) கற்புள்ள பெண்களின் ஸ்தனம், கவரிமானின் மயிர் முடி, மலையிலுள்ள வேங்கையின் தோல், சுத்தவீரன் கையிலுள்ள கொடிய கூர்மையான வேல், அற்பர்கள் இடத்திலுள்ள பொருள், [இவை யாவும்] அவரவர் உயிர் நீங்கிய பின்னே பலரும் கைக்கொள்வார்கள். இந்த உலகத்தில் சத்தியமே எ - று.
-------------

வீணர்பூண் டாலும் தங்கம் வெறும்பொய்யர் மேற்பூச் சென்பார்
பூணுவார் தராப்பூண் டாலும் பொருந்திய தங்கம் என்பார்
காணவே பனைக்கீ ழாப்பால் குடிக்கினும் கள்ளே என்பார்
மானுல கத்தோர் புல்லர் வழக்கினை மெய்யென் பாரே.       33

(இ-ள்) எளியோர்கள் தங்கநகைகளை அணிந்திருந்தாலும் கண்டவர்கள் தங்கமல்ல, மேற்பூச்சு என்பார்கள், பூணத்தக்க செல்வர்கள் தரா பித்தளை முதலிய நகைகளை அணிந்திருந்தாலும், உயர்ந்த தங்கம் என்பார்கள்; பலரும் பார்க்கப் பனை நிழலிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். பெருமைதங்கிய உலகத்தோர் அறிவீனர் உரைக்கும் மொழிகளையே மெய் என்பார்கள் எ-று.
--------------

கலிநிலைத்துறை
ஓரியே மீனுவந் தூனிழந் தையோ
நாரியே கண்பிழை நாட்டில் இல்லையோ
பாரிய கணவனைப் பழுது செய்து நீ
நீரிலே யிருப்பது நிலைமை யல்லவே.       34

(இ-ள்) கணவனை இகழ்ந்து நீங்கி வந்த ஒருபெண் நரியே! ஓ ஒரு மீனை இச்சித்து வாயிலிருந்த இறைச்சியை இழந்தனையே யாது காரணம்? என்ன, [அதற்கு அந்நரி] ஓ பெண்ணே! ஏதேனும் தவ றுதல் உலகத்தில் இல்லையா? நீயோ பெருமை தங்கிய புருஷனை இகழ்ந்து நீ இத்தன்மையில் இருப்பது உன் தன்மைக்கு அழகு அல்லவே என்றது எ - று.
------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
சம்புவே என்ன புத்தி சலந்தனில் மீனை நம்பி
வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்ப தேனோ
அம்புவி மானே கேளாய் அரசனை யகல விட்டு
வம்பனைக் கைப்பி டித்த வாறுபோ லாயிற் றன்றே.       35

(இ-ள்) நரியே! என்ன மதியால் ஜலத்தில் துள்ளிய மீனை நம்பி நாற்றமுள்ள மாமிசத் துண்டை இழந்து ஆகாயத்தைப் பார்க்கின்றனை யாது காரணம்? என்று கேட்ட பெண்ணைப் பார்த்து அந்த நரி, உலகத்தில் மெச்சத்தக்க பெண்ணே! தன் நாயகனாகிய அரசனை அகல விட்டு மற்றொரு புருஷனைக் கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று என்று அறிவாயாக என்றது எ - று. [இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.]
----------

மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலா திருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான்கொண்டஞானம்
ஆப்பிலாச் சகடு போலே அழியுமென் றுரைக்க லாமே.       36

(இ-ள்) தனக்கு மூத்தோர் இல்லாமல் தனியே வாழும் பாலியப்பெண் வாழ்வும், கோபம் இல்லாத அரசன் வீரமும் காத்தல் இல்லாமல் விளைந்த பூமியும், கரையில்லாதிருந்த ஏரியும், தன்னிடம் வேண்டியவைகள் அமைதல் இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசிரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும் [ஆகிய இவை யாவும் ] அச் சாணியில்லாத வண்டிபோல் அழிந்துபோம் என்று சொல்லலாம் எ-று.
----------------

ஒரு பெண்ணின் நடையைப்பற்றிக் கூறியது

கலி விருத்தம்
பொன்னின்மணி கிண்கிணி சிலம்பொலி புலம்ப
மின்னுமணி மேகலைகள் மெல்லென வொலிப்பச்
சின்னமலர் கொண்டுசில சேடியர்கள் சூழ
அன்னமென அல்லவென ஆமென உரைத்தார்.       37

(இ-ள்) பொன் மணிகளும், சதங்கை மணிகளும் சிலம்பொலிகளும் சப்திக்கப் பிரகாசிக்கின்ற மணிமேகலைகள் மெதுவாய் ஒலிக்க அரும்பு மலர்களைக் கொண்டு சில பாங்கியர்கள் சூழ்ந்துவர நடக்கின்றவர்கள் அன்னம் என்றும் அல்ல என்றும் அன்னமே என்றும் [கண்டோர்] கூறினர் எ - று.
-----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கானலை நீரென் றெண்ணிக் கடுவெளி திரியும் மான்போல்
மானுறும் இலவு காத்த மதியிலாக் கிள்ளை யேபோல்
தேனினை யுண்டு தும்பி தியங்கிய தகைமை யேபோல்
நானுனை யரசென் றெண்ணி நாளையும் போக்கி னேனே.       38

(இ-ள்) கானலைத் தண்ணீர் என்று நினைத்து வெட்டவெளியில் ஓடித்திரியும் மான்போலவும், பழுக்கும் என்று வானமளாவிய மலையிலுள்ள இலவமரத்தைக் காத்திருந்த அறிவில்லாத கிளியைப்போலவும், தேனையுண்டு மயங்கிய வண்டு போலவும், நான் உன்னை அரசன் என்று று கருதி நாளையும் வீணாகப் போக்கினேன் எ-று.
----------

தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல்

சங்குமுழங்குந் தமிழ்நாடன் தன்னை நினைந்த போதெல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்கள் உறங்கும்புள்ளுறங்கும்தென்றல் உறங்குஞ்சிலகாலம்
எங்கும் உறங்கும் இராக்காலம் என்கண்கள் இரண்டும் உறங்காதே.       39

(இ-ள்) சங்குகள் முழங்குகின்ற எனது தமிழ்நாட்டு அதிபனை நினைக்கும்போதெல்லாம் அலைகள் வீசாநின்ற சமுத்திரம் தூங்குவதில்லை; பொழுது விடிவதில்லை; சந்திரன் தூங்கும்; [அன்றில் குயில் முதலிய] பக்ஷிகளும் தூங்கும்; தென்றற்காற்றும் சிலகாலம் தூங்கும்; பேய் முதலிய சில பிராணிகளும் தூங்கத்தக்க இராக்காலத்தில் யாது காரணமோ? என் கண்கள் மட்டும் உறங்குவதில்லை எ-று.
--------------

அரவினை ஆட்டு வாரூம் அருங்களி றோட்டு வாரும்
இரவினில் தனிப்போ வாரும் ஏரிநீர் நீந்து வாரும்
விரைசெறி குழலி யான வேசியை விரும்பு வாரும்
அரசனைப் பகைத்திட் டாரும் ஆருயிர் இழப்பர் தாமே.       40

(இ-ள்) பாம்பாட்டுகிறவர்களும், அரிய யானைப்பாகர்களும், இராத்திரியில் தனிவழி செல்கின்றவர்களும், தடாக ஜலத்தில் நீந்துகின்றவர்களும், வாசனை நிறைந்த கூந்தலையுடைய வேசியரை இச்சிக்கின்றவர்களும், அரசர்களைப் பகைத்துக் கொண்டவர்களும் தங்கள் அருமையான உயிரை இழப்பார்கள் எ - று.
----------------

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்
தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க
ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ.       41

(இ-ள்) வாழ்வு வந்தகாலத்தில் மனத்தில் மகிழ்ச்சி அடையக் கூடாது? தாழ்வு வந்தது என்று தளரக்கூடாது. இது மேலானோர் செய்கை. ஊழ்வினையால் வரும் செய்கைகளை ஒருவரால் விலக்க முடியுமோ? ஏழையாயிருந்தவர்கள் சிவிகையில் ஏறத்தக்க செல்வவான் களாதலை நீங்கள் பார்த்ததில்லையா? எ - று.
-----------------

எழுசீரடி யாசிரிய விருத்தம்
பருப்ப தங்கள்போல் நிறைந்திடு நவமணிப்
      பலன்களைக் கொடுத் தாலும்
விருப்பம் நீங்கிய கணவரைத் தழுவுதல்
      வீணதாம் விரை யார்ந்த
குருக்கு சந்தனக் குழம்பினை யன்பொடு
      குளிர்தர அணிந் தாலும்
செருக்கு மிஞ்சிய அற்பர்தம் தோழமை
      செப்பவு மாகா தே.       42

(இ - ள்) மலைகளைப்போலக் குவியல் குவியலாக ஒன்பது வகை இரத்தினங்களையும் பலனாகக் கொடுத்தாலும் விருப்பமில்லாத கணவரைக் கூடுதல் வீணேயாம். வாசனை பொருந்திய ஒளிமிகுந்த செருக்கு மிஞ்சிய அற்பர்கள் சந்தனக்குழம்பை ஆசையோடு குளிர்ச்சி தரப் பூசினாலும், அவர்கள் சிநேகத்தை வாயினால் சொல்லவும் கூடாது எ-று.
----------------

கலி விருத்தம்
பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
உருத்தெரி யாமலே யொளிம ழுங்கிடும்
மருத்துள தோஎனில் வாக டத்திலை
தரித்திர மென்னுமோர் மருந்தில் தீருமே.       43

(இ - ள்) ஒருவனுக்கு பெருத்த செல்வச் செருக்கு என்னும் வியாதிவந்து கூடினால் உருவம் தெரியாமல் கண்ஒளி மழுங்கிவிடும். இதற்கு மருந்துளதோ என்று ஆராயின் வைத்திய கூறிய வாகடங்களில்லை. தரித்திரம் என்று சொல்லத்தக்க மருந்தினால் உடனே தீரும் எ - று.
----------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
அத்தியின் மலரும்வெள்ளை ஆக்கைகொள் காக்கை தானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்
அத்தன்மால் பிரம தேவ னாலள விடப்பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவரில்லை கண்டீர்;       44

(இ-ள்) அத்திமரத்தின் பூவையும், வெள்ளை நிறம் கொண்ட காக்கையும், பைத்தியக்காரர் மனத்தையும், ஜலத்தில் பிறந்த மச்சங்களின் பாதத்தையும், சிவன் விஷ்ணு பிரம்மதேவன் முதலியவர்களால் அளவிடப்பட்டு ஒருவேளை கண்டறிந்தாலும், சித்திரத்தை யொத்த கண்களையுடைய வேசிகளின் நெஞ்சத்தின் அளவைக் கண்டு தெளிந்தவர்கள் உலகத்தில் இல்லை எ - று.
-------------

சொல்லுவார் வார்த்தைகேட்டுத் தோழமை யிகழ்வர்புல்லர்
நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு
வல்லியும் பசுவும்கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம்.       45

(இ-ள்) அற்பர்கள் பிறர்சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுச் சினேகத்தை இகழ்வர்; மேலானவர் நன்றாய் விசாரியாமல் ஒன்றைச் செய்வரோ? செய்யார். ஒரு நரியின் சொல்லைக்கேட்டு, வலிய ஒரு புலியும் பசுவும் சேர்ந்து இறந்துபோன கதையைப்போல் அற்பர் ஒரு வராலேயே யாவும் நாசமாய்ப்போம் எ - று. [இக்கதை பஞ்சதந்திரத் தில் உள்ளது]
--------------

கலி விருத்தம்
கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயிற் குழவிகள் வையினும்
மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுற செவிக் கின்பம் விளையுமே.       46

(இ-ள்) விருதுகளைப் பெற்ற வீரர்கள் யுத்தகளத்தினிடத்துத் திட்டினாலும் மழலைச்சொற்களையுடைய குழந்தைகள் வைதாலும் மன்மத லீலாவிநோதக் கலவியில் மங்கையர் நிந்தித்தாலும் இனிமையுறச் செவிக்கு இன்பமே உண்டாகும் எ-று.
--------------

அறுசீரடியாசிரிய விருத்தம்
புத்திமான் பலவா னாவான் பலமுள்ளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தி னாலும் இடரது வந்தே தீரும்
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோ கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலாம்.       47

(இ - ள்) ஒரு சிங்கத்தை ஒரு முயல் கூட்டிக்கொண்டு போய் ஒரு கிணற்றில் அதன் சாயலைக்காட்டிக் கொன்ற உவமைக் கதை போல் எவ்வளவு வீரத்தன்மையுள்ளவனும் புத்தியில்லாவிடில் எந்த விதத்தினாலும் அவனுக்குத் துன்பமே வந்து சேரும். ஆதலால் புத்தி யுள்ளவனே பலவான் ஆவான் எ-று. (இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.)
---------------

மானமுள் ளோர்கள் தம்ஓர் மயிரறின் உயிர்வா ழாத
கானுறு கவரி மான்போற் கனம்பெறு புகழே பூண்பார்
மானமொன் றில்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்க ளாக
ஈனமாங் கழுதைக் கொப்பாய் இருப்பரென் றுரைக்கலாமே.       48

(இ-ள்) தன்னிடத்திலுள்ள ஒருமயிர் அறுந்தாலும் உயிரை விடுகின்ற கவரி மான் போல மானமுள்ளவர்கள் எப்பொழுதும் புகழையே விரும்புவார்கள். மானம் சிறிதும் இல்லாதவர்கள் புத்தி மழுங்கி சோம்புதல் பெற்று ஈனமடைந்த கழுதைக்கு ஒப்பாய் இருப்பார்கள் என்று சொல்லலாம் எ - று.
-------------

கலிநிலைத்துறை
கழுதை காவெனக் கண்டுநின் றாடிய அலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதி லா நமக் கார் நிகர் ஆமெனப் பகர் தல்
முழுது மூடரை மூடர்கொண் டாடிய முறைபோல்.       49

(இ-ள்) அறிவில்லாத மூடர்களை அவரினுந் தாழ்ந்த முழு மூடர்கள் கொண்டாடிப் புகழ்வது எவ்வாறெனின் ஒரு கழுதை காவென்று கத்தியதைப் பார்த்து, அதற்கு இசையா நின்று ஆடிய ஒரு பிசாசு திரும்பவும் அந்தக் கழுதையை வணங்கித் துதிசெய்ய, அது குற்றமில்லாக் குரலையுடைய நமக்கு ஒப்பானவர்கள் யார் எனச் சொல்லுவது போல் இருக்கும் எ - று.
--------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
ஆசாரஞ் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவ ராவர்
ஆசாரஞ் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார்போல் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.       50

(இ-ள்) ஒழுக்கம் தவறாது செய்வாராகில், அவருக்கு நல்ல ஞானத்தோடு புகழும் உண்டாம்; அவ்வொழுக்கமே நன்மையாய் அதிகரிக்குமாகில் அவரே உலகத்தில் தேவர் ஆவார். ஒழுக்கம் தவறுவாராகில், அறிவோடு நல்ல கீர்த்தியுமற்று. ஊமையர்போல் பேசுபவராய், இம்மையில் பிணியால் உழன்று மறுமையில் நரகத்தையடைவார்கள். எ - று.
---------------

செல்வமும்வந் துற்ற போது தெய்வமும் சிறிது பேணார்
சொல்ததை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும்பேணார்
வெல்வதே கருமமெல்லால் வெம்பகை வலிதென்றெண்ணார்
வல்வினை விளையும் பாரார் மண்ணின்மேல் வாழும் மாந்தர். 51

(இ-ள்) உலகத்தில் வாழும் மானிடருக்குச் செல்வமானது மிகுதியாய் வந்து சேர்ந்தபொழுது கொஞ்சமேனும் தெய்வத்தையும் கருதார்; சொல்வதைக் கேட்டு அறிந்து சொல்லார்; பந்துமித்திரர் களையும் கவனியார்; எக்காரியத்திலும் ஜெயத்தையே கருமமாக கரு துவரேயல்லாமல், வெவ்விய பகைவனுடைய வலிமையையும் எண் ணார்கள். வலிய பாவவிளைவையும் பாரார்கள் எ - று.
--------------

கலிவிருத்தம்
யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா
பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ
தானையுந் தலைவரும் தலம்விட் டேகினால்
சேனையிஞ் செல்வமுந் தியங்கு வார்களே. 52

(இ-ள்) ஒரு பெரிய மதயானையை ஜலத்திலிருந்து கடித்து இழுத்த முதலையானது; கரையிலுள்ள ஒரு பூனையைப் பிடிக்கக் கரை யில் செல்லமாட்டாது. (அதுபோல] அரசர்களும் சதுரங்க சேனைகளும் தங்கள் இருப்பிடம் விட்டுச் சென்றால், சேனையும் செல்வமும் இழந்து தியங்குவார்கள் எ - று.
------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கொண்டநற் கலைக ளோடும் குணமிலாக் கோதை மாரைக்
கண்டுவிண் டிருப்பதல்லால் கனவிலும் புல்லவொண்ணாது
உண்டென மதுவை யுண்ண ஓவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவார் தாமே. 53

இ-ள்) மனதிற்கொண்ட நல்ல சாஸ்திரப் பயிற்சியோடும், நற்குணமும் இல்லாதமங்கையர்களைக் கண்ணால் நிதானித்துப் பார்த்து அவர்களை விலக்க வேண்டுமேயல்லாமல் கனவிலாயினும் சேரவொண்ணாது; சேருவரேல் எழுதிய சித்திரமாகிய தாமரையில் தேன் உண்டென்று வீழ்ந்து வருந்திய வண்டுக்கூட்டங்கள் படும்பாடு அவர்களும் அடைவார்கள் எ - று.
-----------

மயில்குயில் செங்கால் அன்னம் வண்டுகண் ணாடி பன்றி
அயிலெயிற் றரவு திங்கள் ஆதவன் அத்தி கொக்கோடு
உயரும்விண் கமலம்பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை
இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே. 54

(இ-ள்) மயில், குயில், சிவந்த கால்களையுடைய அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூர்மைபொருந்திய பற்களையுடைய பாம்பு, சந்திரன், சூரியன், சமுத்திரம், கொக்கு, உயர்ந்த ஆகாயம், தாமரை யாகிய
இப்பதின் மூன்று பொருட்களினிடத்திலுமுள்ள குணங்களை வகித்தவர்களை உலகத்தவரெல்லாம் போற்றும் ஈசனென்று எண்ணலாம் எ - று
--------

கலி விருத்தம்
தெருளிலாக் கலையினர் செருக்கும் ஆண்மையும்
பொருளிலா வறியர்தம் பொறிய டக்கமும்
அருளிலா அறிஞர்தம் மௌன நாசமும்
கருவிலா மங்கையர் கற்பும் ஒக்குமால். 55

(இ-ள்) தெளிவில்லா கல்வியாளர்களுடைய அகங்காரமும், மன ஆண்மையும்; பொருளில்லாத தரித்திரர்களுடைய மெய்-வாய்- கண் மூக்கு - செவி என்னும் ஐம்பொறிகளின் அடக்கமும் அருளில்லாத ஞானிகளின் மெளன நாசமும், மகப்பேறு இல்லாத மங்கையர்கள் கற்பும் ஆகிய இவைகள் ஒன்றுக்கொன்று சமமாகும் எ-று.
------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
மங்குல் ஐம்பதி னாயிரம் யோசனை மயில்கண்டு நடமாடும்
தங்கு பானுநூ றாயிரம் யோசனை தாமரை முகம்விள்ளும்
திங்களாமதற்கிரட்டியோ சனையுறச் சிறந்திடும் அரக்காம்பால்
எங்கணாயினுமன்பராயிருப்பவர் இதயம் விட்டகலாரே. 56

(இ-ள்) ஐம்பதினாயிரம் யோசனை தூரத்தில் உள்ள மேகத்தைக் கண்டு மயில் நடனம் பண்ணும்; நூறாயிரம் யோசனை தூரத்திலுள்ள சூரியனைக்கண்டு தாமரை முகமலர்ச்சியைக் காட்டும்; சூரியன் இருக்கும் இருநூறாயிரம் யோசனை தூரத்திலுள்ள சந்திரனைக்கண்டு செவ்வல்லி மலர்ந்து சிறப்பு அடையும்; [அதுபோல எவ்வளவு தூரத்தில் இருப்பவராயினும் அன்பராயிருப்பவர் இருதயத்தைவிட்டு அகலார்கள் எ - று.
---------------

சந்திர னில்லா வானம் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
சுந்தரப் புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் வாழ்வு
தந்திக ளில்லா வீணை தனமிலா மங்கை போலாம். 57

(இ-ள்) சந்திரனில்லாத ஆகாயம், தாமரையில்லாத தடாகம், மந்திரி இல்லாத அரசன், மலைபோலும் மதயானை இல்லாத சேனை கள், அழகிய வித்துவான்கள் இல்லாத சபை, மக்கள் இல்லாத வாழ்க் கை,தந்தி நரம்பில்லாத வீணை, இவையாவும் இரண்டு ஸ்தனங்கள் இல்லாத மங்கையர் போலாகும் எ - று.
-------------

கலி விருத்தம்
குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விரைசெறி குழலினாள் வேசை யாசையும்
அரையரன் பமைவதும் ஐந்தும் இல்லையே. 58

(இ-ள்) சப்திக்கா நின்ற சமுத்திரத்திற்கு ஜலதரித்திரமும் [திரு டும் தொழில் கற்ற] குறத்திகளின் சத்தியமும், நரை அறும்படி அவிழ்தம் உண்டு பாலப்பருவம் அடைதலும், வாசனை செறிந்த கூந் தலையுடைய வேசியர்களுக்கு ஒருவர்மேல் உண்மையான ஆசையுண் டாதலும் அரசர்கள் ஒருவரிடத்தில் நீங்காத அன்புடையவராய் இருத் தலும் ஆகிய இவை ஐந்தும் அடைவதற்கு இல்லை எ-று.
----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
முடவனை மூர்க்கன்கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
தடவரை முலைமா தேஇத் தரணியி லுள்ளோர்க் கெல்லா
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்குங் கண்டாய். 59

(இ-ள்) முடவனை அகங்கார குணமுள்ள மூர்க்கன் கொன்றால், அம்மூர்க்கனை அவனிலும் அதிக கோபமுடைய ஒருவன் கொல்லுவான். அறிவில்லாத ஏழையை வலியுள்ளவன் கொல்வானாகில் அவனை இயமன் கொல்லுவான். விசாலித்த மலைபோலும் ஸ்தனங்களையுடைய வளே! ஏழையை அடித்த கோலே பலவானையும் அடிக்கும் என்று அறிவாயாக எ-று.
------------

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை என்றும்
மருவுய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை
கருதிய கருமம் இல்லை கதிபெற வழியும் இல்லை
பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரோதமாய்த் திரிகு வாரே. 60

(இ-ள்) பொருள் இல்லாதவருக்கு இன்பம் இல்லை, புண்ணிய மில்லை, பொருந்திய கீர்த்தியில்லை,மக்களாற் பெருமையில்லை; நினைத் தபடி முடிக்கும் வல்லமையில்லை, மோக்ஷமடையும் வழியுமில்லை, அவர் பெரிய உலகத்தில் நடக்கும் தன்மையுள்ள பிணம் என்று சொல்லும் படி திரிவார் எ-று.
-------------

தூம்பினில் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்கொடாது
பாம்புக்குப் பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல்கற் றாலும் துர்ச்சனர் நல்லோர் ஆகார். 61

(இ-ள்) வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைத்த கல்லாயிருந் தாலும் தேய்ந்து களங்கமின்றிப் பிரகாசத்தைக் கொடாது. பாம்புக் குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகிவந்தாலும் நன் மையைத் தராது. வேம்புக்குத் தேனைவார்த்து வளர்த்தாலும் அந்த வேம்பின் இலைகள் கசப்பு மாறாது துர்ச்சனர்கள் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர்கள் ஆகார்கள் எ -று.
----------

கல்லாத மாந்தரையுங் கடுங்கோபத்
      துரைகளையும் காலந் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்குதவாத்
      தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந் தணர் தமையுங் கொண்ட
      டெந்நாளும் வலது பேசி
நல்லார்போ லருகிருக்கும் மனைவியையும்
      ஒருநாளும் நம்பொ ணாதே. 62

(இ-ள்) கல்வியில்லாத மனிதர்களையும் மிகுந்த கோபமுள்ள அரசர்களையும்; வருங்காலமறிந்து சொல்லாத மந்திரிகளையும் துன்பம் வந்தவிடத்து உதவிசெய்யாத தெய்வங்களையும், வேதநூலில் வல்லவ ரல்லாத பிராமணர்களையும், கணவனோடு எந்த நாளிலும் வல்லமை பேசி நல்லவர்களைப்போல அருகிலிருக்கும் மனைவியையும் ஒருநாளும் நம்பக்கூடாது எ - று.
---------

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடா தெடுத்த பேரை
மீளவே கொடுக்கி னாலே வெய்யுறக் கொட்ட லேபோல்
ஏளனம் பேசித் தீங்குற் றிருப்பதை யெதிர்கண் டாலும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே. 63

(இ-ள்) தேளானது நெருப்பில் விழுந்தால் இறந்து போகா மல் எடுத்தவரைக் கொடுக்கினாலே துன்பம் உறும்படி கொட்டுதல் போல, கேலிகள்பேசிப் பலவித தீங்குகள் கொண்டு இருப்பதை நேரில் பார்த்தும் உலகில் கோளுடையவர்க்கு நன்மைசெய்வது குற்றமே யுண்டாகும்.
--------------

அறிவுளோர் தமக்கு நாளும் அரசரும் தொழுது தாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்
அறிவுளோர் தமக்கு யாதோர் அசடது வருமே யாகில்
வெறியரென் றிகழா ரென்றும் மேதினி யுள்ளோர் தமே. 64

(இ-ள்) அறிவுடையவர்களுக்கு நாடோறும் அரசரும் வணங் கித் தாழ்வார்கள். உலகத்தவர்களும் உண்மையான நேசத்தொடு பணிதல் செய்வார்கள். அந்த அறிவுள்ளோருக்கு யாதேனும் ஒரு குற்றம் நேரிட்டாலும் வெறுக்கத்தக்கவர் என்று இகழ்ச்சி செய்யார், இவ்வுலகினர் செய்கை இத்தன்மையதாம் எ - று.
-------------

குருவுப தேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயதுதான் செய்த தருமம்
அரிய மந்திரம் விசாரம் ஆண்மையிங் கிவைகள் எல்லாம்
ஒருவருந் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்துபோமே. 65

(இ-ள்) ஆசிரியர் செய்த உபதேசம், ஸ்திரீயினிடத்து அனு பவித்த இன்பம் தன்னிடத்துப் பொருந்திய நியாயம், கல்வி, ஆயுள், தன்னால் செய்த தர்மம், அரிதாகிய மந்திரம் துன்பம், வல்லமை இவைகளெல்லாம் ஒருவருக்குந் தெரியக்கூடாது, சொன்னால் அழிந்து போம் எ - று.
------------

இடுக்கினால் வறுமை யாகி ஏற்றவர்க் கிசைந்த செல்வங்
கொடுப்பதே மிகவும் நன்று குற்றமே யின்றி வாழ்வார்
தடுத்ததை விலக்கினோர்க்குத் தக்கநோய் பிணிக ளாகி
உடுக்கவே யுடையு மின்றி உண்சோறும் வெல்ல மாமே. 66

(இ-ள்) துன்பம் அடைந்து தரித்திரத்தால் யாசிப்பவர்க்கு மன மகிழப் பொருட்களைக் கொடுப்பதே மிகவும் நல்லது. யாதொரு குறை வும் இல்லாமல் வாழ்வர். கொடுக்கின்றவரைத் தடுத்து விலக்குகின் றவர்களுக்குத் தகுதியான துன்பம் தரத்தக்க பிணியுண்டாகி, உடுக் கத் துணியுமின்றி சாப்பிடுவதற்கு உரிய அன்னமும்
உரிய அன்னமும் கிடையாமல் வெல்லம்போல் ஆகும் எ'- று.
-----------

மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடும் மேலு நன்மை
வையகம் அதனைக் கொள்வார் மனிதரில் தேவ ராவார்
பொய்யதைச் சொல்வா ராகில் போசனம் அற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடார் அறிவுள் ளோரே. 67

(இ-ள்) மெய் சொல்வோரிடத்து மேலான நன்மையே விளங் கும்; உலகத்தவரும் அவருடைய வார்த்தைகளை ஒப்புக்கொள்வார்கள்; மானிடரில் அவரே தெய்வமாவர்; பொய்பேசுபவருக்கு உணவும் அற்பமாகும் நெய்யரிசி கொதி தாளாது என்னும் பழமொழிபோல் பெருந்தன்மையுடையவர்களல்லர் என்று மதித்து அறிவுடையோர்க ளும் அவரைப் பார்க்கமாட்டார்கள் எ-று.
----------

கலி விருத்தம்
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்
அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வதுமெய் கண்டீர். 68

(இ-ள்) தகப்பன் சொல்லைத்தள்ளி நடந்தவன், தாய் வார்த் தையை இகழ்ச்சி செய்தவன், அழகிய குருவின் ஆணையை மறந் தவன், சந்தமுள்ள வேதநெறிகளைக் கடந்தவன் ஆகிய இந்நால்வ ரும் சிவந்த அக்கினி வாயின் கண் அடைவது உண்மையென்று அறியக்கடவீராக எ - று.
-----------------

அறு சீரடி யாசிரிய விருத்தம்
நாரிகள் வழக்க தாயின் நடுவறிந் துரைப்பார் சுத்தர்
ஏரிபோல் பெருகி மண்மேல் இருகணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வா ராகில் ஓங்கிய கிளையும் மாண்டு
தீரவே கண்கள் இரண்டும் தெரியாது போவர் தாமே. 69

(இ - ள்) ஏழைப்பெண்கள் முறையிட்ட வழக்குகளாயிருப்பினும் நடுவு நிலைமையறிந்து நியாயம் சொல்பவரே பரிசுத்தர். அவர்கள் ஏரிபோல் பெருகிப் பூமியின்மேல் இரண்டு கண்ணும் பிரகாசித்து வாழ் வார்கள். ஆனால் பட்சபாதமாய்ச் சொல்லுவரேல் அவர்கள் உயர்ந்த சுற்றமும் அழிந்து இருவிழிகளும் தெரியாத குருடராய் மயங்கி வருந் துவார்கள். எ - று.
----------

முலை நலம் கூறல்
துப்புறச் சிவந்த வாயாள் தூயபஞ் சணையின் மீதில்
ஒப்புறக் கணவ னோடே ஓர்லீலை செய்யும் போது
கற்பகஞ் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்றென்றே அங்கையால் தடவிப்பார்த்தாள். 70

(இ-ள்) பவளம்போன்ற சிவந்த வாயையுடையவள் பரிசுத்த மான பஞ்சணைமேல் தன்கணவனோடு ஒப்புற ஒருவகைக் கலவி செய் யுங்காலத்தில், பரதார கமனம் என்பதைச் சற்றும் நினையாத தன் நாயகனது மார்பில் பருத்த தன் ஸ்தனங்கள் இரண்டும் தைத்துப் பின்புறம் ஊடுருவிப் போய்விட்டது என்று தன் அழகிய கைகளால் தடவிப் பார்த்தாள் எ - று.
-------------

ஏரிநீ ரிருந்த போதங் கிருந்தனபட்சி யெல்லாம்
மாரிநீர் மறுத்த போதய் பறவையங்கு இருப்ப துண்டோ
பாரினை யாளும் வேந்தன் பட்சமும் மறந்த போதே.
யாருமே நிலையில் லாமல் அவரவர் ஏகு வரே. 71

(இ-ள்) ஏரியில் ஜலம் இருக்கும்போது பக்ஷிகளெல்லாம் வந்து கூடியிருந்தன. அந்நீர் வற்றியபோது பக்ஷிகள் அங்கிருப் பது உண்டோ? [அதுபோல] உலகத்தை ஆளும் அரசன் பக்ஷத்தை மறந்தபோது ஒருவரும் நிலையில்லாமல் அவரவர் பக்ஷமுள்ள இடந் தேடிச் செல்வார்கள் எ - று.
-----------

சந்தக்கழி நெடில் விருத்தம்
மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கவ்வும் காலினராய்
அண்ணார்ந்தெங்கிருப்பாரை அறிந்தேம் அறிந்தேம் அம்மம்மா
பண்ணார்மொழியார் பாலடிசில் பைம்பொற்கலத்தில் பரிந்தூட்ட
உண்ணாநின்ற போதொருவர்க் குதவா மாந்த ரிவர்தாமே. 72

(இ-ள்) கையிலே மண்சட்டியை ஏந்தியவராய், மரநாய் கௌ வும் இலட்சணமுடைய கால் உள்ளவராய், எங்கே அன்னம் கிடைக் குமோ என்று ஏங்கி எண்ணியிருக்கின் றவர்களை அம்மம்மா! கண் டோம்; கண்டோம், அவர்கள் யாவரெனில், இராகம்போன்ற இனிய வார்த்தைகளையுடைய மங்கையர்கள் பொன்கலத்தில் பாலோடுகலந்த அன்னத்தை மிக அன்போடு உபசரித்து ஊட்ட உண்ணும் சமயத் தில் ஒருவருக்கும் கொடாத உலுத்தர்களே (அத்துன்பங்களையனுப விப்பர்] எ - று.
-------------

மண்டலத் தோர்கள் செய்த பாவம்மன் வரைச் சாரும்
திண்டிறல் மன்னர் செய்த தீங்குமந் திரியைச் சேரும்
தொண்டர்கள் செய்ததோஷம் தொடர்ந்துதங்குருவைச்சேரும்
கண்டன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்காமே.       73

(இ-ள்) உலகத்தவர்கள் செய்த பாவம் அரசனைச்சாரும், வலி மையும் வெற்றியுமுள்ள அரசர்கள் செய்த தீமை அமைச்சரைச் சேரும், அடியார்கள் செய்த குற்றம் தன் ஆசிரியனைத் தொடர்ந்து பற்றும் கற்கண்டு போலும் மொழியையுடைய மனைவியர்கள் செய்த பாவம் புருடர்களுக்காகும் எ-று.
---------

நற்குண முடைய வேந்தை நயந்துசே வித்தல் ஒன்று
பொற்புடை மகளீ ரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று
பற்பல ரோடு நன்னூல் பகர்ந்துவா சித்தல் ஒன்று
சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம்தானே.       74

(இ-ள்) நல்ல குணமுடைய ராஜனை விரும்பித் தரிசித்தலும், அழகுமிக்க மனையாளோடு கூடி வாழ்தலும் (கல்விமான்களான நல் லாசிரியரை அடுத்துத் தன்னையொத்த மாணாக்கர்] பற்பலரோடு நல்ல நூல்களைக்
கேட்டுச் சந்தேகமறப் பயின்று கற்றுக் கொள்ளுதலுமா கிய இந்த மூன்று காரியங்களும் இகத்தில் அனுபவிக்கத்தக்க சுவர்க்க போகங்களாம் எ-று.
----------

வேறு
நிட்டையிலே இருந்துமனத் துறவடைந்த
      பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்துமுத்தி பெறுமளவும்
      பெரியசுகம் கிடைக்கும் காம
வெட்கையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு
      மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே
      கிடத்துமட்டும் கவலை தானே.       75

(இ - ள்) சதா நிட்டைபுரித்து பற்று நீங்கி மனத்தின்கண் துறவடைந்த பெரியோர்களுக்குப் பரமபதியின் பாதத்தைத் துதிக்கக் கிடைத்ததுமுதல் மோக்ஷத்தை அடையும்வரையில் பெரிதான ஆனந் தம் கிடைக்கும். கன்னியர்களின் காமம் என்னும் வெப்பத்திலே புத்தி மயங்கிக்கிடக்கும் சிறுவருக்கு விவாகமுறை பேசி விருப்பத்தோடு தாலிகட்டுவதுமுதல் சுடுகாட்டில் அடுக்கிய கட்டைகளின் நடுமத்தி யில் கொண்டுபோய் வைக்கும் வரையில் துன்பமே அனுபவிப்பார் கள் எ - று.
------------

தலைவன் வருந்துதல்

சந்தக்கழி நெடில் விருத்தம்
அன்னம் பழித்தநடை ஆலம் பழித்த வீழி
      அமுதம் பழித்த மொழிகள்
பென்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல்
      சின்னஞ் சிறுத்த இடைபெண்
என்னெஞ் சுருக்கவவள் தன்னெஞ்சு கற்றகலை
      என்னென் றுரைப்ப தினிநான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்ட படி
      தெய்வங்க ளுக்கபய மே.       76

(இ - ள்) அன்னத்தை இகழ்ந்த நடையையும் விஷத்தை நிந் தித்த கண்களையும், அமிர்தத்தைப்பழித்த சொற்களையும், (பொன் போலும் தேமல்படர்ந்து) மிகப்பெருத்த ஸ்தனங்களையும், கருநிற மாய் இருண்ட கூந்தலினையும் (கண்டவர்கள் அதிநுட்பமென்று மதிக் கும்படி) மிகவுஞ்சிறுத்த இடையினையுமுடைய பெண்ணானளள் எனது மனத்தையுருக்க, அவள் தன் நெஞ்சிற் கற்றுக்கொண்ட சாத்திர வல்லபத்தை இனி நான் என்ன என்று சொல்லுவேன். அச்சிறுக்கி யால் நேரிட்ட வில்லங்கங்களுக்குத் தெய்வத்தை நோக்கி முறையிடு வதல்லாமல் என்னால் செய்யத்தக்கது யாது? எ-று.
------------

எண்சீரடி யாசிரிய விருத்தம்
ஆவின மழைபொழிய இல்லம் வீழ
      அகத்தினள் நோய் தனில்வருத்த அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
      வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
      குருக்கள்வந்து தக்ஷணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
      பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே.       77

(இ -ள்) பசு கன்றைப்பெற, மழை விடாதுபெய்ய, வீடு இடிந்து விழ, வீட்டுக்குரிய மனைவி கர்ப்பவேதனைப்பட, வேலையாள் இறக்க; ஈரம்காய்ந்துவிடுகிறதென்று விதைக்க விதை கொண்டோட, வழியில் கடன்காரர் மறித்துக் கொள்ள, அச்சமயத்தில் வேளான்மை செய்து சாப்பிட்ட பூமிகளின் தீர்வையைத் தலைமையான அரசர்கேட்க, அது காலை குருக்களானவரும் குறுக்கே நின்று தக்ஷணைகேட்க கவிகளைப் பாடி வித்துவான்கள் சன்மானம் செய்யும்படி வினவ, பாவிமகன் அடையும் துன்பம் பார்க்கச் சகிக்காது எ-று.
-----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்

தாய்பகை பிறர் நட் பாகில் தந்தை கடன்கார னாகில்
மாய்பகை மனைவி யாரும் மாவழ குற்ற போது
பேய்பகை பிள்ளை தானும் பெருமை நூல் கல்லா விட்டால்
சேய்பகை ஒருவர்க் காகும் என்றனர் தெளிந்த நூலோர்.       78

(இ-ள்) பிறருக்கு அனுகூலமாகவும், தனக்குப் பகையாகவும் இருக்கின்ற மாதாவும், அதிக கடன்பட்ட பிதாவும், மிகுந்த அழகுள் ளவளாய்த் தனக்கு வாய்த்த மனைவியும், பெருமையான சாத்திரங் களைக் கற்றுக்கொள்ளாத பிள்ளையும் ஒருவனுக்கு கிடைக்குமாகில், அவன் யாவருக்கும் பகையுடையவனென்றே நன்றாய் அறிந்த கிரந்த கர்த்தர்கள் சொல்லுவார்கள் எ-று.
-------------

நிலைதளர்ந் திட்ட போது நீணிலத் துறவு மில்லை
சலமிருந் தகன்ற போது தாமரைக் கருக்கன் கூற்றம்
பலவனம் எரியும் போது பற்றுதீக் குறவாங் காற்று
மெலிவது விளக்கே யாகில் மீண்டுமக் காற்றே கூற்றாம்.       79

(இ-ள்) நீர் நிறைந்த தடாகத்திலுள்ள தாமரைப்புஷ்பத் திற்கு அக்காலத்தில் சிநேகமாகிய சூரியனே நீர் வற்றிய காலத்திலே [அத் தாமரைக்கு] சத்துருவாய் நாசஞ்செய்வான். அடர்ந்த பெருங்காடு கள் தீப்பற்றி எரியும்போது அப்பெரு நெருப்புக்கு வாயுவாகிய காற்று உதவியாய் நிற்கும். அவ்வித நெருப்பு தன் அளவில் சுருங்கி ஒரு தீபத்தளவாய் நின்றபோது அக்காற்றே அத்தீபத்திற்கு யமனாகும். [அது போல] செல்வம் நிறைந்த காலத்தில் நெருங்கிய உறவினரா யிருந்தவர்களும் அது தவறிய காலத்தில் பந்துத்வம் நீங்கிப் பகை வர் ஆவார்கள் எ - று.
----------

மடுத்தபாவாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க்கெல்லாம்
கொடுத்தெவர்வறுமையுற்றார் கொடாதுவாழ்ந்தவரார்மண் மேல்
எடுத்துநா டுண்ட நீரும் எடாதகாட்டகத்து நீரும் [
அடுத்தகோ டையிலே வற்றி யல்லதிற் பெருகுந் தானே.       80

(இ-ள்) நெருங்கிய வித்துவான்கள், மேலானவர்கள் வேதியர்கள் யாசிப்போர்கள் இவர்களுக்குக் கொடுத்ததினால் யார் தரித்தி ரத்தை அடைந்தார்கள். கொடாமல் பூமியின்மேலிருந்து யார் வாழ்ந் தார்கள்? நாட்டில் யாவரும் எடுத்து உண்ணத்தக்க தடாக ஜலமும் ஒருவரும் எடுத்து உண்ணாத காட்டினிடத்திலுள்ள ஏரிநீரும், பொ ருந்திய கோடை காலத்தில் வற்றியும் கார்காலத்தில் ஜலம் நிறைந் தும் பெருகுமல்லவா? எ-று.
------------

உணங்கி ஒருகால் முடமாகி
      ஓர்கண் ணிழந்து செவியிழந்து
வணங்கு நெடுவால் அறுப்புண்டு
      வயிறும் பசியால் முதுகொட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி
      அகல்வா யோடு கழுத்தேந்திச்
சுணங்கன் முடுவல் பின்சென்றால்
      யாரைக் காமன் துயர்செய்யான்.       81

(இ-ள்) வாட்டமுற்றும், ஒருகால் முடக்கியும் ஒருகண் குருடு அடைந்தும், காது அறுப்புண்டும் நீண்டுவளைந்த வால் அறுபட்டும் உணவின்றி வயிறு முதுகோடு ஒட்டியும், அழகுகெட்டு முதுமை வாய்ந்தும், அகன்ற வாயினையுடைய கலவடையைக் கழுத்தில் மாட் டிக்கொண்டு திரியும் ஆண் நாயானது ஒரு பெண் நாயின்பின் காமத் தால் ஓடித்திரியுமாகில், மற்றெவர்களை மன்மதன் துன்பம் செய்யான்? எ - று.
------------

எழுசீரடி யாசிரிய விருத்தம்
கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
      காகத்தை யென்செயப் படைத்தாய்
துன்மதி வணிகர் தங்களைப் படைத்து
      சோரரை யென் செயப் படைத்தாய்
வன்மன வடுகர் தங்களைப் படைத்து வானரம்
      என்செயப் படைத்தாய்
நன்மனைதோறும் பெண்களைப் படைத்து
      நமனையென் செயப்படைத் தனையே.       82

(இ-ள்) ஓ நான்முகனே! கருங்கல்லைப்போன்ற நெஞ்சத்தையு டைய பிராமணரைப் படைத்திருந்தும் காகத்தையும், துர்ப்புத்தியுள்ள வணிகர்களைப் படைத்திருந்தும் திருடர்களையும், வலிய நெஞ்சத்தை யுடைய வடுகரைப் படைத்திருந்தும் வானரங்களையும் நல்ல வீடு கள் தோறும் பெண்களைப் படைத்தும் யமனையும் யாது காரணத்துக் காகப் படைத்தாயோ விளங்கவில்லையே எ - று.
-------------

கலி விருத்தம்
உண்ணல்பூச் சூடல்நெஞ் சுவத்தல் ஒப்பனை
பண்ணலெல் லாமவர் பார்க்க வேயன்றோ
அண்ணல்தன் பிரிவினை அறிந்தும் தோழிநீ
மண்ணவந் தனை இது மடமை யாகுமால்.       83

(இ-ள்) என் உயிர்ப்பாங்கியே! உலகத்தில் கற்பிற்சிறந்த பெண்கள் மதுரமான ஆகாரங்களை உட்கொள்ளுதலும், பரிமளமிகுந்த புட்பங்களை முடித்துக் கொள்ளுதலும், மனமகிழ்ச்சி முகமலர்ச்சிக ளோடு இருந்தாலும், (மற்றும் பல விதமான) திவ்ய வஸ்திராபரணங் களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதலுமாகிய இவைகள் எல் லாம் தத்தம் கணவர் கண்டுகளிப்பதற்காகவே அல்லவோ? (அவ்வா றிருக்க) பெருமையிற் சிறந்த எனது நாயகன் தற்சமயம் என்னை விட்டுப் பிரிந்திருப்பது உனக்குத் தெரிந்திருந்தும் என்னை அலங் காரம் செய்வதற்காக நீ வந்தது இது உன் அறியாமையையே ஆகும் எ-று.
----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கோளரி யடர்ந்த காட்டில் குறங்கில்வைத் தமுதமூட்டித்
தோளினில் தூக்கி வைத்துச் சுமந்து பேற வளர்த்த
ஆளனைக் கிணற்றில் தள்ளி யழகிலா முடவற் சேர்ந்தாள்
காளம்நேர் கண்ணி னாரைக் கனவிலும் நம்பொ ணாதே       84

(இ-ள்) வெவ்விய சிங்கங்கள் வாழும் கானகத்தில் துடையி லிருத்தி அன்னம் ஊட்டித் தோளில் தூக்கிவைத்துச் சுமந்து அன் பாக வளர்த்துவந்த புருஷனைக் கிணற்றில் தள்ளி ஓர் அழகிலா முடவனை ஒருத்தி கூடினாள் (ஆதலால்) விஷத்திற்கு ஒப்பான கண் ணுடைய பெண்களைக் கனவிலும் நம்பத்தகாது எ-று.
(இக்கதை பஞ்சதந்திரத்திலுள்ளது.)
-----------
கொச்சைக்கலிப்பா
சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீர் சுரத்தானே
நோய்கொண்டா லும்கொளலாம் நூறுவய தளவும்
பேய்கொண்டா லும்கொளலாம் பெண்கொள்ள லாகாதே.       85


(இ - ள்) சிவந்த நிறத்தைக்கொண்டு விளங்குந் தாமரை மலரிலுள்ள பிரமதேவனும், ஆதிசேடனைப் பாயாகக் கொண்ட மகாவிஷ் ணுவும் வணங்கிந் துதிக்கும்படியாகத் திருப்பட்டீச்சுரத்தலத்தில் எழுந் தருளிய சிவபெருமானே! (ஒருவன்) நூறு வயதளவும் வியா தியையும் கொளலாம் பேயையும் கொள்ளலாம்; (ஆனால்) நற்குணங்கள் இல் லாத பெண்களைக் கொள்ளலாகாது எ - று.
---------

கஸ்தூரி முதலிய வாசனை வஸ்துக்களை விற்பனை செய்பவர் வேடர்
குடியிருப்பிற் சென்று தங்கள் வர்த்தகத்தைக் காட்டியபோது நடந்த சம்பாஷணை.

அறுசீரடி யாசிரிய விருத்தம்
நானம் என்பது மணங்கமழ் பொருளது
      நாவிலுண் பதுவோசொல்
ஊனு ணங்குவோய் மடந்தைய ரணிவதே
      உயர்முலைத் தலைக்கோட்டில்
ஆன தங்கது பூசினால் வீங்குவ
      தமையுமோ எனக்கேட்கக்
கான வேட்டுவச் சேரிவிட் டகன்றனர்
      கடிகமழ் விலைவாணர்.       86

(இ-ள்) (வர்த்தகர்) நானம் என்பது வாசனை கமழும் பொரு ளென்ன, (அதற்கு வேடர்] நாவினால் சுவைத்துச் சாப்பிடத்தக்க ஊன் சொல்லென்ன.. [வர்த்தகர்] பதார்த்தமோ உண்பவனே! ஸ்திரீகள் மேலோங்கி உயர்ந்த ஸ்தனத்திடத்து அணிந்து கொள்ளும் வாசனைத் திரவியமென்ன, [வேடர்] அங்கு அதைப் பூசினால் ஸ்தனவீக்கம் அமுங்கி விடுமோ என்ன, வர்த்தகர்] அவ்விடத்திலுள்ள வேடர் குடியிருப்பை விட்டு நீங்கினர் எ - று.
------------

கலிநிலைத்துறை
கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்
விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்டவன் தேரை
மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு
வண்டு தேனுகர் இன்பமே மானிட இன்பம்.       87

(இ-ள்) கருடன் வாயில் கௌவிக்கொண்டு ஆகாயத்தின் வழி யாகச்செல்லும் வளைந்த வரிகளையுடைய நாகமும், அந்த நாகத்தின் வாயில் அகப்பட்ட தேரையும், அத்தேரை வாயில் அகப்பட்ட வண் டும், அவ்வண்டானது மதுவையுண்ணும் இன்பத்திற்கு ஒப்பேயாகும் இவ்வுலகத்திலுள்ள மனிதர்களும் அனுபவிக்கும் இன்பங்கள் எ-று.
-------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கற்பூரப் பாத்திகட்டி கஸ்தூரி
      எருபோட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலும்
      அதின் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற்பேதை யருக்கறிவிங் கினிதாக
      வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராதாங் கவர் குணமே
      மேலாக நடக்குந் தானே.       88

(இ - ள்) கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியையே எருவா கத்தூவி வாசனை நீரையே பாய்ச்சி அழகுண்டாக ஈருள்ளியை அதில் நட்டு வைத்தாலும் அது தன் குணத்தையே செவ்வையாய்க் காண் பிக்கும். சொல்லத்தக்க அறிவில்லாதவர்க்கு இனிமையாக அறிவு வருமென்று எவ்வளவு சொன்னாலும் நல்லகுணமானது சற்றும்வராது. அப்போதும் அவர்கள் தீயகுணத்தையே மேலாக காட்டுவார்கள் எ-று
--------------

கண் நயப்பு உரைத்தல்

கலி விருத்தம்
தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தரு கேந்தினாள் கெண்டை
கெண்டையென் றக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்       89

(இ - ள்) கொடிகள் அடர்ந்த தாமரைத் தடாகத்தில் உள்ள நீரைக் கையால் முகந்து, ஒரு மங்கை தன் முகத்தின் அருகே ஏந்திப் பார்த்தாள் (அதனுள் தெரிந்த) தனது கண் நிழலைப்பார்த்து. கெண் டை! கெண்டை! என்று கூவிக்கொண்டே கரையில் ஏறிப்பார்த்த பொழுது, அக்கெண்டைமீனை காணாமல் நின்று மயங்கினாள் எ - று.
--------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
மருவு சந்தணக் குழம்பொடு நறுஞ்சுவை
      நலம்பெற அணிந்தாலும்
சருவ சந்தேக மனமுடை மாதரைத்
      தழுவலு மாகாதே
பருவ தங்கள் போற் பலபல நவமணிப்
      பைம்பொனை யீந்தாலும்
கெருவ மிஞ்சிய மானிடர் தோழமை
      கிட்டலு மாகாதே.       90

(இ-ள்) பொருந்திய சந்தனக்குழம்பு முதலிய வாசனைத் திரவி யங்களையும், பலவித சுவையுணவுகளையும், அழகுபெறச் சேகரித்து அணிந்தாலும் எதிலும் சந்தேகாஸ்பதம் உண்டாக நடக்கும் மாதர் களை அணைதல் தகாது. மலையளவாகிய அநேக நவரத்தினங்கள் அழுத் திய பசுமையான பொன் ஆபரணங்களைக் கொடுத்தாலும் கர்வம் மிகுந்துள்ள மனிதர்களின் சிநேகம் எள்ளளவும் கொள்ளுதல் கூடாது எ று.
-----------------

தலைவி வனப்பு உரைத்தல்

நிலத்தினில் சுழியின் மூழ்கி நின்றவள் தன்னை னேரே
குலத்தலை மஞ்ஞை கண்டு கூவெனக் கானிலேக
முலைத்தலை யதனைக் கண்டு மும்மதக் கரிவந் துற்ற
தலைத்தலைச் சிங்க மென்றக் களிறுகண் டேகிற் றம்மா.       91

(இ-ள்) பூமியிலுள்ள ஜலத்தில் முழுகி நின்ற ஒரு மங்கையைக் கூட்டமாயிருந்த மயில்கள் நேரே பார்த்து அவள் சாயலுக்குப் பயந்து கூவென்று அலறி ஒரு சோலையில் புகுந்தன. அவள் ஸ்தன சிகரத் தைக்கண்டு மும்மதங்களைப் பொழிகின்ற யானைகள் தங்கள் இனம் என்று ஓடிவந்து அவள் இடையாகிய சிங்கத்தைக் கண்டு பயந்து களிறு ஓடிப்போயிற்று எ - று.
------------

அற்ப சந்தோஷிகளின் இயல்பு

கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாகம் இன்றுணும் இரையீ தென்று
விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்டபாடு நாளைநாம் படவே போறோம்.       92

(இ - ள்) (ஒரு வேடன் யானைமீது பாணப்பிரயோகம் பண்ணித் தான் ஒரு நாகத்தால் கடியுண்டு, அந்நாகத்தின்மீதே விழுந்து யானை யும் தானும் நாகமும் இறந்து கிடக்கக்கண்ட ஒரு நரி) யானையோ ஆறு மாதத்து உணவாகும்; வேடனோ மூன்றுநாள் பெழுது போகும்; புற்று நாகமோ இன்று உண்ணும் இரையாகும் என்று சந் தோஷித்துக்கொண்டே விரிந்த தலையையுடைய வேடனது கையி லுள்ள வில்லின் குதை நரம்பைக் கடித்தமாத்திரத்தில் அது அறுந்து அதனால் அந்நரி இறந்தது. (அந்நரி பட்டபாடுபோல) அற்ப சந்தோஷி களாகிய நாம் வீணாசை கொண்டு துன்பப்படப் போகிறோம். எ - று.
------------

பூதலத்தின் மானிடராய்ப் பிறப்பதரிது
      எனப்புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின்முறை யருள்கீர்த்தி
      யாந்தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதிவழு வாதவகை வழக்குரைத்து
      நல்லோரை நேசங் கொண்டு
காதவழிப் பேரில்லார் கழுதையெனப்
      பாரிலுள்ளோர் கருதுவாரே.       93

(இ-ள்) உலகத்தில் மானிடராய்ப் பிறப்பது அரிது எனச் சொல் அப்படிப் பிறந்தாலும் முதன்மையான வேதசாஸ்திரங்க ளின் முறைப்படி கிருபை புகழ்ச்சி இவற்றை யுடையவராய் அன் பாய் ஸ்தல யாத்திரை செய்து, நியாயம் தவறாதபடி வழக்குகள் தீர்த்து வரும் நல்லோர்களை நேசம் செய்து காதவழித்தூரமெனும் பேர் பெற் றிராதவர்களைக் கழுதைப் பிறப்பு என்றே கருதி உலகத்திலுள்ளவர் கள் இகழுவார்கள் எ-று.
---------------

ஆரம் பூண்ட மணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள்
ஈரமிருக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது
வாரங்கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி
ஓரஞ்சொன்ன குடியதுபோல் உதிர்ந்துகிடக்குந் தம்பியரே       94

(இ-ள்) மாலையை அணிந்த அழகிய மார்பையுடைய அயோத் தியை அரசாளும் மகாராஜனாகிய அண்ணாவே! கேட்பாயாக; ஈரமிருக்க, மரமிருக்க, அதன் இலைகள் மட்டும் உதிர்ந்துபோக காரணம் யாது? என்று தம்பி கேட்க அதற்கு தமையன் பூமிமேலிருந்து பக்ஷபாதமாய்த் தனது வல்லமையினால் வழக்குத்தீர்த்து ஓரவஞ்சனை செய்பவர் குடி போல் உதிர்ந்து கிடக்கின்றது தம்பி என்று உரைத்தான் எ - று.
----------------

வல்லியந் தனைக்கண் டஞ்சி மரந்தனில் ஏறும் வேடன்
கொல்லிய பசியைத்தீர்த்து ரக்ஷித்த குரங்கைக் கொன்றான்
நல்லவன் தமக்குச் செய்த நலமது மிக்க தாகும்
புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர் தனைப் போக்கு வாரே.       95

(இ - ள்) புலியைக்கண்டு பயந்து ஒரு மரத்திலேறியிருந்த வேட னுக்கு (உயிர் நீங்கத்தக்க) மிகுந்த பசியைத் தீர்த்து இரட்சித்த குரங்கை அவ்வேடன் கொன்றான். (ஆதலால்) நல்லோருக்குச் செய்த உதவி மிகுதியான நன்மையையே தரும்; அற்பர்களுக்கு நல்லுதவி செய்தால் உதவியவனுடைய உயிரைப் போக்கிவிடுவர் எ - று.
(இக்கதை பஞ்சதந்திரத்தி லுள்ளது)
---------------

தன்மானம் குலமானந் தன்னைவந்
      தடைந்தவுயிர் தங்கள் மானம்
என்மான மாகிலென்ன எல்லவரும்
      சரியெனவே எண்ணம் போந்து
நன்மானம் வைத்தெந்த நாளுமவர்
      தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற
      வள்ளலென வழுத்த லாமே.       96

(இ - ள்) தான் பிறந்த ஜாதி அபிமானம் தன்னிடம் வந்து அடைந்தவர்களுடைய உயிர் போன்ற மானம் முதலியவைகளையும் தன்னுடைய மானத்துக்குச் சமானமாகக்கருதி நல்ல அபிமானம் வைத்து எக்காலத்திலும் நன்மை செய்யத்தக்கவர்கள் யாரோ அவர் களையே பொருந்திய மானாபிமானமுள்ளவர்கள் அபயமென்று அடைந் தவர்களை இரட்சிக்கத்தக்க வள்ளல்கள் என்று சொல்லுவார்கள் எ-று.
------------

தன்னைத்தான் புகழ்வோருந் தன்குலமே
      பெரிதெனவே தான்சொல் வோரும்
பொன்னைத்தான் தேடியறம் புரியாமல்
      அவைகாத்துப் பொன்றி னோரு.
மின்னைப்போல் மனையாளை வீட்டில்வைத்து
      வேசைசுகம் விரும்பு வோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரும்
      அறிவில்லாக் கசட ராமே.       97

(இ - ள்) தன்னையே புகழ்கின்றவர்களும் தன் ஜாதியையே பெரியது என்று உரைப்பவர்களும் பொருளைத் தேடித் தருமஞ் செய் யாமல் அதைக் காத்து வைத்திருப்பவர்களும் மின்னலைப்போலும் [தேக காந்தியையுடைய] மனைவியை வீட்டில் வைத்துப் பரத்தையர் போகத் தை இச்சிக்கன்றவர்களும், தாய் தந்தை வித்வான்கள் முதலியோ ரை விரோதித்துக் கொள்பவர்களுமாகிய இவர்கள் புத்தியில்லாத கீழ்மக்கள் ஆவார்கள் எ-று.
------------

பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
      குணமூடப் பேடி லோபர்
முண்டைகளுக் கிணையில்லா முனைவீரர்
      புருடரென மொழியொ ணாதே
உண்டுலகம் உதிப்பாருள் கீர்த்தியறம்
      இன்னதென வுணர்வே யில்லார்
அண்டினவர் தமைக்கெடுப்பார் அழிவழக்கே
      செய்வதவர் அறிவு தானே.       98

(இ-ள்) மங்கையர் சொற்களைக் கேட்கின்ற பேயர்களாகிய குணங்கெட்ட பேடியனைய லோபிகளுக்கும், விதவைகளுக்கும் ஒப்பு ரைக்கக் கூடாத சுத்த வீரர்களாகிய இவர்களையும் ஆண்தன்மை யுடை யவரெனச் சொல்லக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்களுள் புகழும் தருமமும் இன்னது என்று ஆராய்ந்து அறியாதவர்களே அடுத்தவர்களைக் கெடுப்பவராவார். நியாயத்தை விட்டு நியாய விரோதமாகப் பேசுவது அவர்கள் புத்தியாகும்
எ - று.
-----------


பொல்லார்க்குக் கல்விவரில் கருவமுண்டாம்
      அதனோடு, பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்கும் சொற்சென்றால்
      குடிகெடுக்கத் துணிவர் கண்டார்
நல்லோர்க்கிம் மூன்றுகுண முண்டாகில்
      அருளதிக ஞான முண்டாம்
எல்லோர்க்கும் உபகார ராயிருந்து
      பரகதியை யெய்து வாரே.       99

(இ - ள்) துர்க்குண முடையவர்களுக்குச் கல்வியுண்டாகில் கர்வம் உண்டாகும். அக்கல்வியோடு செல்வமும் கூடினால் சொல்லத் தகாத வார்த்தைகளையும் சொல்லும்படி செய்யும். தம் சொல் எங்கும் செல்லத் தகுந்ததாயிருந்தால், குடிகளைக் கெடுக்கவும் துணிவார்கள். நற்குணமுடையார்க்குக் கல்வி செல்வம் சொற்செல்லுதல் ஆகிய இந்த மூன்றும் உண்டாகில், அருளும் அதிக ஞானமும் உண்டாகும். யாவருக்கும் உபகாரிகளாக இருந்து முத்தியை அடைவார்கள் எ-று.
------------

தலைவி நலங் கூறல்

உந்தியின் சுழியின் கீழ்ச்சேர் உரோமமாம் கரிய நாகம்
சந்திர னெனவே யெண்ணித் தையலாள் முகத்தை நோக்க
மந்தர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு
சிந்துரக் கயற்க னோடிச் செவிதனக் குரைத்த தம்மா.       100

(இ ள்) உந்திச் சுழியாகிய நாபிக்கு அடுத்துள்ள உரோமமா கிய கரிய நாகமானது [எனது தலைவியின் வதனத்தைச்) சந்திரன் என்று கருதி மேல்நோக்க, ஸ்தனங்களாகிய மந்தர மலைகள் நெருங்கி வழியை தடுத்துக் கொள்ளுதலைப் பார்த்து செவ்வரி பரந்த கயலைப் போலும் கண்கள் ஓடிச் செவிகளுக்குச் சொல்லியது எ - று.
------------

மாகமா மேடை மீதில் மேடை மீதில் மங்கைநின் றுலாவக் கண்டு
ஏகமா மதியென் றெண்ணி இராகுவந் துற்ற போது
பாகுசேர் மொழியி னாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயிலென்றெண்ணித்தொடர்ந்தரா மீண்டதன்றே       101

(இ-ள்) வானம் அளாவிய மேடைமீதில் (எனது தலைவியான) மங்கைப்பருவ முடையவள் நின்று உலாவுகையில் ஒப்பற்ற பூரண சந்திரன் என்று நினைத்து (நவக்கிரகத்தில் ஒன்றாகிய ) ராகு என்னும் கரும்பாம்பானது வந்து நெருங்க பால்போலும் மொழியையுடையாள் மனம் பதறித் தனது பாதங்கள் வருந்த நடக்கையில் (அவள் சாய லைக் கண்டு) தோகையையுடைய மயிலென எண்ணி தொடர்ந்த அப் பாம்பு திரும்பிவிட்டது எ - று.
----------

சலதாரை வீழும் நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தால்
குலமென்றேகொள்வதல்லால்குரைகடல் வெறுத்ததுண்டோ
புலவர்கள் சபையிற் கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வ தல்லால் நவில்வரோ பெரியோர்குற்றம்       102

(இ-ள்) சலதாரையில் ஒழுகும் (நாற்றமுள்ள) தண்ணீரும் சமுத்திரத்திற் புகுந்தால், அதைத்தன் இனமென்று ஏற்றுக்கொள் ளும். அல்லாமல் சப்திக்கின்ற அச்சமுத்திரமானது வெறுத்துத் தள் ளுவதுண்டோ? இல்லை. அதுபோல பெரிய வித்துவான்கள் சபையில் (நிரம்பிய நூற்கேள்வி இல்லாத) அற்ப கவிஞர்கள் வந்து சேர்த் தாலும், கற்றவர்களென்று ஏற்றுக்கொள்வர் அல்லாமல் குற்றம் சொல்லார்கள் எ று.
--------------

காரெனுங் குழல்கள் தப்பிக் கடுஞ்சிலை வாளி தப்பி
மேரென வளர்ந்து நின்ற வழத்தின ளோடு தப்பித்
தாருறு கரிய ரோமச் சங்கிலி வழியே சென்று
சீரிய னெனவ ளர்த்த செல்வனல் குழலிற்கை வைத்தான். 103

(இ-ள்) கூந்தலாகிய மேகத்துக்கும், புருவமாகிய வில்லுக்கும், கண்களாகிய அம்புகளுக்கும், மகாமேரு போல வளர்ந்து நின்ற ஸ்தனங் களாகிய யானைத்தந்தங்களுக்கும் தவறி, ஒழுங்காகிய கரிய உரோம மாகிய சங்கிலியின் வழியே சென்று, மேன்மையாய் வளர்ந்த செல் வத்தையுடைய எனது நாயகனானவன் அல்குளாகிய பாம்புப்படத் தில் கால்களை வைத்தான்.
---------------

உண்டதை யொழிக்கும் வாசல் உவரிநீர் ஒழிந்து மேலே
வண்டலும் அழுக்குஞ் சேறும் உதிரமும் மாற வாசல்
உண்டத னிருப்பைக்கண்டு பெருங்களி யுள்ளங் கொண்டு
கண்டனர் இளைஞ ரெல்லாம் கதியெனக் கருது வாரே.       104

(இ-ள்) உண்டயுணவுகளை (சீரணிக்கச் செய்து) வெளியில் தள் ளும் மலவாயிலையடுத்து உவர் நீர் ஒழுக, மேலே வண்டலும் அழுக் கும் சேறும் திரண்ட இரத்தமும் மாறாத வாசல் ஒன்றுண்டு; அதன் இருப்பைப்பார்த்துப் பெரும் சந்தோஷத்தை மனதிற்கொண்டு, அத னைப்பார்த்த வாலிபர் எல்லாம் இதுவே மோக்ஷமென்று கருதுவார்கள்
வேறு எ-று.
---------------

கரந்தொருவன் கணைதொடுக்க மேற்பறக்கும்
      இராஜாளி கருத்தும் கண்டே
உரைந்துசிறு கானகத்தில் உயிர்ப்புறா
      பேடுதனக் குரைக்குங் காலை
விரைந்துவிடந் தீண்டவுயிர் விடும்வேடன்
      கணையால்வல் லூறும் வீழ்ந்தது
அரன்செயலே யாவதல்லால் தன்செயலால்
      ஆவதுண்டோ அறிவுள் ளோரே.       105

(இ-ள்) ஒரு காட்டில் ஒளித்திருந்து கணைதொடுக்கும் வேட னைக்கண்டு பயந்து பறந்த புறாக்கள் இரண்டில் ஆண் புறாவானது பெண்புறாவைப் பார்த்து, நம்மை பட்சிக்கக் கருதி பூமியில் வேடன் இருக்கிறான்; ஆகாயத்தில் இராஜாளிப் பட்சி பறக்கிறது யாது செய்வோம் என்ற சமயத்தில், அவ்வேடனைப் புதரிலிருந்த பாம்பு வேக மாக வந்து கடித்தது. அதனால் அவன் இறக்க, அவன் கை வில்லில் இருந்த அம்பு விடுபட்டு மேற்பறந்த இராஜாளியைக் கொன்று வீழ்த் தியது என்றால், அறிவுள்ளோரே! எல்லாம் கடவுள் செயலால் ஆவ தல்லாமல் நம்செயலால் ஒன்றும் ஆவதில்லை எ-று.
----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
கொல்லுலை வேற்க யற்கண் கொவ்வையங் கனிவாய்மாதே
நல்லணி மெய்யிற் பூண்டு நாசிகா பரண மீதில்
சொல்லதிற் குன்றி தேடிச் சூடிய தென்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்புதைத்தனள்வெண்முத்தென்றாள்.       106

(இ-ள்) கொல்லன் உலையில் காய்ச்சிக் கூர்மை செய்த வேலா யுதமும் கெண்டை மீனையும் ஒத்த கண்களும் கொவ்வைப் பழம்போன்ற சிவந்த வாயினையுடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களைத் தேகத் தில் அணிந்து, நாசியின் ஆபரணத்தில் குற்றம் பொருந்திய குண்டு மணியைப புனைந்தது யாது காரணம்? என்ன, அம்மேன்மையுடைய வள் கேட்டு வெட்கிக் தனது கண்ணையும் செவ்வாயையும் மூடிக் கொண்டு வெள்ளைமுத்து என்று சொன்னாள் எ-று.
---------------

தலைவன் கூற்று

கலி விருத்தம்
அருகிலிவள் அருகிலிவள் அருகில்வர வுருகும்
கரியகுழல் மேனியிவள் கானமயில் சாயல்
பெரியதனம் இடைசிறிது பேதையிவள் ஐயோ
தெருவிலிவள் நின்றநிலை தெய்வமென லாமே.       107

(இ-ள்) கறுப்பு நிறம் பொருந்திய கூந்தலையும் அழகிய மேனி யையும், கானமயிலைப்போலுஞ் சாயலையும் பாரித்த ஸ்தனங்களையும், சிறுத்த இடையினையுமுடைய பெண்ணானவள் பக்கத்தில் வர மன மானது உருகும். ஐயோ! வீதியில் இவள் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச்சொல்லுதல் வேண்டும் எ-று.
-----------

பாங்கி கூற்று

அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
கலக மேசெயுங் கண்ணிது வாமென
மலரம் பைந்தையம் வைத்து வணங்கினான்.       108

(இ - ள்) கூர்மையான கண்களையும், வாளாயுதத்தையொத்த அழகிய ஆபரணங்களையுமுடைய எங்கள் கன்னியினது நல்ல நெற்றி யிலுள்ள பொட்டின் அழகைச் செவ்விய வில்லையுடைய மன்மதன் எதிர்கண்டு கலகம் விளைவிக்கும் கண் இது என்று நினைத்துத் தன் மலரம்புகள் ஐந்தையும் (அவள் முன்) வைத்து வணங்கினான் எ-று.
-----------

கொச்சகக்கலிப்பா
குரங்கு நின்றுகூத் தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்புநாய் பாடிக்கொண் டாடிய வதுபோல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.       109

(இ-ள்) குரங்கு கூத்தாடி நின்ற அழகைப்பார்த்து ஒரு நாய் தானும் அவ்வாறு ஆடக்கருதி ஊழைப்பாட்டுடன் வீதியில் ஆடியது போல கைகளை நீட்டி பேசும் மூடர்களைக்கண்டு மெச்சி. தலைகளை யாட்டி, தங்களை தாங்களே மெச்சிக்கொள்வது அறிவிலாதார் தொழில் (எ-று).
------------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தஞ் சொல்லுக் கஞ்சிப்பொறுத்தனர்பெரியோரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருதலாமே.       110

(இ-ள்) வில் வளைந்து கொடுத்தல், யானை நித்திரை செய்தல், புலி பதுங்குதல், வலியகடா பின்வாங்குதல் கீழ்மக்கள் சொல்லுக்குப் பயந்து பெரியோர் பொறுமையோடு இருத்தல் இவை யாவையும் நன்மையென்று நினைக்கக்கூடாது. விஷம் என்றே நினைக்கவேண்டும். எ - று.
-----------

சலந்தனில் கிடக்கும் ஆமை சலத்தைவிட் டகன்ற போது
கொலைபுரி வேடன் கண்டு கூரையிற் கொண்டு செல்ல
வலிவினால் அவனை வெல்ல வகையொன்று மில்லையென்றே
கலையெலி காகம் செய்த கதையென விளம்பு வோமே.       111

(இ-ள்) தண்ணீரிலிருந்த ஓர் ஆமை சலத்தைவிட்டு கரையில் வந்தபொழுது, அதைக்கொல்லும் தொழிலையுடைய ஒரு வேடன் பார்த்துப் பிடித்துக்கட்டி வலையிலிட்டுக் கொண்டுபோக,[அந்த ஆமைக் குப் பிராண சிநேகிதமாகவிருந்த ஒரு மானும் எலியும் காகமும் தங் கள் வல்லமையினால் அவ்வேடனை ஜெயிக்க யாதொரு வகையிலும் முடியாது என்று நினைத்து, ஒருவித தந்திரத்தால் ஆமையைத் தப்புவித்த கதையேயாகும் நீ செய்த காரியம் எ - று. (இக்கதை பஞ்ச தந்திரத்தில் உள்ளது).
-----------

நிலமதில் குணவான் தோன்றின் நீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்
நலமிலாக் கயவன் தோன்றில் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்       112

(இ-ள்) உலகத்தில் நல்ல குணமுடையவனால் ஒருவன் பிறந் தால், அவனால் அவனது குலம் முழுதும் வாழ்வையடையும்; அவன் தானிருக்கும் இடமெல்லாம் வாசனை தோன்றும். சந்தன விருக்ஷம் போல எத்திசையிலும் புகழ் மணக்கும். நன்மையிலாக் கீழ்மகனாய் தித்தால் அவன் குலமும் தேசமும் பாழடையும், கோடரிக்காம்பு போல் தன் ஜாதிகளுக்கெல்லாம் ஈனங்கள் உண்டாக்குவான். எ - று.
விபசாரத்தைக் கொண்டு புருட பாரியர்களுக்குள் நடந்த சம்பாஷணையைத் தலைவி தோழிக்குக் கூறியது.
--------------
அறுசீரடி யாசிரிய விருத்தம்
உயிரனையான் உடன்கலந்த உளவறிந்தீண்
      டெனைமணந்தோன் உடன்றிச் செய்கை
செயலெனயென் றிலைமறைகா யெனத்தணவா
      தவ்விரு வகையும் தீதென்று
அயில்விழியாய் மயற்பொதுவூழ் வலித்தினும்
      பெண்மதியெனதுவும் ஊ ஊழின்
இயலெனவள் ளுவருரைத்தார் சான்றுநீ
      எனப்புகன்றேன் இன்புற் றானே.       113

(இ-ள்) வேல்போலும் கூரியகண்களையுடைய தோழியே! என் உயிரினும் சிறந்த சோரநாயகனிடத்தில் நான் கூடிக் குலாவி வரும் மர்மத்தை என்னை விவாகம் செய்து கொண்ட கணவன் அறிந்து இவ்விடத்தே இலை மறைவு காய்மறைவு என்று இல்லாமல் என்மேல் கோபங்கொண்டு இப்படிப்பட்ட தகாத காரியம் செய்யத், துணிந்த மைக்குக் காரணம் யாது? என்று கேட்க, அப்போது நான் உண்டு என்பதும், இல்லை என்பதும் ஆகிய இரண்டு காரியங்களும் குற்ற மாகவே முடியும் என்றும் எனக்குள் யோசித்துக் காமம் பொது என் றும் ஊழ் வலித்திடினும் பெண்புத்தியல்லவா என்றும் அப்புத்தியும் ஊழின் இயல்புபோல் ஆகுமென்று திருவள்ளுவநாயனார் உரைத்த னர். மேலும் அதற்கு சாக்ஷி தாங்களே பிரத்தியக்ஷமாக இருக்க வேறு தேடுவானேன் என்றேன். அதைக் கேட்டு மன மகிழ்ந்தனர் இதை நீ நீ அறிவாயாக எ - று.
----------

நட்பிடைக் குய்யம்வைத்தார் பிறர்மனை நலத்தைச் செய்வார்
கற்புடைக் காமத் தீயார் கன்னியை விலக்கி னோரும்
அட்டுடன் அஞ்சு கின்றோர் ஆயுளுங் கொண்டு நின்று
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.       114

(இ - ள்) சிநேகத்தில் வஞ்சகம் செய்தவரும் அயலாள் மனைவி இன்பத்தையிச்சித்தவரும், காமாக்கினியால் வருந்துகின்ற கன்னியை விலக்கினோரும், கொல்லும் தொழிலை மேற்கொண்ட போர்க்களத்தில் பயந்து ஓடியவரும் (ஆகிய இவர்கள்] குட்டவியா தியையடைந்து நெடு நாள் உலகத்தில் துன்பத்தையனுபவித்துப் பின்பு நரகக் குழியில் விழுந்து அழுந்துவார்கள் என்று கண்டுகொள் எ - று.
-----------

மதியிலா மறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலந் தன்னில் தோஷமென்றுரைத்தே ஆற்றில்
புதுமையா யெடுத்த போது பெட்டியிற் புலிவா யாலே
அதிருடன் கடியுண் டன்றே அருநர கடைந்தான் மாதோ       115

(இ-ள்) விவேகமற்ற ஒரு பிராமணன் [தன்னிடத்தில் கல்வி பயின்றுவந்த இராஜகுமாரத்தியின்மீது விடாமோகங்கொண்டு, அவள் புஷ்பவதியான காலம் மிகவும் தோசமுடையது என்றும், உடனே அவளை பேழையில் அடக்கம் செய்து நதி முதலிய நீரோட்டங்களில் விட்டுவிட வேண்டும் என்றும், அவள் தந்தையாகிய அரசனுக்குத் தெரிவித்து அவ்வாறே செய்வித்து, பின்பு தான் அந்தப் பெட்டியைத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்று ஓரிடத்தில் அப்பெட் டியைக் கண்டு அதை எடுத்து ஆசையுடன் திறக்க, முன்னமே வேட் டையாடிவந்த வேறு ஓர் அரசன் அந்தப் பெட்டியைப் பார்த்து எடுத்து திறந்து அதற்குள்ளிருந்த கன்னியை அழைத்துக்கொண்டு வேட்டையில் அகப்பட்ட புலியை அதிலே போட்டுப் பூட்டிப் பழைய படி ஆற்றில் விட்டுவிட்டான். ஆதலால் அப்பெட்டிக்குள் இருந்த அப்புலியின் வாயினாலே அப்போதே அதிர்ச்சியோடு அப்பிராமணன் கடிக்கப்பட்டு இறந்து நரகத்தை அடைந்தான் எ று.
----------

மையது வல்லியம்வாழ் மலைக்குகை தனிற்பு குந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்துங் காலை
பையவே நரிக்கோ ளாலே படுபொருள் உணரப் பட்ட
வெய்யவம் மிருகந் தானே கொன்றிட வீழ்ந்த தன்றே.       116

(இ - ள்) ஓர் ஆட்டுக்கடாவானது புலி இருக்கும்படியான ஒரு குகைக்குள் புகுந்து அப்புலிக்குச் சந்தேகதத்தை உண்டு பண்ணி காட் டில் அப்புலியை துரத்தும்பொழுது [எதிரில் வந்த) ஒரு நரியின் மெல் லிய கோளாலே அப்புலியானது உண்மையைத் தெரிந்துகொண்டு அவ்வாட்டின்மேல் பாய்ந்து கொல்ல ஆட்டுக்கடா இறந்தது எ - று.
---------------

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ்
      தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல்லைச் சீராமன்
      கேட்டவுடன் சென்றான் மான்பின்
தங்கையவள் சொற்கேட்ட ராவணனும்
      கிளையோடு தானும் மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும்
      பேருலகோர் நகைப்பர் தாமே.       117

(இ - ள்) அரசர் புகழும் தசரதன், கைகேசி என்னும் மனைவி யின் சொற்களைக்கேட்டு மரணமடைந்தான். ஸ்ரீராமபிரான் ஜானகி யின் சொற்களைக் கேட்டு மான்பின் சென்று வருந்தினான்; இராவணன் தன் தங்கையாகிய சூர்ப்பநகையின் சொற்களைக்கேட்டு தன் சுற்றத் தோடு தானும் மாண்டான். ஆதலால் ஸ்திரீகள் சொற்களைக் கேட்ப தெல்லாம் துன்பத்திற்கே யிடமாகும்; பெரிய உலகத்திலுள்ளவர் களும் நகைப்பார்கள். எ - று.
-----------

ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்ற வர்க்குள்
சூதினால் கபடஞ் செய்து துணைபிரிந் திடுவ ரென்றால்
வேதியன் பவன வாயில் வேசைதாய் பச்சை நாவி
ஊதிய கதைபோ லாகி உறுநர கெய்து வாரே.       118

(இ-ள்) முதலில் ஒற்றுமையான சினேகிதத்தைக் கொண்டி ருந்த இருவருள் ஒருவரை மற்றொருவர் அவமதிக்க வேண்டுமென்று எண்ணி, அதற்குரிய வஞ்சகங்கள் பலசெய்து, அதனால் பகைநேர்ந்து, ஒருவரை விட்டு ஒருவர் பிரிவது, ஒரு தாசியானவள் தன்மகளோடு இணைபிரியாது கூடிக்குலாவிவந்த ஒரு பிராமணனுடைய குதத்தில் பச்சை நாவியை வைத்து ஊதிய கதை போல வஞ்சகஞ் செய்கின் றவர் கொடிய நரகத்தை அடைவர் எ-று. (இக்கதை சிந்தாமணியிலுள்ளது)
-----------

அருமையும் பெருமை தானும் அறிந்துடன் படுவர் தம்மால்
இருமையும் ஒருமை யாகி இன்புறற் கேது வுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்கள் தம்பால்
ஒருமையின் நிரயம் எய்தும் ஏதுவே யுயரும் மன்னோ.       119

(இ-ள்) ஒருவனுடைய அருமைபெருமைகளை யறிந்து உடன் பாடான சினேகஞ் செய்வார்களாகில் இம்மை மறுமை என்னும் இரண் டிடத்தும் ஒரேவிதமான இன்பத்தை அடைவதற்கு ஏது உண்டாகும். சகுளியைப்போல் அன்பில்லாமல் துர்க்குணம் கொண்டவர்களின் சிநேகத்தால் மென்மேலும் பாவங்களே அதிகப்பட்டு நரகவேதுவே உண்டாகும் எ-று.
---------------

ஒருவனே யிரண்டு யாக்கை ஊன்பொதி யான நாற்றம்
உருவமும் புகழு மாகும் அதற்குள் நீ யின்ப முற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடும் மற்றி யாக்கை
திறமதா யுலகம் ஏற்றச் சிறந்துபின் னிற்கு மன்றே.       120

(இ-ள்) உலகத்தில் மனிதர்களுக்குப் பொய்யுடம்பு என்றும், புகழுடம்பு என்றும் இரண்டு உடம்புகளுண்டு. அவற்றுள், இவ்வுலக இன்பங்களை நுகர்வதற்கு ஏதுவாகிய நாற்றம் பொருந்திய மாமிச பிண்டமாகிய பொய்யுடம்பு இவ்வுலகத்திலேயே நிலையின்றி மாய்ந்து விடும். புகழுடம்போவெனில், இம்மை மறுமைகளுக்கு ஏதுவாய் என் றும் அழியாமல் உலகமெங்கும் சிறந்த கீர்த்தியோடு நிலைநிற்கும் எ-று.
------------

கலிநிலைத்துறை
வேலி யானது பயிர்தனை மேய்ந்திட விதித்தால்
கால னானவன் உயிர்தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலம் அன்னையர் பாலகர்க் கருத்துவ ரானால்
மேலி தோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே.       121

(இ - ள்) ஓ அரசனே! காவலாக ஏற்பட்ட வேலியே பயிரை யுண்ணவும், யமன் உயிர்களைக் கவரவும், கொல்லத்தக்க விஷத்தைத் தாய்மார்களே (தங்கள்) பிள்ளைகளுக்கு ஊட்டவும் நினைப்பார்களே யானால் இதை அறிந்து தடுப்பவர் யார்? எ-று.
--------------

பரத்தையரை இச்சித்தவர்கள் அடையும் பலன்

அறுசீரடி யாசிரிய விருத்தம்
அறங்கெடும் நிதியுங் குன்றுந் ஆவியும் மாயும் காயம்
நிறங்கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகிற் சேர்க்கும்
மறங்கெடும்மறையோர் மன்னன்வணிகர் நல்லுழவோரென்றும்
குலங்கெடும் வேசைமாதர் குணங்களை விரும்பி னோர்க்கே.       122

(இ-ள்) சாந்த குணத்தையுடைய வேதியர், அரசர், வைசியர், உழவினர் என்னும் சாதிகளின் உயர்வைக் கெடுக்கத்தக்க பரத்தை யரை இச்சித்தவர்களுக்கு இம்மையிலே தருமம் கெடும், செல்வம் குறையும்,உயிர் அழியும், தேககாந்தி மாறும், புத்தியும்கெட்டு மறு மையிலே நீண்ட நரகத்தில் சேர்க்கும் எ - று.
----------------

இரண்டு சகோதரிகள் தங்களிடம் கலந்த இரண்டு தலைவர்களைப்பற்றிக் கூறியது.

கட்டளைக்கலித்துறை
அரவிந்த நண்பன் சுதன்தம்பி
      மைத்துனன் அண்ணன்கையில்
வரமுந்தி யாயுதம் பூண்டவன்
      காணுமற் றங்கவனோ
பரமன் திகிரியை யேந்திய
      மைந்தன் பகைவன் வெற்பை
புரமென் றெடுத்தவன் மாற்றான்றன்
      சேவகன் ஒண்டொடியே.       123

(இ-ள்) தங்காய்! என்வீட்டுக்கு வந்தவன் தாமரைக்கு சிநே கிதனாகிய சூரியன், அவன் புத்திரன் கர்ணன், அவன் தம்பி அர்ச்சுனன், அவ்வர்ச்சுனன் மைத்துனன் கிருஷ்ணன், அக்கிருஷ்ணன் தமையன் பல ராமன் அப் பலராமன் கையிலுள்ள ஆயுதம் கலப்பை, அக்கலப்பையை பூண்டிருப்பவனாகிய எருமைக்கடா என்று சொல்லி, உன் வீட்டுக்கு வந் தவன் யார்? என்று கேட்க, தமக்காய்! சிவபெருமான் வசிக்கும் கயிலை மலையை யெடுத்த இராவணன். அவ் விராவணனுக்குப் பகைவனாகிய ஸ்ரீராமபிரானுக்கு தாசத்துவம் பூண்டவனும் அவ்விராவணனோடு பகைத்து எதிர்த்தவனும், பர்வதங்களை யெல்லாம். இலேசாகப் பேர்த்து எடுத்தவனுமாகிய ஆஞ்சநேயன். எனவே குரங்கு என்று அறிவாயாக எ று.
---------

இரண்டு நண்பர்கள் தாங்கள் கலவிசெய்த மங்கையர்களின் இயல்பைக் கூறியது

அறுசீரடி யாசிரிய விருத்தம்
சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
அங்கவ ளேறிய வாகனங் காணிவள் மற்றங் கவளோ
கொங்கைகள் ஈரைந் துடையவ ளாயிக் குவலயத்தில்
எங்கும் திரிகின்ற வயிரவ மூர்த்தி யென்றே நினையே.       124

(இ - ள்) ஒருவன் மற்றொருவனைப் பார்த்து நண்பனே நீ கலந்த மங்கை எத்தன்மையள்? என சிவபெருமானுக்கு நாயகியாகிய பார்வதி, அப்பார்வதியின் தமையன் விஷ்ணு அவ்விஷ்ணுவின் மனைவி இலக்குமி, அவ்விலக்குமிக்கு முன் பிறந்தவள் மூதேவி அம்மூதேவி யானவள் ஏறியவாகனம் ஆகும். எனவே கழுதை என்று கூற, அதைக் கேட்ட மற்றவன் நான் கலந்த மங்கையோவெனில், வயிரவக் கடவு ளின் வாகனமாயும் பத்து ஸ்தனங்களை யுடையனவாயும், ஊரெங்கும் திரிகின்ற நாய் என்று அறிவாயாக எ-று.
---------------

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்தர நிலைகள் பேரு மறுகயல் வறுமை யாகும்
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேகம் மாளும்
அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.       125

(இ ள்) வேதியர்கள் தாங்கள் செய்யத்தக்க கிரியைகளைச் செய் யாது ஒழிந்தால் இந்திரனுடைய செல்வங்கள் குறையும் இராஜாக் களின் வாழ்க்கையும் மாறும், மந்தர மலைகளினது நிலைகளும் பெய ரும், எவ்விடங்களிலும் வறுமை மிகுதியாகும். சந்திர சூரியர்களும் நிலைகெடுவார்கள், பூவுலகமெல்லாம் பொலிவு இழந்து நிற்கும், உல கில் வாழத்தக்கவர் யார்? எ -று.
-----------

தலைவி கூற்று
எழுசீரடி யாசிரிய விருத்தம்
என்னனைக் கன்று முத்தனைக் குளிக்கும்
      இறையனை யனைக்குமே யன்று
மன்னனைக் கன்று பின்னனைக் குதவா
      வன்புளால் வருந்திவா டுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த
      முதுபகை யவன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் புகழ்ந்த
      கவுத்துவ ராமகிருஷ் ணையனே.       126

(இ - ள்) என் தாய்க்கு மாத்திரமல்ல; முத்துக்குத் தாயான கரும் பை வில்லாக வளைக்கும் மன்மதனுக்குத் தாயாகிய இலக்குமிக்குப் பிறப் பிடமான சமுத்திரத்தாலும் பெற்றதாய்க்கே அல்லாமல் பின்வளர்த்த தாய்க்கும் உதவிய குயிற்பக்ஷியாலும் துன்பமுற்று வாட்டமடைவேனோ? ராமாவதாரத்தில் மூத்தவனாகிய வாலியைக் கொன்று, இளையவ னாகிய சுக்கிரீவனை ரட்சித்த பழமையான பகையை அவன் தந்தையான இந்திரன் அடையாமல், கிருஷ்ணாவதாரத்தில் கர்ணனைக் கொன்று அர்ச்சுனனை இரட்சித்த கௌஸ்து வாபரணம் அணிந்த இராம கிருஷ்ண அய்யனே. எ - று.
----
[#]. கவுத்துவம் என்பது கபடம் என்னும் பொருளுக்கும் இடமாய் நின்றது
------------

நேரிசை வெண்பா
பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி திண்புவியை
ஆள்வார் மதுரை அழகியசொக் கர்க் [$]கரவம்
நீள்வா கனநன் னிலம்.       127

[$]அரவம் நீள்வாகன நன்னிலம்' என்றதில், அரவம் -பணி, நீள்வாகனம் விடை, நன்னிலம் - செய், எனவே பணி விடைசெய் என்பது பொருள்.

(இ-ள்) நற்குணமுள்ளவருக்கு ஈ- (கொடு), பாவச்செய்கைக்கு அஞ்சு -(பயப்படு), நண்பற்றவரைக் காணில் விலகு- (நீங்கு), வலி மிகுந்த உலகத்தை ஆளும்படியான மதுரை சோமசுந்தரேசருக்கு பணிவிடை செய் எ-று.
------------

மும்மூர்த்திகளின் உணவாதிகள்
சிறுவ னளைபயறு செந்நெல் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் ல் பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாளம் பூவே கறி.       128

(இ - ள்) பிரமனுக்கு பயறுகறியும், செந்நெல் உணவும், தண் டம் ஆயுதமும், உபவீதம் பூஷணமும், அன்னம் வாகனமும், தாம ரை வசிக்குமிடமாம், விஷ்ணுவுக்கு வெண்ணெய் கறியும், பூமி உண வும், சக்கரம் ஆயுதமும்,கவுத்துவம் ஆபரணமும், கருடன் வாகனமும், கடல் வசிக்கு மிடமாம். சிவபெருமானுக்கு பிள்ளைக்கறியும், விஷம் உணவும், மான் ஆயுதமும், சர்ப்பம் பூஷணமும், விருஷபம் வாகனமும், திருக்கைலாயம் வசிக்குமிடமாம் எ - று.
------------

சிரம்பார்த்தான் ஈசன் அயன் தேவிதனைப் பார்த்தான்
கரம்பார்த்தான் செங்கமலக் கண்ணண் உரஞ்சேர்
சிலைவளைத்த திண்புயத்து வண்ணான் ஸ்ரீராமன்
கலைவெளுத்த வெண்மைதனைக் கண்டு       129

(இ ள்) பலமுடைய மலையையும் வளைக்கச் செய்யும்படியான புயமுடைய ஸ்ரீராமன் என்னும் பெயரையுடைய வண்ணான் வஸ்த்திரம் வெளுத்துக் கொடுத்த நேர்த்தியைப் பார்த்தவுடனே சிவன் தலை யைப் பார்த்தான். பிரமா தன் மனைவியைப் பார்த்தான், சிவந்த தாமரைபோலும் கண்ணன் தன் கையைப் பார்த்தான் எ-று.129
-------------

கட்டளைக்கலித்துறை
கரியொன்று [*]பொன்மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்துதொழ
எரியென்னும் செல்வன் துலாத்தினிலேறி இருண்டமஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினி லேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத்தே.       130

* பொன்மிகும்பை - பெருச்சாளி எரியென்னும் செல்வன்- முருகன், துலா - ஸ்நானக்கட்டடம், மயில் நாகமின் வரையுமை, சோறு - அன்னம், சொந்தக்கனல் - நந்தீ, நம்தீ

(இ-ள்) யானை உருவம் அமைந்த கணபதி பெருச்சாளியில் ஏறியும் கல்விமான்கள் சூழ்ந்து துதிக்கவும் எரியென்னும் முருகக் கடவுள் மயிலேறியும், கறுத்த மேகங்கள் படர்ந்து மழைபொழிகின்ற பருவதத்தில் உற்பவித்த உமாதேவி அன்னப்பட்சியில் ஏறியும் தொடர்ந்துவரவும், சம்பு நந்தியிலேறியம் நம்மிடத்தே வந்தது எ-று.
-----------

ஒருபாதி மால்கொள மற்றொருபாதி யுமையவள் கொண்டு
இருபாதி யாலும் இறந்தான்புராரி இருநிதியோ
பெருவாரிதியிற் பிறைவானில் சர்ப்பம் பிலத்தில்கற்ப
தருவானபோஜ கொடையுன்கை ஓடென்கை தந்தனனே.       131

(இ ள்) ஒருபாகத்தை விஷ்ணு கொள்ளவும் மற்றொரு பாகத் தை உமையவள் கொள்ளவும் ஆக இரண்டு பாகத்திலும் திரிபுர சம்மார கர்த்தனான சிவன் இறந்து போயினான், சங்கநிதி பதுமநிதி என்னும் இரண்டும் கடலில் போய்ச்சேர்ந்தன, சந்திரன் வானத்தி லும் ஆதிசேடன் பாதாளத்திலும் புகுந்துவிட்டது. போஜமகாராசனே! கற்பக விருக்ஷம்போலும் கொடைத்தன்மையை உன்கையிலும் தன் கையிலும், ஏந்திய ஓட்டை என்கையிலும் கொடுத்தனன் எ-று.
--------

எழுசீரடி யாசிரிய விருத்தம்
கம்பமத கடகளிற்றான் தில்லைவாழும் கணபதிதன்
      பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பரெலாம் விழித்திருந்தார் அயில்வேற்செங் கையுடைய
      வறுமுகவனும் கண்ணீ ராறானான்.
பம்புசுடர்கண்ணனுமே நஞ்சுண்டான் மால்பயமடைந்தான்
      உமையுமுடல் பாதி யானாள்
அம்புவியைப் படைத்திடுவ தவலமதேயென் றயனுமன்னம்
      இறங்காமல் அலைகின் றானே.       132

(இ-ள்) மும்மதங்களோடு கூடிய யானைமுகமுடையவராய்த் திருத்தில்லையில் அமரும் கணபதியினுடைய பெருவயிற்றைப் பார்த் துப் பயந்து தேவர்கள் * இமையா திருந்தார்கள். கூர்மையான வேலா யுதத்தைக் கையில் வைத்திரானின்ற ஆறுமுகன் கண்ணீர் ஆறானான் பொருந்திய அக்கினிக் கண்களையுடைய சிவன் விஷத்தை யுண்டான். மகாவிஷ்ணு பயமடைந்தான். உமாதேவியும் தேகம் பாதியானாள். பிரமன் உலகத்தைப் படைத்திடுதல் வீண் என்று அன்னமில்லாமல் அலைகின்றான் எ-று.
---
[*] இமையாதிருத்தல் - கண் அசையாதிருத்தல், ஈராறு - பனிரெண்டு, பயம்-ஜலம், அன்னம்-அன்னப்பறவை, இவைகளை இயற்கையாயுள்ளதை வியந்து புதுமையாகக் கூறியிருக்கிறார்.
----------

அறுசீரடி யாசிரிய விருத்தம்
காமமே குலத்தினையும் நலத்தினையும்
      கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
      புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல்
      வழிய டைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகையாக்கி
      கழுத்தரியுங் கத்தி தானே.       133

(இ - ள்) [பெண்கள் மயக்கமாகிய] காமமே ஜாதி நெறியையும் நன்மையையும் கெடுத்து விடும்படியான குற்றம் வறுமைகளை நிறைத்து வைத்திருக்கும் பொக்கிஷம் முத்தி மார்க்கத்திற்கெல்லாம் வழி அடைத்திருக்கும் கதவு, அனைவரையும் பகை யுண்டாக்கிக் கழுத்தை அறுக்கத்தக்க வாளாயுதமாம் எ-று.
-------

கலிநிலைத்துறை
தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி டக்கை
கடாக மெங்கணு மதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாணகன் றன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்த மங்கையர் வசையொலித்தல் போலாம். 134

(இ - ள்) பம்பை, மத்தளம். பேரிகை, சல்லரி, டக்கை, நகாரா முதலிய வாத்தியங்கள் அதிர்ந்திட சப்தித்தலைப் பார்த்தலானது விடக் கூடாத வெட்கம் நீங்கி அன்னிய நாயகனை இச்சித்துப் பொருந்தாத காரியத்தைச் செய்த பெண்களினது பழிமொழிகள் சப்தித்தலைக் கேட்டது போலாம் எ-று.
-----------

பதினான்குசீர் விருத்தம்
தண்டுல மிளகின் தூள்புளி உப்பு
      தாளிதம் பாத்திர மிதேஷ்டம்
தாம்புதீர் தோற்றம் ஊன்றுகோல் ஆடை
      சக்கி முக்கிகை ராந்தல்
கண்டகம் காண்பான் பூஜை முஸ்தீபு
      கழல்குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி யூசி நூலடைக் காயிலை
      கரண்டகம் கண்டமேற் றங்கி
துண்ட மூறியகாய் கரண்டிநல் லெண்ணெய்
      துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாம் குறைவறத் திருத்தித்
      தொகுத்து பற்பல்வினு மமைத்துப்
பெண்டுகள் துணையோ டெய்துவா கனனாய்
      பெருநிலை நீர் நிழல் விறகு
பிரஜையுந் தங்கு மிடஞ்சமைத் துண்டு
      புறப்படல் யாத்திரைக் கழகே.       135

(இ-ள்) அரிசி, மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித பதார்த்த கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல் வஸ்திரங்கள் சக்கிமுக்கி அல்லது நெருப்பு உண்டாக்குங் கருவி, கை ராந்தல், அரிவாள், கண்ணாடி. பூசைக்குரிய சாமான்கள், பாதரட்சை, குடை, வேலையாள், சிற்றுண்டி அல்லது பலகாராதிகள், கம்பளி ஊசி, நூல், வெற்றிலையாதி வைக்கும் பை, கரண்டகம் எழுத்தாணி ஊறுகாய்த் துண்டு கரண்டி நல்லெண்ணெய் துட்டு பூட்டு கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகளெல்லாம் குறைவில்லாமல் திருத்தத் தோடு பலவகைகளும் சேகரித்து ஸ்திரீகள் துணையோடு சரியான வாகனத்தோடு பெருத்த நிலையான ஜலம், நல்ல நிழல், விறகு, சனங்கள் தங்குமிடம் கண்டு சமைத்து உண்டு பிரயாணஞ் செய்கல் யாத்திரைக்கு அழகாம் எ - று.
--------

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் முற்றிற்று.


This file was last updated on 02 Feb. 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)