வித்துவான் தி.சு. ஆறுமுகம் இயற்றிய
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத் தமிழ்
kuRukkuttuRai kumaran piLLaittamiz
by vitvAn ARumukam
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our thanks also go to Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance
in the preparation of this etext file
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வித்துவான் தி.சு. ஆறுமுகம் இயற்றிய
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத் தமிழ்
Source:
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத் தமிழ்
(திருப்பள்ளி யெழுச்சியுடன்)
ஆக்கியோன்- கவிஞர் வித்துவான் தி.சு. ஆறுமுகம் (சிவதாசன்)
4, பகத்சிங் தெரு, திருநெல்வேலி-6.
-------------
திருமுருகன் திருப்பள்ளி யெழுச்சி
உ - குமரகுருபரன் துணை.
திருவுரு மாமலை
(எண்சீராசிரிய விருத்தம்)
விண்ணகங் குணதிசை வெளிறிய தடர்ந்த
வியனிருள் கரைந்தது வீங்குவிண் மீன்கள்
துண்ணென மறைந்தன சிறகடித் தேநற்
சேவலுங் கூவின கூவின காகம்
தெண்ணரும் பொருநையின் தடங்கரை மேவுந்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
விண்ணவர் பேரிடர் விலக்குமெய்த் தேவே
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (1)
நின்றிருக் கோவில்சேர் நீர்த்துறை யெங்கும்
நிறைந்து நீ ராடிய நின்னடி யார்கள்
ஒன்றிய வுளத்துடன் உன்னருள் குளிக்க
உருகிவந் தடைந்தன ரோங்கு நின் வாயில்
தென்றலார் பொதிகைவீழ் தண்பொரு நைசூழ்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வென்றிசேர் திண்புயம் விளங்கெழிற் கடம்பா
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (2)
செங்கதிர் குணகடல் தோன்றினன் நளினச்
செம்மலர் மலர்ந்தது சென்றது பனியும்
எங்கணும் பறவைகள் இரைந்தன திரிந்தே
ஏங்கின பேரிகை யிசைத்தன சங்கம்
தெங்கடர் சோலையில் தேன்பிழி மாவார்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வெங்கலி தீரவே வியனருள் பொழியும்
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (3)
பேரணி யாகநின் மெய்யடி யார்கள்
பூவடர் கரமுடன் போற்றிநின் றாரே
நீரணி வேணியன் நின்மலன் மதலாய்
நீயிரங் காயெனின் நேயரென் செய்வர்
தேரணி வீதிசூழ் திருமலிந் தோங்கும்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வேரணி மாவினை வீழ்த்திய செங்கை
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (4)
மேதகு பல்லியம் முழக்கின ரொருபால்
மெய்சிலிர்த் தடியவர் மொய்த்தன ரொருபால்
நாதமோ டுன்புகழ் நவின்றன ரொருபால்
நற்கலி யோதியே நாடின ரொருபால்
தீதற வோதினர் திருமுரு கொருபால்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வேதனும் பணிந்திடும் வித்தக னேகூர்
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (5)
புலனடக் குங்குலப் பெரியவர் நெஞ்சப்
பொன்மனை விளக்கிடும் பெருஞ்சுட ரேயாம்
நலனுறப் பேரருள் நல்குகற் பகமே
நான்மறை போற்றிடும் நற்பொரு ளானே
துலங்குநற் பயிரணி செய்யடர்ந் தோங்குந்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
விலங்குதோ றாடிடும் வித்தக வேளே
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (6)
தோத்திரம் செய்பவர் தேடிய வண்ணந்
திருவுருக் காட்டியுன் திருவருள் தனக்குப்
பாத்திர மாக்கிநற் பதமருள் தேவே
பண்ணவர் போற்றிடும் பரம்பொரு ளானே
தீத்திறம் அறிந்திடாத் திருவளர்ந் தோங்கும்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வேத்திரக் கண்குற வள்ளியின் நேயா
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே, (7)
தாயரோ ராயிரந் தாமிருந் தாலும்
தண்ணளி யோய்நினக் கிணையென லாமோ
பேயரே யாயினும் பெற்றவள் தனது
பிள்ளைகள் வாடிடப் பார்த்திருப் பாளோ
தீயரும் ஒருமுறை தொழநலஞ் சேர்க்குந்
திருவுரு மாமலை திகழ்முரு கோனே
வேயராம் நெல்லைவாழ் விமலரின் சேயே
வேலவ னேபள்ளி யெழுந்தரு ளாயே. (8)
ஓவறு பேரிடர் உலகினர்க் கன்றி
உம்பருக் கும்புரிந் துழக்கிய சூரன்
மாவடி வாகிய போதும்வி டாமல்
மயிலொடு வாரண மாக்கியாண் டோனே
ஆவடு துறைமடத் தாதிபர் போற்றும்
அணியுரு மாமலை யமர்முரு கோனே
காவட ருங்குறுக் குத்துறை தங்கும்
கந்தவே ளேபள்ளி யெழுந்தரு ளாயே (9)
காரண மாகவிக் காசினி மீது
கருவடை யாவணம் அடியரைக் காக்கும்
பூரண னேமுனம் பெற்றவன் தனக்கும்
பிரணவம் மொழிந்தருள் பேரறி வாளா
வாரணத் திருமுகன் வல்லபன் பாற்பல்
வம்புசெய் தாடியே மகிழ்ந்திடு மதலாய்
ஆரணம் முழங்குரு மாமலை வாழ்வே
ஆறுமு காபள்ளி யெழுந்தருளாயே. (10)
--------------------
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத் தமிழ்
குமரகுருபரன் துணை
(கணபதி காப்பு -நேரிசைவெண்பா)
காராரும் மெய்யன் கணபதிபொற் றாட்பணிந்து
சீரார்பிள் ளைத்தமிழும் செப்புவேன் -- நீராருந்
திண்பொருநை சூழுந் திருவுரு மாமலையன்
விண்புகழன் வேலவன் மீது, (1)
(கலைமகள் காப்பு - நேரிசைவெண்பா)
குறுக்குத் துறைவாழ் குமரனைப் பிள்ளை
உருக்காட்டி யித்தமிழ்யா னோதப் - பெருக்காருங்
கல்விக் கிறைவி கலைமகள் தன்னருளை
நல்விதமா யீவாள் நயந்து. (2)
(தமிழ்ப்புலவர் காப்பு - நேரிசை வெண்பா)
நக்கீர ராதி நலமார் தமிழ்ப்புலவர்
எக்கேடுஞ் சூழா தெனைக்காப்பர் - சொக்காரும்
வேலவன் மீது வியனார் தமிழுரைக்கும்
பாலக னென்பால் பரிந்து. (3)
(அவையடக்கம்)
(பன்னிரு சீராசிரிய விருத்தம்)
முத்துக் குமார சாமிமிசை
மொய்ம்பார் குமர குருபரனும்
முருகார் சேயூர் முருகனுக்கு
முனைந்தே வீர ராகவனும்
கத்துங் கடல்சூழ் செந்திலுக்குக்
கவிஞன் பகழிக் கூத்தனும்வேற்
கந்தன் திருவி டைக்கழிமேல்
கலையார் மீ.சு.பிள்ளையரும்
தத்தும் பாலாற் றணிகரைசேர்
திருவி ரிஞ்சை முருகனுக்குத்
திறனார் மார்க்க சகாயனெனுந்
தேவ னவனுந் திருமலைவாழ்
சத்துக் குமரன் மீதுபண்டா
ரத்தை யாவும் பக்தியுடன்
சாற்றிப் பிள்ளைத் தமிழினிதாய்ச்
சகமேற் கொண்டார் பெரும்புகழே. (4)
(இதுவுமது)
புகழ்சேர் தூய பாவலர் தம்
பெருமை யறியா தன்னவர் போல்
பிள்ளைக் கவியான் பாடுவது
பெரிதும் நகைப்பிற் கிடமாமே
இகழ்சேர்ந் திடினு மெதுவரினும்
எண்ணா திந்தத் தமிழ்க்கூறல்
இகலார் புலியின் வரிமான
எளிய பூஞை யிடலொக்கும்
அகழ்சேர் பொருநை யணிகரைபால்
அழகார் பதியாம் நெல்வேலி
யணித்தாங் குறுக்குத் துறைதங்கி
அன்பர்க் கருளுந் திருக்குமரன்
திகழ்சேர் சேயோன புகழ்பேசும்
திறமார் பனுவ லிதுநோக்கிச்
சிறியே னெளிமை பாராது
தெளிவா ரறிஞர் கொள்வாரே. (5)
-------------------------------------
உ : குமரகுருபரன் துணை
நூல்
1. காப்புப் பருவம்
(பதினான்கு சீராசிரிய விருத்தம்)
திருமால்
பூதங்கு நான்முகன் பெருமிதத் தோடன்று
பொற்கயிலை புகுந்து மூலப்
பிரணவ மறியாது பொறிகலங்கி நின்றிடப்
பிடித்தவனைச் சென்னி குட்டிக்
காதங்குக் கிள்ளியே காவலிடு வேலவன்
கடைவாய்நீ ரொழுகு பாலன்
காமலியுந் திருவுரு மாமலைவாழ் சேயவன்
கந்தனெனுங் குழவி தனையே
மாதங்கு மார்பினன் மழைமுகில் நிறத்தவன்
மாமுனிவர் பாற்பி ழைத்து
மாசிலா ஜயவிஜயர் மண்மீது வந்துழலு
மாறருள் செய்த தூயன்
சேதங்கு சிவனடி தேடியுங் காணாத
செங்கண்ண னாய திருமால்
தீதொன்றும் நேராது தினங்காக்கு மாறவன்
திருவடிக ளேது திப்பாம். (1)
[பொறி – அறிவு; மா தங்கு - இலக்குமி தங்குகின்ற; மா முனிவர் - சனகாதி நால்வர். சே தங்கு - இடபத்தில் தங்கும்] 1
சந்தி விநாயகர்
கானிலுறு வள்ளியெனும் காதலார் மான்மகளைக்
கடிமணஞ் செயவி ழைந்து
காட்டாத வடிவெலாங் காட்டித்தன் முன்னவன்
கருணையால் வென்ற கோவை
ஊனிலவும் வேலணி யுன்னதனைத் தந்தைக்கும்
உபதேசஞ் செய்த குருவை
உருவாருந் திருவுரு மாமலையின் நாதனாய்
ஒளிர்சேயைக் காக்க வென்றே
மாநிலமென் பதுதனது மாதாபி தாவென
மாண்புட னுணர்ந்து மன்னார்
மலரடிகள் வலம்வந்து வணங்கியோர் நொடிதனில்
மாங்கனி யடைந்த பாலன்
தேனிலவு மோதகச் செங்கையன் அருகுசேர்
திருமுடிய னைங்க ரத்தன்
திருநெல்லை சந்திவி நாயகனின் சீரடி
சிரமீது கொள்வ மாதோ. (2)
[ஊன் நிலவும் வேல், உருஆரும் - பெருமை நிறைந்த; தேன் நிலவும் - இனிமை பொருந்திய, அருகு - அருகம்புல்] 2
நெல்லையப்பர்
நெஞ்சமதை யோர்நிலை நிறுத்தாமற் கீரனும்
நியமமதில் தவறி நின்ற
நேரமதி லோர்பூதம் நாடிச்சி றையிட்டு
நீராடு மாற தேக
தஞ்சமென அன்னவன் சாற்றுமுரு கேற்றங்குச்
சார்பூதம் கொன்று மஃதால்
தளைப்பட்ட ஆயிரவர் தமைமீட்டி யருளிய
சண்முகனைக் காக்க வென்றே
கஞ்சனொடு மாயனுங் காணாத மேலவன்
கணுவரை யுதித்த முத்தன்
காயவிடு சாலியைக் கடுமழைப் பெருக்கினிற்
காத்துலற அருள்புரிந்தோன்
பஞ்சனைய சீரடிப் பாவையாங் காந்திமதி
பாகமுறு பரம நாதன்
பழனஞ்சூழ் திருநெல்லைப் பதிநெல்லை யப்பனின்
பாதமலர் சிந்தை செய்வாம். (3)
[நியமம் - நியதி - சிவபூஜை புரியும் நியதி, முருகு - திருமுருகாற்றுப் படை, கணுவரை- கணுக்களையுடைய மூங்கில், சாலி-நெல்] 3
காந்திமதி
புழைதங்கு நெடுங்கரப் பிள்ளையாம் யானைக்குப்
பின்வந்த சிறிய பிள்ளை
பேரானை யென்னுமயி ராவதம் பெறுயானை
பின்தொடரு மிளைய களிறு
மழைதங்கு திருவுரு மாமலையில் மேவிய
மயிலேறு தூய காளை
மானீன்ற மான்மிசை மையலுறு வேடுவ
மதலைதனைக் காக்க வென்றே
கழைதங்கு முத்தருளங் களிநடங் கொளுமாறு
கவின்பெறு தூய முத்தும்
கருநீல மணியெனுங் கண்டனிடப் பாகமே
காணலுறு நீல மணியும்
உழைதங்கு பவளநிற ஓங்கல்பாற் றாவியணை
உயர்பசுங் கொடியு மாகி
உலகீன்றுங் கன்னியாய் ஒளிர்காந்தி மதிபாதம்
உரிமையுடன் சிந்தை செய்வாம். (4)
[புழை - துளை: அயிராவதம் பெறுயானை - தேவகுஞ்சரி, கழை - மூங்கில், உழை - மான், ஓங்கல் - மலை] 4
இலக்குமி
மாங்கனிக் காகமுனம் மாதாபி தாவிட்டு
மலைதேடிச் சென்ற ஆண்டி
மண்டையோட்டினையேந்திப் பலியேற்று வாழாண்டி
மகனாய சிறிய ஆண்டி
தீங்கனி யெனவள்ளி நாயகியை நாரதன்
செப்புமுரை கேட்டு மயங்கித்
திணறிடும் மூதாண்டி தானெனவே மாறிய
சேயவனைக் காக்க வென்றே
சேங்கமல நாண்மலர் சேர்நங்கை பாற்கடல்
தோன்றியநற் பேடை யன்னம்
திண்டாடு மேழையர் சேமிப்பி லின்றியவர்
சிந்தையுறு செல்வ மங்கை
பூங்கணை யனங்கனைப் பெற்றதிரு மாதுகலை
பெற்றவரை யிகலுந் தேவி
புயல்வண்ணன் மார்புறை பொன்மக ளிலக்குமி
பொன்னடியை வாழ்த்து கிற்பாம். (5)
[பலி - பிச்சைச்சோறு, சேங்கமலம் - சிவந்த தாமரை; சேமிப்பு - பணம் போட்டுவைக்கும் இடம், இகலல் – மாறுபடல்].5
நான்முகன்
(பன்னிருசீராசிரிய விருத்தம்)
உந்திக் கமலந் தனதகமாய்
உறைந்தே யுலகைப் படைப்பவனும்
ஓதி மப்புள் ளுடையவனும்
ஒருநான் குசிரங் கொண்டவனும்
சந்தி ரனைச்சூ டரன்முடியைச்
சற்றும் அறியாப் பொய்யவனும்
சகல கலையாள் நாதனுமாம்
சதுர்வே தனையே போற்றிடுவோம்.
தந்திக் கருமைத் தம்பியுமாய்த்
தந்திக் கினிய நம்பியுமாய்த்
தந்தைக் குயர்ந்த தேசிகனாய்த்
தாசர்க் கெளிய தாசனுமாய்
மந்தி குலவும் மாம்பொழில்சூழ்
மல்லல் குறுக்குத் துறைமேவும்
மயிலோன் சேவற் கொடிகொண்ட
மதலை தன்னைக் காத்திடவே. (6)
[ஓதிமப்புள் - அன்னப்பறவை, தந்தி - விநாயகன், தந்தி - தெய்வயானை. தேசிகன் - குரு, மல்லல் - வளப்பம்] 6
கலைமகள்
ஆய கலைகள் நான்கினொடும்
ஆறு பத்துக் குந்தலைவி
அயனின் திருநா அமர்தேவி
அணிசேர் வெண்டா மரையன்னம்
மாய வுலகில் மாந்தரகம்
மண்டு மிருள்தீர் பெருஞ்சோதி
மாண்பார் தூய கலைமகளை
வாழ்த்தி வாழ்த்தி வணங்குதுமே
தூய தமிழின் தனித்தெய்வம்
துகள்தீர் தெய்வம் பரதெய்வம்
சிவனின் நுதற்கண் சோதியெனத்
துள்ளிக் குதித்தே வருதெய்வம்
சேய வடிவ முறுதெய்வம்
செகத்துக் கெல்லாம் பெருந்தெய்வம்
திருவார் குறுக்குத் துறைதெய்வம்
சேயோன் தன்னைக் காத்திடவே. (7)
[துகள் தீர்- குற்றம் தீர்ந்த, சேய வடிவம்- சிவந்த வடிவம், சேயோன் - முருகன்]7
கார்த்திகைப் பெண்கள்
ஏந்தி யெடுத்துச் சீராட்டி
இணைசேர் நகிலின் பாலூட்டி
இதழார் நளினத் தொட்டிலிலே
இனிதாய்க் கிடத்தித் தாலாட்டிக்
காந்தி விளங்கும் மகவாறைக்
கங்கை தனிலோர் பொய்கையிலே
கருத்தாய் வளர்த்த இருமூன்று
கார்த்தி கைப்பெண் ணடிபணிவாம்
சாந்தி திகழும் ஓராறு
சவியார் முகத்தன் பெருமுத்தன்
சரண மடைந்தார்க் கருள்புரியும்
சத்தா மிருமூன் றக்கரத்தன்
மாந்தித் தேனை மதிமயங்கும்
வரிவண் டினங்கள் முரல்சோலை
வளமார் குறுக்குத் துறைமேவும்
வடிவே லவனைக் காத்திடவே. (8)
[நகில் - தனம், நளினம் - தாமரை; காந்தி - ஒளி, மகவு ஆறினை ஆறு குழந்தைகளை, சவிஆர் - அழகு நிறைந்த, சத்து ஆம் இருமூன்று அக்கரத்தன், சத்து - உண்மைப் பொருள், அக்கரம் - எழுத்து, மாந்தித் தேனை - தேனை உண்டு] 8
சக்திவேல்
தொடரும் விளைகள் தீர்த்திடவே
துள்ளி வருங்கூர் வடிவேலை
சூரன் மயக்கம் தொலைத்தாங்குத்
தோகை மயிலாக் கிடும்வேலை
படரும் வரையாந் தாருகனின்
பண்டி கிழித்த பணிவேலை
பாவை சக்தி யருள் வேலைப்
பணிந்து பணிந்து போற்றுவமே
சுடரும் பாலன் ஆறுமுகன்
சோதி ரூபன் வடிவழகன்
துய்யன் மெய்யன் நறுங்கடம்பன்
துடிசேர் முருகன் மால்மருகன்
அடருஞ் சோலைப் பசுஞ்சினையில்
அலரோ டளியும் முகிலுந்தூங்
கணிசேர் குறுக்குத் துறைமேவும்
அயிலோன் தன்னைக் காத்திடவே. (9)
(வரை - மலை, பண்டி - வயிறு, பணிவேல் - அழகுவேல், சுடரும் - ஒளிவிடும், துடி - வேகம், சினையில் - கிளையில், அலர் - மலர், அளி - வண்டு, முகில் - மேகம், தூங்கு அணி சேர் - தூங்கும் அழகு பொருந்திய, அயிலோன் - வேலவன்] 9
முருகனடியார்
சங்கத் தலைவன் நக்கீரன்
சந்தப் புகழ்பா டருணகிரி
சாரும் புராணக் கச்சியப்பன்
சதுர்வே தியன்ப கழிக்கூத்தன்
துங்கக் கலிசெய் குமரகுரு
தொண்டன் வீர வாகெனுமித்
தூயர் தொடர்பா லவர்பாதம்
தொழுது தொழுது வாழ்த்துவமே
பங்கப் பழனத் துழுசாலில்
பணில நிரைகள் குவிமுத்தால்
பகல்போ லிரவில் ஒளிவளரும்
பதியாம் நெல்லைக் கழகுதரும்
புங்கத் திருவா றாம்பொருநை
பொன்னைக் கொழிக்குங் கரைமேவும்
பொழிலார் குறுக்குத் துறையான் நற்
புனிதன் றனையே புரந்திடவே. (10)
[பங்கம் - சேறு; பழனம் - வயல், பணில நிரை - சங்கினங்களின் வரிசை, அரு ஆறாம் - அழகிய நதியாகிய] 10
-----------------------------------------
2. செங்கீரைப் பருவம்
(பதினான்கு சீராசிரிய விருத்தம்)
கந்தமு றுஞ்சுண முங்கலந் துன்னுடல்
மின்னிட நன்றுனை நீராட்டிக்
காய்ந்திட நின்சிறு குஞ்சியைப் பஞ்செனக்
காரகில் தந்திடு புகையூட்டிக்
கொந்தமு றுஞ்சிறு கொண்டைமு டிந்துகு
லுங்கிட அன்னதிற் பூச்சூட்டிக்
குஞ்சம ணிந்தது தொங்கிட நின்னுதற்
கோலமு றும்படி நீறோடு
செந்துரப் பொன்தில் கம்தரித் துன்மிசை
செம்பொனி லாம்பல பூண்பூட்டிக்
சிந்தைம கிழ்ந்திட நின்மருங் கொன்றியுன்
செம்மொழி யெம்செவி கொண்டிங்குச்
சந்ததம் எங்களின் நெஞ்சுக னிந்திடச்
சந்தமோ டாடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை. (11)
[சுணம், சுண்ணம் - வாசனைப்பொடி, குஞ்சி - தலைமயிர், அகில் - ஒருமணப் பொருள். கொந்தம் - மயிர்க்கொத்து, நீறோடு - விபூதியுடன்]11
பாணியி ரண்டினைப் பார்மிசை யூன்றியுன்
பாதம தொன்றினைப் பின்நீட்டிப்
பாங்குட னோர்முழங் காலினை யூன்றிநின்
பால்வடி யும்முகம் நேர்தூக்கிச்
சோணித மென்சிறு வாய்தனி லூறலுஞ்
சிந்திடக் கொன்னையும் நீபேசிச்
சிந்தை கனிந்திட எம்கலி தீர்த்திடச்
செங்குக ஆடுக செங்கீரை
வேணியு றுங்கடி தொங்கல வீழ்ந்திட
வேலவ ஆடுக செங்கீரை
வேதன கந்திகில் கொண்டிட முண்டிய
வித்தக ஆடுக செங்கீரை
சேணிய னின்மகள் குஞ்சரி கொஞ்சிய
செங்குக ஆடுக செங்கீரை
செங்கயல் சேர்பொரு நைந்துறை தங்கிய
தெய்வமே ஆடுக செங்கீரை. (12)
[பாணி - உள்ளங்கை, சோணிதம் - சிவப்பு, கொன்னை - குதலைமொழி.
வேணி - சடைமுடி, தொங்கல் - மாலை. சேணியன் – இந்திரன்] 12
செங்குவ ளைச்சுனை மண்டுப ரங்கிரிச்
செங்குக ஆடுக செங்கீரை
செந்திலெ னுந்திருச் சீரலை வாய்தனிச்
செவ்வனே ஆடுக செங்கீரை
மங்குல டர்ந்திடு நன்குடி தங்கிய
மஞ்ஞைய ஆடுக செங்கீரை
மாமறை யந்தணர் மண்டிய ஏரக
மைந்தனே ஆடுக செங்கீரை
கொங்குநி றைந்திடு குன்றுதொ றாடிய
குன்றவ ஆடுக செங்கீரை
கொந்தவி ழுங்கனி சிந்திடு சோலையு
கந்தவ ஆடுக செங்கீரை
சங்குத னிற்சிவன் தன்னிடம் வந்தவ
சரவண ஆடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை. (13)
[மங்குல் - மேகம், நன்குடி - ஆவிநன்குடி, மஞ்ஞைய - மயிலவனே, கொங்கு - தேன், கொந்து - கொத்து, கனிசிந்திடு சோலை - பழமுதிர் சோலை,
சங்கு – நெற்றி] 13
சின்னவ னென்றுனைப் பன்னுவ தென்சில
சின்னவ ரும்புவி தன்மீது
சேய்மையு றுஞ்சுர ரின்னுல கெங்கணு
செங்குக நின்நிகர் வாருளரோ
கன்னல ராம்மகி ழஞ்சிறி தென்னினும்
நன்மண மன்னதின் வேறுண்டோ
நாயக னேயிது மேனறி யாரவர்
நாடுமுன் கீர்த்தியும் மேலன்றோ
மன்னணி யம்பரந் தன்னிலு டுக்களும்
எண்ணில வாயினும் வெண்ணிலவு
மங்கல மாயொளி தந்திட லொக்குமோ
மந்தர வர்சொலும் மாய்ந்திடவே
சன்னமு றுந்துணர் தொங்கல சைந்திடச்
சரவண ஆடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை. (14)
(கூரர் இன்னுலகு - இனிய தேவருலகு. நன்மை + அலர் = நன்னலர் = மகிழம்பூ, மன் அணி அம்பரம் - நிலைபெற்ற அழகிய வானம், சன்னம் - அழகு, துணர் - பூங்கொத்து]14
குஞ்சியு றுந்தர ளம்புனை தொங்கலுங்
குஞ்சமும் நெற்றிபு ரண்டாடக்
குண்டல மின்னொளி தந்திரு கன்னமுங்
கொஞ்சியு னஞ்செவி நின்றாட
நெஞ்சிலு றங்கிடு மைம்படைப் பொன்னணி
நின்றுக லைந்தது நான்றாட
நின்கரம் மண்டுப சுந்தொடி யுங்கலீ
ரென்றுகு லைந்துகு லைந்தாட
கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன்
கூடிய திர்ந்தும சைந்தாடக்
கோதறு தண்டைசி லம்புகி டந்திசை
கொண்டுபு ரண்டுபு ரண்டாடச்
சிஞ்சித இன்னொலி யுங்குத லைச்சொலுஞ்
சிந்திட ஆடுக செங்கீரை
செந்தமிழ் சேர்பொரு நைத்துறை தங்கிய
சேவல் ஆடுக செங்கீரை. (15)
(குஞ்சி – தலைமயிர், தரளம் புனை தொங்கல் - முத்துக்களாலாய மாலை, ஐம்படைப் பொன்னணி - பொன்னாலாய ஐம்படைத் தாலி. தொடி - வளையல்.
நான்று ஆட - தொங்கி ஆட, சிஞ்சிதம் - ஆபரணவொலி] 15
(பன்னிரு சீராசிரிய விருத்தம்)
பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
புலத்தி யன்றன் சுதன்பெருமை
புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
விதியாம் பாவ வினைதீர்த்து
வியனார் முல்லை வளங்கண்டு
விளைசெய் மருதம் புகுந்துலவி
விரிந்தே தேங்கி நெல்விளைத்துக்
குதியா தேகி வைகுண்டங்
கூடி நீங்கி நெய்தலிலே
குழைவாய்த் தூங்கி விழுந்துருண்டு
கோலக் கடலின் கரத்தணையும்
நதியாம் பொருநை யலைமுழக்கில்
நயந்தா டிடுக செங்கீரை
நலமார் குறுக்குத் துறைநாதா
நன்கா டிடுக செங்கீரை. (16)
[புலத்தியன் சுதன் - அகத்தியன், வைகுண்டம் - ஸ்ரீவைகுண்டம் எனும் நகர்] 16
விடஞ்சேர் கண்டன் மிசையன்பு
மிகவே கொண்டு தூய்மையுடன்
வெண்ணீ றணிந்து வீடுபெற்ற
மெய்யர் வாழ்ந்த நாட்டினிலே
உடம்பெல் லாம்வெண் ணீறணிந்தும்
ஒற்றைக் காலில் தவமிருந்தும்
உறுவார் தம்மை ஏய்த்தொழிக்கும்
ஒழுக்கங் கெட்ட வஞ்சகர்போல்
சடஞ்சேர் நாரை நின்றுறங்கிச்
சமயம் நோக்கிக் காத்திருந்து
தரமாய்ச் சிக்கும் கயல்விழுங்கிச்
சாருங் களிப்பால் நடமாடுந்
தடஞ்சேர் பெருநை யலைமுழக்கில்
சார்ந்தா டிடுக செங்கீரை
தண்ணங் குறுக்குத் துறைவாழும்
தகையா டிடுக செங்கீரை. (17)
[உறுவார் - வந்து சிக்குபவர், சடம் - வஞ்சகம், தடம் - பெருமை] 17
ஒருசார் செந்நெல் விளைந்துவிழும்
ஒருசார் கன்னல் பருத்தோங்கும்
ஒருசார் மஞ்சள் அடர்ந்துவிழும்
ஒருசார் சேம்பு போட்டியிடும்
ஒருசார் மாவின் கனிசொரியும்
ஒருசார் நெல்லிச் சரங்குலுங்கும்
ஒருசார் பெண்ணை பழமுதிர்க்கும்
ஒருசார் தெங்கின் குலைபெருக்கும்
ஒருசார் முல்லை முறுவலிக்கும்
ஒருசார் பிச்சி மணங்கள் ழும்
ஒருசார் அரளி கொந்தவிழும்
ஒழியா வளமும் வளர்ந்தோங்கித்
திருசார் குறுக்குத் துறைவாழும்
தேவே ஆடாய் செங்கீரை
தேவர் குறைநீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை. (18)
[கன்னல் கரும்பு. பெண்ணை - பனை, ஆடாய் – ஆடுக] 18
அள்ளக் குறையா அமுதே நீ
அருளோ டிங்கு வீற்றிருக்க
அறியா துன்னைத்தொழவேசீ
ரலைவாய் நாடி மன்பதைகள்
வள்ளல் தூய சுலோசனனிவ்
வளமார் பொருநை மீதமைத்த
வாரா வதியின் வழியாயும்
வலிவா ரிருப்புப் பாதையினும்
வெள்ளம் போன்று விரைந்தோடும்
விந்தை தன்னை நீகண்டு
வெறித்தே யிங்ஙன் நின்றாயோ
விரைந்தா டிடுக செங்கீரை
தொள்ளக் கழனி சூழ்துறைவாழ்
துரையா டிடுக செங்கீரை
தேவர் குறைதீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை. (19)
[சீரலைவாய் - திருச்செந்தூர், மன்பதைகள் - மக்கள், தொள்ளம் – சேறு] 19
அளிநல் லிசையை யிசைத்துவர
அலைகள் முழவா யொலிகிளப்ப
அலவன் கரையில் நடனமிட
அணிசேர் குமுதம் தலையாட்ட
நளினம் விரிந்து விளக்குயர்த்த
நானா விதமாய்ப் பலகயல்கள்
நனிவான் துள்ளிக் கீழ்விழுந்து
நலமே வாண வெடிமுழக்க
ஒளிசேர் நாரை மேதிமிசை
உவப்பா யேறித் தடங்கயத்துள்
உலவிப் பவனி வருமெழில்கண்
டுவந்தா டிடுக செங்கீரை
தெளிநீர்ப் பொருநைத் துறைமேவுந்
துரையா டிடுக செங்கீரை
தேவர் குறைதீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை. (20)
[அளி - வண்டு, அலவன் - நண்டு. நளினம் - தாமரை, மேதி - எருமை, கயம் - தடாகம்.] 20
-------------
3. தாலப்பருவம்
(பதினான்கு சீராசிரிய விருத்தம்)
உளமா ரன்புட னுனையே ஆடக
வுயர்பொன் தொட்டிலிற் றான்கிடத்தி
உவந்தே யாமிவண் தாலாட் டிடவினும்
உறங்கா தேனழு கின்றாயோ
வளமார் மேதிகள் வதியார் கயத்திடை
வந்தே நீலமும் மேய்ந்தலைய
வாகார் மீன்பல மருண்டே துள்ளியும்
வானில் பாய்ந்துதி ரும்பிவிழ
நளமார் பாசிலை நடுவண் வீழ்ந்தொரு
நலிவார் வெண்கயல் தான்துடிக்க
நாடும் ஓதிமப் பேடோன் றன்னதை
நலமா யாட்டியு றங்கவிடும்
வளமார் பேரெழிற் குறுக்குத் துறையுறை
வயவா தாலோ தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலோ தாலேலோ. (21)
[வதி - சேறு, நீலம் - குவளை, நளம் - தாமரை, நளமார் பாசிலை - தாமரையின் பசிய இலை, ஓதிமப்பேடு – பெண்க அன்னம், வயவா - வெற்றியுடையவனே]21
தரணி நாயகன் தந்தை மற்றுமித்
தரணி நாயகி தாயலவோ
தனய னன்னவர்க் காயு நின்னுளந்
தயங்கக் காரண மேதுளதோ
தரணி முழுவதுந் தாய்மா மன்முனந்
தாங்கி யுண்டதை யெண்ணினையோ
தார மெனஅவன் பெண்கள் நீகொளத்
தரணி சீதனம் நினக்கன்றோ
அரணி யத்தவ னேகி வாடியும்
ஆடு மாடுகள் பின்சென்றும்
அல்லற் படுபவ னன்றோ இஃது நீ
அறிந்தே தாலோ தாலேலோ
பரணி யடுத்தவர் பரிவாய்ப் போற்றிய
பாலா தாலோ தாலேலோ
பாங்கார் தொல்பதி குறுக்குத் துறையுறை
பவனே தாலோ தாலேலோ. (22)
[தாய்மாமன் - திருமால், அரணியத்து - காட்டில், பரணியடுத்தவர் - பரணிக்கடுத்த கார்த்திகைப் பெண்கள், பாங்கு - அழகு – நன்மை] 22
ஒருகால் தொட்டிலை யெட்டி யுதைத்திட
ஒருகா லைக்கரம் பற்றியதன்
உருவார் பெருவிர லுன்வாய் தன்னுற
உவந்து குதப்பிநீ தாலேலோ
அருகால் நெஞ்சும கிழ்ந்தோ னைங்கரன்
ஆனை முகத்தவ னோடிகலி
அகட விகடமும் புரிந்த சோர்வற
அன்பே தாலோ தாலேலோ
பெருகால் கள்பல பொழிய நீர்பொழி
பொருநைச் செல்வனே தாலேலோ
பிறையைச் சூடிய இறைவர்க் கோதிய
பெரும தாலோ தாலேலோ
மறுகார் மங்கலக் குறுக்குத் துறையுறை
மன்னா தாலோ தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலோ தாலேலோ. (23)
[உருவு ஆர் - நல்ல வடிவம் நிறைந்த. அருகால் - அருகம் புல்லால், இகலி - போராடி, பெருகால்கள் - பெரிய கால்வாய்கள், மறுகுஆர் - தெருக்கள் நிறைந்த]23
சங்க மமர்ந்திடுந் தகைசா லேழெழு
சதுர ரன்றொரு நாட்கூடிச்
சடையோன் செய்தருள் தரமா ரகப்பொருள்
தனக்கே ஒவ்வொரு வுரையெழுதித்
துங்க முடையதெம் முரையே யனவவர்
சொல்லித் தமதுளு மிகல்புரிந்து
துய்யோ னருளிய வாறுன் றுணைதனைத்
தேடி வந்திட அன்னவர்தம்
பங்க மொழிந்திட வாய்பே சாமலே
பரமாம் மெய்யுரை காட்டியருள்
பரமே வணிகனின் பால னெனவரு
பவனே தாலோ தாலேலோ
வங்க முறுபொரு நைசேர் திருவுரு
மலைவே லாயுத தாலேலோ
வண்ணக் குறமகள் நண்ணுந் திருவுரு
வள்ளால் தாலோ தாலேலோ. (24)
[ஏழெழுசதுரர் - நாற்பத்தொன்பது புலவர். சடையோன் - சிவபிரான், துங்கம் - உயர்வு - தூய்மை, இகல் - மாறுபாடு, துய்யோன் - சிவபிரான். வங்கம் - கடல் - அலை] 24
பாசார் தாமரை யிலையின் மீதொரு
பசுமண் டூகமுந் தான்பதுங்கிப்
பாங்கார் குவளையி லாடோர் தும்பியைப்
பற்றி விழுங்கிடப் பக்கமொரு
தேசார் வெண்ணிற நாரை கண்டதைத்
தேட்ட மோடுவி ரைந்துகவ்வத்
தேடி யலையொரு வேடன் நாரையைச்
சுட்டு வீழ்த்தியெ டுத்தேக
மாசார் தாரணி மீதோ ருயிரினை
மற்றே ருயிர்பிடித் துண்டலையும்
மகிமை யீதென மகிழும் மாந்தருன்
மலரார் சேவடி தொழுவந்தார்
ஆசா ரவருறும் ஆனந் தந்தளை
அறியா துறங்குநீ தாலேலோ
அளியார் காவுயர் குறுக்குத் துறையுறை
ஐயா தாலோ தாலேலோ. (25)
[பாசுஆர் - பசுமை நிறைந்த, பசுமண்டூகம் - பச்சைத் தவளை, தேசு ஆர் - ஒளிமிகுந்த, தேட்டம் - விருப்பம், மாசு - குற்றம், ஆசு குற்றம்] 25
(பன்னிரு சீராசிரிய விருத்தம்)
கண்ணே மணியே தாலேலோ
கரும்பே தேனே தாலேலோ
கண்ணின் சுடரே தாலேலோ
கற்பத் தருவே தாலேலோ
விண்ணோர் முதல்வா தாலேலோ
வியனார் தமிழே தாலேலோ
வேலா யுதனே தாலேலோ
வேடர் மருகா தாலேலோ
மண்ணோர்க் கிறைவா தாலேலோ
மயில்வா கனனே தாலேலோ
மாலின் மருகா தாலேலோ
வளர்சே வலனே தாலேலோ
பண்ணார் கிளிகள் பயில்சோலை
படருங் குறுக்குந் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ. (26)
[வியன் - பெருமை. பயில்சோலை - பழகும் சோலை] 26
தேடக் கிடையாத் திரவியமே
தின்னத் தெவிட்டாத் தேன்பாகே
தொட்டால் மணக்கும் சவ்வாதே
சொன்னா லினிக்கும் திருப்பெயரே
நாடக் கிடையாப் பரம்பொருளே
நலிவோர்க் கென்றும் நன்மருந்தே
நால்வே தத்தி னுட்பொருளே
நாவல் லோரின் நற்றுணையே
வேடக் குமரி மணவாளா
வேழக் குமரித் திருநாதா
வினைதீர்த் தருளும் வேளாளா
விரும்பும் அடியார்க் குயர்தோழா.
பாடக் குயில்கள் பயில்சோலை
படருங் குறுக்குத் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ. (27)
[நலிவோர் - துன்பப்படுவோர், வேளாளன் - உதவிபுரியவன்] 27
சுளைகள் முற்றுந் தாமரையே
சோலை யெங்குந் தாமரையே
சூழக் கரையிற் குருகாரே
தூய்மை யில்லார் குறுகாரே
வினைகள் தீர்க்குந் திருவடிவேல்
வியனார் தாமரை திருவடியே
விண்ணிற் றிரளுங் கரும்புயலே
விளையும் செந்நெல் கரும்பயலே
மனைகள் தோறும் மங்கலனே
மாதர் கற்பே மன்கலனே
மக்க ளுள்ளந் தண்ணளியே
மலர்கள் மேவும் பண்ணளியே
பனைகள் சூழும் பசுஞ்சோலை
படருங் குறுக்குத் துறைவாழும்
பால குமரா தாலேலோ
பரம குருவே தாலேலோ. (28)
[தாமரை - தாமரை மலர்கள் - தாவும் மான்கள், குருகார் - புள்ளினம், குறுகார் - அணுகார், கரும்புயல் - கரியமேகம், கரும்பு அயல் - கரும்புக்கு அருகே, மங்கலன் - மங்கள காரியங்கள், மன்கலன் - நிலையாய அணி, தண்ணளி - குளிர்ந்த இரக்கம், பண் அளி - பண்பாடும் வண்டுகள்] 28
நாடிப் புனத்தே வேடுவனாய்
நங்கை வள்ளி தனைவிரும்பி
நளின மென்வா யைக்கிளறி
நடுவே வேங்கை மரமாகிக்
கூடிக் குலவிக் குமரனெனுங்
கோலம் மாறிக் கிழமாகிக்
கொம்புத் தேனுந் தினைமாவுங்
கொடுக்க வுண்டு விக்கலொடும்
ஆடிச் சென்று சுனை நீரில்
அவளை விழுத்து நீவிழுந்தே
ஆடும் ஆட்டத் தயர்வொழிய
அன்பே தாலோ தாலேலோ
பாடிக் களிக்கும் பைங்கிளிகள்
பயிலுங் குறுக்குத் துறைவாழும்
பால முருகா தாலேலோ
பரம குருவே தாலேலோ. (29)
தந்தை மார்பிற் காலூன்றித்
தடந்தோ ளேறி யன்னவர்தம்
தலையார் கங்கை நீர்மொண்டு
தடங்கைத் தீயைப் பெய்தணைத்தும்
சிந்தை யன்பால் தொண்டரிடும்
சிரமா ரருகம் புல்லெடுத்துச்
செவ்வி யிளமான் வாய்கொடுத்தும்
சிறிய பிறையாங் குணில்கொண்டு
தொந்தொ மென்று தமருகத்தின்
தொனியைக் கிளப்பிக் களிகூர்ந்தும்
தோணி யாகப் பிறைமதியைத்
தூய கங்கை தனில்விடுத்தும்
சந்த மோடு நீயாடுஞ்
சலிப்பே தீரத் தாலேலோ
சவியார் குறுக்குத் துறைவாழும்
சண்மு காநீ தாலேலோ. (30)
[செவ்வி - அழகிய, குணில் - அடிக்குங்கோல், சந்தம் - அழகு] 30
--------------
4. சப்பாணிப் பருவம்
(பதினான்கு சீராசிரிய விருத்தம்)
சாந்தினா லேமெழுகிச் சதுராகக் கோலமிடு
தரைமீது நீய மர்ந்து
சதங்கையணி நின்னிரு தாளகல நீட்டியே
சவியாரும் முகம்நி மிர்த்தி
காந்திசேர் நின்குமுத வாயொழுகு தேறலால்
கலவையணி மார்பு நனைய
கனிவாருங் குதலைமொழிக் கேற்பவே கரத்திலணி
கடகங்கள் தாமொ லிக்கச்
சேந்தனே வாலையருட் செல்வனே கரந்தூக்கிச்
சப்பாணி கொட்டி யருளே
சேவலங் கொடிநாத சிகிவாக னாநீயும்
சப்பாணி கொட்டி யருளே
சாந்திசேர் திருவதனச் சண்முகக் குமரா நீ
சப்பாணி கொட்டி யருளே
சந்ததஞ் சாறுநிறை திருவுரு மாமலையாய்
சப்பாணி கொட்டி யருளே. (31)
[சவி - அழகு, சந்ததம் - எப்போதும், சாறு - விழா] 31
2 கொக்கரக் கோவென்று கோழியுஞ் சப்பாணிக்
கேற்பவே கூவி யொலிக்கக்
கோலமயில் திமிதிமியென் றேகுதித் தாட்டமிடக்
கோதிலாக் கங்கை மீதுன்
பக்கரில் தங்கியுனைப் பாங்குடன் பேணாறு
பாவையரும் பண்ணி சைக்கப்
பாலனுன் துணைவீர வாகாதி யாவரும்
பார்த்துனையே பாணி கொட்ட
அக்கரம் ஐந்தானும் அமமையுந் தலையாட்டி
அகங்களி கூர்ந்து நோக்க
ஆனைமுகன் தன்கரம் ஆட்டியுனைச் சுற்றிவந்
தாடிமகிழ்ந் தார்ப்ப ரிக்க
சக்கரப் படையானும் சதுர்முகனுந் தலையாட்டச்
சப்பாணி கொட்டி யருளே
சந்ததஞ் சாறுநிறை திருவுரு மாமலையாய்
சப்பாணி கொட்டி யருளே. (32)
[அக்கரம் ஐந்தான் - நமசிவாயன், அக்கரம் - எழுத்து,] 32
3 எட்டாத தூரத்தி லிளமிரவி தோன்றிட
எழுந்தோடி யலைமங் கையர்
எட்டிப்பி டித்தவனை யிழுத்தணைத் திடுவமென
எகிரிமென் மேற்கு திக்க
மட்டாருந் தாமரையின் மீதுமனங் கொண்டிரவி
மாண்புறு கரங்கள் நீட்டி
மகிழ்ந்தணைத் தன்னவளின் முகமலரச் செய்ததை
மாறாமற் பார்த்து நொந்து
கிட்டாத பொருண்மீது கொண்டதம் ஆசைதனின்
கேட்டினை நினைந்து வெட்கிக்
கிட்டியுறு பாறைமேல் மோதித்தம் ஆவிவிடுங்
கிளர்ச்சிநிறை பொருநை யோரம்
தட்டாது கார்பொழியுந் திருவுரு மாமலையாய்
சப்பாணி கொட்டி யருளே
சந்தனக் களபமுறு தடமார்பு வேலவா
சப்பாணி கொட்டி யருளே. (33)
[இரவி - சூரியன், எகிரி - தாவி, மென்மேல் - மேலும் மேலும், மட்டாரும் - தேன் நிறைந்த, கிட்டியுறு - பக்கத்திலுள்ள]33
4 கரங்கொண்ட காசினைக் கண்டுமதற் கேற்பவே
காமுகர்கள் தம்மைக் கூடிக்
கலவியெனும் பொய்ப்பொருள் கடிசாக விற்றிடுங்
கணிகையரை நாடி நொந்தே
உரங்கொண்ட நல்லுடல் உள்ளபொருள் யாவுமே
ஒழிந்திடவும் உள்ளம் மாறி
உன்பாதம் நாடியே உயிர்விடமு யன்றிட
ஒளியாருன் னருள டைந்து
வரங்கொண்ட வாக்கினால் வண்டமிழிற் சந்தமும்
வரையாது பெய்த மைத்து
வண்ணமுறு கிள்ளையாய் வளரருண கிரிபாடும்
வண்புகழிற் கேற்ப நீயும்
சரங்கொண்ட மாவடருந் திருவுரு மலை நாதா
சப்பாணி கொட்டி யருளே
சந்தனக் களபமுறு தடமார்பு வேலவா
சப்பாணி கொட்டி யருளே. (34)
[கடிசாக அதிகவிலையாக, சரங்கொண்டமா சரஞ்சரமாய்க் காய்களைக் கொண்ட மாமரங்கள்] 34
5. கூடின்றி யெங்குமே கோலாக லத்தோடு
கொஞ்சமுங் கவலை யின்றிக்
குலைதொங்கு மாமரக் காவுள்ளே மாங்குயில்
கூவியிசை பாடி மகிழ
வீடின்றித் தாவியலை வான்கவிகள் தேன்பொழி
வருக்கையை வகிர்ந்தெ டுத்து
வாய்முட்ட இட்டுக்கு தப்பியுண் டானந்த
வாரிவீழ்ந் தாடி மகிழக்
கேடின்றி விண்தடவு கிளைமருத வங்கினிற்
குஞ்சுகளுந் தாமு மாகக்
குலவியே வாழ்கின்ற கிள்ளைகள் பயமின்றிக்
கொஞ்சியிசை பாடி மகிழச்
சூடின்றிச் சோலையடர் திருவுரு மாமலையாய்
சப்பாணி கொட்டி யருளே
சுந்தரா களபமுறு சுடர்மார்பு வேலவா
சப்பாணி கொட்டி யருளே. (35)
[வான் கவிகள் - பெரிய குரங்குகள், வங்கு - பொந்து, சூடு - வெப்பம்] 35
6 (பன்னிருசீராசிரிய விருத்தம்)
கல்லெனுந் தோளுடை மள்ளரும் முன்னரே
காரெனும் மேதிகளைக்
கட்டிய டித்துழு தேமரங் கொண்டுசீ
ராக்கிய கம்பலையில்
அல்லெனும் வண்ணமு டன்பொலி வாருமு
ழத்தியர் தாம்கூடி
அணியணி யாகவே நட்டுமு டித்தபின்
அண்மையி லோர்மருதம்
மெல்லென மாருதம் மேவிய நீழலில்
மொய்த்துவி டாயொழித்து
முழவினை யாடவர் முழக்கிடப் பண்ணொலி
மிக்குறு மாறிசைக்கக்
கொல்லெனப் புள்ளொலி கூடுரு மாமலை
கொட்டுக சப்பாணி
கோதறு சண்முக நாதம கிழ்ந்துநீ
கொட்டுக சப்பாணி (36)
[கல் - மலை, மள்ளர் - உழவர், மேதி - எருமை, கம்பலை – வயல்; அல்எனும் - இருட்டைப்போன்ற. ஆடவர் முழவொலிக்கவும், பெண்கள் பண் இசைக்கவும், முழவு - மிருதங்கம்] 36
7 பாங்கர மைந்துள மாமரக் காவினுள்
பாய்ந்துமி ளஞ்சிறுவர்
பதுங்கிநு ழைந்துபற் பைங்கனி தம்மையே
பற்றியெ டுத்தோடி
ஆங்கெவ ருந்தமைக் கண்டிடு வாரென
அண்மையு ரும்பொருநை
யாற்றிடை கண்டக ருந்திடல் கள்மிசை
ஆவலு டனமர்ந்து
தாங்கரங் கொண்டுள மாங்கனி யுண்ணவத்
திட்டுகள் மேலெழும்பித்
தள்ளிட நீரினில் தட்டழிந் தேகரை
சார்ந்தவண் நோக்கிடவங்
கோங்கெரு மைகளைக் கண்டுந கைத்திடுங்
கோப்படர் மாமலைவாழ்
கோதறு சண்முக நாதம கிழ்ந்துநீ
கொட்டுக சப்பாணி. (37)
[பாங்கர் - அருகில், பற்பைங்களி - பல பசுமையான கனிகள். கரைசார்ந்து அவண் நோக்கிட அங்கு ஓங்கு எருமைகளை - எனப் பிரிக்க]37
8 சற்றும டக்கமி லாதுகு தித்திடர்
சார்ந்திடுஞ் சல்லியர்போல்
தங்குத லாற்றடி யின்றிவெ ளிப்புறம்
சாடிய லைவதனால்
செற்றுறு மீன்வலைப் பட்டுநீர்ப் புள்ளிடஞ்
சிக்கியு யிரிழக்கும்
செங்கெளி றுங்கய லும்விரி சள்ளையு
மாதிய மீன்களுடன்
முற்றுறு புத்திய ரொக்குமி றாலயி
ரையொடு தேளியெனும்
மூழ்கிய வாறுதண் ணீரினு ளேயடி
மேவிய மீனினமும்
கொற்றமு டன்நிறை கொள்பொரு நைக்குக
கொட்டுக சப்பாணி
கோதறு சண்முக நாதம கிழ்ந்துநீ
கொட்டுக சப்பாணி (38)
[சல்லியர் – வீணர் - கீழ்மக்கள், ஆற்றினடியில் தங்குதலின்றி எனக்கூட்டுக. செற்றுறு – நெருக்கமாகவுள்ள]38
9 பெற்றவன் இல்லினில் உண்டுமோ இல்லையோ
போதிய செல்வமது
புரிந்தவ ளாயினும் பேரள விற்பறித்
தேபல சீர்களுடன்
உற்றவன் இல்லினுக் கேகிடும் பெண்களை
யொப்பவு யர்பொதிகை
உச்சியி னின்றிழிந் தேயகிற் சந்தனம்
ஓங்குபெ ருந்தேக்கு
மற்றவண் கண்டிடு தந்தமு டன்மண
மிக்குறு பல்பொருளும்
மண்ணினை யும்விட வேமன மின்றியே
வாரியி ழுத்தோடிக்
கொற்றமு டங்கடல் செல்பொரு னைக்குக
கொட்டுக சப்பாணி
கோதறு சண்முக நாதம கிழ்ந்து நீ
கொட்டுக சப்பாணி. (39)
[உற்றவன் - கணவன், மற்று அவண் - மற்றும் அங்கே. கொற்றம் – வெற்றி]39
10 வேதனி வர்ந்திடு வெண்பனி யோதிமம்
வீமமுற் றோலமிட
விண்டுவின் வாகன மாங்கரு டன்வெருண்
டோடியே விண்பறக்கக்
காதனி கழ்த்திடு காமனி வர்கிளி
கம்மென வேவிரைய
காகமு மேகலி யோடும றைந்திடக்
காசினி சுற்றிவரும்
ஆதவ னின்பரி யேழுமி கப்பயந்
தாடிவி ரைந்தோட
அந்தக னின்பக டுங்குலைந் தோடிட
ஆர்ப்பரித் தேகூவுங்
கோதறு சேவலு யர்த்திய வேலவ
கொட்டுக சப்பாணி
குஞ்சரி கொஞ்சுகு றுக்குத்து றையிறை
கொட்டுக சப்பாணி. (40)
[இவர்ந்திடும் - ஏறியுலவிடும். வீமம் - அச்சம், விண்டு - திருமால், "காதல் நிகழ்த்திடும் காமன்’ எனப்பிரிக்க, கலி - சனிபகவான், அந்தகன் - எமன்; பகடு - எருமைக்கடா] 40
-------------
5. முத்தப் பருவம்
(பன்னிருசீராசிரிய விருத்தம்)
1 மெத்தார் வமுடன் நின்தாயர்
மீனாம் அறுவர் தாமூட்டும்
முலையின் தீம்பா லல்லாது
மேவு திசைக ளெண்பாலும்
சத்தாய் விளங்கும் மலைமாதின்
சவியார் நகில்நின் றெழுபாலும்
சாற்றுஞ் சுரவான் மடிசேருஞ்
சளிப்புங் கைப்பும் அறுபாலுங்
வத்தாத் தமிழின் ஐம்பாலும்
வளமார் மறையின் நாற்பாலும்
வள்ள லளித்த முப்பாலும்
மணக்கு முன்றன் திருவாயால்
முத்தாய்ச் சொரிந்தே யிருபாலும்
மிளிரும் பொருநை யொருபால்வாழ்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே. (41)
[மீனாம் அறுவர் - கார்த்திகைப் பெண்டிர் அறுவர்; சுரஆன் – காமதேனு; வத்தாத் தமிழ் - வற்றாத தமிழ், வள்ளல் - வள்ளுவப்பெருமான்] 41
2 தேனார் முல்லை சிரிப்பதுடன்
தினையுஞ் சிரிக்கும் புனத்திடையே
சென்றே சேடி மார்களுடன்
சிரித்தே பேசிக் குரலெழுப்பி
மானார் வள்ளி கவண்வீச
மங்கை யவள்தன் இன்குரலால்
மருங்கார் புட்கள் மருளாமல்
மலர மலரத் தாம்சிரிக்
கானார் காட்சி தனைக்கண்டு
கரமே கொட்டி நீசிரித்த
கனியாங் கொவ்வை யிதழாலே
கனிவாய் முத்தம் தந்தருளே
மேனா டெங்கும் ஒளிசிறக்கும்
மேன்மைக் குறுக்குத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே. (42)
[மருங்கு ஆர் - அருகே நிறைந்துள்ள; மருளாமல் -அஞ்சாமல்] 42
3 வாலைக் குமரி மடிதனிலே
வாகா யமர்ந்தே அருகிருக்கும்
வாம பாகன் திருமார்பில்
வளமா ரடிகள் கொண்டுதைத்து
பாலைப் பொழியும் ஒரு நகிலைப்
பவளச் செவ்வா யாற்சுவைத்துப்
படமார் மற்றொன் றின் நுனியைப்
பற்றி விரலா லேநெருடச்
சேலைப் பழிக்குந் திருவிழியாள்
சிறிதே பொய்யாய்ச் சினங்காட்டத்
திடுக்கிட் டேநீ முகமாறிச்
சிணுங்கிப் பிதுக்கு மிதழ்குவித்து
மேலைக் காகும் வழிகாட்டும்
முருகா முத்தம் தந்தருளே
மேலாங் குறுக்குத் துறைதங்கும்
மெய்யே முத்தம் தந்தருளே. (43)
[வாலைக்குமரி - உமையவள், வாமபாகன் - சிவபிரான். நகில் - முலை, படம் - துணி - சேலை, சேல் - கயல், மேலைக்காம்வழி - முத்திவழி] 43
4. வருகின் றானே தமிழ்ப்புலவன்
வாரி வழங்க நேர்ந்திடுமே
வறுமை பின்னர் நமையணுக
வாடி யுழல்வோ மென்றெண்ணி
அருகிற் புலவன் வருமுன்னே
அகமும் புறமும் அடைத்துவைக்கும்
அமணன் போன்று மூடிநிற்கும்
அரும்பா முகைகள் தம்மோடும்
உருகிப் புலவர் நிலைகாணின்
உள்ளத் துடனே முகமலர்ந்தே
உதவுங் குமணன் போலளியை
உவந்தே ஏற்கும் விரிநளினம்
முருகிப் பொலியும் நீர் நிலைகள்
மேவுங் குறுக்குத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே (44)
[முருகிப் பொலியும் - மணமுடன் அழகாகக் காணப்படும். அளியை –
வண்டுகளை]44
5. புகலிப் பிள்ளை யெனத்தோன்றிப்
புரைதீர் ஞானப் பாலருந்திப்
புனிதன் தோடார் செவியானைப்
போற்றிச் சைவம் தனைவளர்த்தும்
இகலிப் பேணா அமணரிடும்
எரியுங் கடந்து வாதுவென்றும்
எளியன் கூனன் பாண்டியளை
இணைத்தே சைவத் திடைத்திருப்பி
நகலில் லாத பூம்பாவை
நலமா ருடலம் பெறச்செய்தும்
நயந்தாண் பனையைப் பெண்ணாக்கி
நல்லோர் துதிக்க வாழ்பிள்ளாய்
முகலி மான பிணியறுக்கும்
மொய்ம்பார் பொருநைத் துறைவாழும்
முருகா முத்தம் தந்தருளே
முதல்வா முத்தம் தந்தருளே (45)
[புகலிப் பிள்ளை - ஞானசம்பந்தர், இகலி - மாறுபட்டு, நகல் - உருவம், முகலி - பொன்முகலியாறு, மொய்ம்பு - வலிமை] 45
(பதினான்குசீராசிரிய விருத்தம்)
6 மேக மோடு திங்க ளீயும்
முத்தி னுக்குண் டாம்விலை
மீன மிப்பி சங்கு நத்தின்
முத்தி னுக்குண் டாம்விலை
பூக மோடு வாழை செந்நெல்
மூங்கி லிக்கு தாமரை
பொருந்து நித்தி லந்த னக்கும்
பேச லுண்டு மாம்விலை
நாக மோடு டும்பி டங்கர்
நல்கு முத்திற் காம்விலை
நாகம் பன்றி ஆவின் தந்தம்
நல்கு மார மாம்விலை
ஏக னேநின் முத்தினுக்கு
யார்ம திப்ப ரேவிலை
ஏர்கு றுக்குத் துறைக டம்ப
இனிய முத்தம் தருகவே (46)
[பூகம் - கமுகு. இக்கு - கரும்பு, இடங்கர் - முதலை, நாகம் - யானை, ஆரம் - முத்து]46
7. ஆடகப்பொன் னால மைந்த
அன்ன வூசல் தொட்டிலில்
அண்ண லேநீ யாடு கின்ற
அந்த நேர மைங்கரன்
நாட அங்கு நீகை யாட்டி
நகைமு கந்தான் காட்டிட
நாலு வாயி னால ணைத்து
நன்கு முத்த மவன்தர
நீட வன்கை நீபி டித்து
நெருடிக் காதைக் கிள்ளியே
நோவு கொண்டு பிளிறு மந்த
நேயன் கோலங் கண்டுநீ
கூட வேந கைக்குஞ் செம்மைக்
கொவ்வை வாய்கு வித்துமே
கோல மார்கு றுக்குத் துறைய
கொஞ்சி முத்தம் தருகவே. (47)
[நாலுவாய் - தொங்கும்வாய் - துதிக்கை, நீடு அவன்கை - நீண்ட அவனது
கையை] 47
8. பூது றந்து சனக மன்னன்
புதல்வி யாகித் தசரதன்
பொன்ம னைப்பு குந்து நாதன்
பின்னர் காடு சென்றுதன்
மீது மோகங் கொள்ளி லங்கை
வேந்த னுள்ளும் நாட்டிலும்
மேவித் துன்ப முற்ற பாரி
மீட்க வென்று வானரம்
சேது கட்டச் சென்று சுற்றஞ்
சேரப் பத்து சென்னியைச்
செருவில் வென்று வாகை கொண்ட
சீத ரன்றன் மருகனே
கோது மேவாக் குறுக்குத் துறைய
குமர முத்தந் தருகவே
கொவ்வை யாமி தழ்கு வித்துக்
கொஞ்சி முத்தம் தருகவே. (48)
[பூ துறந்து - தாமரையை விட்டு நீங்கி, நாதன் பின்னர் - கணவனாகிய இராமனுக்குப் பின்னால், பாரி - மனைவியாகிய சீதை, மீட்க என்று, பத்து சென்னியை - இராவணனை] 48
9. மாசு கொண்ட நெஞ்சன் யானுன்
மீது காதல் கொண்டிலேன்
மாண்பு மிக்குன் கோவிற் காலை
மாலை சுற்ற வந்திலேன்
தூசு நீக்கு முன்றன் செய்ய
துய்ய பாதம் நாடிலேன்
தொண்ட ரோடு கூடி நின்றுன்
துதிக னிந்து பாடிலேன்
ஆசு மிக்க என்னை யும்நீ
ஆட்கொண் டன்பு பாய்ச்சியே
அன்னை தன்னின் பரிவு காட்டும்
அருளை யெங்ஙன் பேசுவேன்
மூசு வண்டு சேர்கு றுக்குத்
துறைய முத்தம் தருகவே.
மேவு மன்பர் பாவ மோட்டும்
முருக முத்தம் தருகவே. (49)
10) வண்ப லாவை மந்தி கீற
வழிந்து பொங்கு தேறலும்
வண்ணக் கிள்ளை கொத்த வாழை
வாய்ப ழத்தின் நறவமும்
திண்ப லால ணிற்க டிக்கச்
சிதறு மாவின் பிரசமும்
தேன்க ரும்பை மேதி தின்னச்
சிந்து கின்ற பிழியுடன்
கண்ப டாத நளின மல்லி
குவளை மீது திண்வரால்
கடிய வேக மோடு பாயக்
கசியுந் தேனிற் கலந்திட
எண்ப டும்போ தேயி னிக்கும்
ஏர்கு றுக்குத் துறையுறும்
ஏந்த லேவா யூறல் சிந்த
இனிது முத்தம் தருகவே. (50)
[வாழை வாய் பழம் - வாழையில் வாய்த்த பழம், திண் பல்லால் அணில் கடிக்க மாவின் - மாம்பழத்தின், மேதி – எருமை; கண்படாத நளினம் - மூடாத தாமரை; எண்படும்போதே - எண்ணும் போதே, ஏர் - அழகு] 50
---------------
6. வருகைப் பருவம்
[பன்னிருசீராசிரிய விருத்தம்]
1) உருகும் அடியா ருள்ளமதில்
ஊறும் நறுந்தே னேவருக
உறுவார் பிறவிக் கடல்கடத்தும்
உறுதிப் புணையே நீவருக.
பெருகு தமிழின் பயன்வருக
பேரா னந்தக் கட ல்வருக
புவனம் விளக்கு மொளிவருக
பிள்ளாய் வருக புனமாது
பருகு மெழிலே வருகசிவப்
பழமே வருக ஞானவொளி
பரப்புஞ் சுடரே வருகசிவை
பாலா வருக ஆறுமுக
முருகா வருக என்னாளும்
முகிலார் குறுக்குத் துறைவாழும்
முதல்வா வருக பிரணவமும்
மொழிவோய் வருக வந்தருளே. (51)
(உறுவார் - அடைபவரின். சிவை – பார்வதி)
2) கந்தா வருக கண்ணுதலின்
கண்ணே வ ருகஒளிவளரும்
கண்ணின் மணியே நீவருக
கவினார் மயின்மீ தேவருக
நந்தா விளக்கே வருகவுளை
நாடு மெங்கள் மனவிருளை
நலியச் செய்யுங் கதிர்வருக
நாதா மெய்ப்போ தாவருக.
சிந்தா மணியே நீவருக
சிரித்தே மயக்குஞ் சேய்வருக
தேனார் குதலை மொழியாலே
திணற வைப்போ னேவருக
மந்தா கினியென் வண்பொருநை
வளமார் குறுக்குத் துறைவாழும்
மதலாய் வருக வந்தருளே
மன்னே வருக வந்தருளே. (52)
(நந்தா - அழியாத - அணையாத, மந்தாகினி - கங்கை நதி)
3) வாவென் றடியார் அழைத்திடுங்கால்
வாரா திருக்க வழக்குண்டோ
வாரா திருப்பின் நின்சிகையை
வாரி முடியேன் பூச்சூட்டேன்
ஓவென் றலறி யழுதாலும்
உனையான் பாரேன் மையெழுதேன்
ஒளியார் பணிகள் பூட்டேனே
ஒக்க லேற்றேன் உளமுருகத்
தாவென் றேநீ புலம்பிடினும்
தருவே னோயான் பாலமுதம்
தண்ணா ரமுத மதிகாட்டித்
தணியே னேயுன் அழுகைதனை
மாவென் றுஞ்சேர் திருவுருமா
மலைவாழ் கண்ணே வந்தருளே
மங்கை வள்ளி மகிழ்மார்பா
மயின்மீ தேறி வந்தருளே. (53)
[மா என்றும் சேர் - திருமகள் எப்போதும் சேர்கின்ற] 53
4) வருந்தி யுன்னை யானழைக்க
வாரா திருக்கும் வகையென்னே
வள்ளிக் குறத்தி பின்சென்ற
வம்ப னென்றே பழித்தேனோ
பொருந்தி வாழா மல்மாமன்
பிள்ளை பதுமன் தனைக்குட்டிப்
பிடித்தே சிறையிட் டாயெனவே
பேசி யுனைநான் வதைத்தேனோ
அருந்தீ யேந்து மப்பனுக்கே
ஆசா னென்றே யிகழ்ந்தேனோ
ஆண்டிப் பயலென் றுலகறிய
அலர்சொல் கூறித் தூற்றினனோ
செருந்தி மண்டுந் தண்பொருநை
சேருங் குறுக்குத் துறைவர்ழும்
செல்வா வருக வந்தருளே
சேயே வருக வந்தருளே. (54)
[செருந்தி - வாட்கோரை எனும் ஒருவகைக் கோரை] 54
5) அயிலு மொளியைக் கான்றிவர
அரிமால் நெஞ்சங் கனிந்துவர
அடியார் துதிகள் பாடிவர
ஆனை முகத்தோ னாடிவர
மயிலுந் தோகை விரித்துவர
மாண்பார் சேவல் கூவிவர
மறையோன் வேதம் முழக்கிவர
மகவான் கவரி வீசிவர
பயிலு மொன்பான் வீரர்களும்
பாங்கர் விருது கூறிவர
பாவை யிருவோர் பக்கமுற
பால்வெண் யானை மிசைவருவாய்
தொயிலுந் தாருங் கமழ்மார்பா
துதிசேர் குறுக்குத் துறைவாழும்
துரையே வருக வந்தருளே
சுடரே வருக வந்தருளே. (55)
[அயில் - வேல், கான்றிவர - கக்கிவர, மறையோன் - பிரமதேவன், மகவான் - இந்திரன், பாங்கர் - பக்கத்தில், தொயில் - சந்தனக் கோலம், தார் - மாலை] 55
[பதினான்கு சீராசிரிய விருத்தம்]
6) மாக நாயகனுன் மாம னாந்தரணி
மாது மாமியுனக் கன்னவர்
மாரி யேழிலடி நான்கை யேவியுமிம்
மண்ணை நன்குவள மாக்கியும்
ஏக மாகமுறை யேதம் மோர்மருகன்
என்று போட்டியுட னுதவலால்
ஏரின் மாவுழவர் ஏறு போன்றுமுழைத்
தேற்ற மோடுபயிர் செய்வதால்
பூக மாமெனவே கன்ன லைநெல்லைப்
பேணிக் கன்னலென மாந்தரும்
பேத லித்தணுகு மாறு மீறிவளர்
பூவ ளம்பெருகு நாடனே
போக பூமியென லாங்கு றுக்குத்துறை
புண்ணி யாவருக வருகவே
போத நாதனிரு மாது நாதனெனும்
பிள்ளை யேவருக வருகவே. (56)
[மாக நாயகன் - இந்திரன், தாணிமாது - பூமாதேவி, மாரி ஏழில் அடி நான்கு -ஆவர்த்தம் புட்கலாவர்த்தம் சம்காரித்தம் காளமுகி துரோணம் நீலவருணம் சம்வர்த்தம் எனும் ஏழு மேகங்களில் முதல் நான்கு, பூகம் - கமுகு, கன்னல் - கரும்பு] 56
7) ஆறு மாமுகனே கூறு மேழைமொழி
ஐய! நின்செவிகொண் டில்லையோ
ஆறி ரண்டுவிழி கொண்டு மென்றனிடர்
ஆண்ட வாஅறிய வில்லையோ
ஏறு மாமயிற்கு மார னேஅயிலை
ஏந்து நாதனெனு மேந்தலே
ஏக னேயடியர் மோக லோபமவை
ஏக வேயருளைச் செய்பவா
மீறு பேரழகி வேட மாதுதனை
மேவி யேபுனமுஞ் சென்றவா
மிக்க பேதையனென் பக்கம் நீயருளி
மேவ ஏனினமுந் தாமதம்
ஆறு தண்பொருநை சேர்கு றுக்குத்துறை
அண்ண லேவருக வருகவே
அந்த மார்முருக சுந்த ராவருக்
ஐய னேவருக வருகவே. (57)
8) நேமி யானபுவி மீதி லேநதிகள்
வேறு வேறுதிசை யோடினும்
நீடு மாழிதனிற் கூட வேமுடிவில்
நேரு மேயதனைப் போலவே
பூமி மீதுபல சாமி யாமெனினும்
பூச னைமுழுதும் நின்னிடம்
போய டைந்திடுமன் றோவி தேபுதுமை
யல்ல வேவளலார் சொல்லரோ
யாமி ராப்பகலுங் கூடி நின்னடியை
ஏற்றி டாமலய லார்மதம்
ஏகி வேறிறையின் பாதம் நாடிடினும்
யாவு மேபொறுத்து வருகவே
காமி கப்படரும் சீர்கு றுக்குத்துறை
கந்த னேவருக வருகவே
காடு போகிவடி வேடு மாகியலை
காளை யேவருக வருகவே. (58)
[வளலார் - இராமலிங்க வள்ளலார், கா மிகப்படரும் - சோலைகள் மிக்கடர்ந்த; வடி வேடும் - அழகிய வேடனும்] 58
9) சைவ மேயுலகிற் சார நேகசம
யங்க ளுள்முதன்மை யாவதாம்
சங்க ரன்றனையே யெங்க ணும்நிறைப
ராப ரன்முதல்வ னென்பராம்
பைவ ளைத்தலையும் பாம்பு சூடியவன்
பரவு மாகுருநீ யாதலால்
பாலன் தானெனினும் பன்னு தேவதையுள்
பான்மை யேறியவ னாகுவை
கைவ ளைத்துனையே கந்த னேவருக
காவ லாவருக என்றுயான்
காத லாற்கனியக் கூவி டுஞ்சமயம்
காது மந்தமுறல் ஏன்நபம்
தைவ ரும்மருதஞ் சூழ்கு றுக்குத்துறை
சண்மு காவருக வருகவே
சந்த னக்களபக் கந்த மாரகலச்
சரவ ணாவருக வருகவே. (59)
(பான்மை - மதிப்பு, நபம் - வானம், தைவரும் – தடவும்; கந்தம்ஆர் அகலம் - மணம் நிறைந்த மார்பு) 59
10) நார மோடுமன தாரப் பேரருளை
நாடி யோடிவரும் மேலவர்
நாத னேயுனது பாத மாமலரை
நாழி லாதுதொட நீயவர்
பார மேதொலைய நீறு வாணுதலிற்
பாலித் தேயவரை மாசிலாப்
பாக ராக்கிமலம் மூன்று நீக்கியவர்
பாலுட் காமமுத லாயவை
தூர வேவிலகு மாறு பேரருளைச்
சோனை போன்றுபொழிந் தாட்கொளும்
தூய்மை யேநினைந்து தேடி யானடைந்து
சூழ்ந்து ளேன்வருக வருகவே
கார டாதுபொழி சீர்கு றுக்குத்துறை
கந்த னேவருக வருகவே
காடு போகிவடி வேடு மாகியலை
காளை யேவருக வருகவே. (60)
(நாரம் - அன்பு, நாழ் இலாது – குற்றமிலாது - செருக்கின்றி, மலம் மூன்று - ஆணவம் மாயை கன்மம், காமம் முதலாயவை - காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் எனும் அகப்பகை ஆறு, சோனை - மழை, கார் அடாது - மேகம்
இடைவிடாது. வடி வேடுமாகி - அழகிய வேடனுமாகி) 60
-------------
7. அம்புலிப் பருவம்
[பன்னிருசீராசிரிய விருத்தம்]
1) அலைவாய் வந்தாய் நீயிவனும்
அலைவாய் வந்தான் கடல்சூழும்
அகிலஞ் சுற்று வாயிவனும்
அகிலஞ் சுற்றி னானறிவாய்
அலைவார் கங்கை யடுத்தாய்நீ
அடுத்தா னிவனுங் கங்கைதனை
ஆரு மிருளை யவிப்பாய்நீ
அகத்து விருளை யிவனவிப்பான்
தலையா றுடையான் தலைநின்றாய்
தலையா றுடையான் தலைநின்றான்
தாரம் பலவே நீகொண்டாய்
தாரம் பலவே யிவன்கொண்டான்
கலையார் நீவி ரிணையாதல்
கண்டே வருக அம்புலியே
கவினார் குறுக்குத் துறையானைக்
கலந்தா டிடவா அம்புலியே. (61)
[அலைவாய் - திருப்பாற்கடலலையில், திருச்செந்தூரில்; தலையா றுடையான் - தலையில் நதியுடைய சிவபிரான், ஆறு தலைகளையுடையவன் - நிலை நின்றான் - முதன்மையென நின்றான்.- பல - ஒன்றுக்கு மேற்பட்ட] 61
2) அடைந்தாய் முன்னாள் மலர்த்தாரை
அடைந்தா னிவனும் மலர்த்தாரை
அளியார் சோதி வடிவானாய்
அழியாச் சோதி வடிவானான்
மிடைந்தா யுன்னுள் தரிமானை
மிடைந்தா னிவனுங் கரிமானை
வெளியே வருவாய் மலையேறி
வேல னிவனும் மலையேறி
குடைந்தாய் வெண்மைப் பால்வாரி
குடித்தா னிவனும் பால்வாரி
குளித்தே வருவாய் திருசேரக்
குலவி வருவான் திருசேர
அடைந்தார் பாவம் அறுப்பானோ
டாட வாவே அம்புலியே
அணிசேர் குறுக்குத் துறையானோ
டாட வாவே அம்புலியே. (62)
[மலர்த் தாரை - மலர்போன்ற உடுக்களை. கடப்பமலர் மாலையை, அளிஆர் -தண்மை நிறைந்த, மிடைதல் – செறிதல், கலத்தல். கரிமானை – கரிய மான்வடிவை, தெய்வானை வள்ளியை. பால்வாரி - பாற்கடல், பாலைவாரி - திருசேர - இலக்குமியுடன்,
அழகு பொருந்த] 62
2) மீன ரும்மை விரும்பிடவே
மேவி யவர்பால் நீர்சென்று
மார்பி னணைப்புக் குள்ளாகி
மடியிற் கிடந்து கண்வளர்ந்தீர்
கான மளிக்கும் ஆம்பலையே
கரங்கொண் டணைத்து நகைகாட்டி
கலந்து மகிழ்ந்தே அவர்வதனம்
கவின்பெற் றலரச் செய்திடுவீர்
வான ருடனே குலவியுமவ்
வானின் வழியே நீர்வந்து
மாறு முகங்கள் தாம்கொண்டும்
மானு வீர்நீ ரிருவீரும்
ஆன படியா லிவனழைத்தான்
ஆட வாவே அம்புலியே
அணிசேர் குறுக்குத் துறையானோ
டாட வாவே அம்புலியே. (63)
[மீனர் - சந்திரனுக்கு அவன் மனைவியர் இருபத்தேழுபேர், முருகனுக்குக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் - கானம்.. ஆம்பல் - சந்திரனுக்கு மணமுள்ள அல்லி மலர், முருகனுக்கு இசை பாடும் தெய்வானை; வானர் - தேவர்கள் - சந்திரனுக்கு மாறும் முகங்கள், முருகனுக்கு ஆறு முகங்கள்] 63
1) பொருந்து மன்பா லிவனுன்னைப்
பேணி யழைத்தான் புரிந்திலையோ
பேதை மதியே சிறிதேனும்
பெம்மா னிவனுக் கிணையோ நீ
திருந்து கலைக ளறுபத்து
நான்குங் கொண்டான் இவன் நீயோ
சேருங் கலைகள் பதினாறே
சிதறும் பலநா ளவைதாமும்
மருந்து தாங்கும் மால்மருகன்
பழுதில் வடிவன் செம்மதியன்
பாராய் நீயோ குறைவடிவன்
படர்கொண் டுழலும் வெண்மதியன்
பொருந்திக் குறுக்குத் துறையானைப்
போற்றி வாவே அம்புலியே
பொலிவார் வேல னிவனோடு
பிணைந்தா டிடவா அம்புலியே. (64)
5) தக்க னென்னும் நின்மாமன்
தனக்கே நீயும் அஞ்சிடுவை
தக்கன் தாதை பிரமனையே
தலையிற் குட்டும் பெரியவன்
அக்க ரங்கள் ஆறுடையான்
அகளங் கன்நீ யோகளங்கன்
அகத்தி னிருளை யவன்மான
அகற்ற வொண்ணாய் நீசிறிதும்
பக்க முனக்குச் சிறுமானே
பாங்க ரிவர்க்குப் பெருமானே
பால னிவனும் பெருமானே
பாரா யிவையெ லாமுணர்ந்தே
இக்க ணமேநீ யிவனுடனே
இணைந்தா டிடவா அம்புலியே
எழிலார் குறுக்குத் துறையனுடன்
இனிதா டிடவா அம்புலியே (65)
(அக்கரங்கள் ஆறு - சரவணபவ; அகளங்கன் - களங்கமில்லாதவன்; அவன்மான - அவனைப்போல, சிறுமான் - சிறுமான் வடிவமாகிய களங்கம், பெருமான் - பெரிய மானாகிய வள்ளி] 65
(எண் சீராசிரிய விருத்தம்)
6) கூனலிளம் பிறைமதியே குமரனிவன் முன்னர்
கூறுதிரு ஞானமுறு குரவனெனத் தோன்றி
மீனவனின் கூனலுடன் மனவிருளும் போக்கி
மீட்டரனின் பாதமலர் மேவியுறச் செய்தான்
ஈனமுறும் பிறவிதனை எளிதெரிக்கு மிவன்முன்
என்புரியும் நின்வருத்தும் எளியசில நோய்தாம்
ஆனனமா றன்முருகன் அணிபொருநைத் துறையன்
அம்பரனோ டாடிடவே அம்புலிநீ வாவே (66)
[திருஞானமுறு குரவன் - திருஞானசம்பந்தர். ஆனனம் ஆறன் - ஆறு முகங்களையுடையவன், அம்பரன் - அழகிய இறைவன்] 66
7) எடுத்துனையே விழுங்கியுமிழ் எரிவிடஞ்சேர் பாம்பும்
எண்ணிடுமோ இவனமரும் எழின்மயில்முன் நாட
அடுத்துவருங் குருமனையைக் கெடுத்ததினால் நீயே
அடைந்த பெருஞ் சாபமதைக் கடிந்திடுவான் கண்டாய்
தொடுத்துரைசெய் தேவதைகள் தோன்றிடினும் பலவே
தொன்மையனிச் சண்முகன்போல் தேவரில ருண்மை
அடுத்தவரை யாள்முருகன் அணிபொருநைத் துறையன்
அம்பரனோ டாடிடவே அம்புலிநீ வாவே. (67)
[குருமனையை - வியாழன் மனைவி தாரையை, அடுத்தவரை- அடுத்துவரும் அடியவரை, தொன்மையன் - பழமையானவன்] 67
8) மாதமொரு முறைபிறந்து மாண்டிடுவாய் நீயே
மாறிமாறி பிறந்திறத்தல் மாட்சிமையோ சொல்வாய்
பேதமெது மெண்ணிடாது போதமுடன் நண்ணிப்
பிறவியெனும் நோய்தவிர வருகஇவன் பாலே
ஏதமொடு வேதனைகொண் டெத்தனை நாள் திரிவாய்
ஏனிதனை யுணரவிலை யின்னுமட மதியே
ஆதமுறு வான்முருகன் அணிபொருநைத் துறையன்
அம்பரனோ டாடிடவே அம்புலிநீ வாவே
[ஏதம் – நோய் - குற்றம், ஆதர் - அன்பு -ஆதரவு] (68)
9) கூறுமொழி நின்செவியி லேறவிலை யோசொல்
கோபமிவன் கொள்ளமனத் தாபமடை வாய்நீ
சேருமான் திருமுடிமீ தேறியிவன் நின்னைச்
சேர்த்திடுவ னங்குறையுஞ் சீறரவின் வாயுள்
மீறுமொளி கூர்வடிவேல் முன்னரன்று சூரன்
மேவுகதி காணிலையோ தாவிடுமுன் பாலே
ஆறுமுகன் சீறுமுன்னே அணிபொருநைத் துறையன்
அம்பரனோ டாடிடவே அம்புலி நீ வாவே
[சீறு அரவின் - சீறுகின்ற பாம்பின்] (69)
10) பூதலமெ லாம்படைக்கும் வேதனுமே முன்னர்
பெற்றவிடர் கண்டுமுனக் குற்றதிடம் யாதே
ஓதலரி தாம்புகழன் ஒண்கரமார் சேவல்
ஒலிக்குடையும் நீயிவனின் வலிக்கெதிரா வாயோ
காதலதி கம்இவன்பால் கொண்டநவ வீரர்
கதமுறுவ ராயினும்நீ வதமுறுவாய் கண்டாய்
ஆதலினால் போதமுடன் அணிபொருநைத் துறையன்
அம்பரனோ டாடிடவே அம்புலிநீ வாவே.
[சேவல்ஒ லிக்கு உடைதல் - சேவல் கூவச் சந்திரன் மறைதல்,
உடைதல் - பின்வாங்கல், கதம் - சினம்] (70)
------------------
8. சிற்றிற் பருவம்.
(பன்னிரு சீராசிரிய விருத்தம்)
1) விளைத்தே செந்நெல் வளந்தருஞ்செய்
வியனார் களியால் சுவரெழுப்பி
விதமாய் அறைகள் பலவாக்கி
விரித்தே றலை யவையுள்ளே
இழைத்தே கோலம் மலர்த்தாதால்
எழிலா யெங்கும் வேணபொருள்
யாவுஞ் சேர்த்திங் கில்லமைத்தே
இணைந்தா டிடவே சிறுமியர்யாம்
கிளைத்தே நின்று கனிபழுத்துங்
கிறங்கி வருவார் மயல்தீர்த்தும்
கிளர்ந்தே படரால் நிழல்தனிலே
கூடி நின்றோம் கண்பாராய்
வளைத்தே பாயுந் தண்பொருநை
வளமார் குறுக்குத் துறைவாழும்
வள்ளால் சிற்றில் சிதையேலே
வடிவேல் சிற்றில் சிதையேலே. (71)
[செய் - நன்செய்நிலம், அறல் - பொடி மணல், சேர்த்து இங்கு இல் அமைத்து,
மயல் - மயக்கம், படர்ஆல் - படர்ந்த ஆலமரம்] 71
2) அணிசேர் தெங்கங் குரும்பைகளால்
அட்டி லுள்ளே யடுப்பமைத்தங்(கு)
அணித்தே கண்ட தென்னோட்டை
யதன்மேல் தூதைக் கலமாக்கிக்
கணிசேர் மலர்வாய் தேனெடுத்துக்
கலந்தே யளவா யுலையேற்றிக்
காசு நீக்கிப் பருமணலைக்
களைந்தே வல்சி யெனப்புகட்டி
மணிசேர் பாளைக் கமுகினின்று
வெடித்தே யுதிரும் மணிபொறுக்கி
மலர்கள் தழைகள் கறியாக்கி
மாண்பா யடுதல் பாராயோ
திணிசேர் தோளா மனமிரங்காய்
சிறியேம் சிற்றில் சிதையேலே
தேசார் குறுக்குத் துறைவாழுந்
தேவே சிற்றில் சிதையேலே, (72)
[அட்டில் - அடுப்பங்கரை, தென்னோடு – சிறட்டை, தூதைக்கலம் -
சோற்றுப்பானை, கணி - மருதநிலம், காசு - மாசு, வல்சி - அரிசி] 72
3) சரவண பவனே தாள்பணிந்தோம்.
சவிநிறை சிற்றில் சிதையேலே
சயிலொளி பவனே தாள்பணிந்தோம்
சமைத்திடு மன்னம சிைன தையேலே
பரிபுர பவனே பதம்பணிந்தோம்
படியுறு சிற்றில் சிதையேலே
பவமொழி பவனே பதம்பணிந்தோம்
பனிமலர்க் கறிகள் சிதையேலே
சிரவண மேற்பாய் எம்மொழிநீ
திகழொளி பவனே சிதையேலே
சிறுமியர் புரிந்த தவறேதோ
திரிபுர பவனே சிதையேலே
குரவணி பெரியோய் மறைசொல்லுங்
குழவியே சிற்றில் சிதையேலே
குடியெனக் குறுக்குத் துறைவாழுங்
குமரனே சிற்றில் சிதையேலே. (73)
[பவன் - கடவுள், சயிலொளி - குளிர்ந்த ஒளி, பரிபுரம் . சிலம்பு, திரிபுரபவன் - சிவன் செயல் முருகனுக் காயிற்று, குரவு - கடம்புமாலை] 73
4) கந்தா சந்தா சிதையேலே
கண்ணே மன்னே சிதையேலே
கங்கை மைந்தா சிதையேலே
கவினார் முருகே சிதையேலே
நந்தா விளக்கே சிதையேலே
நலமார் தேவே சிதையேலே
நாதா போதா சிதையேலே
நளினப் பாதா சிதையேலே
சிந்தா மணியே சிதையேலே
சேவற் கொடியாய் சிதையேலே
சேயா தூயா சிதையேலே
சிகிவா கனனே சிதையேலே
செந்தார் மார்பா சிதையேலே
செய்சூழ் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சிறியேம் சிற்றில் சிதையேலே (74)
[சந்தா - அழகனே, நந்தா - அவியாத, சிகி - மயில்] 74
5) சிதைப்ப தென நீ எண்ணிடுங்கால்
சிறியே மில்தான் கிடைத்ததுவோ
செகத்தே சிதைக்க வேண்டுபவர்
தெரிவாய் கணக்கி லடங்காரே.
வதைப்ப தொன்றே பிறவுயிரை
வரமாய்க் கொண்டு திரிபவரை
வாய்மை மறந்து கோட்சொல்லி
வம்பு புரிந்தே அலைவாரை
உதைப்ப தென்றே எளியார்மேல்
ஓடி வழக்கிற் கிழுப்பாரை
உன்பேர் சொல்லி யேமாற்றி
உலகில் வாழும் பெரியாரை
இதைப்போன் றாரைச் சிதையாமல்
எமதில் சிதைப்பா யோமுருகா?
எழிலார் குறுக்குத் துறைவாழும்
இறைவா சிற்றில் சிதையேலே. (75)
[சிறியேம் இல் - சிறுமியர் எமது வீடு, எமதில் எமது வீடு] 75
6) உருகா யோநீ உளம்விரும்பின்
உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
உலையா தருள்செய் தேகிடுவாய்
முருகா சிறியர் யாம்பெரிதும்
முயன்று செய்த பலபண்டம்
முன்னா லுனக்கே படைக்கின்றோம்
முயலா தேயெம் மில்சிதைக்க.
ஒருகா லுண்ணின் மறுகாலும்
உண்டா வுண்டா எனக்கேட்பாய்
உனக்கல் லாது யார்க்கிவைதாம்
உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
திருகா வளஞ்சேர் ஆவடுதண்
துறையார் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சேயேம் சிற்றில் சிதையேலே. (76)
[ஒருகால் - ஒரு முறை, மறுகால் - மறு முறை, திருகா - மாறு படா] 76
7) மாங்காய் விரும்பி வருஞ்சிறுவர்
மரமேல் கற்கள் பலவீச
மரமார் மந்திக் குழுகலைந்து
மண்டி யடித்தே விழுந்தோடி
ஆங்கார் தெங்கின் முடிதாவ
அலறிக் காய்ந்த நெற்றொன்றே
அடியி லொருமாங் கிளையினிலே
அடர்தேன் கூட்டை நோக்கிவிழப்
பாங்கார் கிளையொன் றதுகண்டு
பதறிக் குறுக்கே விரைந்தேற்றுப்
படர்தேன் கூடு சிதையாமல்
பரிவாய்க் காக்கும் வளநாடா
நீங்கா வளஞ்சேர் தண்பொருநை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நேயா சிற்றில் சிதையேலே
நிமலா சிற்றில் சிதையேலே. (77)
[மரமார் - மரத்தில் நிறைந்த, ஆங்குஆர் -ஆங்கு நிறைந்து நின்ற,
பாங்கு ஆர் - பக்கத்திலுள்ள] 77
8) முந்தித் தவமே புரிந்துன்னை
முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை
மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி
கொட்டச் செய்து முத்தமிட்டுக்
கூவி யழைத்து வருகவெனக்
கொஞ்சி குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும்
அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா என்மறுகில்
அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல்
நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
நிமலா சிற்றில் சிதையேலே. (78)
[குந்தி - அமர்ந்து, மறுகில் - வீதியில்] 78
9) நின்னைக் குறையே கூறுவதால்
நேரும் பயனிங் குண்டாமோ?
நெருப்பின் வழியே தோன்றியவுன்
நெஞ்சம் சிறிதுங் குளிர்ந்திடுமோ?
அன்னை வயிற்றில் பிறந்திருந்தால்
அறிவாய் நீயெம் அருமைதனை
அப்பன் நுதற்கண் வந்ததனால்
அரிவை யரின்சீர் அறிந்திலைநீ.
பின்னை யேனும் பெண்களைநீ
பெண்டாய்க் கொள்ளின் புரிந்திருப்பாய்
பிடியைப் பிணையை மணந்துளநீ
பெண்ணி னருமை யாதுகண்டாய்
தென்னை யோங்கித் தலைகனக்குந்
திருவார் குறுக்குத் துறைவாழும்
செல்வா சிற்றில் சிதையேலே
சிறியேம் சிற்றில் சிதையேலே. (79)
[பிடியை- பெண் யானையை, பிணையை - பெண்மானை முறையே
தெய்வானை வள்ளியை] 79
10) ஏதோ சினந்து சிறுமதியால்
இகழ்ந்தோ மிதனை யெண்ணாதே
இணையா ரடிகள் நோகாவோ
இங்ஙன் தரையை நீயுழுதால்
போதோ டன்பு பொழிந்தென்றும்
போற்றத் தகுமுன் பொற்பாதம்
புழுதி யளைந்தே வருந்துவதைப்
பெற்றோர் கண்டால் சகிப்பாரோ
தீதோ டிடவே சென்றடியார்
சிந்தை மயக்கம் சிதைத்திடுநின்
திருவா ரடிகள் எம்குடிலைச்
சிதைத்தல் நீதி யன்றுகண்டாய்
மூதோர் புகழுந் தண்பொருநை
முழங்கும் குறுக்குத் துறைவாழும்
முருகா சிற்றில் சிதையேலே
முதல்வா சிற்றில் சிதையேலே. (80)
[போதோடன்பு - மலருடன் அன்பையும், தீது ஓடிடவே சென்று, மூதோர் - அறிவு முதிர்ந்தோர்] 80
--------------
9. சிறுபறைப் பருவம்
(பதினான்கு சீராசிரிய விருத்தம்)
1) புலியைச் சீறி வென்று மாண்ட
பெற்றங் கொண்டு மயிரினைப்
போக்கி டாமற் றோலெ டுத்துப்
பொற்பு றக்கோ டேற்றியே
ஒலியெ டுப்பு டன்மு ழக்கும்
ஒப்பி லாத பறையினை
உறுதி யாயி டக்க ரத்து
(உ)வந்து நன்கு பற்றியே
வலிவு டன்றொ ழிற்ப டைத்து
மணியி ழைத்த குணிலினை
வலக்க ரம்பி டித்து நன்மு
ழக்கு டன்மு ழக்குக
சிலிமு கங்கள் சூழ்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுப றைமு ழக்குக. (81)
[பெற்றம் – மாடு - இங்கு எருமைக்கடா; புறக்கோடு - வெளிப்பக்கம் - முகப்புறம்,
சிலீமுகம் - மேகம்] 81
2) “சோதி நாத னே நீ முன்னர்
சொன்ன வேத ஆழியுள்
சொல்லொ ணாத ஆழ மோடு
தொலைத லில்லாப் புயலிருள்
மோதி மோதி நெஞ்சந் தன்னை
மருள வைப்ப தாலதை
விளங்கு மாறு மீண்டுங் கூறு"
கென்று நாடி யேசன
காதி நால்வர் வேண்டி நிற்க
ஆல நீழல் மேவியே
அரனு ரைத்த புதிய போதம்
அவனி யில்மு ழங்கவே
சேதி யாவ ளங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுப றைமு ழக்குக. (82)
[மருள - மயங்க, சேதியா - குறைவுபடா] 82
3) தெய்வ மென்ப தென்ன எங்குந்
தேடிக் காண வொண்ணுமோ
சொல்லு மென்று சொல்லு வார்தம்
சிந்தை நன்கு ணர்த்திட
நெய்வ ருங்காண் பாலி னின்று
தீவ ருங்காண் விறகிலே
நேரு மஃதை தெய்வ முள்ள
தென்று சொல்லும் பான்மையே
மெய்வ ருந்த உறவெ னுங்கோல்
நட்டு ணர்வுத் தாம்பினால்
முறுக வாங்கிக் கடையும் போது
வந்து தோன்று மென்றிவண்
செய்வ ளைத்தி டுங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுபறைமு ழக்குக. (83)
(நேருமஃதை - அதனை ஒக்கும், செய்வளைத்திடும் - நன்செய் சூழவிருக்கும்]83
4) சங்க ரன்பா லன்பு கொண்ட
சைவ ரோடு பாம்பணை
தங்கு சங்க ணிந்த வன்றன்
தாள்வ ணங்கு வைணவர்
துங்க புத்த னைத்தொ டர்ந்த
தொண்ட ரோடும் அருகனைத்
தொழுது நிற்கு மமண ரோடும்
தூய யேசு நாதனின்
பங்க யம்ப ணிந்து ளோரும்
பகரு மல்லா பக்தரும்
பால னுள்மு ழக்கு தத்தம்
மதமு ழக்க மென்றிடச்
சிங்க நாத னேகு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைச் செல்வ
சிறுப றைமு ழக்குக. (84)
[சேவல் அம்பதாகை - அழகிய சேவற்கொடி] 84
5) ஞால மீது வெயிலெ றிக்கும்
ஞாயி றோடு திங்களும்
நன்நெ ருப்பி னன்செவ் வாய்பு
தன்வி யாழன் வெள்ளியும்
நீல னாய சனிய னோடு
நிருத ராகு கேதுவும்
நின்வ ணங்கு தொண்ட ரைக்கண்
டேப யந்து நீளவே
ஓல மிட்ட கன்றொ துங்க
உத்த மாமு ழக்குக
உன்பு கழ்செ கம்ப டர்ந்திங்
கோங்க வேமு ழக்குக
சீல மார்ந்தி டுங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைச் செல்வ
சிறுப றைமு ழக்குக. (85)
[நீலன் - நீல நிறமுடையவன், நீளவே - வெகு தூரமாய்] 85
(பன்னிரு சீராசிரிய விருத்தம்)
6) வாதம் முழங்க மன்றுகளில்
வண்டு முழங்க மலர்களிலே
வாய்மை முழங்க நெஞ்சமதில்
வாய்கள் முழக்க நின்புகழை
கீதம் முழங்க மனைகடொறும்
குயில்கள் முழங்கச் சோலைகளில்
குறளும் முழங்கப் பள்ளிகளில்
கொண்மூ முழங்க வான்மிசையே
நீதம் முழங்க மன்பதையுள்
நீர்மை முழங்க மங்கையருள்
நீரும் முழங்க மதகுகளில்
நிலத்து முழங்க உழவோதை
சீதம் முழங்குந் தண்டொருதைச்
செழிப்பார் குறுக்குத் துறைவாழும்
சேயே முழக்கு சிறுபறையே
செல்வா முழக்கு சிறுபறையே. (86)
[வாதம் - சொற்போர், கொண்மூ -மேகம், மன்பதை - மக்கள் கூட்டம், நீர்மை - கற்பு, சீதம்-குளிர்ச்சி] 86
7) செக்கர் வானச் செவ்வுடலும்
தேனார் கடம்ப மலர்மார்பும்
சிரங்க ளாறும் மணிமுடியும்
செவியீ ராறுங் குண்டலமும்
அக்கம் ஈறா ருங்கரங்கள்
ஆறி ரண்டில் அஞ்சலென
அபய மளிக்குங் கரமொன்றும்
அல்லல் தீர்க்கும் வடிவேலும்
இக்கார் மொழிய ரிருமாதர்
இடமும் வலமும் நின்றொளிர
இணையா ரடிக ளிரண்டுடனே
ஏறு மயிலுஞ் சேவலுமாய்த்
திக்கெங் குமொளிர் ஆறுமுகச்
செல்வ! குறுக்குத் துறைவாழும்
சேயே முழக்கு சிறுபறையே
தேவா முழக்கு சிறுபறையே. (87)
[செக்கர் - சிவப்பு, அக்கம் - கண். இக்கு ஆர் - கரும்பு நிகர்த்த] 87
8) முக்கா லுக்கே யேகிடுமுன்
முன்னே நரையுந் தோன்றிடுமுன்
முதுமைப் பட்டே வருந்திடுமுன்
மூவர் தமைக்கண் டஞ்சிடுமுன்
விக்கி யிருமித் துடித்திடுமுன்
வேர்த்தே மயங்கிச் சோர்ந்திடுமுன்
விரைந்தே யென்பால் வம்மி னென
வியனார் பறையே முழக்கிடுக.
அக்கா ரமணி அமலனருள்
ஆறு முகனே குஞ்சரியின்
அணிதோள் சேருந் திருமார்பா
அடித்தே முழக்கு சிறுபறையே
செக்கர் மேனித் திருமதலாய்
செல்வா முழக்கு சிறுபறையே
சீரார் குறுக்குத் துறைவாழும்
தவ முழக்கு சிறுபறையே. (88)
[முக்கால் - ஊன்று கோலுடன் மூன்றுகால்; அக்கு ஆரம் அணி –
சங்குமாலை அணிந்த, குஞ்சரி – தெய்வானை] 88
9) நெருப்புள் வெண்ணெ யெனவுருகி
நிமலன் நீழ லடைவதனை
நினையா துலக மாயையினுள்
நின்று மயங்கி யுழலாதீர்
விருப்பும் வெறுப்பும் விடுத்துதறி
விரைந்தே வம்மின் வம்மி னென
விளையாட் டாய்நீ பறைதனையே
வேக மாக முழக்குகவே
பொருப்பின் அரையன் திருமகளின்
பிள்ளாய் வள்ளிக் குறமாதின்
புலனார் விருந்தே அருமருந்தே
புனிதா முழக்கு சிறுபறையே
செருப்புக் கசுரர் குலமழித்த
செல்வா முழக்கு சிறுபறையே
சீரார் குறுக்குத் துறைவாழுந்
தேவே முழக்கு சிறுபறையே. (89)
[பொருப்பின் அரையன் திருமகள் - மலையரசன் மகளாகிய பார்வதி,
செரு - போர்க்களம், புக்கு அசுரர் குலம் அழித்த] 89
10) தாயாம் மந்தி தனைப்பற்றித்
தவிப்பற் றிருக்குங் குட்டியெனத்
தாமே யெம்மை வந்தடைவீர்
தவறி னாலுந் தவிப்பொழியச்
சேயாம் குட்டி தனைநாடிச்
சேர வந்தே யெடுத்தேகும்
சீரார் பூஞை யெனவந்து
சிந்தை மகிழ அரவணைப்போம்
மாயா வுலகில் வருந்தாதீர்
வந்தோம் வந்தோம்" எனவுன்றன்
மழலை முழக்கி யதற்கேற்ப
மன்னே முழக்கு சிறுபறையே
தீயாம் சோதி வடிவோனே
செல்வா திருவா வடுதுறையர்
சீர்செய் குறுக்குத் துறைவாழுந்
தேவே முழக்கு சிறுபறையே. (90)
------------
10. சிறுதேர்ப் பருவம்
[பதினான்கு சீராசிரிய விருத்தம்]
1) தாரணியைச் சூழ்ந்தலை சாகரங்கள் தம்மையே
சக்கரங்க ளெனவ மைத்துத்
தடமாரும் புவிதனைத் தங்குமிட மாமடித்
தட்டெனவே கொண்டு பனியே
சேரணியி மயமெனுஞ் சிலம்புமுத லாயபல்
திகிரிகளைக் கால்க ளாக்கிச்
செப்பமுடன் மேலேழு லோகங்கள் தம்மைமேல்த்
தட்டுகளென் றேய மைத்துத்
தரணிசெய் கொடுங்கைக ளாகஎண் டிசைகளைச்
சேண்விசும்பை மூடு துணியாய்ச்
சுவர்க்கமது சிகரமாய்த் தொன்மறைகள் புரவியாய்த்
திசைமுகனும் வலவ னாகச்
சீரணியுந் தேரெனச் செய்துவிளை யாடிடுஞ்
செல்வதே ருருட்டி யருளே
சோலைசூழ் திருவுரு மாமலையின் வேலவ
சிறுதேரு ருட்டி யருளே. (91)
[தங்கும் இடமாம் அடித்தட்டு, பனியே சேர்அணி இமயம், சிலம்பு - மலை,
திகிரி - மலை, வலவன் - தேர்ப்பாகன்] 91
2) புவியார்ந்த பற்பல புண்ணியத லங்களிற்
போட்டுமொரு பயனு மில்லாப்
புன்னுடலி னஸ்தியைப் புகர்மாற்றிக் கருநிற
மாக்கியக ருப்பன் றுறையும்
குவியார்ந்து வருமதைக் குருத்துவிடச் செய்துசீர்
கொண்டதிருக் குறுக்குத் துறையும்
குருத்துக்கள் தமையெலாங் கோலமல ராக்கியே
கோப்புடன்வி ரித்துச் சிந்தும்
சவியார்ந்த சிந்துபூந் துறையுஞ்சேர்ந் திலங்கிடுந்
தண்பொருநைக் கரையெ லாம்நீ
சாருநவ வீரர்கள் தம்மோடு கூடியே
தனித்தேரு ருட்டி யருளே
செவியாறி ரண்டனே சேவலணி கந்தனே
சிறுதேரு ருட்டி யருளே.
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவ
சிறுதேரு ருட்டி யருளே. (92)
[அஸ்தி - எலும்பு, புகர் - வெண்மை; குவியார்ந்து - குவித்து
கோப்பு - ஒழுங்கு, சவி - அழகு] 92
3) நாத்திரியு மாறெலாம் நல்லவர்போல் பலவாறு
நவின்றுபா மரரை யேய்த்து
நாசவினை செய்துவாழ் மோசமிகு மாக்களின்
நயவஞ்சந் தானு குளவும்
ஆத்தியணி செல்வனின் அனல்விழியில் வந்தவா
அழுக்காறு கொண்டு பிறர்மேல்
அல்லலிழைத் தேயவ ரழியுமா றாக்கிவிடும்
அற்பரா ணவமு ருளவும்
ஈத்தினிது வாழ்சுக மெண்ணாமற் பொருளையே
என்றென்று மீட்டி நொந்துன்
இணையடிகள் சிறிதுமே யெண்ணாம லலைந்திடும்
இழிஞர்பே தமையு ருளவும்
சத்தியணி மைந்தனே சேவலுறு கந்தனே
சிறுதேரு ருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவா
சிறுதேரு ருட்டி யருளே. (93)
[நா திரியுமாறெலாம் - நாக்கு சென்றவாறெலாம், ஆத்தியணி செல்வன் - சிவபிரான்] 93
4) அலைமோதி வெள்ளமே அளவற்றுச் சாடினும்
அணுவேனுஞ் சேத மின்றி
அசையாது நிற்குமழி யாப்பிள்ளை யார்கோவி
லணித்தாய் அகன்ம ருங்கும்
தலைமோதிக் கல்லினாற் சாவுண்டு பேயாகித்
தனைக்கொன்ற வணிகன் றனையே
தந்திரமு டன் கொன்று தன்பழி தீர்நீலி
தங்கியுள அகன்ம ருங்கும்
இலைமீதி லேதுயில் நிலைகொண்ட மாதவன்
இடையரக முள்நு ழைந்தே
இட்டம்போல் பால்வெண்ணெ யெடுத்துண்ட கிருட்டிணன்
எழிற்கோவி லகன்ம ருங்கும்
சிலைமோதிச் சீதையைச் சேர்ராமன் மருகனே
சிறுதேரு ருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் வேலவா
சிறுதேரு ருட்டி யருளே. (94)
[மருங்கு - சுற்றுப்புறம், சிலைமோதி – வில்வளைத்து] 94
5) மலைபோன்று குவிந்துள மணல்மேடு தன்னிலும்
மாஞ்சோலை மருங்கி னூடும்
மாண்பாருங் காவடி மண்டமும் யாதவர்
மண்டபமும் வணிகர் மடமும்
கலைபோன்று வெள்ளாடு குதித்தலையும் சோலைசூழ்
கவின் நரசை யன்பதியிலும்
கடலார்ந்த வெள்ளமுங் காணில்நீ மேவிடக்
காண்மேலக் கோவின் மருங்கும்
வலைபோன்று நிழல்தரும் வான்தடவு மருதமார்
வளமிக்க வீதி களிலும்
வானவரும் போற்றிடும் வடிவேல் வாகுகா
வாகுதே ருருட்டி யருளே
சிலைபோன்று நிற்பினும் ஜீவனுள தெய்வமே
சிறுதேருருட்டி யருளே
தெய்வீகத் திருவுரு மாமலையின் செல்வனே
சிறுதேரு ருட்டி யருளே. (95)
[பதினான்கு சீராசிரியம் - வேறு]
6) கோழி தனைப்புகழ் வாயா லதன்சிறு
குஞ்சைப் புகழ்கில னெனவோதுங்
கொய்யாப் புகழடர் பொய்யா மொழிதனைக்
குறுகி வனமுறு மெயினன்போல்
பூழி யடர்சுரம் போ ந் துறையொரு
பாடல் தனைப்பெறு முட்டையனே
பேசுந் துடியுள ஈசா வுனதடி
பேணா துலகினி லுழல்வேனோ
ஆழி யடர்புவி சூழ வலம்வரும்
ஆறு முகனெனும் பேரிறைவா
அண்ணல் நினையர ணென்றே அலையெனை
யாளுங் கட டனுனக் கிலையோசொல்
ஊழி தனிலுமுன் போலும் நிலைபெறும்
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லக்குக்
உருட்டி யருளுக சிறுதேரே. (96)
[எயினன் - வேடன், பூழியடர் சுரம் – புழுதியடர் பாலை] 96
7) அழுதால் வருபய னுளதோ முனருளம்
அறியச் செய்துள வினையெண்ணி
அகமே கசிந்திடத் தினமே வருந்தினும்
ஆகும் பயனெது முண்டாமோ
தொழுதாற் பயனுள தெனவே துணிவுடன்
துகள்தீர் சேவடி பணிவேனே
துரையே யான்படு துயரே நீக்கியுன்
சுகமா ரடிநிழல் தருவாயே
பழுதா யுனைப்பழிப் பவனே யாயினும்
பால னெனவினு மறியாயோ
பரமே யுறைகுரு பரனே முருகனே
பனியார் திருவுள வடிவேலா
உழுதார் மனமிகக் குளிரப் பயனளி
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லக்குக
உருட்டி யருளுக சிறுதேரே. (97)
[துகள் - மாசு, பனியார் திருவுளம் - பனியெனக்குளிர்ந்த உளம், உழுதார் - உழுத உழவர்கள், உயர்செய் – உயர்ந்த ரக நன்செய்கள்] 97
8) கருவாய் மறுபடி வரவே விரும்பிலன்
கலங்கும் படியெனை விடுப்பாயோ
கனியே நினையல தினியே கதியிலை
கசடன் புரிபிழை எடுப்பாயோ
பெருவாய் நரகினில் புகுவே னெனினுமுன்
புனிதத் திருவடி மறவேனே
பெரிதா யணைப்பினும் வெகுவா யடிப்பினும்
பிரியே னு னைவிடுத் தகலேனே
சிறுவா யுடன்பெரு விரிவார் சிறகுறு
சிகிவா கனமிசை வருவோனே
செகமே பதறிட மிகவே குரலிடுஞ்
சிவலைச் சேவலங் கொடியோனே
திருவா வடுதுறை அறவோர் பணியினில்
திகழுந் திருவுரு மாமலையில்
திடமாய் நிலைபெறு வடிவே லவகுக
திறமா யுருட்டுக சிறுதேரே. (98)
[சிகி - மயில்; பணியினில் – திருப்பணியால்] 98
9) களமார்ந் துனையெதிர் வளமார், பதுமனை
கடிதே பிளந்திடும் வடிவேலா
கரியோ டொருகுறச் சிறுமி மருவிய
கமழ்சேர் தெரியலு முறுமார்பா
குளமார்ந் திடுவிழி வழியே சிவன்தரக்
குதித்தே வருசுடர்ப் பொறியோனே
குகனே உனையடுப் பவருந் துயருறல்
குணமோ உனக்கிது சரிதானோ
வளமார்ந் திடுமலை முகடு களிலுறை
வடிவார்ந் திடுமுயர் முருகோனே
வறியேன் புகலெது மறியே னிகலது
புரியா தருளரி மருகோனே
உளமார்ந் துனைப்புகழ் வளவா வடுதுறைக்
குரிய திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லக்குக்
உருட்டி யருளுக சிறுதேரே. (99)
(களம் - போர்க்களம், கரி - யானை தெய்வானை),
தெரியல் - மாலை, குளம் - நெற்றி, வளம் ஆவடுதுறைக்குரிய ] 99
10) மழையார்ந் துலகினில் வளமார்ந் திடத்தமிழ்
மறையோங் கிடப்புக ழோங்கிடவே
மனித ரனைவருஞ் சமமே யெனுமொரு
மகிமை யுணர்ந்திகல் மாறிடவே
நுழையார்த் திடுகலை பலவு முயர்ந்திட
நுவல்கள் வியும்புவி நிறைந்திடவே
நிலமீ தரசுகள் பகையே மறந்துநல்
லுறவோ டுயர்பணி புரிந்திடவே
விழையார்ந் துளமொடு நலிவார்க் கிரங்கிடும்
விநயர் நலமுடன் வாழ்த்திடவே
விளைவே நிறைந்திட வறுமை மறைந்திட
விமலர் புகலுரை பயன்பெறவே
உழையார்ந் திடுகுற இளமா தணைபவ
உயர்செய் திருவுரு மாமலையில்
உவப்பாய் நிலைபெறு தவப்பா லக்குக
உருட்டி யருளுக சிறுதேரே. (100)
[இகல் - மாறுபாடு, நுழையார்ந்த நுட்பமார்ந்த, விழையார்ந்து - விருப்பம் நிறைந்து, விநயர் - ஒழுக்கமுடையோர், உழை- மான்] 100
(நூல் முற்றும்)
-------------------------------------------------
(அறுசீராசிரிய விருத்தம்)
துகளறுசீர் தண்குறுக்குத் துறைவாழுங்
குமரனெனுஞ் சுடர்வே லன்மேல்
கழறுமெய்க் காதலினா லிப்பிள்ளைத்
தமிழ்தனையே இயம்பி னான்நற்
புகழுறுசீர் திருநெல்லைப் பொற்பதிவாழ்
போதமிலாப் புலவ னிந்நூல்
திகழுறுமென் றெண்ணமுடன் சிவதாசன்
ஆறுமுகன் தெரிந்த வாறே.
(சுபம்)
----------------------
இந்நூலாசிரியர் ஆக்கிவைத்திருக்கும் அச்சேறவேண்டிய கவிதை நூல்கள்
1. திருவுருமாலை கலம்பகம்
2. குறுக்குத்துறை குறவஞ்சி
3. குறுக்குத்துறை கொச்சகக்கலிப்பா
4. திருவுருமாமலை பதிற்றுப்பத்தந்தாதி
5. திருவுருமாமலை கலித்துறையந்தாதி
6. திருமுருகன் திருநூறு
7. திருவுருமாமலை சிலேடை வெண்பா
8. திருவுருமாமலை யிருபது
9. பொன்னூசல் (திருவுருமாமலை)
10. பொற்சுரும்பு (திருவுருமாமலை)
11. திருச்சந்தம்
12. வேய் நாதர் சதகம்
13. கழைமுத்தர்கலி வெண்பா
14. காந்திமதியம்மை இரட்டைமணிமாலை
15. கண நாதன் கலிவெண்பா
16. பண நாதன் நான்மணிமாலை
17. வள்ளுவர் பிள்ளைத்தமிழ்
18. வேணியூர் வணிகன் (Merchant of Venice)
19: ஆட்டனத்தி வெண்பா
20. இசைப்பாடல் இருநூறு
21. கவிதைக் கதை (30 கதைகள்)
22. பதிகங்கள் ஒருசில
23. தனிப்பாடல்கள் (சுமார் 300)
24. மஞ்சள்விடு தூது (மனைவி மீது)
25. கையறம் (மனைவி மீது)
26. பல சித்ர கவிகள்
உமா அச்சகம், திருநெல்வேலி-6
--------------------------------------------------------------------
This file was last updated on 07 Jan 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)