pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு -19
அத்திகிரி யந்தாதி

attakiri antAti
of paLLikoNTAn piLLai
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு :19
அத்திகிரி யந்தாதி

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய ஸ்ரீமாந் - கச்சிடக்கடாம்பி -
இராமா நுஜசார்யஸ்வாமிகள் திருவடி சம்பந்தியும்,
எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய ப்ரபந்த வித்வான்
கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது ம-ள-ள-ஸ்ரீ அ. இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்த வித்வான் - காஞ்சீபுரம் ஸ்ரீமா ந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு, திருமணம் - செல்வகேசவராய முதலியார் அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சிக் கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 வருடம், ஆகஸ்ட் மாதம்
Registered Copyright
------------
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
அத்திகிரி யந்தாதி.

காப்பு.

அத்திகிரிவா ழருளாளன்றாளிணையிற்
பத்தியுடனந்தாதிப் பாமாலை
நத்தியிடச்செங்கமலவாவி சூழ் தென்குருகை
வந்தமுனி புங்கவன்றாணெஞ்சமே போற்று.

நூல்.

மணிபூத்தமாசுணச்சூட்டொளிர்நேமிவலயமுள்ளோர்
பணிபூத்தபாதலத்தோர் பவனத்துறை பண்ணவர்கள்
திணிபூத்ததத்தம் சிந்தைவைத்தேத்துஞ்சிறப்பினவாம்
அணிபூத்தவத்திகிரியருளாளனடியிணையே. (1)

இணைக்கயனேர்விழியிந்துவை நேரு மெயில் வதநம்
பிணைக்கய நேர்நடைப்பெண்ணாசை நீத்துப் பிறங்கு நின்றாட்
டுணைக்கயத்தோயசந்துன்னித்துதிக்குஞ்சுகமருள்வாய்
பணைக்கப்பட்டப்பகட்டுப்பருப்பதப்பண்ணவனே. (2)

பண்ணவப் பாடல்கள் பாடிப்பரவநின் பாதமலர்
எண்ணவப் பாதிகொண்டேத்திநின் பூசையியற்றவென்றும்
ஒண்ணவப்பாலமணியணியாடையுகந்தணிந்து
மண்ணவப் பாவருள் செய்வாரணமலைவானவனே. (3)

வானவர்வாழ்வுறவாரிகடைந்து மருந்தளித்தாய்
தானவர் சாய்வுறச்சக்கரமேந்தினை சாதுசனம்
ஆனவராரணம் வாழ்வருளினையைம்பொறியாங்
கானவர் கெளவைகடிந்தெனையாள்கரிக்கல்லகனே. (4)

கல்லகந்தன்னைக்கரைத்து நின்காற்றுணைக்காதறந்தென்
வல்லகந்தன்னை வரைந்து மெய்ஞ்ஞான வழிநடத்தி
எல்லகந்தன்னிலியக்கியெஞ்ஞான்றுநல்லின்பமய
நல்லகந்தன்னில்வைத்தாணாகமாமலை நாயகனே. (5)

நாயகநன்றுநன்றாநள்ளிரவினயந்துதுயில்
பேயகம் பீடுடைத்தாம்பேதையர்களிற்பேதையென்றன்
றீயகநோக்கினதனைத்திருத்தி நின்சேவடியாந்
தாயகநின்று தரிக்கச்செய்தந்தித்தரணியானே . (6)

தரணியலைக்குஞ்சல நிதிநின்றுந்தணந்தெடுப்பான்
அரணியகேழலவதாரஞ் செய்தவமலவென்றன்
முரணியவல்வினைமோசனித்தாளுதிமுப்பொழிற்குஞ்
சரணியனான தலைவாதந்தாவளத்தாவரனே .. (7)

தாவரசங்கமச் சட்டகதாமரைத்தாமமுறை
மாவரசங்கரன்வாழ்வலப்பாகவரத வெஃக
மாவரசங்கவண்கச்சிநம்பிக்கருள்வார்த்தைகளைப்
பூவரசங்கதமென்பரென்னே யவர்புள்ளுவமே. (8)

புள்ளுவர்நின்னைப்புறங்கூறிப்புந்தி புழுங்கியென்றும்
எள்ளுவரென்னேயிபமலைவாழிமையோர்க்கிறைவா
உள்ளுவரானந்தக்கண்ணீருகுப்பருகந்தெழுந்து
துள்ளுவர்பாடு வராடுவருண்மைச்சுபாவத்தரே. (9)

சுபாவத்ததும் பிச்சுரும்ப நற்றொண்டர்க்கருள்சுரக்குஞ்
சுபாவத்தவென்று துதிப்போர்க்கருளுஞ்சுகப்பரம்
கபாவத்த நன்னில நச்சுக்கண்ணாரியர் நச்சுமயல்
அபாவத்தனாகவடியேற்கருளோரருமறையே. (10)

அருமறையாய்ந்தாய்ந்தளக்கவொண்ணாதவரு நிலைய
குருமறைகொண்டறவோர் தொழுங் குஞ்சரக்குன்றவென்றன்
உருமறைமாயையுருகம்வினைகளொழிக்க நின்றாள்
திருமறை புக்கனன்றேர் கிலனின்றன்றிருவுளமே. (11)

திருமாமலருந்திச்செல்வன் செய்யாகஞ் சிறக்க வந்த
பெருமாமலர்மகள் பேரொளிமாமணிப் பெட்டகமாம்
மருமாமலர்தலை மத்தகமாதங்கமாதிரவென்
கருமா மலங்கழித்தென்று மெற்காக்குங்கடனினக்கே. (12)

நினக்கேதமிய னிரந்தரத் தொண்டுநியதி செய்கென்
மனக்கேதமாறிநின் மாணடி சேர்ந்துய்யும் வாழ்வருள்வாய்
உனக்கேதமொன்று முன்னாருளமேயுகப்பாயுவண
வனக்கேதனாவரதாவைய மாளிகை மாணிக்கமே. (13)

மாணிக்கநன்மணிமாமோலிமத்தகமன்வரதா
ஆணிக்கநகாம்பரவாடிற்றுப்புரவாக்கனந்தக்
கேணிக்கநவிரதாவடியேன்வினைக்கேதமெல்லாம்
நாணிக்கநருசிபோன் மறைந்தோட நயந்தருளே. (14)

நயந்தருந்திற்செகுப்பான் கோவிகையினடித்துவந்து
குயந்தருபேய்மகள்குன்றவவளுயிர் கொண்டமைந்தா
வியந்தருமாமறை வித்தகர் போற்றிடும் வேழவெற்பா
புயந்தருளெற்குன்பதபங்கயப்பெரும்பாக்கியமே. (15)

பெரும்பாக்கியமொன்றும் பேணலன்பேணனின்பேரடிக்கே
அரும்பாக்கிளத்திய ணிந்தத்தியத்திரியத்தவென்னைத்
துரும்பாக்கிருளைத் தொலைத்துத் தொலையாச்சுகத்தமுத்தி
வரும்பாக்கின்னே நின்னைவாழ்த்திவணங்கும் வரம் பெறவே.(16)

வரம்பற்றபேரின்பவாரிதியே வரமாமறையின்
சிரம் பற்றிய நின்றிருமா மலர்நிகர் சேவடியே
அரம்பற்றராவவென்றேயடைந்தேனென்னையாட் படுப்பான்
நிரம்பற்றமென்றுரை நீண்மத்தமாமலை நின்மலனே. (17)

நின்மலநித்தநிராமய நீர்சந்த நீடுநில
வின்மலயத்தென்றலிற் பிறர்க்கேயென்று மின்ப நல்கும்
மின்மலர் புண்ணியகோடி விமானத்தவேழவெற்ப
பன்மலர்கொண்டுநின்பாதம் பரவப்பணித்தருளே. (18)

பணிபதி நாமங்கொள்பல்வல பாவனப்பல்பெயர
மணிபதிமாணிழைப்பெண்மைந்தனாகவும் வார்த்தை சொல்லாக்
குணிபதி கோகிலப் பேர்கூறவுமுன்குறித்தவவென்
பிணிபதிவிட்டுப்பெயரச்செய்வேழப்பிறங்கலனே. (19)

பிறங்கன்மயநின் பெருமாயையானிதம் பெட்டியற்றும்
மறங்கன்மமாதிய மாற்றிநின் மாண்புகழ்மாமருந்தின்
றிறங்கன்ன மூலமபுகு வித்தென்சனமச் சிறுமைகட்டாள்
கறங்கன்னவநிறத்தாய்களபாசலக்காகுத்தனே. (20)

காகுத்தமன்னவகாசினியா சினிகாலளந்த
வா குத்தமவா மனவாரணாசலவஞ்சன் விட்ட
சோத்தமனியப்பூண்முலையுண்டவசோறியென்றுன்சே
குத்தமமயமாயாவிலாசத்தின் றெட்பறுமே. (21)

தெட்புறச்செய்திமுத்தத்துவஞானமென்சிந்தைதனில்
நட்புறச்செய்தியென்னெஞ்சைநின்னன்பர்கணன்னடையிற்
கொட்புறச் செய்தியெனை விட்டென்பாவக்குவால்களெலாம்
விட்புறச் செய்தியஞ்ஞானத்தை வேதண்டவேதண்ட னே. (22)

வேதண்டமேந்தியை வெஃகஃகமேந்தியை விண்ணவர்க்காக்
கோதண்டமேந்தியைக்கும் பக்கராசலக்குன்றினனை
மூதண்ட மேந்தியை முன் மனனேயர்ச்சிர முதல
மாதண்ட மேந்திநமைவைப்பன்வைகுந்தவானகத்தே. (23)

வானகத்தேவரும் வையகத்தேவரும் வாழ்த்துலக
போனகத்தேவனைப்போதகப்பூ தரப்புண்ணியனைக்
கானகத்தேவரு மொவ்வாதநாமுளமே கணக்கில்
ஊனகத்தேவரு மூறொழிப்பானென்று முன்னுதியே. (24)

உன்னுதியென்னுளமேயும்பலோங்கலொளிர்முதலைப்
பன்னுதியப்பரன்பாவனப்பல் பெயர்பன் னுதியேற்
கொன்னுதிவேல் விழிக்கோதையர் குக்கியென் கும்பிவந்து
பின்னுதியாமலருள் வனந்தாமப்பெரும்பதமே. (25)

பெரும்பக்கத்துப்பிறவிப்பிணிபெயர்ப்பான் பெரியர்
விரும்பதகத்தின் மிளிர்வேழவே தண்டவிண்ணதியைத்
தரும்பதகத்தசரமதசையிற்றமியன் முன்னர்
அரும்பதகத்தின் மிசைவந்தருளுதியஞ்சலென்றே. (26)

என்றூழ்த்திகிரியிருப்பவனில்லமிருநிலம்பொன்
துன்றூழ்த்துணை நசைத்தூரைத் துடைப்பவன்றொண்டர்கட்குக்
கன்றூழ்த்திரங்குங்கறவைகடுப்பவன்காத னெஞ்சே
ஒன்றூழ்த்தொகையொழிந்தோருன்னுவாமலையுச்சியனே. (27)

உச்சிட்டமூறிகழ் செந்நீருவர் நீரொழுகுகுழிக்
கச்சிட்டகொங்கையங்காந்தையர்காதல்கழிவதென்றோ
மச்சிட்டமாளிகைவண்கச்சியூர்வையமாளிகைவாழ்
மெய்ச்சிட்டர் போற்றிடும் வேதாந்தமேவி விளங்கொளியே. (28)

ஒளியுருவானையுணர்வுருவானையுலகளந்த
நளியுருவானை நன்ஞானியருள்ள நளினமகிழ்
களியுருவானைக்கறையடிக்கல்லக்கண்ணுறையும்
அளியுருவானையல ரெட்டி னென்றுமருச்சி நெஞ்சே. (29)

அருச்சித்தயனத்தியாசானனந்தனகவகத்தை
வருச்சித்தருள் பெறும் வண்ணஞ் செய்கச்சிவரதவரன்
கருச்சித்திரகுத்தன் காணுங்கணக்கைக்கடந்து நின்றன்
உருச்சித்தம் வைத்துத் தொழச் செய்தடியனையுய்யச் செய்யே. (30)

உய் விரதங்களிலூன்றாதவரையுமுய்யும் வண்ணங்
கய்விரதங்கொண்டுகாத்தியென்போரையுங்காக்கவெண்ணி
மெய்விரதப்புவிமேவிய வேழவெற்பாவடியேன்
செய்விரதந்தனைச் செப்புதிநன்முத்தி சித்திக்கவே . (31)

சித்திக்குஞ் செல்வங்கள் யாவைக்குமெண்வகைச்
சித்திகட்கும் பத்திக்குமண்டப்படைப்பாதிகட்கும்பழிப்பிலதா
முத்திக்கு மூலமெனவே முதனூன்மொழிந்திடுமால்
எத்திக்கு மேத்தியிறைஞ்சுமிபமலை யேந்தலையே. (32)

ஏந்தலை நந்தலை யெண்ணிவெற்பனிணையடியை
மாந்தலைமற்றவன் மாணிசைத்தேன்செவிவாய்மடுத்துப்
போந்தலை புண்ணிய பாவப்பிறவிப்புணரிதனை
நீந்தலையாயினெஞ்சேயெங்ஙன்முத்தி நிலை வருமே. (33)

முத்திநகரத்துண் முக்கியமாயது மொய்யறங்கள்
சித்திநகரத்துட்சீரியதாயதுஞ் செய்யமனச் சுத்திநகரத்துட்
சுத்தியதாயதுந்தொண்டர் தொழும்
அத்திகவருளாளன்றிருக்கச்சியா நகரே.(34 )

ஆனகந்தோறுமமர்ந்தானுமண்டர்களந்தணர்க்காக்
கானகந்தோறுங்கலந்தானுங்கண்பயிர்க்காரறல்போல்
ஊனகந்தோறுமுலவுமுயிர்க்குயிராயவனும்
வானகந்தோயுமதிட்டிருக்கச்சிநம் மாதவனே. (35)

மாதவன்வாமனன் வைகுந்தன்வண்மகரக்குழைசேர்
காதவன்கண்ணன்கருமணிவண்ணன்களிக்கமலப்
போதவன் வேள்வியிற் போந்தவனம்மயற்புல்லிருட்கோர்
ஆதவன்கச்சியருளாளன்பாதமடைதிநெஞ்சே. (36)

நெஞ்சகமே நீ நிரந்தரமோர் நிலை நின்றுருகி
வஞ்சகமேவிய மன்னவன் பாலைவர்வாழவெண்ணி
அஞ்சகம் வேண்டியவப்பனையத்தியசலனை நம்
அஞ்சகம் போக்கியருள்வானடைதியடைக்கலமே. (37)

அடைக்கலமாகவடைவோர்தமையளிப்பான்கரத்தைம்
படைக்கலமேந்திப்பகட்டுப்பறம்புறைபண்ணவனே
கடைக்கலமார்பத்தகாலன்றமர்கள்கடுத்தொறுக்குங்
கடைக்கலமென்னைக்களிப்புடன்காக்குங்கடனினதே. (38)

காக்குங்கடன்மைகரக்குங்கடன்மைகரந்தது போல்
ஆக்குங்கடன் மைய பயம் புகுந்தவரல்லலெல்லாம்
நீக்குங்கடன்மைநெகிழ் நெஞ்சத்தன் பர்தநீள்பிறவி
போக்குங்கடன்மைகள் பூண்டோன் கரிகிரிப்புண்ணியனே. (39)

புண்ணிய பாவங்கள் பொன்னயவல்லிகள் போல்வனவாம்
நண்ணியவன்னவை நீககிநின்பாதநளினமுளம்
எண்ணியவண்ண மெஞ்ஞான்றுமிருப்பானிரங்கிநனித்
தண்ணியவென்றனைத்தாங்குதிதந்தித்தரணியானே . (40)

தந்தித்தரணியதாமரைமாது தயங்குரத்த
கந்தித்தரணிக்கனலபோல வெங்குங்கரந்தவப்ப
வந்தித்தரணிவருந்தாதடியனைவைகுந்தத்தே
உந்தித் தரணிவழியுய்த்துவைக்கவுகந்தருளே. (41)

உகந்தருவானவுயிர்க்குயிராகியுறைபவனும்
இகந்தருவானும் பரந்தருவானுமியைந்தெணநல்
அகந்தருவானுமழியாத பேரின்பமான முத்திச்
சுகந்தருவானுமெழிற்றும் பிமாமலைத்தூயவனே. (42)

தூயவன்றுச்சவனற்காப்புவிவிண்டுணையடியாற்
றாயவன்றாமோதரன்றனைச்சாராத்தருக்கினர்க்குச்
சேயவன் சீரியர் சிந்தையன் செய்யவள் சேருரத்தன்
மாயவன்மாதிரமாதிரன்றாள் சேர்மடமனனே. (43)

மடங்கலைமண்டொழுமாதிரமாதிரமாலை நர
மடங்கலை மாயனை வண்டுவராபதிமன்னவனை
மடங்கலைமானுமும்மம்மரைமாறிவருபிறப்பாம்
மடங்கலைமாய்க்கவென்னெஞ்சேவழுததி வணங்குதியே. (44)

வணங்குதிவஞ்சரைவைணவர்தம்மைவணங்கவென்றாற்
பிணங்குதிமுன்செய் வினைப்பயனாம் பெரும் பீழைக்கஞ்சி
உணங்கு கியுற்றின்றுவாமலையான்னடியுன்னிக்க
இணங் குதியாயி னெஞ்சேயிலலையில்லையினிப்பிறப்பே. (45)

பிறவிக்கு மூலம் பிரகிருதிக் குணப்பேரிணைப்பு
பிறவிக்கு மோசனமக்குணமோசனம் பேசி வற்றை
மறவிக்கு காரணமாக்காதென்மாமனனேமகிழ்ந்து
துறவிக்குழாந் தொழுந்தும் பிச்சயிலறகுத் தொண்டியற்றே. (46)

தொண்டுவழித் தொக்குத் தோன்றி மறைவதச்சூதறித்து
தொண்டுவழி நின்ற தொல்லாசிரியர்கஞ் சொற்படியே
விண்டுவழி மத வேதண்ட வேதண்ட வேதியனைக்
கண்டு வழிபடினெஞ்சேகடுவினைக்கட்டறு மே. (47)

கட்டிடலாங் கடுங்கால் போற்றிரிந்து கறங்கு நெஞ்சைச்
சுட்டிடலாஞ் சித்ர தத்தன்கணக்குச் சுருளையெல்லாம்
அட்டிடலாமைம் பொறியடையாரையகப்பிறவி
தட்டிடலாந்தந்தித்தாவரன்றன்னருள் சார்ந்திடினே. (48)

அருள்வாய்ந்த நெஞ்சத்தறவோருமாரணத்தக்க முறை
பொருள்வாய்ந்த புந்திப்புனிதரும் போற்றிப்புகழ்ந்து நிற்குந்
தெருள்வாய்ந்த சிந்துரச் செஞ்சிலம்பார்ந்த திவாகரவென்
இருள்வாய்ந்த நெஞ்சையியக்கிநின்றாட்டொண்டிருத்துதியே. (49)

இருத்து தியெற்றைக்குமென்னை நின்றொண்டரிருங்குழுவிற்
பொருத்துதியென்புந்தியையவரேவல் புரிந்து நிற்கத்
திருத்துதி செய்தவர் சீராமமுதென் செவியின்மடுத்
தருத்துதியாத்திகிரியாருளாளவகமகிழ்ந்தே. (50)

மகிழ்மாலை மார்பன்றிருவாய் மலர்ந்த மறைத்தமிழ்க்கே ,
மகிழ்மாலைவாரணமாமலை மாலைமடவியர்ககே –
நெகிழ்மாலை கொண்ட நினைத்தன்னிகரற்ற நீர்மையெண்ணி
நெகிழ்மாலையையா நிகழ்த்து வித்தானை நினைதி நெஞ்சே. (51)

நினைதற்கு நீயுண்டு நெஞ்சகமே நில நீர்மலர்கள்
வனைதற்குக்கையுண்டுவாழ்த்தற்கு நாவுண்டுவண்பொருள்கள்
புனை தற்கு முண்டுபுரத்தற்கிபமலைப்புண்ணியனுண்
டினைதற்குக்காரணமென்னீயி ருவென்று மேமமுற்றே. (52)

ஏமக்கலிங்கனை யென்றூழ்த்திகிரியிருப்பவனை
வாமக்கலிகன்றிவாழ்த்துடைவண்கச்சிவாழ்பவனை
வீமக்கலிவயமாகாதுநெஞ்சே விரும்புதியேற்
பாமக்கலிகடற்பார்வரு நம்பவப்பற்றறுமே. (53)

பவப் பற்றுப்பாற்றுவன்பார்ப்பொருட்கூட்டத்தின்பாங்
ருவர்ப் புவப்பற்று நிற்குமுறுதியுநல்குவனூன்றியென்றுந்
தவப்பற்றுத்தாபதர் சார்ந்திடுந்தந்தித்தரணியன்றாள்
தவப்பற்றுக்கோ டெனச்சாரநெஞ்சே நீதலைப்படினே (54)

தலைப்பட்ட முத்தத்துவஞானமுஞ் செந்தமிழ்மறையாங்
கலைப்பட்டவைம் பொருட்காட்சியுங்கைப்படுங்காத னெஞ்சே
நிலைப்பட்டதான நிகமாந்தமேத்துங்கைநீண்டதும்பி
மலைப்பட்ட மாதவன் மாண்டிசோதிமறப்பறவே. (55)

மறப்பறுமாதங்கமாமலையான்கழன்மன்னுதியேற்
பிறப்பறும் பேசவொண்ணாப்பீழைத்தாகும் பெரு நரகின்
விறப்பறும் வேதனை செய்வான்டுவன்விடும் படர்தஞ்
சிறப்பறுஞ் சீரியசித்தியுஞ்சித்திக்குந்திண்ண நெஞ்சே. (56)

திண்ணங்கடைப்பிடிநெஞ்சே திருக்கச்சிச் சீர்நகரில்
வண்ணங்கருமுகில்போல் வையமாளிகைவாழ்பவனை
மண்ணங்கனைமலர்மாதுமணாளனைவாய்ந்து சுட்ட
சுண்ணங்கடையனல்போற்சுடுந்துன்பந் துடைத்தியென்றே. (57)

துடைக்குதி தொல்லுயிர் தொக்குறையண்டத் தொகுதிகளைப்
படைக்கு திபாலனஞ் செய்தியிலீலை யிற்பல்வகை மீன்
மடைக்குதிகொள்ளும் வயற்கச்சிமாநகர்வாழ்வரதா
நடைக்கு திர்நேருடல்போனுண்ணுடல்விடு நா ணுவலே. (58)

நாணுவல் சான்றென நீ நிற்க நான் செய்தவைகட்கெல்லாம்
பேணுவல்யான்செய்பிழை பொறுப்பாயென்றிப்பிண்டம் விடு
நாணுவல்வாயென்று நாடோறு நாடுவனாகளிகள்
பாணுவல்சோலைப்பகட்டோங்கற்பஞ்சவர்பக்கத்தனே . (59)

பக்கப்பதங்கப்பதியூர்பவனைப்பரிதி கொண்டு
பொக்கப்பதங்கற்புதைத்தானைப் பூட்கைப் பொருப்பின்னை
அக்கப்பதங்கா தியிலைவர்போலழியாதமுதச்
சொக்கப்பதம் பெறுவான்றுடிதோறுந்தொழுதிநெஞ்சே. (60)

தொழுகிநெஞசேதும் பித்தூமலையானை நந்தொக்கவனிப்
புழுதிநெடுகப்புணரப்புரண்டு புரண்டலறி
அழுதிநெடித்தக்க மம்புதம் வாரவவசமுற்றே எழுதி
நெகிழ்தியிருத்தியிவ்வாறென்றுமிடுபட்டே. (61)

ஈடுபட்டுத் தும்பியேந்த லெம்மானடியேத்துதியேற்
காடுபட்டுககிடக்குந் நினைத்தன்னருட்காறலத்தாற்
பாடுபட்டுப்பண்படுத்திப்பத்திப் பயிர்பல்கச்செய்வன்
பீடு பட்டென்றும் பெறாப்பேறும் பெற்றுய்தும் பேதை நெஞ்சே. (62)

பேதைகட்கெல்லாம் பெரும் பேதையாகிய பெற்றியானை
மேதைகட்கெல்லாமிதமேதைமேவவிழைந்தருளிப்
பாதைகட்கெல்லாம்பரமானவர்ச்சிரப்பாதையுய்ப்பன்
தாதைகட்கெல்லாந்தனித்தாதைதந்தித்தராதரனே. (63)

தராதரமார்பத்தமனியற் சாய்த்தவசாரலகை
உராதரமுண்டவவும்பனல் லோங்கலொளிர் முதல்வ
நிராதரநின்மல நீசனையிந்நிலநீள் பொருட்கண்
நிராதரனாககி நின்னித்ய விபூதிநிலையருளே. (64)

நிலையாதகாய நிலைத்ததென்றெண்ணிநெடும்பொழுதுந்
தொலையாத பாவத்தொகுதி தொகுத்துத் துயருறுவேன்
உலையாதகீர்த்தியுவணப்புள் ளூர்தியவோங்குமும்பன்
மலையாதவநின்றன் மாயாமயக்கைமறுத்தருளே. (65)

மறுத்தருளம்புலமாற்றலர் மாட்டுறும் வன்மையெலாம்
அறுத்தருளென்றனருவினை கன்னையதற்கடியைச்
செறுத்தருள் யான்றெரிந்துந் தெரியாமலுஞ்செய்பிழையைப்
பொறுத்தருள் பூட்கைப் பொருப்பிற்பொலியும் புராதனனே. (66)

புராதனமாமறைபோற்றும் புராண புருட பற்ப
வராதனமாம்கள்வாழ்மணிமார்பவனசமலர்க்
கராதனதன் றொழுங்கச்சியவெற் குக்கடைக்கணருள்
தராதனவூர்திதன்றந்தாய் தவிர்தற்ரும மன்றே. (67 )

தருமக்களஞ்சியமானாய் கந்தாவளத்தாம கிதி
தருமக்களஞ் சச்சரமாரிபெய் கிடுஞ்சார்ங்கவில்லோய்
பெருமக்களஞ்சலி வந்தனை பெற்றளபேர்க்கவொண்ணாக்
கருமக்களஞ்சியன்காண்களை கண்ணின் ஈழற்றுணையே. (68)

துணையாவது மென்று நெஞ்சே நம்முச் சியிற் சூடுமலர்ப்
பிணையாவதும்பிமவிக் கடறாண்டுவிக்கும் பெருமைப்
புணையாவதும்புலவோர் பொருளாவதும் போற்றெடுப்பு
மிணையாவதுமில்லிபவிறும்பூகனிருங் கழலே. (69)

இருங்கழலெம்பரதாழ்வான் பெற்றுய்ய விசைந்தகழல்
மருங்கழன்மின்னேரகலிகையுத்தரைமைந்தனுருத்
தருங்கழறாரணிதாவியதண் கழறான வரை
ஒருங்கழலாழிப்படையோங்கலோங்கலனொண்கழலே. (70)

ஒண்மணிவண்ணனுபயவிபூதியுயிர்கட்கெல்லாங்
கண்மணிபோன்றநங்கண்ணன்கலசக் கடற் பிறந்த
பெண்மணி நாயகன் பேசுமொராயிரம்பேருடையான்
திண்மணிக்கோடுடைத்தும் பிச்சிலம்பன்றெரிதிநெஞ்சே. (71)

தெரிமாவெனவந்துதேசிகற்செற்ற நந்தேசிகன் வெள்
ளரிமாவெனவந்தகலிடந்தாங்கியவப்பனினிப்
பரிமாவென வந்து பாரளிப்பானற்படி வர்தொழுங்
கரிமாமலையனெஞ்சேயெவ்வுலகுக்குங்காரணனே. (72 )

காரணனண்டகணங்கட்கவற்றையெல்லாங்கடைநாள்
பாரணன்பாலனெனப்பாலிப்பத்திரம் பள்ளிகொள்வோன்
பூரணன் புண்ணியன் பூட்கைப் பொருப்பன் பொருவியோர்
நாரணன்றாணம்புளமேபவமொழி நன்மருந்தே . (73)

மருந்தானவன்பவநோய்க்கு விதுரன்றன்மாமனைக்கு
விருந்தானவன்விறன்மாயா நிசிக்கோர்விரோசனன் போர்
பொருந்தானவவைரிபொல்லாப்புலககடுவைப்பொடிக்கும்
மருந்தானவன்மத்தமாமலைவானவர்மன்னவனே. (74)

வானவர்மன்னவன் வானரமன்னவன் வாளரக்கர்
கானவர்மன்னவர்க்காக்கவென்றேவிற்கரமெடுத்து
மானவர்மன்னவனாகிய வீரன் மரபடியார்
ஆனவர்மன்னவருளத்தியத்திரியாண்டவனே. (75)

ஆண்டவமேயறுபானேழிச்சன்மத்தகன்றனவான்
மாண்டவநே கவரன்கற்பமும்மையின் மற்றுனக்காள்
பூண்டவனாயெம்மையிலுய்வன்காளியன் பொன்முடி மேற்
றாண்டவஞ் செய்தவதந்திமலைச்சக்கரதரனே. (76)

சக்கரன் சங்கன்றறிவாளன்றண்டனற்சார்ங்கனெற்றிச்
சக்கரன்வாழ்வலப்பாகன் சயந்தனஞ் சார்ந்த தனிச்
சக்கரன்றாமறைத்தவனெஞ்சேதவத்ததந்திச்
சக்கரன்றாடொழின்வற்றிடுநம்பவசாகரமே. (77)

பவசாகரத்திற்படிவோர்க்குப்பஃறியன்னாய்தருமக்
கவசாகரதூடணமுத்தலையரைக்காய்ந்தவநற்
றவசாகரா தொழுந்தந்தித்தராதரதார்க்கியப் பேர்த்
துவசாகரவட நீக்கியடியனைத்தொண்டு கொள்ளே. (78)

தொண்டு கொண்டேன்றும் பித்தொன்மலையான் பொற்றுணையடிக்க
விண்டுகொண்டே னென்வினை விலங்கன்னவன்வீறருளார்
தண்டுகொண்டேன்சமன் சாராமனற்பரந்தாமவழி
கண்டுகொண்டே னென்பிறவிக்கடலைக்கடந்தனனே (79)

கடலைக்கடப்பான்ணைகட்டுங்காகுத்தகட்டுளவப்
படலைக்கடவுட்பரூஉமணிமார்பபகட்டுவெற்ப
நடலைக்கடம்விடுநாளடி யேற்கு கின்னல்லருளாம்
முடலைக்கடவையினேற்றுதிமுத்திக்கொர்முட்டறவே.(80)

முட்டின்றி நாடொறுநின்கழற் றொண்டின் முயன்றிடவும்
பெட்டின்றி நின் பெயர் பேசவுமுக்குணப்பீழைதனில்
ஒட்டின்றிநிற்கவுமிவ்வுடல்வீழ் பொழுதுன்பதத்தைத்
தட்டின்றியெய்தவுந்தண்ணருள் செய்தந்தித்தாமத்தனே. (81)

தாமத்தனஞ்சயன்சாரதியானதலைவமணித்
தாமத்தசோதைதளைந்திட்டதாமோதரதமியேன்
தாமத்தளையறத்தண்ணருள்செய்திதந்தாவளப்பேர்த்
தாமத்தனிமுதலே நற்றராதரச்சத்திரனே. (82)

சத்திரவத்திரத்தாற்றானவரைத்தடிந்தவபொற்
பத்திரவத்திர பாண்டவதூதபதக்கு முத
மித்திரவத்திரமேதக்க வேதண்ட வெற்பவென்றன்
குத்திரவத்திரநெஞ்சை நின்றாணிற்கக்கூட்டுதியே. (83)

கூட்டுதிகூடாப் பொருளைச் சராசரக்கூட்டமெலாங்
காட்டுதிகட்கமலாசனன்கண்ணின்று காட்டவற்றை
நாட்டுதிதின்னுருவாய் நின்று நக்க பிரான் கணின்று
வீட்டுதிவேழவெற்பாநின் விழுச் சீர் விளம்பரிதே. (84)

விளங்கனிவீழ்த்திட வெய்யவற்சக்குணில் வீசியவா
களங்கனிவண்ணகளிற்றசலாகண்டுகட்கரும்பு
குளங்கனிபோல்பவகுற்றமெலாங் குடிகொண்ட வென்றன்
உளங்கனிந்துன்னடியுன்னியும் நாளென்றுரைத்தருளே. (85)

அருள் குடி கொண்டவம் போருகவம் பகவாரணத்தின்
பொருள் குடிகொண்ட நற்புந்தியர்போற்றிடும் பூட்கை வெற்ப
இருள் குடிகொண்ட வெளியே னுளத்துன்னிறைமை நிலைத்
தெருள் குடிகொண்டுதிகழ்ந்திடசசெய்திதிருவருளே . (86)

திருக்கச்சியிற்றிரியாமானமானத் திரியுமன்பர்
உருக்கச்சினகரவுள்ளத்துவந்துறையொள்ளொளியே
மருக்கச்சிளமுலைமானாரமயல்டிமாற்றலர்தம்
வருக்கச் சிறுமைவரைந்தாள்கரிகிரிவானவனே. (87)

வானவரம்பையர்வார்முலைப்போகமும் வையகத்துப்
பீனவரம்பைக்கவான் பெண்கள் போகமும் பெட்டொழுகும்
ஈனவரம்பையிகந்துநின் றாடொழுதேத்தி நிற்கும்
ஞானவரம்பைநயந்தருணாகநகத்திறைபே. (88 )

நகத்திறையான நன்னாகாசலத்துறைநாயகமுச்
சகத்திறையான்வசார்சட் சீவசரீரவவி
மகத்திறை பானவ மார்த்தாண்டன் மைந்தன்வரும்பொழுது
சுக்கத்திறைமீது கமலையுடன் வந்தெற்காத்தருளே. (89)

காத்திரந்கந்கனை நின்பணி செய்ய நிற்கண்டுணர
நேத்திரந் கந்தனை நின்னை நினைத்திட நெஞ்சுதக் காய்
சோத்கரந்தந்தனை நின்புகழ் கேட்கத்துக்கநன்னாத்
தோத்திரந்தந்தனை தும்பிச் சயிலச்சுராதிபனே. (90)

சுராசுரர்வேட்டசுதைநிகரா நற்சுதையனையாய்
முராசுரற்செற்றமுகுந்த கரிகிரிவாழ்முதல்வ
நராசுர யோனிகள் போனடத்தாதெனை நாளு நின்றாள்
பராசுரனல்கிப்பணிகொண்டெக்காலுமெற்பாவிப்பையே. (91)

பாலனத்தான் கடைக்கண்ணுண்டுவந்திடும்பல்லுலகப்
பாலனத்தானற்பகட்டுப்பருப்பதத்தான் பறக்கும்
பாலனத்தாற்பயந்தான்றவத்தேவகிப்பாவை பெற்ற
பாலனத்தானெஞ்சமே நமைக்காக்கும் பரத்தினனே. (92)

பரத்தினன்பன்னுமிகத்தினன்பங்கயப்பாவைதிகழ்
உரத்தினன் குஞ்சரவோங்கலனைம்படையுற்றொளிருங்
கரத்தினன்காஞ்சனக்காழகன் காமரக்கா மர்மறைச்
சிரத்தினனிச்சகச் சன்மாதிகாரணன்றேர் திநெஞ்சே. (93)

நெஞ்சகமே நீ நிதநங்கரிகிரிநின்மலன்றாள்
வஞ்சகமேயின்றி வாழ்த்தி வணங்குதியேனமது
விஞ்சகமேட்டைவிமோசனித்துத்தன் பொன்வீடுநல்கி
மஞ்சகமேவிய வானோர்குழாத்தொடும் வாழ்விப்பனே. (94)

வாழ்த்தல் வணங்கி வழிபடறன்பத வாரிசமே
ஊழ்த்தல்புரிவித்தொருவாமலூறு செய்யூழ்வினையைத்
தாழ்த்தல் செய்யாது தவிர்த்தினி மேற்சன்ம சாகரத்தில்
வீழ்ததல் செய்யானெஞ்சமே நம் புதிகரிவெற்பனையே. (95)

வெற்புக்கடங்கொண்ட வித்தக்கட்டான வன்வெஞ் செருக்கின்
வற்புக்கடந்தவராகன்கரிகிரிவாழ்வரதன்
கற்புக்கடல் கமலா நாயகனமைக்காத்தளிக்கும்
அற்புக்கடன்மை கொண்டோ னெஞ்சமேயீ சறிந்துகொள்ளே. (96)

அறிந்துகொண்டேன்சகச்சன்மாதிகாரணனானவனை
அறிந்துகொண்டேனுயிர்க்காதாரபூதனையவ்வணமே
அறிந்துகொண்டேனென்றனாகார மூன்றையுமையமின்றி
அறிந்து கொண்டேனத்திவெற்பனருளிவைக்காதியென்றே. (97)

ஆதியென்றாதியுமைம்பூதமுமைம் பொறிபுலனும்
ஆதியென்றும்முயிர்க்கந்தரியாமியுமாருயிரும்
ஆதிபென்றூழமுதாழியந்தாமத்தமர்பவனும்
ஆதியென்றும் மத்தியத்திரியாய் சொலும்யாவுமன்றே. (98)

அன்றென்பர் சில்லோர் நினைக்காரணப்பொருளாகுமது
நன்றென்றுமுள்ள பரமாணு நற்பிரதானமென்ப
தொன்றென்று சொற்றிடுஞ்சேதனரென்பதுதிக்கைமலைக்
குன்றென்றும் வாழ்ந்திடுங்கோ விந்தவீதென்ன கூத்துரையே. (99)

உரைக்கடங்காதுயர் சாம் பூந்தப் பொன்னுடையுடையாய்
வரைக்கடங்காதுயர்வண்புகழாய்மருண்மாமலையாய்
உரைக்கடங்கா துயருற்பவவாரியொழித்தெனையாள்
கரைக்கடங்காக்கருணைக்கடலேயென்றன்கண்மணியே. (100)

வாழிதிருக்கச்சிவாழி நம் வாரணவள்ளன்மலை
வாழிவரதனருளாளனென்னுநம்வானவர்கோன்
வாழி நந்தாய்பெருந்தேவி வன சநன் மாளிகையாள்
வாழிமறையவர்வாழியுபயமறைகளுமே. (101)

அருளாளன்கச்சியமரா திபன்றன்னடியிணைமேற்
பொருளார்ந்த நூறு சொல்லந்தாதிமாலை புனைந்தனனால்
அருளராந்தசித்தத்திராமாநுசாரியனங்கழல் சேர்
தெருளார்ந்தசீலனெதிரா சதாசன் சிறப்புறவே. (102)

அத்திகிரி யந்தாதிமுற்றிற்று.
------------

This file was last updated on 11 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)