pm logo

பள்ளிகொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு
சேடகிரி யந்தாதி

cETakiri antAti
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பள்ளிகொண்டான் பிள்ளை இயற்றிய பிரபந்தத் திரட்டு :
சேடகிரி யந்தாதி

Source:
ஸ்ரீமதுபயவேதாந்த ப்ரவர்த்தகராகிய
ஸ்ரீமாந் - கச்சிக்கடாம்பி – இராமாநுஜாசார்ய ஸ்வாமிகள்
திருவடி சம்பந்தியும், எதிராஜதாஸரென்னும் தாஸ்ய நாமியுமாகிய
ப்ரபந்ந வித்வான் கொ. பள்ளிகொண்டான் பிள்ளையவர்கள் இயற்றிய
பிரபந்தத் திரட்டு

இஃது -- ம-ள-ள- ஸ்ரீ அ- இரத்தினவேலு பிள்ளையவர்கள் முயற்சியால்
ப்ரபந்ந வித்வான் - காஞ்சீபுரம், ஸ்ரீமாந் - ராமஸ்வாமி நாயுடவர்களாற்
பார்வையிடப்பட்டு திருமணம் - செல்வகேசவராய முதலியார் M.A. அவர்களால்
சென்னபட்டணம், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
1899 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
Registered copyright.
----
ஸ்ரீ ஸ்ரீமதேராமாநுஜாய நம:
சேடகிரி யந்தாதி .

காப்பு.

செந்தாமரை மலராள் சோமார்பன் சேடகிரி
யந்தாமவண்ண லடியிணைமேல் –
அந்தாதிப் பாவினமாலையொன்று பாட
நெஞ்சேதென்குரு கூர் மேவினமாறன்றாள் விரும்பு.

நூல்.

திருமலையாய் திகழ்மாமணி செய்யவள் சேருரத்தாய்
பொருமலை யாழிப்புராணபுருட்புகல்புகுவோர்
கருமலை நன்மருந்தேகன்மம் வாட்டக்கவலுமென்றன்
பொருமலைப்போக்கிடப்பூப்பதெப்போது நின்பொங்கருளே. (1)

அருளேதிருவுருவானவவேங்கடத்தப்பமறைப்
பொருளே புருடோத்தமநாமதேயப்புராதனனே
இருளேயுமீரிரண்டாங்கதிதோறுமெடுக்குஞ்சன்ம
மருளேய்மடங்கன் மடங்கவருளருண்மாமருந்தே . (2)

மருந்தேயடியர்பிறவிப்பிணிக்குவடமலைவாழ்
பெருந்தேவதேவபிரமாண்டத்தோடு பிதாமகனைத்
தருந்தேமலருந்தித்தாமோதரதமியேனை யென்றும்
இருந்தே வருத்துமிருவினையுங்கெட வெண்ணுதியே. (3)

எண்கண்ட மொன்பதெனப்பாகுபாடுற்றிலங்கிடுமிம்
மண்கண்ட தெய்வநல்வான்கண்ட தெய்வம் வடமலையாய்
கண்கண்ட தெய்வநினையன்றியில்லையென் காயமதைப்
புண்கண்ட்டர்த்திடும்புன்கணிரித்தெற்புரந்தருளே. (4)

புரந்தரனாதியர் போற்றிப் புகழும்புயங்கமலைத்
துரந்தரமுற்றத்துறந்தோர்களுள்ளச்சுகாதனனே
நிரந்தரமென்னை நெருக்கும் பிணிகளை நீக்கிடவோர்
வரந்தரவேண்டுமெந்தாயலர் மேன்மங்கைமன்னவனே. (5)

மன்னவனற் றொண்டைமானுக்கருள் செய்வடமலையாய்
பொன்னவன் மார்பினைப்போழ்ந்தாயெவர்க்கும் புகலிடமா
முன்னவமாமறைதன்னை நின்னுந்திமுளைத்தவற்குச்
சொன்னவவென்பவத்துன்பைத்துடைக்கவொர்சூழ்ச்சி சொல்லே. (6)

சொற்பொருளாகிதெரிவித்து நின்னைத்துதித்திடச் செய்
தெற்பொருளாக்குமிரும்பையிறும்பவிருக்கினந்த
நற்பொருளே கவினான்மறை தேர்ந்த நல்லோருளம்வாழ்
சிற் பொருளேயென் சிறுமையையிக்கணந் தீர்த்தருளே. (7)

தீர்த்தங்கள் கோடிதினந்தினமாடினுஞ் செப்புமிட்டா
பூர்த்தங்கள் கோடி புரியினும்வீணம் புயங்கமலைத்
தீர்த்தன்றிருவடிதிண்ண நெஞ்சே நம்பிச்சேர்ந்திடினோர்
மூர்த்தந்தனின்மை மொய்த்த பிணிகள் முடிந்திடுமே. (8)

முடிந்திடுந் தேவர் முடியாததேவர்மொழி மனங்கள்
படிந்திடும் பாதனற்பாந்கட்பருப்பதன் பற்றலரைத்
தடிந்திடுஞ் சக்கரன் சாக்காடுசன்மத்தவற்றவே
கடிந்திடுவான்மனனே நீயவன் பெயர்கட்டுரையே. (9)

கட்டுரையாடைக்கதாதரகண்மலர்க்காப்புடைசூழ்
நெட்டுரைவேங்கடவாணவுடலையு நெஞ்சினையுந்
தொட்டுரை தொல்லைத்துயர்வினையின்னே துரப்பலென்றோர்
கட்டுரையெற்குக்கழறிக்கடைக்கட்கருணைசெய்யே. (10)

செய்யாளுறை திருமார்பமணிகடி கழனந்தம்
பையாளுரகப்பருப்பதத்தாய்நின்பதம்பணியுங்
கையாளெனுமெற்கவற்றுங்கையாறுகழலவருள்
செய்யாத்திறனென்றிருவாய் மலர்ந்ததைச் செப்புதியே. (11)

செப்பும் பவமும் வினையுமறிற்றுயர் தீருமெனின்
ஒப்பும் முயர்வுமிலாவுரகாசல வுண்மைகண்டோர்
ஒப்பும் முனதுகருணையுதிக்கினஃதோடலின்றித்
தப்புமவிரகுந்தலைப்படுமோவதைச் சாற்றுதியே. (12)

சாற்றுதியூது முலை மெழுகென்னத்தளர்ந்திடுமென்
ஓற்றுதியேற்றென்னுறுகணையுன்னியுளமிரங்கிக்
காற்றுதிதீயிற்கவற்றும் வினையைக்கழற்றியெற்காப்
பாற்றுதிவேங்கட வாணவென்சன்மமறும் பரிசே. (13)

பரியுங்குறளுங்கமடமுமீனமும் பன்றியுமாள்
அரியுந்திரிவிதராமனுங்கண்ணனுமாயவனே
விரியும் பெரும்புகழ் வேங்கட வெற்பவென்வெவ்வினையை
யெரியுங்கனலிட்ட தூசாக்கியாட்கொள்வெண்ணுதியே. (14)

எண்ணிலவானபவமெடுத்தெய்த்தவிவ்வேழைதனை
வெண்ணிலவென்ன விரியும் புகழ்த்திருவேங்கடவா
கண்ணிலவும்மணியே கழலாக்கன்மக்கட்டறுத்து
மண்ணிலவுந்தன்மைமாற்றியந்தாமத்தில்வைத்தருளே. (15)

வைத்தனை யென் வல்வினைப்பயன்றுய்த்து வருந்திடுவான்
நத்தனைபோல நயந்து குறும்பையறுத்த நம்பிப்
பத்தனையாண்ட பணிவெற்ப நின்னையென்பாவவலி
எத்தனையேனுமிரங்காதிருக்கவிசைவித்ததே. (16)

வித்தகவேங்கட வெற்பமிளிர்மணிவித்த முடி
மத்தகவென்றன்பவமாமடிக்கு மருந்துன்மனப்
புத்தகம் விட்டெங்குப் போயிற்றுநின்னிரும் பொங்கருளாஞ்
சத்தகத்தென்பாற்றவிர்ந்தது போலித்தராதலத்தே. (17)

தலத்தேவருந்துந்தமியனைக்காக்கத் தயையிலைகொல்
நிலத்தேவரும் பொன்னிலத்தேவருநித்தியவுலகக்
குலத்தேவருந்தொழுங்குண்டலிக்குன்றத்தகூர்ந்தபவ
மலத்தேவருத்திமயக்கிடுமாயைவலி துமித்தே. (18)

துமித்தனை துட்டரைச்சிட்டரைக்காத்தனை தொண்டர்பிழை
சமித்தனையென்று மென்றே சர்ப்பவெற்பநின்றாளடைந்தேன்
துமித்தனையன்புநின்றொன்மாயை செய்வித்த தோமையெல்லாங்
கமித்தனை செய்யினென்கன்மப்பிறவி கழன்றிடுமே. (19)

கழன்றொழியும் பண்டைக்கால வினையின்கணங்களெலாஞ்
சுழன்றொழியும் மவற்றாற்றொடர் துன்பத்தொழுதியெல்லாப்
உழன்றொழியாப்பவத்தென்மீதசுரருயிரையெல்லாம்
அழன்றொழியாழியனந்தாசல நின்னருள்வரினே . (20)

வரிவளையங்கைமடவார்கலவிமயக்குடனே
எரிவளைந்தென்னவிடர் செய்வினையையிரியரியுஞ்
சுரிவளையுந்தொண்டைமானுக்கருள்பணித்தொன்மலையாய்
அரிவளைக்கையலர் மேன்மங்கைவாழுரத்தச்சுதனே . (21)

அச்சுதவம்புய நங்கைமணாளவடியனைவை
வச்சுதனென்ன வருத்தும் வினையைநின் வான் கருணை
வைச்சு தனங்கொடுவாட்டிடுவாய்வரன்வானவர்கள்
அச்சுதன்மத்துறைவோன் போற்றும் வேங்கடத்தற்புதனே. (22)

அற்புதவேங்கடவாணதனுவெனயானெடுத்த
புற்புதர் போயினமானுடமாமிப்புரத்திலெனை
வற்புதணத்தின்வருத்திடும் வல்வினை வான்பகையைப்
புற்புதம் போலப் பொருக்கெனப்போகப்புரிந்தருளே. (23)

புரிந்த விவ்வண்டம் பொருந்தியவீரேழ்புவனமெலாம்
விரிந்த புகழென் வெண்ணிறமார்ந்த வியாளவெற்பா
தெரிந்துந்தெரியாமலுஞ்சிறியேன் செய்த தீவினைத்தாள்
அரிந்தெனைக்காத்தியருட்கடலாகுமரிந்தமனே. (24)

அரிந்தமயாவுமமைத்திட வல்லவவாய்ந்தனைத்துந்
தெரிந்தவசேடச்சிலம்புறை தேவர்கடேவநனி
பரிந்தமனத்துடனின் பாதம் பற்றிடும்பத்திதந்தென்
விரிந்த வினையின் விளைநோய்கள்வீய விதித்தருளே. (25)

விதித்த விதியின்படியடி யேன்கொள்விடக்குடலால்
உதித்தவுறுவல்களுண்டத்மையுமுளமிரங்கிச்
சதித்தவப் பெற்றிய சன்மந்தவிர்த்திசதுமறை தேர்
மதித்தவர் வாழ்த்திடுமாசுண வேந்தன்மலைக்கரசே. (26)

மலைமருந்தப்பிணிமாற்று மருத்துவவாழ்விடமா
மலைமருந்தானவமாமணி முத்தம் வரன்றிடும் பால்
அலை மருந்தாக்கியவப்பவென்னாமயமாம் பிறவி
குலைமருந்தொன்று கொடுக்கத்திருவுளங்கொண்டருளே. (27)

கொண்ட வியாதியின் கூட்டமெலாங்குடி கொண்டொறுக்கும்
பிண்ட விகற்பங்கள் பெற்றடியேன்படும் பீழைதரும்
சண்டவிதலை தவிர்த்தாள் சராசரஞ்சார்ந்த வண்டம்
உண்டவிடங்கவுரகாசலத்துறையுத்தமனே. (28 )

உத்தமனாகியுலகளந்தாயுரகோதிமம் வாழ்
சத்தமசாதுசன பாரிசாததகையடியார்
சுத்தமனத்துச் சுடரொளியே பவத்துன் பறநின்
அத்தமருந்தருள்வாயென் வினையையறத்துணித்தே. (29)

அறந்தலை நின்றவரேத்துமரவவடுக்கனின் றோய்
மறந்தலை நின்று நின்மாற்றமறந்துமதிமயங்கிப்
பிறந்தலைகின்றவடியேன்பிறவிப்பிணியைக் கட்டிப்
பறந்தலையுய்த்ததைப்பற்பப்படுத்திப் பறக்கடியே. (30 )

பறக்கும் பக்கீந்திரவூர்திபதாகைப்பணிமலையாய்
நிறக்குங்குமமுலை நித்தியை மார்ப நினைந்தருட்பால்
கறக்குங்கடவுட்கபிலையன்னாயென்கடும்பவநோய்
வறக்கும் வலியுடைவான் மருந்தொன்று வழங்கு தியே. (31)

வழங்கு திரைக்கடல்சூழ் வையத்தேவர்மறையொலியும்
முழங்குமருவி முழக்கும் விலங்கின் முழக்குமெங்குந்
தழங்குந்திருச்சக்கிரிச்சக்கரவென்றடித்த வினைக்
கிழங்கு கெடும்படிவீசுதிநின்றன் கிருபையெஃகே. (32 )

எஃகெனு நின்னருளாலென்ன வித்தையிடும்பையெல்லாம்
அஃகும்படிக்கோர் விளம்பமுமின்றியருள்புரிவாய்
அஃறிணையும் மதுவல்லாத்திணையும் முத முய்ப்பான்
பஃறலைப்பாப்புப்பருப்பதம் வாழ்கின்ற பண்ணவனே. (33)

பண்ணின்றவேதப்பழம் பொருளே பணிப்பாதவத்தின்
கண்ணின்றகற்பகக்காவேவினையைக் கடிந்த நல்லோர்
உண்ணின்றொளிருமொளியேயென்னூழ்வினையுந்தவந்தென்
புண்ணின்றுடற்றிடும்புன்கண்வினைகளைப் போக்கு தியே. (34)

போக்குதியென்னைப்புதைத்தநின் மாயை புரிமயக்கை
வீக்கு திவீட்டுதிவீயாவினையை விழைந்தருட்கண்
நோக்கு திஞான நன்னோக்கத்தினின்றனுகர்ச்சி பெறக்
காக்குதியென்னை வெண்காகோதரமலை காப்பவனே. (35)

காக்குந் தொழிலினைக்கைக் கொண்டுலகைக்கடைக்கணழித்
தாக்குந்தொழில்களரற்குமயற்குமளித்தவதேன்
றேக்கும் பொழிற்கட்செவிப்பூதரத்துறை செல்வவெனைத்
தாக்குந்தவாவினையின்னே தணக்கத்தயை புரியே. (36 )

புரிமுகச் சேதிமங்கொண்டுபுயங்க நற்பூதரம்வாழ்
கிரிமுகத்தேவகிடுகிடென்றண்டங்கிழியவந்த
அரிமுகத்தேவபரிமுகத்தேவவருள் பெருகிச்
சொரிமுகத்தேவவென்றொல் வினை நோயைத்தொலைத்தருளே. (37)

தொலையாத பாவத் தொகுதிகட்காகரன் சொற்றுடியும்
நிலையாத நெஞ்சினனாகிய நீசனெடும்பகலாய்
உலையாதநின்றனொருமாயையாலுலைந்தேனுரகச்
சிலையாதவாவென்றன் சென்மத்திமிரஞ் செகுத்தருளே. (38)

செகுத்திடுவான் செருச்செய்யிட பாசுரத்தியனுயிர்
உகுத்திடுவானொளிவட்ட முய்த்துக்கதியுய்த்தவனே
மிகுத்திடுவாதைதரும் வினை வீயும்விரகுதனை
வகுத்திடுவாய்வரன் போற்றும் வடமலை மாதவனே. (39)

மாதவத்தோர் தொழுதேத்தும் வடமலையாய் மதங்க
மாதவசத்தினனாய்த் தொழுநோய் கொண்மறையவனாம்
மாதவனுக்கருள் செய்தாய் நின்மாயைசெய்மம்மரிலம்
மாதவநொந்தனன்மாற்றதையோர் நொடிமாத்திரத்தே. (40)

மாத்திரைப்போதிலென் மாப்பவநோயினைமாற்றவருண்
மாத்திரையில்லை கொன்மன்னும் வித்தையைமற்றறுக்கக்
காத்திரையில்லை கொல்கால விளம்பத்தின் காரணமென்
ஓத்திரைத்துத்தொழும் வேங்கடவாண வுரைத்தருளே. (41)

உரைத்தருளெற் கோருறுதிநின் மாயையினொண்டிறலைக்
கரைத்தருள்காலமெலாஞ் செய்தபாவக்கணமலையை
யரைத்தருணின்னையறிவிஞ்சைவித்தென்னகவயலில்
விரைத்தருள் செய்விரையார் பொழில் வேங்கட வேதியனே (42)

வேதித்தணுவெனமேருவைச்செய்வை வெம்மேருவெனச்
சாதித்தணுவினைச் செய்வையென்சன்மத்தவாத்தளையைச்
சேதித்தடக்கலருமை கொலங்ஙனஞ் செய்யினின்ற
னீதித்தருமக்குநிந்தை கொல்வேங்கடநித்தியனே. (43)

நித்திய முத்தர் நின்னீர்மைக்குணங்கணெடிதுதுய்ப்பான்
நித்தியம் வந்து தொழும்பாத பங்கய நின்மலனே
துத்தியனந்தாசலக்கண்ணுமென்னுளத்தோயசத்தின்
மத்தியகத்து முறைவாயென்னோயைமடித்தருளே. (44)

மடியாத்திறல்கொணின் மாயையை மாற்றிவருத்திநிற்கும்
வடியாப்பவக்கடல்வற்றச்செய்தென்மனவாரிசத்திற்
குடியாப் புகுந்தகிக் குன்றத்தவென்னைக்கைக்கொள்ளுதியான்
முடியாப் பொருணினக்கில்லை விடுத்தன்முறைமையன்றே. (45)

முறைமைக்குணமிலிம்மூடனையாட்கொள முன்னினின்றன்
பொறைமைக்குமீரேழ் புவனங்கள் பூத்துப்புரந்தழிக்கும்
இறைமைக்கு நின்றனிருங்கருணைக்கு மெழிலுடைத்தாம்
உறைமைக்கனநிறத்தாயுரகோத்தம வோதியனே. (46)

ஓதிமவூர்தியையுந்திதந்தாய் நல்லுரகமலைச்
சேதிமமோங்கெழிலானந்தமானந்திகழ்ந்து நிற்குஞ்
சோதிமணிமலையே துறந்தோருண்சுகவமுதே
நீதிமகோத்தியேயென்னையாளநினைத்தருளே. (47)

நினைத்துணையாக நினையாமனின்னடிநீரசத்திற்
நினைத்துணையன்புஞ் செய்யாமற் சிறுமியர்சிற்றின்பத்தே
பனைத்துணைப்பற்றுடைப்பாவியு முய் யப்பணிப்பறம்பா
பினைத்துணைவாவருள்பேரின்ப சாகரப்பேற்றினையே. (48)

பேறெவற்றிற்கும் பெருந்துணை நாளும் பிறந்திறவா
ஆறெவற்றிற்கு மருந்துணை நெஞ்சேய வித்தை செய்யும்
ஊறெவற்றிற்கு முற்றூறுஞற்றுந்துணையுன்னவொண்ணா
வீறெவற்றுள்ளினும் வீறுரகேந்திரவெற்பரசே. (49)

வெற்பிற்சிறந்தது நந்நோ யொழித்திடும் வேங்கடமே
கற்பிற் சிறந்தது காயமெடுத்திறவாதகற்பே
அற்பிற்சிறந்ததலர் மேன்மங்கைப்பதிக்காற்றுமன் பே
வற்பிற் சிறந்ததவனருணம்பிவதியும்வற்பே. (50)

வதியேநல்வைகுந்தவான் பதிக்கென்றும் வளர்கருணை
நிதியே நிகமச்சிரத்து நின்றாளை நினைத்திருப்போர்
கதியேகணபணக்காகோதரேந்திரக்கல்லகம் வாழ் பதியே
பதிதன்செய்பாவப்படலத்தைப்பாற்று தியே. (51)

பாற்றுதிபாவையர்பாசத்தைப்பாழிற்படருளத்தை
மாற்றுதிநின்மலர்மாணடிப்பத்தியின் மன்னிநிற்கத்
தேற்றுதிசெம்மணிசேராயிரம்பணச்சேட வெற்பா
ஏற்றுதிநின்னருளேணியில்வீட்டின்பமெய்துதற்கே.(52)

எய்யாமையாலெளியேனிழையேதங்கட்கெண்ணிலையாற்
பொய்யாமை போற்றிப்புகல்புகுந்தேனப்புகரையின்னுஞ்
செய்யாமையென்னைத்திருத்து திசேடச்சிலம்பிறைவா
மெய்யாமையானவவென்பவவன்மையை வீட்டுதியே (53)

வீட்டுதிமுன்னரென்வீயாவினைப்பகை வேரதனை
வாட்டுதிபின்னரென்வன்பவநோய்தனைவாய்ந்திலங்கிக்
காட்டுதிநின்கட்கருணையையென்றுங்களிக்குமுத்தி
நாட்டுதியென்னை நளிர் வேங்கடாசல நாயகனே. (54)

நாயகநாராயணநளிநாதனை நாதமலர்ச்
சாயகற்றந்த சனகசராசரஞ்சாருயிர்க்குத்
தாயகசக்கிரிச்சக்கர வெற்றணவாதசன்ம
நோயக நீங்குநொடியினின்னோனருணோக்குறினே. (55)

நோக்கம் பெறும்படி நோற்பவர் நோன்பினுணுக்கமறிந்
தாக்கந்தருமலர்மேன் மங்கைநாயகவண்டமுட்ட
ஓக்கம் பெறுமுரகேந்திரவோதிமவூன்ற வித்தை
வீக்கம்விரைவில் விமோசனமாகும்விரகு செய்யே. (56)

விர குருவார்நின்பதம்பயனீயெற்குவீழுமிருள்
நரகுருக்கர்ப்பநர கொழி நாகநகத்தலைவா
நரகுருநச்சுடைநாகநகர்க்குருநற்றுறக்கச்
சுரகுருவானவவென்பவநோயைத்துடைத்தருளே. (57)

துடைப்பவவண்டத்தொகுதிகள் யாவுந் துடைத்தவணம்
படைப்பவகாப்பவபாப்பத் திரிப்பண்ண வபரவை
யடைப்பவவென்னை யடர்க்கும் வினையினடலையெல்லாம்
உடைப்பவனென்றுனையுற்றேனுணர்கிலனுன்குறிப்பே. (58)

உன்றன்குறிப்பையுனையன்றியோர்வோரொருவரிலர்
என்றன்பிணியையிரிப்போர் நினையன்றியாருமிலர்
மன்றன்மலர்ப்பொழில்சூழ்வடவேங்கடமாயவனே
என்றன்கடன் செய்தெதிர் நோக்குவனின்னிருங்கடனே. (59)

கடங்கலுழ்கைம்மலைகாரணகாத்தியெனக்கதற
இடங்கரிகுத்ததனின்னாவொழித்த விறையவனே
மடங்கவிமாயையிருவினை தம்மால்வருபிறவி
அடங்கலு நீங்க வருள் ஞானவேங்கடவாதித்தனே. (60)

ஆதித்தனுக்கொளுமாமயத்தாழ்த்தியடியனை நீ
சோதித்தனிற்குச்சொரூபமுமன்று தொழிலுமன்று
பாதித்தல் பாவத்தைப்பாற்றவெனினது பல்குமதைச்
சேதித்தருளுதிசீரார்ந்த சேடச்சிலம்பினனே. (61)

சிலம்புசிலம்புந்திருவடியாய்திறற்சிந்துரங்கள்
உலம்புமுலம்பலறாவுரகேந்திரவோங்கனின்றாய்
புலம்பும்படி யெனைப்போர்த்தவஞ்ஞானப்புழுதியெல்லாம்
அலம்பும்படி நின்னருணீர் பெய்தென்னையளித்தருளே. (62)

அளிக்கும் வினை தனக்கேயமைந்தோயெனையாண்மை கொண்டு
சுளிக்குந் தொன்மாயைத்தொடர்பும் வினையின்றொடர்புமிரீஇ
களிக்கும்படிக்கருள்செய்யுரகோதிம் முற்றுறைந்து
ளிக்கும் பெருமகருணைமழை பொழிகார்முகிலே. (63)

பார்வண்ணவோதிக்கலாநிதிநேர் முகக்காரிகையார்
பார்வண்ணக் கொங்கைமுயக்கின்மயங்கிவருந்துமனப்
பார்வண்ணம் போகப்புரிவாய்புயங்கநற் பூதரனே
பார்வண்ணத்தைம்படைக்கையாவெந் தெய்வ சிகாமணியே. (64)

காமணிதீனசனமணி தெட்ட செருக்கினர்க்கு
காமணி நம்புடையார்க்குக்குமணி நம்பிலர்கை
காமணிபுங்கவர்புந்திபுகுமணி பொய்யர்க்கன்பு
காமணிபாப்புப்பருப்பதத்தோங்கும் பரூஉமணியே. (65)

பருமணிச் சூட்டணிப்பஃறலைப்பன்னகப்பாதவம்வாழ்
கருமணிவண்ணகமலாமணி நற்கவுத்துவமாம்
பெருமணிமார்பவென் பேதைமைதீர்த்தி நின் பீடுடைப்பேர்
திருமணிமந்திரமாக்கொண் டெற்காக்கின்ற தேசிகனே. (66)

தேசிகர் கோனெம் மெதிபதியாற்றிருவாழிசங்கம்
ஆசிகவற்றையணிந்தவனேயரவாசலனே
வாசிகமாகவுமான சமாகவும் வாழ்த்து மென்றன்
காசிகனோய்கள் கலகலத்தோடிடக்கண்டருளே. (67)

கண்டூதியம் பெறக்கற்பகத்தார் தொழுங்காற்கமல
கண்டூதிய விசை நேர்நாம் வென்னைக்காவல்பிணியின்
கண்டூதி தீரக்கழிப்பாய் கண்ணில்லவன்கான்முளையின்
கண்டூ தியங்கியகண்ணா வடமலைக்காவலனே. (68)

காவலர்கைத்தலர்கொண்டுங்கடவுளர்கற்பகப்பூங்
காவலர்கைக்கொண்டுங்கற்றோர்கள் சொன்மலர்க்கண்ணிகொண்டும்
பூவலர் கொண்டும் புகழ்ந்தேத்தும் வேங்கடப்பொற்றைய நோய்
மேவலர் மேன்மை மெலிந்தோட நின்னருள் வேண்டுவனே. (69)

வேண்டுவகொண்டுவிண்ணோர் விரவித் தொழும் வேங்கடவா
ஈண்டுவன் னோய்களிரிந்தோடும்வண்ணமெண்ணிப்பறிப்பு
தோண்டுவதுண்டிப்பதுய்ப்பித்து நாளுஞ்சுகப்படுத்தி
மாண்டுவராத மருந்துந்தந்தாள் கருமாணிக்கமே. (70)

மாணிக்கமே நன்மரகதமே முத்தமாமணியே
ஆணிக்கனகமுடியனந்தாசலவப்பநின்றன்
றோணிக்கழறொழுதேத்திடுந் தொண்டன்றன்றொல் வினைகள்
நாணிக்கவிழ்தலையிட்டோடும்வண்ணநயந்தருளே. (71)

நயந்தரவேறி நடித்தாயிடைச்சிநடையின்வந்த
வியந்தரவெம்முலையுண்டாய்கன் றோச்சிவிள வெறிந்தாய்
பயந்தரவேகடைக்கால் வருங்கூற்றன் படரை வென்று
சயந்தர வேண்டும் வெண்சக்கிரிச்சக்கரத்தற்பரனே. (72 )

கற்பரசக்கரசங்கத்த சார்ங்கச்சராசனத்த
நற்பரமானந்தநாகாசலநகரிநாக்கநல்லோர் கூகக
சொற்பரமாத்துமதூண்டாத சோதிச்சுடருருவ
சிற்பர சின்மய தீயேன் பவமறச்சிந்தைசெய்யே. (73 )

சிந்தையிற் சேர்ந்து திகழ்திருவேங்கடச் செல்வனெனும்
எந்தையிருக்கவினியோரின்னாமையுமெற்கிலையான்
முந்தைவினையினின்மூண்ட முத்தாபமுமூணெருப்பார்
கந்தையிற் றீர்ந்தறுங்கண்கூடென விதைக்காண்டி நெஞ்சே. (74)

நெஞ்சகமேநீ நெகிழ்ந்துவடமலை நின்மலன்றாள்
வஞ்சகமின்றிவழுத்துதியேலவன்வான்கருணை
விஞ்சகக்குப்பையும் வேதனை செய் நம் வினைப்பகைஞர்
துஞ்சகங்காரமுந் தோற்றோடத்தூரத்துரத்திடுமே. (75)

துரத்துங்கைக்கோலிற் சுரைக்கணமேய்த்தவதொன்மறையின்
சிரத்தும்பணிச் சிகரத்துந்திகழ்திருப்பாதவென்றன்
புரத்துமுளத்தும் புலர்த்திடும்புன்கணைப்போக்கிகத்தும்
பரத்தும் பரிந்து நற்பத்தரைக் காக்கும் பரம்பரனே. (76)

பரம்பரைபங்கயை பார்க்கவிபைம்பொற் படாந்திகழ்ந்து
நிரம்பரை மேகலை நின்மலை நேசவென்னெஞ்ச நிலக்
கரம்பரைத்துக்கம்பலை செய்துகாட்சிக்கவின் குரவர்
பரம்பரை வித்தினை வித்திவிளைத்திபத்திப்பயிரே . (77)

பத்திப் பெருஞ்செல்வருண்பரமாநந்தப்பாற்கடலே
புத்திப் பெருஞ் செல்வர் போற்றும் புயங்க நற்பூதரனே
அத்திப் பெருங்கடலாழடியேற்குன்னடிப்புணையான்
முத்திப் பெருங்கரையுய்த்தாண்முதிர்பவமோசனனே. (78)

பவமோகம்பாரித்துப்பல்லூழி காலமும் பற்பலவாம்
நவமோக நாடகஞ் செய்யுநின்மாயை நசிப்பதென்றோ
சிவமோக மோகினிவேடநற்சேடச்சிலம்பவென்றன்
அவ மோக நீக்கியருளழியா முத்தியாநந்தமே. (79)

ஆனந்தவாரிதியேயர வாசலத்தானந்தமா
மானந்தனினின்றொளிருமரகதமாமலையே
ஈனந்தவாத வெளியேற்குன் கீர்த்தியிருஞ்சுதையின்
பானந்தந் தென்வினை பாற்றியருணற்பரகதியே . (80)

பரகதிப்பண்ணவர்பாடிப் பரவும்பணிப்பறம்ப
நரகதிநானில நாநாகதிநன்னவநவமாஞ்
சுரகதிதோன்றித்துனியடைந்தேனின்சுகச்சரணே
திரகதியென்றடைந்தேன் றெரியேனின்றிருவுளமே . (81)

திருவிலியாயினு நின்சேவடிசரண்சேர்ந்த வெனை
உருவிலிசெய்யு மொழியாமயலறுத்துன்னருளாற்
கருவிலியாக்கிநின்காற் றொண்டுகொள்ளுங்கடனினதே
பொருவிலியாகும் புயங்க நற்பூதாப்புண்ணியனே. (82)

புண்ணியன் மேதைப்புலைப்பொருளாற்செய்புரச்சிறையை
நண்ணியவென்னை விடுவிக்கு நாளெந்த நாணவிலாய்
மண்ணிய மாமணியே மணிமாசுணமாமலைவாழ்
அண்ணியவாத்தவகத்தபுறத்தநல்லாரியனே. (83)

ஆரிய வர்க்கத்தவர்க்கடியான வருணிதியே
காரியவர்க்கமெலாங்கண்டுகாத்திடுங்காரணனே
சீரிய வர்க்கத்தவர்தொழுஞ்சேடச்சிலம்பிறைவா
பூரிய வர்க்கப்புலையனையாளும் பொறுப்புனதே. (84)

பொறுக்கத்தகாதபுலையொழுக்கேனிற்புகல் புகுந்தேன்
அறுக்கத்தகாத நம் மானாவுறவினடலை யெண்ணின்
மறுக்கத்தகாதுனக்கென்னையிதுவுமென் மாண்விதியே
குறுக்கத்தகாத புகழாய்வடமலைக்கோவிந்தனே. (85)

கோவிந்தனமுகக்கோபாலபற்குனன் கூவிரத்தேர்
மாவிந்தமுய்த்தவமாசுணமாமலை மாதவனே
பூவிந்தளத்தினிற்புண்டரிகச்சுமம் பூத்ததென்ன
ஆவிந்தவாகத்தடை வேன்கொன் முத்தனவத்தையையே. (86)

அவத்து வெனுமெனையோர்வத்து வாக்கியந்தாம்மெனுந்
திவத்துவைப்பான் சிந்தனை செய்யுஞ்சேடச் சிலம்ப நின்றன்
சிவத் துயர் நன்றிதனக்கெத்தகை நன்றிசெய்யவல்லேன்
பவத்துயர் துய்த்திப்படி மீதுழல்கின்றபாதகனே. (87)

பாதகப்பையலென வெனை நீக்கல் பராபவமாம்
வேதகப்பொன்னகியைப்பொன் செய்வீதம்வியாளவெற்பா
ஓதகப்பற்றறவுன்னரு டொட்டுவளித்தருள்வாய்
சாதகப்பக்கியினோக்குவனின் விழித்தண்ணருளே. (88 )

அருட்படியேற்றியருமறை மூன்றினறிவரிய
பொருட்படியாவுமென்புந்திபுகுவித்துப் போதநல்கி
இருட்படியேட்டையிரித்தென்றுமீறிலிருஞ் சுகமாந்
தெருட்படி சேர்த்தருள் சேடச்சிமயச்சிந்தாமணி யே . (89)

சிந்தாமணிகளிரவைப்பகல் செய்திருமலையாய்
சிந்தாமணிவண்ணசேடச்சிலோச்சயஞ் சேர்ந்தொளிரும்
நந்தாமணி விளக்கே யெனைக்கூயொரு நன்மருந்து
தந்தாமணித்துப் பொழுதிலென்னோயைத்தணந்தருளே. (90)

தணவாத்தான நிரங்குசமான சுதந்தர நீ
கணவாதத்தாயியெனுமெனைக்கைக்கொளிற் கண்டுநின்னைப்
பணவாதவாவிப்படிச் செய்ததென்னென்று பன்னுவர்யார்
மணவாதவூணுண்ணுமாசுணமாமலை வாழ்பவனே. (91)

வாழ்பவனாதியர் வந்துவந்தித்துவரம் பெறுவான்
றாழ்பவனாசனத்தாபரமீதுறைதற்பரனே
வீழ்பவனாதி விளிவிண்பதவி விருப்பிலனென்
ஏழ்பவநாசனஞ் செய்த முதத்திலிருத்து தியே. (92)

இருத்து தியென்றனிதயத்துன்னிண்டையிணையடியைப்
பெருத்து திபீழைப்பிணிதனைப் பேர்த்திநின் பேரகத்திற்
கருத்து திக்கச் செய்துகாத்திகசிந்து கடவுளர்கள்
திருத்துதிசெய்து தொழுஞ்சேட வெற்புறை சீதரனே. (93)

சீதரன் செங்கமலக்கணன் செவ்வித்திருமுகன்றா
மோதரன் மும்மையுலகமுதல்வன் மூவாவுயிர்கட்
காதரன் பொன்முடியாயிரமாமணியங்கதப்பூம்
பூதரன் போக்குவனெஞ்சே நம்பையுள் பொருக்கெனவே . (94)

பொருப்பன்னபாவத்தைப் போக்கலிற்பஞ்சுப்பொதிக்கொர்பொறி
நெருப்பன்னநீர்மையனீராளமாக நினைந்துருகும்
விருப்பன்னவத்தர்க்கு வேண்டுவசெய்வன்விழைந்து நெஞ்சே
கிரஹப்பன்னாக் கலம்பன் பதநீநிதந் திண்ணநம்பே. (95)

நம்பிக்கெட் டோர்களிந் நானிலத்தில்லை நம்பாது நின்று
வெம்பிக்கெட்டோர்கள் விவிதருண்டென்னுள மேவிளித்த
தும்பிக் கெட்டாதவனாசு சிநங்கை சுவணனற்சேய்
நம்பிக்கெட்டாதவனாநவினாகநகாதிபனே. (96)

நகாதிபன் பச்சைந விராதிபன்றனலிவொழித்தோன்
மகா திபன் மாசுணமா மாதிராதிபனமாக முத்திச்
சுகாதிபன்னூயசுராதிபன் வேதச்சுடருருவாங்
ககாதிபன்காப்பனஞ்சேனெஞ்சமேயவன்காரணனே. (97)

காரணன்காரணக்கண்ணுநற்காரியக்கண்ணுநிற்கும்
பூரணன் பூமகள் போந்துறைமார்பன் பொழில்களெலாம்
பாரணன்பன்மணிப்பஃறலைப்பாந்தட்பருப்பதத்தன்
நாரணன்றன் பொருளாதமைக்காக்கநயப்பவனே. (98)

நயப்பவன்றன்னடி. யாரையவர்கணயந்தவெலாம்
பயப்பவன் பாகீரதிதந்த பாதன் பனிமலரோன்
வியப்பவன்விண்ணவர் வெண்பகடூர்தி விரும்பியென்றும்
வியப்பவன்றிவினைவீப்பவன்வேங்கட வேதியனே. (99)

வேதிப்பவனம் மியற்கைக்குணங்கள் விளங்கநெஞ்சே
சோதிப்பவன்றுயர்நல்கித்துணையடித்தொண்டு கொண்டு
சாதிப்பவன்றன்ன தந்தாமவாழ் வினைச் சாற்றிய நோய்
சேதிப்பவன்றிகழ்ந்தோங்கிடுந்தேயந்திருமலை யே. (100)

வாழ்கவட வேங்கடமெனுஞ் சேட் மலைவளங்கள்
வாழ்கவதிலென்றும்வாழ் சீநிவாசன் மலரடிகள்
வாழ்கவவன் மார்புறையலர் மேன்மங்கைவண்மலர்த்தாள்
வாழ்க நம்மாரியாழ்வார்கள்வைபவம் வையகத்தே. (101)

சீரார்ந்த சேடகிரிச் சீநிவாசன்றிருவடிக்கோர்
ஏரார்ந்த சொற்சதவந்தாதிமாலை யிசைத்தனனால்
நாராயணக்கவிஞன்சேய்பதின்மர்தநற்கலையே
பாராயணன்பள்ளிகொண்டானெனும் பெயர்ப்பாவல கென. (102)

சேடகிரி யந்தாதி முற்றிற்று.
---------------

This file was last updated on 11 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)