pm logo

கந்தப்ப தேசிகர் இயற்றிய
தணிகைக் கலம்பகம்

taNikaik kalampakam
of kantappa tEcikar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கந்தப்ப தேசிகர் இயற்றிய
தணிகைக் கலம்பகம்

Source:
கந்தப்ப தேசிகர் இயற்றிய தணிகைக் கலம்பகம்
பதிப்பாசிரியர்: புலவர் ச. திலகம், பி.லிட்.,
தமிழ்ப்பண்டிதர்,
தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
2001       விலை.ரூ 25-00
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியீட்டு எண்: 427

நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
நூற்பெயர் : தணிகைக் கலம்பகம்
பதிப்பாசிரியர் : புலவர் ச.திலகம்
வெளியிடுபவர்: இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
வெளியீட்டு எண்: 427
மொழி: தமிழ்       பதிப்பு : முதற்பதிப்பு
வெளியீட்டு நாள்: ஜூலை, 2001
பக்கங்கள் : 70       விலை: ரூ. 25-00
அச்சிட்டோர் : சரசுவதி மகால் அச்சகம்
பொருள்: இலக்கியம்
------------------------------------------ ---------

வெளியீட்டாளர் முகவுரை

சரசுவதி மகால் நூலகம் அரிய சுவடி நூலகமாகவும், சிறந்த நூற்கருவூலமாகவும், ஆய்வு நிறுவனமாகவும் ஒருங்கு திகழ்ந்து வருகின்றது. சுவடிகளின் அடிப்படையில் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் இந்நூலகம் தொடர்ந்து ஆற்றிவருகின்றது. இந்நிறுவனத்தின் நூல் வெளியீட்டுத் தொண்டின் தொடர்ச்சியாக இப்பொழுது ‘தணிகைக்கலம்பகம்' எனும் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

திருத்தணிகை முருகப்பெருமானின் மீது பாடப்பெற்ற கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த இந்நூல், கந்தப்ப தேசிகர் எனும் புலவர் பெருமகனாரால் இயற்றப்பெற்றதாகும். இந்நூலின் காலம் கி. பி. 18ஆம் நூற்றாண்டாகும். இந்நூலை நன்முறையில் பதிப்பித்துள்ள நூலகத் தமிழ்ப்பண்டிதர் புலவர் ச. திலகம் அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்நூலின் வெளியீட்டுக்குத் தேவையான நிதியுதவியை நல்கியுள்ள நடுவண் அரசுக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன செய்துள்ள நூலக நிருவாக அலுவலர் திரு.சாமி. சிவஞானம் அவர்களுக்கும், வெளியீட்டு மேலாளர் திரு. அ. பஞ்சநாதன் அவர்களுக்கும் பாராட்டுகள். நூலினைச் செப்பமுற அச்சிட்டளித்த சரசுவதி மகால் நூலக அச்சகத்தாருக்கும், நூல் வெளியீட்டுப் பணிகளில் துணை நின்ற ஏனையோருக்கும் பாராட்டுகள்.

முருகப்பெருமானின் சிறப்புகளை இலக்கிய நலந்திகழ எடுத்துரைக்கும் இவ்விலக்கியத்தைப் பொதுவாக இலக்கிய ஆர்வலர்களும் சிறப்பாகச் சைவ சமய அன்பர்களும் விரும்பி வரவேற்பர் எனப் பெரிதும் நம்புகின்றேன்.
தஞ்சாவூர்,       சி. கோசலராமன்,
25-7-2001,       இ. ஆ. ப., மாவட்ட ஆட்சித் தலைவர்
      மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்.
----------------------------------------------- ---------

முன்னுரை

இருந்தமிழே உன்னா லிருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்த வென்றாலும் வேண்டேன்' (தமிழ்விடு தூது)

இமையவருலகத்து அமுதினும் தமிழ் இனிமையுடையது. அமுதமுண்டார் சாவார் என்பது தொன்மொழி. அந்த அமுதமும் வேண்டேன் இனிய தமிழ் மொழி இருக்க என்கிறார் ஒரு புலவர். புலவர்கள் தங்களது புலமையினை நன்கு வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் அமைத்து, ஒவ்வொரு புலவரும் தாம் தாம் செய்த பாடல்களையும், நூல்களையும் இச்சங்கத்தில் அரங்கேற்றிப் பெருமை பெற்றனர். புலவர்கள் அயல் மொழிகளையும் பயின்று அவற்றிலுள்ள சிறந்த நூல்களைத் தழுவித் தமிழில் நூலியற்றும் பொழுது தமிழ் மொழியின் சிறப்பும், தமிழ் நாட்டின் பண்பாடும் முதல் நூல்களின் தரமும் சிறிதும் குன்றாத வகையில் இபற்றினர்.

அங்ஙனம் தோன்றிய நூல்கள் தொடர்நிலைச் செய்யுட்கள், காப்பியங்கள், சிறு பிரபந்தங்கள் முதலாய பலவகை நூல்களாகும். இவை இடைக்காலத்தில் தோன்றின. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற சமயக் குரவர்களும் இவ்விடைக்காலத்திலேயே தோன்றிப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடல்களைப் பாடினார். இவ்வாறு இலக்கியச் சுவையுணர்விலும் சமய ஈடுபாட்டிலும் சிறந்து விளங்கிய பாடல்களே பிரபந்தங்கள் எனப் பட்டன.
பிரபந்தம் என்னும் வடசொல் தமிழில் மேன்மை பொருந்திய யாப்புடைய நூல் என்று பொருள்படும். இப்பிரபந்தங்கள் சிற்றிலக்கிய வகையைச் சாரும், தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். இவற்றுள் கலம்பகமும் ஒன்றாகும். கலம்பகத்தை எண்வகை வனப்புகளுள் விருந்து என்னும் வகையைச் சேர்ந்த பிரபந்தமாக முன்னையோர் கொண்டுள்ளனர். விருந்தாவது புதிதாகத் தாம் வேண்டியவற்றால் பல செய்யுளும் தொடர்ந்துவரச் செய்வதாகும்.

கலம்பகம் என்ற சொல்லுக்குக் கலவை என்பது சொற்பொருள் பல மலர்களாலான மாலை)
"களிவண்டு மிழற்றிய கலம்பகம்
புனைந்த அலங்கலந் தொடையல் "
என்பது தொண்டரடிப் பொடியாழ்வார் வாக்கு. இவர் இங்கே சுட்டும் பகம் என்பதற்குப் பலவகை மலர்கள் என்பது பொருள். பல வகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலை "கதம்பம்" எனப்படும். "கதம்பம்" எனவும் வடமொழியில் இது வழங்கும்.

பல்பூமிடைந்த படலைக்கண்ணி" என வரும் பெரும்பாணாற்றுப்படை அடிக்கு (174) உரை கண்ட நச்சினார்க்கினியர் பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை என்று விளக்கம் தருகிறார். கலம்பக இலக்கியத்திற்குக் கலம்பக மாலை என்றும் ஒரு பெயருண்டு.
பலவகை நிறமும் வடிவமும் மணமும் கொண்ட மலர்களால் கட்டப் பெற்ற கதம்பமலர் மாலை போன்று இந்த இலக்கிய வகையில் இடம் பெற்றுள்ள பாக்களும் அவற்றின் பொருள்களும் பல்வேறு வகைகளில் அமைகின்றன. எனவே இந்த இலக்கியப் பெயர் உவமையாற் பெற்ற பெயராகும். உறுப்பமைதி கலம் 10 பகம் 8 ஆகப் 18 உறுப்புக்களாகும்.

பா. பாவினங்களுள் பெரும்பாலானவற்றையும் கலம்பக இலக்கியத்துள் கணலாம். பொருள்களை நோக்கினால் அகம் புறம் என்னும் இருவகைப் பொருள்களும் காணப்படுகின்றன. நகை முதலிய ஒன்பான் சுவைகளும் இதன் கண் மிளிர்தல் காணலாம்.
பாடல் தொகையிலும் கலம்பகங்களுக்குள்ளே வேறுபாடு உண்டு. தேவர்களுக்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது. வணிகர்க்கு ஐம்பது, வேளார்க்கு முப்பது என்னும் எண்ணிக்கை அளவில் பாடல்கள் பாடுதல் வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன.
“தேவர்க்கும் முனிவர்க்கும் காவல்அர சர்க்கும்
நூறுதொண்ணூற் றைந்துதொண் ணூறே
ஒப்பில் எழுபது அமைச்சிய லோர்க்கு
செம்பிய வணிகர்க் கைம்பது றப்பது
வேளா ளர்க்குஎன விளம்பினர் செய்யுள்."

அமைச்சர் என்பதற்குப் பதிலாக ''அரசனால் ஏவப்பெற்றவர்களுக்கு எழுபது என நவநீதபாட்டியல் தெரிவிக்கிறது. பல கலம்பக இலக்கியங்களை நோக்கும்போது இவ்வரையறை தவிர்ந்து வருதலும் காணப்படுகிறது.
கலம்பக நூல்களிலே 18 பொருள்கள் சிறப்பாக அமையவேண்டும் என்பது பழைய மரபு, புயம், தவம், வண்டு, அம்மானை, பாண்மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், கிளி, மடக்கு, ஊர், மறம்,காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார் தூது என்னும் அடைவில் பதினெட்டினை வெண்பாப்பாட்டியல் தருகிறது.

“வைக்கும் தவம்புயம்வண் டம்மானை பாண்மதங்கு
கைக்கிளைசித் தூசல் களிமடக்கூர் -- மிக்கமறம்
காலம் தழை இரங்கல் சம்பிரதம் கார்தூது
கோலும் கலம்பகத்தின் கூறு.

மேலே சுட்டிய உறுப்புகளின் மேலாகக் கலம்பக இலக்கியங்களில் வெவ்வேறு புதிய பொருள்களும் பாடுபொருளாகக் கொள்ளப்பட்டு உள்ளன. பிச்சியார், கொற்றியார் என்பவற்றைப் போலவே வலைச்சியார், இடைச்சியார், கீரையார், யோகினியார் என்னும் பொருள்கள் எழுந்துள்ளன. புயவகுப்பினைப் போலவே சிலர் திருவடி வகுப்பும் பாடியுள்ளனர். இவற்றிற்கு மேலும் ஆற்றுப்படை, பள்ளு, சிலேடை, மடல், வெறிவிலக்கு என்பவற்றையும் கலம்பக உறுப்புகளாக ஒருசிலர் கொண்டுள்ளனர்.

கலம்பக நூல்களின் பெயரமைதிகள்:

கலம்பகங்கள் தெய்வங்களையும் அரசர்களையும் சான்றோர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக்கொண்டு தோன்றியுள்ளன. எனினும் பக்தியெழுச்சியின் காரணமாகத் தெய்வங்களின் மேல் பாடப்பெற்ற இலக்கியங்களே மிகுதியாயுள்ளன. தெய்வங்களைக் குறித்து எழுந்த கலம்பகங்களுக்கு அத்தெய்வப் பெயர்களோடு சார்த்திப் பெயர் சூட்டுவதோடு தெய்வங்கள் எழுந்தருளியுள்ள ஊர்ப்பெயரைச் சார்த்தியும் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக மதுரைக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம் முதலியனவற்றைக் கூறலாம். தெய்வத்தின் பெயர், அரசர் பெயர், ஞானியோர், மற்றும் தலங்கள் பற்றியும் பாடப்பெறும் கலம்பகங்கள் அந்தந்த நூலின் தலைவர் பெயருடன் சேர்த்துக் கூறப்படுகின்றன ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், அம்பலவாணதேசிகர் கலம்பகம் முதலியன இதற்குச் சான்றாகும். முனிவரைத் தேவரைப் போல வைத்துப் பாடியதற்கு எடுத்துக்காட்டாக மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய அம்பலவாணதேசிகர் கலம்பகம் விளங்குகிறது. இதில் 100 செய்யுட்கள் உள்ளன. இறைபக்தி பாடுபொருளாக அமைந்த கலம்பகங்கள் மேல் தெய்வப்பெயர் சுட்டுவதை விடத் தலப்பெயர் சுட்டுவதே மிகுதி. நூறு என்னும் பேரெல்லையைக் கடந்தும் சில கலம்பக இலக்கியங்கள் காணப்படுகின்றன. இரட்டையர் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகத்திலும், படிக்காசுப்புலவர் பகர்ந்த புள்ளிருக்கு வேளுர்க்கலம்பகத்திலும் 101 பாடல்கள், குமரகுருபரசுவாமிகள் அருளிய மதுரைக்கலம்பகத்தில் 102 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. உதீசித்தேவர் தந்த திருக்கலம்பகத்தில் 110 பாடல்களைக் காணலாம்.

இவ்வாறாகக் கலம்பக உறுப்புகள் 18 என்னும் வழக்கிற்குக் குறைவாகவும் கூடுதலாகவும் உறுப்புகளைப் புலவர்கள் கலம்பக நூல்களில் வைத்துப் பாடியுள்ளனர் என்பது தெரியவருகிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தில் 18 உறுப்புகள் உள. பதினெட்டினும் குறைந்த உறுப்புகள் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருவாமாத்தூர்க்கலம்பகம், நந்திக்கலம்பகம் முதலியவற்றில் காணப்படுகின்றன. ஆசாரியன் திருவடியினை 1946-இல் அடைந்த அபிநவ காளமேகம் அனந்தகிருஷ்ணய்யங்கார் பாடிய திருப்பேரைக் கலம்பகத்தில் 26 உறுப்புகள் இடம்பெற்றுள்ளன.
கலம்பகத்தில் இடம்பெறும் பாடுபொருள்களையும் பா வகைகளையும் நோக்குமிடத்து இப்பிரபந்தம் அந்தாதி, அம்மானை முதலியவற்றிற்குப் பின்னர்த் தோன்றிய இலக்கியம் என்பது விளங்குகிறது.
கடவுளைத் துதித்துப் பாடிய கலம்பக நூல் வரிசையில் தலப்பெயர் கொண்ட நூல்களுள் ஒன்று தணிகைக்கலம்பகமாகும். இந்நூல் திருத்தணிகைச் சந்நிதி முறையில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறது. இதன் ஆசிரியர் கந்தப்பதேசிகர் ஆவார்.

தணிகைத்திருத்தலம்:
தணிகை என்று சொல்லப்படும் திருத்தணிகை என்னும் தலம் சென்னைக்கருகே அரக்கோணத்திலிருந்து வடக்காக 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு மின்சார இருப்புப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு எல்லையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிகமையமாகவும் இது விளங்குகிறது. இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று. இனி இத்தலத்தின் சிறப்பினைச் சிறிது காண்போம்.

தணிகைப்பெருமை:
விண்ணுலகத்தை எள்ளி நகையாடினார் போன்று சிறப்புடன் விளங்குவதும், ஒன்பது கோள்களும் தந்நிலை மாறி மழை மறுத்த போதும் ஆற்று மலையில் இருந்து ஊறும் நீர் நாட்டின் வளத்தை மேம்படுத்தும். அத்தகைய வளம் பொருந்தியதுமாகிய தொண்டை நாட்டில் திருமுருகப்பெருமான் திருக்கோயில் கொண்டருளிய திருத்தணிகை ஒப்பற்ற பெருமையுடையதாகும்.
இத்தணிகையானது ஒப்பற்ற இந்திரனுடைய விண்ணுலகத்தைப் போலவும், நான்முகனுடைய சத்தியலோகத்தைப் போலவும், திருமாலுடைய வைகுண்டத்தைப் போலவும், சிவபெருமானுடைய சிவலோகத்தைப் போலவும், சிறந்து விளங்குவதாகும். மேலும் நான்முகன் திருமால் சிவபிரான் என்னும் மும்மூர்த்திகளைப் போல் சிறப்பினையுடையது. இத்தணிகைமலையின் சிறப்பினைப் பிறர் சொல்லக்கேட்டாலும் இம்மலையை அடைந்து முருகக் கடவுளைப் போற்றி வழிபடுவோம் என்னும் நோக்கத்தோடு திருத்தணிகை மலையை நோக்கிப் புறப்பட்டாலும் அவ்வாறு புறப்பட்டவர்களுடைய தீவினை முற்றும் நீங்கும் என்பர்.

திருத்தணிகைக்கு வழங்கும் பிற பெயர்கள்:
பொன்னுலத்தில் உள்ள செல்வங்களெல்லாம் தன்னிடத்திலே நிறையப் பெற்ற காரணத்தால் இவ்வூர் சீபூரணகிரி என்று பெயர் பெற்றது. அடியார்களுடைய விருப்பங்களை ஒரு கணப்பொழுதில் நிறைவேற்றுதலால் தணிகாசலம் என்று பெயர் பெற்றது. எல்லாவற்றிற்கும் மூலகாரணனாகிய சிவபெருமானே முருகக்கடவுளை மூல காரணன் என்று தொழுதபடியால் மூலாத்திரி என்று பெயர் பெற்றது. கருங்குவளை மலர் நாள்தோறும் மலர்தலான் அல்லிகாத்திரி என்று பெயர் பெற்றது. இக்காரணத்தினால் நீலோற்லகிரி, உற்பலகிரி, கல்லாரகிரி, காவிமலை, நீலகிரி, குவளைச்சிகரி எனப் பலவாறு கூறுதலும் உண்டு. கற்பத்தின் இந்நகர் அழியாமையால் கற்பசித் என வழங்குதலும் உண்டு.

சூரபதுமனோடு செய்த போரினால் உண்டாகிய சினமுந் தணியப் பெற்ற இடமாதலால் செருத்தணிகை எனவும், திருத்தணிகை எனவும் கூறப் பெறும். முருகக்கடவுள் பிரணவப்பொருளைச் சிவபெருமானுக்கு உரைத்தருளிய இடமாகையால் இந்திரநகரி எனவும், நாரதர் விருப்பமுற்ற இடமாகையால் நாரதப்பிரியம் எனவும், அகோரன் எனனும் தவத்தினன் வீடு பெற்ற நகராகையால் அகோரகைவல்யப்ரதம் எனவும்; கந்தக்கடவுள் வீற்றிருப்பதால் கந்தகிரி எனவும், இப்பதிக்குப் பெயர்கள் உள்ளன. இதன் வரலாறுகள் கச்சியப்ப முனிவர் அருளிய தணிகைப்புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் விநாயகர், முருகன் வள்ளியை மணக்க யானை உருவில் வந்து உதவியரென்னுங் காரணத்தால் ஆபத்சகாய விநாயகர் என்னும் பெயர் உடையவராவார்.

இந்நூலில் கூறப்படும் தணிகைமலைச் சிறப்பு:
தணிகைமலையில் உறையும் முருகப்பெருமானைப் பராவும், சிறப்புரைக்கும் சிற்றிலக்கியமாகிய இந்நூலில் தணிகைமலையின் சிறப்புகள் பலபடப் பேசப்பெறுவது இயல்பன்றோ. அவ்வகையில் நூல் முழுதும் தணிகைமலை அழகுறப் படம்பிடிக்கப் பெற்றுச் சொல்லோவியங்களாகக் காட்டப்பெற்றுள்ளன.
அவ்வாறான பகுதிகள் வருமாறு:-

காரிகையார் எதிர்நோக்க மயிலாடக் கல்லருவி முழக்கங் காட்டப்
கள்ளுலாம் பூங்குவளை முப்போதும்
மூவர் தொழும் திருத்தணிகை 1
பணிமணி வெயில் விரீபலகிரி 1
மறத்தியர் பாடல் தொகுந்தணிகாசலம் 6
பொருப்பர் கைவிற்கும் கலைக்கும்
கலைமான்மாய் தணிகைச்சயிரம்
15
வரைக்குறவர் சூழ்தணிகை 20
மானார் நடஞ்செய்தணிகை 21
செல்லையொன்றிய மதில் தணிகை 22
நற்பதமும் தரும் 39
பேரிகைபோல் முகிலார்க்குந் தணிகை 19
கபத்துள் நாளும் விள்ளுமால் வரை 36
வயலினமார் தணிகை 43
மன்றல் கமழும் திருத்தணிகை 44
மணிகையார்ந் தருவி தாழ்தணிகை மால்வரை 46
கொள்ளியின் மலரும் அள்ளிதழ்க் காந்தள்
குலங்களை அருக்கனும் மதியும் கோளரா
வனாமன்றஞ்சி நாடோறும் குலவரையருகிலே
நடக்கும் தெள்ளிய தணிகைப்பதி 52
உற்றவருக்கருள் நற்றணிகைப்பதி 57
மழைக்கணங்களார் தணிகை 61
விமலனார் அளித்திடும் பண்ணுலாவு திருத்தணிகை 64
மாதங்கத்தைச் சாய்க்கும் அரிவாழ் தணிகை 67
பணிகாசலரும் தணிகாசலம் 69
கற்றோர்கள் போற்றும் தணிகை 71
காயுங்கதிர்கால் மணியருவி கறங்கும் தணிகை 72
மேகஞ்சூழ் தணிகாசலர் 84
---- ---------

இந்நூலில் கூறப்படும் முருகனது சிறப்புகள் சில:

குமரப்பெருமானாகிய முருகனை முழுமுதற் கடவுளாகக்கொண்டு முகிழ்த்த சமயம் கௌமாரம் என்பதை அனைவரும் அறிவர். முருகப்பெருமானின் மகத்தான திருவிளையாடல்கள், சிறப்புச்செயல்கள் எண்ணிலாதவை. அவற்றுள் பலவற்றை இந்நூல் எடுத்தியம்புகிறது. அவற்றுள் சிலவற்றை இவண் நூற்செய்யுள் தொடர்களாலேயே தொகுத்துக் காண்போம்.

நீர்கொண்ட சடைமுடியோன் .... ......எழுஞ்சுடர் 1
தானவரை வேரறுத்து ......... நின்திருவடியே 1
வேதாகமங்கள்.......... தணிகைச் சண்முகவா 2
தன் தாமரை மலர்ப்பதம்....... வள்ளலே 4
யார் கொல்......வாழ்வான் 20
மாந்தரொடு விண்ணோர் வணங்குந் தணிகாசலனார் 23
மானவரும் வானவரும் வணங்கிப் போற்ற வர முதவும்
தணிகைவரை வள்ளல் 37
புய வகுப்புப் பாடல் 42
அன்று சுரர் வாதனை ……. வரதன் 44
கடிக்குடங்கை.. தணிகைவேந்தே 48
சார்ந்தாரை.......... சிகாமணி 68
பகலாயிரம் அன்ன சேயோன் 77
அகமலர் ……....குருபரனே 93
குருபரன் நீ..... …… ...ஓங்கலானே 94
-----------------

நூலாசிரியர் வரலாறு:

இந்நூலின் ஆசிரியரான கந்தப்பதேசிகர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். இவர் ஊர் தொண்டை மண்டலத்திலுள்ள திருத்தணிகையாகும். சங்கம மரபில் தோன்றிய இவர் வீர சைவைச் சமயத்தைச் சார்ந்தவர். திருத்தணிகைப்புராணம் பாடிய கச்சியப்பமுனிவரின் மாணாக்கர். பிற்காலத்தில் சிறந்த புலவர்களாகவும் விளங்கிய விசாகப் பெருமாள் ஐயரும் இவர்தம் புதல்வராவர்.
கந்தப்பையர் வீரசைவராயினும், முருகக்கடவுள் மீது பேரன்பு கொண்டு விளங்கினார். முருகன்மீது தோத்திர நூல்கள் இயற்றுவதை இவர்தம் கடமையாகக் கொண்டிருந்தார் எனத்தெரிகிறது. தாம் பிறந்த ஊராகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் முருகக்கடவுள் மீது பேரன்பு கொண்டு விளங்கினார். இவர் முருகன் மீது திருத்தணிகை அந்தாதி, திருத்தணிகைக் கலம்பகம், திருத்தணிகை பிள்ளைத்தமிழ், திருத்தணிகை உலா, தபாநிதிமாலை, ஐங்கரமாலை, வேல் பத்து, மயில்பத்து, மலைப்பத்து, சீர் பாதப் பத்து முதலிய பத்து நூல்களை இயற்றியுள்ளார். இவையனைத்தும் திருத்தணிகைச் சந்நிதி முறை என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முருகன் தாலாட்டு, சிலேடை வெண்பா, வெண்பா அந்தாதி முதலிய பிரபந்தங்களையும் திருத்தணிகைத் தலபுராணத்தையும் இயற்றியுள்ளார்.
பழமலை அந்தாதி, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி முதலிய கடினமான சில பிரபந்தங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இந்நூலின் சிறப்புகள்
இலக்கிய வளமும் பக்தி நலமும் கலந்த இத்தணிகைக் கலம்பக நூற்
சிறப்புகள் பலவாகும்; அரிய கருத்துமணிகளும் பலவாகும்,
அறுபடை வீடுகளாம் தலங்களைப்பற்றி இந்நூல்.
"குன்றுதோ றாடல்பரங் குன்றலைவா யேரகஞ்சீர்
துன்றுபழ முதிர்சோலை தொகுமாவினன் குடியாய்த்'
(பா.எ.1)
எனப் பதிவு செய்துள்ளது. இதில் குன்றுதோறாடல் எனும் அமைவில் திருத்தணிகை சுட்டப்பெற்றுள்ளது.
தருமங்கள் செய்வதாலும் தவங்கள் பல இயற்றினாலும் முருகப்பெருமானின் திருநாமத்தை உச்சரிக்கத் தவறினால் முத்திப்பேறு முகிழ்க்காது என்பதனை,
தருமங்கள் பலசெயினும் தவந்தான் மிகச்செயினும்
முருகனென்று மொழிந்தீலரேல் முத்திநல மிழந்தவரே " (பா.எ.1)
என இந்நூல் அருமையாக எடுத்துரைக்கின்றது.

பிற சமயக் கதைகளைச் சிந்தை செய்யாமல் முருகப்பெருமானின் புகழைச் சொல்லித் துதிப்போர்க்கு எண்வகைச் சித்திகளும் எளிதில் வசமாகும் என்பதனை,
"கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா தனுதின புன்
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே (பா.எ.1)
என இந்நூல் கூறுகின்றது. இப்பாடலடியில் ''திருப்புகழை" என்னும் சொல்லாட்சி முருகப்பெருமானின் சிறந்த புகழை எனவும் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழை எனவும் நயமுற அமைந்துள்ளமை எண்ணத்தக்கது.
தணிகைப்பெம்மானே என்போர்க்குப் பொருள்,குலம், புவி, புகழ், அருள், அழகு, அறிவு முதலியன உரிமையாம் என்பது இந்நூலுணர்த்தும் மெய்ம்மையாகும். (பா.எ.14)

தணிகைத்தேவன் அணியுந் திருப்பூச்சு, வறியோரை வேந்தராக்கும், மண்ணோரை விண்ணவராக்கும், சினத்தோரை சாந்தராக்கும், அவத்தோரைத் தவத்தோராக்கும் என அழகுற எடுத்துரைக்கின்றது இந்நூல். (பா.எ.49)
தெய்வயானையை மணந்தது மட்டுமன்றி, தினைப்புனத்தில் விருத்த வேடம் பூண்டு வள்ளியை மணந்தவன்; மாமரமாக நின்ற சூரனை அழித்தவன்; திருமாலுக்கு மருகனானவன், உமையம்மையிடமும், கார்த்திகைப்பெண்களிடமும் பாலுண்டவன். வானவர்க்குக் குருவானவன் (பா.ஏ.65) என்றெல்லாம். முருகப்பெருமானின் பெருமைகளை இந்நூல் எடுத்து மொழிகின்றது.
வேலை என்னும் சொல்லை வேல்(வேல் + ஐ) வேலைக்கடல் என இரு
பொருள் காட்டுமாறு ஓரடியில் அமைத்து,
பிறழும் வேல்பிடித்து மென்றன்
பிறவி வேலை நீக்கிடாய் (பா.எ.74)
எனச் சுழலும் வேலைப் பிடித்தவனை வழிபட்டால், பிறவி வேலை (கடல்) யிலிருந்து அவன் காப்பான் என்பதை அழகுற நூல் உரைக்கின்றது.

கல்வி கற்றால், முருகனின் திருப்புகழையே நாடோறுங் கற்பதாக அது அமையவேண்டும்; இறந்தாலும் உடலம் பெருமானின் தலத்திலே பொருந்த வேண்டும் என்று பக்தி நிலையின் உயர் வெளிப்பாட்டை இந்நூல் மொழிகின்றது. (பா.எ.75)
இவ்வாறு மிகப்பல அருஞ்செய்திகளைத் தன்னகத்தே கொண்டு பக்தி நிலையில் நின்றும், இலக்கிய அழகுணர்வை வெளிப்படுத்தியும் இந்நூல் எழிலுறு படைப்பாக இலங்குகின்றது.

யாப்பமைதி
இந்நூல் கலம்பகம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. கலம்பகப் படைப்புகள் பல்வகை யாப்புகளிலும் பாக்களைப் பெற்றுப் பளிச்சிடுவது வழக்கம். இந்நூலும் அவ்வாறே அமைந்துள்ளது. இந்நூல் வெண்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கழிநெடில் ஆசிரிய விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், கலித்துறை, கலிவிருத்தம், கலித்தாழிசை, நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலிப்ப,. வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, சந்த விருத்தம் ஆகிய யாப்பு வடிவங்களில் பாக்களைப்பெற்று ஒளிர்கிறது.

நிறைவுரை
தணிகைவேலவனின் தனிப்பெருஞ் சிறப்புகளைச் சாற்றும் அழகிய இலக்கியமாக இப்பனுவல் திகழுகின்றது. இன்று கிடைத்தற்கரிதாக இந்நூல் உள்ளது. இந்நூற்பதிப்புக்கு அடிப்படையாக அமைந்தது. இந்நூலகத் தமிழ்த்துறையில் இடம்பெற்றுள்ள கையெழுத்துப் பிரதியாகும். இக்கையெழுத்துப்பிரதியும் இதுபோன்ற வேறுசில பிரதிகளும் அருட்செல்வர் உயர் திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் இந்நூலகத்திற்குப்பிரதிசெய்து கொள்வதற்காக அளித்த சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுதப்பெற்றவையாகும். அருட்செல்வர் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். இந்நூல் பருவ இதழ்ப் படைப்பு மற்றும் தனிநூல் வெளியீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் வெளிவர அனுமதி அளித்து, வெளியீட்டாளர் முகவுரை வழங்கிச் சிறப்பித்த தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரும் நூலக இயக்குநருமான உயர்திரு சி.கோசலராமன், இ.ஆ.ப., அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் நன்முறையில் வெளிவர ஆவன செய்த நூலக நிருவாக அலுவலர் திரு.சாமி.சிவஞானம் அவர்களுக்கும் நூலக வெளியீட்டு மேலாளர் திரு. அ. பஞ்சநாதன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். நூலைச் செப்பமாக அச்சிட்டளித்த சரசுவதி மகால் நூலக அச்சகப்பிரிவினருக்கும் இந்நூற்பணிகளுக்கு உதவிய ஏனை யோருக்கும் என் நன்றி.
சமய அன்பர்களும் இலக்கிய அன்பர்களும் இந்நூலைப் பயின்று மகிழ்வர் என நம்புகின்றேன்.

தஞ்சாவூர்       ச.திலகம்,
14-7-2001.       தமிழ்ப்பண்டிதர்.

------------------------------- ---------

தணிகைக் கலம்பகம்

நலம்பகமுன் னான்குடைய நற்றணிகை வேலோன்
கலம்பகத்தைப் பாடவழி காட்டுஞ் - சிலம்பகஞ்சேர்
வாலிபத்தி கண்டெதிர்ந்தோர் வன்மைதந்தோன் மைந்தனென்றும்
வாலிபத்தன் வாலிபத்தன் வந்து.

அரும்பத உரை:
இது விநாயகரைத் துதிக்கும் காப்புச் செய்யுள்.
நல் அம்பகம் - அழகிய கண்கள்; சிலம்பு - மலை; வாலிபத்தி - கிட்கிந்தை அரசனாகிய வாலியின் பக்தி; தந்தோன் - தந்தவனாகிய சிவபெருமான்; மைந்தன் - மகனாகிய வினாயகன்; வாலிபத்தன் - என்றும் வாலிபனாக இருப்பவன்; வாலிபத்தன் - தூய யானை முகத்தவன், வந்து பாட வழிகாட்டும் எனக்கூட்டுக.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
நீர்கொண்ட சடைமுடியோ எனற்றிவிழி களிற்பிறந்து
சீர்கொண்ட சரவணத்தின் செங்கமல மிசைவளர்ந்து
கார்த்திகையின் முலைப்பாலுங் கவுரிமுலைப் பாலுமுண்டு
ஆர்த்ததிரைக் கடலிடைச்சென் றசுரர்குலங் களைத்துனைத்துந்
தேவர்சிறை தனைமீட்டுத் தெய்வமடப் பிடிமணந்து
மூவர்தொழுந் திருத்தணிகை முதுகிரியி லெழுஞ்சுடரே!

இவை மூன்றுந் தரவு

தீராத பவப்பிணியின் றிருக்கனைத்தும் நீகடைக்கண்
பாராத போதொருவர் பாற்றுவது தானுன்டோ
வேராரும் பயிர்வாட்டும் வெங்கோடை விசும்பின்மழை
நீராரப் பெயினன்றி நீங்கிடுமா றெங்ஙனே.

பூமிமுத லண்டமெலாம் பொருந்தியிடுஞ் சராசரங்கள்
நீமனத்தி லொருநிமிட நினைக்கவளர்ந் தோங்கிடுமே
காமருவும் புனற்கறையிற் கருவுயிர்த்துச் சேய்மையுறு
மாமைதன்பார்ப் பைக்கருதி னன்றியது வளராதே.

தருமங்கள் பலசெயினுந் தவந்தான மிகச்செயினு
முருகென்று மொழிந்திலரேல் முத்திநல மிழந்தவரே
பிரமன்சங் கரன்மாயன் பினுந்தேவர் யார்க்குமுனைக்
குருவென்று நான்மறையுங் கூசாமற் கூப்பிடுமே.

இவை ஆறுந்தாழிசை.
உலகொரு நொடியினில் வலம்வரு மயிலினை
அலைகட லொடுமலை கெடவிடு மயிலினை
மணிகணில் கணிலென வறைதரு கழலினை
பணிமணி வெயில்விரி பலகிரி மருவினை
அடியொடு நடுமுடி வறிவரு மருவினை
பொடியணி யடியவர் புகழ்தரு முருவினை.

இவையா றடியராகம்
குன்றுதோ றாடல்பரங் குன்றலைவா யேரகஞ்சீர்
துன்றுபழ முதிர்சோலை தொகுமாவி னன்குடியாய்த்
தானவரை வேரறுத்துச் சயந்தனுறு துயர் நீக்கி
வானவரைப் புரந்துச்சி மங்கிலியந் தந்தளித்தோய்.
நாரணன்வா சவன்பரம னான்முகநால் வெலற்கரிய
சூரனுட றுணித்துமயில் கட்டுவா ரணஞ்செய்தோய்
பொருகாற்றி லலைகருகிற் பூதமிடர் செயுங்கீரன்
முருகாற்றுப் படையியம்ப முன்வந்து தோன்றினையே

மடமுனிந்து செந்தமிழை வளர்த்துமலை யத்திருந்த
குடமுனிக்குப் பேரின்பங் கொடுத்ததுநின் றிருவடியே
கருப்புகழாய் பிறசமயக் கதைகேளா தனுதினமுன்
றிருப்புகழை யுரைப்போர்க்குச் சித்தியெட்டு மெளிதாமே.

இவை ஆறும் இருமடித்தாழிசை
மாலைநீந்துநீ வேலையேந்துநீ
வாழ்வதாக்கு நீ தாழ்வுபோக்குநீ
மறைகளாயினை குறைகள்போயினை
வனநிலாவினை புனமுலாவினை
மதிநிறுத்தினை துதிபொறுத்தனை
மலமறுத்தனை நலமுறுத்தினை.

தொண்டர்கள் புகழ்தரு சுப்பிர மணிய
மண்டில மதிமுக வள்ளி நாயக
யுன்றிரு வடியை யுளந்தனி லிருத்திப்
பன்மலர் தூவிப் பணிகுவன் யானே
இறந்தும் பிறந்து மிருவினைக் கயிற்றில்
யாப்புறு முடலி னாசையைத் துறந்து
மன்பொடு கெழீஇ இன்னருள் புரிந்தும்
மேலாம் வாழ்வு பெற்றவர்
காலாற் பணிப்பதென் கைகளாற் செயலே.
இது சுரிதகம்
(அ - உரை.) நீர்கொண்ட சடை முடியோன் - சிவபெருமான். சரவணம் - சரவணப் பொய்கை; கார்த்திகை - கார்த்திகைப் பெண்டிர் அறுவர். கவுரி - உமாதேவி. தெய்வமடப்பிடி - இந்திரன் மகனாகிய தேவயானை. முதுகிரியில் எழுஞ்சுடர் - முதிய மலையாகிய தணிகைமலையில் விளங்கிச் சுடர் வீசும் முருகப்பெருமான்; திருக்கு - குற்றம், துன்பம். வெங்கோடை - வெம்மை மிகுந்த வேனிற்காலம் கடுமை. சராசரங்கள் - நடப்பனவும் நிற்பனவுமாகிய அறுவகை உயிரினங்கள். பார்ப்பு - குஞ்சுகள். ஆமை மனத்தால் நினைக்க குஞ்சுகள் கருவுயிர்க்கும், கருத வளரும். முருகு - முருகக்கடவுள். கூப்பிடும் - கும்பிட்டு வாழ்த்தும், துதிக்கும். அயிலினை - வேற்படையை உடையை, கழலினை - பாதங்களை உடையை. பலகிரி - பல மலைகள். பொடி - திருநீறு. தானவர் - அசுரர். சயந்தன் - இந்திரன் மகன்; சசி - இந்திராணி. சூரன் - பத்மாசூரன். வாரணம் - சேவல், மலயம் - பொதியமலை. மறைகள் - வேதங்கள். புனம் - தினைப்புனம். மலம் - ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள். மண்டிலம் - வட்டம். யாப்புறும் - கட்டுண்டிருக்கும். கெழீஇ - பொருந்தி.
----- ---------

வெண்பா
வேதாக மங்கள் மிருதிபுரா ணங்களெல்லாம்
தாதா வெனுந்தணிகைச் சண்முகவா - வாதா
பணிகடம்பை யஞ்சும் பரவை நிதம் பத்தாட்
கணிகடம்பை நீங்கு மலர்.
(அ-உரை) மருதி - ஸ்மிருதி. வேத விளக்க நூல்கள். தாதா - வள்ளல். (2)

கட்டளைக் கலித்துறை
அலரம்பை யேந்து மனங்கற்கு மைத்துன ரந்தணிகை
இலரம்பை மைந்தருக் குத்தூது கெல்லாம் விடும்பொழிற்
பலரம்பை யின்கனி மாங்கனி கோதிடும் பைங்கிளியே
நலரம்பை யாமெங்க ணங்கையும் வாருவ ணன்னெஞ்சமே.

(அ-உரை.) அலர் அம்பு --- மலர்க்கணை, அனங்கன் - மன்மதன். பல் அரம்பையின் கனி - வாழைக்கனி. அரம்பை - எம்முடைய மகள். வாடுவள் - தணிகைப் பெருமானை நினைந்து வாட்டமுறுகின்றாள் ஆதலின் தூது செல்வாய். இது செவிலி தன் மகள் வருத்தங்கண்டு கிள்ளையைத் தூது செல்ல வேண்டும் எனத் தூதுவிடும் அகப்பொருள் துறைப்பாட்டு. (3)
----- ---------

கழிநெடில் விருத்தம்
நெஞ்சமு ருக்கும் வஞ்சியர் களப
      நெடுமுலை யணைதர நினையே
நின்றிருத் தணிகை மலையணை தரற்கு
      நித்தலும் நினைத்திடல் வேண்டும்
வஞ்சகம் புரியு மவரலங் கார
      வறும்புகழ் வேண்டிலேன் வேண்டும்
வரம்பெறு மருண கிரிநினை முன்னாள்
      வழுத்தலங் காரமும் புகழுந்
தஞ்சகப் படைப்பின் றருக்கினா லணைந்துன்
      தாமரை மலர்ப்பதம் பணியாச்
சதுமுகன் சிரங்கள் குழிந்திடப் புடைத்துச்
      சகமெலா நொடியினிற் படைத்து
மஞ்சகஞ் சூழுஞ் வேங்கட வரையின்
      வந்தக லாதுவீற் றிருந்து
வள்ளியோ னரகி யுள்ளினோர்க் கருளும்
      வள்ளலே வள்ளிநா யகனே.

(அ-உரை) வஞ்சியர்-வஞ்சிக்கொடிபோலும் மகளிர். களபம் -- நறுமணச்சாந்து. அருணகிரி -- திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர். அலங்காரம் - கந்தரலங்காரமாகிய பாமாலை. புகழ் - திருப்புகழ்ப் பாடல். புடைத்து - குட்டி. மஞ்சு - வெண்மேகம். இப்பாட்டினுள் இந்நூலாசிரியர் திருவேங்கட மலையில் விளங்கும் தெய்வம் சுப்பிரமணியக்கடவுளே என்று குறிப்பிடுகின்றார். (4)
-- ---------

சுடறுரு மகத்திரு டுலையு மாறுபோ
லிடரிவை நினைப்பணிந் தேத்து வோர்தமக்
குடலுயிர் விரைமல ருரைய தன்பொருட்
டொடர்பினெங் கணுமுருந் தணிகைத் தோன்றலே.
(அ-உரை) சுடர்ஒளி இடரிலை - துன்பங்கள் இல்லை. (5)
-------------

நாயகனாகி நீயிருந் திடவு நாயக
      னிலாதவே சையர்போற்
றாயகட்டு தித்து மரித்திடுந் தேவர்
      தம்மையான் விரும்பிடத் தகுமோ
சாயகந் துரக்கும் வேடர்கள் புயத்திற்
      றமதுகட் சாயகந் துரந்து
தோயக முருக்கு மறத்தியர் பாடல்
      தொகுந்தணி காசலச் சுடரே.

(அ-உரை) அகட்டுதித்து - வயிற்றின்கண்தோன்றி. மரித்திடும் - இறந்துபோகும். சாயகம் - கணை - அம்பு. மறத்தியர் - குறப்பெண்டிர். (6)
-- ---------

அறுசீர்க் கழிநெடில் விருத்தம்
தோன்றிய வகையுங் காயந் துலைந்திடு வகையு மாவி
மூன்றெனு மலத்தி னாலே முழுவதும் யானென் றெண்ணிக்
கான்றசோ றெனவி டுத்தி காதலை யுலகத் தென்றா
னேன்றசீர்த் தணிகை வெற்பி னெழில்பெறு குமர வேளே
(அ-உரை) மூன்றெனும் மலம் - ஆணவம், கன்மம், மாயை என்னும்
மும்மலம். யான்- யான் என்னும் செருக்கு. (7)
- ---------

கழிநெடில் விருத்தம்
வேளின் கருப்புச் சிலைமலரே
      வேத னெழுதும் தலைப்பொறியே
மீளி நமன்கைப் பாசமே
      வேறுவேறு நீங்களெனை
நாளுந் துயர்செய் தலைத்தீர்கள்
      நான்போய்த் தணிகை வரையிலிவர்ந்
தாளும் பெருமான் றிருமுன்ன
      ரறைவே னெனைவிட் டகல்வீரே.

(அ-உரை) வேள் - காமவேள், மன்மதன், கருப்புச்சிலை - கரும்புவில். வேதன் - பிரமன். தலைப்பொறி - தலை எழுத்து(விதி). வரையிலிவர்ந்து - மலைமேல் ஏறிச்சென்று. ஆளும்பெருமான் - முருகப்பெருமான்.       (8)
--- ---------

வீர வாகுவை முதலிய வொன்பது
      வீரர்க்கு முன்றோன்றல்
பேர வாகுவை யூர்ந்திடு கரிமுகப்
      பிள்ளைக்குப் பின்றோன்றல்
ஆர வாகுவை யிரண்டினோ டிரண்டினோன்
      அருட்டணி கையினெஞ்சே
சேர வாகுவை யாம்பழி நீங்கிநற்
      சிவகதி பெறலாமே.

(அ-உரை) வீரவாகு - சிவனருளால் தோன்றிய ஒன்பது வீரர்களுள் முதல்வனாகிய வீரபாகு என்னும் கடவுள். கரிமுகப்பிள்ளை -- விநாயகக் கடவுள். ஆரவாகு - நீண்ட கைகள். குவையாம்பழி - குவியலாகச் சேர்ந்துள்ள பாவங்கள். சிவகதி - பிறவாத நிலை.       (9)
------ ---------

மறம்-விருத்தம்
மேலா மரசன் றூதனென
      விளம்பு மொருவ யாந்தணிகை
வேடன் றனக்கு வள்ளிதனை
      விரும்பிக் கொடுத்த வேடர்காண்
மாலா யெங்கள் குலமகளை
      வதுவை பேச நினைவிடுத்த
மன்னன் குருபத் தினியுடனே
      மருவுந் தூர்த்தன் றன்குலமோ
சாலா மடந்தை யுருவாகித்
      தாழ்ந்த காலி லாமுடவன்
தன்னைக் கூடி யொருகுரங்கு
      தனைப்பெற் றெடுத்தோன் சிறுகுலமோ.
வேலா மகத்தி லொருவீர
      னீரக் குறைந்த கரமுடையோ
னிழிபாங் குலமோ வெருவாம
      லியம்பாய் தியங்கி மயங்காதே.

(அ-உரை.) மாலாய் - மயங்கி, வதுவை - திருமணம், குருபத்தினி- தாரை; மன்னன் - சந்திர குலத்தவன். மறம் என்பது கலம்பக உறுப்புக்களில் ஒன்று. ஒரு மன்னர் வேடர் குலமகள் ஒருத்தியை விரும்பி மணம்பேசத் தூதுவரை அனுப்பியவிடத்து மறக்குலத்து வேடன் தன் குலப்பெருமையையும் மன்னனது குலச்சிறுமையையும் கூறித் தனது வீரந்தோன்ற மறுத்துக் கூறுதல். (10)
------- ---------

காதலா யொருமயிலிற் களித்தேறுந்
தணிகைவரைக் கந்தன் யார்க்கு
நாதனே யெனத்தெளிந்த வருணகிரி
நாதனுமுன் னவின்ற பாவை
யோதுவார் திருப்புகழென் றுலகினுள்ளோ
ரதற்குநிக ருண்டோ மற்றைச்
சாதலார் விண்ணவர்க டம்புகழைத்
திருப்புகழாய்ச் சாற்றி டாரே.

(அ-உரை.) யார்க்கும் நாதன் - தேவர்க்கும் மூவர்க்கும் மற்றெல்லார்க்கும் தலைவன். பாவை - பாக்களை, திருப்புகழ்ப் பாக்களை. (11)
------------- ---------

சாற்றுங் கோள்தென் றணிகையில்
      வேளோன் சரணத்தைப்
போற்றுங் கோள்புது மாமல
      ரிட்டுப் புகழ்மின்கள்
பாற்றுங் கோள்நும் பாலினடந்தார்
      பசிநோயை
மாற்றுங் கோளுல கத்தினி லோடு
      மனமன்றே.

(அ-உரை) வேளோன் - முக்க வேளாகிய இறைவன். சரணம் - திருவடி.
பாற்றுங்கோள் - (காப்பாற்றுங்கள்) பசி நோயை நீக்குங்கள். (12)
--- ---------

எழுசீர்க்கழி நெடில் விருத்தம்
அன்றுநில மன்றுபுன வன்றுகன லன்றுவளி
      அன்றுவெளி யன்று நவகோள்
துன்றுபுல னன்றுபொறி யன்றுமன மன்றுடரு
      வனறுமுயி ரன்று துகடீர்
குன்றுதொறு நின்றுசுரர் சென்றுதொழ வந்தவுணர்
      குன்றவயி லொன்று விடுநீ
தென்றணிகை யங்கிரியி னன்றுபர மன்செவிதி
      ருந்தமொழி கின்ற பொருளே.

(அ-உ.) நிலம், புனல், கனல், வளி, வெளி - என்று ஐம்பெரும் பூதங்கள், வளி - காற்று. வெளி - ஆகாயம். நவகோள்கள் - ஒன்பது கிரகங்கள். துகடீர்- குற்றம் நீங்கிய. சுரர் - தேவர்கள். செவி திருந்த மொழிகின்ற பொருள் - சிவனுக்குப் பிரணவ மந்திரத்தைக் கூறிய முருகக்கடவுள். (13)
---- ---------

வெண்பா
பொருளுங் குலமும் புவியும் புகழும்
அருளு மழகு மறிவுந்- தெருளுந்
தணிகையா யன்பருளந் தங்குவாய் வைவே
லணிகையா யென்பவர்க்கே யாம்.

(அ-உரை) வைவேல் அணிகையா - கூரிய வேலை ஏந்திய கையையுடைய முருகனே என்பவர்க்கு பொருள் முதலியவெல்லாம் வாய்க்கும். (14)
-------- ---------

தலைவி துன்பந் தலைவர்க்குப் பாங்கி உரைத்தல்
(கட்டளைக் கலித்துறை)
ஆங்கலைக் குங்கலைக் குஞ்சம்ப ராரி யடுகணைக்குங்
கோங்கலைக் குங்குங்கலை யத்தன தாளச்சங் கொண்டுவிடம்
போங்கலைக் குங்கலைக் குங்கணக் கில்லைப் பொருப்பர்கைவிற்
தாங்கலைக் குங்கலை மான்பாய் தணிகைச் சயிலத்தனே.

(அ - உரை.) ஆங்கு அலைக்கும் கலைக்கும் - கடலலைக்கும், திங்களின் கலைக்கும். சம்பராரி - மன்மதன். கணை - மலரம்புகள். கோங்கு அலைக்கும் - கோங்கமுகையினை வருத்தும். குங்கலையத்தனத்தாள் - குங்குமம் பூசிய தனத்தினையுடைய தலைவி. கணக்கில்லை - அளவில்லை. மலைவேடர்கள். கைவிற்கலைக்கும் கலைமான் - கைவில்லால் வெருட்ட வெருண்டோடும் கலைமான்கள். 'தணிகைச்செல்வன்பால் காதல்கொண்டு வருந்தும் தலைவியின் துன்பத்தை பாங்கி அத்தலைவனிடம் கூறுவதாக அமைந்த அகப்பாட்டுறைப் பாடல்.       (15)
------ ---------

சந்த விருத்தம்
சயில மோடியுந் தாழ்சடை நீடியும்
பயிலு மாதவத் தாற்பய னுண்டுகொல்
மயிலுஞ் சேவலுஞ் வாழ்தணி கைப்பரன்
செயலதி யாவுமெ னத்தெளி யார்கட்கே.

(அ-உரை) சயிலம் மலை; பயனுண்டுகொல் – பயனுண்டோ. தெளியார் - அறிந்து தெளியமாட்டாதார் (16)
--- ---------

தாழிசை விருத்தம்
கேடி றிருத்தொண் டெனக்களித்தான்
      கிளத்தென் சொலைத்தே னெனக்களித்தா
நாடுங் குருவாம் படிக்குவந்தா
      நாலாம் பதவிதரற்கு வந்தான்
நீடுந் தணிகைக் கருமயில
      னீங்கா தணிகைப் பொருமயிலன்
பாடற் கிசைந்து நடிப்பாரே.
      படர்நோய் வாய்மண் ணடிப்பாரே.

(அ-உரை) கிளத்தென்சொலை - கூறுகின்ற என் சொற்களை; தேனென – தேன்போல; களித்தான்- சுவைத்தான். நாலாம் பதவி - சாயுச்சியம் என்னும் பதவி;
பொரும் அயிலன் - போரிடும் வேற்படையை உடையவன் நடிப்பார் - சவந்து ஆடுவார்
வாய்மண் அடிப்பார் - நோயின் வாயில் மண்ணிட்டு நிரப்புவார் என்றவாறு. இப்பாட்டு இறுதி இரண்டடிக்காக அமைந்த பாட்டு       (17)
------ ---------

ஐயம் - கலித்துறை
பாரோ வமருல கோமல ரோமலை யோபணிக
ளுரோ விடந்தெரிந் தோதற் கரிதுவெய் யோன்கடவுந்
தேரோடும் வீதித் தணிகையஞ் சாரல் சொற்பொழில்வாய்
காரோ குழலயிற் கண்ணோ வென நிற்கும் காரிகைக்கே.

(அ-உரை) பார் – மண்ணுலகம்; அமருலகு (அமரருலகு) தேவலோகம் மலர் - இலக்குமி மலரில் உரைபவளாதலின் மலரோ என்றான். மலை - அர மகளிர் வாழும் மலை; பணிககளூர் – நாகலோகம்; வெய்யோன்- சூரியன்; கடவும் – செலுத்தும்; கார் – மேகம்; அயில் - ஐயம் என்பது மலைச்சாரலிற் காணும் ஒரு தலைவியைக் கண்டு அவள் அழகு சாயல் முதலியவற்றைக் கண்டு இவள் தெய்வமகளோ மானிட மகளோ என்று தலைவன் ஐயுறும் துறை       (18)
--- ---------

குறுங்கழிநெடில் விருத்தம்
காரிகையா ரெதிர்நோக்க மயிலாடக்
      கல்லருவி முழங் காட்டப்
பேரிகைபோன் முகிலார்க்குங் தணிகையாய்
      நீயிவரப் பெற்றி டாயேற்
தூரிகையா லெழுதருநின் னூர்தியினுங்
      கடிதுலகைத் துருவி யோடிச்
சாரிகையா மெனத்திரியு மெனதுமனப்
      பரிமாவைத் தடுப்பார் யாரே

(அ-உரை) கல்லருவி - மலையினின்று விழும் நீர் அருவி; முழவம்-
மத்தள முழக்கம்; பேரிகை – பெருமுரசு. முகில்- கார்மேகம்; ஆர்க்கும் - ஆரவாரம் செய்யும்
இவர்தல் - மேலேறிச் செலுத்துதல்; ஊர்தி- வாகனம்; ஈண்டுமயில். பரிமா – குதிரை; இது தலைவி தன் மனத்தடுமாற்றத்தைத் தலைவனிடம் கூறும் துறை.       (19)
---- ---------

வெண்பா
யார்கொ லுலகெல்லா மிமைக்குமுனஞ் சூழ்ந்திட்டான்
யார்கொ லழியாச்சூர னாவியட்டான் - யார்கொல்
வனக்குறவர் சூழ்தணிகை வாழ்வா னவனே
ஏனக்குறவு தாய்தந்தை யே.

(அ-உரை). கொல் - ஐயப்பொருள் தரும் இடைச்சொல்; ஆவி - உயிர் மடியச் செய்தவன்; அவனே - அம்முருகப் பெருமானே.       (20)
---------- ---------

கலித்துறை
தந்தனந் தந்தன மென்றிசை பாடச் சலசமுகைத்
தந்தனந் தந்தன மானார் நடஞ்செய் தணிகைவெற்பிற்
றந்தனந் தந்தன முங்கண்டி லாக் கந்தர் தாளெனக்கே
தந்தனந் தந்தன மென்றா ரினியொரு தாழ்வில்லையே.

(அ-உரை) சலசம் – தாமரை. தனந்தந்தன – நகிலாகத்தந்தன. தந்தனம் - தம் தனமும் எங்கள் நகிலையும் தந்தோம். தந்தனம் தந்தனம் - கொடுத்தோம் கொடுத்தோம்,
தாழ்வு – குறைவு.       (21)
------- ---------

அளவடி விருத்தம்
இல்லையும் பொருளையு மெமதென் றெண்ணுவிர்
வல்லைவந் திடர்செயு மறலிக்கென் செய்வீர்
செல்லையொன் றியமதிட் டணிகைச் செல்வனை
யொல்லைவந் தனைசெயா வுலகின் மாந்தரே

(அ-உரை) இல்லையும் - இல்லாளோடும் மக்களொடும் வாழ்வதையும்.
பொருளையும் - மற்றுமுள்ள செல்வங்களையும். வல்லை வந்து – விரைவாக வந்து; மறலி – எமன்; செல் – மேகம்; ஒல்லை - உடனே விரைந்து; செயா – செய்யாத.       (22)
---------- ---------

அம்மானை
மாந்தருடன் விண்ணோர் வணங்குதணி காசலனார்
போந்துதலை யோட்டிலிரப் போன்மகன்கா ணம்மானை
போந்துதலை யோட்டிலிரப் போன்மகனே யாமாகில்
காந்திவிடு மாடகப்பொற் காசுண்டோ வம்மானை
கல்லார வெற்படைந்தால் காசரிதோ வம்மானை

(அ-உரை) விண்ணோர் – தேவர்கள்; தலை ஓட்டில் இரப்போன் - பிரமன் தலை ஓட்டினை ஏந்தி யாசிக்கும் சிவன்; காந்திவிடும் - ஒளி வீசும்; ஆடகப் பொன் - உயர்ந்த ஆடகம் என்னும் பெயருடைய பொன்; வெற்பு – மலை; அம்மானை என்பது ஒரு வகை மகளிர் விளையாட்டு; அம்மானைக் காய்களைக் கொண்டு விளையாடுதல் அப்பொழுது ஒருத்தி ஒரு வினாவை எழுப்ப ஒருத்தி விடை சொல்வதாக அமையும் அகத்துறை புறத்துறைப் பாட்டு.       (23)
------- ---------

நேரடி வெள்ளை விருத்தம்
வெறி விலக்கு
மானைத் துடரா வொருவன் கொலைதா
னேனப் பகையம் புலியே யினிநீர்
கோனைத் தணிகா புரியிற் குலவுந்
தேனைக் கொணறீர் சிதையுந் துயரே.

(அ-உரை) மான் - கலைமான். ஒருவன் - வேடன். பகை அம்புலியே - (இத்தலைவிக்கு) பகை நிலாவே. தேனைக் கொணரீர் - தேனைக் கொண்டு வாருங்கள். சிதையும் துயர் - இவள் துன்பம் நீங்கும்.
வெறி விலக்கு என்பது தலைவியின் தாயும் செவிலியும் அவர் உடம்பு வேறுபாட்டையும் மெலிவையும் கண்டு இது தெய்வக்குற்றமோ என்று எண்ணி வெறியாடிக் குறி சொல்லும் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த எண்ணும்போது தோழி அதனை விலக்கி தலைவி மெலிவை நீக்குதற்கு வழி இது என்று கூறுதல். இஃதோர் அகத்துறை.       (24)
------ ---------

வெண்பா
துயரம் படையாவென் றோகையிடத் தேவண்
டயரம் படையாம லாள்வாய் - யுயரு
மணிகா சலம்புமுலை வள்ளிமண வாளா
தணிகா சலத்துறைவேந் தா.

(அ-உரை) என்தோகையிடத்தே - என் மகளிடத்தே. வண்டு அயர் அம்பு அடையாமல் ஆள்வாய் - வண்டு மொய்க்கும் மன்மதனுடைய மலர் அம்புகள் இவளை
அடையாமல் ஆட்கொள்வாயாக. மணிகாசலம்பும் - மணிமாலையும் காசுமாலையும் திகழும்.       (25)
---- ---------

காலம்
கழிநெடில் விருத்தம்
தாதுவளர் கொன்றையலர் தூற்றுங் காலந்
      தமை நினைக்கப் பிறருமலர் தூற்றுங் காலங்
கோதுபட மாமதியு முறுக்குங் காலங்
      குலவியயிண் மாமதியு முருக்குங் காலம்
பாதகவேள் வாங்கியவிற் கணம்பெய் காலம்
      பைங்குவளை யாகியவிற் கணம்பெய் காலம்
மாதணிகை யிறையகல மயலாங் காலம்
      வண்டணிகை யிறையகல மயலாங் காலம்.

(அ-உரை) அலர் - மலர். அலர் - மகளிர் தூற்றும் பழிமொழி. மாமதியும் - சிறந்த அறிவும். உருக்கும் - உருகச்செய்யும். மாமதியும் - பெரிய நிலாவும். முருக்குங்காலம் - அழகுசெய்யும் காலம், பாதகவேள் - துன்பம் செய்யும் மன்மதன். விற்கணம் - வில்லின் மலரம்புக் கூட்டம், பைங்குவளை விற்கணம் பெய்காலம் - பசிய குவளை மலராகிய விற்கண் அம்பு பெய்யும் காலம். இறை அகலம் மயல் ஆங்காலம். அகலம் - மார்பு. மயல் - மயக்கம். இறை அகல மயல் ஆம்காலம் - தலைவன் நீங்க வருந்தும் காயம். காலம்- வேனிற்காலம்.       (26)
------ ---------

இடையூறு கிளத்தல்
கலித்துறை
தாலிலை யாம்பணி காலும ணித்தணி காசலத்தின்
பாலிலை யாறிடைப் பாவைநல் லாயல்குற் பாற்கடன்மே
லாலிலை மீதுவை குந்தனங் காட்டினை யாங்கதற்கு
மேலிலை யாங்கயி லாயத் திருக்கை விளக்குகவே.

(அ-உரை) காலிலையாம் பணி - கால்களில்லாத பாம்பு. காலும்மணி - கக்கும் நாகரத்தினம். இலையாறு - வழியில்லை. தனங்காட்டினை -- மார்பகத்தைக் காட்டி நின்றாய். கயிலாயம் - இமையம் (இமையம் ஈண்டுக் கண்களை உணர்த்தும்) இடையூறு கிளத்தல் என்பது. இயற்கைப் புணர்ச்சியின் தலைவி நாணத்தால் கண்களை பொத்தி நிற்குமிடத்துத் தலைவன் உன் முகத்தைக் கைகள் மறைக்கின்றன. அவற்றை விலக்குக என வேண்டுதல். இதனை நாணிக் கண் புதைத்தல் என்றும் கூறுவர். இடையூறு - துன்பம். கிளத்தல் - சொல்லுதல்.       (27)
---- ---------

கலிவிருத்தம்
விளக்கி னொளிக்கு விருப்புறு விட்டில்
வளத்தி யைற்பெண் வனப்பை நினைத்தே
யிளைத்து நிலத்தி னிறக்க வழக்கோ
களித்ததி ருத்தணி கைப்பதி யானே.

(அ-உரை) விட்டில் - விட்டில் பூச்சிகள்; வனத்தின் - சோலையின்கண். வனப்பை- அழகினை; இறக்க - மடிந்து போக.       (28)
--- ---------

ஆசிரிய விருத்தம்
பதியே பிரமம் பசுநீயே பாச முடலாம் பாசத்தா
லுதியா மரியா வுழல்கின்றா யொருவிப் பாசம் பதியாக
மதிநீ யென்று மழியாத வகையீ தென்றாரணங்கள்
துதியே பெருகுந் தணிகைவரைத் தோன்று ஞான சூரியனே.
(அ-உரை) பதி – கடவுள்; பசு - உயிர் (ஆன்மா) பாசத்தால்; உதியா மரியா உழல்கின்றாய் - பாசமென்னும் கட்டினால் பிறந்தும் இறந்தும் துன்புறுகின்றாய். ஒருவி – நீங்கி; பதியாக - இறைவனொடு கூடி நிற்க; மதி – எண்ணுக. ஆரணங்கள் - வேதங்கள்.       (29)
- ---------

பாகனொடு கூறல்
கலித்துறை
சூரியன் தேர்ப்பரி பாகனுன் னாண்மைக்குத் தோற்றனனென்
றியாரு மறிதரப் பங்கனென் றேசுவன் யான்வலவ
நாரியின் கண்ணம்பு தூவத் தணிகைநன் னாட்டிலிந்தக்
கார்விரைந் தோடுமுன் றேர்விரைந் தோடக் கடாவிடினே

(அ-உரை) பாகன் - தேர் ஓட்டும் சாரதி; ஏசுவன் – பழிப்பேன்; நாரி – பெண்; கார் – மேகம்; கடாவிடின் - செலுத்துவாயானால்.
பாகனொடு கூறல் என்பது வினை முற்றி மீண்டு வரும் தலைவன் பாகனை விரைந்து தேரைச் செலுத்துமாறு கூறுதல்.       (30)
------ ---------

வருங்கள நாடி மறுகல்
அறுசீர் விருத்தம்
கடாவு மணிப்பொற் சவண்சுழற்றிக்
      காவற் புனத்தா லோவென்னும்
படாமென் முலையார் வாய்க்குரலும்
      பைந்தாட் டினையின் காய்க்குரலும்
விடாது கவர்ந்து தணிகையிற்போய்
      மீளுந் தொழிலே மிகுங்கிளிகா
ளுடாதுண் ணாத லிவனொடுங்காத்
      துறைந்தா ரெங்கே மறைந்தாரே.
(அ-உரை) கவண் - பறவை விலங்குகளை விலக்கக் கயிற்றில் வைத்துச் சுழற்றி வீசும் கல்லெறியும் கருவி; ஆலோவென்று - ஆலோலம் ஆலோலம் என்று; பைந்தாட்டினை – பசியதாள்களையுடைய; திணை குரல் – கதிர்கள்; உறைந்தார் - தங்கியிருந்தவர்.       (31)
---- ---------

வண்டுவிடு தூது
வெண்பா
மறையாக மங்கடொழு மன்னன் றணிகைக்
கிறையாக மின்றணைய வேண்டும் - துறையாகச்
செந்தேனுண் ணுந்தேனே சென்றேதூ தங்கவனைத்
தந்தேனென் றாவளிநீ தான்.

(அ-உரை) மறை - வேதம். இறையாகம் - தலைவனுடைய மார்பு. அணைய - கூட. செந்தேனுனுந்தேனே - செவ்விய தேனையுண்ணும் வண்டுகளே. தந்தேனென்று - கொண்டு வந்து கொடுத்தேன் என்று. ஆவளி - பறந்து சுழல்வாக. வண்டு விடுதூது என்பது தலைவனிடம் தன் காதலைச் சொல்லி வருமாறு வண்டினைத் தூது விடுவது.       (32)
----- ---------

இடைச்சியைப் பழித்தல்
கலிப்பா
தானந்தா னென்றவருந் சாற்றுதணி கைக்கிரிமேல்
வானந்தா னென்னுமிடை வல்லியிடை மெல்லியலே
மோனந்தா னாகாதுன் மோர்க்குடம்பின் பாகவிலை
நீநந்தா தேசொலிள நீர்க்குடமுன் னாம்விலையே.

(அ-உரை) வல்லியிடை - கொடிபோன்ற இடை. மோகனந்தானாகாது - நீ பேசாதிருத்தல் ஆகாது. மோர்க்குடத்தின் விலையைப் பின்பு கூறு என ஒரு காமுகன் கூறுவதாக அமைந்த பாட்டு. முதலாவதாக இள நீர்க்குடம் விலை என்ன என்று
கூறலாம்.
இடைச்சியைப் பழித்தல் என்பது கலம்பகத்தின் உறுப்பாக வரும் ஒரு துறை. இள நீர்க்குடம் - தனத்திற்கு உவமமாகக் கூறப்பட்டது.       33
---------- ---------

கலிவிருத்தம்
விலையி லாமணி மேவுந் திருத்தணி
மலையி னான்றனை வஞ்சர்தந் நோயெலாந்
துலையில் யாந்தொழு வோம்பின்பென் பார்கட
லலையி லாப்பொழு தாட நின் றார்களே.

(அ-உரை ) விளையிலாமணி என்றது - தணிகை முருகக் கடவுளை; ஆட நின்றார்கள் - முழுகி நீராட நின்றார்கள்.       34
---- ---------

விருத்தம்
இரதவாதம்
கள்ளுலாம் பூங்குவளை முப்போது
      முப்போதுங் கயத்துள் நாளும்
விள்ளுமால் வரைத்தணிகை இறைக்கடிமைச்
      சித்தர்யாம் மெய்யாய்க் கேள்நீ
கொள்ளிபோற் சுடும்பசிக்குக் கூழொருகை
      வாரப்பா குவலையத்தி
லுள்ளநீள் வரையனைத்து முருக்கைசேர்
      கனகமென வுரைப்போம் நாமே.

(அ-உரை) கள் – தேன்; கயத்துனாளும் - குளத்தில் தோன்றும், விள்ளும் – கூறப்படும்; இறை - கடவுள். கூழ்-உணவு. வாரப்பா - அப்பனே வார்ப்பாயாக. வரையனைத்தும் - மலைகளை எல்லாம். கனகம் - பொன். உரைப்போம் - செய்வோம். இரதவாதம் -இரசவாதம். கல்லையும் இரும்பு முதலியவற்றையும் பொன்னாகச் செய்யும் வித்தை, கலம்பக உறுப்புக்களுள் இது ஒன்று.       (35)
--------- ---------

தழைகொடு வினாதலிற் தலைவி கையுறை யேற்றமை
பாங்கி தலைமகற் குரைத்தல்
வெண்பா
உரைத்தா லுயிரெனவே யொற்றினாள் கண்ணில்
வரைத்தா மெனுமுலைமேல் வைத்தா - ளரைத்துருட்டித்
தின்னாளி தன்றிச் செயாததிலைத் தென்றணிகை
மன்னாநின் பூந்தழையெம் மான்,

(அ-உரை) வரை - மலை. செயாத நிலை - செய்யாததில்லை. பூந்தழை - பசுந்தழை, தலைவன் தன் காதலைப் புலப்படுத்தக் கையுறையாகத் தந்த தழையைத் தோழி தலைவியரிடம் அளித்த போது அவள் அதனைப் பெருவிருப்போடு வாங்கி மகிழ்ந்தமையைத் தோழி தலைவனிடம் கூறுவதாக வரும் ஓர் அகப்பொருட்டுறை. கையுறை ஏற்றல் - மகிழ்தல் எனப்படும். (36)
-------- ---------

ஊசல்-எண்சீர் விருத்தம்
மானவரும் வானவரும் வணங்கிப் போற்ற
      வரமுதவுந் தணிகைவரை வள்ளல் கூறும்
ஞானமறக் கலமிவரா வுயிர்கள் யாவும்
      நாடோறு நனிவிரும்பித் தாஞ்செய் கின்ற
வீனமுறு மிருவினையாந் திரைகள் வீச
      வில்வாறு பவக்கடலூ டலைவ ரென்னம்
பானலென விழிமடவீ ரிரண்டு பாலும்
      பாங்கியர்கள் நின்றாட்ட வாடி ரூசல்.

(அ-உரை} மானவர் - ஈண்டு மானுடர் என்னும் பொருளில் நின்றது. ஞானமரக்கலம் - ஞானமாகிய மரக்கலம். இவரா - செலுத்தி. ஈனமுறு இரு வினை - தாழ்வைச் செய்யும் இருவினைகள். திரைகள் - அலைகள். பருவக் கடல் - பிறவியாகிய கடல். பானல் - நீலோற்பவமலர். ஆடீர் ஊசல் - ஊஞ்சலாடுவீர்களாக. ஊசல் என்பது இக்கால வழக்கு. கலம்பக உறுப்புக்களுள் இதுவும் ஒன்று.       (37)
--------- ---------

கழிக்கரைப் புலம்பல்
மடக்குத்தாழிசை விருத்தம்
ஊச லஞ்சல மனத்தியே மிகவு
      மூச லஞ்சல மனத்தியே
யொருவி லஞ்செய்கரும் பெண்ணையே
      மதனொருவி லஞ்செய்கரும் பெண்ணையே
வாசம் வீழ்ந்தமலைத் தென்றலே யிடையின்
      வாசம் வீழ்ந்தமலைத் தென்றலே
வளைமுன் போக்கிய திருக்கையே கழலும்
      வளைமுன் போக்கிய திருக்கையே
பாச மாங்கொடியே நெய்தலே புணரும்
      பாச மாங்கொடிய நெய்தலே
பார்ப்பி னாண்டரு மினாரையே யினியென்
      பார்ப்பி னாண்டரு மினாரையே
காச ரும்பியவம் புன்னையே பிறர்சொல்
      காச ரும்பியவம் புன்னையே
கந்த னோடிவரத் தணிகையே விரகங்
      கந்த னோடிவரத் தணிகையே.

(அ-உரை) ஊஞ்சல் – ஊஞ்சல்; மனத்தியே, - தடுமாற்றமில்லாத மனத்தை உடையவளே! ஒரு வில் அம் செய்கரும் பெண்ணையே - நீங்காத வயலிடத்துள்ள பனை மரமே. மதன் ஒரு வில் செய்யும் அம் செய் கரும்பு எண்ணையே - மன்மதன் ஒரு வில் செய்யும் அம்பின் செயலை எண்ணுவாயாக. திருக்கையே - குற்றத்தையே வளைமுன் போக்கியது இருகையே. கொடிய நெய்தல் - நெய்தல் நிலம். புணரும்பாசமரம் கொடிய நெய்தலே - ஒன்றோ டொன்று பிணைந்த கொடியை உடைய நெய்தல் மலர்க்கொடியே. பார்ப்பின் நாண் தரும் மினாரையே - பார்த்தால் நாணந்தரும் மின் போன்ற பெண்டிரையே; காசரும்பியவம் புன்னையே - காசு போன்ற மலர்கள் அரும்பிய புன்னை மரங்களே. பிறர்சொல் காசரும்பிய வம்பு உன்னை - பிறர் சொல் குற்றம் அரும்பிய புதுமை உன்னையே. கந்தன் ஓடிவரத் தணிகையே - தணிகை மலை. விரகங் கந்தனோடு கூடிவரத் தணிவாயாக.       (38)
-- ---------

அறுங்கழிநெடில் விருத்தம்
தணிகையென் றொருகா லோதிற் சாலோக பதவி யெய்துந்
தணிகையென் றிருகா லோதிற் சாமீப பதவி சாருந்
தணிகையென் றுரைக்கின் முக்காற் சாரூப நண்ணுஞ்செய்வேள்
தணிகையென் றுரைக்கி னாற்காற் சாயுச்சிய மடைவர் தாமே.

(அ-உரை) ஒரு காலோதின் - ஒருமுறை கூறினால். சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம் என்பன படிப்படியாக இறைவனை அடையும் பதவிகள்.       (39)
---- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
தாங்குமயில் வாகனமோ வுமைகுறங்கோ
      கந்தமா தனமோ தீமை
நீங்குமறை மின்சிரமோ வல்லிபடர்
      தினைப்புனமோ நிலமி தின்னும்
ஓங்கிவளர் பன்னகமோ வென்னகந்தா
      னெந்தாளு மொழியா துற்றாய்
தேங்குபுனற் சடைமுடியோ னளித்ததிருத்
      தணிகைவரைத் தேவர் தேவே.

(அ-உரை) உமை - உமாதேவியார். குறங்கு – துடை; கந்தமாதனம் - ஒரு மலைநாடு, மறையின் சிரம் - வேதத்தின் முடி. வல்லி - குறமாதாவாகிய வள்ளியம்மை. பன்னகம் - பாம்பு. என்னகம் - எனது நெஞ்சம்.       (40)
------ ---------

கலித்துறை
தேவேந் திரனுதவுந் தெய்வ யானைத் திருக்கணவ
கோவேந் திரவி முடிசேர் தணிகைக் குமரவொரு
மாவேந் திரமென வல்வினை யாலிங்ஙன் வந்துதித்துச்
சாலேந் திரமென நின்திரு நாமத்தைச் சாற்றிலமே.

(அ-உரை) உதவும் - மகளாகப் பெற்று வழங்கும். இரவி முடி - சூரியன் உச்சி.
      (41)
-- ---------

புயவகுப்பு
இலகார முத்தினொடு மன்னியொளிர் கின்றன
      விசைநீடி யெத்திசையு நண்ணிவசை சிந்தின
பலதான வக்கொடியர் வென்னிடமு னிந்தன
      பயனாகு நற்புலவர் பன்னுகவி யொன்றின
மலர்நீல முப்பொழுது முன்னுறவ ணிந்தன
      மகமேரு வெற்புமுத லெந்நகமு மஞ்சின
தலமேழி ரட்டியுறு மன்னவர்பணித்தன
      தணிகாச லக்கடவுள் பன்னிருபு யங்களே.

(அ-உரை) இலகாரம் - இலங்குகின்ற மாலை. விசை - வேகம். நண்ணி - நெருங்கி.
தானவக்கொடியர் - அசுரர்களாகிய பொல்லாதவர்கள். வென்னிட - புறமுதுகு கொட்டித் தோற்றோட. முனிந்தன - சினந்தன. பன்னுகவி - கூறிய பாக்கள், மேருவெற்பு – மேருமலை. புயவகுப்பு என்பது தலைவனின் புஜங்களின் வலிமையையும் வெற்றி முதலியவற்றையும் வகுத்துக் கூறும் ஒரு கலம்பக உறுப்பு.       (42)
---- ---------

அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
மேகத்தோடு கூறல்
புயலினங்கா ளென்மீது பழியிலையா
      தலினுமக்குப் புகன்றேன் முன்னர்
வயலினமார் தணிகையைச்சூழ் றுல்லையினீ
      ரெனக்குமுன மருவு வீரேல்
துயருறுமோர் கொடியிடையாற் பல்மினும்போ
      மிருவில்லாற் றுலையு மோர்வில்
பயமுறுமோ ரிரண்டம்பா னீர்கொடுபோ
      மம்பெல்லாம் பறிபோ மன்றே.

(அ-உரை) புயலினங்கள் - மேகக் கூட்டங்கள். புகன்றேன் - சொன்னேன்.
வயலினமார் - வயல் கூட்டம் நிறைந்த. மருவுவீரேல் - செல்வீராயின். பலமினும்போம் - பல மின்னல்கள் போய்விடும். இருவில் - கண்களின் புருவமாகிய வில் இரண்டு. தொலையும் - தோற்கும். ஓர்வில் வானவில்லாகிய ஒரு வில். இரண்டம்பு - கண்களாகிய இரண்டு அம்புகள். அம்பெல்லாம் மழைத்தாரைகளாகிய அம்புகளெல்லாம். பறிபோம் - அழியும். மேகத்தோடு கூறல் என்பது தலைவி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமையும் ஒரு கலம்பக உறுப்பு.       (43)
---- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
அன்று கார்வா தனைதவிர்க்கும்
      அசுரர் குலம்வே ரறவடர்க்கும்
குன்று பொடியாம் படிதுளைக்கும்
      குகையுட் படுங்கீ ரனைவிடுக்கும்
என்றும் அடியார் உளத்திருக்கும்
      இரவி சதகோ டியிற்சிறக்கும்
மன்றல் கமழுந் திருத்தணிகை
      வரதன் குடங்கைத் தனிவேலே.

(அ-உரை) சுரர்- தேவர்கள். வாதனை - துன்பம். அடர்க்கும் - கொல்லும், குன்று - மலை. பொடியாம்படி - துகளாகும் வண்ணம். விடுக்கும் - விடுதலையாக்கும். இரவி - சூரியன். சதகோடி - நூறுகோடி. மன்றல் - நறுமணம், வேல் விருத்தம் - முருகனது வேலாயுதத்தின் ஆற்றலைச் சிறப்பித்துக் கூறும் விருத்தப்பாடல்.
      (44) ----------------

வெண்பா
வேலேந்துங் கையான் வியன்றணிகை யண்ணலிரு
காலேந்துங் கைகளே கைகளவி - னூலேந்து
நன்னாவே நாளவனை நாடுமன மேமனமென்
றன்னான் மறைபகரு மால்.

(அ-உரை) இருகால் - முருகன் திருவடிகள். நூல் - திருப்புகழ் முதலிய முருகனைப் பற்றிய நூல்கள். பகரும் - கூறும். ஆல் – அசை.       (45)
---------

அகவல்
மாலயன் றொழுதிடு மாலயம் பலவினு
மேவிய சிவமைர் வெள்ளிமால் வரையினும்
மந்தமா ருதந்தவழ் கந்தமா தனமுங்
கருப்பரங் குன்றிடு திருப்பரங் குன்றமும்
நந்திலம் படுபனைச் செந்திலம் பதியுந்
தாவினன் குடியுறு மாவினன் குடியும்
மருவே ரகங்கொளுந் திருவே ரகமுந்
துன்றுதோ றாடல்செய் குன்றுதோ றாடலு
மழைமுதிர் சோலைசூழ் பழமுதிர் சோலையு
மணிகையார்ந் தருவிதாழ் தணிகைமால் வரையு
மற்றுள வரையினும் வாழ்தரு முருகா
வீறு மதிநிக ராறு றுமுகவ
மூறிதழ்க் கமல நேரா றிருவிழிப்
பன்னிரு வரைநிகர் பன்னிரு புயவ
கன்னிய ரிருவர் கலந்தணை மார்ப
வறுசமை யத்தரு முறுசமை யத்த
தேவ தேவநின் றிருவடி பணிகுவன்
குழற்சை வலமுங் குலவுகட் குவளையுந்
திருமுகக் கமலமுஞ் செவ்வாய்க் குமுதமுந்
துணைச்செவி வள்ளையுந் துவரிதழ்ப் பவளமுங்
கந்தரச் சங்கமுங் கவின்றவன் முத்தமும்
உந்தியஞ் சுழியும் ஒளிர்தன வெற்பும்
அருகிடைக் கொடியும் அல்குற்பை நாகமும்
முழந்தா எலவனு முன்கால் வராலும்
பஞ்சடி யாமையும் பரந்திடு மாதர்
அழகெனும் இனியமெய் யாங்கட வழுந்தி
இருவினைத் திரைகள் பொருதழித் தலைப்ப
விரகக் கொடுவளி யரிதெழுந் தெரியக்
காமன் விடுங்கணைக் கராவுமங் காப்பத்
திகைத்திடு வேனைநின் செங்கையாற் பற்றி
யெடுத்தருட் புணைசேர்த் திகலற நடாத்தி
யற் கடற்கே செலு மாற்றொடு புணரிய
விக்கரை மருவா தென்னைநா தாந்தமெ
னக்கரை மேல்விடுத் தானாஅ
மெய்க்கம லக்கழல் வீடுதந் தருளே.

(அ-உரை) மால் - திருமால். அயன் - பிரமன், வெள்ளிமால் வரை - கைலாயமாகிய பெரிய மலை. மந்த மாருதம் - தென்றற்காற்று. கந்தமாதனம் - முருகன் விளங்கும் மலைநாடு; கருப்பரம் குன்றிடும் கருவில் - பிறத்தலைக் குன்றச்செய்யும். நந்து - நத்தைகள். தாவினன் குடி - தாஇல் - நன்குடி. தா - குற்றம். இல் - இல்லாத. ஆவினன் குடி - பழநித்தலம். மழை மேகம் - பெய்யும் மழை. அணிகை - அணிதல். வரை - மலைகள். மதி நிகர் - முழு நிலாவை ஒக்கும். ஆறிருவிழி - பன்னிரண்டு கண்கள். புயவ - புஜங்களை உடையவனே. கன்னியர் இருவர் - வள்ளி தேவயானை. அறுசமயம் - கணாபத்யம் முதலிய ஆறு சமயங்கள், உறும் - வந்து பொருந்தும். குழல் சைவலம் - மயிர்க்கற்றையாகிய பாசி. கட்குவளை ― கண்ணாகிய குவளை மலர். வள்ளை - வள்ளைப்பூ. துவரிதழ் - சிவந்த வாயிதழ். கந்தரம் - கழுத்து. கவின்ற - அழகிய. தனவெற்பு - தனங்களாகிய மலை. அலவன் - நண்டு, வரால் - காதல் வேட்கை. வளி - காற்று. அரி - நெருப்பு. அராவும் அங்காப்ப - பாம்பும் வாய்திறக்க. அருட்புணை - அருளாகிய தெப்பம்; இகல் - பகை, மாறுபாடு. அற்கடல் - இருட்கடல். நாதாந்தம் - நாதமுடிவு. ஆனாது - நீங்காமல், வீடுதந்தருளே - முத்தியாகிய வீட்டினைத் தந்தருள்வாயாக.       (46)
--- ---------

கட்டளைக் கலித்துறை
அருளார் கலியளித் தென்னைமின் னார்கருப் பாசயத்தி
னிருளார் கலிதவிர்த் தாளுந் தணிகை யிறைவர்தந்தே
ருருளார் கலித்த தவரும்வந் தார்தந்த வும்பன்மிசைப்
பொருளார்கல் யாணமுஞ் செய்வதுண் டாநமர் பூங்கொடியே.

(அ-உரை) அருளார்கலி - அருளாகியகடல். மன்னார் - பெண்டிர். இருளார்கலி - இருட்கடல். தவரும் - தவசியரும். உம்பல் - வெள்ளை யானை. கல்யாணம் - திருமணம்.       (47)
-- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
கொடிக்குரம் பையிலுற் றாலுங்
      குயிற்குரல் கொடிக்குண் டாமோ
மிடிக்குடம் பான வென்னுண்
      மேவினு நினையான் காணேன்
கடிக்குடங் கைசேர் நெல்லிக்
      கனியின்ஞா னத்தை வேணி
முடிக்குட முனிவன் காதின்
      மொழிதிருத் தணிகை வேந்தே.

(அ-உரை) கொடி - காக்கை. குரம்பை - கூடு. குயிற்குரல் - குயிலின் இனிய குரல் கொடிக்குண்டோ காக்கைக்கு உண்டாமோ? மிடி – வறுமை, துன்பம். கடிக்குடங்கை - கடிய உள்ளங்கை. வேணி - சடை. குடமுனிவன் - அகத்திய முனிவன்.       (48)
- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
வேந்த ராக்கும் வறியோரை
      விண்ணோ ராக்கும் மண்ணோரைச்
சாந்த ராக்குஞ் சினத்தோரைத்
      தவத்தோ ராக்கு மவத்தோரைக்
காந்த மீர்க்கு மிரும்பெனவென்
      கருத்தை யடியா ரடிகூட்டுஞ்
சேர்ந்த வாழ்க்கைத் திருத்தணிகைத்
      தேவ னணியுந் திருப்பூச்சே.

(அ-உரை) வறியோரை வேந்தராக்கும் - மண்ணோரை விண்ணோராக்கும்;
சினத்தோரை சாந்தராக்கு - சாந்தர் - பொறுமையுடையோர். அவத்தோரைத் தவத்தோராக்கும். அவம் - வீண். திருப்பூச்சு - திருநீற்றுப்பூச்சு.       (49)
---------- ---------

தாழிசை விருத்தம்
பூசலை யுற்றாய் சங்கணி யுற்றாய் பொறியற்றாய்
வாசமு மற்றா யன்னமு மற்றா மரைமொட்டே
யாசிலெ ழுத்தா றார்தணி கைப்பா லமர்வேட்டுப்
பாசறை யுற்றா ராசையு னக்கோ பகராயோ.

(அ-உரை) பூசல் - சிறுசண்டை, பகை. சங்கணி -- சங்தாகியகலன். பொறி - மெய்ம் முதலிய ஐம்பொறிகள். அன்னம் - உணவு. பொறி - வண்டு. அன்னம் - அன்னப்பறவை,
அமரர் - போர்.       (50)
----- ---------

கலித்துறை
பகலோ டிரவற்ற விடந்தனைப் பாவி யேன்கண்
டிகளார் மலமற் றிருக்கும்வகை யென்று சொல்லா
சகமூரு மென்னெஞ்சப் பரியொடு தாவின் மஞ்ஞை
சுகமூர் தணிகைக் குறமாதினைக் கள்ளி யானே.

(அ-உரை) இகலார்மலம் - பகை செய்யும் மும்மலங்கள். என்று - எந்நாள்.
சகம் -- உலகம். பரி - குதிரை. மஞ்சை- மயில். (51)
---- ---------

இரட்டையாசிரிய விருத்தம்
கள்ளியின் மலரார் கிள்ளிமே லணிவார்
      காஞ்சிரங் கனியையார் நுகர்வார்
கரும்பெனத் தழைபேய்க் கரும்பையார் கறிப்பார்
      கருங்கட னீரையார் குடிப்பார்
உள்ளினங் கலைபோல் வெள்ளிபொன் மலையாய்
      ஓங்குறத் தாங்கிவாழ்ந் திடினும்
உற்றவர்க் குதவா உலோபர்வந் திருவை
      உலகிடத் தெவர்விரும் பிடுவார்
கொள்ளியின் மலரு மள்ளிதழ்க் காந்தட்
      குலங்களை யருக்கனும் மதியுங்
கோளரா வினமென் றஞ்சிநா டோறுங்
      குலவரை யருகிலே நடக்கும்
தள்ளிய தணிகைப் பதியினி லடைந்தோர்
      தேடியே காசெலா நொடியில்
தெட்டியே பறித்தோர் பட்டியண் டயத்திற்
      சேர்த்திடுஞ் செட்டியா னவனே.

(அ - உரை) ஆர் – யார். கறிப்பார் – மெல்லுவார். ஓங்குற – பெருக்கமுற. உலோபர் - கஞ்சமனம் படைத்தவர். திரு – செல்வம். கொள்ளியின் மலரும் - நெருப்பைப் போலப் பூக்கும். அருக்கன் – சூரியன். மதி – சந்திரன். கோளரா - இறையைக் கவ்விக்கொள்ளும் பாம்பு. வரை - டிலமலை செட்டி என்ற முருகப் பிரானை.       (52)
---------- ---------

கலித்துறை
யானே யவனவன் யானே பெனக்கொண் டிருந்துமலன்
தானேபன் மாயங்கள் செய்தே யொளிக்கிற் றடுப்பவர்யார்
மாதேய மாகிய நெஞ்சே தியங்கி மயங்குவ தென்
கானேய் கடம்பன் தணிகா சலன்செயல் கண்டனமே.

(அ-உரை) தியங்கி – திரிபுற்று. கான் – காடு. கடம்பன் - கடம்ப மரத்தினை உடைய முருகன். கண்டனம் - கண்டோம்.       (53)
-------- ---------

எண்சீர் ஆசிரிய விருத்தம்
கண்டமலை பயத்தாரும் பண்டமலை பயந்தாருங்
      கருந்திணைமா வேற்றாரும் வருந்தினைமா வேற்றாருந்
தண்டலையா ரானாரும் விண்டலையா றானாருந்
      தானவர்நா ளியாரும் வானவர்நா டளியாருங்
கொண்டகல்லா ரத்தாரும் விண்டகல்லா ரத்தாருங்
      குலவுமுக மாறாரும் புலவுமுக மாறாரும்
புண்டரும் மயிலாரும் மெண்டரும் மயிலாரும்
      பொருத்தணிகை வரையாருந் திருத்தணிகை வரையாரே.

(அ - உரை) கண்டு - அமலை பயந்தாரும். அமலை – பார்வதி. பயந்தார் – பெற்றவர். பண்டமலை பயந்தாரும் -- பண்டங்களாகிய மலையை வழங்கியவரும். கருந்திணைமா ஏற்றாரும் - தினைப்புனத்தில் கரிய யானையை ஏற்றவரும். வருந்தினைமா வேற்றோரும் - வந்ததினை மாவை ஏற்றாரும். தண்டலையார் - அழகிய குளிர்ந்த சோலை சூழ்ந்த ஊரினர். தண்டலை என்னும் ஊர். விண்தலை ஆறு ஆனாரும் -தலை ஆறு உடையவரும். தானவர் – அசுரர். அளியார் – அருளாதவர். வானவர் – தேவர். அளியார் - தந்து கருணை செய்தவரும். கல்லாரம் ஆறாரும் - விளங்கும் ஆறு முகத்தினை உடையவரும். புலவு முகம் மாறாரும் - போரில் புலால் முக வேலினை மாறாதவரும். புண் தரும் அயலாரும் - புண்ணைச் செய்யும் வேலாயுதத்தினை உடையவரும். எண்தரும் மயிலாரும் - எண்ணந்தரும் மயில் வாகனத்தை உடையவரும். பொருத்து அணிகை வரையாரும் - அணிகளை அணிதலை நீக்காதவரும். திருத்தணிகை வரையாரே - திருத்
தணிகை மலையிருப்பவரே.       (54)
------ ---------

வெண்பா
வரையாய் தணிகை வரையா யிவளைப்
புரையாகு நீயிரவிற் போந்தாற் -கரைகாணா
மின்னிடையும் பொய்யென்பர் வில்வேடர் சேமித்த
வென்னிடையும் பொய்யென்ப ரே.

(அ-உரை) வரையாய் – மணந்து கொள்வாயாக. திருத்தணிகை மலையாய் இவளை - இம்மங்கையை. புரையாகும் - தீமையாகும். கரை காணா மின்னிடையும் - அளவற்ற மின்னலையும். என்னிடையும் - என்னுடைய மருங்குழலும். பொய் என்பர் - இல்லை என்பர்.       (55)
------ ---------

வாமம் - விருத்தம்
பொய்யிவறு சமையங்கட் கிறையா னென்னப்
      பொருந்தாறு முகம்படைத்த தணிகை வேந்தன்
கையிலகு சத்திசம யத்திற் கேற்கும்
      கள்ளுடன்மாங் கிசமெனவே கருதி யன்றோ
செய்யசிவன் றிருப்பனங்கா டகலா துற்றான்
      திருமாலுங் குடமுகந்தான் மதன்மீ னேற்றான்
ஐயனொடு புரந்தான்வா ரணம்வ ளர்த்தார்
      அயனுமரைப் பங்கயமேல் விழைவுற் றானே.

(அ-உரை) பொய் இவறும் - பொய்மையை நீங்கும். இறை – கடவுள்; கையிலகு சத்தி - கையில் விளங்கும் சக்தி. கள் – மது; மாங்கிசம் - புலால். திருப்பனங்காடு - ஒரு தலம். குடமுகந்தான் - குடக்கூத்தாடுதலை உவந்தான். மின் ஏற்றான் - மீனக்கொடியை ஏற்றான். புரந்தரன் - இந்திரன். அயன் - பிரமன். மரைப்பங்கயம் - தாமரை மலர், விழைவு - விருப்பம்.
வாமம் - கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.
வாமம் - சக்தி மதம்.       (56)
----- ---------

கொற்றி
நெடில் விருத்தம்
உற்றவ ருக்கரு ணற்றணி கைப்பதி யூடேகு
மற்றிவள் கொங்கை நகக்குறி யும்பிறை வகிரும்போல்
நெற்றி யிடுந்திரு நாமமு நீவிநெ டுஞ்சூலங்
கொற்றியெ னுந்திரு நாமமு நீலிகொ ளும்பேரே.

(அ-உரை) உற்றவர் - வந்து வழிபடுவோர். நகக்குறி - நகத்தால் கீறிய வடு; வகிர் - தவை வகிடு. திருநாமம் - நெற்றியிலிடும் வைணவக் குறி. கொற்றி - போரில் வெற்றியை விளைவிப்பவள். கொற்றி என்பது கலம்பக உ றுப்புகளுள் ஒன்று, திருநாமம் இட்டுக் கொண்டு சூலம் ஏந்தி ஆடுபவள் கொற்றி எனப்படுவாள்.       (57)
------- ---------

பிச்சியார்
கட்டளைக் கலிப்பா
பேர்பெருந்தணி கைப்பொருப் பிச்சியார்
      பெண்க ளேச நடந்திடும் பிச்சியார்
ஏர்கொள் வீடெங்கு மேற்பர் பதத்தையே
      இசையுங் கஞ்ச மிவர்தம் பதத்தையே
வார்த ருங்குழ லாமஞ்சு வர்க்கமே
      வந்த ணைந்தவர்க் காமஞ்சு வர்க்கமே
சீர்கொள் பூதிமெய் யென்றுந் தரிப்பரே
      செப்பும் வேடங்கள் மற்றுந் தரிப்பரே

(அ-உரை) பொருப்பிச்சி - மலையில் வாழ்பவள். பிச்சியார் - பிச்சை ஏந்தும் வேடமணிந்தவள். ஏற்பர் பதத்தையே - பிச்சையாக ஏற்பார் சோற்றினை. இசையும் கஞ்சம் இவர்தம் பதத்தையே - இவர்தம் பாதங்களை ஒக்கும் தாமரை. குழல் - கூந்தலிடும் கொண்டை. அஞ்சுவர்க்கம் - ஐவகை வந்து அணைந்தவர் காமம் சுவர்க்கமே. பூதி - திருநீறாகிய விபூதி; தரிப்பர் - இட்டுக்கொள்வார். வேடங்கள் மற்றும் தரிப்பர். வேறு வேறு வேடங்களையும் தாங்குவார். பிச்சி என்பது சைவ சமயச்சின்னங்களை அணிந்து பிச்சை ஏற்கும் வேடமிட்டு ஆடுபவளைக் குறிக்கும். கலம்பக உறுப்புகளுள் ஒன்று.       58
----------- ---------

எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
தரித்த சக்க ரத்தை யேல தனது மார்ம தாணியாய்ப்
பொருத்தி மாய னோட வன்று பொருது தாரு கன்றலை
யரைக்க ணத்தி லற்று வீழ வங்கை வேலெ றிந்தவன்
திருத்த ணிப்பொ ருப்பி னின்ற தேவ னெங்க டேவனே.

(அ-உரை) சக்கரம் - சக்கரப்படை. மதாணி - மார்பணி. மாயன் - திருமால். பொருது - போரிட்டு. தாருகன் - ஓர் அசுரன். இற்றுவீழ - வெட்டுண்டு வீழ. வேல் எறிந்தவன் - முருகப்பிரான்.       (59)
--------- ---------

சிந்தடி விருத்தம்
தேவராலுந் திருத்தணி கேசனைப்
பூவறாவடி போற்றிப் பணிகலாப்
பாவராலைப் படுகரும் பென்னவே
யாவர்மாதர்த மல்குற் புழைக்கணே.

(அ-உரை ) பூவறாவடி - மலர்கள் நீங்காத பாதங்கள். பாவர்- பாவமுடையவர். ஆலைப்படுகரும்பு - ஆலையில் இட்ட கரும்பு. ஆவர்- ஆவார்கள்.       (60)
---------- ---------

எண்சீர் ஆசிரிய விருத்தம்
புழைக்கை யானையோர் பார்வை யாக்கிமுன்
      போத வேவிடுத் தாத ரத்துடன்
தழைத்த கான்மனும் வல்லி யங்குசத்
      தான மாவிரண் டனையக் கண்டுவந்
திழைத்த மாதவத் தெய்வ யானைசே
      ரெழிற்பு யங்களாந் தறியிற் பூட்டினான்
மழைக்க ணங்களார் தணிகை வேடனான்
      மைத்தி றத்தையார் புகல வல்லரே.

(அ-உரை) புழைக்கை - துளையுடைய துதிக்கை. ஆதரம் – அன்பு; தழைத்த - செழித்த. கான்மனும் - (கால்மன்னனும்) காற்றரசன் (வாயுதேவன்) தறி - யானைகட்டும் முளை. புகலவல்லார் - சொல்லவல்லவர். (61)
---------- ---------

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
வல்லைவரு மொருமாவி லரைமாவின்
      மேலிருகால் வைத்தான் மற்றுஞ்
சொல்லுமரை மாலையமர் முந்திரிகை
      மேல்வைத்தான் றோகை யென்றும்
வெல்லுறுங்குக் குடமென்று மாங்கதற்குப்
      பெயர்புனைந்தான் விரும்பி வாழும்
இல்லமென தகமுமறை முடியுமெழிற்
      றணிகையுமாய் இடங்கொண்டானே.

(அ-உரை) வல்லை வரும் ஒருமா - விரைந்து வரும் ஒரு யானை. அரைமா - பிளவுற்ற மாமரம். அரைமாவை அமர் முந்திரிகைமேல் வைத்தான் - பாதி மாமரத்தை அமரும் முந்திரிகை மேல் வைத்தான். தோகை என்றும் - மயில் என்றும், குக்குடமென்றும் - சேவல் என்றும். பெயர் புனைந்தான் - பேர் வைத்தான். எனதகம் - என்நெஞ்சம். மறைமுடி - வேதசிரம்.       (62)
---- ---------

வண்டோச்சி மருங்கணைதல்
கலித்துறை
கொண்ட லுலாவுந் தணிகா சலன்பதங் கூறலர்போல்
வண்டர்க ளேயொரு காரிகை யோதி மயங்குகின்றீர்
துண்டம தாமெல் லினவல் லினந்தலைச் சொல்லுவதென்
கண்டம தாகு மிடையின நீர்தலைக் கண் ணுறினே

(அ - உரை) கொண்டல் - மழை மேகம். வண்டர்களே - தேன் வண்டுகளே! ஓதி - கூந்தல். மயங்குகின்றீர் - மொய்க்கின்றீர். வல்லின மெல்லினம் சொல்லுதல் - நயமாகச் சொல்லுதல். கண்டமதாகும் - முறிந்துவிடும். இடை - இடுப்பு. நீர் தலைக்கண் கூறினே - நீயிர் அவள் தலையிடத்தே உற்றால். உங்களுடைய கனந்தாங்காமல் இடை முறிந்து விடும் என்பது சரிந்து. வண்டோச்சி மருங்கணைதல் இயற்கைப் புணர்ச்சியின் போது தலைவியை நெருங்க நினைக்கும் தலைவன் அவள் தலையில் மொய்க்கும் வண்டினை ஓச்சுபவன் போல வண்டினிடம் பேசி நெருங்குதல். கலம்பக உறுப்பினுள் இதுவும் ஒன்று.       (63)
----- ---------

எழுசீர்ச் சந்த விருத்தம்
கண்ணி லார்க ளறுவ ரோர்க யத்தை நாடு மாறுபோ
லெண்ணி லாறு சமயர் தாமு மென்கா னின்னை யுணர்வதே
வெண்ணி லாமு டித்த வேணி விமல னார ளித்திடும்
பண்ணு லாவு தணிகை யம்ப திக்குள் வாழு முருகனே.

(அ-உரை) கண்ணிலார் – குருடர்; கயம் - குளம். நாடுமாறு போல் - தேடிச்செல்வது போல. ஆறுசமயர் - கணாதம் முதலிய அறுவகைச் சமயத்தார். என்கொல் நின்னை உணர்வதே - எவ்வாறு உன்னை உணர்வார்கள். வெண்ணிலா முடித்த வேணி விமலன் - நிலவை முடியிலே சூடிய சடையை உடைய சிவனாகிய விமலன்.       (64)
--------------
நெடில் விருத்தம்
முருக னென்று தினைப்புனத்தில் முதிர்கூன் கிழவ னாகினையே
      மொழிய மநாதி சைவனென்று முன்னோர் கொக்கை மடித்தனையே
பரமன் மைந்த னென்றுகடற் பள்ளி மருக னாகினையே
      பரையின் முலைப்பா லுண்டுபின்னும் பன்மீன் முலைப்பா லுண்டனையே
குருவென் றிருந்தும் வானவர்தங் குருவின் மொழியன்று கந்தனையே
      குலமாந் தெய்வ யானையன்றிக் குறமா தினையு மணந்தனையே
தருவ தன்றி யேற்றறியா தவனீ கழுநீ ரேற்றனையே
      தக்க தோவிங் குனக்கிவைசொற் றணிகா சலத்தி லறுமுகனே.

(அ-உரை) கிழவனாயினையே - வள்ளியை மணக்கக் கிழவனாகத் தோன்றினையே. கொக்கை மடித்தனையே - கொக்கு - மாமரம். மாமரமாகி நின்ற சூரனை மடியச் செய்தாயே. கடற்பள்ளி - திருப்பாற்கடலிலே பள்ளிகொள்ளும் திருமால். பரை - உமாதேவி. பன்மீன் - கார்த்திகைப் பெண்டிர். வானவர் தங்குரு - வியாழன் (பிருகஸ்பதி) கழுநீர் - செங்கழு நீர் மலர். தக்கதோ - பொருந்துவதோ. (65)
------ ---------

தாழிசை விருத்தம்
அறுமு கந்தனி லொருமு கந்தனை யடிய னேற்குற வாக்கிடீர்
      அம்ப கம்பனி ரண்டி லொன்றிலென் னாண வங்கெட நோக்கிடீர்
வெறிகொள் பன்னிரு கையி லொன்றிலென் வெம்ப வக்கடல் தடுத்திடீர்
      விளங்கு மாறுசெவ் வாயி லொன்றினில் வீடு சேர்மொழி கொடுத்திடீர்
செறியு மாறிரு செவியி லொன்றிலென் செய்தி யாவையுங் கேட்டிடீர்
      செய்ய மார்பமோ ராறி லொன்றிலென் செந்த மிழ்த்தொடை பூட்டிடீர்
தறுகண் வேடர்க ளுதவு மின்கொடி தனமு மன்பர்கள் மனமுநீள்
      தணிகை யங்கிரி முடிய நண்பு தழைத்த செங்கல்வ ராயரே.

(அ-உரை) அம்பகம் - கண்கள். ஆணவம் - ஆணவமலம். நோக்கிடீர் - நோக்குவீராக. வெறி - நறுமணம். பவக்கடல் - பிறவிக்கடல். வீடுசேர் மொழி - முக்தியடையும் வாசகம். செய்தி - எண்ணங்கள். கேட்டிடீர் - கேட்பீராக. செந்தமிழ்த் தொடை - செந்தமிழ்ப் பாமாலை. மின்கொடி - வள்ளி.       (66)
---- ---------

தலைவன் கற்சுரத்தெளிமை செப்பல்
கலித்துறை
செங்கற் சுடிகை யராவிரு
      பாலுந் திருவிளக்காய்க்
கங்குற் பொழுதிந்தக் கற்சுர
      நீந்தினன் கன்னியிடைச்
சிங்கத்தைச் சாய்க்கு முலையானைக்
      கடுணை செய்திடமா
தங்கத்தைச் சாய்க்கு மரிவாழ்
      தணிகையஞ் சாரலினே.

(அ - உரை) செங்கற் சிடிகை - மாணிக்கமணி ஒளிவீசும் தலைச்சூட்டு. அரா - நாகப்பாம்பு. கற்சுரம் - கற்கள் நிறைந்த பாலை நிலவழி. இடைச்சிங்கம் - இருப்பாகிய அரிமா. மாதங்கம் - யானை. அரி - சிங்கம். (67)
------ ---------

வெண்பா
சார்ந்தாரைச் செல்வந் தணவா தருளுமன்பு
தீர்ந்தாரை நல் குரவிற் சேர்விக்குஞ் - சேர்ந்தாரைத்
தாழ்வெய்த வொட்டாத் தணிகா சலத்திலென்றும்
வாழ்தெய் வசிகா மணி.

(அ-உரை) தரவாது - நீங்காது, கெடாது. நல்குரவு - வறுமை. சிகாமணி - முடிமணி.
      (68)
---- ---------

வஞ்சித்துறை
மணிகா சலருந்
தணிகா சலம்வாழ்
வணிகா சலமோ
துணிகா சலரே.
(அ-உரை) மணிகாசலரும் - இரத்தினங்களும் பொன்னும் விளையும் வணிகாசலமோ - வணிகமலையோ.       (69)
----- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
காசல ருந்தணி கேசர் திருப்புகழ் கட்டுரை செய்திடுநாள்
வாசவன் முற்பிற தேவர்க டாளுறும் வல்லிபொடித்தலா
னீச வரக்க ரெனுங்கருங் கானக நீறு கலந்தது நாம்
பேசின விப்பொழு தேழ்பிற விக்கடல் போற வற்றிடுமே.

(அ-உரை) காசு - ஒளி. கட்டுரை செய்தல் - எடுத்துக் கூறுதல். வாசவன் - தேவன்.
நீச அரக்கர் - தாழ்ந்த அசுரர்கள். நீறு கலந்தது - சாம்பரானது.       (70)
--- ---------

வெண்பா
வற்றாச் சுனையில் மலராத பைங்கழுநீர்
குற்றா தணியுங் குமரேசா - கற்றோர்கள்
போற்றுந் தணிகைப் பொருப்பாவென் றீவினைகள்
மாற்றும் வகையோது வாய்.

(அ-உரை) குற்றாது - கொய்யாமல். ஓதுவாய் - கூறுவாயாக.       (71)
--- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
வாயுன் புகழே துதித்திடவு
      மனதுன் வடிவே நினைத்திடவுந்
தூய நின்றாள் கரந்தொழவுந்
      துணைத்தாள் கோயில் வலம்வரவு
நீயுங் கிவையே யெனக்கருள்வாய்
      நிலம்பொன் மாதர் வேண்டிலன்யான்
காயுங் கதிர்கான் மணியருவி
      கறங்குந் தணிகைப் பெருமானே.

(அ-உரை) துதித்திடவும் - புகழ்ந்து பாடவும்; கரந்தொழவும் - கைகள் கூப்பித் தொழவும், துணைத்தாள் - இரு பாதங்கள்; நிலம், பொன் மாதர் வேண்டிலன் - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்றையும் வேண்டிலேன்; காயும் கதிர்கால் மணி - ஒளிவீசும் இரத்தினங்கள்; கறங்கும் – வழியும்; தணிகை - தணிகைமலை       (72)
- ---------

விருத்தம்
பெரிய குன்ற மட்டு நெஞ்சென் கரிய குன்ற மட்டிலாப்
      பிறழும் வேல்பி டித்து மென்றன் பிறவி வேலை நீக்கிடாய்
வரியும் வேதனைத்த டுத்து மாறன் வேத னைத் தடாய்
      வணிக னென்றி ருந்து மென்னுள் மருவு காசை மாற்றிலாய்
அரியு மஞ்ச வரனு மஞ்ச அயனு மஞ்ச வும்பரோ(டு)
      அண்டர் கோனு மஞ்ச வண்ட மாயி ரத்தோ டெட்டினுந்
திரியும் வஞ்ச வாணை யேசெ லுத்து சூர னஞ்சமுன்
      சிறிது கண்கள் கடைசி வந்த தென்ற ணிகைக் குமரனே.

(அ-உரை) பெரிய குன்றம் அட்டும் - பெரிய குன்றுருவாகிய அசுரனைக் கொன்றும். பிறழும் வேல் பிடித்தும் - பிறழ்கின்ற வேலாயுதத்தைக் கைக்கொண்டும். என்றன் பிறவி வேலை நீக்கிடாய் - எனது பிறவியாகிய கடலை நீக்காதிருக்கின்றாய்.
வேலை – கடல். வகியும் – எழுதும். வேதனைத் தடுத்தும் - பிரமனைத் தடை செய்தும்.
மாரன் வேதனைத் தடாய் - மன்மதன் செய்யும் துன்பத்தைத் தடுக்காமலிருக்கிறாய். என்னுள் மருவு காசை மாற்றிலாய் - என் உள்ளத்தில் சேரும் குற்றங்களை மாற்றாதிருக்கின்றாய். காசு – குற்றம். அரி – திருமால். அரன் – சிவன். அயன் – பிரமன். உம்பர் – தேவர்கள். அண்டர்கோன் – தேவேந்திரன். அஞ்ச – நடுங்கும்படி. அண்டம் – உலகம். ஆணை செலுத்தும் - ஆட்சி செய்யும். சூரன் – பத்மாசூரன். அஞ்ச - நடுங்கிச்சாய. கண் சிவந்த - கோபித்த       (73)
- ---------

கழிநெடில் விருத்தம்
குமரா திருமால் மருகா முருகா கொடியோரைச்
சமரா டியமா மயிலா வலவா தணிகேசா
அமரா பதிகா வலவா தொலைவா மலமுமன்றே
நமர்கா ளுரையீர் நலமார் கதிநாம் பெறலாமே.

(அ-உரை) கொடியோரை - கொடிய அசுரர்களை. சமராடிய - போரிட்டு வென்ற.
மயிலா - மயில் வாகனத்தை உடையாய். அயிலா - வேலாயுதத்தை உடையாய். அமராபதி – இந்திரலோகம். வலவா – வெற்றியுடையவனே. தொலைவா மலமுமன்றே - எமது மும்மலத்தையும் தொலைத்திட வருவாயாக என்று. நமர்காள் – நம்மவர்களே. உரையீர் - வேண்டிக் கொள்ளுங்கள். நலமார் கதி - நன்மையெல்லாம் நிறைந்த பேரின்பநிலை.       (74)
----- ---------

நெடில் விருத்தம்
பெற்றாலு மினியொருவ ரெனைத்தணிகை
      வரையகத்தே பெறவும் வேண்டு
முற்றாலு மருந்தவங்க ளவ்வரைக்கே
      யுறல்வேண்டு முயர்ந்த கல்வி
கற்றாலு முமதுதிருப் புகழமுதே நாடோறுங்
      கற்க வேண்டுஞ்
செத்தாலு மிவ்வுடல மத்தலமீ
      துறவேண்டுஞ் சேந்த னாரே.

(அ-உரை) பெற்றாலும் - மகவாகப் பெற்றாலும். அத்தலம் - தணிகாசலம். சேர்ந்தனரே - செவ்வேளாகிய முருகக்கடவுளே.       (75)
------ ---------

வெண்பா
சேந்த விரலுகிராற் செவ்வரியாழ் வாசித்துப்
போந்திச்சைகள் பேசும் பொய்ப்பாணா - நாந்தரைமேன்
மட்கலமொப் பாயினோம் வண்டணிகை யூரற்குப்
பொற்கலமொப் பார்க்கே புகல்.
(அ-உரை) விரல் - உசிர், விரல் நகங்கள். செவ்வழியாம் -செவ்வழிப்பண்ணமைத்த யாழ். பொய்ப்பாரை - பொய் பேசும் பாணனே. மட்கலம் - மண்பாண்டம். பொற்கலம் - பொன்னாலாகிய குடம் முதலியன. புகல் - சொல்வாயாக.       (76)
------ ---------

கலித்துறை
புகலா யிரவும் பகலுந் தணிகைப் பொருப்பிலெழும்
பகலா யிரமன்ன சேயோன் புகழையிப் பாழ்வவயிற்றுக்
கிகலா இரந்திரந் தெய்ப்பது நீங்கிலை யென்று நல்லோர்
நகலா யிரங்கவு நாண முறாயெந்த நாளுநெஞ்சே.

(அ-உரை) தணிகைப் பொருப்பு - தணிகை மலை. பகல் - சூரியன். சேயோன் - முருகன். இகலா – பகையாக. நகலா இரங்கவும் - சிரித்து இரக்கச்செய்யவும். நாணமுறாய் – வெட்கமடையாதிக்கிறாய். நாளும் - எப்பொழுதும்.       (77)
------- ---------

அறுசீர் ஆசிரிய விருத்தம்
நாளே பிரம மென்பாரும் நானே பிரம மென்பாருங்
கோளே பிரம மென்பாருங் குணமே பிரம மென்பாருங்
தாளே யூழைப் பிரமமெனச் சாற்றுவோருந் தணிகைவரை
வேளே பிரம மென்னாமல் வீணே பிறப்பி னுழல்வாரே.

(அ-உரை) நாளே - நட்சத்திரங்களே. பிரமம் என்பாரும் - பரம் பொருளாகிய பிரமம் என்று சொல்வாரும். கோளே - நவக்கிரகங்களே. குணம் - முக்குணம். (இராசதம், தாமதம், சாத்வீகம்) தானே - முயற்சியே. ஊழை - விதியை சாற்றுவோர்.       (78)
--------- ---------

தாழிசை விருத்தம்
உழலுமொரு கொக்கையட்டோர் கொக்கடியி லிருந்தோ
      ரொருமயிலை யிவர்ந்தன்றிச் சேவலைக்கைப் பிடித்தார்
அழகியசெம் படன்மகனா யாலைவாய் நின்றார்
      ஆரலின்பா லாசைகொண்டோர் பொய்கையிடத் திருந்தார்
குழவியெனப் பொலிந்து குறிஞ் சிக்கிழவ னானார்
      கொடுவேங்கை யாகியொரு குறமானைப் புணர்ந்தார்
தழையுடுக்கும் வேடரொடு மலைகடொறுஞ் சரிந்தார்
      சாற்றில்வசை யாந்தணிகைச் சண்முகர்தஞ் செயலே.

(அ-உரை) கொக்கையட்டோர் - மாமரமாகி நின்ற சூரனைக் கொன்றழித்தவர். இவர்ந்து – ஊர்ந்து. சேவலைக் கைப்பிடித்தார் - சேவற் கொடியைப் பிடித்தவர்.
செம்படன் - செம்படவன், மீன் பிடிப்பவன். ஆரலின் பால் ஆசை கொண்டு - கார்த்திகை விண்மீன்களின்பால் பற்றுக் கொண்டு. பொய்கை – சரவணப்பொய்கை. குறிஞ்சிக் கிழவன் - குறிஞ்சி நிலத் தலைவன். வேங்கை - வேங்கை மரம். குறமான் – வள்ளிநாயகி. சரிந்தார் - நடந்தார், ஆடினார். சாற்றில் வசையாம் - சொன்னால் வசை மொழியாகும்.       79
-------- ---------

வெண்பா
தஞ்செயலே யாவுமெனச் சாற்றித் தணிகையிறை
நஞ்செயலைப் போக்கி நலமளித்தான் - நெஞ்சமே
என்னோ வுலகத்தில் யானெனதென் றேயின்னு
மன்னோ இடந்தழிகு வாய்.

(அ-உரை) யான் எனது என்பது ஆணவமலமும் மாயாமலமும். இடந் தழிகுவாய் - வீணே கிடந்து அழிகின்றாய்.       (80)
------------------

விருத்தம்
ஆயவென் னுளமாய் கோயிலின் மருவு
      மருட்டனி காசல வமரர்
நாயக சிரமோ ராறுடை யார்க்கு
      நற்சிர மைந்தினோ னுயரில்
தூயவன் அவனில் நாற்சிர முடைய
      சுருதிவா னவனுயர் குவனால்
மாயையா ருலகத் தோர்சிரத் தவரு
      மற்றவர்க் குயர்ச்சியா குவரே.

(அ-உரை) சிரமோராறுடையோர் - ஆறுமுகப்பெருமான். நாற்சிரம் ஐந்தினோன் – சிவபெருமான். அவனில் - அவனைவிட நற்சிரமுடைய சுருதி வானவன் - நான்கு தலைகளையுடைய வேதியனாகிய பிரமன். மாயையால் உலகம் - மாயையால் நிறைந்த இவ்வுலகம். ஓர் சிரந்தவர் - ஒருதலையையுடைய மானிடர்       (81)
----------------

சந்த விருத்தம்
ஆகு வாகன னோடொரு மாங்கனிக்
      கன்றம் ராடியநா
ளேக நாயக னிவ்வுல கைச்சுழன்
      றிக்கண முன்வருவோர்க்
கீகு வேன்கனி யென்னலு மேமயி
      லேறியிமைப் பொழுதில்
வேக மாய்வரு நின்கழ றந்தருள்
      மெய்த்தணி காசலனே.

(அ-உரை) ஆகுவாகனன் - மூஷிக வாகனனாகிய விநாயகன். அமராடிய – சண்டையிட்ட. ஏகநாயகன் – சிவபெருமான். இவ்வுலகைச் சுழன்று - இவ்வுலகத்தைச் சுற்றி. ஈகுவேன் – தருவேன். கனி – மாம்பழம். கழல் தந்தருள் - அடியிணை அருள் தருவாயாக.       (82)
------ ---------

விருத்தம்
காசி கரஞ்சிமுத லாந்த லங்கண்மிகு
      காதல் கொண்டுநட மேருகடி
மீச னார்கயிலை வாச னார்ந கையி
      லெழில்கொண் முப்புர மழிந்ததால்
தேசு லாந்தணிகை வாச னார்முருகர்
      செய்ய வாயிலிள முறுவலான்
மாசு லாவியிடு மெனது முப்புரமும்
      வலிய ழிந்திமையின் மாயுமே

(அ-உரை} காஞ்சி - காஞ்சிபுரம். தேசுலாந் தணிகை - ஒளிவிளங்கும் தணிகைமலை. இளமுறுவல் – புன்சிரிப்பு. எனது முப்புரம் - என்னைப் பற்றியுள்ள மும்மலங்கள். இமையின் - இமைப்பொழுதின் கண். (83)
------ ---------

சந்த விருத்தம்
மேகஞ் சூழ்தணி காசலர் வீதிமேவும தங்கிதன்
பாத னாகிய செஞ்சொலாற் பண்ம றந்தனர் விஞ்சைய
ராகு மாடலி னானட மரம்பை தப்பினள் சக்கர
வாக மாமுலை யாற்றுற வைத்து றந்தனர் முனிவரே.

(அ- உரை) மதங்கி - முழவின் தாளத்திற்கு ஏற்படும் மதங்கள் குலப்பெண். பாகன் - பக்கத்தவன் (கணவன்) விஞ்சையர் - விச்சாதர லோகத்தினர். ஆடலினால் நடம் அரம்பை தப்பினள் - ரம்பை தாளம் தப்பினாள். சக்கரவாகம் – இசைப்பறவை. துறவு - துறவொழுக்கம்       (84)
------ ---------

தாழிசை விருத்தம்
முனிவோர்தொழுந் தணிகாசலர் முன்பேகுது மென்றே
      மொழிந்தேயெழுந் தனனங்கதன் முன்பேவினை மலைதா
னினியேதர ணயில்கொன்றிடு மென்றேயழிந் ததுவா
      லிவ்வாறு பிறப்பாங்கட லேமுங்கிழிந் ததுபின்
னுனிமூலம லச்சூர்மர மோங்குக்கிளை யுடனே
      யொடிந்தேவிழுந் ததுமற்றதற் கொருநற் றுணை
தனிமாயையின் வலிசிந்தின நமர்கா ளவனகரிற்
      றங்காதலி னடைவார்செயல் சாற்றற்கெளி தாமே.

(அ- உரை) முன்பேகுதுமென்றே – முன்னதாகச் செல்வோமென்று. அங்கதன் முன்பு - அங்கே அதற்கு முன்பாக. வினைமலைதான் - ஊழ்வினையாகமலை. நனியேது - மிகுதல் ஏது. அரண் அயில் கொன்றிடும் - அம்மதிலை முருகனது வேல் கொன்றுவிடும். இழிந்தது – நீங்கியது. இவ்வாறு பிறப்பாகிய கடல் ஏழும் நீங்கியது. மூலமலச்சூர்மரம் தூங்கும் கிளையுடனே ஒடிந்தே விழுந்தது - மூல மலமாகிய ஆணவமலம் என்னும் மலம் கன்மம், மாயை என்னும் கிளைகளுடன் ஒடிந்து விழுந்தது. தனி மாயையின் வலி சிந்தின - தனித்த மாயா மலத்தின் வலிமை நீங்கின. அவன் நகரில் - முருகனுடைய நகரத்தில். காதலின் அடைவார் - பக்தியோடு செல்பவர் செயல் சொல்லுதற்கு எளிதாகுமோ?       (85)
---------------

வஞ்சித்துறை
தாமதங்க டவிர்ந்துநின்
னாமமென்று நவின்றிடற்
கோமெனும்பொரு ளோதிடா
யேமுறுந்தணி கேசனே

(அ-உரை) தாமதங்கள் தவிர்ந்து - காலந்தாழ்தலைவிட்டு, நாமம் – திருப்பெயர்.
நவின்றிட – சொல்ல. ஓம் என்னும் பொருள் ஓதுவாயாக. ஏமுறும் தணிகேசனே - இன்பந்தந்து பாதுகாப்பான் தணிகை ஈசன்.       (86)
------ ---------

வெண்பா
நேற்றிருந்தா ரின்றைக்கு நீறான ரென்னுமறம்
பார்த்துமுடன் மீதாசைப் பட்டாயே - தூர்த்தநெஞ்சே
யென்று தணிகேச னிருகழற்கன் பாகுவையோ
நின்றெனக்குச் சற்றுரைசெய் நீ

(அ-உரை) நீறானார் - மடிந்து சாம்பரானார்கள். தூர்த்த நெஞ்சே - சுடுதலைச் செய்யும் நெஞ்சமே. சற்றுரை செய் நீ - சிறிதே சொல்வாயாக.       (87)
----- ---------

விருத்தம்
நீயுமொரு விண்மகளை மணம்புரிந்த
      செயலறிந்தே னின்பி தாமுன்
போயொருவிண் மகளைமணம் புரிந்ததனா
      லஃதன்றிப் பொருப்ப ரீன்ற
நாயகியாம் வள்ளிதனை மணந்தனைநீ யவனுமொரு
      நகம தாமென்
றாயைமணம் புரிதலினாற் றந்தையைப்போ லுனக்குமிரு
      தாரம் வாய்த்த
தாயாறு மீன்முலையுண் டொருகுளத்தில் வளர்
      தணிகையமர ரேறே.

(அ-உரை) விண்மகள் - தேவமகள். (தெய்வானை) பொருப்பரீன்ற - மலைவாழும் வேடர்கள் பெற்ற. அவனும் - நின் பிதாவாகிய சிவனும். நகம் - மலை. ஆயை - தாயாகிய பார்வதியை. வாய்த்தது - அமைய நேர்ந்தது. ஆறுமீன் - கார்த்திகை விண்மீன்கள். ஒருகுளம் - சரவணப்பொய்கை. (88)
------------ ---------

எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
ஏறாகி மாத ரெழில்கண்டு கூடு
      மிடமெங்கு நாடி யுழலர்
வேறாகி யுன்ற னடியா ரினத்தை
      விழையேனை ஆள்வ திலையோ
மாறாகி மந்தி மரமேறி யந்தி
      மதிவாங்கி யோங்கு பலவின்
றாறார் பழங்கள் சுளைகீன் றருந்து
      தணிகா சலத்தி னிறையே.

(அ-உரை) ஆண் மகனாகி. நாடியுழலா - தேடித்திரிந்து. மந்தி - பெண் குரங்கு. அந்திமதி - பிறைச்சந்திரன். பலவின் – பலாமரத்தின் கண். தாறு - பழத்தாறு. சுளைகீன்றருந்தும் - பலாச்சுளையைப் பிளந்து அருந்தும்.       (89)
------ ---------

கலித்துறை
கடக்குஞ் சரறிக ரென்மன தண்டங் கடந்திமைப்பி
னடக்குஞ் சரமென நில்லா நிறுத்தவு நானறியே
னடக்குஞ் சரச மெனக்குரை யாய்புக ழட்டதிக்கு
நடக்குஞ் சரவண மன்னா தணிகைநன் நாட்டினனே.

(அ-உரை) கடக்குஞ் சரநிகர் என்மனது - மதம் பொருந்திய யானையை ஒக்கும் என்னெஞ்சு. அண்டங்கடந்து - உலகத்தைக் கடந்து. இமைப்பின் நடக்கும் -இமைப்பொழுதில் நடந்து செல்லும். சரமென - அம்பு போல. நானறியேன் - நான் அறியமாட்டேன். நடக்கும் சரசம் - இயல்பாக நடக்கும் முறையை. அட்டதிக்கும் -எட்டுத்திசைகளிலும். நடக்கும் - விரிந்து செல்லும். சரவண மன்னா - சரவணப் பொய்கையில் உதித்த மன்னவனே.       (90)
------ ---------

சித்து - நெடில் விருத்தம்
நாடரு நீள மலைகளைப் பிசைந்து நுகர்ந்திடுவோம்
      நன்றெழு வாரியுங் கரகம்பெய்து குடித்திடுவோம்
நீடு மெழுவகை லோகங்களைத் தூக்கி நிறுப்போம்
      நிலத்தையு மோரடி யாக்கிநிலாக் கலையைத் தரிப்போம்
பாடுறு வேதனைக் கமலக் கண்ண னாக்கிடுவோம்
      பண்ணரி யைப்பரி யாகப் படைப்போ மிவ்வுலகில்
தேடருஞ் சீர்த்தணி கைவரைச் செவ்வே டன்னருளால்
      சிவனைநொடித் தான்மலையிற் றெளிவிட போநாமே.

(அ-உரை) நீளமலை - நீண்ட மலைகளை. நுகர்ந்திடுவோம் - உண்போம். வாரியும் - கடலையும். கரகம் பெய்து குடித்திடுவோம் - கையில் வைத்து அருந்திடுவோம். எழுவகை லோகம் - ஏழு உலகம். தூக்கி நிறுப்போம் - தூக்கி எடை போடுவோம். தரிப்போம் - சூடிக் கொள்வோம். வேதனை -- பிரமாவை. கமலக்கண்ணன் - திருமால். பன்னரியை - பல நரிகளை. பரியாகப் படைப்போம் - குதிரைகளாகச் செய்துவிடுவோம். நொடித்தான் மலை - சிவபெருமான் நடனமாடும் மலை. சித்து - சித்தர்களில் நிறங்களைக் கூறுவது. கலம்பக உறுப்புகளுள் ஒன்று.       (91)
------- ---------

கழிநெடில் விருத்தம்
தெளியாப் புனலைத் தேற்றுவித்தாற்
      றெளிய வுரைக்கு மாறதுபோல்
விளியா தெனைச்சூ ழாணவத்தை
      விளியக் கடைக்கண் சிறிதளித்தான்
வளியா ருலக மூன்றினுந்தான்
      மகிமை முகிழ்ப்ப வைகறொறு
நளியார் குவளை மூன்றலரு
      நகத்தான் றணிகை யகத்தானே.

(அ-உரை) தெளியாப்புனல் - கலங்கியிருக்கு நீர். தேற்றுவித்து - தேற்றாமரத்தின் விதை. விளியாது – மடியாமல். விளிய – சாவ. கடைக்கண் சிறிதளித்தான் - கண்ணோடி அருள் புரிந்தான். விளியாருலகம் - காற்றுச் சூழ்ந்து நிறைந்த இவ்வுலகம். வைகறொறு – வைகல்தொறும் - நாள்தோறும். நளி – செறிவு. குவளை - குவளை மலர். நகத்தான் -மலையினான்.       (92)
--- ---------

அளவடி விருத்தம்
அகமலர விழியிரண்டு மருவிசொரி தரநினது
முகமலரோ மூவிரண்டு மொழிந்துருகும் படியருளாய்
நகமலருங் கயிலைதனை நற்கீரற் கன்றளித்துச்
சகமலரும் புகழ்படைத்த தணிகைவரைக் குருபரனே.

(அ-உரை) அருவி சொரிதர - அருவிபோல ஆனந்தக் கண்ணீர்வழிய. நகமலரும் - மலையில் மலர்ந்து விளங்கும். சகம் - உலகம். (93)
----- ---------

நெடில் விருத்தம்
குருபரனீ தாருகனை யடுதலினாற்
      சக்கரங்கைக் கொண்டான் மாயன்
வரமுறுமோர் வெண்கரியை யளித்ததனாற்
      பெண்கரியை வலாரி யீந்தான்
பிரமனைமுன் சிறைசெயலாற் பரமனுந்தாழ்ந்
      துபதேசம் பெற்றானின்போ
லொருவருநே ரிலைநினக்குத் திரிகூட
      மாந்தணிகை யோங்க லானே.

(அ-உரை) தாருகன் - தாருகாசுரன். சக்கரம் – சக்கராயுதம். மாயன் - திருமால்.
வெண்கரி- வெள்ளை யானை. பெண்கரி - தெய்வயானையாகிய பெண் யானை. வலாரி - தேவேந்திரன். நிகரிலை - ஒப்பில்லை. தணிகையோங்கல் - தணிகை மலை. (94)
---------- ---------

கலித்துறை
ஓங்கா ரத்திற் பிறர்தீங்கை நாளு முரைத் தெனது
தீங்கா யிரமுங் கரந்தேனை யாண்டனன் றென்றணிகை
நீங்காத வேல னிஃதறிந் தென்றனை நீடுலகிற்
பாங்கார் குறத்தித் திருடனென் றேகம் பயனறிந்தே.

(அ-உரை) ஓங்காரம் - அகங்காரம். கரந்தேனை - மறைத்தேனை. பாங்கார் குறத்தி - பக்கத்தில் இருக்கும் வள்ளி நாயகி. ஏசும் - பழிக்கும். பயனறிந்து -- பயன்பாட்டினை நினைந்து.       (95)
----- ---------

சிந்தடி விருத்தம்
பயன்பெறுமூ வுலகினிலா வழகுற் றாலும்
      பரமனுதற் கட்டியா லருவ மானாய்
நயந்திடுசா பங்கருப்புப் பூவம் பேந்தி
      நாண்மிகுத்த வண்டர்குண மடுத்து நின்றாய்
உயர்ந்துபிடித் திடுந்துவச மீன மாகி
      உறுபடைபெண் கூட்டமதா மதனா னீதான்
வியர்ந்ததிருத் தணிகைவரைச் செவ்வே ளைப்போல்
      மேலாகாய் வேளெனும்பேர் படைத்து மாதோ.

(அ-உரை) அழகுற்றாலும் - அழகுபெற்றிருந்தாலும், பரமன் - சிவபெருமான். நுதற்கட்டியால் அருவமானாய் - நெற்றிக்கண் எழுப்பிய நெருப்பால் உருவம் அழிந்து அருவமானாய். சாபம் - வில், புருவமேந்தி - மலரம்புகளை ஏந்தி. நாண் - கயிறு. வண்டர் - வண்டு, துவசம் – கொடி. உறுபடை - பெரிய சேனை. மன்மதனே நீ வேள் என்னும் பெயர் படை படைத்திருந்தாலும் செவ்வேளைப்போல மேலவனாகமாட்டாய்.       (96)
----- ---------

வெண்பா
மாதரையு மாதரையு மாதரையும் வேண்டிநும்போ
காதரையும் பாடு மவப்புலவீர் - பூதரையாள்
சேயாந் தணிகைவரைச் செவ்வேளைப் பாடிவென்று
மாயாத செல்வமருள் வான்.

(அ-உரை) மாதரையும் - பெரிய நிலத்தையும். மாதரையும் – மகளிரையும். மாதரையும் - அழகையும். வேண்டி - பெற விரும்பி, நும்போல் ஆதரை – உம்மைப் போன்ற சாமான்யரை அனுப்புவீர். வீண் புலவர்களே! பூதரையாள் சேய் - பூமிதேவியாகிய உமையம்மையின் மகனாகிய முருகன். பாடில் - பாடித்துதித்தல்.
மாயாத - அழியாத செல்வம். அருள்வான் - அழிவில்லாத செல்வத்தை வழங்குவான்.
      (97)
-- ---------

கலித்துறை
வான மளந்தது மாயோன் றிருவடி மாயனுந்தித்
தான மளந்தது நான்முகன் சேவடித் தாழ்புவிபோ
மேன மளந்தது வெள்ளிவெற் போனடி யேனல்வளர்
கான மளந்தது தென்றணி காசலன் காலடியே.

(அ-உரை) வானமளந்தது மாயன் திருவடி - வானத்தை ஓரடியால் அளந்தது வாமனனாகிய திருமாலின் திருவடி. உந்தித்தானம் - வயிறாகிய இடம். நான்முகன் - பிரமன். தாழ்புவி - பாதாள உலகம். ஏனம் - வராகம், பன்றி. வெள்ளி வெற்போன் - சிவபெருமான். ஏனல்வளர் கானம் - தினைவிளையும் புனம். தணிகாசலன் காலடி – தணிகையில் விளங்கும் முருகப்பெருமான் திருவடி.       (98)
------ ---------

மருட்பா
அடிவண் டறைபயிலு மங்கணியைக் கும்பூ
முடிவண் டறைகுழலின் மொய்க்கும் வடிவநிழல்
காட்டு மாத லினற்றணிகை
நாட்டில் வாழ்தரு நங்கைமற் றிவளே.

(அ-உரை) அடிவண் தறை பயிலும் - பாதங்கள் நிலத்திலே படிந்துள்ளன. ஆங்கண் இமைக்கும் - அழகிய கண்கள் இமைத்தலைச் செய்யும். பூமுடி - பூக்கள் முடியில் உள்ளன. வண்டறை குழலின் மொய்க்கும் - கூந்தலில் வண்டுகள் மொய்க்கும். வடிவநிழல் காட்டும் - வடிவ நிழல் சாய்ந்து காட்டும். ஆதலினான் இவள் மானிட மகளே எனத் தலைவன் ஐயந்தீர்த்தது. இது துணிவு என்னும் அகப்பொருள் துறை.       (99)
---- ---------

நெடில் விருத்தம்
ஏறும் புகழ்சேர் தென்றணி மைக்கோ னிருதாளுங்
கூறும் பெரியோர் சேவடி நெஞ்சு குறித்திட்டோர்
வீறுங் கமலத் தந்தண னறியா வீடெய்தி
நீறும் படிநீ வினையின கன்றிடு நீராரே.

(அ-உரை) ஏறும் புகழ் - ஓங்கும் புகழ். வீறும் கமலத்து அந்தணன் - பிரமன். வீடு - முத்திவீடு. நீறும் படித் தீவினை யகன்றிடும் - சாம்பராய்ப் போகும்படி பழவினைகள் அகன்றுவிடும். நீரார் - தன்மையராவர்.       (100)

தணிகைக் கலம்பகம் முற்றிற்று.

This page was last updated on 25 Feb. 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)