நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றிய
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு - பாகம் 1
pAvanAcam ennum cingkaip pirapantat tiraTTu - part 1
of namaccivarAyak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றிய
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு - பாகம் 1
Source:
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு
இது பாவநாசத் தலபுராணாசிரியராகிய முக்களாலிங்கமுனிவர் புதல்வரும்,
ஆநந்தக்கூத்தரின் இளைய சகோதரரும் திருக்கைலாச பரம்பரைத்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தரா யெழுந்தருளி யிருந்த
மாதவச்சிவஞான யோகிகளின் சிறிய தந்தையுமான
நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றியது.
மதுரை மு. ரா. கந்தசாமிக் கவிராயரால் மதுரை “எக்ஸெல்ஸியர் பிரஸில்" பதிப்பிக்கப்பெற்றது.
இதன் விலை அணா-12.] [ 1917.
----------------
பொருளடக்கம்.
முகவுரை. | 3. கொச்சகக்கலிப்பா. |
நூலாசிரியர் சரித்திரம். | 4. சந்தவிருத்தம் |
1. கலித்துறையந்தாதி | 5.பிள்ளைத்தமிழ் |
2. பதிற்றுப்பத்தந்தாதி. | 6. சிலேடை வெண்பா. |
---------------
முகவுரை.
குமரன்றுணை.
ஐங்கரக் கடவுளை யாறிரு தடந்தோட்
செங்கடம் பண்ணலைச் செந்தமிழ் முநிவனைத்
தவஞான ரூப தயாநிதி யாகிய
சிவஞான யோகி திருத்தாண் மலரை
யடுத்துப் போற்றுதூஉ மன்பா
லெடுத்த காரிய மிலங்குதற் பொருட்டே.
பாண்டிவளநாட்டில் பொதியமலையடிவாரத்தில் பொருநை நதிக்கரையில் "பாவநாசம்" என்னும் புண்ணியத்தலத்தில் திருக்கோயில் கொண்டருளும் உலகம்மை மீது நமச்சிவாயக்கவிராயர் என்னும் அருட்பெரும் புலவர் இயற்றிய பிரபந்தங்களில் பற்பல பாடல்கள் தென்னாட்டிலே பல இடங்களில் வழங்குவனவாகும். பாடல்கள் பலவும் மதுரம் பழுத்துத் தேன்றுளிக்கும் வளச்செம்பாகத்துடன், பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பல்குவன வாதலின் தமிழ் மக்கள் பலரும் மனப்பாடஞ்செய்து பாராட்டுவதுண்டு. எனது தந்தையார் இராமசாமிக்கவிராயரவர்கள் இப்பாடல்களைக்கூறி மனங் கசிந்துருகுவதைப் பலமுறை யறிந்துள்ளன். ஆதலின் பாலப் பருவந்தொட்டு இக்கவிகளில் எனக்கு விருப்பு மிகவுண்டு. திருநெல்வேலி முதலிய பல இடங்களில் பெரியார் பலர் இப்பாடல்களைக் கூறக்கேட்டு மிருக்கின்றேன். இங்ஙனம் கேள்வி வகையானே பற்பல செய்யுட்கள் எனக்கு மனப்பாடமாயின. பாடல்களின் சுவைப் பெருக்கால் விருப்பமிகக்கொண்டு நூல்களைத் தேடத் தொடங்கினேனாக சில இடங்களில் சில நூல்கள் கிடைத்தன. சில பிரதிகள் அரை குறையாக இருந்தன. பலவாறு முயன்றும் பிரபந்தங்கள் முழுதுமமைந்த சுத்தப்பிரதிகள் கிட்டில. பின்னர் அரிகேசநல்லூர் வித்துவானும் அம்பாசமுத்திரம் ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதரும் அம்பிகாபதிக் கோவையை அச்சிட்டவரும் பழைய சரித்திர ஆராய்ச்சி வல்லுநரும் ஆகிய ஸ்ரீ அரிகரபாரதிகள் பலநாள் முயன்று நான்கு பிரதிகள்
தேடியொப்பு நோக்கிக் காகிதத்தில் எழுதிவைத்திருந்த கலித்துறை யந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கொச்சகக்கலிப்பா, சந்தவிருத்தம். பிள்ளைத்தமிழ் என்னுமிவைகளை ஸ்ரீ முருகாநந்த சுவாமிகள் மூலம் கொடுத்துதவினார்கள். இவர்கள் செய்த பேருதவியை என்றும் மறவாது பாராட்டுங் கடப்பாடுடையேன்.
உலகம்மை திருவருளையே துணையாகக்கொண்டு என்னிடமுள்ள சில பிரதிகளையும் பாரதியவர்கள் கொடுத்த பிரதியையும் வைத்து ஒப்புநோக்கினேன். சிற்சில இடங்களில் சிற்சில எழுத்துக்கள் காணப்படவில்லை. அவ்விடங்களை வெற்றிடமாகவே விட்டுவிட்டேன். சிற்சில கவிகள் பாடப்பிறழ்ச்சியால் பொருள் விளங்காவாறுள்ளன. அவற்றையும் இருந்தவாறே விட்டுவிட்டேன். [200 வருட அளவினவாகிய இந்நூல்களே இத்துணைப் பிறழ்ச்சியுற்று உண்மை காண்டற்கியலாவாறு கலக்கந் தருமேல் பலநூறு வருஷங்கட்கு முன்னுள்ள சங்கநூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து வெளியிட்ட ஸ்ரீமத் மஹாமஹோபாத்தியாயர் வே. சாமிநாதையரவர்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார் களென்பதை நினைத்து நினைத்து உருகுகின்றேன் "பெற்ற வட்கே தெரியுமந்த வருத்தம்” இன்னுஞ் சிலபிரதிகள் தேடியாராய்ந்து வெளியிடலாமெனக் கருதிய யான் 2 வருட காலமாக இருதய வியாதியால் மிகத்துன்புற்று வீட்டைவிட்டு வெளிப்போந்துலவக் கூடாவாறு தளர்ச்சியுற்றமையால் நீர்க்குமிழியாகிய யாக்கையுறும் போதே வெளிப்படுத்த வேண்டுமென்ற வேட்கை மிகுதியால் இயன்றவரை சுத்தப்பிரதியாக்கி முன்னரே அச்சிடப்பெற்றுள்ள “சிங்கைச்சிலேடைவெண்பா" என்ற நூலையும் உடன்சேர்த்து அச்சிடுவித்தேன். சிலேடை வெண்பா நூலுக்குப் பொருள் விளங்கும்படி உரையெழுதி உடன்சேர்த்து வெளியிட விரும்பி அறிந்தவரை உரையும் எழுதிமுடித்தேன். காகிதப் பஞ்சத்தாலும் காலநீட்டிக்காமல் வெளிப்படுத்த வேண்டுமென்ற உட்கருத்தாலும் அவ்வுரையை இப்புத்தகத்தில் வெளியிடவில்லை. திருவருள் கூட்டுமேல் பின்னர் சிலேடைவெண்பா மூலமும் உரையும் தனிப்புத்தகமாகவெளியீடுவேன்.
இப்புத்தகத்தை அச்சிடுங்கால் கல்விவகையாலும் பொருள் வகையாலும் எனக்கு வேண்டுமுதவிகளைச்செய்து அன்புபாராட்டிய தக்கார்கட்கு மிக நன்றி கூறுகின்றேன். இப்பேருபகாரிகட்கு உலகம்மை திருவருள் பெருகுவதாக.
இந்நூல்களில் நோய்த்துயர் மிடித்துயர் பிறப்பிறப்புத் துயர் யமதண்டனைக் கொடுமை முதலிய பலவிஷயங்கள் மிகவும் உருக்கத்துடன் இனிமையான சொற்களாற் றொடுக்கப்பெற்றுள்ளன. கொச்சகக்கலிப்பா சந்தவிருத்தம் இவ்விரண்டனுள்ளும் ஆங்காங்கு மிகக்காணலாம். இவற்றிலுள்ள நயங்களை யெல்லாம் யானெடுத்துக் காட்டல் மிகையாம். இவற்றுள் எந்தநூலிலேனும் சில கவிகளைப்படிப்பவர் தாமே மனங்கசிந் துருகுவரென்பது நிச்சயம். இயற்கையாகவே ஆராய்ச்சிக் குறைவுள்ள யான் பிணித்துயரால் மனநிலை குன்றியிருக்கும் இக்காலத்து இச்சிறந்த நூல்களை வெளியிடப் புக்கமையால் எத்தனையோ குறைகளிருக்கலாம். 'குற்றங்களைந்து குறைபெய்து வாசித்தல், கற்றறிந்த மேலோர் கடன்" என்பதைக் கூறி நிறுத்துகின்றேன்.
உலகம்மை திருவடிகளே சரணம்
மதுரை தெற்காவணி மூலவீதி
25-3-17. இங்ஙனம்
மு. ரா. கந்தசாமிக்கவிராயர்.
----------------------------------------
நூலாசிரியராகிய நமச்சிவாயக் கவிராயர் சரித்திரச் சுருக்கம்.
சிவமயம்.
புண்ணிய பூமியாசிய இப்பரதகண்டத்தில், பூமிதேவியின் மார்பின் மதாணி போன்றதும், கூடல் முதல் இராமேசுவரம் ஈறாகவுள்ள பதினான்கு திருப்பதிகளையும், முதலிடை கடையென்னும் முச்சங்கங்களையும் தன்னகத் தடக்கியதுமாகிய, பாண்டி நாட்டில், 'தமிழெனு மளப்பருஞ் சலதிதந்த" ஆசிரியர் அகத்தியனார் எழுந்தருளியிருக்கும் பொதியமலைச் சாரலின் கண்ணுள்ள விக்கிரம சிங்கபுர மென்னும் திப்பிய திருப்பதியின்கண், சைவவேளாளர் மரபிலுதித்த முக்களாலிங்கர் என்னும் பெரியாருக்கு; இற்றைக்கு நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னர் நமச்சிவாயரென்னும் பெருந்தகையாளரும், சுத்தாத்துவித சைவசித்தாந்திகளாகிய யாமெல்லாம் இறைவனடிப் புணை சேர்ந்து பிறவிப் பெருங்கடல் நீந்தி யுய்யும்வண்ணம், வடநூற் கடலையும் தென்னூற் கடலையும் நிலைகண்டுணர்ந்து தமிழிலுள்ள சிவஞானபோதமென்னும் அரும்பெருநூலுக்கு மாபாடிய மியற்றியருளிய ஆசிரியர் மாதவச்சிவஞான யோகிகளை, அருமைத் திருக்குமாரராகப் பெறுவதற்கு முன்னர் அருந்தவம்புரிந்த ஆனந்தக்கூத்த ரென்பவரும், புத்திரராக அவதரித்தனர். இவர்களைத் தந்தையார் உரிய பருவத்திலே நல்லாசிரியனையடைந்து கல்விகற்கும் வண்ணம் செய்தனர். இவர்கள் ஆசிரியர் மாட்டுப் பேரன்புடையராய், வழிபாடு முதலியன செய்தலிற் சிறிதும் முனிவின்றி ஆசிரியருள்ளத் தருள் சுரக்கும் வண்ணம் ஒழுகிக் கற்றுவருவாராயினர். அவ்வாசிரியர் திருவருட்பெருக்கினால், இவர்கள் ஐயந்திரிபறக் கற்றுப் பண்டிதரா யிருந்ததோடு, 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க வதற்குத் தக" என்னு முதுமொழிக் கிணங்க ஜீவகாருண்யம், ஈசுவரபக்தி, பொறை, அடக்கம், வாய்மை முதலிய எல்லா நற்குணங்களும் அமையப் பெற்றிருந்தனர்.
இவ்விருவருள், நமச்சிவாய ரென்பவர் நாடோறும் தம்மூர்ப் புறத்தேயுள்ள பாவநாச மென்னும் திப்பிய திருப்பதிக்குச் சென்று, தாம்பிரவர்ணியில் நீராடிச் சிவபூசை முதலியன செய்து முடித்துத் திருக்கோயிலிற் சென்று, சுவாமி தரிசனஞ் செய்து தம்மூர்க் கெழுந் தருள்வதியல்பு. இங்ஙனம் நிகழுங்காலத்து, அப்பாவநாசத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் உலகாம்பிகையை உபாசனா மூர்த்தமாகக்கொண்டு, இடையறாப் பேரன்புடன் உபாசித்து வந்ததோடு, அம்பிகை சந்நிதியினின்று கரைந்து கரைந்துருகிக் கண்களினின்றும் ஆனந்த அருவி சொரிய, உரோமாஞ்சங் கொள்ள, நாத்தழுதழுப்ப, உரைத்தடுமாறப் பரவசமுற்று, அவ்வம்பிகையின் திருவருளால் அமிழ்தினுமினிய பல தமிழ்ப்பாடல்களைப் பாடித் துதித்து வருவாராயினர். இப்பெருந்தகையார் இயற்கையிலேயே செல்வத்தராகலின், ஏனைய பயனில் முயற்சிகளையெல்லாம் ஒழித்துத் தம்மாட்டு விரும்பிக் கற்கவரும் நன்மாணாக்கர்கட்கு இலக்கியம், இலக்கணம், சித்தாந்த சாஸ்திரம் முதலிய நூல்களைக் கற்பித்து வந்ததோடு, இறைமைக்குணம் முற்றுமுடைய உலகாம்பிகையின் பொருள் சேர் புகழையே எக்காலத்தும் புகழ்ந்து வந்தனர்.
இவர் இங்ஙனம் ஒழுகுங்காலத்து இவர் தந்தையாராகிய முக்களாலிங்கர், தம்மரும்பெறற் குமாரையழைத்து என் அருமைக் கண்மணியே! மிதிரர்கடன் தேவர்கடன் முனிவர்கடன் முதலியன செய்தற் பொருட்டு நீ ஒரு கன்னிகையை மணந்து இல்லறம் நடத்துவாயென்று கட்டளையிட்டருளினர். அது கேட்ட நமச்சிவாயர் என்றும் ஒரு பெற்றித்தாய பேரின்பத்தை யெய்துதலே தந்துணி பென்பதைக் குறிப்பாலறிவித்து, மௌனமுற்று நின்றனர். இவர் குறிப்பினையறிந்த தந்தையார், "குழந்தாய்! வேத சிவாகமங்களில் கூறிய பிரமசரியமாகிய முதனிலையில் நிற்கும் நீ, இதனையடுத்த இல்லற தருமத்தை நாடாது இறுதி நிலையாகிய துறவறத்தை மேற்கோடல் வேத வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறுபாடாம்; ஆகலின் அந்நினைவை முற்றும் ஒழித்தி" யெனப்பணித்தனர். நமச்சிவாயர் இச் சின்னீரவின்பமாகிய உலகபோகங்களைக், கான்ற சோறெனக் கருதுங் குணமுடையராயினும் "தந்தைசொன் மிக்க மந்திரமில்லை" என்னும் முதுமொழியையெண்ணி, அதற்குடன்பட்டு அவர் கருத்தின்படி ஒரு பெண்ணருங் கலத்தினை மணந்து கமலபத்ரோதகம்போல இல்வாழ்க்கையினின்று ஒழுகுவராயினர்.
இங்ஙனம் ஒழுகும் நாளில், அம்பிகையின் திருவருளால் அவ்வம்மையார் திருவயிற்றில் அரும்பெறற் பெண்மகவொன்று உதித்துப் பிறைச்சந்திரனையொப்ப வளர்ந்து வந்தது. இவர் நாடோறும் இரவின்கண்ணே கோயிலுக்குச் சென்று, அம்பிகை தரிசனஞ் செய்து, தம்மில்லிற் கெழுந்தருளும் பொழுது பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப், பல இனிய தமிழ்ப்பாக்களைப் பாடிக்கொண்டே வருவர். இவ்வன்பர் அன்பினொடு கனிந்துபாடும் பாடலின் சுவையைச் செவிமடுத்து அகமகிழவும், இவர் பெருமையையறிந்து உலகத்தாருய்யவும், திருவுளங்கொண்டு உலகாம்பிகை, ஒருநாளிரவு அர்ச்சகர் அலங்கரித்திருந்த அலங்காரத்தோடு ஒரு கன்னிகை வடிவங்கொண்டு மறைந்து, இவ்வன்பர் பின்னே எழுந்தருளிவர, நமச்சிவாயர் தம்மன முதலிய கரணங்களெல்லாம் அம்பிகையின் பாதபங்கயத்துச் செல்லுதலால், மெய்ம்மறந்து வாயிலுள்ள எச்சில், புறத்தே தெறிக்க "எம்மித யாலயத்தெம் பெருமன்னையே! என்னையாண்டருள் புரிகுவதியாண்டே என்னும் கருத்தமைந்த பாடலைப் பாடித்துதிக்க; புறம்போந்த அவ்வெச்சிற்றுளிகள் அவரோடு மறைந்துவந்த அம்பிகையின் மீது தெறிக்க, அத்திருக்கோலத்துடனே கோயிலின்கட் சென்று எழுந்தருளி இருந்தனள். மறுநாள் வைகறையில் வழக்கம்போலத் திருப்பள்ளி யெழுச்சிக்குக் கோயிலின்கட் புக்க அருச்சகர் அம்பிகை துகிலில் எச்சுற்றுவர் படிந்திருப்பதைக் கண்டு மனந்துணுக்குற்று, அந்தோ இவ்வநுசிதம் புரிந்தார் யாவர் கொல்லோ! வென, மனங்கவன்று, மறுக்க மெய்தி, சிறிது பொழுது நெடிதுயிர்த்து ஒருவாறு தேறி, இத்தகைய கொடுஞ்செய்கைகள் இனி நிகழாவண்ணம் தடுக்கவெண்ணி அக்கோயில் தானிகர்க்குத் தெரிவிக்க, அவர் ஆண்டு சுவாமி தரிசனத்தின் பொருட்டு மதுரையம் பதியினின்றும் போந்த கர்த்தாக்களெனப் பெயரிய அரசரிடம் விண்ணப்பித்தனர். அவ்வரையர் வந்து இதைக் கண்ணுற்றுப் பெரிதும் வருந்தி, இத் தீச்செயல் புரிந்தாரை எவ்வாற்றானும் அறிந்து ஒறுப்பலெனக்கூறி, அர்ச்சகரை யழைத்து சம்புரோக்ஷணம் முதலியன செய்து, பூஜை நடைபெறுமாறு பணித்துத் தம்முறையுள் புக்கனர். அன்றிரவில் அவ்வரையர் எம்பெருமாட்டிக்கும் இங்ஙனம் நிகழ்ந்ததேயெனக் கவன்று, நெடுநேரந் துயிலின்றி வதிந்தபின்னர், அம்பிகையின் திருவருளால் சிறிது துயில்வர, அம்பிகை யவர் கனவிற் றோன்றி, "அன்பனே! நின் மனக்கவல் ஒழிக; நம்மாட்டு இடையறாப் பேரன்புடைய நமச்சிவாயனென்பான் திருக்கோயிலில் நம்மைத் தரிசித்துத் தன்னூர்க்குச் செல்வுழி, நம்மீது அன்பு மயமாகிய இனிய கவிபாடிக்கொண்டே செல்வானாகலால், அப்பாமாலையைக்கேட்கும் வேட்கை மிகுதியால் அவனைப் பின்பற்றிச் சென்றோம். அவன் நமக்குப் பாமாலை புனைந்தலங்கரித்ததேயன்றி, நம் கலைக்கும் ஓர் அணியணிந்தனன். அது நமக்கு மிக்க உவப்பைத் தருவதாகும்; ஆகையால் அதுபற்றி அவனை வருத்தற்க" எனத் திருவாய் மலர்ந்தருளி மறைந்தனள். அரசர் விழித்தெழுந்து, இது கனவோ நனவோ என ஐயுற்றுத்தெளிந்து, அம்பிகையின் திருவளை வியந்து பாராட்டினர். பின்னர் மறுநாளுதயத்தில் ஏவலரைக் கூஉய், நமச்சிவாயரென்னும் பெருந்தகையாளரை யழைத்து வம்மின் எனக் கட்டளையிட, அவ்வாணையைச் சிரமேற் கொடு அவரையழைத்து வந்தனர். அரையர் நமச்சிவாயரை நோக்கி, ஐய! நீவிர் நேற்றிரவில் கோயிலின்கட் சென்று அம்பிகையின்மீது எச்சிற்றம்பலத்தை யுமிழ்ந்து அநுசிதஞ் செய்ததாகக் கேள்வியுற்றனன்; அங்ஙனம் செய்தற்குக் காரணம் என்னையென வினவ, அவரொன்றுந் தோன்றாது திகைத்து, அரசே! யான் நேற்றிரவு கோயிலின் கட்சென்று, அம்பிகையைத் தரிசனஞ் செய்ததுண்மையே; இத்தகைய அநுசிதத்தைப் புரிந்தேனல்லன்; தரிசனஞ் செய்து எம்மில்லிற் கேகுங்கால், தாம்பூலந் தரித்துச் சென்றேனே யன்றி வேறொன்று மறிந்திலேனென உள்ளவாறுரைத்தனர். அரை யர் அப் புலவர் பெருமானின் பக்தி மேம்பாட்டைச் சோதிக்கவெண்ணிக் கோயிலுக்கு வம்மின் என உடன் கொண்டு சென்று, அவரை அம்பிகை சந்நிதியில் நிறுத்தி, அம்பிகையின் கையில் ஒரு பூச்செண்டை வைத்துப் பொற்கம்பிகளால் இறுகப்பிணித்து,"ஐய இச் செண்டு நும் கையில் வரப்பாடுக" எனக் கூறினர். நமச்சிவாயர் அம்பிகையின் திருவருளால் ஒர் கலித்துறையந்தாதி பாட, கவிக்கொரு சுற்றாக அறுந்து,
"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக
மண்டல முங்கை மலரொடுந் தோளின் வழிந்தரத்ந
குண்டல மும்பொலி வாலப் பிராயக் குமாரத்தியாய்ச்
செண்டலர் செங்கை யுலகாளென் னாவிற் சிறந்தனளே"
என்னும் தொண்ணூற்றாறாங் கவியைப்பாடி முடித்தவுடன், அச்செண்டானது அம்பிகையின் திருவருளால் நமச்சிவாயர் கையின் கண்ணே வந்தது. இவ்வற்புதச் செயலைக்கண்ட அரசரும் ஏனையோரும், அம்பிகையின் திருவருளையும் நமச்சிவாயர் அன்பையும் வியந்து, புகழ்ந்தனர். பின்னர் இப்புலவர் பெருமானுக்கு அரையர் பரிசில் முதலியன கொடுத்துப் பலவகைச் சிறப்புச் செய்தனர். நமச்சிவாயர் எஞ்சிய நான்கு கவிகளையும் பாடிமுடித்து, அம்பிகையின் பாதப்போதில் இடையறாப் பேரன்புடையரா யொழுகுவாராயினர்.
இங்ஙனம் ஒழுகும் நாளில், கன்மத்துக்கீடாய்க் குன்மநோயெய்த, அதனால் மிகத் துயருழந்து வருந்தி, அம்பிகையின்மீது அந்நோய் நீங்குமாறு பல இன்னிசைப்பாக்களைப் பாடியும், அந்நோய் நீங்கப்பெறாமையால், மீண்டும் அம்பிகையின்மீது சிங்கைக் கொச்சகக்கலிப்பா எனப் பெயரிய நூலொன்றையியற்ற வெண்ணிப்பாடுங் காலத்து, அந்நோய் அதிகரித்தமையால்,
"பைமருந்தும் வாகடநூற் பண்டிதனார் கொண்டுவந்த
கைமருந்து மேதுமஞ்சட் காப்புமருந் தொவ்வாதாற்
செய்மருந்து பின்னிடுமுன் றீர்த்தமருந் துண்டுபிணிக்
குய்மருந்து வேறே துலகுடைய மாதாவே “
எனவரும் இப்பாடல் முதலிய பல பாடல்களைப் பாடிப் புலம்பி வருந்தினர். எத்துணைப் பெரியாரும் பிராரத்த கன்மத்தை யனுபவித்துக் கழிக்க வேண்டுவது நியமமாதலால், இங்ஙனம் பலவாறாகப் பாடியும், அந்நோய், நீங்காது மேன்மேலும் அதிகரித்து வருத்த, அவ்வருத்தம் சகியாது, கொடும் பிணியுடனிருந்து வருந்துவதிலும் உயிர் துறப்பதே சாலவும் நலமெனக்கருதிக் கல்யாண தீர்த்தத்தின் கண் இழிந்தனர். அவ்வமையத்து, அம்பிகைதோன்றி, "அன்பனே! என்னகாரியஞ்செய்தனை; நீ நம்மாட்டு உழுவலன்புடையையாதலின் இந்நோயை இப்பொழுது யாம் தீர்ப்பினும், நீ முற்பிறவிகளி லீட்டிய கன்மங்கள் நின்னுயிர் புக்குழிப்புக்கு வருத்து மென்பதையறிதி" எனத் திருவாய் மலர்ந்தருளினர். அதனைச் செவியுற்ற நமச்சிவாயர், அன்புருவாகிய தாயே! இப்பிறவியிலேயே இக்கன்மநோயை அனுபவித்துக் கழிப்பல்; இனியொரு பிறவியும் வேண்டகில்லேனென விண்ணப்பித்து, ஆண்டு நின்றும் போந்து, திருக்கோயிலுட் புக்கு, அம்பிகையையும் சுவாமியையும் தரிசனை செய்து, "என்குடி முழுதாள்க" என்னு முதற்குறிப்புள்ள செய்யுள் முதலிய பலபாக்களைப் பாடித் துதித்துத் தம்மில்லிற் கேகினர்.
இவர் இங்ஙனம் ஒழுகும் நாளில், அருந்ததியன்ன பெருந்திறற் கற்பினையுடைய இவரது மனைவியார், அம்பிகையின் திருவடி நீழலையடைய, நமச்சிவாயர், இதுவும் அம்பிகையின் செயலெனவெண்ணி மனஞ்சலியாமல் தம்மொழுக்கநெறியிற் சிறிதும் வழுவாது நின்று, தாயினையிழந்த தம்மரும் பெறற் புதல்வியைப் பாதுகாத்து வருங்காலத்து, ஒரு நாள் மாலைப்பொழுதில், வழக்கம்போல, பாவநாசத்துக்குச் சென்றிருந்தனர். அவ்ரது புதல்வியாரும் சமையற் றொழிலினை முடித்துக் கோயிலுக்குச் சென்றிருந்த தந்தையார் வரவினை எதிர்பார்த்திருக்கும் அமையத்துப் பூப்படைந்தனர். பூப்புற்ற அவ்வம்மையார் தம் தந்தையார் வந்தவுடன் அமுதுபடைக்கும் வண்ணம், அயலகத்துள்ளதோர் மாதினைவேண்ட, அவ்வேண்டுகோளுக்கு அவ்வம்மையார் இசைந்தமை கண்டு ஆண்டுச்சிறிது பொழுது தாழ்த்தனர். அவ்வமையத்தில் நமச்சிவாயர் தம்மில்லிற் கெழுந்தருள, அன்பரன்பிற் கெளியளாகிய உலகாம்பிகை, அவரது புதல்வியாரின் திருவுருக் கொண்டு, நமச்சிவாயரை யன்போடு வரவேற்று, அன்ன முதலிய படைத்து உபசரிக்க, நமச்சிவாயர் உண்டு, காசுத்தி செய்தற்கு வெளி வரும்போது, அவரது புதல்வியாரால் வேண்டப்பட்ட அவ்வம்மையார் வந்து, ஐய! தாங்களே படைத்துண்டீர்களோ? அல்லது வேறு யாரும் படைத்தனரோ? என வினவினர்.
உடனே நமச்சிவாயர் என் பெண்மணியே அமுது படைத்தனளே யல்லது வேறொருவரும் படைக்கவில்லை யென்றனர். அவ்வம்மையார் ஈதென்ன ஆச்சரியம், நும் புதல்வி பூப்படைந்து எம்மில்லின் கணுள்ளாள். அவள் என் தந்தையாருக்கு இன்று அன்னம் படைத்தியென வேண்ட அவ்வேண்டுகோட்கிணங்கித் தங்கட்கன்னம் படைக்க என்னில்லின் கண்ணிருந்து விரைந்து வருகின்றேன், எனக் கூறினர். உடனே நமச்சிவாயர், மனந்துணுக்குற்று, இச்சூழ்ச்சியை யாதெனவறியேன் என மனங்கவன்று, தம்மில்லினுள்ளே சென்று, தம் புதல்வியைக் காணப் பெறாமையால் உலகாம்பிகையே தம்மாட்டுக் கருணை கூர்ந்து இத்திருவுருக் கொண்டு எழுந்தருளி வந்தனள் எனவெண்ணிக், கண்களினின்றும் ஆனந்தவருவி சொரிய, உரோமாஞ்சங் கொள்ள, அம்பிகையைப் பாடித் துதித்தனர். இவ்வற்புதச் செயலை யறிந்த யாவரும் பேராச்சரியமுற்று புலவர் பெருந்தகையின் பக்தி மேம்பாட்டை வியந்து, அவரைப் பெரிதும் பாராட்டினர்.
இங்ஙனம் நிகழும் நாளில், தம் புதல்வியாருக்குத் திருமணம் செய்யக்கருதி, ஒத்த பண்பும், குலனும், ஒழுக்கமும் வாய்ந்த ஒரு மணமகனைத் தேடி மணஞ்செய்வித்துப், பின் தீர்த்த யாத்திரை தல யாத்திரை செய்யக்கருதி, பல தலங்கட்கும் சென்று, சுவாமி தரிசனம் செய்துகொண்டு, இராமேசுவரத்தை யடைந்து இராமநாதரைத் தரிசித்தனர். அவ்விராமநாதரைத் தரிசித்த பலன் சேதுமன்னரைக் காணின் உளதாம் என்னும் ஐதிக முண்மைபற்றி, அவ்விறைவனைக் காண்டற்கு இராமநாதபுரம் சென்று, அம் மன்னர் கடைத்தலையிற் பலநாட் காத்திருந்தும் அம்மன்னரைக் காண்டற்கு அமையம் வாய்க்கப் பெறாமையால் மனங்கசிந்து,
"முத்தலை சிந்தும் பொருநா நதித்துறை மூழ்கியெழுந்
தத்தலை நின்று விடாயாறிக் கல்வி யளைந்து நறுங்
கொத்தலர் கம்பகக் காவோடு நின்று குலாவியயான்
இத்தலை வந்து கடைத்தலை காத்த லிளந்தலையே'
என்னுங் கவியைப்பாடினர். இதனைச்செவியுற்ற சேதுமன்னர், வாயிலிற் போந்து, இப்புலவர் பெருமானைக் கண்ணுற்று “ஐய! நீவிர் யாவர்?” என வினவ, “அரசே! யான் பாவநாசத் தலத்தின்கண் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கின்ற உலகாம்பிகையின் சந்நிதியினின்று அவ்வம்மையார் புகழை அநவரதமும் பாடித் துதிக்கும் புலவன்; என்னை நமச்சிவாயர் என அழைப்பர்”, என்றனர். அம்மன்னர், இப்புலவர் பெருந்தகையாரது கல்வியின் அருமையும் பெருமையும் அம்பிகைமாட்டுப் பேரன்புடைமையும் முன்னர்ப் பலராலும் கேள்வியுற்றிருந்தனராகலின், உடனே கட்டித் தழுவி முகமன்கூறித், தம் அரண்மனைக்குள் அழைத்துச்சென்று, ஆசனத் தமரச்செய்து, இனிய மொழி பலபுகன்று, உபசரித்துச், சிறிதுநேரம் அளவளாவி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவ்வமையத்து, இவரது கவியில் தெய்வத்தன்மையுண்டென்று கேள்வியுற்றிருந்தன ராகலின் அதனைச்சோதிப்ப தெங்ஙனமென மன்னர் கருத அதைக் குறிப்பாலுணர்ந்த நமச்சிவாயர், அரசன் அருகே நின்ற அடைப்பைக் காரனையழைத்து, அவன் நாவில் திருநீற்றையும் மஞ்சட்காப்பையும் இட்டுப் பாடுகவெனப் பணித்தவளவில், அவன்,
"பாவுக்குள் ளேயரன் பாதிக்குள்ளே பன்னி ரண்டுமடற்
பூவுக்குள் ளேநவ கோணத்தி லேதென் பொதியைவரைச்
சார்புக்குள் ளேவந்து நின்றதல் லாலுல கம்பிகையென்
னாவுக்குள் ளேவந்து நின்றாடன் கீர்த்தி நடாத்தவென்றே"
என்னும் கவியைப்பாட, அரசரும் கேட்டு வியந்து, நமச்சிவாயரைப் புகழ்ந்து பாராட்டினர். பின்னர் அரசர் சிவிகை முதலிய விருதுகள் கொடுத்து இவரை மேன்மைப்படுத்தினர். இங்ஙனம் விருது முதலியன பெற்று, நமச்சிவாயர் தம்மூர்க்குச்செல்ல வெண்ணி, வழியிலுள்ள பிற தலங்களையும் வணங்கித் தம்மூரை யடைந்தனர். தாம் பெற்ற விருது முதலியனவெல்லாம். அம்பிகையின் திருவருளால் கிடைத்தனவென் றெண்ணி, அவற்றை அம்பிகையின் சந்நிதியிற் சேர்த்து, அம்பிகையினிடத்து இடையறாத பேரன்புடையாராய் இன்புற்று, சின்னாளிருந்து, உலகாம்பிகையின் திருவடி நீழலையடைந்தனர். அஞ்ஞான்று;
"பாரிலே நமக்கொருவர் சரியோ தென்றற்
பருவதத்தில் வருதாம்ப்ர பர்ணி யாற்று
நீரிலே மூழ்கிவினை யொழிந்தேஞ் சைவ
நெறியிலே நின்றுநிலை பெற்றேஞ் சிங்கை
யூரிலே குடியிருந்தே மெமது கீர்த்தி
யுலகமெலாம் புகழ்ந்தேத்த வுலக மாதின்
பேரிலே கவிதையெல்லாஞ் சொன்னேஞ் சொன்னேம்
பிறப்பிலெழு பிறப்பு மறப் பெறுகின்றேமே."
என்னும் இக்கவியைத் திருவாய் மலர்ந்தருளினர் என்பர்.
இப்புலவர் பெருமான், அவ்வவ் வமையங்களில் பாடிய தனிப்பாடல்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. இவையன்றி கலித்துறையந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கொச்சகக்கலிப்பா, பிள்ளைத் தமிழ், சிங்கைவெண்பா, சாந்தவிருத்தம், *வண்ணம் முதலிய பிரபந்தங்களும், இப்புலவரால் இயற்றப்பட்டனவாம்.(*வண்ணமும் ஏனைய பிரபந்தங்களும் அகப்படவில்லை.) இவர் திருவாய் மலந்தருளிய இப்பிரபந்தங்கள், அருட்கவியின்பாற்பட்டு இன்சுவை முதிரப்பெற்றுக் கற்பனாலங்காரங்களுடன் சுத்தாத்துவித சைவ சித்தாந்த நுண்பொருள்க ளமையப் பெற்றுக் கற்போர் நெஞ்சங் கழிபேருவகை பூப்பச் செய்வதோடு, இம்மை யின்பங்களையு மெய்தற்கேதுவாய் இருக்கும், என்பது துணிபு.
இப் பிரபந்தத்திரட்டுப் பழைய தாலபத்திரப் பிரதிகளில் "பாவநாசத் தலபுராணம் பாடிய முக்களாலிங்கமுனிவர் புதல்வரும், ஆனந்தக் கூத்தரின் இளைய சகோதரருமாகிய நமச்சிவாயக் கவிராயரவர்களியற்றிய பிரபந்தங்கள்” என்று எழுதப்பட்டிருத்தலால் இதிலிருந்து பார்க்குங்கால் நமச்சிவாயக் கவிராயரவர்கள் திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ - மாதவச்சிவஞான யோகிகளின் சிறிய தந்தையாயிருக்கலாமெனத் தெரிகின்றது. சிவஞானயோகிகளுக்கு முக்களாலிங்கரென்னும் பிள்ளைத்திருநாமமிருந்ததும், யோகிகளில் தந்தையார் ஆனந்தக் கூத்தரென்பதும் சிவஞானயோகிகள் சரித்திரவாயிலாக விளங்குகின்றன. இதனால் ஆனந்தக்கூத்தர்தம் அரும்பெறற் றவப்புதல்வருக்கு முக்களாலிங்கரென நாமஞ்சூட்டினதுகொண்டு ஆநந்தக்கூத்தரின் தந்தைபெயர் முக்களாலிங்க முனிவரென்பதும் பொருத்தமுடைய தாகின்றது. தந்தைபெயரை மைந்தர்க்கிட்டு வழங்குவித்தல் தமிழ் நாட்டுப் பெருவழக்காறாதலாலென்க. அன்றியும் பாவநாசத் தலபுராணம் ஆறை அழகப்பமுதலியாரவர்கள் கேட்ப அரங்கேற்றப் பெற்றதென்பது அந்நூல் புராணமகிமைச்சருக்கம். 23-வது செய்யுளில்,
“அம்பொன் மாளிகை யாறைவாழ் மயிலப்ப னருள்குமார சுவாமி
தம்பி யாமுகில் புகழ்ச்சிவ சயிலநா தனுக்குமுன் னவனானோன்
கம்ப மாகரி காத்தரு ளழகப்பன் கனிந்தவன் பொடுகேட்ப
வும்பர் நாயகர் சந்நிதா னத்தினி லுரைத்ததிக் கதையாமால்"
எனக் கூறப்பெற்றுளதாதலால் அழகப்ப முதலியாரவர்கள் காலமும் முக்களாலிங்க முனிவர்காலமு மொன்றாவென்பதை நோக்குவோம். அழகப்ப முதலியாரவர்கள் காலம் இற்றைக்கு 210 வருடங்கட்கு முன்னதாகத் தெரிகிறது. மாதவச் சிவஞான யோகிகள் பரிபூர்ணமாகி 131 வருடங்களாகின்றன. அதன்முன் மாதவச் சிவஞானயோகிகள் ஜீவிய காலமும் ஆனந்தக்கூத்தர் காலமும் 80-வருஷம் இருத்தல் அமையும். ஆகவே ஆறை அழகப்ப முதலியாரவர்கள் காலமும் பாவநாசத்தல புராணாசிரியராகிய முக்களாலிங்க முனிவர்காலமும் இற்றைக்கு 210- வருஷங்கட்கு முற்பட்டுள்ளதென்பதும் பொருத்தமுடையதேயாம்.
திருநெல்வேலி இந்துகலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சிறந்த தமிழ்வித்துவானும் சிவபூஜா துரந்தரருமாகிய அனந்தகிருஷ்ணக் கவிராயரவர்களும், பாவநாசத் திருக்கோயிற் றருமகருத்தரா யிருந்த விக்கிரமசிங்கபுரம் புதுவீடு சுப்பையா பிள்ளையவர்களும் இந்த நமச்சிவாயக் கவிராயரவர்களின் பெண்வழிச் சந்ததிகளேயாவர். இப்புலவர் பிரான் றிருமரபு நீடூழிவாழ்க.
உலகம்பிகை திருவடிகளே சரணம்.
இங்ஙனம்,
மு.ரா. கந்தசாமிக் கவிராயர்.
---------------------------------------------------------------------------
1. பாவநாசம் என்னும் சிங்கை
உலகம்மை கலித்துறையந்தாதி.
சிவமயம்,
காப்பு.
முந்தாதி வேதப் பொருளாகுஞ் சிங்கை முதல்வியுல
கந்தாதி பாட வருள்செய்யு மேயெந்தை யார்சடைமேற்
பிந்தாதி மாகர சந்திர ரேகை பிடித்திதழிச்
செந்தாதி னாலொர் சிவப்பேற்றுந் தாழ்கைச் சிறுகளிறே.
நூல்.
உலகே பொதிய மலைப்பா ரிசநின் றுலாவுசுமங்
கலகே கயநடங் கண்டிருப் பாயிருக் காதிமுறைப்
பலகேள்வி யுண்மைப் பொருளேயுன் பாதம் பணிவனப்பால்
விலகே னெறியை விலக்கேன் வினையை விலக்குவையே. (1)
விலக்குந் தரமல்ல வேயைம் புலாதிக்கும் வேள்பகைக்கு
மிலக்குந் தமியனு மென்னெஞ்சு மோநெட் டிறால்வழிதேன்
கலக்கும் பொருநைத் துறைமுக் களாவையன் கைபுனைநித்
திலக்குங் குமத்தனத் தாயிது வோநின் றிருவுள்ளமே. (2)
உள்ளத் திறங்க ளுலகே யுனக்கிங் கொளிப்பதென்ன
கள்ளத் திறங்களென் கன்மமன் றோட் களங்கமனப்
பள்ளத் திறங்குமுன் னுற்பல தாரைக்கு பாநதிநீர்
;
வெள்ளத் திறங்குவ தெந்நாள் சனன விடாய்கெடவே. (3)
கெடுவா யெனையுங் கெடுப்பாய் மருண்டு கிலேசம் வந்தாற்
படுவாயுன் னோடு படுபவ ரார்வினைப் பாசநெஞ்சே
விடுவாயென் னம்மை யுலகா ளிடத்தின்பு வேண்டிலன்பு
நடுவா யவள்பத நாவாய் சனன நடுக்கடற்கே. (4)
கடலுந் தரங்கமும் போலுல கேநின்ற கன்மமும்பா
ழுடலுந் தொடர்ந்த வுறவென்சொல் கேனுறு கோடிதழி
மடலுங் குலைந்து மதுவூற்ற வெந்தை மதிச்சடைமேற்
படலுஞ் சிவந்த பதம்பாடி யுன்னையும் பாடியுமே. (5)
பாடுங் கவிக்கிரங் காயுல கேகொடும் பாவிக்குநீ
கூடும் புசிப்பன்றிக் கூட்டுவை யோதன்னைக் கொண்டுதப்பி
யோடுந் தனையு முழைத்திடுங் காலிவ் வுயிரகன்றால்
வாடும் பிறகிந்த மண்ணோ டறுதியிம் மண்ணுடம்பே. (6)
மண்கொள்ளு மோவந்த விண்கொள்ளு மோநின் மகிழ்நர்மனத்
தெண்கொள்ளு மோவிஃ தேதோ வதிசய மெண்ணியெண்ணிப்
புண்கொள்ளு மோர்புன் மதியேனுங் காணவிப் போதிரண்டு.
கண்கொள்ளு மோவுல கேயின்று நீநின்ற கட்டழகே. (7)
கட்டிய செம்பட்டு முத்தா ரமுநின் கணவரைப் போய்த்
தெட்டிய கண்ணுந் திருத்தோடுந் தோளும் தெளிந்துநறாக்
கொட்டிய மென்மலர்க் கூந்தலுஞ் சாந்தக் குழம்பலம்ப
முட்டிய கொங்கையு மாயுல கேவந்தென் முன்னிற்கவே. (8)
நிற்கும் பகிரண்ட மெல்லாந் தகர்த்துநிர்த் தூளிபடப்
பொற்குன்ற மும்பொடி யாகநின் றாடும் புனிதர்தமை
விற்குங் கடைக்க ணுலகேயுன் மாய விலாசவுண்மை
கற்கும் பெரியரல் லாற்சிறி யேனெங்ஙன் காண்பதுவே. (9)
காணக்கிடைத்தது நின்றிருக் கோலமென் கள்ளமனம்
பூணக் கிடைத்ததுன் பொன்மலர்த் தாளுன்னைப் போற்றிசெய்து
பேணக் கிடைத்த துலகெனும் பேர்பெற்ற பேறுகண்டு
நாணக் கிடைத்ததொன் றம்மா வதையென்ன நான் சொல்வதே (10)
சொல்லப் படாதுல கம்மேநின் பேரெழிற் றோற்றமப்பாற்
செல்லப் படாது திகைத்துநின் றேன்பற்றிச் சிற்றுளியாற்
கல்லப் படாத கரும்பாறை நெஞ்சைக் கரைத்தினிமேல்
வெல்லப் படாதெழு மோகாந்த காரத்தை வெல்லுவையே. (11)
வெல்வாயென் னம்மை யருளாற் புலன்களை வேங்கைகண்ட
புல்வா யெனவஞ்சும் புன்மைநெஞ் சேபிறை போலெயிற்று
வல்வா யமன்வரு மோவுல கேயென்று வாய்திறந்து
சொல்வாய் விழிக்கினுஞ் சோர்வா யுறங்கினுந் தும்மினுமே. (12)
தும்முங் கனன்முத் தலைச்சூல பாணிநெஞ் சுக்குள்வைத்துச்
செம்மும் புதையற் றிரவிய மாமுன் சிலம்படியை
விம்மும் புளகத் தனத்துல கேயென் மிடறுளைந்து
கம்மும் படியித் தனைநாட் கதறியுங் கண்டிலனே. (13)
கண்டத்தி லேயன்று சற்றே கறுத்த கறுப்பனிலாத்
துண்டத்தி லேசெஞ் சுடர்காட்டு பாதத் துணைதுணையா
யண்டத்தி லேகண்ட தெல்லாமென் னம்மை யடியர்தங்கள்
பிண்டத்தி லேகண் டிருப்பார்கற் பாந்தரம் பின்னிடவே. (14)
பின்னிட்ட கொந்தள பாரத்தின் மாலைப் பிரசமுண்டு
தென்னிட்ட வண்டின் சிறைக்காற்று மூர்ச்சனை தீர்க்கவந்து
முன்னிட்டு நின்றென் னுயிர்விடுங் காற்பத முந்தருவா
யென்னிட்ட மிங்கி துலகே யுனக்கிட்ட மெப்படியே. (15)
எப்படி நீ துணை செய்குவை யோவறி யேன்பிழைத்த
தப்படி யேனிச் சனனத்தி லேதள்ளத் தக்கதன்றா
லப்படி யேழு பிறப்பினுஞ் சூழுமல் லாற்பகட்டுக்
கப்படி யூர்திக்கென் மேலே தினமுங் கடுந்தரவே. (16)
தரமோசென் றுண்டிப் பொருட்டாற் பிறர்வையத் தாழ்ந்துமண்
மரமோவிங் கெப்படிக் கேட்பதம் மாவிந்த வாழ்க்கையென்ன
திரமோபுன் சன்ம மினிப்போது நீவைத் திருந்ததிக
பரமோவுன் பொற்பதந் தாவுல கேபடும் பாடறிந்தே. (17)
அறியாத தொன்றை யறிந்தனு பூதிவந் தானந்தமாய்ப்
பிறியாது நின்றுப்ர பஞ்சமெல் லாந்தள்ளிப் பின்னையொன்றுங்
குறியா திருந்துனைக் காணா விடிற்பிழைக் கும்படிக்கோர்
நெறியாதுங் கண்டதுண் டோவுல கேசொல்லு நீயெனக்கே. (18)
எனக்கே சகாவுனை யன்றியுண் டோவென் றிருளெறிக்குங்
கனக்கேச பாரக் கரும்பைநெஞ் சேயொருக் கானினைத்தாற்
றனக்கே சரீரம் பகிர்ந்தானை வாழ்வித்த தாயெளிவந்
துனக்கே சகாயம் புரிவாளோர் சிற்பத முன்பதமே. (19)
பதமென்ற தாமரைப் பூவுக்கு ளாறு பதச்சுரும்பா
யிதமென்று போயிருந் தாயிலை யேமுடை யாக்கையையற்
புதமென்று தாயுல கைப்பணி யாதென்ன புத்தியிதைச்
சதமென்று நீகெடுத் தாய்மன மேயெனைச் சந்ததமே. (20)
சந்தன பாரத் தனம்பிதி ரோடத் தமிழ்மறைச்சம்
பந்தன வாவறப் பால்கொடுத் தாய்விருப் பாநிகள
பெந்தன மாமிச் சடஞ்சுடு காட்டுப் பெருநெருப்புக்
கிந்தன மாகத் தமியேனு நெஞ்சு மிருந்தனமே. (21)
தனத்தாசை யுண்டது நின்பூ சனையெண்ணிச் சற்சனங்க
ளினத்தாசை யுண்ட துனக்கன்பு வேண்டி ரகசியவுற்
பனத்தாசை யுண்டது சிற்பதங் காமித்த பாதகனேன்
மனத்தாசை யிவ்வள வம்மா வுலகுண்ட மாறங்கையே. (22)
தங்கங் குழைத்த முலைத்தாள மொற்றித் தனிக்குழையா
னங்கங் குழைத்தவென் னம்மாசற் றேனு மகங்குழையாய்
பங்கங் குழைத்த புனல்போற் கலங்கிப் பரந்து திரிந்
தெங்கெங் குழைத்து வளர்ப்பதென் சாண்குழி யிம்மட்டுமே (23)
மட்டுண்ட தென்றெண்ண வேண்டாம் பிறர்தலை வாயிலிற்போய்த்
தட்டுண் டலைந்து தடுமாறித் தீவினைச் சங்கிலியாற்
கட்டுண்ட தென்னசொல் வேனுல கேயொருக் காலுமெய்த்தோர்க்
கிட்டுண்ட திங்கில்லை யேற்றுண்டு நான்பட்ட தின்னமுண்டே (24)
இன்னம் பராமுக மேனடி யார்க்கு மெனக்குமென்ன
பின்னம் பராபரித் தாற்பிழை யோமனப் பேய்க்கிசையப்
பொன்னம் பராபரை நல்குமென் றேசில புத்திசொன்னேன்
முன்னம்ப ராடப் படித்தசங் கீத மொழிக்கரும்பே. (25)
கரும்போ வெனுஞ்சொல் அலகேயென் விண்ணப்பங் கள்ளரும்பே
யரும்போல்வ னென்சொன் மொழிவதென் றேகுறிப் பாலிரக்கம்
வரும்போ லிருந்ததும் வாரா தெனவு மதிமருண்டே
னிரும்போ விரும்பல்ல வோவறி யேனுன் னிதையத்தையே. (26)
இதையத் தெறித்த விருண்மாற்றி நின்னரு ளின்நிரவி
யுதையத் தெறித்த வெயிலொக்கு மேநின்று சூழறுகால்
புதையத் தெறித்த மதுக்கொன்றை யார்தம் புரிசடைக்கா
டதையத் தெறித்த பதத்தாலலைக்கு மரும்பிடியே. (27)
பிடிபட்ட தன்றுன் சொருபத் தியானம் பிறந்துபிறந்
தடிபட்ட சன்மமெந் நாட்படு மோநின் றதிர்படுமவ்
விடிபட்ட வெவ்வர வென்னநொந் தேனுல கேயெனக்கிப்
படிபட்ட துன்ப மினிப்போது நீமுகம் பார்த்தருளே. (28)
அருளுக்குத் தென்மலைச் சந்தனச் சார லகண்டிதசிற்
பொருளுக்குச் சிங்க புரத்துல காளுக்குப் பூங்குழலின்
சுருளுக்குப் பைம்புய றோற்கநின் றாளுக்குத் தொண்டுபட்டு
மிருளுக்குச் சிந்தை யிடைப்படு மேலுண்மை யென்படுமே. (29)
படுக்கின்ற கண்ணியிற் பட்டீடு பட்ட பறவையைப்போ
லெடுக்கின்ற சன்மத் திடைப்பட்டு வீணி லிகபரமுங்
கெடுக்கின்ற கன்மங் கெடுப்பதென் றோவன்பர் கேட்டதெல்லாங்
கொடுக்கின்ற கற்பகக் கொம்பே யசல குலவல்லியே. (30)
குலவல்லி மேனை குமாரத்தி மூரற் குறுமுளைநித்
திலவல்லி சூடகச் செங்காந்த ளோதுபைந் தேங்கமழுற்
பலவல்லி தாமரைப் பூவல்லி மெல்லப் படக்கன்றுதா
ணிலவல்லி சூட மலையா சலப்பக்க னின்றபொன்னே. (31)
பொன்னா சையுமடப் பூவைய ராசையும் போலநிலத்
தின்னா சையுமெனக் கின்னா செயுமிதற் கேதுசெய்வே
னுன்னாசை மேற்கொண்டு வாழ்முக் களாவன யோகியென்யோன்
றன்னாசை நோய்க்கு மருந்தேகல் யாண சவுந்தரியே. (32)
தரியேனுன் பேரன்றி மற்றவர் பேரையுன் சந்நிதியைப்
பிரியே னினியிந்தப் பேயேன் பிறவி பிறந்திறந்து
திரியேன் வறுமைக்கென் செய்வேன் றவர்பின்பு சென்றுபரி
கரியே னுலகம்ம வேறென்ன வேண்டக் கடவதுவே. (33)
கடவுங் கடுநடைக் கார்மேதி யூர்திதன் கையிலகப்
படவுங் கெடவுங் கடப்படு மோவிண் பகீரதி போய்த்
தடவும் பவளச் சடையா னலர்ந்தசெந் தாமரைக்கை
தொடவுஞ் சிவந்த பதத்துல காளைத் துதிசெய்துமே. (34)
துதிசெயுந் தொண்ட னெனக்கே முழுதுந் துணைசெய்துமேல்
விதிசெயுஞ் செய்கை வெறுஞ்செய்கை யாய்விட வேறுசெய்து
கதிசெயுந் தன்பதங் காட்டுங்கொ லோதரங் கப்பொருநை
நதிசெயுங் கம்பலை நீங்காத சந்நிதி நன்னுதலே. (35)
நுதலைக் கிழித்துப் புறப்பட்ட தீக்கொலை நோக்கின்முழு
முதலைத் தமிழ்ச்சிங்கை முக்கள வீசனை மோகஞ்செய்யுந்
திதலைக் குரும்பைக் கரும்பேயுன் பல்லவச் சில்லரிப்பூங்
குதலைச் சதங்கைப் பதங்களுக் காட்பட்டுக் கொண்டனனே (36)
கொண்டே னுளத்துல கம்மநின் னூபுரக் கோகனகங்
கண்டே னொருவருங் காணாத காட்சியைக் கற்பகந்பூந்
தண்டே னுகர்ந்து களிதூங்கு மோர்சஞ் சரிகமென்ன
வுண்டே னிருந்தரு ளானந்த மாமமிர் தோதகமே. (37)
ஓதன மான விடத்தா ரெழுத்திட்ட தொப்பவிலைச்
சாதன வோலையந் தாழ்குழை யாள்பதந் தன்னைநெஞ்சே
மாதன மாக மதித்தன மோகெடு வாய்மருண்ட
சேதன மாக விருந்தோம் பிறந்தென்ன செய்தனமே. (38)
செய்தவம் போதன் முதலோ ரிதுவென்று தெய்வமலர்ப்
பெய்தவம் போருகப் பெண்பெரு மாளெம் பிராட்டியையென்
கைதவம் போத வுலகேயென் றேத்திலன் காலனினி
வைதவம் போத விழைத்தாய் பிழைத்தென்று வாதிக்குமே. (39)
வாதித் தலைத்த வினைமாற்றி வாயுவை மட்டிருத்திச்
சாதித்த சித்தி தரும்யோக சாதனை தன்னிலொன்றிப்
பேதித்த தத்துவ மெல்லாங் குளானந்தப் பேரமுதாற்
சோதித் தவர்க்கென் னுலகா ளருள்வந்து தோற்றிடுமே. (40)
தோற்றேன் வினைப்பகை யைம்புல வேடருஞ் சூழ்ந்துமனந்
தேற்றே னறிவைச் சிறைப்படுத் தார்பசுந் தீங்குதலைக்
கோற்றேன் மொழியுல கம்மாசும் மாவவர் கோட்டிகொள்ள
வாற்றே னினிச்செய லற்றே னுனக்கின் றடைக்கலமே. (41)
கலசந் தருமுனிக் காமணக் கோலமுங் காட்டிமந்தா
நிலசந் தனகிரிச் சாரனின் றாளைமுன் னீதிமறைக்
குலசந் ததிக்குணப் பால்கொடுத் தாளையுட் கொண்டிருந்துஞ்
சலசந் திரசஞ் சலப்படு நெஞ்சைத் தடுப்பதென்றே. (42)
என்றைக்கு நீதுணை யம்மாவென் னாவி யிறந்துவிடு
மன்றைக்கு மோடிவத் தஞ்சலென் பாய்நச் சராவரையான்
மின்றைக்கு மாலையங் கோடீர காந்தி விளங்குபொலங்
கொன்றைக்கு மேற்றிய பொற்றாட் சிமையக் குலக்கொழுந்தே (43)
கொழுந்து நிலவும் பிறைமான நாறுங் குழகன்முடிக்
கழுந்து வரிவிற் கனகா சலத்துன் கணவரொடு
மெழுந்து விடையிற் புறப்படு வாயுல கேயினிப்போய்
விழுந்து நிரையத் தழுந்தாதென் னாவி விடும்பொழுதே. (44)
பொழுது கழிந்தது வீணே யெனக்கென்ன புத்தியுன்னைத்
தொழுது பணிந்து துதித்தில னேயிதைச் சொல்லிச்சொல்லி
யழுது புலம்பில் விடுமோ யமனினி யாயினுமென்
பழுது களைந்து புரப்பா யுலகம் படைப்பவளே. (45)
படைப்பா ரொருவ ரளிப்பா ரொருவரப் பாலொருவர்
துடைப்பார் பிறகு தொழில்வே றிரண்டு தொகுத்துவகுத்
தடைப்பா ரிருவ ரெனத்திரி வாருல கம்மமற்றுன்
கடைப்பார்வை செய்கின்ற தொன்றாலைந் தாதிக்கக் காரருமே. (46)
காறுந் துவர்க்கும் புளிக்குங் கைப்பாமென் கவிமுறைப்பாட்
டேறுந் திருச்செவிக் கேறாதென் றாலு மெளியனுன்பேர்
கூறுந் தொழில்விட்டு மற்றோர் தவஞ்செய்து கொண்டுநின்னைத்
தேறும் படிக்குல கம்மவென் பாழ்மனஞ் செவ்வல்லவே. (47)
செவ்விக் கலையின் மதியே மதியெனத் தீமையராக்
கௌவிக் கிடந்ததுங் கண்டிரங் காயெந்தை கண்ணுதலா
னௌவிக் கருங்க ணுலகேபொன் னாசையி னாற்பிறரை
வௌவித் திரிந்தன னிப்படி யோவென்னை வாழ்வித்ததே. (48)
வாழ்வித்த தொன்றிலை யிந்நாள் வரையும் வறுமையினாற்
றாழ்வித்த தீங்கொரு சற்றல்ல வேயித் தனையுநிற்க
வீழ்வித்த தென்னை யருங்கொடு நோய்க்குள்வெவ் வேறுகெட்டே
னூழ்வித் தகமென்ன சொல்வே னுனக்கென் னுலகம்மனே. (49)
அம்மனை பந்து கழங்காக் குலாசல மத்தனையு
மெம்மனை யங்கை யெடுத்தாடு நாளுல கீன்றெடுத்த
செம்மனை நுண்மருங் கிந்திரை கேள்வனத் தேவரெல்லாந்
தம்மனை யென்று புகுவா ரிவண்மலர்த் தாளிணைக்கே. (50)
தாளென்ற கிண்கிணிப் பங்கயப் பூவைத் தலையின்முடித்
தாளென்று சொன்ன தனேகமுண் டேயுன்னை யாதரித்துங்
கோளென்ற வல்வினை தீரா விடிலைய கோபிழைக்கு
நாளென்று மங்கல கல்யாண சுந்தர நாயகியே. (51)
நாயக மண்டல முக்கோணத் தேயுன்னை நாடுமிந்தப்
பேயக மண்டர்தம் பேறெண்ணு மோபெரும் பேருவரி
போயக மண்டிடுங் காவிரி யீந்தருள் புங்கவன்கைத்
தூய கமண்டல நன்னீர்ப் பொருநைத் துறையன்னமே. (52)
அன்னம் பழகும் பிடிநடை யாளுல கம்மை செம்மை
கன்னம் பழகுங் கயற்பார்வை வெள்ளக் கருணைக்குளே
முன்னம் பழகும் பழவடி யாரை முழுதுநம்பி
யின்னம் பழகும் பொழுதே வருமுத்தி யின்பங்களே. (53)
இன்பந் தருநல் வினையில்லை யோவெளி யேற்குளது
துன்பந் தருங்கொடுந் தொல்வினை யோவெந்தை சோகங்கண்டு
முன்பந் தரதுந் துமியோங் கிமாசல முன்றிலிட்ட
நன்பந் தரினின்று சற்றே கவிழ்ந்து நகைத்த பெண்ணே. (54)
பெண்மைத் திருவுருப் பெம்மா னுடம்பிற் பிறர்க்குணர்த்து
முண்மைப் பொருளை யுலகுடை யாளை யுணர்ந்திலையே
கண்மைக் குவளை யமிர்தப்ர வாகக் கருணைகண்டு
வண்மைக் கடலும் வறுமைக்கு ளாய்நின்ற வன்னெஞ்சமே. (55)
நெஞ்சுக்கு ளேயெங்ஙன் வைப்பேனுன் பாத நினைந்துபுல
னஞ்சுக்கு ளேயொன்றுக் கானாலு மில்லை யறிவுகெட்டே
னஞ்சுக்கு ளேநல்ல துண்டோவெண் டோளெந்தை நாணிலவுப்
பிஞ்சுக்கு ளேசிவப் பூட்டிய தாட்டுணைப் பெண்கொடியே. (56)
கொடியேன் மனமுங்கு ழையேனுன் பேர்சொல்லிக் கூப்பிட்டுன்சீர்
படியே னினியெப் படிப்பிழைப் பேன்யமன் பாசம்விட்டா
லடியேன் விடுவிடென் றப்போ தடிக்கு மடிவிலக்கி
மிடியேனை யம்ம வுலகேயெவ் வாறு விடுவிப்பையே. (57)
விடுபோந் தவனென் னடியானென் றோடி விலக்குவையோ
கொடுபோய் நரகிற் குளிப்பாட்டு போவென்று கூறுவையோ
வடுபோ ரயின்முத் தலைவே னமன்செயு மாக்கினைக்குட்
படுபோதி னென்சொல்லு வாயுல கேயுன் பராக்கொழிந்தே. (58)
ஒழிவாய்த் தவம்விட் டுலையாரென் னம்மை யுலகடியார்
விழிவாய்ப் படுஞ்செவி வெவ்வா யராவெள்ளி வெற்பறுபட்
டழிவாய்ப் பகிரண்டத் தாயிர கோடி யடுக்குமுந்நீர்க்
குழிவாய்ப் புனலிற் குலைவாய்க் கிடந்து குழம்பினுமே. (59)
குழக்கன் றுலவை மலைப்பா ரிசத்திற் குடியிருக்கும்
பழக்கன் றிருவுருப் பாதிசெய் தாயிந்தப் பாவிகண்ணீ
ருழக்கன் றுரியன் றொருகோட்டை யுண்டுகண் ணோட்டைபட
வழக்கன் றியதுன்பந் தீராய்கொ லுன்னடி யார்க்கன்றியே. (60)
அன்றிற் பெயர்க்குன் றெறிந்தோனைப் பெற்றவென் னம்மைதமிழ்க்
குன்றிற் பிறந்த குழந்தைமந் தாநிலங் கொம்பனையார்
முன்றிற் புறந்தவழ் சிங்கைக்கங் காதர மூர்த்தியிட
மொன்றிற் சிறந்தது வேகுடி யாய்வந் துறைந்தனளே. (61)
உறைக்குங் கனன்முத் தலைவேல் வலந்திரித் தூழிநிற்கு
மிறைக்குந் தெளிதற் கெளியதன் றேயுல கீன்றவன்னை
நிறைக்கும் புவனந் திரோதாயி மாயையி னின்றழுந்த
மறைக்குந் திரும்ப வெளியாக்கு மிந்த மகத்துவமே. (62)
மகமுந் தவமும் பயின்மலை யாசல வாணனெங்கோ
னகமும் புறமு மமர்ந்திருப் பாய்பொரு ளார்ச்சிதமுஞ்
சுகமும் பெறுகிலன் பொய்வாழ் விதென்று துறந்துமுய்யே
னிகமும் பரமு மிழந்தே னெனக்கெ னினிப்பிழைப்பே. (63)
பிழைத்தே னிதுவரை பொய்யோடு மெய்யும் பிதற்றியொன்றோ
விழைத்தேன் வினைமட் டிலக்கில்லை யேயெளி யேனரக
துழைத்தேன் விடிவதுண் டோநின் கருணையுண் டாகிலுண்டா
மழைத்தே னளகத் துலகே பிடிப்பிது மாத்திரமே. (64)
திரம்போ லுடலை நினைந்திரை தேடித் திரிந்துநச்சு
மரம்போ னெடுக வளர்ந்திருப் பார்புன் மனையிலொரு
தரம்போ லிரண்டு தரநடந் தால்வைது தள்ளுவரென்
றரம்போலென் னெஞ்சை யுலகே கவலை யறுக்கின்றதே. (65)
அறுத்துப் பொருப்பைப் பிளந்தோர் பொருநை யருவிபைங்கோங்
கிறுத்துப் புறப்பட் டிறங்குதண் சார லிடத்து நின்று
பொறுத்துச் சிவந்தநின் பொற்றாட் கடிமை புகுந்ததம்மே
மறுத்துப் பிறப்பில்லை யென்றுநன் றாவென் மனத்தெண்ணியே. (66)
எண்ணத்தி லேயுண்மை யெண்ணாமல் வேத மெடுத்துச்சொன்ன
வண்ணத்தி லேயென் மனம்வைத்தி லேன்கொங்கை வள்ளத்துப்பால்
கிண்ணத்தி லேசைவக் கன்றுக்கு வார்த்தவள் கீர்த்தியெல்லா
மண்ணத்தி லேநின் றமுதூறப் பாடிக்கொண் டாடிலனே. (67)
ஆடிச் சிவந்த பதத்தார் பவளச் சடாடவிபட்
டோடிச் சிவந்த சரோருகத் தாளென் னுலகிருதாள்
சூடிச் சிவந்த தலையுமெக் காலமுந் தோத்திரங்கள்
பாடிச் சிவந்த கவிநாவும் பெற்றதென் பாக்கியமே. (68)
பாக்கிய மாவ துலகேயுன் பங்கய பாதமெண்ணும்
யோக்கிய வானென வோங்கிய வாழ்வென் றொருபிடியாய்
வாக்கிய வேத வழிநட வாமன் மயங்கிமலந்
தேக்கிய தீவினைக் குள்ளே மனஞ்சென்று சிக்கியதே. (69)
சிக்கென்ற கொங்கை யுலகேமெல் லென்று சிவந்தபதத்
துக்கென்று வந்து தொழும்புசெய் வேனறந் தோற்றவெறும்
பொக்கென்ற வாவிப் புலான்மீனுக் கேயப் புனன்மடைவாய்க்
கொக்கென்று நின்று குறிக்கின்ற தாற்றல்வெங் கூற்றமொன்றே (70)
ஒன்று மலச்சட மொன்பது பீறலவ் வொன்பதினு
நின்று மலச்செடி நாறுமெந் நேரமு நீர்விட்டன்றைக்
கன்று துடைப்பினுந் தீராது பாழ்த்த வருவருப்பி
தென்று தவிர்ப்ப துலகே நரக மிதினுநன்றே. (71)
நன்றாய் முடிந்த தடியேன் சரித்திர நான்செய்பிழை
யொன்றா யிரம்பதி னாயிர மாயொரு மிக்கவொரு
குன்றாய் முடிந்தது கொல்லோ வினிது குடியென்றுபோய்
நின்றா யொதுங்க வுலகே பொதிய நிழலுக்குள்ளே. (72)
நிழலுங் குளிர்ச்சியு நீங்காப் பொருநை நெடுந்துறையா
ளழலும் பசித்தழ லாற்றுமென் னாததை யாதரித்திங்
குழலுங் கருத்து மிழைநூலைப் பாவிழைக் கூடுபெய்யுங்
குழலும் பயிற்சியு மொன்று நன்றாமென் குணகதியே. (73)
கதிகாட்டி யென்னைப் புரப்பாள் கருணையுங் காட்டிநல்ல
மதிகாட்டி யுண்மை வழிகாட்டித் தன்மண வாளருக்குச்
சதிகாட்டி யொக்கநின் றாட்டுவித் தாளித் தனையுலக
விதிகாட்டினளங் கிதைக்காட்டிற் பேறினி வேறில்லையே. (74)
இல்லது முள்ளது நீய்றி வாயுல கேவினைதான்
வல்லது செய்யினு மற்றது நீயுன் மனம்பொறுத்து
நல்லது செய்வ துனக்கே புகழ்தொண்ட னானுன்சித்த
மல்லது பின்னை யறியே னுரைத்தென்ன வாவதுவே. (75)
ஆவது மோர்பொரு ளாகா ததுமுல கம்மமண்மேற்
சாவது மாறிச் சனிப்பது மூருஞ் சகடமென்னப்
போவது மீள்வது மெல்லாமுன் சித்திரம் புன்மையன்றோ
நோவது மேழை யுகப்பதும் வேறு நுவல்வதுமே. (76)
வதுவைத் திருமுன்றிற் பந்தரின் கீழம்மி வைத்ததன்மேல்
விதுவைப் புனைதொங்கல் வேணிப் பிரான்வைத்த மென்மலர்த்தா
ளதுவைப் பெனவெண்ண மாட்டாமற் போய்க்கழு காதியுண்ணும்
*பொதுவைப் பொருளென் றுலகே யிரையிட்டுப் போற்றுவனே. (77)
(*பொது சரீரம்).
போற்று வணங்கு முலகாளைத் தென்னம் பொருப்பொருபா
னாற்று நிரம்பி நடைகாவும் பாய்ந்து நறுங்கனிச்சா
றூற்று வளங்கெழு தென்பாற் களாநிழ லுட்பொருநை
யாற்று நெடுந்துறை மேலிருப் பாள்செம்பொ னாலையத்தே. (78)
ஆலையம் போதென் றிருந்தார் வணங்குல கம்மையைநான்
காலையம் போதும் பகற்போதும் பானுக் கதிரழுங்கு
மாலையம் போதுந் தொழுவே னெனக்கிது மாத்திரமே
வேலையம் போதனுக் கென்பொருட் டாலில்லை வேலையுமே. (79)
வேலை யெடுத்துப் பொருப்பெறிந் தோனம்மை மென்கமலக்
காலை யெடுத்துக் கருத்துள்வைத் தேனில்லை கல்வியின்சொன்
மாலை யெடுத்துப் புனையேனென் சொல்வதம் மாவவதி
யோலை யெடுத்துப் புறப்படுங் கூற்றுக் குரையெடுத்தே. (80)
எடுத்த பிறப்பிற் கதிபெற வேண்டி லெறிதிரைநீர்
மடுத்த முனிக்கு மணக்கோலங் காட்டி மலையமலைக்
கடுத்த தலத்தி லிருந்தாளெ னம்மை யவளைவெம்மை
கொடுத்த பசிக்குயிர் வெம்பிடு வீர்சென்று கும்பிடுமே. (81)
கும்பத்தில் வந்தவன் போற்றுல காள்பொற் குழைதடிந்து
விம்பத்தி னின்று விளையாடுங் கண்கள் விடக்குமரக்
கம்பத் திருந்து வணங்காத பாவியைக் காத்துநல்ல
சம்பத்து நல்கி யொழிப்பதென் றோமனத் தாபத்தையே. (82)
தாபிக்குஞ் செய்கை தருமுயிர் காக்குந் தகைமைநல்குங்
கோபிக்குந் தன்மை கொடுப்பிக்கு மூதண்ட கோடியெல்லா
நாபிக்குள் வந்தவன் முன்னோரைக் கொண்டு நடப்பிக்கும்வான்
சோபிக்குங் கண்கொண் டுலகாளென் பாசந் துடைப்பிக்குமே. (83)
துடைத்தா யிலைவன் கலிநோயை யென்னைத் தொழும்புசெய்றுப்
படைத்தா யிலைவந்து பார்த்தா யிலையுள்ளப் பள்ளத்தில்விட்
டடைத்தா யிலையுன் கருணைப்ர வாகத்தை யைவரைவிட்
டுடைத்தா யுலகம்ம நன்றா யிலையென் னுயிர்ப்பயிரே. (84)
பயிரிட்டு வேலி பிரிப்பவர் போலிந்தப் பாழும்பிறவிக்
குயிரிட்டு வாழ்வொழித் தாயுல கேபக டூர்தியென்னைத்
தயிரிட்ட மத்தினைப் போலலைத் தாலத் ததிமறிப்பே
னயிரிட்ட வேலை யுலகீன்ற நின்றிரு வாணையிட்டே. (85)
இட்டம் பிறிதிங் கிலையுல கேயெனக் கிந்திரனார்
பட்டம் பெறுவது பாரமன் றேதம் பதவியிலே
நட்டம் புயனையு மாற்றுவிப் பாரன் னவரிடத்தே
சட்டம் பலவுண் டுனைப்போற்றப் பெற்றவர் தாட்டிகமே. (86)
தாட்டா மரைதந் தருளுல கேபட்ட சஞ்சலங்கள்
கேட்டா ருருகுவர் கெட்டே னினியென் கிலேசமெல்லாம்
பாட்டா லுரைசெயிற் பட்டோலை கோடிபற் றாததையோ
ரேட்டா யிரம்வரி தீட்டவல் லார்சற் றெழுதுவரே. (87)
எழுதும் படியு முருவேற்றும் போற்று மினச்சுரும்பர்
கொழுதுண் பரிமளக் கொந்தள நீளக் குயிலுலகாண்
முழுதுங் கருணை புரிவாள் சனனமு மோசனமாம்
பழுதுந் தவிருங் கெடுவீ ரெழுத்தொர் பதினஞ்சுமே. (88)
அஞ்சித் திரிந்து பெரியோரைக் காணி லயர்ந்துகெட்டேன்
கஞ்சிக் கலைந்து கவலைப்பட் டேன்சதங் கைத்திருத்தாட்
பஞ்சிக் கிணங்கு மழியாக் கருணை பழுத்தவப
ரஞ்சிப் பசும்பொ னருட்பாவ நாசத் திருக்கவுமே. (89)
இருக்குந் தலமிலை யோமுக் களாநிழ லெந்தையெல்லா
முருக்குங் கடவுண் முழுத்தீ யுடம்பையுன் மோகத்தினா
லுருக்கும் படியங் கிருந்தாய் பொறுத்தது வோவிறுகிப்
பருக்குந் தனமுகை யாயுல கீன்றவுன் பச்சுடம்பே. (90)
பச்சைப் படிவத் துலகே யிரண்டு படியுனக்குப்
பிச்சைப்படிநெல்லுப் பெம்மா ளைப்பது பேருலக
மிச்சைப் படிக்குண்ண வன்றோ வெனக்கில்லை யென்னிலிந்தக்
கொச்சைப் படிறன் பொருட்டா லளக்குங் குறைப்படியே. (91)
பிடிக்குங் கவியின் பயனாகச் சொல்லிற் படுத்துவினை
முடிக்கும் படியென் முயற்சிகொண் டோவண்டு மூச்செறிய
வெடிக்குந் தொடைமைக் குழலுல கேயென்று வேதமெல்லாம்
வடிக்கும் பெயரையென் னாத்தழும் பேற வழுத்துவனே. (92)
வழுத்த நினைக்கிலன் மாதுல காளையென் மண்டைவிதி
யெழுத்தை வெறுப்ப தினியேது கண்டதெல் லாம்புசித்துக்
கொழுத்த விடக்குட லான்வந்த பாவமொர் கோடியென்னைக்
கழுத்தை முறிக்குஞ் சுமைப்பார மெத்தக் கனக்கின்றதே. (93)
கனமுண்ட கூந்த லுலகேயுன் சந்நிதி காத்திருக்க
மனமுண்டு பாழ்த்த வறுமையொட் டாது வலியச்செய்யு
மினமுண்டு நீகொடு போய்நெடுந் தூர மிவனையங்கே
தனமுண்டு காட்டென் றதுகேட் டதுவுந் தடையுண்டதே. (94)
உண்டார் கடல்விடந் தன்மண வாளரன் றுண்கையிலே
கண்டா ளுலகம்மை கண்டத்தி லேமலர்க் கையைவைத்துக்
கொண்டாள் பிறகங் கமுதான தென்பது கொண்டிவட்கு
விண்டாலென் புன்கவி நன்கவி யாமென்று விண்டனனே. (95)
விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக
மண்டல முங்கை மலரொடுந் தோளின் வழிந்தரத்ன
குண்டல மும்பொலி வாலப் பிராயக் குமாரத்தியாய்ச்
செண்டலர் செங்கை யுலகாளென் னாவிற் சிறந்தனளே. (96)
சிறப்பார் சிறப்பி னுலகா ளடியவர் சிந்தைக்கென்னாம்
பிறப்பார் பிறப்பும் பெறுவார் தவமுமப் பேறுதப்பி
யிறப்பா சிறப்பு மிறவாமை வேண்டுமென் றில்லறத்தைத்
துறப்பார் துறப்பு நகைக்கிட மானவித் தொண்டனுக்கே. (97)
தொண்டைக் கனிவிள்ள வள்ளுகிர் வீணை துழாவநெடுங்
கொண்டைச் சொருக்குப் புறந்தாழ வோலைக் குழைதடவுஞ்
சண்டைக் கயலுஞ் சிவப்பேற மாதங்கி சாமளையாம்
பண்டைப் படிவத் துலகா ளருள்வந்து பாலிக்குமே. (98)
பாலான வேலையிற் சிந்தா மணிமண்ட பத்தின்மறை
நாலான பீடத்தை ஞானாந்த மாயருண் ஞாயிருபோன்
மாலான தேவர்கள் காலான மஞ்சத்து வந்திருக்கு
மேலான வாழ்வையுங் கண்டேன் பொருநைக்கு மேல்புறத்தே. (99)
மேலைக் கடவு ளிடப்பாக முந்துள்ளு வெள்ளருவி
மாலைப் பொதிய வரைச்சா ரலுநின்ற வண்ணமுந்தாட்
காலைக் கமலமுங் கல்யாண விக்ரக காந்தியும்பொன்
னோலைக் குழையுங் குழற்காடும் வாழி யுலகம்மையே. (100)
உலகம்மை கலித்துறையந்தாதி. முற்றுப்பெற்றது.
----------------------------------------------
2. பாவநாசம் என்னும் சிங்கை
உலகம்மை பதிற்றுப்பத்தந்தாதி.
சிவமயம்.
விநாயகர் காப்பு.
பத்துக் கவிக்கொருபண் பானசந்த பேதவிய
லொத்துக் கவிக்கு மொருநூறு - முத்தமிழு
மோதலவி நாயே னுலகுமைக்குச் சொல்லவரும்
பூதலவி நாயகன்றாட் பூ.
நூல்.
உலகம் பிகையும் பர்பரா வுமசஞ்
சலகம் பமதா சலசந் ததியா
ளலகம் பயிலன் னகணின் னருளென்
பலகம் பிதபா சமறுப் பதுவே. (1)
பதுமத் தடியெப் படிபெற் றிடுமோ
புதுமத் தளையிற் பொறிதட் டழிவே
னதுமத் திமநெஞ் சருவிப் பொதிய
மதுமத் தரிடத் துமடப் பிடியே. (2)
பிடியே யுலகம் பிகையே பகையே
தடியே னிலையிற் றலையத் தகுமோ
மிடியே னெனயான் விருதா வினிலிப்
படியே மனிதப் பதரா யினனே. (3)
இனமா டமடந் தையரென் றொருபொய்க்
கனவா னதுகண் டதையுண் டெனவே
மனமீ னமயங் குவனோ வனசந்
தனபூ தரசா யையினின் றவளே. (4)
நின்றே னொருநின் னிலையின் னிலையிற்
பின்றே னினிமேற் பிறவே நிறவேன்
குன்றே யணுவே குறுகா நெடுகா
வொன்றே பலவே யுலகம் பிகையே. (5)
அம்பா னவரும் புசுரும் பலரக்
கொம்பா னதினின் றுகுழைந் தநிலா
விம்பா னனமின் னுலகென் செய்குவாள்
வம்பா னதன்வஞ் சகநெஞ் சகமே. (6)
நெஞ்சத் துயரம் மநிகழ்த் துவதோ
கொஞ்சத் துயரன் றதுகொண் டெளியேன்
கஞ்சத் தினுமுக் களவீ சரதுண்
மஞ்சத் துமிருந் தமனோன் மனியே. (7)
மனசஞ் சலமிஞ் சினவஞ் சனைதே
டினசஞ் சிதவெவ் வினையெவ் வளவோ
கனசந் தனவெற் பிறைகைப் புனலே
பனதுங் கபயோ தரபஞ் சமியே. (8)
பஞ்சா னனசே கர*பா கமதிப்
பிஞ்சா னதணைந் துயிலத் துளவா
லஞ்சா துலகம் மையடிச் *சுவடே
நெஞ்சா னதினிற் குநிறுத் திடிலே. (9)
[*பாகமதிற்] <, [*சுவடென்] என்றும் பாடபேதம்.
இடுவா ரெவர்கைக் கிலையென் றயர்வேன்
கெடுவேன் பிறகென் கெடுபுத் தியினா
னெடுவா னவர்கோ னிலமைக் குலகா
ணடுவாள் பணிபண் பினர்நண் பரையே. (10)
வேறு.
பரையோ பரம்பொருளின் பாவகமோ பாவகத்தி
னுரையோ வுரைகடந்த வொன்றோவொன் றல்லவோ
பிறையோ பிறைகலந்த பேரமுதப் பேராறோ
வரையோ வணுவோ நீ மாதுலக மாதாவே. (11)
மாதாநீ யுன்பான் மவுணனெனக் கோர்தகப்பன்
காதார் விழியுலகே கள்ளனொரு பிள்ளையம்மா
பேதாதி பேதப் பிறவிதொறும் பிள்ளை முத்தந்
தாதாவென் பாரந்தத் தாயர்பலர் தாதையரே. (12)
தாதைதாய் மாமன்மகன் றம்பிதமக் கென்பர்சிலர்
பேதையேற் கிங்கே பிறக்குமுன்னிப் பேருளதோ
வேதையோ மாயமொன்று மில்லாத துண்டாக்கி
வாதைநீ செய்வதுமென் வம்பிலுல கம்பிகையே. (13)
கையோ வுனைத்தொழுமென் காலோ வலஞ்சூழு
மெய்யோ வணங்குமருள் வேண்டிமனந் தூண்டினதா
லையோ வெளியேனை யாள்வதினி யென்னமெய்யோ
பொய்யோ வுலகுடைய பூவாய் புகல்வாயே. (14)
புகலா யெலும்புமுடைப் புண்ணீர் புறங்காட்டி
லகலாதைம் பூதவெறி யாட்டில்விழுந் தாடினதா
லிகலார் புரமெரித்தார்க் கின்னமுத மீந்தசந்த்ர
முகலா ளிதத்துலக முத்தேபே யொத்தேனே. (15)
தேனுக்கு மின்சுவையாத் திங்களுக்கோர் சீதளமாய்
வானுக்கு நின்மலமாய் மாமலர்க்கும் வாசனையா
யூனுக்கு மன்னுயிரா யோங்குமுல கம்மாபொய்
யேனுக்கு மெய்யுணர்வா யெப்போ திருப்பாயே. (16)
பாயுந் திரைநீர்ப் பரவைநெடும் பாரில்வந்து
போயுந் திரிவேன் புதுமையிது போதாதோ
தாயுந் தமருஞ் சலிக்கவுல கேநரியும்
பேயுங் களிக்கப் பிறப்பே னிறப்பேனோ. (17)
இறவேனுன் கிண்கிணித்தா ளேத்தினதி னாலினிமேற்
பிறவேன்வந் திங்கே பிறந்தபலன் பெற்றேனான்
மறவே னிதற்கொருகைம் மாறுலகம் மாவினையைத்
துறவே னுனைப்புகழுந் தோத்திரமிம் மாத்திரமே. (18)
திரமோ வுடம்பிதென்ன சென்மமோ தீவினையா
யிரமோமுன் செய்ததம்ம விவ்வளவன் றெவ்வளவோ
வரமோ கவலை யகவிரும்புக் கித்தனைக்குந்
தரமோ வுலகுடைய தாயேநான் பேயேனே. (19)
பேயோ வெனக்குழறும் பேதா யுனக்குமொரு
வாயோவென் றென்னையிகழ் வாயோ மகிழ்வாயோ
தூயோர் தொழுமுலகே சொல்வதெல்லாஞ் சொல்வேனான்
காயோ பழமோநீ கட்டளைசெய் காரியமே. (20)
வேறு
காரிசைந்த கொந்தளங் கருங்கணம்பு விம்பவாய்
தாரிசைந்த கொங்கைகும்ப சம்பவன் றொழும்பிரான்
பாரிசந் துலங்கிநின்ற பைம்பொனின் சிலம்புசூழ்
வாரிசங்கள் கொண்டநெஞ்சு வண்டிருந்து கொண்டதே. (21)
கொண்டலன்ன காலன்வந்து கோவியாது பாவியான்
றொண்டுசெய்வ தென்றுநீ தொழும்புகொள்வ தென்றுகா
ணண்டர்தெண்ட னிட்டிறைஞ்சு மாதிலோக நாயகி
விண்டுசொல்லு மிவ்விரண்டும் வேண்டிலொன் றும் வேண்டிலேன். (22)
வேண்டிநின்ற தம்மசந்த வெற்பினிற்ப ணிந்துபோந்
தீண்டிருந் திறக்குநேர மென்னையாளு முன்னையான்
காண்டலொன்று நீவழங்கு காட்சியொன்று மீட்சியின்
றாண்டுகொள்வ தொன்றுவேறி தன்றியில்லை யொன்றுமே. (23)
ஒன்றுமில்லை யுண்மையம்மை யுலகையன்றி விலகவோர்
குன்றுமில்லை யண்டரண்ட கோடியில்லை வீடுசேர்
நன்றுமில்லை யிவளையன்றி ஞானம்வந்து போனபே
ரின்றுமில்லை யன்றுமில்லை யென்றுமில்லை யில்லையே. (24)
இல்லையென்று முள்ளதென்று மிடையிருந்த *தடிமைநா
னல்லையென்று சாற்றின்முந்துன் னருளுமென்ன தாகுமோ
முல்லையென்று முறுவல்கண்டு முக்களாவின் முக்கணான்
றொல்லையென்ற மையல்விண்டு சொல்லுமம்ம வல்லியே. (25)
[* 'அடியை' என்றும் பாடம்.]
வல்லியங்க ணின்றதென்றல் வரையின்மாலை யருவிநீர்
பல்லியங் கறங்கமன்னு பாவநாசர் பங்கில்வா
ழல்லியங் குழற்பசும்பொ னடியர்தங்க ளடியர்தந்
துல்லியங்கள் சொல்லுமம்ம சொற்கலோக மொக்கவே.(26)
ஒக்கநின்று +சேட்பமார்க்க முள்ளடக்க மெள்ளவோர்
விக்கல்வந்து களைகளைத்து விழிசுழன்று கழியுநாட்
டுக்கமுன்பு ரிந்துபின்பு சுடுவர்போவர் தொடர்வதார்
தக்கதில்லை யுலகெனம்மை சரணமல்ல தரணமே. (27)
[+ சேட்பம் - சிலேத்மம்.]
அரணமுண்ட துலகெனம்மை யருகுசென்று தெரியலான்
மரணமுண்டு சனனமுண்டு வாதையென்று பேதியேன்
சரணமுண்டு துவர்துவண்ட தரளமுண்டு மரகதக்
கிரணமுண்டு மனதிலென்ன கேதமென்ன சேதமே. (28)
சேதனத் தமிழ்ப்பொருப்பெ திர்ந்துதன்னை வந்தியா
தேதனத்த மென்சிரத்தெ ழுத்தை வந்த ழிக்குமோ
மாதனக் குழைக்கெனம்மை வாரியிட்ட வாள்விலைச்
சாதனச் சுருட்டுதைந்து தள்ளுமைக்கண் மெள்ளவே. (29)
மெள்ளமெள்ள முன்செய்தீமை விவகரிக்கு மவர்கண்மு
னுள்ளதுள்ள தென்னவம்ம வொப்புவித்த டிப்பராங்
கொள்ளைகொள்ளை யென்பொலாத கொடுமைசேர்க்கி னடுவனார்
தள்ளுதள்ளு நரகிலென்பர் தமிழ்வரைப்பெ ணமிழ்தமே. (30)
வேறு
அமிழ்தந் துளும்பி விளிம்பலம்ப வலர்ந்த மதிபோ லங்கணிலா
வுமிழ்தண் முறுவன் முகிழ்த்தமுத்தத் துலகேயுனைவாழ்த் துரைப்பேனோ
தமிழ்தந் தருளுந் தனவனசந் தனபூ தரசீ தளப்பொருளை
யிமிழ்தண் புனலிற் படிந்தேழெட் டெழுத்து மெழுதிப் படியேனே. (31)
எழுதிப் படியே னுன் பெயரன் னெழுத்திப் படியோ வெப்படியோ
பொழுதிப் படிவீண் கழியின்விளி பொழுதிப் படியே புகலாமோ
கொழுதிப் படிதேன் மலர்க்குழலார் குரல்வீ ணையிற்கின் னாமிதுனத்
தொழுதிப் படியே யெழுப்புமிசை தொலையா மலையத் துலகாளே. (32)
காள விடம்பட் டினவளைச்செங் காந்தள் கயங்கக் கணவர் தம்மை
யாள விடம்பெற் றிருந்தவுல கம்மே வருத்தலாமேயோ
மீள விடம்பெற் றிலனடியேன் மீளாச் சனன வினைப்பாச்
நீள லடங்காக் கடலருளி னிலைத்தா லொழிய நிலையாதே. (33)
நிலைபட் டொருமுப் பதுகடிகை நேரத் தளவி னிறைவெயிலாற்
றொலைப்பட் டிரவு விடியுமென்னைத் தொடரு மிரவு தொலையாதோ
சிலைபட் டமுஞ்சுட் டியும்புனைந்தாற் றிலத நுதலொப் பெனச்சிவனெஞ்
சலைபட் டிடவா ழுலகுருவத் தருண வெயில்கண் டடி யேற்கே. (34)
அடிபார்த்துனது திருக்கடைக்கண் ணருள்பார்த் திருள்வார்த் தனையகுழன்
முடிபார்த் திறைஞ்சும் படியுனக்கென் முகம்பார்த் திரங்க முடியாதோ
துடிபார்த் திறங்கு மதனையன்று சுடப்பார்த் தவனோர் துவளிடைக்கோர்
கொடிபார்த் திலங்கு முலகுடைய கொம்பே யடியேன் கொடியேனே. (35)
கொடியொன் றிரண்டு முகைசுமந்து கொண்டு வணங்கக் குலமறையின்
முடியொன் றிரண்டு சரணுலக முத்தே யெனக்கு முடிசூட்டாய்
மிடியொன் றிரண்டு வினைதருமோ வியப்பொன் றிலையோ வினையேன்சொற்
படியொன் றிரண்டு பிழைபொறுப்பாய் பலவா மிதுவோ பலனாமே. (36)
பலநாள் வினையுந் தொழுமொருநாட் பலநா ளெனப்போம் படிவாழ்நாட்
சிலநா ளிதற்கு ளுனக்கடிமை செயுநா ளேது சிறியேனுன்
குலநாண் முளரித் திருத்தாளாற் குழனாண் மலராற் குழைந்தான்மங்
கலநாண் புனையு முலகுடைய கரும்பே மனது திரும்பேனே. (37)
திரும்பித் தனைய னெனநோக்கிச் சிறப்பித்தனை போற்சிறிய னெனும்
பெரும்பித் தனையுன் னருணாட்டிப் பிழைப்பித் தனையேற் பிழையேனோ
கரும்பித் தனைபண் பில்லையென்று காண்பித் தனைய கனிமொழிவா
யரும்பித் தனைநேர் முறுவலுல கம்மே யழுது விம்மேனே. (38)
விம்மிப் புளகித் தெழுமுலகே விருப்பா யரன்கை நெருப்பாற்
வம்மிக் கருங்கல் வைத்தமல ரகத்தா மரைவைத் தலர்த்துகள் போய்ச்
செம்மிக் கிடந்த சடைநுதலைத் திறந்த விழியைத் தெழித்துருவாஞ்
சொம்மித் தனையும் பெறத்தனியே சும்மா விருந்து துயில்வேனே. (39)
துயிலும் விழிப்பு மானசன்மத் தொழிலென் றறியா வழிநின்று
பயிலும் வளமைத் தொழும்பரொடும் பயிலா வகையென் செயலானேன்
மயிலு மருளுங் குயிலுலகாள் வல்லை முகிழ்த்த கொவ்வையினால்
வெயிலு நிலவுந் தரவிருளும் வெளியாய் மனமுந் தெளியாதோ (40)
வேறு
தெளியாத சிந்கை தெளிவித்து நின்று தெளிகின்ற வுண்மைதெளிய
வொளியாய் விளங்கி யிருளா யிருண்ட வொழியாத மாயையொழிய
வெளியாரின் வந்து தனையே வழங்கி யெனையா னிழந்துவிடவே
யளியாலெ னம்மை யுலகாள் கொடுத்த வானந்த மென்சொல்வதுவே. (41)
சொல்லப் படாத பரநாத விந்து துரியங்க டந்து தொடரச்
செல்லப் படாத நிலைநின்று கொண்ட திலகா சலப்பெ ணுலகாள்
கல்லப் படாத வினைவேர் விழுந்து கவரோடு சிந்தை யெவரும்
வெல்லப் படாத திதில்வந் திருக்க விழைகின்ற தென்ன விழைவே. (42)
விழநின் றலைந்த சுவரிற்கை வைத்து விழுவார்க ளென்ன வினையா
லழநின்ற துன்ப மனைவாழ்வை நம்பி யலைவேன் மயக்க மலவோ
தொழநின்ற தொண்டர் நிலைநின் றறிந்து துயர்தீர்வ தென்று வயலூ
டுழநின்ற புண்ட ரிகம்விண்டு சாயு முயர்சிங்கை யூரி லுலகே (43)
உலகத் தனந்த பலயோனி தோறு முருவப்ப டுத்து குருவாய்ப்
பலகற்பி தஞ்செய் வினையந்த கார படலங் கிழித்து விடலாந்
திலகத் தலர்ந்த வரவிந்த சந்த்ர திலகாச லப்பெ ணுலகாள்
விலகத் துவண்ட மனமொன்று பட்டு விபரீதபேதம் விடிலே. (44)
விடவும் படாது விகடப்ர பஞ்ச விவகார வஞ்ச வினையாற்
கெடவும் படாது செலவிட்டு மிஞ்சு கிறபோக நின்ற ததிலே
படவும் படாது சனனத்தி லேது பலனோ துடக்கி தலவோ
தொடவும் படாதெ னுலகேயி வாறு துணிவேனி தென்ன துணிவே. (45)
துணியான கந்தை யிடுபிச்சை கொண்டு சுகியாக வுண்டு பசியைத்
தணியா தெவர்க்கு மகிதங்கள் செய்து தனதானி யங்கள் கனமாப்
பிணியான சென்ம நிலைநின்று தேடு பிறவாத நன்மை பெறவே
பணியா தறிந்து முலகே மகிழ்ந்து பரிவேனி தென்ன பரிவே (46)
பரியங்க மெங்கள் சிவனா ருறங்கு பாவாற்றி தீப நிலையந்
தெரியங்க மெங்கண் மறைநாம மம்மை திருமேனி செம்மை தெரியி
லெரியங்க மென்ப ருலகாயி தன்மை யிவையல்ல ரூப மெவையோ
துரியங் கடந்த ததிலேழை யாசை நொடர்கின்ற தென்ன தொடர்வே. (47)
தொடரிற் பிணித்த தெனமோக துக்க சுகமென்றி ரண்டு மிகமே
லிடரிற் பிணித்த தெளிதோ பரத்தி லெனையேது செய்ய நினைவோ
பிடரைப் பிடித்து யமராசன் முன்பு பிடியென்று தள்ளி விடிலப்
படரைத் தவிர்த்தெ னுலகம்மை யென்று பணிவிப்ப தென்ன பணியே.(48)
பணியத் துணிந்து பழகாத சிந்தை பரஞான வுண்மை பறிபோய்
மணியைக் களைந்த படநாக மென்ன மலைவாய் மயங்கு முலகம்
பிணியைத் தவிர்க்கு முலகா ளெனக்கோர் பிடிபா டறிந்து முடிமே
லணியத் தவஞ்செய் தறியாமன் மற்ற தறிகின்ற தென்ன வறிவே. (49)
அறியாத சிந்தை யறிவிக் குமன்ப ரறிவிற்கு முண்மை யறிவாய்ப்
பொறியாத மந்த்ர மறையுங் கடந்த பொருளே தனக்கொர் பொருளாய்க்
குறியாது சிந்தை யுலகென்ற தற்கொர் குறியிட்ட பேரை நெறியாற்
பிறியாது சொல்வ ததுமாறி யம்ம பிழையேனி தென்ன பிழையே (50)
வேறு
பிழைபட வனந்த கோடிப் பேதகப் பிறவி தோறு
நுழைபட முடியா தென்று நுவலுமென் கவலை கேட்டு
மழைபடர் பொதியச் சாரன் மரகத மணியே வஞ்ச
ரிழைபட மனைக டோறு மிரக்கவித் தொழிலிட்டாயே. (51)
இட்டுண்டு சுகிப்பார் முன்னே யிரந்துண்டு வினைப்பா சத்தாற்
கட்டுண்டு திரியச் செய்த கருத் துண்டு கவலை யுண்டே
தட்டுண்ட புவன கோடி தருமுல குடைய தாயே
யட்டுண்ட யமன்கைப் பாசத் தலைப்புண்டு மடங்கி டாதே. (52)
அடங்கிநன் னெறியி னில்லா தன்னை தன் னுதர பாரக்
கிடங்கினில் வீழ்ந்து கெட்டேன் கிடந்தனன் கிடைகொள் ளாமன்
மடங்கியிப் புவியில் வந்தேன் மறுத்தினி வரிலுய் வேனோ
தடங்கிரி யிறுமாந் தென்னுந் தனத்துல குடைய தாயே. (53)
தாயென்று மனைவி யென்றுந் தந்தைதா யென்றுங் காதற்
பேயென்றும் வினைசூழ்ந் தென்னைப் பிடித்தது பிடிப டாமற்
போயென்று வருவ துன்முன் போதுவா யெனவெப் போதுன்
வாயென்ற குமுதப் போது மலருமோ வுலக மாதே. (54)
மாதருங் கிளையும் வாழ்க மைந்தரு மனையும் வாழ்க
வோதரும் பொருள்பெற் றிங்கே யுவந்தனு பவிக்க வாங்கே
நீதருங் கருணைச் செல்வ நிலைமைபெற் றுலகே நிற்க
வாதரம் புரிவன் வாழ்த்தே னன்னதுக் கின்ன தாமே. (55)
ஆமென வெனது பாடற் கருள்செயி னமனார் வந்து
தாமென செய்வா ரென்சொற் றவறுகண் டுலகுத் தாயே
யோமெனு மெழுத்து ணின்ற வொருவனு மொருத்தி நீயு
நாமென செய்வோ மென்று நகைசெயிற் பகைசெய் வாரே. (56)
செய்தியொன் றுலகம் மாகேள் சீவன்விட் டிடுநாள் செவ்வே
யெய்தியென் களைப்பு மாற்றி யிதழ்க்கடை திறந்து பாலும்
பெய்துநின் பேருஞ் சொல்லிப் பிணத்தின்மேல் விழுந்து பின்னு
முய்திறம் புரிவா ரில்லை யுனையன்றித் தனிய னேற்கே. (57)
தனியனுக் கினிவாழ் வென்ன தாயில்லை தந்தை யில்லை
யினியசொற் சொல்லு வாரு மில்லையென் றீரங்கு வேனோ
முனியகத் தியன்வந் தேத்து முதல்வியுன் முன்னே யுள்ளங்
கனியநெக் குருகி மீளாக் கதிபெறக் கருதி னேனே. (58)
கருதிநின் கருணை வேண்டிக் கரைந்துல கம்மா வென்று
சுருதிகண் டறியா வுன்னைத் தொழிலன் தொழும்பு கொள்வாய்
குருதியங் கமலப் போதின் கொழுமுகை நெகிழக் கோலப்
பருதிநின் றலர்த்து மந்தப் பனிமலர்ப் பருவம் பார்த்தே. (59)
பார்த்தகண் பறியா தையன் பையவுன் மெய்யி லூன்றச்
சேர்த்தகட் டுளையை யல்ல திருவருட் பெருநீர் வெள்ளம்
வார்த்தகட் டுணையை யல்ல வளைந்துல கம்ம வானோர்
தூர்த்தபொன் மலர்சூழ் பாதத் துணையையே துணைகொண் டேனே. (60)
வேறு
கொண்டு போயெனை யடம்படர் கொடுநர கிடுமுன்
கண்டு போவென விலக்கியென் கலக்கமுங் களையம்
வுண்டு போலுமொ ரருந்தவ முனைப்புகழ்ந் துரைக்குந்
தொண்டு போலிலை யுலகம்ம துணிவதித் தொழிலே. (61)
தொழவு மாலையஞ் சூழவுஞ் சூழ்ந்துல கடிக்கீழ்
விழவும் வீழ்ந்தெழுந் திறைஞ்சவும் விம்மிநின் றுருகி
யழவு மானந்த பரவச மடிக்கடி யுள்கி
யெழவு நாவெடுத் தேத்தவுங் கடனெனக் கினியே. (62)
இனியெ னக்கொரு குறைவிலை யென்றிர வேனான்
புனித முக்கள விடத்துறை மாணிக்கப் புதுப்பூங்
கனியி டத்தொரு மரகதக் கனியையென் கண்ணாற்
றனியெ டுத்தெடுத் தருந்தினேன் மருந்தெனத் தனித்தே. (63)
தனித்து நானின வளியினைச் சுழுமுனை தாக்கப்
பனித்த தாமரை நெகிழ்த்ததி னமிர்தமும் பருகி
யினித்த தாமெனு முலகியல் வழக்கைவிட் டிகழ்ந்து
குனித்த வாணுத லுலகினைக் குறிப்பதென் குறிப்பே. (64)
குறித்து நித்தமு நினைப்பனெ னுலகம்மை குமுதந்
தெறித்த நித்தில நிலவையு நிலவெடுத் திடையே
முறித்து வைத்தநன் னுதலையு நுதல்விழி முதற்பாற்
பறித்த சித்திரப் படிவமும் படிப்படி பகுத்தே. (65)
பகுத்து ரைப்பதெப்படிவெளி காலனல் படிநீர்
வகுத்த பற்பல புவனமு மலைகளு மரமுந்
தொகுத்த மற்றையெவ் வுயிருமாய் நிரந்தரந் தொடர்ந்து
மிகுத்து நிற்பதோ ருருவுள துலகமெல் லியற்கே. (66)
மெல்ல ருஞ்சரு கிலையிவை விருந்தென வருந்திச்
சொல்ல ருந்தவம் புரிந்துல கருணிலை தொடர
வல்ல ரும்பலர் மறுத்தெனைப் போலதை மதியாப்
புல்ல ரும்பலர் சுவர்க்கமு நரகமும் பொதுவே. (67)
பொதுச்சி றப்பென நோக்கிரண் டுனக்குயிர் பொதுவே
யதுக்கு ளுத்தம மத்திம நிலைமை கண்டருள்வா
யெதுக்கெ டுத்ததெ னுடலமிவ் விரண்டுமற் றிருந்தேன்
மதுத்து ளித்தசந் தனவரை மரகத மயிலே. (68)
மயிலி யற்பரை யுலகுமை யுகமுடி வரம்பில்
வெயிலு டைப்புழு வெனப்பிறப் பிறப்பினின் மெலிவாய்ப்
பயிலு யிர்க்கொரு தனதடி நிழல்படத் துயிற்றித்
துயிலெ ழுப்பின ளெனிலவர் தெரலைப்பரத் துயரே. (69)
துயரெ னக்குநான் தொலைப்பதற் கிசைந்தொரு தொழிலிட்
டுயரு நித்தியப் பொருளிதென் றநித்தியத் தொழுகிப்
பெயர்வு பெற்றிலன் பரத்தினுக் கதுகடைப் பிடியோ
வயர்வ கற்றியிங் கருள்வதென் றுலகுடை யவளே. (70)
வேறு.
அவமே செய்வே னவன செய்யு மனுகூலத்
தவமே செய்யே னென்னுல கம்மா தளர்கின்றே
னவமோ டெண்முப் பானிடு நாற்கோ ணடுமேவிச்
சிவமோ டொக்கு முன்னரு ளென்னோ தெருளேனே. (71)
தெருளுந் தெய்வத் திவ்விய வேதச தெளிவாய்நின்
றருளுஞ் செல்வத் தென்னுல கம்மைக் கரிதுண்டோ
மருளுந் தன்மைச் சஞ்சித மாற்று மறமுண்ட
திருளும் புன்மைச் சின்மதி யேனுக் கெளிதென்றே (72)
அன்றைக் கன்றுன் சந்நிதி நேர்வந் தடிதாழ்வ
தென்றைக் கென்றுன் கண்ணருள் சேர்வ தெளியேனான்
கன்றைக் கன்றும் பண்புள தோமுக் களவோர்பாற்
குன்றைக் குன்றுந் தன்மைசெய் கொங்கைக் குலமானே (73)
மானத் தாலுங் கல்வியி னாலு மனமாறா
ஞானத் தாலும் புண்ணிய நண்ணு நலமெல்லா
மீனத் தாலும் புன்மையி னாலு மெளியேன்பொய்
யூனத் தாலுங் கொள்வதெவ் வாறென் னுலகம்மே. (74)
அம்மா தெய்வப் பொன்னுல கேயென் றருளுள்ளங்
கைம்மே னிலவித் தீங்கனி யாகக் கனிவாகி
யிம்மே முன்னே நின்றவள் செல்வ மிலைமேலோர்
சொம்மே யென்னத் தந்தருள் செய்யுந் தொழிலாளே. (75)
ஆள நினைத்தா லிங்கினி வாரா தருளிங்கே
மீள நினைத்தா லுன்னரு ளென்னம் வெகுகோப
மூள நினைத்தா லேசுவ னீபின் முனிவாய்நான்
மாள நினைத்தா லேதுல கம்மா மதியேனே. (76)
ஏனேன் வந்தே னென்றெதிர் வாயோ வெமவாதைக்
கானே னம்மா கோவென நானின் றழுநேர
மானே பொன்னே யென்னுல கன்னே மதியற்றுப்-
போனேன் முன்னே நின்புக ழெல்லாம் புகழாதே. (77)
புகழுங் கால மேலென வாமோ போங்கால
நிகழுங் கால மற்றெதிர் கால நெறியில்லோர்க்
கிகழுங் கால மென்ன விளைத்தா யிடராம்பிற்
றிகழுங் கால மென்னுலகேயென் செய்வேனே. (78)
செய்வே னேநா னுன்பணி இந்தச் செனனத்தி
லுய்வே னோநா னுற்றுயர் வேனோ வொழிவேனோ
வைவே னோவா கப்பொரு கண்ணால் வரமெல்லா
நைவே னோவா வென்னுல கம்மா நல்காயே. (79)
காயா தென்பா லின்னருள் பூத்துக் கனியாதோ
வீயா தேக வீடென் பொருளென் றிறுமாந்தே
னாயா தென்பாழ் நெஞ்சிது சூற்கொண் டதனானின்
றோயா தென்பா லிவ்வுல கீன்ற வொருகொம்பே. (80)
வேறு
கொம்பு காந்தள் கரும்பு குழைத்துமே
லம்பு வாய்ந்த வரும்பு திருந்தவே
பம்பு சாந்தப் பனிவரைக் கீழ்நின்று
நம்பு வேன்பெற நன்மை பழுத்ததே. (81)
பழுத்த செஞ்சுடர் பாதிபச் சேலென
முழுத்த தண்சினை முக்கள வூடுபொன்
விழுத்த குங்கிரி மெய்பகிர் தெய்வநான்
வழுத்த வென்னெதிர் வந்தது வந்ததே. (82)
வந்த னத்த மனத்தினி துண்டன
னிந்த னத்திலெரித்தன வெண்ணிலாப்
பந்த னத்தினாற் பத்துமுக் கோணிலோர்
சந்த னக்கிரிச் சாரன் முருந்தையே. (83)
மருந்தி தென்ன வளைந்து சகோரமா
யிருந்து கண்க ளெதிர்ந்துல கம்மைதன்
முருந்து வெண்பன் முகிழ்த்த முகிழ்நிலா
விருந்தி னுண்ண விடாய்தணி வித்ததே. (84)
வித்தி லாமல் விளைந்துல கென்னுநா
மத்தி னாலருள் வாய்ந்து வெளியிலே
சித்தி யாமொரு தெய்வப் பயிருமென்
பத்தி நீர்மனப் பாத்தி படர்ந்ததே. (85)
படர்ந்து தீமுனைப் பஞ்சென வஞ்சனை
தொடர்ந்த தீமை தொலையத் தொலைக்குமே
கடந்த ஞானியர் காணு முலகுடை
மடந்தை நூபுர மாந்தளிர்க் காந்தியே. (86)
காந்த னன்னுதற் கண்குளிர் வித்திறு
மாந்த குங்கும் மங்கலச் செப்பின்மே
லேந்து மின்னிசை யாழ்தெறித் தின்னுயிர்
சாந்த மென்கிரிச் சாயையி னின்றதே. (87)
நின்று தேடி நெறிக்கொளுந் தாயினைக்
கன்று தேடிக் கதறுதல் போலுனை
நன்று தேடுவ னாடுவ னீயெனை
யென்று தேடுவ தென்னுல கம்மனே. (88)
அம்ம னைக்குல கம்பிகைக் காதிதன்
செம்ம னைக்கிது செய்கை யறிக்கையிட்
டெம்ம னைக்கொ ரிடுக்க ணிழைத்துளார்
தம்ம னைக்கோர் சமனை விடுப்பதே. (89)
விடுப்ப னின்னல் விடேனின்னன் மெய்வரத்
தொடுப்ப னன்மை தொடேனன்மை சூழ்ந்துனை
யடுப்ப னல்ல தடேனல்ல தேயவங்
கெடுப்ப தென்னுல கேகுல தெய்வமே. (90)
வேறு
தெய்வமறை முறையிடுநின் சேவடியுஞ் சிலம்புந்
திருவுடையு முத்தாரந் திருந்தியநூ லிடையு
மைவரையி னிறைரோம வரையொழுங்கு வயிறு
மணிவரையை நிகருமரு மந்தபயோ தரமுங்
கைவளையும் வளைபொருமங் கலநாணின் கழுத்துங்
கருணைமடை திறந்தொழுகுங் கயல்விழியும் விழிபோய்த்
தைவருபொற் குழையுமுகத் தாமரையுங் குழலுந்
தாயுலகே யெழுதினனெஞ் சகப்படத்தி னிடத்தே. (91)
இடத்தகன்ற தனச்சுவட்டி லெடுத்தணைத்த வீணை
யெழுநிலையத் தெழுசுருதி யிசையமுதந் தெறிக்க
மடற்கமல வரிவளைக்கை மணிவிரன்மெல் லுகிரால்
வரிநரம்பு கடைதிருத்தி மரபின்முறை தெரிந்து
விடக்கருங்கட் கடைசிவந்து வெய்யில் சுருள் சுருட்டி
விடுமோலைக் குழைதடவ விரைக்குழல்பின் சரியத்
தொடக்கயங்கும் வரிச்சிறையஞ் சுகத்தொடுமுத் தாடிச்
சுகித்தருள்சா மளையுலகென் றுணைவிழிக்கொர் துணையே. (92)
துணையெனக்கு நெடுந்தமரத் துனைத்தரங்க மிரங்கச்
சுருட்டியகின் முருட்டுருட்டுந் துறைப்பொரு நைக்குடபாற்
பணைமலர்ச்சந் தனப்பொதியப் பனிவரைக்கு வடபா ற்
படர்சினைமுக் களவினிழற் பவளவரை வுலப்பால்
விணையெறியு மழவெயில்விட் டெறிந்திருளை விலக்க
விளங்குமர கதவொளிவிட் டெறிந்தொரிடப் பாலிற்
கணைபொருகட் கடைசுரந்து கருணைதிரை யெறியக்
கதிர்முறுவ னிலவெறித்தொர் கரும்புநின்ற நிலையே. (93)
நிலவுகொழுத் திருள்கிழித்து நெடுந்திசைபோய் விளக்கு
நிறைமதியிற் சதமடங்கு நிலவுதிரு வுருவும்
பலவமிர்தக் கதிர்துளிக்கும் பளிக்குமணி வடமும்
பலகலையும் விரித்தெழுதும் பருமணிப்புத் தகமு
மலகில்கலைப் பொருளுரைத்த வபிநயமுத் திரையு
மலம்புபுனற் குண்டிகையு மணிமணிக்குண் டலமு
மிலகுபிறைச் சடைமுடியு மெனக்குவெளி யாக
விருந்தனளென் னுலகம்மை யிதையமல ரகத்தே. (94)
அகத்தொருதன் னிலைதரித்தோ வல்லதுமற் றுளதோ
வறிந்திலனென் னுலகுடையா ளருளையெவ ரறிவார்
சகத்துயிர்கள் புரக்குமிணைச் சரணிலொன்று மணியா
சனத்திருக்க மடக்கியொரு தாளுயர மடித்து
முகிழ்த்தவிழி மணிநாசி முனைகுறிப்ப வொருகை
முழந்தாளிற் கிடப்பவொரு முகிழ்விரற்கை யபைய
மகத்துவமுத் திரைதரச்செம் மாந்திருக்கு மந்த
மவுனபர வசவடிவை மறக்குமோ மனமே. (95)
மனநினைப்பின் மலர்கடம்ப வனத்தமிழ்த்தோத் திரஞ்சூழ்
மழகதிர்ச்சிந் தாமணிமண் டபதத்தினு மாகி
யனவரதஞ் சத்திகள்வே றனந்தமயல் சூழ
வதிர்துரங்க வாகினிநின் றணிவாசல் புரக்கத்
தனதருகு வீணையின்மா தங்கியிசை பாடச்
சரோருகன்மான் மகேசனுருத் திரன்மணிக்கா லான
வினமணிச்சிங் காதனத்தி லினிதுதிரி புரையா
விமையமயி லுலகுமைபங் கிருக்குமர சிருப்பே. (96)
இருப்பதுநீ யுலகுமையே யிசைத்தமிழ்த்தேன் கொழிக்க
விமிழ்திரைத்தண் பொருநைநதி யிறைத்தருவி கொழிக்கும்
பொருப்பொருபா லிதுவறிந்து புகழ்வனிது வல்லாற்
புவனசரா சரத்திடத்தும் புயற்கயிலை யிடத்தா
ருருப்பவளம் பசப்பொருபா லொருபுறத்து மகத்து
முபநிடத முடிவிடத்து முபநிடதத் தப்பால்
விருப்பினடி தொழும்பாமன் வெளிக்குவெளி யாக
வெளியிடத்து நிலையமெனப் பரவுவனா னினையே. (97)
நினைவன்மனத் திருள்வெறிக்க நிலவெறிக்குந் தாள
நிரைதெறிக்கக் கடைகுனிக்கு நெட்டிலைச்செங் கரும்பு
முனையினினற் பசுங்குருதி முகந்திரைக்குங் கணைபோன்
முகைகவிழ்க்கும் பசுந்தேறன் முருகுவிளைந் தரும்பு
புனைதிறற்பா சாங்குசமும் புதுநிலவும் புரளப்
புரளுமுழுத் தரளவடம் புதையவெயி லெறிக்குங்
கனைகதிர்ப்பொன் னுருவமுமுக் கண்களுமெக் கண்ணுங்
கண்டுலகி னருளையிரு கண்கண்முகந் திடவே. (98)
முகந்துகொள நிலவெறிக்கு முளைமருப்பு மடுத்து
முதிர்பொருப்பு நெருப்புதிர முறிந்துபொடி யுதிர்ந்து
தகர்ந்திடியப் பொருதுமெனத் தனிமுகத்து விழிசெந்
தழல்கவிப்ப முசலமொரு தடக்கைகொடு சுழற்றி
யிகந்துநில முதுகுகிழித் திரங்கியுர கேச
னினச்சுடிகை மணிதுணிக்கு மிகல்கலப்பை தாங்கி
யகந்தையறப் பச்சுதிர முகந்தவரா கியுமா
யம்மையுல கிருக்கநமக் கார்க்கினிமேற் பயமே. (99)
பயனிதெனத் தமிழ்பிறந்த பருப்பதமு நெடுநீர்ப்
பாலருவித் துறைக்கருங்கற் பாறைகிழித் திறங்கும்
புயல்படு தடாகமுந்தண் பொருநைவர நதியும்
பொதும்பர்நிழற் குளிர்தூங்கப் பொலிந்தபடித் துறையு
முயர்திருமுக் களவுவன மோங்குசிங்கை நகரு
மொருகரக முனியெதிர்கண் டுணர்பாவ நாசர்
மயில்விளையு முனதுசுப மங்களவிக் ரகமும்
வாழியென வாழ்த்துரைத்து வாழ்த்துவனா னுலகே. (100)
பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
-------------------------
3. பாவநாசம் என்னும் சிங்கை
உலகம்மை கொச்சகக் கலிப்பா.
சிவமயம்.
நூல்.
என்பா லிரங்கா திரும்பான் மனம்படைத்த
வன்பா லறப்பான் மறப்பால தாகாதோ
வன்பான் முலைப்பா லழும்பா லனுக்களித்த
வுன்பா லடைந்தே னுலகுடைய மாதாவே. (1)
என்னுடைய சென்ம மினியடையே னல்லனெனிற்
பொன்னுடைய மின்னிடையும் பொன்னடியுங் காண்பேனோ
மின்னுடைய பல்லதுக்கி மேதியுடை யான்வருநா
ளுன்னுடைய தஞ்ச முலகுடைய மாதாவே. (2)
ஏகிவிடி லிப்பிறவி யின்னமொரு சென்மமெடுத்
தாகினுஞ்செம் பாறு மருவியுநான் காண்பேனோ
போகியர்போ லைம்புலனும் போம்வழிபோ காதசிவ
யோகிகடம் பேறே யுலகுடைய மாதாவே. (3)
எண்பொருந வென்னெஞ்சா வின்னமுமுன் கோபுரமுந்
தண்பொருநை நந்நதியுஞ் சந்நிதியுங் காண்பேனோ
பண்பொருவா நீதிப் பழங்கடவுள் வேதாந்தத்
தொண்பொருளே யம்மே யுலகுடைய மாதாவே. (4)
நாறு முடையுடம்பு நந்தினா லெந்தையொரு
கூறு முனதுதிருக் கோலமுநான் காண்பேனோ
வாறுபதப் புள்ளினங்க ளள்ளிமுகந் துண்ணநற
வூறு மலர்க் கூந்த லுலகுடைய மாதாவே. (5)
அண்டருல கெய்திடினு மாறும் படித்துறையுந்
தண்டலையுந் தென்பொதியச் சாரலுநான் காண்பேனோ
துண்டமதிக் குடுமித் தொங்கலார் சிந்தையறி
வுண்டகதிர் வேற்கண் ணுலகுடைய மாதாவே. (6)
தீட்டுதமிழ் மாமுனிக்குச் சித்திரைமா தப்பிறப்பிற்
காட்டுமணக் கோலமெந்தக் காலமுநான் காண்பேனோ
வேட்டுமுலைப் பாலிமய வெற்பரசி யொக்கலைவைத்
தூட்டு மகவே யுலகுடைய மாதாவே. (7)
துள்ளு மறிதிரைப்பார் சூழினுமுன் சூழலுநீர்
தள்ளு மருவித் தடாகமுநான் காண்பேனோ
வெள்ளுமதி னெய்யுமென வெங்குநிறைந் தேபுறமு
முள்ளுமா நின்றா யுலகுடைய மாதாவே. (8)
காடுஞ் செடியுமையோ கானடையே போய்த்திரிந்து
பாடுங் கவலையுமென் பாழ்வினையுந் தீராவோ
தோடுங் குழையு மெட்டித் தொட்டுவிளை யாடிநடந்
தோடுங் கயற்கண் ணுலகுடைய மாதாவே. (9)
காலைப் பொழுதெழுந்து காமர்மலை யத்தருவி
மாலைப் புனல்படிந்து வந்துனையுங் காண்பேனோ
மேலைக் கடவுள் விலையெழுதுஞ் சாசனப்பொன்
னோலைக் குழையா யுலகுடைய மாதாவே (10)
பைமருந்தும் வாகடநூற் பண்டிதனார் கொண்டு வந்த
கைமருந்து மேதுமஞ்சட் காப்புமருந் தொவ்வாதாற்
செய்மருந்து பின்னிடுமுன் தீர்த்தமருந் துண்டுபிணிக்
குய்மருந்து வேறே துலகுடைய மாதாவே. (11)
காட்டு மருந்துங் கடைமருந்துங் கைசலிக்கக்
கூட்டு மருந்துங் குணமருந்தென் பாருனையே
யாட்டுமருந் தைம்புலனுக் கன்பிருந்தாற் போலுவகை
யூட்டுமருந் துண்டோவுலகுடைய மாதாவே. (12)
பன்னுதர மோவாயுப் பற்றிவலித் தீர்த்தலைத்தா
லென்னுதரம் வேறே யிருப்புதர மோவுரையாய்
மன்னுதர மாறுடைய மைந்தரிரு பேரையரு
ளுன்னுதரம் வேறே வுலகுடைய மாதாவே. (13)
ஆர்மருந்தும் வேண்டேனீ யாடுமபி டேகமஞ்ச
ணீர்மருந்து பாழ்ம்பிணியை நீக்குமருந் தாகாதோ
வேர்மருந்தும் பச்சிலையு மெய்மருந்தாங் கைம்மருந்து
மோர்மருந்து மேனோ வுலகுடைய மாதாவே. (14)
வண்டிருந்தார் கூந்தன் மலைமருந்தா முன்னையுமுட்
கொண்டிருந்து மாயக் கொடும்பிணிக்குள் ளாவேனோ
பண்டிருந்தார்க் குள்ளே பசித்தபசி பாலமிர்த
முண்டிருந்தார்க் குண்டோ வுலகுடைய மாதாவே. (15)
பாமரனென் சொல்வேனோர் பச்சிலையுந் தீர்த்திடுமுன்
காமரபி டேகமஞ்சட் காப்பினுக்குந் தீராதோ
நீமரபி னாடுமஞ்ச ணீர்குடித்து நோயிருந்த
தூமர்கன வன்றே வுலகுடைய மாதாவே. (16)
பண்டிதரே வாரும் பரிகாரம் பாரும்வெகு
கண்டிதமாய் நோய்க்குமது கைம்மருந்து தாருமென்றே
கொண்டிதனாற் றீருமென்றுட் கொண்டமருந் தெத்தனையோ
வுண்டிதநான் காணே னுலகுடைய மாதாவே. (17)
முன்குறைய தாக முதுக்குறைவில் லாரிகழப்
பின்குறைதான் பட்ட பெருங்குறைதான் போதாதோ
வென்குறையி தென்னா ரினிக்குறைவந் தான்முழுது
முன்குறையி தென்பா ருலகுடைய மாதாவே. (18)
தப்புவிப்பாய் நோயையென்னைத் தாவிப்பாய் சற்குருவாய்ச்
செப்புவிப்பாய் ஞானந் தெளிவிப்பா யென்றிருந்தே
னிப்புவிப்பால் வேறுபட்ட தென்குறையென் றாராருக்
கொப்புவிப்பா யம்மே யுலகுடைய மாதாவே. (19)
இத்தரநின் றோரா யிரந்தரநொந் தேனுனைநான்
பத்தரமென் றாலுமனப் பாழிரும்பு தேயாதாற்
றத்தரமென் றோடிவருஞ் சண்டனுக்குன் றொண்டனப்போ
துத்தரமென் சொல்வே னுலகுடைய மாதாவே. (20)
காகபல மங்கோர் கதலிபல மாகாதென்
போகபலன் மெய்யடியார் போக்யபலன் போலாமோ
வாகபல சொல்லியென்ன வாவதடி யேன் பிறந்த
யோகபல நன்றாச் சுலகுடைய மாதாவே. (21)
நீர்க்குமிழி வாழ்வை நிலைக்குமிது வென்றுநெடும்
பார்க்குளிருந் தேதோ பழிக்குளகப் பட்டேனா
னார்க்குளெனை யொப்பிடுவ தம்மா வுனைநம்பி
னோர்க்குளவ மானே னுலகுடைய மாதாவே. (22)
(பக்கம் 32 விடுபட்டுப் போயுள்ளது)
கன்றுமறி போற்குதித்துன் காதின்மறிந் தோடமுக்கட்
குன்றுமறி வங்கடுவுங் கூர்விழியின் பார்வையினா
லென்றுமறி ஞோரறிவ தெத்தனையோ வத்தனையி
லொன்று மறியே னுலகுடைய மாதாவே. (31)
புக்கலைவே னங்குமிங்கும் பொய்க்கலைநூல் சொல்லிவெறிக்
குக்கலைநேர் வார்க்கிதமே கூய்க்கலைவேன் கொள்கையென்னோ
மிக்கலைநூன் முத்தொளிரு மேகலைசூழ் வெற்பரசி
யொக்கலைமேற் பிள்ளா யுலகுடைய மாதாவே. (32)
ஈட்டியதுக் காகவங்கு மிங்குமெனக் காட்டிவம்பி
லாட்டியலைத் தாயினிநா னாடினதும் போதாதோ
காட்டிமறைத் தாருயிர்க்குக் கன்மபல போகமெல்லா
மூட்டிவைத்தா யுண்டே னுலகுடைய மாதாவே. (33)
செவ்வொன்றோ காண்பேன் செலவொன்றோ விம்மிவரத்
திவ்வொன்றோ வூழ்வினைதா வென்பதொன்றோ வாயிரமோ
வவ்வொன்றோ கோடிதத்துண் டாக்கமன மேக்கமுற்ற
தொவ்வொன்றோ கெட்டே னுலகுடைய மாதாவே. (34)
தின்னுடனே காலர் சினத்துடனே யென்னையுறத்
தன்னுடனே செல்வதற்குத் தாழ்க்கிலவர் தாழ்வாரோ
வென்னுடனே மாறுகொண்டோ ரிங்கிவரென் றங்கவரை
யுன்னுடனே சொல்வே னுலகுடைய மா தாவே. (35)
புத்தியென்ன வித்தையென்ன போதமென்ன வேதமந்த்ர
சித்தியென்ன வித்தனைக்குஞ் சேதமென்ன வாராதோ
பத்தியென்ன தென்னவொரு பான்மையிலே மேன்மைபெற
யுத்தியென்ன சொல்லா யுலகுடைய மாதாவே. (36)
விண்டாற் பயனேது விண்டபடி யேயுனையுங்
கொண்டாற் பிறவி கொடுத்தார் கொடுப்பாரோ
கண்டாற் பசிபோமோ கையளவி னெய்யிடுசோ
றுண்டாற் பசிபோ முலகுடைய மாதாவே. (37)
ஈட்டுவித்தா யெவ்வினையு மீட்டினே னேதேதொன்
றாட்டுவித்தா யப்படிநின் றாடினேன் மேற்குறையோ
காட்டுவித்தாய் கண்டதெல்லாங் கண்டேனென் கன்மபல
மூட்டுவித்தா யுண்டே னுலகுடைய மாதாவே. (38)
பார்வழிச்சென் றெத்தனையோ பாடினேன் பாதகர்தம்
பேர்வழியுங் கேட்டுருகப் பேச்சுரைத்தேன் பேய்ச்சுரைக்காய்
தீர்வழியுண் டோகசப்புத் தீம்பால்விட் டேதுபிழைப்
போர்வழியுங் காணே னுலகுடைய மாதாவே. (39)
பெத்தரிக்கத் தார்க்கி தமாய்ப் பேசினுமென் பேச்சையவர்
கத்தரிக்கப் பார்ப்பரல்லாற் காசுபணந் தாராரால்
வித்தரிக்கத் தேவையில்லை வீண்குடும்பந் தாங்கி யென்னா
லுத்தரிக்கக் கூடா துலகுடைய மாதாவே. (40)
சித்தமோ கந்திமிர்ந்த தீவினையோ தீவினையா
மத்தமோ கம்புரிய வன்னதுமோ கித்ததென்ன
சத்தமோ வாருதியென் சாதகமோ டெட்டிதுதான்
யுத்தமோ சொல்லா யுலகுடைய மாதாவே. (41)
வெள்ளமறி யாமல்வழீஇ வீழ்வதுபோல் வெவ்வினையின்
கள்ளமறி யாமன்மனங் கைகடந்த தென்னாமோ
துள்ளமறி யேந்தினற்குந் தோன்றா வுனதுதிரு
வுள்ள மறியே னுலகுடைய மாதாவே. (42)
நன்றுங் குறியே னயங்குறியாய் நின்றதிலே
யென்றுங் குறியே னிடராற் குறியேனென்
பொன்றுங் குறியாற் புழுங்கினேன் போக்குவரத்
தொன்றுங் குறியே னுலகுடைய மாதாவே. (43)
முத்தார மந்த முழுத்தார் வதனவிம்ப
வித்தார மாமதியுன் மேனிசெக்கர் மாலையென்றே
சித்தார விந்தம்வைத்த செல்வருக்கோ செல்கதிவீ
டுத்தார மிட்டா யுலகுடைய மாதாவே. (44)
வைப்புரிய முந்நீர் வலம்புரியுந் தொண்டரவ
ரெப்புரிகை யாள ரிடம்புரிவிண் ணோரிடங்காண்
வெற்பிருக்கை யாளரொடு வேதவிந்து நாதாந்தத்
துப்பரிக்கை மேல்வா மூலகுடைய மாதாவே. (45)
பிட்கிற் பிளவுபடாப் பேதமைப்பட் டேற்றகையை
முட்கிட் டியினெமனார் மோதுவரங் கேதாமோ
மட்கிப் பகன் மதிபேரல் வாழ்ந்தவரைத் தாழ்ந்திரந்துண்
டுட்கித் திரிந்தே னுலகுடைய மாதாவே. (46)
வம்பருக்கு ளாய்ப்புறம்போய் வாடாம லுன்கருணைச்
சொம்பருக்கு ஞானத் தொழும்பருக்கு ளாவேனோ
நம்பருக்கு மாரணற்கு நாரணற்கு மிம்பருக்கு
மும்பருக்கும் வாழ்வே யுலகுடைய மாதாவே. (47)
குன்றோ கடலோ குறித்தோ நெறித்தோடிச்
சென்றோ ரிடந்தேடிச் செல்வனென்று சொல்வதற்கே
யின்றோ வுளதோமற் றெல்லாங் கடந்ததென்ப
தொன்றோ பலவோ வுலகுடைய மாதாவே. (48)
குன்றுபடு வெங்கானிற் கோடுபடா யானைகொப்பத்
தென்றுபடு மென்பா ரெமபடருக் கொப்பாரே
கன்றுபடு நோயைக் கரைத்திடிலோ சித்தமெனக்
கொன்றுபடு மம்மே யுலகுடைய மாதாவே. (49)
பெத்தரிகந் தானே பெறுகதியென் பாரதையுன்
பத்தரிகழ்ந் தேறாப் பரகதிச்சென் றேறுவரா
னத்தரிகண் சாத்துமொரு நாயகர்கண் சாத்துதனத்
துத்தரிகஞ் சாத்து முலகுடைய மா தாவே. (50)
மல்கித் திரியில் வளர்தீப நெய்சுருங்கி
வல்கித் திரியுமனத் தன்பறுவே னென்பெறுவேன்
நல்கித் திரியாத ஞானம்வைத்தா லீனவினைக்
கொல்கித் திரியே னுலகுடைய மாதாவே. (51)
சொல்காதோ கண்ணோ சுருங்காதோர் தன்மையன்றி
மல்காதோ ரென்றதையெவ் வாறுணர்ந்து தேறுவனோ
நல்காதோ தம்மைமுற்று நம்பினே னென்பதெனக்
கொல்காதோ சிந்தை யுலகுடைய மாதாவே. (52)
ஆற்றுநீர் போற்பெருகி யற்றுவிடு மல்லதறச்
சேற்றுநீர் போற்குழம்புஞ் செல்வநிலை நில்லாதா
லேற்றுநீர் கொள்வீரென் றீயாருக் கீவாருக்
கூற்றுநீ ரன்றோ வுலகுடைய மாதாவே. (53)
நன்றுசொல்லி நால்வருக்கு நன்மைசொல்லிப் புன்மைசொல்லித்
கன்றுசொல்லி னாலவரைக் காய்ந்துசொல்லி யேற்பதென்னா
லின்றுசொல்லி நீக்கவொட்டா தில்லாமை பொல்லாத
தொன்றுசொல்லி லாமே யுலகுடைய மாதாவே. (54)
கத்துப் பிடித்தேன் கடைப்பிடியென் றுன்கருணைக்
கொத்துப் பிடித்தேனைக் கொண்டுபணி கொள்ளாயோ
பத்துப் பிடித்தாதி பாண்டரங்கன் தாண்டவத்துக்
கொத்துப் பிடித்தா யுலகுடைய மாதாவே. (55)
மூடமிது வன்றோ முறைதிறம்பி வம்பிலையோ
பாடமிடுங் கல்விப் பயனொழுக்கம் பாழ்படலாற்
றேடவரும் பொருள்கள் சேர்த்தவெல்லாம் போக்கியவெற்
றோடமென நிற்பே னுலகுடைய மாதாவே. (56)
மூடப் படுதழல்சூழ் மோகமன மாய்நமன்போ
ராடப் படுமுன்விரைந் தாட்படநின் பாற்படுமோ
வாடப் படுசிறையாய் வல்விலங்கிற் பட்டவருக்
கோடப் படுமோ வுலகுடைய மாதாவே. (57)
கிட்டுமோ கிட்டாதுன் கேண்மைவணங் கேனெனதூழ்
தட்டுமோ தட்டாதுன் றண்ணளியைத் தாராய்நீ
யெட்டுமோ வெட்டாத வென்மனநா னீடேற
வொட்டுமோ வொட்டா துலகுடைய மாதாவே. (58)
பண்ணாது நன்மைபுன்மைப் பாழ்வினையென் னாள்விடியு
மண்ணா திருந்தான் மணியுமணி யாகாதே
யெண்ணாத தெண்ணிமன தீடழிய வைப்பதுனக்
கொண்ணாதென் கண்ணே யுலகுடைய மாதாவே. (59)
பண்ணாதோ பேரருளுன் பார்வையத னாலெனக்கு
நண்ணாதோ விவ்விடரா னானிரங்க நீயிரங்க
வெண்ணாதோ வுன்மனந்தா னென்மனங்கல் லென்றதுதா
னொண்ணாதோ வம்மே யுலகுடைய மாதாவே. (60)
நீதியவா யுன்னை நினைப்போர் வினைத்தீயைக்
காதியசாம் ப்ராச்சியபதங் கைவிலைக்குங் கொள்வாரால்
வாதிபல ரங்கவருக் கிங்கிதனைப் பார்க்கவுமோ
ரூதியம்வே றுண்டோ வுலகுடைய மாதாவே. (61)
வெள்ளமோ வெள்ளிமலை மேடோ தமிழ்மலைக்கீழ்ப்
பள்ளமோ தெள்ளியநாற் பத்துமுக்கோண் மத்தியமோ
கள்ளமோ காண்கிலனான் காண்பே னுனக்கடியா
ருள்ளமோ கோயி லுலகுடைய மாதாவே. (62)
மெள்ளத் திருப்பாயென் விம்மலையுன் பொம்மன்முகை
வள்ளத் திருப்பான் மறைக்குழந்தைக் கேசுரப்பாய்
கள்ளத் திருப்பாமென் கன்மனம்விட் டேயடியா
ருள்ளத் திருப்பா யுலகுடைய மாதாவே. (63)
பொன்னைநம்பி வேறோர் புவியைநம்பி யொவ்வொருவர்
தன்னைநம்பி யாயிரம்பேர் தன்னை நம்பி வாழ்வாரா
லென்னைநம்பி னோர்சலிக்க யான்சலிக்க வென்றுநன்றா
யுன்னைநம்பி வாழ்ந்தே னுலகுடைய மாதாவே. (64)
கற்றதுணை யுண்டாங் கருத்தறிவு கல்வியன்றோ
பெற்றதுணை மற்றோர் பெருந்துணைகள் வேறாமோ
வற்றதுணை யாதோ வருந்துணையாய் நல்கெனக்கா
ருற்றதுணை யம்மா வுலகுடைய மாதாவே. (65)
ஆட்டைக் கொருதரந்தா னானாலு மீனமலக்
கூட்டைக் கழுவியம்மை கோயின்மணி வாசலிற்போய்ப்
பாட்டைக் குளறினுஞ்சொற் பற்றுகிலா தற்றதுள
மோட்டைக் குடமோ வுலகுடைய மாதாவே. (66)
வேட்டமிலாக் கானகத்து வெவ்விலங்கா வெவ்வினையுன்
னாட்டமிலாப் பாழ்மனது நண்ணினதுக் கொண்ணாதோ
வாட்டமிலாச் சீர்குலைந்து வாடிநிற்க நான்மறுகி
லோட்டமிலாத் தேரோ வுலகுடைய மாதாவே. (67)
சொற்பனமாம் வாழ்வுசுப சோபனமா ஞானமென்று
கற்பனயா வுந்தெளிந்து காண்பனவுங் காண்பார்நா
னற்பனதோ சத்துணரேன் ஞானநிலை கண்டவர்த
முற்பனமார் காண்பா ருலகுடைய மாதாவே. (68)
பூசனையா லுன்கமலப் பூஞ்சரணம் பூர்வசென்ம
வாசனையார் காண்பரது வஞ்சனையார் காண்பாரோ
வீசனையா னாலுமவ ரெண்ணா ரவர்கருத்தின்
யோசனையார் காண்பா ருலகுடைய மாதாவே. (69)
நையும்வகை செய்துமன நாணும்வகை செய்தியறஞ்
செய்யும்வகை செய்துநெறி சேரும்வகை சேராயோ
பொய்யும்வகை யொன்றுமிலாப் புண்பாடும் போயடியே
னுய்யும்வகை யுண்டோ வுலகுடைய மாதாவே. (70)
கோலக்கங் காநதியுங் கூன்பிறையு நாறுமுன்றா
ணீலக்கண் பார்த்தெனக்கு நீயுதவு நாளெதுநாண்
மாலக்கண் சாத்துமண வாளரொடு நீயிருந்த
வோலக்கங் காண்பே னுலகுடைய மாதாவே (71)
ஆலமிடு துன்பத் தறிவினெருப் பாற்றின்மயிர்ப்
பாலமிடு கின்றதெனப் பண்பினிடம் வெம்பினதால்
வாலமுட வெண்பிறையார் மாலையிட நாலுமறை
யோலமிட நின்றா யுலகுடைய மாதாவே. (72)
பெண்மையென்று மாண்மையென்றும் பேதமென்றுஞ் சாதியெல்லாந்
தண்மையென்று நெஞ்சிலொரு தன்மையென்றுங் காண்பாராற்
றிண்மையென்று பல்பலவுந் தேர்வார் தெளிந்தபடி
யுண்மையென்று காண்பே னுலகுடைய மாதாவே. (73)
ஆங்கா ரணந்தான தாங்கார வெம்பிணிக்குட்
பாங்கா ரிருந்து பரிகாரஞ் செய்வாரேல்
வேங்காரம் வைத்தபுண்போல் வெவ்வினைப்பட் டேற்கிரங்கா
யோங்கார வாழ்வே யுலகுடைய மாதாவே. (74)
நீர்குறைய வாடி நிலைகுலைந்த தாமரைபோற்
சீர்குறைய வாடிநொந்து சிந்தைகுறை யாகாதே
யார்குறைசொல் வோருனைநீ யங்குறைய வீங்கெளியேற்
கோர்குறையு முண்டோ வுலகுடைய மாதாவே. (75)
தப்பனையென் பார்ப்பருன்னைத் தாழ்ந்தவரைச் சூழ்ந்தவற்குக்
கைப்பனைவே ழந்தொழுவார் காம்பனைய தோளனையார்
துப்பனைய ஞானச் சொரூபனைமால் செய்யநித
மொப்பனைசெய் கூந்த லுலகுடைய மாதாவே. (76)
செப்போசெப் பன்றோநான் செப்புவதிங் கிப்புவன
வைப்போவைப் பன்றோநீ வாழ்வதென்றும் வாழ்வதெல்லாந்
தப்போதப் பன்றோ தனியுனைநா னொந்ததுனக்
கொப்போவொப் பன்றோ வுலகுடைய மாதாவே. (77)
செப்பலவுன் கொங்கைபசுந் தேனலவுன் பான்மொழிசெந்
துப்பலவுன் செவ்வாய் சுரும்பலவுன் பார்வையம்மே
யிப்பலவொப் பிந்திரைமற் றெல்லார்க்கு முன்னுறுப்புக்
கொப்பலவென் சொல்வே னுலகுடைய மாதாவே. (78)
எய்த்தவெலாங் கையேற் றிரந்தவெலா மித்தனைசூழ்
வித்தவெலா மண்பிறப்பில் வீழ்ந்தவெலாந் தாழ்ந்திடநீ
வைத்தவெலா மெண்ணியுன்னை வாழ்த்தினவெ லாமனதுக்
கொத்தவெலாஞ் சொன்னே னுலகுடைய மாதாவே. (79)
மெல்லாச னாம்புயத்து வேதியனப் போதியற்ற
நில்லாசொ ரூபமதி னேசம்வைத்து நிற்பேனோ
நல்லா சிரியரென ஞானமொழிந் தார்மயங்கு
முல்லாச மின்னே யுலகுடைய மாதாவே (80)
காதிமனோ வாக்குடல்செய் கற்பனையோ நற்பகன்முன்
மோதிமமாய் ஞான முடிக்கின்முடி வாகாதோ
சோதிமகா மேருவில்லார் துங்கமனப் பங்கயத்தி
லோதிமமாய் நின்றா யுலகுடைய மாதாவே. (81)
நற்சாபத் தண்ணருளை நான்சார நல்கிலுனை
மற்சாதிப் பாரெவரோ வந்திலையுன் சிந்தையென்னோ
கற்சாபத் தார்கருணைக் கண்களிக்க நண்பளிக்கு
முற்சாகப் பெண்ணே யுலகுடைய மாதாவே. (82)
நித்தியோப வாசபல நின்னைவழி பாடுசெயுந்
துத்தியோப சார சுகிர்தபல மொவ்வாதாற்
சத்தியோப சாரசுப தன்மபரி பாலனஞ்செ
யுத்தியோக வாழ்வே யுலகுடைய மாதாவே. (83)
முற்பா தகமிதுவோ மூதுணரே னேதுதய
வெற்பா தவக்கிரணம் வீசவிருள் சூழாதே
பொற்பாத சேவையிடர் போக்காத தூழ்புரிந்த
வுற்பாத மன்றோ வுலகுடைய மாதாவே. (84)
நற்பலமொன் றெய்திலதே நான்பலவா யெண்ணுமிடர்
பற்பலபுண் பாடு பலபலவென் சொல்வேனோ
பொற்பலர்செந் தாமரையிற் பூத்தவென வாய்த்தொளிரு
முற்பலமென் கண்ணே யுலகுடைய மாதாவே. (85)
இங்கரிப்புக் காரரைப்போ லேனரிப்ப தென்பரந்தத்
தொங்கரிக்கட் டேதொழிப்பார் சொற்கவியுஞ் சொல்வேனோ
சங்கரிக்கத் தானைபடை தான்வேண்டு மோகலிநீ
யுங்கரிக்கப் போமே யுலகுடைய மாதாவே. (86)
சூழியத்துக் கான சுரிகுழற்குந் தோளிணைக்கும்
வீழியத்துப் பாரிதழ்க்கும் வெண்ணகைக்கும் வெவ்வேறா
வாழியத்த தாமரைக்கும் வாழ்த்துரைத்து வாடினநா
னூழியத்துக் காளோ வுலகுடைய மாதாவே. (87)
புந்திச் செயன்மயலிற் பூண்டுபுல்லி லேதவிடு
சிந்திச் சிதறினதாய்த் தீர்ந்ததிடர் தீர்வேனோ
வந்திச்சு பாகிசிந்தை *யானைவளப் போர்கணையா
யுந்திச் சுழியா யுலகுடைய மாதாவே. (88)
[*யானைவளப் பேர்கணை என்றும் பேதம்.]
நீஞ்சக் கடப்படுமோ நின்கரணத் தோணிதனில்
வாஞ்சைக் கடல்கடந்தென் வஞ்சநெஞ்சம் வாராதே
தீஞ்சர்க் கரைமொழியாய் செய்யசரக் கூர்விழியர
யூஞ்சற் குழையா யுலகுடைய மாதாவே. (89)
அம்பளவோ காவி யரும்பளவோ பார்வையருட்
சம்பளமேற் றுண்பவர்க்குத் தானமுத்தித் தானமன்றோ
பம்பளகை யூரும்விண்ணோர் பட்டினமுங் கட்டியதற்
கும்பளமோ விட்டா யுலகுடைய மாதாவே. (90)
தேர்ச்சிதரா நெஞ்சறிவைத் தீங்கதிர்ச்செஞ் சாலியெனப்
பேர்ச்சிதரா தின்னம் பெருஞ்சிதலா யுண்ணாதோ
வார்ச்சிதரா வூழே வலிதேநான் சொன்னதுகேட்
டூர்ச்சிதநீ செய்யா யுலகுடைய மாதாவே. (91)
பற்றிவைத்த வென்னறிவைப் பாழ்ங்கவலை வீண்படவே
முற்றிவைத்த வம்பின் முதலாக்கக் காரியமோ
நெற்றிவைத்த கண்ணரொடு நீநடுவாய்த் தாயிதைநா
னொற்றிவைத்த துண்டோ வுலகுடைய மாதாவே. (92)
விட்டிலே யொத்து விளக்கிலே வீழும்வினைக்
கட்டிலே வீழ்ந்துதவங் காண்கிலனென் றேங்குவனோ
தட்டிலே யேழைமனஞ் சஞ்சாரப் பட்சிமய
லொட்டிலே வீழா துலகுடைய மாதாவே. (93)
நானேதிங் குண்மைசொல்ல ஞானமறி யேன்மயிலே
மானேயென் பொன்னே மணியே மரகதமே
தேனேமென் பால்சேர்ந்த தீங்கனியே மாங்குயிலே
யூனேயென் பேன்கே ளுலகுடைய மாதாவே. (94)
மண்ணுங் குழிந்ததற்பர் வாயிலிற்போய் வந்துநொந்த
வெண்ணுங் குழம்புமன மேங்குமெனக் கேயிரங்காய்
பண்ணுங் குழைந்தசொல்லும் பான்மணக்க மேனைமுலை
யுண்ணுங் குழந்தா யுலகுடைய மாதாவே. (95)
பொட்டகத்துப் பொன்போலும் புட்கலத்துச் செம்மணிபோ
லிட்டகத்துக் குள்ளேநா னென்றும்வைத்துக் காண்பேனோ
சட்டகத்துக் கொன்றோகைத் தாட்சிபல கூனிதென்ன
வொட்டகத்துக் கொன்றோ வுலகுடைய மாதாவே. (96)
பெண்டாட்டி பிள்ளையெனப் பேயாட்டங் காட்டியெனைக்
கொண்டாட்டு வித்தவுனைக் கொண்டாட வேண்டாமோ
மிண்டாட்டு பாழ்ங்கலியால் வீணாட்ட மாட்டியெனை
யுண்டாட்ட வேண்டா முலகுடைய மாதாவே. (97)
பற்றப் பிறவினையைம் *பாலின்மறைத் தோர்வளர்த்த
தெற்றைப் பிறகிடிலித் தீப்பிறவி தீராதோ
மற்றைப் பிறைமயங்க வட்டரத்னச் சுட்டிகட்டு
மொற்றைப் பிறையா யுலகுடைய மாதாவே. (98)
[பாலின் மறைத்தோர் - பானமறந்தோர் எனவும் பாடபேதம்.]
காமச் சுடர்நெருப்புக் காயவழி தேர்ந்துகெஞ்சி
லேமச் சுடர்பொரிபோ லென்றும்வைத்துக் காண்பேனோ
சோமச் சுடர்முடித்தார் சூர்யோ தயச்சுடர்சே
ரோமச் சுடரே யுலகுடைய மாதாவே. (99)
வெவ்வா தனைவினையை மேவா தருள்கிலைவே
றெவ்வா தரவிங் கிரவா திரங்காயே
லவ்வா தவன்வெயிற்கு ளானபுழு வாய்மெலிவ
தொவ்வாதென் னம்மே வுலகுடைய மாதாவே. (100)
ஏழிசைய வண்டிரங்க வெண்டிசைய வெண்டுகிலார்.
சூழிதழி கிண்டு துணைத்தா ளளித்தாள்வா
யாழிநெடு நீரொருகை யாபோச னத்தர்தொழ
வூழிதொறும் வாழி யுலகுடைய மாதாவே. (101)
உலகம்மை கொச்சகக் கலிப்பா முற்றிற்று.
------------------
4. பாவநாசம் என்னும் சிங்கை
உலகம்மை சந்த விருத்தம்.
சிவமயம்.
தாந்த தன்னன தான தனந்தன
தாந்த தன்னன தான தனந்தன
தாந்த தன்னன தான தனந்தன - தனதான.
வாழ்ந்த தென்னவி சால தலங்களை
யாண்ட தென்னப்ர தாப மிகுந்திறு
மாந்த தென்னவிர் தாவின் மதங்கொடு தலைகீழாய்
வீழ்ந்த தென்னவை யோபி றகங்கவர்
மாண்ட தென்னபொ யோவெ னவிங்கினி
வேண்டி யென்னப்ர யோச நநின்பத மடைவேனோ
சூழ்ந்து பன்னிரு காத மணங்கமழ்
தேன்கள் விம்மியி றால்கள் கிழிந்திடை
தூங்கு தென்மலை யாச லநின்றடி யவர்போலத்
தாழ்ந்து சன்னிதி யூடு புகுந்தலை
மோந்து தண்மலர் மாரி பொழிந்திடு
தாம்ப்ர பன்னிம காந திநின்றவெ னுலகாளே. (1)
----------------------------------
தனந்த தானன தனதா னனதன
தனந்த தானன தனதா னனதன
தனந்த தானன தனதா னன தன - தனதான.
பரந்து நாடொறு மறிவீ னரைமன
துளைந்து பாடியு முதவா கூதுகொடு
பசும்பொ னாயிரம் வருமா கிலுமவர் பிறகேபோய்
இரந்து தானினி முடியா ததைவிட
விறந்து போவது மொருதாழ் விலையென
திடும்பை பாரத கதைதா னுனதிரு வருள்தாராய்
புரந்த ராதியர் பதமோ ரணுவென
விகழ்ந்து ஞானமு மனுபூ தியுநிலை
பொருந்து போதமு முடையார் பெறுகதி பெறுவேனோ
கரந்தை வார்சடை முடியா ரிருகரம்
வகிர்ந்து கோதிய குழலாய் தமிழ்முனி
கமண்ட லோதக நதிமேல் கரைவள ருலகாளே. (2)
----------------------------
பிறந்த நாண்முத லுனையே துதிசெய
மறந்து போனது விதிதா னினியொரு
புறம்ப தாகவு மனையே கனவிலு நினையாதே
யிறந்து போவது நிசமே யடிமையு
மிருந்த நாள்வரை யுனையே மலரடி
யிறைஞ்ச வேயருள் புரிவாய் திரிபுரை யபிராமி
சிறந்த கோமதி மயிலே குயின்மொழி
நிறைந்த சோதியின் வடிவே மலைமகள்
திகம்ப ரீயெனு மழகே யழகொளிர் சிவகாமி
கறந்த பாலமு தநிவே தனமதை
யருந்தி யேபொதி கையில்வாழ் தமிழ்முனி
கமண்ட லோதக நதிமேல் கரைவள ருலகாளே. (3)
-------------------
தான தத்தன தான தனந்தன
தான தத்தன தான தனந்தன
தான தத்தன தான தனந்தன - தனதான.
தூர மெத்தனை வேனி னெடுஞ்சுர
கோர மெத்தனை காடு நெருங்கிய
சூழ லெத்தனை மாக டினஞ்சொல முடியாதே.
பாரனைத்தினு மோடி நடந்திரு
கால்க டுத்தத லாம விதம்பெறு
பாட லுக்கொரு காசு பணந்தரு பவர்காணேன்
ஆர ணப்பிர மாதியர் விஞ்சையர்
தேவர் சித்தர்மு னீசுரர் புங்கவர்
ஆகி பத்திய ரான புரந்தரர் முதலானோர்
சார நித்திய சேவை வழங்கிமண்
மீது தெக்கண பாரிச வங்கிரி
சார விற்கொலு வாக விருந்தவெ னுலகாளே. (4)
---------------------------
தத்த தான தனத்தன தானன
தத்த தான தனத்தன தான்ன
தத்த தான தனத்தன தானன - தனதான.
கட்டு பாச மிறுக்குவ ராநய
ணத்தி லூசி நிறுத்துவ ராநர
கத்திலேதலை குப்புற வேவிழ வெறிவாராம்
வெட்டி யூறு படுத்துவ ராமதி
லுப்பு நீரு மொழுக்குவ ராமழன்
மெத்தி வாதை வருத்துவ ராமன முருகாராங்
கிட்டி யூடு நெறுக்குவ ராமெம
னுக்க தூதர் பொறுக்கரி யாரவர்
கிட்டி நாளு மலக்களி யா தருள் பெறுவேனோ
முட்டி லாம லறத்தை யெநாளும்வ
ளர்த்து நீள்பொரு நைத்துறை மேவிய
முக்களா நிழ லிற்குடி வாழுமெ னுலகாளே. (5)
-----------------------
தான தத்தனத் தனத்தனத்த தானதன
தான தத்தனத் தனத்தனத்த தானதன
தான தத்தனத் தனத்தனத்த தானதன - தன தனாதனனா.
வேத னுக்கெனைக் கருப்பிடிக்க வேலைபல
தாய ருக்கெனைப் பெறச்சலிக்க வேலையொரு
மேதி னிக்கொடிக் கெனைச்சுமக்க வேலைகொடு நரகிலேநமனார்
தூதனுக்கெனைப் பிடித்திழுக்க வேலையம
ராச னுக்கெனைச் சிதைத்திறுக்க வேலையெளி
தோபிறப்பெடுத் தெனக்கிறக்கவலையிவை யொழியுநாளுளதோ
சாதனத்தனத் தவத்தகத்ய மாமுனிவ
னாத ரித்தசித் திரைப்பிறப்பி லே வருவ
தாம கத்துவத் தைவித்தரிக்க லோகமதி சயமதாமெனவே
மாதர் மக்களொக் கமிக்கமுக்ய ராய்முழுகு
மாது முத்தமிழ்க் கிரிப்புறத்தில் வீழ்பொருளை.
மாந திப்படித் துறைக்கடுத்த கோவில்வள ருலகநாயகியே (6)
---------------------------
தத்தன தனனத் தாத்த தந்தன
தத்தன தனனத் தாத்த தந்தன
தத்தன தனனத் தாத்த தந்தன - தனதான.
மித்திரர் குறையைக் கேட்க வும்பெறு
புத்திரர் பசியைப் பார்க்க வுந்தமிழ்
விற்கவு மெலிவுற் றேற்க வுந்தொழில் பலவானேன்
எத்தனை கவலைக் காற்று வன்றின
மிப்படி யலையப் பார்த்திருந்தனை
யெப்படி மறுமைக் கேற்ற சிந்தனை பெறுவேனோ
தத்திடு பொருநைத் தீர்த்த மும்படி
வித்துறு வினையைப் போக்கி யன்பொடு
தட்டுறு புவனத் தோர்க்க ருங்கதி தருவாயே
சித்தச னுருவைத் தேய்த்த புங்கவ
கர்த்தனோ டருளைப் பூந்திருந் தொரு
சித்திரை விசுவிற் காட்சி தந்தவெ னுலகாளே. (7)
-----------------------------------
தத்தன தந்தன தத்தன தந்தன
தத்தன தந்தன தத்தன தந்தன
தத்தன தந்தன தத்தன தந்தன -தனதான.
துர்ச்சன சங்கம்வெ றுத்துனை நம்பிய
சற்சன சங்கமி லக்ஷண மிஞ்சிய
சொற்க பதங்களை நித்திய முந்தொழ மருளாதே
முற்சன னங்கள் கொடுத்திடு சஞ்சல
முற்றி யெழுந்த துயர்க்களை யுந்தவிர்
முத்தி வழங்க வனுக்ரக மென்றருள் புரிவாயோ
கற்சிலை யெந்தைசி வத்தவு டம்பினில்
பச்சிலை முந்துப றித்தணி பண்புறு
கற்புவி ளங்கிய பொற்புநி ரம்பிய கடலேகூ
விற்சிலை தங்கு நுதற்சிறு பெண்கண்மு
டித்த சுகந்த மணக்கு நெடுந்தெரு
விக்ரம சிங்கபு ரத்திலி ருந்தவெ னுலகாளே. (8)
--------------------------------
தனதானன தானன தானன
தனதானன தானன தானன
தனதானன தானன தானன-தனதான.
விரகாதியில் வீழ்பழி பாதக
னுபகார சரீரமெ டாதவன்
விபரீத விரோதவி பாஷித னமராதே
யிரவாமலிராதப சாசனொர்
பரிபாக மிலாதநிர் மூடனு
னிருபாத சரோருக சேவைசெய் திடுவேனோ
பரஞானத்ரி கோணக்ரு பாகர
வாபிராமம னோகர மோகித
பரிபூரண காரண கோமள மகமாயி
யுரகாபர ணேசபி ரானொடு
மலையாசல பாரிச மாகிய
வுயர்மாமதி லாலைய மேவிய வுலகாளே. (9)
--------------------
தனனத் தாத்த தனத்தன தானன
தனனத் தாத்த தனத்தன தானன
தனனத் தாத்த தனத்தன தானன -தனதானா.
உடல்விட் டாத்ம மிறக்குமு னேகிறு
கிறெனச் சேத்ம மிழுக்குமுனேயென
துயிர்விட் டாக்கை கிடக்குமு னேசில சிலபேர்போ
யுறவுக் கோக்க ளழைக்குமு னேயவ
ரிழவுக் காட்சி கொடுக்குமு னேயெனை
யொருமித் தாட்க ளெடுக்குமு னேபறை யொலியோடே
சுடலைக் காட்டி னடக்குமு னேயதி
லெருவைக் கூட்டி யடுக்குமு னேயொரு
துறையிற் றீர்த்த முகக்குமு னேதலை மயிரூடே
சுருளத் தீக்கொளி வைக்குமு னேமட்
மடெனக் காட்டெரி பற்றுமு னேயொரு
துணையற் றேற்குநினற்பத தாமரை யருள்வாயே
கடலிற் காட்டிய புத்தமு தேவடி
வெழுதிக் காட்டிய சித்திர மேபர
கதியைக் காட்டிய தற்பர மேசுவை யுறுதேனே
கருணைக் கூத்தினர் முக்கள வீசரை
மருளப் பார்த்த விழிக்குயி லேவிரை
கமழப் பூத்தமெ யுற்றவி லோசன மகமாயி
படலைத் தேத்துள வற்கொர்ச கோதரி
பொதியக் கோட்டுறை முத்தமிழ் மாமுனி
பரவக் காக்ஷி கொடுத்தக்ரு பாகர வபிராமி
பனசக் கோட்டுர சக்கனி யேதெய்வ
மகளுக் கேற்றிடு பொற்சல மேமறை
பழகிப் போற்றிடு நித்யகல் யாணியெ னுலகாளே. (10)
-----------------------
தந்ததந்த தனத்த தனந்தன
தந்ததந்த தனத்த தனந்தன
தந்ததந்த தனத்த தனந்தன-தன தான.
இந்த்ரியங்க ளிழுத்த விடந்தொறு
நின்றுநின்று ப்ரமித்து மயங்கிய
விந்தநெஞ்ச மெனக்கொர் பெரும்பகை யினிமேல்யான்
அந்தியந்த னிலெத்தை விளம்புவன்
வந்திருந்து ளதுக்க சுகங்களி
னங்குமிங்கு மலக்கழி யுந்தொழி லொழியாதோ
மந்த்ரமங்க ளவிக்ரக சுந்தரி
வன்புயங்க சகஸ்த்ர பணங்கள்சு
மந்திருந்த சகத்ரை யமுந்தொழு மகமாயி
--------------------------
தான தானத் தனத்த தனத்தன
தான தானத் தனத்த தனத்தன
தான தானத் தனத்த தனத்தன - தனதான.
வீர சூலப் படைக்கை தரித்திடு
கோல நீலப் பொருப்பின் மருப்புயர்
மேதி யேறித் துரத்தி முடுக்கியெ னுடன்மீதே
யார வாரித் துறுக்கி முறுக்கிய
பாசம் வீசிப் பிடித்து மடித்தென
தாவி மோசப் படுத்து மவத்தையி லுறலாமோ
வாரி சாதப் பிறைக்குள் வியப்புறு
கேச பாரச் சொருக்கவி ழப்பதம்
வாடி யோடிச் சிவப்பவு வப்புடன் வருவாயே
பார தூரத் தைமுற்று நினைத்தடி
யேனை யாளக் கருத்தி னினைத்தொரு
பாவ நாசத் தலத்திலி ருக்குமெ னுலகாளே. (12)
----------------------------
தையாதன தானன தானன
தையாதன தானன தானன
தையாதன தானன தானன தனதான.
நெல்வாலள வாகிலு மோர்பொருள்
செய்வாரிலை யேயென பாவமெ
னிர்வாசமு நீயறி வாய்சிறி தருள்பாராய்
இல்வாழ்வைவி டாதலை வேன்வினை
பொல்லாதது வேறவ காசமு
மில்லாமலை யோதடு மாறுவன் வழிகாணேன்
வல்வாயம தூதர டாவகை
சைவாகம வேதபு ராணமும்
வல்லோர்மன வாலைய நூபுர மெனும்வாழ்வே
கல்வாயுறு தேரையு மோர்பொருள்
செய்யாதறம் யாவையு மேபுரி
கல்யாணம னோகர கோமள வுலகாளே. (13)
-----------------------------
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன-தனதான.
உறவை மாதரை மைந்தரை நண்பரை
மனையை வாழ்வைம கிழ்ந்துப்ர பஞ்சமி
துறுதி யாமென வம்பினி னம்பின னறியாதே
யிறுதி காலம் வரும்பொழு திங்கிவர்
வருவ ராருட னென்றுநி னைந்தில
னிதென பாதக மிந்தவ கம்ப்ரமை யொழியாதோ
சறுவ லோக பயங்கரி சங்கரி
சறுவ தேவ நிரந்தரி யந்தரி
சறுவ பூதது ரந்தரி சுந்தரி மகமாயி
மறைப ராவிய மந்த்ரசு மங்கள
சொருப ஸ்பாவமு ணர்ந்தவர் சிந்தையு
மலைய பூதர முங்குடி கொண்டவே னுலகாளே. (14)
---------------------------
தானான தானன தனத்ததன தானதன
தானான தானன தனத்ததன தானதன்
தானான தானன தனத்ததன தானதன -தனதான.
வாலாயமாயுனை வழுத்துகில னோடியம
தூதாளு மோலையு மழைக்கவரி லோசிறிது
மாகாணி நாழிகை தரிக்கவச மோபிசக விடுவாரோ
காலாற நீழலொரு சற்றுமிலை யாம்வழியி
லேகீழு மேலினுநெ ருப்பொரியு மாமடிமை
கால்பாவு மோவதுக டத்தியம லோகமிசை கொடுபோனா
னாலேழு கோடிநர கத்தெறிவ ரேசிறிது
தேவானு கூலமினி யெப்படிய மேயடிய
னாலேசு மாவநுப வித்துமுடி யாதுதிரு வருள்தாராய்
ஆலால போசனர கத்யமுனி பூசனைசெய்
தேகாக மாகவொரு செட்டிவினை தீரவருள்
வார்பாவ நாசர்புணர் நித்யகலி யாணியெனு முலகாளே. (15)
உலகம்மை சந்தவிருத்தம் முற்றிற்று.
----------------------------
This file was last updated on 16 Feb, 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)