pm logo

நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றிய
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு பாகம் 2

pAvanAcam ennum cingkaip pirapantat tiraTTu
of namaccivarAyak kavirAyar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றிய
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு பாகம் 2

Source:
பாவநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு
இது பாவநாசத் தலபுராணாசிரியராகிய முக்களாலிங்கமுனிவர் புதல்வரும்,
ஆநந்தக்கூத்தரின் இளைய சகோதரரும் திருக்கைலாச பரம்பரைத்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தரா யெழுந்தருளி யிருந்த
மாதவச்சிவஞான யோகிகளின் சிறிய தந்தையுமான
நமச்சிவாயக் கவிராயரவர்கள் இயற்றியது.
மதுரை மு. ரா. கந்தசாமிக் கவிராயரால் மதுரை “எக்ஸெல்ஸியர் பிரஸில்" பதிப்பிக்கப்பெற்றது.
இதன் விலை அணா-12.] [ 1917.
----------------
பொருளடக்கம்.
முகவுரை. 3. கொச்சகக்கலிப்பா.
நூலாசிரியர் சரித்திரம். 4. சந்தவிருத்தம்
1. கலித்துறையந்தாதி 5.பிள்ளைத்தமிழ்
2. பதிற்றுப்பத்தந்தாதி. 6. சிலேடை வெண்பா.
---------------

5. பாவநாசம் என்னும் சிங்கை
உலகம்மை பிள்ளைத்தமிழ்.
பாயிரம்.

விநாயகர் துதி.
தேர்கொண்ட மண்டலப் பருதியிற்
    செக்கச் சிவந்தமா ணிக்கவெற்பிற்
செறிகிளைப் பச்சறுகின் மரகதக்
    கொடிகள்படர் சென் னியிற் பொங்குகங்கை
நீர்கொண்ட குண்டுபடு சுனையைக்
    கலக்குபு நெடும்புனன் முகந்துமீள
நீளப் பணைக்கைக் குறுந்துளியி
    லாழியி னிறைக்குமழ களிறுகாக்க
கூர்கொண்ட கண்டக முடுக்குமொரு
    நூலிழை குழற்கா னறும்பொகுட்டுக்
கோகனக மாகனக சாலைப்
    பெருந்தவக் குலமுனிவ னாவடித்த
பேர்கொண்ட மறைகட் கடங்காது
    நிறைதிருப் பேர்புனைந் துலகமாதின்
பேரரு டிளைப்பவளர் பிள்ளைமைப்
    பருவமுறை பேசுமென் கவிதழையவே. (1)

சரசுவதி துதி.
வடுவகிர் பொருங்கணிள மடமகளிர்
    கைக்குலை மடற்பசுங் காந்தள்வதியு
மரகத மணிச்சிறைப் பைங்கிள்ளை
    யொருகரு மணிக்கட் டொடுந்தகையிலாக்
கொடுமுனைக் கவரலகின் முடைகொள்புல
    வொழுகுவாய்க் கொள்ளையிரு ளள்ளிமெழுகிக்
குயின்றனைய வன்சிறைக் காசத்தி
    னிழிமுட் குடம்பையுள் வதிவதேய்க்கும்
விடுசுடர் நிலாக்கண்டு மாயிர
    மிதழ்ப்புதிய வெள்ளிவெண் கதவுசாத்தா
விரைநறுங் கடவுட் செழுந்தா
    மரைக்கோயின் மேயசொற் பனுவலாட்டி
யுடுவுதிர் நெடுங்குடுமி மலையத்
    தடஞ்சார லொருசார் மதிட்கோயில்வா
ழுலகுடைய நாயகி திருப்பெயர்
    வழுத்தவிங் கொருசிறிய னாவாழ்ந்ததே. (2)

உலகம்மை துதி.
விண்ணுங் கடற்புவியு மளவிடு மடற்கமுக
    வேலிகெழு மருதவைப் பின்
வெண்பா னறும்புனல் பிரித்துண்ணு மோரெகினம்
    விடுதுளை நுகத்தி னொடும்யாப்
புண்ணும் பசும்புரவி யிரதங் கடாவுமென்
    றூழ்வெயில் படச்சூ டுபட்
டுவர்பட்ட வட்டச் சிறுக்கூப வெம்புனலை
    யுண்பது நிகர்க்கு மமுதும்
பண்ணுங் குழைத்துச் சமைத்ததீங் கனிமொழிப்
    பனுவற் கிழத்திபா டற்
பசுந்தே னனைக்குந் திருச்செவியி னாற்பழம்
    பரசமய பேதவே தத்
தெண்ணுங் கடந்துபர நாதவெறு வெளிவீட்
    டிருந்தவுல கீன்றசிங் கைக்
கிறைவியிப் பேதைமைச் சிற்றடிய னாவினி
    லியங்குபுன் சொற்கொள் வதே. (3)

முறுக்கும் புரிப்பவள வார்சடைக் காட்டெந்தை
      மூதண்ட கோடிமுட்ட
முட்டிப் பரந்தெவையு மிறுதிப் படுத்துவதை
      முனியறிந் தூண்மிசைந்த
சுறுக்குங் கறைக்கால கூடப் பிழம்பவன்
      கண்டத்தி னளவுதொட்டுக்
கனியும் பெருஞ்சுவைத் தெள்ளமுத மாக்கியுயிர்
      காக்குமெய்க் கருணையதனா
னிறுக்குந் தராசுநிறை மன்னுயி ரனைத்துமூழ்
      நெறியினுய்த் தருளுமமலை
நிமலையுல கம்மைவெண் கமலைத னிசைத்தமிழ்
      நிறைக்குந் திருச்செவியினிற்
பொறுக்குந் தரத்ததென் றெனவழுவு மிளிதகைப்
      பொய்ந்நிலைச் சின்மதியினேன்
புன்கவியு நன்கவிதை யாகப் படுத்திப்
      பொறுத்தினி தளிக்குமன்றே. (4)

வாக்குமன முந்தொடா வெட்டா வதீதத்தின்
      வளர்கின்ற வொன்றுபலவா
மன்னுயிர்க் கன்னையெனு மறிஞரறி விற்றங்கி
      வாழுமுல கம்பிவம்ம
நீக்குபு துடைத்துநீ காக்கப் படுந்தேவர்
      நின்னைப் புரக்கவென்று
நிற்குமொரு பிள்ளைமைப் பருவந் தொறும்பனுவ
      னினைவுறுமெ னினைவினின்றாய்
பூக்குடுமி வாரணத் துவசனயன் மான்முதற்
      புத்தேளி ருலகமடையப்
பொறையுயிர்த் தளியா வகண்டபரி பூரணப்
      பொருளா யிருந்தநீயே
மேக்குயர் பொலஞ்சயில முதலிய விலங்கன்முதல்
      வேந்தன்மக ளாகியன்னோன்
வேட்கையின் விழைந்தொழுகு வாட்கயற் கண்ணருளு
      வித்ததினு மழகிதன்றே. (5)

பாயிர முற்றிற்று.

நூல்.
முதலாவது, காப்புப் பருவம்.

திருமால்.
தேர்கொண்ட பருதிநிலாப் பூத்த தென்னச்
      செம்மேனி வெண்டவள தூளம் போர்ப்ப
வேர்கொண்ட மாணிக்க வெற்பின் பாங்க
      ரெய்துலக மாமயிலை யினிது காக்கத்
தார்கொண்ட நிறத்ததுழா யந்தேன் சாய்க்குந்
      தண்சாரன் மரகதவே தண்டத் துச்சிக்
கூர்கொண்ட விழித்தோகைக் கோகை யீட்டுங்
      கொழுங்கருணைச் சூற்கொண்ட கொண்ட றானே. (1)

முக்களாலிங்கர்.
எண்டிசை வெற்பர சன்றரு புத்ரியை
      மும்முனைச் சூற்படை
எந்தை மனத்தின் விழைந்தன னிப்பொழு
      தென்னமுற் பாற்பர
சின்றலை வைத்த பெரும்புவ னத்துயிர்
      நன்மணக் காட்சியை
யின்றறி யத்தகு மென்றிமை யத்துழை
      நண்ணவிப் பார்த்தலை
பண்டினு மிக்க துணர்ந்த தமைக்கவொர்
      சொன்முனிக் காற்றலை
பம்பி யுவட்டெறி கங்கை யளித்தினி
      தன்னவற் றேக்கிய
பண்பை நினைத்திட பங்கட விப்பொலி
      தன்னுருக் காட்டிய
பைந்தமிழ் முக்கள வின்கண் முளைத்தெழு
      செம்மலைப் போற்றுது
முண்டக நெட்டிதழ் மண்டப முற்றுறை
      பொன்மகட் கேற்றிட
முன்பட லைத்துள வங்கடு வைத்தளி
      யுண்ணமட் டூற்றிய
மொய்ம்பக லத்தை வழங்கு முகிற்கிருண்
      மின்னெனத் தோற்றிய
முன்கை வளைச்சிறு தங்கையை முற்றெழு
      பண்மிடற் றேற்றிசை
வண்டு வழுக்கி விழுந்து குழித்தெழு
      மென்மதுத் தேக்கெறி
வம்பலர் மைக்குழ லம்பிகை யைச்சுடர்
      செம்மணிச் சூட்டா
வங்கை முறுக்கிடு கங்கண னைப்பொரு
      வெம்முனைக் கோட்டெழின்
மங்கையை விக்ரம சிங்க புரத்துல
      கம்மையைக் காக்கவே. (2)

      நான்முகன்.
மறைக்குங் கடைக்கால மோரா யிரங்குடுமி
      வடபூத ரத்தைவழுவி
வாழிப் பெரும்புவன கோடியுடை படமடியு
      மன்னுயிர்க் கண்டுகண்க
ணிறைக்கும் பழங்கருணை சூற்கொண்டு திரியுமன
      நிலையினா லுலகமீன்று
நின்மலனை மருவுமுல கம்மனையை யெம்மனையை
      நித்தம் புரந்தருளுமா
லுறைக்குங் கறைப்பகட் டாழியைம் படைமாய
      னொருவர்முத லிருவர்நால்வ
ரூழ்முறை திறம்பாது பலதொழி லியற்றுமா
      றொருதொழி லியற்றநசையா
னறைக்கும் பொலன்றா தினுக்குஞ் சுரும்பூக
      நகைமுகை நெகிழ்ந்துகிழியு
நளினநெடு மடல்வயிற் றவதரித் தருளுமொரு
      நான்முக மறைக்குழவியே. (3)

      விநாயகர்.
அந்திப் பிறைக்கொழுந் தமுதறா மணநாறு
      மழல்விழுது விட்டசடைமீ,
யத்திரைக் கட்புணரு நாரங் கிடந்தலைய
      வடியிட்ட ளைந்துசிகரப்
பந்திப் பருப்பதச் சிலையாளி திருவுருப்
      பானிலாப் புழுதியாடிப்
பற்றுநர் மனச்சேவ கத்துலவு மலையப்
      பசும்பிடியை யினிதுகாக்க
தொந்திப் பெரும்பண்டி சரியவணி கிண்கிணி
      துணைச்சர ணலம்பவருவி
தூங்குங் கவுட்கடா மாறலைத் தெழவலஞ்
      சூழ்ந்திளைய வீரன்முந்து
முந்தித் தனித்தேகி யிரசிதப் பருவத
      முகட்டருள் பழுத்ததெய்வ
முக்கட் பழங்கனி புதுக்கனி தரக்கவரு
      மும்மதக் களியானையே. (4)

      சுப்பிரமணியர்.
முற்றுந் தவள மதிச்சுரபி முழுக்குங்
      கலைவெண் மடிசுரந்த
முதுவர னமுது கரந்துநிலா முகக்குங்
      கோர வாய்பெய்யுந்
தெற்றும் பனைச்சந் தனவளஞ் சூழ்சிகரப்
      பொதியத் தமிழ்மணக்குஞ்
சிங்கபுரத் திலுல குடைய தெய்வச்
      சிறுமான் புறங்காக்க
வெற்றுங் குருதிப் புனல்குளித்த விலைவேற்
      கரத்தி னான்குதலை
யிறைவன் மகுடத் தஞ்சுதலை யெய்தப்
      புடைத்தோ ராறுதலை
சுற்றும் பவுரித் திருநடனச் சுருதிப்
      பொருட்கும் பொருளுரைத்துச்
சுரரேத் தெடுப்ப வொருசேவற் றுவச
      முயர்த்த பெருமாளே. (5)

      இந்திரன்.
நன்னுதன் மடவார் முகிழ்விர லளைந்த
      நாதயா ழிசையுமைக் கந்த
நாண்மலர்த் தெரியல் வரியளி தெரிந்த
      நயவளங் கனிந்த பாணிசையு
மின்னமு துயிர்க்கும் வள்ளையும் வளர்க்கு
      மிளங்கிளி மழலையும் பயிலு
மெழுநிலை மாட மறுகுசூழ் சிங்கை
      யிறைவியைப் புரக்கவேத் துதுமால்
பின்னுதெண் டிரைவா ருதியில்வந் திறங்கிப்
      பெரும்புனன் முகந்துகொண் டெழுந்த
பெய்ம்முகிற் படல மின்னொடுந் தவளப்
      பிறங்கன்மீ திவர்ந்தன வடித்த
மின்னகு குலிசக் கதிர்ப்படை சுமந்து
      வெறிபடு மும்மதத் தரச
வெண்ணிறத் தயிரா வதக்களிற் றிருந்து
      விண்ணுலா வருமிறை வனையே. (6)

      இலக்குமி, கலைமகள்.
      மூரிச் சிகரந் தெரியாது
      முன்னீர்க் கிடங்கு கலங்காது
      மோட்டுக் கமடத் தகடுபடு
      முதுகு சவியா தமரரெனும்
      பேரிற் சிறந்தோர் கைவருத்தம்
      பிறவா திமையப் பெருங்கிரிவாய்ப்
      பிறந்த கருணை யுலகுடைய
      பெண்ணா ரமுதைப் புரந்தளிக்க
      பாரித் துயர்ந்த வரைநிறுவிப்
      பல்லா யிரவிண் ணவர்கூரப்
      பகட்டுப் புரந்தீ யெழக்கடையும்
      பருவத் தொருமா தவர்க்கணியாய்
      வாரிக் கடல்வெண் டிரைக்கமஞ்சூல்
      வயிற்றில் வரும்பெண் ணமுதுமுயிர்
      வகுத்துப் பழநான் மறைக்கடலின்
      வளர்நா வள்ளத் தமுதமுமே. (7)

      வயிரவர்.
பொருதிரை திரைத்துதறு மமுதவா ரிதியினொடு
      பொன்னின்மணி மண்டபத்துப்
புனிதமறை யுபநிடத மயமாய் வகுத்தவெப்
      பொருளுக்கு முற்பத்தியா
யிருபதி னிரட்டிபடு திரிகோண வட்டத்தி
      னிளவெயி லெறிப்பநாப்ப
ணிருக்கும் பராபரை யருட்பாவ நாசத்தெ
      மிறைவியை யுகந்துகாக்க
சுருள்படு நெடுந்தோகை ஞமலியம் புரவிமிசை
      தோற்றிவெங் கனலிதூற்றஞ்
சுழல்கட்டி கடுங்கூளி யாடமுக் குடுமிவிடு
      சூலாயு தந்தரித்துக்
கருவிட முடைத்தொழுகு பகுவா யெயிற்றுரக
      கங்கண மணிந்துபுவனங்
காக்குங் கறைக்காளி மைக்கஞ்சு கந்தொட்ட
      காரிப்ப ழங்கடவுளே. (8)

      சப்தமாதர்கள்.
அங்கணில மடையவு மிடந்துழு மருப்பின
      ளந்திசொலு முகிரின்வகிர் கொந்தள முடித்தவ
ளன்றமரர் பசிகெட முகந்தமு தளித்தவ
      ளஞ்சனமு மதசலதி வெங்களி றுகைப்பவள்
வெங்கனலி விழியலகை யங்கொடி யுயர்த்தவள்
      வெண்கிரண நிலவுதரு வன்சிறை யனத்தினண்
மென்கலப மயின்முது கிருந்தமர் விளைப்பவள்
      வெந்திறலி னெழுவரிவர் செஞ்சரண் வழுத்துதும்
வங்கமறி கடன்மடை திறந்ததென் மதப்புனல்
      வண்டுபடு கவுள்வழிகுடு யலம்பியிரு பக்கமு
மண்பெருகி யலையெறிய வன்றிணி மணிப்புய
      மைந்தர்மறு கிடைநடவு சிந்துர வயக்கரி
திங்கணுத லியருட றிமிர்ந்தய லெடுத்தெறி
      செங்கலவை யளறுகண் முகந்துட லிறைத்தொளிர்
திண்கனக வரையென நிமிர்ந்துநிலை பெற்றுயர்
      சிங்கைநக ருலகுடைய மங்கையை யளிக்கவே. (9)
      பத்திரகாளி.
பொதியப் பொருப்பில் வளர்கா ழகிலைப்
      புரட்டி யொளிகால்; புதுமுத்தரித்த வெறிமீன்
உதரிச் சுருட்டு திரைபாய் பொருநைத்
      துறைப்பெணுமையா ளுலகைப் புரக்க நினைவா
முதிரப் பசித்த பசியாலுருமுக் கரிக்கு
      மதர்வாய் முனையைப் பரக்க விரிவாய்
அதிரக் கொடிற்றி னிருசார் களிறிட்டதுக்கு
      மொருசூ ரலகைக் கொடிப்பி ணையையே. (10)

      முப்பத்துமுக்கோடி தேவர்.
கன்னிமதிள் வேலித் தமிழ்ச்சிங்கை யுலகுடைய
      கன்னியைப் பாவநாசக்
கடவுண்மனை யாட்டியைப் பல்லுயிர்க் கன்னையைக்
      கனகனுடல் கீண்டவுகிர்வாட்
கொன்னுதி மடங்கலுக் கிளையவளை வேதக்
      குலத்துக்கு மூத்தவளைமென்
கொம்பனைய மேனைக்கொ ருயிரனைய வருமைக்
      குமாரத்தி யைக்காக்கவோர்
பன்னிருவர் திமிரநூ றாயிரங் கதிருதைய
      பாற்கரர்வெ ளேறுகைக்கும்
பதினொருவ ரிருக்கோடி வெண்பிறை யலங்கற்
      பனிச்சடில கோடியிறைவர்
முன்னிருவர் நான்மறை மருத்துவர் வசுக்கள்கடை
      முடியாத வெண்மராக
முப்பத்து முத்தேவ ரெத்தேவ ரும்பருக
      முதமூதுரைத்த மதியே. (11)

காப்புப்பருவ முற்றும்.
----------------------------

2-வது செங்கீரைப்பருவம்.

ஒருதனிக் கருணையங் கடவுட் பிராட்டிபத
      யுகளம் பணிந்த கேண்மை
யுள்ளத்தி னவரவர்க் கேற்றபடி வேண்டுவன
      வுருவெடுத் தருளு மென்றென்
றருமறைகள் வாய்விட் டரற்றுவது கேள்வியி
      னறிந்தவர் வியந்து நோக்க
வசலப் பெருந்தலைவன் மனையாட்டி புதல்வியென்
      றருவிநீ ராட்டி முனைவே
விருவிழிக் கஞ்சன முறைத்தணி திருத்திநீ
      றெழுதியமு தூட்டி முதிரா
வின்னிளங் குதலைகேட் டம்மம்ம வின்னஞ்சொ
      லின்னஞ்சொ லென்ன மகிழத்
திருவருள் சுரந்துசிறு மகளின்விளை யாடுவாய்
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (1)

சத்திரத் தங்கட் பெரும்புவன நிழவிடுந்
      தலைவரும் புலமை மறையர்
தணருமுத லேனையோ நினைவரும் புதல்வரொடு
      தத்தமக் குரிய வாழ்க்கை
முத்திணர்ப் பைந்தெரிய றுயல்வரு குயத்திரண்
      முரட்குவ டனுக்கு மிடைநூன்
முரிகுழன் மடந்தைய ரொடும்பொருநை நீராடி
      முதல்வரொடு நிற்ப ராவிப்
பத்திரத் தண்பொழிற் சூழல்க டொறுங்குழீஇப்
      பாலடிசி லட்டு முட்டப்
பசித்தவர்க் கீந்துண்டு புனைவன புனைந்துதொடர்
      பழவினை துடைத்து நீக்குஞ்
சித்திரைத் திங்கட் சிறப்புடைய செல்வமே
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (2)

இன்றமி ழலங்கனீர் தெளிதரு பெருங்கொள்ளை
      யின்மாலை யருவி சொரியு
மியனெடுஞ் சுந்தர வரைச்சந்து கொண்டுதலை
      யீர்ம்புனற் றிரைகள் வீசிக்
கொன்றையம் படலப் பொலங்காடு பாசடைக்
      கூவிளக் காடு நிலவுக்
குறுந்துளி தெறித்தனைய தும்பையங் காடுநிலை
      குலையவெங் கறைமிடற்று
மின்றவ ளெயிற்றினர வம்புலி யுலைந்திட
      விரைந்துபல வடிபெ யர்த்து
வெண்ணிலா முத்தங் கொடிப்பவளம் வால்வளை
      வெறிக்கயல் படும்பத் தையிற்
சென்றகரு ணாநிதி குடைந்தாடு மன்னமே
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (3)

நாவடித் தெழுதாத மறையுந் தொழும்பர்புனை
      நாட்பள்ளி யந்தா மமு
நாரணன் முடித்துளவு மாரணன் முதற்புலவர்
      நகைமுடித் தருவின் மலரும்
பாவடிக் களியானை யதளிட் டசைத்தகுப்
      பாயம் பொதிந்த மேனிப்
பண்ணவன் சடைமுடிப் பிறைவயிற் றமுதப்
      பசுந்துளியும் விளரி பாடிப்
பூவடித் திளநற விறைக்குஞ் சுரும்பிமிர்
      பொலங்கொன்றை யுந்தும் பையும்
பூளையும் பூளைப் பசுங்கா பெருக்குமென்
      பூங்கொடிப் பச்சை யறுகுஞ்
சேவடிப் பங்கய மணக்குந் திருத்தோகை
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (4)

வன்பொது ளிலைப்பணைக் கோழரைக் குங்கும
      மலர்ச்சரண மாய முதலா
மன்றலம் பொழிலிற் றுவன்றிப் பெருந்தேவர்
      மாதவக் கிழவர் சூழப்
பொன்பொதி யவிழ்த்தேன் முறுக்குந் தெறித்திளம்
      புதுநறவு சாய்க்கு மிதழிப்
புரிசடைக் கடவுளிற் குடமுனி யிருக்குமொரு
      பொருவிறென் கயிலை யெனவாய்
மின்பொதி விசும்பளக் குங்குடுமி பிடரிமதி
      வென்கிழித் துக்க வமுத
வெண்கனி மெழுக்குற விளர்த்துவட கயிலையொடு
      வேற்றுமைய தன்றி யுயருந்
தென்பொதிய மால்வரைச் சாரல்குடி வாழுமயில்
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (5)

கொங்கவிழ் தடக்குமுத முகைகறித் திழிநறாக்
      கொள்ளைய திருந்து குப்பக்
குளப்படி நடைப்பக டுரப்பிமது வாய்க்களமர்
      குழுமிவிரி செக்கர் நெடுவான்
*பொங்கதிர் முகிற்பிடரின் மின்கொடி நிறைந்தெனப்
      பொற்கயி றெடுத்து வீக்கிப்
புரைபடு நுகத்திட் டிறுக்கியலம் வைத்ததிற்
      பூட்டுறுத் தூன்று கொழுவிற்
பங்கய மடங்கச் சவட்டியுழு பழனப்
      பழஞ்சேறு பட்டு நேமிப்
படர்சிகர நடுவையிற் பருதிவிடு தேரிற்
      பசும்புரவி கால்வ ழுக்கச்
செங்கய விளம்பகடு வெடிதாவு சிங்கையுமை
      செங்கீரை யாடி யருளே
திக்களா வியநீழன் முக்களா முதல்வாழ்வு
      செங்கீரை யாடி யருளே. (6)
      [*பொங்கதிர் - பொங்குகதிர்.]

      வேறு.
வரியெறி சிரகரி ணறுபக நறவுகு
      டைந்தா டுந்தோறு
மருமட னெறிபடு 1வனருக மனையிலி
      ருந்தாய் வெண்பாலின்
விரிதிரை யிருகரை பொருதுடை கடலின்மு
      ழங்கா லங்காலு
மிடலர வமளியி னடுவணி லினிதுகி
      டந்தா யைந்தாக
வுரியனல் கனல்புனல் வெளிவளி புவியென
      வொன்றாய் நின்றா2யெண்
ணுபயமு மிருபது மெழுதொகை புணர்வுற
      வொன்றா குங்3கோணத்
திரிபுரை திரிபுர மடுபகை யுறவினள்
      செங்கோ செங்கீரை
திரிபுவ னமுமருள் புரியுல குடையவள்
      செங்கோ செங்கீரை. (7)
[1. வனருகம் - தாமரை. 2. எண்உபயம் - பதினாறு.
3. கோணத்திரிபுரை - நாற்பத்துமுக்கோணம்.]

      வேறு.
பொங்குளைய வடிசுவலி னீலப் பரிகட்
      டுங்கதிரி னிரதமிட
றாரத் தடவுத் திண்சினைக ளொடியலில
      வங்கோ லஞ்சாயப்
புண்படவிண் முகடுதொடு சாய்கைப் பனசத்
      தண்டலைக ளழியவழி
தேறற் றிரள்பொற் செங்கனிய பொரியரைநெ
      டுஞ்சூ தம்பேரப்
புன்சிதடி யொலிகெழுப ராரைக் குடசத்
      தின்பொழில கடுவையுயர்
சோதித் தருவர்க் கங்குலைய விடிகுமுறு
      மஞ்சா ருஞ்சாதிப்
பொங்கரடி பறியமுதிர் கூனற் கனிதெற்
      றுங்குலைகொள் கவிழ்தலைய
வாழைக் குலமுற் றுந்தொலைய வளர்கறிப
      டர்ந்தே றுஞ்சாரற்
குங்கிலிய முறிபடவ சோகக் கிளர்கொத்
      தும்பணையும் விழநெடிய
பீலிச் சிறகர்ப் பைங்கண்மயி லினமகவி
      நின்றா டுஞ்சோலைக்
குங்குமமு மிடறுவிடு பாளைப் பருவப்
      பைங்கமுகு முதிரும்விளை
யேனற் பொதுள்விக் குங்கதிரு மிதணும்வெதி
      ரங்கா டுந்தாளிற்
கொங்களையு மிளையமது பானப் பறவைத்
      தும்பியளி ஞிமிறுபடி
யாமற் றளைவிட் டங்கண்மல ரலர்கணியி
      ருங்கோ டுஞ்சாரற்
கொம்பரொடு குரவுமிசை சேரத் துணிபட்
      டொன்றுபல சிதைவுபட
மோதிப் புளினக் குன்றுசெறி யிருகரையி
      டந்தோ றுஞ்சாடித்
தங்கநறு மடல்விரவு கோடற் படலைப்
      பங்கிமுது குடுமிவரை
காவற் றலைமைக் குன்றவர்க ளுறைகுடில்பி
      டுங்கா வென்கூனித்
தந்திமுத லியமிருக மாளக் கருவிக்
      கொன்றுநிமிர் வரிசிலைக
டூணிக் குவைவைக் கும்பகழி வயின்வயினெ
      றிந்தே மண்கீறித்
தந்தநுதி புதையவுழு பாழிக் கருமுட்
      பன்றிகளு முலைமுறுக
வூறிக் குறுமைக் கண்களமு துகுகவய
      முந்தாய் வண்காவிற்
றண்டழைகள் விளையுமுண வாகக் கறிகற்
      குங்குருளை வருடைகளு
மாலக் குமுறிப் பங்கமெயி றொழுகுமர
      வும்பால் வெண்பாதித்
திங்கணுழை முழையரியு மாடற் றறுகட்
      குன்றுபடு கரடகட
தாரைக் கலுழிக் குஞ்சரமு மடுகயமு
      மொன்றோ டொன்றாலத்
தெண்டிரைக ளொடுமறிய வாரிப் புனல்கொட்
      டுஞ்சுழியி னுழைசுழல
வீசிப் பருமுத் துங்கிரண மதியுநிதி
      யும்போ துந்தூவித்
தென்பொருநை யருவிசொரி யாணர்ப் பொதியத்
      தென்றல்வரை யருகுவட
பாலிற் பொலிவிற் சிந்துரந னுதல்வனிதை
      செங்கோ செங்கீரை
செந்தமிழும் வடகலையும் வேள்வித் தருமத்
      தந்தணர்சொன் மறையுநிறை
வீதிப் பழனச் சிங்கையுல குடையமயில்
      செங்கோ செங்கீரை. (8)

      வேறு.
ஈட்டு பெரும்புவ னம்பல கோடியு
      மீன்றது பொய்மேனைக்
கின்னுயிர் நன்மக வென்று பிறந்து
      மெனைத்துயிர் யாவையுநின்
றூட்டி வளர்ப்பது பொய்வள மென்முலை
      யுண்டு வளர்ந்துமெலா
வுலகும் வியாபக மானது பொய்யொரு
      தொட்டிலுள் ளாகியும்வெஞ்
சூட்டர வச்சய னத்தனை முதலியர்
      துஞ்சிய வூழியினுந்
துஞ்சுகி லாதது பொய்யென மல்விழி
      துஞ்சியு மாயவிளை
யாட்டய ருஞ்சிறு பேட்டர சோதிம
      மாடுக செங்கீரை
யாரப் பொதியச் சாரற் றலைமக
      ளாடுக செங்கீரை (9)

சுருட்டி யிடுங்குழை வார்குழை யோலை
      துழாவு நெடுங்கணிளந்
தோகை யிமாசல மனைவி முலைப்பா
      றுய்த்தலர் சேதாம்பன்
மருட்டிய வாயமு தூறலி னாலவண்
      மடியை நனைத்துமநாண்
மகிழ்ந னழைத்தலும் வந்து பிதற்றுபு
      மழலைத் தேனினுளந்
தெருட்டிய வன்செவி யொக்க நனைத்துரை
      தெரியா மென்குதலைச்
சில்லரி நூபுர பல்லவ மஞ்சலி
      செய்பவ ரைத்தொலையா
வருட்டிரு நதியி னனைத்து வளர்த்தபெ
      ணாடுக செங்கீரை
யாரப் பொதியச் சாரற் றலைமக
      ளாடுக செங்கீரை. (10)

சூடக முன்கையி லாட மணிக்குழை
      தோளில் விழுந்தாடச்
சுட்டியு மாடமென் முச்சி மிலைச்சிய
      சூழிய நின்றாட
மாடக யாழிசை யம்பவ ளக்கவின்
      வானில வாடநிரை
வகிர்படு மதிநுதல் குறுவெயர் வாடவொர்
      மன்றினு ணின்றாடும்
நாடக குஞ்சித பாதச ரோருக
      நம்பனு ளங்கவரா
நாகிள மேனி துவண்டா டப்பத
      நறுமல ரிதழியின்வா
யாடக மென்சிற கிண்கிணி யாடவு
      மாடுக செங்கீரை
யாரப் பொதியச் சாரற் றலைமக
      ளாடுக செங்கீரை. (11)

செங்கீரைப் பருவம் முற்றிற்று.
ஆகப் பருவம் 2-க்கு விருத்தம் 22.
----------------

3-வது தாலப்பருவம்.

கொங்கார் முகிழி னெகிழ்த்துதறிக்
      கொன்றைப் பயிரிற் படியுநறுங்
கொழுந்தண் ணறல நுகர்வாழ்க்கைக்
      குறுங்கட் பறவை யினமிரியச்
கங்கா நதிப்பெண் ணொருத்தி நெடுங்
      கல்லென் றிரைவாய்ப் படுத்திவலைக்
கவண்கல் லெறிந்து விழியெறிந்துங்
      காவற் றொழில்பூண் டினிதிருந்த
வெங்கா ளிமநச் சிறுபடல
      மிடையுந் தனிக்கத் தாய்ப்பவள
வெற்பின் றலையிற் கழிந்தமுடை
      விதிவெண் டலைநாட் டியவேணிச்
செங்கா டுழக்கி விளையாடுந்
      தெய்வப் பிடியே தாலேலோ
திருமுக் களவின் கனிகனிந்த
      தேனே தாலோ தாலேலோ. (1)

புழுங்குந் தருணத் தருணவெயிற்
      புனிதத் தனிக்கை நிமிர்த்தெடுத்துப்
புவனப் பரப்பி லுறைத்திருந்த
      புதையங் கறைமூ திருட்கவளம்
விழுங்கு கதிர்ச்செம் முகக்களிறு
      விரவு மிரவு தனையறுத்து
வெளிச்சே வகம்போற் குலவிநிற்ப
      மேக படலம் பொதிந்துமுனை
மழுங்கும் பொதும்பர்த் தடங்கோட்டு
      வளையுந் தோட்டிக் குட்படுத்து
மலையப் பாகன் றங்களிறை
      மகளென் றுனைவந் தனைபுரியச்
செழுங்குன் றருவிக் கானீட்டுஞ்
      சிகரா லயத்தாய் தாலேலோ
திருமுக்கு களவின் கனிகனிந்த
      தேனே தாலோ தாலேலோ. (2)

அருவிச் சிகரப் படாமுலைப்பச்
      சமைமென் றடந்தோட் குலைக்காந்த
ளங்கைக் கலைநற் றிருக்குநிலா
      வலங்கற் கதிர்வான் மதிவதனப்
பருவப் புயல்வார் குழற்பொதியப்
      பாவை யுயிர்ப்பச் சந்தனப்பூம்
பழுவச் சிலதி வளர்த்துவிடும்
      பணிக்குஞ் சிறுகாற் பசுங்குழவி
புருவச் சிலையாய் வழங்குமுன்றிற்
      புறத்தி லகத்திற் காவணத்திற்
பொருவிற் படையேற் றிளங்குமரர்
      பொலந்திண் கொடிஞ்சித் தேருருட்டுந்
தெருவில் வளர்ந்து விளையாடுஞ்
      சிங்கைப் பதியாய் தாலேலோ
திருமுக் களவின் கனிகனிந்த
      தேனே தாலோ தாலேலோ. (3)

மூத்து விளைந்து சரியைமுதன்
      மூன்றுங் கடந்து பரநாத
முடிவிற் றெளிந்த சின்மயமா
      மூலத் தலத்து வேரூன்றி
யேத்தி வழுத்தும் பழந்தொழும்ப
      ரிதைய கூபத் துவட்டெறிந்தூற்
றிருந்து வழியு முழுவலன்பி
      னின்பப் புனித நீர்பாய
நீத்த மகர சலதிநெடு
      நேமிப் பொருப்பு வேலியிட்ட
நிலத்து வேதத் தொடைவயின்வாய்
      நிலையா வகுத்த வறுசமையப்
பாத்தி நிறையப் படர்ந்தபசும்
      பயிரே தாலோ தாலேலோ
பாவ நாசத் தினிதமர்ந்த
      பாவாய் தாலோ தாலேலோ. (4)

பொருது கரைகொன் றிரங்குதடம்
      புணரி யமுதக் கடனடுவட்
புதுப்பூங் கடப்பஞ் சோலையின்வாய்ப்
      புரைதீர் கடவுண் மணிகுயிற்றுஞ்
சுருதி பயின்மண் டபத்திருந்த
      தோற்ற மென்முட் புறக்குடக்காய்
தூக்கு முதுகு வடிப்பலவுஞ்
      சூதத் தருவும் பெயர்த்தெறிந்து
வருதண் டரங்கப் பொருநைநதி
      வற்றா நெடுநீர்ப் புடைகிடக்கு
மலர்க்கா வகத்தி லுலைமுகத்தின்
      மாட்டி யுருக்கும் பொலனிமைத்த
பருதி மதிள்வான் சினகரத்திற்
      பயிலுங் குயிலே தாலேலோ
பாவ நாசத் தினிதமர்ந்த
      பாவாய் தாலோ தாலேலோ. (5)

மட்டா ரளகத் திருத்தாயர்
      வாய்விட் டழுமுன் பசிக்கிரங்கி
மணிக்காற் றொட்டில் விட்டிறக்கி
      மடிமே லிருத்தி முத்தாட்டிக்
கட்டார் மணிக்கச் சிறுக்கவொட்டாக்
      கதிர்மா முலையின் முகத்தறுகு
கருங்கண் டிறந்து பிதிரோடு
      கனியுஞ் சுவைப்பா னிலத்தொருபீர்
விட்டா டகக்கை வலம்புரியின்
      வௌவாய் விளிப்பு துளும்பவிட்டு
விம்பக் கனிவாய் நெறித்தூட்டி
      மெல்லென் றுருக்கிக் கிடத்தவணைப்
பட்டா டையின்மேற் கிடக்குமொரு
      பச்சைக் குழந்தாய் தாலேலோ
பாவ நாசத் தினிதமர்ந்த
      பாவாய் தாலோ தாலேலோ. (6)

      வேறு.
மடல்விடு கமலா சனவிதி விதிமுறை
      வீணே போகாமே
மரகத மழைமே னியனருள் புரிதொழின்
      மாறாய் மாறாமே
கடன்மறி திரைநீ ரிடைபல வுலகுயிர்
      பாழாய் மூழ்காமே
கவுண்மத வயிரா வதநட வரசுவி
      ணோர்வாழ் வோயாமே
படவடி வெழுதா வருமறை முதலிய
      மாநூன் மாளாமே
படர்சினை வடவா நிழல்வயின் மவுனம
      தாய்மே வாதேயோர்
தடவிம கிரிமே லரன்மணம் விளைபவள்
      தாலோ தாலேலோ
தமிழ்முனி தொழமால் விடைவரு முலகுமை
      தாலோ தாலேலோ. (7)

உருவெனி லுருவா யருவெனி லருவா
      யுயிரெனி லுயிரேயா
யுளவெனி லுளதா யிலதெனி லிலதா
      யுணர்வெனி லுணர்வேயா
யிருளெனி லிருளா யொளியெனி லொளியா
      யிசையெனி னிசையேயா
யியலெனி லியலா யயலெனி லயலா
      யெமரெனி லெமரேயா
யருளெனி லருளாய் மருளெனின் மருளா
      யறிவெனி னறிவேயா
யலையெனி னலையாய் மலையெனின் மலையா
      யணுவெனி னணுவாயோர்
சரிதையி னமையா வமைவின ளிமையா
      சலமகள் தாலேலோ
தமிழ்முனி தொழமால் விடைவரு முலகேழ்
      தருபரை தாலேலோ. (8)

      வேறு.
பருமநெ டுங்களி றுடலம் வகிர்ந்த
      பசும்பொ னசும்பூறும்,
பச்சுதி ரத்தடி முடைநா அரிவைப்
      பருவப் புயன்மூடுங்
குருமழ வெயில்கள் விளிம்பு தளும்பிய
      கோடீ ரப்பழுவக்
குலமா ணிக்க மலைப்படு போகங்
      குழைபயிர் மாதேவி
யுருமுறழ் வெடிகுற லுடைபடு கண்டை
      யொலிப்ப நடாவுகடா
வூர்தி யமன்பதி குறுகா துன்பத
      யுகளம் வணங்கினர்சீர்
தருமன பஞ்சரம் வளரு மிளங்கிளி
      தாலோ தாலேலோ
சங்கத் தமிழ்பயில் சிங்கைப் பதியுமை
      தாலோ தாலேலோ. (9)

திணிந்திடு பொற்குவ டாயிர பந்திச்
      செம்பொ னெடுங்கிரிவாய்க்
தீப மிடுஞ்சிறு தட்டென முட்டு
      திசைப்புவ னந்தோறும்
பிணிந்திடு மைந்து புலத்தின் வழிப்படு
      பேதை மனத்தினையுன்
பேழை முகைக்கம லச்சரண் வைத்தருள்
      பெற்றவர் புன்பசியுந்
துணிந்திடு நெட்டை முடப்பிறை கட்டு
      துவண்ட கொடிப்பவளத்
துய்ய கதிர்ச்சடை யையனை வைகல்
      சுடுங்கரி மப்பசியுந்
தணிந்திட மூரல் விருந்திடு மம்பிகை
      தாலோ தாலேலோ
சங்கத் தமிழ்பயில் சிங்கைப் பதியுமை
      தாலோ தாலேலோ. (10)

கொன்னவில் வளையுடல் வள்வாய் நேமிக்
      கோன்முத லியர்பரவுங்
கொள்ளைச் சுமையுமெய்ம் முனிவர ரோடுகுட
      முனியுந் தொழுதேத்தும்
பன்னரு முதுமறை யாவும் விராவிப்
      பழவடி யவர்நின்று
பழிச்சி முழக்குஞ் சதிமுறை பிறழாப்
      பாணி பதம்பெயராக்
கன்னிய ரமிழ்தின் மிழற்றும் பாடற்
      கம்பலை யுங்குளிருங்
கடவுட் பல்லிய வொலியுந் தனது
      கலிப்பொடு மாறுசெயச்
சன்னிதி முன்வரு நன்னதி யுடையாய்
      தாலோ தாலேலோ
சங்கத் தமிழ்பயில் சிங்கைப் பதியுமை
      தாலோ தாலேலோ. (11)

தாலப்பருவம் முற்றிற்று.
ஆகப் பருவம் 3-க்கு விருத்தம் 33.
----------------------------------------------------------

4-வது சப்பாணிப்பருவம்.

கோட்டானை யெட்டுமுயர் கோட்டசல மட்டும்வெங்
      கோட்டுளை யெயிற்று மோட்டுக்
குலநாக மெட்டும் புறங்கொள்ளு நள்ளுரகர்
      கொன்றலை சுமக்கு மான்றே
ரோட்டாத வக்கடவுண் மதிவிளக் கிடுபுவன
      வுறையுட் புகுந்து முறைநீ
யோங்கிப்ர பஞ்சந் தழைப்பப் பிழைப்பிலா
      தொன்றொடொன் றினிது கூட
வீட்டா *வியத்திற் பிரித்திவை துடைத்திட்
      டியற்றிவிளை யாடு வதுபோ
லெழுந்துபொற் பித்திகைப் பத்திமணி மாடத்
      திருந்தொலி கறங்க நீங்காத்
தாட்டா மரைக்கரங் கூட்டிப் பிரித்தம்மை
      சப்பாணி கொட்டி யருளே
தமிழ்ப்பாடன் முனிதொழு மணக்கோல வடிவழகி
      சப்பாணி கொட்டி யருளே. (1)
      [*வியம் - ஏவல்.]

மீன்றமர வெண்டிரை புரண்டகழ் கயக்கடலும்
      விரிதிசையொ ரெட்டு மேழு
மெட்டுபடு பைங்குலக் கிரியுமவை சூழ்சக்ர
      வேதண்ட மதுவு முயிரு
மூன்றளவை யுலகமொடு பல்லா யிரங்கோடி
      மூதண்ட வைப்பு நெடுவான்
முப்பத்து முக்கோடி பண்ணவரு மைந்தொழின்
      முடித்துமுடி யாத லருமூ
ழான்றமறை யும்பல வனைத்துமுன் வைப்பென்ன
      வறிவிற்கு ணிக்கு நெறியோர்க்
கத்தகைய வன்றிமற் றிலையெனக் கைபுடைத்
      தறிவுறுத் தருள்வ தேய்ப்பச்
சான்றவர் மனக்கோயில் குடிபுக்கு வாழுவாய்
      சப்பாணி கொட்டி யருளே
தமிழ்ப்பாடன் முனிதொழு மணக்கோல வடிவழகி
      சப்பாணி கொட்டி யருளே. (2)
இமைக்குங் கதிர்ச்சிகர மேருப் பொலன்றலையி
      லேற்றிக் கிடந்த தொல்லை
யெல்லைப் பெரும்புவன முழுதுங் குளிப்பாட்டு
      மெறிதிரைப் புணரி மூழ்கி
யமைக்குங் கடுங்கால வடவாமு கக்கொள்ளை
      யள்ளெரிப் படலை மாந்தி
யாழித் தடங்கடற் கொருபுதல்வி யிடைகிடந்
      தலமர வலைத்த பாரச்
சுமைக்குங் குமக்குன் றணைத்தபுயன் முதலினோர்
      துஞ்சிருட் கங்குல் கழியத்
துரத்தித் திருக்கருணை யவிரொளி பரப்பிநிறை
      துயின்முற் றெழுப்பி யெவையுஞ்
சமைக்கும் பசுங்காந்த ளங்கைமலர் சேப்ப
      சப்பாணி கொட்டி யருளே
தமிழ்ப் பாடன் முனிதொழு மணக்கோ வடிவழகி
      சப்பாணி கொட்டி யருளே. (3)

அலைவைத் திரங்குஞ் சகத்திர முகக்கடவு
      ளாதிப் பழங்கங் கைவா
னாற்றமுத வெள்ளமொரு புன்னுனிப் பனிநீரி
      னளவைபட முடியில் வைத்தோன்
கொலைவைத்த வில்லிற் குனித்திட்ட நெட்டைக்
      குவட்டுவற் பாழி மேருக்
குன்றினுக் கப்புறஞ் சென்றுடல் குலைந்தது
      குறித்திப் புறத்தி னணுகிக்
கலைவைக்க திங்களந் தலைவனெதிர் மாலைக்
      கணங்குழை சமைத்து நெடுவிட்
கலத்திட்ட திமிரக் கருஞ்சோ தெடுத்துண்டு
      கதிர்நிலவின் வாய்வி ளக்கித்
தலைவைத் துறங்குமலை யாசலத் தலைவியொரு
      சப்பாணி கொட்டி யருளே
தமிழ்ப்பாடன் முனிதொழு மணக்கோல வடிவழகி
      சப்பாணி கொட்டி யருளே. (4)

சூலாட்டு கூந்தலம் பிடியொடுங் கடகளிறு
      தோய்ந்தாடு மலைய வருவித்
தூநறும் புனலாட்டி யீர்ம்புனல் புலர்த்தியுஞ்
      சுண்ணந் திமிர்ந்து மிருசெஞ்
சேலாட்டு படைவிழிக் கஞ்சனந் தீட்டியுந்
      திங்கள்வகி ரன்று நிலவுத்
தெண்ணீ ரணிந்தவா ணுதலென்று சுட்டியொரு
      செஞ்சுட்டி சாத்தி யிட்டு
நூலாட்டு நுழைமருங் கேற்றியமு தூட்டியு
      நொடித்துரை பயிற்று வித்து
நூன்மணித் தொட்டில்வைத் துபநிடத மயமான
      நுண்பெருங் கீர்த்தி சொல்லித்
தாலாட்டி யுந்தினம் வளர்க்குநாங் காணவொரு
      சப்பாணி கொட்டி யருள,
தமிழ்ப்பாடன் முனிதொழு மணக்கோல வடிவழகி
      சப்பாணி கொட்டி யருளே (5)

      வேறு.
கன்று சினத்துள வெண்ப லராநெளி
      கடக முறுக்கியிடுங்
கைத்தலை முத்தலை வடிபடு சூலக்
      கடவுளு நீயுமணந்
தொன்ற வியங்கிய வைந்தொழில் வேறுற
      வொன்று மியங்கிலபோ
லுபய வளைக்கை பொருந்த வியங்கிய
      வொளிபிரி யப்பிரிய
வென்றி மதம்பிழி வேழக் கோடுகு
      வெண்முத் தம்புனறோய்
விஞ்சையர் வஞ்சியர் கொங்கைக் கோடுகு
      வெண்முத் தும்பொதியக்
குன்றில் வரன்றி வரும்பொரு நைப்பிடி
      கொட்டுக சப்பாணி
குலவரை யரசியன் மலைமக ளுலகுமை
      கொட்டுக சப்பாணி. (6)

நீல மணிச்சிறை வண்டுழு செங்கழு
      நீரை மணந்தும்வளர்
நீதி யறங்கள் வழாது மடுக்கியு
      நெட்டிதழ் விட்டபுழைக்
கால ரவிந்த மலர்த்தட நின்றழு
      கவுணியர் கோனுண்ணக்
கைச்சிறு கிண்ணத் திளமுலை யமுது
      கறந்து கொடுத்துமிருட்
டால மடைத்த மிடற்றார் சுடலையி
      லாடத் தாளமெடுத்
தாட்டியு முன்பு சிவந்தன விப்பொழு
      தப்படி யெம்மாலுன்
கோல வளைக்கை சிவந்து விடும்படி
      கொட்டுக சப்பாணி
குலவரை யரசியன் மலைமக ளுலகுமை
      கொட்டுக சப்பாணி. (7)

எட்டுமு னிட்ட சகத்திர வண்ட
      மெனைத்தும் வலித்தாளு
மெக்கு வயிற்று முடப்பிறை வெண்ப
      லிருட்டு நிறச்சூரன்
விட்ட வயப்படை பட்ட பறந்தலை
      வெற்றிட மற்றோடு
மெய்க்குரு திப்புனன் மொய்க்க வெகுண்டவன்
      விற்கே டுற்றோட
முட்டியொர் கொக்கி னலைப்புகு மங்க
      மிரட்டை படக்கீறி
முற்கும ரற்கொரு வெற்றி புரிந்தம
      ரர்க்கரு ளச்சோரி
கொட்டு மயிற்படை யுய்த்த கரங்கொடு
      கொட்டுக சப்பாணி
கொட்டு புனற்பொரு நைத்துறை நின்றவள்
      கொட்டுக சப்பாணி. (8)

      வேறு.
கட்டுமங் கலநா ணரம்பையர் பெறத்தேவர்
      கதிபெறக் கடவு ணீலக்
கறைக்கண்ட னென்னுமொரு பெயர்பெற வமைக்குங்
      கடுக்கறை திரண்ட தெனவு
மட்டுடைந் திதழூறு தேறலை முகந்தினிது
      வாய்மடுத் துண்ண வெண்ணி
மழலையா ழிசைவண்டு தண்டுணர்க் காந்தணறு
      மலர்முகையில் வீழ்ந்த தெனவு
முட்டுமெண் டிசை துருவி …… ……..
      …….. ……… ………
முழுநிழற் பாசொளிப் பருமணி பதித்தெனவு
      முகைவயி றலம்பி கறவங்
கொட்டுபைங் கழுநீர் மணந்தகைத் தளிர்கொண்டு
      கொட்டியருள் சப்பாணியே
கொம்மைமலை யெனவிம்மு பொம்மன்முலை யுலகம்மை
      கொட்டியருள் சப்பாணியே. (9)

இழைக்குந் தவத்தொருவன் மூவுலகும் வேரறு
      மிகற்கணைக ளென்று குழைசென்
றிரங்குங் களித்தடங் கயல்கட் குடைந்தது
      மிதழ்த்துகிர் விளிம்பு பூத்துத்
தழைக்குங் குறுந்தா ணிறைக்கட் கிடந்ததுந்
      தண்ணளி துளும்பு வதனத்
தண்ணளி மதிக்கழகு தோற்றதுங் குதலைச்
      சதங்கைப் பதங்கள் வென்ற
மழைக்கும் பசுந்தளிர்ச் சூதமுஞ் சோகமு
      மலர்ந்தவும் வழங்கி யாழு
மாங்குயிற் கிளவியு மருட்டித் திருக்கொழுநன்
      மனமுங் குழைத்த மொழியாற்
குழைக்குங் கரும்புங் கொடுத்தகைத் தளிர்கொண்டு
      கொட்டியருள் சப்பாணியே
கொம்மைமலை யெனவிம்மு பொம்மன்முலை யுலகம்மை
      கொட்டியருள் சப்பாணியே. (10)

தத்தோடு கடலுலக முதலண்ட கோளகைத்
      தட்டுநிலை கோலி யந்தத்
தட்டினுட் கடவுளர் முதற்பல சராசரந்
      தருமுதல்வி நீயி ருக்க
மத்தோ டுடைந்தவெண் டயிரென வுடைந்துனது
      மாயையின் மயங்கி யீண்டு
மாண்டுபடு தெய்வம் பழிச்சித் திரிந்திம்மை
      மறுமையும் பாழ்படுத்திப்
புத்தோ டழுந்திக் கிடக்குமவர் புகும்வழிப்
      புகுதாம லெம்மை மறைநூற்
பொம்மல்படு செம்மைத் திருத்தாள் வணங்கப்
      புரிந்தெமது சுற்ற முற்றுங்
கொத்தோடு தொண்டுகொண் டிருகணருள் கொட்டுவாய்
      கொட்டியருள் சப்பாணியே
கொம்மைமலை யெனவிம்மு பொம்மன்முலை யுலகம்மை
      கொட்டியருள் சப்பாணியே. (11)

சப்பாணிப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 4-க்கு விருத்தம் 44.
------------------------------

5-வது முத்தப் பருவம்.

பொற்றா துறைக்கு நறைக்கமலப்
      பொகுட்டில் விளையு முத்தமிரு
புருவச் சிலையார் களமுத்தம்
      புணரிக் கடல்வாய்ப் படுமுத்தம்
வற்றா நெடுந்தண் இறைப்பொருநை
      வளைக ளளிக்கு மாமுத்தம்
வகுக்கும் புவன கோடிகளு
      மற்றெவ் வுயிரும் பெற்றவுனக்
குற்றா தரிக்குந் தாயரியா
      முனது தொழும்பு புரியுமவ
ருறையுட் பொருள்வேட் டடைந்தாலவ்
      வொழியா விழுக்க நினக்கன்றோ
முற்றா மழலைச் சேதாம்பன்
      முத்தந் தருக முத்தமே
முத்தே வரையுந் தருமுலக
      முத்தே முத்தந் தருகவே. (1)

தெற்றுந் தரங்கக் கருங்கடலுஞ்
      செவ்விக் கமலத் தடமுமடற்
சென்னிக் கமுகப் படப்பையுநீர்
      சிந்து முகிற்றண் படலமும்போய்ச்
சுற்றுந் திரிந்து துருவியந்தச்
      சுடர்வாண் முத்தும் பெறலரிதாற்
சொன்ன பொருளத் தனையும்விழித்
      துணையு மமுதக் கதிர்முகமும்
பற்றுந் திருமங் கலத்தணிநாண்
      பைம்பொற் கழுத்துங் குழலுமென்றிப்
படியுன் னிடத்தி லவயவமாய்ப்
      படர்ந்து சிறந்த பெருங்கருணை
முற்றுந் தருங்கண் பசுங்கரும்பே
      முத்தந் தருக முத்தமே
முத்தே வரையுந் தருமுலக
      முத்தே முத்தந் தருகவே. (2)

நித்தன் குனிக்கும் பாண்டரங்க
      நிருத்த னொருத்தன் கருத்துருகி
நெக்குக் கலவி புலவியின்வாய்
      நிரைத்தா ரிதழி பொன்கொழிக்கு
மத்தம் படருஞ் சடைக்காட்டு
      மதிக்கோட் டமுதத் திவலையென
மலர்ந்த சிறுபூந் தும்பையயன்
      மந்தா கினிப்பெண் மயிலொளிப்பச்
சித்தங் கறுத்து நீயுதைத்த
      திருத்தாள் வருடிப் பிழைபொறுப்பாய்
தேனே யெனத்தண் செழுங்குமுதந்
      திறப்ப நிலவுக் கால்வீசு
முத்தம் பொதிந்த கனிப்பவள
      முத்தந் தருக முத்தமே
முத்தே வரையுந் தருமுலக
      முத்தே முத்தந் தருகவே. (3)

அள்ளித் திமிரஞ் சுளித்தெறியு
      மலரி மணித்தேர் பதிந்துருளு
மாழி யுழுத மேலைநிலத்
      தந்தப் பருவ வேளாளன்
புள்ளிக் குறுந்தா ரகையெருவெண்
      பொடியிட் டிமநீர் பாய்ச்சியிளம்
புனிற்றுப் பிறைவாண் முளைதெளிப்பப்
      புதுப்பூங் கலைவே ரூன்றிநிலா
வெள்ளிக் குருத்து விரித்தமுத
      மென்சூன் முதிர்ந்து பால்கோதி
விளைந்த கதிர்வெண் டலைசாய்க்கும்
      விரவும் புரிசை வரம்புடுத்த
முள்ளித் திருநாட் டணங்கரசே
      முத்தந் தருக முத்தமே
முத்தே வரையுந் தருமுலக
      முத்தே முத்தந் தருகவே. (4)

பொழியுங் கருணைக் களிக்கயல்பைம்
      பொற்றோண் முகந்த குழையோலைப்
புறம்போய்த் திரிய விருபுளகப்
      பொருப்பி னடுவட் பொருத்திசைத்தேன்
பிழியுங் குழைந்த நரம்பறிந்து
      பிணித்திட் டிறுக்கும் வீணையின்மேற்
பிறைக்கூ ருகிர்மெல் விரலளைந்து
      பெருநீர் மதுர மிக்குற்று
வழியுங் குதலைப் பசங்களியோர்
      மடற்காந் தனில்வந் திருந்ததென
வளைக்கை யிருந்து மழலைசில
      வழங்கு வதற்கு மறுவார்த்தை
மொழியும் பவளங் திறந்தொருகான்
      முத்தந் தருக முத்தமே
முத்தே வரையுந் தருமுலக
      முத்தே முத்தந் தருகவே. (5)

      வேறு
மிக்க தவத்தி னுழைந்து விருப்பொடு
      பெற்ற வெனக்கொருகால்
விட்டொளிர் பொற்பணி யைம்படை சுட்டி
      திருத்து மிவட் கொருகா;
லொக்க விருத்தி வழங்குப சொற்கள்
      பயிற்று மூவட் கொருகா
லொக்கலை வைத்தமி தம்பின ருத்தி
      வளர்க்கு மவட் கொருகான்
மைக்குவ ளைக்கண் வளர்ந்திடு தொட்டி
      லசைப்பவ ளுக்கொருகான்
மற்றினி நித்தில வண்டல் வெயர்ப்ப
      விளைப்பல ளுக்கொருகான்
முக்கள விற்குடி கொண்டவ ருக்குயிர்
      முத்த மளித்தருளே
முத்தமிழ் விக்ரம சிங்க புரத்தினண்
      முத்த மளித் தருளே. (6)

மைத்த மணிச்சிறை வண்டு சரோருக
      மாளிகை யும்புனல்வாய்
வண்குமு தப்புது மாளிகை யும்போய்
      மன்றல் விருந்துண்ணத்
தத்த முயிர்ப்பெடை யோடுயர் சேவற்
      றாழ்சிறை நேமியினந்
தழுவியும் வழுவியு மருள்வட விருள்படு
      தண்டலை வண்டலைபூங்
கொத்தலர் வாவி யுழக்கியு மேதி
      குழக்கன் றுள்ளமனைச்
குறுகியும் நின்று மலங்கத் திரைதரு
      குருமணி வெயிலோடு
முத்த நிலாவிரி பொருநைத் துறையவண்
      முத்த மளித்தருளே
முத்தமிழ் விக்ரம சிங்க புரத்தினண்
      முத்த மளித்தருளே. (7)

சீதந தித்திரை யடிபட் டுளைபடு
      சினையுடை பட்டலறித்
திரிவளை முத்த முடைபடு பலவு
      செழித்துவர் வளைமுத்தஞ்
சாதக நுகரப் புயன்மழை சிதறித்
      தகர முகக்கயல்பாய்
தடவரை முகடுயர் வரைமுத் தங்தனி
      தழல்பட வரைமுத்த
மாதலி னித்தகை முத்த மிரண்டுமுன்
      னணிவா ணகைமுத்தி
னம்பவ ளக்கனி முத்தை நிகர்த்தில
      வைம்புலன் வழிசெல்லா
மூதறி ஞர்க்கொரு முத்தி யளிப்பவண்
      முத்த மளித்தருளே
முத்தமிழ் விக்ரம சிங்க புரத்தினண்
      முத்த மளித்தருளே. (8)

      வேறு.
பெண்முத்த மொன்றுளது சேண்மதி மதித்தம்ம
      பெரிதுமுத் தாடல்வேண்டும்
பிறைநுதலி யெனவேறு பொருணினைத் தனைகொன்மெய்ப்
      பேருவமி யங்கள்காட்டி
யொண்முத் தரும்புங் கனித்துகிர் திறந்தெமக்
      குரையா திருத்தியோ
மோதுசொற் பொருள்சினைப் பெயர்வினை குறித்ததன்
      றொருதொழிற் பெயர்குறித்தேம்
விண்முத்த முச்சிப் பசங்கமுக முத்தமொடு
      விளரிவண் டுளறுமுளர,
வெண்ணிள முத்தமுந் தத்துந் திரைக்கடல்
      விளைந்தபரு முத்தமும்பை
கண்முத்த மும்பெற வெமக்கரிய முத்தமே
      கனிவாயின் முத்தமருளே
கலசமுனி தொழுசிங்கை யுலகுடைய மடமங்கை
      கனிவாயின் முத்தமருளே. (9)

வெம்பிக் கொடுஞ்சம ருடற்றுமொன் னலர்நாட்டு
      வேண்டுவ கொள்ளையிட்டு
வேந்தற் களிக்குமொரு சேவகன் செயலெனி
      விலங்கற் குறிஞ்சிசாடித்
தும்பிப் பருப்பத முதற்பல வனைத்தையுஞ்
      சூற்பேய் விழித்துணங்கச்
சுடுகொடும் பாலைப் புலத்தெவையு முல்லைத்
      தொகைப்பெரும் பொருளுமலர்வாய்ப்
பம்பிப் பொறிச்சிறைய வளியுளறு மருதப்
      படப்பைபடு வளனும்வாரிப்
பணிலமுரல் வருணன் றிருக்கோயி லடையப்
      பரப்பியுர கேசன்மகுடங்
கம்பிப்ப வருதிரைப் பொருநையந் துறையிறைவி
      கனிவாயின் முத்தமருளே
கலசமுனி தொழுசிங்கை யுலகுடைய மடமங்கை
      கனிவாயின் முத்தமருளே. (10)

உண்ணென்று கொங்கைக் குறுங்கண் டிறந்துபிதி
      ரோடிவரு பாலருத்தி
யொக்கலையில் வைத்துமனை முன்றிற் புறஞ்சென்
      றுலாவித் திரிந்துமேனை
தண்ணென்ற தென்றற் குழக்கன்ற மெல்லென்று
      தடவக் குழைந்தசீதத்
தமனிய மடற்குயிற் பிள்ளையென் றினியசெந்
      தார்க்கிள்ளை யென்றெனருமைப்
பெண்ணென்று முப்பத் திரண்டறம் வளர்க்கவரு
      பெருமாட்டி யென்றுகடவுட்
பேரமுத மென்றரு மருந்தென்று வாழ்வென்று
      பெறலருஞ் செல்வமென்று
கண்ணென்று கண்ணின்மணி யென்றுசீ ராட்டுமயில்
      கனிவாயின் முத்தமருளே
கலசமுனி தொழுசிங்கை யுலகுடைய மடமங்கை
      கனிவாயின் முத்தமருளே. (11)

முத்தப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 5-க்கு விருத்தம் 55.
-------------------------------

6-வது வாரானைப்பருவம்.

பவுரி திரித்த நிருத்தனழல்
      பழுத்த வுடம்பு குழைத்திருந்த
பச்சை யுடற்செம் மாந்துசெழும்
      பதுமத் திருத்தாண் மண்டலித்துக்
குவியு முழந்தாண் மிசைவளைக்கை
      குனிப்பு நிமிர்த்து நீட்டிமலர்க்
குவளைக் கருங்கண் முகிழ்த்துமணிக்
      குமிழி னுனிக்க ணோக்கியந்த
வவிர்பொற் கிரண மணிக்குமிழி
      னடங்குங் கவன வழியையுச்சி
யளவுஞ் செலுத்தி நினைவிலசஞ்
      சலமாயிருந்து தியானிக்கு
மவுன மமையு மினியெமது
      வாழ்வே வருக வருகவே
மலைய முடையா ளுலகுடையாண்
      மறைநான் குடையாள் வருகவே. (1)

ஊழ்த்து விழுந்து வெயிற்கதிர்பட்
      டுலர்ந்து கிடந்த சருகேனு
முனது சரண யுகளசரோ
      ருகத்தி லருச்சித் துய்யாமற்
பாழ்த்த செனனத் தொடுந்திமிரப்
      பரவை யழுவத் தழுங்கவிடும்
வெரியும் பவ வெயிலும் பாழ்பட்
      டெரிப்பத் திரியு மனக்
காழ்த்த வயிரச் சிலைகுழைத்தோர்
      கலவிப் பெருநா ணிறுக்கிநிறை
கலங்கா வறிவின் கணைகொழுவிக்
      கனிவாய் நெகிழ்ந்தீ சனையனையார்
வாழ்த்த மனத்துக் கெட்டாத
      வாழ்வு தருவாய் வருகவே
மலைய முடையா ளுலகுடையாண்
      மறைநான் குடையாள் வருகவே. (2)

பொதிவாய் முளரித் தளைநெரியப்
      புளுங்குஞ் சுடரோன் றனையொருநாட்
புகல்பெற் றமையான் மதிக்களங்கம்
      போக்கக் கரங்கொண் டழைப்பதென
நுதிவாய் புரட்டித் தீட்டியகூர்
      நொள்வாண் மழுங்கக் கறைதோய்த்த
நுண்ணீர்க் கயிற்றின் குறிப்படுத்தி
      நுடங்கா தறுத்துத் திருந்துதிருப்
பதிவா யுமிழ்ந்த படிவிளக்கும்
      பதும ராக வரிசேர்த்த
பருதி மதிட்செந் துகிற்கொடியாற்
      பகலை விழுங்கு மருண்மாலை
மதிவாய் துடைக்குந் தமிழ்ச்சிங்கை
      வளநாட் டரசி வருகவே
மலைய முடையா ளுலகுடையாண்
      மறைநான் குடையாள் வருகவே. (3)

அழியா முதலே முதற்சமய
      மாறும் பொருந்தி யவரவருக்
கருளுங் கருணைத் தெய்வதமா
      யமையு மமைவே யமையாத
மொழியா ரணத்தின் முதுப்பொருளே
      முதிராப் பருவத் தாணிமுத்தே
முத்தே வருமுற் பவித்தவொரு
      மூலத் தலமே நிலவலையத்
தொழியா தியற்றுந் தவத்தருளத்
      தொன்றே யொன்றா ள்ளப்புரிய
வுணர்வே யுணர்வு கடந்தபரத்
      தொடுங்கி யொடுங்கா துயிர்த்தொகையூழ்
வழியா யியக்கி விளையாடு
      மாயைக் கடலே வருகவே
மலைய முடையா ளுலகுடையாண்
      மறைநான் குடையாள் வருகவே. (4)

எழுதுந் திலக நுதலின்முளைத்
      தெழும்வேர் வழிக்க வருகசிற்றி
லிழைத்த சிறுசோ றொருக்காலிங்
      கெமர்க்குந் தரநீ வருகவுடற்
புழுதி துடைக்க வருகவிரைப்
      புதுநீ ராட்ட வருகபணி
பூட்ட வருக வஞ்சனங்கண்
      புனைய வருக பசித்தழுத
வழுகை தணிய வொக்கலைவைத்
      தமுக மருத்த வருகவெடுத்
தயினி சுழற்றி வருகதொட்டி
      லாட்டித் துயிற்ற வருகதமிழ்
வழுதி யுலகந் தனிபுரக்க
      வருவாய் வருக வருகவே
மலைய முடையா ளுலகுடையாண்
      மறைநான் குடையாள் வருகவே. (5)

      வேறு.
கற்றைச் சுடர்க்கடவுண் மதிமுது குறிஞ்சவுயர்
      கடிமனை யியற்று வதுபோற்,
கன்னிமா வினைமாக்கண் மணமுற் குறித்தெனக்
      கடையுக முடிந்த காலைப்
பொற்றைத் திசைக்கிரிக டூணட்டு நேமிப்
      புறச்சுவ ரெழுப்பி விரியும்
புவனப் பெருங்கோடி வீடுகள மைக்கும்
      பொருட்டெம் பிராட்டி விழைவா
விற்றைப் பகற்புவியி லத்தகை நிறீஇவகுத்
      திட்டதுகொ லென்று மருள்பட்
டிருக்கு முதல் யாவரும் மழுங்கத் தெருத்தலை
      யிருந்தினிது சிற்றில் கோல
வொற்றைப் பிறைக்கண்ணி யண்ணல்பங் குறையுளென
      வுறை யுநா யகிவருகவே
யுரைதெரி சொன்முனி பரவுநறை விடையில்
      வருகருணை யுலகநா யகிவருகவே. (6)

இருக்கோ விடும்பொருண் மணக்கோல நெஞ்சகத்
      தேக்கற வடங்க நோக்கி
யித்தலை யிருத்தியென வத்தலையி னவனருளி
      னெம்மைத் துறந்து நெடுநாண்
மருக்கோதை விரிகுழற் பன்னியொடு மின்னிய
      வளர்க்குந் துளக்கின் முனிவோன்
வைகின னெனக் கண் டிருந்துமவ னெனவிழையும்
      வானவ ரொருங்கு வினைநோய்
முருக்கோம வெங்கன லியற்றுந் தவத்தரொடு
      முதுபொல னடுக் கன்மேரு
முந்துதமிழ் வரைகாண வந்தரு கிருந்ததென
      முனிவர்விண் ணவரின் வினையு
முருக்கோ புரந்திகழ் திருக்கோயி லரசமட
      வோதிமப் பெடை வருகவே
யுரைதெரி சொன்முனி பரவுநறை விடையில்வரு
      கருணை யுலகநா யகிவருகவே. (7)

பாலிடு நிலாத்தெள்ளு துள்ளுவெள் ளருவிசெம்
      பருமணிக் கொள்ளை தள்ளிப்
பாயுமிம சயிலத் தரும்பிநின் கேள்வரெழு
      பண்ணிசைப் பறவை யாறு
காலிடு தொறுந்தளை தெறித்தொழுகு மிதழியங்
      கத்திகைத் தேறன் மோதிக்
கட்டவிழும் வட்டச் சடாபந்தி வெந்தழற்
      கானத் தலர்ந்து ஞான
நூலிடு நெறிப்பொறை யொழுக்கந் திறம்பா
      நுணங்கிய வரம்பில் புலமை
நோன்மையர்த மானதப் புனல்வாவி யிற்பொலிய
      நூற்சுருதி யாக மாதி
யோலிடு மலர்க்கிறை சிவப்பக் கறுத்தகய
      லுண்கணா யகி வருகவே
யுரைதெரிசொன் முனிபரவு நறைவிடையில் வருகருணை
      யுலகநா யகி வருகவே. (8)

      வேறு.
கோடி யிரண்டு மொன்றொடொன்று
      கூடா துடல நடுமுடங்கு
குழவித் தவள வங்கணிலாக்
      கொழும்பொற் சடிலந் திசையளப்பப்
பாடி யிரண்டு மணிக்குழையும்
      பாடற் சுருதி யிசைதூங்கப்
பண்ணுஞ் சுருகி வீணையிசைப்
      பாண ரிருவர் குடியிருப்ப
வாடி யிரண்டு பதஞ்சிவந்த
      மலரின் விமலப் பெருஞ்சோதி
யாகங் குழையப் பொதிந்துகணை
      யரவம் புகுவ தெனச்சினவி
யோடி யிரண்டு குழைநுழையு
      முபய விழியாள் வருகவே
யொன்றும் பலவு மாகிநின்ற
      வுலகே வருக வருகவே. (9)

சொரியுஞ் சுளைமுட் கனிதகர்ந்து
      சுரிகூ னுடம்பி னிடக்கயங்கித்
துணைமாக் கடுவ னலர்ப்பிணவு
      துனியுற் றகன்றோர் புடையொதுங்க
விரியுங் குவட்டுத் தலைதூங்கு
      வெண்பா லருவிக் குறுந்திவலை
வீசுங் கூதிர்க் குண்ணடுங்கி
      மெல்லென் குழவி கைநெகிழப்
பிரியுங் கடுவன் புகுந்தணைத்துப்
      பெருங்கொம் பரிற்பாய் தலுந்தொடர்ந்தப்
பிணவுங் குதிப்பப் பணிந்தெழுந்து
      பிறங்குங் கனகப் பழஞ்சுவர்தேய்த
துரியும் பொதும்பர்த் தடம்பொருநை
      யொலிநீர்த் துறையாள் வருகவே
யொன்றும் பலவு மாகிநின்ற
      வுலகே வருக வருகவே. (10)

பொன்னிற் பொலிந்த மேனைவலம்
      புரிவாக் கியபால் புகட்டிமணிப்
பொலந்தொட் டிலின்மேற் கிடந்தவிரு
      புடைநின் றாட்டுஞ் சேடியர்கள்
கன்னிப் பிடியோ வொருபிடிக்குங்
      காணா மருங்குற் கருங்குயிலோ
காணும் பொருளோ காண்பவர்தங்
      கண்ணோ வெங்கள் கண்மணியோ
தன்னிற் புவன மீன்றெடுத்த
      தாயோ விமபூ தரத்திறைவன்
தலைமா மகளோ வான்வாழ்க்கை
      தழையுந் திருவோ வென்றுன்னை
யுன்னிப் புகழ்ந்து தாலாட்ட
      வுழைக்கண் வளர்வாய் வருகவே
யொன்றும் பலவு மாகிநின்ற
      வுலகே வருக வருகவே. (11)

வாரானைப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 6-க்கு விருத்தம் 66.
----------------------------------------------

7-வது அம்புலிப் பருவம்.

தளிசிந்து வெண்டிரைக் குரைகடற் பட்டவ
      தரித்துவரு ஞான்றுபொய்கைத்
தடத்தெழு மறைக்குழவி கைம்மலரி னம்மைதரு
      தமனிய மிழைத்தவெள்ளத்
துளிசிந்து தெள்ளமுத வள்ளமென வொள்ளொளி
      துளும்பினை கிடத்தலானுஞ்
சுற்றுந் திகம்பரர் தரிப்பரீ புனையுஞ்
      சுடர்க்கலை கொடுத்தலானுங்
களிசிந்தி யிரவலர்த முகமலர வீசுங்
      கலாநிதிய தென்னுமொருதான்
கற்பித்த பேருலக மடையவிரு ளடையாது
      கான்றொளி விரித்தலானு
மளிசிந்து கட்கடை செலுத்தினா ளதுவறிந்
      தம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (1)

உள்ளிவெளி யிற்கிடந் தாசையிருள் வேரறுத்
      தொழுகொளி நிலாப்பரப்பி
யுயர்வுபட முயல்படுங் கலைபல விரித்துநீ
      ருடையகுவ லயமலர்த்தி
யெள்ளரிய மேனெறி பயின்றுதண் ணளிசுரந்
      தின்பம்ப யந்துதெளிவா
யிம்மதிய மெய்த்தொண்டர் தம்மதிய மொத்திவ
      ணிருந்ததென் றுனைவிழைந்தாண்
மள்ளருழு கொழுநுதி படுந்தோறு முள்ளறைய
      வனசங் கிழிந்துசாய்க்கு
மகரந்த சீகரம் வரம்பிடறி வஞ்சோனை
      மாநதியை மானவழியு
மள்ளனீ ரயல்வேலி முள்ளிநா டுடையவளொ
      டம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (2)

மீனவெறி வெள்ளத் தரங்கப் பெருங்கொள்ளை
      வெள்ளத் தடம்பள்ளவாய்
விரிநெடுங் கடலகடு கிழியப் பிளந்தொளி
      விளங்குமிள ஞாயிறென்றூழ்
வானமர் வெண்டிரைக் குண்டுநீ ருவளக
      மலர்ந்திடு நறும்பொகுட்டு
வட்டவா யம்புயமி னமுதப் பசுங்கதிரின்
      மறுமட லொடுக்குமின்று
பானவி னிலாக்கற்றை முற்றுமிரு ணுங்கிப்
      பரந்திரு விசும்புபொதியப்
பாசடை மடற்குமுத முகமலர நீவருதல்
      பார்த்தினிதெ னம்மைவாட்க
ணானன மலர்க்கா சலர்ந்தவதி சயநோக்கி
      யம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (3)

விரிபொறி நெடும்பணக் கயிறிட் டிறுக்குமிள
      வெயில்விட் டெரித்தசடில
விமலனுக் கிருவிழி யெனுந்தகையு மிரணிய
      விலங்கல்வட மேருவலனாத்
திரிதொழிலு மம்பரப் பெருவெளி யடைக்குமுது
      செறியிருட் படலைவெட்டித்
திறக்குந் திறத்திரு நிறத்தசுட ரெனவுஞ்
      சிறந்திரத பானுவொடுநீ
யுரியசெய லொருவனென் றுறையுமிப் பெருமித
      மொழித்தியவ னுதையகதிர்பட்
டொளியிழந் தும்புகல் புகுந்துபடு புன்மையு
      முணர்ந்தவ ணிருப்பதொருவி
யரிவையெம் பெருமாட்டி சரணடைந் ததுகளைந்
      தம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (4)

சுழிப்பட்ட வெண்டிரைச் சலராசி மூழ்கித்
      துகிற்சுவை மறந்துவயிறு
சூற்கொண்டு தெள்ளமு தளித்துவட மேருவிற்
      சுரரைவலம் வந்துநுதல்வாய்க்
கிழிபட்ட வொற்றைத் தழற்பார்வை யெம்பிரான்
      கிளர்சடைப் பழுவவமிர்த
கீலால மேற்றனி யிருந்தனை யுனக்கென்
      கிடைத்ததவ ணிகழினொழியாப்
பழிபட்ட வினையுந் துடைத்தெம்ம னோர்பெரும்
      பாவந்தொ லைக்குமாதி
பாவநா சத்திருத் தலமகிமை யின்னம்
      பகுத்தறிந் தில்லைபோலு
மழிபட்ட நின்குறை யொழித்தருளு மிங்கிவளொ
      டம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலி யாடவாவே. (5)

மருளூறு சிந்தைக் களங்கந் துளங்குநிலை
      மம்மர்படு விரகமொருவா
மற்றையொரு செயலற்ற சஞ்சல மொடுந்தன்னை
      வந்தித் திருக்குமமைதித்
தெருளூறு மன்பர்தங் கட்புலத் தன்றிமுது
      தெய்வப் பழஞ்சுருதியுந்
தெரிதர வெளிப்படா வொருதனி முகற்பரஞ்
      சிற்பரையெ னம்மையிவள்கா
ணிருளூறு முள்ளக் களங்கமும் பிறநிலையு
      மிருபதிற் றேழுகாரத்
திறைவனெனு மாசையுஞ் சஞ்சலமு முடையநிற்
      கெளித்தின்வெளி வந்துவாட் கண்
ணருளூற வம்மென் றழைத்தனள் கிடைப்பதன்
      றம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (6)

தளவைப் பதித்தசெங் குமுதவித முமுதூற
      றடமுலைக் குவடுபடராத்
தண்பொலன் மருமத் திரைந்தொழுக மெல்லென்
      றளிக்குதலை வீசுமின்ப
விளமைத் திருப்பருவ வுருவுகண் டறிவதற்
      கெளிதிது வெளிற்றுமதிநீ
யென்பதா லறியகிற் றிலைபோலு மம்மையிவ
      ளிடைபிங் கலைக்குமேலாய்க்
குளவைப் பினைக்கடந் தப்புறத் தாயிரங்
      குருதியந் தோட்டுமொட்டுக்
குலமுளரி மேற் பரம் பொருளொ டுங்கூடுமக்
      கோமளா னந்தரூப
மளவைக் சுகப்படா தெங்ஙனந் தெளிவதினி
      யம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (7)

ஊழிக் கடுங்கன லெடுத்துக் கவிழ்க்கும்விழி
      யுழுவையம் போத்தினுரிவை
யுடைதிரு மருங்கசைத் திரவாடு நாடகக்
      தொருதலைவ னட்டகேண்மை
வாழிப் பெருந்தகைச் செல்வக் குபேரனெழின்
      மாற்றியதை முன்னியன்னோன்
வன்பெயர்ச் சார்பினா லுனைமுனியு மெனவரு
      வதற்கஞ்ச லஞ்சலஞ்சல்
வீழிக் கனிப்பவள வாய்திறந் தண்ணலருண்
      மெய்ப்படிவ மென்னவிழியு
மேன்மையு மளித்தன ளுனக்குமுன் குறைநீக்கி
      மேற்பதம் வழங்கியருள்வா
ளாழிப் பழம்புவன மடையப் படைத்தவளொ
      டம்புலீ யாடவாவே
யங்கைமழ வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (8)

உலைக்கும் படிற்றுமய லுற்றுத் தகாதன
      வுஞற்றுமொரு வணிகனிடர்கட்
டொழித்தவ னசைத்தகலை மலினந் துடைத்தவிவ
      ளொருகிருச் சன்னிதியினீர்
நிலைக்கும் பெருந்திமிர சலதிவான் படவிடு
      நெடுஞ்சுட ரலங்கலமிர்த
நின்கலையின் மாசுநீ யிவண்வரிற் கழுவுவது
      நிலைமையஃ திரியதன்றே
மலைக்குஞ் சிலைக்கொலைவெ மதுகைவன சரர்விடும்
      வடிக்கணை யுடைக்கமுதுவேய்,
வைத்திடு மிறாலுட லுடைத்துக் குதித்தொழுகு
      வண்டிரை நிறைந்தபொருநை
யலைக்குந் தடங்குடுமி மலையா சலத்தியுட
      னம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (9)

புள்ளிச் சிறைப்பாடன் மகரந்த வண்டுபடு
      பொன்னிதழ்க் கொன்றைபூத்த
புரிசடைக் காட்டில்வைத் தனனிறைவ னென்றுநீ
      போதா திருக்கின்மிகைகாண்
வெள்ளிப் பருப்பதத் தொருஞான்று விமலனொடு
      மேவா விருந்ததன்னை
விட்டுவலம் வந்தகண நாதனை முனிந்தயில்
      விழிக்கடை சிவந்துகாட்டி
யெள்ளிக் கறைக்குருதி யூனும் பறித்தந்த
      வெம்பிரா னம்பொன்மேனி
யிடமும் பறித்தனண்மு னப்படியொர் கோபம்வரி
      னெப்படி பிழைப்பதளிதே
னள்ளிக் கொளுங்குழவி வம்மென் றழைத்தவுட
      னம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (10)

துடைத்திருள் விழுங்குமுழு நிலவாய் விசும்புறிற்
      சுடர்மணி யிமைக்கு நெற்றிச்
சூட்டரா மோட்டுட னிமிர்த்துப் பிடிக்குமொரு
      துண்டப் பிறைப்பிள்ளையாய்
விடைத்துவசன் வார்சடைக் காட்டிடை யொளிக்கிலிவண்
      மென்சரண மறியுமுருவம்,
வேறுபட் டிரவிவர விரவினா லவ்விரவி
      வெண்ணகை கழன்றுவீழ
வுடைத்துனையு மாய்வுற மிதித்துத் துவைத்தவிவ
      ளொருவிசைய மைந்தனிருதா
ளுண்டுநீ யெப்படிவ மாயெவ் விடத்துறைதி
      யோடரிக் கண்களருள்விட்
டடைத்துமைக் கடைமடை திறந்தொழுகு மம்பிகையொ
      டம்புலீ யாடவாவே
யங்கைமழு வண்ணல்புணர் சிங்கையுல கன்னையுட
      னம்புலீ யாடவாவே. (11)

அம்புலிப் பருவம் முற்றிற்று.
ஆகப் பருவம் 7- க்கு விருத்தம் 77.
----------------------------------

8-வது அம்மானைப் பருவம்.

கள்ளூறு பனிமடற் செழுமுளரி மாளிகைக்
      கன்னிகை விசைத்தெறிந்த
கதிரின்முத் தம்மனை திறம்பிமண் புகவிழக்
      கண்டுநகை கொட்டியண்டத்
தெள்ளூறு மிழுதிற் கவர்ந்துறையு நீயெறியு
      மினமணிய மனையின்முத்திட்
டிளைத்தவம் மனையுயர மாணிக்க வம்மனைந
      ளெரியொழுகி நின்றுவெண்பன்
முள்ளூறு நச்சரவ சயனனுந் திசைமுகனு
      மோட்டுவெண் மன்றியெகின
மூதுரு வெடுத்தன்று அருவவொரு நின்மகிணன்
      மூட்டழலி னிற்றல்காட்ட
வள்ளூறு மன்பினர்க் குள்ளூறு மின்பமே
      யம்மானை யாடியருளே
யாரப் பொருப்பினுயர் சாரற் புறத்துமயி
      லம்மானை யாடியருளே. (1)

வண்டினிய வேழிசைக் கல்விபயில் கள்ளொழுகு
      மரைமகளி ரிருவர்செங்கேழ்
மாணிக்க வம்மனையு நீலவம் மனைகளும்
      வகுத்தாட நீயெறிந்த
தண்டரள வம்மனைக ளிற்சிலநி னதரவொளி
      தாவிச் சிவந்துவாட்கட்
டாரையொளி வீசிக் கறுத்துவர வம்மகளிர்
      தங்களம் மனையுமேந்திக்
கொண்டனை யெறிந்தனை யெனத்தனி மருண்டுகை
      குலைந்துமனம் வெஃகவந்தர்
கோலவம் மனையுந் திறம்பாது பற்றிமென்
      குறுநகை முகிழ்த்துவீசி
யண்டமு மகண்டமு நிறைந்துவிளை யாடுவா
      யம்மானை யாடியருளே
யாரப் பொருப்பினுயர் சாரற் புறத்துமயி
      லம்மானை யாடியருளே. (2)

விம்மா மணிக்கச் சிறுக்குமிள முகைதெரிய
      வெள்ளிடை மருங்குலசைய
வேர்வைக் குறுந்துளி துளிப்பவிழி புடைபெயர
      வெள்வளை யுடுத்த காந்தட்
கைம்மா மலர்த்தலையி னம்மனைநி னெதிராடு
      கன்னியரின் முன்னர்யாணர்க்
கதிர்மணி யிமைக்குமென் புளினவெளி தோன்றநீர்
      காலூன்றும் வல்லிதுயலச்
செம்மா னொளித்தபன் னாதவங் குளிரவிரி
      சீகரக் கொள்ளைதுள்ளச்,
செங்கயல்கள் புரளப் பொலிந்தெறி திரைக்கையிற்
      றெண்ணிலா முத்தம்வாரி
யம்மானை யாடுதண் பொருநையந் துறையிறைவி
      யம்மானை யாடியருளே
யாரப் பொருப்பினுயர் சாரற் புறத்துமயி
      லம்மானை யாடியருளே. (3)

பாரா யணக்கடவு ணான்மறையி னுச்சிப்
      பழம்பொருளின் மவுணன்முன்னாட்
பாழியெண் டிசைமுக மிருட்டுவிட மொருகைப்
      படுத்ததென நின்கைநின்று
மோரா யிரங்கோடி கருநீல வம்மனைக
      ளும்பர்சென் றளவியிம்ப
ருலகமுந் திடராழி மால்வரைக் கப்புறமு
      மூழியிருள் விழுதுவிட்டுப்
பேராது குழுமிப் பரந்தொழுகி நிற்பவப்
      பிறழொளியம் மனைகள்யாவும்,
பெய்வளை யடுக்குமக் கைம்மல ரமைத்துவெம்
      பிறவித் துவக்குநீக்கி
யாரா தனைப்பழந் தொண்டர்க் கிரங்குவா
      யம்மானை யாடியருளே
யாரப் பொருப்பினுயர் சாரற் புறத்துமயி
      லம்மானை யாடியருளே. (4)

முகிழ்தனச் சிலதிய ரொடுஞ்சென்று பானிலா
      முற்றத் திருந்துநின்று
முளரிக் கரத்தொன்றி லம்மனைக ளொருகோடி
      முறைமுறை யெறிந்துமேற்றுந்
தொகுவளை யிணைக்கையினு மத்தொழில் புரிந்துமத்
      துணைகளைக் கைகண்மாறிச்
சூதமென் றளிர்மேனி முற்பட வெறிந்துபின்
      சுற்றிப் பிடித்துமுகிர்வா
ணகுமணி யினத்தலை பொறுத்துமத் தொழிலின்வழி
      நாட்டங்க ளாட்டிவிட்டு
நளிநா னனத்திளங் குறுவெயர் பொடிப்பவிரை
      நறுமலர்க் கூந்தலசரிய
வகிலமு மனைத்துயிரு மெப்பொருளு மானபரை
      யம்மானை யாடியருளே
யாரப் பொருப்பினுயர் சாரற் புறத்துமயி
      லம்மானை யாடியருளே. (5)

      வேறு.
தருண நிலாமுழு நித்தில வம்மனை
      தழன்மணி யம்மனை கைத்
தாமரை நின்று மெழுந்தும் விசும்பிற்
      றடவி யிறங்குவகண்
டிருணெடு ஞாலம் விழுங்கா தொளிசெய
      வித்தகை மதியென்றூ
ழிலகொளி யமையா திவைபழை யனவென்
      றெண்ணி யிருந்தாய்மேல்
வருணம் விளங்கிரு விரிசுட ரம்மை
      வகுத்தனள் விடவிண்போய்,
வாளர வஞ்சி வகுத்தப யம்புக
      வருவகொ லென்றுபுகன்
றருநெறி வேதமு மம்ம ருழன்றிட
      வம்மனை யாடுகவே
யழலயில் வெம்முனை விழியுல கம்மனை
      யம்மனை யாடுகவே. (6)

ஓடு நெடுஞ்சுட ருலைமுக வனலிட்
      டோட வுருக்கியபொன்
னொழுகு பசுங்களி கொண்டு குழைத்திழை
      யிடையின லுந்தியின்வாய்த்
தோடு நெளிந்தலர் தாமரை தந்த
      தொகைப்படு பேரண்டந்
துகள்பட வுயிர்க ளலந்தலை படவடி
      சுவலுழை விடுபரியேழ்
பாடு துலக்கிய தேரரி யொளிபாழ்
      படவிட வரவரசின்
படமுடி பொறைகெட வடியொடு கீண்டெழு
      பருவரை யம்மனைவைத்
தாடு மலர்க்கையி லம்மனை பன்மணி
      யம்மனை யாடுகவே
யழலயில் வெம்முனை விழியுல கம்மனை
      யாடுக வம்மனையே. (7)

மும்மத வேழ நடுங்கப் புடைபடு
      முளையிற் றுயிலரிமா
முடைவெண் கோடு பிடுங்கிச் சிதறிய
      முத்த நிலாமுன்றின்
மம்மர்செய் வாளி நெடுங்கண் மணிக்குழை
      மட்டு நெருங்கவிராய்
வரையர மகளி ரிருந்தெதி ராடுசெ
      மணியம் மனையாவுந்
தம்மக வோடணை பிணவு திரட்டிய
      தழலென் றிரியநறுந்
தண்கனி யென்று முகக்கலை யெற்றத்
      தன்மய தன்மையினே
ரம்மனை யாடு தமிழ்ப்பொதி யத்தின
      ளம்மனை யாடுகவே
யழலயில் வெம்முனை விழியுல கம்மனை
      யாடுக வம்மனையே. (8)

      வேறு.
அலையர் தொருமித் தைம்புலனு மடக்கி
      யடங்கா மும்மலவே
ரறுத்துக்கொழுந்து படுந்தழலு மடுக்கற்
      குடுமித் தலைகவிழு
நிலையா வருவித் திரைப்புனலு நிலைபெற்
      றொருதாண் மடித்தொருநா
ணிறுவிச் சுருங்க விழிபுதைத்து நிறையும்
      பரம வணுத்துவத்துத்
தொலையா வுலவை யுந்திநின்றுந் தொடர்ந்தும்
      பிரமரந் திரவாய்
துரக்க வெடிக்குங் கனற்சிகைபோய்த் துறக்கம்
      புகத்தா பதர்தவஞ்செய்
மலையா சலத்துக் கொருதலைவி மணியம்
      மானை யாடுகவே
வற்றாக் கருணை யுலகுடையாண் மணியம்
      மானை யாடுகவே. (9)

வெள்ளைப் பிறைக்கோட் டசலவுரி விழுப்புண்
      கவச மெடுத்தணிந்த
விமல னுருவிற் கழைகுழைக்கும் வில்வேள்
      கணையாய் வரநதிநீர்
கொள்ளைப் பெருக்கு நனைப்பவிரு கோட்டாற்
      குழவித் திங்களுழுங்
கொடிச்செஞ் சடைக்காட் டிதழியின்வீழ் குறுங்கட்
      சுரும்பாய் மலர்க்கரமேற்
பிள்ளைப் பிணையாய் மிடற்றி லிருள்
      பிழியுங்கடுவா யுளத்தடத்திற்
பெயராக் கயலாய் மயல்விளையப் பிறழுங்
      கருங்கண் ணிருமருங்கும்
வள்ளைக் குவவுத் தோடடர்க்கு மணியம்
      மானை யாடுகவே
வற்றாக் கருணை யுலகுடையாண் மணியம்
      மானை யாடுகவே. (10)

துளங்கா மதுகை வயற்களமர் துணைவாண்
      மருப்புக் கரும்பகடு
துரத்தி யுழும்வாட் கொழுமுனையிற் சுரிசங்
      கிடரிக் கருவுயிர்ப்ப
விளங்கா நிற்கு மணித்தரளம் விரைமென்
      பொகுட்டுப் பன்முளரி
விசிக்கும் பொதிவா யுடைத்திழியும் வெள்ளக்
      கலுழி நறாத்தெளியிற்
குளங்கான் மதகு திறந்துவரு கொள்ளைப்
      புனலிற் பெருகவதிற்
குளிர்வான் செக்க ருடுத்திரளாற் குலவுந்
      துழனி நெடுங்கழனி
வளங்கூர் சிங்கை நகர்க்கரசி மணியம்
      மானை யாடுகவே
வற்றாக் கருணை யுலகுடையாண் மணியம்
      மானை யாடுகவே. (11)

அம்மானைப் பருவம் முற்றிற்று.
ஆகப் பருவம் 8-க்கு விருத்தம் 88
----------------

9-வது நீராடற்பருவம்.

ஆதிபரை நீமுதற் பொருளினுரு விற்கசிந்
      தருள்பெருகி யொருவடிவமா
யளவைக் கடங்காது பலபேத சத்தியா
      யளவவளா யெங்குமாகி
மாதிர நெடும்புவன முழுதளித் தூழியினு
      மன்னிப்பொலிந்த தேய்ப்ப
மலையப் பெருங்கிரியி லூற்றிருந் தொழுகியொரு
      வழிபட விசேடநதியாய்
மோதியெண் பகுதிபடு கால்களா யெவ்வயினு
      முறைமுறை புகுந்துவிரவி
முவுலக மடையவும் புரவுதந் தலைகடன்
      முகந்துபொழி கொண்டல்வறளும்
போதினும் வளங்கெழு தளங்கிமிழ் தடந்திரைப்
      பொருநைநீ ராடியருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (1)
நெக்கிள முகைக்கலவை யெக்கரிட வம்மநீ
      நின்றுபுன லாடவியவா
நிலவொளி புரண்டென முடங்கிப் புரண்டுவிழு
நிரைநுரை நெருங்கனோக்கிச்
செக்கர்முழு மாணிக்க முக்கட் பொருப்பின்வான்
      றிவழுடல் குழைந்தமழவுத்
திங்கடவழ் சென்னியி லிருந்துமா கங்கையொரு
      சிறிதும் பெறாதபேறு
மிக்கொழுகு தெக்கண நெடுந்திசைக் கங்கையாய்
      மேவலிற் பெற்றனளெனா
விளைபெருங் களிதூங்க வளிதூங்கு சந்தமலர்
      விடுசினை பொதிந்துவானம்
புக்குலவு பொதிடத் தடங்குடுமி யிடறிவரும்
      பொருநைநீ ராடியருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (2)

கோற்றொடி யுனக்குமென் புனலாடு பருவமுங்
      குறுகியதி ஞான்றிலுன்னைக்
குளிப்பாட்டி யெழின்மேனி கைபுனைந் தருள்பெறல்
      குறித்ததுகொ லறிதறேற்றே
நாற்றிணையு நெய்தற் கடற்சாடு புனலோடு
      நரைநுரைத் துகிலுமகிலு
நானக் குழற்கவரு மலர்முகைக் கிளநிலா
      நடுநித் திலக்குவாலுங்
காற்றுணவு மிசைவிடப் பாந்தள்வேந் தாயிரங்
      காந்தளஞ் சுடிகைநெரியக்
கல்லிப் பிடுங்கிப் பிரித்தமணி யுந்திரைக்
      கையிற் கொணர்ந்துநின்னைப்
போற்றுமெய்ச் சேடிய ரெனப்பரவு தண்டுறைப்
      பொருநைநீ ராடியருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (3)

ஏந்திழை முகக்கொங்கை கங்கையெனு மாற்றவ
      ளெனக்கருதி யாடமுனியே
லீர்ங்கதிர் மதிக்குழவி தவழ்பொதிய வுச்சியி
      னிழிந்துபடு சீகரத்தாற்
பாய்ந்திரு விசும்பிற் பெருக்கெடுத் தகன்மணிப்
      பாறையறை போற்கிழித்துப்
பாதல வரைப்பிற் படர்ந்துகடன் ஞாலப்
      பரப்படைய விரவியோடிக்
காந்தெரி நிறத்தமா ணிக்கமுத் தினமணிகள்
      கமழகிற் பருமுருடுகள்
கந்தித்த சந்தனத் திரள்களொடு சங்கினங்
      கரையிரு மருங்குதள்ளிப்
போந்தலை திரட்டியெறி திரிபதகை யென்னவரு
      பொருநைநீ ராடியருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (4)

அங்கணெடு வெள்ளிப் பருப்பதத் துச்சிதிக
      ழண்ணலங் கடவுள்சுடலை
யடலைபடு வெண்மாலை நிலைபரவு செம்மாலை
      யாகத்தழற் குழைத்தோர்
பங்குசுழை பச்சைபட விளைவிற் றிளைத்தாடு
      பச்சிளந் தோகைமழலைப்
பவளவா யோதிமப் பார்ப்பெனத் தவழமென்
      பனிமதிக் குழவியோடுஞ்
சிங்கமழ வென்றுவெண் மருப்புக் குறுத்துவிடு
      கெறுகளிற் றிளையகன்றுந்
தென்றற் குழக்கன்றும் வன்றிறற் குன்றவர்
      சிறாரும்விளை யாடுசாரற்
பொங்கர்செறி பொசியப் பொருப்பிறைவி தண்டுறைப்
      பொருநைநீ ராடி யருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (5)

சொரியுங் குறுந்துளி நறாப்படலை யளகச்
      சொருக்கவிழ்ந் தெங்கும்விரியத்
துதைமலர்ச் சைவலக் கிளையென றிரிந்துமச்
      சுரிகுழற் காடுதடவித்
திரியுங் கொழுங்கடைக் கண்களைத் தம்பினந்
      திரிவதென் றெண்ணிவந்து
தெள்விழி யிரங்குகரு வரிமிடற் றறுபதச்
      சிறையளி மயங்கியார்ப்ப
நெரியுந் தரங்கக் கரத்தோ டலைப்புண்ட
      நீள்வதன மதியமென்று
நேமியம் புட்பெடை தணந்துமுலை கண்டுகிளை
      நிற்பதென மீண்டுமருளப்
புரியும் பெருங்கரு ணையுருவப் பசுந்தோகை
      பொருநைநீ ராடியருளே
பூவைவா சக்குழலி பாவநா சத்தலைவி
      பொருநைநீ ராடியருளே. (6)
      வேறு.
கனிசிந் தையினொடு நின்பத நூபுர
      கமலத் தலர்வாரிக்
கைகொ டருச்சனை செய்பவர் பற்பலர்
      கன்னிகை நின்முன்னர்ப்
பனிதரு புதுவிதழ் புதுமடல் பலபல
      பால்வளை நித்திலவெண்
பந்தெறி யுந்திரை யங்கையி னிட்டெதிர்
      பஃறுளி மென்புளகேற்
றினிது கசிந்து தெளிந்து விளங்கி
      யிருந்தவர் கைபரவ
வெவ்வெவர் வந்தன ரவ்வவர் வெவ்வினை
      யெவ்வப் படநூறிப்
புனித வொழுக்கந் தருமொரு பொருநைப்
      புதுநீ ராடுகவே
புவனைகல் யாண சவுந்தரி பொருநைப்
      புதுநீ ராடுகவே. (7)

அதிக தவத்தரு வடைய விரிந்தினி
      தார்வச் செறிபைங்கூ
ழளவின் மனப்புனம் விளைவிப் பான்மல
      ரைங்கணை வேடனடுங்
கதியக விரக நெருப்பவி தரமுக்
      கண்வரை குளிர்விக்குங்
கன்னி மயிற்பெடை நின்னிரு நயனக்
      கருணைப் பழநதிபோன்
முதிய மரப்பொழின் முதலொ டெரிந்து
      முதைப்புனம் விளைவிப்பான்
முதுகு குனிந்தடு கார்முக வேட்டுவர்
      மூட்டழ லவியநெடும்
பொதியை யுடற்குளிர் வித்திடு பொருநைப்
      புதுநீ ராடுகவே
புவனைகல் யாண சவுந்தரி பொருநைப்
      புதுநீ ராடுகவே. (8)

அன்னே துரியா தீதப் பொருளே
      யருளே தெருளேபே
ரறிவே யறிவா லறிவா ரறிவுக்
      களவா யளவாகாய்
மின்னே யிருளே நிலவே வெயிலே
      வெளியே வளியேபார்
விரிவே கனலே புனலே யெனவாய்
      வேறாய் வேறாகா
யென்னே யென்னே நின்னுடை மாய
      மியாவ ருணர்ந்தவரே
விச்சா ஞானக் கிரியா சத்தி யெனும்
      பேர் புனைகின்ற
பொன்னே நின்னே ரில்லாய் பொருநைப்
      புதுநீ ராடுகவே
புவனைகல் யாண சவுந்தரி பொருநைப்
      புதுநீ ராடுகவே. (9)
      வேறு.
வழிந்து பசுந்தே னொழுகுமலர் மனையாட்
      டியர்நின் னொடுங்குடைய
வற்றா நெடுநீ ரிளையநிலா வளைக்கை
      முகந்திட் டவர்வலிமை
யழிந்து படநீ யிறைப்பமெலிந் தாற்றா
      ரவரும் புனலைமுகந்
தருமைத் திருமே னியிலிறைக்கி லம்ம
      மிகையென் றொல்கிநிற்பக்
குழிந்து கருங்க லறைகிழியக் கொழுங்கா
      ழகிற்சாங் தரைத்துருட்டுங்
கொழுந்தண் டரங்கக் கரத்தினிலக் குறுங்கைப்
      புனலை யெற்றியுன்மேற்
பொழிந்து சிதறி முழுகாட்டும் பொருநைப்
      புதுநீ ராடுகவே
பொருவில் கருணை யுலகுடையாள் பொருநைப்
      புதுநீ ராடுகவே. (10)

இரட்டைப் பணிக்கோட் டொற்றைமுற்றா விளைய
      நிலவுப் பிறைமவுலி
யெங்கோன் விடுத்த வடாதுபுலத் தெறிநீர்க்
      கங்கை படிந்தெவருந்
திரட்டித் தருவெவ் வினையனைத்துஞ் சிதையத்
      துடைப்பா னடைந்துதனுத்
திங்க டொறும்வந் தினிதாடுந் தெய்வத்
      தலைமை படைத்தனையுன்
பரட்டுக் கலவ னுடைந்தோடப் பசும்பொற்
      கணைக்காற் கிடைந்துவரால்
பதுங்க விழிக்குக் கயலொதுங்கப் பகுவாய்
      மகரந் தகரவலை
புரட்டிச் சுருட்டித் துறைநிறைக்கும் பொருநைப்
      புதுநீ ராடுகவே
பொருவில் கருணை யுலகுடையாள் பொருநைப்
      புதுநீ ராடுகவே. (11)

      நீராடற் பருவம் முற்றிற்று.
      ஆகப்பருவம் 9-க்கு விருத்தம் 99.

10-வது பொன்னூசற் பருவம்.


நிலைபட்ட வெண்ணிணத் தென்புக் கொழுங்கா
      னிறுத்திப் புறத்துமறைய
நெய்த்திடு முடைத்தசைத் தோலெழினி கட்டியளி
      நெஞ்சகப் பலகைகீழிட்
டலைபட்ட மும்மல மொருங்குபட மேல்விட்ட
      மாகச் சமைத்துமூட்டி
யமையாத விருவினைப் பழவடந் தூக்கிவைத்
      தைவர்நின் றாட்டவிரிபா
சிலைப்பட்ட நெட்டிதழ்ப் புண்டரிக வீட்டிருந்
      தியன்மறைத் தச்சனிச்சித்
தியலுமெத் தொழிலும் பெறத்தனி வகுத்துதவ
      வின்னுயிர்க ளென்னமன்னிப்
புலைபட்ட வுடலூச லாட்டுமட வன்னமே
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (1)

வண்டல்படு மள்ளற் கருஞ்சேறு நாறுமலர்
      வாவியின் முளைத்தெழாமன்
மறிபுனல் வறப்பவறள் பாசடைப் படராமல்
      வார்புழை யி னூலிழைந்த
கண்டக நெடுந்தாளின மலராமன் மதிவரவு
      கண்டுமுகி ழாமலகல்வான்
காற்றும் பனிக்குறுந் திவலையிற் புரிமுகங்
      கருகிச் சமட்புறாமற்
பண்டவழி சைச்சுரும் பறுகான் மிதித்துழப்
      பருமட லுடைந்திடாமற்
பகலவற் கண்டன்று பரநாத வொளியிலே
      பகலுமல ரடியருள்ளப்
புண்டரிக மண்டபத் தரசமட வன்னமே
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (2)

திண்ணிய கவட்டுலவை யுடல்குழைந் தீனாத்
      தேமாபிளந்த ளிர்களுஞ்
சினைவிடப் பொதுளாத வாலிலையு முயர்முடத்
      தெங்கின்மட னெற்றிமுற்றாப்
பண்ணியல் சுரக்குங் குரும்பையும் பாசடைப்
      படர் மடற்குமுதமும்
பைந்தாளின் மலராத குவளையும் மொட்டகம்
      பல்காத கோகனமுந்
தண்ணிழல் பரப்புமென் கொடிகிளைத் தலராத
      தளவுஞ்சுமந் தொரெண்டோட்
டாணுச் சினைப்பொலந் தருவிற் படர்ந்ததி
      சயந்தர விரங்குபொருநைப்
புண்ணிய நதிக்கரையில் வளர்காம வல்லியே
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூலூச லாடியருளே. (3)

குருந்துப் பணித்திங்க ளங்குழவி வாணிலவு
      கோலிவிட் டெறியுமுத்திற்
குயிற்றுமணி யூசற் புறத்திருந் தாடுவது
      கொடிமதிளிலங்கை நிருதன்
பெருந்துப் புடைப்புய மிரட்டித்த பத்துப்
      பிறங்கல்கொ டசைத்ததலைநாட்
பெயர்தந் தனுங்குமக் கயிலைப் பொருப்பினுறு
      பெற்றியை நிகர்க்குமென்ன
வருந்தத் தெவிட் டாப் பழங்கடவு ளமிர்தமே
      யமிர்தந் திரட்டுசுவையே
வச்சுவையி னிச்சைதரு மானந்த வின்பமே
      யகின்முரு டுருட்டியெறிதண்
பொருந்தத துறைப்பசுங் கன்னியர சன்னமே
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (4)

பின்னுதிரை நீரூண்ட கொண்டற் படாத்துநுழை
      பிறையனைய கூந்தல்செருகும்
பிள்ளைவண் டாட்டயரும் வெள்ளிவெண் டோட்டுமென்
      பிச்சியந் தொடையுமடுபோர்ச்
கொன்னுதி யயிற்கணுழை யணிமணிக் குழையுமுடல்
      குழையுமதி நுதலுமுகமுங்
குங்குமச் சேதக மெழுக்கெறி பெருந்தனக்
      குவடுமுத் தாபரணமு
மின்னிலகு முத்தந் தெறிக்கக் குனிக்கும்வரி
      விற்கரும் புஞ்சுரும்புண்
வேரியைம் பாணமுந் தோன்றவென் சிந்தையர
      விந்தமுஞ் சிந்தாமணிப்
பொன்னெடுங் கோயிலு மிருந்துவிளை யாடுவாய்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்லூச லாடியருளே. (5)

தத்துந் திரைக்கடல் கிடந்தலறும் வயிறுயர்
      தடங்குடுமி யிடறியுடையத்
தண்புயலி னுண்டுளி யறாதொழுகு சாரலிற்
      றழைமுடையு மிதணமேறி
முத்தும் பனித்தளவு மளவென வரும்புகுறு
      முளைமுறுவ னிலவுகொட்ட
முறுகூறு விமபந் திறந்துகுற மகளிர்கரு
      மோழலுழு பொடியிலெயினர்
வித்துந் தினைக்கதிரின் வீழ்களி யினங்கடியு
      மென்மொழியை யாழினிசையாய்
வேட்டசுண மாப்பறவை கேட்பவதிர் மழைவாயை
      மிடைப்படுஞ் சிறையினமறையப்
பொத்தும் பணைச்சந்த னாசலத் தொருதலைவி
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (6)

தீட்டுமுனை வயிரவுளி வாயிட்ட பத்துத்
      திருத்துமொரு கோமேதகச்
செம்மணிப் பலகைகீ ழிட்டுவித் துருமச்
      செழுங்கால் புனைந்துதிசைவே
ரோட்டுமிரு ளோட்டெழ வெயிற்கற்றை விட்டுவிட்
      டுமிழ்மணிப் பலகைமேலிட்
டொளிர்புருட ராகமுழு நீலவுரு வைத்துவை
      டூரிய வடிம்பழுத்தி
யீட்டுசுடர் வயிரங் துளைத்துவட நாற்றிமுத்
      தினமணி விதானமாக்கி
யித்தகை குயிற்றுமணி யூசனடு மரகத
      மிருந்தாடு கின்றதென்னப்
பூட்டுமணி வார்முகைக் கோட்டிளைய போட்டுமயில்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (7)

ஒழுக்குங் கொழுக்கற்றை முழுநிலவு புடைபரந்
      தொழுகிநின் றசையவசைய
வொள்ளொளிய வெள்ளிவெண் பருமுத்த வூசலை
      யுதைந்துநீ யாடுவதுவான்
முழுக்குந் தடங்கரை யுடைத்தெறி பயோததி
      முகட்டிற் சுருட்டிவாங்கி
முறிபடு நெடுந்துளைக் கல்லோல மீமிசையின்
      முதிரச் சிவந்துநாட்டி
மழுக்கிற் சுடர்ப்பவள மழலைவா யிளவரச

      மரகதப் பச்சைவருண
மடவனப் பார்ப்பிருந் தாடுவதை யேய்ப்பமது
      வாம்பதும வடிபணிந்தோர்
புழுக்குங் கருக்குழிப் புகுதாம லாளுவாய்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (8)

கங்குல்பட ரைம்பான் முடித்தகொந் தளமைக்
      கருஞ்சுருளெறித்த விருளுங்
கழுவுங் குருச்சுடர்க் கருநீல முழுமணி
      கவிழ்த்திட்ட கொள்ளையிருளுங்
செங்குமுத முத்தங் குருத்துவிடு வெயிலுமணி
      செம்மணி கொழித்தவெயிலுங்
சில்லமிர்த மெல்லென் குறுந்தரள நகைசிந்து
      தெண்ணிலவு முறிமேனியிற்
றங்குமொரு வெண்டரளம் விண்டகதிர் நிலவுமுன்
      றளிருடற் பச்சையொளியும்
சாமளக் கோமள மணிப்பசுஞ் சோதியுந்
      தத்தமின் மயங்கியொளிரப்
பொங்குதமிழ் மலையப் பொருப்பிறைவி பன்மணிப்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (9)

கயலாடு தெண்டிரைத் தண்டுறையும் வார்கடற்
      கம்பலையு மெறியவலறிக்
கைபரந் தசுரக் கடற்படை யொடுங்கடைக்
      கண்கடைக் கனலினங்க
மயலாடு கண்டக நிசும்பா சுரன்றமையன்
      மறலிகண் முகிழ்ப்பமறலி
வஞ்சின முரைத்துமுது வெஞ்சமர் விளைத்தமர்
      வழங்கக் குழங்கனமாலைப்
பெயலாடு கொண்டற் கருங்குழற் சூலினிப்
      பெண்ணைக் கடைக்கணித்துப்
பேரம ருடன்றிவர்க் கொல்லென விடுத்துப்
      பெயர்த்தா யிரம்பருவமோர்
புயலாடு தண்டலைபின் மணியூச லாடுவாய்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (10)

மாதுங்க கனகா சலக்கார் முகத்தலைவன்
      மருள்கதுப் பிருள்யழுக்கு
மழவெயிற் செம்பொற் கிரீடமும் பச்சிள
      வரைத்தோளு மூசனிகருங்
காதுந் திருக்குழையு மிருவிழியு மொருபசுங்
      கவினொழுகு குமிழமுமிழுங்
கதிர்வதன விம்பமும் புதியவிதழ் விம்பமுங்
      கரகமல மலருமுருகுந்
தாதுந் ததும்புசெங் கழுநீரு மின்னுமுக
      தரிகமுஞ் சிற்றுதரபந்
தனமும் பொலம்பட்டு மேகலையு நூபுரச்
      சரணுமென் சிந்தைகொளவெப்
போதுஞ் சிலாலிகித மென்னப் பொறித்தமயில்
      பொன்னூச லாடியருளே
புவனைதிரி புரைமும்மை யவனிதரு முலகம்மை
      பொன்னூச லாடியருளே. (11)

பொன்னூசற்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 10-க்கு விருத்தம் 110.
பாயிரத்துடன் விருத்தம் 115
உலகம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
------------------------------------------------------------------------

5. பாவநாசம் என்னும்
சிங்கைச் சிலேடை வெண்பா.

சிவமயம்
காப்பு.
கங்கைவெண்பா மாலைமுடிக் கல்யாண சுந்தரனார்
சிங்கைவெண்பா மாலை சிறப்பாகத் - தங்கியதென்
கற்பகத்தின் கான்மலரக் கட்டினனார் கொண்டொருகைக்
கற்பகத்தின் கான்மலரக் கால்.

நூல்.
பூங்கழனி மங்கையரும் புண்டரிகப் பொய்கைகளுந்
தேங்க மலங்களையுஞ் சிங்கையே- யோங்கல்
வரிசிலை யானனத்தான் வானிமிர்ந்து காணும்
பரிசிலை யானனத்தான் பற்று. (1)

எவ்வழிநின் றுள்ளோரு மேழிசைய வண்டினமுஞ்
செவ்வழியின் பண்புணருஞ் சிங்கையே - மைவழியுங்
காவிக் கழுத்தினார் கஞ்சபத நெஞ்சுறவிப்
பாவிக் கழுத்தினார் பற்று. (2)
கல்விக் குரவருமென் கார்க்குரவக் கோதையருஞ்
செல்விக் கினமடுக்குஞ் சிங்கையே - நல்வித்
துரும வரையினார் சோதியர்சார்த் தூலச்
சரும வரையினார் சார்பு. (3)

மாலைக் குழன்மடவார் வாள்விழியு மாளிகையுஞ்
சேலைக் கொடித்திகழுஞ் சிங்கையே - யாலைக்
கரும்பனைக்கா யங்கெடுத்தார் காலாந்தத் தாடல்
விரும்பனைக்கா யங்கெடுத்தார் வீடு. (4)

வெவ்வாம் பரிமகமு மெல்லியலார் மெல்லிதழுஞ்
செவ்வாம் பலங்கொடுக்குஞ் சிங்கையே - கைவாங்
கொருகனக வில்லா னுயரிமய வேந்தன்.
மருகனக வில்லான் மனை. (5)

வேம்பருமட் கூனுமத வெங்களிறந் தண்ணறவார்
தீம்பருவப் பாகிவருஞ் சிங்கையே - கூம்பநிலா
விட்டவிருந் துண்டார் விருப்பாற் புனிதவதி
யிட்டவிருந் துண்டா ரிடம். (6)

ஆயுத் தமர்நாவு மந்தணரோ மக்குழியுந்
தேயுத் தரமாற்றுஞ் சிங்கையே - நோயுட்
படிந்தவனா சுப்பணியான் பாவியென்பா லின்னல்
கடிந்தவனா கப்பணியான் காப்பு. (7)
மல்லியைந்த தோளினரும் வானசுணப் புள்ளினமுஞ்
சில்லியந்தே ரச்சடைக்குஞ் சிங்கையே - சொல்லினிரு
கான மயிலார் கறிசமைத்த பிள்ளைவரப்
போன மயிலார் புரம். (8)

நித்திலத்தாற் சோறடுபொன் னீர்மையரும் பாவலருஞ்
சித்திரப்பா வைக்கூட்டுஞ் சிங்கையே - யத்திரத்தாற்
சோர விலங்கையினான் சேரவென்ற வாளிதொட்ட
பார விலங்கையினன் பற்று. (9)

கொப்புக் குழையார்கொங் கைக்குடமு மட்குடமுஞ்
செப்புக் குடற்பழிக்குஞ் சிங்கையே - துப்புப்
பழுக்கு மிதழியோர் பாகர்பசுந் தேன்வா
யொழுக்கு மிதழியோ ரூர். (10)

காந்த ரொடும்புணர்ந்தார் கண்களுமக் காளையருஞ்
சேந்த னலம்படருஞ் சிங்கையே - பூந்துளவ
வாரிசவா சத்தார் வனைந்தார் தொழுமலைய
பாரிசவா சத்தார் பதி. (11)

கற்பநிலை வேட்டோர் கருத்தின்மனைப் பித்திகையிற்
சிற்பரைவண் ணங்குறிக்குஞ் சிங்கையே - பொற்பின்
விலங்கற் குடையார் விதிமுதலோர் சென்னி
யலங்கற் குடையா ரகம். (12)

விம்முமலர்ப் பூங்கொத்தும் வித்துரும வாய்ச்சியருஞ்
செம்மலைமாற் றத்தழைக்குஞ் சிங்கையே - கைம்மலரிற்
றுள்ளுமறி வைத்திருப்பார் தொண்டுபுரி யார்க்கிருள்வாய்த்
தள்ளுமறி வைத்திருப்பார் சார்பு. (13)

மிக்க சிறைமயிலு மென்பயிர்க்குத் தீம்புனலுஞ்
செக்கணியா டிக்களிக்குஞ் சிங்கையே - முக்க
ணொருவ ருமாபதியா ருன்னிலர்பான் ஞானத்
திருவ ருமாபதியார் சேர்வு. (14)

கோட்டரும்பொன் மாமதிலுங் கோடா விளையவருஞ்
சேட்டருக்கன் பாற்றிவருஞ் சிங்கையே - தோட்டருக்கந்
தண்ணந் தெரியலார் சத்தியவே தாந்தமுந்தம்
வண்ணந் தெரியலார் வாழ்வு. (15)

கட்டாம் பகைப்புலத்துங் காலமுணர்ந் தோர்கருத்துந்
திட்டாந் தரந்தெரியுஞ் சிங்கையே-யெட்டாந்
திசைக்கலிங்கத் தார்வார் திரைப்பொருநை மான்போற்
றிசைக்கலிங்கத் தார்வா ரிடம். (16)

ஏர்வாய் மணிமறுகு மெண்ணெண் கலையினருந்
தேர்வா னினைவீட்டுஞ் சிங்கையே - யோர்பாற்
பசக்கச் சிவந்தார் பனிவரைக்குத் தென்பா
ரிசக்கச் சிவந்தா ரிடம். (17)

காவ னனியறமுங் கான்பொருநைப் பேராறுஞ்
சீவனமன் பாற்பயந்தாழ் சிங்கையே - நாவன்
மறையவன்றூ தேவினார் வால்வளையை மாற்றார்
மறையவன்றூ தேவினார் வாழ்வு. (18)

பற்றித் தமிழ்கேட்கும் பண்பினருந் தோரணமுந்
தெற்றித் தலையசைக்குஞ் சிங்கையே - நெற்றி
கிழிக்குந் திருக்கழலார் கெற்சிதக்கூற் றாற்ற
லொழிக்குந் திருக்கழலா ரூர். (19)

இச்சைகூர் மாந்த ரிணைப்புயமும் பூந்தருவுஞ்
செச்சையா ரத்தாழுஞ் சிங்கையே - பிச்சை
யிடவென் றுவந்தா ரிடுபலிகொண் டாசைப்
படவென்று வந்தார் பதி. (20)

ஆசில் வயப்புரவி யார்ப்புங் கணிதரும்வான்
றேசி கனைப்பழிக்குஞ் சிங்கையே - காசிமுத
லாளுந் தலத்தகத்தா ரம்புலிச்சூட் டிற்கவுரி
தாளுந் தலத்தகத்தார் சார்பு. (21)

பம்பு பொருநையுமெய்ப் பண்புடையோர் நன்மதியுஞ்
செம்புதனை யுட்குவிக்குஞ் சிங்கையே - யம்புயமார்
வேதசிர மத்தார் விரிசடைவைத் தார்நடக்கும்
பாதசிர மத்தார் பதி. (22)

பூங்குழலார் வார்த்தைகளும் பொய்யிகந்தோ ரைம்புலனுந்
தீங்குழலா வாய்த்தேறுஞ் சிங்கையே - யோங்குமுய
ரான குமரனா ரையரெயின் மூன்றெரியத்
தான குமரனார் சார்பு. (23)

மையிற் செறிகுழலார் வார்முலைச்சாந் துங்குருகுஞ்
செய்யிற் கயிலாருஞ் சிங்கையே-கையி
னெருப்புக் கணிச்சியார் நேயமில்லார் பொய்ம்மை
விருப்புக் கணிச்சியார் வீடு. (24)

வவ்வு நிதிக்ககன்ற மைந்தருந்துப் பும்மடவார்
செவ்வி தழைக்கவருஞ் சிங்கையே- யெவ்வினையுந்
தீரத் திருந்தகத்தர் சேவைசெயத் தண்பொருநைத்
தீரத் திருந்தகத்தர் சேர்வு. (25)

கன்னித் தடம்பொழிலாற் கற்றோர்கை வந்தனையால்
சென்னித் தலம்புகுக்குஞ் சிங்கையே - தன்னைத்
திடவ சனத்தினான் சீர்வழுத்த வைத்தான்
விடவ சனத்தினான் வீடு. (26)

ஓவா வளங்கெழுநீ ரூர்க்களம ருந்தெருவுந்
தேவா லயங்காட்டுஞ் சிங்கையே - மேவா
ரிருப்பரணங் காதரனா ரீர்ம்பொதியச் சாரல்
விருப்பரணங் காதரனார் வீடு. (27)

மெய்யுள் வழங்குதமிழ் வேந்தருமென் பால்வளையுஞ்
செய்யு ளவைவழங்குஞ் சிங்கையே - பையுள்
சிதையத் திருந்தார் திறத்தகன்று மேலோ
ரிதையத் திருந்தா ரிடம். (28)

கன்மந் தருவினையுங் கன்னியர்கொங் கைச்சுவடுஞ்
சென்மந் தரமலைக்குஞ் சிங்கையே - வன்ம
முரணகம லத்தினார் முன்பயிலா நிர்த்த
சரணகம லத்தினார் சார்பு. (29)

பத்த சனங்களுமென் பான்மொழியார் வேல்விழியுஞ்
சித்தச னம்பயிலுஞ் சிங்கையே - சுத்தசல
வானகங்கைக் குள்ளார் வரதா பயமழுமா
னானகங்கைக் குள்ளார் நகர். (30)

காம்பார் பசுந்தோளார் கண்ணு மணிவயிறுந்
தேம்பா னலங்கடக்குஞ் சிங்கையே -பாம்பா
பரணத் தரத்தனார் பார்த்தனடித் திட்ட
விரணத் தரத்தனார் வீடு. (31)

அண்ணற் பழம்பொருநை யாறுமறி ஞோர்மனையுந்
திண்ணத் தறனிறைக்குஞ் சிங்கையே - யெண்ணத்தின்
முன்றுருவ மானான் முகன்காண மூட்டழல்போ
லன்றுருவ மானா னகம். (32)

பாங்களவா வெண்டிசையும் பத்தியடி யார்குழுவுந்
தீங்களவா சஞ்செறியுஞ் சிங்கையே - யோங்காரத்
துள்ளொளியா நின்றா னுபநிடதத் துச்சியின்மே
லள்ளொளியா நின்றா னகம். (33)

மைவார் பொழிற்றுயிலு மாமதியை வேதியரைச்
செவ்வா ரணமெழுப்புஞ் சிங்கையே - யொவ்வாத
போற்றுக் கொடியான் புகழவுமென் பாலிரங்கு
மேற்றுக் கொடியா னிடம். (34)

தூயவரை யிஞ்சியின்வாய்த் துஞ்சுமதி யைக்கண்டு
தீயவர வங்கடுக்குஞ் சிங்கையே - யாயர்
கறவையா னானான் கனன்மழுவா னன்னப்
பறவையா னானான் பதி. (35)

அன்றலைநீ ருண்டவனு மாரத் தடம்பொழிலுந்
தென்றலைம ணந்துவக்குஞ் சிங்கையே - மன்ற
லுலையா வணமளித்தா ரூரனையாட் கொள்ள
விலையா வணமளித்தார் வீடு. (36)

வந்துபகைத் தோர்பொரலால் வண்டுமதத் தால்வர்லாற்
சிந்துரத்த வாறடுக்குஞ் சிங்கையே - கந்தரத்திற்
சற்றுக் கறுப்பார் தழற்சிவப்பார் சஞ்சிதமென்
பற்றுக் கறுப்பார் பதி. (37)

காவ விளைஞர் கடுநடையிற் பூந்தடத்திற்
சேவ லனங்குடையுஞ் சிங்கையே - மூவர்
திருப்பாட லாரத்தர் சிற்சபையி லொற்றித்
திருப்பாட லாரத்தர் சேர்வு. (38)

மைதவழ்கண் ணார்மருங்கு மாதவத்தோ ருந்தவறு
செய்தகவஞ் சிக்காக்குஞ் சிங்கையே - கைதை நறும்
போதைமுடி வைத்தணியார் போற்றறியார் புன்பிறப்பை
வாதைமுடி வைத்தணியார் வாழ்வு. (39)

எவ்வா யினுமுணர்ந்தோ ரின்னறிவு மாகதருஞ்
செவ்வாய் வழுத்தடுக்குஞ் சிங்கையே- வெவ்வாய்
நரககட கத்தினா னண்ணிவிடா தெண்ணு
முரககட கத்தினா னூர். (40)

ஈகையற்ற வஞ்சரையு மெண்ணான் கறங்களையுஞ்
சேகரித்து மெய்ப்புணர்த்துஞ் சிங்கையே - சாகரத்தை
யுண்ட வருக்கொளியா ரோரரி யிரங்கதிர்வாள்
விண்ட வருக்கொளியார் வீடு. (41)

தூயநிலை வாய்மையருந் தொல்லைமனு நூனெறியுந்
தீய வழுக்கறுக்குஞ் சிங்கையே - நேய
மெடுத்த திகம்பரத்தா ரேத்தவருள் செய்வா
ருடுத்த திகம்பரத்தா ரூர். (42)
வெய்ய மிடியும் விரிபொருளை வெண்டிரையுஞ்
செய்ய வளங்கொழிக்குஞ் சிங்கையே - யையர்
துவளக் குழையார் துடியிடையார் சங்கத்
தவளக் குழையார் தலம். (43)

பூவகத்திற் போர்கடந்த பூட்கையும்வில் வேட்கையருஞ்
சேவகத்தி லேவழங்குஞ் சிங்கையே - பாவகத்தி
லொக்க வருவா ரொருவரெனில் வேறுணரத்
தக்க வருவார் தலம். (44)

மாவாய்மைத் தொண்டர் மணிவாயு நன்மனமுந்
தேவாரப் பண்பாடுஞ் சிங்கையே - யோவாமற்
சீலமிசைந் துள்ளார் தெரிவரியார் தெண்டிரைநீ
ராலமிசைந் துள்ளா ரகம். (45)

நீதியுமென் புட்குலத்தோர் நீள்சிறைய புள்ளினமுந்
தீதின வந்தடுக்குஞ் சிங்கையே - பாதி
மரகதமே விட்டார் வழுதியெதிர் சம்புக்
குரகதமே விட்டார் குடி. (46)

வேறற் கரும்பகையும் வேழமதம் பாய்நிலமுஞ்
சேறற் கருமையவாஞ் சிங்கையே - மாறற்கு
வெப்பழிக்கு நீற்றினார் மேவார் புரமெரியுந்
தப்பழிக்கு நீற்றினார் சார்பு. (47)

பத்தி தருவிழவும் பன்மா ளிகையுமுன்னாட்
சித்திரைமா தங்குலவுஞ் சிங்கையே - புத்திரராந்
தார்க்குஞ் சரமயிலான் றாதையொரு பாதிதனைப்
பார்க்குஞ் சரமயிலான் பற்று. (48)

பிந்தாத நல்லறமும் பேராயர் வேய்ங்குழலுஞ்
சிந்தா குலந்தணிக்குஞ் சிங்கையே - சந்தார்
புளகத் தனத்தனாள் பூட்டுகுறி மார்பத்
துளகத் தனத்தனா ளூர். (49)

வேய்வனமும் போர்க்களத்து வீரரடு செஞ்சரமுந்
தீவனமா கத்தாக்குஞ் சிங்கையே - நோவன்முன்
றந்துபர சண்டன் சமர்விளைப்ப மார்க்கண்டன்
வந்துபர சண்டன் மனை. (50)

அன்னந் துணர்க்கமலத் தாடவர்கள் கோமறுகிற்
சின்னந் துவைத்தார்க்குஞ் சிங்கையே - பொன்னம்
பலவிருப்ப ரானார் பழம்புவன கோடி
பலவிருப்ப ரானார் பதி. (51)

ஐய பசுந்தமிழு மாற்றினூ லந்தணருஞ்
செய்ய மகம்புரியுஞ் சிங்கையே - சையத்
தருகுமா ரத்தியார் தந்தலைவர் வேணி
செருகுமா ரத்தியார் சேர்வு. (52)

பந்தித்த கச்சுமின்னார் பாடகப்பூந் தாணடையுஞ்
சிந்தித் தனந்திரியுஞ் சிங்கையே - பந்திக்
குடிலச் சடையார் கொடியனைப்பாழ்ம் பீறற்
குடிலச் சடையார் குடி. (53)

மெய்ம்மாண் பினருளமு மெல்லியலார் மெய்ச்சுணக்குஞ்
செம்மாந் துணர்விலகுஞ் சிங்கையே - பெம்மான்
கணிச்சிகரத் தாற்றினான் காமருபூந் தென்றன்
மணிச்சிகரத் தாற்றினான் வாழ்வு. (54)

மைந்தரயில் வேல்வலியில் வாம்புரவித் தேரேற்றிற்
செந்தி னகரனைநேர் சிங்கையே - யந்தி
திறம்பழகு மெய்யினார் சின்மயவே தாந்தத்
திறம்பழகு மெய்யினார் சேர்வு. (55)

கானாறு நாண்மலரிற் கன்னற் பெரும்பணையிற்
றேனாறு கால்பாயுஞ் சிங்கையே - யூனாற
வுண்டவரை வில்லா ருலகேழு முண்டசரங்
கொண்டவரை வில்லார் குடி. (56)

மூர லரும்பு முருக்கினரு மொய்ம்பினருஞ்
சேரலரைக் கூழையிற்சூழ் சிங்கையே - சார
லலைய மலையா ரருவிகுதி பாயு
மலைய மலையார் மனை. (57)

நாற்றமலர்க் கேணிகளு நாகிளஞ்சூன் ஞெண்டினமுஞ்
சேற்ற வளையார்க்குஞ் சிங்கையே - போற்றுகின்ற
போரகவ சாத்தினார் போர்ம தகரித்தோல்
வீரகவ சத்தினார் வீடு. (58)

ஊறு கரிமதமு மொண்டொடியார் கண்மலருஞ்
சேறுவள மாற்கமிடுஞ் சிங்கையே - நீறுபுனை
வார்கரக பாலனார் வாழ்த்துமண வாளர்பலி
தேர்கரக பாலனார் சேர்வு. (59)

மையார் கரும்புயலை வாழ்வாரைக் கண்டுவப்பாற்
செய்யா ரளகமிகுஞ் சிங்கையே - கையாற்
கடனஞ் சமைத்தான் கழற்காலான் மன்றி
னடனஞ் சமைத்தா னகர். (60)

பேரா தறநெறியிற் பெய்யுநறைப் பூங்காவிற்
றேரா தவருமுறுஞ் சிங்கையே - சோராது
பூவாரப் பாட்டினார் பொன்னா டளிக்கவைத்த
தேவாரப் பாட்டினார் சேர்வு. (61)

ஆரத் தடம்பொருளை யாறுமடற் காளையருந்
தீரத் தனம்பெயராச் சிங்கையே – வாரத்து
நீளத் தருவா னிழல்வாழ் வருளடியார்க்
காளத் தருவா னகம். (62)

ஊறன் மதநீ ருவாக்களிறு மொண்சுரும்புந்
தேறலவாய்க் கொண்டுலவுஞ் சிங்கையே - நாற
னவத்துவா ரத்தினா னண்ணுமுடம் பெண்ணார்
தவத்துவா ரத்தினான் சார்பு. (63)

அங்கம் பசுந்தளிரன் னார்நுதலு மாடவருஞ்
சிங்கம் புலிபொருதென் சிங்கையே - மங்கை
சுறவுக் குழையார் துணை விழிதந் தோடாக்
குறவுக் குழையார் குடி. (64)

தப்பாத தெய்வமறைச் சைவருமின் னார்தனமுஞ்
செப்பாக மங்களங்கூர் சிங்கையே - கப்பான
சூலங் கரந்திரித்தார் சூழ்ந்துதக்கன் வேள்வித்தொக்கார்
சீலங் கரந்திரித்தார் சேர்வு. (65)

பத்தித் துணர்ச்சோலைப் பைங்கனியு மெனசுரும்புந்
தித்தித் துவைப்பார்க்குஞ் சிங்கையே - சத்திக்கு
வாமங் கொடுக்கின்றார் வன்சமனை யோர்மகவாற்
றாமங் கொடுக்கின்றார் சார்பு. (66)

காரளக மாதருமென் கான மயினடமுஞ்
சீரளவி னாடகநேர் சிங்கையே - நீரளவு
கோடீரத் தாரார் குரைகழற்கால் வஞ்சர்கொடுங்
கோடீரத் தாரர் குடி. (67)

ஆக்கமுறு விண்ணவரு மஞ்சிறைச்செஞ் சூட்டனமுந்
தேக்கமல மென்றிருக்குஞ் சிங்கையே - நோக்க
மதியா தவனழலான் வாழ்த்தினரைத் தாழ்த்த
மதியா தனழலான் வாழ்வு. (68)

பாரக் குழலார் பயோதரமும் பைங்கூழுஞ்
சேரப் பணைத்துவளர் சிங்கையே - வாரத்து
நச்சரவ மானார் நரகே சரிநடுங்க
வச்சரவ மானா ரகம். (69)

நேசத் தினின்மடமை நீக்கலினல் லோரெவர்க்குந்
தேசத் தினைநிகர்க்குஞ் சிங்கையே - நீசப்
புலைச்சமைய மாற்றினார் பொய்யறிவுக் கெட்டா
துலைச்சமய மாற்றினா ரூர். (70)

வெவ்வலரிக் கெத்துறையு மென்சூ லியர்நாவுஞ்
செவ்வலரிப் பூமணக்குஞ் சிங்கையே - மௌவலரும்
பாக முறுவலா ராம்பலித ழாளைவிட்டு
யோக முறுவலா ரூர். (71)

ஆகுலவா ரங்குறித்த வாயர் குலவணிகர்
சேகுலவா ரம்பிரிக்குஞ் சிங்கையே - கோகுலமு
னைவசனத் தோகையினார் ஞானவடி வின்புடையார்
சைவசனத் தோகையினார் சார்பு. (72)

பன்ன வருந்தமிழ்கேட் பாருமவர் மாளிகையுந்
தென்ன மலையனிகர் சிங்கையே - இன்னலெறி
வானடிக்கு நாடகத்தார் வாழவருள் வார்சுடலைக்
கானடிக்கு நாடகத்தார் காப்பு. (73)

சொல்வந்த நல்லார் தொகுமனையுஞ் சாலிகளுஞ்
செல்வந் தமருறவாஞ் சிங்கையே - யில்வந்து
சேயத் தலைக்கறியார் தீப்பசியார் தீயவெனை
மாயத் தலைக்கறியார் வாழ்வு. (74)

மானந் தரும்பொருநர் வாளிடத்தும் பூந்தடத்துஞ்
சேனந் துவண்டுலவுஞ் சிங்கையே - ஞானந்
தடைத்தவரைக் காப்பார் தழல்விழிக்கும் பாம்பா
லிழைத்தவரைக் காப்பா ரிடம். (75)

சொன்முனிவ னின்னிசையுந் தோகையர்மென் சொல்லிசையுந்
தென்மலைய வெற்புருக்குஞ் சிங்கையே - பொன்மலைவிற்
கொண்டு புரங்கடந்தார் கோரவிடம் வாய்நிறைய
மண்டு புரங்கடந்தார் வாழ்வு. (76)

பூணம் புயத்திளைஞர் பொற்படமும் வாம்பரியுஞ்
சேணந் தரத்திரியுஞ் சிங்கையே - தூணங்
கொடுக்குநர கேசரியார் கோளொழித்தா ரென்னைக்
கடுக்குநர கேசரியார் காப்பு. (77)

மீனுகளும் பூந்தடத்து மேதிகளு மென்புறவுந்
தேனுவள மேய்ந்துறையுஞ் சிங்கையே - பானு
வினப்பற் றுவைத்தா ரிமையமகண் மேலே
மனப்பற் றுவைத்தார் மனை. (78)

ஊக்கத் தமர்க்களம்புக் கோர்விழியு மாமடமுந்
தீக்கைக் கனல்வழங்குஞ் சிங்கையே - யாக்கையெனுக்
தோற்பொதியச் சாரலார்தொண்டரெனக் காக்குமிளங்
காற்பொதியச் சாரலார் காப்பு. (79)

மேக்களவிட் டோங்குதமிழ் வெற்புமர விந்தமுஞ்சேர்
தேக்கமரப் பூம்பணைபாய் சிங்கையே - நீக்கமிலா
தெங்கு நிலாவிடுவா ரீரச் சடாடவிமேற்
பங்கு நிலாவிடுவார் பற்று. (80)

கொற்றத் தகருங் குடிப்பிறந்த கொள்கையருஞ்
செற்றத் தமர்வளர்க்குஞ் சிங்கையே - முற்றப்
பொறைக்கமடத் தோட்டார் புலன்போயென் னெஞ்சை
மறைக்கமடத் தோட்டார் மனை. (81)

எவ்வெந்தப் பூம்பொழிலு மீர்ங்குமுத நாண்மலருஞ்
செவ்வந்திப் போதலருஞ் சிங்கையே - யவ்வந்தி
பிட்டுக் கலந்தார் பெருநீர்ப் பழம்புவனத்
தட்டுக் கலந்தார் தலம். (82)

நீரகத்தே யுற்றாளு நீள்வணிகர் பொற்றோளுஞ்
சீரகத் தார்மணக்குஞ் சிங்கையே - தாரகத்தை
யந்தத் தெனக்குனித்தா னன்பினுப தேசிப்பான்
றந்தத் தெனக்குனித்தான் சார்பு. (83)

ஈவதற்கன் பாம்வணிக ரீல்லுமறி வோர்மனமுந்
தீவகத்தின் சாந்தமுறுஞ் சிங்கையே - நோவறுத்தென்
பாடற் களிப்பான் பணித்ததிருத் தாள்வழுத்து
மாடற் களிப்பா னகம். (84)

விந்தைக் கிணையாம் விறலியரு மெய்யறிவுஞ்
சிந்தைச் சுகம்பயிற்றுஞ் சிங்கையே - முந்தைக்
கடவுண் மறைத்தலையார் காதலித்துத் தம்பாற்
கடவுண் மறைத்தலையார் காப்பு. (85)

ஆராயு முத்தமிழு மத்தமிழ்மந் தாநிலமுஞ்
சீரா யசைநடைகூர் சிங்கையே - போரானை
வேகத் தசைத்தோன் மிடையு மிருளெறிப்ப
வாகத் தசைத்தோ னகம். (86)

நாவிக் குழன்முடிக்கு நாரியரும் பல்லுயிருஞ்
சீவித் தளவளவுஞ் சிங்கையே - காவிக்
களத்து விடக்கறுப்பார் காமியத்துப் போமென்
னுளத்து விடக்கறுப்பா ரூர். (87)

வன்னவிலைப் பாவையர்கை வாளுகிரு மான்குயிலுஞ்
சின்னவடு கோதியிடுஞ் சிங்கையே - மின்னவிரும்
வேணிபினா கத்தான் விதிதலைமா லைச்சூல
பாணிபினா கத்தான் பதி. (88)

முந்துதவச் செய்கையரு மொய்குழலார் கைவிரலுஞ்
செந்துவரைத் தண்ணளிகூர் சிங்கையே - யிந்து
முடிக்குத் தரித்தார் முனைவிசையன் போர்வில்
லடிக்குத் தரித்தா ரகம். (89)

ஆறூ ரொலியுமின்னா ரல்குலந்தேர்த் தட்டுமியற்
சீறூ ரரவமொக்குஞ் சிங்கையே - யேறூர்வார்
முன்னகர மானார் முகைநெகிழு முண்டகப்போ
தன்னகர மானா ரகம். (90)

போதார் மலர்ப்பொழிலும் புத்தேளி ராலையமுஞ்
சீதாரி வாசமுறுஞ் சிங்கையே - சாதாரி
விண்டவிசைப் பாணானார் வெங்கரசங் காரகோ
தண்டவிசைப் பாணனார் சார்பு. (91)

நாகரிக ரும்பொருநை நன்னதிநீர் வீசுமுத்துஞ்
சீகரமா மாலையொக்குஞ் சிங்கையே - யேக
ரனேக விதமுடையா ரன்புசெய்வார் தங்கள்
சினேக விதமுடையார் சேர்வு. (92)

பொன்னியலார் நெற்றியுந்தென் புள்ளு மிசைதெரிவான்
சென்னியரைத் தண்மதிசேர் சிங்கையே - யுன்னிமனத்
தின்பாவ மாற்றினா னெய்துகதி யெய்தவணி
கன்பாவ மாற்றினான் காப்பு. (93)

அக்கங் கறுத்தவர்கற் றைக்குழலிற் புத்தியிற்சேர்
சிக்கங் கறுத்துவிடுஞ் சிங்கையே - மைக்கனம்போய்ச்
சாயுச்சி யந்தருவார் தண்பொருந்தத் தாரெனக்குச்
சாயுச்சி யந்தருவார் சார்பு. (94)

பார்த்திக்கி லுள்ள பலதலமு முக்களவுஞ்
சீர்த்திக் களவுபடுஞ் சிங்கையே - மூர்த்திக்கு
மானமொழிந் தார்க்கு வடநிழற்கீழ் வந்திருந்து
ஞானமொழிந் தார்க்கு நகர். (95)

பேர்த்தண் டமிழ்வரையும் பேரறமுஞ் சேர்ந்துகலி
தீர்த்தங் கொடுக்குமியற் சிங்கையே - யூர்த்த
முயலு நடத்தினார் மூதண்டத் தெல்லாச்
செயலு நடத்தினார் சேர்வு. (96)

காப்புவளைக் கையாருங் காலவளைக் குண்மடையுஞ்
சீப்பினள கஞ்செறிக்குஞ் சிங்கையே - கோப்புமுறைக்
குஞ்சிதத் தாளார் கொடும்பா தகர்குடியை
வஞ்சிதத் தாளார் மனை. (97)

காப்பாயர் தோளிணையுங் காந்தளில்வீழ் வண்டினமுஞ்
சேப்பாய் மருப்பொசிக்குஞ் சிங்கையே - காப்பாய
சற்பப் படலையார் தம்படிவ மாம்பவள
வெற்பப் படலையார் வீடு. (98)

குத்திரத்தில் வாசவருங் கோமளப்பூங் கோதையருஞ்
சித்திரத்தை யாயுலவுஞ் சிங்கையே - பத்தர்நினை
பஞ்சக் கரக்களவாப் பாலோன் பரிந்துரையா
நெஞ்சக் கரக்களவா நேர்வு. (99)

பாண்டிக் குலவலியிற் பல்கடவு ளாலையத்திற்
சேண்டிக் குரனவிலுஞ் சிக்கையே - வேண்டியெனை
யாழி மலையவெற்பா ராக்கையெடா தாண்டுகொண்ட
வாழி மலையவெற்பார் வாழ்வு. (100)

சிங்கைச்சிலேடைவெண்பா முற்றிற்று.
-------------


This file was last updated on 16 Feb, 2025
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)