pm logo

வீரராகவமுதலியார் செய்தருளிய
திருக்கண்ணமங்கைமாலை

tirukkaNNamangkai mAlai
by virarAkava mutaliyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வீரராகவமுதலியார் செய்தருளிய
திருக்கண்ணமங்கைமாலை

Source:
வீரராகவமுதலியார் செய்தருளிய
திருக்கண்ணமங்கைமாலை (மூலபாடம்)
அபிஷேகவல்லித்தாயார்பேரில் பொற்களந்தைப்பதி-
முத்தமிழ்க்கவி வீரராகவமுதலியார் செய்தருளியது.
இஃது கையெழுத்துப்பிரதிகளில் பாடந்தோறும் பிழைபடுகின்றதை
நோக்கி -அதைவிலக்கும்பொருட்டு - சென்னைமாநகரத்துப் பிரபுக்களிலும்
புலவர்களிலும் - உபாத்தியாயர்களிலும் பலரும் கேட்டுக்கொண்டதால்-
சென்னைக்கல்விச்சங்கத்துத் தமிழ்ப்புலவர் திரு-வேங்கடாசல முதலியாரால்
பல பிரதிகளைக்கொண்டு ஆராய்ந்து - பிழைகளைத் திருத்தி -
தமது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
இது இவரது தமையனார் குமாரர் திரு-வீரராகவசாமிமுதலியாரால் நிறைவேறினது
சாலிவாகன சகாப்தம் - 1834 - ஜயவ
1834
***********************
ஹரி:

திருக்கண்ணமங்கைமாலை.

துதிகவி.
விரகறிமுத்தமிழ்வீரராகவன்
வரகவிமாலையை வழுத்துந்தோறெலாம்
உரகனும் வாணனுமொக்கக்கூடினால்
சிரகரகம்பிதஞ்செய்யலாகுமே

காப்பு.
சீர்பூத்தமாலுக்குமாலாக்கும் வல்லிதிருவல்லியிப்
பார்பூத்தவல்லியபிடேக வல்லிபதுமவல்லி
நீர் பூத்தவல்லித்தமிழ்மாலை பாடவென்னெஞ்சிருக்கும்
தார்பூத்ததெய்வப்புளிக்கீழ் விளங்குந் தமிழ்க்கரசே.     ( 1)

பிறை பூத்த வேணியரன்சாபந்தீர்த்தபிரான்புனித
மறைபூத்தபேரழகன்பத்தராவி நன் மார்பிலொரு
சிறை பூத்திருந்துமுன் மேனிபொன் பூத்ததிறமென்னை காண்
நறைபூத்ததாமரைத் தாளாய் கணமங்கை நாயகியே.     ( 2)

தோடார்விழியருளாலடியேன் செய்ததொல்லைவினைக்
காடானது சுடுங்காலமுண்டோவண்டுகால் குடைந்து
பாடாமுரலுந்துழாய்முடியார்பத்தராவிபெற்ற
நாடாளுகின்றதிருவேகணமங்கை நாயகியே.     ( 3)

வேளுஞ்சிவனும்பிரமனுந்தேவரும் விண்ணுக்
கோளுங்கனல்புனல்காலபுவியும்மண்டகோடியம்பெற்
றாளுந்திருவயிற்றன்னையென்றாலுமழகிலொரு
நாளுங்குறைவுனக்குண்டோகணமங்கை நாயகியே.     ( 4)

விட்டார்க்குமாசைவிடாதார்க்கு நீயன்றிவேறுகதி
இட்டாற்று வதினியில்லை கண்டாயெளியேற்குனது
மட்டார்த்ததாமரைத்தாளே சரணன்றிவைதரணி
நட்டாற்றில்விட்டுவிடாதேகணமங்கை நாயகியே.     ( 5)

மஞ்சார் கருங்குழலுங்குழையூடெறிவாளுமதிப்
பிஞ்சார் நுதலுந்திலகமுநாசியும் பேரருள்கொண்
டஞ்சாதமைத் தகரமுஞ்செம்மேனியழகுமுள்ளில்
நஞ்சானதுமமுதாமேகணமங்கை நாயகியே     ( 6)

காவியும் பூவையுமேகமும் போல்வண்ணன் கண்ணன் கண்ணும்
ஆவியும்போலும்பிடேகவல்லி நின்னஞ்சனக்கண்
எவியமுத்தொழின் மூவருங்கேட்பான்றேயகிலும்
நாவியுநாறுங்குழலாய் கணமங்கை நாயகியே.     ( 7)

பெற்றாருங்கூடப்பிறந்தாருமக்களும்பெண்டிரு நட்
புற்றாரும்வீட்டுக்குறு துணையோவென்னுயிரளிக்கப்
பற்றாகிநின் றகுருதேசிகனும் பரகதியும்
நற்றாயுந்தந்தையு நீ காண்கணமங்கை நாயகியே.     ( 8)

கேட்டுக்குமாக க்கிளர்வுக்கு நின்னிருகெண்டையங்கண்
ஒட்டுக்குள் ளைத் தவுபாயமென்னோவுயர்வா லுயர்ந்த
வீட்டுக்கும்லீலாவிபூதிக்குமிந்த விபூதியிற்சோ
ணாட்டுக்குநாயகப் பெண்ணே கணமங்கை நாயகியே.     ( 9)

சேதிக்குஞ்சூலமும்பாசமுமாச்சமீன் றேடிவந்து
சோதிக்கும்போது வந்தஞ்சலென்பாய் நதை தூற்றுமலர்
கோதிக்குடைந்துமிடைந்தறுகாலளிகோடிசுற்றி
நாதிக்கும் பூங்குழன்மின்னே கணமங்கை நாயகியே.     ( 10)

காவுக்கழகு மலர்மடமாதர்க்குக்கற்பழகு
கோவுக்கழகுமனுநீதிகார்க்குக் கொடையழகு
பாவுக்கழகுபொருளுன் சரிதைபிடிக்குமென்றன்
நாவுக்கழகுன் பதங்காண்கணமங்கை நாயகியே.     ( 11)

பாடேனுன து திருப்புகழ்பாடிடும்பத்தரொடும்
கூடேனுன்கொயில் வலம்புரியேன் செங்கை கூப்பிப்பணிந்
தாடேன் மெய்ஞ்ஞானத்தைத்தேடேனிக்காயமழியுமென்ன
நாடேனுன் சித்தமறியேன் கணமங்கை நாயகியே.     ( 12)

காவிக்கு நேருங்கண் பஞ்சடைந்துள்ளங்கலங்கிநனி
கோவிக்குங் காலனுமுன் வரவாக்குங் குழறியுயிர்
பாவிக்குத்துன்பம் வந்தாகங்கிடந்து பதைத்திடவென்
நாவிக்கும்போது வந்தாள் வாய் கணமங்கை நாயகியே.     ( 13)

வேயகமானதடந்தோளுந்தாளும்வியனருட்குத்
தாயகமானமுகமுந்திருக்கைத்தலங்களுஞ்செவ்
வாயகமான முறுவலுங்கொங்கை வடமும்ரத்தின
நாயகக்கச்சுமறவேன் கணமங்கை நாயகியே.     ( 14)

வடக்குங்குமமுலைமானார் கண்மோகவலையிற் சிக்கிக்
கிடக்குங்கொடும்னமெந்நாளுன்பாதத்தைக்கிட்டுமந்தோ
கடக்குஞ்சரமன்றளித்தபிரானொடுங்கானின் முன்னம்
நடக்கும் பரிபுரத்தாளாய் கணமங்கை நாயகியே.     ( 15)

தேன்பாய் கமலமலடொருவித்தினமுமெளி
யேன்பாவநாவினிடம் வீற்றிருந்தருளே கொண்டு நீ
தான்பாடுமாமதுரத்தமிழ்ப்பாட்டைச்சகதலத்தோர்
நான்பாடினதென்பரென்னோ கணமங்கை நாயகியே     ( 16)

பாலுக்குந்தேனுக்கு நேருஞ்செவ்வாயிற்பணிமொழியால்
மாலுக்குமால் வலை பூட்டுவை நின் குணமட்டுஏதோ
தாலுக்குமற்றவை நாலுக்கும் பேருலகங்கள்பதி
னாலுக்குநாயகப்பெண்ணே கணமங்கை நாயகியே     ( 17)

சிந்தாமணியுஞ்செழுங்காமதேனுவுந்தேம்பொழிபூஞ்
சந்தானமுங்கொடைகற்றது நின்கைத்தலங்கண்டன்றோ
மந்தாகினிவந்தசெஞ்சரணாம்புயன்மார்பில்வளர்
நந்தாவிளக்கின் சுடரே கணமங்கை நாயகியே     ( 18)

கானவழிக்குத் துணைகொல்விபஞ்சிகனபெருமைத்
கான வழிக்குத் துணைசெம்பொன் மூண்டசமரிலடும்
மானவழிக்குத் துணைதானை முத்திவௗ நகர்போம்
ஞானவழிக்குத் துணை நீகணமங்கை நாயகியே     ( 19)

கவிக்குங்கமகனுக்கும்வாதிவாக்கிக்குங்கன்னித்தந்தோ
துவிக்குநின் னூர் வனக்கிள்ளை நின்சந்நிதிசேவித்துக்கை
குவிக்குந் தொழும்பர்பெருமைசொல்வாரெவர் கூர்வடிக்கும்
நவிக்குமொப்பாங்கண்மயிலேகணமங்கை நாயகியே     ( 20)

கனைகுரற் சில்லரி நூபுரத்தாளிற்கவுரிபங்கன்
புனைதருகூறையுமின்றிக்கபாலத்திற்பூத்தபல
மனைவயிற்போயிரந்தானென்னம்மேயுன்னை வாழ்த்திலேனோ
நனைமலர்க்கூந்தற்கிளியேகணமங்கை நாயகியே     ( 21)

காட்டிருந்தாலுகத்திருந்தாலுமிக்காசினியில்
வீட்டிருந்தாலும் வெளியிருந்தாலும்வியனரசின்
பாட்டிருந்தாலும்விரசா நதியின் பரம்பத்
நாட்டிருந்தாலுந்துணை நீ கண மங்கை நாயகியே     ( 22)

வான்மறவாதுகலாபமயூரம் வருங்க திரைத்
தான்மறவாது புழைக்காலரவிந்தந் தண்ணென்
கான்மறவாதுகளிவண்டினீட்டமக்காரணம்போல்
நான்மறவேனின்னைகண்டாய் கணமங்கை நாயகியே     ( 23)

கொடுங்காமன்வாளிதொடாமற்பெருநல்குரவரவம்
பிடுங்காமற்பாவம்பிடியாமன்ஞானப்பெருஞ்செல்வமே
ஒடுங்காமலற்பரைப்போற்றாமற்காலற்குளங்கலங்கி
நடுங்காமற்காத்தென்னையாள் வாய் கணமங்கை நாயகியே -     ( 24)

பயனாமறைவடிவாமால்சனகன்பதியிலுன்னை
வியனாம் வதுவைபுரி நாளுன் பாதமிதித்தகல்லாய்
அயனான்கிடக்கவகுத்தா லுமுத்தியையாள்வனம்மே
நயனாரவிந்தக்கொடியேகணமங்கைநாயகியே     ( 24)

தேனோடரவிந்தவீட்டிருந்தாயத்திருமனைக்கே
தானோதிமத்தினரசைப்பெற்றாயத்தனையனண்டம்
வானோர்களாதிச்சராசரமுற்றும்வகுக்கக்கண்டாய்
நானோ நின்கீர்த்தியைச்சொல்வேன்கணமங்கை நாயகியே -     ( 25)

கோடகலக்கடற்பாரிற்சன் மோததிக்குண்டிற்றள்ளி
நீடகவாழ்க்கைத்திடரேற்றிஞான நெறிமயக்கி
ஆடகம்பெண்ணிலத்தாங்காதற்பேய்பிடித்தாட்டவென்கண்
நாடகம்பார்த்தனை நன்றே கணமங்கைநாயகியே.     ( 26)

வாளுங்கணையும்பொருங்கண்ணருளை வழங்கியென்னை
ஆளும்படி நினை நீபத்தராவிக்குமாவியன்றோ
மூளுங்கருணையுடன் பணிவோர் மனனுண் முளைத்து
நாளுங்கதிக்குங்கரும் பேகணமங்கை நாயகியே.     ( 27)

கான்மலரல்லாற்பலமதமுத்தியென்னப்
பிடியே னுன்னாமமல்லாற்சில தேவர்பிழைக்கதையைப்
படியேன்கனவிலுங்கேளேன்விழுந்து பணிந்துருகி
நடியேனுன் சந்நிதியல்லாற்கணமங்கை நாயகியே.     ( 28)

நீலக்கடாசலங் கூப்பிட்டகாலையினின்விளையாட்
டாலத்தை நேரெண்ணிவிட்டோடினவச்சுதானந்தனை
மூலப்பொருளல்லனென்றோபிரியுமுறைமைகண்டோ
நாலப்பொன்னாடைதொட்டீர்த்தாய்கண மங்கை நாயகியே     ( 29)

மஞ்சுந்தினகரனுங்காற்றுங்கூற்றுமறிகடலும்
விஞ்சுந் தழல்வடவாமுகமும்புவிமேலடங்கி
அஞ்சும்பரிசுனதாணையன்றோ தெள்ளமுதமுங்கார்
நஞ்சுந்தழைத்த கண்மானே கண மங்கை நாயகியே.     ( 30)

வாடோறுந் தீயுமிழ்வெய்யோன்முதற்பலவாந்தெய்வங்கள்
தாடோறும்வீழ்வர்கதிக்குக் கண்டாகனன்றன்னைப்புலி
நீடோறுகிற்சம்புநின் கேள்வன்பால்விட்ட நீர்மையையென்
நாடோறுந்தாமறியாரேகணமங்கை நாயகியே.     ( 31)

கறையின் வெள்வாளெந்தை பின்கானடந்திலங்காபுரத்தில்
சிறையிருந்தாயென்பர் நீயன்றிராவிடிற்றேவருமா
மறையினந் தாபதர் தாமுமிந்நாள் வரை வாழ்வர்களோ
நறையின் வண்டார்குழன்மாதேகணமங்கை நாயகியே.     ( 32)

புகைகிளர்வேற்கைச்சனகன்மகளென்னப்பூத்தமணி
வகைகீளர்செம்பொன்மவுலித்தசரதன்வாழ்மனைக்குத்
தகைகிளர் செல்வமருமகளென்னத்தவமென் செய்தார்
நகைகிளர்மாமுகக் கொம்பேகணமங்கை நாயகியே.     ( 33)

ஆனிலனத்திற்பசுந்தோகையிலயிராவதமா
மானிலொருசில்லியந்தேரிற்புட்பகமான தன்னில்
மேனில்வித்திரிவோர் வாழ்வரோநின்விருப்பிலையேல்
நானிலம் போற்றுந்திருவேகணமங்கை நாயகியே.     ( 34)

அகிலமெல்லாமொருவன் காத்தருவருள் வைசிலர்
துகிலனத்தின்பொருட்டாலேயொருவன் சுடர்ச்சிவிகை
செகதலத்தேந்தச் செய்வாயுன் விநோதத்தைச் செப்புவதார்
நகில சலம் பொருபொன்னே கணமங்கை நாயகியே.     ( 35)

மீவாய் மதியங்குருவை நிந்தித் தவிதமதித்தோ
பூவாய நின்மனைகண்டாலடைக்கும்புதுமைசொல்லாய்
காவாயெனப்பணிவோர் தஞ்சனனக்கடலுக்கொரு
நாவாயனைய பொற்பாவாய்கணமங்கை நாயகியே.     ( 36)

தோன்றுமவனிமடந்தையைச்சென்னிசுமந்து நுங்கிக்
கான்று மணந்தனனென்றல்லவோசெங்கணனைத்தெண்ணீர்
சான்ற பிறந்தகத்தேகுடியாக்கினை தாழ்ந்தவர்க்கெஞ்
ஞான்றுமதுரிக்குந்தேனே கணமங்கை நாயகியே.     ( 37)

தும்பிபன்னாண்டிலர் போமென்பரென் கட்சுரும்பின் குணம்
பம்புவிற்கா லுன்ரிபுரசீறடிப்பற்பமல்லால்
அம்புவிமேலொன்றைப்பாராதென்னோ நலவண்டம் பெற்ற
நம்பிதனக்கொருதாயெகணமங்கை நாயகியே.     ( 38)

கேணல்ல கேள் விவடிவாமுன் கோயிலுக்கே நடக்கும்
தாணல்லதாளுன்னிருசரணாம்புயந்தம்மைத்தொழும்
தோணல்லதோளுன்பெருங்கீர்த்திபாடித்துதித்திருக்கும்
நாணல்லநாண்மற்றவென்காண்கணமங்கை நாயகியே.     ( 39)

தடத்தோகை வாருளை மாவாய் வருமெந்தைதானுனைத்தன்
இடத்தோகையாவன் பினாண்மணமே செய்தினிதிருக்கும்
திடத்தோகையால்ல்லவோகடலார்க்குஞ்செயற்கைகண்டாய்
நடத்தோகையேபொற்குயிலேகணமங்கை நாயகியே.     ( 40)

பாலாழியோதிருவைகுந்தமோமதுபாய்கஞ்சமோ
மாலாகமோசனகேசன்றசர தன்வாழ்மனையோ
மேலானவுள்ளமிலாத் தமியேன்மனம்வீற்றிருந்தாய்
நாலாரணத்தின் கொழுந்தே கணமங்கை நாயகியே.     ( 41)

குடலைச் செந்நீரைக்கவிக்குங்குரம்பையைக்கூர் மயிர்த்தோற்
படலைச்சலமலப்பீற்றற்றுருத்தியைப்பாவமுடை
உடலைப்புவியிலெடுத்தெடுத்தின்னமுளந்தளர்ந்து
நடலைப்படாதென்னையாள் வாய்கணமங்கை நாயகியே.     ( 42)

சுறாக்கொடிவேளுன் மகனாதலாலஞ்சுகபரியூர்ந்
திறாற்பொதுள்காரளிநாண்கன்னல்வில்லிலிமிழ்த்துமணம்
அறாக்குலப் பூங்கணைவிட்டுல கேழையுமாரக்கற்றான்
நறாத் துளிப்பூங்கொந்தரத்தாய் கணமங்கை நாயகியே.     ( 43)

வான்செய்திடுமுபகாரத்திற்கென்னகைம்மாறுபைங்கூழ்
தான் செய்திடுமந்தத்தன்மையைப்போற்சந்ததமுமடி
யேன்செய்தபல்பிழையும்பொறுத்தாண்டனையிங்கிதற்கு
நான்செய்யுமா றுனக்குண்டோகணமங்கை நாயகியே.     ( 44)

விரகங்களானசலராசிமூழ்கிவிலைமடமா
தரகங்களிற்சுழல்வார்சிலரவ்வின்பத்தாரையில்
வரகங்களைச் செலுத்தாமற்சற்றேயுனை வாழ்த்தினரேல்
நரகங்கள் பாழ்கிடவாவோகணமங்கை நாயகியே.     ( 45)

விதியிருநான்குகுகன்பன்னிரண்டு விமலவுமா
பதியொருபானைத் தரியாயிரம்பொற்படவுரகன்
வதியிரண்டாயிரங்கண்பெற்றதுமுன்வடிவழகின்
நதியினைச்சேவிக்கவன்றோ கணமங்கை நாயகியே.     ( 46)

பொங்காதரவினிலுன்கரத்தாமரைப் பூவருடும்.
சங்காழியான் பதமேல் வந்த தெய்வச்சலமென்றன்றோ
கங்காநதியைச் சிவன்சடைக்காட்டினிற்கட்டினன்காண்
நங்காய்முன்கைத்தலச்சங்காய்கணமங்கை நாயகியே.     ( 47)

வெங்கள நஞ்சுமிழ் பேழ்வாய்ப்பறலைவில்லுரகம்
திங்களைத் தொட்டுவிழுங்கியுங்கால்வதுன் செவ்விமுகப்
பங்கயத்திற்கிணையென்றல்லவோகற்பகப்பிள்ளையே
நங்களையாளுந் திருவேகண மங்கை நாயகியே.     ( 48)

வானப்பிரகாசச்சுடராம்பரிதிமதியும்புவித்
தானப்பிரகாசச்சுடரும்புறவிருடான்வெல்வவல்
லானப்பிரகாசச்சுடர்காணெப்போதுமகவிருட்கு
ஞானப்பிரகாசச்சுடர் நீகணமங்கை நாயகியே.     ( 49)

முடங்கொண்டகாலின்கொழும்பாட்டளிதுதை முண்டகப்பூ -
தடங்கொண்ட நீரிலொருதாளினிற்குந்தவத்தைக்கண்டோ
இடங்கொண்டிருந்தனை செவ்வரி கொண்டருளெந்தைநெஞ்சை
நடங்கொண்டகெண்டையங்கண்ணாய் கணமங்கை நாயகியே     ( 50)

சேணின் குரிசில்விதிமுனிவோர் பலதேவரராப்
பூணின் சிவன்பதமுங் குன்று மூழியின்போதினுந்தான்
வாணின்கொழுனன்பதமுலவாத துன்மங்கலப்பொன்
நாணின்பெருமையலவோ கண மங்கை நாயகியே.     ( 51)

எவரசவாதம்புரியினுங்கப்பலிவரினுந் துங்
கவரசரேவல் செய்தாலுமென்னாமங்கவருக்குன
துவரசரோசக்கண்பார்த்திலையேற்செல்வந்தோன்றுமதோ
நவரச நூல்வனக்கொம்பேகணமங்கை நாயகியே.     ( 52)

தீவிளைவாயினுரகஞ்சுமந்த செகதலமேன்
மீவிளை செல்வச்சுவர்க்கமிவ்வண்டவிசாலமெல்லாம்
நீவிளையாடொருசிற்றிலன்றோ பத்தி நீர்மையிலேன்
நாவிளையாடுபதத்தாய்கணமங்கைநாயகியே.     ( 53)

வேதங்கிடந்தபொருளறியாதநின்மென்கமல
பாதங்கிடந்தசிலம்பென்னபாக்கியம்பண்ணிற்றம்மா
சீதங்கிடந்த மலர்மேற்கிடந்துபண்டேன்மிழற்றும்
நாதங்கிடந்தகுழலாய் கணமங்கை நாயகியே.     ( 54)

தோட்டலர் வண்டுளவப்பெருமானின் சுணங்கலர்ந்த
மோட்டிளங்கொங்கைக்குநேராகுமோவெனமுன்னியன்றோ
பாட்டளிகோடிபுரண்மத்தாரைப்பகட்டின் கொம்பை
நாட்டிலொடித்தனன் கண்டாய்கணமங்கை நாயகியே.     ( 55)

வாண்மலர்ப்பூவகைக்கெல்லாமொருகந்தம் வைக லுமுன்
தாண்மலர்க்கென்னபுதுமைபொற்கொன்றையுந்தாமரையும்
நீண்மலர்வான் கற்பகப்பூவுந்தோடவிழ் நீபநறா
நாண்மலருங்கமழுங் காண்கணமங்கை நாயகியே.     ( 56)

முத்தினமாலை குலாவிக்கிடந்தவுன் மூரிக்கிரீ
பத்தினழகினைப்போல் வானன்றே நிறம்பாலில்வெளு
துத்தினம் வேலையின் மூழ்கியுங்கோயிறொறுங்கலித்தும்
நத்தினமாற்றுந்தவங் காண்கணமங்கை நாயகியே.     ( 57)

பொன்மணி தாருபரிதும்பியான்பிறைபூவெண்சங்கும்
மென்மதுரத்தெள்ளமுதும்பயோததிவீசியது
தன்மகளாமுனக்கேசீதனமென்றுதானல்லவோ
நன்மலர் மாளிகை வாழ்வாய்கணமங்கை நாயகியே.     ( 58)

கூறும் பிரமன்முனிவோர்சுரர்சென்னிகோடிபட்டோ
வீறுந் தருமமறியேன் மனக்கல்லின் மேன் மிதித்தோ
எறுஞ்சுரும்பின்மலராவுன் காலினிணைசெவப்பு
நாறுந்தினம் தென் சொல்வாய்கணமங்கை நாயகியே.     ( 59)

தவமோவயர்கிலெனின்பேர் நினைக்கிலென்சந்த தமும்
பவமோமறக்கிலெனன் போபடைக்கிலென்பாவையர்கள்
அவமோகம்விட்டிலெனெவ்வண்ணமோவென்னையாண்டனையென்
நவவோதிம நடைப்பெண்ணேகணமங்கை நாயகியே.     ( 60)

பூட்டாமலின்னமின்னார் மால் விலங்கைப்பொருநாகிற்
கூட்டாமற்றுன்பக்கடலிற்றள்ளாமற் கொடும்பிணியால்
வாட்டாமன்ஞாலத்தொருதாய் வயிற்றில் வரும்பிறப்பை
நாட்டாமலாள்வதெந்நாளோகணமங்கை நாயகியே.     ( 61)

சீதரம்பூத்திருமான் பூத்த நின் முகத்திங்கள் கண்டெப்
போதுமென்சிந்தையரவிந்தமேகளிபூப்பதென்னோ
வேதமும் வேதப்பொருளும்பொருளின் விளக்கமுமந்
நாதமுமானகுயிலே கணமங்கை நாயகியே.     ( 62)

தாளப்பணைமுலைமின்னார் விரகத்தழற்கொழுந்து
மூளப்பவப்புகையென்மனவீட்டினை மூடிற்றினி
ஆரத்திருவுள்ளமானாலருண்மழையாலவிப்பாய்
நாளச்சத்தக்கையாய் கணமங்கை நாயகியே.     ( 63)

பூபதியாயினம்வீரம்படைத்தனம்பொன்னின் செல்வச்
சோபனந்தேடினநாமென்பர் நீயன்பிற்சூட்டிரவல்
ஆபரணங்களென் றெண்ணாரென்மாயமலர்ந்த பற்ப
நாபனையாளுங்கிளியேகணமங்கைநாயகியே.     ( 64)

சேவிக்கும்பத் தர்பவக்காட்டினைச்சுடுஞ்செந்தழலுன்
காவிக்கருங்கண்ணருளவ்வருளினைக்கவ்வை முந்நீர்ப்
பூவிற் பலவருந் தண்ணளியென்னப்புக்கல்வதென்னோ
நாவிக்குழற்பெண்ணமுதே கணமங்கை நாயகியே.     ( 65)

வேரி மலர்த்துவன் மேனி போலுநின்மென்மலர்ப்பூந்
தாரின்ரகத்தினைப்போலுங்காரையுன்றாயகமொப்
பாரிபிடித்தல்லவோவேண்டினபுனல்பாலிக்குங்காண்
நாரியர் தங்கட்கரசே கணமங்கை நாயகியே.     ( 66)

வற்றாத சன்மக்கடலிற்றிளைத்துவருந்துவெனின்
பொற்றாமரைச் சிற்றடிக்கரை காண்பதெப்போதுசொல்வாய்
முற்றாமல் விம்மிச்செஞ்சந்தனச்சேற்றினின் மூழ்கிமுத்தின்
நற்றாம்மேந்துந்தனத்தாய் கணமங்கை நாயகியே.     ( 67)

நீயேயெவெருக்கும்வாழ்வருள்வாயென்று நீண்மறையன்
பாயேபுகலுமுனைப்பணியாதிலம்பாட்டைத்தள்ளப்
பேயேயமன்னரைத் தாழ்வாரென்னாகும்பிரமனுக்கும்
நாயேன்றனக்குமொர்தாயேகணமங்கை நாயகியே.     ( 68)

பாகுபழுத்தகுமுதமுமுல்லையும் பைங்குமிழும்
மாகநிலத்தெள்ளமுதோற்பலமுமணக்குமொரு
கோகனகத்தை முகமெனப்பேரிட்டுக்கொண்டதென்னோ
நாகிளந்திங்கட்கொழுந்தேகணமங்கை நாயகியே.     ( 69)

பொன்னூபுரமிடு முன்பாதகீர்த்திபொலிந்திலங்கும் தெ
தன்னூலெலாந்தெய்வயாழொலி நங்கடிருச்செவிக்
பன்னூல் கடாமிருப்பாணிகண்டாய்மயிர்ப்பாதியைநேர்
நன்னூல் பொருஞ்சிற்றிடையாய் கணமங்கை நாயகியே.     ( 70)

வீணேவருத்துமின்னார் கா தற்பா தலம் வீழ்ந்தனென்மேல்
காணேனருட்கை கொடுத்தெடுப்பாயிருகண்களிரு
வாணேர் மண்டோதரிதன்னாணிழந்திடமங்கலப்பொன்
நாணேந்துஞ்சங்கத்திருவேகணமங்கை நாயகியே.     ( 71)

காரின் கவ்வாய்ப்பட்டுவாரி நன்னீர்படுங்காரணம்போல்
சீரும்பொருளுமணக்குஞ்சதுமறைத்தேனுத்தி
ஆருஞ்செவியிலென்பாவிடம்பட்டமுதாகச்சொல்வேன்
நாருந்திய முக்கனியே கண மங்கை நாயகியே.     ( 72)

மாமானவில்லணி செங்கை யெம்மானுன்கண்மானிணைக்குத்
தாமானுமோவென்ன முன் மானையேயெய் தனனென்றன்றோ
காமானினம்பயந்தீராதரனிடங்காத்ததுகாண்
நாமானும் போற்றும்பொன் மானே கண மங்கை நாயகியே.     ( 73)

எவுங்கதிர் வடி வேலும்பொருமுன்னிருநயனம்
தூவுங்கருணை மழைத் துளியேபடிற்சொல்லுமன்பும்
தேவுங்குணமுநடையுமில்லாமரத்தின் புதிமை
நாவுங்கவிதை சொல்லாதோகணமங்கை நாயகியே     ( 74)

ஆரணன்றிங்களங் கண்ணிச்சடிலனமரர்வெள்ளை
வாரணனுக்குமொருவனையா முனைமன்பதை யென்
காரணம் பொன்மிதிலைப்பெருமான்பெற்றகன்னியென்னும்
நாரணன்மார்பிற்கணியேகணமங்கை நாயகியே.     ( 75)

அல்லும்பகலுமென்னுண்ணிலஞானவரகந்தரக்
கல்லும் பொற்பாரையிணையோவுன் பாதகமலமம்மா
புல்லுந்திருக்கண்ணிமையாதவற்புதப்பொன்னுலக
நல்லும்பரும்பணிகா வேகணமங்கை நாயகியே.     ( 76)

பிறவாதிருக்கினுமன்றிப்பிறக்சினும்பேரன் பினை
மறவாதிருக்கவரந்தருவாய்கண்ணன்மார்பிற்பொன்னே
அறவாழியேசெங்கமலாசனத்தினிலாரணங்கே
நறவாருங்கூந்தற்பிடியே கண மங்கை நாயகியே.     ( 77)

குரலைத் துளக்கிமயிலைவிருப்பிற்கொளப்புனல்வீழ்
சிரலிற்றவபத்தியஞ்சிறை கம்பித்தென் சிந்தைப்புள்ளு
நிரலைப் புரியருண் மீன் கவர் வானுன்னெடுங்குணத்தின்
நரலைக்கண்வீழ்வதெந்நாளோகணமங்கை நாயகியே.     ( 78)

சொல்லரிதாந் தரமாமுலையைச்சுமந்துமலர்ப்
பல்லரிவேள்பொருஞ்சிற்றிடைவாடுதல்பார்த்தலவோ
வல்லரி நேர்பநூபுரமோலிடுமாலை சொல்லாய்
நல்லரிபூத்தநிறத்தாய் கணமங்கைநாயகியே.     ( 79)

கங்கைமுதனதிமானாரருந்ததிக்கல்லகத்தின்
மங்கைகலைக்கொடிமான்மகளிந்திரன்மா துதின
சங்கையிலாவழகுங்கற்பும் பெற்றதகைமையெல்லாம்
நங்கையுன்றாள் பணிந்தன் றோகணமங்கை நாயகியே.     ( 80)

என்றென்.றுமுன்சரணாம்புயந்தம்மையிருதயம்வைத்
தன்றன்று சேவிக்கு நாயடியேனையடற்கலியாம்
குன்றொன்றுதான் பொரப்பார்த்திருந்தாயைய கோவிதுதான் -
நன்றன்று காண்பொன்னனமேகணமங்கை நாயகியே.     ( 81)

பாட்டிலிருக்கும்பொருள் போன்மதுரம்பழுத்தமறைக்
காட்டிலிருக்குங்கிளியா முனைத்தவக்கைக்கொண்டுள்ளக்
கூட்டிலிருத்தினர்க்கல்லாற்பெருமைவைகுந்தத்திரு
நாட்டிலிருக்கவருமோகணமங்கை நாயகியே.     ( 82)

வில்லது பூத்தமணிபொற்பரிபுர மெல்லடிப்பூ
அல்லதுவேறுதுணையில்லையென்னவடியன்மனக்
கல்லதுவீற்றிருந்தாய்முற்றுமப்படிகாத்தளிக்கில்
நல்லதுன் சித்தமென்னம்மேகணமங்கை நாயகியே.     ( 83)

மீனோதகங்கொடுங்கானகமாமலைமேலமர்ந்து
தானோதருந்தவஞ் செய்வரென்னாமுன் சரண்பணியார்
ஆனோர் கண்முத்தித்தசைகாண்பரோதெள்ளறிவினலை
ஞானோத்தியிலமுதேகணமங்கை நாயகியே     ( 84)

எந்தவுலகினுக்குந்தினஞ் செல்வமெல்லாமருளும்
சுந்தரியென்பதறியாள் கொலோவனுசூயையென்பாள்
அந்த மணிப்பணிபொன்னாடையுமுன்னளித்தனள்காண்
நந்தமருந்தவப்பேறேகணமங்கை நாயகியே     ( 85)

மேலானவைகுந்தவீட்டுக்கருளின் விளங்குமொரு
மாலாகுமாலுக்குமாலாக்கு முன்குழன் மாலை தமிழ்
நூலாலனுதின நானூற்பதுபற்ப நூலினத
னாலானை வீக்குந் தகைத்தே கணமங்கைநாயகியே     ( 86)

சுரலோகமுஞ்சங்கரலோகமுமலர்த்தோன்றலின் சுந்
தரலோகமுந்தந்திரலோகமும்பலதாரகையின்
வரலோக முஞ்சலபுற்புதமுன்னருள் வாய்ந்திடிலிந்
நரலோகமேமுத்தியன்றோ கணமங்கை நாயகியே     ( 87)

விஞ்சுமுன தருளின் றிய நாடெய்வவிண்ணமுதும்
செஞ்சுந்தரக்கன்னலும்பாலுங்கைக்குஞ்சிறக்கிலெட்டிப்
பிஞ்சுங்கதிரரவாயிலை வேம்பும் பெருங்கடலின்
நஞ்சுமதுரித்திடுங்காண்கணமங்கை நாயகியே.     ( 88)

கூரப்புவிபொன்மடவார்கள்காதற்குணத்ததுவி
சாரக்கனலின்மெழுகாயென்சிந்தைதளருங்கொலோ
ஆரக்குலந்தெண்டிரைக்கரத்தாலெறியாழித்தண்ணென்
நாரத்தில் வந்த வணங்கேகண மங்கைநாயகியே     ( 89)

பார்மேலுன்கீர்த்தியையுள்ளத்தெழுதிடும்பத்தர்க்கெல்லாம்
தார்மேல் வருந்திருநான்முகத்தோன்கைத்தலவெழுத்தை
தீர்மேலெழுத்தெனக்கண்டாய்கைம்மாறுநினக்குளதோ
நார்மேன்மணக்குமனத்தாய்கணமங்கை நாயகியே     ( 90)

கையுந்தலையுமிருதாளுநாவுங்கருத்துந்தொண்டு
செய்யும்படிகண்டனையேற்சனனத்திருக்ககற்றி
உய்யுந்துணைக்குல கந்தவங்கோடியுஞற்றிமனம்
நையுங்க திசற்றும் வேண்டேன் கணமங்கை நாயகியே     ( 91)

சேயென்பது பிழைசெய்யினும்பெற்றதிருவயிற்றுத்
தாயன்பினை மறவாளெனல்போலத்தமிழறியாப்
பேயன் புரிபிழையும் பொறுத்தாளிற்பெருமையுளை
நாயன்கருத்தில்விளக்கேகணமங்கை நாயகியே     ( 92)

வாளையுந்துந்தெண்டிரைப்பாரிலுன்னை வலம்புரியாத்
தாளையுங்கீர்த்தியைப்பாடாதராவையுந்தாழ்ந்து தொழாத்
தோளையுஞ்சென்னியையும்பாரில்விணிற்சுமந்துபல
நாளையும் பாழிற்கழித்தேன் கணமங்கை நாயகியே     ( 93)

தடந்தாமரைப்பெண்ணமுதேயுனதிருதண்டரள
வடந்தாழ்முலைக்கிணையென்றல்லவோபலவண்டு சுழல்
கடந்தாழ்கவுள்வரைக்கூக்குரல் கேட்டகணத்தினெந்தை
நடந்தாண்டனனென்னனையே கணமங்கை நாயகியே     ( 94)

சொல்லுஞ்சுருதியில் வாழ் சிற்றடியுந்துடியுங்கொங்கை
வல்லுந் துணைவில் லுந்தண்ணருட் கண்ணு மதியுங்குழல்
அல்லுந் தரிசிக்கிற்கல்லுங்கரைந்த முதாகுங்கண்டாய்
நல்லுந்தியாழின் மொழியாய் கணமங்கைநாயகியே     ( 95)

மானச்சுருதியன்மார்பழகாங்கடல்வாயமுதம்
கானச்சுருதிக்கரும்பிற்செஞ்சாறுகனதவத்தின்
மோனத்துறவரிதயாரவிந்தமுருகவிழ்தேன்
ஞானத்தருக்கனியானாய் கணமங்கை நாயகியே     ( 96)

வேயே பொருமிருதோண்மயிலே சிவன் வேதனுக்கும்
தாயேமெய்ஞ்ஞானக்கடலமுதே செந்தமிழினைப்போல்
வாயே கருணைப்பழுத்தகொம்பேமணிமாலிகையே
நாயேன் பயந்தவிர்ப்பாயேகணமங்கை நாயகியே     ( 97)

நெட்டாழியாரமுதம்போன் மதுரிக்கு நீண்மறைக்கும்
எட்டாதபாதமென்புன்பாட்டடங்குமியல்புளதே
கிட்டாததேவர்குலப்பூந்தருவைக்கிளர்புவிமேல்
நட்டான் பெருமைக்கழகேகணமங்கை நாயகியே     ( 98)

சோணாடுங்காவிரியாறுங்கணமங்கைத்தொன்னகருட
சேணாதவனைத்தொடுங்கோயிலுமுன்றிருவழகும்
காணாதிருக்கவும் நாயடியேனிருகண்ணின்முன்னே
நாணாளுநிற்குமென்சொல்வேன்கணமங்கை நாயகியே     ( 99)

பேயாமறிவினென்புன் கவிமாலை பெருகுமெச்சில்
வாயாலுரைத்தனெனாயினுங்கீர்த்திக்குமாசிலைகாண்
பல்யாமுழக்கினலையெறிகங்கையுதகத்தினை
நாயான துண்ணிற் பழுதோகண மங்கைநாயகியே     ( 100)

செந்திருமங்கையபிடேகவல்லித்திருவடியில்.
பைந்தமிழ்மாலை புனைந்தான்களந்தைப்பதிப்பகலான்
மைந்தன் குருகை வருகாரிமாறமகாமுனிவன் தந்தருள்
கலவிக்கவிவீரராகவன்றாரணிக்கே எண்ணிற்பழுதே     ( 101)

*திருக்கண்ணமங்கைமாலை முற்றும்.*
-----------------


This file was last updated on 22 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)