ரா. இராகவையங்கார் எழுதிய
திருவேங்கட மாயோன் மாலை
tiruvEngkaTa mAlai by
irAkava aiangkAr, pirapantam - mAlai
In Tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This etext file has been prepared in a two-step proces: OCR of the PDF file followed by careful proof-reading,
correction of the OCR output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
tரா. இராகவையங்கார் எழுதிய
திருவேங்கட மாயோன் மாலை
Source:
திருவேங்கட மாயோன் மாலை
(இந்நூலுடன் திருவேங்கட சோதி, திருமாலிருஞ்சோலை மலையழகர் தாழிசை மாலை,
திருமந்திரப் பாடல், நூற்றெட்டுத் திருப்பதிகளைக் குறிக்கும் பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன)
ரா. இராகவையங்கார்
பதிப்பாசிரியர்: பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை (ஓய்வு - தமிழ்ப் பல்கலைக் கழகம்)
கவிமணி வெளியீடு, 61, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 600033.
முதற் பதிப்பு: மே 1996
உரிமை : பேராசிரியர் டாக்டர் ரா. விஜயராகவன்
விலை : ரூ.10-00
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம் ஜி-7, அமுதம் குடியிருப்பு தெற்குப் போக்குச் சாலை,
தியாகராய நகர், சென்னை -17
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம், பரங்கிமலை, சென்னை-16.
------------
உள்ளடக்கம்
1. திருவேங்கட மாயோன் மாலை
2. திருவேங்கட சோதி,
3. திருமாலிருஞ்சோலை மலையழகர் தாழிசை மாலை,
4. திருமந்திரப் பாடல்,
5. நூற்றெட்டுத் திருப்பதிகளைக் குறிக்கும் பாடல்கள்
---------
முகவுரை
பரதகண்டத்துக்கு இருபெரு வரம்பாயுள்ளவை சேதுவும் இமயமும் என்பர். 'ஆஸேது ஹிமாசல பர்யந்தம்' என்பது வழக்கு. இப் பரத கண்டத்தை வட நாடு தென்னாடு என இரண்டாகப் பகுத்து இடை நின்று விளங்குவது திருவேங்கடம் என்னும் தெய்வமலை. திருவேங்கடத்துக்கு வடக்கில் உள்ள மக்கள் வழங்குவது ஆரியம் - வடமொழி, தெற்கு உள்ள மக்கள் வழங்குவது தமிழ் - தென் மொழி எனப்படும்.
வடசொற்கும் தென்சொற்கும் வரம்புஆகி
நான்மறையும், மற்றை நூலும்,
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லைஆய்,
நல் அறிவுக்கு ஈறுஆய், வேறு
புடை சுற்றும் துணைஇன்றி, புகழ்பொதிந்த
மெய்யே போல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ
என்று கம்பரும் வடசொற்கும் தென்சொற்கும் எல்லையாய் இலங்குவது திருவேங்கடம் என்கிறார்.
சங்கப் பாடலில் வேங்கடத்துக்கு அப்பால் வேற்று மொழி வழங்குவதாக 'வேங்கடத் உம்பர் மொழி
பெயர் தேஎம்' எனவருவது கவனிக்கத் தக்கது.
இளங்கோவடிகள் திருவேங்கடத்தில் திருமாலின் நின்ற வண்டைத்தை பின்வருமாறு சித்திரிக்கின்றார்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சிமீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்குவில் பூண்டு,
நல்நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்
- சிலப், காடுகாண் 41-52
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலே திருமால் அருள்பாலிக்கும் திருப்பதிகள் எல்லாவற்றையும் பற்றிய பக்திப் பாடல்கள் பலவாக உள்ளன. ஆழ்வார்களுள் தொண்டரடிப் பொடியாழ்வாரைத் தவிர பெரியாழ்வார் முதலாயினார் எல்லாரும் திருவேங்கடத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர். திருவேங்கடத்தைக் குறித்த பாசுரங்கள் 202 காணப்படுகிறது; பின்னால் வந்த புலவர் பலர் திருவேங்கடத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ள னர். சிறப்பாக அழகிய மணவாள நாசர் என்னும் பிள்ளைப் பெருமாளையங்கார், திருவேங்கடத்து மாலை', திருவேங்கடத்து அந்தாதி என இரு பிரபந்தங் கள் தந்துள்ளார்.
இந்த வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பக்திப் பனுவல் மகாவித்துவான ரா. இராகவையங்கார் பாடிய `திருவேங்கட மாயோன் மாலை` பாடல்கள் எல்லாம் 'திருவேங் கடமா யவனே' என்னும் விளியை இறுதியில் விளித்து கவிஞர் பல்வகை முறையீடுகளைத் தெரிவிக்கிறார்.
இந்நூலுடன் இயைபுடைய திருவேங்கட சோதி, திருமாலிருஞ்சோலை மலையழகர் தாழிசை மாலை, திருமந்திரப் பாடல், நூற்றெட்டுத் திருப்பதிகளைக் குறிக்கும் பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாயோன் மாலைக்கு என்னால் எழுதப் பெற்ற குறிப்புரையும் அடிக் குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.
பாடல் முதற்குறிப்பு அகராதியும் நூலிறுதியில் டம் பெற்றுள்ளது
மூலப்படிகளை 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பாதுகாத்து வந்த மகாவித்துவானின் குடும்பத்தாருக்கும், குறிப்பாக இப்பொழுது இந்நூல் வெளியீட்டிற்கு உதவிய மகாவித்துவான் பெயரர் பம்பாய் டாடா ஆராய்ச்சிக் கழகப் பேராசிரியர் டாக்டர் ரா. விஜயராகவன் அவர்களுக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். முதன் முறையாக மூலப்படியிலிருந்து எடுத்து வெளியிடப் பெறும் இப்நூலைத் தமிழுலகம் பெற்றுப் பெறுவதாக.
கவிமணி நிலையம் மு. சண்முகம் பிள்ளை
29-3-96
------------
1. திருவேங்கட மாயோன் மாலை
காப்பு
வேதமோ தாதிமால் வேங்கடச் சோதிமேல்
காதல்கூர் மாலையிற் கவன்புகழ் கமழ்பெயர்ப்
போதெலா முண்டுநா ருண்டியான் புனையவோ
கோதையார் துணையுமுண் டாதலிற் கூடுமால்.
நூல்
1. உடலோ வுயிரோ வெனவே றுணரா
தடலே புரிவே னுனையே தொழுதேன்
விடலோ கொளலோ விழைவாய் கருணைக்
கடலே திருவேங் கடமா யவனே.
2. உணவான் வருவே தனையோ வொழியேன்
மணவா ளியின்வே தனையான் மருள்வேன்
தணவா விவைதீர் தருவாய் மலராள்
கணவா திருவேங் கடமா யவனே.
3. அண்ணான் முனநீ தருமாக் கையினாற்
பண்ணா தனதீ மைகள்பண் ணியுனை
எண்ணா வெனையு மிறையெண் ணுவையோ
கண்ணா திருவேங் கடமா யவனே.
4. விண்ணே செலினுந் நரகே விழினும்
மண்ணே புகினு முனதாண் மறவா
எண்ணே தருவா யிமையோ ருலகோர்
கண்ணே திருவேங் கடமா யவனே.
5. என்றே யுளை நீ யுளனன் றளியேன்
நன்றே புரியே னெனின்யார் நவையோ
மின்றே வகியார் விழையும் மரியின்
கன்றே திருவேங் கடமா யவனே.
6. வேரே தலையே தெரியா வினையை
ஆரே அரிவா ருனதன் பிலர்தாம்
பாரே ழொருபோ னகமே பருகும்
காரே திருவேங் கடமா யவனே.
7. தாளா லுலகியா வையுந்தா வியபோ
தாளா யினனோ வலனே வெனைநீ
வாளா விடுதன் முறையோ மறைசொல்
காளாய் திருவேங் கடமா யவனே.
8. ஐயா வுனமூச்சளவா மறையும்
எய்யா வெனின் யான்றரமோ சிலைபெய்
மையார் மழையின் மலையைக் குடைசெய்
கையாய் திருவேங் கடமா யவனே,
9. நூலா ரறிவா னுழைவுற் றுணர்தற்
கேலா துகடந் துளையென் னிலுநின்
பாலா தரமூர் வதுபார் பரவுங்
காலாய் திருவேங் கடமா யவனே.
10. மாணா வினையே னுனதா ரருளோ
காணா வுனையும் விழிகண் டனன்யான்
ஆணா யகமா யுலகாள் பவநீ
காணாய் திருவேங் கடமா யவனே.
11. ஆலா கலமே தருவா யொருவற்
கேலா வமரர்க் கமிழ்தீ குதியுன்
பாலார் குறைகூறுவதோ பதகர்
காலர் திருவேங் கடமா யவனே.
12. ஆட்டா தளியேன் றனியா டுவனோ
கூட்டா துனையா னெவன்கூ டவலேன்
வீட்டே யொளிப்பாய் விழிமூ டினை நிற்
காட்டாய் திருவேங் கடமா யவனே.
13. ஏந்தா வுனதாள் புணையா யியலின்
நீந்தா வினையா ழியுநீந் துவனீ
யீந்தா லலதுய் குவலோ விளையாள்
காந்தா திருவேங் கடமா யவனே.
14. நாப்பா லுனையா.னவிலுந் தரமோ
பூப்பா யுலகுந் தியினோர் புரையின்
மீப்பா லுளவீட் டொடுமே தினியுங்
காப்பாய் திருவேங் கடமா யவனே.
15. ஆமா றியலே னளவில் செனனம்
சாமா றியல்வேன் றனிநா ரணனென்
நாமா வருளாய் மதனுந் நசைகூர்
காமா திருவேங் கடமா யவனே.
16. உள்வான் புகினுன் னுருவோ தெரியேன்
விள்வான் புகினென் மொழிவீ றிலதே
எள்வா ழொருநெய் யெனவெங் குநிறை
கள்வா திருவேங் கடமா யவனே.
17. விட்டே றெனமே தினியிற் றிரிவேன்
தட்டே யிலையாய்ப் புலனே தனிமேய்ந்
தெட்டா தகலும் மெனையுன் னடியிற்
கட்டாய் திருவேங் கடமா யவனே.
18. அயலே விழையும் பலதந் தவைமேல்
மயலே புரியும் மதிதந் துளையேன்
வியலேழ் கடலோர் செலுவுள் விரவுங்
கயலே திருவேங் கடமா யவனே.
19. தள்ளே லெனை நீ தருதா யலையோ
உள்ளே நினையின் னமிழ்தூ றிமருள்
கொள்ளா தறிவே கொளவன் பவிருங்
கள்ளே திருவேங் கடமா யவனே.
20. பரியே னுயிர்கட் கொளிர்பா வையருக்
கெரிவாய் மெழுகா குவலென்னைகொலொ
தெரியா தெனயா ரெதுசெய் யினுமோர்
கரியே திருவேங் கடமா யவனே.
21. கதியே பெரிதா மணன்மே டெனினுன்
அதியா தரமூ ரருள் பாய் வுழிவிண்
டெதிரே கரையா துகொலோ விமையோர்
கதியே திருவேங் கடமா யவனே.
22. எனைவேண் டிலனென் றெதிரே குளனிற்
றனிமாய் பவனுக் குதவார் தமரோ
முனியா தருள்வாய் முநியா யவருண்
கனியே திருவேங் கடமா யவனே.
23. ஆற்றே னினிமே லளவில் செனனங்
கூற்றே பருகக் குறையா வுடலே
ஏற்றேன் வினைமா மரம்வீ ழவெறி
காற்றே திருவேங் கடமா யவனே.
24. புனமீ துளமா முகில்போ லருளோ
உனமீ துளதா யதுநீ பொழியாய்
எனலே வசையாம் வினையா ரடவிக்
கனலே திருவேங் கடமா யவனே.
25. திடவுள் ளுணர்வோ தினையு மிலன்யான்
விடவுள் ளமுட னமிழ்தா மொழிவேன்
நடவுண் மையிலே னெனை நல் குதியோ
கடவுள் திருவேங் கடமா யவனே.
26 நாவா லுனையான் நவிலும் பொழுதும்
ஆவா கரையா தகலப் புலனிற்
போவான் விரைகின் றவென்புந் தியினைக்
காவாய் திருவேங் கடமா யவனே.
27. திணிகா ரிருள்சீத் தொளிர்வா யெனினும்
பிணியார் விழியிற் படலம் பெரிதாய்
நணியேன் றெரியே னவையீ திரியக்
கணியாய் திருவேங் கடமா யவனே.
28. தெளியே னெறியுந் நடையுஞ் சிதைவேன்
அளியே னொருவீ டடைதல் லெவனொ
ஒளியா ரடிவைத் துயரக் கொளுநீள்
களிறே திருவேங் கடமா யவனே.
29. மெய்தா னருள்செய் தனையா னதின்மேஎய்
பொய்தா னிறையும் புலையாழ் குழியில்
எய்தா வணம்வீழ்ந் தனன்ஞா னமெனுங்
கைதா திருவேங் கடமா யவனே.
30. தவமே பசியைத் தணிவிப் பதலால்
நவமா முணவா னனியா றுவலோ
அவமே விறகிட் டழன்மாய்ப் பலிரா
கவனே திருவேங் கடமா யவனே.
31. தரைமா மகளைத் தழுவிப் பலசீ
வரையோ பெறுவாய் வழியே யொழுகற்
குரைவே தமுமோ துவைதா தைபவக்
கரையே திருவேங் கடமா யவனே.
32. உண்டே மகிழ்வர்க் கெதுவா குதியோ
விண்டே யுமினிக் கும்விழுச் சுவைசெய்
தண்டேன் தெளிவே தனியா ரமிழ்தே
கண்டே திருவேங் கடமா யவனே.
33. அவியாத வினைத் தொகைவித் தினையான்
புவிமீ துவறுக் குநெருப் புணரேன்
செவியார் மறையைச் சிறுமூச் சுதவுங்
கவியே திருவேங் கடமா யவனே.
34. பொல்லா விடரா யவிலங் குபுக
எல்லா வினையும் வனமாய வெனுள்
நல்லோ யொருநிற் கிடமில் லையிதைக்
கல்லாய் திருவேங் கடமா யவனே.
35. படவும் வளிசெல் வழியே படரும்
மடவென் செயலுன் னருளுள் வழியாம்
திடவில் விசயன் செயமா வொருதேர்
கடவுந் திருவேங் கடமா யவனே.
36. ஒருதா தையுநீ யுதவா யுனுவார்க்
கிருதா ணினையார்க் கதிதா தையரைத்
தருவா யலையோ சகலந் தழையுங்
கருவே திருவேங் கடமா யவனே.
37. அண்டா வுனையும் மடியேன் றனையும்
பண்டா நெறியும் பழைதாம் தடையும்
உண்டா முயர்வாழ் வினையு முணரக்
கண்டா திருவேங் கடமா யவனே
38. மெலியா ரெனின்யான் வலிவீ றுசெய்வேன்
வலியார் மிசைமன் னுபொறா மைகொள்வல்
ஒலியார் கருடன் னரவொன் றருளார்
கலியே திருவேங் கடமா யவனே.
39. ஏறா தகருக் குழியே றவெனக்
காறா தநெருப் பினவிந் துவிழும்
வேறா யகருப் புவிவேந் துசெயுங்
காறா திருவேங் கடமா யவனே.
40. வருத்தா விடர்சூழ் பவவா ரிதியிற்
றிருத்தா மனமென் னுஞ்சிதைந் தபுணை
இருத்தா வெனைவிட் டனைமூழ் குதல்மெய்
கருத்தா திருவேங் கடமா யவனே.
41. பழிபா வவனத் துறுபாய் புலிபோல்
வழியா முயிர் கட் குவருத் தம்விளைத்
தழியா வளரென் னகங்கா ரமறக்
கழியாய் திருவேங் கடமா யவனே.
42. மிடைந்தார் மனைகொண் டவன்மேல் விழைவற்
றடைந்தாள் பிறர்பா லவன்கண் முதுமைக்
கிடைந்தெய் தலினின் னடைந்தே னிருநீர்
கடைந்தாய் திருவேங் கடமா யவனே.
43. தருபேய் முலைநஞ் சுதரா தவுயிர்
ஒருவா யின்விழுங் குதியா னுயர்பேய்
தருமா ருயிரோ டுளநஞ் சையுணக்
கருதாய் திருவேங் கடமா யவனே.
44. தேவே திருநா பிசெறிந் துமுனம்
பூவா தொளிர் வீ டுபுகப் புரியாய்
கோவே பவமா கியகோ டையிலாக்
காவே திருவேங் கடமா யவனே.
45. பரந்தார் முலைபால் வழியப் பருகாத்
தரஞ்சே யறிந் தூட் டுவள் தா யலளோ
நிரந்தா ரருள்பா யவுநீ யெவணுங்
கரந்தாய் திருவேங் கடமா யவனே.
46. தோண்மே லுளதொன் றைமறந் துதுரீஇச்
சேணே திரியுஞ் சிதடன் சிவண
விணே யலைகிற் பலென்மெய் யுளுனைக்
காணேன் திருவேங் கடமா யவனே.
47. சொற்கீ ரமதொத் தறமோ துவல்யான்
அற்கீ றொளியா யறமா யினையென்
றெற்கீ துணர்கில் லெனையுய் நெறியுய்
கற்கீ திருவேங் கடமா யவனே.
48. ஏத்தார் நினையெங் கணிருந் தவரோ
நீத்தாழி நிமிர்ந்து விண்ணின் றபொழு
தாத்தா வுயிர்யா வும்வயிற் றடையக்
காத்தாய் திருவேங் கடமா யவனே.
49. வெதிரே தருதீ யெனவென் வினையால்
எதிரே யெரிவேன் மிசைநின் னருளென்
அதிரேர் மழையைப் பொழியா யறிவுக்
கதிரே திருவேங் கடமா யவனே.
50. உறவா யெனதுள் ளமுளா யதனால்
மறவே னுனையான் மரணப் பொழுதும்
அறவான் பெறுகன் றனையே னமுதம்
கறவாய் திருவேங் கடமா யவனே.
51. தடிபோ லடிவீழ்ந் துசெயஞ் சலியே
அடியே னதுகைம் முதலந் நியமில்
நெடியா யளியே னுநினா துடைமை
கடியேல் திருவேங் கடமா யவனே.
52. அரிதா கியதுன் கையினென் கையினுக்
குரிதா கியதஞ் சலியொன் றுமதைப்
பிரியா துரமாய்ப் புரிவேன் பிறிதில்
கரியாய் திருவேங் கடமா யவனே.
53. தாயே தெரியா துதனைத் தெரியா
தோயா தழல்கேட் டொருதன் மகவை
ஆயேந் துவள்போந் தெனையேந் துகநீ
காயேல் திருவேங் கடமா யவனே.
54. நிலமே பொலமே நெடுவேல் விழியார்
நலமே நினைவே னையெனோ நணினாய்
மலமேய் பவவா ரிகடத் துமரக்
கலமே திருவேங் கடமா யவனே.
55. இரவே பசுலே யெதுபோ தினுமென்
புரவே யுனைவந் தனையே புரியாச்
சிரவே தனை தீர் பதரே ணுவைநீ
கரவேல் திருவேங் கடமா யவனே.
56. படியாய்க் கிடந்துன் பவளத் திருவாய்
வடிவார் குவன்வண் குலசே கரமன்
அடியே னெதுவா யெதுசெய் வல்மறங்
கடிவாய் திருவேங் கடமா யவனே.
57. நீரத் தடமுந் நெடுநந் தனமும்
ஆரப் பணியுஞ் செய்யநந் தமகான் நேரப்
புரியே னை நினைப் பையுப்
காரத் திருவேங் கடமா யவனே.
58. ஒழியா நிதமுன் னுடனாய் நிலையாய்ப்
பழியா வடிமை வகுளா பரணர்
விழைவார் நினைவேன் மனமா சருளிற்
கழுவாய் திருவேங் கடமா யவனே.
59. மண்டா யபதந் தருவா யெனயான்
விண்டே னதுவென் மிசைவைத் ததெனப்
பண்டே தெரியா தபடித் திதுதேர்
கண்டாய் திருவேங் கடமா யவனே.
60. பூடே முதலா வெவையும் புகுதந்
தூடே யுளையா கியுமுன் னுணரா
மாடே யனையேனை வளர்ப்பை மகிழ்க்
காடே திருவேங் கடமா யவனே.
61. கோனே ரியினிற் குளியேன் றினநின்
தேனே மலருந் திருப்பா தமிசைப்
பூநே ரிடலன் புகுந்தேன் கமழுங்
கானே திருவேங் கடமா யவனே.
62. பயமே யிலையாய்ப் பயமே புரியா
துயிரோ வெவையும் முறவா யுனதாள்
முயலே னடியார் முழுகிக் குடையுங்
கயமே திருவேங் கடமா யவனே
63. வளனே பெறினென் மதியே பெறினென்
உளனே யுனையுள் ளுவதொன் றிலையேல்
அளனே யிடுவித் தவைடோல் வசுமங்
களனே திருவேங் கடமா யவனே.
64. ஒளிப்பா யசுரர்க் கொளியா யமரர்ச்
களிப்பா யிருபா லருக்கும் மருளைத்
தெளிப்பா யடியர்க் கவர்சிந் தையுளே
களிப்பாய் திருவேங் கடமா யவனே
65. அந்தோ வருளா யெனின்யா னதனை
எந்தா யிரந்தெய் துவலோ விடர்செய்
மைந்தேய் மனமா வைவசித் துநிறூஉங்
கந்தே திருவேங் கடமா யவனே.
66. நடுவே யுளை நீ நவைசெய் குநனென்
றிடுவா யெனையேழ் நரகில் லவணுன்
னொடுநா னுறைவே னலனோ மறவோர்
கடுவே திருவேங் கடமா யவனே.
67. நில்லா மனமென் னுமென் னீள்புணைமீ
தெல்லா விதபண் டமுமே றலினாழ்ந்
தொல்லோ லிடவும் முதவாய் நின்மனம்
கல்லோ திருவேங் கடமா யவனே.
68. நிற்கா தல்செய் நெஞ்சினர் நின்னுடையார்
ஒற்கா வுலகோடுநல் வீடுமுளார்
எற்கா தல்செய் யேழை யெனாது பிழை
கற்காய் திருவேங் கடமா யவனே.
69. மண்யா வுமெவன் பெருமூ வடிவைப்
புண்மா யும்வன் புவிவந்துமலைக்
கண்ணா னென நான் மறைசொல்லுமுனைக்
கண்ணேன் திருவேங் கடமா யவனே.
70. பத்தோடு பல்சென்ம மெடுப்பை பிறப்
பித்தோ ரிலைநின் பிறப்பெண் ணினருக்
கத்தா வுயர்வீடு மளிப்பை யுனார்
கத்தா திருவேங் கடமா யவனே.
71. அவிநேர் வதுவா யடியா ரிசையுண்
செவிநே ரின் முனஞ் சிசுபா லன் வசை
எவினே றுவதுண் டனையென் திருவேள்
கவினே திருவேங் கடமா யவனே.
72. அடைவே விளையா டனினா தெணியுள்
ளுடைவார் சுகரோ வுருகே னுளம்யான்
இடையா யர்குலத் தியசோ தைபிறங்
கடையே திருவேங் கடமா யவனே.
73. மட்டுள் ளவரா வளனைத் தமதாத்
தொட்டுள் ளவரோ யெதுவும் முனதா
விட்டுள் ளவரோ மகிழ்வா ருரலிற்
கட்டுண் திருவேங் கடமா யவனே.
74. சிரமே யெவரும் முணவைத் திடுசத்
திரமே யெனினும் பசியார் செலலில்
வரனீ தரினன் பிலர்மே வலர்சே
கரனே திருவேங் கடமா யவனே.
75. அனமேய் வயிறோ தொழுதெய் வதமாய்த்
தினமே முயல்வேன் றெருள்வார் கனிநீ
மனனே பருகற் கறியேன் ககவா
கனனே திருவேங் கடமா யவனே.
76. பலனே விழைவேன் பலனே யடைதல்
இலனாய் விருதா வினில்யான் முயல்வேன்
நிலனோ நரகோ வெனதூர் நிறைபுட்
கலனே திருவேங் கடமா யவனே.
77. வாசா விடயங் கவியீ துமனன்
ஆசா வருணா லயமாழ்ந் ததெனை
ஏசாது மகன்னெ னாவாள் கபரா
காசா திருவேங் கடமா யவனே
78. வேந்தீ யினிருந் துதவம் விளையா
தாந்தீ தினுவக்கு மெனக் கருளைப்
போந்தீ கெனயா னும்புகல் வதெனோ
காந்தீ திருவேங் கடமா யவனே.
79. தவசா லுயிர்தூய் மைதற் கியலேன்
அவசா பம்விளைப் பவெலா முயல்வேன்
சுவசா 'தனமே தருள்சோ தியறக்
கவசா திருவேங் கடமா யவனே.
80. பிணாலா வணியம் பிரியப் படலாற்
புணாலா ருடல்பொன் றுவன்பொற் பரசின்
மணாளா வெனையா கைமறா தவருட்
கணாளா திருவேங் கடமா யவனே.
81. உழலா துதெளிந் துளநீ ருண்மதி
நிழல்கா ணலின் நின்றொ ளியென் னுயிருட்
டொழலா கவிருத் துவையோ வருளிற்
கழலாய் திருவேங் கடமா யவனே.
82. புசியா வயிறும் புனையா வுடலும்
ஓசியா மனனு முழலா மதியும்
வசியா மருள்வே னருளைத் துளியுங்
கசியாய் திருவேங் கடமா யவனே.
83. குவடோ தனமென் றுகுறித் துழலுந்
திவடே சிலகந் நிலைசெய் குதிநின்
சுவடே.தெரியே னொருதூ ரொடுமுக்
கவடே திருவேங் கடமா யவனே.
84. உடலா கியபா வமெலாம் விரையாப்
புடலா யபழம் பொரமா யுமெனக்
கிடலா யவிட மெதுவோ குளிர்பாற்
கடலாய் திருவேங் கடமா யவனே.
85. ஆகா யமெலா முமளா வுதிநின்
போகா திகமா னபொருள் களையா
னேகா தல்செய்தே யிருள்வீழ் வலெனைக்
காகா திருவேங் கடமா யவனே.
86. பெரும்பா தரசம் பெறுமா ரணம் போல்
அரும்பா வமனம் மிறந்தா லடியேன்
இரும்பே யுயிர்பொன் னெனமின் னும்பொலங்
கரும்பே திருவேங் கடமா யவனே.
87. சுலமா னதுரோ பதைசொல் லொருபேர்க்
கவமா னமிலா திகலட்டுமெனோ
இவள்பா லிரணந் தவிரே னெனநீ
கவல்வாய் திருவேங் கடமா யவனே.
88. புவிப்பா லுனக்குப் புகும்லீ லையென்பார்
தவிப்பா லழுமென்றன் தழங்கு குரலுன்
செவிப்பா லெதுவாங் கொலஞ்சே லெனக்கை
கவிப்பாய் திருவேங் கடமா யவனே.
89. தளைதா தையறச் சிறைவந் தனை நீ
விளையாய் களைதன் மம்விளைப் பைமணிற்
கிளையாது கிளைக்கு மென்பாவ மெனோ
களையாய் திருவேங் கடமா யவனே.
90. பிறந்தாய் விதுரன் குகன்பெண் சபரிக்
குறைந்தாய் விருந்தா யுலகுண் வயிறும்
நிறைந்தா யவரன் புணநின் னருளைக்
கறந்தாய் திருவேங் கடமா யவனே.
91. இடத்தாய் நிறைவா கியதோ ணியெனத்
திடத்தாய்ந் தவர்செப் பினர்நின் னையிடர்
அடத்தாழ் பவத்தா ழெனக்கே னிடமில்
கடத்தாய் திருவேங் கடமா யவனே.
92. ஆரா வயிறோ டமுதா யுனையே
ஆர்வா ரவரைத் தனியார் வைபிற
ஆர்வே னணுகாய் திருமாந் துசிருங்
காரா திருவேங் கடமா யவனே.
93. மிகநா ளுனதாள் விழையா தவமாய்ப்
புகநா னழிதந் தனனிற் புகலற்
க்கநா டியதுன் னருளா லிதயக்
ககனா திருவேங் கடமா யவனே.
94. மறங்கோ லவெனின் வருமா னிலையாய்
அறங்கோ லவெனின் னலையு நினையெத்
திறங்கோ லுமுளம் பொறியிற் றிரியுங்
கறங்கோ திருவேங் கடமா யவனே.
95. உன்மா ணழகுண் ணும்விழிப் பொனின்மான்
பொன்மான் விழையச் சிறைபுக் கதெனக்
கன்மா யொளியிற் றெளிவிப் பதருள்
கன்மா திருவேங் கடமா யவனே.
96. பண்டே மருந்தா யினை நிற் பருகா
துண்டே னுயிருக் குதவாச் சுவைகள்
கொண்டேன் பவநோய் குணமெய் தவுனைக்
கண்டேன் திருவேங் கடமா யவனே.
97. நிழல்போன் மனைநின் மனைவே றுபடத்
தழல்வீழ்ந் ததுதேர்ந் துநின்றாள் பிரிந்தேன்
உழல்வேன் மகிழ்வன் போடெனக் குய்நெறிதான்
கழறாய் திருவேங் கடமா யவனே.
98 வனமார் திடரைக் குளமா வனைவார்
புனலே யதனிற் பொழிவிப் பர்கொலோ
எனயான் செயினும் பயனில் லருள்பெய்
கனமே திருவேங் கடமா யவனே.
99. குலமா ருதிபா லழலுங் குளிரச்
சொலமாண் மனை தன் சிறைவீட் டொருசொல்
இலனே துமிலன் னெளியே னினடைக்
கலமே திருவேங் கடமா யவனே.
100. கூவிப் புனல்பெய் கொடைகூர் மடமே
மேவிப் புனல்வேட் டனனென் பதுபோல்
ஆவித் தருள்வேண் டினனின் னையிறங்
காவற் றிருவேங் கடமா யவனே.
101. உமியோ பலவுண் டவலொன் றுணர்வார்
தமியேன் செய்நிவே தனந்தா னிதினன்
பிமியே னுமிருப் பினதார் வையெலாங்
கமியாய் திருவேங் கடமா யவனே.
102. மண்வா னரசன் பிரமன் முதலா
எண்ணா வுயிராகுவ வாட்டுவைநீ
அண்ணா லசையா துகிடத் தியெலாங்
கண்காண் திருவேங் கடமா யவனே.
103. தரனே தெரியா தவரைப் பரவிப்
பரனீ தரும்வா யினினைப் பரவு
முரனே யிலனா யுளன்ஞா னதிவா
கரனே திருவேங் கடமா யவனே.
104. இவண்வேங் கடவன் னெனமா லுளனாய்
எவன்யா னிதுசெய் தனனென் றெணுவேன்
அவன்மெய் யவன்னா னவன்சொல் லவன் சீர்
அவன்காப் பவன்பாட் டவனே பொருளால்.
105. வரமா தவவேங் கடமா யவனைப்
பரவா வழிபா டுசெய்பான் மையினாற்
கரவா தநயித் ருவகா சிபகோத்
திரரா கவனோ தியசெய் யுளிதே.
--------------
காப்பு : காதல்-அன்பு, பக்தி; பெயர்ப்போது-பெயராகிய மலர், திருநாம மாலை; கோதையார்-ஸ்ரீ ஆண்டாள்.
1. அடலே புரிவேன் - வலிமை காட்டுவேன்; விழைவாய்- விரும்புவாய்.
2. வேதனை - துன்பம்; மணவஈளி - மணமுள்ள மலரம்பு களையுடைய மன்மதன்; மருள்வேன் - மயங்குவேன்; தணவா - நீங்காத; மலராள் - தாமரைப் பூவில் வீற் றிருக்கும் திருமகள்.
3. அண்ணால் - தலைவனே; இறை - சிறிது. -
4. விண் வானுலகம். மோட்ச உலகம்; எண்-எண்ணம்; இமையோர்- தேவர்.
5. உளை - உள்ளாய்; - அளியேன் - இரங்கத்தக்கேன்.;. நவையே குற்றமோ; தேவகியார் கண்ணனின் ஈன்ற தாய். -
6. ஆரே - யாரே; வினை - வினையாகிய மரம்; உருவ கம்; போனகம் உணவு; காரே - மேகவண்ணனே.
7. தாவி யபோது ஆளாயினனோ என்க. போது பொழுது; வாளாவிடுதல் - வீணாகவிடுதல்.
8. சிலை -வில்; மை - - மேகம்; மலை - கோவர்த்தன மலை.
9. ஏலாது - இயலாது; ஆதரம் - அன்பு.
10. மாணா - மாட்சிமையில்லாத; விழி - கண்; ஆணாய கம் - புருஷோத்தமன்.
11. ஆலாகலம் நஞ்சு; அமரர் தேவர்; பதகர் - கீழோர், கொடும்பாவியர்; காலா - யமனே.
12. ஆட்டாது-ஆடச் செய்யாது; கூட்டாது-சேர்க்காது; ஒளிப்பாய். மறைந்திருப்பாய்; நிற்காட்டாய் உன்னை வெளிக்காட்டாய்.
13. தாள் - திருவடி; புணை - தெப்பம்; வினையாழி வினைக்கடல்; உய்குவனோ-பிழைப்பேனோ ; இளை யாள் - திருமகள்; காந்தன் - கணவன்.
14. நவில்தல் - சொல்லுதல்; தரம் - தகுதி; பூப்பாய் - தோற்றுவிப்பாய்; உந்தி - கொப்பூழ்; புரை-துளை; மேதினி - உலகம்.
15. செனனம் - பிறப்பு; மதன் - மன்மதன்; நசை விருப்பம்; காமா மன்மதனே.
16. உள்வான் புகின் நினைக்கத் தொடங்கின்; விள் வான்புகின் சொல்ல முற்பட்டால்; - சொல்; வீறு - திடம்; நெய் - எண்ணெய், மொழி -
17. விட்ட ஏறு - விட்டேறு என்று மரீஇயிற்று; தட்டு- தடை; புலன் - ஐம்பொறி இன்பம். பரந்த;
18. மயல் - மயக்கம்; மதி - அறிவு; வியல் செலு-மீன் செதிள்; கயல் - மீன், மச்சாவதாரத்தைக் குறிக்கும்.
19. உள் - மனம்; அன்பவிரும் - அன்பு தோன்றும்.
20. பரியேன் - இரங்கேன்; ஒளிர்தல் - விளங்குதல்; கரி- சான்று.
21. ஆதரம் - அன்பு, ஆதரவு; கதி - புகலிடம்.
22. குளன் - குளம்; தமர் - சுற்றத்தார்.
23. கூற்று - யமன்; எறிகாற்று - சூறைக்காற்று, பெருங் காற்று.
24. முகில் - மேகம்; கனல் - நெருப்பு. வசை - இகழ்ச்சி; அடவி - காடு;
25. திடம்-உறுதி; தினை - சிறிய அளவு; விடவுள்ளம்- நச்சு மனம்.
26. நவில்தல் - சொல்லுதல்; புந்தி - புத்தி.
27. திணிகார் - செறிந்த கருமை; சீத்து - போக்கி; பிணி- நோய்.
28. நெறி - நன்னெறி; நடை -ஒழுக்கம்; ஒரு வீடு ஒப்பற்ற முக்தி உலகு.
29. புலை-இழிவு; ஆழ்குழி மிகத் தாழ்ந்த பள்ளம்.
30.தவம் - புதுமை; அவம் - வீண்.
31. தரைமகள் - பூமிதேவி.
32. விழுச்சுவை - மேலான இன்பம்; அமிழ்து - அமுது; - ; கண்டு - கற்கண்டு.
33. அவியாத - தணியாத, குறையாத; புவி - பூமி.
34. விலங்கு - மிருகம்; வனம் - காடு.
35. படவு -படகு; வளி காற்று; மடம் - அறியாமை. விசயன் - அருச்சுனன்; கடவும் - செலுத்தும்.
36. தாதை - தந்தை; உனுவார் -உன்னுவார், நினைப் பார் ; சகலம் எல்லாம்.
37. பண்டு - முன்பு, பழங்காலம்; கண்டா கண்தா.
38. ஆர்கலி -கடல்.
39. அறாத - தணியாத; காறு - கறுப்பு.
40. பவவாரிதி - பிறவிக்கடல்; புணை - தெப்பம்.
41. பாய்புலி அகங்காரத்திற்கு உவமை.
42. விழைவு விருப்பம்; பாற்கடல்.
43. பேய் பேய் - பூதனை.
இருநீர் பெருநீர், கடல் ;
44. நாபி -கொப்பூழ்; கா - சோலை.
45. சேய் - குழந்தை; - எவணும் எல்லா இடத்தும்; கரந்தாய் -மறைந்துள்ளாய்.
46. சிதடன் - அறிவிலி; சிவண - ஒப்ப.
47. அற்கீறொளி - இரவைப் பிளக்கும் ஒளி.
48. ஏத்தார் - துதியார்; ஆழி நிமிர்ந்து -கடல் பொங்கி; ஆத்தா - ஆற்றா.
49. வெதிர் - மூங்கில்; அதிர் - முழங்கும்.
50. ஆன் - பசு.
51. தடி-தண்டம்; - அஞ்சலி - வணக்கம்; அந்நியம் வேறு; உடைமை உடைமைப்பொருள்; கடியேல் நீக்காதே.
52. உரமாய் - வலிமையாய், உறுதியாய்.
53. ஓயாது -ஒழியாது; மகவு - குழந்தை; ஆய்- தாய்; காயேல் - சினவாதே.
54. பொரும் பொன்; நணினாய் நண்ணினாய், நெருங்கினாய்; பவவாரி - பிறவிக்கடல்; மரக்கலம்- கப்பல்.
55. போது -பொழுது; புரவு - காப்பு.
56. படி - வாசற்படி; குலசேகரன் - குலசேகராழ்வார்;
செய்வல் - செய்வேன்; மறம் - பாவம்; கடிவாய் போக்குவாய்.
57. தடம்-தடாகம்; நந்தனம்-நந்தனவனம்; நேர-ஒப்ப; உபகாரம் - உதவி.
58. நீதம் - தீத்தம்; வகுளாபரணர் • நம்மாழ்வ கழுவதல் - போக்குதல்.
59. மண்டாய மண்தாய, பூமியைத் தாவிய; பதம் படித்து திருவடி; -- தன்மைத்து; கண்டாய் முன்னிலையசை.- இடையே;
60. பூடு - பூண்டு, ஓரறிவுயிர்; ஊடே மாடு - எருது; மகிழ்ச்சிக்காடு -ஆனந்தவனம்.
61. கோனேரி - திருப்பதியிலுள்ள சுவாமி புஷ்கரணி என்னும் பொய்கை; கமழும் மணக்கும்.
62. முழுகிக்குடையும் - முங்கி நீராடும்; கயம் - நீர்நிலை, தடாகம்.
63. வளன் - வளம், செல்வம்; மதி - அறிவு; என் என்ன பயன்; உள்ளுவது - நினைப்பது; அளன் - அளம், களர் நிலம்.
64. ஒளிப்பாய் - மறைப்பாய்; அமரர்-தேவர்; அடியார்- தொண்டர்,
65. அந்தோ - இரக்கக் குறிப்பு; எந்தாய்-எம் தந்தையே; துன்பம்; மைந்து - வலிமை; மனமா இடர் மாகிய குதிரை'; கந்து - தூண்.
66. நவை - குற்றம்; அவ்ண் - அங்கே; மறவோர் பகைவர். பாவியா; கடு - நஞ்சு.
67. புணை - தெப்பம்; ஓலிட - கூச்சலிட,
68. காதல் - அன்பு, பக்தி; ஒற்கா -குறையாத.
69. நான்மறை - நான்கு வேதம்.
70. பத்து -பத்து அவதாரம்; பிறப்பித்தோர் தோற்று வித்தவர்; அத்தன் - தருதை, உயர்ந்தோன்; கத்தா- கர்த்தா, தலைவன்.
71. சிசுபாலன் - கண்ணனை வைது கொண்டிருந்தவன்; அவனால் மரணமுற்றான். அனையன் - ஒத்தவன்; திரு-இலக்குமி; வேள்கவின் - விரும்பும் அழகு.
72. யசோதை கண்ணனின் வளர்ப்புத்தாய்; பிறங் டை மகன்.
73. மட்டு - அளவு; லிட்டுள்ளவர் -துறந்தவர்; உரலில் கட்டுண்டது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி.
74. சத்திரம் - அன்னசாலை; வரன் - வரம்; மேவலர் பொருந்தார், பகைவர்; சேகரன் - சிறந்தோன்.
75. தெய்வதம்- தெய்வம்; தினம் - நாள் சோறும் தெருள்வார் - தெளிவுபெற்றவர்; ககவாகனன் பறவையை ஊர்தியாயுடையவன்; கருட வாகனன்
76. விருதாவினில் - வீணில், புட்கலன்-பறவை வாகனன்
77. ஆசா - பற்றாக; ஏசாது - இகழாது, ஆள்கஆட்கொள்க; பராகாசம்- மேலான பெருவெளி,
பரமன் உறையும் ஞானாகாசம்
78. உவக்கும் - மகிழும்; போந்து - வந்து; புகல்வது - சொல்லுவது; காந்தீ - ஒளிமயமானவனே.'
79. அவ கெட்ட, கீழான; சுபசாதனம் - துருவநூல் மிகுதியும் அதற்குச் சாதனம் ஏழும்; அறக்கவசன் - தருமாகிய சட்டையுடையான்.
80. பொன்றுவன் - இறப்பேன்; பரசு - மழு.
81. நிழல் - சாயை, ஒளி; இருத்துவையோ -பதியவைப் பையோ.
82. புனையா - அலங்கரியாத; ஓசியா -ஓடியாத, தள ராத; மதி - அறிவு; துளி - துளியளவு; கசிதல் - சொட்டுதல். - தூர் - அடிமரம்;
83. குவடு - குன்று; தனம் - முலை; உழலும் - திரியும்; சுவடு - அடிச்சுவடு, தடம்; முக்கவடு - மூன்று கிளை.
84. புடல் - புடோல் என்பது புடல் என மரீஇயிற்று; மாயும் - அழியும்.
85. அளாவுதி - வியாபித்திருக்கின்றாய்; போகாதிகம்- இன்பமயம்; இருள் - நரகம்; கா -காப்பாற்று.
86. பாதரசம் - இரசம்; மாரணம் - மரணம்; இரும்பு - கரும் பொன்.
87, சுவம் சுபம்; துரோபதை - பஞ்சபாண்டவரின் பத்தினி; இகல் - போர்; இரணம் - போர், கடன்.
88. புவி - மண்ணுலகம்; லீலை - விளையாட்டு; தவிப்பு- பெறாமையால் வரும் ஏக்கம்; - செவி - காது; அஞ்சேல் - பயப்படாதே; கைகவித்தல்- கைகவிழ்த்து அருள் செய்தல்.
89. தளை - விலங்கு; தாதை - தந்தை; தன்மம் - தருமம்; மணிற் - மண்ணில்; களைதல்- நீக்குதல், போக்குதல்
90. விதுரன், குகன், சவரி ஆகியோரின் விருந்தாய் இருந் தான் திருமால்; கறந்தாய் -சுரந்தாய்.
91. தோணி - நீரில் செல்ல உதவும் சிறுகலம்; செப்பினர்- சொன்னார்கள்; சுட - வருத்த.
92. ஆரா - நிரம்பாத; ஆர்வார் - விரும்புவார்; திரு திருமகள்; சிருங்காரன் - இன்பம் துய்ப்பவன்.
93. தாள் - பாதம், திருவடி; விழையாது - விரும்பாது; புகலற்கு - - சொல்வதற்கு; நாடியது - விரும்பியது; ககன் - சஞ்சரிப்பவன்.
94. கோலுதல் மேற்கொள்ளுதல்; மால் - மயக்கம்: எத்திறம் - எந்தவகை; பொறி - ஐம்பொறி;
மெய், - வாய், கண், மூக்கு, செவி; கறங்கு - காற்றாடி
95. விழிப்பொன் - கண்ணாகிய பொன்; மான - ஒப்ப கன்மாதி - கருமங்களைச் செய்விப்பவன்.
96. பருகாது-உட்கொள்ளாது; பவநோய்-பிறவிப்பின.
97. தழல் - நெருப்பு; உழல்வேன் - திரிவேன்; கழறா - சொல்லுவாய்.
98. திடர் - மேடு; புனல் - நீர் -கனம் - மேகம்.
99. மாருதி அனுமான்; அழல் - நெருப்பு; மனை மனைவி; துமிலன் - பேராரவாரமுடையன்.
100. மடம் - இடம்; மேவி - அடுத்து ; ஆவித்து - பெரு மூச்சு விட்டு.
101. உமி - துமி ; தமியேன் - தனியேன்; நிவேதனம் - உட்கொள்ளுவாய்; கமியாய் - படையல்; ஆர்வை பொறுப்பாய்.
102. வானரசன் - இந்திரன்; ஆட்டுவை- ஆட்டுவிப்பாய் அண்ணால் - தலைவனே.
103. தரன் தரம், இயல்பு ; பரன் மேலோன், தெய்வம்; பரவுதல் - துதித்தல்; உரன் - வலிமை; ஞானதிவாகரன் - ஞான சூரியன்.
104. மெய், நா, சொல் எல்லாம் அவனே ; அவன் காப்பவன்.
105. ஆக்கியோன் பெயர் கூறுவது.
--------------------------
2. திருவேங்கட சோதி
1. திருவினைக்கொண் டகலம் வைத்துச்
செகமும் வீடு. மொளிசெய் நின்
உருவி னைக்கொண் டுலகிதைப்பற்
றொழியு முள்ள முதவுவாய்.
அரவ வெற்பென் றவனையொப்ப
வரிய பற்பல் பணிசெயக்
குரவர் சுற்றும் வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
2. மனையி ருந்தென் வாழ்விருந்தென்
மகவி ருந்தென் மதியுடன்
இனமி ருந்தென் னரசிருந்தென்
னெதுவி ருந்தென் நினது தாள்
நினைவி ருந்ததில்லை யாயி
னெஞ்சு நஞ்சு கொல்லும்பற்
குனனி ருந்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
3. இடியி டிக்கிற் சூறை வீசி
யெதிரடிக் கிற்பூ கம்பம்
படி நடுக்கி னாழி யூழி
படவெ டுக்கினென் கொல்நின்
அடிபி டித்த நெஞ்சமுள்ள
ரஞ்சலில்லை யருள்செயக்
கொடிபிடித்த வேங்கடப் பொற்
கோயில் கொண்ட சோதியே.
4. பெருகி ருக்குநெறிநடந்துன்
னருகி ருத்தல் பெட்பநின்
முருகி· ருக்கு மலையினிற்கும்
தருவு ருக்கு முயல்வர்காண்
ஒருகு ருக்களொப்ப நின்னை
யுருகிருக்க வுள்ள மேஎய்க்
குருகி ருக்கும் வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
5. படியி ருந்துன் னுலகருந்து
பவள வாயின் வடிவெலாம்
நெடித ருந்து பொறையர் துங்க
னிலையு மென்கண் வருவதோ
செடியி ருந்து நரகிருந்து
கெடுவ லோசொல் திருவருள்
குடியி ருந்த வேங்கடப் பொற்
கோயில் கொண்ட சோதியே.
6. கூனிமிர்ந்து செவிடர் காது
குரனி மிர்ந்து குருடுகள்
தானிமிர்ந்து காண வூமை
தகும் மோத வுறுபிணிக்
கீனிமிர்ந்த வரும ருந்து
நின்ன ருந்துவேன் கொல்செங்
கோனிமிர்ந்த வேங்கடப் பொற்
கோயில் கொண்ட சோதியே.
7. மகன மர்ந்து கொடையமர்ந்து
மறைய மர்ந்து மிறைவனீ
அகனமர்ந்த தில்லை யேனல்
லறம மர்ந்த தாகுமோ
சகனமர்ந்து தொழவும் வீடு
தரவு மெண்ணி யிவணுளாய்
குகன மர்ந்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
8. மலம்வ ளர்ந்த தேயலாமன்
மதின் வர்ந்த தில்லைசஞ்
லம்வ ளர்ந்த தோலாது
சமம்வ ளர்ந்த தில்லையான்
நிலம்வ ளர்ந்த பேறிதேயென்
னிலைவ ளர்ந்த தில்லைதேர்
குலம்வ ளர்ந்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
9. பகைம லிந்து பவமலிந்து
படர்ம லிந்து நரகமே
மிகம லிந்து நகை விளைந்த வினைய
விந்துன் னடைவனோ
தகைம லிந்த முநிவர் வந்து
தவமு யன்று நினையுறக்
குகைம லிந்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதிாய.
10. கன்றெ டுத்து விளவெறிந்த
கண்ண நின்பெ யர்க்கணத்
தொன்றெ டுத்து மொழிகிலாது
சென்றெ டுக்குஞ் செனனநின்
றென்றெ டுப்பை யென்றிருப்ப
லின்றெ டுத்தல் பொறைகொலோ
குன்றெ டுத்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
11. முடிம லர்ந்த தொடையலோடு
முகம லர்ந்த தெரியலும்
படிம லர்ந்த கோதைசூட
வகம லர்ந்த பரமநின்
அடிம லர்ந்து கமழினென்சொ
லணிய லென்றும் வாடுமோ
குடிம லர்ந்த வேங்கடப்பொற்
கோயில் கொண்ட சோதியே.
வேறு
12. கருவேய்ந்த விப்பிறவியற மாந்தருக் கருளல்
கருதேந்த னிற்பர விமுன்
மருவேன் கடக்கரியின் மிசையாஞ் செகத்தரசு
மதியேன் கிடக்க மலைமேல்
ஒருவேங்கை நற்றருவோ டெதுவாம் படிக்குமென
உனும்வேந்தன் பத்தர் குலமன்
திருவேங் கடத்து நல வுபசாந்த சித்தரடி
தினமேந்த நிற்கு மொளியே.
வேறு
13. கணக்கற் றிறந்தன வெனக்குப்
பவங்களுங் கதிக்குப் புறம்பென நீ
தணக்கக் கொடுஞ்செயல் பெருக்கப்
புரிந்தனன் றவத்திற் றிருந்திலேனை
இணக்கத் தெரிந்திலை யெனைத்துத்
திறங்களு மியற்றத் தெரிந்தனையால்
குணக்கற் பகந்தயைக் கடற்கத்தனென்
றிசைகொழிக்க கப்பெறுந் தெய்வமே.
ஆக்கியோன் பாயிரம்
14. ஆரா வமிழ்தின்முனோர் பாடியதமி
ழாலே மகிழுனை யடிநாயேன்
சீரா கவகவியானோ திய துதி
தீதாயினு முயிருட னார்வாய்
நாரா யணபரதேவா வடமலை
நாதா பரிவின்ய சோதாதிருமுலை
நேராயுணு மொருநீபேய் விடமுலை
நீடா ருயிருடனுகர் வாயே.
--------------
திருவேங்கட சோதி
1. அகலம் - மார்பு; செகம் - உலகம்; அரவ வெற்பு வேங்கடமாலை; ஆதிசேஷன் மலையுருவில் விளங்கு வதால் இப் பெயர் பெற்றது; குரவர் - சான்றோர், முனிவர்.
2. மனை - வீடு ; மகவு - குழந்தை; நஞ்சு நைந்துச் பற்குனன் - அருச்சனன்.
3. சூறை - சூறாவளி, பெருங்காற்று; படி-பூமி; ஆழி - கடல்,
4. நெறி - வழி; பெட்ப - மிக, விரும்பி; முருகு-அழகு தரு - மரம்; குருக்கள் - ஆசிரியர்கள்; ஏய்-பொருந்தி; குருகு - நாரை.
5. வடிவு - அழகு; துங்கன் - மேலோன், உயர்ந்தோன் குடியிருந்த - நிலைத்துள்ள.
6. அருமருந்து - கிடைத்தற்கரி சஞ்சீவி
7. அகன் - மனம்; சகன் - சகம்; குகன் - முருகன். இவண் - இவ்விடம்;
8. மதி - அறிவு; சஞ்சலம் - மனத்துயரம்; சமம் - - ஒத்த நிலை.
9. பவம் - பிறப்பு; மலிந்து - மிகுந்து; படர் - துன்பம்;
10. விளவு விளாமரம்; கணம் கூட்டம், திரள்; செனனம்- பிறப்பு, எடுத்தல் - காத்தல்; பொறை - பாரம்; குன்று -மலை, கோவர்த்தன மலை.
11. தொடையல் - மாலை; கோதை - ஸ்ரீ ஆண்டாள், சொல்லணியல் - சொல் மாலை;
12. வேங்கடததுத் திரியும் சாந்த சித்தர் சிறப்புரைப்பது.
13. பெருந்தெய்வம் போற்றுகை.
---------------------
3. திருமாலிருஞ் சோலை மலையழகர் தாழிசை மாலை
1. சோமச் செந்திரு மாதிற்கன்பினர்
தேவர்க்கும் பெருந்தேவனார்
சீர்நிற்குஞ்சட கோபற் கின்னருள்
சேரத்தந்து கொள்சீலனார்
சோமச் சந்த விமானத் துள்ளிருஞ்
சோலைச் சுந்தர ராசனார்
சோதிப் பொன்னடி யோதிச்சிந்தைசெய்
தூயர்க் கென்குறை யுண்டரோ.
வேறு
2. செந்திரு மாலிருஞ் சோலையிலே
சோமச் சர்த விமானத்தினுட்
டெய்வ சிகாமணிசெய்ய மலர்ப்பதஞ்
சென்னி மிசைப்புனைய ய
இந்தப் பிறவி கிடைத்தது புண்ணிய
மென்னுளனோ வறியேன்
எங்குந் திருவருள் பெற்றவரின்ப
மெனக்கு முண்டாவதுவே.
3. சுந்தரத் தோளுடையார் திருமாலிருஞ்
சோலைமலைச் சாரற்
றுங்கச் சிகரியிற் பொங்கித் தரளஞ்
சொரியும் சிலம்பாற்றின்
சந்தனத்தின் மணமுந்துளவுங் கமழ்
தண்புனற்கண் முழுகுஞ்
சன்மம் படைத்தவர் தன்மம் படைத்தவர்.
சன்மங் கிடைத்திலரே.
வேறு
4. துருவற்கு நிழலைச்செய் வனவெற்பின் வளர்வுற்ற
சுடரொத்து நிலைநிற்கு மகிலேசன்
சுவைமிக்க புதுவைப் பெண்புனைவுற்ற தொடையற்குஞ்
சுருதிக்குந் தனைமுற்றுந் தருமாயன்
பொருவற்ற மலயத்து வசனுக்கின் னருள்வைத்த
புகழ்தக்க திருவுக்குந் திருவானோன்
புதுமைச்செம் பதுமப் பொற்பதம் விட்டுப் புகுதற்குப்
புவியிற்கு ளெதுமற்று மறியேனே.
5. திரு மதுரையிற் பெரிய மதிமரபினுத்தமர்கள்
திகழ் வரிசையிற் றலைமைசெய்
செழியன் மலயத்துவசன் வழிபட வவற்கெனவொர்
செயமக ளளித்துல கெலாம்
ஒருகுடையின் வைத்தரசு புரிய நிகழ்வித்தவனை
யுயர்கயிலை யிற்பர மர்வந்
தொளிர் மணமுடிக்க வருளுதவி விடைவெற்பின்வரு
மொருவர் திருவுக் கழகரே.
6. எங்கட் கெனமாலிருஞ் சோலைவந்தவ
ரேறு திருவுடையார்க்
கென்னிலை சொல்லிவரற்கென் னிதயத்தை
யேவிய தென்பிழையே
துங்கத்தவர் படிச் சோதியிலோ விழித்
தொல்லருள் வெள்ளத்திலோ
துய்யவனப் பிலோ மையல் விளைத்தது
தூதை நினைத்திலதே.
வேறு
7. தானோ தனக்கு நிகர்மாலிரும் பொழிற்
றண் சிலம்பிற்
றேனோ வெனுமொழி யாயொரு காளை
திகைக்க வந்து
மனோ கண்ணென்றுவெம்மா வந்ததோ.
வென்று விண்டுபின்னும்
மானோ வினவி விடைவேண்டி நின்றவிம்
மாய மென்னே.
-------------
தாழிசை மாலை
1. சேமம் - நல்வாழ்வு. காவல்; திருமாது - திருமகள்; சடகோபன் -நம்மாழ்வார்; சீலனார் - நல்ல தன்மையுடையார்; சுந்தரராசன் அழகர் திரு நாமம்; சிந்தை செய்தல் - தியானித்தல்
2 சோமச் சந்த விமானம்-அழகர் வீற்றிருக்கும் கர்ப்பக் கிருகத்தின் மேலுள்ள தூபி; சென்னி துங்கம் - விளக்கம் ; தரளம் - முத்து.
3. தலை; சிலம்பாறு - அழகர் மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு; தன்மம் - தருமம்.
4. துருவன் - அழிவில்லாதவன்; வெற்பு - மலை; சுடர்- சூரியன் ; அகிலேசன் - எல்லா உலகிற்கும் இறைவன்; புதுவைப் பெண் - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீ ஆண்டாள்; தொடையல் பாமாலை; மலையத் துவசன் - மலையத்துவச பாண்டியன்; தாமரை. - பதுமம் -
5. செழியன் - பாண்டியன்; செயமகள் - வெற்றித்திரு மகள்: கயிலையிற் பரமர் - சிவபெருமான்; விடை வெற்பு - அழகர் மலை.
6. இதயம் - மனம்; படிச்சோதி - திருமேனியழகு; விழி- கண்
7. சிலம்பு -மலை; சொல்லி. காளை - இளைஞன்; விண்டு
-------------------------
4. திருமந்திரப் பாடல்
காப்பு
நன்று மோந மோநாராயணாய மந்திரம்
என்று மோது வாரே தேவ ராவ ரன்றியும்
சென்று சேரலாகா வீடு சேய்மை யொன்றிலை
ஒன்று காலமே போகாம லோதனன்றரோ.
4.1. திருமந்திர பஞ்சரத்தினம்
1. ஈதொரு மந்திர மோதினன் வாய்மொழி
யெப்படி யோவவ ணப்படியாம்
ஓதில னென்றெவ னோதுவ னோவவ
னுள்ளம்பி ளப்பதுங் கள்ளமிலை
காதலன் வாழக் கனகன் படுங்கதை
காணத்தெரிப்பதும் பேணத்தகும்
ஆதலி னோதுமி னோதவி னிப்பதொ
ராரமு தோநமோ நாராய ணாய.
2. கொல்ல வருங்களி றொல்லை யடங்கிக்
கும்பிட்டு நிற்கவு மம்பிட்ட யாவும்
எல்லையி றேமல ரென்னவு நாக
மேருவிடமமு தூறவு மெல்லாம்
வல்லையெ ரிந்து கெடச் செயும் வெந்தீ
மன்னுங் குளிர்புன லென்னவுஞ் செய்யு
நல்லதி ருமந்தி ரமிது கண்டீர்
நாஞ்சொலு மோநமோ நாராய ணாய.
3. பேயினுந் துன்பிலை நோயினுந் துன்பிலை
மித்துக்கொளாதுளம் வைத்துக் கொளின்
ஓயினு மீதொரு மந்திர மோதுறி
னூற்றமு மாமிக வேற்றமு மாம்.
தாயினு மாயின செய்யுமி தென்றுமுன் .
தண்குறை யற்கலி கன்றிமுன் கண்ட
மாயிருந் தெய்வத மந்திர கற்பகம்
வாழ்த்துமி னோநமோ நாராய ணாய.
4. நாளொடு கோளு மளந்து தனக்கு
நன்றென் றிரணியன் மன்றலி னட்ட
நீளுயர் தூண்டு கோளரி தந்து
நெஞ்சு பிளப்பிக்க வஞ்சன் விளைத்த
கோளின் விளைந்த வதிசய மெல்லாங்
கொற்றத் திருமந் திரவிளை யாடல்
வேளைவி டாமன் முயன்று செபிக்க
வேண்டுவ தோ நமோ நாராய ணாய,
5. வானந்த ரும்கடல் வையந்த ரும்வெலும்
வன்மைத ரும்பெருந் தன்மைதரும்
மானந்த ரும்வெகு மானந்தரு மெழில்
வண்ணந் தருநல வெண்ணந்தரும்
தானந்த ருமபி தானந்தருமுயர்
சாதித ரும்பெருங் கியாதி தரும்
ஞானந்த ருந்திரு மந்திர மீதென
நம்புமி னோநமோ நாராய ணாய.
----------------------
4. திருமந்திரப் பாடல்
காப்பு : ஓதுவார் - செபிப்பார்; சேய்மை -தூரம்.
1. வாய்மொழி உண்மை; காதலன் - கனகன் இரணியன். - புதல்வன்;
2. களி களிறு - யானை; ஒல்லை - விரைவில்; நாகம்-பாம்பு; விடம் - நஞ்சு; கண்டீர் - முன்னிலையசை.
3. பித்துக்கொளாது - பைத்தியம் பிடியாது; ஓயினும்
தளரினும், ஊற்றம்-மனவெழுச்சி; ஏற்றம்-உயர்வு; குறையல் கலிகன்றி - குறையலூரில் வந்த திருமங்கை யாழ்வார்; மந்திரகற்பகம் - மந்திரமாகிய கற்பகம்; கற்பகம் - வேண்டியார்க்கு வேண்டியன நல்கும் தேவதாரு.
4. நாள் - நட்சத்திரம்; கோள் - கிரகம்; மன்று - சபை; கோளரி - நரசிங்கம்; வேளை -காலம்,சமயம்.
5. வானம்-தேவருலகு; வையம் வெல்லும்; மானம் - பூவுலகு; வெலும் பெருமை;
வெகுமானம் வெகுமதி, பரிசு; அபிதானம் - பெயர்; கியாதி-புகழ். வான்
-----------
4.2. திருமந்திரப் பதிகம்
காப்பு
நன்று மோநமோ நாராய ணாயவென்
றென்று மோதுவோர் யாரேனு மாகமுன்
சென்று பாதமே வீழாத தீயர்கள்
மன்று ளேறவே வாராது பாடலே.
நூல்
1. வான்சொலு மண்சொலும் வண்டிசை மாமுகன்
றான்சொலு நான்மறை தாஞ்சொலு மங்கொரு
தேன்சொலி பங்கன் றினஞ்சொலு மந்திரம்
நான்சொலு மோநமோ நாராய ணாயவே.
2. வெல்வதுந் தீவினை வெம்மறம் வெரறக்
கல்வதும் யாவரும் கற்பதும் நற்கலை
சொல்வதுந் தேவர் துதிப்பதும் யாவைக்கும்
நல்லது மோ நமோ நாராய ணாயவே.
3. வேதமும் வேதியர் மெய்மையு மெய்மையுட்
போதமும் போதத்திற் பொங்கிய சித்தியின்
பேதமும் பேதப் பிணக்கறுக் கும்பர
நாதமு மோநமோ நாராய ணாயவே.
4. தொட்டதும் பரமனைத் தொட்டவ னடியரை
யிட்டதும் வீட்டினி லிருப்பது மறைச்சிரங்
கட்டது மிருவினைக் கல்வியை நெஞ்சினி
னட்டது மோநமோ நாராய ணாயவே.
5. பொற்பொருள் பொருளிலே பொன்மகள் காதல்செய்
சிற்பரம் பொருளினைத் திருமணங் கொல்லையின்
மற்பர காலன்முன் மறித்துப் பறித்திட்ட
நற்பொரு ளோ நமோ நாராய ணாயவே.
6. தானமுந் தானப் பயனுந் தனிச்சோம
பானமும் வேள்வியும் பத்தியுஞ் சித்தியும்
மோனமும் மோன வரம்பின் முளைத்தெழும்
ஞானமு மோநமோ நாராய ணாயவே.
7 சடத்துவ மறவொளி தருவது முனிவர் நெஞ்
சிடத்துவந் திருப்பதோ டிரும்பவக் கடலிடர்
கடத்துவ தகிலமுங் கருதிய முறையினி
னடத்துவ தோநமோ நாராய ணாயவே.
8. அம்புவி செம்பொன்பெண் ணனைத்து முதல்ல
உம்பரு முதவல ரொருவரு முதவலர்
எம்பெரு மானரு ளெய்த வுதவற்கு
நம்புவ தோநமோ! நாராய ணாயவே.
9. குறிய முனிக்குக் கடல்குடிப் பித்ததும்
தறியிற் பரம்பொருள் தான்வரக் கண்டதும்
நெறியிற் செல்வாருள நிற்பது நாவிற்கு
நறியது மோநமோ நாராய ணாயவே.
10. புத்தியிற் றெய்வதம் பொலியப் பொலிவது
சித்திய தின்பஞ் சிறப்ப திறப்பது
முத்திய தென்றுபன் முனிவர் பெருந்தவர்.
நத்திய தோ நமோ நாராய ணாயவே.
----------
4.2. திருமந்திரப் பதிகம்
காப்பு : யாரேனும் - எவரேனும், எத்தகையவரேனும்.
பிரமன்; வானுலகம்; திசைமாமுகன் நான்மறை - நான்கு வேதம்:
இருக்கு, யஜுர், சாமம் அதர்வணம்; தேன்சொரி பங்கன்-தேன்போல் மொழி யுடையாளான
உமையை ஒருபாகத்துக் கொண்ட சிவன்.
2. மறம் - பாவம்; கல்வது-தோண்டுவது, யாவைக்கும்
எல்லாவற்றிற்கும்.
3. போ தம் அறிவு; ப ரநாதம் - மேலான ஒலி. 4. பரமன் இறைவன்;
5. நட்டது - ஊன்றியது. பொன்மகள் -மறைச்சிரம் -வேதமுடிவு ;
திருமகள்; திருமணங்கொல்லை - திருமணங்கொல்லை என்னும் ஊர்;
பரகாலன்-திரு மங்கையாழ்வார்.
6. சோமபானம் சோமயாகத்தில் சோமரசம்
பருகுகை; பத்தி பக்தி; சித்தி - பேறு.
7. சடத்துவம் - அ.றிவின்மை; அகிலம்-எல்லாம்
8. உம்பர் - தேவர்.
9.குறியமுனி - அகத்தியர்; உள்ளம், மனம். தறி - தூண்; உளம்
10. தெய்வதம்-தெய்வம்; பொலிய - விளங்க; நத்தியது- விரும்பியது.
------------
4.3. திருமந்திர பஞ்சகம்
வேறு
1. பானமோ டாகார மான பாலதோ தேனாவ தோநற்
கானமோ போகாதிவேறு காதலோ மேலாய மோன
ஞானமோ யாதேனு மாகநாளுமே வாயார வோதுப்
ஓநமோ நாராய ணாய வோசையே காதார வாழ்க
2. நாதா ஓருமோ நாராயணாய மந்திரம்.
ஓதா தேனை நீ யோதேர்வை யோர்வ தொன்றிலன்
சீதா லோகமாதா காதல தேடி வந்தருள்
பரதா பாதுகா வாயீது பார முன்னதே.
வேறு
3. மந்திர மோநமோ நாராய ணாய
மங்கள மோநமோ நாராய ணாய
மைந்தரு மோநமோ நாராய ணாய
மாதரு மோநமோ நாராயணாய
தந்தையு மோநமோ நாராய ணாய
தாயரு மோநமோ நாராய ணாய
சிந்தையு மோநமோ நாராய ணாய
தெய்வமு மோ நமோ நாராய ணாய்.
4. உத்தியு மோநமோ நாராய ணாய
உறவது மோநமோ நாராய ணாய
சித்தியு மோ நமோ நாராய ணாய
செல்வமு மோநமோ நாராய ணாய
பத்தியு மோநமோ நாராய ணாய்
பயப்பது மோநமோ நாராய ணாய
முத்தியு மோ நமோ நாராய ணாய
முழுவது மோநமோ நாராய ணாய.
வேறு
5. ஓநமோ நாராய ணாய யோசையே யாதாரமாக
வானமே. பாதாள நாகர் வாசமே பாரேழு மேமற்
றானலோ காகார-பூத யாதியே யானாத வீநம்
ஞானமார் நூலான வேதநாலுமே வாழ்வாய மாதோ.
----
1. பானம் - நீர்; மோனம் - மெளனம்.
4. சீதா-சீதை; பாதுகை - திருவடி. மங்களம்- நன்மை. உத்தி - யுக்தி; பத்தி - பக்தி; முழுவதும் - எல்லாமும்.
5. வேதம் நாலு - இருக்கு, எசூர், சாமம், அதர்வணம்;
---------------
5. . நூற்றெட்டுத் திருப்பதிப் பாடல்கள்[*]
[*]மஹாவித்துவான் வாக்குநயம் முதலியவை தமிழுலகம் நன்கறிந்தவை. அவர் இயற்றியவற்றுள் அச்சில் வராதன பல. அவற்றுள் இந்நூற்றெட்டுத்திருப்ப திப்பாடல்கள், திருமால்திருப்பதி நூற்றெட்டுள் இன்ன இன்ன நாட்டுள் இத்தனை இத்தனை திருப்பதிகள் உளவென்று அவற்றின் பெயர்களை அழகுறத்தொடுத்து விளக்குவன. சந்த அமைதியுடைய இச் செய்யுள்கள், திருமால் திருப்பதிகளை அடிக்கடி நினைவுகூர்வார்க்கும் அறிய விரும்புவோர்க்கும் பயன்படும்.
------------
காப்பு
அம்மை மலர்மே லணிமங்கை இம்மைக்கும்
எம்மைக்கு நல்கு மெழிலணங்கு - செம்மற்
றிருமால் மணிமார்பிற் செம்மாந் திருக்கும்
ஒருமா தருளா யுளள்.
திருமால் நிலை
1. நித்தர் முத்தர் தொழற்குவை குந்தத்தி
னீடி ருக்கும்ப ராபரன் ஞானியர்
சித்தம் வைக்கவி யூகமெடுத்தெங்குந்
திகழ்வ னாகிய றத்திற்க வதரித்
தத்தி விக்கணுளார் தொழப் புரற்கட
லங்க ணுற்றனை வர்க்குந்தொ ழற்கென
இத்தரைக்கட் டிருப்பதி நூற்றெட்டி
லெழில ருட்படி வங்கொண்டிருக்குமே.
சோணாட்டுத் திருப்பதிகள்-40
2. தேவாதியர் தொழவாவல்கொள் பூலோகவை குந்தம்
திருமால்வரு குட.காவிரி நடுவேவளர் கோயிற்
சீரின்பவ ரங்கம்முறை யூரன்பில்கு டந்தை
தேருத்தம னூர்வெள்ளறை பேர் நற்சிறு புலியூர்
பூவாழ்திரு நறையூர்புகழ் மாவாலிமெய் நந்தி
புரவிண்ணகர் சேறைகண புரவிண்ணகர் புள்ளம்
பூதங்குடி திருவிந்தளூர் மாதஞ்சைய ழுந்தூர்
பொன்னாண்மதி யங்கண்டியூர் தென்னாகைவண் புருடம்
கோவாதனூ ராற்றங்கரை தேவார்திரு வெளியங்
குடிவாழ்கண மங்கைகண்ணங் குடிகாழிவெல்சித்ர
கூடந்திரு நாங்கூர்மணி மாடந்திரு வெள்ளக்
குளங்கூடல்வை குந்தம்மரி வளங்கூடு விண்ணகரம்
தாவாதொளிர் திருத்தெற்றியம் பலஞ்செம்பொன் செய் கோயில்
தளிக்காவளம் பாடிப்பதி யொளிக்காமணிக் கூடம்
தருத்தேன்வழி பார்த்தன்பள்ளி திருத்தேவனார் தொகையித்
தலமீரிரு பதுஞ்சோழர் தரைத்தெய்வத நிலனே.
பாண்டி நாட்டுத் திருப்பதிகள்-18
3. திரமுயர் கூடல்கு றுங்குடி பேரை
சீவர மங்கைமெய் யம்மலை கோளூர்
வரகுண மங்கைதண் கால்குரு கூர் நன்
மாலிஞ் சோலைபு லாணிகு ளந்தை
சுரர்திகழ் கோட்டிபு ளிங்குடி மோகூர்
தொலைவிலி மங்கலம் புதுவைவை குந்தம்
பரவுபெரும்புகழ் விஞ்சிய பாண்டிப்
பைந்தமிழ் நாட்டுப் பதிபதி னெட்டே.
சேர நாட்டுத் திருப்பதிகள்-13
4. கருவூர்த் துவக்கோடு கடித்தானம் மூழிக்
களமாறன் விளைதிருவண் பரிசார நாவாய்
திருவாழு மனந்தபுரந் திகழ்குட்ட நாட்டுத்
திருப்புலியூர் வாட்டாறு திருச்செங்குன் றூர்கோள்
மருவாத திருவல்ல வாழ்திருவண் வண்டூர்
வாய்ந்ததிருக் காட்கரையென் றாய்ந்த பதின் மூன்றும்
அருகாத புகழ்படைத்த கொடைச் சேரர் நாட்டி
லரும்பெரிய கடவுள்வளர் பெரும்பதிக ளாமே.
நடுநாட்டுத் திருப்பதிகள்-2
5. நெடுமா லயிந்தை
யொடுகோவ லூரை
முடிசூடு மலையன்
நடுநாடு கொளுமே
தொண்டை நாட்டுத் திருப்பதிகள்-24
6. ஊரக மட்ட புயகர மத்தி
யூர்கச்சி வேளுக்கை பாடகந் தண்கா
நீரகம் புட்குழி நீர்மலை வெஃகா
நின்றவூ ரெவ்வு ணிவாத்திங்கட் டுண்டம்
காரக மிடவெந்தை கள்வனூர் கடிகை
கடன்மல்லை திருவல்லிக் கேணிகார் வானம்
வார்பர மேச்சுர விண்ணகர் பவள
வண்ணநல் வேங்கடந் தொண்டையெண் மூன்றே.
வடநாட்டுத் திருப்பதிகள்-11
7. பரவு மிமையப் பொருப்பிற் பிருதி
பதரிது வாரகை நைமிசா ரண்யம்
கருதும யோத்திவிருந்தாவ னந்தான்
கங்கைக்க ரைக்கண்டம் சிங்கவேள் குன்றம்
பொருவருங் கண்ணன் பொருந்தாயர் பாடி
பொன்திகழ் சாளக்கிராமம்ம துரை
மருவிய சீர்வட நாட்டினிற் றெய்வம்
வளர்பெருங் கோயில்கள் வாழ்பதி னொன்றே.
ஆக்கியோன் பெயர்
8. ஒருசோழர் வளநாட்டி லுயர் நாற்ப தூர்கள்
ஒளிர்பாண்டி வளநாட்டி லூரீரொன் பதுதாம்
தருசேரர் பெருநாட்டிற் பதின்மூன்று தலங்கள் .
தனியாய நடுநாட்டிற் றலமொன்றொ டொன்று
வருபாலி வளர்தொண்டை வள நாட்டெண் மூன்றூர்
வடநாட்டிற் பதினொன்றென் றொருநூற்றொ (டெட்டும்
திருவாரு மணிமார்பன் திருக்கோயி லென்று
தெளிநூலின் வழிராக வனிதோதினானே.
பயன்
9. உண்ட முதல்வ னுயரருளே யூற்றெடுத்து
மண்டி வழிந்ததென வண்பெரியார் - விண்ட
திருப்பாடல் பெற்ற திருப்பதிநூற் றெட்டும்
விருப்பாயி னார்பெறுவர் வீடு.
---------------
பாடல் முதற்குறிப்பு அகராதி
எண்களின் முன் குறிப்பு
தி. சோ.என்பது திருவேங்கட சோதி (பக்கம் 26.)
தி. மாலை என்பது திருமாலிருஞ்சோலை மலையழகர் தாழிசை மாலை (பக். 31)
தி. பா. என்பது திருமந்திரப்பாடல் (பக்.34)
தி. ப. என்பது திருமந்திரப் பதிகம் ( பக். 36)
தி. பஞ். என்பது திருமந்திரப் பஞ்சகம் முக். 38)
நூ. தி. என்பது நூற்றெட்டுத் திருப்பதிப் பாடல்கள் (பக். 40) எனக் காண்க.
வெறும் எண் மட்டும் உள்ளவை திருவேங்கட மாயோன் மாலையாகும்.
எண் : பாடல் எண்.
அடைவே விளையா 72
அண்டா வுனையும் 37
அண்ணான் முன நீ 3
அந்தோ வருளா 65
அம்புவி செம்பொன் தி.ப 8
அம்மை மலர்மே நூ.தி. காப்பு
அயலே விழையும் 18
அகிதா கியதுன் 52
அவிநேர் வதுவா 72
அமியாத வினைத் 33
ஆளமேய் வயிறோ 75
ஆய மெலாமு 85
ஆட்டா தளியேன்12
ஆமாறியலே 15
ஆராவமிழ்தின் தி.சோ . 14
ஆரா வயிறோ 92
ஆலாகலமே 11
ஆற்றேனினிமே 23
இடந்தாய் இறைவா 91
இடியிடிக்கிற் தி.சோ. 3.
இரவே பகலே 55
இவண் வேங்கடவன் 104
ஈதொரு மந்திர தி.பா.1
உடலா கியபா 75
உடலோ வுயிரோ 85
உண்ட முதல்வ நூ .தி.9
உண்டே மகிழ்வர்க் 32
உணவான் வருவே 2
உத்தியுமோ நமோ தி.பஞ் 4
உமியோ பலவுண் 101
உழலா துதெளிந் 81
உள்வான் புகினுன் 16
உறவா யெனதுள் 50
உன்மாணழகுண் 95
ஊரக மட்டபுயகர நூ.தி.6
எங்கட்கெனமா தி.மா 6
என்றே யுளைநீ 5
எனைவேண்டிலனென் 22
ஏத்தார் நினையெங் 48
ஏந்தா உனதாள் 13
ஏறா தகருக் 39
ஐயாவுனமூச் 8
ஒரு சோழர் வள நூ .தி.8
ஒருதாதையுநீ 36
ஒழியா நிதமுன் 58
ஒளிப்பா யசுரர்க் 64
ஓநமோநாராயணாய தி.பஞ்.5
கணக்கற்றிறந்தன தி.சோ.13
கதியே பெரிதா. 21
கருவூர் வித்துவக் நூ.தி. 4
கருவேய்ந்த தி.சோ. 12
கன்றெடுத்து தி.சோ. 10
குலமாருதிபா 99
குலடோதனமென் 83
குறிய முனிக்குக் தி.ப. 9
கூவிப் புனல்பெய் 100
கூனிமிர்ந்து தி. சோ. 6
கொல்ல வருங்களி தி.பா.2
கோனேரியினிற் 61
சடத்துவ மறறொளி தி.ப. 7
சிரமே யெவரும் 74
சுந்தரத் தோளுடை தி.மா. 3
சுவமான துரோ 87
செந்திரு மாலிருஞ் தி.மா. 2
சொற்கீர மதொத் 47
சோமச் செந்திரு தி.மா. 1
தடிபோ லடிவீழ்ந் 51
தரனே தெரியா 103
தருபேய் முலை நஞ் 43
தரைமா மகளை 36
தவசாலுயிர் தூய் 58
தவமே பசியைத் 31
தள்ளே லெனை நீ 19
தளைதா தையறச் 89
தாயே தெரியா 53
தாளா லுலகியா 7
தானமுந்தானப் தி.ப. 6
தானோ தனக்கு தி.மா .7
திடவுள் ளுணர்வோ 10
திணிகா ரிருள்சீத் 99
திரமுயர் கூடல் நூ.தி.3
திருமதுரையிற் தி.மா .5
திருவினைக் தி.சோ.1
துருவற்கு தி.மா 4
துருவற்கு நிழலைச் தி.பா.4
தேவதியர் தொழ நூ-தி.. 2
தேவே திருநா 44
தெளியே னெறியுந் 28
தொட்டதும் பரம தி.ப. 4
தோண்மே லுளதொன் 46
நடுவே யுளை நீ 66
நன்று மோ நமோ தி.பா. காப்பு
நன்றுமோ நமோ தி. ப. காப்பு
நாப்பா லுனையா தி.ப
நாதா ஓநமோ தி.பஞ்.2
நீரத்தடமுந் 57
நாவா லுனையான் 26
நாளொடு கோளு தி.பா. 4
நித்தர் முத்தர் நூ.தி 1
நில்லா மனமென் 67
நிலமே பொலமே 54
நிழல்போன் மனைநின் 97
நிற்காதல் செய் 68
நீரத்தடமுந் 57
நூலாரறிவா 9
நெடுமா லயிந்தை நூ.தி. 5
பகைமலிந்து தி.சோ.9
படவும் வளிசெல் 35
படியாய்க் கிடந்துன் 56
படியிருந்துன் தி.சோ. 5
பண்டே மருந்தா 95
பத்தோடு பல்சென்ம 70
பயமே யிலையாய்ப் 62
பரந்தார் முலைப்பால் 45
பரவுமிமையப் நூ. தி. 1
பரியே னுயிர்கட் 20
பலனே விழைவேன் 76
பழிபா வவனத 41
பானமோடாகார தி. பஞ்-1
பிணாலா வணியம் 80
பிறந்தாய் விதுரன் 90
புசியா வயிறும் 82
புத்தியிற்றெய்வதம் தி.ப. 10
புவிப்பா லுனக்குப் 88
புனமீ துளமா 24
பூடே முதலா 60
பெருகிருக்குநெறி தி.சோ.4
பெரும்பா தரசம் 86
பேயினுந் துன்பிலை தி.பா.3
பொல்லா விடராய 34
பொற்பொருள் தி. ப. 5
மகனமர்ந்து தி.சோ. 7
மட்டுள்ளவரா 73
மண்டாய பதந் 59
மண்யாவு மெவன் 69
மண்வா னரசன் 102
மந்திர மோநமோ தி.பஞ்.3
மலம் வளர்ந்த தி.சோ.8
மறங்கோல வெனின் 94
மனையிருந்தென் தி. சோ. 2
மாணா வினையே 10
மிகநா ளுனதாள் 93
மிடைந்தார் மனைகொண் 42
மெய்தா னருள்செய் 29
மெலியா ரெனின்யான் 38
முடிமலர்ந்த தி.சோ.11
வரமா தவவேங் 105
வருத்தா விடர்சூம் 40
வளனே பெறினென் 63
வனமார் திடரைக் 98
வாசா விடயங் 77
வான்சொலுமண் தி. ப. 1
வானந்தருங்கடல் தி.பா 5
விட்டே றெனமே 17
விண்ணே செலினும் 4
வெதிரே தருதீ 49
வெல்வதுந் தீவினை தி. ப. 2
வேதமும் வேதியர் தி. ப. 3
வேதமோ தாதிமால் காப்பு
வேந்தீ யினிருந் . 78
வேரே தலையே 6
---------------
This file was last updated on 08 April 202
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)