pm logo

ஔவை. சு. துரைசாமி பிள்ளை எழுதிய
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை, - பாகம் 1)


caiva ilakkiya varalARu (7-10th CE),
auvai turaicAmi piLLai, part 1
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை ), part 1
ஔவை. சு. துரைசாமி பிள்ளை

Source:
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை )
ஆக்கியோர் : சித்தாந்த கலாநிதி, பேராசிரியர்
ஔவை. சு. துரைசாமி பிள்ளை
தமிழ்ப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்
1958
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் நூல் வெளியீடு
முதற் பதிப்பு 1958
-------
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை
அணிந்துரை ... iii
முன்னுரை ... iv
1. தமிழ் நாட்டு வரலாறு
2. திருஞானசம்பந்தர்
3. திருநாவுக்கரசர்
4. ஐயடிகள் காடவர் கோன்
5. நம்பியாரூரர்
6. சேரமான் பெருமாள்
7. ஏனாதி சாத்தஞ் சாத்தனர்
8. மாணிக்கவாசகர் ...
9. பட்டினத்துப் பிள்ளேயார்
10. சேந்தனர்
11. நந்திக் கலம்பகம் ...
12. ஒளவையார்
13. முதற் கண்ட ராதித்தர்
14. நம்பியாண்டார் நம்பி
15. வேம் பையர்கோன் நாராயணன்
துணை செய்த நூல்கள் : ஆங்கிலம், தமிழ்...
அரும் பொருள் அகர நிரல்
-----------------------
அணிந்துரை
(திரு. T. M. நாராயணசாமி பிள்ளை அவர்கள், M.A.,B.L. M.L.C.
துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)


தமிழ் நாட்டிற்கு அதன் இலக்கியம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பழங்காலந்தொட்டே தமிழ்நாடு இந்தத் துறையில் மேன்மை யுற்றிருந்திருக்கிறது. அண்மையில் தமிழ் இலக்கியத்தையும் மற்ற இலக்கியங்களையும் கற்றுணர்ந்து தேசப்பற்றை ஒப்பற்ற முறையில் ஊட்டினவர் அமரகவி பாரதியாரவர்களாவர். அவர் ‘யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை’ என்றும் இது “உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் ஆணையிட்டுப் பாடியிருக்கிறார்.

இதைப் போன்று மற்றத் தேசத்திய பெரும் புலவர்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது செக்கோசுலோவேக்கிய (Czekoslavia) நாட்டிலிருந்து நமது கலைப்பண்புகளை நேரில் தெரிந்து கொள்ளுவதற்காகத் தென்னிந்தியாவிற்கு வந்திருக்கும் சுவெலபில் (Zvelebil) அவர்களும் தமிழ் நாட்டின் சிறந்த இலக்கியங்களாகிய திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவைகள் உலகத்தின் இறவாத இலக்கியங்கள் என்றும், அவை உலக நாகரிகத்திற்குத் தமிழ் கொடுத்த வரிசை யென்றும் சொல்லியிருக்கிறார்.

தமிழ் நாட்டு இலக்கியங்களில் ஒரு தனிச் சிறப்புற்ற பகுதி சைவ வைணவத் திருப்பாடல்கள். அவை கடவுளைக் கண்ட பெரியார்களால் கடவுளின்பேரில் உள்ள பேரன்பின் மிகுதியினால் மனம்பொங்கி இயற்கையாக வெளிவந்தவை. இந்த நூல்கள் இலக்கியத்தில் ஒரு சிறப்புப் பெறுவதுடன் மக்களை நல்வழிப்படுத்திச் சிந்தைடைச் செம்மை செய்யும் திறனுடையவை. தென்னாடு பக்தியில் தனிச்சிறப்புற்றது. அந்தத் தனிச்சிறப்பு இந்த நூல்களால்தான் உண்டாயிருக்கிறது. இந்தச் சிறந்த பக்தி இலக்கியம் வடநாட்டிலும் பத்தி வெள்ளத்தைப் பரவச் செய்திருக்கிறது.

தமிழ்மொழி வாயிலாக நம் முன்னோர் போற்றி வளர்த்த பேரறிவு நிறைந்த இலக்கியத்தைப் பற்றியும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த காலம், அரசியல் நிலை, சமய நிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி முதலிய விஷயங்களைப் பற்றியும் தக்க அறிஞர்களைக்கொண்டு ஆராய்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல் தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும்.

இப்பணியின் தேவையை நன்குணர்ந்தவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களாவார்கள். அவர்கள் கொண்ட நோக்கத்தைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆராய்ச்சித்துறையில் பணி ஆற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து வெளியிடுவதெனத் திட்டம் வகுத்தனர். அத்திட்டத்தின்படி இதுவரை நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இப்பொழுது அவ்வரிசையில் அமைந்த “சைவ இலக்கிய வரலாறு” என்ற புத்தகம் வெளி வருகின்றது.

இதனைச் சிறந்த முறையில் ஆராய்ந்து எழுதியுதவிய அறிஞர், இப்பொழுது மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்து தமிழ்ப்பணி புரிந்து வரும் அன்பர் சித்தாந்த கலாநிதி வித்துவான் ஔவை S. துரைசாமி பிள்ளையவர்கள் ஆவர். இவர்கள் 1942 முதல் 1951 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக இருந்து நல்ல முறையில் தமிழ்ப்பணி புரிந்துள்ளார்கள். அக்காலத்தில் எழுதப் பெற்றதே “சைவ இலக்கிய வரலாறு” என்ற இந்நூலாகும். இந்நூலில் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு முடியவமைந்த காலப் பகுதியில் தோன்றிய சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவ இலக்கியங்களைப் பற்றிய செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிற நாட்டார் யாத்திரைக் குறிப்புகள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.

இந்நூலாசிரியராகிய திரு. பிள்ளையவர்கள் இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி புரிந்த காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய ‘ஞானாமிர்தம்’ என்ற நூலை ஏட்டுச்சுவடியுடன் ஒத்து நோக்கித் தாம் ஆராய்ந்து கண்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறே சிவஞானபோதச் சிற்றுரையும் தெளிவான பொருள் விளக்கங்களுடன் இவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. சங்கத்தொகை நூல்களாகிய பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, புறநானூறு என்பவற்றுக்கு இவர்கள் எழுதிய விளக்கவுரைகள் புலவர்களும் பொதுமக்களும் மகிழ்ந்து பாராட்டும் முறையில் அமைந்திருக்கின்றன. இவை இவர்களது தெளிந்த புலமைத்திறத்தினையும் இடைவிடாத உழைப்பினையும் நன்கு விளக்குவனவாகும்.

சைவ இலக்கியங்களைப் பற்றிய வரலாற்றினை விளக்கக் கருதிய திரு. பிள்ளையவர்கள் சைவ நூல்கள் தோன்றி வளர்த்த கால நிலையையும் சூழ்நிலையையும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் முறையில் சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டியிருப்பது மிகவும் பொருத்தமுடையதாகும். சங்க நூல்களிலும் பன்னிரு திருமுறைகளாகிய அருள் நூல்களிலும் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த சாத்திரங்களிலும் ஆழ்ந்த பயிற்சியும் ஆராய்ச்சியும் நிரம்பப்பெற்ற அன்பர் திரு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ்நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ்விலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதியுள்ளார்கள். இது மிகவும் பாராட்டிப் போற்றுதற்குரியதாகும்.

புலமை நலமும் ஆராய்ச்சித் திறமும் வாய்ந்த தம்முடைய உரைநடை நூல்களாலும் சுவை மிகுந்த சொற்பொழிவுகளாலும் தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்துவரும் இந்நூலாசிரியர் சித்தாந்த கலாநிதி வித்துவான் திரு. ஔவை துரைசாமி பிள்ளை அவர்களுக்குப் பல்கலைக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்தும் உரியனவாகும்.

அண்ணாமலை நகர்       தி. மூ. நாராயணசாமி பிள்ளை
24-3-1958
-----------------
முன்னுரை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகையில், தமிழ் இலக்கிய வாலாறு எழுதவேண்டிய ஏற்பாடொன்று உருவாயிற்று. தமிழிலக்கியங்களைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு இவ்வரலாற்றைக் காண்பது முறையாகத் தோன்றினமையின் அம்முறையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று.

இலக்கியங்கள் பலவும் தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கு அறிந்த செய்தி. அந்நெறியில் சைவ இலக்கியங்கள் தாம் பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோர்க்கு உணர்த்தும் அறிவுக் கருவூலங்களாகும். ஆயினும் இவ்விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும்; அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிகம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொதுவரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டின் தவக்குறைவாலும், தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை. தமிழகத்தின் பொது வரலாறு, தொல்காப்பியர் காலம், தமிழ் மூவேந்தர் காலம், பல்லவர் காலம், இடைக்காலச் சோழ பாண்டியர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதியர் காலம், மேனாட்டவர் காலம் எனப் பல பாகுபாட்டில் அறியக் கிடக்கின்ற தெனினும், அத்துறையில் உறைத்து நின்று விரிவாக ஆராய்ந்து எழுதும் ஆர்வம் அறிஞர்களின் உள்ளத்தில் இன்றுகாறும் தோன்றிச் செயற்படவில்லை. காலஞ்சென்ற சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் முதலியோர் பாரத நாட்டின் பொது வரலாறே தென் தமிழ் நாட்டிலிருந்து தான் தொடங்கவேண்டும் எனக் கூறி வந்தனர். நாட்டு மக்களிடையிலும் பல்வேறு புராண இதிகாசக் கதைகள் பரவியிருக்கும் அளவு இல்லையாயினும் அதிற் பாதியளவு தானும் நம் நாட்டைப் பல்வேறு காலங்களில் இருந்து ஆண்டு வந்த மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலன்களையும் பற்றிய அறிவு அறவே காணப்படுகிறதில்லை. நாட்டின் பொது வரலாற்றை அடிப்படையாகவும் பின்னணியாகவும் கொண்டு எழுதற்குரிய இலக்கிய வாலாறு, மேலே காட்டிய குறைபாட்டால் “குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சி புக்க மான் போலவும்” இடர்ப்படுகின்றது.

இந்நிலையில், கிடைக்கும் துணைகளைக் கொண்டு கற்றோர் முன் தோன்றுதற்கு முயலும் இலக்கிய வரலாற்றுக்குச் சென்ற பல ஆண்டுகளில் மேனாட்டவரும் நம் நாட்டவருமாகப் பல அறிஞர்கள் இத்துறையில் இறங்கிப் பல நற்பணிகளைச் செய்துள்ளனர். அரசியலாரும் நாட்டில் ஆங்காங்கு நின்று சிறக்கும் கோயில்களிலும், பிற இடங்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களைப் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். மோஹஞ்சோ-தாரோ, ஹாரப்பா முதலிய இடங்களிற் போலப் புதைபொருள் ஆராய்ச்சியில் தமிழ்நாட்டு அரசியல் கருத்தூன்றாது ஒழியினும் ஆங்காங்கு மக்கள் நிலத்திற் கண்டெடுத்த புதைபொருள்களைப் பெற்றும், இவ்வகையில் கிடைத்த செப்பேடுகளைக் கொண்டும் அறிக்கைகள் பல வெளியிட்டுள்ளனர். நாடு உரிமை பெற்ற பின், இச் செயல்வகைகளின் அரசியல் அறிக்கைகள் ஆண்டுதோறும் வெளிவருவது நின்று போயிற்று; என்றாலும், முன்பு வெளியிட்டனவற்றுள் ஒரு சில இறந்து போயினும் பல குறிப்புக்கள் மிகவும் பழமையான நூல் நிலையங்களில் முயல்வார்க்குக் காட்சி நல்குகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு இந்தச் சைவ இலக்கிய வரலாறு தோன்றி வெளிவருகின்றது.

சைவ இலக்கியங்களுள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஈறாகத் தோன்றியவற்றின் வரலாற்றினை எழுதுவதென முதற்கண் வரையறுத்துக் கொண்டு இவ்வரலாறு தொடங்குவதாயிற்று. இவ் வரையறைக்குள் அகப்பட்ட இலக்கிய ஆசிரியன்மார்களின் பெயர்நிரலை இந்நூல் 33-ஆம் பக்கத்தில் காணலாம். ஆயினும், கி. பி.7-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு முடிய நின்ற காலத்தவருள் திருஞான சம்பந்தர் முதல் வேம்பையர்கோன் நாராயணன் ஈறாக உள்ள ஆசிரியர் வரலாறுகள் எழுதி முடித்ததும், யான் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டதனால், இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால வெல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு இன்னும் காணப்படவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல்நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணைசெய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதாயினமையின், இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த அளவிலேனும் இவ்வரலாறு வெளிவருவது நன்றெனத் தேர்ந்து அழகிய முறையில் செவ்வையாக அச்சிட்டுத் தமிழ் உலகிற்கு அளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் உயரிய தமிழ்ப் பணியைப் பாராட்டி, அதற்கு நம் இனிய தமிழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனிய, அழகிய அணிந்துரை தந்து இந்நூலைச் சிறப்பித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் உயர்திரு. டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை நன்கு அச்சிட்டு அளிக்கும் சென்னை ஸ்ரீ ராமபிரசாத் அச்சகத்தாரின் தொழிற்றிறம் யாவரும் பாராட்டற்குரியதொன்று.

தில்லைப் பொன்னம்பலத்தும், மதுரை வெள்ளியம்பலத்தும் திருக்கூத்து இயற்றும் பெருமான், என்னையும் இத்துறையில் இயக்கிப் பணிகொண்ட பேரருளை நினைந்து, அவன் திருவடிகளைப் பரவுகின்றேன்.

“ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

“அவ்வை” காந்தி நகர்,       ஔவை. சு. துரைசாமி
மதுரை, 7-4-58
-----------------

சைவ இலக்கிய வரலாறு
1. தமிழ் நாட்டு வரலாறு (கி. பி. 700-1000)

திருச்சிற்றம்பலம்

சைவ இலக்கியங்கள் என்னும் போதே தமிழறிஞர்களுக்குச் சைவத் திருமுறைகளே முதற்கண் நினைவில் எழும். இச்சைவத் திருமுறைகளின் வரலாற்றைக் காண்பதற்கு முன், அவை தோன்றிய கால நிலையும் மக்கள் நிலையும் அரசியல் பொருளாதார நிலையும் முன்னணியாக அறிவது இன்றியமையாததாகும். தமிழ்நாட்டு வரலாற்றில் சைவத் திருமுறை தோன்றிய காலம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னதென்பது யாவரும் பொதுவாக அறிந்த உண்மை. அப்போது இருந்த அரசியல் வரலாற்று நிலையினை முதற்கண் காண்பதற்குத் தமிழகத்தின் பொதுநிலையறிவு வேண்டப்படும்.

தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும், தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.[1] வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி[2] வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத்தொடராகும். வட பெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டை நாடு என்றும் தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி நடு நாடு என்றும், வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென்வெள்ளாற்றுக்கும்

இடைப்பகுதி சோழ நாடு என்றும் இதன் தென்பகுதி பாண்டி நாடு என்றும் வழங்கும்.[3] இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும் சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்கு நாடாகும். மேலைக்கடற்கரைப்பகுதி சேரநாடு.

தொண்டை நாட்டில் வடபெண்ணை, பொன்முகலி, பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு என்பனவும், சோழ நாட்டில் காவிரி வெள்ளாறு என்பனவும், பாண்டி நாட்டில் வையை தாமிரபரணி என்பனவும் சிறப்புடைய ஆறுகளாகும்.

சைவ இலக்கியங்களின் தோற்றக் காலத்தில் இந்த நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.[4] நடுநாடுமட்டில் திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் [5] வழங்கிற்று. வேறு சில காலங்களில் வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழ நாட்டோடும் சேர்ந்து[6] வழங்கியதுண்டு.

இந்த நாடுகளில் பாண்டிநாட்டில் பாண்டியரும், சோழநாட்டில் சோழரும், தொண்டை நாட்டில் தொண்டையரும் அரசு புரிந்தனர். ஆயினும் அக்காலத்தே இவரோடு களப்பிரரும், மாளவரும், சிங்களரும், பல்லவரும் எனப் பல வேந்தர்கள் காணப்பட்டனர். சைவ இலக்கியங்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பல்லவ வேந்தர் சிறப்பு நிலையில் இருந்து ஆட்சி செய்தனர். அவர்களுடைய ஆட்சி, நம் சைவத் திருமுறைக் காலத்தில், பெரும்பாலும் தொண்டைநாட்டிலும், சிறுபான்மை, சோழ பாண்டிய நாடுகளிலும் பரந்திருந்தது.[7] ஆகவே திருமுறைகள் தோன்றுதற்கிடமான இக்கால நிலையினை வரலாற்று முறையில் காண்பது நேரிது. அதனால் கி. பி. ஆறாம்[8]நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஈறாகவுள்ள காலத்து அரசியல் வரலாற்றினைச் சுருங்கக் காணலாம்.
--------------
[1] தொல். பாயிரம்.
[2]. செந். செல்வி. Vol. XXII, பக். 274.
[3]. செந். செல்வி. Vol. XXII. பக். 275.
[4]. S. I. I. Ins. Vol. XII.
[5]. A. R. No. 376 of 1908 & 308 of 1921.
[6]. A. R. 393, 513 of 1921, 414, 423 & 533 of 1921.
[7]. P. S. Ins.
-------------

பல்லவரென்பவர் தொண்டைநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர்.அவர் தமிழரல்லர்[9] காஞ்சிபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிற் படிமங்கள் ஒன்றன் கீழ் "இது களிறின் தலையன்று ; நுன் மகனுடைய மகுடங்கள் இவையென்று தரண்டி கொண்ட போசர் இரணியவன்ம மகாராஜர்க்குச் சொல்ல" என்றொரு குறிப்புக்[10] காணப்படுகிறது. இதனால் பல்லவர் மகுடம் களிற்றின் மத்தகம் போன்றிருக்கும் என்பது விளங்கும். இவ்வாறே பாக்டிரிய நாட்டு மன்னனான தெமீட்டிரியஸ் என்பவன் நாணயங்களில் அவன் கோடு தாங்கிய யானைத்தலை போலும் வடிவுடைய முடியணிந்திருக்கக்[11] காண்கின்றோம். இது தமிழ்நாட்டு வேத்தியல்பன்று. ஆதலால் பல்லவர் இந்நாட்டினர் அல்லர் என்பது வலியுறுகிறது. அவர்களை தொண்டைநாட்டவரெனச் சிலர் கருதுவர். அதனை வற்புறுத்தத் தக்க நல்ல சான்று கிடையாது.

இவர்களுட் பலர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தொண்டைநாடு போந்து அரசு நிலைபெறுவித்தலில் ஈடுபடவில்லை. அங்கே அவர்கட்கும் சளுக்கிய மன்னர்களுக்கும் போரே நிலவி வந்தது. பல்லவர் தொண்டைநாடு புகக் கருதினபோது சளுக்கி வேந்தர் போந்து தமிழ் வேந்தர்கட்குத் துணையாய் நின்று அவரை வென்று வெருட்டி விடுவர்.[12] பல்லவ வேந்தருள் பலர் சைவராகவும்[13], புத்தராகவும்,[14] வைணவராகவும்[15], சைனராகவும்[16] இருந்திருக்கின்றனர்.
-------
[8]. கி. பி. ஆறாம் நூற்றாண்டெனக் கருதுகிறோமாயினும், கி.பி. 575 முதலே பல்லவராட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று.
[9]. Velurpalayam C. Plates.
[10]. S. I. I. Vol. IV. பக். 11.
[11]. S. I. I. Vol. XII.முன் பக் ii
[12]. Ep. Indi. Vol.No.I.பக்11.
[13]. பரமேஸ்வரவன்மன்
[14]. புத்தவன்மன்
[15]. சிம்மவிஷ்ணுவன்மன்
[16]. மகேந்திரவன்மன் I
---------------

அவருள் தமிழகத்து வரலாறோடு முதன் முதலாக இயைபு பெறுபவன் சிம்மவிஷ்ணு என்பவனாவான். இவன் முன்னோருள் புத்தவன்மனென்பவன் தமிழகத்துட் புகுந்து சோழர்களை வென்றானென்று செப்பேடுகள் சில[17] கூறுகின்றன. ஆயினும், அவன் தமிழகத்தில் அவர்களை வென்றதன் குறியாக அரசு நிலை கண்டதாகத் தெரியவில்லை. அவனோடு பொருத சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்களும் தெரியவில்லை. ஆதலால் முதன் முதலாகத் தமிழகத்துட் புகுந்து தொண்டைநாடு முழுதும் கவர்ந்து பல்லவ அரசினைக் கண்டவன் சிம்ம விஷ்ணு என்பது வரலாற்றாராய்ச்சி முடிபு.

சிம்மவிஷ்ணு : இவன் கி. பி. 575 முதல் 600 வரை அரசு புரிந்தான் என்பர். இவன் தந்தை சிம்மவன்மன் எனப்படுவன்.

மகேந்திரவன்மன் I : இவன், சிம்மவிஷ்ணுவுக்குப்பின் பல்லவ வேந்தனாக விளங்கியவன்; கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி புரிந்தான்.

நரசிங்கவன்மன் I : இவன் முதல் மகேந்திரவன்மனுடைய மகன்; இவனே வாதாபிகொண்ட நரசிங்கவன்மன் என்றும் பல்லவமல்லனென்றும் கூறுவர். இவன் கி.பி. 630 முதல் 660 வரை அரசு செலுத்தினான் என்பர்.

மகேந்திரவன்மன் II : இவன் முதல் நரசிங்கவன்மனுக்கு மகன் இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் தத்தமக்குரிய வருணாசிரம முறை தவறாது ஒழுகினர்[18] என்று செப்பேடுகள் கூறுகின்றன.

பரமேசுரவன்மன் : இவன் இரண்டாம் மகேந்திரனுக்குப் பின்பு அரசுகட்டிலேறியவன்; இவனே இரண்டாம் மகேந்திரவன்மனுக்குத் தம்பி என்பர்.

நரசிங்கவன்மன் II (680-700) : இவனுக்கு இராசசிங்கன் என்றும் வேறு பெயருண்டு. இவன் பரமேசுரவன்மனுக்கு மகன். கச்சியில் கயிலாயநாதர் கோயிலைக் கட்டியவன் இவ்வேந்தர் பெருமான்,

பரமேசுரன் II (700-710) : இவன் இராசசிங்கனான இரண்டாம் நரசிங்கனுக்குப்பின் அரசுகட்டில் ஏறியவன். இவன் கலியின் சேட்டைகளைக் கடிந்து வியாழ பகவான் .உரைத்த நீதிப்படி ஆட்சி செய்தான் என்று செப்பேடுகள்[19]கூறுகின்றன.

நந்திவன்ம பல்லவ மல்லன் (710-755) : இவன், சிம்மவிஷ்ணுவின் மக்களில் ஒருவனான வீமவன்மன் வழி வந்தோருள், இரணியவன்மன் என்பவனுடைய மக்கள் நால்வருள் எல்லோருக்கும் இளையவன். பரமேசுவரன் மகப்பேறின்றி இறந்ததனாலும், இவன் உடன்பிறந்தோர் மூவரும் அரசேற்க இசையாமையாலும் இந்நந்திவர்மன் பல்லவ அரசுகட்டிலேறினான். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தான் என்பர்.

தந்திவன்மன் (775-826) : இரண்டாம் நந்திவன்மனுக்குப்பின் அவன் மனைவி இரேவா என்பாட்குப் பிறந்தவன் இத்தந்திவன்மன். இவன் ஐம்பது ஆண்டுகட்குக் குறையாமல் அரசுபுரிந்துள்ளான். இவன் காலத்தில் பாண்டி வேந்தர்கள் மேன்மையுறத் தலைப்பட்டனர்.

நந்திவன்மன் III (கி.பி. 826-849) . இவன் தந்தி வன்மனுக்கு மகனாவான். இவனே தெள்ளாறெறிந்த நந்தி வன்மன் எனப்படுபவன். இவனுக்கும் பாண்டியர்கட்கும் கடும்போர் நடந்துளது.

நிருபதுங்கவன்மன் (கி.பி. 849-875) , இவன் தெள்ளாறெறிந்த நந்திவன்மனுடைய மகன்; இவனோடு சோழநாட்டு அரிசிலாற்றங்கரையில் போர் உடற்றிய பாண்டியன், வரகுணன் மகனான ஸ்ரீமாற பரசக்ர கோலாகலன் என்பானாவன்.

நிருபதுங்கனுக்குப்பின்னர் அபராஜிதன், கம்பவன்மன், வயிரமேகவன்மன், சந்திராதித்தன், கந்தசிஷ்யன், விசய நரசிங்கவன்மன் எனப் பலர் ஆங்காங்கே இருந்திருக்கின்றனர். இவருள் அபராஜிதன் கங்கவேந்தனை முதல் பிருதிவிபதியைத் துணையாகக் கொண்டு வரகுணபாண்டி யனைத் திருப்புறம்பயத்துப் போரில் வெற்றி கொண்டான்.

----
[17]. Pallavas of Kanchi. P. 84-5.
[18]. “S. L.. I. Vol. 1, p, 148 "ஸுப்ரணித வர்ணாச்ரம தர்ம.”
[19]. S. I. I. Vol. No. 75. Verse. 26.
------------------

பின்னர்ச் சிதைந்தொழிந்த பல்லவருட் சிலர் புலிகாட்டிலும் சிலர் நுளம்பபாடி நாட்டிலும் சில காலம் காட்டுத் தலைவர்களாக நிலவியிருந்து மறைந்து போயினர். புலி நாடென்பது சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர்ப்பகுதி: நுளம்பபாடி பெல்லாரி மாவட்டத்து ஒரு பகுதியும் மைசூர் காட்டின் ஒருபகுதியும் கொண்டது.

தொண்டைநாட்டிற் பல்லவர்கள் அரசு நிறுவி ஆட்சி புரிந்து வருங்காலத்தில், தென்பாண்டி நாட்டில் பாண்டி வேந்தர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்கள் வரலாறு வேள்விக்குடிச் செப்பேட்டைக்கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அறிஞர்களால் ஆராயப்பெற்றுளது.

பாண்டியன் கடுங்கோன் : இடைக்காலப் பாண்டியருள் இவனே முதல்வனாகக் கருதப்படுகிறான். களப்பிரர் ஆட்சியிலிருந்து தென்பாண்டி நாட்டை விடுவித்த பெருந்தகை இவனேயாவன், இவ்ன் கி.பி. 575 முதல் 600 வரை ஆட்சி செய்தான்.

மாறவன்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625) :இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன்; மாறவன்மன் என்ற சிறப்பினைப் பெறும் மன்னருள் இவனே முதல்வன் என்பர்.

சடையவன்மன் செழியன் சேந்தன்) (கி.பி. 625-640 : இவன் அவனி சூளாமணியின் புதல்வன்; சீனநாட்டு யுவான் சுவாங் காஞ்சிநகர்க்கு வந்திருக்கையில் இவன் இறந்தான்; இச்செய்தியை அச் சீன அறிஞர் குறித்துள்ளார்.

மாறவன்மன் அரிகேசரி (கி.பி. 640-670) : இவன் செழியன் சேந்தனுக்கு மகன்; சிவன்பால் பேரன்புடையவன். இவனே கூன்பாண்டியன் என்றும், சுந்தரபாண்டியன் என்றும் திருவிளையாடற் புராணம் கூறும். நம்பியாரூரரால் நெடுமாறன் எனக் குறிக்கப் பெறும் பேறு பெற்றவன் இவனே.
------------

கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 670-710) :இவ்வேந்தன் மாறவன்மன் அரிகேசரிக்கு மைந்தன்; நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் மதுரை திருப்பரங் குன்றம் சென்று.இறைவனைவழிபட்டபோது உடனிருந்து வேண்டும் சிறப்புக்களைச் செய்தவன்; இரணரசிகன் என்ற சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனை வென்றதனால் இரணதீரன் என்ற சிறப்பினை இவ்வேந்தன் பெற்றான்.

அரிகேசரி பராங்குச மாறவன்மன் (கி.பி. 710-765) : இவன் கோச்சடையன் இரணதீரனுக்கு மகன்; இவனைத் தேர் மாறன் என்றும் முதல் இராசசிம்மன் என்றும் வழங்குவதுண்டு. கொங்கு நாட்டுத் திருப்பாண்டிக் கொடுமுடிக்குச் சென்று சிவனைச் சிறப்புற வழிபட்டான்.

நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) : இவன் அரிகேசரி பராங்குசனுக்குக் கங்கவரசன் மகள் பூசுந்தரிபாற் பிறந்தவன். வேள்விக்குடிச் செப்பேடுகளும் சீவரமங்கலத்துச் செப்பேடுகளும் இவன் காலத்தனவாகும். திருமாலிடத்து இவன் பேரன்புடையவன்; “பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நில மன்னவன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன.[20]

இராசசிம்ம பாண்டியன் I (கி.பி. 790-792) : இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன்.

வரகுண மகாராசன் (கி.பி. 792-835) : இவன் இரண்டாம் இராசசிம்மனுடைய மகன்; இவனைக்" கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன் "எனச் சின்னமனூர்ச் செப்பேடுகள் சிறப்பிக்கின்றன: சிவன் திருவடிக்கண் பதிந்த சிந்தையுடையவன்; இவனது ஆட்சி சோழநாடு முழுதையும் தன்பாற் கொண்டிருந்தது.

சீமாறன் சீவல்லபன் (835-862) : இவன் முதல் வரகுணனுடைய புதல்வன். இவனுக்கு ஏகவீரன், பரசக்ர கோலாகலன், அவனிபசேகரன் என்ற சிறப்புக்கள் பலவுண்டு. தெள்ளாறு, குடமூக்கு, அரிசிற்கரை என்ற இடங்களில் பல்லவரொடு பொருது இவன் பெரு வெற்றி எய்தினான்.

வரகுணவன்மன் I (கி.பி. 862-880) : இவன் சீவல்லபனுக்குப் புதல்வன்: திருப்புறம்பயப்போரில் தோல்வி யெய்திச் சோழநாட்டில் தான் வென்ற பகுதியைக் கைவிட்டு நீங்கினான்.[21]

சடையவன்மன் பராந்தக பாண்டியன் (கி.பி.880-900) . இவன் இரண்டாம் வரகுணனுக்குத் தம்பி, சீவல்ல பனுக்கு இரண்டாம் புதல்வன். வரகுணன் மகப்பேறின்றி இறந்தமையின் இவன் அரசு கட்டிலேறினன். இவர்கள் காலத்தில் பாண்டியர் அரசு எல்லையிற் சுருங்கி விளக்கங் குன்றுவதாயிற்று. இவர்கட்குப் பின்வந்த மூன்றாம் இராசசிம்மன் முதலியோர் காலங்களில் இடைக்காலச் சோழ வேந்தரது ஆட்சி ஓங்கத் தலைப்பட்டது. மதுரைகொண்ட பரகேசரி யெனப் படும் முதற் பராந்தகசோழன் முதலியோர் விளக்கம் மிகுவாராயினர்.
-----
[20]. T. V. S. பாண்டியர் வரலாறு. 2-ஆம் பதிப்பு. பக். 53.
[21]. T. V. S. பாண். வர. பக். 58.
---------------

பல்லவ பாண்டியர் காலத்துப் புத்தசமய நிலை


பல்லவர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் புத்த சமயமும் சைன சமயமும் பரவியிருந்தன. இவ்விரண்டினுள், புத்த சமயம், சமண் சமயமெனப்படும் சைனத்திற்கு முன்பே தென்னாட்டிற் பரவியதென்பது வரலாற்றுக் கொள்கை. கி. பி. நான்காம் நூற்றாண்டில் (கி. பி. 399-414) பாகியான் என்னும் சீனரொருவர் தென்னாட்டுக்கு வந்திருந்தார். அவர் ஆங்காங்கே தான் கண்டனவும் கேட்டனவுமாகிய வரலாற்றுச் செய்திகள் பல குறித்துள்ளார். அவர் குறிப்பின்படி, அக்காலத்தே தென்னாட்டில் வீறுகொண்டிருந்த அரசு பல்லவவரசெனக் கருதப்படுகிறது. அது கிருஷ்ணை, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களில் பரவியிருந்தது.
அவர் வந்தபோது, குண்டூர் மாவட்டத்திலுள்ள நாகார்ச்சுனி குண்டாவில் ஒரு புத்த விகாரம் இருந்ததென்பது அவருடைய குறிப்புக்களால் விளக்கமுறுகின்றது. அந்நாளை அரசர்களான பல்லவர்கள் வைதிக சமயத்தவராகக் காணப்பட்டனர். ஆயினும் அவர்கள் வேற்றுச் சமயங்களான புத்த சமண சமயங்கள்பால் காய்ப்புக் கொண்டவர்களல்லர், தம்மால் இயன்ற அரசியற் பாதுகாப்பும் உதவியும் புரிந்துள்ளனர்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஹியூன்சாங் என்ற சீனர் ஒருவர் தென்னாட்டுக்கு வந்தார். அவரும் பாகியானைப் போலவே குறிப்புக்கள் பல எழுதி வைத்துள்ளார். அவர் ஆந்திர நாட்டுக்கு வந்தபோது அந்நாட்டில் இருபதுக்குக் குறையாத சங்காராமங்கள் இருந்தன; அவற்றில் மூவாயிரத்துக்குக் குறையாத புத்த துறவிகள் இருந்தனர். வெங்கி நாட்டில் வெங்கி நகர்க்கு அண்மையில் ஒரு புத்த சங்காராமம் இருந்து மிக்க சிறப்புக் கொண்டு திகழ்ந்தது. அமராவதிக்கருகிலுள்ள தரணிக்கோட்டையில் புத்த சங்கங்கள் பல இருந்தன. பின்பு அவற்றுள் பல பாழ்பட்டமையின் அவர் காலத்தே இருபது சங்கங்கள் சிறப்புடன் இருந்தன. அங்கே புத்த துறவிகள் ஆயிரவர்க்குக் குறையாமல் இருந்தனர். அவர்கள் பெரும்பாலார் புத்த சமய மகாசங்கிகமுறையை மேற்கொண்டவர்கள். விசயவாடைக் கருகிலுள்ள குன்றுகளில் பூருவசீலம் அபரசீலம் என்ற இருவகைப் புத்த சங்கங்கள் இருந்தன.

தமிழகத்துச் சோழநாட்டில் புத்த சங்கங்கள் பல இருந்தனவெனினும் அவை பாழ்பட்டுக் கிடந்தன. மிகச் சிலவற்றில்தான் புத்தர்கள் இருந்து வந்தனர். இந்நாட்டின்[22] தலைநகர்க்கருகில் அசோகமரத்தோப்பும், புத்தர் இருந்து அறவுரை வழங்கும் பீடிகைகளும் இருந்தன.
-----
[22]. இத்தலைநகர் நெல்லூராக இருக்கலாமெனப் பெர்க்கூசன் (Fergusson) கருதுகின்றார். அஃதுண்மையாயின், சோழநாட்டின் பரப்பு நெல்லூர் மாவட்டத்தையும் தன் கண் கொண்டிருந்தமை தெளிவாம்.
-------------

இனித் தமிழ் கூறும் நல்லுலகம் எனப்படும் தமிழ் நாட்டுள் நுழையின், வடக்கில் காஞ்சிமாநகர் இனிய காட்சி வழங்கும். இக்காஞ்சிநகர் கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டிலேயே கல்வி சிறந்த புகழெய்தி யிருந்தது. புத்த சமய நூலாகிய நியாயபாடியம் எழுதிய[23] வாற்சாயனர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட நாட்டவர் எனப்படுகிறார், திக்கநாகர், தருமபாலர், போதிதருமர் முதலியோர் காஞ்சியைச் சூழ்ந்த தமிழ் நாட்டிற் பிறந்த தமிழ்ப் பெருமக்களாவர். வடநாட்டில் புத்தபெருமான் தோன்றிப் புத்த சமயங்கண்டு மக்கட்குரைத்த அந்நாளில், காஞ்சியிலும் அப்புத்தசமயக் கருத்துப் பரப்பப்பெற்றதெனக் கேள்விவழிச் செய்தி கூறுகின்றது. புத்தபெருமானே காஞ்சிமாநகர்க்கு வந்திருந்து தமது புத்த தருமத்தை இந்நாட்டு மக்கட்கு அறிவுறுத்தினரெனவும் உரைப்பதுண்டு. சிங்கள நாட்டு மகாவமிசமும் பாகியான் எழுதிய குறிப்புக்களும், பல்லவராட்சி தோன்றுமுன்பே, பாண்டிநாட்டில் புத்த சமயம் பரவியிருந்ததெனக் குறிக்கின்றன. மணிமேகலைஎனும் தமிழ்நூல், சேரநாட்டு வஞ்சிமாநகரிலும், சோழநாட்டுக் காஞ்சிமாநகரிலும், காவிரிப்பூம்பட்டினத்திலும், புத்த சமய சங்காராமம் இருந்ததைக் குறிக்கின்றது. அந்நாளில் சோழ வேந்தன் ஒருவனால் காஞ்சிமா நகரில் புத்த சயித்தியம் ஒன்று நிறுவப் பெற்றதென்றும் மணிமேகலை கூறுகிறது. அந்நூலில் அறவண அடிகள் என்பார் மணிமேகலைக்கு உணர்த்திய தருக்கமுறை பின்பு திக்கநாகரென்பவரால் வடநாட்டவர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துணையும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கு வோமாயின், பல்லவராட்சி தமிழ்நாட்டில் தோன்றுதற்குமுன்பே, தமிழகத்துச் சோழநாடு, பாண்டிநாடு, சேர நாடு என்ற மூன்று முடிவேந்தர் நாடு முழுதும் புத்த சமயம் பரவி யிருந்ததென்பது தெள்ளிதாம்.

[23]. ஏனை அருத்த சாத்திரம், காம சூத்திரம் முதலிய வட நூல்களை வழங்கிய வாற்சாயனர் இவரின் வேறாவர் என்பர்.
-------------

பல்லவர் காலத்தில் தமிழகத்து வந்த ஹியூன்சாங் என்பவர் எழுதியுள்ள குறிப்புக்களுள் சில காஞ்சி மாநகரைப் பற்றியுள்ளன; “காஞ்சியைச் சுற்றியுள்ள நாடு திராவிடநாடு எனப்படும்; நிலம் மிக்க வளஞ்சிறந்து பெரும் பொருளை விளைவிக்கின்றது: நாடு மிக்க வெப்பமாயிருப்பினும், நாட்டில் வாழ்பவர் மனவலியுடையராவர்; உண்மையொழுக்கங்களில் கடைப்பிடியும் கல்வி கேள்விகளாற் சிறக்கும் புகழும் உடையவர்; இந்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட சங்காராமங்கள் உள்ளன; பத்தாயிரவருக்கு மேற்பட்ட குருமார்கள் தேரவாத நூல்களைப் பயில்கின்றனர். சைனருள்ளிட்ட ஏனையோர் கோயில்கள் எண்பதுக்குக் குறையாமல் உள்ளன. சில பகுதிகளில் திகம்பர சைனத்தைப் பின்பற்றுவோர் பலர் இருக்கின்றனர்.

ததாகதர் (புத்தர்) தாம் வாழ்ந்த அந்நாளில் இப்பகுதிக்கு அடிக்கடி வந்து போவரென்றும், அவர் உரைத்த அறவுரையால் பலர் புத்தர்களாயினரென்றும் கூறுகின்றன்ர். புத்த மன்னனான அசோகனும் இக்காஞ்சிமா நகரைச் சூழ்ந்த பகுதியில் தன்னுடைய அறங்கூறும் தூண்களை நிறுவினன் என்றும் சொல்லுகின்றார்கள். அவற்றுள் பல இப்போதும் உள்ளன. நாலந்தா பல்கலைக் கழகத்தில் தலைமைப் புலமை நடாத்திய சீலபத்திரருக்கு முன்னோனாகிய தருமபாலன் பிறந்த ஊர் இக்காஞ்சியம் பதியே. பாண்டிநாட்டில் சிலர் புத்தனோதிய அறங்களை மேற்கொண்டொழுகுகின்றனர். ஆயினும், பலர், வாணிகத் துறையில் பேரார்வத்தோடும் விருவிருப்போடும் உழைத்துப் பொருளிட்டுவதில் கண்ணும் கருத்துமாயுள்ளனர். பாண்டி நாடு முழுதும் புத்த சயித்தியங்கள் உள்ளன வெனினும், புத்ததருமம் அருகி வருகிறது”[24] என்று கூறுகின்றன. ஹியூன்சாங் குறிப்புக்களே, “காஞ்சிக்கருகில் நூறடிக்கு மேற்பட்ட உயரமுடைய அசோக மரங்கள் கிறைந்த (சங்க) ஆராமம் ஒன்று உளது; இங்கே தான் புத்தர் திர்த்தங்கரர்களைச் சொற்போரில் வென்று

அவருட் பலரைத் தமது சங்கத்திற் சேர்த்துக் கொண்டனர்; அவர்க்கு முன்னேய நான்கு புத்தர்களும் இருந்த இடங்களும் நடந்த சங்கங்களும் சீரழிந்து கிடக்கின்றன.”[25] என்றும் கூறுகின்றன.

மத்த விலாசம் என்பது மகேந்திரவன்மன் எழுதிய பிரகசன நாடகமென்பது அறிஞர் தெரிந்த செய்தி. அதன்கண் புத்த விகாரமொன்று குறிக்கப்படுகிறதன்றோ; அந்த விகாரம், இங்கே ஹியூன்சாங் குறித்துள்ள குறிப்புக்களிற் காணப்படும் புத்த விகாரமாக இருக்கலாம் என்பர். மத்த விலாச பிரகசனத்தில் வரும் தேவசோமன் என்னும் புத்தனால் இந்த விகாரம்[26] இராஜ விகாரம் எனப் படுகிறது. எனவே, இது பழைய வேந்தருள் ஒருவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தேற்றம். பழையோருள் சோழ வேந்தருள் ஒருவனான இளங்கிள்ளியென்பான் இப்புத்த சைத்தியத்தைச் செய்து வைத்தான்[27] என்று மணிமேகலை கூறுகிறது.

இனி, இந்த இராஜ விகாரம் சுற்றுப்புறங்களிலுள்ள சங்கங்கள் பலவற்றிற்கும் தலைமைச் சங்கமென்றும், அவ்ற்றின் வருவாய் இதற்குரியதென்றும், ஒருகால் தனதாசனென்னும் வணிகன் மனைவி புத்த சங்கத்தைச் சேர்ந்து பெரும்பொருளை வழங்கினாள் என்றும் தேவ சோமன் கூற்றில் வைத்து மத்த விலாசம் கூறுகிறது. மணிமேகலை காலத்தேயே இதற்குப் பெரும்பொருள் வழங்கப்பெற்றதை அந்நூலே கூறுகிறது. இதனால் மகேந்திரவன்மன் காலத்தில் காஞ்சிமாநகர்க்கண் இருந்த புத்த சைத்தியம் மிக்க செல்வத்தால் பெருமை பெற்றிருந்ததென்பது தெளிவாகிறது.

-------
[24]. Be{l Records, Vol. II. page. 228-30.
[25]. Watters. VoI. II. p. 236.
[26]. மத்த. பிரக. பக் 12 “Yavadidanim Raja Vihara meva gaechami”.
[27]. “தொடுகழற்கிள்ளிதுணையிளங்கிள்ளி.பைம்பூம்போதிப் பகவற்கியற்றியசேதியம்” (மணி. 28: 172-175) என்று வரும்.
-------------------

தென்னாட்டிற் பரவிய புத்த சமயம் மகாயானமென்றும், அதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நாகார்ச்சுனர் கொணர்ந்தனரென்றும், அக்காலத்தே தென்னாட்டு வேந்தனொருவனும் பிராமணர் பத்தாயிரவரும் மேற்கொண்டு பவுத்தராயினரென்றும் நாகார்ச்சுனர் வரலாற்றால் அறிகின்றோம். புத்த யோகவாதம் மணிமேகலை காலத்தில் விளக்கப்பெற்று நிலவ, அதனைத் திக்கநாதர் பின்பு வட நாட்டிற் பரப்பினரென்றலும் உண்டு. ஹியூன்சாங் வந் திருந்தபோது ஈழநாட்டிலிருந்து புத்த துறவிகள் முந்நூற்றுவர் வந்தார்களெனவும், ஹியூன்சாங், அவர்களோடு கலந்து அளவளாவினர் எனவும்[28] கூறுவர்.

ஹியூன்சாங் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய பவுத்தம் தேரவாதமாகும். தேரர்கட்கு நூறு சங்காராமங்கள் உண்டு. தேரர் பத்தாயிரவருக்குக் குறையார். தியானவாதம் என்றொரு பிரிவும் தென்னாட்டுப் பவுத்தத்தில் உண்டு. இதனை, கி.பி. 527-இல் முதன்முதலாகச் சீன நாட்டுக்குக் கொண்டு சென்றவன் போதி தருமன் என்னும் காஞ்சி நகர வேந்தன் ஒருவனுடைய மூன்றாம் மகன்.

இவ்வாறு தென்னாட்டினின்றும் வட நாட்டுக்குச் சென்று சிறப்புமிக்க திராவிடப் புத்தருள், திக்கநாகனர் சிற்ந்தவராவர். பல்லவவேந்தன் ஒருவனுடைய ஆட்சியில் உயர் நிலைப் பதவியில் இருந்த ஒரு தலைவனுடைய முத்ல் மகன் திக்கநாகன். இவர் வடமொழியில் வல்லுநராகி நாலந்தா பல்கலைக் கழகம் சென்று அங்கே தமது சொல்வன்மையால் பெருஞ் சிறப்புற்றார். அவர்க்குப்பின் அவருடைய மாணவரான தருமபாலர் என்பார் அப் பல்கலைக் கழகத்தே மாணவராயிருந்து பின்னர் அதற்குத் தலைவராகவும் விளங்கினார். தருமபாலருடைய மாணவர் சீலபத்திரர் என்பவர். அவர் சிறப்புற்ற நாளில், தென்னாட்டிலிருந்து சென்ற பார்ப்பனனொருவனுடன் பல நாட்கள் அரிய சொற்போர்கள் நடத்தினரென்றும், முடிவில் சீலபத்திரர் வெற்றி பெற்றாரென்றும் ஹியூன்சாங் கூறியுள்ளார்.
----
[28]. Life of Hiuen Tsang by Beal. p. 139.
-------------

இத்துணைச் சிறப்புற்று விளங்கிய புத்த சமயத்தைப் பற்றிக் கூறும் பாகியானோ ஹியூன் சாங்கோ பிறரோ அக்காலத்தே இச்சமயம் எவ்வகையில் வேந்தர்களுடைய ஆதரவு பெற்றிருந்தது எனக்கூறுகின்றிலர். முதல் மகேந்திரன் காலத்துக்கு மிகமிகத் தொல்லோரான பல்லவ வேந்தர்களுட் சிலரும் களப்பிரரும் தமிழ் வேந்தரும் ஆகிய பண்டை வேந்தர்களின் அரசியலாதரவு இருந்திருக்க வேண்டும். புத்தவன்மன் என்பது முதலாக வரும் வேந்தர் பெயர்கள் இவ்வாறு நினைத்தற்கு இடந்தருகின்றன. அரசியலாதரவு இல்வழி, புதுச் சமயமொன்று நிலைபேறு கொள்வதென்பது எளிதன்று என்பது அக்காலநிலையினைக் காண்பார் இனிதறிவர். ஒரு காலத்தில் அரசியலாதரவு பெற்று நிலைபேறு கொண்ட புத்த சமயம், கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளை எய்துதற்குள் தன் செல்வாக்கினை இழப்பதாயிற்று. அவருடைய சங்கங்கள் புத்த சமயக் கருத்துக்களை மாணவர்க்கு உரைப்பதும், அவர்கள் துணையாக நாட்டிற் புகுந்து நாட்டவர்க்குப் புத்த தருமத்தை விரித்துரைத்துப் பரப்புவதும் ஏனைச் சமயத்து அறிஞர்களோடு சொற்போர் செய்வதுமே அவர்க்ள் பெரும்பாலும் மேற்கொண்டிருந்த கொள்கைகளாகக் காணப்படுகின்றன. முடிவாக நோக்குமிடத்து நால்வர் கால்த்தின் தொடக்கத்தில் பெளத்த சங்கங்கள் மிகச் சிலவாகவும் புத்தர்களின் தொகை போதிய அளவு குறைவாகவும் இருந்தன என்ருெழிவது ஈண்டைக்கு அமைவதாம்.

இனி, அதனையடுத்துப் பேசப்படும் சமண் சமய நிலை யினைக் காண்பாம்.

சமண சமய நிலை

பெளத்த சமயம் போலச் சமண் சமயமும் தென்ன்னாட்டிற் புதிது புகுந்த வேற்றுச் சமயமாகும். இதன் வரலாறு கண்டவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலைகளிற் காணப்படும் சமண சமயம், தன்னை யடுத்துவந்த மூன்று நான்காம் நூற்ருண்டுகளில் தன் வரலாறு தோன்றாதபடி யிருக்கிறதெனக்[29] கூறுகின்றனர். இதற்குக் காரணம் அக்காலத்தே வேதியருக்கும்.சமணருக்கும் இருந்த பகைமையேயெனவும், அதனால் சமணர் தென்னாட்டில் செல்வாக்குப் பெறுவது அரிதாயிற்றெனவும் வரலாற்றறிஞர் கருதுகின்றனர்.

[29]. Studies in South Indian Jainism. p. 51.
-----------------

விக்கிரமன் என்னும் வேந்தன் இறந்தானாக, கி.பி. 525 அளவில், பூஜ்யபாதர் என்பவருடைய மாணவரான வச்சிரநந்தியென்பவர் ஒரு சமண் சங்கத்தை நிறுவினர்.[30] தேவசேனரென்பார் எழுதிய “திகம்பர தரிசன சாரம்” என்னும் நூல், அச்சங்கம் தென்மதுரையில் நிறுவப் பட்டதெனக் கூறுகிறது. இச்சங்கத்தின் வாயிலாகச் சமண் சமயம் தென்னாட்டிற் பரவிற்றென்பர்.

“உலோக விபாகம்” என்றொரு சமண நூல் மைசூர் கல்வெட்டுத் துறையினரால்[31] கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைப் படியெழுதியவர், தான் பாண நாட்டுப் பாடலிகையில் இருந்து எழுதியதாக அதன்கட் குறித்துள்ளார். அதனைக் கண்ட திரு. நரசிம்மாச்சாரியார், “பாடலிகா” என்பது இப்போதுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்று குறிக்கின்றார். திருப்பாதிரிப்புலியூர்[32] வடகரைச் சோழ நாட்டைச் சேர்ந்த தாகலின், உலோக விபாகத்துட் கண்ட பாடலிகா வேறு போலும் என நினைக்க இடமுண்டாகிறது. இந்நிலையில் திருமதி மீனாக்ஷியம்மையார் பண்ணுருட்டி யென்பது பாணுருட்டி யென்பதன் மரூஉவாக இருக்கலாமென நினைத்து அதற்கு அண்மையிலுள்ள பாதிரிப்புலியூர் ஒரு காலத்தே பாண நாட்டிலிருந்திருக்கலாம் எனக் கருதுகின்றார். அது பொருத்தமாகவும் உளது.

சங்ககாலத்தில் சித்தூர் மாவட்டத்தின் கீழ்ப்பகுதி பாணனாடாக இருந்தது. இதனை “வடாஅது, நல்வேற் பாணன் நன்னாடு”[33] என மாமூலனரென்னும் சங்கச் சான்றோர் குறித்துள்ளதனால் அறியலாம்.

[30]. J. B. B. R. A. S. Vol. XVII. P. i. p. 74.
[31]. My. A. R. 1909-10. p. 45.
[32]. “வடகரை ராஜேந்திர சோழவளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயம் திருப்பாதிரிப்புலியூர்” (S.I.. Vol. VII. No. 743).
[33]. அகநானூறு. 325.
---------------

இடைக்காலக் கல்வெட்டுக்களும் அப்பகுதியைப் பெரும் பாணப்பாடி யென்றும், அப்பகுதியை யாண்டவர் வாணுதிராயரென்றும் கூறுகின்றன. அக்கல்வெட்டுக்களால், பாலாற்றின் வடகரையிலிருந்த பாணரசு பின்பு தென்பெண்ணைக் கரையிலும் இருந்ததென்றறிகின்றோம். பிற்காலத்தே பாணர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் வாணாதிராய ரென்றும், வாணகோவரைய ரென்றும் நிலவி யிருந்தனர். அதனால் சோழநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் ஒரு காலத்தே பாணரசின் கீழ் இருந்திருக்கலாம்; ஆகவே, பாடலி பாணனாட்டதென உலோகவிபாகத்தைப் படியெடுத்தவர் கூறும் கூற்று ஏற்றுக் கோடற்குரியதே

இந்த “உலோகவிபாகம்” என்ற நூல் படி யெழுதி முடிந்த காலம் சகம் 380 (கி.பி. 458) என்று குறிக்கப்பட்டுளது. அந்நூல் தோன்றிய காலம் அதற்கு முன்னதாம் என்றும், எனவே பாடலிச் சமண் சங்கம் மதுரைச் சமண் சங்கத்தினும், காலத்தால் முற்பட்டதாமென்றும் அறிகின்றோம். இப்பாடலிச் சங்கம் தோன்றிய பின்பு சமண சமயம் தென்னாட்டில் வலிய கால் கொண்டது. இந்த உலோக விபாகமென்ற நூல் தோன்றிய தொருபுறமிருக்க, மகேந்திரவன்ம பல்லவனையும் பாண்டியன் நெடுமாறனையும் திருநாவுக்கரசரையும் தொடக்கத்தில் தன்கண் தழீஇக்கொள்ளும் சால்பும் இச்சமயத்துக்கு அக்காலத்தே உண்டாயிற்றெனில் வேறு கூறுவது மிகை.

தென்னாட்டில் அக்காலத்தே பரப்பப்பெற்ற சமண் சமயம் திகம்பர சமண மாகும். இந்நாட்டில், ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி யென்பாரும் சருவநந்தி யென்பாரும் சமக்கிருதத்திலும் பிராகிருதத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கினர். ஏழாம் நூற்றாண்டில், பாடலிச் சமண் சங்கத்தில் மருணீக்கியார் தலைமை தாங்கினர்.

உலோக விபாகத்தின் இறுதி மூன்றாம் பாட்டு, இந்த நூல் சகம் 380-இல் முடிவுற்றதாகக் கூறுகிறது. இதனைத் திட்டவட்டமாக முடிவு காண்பதில் அறிஞர்களிடையே ஒத்த முடிவு எய்திற்றிலதாயினும், இஃது ஐந்தாம் நூற்றாண்டினது என்பதில் வேறுபடுவார் இலர். இக்காலத்துப் பல்லவ வேந்தன் இரண்டாம் நரசிங்கவன்மனாவான். இதனை, உலோக விபாகம், “சகம் 380-ல் காஞ்சி வேந்தனை சிம்மவன்மன் காலத்தில்”[34] என்று குறிப்பதனால் தெளியலாம்.

பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் இச்சங்கத்தவரது வடமொழிப் புலமையில் பெருமதிப்புக்கொண்டிருந்தான். அவனும் சிறந்த வடமொழிப் புலவனாதலால், சங்கத்தின்பால் அவனுக்குப் பேரன்புண்டாயிற்றெனின் அது புனைவுரையாகாது. சங்கத்துச் சமண சான்றோர்க்கும் அவன்பால் பேரன்புண்டாயிற்று. அவர்கள் மகிழ்வுற அவன் மத்த விலாச பிரகசனத்தை யெழுதியிருத்தல் கூடும். அக் காலத்தே மருணீக்கியார் தருமசேனரெனப் படுவதின் நீங்கிச் சைவரானதும், அவரைத் தொடர்ந்தே மகேந்திரவன்மன் சைவனானதும் இச்சங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயின. அப்போதைய சமணர்கள்பால் காணப்பட்ட குறைகளை நாவரசர் நாடெங்கும் சொல்லிப் பரப்புவாராயினர்; அவரோடு ஞானசம்பந்தரும் சேர்ந்து நாட்டில் சமண சமயத்தை எதிர்த்துப் பாட்டாலும் உரையாலும் சமயப் பணி புரியலாயினர். சைவனாகிய முதன் மகேந்திரன் பாடலியிலிருந்த சமண்பாழிகளையழித்து, அதனால் கிடைத்த பொருளைக் கொண்டு திருவதிகையில் குணதரேச்சுரம் எனத் தன் பெயரால் சிவன் கோயிலொன்று கட்டினான். இவ்வகையால், பாடலியிலிருந்த சமண் சங்கம் ஒழிந்து போவதாயிற்று. சமண சமயம் மக்களிடையே செல்வாக்கிழந்தது. சமண் சான் றோரும் குன்றுவராயினர்.

மைசூர் நாட்டில் வாழ்ந்த திகம்பர சமணர், “சமண் சங்கம் நான்கனுள் ஜினகாஞ்சியொன்று” என்று[35] குறித்துள்ளனர். ஜினகாஞ்சியென்பது காஞ்சிபுரத்துக்கு அண்மையில் இரண்டுகல் தொலைவில் வேகவதியாற்றங்கரையிலுள்ள திருப்பருத்திக்குன்றம் எனப்படும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றனர்.

இத்திருப்பருதிக்குன்றத்தையும் இங்குள்ள கோயில்களையும்பற்றியெழுதிய திரு. T. N. இராமச்சந்திரன் என்பார், “இங்குள்ள கோயில் இரண்டனுள் ஒன்றாகிய சந்திரபிரபா கோயில் பல்லவர்காலத்து வேலைப்பாடமைந்துள்ளது; அதனaல் அதனை நந்திவன்ம பல்லவன்கட்டியிருக்கலாம்” என்று கூறுகின்றார். அப்பல்லவன் சமய வேறுபாடு கருதாத வேந்தனாதலால் அவன் காலத்தில் சமணர்கட்குத் தீங்கில்லையாக வேண்டும்; மேலும் அவன் காலத்தே வடார்க்காடுமாவட்டத்து ஆர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்தனர். கற்குகைகள் பல அங்கே[36]உள்ளன. அம்மாவட்டத்து வெடால் என்னும் ஊரிலுள்ள[37] கற்குகை சமண் பாழியாக இருந்திருக்கிறது. இது இடைக்காலச் சோழருள் முதலாதித்தன் காலத்தும் இருந்திருக்கிறது. இதனை.திரு. இராமச்சந்திரன் கூறியது பொருத்தமாகவேயுளது.

புதுக்கோட்டை நாட்டில் சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தாமலை முதலிய இடங்களில் குகைகள் அமைத்து அங்கே சமண் சான்றோர்கள் வாழ்ந்திருக்கின்றனர். மகேந்திரவன்மனுடைய கல்வெட்டுக்களும் அந்நாட்டுக் குடுமியான்மலை முதலிய இடங்களில் உள்ளன. இவற்றைக் கொண்டு நோக்குமிடத்து, முதல் மகேந்திரன் சைவனாகிச் சமண் சமயத்தின் வேறுபட்ட கருத்துடையனாகவே, அவன் சலுகை குன்றுவது கண்ட சமண் சான்றோர் மக்கள் வழங்குவதில்லாத இடங்களில் குகை யமைத்து வாழலுற்றனர் போலும் என நினைத்தற்கு இடமுண்டாகிறது.

--------
[34]. Archeo. Rep. of Mysore. 1909-10. p. 45.
[35]. Intl. Ant. Vol. XXXII. p. 460.
[36]. Ep. Ind. IV. p. 137.
[37]. A. R. No. 81 of 1908. 3. A. R. No 82 & 84 of 1908.
----------------

பல்லவ பாண்டியர் காலத்துச் சைவ சமய நிலை


தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு உருவான தொடக்கம் தோற்றுவித்து நிற்கும் சங்க இலக்கிய காலத்தே சிவனை வழிபடும் சமயமாகிய சைவம் நிலவியிருக்கிற தென்பதைச் சங்க இலக்கிய வரலாறு காட்டுகின்றது. எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளைத் தென்னாட்டவர் சிவன் என்று சொல்லி வழிபடுவர். இதனைத் திருவாதவூரடிகள், “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று குறிப்பது தமிழறிஞர் பலரும் சால அறிந்ததொன்று. மேனாட்டாராய்ச்சியாளருள் கிரை ர்சன், சர் ஜான் மார்ஷல், அறிஞர் எர்னஸ்டு மாக்கே. H. M. பிரெயில்ஸ் போர்டு முதலியோர் சிவனை வழிபடும் சமய நெறி திராவிடருடையதென்று துணிந்துரைத்துள்னர். தென்னாட்டைத் திராவிட நாடு என்றும் அந்நாட்டவரைத் திராவிடர் என்றும் உலக அறிஞர் பலரும் ஒருமுகமாகக் கூறுவது உண்மை. ஆகவே சிவநெறியாகிய சிவ வழிபாட்டுச் சமயம் தென்னாட்டுக்குச் சிறப்பாக உரியதாதல் தெளியப்படும். முழுமுதற் கடவுளாகிய சிவத்தைச் சைவனென்றும் வழங்குவதுண்டு. அதனால் சிவ நெறி சைவமென்று வழங்குவதாயிற்று. கி. பி. இரண்டாம் நூற்றாண்டினதெனப்படும் சிலப்பதிகாரத்தை அடுத்து நிற்கும் மணிமேகலை சைவ சமயத்தைக் குறித்துரைக்கின்றது. இது கொண்டு சைவ சமயம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத் தொடக்கத்தே தென்னாட்டில் நிலவியிருந்த தொன்மைச் சமயமென்றும், அடுத்து வந்த புத்த சமண சமய காலங்களிலும் இது நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்ததென்றும் நாட்டு வரலாறு நன்கு கூறுகின்றது.

பல்லவ பாண்டியர் காலத்தில் தென்னாட்டில் நிலவிய சைவ சமயம் மக்களுடைய வாழ்க்கையோடு பிரிப்பற ஒன்றுபட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அரசியல் நீதி முதலிய துறைகட்கும் சைவக்கோயில்களே பெருநிலையங்களாய் விளங்கின. கோயில்களில் கல்வியும் ஏனைக்கலைகளும் ஒருசேர வளர்க்கப்பட்டன. கோயில்களை நடுவிடமாகக்கொண்டே மக்களின் நாட்டுவாழ்வும் அரசியல் வாழ்வும் இயங்கின. சுருங்கச் சொல்லுமிடத்து மக்களுடைய இம்மை மறுமையென்ற இருவகை வாழ்வுக்கும் சைவக் கோயில்களே தலைமை நிலையங்களாய் நலம் புரிந்து வந்தன என்பது மிகையாகாது.

பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாடு, தொண்டை நாடு, சோழநாடு, பாண்டியநாடு, மலைநாடு, கொங்குநாடு என ஐந்து பெருநாடுகளாகப் பிரிந்திருந்ததென்பது முன்பே காணப்பட்டது. இவற்றுள் மலைநாடும் கொங்கு நாடுமொழிய ஏனை மூன்று நாடுகளும் பொதுவாக நல்ல வளமுடையனவாகும். அம்மூன்றிலும் நீர்நில வளத்தாற் சிறப்புற்றது காவிரி பாயும் சோழநாடு. நாட்டு மக்களுடைய வாழ்வை நன்னெறிப்படுத்தற்கண் முற்பட்டு நின்ற கோயில்களும் அம்முறையே சோழநாட்டில் மிக்கும் ஏனையவற்றில் அந்த அளவிற் குறைந்தும் நிற்பன வாயின. இப்போது கிடைத்துள்ள சான்றுகளைக்கொண்டு நோக்கின் சோழநாட்டில் சிறப்பு மிக்க கோயில்கள் 190-க்குக் குறையாமலும், தொண்டை நாட்டில் 32-ம் தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டிற்கும் இடைப் பகுதியாகிய நடுநாட்டில் இருபத்திரண்டும், பாண்டிநாட்டில் பதினான்கும், கொங்கு நாட்டில் ஏழும், மலைநாட்டில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவற்றின் வேறாக, வட நாட்டில் ஐந்தும் துளுநாட்டில் ஒன்றும் அந்நாளில் சிறப்புற்ற கோயில்களாக இன்று நாம் காணக்கிடக்கின்றன. இக்கணக்கினை யெடுத்தற்கு இடமாகிய திருமுறைகளில் 250 வைப்புக் கோயில்கள் உள்ளன.

நடுநாடு என்றது பல்லவர்க்குப் பின் தோன்றி வல்லரசாய் மேம்பட்ட சோழர் காலத்தில் உண்டாகியது. இது பல்லவர் காலத்தில் திருமுனைப்பாடி நாடு என நிலவிற்று. இது, திருக்கோவலூரை மேற்கெல்லையாகக் கொண்டு தென்பெண்ணையாறு கடலொடு கலக்கும் துறைவரையில் அதன் இரு மருங்கும் நின்ற நாட்டுப் பகுதியைத் தன்கட் கொண்ட வளமிக்கதொரு சிறுநாடாகும்.

இக்காலத்தே நிலவிய திருமுறையாசிரியர்களான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவர்பாட்டுக்களால் தமிழகத்தில் அந்நாளில் நிலவிய கோயில்கள் 530-க்குக் குறையாமல் உள்ளமை தெரிகிறது. அரசியற் கல்வெட்டுத் துறையினரால் இதுவரைப் படியெடுத்துள்ள கல்வெட்டுக்களை நோக்கின், தமிழ்நாட்டிற் பேரூர்கள் எத்துணையுண்டோ அவற்றை விட அத்துணை இரட்டிப்பான கோயில்கள் உளவாதல் தெளிவாகிறது.

இவ்வண்ணம் சைவக் கோயில்கள் நாடுமுழுதும் பேரூர் தோறும் நின்று மக்கள் வாழ்வைத் தம்மோடு பிணித்து நின்ற காலம், பல்லவர்களும் பாண்டியர்களும் இடைக்காலச் சோழர்களும் தங்கள் ஆட்சியை நடத்திய காலமாகும். நாட்டினது ஆட்சிமுறையும் கோயில்களின் வாயிலாக நாட்டில் இனிது இயங்கியது அக்காலமே. சங்ககால வேந்தர்கள், புலவர்களைப் பேணுமாற்றால் இயற்றமிழையும், பாணர்களால் இசைத்தமிழையும், கூத்தர் களால் நாடகத்தமிழையும் வளர்த்தாராக, இடைக்காலத்துப் பல்லவரும் பாண்டியரும் சோழரும், இவர்களை அடி யொற்றிப் பிற்காலப் பாண்டியரும் விசயநகர வேந்தரும் இக்கோயில்களின் வாயிலாக இயலிசை நாடகங்களை இறவாது பாதுகாப்பாராயினர். சைவ இலக்கியங்களும் பேணற்பாடு பெற்றன.

இனி, இக்காலத்தே சைவ இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றைக் காண்டற்கு முன், இவற்றுள் முன்னணியில் திகழும் திருஞானசம்பந்தர் முதலிய அருட் சான்றோர்கள் காலத்து வேந்தர்களான பல்லவர்கள் ஆட்சியில் கல்வி நிலை இருந்த திறத்தை முதற்கட் காண்பது இன்றியமையாததாகும். பல்லவர்கள் தமிழ் நாட்டவரல்லரென்பதும், காலஞ் செல்லச் செல்லப் படிப்படியாக வடநாட்டிலிருந்து தென்னாடு புகுந்து தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் பரவியவரென்பதும் அவர்கள் வரலாற்றால் அறியப்படுகின்றன. எனவே, அவர்கட்குத் தமிழ் வேற்றுமொழி யென்பதும் வடமொழி உரிமைமொழி யென்பதும் வெளிப் படை. ஆகவே அவர்கள் ஆட்சியில் வடமொழியே பெரிதும் பேணி வளர்க்கப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பல்லவர்கள் காலத்தில், பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் மேன்மையுற்றுத் திகழ்ந்தனர். அவர்கள் வழங்கிய செப்பேடுகள் பலவற்றிலும் மெய்க்கீர்த்திகளெல்லாம் வடமொழியிலேயே பொறிக்கப் பெற்றன. பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் ஒரு சிறந்த வடமொழிப் புலவனாவான். அவன் மத்த விலாச பிரகசன மென்ற நாடகத்தை யெழுதியவன். பகவத் அஜ்ஜுகம் என்றொரு வடமொழி நாடகமுண்டு; அதனையும் அவனே எழுதினானென்று சில அறிஞர் கருதுகின்றனர். திருவனந்தபுரத்தில் அண்மையில் வெளியிட்டிருக்கும் நாடகங்கள் பல பாசகவி யெழுதியன எனப் படுகின்றன. சொப்பனவாசவதத்தை முதலியன, பாசகவி யெழுதிய நாடகங்களின் சுருக்கமென்றும், அவை பல்லவ வேந்தரவையில் நடித்துக் காட்டற்கென்றே சுருங்கத் தொகுக்கப் பட்டனவென்றும் அறிஞர்கள்[38] கருதுகின்றனர்.

வடமொழியில் வல்ல வேதியர்கட்குப் பல்லவ வேந்தர்களால் மிக்க சிறப்புக்கள் செய்யப்பட்டன. இவ்வேதியருள் நான்கு வேதம் வல்லவர்களும் ஆறங்கம் வல்லவர்களும் கிரம வித்தர்களும் பட்டர்களும் திரிவேதிகளும் எனப் பலர் இருந்திருக்கின்றனர். ஜேஷ்டபாத சோமயாஜி என்பாருக்கு இரண்டாம் நந்திவன்மன் வழங்கிய காசாக்குடிச் செப்பேட்டின் ஒரு பகுதியைத் தமிழ்ப்படுத்திக் காட்டுதும்:

“இராஜாதிராஜ பரமேஸ்வர நந்திவன்ம மகாராஜர் பரமேஸ்வரப் போத்த ராஜ்யத்தை ஆட்சிபுரிகையில் இந்திரனுக்குப் பிரஹஸ்பதி போலப் பல்லவ வேந்தனை நந்திவன்மனுக்குப் பிரதம மந்திரியாகிய பிரம்மஸ்ரீ ராஜர் வேண்டிக்கொண்டபடிக் கடல்போன்ற வேதங்களில் வல்லவனும் சாம வேதத்தைக் கேட்டார் மகிழும்படி ஓத வல்லவனும் ஆறங்கங்களையும் கற்று வல்லவனும் சுருதி மிருதிகளின் அமிர்தத்தைப் பருகினவனும் கருமகாண்ட ஞான காண்டங்களில் வல்லவனும், நாடக அலங்கார சாகித்திய புராண இதிகாசங்களில் வல்லவனும், எல்லாம் வல்லவனும், எல்லாக் கிரியைகளிலும் சிறந்தவனும், நற்குண முடையவனும், அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் பானு போன்றவனும், துவிஜர்களுக்குத் தந்தை தந்தையும், வேதமறிந்து வேதநெறிப்படி நடந்து சந்தோக சூத்திரம் கூறியவாறே நடப்பவனும், வாஜபேய முதலிய யாகங்களைச் செய்தவனும், பாரத்துவாசியும், தண்டகநாட்டுப் பிராமண கிராமமான புண்ணியத்தில் வாழ்பவனும்......ஆகிய ஜேஷ்டபாதசோமயாஜிக் குக் கொடுகொல்லியான ஏகதிரமங்கலம் பிரமதேயமாகக் கொடுக்கப்படுகிறது.”[39]
------
[38]. Pallavas of Kanchi p. 111.
[39]. S. J. Ins. Vol. II. Part. ii p. 358. ff.

வடமொழிப் புலமையும் வடமொழிவாணர்பாற் பெரு மதிப்பும் கொண்டிருந்ததனால், பல்லவ வேந்தர் கரணிசுதன் என்றும் வான்மீகியென்றும் செப்பேடுகளிலும் பிறவற்றிலும் பாராட்டப்பட்டனர். பல்லவ வேந்தரவையில் வடமொழிப் புலவர்கள் எஞ்ஞான்றும் சூழ்ந்து கொண்டிருப்பரெனத் தண்டந்தோட்ட்ச் செப்பேடுகள் குறிக்கின்றன. உதயேந்திரச்செப்பேட்டையெழுதிய பரமேஸ்வரனும், தண்டந்தோட்டச் செப்பேட்டையெழுதிய உத்தரகர்ணிகனும், காசாக்குடிச் செப்பேட்டை யெழுதிய திருவிக்கிரமனும் அக்காலத்தே சிறந்த வடமொழியறிஞராவர்.

இவ்வாறு வடமொழிப்புலவர்கட்குப் பொன்னும் பொருளும் நிலமும் ஊரும் தந்து சிறப்பித்த பல்லவ வேந்தர்கள், கல்லூரிகள் நிறுவி அவற்றின் வாயிலாக வடமொழியறிவு நாட்டில் பரவச் செய்தனர். இக்கல்லூரிகள் கடிகைகள் எனவும் வழங்கும். இக்கடிகைகளுள் காஞ்சிமா நகரிலிருந்த கடிகை மிக்க சிறப்பு வாய்ந்தது. காஞ்சிக் கடிகையின் பழமையினை யாராய்ந்தவர், அது கி.பி.நான்காம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறதென்பர். கடம்ப வேந்தனை மயூரசன்மன் என்பான் காஞ்சிக் கடிகையிற் சேர்ந்து கல்வி பயின்றவன்[40] என்பர். காசாக்குடிச் செப்பேடுகளும் வேளுர்ப்பாளையம் செப்பேடுகளும் இக்கடிகையைக்[41] குறிக்கின்றன.

இக்கடிகையில் பெரும்பாலும் வேதியர்களே கல்வி பயின்றனர். அவர்கட்கு வேண்டும் வேதங்களும் இங்கே கற்பிக்கப்[42] பெற்றன. கற்பித்தோரும் கற்றோருமாகிய இரு திறத்தாரும் வேதியர்களேயாவர். கடம்ப வேந்தனை மயூரசன்மனும் அவனுடைய ஆசிரியரான வீரசன்மரும் வேதவேதாங்கங்களைக் கற்று ஓரள்வு வல்லமை பெற்ற பின்னரே காஞ்சிக் கடிகைக்கு வந்து கல்வி பயின்ற்னரென்பர். இதனால் இக்கடிகையில் கற்பிக்கப்பட்ட வடகலையின் பொதுநிலை, மிகவுயர்ந்த நிலையினை- யுடையதென்பது நன்கு விளங்கும்.

பல்லவ வேந்தர்கள் இக்கடிகையைச் சிறப்பாகப் பேணி வந்தனர். ஒருகால் சத்தியசேனன் என்பவன் இக்கடிகையைக் கைப்பற்றிக் கொண்டானாக, கந்த சிஷ்யன் என்ற பல்லவ வேந்தன் அவனப்பொருது வென்று கடிகையைப் பண்டுபோற் சீர்பெறச் செய்தான். முதன் மகேந்திரவன்மனும்[43] இதனைப் பெரிதும் விரும்பி வேண்டுவன செய்து உதவினன். இராசசிம்ம பல்லவன், “நான்கு வேதங்களை யும் கற்பிக்கும் இக்கடிகையை நன்கு பரிபாலித்தான்” என்று காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இவ்வகையில் இக்கடிகையாருக்கும் பல்லவ வேந்தருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகியிருந்தது. அதனால், வேதம் கற்பான் வந்த மயூரசன்மனுக்கும் பல்லவருக்கும் பகைமையுண்டாயிற்று. ஒருகால் பகைவர் பொருது பல்லவவரசைக் கவிழ்க்க முயன்றபோது இக்கடிகையும் பகைவரால் சீரழிவதாயிற்று. அக்காலத்தில் வேந்தரிடையே நிகழ்ந்த போர்கள் கோயில்கட்குக் கேடு செய்ததில்லை. பிற்காலத்தே கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்களாய் மாறியது காரணமாகப் பகைவர் கைப்பட்டுச் சீர் குலைந்தன.

இது நிற்க, பல்லவர் காலத்தே இக்கல்விக் கடிகை பகைவரது தீச் செயல்கட்கு இரையானதற்கு, அரசியலில் தொட்ர்பு வைத்துக் கொண்டதே காரணமாகும். நந்திவன்ம பல்லவமல்லனைப் பல்லவ வேந்தனாகக்கைக் கொண்டு வந்த காலத்தில் இக்கடிகையாரும் பெரும் பங்கு கொண்டிருந்தனர். பல்லவமல்லனுக்கு முன்பு காலற்றுப்போக இருந்த பல்லவவரசுக்கு இக்கடிகையைச் சேர்ந்த தரணி கொண்ட போசர் இரணியவன்மனையடைந்து பல்லவமல்லனை வேந்தனாகத் தருமாறு வேண்டிக்கொண்டதும், அதற்கிசைந்த இரணியன் பல்லவமல்லனைக் காஞ்சிக்குப் பல்லவவரசனாகச் செல்ல விடுத்ததும் முன்பே கூறப் பட்டன. பகைவரால் இக்கடிகைக்குண்டான கேடு இரண்டாம் நரசிங்கவன்மன் காலத்தில்தான் நீக்கப்பெற்றது; சிறப்பும் மிகப் பெற்றது.

---
[40]. Indian Culture through the ages. p. 243. Note I.
[41]. S. I. Ins. Vol. II P. iii. p. 349; Ibid. P. V. p. 508.
[42]. Ep. Car. Vol. V. No. 178 p. 462. S. I. I. Vol. II. P. iii
[43]. S. I. I. Vol. II. P. iii. 349 & 356.
----------------

திருவல்லம் கல்வெட்டொன்றையும், பிரமதேசத்துக் கல்வெட்டுக்களையும் கருவியாகக் கொண்டு, வடவார்க்காட்டுச் சோளிங்கபுரத்துக்குக் கடிகாசலம் என்றொரு பெயரிருப்பது காட்டி, அங்கே ஒருகடிகை இருந்திருக்கலாமென்று காண, டாக்டர் மீனாட்சியார் பெரிதும் முயன்று, அங்கே வைணவ பிராமணர் கடிகையொன்று பல்லவமல்லன் காலத்தில் இருந்திருக்கக் கூடுமென்று நினைக்கின்றார்.

கடிகையென்பது பிராமணரிருக்குமிடமெனவும். இங்கே கல்வி கேள்வி யாராய்ச்சி நடைபெறுமெனவும் கூறுவர். வேதியர்கள் ஒருங்கு கூடி நூலாராய்ச்சி செய்தலும் முறை வழங்குதலும் செய்யுமிடம் “கடிகை ஸ்தானம்” என்று குறிக்கப்படுகிறது. இக்குறிப்புக்களையே கருவியாகக்கொண்டு நோக்குவோமாயின், இக்கடிகைகள் பாண்டி நாட்டுக் கடிகைப்பட்டின முதலிய இடங்களிலும் இருந்திருக்கலாமெனக் கருதுதற் கிடமுண்டாகிறது. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கன்னட நாட்டில் இத்தகைய கடிகைகள் இருந்திருக்கின்றன. இவற்றை அவை கடிகையென்னாது பிரமபுரிகள் என்று குறிக்கின்றன.

கடிகைகள் வாயிலாகவன்றித் தனித்த நிலையில், வட மொழிப் புலமை மிக்குப் பிறர்க்கு அதனைக் கற்பித்தொழுகிய வேதியர்களுக்குப் பிரமதாயம் வழங்கி வட மொழியின் வளர்ச்சியினைப் பல்லவர்கள் பெரிதும் ஊக்கியுள்ளனர். கெளடிலியன் எழுதிய பொருணூலும், வேதம் வல்ல வேதியர்கட்கு நன்கு விளைந்து பெரும் பயன் தரக் கூடிய நிலங்களைத் தேர்ந்து இறையிலி பிரமதாயமாகவேந்தர்கள் வழங்க வேண்டுமெனக் கூறுகிறது.

இப்பல்லவர்கள் மேற்கொண்ட இந்த நெறியையே இடைக்காலச் சோழவல்லரசர்களும் பின்பற்றி வடமொழிவாணர்கட்குப்[44] பட்டவிருத்தியென்ற பெயரால்[45] நிலங்களும் ஊர்களும் இறையிலியாக வழங்கினர். பல்லவருள் இரண்டாம் விஜயகந்தவன்மன் என்பான் காசிப கோத்திரத்துக் கோலசருமன் என்பவன் இரண்டு வேதமும் ஆறங்கமும் கற்றவன் என்பதுபற்றிச் சாத்துவிகவிருத்தி என்னும் பெயரால் ஓங்கோடு என்றவூரைக் கொடுத்திருக்கின்றான். நான்கு வேதமும் ஆறங்கமும் வல்ல ஜேஷ்டபாத சோமயாஜிக்குக் கொடுகொல்லியென்ற வூரைக் கொடுத்தசெய்தியைக்[46] காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது; பல்லவவேந்தர்கள், வடமொழி வல்ல பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றி, நிலமும் வீடும் இறையிலியாகக் கொடுத்து அக்கிரகாரங்கள்[47] ஏற்படுத்தி வடமொழியைப் பரவச்செய்துள்ளனர், தலகுண்டாவென வழங்கும் ஸ்தானு குண்டூரில் முப்பத்திரண்டு வேதியர் குடும்பங்களைக் குடியேற்றி மக்களுக்குக் கல்வி கற்பிக்கச் செய்தனர். இரண்டாம் நந்திவன்மன், கும்பகோணத்துக்கருகிலும் நாகைப்பட்டினப் பகுதியிலும், இரண்டு வடமொழிவல்ல அக்கிரகாரங்களை ஏற்படுத்தினான். தண்டந்தோட்டச் செப்பேடுகள், அதற்கு மேற்கிலுள்ள ஊரைத் தயாமுக மங்கலமெனப் பெயரிட்டுத் தயாமுகனென்னும் வேதியனொருவன் வேண்டுகோட்படி மூன்று வேதமும் மிருதிகளும் வல்ல வேதியர் முந்நூற்றியெண்மருக்கு வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றன.
---------
[44].S. I. Ins. Vo!. III. No. 200 & 223.
[45]. Ep. Ind. Vol. XV. p. 251.
[46]. S. I. 1.vol11 p iii p 358-359.
[47]. Ep. Ind. Vol. III. p. 130-4; Ibid. Vol. IV. p. 170.
-----------
கோயில்களை, வேதமும் வைதிக புராண வரலாறுகளும் விளங்கும் இடங்களாக்கிய முதன்மைப் பணி, பல்லவர் காலத்தில்தான் சிறந்த இடம்பெறுவதாயிற்று. வேதம் ஓதுதற்கென்றே கோயில்களில் கட்டளைகள் (நிவந்தங்கள்) ஏற்படுத்தப்பட்டன. கூரத்துச் செப்பேடுகள்[48] அவ்வூரி லுள்ள வித்தியாவினீத பல்லவேச்சுரத்தில் மகாபார தத்தை மண்டபத்தில் வைத்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்ததாகக் கூறுகின்றன.[49] தண்டந்தோட்டச் செப்பேடுகளிலும் இச்செய்தி காணப்படுகிறது. பாரதத்தைச் சொல்லும் மண்டபத்துக்குத் தண்ணீராட்டுவோரும் (அம்பலந் தண்ணீராட்டுவார்) தீவட்டி நிறுவித் தீயெரிப்பாரும் ஏற்படுத்தி யிருந்தனர். பாகூரில் நிருபதுங்கவன்மனால் ஒரு வடமொழிக் கல்லூரி ஆதரவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லாரி கி. பி. எட்டாம் நாற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டுமென அறிஞர் கருகின்றனர். இப் பாகூர்க் கல்லூரிக்கு ஊர்கள் பிரமதாயகமாக விடப்பட்டிருப்பது நோக்கின்,[50] இது பிராமணர்கட்கென்றே ஏற்பட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. பல்லவர்கள் காலத்தில், வடமொழிக் கல்வி, மேலே கூறிய கோயில்களாலும் கடிகைகளாலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுச் சிறந்தாற்போல, மடங்கள் வாயிலாகவும் வளம்பெற்றுத் திகழ்ந்தது. மடம் என்பது கற்றவர்களும் பிறரும் இருக்குமிடம் என வடமொழி அமரகோசம் கூறுகிறது. கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இம்மடங்கள் தென்னாட்டில் தோன்றியுள்ளன.

தென்னாட்டு மடங்கள் மட்டில் தொடக்கத்தில் காணார் கேளார் முதலியோர்க்கும் துறவிகட்கும் உணவுதரும் அறச்சாலைகளாக இருந்தன. கற்றுவல்ல புலவர்கள் தங்குதற்கும் அக்காலத்தே மடங்கள் இடமாக இருந்துள்ளன. முதல் தந்திவன்மன் காலத்தில், காஞ்சித் திருமேற்றளி யில் முத்தரையனொருவன் திருமேற்றளிப் பெருமானுக்கும், அத்தளியைச் சார்ந்திருந்த மடத்துக்கும் நிவந்தம் விட்டுள்ளான். மடங்கள் கற்றோர் இருத்தற்கும் இடமாதலின், திருநாவுக்கரசர் திருமேற்றளித் திருப்பதியத்தில், “கல்வியைக் கரையிலாதகாஞ்சிமாநகர்” என்றது. இத்திருமடத்திலிருந்த கற்றோரைக் குறித்த குறிப்பாகலாமென அறிஞர் கருதுகின்றனர். இது புதிது தோன்றியதாக இல்லாமையால், முதன் மகேந்திரவன்மன் காலத்தேயே இத்தகைய மடங்கள் தென்னாட்டில் தோன்றியிருக்கக் கூடுமெனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

-------
[48]. S. I, Ins. Vol. I. p. 151.
[49]. S. I. Ins. Vol. II. p.v.
[50]. Ep. Indi. Vol. XVIII. p. ii; S: I. I. Vpl. II. p. v. p. 516.
-------------

நிருபதுங்கவன் மனுடைய இருபத்தைந்தாமாண்டுக் கல்வெட்டொன்றில் காவிரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்டதொரு நிவந்தம், அவ்வூர், “மடத்துச் சத்தப் பெருமக்கள்” கண்காணிப்பிலிருக்க வேண்டுமெனக் கூறுகிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர்கள் காலத்திலும் இந்த மடம். கோயிற் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பேற்றிருந்ததெனப் பிற்காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சத்தம் என்ற சொல்லுக்கு வடநூன் முறைப்படி நூலென்பது பொருள்; ஆகவே சத்தப் பெருமக்களாவார் வடமொழி வல்ல பெருமக்களென்பது தெளிவாம். ஆகவே, வடமொழி வல்லார் தலைமையில் நிலவிய மடங்கள் பல பல்லவர் காலத்தே இருந்தமையும், அவற்றின் வாயிலாக வடமொழி வளம் பெற்றமையும் இனிது உணரலாம்.

விசயகம்பவன்மன் காலத்தில் நிரஞ்சனகுரவரென்பவர்க்குத் திருவொற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அக்குரவர் நிரஞ்சனேஸ்வரம் என்றொரு கோயிலைக் கட்டியதாகவும், அதற்கு அவரே நிலங்கள் விட்டதாகவும் திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது. இரட்ட வேந்தனான மூன்றாம் கிருஷ்ணனுடைய இருபதாமாண்டுக் கல்வெட்டொன்று,[51] நிரஞ்சன குருவின் மாணவரான சதுரானன் பண்டிதரென்பார். சில நிவந்தங்களை நிரஞ்சனேச்சுரத்துக்கு விட்டனரெனவும், அச்சதுரானன பண்டிதர் கேரள நாட்டினரெனவும், அவர் நிரஞ்சன குரவர்பால் துறவு நெறி மேற்கொண்டு அவர்க்கு மாணவராயினரெனவும், நிரஞ்சன குரவருக்குப் பின் சதுரானன பண்டிதரே மடத்துக்குத் தலைவராயினரெனவும் கூறுகிறது. இம்மடங்களும் கோயில்களும், வடமொழி வியாகரணம், வேதாந்தம், பிரபாகரம், மீமாஞ்சை முதலியவற்றையே கற்பார்க்குக் கற்பித்து வந்தன. திருவொற்றியூரில்[52] வியாகரண மண்டபம் என்றொரு மண்டபமிருந்தது. கும்பகோணத்து நாகேஸ்வர சுவாமி கோயிலில்[53]பிரபாகர மீமாஞ்சை கற்பிக்கப்பட்டது.

சைவ இலக்கியங்கள் பல்லவ பாண்டியர் காலத்தில் தமிழ்நாடிருந்த நிலையும் சமயத்துறையில் பௌத்தம், சமணம் இருந்த நிலையும் சைவக் கோயில்களும் மடங்களும் இருந்த நிலையும், அவற்றாலும் வேந்தர்களாலும் வடமொழி பேணப்பெற்று வந்த நிலையும் இதுகாறும் கண்டு வந்தோம். இக்காட்சியில் தமிழகத்துக்கேயுரிய தமிழ்மொழி எந்நிலையில் பேணப்பெற்றது என்பது காணப்பெறவில்லை. தமிழ்நாட்டில் இப் பல்லவ பாண்டியர் காலத்துக்கு முன்பே தமிழ்க்கு ஆக்கமாகும் பணிகள் வீழ்ந்துவிட்டன. பல்லவர்களின் கல்வெட்டுக்களோ பாண்டியர்களின் ஏடுகளோ எவையும் தமிழ் இலக்கியத் துறையையோ தமிழ்க் கல்வியின் வளர்ச்சியினையோ சிறிதும் கூறுகின்றில. கோயிற் சுவர்களிலும் ஒருசில செப்பேடுகளிலும் தொடர்புடைய ஊர்களையும் அவற்றின் எல்லைகளையும், விலையாவணங்கள், உடன்படிக்கை முதலிய செயல் வகைக்குரிய வக்கணைகளையும் தமிழில் பொறித்ததொன்று தவிர, வேறு தமிழிலக்கியத் துறையில் ஒரு நிகழ்ச்சியும் காணப்படவில்லை.

தென் தமிழ்நாட்டுக் கூடல் நகர்க்கண் இருந்ததாகக் கூறப்படும் சங்கத்தையாதல், சங்கத்தின்கண் வளர்ந்த தமிழ் இலக்கியங்களையாதல், தமிழ் பயிலும் கல்லூரிகளையாதல் இக்காலநிலை யறிதற்குப் பயன்படும் சான்றுகளில் காணப்படவில்லை. கி. பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சிறந்து விளங்கிய பல்லவ பாண்டியர்களின் காலம், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளித்த காலமெனக் கூறுதற்கு இயைபொன்றும் இல்லையென்பேமாயின், அது மிகையாகாது. இக்காலத்தே வாழ்ந்த வேந்தர்களும், வேதியர்களும், மடத் தலைவர்களும், சமயப் பணியாளரும், பிற செல்வர்களும், வடமொழி நமது நாட்டில் வளம்பெறப் பரவுதற்கு முயன்றுள்ளனரேயன்றி நாட்டுமொழி வளம்பெறுதற்கு முயற்சி யொன்றும் செய்தாரல்லர். பெருஞ்செல்வ நிலையங்களாய்ச் சிறந்து வந்த கோயில்களிலும் தமிழ் பயிலுதற்கு இடம் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழி செல்வாக்கிழந்து சிறப்புக் குன்றிய காலம் இந்தக் காலமாகும். இந்தக் காலத்தில் வீழ்ந்த செந்தமிழ், இருபதாம் நூற்றாண்டின் செம்பாதி கழிந்தும் தலையெடுத்து, நாட்டவருடைய அரசியல், வாணிகம், சமயம் என்பன முதலிய துறைகளில் சிறந்த இடம் பெற்று இலக்கிய வளம் பெறும் நிலைமையினைப் பெறாதாயிற்று.

கல்லிலும் செம்பிலும் எழுதும் எழுத்துமுறை பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது; எனினும், அதனை இன்றியமையாது சிறந்த முறையாக நிறுவிய முதன்மை பல்லவர்களது என்னலாம். தொடக்கத்தில், கல்லிலும் செம்பிலும் எழுதப்பட்டவை. நாட்டு நடப்பிலிருந்த தமிழ் மொழியிலே இருந்திருக்க வேண்டும். பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டுக்கள் மூன்று உண்டு. என்றும், அவை முறையே திருக்கழுக்குன்றம்.[54] செங்கற் பட்டு மாவட்டத்திலுள்ள வல்லம், புதுக்கோட்டை நாட்டில் உள்ள, திருமயம் என்ற மூன்றிடங்களிலும் உள்ளன என்றும் கல்வெட்டாராய்ச்சியாளர்[55] கூறுகின்றனர்.
-------
[51]. A. R. No. 181 of 1912.
[52]. A. M. Ep. Report for 1913, p. 86
[53]. M. Ep. Report for 1912. p. 65.
[54]. A. R. No, 65 of 1909.
[55]. S, I; Ins, Vol. XII. No. 16.
-----------
அவற்றுள், திருக்கழுக்குன்றத்துத் தமிழ்க் கல்வெட்டு,

‘திருக்கழுக்(கு)ன்(ற)த்துப் பொரு)மா
னடிகளு(க்)குக் கள(த்)தூர்(க்) கோட்டத்
(து)... திருக்கழுக்குன்ற த்
து ஸ்ரீமலைமேல்
(மூ)லத்தானத்து பெருமா
னடிகளுக்கு வழிபாட்டுப்(பு)றமா
க வாதாபிகொண்ட நரசிங்கப்
போத்த(ர)சர் வை(த்)தது”

என வருகிறது. தமிழ்க் கல்வெட்டின் தொன்மையாராய்ந்த அறிஞர், “நந்திவன்ம பல்லவமல்லன் காலமுதற்கொண்டு தான் கல்வெட்டுக்கள். பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவனவாயின; சிலவே வடமொழியில் உண்டாயின. கல்வெட்டுக்களில் தமிழை வழங்கும் முறையைத் தோற்றுவித்தவன் முதன் மகேந்திரவன்மன்; இவன் முன்னோர். பலரும் வட்மொழியில் எழுதினர்” என்று உரைக்கின்றனர்.

பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டில் வடவெழுத்துக்கள் இல்லாமல் இருப்பதை யாவரும் காணலாம். அக்காலத்தே தமிழில் வடசொற்களைப் பெய்து எழுதுவதாயின், வடசொற்களைத் தமிழெழுத்தால் எழுத வேண்டுமேயன்றி வடவெழுத்தையும் சேர்த்துப் பெய்து எழுதலாகாது என்பது தமிழ் வழக்கிலிருந்து வந்த கொள்கை. “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரிஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியரும் வரையறை செய்துள்ளனர். அதனால், பழைய கல்வெட்டுக்களில் வடவெழுத்துக்காணப்படாதாயிற்று. பிற்காலக் கல்வெட்டுக்கள் அந்த வரையறையை உடைத்தெறிந்து விட்டன. வடவெழுத்துக்களும் கல்வெட்டுக்களில் விரவலாயின.- இந்த முறையும் முதற் பரமேஸ்வரன் காலமுதல் நடைபெறுவ தாயிற்று என்பர். வடமொழிக் கல்வெட்டுக்களின் இடையே தமிழ் எழுத்துக்கள், விரவாமல் இருப்பதும், தமிழ்க் கல்வெட்டுக்களில் வடவெழுத்துக்சள் விரவியிருப்பதும் காண்பார், பல்லவர் காலத்தே தமிழ் வழக்கு இலக்கண வரம்பின் வலியிழந்து ஒழிந்த திறத்தை நன்கு அறிவர். அன்று தோன்றிய வலியழிவு, பின்னர்த் தோன்றிய மணிப்பிரவாளமென்னும் நடையைப் பயந்தது. பின்னும் அதுவே, வடமொழியும் மேனாட்டுமொழியும் பிறவும் கலந்து இன்றைய எழுத்தாளரிடையே நிலவும் சவலை நடையைப் பயந்தது என்னலாம்.

சங்க காலத்தில் வேந்தர்களாலும் செல்வர்களாலும் பெரிதும் பேணப் பெற்று வந்த தமிழ், இடையே வந்த களப்பிரர், சளுக்கர், இரட்டர், பல்லவர் முதலியோரால் பேணற்பாடு. இழந்துபோகவே, அவர்வழி நின்ற தமிழ்ச் செல்வரும் பிறரும். தம்முடைய உரிமைத் தமிழை வளம்படச் செய்யும் துறையில் கருத்தூன்றாராயினர். அரசியல் தமிழிலே நடைபெற்றதெனினும், எழுத்து முறையில் தமிழ் வலியிழந்து நிற்பதாயிற்று. சமயத் துறையில் வடமொழியிற் காணப்படும் வேதங்களும், ஆறங்கங்களும், சுருதி மிருதிகளும், புராண இதிகாசங்களும், வடமொழியிலே நிலவின. புறச் சமயத்தவராய் வந்த பௌத்த சமணச் சான்றோர்களும், செல்வாக்குடைய வடமொழியிலும் பிற மொழிகளிலுமே தம்முடைய அறிவுப் பணி புரிந்தனர். செல்வ நிலையங்களாகிய கோயில்களிலும் மடங்களிலும் தமிழ் இலக்கியங்கள் நிலவுதற்கு இடமில்லையாயிற்று. தமிழ் நாட்டில், தமிழ் மக்கட்கு, அரசியல் நீதி முறைகளையும், சமய நூல் வகைகளையும் இனிதெடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் அருகின; இயற்றமிழ் என்ற தமிழ்த்துறை பல்லவர் காலத்தே போதிய ஆதரவு குன்றியது. என்பது தெளியவுணர வேண்டியதொன்றாகும். இதுதான் சைவ இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த செந்தமிழ் நிலை; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றிய காலத்துச் சைவ இலக்கிய நிலையுமாம்.

சைவ இலக்கியங்களைத் தனித் தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித் தந்த ஆசிரியர்களைக் கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை.

கி.பி.7-ஆம் நூற்றாண்டு
1. திருஞானசம்பந்தர் 2. திருநாவுக்கரசர்
3. ஐயடிகள் காடவர்கோன்

கி.பி.8-ஆம் நூற்றாண்டு
1 சுந்தரர் 2.சேரமான் பெருமாள்.
3. ஏனாதிசாத்தஞ் சாத்தனார்
---
கி.பி.9-ஆம்நூற்றாண்டு

1 மாணிக்கவாசகர் 2 சேந்தனார்
3. பட்டினத்தடிகள்
4. பெருமானடிகள்
----------
கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
1 நம்பியாண்டார் நம்பி 2 ஔவையார்
3. வேம்பையர்கோன் நாராயணன் 4. கண்டராதித்தர்
--------
கி.பி.11-ஆம் நூற்றாண்டு
1 நம்பிகாடநம்பி 2கருவூர்த்தேவர்
3.பூங்கோயில் நம்பி 4. திருச்சிற்றம்பலமுடையான்
---------
கி.பி.12-ஆம்நூற்றாண்டு
1. சேக்கிழார் 2. வேணாட்டடிகள்
3. புருடோத்தமநம்பி 4. வாகீச முனிவர்
5. உய்யவந்ததேவநாயனார் 6. சயங்கொண்டார்
7. ஒட்டக்கூத்தர் 8 தமிழ்த்தண்டியாசிரியர்
9. கவிகுமுத சந்திர பண்டிதன் 10. பரசமய கோளரி மாமுனி
11. நெற்குன்றங்கிழார் களப்பாளராசர்
-----------
கி.பி13-ஆம் நூற்றாண்டு
1. சேதிராயர் 2.கல்லாடதேவர்
3. நக்கீரதேவர் 4 பரணதேவர்
5. மெய்கண்டதேவர் 6. அருண்நந்திசிவனார்
7.இளம்பூரணர் 8. பேராசிரியர்
9. அடியார்க்குநல்லார் 10. சேனாவரையர்
11. தக்கயாகப்பரணி-உரைகாரர் 12. பதிற்றுப்பத்து-உரைகாரர்
13. பாரதம் தமிழ் செய்த அருணிலைவிசாகன் 14.பெரும்பற்றப்புலியூர் நம்பி
15.மறச்சக்கரவர்த்தி பிள்ளை 16.பெரியான் ஆதிச்சதேவன்
17. காரணை விழுப்பரையன்
-------
கி.பி.14-ஆம்நூற்றாண்டு
1.மறைஞானசம்பந்தர் 2.உமாபதிசிவனார்
3.நச்சினார்க்கினியர் 4.கச்சியப்ப சிவாசாரியார்
5.பொய்யாமொழிப்புலவர் 6.அருணகிரியார்
7.இரட்டையர் 8:தாயில் நல்ல பெருமாள் முனையதரையன்
---------------------------

2. திருஞானசம்பந்தர்


பிறப்பு வரலாறு

திருஞானசம்பந்தர் சீகாழியில் அந்தணர் குலத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் சிவபாத விருதயரென்றும், தாயார் பகவதியாரென்றும் பெயர் கூறப் படுவர். இவர் கவுணிய கோத்திரத்தைச் சேர்ந்தவர். திருஞானசம்பந்தருடைய பெற்றோர் சிவன்பால் மிக்க அன்புடையவர். புத்த சமண சமயவுணர்வு பெரிதும் பரவியிருந்தமையின், அக்காலத்தே சைவமாகிய சிவநெறி ஒளி மழுங்கியிருந்தமை சிவபாத விருதயருக்குப் பெருவருத்தம் விளைத்தது. அவர் நாடோறும் சீகாழியிலுள்ள சிவபெருமான்பால் சிவநெறியின் வீழ்ச்சியினையும் செந்தமிழின் தளர்ச்சியினையும் எடுத்தோதி, இவற்றை முன்போல் சீரிய நிலையில் நிறுத்தவல்ல நன்மகனை உலகில் தோற்றுவிக்க வேண்டுமென இறைஞ்சி வந்தார்.

சிவபாத இருதயருடைய சிறந்த வழிபாடு விரைவில் அவர் கருத்து நிறைவுறச் செய்தது. அவர் மனைவியார் சின்னாட்களில் கருவுற்றுத் திருஞானசம்பந்தரைப் பயந்தார். ஞானசம்பந்தர் பிறந்து வளரும்போதே சிவன்டால் பேரன்புண்டாகத்தக்க சூழ்நிலையை அவர் தாயார் உண்டு பண்ணினார். அவர் ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தன் பாலைத் தரும்போதெல்லாம் சிவன்பால் மிக்க அன்பு செலுத்துவார். அந்த அன்பு, அவர் பாலில் ஊறி ஞான சம்பந்தர் உடலும் உயிரும் சிவன் பாலுண்டான அன்பு வடிவாய் வளரச் செய்தது.

இவ்வண்ணம் ஆண்டுகள் மூன்று கழிந்தன. ஞான சம்பந்தர் தந்தையால் பிரியாத அன்புகொண்டார். தந்தையாரும் அவர் அழுகை காணத் தரியாதவரானார். ஒருநாள் சிவபாத விருதயர் சீகாழிக் கோயிலில் உள்ள திருக்குளத்துக்கு நீராடச் சென்றார். திருஞானசம்பந்தர் அது கண்டு தாமும் உடன் வர விரும்பும் விருப்பத்தைத் தெரிவித்தார்.

தந்தையார் அவர் அழுகை காணமாட்டாத பேரன்புடையவராதலால், அவர் விரும்பிய வண்ணமே தம்மோடு அழைத்துச் சென்றார். திருக்குளக்கரையில் ஞானசம்பந்தப் பிள்ளையாரை இருக்கவைத்து, அவர் மட்டில் நீர்க்குள் இறங்கி நீராடலானார். சிறிது போது கழிந்ததும் ஞானசம்பந்தர் தந்தையார் வரக்காணாமையால் அழத் தொடங்கினார்.

ஞானசம்பந்தப்பிள்ளையார் அழத் தொடங்கியது. கண்ட சிவபெருமான் உமையம்மையாகிய தம்முடைய தேவியாரை நோக்கி “நின்மார்பிற் பாலைப் பொன்வள்ளத்திற் கறந்து குளக்கரையில் அழுது நிற்கும் சிறு பிள்ளைக்கு ஊட்டுக” எனப் பணித்தருளினார். தேவியாரும் அவ்வண்ணமே செய்துவிட்டு வந்தார். சிறிது போதில் நீராடி முடித்துக்கொண்ட சிவபாத விருதயர் பிள்ளையாரிடம் வந்தார். அவர் திருவாயில் பால் வடிந்திருந்தது. அது கண்டதும், அவர் “உனக்கு இப்பால் தந்தவர் யார்?” என வினவினர். பிள்ளையார் வாளா இருக்க, தந்தையார் சினங்கொண்டு சிறுகோலொன்றைக் கையில் எடுத்து ஓங்கி, ‘எச்சில் மயங்கிட உனக்கு’ இதனை அளித்தார் யார்? அவரைக் “காட்டு” என்று அச்சுறுத்தினர். உடனே ஞானசம்பந்தர். தமது வலக்கையைக் கோயிற் புறமாக நீட்டிச் சுட்டு விரலாற் காட்டித் “தோடுடைட செவியன்” எனத் தொடங்கும் பாட்டைப் பாடலானார். இதைக் கேட்ட சிவபாத விருதயர் அச்சமும் வியப்பும் கொண்டவராய் மருண்டு நின்றார். திருஞானசம்பந்தர் திருப்பதியம் முற்றும் பாடி முடித்தார்.

இச்செய்தி ஊர் முழுதும் பரவிற்று. ஊராரும் பின்பு நாட்டவரும் கண்டு ஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சிவமெனவே கருதிப் பாராட்டி வழிபட்டனர். ஞானசம்பந்தரும் நாடோறும் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை இன்னிசைத் தமிழ் பாடி இறைஞ்சி ஏத்தி வருவாராயினர். ஒரு நாள் சீகாழிக்கு அண்மையிலுள்ள திருக்கோலக்கா என்னும் ஊர்க்குச் சென்று அங்குள்ள இறைவனைப் பாடினர். அப்போது ஆண்டவன் அருளால் அவர்க்கு பொற்றாளம் வந்தது. அவர் காலால் நடந்து செல்வது காணப்பெறாத தந்தையாராகிய சிவபாத இருதயர் அவரைத் தம் தோள்மேற் சுமந்து செல்லலுற்றார்.

ஞானசம்பந்தருடைய தாய்ப்பாட்டனார் ஊர் திருநனி பள்ளியென்பதாகும். சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை அவ்வூர்க்கு எடுத்துச் சென்றார். அங்கேயுள்ள இறைவனை ஞானசம்பந்தர் இனிமையாகப் பாடினார். அது கண்ட உறவினரும் பிறரும் கொண்ட இன்பத்துக்கு அளவில்லை. ஆங்கிருந்து பல மக்கள் வந்து அவரைக் கண்டு வணங்கித் தத்தம் ஊருக்கு வரவேண்டுமென வேண்டினர். அவர்கள் வேண்டுகோட்கிணங்கிய ஞானசம்பந்தர், அருகிலுள்ள பலவூர்கட்கும் சென்று இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவி வந்தார்.

திருஞானசம்பந்தர் சீகாழிக்கு வந்து சேர்ந்ததும், அவரைக் காண்பதற்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணரென்பாரும் அவர் மனைவியான மதங்கசூளாமணியென்பாரும்[1] வந்தனர். அவர்களை ஞானசம்பந்தர் அன்புடன் வர வேற்று, சீகாழி இறைவன் திருமுன் திருப்பதியம் பாடினர். அதனை யாழ்ப்பாணர் தமது யாழிலிட்டு இசைத்தார். பாட்டும் இசையும், பருந்தும் நிழலும்போல் இயைந்து, கேட்போர் செவியகம் புகுந்து, நெஞ்சு முழுதும் சிவபோகம் நிரம்பச் செய்தன. பின்பு, பாணனார், தாம் எப்போதும் உடனிருந்து பிள்ளையார் பாடும் திருப்பதியங்களை யாழிலிட்டு இசைக்கும் பேற்றினைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். ஞானசம்பந்தரும் அதற்கு இசைந்தார். அது முதல் பாணனாரும் பிள்ளையாருடன் செல்லுமிடந்தோறும் உடன் செல்வாராயினர்.
----
[1]. திருக்கொள்ளம்பூதூர்க் கோயிற் கல்வெட்டொன்றால் இந் நீலகண்டப்பாணனார் திருவுருவத்தையும் இவர் மனைவியார் திருவுருவத்தையும் கோயிலில் எழுந்தருளுவித்து நாளும் வழிபாடு செய்யப்பெற்றமை (A. R. No. 254 of 1917), தெரிகிறது. இவர் மனைவியார் “(சிவ)சூடாமணி” யென இக்கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார்.
--------------

இவ்வாறிருக்கையில் ஞானசம்பந்தர் தில்லைக்குச் சென்று கூத்தாடும் பெருமானைத் திருவேட்களத்தில் தங்கி வழிபட்டார். பின்பு திருவெருக்கத்தம்புலியூர் முதலிய ஊர்களின் வழியாகத் திருவரத்துறைக்குச் சென்றார். அங்கே அவர்க்கு இறைவன் அருளால் முத்துச் சிவிகை வழங்கப்பட்டது. அது பெற்று இறைவன் பேரருளில் திளைத்தாடியின்புற்ற பிள்ளையார், திருச்சேய்ஞலூர் முதலியவூர்களில் இறைவனை இன்னிசையால் வழிபட்டுக் கொண்டு சீகாழி வந்து சேர்ந்து, சில நாள் தங்கியிருப்பாராயினர். அக்காலை, அவர்க்கு உபநயனம் செய்யக் கருதி வந்த வேதியர்களுக்கு இறைவன் திருவைந்தெழுத்தை யுணர்த்தி, “வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என அறிவுறுத்தி நன்னெறிப்படுத்தியிருந்தார். அந்நாளில் திருநாவுக்கரசர் ஞானசம்பந்தர் பெருமையைக் கேள்வியுற்று அவரைக் காண்பதற்குச் சீகாழிக்கு வந்தார். இருவரும் சீகாழியிலுள்ள இறைவனைச் செந்தமிழ் பாடி வழிபட்டனர். திருநாவுக்கரசர். அங்கே சிலநாள் இருந்துவிட்டு வேறுபிற வூர்கட்குச் சென்றார்.

சிறிது காலத்துக்குப்பின், ஞானசம்பந்தருக்குத் தமிழகத்தில் ஆங்காங்குள்ள திருப்பதிகட்குச் சென்று சிவபெருமானைச் செந்தமிழால் வழிபட வேண்டுமென்ற வேட்கை யுண்டாயிற்று. முத்துச் சிவிகை யூர்ந்து காவிரியின் வடகரையிலுள் பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருப்பதியைச் சென்று சேர்ந்தார். அங்கே கொல்லிமழவன் என்னும் வேந்தன் மகட்கு உண்டாகியிருந்த முயலகன் என்னும் நோய் நீங்குமாறு இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவினார். பின்பு அங்கே யிருந்து திருச்செங்குன்றூரை நோக்கிச் செல்வாராயினர்.

திருச்செங்குன்றூரில் ஞானசம்பந்தர் தங்கியிருக்கையில், அவரோடு உடன் சென்றோருட் சிலர்க்குச் சுரநோய் உண்டாயிற்று. பிள்ளையார், இறைவனை வழிபட்டு அச்சுர நோய் நீங்கச்செய்தார். பின்பு, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் முதலிய பதிகளின் வழியாகக் காவிரியின் தென்கரைவழியே திருப்பராய்த்துறை, திருவாலந்துறை முதலிய பதிகளை வணங்கிக் கொண்டு பட்டீச்சுரம் வந்தார்.

பட்டீச்சுரத்தில் ஞானசம்பந்தர் வெயிலால் வருந்த ஒருபூதம் முத்துப் பந்தரைப் பிடித்து இது பட்டீசர் திருவருள் என்றது. பிள்ளையார் சிவபெருமான் திருவருளை வியந்து வணங்கிப் பல பதியங்கள் பாடிப் பரவிவிட்டுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். அங்கே, சிவபாத இருதயர் வந்து, தாம் வேள்வி செய்யக் கருதுவதாகவும் அதற்குப் பொருள் வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். ஞானசம்பந்தர் இறைவனைப் பாடிப் பரவினாராக, ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழியொன்று திருக்கோயில் திருமுன் வைக்கப்பெற்றது. அதனைப் பெற்றுக்கொண்டு சிவபாத விருதயர் சீகாழிக்குச் சென்றார். பிள்ளையார், பின்பு பல பதிகளையும் கண்டு வணங்கிக்கொண்டு திருத் தருமபுரம் போய்ச்சேர்ந்தார். அங்கே திருநீலகண்டப்பாணனாருடைய உறவினர் அவரது இசையைப் பாராட்டினர். ஞான சம்பந்தர் அப்போது யாழ் மூரிப் பதியத்தைப் பாடினார். அப்பாட்டிசை பாணனாரது யாழில் அடங்காதாயிற்று. பாணனார்க்குச் சிறிது வருத்தமுண்டாகவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவன் திருப்புகழ் கருவிக் கடங்காதெனத் தேற்றித் திருநள்ளாறு சென்று இறைவனைப் பரவி, அங்கே இருந்த திருநீலநக்க நாயனார் திருமனையில் தங்கினார்.

அந்நாளில், சிறுத்தொண்ட நாயனார் திருச்செங்காட்டங் குடியில் இருந்து வந்தார். அவர் ஞானசம்பந்தர் திருநள்ளாற்றிற்கு வந்திருப்பதறிந்து தமது திருச்செங்காட்டங்குடிக்கு வருமாறு வேண்டினார். ஞானசம்பந்தரும், நாகைக்காரோணம் கீழ்வேளூர் முதலிய பதிகட்குச் சென்று இறைவனைப் பாடிப் பரவியவாறே, திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர்க்கு விருந்தினராயிருந்து, செங்காட்டங்குடிச் சிவபெருமானைத் தீவிய பாட்டுக்களாற் பாடிப் பரவினார். அப்பதியத்தில் சிறுத் தொண்டரது சிவப்பணியையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். திருமருகற்குப் பிள்ளையார் சென்றிருந்தபோது தான் விடந் தீண்டி யிறந்த வணிகன் ஒருவனை உயிர்ப்பித்து அவனுக்குத் திருமணம் செய்வித்ததுமாகும். செங்காட்டங்குடியில் கணபதீச்சுரத்துக்குச் சென்று ஞானசம்பந்தர் வணங்கும்போது, அவர்க்குத் திருமருகல் காட்சி இறைவனால் அருளப்பட்டது. இவ்வாறு சின்னாள் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் விருந்தினராக இருந்து திருப்புகலூர்க்குச் சென்றார்.

திருப்புகலூரில் முருக நாயனார் என்னும் சான்றோர், ஞானசம்பந்தரை வரவேற்றுத் தமது திருமடத்திலே இருக்குமாறு வேண்டினார். பிள்ளையார், அங்கேயிருந்து புகலூர்ப் பெருமானைப் பணிந்து பாடி வழிபட்டிருக்கும் நாளில், திருநாவுக்கரசர் அங்கே வந்து சேர்ந்தார். இருவரும் அளவளாவி இறைவனைப்பாடிப் பரவினர், அப்போது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தருக்குத் திருவாரூர்த் திருவாதிரை விழாச் சிறப்பை யெடுத்துக் கூறினர். அது கேட்ட ஞானசம்பந்தப்பிள்ளையார் தாமும் திருவாரூர்க்குச் சென்று வழிபட்டுவிட்டு மீண்டும் திருப்புகலூருக்கே வந்து சேர்ந்தார்.

புகலூரில் சில நாட்கள் கழிந்தன. பின்பு இருவரும் சேர்ந்து, திருவம்பர் திருக்கடவூர் முதலிய பல திருப்பதிகளை வழிபட்டுக்கொண்டு திருவீழிமிழலைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே இருவரும் தனித்தனியே தங்குதற்கு இருவேறு மடங்கள் இருந்தன. அவற்றை இடமாகக் கொண்டு இருவரும் அண்மையிலுள்ள திருப்பேணு பெருந்துறை முதலிய பதிகளை வணங்கி வழிபட்டனர். மேலும் இருவரும் திருவீழிமிழலையில் இருக்கும்போது, நாட்டில் மழையின்மையால் வறுமைமிகுந்து மக்கட்கு வருத்தத்தை விளைவிப்பதாயிற்று. ஞானசம்பந்தருக்கும் நாவரசருக்கும் ஆண்டவன் நாடோறும் படிக்காசு நல்கி, அவர்கள் திருப்பணி முட்டுப்படாதவாறு திருவருள் செய்தான். விரைவில் மழைவளம் உண்டாயிற்று; விளைவு பெருகிற்று; மக்கட்கு நல்வாழ்வு எய்தியது. இருவரும் திருவீழிமிழலையின் நீங்கித் திருமறைக்காடு நோக்கிச் செல்வாராயினர்.

திருமறைக்காட்டில், ஞானசம்பந்தரும் நாவரசரும் திருக்கோயில் மறைக்கதவங்கள் திறக்கவும் மூடவும் பாடிச்சிறப்பித்து, மக்கள் சிவநெறியின் செம்மையுணர்ந்து இன்புறச் செய்தனர். அங்கிருந்தே திருவாய்மூருக்குச் சென்று, இருவரும் இறைவனை வழிபட்டுச் சின்னாள் தங்கினர். பின்னர் இருவரும் திருமறைக்காட்டுக்குத் திரும்பிப் போந்து செந்தமிழ் இசைப்பணியால் சிறப்புமிக்கிருந்தனர்.

இந்நாளில் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்த பாண்டியன் நெடுமாறன் என்பவனாவான். அவனைக் கூன்பாண்டியன் என்றும் சுந்தரபாண்டியன் என்றும் கூறுவது வழக்கம். அவன் மனைவி பெயர் மானியார் என்பது. அவரை மங்கையர்க்கரசி யென்பது பெருவழக்கு. அக்காலத்தே அவன் சமண சமயத்தை மேற்கொண்டிருந்தான். பாண்டி நாட்டில் சமண சமயமே சிறந்து விளங்கிற்று. வேந்தன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியார். திருஞானசம்பந்தரைப் பாண்டி நாட்டுக்கு வருதல் வேண்டுமெனத் திருமறைக்காட்டிற்குத் தூதரை விடுத்தனர். அது கண்டு ஞானசம்பந்தர், மதுரை. நோக்கிச் செல்வார், நாவரசர்பால் விடைபெற்றுச் சென்றார். நாவரசர் சோழ நாட்டிலே தங்கினர். மதுரைக்குச் சென்ற ஞானசம்பந்தர் சமணர் இட்ட தீயினின்றும் உய்ந்து வேந்தனுக்கு உண்டான வெப்பு நோயைப் போக்கி, அனல்வாதம், புனல்வாத முதலியவற்றால் சமணரை வென்று பாண்டி வேந்தனைச் சைவனாக்கிச் சிறப்பெய்தினார்.

ஞானசம்பந்தர் மதுரையிற் சிலநாள் தங்கி ஆலவாய் இறைவனைப் பாடிப் பணிந்து வந்தார். அவர் சமணரை வென்ற செய்தி தமிழகம் எங்கும் பரவிற்று. சீகாழியிலிருந்த சிவபாத இருதயரும், மதுரைக்கு வந்து பிள்ளையாரைப் பார்த்து மிக்க இன்பமுற்றார். பின்பு அங்கிருந்து பாண்டியனும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் உடன்வரத் திருப்பரங்குன்றம் திருவாப்பனூர் முதலாகப் பாண்டிநாட்டுப்பதிகள் பலவற்றிற்கும் சென்று, இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு இராமேச்சுரமடைந்து இராமநாதரைப் பாராட்டிப் பாடி, அங்கிருந்துகொண்டே ஈழநாட்டுத் திரிகோணமலையையும் திருக்கேதீச்சுரத்தையும் பாடிப் பரவினார். அங்கிருந்து பல பதிகளை வழி பட்டுக்கொண்டே குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடி யடைந்து சிலநாள் தங்கியிருந்தார். முடிவில் மதுரையை யடைந்து வேந்தன்பால் பிரியாவிடைபெற்றுக்கொண்டு சோழநாடு அடைந்த ஞானசம்பந்தர், முள்ளிவாய்க்கரையை யடைந்தார். அங்கே ஆறுபெருக்கெடுத்துச் செல்லவே, எதிரே தோன்றிய திருக்கொள்ளம்பூதூருக்கு, அங்குக் கட்டப்பெற்றிருந்த ஓடமொன்றை அவிழ்த்து அதில் அடியாருடனே ஏறி ஆற்றைக்கடந்து சென்றார். அங்கே இறைவனைப் பதிகம் பாடிச் சிலநாள் தங்கினார்.

காரைக்கால் அருகிலுள்ள திருத்தெளிச்சேரிக்குச் சென்று ஆண்டவனைப் பாடிப் பரவிவந்த பிள்ளையார் போதிமங்கை யென்ற வூரை நெருங்கினர். அங்கே புத்தர்கள் வாழ்ந்தனர். சமணர்களை வென்று வாகை சூடி வரும் ஞானசம்பந்தர் வரவு அப்புத்தர்கட்குப் பெருஞ் சினத்தை உண்டுபண்ணிற்று. அவர்கட்குத் தலைவனான புத்தநந்தி பிள்ளையாரை வாதத்துக்கழைத்தான். அவரும் அதற்கு உடன்பட்டிருக்கையில் புத்தநந்தியின் தலையில் இடி விழவே அவன் இறந்துபோனான். பின்பு சாரிபுத்தன் என்பான் வந்து வாதிட்டுத் தோல்வியுற்றான். இருந்த புத்தர்கள் பலரும் சைவராய்த் திருநீறணிந்து கொண்டனர்.

ஞானசம்பந்தர், பின்பு, திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருப்பது கேள்வியுற்று அவ்வூர்க்குச் சென்றார். அவர் வருகையறிந்த நாவரசர், எதிர்கொள்ளவந்த கூட்டத்தோடு தாமும் ஒருவராய்ச்சென்று, சிவிகை தாங்குவாரோடு தாமும் ஒருவராய்க்கூடிக்கொண்டு திருப்பூந்துருத்திக்குள் வந்தார். ஞானசம்பந்தர் “அப்பர் எங்குள்ளார்?” என வினவ, சிவிகைக்கீழ் இருந்த நாவரசர் “இங்குள்ளேன்” என விடையிறுக்க, பிள்ளையார் சிவிகையினின்று கீழே இறங்கி நாவரசின் நற்றாளை வணங்கி அன்பு மிகுந்து அவருடன் திருப்பூந்துருத்திக் கோயிற்குச் சென்று, ஆண்டவனை இனிய தமிழ்ப் பாட்டால் வழிபட்டு வாழ்த்தினார். பின்பு இருவரும் தத்தம் இறைவழிபாட்டு நலங்களையும் இடையே நிகழ்ந்தவற்றையும் தம்முள் அளவளாவிக் கொண்டனர். முடிவில் நாவரசர் பிள்ளையாரிடம் விடைபெற்றுக் கொண்டு பாண்டி நாட்டுக்குச் செல்லலுற்றார்.

ஞானசம்பந்தர், தமது தந்தையாருடன் திருநெய்த்தானம் முதலிய பதிகளை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு வந்து சேர்ந்து சில காலம் தங்கியிருந்தார். தங்கியிருக்கையில் அவருக்குத் தொண்டைநாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று வழிபட வேண்டுமெனும் வேட்கையெழுவதாயிற்று. முடிவில் தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்படுகையில் அவரும் உடன்வரவிழைந்தார்; ஆயினும் அவரைச் சீகாழியில் இருக்கச்செய்து, தில்லை, திருத்தினை நகர், திருமாணிகுழி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே திருவண்ணாமலை வழியாகத் திருவோத்தூருக்குச்சென்று சேர்ந்தார்.

திருவோத்தூரில், ஓரன்பர், திருக்கோயில் ஆற்றங்கரையில் இருத்தலின் அதற்கு அடைகரையாகப் பனைமரங்களை வைத்து வளர்த்து வந்தார். அவை யாவும் ஆண் பனைகளாய்க் காயாதொழியவே, அவ்வூர்க்கருகில் வாழ்ந்த சமணர்களுட் சிலர் அவரை எள்ளி நகையாடினர். அக் காலை ஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளவும் அவ்வன்பர் உண்மையைப் பிள்ளையாரிடம் அறிவித்துக்கொண்டார். பிள்ளையார் திருவோத்தூர் இறைவனைப் பாடிப் பரவிய திருப்பதியத்தில் இக்குறிப்பினை வைத்துப் பாடியருளினர். அதன்பின் பனைகள் பூத்துக் காய்க்கத் தொடங்கின.

திருவோத்தூரிற் சில நாள் தங்கியிருந்த பிள்ளையார், பின்பு திருமாகறல் திருக்குரங்கணில்முட்டம் முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டே, திருவாலங்காடு சென்று, காரைக்காலம்மை பரவிய ஆலங்காட்டிறைவனைப் பதியம் பல பாடிப் பரவினர். அதன்பின் திருவெண்பாக்கம் திருக்காரிகரை முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டு சென்று திருக்காளத்தியைக் குறுகினார். அவர் வரவு கேள்வியுற்ற திருக்காளத்தி யன்பர்கள் பிள்ளையாரை எதிர்கொண்டு சென்று காளத்திமலையைக் காட்டிப் பிள்ளையாரைச் சிறப்பித்தார்கள். பிள்ளையார் காளத்திமலையைக்கண்டு வழிபட்டு அங்கே அன்புருவாய் நிற்கும் கண்ணப்பரைச் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடிக் காளத்தியிலேயே சில நாட்கள் தங்கினார். அக்காளத்தியிலிருந்தே வடகயிலாயம், திருக்கேதாரம் முதலிய பதிகளை நினைந்து பல பதியங்கள் பாடிச் சிவபெருமானை வழிபட்டு மகிழ்ந்தார்.

பின்னர், ஞானசம்பந்தப்பிள்ளையார் தெற்கு நோக்கிப் புறப்பட்டுத் திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுக் கொண்டு திருவொற்றியூரை வந்தடைந்தார்.

ஞானசம்பந்தர் தென்னாட்டில் இருக்கையில், திருமயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசர் என்பார், தம்முடைய ஒரு மகளை மணந்து கொள்பவனுக்குத் தமது செல்வ முற்றும் உரிமை செய்யக் கருதி மகளைப் பேரன்புடன் வளர்த்து வந்தார், வருகையில், ஞானசம்பந்தப் பிள்ளையாரின் பெருமை அவர் செவிக்கு எட்டிற்று. அது முதல் தம்முடைய மகளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட உறுதி கொண்டுவிட்டார். இவ்வாறிருக்கும்போது, அப்பெண், ஒரு நாள் பூப் பறிக்கச் சென்ற விடத்துப் பாம்பொன்று தீண்டவே உயிர் துறந்தாள். அவள் பெயர் பூம்பாவையென்பது.

பூம்பாவை இறந்த பின் அவள் உடலை எரித்து என்புகளை யெடுத்து ஒரு குடத்தில் வைத்து, இவளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட்டேனாதலால் அவர் வருங்கால் இதனை அவர்பாற் சேர்க்க வேண்டுமென வைத்திருந்தார் அந்தச் சிவநேசர். ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்து ஒற்றியூர் ஆண்டவனை இனிய பாட்டுக்கள் பாடி வழிபட்டுக் கொண்டிருப்பதைச் சிவநேசர் கேள்வியுற்று, அவரை யடைந்து வணங்கி மயிலாப்பூருக்கு அழைத்து வந்தார். மயிலாப்பூர் இறைவன் கோயிற்குச் சென்று பதியம் பாடிப் பரவி நின்ற பிள்ளையார் சிவநேசரை நோக்கி, எற்புக்குடத்தைக் கொணருமாறு பணித்தனர். குடமும் அவர் திருமுன்னர் வைக்கப்பட்டது. ஞானசம்பந்தர் ஆண்டவன் திருவருளை நினைந்து “மட்டிட்ட புன்னை” யெனத் தொடங்கும் திருப்பதியத்தைப் பாடி இறைவனை இறைஞ்சினார். எற்புக் குடத்திலிருந்த எலும்புகள் தம்மிற் கூடிப் பெண்ணுருவாகப் பூம்பாவை உயிரோடிருந்தால் எவ்வளவு வளர்ச்சியுற்றிருப்பாளோ அவ்வளவு வளர்ச்சியுடன் நின்று ஞானசம்பந்தரையும் பெற்றோரையும் ஆண்டவனையும் வணங்கினாள். அது கண்டிருந்த மக்கட் கூட்டம் பெருமருட்கை கொண்டு பிள்ளையாரைப் பரவிப் பாராட்டினர். பிள்ளையார் சிவநேசருக்கு வேண்டுவன கூறித் தேற்றிவிட்டு மயிலாப்பூரின் நீங்கித் திருவான்மியூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே வந்து தில்லையைச் சேர்ந்தார்.

சிவபாதவிருதயர் தில்லைக்கு வந்து பிள்ளையாரைக் கண்டு பேரின்பத்தால் ஆண்டவனைப் பரவினார். பிள்ளையார் பல திருப்பதிகட்கும் சென்று வழிபட்டுக் கொண்டு சீகாழிப் பதியை யடைந்து தோணியப்பரைப் பல பதிகங்களாற் சிறப்பித்தார். பிள்ளையார் வருகையறிந்த திருநீலநக்கர் முருகநாயனார் முதலிய பெரியோர் சீகாழிக்கு வந்து பிள்ளையாரைக் கண்டு பேரின்பமுற்றனர்.

முடிவில் பெரியோர்கள் ஒன்றுகூடித் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்வதென முடிபு செய்து அவரை வேண்டினர். அவரும் அவர்கள் வேண்டுகோட்கிசைந்தார். திருநல்லூரில் வாழ்ந்த கம்பாண்டார் என்பாருடைய மகளை[2] மணம் பேசினர். திருநல்லூரிலேயே திருமணம் செய்ய ஏற்பாடாயிற்று. கணிகள் குறித்த நன்னாளில் திருமணம் இனிது நடந்தது. திருமண முடிவில் மணமக்களும் மணத்திற்கு வந்திருந்த உறவினர் சான்றோர் முதல் அனைவரும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவன் திரு முன் நின்றனர். ஞானசம்பந்தப் பிள்ளையார் இனிய அழகிய திருப்பதியத்தால் இறைவனைப் பாடிப் பரவினர். உடனே ஒரு பேரொளி தோன்றி ஒரு வாயிலும் காட்டி நின்றது. யாவரும். அதனுட் சென்றனர். எல்லாரும் சென்ற பின் ஞானசம்பந்தப் பிள்ளையார் மணமகளின் கையைப் பற்றிக்கொண்டு அதனுட்புக்கு ஒன்றி உடனனானார்.”

----
[2]. மணமகளின் பெயர் இன்னதெனச் சேக்கிழாரால் குறிக்கப்படவில்லை. ஆயினும், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாபுரம்) கோயிற் கல்வெட்டொன்றால் (A. R, No.,527 of 1918) அவர் பெயர் சொக்கியாரெனத் தெரிகிறதெனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை கூறுகிறது (A. R. for 1919 para 3)
----------------

வரலாறு பற்றிய வேறு நூற் குறிப்புக்கள்

இதுகாறும் கூறிய இவ்வரலாறு பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர்புராணத்துட் கண்டதாகும். இத் தொண்டர்புராணத்துக்கு முற்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி,

“வையமகிழ யாம்வாழ அமணர் வலிதொலைய
ஐயன்பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய்
பையமிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல்அருள் பெற்றன. னென்பர் ஞான்சம்பந்தனையே”

“பந்தார்விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல
சந்தாரகலத்து நீலநக்கன் பெயர் தான்மொழிந்து
கொந்தார்சடையர் பதிகத்தில் இட்டடியேன்தொடுத்த
அந்தாதிகொண்டபிரானருட்காழியார் கொற்றவனே”

என்று குறிக்கின்றது. இத்திருவந்தாதிக்கு முற்பட்டதான திருத்தொண்டத்தொகை,

“வம்பறான வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”

என்று கூறுகிறது. இனி, சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்டவரும், நம்பியாண்டார் நம்பிக்குப் பிற்பட்டவருமான ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப்பரணியில், திரு ஞானசம்பந்தர் வரலாற்றைச்[3] சிறிது கூறியுள்ளார்.
----
[3]. தக்கயாகப்பரணி 6. தாழிசை 17-220.
-----------------

அதன்கண் திருஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்றதும் அவர் தங்கியிருந்த மடத்தில் அமணர் தீ வைத்ததும், பாண்டி வேந்தன் வெப்புற்றதும், அவ்வெப்பு நீங்க அமணர் மந்திர தந்திரங்களால் முயன்றும் மாட்டாராயினதும், பாண்டியன் ஆற்றானாய் மூர்ச்சித்ததும், அது கண்டு குலச்சிறையார் ஞானசம்பந்தரை யடைந்து வேண்டுவதும், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வேண்டிக் கொள்வதும், ஞானசம்பந்தர் வந்து அரசனருகே வீற்றிருப்பதும், அமணர் கண்டு வெகுளுவதும், குலச்சிறையார் அமணர்களை யடக்கி ஞானசம்பந்தரை வேண்டுவதும், ஞானசம்பந்தர் திருநீறிடுவதும், இட்ட வளவே, வேந்தன் வெப்பு நீங்கி யெழுந்து அவரைப் பணி வதும், அமணர் வேந்தனைத் தடுப்பதும், வேந்தன் அவர்களை நோக்கி, “கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே, கெட்டேனடிகள் இவர் கேவலரோ, விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர், வெங்கோபமும் உங்கள் விவாதமுமே”[4]என்று தெழிப்பதும், பின்னர் அந்த அமணர்கள் அனல் வாதமும் புனல் வாதமும் புரிவோமென மேற்கொள்வதும், சமயப் போர் செய்தல் வேண்டாவென மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரைப் பணிந்து தடுப்பதும், ஞானசம்பந்தர் அவரைத் தேற்றி அனல் வாத புனல் வாதங்கட்கு உடன்பட்டுச் செல்வதும், வாதங்கள் நிகழ அமணர் தோற்பதும், ஞானசம்பந்தர் பாண்டியனை நோக்கி, “வாராய் இவர் ஆகம துல்லபமும், வருமெங்கள் சிவாகம வல்லபமும், பாராய் வழுதியிது பாருருவத், திருவிக்ரமமின்றுபடும்படியே”[5] எனச் சொல்லிக் காட்டுவதும், முடிவில் அமணர் கழுவேறியதும், அது கண்டு ஞானசம்பந்தர் விலக்கியதும், அவருக்கு மாகேசுரக் கணபதித் தொண்டர்கள், “மண்ணாவுடம்பு தங்குருதி, மண்ணக் கழுவின் மிசை வைத்தார், எண்ணாயிரவர்க் கெளியரோ, நாற்பத்தெண்ணியிரவரே”[6] என்று அமைதி கூறுவதும் இவ் வரலாற்றில் அடங்கியுள்ளன.
--------
[4]. தக்கயாகப்பரணி. தா. 199.
[5]. தக்கயாகப்பரணி. தா. 215.
[6]. தக்கயாகப்பரணி. தா. 219.
---------------

வரலாற்றாராய்ச்சி

ஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் ஞானப்பால் உண்டதும், பொற்றாளம் பெற்றதும், முத்துத் சிவிகை முதலியன பெற்றதும், முயலகன் என்னும் நோய் நீக்கியதும், திருச்செங்குன்றத்தில் அடியார்க்குண்டான குளிர் நோய் போக்கியதும், பட்டீச்சுரத்தில் முத்துப்பந்தர் பெற்றதும், திருவாவடுதுறையில் பொற்கிழி பெற்றதும், திருத்தருமபுரத்தில் திருப்பதியம் யாழிலடங்காமை காட்டியதும், திருமருகலில் விடம் நீக்கியதும், திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் திருக்கதவம் அடைத்ததும், மதுரையில் தென்னவனுக்கு வெப்பு நோய் அகற்றியதும், அமணரொடு அனல்வாத புனல்வாதங்கள் புரிந்து வென்றதும், திருக்கொள்ளம்பூதுாரருகே ஆற்றில் ஒடம் செலுத்தியதும், போதிமங்கையில் புத்தன் தலையில் இடி வீழ்ந்ததும், திருவோத்துாரில் ஆண்பனை பெண்பனையானதும், திருமயிலையில் என்பு பெண்ணுருவாக் கண்டதும், திருமணக்கோலத்தில் பேரொளியிற் கலந்து மறைந்ததும் பேரற்புதங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை வற்புறுத்தும் சான்றுகளும் வழக்காறுகளும், நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளன; அவை பின்னர்க் காணப்படும்.

உடனிருந்த சான்றோர்கள்

ஞானசம்பந்தர் வரலாற்றில் மேலே குறித்த அற்புதங்கள் ஒழிய, அவர் திருநாவுக்கரசர் சீகாழிக்கு வர, அவரோடு அளவளாவி மகிழ்வதும், பின்பு திருப்புகலூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திருவீழிமிழலை முதலிய இடங்களில் திருநாவுக்கரசருடன் கூடியிருந்து அருட்பாடல் வழங்குவதும் குறிக்கத்தகுவன. திருநீலநக்கர், முருகநாயனர், திருநீலகண்டயாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், பாண்டி வேந்தன் நெடுமாறனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனர் முதலியோர் ஞானசம்பந்தர் காலத்தே இருந்தவராவர்.

திருஞானசம்பந்தருடைய திருப்பதியங்களில் அவராற் குறிக்கப்பெற்றிருக்கும் சண்டேசுரனர். கண்ணப்பர், நமிநந்தியடிகள், கோச்செங்கட்சோழன் முருகநாயனார், சிறுத் தொண்டர், திருநீலநக்கர், பாண்டிமாதேவியாரான மங்கை யர்க்கரசியார், குலச்சிறையார், திருநீலகண்டயாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் என்ற பன்னிருவருள், மேலே கூறிய திருநீலநக்கர் முதலிய எழுவர் நீங்கலாக எஞ்சும் ஐந்து பேர்களும் திருஞானசம்பந்தர்க்குக் காலத்தால் முற்பட்டோராவர். அவருள் சண்டீசரை,

“வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன்தன்கருமம் தேர்ந்துசிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே”[7]

என்றும், கோச்செங்கணானை, “செம்பியன் கோச்செங்கணான் செய்கோயில்”[8]என்றும், கண்ணப்பரை, “வாய் கலசமாக வழிபாடுசெயும் வேடன் மலராகும் நயனம், காய்கணையினால் இடந்து ஈசனடி கூடுகாளத்திமலையே”[9] என்றும், “கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் அண்ணல் ஆரூராதி யானைக்காவே”[10] என்றும் நமிநந்தியடிகளை, “ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணனென்று ஆதரிக்கும், நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்”[11] என்றும், புகழ்த்துணையாரை “அலந்த அடியான் அற்றைக் கன்று ஒர் காசெய்திப், புலர்ந்த காலைமாலை போற்றும்புத்தூரே”[12] என்றும், தண்டியடிகளை, “அண்டர் தொழு தண்டி பணிகண்டு அடிமை கொண்ட இறை”[13]என்றும் குறித்துள்ளார்.
------
[7]. ஞானசம், 62:4.
[8]. ஞானசம். 276:4.
[9]. ஞானசம். 327:4
[10]. ஞானசம். 367:7
[11]. ஞானசம். 62:6
[12]. ஞானசம். 199:7
[13]. ஞானசம். 326:10
-----------
தமது காலத்தில் வாழ்ந்தவர்களுள், திருநீலநக்கரை, நிறையினர் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர் அறையுமூர் சாத்தமங்கை யயவந்தி மேல் ஆய்ந்த”[14] என்றும், முருகநாயனாரை, “தொண்டர் தண்கயமூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும், கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலம்”[15] என்றும், சிறுத்தொண்டரை, “செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணிசெய்ய”[16] என்றும், மங்கையர்க்கரசியாரை, “மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கைம் மடமானி, பங்கயச்செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும்பரவ”[17] என்றும், குலச்சிறையாரை, “கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிகின்றேத்த”[18] என்றும் பாராட்டிப் பாடியுள்ளார்.
------
[14]. ஞானசம். 316: 11.
[15]. ஞானசம். 228: 3.
[16]. ஞானசம். 321: 1.
[17]. ஞானசம். 378:1.
[18]. ஞானசம். 378: 2.
--------------
திருஞானசம்பந்தர் காலம்

இனி, திருஞானசம்பந்தர் காலத்தைக் காண்டல் வேண்டும். இவரது காலத்தைப்பற்றி இதுகாறும் பல அறிஞர்கள் பலவேறு வகையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். திரு. சைமன் காசி செட்டியாரவர்கள், “சோழ பூருவபட்டயத்திற்” கண்டவாறு ஞானசம்பந்தர் நாவரசர், நம்பியாரூரராகிய மூவரது காலமும் ஒன்றே யென்றும், அஃது ஐந்தாம் நூற்றாண்டாகும் என்றும் கூறுவர். திரு. சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், கூன்பாண்டியன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன்[19] என்பர்; எனவே அவர் கருத்துப்படி, ஞானசம்பந்தர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாம். கொழும்பு திரு. ஆனரபிள் P.குமாரசாமியவர்கள், விடந்தீண்டியிறந்த வணிகனை ஞானசம்பந்தர் எழுப்பிய வரலாறு கூறும் திருவிளையாடற் கூற்றுச் சிலப்பதிகாரத்திற் காணப்படுவது கொண்டும், சிலப்பதிகாரம் கி.பி. 113-135 வரையிருந்த கயவாகுவின் காலமாதல் கொண்டும் ஞானசம்பந்தர் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு கிறித்து பிறந்த காலத்தவராக இருக்கவேண்டும்[20] என்பர். ---
[19]. வீரசோழி, முன் பக். 17.
[20]. His letter to Prof. P. Sundaram Pillai,dated 1-3-1895.
-----

அறிஞர் ஹூல்ஷ் என்பார்[21] தமிழ்ப்பாட்டுக்கள் பலவும் கரிகாலன் காலத்தும் கோச்செங்கணான் காலத்தும் இயற்றப்பட்டன வென்பது தெளிவாக விளங்குதலால், தேவார ஆசிரியர்களை அவ்விரு பெருவேந்தர்களின் காலத்தவராகக் கொள்வதில் தடையில்லை என்றனர். இற்றைக்கு நாற்பது ஆண்டுகட்கு முன் மனேன்மணிய ஆசிரியரான பேராசிரியர், P. சுந்தரம் பிள்ளையவர்கள் ஞானசம்பந்தர் காலத்தை முதன் முதலாக, அக்காலத்தே தமக்குக் கிடைத்த கருவிகளைக் கொண்டு நேரிய முறையில் ஆராய்ந்து, சங்கரர்,[22] தாம் எழுதிய செளந்தரியலகரி யென்ற நூலில் ஞானசம்பந்தரைக் குறித்துப் பாடியிருப்பதால், ஞானசம்பந்தர் சங்கரர்க்கு முற்பட்டவரென்று நிறுவி, முடிவில் ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவரெனத் [23] துணிந்துரைத்தார். பின்பு, கல்வெட்டுக்கள் சில குறிப்புக்களை அவர்க்கு உதவின. அவற்றைக் கொண்டு, தாம் ஆராய்ந்து கண்ட காலத்தை முடிந்த முடிபாகப் பின் வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
[21]. S. I. Ins. Vol II. p. 153.
[22]. “தவஸ்தன்யம் மன்பே தரணிதர கன்யே ஹ்ருத யத:
பய: பாராவாரம் பரிவஹதி ஸாரஸ்வத மிதி.
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசுராஸ்வாத்ய தவ்யத்
கவீனாம் ப்ரெளடா நாமஜநி கமநீய: கவயிதா”
—செளந்தரியல்யகிரி. சு. 76.
[23]. Tami. Ant. No, III. p, 59.
----------------
அதன் தமிழ்ப்படி வருமாறு,

“தேவாரத்தில் காஞ்சியில் திருமேற்றளி என்றொரு கோயில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றுள்ளது. அத் திருமேற்றளி இருக்குமிடம் தெரியவில்லை. ஒருகால் அதுவே திருக்கற்றளி யெனப்படும் கயிலாசநாதர் கோயிலாயின், ஒரு சிறந்த முடிபு பெறப்படும். கயிலாச நாதர் கோயிலுக்கு இராசசிம்மேச்சுரம் என்றொரு பெயருண்டு. இராசசிம்ம பல்லவன் இரணரசிகனை வென்ற உக்கிரதந்தனுக்கு மகனாவான். அறிஞர் ஹூல்ஷ், (Dr. Hultszh) இரணரசிகனை மேலைச் சளுக்க வேந்தனான இரணராகன் என்பர். எனவே, இராசசிம்மன் இரணராகனுக்குப் பின்வந்த முதற் புலிகேசியின் காலத்தவன் என்பது பெறப்படும். புலிகேசி கி.பி. 567-இல் இருந்த கீர்த்திவன்மனுக்கு முன்னோனாவான். இராசசிம்மேச்சுரமான திருக்கற்றளி கி.பி.550-இல் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்பது அறிஞர் ஹூல்ஷ் (Dr. Hultszh) அவர்கள் கருத்து; அதனை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அப்பர் பாடிய திருமேற்றளி இதுவாகுமாயின், அப்பர் காலத்தின் மேலெல்லைஆறாம் நூற்றாண்டாகும்.

“போக்சு (Foulks) என்பார் வெளியிட்டுள்ள பல்லவ மல்லன் செப்பேடும் கூரத்துச் செப்பேடும் இராசசிம்மனுக்குப் பின்வந்தவன் நரசிம்மவன்மனென்றும், அவன். சளுக்க வேந்தனை புலிகேசியை வென்று வாதாபிக்கரை அழித்தானென்றும் கூறுகின்றன. மற்று, பல்லவரிடத்தினின்று மீட்டு வாதாபி நகரைச் சீர் செய்தவன் முதல் புலிகேசி யென்றும், அவன் இராசசிம்மன் காலத்தவன் என்றும் தெரிவதால், வாதாபி நகரை யழித்த முதல் நரசிம்மன் காலத்தவன் இரண்டாம் புலிகேசியாதல் பெறப்படும். அவன் சகம் 532-இல் இருந்தவனாதலால் அவன் ஏழாம் நூற்றாண்டினன் என்பது தேற்றமாம். இதற்குமுன் செய்த ஆராய்ச்சியால் திருஞானசம்பந்தரை ஏழாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமெனக் கண்டோம். வாதாபி கொண்ட வரலாறு பெரியபுராணத்திற் கூறப்பட்டிருத்தலை முதன் முதலில் கண்டுரைத்தவர் திரு. V. வெங்கையரவர்களாவர்[24] இப்புராணப்படியே, சிறுத்தொண்டர் செய்த செயல்வகைகளுள் வடபுலத்துத் தண்டுபோய் வாதாபிதுகள் படுத்தது ஒன்று. சிறுத்தொண்டர் வடபுலஞ் சென்றபோதுஇருந்த வேந்தன் வாதாபி கொண்ட நரசிங்கவன்மனத் தவிர வேறே யாவனாதல் கூடும்? ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்திருந்த சிறுத்தொண்டர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நரசிங்கவன்மனோடு உடனிருந்தவராவர். சிறுத்தொண்டர் வேண்டவே, தாம் பாடுவதாக ஞானசம்பந்தர் செங்காட்டங்குடித் திருப்பதிகத்திற்[25]கூறுகின்றார். ஆகவே, திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூன்பாண்டியனைச் சைவனாக்கித் தென்பாண்டியில் சிவ நெறி நிறுவிய பெருந்தகையாவர் என்பது துணிபு.[26]

இனி, பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்குப் பின்னர், தஞ்சை ராவ்சாகிபு. திரு. K.S.சீனிவாச பிள்ளையவர்கள் ஞானசம்பந்தர் காலத்தைப் பற்றித் தாம் எழுதிய தமிழ் வரலாற்றிற் பிற்காணுமாறு கூறுகின்றார்:[27] சீகாழியில் கெளனிய கோத்திரத்தினராய்ச் சிவபாத இருதயர் என்பார்க்குத் தவப்பயனாய் அவர் மனைவி பகவதியார் வயிற்றில் சம்பந்த மூர்த்தியடிகள் அவதரித்தனர், அவர்க்கு மூன்றாம் ஆண்டில் பொன்வள்ளத்துப் பாலூட்டிய கதையையாவரும்அறிவர்.

-----
[24]. Ep. Indi. Vol. IV. p. 227. f. and Madras Christian College Magazine for Nov. 1893
[25]. “செங்காட்டங் குடிமேய
வெந்த நீறணி மார்பன் சிறுத்தொண்டனவன் வேண்ட
அந்தண் பூங்கலிக் காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே”
—ஞான. 321:11
[26]. Tam. Ant. No. III. p. 63-5.
[27]. தமிழ் வரலாறு. பக்.58.64
-----------
மூன்றாம் ஆண்டு என்பது எது? நிறைவுற்ற ஆண்டைக் குறிப்பிடுவதே நம்மனோர் வழக்கம். நடைபெறும் ஆண்டைக் குறிப்பிடுவதில்லை. ஆதலால் பிள்ளையார்க்கு இச்சம்பவம் நிகழ்ந்த காலத்து நடைபெற்றது நான்காம் ஆண்டாம். உடனே பிள்ளையார் தலயாத்திரை செய்யத் துவக்கினர் தில்லை, முதுகுன்றம், பழுவை முதலிய பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடிச் சீகாழி வந்து சேர்ந்து சில யாண்டுகள் அங்கு வதிந்தனர். உபநயனச் சடங்கு நடந்தது. வயது ஏழாயிற்று. அப்பர் சுவாமி, பிள்ளையாரை இறைஞ்சுதற்குக் காழி வந்தனர். பின்கண்ட செய்யுள் அக்காலத்து அவர் தேகத்தில் வயது முதிர்ச்சியால் நடுக்கம் இருந்ததைக் காட்டும். அது,

“சிந்தை யிடையறா அன்பும் திருமேனி தனில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும் கையுழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத் தரசும் எதிர் வந்தணைய”

என்பது. பிள்ளையாரும் அப்பரும் சில காலம் காழியில் உடன் உறைந்தனர். பிறகு அப்பர் சுவாமிகள் தலயாத்திரை புறப்பட்டனர். பிள்ளையார் காழியில் இருந்து சிவ பெருமான் மீது பலவகைச் சித்திர கவிகளும் பாடினர்.

“பிறகு தல யாத்திரை செய்யப் புறப்பட்டுச் சோழநாடு, மழநாடு, வடகொங்கு, கீழ்கொங்கு, தென்கொங்கு ஆகிய இந்நாடுகளில் நூற்றுக்கணக்கான தலங்களில் சிவபெருமானை வணங்கிப் பதிகம் பாடினர். அந்த யாத்திரையில் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தனர். அத்தலம் வருவதற்கு முன் அவர் சென்ற தலங்களில் பெரிய புராணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன நூற்றுக்கு மேலும் உள. பெயர் குறிப்பிடாதன பல நூறென அறியலாம். அநேக தலங்களில் நீண்ட நாள் தங்கியிருந்தனரென்று தெரிகிறது.”

பல அடியார்கள் கூட்டத்துடன் தலயாத்திரை செய்வது, தமிழ்நாடு அக்காலத்திலிருந்த நிலைமையில் கால ஹரணம் ஆகத்கூடியதே; ஒருவாறு கணக்கிடுவதால் திருச்செங்காட்டங்குடி வந்த காலத்துப் பிள்ளையாருக்கு 11 அல்லது 12 வயதாவது நிறைந்திருக்க வேண்டும். பிள்ளையார் வருவதைத் தெரிந்துகொண்டு சிறுத்தொண்ட அடிகள் எதிர்சென்று வணங்கிப் பிள்ளையாரைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்றனர். பிள்ளையார் சிறுத்தொண்டர் மனையில் அவர் உபசரிக்கத் தங்கியிருந்தனர். திருச்செங்காட்டங்குடிப் பதிகத்தில் சிறுத்தொண்டர் பெயரை வைத்துப் பாடினர். அவை,

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டங் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணி செய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே” [28]

செந்தண்பூம் புனல் பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்த நீறணி மார்பன் சிறுத் தொண்டனவன் வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே” [29]

என்பன.
----
[28]. ஞானசம். 321 : I
[29]. ஞானசம். 321: II
--------------

“ஈண்டுச் சிறுத்தொண்ட அடிகள் வரலாற்றைச் சற்று ஆராய்வோம். சிறுத்தொண்டரென்பது காரணப்பெயர். அவரது இயற்பெயர் பரஞ்சோதியார். இவர் காஞ்சியில் பல்லவ அரசன் நரசிம்மவர்மனிடத்திற் சேனாதிபதியாயிருந்தனர். பல்லவர்களுக்கும் துங்கபத்திரை நதிக்கு வடபாலுள்ள குந்தள நாட்டரசர்களாகிய சளுக்கியர்களுக்கும் ஓவாது போர் நடப்பது வழக்கம். நரசிம்மவர்மன் காலத்திருந்த சளுக்கிய அரசன் இரண்டாவது புலிகேசி யென்பான். அவன் மிக்க பராக்கிரமசாலி. அநேக அரசர்களைப் போரில் வென்று அவர்கள் நாடுகளைக் கீழ்ப் படுத்தினான். அக்காலத்தில் ஹர்ஷவர்த்தனன் என்னும் கன்னோசி நாட்டரசன் ஒருவன் இருந்தனன். அவன் நருமதையாறு தொடங்கி ஹிமயமலை வரையிலுள்ள நாடுகளையும் அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளையும் போர்புரிந்து தனக்குக் கீழாக்கினன்; பெருங்கீர்த்தி பெற்ற பராக்கிரமசாலி. அவன் குந்தள நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது புலிகேசி II என்னும் குந்தளநாட்டரசன் அவனை முறியடித்தான். பாரத வருஷத்திலிருந்த அரசர்களில் ஹர்ஷவர்த்தனனை வென்றவன் புலிகேசி II ஒருவனே யென்றால் அவன் பராக்கிரமத்தின் அளவு எத்துணையதாம்! இவனது தலலநகர் வாதாபி. யுவான் சுவாங் என்னும் பிரசித்தி பெற்ற சீன தேசயாத்திரிகர் கி.பி. 641-ஆம் ஆண்டில் வாதாபி சென்று சில காலம் தங்கினர். அந்நகரத்தினதும் நகரத்தரசனதும் ஆகிய பெருமையை அவர் எழுதிய புத்தகத்தில் மிகப்பாராட்டியிருக்கின்றனர்.

அடுத்த கி. பி. 642-ஆம் ஆண்டில் பரஞ்சோதியார் பல்லவனது திரண்ட படையோடு குந்தள நாட்டரசனுடன் போர் செய்யச் சென்று மிக்க பராக்கிரமசாலியாகிய புலிகேசி II என்பானது தலைநகராகிய வாதாபியைத் துகளாக்கி அங்குப் பல்லவனது ஜயஸ்தம்பத்தை நாட்டினர். குந்தளராட்சி நிலைகுலைந்துபோய் விட்டது. வாதாபி நகரம் அதனோடு பாழாய்ப்போய் விட்டது. பதின்மூன்று வருஷகாலம் சளுக்கியராட்சி மங்கித் தத்தளித்துக்கொண்டிருந்தது. கி. பி. 655-ஆம் ஆண்டில் புலிகேசி II என்பானது மகன் விக்கிரமாதித்தன் I என்பான் கிருஷ்ணாநதிக்கு வடக்கேயுள்ள கல்யாணபுரம் என்னும் நகரத்தைத் தனது தலைநகராக்கினன். பரஞ்சோதியார் வாதாபி நகரத்தைப் பாழ்படுத்தியதை அடியில் கண்ட பெரிய புராணச் செய்யுள் விளக்கும். அது;

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்துளைநெடுங்கைவரை யுகைத்துப்
பன் பணியு நிதிக் குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே யிகலரசன் முன் கொணர்ந்தார்”

என்பது.

“நரசிம்மவன்மன் அவர் மூலமாக வெற்றி பெற்றதற்குப் பெருமகிழ்ச்சி கொண்டானேனும், அவர் தனது வழிபடு கடவுளாகிய சிவபெருமானது அணுக்கத் தொண்டரென அறிந்து அவரைத் தன்கீழ் வைத்து வேலை வாங்குவதனால் பெரிய சிவாபராதம் வருமென அஞ்சி அவருக்குத் திரண்ட நிதியும் மானியங்களும் கொடுத்துத் திருத்தொண்டு செய்து கொண்டு இஷ்டப்படி யிருக்க வேண்டினன். அவன் வேண்டுகோளுக்கிணங்கிப் பரஞ்சோதியார் தம்மூராகிய திருச்செங்காட்டங்குடி வந்து வதிந்தனர்.” பின்வரும் பெரியபுராணச் செய்யுட்கள் இதனை விளக்கும்.

அவை,

“கதிர்முடி மன்னனும் இவர்தங்
      களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப்புகழ்ந்துரைப்ப
      அறிந்த அமைச்சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
      வாய்த்த வலியுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகிலில்லை
      யென எடுத்துரைத்தார்”

“தம்பெருமான் றிருத் தொண்ட
      ரெனக்கேட்டதார் வேந்தன்
உம்பர் பிரானடியாரை
      யுணராதே கெட்டொழிந்தேன்
வெம்பு கொடும்போர் முனையில்
      விட்டிருந்தேனென வெருவுற்று
எம்பெருமான் இது பொறுக்க
      வேண்டுமெனஇறைஞ்சினான்”

“இறைஞ்சுதலு முன்னிறைஞ்சி
      என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம் புரிவேனதற் கென்னே
      தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்த கிதிக் குவைகளுட
      னீடு விருத்திகளளித்தே
அறம் புரியுஞ் செங்கோலான்
      அஞ்சலிச்செய்துரைக்கின்றான்”

“உம்முடைய நிலைமையினை யறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக் கருத்துக் கினிதாக விசைந்து மது
மெய்ம்மைபுரிசெயல்விளங்க வேண்டியவாறேசரித்துச்
செம்மைநெறித்திருத்தொண்டு செய்யுமென விடைகொடுத்தான்”

“மன்னவனே விடை கொண்டு தம்பதியின் வந்தடைந்து
பன்னு புகழ்ப் பரஞ்சோதியார் தாமும் பனிமதி வாழ்
சென்னியரைக் கணபதிச்சரத் திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறையன் பிற்செய்கின்றார்”

என்பன.

“திருச்செங்காட்டங்குடி வந்து சிறிது காலத்தில் அவர் சீராளர் என்னும் மகவைப்பெற்றார். கி. பி. 642-லோ 643-ன் துவக்கத்திலோ அவர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்திருத்தல் வேண்டும். வந்து எவ்வளவு காலத்துக்குப் பின்னர் சீராளர் பிறந்தார் என்பது தெரியவில்லை. இரண்டொரு ஆண்டுகள் இருக்கலாம். சம்பந்தமூர்த்திகள் வந்த காலத்துச் சீராளருக்கு நிறைந்த வயது மூன்றென்பது பின்கண்டவற்றால் விளங்கும்.” அவை,

வந்து வளர் மூவாண்டின் மயிர்வினை மங்கலஞ்செய்து
தந்தையாரும் பயந்த தாயாருங் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொற்றெளிவின் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப் பள்ளியினி லிருத்தினார்”

அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருள
முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகாவலனார்தம் நன்மைச்
சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்”

என்பன.

“பிள்ளையார் வந்தது கி. பி. 646-7-ஆம் ஆண்டிலோ அதற்கு இரண்டோராண்டு பின்னரோ இருத்தல் வேண்டும். ஏனென்றால் சீராளருக்கு நான்காம் வயது நடைபெற்ற காலம் அது. அவர் கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்திருப்பர். சிறுத்தொண்டர் தம்மூர் வந்த ஆண்டோடு இக்காலத்தைக் கூட்ட 646-7 ஆகும். அவர் ஊர் வந்த காலத்துக்கும் சீராளர் கர்ப்பத்தில் உற்பவித்ததற்கும் இடையில் இரண்டோராண்டு நிகழ்ந்ததென்றால் நான் மேற்சொல்லிய கணக்குச் சரியாய்விடும். கி. பி. 646-7-க்கும், 648-9-க்கும் இடையில் பிள்ளையார் திருச்செங்காட்டங்குடி வந்தனர் என்று வைத்துக்கொள்ளலாம். பிள்ளையார் பிறகு பல தலங்கள் சென்று திருப்புகலி வந்தனர். அங்கு, நாவுக்கரசர் வர, இருவரும் இன்னும் பல தொண்டர்களுடன் சில நாள் வசித்துத் திருநாவுக்கரசருடன் தலயாத்திரை செய்ய ஆரம்பித்தனர். பல தலங்களுக்குச் சென்று திருமறைக்காடு வந்தனர். அங்கு நின்று திருநாவுக்கரசரை விட்டுப் பிரிந்து மதுரை சென்றதும் சமணரை வாதில் வென்றதும், பாண்டியனைச் சைவனாக்கியதும் யாவரும் அறிந்தனவே; மதுரையை விட்டு நீங்கிப் பல தலங்கள் சென்று திருப்பூந்துருத்தி வந்து, திருநாவுக்கரசரைச் சந்தித்தனர். அவரை விட்டுப் பிரிந்து காழி சென்று உடனே வடபக்கம் யாத்திரை செய்தனர். காஞ்சிபுரம், திருவொற்றியூர், திருமயிலை முதலிய தலங்கள் சென்று பதிகம் பாடிச் சிவபிரானை வணங்கிச் சீகாழி வந்தனர். இவருக்கு மணம் புரியும் வயது வந்ததால் பெற்றோர் முதலாயினர் முயற்சியால் மணம் அமர்ந்ததும் சோதியிற் கலந்ததும் பலருக்கும் தெரிந்தனவே. இவர் சோதியிற் கலந்த காலத்து இவருக்கு ஆண்டு பதினாறு எனக் கீழ்க்கண்ட வெண்பா கூறும். அஃது,

“அப்பருக் கெண்பத்தொன் றருள் வாதவூரருக்குச்
செப்பிய நாலெட்டில் தெய்வீகம்—இப்புவியிற்
சுந்தார்க்கு மூவாறு தொன் ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி”

என்பது.

“சம்பந்தமூர்த்திகளைத் தவிர்த்து ஏனையோர்க்குப்பெரிய புராணம் வயது கூறவிலலை. ‘திருவளர் ஞானத் தலைவர் திருமணம் செய்தருளுதற்குப், பருவம் இது என்றெண்ணி அறிவிக்கும் பாங்கணைந்தார்’ என்று அப்புராணம் சொல்வதால் அவர்க்கு மணஞ்செய்யும் பருவம் வந்ததெனக் கொள்ளலாம். அக்காலத்தில் மணஞ்செய்யும் பருவத்தை ஆணுக்குப் பதினறும் பெண்ணுக்குப் பன்னிரண்டுமெனக் கொண்டிருந்தனர் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் பல உள. மணம் முடிந்த காலமும் சோதியிற் கலந்த காலமும் ஒன்றேயாதலால் இவருக்கு ‘அந்தம் பதினாறு’ என்று வெண்பாவில் கூறியிருப்பது பொருத்தமுடையதேயாம். திருநாவுக்கரையரைச் சீகாழியில் முதலில் சந்தித்தபோது இவருக்கு உபநயனமாகி விட்டது. எட்டாம் வயது நடைபெறுங் காலம். அதற்குப் பிற்கு சில காலம் சீகாழியில் தங்கியிருந்து பின்னரே தல யாத்திரை செய்யப் புறப்பட்டனர். இப்போது இவருக்கு எட்டு வயதெனக் கொண்டால் அது முதல் திருமணம் நடக்கும் வரையுள்ள காலம் எட்டு ஆண்டுகளாகும். திருப்புகலூர், திருவீழிமிழலை, மதுரை முதலிய சில தலங்களில் நீண்டகாலம் தங்கியிருந்தனர்.

இவர் திருச்செங்காட்டங்குடி வருவதற்கு முன் செய்த யாத்திரை மூன்று நான்கு ஆண்டுகள் சென்றிருக்கலாம். இவர் சோதியிற் கலந்தது சிறுத்தொண்டரை முதலில் சந்தித்ததற்கு நாலைந்தாண்டுகளுக்குப் பின்னர்த்தாம். சோதியிற்கலந்த காலம் கி. பி. 655-க்குச் சிறிது காலம் முன்னே யிருக்கலாம். இவர் சமணரையும் பெளத்தரையும் வாதில் வென்று சைவத்தைப் பரவச் செய்தனர்.'

முடிவாக,பேராசிரியர்,திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளையவர்கள், திருஞானசம்பந்தர் காலத்தைப்பற்றிப் பலரும் கூறிய முடிபுகளைத் திரட்டி, “திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் காலத்தைப்பற்றிப் பலர் பலவாறு கூறியதை மறுத்துக் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் காலத்தில் சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியில்ல் வாழ்ந்தனர். அவர் வாதாவியென்னும் வடநாட்டு நகரத்தைத் தம் அரசனுக்காகச் சென்று வென்றழித்தனரென்று பெரிய புராணம் கூறுகின்றது. வாதாவிநகரம் பம்பாய் மாகாணத்திலுள்ளது. அஃது அழிக்கப்பட்ட காலத்திலே அங்கே அரசாண்டவன் சாளுக்கிய வேந்தன் இரண்டாவது புலிகேசியென்பான் என்பது டாக்டர் ஹூல்ஷி என்பவர் வெளியிட்ட கல்வெட்டுப் பட்டயங்களாலே தெரிகின்றது. அவ்வரசன் காலம் கி. பி. 609-642. அதே காலத்தில் காஞ்சி நகரத்தில் முதல் நரசிம்மவன்மன் என்பான் அரசாண்டனன். சிறுத்தொண்டர் முதல் நரசிம்மவன்மன் படைத்தலைவனாக இருந்திருக்கவேண்டும். இதனால் திருஞானசம்பந்தர் காலமும் ஏழாவது நூற்றாண்டின் முற்பகுதியென்றே தெரிகின்றது.

முதல் நரசிம்மவன்மனது, தந்தையாகிய குணபரன் என்பவன் காலத்தே அப்பர் சுவாமிகள் சைவ சமயம் புகுந்தனரென்று யூகிக்க இடமுண்டு. குணதரவீச்சுரம் என்னும் கோயிலை அவன் கட்டினதாகத் தோன்றுகிறது. அப்பர் சுவாமிகள் கி.பி. 509-650 வரையுள்ள காலத்தில் 80 ஆண்டுகள் இவ்வுலகில் திகழ்ந்தனர் என்று யூகிக்க இடமுண்டு. திருஞானசம்பந்தர் கி. பி. 609-642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டு நிலவுலகில் வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டினர் என்க”[30] என்று கூறுகின்றார்.

திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்கள்

திருஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதியங்கள் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார் நம்பி உரைத்துள்ளார். இதனை, அவர், “துன்றிய, பன்னுதமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல், மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும், முன்னிய, சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன, வந்தங்கவதரித்த வள்ளலை”[31] என்றும், “—மொய்த்தொளிசேர், கொச்சைச் சதுரன்தன் கோமானைத் தான்செய்த, பச்சைப்பதிகத்துடன் பதினாறாயிரம்பா, வித்துப்பொருளைவிளைக்கவல பெருமான்”[32] என்றும் குறித்துள்ளார். இவருக்குப் பின்வந்த திருமுறைகண்ட புராணமுடையார், இவர் கூறியதையே, “தோடுடையசெவியன் முதல் கல்லூரென்னும் தொடை முடிவாப் பரசமயத் தொகைகள் மாளப், பாடினார் பதிகங்கள் பாவிலொன்றாம் பதினாறாயிரமுளதாப் பகருமன்றே”[33] என்று கூறுவாராயினர்.

இவற்றுள் திருமுறைகண்ட காலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்களுள் முந்நூற்று எண்பத்து நான்கு திருப்பதியங்களே கண்டு தொகுக்கப்பட்டன. அதனைத் திருமுறைகண்ட புராணம், “பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிக முந்நூற்றெண்பத்து நான்கில் இலங்கு திருமுறை மூன்று”[34] என்று கூறுவது காண்க.
----
[30]. திருஞானசம்பந்தர் சுவாமிகள் சரித்திரம் பக். 273.4
[31]. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை
[32]. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 22.
[33]. திருமுறைகண்டபுறாணம் செய். 14
[34]. செய்யுள்: 25
-----------

திருமுறைகண்ட காலத்துத் திருஞானசம்பந்தர் பாடியனவெனக் காணப்பட்ட முந்நூற்றெண்பத்து நான்கு திருப்பதியங்களுள் ஒரு திருப்பதிகம் அவை முதன்முதல் அச்சேறிய காலத்தில் கிடைக்காது போயிற்று. எஞ்சிய முந்நூற்றெண்பத்துமூன்று திருப்பதியங்களே அச்சாகி வெளிவந்தன.

இப்பதியங்கள் தொடக்கத்தில் பண்முறையில் அறிஞர்களால் அச்சேற்றி வெளிப் படுத்தப்பட்டன. இவை திருமுறை திருமுறைகளாக வகுக்கப்பட்டதும் பண்முறை பற்றியேயென்பது திருமுறைகண்ட புராணத்தால் தெரிகிறது. திருஞானசம்பந்தர் திருப்பதியங்கள் முதன்மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. முதல் திருமுறையில், கட்டபாடை முதல் மேகராகக் குறிஞ்சியீறாகப் பண் ஏழும் பண்ணமைதி பெறாத யாழ்மூரியுமாகப் பண் எட்டிற்குத் திருப்பதியம் நூற்று முப்பத்தாறும், இரண்டாம் திருமுறையில் இந்தளம் முதல் செவ்வழியீறாகப் பண் ஆறுக்குத் திருப்பதியம் நூற்றியிருபத்திரண்டும், முன்றாந் திருமுறையில் காந்தார பஞ்சமம் முதல் அந்தாளிக் குறிஞ்சியீறாகப் பண் ஒன்பதுக்குத் திருப்பதியம் நூற்றியிருபத்தைந்தும் ஆக முந்நூற்றெண்பத்து மூன்று பதிகங்களாகின்றன.

கல்வெட்டாராய்ச்சியாளரால் திருவிடைவாய் என்னுமூர்க் கல்வெட்டொன்றில்[35] திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் காணப்பட்டது. அப்பதிகம் ஏனைப் பதியங்களோடு சேர்த்து இப்போது அச்சாகும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் வெளியிடப்பட்டுளது, அது பண் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருவிடைவாய்த் திருப்பதிகம் கல்லில் வெட்டப்பட்டபோது. அதற்கென்று வகுக்கப்பட்டிருந்த பண்ணின் பெயர் விடுபட்டதாகக் கொள்ளின், திருமுறைகண்டபுராணமுடையார் கூறும் முந்நூற்றெண் பத்துநான்கென்னும் தொகை நிறைந்து விடுகிறது.

இனி, யாழ்.மூரிப்பதிகம் பண்ணமைதிபெறாததென்றும், கொல்லிப்பண்ணில் ஒன்று[36] வெள்ளிப்பதிகமென்றும் கயப்பாக்கம் திரு. சதாசிவ செட்டியார் கூறுகின்றார். திருமுறைகண்டகாலத்துக் காணப்பட்ட திருப்பதியங்கள் முறையே பண்ணும் கட்டளையும் கண்டு தொகுக்கப்பட்டனவென்பது திருமுறைகண்ட புராணம் கூறுவது. அவ்வாறு பண்ணடைவு பெற்ற திருப்பதிகங்கள் முந்நூற் றெண்பத்து நான்காயின், பண்ணமைதி பெறாத யாழ்மூரியும் கொல்லி வெள்ளிப் பதிகமும் சேர, திருஞானசம்பந்தர் பாடியனவென இன்று நமக்குக் கிடைக்க வேண்டிய திருப்பதியங்கள் முந்நூற்றெண்பத்தாறாகும். ஆனால் பொதுவகையில் முந்நூற்றெண்பத்துநான்கு பதியங்களே கிடைத்துள்ளமையின், திருமுறை வகுக்கப்பெற்ற பின்பும் இரண்டு திருப்பதிகங்கள் மறைந்தனவெனக் கருத வேண்டியிருக்கிறது.

திருப்பதிகம் ஒவ்வொன்றிற்கும் பதினொரு பாட்டுக்கள் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றுள்ளன. அவற்றுள் திருவெழுகூற்றிருக்கை ஒன்றுமே தனிப்பாட்டாய் அமைந்தது. ஏனை யாவும் பதினொரு பாட்டுக்கள் கொண்ட திருப்பதிகங்களேயாகும். ஆகவே அவற்றின் கண் அடங்கிய பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இருநூற்றுப் பதின்மூன்றாதல் வேண்டும். அவற்றோடு திருவெழுகூற்றிருக்கை சேர திருப்பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இருநூற்றுப் பதின்நான்காதல் வேண்டும். ஆனால் இப்போது கிடைப்பன நாலாயிரத்து நூற்றியெண்பத்தொரு திருப்பாட்டுக்களே. இவற்றுள், சிலபதிகங்களில் பன்னிரு திருப்பாட்டுக்களும் சிலவற்றில் ஏழு பாட்டுக்களும் சிலவற்றில் எட்டும் சிலவற்றில் ஒன்பதும் சிலவற்றில் பத்தும் உள்ளன.
---
[35]. Annual Report, Madras Epigraphy No. 8 of 1918.
[36]. திருமறைக்காட்டுத் திருப்பதியங்களில் “விடைத்தகர்” எனத் தொடங்குவது. இவ்வாறு திரு. செட்டியார் அவர்கள் கூறுதற்குச் சான்று ஒன்றும் தெரிந்திலது.
--------------

கிடைத்துள்ளனகொண்டு[37] பொதுவாகவுள்ள ஏழு திருப்பதிகங்களையும் கழித்து நோக்குமிடத்துத் திருஞானசம்பந்தர், திருப்பதிகங்களால் வழிபட்ட திருப்பதிகள் இருநூற்று இருபதாகின்றன. இவற்றில் சீர்காழிக்குமட்டில் அறுபத்தேழு பதிகங்கள் உண்டு. திருவீழிமிழலைக்குப் பதினான்கு பதிகங்களும், மதுரைக்கு ஒன்பது பதிகங்களும், திருமுது குன்றத்துக்கு ஏழு பதிகங்களும், திருவிடைமருதுார்க்கு ஆறு பதிகங்களும் உள்ளன. திருவாரூர், திருவையாறு, திருக்கச்சி, திருமறைக்காடு என்ற ஊர்கட்கு ஐந்து திருப்பதிகங்களும், திருநள்ளாற்றுக்கு நான்கு திருப்பதிகங்களும், திருஅம்பர்மாகாளம், திருவானைக்கா, திருச்சிவபுரம் திருநல்லூர், திருநறையூர்ச் சித்தீச்சுரம், திரு நாரையூர் திருமழபாடி, திருவலஞ்சுழி என்ற இவற்றிற்கு மூன்று திருப்பதிகங்களும், திருவான்மியூர், திருவாழ் கொளிப்த்துர்திருவலிவலம் திருமாற்பேறு, திருமருகல், திருவண்ணுமலை, திருவாமாத்துர், கோட்டாறு, திருக்கோயில் (சிதம்பரம்), திருச்செங்காட்டங்குடி, திருத்தேவூர், திருநாகேச்சுரம், திருநாகைக்காரோணம், திருப்புகலூர், திருப்பூவணம் என்ற ஊர்கட்குத் தனித்தனி இரண்டு பதிகங்களும், ஏனைய ஊர்கட்கெல்லாம் ஒவ்வொரு திருப்பதிகமும் காணப்படுகின்றன.
---
[37]. பொதுவாகவுள்ளவை:
அவ்வினைக்கிவ்வினை காதலாகி,
ஆரூர் தில்லை. கல்லானீழல்.
வேயுறுதோளி வாழ்க.
துஞ்சலுந்.
---------------

திருஞானசம்பந்தர் செய்த தல யாத்திரை

திருஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் சீர்காழியின் நீங்கி ஆறு முறை திருக்கோயில் வழிபாடு குறித்து “யாத்திரை” செய்துள்ளார். அக்காலை அவர் வழிபட்ட கோயில்கள் வருமாறு:

முதல் யாத்திரை, திருப்பிரமபுரம் முதல் மூன்று; இரண்டாவது யாத்திரை, திருநனிபள்ளி முதல் ஏழு; மூன்றாவது யாத்திரை, திருமயேந்திரப்பள்ளி முதல் நான்கு; நான்காவது யாத்திரை, சிதம்பரம் முதல் இருபத்திரண்டு; ஐந்தாவது யாத்திரை, திருக்கண்ணுர் கோயில் முதல் நூற்று எழுபத்தெட்டு; ஆறாவது யாத்திரை, சிதம்பரம் முதல் நாற்பத்தேழு; இறுதியாகிய ஏழாவது யாத்திரை, திருநல்லூர்ப் பெருமணத்தோடு முற்றுப்பெற்றது.

சேக்கிழார் கூறிய திருஞானசம்பந்தர் வரலாற்றிற் கண்ட திருக்கோயில்கள் மேலே கூறியனவாகும். இவற்றுள் ஒரு முறைக்கு மேல் இருமுறை மும்முறையாக வழிபடப்பட்ட கோயில்களைக் கழித்து நோக்கின், திருஞான சம்பந்தரால் திருப்பதிகம்பாடி வழிபடப்பட்ட கோயில்கள், திருவிடையாய் உளப்பட இருநூற்று நாற்பத்தொரு கோயில்களாகும். எஞ்சி நிற்கும் முப்பத்துமூன்று கோயில்கட்குத் திருப்பதிகம் காணப்படவில்லை. அவை மாறன்பாடி, திருநீடூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கைவீரட்டம், திருவெதிர்கொள்பாடி, திருக்கஞ்சனூர், திருவெஞ்சமாக்கூடல், திருவாட்போக்கி (இரத்தினகிரி) திருவாலந்துறை, திருச்செந்துறை, திருத்தவத்துறை, திருவெறும்பியூர், திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருப்பாலைத்துறை, திருப்பூவனூர், திருவாறைமேற்றளி, திருச்சத்திமுற்றம், திருவாறைவடதளி, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருமூவலூர், திருவாரூர் அரநெறி, திருத்தலையாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கோடிக்குழகர் கோயில், திருச்சுழியல், திருமணமேற்குடி, திருப்போதிமங்கை, திருத்தினைநகர், திருக்கச்சி அநேகதங்காவதம், திருக்கச்சிமேற்றளி, திருவெண்பாக்கம், திருக்காரிகரை என்பனவாகும்.

திருப்பதிகத்தால் வழிபடப் பெற்ற கோயில்களுள் இராமனதிச்சுரம், திருவேடகம், திருக்கடைமுடி, திருக்கற்குடி, திருக்கலிக்காமூர், திருக்கள்ளில், திருக்கோட்டாறு, திருச்சிறுகுடி, திருச்சிற்றேமம், திருச்சோபுரம், திருத்தென்குடித்திட்டை, திருநெல்வாயில் என்ற திருக்கோயில்கட்குத் திருஞானசம்பந்தர் சென்றதாகச் சேக்கிழார் கூறிற்றிலர்.

திருப்பதிக ஆராய்ச்சி-வரலாற்றுக் குறிப்பு

இனி, திருஞானசம்பந்தர் பாடியுள்ள திருப்பதிகங்களைக் காண்பது முறையாகும். இத்திருப்பதிகங்களின் இறுதியிலுள்ள திருப்பாட்டில் அப்பதிகத்தைப் பாடிய தமது ஊரும் பெயரும் தவறாமல் குறித்துள்ளார் திருஞானசம்பந்தர், அதன்கண், அப்பதிகத்தை ஓதுபவர் எய்தும் பயனையும் அவர் குறிப்பதனால் அதனைப் பயனுதலிய திருப்பாட்டென்பதும் உண்டு. அது திருப்பதிகத்தை முடித்து நிற்பது பற்றித் திருக்கடைக்காப்பு என்று பெரிதும் பலராலும் கூறப்படும்.

இத்திருக்கடைக்காப்பில் திருஞானசம்பந்தர் தம்மைச் சீகாழிப்பதிக்கு உரியவரென்றும், தாம் மறையவர் மரபில் கவுணியர் குடியிற் பிறந்தவரென்றும் குறிக்கின்றார். இவர் காலத்தே சீகாழியில் வாழ்ந்த வேதியர்கட்கு இக்கவுணியர்குடி தலைமை பெற்றுச் சிறந்து விளங்கிற்று என்று இவர் திருப்பதிகத் திருக்கடைக்காப்புச் செய்யுட்களால்[38] அறிகின்றோம்; “புகலிந்நகர்பேணும், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்”[39] என்றும், “நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன்”[40] என்றும் “கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்”[41] என்றும், “கவுணியர் குலபதி காழியர் கோன்”[42] என்றும் வருவன காண்க.

[38]. சோழநாட்டு வேதியர் மரபுக்கே ஞானசம்பந்தர் பிறக்த குடி தலைமை பெற்று நிலவிற்றென்பதை, “பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன்” (50) என அவர் கூறுவது கொண்டே அறியலாம்.
[39]. ஞானசம். 107.
[40]. ஞானசம். 280.
[41. ஞானசம். 381.
[42]. ஞானசம். 112.
------------

ஞானசம்பந்தர் உமையம்மையளித்த ஞானப்பால் உண்டு சிவஞானம் கைவரப் பெற்றவரென்பது வரலாறு. பொற்கிண்ணத்தில் ஞானப்பாலைப் பெய்து தம்மை உண்பித்து இறைவன் ஆட்கொண்ட நிகழ்ச்சியை, அவரே, “போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்”[43] என்று குறித்திருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இதனுள் திருஞானசம்பந்தர் சிவஞான சம்பந்தரென்பது ஒருதலை. “கொய்ம்மா மலர்ச்சோலைக் கொச்சைக்கு இறைவன் சிவஞானசம்பந்தன்”[44] என்று இக்குறிப்பையும் அவர் காட்டியருளுவது காணத்தக்கது. இத்தகைய சிவஞானப்பேறு பிறரெவரும் பெறற்கு அரிதென்பது உலகம் அறிந்த செய்தி. இவ்வண்ணம் பெறலரும் பேறாகிய சிவ ஞானப்பேற்றால் பெருமைமிக்க ஞானசம்பந்தர், அக்காலத்து நிலவிய கலைஞானம் பலவும் நிரம்பப்பெற்றிருந்தனர். கற்றுவல்ல பெரியோர் பலருடைய கேள்வியும் சூழ்நிலையும் அவர்க்குக் கிடைத்திருக்கின்றன. ஞானசம்பந்தர் “தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்”[45] என்பன போன்ற தொடர்களால் தம்மைத் தமிழ்க்கே உரியரெனக் கூறுகின்றாராயினும், வடமொழி நான்மறையிலும் தாம் மிக்க வன்மை யுடையரென்றும், அம்மறையினும் தமக்கு நீங்காக் கிழமை யுண்டென்றும் நாம் அறிய, “நார்மலிங்தோங்கும் நான்மறைஞானசம்பந்தன்”[46] எனவும், “அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் ஞானசம்பந்தன்”[47] எனவும் பல திருப்பதிகங்களிற் குறித்துரைக்கின்றார்.
---
[43]. ஞானசம், 282.
[44]. ஞானசம். 175
[45]. ஞானசம். 41
[46]. ஞானசம். 41
[47]. ஞானசம். 47
---
இறைவன் திருவருளாற் பெற்ற சிவஞானத்தால், செயற்கையாற் பெறப்படும் தமிழ் வடமொழிகளின் கலைஞானமும் ஒருங்கு கைவரப்பெற்ற திருஞானசம்பந்தர், தம்முடைய ஞானத்தின் சிறப்பை, “ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்”[48] “பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்”[49] என்றும் பல திருப்பதிகங்களிற் குறிக்கின்றார். இவ்வண்ணம் கலைஞானமும் உண்மை ஞானமாகிய இயல்ஞானமும் சிறக்கப்பெற்றிருப்பதை நுணுகிக் கண்டதிருத்தொண்டர் புராணமுடையார், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனையற மாற்றும் பாங்கினில் ஒங்கிய ஞானம், உவமையிலாக் கலை ஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம் பந்தர் தாமுணர்ந்தார்”[50] என்று கூறுவதும், ஞானசம்பந்தர் தாமே தம்மைச் “சிவஞானசம்பந்தன்”[51] என்றும், “மறை சேர்வருங் கலைஞானசம்பந்தன்”[52] என்றும் கூறுவதும் ஒப்பு நோக்குவார்க்குச் சேக்கிழார் கூறியது மிக்க பொருத்தமாக இருப்பது இன்பந்தருவதொன்று.
-----
[48]. ஞானசம். 195.
[49]. ஞானசம். 221.
[50]. பெரிய பு. திருஞான. 139.
[51]. ஞானசம். 175.
[52]. ஞானசம். 77.
--------------

பதிகம் பாடிய காரணம்

இவ்வண்ணம் பல்வகை ஞானங்களால் உயர்ந்த திரு ஞானசம்பந்தர் தாம் தமிழில் திருப்பதிகங்கள் பாடுதற்குரிய காரணத்தையும் ஒரளவுவிளங்கக் கூறியுள்ளார். “ஞாலம் மிக்க தண்டமிழால் ஞானசம்பந்தன் சொன்ன கோலம் மிக்க மாலை”[53] என்றும், “கழுமலநகர்ப், பழுதில் இறையெழுதுமொழி தமிழ்விரகன்”[54] என்றும் கூறுவன, தமிழ் எழுதாமொழியாகாது எழுதுமொழியென்பதும், எளிதில் மக்கள் உள்ளத்தைக் கசிவிக்கும் இயல்புடையதென்பதும், இயல்பாகவே தன்பால் இன்பம் ஊற விளங்குவதென்பதும், இம்மொழியே நாட்டில் மேன்மை மிக்கு விளங்கிற்றென்பதும், இத்தமிழ்க்கே தமக்குக் கிழமை மிகவுண்டென்பதும், அதன்கண் தமக்கு வன்மை மிக உண்டென்பதும் வற்புறுத்தி, ஞானசம்பந்தர், தமிழால் தம்முடைய திருப்பதிகங்களைப் பாடுதற்குற்ற காரணத்தைப் புலப்படுத்தியுள்ளனர்.
---
[53]. ஞானசம். 51:11
[54]. ஞானசம். 325:12
---------------

பொருளாராய்ச்சி

இங்ஙனம் இனிய தமிழால் திருப்பதிகங்கள் பாடலுற்ற திருஞானசம்பந்தர், அத்திருப்பதிகங்களைப் பொதுவாகச் “செந்தமிழ்”[1] “ஒண்டமிழ்” [2] “விலையுடைய அருந் தமிழ்”[3] “இன்தமிழ்”[4] “பூந்தமிழ்”[5] என்று கூறுவாராயினும், அவற்றின் சிறப்பும் விளங்க, “திருநெறியதமிழ்”[6] “அருள்மாலைத் தமிழ்”[7] “மறையிலங்கு தமிழ்”[8] “தவம் மல்குதமிழ்”[9] “மறைவளரும்தமிழ்”[10] “பொய்யிலிமாலை”[11] “அளிதருபாடல்”[12] என எடுத்தோதுகின்றார். சில திருப்பதிகங்கட்குத் தாமே பெயர் கொடுத்து “பல்பெயர்ப் பத்து”[13] “இன்னிசை” [14] “ஏழிசைமாலை”[15] “பூம்பாவைப் பாட்டு”[16] “பாசுரம்”[17] என்று இயம்புகின்றார். இப்பதிகங்களை ஓதும் முறையையும் ஓதியவழி எய்தக்கூடிய பயன்களையும் பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யுளில் தவறாமல் கூறியுள்ளார். “காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய்நவிற்றிய தமிழ்மாலை, ஆதரித்திசை கற்றுவல்லார்சொலக் கேட்டு உகந்தவர்தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந்து அடையாவே”[18] எனவும் கூறுகின்றார்,
-----
55. ஞானசம். 293.
56. ஞானசம். 291.
57.ஞானசம். 263.
58. ஞானசம். 114.
59. ஞானசம். 194.
60. ஞானசம். 1.
61. ஞானசம். 3.
62. ஞானசம். 61.
63. ஞானசம். 112
64. ஞானசம். 203.
65. ஞானசம். 362.
66. ஞானசம். 380.
66. ஞானசம். 63.
67.ஞானசம். 108.
68. ஞானசம். 173.
69. ஞானசம். 183.
70. ஞானசம். 312.
71. ஞானசம். 242
---------
இனி, அந்தணர் முதலிய நால்வகை மரபினருக்கும் தனித்தனி மாலை கூறுவது தமிழ் நூல்களின் இயல்பு. அவ்வகையில் அந்தணருக்குத் தாமரைப்பூவை மாலையாகக் கூறுவர். திருஞானசம்பந்தர் அந்தணராதற்கேற்பத் தாம் தாமரைப்பூ மாலை அணிவது இயல்பென்பதை, “கமலத் தார்மிகுந்த வரைமார்பன் சம்பந்தன்”[72] என்று குறித்துள்ளார்.

[72]. ஞானசம். 60.
-----------------

உட்கோள்

திருஞானசம்பந்தர் சிவபெருமான் திருவடிக்கே ஒன்றிய அன்புடையராய் அவர் திருவடியல்லது பிறிது நினையாத கடைப்பிடி யுடையவராய் இருத்தலால், “கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்”[73] என எடுத்துக் கூறுவதோடு, “நின்றியூரில் உறையும் இறையல்லது எனது உள்ளம் உணராது”[74] “ஏகம் பத்து உறைவானையல்லாது உள்காது என் உள்ளமே”[75] “உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின், ஒண்மலரடியலால் உரையாது என் நா”[76] எனப் பல திருப்பதிகங்களில் அக் கருத்தை வற்புறுத்துகின்றார்.

இறைவன் இயல்பு கூறல்

இனி, ஞானசம்பந்தர் இறைவனைப்பற்றிக் கூறுவன அவர் காலத்துக் கடவுட் கொள்கையைக் காட்டுவனவாம். மணிமேகலையாசிரியர் காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சமயங்களுள் சைவமும் ஒன்று. மணிமேகலையோடு பேசிய சைவவாதி, தன் கடவுட் கொள்கையைக் கூறுமிடத்து,

“இருசுடரோடுஇயமானன்ஐம்பூதம் என்று
எட்டுவகை யுயிரும் யாக்கையு மாய்க்
கட்டி நிற்போனும் கலையுரு வினோனும்
படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதான் ஒன்றி லோனும்
அன்னோன் இறைவனாகும் என்று உரைத்தனன்;”[77]

எனவே, இக்கொள்கை திருஞானசம்பந்தர்க்கு முன்பே தமிழ்நாட்டில் நிலவிய சைவக்கொள்கையாதலை நன்கறியலாம். இதனை ஞானசம்பந்தர் பல திருப்பாட்டுக்களில் வற்புறுத்துகின்றார். சுடர் இரண்டு, இயமானன் ஒன்று, பூதம் ஐந்து ஆக எட்டு வடிவாக இறைவன் உளன் என்ற கொள்கையை, "மண்ணொடு நீர் அனல்கனலோடு ஆகாயம் மதியிரவி, எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்டிசையும், பெண்ணினொடு- ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்"[78] என்று எடுத்தோதுகின்றர். ------
[73]. ஞானசம். 77.
[74]. ஞானசம். 18.
[75]. ஞானசம். 148.
[76]. ஞானசம். 262.
[77]. மணி.27:89-95.
[78]. ஞானசம். 184:3.
----
“இயமானன்” எனச் சைவவாதி கூறியது, உயிரையே வேள்வித் தலைவனையன்று என்றற்கு ஈண்டுக் காட்டியனவே சான்றாதல் காண்க. "உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்" எனச் சைவவாதி கூறியது, செய்த வினைக்கு ஏற்ப இறைவன் உயிர்கட்கு உடல் கருவிகளைப் படைத்துக் கூட்டி நிறுத்துவன் என்னும் சைவக் கருத்தாகும். இதனை ஞானசம்பந்தர், “உடல்வரை இன்னுயிர் வாழ்க்கையாய ஒருவன்”[79] எனக் குறிக்கின்றார். “கலையுருவினோன்” என்பது, “கலையவன் மறையவன் காற்றொடு தீ மலையவன், விண்ணொடு மண்ணுமவன்”[80] என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. “பேணுமூன்று உருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்”[81] என்பது “படைத்து விளையாடும் பண்பினோன்” என்றதையும், “இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகுபெரு வளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதுகெட, இருவர்கள் உடல் பொறையொடுதிரி எழில்உரு உடையவன்”[82] என்பது "துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்" என்றதையும், "விரை மலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதல் ஒருவன்"[83] எனவும், "மூவரும் இவரென்னவும் முதல்வரும் இவரென்னவும், மேவரும் பொருளாயினர்"[84] எனவும், “வருவன தன்னின் வேறுதான் ஒன்றில்லோனும்” என்றதையும் நிறுவுகின்றன.
-----------
79. ஞானசம். 363:1.
80. ௸ 109:6
81. ௸ 132:5.
82. ௸ 22:7
83. ௸ 53:1
84. ௸ 214:6.

-----------
இத்தகைய முதல்வன் உயிர்களிடத்தில் உயிர்க்குயிராப் உடனாய் நின்று, காண்பன கண்டும் காட்டியும் உதவுகின்றான் என்பாராய், "உரைசேரும் எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்”[85] என்றும், "புவி முதல் ஐம்பூதமாய்ப் புலனைந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய், அவையவைசேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்"[86] என்றும் கூறுகின்றா. பயனுருவாயும் அல்ல வுருவாயும் நிற்கின்றான் ஆயினும் இறைவன் இவற்றின் வேறாயும் உடனாயும் இருப்பன் என்பதைப் "பல்கதிரோன் மதிபார் எற்றும்நீர் திக்காலும், மேலேவிண் இயமானனோடு மற்றுமாதோ பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான்”[87] எனவும், "ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணாண் குணமூன்றாய்...வேறாய் உடனானான்"[88] எனவும் பல பாட்டுக்களில் விதந்தோதிக் காட்டுகின்றார். இங்கே கூறிய உடனுதலாகிய உடனிலையையே பின்னர்ப் போந்த சித்தாந்த சைவ நூல் உரைகள் சுத்தாத்துவித நிலை எனக் கூறுவனவாயின.

இவ்வாறு தாம் கூறிப்போந்த இறைவனை, உண்டா இல்லையா என ஆராயும் ஆராய்ச்சி இனி வேண்டா: அவன் என்றுமுள செம்பொருள்; அவனை வழிபடுவதே செயற்பாலது என மக்களுக்கு ஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார். அவனது உண்மையினை ஆராய்ந்து காண்பதென்பது மக்கள் அறிவெல்லைக்கு இயலாதது என்ற கருத்துப்பட, "உம்பராலும் உலகின்னவராலும், தம்பெருமை அளத்தற்கரியான்"[89] என்று அவர் கூறியுள்ளார்.
-----
85. ஞானசம். 182:4.
86. ஞானசம். 129:7.
87. ௸ 53:2.
88. ௸ 11:2
89. ௸ 29:5
------------

இவ்வாறு, இறைவன், அரிய காட்சியனாயினும், ஆளப்படுவாரை அவன் ஆட்கொள்ளும் முறையும், அவர்கட்கு அருளும் வண்ணமும், பிறவும் அளவிறந்தனவாகும். அதனால் அவரவரும் தாம்தாம் அவன் திருவடிகளை வணங்கி வினைநீக்கமும் வீடுபேறுமே வேண்டற்பாலராவர் என்பது ஞானசம்பந்தர் நல்கும் நல்லுரை. "ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும், கேட்பான் புகில் அளவில்லைகிளக்கவேண்டா, கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார்"[90] என அவர்கூறுவது ஈண்டு நோக்கத் தகுவதாம். சுருங்கச் சொன்னல், ஒவ்வொருவரும் தாந்தாம் செய்த பிழைக்கு வருந்தி மனம் திருந்தி வழிபடல் வேண்டும் வழிபடுவோர்க்கு அவர் அருள் செய்வார் என்பாராய், "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே, ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்"[91] என்றும் அறிவுறுத்துகின்றார், இறைவனுடைய திருப்பெயர்களும் பல. அவன் உயிர்களை ஆட்கொள்ளற்குக் கொள்ளும் திருவுருவும் பல. "நானாவித வுருவால் நமை ஆள்வான்"[92] என அவர் கூறு வது காண்க. அதனால், அவனுடைய பெயரும் உருவும் இதுவென வரையறுத்தோதுதல் அருமையாம்; ஆயினும் அவனது உரு நீதி யெனல் அமையும் என்பாராய், "இன்னவுரு இன்னநிறம் என்று அறிவதேல் அரிது, நீதி பலவும், தன்னவுருவாம் என மிகுத்த தவன்"[93] என்று விளக்குகின்றார். உயிர்களின் இயல்பு - இவ்வாறு, கடவுட் கொள்கை நலங்களை ஆங்காங்குக் குறித்துச்செல்லும் திருஞானசம்பந்தர், தாம் மேற்கொண்டுள்ள சில அரிய கொள்கைகளையும் நாம் அறியக் குறித்துள்ளார். உலகில் வாழும் மக்களுடைய நெஞ்சம் பலவகை யான நினைப்புக்கட்கு உறைவிடம். நெஞ்சம் புண்ணாமாறு நெடிது நினைந்து வருந்தித் துஞ்சுவது மாந்தர் தொழிலாகும். ஆகவே, நெஞ்சத்தை நினைப்புக்கட்கு இரையாக்காது, ஒரு நெறியில் நிறுத்தி வாழ்வது இன்றியமையாது என்பார், "நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின்று அயராதே, மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம் வந்து அடையாமை"[94] என்று குறிக்கின்றார்.
-----
90. ஞானசம். 312 : 4.
91. ஞானசம். 200 : 1.
92. ௸ . 9 : 5.
93. ௸ . 329 : 4.
94. ௸ .118: 8.
----------
மேலும் பிறப்புத் துன்ப வடிவினது:பிறந்தவர் துன்ப நீக்கமே வேண்டற்பாலர். அது துறவு மேற்கொண்டவர்க்கே எளிதில் கை கூடப்பெறுவது என்ற கொள்கை நாட்டில் அந்நாளில் நன்கு பரவி யிருந்தது. அதுகண்ட ஞானசம்பந்தர். "துறவும் ஒரு நன்னெறியே ஆயினும், அதனினும் எளியதும் நலந்தருவதுமாகிய திருநெறியொன்று உண்டு : அஃது. இறைவனை நாளும் இடையறாது வழிபட்டு வாழ்வது என்று ஞானசம்பந்தர் தெருட்டுவாராய்," பிறவியால் வருவன கேடுள.ஆதலால் பெரிய இன்பத் துறவியார்க்கல்லது துன்பம்நீங்காதுஎனத்தூங்கினாயே,மறவல்நீமார்க்கமே நண்ணினாய், தீர்த்தநீர்மல்குசென்னி, அறவன் ஆரூர் தொழுது உய்யலாம்மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே"[95] என்று கூறுகின்றார், "காமஞ்சான்ற கடைக்கோட்காலை, ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி"[96] அறம் புரிந்த நல்லோர்க்கே துறவு நன்கு கைகூடப் பெறுவதெனத் தொல்காப்பியரும், "ஓடி உய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே"[97] எனச் சங்கச் சான்றோரொருவரும் கூற, வழிவழியாக வந்த அப்பழந்தமிழ்க் கொள்கையை உடன்பட்டு, பெண்டிர் மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை, விண்டு பண்டே வாழமாட்டேன்"[98] என்று உரைக் கின்றார். இவ்வாறு துறவுபற்றிக் கூறினராயினும், துறவு பூண்டுவாழும் பெரியோர்களைப் பாராட்டி, "ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றமே "[99] எனவும், "அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்"[100] எனவும் கூறுவது குறிக்கத்தக்கது.
-------------
95. ஞானசம். 215 : 5.
96. தொல். பொ. கற்பு. 51.
97.புறம்: 193.
98. ஞானசம். 50 : 3.
99. ௸. 131 : 10,
100. ௸ 132 : 6.
--
அறவுரை வழங்கல்

இனி, தாம் வற்புறுத்தும் வழிபாட்டையும் ஒருமையுணர்வோடு உலகியற் சிற்றின்பத்தை உள்ளங்கொள்ளாது செய்தல் வேண்டுமென்பாராய், "செப்ப நெஞ்சே நெறி கொள்: சிற்றின்பம், துய்ப்பன் என்னாது அருளே துணையாக"[101]என்றும், "பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம் புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவாப் பகையறு வகை நினையா”[102] என்றும் கூறுவர். வாழ்க்கையின் பயன் இறைவன் திருவடியை வழிபட்டு வாழ்வதே எனவும், அதனைக் காலையும் மாலையும் செய்வது மக்கட்குக் கடன் எனவும் வற்புறுத்துகின்றார். 'வையத்தில் நன்னெறிக்கண் வாழ்வார்க்கும், வாழ்க்கையின் இயல்பாகிய துன்பப்பயன் இல்லாதுபோதல் இல்லை. இப்பிறவித்துன்பமும், தம்மாலும் பிறவுயிர்களாலும் வருமாயின் அதனை ஒரளவு முன்னறிந்து காத்தல் மக்கட்கு. இயலுவதொன்று நாள் கோள் முதலிய தெய்வத்தால் வருவன அவ்வாறு காக்கப்படுவன அல்ல; ஆயினும், ஒருமை வழிபாடுடையார்க்கு அவையும் இல்லாதொழியும் எனத் திருஞானசம்பந்தர் தெருட்டலுற்று, "ஆதிப்பிரான் அடிகள் அடைந்தேத்தவே கோளும் நாளவை போயறும் "[103]'எனவும், '"நாதன் அமர்கின்ற நாகேச்சுரம். நண்ணுவார், கோளும் நாளுங் தீயவேனும் நன்காம் குறிக் கொண்மினே"[104]எனவும் ஊக்குகின்றார். ஒரு நெறிய மனம் வைத்து ஆண்டவனே வழிபடுவதை, மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு இம்மைப் பயன்களேயன்றி. வீடுபேற்றுக்கு இன்றியமையாத திருவருள் ஞானமும் அவனால் நல்கப்படும்"[105] என்றும், அவன் ஞானமே வடிவாக, உடையவன்[106] என்றும் அறிவுறுத்தியுள்ளார். வழிபடு வோர்க்கு அவன் இம்மைப் பயன்களை நல்குவனென்பதை, "சங்கரனர் தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவர்"[107] எனவும், மண்ணில் நல்லவண்ணம். வாழலாம் வைகலும், எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை"[108] எனவும் கூறுதல் காண்க.


[101]. ஞான.சம். 28: 1.
[102]. ௸ 126:7
[103]. ௸ 146 : 7.
[104]. ௸.255 : 6.
[105]. ௸. 21 : 6; 17:6
[106]. ௸.69 3.
[107. ௸ 238 : 2.
[108]. ஞானசம். 282:1.
--------------

இன்ப நாட்டமும் அதனைப்பெறும் முயற்சியுமேயுடைய உயிர்கட்குத் தடைசெய்வன அவ்வுயிர்கள் செய்யும் வினைகளே என்பது சமய தத்துவ நூல்கள் கூறும் கொள்கை. இவ்வினைகளை, உயிர்கள் நுகர்ந்து கழித்தாலன்றி அவை நீங்கா:வினையாகிய பகையை வெல்லும் பொருள் யாதும் இல்லை யென்பது சமணம், பெளத்தம் மீமாஞ்சை முதலிய சமயங்களின் முடிபு. ஞானசம்பந்தர், அம்முடிபை மறுத்து, இறைவழிபாட்டால் இவ்வினைப் பகையும் கெடும்; இறைவன் திருவருள் ஒளியின்முன் வினயாகிய இருள் நிலையின்றிக் கெட்டொழியும் என்று தெருட்டுகின்றார்.

இவ்வினைகள் உளவாதற்குக் காரணம் உயிர்களை அனாதியே பற்றி நிற்கும் மலம் என்பது சைவசமய அறிவு நூன்முடிபு. மலத்தின் தொடர்பு அறுவதே வினைக் கட்டினின்றும் வீடுபெறுவதற்கு வழியாகும், இம்மலத்தின் மறைப்பு, இறைவன் வழிபாட்டால் நீங்குமெனத் திருஞான சம்பந்தர் அறிவுறுத்துகின்றார். இம்மலகன்மங்களைப் பாசம் என்பது சைவநூல் வழக்கு. அதனையும் ஞான சம்பந்தர் மேற்கொண்டு, "ஈசன் முதுகுன்றை நேசமாகி நீர், வாசமலர் தூவப் பாசவினை போமே!”[109] எனவும், "பாசமறுப்பீர்காள், ஈசன் அணியாரூர், வாசமலர் தூவ, நேசமாகுமே"[110] எனவும் கூறுகின்றார்,
---
[109]. ஞானசம். 93 : 4.
[110]. ௸ 91:6
-----------
வரலாற்றுக் குறிப்புக்கள்

இனி, ஞானசம்பந்தர் காலத்தில் நாட்டில் இறைவன் அருட்செயலை விளக்கும் புராண வரலாறுகள் பல நிலவிய குறிப்பை ஆங்காங்குக் குறித்துள்ளார். கணபதியையும்[111] முருகனையும்[112] பற்றிய வரலாறுகளும், உபமன்னியுவுக்குப் பாற்கடல் ஈந்ததும்,[113] குபேரனுக்குத் தோழமை தந்ததும்[114]' -சலந்தரன் தலையரிந்ததும்[115], தேவர்பொருட்டு நஞ்சுண்டதும்,[116] தக்கனது வேள்வியை அழித்ததும்,[117] தாருகாவனத்து முனிவர்விட்ட யானையைத் தோலுரித்ததும்,[118] அவர் மகளிர்பால் பலி ஏற்றதும்,திருமாலுக்குச் சக்கரம் அளித்ததும்,[119] திரிபுரம் எரித்ததும்[120],திருமாலும் பிரமனும் இறைவன் அடிமுடி தேடியதும்[121], பிரமன் தலையைக் கொய்ததும்[122],மார்க்கண்டர் பொருட்டுக் கூற்றுவனை அழித்ததும்[123], காமனை யெரித்ததும்[124]' ஆகியவரலாறுகளும் . குறிக்கப்படுகின்றன.

இராமாயண வரலாற்றிற் காணப்படும், இராமன்,'[125], இராவணன்[126], வாலி[127], சாம்புவன்,[128] சம்பாதி, சடாயு[129]முதலியோர் இறைவனை வழிபட்ட செய்திகளும், பாரதத்தில் வரும் அருச்சுனன் வழிப்பட்டுப் பாசுபதம் பெற்ற செய்தியும்[130],ஞானசம்பந்தரால் குறிக்கப்படுகின்றன. இவற்றிடையே இராவணனுடன் சடாயுவும் சம்பாதியும் போர் செய்ததும்[131],இராவணன் வாலியாற்கட்டுண்டதும்[132], ஞானசம்பந்தரால் எடுத்தோதப் படுகின்றன்." ஆங்காங்குச் சென்றபோது அவ்வவ்விடங்களில் அக்காலத்து வழங்கிய தல வரலாறுகளையும் ஞானசம்பந்தர் குறித்துள்ளார். ----
[111]. ௸ 123:5
[112]. ௸ 198:1,199:6, 209:1.
[113].ஞான 201:9 . [114].ஞான 219 : 5 [115].௸. 380: 2.
[116]. ௸22 : 1
[117].௸. 131 :3. [118]. ௸.75:7
[119]/ ௸. 377 : 7. [120]. ௸.11 : 6.
[121].௸. 48 : 9.
[122]. ௸I31 : 7. [123].௸. 20 : 7. [124]. ௸ 361 : 2
[125].௸.268 : 2.
[126]. ௸.337 : 10. பதிகந்தோறும் இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தியும், திருமாலும் பிரமனும் அடி முடி தேடிய செய்தியும் கூறப்படுகின்றன.
[127].ஞான.349:6. [128].ஞான.291:1 [129]. ௸179 : 1.
]130].௸, 62 : 5. [131]. ௸ 179 : 4. [132] ௸. 349: 8.
-----------
திருவானைக்காவில் ஆனை வழிபட்டதும்[133] திருவெண்காட்டில் வெள்ளை யானை வழிபட்டதும்,[134] மயேந்திரப்பள்ளியில் ஞாயிறும் திங்களும் வழிபட்டதும்[135], பிறவும் அவரால் குறிக்கப்படுவனவாகும்.

விலங்குகளேயன்றி வேந்தருட் பலரும் தேவர்களும் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற செய்திகள் பல ஞானசம்பந்தரால் கூறப்படுகின்றன. சீகாழியிலும் பிறவிடங்களிலும் பிரமன் வழிபட்ட செய்தியும்[136], திருக்கண் ணர் கோயிலில் இந்திரன் வழிபட்டதும்[137], சீகாழி வெள் ளத்தில் மிதந்தோங்கிய செய்தியும்[138], கண்ணன் மலையைக் குடையாகத் தாங்கிய செய்தியும்[139], பகீரதன் கங்கையைக் கொணர்ந்தசெய்தியும்[140], நளன் திருநள்ளாற்றில் வழிபட்ட செய்தியும்[141] நந்தன் என்பான் சீகாழியில் இருந்து அரசாண்ட செய்தியும்[142], திருப்பாதிரிப்புலியூரில் முடக்கான் முயலகன் அருள் பெற்றதும்[143], கோச்செங்கட் சோழனது முன்னைப்பிறப்புவரலாறும்[144], அவன் திருவானைக்கா[145], திருவம்பர்[146], திருவைகா[147], திருத்தண்டலை நீணெறி[148], திருமூக்கீச்சுரம்[149]' என்ற இடங்களில் திருப்பணி செய்ததும், இவ்வாறே தமிழ் வேந்தர் மூவரும், திருப்பூவணம்[150],திருமூக்கிச் சுரம்[151[' முதலிய இடங்களில் பணி செய்து வழிபட்ட செய்தியும், திருவாலங்காட்டுப் பழையனுரர் நீலி கதையும்[152], இறைவன் ஆலின் கீழிருந்து அறமுரைத்த வரலாறும்[153], இறைவன் கூடலில் தமிழ் ஆய்ந்ததும்,[154] விருத்த குமார பாலனான திருவிளையாடல் புரிந்ததும்[[155] பிறவும் குறிக்கப்படுகின்றன.
----
[133].ஞான159:4. [13]4].ஞான.284:7. [135].௸. 289 :6.
[136]. ௸.1 : 11. [137] ௸. 101 :7. [138]. ௸ 75 : 2.
[139].௸. 79 : 9. [140]. 6; 327 : 6. [141]. ௸.I69 :3.
[142]. ௸. 63: I [143] .௸.257 :1. [144]. ௸.199 : 7.
[145].௸. 159 :5. [146]. ௸.277 : 5. [147] ௸ .276: 4.
[148]. ௸.308 : 9. [149] .௸.378 :6. [150]. ௸ 64 : 1.
[151]. ௸256 : 9. [152]. ௸ 45 : 1. [153]. ௸.337 :3,
[154]. ௸.312: 11. [155.]. ஞானசம். 52 : 6.
--------------

அடியார் வரலாறுகள்

இனி, சிவனடியார்களுட் சிலருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் பல திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன என முன்பே கூறினோம். அவருள் கண்ணப்பர் கண்ணிடந் தப்பியதும்,[156] தந்தையைத் தாளற வீசிச் சண்டேசுரர் சண்டீசபதம் பெற்றதும்,[157] குலச்சிறையார் அடியவர்களைப் பேணியதும்,[158] சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியிலிருந்து சிவவழிபாடு செய்ததும்,[159] திருநீலகண்ட யாழ்ப்பாணர் இசைபாடியதும்,[160] நமிநந்தியடிகளும், [161] திருநீலநக்கர்,[162] மங்கையர்க்கரசியார்,[163] முருகநாயனர்[164] முதலியோர் வழிபட்டதும் பிறவும் ஆங்காங்குக் குறிக்கப்படுகின்றன.
---
[156]. ஞானசம். 327: 4. [157] ௸. 62 : 4.
[158]. ௸. 378: 4, 8 [159]. ௸ 321 : 7, 8
[160]. ௸. 62 : 9. [161]. ௸. 62 : 6.
[162]. ௸. 316 : 11. [163]. ௸. 378 : 1, 3
[164]. ௸ 228: 3.
-----------
இவ்வண்ணம், தம் காலத்தே தாம் கேட்டனவும் கண்டனவுமாகிய நிகழ்ச்சிகளைக் குறித்துச் செல்லும் திருஞானசம்பந்தர், தம்முடைய வரலாற்றுக் குறிப்புக்களையும் இடையிடையே ஆங்காங்குக் குறித்துள்ளார். தாம் இளமையில் ஞானப்பால் உண்ட குறிப்பைத் திருக்கழுமலத் திருப்பதிகத்திலும்,[165] தம்முடைய தந்தை தம்மைத் தனது தோண்மேல் எடுத்துச் செல்லத் தாம் அவர் தோள்மேல் இருந்தபடியே இறைவனைப் பாடிப் பரவிய குறிப்பைத் திருநனிபள்ளித் திருப்பதிகத்திலும்,[166] தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டுத் தாம் இறைவனை வேண்டிப் பொன் பெற்றுத் தந்த குறிப்பைத் திருவாவடுதுறைத் திருப்பதிகத்திலும்[167] படிக்காசுபெற்ற குறிப்பைத் திருவிழிமிழலைத் திருப்பதிகத்திலும்[168], மறைக்காட்டில் கதவடைக்கப் பாடியகுறிப்பைத் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்திலும்[169],' சமணர் தம் திருமடத்துக்கிட்ட தீயை பாண்டியனைப் பற்றச் செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகத்திலும்[170], திருநீற்றால் பாண்டியன் சுரந்தீர்த்த குறிப்பு திரு. நீற்றுப்பதிகத்திலும்[171], கோளறுபதிகத்திலும்[172], சமணரொடு வாது செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகங்களி லும்[173], ஆற்றில் ஏடு செலுத்திய குறிப்பு, திருப்பாசுரப் பதிகத்திலும்[174], திருக்கழுமலப் பதிகத்திலும்[175], ஒடம்விட்ட செய்தியைத் திருக்கொள்ளம்பூதூர்த் திருப்பதிகத்திலும்[176], ஆண்பனை பெண்பனையான நிகழ்ச்சியைத் திருவோத்தூர்த் திருப்பதிகத்திலும்[177], முத்திவேண்டியதைத் திருநல்லூர்ப் பெருமணத் திருப்பதிகத்திலும்[178], காட்டியுள்ளனர்.

[165]. ௸ 282 : 2. [166]. ௸ 220 : 11
[167]. ௸ 262 : 1, 10 [168]. ஞானசம். 92; 1,2 [169], ஞானசம். 173 : 1. [170]. ௸ 309: 1, 6, 11. [171]. ௸ 272 : 11. [172]. ௸ 221:10 [173]. ௸ 94; 10, 353 : 10. [174]. ௸ 312: 11. [175]. ௸ 371 : 12. [176]. ௸ 264; 6. [177] ௸ 54 : 11 [178]. ௸ 383 : 10.
[179]. சில திருப்பதிகங்களில் இக்குறிப்புக்கள் காணப்பட வில்லை. அவை, ஞானசம். 57, 73, 78, 138, 156, 179, 180, 203, 214, 215, 247-8; 253, 316, 321, 330, 352, 370, 371-ஆகப்பத்தொன்பதுமாம். இவற்றுட் சில சமண்புத்தர்களைக் காண்பதற்கு முன் பாடியனவாகவும் இருக்கலாம் ; சிலவற்றில் சிதைந்து போயு மிருக்கலாம் என்பர்.
-----------

பிற சமயக் குறிப்புக்கள்

திருஞானசம்பந்தர் காலத்தில் வேத வழக்கொடுபட்ட வைதிக நெறியை மேற்கொள்ளாத புத்தர், சாக்கியர், தேரர், சமணர் முதலிய சமயத்தவர்கள் தமிழகத்தில், இருந்து வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களுடைய நடை உடை ஒழுக்கம் முதலியவற்றில் அருவருப்புற்றுத் தாம் பாடிய திருப்பதிகங்களில் அவற்றை மறுத்தும்,வெறுத்தும், வெகுண்டும், கடிந்தும், எள்ளியும், இகழ்ந்தும் பாடி யுள்ளார்[180]. இதைக் கண்ட ஆராய்ச்சியாளர், "ஞானசம்பந்தர் வரலாறு, மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிககு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடையின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம்,அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதி யிருந்தமையேயாகும்1' என்று கூறுகின்றனர்.
-----
[180]. Tam. Ant. V. III p. 7.
----------
இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்தவர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றாரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச்சமயத்தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொருளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர்களைப் பெரிதும் வெகுண்டு பேசுவானேன் என்பது உடனடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம்பிள்ளைஅவர்கள்"ஞான சம்பந்தர்முதலியஅருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ் சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங்காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செயலாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டிலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சீர்குலைந்து போயிருக்கலாம்.

அரசியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலிபெறும் வரையில் மக்கட்கு நல்லனவாகத் தோன்றும் ; அவ்வலி பெற்றதும், அவை தம்முடைய நலம் குன்றிச் சீரழிவது உலகியலில் இயல்பு. கெளதமருடைய சமயமும் இவ்வாற்றால் சீரழிந்து போயிற்று எனலாம். ஆயினும், அவரது புத்த சமயமும் பிறவுமாகிய வேற்றுச் சமயங்களிடத்து ஞானசம்பந்தருக்குத் தீராத செற்றமுண்டானதற்கு அஃது ஒன்றுமட்டில் காரணமாக முடியாது. அக்கால நிலையினை நாம் தெளிய அறிந்து கோடற்கு வேண்டிய சான்றுகள் நிரம்பக் கிடைக்காத இக்காலத்தில், அதுபற்றி நாம் பலவேறு காரணங்களைக் கற்பித்துக் கொள்வது நேரிதன்று. தெளிவும் மெய்ம்மையும் நிறைந்த சான்று களால், அக்கால நிலை விளங்கப் புலப்படுமாயின், அது கொண்டு உண்மை தெளிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ளலாம் [181] என்று கூறுகின்றார்.

ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவரைக் குறித்து உரைக்குமிடத்து, அவர்களுடைய தலைவர் பெயர்களைக் குறிக்கினறார். " சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமை சேர், கந்து சேனனும் கனக சேனனும் முதலதாகிய பெயர் கொளா? [182] எனவும், 'கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா, சுனக கந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா, அனக நந்தியர் [183]' எனவும் கூறுகின்றார். அவர்கள் மதுரைக்கு அண்மையிலுள்ள ஆனைமலை முதலிய இடங்களில் வாழ்ந்தனர்'[184] எனவும், நீறணிந்த சைவர் முதலியோர் வரின், அவர் மேனிபட்ட காற்றுத் தீண்டினாலும் அவர்கள் அது பொருது சினந்து கொண்டு ஒடுவர்[185] எனவும், வேத வேள்விகளை நிந்திப்பர் [186] எனவும், செந்தமிழ் ஆரியம் என்ற இவை அவர்கட்குத் தெரியாது[187] ’ எனவும்,பாகதமே அவர்மொழி[188] யெனவும், கடுநோன்புடையர் [189]' எனவும், பரம்பொருள் உண்மை பற்றி உரை நிகழுங்கால், "அத் தகுபொருள் உண்டும் இல்லையும் என்று" சொல்லுவர் [190] எனவும் கூறுகின்றார் . புத்தர்களுடைய பிடகாகமத்தையும் ஞானசம்பந்தர் குறிக்கின்றார்[191] .

----
[181]. Tam. Ant. III. p. 9. [182]. ஞானசம். 297.
[183]. ஞானசம். 297: 4, 6. [184]. ௸ 297: 1.
[185]. ௸ 366: 8. [186]. ௸ 366: 1.
[187]. ௸ 297: 4. [188]. ௸ 297: 2.
[189]. ௸ 361: 10. [190]. ஞானசம். 297: 3. [191]. ஞானசம். 13:10,
----------

"சந்துசேனன் இந்துசேனன் என ஞானசம்பந்தரால் குறிக்கப்படுபவர் சைனர் என்றும், கனகநந்தி, புட்ப நந்தி முதலியோர் புத்தரென்றும் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை யுடையார்[192]கூறுகின்றனர். அவர்கள் ஆனைமலை நாகமலை என்ற மலைகளில் கற்குகைகள் உள்ளன. . இவற்றிற்கு அருகிலுள்ள பசுமலையில் கற்குகைகள் காணப்படவில்லை; நாகமலைக் குகையில் மூன்று கல் வெட்டுக்கள் உள்ளன [193]; அவை ஆந்தைமகன் வேள் வேண்குவிரான், பொதிகைக் குவிரான் என வருகின்றன ; இவற்றின் எழுத்தமைதி காணின், இக்கல்வெட்டின் காலம் கி. மு. இரண்டல்லது மூன்றாம் நூற்றாண்டாகும்' என்றும் அவர்கள் புத்தர்கள்' என்றும் உரைக்கின்றனர். ஞான சம்பந்தர், புத்தர்களைப் போதியார்[194] என்றும் வழங்குவர். ஞானசம்பந்தரால் சாக்கியர்[195] எனக் கூறப்படுவோர், புத்தருள் ஒருவகையினராவர். புத்த சமயத்தைக் கண்ட சித்தார்த்தரும் சாக்கியர் மரபைச் சேர்ந்தவர் என அவர் வரலாறு கூறுகிறது. தேரர்[196] எனப்படுவோரை வட நூல்கள் ஸ்தவிரவாதிகள் என்று கூறும். இவ்வாறே, சைனர்களை ஞானசம்பந்தர், அங்கதர்[197] அமணர், அருகர்[198]: ஆகதர்[199] ஆரம்பர்[200] கவணர்[201], குண்டர்[202] சமணர், பிராந்தர் [203]எனப் பல பெயர்களால் குறிக்கின்றார், --------
[192] A. R. on S. Ep. for 1926-7, para 8. -நன்னூலாசிரியர் பவணந்தி யெனவும், வெண்பாப் பாட் டியலுடையார் ஆசிரியர் வச்சணந்தி யெனவும் வருவது காணுங்கால், கனக கந்தி முதலிய பெயருடையாரைப் புத்தரெனவே கோடல் பொருந்துவதாக இல்லை.
[193]. A. R. No. 621-3. of 1926
[194]. ஞானசம். 148; 10. [195] ஞானசம். 68 : 10. [196]. ௸ 6 : 10. [197]. ௸ 297: 10. [198]. ௸ 366 : 10. [199]. ௸; 297 : 2.
[200]. ஞானசம். 10 10. [201]. ஞானசம். 271; 10. [202].௸ 5 : 10. [203]. ௸ 27 : 10.
-------------

சைனர் தங்கள் முதல்வனை அருகன் என்றலின், அவர்கள் அருகர், ஆருகதர், ஆகதர், ஆதர் எனக் குறிக்கப்படுகின்றனர். எல்லாப் பொருட்கும் அணுவை முதற் காரணமாகக் கோடல்பற்றிச் சமணர் ஆரம்பவாதிகள் எனப்படுதற்கு இயைபுண்மை யால், அவர்களை ஞானசம்பந்தர் ஆரம்பர்" என்று குறிக்கினறார், ஆருகதர் அநேகாந்த வாதிகளாதலால், அவர்களைப் பிராந்தர் என்று கூறுகின்றார். ஆருகத சமய முதனூல்கள், பூருவம், அங்கம், பகுசுருதியென மூவகையாய் ஆகமம் என்ற பெயர் கொண்டு நிற்கின்றன ; அவற்றுள் பூருவாகமங்கள் மறைந்து போயின அங்காகமங் களும் பகுசுருதி ஆகமங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அங்காகமங்களை மேற்கொண்டு நிற்பது பற்றி ஆருகதர் அங்கதர் எனவும் அழைக்கப்பட்டனர்.[204] மேலும் அவர் ஆருகதரைக் கவணர் எனக் கூறுவதன் கருத்து விளங்கவில்லை. இனிக் குண்டர் என்பது பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் தோன்றிய கட்டுரை யொன்று"அமணராவார் மனை வாழ்க்கையைத்துறந்தவர்என்பது, குண்டராவார்மனை மாண்புரைக்கும் உள்ளமுடையவராய் இல்லறத்தில் நின்று ஒழுகுவோர் என்பதும் துணிந்து கூறப்படும்" என்றும், 'தம் சமயத் தலைவராகிய மகாவீரர்குண்டக்கிராமத்திலிருந்து நிகழ்த்திய மனை வாழ்க்கையில் ஈடுபட்ட சமண் மக்கள் தாம் குண்டக் கிராமத்து அமர்ந்து, தம் சமயத் தலைவர் மேற்கொண்டொழுகிய இல்லறத்தில் நின்றமை பற்றித் தம்மைக் குண்டரெனக் கூறிக் கொண்டிருத்தலும் கூடும் :

அல்லது, குண்டக் கிராமத்திற் பிறந்தருளிய பெரியார் வழியைப் பின்பற்றியவர் என்ற கருத்தால் அங்ஙனம் கூறப்பட்டார் என்றலும் கூடும்'[205]என்றும் கூறுகின்றது. புத்தம் ஆருகதம் என்ற இரு சமயத்தவருள்ளும் துறவு பூண்டு உயர்ந்த சான்றோரைச் சமணர் என வழங்குப. இச்சமணர் அசோக மன்னனுடைய கல்வெட்டுக்களிலும் [206] குறிக்கப்படும் பழமையுடையராவர்.
---
[204]. பூருவாகமம் மகா வீரரால் முதற்கண் வழங்கப்பட்டன வென்றும், பின்பு அவர்மாணவரும் பிறரும் அங்காகமங்களை வழங்கினரென்றும், அங்கங்கட்குத் திருஷ்டிபாத மெனப் பெயருண்டென்றும், அவற்றின் தோற்றக்காலம் கி.மு. மூன்று நான்காம் நூற்றாண்டென்றும்கூறுவர்-( An Epitome of jainisn p .690)
[205]. A Research on தேவாரமும் பெரியபுராணமும் conducted by Vidvan K. Vellai Varanan in the year 1934-36 in the Annamalai University.
[206]. Edicts of Asoka.
----------
இவ்வண்ணம் புறச்சமயத்தவர்களேயன்றி அகச் சமயத்தவர்களான பாசுபதரும்[207]கபாலிகளும் மாவிரதிகளும் ஞானசம்பந்தர்காலத்தில் இருந்திருக்கின்றனர். திருஞான சம்பந்தர், "காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பைநகர்"[208] என்று கூறுகின்றார். அவர்காலத்து வேந்தனான முதல் மகேந்திரவன்மன், தான் எழுதிய மத்தவிலாசமென்னும் நாடகத்தில் பாசுபதரோடு காபாலியையும் குறித்துள்ளான்.[209] ஞானசம்பந்தரோடு உடன் பயின்ற திருநாவுக்கரசர் மாவிரதிகளையும் குறிக்கின்றார், பிற்காலக்கல்வெட்டுக்களிற் காணப்படும்[210] காளாமுக சைவம் ஞானசம்பந்தர் திருப்பதிகங்களிற் குறிக்கப்படவில்லை. காபால சமயம் மத்த விலாசத்திலும், பிற்காலக் கல்வெட்டுக்களிலும்[211] காணப்படுமாயினும், ஞானசம்பந்தரால் தனியே குறிக்கப்படவில்லை.
----
[207]. பாசுபத சைவமடம் ஒன்று திருவானைக்காவில் இருந்து அக்கோயில் காரியத்தையும் மேற்பார்வை செய்து வந்திருக்கிறது(A.R. 135 of 1936-7.)
[208]. ஞானசம். 86 : 4.
[209]. Bulletin of the School of Oriental Studies. London. Vol. V. P. 696-717.
[210]. A. R. for 1915. para 6, 11 ; A. R. for 1908 para.89;A. R. for 1924. para. 17.
திருநணாப்பதிகத்தில் ' "நானாவிரதத்தால் விரதிகள் நன்னாமமே யேத்திவாழ்த்த "(208:7) என்ற விடத்து விரதி மாவிரதிகளாகக் கருதுதற்கும் இடனுண்டு.
[211]. A. R. for 1912. para. 29.
--------------

திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயிலுக்குக் கபாலீச்சுரம் எனப்படுவது கொண்டும், : கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்"[212] என்று ஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கியும் காபாலிகள் அவ்ர் காலத்தே இருந்தமை நன்கு தெளிவாகிறது. அங்ஙனம் இருக்கவும், அங்கே"உருத்திர பல்கணத்தார்க்கு[213]" உணவிடும் கல்விழாவைஉயர்த்திப் பாடியவர், காபாலிகளைக் குறியாது ஒழிந்ததற்குக் காரணம் தெரிந்திலது. மாவிரதம் என்பது அகச்சமயம் ஆறனுள்[214] ஒன்றாகும். இதனை மேற்கொண்டு ஒழுகிய மாவிரதிகளைத் திருநாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். கி. பி. பத்தாம் நூற்றாண்டில் மாவிரதிமடம் ஒன்று தென்னாட்டில் அருப்புக்கோட்டைப் பகுதியில் திருச்சுழியலைச் சேர்ந்த பள்ளிமடம் என்ற இடத்தில் இருந்ததாக அங்குள்ள சிவன்கோயில் கல்வெட்டொன்று[215] கூறுகிறது. டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்பர்[216]. மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச்சைனர்என்று[217] கூறுகின்றனர். மாவிரதிகளுக்குக் காளாமுகர் போலத் தீக்கையும் என்பு மாலையணிதல் முதலிய சரியைமுறையும் உண்டாதலால், டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்றும், ஆருகதர்களிடையே, மாவிரதிகள்பால் காணப்படுவது போல, விரதங்கள் காணப்படுவது கண்டு மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச் சைனர் என்றும் பிறழக் கூறிவிட்டனர்.
-------
[212]. ஞானசம். 183.9 [213] . ஞானசம். 183 : 1.
[214]. சிவஞானபாடியம்- அவையடக்கம். [215]. A. R. No. 423 of 1914.
[216]. Dr. Brandarkar’s Vaishnavism. p. 118.
[217]. A. R. for 1915 para. 31.
-------------
இனி, சிவனை வழிபடும் திருநெறியாகிய சைவம், இத் தென்னாட்டில் சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே நிலவி வருவதொரு தொன்மைச் சமயமாகும். இதற்குச் சைவம் என்பதே பெயரென்பதை, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கிய மணிமேகலை நூலாசிரியர் குறிப்பால்[218] இனிது விளங்குகிறது. அந்நெறியினரான தமிழர் அனைவரும் சைவரேயாவர். வேதவழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடுதலால் சைவர் எனப்படுவர். அங்ஙனமிருக்க, திருஞான சம்பந்தர், "காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகர் [219]” என்று குறித்து, அகச் சமயத்தவர் அறுவருள் ஒருதிறத்தினரான பாசுபதரோடு அவர்களைச் சேரவைத்துக் கூறுகின்றார். இதனால், சைவர் 'என்ற சொல்லால் ஒரு சிலரைச் சுட்டிக் காட்டுகின்றார் ஞானசம்பந்தர் என்பது தெற்றெனத் தெரிகிறது. அவர்கள் யாவர் ? முதன் மகேந்திரவன்மன் எழுதிய மத்த விலாச நாடகத்தாலும் திருநாவுக்கரசர் வழங்கியுள்ள திருப்பதிகங்களாலும் ஞானசம்பந்தர் காலத்தே காபாலிகளும் மாவிரதிகளும் இப்பாசுபதரோடு உடன் இருந்திருக்கின்றனர் என முன்பே கூறினோம்.

சிவபெருமானுக்குச் சைவன் என்பதும் ஒரு பெயர். "சீருறு தொண்டர் கொண்டடிபோற்றச் செழுமலர் புனலொடு தூபம், தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார்"[220] என்பது காண்க. சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக்கொண்டு ஒழுகுவர் காபாலிகள். மத்தவிலாசத்திற் காணப்படும் காபாலி திருவேகம்பத் திருக்கோயிலை இடமாகக் கொண்டுள்ளான். மாவிரதிகளும் தீக்கை பெற்று எலும்புமாலையணிதல் முதலிய சரியைகளை " மேற்கொண்டவரெனச் சிவஞானபாடியம் கூறுகிறது. இவ்விருத்திறத்தார்பாலும் சைவக்கோலம் சிறந்து தோன்றுவது கொண்டு இவ்விரு திறத்தோரும் ஞானசம்பந்தரால் சைவர் எனக் குறிக்கப்பட்டனர் எனக் கோடல் நேரிது. ஏனைக் காளாமுகம், வாமம், பைரவம். ஐக்கியவாதம் முதலிய சைவக் கிளைகள் ஞானசம்பந்தர் காலத்துக்குப் பின்பே தமிழகத்திற் புகுந்தனவாதல் வேண்டும். பைரவம் மட்டில், ஞானசம்பந்தர் காலத்தில் தான், பையத் தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கிற்று என்பது சிறுத்தொண்டர் வரலாற்றால் தெரிகிறது. -----
[218]. மணிமே. 27 : 89-95. [219] . ஞானசம். 66:4. [220]. ஞானசம். 376 : 3.
--------------

இந்த ஆறும் பொதுவாகச் சிவனைவழிபடும் வைதிக சைவத்துக்கு மாறு பட்டன அல்லவாதலாற் போலும், ஞானசம்பந்தர் முதலியோர் அவர்களை ஒதுக்கினரிலர். அவர்களைத் தாம் தழீஇக் கொண்டொழுகிய குறிப்புத் தோன்றவே, ஆறு சமயங்கட்கு ஒருதலைவன்[221] எனவும், அத்தலைமையை விளக்கி, "முன்னம் இரு மூன்று சமயங்களவையாகி, பின்னையருள் செய்த பிறையாளன்[222]" எனவும் கூறியுள்ளார்.

திருப்பதிகங்களிற் காணப்படும் இயற்கை நலம்

இனி, ஞானசம்பந்தர் மருதவளம் சிறந்த பொன்னி நாட்டில் பூமரு சோலைப் "பொன்னியல்மாடம்[223]"பொலிந்து விளங்கும் சீகாழிப்பதியில் பிறந்து மேம்பட்டவர். நாற்புறமும் நன்செய் வளம் சான்று பூவார் சோலையும் புயல்படு பொழிலும் புள் இடையறாத பூம்பொய்கையும் இன்றும் காண்பார் கண்ணுக்கு இன்பக் காட்சி நல்கும் நலமுடை யது சீகாழி; ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி விளங்கிய அன்றும் அஃது. அக்காட்சியை வழங்கியிருக்கும் என்பது ஒருதலை. அன்றியும் அவர் தமிழ்நாடு முற்றும் சிறப் புடைய ஊர்கட்குச் சென்று அவற்றின் இயற்கை நலங்களை நேரிற்கண்ட சீர்த்தியுடையர். ஆங்காங்கு நம் தமிழகம் வழங்கிய இயற்கைக் காட்சிகள் அவருடைய ஞானக்கண்ணுக்கு நல்விருந்து செய்துள்ளன. அவர், இறைவன் புகழைத் தமது உளங்குளிர்ந்தபோதெலாம் உகந்து உரைப்ப [224] வராயினும், அவனை உள்ளுறையாகக் கொண்டு நிலவும் இயற்கையின் இன்பநலமுழுதும் சிறக்க நுகர்ந்து தேக்கெறிபவராவர்.


[221]. ஞானசம். 131 : 1. [222[. ஞானசம். 165 : 5.
[223]. ஞானசம். 97 : 1. [224] .ஞானசம். 234 : 9.
--------------

அவர் பிறந்த சீகாழி அக்காலத்தே கடற்கரையை அடுத்திருந்தது. 'கடல் வாழ் பரதர் மனைக்கே நுண்மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகர் '[225] எனக் கடற் காட்சியை எடுத்தோதுவார். மருதப்பகுதியில் நெல் விளை யும் வயல்களைக் காண்பார், வயலிடையே நீர் நிலையும் அதன்கண் மலர்ந்துவிளங்கும் தாமரை முதலிய நீர்ப்பூக்களும் அவர் உள்ளத்தை மலர்விக்கும். மலர்ந்த தாமரை மேல் அன்னப்புள் வீற்றிருப்ப, காற்றால் அசையும் தாமரையிலே எழுந்து குடைபோல் அப்புள்ளிற்கு நீழல் செய்ய, கரையருகே விளைந்து தலைசாய்ந்து கிற்கும் நெற் கதிர் சாமரைபோல் அசைந்து இரட்டுவது, அவர் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அவர் பேருவகைகொண்டு, "செறியிதழ்த்தாமரைத் தவிசில் திகழ்ந்து ஒங்கும் இலக்குடைக் கீழ்ச் செய்யார் செந்நெல், வெறிகதிர்ச் சாமரை இரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே [226]" என்று பாடுகின்றார். இத்திருவீழிமிழலை இம்மருத நிலத்து நல்லூர்களுள் ஒன்று.

திருவண்ணாமலைக்குச் செல்லும் திருஞானசம்பந்தர் அந்த அண்ணாமலையின் சாரலான முல்லைப்பகுதியில் எருமைகளும் ஆயரால் மேய்க்கப்படுவது காண்கின்றார், மேதியொன்று தன் கன்றை நினைந்து வழிதப்பிச்சென்று கத்துகிறது. ஆயன் அதனைக் காணாது தன் குழலை ஊதுகின்றான். பொதுவாக எளிதில் இசைவயப்படாத எருமை, அவனது குழலோசை கேட்டதும் சென்று, தன் இனத்தோடே கூடுகிறது. அதனை ஞானசம்பந்தர்," கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத, அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலை " [227]என்று மகிழ்ந்து பாடுகின்றார்,

--------
[225]. ஞானசம். 66 : 1. [226]. ஞானசம். 132:2. [227]. ௸. 69 : 6.
-----------
திருக்காளத்தி குறிஞ்சி நிலப்பகுதி. அங்கே ஞான சம்பந்தர் சென்றபோது அதன் இயற்கை நலம் அவர்க்கு இன்பம் நல்குகிறது. ஒரு பிடியானை தன் கன்றுடனே சென்று சந்தனமரத்தின் குளிர் தழையைத் தின்று இனிது உலாவிச் செல்ல, அதன் கன்று மகிழ்வுடன் விளையாடுகிறது. அதனோடு உடன் செல்லும் பிடியானை தானும் விளையாடி அக்கன்றை இன்புறுத்துகின்றது. இதனைக் காணும் ஞானசம்பந்தர், "குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக், கன்றினொடு சென்றுபிடி நின்று விளையாடு காளத்திமலையே" [228] என்று பாடி மகிழ்கின்றார்.

இங்நிலப்பகுதியில் வாழ்பவருள், குறமகளிர் குறிஞ்சிப் பண்பாடி முருகனது பெருமையைப் பகர்கின்றனர்[229]. ஒருபால் அவர்கள் பரண்மேல் இருந்து புனத்திற் படியும் கிளிகளை ஒப்புகின்றனர்[230]. "வயல்களில் கடைசியர்கள் பாடலும் விளையாட்டும் காணப்படுகின்றன.[231] மறையவர் மனைகளில், மகளிர், கழங்கும் பந்தும் அம்மானையும் ஆடும் போதும் இறைவன் புகழையே பாடுகின்றனர். [232] நிதியால் மிக்க செல்வர்கள் நித்தநியமங்கள் வழுவாது விதிமுறையே செய்து ஒழுகுகின்றார்கள்.[233]. செல்வமுடையவர்கள் ஈத்து வக்கும் இன்பத்தில் பேரீடுபாடு உடையராய், இன்மையால் போந்து தம்மை இரப்போர்க்கு வேண்டுவன ஈத்துமகிழும் செயலில் மிக்குவிளங்குகின்றனர்.[234]. கலைவல்ல புலவர்க்கும் [235]. கவிதைப்புலவர்க்கும்[236]. பெருங்கொடைபுரிவோர் பெருகியுள்ளனர். வேளாளர்கள் தாளாளர்களாய் வள்ளன்மை சிறந்து உள்ளனர்.[237].
------
[228]. ஞானசம்.327:10. [229]. ஞானசம். 12.10
[230]. ஞானசம் 69:2. [231]. ஞானசம் 330:1
]232]. ஞானசம்:129:2 [233]. ஞானசம் 82:7
[234]. ஞானசம் 178:9 [235]. ஞானசம் 20:3
[236]. ஞானசம் 102:1 [237]. ஞானசம் 178:3
----------

சமய ஒழுகலாற்றுக் குறிப்புக்கள்

செல்வமனைகளில் கொடிகள் வானளாவ நின்று அழகு செய்கின்றன.[238]. தெருக்களில் அடியார் கூட்டம் இறைவன் புகழைப்பாடுகிறது.[239]. அரங்குகளில், மாதரும் மைந்தரும் பாலென மொழிந்து விளையாட்டயர்கின்றனர்.[2403]. திருக்கோயில்களில் முழவும் சங்கும் யாழும் முழங்குகின்றன.[241]. அந்தணர் வேள்வியும், அருமறைத்துழனியும், அவற்றின் வேறாகச் செந்தமிழ்க் கீதமும் சிறந்து விளங்குகின்றன[242] செந்தமிழரும் தெய்வமறை நாவலரும் ஏனைச் செழுங்கலை வாணரும் வேறுபாடின்றிச் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

[238]. ஞானசம் 237:1 [239]. ஞானசம் 138:6
[240]. ஞானசம் 8:9 [241]. ஞானசம் 330:8
[242]. ஞானசம் 286:3
-----------

இறைவழிபாடு கோயில்தோறும் இனிது இயலுகின்றது. மகளிரும் ஆடவரும் மாமலர் கொணர்ந்து வழிபடுகின்றனர். மணமாகாத கன்னிப்பெண்கள், நறுமலரும் தெண்புனலும் தூபமும் சாந்தமும் கொணர்ந்து வழி பாடாற்றுகின்றனர். அந்திப்போதில், அடியவர்கள் தூப தீபங்களுடன் "சந்திபல அர்ச்சனைகள்" செய்கின்றனர். இவ்வாறே முற்றத்துறந்த முனிச்செல்வர்கள் வழிபாடு செய்து வாழ்கின்றனர். திருக்குற்றால மலைப்பகுதியில், பிடியானைகளும் களிறுகளும் வேங்கைக் கொத்துக்களைத் தலையிற்கொண்டு இறைவனை வழிபடுகின்றன.

சிவனடியார் கூட்டத்தைச் சிவமே என விரும்பிப் பேணுவது செந்தமிழ் நாட்டுச் சைவ நூல் வகுக்கும் அறங்களுள் ஒன்று. இதனால், இவர்கட்குச் சிவன்பாலுள்ள பேரன்பு தெற்றென விளங்குகிறது. சிவனடியார் என்பவர், பண்டைத் தவத்தாலும் அடியாரொடு பயிலும் பயிற்சியாலும் சிவன்பால்பேரன்புற்றுத் தொண்டுசெய்பவராவர் [243] என்று ஞானசம்பந்தர் அவர்களைச் சிறப்பித்திருக்கின்றார். இத் தொண்டர் கூட்டுறவால், வினைத்தொடர்பும் அதுவாயிலாக அறியாமையும் நீங்கும்.[244] அதனுள் அவர் தொடர்பே சைவர்கள் விரும்பற்பாலது. [245] இவர்கள் இறைவன் புகழையல்லது வேறு புகழ்களைச் செவியிற் கொள்ளார்.[246] இத்தொண்டர்களை உளத்திற்கொண்டு போற்றுபவர் வினையின் நீங்கி உண்மை அறிவு விளக்கம் பெறுவர். [247] அவர்கட்குத் தூநெறியாகிய சிவநெறி எளிதில் கைகூடுமென [248] ஞானசம்பந்தர் வற்புறுத்துகின்றார்,
------
[243]. ஞானசம் 305:7 [244]. ஞானசம் 242:2
[245]. ஞானசம் 364:6 [246]. ஞானசம் 251:4
[247]. ஞானசம் 369:2 [248]. ஞானசம் 240:10
--------------

தொல்லிலக்கியக் குறிப்புக்கள்b/>

ஞானசம்பந்தர் வழங்கியுள்ள திருப்பதிகங்களில், சங்க நூற் கருத்துக்களும் திருக்குறட் கருத்துக்களும் ஆங்காங்கு நின்று ஒளிர்கின்றன. "கெண்டை பாய்தர ஆவிழ்ந்த வண்டுபிணி ஆம்பல் நாடுகிழவோனே" [249] என்பது ஐங்குறு நூற்றிற் காணப்படும் பகுதி : இது திருக்கேதாரப் பதிகத்தில், "வண்டுபாட மயிலால மான் கன்று துள்ள வரிக்கெண்டை பாயச் சுனைநீலம் மொட்டு அலரும் கேதாரம்மே”.[250] என அமைந்து விளங்குகிறது. “சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று"[251] என்பது திருக்குறள். இது, திருவோமாம் புலியூர்ப்பதிகத்தில், "சலத்தினாற்பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க, உலப்பில் பல்புகழார்" [252] என்பதன்கண் கிடந்து ஒளி செய்கிறது. -

திருக்கோயில்கள்

ஞானசம்பந்தர் காலத்தே தமிழ்நாட்டுச் சிவன் கோயில்கள் சிலவற்றில் மலையாள நாட்டிலிருந்தும் வேறு பிற நாடு களிலிருந்தும் அந்தணர்களும் பிறரும் வந்து வழிபாடு செய்திருக்கின்றனர். திருப்பழுவூரில் பத்தரும் சித்தரும் மறையவரும் மகளிரும் வழிபடும் திறத்தைக் கூறும் ஞான சம்பந்தர், "அந்தணர்களான மலையாளவர் "[253] ஏத்தும் இயல்பையும் எடுத்துக் கூறுகின்றார், சைவத்தின் உட் கூறுகளான அறுவகைச் சமயத்தவரது வழிபாடும் [254]அவரால் குறிக்கப்பெறுகிறது.
-------
[249]. ஐங்குறு.40
[250]. ஞானசம் 250:1
[251]. குறள் .660
[252]. ஞானசம் 380:5
[253]. ஞானசம் 170:11
[254]. ஞானசம் 337:6
---------------

ஞானசம்பந்தர் காலத்தே தமிழ் நாட்டின் வடபகுதியைப் பல்லவ வேந்தர் ஆட்சி புரிந்து வந்தனரென முன்பே கூறி னோம். அக்காலத்தே, வடநாட்டவரும் பிறநாட்டினரும் தமிழகத்திற்குப் போந்து இசை பயின்றனர். அந்நாளில் தமிழகத்தில் இசைத்தமிழ் மிக்க விளக்கமுற்றிருந்தது. திருக்கோயில்களில் "அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும்"[255] சிறப்புற்று விளங்கின. செல்வமனைகளிலும் மகளிர் விளையாட்டயரும் பூங்காக்களிலும் தமிழின் இனிய இசை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஞானசம்பந்தர், " வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகார், ஊசல் மிசையேறி இனிதாக இசைபாடு உதவி மாணிகுழியே"[256] எனவும், ஊறுபொருள் இன் தமிழ் இயற்கிளவி தேறும் மடமாதருடன், வேறுதிசை ஆட வர்கள் கூர இசைதேரும் எழில் வேதவனமே" [257]எனவும் குறிக்கின்றார். அந்நாளில், எண்ணும் எழுத்தும் போல இசையும் தமிழ் மக்களால் கண்ணெனக் கருதிப் பயிலப் பெற்ற குறிப்பு,"எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாயகடவுட்கு இடம்"[258] என்பதனால்தெளிவாக வலியுறுகிறது.

புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குடுமியான்மலையில் இசைக் கல்வெட்டொன்று[259] உளது. அது பல்லவ காலத்துக் கிரந்த எழுத்தில் உள்ளதனால் அதன் காலம் ஞானசம்பந்தர் வாழ்ந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தே உருத்திராச் சாரியார் என்னும் வடவர் ஒருவர் தமிழ்நாடு போந்து அப்போது நிலவிய இசையைப் பயின்று தன்பால் வந்த பலருக்கு இசையறிவு கொளுத்தி மேம்பட்டார். அவரிடத்தே பயின்ற பல்லவ அரச குமரனொருவன் இந்த இசைக்கல் வெட்டை இங்கே ஏற்படுத்தியுள்ளான். அவன் பெயர் தெரிந்திலது ; ஆயினும், அவன் பல்லவ வேந்தனான முதன் மகேந்திரவன்மனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
இக் கல்வெட்டிற் கண்ட இசையும் தமிழ் இசையே எனப் பண்டைத் தமிழரது "யாழ் நூல்" கண்ட சுவாமி விபுலாநந்தர் [260] ஆராய்ந்து கண்டுள்ளார்.

[255]. ஞானசம் 286 : 3 [256]. ஞானசம், 335:5
[257]. ௸. 334 : 4. [258]. ௸ 176:4
[259]. A. R for 1905. para. 4 [260]. யாழ் நூல்: பக் 338
--------------

திருப்பதிகப் பாட்டியலாராய்ச்சி

ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்கள் யாவும் இசைத் தமிழ் வகையிலும் இயற்றமிழ் வகையிலும் அடங்குவனவாகும். இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய ஆராய்ச்சியாளர் "இசைத் தமிழ்ப் பாடல்களாகிய இத் தேவாரப் பதிகங்கள், இசைவகையில் செந்துறைப் பாவின்கண் அடங்குமாயினும், இசையோடு இயற்றமிழ்த் திறனும் நன்கு அமையப் பாடப்பெற்றன

வாதலின், இப்பாக்கள் இயற்பாக்களுள் எதன்பாற்படும் என நோக்குதலும் இன்றியமையாததே; இவற்றை விருத்தப்பா என்பர் சிலர்; அது பொருந்தாது. செந்தமிழ்ப் பாக்களெல்லாம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பெரும் பகுதியுள்ளும் மருட்பா, பரிபாடல் ஆகிய வகையினுள்ளும் அடங்குமென்பதே யன்றி அக்காலத்து விருத்தப்பா என ஒருபா வழங்கிய தென்றால் பண்டைய தமிழ் நூல் இலக்கணமாகிய தொல்காப்பியச் செய்யுளியலில் சொல்லப்படாது ஒழிதலானும், விருத்தம் என்னும் வடமொழிச் செய்யுளின்வகை அம்மொழியோடு பல்லாற்றானும் வேறுபட்ட நம் செந்தமிழ்ப் பாக்களுக்கு உரியதன்று ஆகலானும், இப்பொழுது விருத்தவகையுள் அடக்கப்படும் அருந்தமிழ்ப் பாக்களெல்லாம் எவ்வாற்றானும் அதனோடு இயையாது, பல்வகைச் சந்த வேறுபாடுடைய கலி முதலிய பாக்களுட்பட்டு அடங்கலானும், சந்த வேறுபாடு உடைய இத் தேவாரச் செந்தமிழ்ப் பாக்களெல்லாம் நம் தமிழ்க் கலியின் பாற்பட்டு அடங்குமாறு காண்க. ...திருமுறைகளாகிய தேவாரப் பதிகங்களைப் பல்வேறு சந்தங்கள் அமைய நயம்பெறப் பாடியருளிய ஞானசம்பந்தப்பிள்ளையார், தாம் சந்தக் கலிப்பாவினாலேயே மேற்படி திருப்பதிகங்களைப் பாடினார் என்பது,
"கந்தண் பூங்காழி யூரன் கலிக்கோவையால்
சந்தமே பாடவல்ல தமிழ் ஞான சம்பந்தன்"[261]

என்ற திருக்கடைக் காப்புப் பாடலொன்றால் தெள்ளிதிற் பெறப்படும்"[262] என்று கூறுகின்றனர். இக் கூற்றால் இத் திருப்பாட்டுக்கள் இயற்றமிழ் நெறியில் கொச்சக ஒருபோகு வகையில் அடங்கும் என்பது பெறப்படும்.
-------
[261]. ஞானசம். 148 : 11
[262]. A thesis on மூவர் தேவாரம் by Vidvan K. VellaiVaranar under the auspices of the Annamalai Univesity in the year 1935-37
----------
இனி, இவை இசைத்தமிழ் வகையில் எவ்வகையின் பாற்படும் எனத் தெளியவுணர்தற்கு வேண்டும் இசைத் தமிழ் நூல்கள் முழுவடிவில் ஒன்றும் இன்று நாம் கிடைக்கப்பெற்றிலோம். ஆயினும், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் உரையில் அடியார்க்கு நல்லார் முதலியோர்களால் காட்டப்படும் இசைத் தமிழ்நூல் மேற்கோள்களைத் துணையாகக் கொண்டு நோக்குமிடத்து, முதனடை, வாரம், கூடை, திரள் எனக் காணப்படும் இசையியக்கம் நான்கனுள் ஒன்றாகிய வாரத்தின் பால் இப்பாட்டுக்களை அடக்கலாம். தெய்வஞ் சுட்டிவரும் வாரப்பாட்டுத் தேவாரமாகும். திருஞானசம்பந்தர் முதலியோர் பாடியருளிய பாட்டுக்களையும் தேவாரமென வழங்கும் வழக்கம் நம்நாட்டில் பயில வழங்குவதொன்று. இவ்வாற்றால் ஞானசம்பந்தர் பாடிய பாட்டுக்கள் இசை வகையில் தெய்வஞ் சுட்டிய வாரப்பாட்டு என்பது தெளிவாம், "வாரமென்பது வகுக்குங்காலை, நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித், தொடையமைந்து ஒழுகும் தொன்மைத்து என்ப" எனச் சிலப்பதிகார அரும் பதவுரைகாரர் காட்டும் இசைத்தமிழ்ப் பழஞ் சூத்திரமொன்று வாரத்தின் இயல்பை விளக்கி நிற்பது ஈண்டு நோக்கத்தக்கது.

இவ்வாறு இயலும் இசையுமாகிய இருவகைக்கும் ஒத்த நெறியில் பல ஆயிரக்கணக்கில் ஞானசம்பந்தர் முதலியோர் பாடிக் காட்டிய பாட்டுக்கள் பிற்காலத் தமிழ்ப் பாவலர்கட்குச் சீரிய வழிகாட்டியாய் அமைந்தன. பின் வந்த சீவக சிந்தாமணி முதலிய சமண சமயப் பெருநூல்களும், பெரிய புராணம் முதலிய சைவ சமயப் பெருநூல்களும்' நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்' கம்ப ராமாயணம் முதலிய வைணவ சமயப் பெருநூல்களும் இக்காட்டிய பாட்டுக்களையே நெறியாகக் கொண்டு இயலுவனவாயின. இடைக்காலத்தே, பண்டைய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொடர்நிலைச் செய்யுட்கெனக் கொண்ட ஆசிரியப்பா வீழ்ந்து போயிற்று. பிரபந்தங்கள் எனப்படும் சிறு நூல்களிலும் இலக்கண நூல்களிலும் ஆசிரியப்பா ஒதுக்குண்டு கிடப்பதாயிற்று. ஆயினும் இடைக்காலத்துப் புலவர்களுள் ஒருவரான கொங்குவேளிர் மாத்திரம் தாம் எழுதிய பெருங்கதை யென்னும் தொடர்நிலைச் செய்யுளை ஆசிரியப்பாவால் ஆக்கியுள்ளார்; ஆயினும் அதன் முதலும் இறுதியும் கிடைத்தில. இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய காந்தி புராணம் என்னும் தொடர்நிலைச் செய்யுளில் இடையிடையே ஆசிரியப்பாக்கள் சில காணப்படுகின்றன. எங்ஙனமாயினும், இன்று தமிழ் இலக்கிய உலகில் பெருகி நிற்கும் பெரு நூல்கள் பலவும் இயன்றிருக்கும் பாட்டுக்களின் பெருகிய தோற்றத்துக்கு அடிகோலிய முதன்மை திருஞானசம்பந்தர்க்கு உரியதென்பது தெளியக் கோடற்பால தொன்று.

அரிய சொல்லாட்சிகள்

இனி, இசைத் தமிழ்ப் பாட்டுக்கள் பலவும், இயல்நெறியினும் இசை நெறியினேயே பெரிதும் மேற்கொண்டு இயலுவனவாகும். ஆதலால், இசைக்கேற்பச் சொற்கள் உரு வேறுபடுவது இயற்கை. அவ்வகையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்களில் இயற்றமிழ் நெறியில் காணப்படாத சில சொல்லுருவங்கள் காட்சி தருகின்றன. உண்ணென்னும் வினையடியாக உண்டி, உணவு, உண், ஊண் என்பன முதலிய செயப்படு பொருண்மேனின்ற வினைப் பெயர்கள் பெருக வழங்குதல் உண்டு; உண்பான், உண்டான் என்பன போல வினைமுதன்மேல் நிற்பனவும் உள.

இவ்வாறே உண்ணென்பதன் அடியாக உண்ட உண்கின்ற, உண்கின்ற என்ற வாய்பாட்டிற்பெயரெச்சங்கள் தோன்றி வழங்குவது பெருவழக்கு. திருஞானசம்பந்தர் உண்னென்னும் வினையடியாக உண்ணி யென்றொரு வினைப்பெயரை வினைமுதன்மேல்வரப் படைத்து, "இடுபலி உண்ணி"[263]என்றும் உண்டவெனும் பொருள் படுமாறு உண்ணியவெனப் பெயரெச்ச மொன்றைப் படைத்து, "இருங்களம் ஆரவிடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்" [264] என்றும் வழங்குகின்றார் . "உண்பு நீங்கி வானவரோடு 'உலகில் உறைவார்"[265] என்றவிடத்து உண்பு என்பதும் ஞானசம்பந்தர் புதிது படைக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றுதல் என்பதன் மறுதலையாக அன்றுதல் எனத் தெரிநிலை வினையொன்றைப் பிறப்பித்து “அன்றி நின்ற அவுணர்“[266]' “அன்றிய அமணர்கள்”[267] “அன்றினர் அரி யென வருபவர்” [268] என வேறுவேறு வகையாக வழங்குவர். கணையென்னும் பொருட் பெயரைக் கணையைத் தொடுத்தான் என்னும் பொருள்பட வினைப்படுத்து “எயில் மூன்றும். எரியுண்ணக் கணையல் செய்தான்”’ [269] எனவும் நீளுதல் என்னும் பொருளில் “நீணுதல்” [270] எனவும் வந்தனையை "வந்தனம்"[271] எனவும், நல்லுலகு என்பதை “நன்னுலகு” [272] எனவும், நடுநடுங்கியெனவரும் அடுக்கினை “நடுநடுத்து”[273]எனவும் கைதை வேலியைக் “கைதல் வேலி” [274] எனவும், வேள்வியை “வேழ்வி”[275] எனவும், “துறவைத் துறவி” [276], எனவும், பிறவி, இறப்பு என்பனவற்றைப் “பிறவினோடு, இறவுமானான்” [277]எனவும் வழங்குகின்றார்.
----
[263]. ஞானசம். 40:9 [264]. ஞானசம். 43:4- [265]. ஞானசம் 49:11 [266]. ஞானசம் 29:7
[267].ஞானசம் 113 : 10. [268]. ஞானசம் 124 : 6. [269]. ஞானசம் 106 : 4. [270]. ஞானசம் 1 :9 [271]. ஞானசம் 126 : 3. [272]. ஞானசம் 136 : 11 [273]. ஞானசம் 224 : 8 [274]. ஞானசம் 252 : 7.
[275]. ஞானசம் 230 : 8. [276]. ஞானசம் 01 : 2. [277]. ஞானசம் 110 : 1.
---------

பழமொழிக் குறிப்பு

இவ்வண்ணம் புது முறையிற் சொற்களை இனிய வகையில் இசைக்கேற்பச் சமைத்துக் கொள்ளும் சதுரப்பாடு சிறந்து விளங்கும் ஞானசம்பந்தர், தம் காலத்தும் தமக்கு முன்னோர் காலத்தும் வழங்கிய பழமொழிகளையும் கருத்துக்களையும் பொன்னே போல் போற்றித் தம்முடைய ஞானப் பாட்டுக்களின் இடையே தொடுத்துச் சிறப்பித்திருக்கின்றார். கருப்பு வெளுப்பாகாது, கசப்பு இனிப் பாகாது என இன்று நாட்டில் நிலவும் பழமொழி பண்டை நாளில் "நீலமுண்டது பிறிது ஆகாது " என வழங்கிற்று : இப் பழமொழிகள் சிலவற்றைத் தொகுத்துப் பழமொழி என்னும் பெயரால் நீதிநூல் செய்த "முன்றுறை யரையர்" என்பார். மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடான் என்பதை விளக்குதற்கு, "ஆகாதே உண்டது நீலம் பிறிது" [278]என்று குறித்தார். இப் பழமொழியை நம் ஞான சம்பந்தர், “சிராப் பள்ளித் தலைவரை நாளும் தலைவரல்லாமை உரைப்பீர்காள் நிலவரை நீலமுண்டதும் வெள்ளே நிறமாமே”[279] என்று பாடுகின்றார். இவ்வாறே நினைவு சொல் செயல்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தாமல் மடிந்து இருப்பவர், "நான் சிவா எனச்சும்மா இருந்தேன்" என்பதை உலகியலில் இன்றும் காணலாம். இது ஞான சம்பந்தர் காலத்தும் நிலவியிருந்தது என்பதை, "நண் பால் சிவாய எனா நாலூர் மயானத்தே, இன்பாயிருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே"[280] என்று ஞானசம்பந்தர் கூறுவது கொண்டு உணரலாம். மேலும், எழுத்துக்கெல்லாம் அகரம் முதலாதல் போல இறைவன் எல்லாவற்றிற்கும் முதலாக உள்ளான் என்ற கருத்தை “அகர முதலானே”[281] என்று குறிக்கின்றார். இது போலும் குறிப்புக்கள் பல இவருடைய திருப்பாட்டுக்களிற் காணப்படுதலின் விரிவஞ்சி விடுக்கின்றோம்.

[278]. பழமொழி. 94. [279]. ஞானசம். 98 : 5. [280]. ஞானசம், 182:10, [281]. ஞானசம் 88 : 5
------------

திருப்பதிகங்களால் நாட்டில் விளைந்த திருத்தம்

ஞானசம்பந்தருடைய பாட்டுக்கள் நாட்டில் பரவப் பரவ, அவரது ஞானவாய்மை உயர்ந்து விளங்குவதாயிற்று. அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டிலேயே அவரது சைவப் பணி சான்றோர் பரவும் சான்றாண்மையைப் பெற்றது.அப்போது நிலவிய நம்பியாரூரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், “வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா, எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”[282] என்று 'பாராட்டியதோடு அமையாது, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” [283] என்பன முதலிய சொற்றொடர்களால் தமது அன்பும் பெருமதிப்பும் தோன்றக் கூறிப் பாராட்டினர். அவர்க்குப் பின்வந்த பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பிகளும் ஞானசம்பந்தரை வியந்து பாடியுள்ளனர். பட்டினத்தடிகள் ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட வரலாற்றை வியந்து தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக்கோவை முதற் செய்யுளிலேயே குறித்துப் பாராட்டுகின்றார். நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தர் பொருளாகப் பல சிறு நூல்களை இயற்றினார். இவர்கட்குப் பின்வந்த சேக்கிழார் பெருமான் ஞானசம்பந்தர் வரலாற்றை ஆராய்ச்சித் திறனும் அன்பும் சிறக்க இனிய பாட்டுக்களாற் பாடியுள்ளார். பின்வந்த தமிழ்ப் புலவர் அனைவரும் தாம் பாடிய நூல்களில் ஞானசம்பந்தர் முதலிய பெருமக்களை வாழ்த்தி வணங்கி வழிபட்டிருக்கின்றனர். ஞானசம்பந்தரைப் பாராட்டி உரைக்கும் தமிழ் நூல்கள், வெளிவந்தனவும் வெளிவாராதனவுமாக இருநூற்றுப் பதின்மூன்று நூல்கள் என ஆராய்ந்து கணக்கிட்டுச் சீகாழியில் கடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் இந் நூலாசிரியரால் காட்டப்பட்டிருக்கிறது. இடைக் காலச் சைவர்கள், ஞானசம்பந்தர் முதலிய நான்கு பெரு மக்களையும் சமய குரவர்கள் எனவும், அவர்கள் வழங்கிய திருப்பதிகங்களைத் தமிழ் மறை எனவும், அவருள் ஞானசம்பந்தரைத் திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை என்பதுபற்றி அவர் திருப்பதிகங்களை மாத்திரம் திருஞானம் எனவும் போற்றிப் பரவினர்.

வடமொழியில் காணப்படும் நான்மறைகள் போல, ஞானசம்பந்தர் முதலியோர் வழங்கிய திருப்பதிகங்கள் சைவக் கோயில்களில் வைத்து ஒதப்பட்டன.[284] வடமொழி வேதங்களை ஒதுவதற்குக் கோயில்களில் நிவந்தங்கள் விடப்பட்டது போல, இத் திருப்பதிகங்களை ஒதுவதற்குப் பல்லவ வேந்தர் காலத்தேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.[285]

----
[282]. சுந் 39 : 5. [283]. சுந். .....
[284]. பதினாறாம் நூற்ருண்டிலேயே இத்திருப்பதிகங்களைத் திராவிட வேதம் என வழங்கும் வழக்கம் இருந்ததென நாகலாபுரத்து வேதாரணியேச்சுரர் கோயில் கல்வெட்டொன்று (A. R. No. 627 of 1904) கூறுகிறது
[285]. K. A. N. Sastry’s Cholas. Vol. II. p. i. Lá. 476-7,
---------
திருஞானசம்பந்தரும் கல்வெட்டுக்களும்

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களிலும், அவரைப் பாராட்டிக் கூறும் ஏனைத் தமிழ் நூல்களிலும் போலத் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் அவர் பெயர்கள் பல வேறுவகையில் வியந்து குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுக்களெல்லாம் பெரும்பாலும் இடைக்காலமக்களுடைய உலகியல் வழக்கு நிகழ்ச்சியாதலால், இவற்றால் குறிக்கப்படும் ஞானசம்பந்தர் பெயர்வழக்கு உலகவழக்கெனக் கருதவேண்டும். ஆளுடைய பிள்ளையார்.[286] திருஞானம் பெற்ற பிள்ளை[287] காழிநாடுடைய பிள்ளை[288] சம்பந்தப் பெருமான்[289] பரசமய கோளரி[290] திருஞானசம்பந்தடிகள்[291] காழிச் சம்பந்தப் பெருமாள் நாயனார்[292] திருஞானசம்பந்தப்பெருமாள்[293]' சிவஞான சம்பந்தடிகள் [294] திருஞான சம்பந்த நம்பி[295] ஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை[296] ஆணை நம தென்றபெருமாள்[297] என்பன சில பெயர்களாகும்.

[286]. A. R. No. 114 of 1908. [287]. A. R. No. 216 of 1908.
[288]. S. I. I. Vol. VII. No. 785. [289]. A. R. No. 52 of 1916
[290]. A. R. No. 534 of 1918 [291]. A. R. No. 37 of 1920.
[292]. A. R. No. 48 of 1922. [293]. A. R. No. 145 of 1927.
[294]. S. I. Ins. Vol. VIII. No. 613. [295]. A R. No. 606 of 1922.
[296]. A. R. No. 448 of 1912. [297]. S. I. I. VoI. VIII. No. 442.
---------------

இவ்வண்ணம், உலகியல் வழக்கில் திருஞான சம்பந்தர் பெயர் பயில வழங்கிற்றெனவே, அதனை வழங்கும் மக்கட்கும் அவர் பெயர் வழங்கியிருக்குமென்பது சொல்ல வேண்டா. அரசியல் தலைவர் பலர், திருஞான சம்பந்தப் பல்லவரையன்[298]' எனவும், திருஞான சம்பந்தமாராயன் [299] எனவும் காணப்படுகின்றனர். ஏனைமக்களுள், ஆண் மக்கள், சொக்க ஞானசம்பந்தன்[300] நம்பி சம்பந்தப் 'பெருமாள்[301] நல்ல ஞானசம்பந்தன்[302] செல்வ ஞான சம்பந்தன்[303] எம்பிரான் சம்பந்தன்[304] நக்கன் திருஞான சம்பந்தன்[305]' எனவும், ஞானசம்பந்தன்,[306] திருஞானசம்பந்த பண்டாரம்,[307] திருஞானசம்பந்தன் இராமநாதன்,[308]' கை காட்டுவான் கரும்பன் திருஞானசம்பந்தன்[309], சம்பந்தாண்டான்,[310] ஆண்டார் சம்பந்தப்பெருமாள்[311] திருஞான சம்பந்த வேளான்[312] ஞானசம்பந்தக் கோன்[313] எனவும், பெண்மக்கள் சிவஞான சம்பந்தத் தலைக்கோலி,[314] ஞான சம்பந்த நங்கை'[315] எனவும் பெயர் தாங்கி இருந்திருக்கின்றனர்.

[298]. S. I. I. Vol. V. No. 984. [299]. S. I. I. Vol. V. No. 483.
[300]. P. S. Ins. No. 310. [301]. P. S. Ins. No. 317.
[302]. P. S. Irs. No. 481. [303]. A. R. No. 465 of 1916; 358 of 1922.
[304]. A. R. No. 92 of 1920, [305]. S. I. Ins. Vol. VIII. No. 50.
[306]. A. R. No. 292 of i927-8 [307]. 285 of 1916.
[308], 102 of 1932-3. [309]. 172 of 1934-5.
[310]. 92 of 1920; 384 of 1937-3. [311]. S. I. I. Vol. VIII. No. 273.
[312]. ௸ No. 83. [313]. S. I. I. Vol. V., I, No. 35.
[314]. 231 of 32-3. [315]. 34 of 1924.
------------

அரசியல் தலைவருள் சிலர், மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றமைக்கு அறிகுறியாக இந்நாளில் ஊர்கள், நந்தவனங்கள், சிறப்புடைய கட்டிடங்கள் முதலியன அவர்களுடைய பெயரிடப் பெற்றிருப்பது கண்கூடு. இந்தச் செயல் நம் நாட்டு மக்களின் பொதுப்பண்பு. இப்பண்பு இன்று நேற்றுத் தோன்றியதாகாது. பண்டிருந்தே தொன்று தொட்டு வந்ததாகும். ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி, ' இன்னிசையால் தமிழ் பரப்பும் ' பெருங்தொண்டு செய்தது குறித்து, அவர்பால் மக்கட்குண்டான பேரன்பால், திருஞான சம்பந்தனல்லூர்[316] திருஞான சம்பந்த சதுர்வேதி மங்கலம்[317]’ என ஊர்களும், திருஞான சம்பந்த வளாகம்[318] திருஞானசம்பந்தன் தளம்[319] என இடங்களும், திருஞானசம்பந்தர் கோயில்[320] திருஞானசம்பந்தீஸ்வரம்[321] எனக் கோயில்களும், திருஞானசம்பந்தன் மடம்[322] திருஞானசம்பந்த நம்பி மடம் [323] செல்வஞானசம்பந்தர் மடம்[324] சீகாழி நாடுடைய பிள்ளை திருமடம்[325] பரசமய கோளரிமடம் [326]திருஞான சம்பந்தர் திருக்குகை'[327] என மடங்களும், திருஞானசம்பந்தர் நந்தவனம்[328] திருஞான சம்பந்தர் மடப்புறம்[329] என நந்தவன முதலியனவும் பல காலங்களில் பல மக்களால் நிறுவப்பெற்றுள்ளன. இவ்வாறே, திருஞானசம்பந்தன் மடை[330]., திருஞானசம்பந் தன்நாழி[331] என வேறு பலவற்றிற்கும் ஞானசம்பந்தர் பெயர் வழங்கப்பெற்றுளது. - -
-----
[316]. S. I. I. Vol. VIII. No. 166; 94 of 1918; 310 of 1923 ; 180
[317]. S. I. I. Vol. VI. No. 48. [318]. Ibid. Vol. VII. No. 1025.
[319]. S. T. T. Voi. VIII. No. 403 [320]. S. I. I. Vol. V. No. 988.
[321]. S. I. I. ... [322]. 199 of 1932-3.
[323]. .....not visible [324]. 358 of 1922. VII. No. 785
[325]. S. I. I., VII, no. 785 [326]. 534 of 1938.
[327]. S. I. I.VIII. No. 206. [328]. S. I. I. 54 of 1932-3
[329]. S. I. I. VIII, no, 714; S. I. I., vol VI, no, 35 [330]. S. I. I. VIII, no. 213 [331]. 214 of 1910.
--------------

திருஞானசம்பந்தர் பாண்டிநாட்டில் சமணரொடு வாது புரிந்து வெற்றியெய்திய செயல், தமிழ் நாட்டுச் சைவசமய உலகில் ஒரு புதிய கிளர்ச்சியையுண்டுபண்ணிற்று. அவர் சென்ற இடந்தோறும், அச்சிறப்பு, மக்கள் உள்ளத்தே அவர்பால் பெருமதிப்பும் வழிபடற்கு அமைந்த பேரன்பும் தோற்றுவித்து விளங்கிற்று. அந்நாளில் பாண்டிநாட்டு மதுரை நகரில் பாண்டியன் மாதேவியாய் விளங்கிய மங்கையர்க்கரசியாரின் பெருமாண்பு மிக்க புகழெய்திற்று. ஞானசம்பந்தரை நினேக்கும்போதெல்லாம் அவர்பால் தாய்மையன்பு கொண்டு ஒழுகிய மங்கையர்க்கரசியின் திருப்பெயர் நினைவுக்கு வருவது இயல்பு. இவ்வியல்புபற்றி இடைக்காலத்துப்பெருமக்கள் திருஞான சம்பந்தருக்குக் கோயில் எடுத்தபோது அக்கோயிலில் மங்கையர்க்கரசியார் படிமத்தை எழுந்தருள்வித்து வழிபாடு செய்துள்ளனர். சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர்கோயிலில் மங்கையர்க்கரசியாரை எழுந்தருள்வித்து ஞானசம்பந்தருடைய பெற்றோருக்கில்லாத பெருஞ்சிறப்பினைச் செய்துள்ளனர்.[332] மேலும் மங்கையர்க்கரசியாரது மாண்பு கண்ட முன்னாளைச் செல்வர்கள், தங்கள் பெண்மக்கட்கும் மங்கையர்க்கரசியென்று பெயரிட்டு வழங்கியிருக்கின்றனர். இத்தகைய மங்கையர்க்கரசியர் பலர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றனர். திருக்கோட்டியூரில் மங்கையர்க்கரசி யென்னும் பெயரையுடைய கண்ட நாச்சி யென்பவர், அவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் திருஞானசம்பந்தர் திருவுருவமொன்றை எழுந்தருள்வித்து வழிபாட்டுக்கென நிலம் விட்டிருக்கின்ற செய்தியை அக்கோயிற் கல்வெட்டொன்று [333]கூறுகிறது. இவ்வாறே, ஒரு மங்கையர்கரசி, திருவண்ணாமலக் கோயிலில் மங்கையர்க்கரசி மண்டபம் என ஒரு கல்மண்டபம் எடுத்திருக்கின்றாள்."[334]

திருஞானசம்பந்தரைத் தமிழ்நாடெங்கும் ஊர்தோறும் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருள்வித்து வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்திலே தோன்றி நிலவுவதாயிற்று. பலவூர்களில் திருஞானசம்பந்தருக்குத் தனியே கோயில் அமைத்து நாள்வழிபாடும் விழாவும் கடத்தி வந்துள்ளனர்.
[332]. I. A. R. No. 375 of I..........
[333]. .......... not visible [334]. S. I.I. Vol. VIII........ -------------

பாண்டி நாட்டுத் தென்காசியிலுள்ள சிவன் கோயிலில் திருஞானசம்பந்தர்க்குக் கோயில்கண்டு அதன் கண் ஆண்டுதோறும் ஞானசம்பந்தர் ஞானப்பால்பெற்ற திருவிழாவைக் கொண்டாடயிருக்கின்றனர் என அவ்வூர்க்கல்வெட்டொன்று [335]கூறுகிறது. இவ்விழா சீர்காழியில் இப்போதும் நடந்து வருவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. தில்லைக் கோயிலில் திருஞானசம்பந்தர்க்குத் தனியே ஒர் கோயில் இருந்ததெனவும், அது காளிங்கராயன் என்பனால் பொன்வேயப் பெற்றதெனவும் தில்லையிலுள்ள கல்வெட்டொன்று[336] கூறுகிறது. சிர்காழியிலுள்ள திரு ஞானசம்பந்தர் கோயிலுக்குத் தலைச்சங்காடு, குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம், திருமுல்லைவாயில், திருவாக்கூர் முதலிய ஊர்களிலுள்ள மகாசபையினர் கோயில் வழிபாட்டுக்கும் கோயில் பழுது பார்த்தற்குமாக, மிக்க நிலங்களை விட்டிருக்கின்றனர். இக்கோயிலில் ஞான சம்பந்தர் பாடிய பதியங்களை இசைநெறி வழுவாமற்பாடுதற்காக இசைக் கல்லூரியை எற்படுத்தி, அதன்கண் தங்கி இசை கற்பிக்கும் ஆசிரியர்கட்கு நிலம் விட்டிருக்கின்றனர்.[337],

[335]. A. R. No. 601 of 1917.
[336]. S. I. I. VoH. IV. No. 225.
[337]. A. R. No. 374-388 of 1918.
------------
இடைக்காலத்தே தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் நாட்டாட்சிக்குக் சிறந்த உறுப்பாகத் திருக்கோயில்களை எழுப்பி அவற்றிற்கு ஊரும் நிலங்களும் பொன்னும் மிகைப்படக் கொடுத்து, இன்றைய அரசியலறிஞர் அனவரும் எண்ணி யெண்ணி வியக்கத்தக்க வகையில் தங்கள் அரசியலாட்சி முறையை நடத்தினர் என்ற செய்தி நாடு அறிந்ததொன்று.இக்கோயில்கள் பலவும்தனித்தனிச்சபைகளால் ஆளப்பெற்று வந்தன. கோயில் காரியம் பார்க்கும் சபைகள் இல்லாத கோயில்களை அவ்வவ்வூர்களை ஆளும் மகா சபைகள் ஆட்சி செய்தன. இக் கோயில்கட்கெனத் தனித்தனிப் பண்டாரங்கள் (Treasury) இருந்தன; அவற்றின் வரவு செலவு குறிக்கும் கணக்குகளும் தணிக்கை செய்யும் தனிக் குழுக்களும் இருந்தன.
இக்கோயில்கள் ஒருபால் நாடாளும் வேந்தர்களுக்கும் ஒருபால் நாட்டு மக்கட்கும் இடை நின்று இரு திறத்தாரிடையும் அன்பும் ஒத்துழைப்பும் ஒப்ப நிலவுமாறு செய்தன[338]. இத்தகைய அரிய பணிகளைச் செய்தற்குரிய கோயில்களின் நெறியறிந்து செயல் புரியும் கோயிற் பெருமக்கள் சமயப்பற்றும் சமய ஒழுக்கமும் உடையராதல் வேண்டும். அவர்களில் பலர் துறவிகளும் மாகேசுரர்களும் சிவயோகியர்களுமாக இருந்தனர். கோயில்களில் செய்யப்படும் செயல் பலவும் கோயிற் பணிக்குரிய மாகேசுரர்களால் காக்கப்படும் ; ஆதலால் தான், கோயில்களில் விடப்படும் நிவந்தங்களின் இறுதியில் பன்மாகேசுரரஷை என்றொரு தொடர் குறிக்கப்படுகிறது. இந்த மாகேசுரர் முதலியோர் சமய உணர்வும் ஒழுக்கமும் பெறுதல் வேண்டி, அவர்கட்கென நாடெங்கும் மடங்கள் பல தோன்றி உணவும் உடையும் உறையுளும் மருந்தும் உதவிவந்தன. அவ்வாறு தோன்றிய மடங்களுள் மிகப் பழமை வாய்ந்தவை திருஞான சம்பந்தர் பெயரால் தோன்றியன. திருவானைக்காவிலுள்ள சங்கராசாரியார் மடம் முன்னாளில் திருஞான சம்பந்தர் மடமாக இருந்ததென அங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்த அரசியற் கல்வெட்டாராய்ச்சியாளர்[339] கூறுகின்றனர். இவ்வாறே திருஞான சம்பந்தர் பெயரால் மடங்கள் பல தமிழ் நாடெங்கும் இருந்தன என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் எடுத்தோதுகின்றன. ஆயினும் அவற்றுள் பல மூன்றாங் குலோத்துங்கனுடைய இருபத்திரண்டாம் ஆண்டில் உண்டான குகையிடி கலகத்தால்[340] அழிக்கப்பட்டன : மிகச் சிலவே எஞ்சின. பின்னர்ச் சில உண்டாயின என்றாலும் அவை வேறு வேறு பெயரால் தோன்றி நிற்பனவாயின. இப்போது மதுரையிலுள்ள திருஞான சம்பந்தர் திருமடம் ஒன்றுதான், தன்தொன்மைச்சிறப்பை உணர்த்திக் கொண்டு நிற்கிறது. தஞ்சை மாவட்டத்து மாயூரத்துக்கு அண்மையிலுள்ள தருமபுர ஆதீனமடம் திருஞான சம்பந்தர் பெயர்கொண்டு நிலவுவது ஈண்டுக் குறிக்கத்தக்க தொன்று.

[338]. A. R. for 1921-2, para. 68-71.
[339]. A. R. for 1909. para. 63.
[340]. “35& #1719. 3; 30.5ib which happened in the 22nd year of Gustu 1 GH56) # (GG 60 TË Gl:Éissir III) must have been instigated by the Brahmanas against the non-Brahmanical Saiva-Mathas”— A. R. for 1913. para. 42. Vide also A. R. foro 1926-7. p. 84.
-------------

திருக்கோயில்கள் தோறும் திருக்கை கோட்டியென ஒரு மக்கட்குழுவினை நிறுவி, அவர்கட்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் வழங்கிய திருப்பதிகங்களை இசையோடு கற்பித்து நாளும் வழிபாட்டுக் காலத்தில் ஒதுவதாகிய ஒருநெறி பல்லவ வேந்தர் காலமுதலே ஏற்படுத்தி இருந்தனர். உழைக்கும் திறனில்லாத குருடர்களும் மகளிரும் ஆடவரும் இத் திருப்பதிகங்களக் கற்று இசை நலங்கிளர எங்கும் இசைத்து வந்தனர். இவ்வகையால் மக்கள் மனத்தில் திருஞான சம்பந்தர் முதலியோருடைய திருப்பதிகங்கள் நன்கு பதிந்திருந்தன. அதனால், அவர் திருப்பதிகங்களிற் காணப்படும் பல இனிய சொற்ருெடர்களை வியந்தெடுத்துக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் கோயிலுக்கும் தெருக்களுக்கும் நிலங்களுக்கும் பெயராக அமைத்துப் பாராட்டும் வழக்கம் இடைக்கால நன் மக்களிடையே நிலவிற்று. திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களக் கோயிற்சுவர்க் கல்லில் வெட்டி வைப்பதும்[341], சில கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களுள் ஒன்றான "வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாட்டைக் கல்லிற் பொறிப்பதும்[342] செய்திருக்கின்றனர். தென்குடித் திட்டைத் திருப்பதிகத்தில் திருஞான சம்பந்தர், " ஐயுணர் வெய்தி மெய்தேறினார் வழிபடும் தென்குடித் திட்டை'[343] என்று பாடினாராக, பின் வந்தவர், மெய் தேறினார் தம் வழிபாட்டால் சிவமாந்தன்மை யெய்தும் சிறப்புக் கருதி அங்குள்ள இறைவனை, "தேறினார்' என்றே பெயரிட்டு வழங்கினர்;

[341]. ATR. No. 8 of 1918.
[342]. A. R. No. 192 of 1928-9,
[343]. ஞானசம், 293 : 6,
--------------

இதனை அவ்வூர்க் கோயில் கல்வெட்டொன்று[344] "தென்குடித் திட்டையுடைய நாயனார் தேறினார் என்று கூறுகிறது. திருப்புகலூர்ப்பதிகமொன்றில், போற்றிசைத்து என்றும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான்[345]' என்று ஞானசம்பந்தர் பரவினர் ; பட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள கிரமங்கலத்தில் எழுந்தருளிய இறைவனை, "மெய்ய நின்ற நாயனார் ' எனப் பெயரிட்டுப் போற்றின்ரென அவ்வூர்க் கல்வெட்டுக்[346] கூறுகிறது. திருப்புத்தூரிலுள்ள இறைவனை ஞானசம் பந்தர் ஒங்கு கோயில்லுறைவார்[347]' என்றும், அக்கோயிலை ஓங்கு கோயில் [348]' என்றும் குறித்தாராக, மெய்கண்டார் சந்தானத்துத் திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தரென்பார் ஒங்கு கோயில் என்றே கொண்டு ஒரு புராணம் பாடினாரென்று[349] அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. தஞ்சை காட்டிலுள்ள குற்றாலத்துக்குத் திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தில் திருத்துருத்தி என்று பெயர் குறிக்கப்படுகிறது. இதனை ஞான சம்பந்தர் பாடுமிடத்து, ஒரு பாட்டில், "பைம்பொழில் சூழ் வீங்குநீர்த் துருத்தியார்[350] ' எனக் குறித்தனர். பின்வந்தோர் இத்தொடரினையே, அவ்வூர்ப் பெயராகக் கொண்டு கல்வெட்டுக்களிற் குறிக்கும் போதெல்லாம், திருவழுந்துார் நாட்டு வீங்குநீர்த் துருத்தியுடையார் . சொன்னவாறறியும் மகாதேவர்[351] ' எனவும், விங்கு நீர்த்துருத்தியுடைய திருக்கற்றளி மகாதேவர்[352] எனவும் வழங்கினார். திரு அவளிவணல்லுர்த் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர், இறைவனை, " புரிநூலொடு குலாவித், தம்பரிசினோடு சுடுநீறு தடவந்து...செம்பொன் நெடுமாடமதில் கல்வரை விலாக, அம்பெரிய எய்தபெருமான் உறைவது அவளிவணல்லூரே [353]' என்று சிறப்பித்தார்.

[344].A. R. No. 150 of 1933-4.
[345].ஞானசம். 2 : 5.
[346]. A. R. No. 125 of 1935-6.
[347].ஞானசம், 26 : 3.
[348]. A. R. No. 186 of 1935–6.
[349]. A. R. No. 180 of 1935-6.
[350].ஞானசம். 348 : 1.
[351]. A. R. No. 101 of 1926.
[352].A. R. No. 104 of 1926.
[353],ஞானசம், 340: 1.
----------

அவ்வூர்க் கல்வெட்டுக்கள், அத் திருப்பாட்டிற் காணப்படும் தம்பரிசு', அம்பெரிய என்ற தொடர்களால் இறைவனைத் தம்பரிசு உடைய நாயனார் ” என்றும் அம்பெரிந்த பெருமான்' என்றும் பெயர் குறித்து, அவளிவணல்லூர் உடையார் தம் பரிசுடைய நாயனார் கோயிலில் எழுந்தளுகிற...... அம்பெரிந்த பெருமானயும் நாச்சியாரையும்... எழுந்தருளுவித்தான்...... சாத்தன் உடையான் தம்பரிசு உடையான் ஆதிச்ச தேவனான அமரகோன்[354]' என்று கூறுகின்றன. அச் சிறுபாக்கத்துத் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர் இறைவனை அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே[355] " என்றதனால், கல்வெட்டுக்கள், அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்ட நாயனார்[356] ' என்று குறிக்கலுற்றன. இவ்வண்ணமே, குரங்கனின் முட்டத்து இறைவனைக் கொய்யா மலர் சூடுவார்[357]' எனவும், திருப்புறம் பயத்து இறைவன் கோயிலிலுள்ள தென்முகக்கடவுளை அறமுரைத்த நாயனார்[358] எனவும் பிறவும் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆங்காங்கு ஞானசம்பந்தர்பாடிய திருப்பதிகங்களைக் கண்டு மேற்கொண்டனவாகும்.

திருஞானசம்பந்தர், ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில், இறைவியைக் குறித்துரைத்துப் பாடிய சொற்றொடர்களையே பெரும்பாலும் அவ்வவ்வூர்க் கல்வெட்டுக்கள் எடுத்தோதியுள்ளன. திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவியை "வேயன தோளுமை'[359] என்றாராகக் கல்வெட்டு, "வேயன தோளி நாச்சியார்[360] எனவும், திருவோத்துார்த் திருப்பதிகம் இடையீர் போகா இளமுலையாள்[361]' என்றதாகக் கல்வெட்டு இளமுலை நாச்சி[362] யெனவும், அச்சிறுபாக்கத்துப் பதிகம், இளங்கிளையரிவை[363]' என்றதாகக் கல்வெட்டு

[354].S. I. I. Vol. VIII. No. 201.
[355]. ஞானசம். 77 : 1-10,
[356]. S. I. I, Vol. VII. No. 447.
[357]. A. R. No. 294 of 1912.
[358]. A. R. No. 335 of 1927.
[359]. ஞானசம். 184:2.
[360].S. i. I. Vol. V, No. 987.
[361]. ௸ 54 : 2.
[362]. S. I. I. Vol. VII. No. 107.
[363]. ௸ 77 : 7.
-------------

மகாதேவருடைய இளங்(கிளைப்)பாவை"[364] எனவும், திருப்பாம்புரப்பதிகம் "மாமலையாட்டி” [365] என்றலும், கல் வெட்டு மாமலையாட்டியார்"[366] ' எனவும், திருவலஞ் சுழிப் பதிகத்தில் ஞானசம்பந்தர் "வண்டுவாழ் குழல்மங்கை" [367] என்றாராகக் கல்வெட்டு "வண்டுவாழ் குழலி"[368] எனவும் "வண்டுவாழ் குழலிச் சதுர்வேதிமங்கலம்"[369] எனவும் கூறுவனவாயின.

தமிழகத்தில் நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களை அவர்களாற் பாடப்பெற்ற பொருள்பற்றியும், அவர்தம் பாட்டுக்களிற் காணப்படும் அரிய சொல்லாட்சி பற்றியும் சிறப்புப் பெயர்தந்து வழங்குவது சங்க காலத்திருந்தே தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். மருதம் பொருளாகவும் பாலை பொருளாகவும் பாடிய சான்றோரை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனவும், பாலைபாடிய பெருங்கடுங்கோ எனவும் சங்கத்தொகை நூல்கள் குறிப்பது நாடறிந்தது. இவ்வாறே "மீனெறி தூண்டிலார்" [370] "தொடித்தலை விழுத்தண்டினார்" [371] என்பன முதலாக வரும் சான்றோர் பெயர்கள் அவர்கள் வழங்கிய சொற்றொடர் அடியாக வந்தனவாகும். இவ்வண்ணமே ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பாடிய பாட்டுக்களுள் கிடக்கும் இனிய சொற்றொடர்களை மக்கட்குப் பெயராக வழங்குவது இடைக்காலத்தே தோன்றிய சீரிய வழக்காறாகும். திருஞானசம்பந்தர் "திருநனிபள்ளி"[372] "திருக்கழுமலநகர்த்"[373] திருப்பதிகங்களிலும் "கோளறு திருப்பதிகத்திலும்" [374] "ஆணை நமதே" என்று எடுத்தோதினார்; அதுகண்டு, அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டார் நம்பி யென்பார், "முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான்" [375] என்று வியந்து கூறிப் பாராட்டினர்.

[364]. S, I I. Voł.VII. No, 452.
[365]. ஞானசம்41:3
[366].A. R. No. 90 of 1911.
[367]. ஞானசம் 242:2
[368].A. R. No. 206 of 1927-3.
[369]. A.. R. No. 60 of 1911.
[370].குறுந்.54.
[371].புறம், 243.
[372]. ஞானசம். 220:11.
[373]. ஞானசம், 376:11.
[374]. நம்பி. திருத்தொகை : 23.
[375]. ஞானசம். 221 : 11
-----------
அவர்க்குப் பின்வந்தோர், ஞானசம்பந்தரை ஆணை நமதென்ற பெருமாள் எனப் போற்றிப் புகழ்வாராயினர். அந்நாளில், பிரான்மலை நிற்கும் நாட்டைச் சேர்ந்த நகரத்தாருள் பலர், திருஞானசம்பந்தர் பால் மிக்க ஈடுபாடுடையராய் இருந்தனர். கலசப்பாடியுடையார் திருஞானசம்பந்தர், நாவலூருடையார் திருஞான சம்பந்தர்" எனப் பலர் அவரிடையே காணப்படுவதும், அவருள் ஒருவர் "பட்டமுடையார் ஆணை நமதென்ற பெருமாள்"[376] என்ற பெயர்கொண்டிருப்பதும் குறிக்கத்தகுவனவாகும்.

திருவண்ணாமலைப் பதிகத்தில் ஞானசம்பந்தர் வழங்கும் "பெண்ணாகிய பெருமான்”[377] என்ற தொடர், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள மாறங்கியூர்க் கல்வெட்டொன்றில், "இருங்கோளப்பாடி நாட்டுச் சிற்றாமூருடையான் தியாகப் பெருமாள் பெண்ணாகிய பெருமான்"[378] என்ற ஒரு தலைவ னுக்குப் பெயராக விளங்கியிருக்கிறது "மறையணி நாவினான் மாமழபாடியே"[379] யென்பது திருஞானசம்பந்தர் வழங்குவது; திருமழபாடிப் பகுதியில் வாழ்ந்த பட்டனொருவன் "மறையணிநாவினன் பட்டன்"[380] என்று பெயர் கூறப்படுகின்றான். திருநெல்வேலிப்பதிகத்தில் "மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந்துறைகமழ் திருநெல்வேலி"[381] என்று ஞானசம்பந்தர் பாடினராக, அவ்வூரின் ஒரு பகுதிக்கே "சிந்துபூந்துறை" [382] என்ற பெயர் வழங்குவதாயிற்று. அப்பதிகத்தே "திருந்துமா மறையவர் திரு நெல்வேலி" எனவரும்தொடரில் திருந்துமாமறை யென்ற தொடரை வழிவகை யொன்றுக்குப் பெயராக அமைத்து "திருந்து மாமறைப்பிலாறு என்னும் பேரால் விட்டவழி"[383] என்று வழங்கியுள்ளனர்.

----
[376]. S. I. I. VTo].VIII.No 442.
[377]. ஞானசம். 10 : 1.
[378]. A. R. No.102 of1935-6,
[379]. ஞானசம்.286:2
[380].S. I. I. Vol. V. No. 634.
[381]. ஞானசம்.10:11
[382].S. I. I. Vol. V. No. 410.
[383]. S. I. I. Vol. V. No. 411.
----------------
இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிக்கின்றோம். திருஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்தில் மிறைக்கவி பாடும் வழக்காறு வந்து விட்டது. அதனால் அவர், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று, கோமுத்திரிகை, சக்கரமாற்று முதலியன பாடியுள்ளனர். பழமையாக வரும் இசைத் தமிழ் நெறியில் பல வேறுபாட்டுக்களைப் பாடிய திருஞானசம்பந்தர், புதுவதாகப் புகுந்த மிறைக்கவி (சித்திர கவி) நெறியையும் மேற்கொண்டமை, அக்காலத்தே வாழ்ந்த புதுமைப்பித்தர்களைத் தம்மொடு தழுவிக்கொண்டு சென்ற அவரது தகைமையை நாம் தெளியக் காட்டுகின்றது. நாளும் வளர்ந்து வரும் மக்கள் உள்ளம் எவ்வெப்புதுமை நெறிகளை விரும்பி மேற்கொள்கிறதோ அவ்வந் நெறிகளைத் தேர்ந்து மேற்கொள்ளாது ஒழியுமாயின், அவ்வுள்ளத்தைச் சமய நல்லொழுக்கத்தை மேற் கொள்ளுமாறு செய்யும் சமயப்பணி வெற்றி பெறாது என்பது உலகில் தோன்றி நின்று மறைந்த பழம்பெருஞ் சமயங்களின் வரலாறு காட்டும் உண்மை. இவ்வுண்மை நெறி திருஞானசம்பந்தர் நாளும் இன்னிசையால் வளர்த்த தமிழ்த் தொகையுள் ஒளிவிட்டுத் திகழ்வதை அறிஞர் கண்டு இன்புறுவார்களாக
-------------

----------
continued in part 2 ----------

This file was last updated on 20 April 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)