pm logo

ஔவை. சு. துரைசாமி பிள்ளை எழுதிய
சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை, - பாகம் 2)


caiva ilakkiya varalARu (7-10th CE),
auvai turaicAmi piLLai, part 2
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சைவ இலக்கிய வரலாறு
(கி.பி. 7 முதல் 10- ம் நூற்றாண்டு வரை ), part 2
ஔவை. சு. துரைசாமி பிள்ளை

3. திருநாவுக்கரசர்

வரலாறு

திருஞான சம்பந்தர் காலத்தில் அவரோடு உடனிருந்த சான்றோருள் திருநாவுக்கரசர் ஒருவர் என்பது முன்பே, கூறப்பட்டுள்ளது. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் சீர்த்த இடம் பெறுவோருள் இவரும் ஞான சம்பந்தர் போலச் சிறந்தவராவர்.

திருநாவுக்கரசரது பிள்ளைப் பெயர் மருணீக்கியார் என்பது. இவரது ஊர் நடுகாட்டிலுள்ள திருவாரூர்; இஃது. இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கில் மூன்று நான்கு கல்தூரத்தில் இருக்கிறது. அவ்வூரில் வேளாளர் குடியில் செல்வச் சிறப்பும் போர்ப் புகழும் சிறக்கப்பெற்ற புகழனார்[1] என்பார்க்கும் அவர் மனைவி மாதினியார் என்பார்க்கும் மகனாகப் பிறந்தவர் மருணீக்கியார். இவர்க்கு மன்னே பிறந்தவர் திலகவதி என்னும் சிவம்பெருக்கம் திருவுடையராவர்.

மருணீக்கியார் இளமையில் சிறந்த கல்வி பெற்று வருகையில் திலகவதியார்க்கு திருமண ஏற்பாடு செய்யப் பெற்றது. மணநாள் குறிக்கப் பெற்ற பின் மணமகனாக்க் குறிக்கப்கெற்றவர் போர்க்குச் செல்ல வேண்டியவரானார். போர் முடிவு பெறுதற்குள், புகழனார் இயற்கையெய்தினார் அவர் மனைவியாரும் இப்பெயர் வடமொழியில் கீர்த்தியென வரக்கண்டார். மக்கட்குக் கீர்த்தியெனவும் மா கீர்த்தியெனவும் பெயரிடலாயினர் போலும், பாண்டியன் மா கீர்த்தியென்பான் பெயர் தொன்னாளில் மாசீர்த்தி என இருந்து, அதன் பொருள் அறியாமல் ஏடு எழுதினோரால் மாகீர்த்தி எனப்பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்நாளைய வரலாற்று ஆராய்ச்சியேடுகளிலே போதிய சான்றுகள் உண்டு.உடன்கட்டை யேறினார். திலகவதி யாரும் மருணீக்கியாரும் உறவினரிடையே தமித் திருப்பாராயினர். இந்நிலையில் போர்க்குச் சென்ற மணமகனார், அப்“பொருவாரும் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்.”
-----
[1] இப்பெயர் வடமொழியில் கீர்த்தியென வரக்கண்டார். மக்கட்குக் கீர்த்தியெனவும் மா கீர்த்தியெனவும் பெயரிடலாயினர் போலும், பாண்டியன் மா கீர்த்தியென்பான் பெயர் தொன்னாளில் மாசீர்த்தி என இருந்து, அதன் பொருள் அறியாமல் ஏடு எழுதினோரால்
மாகீர்த்தி எனப்பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்நாளைய வரலாற்று
ஆராய்ச்சியேடுகளிலே போதிய சான்றுகள் உண்டு.

--
இச் செய்தியை அறிந்ததும், திலகவதியார், தான் மணஞ் செய்யப் பெறாராயினும், தன்னை மணம் பேசப் பெற்றவர்க்கு உரிமை செய்து விட்டாராதலால், தன் தாயைப் போலத் தானும் உடனுயிர் துறக்கக் கருதினார். பற்றுக் கோடாகிய தாய் தந்தையரைப் பிரிந்து மனம் சோர்ந்திருந்த மருணீக்கியார்க்குத் தந்தையும் தாயும் போல வேண்டுவன புரிந்து அன்புறப் பேணிவரும் அருமைத் தமக்கையார் கருத்து, அவரது உள்ளத்தே பெருந்துயரை விளைவித்தது. உடனே, அவர் தமக்கையார் திருவடியில் வீழ்ந்து வணங்கித் தம்பொருட்டு உயிர்தாங்கியருளல் வேண்டுமென இறைஞ்சினர். “தம்பியார் உளராக வேண்டும்”[2] என்ற சீரருள் திலகவதியார் உள்ளத்தே பிறந்தது. அவ்வாறே, அவர், மருணீக்கியாகிய தன் தம்பியின் பொருட்டு உயிர் வாழ்வாராயினர். திருநாவுக்கரசரான பின், தன் பொருட்டு உயிர் வாழ்தற்கு ஒருப்பட்ட தன் தமக்கையின் அருள்நலத்தைப் பின்பொருகால் நினைவுகூர்ந்து, தான் பாடிய திருப்பதிகமொன்றில், “அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு, அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே[3]” எனக் குறித்துரைத்துள்ளார்.

மருணீக்கியார், பெற்றோரையும் உற்றோரையும் இழந்த துன்பத்தினின்றும், ஒருவாறு தேறி, நிலையாமையுணர்வு மீதூரப்பெற்றுச் சமய நூல்களைப் பயிலத் தொடங்கினர். நிலையாமையைப் பலபடியாலும் எடுத்தோதிச் சிறப்பிக்கும் வகையில், சமண் சமயம், அவருள்ளத்தைப் பெரிதும் மகிழ்வித்தது. சமண் நூல்கள் பலவற்றைப் பயின்றார். தமக்கையாரைப் பிரிந்து சென்று சமண் பள்ளிகளை அடைந்து தாமும் சமணரானர். அச்சமயத்தவர் உறைந்த பல இடங்கட்கும் சென்று பழுத்த சமண நூற் புலவராகித் தருமசேனர் என்னும் சிறப்புப்பெற்றுத் திகழ்வாராயினர்.

தம்பியார் தன்னைக் கைவிட்டுத் தமக்குரிய சிவநெறியையும் துறந்து சமணரானது,
----
[2]. திருநா. 121 : 6.
[3]. பெரியபு. திருநா. 34.
---

திலகவதியார் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை விளைவித்தது. அண்மையிலுள்ள திருவதிகையை அடைந்து திருமடமொன்றை அமைத்துக் கொண்டு, திருவதிகைக் கோயிலில் நாளும் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து வரலானார். நாட்கள் திங்களாயின; திங்கள் யாண்டுகளாயின; பல ஆண்டுகள் கழிந்தன.

நடுநாட்டை ஆண்ட வேந்தனை முதல் மகேந்திரவன்மன் சமண் சமயத்தை மேற்கொண்டு அதனைப் பெரிதும் ஆதரித்து வந்ததனால், அவன் காலத்தே திருப்பாதிரிப்புலியூர் சமண் சமயத்தவர்க்குச் சிறந்த இடமாய் விளங்கிற்று என்பது முன்பே கூறப்பட்டது. அங்கிருந்தே சமண் துறவிகள் தங்கள் சமயத்தை நாட்டில் பரப்பி வந்தனர். வேந்தனும் சமணனாய் இருந்தமையின் அரசியற் சலுகை பெற்ற சமண் சமயம் சிறப்புறுவதாயிற்று. இக் காலத்தே தான், தென்பாண்டி நாட்டிலும் சமண் சமயம் அரசு கட்டிலேறி ஆட்சி புரிந்து வந்தது.

திருப்பாதிரிப்புலியூரில் தருமசேனராய் விளங்கிய மருணீக்கியார்க்குச் சூலை நோயுண்டாயிற்று. அது நீங்குதற்குரிய முயற்சிகள் பலவும் பயன்தாரா தொழிந்தன. முடிவில் ஒருநாள், அவர் திருவதிகை அடைந்து தன் தமக்கையாரைக் கண்டு அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நோய் தீரும் வகை அறியாது திகைக்கும் தம் திகைப்பைத் தெரிவித்துக் கொண்டார். திலகவதியார், உடனே திருவதிகைப் பெருமானை வணங்கி அவர் திருப்பெயரைச் சொல்லித் திருநீறணிவித்து அப் பெருமானை வணங்கித் தனது குறையைச் சொல்லிப் பாடிப்பரவச் செய்தார். மருணீக்கியார், “கூற்றாயினவாறு விலக்ககிலீர்”[4] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இதன்கண், “சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்” [5] “வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்” [6] என்று குறித்திருப்பது இவ்வரலாற்றை வற்புறுத்துகிறது.

[4]. திருநா. 1 : 1.
[5].௸ 1 : 4
[6]. ௸ 1: 7.
------

இத் திருப்பதிகத்தைப் பாடிப் பரவியதன் பயனாக மருரணீக்கியாருக்குச் சூலை நோய் நீங்கிற்று. அது நீங்கிய மகிழ்ச்சியால் அவர் பல திருப்பதிகங்களைப் பாடினார். அது முதல் அவர் திருகாவுக்கரசராய்ச் சிவபெருமானது திருவருளைப்பாடும் திருத் தொண்டரானார். தமக்குற்ற சூலை நோய் இறைவன் திருவருளால் வந்தது என்றும், அதனைத் தீர்க்கு முகத்தால் இறைவன் தம்மை ஆட்கொண்டான் என்றும்[7] உணர்ந்தார்; இறைவன்பால் பேரன்பு பெருகிற்று. மூத்து முதிர்ந்த முதுமை நிலையினும் அவர் தமக்கையுடன் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து கொண்டும் திருப்பதிகம் பாடிக் கொண்டும் இருந்து வரலானார்.

இச் செய்தியறிந்த சமணருட் பலர், பல்லவ வேந்தனை அடைந்து திருநாவுக்கரசரின் செயலை மிகைப்படுத்தோதி அவன் உள்ளத்தே அவர்பால் சினமுண்டாகச் செய்தனர். வேந்தன் திருநாவுக்கரசரைத் தன்முன் வருமாறு பணித்தான். அவர், “நாமார்க்கும் குடியல்லோம்”[8] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, “நின்றுண்டார் எம்மை நினையச் சொன்ன வாசகமெல்லாம் மறந்தோம்; வந்தீர் யார்? மன்னனாவான் யார்?”[9] என்று எடுத்தோதி மறுத்தார். பின்னர், அவர் வேந்தன் முன் கொண்டுபோகப் பெற்று நீற்றறையில் சிறையிடப் பெற்றார்;[10] அங்கே அவர்கள் அவர்க்கு நஞ்சுகலந்த உணவு தந்தனர்;[11] வயக்களிறு கொண்டு அவர் தலையை இடறச் செய்தனர், இவற்றால் சிறிதும் அவர் ஊறுபடாதது கண்டும் அமையாது, முடிவில், அவரை ஒரு கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளி விட்டனர். ஆனால், நாவரசர், இறைவன் திருப்பெயரையே ஓதி[12] அக் கல்லோடே மிதந்து போந்து கரையேறித் திருப் பாதிரிப்புலியூர் இறைவனைப் பரவி விட்டுத் திருவதிகை வந்து சேர்ந்தார்.

---
[7]. “ஆமயந் தீர்த்து அடியேனை ஆளாக்கொண்டார், அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;” “சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே” (திருநா . 301 : 1, 3.1
[8]. திருநா. 312 : 1.
[9]. ௸ 312 : 8.
[10]. ௸ 265 : 8.
[11]. ௸ 70 : 5.
[12]. ௸ 186: 7.
-------------

சமணர் செய்த இடுக்கண்களிலிருந்து இனிது உய்ந்து உயர்ந்த திருநாவுக்கரசர்க்கு இறைவன் திருவருள் புரிந்த நலத்தை அறிந்தான் பல்லவமன்னன்; தானும் சைவன் ஆனான். திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமண்பாழிகளை இடித்துத் தகர்த்து நாவரசர் இருந்த திருவதிகையில் குணபரன் என்ற தன் பெயரால் குணபரேச்சுரம் என்னும் கோயில் ஒன்றைப் புதிதாகக் கட்டினான்[13]. அது குணதரேச்சுரம் எனவும் வழங்கும். குணபரன் என்பது முதன் மகேந்திரவன்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. அவனே தான் சைவனான திறத்தை அவன் காலத்தே திருச்சிராப்பள்ளியில் ஏற்பட்ட கல்வெட்டொன்றில்[14] குறித்திருக்கின்றான்.

பின்பு, நாவரசர், சிவபெருமான் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அப்பெருமானைப் பாடிப் பரவும் வேட்கையுற்றுத் திருவெண்ணெய் நல்லூர் திருக்கோவலூர் முதலிய திருப்பதிகட்குச் சென்று, திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோயில் உள்ள பெண்ணாகடம் அடைந்தார். அங்கே இறைவனை வணங்கித் தனக்கு மூவிலைச் சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்துத் தனது உடம்பைத் தூய்மை செய்யவேண்டுமென[15] வேண்டிக் கொண்டார். இறைவன் அருளால் அவர்க்கு அவர் விழைந்தவாறே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டன.

பெண்ணாகடத்தில் சின்னாள் தங்கியிருந்து அரிதிற். பிரிந்துபோந்த நாவுக்கரசர், தில்லைப்பேரம்பலம் அடைந்து பன்னாள் தங்கி, “தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலக்கூத்தனை”[16] வணங்கியும் வாழ்த்தியும் திருப்பதிகங்கள் பல பாடியும் வழிபட்டுக்கொண்டிருந்தார். அந்நாளில் சீர்காழிப்பதியில் திருஞானசம்பந்தர் தோன்றி ஞானப்பாலுண்டு சிவஞானச் செல்வராய்த் திகழ்வது கேள்வியுற்றார், உடனே, சீர்காழிக்குச் சென்று அவரையும் அங்குள்ள சிவபெருமானையும் கண்டு இன்புறவேண்டும் என்னும் விழைவுமீதுாரப் பெற்றுச் சீர்காழியடைந்து, தன் வரவு கேட்டு வரவேற்ற திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைக்கண்டு பேரின்புற்றார். பின்னர், சீர்காழிப் பரமனை வணங்கி வழிபட்டுத் திருப்பதிகங்கள் பல இசைத்து இன்பம் கொண்டார்.


[13]. பெரியபு: திருநா. 146.
[14]. S. I. I. Vol. I. No. 33.
[15]. திருநா. 110 : 1, 10.
[16]. திருநா. 116 : 8.
------------

சில நாட்கள் கழிந்ததும், திருநாவுக்கரசர், இடையிலுள்ள திருப்பதிகளைப் பதிகம்பாடிப் பரவிக்கொண்டே பழையாறை நகரத்து ஒரு கூற்றிலுள்ள திருச்சத்தி முற்றம் அடைந்து இறைவனை வணங்கித் தன் முடிமேல் அவர் திருவடியைச் சூட்டுமாறு வேண்டினார். அப்போது, இறைவன் அவர் கனவில் தோன்றி “நல்லூர்க்கு வா” என்று பணிப்ப, நாவரசர் நல்லூரையடைந்து தான் நயந்த திருவடிப் பேறுபெற்று, அதனால் எய்திய இன்ப மிகுதியால் இனிய திருப்பதிகங்கள் பாடினார்.

அங்கே சிலகாலம் தங்கியிருந்த திருநாவரையர், மேலும் பல திருப்பதிகளைக் கண்டுவழிபட விரும்பித் திருப்பழனம் முதலிய திருப்பதிகளைப் பரவிக்கொண்டு திங்களூர்க்குச் சென்றார். அவ்வூரில் அப்பூதியென்னும் வேதியர் தம்பால் பேரன்பு கொண்டு தம்பெயரையே தன்மக்கட்கும் தான் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கும் இட்டுப்பெருஞ்சிறப்புடன் ஒழுகி வருவதை நாவரசர்கண்டார். அவர்மகன் மூத்த திருநாவுக்கரசு என்பான் அரவு தீண்டப்பட்டு இறந்தானைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்து. அப்பூதியாரையும் தாம்பாடிய திருப்பதிகமொன்றில் சிறப்பித்து அவர்பால் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திருவாரூர் சென்று சேர்நதார்.

திருவாரூர் அந்நாட்கு முன்பிருந்தே சோழர் தலைநகராய்ச் சிறந்து விளங்கியது. அங்குள்ள சிவபெருமானுக்குத் திருவாதிரை விழா மிக்க சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். திருநாவுக்கரசர் அங்கே பலநாட்கள் தங்கித் திருப்பதிகத்தொண்டும் உழவாரத் திருத்தொண்டும் புரிந்தார். பின்பு, அவர் திருப்புகலூரை யடைந்தாராக, அங்கே வந்திருந்த திருஞானசம்பந்தரைக் கண்டு திருவாரூரில் தாம்கண்ட திருவாதிரை விழாவின் சிறப்பை எடுத்தோதினார். ஞானசம்பந்தர் தாமும் சென்று அவ் விழாவைக்காண விழைந்து திருவாரூருக்குச் சென்றார். நாவரசர் திருப்புகலூர் முருகநாயனார் திருமடத்தில் சிலநாள் தங்கி இருந்து, திருஞானசம்பந்தர் திரும்பி வந்ததும், அவருடன் திருப்பதிகள் பலவற்றை வணங்கிக்கொண்டு திரு வீழிமிழலை யடைந்தார்.

அந்நாளில், நாட்டில் மழை இல்லாமையால் காவிரியும் வறண்டது. உணவு நெருக்கடியான பெருவறம் உண்டாயிற்று. திருவீழிமிழலையில் கூடியிருந்த திருநாவுக்கரசர்க்கும் திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்கும் வீழியிறைவன் நாடோறும் படிக்காசு நல்கினார். அதனால் இருவரும் வறுமை அறியாது இனிதிருந்தனர். பின்னர் மழைபெய்தது; நாடும் நலமுற்றது.

அதன்பின்,இருவரும் திருமறைக்காட்டுக்குச் சென்றனர். அங்கே மறைக்கதவுகளைத் திறத்தலும் மூடுதலுமாகிய நிகழ்ச்சிகள் நடந்தன[17]. அவ்வூரில் தங்கியிருக்கும் நாளில் ஒருநாள் இறைவன் நாவரசர் கனவில்தோன்றித் திருவாய்மூருக்கு வருமாறு பணித்தார். நாவரசர் திருவாய்மூருக்குச் சென்றார். வழியில் இறைவன் பொற்கோயில் ஒன்றைக் காட்டி அதனுட் புக்கு மறைந்தார். அதனால் அவர் இறைவனைக் காணாது அயருங்கால், அவர்திருவாய்மூருக்குச் செல்வது அறிந்து திருஞானசம்பந்தரும் வந்து சேர்ந்தார். நாவரசர் இறைவனை நோக்கித் திருஞான-சம்பந்தர் உடனிருப்பதை எடுத்தோதித் தனக்கு இறைவன் திருவுருவைக் காட்டவேண்டுமென வேண்டி ஒரு பதிகம் பாடினார். இறைவன் தன் திருவுருவைக்காட்டியருளவே, நாவுக்கரசர் திருவாய்மூர் இறைவனைப்பாடும் அடியாரொடு கண்டு இன்புற்றுத் திருவாய்மூருக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டுக் கொண்டு திருமறைக் காட்டுக்கே மீளவும் வந்து சேர்ந்தார். சின்னாட்களில் திருஞானசம்பந்தர் தென்பாண்டி நாட்டுக்குச் சென்றார்.

-----
[17]. திருநா. 124 :1, 6
----------

திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டினின்றும் புறப்பட்டுத் திருவீழிமிழலை, திருவாவடுதுறை முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டு பழையாறைக்கு வந்துசேர்ந்தார். அங்கே,வடதளியென்னும் திருக்கோயிலில் இருந்த இறைவன் திருவுருவத்தைச் சமணர்கள் மறைத்து விட்டனர். அதனை அறிந்த திருநாவுக்கரசர், சமணர்கள் செய்த தீச்செயலைமறுத்து அவ்விடத்தே ஒருபுறத்தில் தங்கி உண்ணா நோன்பு [18] மேற்கொண்டார். உடனே பழையாறையிலிருந்த வேந்தர் பெருமானான சோழன் அதனை அறிந்து போந்து, சமணர்களை விலக்கி, வடதளி இறைவனது திருவுருவம் வெளிப்பட்டு விளங்கச் செய்தான். நாவரசரும் அவ்விறைவனைப் பதிகம் பாடிப் பராவிக்கொண்டு மேலும் பல திருப்பதிகளை வணங்குதற்குச் சென்றார்.

திருநாவுக்கரசர், திருவானைக்கா முதலிய பதிகள் பலவற்றை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்போது, வழியில் இறைவன் ஒரு வேதியனாய்ப் பொதி சோறும் நீரும் கொணர்ந்து தந்து அவரது இளைப்பைப் போக்கிப் பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியைக் காட்டி மறைந்தார். பைஞ்ஞீலி இறைவனைப் பரவிச் சென்ற நாவரசர் மலைநாட்டுப் பதிகள் பலவற்றிற்குச் சென்று, பின்னர்த் திருவண்ணாமலை யடைந்து இறைவனை வணங்கிப் பதிகம் பல பாடிப் பரவினார். அங்கிருந்து திருவோத்தூர், திருவேகம்பம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திருக்காளத்திக்குச் சென்றார். அங்கே கண்ணப்பர் செய்த திருத்தொண்டை வியந்து கொண்டே பன்னாட்கள் தங்கினார்; அப்போது அவர் பாடிய திருப்பதிகங்கள் பலவாகும் [19].
---
[18]. இவ்வாறு உண்ணா நோன்பால் குற்றம் செய்தாரைத் திருத்தும் முறைமையினை இருபதாம் நூற்றாண்டில் காந்தியடிகள் மேற் கொண்டு நாட்டின் அரசியல் துறையிலும், அரசியல் இயக்கத் துறையிலும் உண்டாகிய குற்றங்கள் பலவற்றைக் கடிந்தமை ஈண்டு நினைவு கூரத்தக்கது.
----------

திருக்காளத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசர்க்குத் திருக்கயிலையைக் கண்டு வழிபட வேண்டுமென்னும் ஒரு வேட்கை உள்ளத்தில் உண்டாயிற்று. உடனே கயிலை
நோக்கி புறப்பட்டுச் செல்லலுற்றார். மிக்க முதுமையுடையவ-ராயினும், உலையாவுள்ள முடைமையால், வழியருமை கருதாது செல்வாராயினர். அரிய வழிகள் பலவற்றை நடந்து கடக்க வேண்டியிருந்தமையின் நாவரசர்க்கு உடல் வலி குறைந்தது; நடக்கும் நடை தளர்ந்தது: கைகால்கள் தேய்ந்தன . உடலால் தவழ்வதும் செய்தார். உடலுறுப்புக்கள் ஓய்ந்து தேய்ந்தொழியினும், உள்ளம் மட்டில் சிறிதும் தேயாது ஓங்கிநின்றது. அவரது உண்மையன்பின் உறைப் பினைக்கண்ட திருக்கயிலை முதல்வனாகிய சிவபெருமான், வழியிடையே தோன்றி, ஒரு பொய்கையைக் காட்டி அதன் கண் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்க எனப் பணித்தருளினர். அவ்வாறே நாவரசரும் அப்பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் கரையேறித் திருக்கயிலைக் காட்சி கண்டு இன்புற்றார் இறைவன் கயிலையிற்போல ஆணும் பெண்ணும் எவ்வுயிரும் கலந்து நிற்கும் காட்சி நல்கினன். அப்பேற்றை நம் நாவரசர் இனிய திருப்பதிகங்களாற் பாடி மகிழ்ந்தார்.

பின்பு திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென்று திரும மொன்றைச் சமைத்துக் கொண்டு அங்கே தங்கித் தொண்டுகள் பல செய்து வந்தார். அந்நாளில் தென்னாடு சென்று தென்னவனைச் சைவனாக்கி நாடுமுழுதும் சிவம் பெருக்கிப் போந்த திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு வந்தனர். அவரை அன்புடன் வரவேற்ற நாவரசர் அவருடனே திருப்பூந்துருத்தியிற் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கினர். திருஞான சம்பந்தர் நீங்கிய பின் நாவரசர், தென்னாடுசைவ நாடானது கேட்ட மகிழ்ச்சியால் தாமும் அங்குச் சென்று அந்நாட்டுப் பதிபலவும் கண்டு பரவ விரும்பிப் புறப்பட்டுச் சென்றார்,
___
[19]. இப்போது ஒரு திருப்பதிகம் (திருநா. 222) தான் கிடைத் துள்ளது. ஆனால் நாவரசர் கண்ணப்பரைப் பல பதிகங்களிற் குறித்துள்ளனர்.
---------

மதுரையில் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும், குலச் சிறையாரும் செய்த சிறப்புக் கண்டு பேருவகையுற்றுத் தென்னாட்டுப் பதி பலவும் கண்டு கொண்டு திரும்பப் பொன்னி நாடு வந்து சேர்ந்தார். முடிவில் அவர் திருப்புகலூரை யடைந்து உழவாரப் பணியும் திருப்பதிகப் பணியும் புரிந்து வந்தார். அங்கே சோதனைகள் பல நிகழ்ந்தன. அவற்றை 'யெல்லாம் வென்று சிறந்த திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில் "சிவானந்த ஞானவடிவேயாகி"[20] இறைவன் திருவடிக் கீழ்ச் சென்று சேர்ந்தார்.

பிற நூற் குறிப்பு

திருநாவுக்கரசரது வரலாற்றை அறிதற்குச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் சிறந்து நிற்கிறது. அவர்க்கு முன்தோன்றி விளங்கிய நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை என்பனவும் இவர் வரலாற்றுக் குறிப்புக்களுட் சிலவற்றைத் தம் மகத்தே கொண்டுள்ளன. இவற்றுள் திருத்தொண்டத் தொகை, "திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட திருநாவுக்-கரையன்"[21] என்று குறிப்பதனோடு அமைகின்றது. திருத்தொண்டர் திருவந்தாதி, திருநாவுக்கரசர் திருவாமூரையுடையவர்: திருவதிகை வீரட்டரால் ஆட் கொள்ளப்பட்டவர். பகைவர் விடங்கலந்தளித்த அமுதை யுண்டவர்; திருநல்லூரில் சிவபெருமானால் சென்னியில் திருவடிசூட்டப்பெற்றவர்'[22]என்றும், "அவருடைய திருப் பதிகங்கள் திருமறைக்காட்டில் மறைக் கதவுகளைத் திறந்தன ; அவர் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளப்பட்ட போது, அக்கல்லைப் புணையாகக் கடலில் மிதப்பித்தன [23].
______________________________
[20]. பெரியபு. திருநாவுக். 427,
[21]. சுந்த. தே. 39 : 4.
[22]. திருத்தொண். திருவந். 24.
[23]. திருத்தொண். திருவந். 25.
------------

என்றும், திருநாவுக்கரசர் தம் தமக்கையார் அறிவுரையை மேற்கொண்டு திருநீறணிந்து சூலைநோய் நீங்கினர்'[24] என்றும், வானுலக மகளிர் இனிய நடம்புரிந்து அவர் கருத்தைக் கலைக்க முயன்றாராக, அவர், அவர்களைத் துகளாக வெறுத்து ஒதுக்கினர்[25] என்றும் அவர் 4900 திருப்பதிகங்கள் பாடினர்[26]என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் வரலாறு குறித்துப் பிற்காலத்தில் எழுந்த பாடல்கள் மிகப் பல ; அவை திருத்தொண்டர் புராணத்தை மேற்கொண்டன.
---
[24]. திருநா. திருவேகா. 1.
[25]. ௸. 2.
[26]. ௸. 3, 7.
---

திருநாவுக்கரசரது காலம்

திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரு காலத்தவர் என்பது முன்பே கூறப்பட்டது. இருவரும் பன்முறையும் தம்மில் கூடி இறைவனை வழிபட்டுள்ளனர். அதனால் திருஞானசம்பந்தர் வாழ்ந்த கி. பி. ஏழாம் நூற்றாண்டாகிய காலமே திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமாம் என்பது பொதுவாக விளங்கும் உண்மையாகும். திருநாவுக்கரசர் தமது எண்பத் தோராம் ஆண்டில் இறைவன் திருவடி நீழலெய்தினர் எனப் பழைய பாட்டு ஒன்று[26] கூறுகிறது. அக்கூற்று அறிஞர் பலராலும் ஏற்கப்பெற்று நிலவுகிறது. மேலும், திருஞானசம்பந்தர் தோன்றுதற்குமுன்தோன்றி, அவர் இவ்வுலகில் நிலவிய காலமுற்றும் உடனிருந்து, அவர் இறைவனது அருளொளியிற் கலந்த பின்னும் இருந்து சிறந்தவர் திருநாவுக்கரசர் என்பது சைவவுலகு நன்கு அறிந்த செய்திகளுள் ஒன்று. :

---
[26] "அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாத வூரர்க்குச், செப்பிய நாலெட்டில்.தெய்வீகம்- இப்புவியில், சுந்தரர்க்கு மூவாறு தொன் ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு அறி" என்பது பழைய வெண்பா.
----------

காஞ்சி நகரைத் தலைமை நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முதன் மகேந்திரவன்மன் தொடக்கத்தில் சமண சமயத்திலிருந்து பின்னர்த் திருநாவுக்கரசரால் சைவ சமயம் சேர்ந்தவன் என அவனது வரலாறு கண்டோர்[27] கூறுகின்றனர். சைவனாகிய அவன், பாடலி புத்திரம் என அந்நாளில் சமணரால் பெயர் வழங்கப்பெற்ற திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமண் பாழிகளை இடித்துத் திருவதிகையில் தன் பெயரால் குணபரேச்சுரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று[28] திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. குணபரனென்பது முதன் மகேந்திர வன்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று என்பதைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள அவனது[29] கல்வெட்டே எடுத் தோதுகிறது. ஆகவே, குணபரனை முதன் மகேந்திர வன்மன் திருவதிகையில் ஓர் இடங்கண்டு அங்கே குணப ரேச்சுரத்தை எடுத்ததும், அந்நாளில் அத் திருவதிகையில் திருநாவுக்கரசர் தம்முடைய தமக்கை திலகவதியாரது திரு மடத்தில் இருந்து கொண்டு நாளும் இறைவனைத் திருப் பதிகம் பாடி வழிபட்டு வந்தனரென[30] அவர் வரலாறு கூறு வதும் ஒப்பவைத்து நோக்குவோர், முதன்மகேந் திரவன்மன் திருநாவுக்கரசரால் சைவனானான் என்பதைத் தெளிவாகக் காண்பர்.

இனி, இம் முதன் மகேந்திரவன்மன் கி. பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தனுமாவான். அவன் சமண வேந்தனாக இருந்தபோது திருநாவுக்கரசரும் தருமசேனர் என்ற பெயருடன் சமண் சமயத்திலிருந்து, அவன் சைவனாவதற்குச் சிறிது முன்பேசைவரானார். அவ்வேந்தன் சமணனாகஇருந்தபோது அச்சமணசமயத்தின்பால் அவ னுக்கு இருந்த பற்றின் மிகுதியை அவன் ஏனைச் சமயங்களை எள்ளியிகழ்ந்து எழுதியிருக்கும் மத்த விலாச நாடகமே நல்ல சான்று பகருகிறது. அப்பற்று மிகுதி முற்றும் அவன் சைவனான பின், சமண் சமயத்தின்பால் காழ்ப்பாய் மாறினமையே அவன் சமண் பாழிகளை இடித்துத் தகர்த்துக் கொண்டு சென்று குணபரேச்சரத் தைக் கட்டியதற்குக் காரணமாகும்.
____________________________
[27]. The Pallavas by Prof. J. Dubreil and The Pallavas of Kanchi by A. Gopalan. p. 90.
[28]. சேக்கிழார் : திருநா. புரா. 146.
[29]. S. I.I.Vol.I, No.33.p. 29.
[30]. திருநா. புரா. 143; 7.
---------

இனி திருநாவுக்கரசர் சைவராகிய போது மிக்க முதுமை யுற்றிருந்தார் எனத் திருத்தொண்டர் வரலாற்றுக் குறிப்பு [31]ஒன்றால் தெளிவாகத் தெரிகிறது. அவர் சமணரான காலத்தில் வேற்றுச்சமய உண்மைகளை அறிதற்கண் வேட்கை எழுதற்குரிய அத்துணைப் பரந்த கல்வி கேள்விகளையுடை யராயிருந்தமையின், அப்போது அவர்க்குக் குறைந்தது இருபத்தைந்து வயதேனும் இருத்தல் வேண்டும். அவர் சைவரானபோது, முதுமையும் அது காரணமாக உடலிற் பிறக்கும் அசைவும் அவர்பால் காணப்பட்டமையின் அவர்க்கு அப்போது வயது ஐம்பதுக்குக் குறையாமலும் அறுபதுக்கு மிகாமலும் இருக்கும். ஆகவே, அவர் சமண், சமயத்தில் குறைந்த அளவு இருபத்தைந்தாண்டேனும் இருந்திருப்பர் எனக் கருதலாம். இவ்வகையால், திருநாவுக்கரசர் திருவாமூரில் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் என்பது தெளிவு. . .

முதன் மகேந்திரவன்மன் சைவனானபின்,சிவன்கோயில் கள் பல கட்டியிருப்பது[32] காண்கின்றோம். இவற்றைக் கட்டுதற்குப் பத்தாண்டுகள் வைப்போமாயின், அவன் கி.பி. 620 அளவில் சிவநெறி சேர்ந்தான் எனல் அமையும். அப்போது நாவரசரது வயதைக் குறைந்தது ஐம்பதாகக் கொண்டாலும் அவர், கி. பி. 570 அளவில் பிறந்தார் என்பது பெறப்படும். ஆகவே, திருநாவுக்கரசர், கி. பி. 570 அளவில் திருவாமூரில் புகழனார்க்கும் மாதினியாருக் கும் மகனாகத்தோன்றி, எண்பத்தோரியாண்டு மண்ணுல கில் வாழ்ந்திருந்து, கி. பி. 650-1 அளவில் சித்திரைத் திங்கள் சதய நாளில் திருப்புகலூரில் இறைவன் திருவடி நீழல் எய்தினார் என அறிகின்றோம்.
______________________________
[31]. திருத்தொண் : திருஞான புரா. 270.
[32]. வல்லம் (செங், ஜில்லா), மகேந்திரவாடி (வ, ஆ.) தளவானூர் (தெ. ஆ.), சீயமங்கலம், பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல் மகேந்திரவன்மனால் கட்டப்பட்டவை-
---------

இனி, தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை ராவ்சாகிபு K. சீனிவாசப்பிள்ளை அவர்கள், முதல் மகேந்திரவன்மன் தனது ஆட்சியின் முற்பாதியில் சைவனாகி யிருக்கவேண்டும் என்றும், அஃதாவது கி.பி. 610-ஆம் ஆண்டை ஒட்டி யிருக்கலாம் என்றும், திருநாவுக்கரசர் சயினரான காலத்தில் அவர்க்கு "இருபத்தைந்து வயது இருந்திருக்கலாம் ” என்றும், அச்சமயத்திலேயே "பதினைந்து ஆண்டுகளாவது சென்றிருத்தல் வேண்டும் என்றும், மீண்டும் சைவத்தைத் தழுவியகாலத்து இவருக்கு வயது நாற்பதை ஒட்டியிருந்ததென்று கொள்ளலாம் என்றும், அவர் திரு ஞானசம்பந்தரை முதன் முதலாகச் சீர்காழியில் சந்தித்த போது அப்பர் சுவாமிகளுக்கு எழுபது ஆண்டுக்கு மேலிருக்கவேண்டும்" என்றும், 'இதனால்,"சுவாமிகள் திரு வதிகையில் சற்றேறக்குறைய முப்பதாண்டுகள் வதிந்தன ரென்று கொள்ளலாம் "என்றும், பின்பு ஞானசம்பந்தரைத் திருப்புகலூரில் முருக நாயனர் திருமடத்தில் "சந்தித்த போது கி. பி. 650-ஆம் ஆண்டுக்குச் சிறிது காலமுன்னராய் இருக்கலாம்” என்றும், அவர் இறைவன் திருவடி அடைந்தது கி. பி. அறுநூற்றைம்பத்தைந்தை ஒட்டியிருக்கலா-மென்றும் கூறுவர்[33]. இனி, பெரியபுராண ஆராய்ச்சியுடையார், திருநாவுக்கரசர், "சைவராக மாறின பொழுது குறைந்தது 35 - 40 வயதினராதல் வேண்டும் அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவரென்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கி.பி. 580-660 எனக் கோடல் பொருத்தமாகும் [34]” என்று கூறுவர்.

திருஞானசம்பந்தர் முதன் முதலாகத் திருநாவுக்கரசரைச் சீர்காழிப்பதியிற் கண்டபோது, அவருடைய திருமேனியில் அசைவு தோன்றியிருப்பதைக் கண்டார் எனச் சேக்கிழார் குறிக்கின்றார்.[35] இதனால் அக்காலத்தே திருநாவுக்கரசர் மிக்க முதுமை யெய்தியிருந்தனர் என்பது தெளிவாகிறது. ______________________________

[33]. தமிழ் வரலாறு.பக், 64 - 73.
[34].பெரிய புராண ஆராய்ச்சி by Dr. M.Rajamanikam p.8
[35]. பெரிய புரா. ஞானசம். 270.
-------

இது கண்டு இவர்க்கு வயது 70 இருக்கலாம் என்பது தமிழ் வரலாறுடையார் கருத்து. சைவசமயம் புகுதற்கும் சீர்காழியில் திருஞானசம்பந்தரைச் சந்திப்பதற்கும் இடையே நிற்கும் முப்பது ஆண்டுகளையும் திருநாவுக்கரசர் திருவதிகையிலேயே கழித்தாரென்பது பொருந்துவதாக இல்லை; ஏனெனில், இறைவன் திருவருளால் சூலைநோயின் நீங்கி இன்புற்றவர், அங்கேயே இருந்தொழியாது வேறு பல திருப்பதிகட்குச் சென்று வணங்கினர் என்றே அவர் வரலாற்றின் போக்கு உணர்த்துகிறது. இனி, ஆராய்ச்சியாளர் சிலர் திருநாவுக்கரசர் சயினசமயம் புகுந்தபோது நாற்பது வயதிருக்கலாமென்பது பொருந்தவில்லை; நூலறிவே பற்றி அதற்கு அடிமையாகி ஒருவர், வேற்றுச் சமயம் புகுதல் முதலிய செயல்களைச் செய்தற்குரிய காலம் முப்பதாண்டுக்குக் குறைந்த பருவமாகும். இவற்றை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால், தொடக்கத்தில் யாம் கூறியவாறு கொள்வதே பொருத்தமாதல் தெளியப்படும். இலக்கிய வரலாறெழுதிய பேராசிரியர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்களும், “கி. பி. 550 முதல் 650 வரையுள்ள காலமே தேவார முதல்வராகிய அப்பர் சம்பந்தர் காலமென்று எளிதில் கொள்ளலாம்”[36] என்று கூறுகின்றார்.
---
[36]. இலக்கிய வரலாறு. பக். 335.

வரலாற்றாராய்ச்சி

திருநாவுக்கரசர் வரலாற்றில், அவர் சமண் சமயத்தை மேற்கொண்டு அச் சமண் சமயச் சான்றோரிடையே பல காலம் தங்கியிருந்தவர் என்பது சிறந்ததொரு நிகழ்ச்சியாகும். பின்னர், அவர், சூலைநோயுற்றுத் திருவதிகை வீரட்டானேச்சுரரைப் பாடி அந்நோயின் நீங்கிச் சிறந்த சிவத்தொண்டராய்த் திருப்பதிகம் பல பாடலுற்றதும்,[[37] சமணர் அவரை நீற்றறையில் சிறையிட்டதும்[38], நஞ்சு

கலந்த பாற்சோற்றை உண்பித்ததும்[39] களிறொன்றை அவர் மேல் ஏவிக் கொலை செய்ய முயன்றதும், திருநாவுக்கரசர் கல்புணையாகக் கடலில் மிதந்து போந்து கரையேறியதும்[40] பெண்ணிகடத்தில் சூலக்குறியும் இடபக் குறியும் பெற்றதும்,[41] திருநல்லூரில் சென்னியில் சிவபெருமானால் திருவடி சூட்டப்பெற்றதும்,[42] திங்களுர் அப்பூதி மகன் அரவு கடித்து இறந்தானை உயிர்ப்பித்து அப்பூதியைத் திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்ததும்,[43] திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும்,[44] திருமறைக்காட்டில் கதவம் திறந்ததும், திருவாய்மூரில் சிவதரிசனம் பெற்றதும், பழையாறையில் உண்ணா நோன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த சிவபெருமானால் வெளிப்பட விளங்கச்செய்ததும், திருப்பைஞ்ஞீலியருகில் பொதிசோறு பெற்றதும், திருவையாற்றில் கயிலைக் காட்சி பெற்றதும் பிறவும் சிவம் பெருக்கும் சிறப்புடைச் செயல்களாகக் குறிக்கப்படுகின்றன. இவற்றைத் திருநாவுக்கரசர் தாமே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில் குறித்திருக்கின்றார், இஃது இவரது வரலாற்றின் வாய்மையை[45] நன்கு வற்புறுத்துகிறது.
--
[37]. திருநா :91 : 3; 100 :1 ; 250 : 1; 310 : 3.
[38]. “வெஞ்சொற் சமண் சிறையில் என்னை மீட்டார்” – திருநா. 265 : 8.
[39]. வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர்தந்த, நஞ்சமுதாக்குவித்தார் —70:5.
[40]. “கல்லினோடெனைப் பூட்டி யமண்கையர்,
ஒல்லே நீர்புக நூக்க என் வாக்கினல்,
நெல்லு நீள்வயல் நீலக்குடியான்,
நல்ல நாமம் நவிற்றியுய்ந்தேனரோ”—186:7
[41]. 110: 1, 10.
[42]. 228 : 1.
[43]. 12 : 10.
[44]. 164:7 இவ்வாறே ஒவ்வொருசெய்திக்கும் அகச் சான்றுகள் இவர் பாடிய திருப்பதிகங்களில் காணக் கிடக்கின்றன.
[45]. “வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவலுறுகின்றேன்”—சேக்கிழார். பெரியபு. திருநா. 1.
----

திருநாவுக்கரசர் தம்முடைய வாழ்நாளிற் பெரும்பகுதியைச் சமண்சமயத்தில் கழித்திருக்கின்றார், அதனால் அவரது சமண்சமய வாழ்வு சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணத்துட் கூறப்படவில்லை. வரலாறு கண்டு செல்லும் நமக்கு அதனை அறிவதும் உரிமையாகிறது. அதனை அறிதற்கு வேண்டும் குறிப்புக்கள் வேறெங்கும் காணப்படவில்லை. அதனால், அவருடைய திருப்பதிகங்களே அவரது சமண சமயவாழ்வை அறிதற்கு இடமாகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு நோக்குங்கால் அடியிற்கண்ட வகையில் அவ்வரலாறு காணப்படுகிறது.

திருநாவுக்கரசர் சமண சமயம் புகுந்ததன் நோக்கம் கூற வந்த சேக்கிழார், "நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துணிந்து, சமயங்களானவற்றின் நல்லாறு தெரிந்து உணர்ந்தும் நம்பர் அருளாமையினால்"[46] சமண் சமயம் குறுகினர் என்றார். திருநாவுக்கரசரும் “உய்யலாம் எண்றெண்ணி”[47] அச்சமயம் புகுந்ததாகக் கூறுகின்றார். அந்நாளில் சமண் துறவிகள் தமக்கெனச் சிறந்த கொள்கையும் கோலமும் உடையும் உடையராயிருந்தனர், தங்கள் தலைமயிரைத் தாமே பறித்துக்கொள்வதும், மகளிர் சிலர் முறையாக வந்து “எம்தெய்வம்”[48] என்று மயிர்பறிக்கப் பறிப்புண்பதும், ஆடையின்றியும், பாயுடுத்தும், பீலி கையிலேந்தியும் திரிவதும் இயல்பு. மேனியிற் கடுப்பொடியைப் பூசிக்கொள்வதும் உண்ணுங்கால் நின்றுண்பதும், உரையாடாது நிறைய உண்பதும், பிறவும் அவர்களுடைய கொள்கைகள்.

திருநாவுக்கரசர் சமணராயிருந்தபோது, மகளிர் கண்டு காணத்தக்க கோலம் கொண்டார். பேரூர் தெருக்களில் இவர் வரக்கண்டால், மகளிர் விரைந்து தம் மனைக்குட் சென்று கதவைத் தாளிட்டுக் கெண்டனர். தனது தலைமயிரைத் தானே தன்கையால் “கண்ணழலப்”[49] பறித்தெறிந்தனர். சமண் சமயத்துத் துறவுக்கோலத்திலும் கொள்கையிலும் பேரீடுபாடு கொண்டு இனிதொழுகிய இவருக்கு அவர்கள் பால் உண்டாகிய அன்பு பெரிதாகும்; அதனல், அவர்களிடம் பெருநூல்கள் பல பயின்று கல்விச் செருக்கு மிகுவதாயிற்று. "ஒர்த்து உளவாறு நோக்கி உண்மையை யுணராத"[50] சமண் சான்றோர் கூற்றுக்கள் நாவரசருக்கு உண்மையாகவே தோன்றின.

---
[46]. திருநாவுக். புரா. 37.
[47]. திருநாவுக். தேவாரம். 5 : 1.
[48]. ௸ 217 : 11.
[49]. ௸ 5 : 7.
[50]. ௸ 73 : 2,
-----------

சமண வாழ்வில் அவருடைய குலத்துக்கும் வளத்துக்கும் குறைவுண்டாகவில்லை. அந்நாளில் நிலவிய சமண் சான்றோரிடையே தமிழறிவு மிகுதியும்பரவவில்லை. அவர்களது கூட்டத்திடையே இருந்ததனால், தமிழ்நெறியாகிய சிவநெறி அவர்க்கு விளங்காதாயிற்று. ஒருகால் அந்நெறியைக் கண்டாலும், சமணரது சூழ்நிலை பாற்பிறந்தகல்விச்செருக்கும் மயக்கமும் அவரை உண்மை யுணரவிடாவாயின. உண்டகையெல்லாம் நெய்யொழுகு மாறு பேருணவு கொள்வதும், மூக்கினால் முரலும் மெல்லோசையே எழும் சமண் மந்திரங்களை ஒதித் திரிவதுமே நாவரசர் சமணராய் இருந்து செய்த பெருஞ்செயல்.

இச் சமண் வாழ்வின் நீங்கிச் சைவ வாழ்வு பெற்ற பின்பும், அவ்வாழ்வில் தாம் இருந்த இருப்பை எண்ணிப் பல திருப்பாட்டுக்களில் நாவரசர் வருந்திக் கூறியுள்ளார். "எண்ணில் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்"[51] “சமணரொடு அயர்த்து நாளும் மறந்து அரன்திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன், வாழ்வெலாம் வாளாமண்மேல்”[52] கழித்தேன். சமணர் கூட்டத்துட் புக்கு "அழுந்தி விழாமே போத வாங்கிப் பத்திக்கே வழிகாட்டிப் பாவம் தீர்த்துப், பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேன்"[53] என்பன முதலியன இதற்குப் போதிய சான்றுகளாகும்.

இனி, சமண் சமயத்தில் தான் இருந்தது நெடுங்கால மென்பதை, “பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன், சோர்வன் நான் நினைந்தபோது”[54] என்று குறிப்பதும், சைவ வாழ்வில் தலைப்பட்டபோது மிக்க முதுமையெய்திய செய்தியை, “தளையவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பமெய்த, இளையனு மல்லேன், எந்தாய், என்செய்வான் தோன்றினேனே”[55] என்று குறிப்பதும் நோக்கற்பாலன. நோக்கு-

[51]. திருநா. 266 : 3.
[52]. திருநா. 305 : 8.
[53]. ௸ 298 : 7.
[54]. ௸ 39 : 7.
[55]. ௸ 78 ; 9.
--------

மிடத்து, திருநாவுக்கரசர்க்குச் "சமண்சமயத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி கழிந்ததே" என்ற உணர்வுதோன்றி மிக்க வருத்தத்தை விளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால், அவர், தமது சமண் சமய வாழ்வை நினைந்து வருந்தி மிகப்பல பாட்டுக்களைப் பாடியிருப்பதைக் காண் கின்றோம். "ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே"[57] "போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே"[58] "நீதனேன் என்னே நான் நினையாவாறே"[59] என்பன முதலாக முடியும் திருப்பதிகங்கள் பல திருநாவுக்கரசரது வருத்த மிகுதியைச் சுட்டி நிற்கின்றன.
---
[57]. திரு நா. 217
[58]. ௸.268
[59]. ௸ 225

திருப்பதிகங்கள்

திருநாவுக்கரசர் 4900 திருப்பதிகம் பாடினர் என்பர். நம்பியாரூரர், தாம்பாடிய திருப்பதிகம் ஒன்றில், திரு நாவுக்கரசரை, "இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈந்தவன் திருநாவினுக்கரையன்"[60] என்று குறித்துள்ளார்; அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டார் நம்பிகளும், "பதிகம் ஏழேழு நூறு பகரும் மாகவியோகி"[61] எனவும் "கசிந்து இதயம் ஏழெழுநூறு அரும்பதிக நிதியே, பொழிந்தருளும் திருநாவின் எங்கள் அரசினையே"[62] எனவும் கூறியுள்ளார். சேக்கிழாரும், "உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழெழுநூறும்" என்று, நம்பியாரூரர் குறித்த குறிப்பையே எடுத்தோதக் காண்கின்றோம். இவ்வகையால் திருநாவுக்கரசர் 4900 திருப்பதி கங்களேப் பாடியருளினாரென்று அறியலாம். திருமுறைகண்ட புராணமுடையாரும், 'கொடுங்கூற்றாயின என்ன எடுத்துக் கோதில், ஒருமானைத் தரிக்கு மொரு வரையுங்காறும் ஒரு நாற்பத்தொன்பதினாயிரமதாக"[63] என்று கூறியிருக்கின்றார். இப்போது பண்முறையில் நூற்றுப்பதினான்கும், திருகுறுந்தொகை நூறும், தாண்டகம் தொண்ணூற்றென்பதும் ஆக இந்நாளில் முந்நூற்றுப்பதின் மூன்று திருப்பதிகங்களே கிடைக்கின்றன.

[60]. சுந் தேவா. 65 :2.
[61]. திரு நா. ஏகாதச. 7.
[62]. ௸ ௸ .3.
[63]. திருமுறைகண். பு. 15.
---------

இவற்றுட் சில திருப்பதிகங்கள் இடையிற் சில திருப்பாட்டுக்களும் இறுதியிற் சில குறைந்தும் காணப்படுகின்றன. அதனால் திருப்பதிகங்கள் அனைத்தும் சேரக் கூடுதலாகும் திருப் பாட்டுக்கள் 3130 என்று ஒரு தொகுதியாகக் கூறுவது இயலாதாகின்றது.

இனி, திருமுறைகண்ட காலத்தில், முந்நூற்றெழுபத்து மூன்று திருப்பதிகங்களே கிடைக்கப்பெற்றுப் பண் வகுக் கப்பட்டன; இதனைத் திருமுறைகண்ட புராணம், "பண் புற்ற திருஞானசம்பந்தர் பதிகமுந்நூற் றெண்பத்தினான்கினால் இலங்குதிருமுறை மூன்று, நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்,வண்பெற்ற முறை யொன்று நூற்றினால் வன்றொண்டர்"[64] என்று கூறி யிருப்பது காண்க. மிகுதியாகக் கிடைக்கும் ஆறு திருப்பதிகங்களும் இவை யென்றும் அவை கிடைக்கப் பெற்ற வரலாறு இது என்றும் அறிதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை.
---
[64]. திருமுறை. க. புரா. 25.
---------

இனி, கொல்லிப்பண் முதல் குறிஞ்சிப்பண் ஈறாக உள்ள திருப்பதிகங்கள் இருபத்தொன்றும், கொல்லி எனப்பண் வகுக்கப்பெற்ற திருநேரிசைத் திருப்பதிகம் இரண்டும், பண்வகுக்கப் பெறாத திருநேரிசைத் திருப்பதிகம் ஐம்பத் தாறும், கொல்லியெனப் பண் வகுக்கப்பெற்ற திருவிருத் தத் திருப்பதிகம் இரண்டும், பண் வகுக்கப் பெருத திரு விருத்தம் முப்பத்து மூன்றுமாகத் திருப்பதிகங்கள் நூற்றுப்பதினன்கும் ஒரு திருமுறையாகவும், திருக்குறுந் தொகைப்பதிகம் நூறும் ஒரு திருமுறையாகவும், திருத் தாண்டகம் தொண்ணுாற்றென்பதும் ஒரு திருமுறையாகவும் வகுக்கப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டமைபின், அவற்றின் தொடர்ச்சியாக இவற்றையும் மேற் கொண்டு இம் மூன்றையும் முறையே நான்காந்திருமுறை ஐந்தாந் திருமுறை ஆருந் திருமுறை என்று சான்ருேர் வழங்கலாயினர். இவற்றுள் ஆருந் திருமுறையைத் தாண் டகத் திருமுறை யென்றும், இத்தாண்டகங்களேப் பாடிய சிறப்பால் திருநாவுக்கரசரைத் தாண்டக வேந்தர் என் றும் அறிஞர் அன்பால் பாராட்டுவது வழக்கம்.

இத் திருப்பதிகங்களால் திருநாவுக்கரசர் பாடிய சிறப் பினையுடைய ஊர்கள் 125; இவற்றில் ஒரு திருப்பதிகமே பெற்றவை 76; இரண்டு திருப்பதிகங்கள்பெற்றவை 23: மூன்று திருப்பதிகங்கள் பெற்றவை 7 ; நான்கும் நான் குக்கு மேற்பட்டவையுமாகிய திருப்பதிகங்கள் பெற்றவை 19. அவை, திருவதிகை, திருவாரூர், திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருவின்னம்பர், திருவையாறு, திருவொற்றியூர், திருக்கச்சியேகம்பம், திருக்கயிலாயம், திருக்கழிப்பாலை, தில்லைச் சிற்றம்பலம், திருச்சோற்றுத் துறை, திருநாகைக்காரோணம், திருநெய்த்தானம், திருப்பழனம், திருப்புகலூர், திருமறைக்காடு, திருமாற்பேறு, திருவீழிமிழலை என்பனவாகும். இவற்றுள் மிகுதியான திருப்பதிகங்கள் உள்ளவை. திருவாரூரும் அதனையடுத்துத் திருவதிகையுமாகும். இதுபோது கிடைத்துள்ள திருப்பதிகங்களைக்கொண்டு உணரும் கருத்து இது. திருநாவுக்கரசர் பாடிய 4900 திருப்பதிகமும் கிடைக்கப் பெற்று, அவற்றுட் சிறப்பிக்கப்படும் திருப்பதிகளையும் அவற்றிற்கு அமைந்த திருப்பதிகங்களையும் கொண்டு காணவேண்டிய தொன்று ; அக்காட்சி திருநாவுக்கரசர் அவ்வத் திருப்பதிகளிலும் தங்கிய காலத்தை உணர்வதற்குச் சிறந்த வாயிலாகும். இப்போது இவர் பாடிய திருப்பதிகங்களில் சசிறிது ஏறக்குறையப் பதினாறில் ஒரு பகுதியே கிடைப்பதால், இதுகொண்டு திருநாவுக்கரசர் திருவதிகையிலோ திருவாரூரிலோ பன்னெடுநாள் தங்கினர் எனக் கருதுவது முறையாகாது.

திருப்பதிகங்களின் ஆராய்ச்சி

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள், இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, இறைவன் உயிர்க்கு அருள் செய்யும் திறம், கற்றவர்களும் ஞானிகளும்பிறரும் இறைவனுக்கு அடியார்களாய் அன்புசெய்யும் முறை, இறைவன் அவர்களுடைய மனத்தின்கண் எழுந்தருளி இன்புறுத்துவது முதலிய பல பொருள்களை விரித்துக் கூறுகின்றன. "பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை, நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன்"[65] என்பதனுள், "பொறிப்புலன்களைப்போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர்" என்பது ஞானிகளும் பிறரும் அடிமையுற்று அன்புசெய்து வழிபடும் முறையினையும், "சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன்" என்பது, அன்பர் மனத்தின்கண் தோன்றி இன்புறுத்தும் திறத்தினையும் புலப்படுத்துவது காணலாம். வேறொருபாட்டில், "சிந்தையுட் சிவமாய் நின்ற தன்மையோடு, அந்தியாய் அனலாய்ப் புனல் வானமாய்ப் புந்தியாப்ப் புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை"[66] என்று கூறுவதும் மேலே இரண்டாவதாகக் காட்டிய இறையியல்பை வற்புறுத்தா நிற்கும்.
---
[65]. திருநா. 162 : 4.
[66]. திருநா. 162:5,
------

இனி திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சமணராயிருந்து, பின்பு சைவரானவராதலால், அதுகுறித்து, அவர் பண்டு தாம் சமண் சமயத்திலிருந்து கொண்டு சிவபெருமானை இகழ்ந்தது நினைந்துவருந்திக்கூறுவனவும், சமணர் நட்பை அருவருத்துக் கூறுவனவும் ஈண்டு எடுத்துக் குறிக்கலாகாத அளவு விரிந்து கிடக்கின்றன.

இவர் காலத்தே யோகநெறியும் ஞானநெறியும் இறை வழிபாட்டில் சீர்த்த இடம் பெற்றிருந்தன. யோகநெறி நின்றோர், பொறி புலன்களே ஒடுக்கி அகக் கண்ணால் உள்ளத்தே உணர்வு வடிவாய் எழுந்தருளும் இறைவனைக் கண்டு வழிபடுவர். இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனாய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை நல்குவன். இவ்வழிபாட்டு முறையை நம் திருநாவுக்கரசர், "உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணம்செய்திட்டு உன்கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி"[67] என்பது முதலிய பல திருப்பாட்டுக்களில் எடுத்துரைக்கின்றார். "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள், ஞானத்தால் தொழுவேன் உனை நானல்லேன், ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தாய் உனைநானும் தொழு வனே"[68] என்பது முதலிய திருப்பாட்டுக்களால் ஞான நெறியின் நலத்தை மிக்க நயம்படக் கூறுகின்றார் நம் நாவரசர்.

யோகஞான நெறிகளால், இறைவன், "அண்டமாய் ஆதியாய் அருமறையோடு ஐம்பூதப் பிண்டமாய், உலகுக்கு ஓர் பெய்பொரு"[69]ளாக இருத்தலையுணர்பவர், எங்கும் யாவையுமாய் இருத்தலைக் கண்டு எல்லாம் சிவமாயிருப்பது எனத் தேறி இனிது உறைவர் என அறிவு நூல்கள் கூறுகின்றன. அவர் சிந்தைக்கண் சிவமாய் கின்று இன்புறுத்தும் சிவபெருமான், எங்கும் தன் இருப்பை இனிது விளக்குகின்றார் என்பதை நம் நாவரசர், "அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே"[70] என்று ஓதி அறிவுறுத்துகின்றார்,

இறைவனது உண்மையை உணர்ந்து அவனது அருணநலம் பெறுவது குறித்தே உலகில் சமயம் பலவும் உண்டாயின. ஆதலால், அச்சமயங்கள் பலவும் அவனுக்கு ஏற்பனவேயாகும். சமயங்கள், பலவாய்த் தம்மில்வேறுபாடு சில உடையவாய் இருப்பது கொண்டு, பிணங்கிப் பூசலிட்டுப் பேதுறுவது முறையன்று என்பது திருநாவுக்கரசர் திருவுள்ளமாகும். அவர் காலத்தே சமயங்கள் அறுவகைப்பட்டுத் தம்மில் வேறுபட்டு இகலி நின்றமையால் அதனை விலக்கற்கு, "சமயமவை ஆறினுக்கும் தலைவன் தான் காண்"[71] என்றும், "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்"[72] என்றும் கூறியுள்ளார்.
---
[67]. திருநா. 239 : 1.
[68]. திருநா. 205 : 3.
[69]. ௸ . 7:4
[70]. ௸ 250: 9.
[71]. .௸ 279; 7.
[72]. ௸ 60; 9.
-----------

இக் கருத்தே கொண்டு பிறாண்டும் அவர், "மிக்க சமயங்கள் ஆறின் உரு வாகிநின்ற தழலோன்[73]" எனவும், "ஆறொன்றிய சமயங் களின்அவ்வவர்க்கு அப்பொருள்கள் வேறொன்றிலாதன[74]" எனவும், ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன"[75] எனவும் பல படக் கூறி வற்புறுத்தியுள்ளார்.

மக்களினத்தில், அந்நாளில், குலம் கோத்திரம் முதலிய வற்றின் பெயராலும், புலாலுண்டல் முதலிய செயல் . வகையாலும் வேற்றுமைகளும் வேறுபாடுகளும் தோன்றி நிலவின.இறைவன் திருவருட்பேற்றில் நாட்டமுடையார்க்கு இவ்வேற்றுமை கூடாது என்றும், இவ்வேற்றுமையுளதாயின் திருவருட்பேற்றுக்குச் சாதனமான அடியார் வழிபாடு நன்கு வாயாது என்றும் பிறவும் கருதி இவ் வேறு பாட்டைக் களைதற்குத் திருநாவுக்கரசர் பெரிதும் முயன் றுள்ளார் . "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர், பாத்திரம் சிவம் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே[76]" என்று மக்களே நோக்கி அறிவுறுத்துவதும், "ஏதும் ஒன்றும் அறிவிலராயினும், ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப், பேதமின்றி அவரவர் உள்ளத்தே, மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே"'[77] என வேற்றுமை பாராட்டாத ஒருமை நிலையினை இறைவன்மேல் வைத் துரைப்பதும் பிறவும் இதனை வற்புறுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

---
[73]. திருநா. 14: 3. [74]. திரு.நா. 101 :4.
[75]. ௸101: 7. [76]. ௸. 174 : 3
[77]. ௸ 174 : l.
----------

இனி, இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் தோறும் சென்று வழிபடுவதும், புண்ணிய நீர் நிலைகட்குச் சென்று அவற்றில் படிந்து நீராடுவதும் சமயநெறி நிற்பார்க்கு உரிய சமய வொழுக்கங்களாக அந்நாளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறே இறைவன் திரு வுருவமைத்து வழிபடுவது, சமய ஞான நூல்களை இடை விடாது பயிலுவது, வேதமோதுவது, வேள்வி செய்வது, காடு சென்று தவஞ் செய்வது, அடியார் வேடம்பூண்டு கூட்டமாய்த் தனித்திருந்து ஒழுகுவது, பட்டினி கிடப்பது முதலியனவும் பலரிடத்தில் காணப்பட்டன.

ஆயினும் அவருள் பெரும்பாலாரிடத்தில் இறைவன்பால் உண்மையன்பும், ஏனை உயிர்கள்பால் சிறந்த அருளும் காணப்படவில்லை; உண்மையன்பும் அருளறமும் இல்லாதார் இன்னோரன்னவற்றைச் செய்வதால் எள்ளளவும் பயனில்லை என்பது நாவரசரின் ஞானக் கருத்தாகும். இதனைப்பாவநாசக் குறுந்தொகையில்[78] எத்தவத்தைச் செய்யினும் எவ் வொழுக்கத்தில் நிற்பினும், அவரவரும் எங்கும் சிவமாய்த்திகழும் இறைவனது இறைமைத் தன்மையைப் பற்றிய திண்ணிய உணர்வு உடையராதல் வேண்டுமென அவர் பெரிதும் விதந்து கூறியுள்ளார்.

நம் திருநாவுக்கரசர், இனிய இசைவல்ல செந்தமிழ்ப் பெரு நாவலராதலால், அதற்கேற்ப, எண்ணும் எழுத்துமாகிய இரண்டனுடன் இசையையும் கூட்டி, "எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன் காண்"[79] என்று பாராட்டி மகிழ்கின்றார். இவ்வாறே திருஞான சம்பந்தர், "எண்ணும் ஓர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாய கடவுள்"[80] என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது.

இறைவனது திருவடியைச் சிறப்பித்து இவர் பாடியது போல இவர்க்கு முன்னும் பின்னும் தோன்றி நிலவிய சான்றோருள் எவரும் பாடியதே இலர். கட்டளையுடைய பாட்டுக்களான திருவிருத்தமும் திருத்தாண்டகமும் இவர்க்கென்றே அமைந்த இனிய பாவினங்களாகவுள்ளன. திருவிருத்தத்தினும் திருத்தாண்டகம் அரிய கட்டளை அமைந்தது. ஆயினும், இவர், இத் திருத்தாண்டகங்களை மிக்க எளியவாகப் பாடியிருப்பது இவரது திருப்பெயர்க்குப் பொருத்தமாக இலங்குகிறது. திருமுறை கண்ட காலத்திருந்த சான்றோர், இத் திருத்தாண்டகங்களை யெல்லாம் ஒரு சேரத் தொகுத்து ஒரு திருமுறையாக வகுத்திருப்பது ஒன்றே இவரது திருத்தாண்டக மாண்பை வற்புறுத்துவதாகும்.
--

[78]. திரு.நா. 213: 1-10.
[79]. திரு நா. 262 : 7.
[80]. திருஞான. 170: 4.
-----------

இது பற்றியே பின்வந்த சான்றோர் பலரும் திருநாவுக்கரசரைத் தாண்டக வேந்தர் என்றும் தாண்டகச் சதுரர் என்றும் சிறப்பித்துப் பாராட்டினர். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கின மூன்றாங் குலோத்துங்கனது இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் திருக்குறுக்கையில் உண்டாகிய கல்வெட்டொன்று,[81] அவ்வூர்த் திருக்கோயிலில் திருகாவுக்கரசரது திருத்தாண்டகத்தை ஒதுதற் கென்றே நிவந்தம் விட்ட செய்தியைக் குறிக்கின்றது.

இறைவன் திருவடிக்கு அன்பு பூண்டு தொண்டராகிய பெருமக்களது உட்கோள் இன்னது எனக் கூறுவாராய், தமது மனக்கோளும் அதுவே யென்பதுபடப் பல திருப் பாட்டுக்களைப் பாடியிருக்கின்றார். இறைவனாகிய சிவ பெருமான், “தீதாய் வந்த நஞ்சு அமுது செய்து, அமுதம் உண்ட அமரர் உலந்தாலும் உலவாது”[82] நின்று அருள் செய்பவனாதலால், அவனுக்குத் தொண்டுபட்ட அடியார் அஞ்ச வேண்டியதில்லை; அவர்கள் வானம் துளங்கினும் மண் கம்பமாயினும், மலைகள் தானம் துளங்கித் தலைதடு மாறினும், தண்கடற்கண் மீனம்படினும் ஒரு சிறிதும் அஞ்சார்.[83] “அப்பனார் உளர் அஞ்சுவதுஎன்னுக்கே”[84] என்பது அவரது உட்கோள். அடியவர் சிந்தைக்கண், இறைவன் சிவமாய்[85] நீங்காது உறைதலால், அவர்கட்குக் கூற்றமும் தீங்கு செய்யாது;[86] வினைகளும் தொடர்ந்து துன்பம் செய்யா;[87] அவர்பால் பரிவும் இடுக்கணும்[88] உளவாகா; எங்கெழில் என் ஞாயிறு எமக்கு[89] என இறுமாந்திருப்பது [90] அவரது இயல்பு. சுருங்கச் சொல்லின், முடிசூடிய மன்னர் வாழ்வும் அவர்க்குத் தம் அடி சூடிய துகளினும் புல்லிதாகும்;

[81]. A. R. No. 219 of 1917. [82]. திருநா. 264 : 5.
[83]. திருநா.. 113 : 8. [84]. ௸ 191 : 6.
[85]. ௸ 162 : 5. [86]. ௸ 309 : 2.
[87]. ௸ 115 : 4. [88]. ௸ 309 : 2.
[89]. ௸ 309 : 2. [90]. ௸ 9 : 11 .
----------

ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது இறைவன் திருவடியையே தஞ்சம்[91] என்று எண்ணுவர். சிவனடியார் ஆவுரித்துத் தின்றுழலும் புலையராயினும்[92] அவர்களைத் தாம் வணங்கும் கடவுளாகக் கருதிப் போற்றுவர் இறைவன் திருப்பெயரை ஓதாதவரும் அவனது திருநீற்றை அணியாதவரும் "அளியற்றவர்: பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி "[93] இறக்கின்றவர் - இறைவன் திருக்கோயில் இல்லாத ஊர்களும், திருநீறணி யாதவரும், இறைவனைப் பத்திமையாற் பாடாதவரும் வாழும் ஊர்களும் " ஊரல்ல; அடவி காடே"[94] என்பது இந்தச் சிவனடியார்களது உட்கோளாகும். இறைவன், அரன் என்று திருப்பெயர் கொண்டதே தொண்டர்க்கு உளதாகும் துன்பத்தை அறுத்தற்கேயாகும்; "தொடருந் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து, அடரும்போது, அரனாய் அருள் செய்வர்"[95] என்று திருநாவுக்கரசர் தெளிய உரைப்பது காண்க. சிவாயவென்னும் இறைவன் திருப் பெயரை ஓதி வழிபடுவார்க்கே வானகம் படைத்தருளப்பட்டது[96] என்பதும், அவ்வாறு உலகில் வாழும் வாழ்வு பெற்ற சிவனடியார்கள். இம்மையுலகவர் போல "நெல்லினார் சோறுண்ணும்"[97] நீர்மையுடையராகார். இவ்வுலகி லும், அவர்களது கருத்தறிந்து முடிக்கும் திருக்கருத்தால் அவரது குற்றேவலை எதிர்நோக்கி யிருப்பது இறைவன் பேரருள் இயல்பாகும். "கூம்பித் தொழுவார் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி" [98]எனத் திருநாவுக்கரசர் இவ்வியல்பை விதந்தோதிப் பாராட்டுவது காணத்தக்கது,

______________________________
[91]. திருநா. 111 : 4. [92]. திருநா. 309 ; 10.
[93]. ௸ 309 : 6. [94]. ௸ 309 : 5.
[95]. ௸. 165 : 8. [96]. ௸ 165: 8; 307: 10.
[97]. ௸49.6 [98]. ௸ 219 : 4.
-----------

இனி, சமண் சமயத்திலிருந்த போது இறைவனை அறியாது இகழ்ந்திருந்த திறத்தை மிக விரித்துக் கூறும் திருநாவுக்கரசர், "சமண் தீர்த்து அன்றென்னை ஆட்கொண்டார் என்றும்"[99]'சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டார்[100] என்றும் சுருங்க உரைக்கின்றர். தம்மியல்பும் இறையியல்பும் விரியக்கூறும் இவர், தம்மை இறைவன் ஆட்கொண்டு இன்புறுத்திய திறத்தை மிகவும் அழகுறக் கூறுகின்றார், இறைவன் இருநிலம் தீ நீர் முதலிய எல்லாமாகவும் அல்லவாகவும் இருப்பினும், தாம் விரும்பும் எண்ணும் இசையும் முதலாகிய பல கலைவடிவாகவும் இருக்கின்றான், அவனையும் அவன் திறங்களையும் அறியும் பொறியின்றிப் பன்னாள் வேற்று நெறியில் கிடந்து உழந்த போது, இறைவன் உணர்வின்கண் ஒன்றி நின்று" நெறி தான் இது"[101]வென்றுகாட்டி அருள்புரிந்து, '"சிவலோகநெறி அறியச் சிந்தைதந்து"[102] சிறப்பித்தான் என்பர். இதனை நாவரசர் தாமே, எண்ணோடு பண்ணிறைந்த கலைகளாய தன்னையும் தன்திறத்து அறியாப்பொறியிலேனைத் தன் திறமும் அறிவித்து நெறியுங் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக்கொண்டான்"[103] என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு தாம் ஆட்கொள்ளப் பட்டதை உணர்ந்தே அவர் தம்மை இறைவற்கு அடிமை என்பதைத் தெரிந்ததாகக் கூறுவார், 'என்னத் தன் அடியான் என்று அறிதலும், தன்னை நானும் பிரானென்று அறிந்தேன்'[104] என்று இயம்புகின்றார்,

இறைவனைத் தனக்குப் பிரான் என்று தேறியொழுகும் திருநாவுக்கரசர், "அளக்கலாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்[105] " இருக்கும் இறைவனைப் பொது நிலையின் நீக்கித்[106] தனிநிலையில் தம் உள்ளத்தே வைத்துக் காண்கின்றார், ______________________________

[99]. திருநா. 310 : 5. [100]. திருநா. 310 ; 3.
[101]. ௸ 257 : 4. [102]. ௸ 268:4。
[103]. ௸ 305 : 1. [104] ௸ 205 ; 8
[105] ௸ 312 : 7.
[106]. "பொது நீக்கித்தனை நினையவல்லார்க்கென்றுந்துணை"-215:5
----------

உள்ளத்தில் விளங்கும் புந்தி வட்டத்தில்[107] இறைவன் சிவமாய்க் காட்சி அளிக்கின்றான். அக்காட்சி தேனும் இன் னமுதுமாய் அவர்க்கு இன்பம் செய்கின்றது. அவ்வின்பத்தில் மூழ்கித்திளைக்கும் திருநாவுக்கரசர், அங்கே காட்சி நல்கும் சிவத்துக்குத்[108] தன் உள்ளம் கோயிலாவதையும், உடல் இடங் கொண்டதாம் அங்கு ஊறுகின்ற இன்பத்தை நுகர்வதையும், அதனால் நுகராதவாறு தடை செய்து நின்ற வினைத்தொடர்பு நீங்கி மறைவதையும், சிவன்பால் பேரன்புபெருகி மிகுவதையும் உணர்கின்றார் ; இத்தனைக்கும் ஏதுவாவது இறைவன் தம்மைக் கூழாட்கொண்ட பேரருளே என்று தெளிகின்றார். அத்தெளிவால் இறைவனை நோக்கி, '"என்பு இருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு "என்னையோர் உருவமாக்கி, இன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயிலாக்கி, அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரர்"[109] என்று பாராட்டி உரைக்கின்றார். இவ்வாறு அகவழிபாடு சிவபோக நுகர்ச்சிக்கு வாயிலாவது கொண்டு, "காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக, வாய்மையே தூய் மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப், பூசனை ஈசனார்க்குப் போற்ற விக் காட்டினோமே"[110] என்றும், இதனைச் செய்வாரது பாவம் நாசமாம்[111] என்றும் எடுத்துரைத்துள்ளார்.

---
[107]. புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானேயும் பொய்யென் பனோ- 98 : 1; 113; 5. புந்தியாய்ப் புண்டரிகத்துள்ளாய் போற்றி-219: 9.
[108]. சிந்திப்பார் சிந்தைக்கண் இறைவன் நல்கும் காட்சியைச் சிவமெனவே நாவரசர் வழங்குகின்றார். சிந்தையுட் சிவமதானார் 29 : 4, 35 : 2; 48 : 5 162 : 5. எனப் பலவிடத்தும் கூறுவது காண்க. -
[109]. திருநா. 5 : 2. [110]. திருநா. 76 : 4.
[111]. ௸ 245 : 3,
----
அகப்பூசை கைவரப் பெற்றோர்க்குப் புறப்பூசை இன்றி யமையாததன்று என்பவரும் உண்டு. புறப்பூசை மிக்க தூய்மையும் காண்பார் நெஞ்சு உருகித் தெருளும் வகைமையும் உடையதாகும். இப் புறப்பூசையால் மக்கள் இருமையும் இன்ப வாழ்வில் நிலைபெறுவார்கள் என்று திரு 'நாவுக்கரசர் கூறுவது கருதத்தக்கது.

இனி, திருநாவுக்கரசர் அன்பொழுக்கமாகிய அகப் பொருள் துறைகளில் இனிய பாட்டுக்கள் பலப்பல பாடி யுள்ளார். தலைமகளொருத்தி இறைவன்பால் பெருங் காதல் கொண்டு உளஞ்சிறந்ததிறத்தை,

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"[112]

என்ற திருப்பாட்டால் இனிதுரைத் திருப்பது அறிஞர் பலரும் நன்கறிந்ததொன்று. இப் பெற்றியளாய நங்கை, குயிலினங்களையும் ஏனைக் குருகினங்களையும் வண்டுகளை யும் நோக்கிக் காதல் கைம்மிகுதலால் கையற்றுப் புலம்பு

"மனைக்காஞ்சி இளங்குருகே
மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைம்மா உரிபோர்த்தான்
பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம்
உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணுள்
சொல் தூதாய்ச் சோர்வாளோ" [113]
என்று கூறி அழுங்குவதும், "அகலிடத்தார்.ஆசாரத்தை" அகன்றொழுகும் இந்நங்கையின் செயல் கண்ட தாயரும் பிறமகளிரும்,-
---
[112]. திருநா. 239; 7. [113]. திருநா. 12:3.
----------

"கருகு கண்டத்தன்காய்கதிர்ச் சோதியன்
பருகுபால் அமுதே எனும் பண்பினன்
அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
ஒருவன் என்னே உடைய கோ என்னுமே” [114]

என்று தம்மிற் பேசிக் கொள்வதும், பெற்றோரும் பிறரும் போந்து அந்நங்கையை நோக்கி நீ மனையிடத்தே இருத்தல் முறையே யன்றி வெளியே இறைவனே நாடிச் சேறல் கூடாது என்றாராக, அவள், அவர்களை மறுத்துரைப்ப, அவர்கள் மனம் வருந்தி,

"மாது இயன்றுமனைக்கு இரு என்றக்கால்
நீதிதான்சொலநீஎனக்குஆர் எனும்
சோதிஆர்தரு தோணி புரவர்க்குத்
தாதியாவன் நான் என்னும் என்தையலே "[115]

என்பதும், இவள் செயலைக் கண்டோருட் சிலர், இவட்கு இம்மால் உண்டாதற்குக் காரணமான இறைவனைக்குறை கூறுவாராய், -

"பண்ணி னேர்மொழியாள் பலியிட்டஇப்
பெண்ணை மால் கொடு பெய்வளைகொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை -
அண்ணலாருக்குச் சால அழகிதே " [116]

என்று இயம்புவதும், முதுபெண்டிர் சிலர் போந்து, "நங்காய், நின்னாற் காதலிக்கப்படுபவன் நின்மலனாகிய இறைவன்; அவனைக் கூடுவது என்பது இயலாத தொன்று " என்பாராய்,-

"முல்லை வெண்ணகை
மொய்குழலாய் உனக்கு
அல்லனாவது அறிந்திலை நீ ; கனித்
தொல்லையார் பொழில் தோணி புரவர்க்கே
நல்லையாயிடுகின்றனை நங்கையே "[117]

என்று தெருட்ட முயல்வதும், அவ்வழியும் தெருண்டு தன்-
முயற்சி கைவிடாத அவட்கு அவர்கள் அவளது காதலனைப் பழித்து.

"உறவு பேய்க்கணம், உண்பது வெண்டலை
உறைவது சமம் உடலில் ஓர் பெண்கொடி
துறைகளார் கடல் தோணிபுரத் துறை
இறைவனார்க்கு அவள் என் கண்டு அன்பாவதே"[118]

என்பதும் பிறவும் மிக்க இன்பம் பயப்பனவாகும்.

---
[114]. திருநா. 143 : 5. [115]. திருநா. 159 : 1.
[116] ௸159 :.5. [117]. ௸ 159 : 6,
[118]. திருநா. 159 ; 8.
------------

இறைவன்பால் தமக்கிருந்த பேரன்பால் அகத்துறையில் மகளிர் கூறும் கூற்றில் வைத்துப் பழிப்புரை வழங்கிய திருநாவுக்கரசர், தாமே பழிப்பு வாய்பாட்டால் இறைவனைப் பரவிப் புகழ்ந்து பாடும் அருட் பாட்டுக்களும் பலவுள்ளன.

இறைவன் திருமேனி மேல் வெண்ணீறு கிடந்து ஒளி விளங்குதலைக் கண்டு, சந்தனம் முதலிய விரைப்பொருள்கள் விலைமிக்குடைய எனக் கருதியும் விலையின்றி எங்கும் யாவர்பாலும் கிடைக்கக்கூடியது திருநீறு எனக்கொண்டும் அதனை மேனியில் பூசிக்கொண்டு விளையாடுகின்றான் இறைவன் என்பாராய், "விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேதவிகிர்தர்"[119] என்றும், இறைவன் இடையில் நால்விரற் கோவணம் உடுப்பவன் என்பது பற்றிக் கோவணம் உடுத்து மகளிர் இல்லங்களில் பலி யேற்கச் சென்று திரியும் நீயிர், மலைவாணர் பாவை யாகிய உமை நங்கையை மணந்த ஞான்றும் இக்கோவ ணத்தைத்தான் உடுத்திருந்தீரோ என வினவுவாராய், "இடும் பலிக்கு இல்லந்தோறும் உழிதரும் இறைவன் நீரே, நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல், கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?"[120] என்றும்,

---
[119]. திருநா. 8 : 9. [120]. ௸. 77 : 1.
--------

இறைவன் திருமுடியில் கங்கையும் பிறைத்திங்களும் பாம்பும் உண்டு என்பது உலகறிந்த செய்தியாதலின், ' கங்கையாகிய நங்கையை நீர் நும்சடையில் மறைத்துள்ளீர் : இச்செய்தியை உமையம்மை யறியின் பெருந்தொல்லை விளையுமே" என்பாராய் "எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டருளீர், கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே"[121] என்றும், பிறைக்கும் பாம்புக்கும் பகையென்பது பற்றி, "பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசு அறியோம், எய்தப்பெறின் இரங்காது கண்டாய் எம் இறையவனே" [122] என்றும், மேனியில் கிடக்கும் பாம்பைக் கண்டு அம்மேனியிற் பங்குடைய தேவியாகிய அரிவை அஞ்ச, அவரைக் கண்டு அப்பாம்பு மயில் என்று ஐயுற்று அஞ்சி வருந்த, அப்பாம்பைக் கண்டு பிறைத் திங்கள் அஞ்சி நடுங்க, இவற்றைக் காணும் தலமாலையிலுள்ள தலைகள் நகுகின்றன என்பார்,

"கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுறக்
கிடந்த பாம்பு அவளை ஒர் மயிலென்று ஐயுறக்
கிடந்த நீர்ச் சடை மிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடிலவாணரே"[123]

என்று இவ்வாறு பலவும் வருவன அறிஞர் கண்டு இன்புறக்கடவர்.

இவ்வகையிலே நம் நாவுக்கரசர் இறைவனை முன்னிலைப் படுத்தி இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பல.

"இறைவா, சாகும் நாளில், பொறிபுலன்கள் நிலைகலங்கி அலமருதலால், யான் வேறு பற்றுக்கோடின்றி உன்னை எங்குற்றாய் என அழைப்பேன்; அப்போது நீ போந்து இங்குற்றேன் என்று சொல்லியருள வேண்டும்"'என்பார்,"சங்கொத்த மேனிச் செல்வா, சாதல் நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என் கண்டாயே"[124] என்றும், இறைவன் தம் உள்ளத்தே புகுந்து காட்சி வழங்கினராக, அக்காட்சியின்பத்தில் மகிழ்வுற்றுத் தெளிந்த நாவரசர், '"கள்ளரோ, புகுந்தீர்" என்றலும்,

---
[121]. திருநா. 104 : 8. [122]. திருநா. 107: 1.
[123]. ௸ 10 : 8. [124]. [124]. ௸ 75: 8.
-------

இறைவன் அருளொழுக நோக்கி '"வெள்ளரோம் என்று நின்றர் விளங்கு இளம்பிறையினரே [125]" என்றும் பாடிப் பரவுகின்றார். ஒருகால் இறைவன் திருநாவுக்கரசர்சென்னி மேல் தன் திருவடியைச் சிறப்பித்தாகை, அது நினைந்து அன்புபெருக உளங்குழைந்து, தம் சென்னியின் வன்மை பால் இறைவனுடைய மெல்லிய திருவடிகள் வருந்துமென நினைந்து, " மூர்த்தியென் உச்சிதன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே "[126] என்றும், இத் திருவடிகளைக் காண்டற்குத் தேவதேவர்கள் முயன்றும் முயற்சி முற்றாது அமைந்தாராக, மார்க்கண்டன் உயிர் கொள்வான் சென்று வீழ்ந்த காலன் அத்திருவடிகளைக் கண்டு கொண்டான் என்பாராய், "வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே"[127] என்றும், இறைவன் மாத்திரம் என்பால் அருள் கொண்டு ஆட்கொள்வானாயின், அவனைப் பின் என் முன்னே தானே வந்து எதிர்ப்படுமாறு செய்து கொள்வேன் . எங்ஙன மெனில், அவன் திருப்பெயர்களுள் ஒன்றாகிய பவன் என்னும் திருப்பெயரைப் பற்றிப் பவபவ. பவபவ எனப் பன்னாளும் இடைவிடாது அழைப்பேன் இறைவனும், இவன் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்வருவான் என்பார், "அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்றனை யான், பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவன் எனப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே"[128] என்றும்,

---
[125]. திருநா. 75 9, [126]. திருநா. 77:10.
[127]. ௸ 114 : 11. [128]. ௸ 113: 9.
-------------

இறக்குங் காலத்து நமன் தூதர் போந்து என்னை நலிந்து என் உயிரைக் கொண்டு போங்காலத்து எனக்கு அருள் செய்யலாம் என்பது, இறைவனே, நின் திருவுள்ளமாக இருக்கலாம் ; அதற்கு முன்பே நீ போந்து என் நெஞ்சில் நின் திருவடியை எழுதி வைப்பாயாக செம்மை திறம்பாத சிவக்கொழுந்தே என்றும், அப்போது நீ அருளுவதை யாவர் அறிவார்? என்பார்,'

"வெம்மை கமன் தமர்மிக்கு
விரவி இழுப்பதன் முன்.
இம்மையுன் தாள் என்றன்.
நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில்,
அம்மை அடியேற்கு அருளுதிர்
என்பது இங்கு ஆர்.அறிவார்
செம்மை தரும் சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே[129]

என்றும் பாடுவன பலவாகும்.

இவ்வண்ணம் இறைவன்பால் இன்பவுரையாடி மகிழும் நாவரசர், மக்களுக்கு யாக்கை நிலையாமை, இளமை நிலை யாமை, செல்வநிலையாமை முதலிய பல நிலையாமைகளை யும் பரக்க எடுத்தோதி அறிவு கொளுத்துவதோடு, இறைவன் திருவருளாகிய செல்வமும் அது பெற்றுவாழும் வாழ்வுமே இன்றியமையாதன என்பதை ஆங்காங்கு எடுத்தோதுகின்றார். பொருளிலாதபோது ஒருவர்க்கு உறவாய்நின்று உதவும் மக்கள் இலராவது இயற்கை. பொரு ளிலாரும் இறைவன் அருட்பேறு குறித்துப் பாடுவாராயின் இம்மையேயன்றி அம்மையிலும் அவர் இன்ப வாழ்வில் இருத்தப்பெறுவர்[130] என்பாராய்,

"மாடுதானது இல்லெனின் மானுடர்
பாடுதான் செல்வாரில்லை, பன் மாலையால்
கூட நீர் சென்று கொண்டீச்சரவனைப்
பாடுமின் பரலோகத் திருத்துமே '[131]

என்றும், சுற்றமும் துணையும் பெற்ற மக்களுமாகிய தொடர்பற்றாரை உலகியல் விரும்புவதில்லை. "அற்றாரைத் தேறுதல் ஓம்புக"[132] என்பது திருமறை. இறைவன் திரு வருளோ,அங்ஙனம்தொடர்பற்றார்க்குப்பற்றுக்கோடாய் நின்று பேரின்ப வாழ்வை நல்கும் என்பாராய்,

---
[129]. திருநா. 97 : 6.
[130]. திருநா 153 : 5.குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால், கறைநிலாவிய கண்டன் எண் தோளினன்... இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே.'
[131]. ௸. 184 : 3.
[132]. திருக்குறள், 506.
----------

"தந்தை தாயொடு தாரம் எனும்தளைப்
பந்தம் அங்கு அறுத்துப் பயில்வு எய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சரவனைப்
பாடுமின் பரலோகத்திருத்துமே"[132]

என்றும்," அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணையாவன்"[133] என்றும் அறிவுறுத்துகின்றார். இளையவர்க்கு இனிய கனியும் கட்டிபட்ட கரும்பும் இன்பங் தருவன; காளைப்பருவத்தார்க்கு இளமங்கையர் கூட்டமும் ஆண்மைச் செவ்விபெற்றார்க்கு அரசியற் போகமும் இன்பந்தருவன : இறைவன் இப்பெற்றியார் அனைவர்க்கும் அவரவர் விழையும் இன்பங்களெல்லாவற்றினும் மேலான இனிமை நல்கும் இனியன் என்பார்,

"கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க்குழல் பாவை. நல்லாரினும்
தனிமுடிகவித்தாளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே "[134]

என்றும், இவ்விறைவன், ' "உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பித்தலும், இறைவனாகி நின்று எண்ணிறைந்து இருத்தலும்"[135] உடையனாதலின், அவனுக்கு "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்"[136]' மக்கள் நெஞ்சில் நினைந்து வாழ்தல் வேண்டும் என்றும், "அனுசயப்பட்டு அது இது என்னாது, கனிமனத்தோடு கண்கள் நீர்மல்க இறைவனை வழிபடும் புனித வாழ்வு வாழ்வோர் மனிதரில் தலையான மனிதர்"[137] என்றும் நம் திருநாவுக்கரசர் வழங்கும் தெரு ளுரை மிகப்பலவாகும்.

---
[132]. திருநா. 184 : 4. [133]. திருநா. 181 : 6.
[134]. ௸ 128 :10. [135].௸ 182 : 5.
[136]. ௸. 137 : 9. [137]. ௸ 179 : 6.
-----

திருநாவுக்கர்சர் பாட்டில் சிறப்புப் பெற்றவர்கள்

மக்கட்கு நல்லறிவு கொளுத்தி மேம்படும் திருநாவுக்கரசர், தாம்பேணிய நன்னெறிக்கண் நின்று சிறப்புற்ற சான்றோர் பலரைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் ஆங்காங்குக் குறித்துப் பாடியுள்ளார். அவருட் பலர், அவர் காலத்துக்கு முன்னிருந்தோராவர். சோழன் செங்கணான், சண்டேசுரர், சாக்கிய நாயனர், கண்ணப்பர், கணம்புல்லர், அமர் நீதி, நமிநந்தி முதலியோர் அவருள் முன்னணியில் நிற்கும் சான்றோராவர். -

1.சோழன் செங்கணான் .

இச் சோழ வேந்தனைக் கோச்செங்கணான்[138] என்றும், கோச்சோழன் என்றும் வழங்குவதுண்டு, இவ்வேந்தர் பெருமானைத் திருஞானசம்பந்தரும் பாடிப் பாராட்டியிருப்பதை முன்பே கூறினோம். இவ்வேந்தன், முற்பிறவியில் சிலந்தியாயிருந்து திருவானைக்காவிலுள்ள இறைவ னுக்குத் திருநிழற்பந்தர் செய்து, மறுபிறப்பில் கோச் செங்கணானாகப் பிறந்து சிறப்புற்றான் என்பர்; இதனைத் திருநாவுக்கரசர், "சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர்செய்து, உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்க ணானுமாகக், கலந்தநீர் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள், குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்ட னாரே"[139] என்று குறிக்கின்றார். சிலந்தியாயிருந்து சோழனை இவ் வரலாற்றுக் குறிப்பு இடைக்காலக் கல்வெட்டுக்களில் நிலைத்த இடம்பெற்றுளது. இதனைச் சிலந்தியைச் சோழனாக்கினன் திருத்தோப்பு எனவரும் கல்வெட்டு[140] இனிது குறிக்கின்றது.

---
[138]. A. R. No. 205 of 1904. இவர் சிவபெருமானுக்கு எழுபதுக்கு மேற்பட்ட கோயில்கள் கட்டினாரென்று திருமங்கை மன்னன் பெரிய திருமொழி (vi: 6.அ.)யிற் கூறுகின்றார். இவை செங்கற்களாலாகியவை யென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது.
[139]. திருநா.49:4;, 289:8;,297:6
[140]. S. I. I. Vo!. IV. No. 426.
----------

2. சண்டேசுரர்.

திருஞானசம்பந்தரும் இச் சான்றோரைத் தம்முடைய பாட்டுக்களில் நன்கு பாராட்டி யுள்ளார். இவரைத் தண்டி யென்றும் வழங்குவதுண்டு. இவர் வரலாறு திருத் தொண்டர் புராணத்துள் சேக்கிழாரால் விரித்துரைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, இங்கே திருநாவுக்கரசர்,"அண்டமார் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல்பாதம், கொண்டு அவன் குறிப்பினாலே கூப்பினன் தாபரத்தைக், கண்டு அவன் தாதை ஆய்வான் காலற எறியக்கண்டு, 'தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே[141]" என்றும், "அங்கு அரவத்திருவடிக்கு ஆட் பிழைப்பத் தந்தை அந்தணனை அற எரிந்தார்க்கு அருள் அப்போதே, கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார்" [142] என்றும் குறித்தருளுகின்றார். இவ்வாறு கொன்றை முதலியன பெறும் நிலை, சண்டேசுரபதம் என்பர்; இது பற்றியே இவர் சண்டேசுரர் எனப்படுவாராயினர்.

---
[141]. திருநா. 48: 4. [142]. திருநா. 289 : 9.
----------

3.சாக்கிய நாயனார்

கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே பெளத்தசமயம் தென்னாட்டிற் படர்ந்திருந்ததென்றும் பெளத்தர்கட்குச் செல்வச் சிறப்புடைய மடங்கள் பல இருந்தனவென்றும் வரலாறு கூறுகிறதன்றோ ? இச்சாக்கிய நாயனார், அவர்களை அடைந்து அவர்கூறிய பெளத்தசமயத்தை மேற்கொண்டு அவரது வேடம்பூண்டு அவரிடையே சின்னாள் ஒழுகியிருந்து பின்னர்ச் சைவராயினவர். பெளத்த சமயத்தைக்கண்ட கோதமபுத்தர் சாக்கியர் மரபிற் பிறந்தவரானதால், அவர் கண்டுரைத்த அறத்தை மேற்கொண்டார் சாக்கிய ரெனப்பட்டனர். சாக்கியர்க்குரிய கோலத்தோடு இருந்தே சிவத்தொண்டு புரிந்தமையின் இவர் சாக்கியரெனவே வழங்கப்படுவாராயினர் ; அதனால், இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று. இவர் எறிந்த கற்களே இறைவன் புது மலர்களாகக் கருதி மேற்கொண்டு வந்தனர் என்பராய், நம் திருநாவுக்கரசர், "புத்தன் மறவாது ஓடிஎறி சல்லி புதுமலர்களாக்கினான்"[[143] என்றும், சாக்கியராய்க் கஞ்சியுண்டு வாழ்ந்த இவர்க்கு இறைவன் நீள்விசும்பாளும் பேரருள் நல்கினான் என்பார், "கல்லினால் எறிந்து கஞ்சிதாம் உணும் சாக்கியனார், நெல்லினால் சோறுணாமே நீள்விசும்பு ஆள வைத்தார்”[[144] என்றும் பாராட்டிக் கூறுகின்றார்,

---
[143]. திருநா. 266:8. [144]. திருநா. 49 : 6.
---

4. கண்ணப்பர்.

கண்ணப்பர் வரலாறு நாடறிந்ததொன்று. திருநாவுக் கரசர், இவரது வரலாற்றைத் திருக்குறுக்கை, திருச்சாய்க்காடு முதலிய திருப்பதிகங்களில் சிறிது விரியக்கூறி, திரு மழபாடித் திருப்பதிகத்தில், "கண்ணப்பர்க்கு அருள் செய்த காளேகண்டாய்"[145] என்றும், திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகத்தில் "கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்"[146] என்றும் குறித்துரைக்கின்றார். சம்புவராய மன்னர் ஆட்சிக்காலத்தில் வேட்டுவர் சிலர், தாம் திருக் கண்ணப்பர்வழிவந்தவரெனக் கூறிக்கொண்டு சம்புவராய மன்னர்க்கு நன்றாக வேண்டி இறைவனுக்கு நிவந்தம்விட்டதாக வன்பார்த்தான் பனங்காட்டூர்க் கல்வெட்டொன்று[147] கூறுகிறது. கண்ணப்பர் வரலாற்றை வியந்து நக்கீர தேவர் பாடியனவும் உண்டு; அவை பதினோராந்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளன.

---
[145]. ௸ 263 : 9.
[146]. ௸ 226 : 6.
[147]. A.R. No. 247 of 1906.
----------

5. கணம்புல்லர்.

இவரது இயற்பெயர் புல்லன் என்பது. கணம் புல்லை விற்று. அதனால் வரும் பொருள் கொண்டு இறைவன் திருக்கோயிலில் விளக்கெரிக்கும் திருப்பணியைச் செய்ததுபற்றி, இவர் கணம் புல்லர் ஆயினர் என்பர். திருநாவுக்கரசர், இவருடைய குணநலங்களைப் பாராட்டி, "எண்ணிறந்த குணத்தினாலே கணம் புல்லன் கருத்துகந்தார்[148] என்றும் "நல் அருந்தவத்த கணம் புல்லர்”[149] என்றும் கூறுகின்றார்.


6. அமர்நீதியார்.

இவரது வரலாறு திருத்தொண்டர் புராணத்துள் விரிவாய்க் காணப்படுகிறது. "நாட்கொண்ட தாமரைப்பூத்தடம் சூழ்ந்த நல்லூரகத்தே, கீட்கொண்ட கோவணம்கா என்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர் வாணிகனை, ஆட்கொண்ட வார்த்தை உரைக்கு மன்றோ இவ்வகலிடமே"[150] என்று திருநாவுக்கரசர் சிறப்பித்தருளுகின்றார். பிற்காலத்திலும் அமர்நீதியார் என்ற பெயருடன் பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்திருப்பதைக் கல்வெட்டுக்கள்[151] கூறுகின்றன. இதனால், அமர்நீதியாரது வரலாறு தமிழ்மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தமை விளங்கும். "வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன்றோ இவ்வகலிடமே" எனக் கூறுவது நோக்கின் அமர்நீதியாரை இரண்டொரு நூற்றாண்டு நம் நாவரசர்க்கு முற்பட்டவராகக் கருதலாம்.

7. நமிநந்தி.

இவர் பெயரைத் திருத்தொண்டத் தொகையும் பிறவும் நமிநந்தியென்றே வழங்குகின்றன ; அதுகொண்டு பிற்காலத்து மக்கள் பலர் தமக்கு நமிநந்தி யென்றே இயற்பெயர் கொண்டிருப்பாராயினர்[152].

---
[148]. திருநா. 226 : 7.
[149]. திரு நா. 50:9.
[150]. ௸ 98 : 7.
[151]. சோழ நாட்டு இந்தளூர் நாட்டுக் கஞ்சனூருடையான் கஞ்சாறன் அமர்நீதியான பல்லவதியரையன் திருவொற்றியூருடையார்க்குத் திருநுந்தா விளக்குக்குப் பொன்னளித்தது -(A. R. 188 of 1912).
[152]. நமி நந்தியடிகள் மகன் பெரியன் -(A. R. .No. 149 of 1932–33*)
----------

இந்த, நமி என்னும் சொல் நம்பி என்பதன் மரூஉ வாகும் , திருத்தொண்டத்தொகையும், "அருநம்பி நமிநந்தி" என்று குறிப்பது ஈண்டு நோக்கத்தக்கது. திருநாவுக்கரசர், இந் நந்தியாரை "நம்பி நந்தி "என்றே குறித்துரைக்கின்றார். இவர் திருவாரூரில் இறைவனுக்கு நீரால் திருவிளக்கேற்றினரென் பது வரலாறு. இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி, "வேத மறிக்கரத்து ஆரூரற்கு விளக்கு நெய்யைத் தீது செறி அமண் கையர் அட்டாவிடத்து எண்புனலால், ஏதம் உறுக அருகர் என்று அன்று விளக்கெரித்தான், நாதன் எழில் ஏமப்பேரூர் அதிபன் நமிநந்தியே"[153] என்று கூறுகிறது. நமிநந்தியார் திருநாவுக்கரசர்க்குக் காலத்தால் மிக முற்பட்டவராய்ச் சான்றோர் வியந்து பாராட்டும் சால்பு உடையராய் விளக்க-முற்றிருந்தமையின், திருநாவுக்கரசர், "தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியுமன்றே"[154] எனவும், "அடித்தொண்டன் நந்தியென் பான் உளன் ஆரூர் அமுதினுக்கே"[155]' எனவும், திருவாரூர் அறநெறித் திருத்தாண்டகத்தில் இறைவனை, "நந்திபணி கொண்டு அருளும் கம்பன்"[156] எனவும் பாராட்டியுள்ளார். இந் நமிநந்தியார், திருவாரூரில் வாழ்ந்தநாளில் இறைவன் திருத்தொண்டர்க்கு அவர் பெருவிளக்கமாய்த் திகழ்ந்தார் என்பது தோன்ற,
"கொடிகொள்விதானம் கவரி பறைசங்கம் கைவிளக்கோடு இடிவில் பெருஞ்செல்வ-மெய்துவர் எய்தியும் ஊனமில்லா,அடிகளும் ஆரூரகத்தினராயினும் அந்தவளப் பொடிகொண்டு அணிவார்க்கு இருளொக்கும் நந்திபுறப்படினே"[157]' என்று விதந்தோதிப் பரவுகின்றார். திருவாரூர்த் திருவிருத்தத்துள். நமிநந்தியடிகளை "ஆராய்ந்த அடித் தொண்டர் ஆணிப்பொன்"[158] என்று திருநாவுக்கரசர் பாராட்டினராக, இதனைக்கண்டு வியப்புற்ற சேக்கிழார் சுவாமிகள், நமிநந்தியடிகள் வரலாறு கூறுமிடத்து,' "தொண்டர்க்கு ஆணியெனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினர் [159]” என எடுத்தோதி இன்புறுகின்றார். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்கழுக்குன்றத்தில் நமிநந்தியடிகள் பெயரால் திருமடமொன்று இருந்ததென அவ்வூர்க் கல்வெட்டொன்று[160] கூறுகிறது.

---
[153]. திருத்தொண். அங்.. 31. [154]. திருநா. 103 : 2.
[155]. திருநா. 103 : 4. [156]. ௸ 248 : 4.
[157]. ௸ 103 : 6. [158]. ௸ 103 : 2.
[159]. திருத்தொண். புராணம் நமி நந்தி. 31.
[160]. S. I. I. Vol. III. No. 75.
----------

"இனி, தம் காலத்திலிருந்த திருஞான சம்பந்தர், அப்பூதியடிகள், திலகவதியார் முதலியோர்களைத் திருநாவுக்கரசர் சிற்சில தொடர்களால் குறிப்பிடுவது கருதத்தக்கது. திரு நாவுக்கரசரது வாழ்வில் இவர்கட்குத் தொடர்புண்டு; திரு நாவுக்கரசரோ தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறித்துரைக்கும் இயல்புடையவர். இவ்வாற்றால், இவர்களைப் பற்றி நம் நாவரசர் நமிநந்தியடிகளைக் குறித்ததுபோல விரிந்த குறிப்புக்கள்பலவற்றை உரைத் திருப்பரென நினைத்தற்கு இடமுண்டு. ஆனால், அவர் பாடிய திருப்பதிகங்களில் பதினாறில் ஒரு பகுதியே கிடைத்துள்ளமையின், அக் குறிப்புக்கள் பலவும் மறைந்து போயின எனக் கொண்டொழிவது நம்மனோர்க்குச் சால்பாகும். திருஞானசம்பந்தர்க்குத் திருவாவடுதுறையில் இறைவன் செம்பொன் வழங்கியதையும், திருமறைக்காட்டில் அவர் மறைக்கதவு மூடப் பாடியதையும், "கழுமலஆரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனரே"[161]' என்றும் "திறக்கப் பாடிய எனினும் செந்தமிழ், உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் உந்நின்றார்"[162] என்றும் குறித்திருக்கின்றார்,

தம்பால் பேரன்பு கொண்டொழுகிய திங்களூர் அப்பூதியடிகளை, "அஞ்சிப் போய்க் கலிமெலிய அழல் ஓம்பும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்"[163] என்று குறித்துப் பாடுகின்றார். 'அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே [164" என்பதனால் திலகவதியம்மை யாரைத் திருநாவுக்கரசர் சுட்டிக் காட்டுகின்றார்[165].

---
[161]. திருநா. 56 : 1. [162]. திருநா. 164: 8. [163]. ௸ 12 :10. [164]. ௸ 121:6.
[165]. A thesis on தேவாரம்&பெரியபுராணம் & by Vidvan Κ. Vellaivaranan on behalf of the Annamalai University, in 1935-6,
-----------

இறைவன் அருட் செயல்களாகப் புராணங்களிற் கூறப்படும் செய்திகள் பல திருநாவுக்கரசர் காலத்தே தமிழகத்தில் நிலவியிருந்தன. அவற்றையும் திருநாவுக்கரசர் தாம் பாடிய திருப்பாட்டுக்களில் தொகுத்துப் பாடியிருக்கின்றார். மார்க்கண்டன் பொருட்டு இறைவன் காலனை வீழ்த்தியதும்[166], கண்ணன் தன் கண்ணையிடந்து அருச்சித்து ஆழிப்படை பெற்றதும்[167], அருச்சுனன் பொருட்டு இறைவன் வேடுவனாய்ச் சென்றதும்[168], பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கியதும்[169], திரியும்புரம் மூன்றையும் எரித்ததும்[170], வியாக்கிரபாதன் மகன் உபமன்னியுவுக்குப் பாற்கடலை அளித்ததும்[171], அயன்தலை ஐந்தனுள் ஒன்றை அறுத்ததும்[172], தருமிக்குப் பொற்கிழி அளித்ததும்[173], அகத்தியன் பொருட்டு இறைவன் பொதியிற்கு எழுந்தருளியதும்[174], ஆலின் கீழிருந்து நால்வர்க்கு ஆகமப் பொருளைஅருளியதும்[175], திருமறைக் காட்டில் விளக்கெரியத் தூண்டிய எலியை மறுபிறப்பில் மாவலி மன்னனாகப் பிறப்பித்ததும்[176], இராவணனைக் கயிலைமலையின் கீழ்ப்பட அடர்த்ததும் பிறவும் திருநாவுக்கரசரால் இனிது குறிக்கப்படுகின்றன.

இவற்றுள் இராவணனை அடர்த்த செய்தி மாத்திரம் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் திருக் கடைக்காப்பாகக் குறிக்கப்படுகிறது. தொடக்கத்தில் பிணக்கம் செய்து, பின்பு அருட்பேறு கருதி இறைவற்கு வணக்கஞ் செய்து வாழ்வு பெற்ற இராவணன் போலத் தாம் தொடக்கத்திற் புறச்சமயம் புக்கு நின்று பிணங்கிப் பின்பு சூலையால் ஆட்கொள்ளப்பட்டமையின், திருநாவுக்கரசர் இராவணன் வரலாறு குறிப்பதையே திருக்கடைக் காப்பாகக் கொண்டு ஓதுவாராயினர் ; இதனைச் சேக் கிழாரும் "அத் தன்மையனான இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு[177] வணங்கிச் சென்றனர் எனக் கூறுகின்றார்,

---
[166].திருநா. 49 : 2, 65. 108, 2.
[167]. திருநா. 56 : 6; 64: 8. 3.
[168]. ௸ 65 : 4, [169]. ௸ 65 : 7.
[170]. ௸ 114 : 3. [171]. ௸ 170 : 6.
[172]. ௸ 264; 10. [173]. ௸. 290 : 3.
[174]. ௸ 264 : 3, [175]. ௸ 177: 10
[176]. ௸ 49.: 8 [177]. திருநா. புரா. 75.

----------

திருநாவுக்கரசரும் திருப்பதிகளும்

திருநாவுக்கரசர் தமிழ் நாட்டில் இறைவன் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்குள்ள இறைவனை இசைநலம் பெருகப் பாடிப் பரவியுள்ளாரென்று அவர் வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசருடைய திருப் பதிகங்களுள் இப்போது நூற்றியிருபத்தைந்து திருப்பதி கட்குரிய திருப்பதிகங்கள் சிலவே கிடைத்துள்ளன. அவற்றால், அவ்வத் திருப்பதிகளில் திருநாவுக்கரசர் அக்காலத்தில் தாம் கண்டனவும் கேட்டனவுமாகிய செய்திகள் பல அறியப்படுகின்றன. அவை வரலாற்றுண்மை கொண்டும் விளங்குகின்றன. அவ்வத் திருப்பதிகளின் இயற்கைக் காட்சிகளும் திருநாவுக்கரசருடைய திருப் பாட்டுக்களில் சிறப்பெய்துகின்றன.

1. தில்லைப்பெருங் கோயில்.

இங்கே விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்கூத்து நிகழ்த்துகின்றான். அதனைக் காணும் நாவரசர் " சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால், பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பதென்னே'[178] என்று பாடிப் பரவுகின்றார், அவனுடைய குமிண் சிரிப்பு திருநாவுக்கரசர்க்குப் பேரின்பம் தந்து "என்று வந்தாய்" என்னும் திருக்குறிப்பைப் புலப்படுத்து கிறது. அவனது "சிரித்த முகம்" நாவரசர் உள்ளத்தே நன்கு பதிந்து விடுகிறது. அதனையே நினைந்து நினைந்து பல திருப்பாட்டுக்களில் எடுத்தோதி இன்புறுகின்றார், அக்காலத்தே திருவம்பலம் பொன்வேயப் பெற்றுச் செம்பொன் அம்பலமாய்த் திகழ்ந்தது; அதனைத்."தூய செம்பொன்னினால்எழுதி மேய்ந்த சிற்றம்பலம்"[179] என்று குறிக்கின்றார், தில்லைநகரும் அந்நாளில், நீலம் மலர்ந்து வாளை பாயும் வயல் சூழ்ந்து வண்டு பண்பாடும் சோலையுடன் பாளையுடைக் கமுகு ஓங்க நிற்கும் பல மாடமாளிகை கொண்டு இனியக் காட்சி வழங்கிற்று. தினைத்தனையும் வேதம் குன்றாச் செந்தீயந்தணர்களும் சிட்டர்களும் தில்லையில் வாழ்ந்து வந்தனர்.

-----
[178]. திருநா. 36:1. [179]. திருநா. 116:8.
------------

அந்நாளில் தில்லைக்குச் சிதம்பரம் என்ற பெயர் கிடையாது; பிற்காலத்தில்தான், அங்குள்ள சிற்றம்பலம் சிற்றம்பலம் எனச் சிதைந்து பின் சிதம்பரம் எனத் திரிந்தது. அதன் வரலாறு அறியாத வடமொழியாளர் சித் + அம்பரம் எனப் பிரித்துச் சிதாகாசம் என்பது முதலிய பல கருத்துக்களைப் புகுத்தி உரைப்பாராயினர். இவ்வாறே பிற்காலத்தில் தமிழ்ப்பேரூரும் சிற்றறூருமாகிய பலவும், தமிழர் தமது வரலாறு மறந்த அற்றம் நோக்கி, வடமொழிப் பெயர் பெற்று வழுமலிந்த கற்பனைக் கதைகட்கு இடமாகிக் கல்வி கற்கும் இளைஞர் உள்ளத்தில் சமய உணர்வும் பற்றும் தோன்றாத செயன்முறைகளை மேற் கொண்டு நிற்பனவாயின.

2. திருவதிகை.

இது, திருநாவுக்கரசர் பிறந்த திருவாமூர்க்குக் கிழக்கில் கெடிலம் என்னும் ஆற்றின் வடகரையில் உள்ளதொரு திருப்பதி. திருநாவுக்கரசர், இதனை," கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே"[180] என்று குறிக்கின்றார். இறைவன் முப் புரத்தை எரித்ததாகிய வீரட்டம் புரிந்த இடம் இத் திரு வதிகையே என்பர் ; அதற்கேற்ப," செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ, வில்தான் கொண்டு எயில் எய்தவன் வீரட்டம், வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்", "விண்டார் மூவெயில் எய்தவன் வீரட்டம்" [181] எனப் பன்முறையும் கூறுகின்றார். இத் திருவதிகைக்கு அதியரைய மங்கை என்று வேறு பெயர் ஒன்று உண்டெனப் பல்லவர் காலத்துக் கல்வெட்டொன்று[182] கூறுகிறது.

----
[180]. திருநா. 105 : 1. [181]. திருநா. 167 : 4, 5, 6.
[182]. A. R. No. 360 of 1921, 18th regnal year of Nirupatunga.
------------

திருநாவுக்கரசரும் அக்காலத்தவராதலின். அதனை "அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை"[183] எனத் தாம் பாடிய திருத்தாண்டகத்துள் எடுத்தோதுகின்றார். இவ்வூரருகேயோடும் கெடிலத்தை அந்நாளையவர் தென்றிசைக் கங்கையென வழங்கினர்; ஆகவே,அவ்வழக்காறும்தோன்ற நம் நாவரசர், "தென்றிசைக் கங்கை அது எனப்படும் கெடிலம்"[184]என்று பாராட்டியுள்ளார். இக்கெடிலம் கொணரும் நீர் நலத்தால்இவ்வூர் மிக்கவளம்பொருந்தியிருக்கும் திறம்,திருநாவுக்கரசர் திருப்பாட்டுக்களில் பலவிடங்களில் அழகுற எடுத்துக் கூறப்படுகிறது. நீர் நிலைகளில் நீலம் முதலிய மலர்கள் மலர்ந்திருப்பதும், வண்டுகள் தேனுண்டு பாடுவதும், நீர்த் திரைகள் அலைப்பதால் மலரில் வீற்றிருக்கும் அன்னங்கள் ஊசலாடி மகிழ்ந்து உறங்குவதும், மகளிர் நீராடி இன்புறுவதும் பிறவும் இனிய செஞ்சொற்களால் சொல்லோவியம் செய்யப் பெற்றுள்ளன.

---
[183]. திருநா. 217 : 1, 4. [184]. திருநா. 10 : 6.
-----

3. திருவொற்றியூர்.

தொண்டை நாட்டில் நாவரசர் காலத்தில் சிறந்து விளங்கிய திருப்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். கடற்கரையில் உள்ளதாகிய இவ்வூர், கடலிற் செல்லும் கலங்கள் கடல் திரையின் இடைநின்று நல்ல காட்சி நல்குவதும், கடற் சங்குகள் கரையில் வந்து மேய்வதும் திருவொற்றியூரில் இன்றும் காணப்படும் நிகழ்ச்சிகளாகும். இவற்றைத் திருநாவுக்கரசர், "விடுகலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரைமோதக் கரையேறிச் சங்கம் ஊரும் திருவொற்றியூர் "[185]' என்று குறிக்கின்றார். இவ்வூர், பண்டை நாளில் சிறந்த கல்வி நிலையமாக விளங்கிற் றென்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் விளக்கமுறு கின்றது.

திருவொற்றியூர்க் கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று வியாகரணதான மண்டபம் எனப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவதே போதிய சான்று பகரும். அம்மண்டபம் அக் காலத்துக்கு முன்பே தோன்றிய தொன்மையுடைய தென்பது கருதத்தக்கது. திருநாவுக்கரசர் காலத்தில் இவ்வூர் கல்விநலம் சிறந்திருந் தமை தோன்ற, "ஓதல் ஒவா ஒளிதிகழும் ஒற்றியூர்"[186]என்று இயம்புகின்றார். அந்நாளிற் பல்லவர்க்குத் தலை நகராக விளங்கிய காஞ்சிமாநகரம் கல்விக் கடிகையொன்றால் கலைவளம் பெருக்கிய திறத்தை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.[187] அக்காஞ்சிமா நகரைப் பாடுமிடத்துத் திருநாவுக்கரசர் கல்வியைக் "கரையிலாத காஞ்சிமாநகர்"[188] என்பது பொருத்தமாக இருக்கிறது. திருக்காளத்திக்குச் சென்றபோது அங்கே இறைவனைத் "தேனார்ந்து உக்க ஞானப்பூங்கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்தொளியானான்காண்"[189] என்று பாடியருளினாராக, அங்குள்ள இறைவிக்கு ஞானப் பூங்கோதை யென்பதே திருப்பெயராகக் கல்வெட்டுக்களிலும் நூல்களிலும் வழங்கி வருகின்றது.

--
[185]. ௸. 259 : 4. [186]. திருநா. 259 : 3.
[187]. Dr. C. Minakshi's Administration and Social life under the Pallavas. pp. 186-197.
[188]. திருநா. 43: 8, [189]. ௸ 222:9,
--------

4. திருப்புகலூர்.

திருநாவுக்கரசர் இறுதிக் காலத்தில் தங்கிய திருப்பதி இதுவே யாகும். இது நெய்தல் திணையில் புன்னை மரங்கள் செறிந்து இனிய காட்சி வழங்கும் அழகிய ஊராகும். பூம்புகார், பூந்தராய் என்றாற் போல இவ்வூரும் பூம்புகலூர் எனப்படுவதே இதன் இயற்கை நலத்தைப் புலப்படுத்தா நிற்கும். இதனைத் திருஞான சம்பந்தர் புள்தன் பெடையோடு ஆடும் பூம்புகலூர்[190] என்பர் . திருநாவுக்கரசர் " பூம்புகலூர் மேவிய புண்ணியனே "' [191] என்பர். திருநாவுக்கரசரால் புன்னைப் பொழில் புகலூர் புன்னைக் கானற் பொழிற் புகலூர்'[192] என இப்புகலூரது புன்னைப் பொழில்வளம் புகழப்படுவது காணலாம். இங்குள்ள இறைவனை நம் நாவரசர், கோணப்பிரான் எனக் குறித்து, "தொல்லை நீர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடு வினயே"1எனப் பரவுகின்றார்.

இப்பெயரே, பிற் காலத்துக் கல்வெட்டுக்களிலும்[193] இறைவன் திருப்பெயராகக் காணப்படுகிறது. முதல் இராசராச சோழன் காலத்தேயே திருப்புகலூரில் திருநாவுக்கரசர்க்குத் திருக் கோயில் இருந்ததென்றும், அக் கோயிலில் நாள் வழி பாட்டின் பொருட்டு வேந்தனால் நிவந்தம் விடப்பட்டதென்றும் கல்வெட்டால்[194] அறிகின்றோம். இவரைப் பிற் காலத்தார் பேணிப் பரவிய திறத்தைத் திருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும் என்ற தலைப்பின் கீழ்க் கூறுதும். இது காறும் கூறியவாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் பலவும் எடுத்து அவற்றிற்குரிய திருப்பதிகளையும் அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களையும் எழுதப் புகின் இவ்வுரை வரம்பின்றிப் பெருகுமாதலின் இம் மட்டில் அமைவாம்.

----
[190]. திருஞான.228 : 1. [191]. திருநா. 313 : 1. .
[192]. திருநா. 106; 1, 4. [193]. திருநா. 106: 10.
[194]. A. R. 65 of 1927-8. 22nd regnal year of Rajaraja, the Great.
---------

திருப்பதிகங்களின் சொன்னலங் காண்டல்

திருநாவுக்கரசருடைய திருப்பதிகங்களிற் காணப்படும் உவமைகளும் அரிய சொல்லாட்சிகளும் இலக்கி ஆராய்ச்சியாளர்க்குப் பேரின்பம் தருவனவாகும். திரு நல்லூரிடத்தே இறைவன் எழுந்தருளியிருப்பவும், அவனை உலகெல்லாம் தேடித் திரிகின்றவர்களைப் பார்த்து, அவர்கள் ஆற்றில் கொடுத்தொழிந்த பொருளொன்றைக் குளத்தில் தேடிப் பார்ப்பவர்களை யொப்பர் என்பாராய், "தேற்றப்படத் திருநல்லூரகத்தே சிவன் இருந்தால், தோற்றப்படச் சென்று கண்டு கொள்ளார் தொண்டர், துன்மதியால், ஆற்றில் கொடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப் போல்,
காற்றின் கடுத்து உலகெல்லாம் திரிதர்வர் காண்பதற்கே[195]" என்றும், இறைவனது உண்மையுணராதவர் சிலர், உணர்ந்து வழிபடுவாரைக் கண்டு, உங்கள் இறைவன்

இப்படி யிருப்பானே எனத் தம் சிற்றறிவிற் கண்ட வற்றைக் காட்டிப் பிணங்கி நின்றாராக, அவர்களைக் கண்ட திருநாவுக்கரசர், அவர் செய்கை, "கடலாமையைப்பார்த்த குளத்துயாமை நீ பரவும் கடல் எம் குளத்துக்கு நிகராமோ?” என்பதுபோல்கின்ற தென்பாராய்,

"கூவலாமை குரைகடல்ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே "'[196]

என்றும் கூறுவர். தாம் சமணரொடு கூடிநின்று உண்மை நெறியுணராது உழன்ற திறத்தை,
"அமணொடு இசைவித்து.எனக் கொத்தைக்கு மூங்கை வழிகாட்டுவித்து என்னைக் கோகு செய்தாய்"[197] எனவும், சிவநெறிதேராது புறச்சமயத்தே ஒதுங்கியிருந்த தம் நிலைமையை விளக்கற்கு, ஆரூரர் தம்முன்பிருக்கும் விதியின்றி "முயல்விட்டுக் காக்கையின்பின் போனவாறே"[198] எனவும், ஆரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகியுய்யும் விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே"[199] எனவும் கூறிச் சைவவாழ்வில் தாம் கவலையின்றி இனிது இருக்கும் இயல்பு தோன்ற, "எங்கு எழில் என்ஞாயிறு"[200] எனவும் இவை போல்வன பலவும் கூறுமாற்றால் பழமொழிகள் மிகப்பல இவர் திருப்பாட்டுக்களில் காணப்படுகின்றன.
---
[195]. திருநா. 97 :6.
[196]. திருநா. 214: 5. [197]. திருநா. 99 : 2.
[198]. ௸ 5 : 2. [199]. ௸ 5 : 7.
[200]. ௸ 309: 2.
----------

இனி, இத்திருப்பதிகங்களால் அந்நாளில் இறைவனுக்குத் திருக்குறுக்கையில் அட்டமி விழாவும், திருவாரூரில் திருவாதிரை விழாவும், திருவொற்றியூரில் உத்திர விழாவும் நடந்த செய்திகள் விளக்கமுறுகின்றன. திருக்குடந்தையில் உள்ள தீர்த்தம் புண்ணிய நதியேழும் கொண்டது. என்பதை,

"தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டம் "[201]என்று குறிக்கின்றார், குமரி தீர்த்தத்தைக் குறிக்கும் போதெல்லாம், நம் திருநாவுக்கரசர், "கொங்கு தண் குமரித்துறை"[202] எனவும், "குருகாவூர் வெள்ளிடை குமரி கொங்கு"[203]எனவும் குறிக்கின்றார். குமரியை முன்னும் பின்னுமாய்ச் சிறப்பித்துநிற்கும் கொங்கு என்னும் சொல் குறிக்கும் பொருள் தெளிவாகவில்லை. தென்குமரிக்கரையில் இருக்கும் ஊர்க்கு அதுபெயராகலாம் என அறிஞர் கருதுகின்றனர். கன்னியாகுமரியிலுள்ள கல்வெட்டுக்களுள் இப்போது கிடைப்பன எவையும் அவ்வாறு குறிக்கவில்லை.

மற்று, குமரிக்கோயில் இடைக்காலத்தே திருப்பணி செய்யப் பெற்றபோது பழையவாயிருந்த கல்வெட்டுக்கள் பல அழிந்துபோயின என்பது தெளிய விளங்குவதனால்,[204] இப் போது கிடைக்கும் கல்வெட்டுக்களில் இது பற்றிய குறிப்பொன்றும் காணப்படாமை கொண்டு ஒரு முடிபிற்கும் வருதற்கில்லை. குமரிப்பகுதியைச் சேர்ந்த நாகர்கோயிலில் உள்ள திருக்கோயிலில் என்றொரு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதனைப்பற்றி ஆராய்கையில் ஒருகாலத்தே குமரிப்பகுதியில் கொங்கரென்ற தலைவர் வாழ்ந்தனரென்பது தெரிகிறது. அவரது தலைமையில் இருந்தமை பற்றிக் குமரி, கொங்கு தண்குமரி எனப்படுகிறது என்றற்கு இடமுண்டாகிறது. வேறு சிலர் கொங்கு நாட்டில் குமரியெனப் பெயரியதொரு தீர்த்தமிருக்கலாம்; அதனையும் உடன்கூட்டி,[205] "கொங்கு தண் குமரி " என்று திருநாவுக்கரசர் வழங்கியிருக்கலாம் எனக் கருதுவர். கொங்குநாட்டுப் பேரூர்த் திருவான்பட்டியுடைய இறைவனையும் குறிக்கின்றாராதலின், கொங்கிற்குமரியும் அவர் அறிந்திருக்கலாம் என்பர். இவ்வாறு குறிக்கத்தக்க சிறப்புடைய குமரிதீர்த்தம் என ஒன்று கொங்குநாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை; தென் குமரியே கருத்தாயின் "கொங்குதார்க் குமரி யென்பது கொங்கு தென்குமரி' என்று பாடமாயிற்றாதல் வேண்டும் என்பவரும் உண்டு : அங்ஙனம் ஒரு பாட வேறுபாடு காணப் படாமை ஈண்டுக் கருதத்தக்கது.

---
[201]. திருநா 289 :10. [202]. திருநா. 213 : 2.
[203]. ௸ 284 : 9.
[204]. Travancore Archaeological Series Vol.III(1931)p.90.
[205]. திருநா. 221 - 10.
------

சமயநெறி பற்றிய வழக்கங்கள் சில இவருடைய திருப் பதிகங்களில் தெரிகின்றன. சிவனடியார்களைஆட்கொள்ளு மிடத்து அவர்கள் தலையில் பால் தெளித்து [206]தீர்த்தநீராட்டுவதும், சென்னியைத் திருவடியால் தீண்டுவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன. சென்னியைத் திருவடியால் தீண்டுவது பிற்காலத்தே திருவடி தீக்கையெனப்படுவதாயிற்று. சிவனடியார்கட்குச் சூலக்குறி இடபக்குறி பொறித்தலும் அக்காலத்தே இருந்திருக்கிறது; இதனைத் திருத்தூங்கானை மாடத்தில் திருநாவுக்கரசர் தன்மேற்சூலக் குறிபொறித்தல் வேண்டுமென இறைவன்பால் விண்ணப்பம்[207] செய்துகோடலால் தெளியக் காண்கின்றோம். இவ் வழக்கம் பின்பு பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டளவில், திருக்கோயிலிற் பணி புரிந்த அடியார்கள் இடையேயும் இருந்திருக்கிறது. தீக்காலிவல்லத்துத் திருக் கோயிலிற் பணிபுரிந்த தேவரடியார்க்ட்குச்சூலக்குறி இடப் பட்டதென அக்கோயிற் கல்வெட்டொன்று[208] கூறுகிறது. இவ்வாறே திருமால் அடியார்களுட் சிலர் இக்காலத்தும் சங்கும் சக்கரமும் இரு தோளிலும் பொறித்துக்கொள்வது ஈண்டு நினைவு கூரத்தக்கதாம்.

---
[206]. திருநா. 5 : 4. [207]. திருநா. 110 : 1.
[208]. A. R. No. 230 of 1921. 49th regnal year of Kulottunga the First.
----

அரிய சொல்லாட்சிகள்

பல்லாயிரக் கணக்கில் படிக்குந்தோறும் பேரின்பம் சுரக்கும் பண்சுமந்த பாடல்களைப்பாடியருளிய திரு காவுக்கரசருடைய திருப்பாட்டுக்களில் அரிய இனிய சொல்லாட்சிகள் தோன்றி இன்பம் செய்கின்றன. இறைவனை வழிபடுமிடத்துத் தொண்டர், "சோத்தம் எம்பெரு மான்" என்று வழங்குவது தொன்று தொட்டு வரும்மரபு. சோத்தமாவது இழிந்தார் செய்யும் அஞ்சலியெனப் பேராசிரியர்[209] கூறுவர். இறைவனை நோக்கத் தாம் இறப்ப இழிந்தமை எண்ணி, திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் அச் சொல்லைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் எடுத்தாளு கின்றனர். இறைவனை நோக்க, அயனும் மாலும் முதலான தேவர் பலரும் இழிந்தவர் என்பது தோன்ற, "ஆத்தமாம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர், சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல"[210]என்று திருநாவுக்கரசர் கூறுகின்றார். கும்மலித்தல் என் னும் சொல் உடம்பு பூரித்தல் என்னும் பொருள்பட வருவதாகும் ; நீரில் நனைந்த குருகினம், தம் இறகின் ஈரம் புலர வேண்டி இறகு நிமிர்த்துக் கும்மலிப்பது இயல்பு; இதனை. நம்நாவரசர்,"படப்பையெல்லாம் .குருகினங்கள் கூடியாங்கே கும்மலித்து இறகுலர்த்தி, மருவலாம் இடங்கள் காட்டும்"[211] என்பர். ஒப்புமை யாவதொன்றனை ஒப்பாரியென வழங்குவதுண்டு : மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்"[212] எனத் திருவள்ளுவர் வழங்குவது காண்க.
---
[209]. திருக்கோவை. 178. உரை.
[210]. திருநா. 50 : 2,
[211]. திருநா. 55 : 8, [212]. குறள், 1071.
----

திருநாவுக்கரசர் அதனைத் தாமும் வியந்து, "ஒப்பாரி இலாத எம்மடலுளான்[213] என்று ஓதுகின்றார்", இவ்வாறே, "நிவஞ்சகத் தகன்ற செம்மையீசன்"[214] எனவும் "கள்ளையிற் பட்டு நக்கரைப்பிக்க"[215]" எனவும், "கண்ணிட்டுப் போயிற்று "[216] எனவும், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி யுயக்கொளும்"[217] எனவும், " தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே "[218] எனவும், அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினே"[219] என "அரியோடு பிரமனும் துத்தியம் செய நின்ற நற்சோதியே" [220] எனவும் பிறவுமாக வருவன பலவும் அறிஞர்கண்டு இன்புறும் பான்மையவாகும்.

----
[213]. ௸ 117: 1. [214]. திருநா. 78 : 7.
[215]. ௸ 96 : 9, [216]. ௸ 98 : 2 :
[217]. ௸ 185:9 [218]. ௸ 199: 3.
[219]. ௸ 211:21 [220]. ௸ 214:2
---------

முந்துநூல் வழக்கு

"முன்னனோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்" [221]என்பது ஒரு பழமையான கொள்கையாகும். அது தமிழகத்துச் சான்றோர் எல்லாரிடத்தும் இயல்பாகக் காணக்கூடிய தொன்று. இலக்கணநூல் எழுதுவோரும் இலக்கிய மெழுதுவோரும் இப்பண்புடையராதலை எளிதிற்காணலாம். திருஞானசம் பந்தர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் இறைவன் திருவருள் வழிநின்று தம் உளம் குளிர்ந்தபோதெல்லாம் அதன்கண் உவட்டெடுத்துப் பெருகிய உணர்ச்சி மொழியாக இத் திருப்பதிகங்களை யோதியுள்ளனர் ; ஆயினும், அவ்வுணர்வுப் பெருக்கிடையே அவர் கற்றனவும் கேட்டன வுமாகிய முந்துநூற் கருத்துக்களும் சொற்களும் பொன்னும் மணியும் போல வெளிப்படுகின்றன. "அகரமுதல: எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு "[222] என்பது திருக்குறள் ; இதனைத் திருநாவுக்கரசர், '"ஆனத்து முன் னெழுத்தாய் நின்றார்போலும்[223]" என்பர். இதன்கண் அகரமுதல் னகர இறுவாயாகிய எழுத்து அனைத்தையும் ஆனம் எனவழங்கியது திருநாவுக்கரசரது செஞ்சொற்றிறமாகும். '"இனிய வுளவாக இன்னத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந்தற்று"[224] என்பது திருக்குறள். இதன் ஈற்றடியை வாங்கி, ஆரூரரைக், கையினால் தொழா தொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே"[225] என்பர். "புறந் தூய்மை நீரானமையும் அகந்தூய்மை வாய்மையாற். காணப்படும்"[226] எனவரும் திருக்குறளை உளத்திற்கொண்டு, :வாய்மையே. துாய்மையாக மனமணி யிலிங்கமாக"[227] என்பர்.

---
[221]. நன்னூற் பாயிரப் பகுதியில் இஃது எடுத்துக் காட்டப் படுகிறது. -
[222]. குறள். 1. [223]. திருநா. 242 : 5.
[224]. குறள். 100. [225]. ஷ 5 : 1
[226]. ஷ 238:7 [227]. ஷ 76 : 4.
----------

"இழுக்கலுடையுழியூற்றுக்கோலற்றே, ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்"[228] என்பது திருக்குறள். திருநாவுக்கரசர், '"நினைவார்க்கெலாம் ஊற்றுத்தண்டொப்பர் போல் ஒற்றியூரரே?"[229]என்றார். இவைபோலும் பல திருக்குறட் கருத்துக்களையும் கருத்துடைய சொற்றொடர்களையும் இடை யிடையே தொடுத்துப்பாடும் நம் திருநாவுக்கரசர் அத்திருக்குறட் காலத்தை அடுத்து வந்த சங்க இலக்கியக்கருத் துக்களையும் கவினுடைய சொற்றொடர்களையும் கையாளுதலில் பின்னிடுகின்றார் இல்லை. பிறப்புமாறி மறுபிறப் பெய்துங்கால், ஒருவர்க்கு மறதியுண்டாகும் எனச் சங்கச் சான்றோர் கூறுவர்;

"சாதல் அஞ்சேன் அஞ்சுவல், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவதாயின், மறக்குவென் கொல் என் காதலன் எனவே"[230] என வருவது காண்க. இக்கருத்தைத் திருநாவுக்கரசர்,

"துறக்கப்படாத இவ்வுடலத்
துறந்து வெந்தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும்
பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி
வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பென் கொலோ,என்று என்
உள்ளம் கிடந்து மறுகிடுமே"[231]

என்று கூறுகின்றார் இறந்தார். எய்தும் மேலுலகைச் சங்கச் சான்றோர் வாராவுலகம் என்பதுவழக்கம்; "நீளிலே எஃகம் அறுத்த உடம்பொடு, வாராவுலகம் புகுதல் ஒன்றெனப் படை தொட்டனனே குருசில்"[232] எனப் பரணர் கூறுவது காண்க.

---
[228]. குறள். 415 [229].திருநா . 138:3
[230]. நற்றிணை 397
[231]. திரு நா. 114:8. இக் கருத்தையே பிறிதோரிடத்தில், '"மருவாகி நின் னடியே மறவேன் அம்மான் மறித்தொருகால் பிறப்புண்டேல் மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே:- (239 : 6.) என்று கூறுவர்
[232]. புறம். 341.
----------

இதனை நம் திருநாவுக்கரசர், நயந்தெடுத்து, "வாராவுலகு அருள வல்லான்றன்னை"[233] என்று மொழிந்து இன்புறுகின்றார், அதியமான் தந்த நெல்லிக் கனியை, யுண்ட ஒளவையார். சாதல் நீங்க எமக்கு ஈத்த மையின், நீலமணி மிடற்றனாகிய இறைவன் சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்று இருந்தாற் போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும் ' என்பராய், " போடு திருவின் பொலந்தார் அஞ்சி, பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே[234] என்றாராக, இதன்கண்,இறை வன் நஞ்சுண்டும் இறவாது நிலைபேறு உடையனாதலும், நஞ்சுண்ணாது அமுதுண்ட விண்ணோர் சாதல் நீங்காமை யும் குறிப்பால் விளங்குதல் கண்ட இளங்கோவடிகள், "விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்"[235] என்று எடுத்தோதினர். அதன் நயங்கண்ட நம் நாவரசர்,"தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதமுண்ட மற்று அமரர் உலந்தாலும் உலவாதானை"[236] எனப் பரிந்து பாடிப் பரவுகினறார்.

இனி, தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார், தொல்காப்பியரை "ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்" என்று குறிக்கின்றார். இப்பகுதிக்கு உரை கண்ட இடைக்காலச் சான்றோர் பலரும், ஐந்திரமாவது இந்திரனாற் செய்யப்பட்டதோர் இலக்கணம் என்று கூறுகின்றனர். இவ்வாறே சிலப்பதிகாரத்துக்கு அரும்பத உரை கண்ட சான்றோர், "புண்ணிய சரவணம் பொருந்து விராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்"[237] என வருமிடத்து விழுநூலாவது ஐந்திர வியாகரணம் என்று கூறுகின்றார். இவ்வாற்றால் பண்டை நாளில் ஐந்திரம் என்ற பெயரால் இலக்கணமொன்று இருந்தமை தெரிகிறது.

இவ்வைந்திரம் இந்திரமெனவும் வரும். இவ் விலக்கணத்தையும், இந்திரனுக்கு இறைவன் அருளினன் என்பது போதர, நம் திருநாவுக்கரசர், "இந்திரத்தை இனிதாக ஈந்தார்போலும்" [238]என்று தெரித்தருளுகின்றார், இவ்வாறே ஆகமங்களின் வரலாற்றையும் அகத்தியன் வரலாற்றையும், திருநாவுக்கரசர், "அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை"[239] என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு இறைவன் கலையும் கல்வியும் நல்கிய வள்ளன்மையைச் சான்றோர் எடுத்தோதக் கண்டே காமிகம் காரணம் முதலிய சிவாக மங்களைக் கற்பிக்கும். கல்விநிலையங்கட்குக் கோயிலி லேயே இடம் வகுக்கலாயினர்; பின்வந்த தமிழ் நாட்டு வேந்தர்கள் இறைவன் திருக்கோயிலை பல்வகைக் கலைகட்கும் கல்விக்கும் சீர்த்த இடமாகச் செய்து வளர்த்தனர். இதனை அறியாத தன்னலவாதிகள் இந்நாளில் திருக்கோயில்கள் கல்வி நிலையமாதல் கூடாது எனப் பிணங்கிப் பேதைமை மொழிகின்றனர்.

-----
[233]. திருநா. 217 : 2. [234]. புறம். 91.
[235]. சிலப். 12 "வம்பலர்". [236]. திருநா. 264 : 5.
[237]. சிலப். 11:9, 89,
[238]. திருநா. 212:8. [239]. திருநா. 264:3.
-------------

திருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும்

திருநாவுக்கரசருடைய திருப்பெயர், திருநாவுக்கரசு தேவர், திருநாவுக்கரசு நாயனார், திருநாவுக்கரசு முதலியார், திருநாவுக்கரையர், திரு நாவுடையபிள்ளை, நாவுடைப் பெருமான் எனப் பலவகையாகக் கல்வெட்டுக்களில் வழங்கப் பெற்றுளது. அவற்றுள், திருநாவுக்கரசு தேவர் என்பது பெருவழக்கு. ஏனைய சிறுபான்மையாக வழங்கின. கோவிலூரென வழங்கும் திருவுசாத்தானத்திலுள்ள கல்வெட்டொன்று[240] திருநாவுக்கரசரைத் திருநாவுக்கரசு நாயனாரெனக் குறிக்கின்றது. திருச்செந்தூர்க்கு அண்மை யிலுள்ள ஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்று[241] அவரைத் திருநாவுக்கரசு முதலியார் என வழங்குகிறது. திருநாவுக்கரைய தேவர் என்னும் பெயரைத் தஞ்சைப் பெரியகோயில்கல்வெட்டும்[242] திருமழபாடிக் கல்வெட்டும்’[243] பிறவும்[244] கூறுகின்றன.

---
[240] A. R. No. 186 of 1908. [241] A. R. No. 456 of 1930.
[242]. S. I. I. Vol.II. partii. No. 41.
[243]. A. R. No. 37 of 1920.
[244]. திருப்புகலூர் A. R. 68 of 1928. திருவாரூர் A. R. No.137 1934.
------

தஞ்சை மாவட்டத்துச் சூலமங்கலத்தில் கோச்சடைய வன்மரான பராக்கிரம பாண்டியன் காலத்துப் பத்தாமாண்டுக் கல்வெட்டொன்றும்[245] பன்னிரண்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்றும்[246] நாவரசரைத் திருநாவுடைய பிள்ளையாரென வழங்குகின்றன. திருவெண்காட்டிலுள்ள கல்வெட்டொன்று[247] தேவகன்மி நாவுடைப் பெருமான் திருவெண்காடு பட்டன்என ஒருவன்பெயரைக்குறித்தலால், திருநாவுக்கரசர்க்குத் திருநாவுடைப் பெருமான் என்றொருபெயரும் வழங்கி வந்ததென்று தெரிகின்றோம்.

இந்நாளில் பிராமணரிடையிலும் சிவப்பிராமணரிடையிலும் தம்மைத் தமிழ் மொழியினர் என்று கருதும் கருத்து இறந்து போயிற்று. அதனால், திருநாவுக்கரசருடைய பெயரைப் பிராமணமக்கட்கு இடும் மரபு மறைந்தொழிந்தது. இந்த மரபு இடைக்காலத்தில் நிலவினமையால் அது பெருக வழங்கியிருந்தது; அதனைத் தஞ்சாவூர்ப் பெரிய கோயில் கல்வெட்டு[248] எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறது. சிவப் பிராமணர் பலர், பொற் சுவரன் திருநாவுக்கரையனான தர்ம சிவன்[249] கம்பன்தி ருநாவுக்கரையனான சதா சிவன் அப்பி,திருநாவுக்கரையனான நேத்திர சிவன்,[250] ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்,[251] மாதேவன் திரு நாவுக்கரையனானவிஞ்ஞான சிவன்,[252] சத்திதிருநாவுக்கரை யனான ஈசான சிவன்,[253] ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன்[254] எனத் திருநாவுக்கரைசர் திருப்பெயரைத் தாங்கிச் சிறப்பெய்தி யிருந்தமை தெளிவாகிறது.

----
[245]. A. R. No. 564 of 1921.
[246]. A. R. No. 294 of 1911.
[247]. S. I. I. Vol. V. No. 985.
[248]. S. I. I. Vol. II. part iii. No. 65.
[249]. S. I. I. Vol. II. part iii. No. 65.para 6
[250]. Ibid, para 7. [251]. Ibid. para 8.
[252]. Ibid. para. 10. [253]. Ibid. para.
[254]. Ibid. para. 13.
----------

இவ்வாறே அரசியல் தலைவர் பலர் திருநாவுக்கரசர் திருப்பெயர் தாங்கியிருந்தனர். சயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் குன்றங்கிழான் திரு நாவுக்கரைசு தேவன்'[255] என்றும், "அம்பலவாணன் திரு விசலூரானான திருநாவுக்கரையன்"[256] என்றும், கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துத் திருவடகுடி மகா தேவர் தானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்[257] என்றும் வருவன போதிய சான்று பகர்வனவாம்.

இனி, திருநாவுக்கரசர்க்கு இளமைப் போதில் அவருடைய பெற்றோர் இட்ட பெயர் மருணீக்கி எனத் திருத்தொண்டர் புராணம்[258] கூறுகிறது. மருணீக்கி, இருணீக்கி யென்பன போன்றபெயர்களை மக்கட்கு இடும்வழக்கு முன்னாளில் இருந்ததென்றற்குத் திருவதிகைக்கோயில் வாகீசன் மடத்துக்கு நிலம் விடும் கல்வெட்டொன்றில்[259] கையெழுத்திட்ட சான்றோர்களுள், இருணீக்கி கோன் என்றொருவர் கையெழுத்திட்டிருப்பது சீர்த்த சான்றாக விளங்குகிறது. -

திருநாவுக்கரசர் என்னும் தூய தமிழ்ப் பெயரை வட மொழிப்படுத்தி வாகீசர் என வழங்குவதும் உண்டு. நாவரசர் முன்னைப் பிறவியில் வாகீசரென்ற முனிவராய் விளங்கினரென்றும், எனவே, வாகீசரெனவும் அவர்க்குப் பெயருண்டென்றும் திருத்தொண்டர் புராணத்தால் அறிகின்றோம். அதனால் திருநாவுக்கரசரைச் சில கல்வெட்டுக்கள் வாகீசரென்று குறிக்கின்றன. திருக்காளத்திப் பகுதியிலுள்ள தொண்டைமானுற்றுாரில் கி. பி. பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய பராந்தக சோழ வேந்தனுடைய கல்வெட்டொன்று[260] பள்ளிப்படை வாகீசுரப்படாரர் என்று ஒருவர் உண்டெனக் கூறுகிறது. அதனை வற்புறுத்துவது போலத் திருவதிகையிலுள்ள கல்வெட்டொன்று திருநாவுக்கரசர் திருமடத்தை வாகீசன்மடம்[261] என வழங்குகிறது.

---
[255]. A.R. 95 of 1914. [256]. A.R. 133 of 1925.
[257]. S.I.I. Vol.VIII. No. 675,
[258]. பெரியபுராணம் திருநா. 18.
[259]. S.I.I, Vol.VIII. No.324.
[260]. S.I.I, Vol.VIII. No.529. [261]. Ibid. No. 324.
------
இனி, திருநாவுக்கரசர், திருக்கயிலை செல்லும் முயற்சியில் ஈடுபட்டு உடல் தேய்ந்து ஒய்ந்து போன காலத்தில், தமக்குக் காட்டியருளப்பெற்ற நீர் நிலையில் மூழ்கித் திருவையாற்றில் குளித்தெழுந்த கோலத்தோடே சென்று இறைவன் திருக்கயிலைக் காட்சி நல்கப்பெற்ற வரலாறு பண்டை நாளை நன்மக்கட்குப் பெரும் வியப்பினை விளைத்தது. அதனல், அவர்கள் அவரைக் குளித்தெழுந்த நாயனார் என்றும் வழங்கினர். அவர் திருப்புகலூர் வந்து அடைந்த போதும் அக்கோலத்தோடே யிருந்த மையின், அவ்வூரவர் அவரைக் குளித்தெழுந்த நாயனார் என்றே வழங்கி வந்தனர். திருப்புகலூரில் அவர் இறைவன் திருவடியடைந்த பின் அவர்க்குக் கோயிலெடுத்து அதனைக் குளித்தெழுந்த நாயனார் கோயில் என்று குலவிய அன்புடன் கூறலுற்றனர். மேலும், நம் சோழ மன்னனை இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருப்புகலூரிலுள்ள "குளிச்செழுந்த நாயனர்" கோயிலுக்கு உரிய நிலங்கள் சிலவற்றைத் தோட்டக் குடியான இராசேந்திர சோழநல்லூர் ஊரவையினர் இறையிலியாக்கிய செய்தியைத் திருப்புகலுார்க் கல்வெட்டுக்[262] கூறுவது கொண்டு இவ்வுண்மை துணியப்படுகிறது.

இனி, தெள்ளாறெறிந்த நந்திவன்மன் முதலிய பல்லவ மன்னர் காலத்தேயே திருநாவுக்கரசர் முதலியோர் அருளிய திருப்பதிகங்களைக் கோயில்களில் ஓதும் மரபு இருந்து வந்ததாயினும், முதல் இராசராச சோழ தேவர்கால முதலே திருநாவுக்கரசர் திருவுருவத்தைக் கோயில்களில் எழுந்தருள்வித்து நாடோறும் பூசனையும் ஆண்டுதோறும் பெருவிழாவும் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

----------
[262]. A.R. No 86 of.1928
----------

முதல் இராசராசன் காலத்திலும் அவன் மகன் இராசேந்திரன் காலத்திலும், தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலும்[263] திருமழபாடியிலும்[264] முறையே பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனுன தென்னவன் மூவேந்த வேளானும், திருமால் அரங்கனை திருப்பள்ளித் தாமப்பிச்சன் என்பவனும் அவன் மனைவியும், வீர ராசேந்திரன் காலத்தில் அகத்திய கொண்டாவில் உத்தம சோழ கங்கனை செல்வகங்கன் மனைவியும்[265], திருவாரூர்க் கோயிலில் இரண்டாங் குலோத்துங்கனும்[266], திருவலஞ்சுழியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் தேவரடியார் ஆட் கொண்டான் தேசும் திருவும் உடையாளும், கிழக்கடைய நின்றாளும் ஆகிய இவ்விருவரும்[267], திருக்கச்சூரில் மூன்றாங் குலோத்துங்க சோழனும்[268], சூலமங்கலத்துக் கரி யுரித்த நாயனார் கோயிலில் சடையவன்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் திருநாவுடையார் என்பவரும்[269], இராமநாதபுர மாவட்டத்துத் திருப்புத்துார் உருத்திர கோட்டிச்சுரத்தில் அருவியூர் வாணிகன் புற்றிடங் கொண்டான் திருச்சிற்றம்பல முடையானை ஞானசம்பந்தன் என் பவனும்[270], திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருள்வித்து நாட்பூசனை முதலிவற்றுக்கு வேண்டும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

---
[263]. S.I.I.Vol.II.Part ii.No.38 & 41.
[264]. A.R.37 of 1920. [265]. A.R.559 of 1906.
[266]. S.I.I.Vol.VII.No.485. [267]. S.I.I.Vol.VIII.No.228.
[268]. A.R.316 of 1909. [269]. A.R.294 of 1911.
[270]. A.R.300 of 1928.
----

திருநாவுக்கரசர் பிறந்த ஊராகிய திருவாமூரிலும்[271]அவர் இறுதிக் காலத்தே இருந்து வழிபாடு செய்த திருப்புகலூரிலும்[272] எழுந்தருளப் பெற்றிருந்த திருநாவுக்கரசர் திருவுருவ வழிபாட்டுக்கென, முதல் இராசராசன் காலத்திலும் முதற் குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் நிவந்தமாக விடப்பட்டுள்ளன. இவ்வாறே, திருப்புத்தூர்[273] கோவிலுரர் எனப்படும் திருவுசாத்தானம்[274], சூலமங்கலம்[275] கோயில் தேவராயன் பேட்டை யென வழங்கும் திருச்சேலூர்[276] முதலிய இடங்கள் பலவற்றிலும் கோயில் கொண்டிருந்த திருநாவுக்கரசர்க்கு வழிபாடு நடத்தற்கு நிவந்தங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன.

[271]. A.R.137 of ….. [272]. А.R.68 of 1928.
[273]. A.R……
[274]. A.R.186 of 1908. [275]. A.R.
[276]. A. R. 278 of 1923.
-----

பல திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களுள் தொடக்க விழா திருநாவுக்கரசர் திருவிழாவாக இருந்திருக்கிறதென்று தீர்த்தநகரி யென வழங்கும் திருத்தினை நகர்க்கோயில் கல்வெட்டால்[277] அறிகின்றோம். திருநெல்வேலி மாவட்டத்து ஆற்றூர்க் கோயில் கல்வெட்டொன்று[278] திருநாவுக்கரசுக்குத் திருவிழாச் செய்தற்கு வேண்டும் ஏற் பாட்டைச் செய்கின்றது.

[277], A. R. 121 of 1904. [278]. A. R. 456 of 1930.

இவ்வண்ணம் நன் மக்களால் சிறப்பும் பூசனையும் செய்து வழிபடப் பெற்ற திருநாவுக்கரசரை அவர் வாழ்ந்த காலத்தே வழிபடு கடவுளாகப் பேணி வழிபட்டுய்ந்த அந்தணர் பெருமானாகிய அப்பூதியடிகளைப் போலவே,முதல் இராசராசன் காலத்தில் திருப்புகலூரில் அங்கி குமர கிரம வித்தனான பொற்கோயில் சண்டேசுர் யோகியென்னும் அந்தணர், "திருநாவுக்கரைய தேவர்க்கு உச்சியிலும் இரவிலும் போனகம் படைத்தற்கு நெல்லும் காசும் தந்து வழிபட்டிருக்கின்றார்[279].

இனி, திருநாவுக்கரசர் பெயரால் திருமடங்கள் நம் தமிழகத்தில் பல இடங்களில் இருந்திருக்கின்றன. திருவீழி மிழலையில் திருநாவுக்கரசர் மடமெனவும்[280], திருப்பாற்றுறையில் திருநாவுக்கரசுதேவன் மடமெனவும்[281], திரு. விளச்சேரியில் திருநாவுக்கரசு மடமெனவும்[282], சேரமாதேவியில் திருநாவுக்கரசர் மடமெனவும்[283] திரிபுவனையில் திருநாவுக்கரசு மடமெனவும்[284] திருவதிகையில் திருநாவுக்கரைச தேவர் மடமெனவும்[285], பெரிச்சி கோயிலில் திருநாவுக்கரசன் மடமெனவும்[286], பட்டீச்சுரத்தில் திருநாவுக்கரசு மட மெனவும்,[287] திருப்பாசூரில் திருநாவுக்கரசன் மடமெனவும்[288] கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

---
[279]. A. R. 68 of 1928. [280]. A. R. 402 of 1908 [281]. 583 of 1908, [282]. 303 of 1911.
[283]. 653 of 1916. [284]. 203 of 1919, [285]. A. R.382 of 1921 . [286]. A. R. 80 of 1924,
[287]. A. R. 261 of 1927. [288]. A. R. 127 of 1930.
----------

இவ்வாறே தில்லையிலும் திருப்பூந்துருத்தியிலும் திருநாவுக்கரசு பெயரால் திரு மடங்கள் இருந்திருக்கின்றன. வெனினும், தில்லையிலிருந்தது இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போக, திருப்பூந் துருத்தியிலிருந்தது செவ்வாய்க்கிழமை மடமாக மாறி யிருக்கிறது. திருக்குறுக்கை வீரட்டேசுரர் கோயிலில் திரு. நாவுக்கரசு திருக்குகையென ஒரு மடம் இருந்ததென அவ்வூர்க் கல்வெட்டொன்று[289] கூறுகிறது. பூதக்குடிச் செப்பேடு ஒன்று அங்கே திருநாவுக்கரசர் மடமொன்றிருந்ததெனத். தெரிவிக்கிறது. திங்களூர், புகலூர்,திருநல்லூர் முதலிய இடங்களிலும் திருநாவுக்கரசர் திருமடங்கள் இருந்தன எனத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது.

[289]. A. R. 219 of 1917.

பிரான்மலையிலுள்ள மங்கைபாகர் திருக்கோயிலில் திருநாவுக்கரசர் பெயரால் திருநாவுக்கரசு திருமண்டபம் என ஒரு மண்டபம் இருந்திருக்கிறது. திருவதிகையில் பிடாரி' கோயிலின் வடக்கிலிருந்த காட்டையழித்துச் சாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோரைக் குடியேற்றி அத் தெருவுக்குத் திருநாவுக்கரசன் திருவீதி யெனப்பெயரிட்டு வழங்கினர். திருநாவுக்கரசர் பால் தமக்கிருந்த அன்பு மிகுதியால் தம்மக்கட்கு மூத்த திருநாவுக்கரசு இளைய திரு. காவுக்கரசு என்றும், தாம் நிறுவிய தண்ணீர்ப் பந்தல், தம் மனைக்கண் இருந்த அளவைகள் முதலியவற்றுக்குத் திரு நாவுக்கரசு என்றும் பெயரிட்டு அன்புசெய்தனர் அப்பூதியடிகள் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றமை முன்பே காட்டப்பட்டது. இவ்வாறே, திருவாவடுதுறையில் ஓர் அன்பர் தன்மக்கட்கு மூத்ததிருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டிருந்தனர். அவருள் இளைய திருநாவுக்கரையர் என்பார் திருவாவடுதுறைக் கற்றளிப் பிரானுக்கு அரிய திருப்பணி செய்தனர். அங்கே அவருடைய திருவுருவத்தைச் செய்தமைத்து அதன்கீழ் 'இவ் ஆர்க்கற்றளிப் பிரானர்க்குத் தொண்டர் இளைய திருநாவுக் கரையர்' [290] என்பது எழுதப்பட்டுள்ளது. பிரான் மலைப்பகுதியில் திருநாவுக்கரசு நாழி என்று ஓர் அளவை வழங்கிவந்ததாகக் குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று[291] கூறுகிறது.

[290]. A. R. 131 of 1925.
[291]. S. I. I. Vol. VIII. No.440.

திருநாவுக்கரசரை வாகீசரென வழங்குவதுண்டென்று முன்பே கூறினோம். திருவதிகையில் இருந்த திருநாவுக் கரசர்மடம் வாகீசன் மடமென்று வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது[292]. அப்பெயரும் தமிழ் மக்களால் நன்கு போற்றப்பட்டு வந்துளது. பலர் அப்பெயரைத் தமது இயற்பெயராகக் கொண்டுள்ளனர். திரு வாலங்காட்டில் மணலூருடையான் வாகீசன் என்று ஒருவரும், திருவாரூர் வடக்கில் மடத்து முதலியார் பிள்ளை வாகீசப்பெருமாள் என்று ஒருவரும், நொடியூரில் நொடி யூருடையான் சொக்கன் அரையங்குளவனை வாகீசப் பெருமாள் என்று ஒருவரும் இருந்திருப்பதைக் கல்வெட் டுக்கள் தெரிவிக்கின்றன. தஞ்சைமாவட்டத்துப் பெருஞ் சேரியில், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் அவ்வூரிலுள்ள சிவன் கோயிலைக் கற்றளியாக்கிய செய்தி கூறும் கல்வெட்டு அக்கோயிலைத் திருவாகீசுரம் என்று குறிக்கிறது. இது வாகீசனென்ற செல்வரொருவரால் கட்டப் பெற்றதாகவும் இருக்கலாம். திருவொற்றியூரிலிருந்த மட மொன்றிலிருந்து கொண்டு "சோம சித்தாந்தம் வக்காணித்த" "வாகீச பண்டிதரென ஒருவர் இருந்து ஞானாமிர்தம் என்னும் தமிழ் நூலைச் செய்துள்ளார். முதற் பராந்தகன் காலத்தில் தொண்டை மானாற்றூரில் வாகீசுரபண்டிதன் தூம்பு[293] என ஒரு தூம்பும் இருந்திருக்கிறது.

[292]. S.l I Vol. VIII. No. 324.
[293]. S. I.I, Vol.VIII.No. 529.
----------

மதுரைத் திருஞானசம்பந்தர் மடத்துத் தலைவர் திருஞானசம்பந்த பண்டாரம் என வழங்கியது போலப் பதினாறாம் நூற்றாண்டில் பிரான்மலையிலிருந்த மடமொன்றில் [294] திருநாவுக்கரசு பண்டாரமென ஒருவர் சிறந்திருந்தார்.

இவ்வண்ணம் திருநாவுக்கரசர்க்குத் திருக்கோயில் எடுப்பித்தும் சிறப்பும் பூசனையும் செவ்வனம் செய்தும் திரு மண்டபம், திருமடம், திருவீதி முதலியன அமைத்தும் திரு நாவுக்கரசரை வழிபட்ட இடைக்கால நன்மக்கள், அவர் வழங்கிய திருத்தாண்டகங்களை ஓதுதற்கென்றே நிவந்தங்கள் விட்டனர். திருக்குறுக்கை வீரட்டத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திருநாவுக்கரசு அருளிய திருத்தாண்டகம் ஓதுதற்கு[295] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்ஙனமே திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களுட் காணப்படும் அரிய சொற்றொடர்கள் பல இறைவனுக்கும் இறைவிக்கும் மக்கட்கும் பெயராக வைத்துச் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. திருப்பாதிரிப்புலியூரில் இறைவனை, "தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே"[296] என்று பாடினாராக, அவ்வூர்க்கல்வெட்டு, இறை வசீனத் "தோன்றாத் துணையாளுடையார் "[297] என்றும், திருச்செம்பொன் பள்ளியில் இறைவனைப் பாடுங்கால், "தெருவெலாம் உழல்வார்செம்பொன் பள்ளியார்,ஒருவர்தாம் பல பேருளர் காண்மினே" [298] என்று குறித்தாராக, அவ்வூர்க்கல்வெட்டு அவரைத் தெருவெலாம் உழல்வார் நாயனார்[299] என்றும் குறிக்கின்றன.

நாவரசர் திருநாகைக் காரோணம் சென்று இறைவனைப் பாடுங்கால் "கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே, வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே"[300]என்று பாடினர்; இடைக்காலத்தார் மகளிரை வேனெடுங்கண்ணி யென்று பெயரிட்டு வழங்குவாராயினர்; "இதனை இவன் தங்கை வேல் நெடுங்கண்ணி "[301] எனவரும் கல்வெட்டால் அறியலாம்.

---
[294]. A. R. 199 of 1924.
[295]. A. R. 219 of 1917.
[296]. திருநா. 94: 1. [297]. S. I. l. Vol.VII. No.741.
[298]. ஷ 149 : 4. [299]. A. R. 171 of 1925.
[300]. ஷ 104 : 2 [301]. S. I. I. Vol. VIII. No.497.
----------

திருச்சாய்க்காட்டில் இறைவனைப் பாடலுற்ற திருநாவுக்கரசர் கண்ணப்பர்க்கு இறைவன் அருள்புரிந்த வரலாற்றை ஒரு திருப்பாட்டில் ஒதலுற்று, "ஒருகணை யிடந்து அங்கு அப்பத் தவப்பெருந் தேவுசெய்தார் சாய்க்காடு மேவினாரே"[302] என்றார், தவப்பெருந்தேவு செய்தார் என்ற இத்தொடரையே பெயராகக் கொண்ட சான்றோரும் திருக்காளத்தியில் இருந்திருக்கின்றார் ; இதனை, "திருக்காளத்தியாண்டார் தவப்பெருந்தேவு செய்தார் எழுத்து”[303] என வருதலால் அறியலாம்.

திருமழபாடியில் இறைவனை அடிகள் "மழபாடி வயிரத்தூணே"[304] என்றாராக, அதனையே தமக்குப் பெயராகக் கொண்டார் ஒருவர், "ஆனை மங்கல முடையான் பஞ்சநதி வயிரத்தூண்[305] என்று திருமழபாடிக் கல்வெட்டொன்றில் குறிக்கப்படுகின்றார். தில்லையிற் கூத்தப்பெருமானைக் கண்டு பரவிய திருநாவுக்கரசடிகள் "இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே"[306] என்றாராக, எடுத்த பொற்பாதம் என்ற தொடரை நயந்த சான்றோர் ஒருவர், தில்லையில் ஊர்க்கணக்கராயிருந்திருக் கிறார்; இதனை, "இவை அருளால் ஊர்க்கணக்கு எடுத்த பொற்பாதப்பிரியன் எழுத்து"[307] எனத் தில்லைக்கோயிற் கல்வெட்டுக் கூறுவது காணலாம். இவ்வாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகத் தொடர்கள் பல ஆடவர்க்கும் மகளிர்க்கும் இனிய பெயர்களாய் அழகு செய்திருக்கும் காட்சி கல்வெட்டுக்களில் மணிபோல் ஆங்காங்குக் கிடந்து இன்பஞ் செய்கின்றன என்று எடுத்தோதியமைகின்றாம்.

---
[302]. திருநா. 65 : 8. [303]. S.I.I. Vol.VIII.No. 497
[304]. திருநா. 254 : 1. [305]. S.I.I. Vol. V. No.632.
[306]. திருநா. 81 : 4. [307]. S.I.I. Vol. III. No.43.
---------

4. ஐயடிகள் காடவர்கோன்


வரலாறு

ஐயடிகள் காடவர்கோன், பதினோராம் திருமுறையிற் காணப்படும் நாயன்மார்களுள் ஒருவர். காடவர்கோன் எனக் குறிக்கப்படுவது ஒன்றே இவர் பல்லவர் குலத்து வேந்தருள் ஒருவர் என்பதை நன்கு புலப்படுத்துகிறது.

காஞ்சிமா நகர்க்கண் இருந்து அரசு மேம்பட்ட பல்லவருள் சிம்மவிஷ்ணுவன்மன் வழிவந்த மன்னர் நம் ஐயடிகள் காடவர்கோன். இவருக்கு முன்னே காஞ்சியிலிருந்து அரசு புரிந்தவன் இரண்டாம் மகேந்திரவன்மன்.

ஐயடிகளது பெயர் செப்பேடுகளில் பரமேச்சுர வன்மன் என்றே காணப்படும். இவர் ஆட்சிக்கு வந்த சின்னாட் களுக்கெல்லாம் சளுக்கி வேந்தனை முதல் விக்கிரமாதித் தனோடு பெருவள நல்லூர் என்னும் இடத்தே கடும்போர் உடற்றி வெற்றி பெற்றார். அதன் பயனாகச் சளுக்கிவேந்தன் கைப்பற்றியிருந்த பகுதியையும் இவர் அடிப்படுத்தினர். சிவபெருமான்பால் பேரன்பு கொண்ட இவர், நாட்டில் பலவிடங்களில் திருக்கோயில் திருப்பணி செய்தார். கூரம் என்னுமிடத்தில் சிவன்கோயில் ஒன்றைக் கட்டி அதற்குத் தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய "வித்தியா வினிதன்" என்பதனால் வித்தியாவினித பரமேச்சுரபல் லவனிச்சுரம் என்று பெயரிட்டார். அவ்வூருக்கும் பரமேச்சுரமங்கலம் என்று பெயர் தரப்பட்டது.

பின்பு, அவ்வூரை இருபத்தைந்து கூறாக்கி, அவற்றுள் மூன்று கூறுகளைக் கோயிற் பணிபுரியும் அனந்தசிவம், புல்லசருமன் என்ற இருவர்க்கும், ஒரு கூற்றைப் பாரதம் படிப்போருக்கும், ஒரு கூற்றைப் பாரதம் படிக்கும் மண்டலத்தில் நீர் தெளித்து விளக்கேற்றி வைப்பதற்கும் ஏனையவற்றை இருபது சதுர்வேதிகட்கும் அளித்தார். இவ்வகையில் இவர்க்கு ஆண்டு முதிரவே அரசியலில் உவர்ப்பு உண்டாயிற்று. அதனால், இவர் தன் மகன் நரசிங்க வன்மனுக்கு-அரசியலைத் தந்து விட்டுச் சிவப்பணி புரியத் தொடங் கினர். சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் இடம் பல வற்றுக்கும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் அழகிய வெண்பாவைப் பாடிப் பரவி வந்தார்.

இவ்வாறு வருபவர், தில்லைக்கு வந்து அங்கே திருக்கூத்தியற்றும் இறைவனை வணங்கி வெண்பாவொன்று பாடி இன்புற்றார். இவர் தில்லைக்கு வந்தபோது அங்கே சில நாள் தங்கினார். பின்னர், ஏனைத் திருக்கோயில்கட்கும் சென்று இறைவனைப் பணிந்து திருப்பணி செய்த காடவனார், நெடுநாள் உயிர் வாழ்ந்திருந்து இறைவன் திருவடி நீழலெய்தினர். இவ்வரலாறு, திருத்தொண்டர் புராணமும் பல்லவருடைய செப்பேடுகளும் துணையாகக் கொண்டு காணப்பட்டதாகும்.

வரலாற்றாராய்ச்சி

பரமேச்சுரன் என்பது இவரது இயற்பெயரெனக் காணப்படுகின்றது . எனினும், இவர் சிவத்தொண்டு செய்யும் "மாதவம்"[1] பூண்டபின், அடிகள் எனப்பட்டனராதல் வேண்டும். அடிகளாகிய காலத்தில் அரசு புரிந்த வேந்தன் இவருடைய மகனை இரண்டாம் நரசிங்கவன் ஆதலால், அவனும் அவன் நாட்டு நன்மக்களும் இவரை ஐயரடிகள் என வழங்கினர். இடைக்கால வேந்தர்கள் தம் தந்தையை ஐயரென வழங்கியதனால் இவ்வுண்மை வலியுறுகிறது.

சோழவேந்தனை வீர ராசேந்திரன் தன் தந்தையான இராசேந்திரனைப் "பூருவதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின ஐயர்க்கு யாண்டு இருபத்து மூன்றாவது”[2] என்றும், அழகிய பல்லவனை கோப் பெருஞ் சிங்கன் புதல்வன் அழகிய பல்லவன் வீரராயனை கச்சியராயன், கல்வெட்டொன்றில்[3] தன் தந்தை கோப் பெருஞ்சிங்கனை,"ஜயதேவர்" என்றும் குறிப்பன ஈண்டு நோக்கத் தக்கனவாம். ஆகவே, நரசிங்க வன்மனாலும் அவனாட்டு நன் மக்களாலும் பரமேச்சுர வன்மனர் ஐயரடிகள் என வழங்கப் பெற்றார் என்பதும், அதுவே பின்பு ஐயடிகள் என வழங்கலாயிற்று என்பதும் தெளிவாம்.

---
[1]. பெரியபு. சத்தி: 7.
[2]. S. I. I.Vol.IV. No. 529.
[3]. S. Í. í. Vol.XII No. 134.
---------

இனி, இவரைக் காடவர்கோன் என நம்பியாரூரர் கூறினாராக, நம்பியாண்டார் நம்பி காடவர்கோன் என்னாது பல்லவன் என்றே கூறுதலால், பல்லவர்க்குக் காடவர் என்பதும் ஒரு பெயராதல் விளங்குகிறது. நம்பியாரூரர்க்கு முன்னே இருந்த தமிழ்ச் சான்றோர் எவரும் இலக்கியங்களில் பல்லவர்களைக் காடவர் என வழங்கியது கிடை யாது. காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பல்லவவேந்தருள், சிறப்புடைய முதன் மகேந்திர வன்மன், முதல் நரசிங்க வன்மன், இராச சிங்கன் முதலி யோர் பல சிறப்புப் பெயர் கொண்டுள்ளனர், அவற்றுள், காடவர் என்ற பெயரோ அதன் வடமொழிப் பெயர்ப்போ காணப்படவில்லே. பல்லவர்கள் தென்னாடு போதருமுன் காடு சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்திருந்தனர் என்னும் வர லாறு கொண்டு அவர்களைத் தமிழ்ச் சான்றோர் காடவர். எனவும், காடவர்கோன் எனவும் வழங்கினராதல் வேண்டும்.

ஆயினும், காடவரென முதன் முதலாகத் தமிழ் இலக் கியங்களில் வைத்துப் பாடிச் சிறப்பித்தவர் நம்பியாரூர ராதலின், அந்நலமுணர்ந்த பிற்காலப் பல்லவர்கள் தம்மைக் காடவர் என்றும், காடவர் குலத்தார் என்றும் கூறிக்கொண்டனர். காஞ்சிவைகுந்தப்பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள், நந்திவன்ம பல்லவ மல்லன் தந்தையான இரணிய வன்மனைக் "காடவேசகுல ஹிரண்ய வன்ம மகா ராஜர்"[4] என்றும், அவையே நந்திவன்மனைக் குறிக்குங்கால் காடவகுலம் சிறக்கத் தோன்றிய சத்தியந்த சுபுத்திரன்' என்றும் குறிக்கின்றன. நிருபதுங்கனுடைய கல் வெட்டொன்று[5] அவன் மனைவியைக் காடவன் மாதேவி யார் என்று கூறுகிறது. இனி, வடமொழிச் செப்பேடுகள் பலவும் பல்லவர்களைக் காடு வெட்டிகள் என்றே குறிக்கின்றன. ______________________________

[4]. S. I. I. Vol. IV. No. 135; A. R. No. 37 of 1888.
[5]. S.J. I. Vol. XII. No. 65.
----------

கங்க வேந்தர்களான சீபுருஷன், சிவமாறன் முதலியோர் செப்பேடுகள்[6] காஞ்சியைக் காடு வெட்டிகள் ஆண்டனரெனக் குறிக்கின்றன. சத்தியவேடு கல்வெட்டுக்கள்[7] பல்லவர் கீழிருந்த தலைவர்களுள் இருவரைக் காடு வெட்டிப் பேரரையன் என்றும் காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன்என்றும் கூறுகின்றன நிருபதுங்கனுடைய பாகூர்ச் செப்பேடுகள், ஒரு தலைவனை, "விடேல் விடுகு காடுபட்டி தமிழ்ப் பேரரையன்"[8] என்று செப்புகின்றன. காடு வெட்டி யெனவரும் குறிப்புக்களுள் மிகப் பழமையானது சிரகுண்டா கல்வெட்டிற்காணப்படுவது[9] எனவும், சிம்ம விஷ்ணுவின் சகோதரன் பீமவன்மன் வழி வந்தோரே காடவர் எனக் குறிக்கப்படுகின்றனர்[10] எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

ஐயடிகள் காடவர்கோன், "வெய்ய கலியும் பகையும் மிகை யொழியும் வகை அடக்கி...அரசளிப்பார்"[11] "பிற புலங்கள் அடிப்படுத்து….. "அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில் [12] வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார்"[13] என்று திருத் தொண்டர் புராணம் கூறுகிறது. இதன்கட் குறித்த "பகை யொழியும் வகை யடக்கிய திறம் சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனோடு போர் செய்து பெற்ற வெற்றியால் விளக்கமாகிறது. இதனை இக்காடவர் கோனுடைய கூரத்துச் செப்பேடுகள்[14] விரியக் கூறுகின்றன. இவர் கலி யொழியும் வகை யடக்கிய திறத்தைக் காசாக்குடிச் செப் பேடுகள்'[15] இவர் பெயரனான இரண்டாம் பரமேச்சுரன்-

---
[6]. My. Arch. Reports. 1923 : 52: 3. 1907, p. 3. Kondaji-I. Agrahara plates.
[7]. A. R. No. 31 & 32 of 1912.
[8]. Ep. Indi. Vol. XVIII.p. 11.
[9]. Ep. Car. Vol. VI. C. M. 50.
[10].Introduction to SII.Vol.XII. p. viii.
[11]. ஐயடிகள். புரா : 1.
[12]. Ibid 2. [13]. Ibid. 3.
[14]. S. I. I. Vol. I. No. 151.வரி : 19-49.
[15]. S. I. Í. Vol. II, part iii. No. 78. argeor.24 & 26.
-------------

மேல் ஏற்றிக் கூறுகின்றன; ஆயினும், அவை இவர் ஏனைமன்னர் எல்லாரையும் வென்று “பிறபுலங்கள் அடிப்படுத்து” மேன்மையுற்றதை வற்புறுத்துகின்றன.

வேளுர்ப்பாளையம் செப்பேடுகள்,[16] இவர் பகைவர் செய்த சூழ்ச்சிகளைக் கடிந்து சளுக்கர் சேனையாகிய இருட்கு ஞாயிறு போல் திகழ்ந்தார் என்று தெரிவிக்கின்றன. கூரமென்னும் ஊர்க்குப் பரமேச்சுரமங்கலம் எனப் பெயரிட்டுச் சதுர்வேதிகட்குக் கூறு செய்தளித்த செயல்,[17] ஐயடிகள் "அருமறையின் துறைவிளங்க " அரசளித்தாரென்பதை வற்புறுத்துகிறது."கலை பலவும் பணி செய்யப் பாரளித்தார்" எனச் சேக்கிழார் கூறுவதற்கேற்பத் தன் கலைகளாற் சிறக்கும் திங்களைப் போல இவரும் கலைத் துறைகளால் நிறைந்தவர்'[18] என்று கூரத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால், செப்பேடுகளால் சிறப்பிக்கப்பெறும் முதற் பரமேச்சுரவன்மனும், திருத் தொண்டர் புராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோனும் ஒருவரேயாதல் தெளிவாம்.

இனி, கலியொழியும் வகை யடக்கிய இவர் செயலே இவர் பெயரன் இரண்டாம் பரமேஸ்வரன் மேல் ஏற்றிக் கூறுவதும், இவர், நெற்றிக் கண்ணால் மேம்படும் சிவன் போலத் தன் காட்சி நலத்தால் மேம்பட்டவரெனக் கூறும் கூரத்துச் செப்பேடுகட்கு வேறாக, உதயேந்திரம் செப்பேடுகள் அச்சிறப்பை இரண்டாம் பரமேச்சுரனுக்கு ஏற்றி உரைப்பதும் உண்டு.[19] இவ்வாறு ஒருவர்க்குரிய சில சிறப்புக்கள் வேறொருவர்க்குரியனவாகக் கூறுவது இச் செப்பேடுகட்கு இயல்பாதலின், இச்சிறு வேறுபாடு பற்றி மயங்குதல் கூடாது.

---
[16]. S. I. I. Vol. II. part v. No. 98.
[17]. S.I.I.Vol.I. No. 151. [18]. S.I.I. Vol. I. No. 151.
[19]. S. I. I. Vol. II. part iii. No. 74.
----------

இனி, செப்பேடுகள் பலவும் கலிகடிந்தவன் என்றும், "பத்திமான்" என்றும், மனுமுறை வழாது ஆட்சி புரிந்தவன்'[20] என்றும் இரண்டாம் பரமேச்சுரனைக் கூறுதலின், அவனே ஐயடிகளாகலாமே எனின், அவன் நம்பி யாரூரர்க்குக் காலத்தாற் பிற்பட்டவனாதலின், அவ்வாறு கோடல் பொருந்தாது என அறிக.

--
[20]. S. I. I. Vol. II. part v. No. 98, agar. 14.
------

இனி, இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி யாகும். நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டிக் கூறுதலால், அவர் காலத்துப் பல்லவ வேந்தனான இரண்டாம் நரசிங்க வன்மனுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஐயடிகள் என்பது துணிவாம். மகேந்திர வன்மனால் கட்டப்பெற்ற சிராமலைக் கோயிலை இவர் பாடுதலால், அவன் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது தேற்றம். மகேந்திரவன்மனுக்கும் நரசிங்க வன்மனுக்கும் இடையே முதல் நரசிங்கவன்மன், இரண்டாம் மகேந்திர வன்மன், முதற் பரமேச்சுர வன்மன் என்ற வேஙந்தர் மூவர் இருந்திருந்தனர். இவருள் முதல் நரசிங்கவன்மன் ஏழாம் நூற்றாண்டின் இடையில் இருந் தவனாதலின், முதற் பரமேச்சுரனை ஐயடிகள் காடவர் கோனது காலம் ஏழாம் நூற்றண்டின் இறுதியாமென்பது துணியப்படுகிறது. பதினோராந் திருமுறையில், நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனர் நூல்களுக்கு முன்னே ஐயடிகள் காடவர்கோனது க்ஷேத்திரத் திருவெண்பா வென்னும் நூல் வைக்கப்பெற் றிருக்கும் முறையும் இக்கால வரையறைக்கு ஒராற்றால் சான்றாவது ஈண்டுக் கருதத்தக்கது.

நூலாராய்ச்சி

ஐயடிகள் காடவர்கோன் செய்ததாக க்ஷேத்திரத் திரு வெண்பா ஒன்று தான் கிடைத்துள்ளது. இதன்கண் இரு பத்து நான்கு திருவெண்பாக்களும், அவற்றுள்ளே இருபத்து இரண்டு திருப்பதிகளும் காணப்படுகின்றன. அத் திருப்பதிகள், இருபத்து இரண்டுமாவன : திருச்சிற்றம் பலம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவிடைவாய், திரு நெடுங்களம், குழித்தண்டலை, திருவானைக்கா, திருமயிலை, உஞ்சேனை மாகாளம், வளைகுளம், திருச்சாய்க்காடு, திரும்ப்பாச்சிலாச்-சிராமம், திருச்சிராமலை, திருமழபாடி, திருவாப்பாடி திருவேகம்பம், திருப்பனந்தாள், திருவொற்றி யூர், திருமயானம் என்பன. இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு திருவெண்பாவாற் குறிக்கப் பெறுகின்றது : இவ் வெண்பாக்களில் பத்தாம் திருவெண்பாவும் இருபத்து மூன்றாம் திருவெண்பாவும் பொது. இவற்றுள் பத்தாம் திருவெண்பா,

"படிமுழுதும் வெண்குடைக்
கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து
மும்மை- கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச்
சோதிக்குத் தொண்டுபட்டு
ஓடு ஏந்தி உண்பது உறும் " [21]

என வருவது. பாரெல்லாம் ஆளும் முடியரசர் செல்வத்தினும் பரமசிவனுக்குத் தொண்டுபட்டு ஓடேந்தி இரந்துண்பது மும்மை நலம் தருவதாம் என்ற இக்கருத்தையே, திருவொற்றியூரைப் பாடிய திருவெண்பாவில், ஒற்றியூர் இறைவனை வணங்கி, "இரந்துண்டு இருக்கப்பெறின்," "தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு, எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன்"[22] என வேறு வகையில் வைத்து வற்புறுத்துகின்றார். இதனை வியந்து கண்ட நம்பி யாண்டார் நம்பி, "முடியரசாம் அத்திற்கு மும்மை நன்று ஆள் அரற்காய் ஐயமேற்றல் என்னும் பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம் பல்லவனே"'[23] என்று கூறுவாராயினர்.

---
[21].க்ஷேத்திரத் திருவெண்பா. 10. [22]. ஷ. 22.
[23]. திருத்தொண்டர்திருவந்தாதி 56
-----

ஏனை இருபத்து மூன்றாம் திருவெண்பா, இறைவன் திருப்புகழ் பாடும் பாட்டரவம் கேட்ட பகல் செய்யும் இன் பத்தை, வெண்குடைக் கீழ் வீற்றிருந்த செல்வந்தானும் விளைவியாது என்ற கருத்தமைய நிற்பது.[24] இவ்வாறு இறைவன் திருப்புகழ் பாடக்கேட்கும் செயலைச் சிறப்பித்ததனால் இவர்க்குப் பின், தமிழ்நாட்டுக் கோயில்களில் மூவர் முதலிகள் அருளிய திருமுறைகளை ஓதும் மரபு உளதாயிற்று. மேலும், இவர்க்கு முன்னிருந்த பல்லவ வேந்தர் பலரும் வேதம் ஓதுதற்குக் கோயில்களில் நிவந்தங்களும், வேதம் ஓதுபவர்கட்கு இறையிலியாக நிலங்களும் ஊர்களும் வழங்கினரேயன்றித் திருமுறைகளை ஓதுதற்கு ஏற்பாடு ஒன்றும் செய்யாமையே இதற்குப் போதிய சான்றுபகரு கிறது. சேக்கிழாரும் "வடநூல் தென்தமிழ் முதலாம் பன்னுகலை பணி செய்யப் பாரளிப்பார்[25] என்பது இதனை வலியுறுத்துகிறது.

இவர் பாடிய திருப்பதிகளுள் குடந்தையென்பது கும்பகோணம். இது பழைய நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் குடமூக்கில் எனவும் குடமுக்கு எனவும் வழங்கும். இது திருநாவுக்கரசராலும்[26] பாடப் பெறும் சிறப்புப் பெற்றது; இப்போது நாகேச்சுரம் என வழங்குகிறது. திருமுறைகள் இதனைக் குடந்தைக் கீழ்க்கோட்டமென்று வழங்குகின்றன. திருத்துருத்தி இப்போது குற்றாலம் என வழங்குகிறது. இது, திருமுறைகளில் திருத்துருத்தி[27] யெனவும், கல்வெட்டுக்களில் வீங்குநீர்த் துருத்தி[28] யெனவும் கூறப்படுகிறது. திருவிடைவாயென்பது இப்போது திருவிடைவயல் என வழங்கும் ஊராகும். இதனைக் கல்வெட் டுக்கள் திருவிடைவாயில்[29] என்று குறிக்கின்றன. திரு ஞானசம்பந்தர் இதனை "விடைவாய் "என[30] வழங்குவர். பாண்டவாய் என்னும் ஆற்றின் கரையில் இருப்பது பற்றி ஐயடிகள், இதனைப் பாண்டவாய்த் தென்னிடை வாய்[31] என்று சிறப்பிக்கின்றார்.

---
[24]. க்ஷேத்திரத் திருவெண்பா. 23,
[25]. ஐயடிகள், புரா. 3. [26].திருநா. 289.
[27]. திருஞா 234;திருநா.42.சுந்.74
[28] A. R. No. 99 - 107 of 1926.
[29].A. R. No. 12 of 1918.
[30] திருஞான. 384. [31]. க்ஷேத்தி. 7.
----------

ஐயடிகள் கூறும் குழித்தண்டலை இப்போது குளித்தலையென வழங்குகிறது. இதற்கருகே காவிரியின் தென்கரையி லுள்ள கோயில் கடம்பந்துறை யென்பது. இக்கடம்பந்துறையைத் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்[32]. இக் கடம்பந்துறையை யுடையவூர் குழித்தண்டலையாதலின், ஐயடிகள், கடம்பந்துறை யென்னாது குழித்தண்டலையெனக் கூறினராதல் வேண்டும். "மயிலைத் திருப்புன்னையங் கானல்" என்பது திருமயிலையில் புன்னையங் கானலிடத்துக் காபாலீச்சுரமாகும்.

திருஞானசம்பந்தரும் இம் மயிலையை மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை[33]" என்று பாராட்டிப் பாடியுள்ளார். வளைகுளம் என்பது இப்போது வளர்புரமென வழங்குகிறது : திருத்தணிகைக்குக் கிழக்கில் மூன்று கல் அளவில் உளது. இதனைக் கல் வெட்டுக்கள், "சயங்கொண்ட சோழமண்டலத்து மேலூர்க் கோட்டத்து மேலூர் நாட்டு வளைகுளமான பட்டர்சுரவல்லி சங்கிராம ராமசதுர்வேதி மங்கலம் "என்றும், இங்குள்ள சிவன் கோயிலை நாகீச்சுரமென்றும் [34]கூறுகின்றன.

திருவாப்பாடி திருவாய்ப்பாடி யெனவழங்குகிறது. இவ்வூர் மண்ணியாற்றின் தென்கரையில் இருப்பதாகத் திருநாவுக்கரசர்4 கூறுவர். அது கொள்ளிடத்தின் கிளையாதல் பற்றி, கொள்ளிடத்தின் தென் திருவாப்பர்டி'[35]என்று ஐயடிகள் ஓதுகின்றார். திருப்பனந்தாள் திருக்கோயிலை, அடிகள் " திருப்பனந்தாள் தாடகையவீச்சரம்" [36]என்பர் : இவ்வாறே திருஞானசம்பந்தரும் :தண்பொழில் சூழ் பனந்தாள் திருத்தாடகையீச்சரமே"[37] என்று சிறப்பித்துள்ளார். கச்சிமயானமென்றும், நாலூர் மயானமென்றும், திருக்கடவூர் மயானமென்றும் மூன்று மயானங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள், ஐயடிகள் குறிக்கும் திரு மயானம் இன்னது என வரைந்து கூறற்கு இல்லை :

---
[32]. திருநா. 132 [33]. திருஞானசம். 383.
[34]. A. R. No. 26 of 1911.
[35]."மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரை மேல் மன்னி, அந்தமோடளவிலாத அடிகள் ஆப்படியாரே - 48 : 5. ;
[36]. க்ஷேத்தி. 19. 6. ஷ 21. [37]. திருஞான. 320.
----------

ஆயினும், திருக்கடவூர் மயானமொன்றே திருமயான மெனவும், அங்குள்ள இறைவன் திருமயானப் பெருமான் எனவும் தனிப்படக்[38]கூறப்படுதலின், அடிகள் திருமயானம் எனக் குறிப்பது திருக்கடவூர் திருமயானமாகக் கருதுதற்கு இடந்தருகிறது.

ஐயடிகள் பாடியருளிய திருவெண்பா இருபத்துநான் கனுள் திருப்பதிகளைக் குறிக்காமல் பொதுப்பட நிற்கும் வெண்பா இரண்டும் அரசியற் செல்வத்தின் சிறுமையினையே எடுத்தோதுவது காணுமிடத்து, அவை, அரசியலைத் தம் மகற்கு அளித்த காலத்து அவர் பாடியன எனவும், ஏனைய, அவர் பற்பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வழி பட்டு ஏற்ற திருப்பணிகளைச் செய்தபோது பாடியன எனவும் தெரிகின்றன. இவ்விருவகைக் கருத்துக்களை யுடைய பாட்டுக்களையும் ஒருசேரத்தொகுத்து க்ஷேத்திரத் திருவெண்பா எனப் பெயரிட்டுப் பதினனோராந்திருமுறையுள் ஒன்றாகப் பிற்காலச் சான்றோர் தொகுத்துள்ளனர் என்பது புலனாகிறது. மேலும், திருப்பதிகளைப்பாடும் ஒவ் வொருவெண்பாவும் சாதற்காலத்துத் துன்பத்தையே பன்னிப்பன்னி பேசுதலின், அடிகள், அரசியலில் உவர்ப்பும் முதுமை வரவுகண்டு அச்சமும் மிகக்கொண்டு அரசியலைத் துறந்து திருப்பதிதோறும் செல்லும் நிலையில் இவற்றைப் பாடினர் என்பது தேற்றமாம்.

இவ்வாறு திருக்கோயிற் பணியாலும் க்ஷேத்திரத் திரு வெண்பாப் பாடிய செந்தமிழ்த் திருப்பணியாலும் சிறப் புற்றதோடு, நம்பியாரூரரால் திருத்தொண்டத்தொகையில் திருத்தொண்டருள் ஒருவராக வைத்துச் சிறப்பித்துப் பாடும் பேறுபெற்றது கண்ட பிற்காலத்து நன்மக்கள், ஐயடிகள் என்ற பெயரை மக்கட்கு இட்டுவழங்கினர். முதல் இராசராசன் மகனை முதல் இராசேந்திரனுடையகல்வெட்டுக்களுள், திருக்கண்டியூர்க் கல்வெட்டொன்று திருக்கண்டியூர்[39] லகுளீஸ்வர பண்டிதர் மடத்திற் பயிலும் மாணாக்கன் ஒருவனே, "சிவப்பிராமணன் பாரத்து வாசி ஐயடிகள் ஐயாறன்" என்று குறிக்கின்றது. .
______________________________
[38]. A. R. No. 259 of 1925.
[39]. S. I. I. Vol. V. No. 578.
----------

5. நம்பியாரூரர்

வரலாறு

தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோவலூர் வழியாகச் சென்று, திருப்பாதிரிப்-புலியூருக்கு வடக்கில் கட லொடு கலக்கும் தென் பெண்ணையாறு, திருக்கோவலூர்க் தக்கிழக்கிலிருந்து கடலொடு கலக்குங் காறும் பரந்தவெளி யில் பாய்கிறது. அதன் வளவிய நீரைப் பெற்று நலஞ். சிறக்கும் நாடு பண்டைநாளில் திருமுனைப்பாடி நாடு என வழங்கிற்று. இதுதொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ளமைபற்றி நடுநாடெனவும் கூறப்படும். இந் நாட்டில் பெண்ணையாற்றின் தென்பகுதியில் திருநாவ லூரில் சடையனாரென்னும் சிவப்பிராமணருக்கும், இசை ஞானியாரென்னும் அவர் மனைவியாருக்கும் பிறந்தவர் நம்பி ஆரூரர். அந்நாளில் அப்பகுதியை நரசிங்க முனையரையர் என்னும் தலைவர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் நம்பியாரூரருடைய வனப்பைக் கண்டு ஆர்வமிகுதியால் தனது பெருமனையில் வளர்த்து வந்தார். ஆரூரர், நிரம்பிய கல்விகற்றுத் திருமணம் செய்து கொள்ளற்கு உரிய செவ்வியெய்தியபோது, அந் நாட்டைச் சேர்ந்த புத்தார் என்னும் ஊரில் வாழ்ந்த சடங்கவி என்னும் சிவப் பிராமணருடைய மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். திருமணம் புத்தூரில் நடைபெற்றது. திருமணச்சடங்கு கள் நடந்துகொண்டிருக்கையில் முதிய வேதியரொருவர் தோன்றி மணமகன் தனக்கு அடிமை என்றும், தனக்குப் பணி செய்வது அவரது கடமை என்றும் திருமணத்திற் கூடியிருந்த சான்றோர் முன் வழக்கிட்டார் ; திருமணமும் சிதைவுற்றது. அங்கிருந்த சான்றோர் நடுநின்று உரைத்ததற் கேற்ப, மணமகனும் வழக்கிட்டவேதியரும் பிறரும் வழக் குத் தொடுத்த அந்த முதுவேதியர் இருக்கும் திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றனர். அங்கே கூடிய பேரவையில், அவ்வேதியர், நம்பியாரூரரும் அவருடைய முன்னோரும் தமக்கு வழிவழியாக அடிமைப்பணி செய்யும் கடமை யுடையர் என்பதை ஆவணம் காட்டி நிறுவினார். அவை யினர், வேதியர் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்க அனைவரும் பின்தொடரச் சென்று திருக்கோயிலுள் அவர் புகுந்து மறைந்தார். திகைத்து நின்ற அக்கூட்டத்திடையே நம்பியாரூரர் காண இறைவன் காட்சி தந்து சிறப்பித் தருளினார். நம்பியாரூரர் உடனே இறைவனை இனிய பாட்டுக்களாற் பாடத் தொடங்கினார். யாவரும் மருண்டு கையற்று அகன்றனர். " பித்தா பிறை சூடி" எனத் தொடங்கிப்பாடிய அத்திருப்பதிகத்தின்கண், நம்பியாரூரர் தான் இறைவனுக்கு வழிவழியாக அடிமையே என்பதை எடுத்தோதி இன்புற்றார். வழக்கு நிகழும்போது அவர் வன்மொழிகள் பல வழங்கியது பற்றி வன்றொண்டர் என்ற பெயரும் அவர்க்கு எய்துவதாயிற்று.

நம்பியாரூரர் அன்று முதலே பிறந்த மனைத்தொடர்பு நீங்கி இறைவன் எழுந்தருளும் திருக்கோயில் கட்குச் சென்று திருப்பதிகம் பாடுவதையே திருப்பணியாகக் கொண்டார். அதனால், அவர் அங்கிருந்து திருநாவலூர், திருத்துறையூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பரவிக் கொண்டு, திருநாவுக்கரசர் சூலை நோயின் நீங்கி உய்தி பெற்றுயர்ந்த திருவதிகை நோக்கி வந்தார் ; வருகையில், வழியில் சித்தவட மடத்தில் தங்கினர். அன்றிரவு இறைவன் முது வேதியர் ஒருவர் உருவில் வந்து அவர்க்குத் திருவடி தீக்கை செய்து மறைந்தார். அதனைத் தெளிந்த நம்பியா ரூரர் " கறைகொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்... இறை போதும் இகழ்வன் போல் யானே[1]" என்பது முதலிய பலவற்றை இனிய திருப்பாட்டுக்களால் எடுத்திசைத்து இறைவனைப் பரவினார். இவ்வாறு திருப்பதிகம் பாடும் பணி செய்துவரும் நம்பியாரூரர், திருமாணிகுழி, திருத்தினைநகர் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு தில்லையை யடைந்து அம்பலவாணனைப் பன்னாளும் பணிந்து வந்தார். வருகை யில் ஒருநாள் " திருவாரூர்க்கு வருக" என்று ஒரு திரு வருட் குறிப்பு அவருக்குத் தோன்ற, உடனே திருவாரூர் நோக்கிச் செல்வார் கொள்ளிடம் கடந்து சீர்காழிப் பதி தோன்றக் கண்டார்.

[1]. சுந்த. 38: 1.
----

திருஞான சம்பந்தர் தோன்றித் திருவருள் ஞானம் பெற்றுச் சிறப்பெய்திய சீர்த்தியுடையதென்பது பற்றிச் சீர்காழிப்பதியை மிதித்தற்கு அவரது உள்ளம் அஞ்சிற்று
அதனால், ஆரூரர், அதன் எல்லைப் புறத்தை வணங்கி வலம் வருகையில் எதிரே இறைவன் அவர்க்குத் திருத்தினை நகரிற் காட்டிய திருக்கோலக் காட்சியை நல்கியருளினார். அதுகண்டு பேரின்பம் உற்றவர் சீர்காழிக்குட் சென்று திருக்கோயிலில் இறைவனைத் திருப்பதிகம் பாடிச் சிறப் பித்தார். பின்பு திருக்கோலக்கா, திருப்புன்கூர், மயிலாடு துறை, அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய திருப்பதி களை வணங்கிச் சென்ற நம்பியாரூரர் திருவாரூரரை நெருங்குதலும், அவ்வூரவர் அவரை எதிர் கொண்டு அழைத்துச் சிறப்புப் பல செய்து வரவேற்றனர். நேரே இறைவன் திருக்கோயிற்குச் செல்பவர் தெருவிலேயே "எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்[2] என முடியும் பாட்டுக்களைக் கொண்ட திருப் பதிகத்தைப் பாடினார். அங்கே அவர் திருக்கோயிலுக்குட் சென்று இறைவனைப் பரவி நிற்கையில் 'யாம் உமக்குத் தோழரானோம் ; இனி நீர் மணக்கோலத்தோடே இருக்க" என்று ஒரு திருவாக்குப் பிறந்தது. கேட்டார் அனைவரும் பெரு வியப்புற்று நம்பியாரூரரைத் தம்பிரான் தோழர் என்ற பெயர் சூட்டிச் சிறப்பித்தார்கள். நம்பியாரூரர் திருவாரூரிலே தங்கி இறைவனைத் திருப்பதிகம் பாடி வழி பட்டு வருவாராயினர்.
---
[2]. சுந்த. தே . 73.

இவ்வாறு வரும் நாளில், அவ்வூரில் வாழ்ந்த பரவையார் என்ற நங்கையொருவரைக் கண்டார்; அந்நங்கையாரும் இவரைக் கண்டார். இருவர் கருத்தும் காதலால் ஒன்றின. நம்பியாரூரர் இறைவனை வேண்டி அவரது அருட்டுணை யால் பரவையாரைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொண்டு இனிதிருந்தார்.

ஒருநாள் அவர் இறைவனை வழிபடச் சென்றபோது தேவாசிரியன் என்னும் மண்டபத்தில் சிவனடியார் சிலர் இருக்கக்கண்டு இவர்கட்கு அடியனாதல் வேண்டும் என விழைந்து இறைவனை வேண்டினர்; இறைவன் அடியவர் களின் வரலாறுகளை அவருள்ளத்தே தோற்றுவித்துத் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துத் தந்தருளினர்; அதுவே முதலாகக்கொண்டு ஆரூரர் திருத்தொண்டத்-தொகை[3] யென்னும் திருப்பதிகத்தைப் பாடித் தம் வேட்கையை நிறைவு செய்து கொண்டார்.

திருவாரூர்க்கு அருகில் குண்டையூரில் வாழ்ந்த செல்வ 'ரொருவர், நம்பியாரூரர்க்கு நெல்லும் பிறபொருள்களும் உதவி வந்தார். ஒருகால் மழையில்லாமையால், ஆரூரர்க்கு உதவுவதற்கென நெல்முட்டுப்படுவது கண்டு அச்செல்வர் வருந்தினார். அன்றிரவே, அவர் இருந்த ஊரில் நெல் மலை போல் குவிந்து விட்டது. அதனை அவர் நம்பியாரூரர்க்குத் தெரிவிப்ப அவர், "நீளநினைந்து அடியேன்"[4] என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிச் சிவபெருமானை இறைஞ்சினார். இரவில், அந்நெல் முற்றும் திருவாரூர்த் தெருவில் அவரவர் வீட்டெதிரே குவிக்கப் பெற்றது. அதனை அறிந்ததும், ஆரூரர் அவரவர் வீட்டருகே யிருந்த நெற்குவையை அவரவரே பெறுக எனத் தெரிவித்தருளினார்.
வருகால் திருநாட்டியத்தான்குடியில் வாழந்த கோட்புலியார் என்னும் தலைவர், நம்பியாரூரரைத் தமது ஊர்க்கு அழைத்துச் சென்று தம்முடைய மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்ற மகளிர் இருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆரூரரை வேண்டினார். நம்பி யாரூரர் அவ்விரு பெண்களையும் தம்முடைய மக்களாகவும் தம்மை அவர்கட்குத் தந்தையாகவும் கூறிச் சிறப்பித்தார்.

[3]. சுந். தே. 39. [4]. ௸. 20.
----

திருவாரூரில் பரவையாருடன் நம்பியாரூரர் வாழ்ந்து வரு கையில், திருவா ரூர்ப் பங்குனி விழாச் செலவிற்குப் பொன் வேண்டும் எனப் பரவையார் அவர்பால் முறையிட்டனர். ஆரூரர் இறைவனைப் பரவி வழிபட நினைந்து திருப்புக லூர்க்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினார். உறங்கும் போது தலையணைக்காக அங்கே திருக்கோயிலுக்குள் கிடந்த செங்கற்களுள் இரண்டை வைத்துக் கொண்டு உறங்கினார். விடிந்தபோது அக்கற்கள் பொற் கட்டிகளாக மாறியிருந்தன. அது கண்டவர், இறைவனது வள்ளன் மையை வியந்து, "தம்மையே புகழ்ந்து இச்சைபேசினும்"[5] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி இன்புற்றனர்.

பின்னர், நம்பியாரூரர் காவிரிக் கரையிலுள்ள நன்னிலம், திருவீழிமிழலை, திருவலஞ்சுழி, திருக்குடந்தை முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டே திருவாலம் பொழிலை அடைந்து தங்கியிருக்கையில் "மழபாடி காண மறைந் தனையோ" என்று ஒரு குறிப்பு அவர் கனவில் உள தாயிற்று. உடனே அவர், கண் விழித்து எழுந்து காவிரி யைக் கடந்து வடகரை வழியாகத் திருமழபாடி யடைந்து "பொன்னார் மேனியனே"[6] எனத் தொடங்கும் திருப்பதி கம் பாடி, மழபாடி இறைவனை வணங்கினார். அங்கிருந்து திருவானைக்கா முதலிய திருப்பதிகளை வழிபட்டுக் கொண்டே திருப்பாச் சிலாச்சிராமம் சென்று சேர்ந்தார். அங்கேயும் அவர்க்குப் பொன் வேண்டி யிருந்தமையின், இறைவன்பால் அக்கருத்தைத் தெரிவித்துக் கொண்டார். பொருள் வரச் சிறிது காலம் தாழ்த்தது. அப்போது " வைத்தனன் தலைக்கே"[7] எனத் தொடங்கும் திருப்பதி கத்தைப் பாடி முடித்தார் ; பொருளும் வந்து சேர்ந்தது. இறைவன் பேரருளை நினைந்து நெஞ்சு உருகிப் பரவிய ஆரூரர், திருமுதுகுன்றத்துக்குச் செல்லும் கருத்துக் கொண்டு, இடையிலுள்ள திருப்பதிகளை வணங்கின வராய்த் திருக்கூடலையாற்றூர் வந்து சேர்ந்தார். ஊரருகே வருகையில் வேதியரொருவர் கண்பட, அவரை முது குன்றுக்கு வழிகாட்டுமாறு நம்பியாரூரர் கேட்டார்; அவர் கூடலையாற்றூர் செல்லும் வழியைக் காட்டி மறைந்தார். அதுவும் இறைவன் திருவருட் செயலே எனத் தெளிந்த ஆரூரர், "வடிவுடை மழுவேந்தி"[8] என்ற திருப்பதிகத்தால், "அந்தணன் வழிப்போந்த அதிசயம் அறியேனே" என்று பாடிப் பணிந்து கூடலையாற்றூர்ப் பெருமானைக் கும்பிட்டு மகிழ்ச்சி கூர்ந்தார்.

[5]. சுந். தே. 34. [6]. ௸ 24. [7]. ௸. 14. [8]. சுந். தே. 85.

திருமுதுகுன்றம் சென்று சேர்ந்த நம்பியாரூரர், அங்கே சின்னாள் தங்கியிருந்தாராக, அப்போது அவர்க்குப் பொன் வேண்டுவதாயிற்று. அதனால் அவர் இறைவனை வழிபடவும் பன்னீராயிரம் பொன் கிடைத்தது. அது பெற்றுப் மெருமகிழ்வு கொண்டு இன்புறும் ஆரூரர், இறை வன் பேரருளைப் பேணி நினைந்து, திருவருட் குறிப்பின்படி அதனை அங்கே ஓடும் மணிமுத்தாற்றில் எறிந்து விட்டுத் தில்லைச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டே திருவாரூர் வந்து சேர்ந்தார்.

அங்கே பரவையார் மனையில் இருந்து வரும் நாளில் ஆரூரர்க்குத் தாம் மணிமுத்தாற்றில் இறைவன் அருளிய பொன்னை இட்டதும், அதனைத் திருவாரூர்த் திருக்குளத் தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருளிய குறிப்பும் நினைவு கூர்ந்து பரவையார்க்குத் தெரிவித்தார். ஆற்றிற் கெடுத்துக் குளத்தில் தேடுவார் யாரும் இல்லை என்ற குறிப்புத் தோன்றப் பரவையார் முறுவலித்தார். அது பொறாத நம்பியாரூரர் முதுகுன்றவாணரை நினைந்து திருப்பதிகம் பாடிக் கொண்டே பொன்னைத் தேடலுற்றார். எட்டுத் திருப்பாட்டுக்கள் முடிந்தது பொன்னும் அகப்படுவ தாயிற்று. பாட்டும் முடிந்தது ; முத்தாற்றில் எறிந்த, பொன் முற்றும் கை வந்தது.

நம்பியாரூரர், ஒருகால் திருக்கடவூர் திருநள்ளாறு முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சீர்காழி திருக்கோலக்கா முதலிய திருப்பதிகளின் வழியாகத் திருக்குருகாவூர்க்குச் செல்லும் கருத்தினரானார். வழிச் செலவால் அவர்க்கும் உடன் போந்த அடியார்க்கும் பசியும் நீர் வேட்கையும் தோன்றிப் பெருகி வருத்தின. குருகாவூர்க் கருகில் இறைவன் ஒரு குளிர்ந்த பந்தரிட்டு அதன் அயலில் பொதிசோறும் தண்ணீரும் அமைத்திருந்தார். ஆரூரர் அது கண்டதும் பந்தரின் கீழேயிருந்து அங்கிருந்த வேதியர் தந்த பொதிசோற்றையுண்டு தண்ணீர் அருந்தி அயர்ச்சி போக்கிக் கொள்ளச் சிறிது கண்ணயந்தார். விழித்தெழுந்து பார்க்கையில் அங்கே பந்தரும் இல்லை; 'சோறு நல்கிய வேதியரும் இல்லை. ஆகவே, நம்பியாரூரர் தமக்கு வழியில் தோன்றிப் பொதிசோறு தந்தவர் இறை வன் எனவே தெளிந்து குருகாவூர்ப்பெருமானை "இத்தனை யாமாற்றை"[9] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் பரவிக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்.

சின்னாட்குப்பின் நம்பியாரூரர் தொண்டை நாட்டுத் திருப்பதிகளைக் கண்டு வணங்கும் விருப்பமுற்றுத் திருக் கழுக்குன்றம் சென்று பரவிக் கொண்டு திருக்கச்சூர் சென்று அடைந்தார். அங்கே அவர்க்கு இறைவன் அரு ளால் வேதியர் ஒருவர் சோறு இரந்து வந்து கொடுத்துப் பசி தீர்த்தார். திருவருட் பாங்கை உய்த்துணர்ந்து "முதுவா யோரி”[10] எனத் தொடங்கும் திருப்பதிகத்தை மனமுருகிப் பாடி வணங்கினார். அதன்பின் திருவேகம்பத்தைப் பணிந்து கொண்டு திருக்காளத்திக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே இருந்தபடியே சீபருப்பதம் திருக்கேதாரம் முதலிய திருப் பதிகளைப் பண்கனியும் பாடல்களாற் பாடிப் பரவி விட்டுத் திருவொற்றியூரைச் சென்றடைந்தார்.

[9]. சுந். தே. 29. [10]. சுந். தே. 41.

திருவொற்றியூரில் இருந்து கொண்டு இறைவனுக்குத் திருமாலைத் திருப்பணி செய்து கொண்டிருந்த சங்கிலி யார் என்னும் நங்கையாரைக் கண்டு திருமணம் செய்து கொள்ள விருப்பமுற்றுஒற்றியூர் இறைவன் பால் வேண்டிக் கொண்டார். இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி நம்பியாரூரர் வேட்கையைத் தெரிவித்து அவரை மணந்து கொள்ளுமாறு பணித்தருள, அவர் தம் உடன்பாடு தெரி வித்து, 'ஆரூரர்க்குத் திருவாரூரில் விருப்பம் மிக வண்டே ' என முறையிட்டார். இறைவன் நம்பியாரூரர் கனவில் தோன்றி, " சங்கிலியை மணத்தல் வேண்டின் பிரியேன் என்று ஒரு சூள் செய்து தரல் வேண்டும்" என இசைப்ப, அவர், " அங்ஙனமே செய்வேன் ; அப்போது தேவரீர் திருக்கோயிலினீங்கி மகிழ மரத்தடியில் இருத்தல் வேண்டும்" என்றார்.

மறுநாள் சங்கிலியார், தோழியர் சூழத் திருவொற்றியூர் இறைவனை வணங்க வந்தபோது, நம்பியாரூரர் தம் கருத் தைத் தெரிவித்து அவரது உடன்பாட்டையும் பெற்று, இறைவன் திருமுன்னர் நின்று பிரியாச்சூள் செய்து தருவ தாக அவரை அழைத்தாலும், அருகில் நின்ற தோழியர், "இறைவன் திருமுன்னர்ச் செய்தல் கூடாது; புறத்தே நிற்கும் மகிழின்கீழ்ச் செய்வதே முறையாகும்" என்றனர்; வேறு ஒன்றும் செய்தற்கில்லாமையால் ஆரூரர் அவ் வண்ணமே செய்தார். திருமணம் சிறப்புற நடைபெற்றது. ஆரூரர் திருவொற்றியூரில் சங்கிலியார் மனையில் பன்னாள் தங்கியிருந்தார்.

இருந்து வருகையில், வேனிற்காலம் வந்தது. வேனில் விழாவில் திருவாரூர் இறைவனது திருவோலக்கச் சிறப் பும் நங்கை பரவையாருடைய ஆடல் பாடல்களின் சிறப்பும் ஆரூரர் நினைவில் தோன்றி அவரைத் திருவாரூர்க்குச் செல்லுமாறு தூண்டின ; சங்கிலியார்க்குச் செய்து தந்த சூளுறவை மறந்தார். "பத்திமையும் அடிமையையும்"[11] எனத் தொடங்கும் திருப்பதிகத்தை இறைவன் திரு முன்னர் நின்று பாடிப் பரவித் திருவொற்றியூர் எல்லையை நீங்கினார். உடனே அவருடைய கண்கள் இரண்டும் மறைந்தன. பெரு வருத்தம் எய்திய ஆரூரர், "இது சங்கிலியார் காரணமாக உண்டாயது" என உணர்ந்தார் ; ஆயினும், "அழுக்கு மெய்கொடு"[12] என்ற திருப்பதிகம் பாடிப் பரவிக்கொண்டே திருவாரூர் நோக்கி வருவாராயினர்.

[11]. சுந். தே. 51. [12]. சுந். தே. 54.

வருபவர், திருவெண்பாக்கம் என்னும் ஊரை அடைந்து அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் திருமுன் "பிழை யுளன பொறுத்திடுவீர்"[13] என்ற திருப்பதிகம் பாடி ஊன்று கோல் ஒன்று அருளப்பெற்றார். பின்பு, அவர் அடியார்சிலர் உடன் வரத் திருவாலங்காடு, திருவூறல் முதலிய திருப்பதி களை வணங்கிக் கொண்டு காஞ்சிமா நகரம் வந்து சேர்ந் தார். அங்கே, திருப்பதிகம் பாடி வழிபட்டார்க்கு, ஒருகண், பார்க்கும் தகுதிபெற்றது. அதனால் மகிழ்ச்சிகொண்ட ஆரூரர், "ஆலந்தான் உகந்து அமுது செய்தானை"[14] என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, அதன்கண் தாம் கண் பெற்ற செய்தியைக் 'கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று எடுத்தோதி இன்புற்றார்.

காஞ்சிமா நகரின் நீங்கிவரும் நம்பியாரூரர் திருவாமாத் தூர், திருவரத்துறை முதலிய திருப்பதிகளைத் திருப்பதிகம் பாடிப் பரவிக்கொண்டு திருவாவடுதுறை அடைந்து இறை வனைப் பதிகம் பாடிப் பரவித் திருத்துருத்தி சென்று சேர்ந்தார். அங்கே அப்போது அவர்க்கு உடம்பில் உண் டாகியிருந்த ஒருவகை நோய் அங்குள்ள திருக்குளத்தில் மூழ்கியதனால் நீங்கிற்று. அதனால், அவர், இறைவனை, "மின்னுமா மேகங்கள்"[15] எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் புகழ்ந்தார். சிலநாள் அங்கே தங்கியிருந்து பின் திருவாரூர் சென்று சேர்ந்தார்.

திருவாரூரில், இறைவன் திருக்கோயிலை வலம் வந்து பணிந்து, அன்பு மேலீட்டால், பல பதிகங்களைப் பாடிப் பரவிய நம்பியாரூரர், " மீளா அடிமை உமக்கேயாளாய்"[16] என்ற திருப்பதிகத்தில் தாம் இறைவற்கு ஆளாகிய தன் மையையும் மற்றைக் கண்ணின்றி வருந்தும் திறத்தையும் சொல்லி முறையிட்டார்; மற்றைக்கண்ணும் நலம் பெற் றது. நம்பி ஆரூரர் இரு கண்ணாலும் இறைவன் திருக் கோலத்தைப் பருகுவது போலும் ஆர்வமுடன் பார்த்துப் பேரின் புற்றார்.

[13]. சுந். தே. 89 {14]. சுந். தே. 61
[15]. சுந். தே. 74 [16]. சுந். தே 95.

இச் செய்தியறிந்த பரவையார், நம்பியாரூரை வரவேற்றற்குப் பிணங்குவாராயினர். ஆரூரருடைய முயற்சிகள் பயன்தாராவாயின. அவர் இறைவன்பால் முறையிடவும் பாவையார் இறைவனருளால் சினந்தணிந்து அவரை வரவேற்றார். ஆரூரர் ஆவர்மனையில் பண்டுபோல் இருந்து வந்தார்.

இஃது இவ்வண்ணமாக, பெருமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காமர் என்பார், நம்பியாரூரர். இறைவனைப் பரவையார் பால் தூது செல்ல விடுத்தார் என்பது கேட்டு, ஆறாச்சினமும் அருவருப்பும் கொண்டார். அவர்க்குச் சூலைநோய் உண்டாயிற்று. வருந்திக்கொண் டிருக்கும் அவரது கனவில், இறைவன் தோன்றி, "இந் நோய் நம்பியாரூரர் வந்தால் நீங்கும்; அவரும் வருவார் " என்றார். விழித்து எழுந்த ஏயர்கோன், நம்பியாரூரர் வந்து காண்பதன் முன் உயிர் விடுதல் தக்கது என நினைத்துத் தம் உடைவாளால் வயிற்றைக் கீறிக்கொண்டு உயிரொடுங்கினார். அவர் மனைவியார், தாழும் உடன் கட்டை யேறற்கு வேண்டும் ஏற்பாடு செய்து கொண் டிருந்தார். அப்போது நம்பியாரூரரும் அவ்வூர்வந்து சேர்ந் தார். அவருடைய மனைவியார் நிகழ்ந்தது ஒன்றும் வெளியே தெரியாதவாறு மறைத்து. ஆரூரரை நண்கு வர வேற்குமாறு வலரைப்பணித்து விட்டுத் தாம் கணவன் உடற்குப் பக்கத்தே யிருந்தார். மனைக்குள் வந்த நம்பியா ரூரர் செய்தி முற்றும் அருகிருந்தாரை உசாவியறிந்து தாமும் உயிர் துறக்க முற்பட்டார். அப்போது கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து நம்பியாரூரர் கைவாளைப் பற்றிக் கொண்டார். இருவரும் அன்பால் ஒருவர் ஒருவரைத் தழு விக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து பாராட்டினர். பின்பு, ஆரூரர், கலிக்கர மருடன் திருப்புன்கூருக்குச் சென்று இறைவனைப் பதிகம் பாடிப் பரவிக்கொண்டு திரு வாரூர் வந்து சேர்ந்தார். அங்கே, இறைவனைப் பணிந்த பின்னர்க்கலிக்காமர் ஆரூரர்பால் விடைபெற்றுக்கொண்டு பெருமங்கலம் சென்றார்.

சிலநாட்கள் சென்றன. நம்பியாரூரர் திருநாகைக் காரோணம் சென்று இறைவனைப் பாடிப் பொன், மணி, ஆடை, சாந்தம் முதலிய சிறப்புக்களைப் பெற்று வந்தார். இவ்வாறு இருக்கையில், சேரநாட்டு வேந்தரான சேர மான் பெருமாள் என்பார், இறைவன் அருளால் நம்பி யாரூரர் வாழ்ந்து வரும் திறம் அறிந்து அவரைக் காண்பதற்குத் திருவாரூர்வந்தார். நம்பியாரூரர் அவரை ஆர்வமுடன் வரவேற்று அன்பு செய்தார். அதனால் அவர்க்குச் சேரமான் தோழர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

சின்னாட்குப்பின், ஆரூரரும் சேரமானும் பாண்டிநாடு சென்று, அந்நாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றைவணங்கி வழிபட்டுக்கொண்டு மதுரை நகரை அடைந்தனர். அங்கே பாண்டிவேந்தனும் அவன் மகளை மணந்து அங்கே இருந்த சோழவேந்தனும் இருவரையும் வரவேற்றுப் பேரன்பு செலுத்தினர். மூவேந்தருடன் நம்பியாரூரர் திருவாலவாய் இறைவனைப் பணிந்து பரவித் திருப்பதிகம் பாடிச் சிறப் பித்துச் சிலநாட்கள் தங்கினர். பின்பு அவர் திருப்பூவணம் தொழப் புறப்படலும், மூவேந்தரும் உடன் வந்தனர். பூவேந்தர் சூழ்வரச் சென்று பூவணத் திறைவனைப்பாடிப் பரவிய நம்பியாரூரர், மதுரைக்கு மீளவந்து, திருவாப்ப னூர், திருவேடகம் முதலிய திருப்பதிகட்கு அவர்களுடனே சென்று பரவினர். அதன்மேல், திருப்பரங்குன்றம் சென்று மூவேந்தர் முன்னே இறைவனுக்குத் தொண்டு படுந்திறத்தை இனிய பதிகமொன்றாற் பாடிக்காட்டினர்.

பின்பு, பாண்டி வேந்தர் சோழர் பெருமான் என்ற இரு வேந்தர் பாலும் விடைபெற்றுக் கொண்டு, சேரமான் உடன் வர, ஆரூரர், திருக்குற்றலம் திருநெல்வேலி முதலிய தென் பாண்டித் திருப்பதிகளைத் தொழுது கொண்டு திரு விராமேச்சுரம் சென்றார். அங்கிருந்தவாறே, ஈழநாட்டு மாதோட்டத் திருக்கேதீச்சரத்தை அரிய திருப்பதிகம் பாடிப்பரவி விட்டுத் திருச்சுழியல் வந்தடைந்தார். சுழி யற் பெருமான் திருமுன் வணங்கி வழிபட்ட நம்பிகட்குத் திருக்கானப் பேர்க்குச் செல்ல வேண்டுமென்ற ஒரு திரு வருட் குறிப்புண்டாயிற்று. ஆகவே, அவர் திருக்கானப்பேர் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டார். அதன் பின் பாண்டி நாடு கடந்து சோழ நாட்டுப் பாதாளீச்சரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்.

சில நாட்கள் கழிந்தபின், சேரமான், நம்பியாரூரரைத் தமது சேரநாட்டுக்கு வருமாறு வேண்டினார். ஆரூரரும் அதற்கிசைந்து உடன் புறப்பட்டார். இருவரும் காவிரியின் தென்கரை வழியாகச் சென்று திருக்கண்டியூரை அடைந் தனர். எதிரே வடகரையில் திருவையாறு காட்சியளித்தது. அப்போது, காவிரி பெருக்கிட்டுச் சென்றமையின் மனங் கலங்கிய ஆரூரர், "எதிர்த்து நீந்த மாட்டேனான் எம்மான் தம்மான் தம்மானே"[17] என்றொரு பதிகம் பாடினார் ; வெள் ளம் பிளவுபட்டு வழிவிட்டது. இருவரும் ஐயாற்று இறை வன் அடி பணிந்துகொண்டு மேற்கே கொங்கு நாடு கடந்து மலைநாட்டுத் திருவஞ்சைக்களம் சென்று சேர்ந்தனர். அங்கே, அஞ்சைக்களத்து அப்பனை "முடிப்பது கங்கை"[18] என்றொரு பதிகம் பாடிப் பரவினார்.


சேரமான் பெருமனையில் உயர்விருந்தாய்ப் பன்னாட்கள் தங்கிய நம்பியாரூரர்க்குத் திருவாரூர் நினைவு உண்டா யிற்று. சேரமான்பால் பிரியாவிடை பெறுவார்க்கு அவர் பெரும் பொருள் நல்கினார். நம்பியாரூரர் அதனைப் பெற்றுக்கொண்டு கொங்குநாடு புகுந்து திருமுருகன் பூண்டிக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், கள்வர் சிலர் போந்து அப்பொருளை ஆறலைத்துச் சென்றனர். அவர் முருகன்பூண்டியை அடைந்து அங்கே கோயில் கொண் டிருக்கும் இறைவனை வணங்கி, இனிய பதிகம் பாடி முறை யிட்டார். அன்றிரவே அவர் இழந்த பொருள்கள் அத்தனை மும் வந்து சேர்ந்தன. ஆரூரர் அவற்றைப் பெற்றுக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்,

பின் பொருகால் நம்பியாரூரர் சேரமானைக்காண வேண்டு மென நினைத்துச் சேரநாட்டுக்குச் சென்றார். செல்லுங் கால், திருப்புக்கொளியூர் சென்று அங்கே முதலையுண்ட சிறுவன் ஒருவன் உயிர்த்தெழுமாறு அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அவிநாசியப்பரைத் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்தார். அதன்பின் மலைநாடு புகுந்து மகோதை நகரைக் குறுகினர். அவரது நல்வரவு கேட்ட சேரமான் பெருமகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் எதிர்கொண்டு அழைத்துச்சென்று பெருஞ் சிறப்புச்செய்தார்.

நம்பியாரூரர் மகோதைக்கு அண்மையிலுள்ள திரு வஞ் சைக் களத்தில் தங்கித் தலைக்குத் தலைமாலை"[19] என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வழிபட்டுக் கொண்டிருந்தார். இருக்கையில், இறைவன் திருவருளால் வெள்ளை யானை வர அதன்மேல் ஏறித் திருக்கயிலாயம் செல்ல லுற்றார். இ. துணர்ந்த சேரமான் தன் குதிரைமீதேறி யானைக்கு முன்னே துணைபுரிந்து சென்றார். இருவரும் திருக்கயிலை சென்று சேர்ந்தனர்.

[17]. சுந். தே. 77:9. [18]. சுந். தே. 42 [19]. சுந். தே. 4
--------

வரலாற்றாராய்ச்சி

மேலே கூறியவரலாறு சேக்கிழாரடிகள் உரைத்த திருத் தொண்டர் புராணத்திற் கண்டது. இவ்வரலாற்றை நம்பி யாரூரர் பாடிய திருப்பதிகங்களைக் கொண்டு காணுங்கால், இத் திருப்பதிகங்கள் பலவும் வரலாற்றிற் கண்ட நிகழ்ச்சிகளை வற்புறுத்தும் வகையில் அமைந்திருப்பது விளங்குகிறது.

நம்பியாரூரர் பிறந்தவூர் திருநாவலூர் என வரலாறு கூறிற்று. அதனை நம்பியாரூரர், "நாவலூர் நமக்கும் நாத னுக்கும் நரசிங்கமுனையரையனுக்கும் ஊர்"[20] என்று கூறுகின்றார். அவருடைய பெயரை, ஆரூரன், வன்றொண்டன், நம்பி, நாவலூராளி முதலியவாக வரலாறு உரைத்தது. "நாவலர்கோன் நம்பியூரன்"[21] என்றும், "நாவல் ஆரூரன் நம்பி"[22] என்றும், "நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பி வன்றொண்டன் ஊரன்"[23] என்றும் வரும் அவருடைய திருப்பதிகங்களால் வலியுறுகின்றது.

[20]. சுந். தே. 17:11. [21]. சுந். தே. 4:10
[22]. சுந். தே. 53:10. [23]. சுந். தே. 64: 10

நம்பி ஆரூரருடைய தந்தை பெயர் சடையனார் எனவும், தாய் பெயர் இசை ஞானியார் எனவும் வரலாறு கொண்டு அறிகின்றோம் ; அவற்றை அவருடைய திருப்பதிகம், "சடையன் இசை ஞானி காதலன் திருநாவலூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன்"[24] என்று கூறுகிறது. இந்நிலையில் திருவாரூர்க் கல்வெட்டொன்று, இசைஞானியார் திருவாரூர்க்கு அண் மையிலுள்ள கமலாபுரத்தில் ஆதிசைவருள் கௌதம் கோத்திரத்தவரான ஞானசிவாசாரியார் என்பாருடைய மகள் என்று[25] குறிக்கின்றது. இதனால், இசைஞானியார் நம்பியாரூரரைக் கருவுயிர்க்குங்கால் தன் தாய்வீடாகிய கமலாபுரத்தில் இருந்திருக்கலாம் என்றும், திருவாரூர் இறைவன் அவர்கட்கு வழிபடு தெய்வமாதலின், குழந் தைக்கு ஆரூரன் என்ற பெயரிட்டிருக்கலாம் என்றும் கருத லாம். திருவாரூர் இறைவன் பெயரையே பெற்றோர் தனக்கு இட்டிருக்கின்றனர் என்ற கருத்தை விளக்குவது போல, திருவாரூர், "அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண் டன் ஆரூரன்”[26] என்றும் "சீராரும் திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில்வைத்த ஆரூரன்" [27] என்றும் வரும் திருப் பாட்டுக்கள் இசைக்கின்றன.

[24]. சுந். தே. 39:11. [25]. S. I. I. Vol. II. part ii. No.38.
[26]. சுந். தே. 59:11. [27]. சுந். தே. 89:11

நம்பியாரூரர் புத்தூரில் திருமணம் தடுக்கப் பெற் றுத் திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொள்ளப்பட்டார் என்பது வரலாறு. இதனை ஆளுடைய நம்பிகள் தம் முடைய திருப்பதிகங்கள் பலவற்றில் தாமே எடுத்தோது கின்றார். "அன்று வந்து எனை அகலிடத்தவர்முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத்திரள் தொத்தினை"[28] என்பது முதலாக உள்ள திருப்பாட்டுக்கள் சான்று பகருகின்றன. திரு மணத்தின் போது இறைவன் வேதியர் உருக்கொண்டு வந்து தடுத்தாட்கொண்ட செயலை, "வாயாடி மாமறை யோதி ஓர் வேதியனாகி வந்து .... வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட நாயாடியார்"[29] எனக் குறித்தருளுகின்றார். ஆட்கொள்ளப்பட்ட காலத்திலே தமக்கு வன்றொண்டன் என்ற சிறப்புண்டாயிற்று என் பதை, "தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சவைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்"[30] என நம்பியாரூரர் நவிலுகின்றார்.

[28]. சுந். தே. 62:5, 68:6, 69:8 [29]. சுந். தே. 17:8 [30]. சுந். தே. 17:2.

வன்றொண்டரான நம்பியாரூரர் திருவதிகைக்கு அருகில் சித்தவட மடத்தில் தங்கியிருக்கையில் இறைவன் திருவடி தீக்கை பெற்ற செயலைக், "கறைக் கொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்"[31] என்றும், அப்போது, தாம், இறைவனை இகழ்ந் தது குறித்து வருந்தி, "எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே" என்றும் குறித்துள்ளார். திருவாரூரை அடைந்து வழிபட் டிருக்கையில் இறைவன் தன்னை நம்பியாரூரர்க்குத் தோழ னாகத் தந்தமையின், தம்பிரானாகிய இறைவற்குத் தாம் தோழனாகிய குறிப்பை, "அடியேற்கு எளிவந்த தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசு கள் பொறுக்கும் நாதனை" [32] என்று காட்டுவர் ; இக் குறிப்புக்குள்ளே பரவையார்பால் தனக்காக இறைவன் தூது சென்ற குறிப்பும் உளது. பரவையாரைத் தான் மணந்து கொண்ட குறிப்பு, "மாழை யொணகண் பரவையைத் தந்தாண்டானை"[33] என்பதிலும், சங்கிலியாரை மணந்து கொண்ட குறிப்பு, "சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை" என்பதிலும் - இனிது விளங்கப் பாடியுள்ளார்.

[31]. சுந். தே. 38: 1. [32]. சுந். தே. 68:8
[33]. சுந். தே. 51:10 [34]. சுந். தே. 51:11

இவ்வாறே குண்டையூரில் நெல் பெற்ற நிகழ்ச்சியும், திருநாட்டியத்தான்குடிக் கோட் புலியாருடைய மக்களான வனப்பகை, சிங்கடி என்ற இரு பெண்களையும் நம்பியா ரூரர் தம்முடைய மக்களாகக் கருதிய கருத்தும், திருமுது குன்றில் இறைவன் தமக்குப் பொன் உதவிய குறிப்பும் பிறவும் அவருடைய திருப்பதிகங்களில் ஆங்காங்குக் காட் டப்பட்டுள்ளன. சங்கிலியாரைத் திருவொற்றியூரில் திரு மணம் செய்து கொண்ட செயலை, "திருவொற்றியூர் புக்குச், சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள்"[35] என்றும், சங்கிலியார்க்குச் செய்த சூளுறவை மறந்து திருவாரூர்க்குச் செல்வாராய்த் திருவொற்றியூர் எல்லை கடந்ததும் கண்ணொளி மறைந்ததை, "தண்பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்காக என் கண் கொண்ட பண்பனே"[36] என்றும், ஊன்றுகோல் பெற்றதை, "ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே"[37] என்றும், கச்சி மாநகர்க்கண் கண் ஒன்று பெற்ற திறத்தை, "கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே"[38] என்றும், திரு வாரூரில் மற்றைக் கண்ணை வேண்டிப் பெற்ற குறிப்பை, "பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்"[39] என்றும், அவிநாசியில் முதலையுண்ட பாலனை உயிர்த் தெழச் செய்த நிகழ்ச்சிக் குறிப்பை, "கரைக்கால் முதலை யைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே"[40] என்றும் கயிலை செல்வதற்கு வெள்ளானையை இறைவன் அருளின அருட் செயலை, "விண்ணுலகத்-தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல், என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை யுத்தமனே"என்றும் குறித்துள்ளார். இவ்வகையே நோக்கின், இவருடைய திருப்பதிகங்கள் பலவும் இவரு டைய வரலாற்றுக் குறிப்புக்கள் செறிந்தவை என்பது இழுக்காது.

[35]. சுந். தே. 45: 4. [36]. சுந். தே. 69:3. [37]. ௸ 89:10.
[38] . ௸ 61: 1. [39]. ௸ 65:11. [40]. ௸ 92: 4.

நம்பியாரூரது காலம்

நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களுள், "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார்"[41] எனவரும் திருப்பாட்டில் குறிக்கப்படும் பல்லவ மன்னன் தந்தி வன்மன் ; அவனே திறைகொடா மன்னவரை உடை யனாயிருந்தான் என்றும், அவன் காலம் கி.பி. 780-க்கும் 830- க்கும் இடைப்பட்ட காலம் என்றும், எனவே அவன் காலத்தவரான நம்பியாரூரர் காலம் எட்டாம் நூற்றாண் டாக வேண்டும் என்றும் திரு. M. S. பூரணலிங்கம் பிள்ளையவர்கள்[42] கூறுவர். அவர்க்குப் பின் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில், "கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற கோமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"[43] என்றவிடத்துக் காடவர்கோன் கழற்சிங்கன் என்றது இரண்டாம் நரசிம்ம வன்மனையே குறிக்கும் என்றும், தம்பால் பேரன்புடையராகிய கழற்சிங்கர் பொருட்டு இறைவன் திறைகொடா மன்னவரைத் திறை கொடுக்குமாறு செய்திருப்பர் என்றும், "சிங்கம் என்பது நரசிங்கம் என்னும் சொல்லின் முதற் குறையாகும் என்றும், நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசராய் இருக்கலாம் என்றும், எனவே நம்பி யாரூரர் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்றும்[44] கூறுகின்றார். இனி, திரு. சதாசிவப் பண்டாரத் தாரவர்கள், இரண்டாம் நரசிங்க வன்மன் காலமே நம்பி யாரூரர் காலமென்றும், நம்பியாரூரரை இளமையில் வளர்த்த நரசிங்க முனையரையர் இரண்டாம் நரசிங்கவன் மன் கீழிருந்த குறுநிலத் தலைவர் என்றும், கழற்சிங்கன் என நம்பியாரூரர் குறிப்பது இரண்டாம் நரசிங்க வன்மனையே என்றும், எனவே அவனது "ஆட்சிக்காலம் கி.பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாகலின் சுந்தரமூர்த்திகளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும் ; எனவே நம் சுந்தரமூர்த்திகள் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதி யிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தருளிய பெரியார்" என்பது வெளியாதல் காண்க[45] என்பர்.

[41]. சுந். தே. 90:4. [42]. Tamil Literature. p. 177: 8. [43]. சுந். தே. 39:9.
[44]. 'இலக்கிய வரலாறு. பக். 337-40. [45]. தமிழ்ப் பொழில். Vol. III. பக். 201-9.

இனி. திரு. T. A. கோபிநாத ராயர் அவர்களும் தஞ்சை ராவ்பகதூர் திரு. K. S. சீனிவாச பிள்ளையவர்களும் நம்பி யாரூரர் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரும் தவர் என்று கூறினர். இதற்கு அவர்கள் இரண்டு கருத்துக்களை அடிப்படையாகக் காட்டினர். முதலாவது : பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்படி, நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள் பால் திருமுகப் பாசுரம் கொணர்ந்த பாணபத்திரன் காலத்தில் பாண்டி நாட்டு வேந்தன் வரகுணன் என்பானாவன், அவன் ஒன்ப தாம் நூற்றாண்டினன் என்பது. இதனை மறுத்துக் காட்ட வந்த திரு. பண்டாரத்தா ரவர்கள், இப் பரஞ்சோதியார் கூற்று வரலாற்றாராய்ச்சிக்குக் கொள்ளப்படுவதாயின், அப்பரஞ்சோதியார், திருஞான சம்பந்தர் காலத்துக் கூன் பாண்டியனான சுந்தரபாண்டியனுக்குப் பத்துத் தலை முறை முந்தியவன் மாணிக்கவாசகர் காலத்து அரிமர்த் தன பாண்டியன் என்றும், அவனுக்கு நாற்பத்து மூன்று தலைமுறை முந்தியவன் வரகுணன் என்றும் கூறுகின்றார் அதனால், திருஞான சம்பந்தர்க்கு ஆயிரத்தைஞ்நூற்றுத் தொண்ணூறு ஆண்டு முந்தியவர் நம்பியாரூரர் என்று முடிவதால் அவர் கூற்றுப் பொருந்துவதன்று என்பர்.

இரண்டாவது "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமை யார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் " என்னும் 'திருப்பாட்டால், அடி கள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங் கிற்று; அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர் ; பல்லவர்களுள் தந்திவர்மன் (780 - 830) ஆட்சிக் காலத்தில் தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும்; ஆகவே அடிகள் தந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி. பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டும்" என்பது.

இதுபற்றி ஆராய்ச்சி செய்த திரு. பண்டாரத்தாரவர்கள், " அடிகள் தம் காலத்துப் பல்லவ மன்னன் போர் வலிமை. யற்றவன் என்றாதல், அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்றாதல் அப்பாடலில் கூறினாரில்லை ; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத் தெம்பெருமான் அருள் புரிபவராகவும் அவனோடு முரணிப் பகைஞராயி னோர்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும் இருந்துள்ளமையை நன்குவிளக்கி அம்மன்னனது ஒப்புயர் வற்ற சிவபத்தியின் மாட்சியைத் தெரிவித்துள்ளார் ; ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின். அப்பெரியார் தந்தி வர்மப் பல்லவன் காலத்தினரல்லர் என்பது தெளிவாதல் காண்க”[46] என்று கூறியுள்ளார்.

இனி, டாக்டர் மீனாட்சி யென்பார், சுந்தரரைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் எனப் பொதுவாகக் கூறுவர். அதற்கு அவர் பாடிய திருத்தொண் டத் தொகையில் "கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"[47] என்பது சான்றாகக் காட்டப்படுகிறது; காட வர் கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற் சிங்கன் சுந்தரர் காலத்துப் பல்லவ வேந்தன் ; இதனை வற்புறுத்தும் வகையில் பின்கண்ட முடிபுகள் வற்புறுத்தப் பட வேண்டியனவாகும். முதலாவது இக்கழற்சிங்கன் ஒரு சிறந்த வேந்தனாகவும் அவனுடைய ஆட்சி நலம் கடல் கடந்து சென்றிருந்ததாகவும் துணியவேண்டும் ; இரண்டாவது, கழற்சிங்கன் எனப்படுவதால் இப்பல்லவவேந்தன் போர்வென்ற வெற்றியுடையனாக வேண்டும்; மூன்றாவது சுந்தரரால் பாராட்டுப் பெறத்தக்க அத்துணைச் சிவபத்தி யுடையனாக இக்காடவர்கோன் இருத்தல் வேண்டும்; இம் மூன்று கூறுபாடுகளும் பொருந்தி யிருப்பவன் மூன்றாம் நந்திவன்மனாவான்; அவன், கி.பி. 840 - 865வரை வேந்தனாக இருந்தான் எனச் சொல்லப்படுகின்றான்[48] என்று எடுத்தோதி அவற்றை முறையே விரித்துரைக்கின்றார்.

[46]. தமிழ்ப்பொழில். Vol. III. பக். 205,, [47]. சுந். தே. 39:9.
[48]. Dr. C. Minakshi's Administration and Social life andar the Pallavas. p. 299-305.

அவ்விரிவுரை முற்றும், நம்பியாரூரரோடு சிறிதும் இயை பில்லாத மூன்றாம் நந்திவன் மனது வரலாறு கூறுவதாயும், நம்பியாரூரர் வழங்கிய திருப்பாட்டுக்கட்கு உண்மைப் பொருளறியும் திறமையில்லாததாயும் இருக்கிறது. ஆதலால் அதனை யெடுத்தோதி மறுப்பது வேண்டாச் செய் லென்று விடுக்கின்றோம்.

இனி, திரு . மீனாட்சி கூறுவனவற்றுள், காடவர்கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற்சிங்கன் சுந் தரர் காலத்துப் பல்லவவேந்தன் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததோர் உண்மை . 'கடல் சூழ்ந்த வுலகெல்லாம் காக்கின்ற பெருமான் என நிகழ்காலத்தாற் கூறப் படுவதே, அக்கழற்சிங்கன் நம்பியாரூரர் காலத்தவன் என்பதை நன்கு வற்புறுத்துகிறது ; ஏனை நாயன்மார் எவரையும் அவர் நிகழ்கால வினையாற் கூறாமை மேற் கூறிய கருத்தை வலிமிக்கதாக்குகின்றது. அதனால், கழற் சிங்கன் என்ற பல்லவவேந்தனை இன்னான் எனத் துணி வதே ஆராய்ச்சியாளர் செய்ய வேண்டுவது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனான தந்திவன்மன் பெயரே, நம்பியாரூரர் பரவும் கோக்கழற் சிங்கன் வேறு என்பதை வெளிப்படுத்துகிறது. இனி, திரு. மீனாட்சியவர் கள் விரும்பி விரித்துரைக்கும் தெள்ளாறு எறிந்த நந்தி வன்மனுக்கோ சிங்கன் என்ற பெயர் கிடையாது; இதனால் நம்பியாரூரர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவர் அல்லரென்பது விளங்கத் தெரிகிறது.

இனி, கச்சியாண்ட பல்லவவேந்தர் குடிவழியில் சிம்ம விஷ்ணு வழி, வீமவன்மன் வழி யென இரண்டு வழிகள் இதுகாறும் நிகழ்ந்துள்ள பல்லவர் வரலாற்று ஆராய்ச்சி யால் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள், வீமவன்மன் குடிவழியில் சிங்கன் என்ற பெயரோடு இயைபுடையார் எவரும் இல்லை; சிம்மவிஷ்ணுவின் குடிவழியில் அச் சிம்ம விஷ்ணு உட்பட மூவர் உள்ளனர். அவர்கள் சிம்மவிஷ்ணு வும், முதன் மகேந்திரவன்மனான முதல் நரசிங்கவன் மனும் பரமேசுரவன்மன் மகனான இரண்டாம் நரசிங்கவன்மனுமா வர். சிம்ம விஷ்ணு, திருநாவுக்கரசர் காலத்தவனான முதல் மகேந்திரவன்மனுக்குத் தந்தையாதலால், நம்பியாரூரர் காலத்துக் கழற்சிங்கனாதற்கு ஒவ்வான். மகேந்திரன் மகனான முதல் நரசிங்கவன்மன் கி.பி. 630-க்கும் 660-க்கும் இடையில் வாழ்ந்தவனாவன் ; இரண்டாம் நரசிங்கவன் மன் கி. பி. 680-க்கும் 710-க்கும் இடையில் வாழ்ந்த வன் ; இவ்விருவருள் ஒருவனையே "கழற்சிங்கன் என்னும் தொடர் குறித்தல் வேண்டும். முதல் நரசிங்கவன்மன் வாதாபிகொண்ட பல்லவமல்லன் எனப்படுவன் ; திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்த சிறுத்தொண்ட நாயனா ரான பரஞ்சோதியாருடன் வாதாபியை எறிந்து வெற்றித் தூண் நாட்டியவன்; அவன் காலத்தே தான் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் சிறப்புற்றது. ஆதலால், திருஞான சம்பந்தர்க்குக் காலத்தாற் பிற்பட்ட நம்பியாரூரர் தன் காலத்து வேந்தனாகக் குறிக்கும் கழற் சிங்கன் முதல் நர சிங்கவன் மனாதல் கூடாது. ஆகவே கழற்சிங்கன் என்பது, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற் றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவனான இரண்டாம் நரசிங்கவன்மனையே குறித்து நிற்பது இனிது தெளியப் படுகிறது. இவனை, ஸ்ரீ சங்கரபக்தன், ஸ்ரீ ஆகமப்பிரியன், சிவ சூடாமணி என்று செப்பேடுகள்[49] புகழ்ந்தோதுவதும், இவனை அவை இராஜசிங்கன் க்ஷத்திரிய சிங்கன் என வழங்குவதும்[50] மேலே எய்திய துணிபை வற்புறுத்துகின் றன. இத்துணையும் கூறியவாற்றால் நம்பியாரூரர், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டி லும் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் என்பது முடிபாம்.

இவர் காலத்தே திருநாவலூரில் இருந்த சிற்றரசர் நரசிங்க முனையரையன் என்று முன்பே கண்டோம். அந் நாளில் முடிவேந்தர்கள், தம்கீழ் நின்று ஆட்சி புரியும் குறுநிலத் தலைவர்கட்குத் தங்கள் பெயரையே சிறப்பாக வழங்குவது மரபாதலின், அதுவே பற்றி, இரண்டாம் நரசிங்க வன்மன், தன் பெயராலேயே நரசிங்க முனையரை யன் என்ற சிறப்பைத் தந்தானாக வேண்டும். இவ்வழக்குப் பிற்காலத்தே சோழவேந்தர்பாலும் இருந்திருக்கிறது. இரண்டாம் இராசராசன் காலத்தில் சிறப்புற்றிருந்த மோகன் ஆளப்பிறந்தான் என்னும் தலைவனுக்கு நாலு திக்கும் வென்ற இராசராசக் காடவராயன்[51] என்று சிறப் பளித்திருப்பது கொண்டு இவ்வுண்மை துணியப்படும். இத் தலைவர் பெற்ற சிறப்பே முடியரசன் பெயரைக் காட்டு வது போல, நரசிங்கமுனையரையர் பெயரைக் கொண்டே முடியரசனான பல்லவவேந்தன் நரசிங்கவன்மன் என்று தெளிவாய்க் காணலாம்.

[49]. S. I. I. Vol. I. No.25& 26.p. 14-8. [50]. A.R. No. 566 of 1912.
[51]. A.R. No. 166 of 1906.

நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள்

நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள் சைவத் திருமுறை களுள் ஏழாந்திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளன. இவ்வேழாந் திருமுறையில் இவர் பாடியனவாக நூறு திருப் பதிகங்கள் உள்ளன. திருமுறைகண்ட புராணம், இவர் பாடிய திருப்பதிகங்கள் முப்பத்தெண்ணாயிரம்[52] என்றும், பண்முறையால் தொகுத்தபோது நூறு திருப்பதிகங்களே கிடைத்தன என்றும் குறிக்கின்றது.[53]

[52]. திருமுறை கண்ட புராணம். 16. [53]. ௸. 25.

பத்துப்பாட்டுக்கள் கொண்டதனைப் பதிகம் என வழங் கும் முறைமை கொண்டு நோக்கின், நம்பியாரூரர் பாடியன மூன்று லக்ஷத்து எண்பத் தெண்ணாயிரம் என்றும், பண் வகுக்கப் பெற்ற காலத்தில் ஆயிரம் திருப்பாட்டுக்களே கிடைத்தன என்றும் காண்கின்றோம். ஆனால் சில திருப் பதிகங்களில் பதினொரு திருப்பாட்டுக்களும், சிலவற்றில் பன்னிரண்டு திருப்பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவ்வகையால், நம்பியாரூரர் பாடியன என (நூறு திருப் பதிகங்களும்) 1026 செய்யுட்களும் கிடைக்கப்பெறுகின்றன.

இப்பாட்டுக்களை இடைக் காலத்தார், இந்தளம் முதல் பஞ்சமம் ஈறாகப் பதினேழு பண்களாக வகுத்துள்ளனர். இவற்றுள், தக்கேசிப் பண்ணில் 17 திருப்பதிகங்களும், நட்டராகப் பண்ணில் 14 திருப்பதிகங்களும், இந்தளத்தில் 12 திருப்பதிகங்களும், ஏனையவற்றுள் ஒன்றும், மூன்றும், நான்கும், ஐந்தும், ஏழும் ஒன்பதுமாக உள்ளன. திரு முறை கண்ட புராணம், இந்தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, பழம் பஞ்சுரம், தக்கேசி, காந்தாரம், காந்தார பஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, காமரம், குறிஞ்சி, செந் துருத்தி, கௌசிகம், பஞ்சமம் எனப் பதினைந்து பண்களைக் கூறுகின்றது. மிக்குக் காணப்படும் கொல்லிக் கௌவாண மும் பியந்தைக் காந்தாரமும் முறையே கொல்லிப் பண்ணி லும் காந்தாரப் பண்ணிலும் அடக்கப்பட்டன போலும்.

இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்கள் நூறனுள், பொதுவாக உள்ள ஐந்து திருப்பதிகங்கள் ஒழிய எஞ்சிய தொண்ணூற்றைந்தும் திருவெண்ணெய் நல்லூர் முதல் திருநொடித்தான் மலை ஈறாக எண்பத்து நான்கு திருப்பதிகளைக் குறித்துப் பாடியுள்ளன.

திருப்பதிகப் பொருள்

இத்திருப்பதிகங்களால் இறைவன் இயல்பும், உயிர் களின் இயல்பும், உயிர் வாழ்க்கையின் இயல்பும், உயிர்கள் இறைவன் திருவருளைப் பெறுதலின் இயல்பும் இனிய தமிழ் நடையில் கூறப்படுகின்றன.

இறைவன் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதலாகிய அகரவெழுத்தைப் போல், உலகிற்கு முதல்வனாக[54] உள்ளான். உலகென்பது பாரும் விண்ணும் இடை நின்ற நீரும் தீயும் காற்றும் கலந்த மயக்கமாகும்;[55] இறைவன் உலகத் தோடு ஒன்றாய் அதன் கூறுகளாகிய நிலமும் நீரும் நெருப்பு முதலிய எல்லாமாய் இருக்கின்றான் என்பதைப் படர்க்கையிலும்[56] முன்னிலையிலும்[57] வைத்து விரித்துக் கூறு கின்றார். உலகிடை வாழும் உயிர்களின் உடம்பின் கூறாகவும் இறைவன் ஒன்று பட்டிருக்கின்றான் என்பதை, "ஊனாய் உயிரானாய் உடலானாய்"[58] என்பது முதலிய வற்றால் குறிக்கின்றார். இவ்வுலகுயிர்கட்கு இடமாகிய அண்டமும் அதற்கு அப்பாலும் எல்லாம் இறைவனில் அடக்கம், அவன் "அண்டமதாயவன்"[59] இவ்வண்டங்களில் காலமும் ஞாயிறுமாகி[60] உயிர்கட்கு வேண்டும் பெண் ஆண் என நிலவும் உடம்புமாகி[61] இறைவன் விளங்குகின்றான்.

[54]. சுந். தே. 5:7. [55]. தொல். பொரு . மரபு. 89.
[56]. ௸ 2: 10; 56: 8; 62:6; 83:6. [57]. ௸ 9:3. [58]. சுந். தே. 1:7.
[59]. சுந். தே. 20:9. [60]. ௸ 19:9. [61]. ௸ 28: 6.

அண்டமும் பிண்டமுமாகிய எல்லாவற்றிலும் கலந்து ஒன்றாய் நிற்பதோடு அண்டம் கடந்து அப்பாலும் வேறு பட்டுத் தனித்து விளங்குவதும் இறைவற்கு இயல்பு[62]. அந்நிலையில் இறைவன் "காண்டற்கரியன்"[63] "முதல் காண்பரியான்"[64], "ஒன்னா அறிவொண்ணா மூர்த்தி" [65]. இவ்வண்ணம், உலகுயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் நின்று விளங்கும் இறைவன், பண்ணிடைத் தமிழும் பழத் தினிற் சுவையும் கண்ணிடைமணியும்[66] போல் உடனாகவும் இருந்து, எழுத்துக்கு உயிர் போல் இயக்கமும், பயிர்க்குப் புயல்போல் ஆக்கமும்[67] நல்குகின்றான்.

[62 ]. சுந். தே. 12:2. [63]. ௸ 18:2. [64]. ௸ 57 : 7.
[65]. ௸ 57:6. [66]. ௸ 29:6. [67]. ௸. 4.4.

இனி, இவ்வுலகினையும், உலகில் நிலவும் உயிர்கட்குரிய உடம்பினையும், உடம்பிடை நின்று உலகில் உயிர்கள் செய்வன செய்து, பெறுவன பெற்று, நுகர்வன நுகர்ந்து உய்திபெறற்கு வேண்டுவனவற்றையும் படைத்து அளிப் பதும் இறைவன் செயல்;[68] அதனால் அவனுக்கும் இவற் றுக்கும் உள்ள தொடர்பு படைப்பவனுக்கும் படைக்கப் படும் பொருட்குமுள்ள தொடர்பாதலால், அத்தொடர்பு விளங்க, "தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்"[69] என்றும், "தந்தை தாய் உலகுக்கு"[70] என்றும் கூறுகின்றார்.

உலகிடை உடம்பொடு கூடிநின்று வாழ்வாங்கு வாழும் உயிர்களோடு உடனாய் நின்று பெறற்குரியவற்றைப் பெறுவித்து அவற்றின் பயனை நுகரப்பண்ணுவதும் இறை வனது அருட்செயலாகும். அது குறித்து, " நாக்கும் செவி யும் கண்ணும் நீ"[71], "பீடை தீர அடியார்க்கருளும் பெருமான்"[72], "பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி"[73], "உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன்"[74] என்று பலபடியாக உரைக்கின்றார். உலக வாழ்க்கையால் உய்தி பெறச் சமைந்த உயிர்களின் அறிவு நெறிக்கு வேண்டும் கல்விக்கு வாயிலாகிய எழுத்தும், சொல்லும், பாட்டும், நூலும் கற்பித்து அறிவின்பம் நல்குபவனும் இறைவனே ; அதனால் அவன், ஞானாசிரியனாகவும் ஞானப் பொருளாகவும் விளங்கு-கின்றான் என்பர்.

[68]. சுந். தே. 38: 7. [69]. சுந். தே. 53:3. [70]. ௸. 75: 4.
[71]. ௸. 4:7. [72]. ௸. 53:10. [73]. ௸. 97: 1. [74]. ௸.. 97:1

இதனை, "எழுத்தொடு சொற் பொருள் எல்லாம் முன் கண்டான்"[75], "சொல்லும் பொருளுமாய் நின்ற நம்பி"[76], "கற்றகல்வியிலும் இனியான்"[77] என்று கூறுவதனால் அறியலாம். இவ்வாறு இறைவனால் இயம்பப் பெற்ற அருணூல் ஆகமம் எனப்படும். அவ்வுண்மையும் விளங்க, "அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதி"[78], "ஆகமசீலர்க்கு அருள் நல்கும் பெம்மான்"[79] என்பதனால் இனிது விளங்குகிறது. இவ்வண்ணம் ஆகம நூலின் தோற்றமும் பயனும் நம்பியாரூரர் எடுத்தோ துதற்கு ஏற்ப அவர் காலத்து வேந்தனான கழற்சிங்கன் தன்னை "ஸ்ரீ ஆகமப்பிரியன்"[80] என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

[75]. சுந். தே. 96:7 [76]. ௸. 63:8 [77]. ௸. 6:5 [78]. ௸. 84:8
[79]. சுந். தே. 96: 6. [80]. S. I. I. Vol. I. No.25 & 26.

இனி, "மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறி காட்டும் வேதமுதலாக"[81] விளங்குதலால் அம் மெய்ந்நெறி, யோகநெறி, ஞானநெறி என இரண்டாய் இயலுவதைக் காட்டி, யோகநெறி நிற்கும் உயிர்கட்கு அருளும் திறத்தைப் பல பாட்டுக்களால் எடுத்துரைக் கின்றார். இறைவன் உள்ளத்துள்ளே நிற்கும் ஒண் பொருள் : அவனை உள்ளத்துள்ளே ஓர்ந்து உணர்வது யோகம் ;[82] அவ்வாறு உணர்வார்க்கு அவன் "நாபிக்கு மேலே ஓர் நால்விரல் நடு"[83]விற் காட்சியளிப்பன் ; அவ் விடத்தேயவன் சிந்தித்து என்றும் நினைந்தெழும் அன்பர் சிந்தையில் திகழ்கின்றான்;[84] அவ்வாறு திகழ்வதால் சிந்திக்கும் அன்பரது சிந்தை திருத்தம் எய்துகின்றது[85]. ஞான நெறியென்பது, இறைவன்பால் உண்மையன்பு கொண்டு தொழுதல் வணங்குதல் பாடுதல் முதலியவற்றால் வழிபடுவதாகும்.

யோகநெறியினும் இந்த ஞானநெறி பெரும் பான்மையான மக்கட்கு எளிதில் இயலும் செயலாதலால் இதனையே தாம் அருளிய திருப்பாட்டுக்கள் பலவற்றிலும் பெரிதும் எடுத்து மொழிந்துள்ளார். நறிய பூவும் நீரும் கொண்டு இறைவனை நாடொறும் அன்புடன் பூசனை புரி பவர்க்குத் தூய அறிவுண்டாகும்; உண்மை ஞானம் கைவரும் என்பாராய், "நறுமலர்ப்பூவும் நீரும் நாடொறும் வணங்குவார்க்கு, அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பன்[86] என்றனர்.

[81]. சுந். தே. 40:10. [82]. சுந். தே. 45: 4. [83]. ௸. 45: 9.
[84]. ௸. 61: 8. [85]. ௸. 47: 8. [86]. ௸. 8:3.

இறைவன் பால் அன்பில்லாத வழி அவனது திருவடி ஞானம் எய்தாது என்பதை, "அன்பரல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசேரார்"[87] என்பர். அன்பர் நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்டு[88] அங்கே ஞானவொளி திகழ்ந்து[89] அவர்கட்கு உண்டாகும் துயர்களை[90] நீக்கியருள்கின்றான். அவ்வகையால் அவனது அரு ணலத்தைப் புகழ்ந்து பாடும் அன்பர்கள் பிரியாப் பேரன் பால் பிணிப்புற்று அப்பணியினையே செய்தொழுகுவார்கள்[91]. இறைவன் திருப்பெயர்களுள் சிறந்த நிறைமொழி யாகவுள்ள "நமச்சிவாய" என்பதை இடையறாது சிந்தை யிற் சிந்தித்தலும் நாவால் மொழிதலும் அவருடைய சீர்த்த செயல்களாகும். இறைவன்பால் அன்பு செய்யும் ஏனைப் பெருமக்களையும் இறைவனைப் போலவே கருதி அவர்களை வழிபடுவதும் இந்த மெய்யன்பர்களின் அன்புடைத் தொழில்.

[87]. சுந். தே. 7: [88]. சுந். தே. 12: 7. [89]. ௸. 23:9.
[90]. ௸. 1:9. [91]. ௸. 2:7.

இறைவன் அருளிய ஞானயோக நெறிகளை மேற்கொள் ளாத மக்களும் பலர் . அவர்கள், உயிர்கட்கென இறைவன் உடம்பு முதல் உலகப் பொருள் ஈறாகவுள்ள பலவற்றையும் படைத்து உதவிய நன்றியை நினையாது, உடம்பு முதலிய வற்றால் செய்வன செய்து பெறுவனபெற்று நுகருங்கால் எய்தும் இன்பத்துக்கே அடிமையாகி, அவ்வின்பத்தை நிலைபெற்ற ஒன்றாகக் கருதி யொழுகுவர்[92]. அவர்களும் உடம்பு முதலியவற்றின் நிலையாமை உணர்ந்து நிலைத்த இன்ப நிலையமாக இருக்கும் இறைவன் திருவடியை அடை தல் வேண்டும் என்ற அருள் உள்ளத்தால், பிறவித் துன்பம், உடல் நிலையாமை, செல்வ நிலையாமை முதலியவற்றைப் பலவகையாலும் எடுத்துப் பாடி நல்லறிவு கொளுத்துகின் றார் . " தோற்றமுண்டேல் மரணமுண்டு"[93] "இன்பமுண் டேல் துன்பம் உண்டு"[94], "வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்"[95], "பொய்த்தன்மைத்தாய மாயப் போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத் தாய வாழ்வு வேண்டி நான் விரும்புகில்லேன்"[96] என்றும், தன் நெஞ்சினைத் தெருட்டும் வாய்பாட்டில் வைத்து, "பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டை யாரலர் பெண்டிரும், நிதியும் இம்மனைவாழும் வாழ்க்கையும் நினைப்பொழி, மட நெஞ்சமே"[97] என்றும் அருளிச் செய்கின்றார்.

[92]. ௸. 64:5. [93]. ௸. 7.2 [94]. ௸. 7:3. [95]. ௸. 7:1
[96]. சுந். தே. 8:9. [97]. சுந். தே. 35:2.

புராண வரலாறுகள்

இனி, சைவபுராணங்கள் காட்டும் பௌராணிக நெறிக் கண் நின்று அவற்றுள் இறைவனைப் பற்றிக் கூறப்படும் உருவம், செயல் முதலிய திறங்களையும் நம்பியாரூரர் ஆங் காங்கு எடுத்து நிரம்ப மொழிகின்றார். திருமுடியிற் சடை யும் பிறையும் கங்கையும், நெற்றியிற்கண்ணும், கழுத்திற் கறையும், கைகளில் மழுவும், மானும், எரியும் பிறவும் விளங்க, உமையொரு கூறனாய், மேனியில் வெண்ணீறும், பாம்பணியும் இடையிற் புலித்தோலும் தோற் போர்வை யும் உடையனாய் நிலவும் திருவுருவைப் பல பாட்டுக்களில் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார்.

இவ்வாறு "ஆணொடு பெண்ணாம் உருவாகி"[98] நிற்கும் இறைவன், பிரமன், திருமால், என்ற தேவர்கட்குத் தலைவன்[99] ; அவர்களது உருவத்தையும் தனது உருவில் ஒடுக்குவன்[100]: மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாகும்[101]. மேனியெங்கும் திருநீறணிந்து திகழ்வன்.[102]

[98]. சுந். தே. 3:9. [99]. ௸. 4:9. [100]. ௸. 84:7.
[101]. ௸. 7:4. [102]. ௸. 82:7.

இனி, இப்புராணங்கள் கூறும் வரலாறுகளுள், இறைவன் உமையை மணந்தது[103], அவன் உமைதழுவக் குழைந்தது[104], உமையம்மை இறைவன் கண்ணைப் புதைத்தது[105], முருகனைப் பெற்றது[106], காமனை எரித்தது,[107] திரிபுரம் செற்றது,[108] தேவர்கள் பொருட்டுக் கடல் நஞ்சு உண்டது[109], கண்மலர் இட்டு இறைவனை வழிபட்டது[110]. இறைவன் தக்கன் வேள்வியைச் சாடியது,[111] இராவணனை மலையின் கீழ் அடர்த்தருளியது,[112] அருச்சுனற்கு வேடனாய்ச் சென்று பாசுபதம் அருளியது[113], இந்திரன் வழிபட்டது[114]. அயிராவதம் வழிபட்டது[115]. அகத்தியர் வழிபட்டது[116], காமதேனு வழிபட்டது[117], காளியொடு இறைவன் திரு நடனம் செய்தது[118], தாருக வனத்து முனிவர் வரலாறு,[119] இறைவன் ஆலின் கீழ் இருந்து அறம் சொன்னது[120], கலைய நல்லூரில் பிரமன் இறைவனைப் பரவியது,[121] மார்க்கண் - டேயர் பொருட்டுக் காலனைக் காய்ந்தது,[122] திருப்புன்கூரில் மழைகுறித்துப் பன்னிருவேலி நிலம் பெற்றது[123], இறைவன் தில்லை மூவாயிரவர்க்கு மூர்த்தியெனப் படுவது[124] முதலிய பல செய்திகள் நம்பியாரூரரால் நன்கு குறிக்கப்படுகின்றன.

[103]. ௸. 16:1. [104]. ௸. 61:10. [105]. ௸. 16:4
[106]. ௸. 16: 9. [107]. ௸. 9:4; 16:9 [108]. ௸. 9:4; 16:5; 55:8;66:5. [109]. ௸. 9:10. [110]. சுந். தே. 66: 3. [111]. சுந். தே. 16: 6.
[112]. ௸. 16:7; 55:9. [113]. ௸. 53:8; 55:7; 66:3. 5.
[114]. ௸. 65: 5. [115]. ௸. 65: 7. [116]. ௸. 65: 5.
[117]. ௸. 65:4 [118]. ௸. 70: 4. [119]. ௸. 65: 6.
[120]. ௸. 55: 7. [121]. ௸. 16:10. [122]. ௸. 62:6;63:4.
[123]. ௸. 55:2. [124]. ௸. 90: 7.

இவற்றின் வேறாக, திருத்தொண்டத் தொகையில் தனி யடியார் அறுபத்து மூவர் வரலாற்றுக் குறிப்பும், தொகை யடியார் ஒன்பதின்மர் குறிப்பும் குறிக்கப்படுகின்றன. அவருள் புகழ்த்துணையார்,[125] கோட்புலியார்,[126] சண்டே சுரர்,[127] ஏயர்கோன் கலிக்காமர்[128], திருநீலகண்டர்[129], கோச் செங்கணான்[130], கண்ணப்பர்[131] முதலியோரைப் பற்றிய குறிப்புக்களும், திருஞான சம்பந்தர் ஞானம் பெற்றதும்,[132] அவர் திருத்தாளம் பெற்றதும்,[133] திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடியதும்[134], திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழி மிழலையிற் காசு பெற்றதும்[135] அடிகளால் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. மேலும், கோச்செங்க ணான் முற்பிறவியிற் சிலந்தியாயிருந்து சோழனானதும்[136], பரசுராமன் முந்நூறு வேதியர்க்கு நிலம் பகிர்ந்தளித்ததும்[137], தொண்டைமான் களிற்றை முல்லைக்கொடியால் கட்டியதும்[138] சுருங்கக் கூறப்படுகின்றன.

[125]. ௸. 9:6. [126]. ௸. 15:10 [127]. ௸. 16:3.
[128]. ௸. 55: 3. [129]. ௸. 58:9 [130]. ௸. 65: 1.
[131]. ௸. 65: ; 88:6. [132]. ௸. 97:9 [133]. ௸. 62:8.
[134]. சுந். தே . 65:2 [135]. ௸. 46:7; 88: 8. [136]. ஷை 66:2.
[137]. ௸. 65:3. இவ்வரலாற்றுக் குறிப்புக் கேரள நாட்டுத் தோற்ற வரலாறாகப் பொய்புணர்ந்து காணப்படுகிறது.
[138]. ௸. 69:10.

பதிகம் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்

நம்பியாரூரர் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்த திருப்பதி கள் திருவெண்ணெய்நல்லூர் முதல் திருநொடித்தான் மலை யீறாக எண்பத்து நான்கு என முன்பே கூறினோம். அவையே யன்றி அவற்றின் வேறாக மிகப்பல திருப்பதி களை நம்பியாரூரர் ஆங்காங்கு குறித்துள்ளார். அவை, அண்ணாமலை, ஆழியூர், திருவாறைமேற்றளி, இன்னம்பர், இராமேச்சுரம், ஈழநாட்டு மாதோட்டம், என்னூர், வட கஞ்சனூர், கடம்பூர், கடம்பந்துறை, கடைமுடி, கண்டியூர், கருப்பூர், கச்சிக் காமக்கோட்டம், கிழையம், கிள்ளிகுடி, கீழைவழி, கீழையில், கீழ்வேளூர், குடப்பாச்சில், குடமூக் கில், குண்டையூர், குரங்கணில் முட்டம், குற்றாலம், குறுக்கை நாட்டுக் குறுக்கை, கைம்மை, கொங்குநாட்டுப் பேரூர், கொண்டல் நாட்டுக் கொண்டல், கோத்திட்டை கோவல், கோளிலி, சிராப்பள்ளி, தக்களூர், தகட்டூர், தஞ்சை, தண்டங்கூறை, தண்டலையாலங்காடு, தண்டந் தோட்டம், தருமபுரம், தாழையூர், திருமலை, தெள்ளாறு, தென்னூர், தென்பனையூர், தேங்கூர், தேவனூர், நாங்கூர் நாட்டு நாங்கூர், நாலனூர், நெடுங்களம், நெய்த்தானம், நெல்லிக்கா, பழனம், பழையாறு, பாசூர், பாம்பணி, பாம் பரம், பிடவூர், புகலி, புரிசை நாட்டுப் புரிசை, பூங்கூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், மகோதை[139], மருகல் நாட்டு மருகல், மிழலை நாட்டு மிழலை, மூலனூர், வலஞ்சுழி, விளத்தூர் நாட்டு விளத்தூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணி, வெண்ணி நாட்டு மிழலை, வெற்றியூர், வேல னூர், வேளா நாட்டு வேளூர் என்பனவாகும். இவற்றுட் பலவும் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் பாடப்பெற்றுள்ளன-வாதலால், நம்பியாரூரரும் இவற்றின் மேற் பதிகம் பாடியிருக்கலாம்; ஆயினும், அவை திரு முறை கண்டகாலத்தேயே மறைந்து போயினபோலும்.

[139]. சங்க காலத்துச் சேரவேந்தருள் மாக்கோதை யென்பான் பெயரால் தோன்றி, நம்பியாரூரர் காலத்தே மகோதை யென மருவிவிட்ட இது வஞ்சிமா நகரின் ஒரு பகுதியென அறிக. இம் மகோதை, பிற்காலத்தே மகோதையார் பட்டினம் என மாறிப் பின்பு மகாதேவர் பட்டின மென வழங்கலாயிற்று - Logan's Malabar. p. 207.
---

இனி, நம்பியாரூரர் திருப்பதிகங்களில் அவர்காலத்தில் நிலவிய நாடுகள் சிலவற்றைக் குறிக்கின்றார். அவை, ஈழ நாடு, குறுக்கை நாடு, கொண்டல் நாடு, தென்னாடு, நறையூர் நாடு, நாங்கூர் நாடு, புரிசை நாடு, பொன்னூர் நாடு, மரு கல் நாடு, மிழலை நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற் றம், வெண்ணிநாடு, வேளா நாடு என்பன வாகும். இவற் றுள், கொண்டல் நாடு ஒன்றொழிய ஏனையாவும் கல்வெட் டுக்களாலும் ஆங்காங்கு குறிக்கப்பட்டுள்ளன. கொண்டல் நாடு இருக்குமிடம் தெரிந்திலது; ஏனையவை தொண்டை நாட்டிலும் சோழநாட்டிலும் காணப்படும் உண்ணாடுகள். இதனால், நம்பியாரூரர் வாழ்வு பெரிதும் தொண்டை நாட்டி லும் சோழ நாட்டிலுமே நிலவிற்றென அவரது வரலாறு கூறுவது முற்றிலும் உண்மையாதல் இனிதுவிளங்குகிறது. மாதோட்டம், இராமேச்சுரம் ஆகிய திருப்பதிகளைக் கூறு மிடத்து "ஈழ நாட்டு மா தோட்டம் தென்னாட்டு இராமேச் சுரம் என்ற திருப்பாட்டில், மேற்கொண்டு சோழநாட்டுத் துருத்தி முதலிய ஊர்களைக் குறிப்பார், "சோழ நாட்டுத் துருத்தி"[140] யென விதந்துகூறி வேறுபடுத்துக் காட்டுவது நாடுகளின் அமைப்பைச் செவ்வே அறிந்துரைக்கும்
அவரது சொற்றிறத்தின் திட்பத்தை உணர்த்துகிறது.

இனி, நாடுகளைக் குறித்ததுபோல அக்காலத்து வழங்கிய மலை ஆறு முதலியவற்றின் பெயர்களையும் நம்பியாரூரர் குறித்துள்ளார். அண்ணாமலை[141], குமணமலை[142], விச்சி மலை[143], சீபருப்பதம்[144] முதலியன சிறப்புடையன. இவற்றுள் குமணமலை யென்பது சங்க நூல்களில் முதிரமெனக்[145] கூறப்படுகிறது. விச்சிமலையும் சங்க நூல்களில்[146] காணப்படும் மலைகளுள் ஒன்று. இம்மலைக்குரிய விச்சிக்கோன் பக்கல் கபிலர் பாரிமகளிரை மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். நம்பியாரூரர், "பருவி விச்சி மலைச் சாரல் பட்டை கொண்டு பகடாடிக் குருவியோப்பிக் கிளிகடிவார் குழன்மேன் மாலை கொண்டு ஓட்டந்து, அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு"[147] என்பதனால் விச்சிமலை காவிரி நாட்டு எல்லையில் நிற்கும் மலைகளுள் ஒன்றென அறியலாம். இஃது இப்போது திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் பச்சைமலை என்ற பெயர்தாங்கி நிற்கிறது. சீபருப்பதம் இப்போது கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச்சுனம் என்று கூறப்படுகிறது; அங்குள்ள கல்வெட்டுக்களும் அதனைச் "சீபருவதம்"[148] என்று குறிக்கின்றன. இவ்வண்ணம் சில மலைகளை விதந்தோதிய-தோடு நில்லாமல், மலைகள் பலவற்றின் முடியிலும் சிவபெருமான் கோயில் கொள்கின்றான் என்பாராய், "மலையின் தலை யல்லது கோயில் கொளீர்" [149] என்றும் குறிக்கின்றார்.

இனி ஆறுகளுள், அரிசிலாறு, காஞ்சி, காவிரி (பொன்னி), கெடி லம், கொள்ளிடம், கோதாவிரி, சிற்றாறு, நிவவு, பாலி, பெண்ணை, மண்ணியாறு, முத்தாறு, வெள்ளாறு என்ற இவற்றை எடுத்தோதுகின்றார். இவற்றுள் காஞ்சியாறு நொய்யலென வழங்குகிறது[150]. சிற்றாறென்பது வெஞ்ச மாக் கூடலருகே வருவது ; இதனைக் குடவனாறு என்றும் வழங்குகின்றனர்; இஃது இப்போது அமராவதி (ஆன் பொருநை) யாற்றொடு கலந்து கொள்கிறது. பதிற்றுப் பத்து உரைகாரர் குறிக்கும் குடவனாவறு இதுவாயின், ஒரு காலத்தில் இது காவிரியோடு கலந்திருக்க வேண்டும். நீர் நிலைகளுள் குமரியும் ஈழநாட்டு மாதோட்ட நகர்க்கு அண்மையில் உள்ள பாலாவியும் சிறப்புடைய நீர்நிலை - களாக நம்பியாரூரரால் குறிக்கப்படுகின்றன.

[140]. சுந். தே. 12:7 [141]. சுந். தே. 2:6. [142]. ௸. 33: 9.
[143]. ௸. 77:3. [144]. ௸. 78:6. [145]. புறம் 158.
[146]. புறம். 200. [147]. சுந். தே. 77:3. [148]. A. R. No. 35. of 1915.
[149]. ௸. 2: 9.
[150]. இது சங்க நூல்களிற் காணப்படும் ஆறுகளுள் ஒன்று. (பதிற். 48:18.)

இயற்கை நலம் காட்டல்

இங்ஙனம், தமிழகத்துப் பலவகை நாடுகளையும் சிறப் புடைய ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றையும் காட்டி இன்புறுத்தும் நம்பியாரூரர், தாம் பாடியருளிய பாட்டுக்களில் அவ்வவ்விடங்கள் வழங்கும் இயற்கைக் காட்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றார். இக்காட்சிகள் தமிழ் நூல்களில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய் தல் என ஐந்து வகையாக வகுத்துக் கூறப்படும். இவ் வகையே நோக்கின், சீப்பருப்பதம், திருக்கழுக்குன்றம் முதலிய திருப்பதிகள் குறிஞ்சி நிலத்தில் உள்ளன. அவற்றை நோக்கு வோர்க்கு அங்கே குறிஞ்சி நிலத்தின் இயற்கை நலம் இனிது தோன்றாநிற்கும். நம்பியாரூரர் இத் திருப்பதிகளைப் பாடிய பாட்டுக்களில் இக் குறிஞ்சிக் காட்சியை எடுத்தோதுகின்றார்.

சீபருப்பதம் என்பது கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச் சுனம் என இப்போது வழங்கும் இடம் என முன்பே கூறி னோம்; இங்குள்ள பழங் கல்வெட்டுக்கள் இதனைச் சீபரு வதம் என வற்புறுத்துகின்றன. இது மலைகள் செறிந்த நிலப் பகுதி. நம்பியாரூரர் அருளிய திருப்பதிகத்தைக்கொண்டு நோக்குமிடத்து, இங்கே மானும் மரையுமாகிய விலங் கினங்களும் மயிலினங்களும் கலந்து வாழ்கின்றன ; ஒரு பால் களிற்றி யானைகள் பிடிகளோடு கூடியுறைகின்றன ஏனல் விளையும் புனங்களின் அயலே கரடிகள் காணப் படுகின்றன ; ஏனங்கள் நிலத்தைக் கிளறுவதால் புதைந்து கிடக்கும் மணிகள் வெளிப்படுகின்றன ; ஒரு பால் குறவர் தினைப்புனம் அமைத்துள்ளனர் ; குறமக ளிர் கவணை ஏந்தி விளையும் புனங்களைக் காவல் புரிகின்ற னர் ; வேடர்கள் மலைத்தேனை இலைத்தொன்னைகளிற் பிழிந்து உண்கின்றனர்[151].

திருக்கழுக்குன்றமும் குறிஞ்சிப்பகுதியே யாதலின், அங்கே பிடியானைகள் கன்றொடு சூழ்வருவதும், களிறுகளும் பிடிகளும் கலந்துறைவதும், வெள்ளிய அருவிகளில் மணி யும் முத்தும் வந்து வீழ்வதும், பாலுண்ணும் குட்டிகளைத் தழுவிக்கொண்டு முசுக்கலைகள் பாறைமீது பாய்வதும், தேனினமும் வண்டினமும் இன்னிசைபாட, கானமயில் களித்திருப்பதும், சந்தன மரங்கள் இனிய மணம் கமழ் வதும், மிக்க மழையால், விளைந்து முதிர்ந்த மூங்கில்கள் முத்துக்களைச் சொரிவதும் பிறவும் இனிய காட்சியளிக்கின்றன.[152]

[150]. சுந். தே. 79:1-10. [151]. ௸. 81: 1-10.

வெஞ்சமாக் கூடல் என்பது கருவூர்க்கு அண்மையில் முல்லை நிலப்பகுதியிலுள்ளதோர் ஊர். இதன் அருகே சிற்றாறு ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. இதன் கீழ்க்கரையில் வெஞ்சமாக்கூடல் இருக்கின்றது. இதனைச் சூழ்ந்த பகுதி முற்றும் முல்லை நிலமேயாகும். இதனைக் காணும் நம்பியாரூரர் இது வழங்கும் இயற்கைக் காட்சியில் ஈடுபடுகின்றார்.

சிற்றாற்றின் நீர்ப்பெருக்கில் காட்டில் வளரும் மூங்கில் இடைப்பிறந்த முத்துக்களும், ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி முதலியனவும் வருகின்றன ; சந்தனமும் அகிலும் மணிகளும் கரையில் ஒதுக்கப்படுகின்றன. வெஞ்சமாக் கூடல் நகர்க்கண் புன்னையும் ஞாழலும் செறிந்த பொழில் களில் குருக்கத்தி படர்ந்துவிளங்க, அவற்றிடையே குயில் கள் இருந்து கூவுகின்றன. வேறொருபால் கமுகும் தென்னை யும் பலாவும் விரவிக் குளிர்ச்சி மிகுந்துள்ள பொழில்கள் உள்ளன. இங்கே செல்வ மக்களும் வன வேட்டுவரும் விரும்பி வாழ்கின் றனர்.[152]

பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் திருப்புனவாயில் என்பது ஒன்று ; இது திருவாடானை வட்டத்தில் கடற்கரை யைச் சார்ந்த பாலை நிலப்பகுதியில் இருப்பது. இதன் பாலை வடிவம் நம்பியாரூரர் கண்களுக்குத் தெரிகின்றது. அதனை அவர் அத் திருப்புனவாயிற் பதிகத்தில் விளங்கக் காட்டுகின்றார். பாலை நிலத்தில் வேட்டுவர் வாழ்வர். அவர் கள் அப்பகுதியிற் செல்லும் வழிப்போக்கர்களையும் வணிகர்களையும் சூறையாடுவது இயல்பு. இதனை, "மற வேடுவர் பொருது சாத்தொடு பூசல் அறாப் புனவாயிலே" [153] என்பர்.

இப்பகுதியில் சிறு சிறு கற்குன்றுகளும் தூறுகளும் கடுவெளியும் புற்கென்ற காட்சி தருகின்றன. கடுவெளி யில் மானினங்கள் வாழ்கின்றன. அவற்றையும் அங்கு வாழும் வேட்டுவர் அலைப்பதனால் அவை அவர்கட்கு அஞ்சி ஒளிந்து வாழ்கின்றன. ஆங்காங்கு நிற்கும் கள்ளி மரங்களின் கவடுகளிலிருந்து புறாக்கள் பெடைகளைப் பயிரும்; நிலம் செந்நிறமுடைமையின், " பொன்புனம்" என்றும் 'செந்தாரை" யென்றும் குறிக்கப்படுகிறது. இங்கே வெயில் வெம்மை மிக்கிருத்தலால் கள்ளிகளும் வற்றி விடுகின்றன ; புல் தீய்ந்து கரிந்தொழிகிறது; அவ் வெம்மையைக் கழித்தல் வேண்டிப் புள்ளிமான்கள் தூறு களில் மறைந்து உறைகின்றன. கல்லும் தூறும் நிரம்பிக் கரிந்து தோன்றும் அக்கருங்காட்டில் மேயும் கோழிகள் புற்றுக்களின் மேலேறிக் கூகூ வெனக் கூவுகின்றன.[154]

[152]. சுந். தே. 42: 1-10. [153]. ௸. 50:2. [154]. ௸. 50: 1-10.

இனி, சோழநாட்டுத் திருப்பதிகள் பலவும் மருதநலம் சிறந்தனவாகும். அவற்றுட் கலயநல்லூர் என்பது ஒன்று. இப்போது அது சாக்கோட்டை என வழங்குகிறது. இடைக் காலத்தே ஷாஜி யென்பான் ஒருவன் இங்கே இருந்து கோட்டை யமைத்து இப்பகுதியை ஆண்டான் என்றும், அது முதல் இவ்வூர் ஷாஜிக் கோட்டை என்று பெயர் பெற்று முடிவில் சாக்கோட்டையென மருவி வழங்குவதாயிற்று என்றும் கூறுகின்றனர்.[155] இஃது அரிசில் ஆற்றின் தென்கரையில் மருத வயல்கட்கு இடையே மிக்க வனப்புடன் விளங்குகிறது. இதனைக் குறிக்கும் நம்பி யாரூரர், "பரமன் உறையுமூர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசி லின் தென் கலயநல்லூர்"[156] என்று இயம்புகின்றார்.

இவ்வூர் அருகே ஓடும் அரிசிலாறு கும்பகோணத்துக் கண்மையில் அரிசிலூர் என்னுமிடத்தேகாவிரியிற் பிரிந்து வருகிறது. அரிசிலூர், சங்க காலத்தே அரிசில்கிழார் முதலிய சான்றோர் தோன்றுதற்கு நிலைக்களனாம் சிறப் புற்று இடைக் காலத்தும் தனது இருப்பு மறையாதே இருந்து[157] இந்நாளில் மறைந்து போயிற்று.

[155]. Tanjore Gazetteer. Vol. I. p. 43. [156]. சுந். தே. 16:11.
[157]. A. R. No.255 of 1911.

காவிரியின் பிரிவாதலால், அது கொணரும் வளமெல் லாம் அரிசிலாறும் பகிர்ந்து கொணர்ந்தது. அதன் வெள் ளத்தில் வெண் கவரியும் கரும்பீலியும் வேங்கை கோங்கு முதலியவற்றின் மலரும் மிதந்து வந்தன. மலைநாட்டு ஏலம் இலவங்கம் முதலியனவும், பலவகைப் பழங்களும், அகில் சந்தனம் முதலிய விரைப் பொருள்களும் முல்லை மல்லிகை செண்பகம் முதலியனவும் அரிசிலாற்றின் வரு வாயாயின. யானை மருப்பும் பொன்னும் மணியும் கரை மருங்கில் ஒதுக்கப்பட்டன.

இவ்வாற்றின் பெருக்கால் வயல்கள் நீர்வளம் மிகு தலின், இனிய பொழில்களும் அழகிய பொய்கைகளும் செல்வ மாடங்கள் மலிந்த திருவீதிகளும் கொண்டு ஊர்கள் பொலிவுறுகின்றன. வயல்களில் நெல்லும் கரும்பும் நிரைநிரையாய் நின்று காட்சியளிக்கின்றன. கன்றினம் கரும்பின் முளைகளை மேய், உடன் மேயும் கறவைகள் கழு நீர்க்கொடிகளை மேய்கின்றன. நீர் இடையறாமையால் கயல் மீன்கள் வளம் பெறுகின்றன. பொய்கைகள் தாமரை மலர்ந்து காண்பார் கண்கவரும் கவின் கொண்டு விளங்க, மகளிர் நீராடி இன்புறும் மகிழ்ச்சி மிகவும் சிறந்து மாண் புறுகின்றது. பொழில்களில் பல்வகைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி நிற்க, வண்டினம் தேனுண்டு பண்பாடு கின்றன ; மயில்கள் நடமாடி மகிழ்கின்றன ; ஆங்கு நிற்கும் புன்னை மரங்கள் முத்துப்போல் அரும்பிப் பொன்போல் மலர்ந்து பவளம் போற் காய்த்து இனிய காட்சி வழங்கு கின்றன. கமுகு மரங்கள் பாளை விரிதலால் தேமணங் கமழும் அப்பொழில்-களினூடே தென்றல் புகுந்து மன்றல் செய்கிறது.

நீர்வளஞ் சிறந்த ஊர்தொறும் மறையவர் உறைவர் என்பது ஒருதலை. அதனால் அங்கே அவர்களது இருப்புச் சொல்லாமலே விளங்கும். அவர்கள் காலம் அறிந்து மறை யோதுவர்; அதனால் அவர் உறையும் ஊர்ப்பகுதி மறை யோசை மிக்குளது . ஒருபால் கலைபயிலும் அந்தணர் உறைகின்றனர். அவர்கள் சொல்லிலக்கணமும் பொரு ளிலக்கணமும் நான்மறையு மாகியவற்றைக் கற்பாரும் கேட்பாருமாய் உள்ளனர் ; அதனோடு அவர்கள் இறை வனைத் தோத்திரம் பல சொல்லித் துதிக்கின்றனர். ஒருபால் அந்தணர்கள் வேள்வி செய்ய, அவருடைய ஓமப்புகை விண் படர்ந்து மழைமுகில் போல் தோன்றுகிறது.

ஒருபால் மண்டபங்களும் கோபுரங்களும் மாளிகைகளும் மல்கிய வீதிகள் உள்ளன. அவற்றின் கண் விழவொலியும் முழவொலியும் சிறுவர்களின் விளையாட்டொலியும் மிக் கிருக்கின்றன. இவ்வண்ணம் அழகு திகழும் கலய நல்லூரில் சோலைகளில் குயில்கள் கூவ, மயில்கள் ஆட, வண்டினம் பாட, கிளிகள் இறைவன் திருப்பெயரைக் கற்றுச்சொல்ல, காலை மாலை என்ற இருபோதும் இறைவன்பால் உண்மையன்பு கொண்டு உளமுருகி வழிபடும் அடியவர் கூட்டம் இடையறாது காட்சி தருகின்றது.[158]

[158]. சுந். தே. 16:1-11.

இப்போது வேதாரணியமென வழங்கும் திருப்பதி நம்பி யாரூரர் முதலியோர் காலத்தில் மறைக்காடு என்ற திருப் பெயரால் விளங்கிற்று. இது நெய்தல் வளம் படைத்த சோணாட்டுக் கடற்கரையூர்களுள் ஒன்று. இங்கே தாழைப் பொழில்களும் புன்னைப் பொழில்களும் மல்கியிருக் கின்றன. தென்னைச் சோலையும் பெண்ணைக் காடும் இப் பகுதியில் மிக்கிருக்கின்றன. கடற்கரையில் தூயவெண் மணல் பரந்துளது ; மலைபோலக் கடலலைகள் போந்து கரையை மோதியலைக்கின்றன. அதனால் கடற்கரையில் சங்கும் இப்பியும் வலம்புரியும் மிகுதியாக ஒதுக்குண்டு வாழ்கின்றன.

மணல் பரந்த கரையில் தாழையும் ஞாழலும் செறிந்த படப்பையை அடுத்து வாழைகள் நிற்கும் வயல்கள் உள்ளன.. தாழைத் திரளின் இடையில் வாழும் குரங்குகள் வாழைக் கனியை உண்கின்றன. தகர மரங்களுடனே நிற்கும் தாழை ஞாழல் முதலியவற்றின் நீழலில் கடற்கண் வாழும் சுறா மீன்களும் மகர மீன்களும் முத்தையும் பவளத்தையும் கொணர்ந்து கரையில் ஒதுக்குகின்றன. தெங்கும் பனை யும் நிற்கும் மணற்பரப்பில் அவற்றின் பழங்கள் உதிர்ந்து கிடக்கின்றன. சங்கு, இப்பி, வலம்புரி முதலியவற்றை இடறிவரும் மரக்கலங்கள் கடற்கரையில் தங்குகின்றன. முகில்கள் தங்கும் சோலைகளின் முடியளவும் உயர்ந்து மலையெனத் திரண்டு வரும் கடலலைகள் மோ துகின்றன. கடலகத்தேயுள்ள அருமணிகளை வங்கங்களும் சுறா மீன் களும் கொணர்ந்து கரையில் எறிகின்றன. நீனிறக் கட லருகே இடையிடையே உள்ள கழிகளைச் சார்ந்து தாழை கள் மலிந்துள்ளன. அவற்றின் மடலிடையே கொக்கும் நாரையும் பிறவுமாகிய நீர்க்குருகுகள் வாழ்கின்றன. சில காலங்களில் கடலலைகள் வலம்புரிகளையும் சலஞ்சலங் களையும் கரையில் எற்றி அலைக்கின்றன. நெல்விளையும் வயல்களில் கயல் மீன்கள் விளையாடக் கடலில் வாழும் வளைகள் ஏனைவளைகளையும் சலஞ்சலங்களையும் கரையிற் சேர்க்கின்றன. பூம்பொழில்களில் வண்டிருந்து பண்பாடி இன்புறுகின்றது.[159]

[159]. சுந். தே. 71: 1-10.

இயற்கை நலங்களை எடுத்துக் காட்டும் நம்பியாரூர ருடைய திருப்பாட்டுக்கள், அவ் வியற்கையில் காணப்படும் நிகழ்ச்சிகள் சிலவற்றை மிக்க அழகுறக் கூறு கின்றன. இவ்வியற்கைக் காட்சிகளில் சிலவற்றை யெடுத் தோதும் வகையால் பண்டைத் தமிழாசிரியன்மார் மக் களது பண்பாட்டினையும் உள்ளுறுத்துரைக்கும் இயல் புடையவர். இடைக்காலத்தே உள்ளுறுத்துரைக்கும் இம் முறையை நெகிழ்த்து இயற்கைக் காட்சிகளை மாத்திரம் எடுத்தோதிப் பிறரை இன்புறுத்தித் தாமும் இன்புறும் செயல் உளதாயிற்று. இவ்விரு கூறுகட்கும் இடைப்பட்ட காலம் நம்பியாரூரர் வாழ்ந்த காலம். அக்கால நிலைக்கு இயைய நம்பியாரூரர் இயற்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை எடுத்துரைக்கின்றார்.

குறமகளொருத்தி தினைப்புனம் காத்து வருகையில், கிளிகள் கூட்டமாய் வந்து தினைக் கதிர்களிற் படிந்து தினை யைக் கவர்கின்றன ; அவள் ஆலோலம் செய்து வெருட்டு கின்றாள் : அவ்வோலத்தையும் தன்னினமான கிளியின் குரல் என்றே கருதி அவை நீங்காதே இருக்கின்றன ; அதனால் அவள், "என்னை இக்கிளி மதியாதிருக்கின்றது" எனச் சிவந்து கையில் கவணேந்தி ஒலி செய்கின்றாள்; அதன் பின்பே, அக்கிளிகள் அஞ்சி நீங்கிச் சீபருப்பத மலை மேல் திரிந்து ஏறுகின்றன ; இதனை,

"மன்னிப்புனங் காவல் மட
      மொழியாள் புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்தே கவைக்
      கோலிக் கதிர் கொய்ய
என்னைக் கிளி மதியாது
      என்று எடுத்துக் கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்து ஏறிய
      சீபர்ப்பத மலையே"[160]
என்று பாடுகின்றார்.

வேழமொன்று மதங்கொண்டு அறிவு திரிந்து தன் பிடி யானையை நோக்கி "நீ மாற்றுக் களிறொன்றை அடைந் தாய் " எனத் தன் கையை மேலெடுத்துப் பிளிறிப் பூசு லிட்டு மதம் ஒழுக்கி நின்றது. அதுகண்ட பிடியானை, "இது கேட்கத் தரியேன்" என்று சொல்லி அயல் அறியத் தூற்றி நிற்கிறது ; களிறு, உண்மையுணர்ந்து தன் செய் லுக்கு வருந்திப் பிடியைத் தேற்றித் தான் இனி அவ்வாறு செய்வதில்லை யெனச் சூளுறவு செய்து கூடுகிறது. இந் நிகழ்ச்சியை,

" மாற்றுக் களிறடைந்தாய்
என்று மதவேழம் கையெடுத்து
மூற்றிக் கனல் உமிழ்ந்து மதம்
பொழிந்து முகஞ் சுழியத்
தூற்றத் தரிக்கில்லேன்
என்று சொல்லி அயலறியத்
தேற்றிச் சென்று பிடி
சூளறும் சீபர்ப்பத மலையே'[161]

என்று இனிமை மிகப் பாடியிருப்பது காணலாம்.

[160]. சுந். தே. 79: 3. [161]. ௸.79:6.

மக்கட்கு அறிவு வழங்கல்

மக்களுயிர் உலகத்தோடும் இறைவனோடும் தொடர் புறும் இயைபுடையது. உலகத்தோடு இயைந்து வாழ் வாங்கு வாழும் வகையால் இறைவன் திருவருள் உண்மை யுணர்ந்து, அதனோடு இயைந்து, ஞானம் பெற்று வீடு பேறு எய்தும் என்பது சிவநெறியின் முடிபு. வாழ்வாங்கு வாழ்தற்குத் துணை, உடம்பு உலகு நுகர்பொருள் என்பன வாம். அவற்றைத் துணையாகக் கொண்டு அவை நல்கும் பயனைக்கொண்டு ஒழியாமல் அவற்றின் இயைபால் உள தாம் சிற்றின்பத்துக்கு அடிமையாகி அவற்றையே உறுதி யாகக் கருதும் மயக்கம் உயிர்கட்கு உண்டாவது இயல்பு. அவ்வாறு மயங்குவோரே பெரும்பாலோர். அவரைத் தெருட்டுவதும் திருவருள் ஞானம் பெற்றோர் கடனாதலின், அருண்ஞானச் செல்வராகிய நம்பியாரூரர் அறிவுரை பல வழங்குகின்றார்.

உலக வாழ்வுக்கு முதலாகும் உடம்புக்குத் தோற்றம் உண்டேல் மரணமுண்டு ; இன்பமுண்டேல் துன்பமுண்டு; இதன் தோற்றத்துக்கும் ஆக்கத்துக்கும் காரணராகும் தந்தை தாயர் எள்ளளவும் சார்வாகார் ; நாட் செல்லச் செல்ல இவ்வுடம்பு தேய்ந்து வீழ்ந்தொழியும் ; மன்னர் சூழ வரும் பெருவாழ்வு வாழ்வோரும் சாவர்; செத்த போதில் யாரும் துணையாவதில்லை. இவ்வுடம்பகத்தே ஐம்புலன்கள் என்னும் வேட்டுவர் ஐவர் உளர் ; அவர் நம்மை வஞ்சிப்பர்; அவர்கள் செய்யும் வஞ்சனையால் நாம் பிறரால் இகழப்பட்டு அல்லலுறுவோம் ; ஆதலால்,

"கூசம் நீக்கிக் குற்ற நீக்கிச் செற்றம் மனம் நீக்கி
வாசமல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி, என் பணிந்து ஏறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே"[162]
என்று அறிவுறுத்துகின்றார்.

இறைவன் திருவருளோடு இயைந்து வாழும் வாழ்வே "இன்பத்தோடு இசைந்த வாழ்வு"[163], "ஏனை உடம்பை நச்சி வாழும் உலக வாழ்வு", "பொய்த் தன்மைத்தாய் மாயப் போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத்தாய் வாழ்வு: "[164] உடம்பென்பது, "ஊன்மிசை யுதிரக்குப்பை, ஒரு பொருளிலாத மாயம்;"[165] இதனை மகளிரே பெரிதும் மதிப்பர். இவ்வுடம்பின்கண் காணப்படும் தத்துவ தாத்து விகக் கூறுகளைச் சமயவாதிகள் வேறு வேறு கூறுவர்.

[162]. சுந். தே . 7:7. [163]. சுந். தே. 8:1. [164]. ௸. 8:9. [165]. ௸.8 :3.

இவற்றோடு இயையும் வாழ்வு, "சுவையிலாப் பேதை வாழ்வு"[166] முன்னே மணமென்று சொல்லி மகிழ்வுறும் தாய் தந்தையரும் பிறரும், பின்னே பிணம் எனச் சுட்டெரிப்பர். இதனை யுணராதார்,

"தாழ்வெனும் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்"[167]

என்று தெருட்டுகின்றார்.

[166]. சுந். தே. 8: 4. [167]. சுந். தே . 8:7.

இச் சுவையிலாப் பேதை வாழ்வைச் சுவையுடைத்து எனக் கருதுவோர் பலரும், " பாவமே புரிந்து பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு ஆவ என்று உழந்து அயர்ந்து[168] வீழ்வர்." அவர்க்கு உயிர் வாழ்க்கை யொன்றே கருத்து ; அதனால் அவர்கள் அதையே நினைந்து உடல் தளர்ந்து மாநிதி இயற்றி " என்றும் வாழலாம்[169] எனப் பேசுவர். வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து வீற்றிருந்த இவ்வுடம்பு தேய்ந்து இறந்து வெந்துயர் உழக்கும்[170]; வேறு சிலர் சடை முடித்துத் தவம் முயன்று அவமாயின பேசுவர்; அதனால் பிறவித்துயர் நீங்குவது அரிது;[171] எத்திறத் தோர்க்கும், சுற்றமும் துணையும் பிறரும் கண்டு கண்ணீர் சொரிந்து அழ, உயிர் உடம்பின் நீங்கிப் போவது நிச்சயம்.[172] வேறு சிலர், தேரர் சமணர் முதலியோருடைய வேற்றுச் சமயம் கூறும் தவம் மேற்கொண்டு அவஞ் செய்வர்; அவர், தமது தவத்தின் அவத்தன்மை யுணர்ந்து நீங்கள் வேண்டும் ; தளிகளையும் சாலைகளையும் நிறுவுவது தவமென முயல்வர்; அவர்கட்கு அவை தவமாவது, தம்மை உணர்ந்து தம்மை அடிமையாகவுடைய இறைவனை உணர்ந்து செய்யுங் காலையேயாம்.[173] சுருங்கச் சொல்லு மிடத்து. உறுதி நாடுவோர். இறைவன் திருக்கோயில்களையும் அடியார்களையும் வழிபாடு செய்தல் வேண்டும்[174]; இவ் வழிபாட்டால், வெளிறு தீரும்; நின்ற பாவம் நீங்கும்;[175] மலமெலாம் அறும் ; வினைகள் வந்து சாரா.[176]

[168]. சுந். தே. 64 :4. [169]. ௸. 64 : 5. [170]. ௸. 64: 6.
[171]. ௸. 64: 7. [172]. ௸. 64 : 8. [173]. ௸. 78: 6.
[174]. சுந்.தே . 78:10. [175]. சுந். தே. 81:3. [176]. ௸. 35: 8.

இங்ஙனம், மக்கட்கு நல்ல அறிவு வாழ்வு வழங்கும் நம்பி யாரூரர், புலவர் பெருமக்களை நோக்கிச் சிறப்பாகச் சில நல்லுரைகளைச் செப்புகின்றார். உலகியல் நிகழ்ச்சிகளைப் புலன்களால் வாங்கித் தம் புலமை கருவியாக இனிய சொற்களால் தொடுத்து யாப்பமைதியும் இன்னிசையும் பொருந்திய பாட்டுக்களில் உருப்படுத்திப் படிப்போரும் படிக்கக் கேட்போருமாகிய அறிஞர் மனக்கண்ணில் உயி ரோவியம் செய்து காட்டும் உரமுடையோர் புலவர் என உரைக்கப்படுவர். ஆயினும், அவர்கள் உலகில் வாழ்வது வேண்டிச் செல்வர்களை அடைந்து இல்லது புனைந்து பாடி அவர்களை மகிழ்வித்து, அதனால் அவர் நல்கும் பொருளைப் பெறும் செயல் இடைக் காலத்தே பெருகிற்று. புகழ்விருப் பால், செல்வர்கள் புலவர்களின் பின்னின்றது போக, பொருள் விருப்பால் புலவர்கள் செல்வர்களைப் பின் னின்று வாழும் நிலைமை நம்பியாரூரர்க்குப் பெருவருத்தம் விளைத்தது. செல்வரது செல்வமும் புலவரது புலமையும் இறைவன் உடைமையாதலின், புலவராயினார், இறை வனையே பாடுதல் வேண்டும்; அதனால் அவர்கட்கு உல கியல் வாழ்வும் பேரின்ப வீடும் எய்துவது எளிது என வற் புறுத்தினார். புலவர்களை அருளொடு நோக்கி, " புலவீர் காள், பொய்ம்மையாளர், கொடுக்கிலார், நலமிலாதார், குல மிலாதார், நோயர், நொய்யர், கல்லாதவர், வஞ்சர், சழக்கர், துட்டர் முதலிய பலரையும் பாடுதல் ஒழிமின். இவர் களை எத்துணை நல்லர் என்று இல்லது புனைந்து இறப்பப் புகழ்ந்து பாடினும் கொடார் ; ஆகவே, இச்செயலை விட்டு, இறைவனைப் பாடுமின் ; இம்மையில் இன்ப வாழ்வும் அம்மையில் சிவலோக வாழ்வும் உண்டாம்; இதற்கு "யாதும் ஐயுறவு இல்லை" [177] என வற்புறுத்துகின்றார்.

[177]. சுந். தே. 34:1.

பழைய நூலாட்சியும் பழமொழியும்

முன்னோர் மொழி பொருளேயன்றி அவருடைய மொழி களையும் மேற்கொண்டாளுவது சான்றோர் இயல்பன்றோ. சங்க நூல்கள், கொடை வள்ளல்களுட் சிறந்தோனாக வேள் பாரியைக் கூறுகின்றன. அச்செய்தியை நம்பியாரூரர் மேற்கொண்டு, "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலர்"[178] என்று எடுத்தோதுகின்றார். புலவரைப் பேணும் தக்கோரைப், "புலவர் புக்கில்"[179] என்று பண்டை நாளைச் சங்கச் சான்றோர் பாராட்டினர். அக்கருத்தையும் நம்பியாரூரர், "நொய்ய மாந்தரை விழுமிய தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரில்லை"[180] எனக் கூறுகின்றார். நீர்ப் பறவையினத்துள் ஒன்றான நாரையைச் சங்க நூல்கள் "தினைத்தாளன்ன சிறுபசுங்கால"[181[ என்றனவாக, நம்பியாரூரர் அச் சொற்றொடரையே மேற்கொண்டு "தினைத் தாளன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்"[182] எனத் தம்முடைய திருப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், "விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே"[183] என்றாராக, நம்பி யாரூரர், தாம் பாடுவன அவ்விருந்து என்னும் யாப்பின் பாற்படும் என்பது தோன்ற, "விருந்தாய் சொன் மாலை கொண்டேத்தி"[184] என உரைத்தருளுகின்றார். திருவேரகத்தில், அந்தணர்கள் நீராடி "விரையுறு நறுமலரேந்தி"[185] வழிபாடு செய்வரென நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில் எடுத்தோதினார் ; அக்கருத்தே விளங்க, நம்பியாரூரர், திருக்கருப்பறியலூர்த் திருப்பதிகத்தில், "முட்டாமே நாடோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும், கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர்"[186] என்று பாடியுள்ளார்.

[178]. சுந். தே. [179]. புறம். 375. [180]. ௸. 34:7
[181]. குறுந். 25. [182]. ௸. 95:6. [183]. தொல். செய்யு. 239.
[184]. ௸. 30:4. [185]. முருகு. 288. [186]. 30: 3.

இனி, திருவள்ளுவனார் வழங்கிய திருக்குறளை யெடுத்தா ளாத செந்தமிழ்ச் சான்றோர் இலர் என்பது உலகறிந்த உண்மை. அதற்கேற்ப நம்பியாரூரர் திருக்குறள்கள் பலவற்றைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் வைத்து அமைத்து அழகு செய்துள்ளார். திருவள்ளுவனார் இறை வனைப் "பொறிவாயில் ஐந்தவித்தான்"[187] என்று குறித்தாராக, நம்பியாரூரர் "பொறிவாயிலிவ் வைந்தனையும் அவியப் பொருது உன் அடியேற்கும் சூழல் சொல்லே"[188] என்றார். அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு"[189] என்ற திருக்குறள், "அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே"[190] என்றும், "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"[191] என்ற திருக்குறள், "ஓடுபுனற்கரையாம் இளமை உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி"[192] என்றும் வரும் திருப்பாட்டுக்களில் அமைந்துள்ளன.

இனி, அக்காலத்து வழங்கிய பழமொழிகள் பல நம்பி யாரூரருடைய பாட்டுக்களில் காணப்படுகின்றன. பேயோ டாயினும் கூடிய வழி அதனிற் பிரிவதென்பது துன்பந் தருவதாம் என்று பழையோர் கண்டனர். அவரது பழமொழி, முன்றுறையரையனார் செய்த பழமொழி நானூறென்னும் நூலில், "இலங்கருவி, தாஅய் இழி யும் மலைநாட, இன்னாதே, பேஎயோடானும் பிரிவு"[193] என்று காட்டப்படுகிறது. இதனை நம்பியாரூரர், "பேயோ டேனும் பிரிவொன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்"[194] என்று கூறுகின்றனர். எய்ப்பினில் வைப்பென்று ஒரு பழமொழி உண்டென முன்றுறையரையனார் "தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ, எய்ப்பினில் வைப்பென்பது"[195] என்று கூறினர்.

[187]. குறள் 6. [188]. சுந். தே. 3:2 [189]. ௸.1 [190]. ௸. 3:7
[191]. ௸. 339 [192]. ௸. 3:4 [193]. பழமொழி 126
[194]. ௸. 95:9 [195]. ௸. 358

நம்பியாரூரர் அப்பழமொழியை, "நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறையறிந்து அருள்புரிவானை"[196] எனத் தாம் மேற்கொண்டு கூறுகின்றார். இவ்வாறே " பஞ்சியிடப்பட்டில் கீறுமோ"[197], "வெட்டெனப்பேசன்மின்[198], " பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம்"[199], "இரும்புண்ட நீர் போல்"[200] கணக்கு வழக்கு[201] என்பன முதலாகப் பல பழமொழிகள் இவருடைய திருப்பாட்டுக்களில் காணப்பட்டுகின்றன.

[196]. சுந். தே. 67 :2. [197]. சுந். தே. 43:1 [198]. ௸. 44:3.
[199]. ௸. 50:4. [200]. ௸. 58: 1. [201]. ௸. 54: 1.

சொல் நயம்

இங்ஙனம் பண்டைச் சான்றோர் வழங்கிய சொற்கள், சொற்றொடர்கள், கருத்துக்கள், பழமொழிகள் முதலியவற்றைத் தாம் பாடியருளும் திருப்பாட்டுக்களின் இடை யிடையே தொடுத்து இனிமை அமையப்பாடும் நலமிக்க நம்பியாரூரர் , பாடும் பாட்டுக்கு ஏற்பச் சில அரிய சொற் களையும் சொற்றொடர்களையும் புதியனவாக அமைத்துக் கொள்கின்றார். மனத் திட்பமில்லாத மக்களை ஓட்டை நெஞ்சினர் எனப் பிறரெல்லாம் கூறுவர். நம்பியாரூரர். "முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே"[202] என வழங்குகின்றார். சிறு மட்கலத்தைச் சிட்டி யென்றும், சிட்டென்றும், அதனால் அக்கலம் போலும் மண்டையோட் டைச் சிட்டு என்றும் அதன் மேலுள்ள குடுமியைச் சிட்டுக் குடுமி யென்றும் மக்கள் வழங்குவர். இறைவன் உண விரந்து உண்ட மண்டைக்கலத்தையும் சிட்டெனக்குறித்து நம்பியாரூரர் , பலியிரந்தூண் சிட்டு உகந்தார்க்கு இடமா வது நம் திரு நின்றியூரே"[203] என்றனர். திவ்விய என்னும் வடசொல்லைத் திப்பியமெனத் தமிழ்ப்படுத்து வழங்குவது பண்டைச் சான்றோர் மரபு. அதனையே தாமும் பின்பற்றி "தேசுடைய இலங்கையர்கோன் வரையொக்க அடர்த்துத் திப்பிய கீதம்பாடத் தேரொடு வாள் கொடுத்தீர்"[204] என்று பாடுகின்றார் .

[202]. சுந். தே. 7:8 [203]. ௸. 19:8. [204]. சுந். தே. 46:7

சொற்களைக் குறைக்கும்வழிக் குறைத்துச் செய்யுள் செய்யும் செந்தமிழ் நடை சிறக்க, பாசம் என்னும் சொல்லி லுள்ள அம்முக்குறைத்துப் பாசமற்றவர் என வரற்குரிய சொற்றொடரொன்றைப் பாசற்றவர்[205] எனவும், சொல்லுதல் என்னும் பொருளதாகிய பனுவல் என்னும் பெயர்ச் சொல்லை வினைப்படுத்துப் "பனுவுமா பனுவி"[206] எனவும் வழங்குகின்றார். இவ்வாறே, "சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்"[207], "அருண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்"[208], "நொண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்"[209], "திதையும் தாதும் தேனும் ஞிமிறும், துதையும்"[210] என்பன முதலாக வருவன ஆராய்ச்சியாளர் காணத் தகுவனவாம். இங்ஙனம் சொற்களைப் புதுப்புது வகையால் ஆக்கும் நாவலர் பெருமானான நம்பியாரூரர், கண்ணபிரானை "யானையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப்பிள்ளை"[211] என் றும், நஞ்சுண்ட இறைவனை, 'நஞ்சினை யுண்டிட்ட பேதைப் பெருமான்"[212] என்றும் கூறுவர்.

[205]. சுந். தே. 50:7. [206]. ௸.67:6. [207]. ௸.73:3.
[208]. ௸.66:2. [209]. ௸.73:8. [210]. ௸.94:5.
[211]. ௸.57:8 [212]. ௸.94:6.


இங்கே இறைவன் நஞ்சுண்டது அறிவுடையார் செய் லன்று; பேதையார் செயல் என்றும், ஆயினும் அதனை அவர் பிறர் வாழச்செய்ததனால் பெருந்தகைமையாயிற்று என்றும் புலப்பட 'பேதைப் பெருமான்" என்னும் சொல் வித்தகம் அவர் கூற்றில் அமைந்திருப்பது காணத் தக்கது.

தொடக்கத்தில் நம்பியாரூரர் திருவாரூர்க்கு வருகையில், அத் திருவாரூர் தமது ஊரென்றும், அதனை இறைவன் தமக்கு இடமாக்கிக்கொண்டமையின், அங்குவரும் எம்மையும் ஏற்றுக் கொள்வாரோ என்பாராய், ''எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்''[213] என்று கூறுகின்றார்.

பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல்லை அட்டித்தரல் வேண்டும் என்ற குறிப்புடன் திருக்கோளிலிப் பெருமானை வேண்டுகின்றவர், மகளிரொடு கூடி வாழ் பவர்க்குப் பொருளின் இன்றியமையாமை நன்கு புலப் படும் என்பது பட, "பாதியோர் பெண்ணை வைத்தாய் படரும் சடைக் கங்கை வைத்தாய், மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே"[214] என்றும், "குரவ மருங் குழ லாள் உமை நங்கை யோர் பங்குடையாய், பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதியன்றே"[215] என்றும் குறித்துரைக்கின்றார்.

[213]. சுந். தே. 73:7 [214]. சுந். தே. 20:3. [215]. ௸.20:6.

திருக்கோடிக் குழகர், கடற்கரையில் கடிதாய்க் குளிர்காற்று வீச, ஆந்தையும் கூகையும் குழற, கொடியரான வேடர்கள் வாழுமிடத்தே கோயில் கொண் டிருப்பது கண்டு, இங்கே தனியே யிருப்பது கூடாது என்றும்,

"ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ
அற்றப்பட ஆரூர் அது என்று அகன்றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே"[216]

என்றும் பரிந்து பாடுகின்றார். திருநாகைக் காரோணத்தில் இறைவன் திருமுன்னர் நின்று முத்தாரம், மணிவயிரக் கோவை முதலிய நலங்களெல்லாம் வேண்டுமெனக் கேட்பவர், ஒருகால் இறைவன் இவை என்பால் இல்லை யென்று சொல்லி விட்டால் என் செய்வது என நினைத்தவர்போல்,

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
      வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீரல்லீர்
      அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்
தோற்றமிகு முக்கூறில் ஒரு கூறு வேண்டும்
      தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்"[217]
என்றும்,

"மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே யாட்சி
      மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான்
      எம்பெருமான் இது தகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகின்
      திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும் பாடன் என்று உரைக்க வேண்டா
      கடல் நாகைக்காரோணம் மேவியிருந்தீரே"[218]

என்றும் இயம்புகின்றார்.

[216]. சுந். தே. 32 : 8. [217]. சுந். தே. 46:8 [218]. ௸. 46:9

சேரமான் பெருமாள் தந்த பொருளைப் பெற்றுவரும் நம்பியாரூரரைத் திருமுருகன்-பூண்டிக்கு அண்மையில் வேடுவர் ஆறலைத்து அப்பொருளைக் கவர்ந்தேகினாராக. ஆரூரனார், திருமுருகன்பூண்டி இறைவன் திருமுன் வணங்கி நின்று, "கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித், திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கு மிடம் "இவ்விடம் ; முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானிரே"[219] என்று கூறுவர். திருவோணகாந்தன் தளியில் இறைவனை வணங்கி, "உமக்கு யான் ஆட்பட்டும் பயன் பெரிது பெற்றிலேன்; இனி யாங்கள் உமக்கு ஆட்படோம்" என்பாராய்,

"திங்கள் தங்கு சடையின் மேல் ஓர்
      திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்
      கணபதியேல் வயிறுதார்
அங்கை வேலான் குமரன் பிள்ளை
      தேவியார் கொற்றட்டியாளார்
உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்
      ஓணகாந்தன் தளியுளீரே''[220]
என்றும்,

''வாரமாகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர்
      பெறுவது என்னே ,
ஆரம்பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல்
      உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்த
      அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
      ஓணகாந்தன் தளியுளீரே''[221]

என்றும், பிறிதோரிடத்திலும் இவ்வாறே,

பேருமோராயிரம் பேருடையார்
      பெண்ணோடு ஆணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
      பெற்றவா நாமறியோம்
காருங்கருங்கடல் நஞ்சமுதுண்டு
      கண்டங் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பாவது அறிந்தோமேல்
      நாம் இவர்க் காட்படோமே [222]

என்றும் இசைக்கின்றார்.

.[219]. சுந். தே. 49:2 [220]. சுந். தே. 5:2 [221]. சுந். தே. 5:9 [222]. சுந். தே. 18:3

இனி, நம்பியாரூரர் கண்ணிழந்து வருந்திய காலத்தில் இறைவனைப் பழிப்பதுபோலப் பாடியன மிக்க சொன் னயம் அமைந்தனவாகும். 'ஈன்று கொண்டதோர் சுற்ற மொன்று அன்றால் யாவராகில் என் அன்புடையார்கள், தோன்ற நின்று அருள் செய்தளித்திட்டால் சொல்லுவாரை யல்லாதன சொல்லாய், மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்காகில், ஊன்றுகோல் எனக்கு ஆவதொன்று அருளாய் ஒற்றியூரெனும் ஊருறை வானே"[223], "மகத்திற் புக்கதோர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளர், அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா எனத் தரியேன், முகத்தில் கண்ணிழந்து எங்ஙனம் வாழ்வேன் முக்கணா முறையோ மறையோதீ, உகைக்கும் தண்கடல் இதழ் வந்து உலவும் ஒற்றியூரெனும் ஊருறைவானே"[224] என்று பாடுகின்றார். பின்பு காஞ்சிமாநகரில் ஒருகண் பெற்றுத் திருவாரூர்க்கு வந்து இறைவனை வணங்கு பவர், மற்றைக் கண்ணையும் தரல் வேண்டுமெனப் பரவு கின்றார். அக்காலையில் சினந்து இறைவனைப் பழிப்பார் போல , " விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி யாட் பட்டேன், குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தையாக், கினீர் , எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழி பட்டீர் , மற்றைக் கண் தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே''[225] என்று பல பாட்டுக்களால் பாடுகின்றார்.

இங்ஙனம் இறைவன் பால் எழுந்து நிலவிய பேரன் பால் பழிப்பது போலவும் பரவுவது போலவும். பாட்டுக்கள் பாடி ஒழுகிய நம்பியாரூரர், இறைவன் மகளிர் வாழும் மனைதோறும் சென்று பலியிரந்த வரலாற்றை நயந்தெடுத்துப் பலியிடும் மங்கையர் கூற்றில் தம்மை வைத்துத் தமது பேரன்பைப் புலப்படுத்துகின்றார். பலியிடுவாளொருத்தி, பலியிரக்கும் இறைவன்பால் கருத் திழந்து, 'எம்பால் பலிபெற வேண்டின் நீர் தனித்து வரவேண்டுமே யன்றிப் பெண்ணொருத்தியொடு வருத லால் யாம் பலியிடமாட்டோம், சென்மின்' என்பாளாய், "நீறு நுந்திருமேனிநித்திலம் நீனெடுங் கண்ணினாளொடும், கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நடமினோ"[226] என்று கூறுகின்றாள். இவ்வாறு பலியிடப் போந்த நங்கை யொருத்தி இறைவன் பால் கருத்திழந்து கூறும் கூற்றில் வைத்து, "என்னது எழிலும் நிறையும் கவர்வான், புன்னை மலரும் புறவில் திகழும், தன்னை முன்னம் நினைக்கத் தருவான், உன்னப்படுவான் ஒற்றியூரே"[227] என்று பரிகின்றார் ; இவ்வாறே வேறொருத்தி, கிள்ளை பூவை முதலியவற்றை இறைவன்பால் தூதுவிடும் கருத்தை மேற்கொண்டு, " பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள், அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை, மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும், உற்கக் மில்லாமையும் உணர்த்த-வல்லீர்களே"[228] என்று வருந்துகின்றாள்.

[223]. சுந். தே. 54 :4 [224]. சுந். தே. 54:9. [225]. ௸. 95:2.
[226]. ௸. 36:5. [227]. சுந். தே. 91:4. [228]. சுந். தே. 37:2.

நம்பியாரூரரும் கல்வெட்டுக்களும்

நம்பியாரூரருக்குரிய பெயர்களுள் ஆலால சுந்தரர், நாவ லூருடையார், ஆரூரர், ஆளுடைய நம்பி, வன்றொண்டர், தம்பிரான் தோழர், திருத்தொண்டத்தொகையார், சுந்தரப் பெருமாள், சேரமான் தோழர் என்பன முதலிய பெயர்கள் கல்வெட்டுக்களில் வழங்குகின்றன. நம்பியாரூரர் மண்ணுலகில் வந்து தோன்றுதற்கு முன் திருக்கயிலாயத்தில் ஆலால சுந்தரராக விளங்கினார் என்ற வரலாறு பற்றி, ஆலால சுந்தரர் எனச் சிறப்பித்து உரைக்கப்படுவதுண்டு. திருத்தொண்டர் வரலா றுரைத்த சேக்கிழார் "ஆலால சுந்தரர்"[229] என்று சிறப்பித்து உரைக்கின்றார். திருநெல்வேலி மாவட்டத்துத் திருவாலீஸ்வரமென்னும் கோயிலில் ஆட் கொண்ட நாயக மாணிக்கம் என்னும் தேவரடியாள் ஒருத்தி நம்பியாரூரரை ஆலால சுந்தர நாயனார் என்ற பெயரால் எழுந்தருள வைத்துப் பரவை நாச்சியார் திரு உருவத்தையும் உடன் எழுந்தருள்வித்தாள் என்று அங் குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது[230]. திருவரசிலியி லுள்ள இறைவனுக்கும் "உடையார் ஆலால சுந்தர நாயனார்"[231] என்றே பெயர் என அவ்வூர்க் கல்வெட்டால் அறிகின்றோம்.

[229]. பெரியபு. திருநாவு. 11. [230]. A. R.No.345of 1916.
[231]. S. I. I. Vol. VII. No. 819.

ஆலால சுந்தரர் என்ற பெயரால் நந்த வனங்கள் திருக்காளத்தி[232], திருப் பாலைவனம்[233], முதலிய இடங்களிலும், மடங்கள் பல, சோழவந்தானுக்கு அண்மை யிலுள்ள தென்கரை,[234] தஞ்சை மன்னார் குடிக்கு அண்மையி லுள்ள பாமணி,[235] அறையணி நல்லூர்[236], திருநெல்வேலி[237] முதலிய இடங்களிலும், ஆலால சுந்தரன் திருக்குகை யெனத் திருமணஞ்சேரி[238]யிலும் இருந்திருக்கின்றன. இப்பெயரையே சநம்புடைய மக்கள் பலர், இராசேந்திர சோழ கேரள நிஷத ராஜனான ஆலால சுந்தரப் பெருமாளான தப்பிலா வாசகன்[239] என்றும், குன்றத்தூர் திருமடவளாகத்திலிருக்கும் உடையாரான ஆலால சுந்தரர்[240] என்றும், உடையான் ஆடுவானான ஆலால சுந்தரப்பெருமாள்[241] என்றும் கொண் டிருந்தனர். மகளிருள்ளும் "மாணிக்கத்தின் மகள் மடப் பிள்ளையான ஆலால சுந்தரமாணிக்கம்[242] என்று பெயர் தாங்கியுள்ளனர்.

இனி, நம்பியாரூரர் திருநாவலூரினர் என்பது பற்றி, தன்னை "நாவலூரன்"[243] என்று அவரே கூறுவதுண்டு. இதனால் இவரைச் சான்றோர் நாவலூருடையார் என்று பாராட்டினர்.[244] திருச்சிராப்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த சிவாலயத்திற் காணப்படும் கல்வெட்டுக்கள், நாவலூருடையான் காளிதாசன் திருச்சிற்றம்பலமுடையான் குலோத் துங்க சோழ உறந்தையரையன்[245] என்றும் நாவலூருடையான் திருச்சிற்றம்பலமு-டையான் கங்கை கொண்ட பிள்ளை[246] என்றும் வணிகர் இருவரைக் கூறுகின்றன ; வாட்போக்கி எனப்படும் இரத்தினகிரியிலுள்ள கல்வெட்டு, சிவபாத சேகரபுரத்து நாவலூருடையான்[247] என்ற பெயரினன் ஒருவனைக் குறிக்கின்றது. இவற்றால் நாவலூருடை யான் என்றும் மக்கள் தமக்குப் பெயர் பூண்டு விளங்கினர் என்பது தெளியப்படுகிறது.

[232]. A. R. No. 22 of 1912. [233]. A. R. No.309 of 1928-9.
[234]. A.R. No. 124 of 1910. [234]. A. R. No. 169 of 1926.
[236]. A.R. No.175 of 34-5. [237].S.I. I. Vol. V. No. 422.
[238]. A. R. No.28 of 1914. [239]. A.R.No. 42 of 1928-9. A.
[240]. A. R. No.212 of 1930. [241]. Travan. Arch. Vol. VI. No. 14.
[242]. S. I. I. Vol. XII.No. 196. [243]. சுந்.தே .34:10.
[244]. S. I. I. Vol. VIII: No. 442. [245]. A.R. No. 47 of 1913.
[246]. A. R. No.45 of 1913. [247]. A.R. No. 145 of 1914.

நம் நாவலூருடையாரைப் பெற்றோர் நம்பியாரூரர் என்ற திருப்பெயரிட்டுச்சிறப்பித்தனர் என அவர் வரலாறு கூறுகிறது : "தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியா ரூரர் என்றே நாமமும் சாத்தி"[248] எனச் சேக்கிழார் து வதும், அவரே ஒரு திருப்பதிகத்தில் தன்னை நாவல் ஆரூரன் நம்பி"[249] என்று குறிப்பதும் ஈண்டு நினையத் தக்கன. இத் திருப்பெயரையே எடுத்தாளும் கல்வெட்டுக்கள் மிகப்பல[250] ஆரூரன் என்பது திருவாரூரில் உள்ள இறைவனுக்குத் திருப்பெயராகும். அதுவே தனக்கும் பெயராயிற்றென அவர், "அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன் ஆரூரன்"[251] என்று எடுத்துக் கூறுதலால், அதனையும் கல்வெட்டாளர்[252] மேற் கொண்டனர். மக்களில் சிலர் நம்பியாரூரன் என்ற பெயர் தாங்கியிருக்கின்ற னர். திருவெண்ணெய் நல்லூரிலே கிணையன் மகன் சோர னான நம்பியாரூரக்கோன் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்குப் பாலாடி யருளுமாறு கிளி யூர்மலையமான் ஒருவன் விட்ட பசுக்களைத் தான் ஓம்புவ தாகஉடன்பட்ட கல்வெட்டொன்று உளது[253]. இத்திருவெண் ணெய்நல்லூரில் நம்பியாரூரர்க்குத் திருக்கோயிலும் நாள் வழிபாடும் இருந்தன என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள்[254] எடுத்தோதுகின்றன.

[248]. பெரியபு. தடுத்தாட். 4. [249]. சுந் . தே. 53:10.
[250]. S. I. I. Vol. II. p.ii. No. 38, 41; S. I. I. Vol. V. No. 418. S. I. I. Vol. VII. No. 939; A. R. No. 275 of 1917; 299 of 1917, 37 of 1920
[251]. சுந். தே. 59:11. [252]. S. I. I. Vol. II. p. iii. No. 65.
[253]. S. I. I. Vol. VII. No. 939. [254]. Ibid. No.945.
--------

நம்பியாரூரரை இறைவன் தடுத்து ஆட்கொண்ட போது அவர் வன்மைகள் பேசினர் என்றும், அதனால் அவருக்கு வன்றொண்டர் என்று ஒரு சிறப்புப்பெயர் உண்டாயிற்று என்றும் அவர் வரலாறு கூறுகிறது ; அவரும் அதனை வற் புறுத்துவதுபோல, ''தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள் சவைமுன், வன்மைகள் பேசிட வன் றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்"[255] என்று உரைத் தருளுகின்றார். இவ்வரலாற்றில் மிக்க ஈடுபாடு கொண்ட பிற்காலச் சான்றோர் மக்கட்கும் இவ் வன்றொண்டன் என்ற பெயரையிட்டுச் சிறப்பித்தனர். திருத்துறைப் பூண்டி[256]யிலுள்ள இறைவனுக்கு மூன்றாம் இராசராசன் காலத்தில் அவ்வூரில் வாழ்ந்த வன்றொண்ட முதலியார் என்ற சான்றோர் நிலம் விட்ட செய்தியை அவ்வூர்க் கல் வெட்டொன்று கூறுவதுகாண்க. பிறிதோரிடத்தில் நம்பி யாரூரர் தம்மை வன்றொண்டன் என்று குறிப்பதோடு[257] நில்லாமல் "அணுக்க வன்றொண்டன்"[258] என்றும் எடுத் துரைத்தார். அதனைக் கண்டோரும், மக்களை அப்பெய ரிட்டு வழங்கினர். வீரனாமூர் என்னுமிடத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு அணுக்க வன்றொண்டன் என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் நிலம் விட்டனர் என்று கல்வெட்டுக்[259] கூறுகிறது.

இனி, இவ்வாறு இறைவனுக்கு ஆளாகப் பெறும் சிறப் பினால் இவரைச் சான்றோர் ஆளுடைய நம்பியென வழங்கிப் பரவியதுண்டு. அரசியற் குறிப்புக்களாகிய கல்வெட்டுக் களும் இப்பெயரை மகிழ்ந்தேற்று ஆளுடையநம்பி யென்று வழங்குகின்றன[260]. மேலும், அக்காலத்தே நம்பியாரூரது வரலாறு கூறும் புராணம், "ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம்" எனவும் வழங்கியிருக்கிறது. திருவொற்றி யூரில் பங்குனி உத்திர விழாவில் இறைவனை மகிழ மரத் தின் கீழ் எழுந்தருள்வித்து நாடாளும் வேந்தரும், கற்று வல்ல சான்றோர்களும் கூடியிருந்து அந்த ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணத்தை ஓதி விழாக்கொண்டாடுவர் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள்[261] உரைக்கின்றன. திருவாரூர்[262], திருவிடைமருதூர்[263] முதலிய பல இடங்களிலுள்ள கல்வெட்டுக் கள் நம்பியாரூரரை ஆளுடைய நம்பி யெனவே சிறப்பித் துரைக்கின்றன.

[255]. சுந். தே. 17:2. [256]. A. R. No. 478 of 1912. [257]. ஷை 17:11.
[258]. சுந். தே. 70:10. [259]. A. R. No.524 of 1937-8.
[260]. A.R. No.309 of 1907; S. I. I. Vol. VII. No. 485.
[261]. S. I. I. Vol. V. No. 135-8; A. R. No.371 of 1911.
[262]. S. I. I. Vol. VIII. No. 485. [263]. A.R. No. 302 of 1907.

திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவன் நம்பியா ரூரரைத் தடுத்தாட்கொண்ட சிறப்பு, நாட்டில் நன்கு பரவி யதும் இறைவனைத் தடுத்தாட்கொண்ட நாயனார் என்று சான்றோர் வழங்கலுற்றனர். முதல் இராசராசன், அவன் மகனான முதல் இராசேந்திரன் முதலியோர் காலம்வரை வெண்ணெய் நல்லூர் இறைவனுக்குத் திருவருட்டுறை யுடைய மகாதேவர்[264] என்ற பெயரே வழங்கிவந்தது. அவர் கட்குப் பின் வந்த வேந்தர் காலத்தில் தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் ஆட்கொண்ட தேவர்[265] என்றும் பெயர் கள் வழங்கலாயின. இவ்விறைவன் பால் அன்பு பூண்டோர் தம் மக்கட்கும் இப் பெயரையிட்டுப் பேணினர். நெற்குன்றம் என்னும் ஊரில் வணிகனொருவனுக்குத் தடுத்தாட்கொண்டான்[266] என்ற பெயரும், மாறங்கியூரில் தேவேந்திர வல்லப் பிரமாதிராயன் மடத்தைக் கண் காணித்து வந்த ஒருவற்குத் தழுவக் குழைந்தான் தடுத்தாட்-கொண்டான்[267] என்ற பெயரும் வழங்கின. நம்பியாரூரர், தாம் ஆளென உணர்ந்து அன்புமிக்கு இறைவனைப் பாடத்தொடங்கியபோது இறைவன் அவரைப் பித்தன் என்று பாடுமாறு பணித்தருளின வரலாற்றை நினைவு கூரு முகத்தால் பிற்காலச் சான்றோர் இறைவனைப் "பிச்ச னென்று பாடச்சொன்னான்"[268] என்ற ஒரு சிறப்புப் பெயரையும் கூறிப்பரவினர் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

[264]. S. I. I. Vol. VII. No. 938. [265]. Ibid. No.939.
[266]. A. R. No. 211 of 1934-5; A. R. No.96 of 1935-6.
[267]. A.R. No.95 of 1936-6. [268]. S. I. I. Vol. XII. No. 231.

நம்பியாரூரர் திருவாரூர்க்குச் செல்லுங்கால் திருத்துறை யூரை அடைந்து இறைவனை வழிபட்டுத் தமக்குத் தவநெறி யருளுமாறு வேண்டினார் என்பது வரலாறு ; " துறையூர் அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே"[269] என நம்பியாரூரரே தமது திருப்பதிகத்தில் குறித்தருளு கின்றார். அது குறித்து அவரைப் பிற்காலச் சான்றோர் தவநெறிச் சுந்தரர்"[270] எனச் சிறப்பித்துப் பேணினர்.

நம்பியாரூரர் திருவாரூர் இறைவனைத் தமக்குத் தோழ னாகக்கொண்டு திருப்பதிகம் பாடிப் பரவிவரும் நாளில் அவருக்குத் தம்பிரான் தோழர் என்ற சிறப்பு எய்திற் றென அவரது வரலாறு கூறுகிறது ; சேக்கிழாரும், அச் சிறப்பை, " அன்று முதல் அடியார்களெல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்"[271] என்றும், "இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடும் ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்ட சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றார்"[272] என்று விதந்தோதுகின்றார். நம்பியாரூரரும் இத்தொடர்க் கருத்தை ஒரு திருப்பதி கத்தில், "தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை"[273] என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு வரலாற்றாலும் திருப்பதிகத் தாலும் வற்புறுத்தப் பெறுதலால் இப்பெயர் நலத்தைப் பிற்காலத்து அறிஞர்கள் நன்குணர்ந்து வியந்து மக்கட் கிட்டு மாண்புற்றனர். ஏழிசை மோகன் மூவேந்தரையனான தம்பிரான் தோழன்[274] என்றும், கலியன் சேந்தனான தம்பிரான் தோழன்[275] என்றும் செல்வர் பலர் இப்பெயர் தாங்கி யிருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. திரு முட்டத்தில் திருப்பதிகம் பாடும் திருப்பணியை மேற் கொண்டு , தம்பிரான் தோழனான மானக்கஞ்சாறன் என்ற ஒருவர் வாழ்ந்திருந்தாரென அவ்வூர்க் கல்வெட்டொன்று[276] கூறுகிறது.

[269]. சுந்.தே . 13: 1-11. [270]. S. I. I. Vol. VIII.No.69.
[271]. பெரியபு , தடுத்தாட். 129. [272]. பெரியபு. தடுத்தாட். 171.
[273]. சுந். தே. 68:8. [274]. A.R.No.61 of 1922.
[275]. A.R. No.273 of 1927-8. [276]. A.R.' No.255 of 1916.

பின்பு கழறிற்றறிவாரான சேரமான் பெரு மாளுடன் நம்பியாரூரர் நட்புக்கொண்டு விளங்கிய சிறப்புக் குறித்து, சேரமான் தோழர் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றார். இதனைச் சேக்கிழார், "சேரர்பெரு மானார் தாமும் வன்றொண்டரும் கலந்த, பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார்பரவும், மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்காகி விளங்கியது"[277] என்று குறிக்கின்றார். இப்பெயர் நலத்தைப் பாராட்டி மக்கட்கிட்டு மேன்மை எய்துவது பிற்கால மக்களிடையே பெருவழக் காய் நிலவிற்று என்பதைக் கல்வெட்டுக்கள்[278] எடுத்துரைக் கின்றன.

நம்பியாரூரர்க்கு இங்கே கூறிய சிறப்புப் பெயர் களோடு சுந்தரர் என்ற பெயரும் உண்டு ; இஃது இடைக் காலத்தே சுந்தர நாயனார்[279] என்றும், சுந்தர நாய்கனார் என்றும் வழங்கிற்று ; பின்பு சுந்தரமூர்த்தி நாயனார் என்ற பெயர் தோன்றிற்று; அஃது இன்று காறும் வழங்கி வருகிறது.

நம்பியாரூரருடைய தந்தையார் சடையனார் என்றும், தாயார் இசை ஞானியார் என்றும் அவர் வரலாறு கூறு கிறது; நம்பியாரூரர் தாமே தம் தாய் தந்தையரை, "நண் புடைய நன்சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர் கோன் ஆரூரன்”[280] என்று குறித்தருளுவர். பண்டைநாளில் சடையன் என்னும் பெயர் மக்களிடையே பயில வழங் கிற்று. இசைஞானியார் திருவாரூர்க்கு அண்மையி லுள்ள கமலாபுரத்தில் வாழ்ந்த ஞான சிவாசாரியார்க்கு மகள் என்றும், அவர் கௌதம் கோத்திரத்தவ ரென்றும் திருவாரூர்க் கல்வெட்டொன்று[281] கூறுகிறது. நம்பியாரூரர் திருவாரூரில் மணந்து கொண்ட பரவையாரைக் கல்வெட்டுகள் நங்கை பரவையார்[282] என்றும், பரவை நாச்சியார் என்றும் குறிக்கின்றன.

[277]. பெரியபு. கழறிற். 66.
[278]. S. I. I. Vol. V. No. 295; S. I. I. Vol. VIII. No. 213. A.R. No. 87 of 1927-8; A. R.No.306 of 1927-8.
[279]. A. R. No. 236 of 1922. [280]. சுந். தே. 16:11.
[281]. S. I. I. Vol. VII. No. 485.
[282]. S. I. I. Vol. II. part ii.No.38; Ibial. p. 66. S. I. I. Vol. V. No.533; A.R.No.345 of 1916.

இனி, நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்களுள் திருத் தொண்டத் தொகை யென்பது மிகச் சிறந்ததொன்று; அஃது இல்லையாயின், சிவநெறிக்கண்நின்று சைவ சம யத்தின் மாண்பைத் தம் வாழ்வால் விளக்கஞ் செய்து காட்டிய நாயன்மார் பலருடைய வரலாறுகள் மறைந்தே போயிருக்கும் ; சைவ சமயம் இன்றிருக்கும் நிலையையும் இழந்து மடிந்து போயிருக்கும். இதனை நன்கறிந்தே திருத் தொண்டர் வரலாற்றை விரித்துரைத்த சேக்கிழார் , "ஈசன் அடியார் பெருமையினை எல்லாவுயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்"[283] என்றும், "மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப், போதுவான்"[284] என்றும் நம்பியாரூரை மிகவும் நயந்து பாராட்டிக் கூறுகின்றார். இச்சிறப்பை இடைக்காலச் சான் றோர் தெளிய உணர்ந்து நம்பியாரூரரைத் திருத்தொண்டத்-தொகையான் என்றும் திருத்தொண்டத் தொகையார் என்றும் சிறப்பித்துப் பாராட்டிப் பரவினர். அதனால் நம்பியாரூரர் பிறந்த திருநாவலூரில் உள்ள சிவன் கோயிலுக்கே திருத்தொண்டீச்சுரம்[285] என்று பெயரிட்டனர் ; தில்லைப்பதியில் சிவகங்கையின் வடகரையில் நம்பியாரூரர் திருப்பெயரால் நிறுவப்பெற்ற கோயிலைத் திருத்தொண்டத் தொகையீச்சுரம்[286] என வழங்கினர். திரு வொற்றியூர்க் கோயிலில் திருத்தொண்டத் தொகையை ஓதுதற்கென்றே நிவந்தங்கள்[287] விடப்பட்டன. இத்திருத் தொண்டத் தொகையின் பெயரால் ஏற்பட்ட ஊர்களும் உண்டு ; அவை திருத்தொண்டத் தொகை மங்கலம்[288] எனப் பட்டன.

[283]. பெரியபு. சண்டே . 60. [284]. ஷை திருமலை. 25.
[285]. A.R.No.325 of 1902. [286]. A.R. No. 262 of 1913.
[287]. A.R. No. 137 of 1912. [288]. A. R.No.54 of 1906.

திருப்புத்தூரில் திருத்தொண்டத் தொகையான் திரு மடம்[289] என்றொரு மடமும், திருவிடைவாயிலில் திருத்தொண் டத்தொகையான் திருக்குகை[290] எனக் குகையும் பிறவும் நாட்டில் பலவிடங்களிலும் ஏற்படுத்தினர்.

இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களில் காணப்படும் இனிய சொற்றொடர்களை இடைக்கால நன் மக்கள் எடுத்து உயரிய நெறியில் போற்றியிருக்கின் றனர். வெஞ்சமாக் கூடலில் இருக்கும் இறைவனை நம்பி யாரூரர் , "விகிர்தா அடியேனையும் வேண்டுதியே"[291] என்றும், தேவியாரை, "பண்ணேர் மொழியாளையோர் பங்குடையாய்"[292] என்றும் பாடினர்; அவ்வூர்க் கல்வெட்டுக்கள் இறைவனை விகிர்தேச்சுரர்[293] என்றும், அம்மையைப் பண்ணேர் மொழியா[294] ளென்றும் குறிக்கின்றன. திருத் துருத்தியிலுள்ள இறைவனை, ''காவிரியகன் கரை யுறைவார் அடியிணைதொழுதெழும் அன்பராம் அடியார் சொன்ன வாற்றிவார் துருத்தியார்"[295] என்று நம்பியாரூரர் பாடினாராகக் கல்வெட்டுக்களும் திருத்துருத்தியுடைய இறைவனை, சொன்னவா றறிவார்"[296] என்று கூறுகின்றன. திருமழ பாடியில் ஒரு பகுதிக்குப் பொன்னார் மேனி வளாகம் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று[297] கூறுகிறது; இது நம்பியா ரூரர் திருமழபாடி இறைவனைப் பாடிய திருப்பதிகத்தின் தலைப் பாட்டிற் காணப்படும் தொடர். திரு வன்பார்த் தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கும் இறைவனை, ''விடையின் மேல் வருவானை"[298] என எடுத்து நம்பியாரூரர் பாடினர்; அத் தொடரையே செல்வரொருவர் தனக்குப் பெயராகக் கொண்டிருந்தார் என்பதைத் திருவோத் தூரிலுள்ள கல்வெட்டொன்று, "வைப்பூருடையான் தேவன் விடையின் மேல் வருவான்"[299] என்று கூறுவதால் விளங்குகிறது. திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயில் தெற்குச் சுவரில் உள்ள நம்பியாரூரர் திருவுருவத்தின் கீழ் இளங் கிளையாரூரன் என்று பெயர் எழுதப்பட் டுளது; இதற் கேற்ப அவர் அவ்வூர்த் திருப்பதிகக் காப்புச் செய்யுளில் தன்னை 'இளங்கிளை யாரூரன்"[300] என்று கூறுகின்றார்.

[289]. A. R.No. 104 of 1908; 180, 190, 192 of 1929.
[290]. A. R. No. 10 of 1918. [291]. சுந். தே. 42: 1-11.
[292]. சுந். தே. 42-4. [293]. A. R. No. 147 of 1905.
[294]. A. R. No. 150 of 1905. [295]. சுந். தே. 74 : 1.
[296]. A. R. No. 482 of 1907. [297]. S. I. I. Vol. V. No. 632.
[298]. சுந். தே. 861. [299]. S. I. I. Vol. VII. No.97. [300]. சுந். தே. 29:10.

இதுகாறும் கூறியவற்றால், சைவ இலக்கியவுலகில் தலை சிறந்து நிற்கும் திருஞான சம்பந்தர் முதலிய மூவர் பாடி யருளிய திருப்பதிகங்களும். அவற்றைப் பாடியுதவிய பெருமக்களும் மக்களின் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகச் சிறந்த செல்வாக்குப் பெற்றிருந்தமை நன்கு தெளியப்படும். சைவத் திருக்கோயில்களிலும் நிலை யங்களிலும் தலைமையிடத்து வீற்றிருந்த இந்த இலக்கியங் கள், சைவர்களின் அறியாமை வறுமை கீழ்மைப் பண்பு களால் இன்று அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டும் பேணற் பாடு இன்றியும் புறக்கணிக்கப்பட்டுள்ளன ; இறைவன் திருப்பெயர்கள் யாவும் வடமொழியில் மாற்றி மறைக்கப் பட்டு விட்டன.
------



This file was last updated on 01 March 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)