பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை -பாகம் 1 (001-140)
[சொக்கப்ப நாவலர் உரை]
tanjcaivANan kOvai -part 1 (upto verse 80)
of poyyAmozip pulavar
(with cokkappa nAvalar uraiyudan)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our sincere thanks also go to Mr. Rajendran Govindasamy of Tamilnadu, India for his assistance in
proof-reading of the OCR output and in the preparation of the e-text file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை - பாகம் 1 (001-140)
[சொக்கப்ப நாவலர் உரை]
Source:
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை
[சொக்கப்ப நாவலர் உரை]
இக் கோவை நாற்கவிராசநம்பி அகப்பொருள் விளக்கத்திற்கு இலக்கியமாகவுள்ளது.
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை-1.
கழக வெளியீடு: 627
First Edition: October, 1952
(Copy-right)
Published by : The South India Saiva Siddhantha Works Publishing Society Tinnelvelly, Ltd
1/140, Broadway, Madras -1;
Head Office: 24, EAST CAR STREET, THIRUNELVELI
Appar Achakam, 2/140, Broadway, Madras-1.
---------------
பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
நூலாசிரியர் வரலாறு
உரையாசிரியர் வரலாறு
நூல்
உரைத் தற்சிறப்புப் பாயிரம்
1. களவியல் (001 – 280)
1.01. கைக்கிளை (001 – 004)
1.02. இயற்கைப் புணர்ச்சி (005 – 019)
1.03. வன்புறை (020 – 025)
1.04. தெளிவு (026)
1.05. பிரிவுழி மகிழ்ச்சி (027 – 028)
1.06. பிரிவுழிக் கலங்கல் (029 – 033)
1.07. இடந்தலைப்பாடு (034 – 038)
1.08. பாங்கற்கூட்டம் (039 – 062)
1.09. பாங்கி மதி யுடன்பாடு (063 – 080)
1.10. பாங்கியிற் கூட்டம் (081 – 140)
1.11. ஒருசார் பகற்குறி (141 -155)
1.12. பகற்குறி இடையீடு (156 -162)
1.13. இரவுக்குறி (163 – 189)
1.14. இரவுக்குறி இடையீடு (190 – 208)
1.15. வரைதல் வேட்கை (209 -227)
1.16. வரைவு கடாதல் (228 – 247)
1.17. ஒருவழித் தணத்தல் (248 – 259)
1.18. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் (260 – 280)
2. வரைவியல் (281 – 366)
2.19. வரைவு மலிவு (281 – 287)
2.20. அறத்தொடு நிற்றல் (288 – 304)
2.21. உடன்போக்கு (305 – 322)
2.22. கற்பொடு புணர்ந்த கவ்வை (323 – 348)
2.23. மீட்சி (349 – 354)
2.24. தன்மனை வரைதல் (355 -359)
2.25. உடன்போக்கு இடையீடு (360 – 365)
2.26. வரைதல் (366)
3. கற்பியல் (367 -425)
3.27. இல்வாழ்க்கை (367 -376)
3.28. பரத்தையிற் பிரிவு (377 – 407)
3.29. ஓதற் பிரிவு (408 – 410)
3.30. காவற் பிரிவு (411 – 413)
3.31. தூதிற் பிரிவு (414 – 416)
3.32. துணைவயிற் பிரிவு (417 – 419)
3.33. பொருள்வயிற் பிரிவு (420 – 425)
-------------------------
பதிப்புரை
உலகில் தோன்றியிருக்கும் உயிர்கட்கெல்லாம் இன்பமே நிலைக்களன். இன்பத்தில் தலைசிறந்த இன்பம் காதல் வாழ்வு. இக்காதல் கட்டற்ற அன்பினின்றும் கிளைத்தெழும் பெற்றியது. இஃது ஆண்மை பெண்மை முகிழ்த்த ஆடவர் பெண்டிரின் மனத்தில் ஊன்றிக் கிளைத்துத் தழைத்துப் பற்றிப் படர்ந்து திகழும் பான்மையது. இதனை விளக்குவனவே கோவை நூல்கள்.
கோவைகளின் மாண்பு முழுதும் வற்றாத களஞ்சியம், இத் தஞ்சைவாணன் கோவை. இதற்கு நல்லுரை வகுத்தமைத்து ஈந்துதவியவர் சொக்கப்ப நாவலரென்னும் புலவர் பெருமானாராவர்.
இத்தகைய நூலைச் செவ்விய அமைப்புடன் செப்பஞ் செய்து தமிழுலகு கூட்டுண்டு மகிழ ஆசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, முன்னுரை முதலியவற்றுடன் வெளியிட்டுள்ளோம்.
இதனைத் தமிழ் கூறும் நல்லுலகத்து மக்கள் யாவரும் வாங்கிக் கற்று, முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகர்களாய் எஞ்ஞான்றும் விளங்கி, இந்நூற் கருத்தையும் சிறப்பியல்களையும் நாடெல்லாம் பரப்புவார்கள் என நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
-------------------------
முன்னுரை
என்றுமுள தென்றமிழ் மொழிக்கண் நின்று நிலவும் நூல்களுள் முதன்மை வாய்ந்தது தொல்காப்பியம் : இது, எழுத்து சொல் பொருள் என்னும் முப்பகுப்புடைய இலக்கணங்களைக் கொண்டு திகழ்கின்றது. அதன் வழியாய் அதன் கருத்தை விரித்தும் தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற இலக்கண நூல்கள் பல. அவற்றுள், 'நம்பி அகப் பொருள் விளக்கம்' என்னும் நூலும் ஒன்று. இஃது, அகப்பொருள் இலக்கணத்தை வகைப்படுத்திக் கூறுகின்றது. இதற்கு ஏற்ற இலக்கியமாகத் திகழ்வது, 'தஞ்சைவாணன் கோவை' என்னும் இந்நூல்.
இதனைச் செந்தமிழணங்கிற்கு மணிக்கோவையாக ஆக்கி அணிந்தவர்; 'எய்யா நல்லிசைச் செவ்வேற் சே' யால், 'பொய்யாமொழி' என்று புகழப்பெற்ற பொய்யாமொழிப் புலவர் பெருமகனாராவர்.
மங்கலப் பாண்டி வளநாட்டின்கண், தெங்கும் பலவும் செந்நெலும் கன்னலும் பொங்கிய வளமிகு [1]மாறை நாட்டில், ‘சந்திரவாணன்' என்னும் தோன்றல் ஒருவர் இருந்தனர்; இவர், கோமாற வர்மர் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவருக்கு அமைச்சராகவும், படைத் தலைவராகவும் புலவர்களைப் புரக்கும் புரவலராகவும் புகழுடன் விளங்கினர்; இவர் தஞ்சாக்கூரில் பிறந்தவராதலால், தஞ்சைவாணன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தனர். ஆதலால் இவர்மீது அகப்பொருட் சுவை பலவும் தோன்றத் 'தஞ்சைவாணன் கோவை' என்னும் பெயரமைத்து இந்நூலைப் பாடி அரங்கேற்றினர்.
-----
[1] மாறைநாடு என்பது, பாண்டிநாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.
----------
இந்நூலின் காலம் கோமாறவர்மர் திரிபுவன சக்கரவர்த்தி காலமாகிய கி.பி. (௧௨) 12-ஆம் நூற்றாண்டு என்று கொள்ளக் கிடக்கின்றது. அஃதாவது, ஏறக்குறைய இற்றைக்கு (750) ஆண்டுகட்குமுன் பாடப் பெற்றதெனக் கொள்ளலாம்.
நாற்கவிராச நம்பி இயற்றிய 'அகப்பொருள் விளக்கம்' அகத்திணை இயல் களவியல் வரைவியல் கற்பியல் ஒழிபியல் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளையும், அவைகளின் உள்ளடக்கமான இயற்கைப் புணர்ச்சி முதல் திணை மயக்கம் ஈறாக (௫௩) 53 கிளவிக் கொத்துக்களையும், அவைகளின் உட்பிரிவான பலதுறை விளக்கங்களையும் விளக்கிக் கூறுகின்றது. அத் துறைகளுக்கேற்ற இலக்கியமாக இக் கோவை படர்ந்து மிளிர்கின்றது.
பொதுவாக நோக்குமிடத்துக் கோவைகள் [2]'உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலிய வற்றால் தம்முள் ஒப்புமையுடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால்வகையால் தாமே எதிர்ப்பட்டு'க் களவிற் புணர்ந்து இன்பந் துய்த்துப் பின் கற்புநிலையின் இற்கிழமை பூண்டு விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஒழுகிவரும் இல்லற இயற்கை நுட்பத்தைப் புனைந்துரை வகையால் எடுத்துரைத்து ஒரு கோவை (தொடர்பு) ஆக்கி, கற்றோர்க்கும் கேட்டோர்க்கும் இன்பம் பயக்கும் துள்ளலோசையான் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாக்களால் பாடப் பெறுவதாகும்.
-----
[2] திருக்குறள், காமத்துப்பால், அதி. (௧0௯) 109 பரிமேலழகர் விளக்கவுரை.
----------
இம்முறையில் அமைந்து விளங்குவன : திருக்கோவையார், பாண்டிக்கோவை, அம்பிகாபதி கோவை, திருவெங்கைக் கோவை, கோடீசுரக் கோவை முதலிய பலவுமாம். இவைகள் கடவுளரையோ அரசர்களையோ குறுநில மன்னர்களையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அத் தலைவர்களின் ஆட்சி முறைக்குட்பட்ட நாட்டில் இக் காதலர் நிகழ்ச்சி நிகழ்வதாகத் துறைகொண்டு அமைந்து செல்லும். இவற்றுள், திருக்கோவையாரும் திருவெங்கைக் கோவையும் கோடீசுரக் கோவையும் தனக்கொப் புமை யில்லாத் தலைவனான இறைவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மிளிர்வன. அம்பிகாபதி கோவை யாரையும் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாது கோவை நிகழ்ச்சியை மட்டும் கூறுகின்றது. பிறகோவைகள் மக்களுட் சிறந்த அரசர்களையும் வள்ளல்களையும் பிறரையும் தலைவராகக் கொண்டு நிகழ்வனவாகும். இவைகள் போன்றே இத் தஞ்சைவாணன் கோவையும் வள்ளலான சந்திரவாணன்மேற் பாடப்பெற்றுத் தானே தனக்கொப்பான தனிநூலாகத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஓங்கி மிளிர்கின்றது.
அகப்பொருள் துறையில் முதலாவது கைக்கிளை நிகழ்வது இயற்கை. [3]'கைக்கிளையாவது : ஒருமருங்குபற்றிய கேண்மை' என்பர், நச்சினார்க்கினியர். ஒருமருங்குபற்றிய கேண்மையாவது, தலைவனோ தலைவியோ ஒருவர் காதல் கொள்ளாமல் இருப்ப, (இருவரும் ஒன்றுபட்டுக் காதல் கொள்ளாமல்) ஒருவர் மட்டும் காதல் கொள்வது. அஃதாவது, ஒருவர் விரும்ப மற்றொருவர் விரும்பாதிருத்தல்; அல்லது அறியாதிருத்தல். ஆகலான், இது முற்றுப் பெறாத காதல் ஆகின்றது.
-----
[3] தொல். அகத்திணை இயல், சூத்திரம் - (௧) 1. நச். உரை விளக்கம்.
----------
இருவரும் ஒருங்கியைந்து முற்றுப்பெற்ற காதலே அன்பின் ஐந்திணை ஒழுகலாறு. இதனைத் திருவள்ளுவப் பெருமான்,
[4]'தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.'
என்றார். 'விதை இல்லாத கனி' என்று கனிந்து கூறுவதை ஊன்றி நோக்குக. ஐந்திணை : ஐவகை ஒழுக்கம். அவை, முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் ஆகிய இருத்தல் புணர்தல் பிரிதல் ஊடல் இரங்கல் என்னும் நிகழ்ச்சிகளாம். இவைகள் நிகழுமுன் நிகழ்வதே கைக்கிளை. அதற்கு முதல் முதல் காணுதல் வேண்டும். அது தலைவன் தலைவியைத் தன் கண்ணாற் காண்பது. இதனைக் கோவைகளில் துவக்கத்திலேயே 'காட்சி' என்ற துறை யமைத்துக் கூறப்பெறும். அந்த முறையிலேயே எல்லாக் கோவைகளும் தொடக்கமுறுகின்றன.
-----
[4] திருக்குறள் : (௧௧௯௧) 1191.
----------
கோவைகளுட் சிறப்புடையதாக ஆன்றோரால் பண்டு தொட்டுப் பாராட்டப் பெறுவது, திருச்சிற்றம்பலக் கோவையெனப் பெயரிய திருக்கோவையார். மற்றக் கோவைகளைக் குறிக்குங்கால் உயர்வு குறிக்கும் ‘ஆர்’ விகுதி கொடுத்து வழங்கினாரில்லை; இது ஒன்றுக்கு மட்டும் அவ் விகுதி கொடுத்து அழைக்கப்பெறுவது அதன் சிறப்பியல்பு நோக்கியே. அது சொல் பொருள் நயம், ஒப்பற்ற இறைவனையே தலைவனாகக் கொண்டுள்ள பண்பு முதலியவற்றால் சிறப்புற்றிருத்தலை ஓர்க.
இதில் தலைவன் தலைவியைக் கண்ட காட்சியை முதல் முதலாகத்,
[5]'திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
உருவளர் காமன் தன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே.' ((௧) 1)
என்பதாம்.
-----
[5] திருக்கோவையார் : (௧) 1.
----------
பெண்ணலங்கனிய நின்ற தலைவியின் ஒவ்வோர் உறுப்பையும் ஐந்திணை நெறிபடரும் நிலத்தின் கருப் பொருள்களான மலர்களானியன்ற மாலை எனத் தலைவன் வியக்கின்றான்.
இவ்வாறே மற்றக் கோவைகள் எல்லாவற்றினும் அவ்வவ் ஆசிரியன்மார் எடுத்துக்கூறிச் செல்வதைக் காணலாம். இவைகள் போன்றே இந் நூலகத்தும் காட்சித் துறையை முதலில் அமைத்துள்ளனர். பிறரெல்லாம் மலர்களையும் அரும்புகளையும் அமுதக்குடங்களையும் பொருத்திக் காட்டிப் பெண்மை வடிவைக் குறிக்க, இவர்,
'புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடிநின்றது.' ((௧) 1)
என்று தலைவியின் செவ்விய திருவுரு தோன்றக் கூறினார்.
இதில் தலைவியின் கூந்தல் நெற்றி கண் முகம் இவைகளின் பொற்புத்தோன்ற உருவகமாகக் கூறி, கற்பகத்தின் பக்கலில் பசும்பொன்கொடி நின்றது என்று தலைவியின் முழுவடிவத்தையும் குறித்துக் காட்டினார். தலைவியின் ஒவ்வோர் உறுப்பும் கற்பகம் என்றார். கற்பகமென்பது ஒருவர்க்கு நினைந்தவற்றை நினைந்தவாறே கொடுக்கும் பெற்றிமையுடைய ஒரு தெய்வத் தாரு. அதைப்போல் இப் பெண்ணணங்கின் ஒவ்வோர் வடிவும் இன்பந் தருவது என்று வியக்கின்றான். இக் கொடிபோல்வாளின் செவ்வியினால் கண்ட அத்தலைவன் கண்ணும் மனமும் அவள்பாற் கலந்துறவாட அவளே தானாய் தானே அவளாய்ப் பிரித்தறியாவண்ணம் நிற்றலினானும் அவள் வனப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புத்துணர்வும் புதிய இன்பமும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டு உடல் மயிர்க் கூச்செறிந்து நிற்றலானும், 'பசும்பொன் கொடிநின்ற' தென்று வியந்து நின்றான் தலைவன். இதனைத் திருவள்ளுவரும்,
[6]வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.'
என்றதும் இக் கருத்தோடொப்ப இருத்தலை அறிக.
-----
[6] திருக்குறள் : (௧௧0௫) 1105.
----------
மற்றக் கோவைகட்கும் இதற்கும் வேறுபாடென்னை யெனின், மற்றவை யெல்லாம் இலக்கண நூல்களிற் கூறிய துறைக்குச் சில துறைகள் குறைந்தும் மிக்கும் விரவியும் கிடப்ப, இஃது அகப்பொருள் விளக்கத்திற் கூறியிருக்கும் துறைகள் எல்லாவற்றையும் ஒருங்கே அமைத்துத் திகழும் பெற்றிமைமிக்க சீர்மையுடையது. இதனாலன்றோ இதன் பாடல்களையே அகப்பொருள் விளக்க நூற்பாத் துறை இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைப்பா ராயினர்.
இதன்கண் பழங்காலச் சங்கநூற் பாடல்களின் கருத் தமைதிகள் ஆங்காங்கே இடம் நோக்கி அமைந்து மிளிர்தலைக் காணலாம். 'பிரிவுழி மகிழ்ச்சி' என்னும் கிளவித் துறையில், தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுங்கால் தலைவியின் அழகு இளமை நலம் முதலியன தன் மனத்தைக் கவற்றக் கூறுகின்ற முறையில்,
'அகில்ஏந்து கூந்தல் ஒருகையில் எந்தி அசைந்தொருகை
துகில்ஏந்தி ஏந்தும் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகில்ஏந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறைவாய்
நகில்ஏந்து பூங்கொடி போல்செல்லு மால்நெஞ்சம் நம்உயிரே.'
என்று கூறுகின்றான். இதில் தலைவன் தலைவியின் அழகு நலத்தில் ஈடுபட்டுத் தன் நெஞ்சொடு பகர்கின்றான் : 'உயிரென்றால் உடலகத்து இயங்கிக்கொண்டு கட்புலனுக்குத் தோன்றாமல் இருக்குமே, அந்த உயிரன்று; இதுவோ நம் உயிர்; இது வேறு தன்மையுடையது' என்கின்றான். 'அது நீண்டு விரிந்து அடர்ந்து கறுத்துக் காரொளி காட்டிப் பளபளப்புடன் விளங்கும் தன் கூந்தலை ஒரு கையில் தாங்கி நிற்கும்; மெல்லிய பூங்கரைகளையுடைய ஆடையை மற்றொரு கையில் தாங்கி அரும்பைத் தாங்கிய பூங்கொடிபோல் மெல்ல மெல்லச் செல்லும்' என்கின்றான். என்ன அரிய கருத்து பார்மின்கள். ஓர் இள நங்கையின் சாயலோடு கூடிய தோற்றம், காண்பார் ஒருவர்க்குப் புலனாவது, கூந்தலும் ஆடை அமைதியுமே. அவைகளை நேரிற் படம் பிடித்ததுபோல் எளிதிற் புலனாகுமாறு தலைவன் கூற்றாகச் சில்வகை எழுத்துக்கள் கொண்ட தொடரினால் தீட்டிக் காட்டிய புலவர் பெருமானின் அறிவுத் திறத்தைக் காண்மின். இதே கருத்தமைந்த சங்ககாலச் சான்றோர் பாடலையும் ஒப்பிட்டு நோக்கிநோக்கி மகிழ்க.
[7]'காணா மரபிற்று உயிர்என மொழிவோர்
நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே
யாஅம் காண்டும்எம் அரும்பெறல் உயிரே
சொல்லும் ஆடும் மென்மெல இயலும்
கணைக்கால் நுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.'
என வருவதறிக.
-----
[7] தொல். களவியல் நூற்பா : (௧0௧) 101 மேற்கோள்.
----------
பாங்கற் கூட்டத்துக் கிளவித்துறையில் பாங்கன் தலைவனை நோக்கி, 'நீ கண்ட தலைவி வாழும் இடம் எது?' என்று வினவுகின்றான். அப்போது தலைவனைத் தன் முன்னிலைப்படுத்தி அழைக்கின்றான். அதில் தலைவனை நடுநிலையாளன், முறைபிறழான், தனக்கென ஒன்றும், பிறர்க்கென ஒன்றும் மொழியான் என்னும் கருத்து நயம் தோன்ற,
'நுகத்தில் பகலனையாய் தன்மை ஏது? நுவல் எனக்கே' ((௪௮) 48)
என்பது. இதன் சொல்லும் கருத்தும்,
[8]’தத்தமக்குக் கொண்ட குறியோ தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.'
எனவரும் பழமொழி நானூற்றுப் பாடலின் கருத்தினோடும்,
[9]‘பால்கொளல் இன்றிப் பகல்போன் முறைக்கொல்கா
கோல் செம்மை.’
எனவரும் கலித்தொகைக் கருத்தினோடும்,
[10]'பகலன்ன வாய்மொழி, நுகத்திற் பகலாணி போன்ற
நடுநிலைச் சொல்.'
எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையார் கருத்தினோடும்,
[11]'கொடுமேழி நசை உழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்.'
எனவரும் பட்டினப்பாலைக் கருத்தினோடும்,
[12]'தகுதிஎன ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின்'
'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.'
எனவரும் திருக்குறட் கருத்தினோடும், ஒத்து இன்பந் தருதலை ஓர்க.
-----
[8] பழமொழி நானூறு: (௩௩௯) 339.
[9] கலித்தொகை - (௮௬ : ௧௭ - ௮) 86 : 17 – 8.
[10] புறப்பொருள் வெண்பா : (௧௫௭) 157.
[11] பட்டினப்பாலை : (௨0௫ – ௭) 205 – 7.
[12] திருக்குறள் : (௧௧௧, ௧௨0) 111, 120.
----------
இன்னும் இந் நூற்கண் திருக்குறள் நாலடியார் போன்ற அறநூற் கருத்துக்களும், மக்கள் வாழ்க்கை முறைக்கு வேண்டும் உலகியல் ஒழுக்கங்களும் ஈண்டி 'அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே.'[13] என்னும் சீரிய மொழிக்கு இலக்காகி மக்கள் வாழ்க்கை நெறி காட்டியாய் என்றும் நின்று நிலவும் திருநூலாய் இலங்குகின்றது.
-----
[13] நன்னூல் : (௧0) 10.
----------
தமிழில் இன்பச்சுவை காண விழைவார்க்கும், தமிழில் முற்றக் கற்றுத் துறைபோக எண்ணுவார்க்கும், எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று அறிஞர் வியக்குமாறு கொடுத்து, வற்றாவளஞ்சுரக்கும் பெருநிதியாய் நீண்ட தமிழின் பேரிலக்கியமாகத் திகழ்ந்து உலவி வருவது இதன் சிறப்பின்வளமே என்ப தொருதலை.
செல்லூர்க்கிழார், செ. ரெ. இராமசாமிபிள்ளை
கழகப் புலவர்.
-------------------------
நூலாசிரியர் வரலாறு
செந்தமிழணங்கிற்கு அணிபல புனைந்து அழகுபடுத்தியவர் நல்லிசைப் புலமை வல்லுநராவர். அவருள் ‘தஞ்சைவாணன் கோவை'யை அணிந்து மகிழ்ந்த புலவர் பெருமானார் பொய்யாமொழிப் புலவரும் ஒருவராவர்.
இவர் தொண்டைமண்டலத்தில் சைவ வேளாண் குடியில் தோன்றியவர். இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஓர் தமிழாசிரியர்பால் கல்வி பயின்று வந்தார். ஒருநாள் தம் ஆசிரியர் தம் பயிர்க் கொல்லையைக் காத்துவரக் கூறினார். அவ்வாறே சென்று காவல் புரிந்தார்; அப்போது அங்கிருந்த காளிகோயில் ஒன்றின் பக்கலில் ஒரு மர நிழலில் படுத்துறங்கினார்; அப்போது பயிர்களைக் குதிரையொன்று வந்து மேய்வதாகக் கனவு கண்டார்; உடனே திடுக்கிட்டெழுந்தார். பார்த்தார்; கனவிற் கண்டவாறே குதிரை யொன்று பயிரை மேய்வது கண்டார்; உடனே விரைந்து சென்று அக் குதிரையை ஓட்டினார். ஓட்டியும் அது, அப்பயிர் மேய்வதை விட்டுச் செல்லவில்லை. உடனே காளி கோயிலுக்குச் சென்றார்; காளியை வணங்கினார்; தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக் கருதி, அப்பிழை நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வாழ்த்தினார்; காளிதேவி அவருக்கு நேரில் காட்சியளித்து அருள்செய்து மறைந்தனள்.
காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாப்புனையும் திறனும் கைவரப் பெற்றார். அக்கொல்லையின் பயிர் அக் குதிரையால் அழிவுற்றதற்குச் சினந்து,
'வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையில் - காய்த்த
கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரைமா ளக்கொண்டு போ’
என்னும் வெண்பாவைப் பாடினார். அதுபோழ்தே அக் குதிரை கீழே வீழ்ந்து இறந்தது.
அதனைக் கண்ட அருகிலிருந்தோர் இவர்தம் ஆசிரியரிடம் போய்க் கூறினர். ஆசிரியர் வந்து நேரிற் பார்த்தார்; ‘இது காளிங்கராயன் குதிரையன்றோ! அவன் அறியின் யாதாமோ’! எனக் கலங்கினார். அதனை அறிந்த பொய்யா மொழிப்புலவர், அவ்வெண்பாவின் ஈற்றடியை மட்டும் 'குதிரைமீ ளக்கொண்டு வா' என்று மாற்றிப் பாடினார். குதிரை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்ட யாவரும் வியப்புற்றனர். ஆசிரியர் தம் அருமை மாணவரைத் தழுவினார். அவர்தம் வாக்காகிய பாட்டு, தப்பாமல் குறித்த பயனைத் தந்ததை வியந்து பாராட்டினார். அவர் அதுகாலை,
'பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்
சிதைவில்புல வர்சிகா மணியாய்த் - துதிசேரும்
செங்காட்டங் கோட்டத் துறையூர் எனுந்தலத்தில்
தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்'
என்னும் வெண்பாப் பாடி அவரை வா ழ்த்தி நின்றார்.
அன்று முதல் ஆசிரியர் இட்ட காரணப் பெயரான, 'பொய்யாமொழி' என்பதே பெயராக வழங்கிற்று. இவரது இயற்பெயர் மறைவதாயிற்று. பின்னரும் காளியின் அருளினால் செய்யுள் பாடும் திறனில் மிக்கோங்கி விளங்கினர். இவர் காளியையே பாடும் கடப்பாடுடைய ரானார்.
இவர்பால் ஒருநாள் முருகக் கடவுள் அடியார் கோலத்துடன் வந்து தம் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர்,
'கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவனோ'
என்று மறுத்துரைத்தார். வேற்றுருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார்.
பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்றுவர எண்ணினார்; அங்கே பழைய தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நிறுவி நடத்த நினைத்தார்; மதுரை நோக்கிப் புறப்பட்டார்; வழியில் திருச்சிராப்பள்ளியில் தங்கினார். ஆங்கு எழுந்தருளியிருக்கும் தாயுமானவரைப் போற்றினார்; அவர்மீது கலித்துறை ஒன்று பாடிப் பணிந்தார். அப்பால் அங்கிருந்து தன்னந்தனியராக ஒரு காட்டின் வழியாக மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. வெம் பரற் கற்களும் வேல முட்களும் படர்ந்த வெவ்விய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக வழிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். முருகக் கடவுள் அங்கே ஒரு வேட்டுவச் சிறுவன்போல் உருவங்கொண்டு இவர்முன் தோன்றினார். 'இவ்வழியாக இக்காட்டில் நீ செல்வது கூடாது,' எனக் கூறினார். பொய்யாமொழியார், 'நாம் இன்று ஒரு கள்வனிடம் அகப்பட்டுக் கொண்டோம்' என்று கருதி அஞ்சி நின்றார். அப்போது முருக வேடன் 'நீ யார்?' என்று கடுகடுத்த குரலுடன் வினவினார். அதற்குப் புலவர் ‘யான் ஒரு புலவன்' என்றார். ‘ஆனால், உனக்குப் பாடத் தெரியுமோ?' என்று வினவினார் முருகவேள். 'தெரியும்' என்றார் புலவர் பெருமானார். முருகவேடன், ‘என்மீது சுரம்போக்காக ஒரு பாடல் பாடுக' என்று கூறினார். உடனே புலவர் 'உன் பெயர் யா'தெனக் கேட்டனர். அப்போது முன், 'முட்டையையும் பாடுவேனோ' என்று மொழிந்ததை நினைவாகக்கொண்டு முருகவேள், 'என் பெயர் முட்டை' என்றார். அப்போது புலவர்,
'பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முள்தைக்குங் காடு'
என்னும் வெண்பாவைப் பாடினர்.
இச் செய்யுளைக் கேட்டுக் கொண்டிருந்த முருகவேடன், 'இச் செய்யுளிற் பொருட் குற்றமுளது. அஃதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேல முட்கள் வெந்தெரிந்து போகாமல் கிடப்ப தெங்ஙனம்?' என்று நகைத்தார். 'வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ? இவ்வாறு குற்றமுள்ள பாடல் புலவர் பாடுவரோ? யான் பாடுவேன் 'கேட்குக,' என்று பொய்யாமொழியார் மீது,
’விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்'
என்னும் வெண்பாவைப் பாடினர். அப்பால் ‘நீ முன் குஞ்சைப் பாடேனென்று கூறிய வாயால் இப்போது முட்டையைப் பாடியது வியப்புக் குரித்தே,' என்று கூறினார். அப்போது புலவர், இவ்வுருவில் வந்துள்ளோர் முருகப்பெருமானே எனத் துணிந்தனர். தம் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலங் காட்டி புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.
அப்பால் அவ்வழியைக் கடந்து பாண்டிநாடு போந்தனர். அதுகாலை ஆட்சி செய்து கொண்டிருந்த வணங்காமுடிப் பாண்டியனைக் கோயிலில் போய்க் கண்டனர். கண்டு 'கழற்கால் அரவிந்தம்' என்னும் செய்யுளைப் பாடித் தம்மைத் தெரிவித்தனர். பாண்டியன் புலவரிடம் நன்மதிப்புக் காட்டாமல் இருந்து, 'இங்குக் கல்லுருவில் இருக்கும் சங்கப்புலவரைத் தலையசைக்கவும் கை தட்டவும் செய்க,' என்றான். அதற்குப் புலவர் இசைந்தார்.
'உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கட் குலன் அறியச் செப்புங்கள் - சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழும் ஒக்குமோ
ஏடெழுதார் ஏழெழுவீர் இன்று'
எனப்பாடி அவ்வாறே செய்வித்தனர். பின்னர்ப் 'பொற்றாமரைக் குளத்தில் அமிழ்ந்து கிடக்கின்ற சங்கப் பலகையை மிதக்கப் பாடுக' எனப் புலவர்,
'பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்
பாவேந்தர் உண்டென்னும் பான்மையால் - கோவேந்தன்
மாறன் அறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே சற்றே மித'
என, ஒரு வெண்பாப் பாடியவுடன் அதுவும் மிதப்பக் கண்டான் வேந்தன். அதற்கும் வியவாமல் இருந்ததுடன் புலவருக்கு நன்மதிப்புங் கொடுத்தானில்லை. அதுகண்டு புலவர் சினங்கொண்டு மீண்டனர்.
பின்னர், அக்காலத்தில் பாண்டி மண்டலத்தின்கண் உள்ள சிறு நாடுகளில் ஒன்றாகிய மாறை நாட்டில் தஞ்சாக்கூர் என்னும் ஊரில் மாவலிவாண மரபைச் சேர்ந்த சந்திரவாணன் என்னும் வேளாளச் செல்வன் அந்நாட்டை அரசாண்ட கோமாறவர்மா திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவருக்கு அமைச்சராகவும் படைத்தலைவராகவும் புலவர்களைப் புரக்கும் வள்ளலாகவும் வாழ்ந்து வந்தனர்.
பொய்யாமொழிப் புலவர் அச் செல்வரையடைந்து அவர்மீது நாற்கவிராச நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாகக் கோவையொன்று பாடினர். அக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் மேற்கூறிய சந்திரவாணனே. சந்திரனுக்கு மகனுகிய வாணன் என்று சொக்கப்ப நாவலர் உரையிற் காணக்கிடப்பதால், அவ்வள்ளலின் இயற்பெயர் அறிவதற்கில்லை. புலவர் இக்கோவையை அரங்கேற்றுங்கால் ஒவ்வொரு பாடலுக்கும் மூன்று கண்களிலும் மணிபதித்துச் செய்யப்பெற்ற பொன் தேங்காய் ஒவ்வொன்று பரிசாக வழங்கிப் பல வரிசை முறைகளும் செய்து சிறப்பித்தார் என்பர். இன்னும் பொய்யாமொழிப் புலவர் பாடிய தனிப்பாடல்களைக்கொண்டு வழங்குகின்ற வேறு பல வரலாறுகளையும் தமிழ் நாவலர் சரிதம் முதலிய நூல்களால் அறிந்து கொள்ளலாம்.
பின்பு, பொய்யாமொழியார் சோழநாட்டைச் சேர்ந்து பெருஞ் செல்வராகிய சீனக்க முதலியாரிடம் சார்ந்து நட்புரிமை கொண்டார்; உயிரும் உடலும்போல் பிரிவின்றியைந்த பெருங்கிழமை கொண்டு வாழ்ந்தனர். இவ்வாறு ஆங்கு வாழ்ந்து வருங்கால் ஒருநாள் புலவர் பெருமானார் வெளியூருக்கு ஒரு அலுவலை முன்னிட்டுச் சென்று மீண்டார். அதற்குள் சீனக்க முதலியார் இறந்தனர்; இவர் வருமுன் நன்காடு கொண்டுசென்று எரியூட்ட முற்பட்டனர்; புலவர் திரும்பி வரும்போது செய்தி யறிந்து விரைந்து நன்காடு சென்றார்; அப்போது முதலியாரைக் கிடத்திச் சிதைகள் அடுக்கப்பெற்றிருந்தது. அதன் பக்கலில் சென்று,
‘அன்று நீ செல்லக்கிட வென்றாய்' என்று தொடங்கி ஒரு வெண்பாப் பாடினார். அப்போது சிதையில் கிடத்தி யிருந்த முதலியாரின் உடல் ஒரு பக்கமாக ஒதுங்கியது; அதில் தம் நண்பருடன் படுத்தார்; உடனே உயிர் பிரிந்தது; தம்முயிர்கொண்டு தம் நண்பரைத் தேடிச் சென்றதுபோல் சென்று விண்ணுலகெய்தி இருவரும் அன்பால் ஒன்றுபட்டனர்.
பொய்யாமொழிப்புலவர் கோமாறவர்மர் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவர் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதும், இவர் காலத்திலேயே, நாற்கவி நம்பியும் வாழ்ந்தவர் என்பதும் வரலாறுகளினால் அறியக் கிடக்கின்றது. ஆதலால் இவர் எழுநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டிருந்தவர் என்பது புலனாகும்.
-------------------------
உரையாசிரியர் வரலாறு
இத் தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை எழுதிய சொக்கப்ப நாவலர் பிறந்த ஊர், தொண்டைமண்டலத்தைச் சார்ந்த குன்றத்தூர். இவர் சிறந்த தமிழ்ப் புலமையும் நாவன்மை பாவன்மையும் பெற்று அட்டாவதானியாக விளக்கம் பெற்றிருந்தனர். இவர் இந் நூலாசிரியரான பொய்யாமொழியார் மரபில் வந்தவர். இவர் (௧௭) 17 - ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் சேலம் கணக்கத்தெருவில் வாழ்ந்து வந்தார். அதுகாலத்தில் இக் கோவைக்கு உரையும், சேலம் தலபுராணமும், சுகவன நாதர் தோத்திர நூல்களும் இயற்றினார் என்பர். நாவலரின் மரபில் வந்தவர்கள் சேலம் வழக்குரைஞர் சுப்பராய முதலியாரும் இவரின் புதல்வர் கனகராய முதலியார் எம்.ஏ., பி.எல்; ஆன பெரு நிலக் கிழவரும் ஆவர்.
தொண்டை மண்டலத்து வேளாளர்கள் விசயநகரத் தரசர் காலத்து (௧௭) 17 - ஆம் நூற்றாண்டில் தாரமங்கலம் முதலிய இடங்களில் குறுநில மன்னர்களாக இருந்து சிவபெருமான் திருக்கோயில்கள் பல கட்டுவித்தமை துருக்கங்களாலும் சாசனங்களாலும் தெரிகின்றது. இன்னும் இவ் வுரையாசிரியரைப்பற்றிய விரிந்த வரலாறுகள் அறிதற்கரியனவாக இருக்கின்றன.
-------------------------
தஞ்சைவாணன் கோவை : மூலமும் உரையும்
ஓம்
உரைத் தற்சிறப்புப் பாயிரம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பொய்யா மொழியா ரெனும்பெரியோர்
புகலும் வாணன் கோவையுரை
மையார் சோலைக் குன்றத்தூர்
வளரட் டாவ தானிசொக்கன்
கையார் கனிபோல் அகப்பொருளிற்
காணுஞ் சங்கையெ லாந்தீர
மெய்யாந் தொல்காப் பியநூலின்
விதியால் எழுதி விளக்கினனே.
இது, மன்னு புகழ் பெற்ற வாணன் தன்மேல் பன்னிய கோவையுரை பகர்ந்தான் இவன் என்பது.
(இதன்பொருள்) திரிபுபடாத சொல்லினை யுடையா ரென்று யாவராலும் புகழப்படும் பெருமையுடையராற் சொல்லப்படும், வாணன் என்னும் இயற்பெயருடையோனது கோவை யென்னும் பாட்டிற்கு நால்வகைத்தாகிய உரையை, மேகங்களைப் பொருந்தாநின்ற சோலை சூழ்ந்த குன்றத்தூர் என்னும் நகர் வளர்தற்கேதுவாகிய அட்டாவதானத்தை உடையனாகிய சொக்கன் என்னும் இயற் பெயரையுடைய நாவலர்பிரான், அகங்கையிற் பொருந்திய நெல்லிக்கனிபோலத் தன்னால் ஐயந்திரிபறக் காணப்படும் அகப்பொருளிடத்துப் பிறர்க்குத் தோன்றுங் கடாவிடை யெல்லாந் தீரும்படி, உண்மையாமென்று அதங்கோட்டாசிரியர் முதலானோராற் கொள்ளப்படும், தொல்காப்பியன் என்னும் முனிவனாற் செய்யப்பட்டதாய் நிரம்பிய இலக்கணத்ததாய அந்நூலினியல்பால் எழுதுதலைச் செய்து, யாவரும் அறியும்பொருட்டுத் தெரிவித்தான் என்க.
திரிபாவது ஒன்றை யொன்றாகக் காண்டல். [1]'பொய்யாமொழியார்' எனவே, வந்தனை முதற்காரணமாகவுடைய பாவினையும் உடையார் என்பது பெற்றாம். சொல்லினையும் பாவினையும் திரிபின்றி யுணரவே, அவ் வுணர்ச்சிக்குப் பயனாகிய ஒழுக்கமும் உடையார் என்பதாம். இவ்வகையாய பேருணர்வுடையராற் புகழப்பட்டான் எனவே, அவனது பெருமை கூறவேண்டாவாயிற்று. ’வளரட்டாவதானி’ என்றது ஏதுப்பொருண்மைக்கண் வந்த வினைத்தொகை.
-----
[1] அது பயிலாமொழியார் எனவே, அதனை முதற்காரணமாக வுடைய பாவினையும் உடையார் என்பது இதனானே பெற்றாம்.
----------
[2]'தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.'
என்னும், திருவள்ளுவர் கூறிய திருக்குறளினது பயனுக்கு உதாரணம் இவன் என்பது பெற்றாம். முன்னை நல்வினை யுண்மையாற் பிறந்த நுண்ணறிவான் இவன் காண்டலாற் சங்கையின்றென்பது தோன்ற, 'காணும் அகப்பொருள்' என மாறிப் பிறர்க்குத் தோன்றும் என வருவித்து உரைக்க. நிரம்பிய இலக்கண முணராதார் தாம் வேண்டியவாறே கூறிய கூற்றைத் தன்மொழியான் நீக்கி, மாசுண்ட மணியைத் துடைப்பார் போன்று செய்தான் என்பது, 'விளக்கினன்' என்பதனாற் பெற்றாம். 'குன்றத்தூர்ச் சொக்கன் கையார் கனிபோல் கோவைக்கு உரை யெழுதி விளக்கினன்' என ஒரு தொடர் ஆக்குக.
-----
[2] திருக்குறள். புகழ் - (௬) 6.
----------
'பொய்யா' என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், 'மொழியார்' என்னும் வினைக்குறிப்புப் பெயரது முதனிலையாகிய, 'மொழி' என்னுங் கருவிப் பெயர்கொண்டு முடிந்தது. ‘புகலும்' என்னும் பெயரெச்சம், 'கோவை' என்னுஞ் செயப்படுபொருள் கொண்டது. 'வாணன் கோவை' என்றவழி ஆறாம்வேற்றுமைச் செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'சோலைக் குன்றத்தூர்' என்பது உருபும் பொருளும் உடன்தொக்க தொகை. ‘அட்டாவதானி' என்பது வடசொன் முடிபாகிய குறிப்புவினைப் பெயரெச்சக் குறிப்பாய்ச், 'சொக்கன்' என்னும் பெயரோடு இயைந்தது; இது,
[3]‘குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே.'
என்னும் விதிபெற்றது. நச்சினார்க்கினியர், 'எச்சம் முற்றாதலன்றி முற்று எச்சமாகாது' என்று கூறினாராலோ வெனின், அஃதிலக்கணமன்று; குறிப்பு வாய்பாட்டான் எச்சங்கண்டன்றே முற்றாய்த் திரிந்ததென்று சொல்லுதல் கூடுவது, அது காணாது முற்றே கூறினமையால் என்க.
-----
[3] நன்னூல் வினையியல் - (௩௨) 32.
----------
கை என்பது ஆகுபெயர். போல் என்னும் உவம வுருபு வினை யுவமத்தின்கண் வந்தது. தொல்காப்பிய நூல் என்றவழி மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்தொக்க தொகை. நிலைமொழி யீறு திரிந்து கருத்தனாகு பெயராய்ப் பண்புத்தொகை யாயிற்றெனினும் இழுக்காது.
உரைத் தற்சிறப்புப் பாயிரம் முற்றிற்று.
-------------------------
முதலாவது : 1. களவியல் (001- 004)
1.01. கைக்கிளை (001-004)
001. காட்சி :
காட்சி என்பது தலைமகன் தலைமகளைக் காண்டல். தலைமகன் என்றும் தலைமகள் என்றும் கூறிய இவர் யாரெனின், இல்லது இனியது நல்லது என்று புலவரான் நாட்டிக் கூறப்பட்ட மூன்றனுள், இல்லதாகிய புனைந்துரையால் தோன்றினோர் என்க. இவரது இலக்கணம் யாதோவெனின், பிணி மூப்பு இறப்புக்களின்றி, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலியவற்றான் தம்முள் ஒப்புமையராய்ப் பொருவிறந்தார் என்ப. என்னை,
[1]‘பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரவிதியான் இப்பத்து வகையும் ஒத்திருப்பது இலக்கணம். இவற்றுள் ஆண்டு என்பது இருவர்க்கும் களவிற் காணும்போதில் எத்தனை யாண்டு கூறவேண்டு மெனின், பதினைந்தாண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகனும், பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகளும் களவொழுக்கத்தில் நிகழ்வரென்று [2]கூறுக. என்னை,
[3]'களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்க ளிரண்டின் அகமென மொழிப.'
எனவும்,
'களவி னொழுக்கமுங் காலமுந்
திங்க ளிரண்டின் அகமென மொழிப'
எனவும் வருஞ் சூத்திரங்களாற் கண்டுகொள்க.
-----
[001-1] தொல். பொருள். மெய்ப்பா - 25.
(பாடம்.) [001-2] உணர்க.
[001-3] இறையனார் அகப்பொருள். களவு - (௩௨) 32.
----------
தலைமகன் என்றும் தலைமகள் என்றும் கூறப்படும் விதி யாதெனின், கோவையாதலின் கூறவேண்டும் என்பது, கோவை யாவதென்னெனின், பாட்டியலுட் கூறப்படுஞ் செய்யுட்களில் இஃதோர் செய்யுட்கோவை யென்று பெயராயது. அஃது என்னை யெனின், மணிகளை யோரினமா யொழுங்குபடக் கோப்பது கோவை என்று பெயர்; அதுபோல, இதுவும் அகப்பொருட் கிளவிகளை ஒழுங்குபடக் கோத்து நிற்றலின் கோவையென்று பெயராயிற்று என்பது.
அகப்பொருள் என்பது யாதோவெனின், அகத்தினாய பயன் என்பது. ஆயின், அகம் என்பது யாதோவெனின், ஒருவனும் ஒருத்தியும் தம்முள் ஒத்த அன்பினராய்க் கூடும் கூட்டத்தின்கண் பிறந்த இன்பம் அக் கூட்டத்தின் பின்னர் ஆண்டு அனுபவித்த அக் காலத்தில் இன்பம் எவ்வாறிருந்ததென்று அவ்விருவரி லொருவரை யொருவர் கேட்கின், தமக்குப் புலப்படக் கூறப்படாததாய், உள்ளத்துணர்வே நுகர்வதாய் அகத்தே நிகழ்தலின், அகம் எனப் பெயராயிற்று. ஆயின், அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகம் என்றது ஓர் ஆகுபெயராம் என்பது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அகத்திணையியல் என்பதற்கு நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை கூறினாரென்றுணர்க.
பொருள் என்பது யாதோவெனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் அகப்பொருள் என்னப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் என்னப்படும். இனிச் சுவை ஒன்பானுள் இஃது இன்பச்சுவை யென்று கூறப்படும். அச்சுவை யாவையோ வெனின், வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என இவை. இவற்றுள் சாந்தம் ஒழிந்த எட்டுங் கூறப்படுவன. அவற்றுள் இச்சுவை காமம் என்று சொல்லப்படுவது. காமம் எனினும், இன்பம் எனினும், சிங்காரம் எனினும் ஒக்குமாகலின், இக்கோவை இன்பச் சுவை யென்னப்படும்.
இஃது எனைத்து வகையாற் கூறப்பட்டதோ எனின், களவு, கற்பு என்னும் இரண்டு கைகோளாற் கூறப்படும். கைகோள் என்பது யாதோவெனின், கை என்பது ஒழுக்கம், கோள் என்பது கொள்ளுதல். 'நிரைகோட் பறை' என்பதுபோல நின்றது; எனவே, களவொழுக்கம் கற்பொழுக்கம் எனப்பட்டது.
களவாவது யாதோவெனில், தலைமகனும் தலைமகளும் கொடுப்போரும் அடுப்போரும் இன்றிப் பான்மைவகையான் தாமே யெதிர்ப்பட்டுப் [4]புணர்தல்; ஆதலான், இவ்வியற்குக் களவியல் என்று பெயராயிற்றென்பது. ஆயின், களவென்பது தருமநெறி யன்றே, இலக்கணம் பலவற்றினுங் கூறிய வழக்குப் பயிற்சியாய் வருவதென்னையெனின், களவில் தீங்குதருவதாய் நரகத்துக் கேதுவாய செய்யத்தகாத களவு அன்றென் றறிக. அறஞ்செய்ய மறமாகவும், மறஞ்செய்ய அறமாகவும் வருதலும் உள.
-----
(பாடம்.) [001-4] புணர்தலான்.
----------
அஃதென்னை யெனின், தக்கன் வேள்விசெய்ய அஃது அவனுக்கே தீங்கு தருதலான் அறஞ்செய்ய மறமாயிற்று. ஒருவன் அயலார் மனைவியைக் கைதொட்டான்; அப்போது ஒருவனைக் கரிகூறிக் கூவினாள்; கூவவே, தொட்டானை அரசன்முன்னே யீர்த்துப்போய் விடக் கரியோனை யழைத்து உள்ளபடி கரிகூறென்ன, அவன் கைதொட்டதில்லையென்று கூறினான்; கரிகூறவே அவனைப் போவென்று அரசன் விடுத்தனன். ஆங்குப் பொய்யுரைத்தது அறமாயிற்று. இவன் கைதொட்டானெனின், அவன் தலையோடு முடியும். இனிப் பொய்யும் களவும் இரண்டும் ஒக்கும் என்ப. ஆதலான், களவினும் நன்குதரு களவுமுண்டு. இக்களவு கேடு முதலிய துன்பங்களைத் தருவதன்று; எண்மணத்துள் ஒருமணமாய்க் கந்தருவநெறி யென்று மறையொழுக்கமாய்க் கூறப்பட்டதாகலின், தருமவொழுக்கம் எனப்படும். நாகபட்டினத்தில் புத்தர்தெய்வம் பசும்பொன்னாற் செய்திருந்தது. அதனை [5]ஆலிநாடர் களவிற் கொண்டுவந்து திருவரங்கத்து மதில் செய்வித்தனர். அவர் அச்சமயத்தில் கடவுட்டன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றங் கூறுநர் ஒருவரும் இலராதலான், களவினும் நன்குதரு களவும் உண்டென்றறிக.
-----
[001-5] திருமங்கை யாழ்வார்.
----------
ஆயின், களவியல் என்று பெயர்கூறவேண்டுவது என்னை யெனின், வேதத்தினைப் பலபொருளும் மறைந்திருக்குங் காரணத்தான் மறை என்று பெயர் கூறினாற்போல, பிறரறியாமை இருவரும் கரந்த உள்ளத்தராய்க் கூடுதலான் களவியல் என்றது என்க. பின் கற்பின் வழி நின்று விளங்குதலான் குற்றமின்றெனக் கொள்க.
இக்களவொழுக்கத்திற்கு முன்னர்க் கைக்கிளை கூறப்படும். என்னை,
[6]'மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்
கைக்கிளை நிகழ்தல் கடனென மொழிப.'
என்ப திலக்கணமாகலின்.
-----
[001-6] அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - (௨௮) 27.
----------
கைக்கிளை யென்பது யாதோ எனின், கை யென்பது சிறுமை, கிளை யென்பது உறவு; ஆகலின், சிறுமையுறவு என்பது கைக்கிளை என்று பெயராயிற்று. கைக்குடை, கைவாய்க்கால், கையரிவாள் என வழக்கிடத்துஞ் சிறுமைபற்றி வருதல் காண்க. அஃதென்னை யெனின், ஒருதலைக் காமம் என்னப்பட்டுத் தலைமகன் கூற்றாய் நிகழ்தலினான் என்க. அதனுள் இக்கிளவி காட்சி யென்னப்பட்டது.
காணுமியல்பு யாதோவெனின், முன் சொன்ன தலைவனும், கற்கந்தும் எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட்பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார் ஆளிமொய்ம்பினர் அரிமான்துப்பினர் பற்பனூறாயிரவர் கூர்வேல் இளைஞர் தற்சூழச் செல்வன் என்பது முடிந்தது. அவளும் உடன்பிறந்து உடன்வளர்ந்து நீருடனாடிச் சீருடன் பெருக்கி ஓலுடனாட்டப் பாலுடனுண்டு பல்லுடனெழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்சியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார், கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிர் பற்பனூறாயிரவர் தற்சூழத் தாரகைநடுவண் தண்மதிபோலச் செல்வாள் என்பது முடிந்தது. முடியவே, தமியராய்ப் புணர்ந்தா ரென்பதனோடு மாறுகொள்ளுமெனின், மாறுகொள்ளாது; என்னை, அவள் ஆயங்களும் பொழிலிடம் புகுதலும் விளையாட்டு விருப்பினாற் பிரியும். என்னை பிரியுமாறு எனின், ஒருவர் ஒருவரின் முன்னர் தழை [7]விழைதக்கன தொடுத்தும் என்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், மயிலொடு மாறாடுதும் என்றும், குயிலொடு மாறுகூவுதும் என்றும், அருவியாடி அஞ்சுனைகுடைதும் என்றும், வாசமலர்க் கொடியில் ஊசலாடுதும் என்றும் பரந்து, அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லோ எனவும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லோ எனவும், இவ்வகை நினைத்துப் பிரிய என்பது.
-----
(பாடம்.) [001-7] விழையத்தக்கன தொடுத்தும்.
----------
இவ்வகை அவளைத் தமியளாக்கிப் பிரிபவோவெனின், எட்டியுஞ் சுட்டியும் காட்டப்படுங் குலத்தினளல்ல ளாகலானும், பான்மையும் அவ்வகைத் தாகலானும், பிறவாறு நினையார் பிரிப என்பது. ஆயின், இவ்வகைப்பட்ட ஆயத்திடை மேனாட் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய் நிற்குமோ எனின், நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்குமாகலான் என்பது. யாங்ஙனம் நிற்குமோ எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகும்[8] வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும்[9] பராரைஞாழலும் பைங் [10]கொன்றையொடு பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் வரிபாடத் தண் தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும் பொழிலது நடுவண் ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.
-----
[001-8] கோங்கும்.
[001-9] பரவைஞாழலும்.
[001-10] கொன்றையும்.
----------
கண்டு, பெரியதோர் காதற்களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடி மேற் சிலம்பு கிடந்து புடைப்ப, மலரணிக் கொம்பர் நடைகற்பதென நடந்து சென்று, நறைவிரிவேங்கை நாள்மலர் கொய்தாள். கொய்தவிடத்து மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவிவல்லி மண்டபத்துப் போதுவேய்ந்த பூநாறு கொழு நிழற்கீழ்க் கடிக்குருக்கத்திக் கொடிபிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்திழிதரும் அருவி பொன் கொழித்து மணிவரன்றி மாணிக்கத்தொடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி ஆடகப் பாறைமேல் அதிர்குரன் முரசினிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயில்கள் இசைபாட, தண்டாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாபம் கொளவிரித்து, முளையிள ஞாயிற்று இளவெயிலெறிப்ப ஓர் இளமயில் ஆடுவது கண்டு நின்றாள்.
அப்பால், தலைமகனும் [11]பற்பனூறாயிரங் கூர்வே லிளைஞரொடு [12]நளிமா மலைச்சாரல் வேட்டம்போய் விளையாடுகின்றான், ஆண்டெழுந்ததோர் [13]கடமான்பின்னோடிக் காவல் இளைஞரைக் கையகன்று, நெடுமான்தேரோடும் பாகனை நிலவுமணற் கான்யாற்று [14]நிற்கச் செய்து, தொடுகழலடி யதிரச் சுருளிருங்குஞ்சி பொன்ஞாணிற் பிணித்து, கடிகமழ் நறுங்கண்ணி மேற்கொண்டு வண்டு மணமயர, அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன்பொழிலிடைப் பரந்து நாற, அடுசிலையொடு கணையேந்தி வடிவுகொண்ட காமன்போலச் சென்று, அவள் நின்ற இரும்பொழிலிலே புகும். அஃது யாங்ஙனமோ வெனின், வடகடலிட்ட ஒருநுகத் தொருதொளை, தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற்போலவும், வெங்கதிர்க் கனலியும் தண்கதிர் மதியமும் தங்கதி வழுவித் தலைப்பெய்தாற்போலவும் தலைப்பெய்து ஒருவரொருவரைக் காண்டல் நிமித்தமாகத் தமியராவர் என்பது.
-----
(பாடம்.) [001-11] பற்பனூறாயிரவர்.
[001-12] குளிர்.
[001-13] கடுமான்.
[001-14] நிற்கப்பணித்து.
----------
புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை அன்னஞ்செந்நெல்
வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலயத்திலே. (001)
உரை கூறுமிடத்து [15]நான்கு வகையாற் கூறப்படும். அவை யாவையெனின், கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல் என இவை. அவற்றுள், கருத்துரைத்தலாவது — சொல்லப்படுஞ் செய்யுளின் கருத்தையுரைத்தல். கண்ணழித்தலாவது — பதப்பொருள் உரைத்தல். பொழிப்புத்திரட்டலாவது — அச் செய்யுளிற் கூறப்படும் பொருளைத் தொகுத்து ஒரு பிண்டமாகக் கூறுதல். அகலங் கூறலாவது — அச்செய்யுளின் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவிடை யுள்ளுறுத்தி ஐயந்தீர விரித்துக் கூறல்.
-----
[001-15] 'பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே.' – என்பதனானுணர்க.
----------
அவற்றுள் இச் செய்யுட்குக் கருத்துரை யாதோ வெனின், கிளவி கூறவே [16]கருத்துரை விளங்கிநின்ற தெனக் கொள்க.
-----
(பாடம்.) [001-16] கருத்துரையாய்.
----------
(இ - ள்.) புயலே சுமந்து – புயலைத் தாங்கி, பிறையே அணிந்து – மதிக்கலையைத் தரித்து, பொரு வில்லுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்து – போர் செய்யும் வில்லுடனே கெண்டை மீன் பொருந்திய தாமரை மலர்ந்து, ஒரு கற்பகத்தின் அயலே – ஒரு கற்பகத்தின் பக்கத்து, பசும்பொற்கொடி – பசிய காமவல்லிக்கொடி, நின்றது – என் கண்ணெதிரே நின்றது, ஆல் – அசை, வெள்ளை அன்னம் – வெள்ளை நிறத்தையுடைய அன்னம், செந்நெல் – சிவந்த நெல், வயல் – கழனி, தடம்பொய்கை – பெரிய வாவி, சூழ் – சூழ்ந்த, தஞ்சை வாணன் – [17]தஞ்சையில் இருக்கும் வாணன், மலயத்திலே – பொதிய மலையிடத்து என்றவாறு — இதுகண்ணழித்தல்.
-----
[001-17] தஞ்சாவூரில், தஞ்சாக்கூரில். தொல் - பாயிரஉரை மேற்கோள்.
----------
(பொழிப்புரை) அன்னப்புள் செந்நெல் செறிந்த வயலும், வாவியும் சூழ்ந்த தஞ்சைவாணன் பொதிய வெற்பில் ஒரு கற்பகத் தருவின் பக்கத்தில் ஒரு பசும்பொற்கொடி, புயலைத்தாங்கிப் பிறையைத் தரித்துப் போர்செய்யும் வில்லுடன் கெண்டைமீன் பொருந்திய தாமரை மலர்ந்து என் கண்ணெதிரே நின்றது என்றவாறு — இது பொழிப்புத் திரட்டல்.
(விரிவுரை) 'புயலைச்சுமந்து பிறையையணிந்து பொருவிலுடன் கயலேமணந்த கமலமலர்ந்து' என்னும் வினையெச்ச அடுக்குகள், 'நின்றது' என்னும் அஃறிணை முற்றுவினைகொண்டு முடிந்தன. புயலைப் பிறையைக் கமலத்தை என்னும் இரண்டாமுருபு தொக்கு நின்றன. ஏகாரம் அனைத்தும் ஈற்றசை. ’வயல் பொய்கை' என்புழி எண்ணும்மை தொக்கு நின்றது. புவியின்கண் கற்பகத்தருவைக் கூறினது குற்றமெனின், குற்றமன்று. என்னை, தேவரெல்லாரும் பொதியமலையிற் கூடியிருத்தலின் அம் மலைக்குப் பொதுஇல் என்னும் பெயர், இக்காலத்து பொதியில் எனத் திரிந்து மரூஉவாய் நின்றது; ஆதலால், தேவரிருக்குமிடத்துக் கற்பகத்தரு இருக்குமென்பது துணிபு. அன்றியும், குறுமுனி யிருக்கும் மலையாதலானுங் கூறப்படும். கற்பகத்தின் அயலில் நிற்பது காமவல்லிக்கொடி யாதலான், பசும்பொற்கொடி – காமவல்லிக்கொடி யென்றுணர்க.
இக்கவி கட்டளைக்கலித்துறை என்றுணர்க. திலதக்கலித்துறை, கோவைக்கலித்துறை யெனினும் அமையும். இதற்கு விதி, 'நேர்பதி னாறே' என்னுங் கட்டளைக்கலித்துறைச் சூத்திர அடியிற் கண்டுகொள்க. ஆயின், 'யானுந் தோழியும்' என்பதும், [18]'வென்றான் வினையின்' என்பதும், கலித்துறை யன்றோவெனிற் கூறுதும் :
[19]’மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத்
தாவாத இன்பந் தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்தும் அன்றே.'
என்னும் சிந்தாமணிப் பதிகச்செய்யுளில் இதற்குப் பெயர், விருத்தத் தோசையாய் விருத்தத்திலக்கணம் நிரம்பாமையானும், நெடிலடி நான்காய்க் கலித்துறை யோசையிலக்கணம் நிரம்பாமையானும், விருத்தக்கலித்துறை யென்று நச்சினார்க்கினியர் கூறிய உரையான் உணர்க. — இது அகலங்கூறல்.
-----
[001-18] சூளாமணி காப்பு.
[001-19] சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - (௧) 1.
----------
இதனில் அகப்பாட்டுறுப்பு வருமாறு :
[20]'திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பா டெச்சம் பொருள்வகை துறையெனா
அப்பால் ஆறிரண் டகப்பாட் டுறுப்பே.'
என்பதனான் இப்பாட்டிற்குத் திணை - குறிஞ்சி, கைகோள் - களவு, கூற்று - தலைவன் கூற்று, கேட்போர் - நெஞ்சு, இடம் - பொழிலிடம்.
[21]’ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப’
என்பவாகலின். காலம் - இறந்தகாலம், பயன் - காட்சி வியப்பினால் உள்ளமகிழ்தல். முன்னம் - தலைவியைக் கண்டு தலைவன் வியந்து பொருளைக்கூறாது உவமையே கூறுதல். புறத்துக் கண்ட பொருள் காரணமாக நெஞ்சிற்றோன்றிய விகாரத்தின் விளைவு மெய்ப்பாடாதலான், மெய்ப்பாடு -மருட்கை. திருக்கோவையா ருரையில் காட்சிச் செய்யுட்கு மெய்ப்பாடு உவகையென்று பேராசிரியர் எழுதினாராலோவெனின், உவகையாகாது, என்னை, கண்டபொருளான் நெஞ்சில் மயக்கந் தோன்றி ஒன்றை யொன்றாகக் கூறுதலின் மருட்கையேயாம் என்க. எச்சம் - நெஞ்சம், பொருள்வகை -ஆற்றொழுக்கு, துறை ஒவ்வோரிடங்களில் அரிதாய் வருமெனக் கொள்க. வந்தவிடத்து உரையிற் கூறுதும், கண்டு கொள்க.
-----
[001-20] அகப்பொருள் விளக்கம். ஒழிபியல் - சூ. (௨) 2.
[001-21] தொல். பொருள். செய்யுளியல் - சூ. (௧௯௯) 199.
----------
காட்சிக்குப் பாட்டுப்பாடும் இயல் ஓரினஞ்சார்ந்த பொருளாற் பாடவேண்டும் என்பது இயல்பு. அது சான்றோர் கூறிய கோவைச்செய்யுளிற் கண்டுகொள்க. ஆயின், இச்செய்யுட்கு ஓரினஞ்சார்ந்தது எங்ஙனமெனின், குறிஞ்சி நிலத்துப் பொருளையே ஓரினஞ்சார்த்திப் பாடியவாறு கண்டுகொள்க. இக்காட்சிக்கன்றி வழிநிலைக்காட்சிக்கு எவ்வாறு கூறினும் அமையும். காட்சிக்குக் கண்டபொருளை (அவயவத்தை)க் கூறாது உவமையைக் கூறவேண்டுவ தென்னையெனின், இங்ஙனஞ் சிறந்து தோன்றாவிடின் ஐயம் நிகழாதாதலான் இங்ஙனங் கூறவேண்டுமென்பது. வாணன் நாட்டிடத்துப் பொருவிறந்த தலைமகன் பொருவிறந்த தலைமகளைக் கண்ணுற்றானென்புழி, இவன் பொருவிறப்புக்கு மாறு கொள்ளுமெனின், எண்திக்குங் கீர்த்தியை நிலைநிறுத்தித் தெய்வத்தோ டொத்தவ னாதலின், தேவருள் ஒருவனென்று கூறப்படுமவன் கீர்த்தியிற்பாடும் புலவரால் தோன்றுந் தலைவனும் தலைவியு மாதலான், மக்கட்டன்மையிற் பொருவிறந்தா ராயினாரெனக் கொள்க.
இத்தமிழ், நாடகத்தமிழ் எனப்படும். என்னை, கிளவி யொழுங்குபடக் கோத்துக் கதைபோல வந்து நாடகத்துக்கேற்றலின். ஆயின், இலக்கணமென்று இலக்கணத்திற் கூறியவாறென்னை யெனின், அந்நாடகத்தமிழ்க்கே இலக்கணங் கூறினார் என்க. இவை யெல்லாம் அகலவுரைப்பாற்படும்.
---------- (001. காட்சி - முற்றும்) ----------
002. ஐயம் :
ஐயம் என்பது, கண்ணுற்ற தலைமகன் கொடி அல்லள் பெண் ணென்றறிந்து, இங்ஙனங் காட்சியிற் சிறந்து தோன்றிய இவள் தெய்வப் பெண்களில் எத்தெய்வப் பெண்ணோ என்று ஐயப்படுதல் கூறல்.
பாரணங் கோதிருப் பாற்கடல் ஈன்றபங் கேருகத்தின்
ஓரணங் கோவெற் புறையணங் கோஉயர் பாவலர்க்கு
வாரணங் கோடி தருந்தஞ்சை வாணன்தென் மாறைவையை
நீரணங் கோநெஞ்ச மேதனி யேஇங்கு நின்றவரே. (002)
(இ – ள்.) பாரினிடத்துப் பொழிலின் மேலிருந்து புவியினுள்ளோர் சிறப்புச்செய்ய அச்சிறப்பைக் கொள்ளுந் தெய்வப் பெண்ணோ! திருப்பாற் கடல்பெற்ற பங்கேருகத்துக்கண் இருக்கும் ஒப்பில்லாத தெய்வப் பெண்ணோ! வரையரமகளோ! உயர்ந்த பாவலர்க்குக் கோடி யானையைக் கொடுக்கும் தஞ்சைவாணனது தென்மாறை நாட்டகத்து வரும் வையையாற்றின்கண் தோன்றிய நீரரமகளோ! நெஞ்சமே, தனியே இங்கு நின்றவர் யாரோவென்று அறியப்படாது.
இதனுள் ஓகாரங்கள் ஐயப்பொருளவென்று உணர்க. நெஞ்சமே, தனியே யிங்கு நின்றவர் யார்? என, நெஞ்சொடு வினாதற் பொருண்மை யென்று வினா ஓகாரம் என்பாரும், அவரோ இவரோ என்று ஆராய்தற் பொருண்மைக்கண் வந்ததென்று தெரிநிலை ஓகாரம் என்பாரும் உளராலோவெனின், இக்கிளவி ஐயமாதலால் ஐயப்பொருண்மையை விளக்குவது இவ்வோகாரங்கள்; அல்லவெனின், ஐயப்பொருண்மையை யுணர்த்துவது வேறின்மையால், அவர் கூறிய வினா ஓகாரமும், தெரிநிலை ஓகாரமும் அப்பொருண்மை யறிக.
[1]'பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப வோகா ரம்மே.'
எனச் சூத்திரத்துள் ஐய ஒகாரங் கொண்டிலரால் எனின், இச்சூத்திரத்திற் கொண்டிலர்; எழுத்ததிகாரத்து உயிர்மயங்கியலில் ஓகார வீற்றுப் பதமுடிப்புழி,
[2]'மாறுகொ ளெச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.'
என்னுஞ் சூத்திரத்தில் ஐய ஓகாரமுங் கொண்டார். அதற்கு உதாரணம், 'பத்தோ பதினொன்றோ' என உரையாசிரியர் காட்டிப் போந்ததனானுங் கொள்க. பாரணங்கோ என்பதற்குத் தெய்வப் பெண்ணோ என்று கூறினமையால் இறையனார் அகப்பொருளில்,
[3]'உரையுறை தீந்தமிழ் வேந்த னுசிதன்தென் னாட்டொளிசேர்
விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிவிண்தோய்
வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த
திரையுறை தெய்வங்கொ லையந் தருமித் திருநுதலே.'
என ஐயத்திற்குக் காட்டிய பாட்டில் பொழிலின்மேலுறை தெய்வம் எனச் சூரரமகளைக் கூறியவாறு கண்டுகொள்க. 'பங்கேருகத்தி னோரணங்கோ' என்பது மகரவீற்றுப்பதம் அத்துச்சாரியை பெற்று, இன் என்னும் ஐந்தாமுருபு ஏழாவதின் பொருள்பட வந்தது.
-----
[002-1] தொல். சொல். இடையியல் - (௮) 8.
[002-2] தொல். எழுத். உயிர் மயங்கியல் - (௮௮) 88.
[002-3] களவியல். (௨) 2-ம் சூ. மேற்கோள்.
----------
[4]'யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.'
என்னுஞ் சூத்திரவிதியாற் கண்டுகொள்க. அன்றியும் ஊரினிருந்தார், மனையினிருந்தார் என்பதுபோற் கொள்ளினும் அமையும்.
-----
[002-4] தொல். சொல். வேற்றுமை மயங்கியல் - சூ. (௨௩) 23.
----------
பொழிலைச்சார்ந்து நிற்றலின், 'பாரணங்கோ' என்றும், பசும்பொற்றகடு வேய்ந்து மரகதவிளிம்படுத்த மாணிக்கச்சுனையருகு சண்பகம், பாதிரி, வகுளம், அசோகு, சந்தன முதலாய தருக்கள் மலர்ந்த பூநாறு கொழுநிழற்கீழ் ஒரு கற்பகத்தைச் சார்ந்து பளிக்குப் பாறைமேல் கோலக்கலாபம் விரித்து மயிலாடநோக்கி நின்றா ளாகலின், இவள் நிற்குமிடத்துச் சிறப்புநோக்கிப்; 'பங்கேருகத்தி னோரணங்கோ' என்றும், மலையிடத்து நிற்றலால், 'வரையரமகளோ' என்றும், சுனைநீ ரருகுநிற்றலின், 'நீரரமகளோ' என்றுங் கூறினா ரென்க.
பொழிலின்மேலிருந்து பூசைகொள்ளுந் தெய்வம் யாதோ எனின் சூரரமகள் என்ப. 'பாற்கடல்' என்ன அமையாதோ, 'திரு' என்றது எற்றுக்கோ வெனின்; கடல்களில் குணமிக்க கடலாதலானும், தேவருக்கு அமுதங் கொடுத்ததாதலானும், நெடுமால் பள்ளிகொண்ட இடமாதலானும், 'திருப்பாற்கடல்' என்று கூறப்பட்டது.
இவ்வாறு தலைவியும் ஐயுறாதது என்னையெனின், ஐயுறின், 'கந்திருவனோ! முருகவேளோ! இயக்கனோ!' என ஐயுறவேண்டும். அங்ஙனம் ஐயுறவே, அச்சந்தோன்றும்; தோன்றவே, காமவேட்கை நிகழாது, ஆதலால், கூறிற்றிலர் எனக் கொள்க.
---------- (002. ஐயம் - முற்றும்) ----------
003. துணிவு :
துணிவு என்பது, கண்ணி வாடுதல் கண்இமைத்தல் முதலிய குறிகளான் மானிடமாதே யென, முன் ஐயுற்ற தலைமகன், தெளிந்து கூறல்.
மையார் குவளை வயல்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
நையா தொழிமதி நன்னெஞ்ச மேஇனி நம்மினுந்தன்
நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலஉண்கண்
கையால் அழைப்பன போலிமை யாநிற்குங் காரிகைக்கே. (003)
(இ - ள்.) நல்ல நெஞ்சமே, இக் காரிகைக்கு நம்மினும் தனது நெய்யார்ந்த கருங்குழலில் சூடிய செம்மலர் வாடின; அன்றியும், நீலம்போன்ற மையுண்டகண் கையினால் வாவென்று அழைப்பனபோலும் இமையாநின்றன; ஆதலால், கருமைபொருந்திய குவளை மலர்ந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத தெவ்வர்போல நீ இனி நையாதொழிவாயாக.
மதி - முன்னிலையசை. உண் கண் - மையுண்ட கண். நெய் - புழுகு.
[1]‘நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினாற்
பொய்கைகள் பூம்படாம் போர்த்தல் போன்றவே.'
என்றார் பிறருமென்க.
-----
[003-1] சிந்தா. நாமக – (௫௧) 51.
----------
---------- (003. துணிவு - முற்றும்) ----------
004. குறிப்பறிதல் :
குறிப்பறிதல் என்பது, தலைவி வேட்கை, அவள் பார்வையால் தன்னிடத்து உண்டென்று குறிப்பால் அறிவது.
மண்ணிற் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலயவெற்பில்
பெண்ணிற் சிறந்தஇப் பேதைதன் பார்வை பெருவினையேன்
எண்ணிற் சிறந்த இருந்துயர் நோய்தனக் கின்மருந்தாய்க்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதுங் காட்டியதே. (004)
(இ - ள்.) மண்ணிலே மிகுந்த புகழையுடைய தஞ்சைவாணன் பொதிய வெற்பிடத்துப் பெண்மையிற் சிறந்த இப்பேதையினது பார்வை பெரிய தீவினையேன் எண்ணத்தின் மிகுந்த பெரிய வேட்கைநோய் தனக்கு வருத்தப்பாடு செய்யாது இன்பஞ்செய்யும் மருந்துமாகி, கண்போற் சிறந்த உறுப்பில்லையாவதுங் காட்டியது.
துயர் - ஆகுபெயர். வேட்கையை நோயாக்கலால் பார்வையை மருந்தாக உருவகம் செய்யப்பட்டது. அவயவம் பலவற்றினானும் பயன்தருவ தின்மையாய்க் கண் பயன்தருவதாய்ச் சிறத்தலின், 'கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை யாவதுங் காட்டியது' என்று கூறியது.
காட்சி முதல் குறிப்பறிதல் ஈறாக நான்கும் கைக்கிளை யென்று கூறப்படுதலின், கைக்கிளையுள் தலைவி வேட்கைக் குறிப்பினை யறிந்தான் என்புழி, கைக்கிளை யென்பதனொடு மாறுகொள்ளும்; மற்றென்னை யெனின், மாறுகொள்ளாது; என்னை,
தலைமகள் பார்வை பொதுப் பார்வையே, இவன் தன் அவா மிகுதியால் பார்வையில் வேட்கையுளதென்று கருதினா னென்பதாயின், தலைவன் அறிவிலனாம்; மற்றென்னை யெனின், தலைமகள் வேட்கைக் குறிப்பால் பார்த்தாள் என்புழிப் புணர்ச்சிக்கு உடன்பட்டாளாயிற்று; உடன்பட்டாள் எனவே தொல்லாசிரியர் கைக்கிளையிற் கூறார்.
மெய்ப்பாட்டியலில் தலைவிக்குக் கூறிய அவத்தையில்,
[1]'புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.' — (முதல் அவத்தை)
’கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ
டூழி நான்கே இரண்டென மொழிப.’ — (இரண்டாம் அவத்தை)
'அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.' — (மூன்றாம் அவத்தை)
'பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப.' — (நான்காம் அவத்தை)
'தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு
பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.' — (ஐந்தாம் அவத்தை)
-----
[004-1] தொல். பொருள். மெய் - (௧௩) 13, (௧௪) 14, (௧௫) 15, (௧௬), (௧௭) 17.
----------
இங்ஙனம் நான்கு அவத்தைக் கண்ணுங் கூறிய மெய்ப்பாடு பதினாறும் நிகழ்ந்ததில்லை; ஐந்தாம் அவத்தைக் குணம் நான்கினும் முதற்குணம் தெரிந்துடன்படுதல்' என்பதற்கு, 'ஆராய்ந்துடன் படுதல்' என்று இலக்கணங் கூறினமையால், இவற்றின் ஒன்றுமின்றிக் கைக்கிளையில் உடன்பட்டாள் என்று சொல்லுவது பொருந்தாதென்பது. ஆயின், சான்றோர் செய்யுள் பலவற்றினுங் கைக்கிளையுட் குறிப்பறிந்தானென்று கூறியவாறென்னை யெனின், அவள் பார்த்த பார்வை நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவேயாம். அஃது என்னை யெனின், ஒருவன் பசித்து வந்தானொருவனைக் கண்டான்; அவன் பசியோடிளைத்து வந்தவன் முகத்தைப் பார்த்தான்; அப்பார்வை பசி தீர்க்குமென்பதோ தீராதென்பதோ என்னல்போல நின்றது. பசித்துவந்தவன், இவன் சோறு கொடுப்பானென்று எண்ணுவதல்லது, கொடானென எண்ணுவது இல்லை; யாதினாலெனின், தன் அவாவினால் என்பது. அது போலத் தலைமகனும் தன் அவா வயத்தனாய்க் கூறியதல்லது, அறிவிலனாய்க் கூறினான் அல்லனென்று உணர்க.
இனி, வேட்கையின் குறிப்பு உணர்ந்தது பதினாறாங் கவி முறுவற்குறிப்பு உணர்தற் செய்யுளிற் கூறியவாற்றான் உணர்க. இனி, இவ்வாறே அகத்திணையியலில்,
[2]'முன்னைய நான்கு முன்னதற் கென்ப.’
என்னுஞ் சூத்திரத்தில் நச்சினார்க்கினியர் உரையின், 'அவ்வேட்கை மிகுதியாற் கூறியதல்லது உடம்பட்டாளல்லள்', என்று கூறியவா றுணர்க. அவளுடம்படுவது எங்ஙனமெனின், மறுத்தெதிர் கோடலின்கண்ணே உடம்பட்டவாறு உணர்க. ஆயின், அந்நான்கு அவத்தைக்கண் ஓதிய பதினாறுவகையும் [3]நிகழ்ந்தன்றோ உடம்படுவது எனின், நிகழ்ந்தது உண்டென்று உணர்க. எங்ஙன மெனின் மெய்தொட்டுப் பயிறல் முதலிய நிகழ்ந்துழி எல்லாவகையும் நிகழ்ந்தவாறு கூறவேண்டாவாயிற்று.
-----
[004-2] தொல். பொருள். அகத். – (௫௨) 52.
(வே.பா.) [004-3] நிகழாதன்றோ.
---------- (004. குறிப்பறிதல் - முற்றும்) ----------
1.01. கைக்கிளை முற்றிற்று
-------------------------
1.02. இயற்கைப் புணர்ச்சி (005-019)
அஃதாவது, தெய்வத்தாற் கூடுதலும், தலைவியாற் கூடுதலும் என இருவகைப்படும். செய்யுட்பாடுவார் தெய்வப் புணர்ச்சி பாடுவாருமுளர், தலைவியிற் புணர்ச்சி பாடுவாருமுளர்; இவ்விரண்டிற்கும் இயற்கைப் புணர்ச்சியென்று பெயர் கூறப்படும். அவற்றுள் இச்செய்யுள் தலைவியிற் புணர்ச்சியாய இயற்கைப் புணர்ச்சி [1]என்க.
[2]'வேட்கை யுணர்த்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டமென் றிறைவியிற் கூட்டநால் வகைத்தே.'
என்னுஞ் சூத்திரவிதியால், இயற்கைப் புணர்ச்சி நான்கு வகைப்படு மெனக் கொள்க. அவை வருமாறு :
-----
(வே.பா.) [1.02-1] என்று கொள்க.
[1.02-2] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௧0) 10.
----------
005. இரந்து பின்னிற்றற் கெண்ணல் :
இரந்து பின்னிற்றற் கெண்ணல் என்பது, தலைவன் தலைவியை யிரந்து பின்னிற்றற் கெண்ணல். பின்னிற்றல் என்பது ஒரு சொல்; அதற்குப் பொருள் இதஞ்சொல்லுதல்.
தேங்கிய காதர வாதரஞ் செப்பித்தண் செப்பிணைபோல்
வீங்கிய மாமுலை மேவுதும் யாம்விச யக்கொடிமேல்
வாங்கிய சாபம் உயர்த்தவன் போர்வென்ற வாணன்வையம்
தாங்கிய மாலனை யான்தஞ்சை சூழ்வரைத் தாழ்குழற்கே. (005)
(இ - ள்.) நெஞ்சமே, வெற்றிக்கொடிமேல் வளைவில்லை யுயர்த்தவனாகிய சேரனது போரைவென்ற வாணன் வையந்தாங்கிய மாலுக் கொப்பானவன் தஞ்சையைச் சூழ்ந்த வரையிலிருக்குந் தாழ்ந்த குழலினை யுடையாட்கு நிறைந்த அச்சந்தரும் ஆதரத்தைச் சொல்லி, தண்ணிய செப்பிணைபோற் பூரித்த பெரிய முலையிடத்து யாம் கூடுதும் என்றவாறு.
காதரம் - அச்சம்; வடசொல். ஆதரம் - காதல். தாழ்குழல் - அன்மொழித் தொகை. நெஞ்சம் முன்னிலையெச்சம்.
---------- (005. இரந்து பின்னிற்றற் கெண்ணல் - முற்றும்) ----------
006. இரந்து பின்னிலை நிற்றல் :
இரந்து பின்னிலை நிற்றல் என்பது, தலைவியை யிரந்து இதஞ் சொல்லுதல். நிலையாகப் பின்னிற்றல் என்று மாறிக் கொள்க.
செறிவேழ வெஞ்சிலை வேள்தஞ்சை வாணன் திருந்தலர்மேல்
எறிவேலை வென்றகண் ணென்னுயிர்க் கேவி யிருண்டறல்போல்
நெறிவேய் அலங்கன் முடித்தலை சாய்த்திங்ங னிற்பதுதான்
அறிவே யறிந்த வுனக்கலர் மாளிகை ஆரணங்கே. (006)
(இ - ள்.) அலர் மாளிகையிலிருக்கும் அரிய தெய்வம் போல்வாய், வென்றி செறிந்த கருப்பு வெஞ்சிலையை யுடைய வேளன்ன தஞ்சைவாணன் பகைவர்மேலெறிந்த வேலை வென்ற நின்கண்ணை என்னுயிர்மேலே விடுத்தலைச் செய்து, அறல்போல் இருண்டு நெறிவேய்ந்த மாலையைச் சூடிய முடித்தலையைச் சாய்த்து, இவ்வாறு நிற்பது எல்லா மறிந்த உனக்கு அறிவோ என்றவாறு.
'இருண்டறல்' என்புழியும், 'அறிவே யறிந்த உனக்கு' என்புழியும் மொழி மாற்றிக்கொள்க. 'வேள் தஞ்சை வாணன்' என்புழி, அன்ன என்னும் பெயரெச்ச வினைக்குறிப்பாகிய உவம வுருபு தொக்கது. 'என்னுயிர்க்கேவி' என்புழி, நான்கனுருபு, மேல் என்னும் ஏழனுருபாயினவாறு கண்டுகொள்க.
[1]'கிளையரில் நாணற் கிழங்குமணற் கீன்ற'
என்பதுபோலக் கொள்க. நெறி - மயிர் இருபக்கமும் வகிர்ந்த நடுவொழுங்கு. முடித்தலை - இருபெய ரொட்டுப் பண்புத் தொகை. ஆரணங்கு - ஆகுபெயர்; அன்னம் போல்வாளை அன்னம் என் றதுபோலக் கொள்க.
-----
[006-1] அகநானூறு - (௨௧௨) 212.
----------
---------- (006. இரந்து பின்னிலை நிற்றல் - முற்றும்) ----------
007. முன்னிலையாக்கல் :
முன்னிலை யாக்கல் என்பது, தலைமகன் தலைமகளை முன்னிலை யாக்கிக் கூறுதல். அஃதென்னை யெனின்,
காரியத்திற்கு முன்னிற்பது யாதோ அது முன்னிலை யென்று பெயர் பெறும். முன்னிலை யெனினும் முதனிலை யெனினும் காரணம் எனினும் ஒக்கும். ஆயின், என்சொல்லியவாறோ வெனின், இவள் நிற்பது தன் காரணமாக்கிக் கூறுதல்.
வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவண்டு
கொழுதிய லார்செய் குழன்மட வீர்நுங்குற் றேவல்செய்து
தொழுதிய லாயத் தொகுதியொ டாடிச் சுனைகுடையா
தெழுதிய பாவையைப் போல்நின்ற வாறென் இயம்புமினே. (007)
(இ - ள்.) பாண்டியருடைய புகழை வளர்க்கின்ற வாணன் தென்மாறை நாட்டு, வண்டு கொழுதப்பட்ட, செய்ய வேண்டும் இலக்கணமெல்லாம் முற்றச் செய்த குழலையுடைய மடவீர், நும்மிடத்துக் குற்றேவல் செய்து தொழுது சஞ்சரிக்கும் ஆயக்கூட்டத்தோடு விளையாடிச் சுனைகுடையாது எழுதிய சித்திரப் பாவைபோல, நீர் நின்றவாறு யாது காரணம்? என்னைக் காக்கவோ? சொல்லும் இப்போதே என்றவாறு.
'வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்' என்பது, பாண்டியனுக்கு அமைச்சனாதலால் என்று கொள்க. வழுதி யென்னாது வழுதியர் எனப் பன்மையாற் கூறியது என்னையெனின், வழுதி குலத்து முன்னுள்ளோர் படைத்த புகழும், இப்பாண்டியன் படைத்த புகழும் எல்லாம் வளர்ப்பவனாதலின் பன்மையாற் கூறப்பட்டது.
நாமம் - புகழ். தென் - அழகு; தெற்குத் திசையிலுள்ள மாறை யென்றுமாம். கொழுதுதல் - கோதுதல். இயல் - இலக்கணம். ஆர் - நிறைய; ஆர என்னுஞ் சொல் விகாரத்தால் ஆர் என நின்றது. இயலுதல் - சஞ்சரித்தல். தொகுதி -கூட்டம். குடைதல் - குளித்தல். இன்னே - இப்பொழுதே. 'என்னைக் காக்கவோ' என்னுஞ் சொல் வருவித்து உரைக்க; இச்சொல் உரையாவிடின் முன்னிலை யாக்கற் பொருள் தோன்றாமை யுணர்க. இலக்கணமெல்லாம் முற்றச்செய்த குழல் என்றது, திருமுருகாற்றுப்படையில்,
[1]'துவர முடித்த துகளறு முச்சி'
என்பதற்கு, 'முற்றமுடித்த வுச்சி' எனப் பொருள் கொண்டவாறு உணர்க.
-----
[007-1] திருமுரு. (௨௬) 26.
----------
---------- (007. முன்னிலையாக்கல் - முற்றும்) ----------
008. மெய்தொட்டுப் பயிறல் :
மெய்தொட்டுப் பயிறல் என்பது, தலைவன் தலைவி மெய்யினைத் தீண்டி நெருங்குதல்.
தீண்டுமாறு என்னை, மெய்யைத் தொடக் கொடுக்கின் நாணிலளாம்; நாணுடையள் எனின் தொட்டது இன்றாம். மற்றென்னை யெனின், நாணும் உடையள், தொட்டதும் உண்டு எனல் வேண்டும். எவ்வாறு எனின், புனல் ஓடும்வழி புல் சாய்ந்து புறங்கிடப்பது போல, வேட்கை மீதூரப்பட்டு நாணம் ஒருபாற் சாய்ந்துகிடப்ப நின்றாளென்க. அக்காலத்தில் தலைவன் தீண்டற்கஞ்சி நின்று, குழலில் வண்டை யோட்டுவதுபோல நெருங்கி வண்டை யோட்டுகையில் கைப்பட்டது போலத் தொட்டான் என்க. அங்ஙனங் தீண்டிற் பயனென்னை யெனின், இவனுக்கு ஊற்றின்பமும், தலைவி நாணைத் தன்வசப்படுத்தலும் பயனென்றுணர்க. பயிறல் என்பதற்குப் பழகுதல் என்றுரைப்பாரும் உளர். நெருங்கி நிற்றலால் பழகுதலுமாம். நச்சினார்க்கினியர், மெய்தொட்டுப் பயிறல் என்பதற்கு, புலையன் தீம்பால்போல மனங்கொள்ளவும் கொள்ளாவுமாகி யிருக்கின்ற காலத்தே தொட்டான் என்று உரை கூறினார். அஃதென்னை யெனின், புலையன் தொட்டான் என்பதனான் சிறிது அருவருப்பும், பாலுக்குக் குற்றமின்று என்பதனான் விருப்பும் என்று பொருள்கொள்க. அருவருப்பும் விருப்பும் இவட்கு ஏற்றினாலாயதோ வெனின், களவொழுக்கம் என்பதனான் அருவருப்பும், கந்தருவ மணம் என்பதனான் விருப்பும் என்று பொருள் கொள்க. இனி, எவ்வுறுப்பைத் தொட்டானெனின், தோள் தீண்டினான் என்க. என்னை,
[1]'உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்.'
என்பதனாற் கண்டுகொள்க.
-----
[008-1] குறள். புணர்ச்சி மகிழ்தல் - (௬) 6.
----------
நல்லார் விழிபோ லிருந்தும் அளியெனு நாமம்பெற்றும்
அல்லார் குழலில் அமர்ந்திருந் தாலம ராரைவெல்ல
வல்லான் வரோதயன் வாணன்தென் மாறை மதுகரங்காள்
நில்லா திடையுமக் கோபழி சால நிலைநிற்குமே. (008)
(இ – ள்.) பகைவரை வெல்ல வல்லமை படைத்து வரத்தினால் உதயஞ் செய்தவனாகிய வாணனது தென்மாறை நாட்டு வண்டுகாள், நல்லார்க்கு நீர் கண்போலிருந்தும், அன்பு என்கிற அளியென்னும் பெயரைப் பெற்றும், இவளுடைய இருள் போன்ற குழலின்மேற் பொருந்தி யிருந்தீராயின், இடை நில்லாது இறும்; அதனால் இவள் இறந்து படும்; படின் உமக்குப் பெண்கொலைப் பாவம் மிகவும் நிலைநிற்கும்; அவ்வண்ணம் கொலைப்பாவம் வாராமல் நீக்குவீராக என்றவாறு.
நீக்குவீராக என்பது வருவித்து உரைக்கப்பட்டது. ஓ என்பது அசைநிலை. அல்லார் என்புழி, ஆர் உவமவுருபாய் நின்றது. வரோதயன் வடசொன் முடிபு. வல்லான் என்னும் வினைக்குறிப்பு முற்றுவினை யெச்சமாய் நின்றது. என்னை, திருமுருகாற்றுப் படையுள்,
[1]'குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்'
என்பதற்கு, 'குழலையூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியத்தை யொலித்து' என முற்றுவினை யெச்சமாக நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் கண்டுகொள்க. இக்கிளவிக்கு வண்டு முன்னிலையாகப் பாடவேண்டும் என்பது.
-----
[008-1] திருமுரு. (௨0௧) 201.
----------
---------- (008. மெய்தொட்டுப் பயிறல் - முற்றும்) ----------
009. பொய்பாராட்டல் :
பொய்பாராட்டல் என்பது, தலைமகன் தலைமகள் மாட்டு உள்ளதும் இல்லதும் கூட்டிக் கொண்டாடுதல்.
ஆயின், இக்கிளவியிற் பொய்பாராட்டல் எனக் கூறியதல்லது, உள்ளதும் எனக் கூறியதில்லையால் இவ்வாறு உரை கூறியதென்னை யெனின், இல்லதனைக் கூறிக் கொண்டாடுவான் உள்ளதனை விடுவதிலன், மிகவுங் கொண்டாடுவான் என்பதாதலான், பொய்பாராட்டற்கு உள்ளதும் இல்லதுங் கூட்டிக் கொண்டாடுதல் என [1]'மெய்தொட்டுப் பயிறல், பொய்பாராட்டல்' என்னுஞ் சூத்திரத்தில் உரையாசிரியர் எழுதிய வுரையிற் கண்டுகொள்க.
-----
[009-1] தொல். பொருள். களவியல் - (௧௧) 11.
----------
பருந்தொன்று கூரிலை வேற்படை வாணன் பரிமளப்பூஞ்
செருந்தொன்று சோலைத்தென் மாறைஅன் னீர்செழுந் திங்களுங்கள்
முருந்தொன்று கோப முகங்கண்டு நாணி முயல்மறுத்தீர்
மருந்தொன்று நாடியன் றோவட மேரு வலங்கொள்வதே. (009)
(இ – ள்.) பகைவ ருடலில் தோய்ந்து அவர் ஊன் பற்றிப் புலவு நாறுதலால் பருந்து பொருந்துங் கூரிய இலை போலும் வேலாகிய படையை யுடைய வாணனது பரிமளம் பொருந்திய பூவோடு கூடிய செருந்திமரஞ் செறிந்த சோலை சூழ்ந்த தென்மாறை நாடுபோலும் வனப்புடையவரே, நிறைந்த திங்கள் உமது முருந்து பொருந்துங் கோபமுடைய முகத்தைக் கண்டு, தன்னிடத்து முயலாகிய மறு உண்மையான் ஒவ்வாமையாய் நாணி, அம் முயல்மறுத்தீர்தற்கு மருந்தொன்று மனத்தில் நாடியன்றோ வடமேருவைத் தினம் வலங்கொள்வது என்றவாறு.
முருந்து - இறகின் முதன்முள்; பற்கு உவமை. கோபம் - இந்திரகோபம்; இதழ்க்கு உவமை. இஃதிரண்டும் ஆகுபெயர். இதனுள் இல்லது மருந்தொன்று நாடுதல்; உள்ளது வடமேரு வலங்கொள்வது. மகளிர்க்கு உறுப்புப் பலவற்றினும் முகனும் முலையும் சிறந்த உறுப்பாதலின், இவ்விரண்டி னொன்றை இக் கிளவிக்குப் பாடவேண்டும் என்பது புலவர் வழக்கு, 'சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல்' என்னுந் தந்திர உத்தியாதலான்.
---------- (009. பொய்பாராட்டல் - முற்றும்) ----------
010. இடம்பெற்றுத்தழால் :
இடம்பெற்றுத்தழால் என்பது, தலைவி நிற்குமிடத்து அயலாய்த் தேனருவி யாற்றங்கரையில் அசோகமரம் நிற்க, பூங்கொடி சுற்றும் படர்ந்திருக்க, மாதவிக்கொடி நின்று மலர்பூத்து வண்டும் தேனும் பாட வரிக்குயில் கூவத் தென்றல் வீசாநிற்க மணல் பரந்து பூந்தாது தவிசுபடுத்தாற்போற் பொலியும் அவ்விடத்தைக் காணப்பெற்று, அவ்விடத்துத் தலைவன் தலைவியைத் தழுவ விரும்பிக் கூறுதல்.
இவ்வாறு விரித்துச் சிறப்பித்துக் கூறவேண்டுவது என்னை யெனின், களவிற் பகற்குறியிற் கூடுங் கூட்டமெல்லாவற்றிற்கும் இதுவே குறியிடமாக நிற்றலின் எனக் கொள்க.
படம்பட்ட வாளர வல்குலி லேதளை பட்டநெஞ்சம்
விடம்பட்ட வாள்பட்ட வேதனை தீரவிண் தோய்பொழிலும்
தடம்பட்ட வாவியுஞ் சூழ்தஞ்சை வாணன் தமிழ்க்கிரிநாம்
இடம்பட்ட வார முலைத்தடந் தோய்தற் கிடமிதுவே. (010)
(இ – ள்.) ஒளி பொருந்திய அரவினது படம்போல் உண்டாகப்பட்ட அல்குலிடத்துக் கட்டுப்பட்ட நெஞ்சமே, விடத்திலே பதப்பட்ட வாளாலறுக்கப்பட்ட துன்பந்தீர, விண்ணைத் தொட்ட பொழிலும், விரிவுபட்ட வாவியும் சூழ்ந்த தஞ்சைவாணனது பொதியமலையினிடத்து நாம் மார்பெல்லாம் இடமாகப்பட்ட முத்துமாலை பூண்ட முலையாகிய வாவியிற் குளித்தற்கு இதுவே இடம் என்றவாறு.
'படம்பட்டவாளரவு' என்புழி மொழி மாற்றிக்கொள்க. நெஞ்சம் அண்மைவிளி. வாள் போன்றதனை வாள் என்றார், அஃது ஆகுபெயராற் கண்ணென்று கொள்க. தமிழ்க்கிரி என்புழி கண் என்னும் உருபு தொக்கது. இதுவே யென்னும் ஏகாரம் தேற்றம்; அத் தேற்றத்தினால் இடம் வேறில்லை யென்பது உணர்த்தப்பட்டது.
---------- (010. இடம்பெற்றுத்தழால் - முற்றும்) ----------
011. வழிபாடு மறுத்தல் :
வழிபாடு மறுத்தல் என்பது, 'இரந்து பின்னிலை நிற்றல்' முதலாகப், 'பொய் பாராட்டல்' ஈறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவி மறுத்தல்.
இடம் பெற்றுத் தழால் என்னுங் கிளவியில் இடங்குறித்துத் தலைவன் தன்னுட் கூறுதலும், தலைவி தன் இயல்பான் அவன் கூறியவிடத்துக் காகதாலியம் போலச் சென்றாள், கூறக்கேட்டு இவன் சொற்படி சென்றாளல்லள்; அங்ஙனஞ் சென்றாளாயின், புணர்ச்சிக்கு உடன்பட்டனளாம்; ஆகவே, மறுத்தெதிர் கோடலோடு மாறு கொள்ளும் அன்றியும், இக்கிளவியின் பொருள் தலைவன் வழிபாட்டைத் தலைவி மறுத்தாள் என்பதாகலின், மறுத்தே கூறவேண்டும் எனப்படும். அஃதென்னை யெனின், தலைவன் நெஞ்சுட் கூறியதனைத் தலைவி அறியாளென்று உணர்க.
தேறாத தெவ்வென்ற வாணன்தென் மாறைச்செந் தேனருவி
ஊறாத காலத்து மூறுதண் சார லொதுக்கிடந்தந்
தாறத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகமெய்தி
மாறாத தண்ணளி கூர்மலர் வாள்முக மாதவியே. (011)
(இ – ள்.) அசோகமரத்தைப் பொருந்தி எஞ்ஞான்றும் மாறாத தண்ணிய வண்டு செறிந்த மலரை ஒளி பொருந்திய முகத்திலேயுடைய குருக்கத்தியே, நீ யொரு காரியஞ் செய்ய வேண்டும்; அஃதென்னை யெனின், தெளிவில்லாத பகையை வென்ற வாணனது தென்மாறை நாட்டகத்துச் செந்தேன் கலந்த அருவியாறு ஊறாத வேனிற் காலத்தும் ஊறப்பட்ட குளிர்மலையினிடத்து இருக்கின்றனை நீ யாதலால், எனக்கு ஒதுங்குமிடம் கொடுத்து, இவரது ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் என்றவாறு.
இவரது சோகத்தை ஆற்றுந் தன்மை பெண்தன்மை யாகலின், நினக்கு அப்பெண்தன்மை சிலேடை வகையால் தோன்ற நின்றனை யென்று கூறினாள் என்பது. அஃதென்னை யெனின், நீ சோக மின்மையை யெய்தினை; அன்றி, தண்ணளியையு முடையை; மலர் போலும் வாண்முகத்தையு முடையை; அன்றியும், மாதவியென்று ஒரு பெண் பெயரினையு முடையை ; ஆதலான், இவர் சோகத்தை யாற்றல் வேண்டுமென்பதனான், நீ யோர் கருமஞ் செய்ய வேண்டும் என வருவித்து உரைக்கப்பட்டது. மாதவியை நோக்கி நீ செய்கென்று கூறினமையான், தலைவி மறுத்தமை தோன்றிற்று. இங்ஙனங் கூறத் தலைவன் நெருங்கி வருதலால், நாணிக் கண்புதைத்தாள் என்க. இஃது இச்செய்யுளில் இல்லையால், கூறியவாறு என்னை யெனின், மேல்வருங் கவியுள் கண்புதைக்கு வருந்தல் கூறுகின்றா ராதலான், இச் செய்யுளிற் கண்புதை கூறவேண்டுவ தென்று உணர்க.
தேறாத - தெளியாத, தெவ் - பகை. அருவி யூறாத காலம் - வேனிற்காலம். உம்மை - சிறப்பு. சாரல் - மலைப்பக்கம்.
குருக்கத்திமேல் ஏற்றுங்கால் — அசோகம் - ஓர் மரம். அளி - வண்டு. மலர் வாண்முக மாதவி - மலர்பொருந்திய முகத்தையுடைய குருக்கத்தி.
பெண்மேல் ஏற்றங்கால் — அசோசம் - துன்பமின்மை. தண்ணளி - அருள். மலர் வாண் முகம் - மலர்போலும் ஒளி பொருந்திய முகம். மாதவி - மாதவி யென்னும் பெண்.
---------- (011. வழிபாடு மறுத்தல் - முற்றும்) ----------
012. இடையூறுகிளத்தல் :
இடையூறு கிளத்தல் என்பது, தலைவி நாணிக் கண்புதைத்ததினான் எழுந்த துன்பத்தைக் கூறுதல்.
சிதையா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றென்
இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை
மதயானை வாணன் வருந்தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர்
புதையார் தனமென்ப தோமதர் வேற்கண் புதைத்ததுவே. (012)
(இ - ள்.) கேடில்லா த தாமரைத் திருமாளிகையினுஞ் சிறந்ததென்று என் இதய தாமரை வீட்டில் நன்றாக இருக்கின்றவரே, இரு கொம்பையும் ஒரு கையையுங் கொண்ட மதயானையை யுடைய வாணன் வரப்பட்ட தஞ்சையைச் சூழ்ந்து வரும் வையை நாட்டின்க ணுள்ளோர் தனம் படைக்கின் புதையார் என்னும் நாட்டு வழக்கமோ, தனத்தைப் புதையாது, நீர்மதர்த்த வேல்போலுங் கண்ணைப் புதைத்தது என்றவாறு.
இவரைத் திருமகள் எனப் பாவித்துக் கூறினமையான், தாமரை மாளிகை யாயிற்று. இதயாரவிந்தம் வடசொன் முடிபு. வையைநாட்டு உறைவோர் தனத்தைப் புதையார் என்றது, தினந்தோறுந் தருமத்தின் பொருட்டும் புகழின் பொருட்டும் வழங்குவர் என்று கூறியவாறு உணர்க.
---------- (012. இடையூறுகிளத்தல் - முற்றும்) ----------
013. நீடுநினைந்திரங்கல் :
நீடுநினைந் திரங்கல் என்பது, புணர்ச்சி யெய்தாமையான் இவளுள்ளம் எஞ்ஞான்று இயையுங்கொல்லோ எனக் கால நெடிதாகத் தலைவியை நோக்கி நினைந்து இரங்கிக் கூறல்.
தமிழ்தங் கியதஞ்சை காவலன் வாணன் தடஞ்சிலம்பில்
குமிழ்தங் கியமதிக் கொம்பரன் னீர்குளிர் வெண்ணிலவூ
டுமிழ்தண் தரளப் பவளச்செங் கேழ்வள்ளத் துள்ளிருக்கும்
அமிழ்தந் தருவதென் றோபெரு வேட்கையென் னாருயிர்க்கே. (013)
(இ - ள்.) தமிழ் நிலையாய்த் தங்கிய தஞ்சைக்கு வேந்தாகிய வாணன் பெரிய மலையிடத்தில் குமிழ் தங்கிய மதியையுடைய கொம்புபோல்வீர்! பெரு வேட்கை கொண்ட என்னாருயிர்க்குக் குளிர்ந்த வெள்ளிய நிலவினை உள்ளே காலப்பட்ட தண்ணிய தரளம் பொருந்திய பவளத்தினாற் செய்த சிவந்த நிறம் பொருந்திய கிண்ணத்தின் உள்ளிருக்கும் அமிழ்த நீர் தருவது எஞ்ஞான்றோ, என்று நீடுநினைந்திரங்கிக் கூறினான் என்றவாறு.
'குமிழ் தங்கிய மதிக் கொம்பரன்னீர்' என்றது, நாசி பொருந்திய முகத்தையுடைய கொம்புபோல்வீர் என்றும், 'குளிர்வெண் ணிலவூ டுமிழ் தண்தரளம்' என்றது, முறுவல் என்றும், 'பவளச் செங்கேழ் வள்ளம்' என்றது வாயென்றும், பொருளைக் கூறாது உவமத்தினாற் கூறினார், ஆகுபெயரென்னும் இலக்கணங் கொண்டென்று உணர்க.
---------- (013. நீடுநினைந்திரங்கல் - முற்றும்) ----------
014. மறுத்தெதிர்கோடல் :
மறுத்தெதிர்கோடல் என்பது, முன் வழிபாடு மறுத்ததனை மறுத்துத் தலைவன் கூறிய சொல்லை யேற்றுக்கோடல்.
எதிர்கோடல் ஏற்றுக்கோடலாமோ எனின், போரெதிர்ந்தான் என்றால் போரேற்றான் என்று பொருள் கூறுதல் போலும் என்று உணர்க. வழிபாடு மறுத்ததனை மறுத்தலென்றது, வழிபாடு மறுத்தல் இக்கிளவியைத் தொடராதன்றே. இடையூறு கிளத்தல், நீடுநினைந்திரங்கல் என்னும் இரண்டு கிளவியும் இடையிட்டு நிற்க, வழிபாடு மறுத்ததனை, மறுத்தெதிர்கோடல் எங்ஙனம் இயையுமோ வெனின், இயையும். என்னையெனின், வழிபாடு மறுத்தல் தலைவி கூற்றாகலின், அக்கூற்றுக்கு மறுத்தெதிர்கோடலும் தலைவி கூற்றாகலின், அடுத்த கூற்றாய் இயைந்தவாறு காண்க. இவ்வியை புடைமை [1]‘மறைந்தவற் காண்டல்' என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தில், கிளவி கோக்குமுறைமையில் தலைவி கூற்றெல்லாம் ஒருங்குபடத் தொகுத்துக் கூறுமிடத்து வழிபாடு மறுத்தல், மறுத்தெதிர்கோடல் எனத் தொடர்ச்சியாய்க் கூறியவாறு உணர்க.
-----
[014-1] தொல். பொருள். களவியல் - (௨0) 20.
----------
கறையார் இலங்கிலை வேலன்பர் காமக் [2]கடற்கெதிர்ந்த
நிறையாம் வரம்பினி நிற்பதன் றானிறை நீருலகை
மறையாமல் வன்கலி மாற்றிய வாணன்தென் மாறையினும்
பொறையார் தவஞ்செய்தி லேநெஞ்ச மேயென் புகல்வதுவே. (014)
(இ - ள்.) நெஞ்சமே, குருதியார்ந்திலங்கிய இலை போலும் வேலையுடைய அன்பரது காமக்கடல் கரை புரண்டுவர, அக் கடற்கெதிராய நம்முடைய நிறையாகிய வரம்பு தடுக்கும் எனக் குறுக்கிடின் நிற்பதன்று; நிறைந்த நீர் சூழ்ந்த வுலகை மறைக்கவந்த வன்கலியை மறையாமல் மாற்றியிடுந் தன்மையையுடைய வாணனது தென்மாறை நாட்டுக்கண் வேட்கையைப் பொறுக்கத்தக்க நிறைதவம் செய்திலேம், நாமினிப் புகல்வது என் என்றவாறு.
-----
(வே-பா) (014-2) கடற்கெதிர் நம்.
----------
கறை - குருதி. ஆல் - அசை. கடல் எழுந்து வரின் குறுக்கே தடுக்க நினைப்பார் உலகத்தில்லை யென்பது குறிப்பாற் பெறப்பட்டது. நிறை - மறை பிறரறியாமை. [3]'நிறை யெனப்படுவது மறை பிறரறியாமை' என்றார் பிறரும். அன்றியும்,
[4]'காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.'
என்று கூறியவாற்றானும் உணர்க.
-----
[014-3] கலித். நெய்தல் - (௧௬) 16.
[014-4] குறள். நிறையழிதல் - (௧) 1.
----------
---------- (014. மறுத்தெதிர்கோடல் - முற்றும்) ----------
015. வறிதுநகை தோற்றல் :
வறிதுநகை தோற்றல் என்பது, தலைவி முகத்தே சிறுநகை தோற்றல். என்னை [1]'வறிதுசிறிதாகும்' என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. நகை தோற்றல் - நகை வெளியாய்த் தோன்றிய தென்னின் பொருந்தாது என்னை, தலைவன் முன் நாணுடைய ளாதலின் பல்தோன்றச் சிறுமுறுவல் தோன்றலும் அமையாது. அமையா தாயின், வறிது நகை தோற்றல் என்னுங் கிளவிப் பொருள் பொய்க்குமே யெனின், அற்றன்று :
[2]'முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.'
என்பதனான் நகை வெளிதோன்றா தென்பது கூறியவாறு உணர்க. நகைதான் தோன்றுமா றென்னை யெனின், தலைவன் சொற்கு வேட்கையா லுடன்பட்டு மகிழ்ச்சியான் முகமலர்ந்து அம்மலர்ச்சிக் குறிப்பினான் நகையெனத் தோற்றுவித்தவாறு உணர்க.
-----
[015-1] தொல். சொல். உரியியல் - (௪0) 40.
[015-2] குறள். குறிப்பறிவுறுத்தல் - (௪) 4.
----------
எறிதேன் அலம்புஞ் சிலம்பினெப் போதும் இரந்திவள்பின்
வெறிதே திரிந்து மெலிந்தன நாமுள்ள மெல்லியற்குப்
பிறதேகொ லென்னும் பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து
வறிதே முறுவல்செய் தாள்தஞ்சை வாணன் வரையணங்கே. (015)
(இ - ள்.) இறகாற் காற்றை யெறியும் வண்டுகள் எப்போதும் ஆரவாரிக்குஞ் சிலம்பிடத்தில் குறையிரந்து இவள் பின்னே பயனின்றியே திரிதலைச் செய்து நாம் மெலிந்தனம்; இம் மெல்லியற்கு உள்ளம் வேறென்று சொல்லும் பெருந்தகை தேறுமாறு பெரிதாய நெட்டுயிர்ப் பெறிந்து தஞ்சைவாணன் வரையணங்கு போல்வாள் வறிதே முறுவல் செய்தாள் என்றவாறு.
'எறிதேன்' என்பது ஒற்றுமை நயத்தால் சினைவினை முதன்மேல் நின்றது. அலம்பல் - ஆரவாரித்தல். 'எப்போதும்' என்பதனை வண்டுகளோடு கூட்டுக. பெரிதுயிர்த்தல் எற்றுக்கோவெனின், நிறையால் தடுக்கரிதாயிற் றென்னும் எண்ணத்தினால் நெட்டுயிர்ப்புத் தோன்றிற்றெனக் கொள்க.
இக்கவி யார்கூற்றெனின், உரைப்போரும் கேட்போரும் இன்மையான் கவிக்கூற்றென்று கொள்க. அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டினும் துறை யென்னும் உறுப்பு இக்கவியெனக் கொள்க. தலவன் கூற்றாய்க் கூறாது கவிக்கூற்றாய்க் கூறவேண்டுவ தென்னை யெனின், இது தலைவன் கூற்றாயின், மேல் முறுவற் குறிப்பு உணர்தல் என்னும் தலைவன் கூற்றுத் தோன்றாதாதலான் இது கவிக்கூற்றாயிற்று.
---------- (015. வறிதுநகை தோற்றல் - முற்றும்) ----------
016. முறுவற் குறிப்புணர்தல் :
முறுவற் குறிப்புணர்தல் என்பது, அம் முறுவலின் குறிப்பைத் தலைமகன் உணர்தல்.
வின்மலை வேலன்ன நன்னுதல் வாட்கண்ணி வேட்கையெண்ணாள்
என்மலை வேனென்னு மென்னுயிர் தாங்கு மெதிர்ந்தவொன்னார்
மன்மலை வேழந் திறைகொண்ட சேய்தஞ்சை வாணன்மஞ்சார்
தென்மலை வேய்நிக ரும்பெருந் தோளி சிறுநகையே. (016)
(இ - ள்.) போரிலெதிர்ந்த பகைவரது நிலைபெற்ற மலைபோன்ற யானையைத் திறையாகக் கொண்ட, முருகவேளை யொக்குந் தஞ்சைவாணனது முகிலார்ந்த பொதிய மலையிலெழுந்த வேயை நிகரும் பெரிய தோளினை யுடையாளது சிறிய நகையானது, 'வில்லும் பொருகின்ற வேலும் போன்ற நன்னுதலும் வாட்கண்ணுமுடையாள் எனது வேட்கையினை யெண்ணாளாயின், நான் இனி யாது செய்வேன்' என்னும் என்னுயிரைத் தாங்கா நிற்கும் என்றவாறு.
'வின்மலை வேல்' என்புழியும், 'நன்னுதல் வாட்கண்ணி' என்புழியும் உம்மைத்தொகை நிரனிறை. மலைவேல் - பொருவேல். என் மலைவேன் - யாது செய்வேன். மலை வேழம் - உவமத்தொகை. என்னுயிர் தாங்கா நிற்கும் என்பதனால், தலைவி வேட்கைக் குறிப்பை முறுவலினான் உணர்ந்தானென்று கொள்க. கைக்கிளையில், 'குறிப்பறிதல்' என்பது தன் அவாவினாற் கூறியதல்லது வேட்கைக் குறிப்பு நிகழ்ந்ததன் றென்பது இக்கிளவியாற் றெளியப்பட்ட தென்று உணர்க.
---------- (016. முறுவற் குறிப்புணர்தல் - முற்றும்) ----------
017. முயங்குதலுறுத்தல் :
முயங்குதலுறுத்தல் என்பது, தலைவி முயங்குதற்கு உடன்பட்ட அருமையை வலியுறுத்திக் கூறுதல்.
வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்ததன்றோ
நானக் குழலியை நானின்று பெற்றது நாவலர்க்குத்
தானக் களிறு தரும்புயல் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
கானக் கடிவரை வாய்விரை நாண்மலர்க் காவகத்தே. (017)
(இ - ள்.) நாவலர்க்கு மதம் பொழியும் யானையைக் கொடுக்கும் புயல் போன்ற வாணனது தமிழ்த் தஞ்சை சூழ்ந்த காடு மிகுந்த வரையிடத்து, மண நாறும் நாட்கொண்ட மலர் செறிந்த சோலையிடத்து, மான்மதமார்ந்த குழலினை யுடையாளை நான் இன்று முயங்கப்பெற்ற அருமை, வானத்தை யிடமாக வுடைய ஆதித்தன் மண்ணிடத்து மாதை வந்து கூடியதாம் என்றவாறு.
வானம் - ஆகாயம். நானம் - மான்மதம். தானம் - மதம். புயல் வாணன் - உவமைத்தொகை. கானம் - காடு. கடி - மிகுதி. நாண் மலர் - முறுக்கவிழ் மலர். 'நானின்று பெற்றது' என இறந்த காலத்தாற் கூறியது, கூடும் விரைவுபற்றி யெனக்கொள்க. என்னை,
[1]'வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்தகா லத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.'
என்னுஞ் சூத்திர விதியாற் கண்டுகொள்க.
-----
[017-1] தொல். சொல். வினை - (௪௪) 44.
----------
---------- (017. முயங்குதலுறுத்தல் - முற்றும்) ----------
018. புணர்ச்சியின் மகிழ்தல் :
புணர்ச்சியின் மகிழ்தல் என்பது, தலைவன் புணர்ச்சியான் மகிழ்தல்.
மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் வாணனெண்ணெண்
கலைநாடு தஞ்சையர் காவலன் மால்வரைக் கன்னிபொன்னாண்
முலைநா முயன்று முயங்கின மால்முயன் றாலினியைந்
தலைநாக நன்மணி யும்பெற லாமித் தரணியிலே. (018)
(இ - ள்.) நெஞ்சமே, சேரமானாடாகிய மலைநாட்டை வெற்றியாற் கவர்ந்த வழுதிக்குக் கண்போன்றவன், அறுபத்து நான்கு கலைகளும் இருப்பதற்கு நாடிய தஞ்சை நகரிலுள்ளார்க்கு அரசனாகிய வாணனது பெரிய மலையிடத்து, பெறுதற்கரிதாகிய இக் கன்னியினுடைய பொன்னாணணிந்த முலையினிடத்து நாம் முயற்சியான் முயங்கினம்; ஆதலால், இன்று இத்தரணியிற் கிடைப்பதற்கு அரிதாகிய ஐந்தலை நாகத்தினது நல்ல மணியும் பெறவேண்டுமென்று சிந்தித்தலை முயன்றாற் பெறலாம் என்றவாறு.
தவஞ் செய்து முயன்றோர்க்கும் எய்துதற்கு அரிதாகிய இவளை நம் முயற்சியாற் பெற்றமையான், நாகமணியும் பெறலாமென்று தன் முயற்சியின் பெருமை கூறினானென்க. என்னை,
[1]'ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.’
இக்குறளில், ஊழில் ஒருவற்குப் பேறில்லாவிடினும், முயற்சி ஊழைப் புறங்கண்டு நினைத்தது முடிக்கும் எனக் கூறினாராகலின் என்க. இவண் முயற்சி யாதெனின்,
[2]'காட்சி முதலாச் சாக்கா டீறாக்
காட்டிய பத்துங் கைவரு மெனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே.'
என்னுஞ் சூத்திரவிதியால், இப் பத்து அவத்தைக்கண்ணும் மடியின்றி முயன்று செய்தல் எனக் கொள்க.
-----
[018-1] குறள். ஆள்வினை - (௧0) 10.
[018-2] அகப்பொருள் விளக்கம், அகத்திணை - (௩௬) 36.
----------
ஆயின், சாக்காடு என்பது என்னையெனின், உணர்விலனாதல். மலைநாடு - சேரமானாடு. வழுதி - பாண்டியன். எண்ணெண்கலை - கல்வி. மால் - பெருமை. வரை - மலை. பொன்னாண் - பொன்னினாற் செய்த நாண். முயன்று - முயற்சிப்பட்டு. முயங்கினம் - புணர்ந்தனம். இனி - இன்று.
---------- (018. புணர்ச்சியின் மகிழ்தல் - முற்றும்) ----------
019. புகழ்தல் :
புகழ்தல் என்பது, தலைவியது நலத்தைப் பாராட்டல்.
திரண்மா மரகதச் செய்குன்று காளென்றுஞ் செவ்வனநீர்
முரண்மா தவங்கள் முயன்றுசெய் தாலு முளரிமங்கை
சரண்மாறை வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டென் தனியுயிர்க்கோர்
அரண்மா னனையகண் ணாள்கொங்கை போறல் அரிதுமக்கே. (019)
(இ - ள்.) திரண்ட பெரிய மரகதத்தாற் செய்த செய்குன்றுகாள், நீர் செவ்விய வனத்தின்கண் ணிருந்து இரவு பகல் எப்பொழுதும் முலைக்கு நிகராகவேண்டு மென்று மாறுபட்ட பெருந்தவத்தை முயன்று செய்கின்றீர்; செய்யினும், திருமக ளடைக்கலமாக விருக்கும் மாறை யென்னும் வாணனது தமிழ்த் தஞ்சை நாட்டகத்துத் துணையில்லாத எனது உயிர்க்கு அரணும் மானும் அனையகண்ணாள் கொங்கையை யொப்பாதல் உமக்கு அரிது என்றவாறு.
செய்குன்று - வினைத்தொகை; செய்குன்றாவது - மாதர் விளையாடுவதற்கு மரகதமணியாற் செய்யும் மேடை. செவ்வனம் என்புழி ஏழாம் வேற்றுமைத் தொகை. முரண் -மாறுபாடு; மாறு பாடாவன - மழையில் நனைந்தும், வெயிலில் உலர்ந்தும், பனியில் குளிர்ந்தும், காற்றில் அலைபட்டும் நிலையிற் பிரியாதிருத்தல். மா - பெருமை. முயன்று - வருந்தி. முளரிமங்கை - திருமகள். சரண் - அடைக்கலம். தனி - துணையின்மை. அரண்மான் என்புழி உம்மைத் தொகை; மதன்போர்க்கு அரணாயிருத்தலின் அரண் என்று கூறியது. போ றல் - போல்தல்.
[1]'நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும்'
என்பதனான் நிலைமொழி லகரங்கெட்டு,
[1]'லனவென வரூஉம் புள்ளி முன்னர்
தநவென வரிற் றனவா கும்மே.'
என்பதனான், வருமொழித் தகரங்கெட்டு றகரமாய்ப், போறல் என முடிந்து நின்றது. செய்தாலும் என்புழி உம்மை அருமை தோன்ற நின்றது.
-----
[019-1] தொல். எழுத். தொகை - (௧௮, ௭) 18, 7.
----------
‘இரந்து பின்னிற்றற்கெண்ணல்' முதல், 'நீடுநினைந்திரங்கல்’ ஈறாகிய ஒன்பதனுள், 'வழிபாடு மறுத்தல்' ஒன்றும் ஒழித்து ஒழிந்த எட்டும் வேட்கை யுணர்த்தற்கு உரியன. வழிபாடு மறுத்தல் ஒன்றும் மறுத்தற்கு உரித்து. மறுத்தெதிர் கோடலும், வறிதுநகை தோற்றலும் ஆகிய இரண்டும் உடன்படற்கு உரியன. முறுவற் குறிப்புணர்தலும், முயங்குத லுறுத்தலும், புணர்ச்சியின் மகிழ்தலும், புகழ்தலும் ஆகிய நான்கும் கூட்டத்திற்கு உரியனவாம்.
இங்ஙனம் புணர்ந்த தலைவன், புணர்ச்சியால் வேட்கையிற் குறைபாடுளனோ, முன்போலும் வேட்கையுடையனோ என்னும் இரண்டில், வேட்கையிற் குறைபாடுடையன் எனின், தலைவியிடத்தில் அன்பிலனாம்; என்னை, வேட்கையினாற் பிறந்த அன்பாதலான். அன்றி முன்னின்ற வேட்கையிற் குறைபாடில னெனின், புணர்ச்சியாற் பயனின்றெனவாம். மற்று என்னை யெனின், அன்பும் — இயற்கை யன்பு என்றும், செயற்கை யன்பு என்றும் இரண்டு வகைப்படும். அவற்றுள் இயற்கை யன்பாவது, ஊழ்வினை வயத்தான் ஒருவரிடத்து ஒருவர்க்குப் பற்றிய அன்பு. செயற்கை யன்பாவது, புணர்ச்சிக்கண் தலைவியிடத்துப் பிறந்த குணங்களாற் றோன்றும் அன்பு. ஆதலால், புணர்ச்சிக்கண் குறைந்த வேட்கை இயற்கை யன்பினானும், செயற்கை யன்பினானும் நிறையு மாதலான், புணராத முன்னின்ற வேட்கையும் அன்பும் புணர்ந்த பின்னும் ஒத்து நிற்குமென்று உணர்க. என்னை,
[2]'அதுவே, தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயி னொத்தல்.'
என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திரத்தில், இருவயி னொத்தல் என்பதற்குப் பொருள், புணராத முன்னும் புணர்ந்த பின்னும் ஆகிய இரண்டிடத்தும் வேட்கையும் அன்பும் ஒத்திருக்கு மென்பது அவ்வுரையாற் கண்டுகொள்க.
-----
[019-2] இறையனார் அகப். – (௨) 2.
----------
---------- (019. புகழ்தல் - முற்றும்) ----------
1.02. இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
-------------------------
1.03. வன்புறை (020-025)
அஃதாவது, தலைவி ஐயுற்றவழி ஐயுறவு தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல். அஃது,
[1]'ஐயந் தீர்த்தல் பிரிவறி வுறுத்தலென்
றெய்திய வன்புறை இருவகைத் தாகும்.’
என்னும் சூத்திரவிதியால், வன்புறை இரண்டு வகைப்படும்.
-----
[1.03-1] அகப். விளக்கம், களவியல் - (௧௨) 12.
----------
020. அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல் :
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் என்பது, புணர்ச்சியிடத்து, தலைவி யணிந்த முத்துமாலை முதலிய கொங்கையணி குழலணி இவைகள் வேறுபட்டதனைத் தலவன் தன் கையினால் வேறுபாடு தீர அணிந்துழி, தலைவி பாங்கியால் அணியப்பட்ட அணி இவர்கையா லணியும்போது வேறுபடும் என்றும், இவ் வேறுபாட்டைப் பாங்கியறியின் ஐயம் பிறக்கும் என்றும் நாணினளாகி முகம் வேறுபட்டாளாக, அவ்வேறுபாடு தலைவன் அறிந்து தலைவியைத் தெளிவித்தல்.
நாவியுங் காரகி லாவியுந் தோய்குழல் நாணியஞ்சேல்
வாவியுஞ் சோலையுஞ் சூழ்தஞ்சை வாணன்தென் மாறைவயற்
காவியுஞ் சேலுங் கமலமுங் காட்டுநின் கண்மலரும்
ஆவியும் போலினி யாரணி யாக வணிந்தனனே. (020)
(இ - ள்.) மான்மதமும் கரிய அகிற் புகையும் தோய்ந்த குழலையுடையாய், யான் அணிந்த அணியால் ஐயுற்று நாணி யஞ்சலை; வாவிகளும் சோலைகளும் சூழ்ந்த தஞ்சைவாணனது தென்மாறை நாட்டு வயலிடத்துண்டாகிய நீலப்போதும் கயலும் கமலப்போதும் ஒப்புக்காட்டும் நினது கண்மலரும் ஆவியும் போன்ற தோழிமார் அணிந்த அணியாக அணிந்தனனாதலான் என்றவாறு.
நாவி - மான்மதம். தோய்குழல் - ஆகு பெயர்; தாழ்குழல் என்பது போல அன்மொழித்தொகை யாகாதோ எனின், ஆகாது. என்னை, தாழ்குழல் என்பது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. தோய்குழல் அவ்வண்ணமாகாது மற்றுமோர் சொல்லை நோக்கி நிற்றலான் ஆகுபெயர் ஆயிற்று. காவி - நீலப்போது. சேல் - கயல். இனியார் - ஈண்டுத் தோழிமார்.
---------- (020. அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல் - முற்றும்) ----------
021. பெருநயப் புரைத்தல் :
பெருநயப் புரைத்தல் என்பது, மீண்டும் இவன் வருவன் கொல்லோ! வாரான்கொல்லோ! என்றெண்ணி முகம் வேறு பட்டாளாக, அவ் வேறுபாட்டைத் தலைவன் குறிப்பான் உணர்ந்து, தனது மிகுந்த காதலை உரைத்தல்.
மன்னா உலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்வெற்பில்
என்னாவி யன்ன இவளிடை மேலிணை கொண்டெழுந்த
பொன்னா ணணிகொங்கை போலவண் டீருங்கள் பொய்கையுண்டோ
நன்னாள் அரும்பொரு தாளிரண் டீனு நளினங்களே. (021)
(இ – ள்.) நிலையில்லாத உலகத்தினிடத்து நிலைபெற்ற கீர்த்தியையுடைய தஞ்சைவாணனது வெற்பிடத்து வண்டுகாள், என் ஆவியையொத்த இவளிடைமேல் இரண்டு என்னும் எண்ணைக்கொண் டெழுந்த பொன்னாண் என்னும் பூணையணிந்த கொங்கைபோல, நல்லநாட் கொண்ட அரும்புகள் ஒரு தாள் இரண்டீனுந் தாமரைகளை உங்கள் பொய்கைக்கண் கண்டதுண்டோ என்றவாறு.
வண்டுகாள், நீர் எவ்விடத்து வாவிகளினுஞ் சென்று எல்லாப் பூக்களையுங் கண்டறிதிரன்றே? அவ்வாவிகளில் ஒரு தாள் இரண்டு அரும்பு ஈனுந் தாமரைகளைக் கண்டதுண்டேல் சொல்லுவீராக என்று கூறியது, வயிற்று ரோமரேகை ஒரு தாளாகவும், முலை யிரண்டும் அத்தாளிலே பிறந்த அரும்பாகவும், தன் காதலாற் றோன்றியதென்று தன்னயப்பு உரைத்தவாறுணர்க. அன்றியும், 'என்னாவி யன்ன விவள்' என்பதனான், இவள் நீங்கும்போதில் உயிர் நீங்கும் உடம்பாகுவேன் என்பது தோன்றலானும், தன்னயப்பு உணர்த்தியவாறு உணர்க.
சீர் - கீர்த்தி. பொய்கை யுண்டோ என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது. 'வெற்பகத்து வண்டீர்' எனக் கூட்டுக. இக்கிளவிக்கு வண்டு முன்னிலையாகப் பாடவேண்டு மென்பது.
---------- (021. பெருநயப் புரைத்தல் - முற்றும்) ----------
022. தெய்வத்திறம் பேசல் :
தெய்வத்திறம் பேசல் என்பது, இங்ஙனம் கூறியும் தெளிந்திலளால் ஊழ்வலியினது திறத்தைக் கூறல்
மன்னிய பார்புகழ் வாணன்தென் மாறையின் மாந்தளிர்போல்
மின்னிய மாமை விளர்ப்பதென் னேவிதி கூட்டநம்மில்
பின்னிய காதல் பிரிப்பவர் யாரினிப் பேரருவி
இன்னிய மாக இளமயி லாடும் இரும்பொழிற்கே. (022)
(இ – ள்.) பாரிடத்து நிலைபெற்ற புகழையுடைய வாணனது தென்மாறைவெற்பில் வரும் பேரருவி தண்ணுமையாக இளமயில் ஆடும் இப்பெரிய சோலையிடத்து, இன்று மாந்தளிர்போல் ஒளிவிடப்பட்ட அழகை விளர்த்துக் காட்டுவது என்னே! விதியானது கூட்டுவிக்க நம்முட் பிணித்த காதலைப் பிரிப்பவர் யார்? ஆதலால், நீ ஐயுறேல் என்றவாறு.
'அருவி யின்னியமாக இளமயில் ஆடும்' என்பதனான், வெற்பு வருவிக்கப்பட்டது. 'பார் மன்னிய' என இயையும். மாமை - அழகு; நிறமுமாம்.
[1]'தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.'
என்னுங் குறளில், 'அம் மா அரிவை' என்பதற்கு, 'அழகிய மாமை நிறத்தை யுடைய அரிவை' என்று பரிமேலழகர் எழுதிய வுரையாற் கண்டுகொள்க.
-----
[022-1] குறள். புணர்ச்சி மகிழ்தல் - (௭) 7.
----------
விளர்த்தல் - மனக் கவற்சியால் வெளுத்தல். விதி - ஊழ்வினை. பின்னிய - பிணித்த. இனி - இன்று. இன்னியம் - ஈண்டுத் தண்ணுமை. இருமை - பெருமை. பொழிற்கே என்புழி வேற்றுமை மயக்கம். ஏகாரம் இரண்டும் ஈற்றசை. தலைவி - முன்னிலை யெச்சம்.
---------- (022. தெய்வத்திறம் பேசல் - முற்றும்) ----------
023. பிரியேனென்றல் :
பிரியேனென்றல் என்பது, நீர்க்கரைப் பசுங்கொடி வேனில் வெப்பத்தால் நிறம் வேறுபடல் போல, புணர்ச்சி யின்பத்தாற் பெற்ற அழகு, எம்பெருமான் பிரிவன் என்னுங் கவற்சியால் விளர்த்த வெளுப்பு நீங்காமை கண்ட தலைமகன் நின்னிற் பிரியேன் என்று வற்புறுத்திக் கூறல்.
வண்கொடி யேய்மதில் மாறை வரோதயன் வாணனொன்னார்
எண்கொடி யேனெய்த இவ்வண்ண நீயிரங் கேலிரங்கேல்
நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்குழல் நூபுரத்தாள்
பெண்கொடி யேபிரி யேன்தரி யேனிற் பிரியினுமே. (023)
(இ - ள்.) கொடுக்குங் கொடையாற் கட்டிய கொடி பொருந்திய மதில் சூழ்ந்த மாறைநாட்டில், வரத்தினா லுதயஞ் செய்த வாணனுக்குப் பகைவரா யுள்ளார் எய்தும் எண்ணத்தைக் கொடியேனாகிய யான் எய்த நினைக்கின், விளர்ப்பு வண்ணமாக நீ யிரங்கற்க இரங்கற்க; நுண்ணிய கொடிபோல் அழகையுடைய இடையையும் வண்டுக ளிமிரும் பூவணிந்த குழலையும் பரிபுரமணிந்த தாளையும் உடைய பெண்கொடியே, நின்னிற் பிரியேன்; அன்றிப் பிரியினும், கணப்போதும் தரியேன் என்று அணங்கின் முன்னே சூளுற்றான் என்றவாறு.
வண்மைக் கொடி, வண் கொடி யென நின்றது; நன்மை நெறி நன்னெறி யென நின்றாற்போல. வண்மை, நன்மை யென்பன பண்புப்பத மாகலின், ஈற்றுயிர் மெய்கெடுதல் அப் பதத்திற் கியல்பெனக் கொள்க. வண்மை - கொடை. எய்தல் - பொருந்துதல். 'வாணனொன்னார்' என்பது,
[1]‘அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின்
அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே.'
என்னும் வேற்றுமை மயங்கியற் சூத்திரத்தால், அது என்னும் ஆறனுருபு, 'வாணனுக்கு ஒன்னார்' என நான்கனுருபாகப் பொருள் கொள்க.
-----
[023-1] தொல். சொல். வேற்றுமை மயங். – (௧௧) 11.
----------
எண் - எண்ணம். இவ்வண்ணம் என்புழி, சுட்டு, முற்கவியில், 'விளர்ப்பதென்னே' என்று கூறினமையான், அவ்விளர்ப்பு வண்ணத்தைச் சுட்டிற்று. 'இரங்கேல் இரங்கேல்' என்றது அடுக்கு மொழி. என்னையெனின்,
[2]'கொல்லல் கொல்லல் செய்நலங் கொல்லல் எஞ்ஞான்றும்
சொல்லல் சொல்லல் பொய்ம்மொழி சொல்லல் எஞ்ஞான்றும்
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் எஞ்ஞான்றும்.’
என்னும் இம்மூவடி வெளிவிருத்தத்துள், அடிதோறும் அச்சப் பொருண்மைக்கண் விரைவுபற்றிய அடுக்குமொழி வந்தவாறு போலக் கொள்க. ஏர் - அழகு. இமிர்தல் - முரலுதல். என்னை,
[3]'வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதும்.'
என்னுங் குறிஞ்சிக் கலியுள், இமிர்தல் வண்டொலிக்கு வந்தவாறு கண்டுகொள்க.
-----
[023-2] யாப்பருங் - விரு. செய். (௧௫) 15 - ஆம் சூ. உரை மேற்கோள்.
[023-3] கலித். குறிஞ்சி - (௭) 7.
----------
'நுண்கொடியேரிடை' உவமைத் தொகை. 'நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்குழ னூபுரத்தாள்' என்புழி உம்மைத் தொகை. 'பிரியேன்' என்னுங் கிளவியில், 'தரியேன் நிற்பிரியினும்' என்று கூறியவாறு என்னை யெனின், இங்ஙனங் கூறாவிடின், 'பிரிந்து வருகென்றல்' என்று அடுத்த கிளவி வருதலின், 'பிரியேன்' என்று முன்சொல்லி, உடனே, 'பிரிந்து வருவேன்' எனக் கூறின், தலைவன் பொய்யனெனத் தோன்றித் தலைவி யிறந்துபடும். அதனால், பிரியே னென்றலுடனே பிரிவையும் அறிவுறுத்திக் கூறினன் என்பது. இக்கிளவிக்குப், 'பிரியேன் பிரியினுந் தரியேன்' என்று கூறுவது இலக்கணம். என்னை,
[4]'மின்னிற் பொலிந்தசெவ் வேல்வலத் தான்விழி ஞத்தெதிர்ந்த
மன்னர்க்கு வானங் கொடுத்தசெங் கோன்மன்னன் வஞ்சியன்னாய்
நின்னிற் பிரியேன் பிரியினு மாற்றே னெடும்பணைத்தோள்
பொன்னிற் பசந்தொளி [5]வாடிட வென்னீ புலம்புவதே.'
[4]'பொன்னாற் புனைகழற் பூழியன் பூலந்தைப் பூவழிய
மின்னா ரயில்கொண்ட வேந்தன் விசாரிதன் வெண்டிரைமேல்
முன்னாண் முதலறி யாவண்ண நின்ற பிரான்முசிறி
யன்னாய் பிரியேன் பிரியினு மாற்றே னழுங்கற்கவே.’
எனவும் கூறிய சான்றோர் செய்யுட்களான் உணர்க.
-----
[023-4] இறைய. அகப்பொருள் - (௨) 2 - ஆம் சூ. உரை மேற்கோள்கள்.
(வே.பா.) [023-5] வாடவென்னாங்கொல் புலம்புவதே.
----------
இக்கிளவியில் அணங்கொடு சூளுற்றுக் கூறினான் என்பது. சூளுறல் செய்யுளிற் கூறியதில்லையால் எனின், வரைவியலில் [6]'துதித்தே னணங்கொடு சூளுமுற்றேன்' என்பதனானும், [7]'தெய்வம் பொறைகொளச் செல்குவம்' என்பதனானும் உணர்க. இஃது இக்கிளவிக்க ணல்லது கூறுதற்கு வேறோரிடம் இன்மையான் இங்ஙனம் கூறியதென்று உணர்க.
-----
[023-6] தஞ்சைவா - (௨௯0) 290.
[023-7] அகப். விளக்கம், வரைவியல் - (௬) 6.
----------
[8]'இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை.'
என்னுங் குறிஞ்சிக்கலியுள், சூளுறவு கூறியவாறு உணர்க.
-----
[023-8] கலித். குறிஞ்சி - (௫) 5.
----------
---------- (023. பிரியேனென்றல் - முற்றும்) ----------
024. பிரிந்து வருகென்றல் :
பிரிந்து வருகென்றல் என்பது வெளிப்படை. பிரிந்து வருகேன் என்னுஞ் சொல் விகாரப்பட்டதெனக் கொள்க.
சென்றே பகைவென்ற திண்படை வாணன் செழுந்தஞ்சைசூழ்
நன்றே தருவையை நாடனை யாய்நம தாருயிர்போல்
ஒன்றே யெனதுரை யூங்குயர் சோலையி னூடொளித்து
நின்றே வருவலிங் கேவிளை யாடுக நீசிறிதே. (024)
(இ – ள்.) மேற்சென்று பகையை வென்ற திண்ணிய சேனையையுடைய வாணனது வளவிய தஞ்சையைச் சூழ்ந்து வந்து [1]நன்றே தரப்பட்ட வையைநாடு போன்றவளே, யான் ஒரு சொல் சொல்லுகின்றேன், அது கேட்பாயாக; நம்மிருவர்க்கும் அரியவுயிர் ஒன்றாயதுபோல என் சொல்லும் ஒன்றே; யாதெனின், உவ்விடத்துயர்ந்த சோலையினுள் ஒளித்து நின்று வருவேன், இவ்விடத்து நீ சிறிதுபோது விளையாடுக என்றவாறு.
-----
(வே.பா.) [024-1] நன்மை.
----------
'சென்றே பகைவென்ற' என்றது, வஞ்சித் திணைப்பொருள்; அது மேற்சென்று பகைபொருதல்.
[2]'வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் — உட்கார்
எதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை.'
என்னும் வெண்பாவானும்,
[3]'வஞ்சி தானே முல்லையது புறனே.'
[4]'எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே.'
என்னுஞ் சூத்திரங்களானும், பகை வேந்தனை வேந்தன் மேற்சென்று பொருவது வஞ்சித்திணை. மேற்சேறல் எனினும், தலைச்சேறல் எனினும் ஒக்குமாதலான், 'சென்றே பகைவென்ற திண்படை வாணன்' என்றார்.
-----
[024-2] சேந். திவா. (௧௨) 12 - ஆம் தொகுதி.
[024-3] தொல். பொருள். புறத். – (௬) 6.
[024-4] தொல். பொருள். புறத். – (௭) 7.
----------
நன்று - நன்மை. ஆருயிர் - அரிய வுயிர். ஊங்கு - சுட்டு நீண்டது. 'சிறிது' என்றது காலத்தின்மேல் நின்றது. காலத்திற் சிறிது கணமாதலின் கணப்போது விளையாடுக என்றவாறாயிற்று. ஆயின், இங்ஙனம் பிரியின், இவன் அன்பிலனாம், தலைவி யாற்றாளாம்; மற்றென்னை பிரிந்தவாறு எனின், பிரியாவிடின் களவு பிறர்க்குப் புலனாம்; புலனாகவே, இவள் பெரு நாணினளாதலால் இறந்துபடு மாதலின், பிரியவேண்டு மென்று கருதிப் பிரிந்தான் என்பது. தலைமகள் பிரிவுக்கு இயைந்து ஆற்றுமோ வெனின், ஆற்றும். எங்ஙனமெனின், ஆற்றாமையான் இறந்துபட்டுழி எம்பெருமானும் இறந்துபடும் என்று கருதிப் பிரிவினை ஆற்றல் வேண்டுமென்று ஆற்றினளாம்.
---------- (024. பிரிந்து வருகென்றல் - முற்றும்) ----------
025. இடமணித் தென்றல் :
இடமணித் தென்றல் என்பது, தலைவனூர் சேய்த்தோ அணித்தோ என்று தலைமகள் கவலைப்பட்டவதனைக் குறிப்பினா லறிந்த தலைவன், இடம் அணித்தென்று கூறுதல்.
மணிபொன் சொரியுங்கை வாணன்தென் மாறை மருவினர்போல்
தணிபொன் சொரியுந் தடமுலை யாயுயர் சந்தமுந்தி
அணிபொன் சொரியு மருவியெஞ் சார லகத்தலர்தேங்
கணிபொன் சொரியுநின் சாரல்மென் காந்தளங் கையகத்தே. (025)
(இ – ள்.) ஏற்றார்க்கு மணியும் பொன்னுஞ் சொரியப்பட்ட கையையுடைய வாணனது தென்மாறை நாட்டின்கண் உறைவார்போல, தணிவாகப் பொன்போற் பசலை நிறத்தைச் சொரியும் பெரிய முலையாய், நீ இங்ஙனம் ஆற்றாமை கொள்ளவேண்டா; நின்னூர்க்கு எம்மூர் சேய்த்தன்று, அணித்தாயிருக்கும்; எங்ஙனமெனின், உயர்ந்த சந்தனத் தருக்களைத் திரையா லெறிந்து அணியணியாகப் பொன்னைச் சொரியும் அருவி பொருந்திய எம் சாரலகத்துத் தேனொடு கூடிய வேங்கை நின் சாரலிடத்திருக்கும் மெல்லிய காந்தட்போதாகிய கையிடத்திலே பொன்போல் அலரைச் சொரியும் என்றவாறு.
'சந்த முந்தி அணிபொன் சொரியும் அருவி' என்றதனால் திரை வருவிக்கப்பட்டது. 'மணி பொன்' என்புழி உம்மைத் தொகை. தணிதல் - நிறைதல். உந்தல் - எறிதல். 'பொன்போல் அலரைச் சொரியும்' என மொழிமாற்றிக் கொள்க. ஆதலான், என் சாரலும் நின் சாரலும் அணித்தென்றவா றாயிற்று. என்சாரல் வேங்கைத் தருவால் நின்சாரற் காந்தள் பயன்பெற்றாற் போல, என்னால் நீயும் நீங்காது பயன்பெறுவை யென உள்ளுறையுவமம் தோன்றியவாறு உணர்க. இவ்வாறு இடமணித்தென்று கூறித் தலைவன் நீங்கும். எவ்விடத்து நீங்குமோ எனின், தலைவி ஆற்றுவாள் கொல்லோ, ஆற்றாள் கொல்லோ என்பது அறிது மென்று, தலைவி காணாததோர் அணிமைக்கண் தான் மறைந்திருந்து தலைவியை நோக்கி யிருக்குமெனக் கொள்க. முன்னைய மூன்றும், 'ஐயந்தீர்த்தல்,' பின்னைய மூன்றும், 'பிரிவறிவுறுத்தல்' என்க.
---------- (025. இடமணித் தென்றல் - முற்றும்) ----------
1.03. வன்புறை முற்றிற்று
-------------------------
1.04. தெளிவு (026)
026. தெளிவு :
அஃதாவது,
[1]'தலைவன் மாற்றந் தலைவி தேற்றம்
தெளிவா மென்பர் தெளிந்திசி னோரே.'
என்னுஞ் சூத்திரவிதியால் தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்து ஆற்றுவது.
-----
[026-1] அகப். விளக்கம், களவியல் - (௧௪) 14.
----------
எத்துந் தமதுரை தேறிநின் றேனையிங் கேதனியே
வைத்தங் ககன்று மறந்துறை யார்வறி யோர்கவர
முத்துந் துகிரு மிரங்குந் தரங்க முகந்தெறிந்து
தத்துங் கரைவையை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே. (026)
(இ - ள்.) எத்திறத்துந் தரியேம் நிற்பிரியினு மென்று கூறிய தமதுரையை மெய்யாகத் தேறிநின்றேனை இவ்விடத்துத் தனியாக வைத்து நீங்கி அவ்விடத்து நம்மை மறந்து தரித்து இரார், வறியோர் கவர முத்தையும் பவளத்தையும் ஒலிக்குந் திரையாகிய கையினான் மொண்டு வீசித் தத்துங் கரைபொருந்திய வையை சூழ்ந்த தமிழ் வெற்பர் என்றவாறு.
வறியோர் கவர முத்தும் துகிரும் திரைக்கையாலே முகந்து எறிகின்ற அருளுடைய வையைநதி சூழ்ந்த நாட்டுவெற்ப ராதலான், இவரும் அருளுடையாராய் நம்மைத் தனியே இங்கு வைத்து அங்ககன்று உறையார் என்பது தோன்றிநின்றது.
எத்தும் - எத்திறத்தும். 'அகன்று அங்கு' என்று இயையும். துகிர் - பவளம். இரங்குதல் - ஒலித்தல். தரங்கம் - அலை. தத்தல் - தாவல்.
---------- (026. தெளிவு - முற்றும்) ----------
1.04. தெளிவு முற்றிற்று
-------------------------
1.05. பிரிவுழிமகிழ்ச்சி (027-028)
அஃதாவது, தலைவி பிரிந்து போகுழிப் போகின்ற தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்.
027. செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல் :
செல்லுங் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் என்பது, தலைவன், புணர்ச்சிக் களத்தினின்றும் பெயர்ந்து போகாநின்ற தலைமகளது செலவைக்கண்டு தன் நெஞ்சத்தோடு சொல்லுதல்.
அகிலேந்து கூந்த லொருகையி லேந்தி யசைந்தொருகைவாய்
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறை
நகிலேந்து பூங்கொடி போற்செல்லு மானெஞ்ச நம்முயிரே. (027)
(இ - ள்.) நெஞ்சமே நம்முயிராயதோர் வடிவு கொண்டு அகிற்புகை யேந்திய கூந்தலை யொருகையி லேந்திக்கொண்டு, ஒரு கையிற் றுகிலை யேந்திக்கொண்டு அசைந்து, தாளிணை யேந்துந் துணைச்சிலம்பு ஆரவாரிக்கத் துளி கலந்த முகிலை யேந்திய பூவொடுகூடிய பொழில் சூழ்ந்த தஞ்சைவாணனது கடற்கரையிடத்து, முலையை யேந்து பூங்கொடி. நடந்து செல்லல்போற் செல்லும், நீ காண்பாயாக என்றவாறு.
கூந்தல் முடியாமலும் துகில் உடாமலும் வந்த தென்னை யெனின், புணர்ச்சிக்களத்து இருப்புழி ஆயக்கூட்டத்தார் வருவா ரென்றும், வந்தால் களவு புலனாமென்றுங் கருதி, அவ்விடத்து நீங்கிக் குழல் முடிக்கவும் துகில் உடுக்கவும் நினைத்து வந்தாளென்க.
அகில் - ஆகுபெயர். துகில் - புடைவை. துளி - தண்ணீர். நகில் - முலை. நெஞ்சம் - அண்மைவிளி. ஆல் - அசை. ' காண்பாய்' என்னுஞ்சொல் எச்சமாய் நின்று முடிந்தது.
---------- (027. செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல் - முற்றும்) ----------
028. பாகனொடு சொல்லல் :
பாகனொடு சொல்லல் என்பது, தலைவன் தன்னைத் தேடி வந்த பாகனோடு தலைவி செல்வதைக் காட்டிக் கூறல்.
தென்பால் திலகமன் னான்றஞ்சை வாணன்தென் மாறைமுந்நீர்
வன்பால் திரண்முத்த வண்டலின் மேல்வரும் ஏதமஞ்சி
முன்பார்த்தென் நெஞ்சம் வரும்வழி பார்த்து முறைமுறையே
பின்பார்த் தொதுங்குதல் காண்வல வாவொரு பெண்ணணங்கே. (028)
(இ - ள்.) வலவா, ஒரு பெண்ணணங்கு தென் திசைக்குத் திலகம் போன்றவனாகிய தஞ்சைவாணனது தென்மாறை நாட்டுக் கடற்கரையில் வலிய பாற்றிரள் போன்ற முத்தத்தினான் வண்டலம்பாவை செய்து விளையாடும் ஆயக்கூட்டத்தார் மேலாகவருங் குற்றமஞ்சி முன்னே பார்த்து, நெஞ்சம் வருகிற வழியை முறை முறையாய் இருபக்கமும் பார்த்து, யான் வருகின்றேனோ என்று பின்பார்த்து நடந்து ஏகல் காண்பாயாக என்றவாறு.
'பாற்றிரண் முத்தம்' என்புழி உவமைத் தொகை. வண்டலின் மேல்வரும் ஏதம் - ஆயக்கூட்டத்தார் தான் வருகின்ற கோலங் கண்டு ஐயுறுவார் என்னுங் குற்றம்.
வலவன் - தேர்ப்பாகன். 'பெண்ணணங்கு' என்றது பின்மொழி நிலையல். 'அணங்குபோலும் பெண்' என்று பொருள் கூறுக; இதனை முன்மொழி நிலையல் என்பாரும் உளர்.
---------- (028. பாகனொடு சொல்லல் - முற்றும்) ----------
1.05. பிரிவுழிமகிழ்ச்சி முற்றிற்று
-------------------------
1.06. பிரிவுழிக்கலங்கல் (029-033)
அஃதாவது, தலைவி பிரிந்தவிடத்தில் தலைவன் கலங்கிக் கூறல்.
[1]'மருளுற் றுரைத்தல் தெருளுற் றுரைத்தலென்
றிருவகைத் தாகும் பிரிவுழிக் கலங்கல்.
என்னுஞ் சூத்திரவிதியால் பிரிவுழிக்கலங்கல் இரண்டு வகையாகும்.
-----
[1.06-1] அகப். விளக்கம், களவியல், சூ - (௧௬) 16.
----------
029. ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோவென்றல் :
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல் என்பது, தலைவியை ஆயக்கூட்டம் வந்து வழிபடுதலைக்கண்டு, இவ் வாயத்துள்ளாள் என்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ என்று மயங்கிக் கூறுதல்.
சீயங்கொ லோவெனத் தெவ்வென்ற வாணன்தென் மாறைவையைத்
தோயங்கொ லோவெனு நேயநம் பால்வைத்துச் சோலைமஞ்ஞை
ஆயங்கொ லோவெனு மாயத்துள் ளாளிவ் வரிவையென்ன
மாயங்கொ லோநெஞ்ச மேமணம் போலிங்கு வந்துற்றதே. (029)
(இ - ள்.) நெஞ்சமே, தெவ்வர் போர்க்களத்திற் பொரும்போது இவன் சிங்கமோ என்று சொல்லும்படி வெற்றி யடைந்த வாணனது தென்மாறை நாட்டில் வரும் வையையாற்றினது நீரோ என்று சொல்லப்பட்ட அன்பை நம்மிடத்திலே வைத்து, சோலையிடத்துலாவும் மயிற்கூட்டமோ என ஐயங்கொடுக்கும் இவ்வாயக் கூட்டம் வழிபட நடுவே விளங்குகின்றாளாகிய இவ்வரிவை மணஞ்செய்ததுபோல இங்கு வந்து கூடியது யாது மாயமோ! என்றவாறு.
சீயம் - சிங்கம். தெவ்வு - பகை. தோயம் - நீர். நேயம் - அன்பு. மஞ்ஞை - மயில். கொல் நான்கும் ஐயம். ஓகாரம் நான்கும் அசை நிலை. அன்றி, ஓகாரம் ஐயமெனின், கொல் அசைநிலை.
இங்ஙனம் தலைவி காணாததோர் அணிமைக்கண் நின்ற தலைமகன், ஆயக்கூட்டத்தில் தலைவி சேர்ந்தவுடன், அவர், குறுங் கண்ணியும் நெடுங் கோதையும் தளிரும் கொண்டுவந்து வழிபடுவாரும், குற்றேவல் செய்வாரும் பல்லாண்டு கூறுவாருமாய்ச் சூழ, தாரகை நடுவண் தண்மதிபோல இவள் வீற்றிருப்பதைக் கண்டு கூறியவாறென்று உணர்க.
---------- (029. ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோவென்றல் - முற்றும்) ----------
030. வாயில்பெற்றுய்தல் :
வாயில்பெற்று உய்தல் என்பது, தலைவி ஆயக்கூட்டத்திற் செல்லும்போது உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்ல அறிந்து, அவ் வுயிர்ப்பாங்கியைத் தலைவன் தூதாகப் பெற்று உய்வதாகக் கூறல்.
வாயில் எனினும், தூது எனினும் ஒக்கும். பக்கத்திற் பிரியா திருத்தலான் பாங்கி யென்று பெயராயிற்று.
இடந்தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் கூறி, மதியுடம்பாட்டில் அறியும் பாங்கியை ஈண்டு அறிந்ததாகக் கூறவேண்டிய தென்னையெனின், மதியுடம்பாட்டில் வாயில்பெற்று இரவு வலியுறுத்திக் கண்ணியும் தழையும் ஏந்திச்சென்று, ஊர் பெயர் முதலிய வினாவுழிப் பாங்கியை அறிதற்கெனக் கொள்க. ஈண்டு அறியாவிடின், இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டத்தில் அறியும் இடமின்று; ஆதலான், இவ்வாயில்பெற்று உய்தற்கும், அவ்வாயில்பெற்று இரவு வலியுறுத்தற்கும், 'மாட்டேற்றுப் பூட்டு' என்று உணர்க.
பெருமால் மருந்தொன்று பெற்றனம் யாநெஞ்சம் பேதுறல்பார்
மருமான் வரோதயன் வாணன்தென் மாறை மணங்கமழ்பூந்
திருமான் முகமலர்ச் சேயரி பாய்கயல் சென்றுசென்றவ்
வொருமா னகைமுக மாமல ரோடை யுலாவருமே. (030)
(இ – ள்.) நெஞ்சமே, பாரின் வழித்தோன்றி வரத் துதித்தவனாகிய வாணனது தென்மாறை நாட்டு மண நாறும் பூவிலிருக்கப்பட்ட திருமகள் போன்ற தலைவியது முகமலரின்கணுள்ள செவ்வரி பரந்த கயல்போன்ற கண்கள் போய்ப் போய்ப் பாங்கியது ஒளிபொருந்திய முகமாகிய மலரோடையுள் உலாவிக்கொண்டு வருதலான், நமது பெரிய மாலாகிய நோய்க்கு மருந்தொன்று யாம் அறியப்பெற்றனம்; இம் மருந்தினான் அந்நோய் தீரும், மயங்கல்வேண்டா என்றவாறு.
எனவே, தலைவிநோக்குத் தலைவற்கு உயிர்ப்பாங்கியை அறிவித்தவாறு கண்டுகொள்க. 'மருந்தொன்று யாம் அறியப் பெற்றனம்' என இயையும். பேதுறல் - மயங்கல். நெஞ்சம் - அண்மை விளி. மருமான் - வழித்தோன்றியோன்; அவ்வழியை வளஞ்செய்தல் இயல்பாதலான், 'பாரின் வழித்தோன்றி' எனப்பட்டது; பூமி பாலகன் எனினும் அமையும். ‘மருமான்' என்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது. திருமானும் கயலும் ஆகுபெயர். 'சென்று சென்று' என்பது அடுக்கு. அவ்வொருமான் - உயிர்ப் பாங்கி. அதிகாரம், 'பிரிவுழிக்கலங்கல்' என வைத்துக், 'கலங்கல்' கூறாது, 'உய்தல்' கூறியது என்னையெனின், 'மருளுற் றுரைத்தல்’ 'தெருளுற் றுரைத்தல்' என்று இரு வகையாற் கூறப்படும் என்னும் இலக்கணம் சூத்திரத்துட் கூறலான், 'தெருளுற் றுரைத்தல்' என் னும் இலக்கணத்தாற் கூறப்பட்டது.
---------- (030. வாயில்பெற்றுய்தல் - முற்றும்) ----------
031. பண்பு பாராட்டல் :
பண்பு பாராட்டல் என்பது, தலைவியது அழகைப் பரிந்து கொண்டாடல். பண்பு என்று அழகிற்குப் பெயரோவெனின், அழகும் பண்பு பலவற்றினுள்ளும் ஓர் பண்பாதலான் அழகு பண்பெனப்பட்டது.
மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறையில் வாய்த்தவர்கண்
கயலா மெனிற்கயல் கள்ளங்கொள் ளாகருந் தாழளகம்
புயலா மெனிற்புயல் போதுகொள் ளாதிப் புனையிழையார்
இயலாம் அனைத்தையும் வேறென்ன பேரிட் டியம்புவதே. (031)
(இ – ள்.) நெஞ்சமே, மயக்கமார்ந்த யானைப் பெருமையை யுடைய வாணனது தென்மாறை நாட்டில் நமக்கு நல்வினைப் பயத்தால் வாய்த்த மடவாரது கண்களைக் கண்களல்ல, கயலேயாம் எனச் சொல்லின், அக்கயல்கள் கள்ளப்பார்வை கொள்ளா; கரிதாய்த் தாழ்ந்த அளகத்தை அளகம் அன்று, புயலாமெனில், அப்புயல் அலங்காரமாகப் போதுகளைப் புனையாது; இவ்விரண்டு உறுப்பிற்கும் அழகின் பெருக்கத்தான் உவமப் பொருள்களைப் பெயரிட்டுக் கூற இயையாமையாற் புனையிழையாரது இலக்கணமாகிய அனைத்துறுப்பையும் உவமப் பெயர்களில் வேறாக என்ன பெயரிட்டு இயம்புவது என்றவாறு.
எனவே, அழகின் பெருக்கத்தான் அவ்வுறுப்புகள் தமக்குத் தாமே உவமை கூறவேண்டுவ தல்லது, வேறு பொருள்கள் ஒப்புக் கூறப்படாவாயின.
மயல் - மயக்கம். வாய்த்தல் - முயற்சியான் எய்தற்கு அரிதாகிய பொருள் ஓர் காலத்து ஓரிடத்து நல்வினைப்பயத்தான் தானே வந்து எய்துதல். அளகம் - குழல். இயல் - இலக்கணம். இயம்புவது - சொல்லுவது. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
---------- (031. பண்பு பாராட்டல் - முற்றும்) ----------
032. பயந்தோர்ப் பழிச்சல் :
பயந்தோர்ப் பழிச்சல் என்பது, தலைவியைப் பெற்றாரைத் தலைவன் வாழ்த்தல்.
அணியுஞ் சுடர்விரி சங்குபங் கேருக மாடகமும்
மணியுந் தரமன்னி வாழிய ரோதஞ்சை வாணன்வெற்பில்
தணியுந் தொழிலொழித் தின்பமுந் துன்பமுந் தன்பதமே
பணியும் பணியெனக் குப்பயந் தாளைப் பயந்தவரே. (032)
(இ - ள்.) நெஞ்சமே, ஒளிவிரியப்பட்ட சங்கநிதியும் பதுமநிதியும் பூணாரமும் செம்பொன்னும் நவமணியும் கொடுக்க மாறாது நிலைபெற்றுத், தஞ்சைவாணன் வெற்பில், மற்றத் தொழில்களெல்லாம் இன்பமுந் துன்பமுமாதலின் தாழுந் தொழிலென்று அவற்றை யொழித்து, எஞ்ஞான்றும் இன்பந் தருவதாய தன்னுடைய பாதத்தைப் பணியுந் தொழிலை எனக்குக் கொடுத்தாளைப் பெற்ற தாயும் தந்தையும் என்னும் இவர்கள் பன்னாளும் வாழியர் என்றவாறு.
அணி - பூணாரம், சுடர் - ஒளி. சங்கு - சங்கநிதி. பங்கேருகம் - பதுமநிதி. 'சங்குபங்கேருகம்' என்புழி உம்மைத் தொகை. ஆடகம் - பொன். மணி - நவமணி. ஓகாரம் - அசைநிலை. தணிதல் - தாழ்தல். பணியும் பணி - வணங்குந் தொழில். பயத்தல் - கொடுத்தல். பயந்தவர் - இருமுதுகுரவர். ‘இன்பமுந் துன்பமுந் தணியுந் தொழில்' எனவும், 'அணியுமாடகமு மணியும்' எனவும் இயையும். உம்மைகள் எண்ணின்கண் வந்தன.
---------- (032. பயந்தோர்ப் பழிச்சல் - முற்றும்) ----------
033. கண்படை பெறாது கங்குனோதல் :
கண்படை பெறாது கங்குனோதல் என்பது, அன்றிரவில் தலைவி தந்த வேட்கையான் துயில் பெறாது கங்குற்காலத்து நொந்து கூறல்.
வாமக் கலையல்குல் வாணுத லார்தஞ்சை வாணன்வெற்பில்
நாமக் கலவி நலங்கவர் போது நமக்களித்த
காமக் கனலவர் கையகல் காலைக் கடும்பனிகூர்
யாமக் கடலகத் துந்தணி யாதினி யென்செய்துமே. (033)
(இ - ள்.) நெஞ்சமே, தஞ்சைவாணன் வெற்பில், நாம் முன் இயற்கைப் புணர்ச்சியில் இன்பங் கொள்ளும்போது அழகுபொருந்தி மேகலை சூழ்ந்த அல்குலையும், ஒளி பொருந்திய நுதலையும் உடையார் நமக்குக் கொடுத்த வேட்கைக் கனல் உள்ளடங்கியிருந்து, அவர் பிரிந்த விடத்துக் கடிய பனி மிகுந்த இரவாகிய கடலின்கண் மூழ்கியுந் தணியாது; இன்று என்செய்யக் கடவோம் என்றவாறு.
வாமம் - அழகு. கலை - மேகலை. நலம் - ஆகுபெயர். கவர்தல் - கொள்ளுதல். கையகலல் - பிரிதல். யாமம் - இடையிரவு. உம்மை - சிறப்பு. இனி - இன்று. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
'ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ வென்றல்' ஒன்றும், 'மருளுற்றுரைத்தல்'; ஏனைய நான்கும், 'தெருளுற்றுரைத்தல்.’
---------- (033. கண்படை பெறாது கங்குனோதல் - முற்றும்) ----------
1.06. பிரிவுழிக்கலங்கல் முற்றிற்று
'காட்சி’ முதலாகக் 'கண்படைபெறாது கங்குனோதல்’ ஈறாகக்கூறிய கிளவி முப்பத்து மூன்றும்
முதனாள் நிகழ்ந்ததெனக் கொள்க.
-------------------------
1.07. இடந்தலைப்பாடு (034-038)
[1]'தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென்
றிவ்வோர் மூவகைத் திடந்தலைப் பாடே.'
என்னுஞ் சூத்திரவிதியால் இடந்தலைப்பாடு மூவகைப்படும்.
-----
[1.07-1] அகப். விளக்கம், களவியல் சூ. - 18.
----------
034. தந்ததெய்வந் தருமெனச்சேறல் :
தந்த தெய்வம் தருமெனச் சேறல் என்பது, முன் இயற்கைப் புணர்ச்சியில் அவளைத் தந்த விதி இன்னும் அவ்விடத்திற் சென்றால் தருமெனச் சேறல்.
மன்றும் பொதியிலு மாமயில் சேர்தஞ்சை வாணன்வெற்பில்
துன்றும் புயலிளஞ் சோலையின் வாய்ச்சுற வுக்குழையைச்
சென்றுந்து சேல்விழி மின்னைமுன் நாள்தந்த தெய்வநமக்
கின்றுந் தருநெஞ்ச மேயெழு வாழியிங் கென்னுடனே. (034)
(இ – ள்.) நெஞ்சமே, மன்றினிடத்தும் பொதியிலிடத்தும் பெரிய மயில் சேருந் தஞ்சைவாணன் வெற்பிடத்து, புயல் நெருங்கிய இளஞ் சோலையினிடத்து, மகரக் குழையைப் போய்த் தள்ளுங் கெண்டைபோலும் விழியையுடைய மின்னை நெருநல் தந்த விதியானது நமக்கு இன்றுஞ் சென்றால் தருமாதலான், என்னுடன் ஒருப்பட்டு எழுவாயாக என்றவாறு.
மன்று - ஊர்க்கு நடுவாய் எல்லாரும் இருக்கத் திண்ணை போட்டிருக்கும் மரத்தடி. பொதியில் - அம்பலமாய் எல்லாருங் கூடியிருக்கும் கூடம். என்னை, திருமுருகாற்றுப்படையுள்,
[1]'மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்'
என்பதனாற் காண்க.
-----
[034-1] திருமுரு. 226.
----------
மாமயில் - ஊரில் வளர்ந்த பெரியமயில். 'புயல் துன்றும்' என இயையும். சுறவுக்குழை - மகரக்குழை. உந்தல் - தள்ளுதல். சேல் விழி - உவமைத்தொகை. மின் - ஆகுபெயர். தெய்வம் - விதி. வாழி - முன்னிலையசை.
---------- (034. தந்ததெய்வந் தருமெனச்சேறல் - முற்றும்) ----------
035. முந்துறக்காண்டல் :
முந்துறக்காண்டல் என்பது, முந்துபோலக் காண்டல்.
மருவாய நாப்பண் மயிலுரு வாய்நென்னல் வாணன்தஞ்சைத்
தருவாய்த் தழைகொய்து தண்புனங் காத்துத் தடங்குடைந்து
திருவாய் மலர்ந்து சிலம்பெதிர் கூயின்றொர் தெய்வதப்பெண்
உருவா யொருதனி யேநின்ற தாலென் னுயிர்க்குயிரே. (035)
(இ - ள்.) நெஞ்சமே, நெருநல் பொருந்திய ஆயக் கூட்டத்து நடுவே மயிலின்வடிவாக இற்றைப்பொழுது வாணனது தஞ்சைச் சோலையிடத்துத் தழைகொய்து, மழைபெய்தலாற் குளிர்ந்த புனங்காத்து, வாவியில் நீராடி, திருவாய் திறந்து மலையெதிர்கூவி, ஒப்பற்ற தெய்வப்பெண் ணுருவாய், ஒப்பற்ற தனியே யென்னுயிர்க்குயிர் நின்றது, காண்பாயாக என்றவாறு.
ஆயநாப்பண் - ஆயக்கூட்டத்து நடு. தரு - சாதியொருமை. தடம் - வாவி. சிலம்பெதிர் கூவுதல் - ஓர்விளையாட்டு. ஆல் - அசை. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
---------- (035. முந்துறக்காண்டல் - முற்றும்) ----------
036. முயங்கல் :
முயங்கல் என்பது புணர்தல்.
மானா கரன்தஞ்சை வாணன் வரோதயன் மாறையன்னாள்
தானாவி நின்றலர் தாமரை யேஅத் தடமலர்வாய்
ஆனா தொழுகுசெந் தேனல்லி மேவு மரசவன்னம்
யானா கிடைப்பது வேயின்ன பான்மை யிருவர்க்குமே. (036)
(இ - ள்.) மானத்துக்குப் பிறப்பிடமாய் வரத்தி லுதித்த தஞ்சைவாணனது மாறைநாடுபோல்வாள் வாவியினின்று மலர்ந்த தாமரை, அவ்வாவித் தாமரையிடத்து நீங்காமலொழுகுஞ் செந்தேனையுடைய அகவிதழின்கண் மேவியிருக்கும் அரசவன்னம் யானாயினேன்; ஆ, இத் தன்மை யிருவர்க்குங் கிடைக்கத்தக்கதோ என்றவாறு.
எனவே, ஊழ்வினைப்பயத்தா னன்றி முயற்சியாற் கிடைக்கத் தக்கதோ என்றவா றாயிற்று. மானாகரன், வரோதயன் இவ்விரண்டும் வடசொல் முடிபு; வினைமுற்று வினையெச்சமாய்த் திரிந்தது. தான் - சந்தவின்பப் பொருட்டு வந்தது. ஆவி - வாவி. ஆனாது - நீங்காது. அல்லி - அகவிதழ். ஆ - அதிசயக் குறிப்பு. கிடைப்பது - அரிதாகிய பொருள்வாய்ப்பு. ஏகாரம் - ஈற்றசை.
---------- (036. முயங்கல் - முற்றும்) ----------
037. புகழ்தல் :
புகழ்தல் என்பது, தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறல்.
அரும்பாம் அளவில் தனத்தொடவ் வாயல ராமளவில்
கரும்பா மொழிவத னத்தொடவ் வாய்களி யானைசெம்பொன்
தரும்[1]பாரி வாணன் தமிழ்த்தஞ்சை யான்தரி யாரின்முன்செய்
பெரும்பாவ மல்லது நீர்நின்ற பேறல்லி பெற்றிலையே. (037)
(இ - ள்.) அகவிதழை யுடைய தாமரையே, நீ அரும்பாகுங் காலம் கரும்பை யொத்த மொழியை யுடையாளது தனத்துக் கொப்பாகாய்; அலராகுங் காலத்து முகத்தோ டொப்பாகாய்; களித்தயானையும் செம்பொன்னும் நாவலர்க்குத் தரும் பாரியென்னும் வள்ளலுக் கொப்பான தமிழ்த்தஞ்சை நகரையுடைய வாணனுக்குப் பகைவரைப் போல முன்செய்த பெரும் பாவமல்லது, நீரிலே தவப்பேறு பெற்றிலை யாயினை என்றவாறு.
-----
[037-1] பாரி இன்னார் என்பதனைச் சிறு பாணாற்றுப் படையுள், 'சுரும்புண - நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச், சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்குவெள் அருவி வீழுஞ் சாரற், பறம்பிற் கோமான் பாரியும்' என்றதனானும் அதற்கு நச்சினார்க் கினியர் கூறிய உரையானும் உணர்க.
----------
எனவே, தலைவியைப் புகழ்ந்தவா றாயிற்று. தனம் - முலை. வதனம் - முகம். பாரி - ஓர் வள்ளல். தரியார் - பகைவர். அல்லி - அண்மைவிளி; ஆகுபெயர்.
---------- (037. புகழ்தல் - முற்றும்) ----------
038. ஆயத்துய்த்தல் :
ஆயத்துய்த்தல் என்பது, ஆயக்கூட்டத்துத் தலைவியைச் செலுத்தல்.
மேவிக் கலைக்கட லென்புலன் மீனுண்டு மீண்டுவந்தென்
ஆவிக் கமலத் தமரன்ன மேநின் அயில்விழிபோல்
வாவிக் கயலுக ளுந்தஞ்சை வாணன் வரையினுடன்
கூவிக் கயங்குடை நின்குயி லாயங் குறுகுகவே. (038)
(இ - ள்.) கலையாகிய கடலில்மேவி, என்னறிவாகிய மீனையுண்டு போய் மீண்டுவந்து, என்னுயிராகிய கமலத்திற் குடியாக அமர்ந்திருக்கும் அன்னமே! நின்னுடைய கூரிய கண்போல வாவியிற் கயல்கள் புரளுந் தஞ்சைவாணன் மலையில் எதிர் கூவிக் கயத்துட் குளித்து விளையாடும் நின்னுடைய குயிற்கூட்டம்போன்ற ஆயக்கூட்டத்திற் கூடுக என்றவாறு.
'கலைக்கடல்மேவி' என மாறுக. புலன் - அறிவு. கலை கடலாகவும், புலன் மீனாகவும், அதனை யுண்ணுந் தலைவி அன்னமாகவும், அவ்வன்னமிருக்கும் உயிர் கமலமாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. ‘மீண்டு வந்து' என்பதனால், போய் என்ற சொல் வருவிக்கப்பட்டது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து இடந்தலைப்பாட்டில் வந்தமையால் போய் மீண்டுவந்தெனக் கூறியது.
அயில் - கூர்மை. விழி - கண். 'வாவி' என்புழி ஏழனுருபு தொக்கது. கயல் - மீன். 'கயல்போல்விழி' என்னாது, 'விழிபோற் கயல்' என்றது,
'பொருளது புணர்வே புணர்ப்போன் குறிப்பின்
மருளற வரூஉ மரபிற் றென்ப.’
என்னும் உவமவியற் சூத்திரத்தான் இன்னது பொருளென்றும், இன்னது உவமையென்றுங் கூறத்தக்கதில்லை. பொருளும் உவமமும் புணர்க்கும் புலவனால் எவ்வாறு செய்யப்பட்டதோ அவ்வாறு இயையுமென்று கொள்க. இதனை இயலுடையார் விபரீத வுவமை யென்ப. உகளுதல் - பிறழ்தல். 'அலர்த்தேன் குதிக்க வாவிக் கயலுகளும்' என்று பாடமோதுவாரும் உளர். வரை - மலை. உடன் கூவுதல் - எதிர்கூவுதல். குடைதல் - குளித்தல். குயிலாயம் - உவமைத்தொகை. குறுகல் - கூடுதல்.
'தந்ததெய்வந் தருமெனச் சேறல்' ஒன்றும் தெய்வந் தெளிதற் குரித்து; 'காண்டல்,' 'முயங்கல்,’ 'புகழ்தல்' மூன்றும் கூடற்குரிய; 'ஆயத்துய்த்தல்' ஒன்றும் விடுத்தற்குரித்து.
---------- (038. ஆயத்துய்த்தல் - முற்றும்) ----------
1.07. இடந்தலைப்பாடு முற்றிற்று
இரண்டாநாள் இடந்தலைப்பாட்டிற் கூடினாரென் றுணர்க.
-------------------------
1.08. பாங்கற் கூட்டம் (039-062)
அஃதாவது மூன்றா நாள் பாங்கனாற் கூடுங் கூட்டம்.
[1]'சார்தல் கேட்டல் சாற்றல் எதிர்மறை
நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென்
றாங்கெழு வகைத்தே பாங்கற் கூட்டம்.'
என்னுஞ் சூத்திர விதியாற் பாங்கற் கூட்டம் எழுவகையினை யுடைத்து என்பது.
-----
[1.08-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௨0) 20.
----------
039. தலைவன் பாங்கனைச் சார்தல் :
தலைவன் பாங்கனைச் சார்தல் என்பது, தலைவன் இவ்வேட்கை நோய் பாங்கனா லன்றித் தீராதென் றெண்ணிப் பாங்கனைச் சார்தல்.
புனையாழி அங்கைப் புயல்வளர் பாற்கடற் பூங்கொடிவாழ்
மனையா கியதஞ்சை வாணனொன் னாரென மற்றிங்ஙனே
இனையா தெழுமதி நன்னெஞ்ச மேநமக் கின்னுயிரே
அனையான் அருட்புன லாலனங் கானலம் ஆற்றுதற்கே. (039)
(இ - ள்.) நல்ல நெஞ்சமே, நமக்கினிய உயிர்போன்ற உயிர்ப்பாங்கன் அருட்புனலால் காமாக்கினியை அவித்தற்கு, சக்கரத்தை யணியும் அழகிய கையினையுடைய புயல் போன்ற திருமால் கண்வளரும் பாற்கடலைப் பிறந்தகமாக வுடைய பூங்கொடி போன்ற திருமகட்கு வாழ்க்கை மனையாகிய தஞ்சைமா நகரையுடைய வாணனுக்கு ஒன்னார் போல இவ்விடத்தில் வருந்தாது, அவன் பக்கற் சேர எழுவாயாக என்றவாறு.
'ஆழி புனை' என மாறுக. புயல் - மேகம். 'ஆழியங்கைப் புயல்' என்பதும், 'பாற்கடற் பூங்கொடி' என்பதும் சிறப்புருவகம். 'பூங்கொடி வாழ்மனை யாகிய தஞ்சை' எனவே, திருமகள் பிரியாத தஞ்சையென் றாயிற்று. ஒன்னார் - பகைவர். மற்று - அசை. இனைதல் - வருந்துதல். மதி - முன்னிலையசை. அருட்புனல் - அருள் நீர். அனங்கானலம் - காமாக்கினி; வடசொல் முடிபு.
---------- (039. தலைவன் பாங்கனைச் சார்தல் - முற்றும்) ----------
040. பாங்கன் தலைவனை உற்றது வினாதல் :
பாங்கன் தலைவனை உற்றது வினாதல் என்பது, பாங்கன் தலைவனது உள்ளமும் தோளும் வாடிய வேறுபாட்டைக் கண்டு நினக்கு இவ்வேறுபா டுற்ற காரணம் என்னவென்று வினாதல்.
வலம்புரி போற்கொடை வாணன்தென் மாறை மழைவளர்பூஞ்
சிலம்புறை சூர்வந்து தீண்டின போலொளி தேம்பியிவ்வா
றுலம்புனை தோளுநின் உள்ளமும் வாடி யுருகிநின்று
புலம்புவ தென்னைகொல் லோசொல்ல வேண்டும் புரவலனே. (040)
(இ - ள்.) புரவலனே! சங்கநிதிபோற் கொடுக்கும் கொடையை யுடைய வாணனது தென்மாறை நாட்டின்கண் உள்ள முகில் கண்வளரும் பொலிவினை யுடைய சிலம்பில் உறையுஞ் சூர் என்னுந் தெய்வப் பெண் வந்து தீண்டியது போல, நின் திருமேனி ஒளிதேய்ந்து, திரண்ட கல்லுப் புனைந்தா லொக்கும் நின்னுடைய தோளும் உள்ளமும் வாடி உருகிநின்று இவ்வாறு புலம்புவது என்னோ சொல்ல வேண்டும் என்றவாறு.
வலம்புரி - ஆகுபெயர். மழை - முகில். வளர்தல் - கண் வளர்தல். பூ - பொலிவு. சிலம்பு - மலை. சூர் - ஓர் தெய்வப் பெண். தேம்பல் - தேய்தல்.
[1]'தேம்பலஞ் சிற்றிடை ஈங்கிவ டீங்கனிவாய்.’
என்றார் பிறரும். உலம் - திரண்டகல். கொல், ஓ என்பன அசைநிலை.
-----
[040-1] திருக்கோவையார் - (௧௧) 11.
----------
---------- (040. பாங்கன் தலைவனை உற்றது வினாதல் - முற்றும்) ----------
041. தலைவன் உற்றதுரைத்தல் :
தலைவன் உற்றது உரைத்தல் என்பது, இவ்வாறு வினாவிய பாங்கற்குத் தலைவன் தனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறல்.
மலைமுழு துங்கொற்றம் வைக்கின்ற வாணன்தென் மாறைநண்பா
சிலைமுழு துஞ்சுற்று முற்றுமெய் யாநிற்பச் செந்நிறத்தே
கொலைமுழு துங்கற்ற கூரிய வாளி குளிப்பஇன்றென்
கலைமுழு தும்பட்ட தாலொரு மான்முடிக் கண்ணியிலே. (041)
(இ – ள்.) எண்டிசையின் மலைமுற்றும் வெற்றிக் கொடியை வைக்கின்ற வாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்ற பாங்கனே ! புருவமாகிய சிலைமுழுதும் சுற்றாகிய திசைமுற்றும் எய்யாநிற்ப, கொலைத்தொழின் முற்றுங் கற்ற கண்ணாகிய கூரியவாளிகள் எனது செவ்விதாகிய நெஞ்சிடத்திலே மூழ்க, அப்போது என்னெஞ்சி லிருக்கின்ற கலையறிவு முற்றும் ஒரு பெண் வைத்த தலைக்கண்ணியிற் பட்டது என்றவாறு.
‘மலை முழுதுங் கொற்றம்' எனவே எண்டிசைக்கும் அவாய் நிலையான் வந்தது. கொற்றம் - ஆகுபெயர். சிலை - ஆகுபெயர். உலகிற் சிலை நடுநிலையி லெய்யும்; இச்சிலை அவ்வாறன்றிச் சிலை முற்று மெய்யா நின்ற தென்று கருவி கருத்தாவாகக் கூறியது. விற்றோன்றுந் திசையிலன்றித் திசை யெட்டினும் எய்கின்றமையான் சுற்றாகிய திசைமுற்றும் என்றது, எண் திசையினும் இருந்து வரினுந் தைப்பது நெஞ்சிடத்தே யெனக் கொள்க.
செந்நிறம் - மார்பு. கொலை முற்றும் - கொலைத் தொழில் முற்றும். வாளி - ஆகுபெயர். குளிப்ப - மூழ்க. கலை - ஆகுபெயர். ஒரு மானுக்கு முடிபோட்ட கண்ணியிலே கலையெல்லாம் பட்டதென ஒரு பொருள் தோன்றியவாறு காண்க. ஆல் - அசை. கண்ணி - விலங்குகள் புட்கள் அகப்படுத்துங் கருவிக்கும், மாதர் குழலிற் சூடுங் குறுங்கோதைக்கும் பொதுவாகலான், இவ் விரண்டுவகைப் பொருளும் தோன்ற நின்றது.
---------- (041. தலைவன் உற்றதுரைத்தல் - முற்றும்) ----------
042. கற்றறிபாங்கன் கழறல் :
கற்றறிபாங்கன் கழறல் என்பது, வேதாகம புராணம் யாவுங் கற்றறிந்த பார்ப்பனப் பாங்கன் இடித்துக் கூறல். இடித்துக் கூறல் - உறுதிச்சொல் லுரைத்தல்.
தருகற் பகமன்ன சந்திர வாணன் தடஞ்சிலம்பில்
முருகக் கடவு ளனையவெற் பாமுகி லும்பிறையுஞ்
செருகக் கிளர்வரை வந்தவொர் பேதைக்குன் சிந்தையெல்லாம்
உருகக் கலங்கினை நீதகு மோமற் றுனக்கிதுவே. (042)
(இ - ள்.) இரவலர் யார்வந்து கேட்பினும் கேட்பவை யெல்லாங் கொடுக்குங் கற்பகத் தருவையொத்த சந்திரற்கு மகனாகிய வாணனது தடஞ் சிலம்பிலிருக்கும் முருகக் கடவுளை யொக்கும் வெற்பனே! நீ முகிலும் பிறையுஞ் செருகும்படி யெழுந்த வரையிடத்தில் வந்த ஓர் பெண்ணுக்கு நின் சிந்தையெல்லாம் உருகக் கலங்கினை, உனக்கிது தகாது என்றவாறு.
சந்திரன் - வாணனுக்குத் தந்தை. தடஞ்சிலம்பு - பெரிய மலை. செருகல் - செருகுதல்.
[1]'துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்,
டுளைப்பூ மருதின்'
எனத் திருமுருகாற்றுப் படையுள், செரீஇ என்பதற்குச் செருகி யென உரை கூறியவாறு கண்டுகொள்க. கிளர்தல் - எழுதல், வரை - மலை. ஓகாரம் - எதிர்மறை. மற்று - அசை. 'இது தகுமோ' என இயையும்.
-----
[042-1] திருமுரு. (௨௬) 26, (௨௭) 27, (௨௮) 28.
----------
---------- (042. கற்றறிபாங்கன் கழறல் - முற்றும்) ----------
043. கிழவோன் கழற்றெதிர்மறுத்தல் :
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல் என்பது, பாங்கன் கூறிய கட்டுரையைத் தலைவன் மறுத்துக் கூறல்.
மாலாய் மதம்பொழி வாரண வாணன்தென் மாறையன்னார்
சேலார் கருங்கண்ணுஞ் செங்கனி வாயுஞ் சிறியநுண்ணேர்
நூலார் மருங்கும் பெருந்தன பாரமு நும்மையன்றி
மேலா னவருங்கண் டாலுரை [1]யாரிந்த வீரங்களே. (043)
(இ - ள்.) மயக்கமாய் மதத்தைப் பொழியும் வாரணத்தையுடைய வாணனது தென்மாறைநாடு போல்வாரது சேல் போன்ற கருங் கண்ணும், செங்கனி போன்ற வாயும், சிறுமையாகிய நுண்ணிய அழகாகிய நூல் போன்ற இடையும், பெரிய தனபாரமும், கண்டார் நெஞ்சினை உருக்குந் தன்மையில் வலிய என்பதனை யெளியவாகக் கூறினீர்; நும்மையன்றி மேலானவருங் கண்டால் உரையார்கள் இத் தன்மையாகிய வீரமொழிகள் என்றவாறு.
-----
(வே-பா.) [043-1] யாரின்ன.
----------
எனவே, நீரும் காணாத தன்மையால் இவ்வாறு கூறினீர் என்று கூறியவா றாயிற்று. மால் - மயக்கம். வாரணம் - யானை. சேல் - கயல். 'செங்கனி வாய்' என்புழி உவமைத்தொகை. ஏர் - அழகு. 'மேலானவரும்' என்புழி உம்மை சிறப்பும்மை; ஏனைய எண்ணின்கண் வந்தன. ஆர் என்பது ஒப்பு. பாங்கன் - முன்னிலை யெச்சம்.
---------- (043. கிழவோன் கழற்றெதிர்மறுத்தல் - முற்றும்) ----------
044. கிழவோற் பழித்தல் :
கிழவோற்பழித்தல் என்பது, அவ்வாறு கூறிய தலைவனைப் பாங்கன் பழித்துக் கூறல்.
சூரார் சிலம்பிற் சிலம்பிமென் னூல்கொண்டு சுற்றவெற்றிப்
போரார் களிறு புலம்பிநைந் தாங்கொரு பூவைகொங்கை
வாரா லணைப்ப வருந்தினை நீதஞ்சை வாணன்வெற்பா
ஓராழி சூழுல கத்தெவ ரேநின்னை யொப்பவரே. (044)
(இ – ள்.) தஞ்சைவாணன் வெற்பி லிருப்பவனே! சூர் பொருந்திய மலையினிடத்துச் சிலம்பியானது மெல்லிய நூலைக்கொண்டு சுற்ற, மாற்றார் படையிலே வெற்றிப்போர் செய்கின் ற யானையானது புலம்பி நைந்தாற் போலும், ஒரு பெண்ணினது வார்பொருந்திய கொங்கையா லணைப்ப நீ வருந்தினை; ஆதலால், ஒப்பற்ற ஆழி சூழ்ந்த வுலகத்தில் நின்னை யொப்பாவார் யார் என்றவாறு.
சூர் - தெய்வப் பெண்களில் ஓர் சாதி. சிலம்பு - மலை. சிலம்பி - சிலந்தி. களிறு - யானை. ஆங்கு - உவமையுருபு. பூவை - ஆகுபெயர். 'வார்க் கொங்கை' எனமாறுக. ஆழி - கடல். 'சிலம்பி மென் னூல்கொண்டு சுற்ற வெற்றிப் போரார்களிறு புலம்பி நைந் தாங்கு' என்பது அந் நூற்றளையை நீங்கி வருதற்கு அரிதாய்ச் சங்கிலித்தளைக்கு நில்லாத தன் வலியிழந்து புலம்பி நைந்தாற் போல; கடல்போல் வருகின்ற நால்வகைப் படையும் வென்று மனத்திற் கலங்காத வீரம், ஒரு பெண்வேட்கையாற் கலங்கி வருந்தினை, நின்னை யொப்பாவார்யார்? எனக் குறிப்பாற் பழிப்புத் தோன்றியவாறு உணர்க.
---------- (044. கிழவோற் பழித்தல் - முற்றும்) ----------
045. கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல் :
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல் என்பது, தலைவன் நீ பழிக்கின்ற என்னுள்ளம் தேறுதற்கு வேட்கை என்னால் தாங்கமுடியாதென்று கூறுதல்.
பொறைகொண்ட தாமரைப் போதன்ன கொங்கையும் பொங்கரிசேர்
கறைகொண்ட வாளன்ன கண்களுங் கொண்டொரு கன்னிதெவ்வைத்
திறைகொண்ட வாணன் செழுந்தஞ்சை சூழுஞ் சிலம்பிலின்றென்
நிறைகொண்ட வாறறி யாதிக ழாநிற்றி நீயுநின்றே. (045)
(இ – ள்.) பாரங்கொண்ட தாமரை முகையன்ன கொங்கையும், மிகுந்த அரிபொருந்திய, மாற்றாரைப் பொருது அவருடற் குருதிக்கறைகொண்ட வாளையொத்த கண்களுங்கொண்டு ஒரு கன்னியானவள், பகையைத் திறைகொண்ட வாணனது செழுமையாகிய தஞ்சை மாநகரைச் சூழும் சிலம்பிடத்து, இன்று என்னுடைய நிறையைக் கவர்ந்தவாறறியாது, நீயும் என் முன்னின்று இகழா நின்றாய், யான் என் செய்வேன்! என்றவாறு.
பொறை - பாரம். போது - முகை;
[1]'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.'
என்பதனான் உணர்க.
-----
[045-1] குறள். பொழுதுகண் டிரங்கல் - (௭) 7.
----------
பொங்குதல் - மிகுதல். அரி - செவ்வரி. கறை - இரத்தம். தெவ் - பகை. திறை - வெற்றி. நிறை என்பது அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி யென்னும் மேன்மக்கள் குணங்களுள் ஓர் குணம்; அஃதாவது, மனத்தின்கண் பிறரறியாமை அடக்கத்தக்க காரியத்தை யடக்குதல்.
[2]'நிறை யெனப்படுவது மறைபிற ரறியாமை'
என்றார் பிறரும். நீயும் என்னும் உம்மை சிறப்பும்மை. பாங்கன் - முன்னிலையெச்சம்.
-----
[045-2] கலித். நெய்தல் - (௧௬) 16.
---------- (045. கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல் - முற்றும்) ----------
046. பாங்கன் தன்மனத் தழுங்கல் :
பாங்கன் தன் மனத்தழுங்கல் என்பது, அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானாய் இவ்வாறு கூறினால் யான் அதற்குத்தான் என் சொல்வேன் என்று தன்னுள்ளே யிரங்குதல்.
சீதள வாரங் கமழ்தஞ்சை வாணன்தென் மாறையன்னாள்
காதள வாவெங் கடுவள வாவொளிர் காவியந்தண்
போதள வாவிழி யென்னுமென் னாசைப் புறத்தளவா
சூதள வாமுலை யென்னுமென் நாம்இனிச் சொல்லுவதே. (046)
(இ – ள்.) எம்பெருமான், குளிர்ச்சி பொருந்திய சந்தனங் கமழப்பட்ட தஞ்சைவாணன் தென்மாறை நாடு போல்வாளது கண்களைக் காதினாலும் அளவிட்டறியப்படா, வெவ்விய விடத்தினாலும் அளவிட்டறியப்படா, விளங்கப்பட்ட அழகிய குளிர்ந்த நீலப்போதினாலும் அளவிட்டறியப்படா என்று சொல்லும்; முலையை மலைபோல் வளர்ந்த என்னாசையிடத்தும் அளவிட்டறியப்படா, வல்லினாலும் அளவிட்டறியப்படா என்று சொல்லும்; ஆதலால், நெஞ்சமே, நாம் இன்று சொல்லுவது என் என்றவாறு.
ஆரம் - மைந்தரும் மாதரும் மார்பினும் முலையினும் பூசுஞ் சந்தனம். கடு - விடம். காவி - நீலம். 'அந்தண் காவி' என மாறுக. புறம் - இடம். சூது - வல். இனி - இன்று. அளத்தல் - அறிதல்; அளவா - அறியப்படா.
காதைக் கடந்துபோதலான், 'காதளவா என்றும், கடு உண்டாரைக் கொல்லும், அவ்வாறன்றிக் கண்டாரைக் கொல்லுதலான், 'நடு வளவா' என்றும், காவிப் பூவிற்குப் பார்த்தறியுங் குணம் இன்மையின், 'காவி யந்தண் போதளவா' என்றுங் கூறியது.
[1]'காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று.'
என்னுங் குறளினானுங் காவிக்குக் கண்டறியுங் குணமின்மை உணர்க.
-----
[046-1] குறள். நலம்புனைந்துரைத்தல் - (௪) 4.
----------
ஆசையினும் முலை பெரிதாகலான், 'ஆசைப்புறத்தளவா' என்றும், வட்டங்கொண்டு குவிந்து வண்ணம் பொதிந்திருத்தலான், 'சூதளவா' என்றுங் கூறியது. 'என்னும்' என்பது இரண்டும் இறுதிவிளக்கு. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
---------- (046. பாங்கன் தன்மனத் தழுங்கல் - முற்றும்) ----------
047. பாங்கன் தலைவனோ டழுங்கல் :
என்மே லறைவது யானிங்கு நின்செவிக் கென்சொலெல்லாம்
வன்மே லடர்கொங்கை காரண மாய்த்தஞ்சை வாணன்வெற்பா
கன்மே லறைகின்ற மென்முளை போலுங் கடல்வெதும்பில்
தன்மேல் விளாவவுண் டோதரை மேலொரு தண்புனலே. (047)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே, பேரின்பத்திற்குரிய நீ இச் சிற்றின்பத்திற்கு இத்தன்மையனாதல் தகாது என்று, சூதின்மேற் பகை நெருங்குங் கொங்கையினை யுடையாள் காரணமாக, இங்குக் கூறும் என் சொல் லெல்லாம் நின்காதுக்குக் கல்லின்மேல் அறைகின்ற மெல்லிய மூங்கிலின் முளைபோலு மாயின; யான் மேற் சொல்லுமாறு யாது? கடல் வெப்பமுறின் அவ்வெப்பம் மாற அக்கடன்மேல் விளாவுதற்குப் பாரிடத்து ஒரு தண்ணீருண்டோ என்றவாறு.
அறைதல் - சொல்லுதல். 'யானென் மேலறைவது' என மாறுக. வல் - சூது. அடர்தல் - நெருங்குதல். கொங்கை - ஆகுபெயர். அறைதல் - அடித்தல். முளை - மூங்கில். வெதும்பல் - வெப்பமுறல். தன், அடிச்சந்த நோக்கிவந்தது. தரை - பார். புனல் - நீர்.
---------- (047. பாங்கன் தலைவனோ டழுங்கல் - முற்றும்) ----------
048. எவ்விடத் தெவ்வியற்றென்றல் :
எவ்விடத் தெவ்வியற்றென்றல் என்பது, எம்பெருமான் இவ்வாறு கூறியும் ஆற்றானாயினன், அதனால், தலைவியைக் கூடா தொழியின் இறந்துபடு மென்றுதேறி, தலைவனை நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எவ்வியலை யுடையதென்று வினாவுதல்.
முகத்திற் பகழி யிரண்டுடை யார்க்கிட மூரிமுந்நீர்
அகத்திற் பிறந்த அரவிந்த மோவடை யார்தமக்கு
மகத்திற் சனியன்ன சந்திர வாணன்தென் மாறைவெற்போ
நுகத்திற் பகலனை யாய்தன்மை யேது நுவலெனக்கே. (048)
(இ – ள்.) நின்னாற் காணப்பட்ட முகத்தில் அம்பு போன்ற கண் இரண்டுடையார்க்கு இருப்பிடம், பெருமை பொருந்திய கடலகத்திற் பிறந்த தாமரையோ? பகைவர் தமக்கு மகநாளில் வந்த சனியையொக்கும் சந்திரவாணன் தென்மாறை வெற்போ? உழும் ஏர்ப்பெயலிற் பிணித்த நுகத்தின் நடுப்போன்ற தலைவனே! அவர்க்கு இலக்கணம் யாது? அறிய எனக்குச் சொல்வாயாக என்றவாறு.
பகழி - ஆகுபெயர். மூரி - பெருமை. முந்நீர் - கடல். அரவிந்தம் - தாமரை. அடையார் - பகைவர்.
மகத்திற் சனி வருங்கால் உலகில் தீமை பயத்தலால், 'அடையார் தமக்கு மகத்திற் சனியன்ன சந்திரவாணன்' எனக் கூறியது;
[1]'மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்'
என்று, சுந்தரழர்த்தி சுவாமிகள் ஓதியவாற்றானும் உணர்க. 'நுகத்திற் பகலனையாய்' என்றது, நடுவன்றி ஓர்பக்கஞ் சாயின் அவ் விடத்திற் பாரமுறைக்கும், நடுவாகின் சமனாயிருக்கும் ஆதலான், இவனும் நடுவுநிலைமையை யுடையவன் என்று கூறப்பட்டது.
-----
[048-1] திருவொற்றியூர்த் தேவாரம், செ. (௧) 1.
----------
தன்மை - இலக்கணம். நுவலல் - சொல்லுதல். ஓகாரம் இரண்டும் வினா.
---------- (048. எவ்விடத் தெவ்வியற்றென்றல் - முற்றும்) ----------
049. அவனஃ திவ்விடத் திவ்வியற்றென்றல் :
அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்றென்றல் என்பது, தலைவன் என்னாற் காணப்பட்ட உரு இவ்விடத்து இவ்வியலை யுடை யது என்று பாங்கற்குக் கூறல்.
கனமே குழல்செங் கயலே விழிமொழி கார்க்குயிலே
தனமே முகையென் தனிநெஞ்ச மேயிடை தன்பகைக்கு
வனமே யருளிய வாணன்றென் மாறை மணிவரைசூழ்
புனமே இடமிங்ங னேயென்னை வாட்டிய பூங்கொடிக்கே. (049)
(இ - ள்.) இவ்வாறு என்னை வாட்டிய பூங்கொடி போல்வாட்கு இருப்பிடம், தன் பகைவர்க்குக் காடே யிடமாகக் கொடுத்த வாணனது தென்மாறை நாட்டு முத்தத்தையீனும் மூங்கில் சூழ்ந்த தினைப்புனமே; குழல் முகிலே; விழி செவ்வரி பொருந்திய கயலே; மொழி கருங்குயிலே; தனம் முகையே; இடை என் தனிமையாகிய நெஞ்சமே என்றவாறு.
கனம் - முகில். கயல் - மீன். தனம் - முலை. முகை - மொக்குள். மணி - முத்தம். வரை - மூங்கில். புனம் - தினைப்புனம். இங்ஙனம் - இவ்வாறு. பூங்கொடி - ஆகுபெயர்.
'கார்க்குயிலே மொழி' எனவும், 'முகையே தனம்' எனவும் மாறுக. 'இங்ஙனே' என்புழி ஏகாரமும் 'பூங்கொடியே' என்புழி ஏகாரமும் ஈற்றசை; ஏனைய தேற்றம்.
'தனிநெஞ்சம்' என்றது வேட்கைப் பாரத்தைச் சுமந்து நைந்ததனால் அந்நெஞ்சம், முலைப்பாரத்தைச் சுமந்து நைந்த இடைக்கு உவமமாயிற்று. வரை கண்களை யுடைமையின் ஆகுபெயரான் மூங்கிற்குப் பெயராயிற்று. வரை மலையாகாதோ எனின், ஆகாது. என்னை, மேற்கூறும் பாங்கன் இறைவனைத் தேற்றுஞ் செய்யுட்கண், 'கழைவளர் சாரல்' என்றமையான், இவ்விடத்து மூங்கிலென்றே பொருள்கூற வேண்டுவதாயிற்று;
[1]'மால்வரை நிவந்த சேணுயர் வெற்பின்'
எனக் கூறியதனான் உணர்க.
-----
[049-1] திருமுரு. - (௧௨) 12.
----------
---------- (049. அவனஃ திவ்விடத் திவ்வியற்றென்றல் - முற்றும்) ----------
050. பாங்கன் இறைவனைத்தேற்றல் :
பாங்கன் இறைவனைத் தேற்றல் என்பது, இவ்வாறு நீ வருந்தா தொழிக, நீ சொன்ன குறியிடத்துச் சென்று தலைவியைக் கண்டு யான் வருகின்றேன் என்று தேற்றுதல்.
மழைவளர் மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பின்
இழைவளர் வார்முலை யேரிளந் தோகையை யிக்கணம்போய்க்
கழைவளர் சாரலிற் கண்டுனை யான்வந்து காண்பளவும்
தழைவளர் தாரண்ண லேதணி வாய்நின் தகவின்மையே. (050)
(இ – ள்.) மலரோடுந் தழைகலந்து நீண்ட மாலையை யுடைய இறைவனே! முகில் துஞ்சும் மாளிகை நெருங்கிய மாறைநாட்டு வரோதயனாகிய வாணனது வெற்பில், அணிக்கியலுங் கச்சுப் பொருந்திய முலையழகுடைய இளந்தோகை போல்வாளை நீ கூறிய குறியிடமாகிய மூங்கில் வேலியாய் வளர்ந்த புனத்தில், இக்கணம் போய்க் கண்டு உனை யான் மீண்டுவந்து காணுமளவும் நினது வருத்தம் ஒழிவாய் என்றவாறு.
மழை - முகில். இழை - ஆபரணம். வார் - கச்சு. ஏர் - அழகு. தோகை - ஆகுபெயர். சாரல் - ஆகுபெயர்; என்னை, தலைவன் குறி கூறியது, 'புனமே யிடம்' என்றதனால் என்று உணர்க. இங்ஙனம் மூங்கில் வேலிப்புனம் என்று அதிகாரப்படக் கூறியவாறென்னை யெனின், இக்கிளவிக் கடுத்த கிளவி 'குறிவயிற்சேறல்' என்றலின், தலைவி யிருக்குமிடமுங் குறியென்றலின், அக்குறியிற் குறியிட மெல்லாம் ஒன்றாய் வருதல் விதியாதலான், 'மூங்கிற்புனம்' என்று அதிகாரப்பட்டவாறு உணர்க. அன்றியும் வரைவு கடாவுதலில், [1]‘இரவுவருவானைப் பகல் வருகென்றல்' என்னுங் கிளவிச் செய்யுளில், 'கழைவிளை யாடுங் கடிபுனங் காத்தும்' என்று பாங்கி கூறிய வதனானும், இச்செய்யுளில் புனங் கூறுமிட மெல்லாம் மூங்கிலடையாளமன்றி வேறோர் அடையாளங் கூறுவது இன்றென உணர்க.
-----
[050-1] த - கோவை. செய்யுள் (௨௩௮) 238.
----------
தார் - மாலை. மலராற் கட்டுதல் மாலையாகலான் மலர் கூறாது, தழை யிடையிடையே கட்டுதலின் தழை கூறினார். அண்ணல் - இறைவன். தணிதல் - ஒழிதல். தகவின்மை - வருத்தம். முன் வளர் இரண்டுங் கண்வளர்தல். பின் வளர் இரண்டும் நீடல். 'கழைவளர் சார லிக்கணம் போய்' என மாறுக. 'மீண்டு' என்பது அவாய்நிலையான் வந்தது.
---------- (050. பாங்கன் இறைவனைத்தேற்றல் - முற்றும்) ----------
051. குறிவயிற் சேறல் :
குறிவயிற்சேறல் என்பது, தலைவன் கூறிய குறியிடத்துத் தலைவியைக் காணப் பாங்கன் போதல்.
பாரித்த திண்மையெம் மண்ணலுண் ணீரைப் பருகிநின்று
பூரித்த செவ்விள நீர்களுந் தாங்கியப் பூங்கொடிதான்
வாரித்த லம்புகழ் வாணன்தென் மாறை வரைப்புனஞ்சூழ்
வேரித்த டம்பொழில் வாய்விளை யாடுங்கொல் மேவிநின்றே. (051)
(இ - ள்.) நெஞ்சமே! தலைவன் கூறிய அப்பூங்கொடிதான், கடல் சூழ்ந்த நிலவுலகம் புகழும் வாணனது தென்மாறைநாட்டு மூங்கில் வேலியை யுடைய தினைப்புனஞ் சூழ்ந்த மணம் பொருந்திய பெரிய சோலையிடத்துப் பொருந்தி நின்று, வீரமில்லாதார்க்கும் வீரத்தைப் பிறப்பித்த எம் அண்ணலது உள்ளத்துள்ள கலையறிவாகிய நீரைப்பருகி, நிலைகொண்டு விம்மிய செவ்விளநீர் போன்ற முலைகளையுந் தாங்கி, விளையாடுமோ என எண்ணிக்கொண்டு சென்றான் என்றவாறு.
பாரித்தல் - பிறப்பித்தல். திண்மை - வீரம். உண்ணீர் - உள்ளத்துள்ள கலையறிவு. பூரித்தல் - விம்முதல். உம்மை - அசை. வாரி - கடல். தலம் - நிலவுலகம். வரை - மூங்கில். வேரி - மணம். தடம் பொழில் - பெரியசோலை. கொல் - ஐயம். நெஞ்சம் - முன்னிலை யெச்சம். 'வரைப்புனம்' என்பது வரைக்கட்புனம் என அமையாதோ வெனின், இவ்விடத்து இவ்வியற்றென்னுஞ் செய்யுளில் 'மணிவரை சூழ்புனம்' எனவும், பாங்கன் இறைவனைத் தேற்றுஞ் செய்யுளில் 'கழைவளர்சாரல்' எனவும், இச் செய்யுளில் 'வரைப் புனம்' எனவும் மூங்கிலே யதிகாரப்பட்டு வருதலின் மலையாகா தென்க.
---------- (051. குறிவயிற் சேறல் - முற்றும்) ----------
052. இறைவியைக் காண்டல் :
கானேய் அளகங் கரும்புய லேயியல் கார்மயிலே
மானே விழிமுக மாமதி யேதஞ்சை வாணன்வெற்பில்
தேனேய் தொடையலச் சேயனை யான்சொன்ன சேயிழையாள்
தானே இவளிது வேஇட மாகிய தண்புனமே. (052)
(இ – ள்.) நெஞ்சமே! தஞ்சைவாணன் வெற்பிடத் திருக்கும் முருகக்கடவுளனைய வண்டு பொருந்திய மாலையை யுடைய எம் இறைவன் சொன்ன இடமாகிய தண்புனம் இதுவே; கருமையாகிய புயலே மணம் பொருந்திய அளகபாரமா யிருக்கின்றது; கார்காலத்து மயிலே இயலா யிருக்கின்றது; மானே விழியா யிருக்கின்றது; நிறைமதியே முகமா யிருக்கின்றது; ஆதலால், அச் சேயிழையாள்தான் இவளே என்றவாறு.
கான் - மணம். எய்தல் - பொருந்துதல். இயல் - சாயல். கார் - கார்காலம். விழி - கண். மாமதி - நிறைமதி. தேன் - வண்டு. தொடையல் - மாலை. சேய் - முருகக்கடவுள்.
'கரும்புயலே கான் ஏயளகம்' எனவும், 'கார்மயிலேயியல்' எனவும், 'மதியே முகம்' எனவும், 'தஞ்சைவாணன் வெற்பிற்சேய்' எனவும் மாறுக. ஈற்றசை ஏகாரமொன்றும் ஒழித்து, ஏனைய ஏகாரமெல்லாந் தேற்றத்தின்கண் வந்தன. நெஞ்சம் - முன்னிலை யெச்சம். 'அச்சேயனையான் சொன்ன' என்பது இடைநிலை விளக்கு.
---------- (052. இறைவியைக் காண்டல் - முற்றும்) ----------
053. இகழ்ந்ததற்கிரங்கல் :
இகழ்ந்ததற்கு இரங்கல் என்பது, தலைவி பேரழகைக்கண்டு பாங்கன் காணா முன்னம் எம்பெருமானை அறிவின்றி இகழ்ந்தனம் என்று இரங்கிக்கூறல்.
கொலைகா லயிற்படை நேரியர் கோன்அகங் கோடவங்கைச்
சிலைகால் வளைத்துத் திருத்திய வாணன்தென் மாறைவெற்பில்
முலைகால் கொளக்கண் டிளைத்தநுண் நூலிடை முற்றிழைகண்
வலைகால் பிணிப்பவந் தார்வருந் தாரல்லர் மாலுழந்தே. (053)
(இ – ள்.) நெஞ்சமே! கொல்லுந் தொழிலை உமிழ்கின்ற வேற்படையை யுடைய சோழனது உள்ளம் மாறுபட அழகிய கைச்சிலையைக் காலால் வளைத்து, அம் மாறுபாட்டைத் திருத்திய வாணனது தென்மாறை வெற்பிடத்து, முலையிடங் கொள்ளக் கண்டதனால் இளைத்த நுண்ணிய நூல்போன்ற இடையையும், அணியும் அணியினிற் றாழ்வின்றி முற்றுப்பெற்ற அணியையும் உடையாளது கண்ணாகிய வலை காலிற் பிணிப்ப வந்தவர் ஆசை நோயை அனுபவித்து வருந்தாரல்லர் என்றவாறு.
எனவே, வருந்துவா ரென்றவா றாயிற்று. கொலை - ஆகுபெயர். காலுதல் - உமிழ்தல். அயிற்படை - வேற்படை. நேரியர் கோன் - சோழன். அகம் - உள்ளம். கோடல் - மாறுபடல். அம் - அழகு. 'கால்வளைத்து' என்புழி வேற்றுமைத் தொகை. திருத்தல் - செவ்விதாக்கல். கால்கொளல் - இடங்கொளல். முற்றிழை - அன்மொழித்தொகை. பிணித்தல் - கட்டல். உழத்தல் - அனுபவித்தல் :
[1]'கடலன்ன காமம் உழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.'
என்னுங் குறளானு முணர்க. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
-----
[053-1] குறள். நாணுத்துறவுரைத்தல் - (௭) 7.
----------
---------- (053. இகழ்ந்ததற்கிரங்கல் - முற்றும்) ----------
054. தலைவனை வியத்தல் :
தலைவனை வியத்தல் என்பது, பாங்கன் தலைவி கண்வலையிற் சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்து வந்தது வியப்பென்று அதிசயித்துக் கூறல்.
தலங்கா வலன்தஞ்சை வாணன்முந் நீர்பொருந் தண்பொருந்தத்
திலங்கார வல்வடக் கொங்கைவெற் பாலிணை நீலவுண்கண்
பொலங்காம வல்லி கடைந்தவப் போது புடைபெயர்ந்து
கலங்கா திருந்ததெவ் வாறெம்பி ரான்தன் கலைக்கடலே. (054)
(இ - ள்.) நெஞ்சமே! இரண்டு நீலம்போன்ற உண் கண்ணையுடைய பொன்மயமாகிய காமவல்லிக்கொடி போன்றவள், உலகிற்குக் காவலனாகிய தஞ்சைவாணனது கடலை யெதிருந் தண்ணிய பொருநை யாற்றின்கண் பிறந்தொளிரும் முத்துக்களைக் கோத்த வலிய வடம்பூண்ட கொங்கையாகிய வெற்பினாலே கடைந்த அப்போது, அசைந்து எம்பிரான்றன் கலைக்கடலானது கலங்காதிருந்த தெவ்வாறு என்றவாறு.
எனவே, எனக்கிது வியப்பா யிருந்ததென்றவா றாயிற்று. தலம் - உலகு. பாதலநீர், பூதலநீர், மீதலநீர் இம்மூன்று நீருங் கூடியதால், கடல் முந்நீர் எனப் பெயராயிற்று. பொருதல் - எதிர்தல்.
பொருந்தம் - பொருநையாறு; பொருந் என்னும் தொழிற் பெயர் அஃறிணை யாதலின் ஐகாரவீறு பெற்றது. ஆரம் - முத்து. பொருநையாறுங் கடலும் எதிர்ந்து கலந்தவிடத்துப் பிறத்தலான் 'பொருந்தத்து இலங்கு ஆரம்' என்றார். பொலம் - பொன்;
[1]'பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுண் மருங்கிற் றொடரிய லான.’
என்பதனாலறிக.
-----
[054-1] தொல். எழு. புள்ளிமயங்கியல் - (௬௧) 61.
----------
காமவல்லி - கற்பகத்திற் படருங் கொடி : ஆகுபெயர். கடைதல் - ஈண்டு அறிவைச் சுழலச் செய்தல். புடைபெயர்தல் - அசைதல். கலைக்கடல் - கல்வியறிவாகிய கடல். நெஞ்சம் - முன்னிலை யெச்சம்.
---------- (054. தலைவனை வியத்தல் - முற்றும்) ----------
055. தலைவியை வியத்தல் :
தலைவியை வியத்தல் என்பது, தலைவியைப் பாங்கன் வியந்து கூறல்.
வெங்கோல் மழைபொழி வானவர் போர்வென்ற மீனவர்தம்
செங்கோல் முறைமை செலுத்திய வாணன்தென் மாறைவெற்பில்
நங்கோல் மெலிய நலிகின்ற காமவெந் நஞ்சினையிப்
பைங்கோல் மணிவளை யார்தணி யாரல்லர் பார்வைகொண்டே. (055)
(இ – ள்.) நெஞ்சமே! வெவ்விய அம்புமாரியைப் பொழிகின்ற சேரரது போரை வென்ற மீனவருடைய நீதிமுறைமையை எண்டிக்குஞ் செலுத்திய வாணனது தென்மாறை வெற்பிடத்திருக்கின்ற நம் பெருமான் மெலிவடைய வருத்தஞ் செய்யாநின்ற காமமாகிய வெவ்விய விடத்தை இந்தப் பசியகோலுடைய நல்லவளையை யுடையார் தமது அருட்பார்வை கொண்டு தணிப்பார் என்றவாறு.
வெங்கோல் - அம்பு. வானவர் - சேரர். மீனவர் - பாண்டியர். இறைமைத்தன்மை யுடையராதலால் உயர்த்துக்கூறியது. செங்கோல் - செவ்வியநீதி. நலிதல் - வருத்தல். கோல் - வளைபிற்புள்ளி, கோலம் என்பது கடைக்குறையாய்க் கோல் என நின்றதென்பாரு முளர். நெஞ்சம் - முன்னிலை யெச்சம்.
இச் செய்யுளில் வியத்தற்பொருண்மை வந்தது எங்ஙன மெனின், எம்பெருமான் இறந்துபடாமற் காத்து இன்றுங் குறியிடத்துத் தனித்து வந்து நிற்றலின், இவர் பார்வைகொண்டு தணிப்பாரெனக் கூறியது வியப்பின்மேல் நின்றது.
இவ்வைந்து பாட்டும் பாங்கன் தன்னுட் கூறியது.
---------- (055. தலைவியை வியத்தல் - முற்றும்) ----------
056. தலைவன் றனக்குத் தலைவிநிலை கூறல் :
தலைவன் றனக்குத் தலைவிநிலை கூறல் என்பது, பாங்கன் தலைவி குறியிடத்துத் தனித்து நிற்கின்ற நிலையைக் கண்டுவந்து தலைவற்குக் கூறல்.
வளங்கனி மாறை வரோதயன் வாணன் மலயவெற்பா
உளங்கனி காத லுடனின்ற தானின் னுடலமெல்லாம்
களங்கனி போலக் கருகிவெண் கோட்டுக் களிறுண்டதோர்
விளங்கனி போல்வறி தாநிறை வாங்கிய மென்கொடியே. (056)
(இ – ள்.) வளம் பழுத்த மாறைநாட்டு வரோதயனாகிய வாணனது மலையவெற்பனே! நின்னுடலமெல்லாங் களம் பழம்போலக் கருக, வெண்ணிறக் கோடுடைய யானை யுண்டதோர் விளங்கனிபோல் இல்லாமையுடையதாகி நின்று, நிறையாகிய குணத்தைக் கொண்ட மெல்லிய கொடியானது, நீ சொன்ன குறியிடத்து உளங்கனிந்த காதலுடன் நின்றதாதலால், நீ அக்குறியிடத்துச் செல்வாயாக என்றவாறு.
கனிதல் - பழுத்தல். கருக என்பது கருகி யெனத் திரிந்து நின்றது. என்னை,
[1]'செயிர்த்தவள் சிவந்து நோக்கிச் சீறடி சென்னி சேர்த்தி
அயிர்ப்பதென் பணிசெய் வேனுக் கருளிற்றுப் பொருள தென்ன
உயிர்ப்பது மோம்பி யொன்று முரையலை யாகி மற்றிப்
பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு பகட்டெழின் மார்ப என்றாள்.'
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளில், 'நோக்க' என்பது, 'நோக்கி' எனத் திரிந்து நின்றதுபோற் கொள்க. 'மின்கொடியே' என்று பாடம் ஓதுவாரும் உளர். வறிதா - இல்லாமையை யுடையதாக. வெற்பின் என்று பாடமோதி, 'இறைவா' என்பது முன்னிலை யெச்சமென்று பொருள் கூறுவாருமுளர்.
-----
[056-1] சிந்தா. விமலை - (௧0௧) 101.
----------
---------- (056. தலைவன் றனக்குத் தலைவி நிலை கூறல் - முற்றும்) ----------
057. தலைவன் சேறல் :
தலைவன் சேறல் என்பது, பாங்கன் சொற்படி தலைவன் குறியிடத்துப் போதல்.
புறங்கூ ரிருட்கங்குல் போன்றக நண்பகல் போன்றபொங்கர்
நிறங்கூர் படைக்கண்ணி நின்றன ளேநிழ லைச்சுளித்து
மறங்கூர் களிற்றண்ணல் வாணன்தென் மாறையில் வாணுதலாள்
அறங்கூர் மனத்தரு ளானின்ற தாமென தாருயிரே. (057)
(இ – ள்.) நெஞ்சமே! தன்னிழலைப் பிறிதோர் யானை யெனக் கருதித் திரும்பிக் கோபமிகுங் களிற்றையுடைய அண்ணலாகிய வாணன் தென்மாறை நாட்டின் புறத்தில் மிகுந்து இருண்ட கங்குலையொத்து, அகத்தில் மாணிக்கங்களின் ஒளியான் நல்ல பகல்போன்ற சோலையிடத்து, வாணுதலாளாகிய வொளி மிகுந்த படைக்கண்ணி நின்றனளே! அந்நின்ற தோற்றம் முறைமை கூர்ந்த மனத் தருளினாலே எனது ஆருயிர் நின்றதாம் என்றவாறு.
கூர்தல் நான்கும் மிகுதல். தழைகளினது செறிவால் புறம் கூர் இருட் கங்குல் போன்றது. பொங்கர் - சோலை. நிறம் - ஒளி. படைக்கண்ணி - உவமைத் தொகை. சுளித்தல் - திரும்பல். மறம் - கோபம். களிறு - யானை. அறம் - முறைமை. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
---------- (057. தலைவன் சேறல் - முற்றும்) ----------
058. தலைவியைக் காண்டல் :
பாகையுந் தேனையும் போன்மொழி யார்தமிழ்ப் பைந்தொடையும்
வாகையுஞ் சூடிய வாணன்தென் மாறை வளமுமவன்
ஈகையும் போலு மெழிலியை நோக்கி யிரங்குபுள்ளும்
தோகையும் போல்நின்ற வாதனி யேயிந்தச் சோலையிலே. (058)
(இ – ள்.) நெஞ்சமே! இந்தச் சோலையிடத்துத் தனியே என் வரவை நோக்கிப் பாகையுந் தேனையும் போன்ற மொழியார் நின்ற முறைமை, தமிழ்மாலையும் வாகைமாலையுஞ் சூடிய வாணனது தென்மாறைநாட்டு வளமும் அவன் கொடையும் ஒக்கும், மேகத்தை நோக்கி யிரங்குஞ் சாதகப்புள்ளையும் மயிலையும் ஒக்கும் என்றவாறு.
'மொழியார் நின்றவா' என மாறுக. தமிழ்ப்பைந் தொடை - தமிழ்மாலை. வாகை - ஆகுபெயர். வளம் - செழுமை. வளமும், ஈகையும் எல்லாருக்கும் உபகரித்தலான் மேகம் ஒப்பாயிற்று. ஈகை - கொடை. எழிலி - மேகம். நோக்கி - வரவு கருதி. இரங்கல் - ஒலித்தல். புள் - சாதகப் புள். தோகை - மயில். நெஞ்சம் - முன்னிலையெச்சம். வாகை மாலை - வென்றார் சூடுவது. பாகையும் தேனையும் போன் மொழியார், நின்றவாறு இரங்கு புள்ளுந் தோகையும் ஒப்பு என்று பயனிலை கொண்டவாறு உணர்க.
---------- (058. தலைவியைக் காண்டல் - முற்றும்) ----------
059. கலவியின் மகிழ்தல் :
கலவியின் மகிழ்தல் என்பது, புணர்ச்சியின் மகிழ்தல்.
யாரும்பர் தம்பத மென்போல வெய்தின ரிம்பரம்பொன்
வாருந் துறைவையை சூழ்தஞ்சை வாணன் மலயவெற்பில்
தேருந் தொறுமினி தாந்தமிழ் போன்றிவள் செங்கனிவாய்
ஆருந் தொறுமினி தாயமிழ் தாமென தாருயிர்க்கே. (059)
(இ – ள்.) நெஞ்சமே ! அழகிய பொன்னை யொழுக்குந் துறைகளையுடைய வையையாறு சூழ்ந்த தஞ்சைவாணனது பொதிய வெற்பில், ஆராயுந்தோறும் ஆராயுந்தோறுந் தெவிட்டாத இன்பமாந் தமிழையொத்தவளது செங்கனி வாயிலூறிய நீர் நுகருந்தோறும் தெவிட்டாமல் இன்பமாய், எனது ஆருயிர் இறந்துபடாமைக்குக் காரணமாகிய அமிழ்தாகின்ற தாதலால், இவ்வுலகில் உம்பர்தம் பதத்தை என்போல எய்தினர் யார்? யானொழிய ஒருவருமில்லை என்றவாறு.
உம்பர் - தேவர். இம்பர் - இவ்வுலகு. வார்தல் - ஒழுகுதல். தேர்தல் - ஆராய்தல். செங்கனிவாய் - ஆகுபெயர். ஆர்தல் - நுகர்தல். ஆருயிர் - அரிய வுயிர். மலயவெற்பு - பொதிய வெற்பு. 'மலய வெற்பிற் றமிழ்' என்றது அவ்வெற்பில் தமிழ் பிறத்தலான் என்க. இறப்பைத் தீர்த்தலால் அமிழ்தம் என்றது. 'வாணன் மலயவெற்பு' என்புழி ஆறனுருபு நிலப்பிறிதின் கிழமைப் பொருளாய்த் தொக்கது. நெஞ்சம் - முன்னிலையெச்சம்.
---------- (059. கலவியின் மகிழ்தல் - முற்றும்) ----------
060. புகழ்தல் :
புகழ்தல் என்பது, புகழ்ந்து கூறல்.
தழல்கண்ட தன்ன கலிவெம்மை யாறத்தன் தண்ணளியாம்
நிழல்கண்ட சந்திர வாணன்தென் மாறை நிழல்பொலியுங்
கழல்கண்ட தன்ன கதிர்முத்த மாலிகைக் காரிகைநின்
குழல்கண்ட பின்னல்ல வோஅற னீருட் குளித்ததுவே. (060)
(இ – ள்.) தழலைக் கண்டதுபோன்ற கலியினது வெப்பந் தணியத் தனது அருளாகிய நிழலாக்கிக்கண்ட சந்திரவாணனது தென்மாறை நாட்டிற் றோன்றும் ஒளி மிகுந்த கழற்காய் போல, பரிதாகிய கதிரெறிக்கும் முத்துமாலிகையை யுடைய காரிகை, நினது கூந்தலைக் கண்ட பின்னல்லவோ முன் வெளிப்பட்டிருந்த அறலானது நாணி இப்போது நீருட் குளித்திருக்கின்றது என்றவாறு.
தழல் - நெருப்பு. கலி - கலியுகம். வெம்மை - வெப்பம். அளி - அருள். நிழல் - ஒளி. பொலிதல் - மிகுதல். கழல் - ஆகுபெயர். கதிர் - ஒளி. காரிகை - அண்மைவிளி. குழல் - கூந்தல். அறல் - கருமணல். குளித்தல் - மூழ்கல். 'நின்குழல்' என்புழி ஆறாம் வேற்றுமை யுறுப்புத் தற்கிழமைக்கண் வந்தது. 'அல்லவோ ' என்புழி ஓகாரம் எதிர்மறை.
---------- (060. புகழ்தல் - முற்றும்) ----------
061. பாங்கியொடு வருகெனப் பகர்தல் :
பாங்கியொடு வருகெனப் பகர்தல் என்பது, இனி நீ வருங்கால் நின் உயிர்ப்பாங்கியொடு வருக எனக் கூறல்.
என்கா தலினொன் றியம்புகின் றேனிங் கினிவருங்கால்
நின்கா தலியொடு நீவரல் வேண்டு நிலமடந்தை
தன்கா தலன்தஞ்சை வாணன்தென் மாறைத்தண் தாமரைவாழ்
பொன்காதல் கொண்டு தொழுஞ்சிலம் பாரடிப் பூங்கொடியே. (061)
(இ – ள்.) நிலமடந்தை தனக்குக் கணவனாகிய தஞ்சைவாணனது தென்மாறை நாட்டிலிருக்கும் தண்ணிய தாமரையில் வாழுந் திருமகள் ஆசைகொண்டு பணியுஞ் சிலம்பார்ந்த அடிகளையுடைய பூங்கொடிபோல்வாய்!எனது காதல் மிகுதியால் ஒரு சொல் சொல்லுகின்றேன், இக்குறியிடத்து இனிமேல் வருங்கால் நின்னிடத்திற் காதலுடையவளாகிய உயிர்ப்பாங்கியொடு நீ வருதலைச் செய்ய வேண்டும் என்றவாறு.
காதல் - ஆசை. இயம்பல் - சொல்லல். காதலி - உயிர்ப்பாங்கி. காதலன் - கணவன். பொன் - திருமகள். பூங்கொடி - ஆகுபெயர். 'நிலமடந்தைதன் காதலன்' என்றது, பூவைநிலை யென்னும் புறப்பொரு ளிலக்கணத்தால், வாணனை மாயோனாகக் கூறியவாறு உணர்க. என்னை,
[1]'மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்.'
என்னும் வெட்சிக்கரந்தையிற் கூறிய சூத்திரத்தான் உணர்க.
-----
[061-1] தொல். பொருள். புறத்திணையியல் - (௫) 5.
----------
---------- (061. பாங்கியொடு வருகெனப் பகர்தல் - முற்றும்) ----------
062. பாங்கிற் கூட்டல் :
பாங்கிற் கூட்டல் என்பது, தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்தல்.
என்னூடு நின்ற விளங்கொடி யேசங்க மேய்ந்துகுழாந்
தன்னூடு செல்லுஞ் சலஞ்சலம் போல்தஞ்சை வாணன்வெற்பில்
பொன்னூடு செல்லும் புகழ்மணி போனின் புடையகலா
மின்னூடு நுண்ணிடை யாருட னீசென்று மேவுகவே. (062)
(இ - ள்.) என்னுள்ளே நிலையாய் நிற்கின்ற இளங் கொடிபோல்வாய்!சங்கக்கூட்டத்துள்ளே பொருந்திச் செல்லா நிற்குஞ் சலஞ்சல மென்னுஞ் சங்கு போலவும், தஞ்சைவாணனது வெற்பிடத்துப் பொன்னுள்ளே செல்லும் மாணிக்கம் போலவும், நின் பக்கம் அகலாத மின் பிணங்கும் நுண்ணிய இடையாராகிய ஆயக்கூட்டத்துடன் நீ போய்ப் பொருந்துக என மாலை சூட்டித் தலைவியை விடுத்தான் என்க என்றவாறு.
இளங்கொடி – ஆகுபெயர். 'குழாந் தன்னூடேய்ந்து செல்லும்' எனமாறுக. இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி; இடம்புரி ஆயிரஞ் சூழ்ந்தது வலம்புரி; வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம். புகழ்மணி - மாணிக்கம். சலஞ்சலம் சங்குகளிற் சிறத்தலானும், மாணிக்கம் மணிகளிற் சிறத்தலானும் உவமை கூறியதென்று உணர்க. புடை - பக்கம். ஊடல் - பிணக்கம். மேவுதல் - பொருந்தல்.
இக்கிளவியில் மாலைசூட்டித் தலைவியை விடுத்தானென்பது; ஆயின், இச்செய்யுளில் முல்லைமாலை சூட்டி விடுத்தானென்பது இல்லையாலெனின், தலைவி ஆயக்கூட்டத்திற் சார்ந்தவுடன் தலைவியை நோக்கி, 'நினக்கு முல்லைமாலை சுனைப்புனல் சூட்டியவாறு நன்றால்' என்று பாங்கி கூறியவதனான் இங்ஙனங் கூறப்பட்டது. வரைவியலில் தலைவனைப் பாங்கி வாழ்த்தற் செய்யுளில்,
[1]'சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே'
என்றதனானும் அறிக.
-----
[062-1] தஞ்சைவாணன் கோவை - (௨௮௫) 285.
----------
இவற்றுள் முன்னைய மூன்றும் சார்தல், கேட்டல், சாற்றல் என்னும் மூன்றற்குரிய; 'பாங்கன்கழறல்' முதல், 'கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்' ஈறாகக் கூறிய நான்கும் எதிர்மறைக்குரிய; 'பாங்கன் தன் மனத்தழுங்கல்' முதல், 'தலைவன் தனக்குத் தலைவி நிலைகூறல்' ஈறாகக் கூறிய பதினொன்றும் நேர்தற்குரிய; ' தலைவன்சேறல்' முதல், 'புகழ்தல்' ஈறாகக் கூறிய நான்கும் கூடற்குரிய; 'தலைவன் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்த'லும், தலைவன் 'தலைவியைப் பாங்கிற்கூட்ட'லும் ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்குரிய எனக்கொள்க.
---------- (062. பாங்கிற் கூட்டல் - முற்றும்) ----------
1.08. பாங்கற்கூட்டம் முற்றிற்று
-------------------------
1.09. பாங்கி மதியுடன்பாடு (063-080)
அஃதாவது, தலைவி வேறுபாட்டைக் கண்டு புணர்ச்சியுண்மை அறிந்தாராய்ந்து தன்மதியை யுடன்படுத்தல்.
[1]'முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென்
றாங்குமூ வகைத்தே பாங்கிமதி யுடன்பாடு'
என்னுஞ் சூத்திரவிதியால் பாங்கிமதியுடன்பாடு மூவகைப்படும். அவற்றுள்,
-----
[1.09-1] அகப்பொருள் விளக்கம். களவியல் - (௨௨) 22.
----------
முன்னுறவுணர்தலாவது — தலைவி பாங்கற் கூட்டத்தின்கண் பாங்கியை நீங்கிச் சென்று தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து பாங்கி முன்னுற்றவழி, பாங்கி தலைவியது வேறுபாடு கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.
குறையுற உணர்தலாவது — பாங்கி தலைவன் தழையுங் கண்ணியுங் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக் கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.
இருவரு முள்வழி யவன்வர வுணர்தலாவது — தலைவியும் தானும் ஒருங்கிருந்துழி, தலைவன் அவ்வாறு வரக்கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.
1.09.1. முன்னுறவுணர்தல் :
[1]'நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியும்
செய்வினை மறைப்பும் செலவும் பயில்வுமென்
றிவ்வகை யேழினு மையமுற் றோர்தலும்.'
நாற்றமாவது — தான் பண்டு பயின்றறியாததோர் நாற்றம்.
தோற்றமாவது — கூட்டத்தாற் பிறந்ததோ ரழகு.
ஒழுக்கமாவது — தெய்வந்தொழாமை முதலியன.
உண்டியாவது — ஊண் பண்டையிற் சுருங்குதல்.
செய்வினை மறைத்தலாவது — தான்செய்யும் வினையைப் பாங்கிக்கு மறைத்தல்.
செலவாவது — ஆயத்தை நீங்கித் தனியே சேறல்.
பயில்வாவது — எப்பொழுதும் ஓரிடத்தே நிற்றல்.
இவ்வேழினானும் பாங்கி தலைவியை ஐயமுற்று ஆராய்தல். இவ்வேழினுள் இச்செய்யுள் தோற்றத்தால் ஆராய்கின்றது.
-----
[1.09.1-1] அகப்பொருள் விளக்கம். களவியல் - (௨௩) 23.
----------
063. தோற்றத்தாலாராய்தல் :
வண்டலை ஆயத் துடனயர்ந் தோவன்றி வண்டிமிர்பூந்
தண்டலை ஆரத் தழைகள்கொய் தோதஞ்சை வாணன்வெற்பில்
புண்டலை வேலினுங் கண்சிவப் பாரப் பொலஞ்சுனைத்தேன்
கொண்டலை நீர்குடைந் தோவிவண் மேனி குழைந்ததுவே. (063)
(இ - ள்.) நெஞ்சமே! இவள் மேனி குழைவுபட்டது, ஆயக்கூட்டத்துடன் வண்டலம் பாவையை வருந்திச் செய்தோ! அன்றி, வண்டு ஆரவாரிக்கும் பூஞ்சோலையிடத்துச் சந்தனத் தழைகள் கொய்தோ! அன்றித் தஞ்சைவாணனது வெற்பிடத்துப் புண்செய்யும் தலையையுடைய வேலினும் கண்சிவப்புப் பொருந்தப் பொன் விளையப்பட்ட சுனையினிடத்து மலைத்தேன் வந்துகூடக் கொண்டலையப்பட்ட நீருட் குளித்தோ! யாதோ! அறிகின்றிலேன் என்றவாறு.
வண்டல் - வண்டலம்பாவை. அயர்தல் - செய்தல். அன்றி - வினையெச்சக் குறிப்பு. இமிர்தல் - ஆரவாரித்தல். தண்டலை - சோலை. ஆரத்தழை - சந்தனத்தழை. பொலம் - பொன். குடைதல் - குளித்தல். குழைதல் - இளகுதல். ஓகாரங்களனைத்தும் ஐயத்தின்கண் வந்தன. நெஞ்சம் - முன்னிலை யெச்சம்.
[1]'அவ்வகை தன்னால் ஐயந் தீர்தல்'
அவ்வேழு வகையினாலும் புணர்ச்சியுண்டென்று கருதித் தலைவியிடத்து ஐயந் தீர்தல்.
-----
[063-1] அகப்பொருள் விளக்கம். களவியல் (௨௩) 23.
----------
---------- (063. தோற்றத்தாலாராய்தல் - முற்றும்) ----------
064. ஒழுக்கத்தா லையந்தீர்தல் :
திளைக்குந் திரைமே லுனக்குமுன் தோன்றலிற் செம்பொன்வெற்பை
வளைக்கும் பிரான்முடி வைகுத லாற்றஞ்சை வாணன்மண்மேல்
விளைக்கும் புகழ்போல் விளங்குத லாற்செக்கர் விண்பிறைகார்
தளைக்குங் குழற்றிரு வேதொழ வேதகுந் தன்மையதே. (064)
(இ – ள்.) காரைத் தன்னிடத்து நின்று நீங்காமல் தளைசெய்யுங் குழலையுடைய திருவே! நிரம்புங் கடலினிடத்து நினக்கு முன்னே தோன்றலானும், செம்பொன் மலையை வில்லாக வளைக்கும் சிவனது திருமுடியிடத் திருத்தலானும், தஞ்சைவாணன் புவியின்மேல் விளையச் செய்யும் புகழ்போல நாட்குநாள் மிக்காய் விளங்குதலானும், செவ்வானத்திடைத் தோன்றிய பிறை திங்கடோறுந் தொழுதல்போல் இன்றுந் தொழத்தகுந் தன்மைய தாதலான், நீ தொழுவாயாக என்றவாறு.
திளைத்தல் - நிறைதல். திரை - ஆகுபெயர். செம்பொன் வெற்பு - மேருமலை. பிரான் - சிவன். முடி - சடைமுடி. வைகுதல் - தங்குதல். செக்கர்விண் - செவ்வானம். கார் - கருநிறம்; மேகமெனினும் அமையும். தளைத்தல் - தடைசெய்தல்.
திரு இவ்வுருக்கொண்டு வந்து பிறந்தாள் என்னும் கருத்தால் 'திருவே' என்று கூறியது. இவள் கற்புக்கடன் பூண்டவளாதலான்,
[1]'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.'
என்னும் விதியினான் தொழாளாயினாள்; ஆகவே ஒழுக்கத்தினால் ஐயந்தீர்ந்தவா றாயிற்று.
-----
[064-1] குறள். வாழ்க்கைத்துணைநலம் - (௫) 5.
----------
இப்பால் பாங்கி தலைவியை நோக்கிக், 'கண்சிவந்தும் இதழ் வெளுத்தும் நுதல் குறுவெயர் வரும்பியும் இருத்தலால், இவ் வேறுபாடு நினக்கெற்றினாலாயது?' என்று வினாவுதலும், தலைவி, 'சுனையாடிப் போந்தேன்' அதனால் வந்தது என்று விடுத்தலும் இச்செய்யுளில் கவி கூறிற்றிலர்; யாதினாலெனின், அகப்பொருட் சூத்திரத்தில் இவ்விரண்டிற்குங் கிளவி கூறிற்றிலராதலா னென்க. அவர் கிளவி கூறாததற்குக் காரணம் என்னையெனின், சுருக்க நூலாதலிற் கூறிற்றிலர். விரிநூலிற் கூறியதுண்டோ வெனின், கூறியதுண்டு. என்னை, தொல்காப்பியத்தில் [2]'நாற்றமுந் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்தில் நச்சினார்க்கினிய ருரையில் தலைவி வேறுபாடு பாங்கி வினாயதற்குச் செய்யுள்,
'தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமால் ஐம்பாலு — மையுறுவல்
பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்
கென்னை யிதுவந்த வாறு.'
இதற்கு விடை : நின்னை நீங்கி மேதக்க சுனை கண்டு நெடுங் காலம் ஆடினேன், அதனான் ஆயிற்று என்னும்.
-----
[064-1] தொல். பொருள். களவியல் - (௨௩) 23.
----------
---------- (064. ஒழுக்கத்தா லையந்தீர்தல் - முற்றும்) ----------
065. அதற்குப் பாங்கி மெய்யினாற் பல்வேறு
கவர்பொருள் சொல்லி நாடலின் சுனை நயப் புரைத்தல் :
சுனைநயப்பு உரைத்தல் என்பது, மெய்யாயினது கூறி அக் கூறும் பொருளிற் பல்வேறு கவர்பொருள் சொல்லி ஆராய்தலின் சுனைநன்மையைக் கூறல்.
பூட்டிய வார்சிலை வீரரை வென்றெப் பொருப்பினுஞ்சீர்
தீட்டிய வாணன்தென் மாறையன் னீரிதழ்ச் செம்மையுமை
ஊட்டிய வாளின் கருமையுந் தான்கொண் டுமக்கிங்ஙனே
சூட்டிய வாறுநன் றால்முல்லை மாலை சுனைப்புனலே. (065)
(இ – ள்.) நாண்பூட்டிய வில் வீரரை வெற்றி கொண்டு குலமலைகள் எட்டினும் கீர்த்தியைப் பொறித்த வாணனது தென்மாறை நாட்டை யொப்பீர், நுமது இதழின் செம்மையும் மையூட்டிய வாள் போன்ற கண்ணின் கருமையும் தாவென வாங்கிக்கொண்டு உமக்கு இவ்வாறு கைம்மாறாகச் சுனைப்புனலானது முல்லை மாலையைச் சூட்டியவாறு நன்று என்றவாறு.
'வார் பூட்டிய' என மாறுக. வார் - நாண். பொருப்பு - குலமலை. சீர் - கீர்த்தி. தீட்டல் - எழுதல். ஊட்டல் - உட்கொள வைத்தல். வாள் - ஆகுபெயர். ஆல் - அசை.
தலைவன் பாங்கற் கூட்டத்தில் தலைவியைப் பாங்கிற் கூட்டும்போது நின் காதலியோடு நீ வருக எனக் கூறிக் கற்புடையவ ளென்றெண்ணி, கற்புடைய மகளிர் முல்லைமாலை சூடுவது இயல்பாதலான், முல்லைமாலை சூட்டி விடுத்ததனால், தலைவியும் தலைவன் சொல்லைக் கடவாளாதலால், தன் கற்புடைமை தன் உயிர்ப்பாங்கி யறியவேண்டுமென்று கருதி, தலைவன் சூட்டிய முல்லை மாலையை மறையாது வந்தாளாதலால் அதுகண்டு கூறினாளென்று உணர்க.
தலைவன் சூட்டினான் என்பது என்னை யெனின்,
[1]'ஆணெடுந் தானையை யாற்றுக் குடிவென்ற கோன்பொதியில்
சேணெடுங் குன்றத் தருவிநின் சேவடி தோய்ந்ததில்லை
வாணெடுங் கண்ணுஞ் சிவப்பச்செவ் வாயும் விளர்ப்பவண்டார்
தாணெடும் போதவை சூட்டவற் றோவத் தடஞ்சுனையே.'
என்னும் இறையனார் அகப்பொருளில் [1]'முன்னுறவுணர்தல்' என்னுஞ் சூத்திர வுரையில் இக்கிளவிக்குப், 'போதவை சூட்ட வற்றோ வத்தடஞ்சுனை' என்றமையான், தலைவன் போது சூட்டினா னென்று உணர்க.
-----
[065-1] இறையனார் அகப்பொருள் - (௭) 7.
----------
முல்லைமாலை சூட்டி வந்ததைக் கண்டு வினாவினாளென்று தலைவிக்குத் தோன்றவும், இதழ் வெண்மைக்கும், கண் செம்மைக்கும், முல்லைமாலை யுவமையாகப் பாங்கி கருதிக் கவர்படுபொருளாய்ச் சொல்லலின், மெய்யினாற் பல கவர்படுபொருள் சொல்லி நாடலாயிற்று. நாடல் - ஆராய்தல். இதழ் வெளுத்தல் அதரபானத்தாலும், கண் சிவத்தல் இறுகத் தழுவுதலானும் தோன்றியவென்று உணர்க.
---------- (065. அதற்குப் பாங்கி மெய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலின் சுனை நயப் புரைத்தல் - முற்றும்) ----------
066. சுனைவியந்துரைத்தல் :
சுனை வியந்துரைத்தல் என்பது, அச்சுனை வியப்பை யானும் ஆடிக்காண்பேன் என்று கூறல்.
மறலா யெதிர்ந்த மறமன்னர் வேழ மலையெறிவேல்
திறலார் முருகன் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவையை
அறலார் குழலாய் நுதற்குறு வேர்வு மழகுநின்போற்
பெறலா மெனிற்குடை வேனடி யேனும் பெருஞ்சுனையே. (066)
(இ - ள்.) மதிமயக்கமா யெதிர்ந்த வீரமன்னரது யானையாகிய மலையை யெறியும் வேலால் (முன் மலையை யெறிந்த) வெற்றியார்ந்த முருகனை யொக்குஞ் செழுந் தஞ்சைவாணனது தென்மாறை நாட்டில் வரும் வையை யாற்றிலிருக்கும் அறல் போன்ற குழலையுடையாய், நுதற்குறுவேர்வும் அழகும் நின்னைப்போற் பெறலாமெனின், அடியேனும் பெருஞ்சுனையை ஆடிக்காண்பேன் என்றவாறு.
மறல் - மயக்கம். மற மன்னர் - வீர மன்னர். திறல் - வெற்றி. அறல் - கருமணல். குடைதல் - நீராடுதல். 'பெறலா மெனில்' என்பது, பெறுதற்கு அருமைதோன்ற நின்றது. தான் குற்றேவல் செய்யும் முறைமையால், 'அடியேன்' எனக் கூறினா ளென்று உணர்க.
---------- (066. சுனைவியந்துரைத்தல் - முற்றும்) ----------
067. பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலின் தகையணங்குறுத்தல் :
தகையணங்குறுத்தல் என்பது தலைவி வேற்றழகினால் அவளைத் தெய்வப் பெண்ணாக வலியுறுத்திக் கூறல்.
குவளை சிவத்துக் குமுதம் வெளுத்த குறையல்லவேல்
அவளை மறைத்துன்னைக் காட்டலு மாமலர்த் தேன்குதிக்கத்
தவளை குதிக்குந் தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
இவளை வரக்கண்டு நீயணங் கேபின் எழுந்தருளே. (067)
(இ - ள்.) குவளையொக்குங் கண் சிவந்து, குமுதமொக்கும் வாய்வெளுத்த குறைபாடல்லவாயின், எங்கள் தலைவி யொருத்தியுண்டு அவள் வடிவில் நின்னை யொப்பவள், அவளை மறையவைத்து நின்னை அவளென்று காட்டலாமென்று எல்லாருஞ் சொல்லுவர்; அலரினின்றுந் தேன்குதிக்கப் புதுநீர் வந்ததென்று தவளை குதிக்கும் பெரிய பொய்கை சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பிலிருக்கும் மலையணங்கே, எங்கள் தலைவி வருமளவும் இருந்து அவளை யொப்புக்கண்டு பின்னை நீ யெழுந்தருள்வாய் என்றவாறு.
[1]'கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே.'
என்னும் மயங்கியற் சூத்திரத்தில் அன்னம் போல்வாளை அன்னம் என்றும், யானை போல்வானை யானை யென்றும் கூறினமையான், இவ்விடத்துங் குவளை போன்ற கண்ணைக் குவளை யென்றும், குமுதம் போன்ற வாயைக் குமுதம் என்றும் ஆகுபெயராகக் கூறியவாறு உணர்க.
-----
[067-1] தொல். சொல். வேற்றுமை மயங்கியல் - (௩௪) 34.
----------
அலர்த்தேன்' என்புழி ஐந்தனுருபு தொக்கது. தடம் பொய்கை - பெரிய பொய்கை. அணங்கு - தெய்வப்பெண்.
மனத்தில் தலைவிதான் என்று அறிந்துவைத்து வாயுரையில் அணங்காகக் கூறினமையின், பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலாயிற்று. 'கவர்பொருள்' என்னாது 'பல்வேறு கவர்பொருள்' என்றது என்னையெனின், ஒன்றல்ல வெல்லாம் பலவாதல் தமிழ்நடை யாதலின் என்றுணர்க. இவையிரண்டும் நாணநாட்டம்.
---------- (067. பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடலின் தகையணங்குறுத்தல் - முற்றும்) ----------
068. நடுங்க நாட்டம்:
நடுங்க நாட்டம் என்பது, தலைவியை நடுங்கத்தக்கதாக நாடுதல்.
பால்போல் மொழிவஞ்சி யஞ்சிநின் றேனிந்தப் பார்முழுதும்
மால்போற் புரந்தவன் மாறை வரோதயன் வாணன்வென்றி
வேல்போற் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன்வெய்ய
கோல்போற் கொடியன வாங்கொலை யானையின் கோடுகண்டே. (068)
(இ – ள்.) பால்போலும் மொழியையுடைய வஞ்சிக் கொம்புபோல்வாய்! இந்தப் பாருலக முழுவதையுந் திருமால்போல் இடையூறு நீக்கிக்காத்த மாறைநாட்டில் வரோதயனான வாணனது வென்றி வேல்போற் குருதியளைந்து சிவந்து நெறிமுறைமை வழுவிய வேந்தனது கொடுங்கோல் போல யார்க்கும் அச்சங்கொடுக்குங் கொடுமையவாகிய கொலைத்தொழில் செய்யும் யானையது கோட்டைக்கண்டு அஞ்சிநின்றேன் என்றவாறு.
வஞ்சி - ஆகுபெயர். மால் - விண்டு. புரத்தல் - காத்தல். கோடிய – வழுவிய. கோடு - கொம்பு.
'நாணவு நடுங்கவு நாடாள் தோழி
காணுங் காலைத் தலைமகள் தேத்து.'
என்பதனால், நாண நாட்டமும், நடுங்க நாட்டமும் கூறியது அகப்பொருட் சிதைவாய்ப் பெருந்திணைப்பாற்படும். அன்றியும் பாங்கி இவ்வாறு கூறவே, தலைவி குறிப்பறியாது கூறினாளுமாம், அவமதித்தாளுமாம், ஆசார மில்லாது கூறினாளுமாம்; மற்று இக்குற்றமெல்லாம் நீங்குமாறும், அகப்பொருட் சிதைவு வாராமற் போற்றுமாறும் என்னையெனின், நாண நாட்டத்தின்கண், தலைவிக்கு உயிர்ப் பாங்கி யாதலின், இவளுள்ளமே அவளுள்ள மாதலின், புணர்ச்சியுண்மை யுண்டு என்பது அறிந்து கூறுகின்றாளென்பது தலைவியறியும். அறிந்த தலைவி பாங்கியுடன் கூறாதது என்னை யெனின், இவள் பெருநாணினளாதலான் கூறலாகாதென் றிருந்தாள். தன்னுடன் உண்மை கூறவில்லை, தானுண்மைக்கு அயலாயினேன், அவ்வாறு அயலாகாது உடம்பட்டிருக்கத் தலைவியாகத் தன்னோடு கூறவேண்டுமென்பது கருதி, பாங்கி ஆராய்ச்சி செய்த காரியமாதலான், நாண நாட்டத்தாற் குற்றமின்மை யறிக.
இனி நடுங்க நாட்டம், யானையைக் கண்டஞ்சினேன் என்ற வழி தலைவி நடுங்காம லிருந்தவழி என்னையெனின்,
[1]'மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்'
என்னும் சூத்திரத்தில், 'வழிநிலை பிழையாது' என்பதற்கு நச்சினார்க்கினியர் உரையில், 'பாங்கி குற்றேவல் முறைமை தப்பாது, பெருநாணினள், பேரச்சத்தாள் தலைவி யென்பதறிந்து, தானும் இறந்துபடாமற் கூறத்தகும் வார்த்தை கூறும்' என்று உரை கூறினாராதலா னென்பது. நடுங்கநாடிக் கூறும்போதும் பாங்கி, எம்பெருமாட்டி கவற்சியுறும், கவற்சி யுற்றபோதே யிறந்துபடினும் படும் என்பதறிந்து, முகமலர்ச்சியாய் நகையாடுதல் போன்றுங் கூறுமாதலால், தலைவி இவள் முகக்குறிப்பு நோக்கியும், கவற்சி யில்லாமை நோக்கியும் பொய்யென் றறிந்திருந்தா ளென்க. அன்றியும் சான்றோர் செய்யுட்களிற் பெரும்பாலும் பயின்று வருதலானும் குற்றமின்றென உணர்க. குற்றமாயின் சான்றோர் செய்யுட்கண் ஓதார் என வுணர்க.
-----
[068-1] தொல். பொருள். களவியல் - (௨௩) 23.
----------
தொல்காப்பியச் சூத்திரத்தும், [1]'வழிநிலை பிழையாது' என்பதனால் வழுவமைதி பெற்றாம். திருக்கோவையாரில் நாண நாட்டம், நடுங்க நாட்டத்தைப் பெருந்திணைப்பாற்படும் என்று பேராசிரியர் உரைகூறினா ரெனின், 'மாறுகொளக் கூறல் ’ என்னுங் குற்றமாம். என்னை,
[2]'அளவி லின்பத் தைந்திணை மருங்கிற்
களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும்.’
என்னும் அகப்பொருளினும், [3]அன்பினைந்திணைக் களவெனப் படுவது' என்னும் இறையனார் அகப்பொருளினும்,
[4]'இன்பமும் பொருளும் அறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக்கூட்டம்.'
என்பதனான் தொல்காப்பியத்தினும், மற்றும் பிற நூல்களினும் [5]ஐந்திணை களவென்று கூறுவதல்லது பெருந்திணையை அகப் பொருளிற் கூறுவது ஒருநூலினு மில்லை.
-----
[068-2] அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - (௨௬) 26.
[068-3] இறையனார் அகப்பொருள் - (௧) 1.
[068-4] தொல். பொருள். களவியல் - (௧) 1.
(வே-பா.) [068-5] ஐந்திணைக் களவென்று.
----------
பெருந்திணையாவது,
'ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமும்
செப்பிய வகப்பொருட் சிதைவும் பெருந்திணை.'
என்னுஞ் சூத்திரவிதியாற் பெருந்திணைப்பாற் படும் என்றல் பொருந்தாது. அகத்திற் சிதைந்தது புறத்தின் பாற்படும்.
[6]'மடலே றுதலொடு விடைதழா லென்றா
குற்றிசை தன்னொடு குறுங்கலி யென்றா
சுரநடை தன்னொடு முதுபாலை யென்றா
தாபத நிலையொடு தபுதார நிலையெனப்
புகன்றவை [7]யியற்பெயர் பொருந்தா வாயின்
அகன்ற வகப்புறப் [8]பெருந்திணைத் தாகும்.'
என்பதனால் நாணநாட்டம் நடுங்கநாட்டம் இதனோடு ஒப்பதன்றி வழுவமைதி யென்று உணர்க.
-----
[068-6] அகப்பொருள் விளக்கம். ஒழிபியல் - (௩௫) 35.
(வே-பா.) [068-7] இறைவற் பொருந்தாவாதலின்.
(வே-பா.) [068-8] பெருந்திணைக் காகும்.
----------
இவற்றுள் முன்னைய இரண்டும் மெய்யினாற் சொல்லியது, பின்னைய இரண்டும் பொய்யினாற் சொல்லியது.
---------- (068. நடுங்க நாட்டம் - முற்றும்) ----------
இத்துணையும் மூன்றநாட் செய்தியென வுணர்க.
1.09.1. முன்னுறவுணர்தல் முற்றிற்று
1.09.2. குறையுறவுணர்தல்
069. பெட்ட வாயில்பெற் றிரவுவலியுறுத்தல் :
பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல் என்பது, இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்ப் பிரிவுழிக்கலங்கலின் வாயில் பெற்று உய்தல் என ஆண்டு விரும்பப்பட்ட பாங்கியைத் தூதாகப் பெற்றுக் குறையிரத்தலை வலியுறுத்திக் கூறல்.
பொருமணி வெண்டிரைப் பைங்கடல் வங்கம் பொருந்திமுன்பு
தருமணி பின்பெற் றணிபவர் போற்சென்று சார்ந்திரந்து
பருமணி நன்கலப் பாங்கியை நீங்கியப் பாவையைநாம்
மருமணி வண்துறை தார்வாணன் மாறை மருவுதுமே. (069)
(இ - ள்.) வெண்டிரை முத்துக்களைப் பொரப்பட்ட பசிய கடலிடத்து மரக்கலத்தை முன்புபொருந்திப் பின் அக் கடல்தரப்பட்ட மணிகளைப் பூண்பவர்போல, நாம் போய்ப் பரியமணிகளைக் குயிற்றிய நல்ல அணிகளையணிந்த பாங்கியைச் சார்ந்து நமது குறையையிரந்து, அவள் நேர்ந்தபின் பாங்கியை நீங்கி அப்பாவை போல்வாளை மணம்பொருந்திய கரியவண்டு உறையப்பட்ட தாரணிந்த வாணன் தென்மாறை நாட்டுக் கூடுதும், நெஞ்சமே! அஞ்சல் என்றவாறு.
'வெண்டிரை மணிபொரு' என மாறுக. வெண்டிரை - வெண்மை நிறம் பொருந்திய அலை. மணி - முத்து. வங்கம் - மரக்கலம். நன்கலம் - நல்லவணி. 'நாஞ்சென்று' எனவும், 'பாங்கியைச் சார்ந்து' எனவும் மாறுக. மரு - மணம். மணிவண்டு - கரு வண்டு. தார் - மாலை. நெஞ்சம் - முன்னிலையெச்சம். மாறை நாடு கடலாகவும், பாங்கி மரக்கலமாகவும், தான் மரக்கல நாயகனாகவும், தலைவி அக்கடலிடத் திருக்கும் மணியாகவும் உவமித்தவதனால் இது தொழிலுவமம்.
[1]'நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்
றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே.'
என்னுஞ் சூத்திரவிதியால் மொழிகள் மாறிநின்றன.
-----
[069-1] தொல். சொல். எச்சவியல் - (௮) 8.
----------
---------- (069. பெட்ட வாயில்பெற் றிரவுவலியுறுத்தல் - முற்றும்) ----------
070. ஊர்வினாதல் :
ஊர் வினாதல் என்பது, தலைவன் கண்ணியும் தழையும் ஏந்திக் குறையுற்றான்போல வந்து நின்று ஊர் வினாதல்.
புதியேன் மிகவிப் புனத்திற்கி யான்றனிப் போந்தனனும்
பதியேது செல்லும் படிசொல்லு வீர்படி மேற்படிந்த
மதியேய் சுதைமதில் சூழ்தஞ்சை வாணன்தென் மாறைவையை
நதியேய் சுழிநிக ரும்பழி தீருந்தி நல்லவரே. (070)
(இ – ள்.) புவியின்மேற் படிந்த மதியை யொப்பாகிய சுதையினால் விளங்கிய மதில் சூழ்ந்த தஞ்சைவாணனது தென்மாறை நாட்டின்கண் வருகின்ற வையைநதியிற் பொருந்திய சுழியை யொக்குங் குற்றந்தீர்ந்த உந்தியை யுடைய மடவாரே! யான் இப்புனத்திற்கு மிகவும் புதியேன், ஒரு காலும் வந்தறியேன், இப்போது தனியாக வந்தேன், நீரிருக்கும் பதி யாது? யான் செல்லும்படிக்குச் சொல்லுவீர் என்றவாறு.
படி - புவி. ஏய் - ஒப்பு. சுதை - வெண்சாந்து. ஏய் - பொருந்துதல். உந்தி - கொப்பூழ். நல்லவர் - மடவார்.
---------- (070. ஊர்வினாதல் - முற்றும்) ----------
071. பெயர் வினாதல் :
கரைத்தாவி யுந்திய காவிரி வைகிய காலத்தினும்
தரைத்தாரு வன்னசெந் தண்ணளி வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
வரைத்தாழ் சிலம்பினும் வாழ்பதி யீதென்று வஞ்சியன்னீர்
உரைத்தா லிழிவதுண் டேற்பெய ரேனும் உரைமின்களே. (071)
(இ - ள்.) கரையைத் தாவித் திரையை யெறிந்த காவிரி வற்றிய காலத்தினும் பூமியின்கண் கற்பகத் தருவை யொத்த செவ்விய அருளையுடைய வாணனது இனிமை பொருந்திய தஞ்சையைச் சூழ்ந்த மலைகள் பணியப்பட்ட பொதியவெற்பில் நும்முடைய வாழ்வாகிய பதி யீதென்று உரைத்தால் உமக்கு இகழ்ச்சி வருவதுண்டேல், வஞ்சிக் கொம்புபோல்வீர், பெயராயினும் உரைமின்கள் என்றவாறு.
தாவுதல் - கடத்தல். உந்தல் - எறிதல். காவிரி - காவேரி. வைகல் - வற்றல், தரை - புவி. தாரு - கற்பகத் தரு. செந்தண்ணளி - செவ்விய அருள். தமிழ் - இனிமை. வரை - மலை; சாதி யொருமை. தாழ்தல் - பணிதல். சிலம்பு - ஈண்டுப் பொதியவெற்பு. இழிவது - குறைவருவது.
'வரைத்தாழ் சிலம்பின்' என்புழி, ஐகார ஈற்றுப் பெயராகலான், 'வரை தாழ்சிலம்பு' என இயல்பாய் முடியாது, ஒற்று மிக்கவாறு என்னையெனின்,
[1]'வேற்றுமை யல்வழி இஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம், இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.'
என்னுஞ் சூத்திரவிதியால், இகர ஐகார ஈற்றுப் பதங்கள் இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து முடிவனவும், உறழ்வாய் முடிவனவுமாகிய மூவகை முடிபினுள், தினைகுறிது - தினைக்குறிது என்றாற்போல, வரைதாழ் - வரைத்தாழ் என உறழ்ச்சி முடிபாயின வென்று உணர்க.
-----
[071-1] தொல்.எழு. தொகைமரபு - (௧௬) 16.
----------
---------- (071. பெயர் வினாதல் - முற்றும்) ----------
072. கெடுதிவினாதல் :
கெடுதிவினாதல் என்பது, கெட்டபொருளை வினாவுதல்.
தண்பட்ட மேவும் வயற்றஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பில்
பண்பட்ட தேமொழிப் பாவையன் னீர்பனை பட்டகையும்
மண்பட்ட கோடு மதம்பட்ட வாயும் வடிக்கணைதோய்
புண்பட்ட மேனியு மாய்வந்த தோவொரு போர்க்களிறே. (072)
(இ - ள்.) தண்ணிய வோடையும் பொருந்திய வயலும் சூழ்ந்த தஞ்சைவாணனது பொதிய வெற்பிடத்துப் பண்ணுண்டாகப்பட்ட இனிய மொழியையுடைய பாவைபோல்வீர்! பனைபோ லுண்டாகிய கையும், தன்னிழலைச் சுளித்துப் பாய்தலான் மண்பட்ட கோடும், கரடத்தானத்தி லிருந்து வடிந்தொழுகும் மதம்பட்ட வாயும், கூரிய என் கைக்கணை மூழ்கலால் புண்பட்ட வுடலுமாய் ஒரு போர்க் களிறு நும் புனத்தயலே வந்ததோ? கண்டிரேல் சொல்லுவீராக என்றவாறு.
பட்டம் - ஓடை. பட்டமும் வயலும் என உம்மைத்தொகை. மேவுதல் - பொருந்துதல். தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. பண் - இசை. படுதல் - உண்டாதல். தேம் - இனிமை. பாவை - சித்திரப் பாவை. பனைபட்ட கை - பனைபோ லுண்டாகிய கை; உவமத் தொகை. வடி - வடித்தல். களிறு - யானை. உம்மை - எண்ணின்கண் வந்தன. கெடுதிவினாதல், வேழம்வினாதல், பன்றிவினாதல், நாய்வினாதல், இனையவினாதல் எனப் பலவும் உள; அவற்றுள் இது வேழம்வினாதல்.
---------- (072. கெடுதிவினாதல் - முற்றும்) ----------
073. ஒழிந்ததுவினாதல் :
ஒழிந்தது வினாதல் என்பது, இவன் வினாயதற்கு விடை யின்மையால், நீர் பேசாதொழிந்தது என் என வினாதல்.
வனமார் குடிஞைப் பகைக்குர லாமென வாணன்தஞ்சைப்
புனமார் குளிரிப் புடைப்பொலி யாற்கிள்ளை போயினமீண்
டினமா மெனவந்திவ் வேனலெல் லாம்வவ்வு மென்பதற்கோ
கனமா நறுங்குழ லீர்மொழி யாதொழி காரணமே. (073)
(இ - ள்.) வாணனது தஞ்சை நாட்டில் முகில் போன்ற கருமையாகிய நறிய குழலீர்! மொழியா தொழிந்த காரணம், காட்டிலார்ந்த கூகைக்குப் பகையாகிய காக்கைக் குரலாமென, புனத்திற் பொருந்திய குளிரி யென்னுங் கருவியை நுங் கையாற் புடைத்திடும் ஓசையால் வெருண்டு போயின கிளிகளெல்லாம், நீர் வாய் திறந்து மொழியின், நுமது குரலென்றறியாது, கிளிக்குரலென் றெண்ணி மீண்டு வந்து, இவ்வேனற் கதிரையெல்லாங் கவரும் என்பதனாலோ, சொல்லுவீர் என்றவாறு.
'வாணன் தஞ்சைக் கனமா நறுங்குழலீர்' எனவும், 'பகைக் குரலாமெனப் புனமார் குளிரி' எனவும், 'போயின கிள்ளை' எனவும் மாறிக் கொள்க; என்னை,
[1]'மொழிமாற் றியற்கை
சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய
முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்.'
என்னுஞ் சூத்திரவிதியால், மொழிமாற்றிப் பொருளுரைத்துக் கொள்க.
-----
[073-1] தொல். சொல். எச்சவியல் - (௧௩) 13.
----------
'நல்லவரே சொல்லுவீர்' என்றும், 'வஞ்சியன்னீர் உரைமின்கள்' என்றும், 'பாவையன்னீர்' என்றும், 'கனகமாநறுங் குழலீர்' என்றும், வினாதல் நான்கினும் பன்மையாற் கூறிய சொற்கள் பாங்கி யொருத்தியையே.
[2]'ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்'
என்னுஞ் சூத்திரவிதியாற் கூறிய உயர்சொற் கிளவி யென்று உணர்க. தலைவியும் கூடவிருந்தாளெனில் வருங்குற்றம் என்ன வெனின், குற்றம் உண்டு. என்னை, 'இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்' என மேலே கூறப்படுதலின், இங்ஙனம் இருவரும் உடனிருந்தார் என்று கூறலாகாது என வுணர்க.
-----
[073-2] தொல். சொல். கிளவியாக்கம் - (௨௭) 27.
----------
வனம் - காடு. ஆர்தல் - பொருந்தல். குடிஞை - கூகை; பகை - காக்கை. குளிரி - தினைப்புனத்திற் கிளியோட்டுவோர் மூங்கிலில் வீணைபோற் கட்டித் தெறிக்குங் கருவி.
[3]'தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங், கிளிகடி மரபின்'
என்னும் பத்துப்பாட்டில், 'குளிரும்' என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் கண்டுகொள்க. குளிர் எனினும், குளிரி எனினும் ஒக்கும். புடைத்தல் - விரலாற்றெறித்தல். கிள்ளை - கிளி. ஏனல் ஆகுபெயர். கனம் - முகில். மா - கருமை. கனங்குழல் என்புழி உவமைத்தொகை. 'கனமா நறுங்குழல்' பாரமாகிய நறிய குழல் எனினும் அமையும். 'என்பதற்கு' வேற்றுமை மயக்கம். ஓகாரம் - வினா.
-----
[073-3] குறிஞ்சிப்பாட்டு - (௪௩) 43.
----------
---------- (073. ஒழிந்ததுவினாதல் - முற்றும்) ----------
074. யாரே யிவர்மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல் :
யாரே இவர்மனத்து எண்ணம் யாது எனத் தேர்தல் என்பது, இவ்வாறு கண்ணியும் தழையும் ஏந்தி, ஊர் பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவி நின்றவர் யாரோ, இவர் மனத்து எண்ணம் யாதோ எனப் பாங்கி தன் மனத்தில் ஆராய்தல்.
தரையார வண்புகழ் தேக்கிய வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
வரையாது நும்பதி யாதுநும் பேரென்பர் வார்துளிக்கார்
புரையானை யம்பொடு போந்ததுண் டோவென்பர் பூங்கொடியீர்
உரையாத தென்னென்ப ராலென் கொலோவிவர் உட்கொண்டதே. (074)
(இ - ள்.) தரைநிறைய வளவிய புகழை நிறைத்த வாணனது தமிழ்த் தஞ்சைசூழ்ந்த வரையிடத்து நும்முடைய பதி யாது? நும்முடைய பெயர்யாது? என்றுஞ் சொல்லுவர்; அல்லாமலும், நெடியதுளியைச் சொரியும் மேகத்தையொக்கும் யானை என் கையம்போடு வந்த துண்டோ? என்றுஞ் சொல்லுவர்; அன்றியும், பூங்கொடி போல்வீர்! யாதும் உரையாதது என் என்றுஞ் சொல்லுவர்; ஆதலால், இவர் யாரோ, இவர் உட்கொண்ட எண்ணம் என்கொல்லோ, அறிகின்றிலேன் என்றவாறு.
தரை - பூவுலகம். ஆர - நிறைய. வண்புகழ் - வளவியபுகழ். தேக்கல் - நிறைத்தல். தமிழ் - இனிமை. வரை - மலை. 'பதி யாது', 'பேர் யாது' என மாறுக. வார் - நெடுமை. துளிக்கார் - துளிசொரியுங் கார். புரை - உவமவுருபு.
'போந்தது'—'வந்ததோ வொருபோர்க் களிறே' என்று தலைவன் முன் வினாவிய சொல்லையே பாங்கி யீண்டு, 'யானை அம்பொடு போந்ததுண்டோ' என்று அப்பொருளையே யெடுத்துக் கூறினமையால், 'வந்தது' என்னும் பெயராயினவாறு காண்க. அன்றியும், 'புதியேன் தகவிப் புனத்திற் கியான்றனிப் போந்தனன்' என்பதனானும் உணர்க.
பூங்கொடியீர் - ஆகுபெயர். உம்மை - இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது. கொல் - ஐயம். ஓகாரம் - அசை. உட்கொண்டது - உட்கொண்ட எண்ணம்.
---------- (074. யாரே யிவர்மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல் - முற்றும்) ----------
075. எண்ணந் தெளிதல் :
யாரே யிவரென் றறிகின்றி லேமெதிர்ந் தாரைவென்று
வாரேய் கழற்புனை வாணன்தென் மாறை வரையுறைவீர்
ஊரே தெனமுன் வினுவிப்பின் வேறொன் றுரைப்பதெல்லாம்
நேரே யிவர்பொருட் டாலென்று தோன்றுமென் நெஞ்சினுக்கே. (075)
(இ – ள்.) கண்ணியும் தழையும் ஏந்திக் குறையுற்றார் போல் வினாவிய இவர் யாரென் றறிகின்றிலேம்; போர்க் களத்தில் எதிர்ந்தாரை வென்று கயிறு பொருந்திய கழலைப் புனைந்த வாணன் தென்மாறை நாட்டில் வந்த இவர் நம்மைநோக்கி, வரையுறைவீர்! நுமது ஊர் எது என முன் வினாவிநின்று பின் வேறொன்றாகச் சொல்லும் வார்த்தை யெல்லாம் ஆராய்ந்து எண்ணில், செவ்வனே இவள் பொருட்டென்று என் நெஞ்சினுக்குத் தோன்றும், இதற்கு ஐயமில்லை என்றவாறு.
யாரே - ஏகாரம் ஈற்றசை. வார் - கயிறு. ஏய்தல் - பொருந்தல். கழல் - வீரக்கழல். புனைதல் - தரித்தல். நேர் - செவ்வை. ஆல் - அசை.
---------- (075. எண்ணந் தெளிதல் - முற்றும்) ----------
1.09.2. குறையுறவுணர்தல் முற்றிற்று
1.09.3. இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்
076. தலைவன் கையுறையேந்தி வருதல் :
தலைவன் கையுறையேந்தி வருதல் என்பது, தலைவியும் பாங்கியும் சேர்ந்திருப்பதுகண்டு தலைவன் கையுறை யேந்தி வருதல்.
தண்டா மரைமலர்ப் பொன்னையும் பார்மங்கை தன்னையும்போல்
வண்டார் குழல்மட வார்மணந் தார்சென்று வாணன்தஞ்சை
நுண்டா தணிபொங்கர் நீழலின் கீழந் நுடங்கிடையார்க்
கண்டா தரவையெல் லாஞ்சொல்ல வேநல்ல காலமிதே. (076)
(இ - ள்.) வாணனது தஞ்சைசூழ்ந்த நுண்ணிய தாது பொருந்திய சோலைநிழலில் தண்ணிய தாமரை மலரிலிருக்குந் திருமகளும் பார்மங்கையாகிய நிலமகளும் போல, வண்டார் குழலின் மடவாராகிய தலைவியும் பாங்கியும் சேர்ந்திருந்தா ராதலால், நாம் போய் அந் நுடங்கிடையாரைக் கண்டு நமது காதலெல்லாஞ் சொல்ல இது நல்ல செவ்வி என்றுவாறு.
பொன் - திருமகள். பார்மங்கை - நிலமகள். மணத்தல் - சேர்தல். தாது - பராகம். பொங்கர் - சோலை. நுடங்கல் - ஒசிதல். 'இடையார்க் கண்டு' என்புழி, இரண்டனுருபு தொக்கது. உம்மை - எண்ணும்மை. ஏகாரம் - ஈற்றசை. காலம் - செவ்வி; செவ்வி, பதம், அமயம், காலம் என்பன ஒரு பொருட் கிளவி.
---------- (076. தலைவன் கையுறையேந்தி வருதல் - முற்றும்) ----------
077. தலைவன் அவ்வகை வினாதல் :
தலைவன் அவ்வகை வினாதல் என்பது, தலைவன் முன் கெடுதி வினாதல்போல மீண்டு கலைவந்ததோ என்று வினாதல்.
வல்லா ரிளங்கொங்கை வஞ்சியன் னீர்தஞ்சை வாணனைக்கண்
டொல்லார் களத்தி னுடைந்தது போல வொருகலைபோர்
வில்லார் கணைதைப்ப மெய்சோர்ந் தினம்விட்டு வெய்துயிர்த்துப்
புல்லார் வதுமின்றி யேவந்த தோநும் புனத்தயலே. (077)
(இ – ள்.) சூதுபோன்ற இளங்கொங்கையை யுடைய வஞ்சிக்கொம்பு போல்வீர்! தஞ்சைவாணனைக் கண்டு பகைவர் போர்க்களத்தில் உடைந்து ஓடியது போலப், போர் செய்யும் எனது கையில் வில்லார்ந்த கணை தைப்ப ஒரு கலைமான் மெய் சோர்ந்து இனத்தைப் பிரிந்து பெருமூச் செறிந்து புல்லருந்தலுமின்றி நும் புனத்தயலிலே வந்ததோ? கண்டீராயிற் சொல்லுவீர் என்றவாறு.
வல் - சூது. ஆர் - ஒப்பு. ஒல்லார் - பகைவர். களம் - போர்க் களம். உடைதல் - படை தட்டழிதல். சோர்தல் - மயங்கல். விடுதல் - பிரிதல். வெய்துயிர்த்தல் - பெருமூச்செறிதல். ஆர்தல் - அருந்தல். வினையெச்ச அடுக்குகள், 'வந்ததோ' என்னும் வினாப் பொருண்மை வினை கொண்டு முடிந்தன. ஓகாரம் - வினா.
---------- (077. தலைவன் அவ்வகை வினாதல் - முற்றும்) ----------
078. எதிர்மொழி கொடுத்தல் :
வாக்குந் திறனு மதனையொப் பீர்தஞ்சை வாணன்மஞ்சு
தேக்குங் குடுமிச் சிறுமலைக் கேதிரி கோட்டிரலை
கோக்குஞ் சரமுங் குருதியுஞ் சோரக் கொடிச்சியரேம்
காக்கும் புனமருங் கேதனி யேவரக் கண்டிலமே. (078)
(இ - ள்.) மெய்த்திருத்தத்தினும் வெற்றியினும் மதனைப்போல்வீர், தஞ்சைவாணனது முகில் நிறையும் உச்சியையுடைய சிறுமலையிடத்துத் திரித்ததுபோலிருக்கின்ற கொம்பையுடைய கலையும், யானைகட்குத் தலைமையாகிய குஞ்சரமும் குருதியொழுகக், கொடிச்சியராகிய யாங்கள் காக்கும் புனப்பக்கத்தே தனியேவரக் கண்டிலேம் என்றவாறு.
வாக்கு - திருத்தம்; மெய் அவாய்நிலையான் வந்தது. [1]'வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கு' என்னும் கேமசரியா ரிலம்பகத்துப் பாட்டில் 'வாக்கு' திருத்த மென்பதுணர்க. திறன் - வெற்றி. மஞ்சு - மேகம். தேக்கும் - நிறையும். குடுமி - உச்சி. சிறுமலை - மலைப்பெயர். 'சிறுமலைக்கு' என்புழி வேற்றுமை மயக்கம். திரிதல் - முறுக்குதல். கோடு - கொம்பு. இரலை - கலைமான். குஞ்சரம் - யானை. குருதி - இரத்தம். சோர்தல் - ஒழுகுதல். கொடிச்சியர் - குறத்தியர். இரலைக்கு உம்மை கொடாது குஞ்சரத்திற்கு உம்மை கொடுத்தது என்னை யெனின்,
[2]'எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்'
என்னும் விதியாற் கொள்க. குருதியும் என்னும் உம்மை அசை.
-----
[078-1] சிந்தா. கேமசரியார் - (௬௨) 62.
[078-2] தொல். சொல். இடையியல் - (௩௬) 36.
----------
---------- (078. எதிர்மொழி கொடுத்தல் - முற்றும்) ----------
079. இறைவனை நகுதல் :
இறைவனை நகுதல் என்பது, தலைவன் அப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடி நகாநிற்றல்.
மைவா ளிலங்குகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பில்
இவ்வாளி மொய்ம்பரின் றெய்தமெய்ம் மானிள மாந்தளிரின்
செவ்வாளி யுங்கொண்டு சேட்சென்ற தாலன்று சீதைகொண்கன்
கைவாளி யுங்கொண்டு போனபொய்ம் மானினுங் கள்ளத்ததே. (079)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பிடத்து மையெழுதிய வாள்போ லிலங்குங் கண்ணையுடைய மங்கைப்பருவத்து நல்லாய்! இந்த ஆளி போலும் வலியையுடையார் இப்போது எய்த மெய்யாகிய மான் இளமாந்தளிராகிய சிவந்த வாளியையுங் கொண்டு சேய்மைக்கண் சென்றதாதலால், பண்டை நாளில் இராமனது வாளியையுங் கொண்டு போன பொய்யாகிய மானினுங் கள்ளத்தையுடையது என்றவாறு.
'பொன்மான்' என்று பாடமோதுவாரு முளர்; இவரெய்த மெய்ம்மான் என்று கூறவே, அம்மான் பொய்மான் என்றே கூறவேண்டு மாதலால், அது பாடமன்மை யுணர்க. 'மைவா ளிலங்குகண்' உவமைத்தொகை. 'ஆளி மொய்ம்பர்' என்பதும் அது. மொய்ம்பு - வலி. 'இளமாந் தளிரின் செவ்வாளி' என்றது கையில் அம்பின்றித் தளிர் பிடித்து நிற்றலின் நகையாடிக் கூறியது. சேண் - சேய்மை. அன்று - பண்டைக் காலம். சீதை கொண்கன் - இராமன். கைவாளி - கையம்பு. உம்மை - சிறப்பும்மை.
---------- (079. இறைவனை நகுதல் - முற்றும்) ----------
080. பாங்கிமதியின் அவரவர் மனக்கருத்துணர்தல் :
பாங்கிமதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் என்பது, பாங்கி தன்னறிவினான் தலைவன் தலைவி யென்றிருவரது மனக் குறிப்பை யாராய்ந்து கூறல்.
புனங்காவ லன்றிவள் பூண்டதும் ஆண்டகை போந்ததுமான்
இனங்காவ லின்கலை யெய்யவன் றாலிக லாழிவிந்தை
தனங்காவ லன்தஞ்சை வாணனன் னாட்டிவர் தங்களில்தாம்
மனங்காவல் கொண்டதெல் லாங்கண்க ளேசொல்லும் வாய்திறந்தே. (080)
(இ - ள்.) போர்செய்யும் நேமியை யணிந்த வீரமகளுடைய தனத்துக்குக் காவலனாகிய தஞ்சைவாணனது நல்ல நாட்டில், இவ்விருவரும் தங்களில் தாம் மனத்தைக் காவல் கொண்டதெல்லாம், இவர்கள் கண்கள் யாமறிய வாய் திறந்து சொல்லுதல்போல் அறிவிக்கு மாதலால், இவள் மனத்தின்கண் பூண்டிருப்பது புனங்காவல் அன்று; இவ்வாண்டகை வந்ததும் மானினங்கட்குக் காவலா யின்பத்தைக் கொடுக்குங் கலை யெய்ய அன்று என்றவாறு.
ஆண்டகை - அன்மொழித்தொகை. இகல் - போர். ஆழி - நேமி. விந்தை - வீரமகள்; வாணன் தோளைப் பிரியாதிருத்தலின், 'தனங்காவலன்' என்று கூறியது. மனங்காவல் கொள்ளல் - வேறோரிடத்திற் செல்லாது காவல் செய்வதுபோலத் தம்மிடத்தில் மனத்தை வைத்திருத்தல்.
---------- (080. பாங்கிமதியின் அவரவர் மனக்கருத்துணர்தல் - முற்றும்) ----------
1.09.3. இருவரு முள்வழி யவன்வர வுணர்தல் முற்றிற்று
காட்சியில் தலைவி ஆயவெள்ளம் புடைசூழ்ந்து குற்றேவல் செய்ய வீற்றிருந்தாள் என்று கூறி இங்ஙனந் தினைப்புனங் காத்திருந்தாளென்று கூறியதும், தலைவனும் பற்பல் நூறாயிரங் கூர்வே லிளைஞர் புடைசூழத் தேரேறி வேட்டையாட வந்தான் என்றுகூறி இங்ஙனந் தமியனாய்த் தழையேந்திவந்தான் என்றும் குறையிரந்தான் என்றும் கூறியதும் மாறுபாடன்றோ எனின், மாறுபாடன்று; என்னை, தலைவி ஆயக்கூட்டமும் முன்போலே சூழ்ந்து பிரிந்து விளையாடாநிற்ப, இவளும் பற்பல விளையாட்டினுள் இதுவுமோர் விளையாட்டாகவும், தலைவன் குறியிடத்து வரின் தனித்து அவனைக் கூடவேண்டும் என்னுங் கருத்தாகவும் புனங்காத்தாளென்றும், தலைவன் கூர்வேலிளைஞரும் வேட்டை விருப்பாற் சூழ்ந்து பிரிந்து செல்லாநிற்ப, இவனும் வேட்கை மீதூரப்பட்டுப் பாங்கியாற் கூடவேண்டுமென்னுங் கருத்தினால், தலைவி குலமுறைமை ஒருவர்க் கொருவர் தழையும் கண்ணியும் கொடுத்துக் காண்டலும் இவர் அவற்றை யேற்றுக்கோடலும் தொன்றுதொட்டு நடந்துவரும் இயல்பாதலால், தழையும் கண்ணியும் எந்தி வந்துநின்று குறையிரந்தான் என்றுங் கூறியது மாறுபாடன்றென உணர்க. எனவே, எளியளாய்ப் புனங்காத்தாளும் அல்லள், எளியனாய்க் குறையுற்றிரந்தானும் அல்லன் என்பது தோன்றியவாறு உணர்க.
1.09. பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று
-------------------------
முதலாவது ; 1. களவியல்
1.10. பாங்கியிற் கூட்டம் (081-141)
அஃதாவது, பாங்கி கூட்டுவிக்கத் தலைவன் கூடும் கூட்டம்.
[1]'இரந்துபின் நிற்றல் சேட்படை மடற்கூற்று
மடல்விலக் குடன்படல் மடற்கூற் றொழிதல்
குறைநயப் பித்தல் நயத்தல் கூட்டல்
கூடல் ஆயங் கூட்டல் வேட்டலென்
றீராறு வகைத்தே இகுளையிற் கூட்டம்.'
என்னுஞ் சூத்திரவிதியால், பாங்கியிற் கூட்டம் பன்னிரண்டு வகைப்படும்.
-----
[1.10-1] அகப்பொருள்விளக்கம், களவியல் - (௨௭) 27.
----------
081. தலைவனுட்கோள்சாற்றல் :
தலைவன் உட்கோள் சாற்றல் என்பது, தலைவன் தன் உள்ளத்தின்கண் கொண்ட காதலைக் கூறுதல்.
வாவுங் கலைவிந்தை காவலன் வாணன்தென் மாறையன்னீர்
ஏவுந் தொழிலெனக் கேதிய லாததிங் கேநுமக்கோர்
மேவுஞ்செய் குன்றமுஞ் சோலையு மாகப்பொன் வெற்பும்விண்ணோர்
காவுந் தரவும்வல் லேனெனை யாளுங் கடைக்கண்வைத்தே. (081)
(இதன்பொருள்) மேலெழுந்து தாவுதலைச் செய்யுங் கலையை ஊர்தியாயுள்ள வீரமகளுக்குக் காவலனாகிய வாணனது தென்மாறை நாடுபோல்வீர்! நீர் என்னை யேவுந்தொழில் இவ்விடத்து எனக்கு இயலாதது ஏது? எத்தொழில் செய்யவும் வல்லேன்; நுமக்கு விளையாடற்குப் பொருந்தும் ஒப்பற்ற செய்குன்றும் சோலையுமாக மேருமலையும் கற்பகக் காவும் தரவும் வல்லமையுடையேன்; என்னிடத்துக் கடைக்கண் வைத்து ஆளும்படி செய்வீர் என்றவாறு.
வாவுதல் - தாவுதல். விந்தை - வீரமகள். 'மேவுமோர் செய் குன்று' என மாறுக. 'தரவும் வல்லேன்' என்புழி, உம்மை, நீர் எத்தொழில் ஏவினும் அத்தொழில் செய்யவும் வல்லேன் என்று தோன்றினமையால், இறந்தது தழீஇய எச்சவும்மை. இதனுள் செய்குன்றமும் சோலையுமாகப் பொன்வெற்பும் விண்ணோர்காவும் என்பது நிரனிறை யெனக் கொள்க.
---------- (081. தலைவனுட்கோள்சாற்றல் - முற்றும்) ----------
082. பாங்கி குலமுறை கிளத்தல் :
பாங்கி குலமுறை கிளத்தல் என்பது, தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையால் இயையாது என மறுத்துக் கூறல்.
நீவே றுரைக்கின்ற தென்குற மாதெங்க ணேரிழைபோற்
மாவேழ வன்படை வாணன்தென் மாறை மணியையன்றித்
தாவேது மில்லாத் தமனிய மீது தலம்புரக்குங்
கோவே அழுத்துவ ரோவறி யோருங் குருவிந்தமே. (082)
(இ - ள்.) இவ் வுலகைப் புரக்குங் கோவாகிய தன்மையைப் பெற்றோய்! நீ இயையுந் தன்மையைக் கூறாது இயையாது கூறியதென்னை? எங்கள் நேரிழை குறமாது, போர்செய்யும் பரியும் வேழமும் வலிய படையாகவுடைய வாணன் தென்மாறை நாட்டிற் பிறக்கும் மணியையன்றிக், கேடேதும் இல்லாத பசும் பொன்னின்மீது வறுமையுற்றோருங் குருவிந்தத்தை யழுத்துவரோ என்றவாறு.
'எங்க ணேரிழை குறமாது' என இயையும். 'மாவேழம்' என்புழி, உம்மைத்தொகை. மணி - பதுமராகம். தா - கேடு. தமனியம் - பொன். தலம் புரத்தல் - உலகைக் காத்தல்.
வறியோர் - நல்குரவோர். 'அன்றி' என்னும் வினையெச்சக் குறிப்பு, 'அழுத்துவரோ' என்னும் முற்றுவினை கொண்டது. ஓகாரம் எதிர்மறை. 'வறியோரும்' என்னும் உம்மை இழிவு சிறப்பு.
'குருவிந்தம்' என்பது [1]'கதிர்நிரை பரப்பு மணிமுடித் தேவர்கள்' என்புழி, 'குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு, சாதுரங் கம்எனுஞ் சாதிகள் நான்'கில் ஒன்று என்று கூறிப், பின்னும் அப்பாட்டிலே,
'செம்பஞ் சரத்தந் திலகமு லோத்திரம்
முயலின் சோரி சிந்துரங் குன்றி
கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்
குருவிந் தத்திற் குரித்தன நிறமும்.'
என்று கூறியவதனால், 'குருவிந்தம்' என்பது பதுமராகமணிக்குப் பொதுமணியாவதும், உச்சிக் கதிர்போலக் கதிரெழுவதாங் கதிரில்லாதது எட்டுவகையில் ஒரு நிறங்கொண் டிருப்பதும் குருவிந்தக்கல் என்று கண்டுகொள்க.
-----
[082-1] கல்லாடம் - (௯௯) 99.
----------
---------- (082. பாங்கி குலமுறை கிளத்தல் - முற்றும்) ----------
083. தலைவன் தலைவி தன்னை யுயர்த்தல் :
மிக்கா ருளரல்லர் மெல்லியன் மாதரின் மேதினிமேல்
தக்கார் புகழ்தஞ்சை வாணர்பி ரான்தமிழ் நாடனையாய்
மைக்கார் நிகர்குழல் வள்ளிசெவ் வேளுக்கு வல்லவையாம்
இக்கா ரணமுண ராதென்கொ லோநின் றியம்புவதே. (083)
(இ - ள்.) மேதினிமேல் தகுதி யுடையோராற் புகழப்பட்ட தஞ்சையிலுள்ள வாணர்பிரானது தமிழ்நாடு போல்வாய்! மெல்லிய இயல்பினை யுடைய மாதரில் மிகுதித் தன்மையை யுடையா ரல்லார் ஆர்? கரிய முகிலை யொக்குங் குழலினை யுடைய வள்ளி முருகக் கடவுளுக்கு வல்லவை யாகிய இக் காரணம் உணராது, இயையாது என்று நீ சொல்லுவது என் என்றவாறு.
'மிக்குள ரல்லரார்' என மாறுக. மேதினி - புவி. தக்கார் - பெரியோர். செவ்வேள் - முருகக்கடவுள். வாணர்பிரான் - அவன் குலத்தில் வாணர் என்று பிறக்கு மவர்கட்கெல்லாஞ் சிறந்தோன். 'கொலைகா லயிற்படை நேரியர்கோன்'[செ - (௫௩) 53] என்று முன்னங் கூறியதுபோலக் கொள்க. தமிழ்நாடு - பாண்டிநாடு. வல்லவை - தேவி. காரணம் - கதை. கொலோ - அசைநிலை.
---------- (083. தலைவன் தலைவி தன்னை யுயர்த்தல் - முற்றும்) ----------
084. பாங்கி யறியாள்போன்று வினாதல் :
பாங்கி யறியாள்போன்று வினாதல் என்பது, இவன் தலைவியிடத்துக் காதல்கொண்டது அறியாள்போல நீ எவளிடத்துக் காதல் கொண்டாய் என வினாதல்.
பொன்னிய லூசலும் பொய்தலு மாடியெப் போதுநன்னீர்
மன்னிய நீலமு நித்தில முங்குற்று வாணன்தஞ்சை
இன்னிய லாரு மிளமரக் காவி னிடம்பிரியாக்
கன்னியர் தாம்பலர் யார்நின்னை வாட்டிய காரிகையே. (084)
(இ - ள்.) பொன்னாலியன்ற ஊசலும் விளையாட்டும் ஆடி யெஞ்ஞான்றும் நல்ல நீரினிடத்து நிலைபெற்ற நீலமும் முத்தும் குற்றும் வாணனது தஞ்சைநாட்டில் இனிய இயல் பொருந்தும் இளமரச் சோலையிடம் பிரியாத கன்னியர்கள் தாம் பலர், அவருள் நின்னை வாட்டிய காரிகை யார்? யான் அறிய உரைப்பாயாக என்றவாறு.
'பொன்னியல்' என்புழி, மூன்றனுருபு தொக்கது. பொய்தல் - விளையாட்டு. நீலம் - குவளை. நித்திலம் - முத்து. இன்னியல் - இனிய சாயல். கா - சோலை. காரிகை - பெண். ஊசலும் விளையாட்டும் இவ்விரண்டையும் ஒரு தொழிற்படுத்தி, 'ஆடி' என்றும், நீலமும் நித்திலமும் இவ்விரண்டையும், 'குற்று' என்னும் பல பொருள் குறித்த வொரு சொல்லால் நீலப்பூவைக் 'கொய்து' என்றும், நித்திலத்தை 'அவைத்து' என்றும் கூறினாரென்று உணர்க.
அவைத்தல் - உரலில் நெல் முதலியன பெய்து குற்றுதல்.
‘துவைக்குந் துணிமுன்னீர் கொற்கை மகளிர்
அவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்தம்
மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின்
அணங்கமுத மன்னலார் பாடல்.'
என இதனுள், பெண்கள் சிறுசோறடுதற்கு நித்திலங் குற்றுதற்கு அவைத்தல் என்று பொருள் வந்தவாறு கண்டுகொள்க. தலைவன் - முன்னிலையெச்சம்.
---------- (084. பாங்கி யறியாள்போன்று வினாதல் - முற்றும்) ----------
085. இறையோன் இறைவி தன்மை யியம்பல் :
தாளிணை மாந்தளி ரல்குல்பொற் றேரிடை சங்கைகொங்கை
கோளிணை கோலக் குரும்பைகை காந்தள் கொடிக்கரும்பார்
தோளிணை வேய்முகந் திங்கள்செவ் வாயிதழ் தொண்டையுண்கண்
வாளிணை வார்குழ லாய்வாணன் மாறையெம் மன்னுயிர்க்கே. (085)
(இ - ள்.) வார்குழலாய்! வாணனது மாறைநாட்டி லிருக்கும் எம் மன்னுயிர்போல்வாட்கு இலக்கணம், தாளிணை மாவினது தளிர்; அல்குல் பொன்னின் அலங்கரித்த தேர்; இடை உண்டு இல்லையென்னுஞ் சங்கை; கொங்கை கொத்தில் இரண்டிணைந்து அழகார்ந்த குரும்பை; கை காந்தள்; பூங்கொடியும் கரும்பும் குங்கும எழுத்தால் ஆர்ந்த தோளிணை வேய்; முகம் திங்கள்; சிவந்த வாயிதழ் கோவைக்கனி; மையுண்டகண் வாளிணை; நீ யறிவாயாக என்றவாறு.
சங்கை - ஐயம். கோள் - கொத்து; [1]'கோட்டெங்கின் குலைவாழை' என்புழி, கோள் கொத்தினை யுணர்த்தியவா றுணர்க. அன்றியும், [2]'வண்கோட்பலவின்' என்புழியும், கோள் கொத்தினை யுணர்த்தியவா றுணர்க. கோலம் - அழகு. கொடி - வல்லி. 'கொடிக் கரும்பு' என்புழி, உம்மைத்தொகை. தொண்டை - கொவ்வைக்கனி. மன்னுயிர் - ஆகுபெயர்.
-----
[085-1] பட்டினப்பாலை - (௧௬) 16.
[085-2] மலைபடுகடாம் - (௩௩௭) 337.
----------
---------- (085. இறையோன் இறைவி தன்மை யியம்பல் - முற்றும்) ----------
086. பாங்கி தலைவியருமை சாற்றல் :
பாங்கி தலைவியருமை சாற்றல் என்பது, பாங்கி தலைவியை அரியளாக்கிக் கூறல்.
புகழார் வரையெம் புரவலன் காதற் புதல்வியைநீர்
இகழா வெளியளென் றெண்ணப் பெறீரெமக் கென்றும்வண்மை
திகழா பரணன் செழுந்தஞ்சை வாணன் சிலம்பினுள்ளீர்
அகழார் கலியுல கிற்புல னான அணங்கவளே. (086)
(இ - ள்.) எமக்கெஞ்ஞான்றும் வளமையொளிரும் ஆபரணம்போன்ற செழுந்தஞ்சை வாணனது சிலம்பிலிருப்பீர், புகழ் நிறைந்த வரைக்கு இறைவனாகிய எம் புரவலர்க்குக் காதற் புதல்வியா யுள்ளாளை யிகழ்ந்து எளியளென் றெண்ணப்பெறுந் தகுதியுடையீ ரல்லீர்; அவள் சகரரால் அகழப்பட்ட கடல்சூழ்ந்த வுலகில் அறிவுருவான தெய்வப் பெண் என்றவாறு.
வரை - மலை. புரவலன் - அரசன். ஆர்கலி - கடல்.
---------- (086. பாங்கி தலைவியருமை சாற்றல் - முற்றும்) ----------
087. தலைவன் இன்றியமையாமை இயம்பல் :
தலைவன் இன்றியமையாமை இயம்பல் என்பது, இன்றியமையாமை ஓர் சொல், முடிந்த பொருளாய்த் துணிபு பற்றிய சொல்; என்னை,
[1]'நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.'
என்பதுபோலத் தலைவி இன்றியமையாமை கூறல்.
வனைந்தா லனகொங்கை மாதுரு வாய்த்தஞ்சை வாணன்வெற்பில்
புனைந்தா லனைய புனத்தயல் வாய்வண்டு போதகத்தேன்
நனைந்தா லனையவென் னல்வினை தான்வந்து நண்ணிற்றென்று
நினைந்தா லணங்கனை யாய்தமி யேனுயிர் நிற்கின்றதே. (087)
(இ - ள்.) அணங்குபோல்வாய்! தஞ்சைவாணனது வெற்பிடத்து அலங்கரித்தாற்போலும் புனத்தின் பக்கத்தில் என் நல்வினைதான், கைவல்லார் கையினாற் செய்து வைத்தாற்போலுங் கொங்கையை யுடைய மாதுருவாய்வந்து பொருந்திற்றென்று நீ நினைத்தால், போதகத்திலிருக்குந் தேனில் வண்டு நனைந்தாலொத்த அத்தலைவி இன்பத்தின் மூழ்குந் தமியேனுயிர் நிற்கின்றது; நினையாவிடின் நில்லாதென் றறிவாய் என்றவாறு.
போது தலைவியாகவும், தேன் இன்பமாகவும், வண்டு தானாகவும் உவமித்தவதனான் தலைவி யின்பத்து மூழ்கும் என்று வருவிக்கப்பட்டது.
வனைதல் - செய்தல். புனைதல் - அலங்கரித்தல். அயல் - பக்கம். நண்ணல் - பொருந்தல். அணங்கு - தெய்வப்பெண். 'நினையா விடிலுயிர் நில்லாது' என்பது அவாய்நிலையான் வந்தது. 'போதகத் தேன் வண்டு' எனவும், 'என் நல்வினைதான் வனைந்தா லனகொங்கை மாதுருவாய்' எனவும் மாறுக.
-----
[087-1] திருக்குறள். வான்சிறப்பு - (௧0) 10.
----------
---------- (087. தலைவன் இன்றியமையாமை இயம்பல் - முற்றும்) ----------
088. பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல் :
மருப்பா வியதொங்கல் வாணன்தென் மாறை வனசமலர்த்
திருப்பாவை யன்னவென் சேயிழை யாட்குன் திருவுளத்து
விருப்பா கியகுறை யுள்ளதெல் லாஞ்சொல்லி வேண்டுகநீ
பொருப்பா மொழியப் பெறாரெம்ம னோரிவை போல்வனவே. (088)
(இ - ள்.) குறிஞ்சிநிலத்து இறைவனே! மணம் பொருந்திய மாலையையுடைய வாணனது தென்மாறை நாட்டுத் தாமரைமலரில் எழுந்தருளியிருக்குந் திருமாது போன்ற எம்பெருமாட்டிக்கு உனது திருவுளத்து விருப்பமாகிய குறையுள்ளதெல்லாம் நீயே சொல்லி வேண்டிக் கொள்வாயாக; அன்றி எம்போல்வார் இவைபோன்ற காரியங்கள் மொழியப்பெறுந் தகுதியர் அல்லர் என்றவாறு.
மரு - மணம். பாவுதல் - பொருந்துதல். தொங்கல் - மாலை. வனசமலர் - தாமரைமலர். திருப்பாவை - திருமாது. பொருப்பன் - குறிஞ்சிநிலத்து இறைவன்.
---------- (088. பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல் - முற்றும்) ----------
089. பாங்கியைத் தலைவன் பழித்தல் :
வில்லார் நுதல்வெய்ய வேலார் விழிக்கென் மெலிவுசொல்ல
வல்லா ரிலைசொல்ல வல்லையென் றியான்தஞ்சை வாணன்றெவ்வின்
ஒல்லா திதுநுமக் கென்றுண ரேனின் றுணங்கியிந்நாள்
எல்லா மிரந்தது நின்குறை யேயல்ல என்குறையே. (089)
(இ - ள்.) வில்போன்ற நுதலும், வெவ்விய வேல் போன்ற விழியுமுடையாட்கு எனது மெலிவுசொல்ல, நின்னை யல்லால் வல்லாரில்லை; நீ சொல்ல வல்லை யென்றெண்ணி யான், தஞ்சைவாணனுக்குப் பகைவர்செய்தி யார்க்கும் பொருந்தாததுபோல, என் செய்தி நுமக்குப் பொருந்தாதென்று அறியேன் வேட்கை வெயிலினால் உலர்ந்து, செஞ்சுடர்தோன்றுங் காலையில் தொடங்கி இன்றாகிய இந்நாள்முற்றும் நும்மை யிரந்தது நின்மேற் குறையல்ல, என்மேற் குறை என்றவாறு.
-
ஆர் - ஒப்பு. 'நுதல்விழி' என்புழி, உம்மைத்தொகை. விழி - ஆகுபெயர். தெவ் - ஆகுபெயர். ஒல்லாது - பொருந்தாது. உணங்கல் - உலர்தல். 'இன்றிந்நாள்' என இயையும். 'நின்குறையல்ல என்குறை' என்றது குறிப்புமொழி. 'கற்கறித்து நன்கட்டாய்' என்பதுபோல, [1]'வயக்குறு மண்டிலம்' என்னும் பாலைக்கலி பன்னீரடித்தரவில், 'இறத்திராலைய மற்றிவ ணிலைமை கேட்டீமின்' என்றது போலும் ஒருமை பன்மை மயக்கமெனக் கொள்க. பாங்கி - முன்னிலையெச்சம்.
-----
[089-1] கலித். பாலை - (௨௪) 24.
----------
---------- (089. பாங்கியைத் தலைவன் பழித்தல் - முற்றும்) ----------
'இன்றிந்நாளெல்லா மிரந்தது' என்று வரையறுத்துக் கூறியவதனால், 'குறையுற வுணர்தல்' முதல், நாலாநாட் செய்தி என்று அறிவித்தற்குக் கூறியவாறென்று உணர்க.
--------------------
090. பாங்கி பேதைமை யூட்டல் :
பாங்கி பேதைமை யூட்டல் என்பது, தலைவி பிறர் துயரம் அறியாளெனப் பேதைமையைப் பாங்கி தலைவன் உளங்கொளச் சாற்றல்.
தேனுஞ் சுரும்புஞ் செறிதொங்கல் வாணன்தென் மாறைவெற்பா
மானுங் கலையும் வடிக்கணை யாலெய்து மன்னுயிரும்
ஊனுங் கவர்கின்ற தன்னையர் போலயி லொத்தகண்ணாள்
தானும் பிறருள்ள நோயறி யாத தகைமையளே. (090)
(இ - ள்.) பெடையும் சுரும்பும் செறிந்த மாலையை யணியும் வாணனது தென்மாறைநாட்டு வெற்பிலுள்ளவனே! மானும் கலையும் வடித்த கணையால் எய்து, அவ் விலங்கினது உயிரும் ஊனும் கொள்கின்ற தன்னுடன் பிறந்த தன்னையர்போல, வேலொத்த கண்ணினை யுடையாள் தானும் பிறருள்ளத்தின்கண் ணுள்ள நோயை யறியாத முறைமையள் என் றவாறு.
தேன் - சாதிப்பெயர்; பெடைமேல் நின்றது. சுரும்பு - ஆண் வண்டு. வடி - வடித்தல். கவர்தல் - கொள்ளுதல். தன்னையர் - தமையர். அயில் - வேல். தகைமை - முறைமை. ஓரிடத்திற் பிறந்தவராகலான் தன்னையர் குணம் இவட்குமாயினவாறு உணர்க.
---------- (090. பாங்கி பேதைமை யூட்டல் - முற்றும்) ----------
091. காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் :
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் என்பது, அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி, முதிர்ந்த அறிவினையுடையாள் தலைவி, அவளை அவ்வாறு கூறற்பாலை யல்லை என்று தலைவன் கூறல்.
வருநீர் வனமுலை மங்கைநல் லாய்செங்கை வாணன்வையை
தருநீர் மலிவயல் தஞ்சையன் னாளன்று தஞ்சமிலேன்
அருநீர் நவையுறக் கண்மலர் நீர்தெளித் தாற்றினளால்
இருநீர் நிலங்கொள்ளு மோவறி யாளென்னும் இவ்வுரையே. (091)
(இ - ள்.) அழகின்றன்மை நாட்குநாள் மிக்காய்த் தோன்றும் முலையையுடைய மங்கைப்பருவ நல்லாய், சிவந்த கையையுடைய வாணனது வையையாறு தரும் நீரான் மலிந்த வயலினையுடைய தஞ்சைநகர்போல்வாள் முன் பற்றுக்கோடில்லேன், பிறர் எய்தற்கு அரிதாகிய கல்வி யறிவு வேட்கையாற் குற்றமுறும்போது, அக் குற்றந்தீரத் தனது கண்மலரினுள்ள அருளாகிய நீரைத்தெளித்து ஆற்றினாளாதலால், அவளை யறியாளென்று கூறிய இவ் வுரையைப் பெருநீர் சூழ்ந்த இவ்வுலகம் முறைமையென்று கொள்ளாது என்றவாறு.
'வனநீர் வருமுலை' என மாறுக. மலிதல் - நிறைதல். தஞ்சம் - பற்றுக்கோடு. அரு நீர் - அரிய கல்வியறிவு. நவை - குற்றம். நீர் - அருள். ஆற்றுதல் - தணித்தல். இருநீர் - பெருநீர். ஓகாரம் - எதிர்மறை.
---------- (091. காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் - முற்றும்) ----------
092. பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் :
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் என்பது, இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி முன் நின் வேட்கை தீர்த்தாள் என்று கூறினையே, அவ்வாறு இன்னுங் கூடுக என்று கூறல்.
செறிவளர் காவி வயற்றஞ்சை வாணன் சிறுமலைமேல்
நெறிவளர் வார்குழல் நேரிழை யாளன்ன நீர்மையளேல்
குறிவளர் காவின்முன் கூடிய வாறின்னுங் கூடுகநீ
கறிவளர் சாரல்வெற் பாபிற ராலென்ன காரியமே. (092)
(இ - ள்.) கறிக்கொடி வளருஞ் சாரலை யுடைய வெற்பனே! ஒழுங்காய் வளர்ந்த வார்ந்த குழலையுடைய நேரிழையாள் நின் வேட்கை தணிக்கும் அத்தன்மையாகிய குணமுடையாளேல், வளருங் காவி செறிந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணன் சிறுமலைமேல் நீ கூடுங்குறி வளரப்பட்ட காவில் முன் கூடியவாறுபோல் இன்னுங் கூடுக, என் போலும் பிறரால் என்ன காரியம் என்றவாறு.
‘வளர் காவி செறி வயல்' என மாறுக. காவி - நீலம். நெறி - ஒழுங்கு. குறி - கூடுமிடம். கறி - மிளகு; ஆகுபெயர். சாரல் - மலைப்பக்கம்.
---------- (092. பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் - முற்றும்) ----------
093. தன்னிலை தலைவன் சாற்றல் :
தன்னிலை தலைவன் சாற்றல் என்பது, இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேட்கை நோயால் உழக்குந்தன்மை கூறல்.
உரைத்தென் பிறவந்தப் பைந்தொடி யாக முறாவிடில்வெண்
திரைத்தென் கடன்முத்துந் தென்மலைச் சந்துஞ் செழும்பனிநீர்
அரைத்தென் புருகமெய் அப்பினும் வெப்ப மறாதினிநின்
வரைத்தென் கருமமெல் லாந்தஞ்சை வாணன் வரையணங்கே. (093)
(இ - ள்.) தஞ்சை வாணன் மலையி லிருக்கும் அணங்கே! அந்தப் பைந்தொடியை யுடையாளது ஆகத்தைக் கூடாவிடில் யான் சொல்லி யென்ன பயன்? வெண்மை நிறம்பொருந்திய திரை பொருந்தும் தென்கடலிடைப் பிறந்தமுத்தும், பொதியமலையிற் பிறந்த சந்தனமும் செழும் பனிநீர் விட்டரைத்து வேட்கைத்தீயில் வெதும்பிய எலும்பு உருக என் மேனியெங்கும் அப்பினாலும் வெப்பம் ஆறாது; இன்று எனது காரியமெல்லாம் நினது எண்ணத்தின்மட்டிற் பட்டது என்றவாறு.
எனவே, உய்யச்செய்யினும் நையச்செய்யினும் நீயல்லால் வேறில்லை யென்றவாறாயிற்று. பிற - அசைநிலை. பைந்தொடி - அன்மொழித் தொகை. ஆகம் - மெய். திரை - அலை. தென்மலை - பொதியம். சந்து - சந்தனம். ஆறாது - அறாது எனக் குறுக்கும் வழிக் குறுக்கலாய் நின்றது, வாராது - வராது, தாராது - தராது என்றாற்போல.
---------- (093. தன்னிலை தலைவன் சாற்றல் - முற்றும்) ----------
094. பாங்கி உலகிய லுரைத்தல் :
பாங்கி உலகியல் உரைத்தல் என்பது, இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி உலகில் வேட்கைகொண்டோர் சான்றோரை முன்னிட்டு வரைந்து கொள்வர். அவ்வாறு உலகியலால் நீயும் வரைந்துகொள்க எனக் கூறல்.
விரையக நாண்மலர் மெல்லியல் மாதை விரும்பினையேல்
வரையக நாட வரைந்துகொ ணீதஞ்சை வாணன்முந்நீர்
தரையக நான்மறைக் கேள்வியர் வேள்வியர் சான்றவர்தம்
உரையக நாடிமுன் னிட்டன தாகு முலகியலே. (094)
(இ - ள்.) மலையிடமாகிய நாட்டை யுடையவனே! தஞ்சைவாணனது முந்நீர் சூழ்ந்த புவியகத்தில் வேட்கை கொண்டார் செய்யும் உலகமுறைமை, நான்கு மறையையும் கேள்வியாலறிந்து வேள்விசெய்யுஞ் சான்றவர் கூறும் உரையிடத்துக் கொண்ட பொருளைக் கருதி அவரை முன்னிட்டு வரைந்து கொள்ளில், அன்ன தாகுமா தலால், மணத்தைத் தன்னிடத்திலேயுடைய நாண்மலரிலிருக்கும் மெல்லிய இயல்பினையுடைய மாதுபோல்வாளை விரும்பினையேல், நீ வரைந்து கொள்வாயாக என்றவாறு.
விரை - மணம். நாண்மலர் - முறுக்கவிழ்மலர். மாது - ஆகுபெயர். வரைதல் - மணஞ்செய்தல். உரையகம் - ஆகுபெயர். கேள்வியர் - முற்றெச்சம். அனது - இடைக்குறைவிகாரம்.
---------- (094. பாங்கி உலகிய லுரைத்தல் - முற்றும்) ----------
095. தலைமகன் மறுத்தல் :
வெண்டா மரைமங்கை காதல னாகிய வேதியன்பால்
உண்டா கியதொல் லுலகிய லாலுங்க ளாரணங்கை
வண்டார் குழலி வரைந்துகொள் வேன்தஞ்சை வாணன்வண்மை
கண்டா லருளுள்ள நீயென தாருயிர் காத்தபின்னே. (095)
(இ - ள்.) வண்டார்ந்த குழலையுடையாய்! தஞ்சை வாணனது கொடை கண்டாற்போலும் அருளுள்ள நீயாதலால், இப்போது என்னுடைய அரியவுயிர் ஏகுந் தன்மையாய் நின்றது, அது ஏகாமற் காத்தபின் வெண்டாமரை மங்கைக்குக் கணவனாகிய மறையோனிடத்து உண்டாகிப் பழைமையாகிய வுலகியலால் உங்களுடைய ஆரணங்குபோல்வாளை நீ சொன்னபடி வரைந்துகொள்வேன் என்றவாறு.
வெண்டாமரை மங்கை - வாணி. வேதியன் - பிரமன். ஆரணங்கு - ஆகுபெயர். நல்குரவால் உயிர்போகின்றாரைப் போகாமல் நிலைமையைச் செய்யுங் கொடையாதலால், அக் கொடையைக் கண்டாற்போலும் அருளுள்ள நீ யெனவே, கொடைக்கும் அவளருளுக்கும் உவமை கூறியவாற்றான், 'எனது ஆருயிர் காத்தபின்' என்று கூறியவாறு உணர்க. வண்மை - கொடை.
---------- (095. தலைமகன் மறுத்தல் - முற்றும்) ----------
096. பாங்கி யஞ்சி யச்சுறுத்தல் :
பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் என்பது, பாங்கி தானும் அஞ்சினவளாய்த் தலைவனை அப் புனம்விட்டுப் போக அச்சமுறுத்திக் கூறல்.
மல்லார் புயன்தஞ்சை வாணன்வெற் பாவெமர் வந்தினியிக்
கல்லார் வியன்புனங் காவல்வி டாரவர் காணின்மிகப்
பொல்லா திருண்டது போதுமற் றியாங்களும் போதுமிங்கு
நில்லா தெழுந்தருள் நீயுமிப் போது நெடுந்தகையே. (096)
(இ - ள்.) மற்றொழில் பொருந்திய புயத்தையுடைய தஞ்சைவாணன் வெற்பிடத்துள்ளவனே! எங்கட்குத் தமராயுள்ளவர் இன்றுவந்து மலையார்ந்தகன்ற புனம் இராக் காவல் விடார்; அவர் நின்னைக் காணில் மிகவும் பொல்லாரா யிருப்பர்; நெடுந்தகையை யுடையவனே, இருண்டதுபோது, எம்மூர்க்கு யாங்களும் போதும், நீயும் இப்போது இங்கு நில்லாது எழுந்தருள்வாயாக என்றவாறு.
எமர் - எமக்குத் தமர். வியன் - அகற்சி. நெடுந்தகை - அன்மொழித் தொகை. இதனுள், 'வெற்பா' எனவும், 'நெடுந்தகை' எனவும் இரண்டிடத்தும் பொருட்பெயர் முன்னிலையாய் நின்றது. இவ்வாறு வந்தது என்னையெனின்,
[1]'பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே.'
என்னுஞ் சூத்திரவிதியால்.
[2]'பொற்பூண் சுமந்த புணர்மென் முலைக் கோடு போழ
நற்பூங் கழலா னிருதிங்க ணயந்த வாறுங்
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான்
வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும்'.
இதனுள், 'நற்பூங்கழலான்' எனவும், 'கற்பாடழித்த கனமாமணித் தூண்செய் தோளான்' எனவும் இரண்டிடத்தும் படர்க்கைப்பெயர் ஒரு பொருளைக் கருதியவாறு உணர்க.
'வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந்
தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற்
கூடலார் கோவொடு நீயும் படுதியே
நாடறியக் கவ்வை யொருங்கு.'
என்பதனானும் உணர்க.
இவ்வாறு வருதல் பெரும்பான்மையும் வழுவமைதியாய் வருதலின், இச்செய்யுளுள்ளும் இரண்டிடத்தும் முன்னிலைப்பொருளைக் கூறியவாறு உணர்க. மற்று - அசை.
-----
[096-1] தொல். சொல். கிளவியாக்கம் - (௩௭) 37.
[096-2] சிந்தா. பதிகம் - (௧௪) 14.
----------
---------- (096. பாங்கி யஞ்சி யச்சுறுத்தல் - முற்றும்) ----------
097. தலைவன் கையுறை புகழ்தல் :
சிமையார் மலயத் தமிழ்த்தஞ்சை வாணன் சிறுமலைமேல்
அமையா கியதடந் தோளன்ன மேயணி யத்தகுமால்
உமையாள் இறைவன் பயில்கயி லாயத்தும் உம்பர்தங்கும்
இமையா சலத்துமெல் லாமில்லை யால்நிகர் இத்தழைக்கே. (097)
(இ - ள்.) சிகரத்தைப் பொருந்திய பொதியமலையிற் பிறந்த தமிழ் வளர்க்குந் தஞ்சைவாணனது சிறுமலைமே லிருக்கும் மூங்கிலிற் பெரியதோளையுடைய அன்னம்போல் வாய், இத்தழைக்கு நிகர் உமையாள் இறைவனாகிய சிவன் பிரியாது பழகியிருக்குங் கயிலாயத்தும், தேவர்கள் பிரியா திருக்கும் இமையாசலத்தும் முற்றுமில்லை யாதலால் அணியத்தகும் என்றவாறு.
சிமையம் - சிமை யென விகாரப்பட்டு நின்றது. மலயம் - பொதிய மலை. அமை - மூங்கில். தடந்தோள் - பெரியதோள். அன்னம் - ஆகுபெயர். நிகர் - ஒப்பு. 'தடந்தோளாகிய' என மாறுக. ஆல் - அசை. இத்தழைக்கு நிகரில்லை யென்று கூறுவது என்னையெனின், தன் உயிரை நிறுத்தற்கு ஏதுவாகலானும், மணத்துக்குத் தான் முன்னிற்றலானும் என்றுணர்க.
---------- (097. தலைவன் கையுறை புகழ்தல் - முற்றும்) ----------
098. பாங்கி கையுறை மறுத்தல் :
மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலயவெற்பா
நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையி னன்னுதலாள்
அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப்
பல்குற் றமும்வரு மால்யாங்கள் வாங்கேம் பசுந்தழையே. (098)
(இ - ள்.) நிறையுற்ற தண்புனல் சூழ்ந்த தஞ்சை வாணன் மலயவெற்பி லிருப்பவனே! நீ தரப்பட்ட இத்தழை இந்நாட்டிலுள்ளன அல்லாமையால் நன்னுதலாள் அல்குற்றடத்திலே யணியில் எமக்குத் தமராயுள்ளார் கண்டால் ஐயப்படுவர்; அதுவுமன்றிப் பல குற்றமும் வருமாதலால், இப்பசுந்தழையை யாங்கள் வாங்குதல் செய்யேம் என்றவாறு.
மல்குறல் - நிறைதல். நல்குறல் - தருதல். அயர்த்தல் - ஐயப்படுதல். குலத்துக்கும் தலைவிக்கும் தனக்கும் மறு என்பதுபற்றிப் பல குற்றம் என்று கூறினாள்.
---------- (098. பாங்கி கையுறை மறுத்தல் - முற்றும்) ----------
099. ஆற்றா நெஞ்சினோ டவன் புலத்தல் :
ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் என்பது, ஆற்றாமையாகிய நெஞ்சுடனே தலைவன் புலந்து கூறியது.
உழையும்வெங் காளமும் போலுங்கண் ணாளொரு காலமுள்ளம்
குழையுமெம் பாலென்று கொண்டநெஞ் சேகலிக் கோடைமண்மேல்
மழையுமந் தாரமும் வந்தன வாணன்தென் மாறையின்மாந்
தழையுநம் போலிங்ங னேகவின் வாடத் தவஞ்செய்ததே. (099)
(இ - ள்.) மானும் வெவ்விய விடமும் போலுங் கண்ணையுடைய பாங்கியானவள் யாம் இரந்து பின்னின்றேமாயின், ஒருகால் எம்மிடத்து மனமிளகும் என்று எண்ணங்கொண்ட நெஞ்சே! கலியாகிய கோடைசூழ்ந்த இம் மண்ணுலகின்மேல், கோடை வெப்பந் தணிய மழையும் மந்தாரமும் வந்தாற்போன்ற வாணன் தென்மாறை நாட்டில், நம்மைப்போல் இந்த மாந்தழையும் அழகுவாடத் தவஞ் செய்தது, யாம் என் செய்வோம் என்றவாறு.
உழை - மான். காளம் - விடம். குழைதல் - இளகுதல். கவின் - அழகு. 'மழையும் மந்தாரமும்' என்பதற்கு மேகமும் மந்தாரத் தருவும் என்று பொருளுரைப்பாரும் உளர். மழைபோல் உடனே வெப்பந் தணியாமையின் அது பொருளன்மை யுணர்க. 'யாம் என் செய்வோம்' என்பது சொல்லெச்சம்.
---------- (099. ஆற்றா நெஞ்சினோ டவன் புலத்தல் - முற்றும்) ----------
100. பாங்கி ஆற்றுவித் தகற்றல் :
பாங்கி ஆற்றுவித்து அகற்றல் என்பது, இவ்வாறு கூறுதல் கேட்ட பாங்கி தலைவனை அஞ்சலை நாளை வா எனக் கூறிவிடுத்தல்.
சோலையில் வாழிளந் தோகையன் னாளைத் தொழுதிரந்திம்
மாலையில் வாழி வரங்கொள்வல் யான்தஞ்சை வாணன்வெற்பா
வேலையில் வார்துகி ரன்னவெய் யோன்வெயில் வெற்பின்மல்கும்
காலையில் வாபின்னை யென்கைய தாகுநின் கையுறையே. (100)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! சோலையில் வாழும் இளந்தோகைபோல்வாளை யான் இவ்விரா முற்றுந் தாளிற் பணிந்து இரந்து வரமாக வேண்டிக்கொள்வன்; கடலில் நெடிய பவளம் போன்ற கதிரோனது கிரணம் வெற்பிலெல்லாம் நிறையுங் காலைப்பொழுதில் வா; வந்தாயேல், அப்போது நின் கையுறை என் கையதாகும் என்றவாறு.
தோகை - மயில். வாழி - அசைநிலை. வேலை - கடல். துகிர் - பவளம், வெய்யோன் - சூரியன். வெயில் - கிரணம். மல்குதல் - நிறைதல். கையிலுறைதலின் கையுறையாயிற்று.
---------- (100. பாங்கி ஆற்றுவித் தகற்றல் - முற்றும்) ----------
இத்துணையும் ஐந்தாநாட் செய்தி
தலைமகன் கூற்றாயின வெல்லாம், 'இரந்துபின்னிற்றற்'கும், பாங்கி கூற்றாயின வெல்லாம், 'சேட்படுத்தற்'கும் உரியவாறு காண்க.
--------------------
101. இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல் :
இரந்து குறை பெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல் என்பது, மற்றைநாட் காலையில் வந்த தலைமகன் இவளாற் காரியமின்றெனக் கருதி, இரந்து குறை பெறாதாயினோம் என்று வருத்தமுற்று, இனி நமக்குப் பொருளாவது மடலே யெனத் தன்னுள்ளே மதித்துக் கூறல்.
திருந்தார் தொழுங்கழற் சேயன்ன வாணன்தென் மாறைவெற்பில்
அருந்தா அமுதன்ன அஞ்சொனல் லாரழ கார்குழைதோய்
பெருந்தாரை வேல்விழி தந்தவெங் காமப் பிணிதனக்கு
மருந்தா வதுநெஞ்ச மேயில்லை வேறு மடலன்றியே. (101)
(இ - ள்.) நெஞ்சமே! பகைவர் தொழுந் தாளை யுடைய முருகவேளை யொத்த வாணன் தென்மாறை வெற்பிடத்து ஆராவமுதுபோன்ற அழகிய சொல்லையுடைய மடவாருடைய முகத்திற்கு அழகாயார்ந்த குழையைத் தொட்ட மணிபொருந்திய பெரிய வேல்போன்ற விழிப் பார்வையானது தந்த வெவ்விய காமமாகிய பிணிக்கு மருந்தாவது மடலேறலே யன்றி வேறில்லை என்றவாறு.
எனவே, யாம் அது செய்யக்கடவேம் என்பதாயிற்று.
மடலேறலாவது — தலைவன் ஒவ்வாக் காமத்தால் பனங்கருக்காற் குதிரையும், பனந்தருவி னுள்ளனவற்றால் வண்டில் முதலானவும் செய்து அக்குதிரையின்மே லேறுவது. மடலேறுவான் திகம்பரனாய், உடலெங்கும் நீறுபூசிக், கிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டிக், கிழியின் தலைப்புறத்தில் அவள்பேரை வரைந்து கைப்பிடித்து, ஊர்நடுவே நாற்சந்தியில் ஆகாரம் நித்திரை யின்றி, அக் கிழிமேற் பார்வையும் சிந்தையும் இருத்தி, வேட்கை வயத்தனாய் வேறு உணர்வின்றி, ஆ வூரினும் அழல் மேற்படினும் அறிதலின்றி, மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவ்வூரிலுள்ளார் பலரும் கூடி வந்து நீ மடலேறுதியோ? அவளைத் தருதும், சோதனை தருதியோ? என்றவழி இயைந்தானாயின், அரசனுக்கறிவித்து, அவனேவலால் அவன் இனைந்து நையத்தந்து மடலேறென்றவழி, ஏறும் முறைமை : பூளை, எலும்பு, எருக்கு இவைகளாற் கட்டிய மாலை யணிந்துகொண்டு அம்மாவிலேற, அவ்வடத்தை வீதியில் ஈர்த்தலும், அவ்வுருளை யுருண்டோடும்பொழுது, பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தந் தோன்றாது வீரியம் தோன்றின், அப்போது அவளை யலங்கரித்துக் கொடுப்பது; இரத்தங்கண்டுழி அவனைக் கொலை செய்துவிடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கென்று உணர்க.
சேய் - முருகன். தோய்தல் - தொடுதல். தாரை - கண்மணி. 'பெரு வேல்' என மாறுக. வேல்விழி - அன்மொழித்தொகை. காமத்தைப் பிணியாகக் கூறப்பட்டமையின் மடலேறுதலை மருந்தாகக் கூறப்பட்டது.
---------- (101. இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல் - முற்றும்) ----------
102. பாங்கிக்குலகின்மேல் வைத்துரைத்தல் :
பாங்கிக்கு உலகின்மேல் வைத்து உரைத்தல் என்பது, தலைவன் அம்மடலேற்றினை உலகின்மேல் வைத்துப் பாங்கிக்குக் கூறுதல்.
விரையூர் குழலியர் தந்தசிந் தாகுல வெள்ளநிரை
கரையூர் பொழுதிளங் காளையர் தாங்கிழி கைப்பிடித்துத்
தரையூர் தொறும்பெண்ணை மாமட லூர்வர் தவிர்ந்துபின்னும்
வரையூர்வர் தஞ்சையர் கோன்வாணன் மாறையில் வாணுதலே. (102)
(இ - ள்.) தஞ்சையி லுள்ளார்க்கு இறைவனாகிய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் ஒளிபொருந்திய நுதலினை யுடையவளே! மணமூருங் குழலையுடைய மாதர் தந்த காதலாகிய வெள்ளமானது நிரைத்த கரையின்மேற் செல்லும்போது, இளங்காளையர் தாம் வரைந்த கிழியைக் கையிலே பிடித்துப் புவியின்கணுள தாகிய ஊர்கடோறும் பனைமடலினாற் செய்த மாவை நடத்துவர்; அதனாற் சிந்தனை முடியாவிடில், அதனை விடுத்துப் பின்னும் வரைபாயச் செல்வர்; இதனை நீ அறிவாயாக என்றவாறு.
விரை - மணம். ஊர்தல் - நாற்றிக்குஞ் சென்று கமழ்தல். கரையூர்தல் - கரைமேற் செல்லுதல். கிழி - தலைவி யுரு எழுதப்பட்டது. பெண்ணை - பனை. 'மடல் மா' என மாறுக. வரை யூர்தல் - வரைபாய நடத்தல்.
---------- (102. பாங்கிக்குலகின்மேல் வைத்துரைத்தல் - முற்றும்) ----------
103. அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல்வைத்துச் சாற்றல் :
அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துச் சாற்றல் என்பது, அம்மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துக் கூறல்.
வன்பணி போனிலந் தாங்கிய வாணன்தென் மாறைவெற்பில்
மின்பணி பூண்முலை மெல்லிய லீர்குறை வேண்டியுங்கள்
முன்பணி வேனின்று நாளைவெண் பூளை முகிழெருக்கோ
டென்பணி வேன்மடல் மேல்வரு வேனிவை யென்பணியே. (103)
(இ - ள்.) வலிய அநந்தனைப்போல நிலவுலகத்தைத் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் மின்னும் பணியும் ஒளிப் பூண் பொருந்திய முலையினையுடைய மெல்லியலீர்! எனது குறையை முடிக்கவேண்டி யின்று உங்கள் முன் பணிவேன்; யான் பணிதலைக் கண்டு என் குறையை முடியாவிடில், நாளை வெண்பூளைப்பூ எருக்கமுகையுடனே என்புமாலை அணிந்து மடன்மா ஏறி வருவேன்; என்னுடைய தொழில் இவை என்றவாறு.
'முடியாவிடில்' என்பது அவாய்நிலையான் வந்தது. வன்பணி - அநந்தன். 'எருக்க முகிழ்' என மாறுக. அணிவேன் - முற்றுச் சொல் எச்சமாய் நின்றது. பணி - தொழில்.
இவ்வாறு மடலேறுவேன் என்று கூறியது பெருந்திணைப்பாற் படுமே யெனின், படாது. என்னை, தலைவன் பாங்கி உடன்பட வேண்டுமென்று குறித்துச் சொல்லியதல்லது மடலேறுங் கருத்தாய்க் கூறினன் அல்லன். ஆதலானன்றே மடலேற்றெனவையாது மடற்கூற்றென்று கூறியது; சான்றோர் செய்யுட்களிலெல்லாம், மடற்கூற்றென்றே வருவதல்லது மடலேற்றென வாராமையானும், [1]'மடன்மா கூறு மிடனுமா ருண்டே.' என்று தொல்காப்பியர் கூறிய வாற்றானும் உணர்க.
-----
[103-1] தொல். பொருள். களவியல் - (௧௧) 11.
----------
---------- (103. அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல்வைத்துச் சாற்றல் - முற்றும்) ----------
104. பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல் :
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல் என்பது, அவ்வாறு கூறக்கேட்ட பாங்கி கிழிதீட்டிய பின்னன்றோ மடலேறுவது, ஆதலால் தலைவி யவயவம் தீட்டுதற்கு அருமையென்று கூறல்.
தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை சூல்வளையூர்
மடையேய் வயற்றஞ்சை வாணன்வெற் பாமல ரோன்வகுத்த
படையே நயனம் படைத்தபொற் பாவை படியெடுக்க
இடையே தெனத்தெரி யாதுரை யாணி யிடவரிதே. (104)
(இ - ள்.) சூல்கொண்ட சங்குகள் ஊரும் மடை பொருந்திய வயல்சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பனே! மாலையாக எருக்கையும் என்பையும் நீ யணிந்தால் நினக் கியாது பயனைத் தரும்? கிழிதீட்டிய பின்னன்றோ மடலேறுவது, தீட்டுதல் நின்னால் முடியாது; எங்ஙன மெனின், பிரமன் வகுத்த படைக்கலமே நயனமாகப் படைத்த பொற்பாவையது உருப் படியெடுக்க இடை யாதெனின் தெரியாது; சொல்லை யெழுது கருவியால் எழுதவரிது.
இதனுள், 'பொற்பாவை' என்பது, பொன்னம்பாவை யாக்கிப் படிக்கல்லிட்டு நிறுக்க நிறையேதெனத் தெரியாது, உரைக்க எண்ணின் உரையாணியிடவரிது; இவ்வாறு வேறு பொருடோன்றிச் சிலேடையாய் நின்றது காண்க.
தொடை - மாலை. ஏகாரம் - ஈற்றசை. சூல்வளை - கருப்பங் கொண்ட சங்கு. 'எருக்கென்பு' என்புழி, எண்ணும்மை தொக்கு நின்றது. உரையாணி - உரையை யறிவிக்குங் கருவி.
---------- (104. பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல் - முற்றும்) ----------
105. தலைவன் தன்னைத்தானே புகழ்தல் :
தலைவன் தன்னைத்தானே புகழ்தல் என்பது, இவ்வாறு எழுதல் அரிதென்று கூறிய பாங்கியை நோக்கி, யான் எழுத வல்லேன் எனத் தன்னைத்தானே புகழ்ந்து தலைவன் கூறல்.
நறையல ராவிரைப் போதிசை யாதிசை நான்முகத்தும்
மறையல ராவந்த மான்மகன் யான்தஞ்சை வாணன்வையைத்
துறையல ராவியங் காவியங் கண்ணி துணிந்துசொல்லுங்
குறையல ரார்குழ லாட்கினித் தீரக் குறையில்லையே. (105)
(இ - ள்.) நறையலரென்னும் அவ் விரைப்போதி லிசைந்து திக்குக்கொரு முகமாகும் நான்முகத்திடத்தும் வேதம் விரிவாக வந்த மாலுக்கு மகன் யானாதலால், தஞ்சைவாணன் வையைத் துறையினும், விரிவாகிய வாவியினும், நீரிற்றோன்றிய காவிப்பூப்போலுங் கண்ணையுடையாய், நீ யெழுதப்படாதென்று துணிந்து சொல்லுங் குறை யலரார்ந்த குழலையுடையாட்கு இன்றெழுதப்படாதென்று விடத்தக்கதாய குறையில்லை என் றவாறு.
இன்னுமோர் பொருள், நறையலரென்னும் அவ்விரைப்போதி லிசையாது நான்கு திசையிடத்தும் களவு வெளியாக வந்த ஆசை கொண்ட புருடன் யானெனச் சிலேடைவகையால், பிரமன் யானெனத் தோன்றியவதனால் எழுதற்கரிய தின்றென்று கூறியவா றாயிற்று.
நறை - மணம். அவ்விரை - ஆவிரை யெனச் சுட்டுநீண்டது, ஆவயினான என்றாற்போல.
பிரமன்மேல் ஏற்றுங்கால் — இசையா - இசைந்து. மறை - வேதம். அலராவந்த – விரிவாகவந்த. மால் - மாயோன். மகன் - பிரமன்.
தலைவன்மேல் ஏற்றுங்கால் — இசையா - இசையாது. நான் முகம் - நான்கிடம். மறை - மறைகள். அலராவந்த - வெளியாக வந்த. மால் - ஆசை. மகன் - புருடன். ஆவி - வாவி. அம் - நீர். காவி - நீலப்பூ. அம் - சாரியை; அழகு. கண்ணி - அண்மை விளி. தீர்தல் - விடல். [1]'தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்.’ என்பதனாற் கொள்க. குறை - குற்றம். குறை - குறைவு.
-----
[105-1] தொல். சொல். உரியியல் - (௨௨) 22.
----------
---------- (105. தலைவன் தன்னைத்தானே புகழ்தல் - முற்றும்) ----------
106. பாங்கி அருளியல் கிளத்தல் :
பாங்கி அருளியல் கிளத்தல் என்பது, அவ்வாறு தலைவன் கூறக் கேட்ட பாங்கி மடலேறத் தகாது என அருண் முறைமை கூறுதல்.
செயலார் குடம்பையிற் செந்தலை யன்றிற் சினையுளபைங்
கயலார் வனவெண் குருகின்வண் பார்ப்புள கைக்கடங்கா
மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறைவை யைத்துறைவா
இயலா தருளுடை யார்க்கென்று மாமட லேறுவதே. (106)
(இ - ள்.) பாகன் கைக்கடங்கா மதத்தால் மயக்கமார்ந்த களிற்றரசனாகிய வாணன் தென்மாறைநாட்டில் வருகின்ற வையைத் துறைவனே, பனையில் புட்களாற் செய்யப்பட்ட செயலார்ந்த கூட்டில் சிவந்த தலையினையுடைய அன்றில் முட்டைகளுள; பசிய கயலார்வனவாகிய வெண்ணிறக்குருகின் வளவிய பார்ப்புகளுள; ஆதலால், அருளுடையார்க்கு எக்காலத்தும் மடன்மா ஏறுதல் பொருந்தாது என்றவாறு.
எனவே, மடலேறத் தகாது என அருண்முறைமை கூறுதலால், பனையை வெட்டலும், முட்டைகளைச் சிதைத்தலும், பார்ப்புக்களை வதைத்தலும் ஆகிய பாவங்கள் சூழ்தலின், அருளுடையோர்க்கு ஆகாது என்றவாறாயிற்று. மடற்கூற்று அதிகாரப்பட்டு வருதலின் பனை யென வருவிக்கப்பட்டது.
செயல் - தொழில். குடம்பை - கூடு. 'செந்தலையன்றில்' - வண்ணச்சினைச்சொல்.
[1]'அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.'
என்னுஞ் சூத்திரத்தான் உணர்க.
சினை - முட்டை . குருகு - நாரை, பார்ப்பு - பிள்ளை.
[2]'பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளைமை'
என்பதனான் உணர்க. மயல் - மயக்கம். களிறு - யானை. இயலாது - பொருந்தாது. அண்ணல் - வேந்தன்.
-----
[106-1] தொல். சொல். கிளவியாக்கம் - (௨௬) 26.
[106-2] தொல். பொருள். மரபியல் - (௪) 4.
----------
---------- (106. பாங்கி அருளியல் கிளத்தல் - முற்றும்) ----------
107. கொண்டு நிலைகூறல் :
கொண்டு நிலைகூறல் என்பது, தலைவன் உயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கும் நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறல்.
வெண்டோ டணிமுகப் பைங்குரும் பைக்கொங்கை வெய்யவுண்கட்
கண்டோர் விரும்புங் கரும்பனை யாரைக் கடற்றுறைவா
கொண்டோர் குறைமுடி கொம்பனை யார்நின் குறைமறுத்தால்
வண்டோ லிடுந்தொங்க லான்வாணன் மாறை வளநகர்க்கே. (107)
(இ - ள்.) கடற்றுறைவா! கொம்பனையார் நினது குறையை மறுத்தால், வெண்மைநிறம் பொருந்திய தோடணிந்த முகத்தையும், பசிய குரும்பையாகிய கொங்கையையும், உண்ணப்பட்ட வெய்ய கள்ளையுமுடைய கண்டோரால் விரும்பப்படுகின்ற கரிய பனையாரைக்கொண்டு, வண்டுகள் ஆரவாரிக்கும் மாலையையணிந்த வாணன் மாறையாகிய வளவிய நகரிடத்து ஒப்பற்ற நின்குறையை முடிப்பாயாக என்றவாறு.
கொம்பனையார் மறுத்தகாலையில் தோடணிந்த முகமும், குரும்பைபோன்ற கொங்கையும், உண்கண்ணுமுடைய கரும்பு அனையாரைக்கொண்டு எனச் சிலேடையால் ஒரு பெண்ணாகத் தோன்றியவாறு உணர்க.
'மறுத்தாற் குறைமுடி' யெனவே, குறிப்பான் மறாளெனத் தோன்றி நிற்றலின், அவன் உயிரைத் தாங்கிக்கொண்டு நிற்கும் நிலைமையாயிற்று. முன்கூறிய செய்யுட்களில், 'வெற்பன், சிலம்பன், பொருப்பன்' என்று குறிஞ்சிநிலத்துத் தலைமகனாகக் கூறி, இவ்விடத்தில் 'கடற்றுறைவா' என்று நெய்தனிலத்துத் தலைமகனாகக் கூறியவதனான், முன்கூறிய தலைவனேயோ, இவன் வேறேயோ எனின், அத்தலைவன்தானே இவன். ஐந்திணையில் எத்திணை கூறினும் அத்திணைக்குரிய கருப்பொருளாற் கூறப்படும்; ஆயின், இக் கிளவி எத்திணைப்பாற்படுமெனின், நெய்தற்பாற்படும். அஃதென்னை யெனின், பனை நெய்தனிலத்துக் கருப்பொருளாதலான், 'கடற்றுறைவா' எனக் கூறியவாறு. பனை நெய்தனிலத்துக் கருப்பொரு ளானவாறு என்னையெனின், குறிஞ்சி கற்பூமியாதலான் பனைக்காகாது; பாலைக்குத் தீந்து போவதல்லது பயிராவதில்லை; முல்லை, வரகு சாமை முதிரை முதலாயின மக்கட்கு ஊணும், நிரையினங்கட்குப் புல்லு முதலியன உணவும், நிழலுமாக இருத்தலின் பனைக்காகாது; மருதநிலத்திற்கு வாவியும், குளனும், கமுகு, வாழை, செந்நெல், கரும்பு முதலியனவும் நீர்ச்சார்பாதலின், அந்நிலத்திற்கும் பனையாகாது; மணல்நிலத்திற் பயிராதலால் நெய்தனிலத்துக் கருப்பொருளாயிற்று.
தோடு - பனைமேலேற்றுங்கால் ஏடு; பெண்மேலேற்றுங்கால் செவியிற்குழை. குரும்பைக் கொங்கை - பனைக்குப் பண்புத்தொகை; பெண்ணுக்கு உவமைத்தொகை. 'உண்கட்' பனைக்கு உறுகள்; பெண்ணுக்கு மையுண்ட கண். ஓலிடுதல் - ஆரவாரித்தல். 'வள நகர்க்கே' என்புழி வேற்றுமை மயக்கம்.
தலைமகன் கூற்றாயின வெல்லாம், 'மடற்கூற்'றிற்கும், பாங்கி கூற்றாயின வெல்லாம், 'மடல்விலக்'கிற்கும் உரித்தாவாயினவாறு காண்க.
---------- (107. கொண்டு நிலைகூறல் - முற்றும்) ----------
108. தலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவற் குணர்த்தல் :
களவரும் பாகரு நீலங்கள் காமக் கடவுளுமால்
கொளவரும் பாபைங் குரும்பைக் குலஞ்செங் குமுதத்துவெண்
தளவரும் பாநண்ப னேதஞ்சை வாணன் தமிழ்வையைநாட்
டிளவரும் பாமிவள் மாட்டென்கொ லோநின் றிரப்பதுவே. (108)
(இ - ள்.) நண்பனே! கரு நீலம் போன்ற கண்களிற் களவு அரும்பவில்லை; காமக் கடவுளும் கா தல்கொள்ளா மார்பில் பசிய குரும்பைக்குலைபோல முலைகள் அரும்பவில்லை; செவ்விய குமுதம் போன்ற வாயில் வெண்டளவு போன்ற பல் அரும்பவில்லை : தஞ்சைவாணன் தமிழ் வையைநாட்டின் அரும்புபோன்ற இவளிடத்தில் யான் சென்று நின்று இரப்பது எவ்வாறு சொல்வாயாக என்றவாறு.
பொருளை உவமைப்பொருளாய்க் கூறியவெல்லாம் ஆகுபெயர். கொல்லும், ஓவும் அசைநிலை.
---------- (108. தலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவற் குணர்த்தல் - முற்றும்) ----------
109. தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல் :
சிலைபயில் வாணுதல் மின்னே பிறந்தவச் செவ்வியிலே
கொலைபயி னாகக் குருளையைப் போற்குறி யோனிருந்த
மலைபயில் வார்தமிழ் வாணன்தென் மாறை மயிலனையாள்
அலைபயி லால்விழி யாலென தாவி யணங்கினளே. (109)
(இ - ள்.) சிலை வளைவு பழகும் வாணுதலையுடைய மின்னே! குறுமுனிவன் இருந்த மலையில் பழகிய நெடுந் தமிழ்கற்ற வாணன் தென்மாறைநாட்டு மயிலனையாள் பிறந்த அக்காலத்தே கொலைபழகிய நாகக் குட்டியைப் போல் அலையிற் பழகிய ஆலம்போன்ற விழியால் எனது ஆவியை வருத்தினாள் என்றவாறு.
சிலை - வில். பயிலல் நான்கும் பழகுதல். குருளை - குட்டி. குறியோன் - அகத்தியன். 'வாணுதன் மின்னே' என்றது சிறப் புருவகம். அலை - ஆகுபெயர். ஆலம் - ஆல் என விகாரப்பட்டது; நீலம் - நீல் என நின்றாற்போல.
---------- (109. தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல் - முற்றும்) ----------
110. பாங்கி தலைமகள் செவ்வியருமை செப்பல் :
பாங்கி தலைமகள் செவ்வி யருமை செப்பல் என்பது, தலைமகளது காலப்பருவத்தின் அருமை கூறுதல்.
ஏடா ரலங்கல் இலங்கிலை வேல்வெற்ப ஏழுலகம்
வாடாமல் வந்தருள் வாணன்தென் மாறையில் வல்லியன்னாள்
சூடாள் குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சுனையும்பந்தும்
ஆடாள் தனக்கென்கொ லோஅடி யேன்சென் றறிவிப்பதே. (110)
(இ - ள்.) பூவார்ந்த மாலை யணிந்து இலங்கப்பட்ட இலைபோலும் வேலையுடைய வெற்பனே! ஏழுலகும் வாடாமைக்குக் காரணமாக வந்தருளப்பட்ட வாணன் தென்மாறைநாட்டில் வல்லிபோல்வாள் குவளைப்போதும் முல்லையஞ்சூட்டும் சூடாள், சுனையும் பந்தும் ஆடாள், அவள்தனக்கு அடியேன் போய் அறிவிப்பது எவ்வாறு என்றவாறு.
ஏடு - ஆகுபெயர். அலங்கல் - மாலை. இலங்குதல் - ஒளிர்தல். இலைவேல் - உவமைத்தொகை. 'குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சூடாள்' என்றும், 'சுனையும் பந்துமாடாள்' என்றும், ஒருவினை கொண்டு முடிந்தது. முல்லையஞ்சூட்டு - முல்லைப்பூவாற் சுட்டி போலச்செய்து நெற்றியிற் கட்டுவது. 'தனக்கு' என்புழி சுட்டு வருவிக்க. கொல்லும், ஓவும் அசைநிலை.
---------- (110. பாங்கி தலைமகள் செவ்வியருமை செப்பல் - முற்றும்) ----------
111. தலைவன் செவ்வியெளிமை செப்பல் :
தலைவன் செவ்வி யெளிமை செப்பல் என்பது, செப்புதற்குப் பதம் எளிதெனத் தலைவன் கூறுதல்.
தேன்வந்த வாயிதழ்ச் சேயிழை யாயிளஞ் செவ்விநவ்வி
மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில்
யான்வந்த வாசென் றியம்புதி யேலவர் யாவரென்னாள்
தான்வந்த வாவுட னேநின்னை யாரத் தழீஇக்கொளுமே. (111)
(இ - ள்.) தேன்போன்ற சொல்வந்த வாயிதழையும் செய்ய பூணையும் உடையாய்! இளமையழகாகிய நவ்வி மான்போல் வந்த வொளிபொருந்திய கண்ணையுடைய வஞ்சிக்குத் தஞ்சைவாணன் வெற்பில் யான் வந்தவாறு நீ சென்று கூறுதியேல், அவர் யாவரென்று கூறாது, தான் ஆசையுடனே வந்து, நின்னை ஆகத்தோடு ஆகம் பொருந்தத் தழுவிக்கொள்வாள் என்றவாறு.
தேன் - ஆகுபெயர். நவ்வி மான் - இருபெய ரொட்டுப் பண்புத்தொகை.
'மான்வந்த வாள்விழி' - உவமைத்தொகை. வந்தவா - வந்தவாறு. 'நீ சென்று' எனவும், 'தான் அவாவுடன் வந்து' எனவும் இயையும்.
---------- (111. தலைவன் செவ்வியெளிமை செப்பல் - முற்றும்) ----------
112. என்னை மறைத்தபின் எளிதென நகுதல் :
என்னை மறைத்தபின் எளிதென நகுதல் என்பது, நீர் இருவரும் ஒத்து என்னை மறைத்தபின் இக்களவொழுக்கம் ஒழுகுதற்கு எளிதென நகையாடிக் கூறல்.
மண்ணும் பயில்வித்து மொன்றினுஞ் சந்திர வாணன்வெற்பா
நண்ணும் புனலின்றி அங்குரி யாதுங்கள் நல்வினையாற்
கண்ணுங் கருத்துங் கலந்தன வாயினுங் கண்ணினும்முள்
எண்ணுங் குறையென்னை நீர்மறைத் தாலிங் கியல்வதன்றே. (112)
(இ - ள்.) சந்திரவாணன் வெற்பனே! நிலனும் நிலத்துப் பழகிய வித்தும் இரண்டும் ஒத்துக் கூடினும், அவ் விரண்டும் நனையப்பொருந்தும் புனலின்றி முளையாதது போல, நீங்கள் முன்செய்த நல்வினையால் கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும், கருதுமிடத்து நும்முள்ளத்துள் எண்ணுகின்ற குறை நீர் என்னை மறைத்தால் இவ்விடத்து முடிவதன்று என்றவாறு.
பயிலுதல் - பழகுதல். அங்குரியாது - முளையாது. எண்ணல் - கருதல். இயலுதல் - பொருந்துதல்; பொருந்தல் எனவே முடிவின் மேல் நின்றது. இச்செய்யுளில் 'அங்குரியாது, அதுபோல' என்று சுட்டிக்கூறாத உவமமாயிற்று. என்னை,
[1]‘சுட்டிக் கூறா வுவம மாயிற்
பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே.'
என்னுஞ் சூத்திரவிதியால்,
[2]'மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.'
என்றாற்போலக் கொள்க.
-----
[112-1] தொல். பொருள். உவமவியல் - (௭) 7.
[112-2] குறள். விருந்தோம்பல் - (௧0) 10.
----------
---------- (112. என்னை மறைத்தபின் எளிதென நகுதல் - முற்றும்) ----------
113. அந்நகை பொறா தவன்புலம்பல் :
அந்நகை பொறாது அவன் புலம்பல் என்பது, அவள் நகையாடிக் கூறுதல் பொறாமல், தலைவன் புலந்து கூறுதல்.
வெவ்வே லெறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியதோர்
செவ்வேல் நுழைப்பவர் சீலமன் றோதிரு வேமருவார்
வைவேல் அமர்வென்ற வாணன்தென் மாறை மயில்பொருட்டால்
நைவேனை அஞ்சலென் னாதின்ன வாறு நகைக்கின்றதே. (113)
(இ - ள்.) திருவையொப்பவளே, மருவார் வைவேலாற் செய்யும் போரைவென்ற வாணன் தென் மாறைநாட்டு மயில்போன்றவள் பொருட்டால் நைகின்ற என்னை அஞ்சலை யென்றோதாது இவ்வாறு நகைக்கின்றது, வெவ்விய வேலெறிந்து துன்பந்தரும் புண்ணில் மீட்டும் அழலிற் பழுக்க வெதுப்பியதோர் வேலை நுழைப்பவர் குணமன்றோ என்றவாறு.
வெவ்வேல் - கொடியவேல். விழுப்புண் - துன்பந்தரும் புண். வெதுப்பல் - அழலிடை வெதுப்பல். செவ்வேல் - பழுக்கக் காய்ந்த வேல். சீலம் - குணம், திரு - ஆகுபெயர். வை - கூர்மை. அமர் - போர். மயில் - ஆகுபெயர். ஆதலால், நகைக்கின்ற நின்குணமும், வேலை நுழைப்பவர்தங் குணமும் ஒக்கும் என்பதாயிற்று.
---------- (113. அந்நகை பொறா தவன்புலம்பல் - முற்றும்) ----------
114. பாங்கி தலைவனைத் தேற்றல் :
தன்கண் ணனையதன் பாங்கிய ருள்ளுந் தனக்குயிராம்
என்கண் ணருள்பெரி தெம்பெரு மாட்டிக் கிகல்மலைந்தார்
வன்கண் ணமர்வென்ற வாணன்தென் மாறையில் வந்தவளால்
புன்கண் ணடையலை நீயினி வாடல் புரவலனே. (114)
(இ - ள்.) புரவலனே! எம்பெருமாட்டிக்குத் தன் கண்போன்றுள்ள பாங்கியர் பலருளர், அப்பலருள்ளுந் தனக்கு உயிரொக்கும் என்னிடத்து அருள்பெரிது; பகையா யெதிர்ந்தார் கொடிய அமரைவென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால் வருத்தமடையலையாய் இன்று வாடற்க என்றவாறு.
எனவே, பாங்கியர் பலருங் கண்போன்றவர் என்றும், தான் உயிர்போன்றவள், தன்னிடத்து அருள்பெரிதென்றும் கூறியவதனால், தன் சொல்மறாள், நீ யஞ்சாதை யென்று தேற்றியவாறாயிற்று. உயிராம் - உயிரொக்கும். இகல் - பகை. வன்கண் அமர் - கொடிய அமர். புன்கண் - வருத்தம். வாடல் - அல்லீற்று வியங்கோள்.
---------- (114. பாங்கி தலைவனைத் தேற்றல் - முற்றும்) ----------
115. பாங்கி கையுறை யேற்றல் :
ஒலிதெண் கடல்புடை சூழுல கேழினு மூழ்வினைதான்
வலிதென் பதனை வயக்கிய தாற்றஞ்சை வாணன்வெற்பா
கலிதெங்கு மாவுங் கமுகும் பலாவுங் கதலிகளும்
பொலிதென் பொதியிலின் மேற்சந்த னாடவிப் பூந்தழையே. (115)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பா! இலாங்கலி தென்னை மா பாக்கு பலா வாழை ஆகிய மரங்கள் பொலிந்த தெற்கின்கணுள்ள பொதியமலையிடத்து உண்டாகிய சந்தனக்காட்டிற் றோன்றிய இப்பூந்தழையானது, ஒலியொடு கூடித் தெளிந்த கடன்மருங்கிற் சூழ்ந்த உலகேழிடத்தும் பழவினைதான் வலிதென்று சொல்வதனை இப்போது விளங்கச்செய்தது என்றவாறு.
எனவே, கையுறை யேற்றவா றாயிற்று. இதனுள் கருப்பொருள் மயங்கியவாறு,
[1]'உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே.'
என்னுஞ் சூத்திரவிதியால் உணர்க.
புடை - மருங்கு. ஊழ்வினை - பழவினை. வயக்கியது - விளக்கியது. கலி - இலாங்கலி, தலைக்குறையாய் விகாரப்பட்டு நின்றது : தெங்கில் ஓர் வேறுபாடு. 'கலி தெங்கும்' என்புழி,
[2]'எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்.'
என்னுஞ் சூத்திரவிதியால், உம்மை தொக்கு நின்றது. உம்மைகள் எண்ணின்கண் வந்தன. கதலி - வாழை. அடவி - காடு. பூந்தழை - பூவோடு கூடியதழை.
-----
[115-1] தொல். பொருள். அகத்திணையியல் - (௧௩) 13.
[115-2] தொல். சொல். இடையியல் - (௩௬) 36.
----------
---------- (115. பாங்கி கையுறை யேற்றல் - முற்றும்) ----------
116. கிழவோனாற்றல் :
கிழவோனாற்றல் என்பது, தலைவன் துயர்மாறிக் கூறுதல்.
மைப்போ தணிதொங்கல் வாணனொன் னாரென வல்வினையேற்
கப்போ தடைந்த அருந்துயர் நீங்கி யரும்பியபொற்
செப்போ திளமுலை யாணகை வாண்முகத் திங்களைக்கண்
டிப்போ திளகிய தாலிந்து காந்தங்கொ லென்னெஞ்சமே. (116)
(இ - ள்.) குவளைப் போதால் இயன்ற மாலையை யணிந்த வாணன் பகைவரையொத்த வல்வினையேனாகிய எனக்கு நென்ன லடைந்த அரிய துன்பம் நீங்கித் தோன்றிய பொற்செப்பு உவமையா யோதிய இளமுலையையுடைய பாங்கியது மகிழ்ச்சி ஒளிபொருந்திய முகத்திங்களைக் கண்டு, இப்போது மகிழ்ச்சியால் இளகியதாதலால், என்னெஞ்சம் சந்திரகாந்தம் என்னுஞ் சிலை என்றவாறு.
எனவே, ஈரமின்றிப் புலர்ந்த தன்னெஞ்சம் பாங்கி முகத்திங்களைக் கண்டு, இப்போது மகிழ்ச்சி யென்னும் நீருண்டாதலின், 'இந்து காந்தம்' என்று கூறியது.
மைப்போது - குவளைப்போது. ஒன்னார் - பகைவர். அரும்பல் - தோன்றல். கொல் - அசைநிலை.
பாங்கி கூற்றாயின வெல்லாம், 'குறைநேர்தற்’கும், தலைவன் கூற்றாயின வெல்லாம், 'மடற்கூற் றொழிதற்'கும் உரியவாறு உணர்க.
---------- (116. கிழவோனாற்றல் - முற்றும்) ----------
117. இறைவன் றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறை யுணர்த்தல் :
இருவர்கண் டால்வரு மேதமென் றெண்ணி யெனக்கெதிரே
வருவர்வந் தாலுந்தம் வாய்திற வார்தஞ்சை வாணன்வெற்பின்
ஒருவர்நஞ் சார லுழையக லார்தழை யுள்ளதெல்லாந்
தருவர்வம் பார்முலை யாயென்கொ லோசெயத் தக்கதுவே. (117)
(இ - ள்.) வம்பார் முலையாய்! இருவர் கண்டால் குற்றம் வருமென்றெண்ணி எனக்கு எதிராயேவருவர், வந்தாலும் தம் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லார்; தஞ்சை வாணன் வெற்பில் ஒருவர் நம்முடைய மலைச்சாரலிடத்தைவிட் டகலார்; இவ்வனத்திலுள்ள தழைகளையெல்லாங் கொய்துவந்து தருவர்; அவர்க்கு யாம் செய்யத்தக்க தென்னோ என்றவாறு.
ஏதம் - குற்றம். உழை - பக்கம். வம்பு - கச்சு. கொல் - அசைநிலை.
---------- (117. இறைவன் றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறை யுணர்த்தல் - முற்றும்) ----------
118. இறைவி யறியாள்போன்று குறியாள் கூறல் :
இறைவி யறியாள்போன்று குறியாள் கூறல் என்பது, பாங்கி இவ்வார்த்தை கூறவே தலைவி தான் கேட்டு அறியாள்போல மனத்திற் கருதாத வேறொன்றைக் கருதிக் கூறல்.
பாங்கி வினாவியதற்கு விடைகூறாது வேறொன்று கூறியது, [1]'செப்பும்வினாவும் வழாஅ லோம்பல்' என்று கூறிய விதியின்றி வழுவக் கூறுதலால் செப்புவழு என்னுங் குற்றந் தங்குமேயெனின், தங்காது. என்னை, 'ஒருவர் வந்திருக்கின்றார், தழையுள்ளதெல்லாந் தருவர், அவர்க்கு யாம் என்செய்வோம்?' என்று வினாயவழி, இவள் பெருநாணுடைய ளாதலால், அவன் நினைத்தபடி செய்வோ மென்று கூறத் தகாதாதலானும், இவள் கற்புக்கடன் பூண்டவளாதலானும், மறுக்கத்தகா தாதலானும், காமம் ஒருபாலும் நாணம் ஒருபாலும் ஈர்த்துக்கொண்டு நிற்றலின், ஒருபாற் சாரமாட்டா ளாதலானும், என்செய்வோம் என்று நெஞ்சிற் கவற்சியுற்று நடுவாக நின்றாளாகலான், அவள் கேட்டதற்கு விடை செவ்வன் கூறாது, அக்கணம் மனத்திற்றோன்றிய வொன்று கூறுவது, இவ்விடத்திற்கு முன்னம் என்னும் உறுப்பாதலின், இவ்வாறு கூறுதல் செப்புவழு அன்றெனக் கொள்க.
இவ்வாறு கூறாது வாளாவிருக்கின் அமையாதோ வெனின், வாளாவிருக்கின் அவள் கூறியதற்கு உடம்பட்டாளாம்; உடன்படின் மேற்கூறுங் கிளவிகள் பலவற்றையும் நீக்கல்வேண்டுமாதலான், இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரியவென்று அவ்விடத் தவரவர்க்கு உரைப்பதுபற்றி,
[2]'முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
யின்ன வென்னுஞ் சொன்முறை யான.’
என்னுஞ் சூத்திரவிதியால், இவ்வாறு கூறுதல் இயல்பெனக் கொள்க.
கலைதொடக் கீண்ட கருவியந் தேன்பல கால்கொடுமா
மலைதொடுத் தூர்ந்து வருகின்ற தாற்றஞ்சை வாணன்வென்றிச்
சிலைதொடுத் தாங்கெழில் சேர்நுத லாய்பயில் செம்பழுக்காய்க்
குலைதொடுத் தோங்குபைங் கேழ்ப்பூக நாகக் குழாங்கவர்ந்தே. (118)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்றிச் சிலைதொடுத்தாற்போலும் அழகு சேர்ந்த நுதலையுடையாய்! பிறைக்கோடு தீண்டக் கிழிந்த இறாற்றொகுதிகள் தங்கிய தேனானது ஒரு முகமாய் வாராது பலகால்கொண்டு பெரிய மலையுச்சி தொடுத்துக்கடந்து நெருங்கிச் சிவந்து பழுக்காய்க் குலைவைத்தோங்கப்பட்ட பசிய நிறத்தையுடைய பூகக்குழாத்தையும் நாகக்குழாத்தையுங் கவர்ந்து வருகின்றது; நீ காண்பாயாக என்றவாறு.
கலை - பிறைக்கோடு. தொடுதல் - தீண்டுதல். கருவி - தொகுதி. தொடுத்து - தொடங்கி. நாகம் - புன்னை. குழாம் என்பது பூகத்துடனுங் கூட்டுக. கவர்தல் - கொள்ளுதல்.
-----
[117-1] தொல். சொல். கிளவியாக்கம் - (௧௩) 13.
[117-2] தொல். சொல். எச்சவியல் - (௬௩) 63.
----------
---------- (118. இறைவி யறியாள்போன்று குறியாள் கூறல் - முற்றும்) ----------
119. பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல் :
பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல் என்பது, பாங்கி தலைவியின் வயத்தனாக வந்தவனைக் கண்டமை பகர்தல்.
திவாகர னேயன்ன பேரொளி வாணன்தென் மாறைநன்னாட்
டுவாமதி போலு மொளிர்முகத் தாயென் னொளிப்பதுன்மேல்
அவாவின னாகியொர் மானை வினாவிவந் தானையின்றிக்
கவானுயர் சோலையின் வாய்வண்ட லாருழைக் கண்டனமே. (119)
(இ - ள்.) ஆதித்தனையொத்த பேரொளி வாணன் தென்மாறை நாட்டு உவாமதிபோலும் ஒளிர்முகத்தாய்! நீ யொளித்துச் சொல்வது யாது காரணம்? உன்மேல் ஆசை கொண்டவனாகி ஓர் மானை வினாவிவந்தவனை இப்போது இந்தத் திரளாயுயர்ந்த சோலையிடத்து விளையாடும் வண்டலம்பாவை பொருந்திய இடத்து யாம் கண்டனம் என்றவாறு.
உலகத்தில் கலியிருள் மாற்றுந் தன்மையால், 'திவாகரனே யன்ன' எனக் கூறியது.
ஒளி - கீர்த்தி. உவாமதி - பூரணமதி. ஒளிர்தல் - விளங்குதல். கவான் - திரட்சி. 'மாயோ னன்ன மால்வரைக் கவான்' என்றார் பிறரும். வண்டல் - ஆகுபெயர். 'வண்டலாடுழை' என்று பாட மோதுவாரும் உளர்.
---------- (119. பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல் - முற்றும்) ----------
120. பாங்கியைத் தலைவி மறைத்தல் :
செவ்வண்ண வேல்விழி யாய்தஞ்சை வாணன்தென் மாறைநன்னாட்
டிவ்வண்ண நீசொல்வ தேற்பதன் றானின் னிடையெனத்தாம்
மெய்வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய்க்
கைவண்ண வார்தழை கொண்டுசென் றார்தமைக் கண்டுகண்டே. (120)
(இ - ள்.) செவ்வண்ணமாகிய வேல்போன்ற விழியினையுடையாய், தஞ்சைவாணன் தென்மாறை நன்னாட்டில், நின்னிடைபோல தாம் மெய்வண்ணம் வாடிப் பயனின்றி வருந்தி நம் புனத்திற்குப் புதியோராய்க் கையிலே அழகிய நெடிய தழையைக் கொண்டு வந்து போனார் தம்மைக் கண்டு கண்டு, இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பதன்று என்றவாறு.
செவ்வண்ண வேல் - பகைவருடற் குருதி தோய்ந்த கொடிய வேல். இவ்வண்ணம் - இவ்வாறு. ஆல் - அசைநிலை. வெறிதே - பயனின்றியே. விருந்தினர் - புதியோர். வண்ணம் - அழகு. - கண்டு கண்டு - அடுக்குமொழி.
---------- (120. பாங்கியைத் தலைவி மறைத்தல் - முற்றும்) ----------
121. பாங்கி யென்னை மறைப்ப தென்னெனத் தழால் :
பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழால் என்பது, இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியை உனக்கு நான் வேறோ என்று உவகையாய்த் தழுவிக்கொண்டு கூறல்.
பரக்கின்ற செவ்விதழ்ப் பங்கயப் பாதம் பணிந்துநின்னை
இரக்கின்ற தொன்றையும் எண்ணலை யாலெழு பார்முழுதும்
புரக்கின்ற கோன்றஞ்சை வாணன் பொதியிலிற் பொய்த்தென்னைநீ
கரக்கின்ற தென்னைகொ லென்னுயி ராகிய காரிகையே. (121)
(இ - ள்.) ஏழுலக முழுதும் காக்கின்ற வேந்தாகிய தஞ்சைவாணனது பொதிய வரைக்கண் எனக்கு உயிரை யொக்குங் காரிகையே! செவ்விதழ் பரக்கின்ற பங்கயம் போன்ற பாதத்தைத் தொழுது யான் நின்னை யிரக்கின்ற தொன்றையும் எண்ணலையாய் உண்மையை நீக்கி என்னை நீ மறைப்பது என்னோ என்றவாறு.
ஆல் - அசை. புரத்தல் - காத்தல். பொய்த்தல் - உண்மை நீக்கல். கரத்தல் - மறைத்தல். 'தஞ்சைவாணன் பொதியிலில் என்னுயிராகிய காரிகை' எனவும், 'செவ்விதழ் பரக்கின்ற' எனவும் மாறுக. வருந்துழி வருந்தியும், மகிழ்ந்துழி மகிழ்ந்தும், இறந்துழி இறந்தும் இயைவதாதலின், 'என்னுயிராகிய காரிகை' என்று கூறினார்.
---------- (121. பாங்கி யென்னை மறைப்ப தென்னெனத் தழால் - முற்றும்) ----------
122. பாங்கி கையுறை புகழ்தல் :
சூடத் தகுவன வல்லதெல் லாம்படி சொல்லினுந்தாம்
வாடத் தகுவன வல்லநல் லாய்தஞ்சை வாணன்வெற்பர்
தேடத் தகுவன வல்லதல் லாத சிலம்பினுள்ளார்
நாடத் தகுவன வல்லகல் லார நறுந்தழையே. (122)
(இ - ள்.) நல்லாய்! உலகமெல்லாஞ் சொல்லினும் சொல்லா தொழியினும் மலையிடத்துத் தோன்றிய இச்சந்தன நறுந்தழை சூடத்தகுவன வல்லது, தாம் வாடத்தகுவன அல்ல; அன்றியும், தஞ்சைவாணன் வெற்பர் தேடத்தகுவன வல்லதல்லாத மலையினுள்ளார் நாடத்தகுவன அல்ல என்றவாறு.
'படியெல்லாம்' என மாறுக. 'சொல்லினும்' என்புழி உம்மை எதிர்மறையாகலின், 'சொல்லாதொழியினும்' என்பது, வருவிக்கப்பட்டது. 'அல்ல' என்பது அஃறிணைப் பன்மைவினைக் குறிப்பு முற்றுச்சொல். நாடல் - கருதல். கல் - மலை. ஆர நறுந்தழை - சந்தனத்தழை.
இவற்றுள் பாங்கி கூற்றாயினவெல்லாம், 'குறைநயப்பித்தற்'கும், தலைவி கூற்றாயினவெல்லாம், 'மறுத்தற்'கும் உரியவாறு உணர்க.
---------- (122. பாங்கி கையுறை புகழ்தல் - முற்றும்) ----------
123. தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் :
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் என்பது, பாங்கி தலைவனது வேட்கையால் கொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறல்.
வனையுங் குழல்வஞ்சி வாணன்தென் மாறை வரைக்களிறு
தினையுந் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்தவின்னீர்
சுனையுண்ட சோக நிழற்சோக நீங்கித் துயில்வதுகண்
டெனையுங் கடைக்கணி யாவினை யாநிற்பர் ஏதிலரே. (123)
(இ - ள்.) அலங்கரிக்குங் கூந்தலையுடைய வஞ்சி நம்புனத்து அயலாராய் வந்தோர், வாணன் தென்மாறை வரையிடத்துக் களிறு பிடியொடு தினையும் தழையும் மேய்ந்து, சுனையிடத்துத் தெளிந்த இனிய நீரையுண்டு, துன்பம் நீங்கி, அசோகமரத்து நிழலின்கீழ்த் துயில்வதனைப் பார்த்து, என்னையும் கடைக்கண்ணால் நோக்கி வருந்தாநிற்பர் என்றவாறு.
'வஞ்சி ஏதிலர்' எனவும், 'களிறு பிடியொடு' எனவும், 'சுனைத் தெளிந்த வின்னீர்' எனவும், 'உண்டு சோக நீங்கி' எனவும் மாறுக. வனைதல் - அலங்கரித்தல். வஞ்சி - அண்மை விளி. இனையாநிற்பர் - வருந்தாநிற்பர். ஏதிலர் - அயலார். கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல். 'பிடியொடு துயிலுங் களிற்றைக் கண்டு என்னையும் நோக்காநிற்பர்' எனவே நீ இதனை யறிந்திலையெனக் குறிப்பால் அறிவித்தவாறாயிற்று.
---------- (123. தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் - முற்றும்) ----------
124. மறுத்தற் கருமை மாட்டல் :
மறுத்தற்கு அருமை மாட்டல் என்பது, இவ்வாறு கூறிய சொற்கட்கு விடை யின்மையால், இனி அவர்வரின் என்னால் மறுத்தற்கு அரிதெனப் பொருத்திக் கூறுதல். மாட்டல் - பொருத்துதல்.
கையுந் தழையுமுன் காண்டொறுங் காண்டொறுங் கட்டுரைத்த
பொய்யுந் தொலைந்தன பூந்தழை போலரி போர்த்துநஞ்சும்
மையுங் கலந்துண்ட வாள்விழி யாய்தஞ்சை வாணன்வெற்பர்
மெய்யுந் துவண்டதென் னான்முடி யாது வெளிநிற்கவே. (124)
(இ - ள்.) செவ்வரியை மேற்கொண்டு நஞ்சும் மையும் கலந்துண்ட வாள்போல் விழியாய்! இவ்வனத்திலுள்ள மாந்தழைகளெல்லாம் நமக்குக் கொண்டுவந்து கொண்டுவந்து வாடி யெறிதலால், அப் பூந்தழைகள் தொலைந்தாற்போல், அவர் கையுந் தழையும் எதிரே காணுந்தோறும் காணுந்தோறும் யான் உறுதிச்சொல்லா யுரைத்த என்னிடத்திலுண்டான பொய்யெல்லாந் தொலைந்தன; அன்றியும், தஞ்சைவாணன் வெற்பர் மெய்யும் அலைந்தலைந்து துவண்டதாதலால், இனி அவர் வரின் வெளியாய் நிற்க என்னால் முடியாது என்றவாறு.
எனவே, அவர் வரின் மறையவேண்டும் என்பதாயிற்று. கட்டுரைத்தல் - உறுதிச்சொற் கூறுதல். அரி - செவ்வரி.
---------- (124. மறுத்தற் கருமை மாட்டல் - முற்றும்) ----------
125. தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் :
தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் என்பது, தலைவன் எண்ணுங் குறிப்பு நம் பக்கல் இரப்பவன்போற் றோற்றவில்லை, வேறு நினைப்பானாகத் தோன்றியதென்று ஒழுங்குபடக் கூறுதல்.
விடையான் மிசைவரு மேருவில் லானொடு மேழிவென்றிப்
படையா னொடும்வெம் பகைகொள் வதோபகல் போலுமெய்ம்மை
உடையா னுயர்தஞ்சை வாணனொன் னாரென வொல்கியநுண்
இடையாய் பிறிதுகொ லோவறி யேன்வெற்ப ரெண்ணுவதே. (125)
(இ - ள்.) நடுவு நிலைமையையும் வாய்மையையும் உடையான் எல்லார்க்கும் புகழாலுயர்ந்த தஞ்சைவாணனுக்கு ஒன்னாரெனத் துவண்ட நுண்ணிய இடையை யுடையாய், வெற்பர் எண்ணுவது விடையான்மேல் வருந்தன்மையை யுடைய மேருவில்லானோடும், மேழியைத் தனக்கு உறுப்பாகவுடைய வெற்றிப்படையை யுடையானோடும் வெய்ய பகைகொள்வதோ, பிறிதோ, அறியேன் என்றவாறு.
விடை - இடபம்; விடை ஆன் - பண்புத்தொகை. மேரு வில்லான் - சிவன். மேழிவென்றிப்படை - கலப்பை. படையான் - பலதேவன். சிவனுடன் பகைகொள்ளுதல் - எருக்கமாலை என்புமாலை யணிதல். பலதேவனொடு பகைகொள்ளுதல் - பனையை வெட்டுதல். பனை அவனுக்குக் கொடியெனவே மடலேறுங் குறிப்புத் தோன்றியது. 'பிறிது' என்பதனால் வரை பாய்தல் கொள்க. பகல் - நடுவு நிலைமை. போலும் - அசைநிலை. [1]'ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்' என்பதனால் அறிக. மெய்ம்மை - வாய்மை. கொல் - ஐயம். ஓகாரம் - அசைநிலை.
-----
[125-1] தொல். சொல். இடையியல் - (௩0) 30.
----------
---------- (125. தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் - முற்றும்) ----------
126. தோழி தலைவியை முனிதல் :
தூற்றா தலரை மறைப்பவர்க் கேகுறை சொல்லுகுற்றம்
ஏற்றா தொழியெனை யெம்பெரு மாட்டிசென் றேற்றவர்க்கு
மாற்றா தருள்செங்கை வாணன்தென் மாறையில் வந்துநெஞ்சம்
போற்றாது நின்றய லேன்சொன்ன தீங்கு பொறுத்தருளே. (126)
(இ - ள்.) எம்பெருமாட்டி, தூற்றாது அலரை மறைக்கின்ற நினக்கு உண்மையானவர்க்கே நின் மனக் குறையைச் சொல், என்னைக் குற்றமேற்றாது விடு; சென்று ஏற்றவர்க்கு இல்லை யென்னாது கொடுக்குஞ் செங்கையை யுடைய வாணன் தென்மாறை நாட்டில், நின் பக்கத்தில் வந்து நெஞ்சத்தைக் காவாமல், அயலேனாகிய யான் அறியாமற் சொன்ன குற்றத்தைப் பொறுத்தருள்வாயாக என்றவாறு.
'எனைக் குற்றம்' எனவும், 'வந்து நின்று' எனவும் இயையும். போற்றாது - காவாது.
---------- (126. தோழி தலைவியை முனிதல் - முற்றும்) ----------
127. தலைவி பாங்கியை முனிதல் :
தலைவி பாங்கியை முனிதல் என்பது, பாங்கியை முனிந்து தலைவி தன்னுட் கூறல்.
மற்றே தவர்நினை வார்தஞ்சை வாணன் வரையின்முந்நாள்
பொற்றேரின் வந்து புணர்ந்துசென் றார்தம் பொருட்டுநம்மைக்
குற்றேவல் மங்கை குறையிரந் தாளெனுங் குற்றமிந்நாள்
எற்றே தவறுநம் பாலில்லை யாகவு மெய்தியதே. (127)
(இ - ள்.) தஞ்சைவாணன் வரையில் மூன்றுநாள் பொற் றேரினில் வந்து புணர்ந்து சென்றார், அவர் மற்றேது நினைவார், அவர் தம்பொருட்டு நம்மைக் குற்றேவல் மங்கையாகிய இவள் குறையிரந்தா ளென்னுங் குற்றம் இந் நாள் நம்பக்கல் இல்லையாகவும் தவறெய்தியது எத்தன்மைத்து என்றவாறு.
மற்று - அசைநிலை. 'ஏது' என்புழி இரண்டனுருபு தொக்கது. முந்நாள் - மூன்றுநாள். அவையாவன, இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்பன. 'தம்பொருட்டு' என்புழி, 'அவர்' என்னுஞ் சுட்டுப்பெயர் வருவிக்க. 'அவர் மற்றேது நினைவார்' எனவும், 'இந்நாள் நம்பால்' எனவும், 'தவறு எய்தியதே' எனவும் இயையும்.
---------- (127. தலைவி பாங்கியை முனிதல் - முற்றும்) ----------
128. தலைவி கையுறை யேற்றல் :
ஆற்றுந் தலைவ ரருந்துய ராற்றினு மாற்றிலனாண்
மாற்றும் புனையின் மயிலனை யாய்தஞ்சை வாணன்தெவ்வின்
போற்றுங் கொடுவினை யேன்புனை யாவிடிற் போந்தலரே
தூற்றுந் தழையென்றி தொன்றெங்ங னேவந்து தோன்றியதே. (128)
(இ - ள்.) மயில்போல்வாய், தஞ்சைவாணன் பகைபோல மிக்காய்க் கூறுங் கொடிய வினையேன் அணிந்தேனாயின் நாணை மாற்றும், அணியாது தடுத்தேனாயின் எங்குஞ் சென்று அலரையே தூற்றும், தழையென்று பெயரிட்டுக்கொண்டு இஃதொன்று எவ்விடத்திலேயிருந்து இவ்விடத்தில் வந்து தோன்றியது, முன் நல்வினையாற்றுந் தலைவர் அரிய வேட்கையை ஆற்றல்செய்யினும் யான் ஆற்றிலன் என்றவாறு.
எனவே, தலைவி கையுறை வாங்கினாளாயிற்று. என்னை,
'நல்வினை யாற்று முயர்நாண மாற்றுமலர்
தூற்றலினால் வந்த துயர்.'
இன் - ஐந்தனுருபு ஒப்பின்கண் வந்தது. போற்றல் - மிக்காய்க் கூறல். யான் என்பது தோன்றா எழுவாய். தெவ் - பகை.
இவற்றுள் பாங்கி கூற்றாயினவெல்லாம், 'குறைநயப்பித்தற்'கும், தலைவி கூற்றாயினவெல்லாம், 'குறை நேர்தற்'கும் உரித்தாயினவாறு காண்க.
---------- (128. தலைவி கையுறை யேற்றல் - முற்றும்) ----------
129. இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல் :
போயா னளித்தலுங் கைகுவித் தேற்றபின் போற்றியன்பால்
சாயாத கொங்கையின் மேலணைத் தாள்தஞ்சை வாணன்வெற்பா
காயா மலரன்ன மேனிமெய் யாகநின் கையுறையே
நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே. (129)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! நீ தந்த கையுறையை நான் போய்க்கொடுத்தலுங் கைகுவித்து ஏற்றாள், ஏற்றபின் அன்பினால் மிகவும் புகழ்ந்துகூறி, எஞ்ஞான்றுஞ் சாயாத கொங்கையின்மேல் அணைத்தாள், அணைத்துக் காயாம்பூவையொத்த நிறத்தைப் பொருந்திய மெய்யாகத்தையுடைய நீயாக நினைத்தாளல்லது மாந்தழையாக நினைந்திலள் என்றவாறு.
எனவே, நீ வந்துழி நிகழும் உபசாரம் யாவையும் தழையினிடத்து நிகழ்ந்ததென்று கூறியவாறாயிற்று. 'யான்போய்' எனவும், 'அன்பினாற் போற்றி' எனவும், 'மெய்யாகம் நீயாக' எனவும் மாறுக.
அளித்தல் - கொடுத்தல். போற்றி - புகழ்ந்து, மெய்யாகம் - பண்புத்தொகை. மேனி - நிறம்.
---------- (129. இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல் - முற்றும்) ----------
130. பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல் :
அணிமா மலர்மயி லைப்புயத் தூணங்கொ ளாகமெனும்
மணிமா ளிகைவைத்த வாணன்மண் காவலன் மாறைவெற்பா
துணிமா மரகதப் பாசறை வேலைச் சுடரவன்போல்
பணிமா மணிதிக ழும்பகல் யாங்கள் பயிலிடமே. (130)
(இ - ள்.) அழகாகிய மா என்னும் பெயரையுடைய திருமகளைப் புயமென்னுந் தூண்களையுடைய மார்பென்னும் மணிமாளிகையில் வைத்த வாணனாகிய வேந்தனது மாறை வெற்பனே! பகற்காலத்தில் யாங்கள் விளையாடுமிடம் பெருமையுடைய மரகதத் துண்டங்கள் போன்ற குருக்கத்தி யிலையாற் பச்சைநிறம் பொருந்திய முழையினிடத்தே கடலிடத்துக் கதிரோன்போல நாகமாணிக்கங்க ளொளிவிடும் என்றவாறு.
மலர்மயில் - திருமகள். ஆகம் - மார்பு. 'தூணம்' என்புழி, அம் பகுதிப்பொருள் விகுதி. 'மாமரகதத்துணி' என மாறுக. பாசறை - பசிய குருக்கத்தி யிலையாற் செறிந்த முழை. 'குருக்கத்தி என்று செய்யுளிற் கூறிய தில்லையாலெனின், மேல்வரும், 'குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்' என்னுங் கிளவிச் செய்யுளில், 'பூமாதவிப்பந்தர்' என்று கூறினமையானும், மேற்சொன்ன குறியிட மூன்றுங் குருக்கத்தி யென்று உய்த்துணர்ந்துகொள்ளக் கிடத்தலானும், ஈண்டு, 'குருக்கத்தி' என்று வருவிக்கப்பட்டது.
துணி - துண்டம்; ஆகுபெயர். மாமணி - மாணிக்கம். திகழ்தல் - ஒளிவிடுதல். பாசறை கடற்கும், மாணிக்கம் கதிரோனுக்கும் உவமையாதலின் பண்புவமை. 'மலர்மயிலை மார்பில் வைத்த வாணன்' எனவே பூவைநிலை. பயிலிடம் - ஈண்டு விளையாடுமிடம். குறியிடம் - பகலிற்கூடும் இடத்து அடையாளம்.
---------- (130. பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல் - முற்றும்) ----------
131. பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டு சேறல் :
நாமாவீ மூழ்கி நறுமலர் குற்றுநந் தாவனத்துத்
தேமா விளந்தளிர் செவ்வண்ணங் கொய்து சிலம்பெதிர்கூய்
வாமா னெடுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பிற்
பூமா தவிப்பந்தர் வாய்விளை யாடுகம் போதுகவே. (131)
(இ - ள்.) தாவுமான்போல் நெடியகண்ணையுடைய மடந்தைநல்லாய்! தஞ்சைவாணன் வெற்பில் நாம் வாவியினிடத்து மூழ்கி, நறிய மலர்களைக் கொய்து, நந்தவனத்துச் செவ்வண்ணமாகிய தேமாவினது இளந்தளிரைக் கொய்து, சிலம்பெதிர் கூவி, பூவொடு கூடிய குருக்கத்திப் பந்தரின் விளையாடுவாம், செல்வாயாக என்றவாறு.
ஆவி - வாவி. குற்று - கொய்து. வாமான் - தாவுமான். மாதவிப் பந்தர் - தினைப்புனத்தயலில் சோலையில் மாதவி படர்ந்து மலர்ந்து நாற்றம் வீசச் சுற்றும் புதல் சூழ்ந்து அகத்திருந்தோர் புறத்தில் வருவோர்க்குப் புலனாகாத மறைவு வாய்த்திருப்பதோர் இடம்.
---------- (131. பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டு சேறல் - முற்றும்) ----------
132. பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல் :
கண்சாயல் கையுருக் கொண்டுதன் வேன்மயில் காந்தள்வள்ளி
எண்சாய வென்றனை யென்றுசெவ் வேளிவ ரும்பவளம்
வண்சா யொசிக்கும் வயற்றஞ்சை வாணன் மலயமராத்
தண்சாயை நின்றணங் குந்தைய னீநிற்க சாரலிலே. (132)
(இ - ள்.) தையலே, கண்ணுஞ் சாயலுங் கையும் உருவுங்கொண்டு, தனது வேலும் மயிலுங் காந்தளும் வள்ளியும் ஒப்பில்லையென் றெண்ணிய முருகவேளின் எண்ணத்தைத் தாழ்வுபட வென்றனையால், ஏறிப்படரும் பவளம் வளவிய கோரையை யசைக்கும் வயலையுடைய தஞ்சைவாணன் மலயத்தினிடத்து, மராமரத்துத் தண்ணிய நிழலிலே நின்று, என்னுடன் நீ வந்தாயாகில், நின்னை அம் முருகவேள் வருத்துமாதலால், இச்சாரலில் இவ்விடத்தில் நிற்பாயாக என்று பாங்கி யகன்றாள் என்றவாறு.
எண்ணும்மை தொக்குநின்று, நிரனிறைப்பொருள் வந்தவா றுணர்க. இவர்தல் - ஏறுதல். சாய் - கோரை. ஒசித்தல் - அசைத்தல். சாயை - நிழல். சாரல் - மலைப்பக்கம்.
---------- (132. பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல் - முற்றும்) ----------
133. இறைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல் :
முயங்கிய நூபுரப் பங்கயத் தாளு முலைசுமந்து
தயங்கிய நூலிடை தானுமென் போலத் தளர்வுறுமிங்
கியங்கிய வாறென் மனத்திரு ணீக்கவென் றேதுணிந்தோ
வயங்கிய சீருடை யான்வாணன் மாறை மணிவிளக்கே. (133)
(இ - ள்.) விளங்கிய புகழை யுடையோனாகிய வாணன் தென்மாறை நாட்டு மணிவிளக்குப் போல்வாய்! நூபுர முயங்கிய பங்கயம்போன்ற தாளும், முலையைச் சுமந்து தள்ளாடிய நூல்போன்ற விடைதானும் என்னைப் போலத் தளர்வுறும்; இவ்விடத்துச் சஞ்சரித்தவாறு என் மனத்துன்பத்தை நீக்கவென்று துணிந்தோ சொல்வாயாக என்றவாறு.
'நூபுரமுயங்கிய பங்கயத்தாள்' என இயையும். நூபுரம் - சிலம்பு. தயங்கல் - தள்ளாடல். இயங்கல் - சஞ்சரித்தல். ஏகாரம் - ஈற்றசை. ஓகாரம் - வினா. வயங்குதல் - விளங்குதல். சீர் - கீர்த்தி. விளக்கு - ஆகுபெயர். தலைவியை விளக்கு என்று கூறினமையான் மனத்துன்பத்தை இருள் என்று கூறியது. இருள் - ஆகுபெயர்.
---------- (133. இறைவி இறையோனிடத் தெதிர்ப்படுதல் - முற்றும்) ----------
134. புணர்ச்சியின் மகிழ்தல் :
தருந்தாரு வஞ்சுங் கொடையுடை யான்தஞ்சை வாணனின்சொல்
செருந்தார் பசுந்தமிழ்த் தென்வரை மேற்செம்பொன் மேருவெற்பால்
கருந்தாரை நஞ்சுமிழ் வாசுகி யால்வெண் கடல்கடைந்து
வருந்தா அமுதளித் தாள்வல்ல ளாமிம் மடக்கொடியே. (134)
(இ - ள்.) கேட்டவை பலவுந் தருந் தாரும் அஞ்சப்பட்ட கொடையை யுடையானாகிய தஞ்சைவாணன் இனிய புகழையும் செருந்திமரச் சோலையையும் பசியதமிழையு முடைய பொதியமலைமேல், செம்பொன் மேருவெற்பால், கரிய தாரையாய் நஞ்சை யுமிழப்பட்ட வாசுகி யென்னும் பாம்பால், வெண்மை நிறம்பொருந்திய கடலைக் கடைந்து, வருந்தாத அமுதை யளித்தாளாதலால், இம்மடக்கொடி வல்லளாம் என்றவாறு.
தருந்தாரு - கற்பகம். தென்வரை - பொதியமலை. தாரை - நீர்வரும்வழி; சலதாரை என்றாற்போல. வாசுகி - கடல் கடைந்த பாம்பு. வெண் கடல் - பாற்கடல். இவ்வாறு வருத்தப்படாமல் அமுதம் ஈந்ததினால், 'வல்லள்' என்று கூறியது. வல்லள் - உயர்திணை யொருமைவினைக் குறிப்புமுற்று.
---------- (134. புணர்ச்சியின் மகிழ்தல் - முற்றும்) ----------
135. புகழ்தல் :
மயனார் விதித்தன்ன மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பயனார் பயோதரப் பாவையன் னீர்பசும் பொற்குழைதோய்
நயனார விந்தத்து நஞ்சுநும் வாயிதழ் நல்லமுதம்
அயனார் படைத்தில ரேலடங் காதவ் வரனுக்குமே. (135)
(இ - ள்.) தெய்வத் தச்சனார் விதித்ததுபோன் ற அரிய செயலாகிய பெரிய மதில் சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பில் இன்பப் பொருளார்ந்த முலையையுடைய சித்திரப் பாவைபோல்வீர்! பசிய பொன்னாற் செய்த குழையைத் தொடும் நயனமாகிய தாமரையிலிருக்கும் நஞ்சானது அடங்குமாறு நும் வாயிதழூடு நல்லமுதம் அயனார் படையாமற் போனாராகில், முன்பு கடலிற்பிறந்த நஞ்சை யடக்கிய அவ்வரனாற்கும் அடங்காது என்றவாறு.
பயன் - இன்பப்பொருள். பயோதரம் - முலை. தோய்தல் - தொடுதல், 'நயனாரவிந்தம்' - ஏகதேசவுருவகம். இதழமுதம் உண்டு விடந்தணிந்தா னாதலால் இவ்வாறு கூறியதென்று உணர்க. மயன் - தெய்வத்தச்சன்.
---------- (135. புகழ்தல் - முற்றும்) ----------
136. தலைமகளைத் தலைமகன் விடுத்தல் :
தலைமகளைத் தலைமகன் விடுத்தல் என்பது, தலைமகளைத் தலைமகன் ஆயக்கூட்டத்திற் செல்லவிடுதல்.
நேயம் புகலிட மின்றிநின் பால்வந்து நின்றதுபோல்
ஆயம் புகல வடைந்தரு ணீயடை யாதமன்னர்
வாயம் புகவில் வணக்கிய வாணன்தென் மாறைநன்னீர்
தோயம் புகரிணை வேல்விழி யாய்நின் துணையுடனே. (136)
(இ - ள்.) சரணென்று வந்தடையாத பகைமன்னரிடத்து அம்புகளுதிர வில்லைவளைத்த வாணன் தென்மாறை நாட்டுள்ள நல்ல நீரிலே தோய்த்துப் பதஞ்செய்த அழகிய புகர்நிறத்தையுடைய இணைவேல்போலும் விழியாய்! நீ யன்புசொல்வதற் கிடமில்லாது நின் பக்கலிலே வந்து நின்றதுபோலச் சூழப்பட்ட ஆயக்கூட்டம் தங்களன்பைச் சொல்லத்தக்கதாக நின் பாங்கியுடனே நீ அடைந்தருள்வாயாக என்றவாறு.
நேயம் - அன்பு. நேயம் புகல்வதற்கு இவள்போலும் வேறொருவ ரின்மையால், இவளிடத்து வந்து சூழ்ந்ததுபோலும் என்று கூறியவாறுணர்க. வாய் - இடம். அம்புஉக - அம்புஉதிர. புகர் - இரத்தக்கறை.
---------- (136. தலைமகளைத் தலைமகன் விடுத்தல் - முற்றும்) ----------
137. பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல் :
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல் என்பது, குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன் போயினபின் தான் கையுறைக்குப் போயின பாவனையாய்க் கையுறைகொண்டு வந்து காட்டல்.
பொய்போ லிடைநின் விழிபோற் குவளையம் போதிவைநின்
மெய்போ லசோக மிளிர்பூந் தழையிவை மெல்லியனின்
கைபோற் கவின்கொள்செங் காந்தளம் போதிவை கண்டருள்யான்
மைபோற் குழலிதந் தேன்தஞ்சை வாணன் வரையினின்றே. (137)
(இ - ள்.) மையை யொக்குங் குழலையுடையாய்! தஞ்சைவாணன் வரையினின்று யான் நினக்குத் தந்தேன்; பொய்யையொக்கும் இடையாய்!நினது கண்களையொக்குங் குவளைப்போது இவை; நினது மெய்யைப்போ லொளிவிடும் அசோகப்பூந்தழை இவை; மெல்லிய இயலையுடைய நினது கையைப்போல அழகுகொண்ட செங்காந்தட்போது இவை; நீ கண்டருள்வாய் என்றவாறு.
மிளிர்தல் - ஒளிவிடுதல். கவின் - அழகு. மை - மேகம். 'பொய்போலிடை,' 'மைபோற் குழலி' என இரண்டு முன்னிலை வந்தவாறு காண்க. 'தஞ்சைவாணன் வரையின் யான்' என மாறுக. அம் மூன்றும் சாரியை.
---------- (137. பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல் - முற்றும்) ----------
138. தலைவியைப் பாங்கிற் கூட்டல் :
குனிநாண் மதிநுதற் கோகில மேநின் குழலிலெல்லாப்
பனிநாண் மலரும் பறித்தணிந் தேனிந்தப் பார்மடந்தை
தனிநா யகன்தஞ்சை வாணன்றண் சாரல் தனித்துநில்லா
தினிநா மகன்றிளை யார்விளை யாடிட மெய்துதுமே. (138)
(இ - ள்.) வளைந்த நாட்கொண்ட மதிபோன்ற நுதலை யுடைய கோகிலமே! நினது குழலினிடத்தில் வனத்திலுள்ள குளிர்ந்த முறுக்கவிழ்ந்த மலரனைத்தும் பறித்தணிந்தேன்; இந்தப் பூமடந்தைக் கொப்பற்ற நாயகனான தஞ்சைவாணனது குளிர்ந்த மலைச்சாரலிடத்துத் தனியாய் நில்லாது இவ்விடத்தினின்றும் அகன்று, இப்போது இளையார் விளையாடுமிடத்தை யாம் எய்துவோம் என்றவாறு.
குனிநாண்மதி - பிறை. 'மதிநுதற் கோகிலம்' என்றது சிறப்புருவகம். தனி - ஒப்பின்மை. நாண்மலர் - முறுக்கவிழ்மலர்.
---------- (138. தலைவியைப் பாங்கிற் கூட்டல் - முற்றும்) ----------
139. பாங்கி தலைவியை நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல் :
பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் என்பது, தலைமகளை ஆயத்திற் கூட்டி மீண்டு வந்து தலைவற்கு ஓம்படை சாற்றல். ஓம்படை - மறவாமை.
சின்னாண் மலர்க்குழல் காரண மாச்செவ்வி பார்த்துழன்று
பன்னா ளுரைத்த பணிமொழி நோக்கிப் பழிநமக்கீ
தென்னா திடைப்பட்ட வென்னீலை நீமற வேலிறைவா
தன்னாக மெய்ப்புக ழான்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே. (139)
(இ - ள்.) இறைவனே! தன் ஆகத்தை மெய்ப் புகழாய் நிறுத்தின தஞ்சைவாணன் தமிழ் வெற்பிடத்துச் சில நாண்மலரை யணிந்த குழலையுடையாள் காரணமாக, அவளது பதம்பார்த்து வருத்தப்பட்டு, நேற்றும் இன்று மாகிய பலநாள் உரைத்த தாழ்ந்த மொழியைக் கருதி, நமக்கிது பழியென்று சொல்லாது, நும்மிருவர்க்கும் நடுப்பட என்னிலைமையை நீ மறவாதிருக்கக்கடவை என்றவாறு.
செவ்வி - காலம். உழன்று - வருந்தி. பணிமொழி - தாழ்ந்த மொழி. தன்னாகம் - தன்னுடல். இரண்டுநா ளென்பதனைப் பன்னாளென்று கூறிய தென்னையெனின், ஒன்றல்லன எல்லாம் பல என்பது தமிழ்நடை யாகலின் கூறியவாறென்று உணர்க.
---------- (139. பாங்கி தலைவியை நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல் - முற்றும்) ----------
140. உலகியன் மேம்பட விருந்து விலக்கல்
உலகியல் மேம்பட விருந்து விலக்கல் என்பது, உற்றார் அயலூரிலிருந்து வந்தால், அவர்க்கு ஊண்கொடுத்து உபசாரஞ் செய்தல் உலகியல் பாதலால், அவ்வுலகியல் பெருமைப்படத் தலைமகனை எம்மூர்க்குவந்து இருந்துபோம் எனக்கூறிப் பகற்குறியை விலக்கல்.
ஆயின், விருந்தென்பது உண்டிக்குப் பெயரோவெனின், விருந்து என்பது புதுமை, உலகின்கண் மருவி ஊண்மேல் நின்றது. என்னை, ஒருவன் ஒருவற்கு விருந்து கூறினான் எனின், ஊண் கூறினன் என்பதல்லது புதுமை கூறினன் என்னும் பொருள்தரா தாதலான், விருந்தென்றது ஊணென்றே கொள்க.
வலைப்பெய்த மான்றசை தேன்றோய்த் தருந்தி மரைமுலைப்பால்
உலைப்பெய்த வார்தினை மூரலு முண்டுளங் கூருவகை
தலைப்பெய்த நாளனை யான்தஞ்சை வாணன் சயிலத்தெம்மூர்
இலைப்பெய்த தாழ்குரம் பைத்தங்கி னாலுமக் கென்வருமே. (140)
(இ - ள்.) தலைவரே! வலை சுற்றுமிட்ட மானினது தசையைத் தேனிற் றோய்த்து அருந்தி மரைமுலையினின்றும் பாலினை உலையாகப் பெய்து அட்டு வடித்த தினைச் சோற்றை உண்டு, உளத்தின் மிகுந்த வுவகை வந்துகூடிய நாள்போன்றவனாகிய தஞ்சைவாணன் வரையிடத்து, எம் மூரில் இலையான் மேய்ந்த குடில்வீட்டுள் தங்கினால் உமக்கியாது குறைவரும் என்றவாறு.
உலைப்பெய்த - உலையிற்பெய்த. வார்தல் - வடித்தல். மூரல் - சோறு. தலைப்பெய்தல் - கூடுதல். [1]'ஆங்க விரண்டே தலைப்பெயன் மரபே.' என்பதனாலுணர்க. என்வரும் - யாது குறைவரும். இங்ஙனங் கூறியது இரவுக்குறியை நாடிப் பகற்குறியை விலக்கிய கருத்தென்றுணர்க. என்னை, தினைவிளைந்தால் நாளைத் தினையறுத்து இவள் ஊர்க்குப்போதலால், தலைவனையும் ஊர்க்கு வா என்றுகூறி, வந்தால் இரவுக்குறியிற் கூட்டுவிப்பேனெனுங் குறிப்புத் தோன்றக் கூறியதன்றி விருந்து கூறியதன்றென வுணர்க. தலைவன் - முன்னிலை யெச்சம்.
-----
[140-1] இறையனார் அகப்பொருள் - (௩) 3.
----------
---------- (140. உலகியன் மேம்பட விருந்து விலக்கல் - முற்றும்) ----------
This file was last updated on 2 Feb. 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)