பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை -பாகம் 2 (141-280)
[சொக்கப்ப நாவலர் உரை]
tanjcaivANan kOvai -part 2 (upto verse 80)
of poyyAmozip pulavar
(with cokkappa nAvalar uraiyudan)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our sincere thanks also go to Mr. Rajendran Govindasamy of Tamilnadu, India for his assistance in
proof-reading of the OCR output and in the preparation of the e-text file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை - பாகம் 2 (141-280)
[சொக்கப்ப நாவலர் உரை]
Source:
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை
[சொக்கப்ப நாவலர் உரை]
இக் கோவை நாற்கவிராசநம்பி அகப்பொருள் விளக்கத்திற்கு இலக்கியமாகவுள்ளது.
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை-1.
கழக வெளியீடு: 627
First Edition: October, 1952
(Copy-right)
Published by : The South India Saiva Siddhantha Works Publishing Society Tinnelvelly, Ltd
1/140, Broadway, Madras -1;
Head Office: 24, EAST CAR STREET, THIRUNELVELI
Appar Achakam, 2/140, Broadway, Madras-1.
---------------
பொருளடக்கம்
1. களவியல் (001 – 280)
1.01. கைக்கிளை (001 – 004)
1.02. இயற்கைப் புணர்ச்சி (005 – 019)
1.03. வன்புறை (020 – 025)
1.04. தெளிவு (026)
1.05. பிரிவுழி மகிழ்ச்சி (027 – 028)
1.06. பிரிவுழிக் கலங்கல் (029 – 033)
1.07. இடந்தலைப்பாடு (034 – 038)
1.08. பாங்கற்கூட்டம் (039 – 062)
1.09. பாங்கி மதி யுடன்பாடு (063 – 080)
1.10. பாங்கியிற் கூட்டம் (081 – 141)
1.11. ஒருசார் பகற்குறி (142 -155)
1.12. பகற்குறி இடையீடு (156 -162)
1.13. இரவுக்குறி (163 – 189)
1.14. இரவுக்குறி இடையீடு (190 – 208)
1.15. வரைதல் வேட்கை (209 -227)
1.16. வரைவு கடாதல் (228 – 247)
1.17. ஒருவழித் தணத்தல் (248 – 259)
1.18. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் (260 – 280)
----------------
2. வரைவியல் (281 – 366)
3. கற்பியல் (367 -425)
-------------------------
தஞ்சைவாணன் கோவை- மூலமும் உரையும்
[சொக்கப்ப நாவலர் உரை]
141. விருந்திறைவிரும்பல் :
விருந்து இறை விரும்பல் என்பது, அவ்வூணைத் தலைவன் விரும்பிக் கூறல்.
மஞ்சூட்டி யன்ன சுதைமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பஞ்சூட் டியமென் பதயுகத் தீருங்கள் பாடியின்மான்
வெஞ்சூட் டிழுதன்ன ஊனும்பைந் தேனும் விருந்தினர்க்குச்
செஞ்சூட் டிளகுபொன் போல்தினை மூரலுந் தெள்ளமுதே. (141)
(இ - ள்.) முகிலை யருந்தியதுபோன்ற சுதை பூசிய மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பில் பஞ்சைப்பொருந்திய மெல்லிய பாதமிரண்டுடையீர்! உங்களூரிடத்து வெண்ணெய்போன்ற வெவ்விய சூட்டுண்ட மானூனும், பசிய தேனும், செஞ்சூடு சுட்டிளகிய பொன்போன்ற தினைச்சோறும் விருந்தினர்க்குத் தெள்ளமுதுபோலும் என்றவாறு.
எனவே, பாங்கி கூறிய இரவுக்குறியைத் தலைவன் குறிப்பா லுணர்ந்து இயைந்து கூறியது; இக்கருத்தானேயன்றே பகற்குறி யிடையீடு பட்டவாறென் றுணர்க.
ஊட்டல் - அருந்துதல். சுதை - வெண்சாந்து. பஞ்சூட்டல் - செம்பஞ்சு பொருந்துதல். பாடி - முல்லை; ஊர்க்குப் பொருள் மயக்கம். செஞ்சூட்டிளகுபொன் - சிவக்கச்சுட்டிளகிய பொன். 'இழுதன்ன வெஞ்சூடு' எனவும், 'மானூன்' எனவுமியையும்.
---------- (141. விருந்திறைவிரும்பல் - முற்றும்) ----------
பாங்கி கூற்றாயின வெல்லாம், 'கூட்டற்'கும், 'பாங்கிற்கூட்டற்'கும் உரிய.
தலைவன் கூற்றாயின வெல்லாம், 'கூடற்'கும்; 'கூட்டற்'கும், 'வேட்டற்'கும் உரியவாறு உணர்க.
1.10. பாங்கியிற் கூட்டம் முற்றிற்று.
-------------------------
1.11. ஒருசார் பகற்குறி (142-155)
அஃதாவது, ஒருகூற்றுப் பகற்குறி. ஒரு கூற்றுப் பகற்குறி யாதெனில், தலைவன் மற்றைநாள் தன் வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்து வந்து நிற்க, தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக் கூறத் தலைவன் வருந்திப்போதலாதலான் பகற்குறி யாகாது, ஒருசார் பகற்குறி யாயிற்று.
[1]'இரங்கல் வன்புறை இற்செறிப் புணர்த்தலென்
றொருங்கு மூவகைத் தொருசார் பகற்குறி.’
என்னுஞ் சூத்திரவிதியால், ஒருசார்பகற்குறி மூவகைப்படும் எனக் கொள்க.
-----
[1.11-1] அகப்பொருள் விளக்கம்; களவியல் - (௩௬) 36.
----------
142. கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண் டிரங்கல் :
ஆழ்ந்தார் தமக்கரு ளாதவர் போலிவ் வளவிலன்பு
சூழ்ந்தார் செலத்தொங்கல் சூழ்குழ லாய்சொற் பொருள்படைத்து
வாழ்ந்தார் புகழ்தஞ்சை வாணனைப் பேணலர் மானவெய்யோன்
வீழ்ந்தார் கலிக்கரந் தான்பனி மாலை வெளிப்படவே. (142)
(இ - ள்.) மாலைசூழ்ந்த குழலினையுடையாய், மிடியில் மூழ்கினர்க்குக் கொடாதவர்போல் இந்தமட்டில் அன்பு சூழ்ந்தார் பிரிந்துபோகச், சொற்பொருள் படைத்து வாழும் புலவராற் புகழப்பட்ட தஞ்சைவாணனை விரும்பாதவர் கடலில் விழுந்து மறைதல்போல, கதிரோன் பனியொடுகூடிய மாலைக்காலம் வெளிப்படக் கடலில் வீழ்ந்து மறைந்தான்; யான் என்செய்வேன் என்றவாறு.
ஆழ்ந்தார் - மிடியிலாழ்ந்தார்; எனவே, ஆழ்ந்தார் தானாகவும், கொடாதவர் தலைவராகவும் கூறியவாறாயிற்று. சூழ்ந்தார் - பொருந்தினார். பேணலர் - விரும்பாதவர். ஆர்கலி - கடல். கரத்தல் - மறைதல். பனிமாலை - அந்தியம்போது. 'வெளிப்பட்டதே' என்று பாடமோதுவாருமுளர்.
இக்கிளவி, பாங்கியை நோக்கிக் கூறுதலும், மாலையம் பொழுதை நோக்கிக் கூறுதலும், தன்னுட் கூறுதலும் என மூவகைப்படும். அவற்றுள் இச்செய்யுள் பாங்கியை நோக்கிக் கூறியது.
[1]'புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.’
என்பது மாலையுடன் கூறியது.
[2]'காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.'
என்பது தன்னுட் கூறியது.
-----
[142-1] குறள். பொழுதுகண்டிரங்கல் - (௨) 2.
[142-2] குறள். பொழுதுகண்டிரங்கல் - (௭) 7.
----------
---------- (142. கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண் டிரங்கல் - முற்றும்) ----------
143. பாங்கி புலம்பல் :
காலையம் போருக வாள்முகத் தாளன்பர் கையகல
மாலையம் போது வருவித்த நீர்தஞ்சை வாணன்தெவ்வர்
ஆலையம் போலுங்க ளாதவன் கோயி லழல்கொளுந்த
வேலையம் போடுழல் வீர்பரி காளென்றும் வெய்துயிர்த்தே. (143)
(இ - ள்.) பரிகாள், காலை அம்போருகம்போலும் ஒளியையுடைய முகத்தாளைத் தலைவர் கையகல மாலையம் பொழுதை வரச்செய்த நீர் தஞ்சைவாணன் தெவ்வராலயம் போல், உங்கட்கு இறைவனாகிய கதிரவன்கோயில் அழல் பற்றக் கடலில் தண்ணீரோடே யெப்போதும் நெட்டுயிர்த்து வருந்துவீராக என்றவாறு.
காலையம்போருகம் - முறுக்கவிழ்தாமரை. 'அம்போருகவாள் முகம்' - உவமைத்தொகை. 'முகத்தாள்' என்புழி இரண்டனுருபு தொக்கது. கையகல் - ஒருசொல்; அது பிரிதல்.
[1]'செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றா லுறாஅ தவர்.'
என்பதுபோலும்.
தெவ்வர் - பகைவர். ஆதவன் - கதிரவன். கொளுந்தல் - கொளுத்தல். அம்பு - நீர். உழலுதல் - வருந்துதல். வெய்துயிர்த்தல் - நெட்டுயிர்த்தல்.
-----
[143-1] குறள். நெஞ்சொடு கிளத்தல் - (௫) 5.
----------
---------- (143. பாங்கி புலம்பல் - முற்றும்) ----------
144. தலைவனீடத் தலைவி வருந்துதல் :
தலைவன் நீடத் தலைவி வருந்துதல் என்பது, தலைவன் வாராது நாழிகை நீட்டித்துழித் தலைவி வருந்திக் கூறுதல்.
ஆராத வின்ப விடந்தொறு நீங்கிய வாயமென்பால்
வாராத முன்னம் வருகில ராற்றஞ்சை வாணன்வெற்பில்
கூரா தரநல்கி வல்வினை யேனலங் கொள்ளைகொண்டு
தேரா தவனுட னேநென்னல் மாலையிற் சென்றவரே. (144)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பில் மிகுந்த காதலைக்கொடுத்து, வல்வினையேன் நலத்தையெல்லாங் கொள்ளை கொண்டு, தேரோடுகூடிய சூரியனுடனே நெருநல் மாலைக் காலத்துச் சென்றவர் அமையாத விளையாட்டின்பத்தால் அவ்விடந்தோறும் நீங்கிய ஆயக்கூட்டம் என்னிடத்து வாராதமுன்னம் வருகிலார், யான் என்செய்வேன் என்றவாறு.
ஆல் - அசை. கூர் - மிகுதி. ஆதரம் - காதல். நலம் - அழகு. நென்னல் - முன்னைநாள்.
---------- (144. தலைவனீடத் தலைவி வருந்துதல் - முற்றும்) ----------
145. தலைவியைப் பாங்கி கழறல் :
தலைவியைப் பாங்கி கழறல் என்பது, பாங்கி நீ வருந்துவது முறைமையன்றெனக் கட்டுரைத்தல். கழறல் என்பது கட்டுரை; இடித்துக் கூறல், உறுதிச்சொல். இவை ஒருபொருட் கிளவி.
சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ் வாணன்தென் மாறைவெற்பர்
துறந்தா ரெனையென்று சோருவ தேனிந்தத் தொல்லுலகில்
பிறந்தா ரெவர்க்கும் பிரிவெய்து மால்வெய்ய பேரமர்க்கண்
புறந்தாழ் கரிய குழற்செய்ய வாயைய பூங்கொடியே. (145)
(இ - ள்.) வெவ்விய பெரிய போர்செய்யுங் கண்ணும் புறப்பக்கத்தே தாழ்ந்த கரியகுழலும் சிவந்த வாயும் உடைய அழகாகிய பூங்கொடிபோல்வாய்! இந்தப் பழைய வுலகின்கட் பிறந்தார் யாவர்க்கும் பிரிவுவாராமற் போகாது, வந்தெய்தும்; சிறந்த முன்னோர் ஆய்ந்த செழுந்தமிழைக் கற்ற வாணனது தென்மாறைநாட்டுத் தலைவர் என்னை விட்டுத் துறந்தாரென்று நீ அயர்வது என், இனி அயர வேண்டா என்றவாறு.
சிறந்தார் - அகத்தியனார், தலைச்சங்கத்தார் முதலாயினோர். சோருதல் - அயர்தல். எண்ணும்மை தொக்குநின்றன. ஐய - அழகாகிய.
---------- (145. தலைவியைப் பாங்கி கழறல் - முற்றும்) ----------
146. தலைவி முன்னிலைப் புறமொழிமொழிதல் :
தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல் என்பது, பாங்கி முன்னிலையாய் நிற்கத் தலைவி அவள்மேல் வெறுப்பால் அவளை நோக்கிக் கூறாது புறமாய் மொழிதல்.
பூவலர் வாவியி னீரற்ற போதுற்ற புன்மையல்லால்
காவலர் காமந் துறக்கிலென் னாங்கடம் பாய்மதுகை
மாவல வாணன் வயற்றஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா
மேவலர் போலுங் கழற்றுரை யாளர் வியனறிவே. (147)
(இ - ள்.) தலைவர் ஆசையைத் துறக்கில் பூவலரும் வாவி நீரற்றபோதுற்ற இழிவுபோலு மல்லாமல் யாதாம்; இதனை யறியாது கட்டுரை சொல்வாரது விரிந்த அறிவு, மதம்பாயும் வலியையுடைய யானைத்தொழில் வல்ல வாணனாகிய வயல்சூழ்ந்த தஞ்சை வேந்தனை வாழ்த்தல் செய்யாத பகைவரறிவுபோலும் என்றவாறு.
எனவே, காலமிடனறியாது மதிகெட்டுக்கூறுவர் பகைவர், அவரறிவையொக்கும் கட்டுரைகூறுவா ரறிவு என்றவாறாயிற்று.
'பூவலர்வாவி' - வினைத்தொகை. புன்மை - இழிவு. கடம் - மதம். மதுகை - வலி. வியன் - விரிவு.
---------- (146. தலைவி முன்னிலைப் புறமொழிமொழிதல் - முற்றும்) ----------
147. தலைவி பாங்கியொடு பகர்தல் :
தலைவி பாங்கியொடு பகர்தல் என்பது, வெறுப்பால் முன்னிலைப் புறமொழி கேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலால் வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு பகர்தல்.
முலையார் முயக்கினு மல்லா விடத்தினு மூரிமுந்நீர்
அலையா ரமுதமு நஞ்சமும் போல அணங்கனையாய்
தொலையாத வின்பமுந் துன்பமுங் காட்டுவர் தூங்கருவி
மலையா சலத்தமிழ் தேர்வாணன் மாறைநம் மன்னவரே. (147)
(இ - ள்.) அணங்கனையாய்! ஒலிக்கும் அருவியை யுடைய பொதியமலையிற் பிறந்த தமிழை யாராய்ந்த வாணன் மாறைநாட்டு நம் மன்னவர், முலைபொருந்திய புணர்ச்சியினும் பிரிவினும், பெருமைபொருந்திய முந்நீராகிய கடலிடத்துப் பிறந்த அமுதும் நஞ்சும்போலத் தொலைவில்லாத இன்பமும் துன்பமும் காட்டுவாராதலால் இரண்டினும் [1]'அல்லராயிருந்தார் என்றவாறு.
ஆர்தல் - பொருந்துதல். அலையார் என்புழி, ஆர்தல் - தோன்றுதல். தூங்கருவி - ஒலிக்குமருவி . 'வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க.’ என்னுந் தொல்காப்பியச் சூத்திரவுரையாற் காண்க. மலையாசலம் - பொதியமலை. 'அமுதமும் நஞ்சமும் போல' என்பதனால், இன்பத்தினும் துன்பம் மிக்கு என்று கூறியவா றாயிற்று. என்னை,
[2]'இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது.'
என்பதனானுணர்க.
-----
[146-1] (வே.பா.) வல்லராயிருந்தார்.
[146-2] குறள். படர்மெலிந்திரங்கல் - (௬) 6.
----------
---------- (147. தலைவி பாங்கியொடு பகர்தல் - முற்றும்) ----------
148. தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல் :
தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல் என்பது, தலைவியைப் பாங்கி அச்சமுறுத்திக் கூறுதல்.
பேணற் கரியநின் பெண்மையு நாணமும் பேணியவர்
காணத் தகுமென்று காண்பதல் லாற்கழி காதனெஞ்சு
பூணத் தருகினும் பொற்பல்ல [1]ளாகுதல் கற்பல்லவால்
யாணர்த் தமிழுடை யான்வாணன் மாறையின் இன்னமுதே. (148)
(இ - ள்.) புதிதாய்ப் புலவர் பாடுந் தமிழையெல்லாங் கொள்ளுந் தன்மையையுடைய வாணன் மாறையின் இனிய அமுதம் போன்றவளே! மிகுந்த காதலை நெஞ்சு பூணத்தருகினும் விரும்பற்கரிதாகிய நின் பெண்மையும் நாணமும் விரும்பியவரே காணத்தகுமென்று கருதுவதல்லாமல், இவ்வாறு துன்பத்தாலழுங்கி அழகல்லளாகுதல் கற்பல்ல என்றவாறு.
பேணற்கரிய நின் பெண்மை - தவஞ்செய்து விரும்பினும் எய்தற்கரிய பெண்தன்மை. பேணி - விரும்பி. தேற்றேகாரம் விகாரத்தாற் றொக்கது. காண்பது - கருதுவது. பொற்பு - அழகு. யாணர் - புதுமை.
என்பதனால் யாது கூறியதெனின், துன்பமுறவே அத் துன்பத்தால் நலனழியும், நலனழியவே அன்னைக்கு ஐயந்தோன்றும், தோன்றவே இற்செறிப்பு வரும், வேற்றுவரைவு நேரினும் நேரும்; ஆதலான், கற்புக்கெடுமென்று அச்சமுறுத்திக் கூறியவாறாயிற்று.
-----
[147-1] (வே.பா.) (1) வாகுதல்.
----------
---------- (148. தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல் - முற்றும்) ----------
149. நீங்கற்கருமை தலைவி நினைந் திரங்கல் :
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கல் என்பது, தலைவன் விட்டு நீங்கற்கு அருமையைத் தலைவி நினைந்து தன்னுள் இரங்கிக் கூறல்.
குன்றா கியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து
சென்றார் முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பில்
நன்றா மிறைவற்கு நன்றியி [1]லேற்குமுன் நான்முகத்தோன்
ஒன்றா விதித்தில னேயுயிர் போல உடம்பையுமே. (149)
(இ - ள்.) நெஞ்சமே! பொன்னாகிய மலையையும் யானைத்திரளையும் கொடையைப் புகழ்ந்து சென்றோர்கள் பரிசிலாய்க் கொள்ளப்பட்ட செழுமையையுடைய தஞ்சைவாணனது தென்மாறைநாட்டு வெற்பிடத்து, நல்வினை செய்த இறைவற்கும், தீவினை செய்த எனக்கும், நான்முகத்தோன் முன் இருவரையும் படைக்குங் காலத்தில் உயிர்போல் உடம்பையும் ஒன்றாய் விதியாமற்போயினான்; இனிச் செய்யுமாறு என் என்றவாறு.
வேழக்குழாம் - யானைக்கூட்டம். முகத்தல் - கொள்ளுதல். நன்றி - நல்வினை. 'முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்' என்னும் பெயரெச்சம் வினைமுதலோடு முடியாது பிறவாற்றான் முடிந்தது.
-----
[149-1] (வே.பா.) வேற்குமந் நான் முகத்தோன்.
----------
---------- (149. நீங்கற்கருமை தலைவி நினைந் திரங்கல் - முற்றும்) ----------
150. தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல் :
நெஞ்சுக வாய்மல ரன்னகண் ணீர்மல்க நின்றவஞ்சொல்
கிஞ்சுக வாய்வஞ்சி கேட்டருள் நீயுங் கிளைத்தமிழோர்
தஞ்சுக வாய்மொழி நெஞ்சுடை யான்தஞ்சை வாணன்வெற்பில்
மஞ்சுக வார்த்தன வாலவர் தேரின் மணிக்குரலே. (150)
(இ - ள்.) நெஞ்சம் உதிரும்படி ஆய்ந்த மலர் போன்ற, கண்ணினிடத்து நீர் நிறைய நின்ற, அழகிய சொல்லையும் முருக்கம்பூப்போன்ற வாயையும் உடைய வஞ்சியே! கிளைத்தமிழையுடைய பெரியோர் தம் வாயுறை வாழ்த்தாகக் கூறிய மொழியை நெஞ்சிலே மறவாது வைத்திருக்குந் தன்மையனாகிய தஞ்சைவாணன் வெற்பில், அவரது தேரின் மணிக்குரல் முகிலுதிர வார்த்தன யான் கேட்டேன், நீயும் கேட்டருள்வாய் என்றவாறு.
நெஞ்சுக - நெஞ்சம் உதிர. ஆய்மலர் - மலருள் தெரிந்தெடுத்த மலர். கிஞ்சுகம் - முருக்கம்பூ; ஆகுபெயர். உம்மை - எச்ச வும்மை. கிளைத்தமிழ் - விரிந்ததமிழ். 'வாய்ச்சுகமொழி' என இயையும்; அது வாயுறை வாழ்த்து. மஞ்சுக - மஞ்சுதிர. ஆர்த்தன - ஒலித்தன. மணிக்குரல் - மணியோசைகள்.
இனித் தேரின் மணியோசை முகிலுதிர ஆரவாரத்துடன் வந்தானெனின், களவென்பதனோடு மாறுகொள்ளுமே யெனின், மாறுகொள்ளாது. என்னை, நால்வகைப் புணர்ச்சியினும் தலைவன் தேரோடும் சேனையோடும் வந்தானல்லது தமியனாய் வந்தானல்லன். எவ்வாறெனின், காட்சியிற் கூறியதானுணர்க; அன்றியும், பிரிவுழி மகிழ்ச்சியில், 'பாகனொடு சொல்லல்' என்பதனானும், பாங்கியிற் கூட்டத்தில், 'தலைவி பாங்கியை முனிதல்' என்னுங் கிளவிச் செய்யுளில் முன்னாள் பொற்றேரின் வந்து புணர்ந்து சென்றார் என்றுங் கூறினமையானும், மேல் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவோன் மீண்டு வருங்கால் பாகனொடு கூறலினுந் நேர்முந்த வேண்டுமென்று கூறுதலானும், வருந்தொறும் தேரொடுஞ் சேனையொடும் வந்து, குறியிடத்துத் தமியனாய் வருதல் என்று உணர்க.
---------- (150. தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல் - முற்றும்) ----------
151. தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் :
தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் என்பது, தலைவன் சிறைப்புறமாகக் குறியிடத்து வரத் தோழி தங்களுக்குள்ள செறிப்பை அறிவுறுத்துக் கூறுதல். சிறைப் புறம் - வேலிப் புறம்.
[1]'சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.'
என்பதனானுணர்க. செறிப்பு - கானவர் தினைகொய்யப் புனத்தின் இல் வந்திருத்தல்.
தொடைக்கணி யார்தடந் தோளவர் கேளலர் தோகையன்னார்
உடைக்கணி யாந்தழை கொய்யா ருழவ ருடைத்ததெண்ணீர்
மடைக்கணி யார மிடுந்தஞ்சை வாணன் வரையின்முன்போல்
கடைக்கணி யார்கணி யார்நம்மை நாளைக் கருங்கணியே. (151)
(இ - ள்.) கரிய கண்ணையுடையாய்! மாலைக்கு அழகார்ந்த பெரிய தோளினையுடையார் நமக்கு இனி யுறவல்லர்; மயில்போன்ற ஆயக்கூட்டத்தாரும் அரையில் உடுத்தற்கு அழகார்ந்த தழையை இனிக் கொய்யார்கள்; உழவருடைத்த தெண்ணீர் வயல்மடையை அணியப்பட்ட முத்தினாலடைக்குந் தஞ்சைவாணன் வரையிடத்து நாம் தழை கொய்ய [2]வந்தோம் என்று அச்சத்தானோக்கி நிற்கும் வேங்கையார் நாளை நம்மை முன்போற் கடைக்கண்ணாற் பாரார் என்றவாறு.
எனவே, குறவர் தினைகொய்ய வந்தனர், யாம் இன்று ஊர்க்கு ஆயக்கூட்டத்துடன் போவோம் என்று செறிப்பறிவுறுத்த வாறாயிற்று.
கேளலர் - உறவலர். உடைக்கு - உடுத்தற்கு. ஆரம் - முத்து. கடைக்கணியார் - கடைக்கண்ணாற் பாரார். சிறப்பும்மை தொக்கது. கணியார் - வேங்கையார்; உயர்சொற்கிளவி.
[3]'ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.'
என்னுஞ் சூத்திரவிதியானுணர்க. கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல்.
-----
[151-1] குறள். வாழ்க்கைத்துணைநலம் - (௭) 7.
[151-2] (வே.பா.) (1) வருவோம்.
[151-3] தொல். சொல். கிளவியாக்கம் - (௨௭) 27.
----------
---------- (151. தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் - முற்றும்) ----------
152. தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி மொழிந் தறிவுறுத்தல் :
தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தல் என்பது, தலைவன் முன்னிலையாய் நிற்பத், தோழி தலைமகனைக் காணாள்போலப் புறமொழியாய்ப் புட்களை நோக்கிக் கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல்.
பயில்காள பந்திப் புயலன்ன வோதியைப் பைங்கிள்ளைகாள்
மயில்காள் சிறிது மறக்கப் பெறீர்தஞ்சை வாணன்வெற்பில்
குயில்காள மெங்கு மியம்புதண் சோலையிற் கூடியின்பம்
அயில்காள வெங்கதிர் வேலன்பர் சால அயர்ப்பினுமே. (152)
(இ - ள்.) பைங்கிள்ளைகாள், மயில்காள், நெருங்கிய கரியபந்தியா யிருக்கின்ற புயல்போன்ற வோதியை யுடையாளைத், தஞ்சைவாணன் வெற்பில் குயில் காளம்போல் எங்கும் ஒலிக்குங் குளிர்ந்த சோலையிற்கூடி இன்பமருந்தும் விடம்போன்ற வெங்கதிர் வேலையுடைய அன்பர் மிகுதியும் மறந்தாலும், நீங்கள் சற்றும் மறக்குந் தன்மையைப் பெறீராக என்றவாறு.
எனவே, யாம் ஊர்க்குப் போகாநின்றோம் எனச் செறிப் புணர்த்தலாயிற்று.
பயிலுதல் - நெருங்குதல். காளம் - கருமை. பந்தி - நிரை. ஓதி - கூந்தல். காளம் - காகளம். இயம்பல் - ஒலித்தல். அயிலுதல் - அருந்துதல். காளம் - விடம். அயர்த்தல் - மறத்தல்.
---------- (152. தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி மொழிந் தறிவுறுத்தல் - முற்றும்) ----------
153. பாங்கி தலைமகன் முன்னின் றுணர்த்தல் :
கானலங் கான்மலர்க் கள்வாய்க் கருங்கணி கட்டுரையால்
கூனலஞ் சாய்பொற் குரலுங்கொய் தாரெமர் கொற்றவயாம்
ஏனலங் காவலு மின்றே யொழிந்தன மேழ்புவிக்கும்
தானலங் காரமன் னான்றஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே. (153)
(இ - ள்.) கொற்றவ! ஏழுலகுக்கும் கீர்த்தியால் அலங்காரம் போன்றவனாகிய தஞ்சைவாணன் வெற்பிடத்துச் சோலையில் அழகிய மணத்தோடுங் கூடிய மலரிலிருக்குங் கள்ளைத் தன்னிடத்திலே யுடைய பெரிய வேங்கை மரத்தினுடைய கட்டுரையால், எமர், தலைவளைந்து சாய்ந்த பொன்னிறமாகிய தினைக்கதிரைக் கொய்கின்றா ராதலால், தினைப்புனங் காவலும் இன்று ஒழிந்தனம் என்றவாறு.
கானல் - சோலை. கான் - மணம். கணி - வேங்கை. கட்டுரை - உறுதிச்சொல்.
வேங்கை பூக்குங்காலம் தினைக்கதிர் கொய்யுங் காலமாதலால், வேங்கை கட்டுரையால் தினைக்கதிர் கொய்கின்றார் என்று கூறியது.
[1]‘வாராக் காலத்து நிகழுங் காலத்தும்.’
என்னுஞ் சூத்திரவிதியால் கொய்கின்றார் என்னும் நிகழ்காலச் சொல்லைக், 'கொய்தார்' என விரைவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினாரென வுணர்க. முன், 'இறைவனைக் குறிவரல் விலக்கல்' செய்யுளில் [2]'புனமும் பசுந்தினைச் செங்குர லேந்தும்' என்று கூறியவதனானும், 'கொய்கின்றார்' என்றே கொள்க.
கூனல் - தலைவளைதல். குரல் - கதிர். ஏனல் - தினை. 'சோலையில் அழகிய மணத்தோடுங் கூடிய மலரிலிருக்குங் கள் வாயினிடத்து நாறுங் கரிய நிறத்தையுடைய கணிக்காரிகை கட்டுரையால்' எனினும் அமையும், கணிக்காரிகையைக் கேட்டுத் தினை கொய்தல் அவர்க் கியல்பாதலின்.
-----
[153-1] தொல். சொல். வினையியல் - (௪௪) 44.
[153-2] தஞ்சைவா. – (௧௫௬) 156.
----------
---------- (153. பாங்கி தலைமகன் முன்னின் றுணர்த்தல் - முற்றும்) ----------
154. பாங்கி முன்னின் றுணர்த்தி யோம்படைசாற்றல் :
பாங்கி முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் என்பது, அவ்வாறு முன்னின்று உணர்த்திய பாங்கி எம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல்.
கனஞ்சாய நல்கிய கையுடை யானெதிர் கன்றினர்தம்
மனஞ்சாய வென்றருள் வாணன் வரோதயன் மாறைவெற்பில்
சினஞ்சாலும் வேலண்ண லேமறவே லெம்மைச் செவ்வியிரு
தனஞ்சா யினுமினி நின்னையல் லாதில்லைத் தாழ்குழற்கே. (154)
(இ - ள்.) கொடையில் மேகஞ்சாயக் கொடுக்கப்பட்ட கையையுடையவன் வீரத்தா லெதிராகிச் சினந்தவர் மனஞ்சாய வென்றருளிய வரோதயனாகிய வாணனது மாறை வெற்பில் கோபமமையும் வேலையுடைய தலைவனே! அழகையுடைய இரு தனம் சாயினும் இனித் தாழ்ந்த குழலையுடையாட்குப் பற்றுக்கோடு நின்னையல்ல தில்லை யாதலால், எங்களை மறவேல் என்றவாறு.
கனம் - மேகம். சாய்தல் - நிலைதளர்தல். நல்கல் - கொடுத்தல். மனஞ்சாய - செவ்விதி னில்லாது வளைய. சினஞ்சாலும் - சினம் நிறையும். செவ்வி - அழகு. தனஞ்சாய்தல் - முலைசரிதல். 'தனஞ் சாயினும்' என்று இங்ஙனங் கூறுதல், எடுத்துக்கோடற்கண்ணே எஞ்ஞான்றும் ஒருதன்மையர் என்று கூறியதனோடு மாறுகொள்ளும் எனின், மாறுகொள்ளாது. என்னை,
[1]'நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்.'
என்னுஞ் சூத்திர விதியால், ஆண்டுக்கூறியது நாடக வழக்கு; ஈண்டுக் கூறியது உலகியல் வழக்கென்றுணர்க. பற்றுக்கோடு அவாய் நிலையான் வந்தது.
-----
[154-1] தொல். பொருள். அகத்திணையியல் - (௫௩) 53.
----------
---------- (154. பாங்கி முன்னின் றுணர்த்தி யோம்படைசாற்றல் - முற்றும்) ----------
155. கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல் :
கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல் என்பது, இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கோடுபெறாது நெஞ்சொடு கூறல்.
ஏவல ரேய்விழி மாந்தளிர் மேனிய ரேனலினிக்
காவல ரேமனங் காத்தனம் யாங்களி யானைசெம்பொன்
நாவல ரேபெற நல்குங்கை மேக நறுங்குவளை
மாவல ரேய்தொடை யான்றஞ்சை வாணன் வரையில்வந்தே. (155)
(இ - ள்.) மனமே! ஏவும் மலரும் போன்ற விழியினையும் மாந்தளிர்போன்ற மேனியையும் உடைய அவர் இனித் தினைப்புனங் காப்பாரல்லர்; களித்தயானையும் செம்பொன்னும் நாவலர்பெறக் கொடுக்குங் கையையுடைய மேகம்போன்ற நறுங் குவளையினது கரிய மலர் பொதிந்த மாலை யணிந்தவனாகிய தஞ்சைவாணன் வரையிடத்து வந்து நாம் வீணே காத்தனம் என்றவாறு.
ஏ - அம்பு. ஏவலர் - எண்ணும்மை தொக்கு நின்றது. ஏய்தல் - ஒப்பு. 'மாந்தளிர் மேனியர்' - உவமைத்தொகை. ஏனல் - தினை. இனி - இனிமேல். காவலர் - காப்பாரல்லர். 'யானைசெம் பொன்' - எண்ணும்மைத் தொகை. மாவலர் - கரியமலர். ஏய்தல் - பொதிதல். மனம் - அண்மைவிளி.
---------- (155. கிழவோன் தஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல் - முற்றும்) ----------
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண் டிரங்கலும், பாங்கி புலம்புதலும், தலைவனீடத் தலைவி வருந்தலும், முன்னிலைப் புறமொழி மொழிதலும், பாங்கியொடு பகர்தலும், நீங்கற் கருமை தலைவி நினைந்திரங்கலும், கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும் ஆகிய ஏழும் இரங்கற்குரிய.
தலைவியைப் பாங்கி கழறலும், தலைவியைப் பாங்கி அச்சுறுத்தலும், தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும் ஆகிய மூன்றும் வன்புறைக்குரிய.
'சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தல்' முதல் நான்கு கிளவியும் இற்செறிப்பு உணர்த்தற்கு உரியவாறு காண்க.
1.11. ஒருசார் பகற்குறி முற்றிற்று.
-------------------------
1.12. பகற்குறி இடையீடு (156-162)
அஃதாவது, பகற்குறிக்கண் வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடுபட்டுப் போதல்.
[1]'விலக்கல் சேறல் கலக்க மென்றாங்
கிகப்பின்மூ வகைத்தே பகற்குறி இடையீடு.'
என்னுஞ் சூத்திரவிதியாற் பகற்குறி யிடையீடு மூவகைப்படும்.
-----
[1.12-1] அகப்பொருள்விளக்கம், களவியல் - (௩௮) 38.
----------
156. இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் :
புனமும் பசுந்தினைச் செங்குர லேந்தும் புகன்றகிள்ளை
இனமுங் குழீஇவந் திறைகொள்ளு மாலிறை யார்வளையும்
மனமுங் கவர்வெற்ப வாணன்தென் மாறை மடப்பிடியும்
அனமுந் தொழுநடை பாற்பல கால்வரு மன்னையுமே. (156)
(இ - ள்.) தலைவி கையின்கண் நிறைந்த வளையும் அவள் மனமும் இரண்டையுங் கவர்ந்து கொள்ளும் வெற்பனே! இப்புனமும் பசிய தினையினது முற்றிச் சிவந்த கதிரை யேந்திநிற்கும்; இவள் சொல்லைப்போற் சொல்லப்பட்ட கிளியினமும் கூடிவந்து தங்கும்; வாணன் தென்மாறை நாட்டு மடப்பத்தோடுகூடிய பிடியும் அன்னமும் தொழும் நடையினை யுடையாள் பக்கல் அன்னையும் பல்கால் வரும் என்றவாறு.
எனவே, தலைவியும் புனம்விட்டு நீங்கத்தகாதாளல்லள், நீயும் இங்கு வாரற்க எனக் குறிப்பாற் பெறப்பட்டது.
குரல் - கதிர்; குழீஇ வருதல் - பலபல தொகுதியாய்க் கூடி வருதல். இறைகொள்ளுதல் - தங்குதல். இறை - ஆகுபெயர். தொழுநடை - ஆகுபெயர். கவர்தல் - கொள்ளுதல்.
---------- (156. இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் - முற்றும்) ----------
157. இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல் :
நந்துசுற் றுங்கடல் ஞாலமெல் லாம்புகழ் நாமன்வளர்
சந்துசுற் றுங்கொங்கை மங்கையர் வேள்சஞ் சரீகநறை
வந்துசுற் றுந்தொங்கல் வாணன்தென் மாறை வரையின்மலர்க்
கொந்துசுற் றுங்குழ லாய்செல்லல் நீயக் குளிர்பொழிற்கே. (157)
(இ - ள்.) சங்கு சுற்றுங் கடல்சூழ்ந்த வுலகமெல்லாம் புகழப்பட்ட பெயரைப் படைத்து நாட்கு நாள் வளருந் தகைமையையுடைய சந்தனந்திமிருங் கொங்கையை யுடைய மங்கையர்க்கு வேளையொத்த சஞ்சரீகம் மணத்தால் வந்து சுற்றுந் தொங்கலையணிந்த வாணன் தென்மாறை வரையிடத்துள்ள மலர்க்கொத்துச் சுற்றிய குழலாய், குளிர்ந்த பொழிலிடத்து நீ செல்லற்க என்றவாறு.
நந்து - சங்கம். நாமம் - பெயர். சந்து - சந்தனம். சுற்றல் - திமிர்தல். சஞ்சரீகம் - வண்டு. நறை - மணம். கொந்து - கொத்து; மெலிந்து நின்றது. 'நாமன் வேள்' என்னும் வினைக்குறிப்புமுற்று எச்சமாய்த்திரிந்து நின்றது.
---------- (157. இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல் - முற்றும்) ----------
158. இறைமகளாடிடம் நோக்கி யழுங்கல் :
அருவித் தடமு மணிமுத்த யாறு மவனியெங்கும்
திருவித் தியதஞ்சை வாணன் சிலம்புமிச் சிற்றிலும்பேர்
இருவிப் புனமுமின் றென்னினைக் கின்றன வென்னையின்னே
மருவிப் பிரிபவர் போலில்லை யேமண்ணில் வன்கண்ணரே. (158)
(இ - ள்.) சிற்றருவி வந்து விழும் பொய்கையும், ஒழுங்காய முத்துக்களைக் கொழித்துவரும் பேரருவி யாறும், புவியெங்குஞ் செல்வத்தையே வேளாண்மையாய் விதைக்கப்பட்ட வாணனது சிலம்பும், இச்சிற்றில்லமும், பெரிய தாளையுடைய தினைப்புனமும், இன்று என்னை யென்னாக நினைக்கின்றனவோ, இப்போது பலநாளும் மருவிப் பிரிபவர்போல் உலகின் வன்கண்ணர் இல்லை என்றவாறு.
உம்மை - எண்ணும்மை. தடம் - பொய்கை. இருவி - தினைத் தாள். இன்னே - இப்போது. வன்கண்ணர் - கொடியர். அழுங்கல் - தன்னுள் இரங்கல்.
---------- (158. இறைமகளாடிடம் நோக்கி யழுங்கல் - முற்றும்) ----------
159. பாங்கி ஆடிடம்விடுத்துக் கொண் டகறல் :
பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்டகறல் என்பது, பாங்கி விளையாடுமிடம் விட்டு நீங்கித் தலைவியைக்கொண்டு தம்மூர்க்குப் போதல்.
உன்னைய ராவல்கு னல்லவ ரேயென் றுசாவினெங்கள்
மன்னைய ராமல் வகுத்துரை நீதஞ்சை வாணன்வெற்பின்
என்னைய ராணைகொண் டேகுகின் றேனிவை யித்தனையும்
பின்னைய ராதொழி வாயித ணேயிது பெற்றனமே. (159)
(இ - ள்.) பரணே! நீயும் யானும் இந்தப் பிரிவைப் பெற்றனமே, உன்னை யெங்கள் மன்னாகிய தலைவர் வந்து அரா வல்குல் நல்லவர் எங்கே யென்று உசாவில், அயர்ச்சி யடையாமல் நீ வகுத்துச் சொல்வாய்; தஞ்சைவாணன் வெற்பில் என்னையர் ஏவலால் தலைவியைக்கொண்டு ஊர்க் கேகுகின்றனன்; ஆடிடம் நோக்கி யழுங்கியதும், ஆடிடம் விடுத்துக்கொண் டகறலும், உன்னுடன் சொல்கின்ற சொற்களுமாகிய இவை இத்தனையும் பின் மறவாதொழிவாயாக என்றவாறு.
'நல்லவர்' என்புழி, 'எங்கே' என வருவித்து உரைக்க. 'அரா வல்குல்' உவமைத்தொகை. ஓகாரம் - அசைநிலை. உசாதல் - வினாதல். அயர்ச்சி - தளர்ச்சி. என்னையர் - ஈன்றோர். ஆணை - ஏவல். அயர்தல் - மறத்தல். இதண் - பரண்.
---------- (159. பாங்கி ஆடிடம்விடுத்துக் கொண் டகறல் - முற்றும்) ----------
இத்துணையும் ஆறாநாட் செய்தியென்றுணர்க.
--------------------
160. பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்றிரங்கல் :
பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கல் என்பது, ஏழாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப்பந்தரிடத்து வந்து நீட்டித்து நினைந்திரங்கல்.
மான்காள் நிகரில் மடமயில் காள்தஞ்சை வாணன்வெற்பில்
தேன்காள் நிரைமென் சிறைக்கிள்ளை காளென் தெருமரல்நோய்
தான்கா ணியகொலிச் சந்தனச் சோலையைத் தன்னையின்றி
யான்கா ணியகொல் எழுந்தரு ளாததின் றென்னுயிரே. (160)
(இ - ள்.) மான்காள்! உவமையில்லாத மடப்பத்தை யுடைய மயில்காள்! தஞ்சைவாணன் வெற்பிடத்திருக்கின்ற வண்டுகாள்! ஒழுங்காய் வருகின்ற மெல்லிய சிறகையுடைய கிளிகாள்! இன்று என்னுடைய சுழலும் வேட்கைநோயைத் தானறியவோ, இச்சந்தனச்சோலையிற் கரந்திருக்கின்ற தன்னை இன்று யான் தேடிக்காணவோ, என்னுயிர்போல்வாள் எழுந்தருளாதது என்றவாறு.
தெருமரல் - சுழற்சி. 'சோலையை' என்புழி வேற்றுமை மயக்கம். உயிர் - ஆகுபெயர்.
---------- (160. பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்றிரங்கல் - முற்றும்) ----------
161. தலைவன் வறுங்களநாடி மறுகல் :
தலைவன் வறுங்களநாடி மறுகல் என்பது, தலைவி யில்லாத தினைப்புனத்தை நோக்கி வருந்துதல்.
செங்கேழ் விழிக்கு மொழிக்கும் பகைதிருப் பாற்கடலும்
பங்கே ருகமும் பயந்தன வாயினும் பைங்கிள்ளைகாள்
சங்கேய் தடந்துறை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
எங்கே யினித்தங்கு வாரேனல் காத்திங் கிருந்தவரே. (161)
(இ - ள்.) பைங்கிள்ளைகாள்! செவ்வரி பொருந்திய விழிக்கும் மொழிக்கும் தாமரையும் திருப்பாற்கடலும் மாதரைப் பெற்றனவாயினும் பகையாயின வாதலால், தினைப்புனங் காத்திருந்தவர் சங்குபொருந்திய பெரிய வைகைத்துறை சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல் இன்று எங்கே தங்குவார் என்றவாறு.
இது மொழிமாற்று நிரனிறை.
'ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு மூரகமும் பஞ்சரமாய் — நீடியமால்
நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு.’
என்றாற்போல, நிரனிறை மொழிமாறி நின்றது.
கேழ் - நிறம். பங்கேருகம் - தாமரை. இடமாயினதன்றி பயந்ததின்றே யெனின், சீதை இலங்கையில் பொய்கைத் தாமரையிற் பிறந்தாளென்பது இராமர் கதையிற் கண்டுகொள்க. துறை - வைகைத்துறை. தரியலர் - பகைவர். ஏனல் - தினை. 'கோடாப் புகழ்மாறன்' என்னுஞ் செய்யுளும், 'வறுங்களநாடி மறுகல்' என்றே கொள்க.
---------- (161. தலைவன் வறுங்கள நாடி மறுகல் - முற்றும்) ----------
162. குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல் :
குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் என்பது, தலைவியின் ஊர் தேடிச் சேறுமெனில், அறிந்திலம் என்று மதி மயங்கிக் கூறல்.
பெறவரி தாலவள் பின்சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு
மறவரி தானன்ன வாணன்தென் மாறை வரைப்புனஞ்சூழ்
நறவரி தாழ்முல்லை நாண்மல ரோதி நகருமெனக்
குறவரி தாமென்செய் வேனென்று சோருமென் னோருயிரே. (162)
(இ - ள்.) அவளைப் பெறுதல் அரிதாயதுமன்றி அவள் பின்னே தொடர்ந்துசென்ற நெஞ்சமும் மீட்டு நாம் பெறவேண்டுமெனிற் பெறுதற்கு அரிதாயது; பகைவர்க்கு வீரம் பொருந்திய சிங்கத்தையொத்த வாணன் தென்மாறை வரைப்புனஞ் சூழ்ந்த கள்ளால் வண்டு தாழப்பட்ட முல்லை நாண்மலரை யணிந்த குழலையுடையாளது நகரும் எனக்கு உறுதற்கரிதாதலான், என்செய்வேன் என்று என்னொப்பற்ற உயிர் சோராநிற்கும் என்றவாறு.
எனவே, இதற்குச் செய்யுமா றறிந்திலேனென மதிமயங்கிக் கூறியவாறாயிற்று.
மதி - அறிவு. ஆல் - அசை. பேணலர் - பகைவர். மறவரி - வீரச்சிங்கம். 'சூழ்ந்த' என்னும் பெயரெச்சம் 'நகர்' என்னும் பெயர்கொண்டு முடிந்தது. நெஞ்சமும் என்னும் உம்மை எச்சவும்மை. நறவு - கள்ளு. அரி - வண்டு. 'தாழ்முல்லை' - வினைத் தொகை. ‘நாள்மலரோதி' - ஆகுபெயர். முன்னர், 'இடமணித் தென்றல்' என்னுஞ் செய்யுளில் தன்னூரும் அவளூரும் ஓரெல்லை யென்று கூறினவன், இங்ஙனம் ஊரறியேன் என்று கூறியது முன்கூறியதனோடு மாறுகொள்ளுமெனின், மதிமயங்கிக் கூறலான் மாறுகொள்ளாதென்று உணர்க.
---------- (162. குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல் - முற்றும்) ----------
இவற்றுள் முன்னைய இரண்டும் விலக்கற்குரியன.
'பாங்கி யாடிடம் விடுத்துக்கொண் டகறல்' ஒன்றும் சேரற்குரித்து.
ஏனைய நான்கும் கலக்கத்திற்குரியன.
1.12. பகற்குறி இடையீடு முற்றிற்று.
-------------------------
1.13. இரவுக்குறி (163-189)
அஃதாவது, தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல்.
[1]'வேண்டல் மறுத்த லுடன்படல் கூட்டம்
கூடல்பா ராட்டல் பாங்கிற் கூட்டல்
உயங்கல் நீங்கலென் றொன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக்குறி தானே.'
என்னுஞ் சூத்திரவிதியான் இரவுக்குறி ஒன்பது வகைப்படும்.
-----
[1.13-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௪0) 40.
----------
163. இறையோன் இருட்குறி வேண்டல் :
இறையோன் இருட்குறி வேண்டல் என்பது, தலைவன் இருட் குறியை விரும்பிப் பாங்கியுடன் கூறல்.
கருவிருந் தெண்டிசை யுங்கன மாமழை கான்றதுள்ளம்
வெருவிருந் தெம்பதிக் கேகவொண் ணாது விதம்விதமாய்
வருவிருந் தென்றும் புரந்தருள் வாணன்தென் மாறையன்னீர்
ஒருவிருந் தெங்களைப் போலெய்து மோகங்குல் உங்களுக்கே. (163)
(இ - ள்.) வகைவகையாய் வரும் விருந்தை எஞ்ஞான்றும் ஓம்பும் வாணன் தென்மாறை நாடுபோல்வீர், சூல்கொண்டு முகில் எண்டிசையும் பெரிய மழையைப் பெய்தது; ஆதலால், உள்ளத்தினிடையே அச்சமிருந்தால் எம் பதிக்குச் செல்லுதல்கூடாது, இற்றைக்கு வைகுதல் வேண்டும்; எங்களைப்போல் ஒப்பற்ற விருந்து இந்தக் கங்குலின்கண் உங்களுக்கு நீர் வருந்தித் தேடுகினும் கிடைக்குமோ, சொல்லுவீராக என்றவாறு.
கரு - சூல். கனம் - முகில். கான்றல் - பெய்தல். வெருவு - அச்சம். ஏக - போக. ஒண்ணாது - கூடாது. விருந்து புரத்தல் - விருந்தோம்பல். அன்னீர் - உயர்சொற்கிளவி.
---------- (163. இறையோன் இருட்குறி வேண்டல் - முற்றும்) ----------
164. பாங்கி நெறியின தருமைகூறல் :
மலைமாது வல்லவன் வாணன் வரோதயன் மாறைவெற்பில்
சிலைமா லுருமெங்குந் தீயுமி ழாநிற்குஞ் சிங்கமெங்கும்
கொலைமா கரியிரை தேர்ந்துழ லாநிற்குங் கொற்றவபொற்
கலைமா னுறைபதி நீவரு மாறென்கொல் கங்குலிலே. (164)
(இ - ள்.) வீரமகட்குக் கணவனாகிய வாணனென்னும் வரோதயன் வெற்பிடத்திற் கொற்றவனே! மேகலை பொருந்திய மான் உறைகின்ற பதிக்கு நீ வருகின்றவழி வில்லொடுகூடிய மேகத்திடத்து இடிகளெங்குந் தீயைக் கக்காநிற்கும்; சிங்கங்கள் எவ்விடத்துங் கொல்லுந்தொழிலை யுடைய கரிகளை யிரையாகத் தேடி வருந்தித் திரியாநிற்கும்; கங்குற்பொழுதில் நீ வந்தது எப்படியோ என்றவாறு.
எனவே, நீ வருதல் தகுதியன்றென்று கூறியவாறாயிற்று.
மலைமாது - வீரமகள்; மலைதல் - பொருதல். சிலை - வில். மால் - மேகம். உரும் - இடி. உமிழ்தல் - கக்கல். தேர்தல் - ஆராய்தல். உழலல் - வருந்தித் திரிதல். பொற்கலை மான் - மேகலை யுடைய தலைவி.
---------- (164. பாங்கி நெறியின தருமைகூறல் - முற்றும்) ----------
165. இறையோன் நெறியின தெளிமைகூறல் :
வடுவரி நீள்கண்ணி அஞ்சலம் யாந்தஞ்சை வாணன்வெற்பில்
கொடுவரி கேழற் குழாம்பொரு கொல்லையுங் குஞ்சரந்தேர்ந்
தடுவரி தாவும் அடுக்கமுஞ் சூர்வழங் காறுமைவாய்க்
[1]கடுவரி நாகந் தவர்மல்கு கல்லளைக் கானமுமே. (165)
(இ - ள்.) வடுப்போன்று வரியோடுகூடிய நீண்ட கண்ணையுடையாய்! தஞ்சைவாணன் வெற்பிடத்துப் புலிக் குழாமும் பன்றிக்குழாமும் ஒன்றோடொன்று பொரப்பட்ட கொல்லைக்காடும், குஞ்சரத்தைத் தேடிக் கொல்லும் சிங்கம் தாவப்பட்ட மலைப்பக்கமும், அச்சத்தைக் கொடுக்குஞ் சூரரமகளென்னுந் தெய்வப்பெண் இயங்கும் வழியும், ஐந்து வாயும் விடமும் வரியுமுடைய நாகங்கள் தவர்ந்து செல்லும் நெருங்குகற்களின் வளைகளையுடைய காடும் யாம் அஞ்சலம் என்றவாறு.
வடு - மாவடு. வரி - செவ்வரி. கொடுவரி - புலி. கேழல் - பன்றி. தேர்தல் - ஆராய்தல். அடுக்கம் - மலைப்பக்கம். சூர் - சூரரமகள். ஆறு - வழி. வழங்கல் - இயங்கல். தவர் - தவர்தல். கல்லளை - கல்வளை. அடுதல் - கொல்லுதல். அரி - சிங்கம். அடு, முற்றியலுகர மாதலான் வகர வுடம்படுமெய் பெற்றது. தாவுதல் - பாய்தல்.
-----
[165-1] (வே.பா.) (1) கடுவரி நாகக் குழாமல்கு.
----------
---------- (165. இறையோன் நெறியின தெளிமைகூறல் - முற்றும்) ----------
166. பாங்கி யவனாட் டணியியல் வினாதல் :
பாங்கி அவன்நாட்டு அணி இயல் வினாதல் என்பது, பாங்கி தலைவன் நாட்டுப் பெண்களணியும் அணியையும் இயலையும் வினாதல். இயல் - புனைதல், முடித்தல், விளையாடிடம் முதலியன.
எனவே, தலைவன் நெறியினது எளிமை கூறியவழி நன்றென்று கூட்டற்கு உடம்பட்டுக் கூறாது, அணியியல் வினாதல் வினாவழுவெனின், அன்று. தலைவனை அவனாட்டணியியல் வினாவுழித் தலைவன் தன்னாட்டணியியல் வினாவும், வினாவுழி அணியியல் கூறும்வழி அதுவே குறியிடமாகக் கூறலாம் என்று கருதிப் பாங்கி வினாவியவாறென்று உணர்க.
பூந்தழை யாது மலைமலர் யாது புனையிழையும்
சாந்தமும் யாது தடம்பொழில் யாது தரணியின்மேல்
மாந்தரில் வேளன்ன வாணன்தென் மாறை வளநகர்சூழ்
தேந்தரு சோலைவெற் பாவுங்கள் நாட்டுறை செல்வியர்க்கே. (166)
(இ - ள்.) புவியின் மேல் மாந்தருக்குள் வேளையொத்த வாணன் தென்மாறை வளநகர்சூழ் தேனைத் தரும் மலரை யுடைய சோலைவெற்பனே! உங்கள் நாட்டுறையும் செல்வியர்க்கு இடையிலுடுக்கும் பூந்தழை யாது? சூடும் மலர் யாது? அணியும் அணியொடு பூசுஞ் சந்தனமும் யாது? விளையாடும் பெரிய பொழில் யாது? சொல்வாயாக என்றவாறு.
மலைதல் - சூடுதல். புனைதல் - அணிதல். இழை - அணி. உம்மை இரண்டும் அசைநிலை; எண்ணும்மை யாகாதோவெனின், ஆகின் பன்மை வாசகங்கொண்டு முடியுமாதலான், எண்ணும்மை யாகாது; ஆதலால் மூன்றனுருபு வருவித்துரைக்கப்பட்டது. தடம் பொழில் - பெரியபொழில். தேம் - தேன்.
---------- (166. பாங்கி யவனாட் டணியியல் வினாதல் - முற்றும்) ----------
167. தலைவ னவணாட் டணியியல் வினாதல் :
தலைவன் அவள் நாட்டு அணி இயல் வினாதல் என்பது, பாங்கிகுறிப்பு அறிந்து அவள் நாட்டு அணி இயலைத் தலைவன் வினாதல்.
எந்நாட் டவரணி கூறியென் பேறிங் கிகல்வடிவேல்
மைந்நாட்ட வெண்முத்த வாணகை யாய்தஞ்சை வாணன்மண்மேல்
உந்நாட் டரிவைய ராடிடஞ் சாந்த மொளியிழைபூ
மொய்ந்நாட் டழையொடெல் லாமொழி யாமல் மொழியெனக்கே. (167)
(இ - ள்.) போர்செய்யுங் கூரிய வேல்போன்ற மையெழுதிய நாட்டத்தையும், வெண்முத்துப்போன்ற வொளி நகையையும் உடையாய்! எங்கள் நாட்டவர் அணியும் அணி முதலிய கூறிப் பெறுவதியாது, தஞ்சைவாணன் மண்மேல் இவ்விடத்து உங்கள் நாட்டு அரிவையர் ஆடிடமும், பூசுஞ்சாந்தும், அணியும் ஒளிப்பூணும், முடிக்கும் பூவும், மொய்த்த நாட்டழையோடு எல்லாம் விடாமல் எனக்கு மொழிவாயாக என்றவாறு.
இங்கு - இவ்விடம். இகல் - போர். நாட்டம் - கண். வாள் - ஒளி. 'வடிவேல் நாட்டம்,' 'வெண்முத்தநகை' இரண்டும் உவமைத்தொகை. மொய்த்தல் - செறிதல்.
---------- (167. தலைவ னவணாட் டணியியல் வினாதல் - முற்றும்) ----------
168. தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல் :
வகைகொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின்முத்தம்
தகைகொண்ட சந்தனச் சாந்தணிந் தாடுவர் தஞ்சையர்கோன்
மிகைகொண்ட தெவ்வரை வெந்கண்ட வாணன்வெற் பாவெமதூர்
நகைகொண்ட வல்லியன் னாரெல்லி நாக நறுநிழலே. (168)
(இ - ள்.) குற்றங்கண்ட தெவ்வரைப் புறங்கண்ட தஞ்சையர் கோனாகிய வாணன் வெற்பனே! எமது ஊரிடத்து மகிழ்ச்சிகொண்ட வல்லிபோல்வார், வகைகொண்ட மாந்தழை, காந்தளம் போது, யானைக்கோட்டு முத்தம், அழகுகொண்ட சந்தனச்சாந்து இவையணிந்து கங்குற் காலத்துப் புன்னாகத்தின் நறிய நிழலில் விளையாடுபவர் என்றவாறு.
எனவே, குறியிடங் கூறியவாறாயிற்று. இரவுக்குறியிடம் மனையைச் சுற்றி வளைந்த மதிலகத்தென்று உணர்க.
'மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட தஞ்சையர் கோனாகிய வாணன்’ என முடிக்க. 'நிழலிலாடுவர்' என இயையும். 'வகைகொண்ட' என்பதனைப் 'பொது' முதலியவற்றிற்குங் கூட்டுக.
வகை கொள்ளலாவது : தழைவகையிற் கொண்ட மாந்தழையும், போதுவகையிற் கொண்ட காந்தட் போதும், முத்தவகையிற் கொண்ட யானைக்கோட்டு முத்தமும், சந்தனவகையிற் கொண்ட தகைகொண்ட சந்தனமும் என்று உணர்க.
தகை - அழகு. மிகை - குற்றம். வெந் - புறம். நகை - மகிழ்ச்சி. எல்லி - இரா. உடுப்பதற்கும், சூடுவதற்கும், பூண்பதற்கும், 'அணிந்து' என்னுஞ் சொல் பொதுவாகலான் அச்சொற்கொண்டு ஒரு முடிபாக்கிக் கூறியவாறு உணர்க.
---------- (168. தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல் - முற்றும்) ----------
169. இறைவிக் கிறையோன்குறை யறிவுறுத்தல் :
இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல் என்பது, பாங்கி தலைவனை ஓரிடத்து நிறுவி தலைவிபக்கற் சென்று தலைமகன் குறையை யறிவித்தல்.
புயலே றதிர்தொறும் பொங்குளை மீதெழப் போதகந்தேர்ந்
தியலே றதிரு மிருங்கங்குல் வாய்முத்த மீன்றுசங்கம்
வயலே றணைவள ருந்தஞ்சை வாணன் வரையிலுண்கண்
கயலே றனையநின் பால்வரல் வேண்டினர் காதலரே. (169)
(இ - ள்.) இடி யதிருந்தொறும் மிகுந்த மயிரைச் சிலிர்த்து யானையைத்தேடி யியங்குஞ் சிங்கவேறு வாய்விடும் பெரிய கங்குலிடத்துச் சங்கம் முத்தங்களையீன்று வயலினுயர்ந்த வரம்பிலே துயிலுந் தஞ்சைவாணன் வரையிடத்துக் கயலேறுபோன்ற மையுண்ட கண்ணையுடைய நின்பக்கல் வரத் தலைவர் விரும்பினர் என்றவாறு.
புயலேறு - இடி. பொங்குதல் - மிகுதல். உளை - மயிர். மீதெழல் - மேலே சிலிர்த்தல். போதகம் - யானை. தேர்தல் - தேடுதல். இயலல் - இயங்குதல். ஏறு - சிங்கவேறு. 'இடித்தவுடன் மயிர்சிலிர்த்துச் சிங்கம் யானையைத் தேடும்' என்றது, இடியென் றறியாது களிறு பிளிறியதென்று கருதித் தேடியவாறென்று உணர்க. ‘சங்க முத்த மீன்று' எனவும், 'கயலே றனைய வுண்கண்' எனவும் மாறுக. கயலேறு - மீன்களிற் சிறந்தது. தலைவி - முன்னிலையெச்சம்.
---------- (169. இறைவிக் கிறையோன்குறை யறிவுறுத்தல் - முற்றும்) ----------
170. நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல் :
நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தல் என்றது, இவ்வாறு கூறக்கேட்ட தலைவி இயையாது தன் நெஞ்சொடு கூறுதல்.
விடவார் கணைவிழி மெல்லியல் மாதரை மேதினியோர்
மடவா ரெனுமுரை வாய்மைநெஞ் சேதஞ்சை வாணன்தெவ்விற்
கடவா ரணந்திரி கங்குனங் கண்ணன்ன காதலர்முட்
பிடவார் சிறுநெறி வாய்வரல் வேண்டினள் பெண்ணணங்கே. (170)
(இ - ள்.) நெஞ்சே! தஞ்சைவாணன் பகைவரைப் போல் மதம்பொழியும் யானைதிரியுங் கங்குலில் முட்பிட வார்ந்த சிறுநெறியிடத்து நம் கண்போற்சிறந்த காதலர் வர அணங்குபோலும் பெண் விரும்பின ளாதலான், விடம் பொருந்திய நெடிய கணைபோலும் விழியையும் மெல்லிய இயலினையும் உடைய மாதரை உலகினுள்ளோர் மடவார் என்று கூறும் உரை வாய்மைதானே என்றவாறு.
'கணைவிழி' - உவமைத்தொகை. மடவார் - அறிவிலார். வாய்மை - உண்மை. கடவாரணம் - மதவாரணம். பிடவு - ஓர் மரம். சிறுநெறி - அருநெறி. 'பெண்ணணங்கு' - பின்மொழி நிலையல்.
---------- (170. நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல் - முற்றும்) ----------
171. நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல் :
நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தல் என்பது, நெஞ்சொடு கூறிய தலைவி பாங்கியோடு உடன்பட்டுக் கூறுதல்.
வெங்குல வாரண மேற்றவர்க் கேநல்கி வேற்றரசர்
தங்குல வாழ்வு தவிர்த்தருள் வாணன் தமிழ்ச்சிலம்பில்
கங்குல வாவினர் காதல ராயிற் களிபயந்த
கொங்குல வாவலர் சூழ்குழ லாயென்கொல் கூறுவதே. (171)
(இ - ள்.) வெவ்விய கூட்டமாகிய யானைகளை இரப்போர்க்குக் கொடுத்துப் பகைவேந்தர்தங் குலத்தினுள்ளோர் வாழ்வெல்லாந் தவிர்த்தருள் வாணன் தமிழ்ச்சிலம்பிடத்து வண்டுகட்குக் களிப்பைக்கொடுத்த மணம் வாடாத மலர்சூழ்ந்த குழலாய்! காதலர் இரவுக்குறியைக் காதலித்தாராயின் யான் மறுவார்த்தை கூறுவது என் என்றவாறு.
எனவே, நேர்ந்தமை யாயிற்று.
குலம் - கூட்டம். தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. களி - களிப்பு. 'களிபயந்த கொங்கு ' என்றதனால் வண்டு வருவித்து உரைக்கப்பட்டது. கொங்கு - மணம். உலவா - வாடா.
---------- (171. நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல் - முற்றும்) ----------
172. நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல் :
பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்துநெஞ்சம்
கரவாத பொன்னைநின் காரண மாகக் கயிலையென்றே
வரவா தவனஞ்சும் வெண்மா ளிகைத்தஞ்சை வாணன்வெற்பா
இரவாத வண்ணமெல் லாமிரந் தேனிவ் விரவிடையே. (172)
(இ - ள்.) வெண்சாந்து பூசியவதனாற் கயிலாயமலை யென்று கதிரோன் வருதற் கஞ்சும் மாளிகையுடைய தஞ்சைவாணன் வெற்பனே! நெஞ்சத்தில் நின் காதலை மறையாத பொன்னை நின் பொருட்டாகப் புகழாத வண்ணமெல்லாம் புகழ்ந்தும், பாதங்களைப் பலகாற் பணிந்தும், இவ்விடையிருளின்கண் அவள் மனம் இயைதற்கு இரவாத முறைமையெல்லாம் இரந்தேன் என்றவாறு.
பரவுதல் - புகழ்தல். கரத்தல் - மறைத்தல். பொன் - திருமகள். ஆதவன் - கதிரோன். வண்ணம் இரண்டும் முறைமை.
---------- (172. நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல் - முற்றும்) ----------
173. குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதல் :
குறியிடை நிறீஇத் தாய்துயில் அறிதல் என்பது, பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது துயிலை யறிதல்.
மாகந் தரியலர்க் கீந்தருள் வாணன்தென் மாறைவெற்பில்
மேகந் தருமின் னிடையன்ன மேவிரை நாண்மலர்வேய்
நாகந் தழுவுங் குடம்பையின் வாய்நடு நாளிரவில்
சோகந் தவிர்வில வாய்த்துயி லாததென் தோகைகளே. (173)
(இ - ள்.) தன்னைச் சேராத பகைவர்க்கு வானுலகத்தை அளித்தருள் வாணன் தென்மாறை வெற்பிடத்து மேகங்கொடுக்கும் மின்போன்ற இடையையுடைய அன்னமே! மணநாண்மலர் பொருந்திய புன்னாகத்தைத் தழுவுங் குடம்பையிடத்தில் இரவில் இடையாமத்து மயில்கள் துன்பத்தை நீங்காவாய்த் துயிலாதது என் என்றவாறு.
மாகம் - வானுலகு. தரியலர் - பகைவர். குடம்பை - கூடு. வேய்தல் - பொருந்துதல். சோகம் - துன்பம். தோகை - மயில்.
---------- (173. குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதல் - முற்றும்) ----------
174. இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல் :
கந்தார நாணுங் கனிந்தசொல் லாய்நங் கடிமனைக்கே
வந்தார் அவாவின் பெருமையி னாற்றஞ்சை வாணன்வெற்பில்
கொந்தா ரசோகந் தருஞ்செழும் போதுங் கொழுந்தழையும்
தந்தா ரகலந் தழீஇயக லாது தணந்தவரே. (174)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பில் கந்தாரம் நாணும் தித்தித்த சொல்லாய்! கொத்தார்ந்த அசோகத்தரு தரப்பட்ட செழும்போதும் கொழுந்தழையும் தந்து நிறைந்த முலையைத் தழீஇ மனத்தாற் பிரியாது மெய்யாற் பிரிந்த, ஆதரங்கொண்ட அவாவின் பெருமையினால், நமது விளங்கிய மனைக்கு வந்தார் என்றவாறு.
கந்தாரம் - ஓர் பண். கனிதல் - தித்தித்தல். கடி - விளக்கம். கொந்து - கொத்து. அகலம் - ஆகுபெயர். தணத்தல் - பிரிதல்.
---------- (174. இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல் - முற்றும்) ----------
175. தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல் :
மின்னே யயிலொடு மின்விளக் காவந்த வெற்பரைநாம்
பொன்னே யெதிர்கொளப் போதுகம் வாபுவி யேழினுக்கும்
தன்னேயம் வைத்தருள் சந்திர வாணன் தமிழ்ச்சிலம்பில்
நின்னே ரியன்மயில் கண்டுயில் நாக நிழலகத்தே. (175)
(இ - ள்.) ஏழ்புவிக்கும் தன் அன்பை வைத்தாளப்பட்ட சந்திரவாணன் தமிழ்ச்சிலம்பி லிருக்கப்பட்ட பொன் போன்றவளே! நின் இயலுக்கு நேராகிய மயில் கண்ணுறங்கும் புன்னாக நிழலகத்து ஒளிபொருந்திய வேலுடனே மின்னும் விளக்காகக் கங்குலில் வந்த வெற்பரை நாம் எதிர்கொள்ளப் போதுகம் வா என்றவாறு.
மின் - ஒளி. எய்தல் - பொருந்துதல். அயில் - வேல். பொன் - ஆகுபெயர். நேயம் - அன்பு. தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. இயல் - சாயல். 'நின் இயல்' என மாறுக.
---------- (175. தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல் - முற்றும்) ----------
176. குறியுய்த் தகறல் :
குறி உய்த்து அகறல் என்பது, பாங்கி தலைமகளைக் குறியிடத்துச் செலுத்தித் தான் அகன்றுபோதல்.
மந்தார மன்னகை வாணன்தென் மாறை மயிலனையாய்
நந்தா வனப்பொய்கை நான்கொய்கு வேன்குழ னாணுங்கங்குல்
கொந்தார் தெரியனின் செங்கனி வாயொடுங் கொங்கையொடும்
பைந்தா மரையையுஞ் சேதாம் பலையும் பகைப்பித்ததே. (176)
(இ - ள்.) மந்தார தருப்போன்ற கையையுடைய வாணன் தென்மாறை நாட்டு மயில் போன்றவளே, குழலுக்கு நாணுங் கங்குலானது கொத்தார்ந்த மாலையணிந்த நின் செங்கனிவாயொடுங் கொங்கையொடுஞ் சேதாம்பலையும் பைந்தாமரையையும் பகைக்கச் செய்ததாதலால், கேடில்லாத சோலையிடத்திருக்கும் பொய்கையிற் போய், நான் அப்போதுகளைக் கொய்வேன், கொய்து வருமளவும் இவ்விடத்து நிற்பாயாக என்றவாறு.
மந்தாரம் - பஞ்ச தருவில் ஓர் தரு. நந்தா - கெடா. வனம் - சோலை. கொந்து - கொத்து. தெரியல் - மாலை. சேதாம்பல் - அரக்காம்பல்.
இவ்வாறு இரவுக்குறிக்கண் தலைவியைத் தமியளாய் நிறுத்திப் பாங்கி நீங்கில் இடையிருளில் அச்சமின்றி தலைவி நிற்பளோ எனின், தான் பயின்ற இடமும் தன் ஆயத்தோடு ஒக்குமாதலானும், தலைவன் ஓர்புடை அருகு நிற்றலானும், பாங்கியும் அப்பால் பொய்கையில் நிற்றலானும் அச்சமின்றி நிற்பளென்று உணர்க.
---------- (176. குறியுய்த் தகறல் - முற்றும்) ----------
177. வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதல் :
முதிரா முலையிப் பனியந்த கார முனியவல்ல
கதிரா யிரமில்லை யேழ்பரித் தேரில்லைக் காவல்வெய்யோற்
கெதிராதல் சோமற் கியல்வதன் றேநும்மில் யார்திறந்தார்
மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே. (177)
(இ - ள்.) எஞ்ஞான்றும் முதிர்ந்து சாயாத முலையை யுடையாய்! இந்தப் பனிபொருந்திய அந்தகாரமாகிய பூட்டைத் திறப்பதற்குத் திறவுகோலாகிய கதிராயிரமில்லை, திறப்பவனைக் கொண்டுவரும் ஏழ்பரியையுடைய தேரில்லை, திறக்குங் காவலையுடைய வெய்யோனுக்கு எதிராய்வந்து திறத்தல் சோமற்குப் பொருந்துவதன்றே யாதலான் நும் இல்லாகிய தாமரைமாளிகையை மதுராபுரித் தமிழை யாராய்ந்த வாணன் மாறை நாட்டிலிருக்கும் பொய்கை நீரில் வந்து திறந்தவர் யார் என்றவாறு.
அந்தகாரம் - இருள். பரி - குதிரை. வெய்யோன் - சூரியன். சோமன் - சந்திரன். இயல்வது - பொருந்துவது. வனம் - நீர். 'முதிராமுலை' என்றதற்கு 'நும்மில்' என்றது ஒருமைப்பன்மை மயக்கம்.
---------- (177. வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதல் - முற்றும்) ----------
178. பெருமகள் ஆற்றின தருமை நினைந் திரங்கல் :
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் என்பது, தலைவி தலைவன் வரும் வழியினது அருமையை நினைந்து இரங்கல்.
செழியன் கயலைத் திசைவைத்த வாணன்தென் மாறையென்மேல்
கழியன் புடையநின் கால்கண்க ளாகக் கராம்பயிலும்
குழியன்றி யும்வெஞ் சுழியொன்றும் யாறுங் குழீஇக்கொடிதாம்
வழியன்ப நீயெங்ங னேவந்த வாறிம் மழையிருளே. (178)
(இ - ள்.) அன்பனே! பாண்டியனது கயற்கொடியைத் திசையெட்டினும் நிறுத்திய வாணனாட்டில் இருக்கின்ற என்மேல் மிகுந்த அன்புடைய நினது கால்களே கண்களாக, முதலைகள் நெருங்குங் குழிந்த மடுவல்லாமலும் வெவ்விய சுழி பொருந்தும் அருவியாறுங் கூடிக் கொடியதாம் வழியில் இம் மழைக்காலிருளில் நீ வந்தவாறு எவ்வாறு என்றவாறு.
செழியன் - பாண்டியன். கயல் - ஆகுபெயர். கழி - மிகுதி. கால் கண்களாதல், இருட்செறிவால் அக்கண் நெறி செல்லாதாகலான் காலறிவாற் றடவிவருதல். கராம் - முதலை. பயிலுதல் - நெருங்குதல். குழீஇ - கூடி.
---------- (178. பெருமகள் ஆற்றின தருமை நினைந் திரங்கல் - முற்றும்) ----------
179. புரவலன் தேற்றல் :
புரவலன் தேற்றல் என்பது, தலைவியைத் தலைவன் தேற்றல்.
வெயிலுந் தரவிந்த மென்மல ரன்னமும் விந்தைவெற்றி
மயிலும் பயில்புயல் வாணன்தென் மாறைநின் வாள்விழிபோல்
அயிலுங் குயில்மொழி நின்னிடை போன்மின்னு மாடளிகள்
பயிலுந் தொடைநின் குழல்போ லிருளைப் பருகினவே. (179)
(இ - ள்.) குயில்போன் மொழியாய்! வெயிலினாலே முறுக்கைத் தள்ளப்பட்ட மெல்லிய தாமரை மலரிலிருக்குஞ் செல்வத் திருவும், விந்தையாகிய வெற்றித்திருவும் பழகிய புயத்தை யுடையவனாகிய வாணன் மாறைநாட்டு நின் ஒளியையுடைய விழியையொக்கும் என் கைவேலும், நின் இடையையொக்கும் மின்னும், ஆடும் வண்டுகள் செறிந்த மாலை சூழ்ந்த நின்குழலை யொக்கும் இருளைக் குடித்தன, ஆதலால், யான் அச்சமின்றி வந்தேன் என்றவாறு.
உந்தல் - தள்ளுதல். அரவிந்த மென் மலர் அன்னம் - செல்வத்திரு. விந்தை வெற்றிமயில் - வெற்றித்திரு. பயிலுதல் - பழகுதல். அயில் - வேல். பயிலுதல் - செறிதல். பருகுதல் - குடித்தல்.
---------- (179. புரவலன் தேற்றல் - முற்றும்) ----------
180. புணர்தல் :
சுழிநீ ரலைகடற் றொல்லுல கேழினுந் தோற்றும்வண்மைக்
கழிநீடு மாடக மேருவின் மீதினுங் காவல்கொண்டு
வழிநீள் புகழ்கொண்ட வாணன்தென் மாறை வரையின்மலர்ப்
பொழினீழ லும்ப ரமுதனை யாரைப் புணர்ந்தனமே. (180)
(இ - ள்.) சுழிந்த நீரும் அந்நீரி லலையும் பொருந்திய கடல் சூழ்ந்த பழையவுல கேழினும் புரக்குஞ் செல்வ மிகுதி நீண்ட பொன்மேருவின் மீதினுங் காக்குந் தொழிலைக்கொண்டு, அத்தொழில் வழியே நீண்ட புகழைக் கொண்ட வாணன் தென்மாறை வெற்பிற்றோன்றிய மலர்ச் சோலை நீழலில் தேவாமிர்தம் போல்வாரை யாம் புணர்ந்தனம் என்றவாறு.
யாம் - தோன்றா எழுவாய், 'சுழிநீரலை' என்புழி உம்மைத் தொகை. தொல்லுலகு - பழைய வுலகு. வண்மை - வளம். கழி - மிகுதி. ஆடகமேரு - பொன்மேரு. உம்பரமுதம் - தேவாமிர்தம்.
---------- (180. புணர்தல் - முற்றும்) ----------
181. புகழ்தல் :
மண்ணார் பெரும்புகழ் வாணன்தென் மாறை [1]வரைபயிலும்
தண்ணார முங்கமழ் சார்வருஞ் சாரலிற் சார்ந்துறையும்
பெண்ணா ரணங்கன்ன நின்முகந் தான்கண்ட பின்னுமுண்டோ
கண்ணார் தடங்களின் வாயொடுங் காத கமலங்களே. (181)
(இ - ள்.) நிலவுலகம் நிறைந்த பெரிய புகழுடைய வாணன் தென்மாறைவரையில் பயிலுந் தட்பமாய்ச் சந்தனமும் நாறுகின்ற பிறரொருவர் சார்தற்கரிய மலைச்சாரலிற் சார்ந்து உறையும் ஆரணங்குபோன்ற பெண்ணே! நின் முகத்தைக்கண்ட பின்னும் இடமார்ந்த பொய்கைகளில் வாய்குவியாத கமலங்களுண்டோ, இல்லை என்றவாறு.
'நின் முகத்தை மதியமென்று கருதி வாயொடுங்காத கமல முண்டோ' எனினும் அமையும். மண் - நிலவுலகம். ஆர்தல் - நிறைதல். ஆரம் - சந்தனம். தென்மாறைவரை - பொதியம். 'ஆரணங்கன்னபெண்' என இயையும். பெண் - அண்மைவிளி. கண் - இடம். ஒடுங்கல் - குவிதல்.
-----
[181-1] (வே.பா.) (1) வரையகிலும்.
----------
---------- (181. புகழ்தல் - முற்றும்) ----------
182. இறைமக ளிறைவனைக் குறிவரல் விலக்கல் :
மூரற் கதிர்முத்த வார்முலை யாவியின் மூழ்கத்தனி
வாரற்க நீதஞ்சை வாணன்வெற் பாவய மாவழங்கும்
வேரற் கடிய கவலையி னூடு வெயிலவற்கும்
சாரற் கருமைய தாலிருள் கூருமெஞ் சாரலிலே. (182)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே, வயமாவாகிய சிங்கம் புலி யானை இவைகள் சஞ்சரிக்கும் வேரல் நெருங்கிய கடியவாகிய கவர்வழியாய், உள்ளே வெயிலவன் கிரணங்கட்கும் சேர்தற்கருமை யுடைத்தாதலால், எக்காலமும் இருள்மிகும் எஞ்சாரலிடத்து நகைத்தல்போன்ற கதிரையுடைய முத்தமும் கச்சும் பொருந்திய முலையென்னும் வாவியில் முழுக நீ தனியே வாரற்க என்றவாறு.
மூரல் - நகை. கதிர் - கிரணம் 'முத்தம்வார்' என்புழி உம்மைத் தொகை. வார்முலை - கச்சிறுக்கியமுலை. ஆவி - வாவி. வயமா, புலி யானை சிங்கம் மூன்றிற்கும் பொதுவாதலான் இம்மூன்றையுங் கூறப்பட்டது. வேரல் - மூங்கில். கவலை - கவர்வழி. வெயிலவன் - ஆகுபெயர். கூர் - மிகுதி.
---------- (182. இறைமக ளிறைவனைக் குறிவரல் விலக்கல் - முற்றும்) ----------
183. இறைவியை இல்வயின் விடுத்தல் :
இறைவியை இல்வயின் விடுத்தல் என்பது, தலைவன் தலைவியை மனையிற் செல்லென விடுத்தல்.
மல்லையம் போர்வென்ற வாணன்தென் மாறைநின் மாளிகையாம்
தொல்லையம் போருகந் தேடவுங் கூடுந் தொடித்தளிரால்
முல்லையம் போது முகையுங்கொய் யாது முகிழ்மலையாய்
செல்லையம் பொற்பளிங் கிற்றலம் பாதஞ் சிவப்பிக்கவே. (183)
(இ - ள்.) மல்லை யென்னும் ஓரூரிடத்தில் போரை வென்ற வாணன் தென்மாறைநாட் டிருக்கின்ற முகை போன்ற முலையாய்! நின் மாளிகையாகிய பழமையுடைய தாமரையானது தேடவும் அமையுமாதலால் தொடி செறிந்த தளிர்போன்ற கையினால் முல்லைப்போதும் அதனது முகையுங் கொய்யாது அழகிய பளிங்குத்தலத்தைப் பாதமானது சிவப்பேறச்செய்யச் செல்லக்கடவை என்றவாறு.
மல்லை - ஓரூர். 'தொடித்தளிர்' - ஆகுபெயர். அம் - சாரியை. அம் - அசைநிலை. செல் - செல்லக்கடவை. ஐ - சாரியை. பொன் - அழகு. 'தலம்' என்புழி இரண்டனுருபு தொக்கது.
---------- (183. இறைவியை இல்வயின் விடுத்தல் - முற்றும்) ----------
184. இறைவியை யெய்திப் பாங்கி கையுறைகாட்டல் :
முகையா யலராய் முலைக்குநின் வாய்க்கு முறைமுறையே
பகையா முளரியுஞ் சேதாம் பலுமிவை பைங்கழுநீர்
வகையார் தொடைபுனை வாணன்தென் மாறையின் மௌவலன்ன
நகையா யவையிவை நின்குழற் காமுல்லை நாண்மலரே. (184)
(இ - ள்.) பசிய கழுநீர் வகையார்ந்த மாலையணிந்த வாணன் தென்மாறைநாட்டின் மௌவல்போன்ற நகையினை யுடையாய்! முகையாய் அலராய் முலைக்கும் நின்வாய்க்கும் நிரனிறையாய்ப் பகையான தன்மையையுடைய தாமரையும் செவ்வாம்பலும் இவை கண்டருள்; முல்லைநாண் மலராகிய இவையும், முன்காட்டிய அவையும் நின் குழற்குச் சூடுதற்காம் என்று கொண்டுவந்தேன் என்றவாறு.
முளரி - தாமரை. சேதாம்பல் - செவ்வாம்பல். கழுநீர் - குவளை. மௌவல் - முல்லை. இரவுக்காலமாதலால் தாமரையை முகை யென்றும், ஆம்பலையும் முல்லையையும் மலர் என்றும் கூறிய வாறென்று உணர்க.
---------- (184. இறைவியை யெய்திப் பாங்கி கையுறைகாட்டல் - முற்றும்) ----------
185. இற்கொண் டேகல் :
இற்கொண்டு ஏகல் என்பது, தலைவியைப் பாங்கி மனையிடத்திற் கூட்டிப் போதல்.
ஒல்கா விருண்மணந் தொல்கரும் போழ்தி னுணர்ந்துநம்மை
நல்கா வியல்பன்னை நாடினுள் நாடு நடந்தருள்நீ
மல்காவி சூழ்தஞ்சை வாணன்தென் மாறையின் வள்ளையின்மேல்
செல்காவி யன்ன விழித்திரு வேநின் திருமனைக்கே. (185)
(இ - ள்.) நிறைந்த பொய்கை சூழ்ந்த தஞ்சைவாணன் தென்மாறையில் வள்ளையின்மேற் செல்லுங் காவி போலக் காதின்மேற் செல்லும் விழியை யுடைய திருவை யொப்பவளே! நம்மை நல்கும் அவ்வியல்பினை யுடைய அன்னை சுருங்காத இருளைப்பொருந்திச் சுருங்குதற்கரிய இராப்போதிற் றுயில் எழுந்து தேடினுந் தேடுமாதலினால், நின் திருமனைக்கு நீ நடந்தருள் என்றவாறு.
ஒல்கா - சுருங்கா. உணர்தல் - துயிலெழுதல். நல்கல் - பயத்தல். ஆவியல், சுட்டு நீண்டது. மல்கல் - நிறைதல். ஆவி - பொய்கை. வள்ளை - வள்ளைக்கொடி. காவி - நீலம்.
---------- (185. இற்கொண் டேகல் - முற்றும்) ----------
186. பிற்சென் றிறைவனை வரவுவிலக்கல் :
பிற்சென்று இறைவனை வரவு விலக்கல் என்பது, பாங்கி தலைமகளை மனையிற் சேர்த்த பின்பு தலைமகன்பாற் சென்று இவ்விருளினில் நீ வாரல் என்று வரவு விலக்கிக் கூறுதல்.
வெம்போர் முருகென்ன வேல்வல னேந்தி வெறிதிங்ஙனே
வம்போர் நகரெல்லி வாரல்வெற் பாமரு வாவரசர்
தம்போர் கடந்த தடம்புய வாணன் தமிழ்த்தஞ்சைநாட்
டம்போ ருகமல்ல வோதிருக் கோயி லணங்கினுக்கே. (186)
(இ - ள்.) வெற்பனே! பகைவேந்தர்தம் போரைக் கடந்த தடம்புயத்தை யுடைய வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டின்கணுள்ள அணங்கு போல்வாட்குத் திருக்கோயில் அம்போருகம் அல்லவோ, ஆதலினால், வெம்போரில் முருகவேளென்று சொல்ல வேலை வலத்திலே யேந்திப் பயனின்றிப் புதுமை ஆராயும் நகரிடத்து இராப்பொழுதில் இவ்விடத்தில் நீ வாரல் என்றவாறு.
முருகு - முருகவேள். வலன் - வலப்பக்கம். வம்பு - புதுமை. ஓர்தல் - ஆராய்தல். எல்லி - இராப்போது. 'அல்லவோ' என்னும் ஓகாரம் எதிர்மறை. அம்போருகம் இராக்காலத்தில் கதவு திறவா தாதலால் தலைவி மனைவிட்டு வெளிவருதல் அரிது எனக் குறிப்பால் அறிவித்தவாறு உணர்க.
---------- (186. பிற்சென் றிறைவனை வரவுவிலக்கல் - முற்றும்) ----------
187. பெருமகன் மயங்கல் :
பெருமகன் மயங்கல் என்பது, பாங்கி இவ்வாறு இரவுக்குறி விலக்கிய சொற்கேட்டுத் தலைமகன் மயங்கிக் கூறல்.
வஞ்சங் கலந்த கலிவென்ற வாணன்தென் மாறைவெற்பில்
தஞ்சங் கலந்தசொல் தையலும் யானுந் தனித்தனியே
நெஞ்சங் கலந்த நிலைமையெல் லாங்கண்டு நீயமுதின்
நஞ்சங் கலந்தனை யேநனை வார்குழல் நன்னுதலே. (187)
(இ - ள்.) வார்ந்து அரும்பை முடித்த குழலையும் நல்ல நுதலையும் உடையாய்! வஞ்சனை கலந்த கலிகாலத்தை வென்ற வாணன் தென்மாறை வெற்பில் பற்றுக்கோடாகக் கலந்த சொல்லையுடைய தையலும் யானும் தனித் தனியே நெஞ்சங் கலந்த நிலைமையெல்லாங் கண்டும், நீ, உண்ணும் அமுதில் நஞ்சங் கலந்தாற்போலும், வாரல் என்னுஞ் சொல்லைச் சொல்லினை என்றவாறு.
தஞ்சம் - பற்றுக்கோடு. நனை - அரும்பு. வார்தல் - சீப்பிடுதல்.
---------- (187. பெருமகன் மயங்கல் - முற்றும்) ----------
188. தோழி தலைமகள் துயர்கிளந்து விடுதல் :
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுதல் என்பது, தோழி தலைமகனுக்குத் தலைமகள் துயரைக் கூறி நீ ஊர்போய்ச் சேர்ந்த செய்தி யாம் அறியும்படி குறிசெய் என்று கூறிவிடுதல்.
முன்னூ ரரவுந் தெரியா விருணெறி முன்னிநையும்
மின்னூர் புனையிழை மின்னனை யாளுய்ய வேலின்வெம்போர்
மன்னூர் களிறு திறைகொண்ட வாணன்தென் மாறையன்ன
நின்னூ ரகம்புகுந் தாற்குறி காட்டு நெடுந்தகையே. (188)
(இ - ள்.) நெடுந்தகையே! முன்னே ஊரப்பட்ட அரவும் தெரியா இருள் செறிந்த நெறியென்றதனை நினைந்து நையும் ஒளியூர்ந்த அணியை யணியும் மின்போன்றவள் உய்யும்பொருட்டு, வேலினால் வெய்ய போரிற் பகைவேந்தன் ஊரப்பட்ட களிற்றைத் திறையாகக் கொண்ட வாணன் தென்மாறைபோன்ற நின்னூருட் புகுந்தால், ஓர் அடையாளங் காட்டுவாயாக என்றவாறு.
'அரவும்' என்புழி உம்மை சிறப்பும்மை. முன்னி - நினைந்து. மின் - ஒளி. 'இழைபுனை' என இயையும். புனைதல் - அணிதல். இழை - அணி. மன் - வேந்தன். குறி - அடையாளம். காட்டுதல் - கோடுகுறித்தல், சங்குகுறித்தல் முதலியன.
---------- (188. தோழி தலைமகள் துயர்கிளந்து விடுதல் - முற்றும்) ----------
189. திருமகட் புணர்ந்தவன் சேறல் :
இருங்குன் றனமதி லெம்பதிக் கேக லெளிதுசெம்மை
தருங்குங் குமமுலைத் தையல்நல் லாய்தஞ்சை வாணன்வெற்பில்
கருங்குஞ் சரஇனம் வெண்சிங்க ஏறஞ்சுங் கங்குலினெம்
மருங்குஞ் சுடர்விளக் காமட வார்குழை மாணிக்கமே. (189)
(இ - ள்.) சிவப்பு நிறத்தைத் தருங் குங்கும மணிந்த முலையையுடைய தையனல்லாய்! தஞ்சைவாணன் வெற்பில் கரிய யானைக்கூட்டங்கள் வெண்சிங்க ஏற்றை யஞ்சுங் கங்குலில் எட்டுத்திக்கும் மடவாரது குழையி லணிந்த மாணிக்கம் ஒளிபொருந்திய விளக்கேற்றினாற் போல வருமாதலால், பெரிய மலைபோலும் மதில்சூழ்ந்த எம்பதிக்கு ஏகல் எளிது; நீ கவலற்க என்றவாறு.
எனவே, தலைவி என் நெஞ்சிலிருக்கின்றா ளாதலின், அவள் குழை மாணிக்க வொளியினால் இருள் நீங்கு மென்றவாறாயிற்று.
இருமை - பெருமை. குஞ்சரம் - யானை. சுடர் - ஒளி. குழை - காதணி. 'சிங்கஏறு' என்புழி இரண்டனுருபு தொக்கது.
---------- (189. திருமகட் புணர்ந்தவன் சேறல் - முற்றும்) ----------
இறையோ னிருட்குறி வேண்டலும், நெறியி னெளிமை கூறுதலும், தலைமகனவணாட் டணியியல் வினாதலும், பாங்கி இறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலும் ஆகிய நான்கும் வேண்டற்குரியன.
பாங்கி நெறியின தருமை கூறலும், இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கலும், பாங்கி இறைவனை வரவு விலக்கலும்,ஆகிய மூன்றும் மறுத்தற்குரியன.
பாங்கி யவனாட் டணி யியல் வினாதலும், அவற்குத் தன் னாட் டணி யியல் பாங்கி சாற்றலும், நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தலும், ஆகிய மூன்றும் உடன்படற்குரியன.
தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைவற் குணர்த்தலும், குறியிடை நிறீஇத் தாய் துயிலறிதலும், இறைவிக்கு இறைவன் வரவறி வுறுத்தலும், அவட்கொண்டு சேறலும் ஆகிய நான்கும் கூட்டற்குரியன.
தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதலும், தேற்றலும், புணர்தலும் ஆகிய மூன்றும் கூடற்குரியன.
தலைமகன் புகழ்தலும், கையுறை காட்டலும் ஆகிய இரண்டும் பாராட்டற்குரியன.
தலைமகன் தலைவியை இல்வயின் விடுத்தலும், பாங்கி தலைமகளை இற்கொண் டேகலும் ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்குரியன.
நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தலும், தலைமகள் ஆற்றின தருமைநினைந் திரங்கலும், பெருமகன் மயங்கலும், தோழி தலைமகள் துயர் கிளந்து விடுதலும் ஆகிய நான்கும் உயங்கற்குரியன.
பாங்கி குறியுய்த் தகறலும், திருமகட் புணர்ந்தவன் சேறலும் ஆகிய இரண்டும் நீங்கற்குரியன.
முயங்கல் - வருந்துதல்.
இத்துணையும் ஏழாநாட் செய்தியென் றுணர்க.
1.13. இரவுக்குறி முற்றிற்று.
-------------------------
1.14. இரவுக்குறி இடையீடு (190-208)
அஃதாவது, எட்டாநாள் இரவுக்குறிக்கண் வந்த தலைமகன் அல்லகுறிப்படுதலால் இடையீடு பட்டுப் போதல்.
[1]'அல்லகுறி வருந்தொழிற் கருமை யென்றாங்
கெல்லிக்குறி யிடையீ டிருவகைத் தாகும்.’
என்னுஞ் சூத்திரவிதியான் எல்லிக்குறி யிடையீடு இருவகைப்படும்.
அல்லகுறி என்பது, தலைமகனால் நிகழ்த்தப்படுவனவாகிய புள்ளெழுப்பல் முதலியன. எனவே, நீரிற் கல்லெறிதல், இளநீர்வீழ்த்தல் முதலியனவுங் கொள்க. வருந்தொழிற் கருமை என்பது, தலைமகன் வருகின்ற தொழிற்கருமை.
-----
[1.14-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௪௩) 43.
----------
1.14.1. அல்லகுறி
190. இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல் :
கயல்வென்ற உண்கண்ணி காரண மேதுகொல் கைதையங்கான்
அயனின்ற புன்னையி னன்னமெ லாமட லாழியங்கைச்
சயமங்கை தன்பெரு மான்தஞ்சை வாணன் தரியலர்போல்
துயரம் பெருகி இராவொரு போதுந் துயின்றிலவே. (190)
(இ - ள்.) கயலை வென்று மையுண்ட கண்ணாய்! போர்புரியுஞ் சக்கரத்தைத் தரித்த சயமங்கைக்கு இறைவனாகிய தஞ்சைவாணன் தரியலர்போற் கைதையங்காட்டின் அயலிலிருக்கும் புன்னையின் அன்னமெல்லாந் துயரம் பெருகி, இவ்விரவின்கண் ஒரு நாழிகையுந் துயின்றில, காரணம் யாதோ,தெரிந்திலன் என்றவாறு.
கைதை - தாழை. புன்னை - புன்னாகம். அடல் - போர். சயமங்கை - வெற்றிமாது. போது - ஈண்டு நாழிகை. உம்மை - சிறப்பு.
---------- (190. இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல் - முற்றும்) ----------
191. தான்குறி மருண்டமை தலைவியவட் குரைத்தல் :
தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் என்பது, தலைவி தான் அல்லகுறியிடத்து நின்று தலைவனைக் காணாமையால், மீண்டு விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறல்.
அல்லகுறிப்படுங் காரணம் என்னையெனின், தலைவன் முன்னைநாளிரவில் புன்னைமரத்தின்கீழ் நின்று அதன்மே லிருக்கும் மயில்களை யெழுப்ப, அக்குறியிடத்து வந்து நீங்கிய தலைவி மற்றநாள் குறிக்கு வருவள் என்று தலைவன் வந்து நிற்க, தலைவன் வருங்கால் அணித்தும் அல்லது சேய்த்தும் அல்லதாய ஓர் புன்னைமரத் திருந்த அன்னங்கள் தற்செயலா யெழுந்து ஆரவாரிக்க, அது தோழியாலறிந்த தலைவி அவ்வன்னங்களெழுந்த புன்னைக்கீழ் வந்து நின்று போயினள். தலைவனும் மயிலிருக்கும் புன்னைக்கீழ் நின்று தலைவியைக் காணானாய், இருபுன்னைக்கும் நடுவிருந்த தாழைமரங்களிலே ஓர் மரத்தில் தான் வந்து போயதற்கு அடையாளமாகத் தான் அணிந்த மாலையை வைத்துப்போய நாளில் இருவரும் அல்லகுறிப்பட்ட காரணம் என்று உணர்க.
பேசத் தகுவதொன் றன்றுகண் டாய்பிறி தோர்குறியை
நேசத் தவர்குறி யென்றுசென் றியான்குறி நின்றுவந்தேன்
வாசத் தமிழ்புனை கோளுடை யான்தஞ்சை வாணனொன்னார்
தேசத் தவருமெய் தாவெய்ய நோயெய்திச் சேயிழையே. (191)
(இ - ள்.) சேயிழையே! தலைவர் நிகழ்த்த நிகழ்ந்த தல்லாதாய்ப் பிறிதொன்றா னிகழ்ந்த அடையாளத்தை நேசத்தையுடைய தலைவர் நிகழ்த்திய அடையாளமாக எண்ணிப்போய்க் குறியினின்றும், மணம்பொருந்திய தமிழ்மாலை புனைந்த தோளுடையானாகிய தஞ்சைவாணன் பகைவர் தேசத்திலுள்ளோரும் எய்தாத கொடிய துன்பத்தை யெய்தி வந்தேன்,அத்துன்பம் சொல்லத்தகுவதொன்று அன்று என்றவாறு.
கண்டாய் - முன்னிலையசை. குறி - அடையாளம். நேசத்தவர் - அன்புடையவர். வாசம் - மணம். ஒன்னார் - பகைவர்.
---------- (191. தான்குறி மருண்டமை தலைவியவட் குரைத்தல் - முற்றும்) ----------
192. பாங்கி தலைமகன் தீங்கெடுத் தியம்பல் :
பாங்கி தலைமகன் தீங்கெடுத்து இயம்பல் என்பது, பாங்கி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறல்.
வடியோ வெனுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணனைவந்
தடியோ மெனச்சென் றடையலர் போலயர் கின்றநின்கைத்
தொடியோட மென்பணைத் தோளிணை வாடுந் தொழில்புரிந்த
கொடியோர் துணிந்துசெய் தார்குறி யாத குறிநமக்கே. (192)
(இ - ள்.) வடுவோ கண்ணோ என்று ஐயந்தருங் கண்ணையுடைய மடந்தை நல்லாய்! தஞ்சைவாணனை வந்து யாம் அடியோமெனச் சொல்லி யடையாதவர்போல அயர்கின்ற நின் கைத்தொடி யோடிப்போக மெல்லிய மூங்கில்போன்ற தோளிணை வாடுந் தொழிலைக்கொடுத்த கொடியோர் குறியாத குறியை நமக்குத் துணிந்துசெய்தார் என்றவாறு.
எனவே, நாம் கருதாத அடையாளத்தை நமக்கறிவித்துத் தாம் அக்குறி வாராதொழிந்தா ரென்று தலைவன் தீங்கு கூறியவாறென்று உணர்க.
வடி - மாவடு. அடையலர் - பகைவர். தொடி - வளை. பணை - மூங்கில். குறித்தல் - கருதுதல்.
---------- (192. பாங்கி தலைமகன் தீங்கெடுத் தியம்பல் - முற்றும்) ----------
193. தலைவன் புலந்து போதல் :
தலைவன் புலந்து போதல் என்பது, தலைவன் தான் குறித்த குறியிலிருந்து தலைவி அல்லகுறிப்பட்டு வாராமையாற் புலந்து தன் ஊர்க்குப் போதல்.
தேனுற்ற வாகையந் தார்த்தஞ்சை வாணனைச் சேரலர்போல்
மானுற்ற பார்வை மயில்பொருட் டாக வழிதெரியாக்
கானுற்ற கானற் கனையிருள் வாய்வரக் கற்பித்தநீ
யானுற்ற நோய்களெல் லாம்படு வாயினி யென்னெஞ்சமே. (193)
(இ - ள்.) எனது நெஞ்சமே! தேன்பொருந்திய வாகையந் தாரணிந்த தஞ்சைவாணனைச் சேராதவர்கள் போல, மான்போலுற்ற பார்வையினை யுடைய மயில் பொருட்டாக வழிதெரியாத காடுபோலப் பொருந்திய சோலையிடத்திற் செறிந்த இருளிலே வரக் கற்பித்த நீ யான் உற்ற நோய்களெல்லாம் இன்று படுவாயாக என்றவாறு.
வாகையந்தார் - வெற்றிமாலை. சேரலர் - பகைவர். 'மானுற்ற பார்வை', 'கானுற்ற கானல்' இரண்டும் உவம வாசகம். ஈங்கு, 'உற்ற' என்பதற்கு 'வம்புறா வென்று செப்புற்ற தோர்பகை' என்பதனை உதாரணங் காட்டுவாரும் உளர். மயில் - ஆகுபெயர். கானல் - சோலை. கனையிருள் - செறிந்தவிருள்.
இவ்வாறு புலந்துபோம் தலைவன் தான் வந்து குறியிடத்து நின்றுபோயதற்கு அடையாளமாகத் தன் மாலையைத் தாழைமேல் வைத்துப் போயினான் என்பது மேல்வருஞ் செய்யுளிற் றோற்றிய தென்பது.
---------- (193. தலைவன் புலந்து போதல் - முற்றும்) ----------
இத்துணையும் எட்டாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
194. புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல் :
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண்டு இரங்கல் என்பது, ஒன்பதாநாள் இருள் புலர்ந்தபின் தலைவி வறுங்களங் கண்டு இரங்கல்.
தாதகை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தடந்துறைவாய்
நீதகை கொண்டென்முன் னின்றனை யேசெந் நிறக்கனிவாய்
மேதகு முள்ளெயிற் றொண்முகை கொங்கைவெண் தோட்டுமென்பூம்
கேதகை யென்னுநல் லாய்கொண்கர் மாலை கிடைத்ததென்றே. (194)
(இ - ள்.) தாது செறிந்த சோலைசூழ்ந்த தஞ்சைவாணனது பெரிய வையைத்துறையிடத்துச் சிவந்த நிறத்தையுடைய கனியாகிய வாயையும், மேம்பாடுள்ள முள்ளாகிய எயிற்றையும், ஒள்ளிய முகையாகிய கொங்கையையும், வெண்மைநிறம் பொருந்திய தோட்டையும் உடைய மெல்லிய பொலிவாகிய கேதகை யென்னும் பெண்ணே! நினக்குத் தலைவர் சூட்டிய கழுநீர்மாலை கிடைத்ததென்று நீ யழகுகொண்டு என்முன் நின்றனை யாதலால், நல்வினை செய்தாய் என்றவாறு.
கேதகையைப் பெண்ணென்று கூறியவதனாற் கேதகை யுறுப்பெல்லாம் பெண்ணுறுப்பாகக் கூறியவாறு காண்க.
அகைதல் - செறிதல். தண்டலை - சோலை. தகை - அழகு. மேதகு - மேம்பாடு. தோடு - இதழ். கேதகை - தாழை. கொண்கர் - தலைவர். 'தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்' என்னுங் கிளவிச் செய்யுளில் கழுநீர் மாலை கூறியவதனால், ஈண்டுக் கூறிய மாலை கழுநீர்மாலை யென்று அறியப்பட்டது. 'ஆதலால் நீ நல்வினை செய்தாய்' என்பது சொல்லெச்சம்.
---------- (194. புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல் - முற்றும்) ----------
195. தலைவி தன்றுணைக் குரைத்தல் :
[1]வரலிங் கரிய மயங்கிருள் யாமத்து வந்திளவேய்
நரலுஞ் சிலம்பர் நவமணி யாழி நறவுண்வண்டு
முரலுந் தளையவிழ் மொய்ம்மலர்க் காந்தளஞ் செம்மலர்க்கை
விரலென்று கொல்செறித் தார்நெறித் தாழ்குழல் மெல்லியலே. (195)
(இது பிறசெய்யுட் கவி.)
இதற்குச் செய்யுளிற் கவி யில்லை. என்னை பாடா தொழிந்த தெனின், செய்யுட்பாடி நெடுங்கால மாதலால் முறை யெழுதுவார் விட்டதும், ஏட்டிற் பழுதினா லிறந்ததுவு மாயிற்று. முன்னர் வருங் கிளவிகட்குச் சில இடங்களில் செய்யுட்க ளில்லாமைக்கும் இவ்வுரைப்படி கண்டுகொள்க.
-----
[195-1] அம்பிகாபதி கோவை - (௧௯௮) 198.
----------
---------- (195. தலைவி தன்றுணைக் குரைத்தல் - முற்றும்) ----------
196. தலைமகள் அவலம் பாங்கி தணித்தல் :
தலைமகள் அவலம் பாங்கி தணித்தல் என்பது, தலைமகளது துன்பத்தைப் பாங்கி தணித்துக் கூறல்.
பொய்யா தவர்தங் குறிபிழை யாரவர் பூண்டவன்பு
மெய்யாதல் தேறி யழுங்கன்மின் னேபுய வெற்பிரண்டால்
மையாழி வைய நிலையிட்ட வாணன்தென் மாறைவெற்பின்
உய்யான மென்கழு நீர்நறு மாலை யுடைத்தல்லவே. (196)
(இ - ள்.) புயமாகிய மலையிரண்டினால் கருங்கடல் சூழ்ந்த வுலகத்தை நிலைக்கச்செய்த வாணன் தென்மாறை வெற்பிடத்தி லிருக்கும் மின்னே! இச் சோலையி லிருக்குங் கைதையானது, மெல்லிய கழுநீர்மாலை யுடைத்தாயிராதே இங்ஙனம் உடைத்தா யிருத்தலால், அவர்தங் குறியும் பொய்த்துப் போகாது, அவரும் பிழைத்தல் செய்யார், அவர் நம்மிடத்திற் பூண்ட அன்பு மெய்யாதலைத் தெளிந்து இரங்கலை என்றவாறு.
'புயவெற்பு இரண்டால் வைய நிலையிடல்' - புயவலியால் நிலவுலகத்தைத் தாங்கி நிலைக்கச் செய்தல். தம் - அவர்தம். பிழைத்தல் - தப்பல். வையம் - உலகம். உய்யானம் - ஆகுபெயர்.
---------- (196. தலைமகள் அவலம் பாங்கி தணித்தல் - முற்றும்) ----------
197. இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல் :
இறைவன்மேற் பாங்கி குறி பிழைப்பு ஏற்றல் என்பது, ஒன்பதாநாள் இரவுக்குறிக்கு வந்த இறைவன்மேற் பாங்கி அல்லகுறிப்பட்ட குற்றம் ஏற்றிக் கூறல்.
விம்மூர் துயர்க்கடல் வெள்ளத்துள் ளேயெம்மை வீழ்வித்துநீர்
எம்மூ ரகத்து வரலொழிந் தீரெதி ரேற்றதெவ்வர்
தம்மூரை முப்புர மாக்கிய வாணன் தமிழ்த்தஞ்சைபோல்
உம்மூர் வரத்துணிந் தோமன்பர் கூறுமவ் வூரெமக்கே. (197)
(இ - ள்.) அன்பரே! விம்முதல் நிகழப்பட்ட துன்பக் கடலாகிய வெள்ளத்துள் எங்களை வீழத்தள்ளி எம் ஊரிடத்து நீர் வருதலை யொழிந்தீர்; ஆதலால், எதிராய்ப் போரேற்ற தெவ்வர்தம் ஊரை முப்புரமாக எரித்த வாணனது தமிழ்த் தஞ்சைபோலும் வளமுடைய உம்மூரிடத்து வரத் துணிந்தோம், அவ்வூர் இத்திசையென்று எமக்கு அறியக்கூறும் என்றவாறு.
அன்பர் - அண்மைவிளி. விம்முதல் - துன்பம் உள்ளடங்காது மேன்மேல் எற்றி யெற்றி வருதல். ஊர்தல் - செல்லுதல். எதிரேற்றல் - போரேற்றல். தெவ்வர் - பகைவர். முப்புரமாக்குதல் - எரித்தல்.
---------- (197. இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல் - முற்றும்) ----------
198. இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல் :
இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றல் என்பது, தலைவிமேல் தலைவன் அல்லகுறிப்பட்ட குற்றம் ஏற்றிக் கூறுதல்.
துறந்தன ளாகியம் போருகந் தன்னையித் தொல்வரைமேல்
பிறந்தன ளாகும் பெருந்திரு மாதெனப் பேதையரில்
சிறந்தன ளாதலிற் செந்தமிழ் வாணன்தென் மாறையன்னாள்
மறந்தன ளாயினும் யாமொரு போது மறவலமே. (198)
(இ - ள்.) பெருந்திருமாது தாமரை மலரை நீக்கினவளாகி இந்தப் பழைய மலைமேல் வந்து பிறந்தன ளாகுமென்று உலகஞ்சொல்லப் பெண்களிற் சிறந்தன ளாதலின், செந்தமிழ் வாணன் தென்மாறை போன்றவள் மறந்தன ளாயினும், யாம் ஒருபோதும் மறந்திலம் என்றவாறு.
அம்போருகம் - தாமரை. வரை - மலை. என - என்று சொல்ல. பேதையர் - பெண்கள். போது - நாள்.
---------- (198. இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல் - முற்றும்) ----------
199. அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல் :
அவள் குறிமருண்டமை அவள் அவற்கு இயம்பல் என்பது, தலைவி குறிமயங்கியது பாங்கி தலைவற்கு உணர்த்தல்.
தனையா வரும்புக ழத்தரும் வாணன் தமிழ்த்தஞ்சைமான்
அனையா ளவள்குறி யாமிதென் றேநினைந் தல்லதொன்று
நினையா வருங்கங்குல் நின்குறி யாவந்து நின்றதுநம்
வினையால் விளைந்ததென் றேவெறி தேயன்ப மீண்டனளே. (199)
(இ - ள்.) அன்பனே! தன்னை யாவரும் புகழக் கொடுக்கும் வாணன் தமிழ்த்தஞ்சை மான்போன்றவ ளாகிய அத்தலைவி இது குறியாமென்று நினைந்து வருங் கங்குலிடத்து நீ நினையாவல்ல தொருகுறி நின்குறியாய் வந்து நேர்பட நின்றது, நாம் முன்செய்த தீவினையால் விளைந்ததென்று பயனின்றி மீண்டனள் என்றவாறு.
'இதுகுறியாம்' எனவும், 'நினைந்து வருங் கங்குல்' எனவும், 'நினையா வல்ல தொன்று' எனவும் மாறுக. கங்குல் - இரா. வெறிதே - பயனின்றியே. அன்ப என்பது அண்மைவிளி.
---------- (199. அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல் - முற்றும்) ----------
200. அவன்மொழிக் கொடுமைசென் றவளவட் கியம்பல் :
அவன்மொழிக் கொடுமைசென்று அவள் அவட்கு இயம்பல் என்பது, தலைவன் சொல்லிய கொடுமையைத் தோழி தலைமகட்குச் சொல்லல்.
பல்லியம் போலுரு மேறெங்கும் ஆர்ப்பதும் பார்ப்பதின்றி
வல்லியம் போதகம் போர்பயில் கான்வந்து வாணன்தஞ்சை
அல்லியம் போருகை யன்னநின் கேளரு ளாசையினின்
றெல்லியம் போதுசென் றேனென்று கேள்வர் இயம்பினரே. (200)
(இ - ள்.) போர்புரிவோர் முரசுபோல் இடி யெவ்விடத்தும் ஆரவாரிப்பதையுங் கருதுதலின்றிப் புலியும் யானையும் போர்நெருங்கிச் செய்யுங் காட்டில்வந்து, வாணன் தஞ்சை நகரிலுள்ளவர் அகவிதழையுடைய அம்போருகத்தை யுடையவளாகிய திருமகளையொத்த நினது உறவு தரும் ஆசையாற் குறியிடத்து நின்று இராப்போதில் நீ வாராமையான், மீண்டு சென்றேனென்று கொண்கர் இயம்பினார் என்றவாறு.
பல்லியம் - முரசு. உருமேறு - இடி. பார்ப்பது – கருதுவது. வல்லியம் - புலி. போதகம் - யானை. கான் - காடு. அல்லி - அகவிதழ். அம்போருகை - திருமகள். கேள் - உறவு. அருளாசை - தருமாசை. நின்று - குறியிடத்து நின்று. எல்லியம்போது - இராப்போது. கேள்வர் - கொண்கர்.
---------- (200. அவன்மொழிக் கொடுமைசென் றவளவட் கியம்பல் - முற்றும்) ----------
201. என்பிழைப் பன்றென்று இறைவி நோதல் :
என் பிழைப்பு அன்றென்று இறைவி நோதல் என்பது, குறி பிழைத்தது என்பிழை யன்றென்று இறைவி நொந்து கூறல்.
வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொறெண்ணி
மயலூர் மனத்தொடு வைகினன் யான்தஞ்சை வாணன்வெற்பர்
புயலூ ரிருட்கங்குல் வந்தவ மேநின்று போயினரென்
றயலூர் நகைக்குமென் னேயென்ன பாவங்கொ லாக்கினவே. (201)
(இ - ள்.) அகலம் பரந்த மதிற்புறத்து நொச்சி மரத்தினது பழைய மலர் சரசரத்து வீழ்தோறும் வீழ்தோறும் தலைவர் வருகின்றார் என்னும் ஆசை செல்லும் மனத்தோடு யான் இருந்தேன்; தஞ்சைவாணனது வெற்பி லுள்ளாராகிய தலைவர் புயல்கள் செல்லும் இருளில் வந்து பயனின்றியே நின்று மீண்டுபோயினர் என்று அயலூர் அறியில் நகைக்கு மாதலால், இவ்வாறு ஆக்கியது என்ன பாவமோ, செய்யுமாறு என்னே என்றவாறு.
வியல் - அகலம். ஊர்தல் - பரத்தல். எயில் - மதில். ஊழ்மலர் - பழையமலர். மயல் - ஆசை. ஊர்தல் இரண்டும் செல்லுதல். என்னே என்பது இகழ்ச்சியான் வந்தது. 'அயலூர் நகைக்கும்' எனவே இகழ்ச்சி பிறந்து அவ்விகழ்ச்சிக்கண், 'என்னே' என்று இழிவு தோன்றியவாறு உணர்க.
---------- (201. என்பிழைப் பன்றென்று இறைவி நோதல் - முற்றும்) ----------
இத்துணையும் பகற்செய்தியென்று உணர்க.
1.14.1. அல்லகுறி முற்றிற்று
-------------------------
1.14.2. வருந்தொழிற்கருமை
202. தாய் துஞ்சாமை :
தாய் துஞ்சாமை என்பது, தாய் விழித்திருத்தல்.
ஆழிய கன்புவி யுள்ளன யாவு மடங்கிநள்ளென்
றூழி முடிந்தன வோங்கிருள் யாமத்து மோடையினும்
தாழியி னும்போ தலர்தஞ்சை வாணன் தரியலர்போல்
தோழிநம் மன்னைகண் ணேதுயில் கோடல் துறந்தனவே. (202)
(இ - ள்.) தோழியே! கடல்சூழ்ந்து அகன்ற புவியி லுள்ளன யாவும் அடங்கி நள்ளென்னும் ஓசையோடே கூடி யுகமுடிவு காலம்போன்று இருள் வளரப்பட்ட யாமத்தும் ஓடையிடத்தும் தாழியிடத்தும் போதுகள் அலருந் தஞ்சைவாணன் தரியலர்போல், நம் அன்னை கண்டுயில் கொள்ளுதலைத் துறந்தனள் என்றவாறு.
ஆழி - கடல். நள்ளென்னு மோசை - அனுகரணவோசை. ஊழி - யுகம். யாமம் - இரவு. தாழி - சால்.
---------- (202. தாய் துஞ்சாமை - முற்றும்) ----------
203. நாய் துஞ்சாமை :
நாய் துஞ்சாமை என்பது, தாய் துஞ்சியபின் ஊரிலிருக்கும் நாய் துஞ்சாமை.
தண்ணென் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
பெண்ணென் பிறவியும் பேருடைத் தன்றிப் பெரும்பதிநங்
கண்ணென் பவர்வரக் கங்குலின் ஞாளிக் கணங்குரைத்துத்
துண்ணென் கடுங்குரல் வாயன்னை துஞ்சினுந் துஞ்சிலவே. (203)
(இ - ள்.) குளிரென்னும் புனலையுடைய வைகை சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல் பெண்ணென்று சொல்லும் பிறவியும் கீர்த்தியுடைத்தன்று; இப் பெரும் பதியிடத்து நம் கண்ணென்று சொல்லப்பட்ட தலைவர் கங்குலில்வர நம் அன்னை துஞ்சினும், துண் என்று சொல்லும் கடிய குரலெழும் வாயையுடைய ஞாளிக்கூட்டங் குரைத்துத் துஞ்சில என்றவாறு.
பாங்கி - முன்னிலை யெச்சம். தரியலர் - பகைவர். பேர் - கீர்த்தி. 'பெரும்பதி' என்புழி ஏழனுருபு தொக்கது. ஞாளிக்கணம் - நாய்க்கூட்டம். 'துண்ணென் கடுங்குரல்வாய் ஞாளிக்கணம்' என இயையும். துண் என்பது அச்சக் குறிப்பு. துஞ்சினும் என்னும் உம்மை துஞ்சுதல் அரிதென்பது தோன்ற நின்றது.
---------- (203. நாய் துஞ்சாமை - முற்றும்) ----------
204. ஊர்துஞ்சாமை :
ஊர் துஞ்சாமை என்பது, நாய்துஞ்சினும் ஊரிலுள்ளார் துஞ்சா திருத்தல்; இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல் நின்றது.
ஓங்கண்ணல் வெம்பக [1]டுந்திவந் தோரை உடன்றுதும்பைத்
தேங்கண்ணி சூடிச் செருவென்ற வாணன்தென் மாறைமின்னே
தாங்கண் ணனையர் தமைப்பிரிந் தோநந் தனிமைகண்டோ
நாங்கண் ணுறங்கினு மோவுறங் [2]கார்கண் நகரவரே. (204)
(இ - ள்.) உயர்ந்த பெருமையுடைய வெவ்விய யானைப்பகட்டை நடத்திவந்த பகைவரைச் சினந்து தும்பையென்னுந் தேன்பொருந்திய மாலையைச் சூடிப் போரைவென்ற வாணன் தென்மாறை நாட்டு மின்போன்றவளே! தாம் கண்போன்ற நாயகரைப் பிரிந்தோ, அன்றி நமது தனிமைகண்டோ, நாம் கண்ணுறங்கினும் கண்ணுறங்கார் நகரவர் என்றவாறு.
அண்ணல் - பெருமை. பகடு - யானை. உந்தல் - நடத்துதல். உடலுதல் - சினத்தல். போர் பொருவோர் தும்பைமாலை சூடுதல் புறப்பொரு ளிலக்கண வழக்கு. தேங்கண்ணி - தேன்பொருந்திய மாலை. செரு - போர்.
-----
[204-1] (வே. பா.) (1) டூர்ந்துவந்தார்.
[204-2] காரிந் நகரவரே.
----------
---------- (204. ஊர்துஞ்சாமை - முற்றும்) ----------
205. காவலர் கடுகுதல் :
காவலர் கடுகுதல் என்பது, நகர்காப்போர் துடியடித்துக் கொண்டு ஊர்சுற்றிக் கடுகி வருதல்.
புயற்கண் ணியதலைப் பூகமென் பாளைப் புதுமதுநீர்
வயற்கண் ணிறைதஞ்சை வாணன்தென் மாறையில் வஞ்சியன்னாள்
கயற்கண் ணிணையஞ்சி நீர்மல்கக் காவலர் கைப்பறையின்
செயற்கண் ணிணையல்ல வோபடு கின்றன திண்கடிப்பே. (205)
(இ - ள்.) முகிலைக்கிட்டிய தலையினையுடைய பூகத்தினது மெல்லிய பாளைப் புதிய மதுநீர் வயற்கண் நிறையுந் தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சிக் கொம்புபோல் வாளது கயல்போன்ற கண்ணினை யஞ்சி நீர் நிறையவல்லவோ காவலரது கைப்பறையின் செயல்பொருந்திய கண்ணிணையின் திண்ணிய கடிப்புப் படுகின்றன என்றவாறு.
அண்ணிய - கிட்டிய. தலை - கமுகினது உச்சி. பூகம் - கமுகு. பறை - துடி. கண்ணிணை - இருபக்கம். கடிப்பு - அடிக்குங் குறுங்கோல். ஓகாரம் - எதிர்மறை.
உரைப்போர் கேட்போர் இன்மையின் கவிக்கூற்றாய துறை; 'வருந்தொழிற்கருமை' கூறுங் கிளவி ஏழினுள்ளும் ஆறு கிளவியும் தலைவி கூற்றாய்க் கூறி, இது கவிக்கூற்றாய்க் கூறியது என்னை யெனின், அயன்மாக்கள் தன்மையைக் கற்புடைமகளிர் கூறுவது இயல்பன்றாகலின், அவர் கூறாரென்னும் ஒழுக்கம்பற்றிக் கவிக்கூற்றாக் கூறியதென் றுணர்க. இக்கருத்தானன்றே, 'ஊர்துஞ்சாமை' என்னுங் கிளவிச் செய்யுளில், 'தாம் கண்ணனையர் தமைப்பிரிந்தோ ' என ஆடவரை நீக்கி மடவார் செயலாய்க் கூறியதூஉம் என்றுணர்க.
[1]'அடிக்கண் ணதிருங் கழலரி கேசரி தெவ்வனுங்கக்
கொடிக்கண் ணிடியுரு மேந்திய தென்னவன் கூடலன்னாய்!
வடிக்கண் ணிரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர்
துடிக்கண்ணி ரண்டுங்கங் குற்றலை யொன்றுந் துயின்றிலவே.'
என இறையனார் அகப்பொருள் உரையிற் காட்டியவதனானும் உணர்க.
-----
[5] இறையனார் அகப்பொருள் - (௩0) 30.
----------
---------- (205. காவலர் கடுகுதல் - முற்றும்) ----------
206. நிலவு வெளிப்படுதல் :
நிலவு வெளிப்படுதல் என்பது, தலைவன் வருதற்கு இடையூறாய் நிலவு வெளிப்படுதல்.
தெண்பாற் கதிர்முத்த வெண்ணகை யாய்திகி ரிக்கிரிசூழ்
மண்பாற் புகழ்வைத்த வாணன்தென் மாறைநம் மன்னர்பொற்றேர்
பண்பாற் பரிக்கும் பரிவரு மாறென் பரந்தநிலா
வெண்பாற் கடலில்வை யம்பதி னுலு மிதக்கின்றவே. (206)
(இ - ள்.) தெளிவாய்ப் பால்போன்ற கதிரையுடைய முத்தம்போன்ற வெள்ளிய நகையை யுடையாய்! பரந்த நிலவாகிய வெண்பாற்கடலின் உலகம் பதினாலு மிதவா நின்றன; ஆதலாற் சக்கரவாளகிரி சூழ்ந்த புவியிடத்துப் புகழை வைத்த வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் நம் மன்னரது பொற்றேரைக் குணத்தினாற் பரிக்கும் பரிகள் வருமாறு எப்படி? என்றவாறு.
திகிரிக்கிரி - சக்கரவாளம். பண்பு - குணம். பரித்தல் - சுமத்தல். பரி - குதிரை. வையம் என்பது தேர்க்கும் பேராதலின், முன் பதினாலு தேர் மீது நின்றன கண்டு நம் மன்னர் பொற்றேர் பரிக்கும் பரி வருமாறு என் என ஓர் பொருள் தோன்றியது காண்க.
நிலவு வெளிப்படுதல் பதினாலு நாழிகைக்குமேற் கூறுவதென் னெனின், மதித்திங்களும் பிறைத்திங்களும் தம்மிற் கலக்கின்ற நாள் அப்பதினைந்தில் இது மதித்திங்க ளாதலால் இம் மதித்திங்கட்கு முற்கூறும் பிறைத்திங்கட்குப் பிற்கூறும் களவில் இரவுக் குறிக்கு உரித்தாகலானும் மற்றைத் தினம் அட்டமிப் பக்கமாகலானும் என்று உணர்க.
[1]'திங்க ளிரண்டி னகமென மொழிப.’
என்னும் இறையனார் அகப்பொருட்சூத்திர வுரையா னுணர்க.
-----
[6] இறையனார் அகப்பொருள் - (௩௨) 32.
----------
---------- (206. நிலவு வெளிப்படுதல் - முற்றும்) ----------
207. கூகை குழறுதல் :
கூகை குழறுதல் என்பது, கூகை குழறக்கேட்ட தலைவி அஞ்சிக் கூறுதல்.
நம்பே றுடைமை யிருக்கின்ற வாகடல் ஞாலத்துள்ளோர்
தம்பே றெனவந்த சந்திர வாணன் தரியலர்போல்
வம்பேறு கொங்கை மயிலிய னாமஞ்ச மன்றமராங்
கொம்பேறு நள்ளிருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே. (207)
(இ - ள்.) கச்சேறி யிருக்கப்பட்ட கொங்கையை யுடைய மயில்போன்ற இயலையுடையாய்! கடல்சூழ்ந்த வுலகத்துள்ளோர் தம் தவப்பேறாய் வந்த சந்திரவாணன் தரியலர்போல நாம் அஞ்சத்தக்கதாக வெளியிலிருக்கும் மராமரத்தின் கிளையிலேறி இடையிருளின்கண்ணே கூகைகள் குழறாநின்றன; நமது நல்வினைப் பேறு இருக்கின்றவாறு நன்றாயிருந்தது என்றவாறு.
பேறு இரண்டும், நல்வினைப்பேறு. வம்பு - கச்சு. மன்றம் - வெளி. நள்ளிருள் - இடையாமம். 'நன்றாயிருந்தது' என்னுஞ் சொல் வருவித்துரைக்கப்பட்டது. குறிப்புமொழியதனாற் றீதாயிருந்ததென்பது பெறப்பட்டது. மயிலியல் - அன்மொழித் தொகை; அண்மைவிளி. மராங்கொம்பு - ஆச்சாக்கொம்பு.
---------- (207. கூகை குழறுதல் - முற்றும்) ----------
208. கோழி குரல்காட்டுதல் :
கோழி குரல் காட்டுதல் என்பது, இருவர்க்கும் இடையூறாய்க் கோழி குரல் காட்டுதல்.
மன்பதை யுய்ய வருந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பர்
கொன்பதி வேல்வலங் கொண்டுவந் தால்தங்கள் கோனடந்தான்
என்பது தேறி யிடையிரு ளூரை யெழுப்பும்வெம்முள்
பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே. (208)
(இ - ள்.) மக்கட்பரப்பு உய்யும்படி வரும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பர் அச்சம் பதிந்த வேலை வலங் கையிற்கொண்டு வந்தால், வெவ்விய முள்ளையுடைய அழகுபொதிந்த தாளையும் வளைந்த வாயையும் செய்ய சூட்டையும் உடைய வலியபுள்ளாகிய கோழியினம் தங்கள் கோனாகிய முருகவேள் நடந்துவந்தான் என்பதை அறிவில் தெளிந்து இடையிருளில் ஊரை யெழுப்பும் என்றவாறு.
மன்பதை - மக்கட்பரப்பு. கொன் - அச்சம். தங்கள் கோன் - முருகவேள். பொன் - அழகு.
---------- (208. கோழி குரல்காட்டுதல் - முற்றும்) ----------
இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற் கருமை ஏழிற்கும் ஒவ்வொன்றுக்கு நந்தான்கு நாழிகையாகக் கொள்வது.
இத்துணையும் ஒன்பதநாட் செய்தியென் றுணர்க.
--------------------
1.14. இரவுக்குறி இடையீடு முற்றிற்று.
-------------------------
1.15. வரைதல் வேட்கை (209-227)
அஃதாவது, இவ்வாறு இடையீடு பட்டதனாற் பத்தா நாள் தலைவி வரைதல் வேட்கையாற் கூறுவது.
[1]‘அச்ச முவர்த்த லாற்றா மையென
மெச்சிய வரைதல் வேட்கைமூ வகைத்தே.'
என்னுஞ் சூத்திரவிதியால் வரைதல்வேட்கை மூவகைப்படும்.
-----
[1.15-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௪௭) 47.
----------
209. தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல் :
விண்டார் பதிகொண்ட வேற்படை வாணன் விரைகமழ்பூந்
தண்டா மரைமங்கை தங்கிய தஞ்சைநின் தாயர்தம்மோ
டுண்டா கியமுனி வோவன்றி யாயத்தொ டுற்றதுண்டோ
வண்டார் குழலிசொல் லாய்செல்வ தேதுன் மனத்திடையே. (209)
(இ - ள்.) பகைவருடைய பதியைக்கொண்ட வேற்படையையுடைய வாணனது மணங் கமழ்கின்ற பொலிவு வாய்ந்த தண்ணிய தாமரைமலரில் இருக்கும் மங்கை தங்கிய தஞ்சையிலிருக்கின்ற வண்டார் குழலி, நின் தாயர் தம்மாலுண்டாகிய முனிவோ? அல்லது நின் ஆயக்கூட்டத்தாரால் வந்த இடையூறுண்டோ? உன் மனத்திடை நிகிழ்கின்ற துன்பம் யாதோ? சொல்வாயாக என்றவாறு.
விண்டார் - பகைவர். தண்டாமரை மங்கை - திருமகள். வண்டார் குழலி - அண்மைவிளி. ஆல் உருபு இரண்டிடத்தும் ஓடுவாய்த் திரிந்தன.
[1]'மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.'
என்றாற்போலக் கொள்க.
-----
[209-1] குறள். வாய்மை - (௫) 5.
----------
---------- (209. தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல் - முற்றும்) ----------
210. அருமறை செவிலி யறிந்தமை கூறல் :
அருமறை செவிலி அறிந்தமை கூறல் என்பது, தலைவி யரிய களவொழுக்கத்தைச் செவிலி யறிந்தமை பாங்கிக்குக் கூறல்.
மாணிக்க மென்கொம்ப ரென்சொல்லு கேன்தஞ்சை வாணன்வெற்பர்
பேணிப் புணர்ந்து பிரிந்தபின் தோன்றலும் பேதைமுகம்
பாணித்த லின்றி மதிகண்டு நாணிய பங்கயம்போல்
நாணிக் கவிழ்ந்தத னாலறிந் தாளன்னை நங்களவே. (210)
(இ - ள்.) மெல்லிய மாணிக்கக் கொம்புபோல்வாய்! யான் யாது சொல்லுவேன், தஞ்சைவாணன் வெற்பராகிய தலைவர் நம்மை விரும்பிப் புணர்ந்து பிரிந்துபோய்ப் பின்னும் மனைக்கண் நீர்வேட்ட காரணம்போலத் தோன்றலும், அவரைக் கண்டவுடன் உன்னுடைய அறிவில்லா முகம் நீட்டித்தலின்றி, மதியைக்கண்டு நாணிய பங்கயம்போல, நாணிக் கவிழ்ந்தபடியினாலே நம் களவை அன்னை யறிந்தாள் என்றவாறு.
‘மென்மாணிக்கம்' என இயையும். கொம்பர் - அண்மைவிளி. பேணி - விரும்பி. பாணித்தல் - நீட்டித்தல், நாணல் - குவிதல்.
களவில் தாயறிந்தாள் என்று கூறல் வழுவெனில், வழுவன்று. என்னை, இரவுக்குறியின் இடையீடு பட்டவதனால் வரைதல் வேட்கை தலைவிக்குப் பிறந்தது. பிறக்கவே, பாங்கியொடு வருந்தொழிற்கருமை முதலிய கூறித் தலைவன் வரவை விலக்குவித்தலின், அருமறை செவிலி யறிந்ததாகக் கூறவே, தலைவன் விரைந்து வரைந்துகொள்வ னென்று கருதித் தலைவி தானே கூறியதல்லது செவிலியறிந்தா ளல்லளென்று உணர்க. அன்றி, அறிந்தாளெனின் வரைவியலில், 'செவிலி தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதல்' என்னும் கிளவிக்கு வழுவாம். அன்றியும், செவிலி வெறியாடுதல் முதலியனவற்றால் தலைவிக்கு உற்ற நோய் யாதோ என்று வினவினாள் என்று ஆண்டுக் கூறலின், ஈண்டு அறிந்து வைத்து அங்ஙனம் வினாவில் வினாவழு வருமாதலானும் செவிலி அறிந்தாளல்லள் என்றுணர்க.
---------- (210. அருமறை செவிலி யறிந்தமை கூறல் - முற்றும்) ----------
211. தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல் :
தலைமகன் வருந் தொழிற்கு அருமை சாற்றல் என்பது, தலைவி தலைமகன் வருந்தொழிற்கு அருமையைப் பாங்கிக்குக் கூறுதல்.
ஓவலில் வாயன்னை ஞாளியிவ் வூர்க ணுறங்கினுமூர்க்
காவலர் காய்வர் நிலாமதி காலுங் கடுங்குடிஞைச்
சேவலும் வாரண முந்தஞ்சை வாணனைச் சென்றிறைஞ்சா
மேவலர் போல்வெய்ய வாயடை யாவென் மெலிவறிந்தே. (211)
(இ - ள்.) ஒழிவில்லாத வாயையுடைய அன்னையும் ஞாளியும் இவ்வூரும் கண்ணுறங்கினும் ஊர்க்காவலர் அயலார் யாரென்று சினந்து திரிவார்கள்; மதி நிலவைக் காலும்; தஞ்சைவாணனைப் போய் வணங்காத பகைவரைப்போல என் மெலிவறிந்து கடிய கூகைச்சேவலும் வாரணமும் வெய்ய வாயடையா என்றவாறு.
பாங்கி - முன்னிலையெச்சம். ஓவல் - ஒழிதல். ஞாளி - நாய். காலுதல் - உமிழ்தல். 'மதிநிலா' என இயையும். குடிஞை - கூகை. சேவல் - ஆண்புள். வாரணம் - கோழி. 'மெலிவறிந்து' என்பதனாற் காரணத்தைக் காரியமாக உபசரிக்கப்பட்டது.
---------- (211. தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல் - முற்றும்) ----------
212. தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல் :
நம்பால் நலனுண்ட நம்பா தகர்தந் நகர்வினவித்
தம்பா லுடன்சென்று சார்குவ மோதரி யாரைவென்று
வம்பார் கழல்புனை வாணன்தென் மாறை வளரும்வஞ்சிக்
கொம்பா கியமருங் குற்கரும் பாமொழிக் கோமளமே. (212)
(இ - ள்.) தரியாரை வென்று வீரத்தால் கச்சார்ந்த கழலையணிந்த வாணன் தென்மாறை நாட்டு வளரும் வஞ்சிக் கொம்புபோன்ற மருங்குலையும் கரும்புபோன்ற மொழியினையும் உடைய கோமளமே! நம்மிடத்து இன்பத்தையுண்ட நம்முடைய பாதகர் இருக்கும் நகரம் வினவி இருவரும் உடன்சென்று அவர் தம்பாற் சேர்குவம், நீ யஞ்சலை என்றவாறு.
தரியலர் - பகைவர். வம்பு - கச்சு. ஓகாரம் - அசைநிலை.
---------- (212. தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல் - முற்றும்) ----------
213. பாங்கி யிறைவனைப் பழித்துரைத்தல் :
வறியார் புகழ்தஞ்சை வாணன்தென் மாறை மடந்தையன்னாள்
அறியாள் துயர்முன் னறிந்தவர் தாமத னாலழலின்
பொறியா ருயிர்வெம் பணிமா மணியும் புதையிருள்கூர்
நெறியா ரருள்பெற நாநடு நாளிடை நீந்துதுமே. (213)
(இ - ள்.) மிடியுடையார் புகழப்பட்ட தஞ்சைவாணனது தென்மாறை நாட்டு மடந்தைபோல்வாள் முன்னர் வேட்கை நோயை யறியாள், அவர் தாம் அறிந்தவதனால் நெருப்பின் பொறிபோன்ற உயிர்ப்பையுடைய வெய்ய நாகம் ஈன்ற மாணிக்கத்தையும் புதைக்கப்பட்ட இருள் செறிந்த நெறியில் வரப்பட்டவரது அருளைப்பெற நாம் இடையாமமாகிய வெள்ளத்திடையே நீந்துவம் என்றவாறு.
அவரது அருளைப் பெறவேண்டி நாம் இறந்துபடாது துன்பப்படுவோம் எனவே, இயற்பழித்த லாயிற்று. வறியார் - மிடியார். உயிர் - உயிர்ப்பு. பணி - பாம்பு. மாமணி - மாணிக்கம். புதைத்தல் - மறைத்தல். நெறி - வழி. நடுநாள் - இடையாமம். நீந்தல் - துன்பமுறல்.
---------- (213. பாங்கி யிறைவனைப் பழித்துரைத்தல் - முற்றும்) ----------
214. இறைவி இறையோன்தன்னை நொந்தியற்பட மொழிதல் :
இறைவி ...... இயற்பட மொழிதல் என்பது, பாங்கி இயற் பழித்தது பொருளாய்த் தலைவி இயற்பட மொழிதல்.
புணரா விரகமும் போகா இரவும் புணர்முலைமேல்
இணரார் பசப்பும் பிறவுமெல் லாமிருள் கூர்ந்தறல்போல்
வணரார் குழற்பிறை வாணுத லாய்தஞ்சை வாணன்வெற்பர்
உணரா திருப்பது வேறொன்று மல்லநம் மூழ்வினையே. (214)
(இ - ள்.) அறல்போல் இருள்கூர்ந்து கடைகுழன்று ஆர்ந்த குழலையும் பிறைபோன்ற வாணுதலையும் உடையாய்! கூடாத விரகமும், கழியாத இரவும், நெருங்கிய முலைமேற் கொன்றைப் பூங்கொத்து வைத்தாற்போன்ற பசப்பும், ஒழிந்த துன்பங்களும் இவையெல்லாம் தஞ்சைவாணன் வெற்பர் அறியாதிருப்பது வேறொன்றும் அல்ல; நம் ஊழ்வினையாதலால் அவர்மேற் குறையின்று என்றவாறு.
புணர்தல் - கூடுதல். புணர்தல் - நெருங்குதல். இணர் - பூங் கொத்து; பசப்புப் பொன்னிற மாதலால் கொன்றை என வருவித்தது. வணர் - கடை குழன்றல். உணர்தல் - அறிதல். ஊழ் வினை - பழவினை.
---------- (214. இறைவி இறையோன்தன்னை நொந்தியற்பட மொழிதல் - முற்றும்) ----------
இத்துணையும் பத்தாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
215. கனவு நலிபுரைத்தல் :
கனவு நலிபு உரைத்தல் என்பது, தலைவன் கனவிற் கூடினானாக, விழித்தபின்பு பொய்யாய்ப் போன துன்பத்தைப் பதினொன்றா நாள் பாங்கியுடன் தலைவி கூறல்.
[1]இல்லா வருந்துயி லுண்டா யவரும்வந் தெய்திற்கங்குல்
பொல்லாத சேவற் கடுங்குர லார்த்துப் புவிபுரக்கும்
மல்லார் புயன்தமிழ் வாணன்தென் மாறை மருவலர்போல்
அல்லாமை நெஞ்சந் தடுமாற நல்லிடை யாக்கியதே. (215)
(இ - ள்.) பிரிவில் இல்லா அருந்துயிலு முண்டாய வரும் வந்தெய்தின், கங்குலில் பொல்லாமையாகிய கோழி, கொடிய குரலை யார்த்துப், புவியைக் காக்கும் மற்றொழிலார்ந்த புயத்தையுடைய தமிழைக்கற்ற வாணன் தென்மாறை நாட்டைச் சேராதார்போல, நன்கல்லாத என் நெஞ்சம் தடுமாற்றமாக நல்ல இடையூறாக்கியது என்றவாறு.
தலைவன் பிரிந்தகாலை துயில் அரிதாதலால், 'இல்லா வருந்துயில்' என்றும், தலைவன் வந்தெய்தல் அரிதாதலால், 'அவரும் வந்தெய்தில்' என்றும், இன்பத்தைக் கெடுத்துத் துயிலெழுப்பலால், 'பொல்லாத சேவல்' என்றும், மிகுந்த துன்பத்தைக் கொடுத்தலின், 'நல்லிடை' என்றும் கூறியவாறு. துயிலும் என்னும் எதிரது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது.
பாங்கி முன்னிலை யெச்சம். இது, 'கனவொடு மயங்கல்' என்னும் மெய்ப்பாடு.
-----
[215-1] அகப்பொருள் விளக்கத்தில் இச் செய்யுட்கு மாறாக,
'சினவாகை சூடிச் செருவென்ற வாணன்தென் மாறையினம்
மனவாழ் வனையவர் வந்துநல் யாம மணந்ததெல்லாம்
நனவா மெனவே மகிழ்ந்தேன் விழித்தொன்று நான்கண்டிலேன்
கனவாய் முடிந்தது பின்னையென் னேயென்ன கைதவமே.'
என்னும் செய்யுள் காணப்படுகிறது.
----------
---------- (215. கனவு நலிபுரைத்தல் - முற்றும்) ----------
216. கவினழிபுரைத்தல் :
கவின் அழிபு உரைத்தல் என்பது, விரகத்தால் தலைவி தன் நலனழிந்ததனைப் பாங்கியொடு கூறல்.
வாளினு நீள்விழி வாணுத லாய்தஞ்சை வாணன்தெவ்வின்
நாளினு நாளு நலந்தொலை வேனகை யாரயில்வேல்
வேளினு மேர்நல்ல வெற்பனு நீயுமென் மேனியினும்
தோளினு நோயறி யீரறி யாததென் தொல்வினையே. (216)
(இ - ள்.) வாளினும் நீண்ட விழியையும் ஒளி பொருந்திய நுதலையும் உடையாய், தஞ்சைவாணனது பகையைப் போலச் சென்ற நாளினும் வருநாள் மிகவும் நலனழிதலையுடைய எனது மேனியினும் தோளினும் உற்ற வேட்கைநோயை, ஒளியார்ந்த கூர்வேலையும் வேளினு மிக்க அழகையும் உடைய வெற்பனும் நீயும் அறிதல்செய்யீர்; நீர் அறிதல் செய்யாதது யாதெனின் என் பழவினை என்றவாறு.
'நலந்தொலைவேன் மேனியினும்' எனவும், நோய் நகையா ரயில்வேல்' எனவும், 'நீயுமறியீர்' எனவும் மாறுக. நோய் என்புழி இரண்டனுருபு தொக்கது. 'தோளினுநோயறிவீர்' என்று பாட மோதுவாருமுளர்.
தெவ் - பகை. நகை - ஒளி. அயில் - கூர்மை. தொல்வினை - பழவினை. நாளும் என்புழி உம்மை அசைநிலை.
---------- (216. கவினழிபுரைத்தல் - முற்றும்) ----------
217. தன்துயர் தலைவற் குணர்த்தல் வேண்டல் :
தன் துயர் தலைவற்கு உணர்த்தல் வேண்டல் என்பது, தலைவி தன் துயரைத் தலைவற்கு அறிவிக்கவேண்டும் என்று பாங்கியொடு கூறல்.
வரைப்பால் மதுரத் தமிழ்தெரி வாணன்தென் மாறைவையை
நுரைப்பால் முகந்தன்ன நுண்டுகி லாயிந்த நோயவர்க்கின்
றுரைப்பா ருளரே லுயிரெய்த லாநமக் கூர்திரைசூழ்
தரைப்பால் வளரும் புகழெய்த லாமவர் தங்களுக்கே. (217)
(இ - ள்.) பொதியவரையிடத்துப் பிறந்த மதுரமாகிய தமிழை ஆராய்ந்த வாணன் தென்மாறையைச் சூழ்ந்து வரும் வையையாற்றின் நுரையையும் பாலையும் முகந்துகொண்டாலொத்த நுண்ணிய நூலாற்செய்த துகிலையுடையாய், யான் வருந்தும் இந்த நோயைத் தலைவர்க்கு இன்று உரைப்பாருண்டாயின் நமக்கு உயிர் எய்தலாம்; சொல்வார்க்குப் பயன் யாதெனின், அவர் தங்களுக்கு நடக்குந் திரையையுடைய கடல் சூழ்ந்த புவியினிடத்தில் வளரும் புகழெய்தலாம் என்றவாறு.
வரை - பொதியமலை. பால் - இடம். நுரைப்பால் - உம்மைத்தொகை. ஊர்திரை - வினைத்தொகை. திரை - ஆகுபெயர். தரை - நிலவுலகம். நுண்டுகில், [1]'குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி' என்றாற்போல, ஒற்றுமை நயம்பற்றி, நுண்ணிய நூலாற் செய்த துகில் என்று கொள்க.
-----
[216-1] திருமுரு. – (௧௯௯) 199.
----------
---------- (217. தன்துயர் தலைவற் குணர்த்தல் வேண்டல் - முற்றும்) ----------
218. துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் :
துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் என்பது, யான் துன்புறலைத் தலைவர்க்கு நீ சென்று சொல்லெனத் தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கி சொல்லல்.
ஒல்லென வேயென் னுறுதுயர் தாமும் உணரும்வண்ணம்
சொல்லென நீயிது சொல்லியென் பேறுன் துயரமெல்லாம்
வல்லென வேகொண்ட கொங்கையர் வேள்தஞ்சை வாணன்வெற்பில்
அல்லென ஆர்குழ லாயறி யாரல்ல அன்பருமே. (218)
(இ - ள்.) விரைவினுள் இது விரைவென்ன என்னுடைய மிக்க துயரைத் தலைவர் தாமும் உணரும்வண்ணம் என்னைச் சொல்லென்று நீ இது சொல்லிப் பெறும் பயன் யாது? சூதென்று சொல்ல ஒப்புமைகொண்ட கொங்கையர்க்கு வேளாகிய தஞ்சைவாணன் வெற்பில் இருளென்று சொல்லப் பொருந்திய குழலினை யுடையாய், உன் துயர மெல்லாம் அன்பரும் அறியாரல்லர் என்றவாறு.
ஒல்லெனல் - விரைவின்கண் வந்தசொல். உறுதுயர் - மிக்க துயர். வல் - சூது. அல் - இருள். ஆர்ந்த - பொருந்திய.
---------- (218. துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் - முற்றும்) ----------
219. அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி :
அலர் பார்த்து உற்ற அச்சக் கிளவி என்பது, உற்றாருஞ் சொல்லும் அலரைக் கருதி அதனாலுற்ற அச்சத்தால் தலைமகள் கூறுஞ் சொல்.
மலருந் தொடைவஞ்சி வஞ்சக மாதரு மாரனும்வாய்
அலருந் தடங்கை யலருந் தொடாநிற்ப வஞ்சிநெஞ்சம்
பலரும் புகழ்தஞ்சை வாணர் பிரானைப் பணியலர்போல்
புலரும் பெயருங்கண் ணீர்புல ராது புலரினுமே. (219)
(இ - ள்.) மலருமாலையுடைய வஞ்சிபோல்வாய், ஊரிலுள்ள வஞ்சகமாயிருக்கப்பட்ட மாதரும் மாரனும் வாயலரும் பெரிய கையலருந் தொடாநிற்ப அஞ்சி நெஞ்சமானது, பலரும் புகழப்பெற்ற தஞ்சைவாணர் குலத்துச் சிறந்தானைப் பணியாதார்போலப் புலரும்; நெஞ்சு புலரினும் பெயரப்பட்ட கண்ணீரானது புலராது என்றவாறு.
வஞ்சி - அண்மைவிளி, மாரன் - மன்மதன். வாயலர் - தூற்றுஞ்சொல். கையலர் - மாரன் அம்பாக எய்யும் மலர். பெயர்தல் - நிலைவிட்டுப் பிரிதல். 'நெஞ்சமும் புலரும்' எனவும், 'புலரினும் பெயருங் கண்ணீர்' எனவும் இயையும்.
---------- (219. அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி - முற்றும்) ----------
220. ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி :
ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி என்பது, வழியைப்பார்த்து அவ்வழி ஏதத்தால் உண்டாகிய அச்சத்தால் தலைவி கூறுஞ் சொல். பார்த்தல் - கருதல்.
அறியுங் கரியும் பொருநெறிக் கோர்துணை யாயவர்மேல்
சொறியுந் திவலை துடைக்கவென் றோகுழை தோய்ந்துநஞ்சும்
வரியும் பயில்கண்ணி வாணன்தென் மாறைநம் மன்னர்வந்து
பிரியும் பொழுதெல்லி வாய்வினை யேன்மனம் பின்செல்வதே. (220)
(இ - ள்.) குழையைத் தொட்டு நஞ்சும் வரியும் நெருங்கும் கண்ணாய்! வாணன் தென்மாறையி லிருக்கும் நம் மன்னர் இரவின்கண் வந்து பிரியும்பொழுது பாவியேன் மனம் அவரைப் பிரியாமற் றொடர்ந்துசெல்வது சிங்கமும் யானையும் பொருகின்ற வழிக்கு ஒரு துணையாய் அவர்மேற் சொரியப்பட்ட மழைத்திவலையைத் துடைக்க வென்றோ, சொல்வாயாக என்றவாறு.
அரி - சிங்கம். கரி - யானை. கண்ணி - அண்மைவிளி. எல்லி - இரவு. நஞ்சு - விடம். வரி - செவ்வரி. பயில்கண் - நெருங்குங் கண்.
---------- (220. ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி - முற்றும்) ----------
221. காம மிக்க கழிபடர் கிளவி :
காம மிக்க கழி படர் கிளவி என்பது, வேட்கை மிக்குச் சிறப்பச் சிந்தித்துச் சொல்லுஞ் சொல்.
இக்கிளவிச் செய்யுட்குக் கருத்து : கடல், கானல், பொழில், விலங்கு, புள் இவற்றை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்.
[1]மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே. (221)
இக்கிளவிச் செய்யுள் ஆங்கு, 'நெஞ்சழிதல்' என்னும் மெய்ப்பாடென்று உணர்க.
-----
[221-1] கோவையார் - (௧௭௪) 174.
----------
---------- (221. காம மிக்க கழிபடர் கிளவி - முற்றும்) ----------
222. தன்னுட் கையா றெய்திடு கிளவி :
தன்னுட் கையா றெய்திடு கிளவி என்பது, தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன்மே லிட்டுச் சொல்லுஞ் சொல்.
[1]விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாமங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. (222)
(இதுவும் பிறசெய்யுட் கவி.)
இக் கிளவிச் செய்யுள் எம் மெய்யாயினும் 'ஒப்புமை கோடல்' என்னும் மெய்ப்பாடென்று உணர்க. [2]'இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்திற் காண்க.
-----
[222-1] கோவையார் - (௧௭௭) 177.
[222-2] தொல். மெய்ப்பாட்டியல் - (௨௨) 22.
----------
---------- (222. தன்னுட் கையா றெய்திடு கிளவி - முற்றும்) ----------
223. நெறி விலக்குவித்தல் :
நெறி விலக்குவித்தல் என்பது, தலைவி தலைவன் வரும் வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறல்.
ஏவற்கருத்தா, இயற்றுங் சருத்தா, கருவிகருத்தா, கருமகருத்தா எனக் கருத்தா நால்வகையாய்க் கூறப்படும். அவற்றுள் பாங்கியை இயற்றுங் கருத்தாவாக்கி, தலைவியை ஏவுங்கருத்தாவாய்க் கூறவின், 'நெறிவிலக்கல்' என்னாது, 'நெறி விலக்குவித்தல்' எனக் கூறியதென்று உணர்க. இவ்வாறே மேல்வரும், 'குறிவிலக்குவித்தல்' முதலாயினவற்றிற்குங் கொள்க.
ஈன்றா ளினுமெனக் கன்புடை யாய்சென் றிரந்துகொண்டு
சான்றாண்மை யன்பர் தமக்குரை நீதஞ்சை காவலனைத்
தேன்றாழ் வரைத்தமிழ் சேர்த்திய வாணனைச் சேரலர்க்கும்
தோன்றா விருங்கங்குல் நீவரு மாறொழி தோன்றலென்றே. (223)
(இ - ள்.) ஈன்றதாய் அன்பினும் என்னிடத்து அன்பு மிக்குடையாய்! தஞ்சை காவலனைத் தேன்றாழ்ந்த பொதியமலையில் தமிழைச் சேர்த்திய வாணனைச் சேராத பகைவர்க்குந் தோன்றாத பெரிய கங்குலிடத்துத் தோன்றலே! வரும்வழியையொழி யென்று மாட்சிமையுடைய அன்பர்க்கு நீ சென்று வேண்டிக்கொண்டு உரைப்பாயாக என்றவாறு.
உம்மை - சிறப்பும்மை. எனக்கு என்புழி வேற்றுமை மயக்கம். சான்றாண்மை - மாட்சிமை. தாழ்தல் - தங்குதல். வரை - பொதியவரை. சேரலர் - பகைவர். உம்மை இழிவு சிறப்பு. தோன்றல் - அண்மைவிளி.
---------- (223. நெறி விலக்குவித்தல் - முற்றும்) ----------
224. குறி விலக்குவித்தல் :
குறி விலக்குவித்தல் என்பது, தலைவி தலைவன் வரும் இரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறல்.
வெற்றிய வாலிய வாணர் பிரான்தஞ்சை வெற்பகத்திப்
பெற்றிய சோலைப் பிறங்கிருள் வாரல்மின் பேதையின்னும்
முற்றிய வேனற் படுகிள்ளை யோட்டு முறைமையளென்
றெற்றிய காதலி னாலிசைத் தாளன்னை யென்றுரையே. (224)
(இ - ள்.) தலைவி இன்னும் முற்றிய தினையிடத்து வீழுங் கிளியோட்டும் முறைமையளென் றிரங்கிய காதலினால் அன்னை சொன்னாளாதலால், வெற்றியை விரும்பிய வாணர்பிரானது தஞ்சை வெற்பிடத்து இவ்விடையீடு படுவதாகிய சோலையிற் செறிந்த இருட்குறியிடத்து வாராதொழிமினென்று அன்பர்க்கு நீ கூறுவாயாக என்றவாறு.
பாங்கி முன்னிலை அதிகாரப்பட்டு வருதலாற் கொள்க. அன்பர்க்கு என்பது அவாய் நிலையான் வந்தது. பிறங்கல் - செறிதல். எற்றல் - இரங்கல். இசைத்தல் - கூறுதல். வாரன்மின் - ஒருமைப் பன்மை மயக்கம். என்னை, [1]'வயக்குறுமண்டிலம்' என்னும் பாலைக்கலியில், 'இரத்திராலையமற் றிவணிலைமை கேட்டீமின்' என்றாற்போலக் கொள்க.
[2]'ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே.'
என்னுஞ் சூத்திரவிதியானும் உணர்க.
-----
[224-1] கலித். பாலை - (௨௪) 24.
[224-2] தொல். சொல். எச்சவியல் - (௬௫) 65.
----------
---------- (224. குறி விலக்குவித்தல் - முற்றும்) ----------
225. வெறி விலக்குவித்தல் :
வெறிவிலக்குவித்தல் என்பது, தலைவி, தாய் வெறியாடுதல் கொண்டாள் என்று தலைவர்க்குக் கூறி வரவு விலக்கெனத் தோழியோடு கூறல்.
மின்னா திடித்தென அன்னைகொண் டாள்வெறி விந்தைமங்கை
மன்னாண்மை மன்னிய வாணன்தென் மாறை வரையில்வண்டியாழ்
என்னா அசுண மிறைகொள்ளு நாட ரெனக்கருளால்
முன்னா ளருளிய நோதணிப் பானின்று மொய்குழலே. (225)
(இ - ள்.) மொய்குழலே! வெற்றி மங்கையால் அரசாண்மை நிலைபெற்ற வாணன் தென்மாறையில் வண்டிசையை யாழிசையென் றெண்ணி அசுணப்புட்கள் தங்குநாடர் எனக்கருளினால் முன்னாளருளிய நோயைத் தணிக்கும் பொருட்டாக, இன்று அன்னை மின்னாதிடித்தது போலக் காரணமின்றி வெறியாட்டாளனை வினாவ உட்கொண்டாளென்று அன்பர்க்கு உரைத்து வரவு விலக்குவாயாக என்றவாறு.
வெறி - வெறியாட்டாளனை வினாதல். விந்தை மங்கை - வெற்றிமாது. மன்னாண்மை - அரசாண்மை. வண்டு, யாழ் இரண்டும் ஆகுபெயர். இறைகொள்ளுதல் - தங்குதல். நோய் - வேட்கை நோய். தணிப்பான் - வினையெச்சம். மொய்குழல் - வண்டு மொய்க்குங் குழல்.
---------- (225. வெறி விலக்குவித்தல் - முற்றும்) ----------
226. பிறர் வரைவு விலக்குவித்தல் :
பிறர் வரைவு விலக்குவித்தல் என்பது, தலைவி பிறர்வரைவைத் தலைவர்க்குக் கூறி வரைவு விலக்கெனப் பாங்கியொடு கூறல்.
பொருபால் மதியினைப் போன்மருப் பியானையிற் பொன்னொடின்பம்
தருபால் மொழிவஞ்சி சாரவந் தார்தஞ்சை வாணன்வெற்பின்
ஒருபால் நொதுமல ரென்னவெந் தீயுலை யுற்றசெவ்வேல்
இருபால் மருங்கினுங் கொண்டெறிந் தாலொத்த தென்செவிக்கே. (226)
(இ - ள்.) இன்பத்தைக் கொடுக்கும் பால்போலும் மொழியையுடைய வஞ்சிக்கொம்பு போல்வாய்! தஞ்சைவாணன் வெற்பில் பொரப்பட்ட வெண்மதியை யொக்கும் மருப்பையுடைய யானையின்மேல் பொன்னொடு ஓரிடத்தயலார் சாரவந்தாரென்று சொல்ல, அச்சொல் என் செவிக்கு வெய்ய தீயுலையிற் பழுக்கக்காய்ந்த செவ்வேலை இரண்டு பக்கத்திடத்துங்கொண் டெறிந்தாலொத்ததென்று என் அன்பர்க்குக்கூறி அவர் வரைவு விலக்குவாயாக என்றவாறு.
நொதுமலர் - அயலார். பால் - வெண்மை; பால் - பால்; பால் - இடம்; பால் - பக்கம், முறையே காண்க.
---------- (226. பிறர் வரைவு விலக்குவித்தல் - முற்றும்) ----------
227. குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் :
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் என்பது, பெரியோரை வரைவு கூறி வர நமர் எதிர்கோடலைச் செய்யென்று தலைவி பாங்கியொடு கூறல்.
தற்பழி யாமலுஞ் சந்திர வாணன் தமிழ்த்தஞ்சைநங்
கற்பழி யாமலுங் காரண மாகக் கயல்விழிநின்
சொற்பழி யார்நமர் சொல்லுவல் லேசென்று சொல்லலையேல்
இற்பழி யாம்வழி யாநம தாருயிர்க் கேதமுமே. (227)
(இ - ள்.) கயல்போன்ற விழியினையுடையாய்! சந்திரவாணன் தமிழ்த் தஞ்சையில் தலைவன் றன்னைப் பழியாமலும், நமது கற்பு அழியாமலும், இவ்விரண்டுங் காரணமாக வல்லேசென்று பெரியோரை மணமொழிந்து வரவும், நமர் எதிர்கொள்ளவும் தலைவர்க்கும் நமர்க்கும் சொல்லு; நீ சொல்லியக்கால் நமர் நின் சொல்லைப் பழியார்; நீ சொல்லலையேல் நம் மனைக்குப் பழியாம்; நமது ஆருயிர்க்கு ஏதம் வருவதற்கு வழியுமாம் என்றவாறு.
கயல் விழி - அன்மொழித்தொகை. இல் - ஈண்டுக் குலம். ஏதம் - குற்றம். பிறர் வரைவு நேரின் உயிர்போய்விடு மாதலான், 'நமதுயிர்க்கேதம்' என்று கூறியவாறு 'வெறிவிலக்குவித்தல்' முதலிய மூன்று கவியுள்ளும் தலைவற்குக் கூறென்று கூறவில்லையெனின், 'விலக்குவித்தல்' 'கொள்ளுவித்தல்' எனத் தலைவி ஏவலாய்ப் பாங்கி செயலாய்க் கூறியதனானும், 'வரைவுகடா'வினும் இக்கிளவிகளின் பொருள்படத் தலைவற்குக் கூறுதலானும், அதிகாரப்பட்டு வருதலானும் தலைவர்க்குக் கூறென்று கூறியவாறாயிற்று.
---------- (227. குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் - முற்றும்) ----------
[2]'பருவரல் வினவிய பாங்கிக் கிறைவி
அருமறை செவிலி யறிந்தமை கூறலும்
தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றலும்.’
ஆக இரண்டும்,
'அலர்பார்த் துற்ற வச்சக் கிளவியும்
ஆறுபார்த் துற்ற வச்சக் கிளவியும்.'
ஆக விரண்டும், நெறிவிலக்குவித்தல் முதலிய நான்கும் ஆகிய எட்டும் அச்சத்திற்கு உரியன.
'பாங்கி இறைவனைப் பழித்தலும்
துன்புறு பாங்கி சொல்லெனச் சொல்லலும்'
ஆகிய இரண்டும் உவர்த்தற்கு உரியன.
'தலைமக னூர்க்குச் செலவொருப் படுதலும்
பாங்கி யிறைவனைப் பழித்தலும் பூங்கொடி
இறையோன் றன்னைநொந் தியற்பட மொழிதலும்
கனவுநலி புரைத்தலுங் கவினழி புரைத்தலுந்
தன்றுயர் தலைவற் குணர்த்தல் வேண்டலும்
காம மிக்க கழிபடர் கிளவியும்
தன்னுட் கையா றெய்திடு கிளவியும்
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தலும்.’
ஆகிய எட்டும் ஆற்றாமைக்கு உரியன.
-----
[1.15-2] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௪௮) 48.
----------
இத்துணையும் பதினொன்றாநாட் செய்தியென் றுணர்க.
-------------------------
1.16. வரைவு கடாதல் (228-247)
அஃதாவது, பாங்கி தலைவனொடு வரைவு கூறி வினாதல்.
[1]'பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென்
றொருநால் வகைத்தே வரைவு கடாதல்.'
என்னுஞ் சூத்திரவிதியால் வரைவுகடாதல் நான்கு வகைப்படும்.
-----
[1.16-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௪௯) 49.
----------
228. வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் :
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் என்பது, முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலி யறிந்தமை கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும், அதற்குத் தான் மறைத்துக் கூறியதாகவும் தலைவற்குக் கூறுதல்.
இக்கிளவி முதல் 'கவினழி புரைத்தல்' ஈறாகக் கூறிய கிளவிகள் பலவற்றுள்ளும் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவு கடாவியவாறு கண்டுகொள்க.
தளரா இளமுலை தாங்ககில் லாது தளரிடைகண்
வளராத தென்கங்குல் வாரா யெனத்தஞ்சை வாணன்வெற்பா
விளரார் திருநுத லன்னைக்கொர் மாற்றம் விளம்பியுய்ந்தேன்
உளரா மவர்வலை யுட்பட்டு வாழ்வ துணர்ந்தருளே. (228)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! செவிலி என்னை ஈங்கு வாராயென அருகழைத்து, எஞ்ஞான்றும் இறுகிய தன்மை தளராத இளமுலைகளைத் தாங்கமாட்டாது தளர்ந்த இடையினையுடையாள் கங்குலின்கண் துயில்கொள்ளாதது என்னென்று வினவ, வெளுப்பார்ந்த திருநுதலையுடைய அன்னைக்கு ஒரு சொல் மறைத்துச் சொல்லி உய்ந்தேன்; எமக்குள்ளாராகிய தாய்மார் வலையுள் அகப்பட்டு யாங்கள் உயிர்வாழ்தல் உணர்ந்தருள்வாயாக என்றவாறு.
தளரிடை - அன்மொழித்தொகை. கண்வளர்தல் - துயிலு தல். கங்குல் - இரவு. விளரார்தல் - மகட்குத் துயில் வாராமையால் யாது நோயோ என்று துன்பத்தால் திருநுதல் வெளுத்தல். ஓர் மாற்றம் - தலைவி துயிலிடைக் கனவுகண்டு வெருவி யெழுந்தாள், அவ்வச்சத்தினால் துயில் வாராதிருந்தா ளென்னும் மாற்றம். யான் இங்ஙனம் மறைத்துக் கூறாவிடின் என்னுயிர்க்கு ஏதஞ்செய்வ ரென்பது தோன்ற, 'உய்ந்தேன்' என்று கூறியவாறு. எனவே, குறிப்பால் வரைவு கடாதலாயிற்று. 'தாங்கி நில்லாது' என்று பாடமோதி, தளரிடைக்குத் துவளுமிடை யென்று பொருளுரைப்பாரு முளர்.
---------- (228. வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் - முற்றும்) ----------
229. அலரறிவுறுத்தல் :
அலர் அறிவுறுத்தல் என்பது, ஊரில் தலைவியைத் தூற்றும் அலர் விரிந்த தென்று தலைவனுக்கு அறிவுறுத்தல்.
மணிவரை மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பா
பணிமொழி யாளென்னுங் கொள்கொம்பு மூடிப் படர்ந்தயலார்
அணிமனை தோறுங் கொழுந்துவிட் டம்பல் அரும்பிமண்மேல்
தணிவில தாகவிப் போதலர் பூத்ததுன் தண்ணளியே. (229)
(இ - ள்.) மணிவரைபோன்ற மாளிகையையுடைய மாறை வரோதயனாகிய வாணனது வெற்பிலுள்ளவனே! நினது தண்ணளியாகிய வல்லி தலைவியென்னுங் கொள் கொம்பை மூடிப்படர்ந்து, பக்கத் தழகிய மனைதொறும் கொழுந்துவிட்டு, அம்பலென்னும் அரும்பை யரும்பி, மண்மேல் தணிவில்லாததாக இப்போது அலரென்னும் பூவைப் பூத்தது என்றவாறு.
மணிவரை - மாணிக்கமலை. பணிமொழி - மெல்லிய மொழி. கொள் கொம்பு - கொடிபடரக் கொள்ளுங்கொம்பு. அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று. இன்னதின் கண்ணது என்பது அயல் அறியலாகாது என்பது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடையது போலும் பட்டது என விளங்கச்சொல்லி நிற்பது. என்னை, [1]'அம்பலு மலருங்களவு' என்னும் இறையனார் அகப்பொருட்சூத்திர வுரையிற் கண்டுகொள்க. இச்செய்யுள், 'இயைபுருவகம்' எனக்கொள்க.
-----
[229-1] இறையனார் அகப்பொருள் - (௨௨) 22.
----------
---------- (229. அலரறிவுறுத்தல் - முற்றும்) ----------
230. தாயறிவுணர்த்தல் :
தாய் அறிவு உணர்த்தல் என்பது, இக்களவைத் தாய் அறிந்தாள் என்று தலைவற்குக் கூறுதல்.
திரையிற் பவளம் வடவா முகத்தெழுந் தீக்கொழுந்தின்
கரையிற் படருங் கடற்றுறை நாட கயற்கொடிபொன்
வரையிற் றிகழ்வித்த வாணன்தென் மாறை மலர்ந்தமௌவல்
விரையிற் களவையெல் லாமறிந் தாளன்னை மெய்யுறவே. (230)
(இ - ள்.) பவளக்கொடி திரையால், வடவாமுகக் கனலிலெழுங் கொழுந்துபோலக், கரையிலே படருங் கடற்றுறை நாடனே! கயற்கொடியைப் பொன்மலையிலே விளக்குவித்த வாணன் தென்மாறை நாட்டின் தலைவிக்குச் சூட்டிய முல்லைமாலை மணத்தினாலே அன்னை களவை யெல்லாம் உள்ளபடி யறிந்தாள் என்றவாறு.
எனவே, களவொழுக்கத்தில் ஒழுகற்பாலையல்லை யென்று கூறியதாயிற்று. திரை - அலை. இன் இரண்டும் மூன்றனுருபு. என்னை,
[1]'இன்னா னேது வீங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால வென்மனார்.'
என்னுஞ் சூத்திர விதியால் உணர்க. கொழுந்தின் - ஐந்தாம் உருபு உவமப் பொருளின்கண் வந்தது. பொன்வரை - மகாமேரு. நிகழ்வித்தல் - விளக்குவித்தல். மௌவல் - முல்லை. விரை - மணம். மெய்யுற - உள்ளபடி.
-----
[230-1] தொல். சொல். வேற்றுமையியல் - (௧௩) 13.
----------
---------- (230. தாயறிவுணர்த்தல் - முற்றும்) ----------
231. வெறியச்சுறுத்தல் :
வெறி அச்சுறுத்தல் என்பது, அன்னை வெறியாட்டாளனை வினாதல் உட்கொண்டாள் என்று தலைவனுக்கு அச்சமுறுத்திக் கூறல்.
அம்பல் என்பது பெரும்போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலரென்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமை என வேற்றுமை சொல்லப்பட்டதாம்.
மையுற்ற நீலக்கண் மாமங்கை கோன்றஞ்சை வாணன்வெற்பில்
நெய்யுற்ற வேலன்ப நீதணி யாமையி னெஞ்சினுள்ளே
ஐயுற் றயர்வுற்றெம் மன்னையு மாயுமென் னாரணங்கின்
மெய்யுற்ற நோய்தணிப் பான்வெறி யாடல் விரும்பினரே. (231)
(இ - ள்.) மை யெழுதிய நீலமலர்போன்ற கண்ணை யுடைய திருமகட்குக் கணவனாகிய தஞ்சைவாணன் வெற்பில் நெய் தடவிய வேலையுடைய அன்பனே! நீ தலைவிக்குக் கொடுத்த காம வேட்கையாகிய நோயைத் தணியச் செய்யாமையான் அன்னையும் யாயும் எந்நோயோ என்று நெஞ்சினுள்ளே ஐயப்பட்டு அயர்ச்சி யடைந்து, என் ஆரணங்கு போல்வாளது மெய்யுற்ற நோயைத் தணிக்கும் பொருட்டு வெறியாட்டாளனை வினாதல் விரும்பினர் என்றவாறு.
எனவே, வெறியாட்டாளனை வினாதற்கு முன்னமே நீ விரைந்து வரைந்துகொள்வாய் என்பது குறிப்பால் தோன்றிற்று.
மாமங்கை - திருமகள். தணித்தல் - ஆறச்செய்தல். அயர்தல் - கவற்சி. அன்னை - செவிலி. ஆய் - நற்றாய். ஆரணங்கு - ஆகு பெயர். தணிப்பான் - வினையெச்சம்.
---------- (231. வெறியச்சுறுத்தல் - முற்றும்) ----------
232. பிறர் வரைவுணர்த்தல் :
பிறர் வரைவு உணர்த்தல் என்பது, பிறர் வரைவு கூறி வந்ததனைத் தலைவற்கு அறிவித்தல்.
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம்பகுவாய்த்
துடிக்கின்ற திங்களிற் றோன்றுந் துறைவசெஞ் சொற்புலவோர்
வடிக்கின்ற முத்தமிழ் வாணன்தென் மாறையெம் மான்மருங்கை
ஒடிக்கின்ற கொங்கைகண் டாலெவர் நெஞ்சுரு காதவரே. (232)
(இ - ள்.) வாய் விள்ளும் இப்பியிற் பாதி உள்ளும் பாதி வெளியுமாய்த் தோன்றும் நித்திலம், பாம்பினது வெய்யவகிர்ந்த வாயிடத்துத் துடிக்கின்ற திங்களைப்போலத் தோன்றும் நீர்த்துறைவனே, செவ்விய சொல்லையுடைய புலவோர் ஆராய்ந்து குற்ற நீங்கித் தெளிந்த முத்தமிழைக் கற்ற வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் எங்கள் மான் போன்ற தலைவியது இடையை ஒடிக்கின்ற கொங்கையைக் கண்டால் நெஞ்சுருகாதார் யார் என்றவாறு.
வெடித்தல் - வாய்விள்ளுதல். இப்பி - முத்திப்பி. நித்திலம் - முத்து. பைத்தலை - ஆகுபெயர். பகுவாய் - வகிர்வாய். துடித்தல் - நடுங்குதல்; உவமப்பொருட்குத் துடிப்பு யாது எனின், ஒளியால் துடித்தல்போலத் தோன்றல். வடித்தல் - ஆராய்ந்து குற்றம் நீங்கித் தெளிதல். முத்தமிழ் - இயல் இசை நாடகம். மான் - ஆகுபெயர். மருங்கு - இடை. உகுதல் - உதிர்தல். 'வெடிக்கின்ற விப்பியு ணித்திலம் பைத்தலை வெம்பகுவாய் துடிக்கின்ற திங்களிற் றோன்றுந் துறைவ' என்றது இறைச்சி யென்க. [1]‘இறைச்சி தானே பொருட் புறத்ததுவே' என்னுஞ் சூத்திரத்தா னுணர்க.
-----
[1] தொல். பொருள், பொருளியல் - (௩௫) 35.
----------
---------- (232. பிறர் வரைவுணர்த்தல் - முற்றும்) ----------
233. வரைவெதிர் வுணர்த்தல் :
வரைவெதிர் வுணர்த்தல் என்பது, பாங்கி தலைவனை நோக்கி நீ வரைவு கூறி, எங்கள் நகர்க்கு வந்தாயாகில் எமர் எதிர்கொண்டு வருவரெனக் கூறுதல்.
குருதிகண் டாலன்ன காந்தளஞ் சாரற் குறிவெறிதே
வருதிகண் டாய்தஞ்சை வாணன்வெற் பாவெங்கள் மாநகர்நீ
சுருதிகண் டாரொடுந் தோன்றிலெங் கேளிர்நின் சொல்லிகவார்
பருதிகண் டால்மல ராதொழி யாகயப் பங்கயமே. (233)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! குருதி கண்டாலொத்த காந்தட் பூவலர்ந்த எங்கள் சாரற் குறியிடத்தில் பயனின்றியே வருவாய்; எங்கள் மாநகரில் நீ வேதம்வல்ல அந்தணரொடும் வந்து தோன்றி வரைவு கூறினையேல் எங்கள் சுற்றத்தார் நின் சொல்லைக் கடவார்; அஃதென்னெனின், ஞாயிற்றைக் கண்டால் குளத்திலிருக்கும் தாமரை அலராது ஒழியா; ஆதலால், அந்தணரை முன்னிட்டுக்கொண்டு வருவாயாக என்றவாறு.
எனவே, வெளிப்படையால் வரைவு கடாவியது.
குருதி - இரத்தம். அம் - சாரியை. குறி - ஏழாம்வேற்றுமைத்தொகை. கண்டாய் - முன்னிலை யசைச்சொல். சுருதி - வேதம். கண்டார் - முடிவுகண்டார். இகத்தல் - கடத்தல். 'நின் சொல் இகழார்' என்று பாடமோதுவாரு முளர். ‘அலராது ஒழியா' என்பது அலருமென்னும் பொருடந்து நின்றது.
---------- (233. வரைவெதிர் வுணர்த்தல் - முற்றும்) ----------
234. வரையுநா ளுணர்த்தல் :
வரையுநாள் உணர்த்தல் என்பது, மணஞ்செய்கின்ற நாளை அறிவித்தல்.
அலகம் பனகண் ணிவள்கொங்கை மென்சுணங் காகிவண்டு
பலகம் பலைசெய்யப் பூத்தன வேங்கை பனிவரைமேல்
திலகம் பதித்தெனச் சேல்வைத்த வாணன்தென் மாறைமன்னன்
உலகம் பயில்புகழ் போற்சிலம் பாமதி யூர்கொண்டதே. (234)
(இ - ள்.) சிலம்பனே, கூர்மைபொருந்திய அம்பு போன்ற கண்ணையுடைய எங்கள் தலைவியது இறுகி வளர்ந்த முலைமேல் பரந்த மெல்லிய சுணங்குபோல வண்டுகள் பலபல விதமாய் ஆரவாரஞ் செய்ய வேங்கைகள் பூத்தன; பனிவரைமேல் திலகம் பதித்ததுபோன்ற சேற்கொடியை வைத்த வாணனாகிய தென்மாறை மன்னனது உலகமெல்லாமாக வளைந்த புகழ்போல் திங்களைப் பரிவேடம் வளைந்தது என்றவாறு.
எனவே, இது வரையுநாளென வெளிப்படையான் உணர்த்தியவா றாயிற்று.
அலகு - கூர்மை. அம்பு - கண். சுணங்கு - மாமைநிறம். கம்பலை - ஆரவாரம். பனிவரை - இமயமலை. சேல் - ஆகுபெயர். பயிலுதல் - வளைதல். ஊர் - பரிவேடம். 'வண்டு கம்பலை செய்யப் பூத்தன வேங்கை' என்றதனால், 'வேங்கை சண்பகம் வண்டுணா மலர்' என்னும் விதியான், வேங்கைப் பூவை வண்டு அணுகாதாதலால் இங்ஙனங் கூறிய தென்னையெனின், வேங்கை மரத்தினும் சண்பக மரத்தினும் வண்டுண்ணாதிராது, உண்ணின் அதனான் மயங்கி மூர்ச்சையினை யடையும், பூவைக் கொண்ட உவகையால் ஆரவாரிக்கும், அதுபற்றிக் கூறியவாறு.
---------- (234. வரையுநா ளுணர்த்தல் - முற்றும்) ----------
235. அறிவு அறிவுறுத்தல் :
அறிவு அறிவுறுத்தல் என்பது, பாங்கி தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.
வனநாள் முளரி முகைவென்று வாணன்தென் மாறைவெற்பில்
கனநா ணணிந்துபொற் கச்சற வீசிக் கதித்தெழுந்த
தனநாணு நுண்ணிடைத் தையனல் லாள்பழி சாற்றுவல்யான்
எனநாணி நின்பழி தான்மறைத் தாளன்ப என்னையுமே. (235)
(இ - ள்.) அன்பனே! வாணன் தென்மாறை வெற்பில் நீரில் தோன்றி மலர் மலர்தற்கு நாட்கொள்ளுந் தாமரை முகையை வென்று, கனமாகிய பொன்னாண் அணிந்து, பொற்கச்சு அற எறிந்து பருத்தெழுந்த முலைக்கு நாணப்பட்ட நுண்ணிய இடையையுடைய தையலாகிய நல்லாள், நீ பிரிந்து செய்த பிழையை யான் சொல்லுவன் என்று நாணி நினது பழியைச் சொல்லாமல் என்னையும் மறைத்தாள் என்றவாறு.
எனவே, இங்ஙனம் அறிவுடையாளை நீ விரைந்து வரைந்து கொள்ளெனக் குறிப்பாற் கூறியவாறாயிற்று.
வனம் - நீர். நாண்முகை - மலர்தற்கு நாட்கொள்ளும் முகை. நாண் - பொன்னாண்; ஓர் அணி விசேடம். வீசி - எறிந்து. கதித்தல் - பருத்தல். தனம் - முலை; தனத்துக்கு என நான்கனுருபு தொக்கது.
---------- (235. அறிவு அறிவுறுத்தல் - முற்றும்) ----------
236. குறிபெயர்த்திடுதல் :
குறிபெயர்த்திடுதல் என்பது, பாங்கி இக்குறி இயல்பல்ல, வேறோர் குறியிடை வருகவென்று கூறுதல்.
ஊறோர் பவரிங் குலாவவுங் கூடும்வந் தொண்சிலம்பா
வேறோர் பொதும்பரிற் போய்விளை யாடுக வேற்படையான்
மாறோர் பகைவென்ற வாணன்தென் மாறையெம் மன்னுதவப்
பேறோர் வடிவுகொண் டாலன்ன நீயுமென் பேதையுமே. (236)
(இ - ள்.) ஒள்ளிய சிலம்பை யுடையவனே! உறுதற் றொழிலை ஆராய்ந்து திரிபவர்கள் இக்குறியில் வந்து உலாவவுங் கூடுமாதலால், வேற்படையினாலே எதிர்ந்தோர் பகையைவென்ற வாணன் தென்மாறை நாட்டில் என்னுடைய நிலைபெற்ற தவப்பேறு ஒரு வடிவுகொண்டாலொத்த நீயும் என் பேதையும் வேறாகிய ஓர் சோலையிற்போய் விளையாடுக என்றவாறு.
எனவே, இக்குறிக்கண் வாரற்க எனக் குறிப்பால் வரைவு கடாதலாயிற்று.
ஊறு - உறுதல். ஓர்பவர் - ஆராய்பவர். உம்மை - எதிர்மறை, 'வந்திங்கு' என இயையும். பொதும்பர் - சோலை. மாறு - எதிர்; 'வாளிரண்டு மாறு வைத்தபோல் மழைக்கண் மாதரார்' எனப் பிறரும், 'மாறு' எதிராகக் கூறியவாறு உணர்க.
---------- (236. குறிபெயர்த்திடுதல் - முற்றும்) ----------
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
237. பகல் வருவானை இரவுவருகென்றல் :
முத்தணி நீல மணித்தகட் டுள்ளெங்கு மொய்கொளவே
வைத்தணி சேர வகுத்தது போற்றஞ்சை வாணன்வையைப்
பைத்தணி வார்திரை தோய்கருந் தாட்புன்னைப் பாசிலைவெண்
தொத்தணி பூந்துறை வாவரு வாயிருள் தூங்கிடையே. (237)
(இ - ள்.) முத்தினிரையை நீல நிறமாகிய நல்ல தகட்டுள் எங்குஞ் செறிவுகொள வைத்து ஒழுங்குசேர வகுத்ததுபோலத், தஞ்சைவாணனது வைகையாற்றிடத்துப், பைத்த அழகாகிய நெடிய அலை தோயப்பட்ட கரிய அடியையுடைய புன்னையினது பச்சிலையில் வெள்ளிய பூங்கொத்தணியப்பட்ட பொலிவினையுடைய துறைவனே, இருள் தூங்கப்பட்ட இடையாமத்து வருவாயாக என்றவாறு.
முத்தணி - முத்துநிரை. மொய்கொள் - செறிவுகொள். பைத்து - பைத்த. அணி - அழகு. வார்திரை - நெடியதிரை. கருந்தாள் - கரிய நிறத்றையுடைய அடி. பாசிலை - பச்சிலை. தொத்து - பூங்கொத்து. பூ - பொலிவு. இச்செய்யுளில் இறைச்சி கூறியவாறு உணர்க.
---------- (237. பகல் வருவானை இரவுவருகென்றல் - முற்றும்) ----------
238. இரவு வருவானைப் பகல்வரு கென்றல் :
இறைவிளை யாடு மிளமுலை சாயற் கிடைந்தமஞ்ஞை
கழைவிளை யாடுங் கடிப்புனங் காத்துங் கலையகலா
துழைவிளை யாடு முயர்சிலம் பாவின்னு முன்பொருட்டால்
மழைவிளை யாடு மதிற்றஞ்சை வாணன் மலயத்திலே. (238)
(இ - ள்.) புயல் விளையாடும் மதில்சூழ்ந்த தஞ்சைவாணனது பொதிய மலையிடத்து மானைப்பிரியாது கலை விளையாடும் உயர்ந்த சிலம்பை யுடையவனே! இன்னும் உன் பொருட்டாகப் பூண் விளையாடப்பட்டஇளமுலையை யுடையாளது சாயலுக்கு இடையப்பட்ட மஞ்ஞை மூங்கிலிடத்து விளையாடும் சிறந்த தினைப்புனத்தை யாங்கள் பகற்பொழுதிற் காப்போம்,அங்கு வருவாயாக என்றவாறு.
இழை - ஆபரணம். சாயல் - இயல். இடைதல் - தோல்வி யடைதல். கழை - மூங்கில். கடி - சிறப்பு. 'உழையகலாது கலை விளையாடும்' என இயையும். 'மானைப் பிரியாது கலைவிளையாடும்’ என்றதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாடுக என உள்ளுறை யுவமங் காண்க.
---------- (238. இரவு வருவானைப் பகல்வரு கென்றல் - முற்றும்) ----------
இத்துணையும் பதின் மூன்றாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
239. பகலினு மிரவினும் பயின்றுவரு கென்றல் :
குரவுங் கணியும் விரவும்வெற் பாவெய்ய குஞ்சரமேல்
வரவுந் தியதெவ்வை மாற்றிய வாணன்தென் மாறைமின்னும்
அரவும் பணியு நுடங்கிடை யாற்றல ளால்பகலும்
இரவுங் குறிவயி னீவரல் வேண்டும் இவள்பொருட்டே. (239)
(இ - ள்.) குரவமரமும் வேங்கைமரமும் ஒன்றோ டொன்று கலந்திருக்கும் வெற்பை யுடையானே! வெய்ய யானையின்மேல் வரவே நடத்திய பகையை மாற்றிய வாணன் தென்மாறை நாட்டில் மின்னும் அரவும் பணியப்பட்ட ஒசியும் இடையினை யுடையாள் உன்னைப் பிரிந்து ஆற்றலள்; ஆதலால், இவள்பொருட்டுப் பகலினும் இரவினுங் குறியிடத்தில் நீ வரவேண்டும் என்றவாறு.
எனவே, ஓரறிவுயிராகிய மரங்களும் பிரியாது ஒன்றோ டொன்று கலந்திருக்கின்றமையால், ஆறறிவொடுகூடிய நீ பிரிந்திருக்கத் தகாது என்று உள்ளுறையுவமம் தோன்றியவாறு உணர்க.
குரவு - குரா. கணி - வேங்கை. விரவுதல் - கலத்தல். உந்தல் - நடத்தல். நுடங்கல் - ஒசிதல். நுடங்கிடை - அன்மொழித் தொகை.
---------- (239. பகலினு மிரவினும் பயின்றுவரு கென்றல் - முற்றும்) ----------
240. பகலினு மிரவினும் அகலிவ ணென்றல் :
தாவாத செல்வந் தருந்தஞ்சை வாணன் தடஞ்சிலம்பா
நீவாரல் சார னிலவல ராம்பக னீடிருளார்
மாவா னிலவு நிலமங்கை வார்குழன் மல்லிகைபோல்
ஓவா திரவெறிக் குஞ்சோலை நீழலி னூடுவந்தே. (240)
(இ - ள்.) தன்னை யடைந்தோர்க்குக் கேடில்லாத செல்வத்தைத் தரும் தஞ்சைவாணனது பெரிய சிலம்பை யுடையானே! பகலில்வரின் விளங்கப்பட்ட அலராம்; இரவில் வரின் நீண்ட இருளார்ந்த பெரிய வானிலவு, நிலமங்கையது குழலின் முடித்த மல்லிகைப் பூப்போல, நீங்காது சோலை நிழலினுள்ளே வந்து எறிக்கும்; ஆதலால், சாரலிடத்து நீ வாரலை என்றவாறு.
தாவாத - கெடாத. நிலவுதல் - விளங்குதல். மா - பெருமை. வான் - ஆகாயம். நிலவு - நிலா. ஓவாது - நீங்காது. 'பகல் நிலவலராம்' எனவும், 'இரவு நீடிருளார்' எனவும், 'வந்தே யெறிக்கும்' எனவும், 'சாரல் நீ வாரல்' எனவும் இயையும். சாரல் என்புழி ஏழனுருபு தொக்கது.
---------- (240. பகலினு மிரவினும் அகலிவ ணென்றல் - முற்றும்) ----------
241. உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல் :
தலத்திற்கு மாறைக்கு மன்னவன் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
நிலத்திற்கு மாமணி யாகுநின் னாட்டிற்கு நின்பதிக்கும்
குலத்திற்கு மாசில் குடிமைக்குஞ் சீர்மைக்குங் கோதின்மெய்ம்மை
நலத்திற்கு மாவதன் றால்வரை யாது நடப்பதுவே. (241)
(இ - ள்.) புவிக்கும் மாறைக்கும் மன்னனாகிய வாணனது தமிழ்த்தஞ்சை சூழ்ந்த நிலத்திற்கும் மாமணியாகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் நின் குலத்திற்கும் குற்றமில்லாத நின் குடிமைக்கும் கீர்த்திக்கும் குற்றமில்லாத நினது வாய்மைக்கும் நீ செய்யும் நல்வினைக்கும் நீ வரையாது நடப்பது ஆகும் முறைமை யன்று என்றவாறு.
உம்மைகள் - எண்ணின்கண் வந்தன. 'தலத்திற்கு மன்னவன்' என்பது அமையாதோ, 'மாறைக்கு மன்னவன்' என்னல் வேண்டுமோ எனின், மாறை தலைமுறைக்காணி யாதலாற் கூறினார். சீர்மை - சீர்த்தி. மெய்ம்மை - வாய்மை. நலம் - செய்யப்படும் நல்வினை. ஆல் - அசை.
---------- (241. உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல் - முற்றும்) ----------
242. ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல் :
ஆறு பார்த்துற்ற அச்சங் கூறல் என்பது, வரும் வழியைக் கருதி அவ்வழியில் திரிதரும் விலங்காற் றோன்றும் அச்சங்கூறல்.
புராந்தகர் செஞ்சடை வெண்பிறை போனுதற் புள்ளிமிழ்பூங்
குராந்தொடை மென்குழற் கொம்பினை வேண்டிக் கொடிமுல்லைநீள்
மராந்தழு வுந்தஞ்சை வாணன்வெற் பாவல்சி தேர்ந்திலஞ்சிக்
கராந்திரி கல்லதர் வாயெல்லி நீவரல் கற்பலவே. (242)
(இ - ள்.) முல்லைக் கொடியானது நீண்ட செங்கடப்ப மரத்தைத் தழுவிப்படருந் தஞ்சைவாணன் வெற்பனே! புராந்தகரது செஞ்சடையிற் சூடிய வெண்பிறை போன்ற நுதலையும், வண்டுகள் ஆரவாரிக்கும் பூங்குரா மாலை யணிந்த மெல்லிய குழலினையும் உடைய கொம்பு போல்வாளை வேண்டி, நிலத்திற் குழியாய் ஆழ்ந்த நீர்நிலை யிடத்து முதலைகள் இரைதேடித் திரியப்பட்ட கல்லதரி னிடத்து இராக்காலத்து நீ வருவது முறைமை யன்று என்றவாறு.
புராந்தகர் - ஈசர். புள் - வண்டு. இமிழ்தல் - ஆரவாரித்தல். குராந்தொடை - குரவமாலை. கொம்பு - ஆகுபெயர். மராம் - செங்கடம்பு. 'மராந்தழுவும் வெற்பு' எனக் கூட்டுக. வல்சி - இரை. தேர்ந்து - தேடி. இலஞ்சி - குழிந்தாழ்ந்த நீர்நிலை. கராம் - முதலை. கல்லதர் - இருமருங்கும் நெருங்கிய வழி. எல்லி - இரவு. கற்பு - முறைமை.
ஓரறிவாகிய கடம்பு முல்லைக்கொடியைத் தழுவியதுபோல ஆற்றிவொடுங் கூடிய உயர்பிறவியாகிய நீ கொடிபோல்வாளைத் தழுவுவாயாக என்று உள்ளுறையுவமங் கொள்ளக்கிடந்தவாறு உணர்க.
---------- (242. ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல் - முற்றும்) ----------
243. ஆற்றாத் தன்மை யாற்றக்கூறல் :
ஆற்றாத் தன்மை யாற்றக் கூறல் என்பது, தலைமகளது ஆற்றாத தன்மையை ஆற்றுதல் செய்யத் தலைவற்குக் கூறல்.
கலங்குந் தெளியுங் கனலெழ மூச்செறி யுங்கண்ணினீர்
மலங்கும் பொலந்தொடி சோரமெய் சோரு மறஞ்செய்கொலை
விலங்கும் படிறுசெய் யாக்குன்ற நாட விரைந்தளிப்பாய்
அலங்குங் கடும்பரித் தேர்வாணன் மாறை யணங்கினையே. (243)
(இ - ள்.) விளங்கப்பட்ட கடிய வேகத்தையுடைய பரி பூட்டிய தேரையுடைய வாணன் மாறையின் மறமாகச் செய்யுங் கொலைத்தொழிலையுடைய விளங்கும் களவுசெய்யாத மலைநாட்டை யுடையானே! கலங்கும், தெளியும், நெருப்பெழப் பெருமூச்செறியும், கண்களில் நீர்ததும்பும், பொன்னாற் செய்த தொடிகழல் மெய்யிளைக்கும் என்று சொல்லப்பட்ட அணங்குபோல்வாளை விரைந்து அளிப்பாயாக என் றவாறு.
அளியாவிடின் இறந்துபடும் என்பது தோன்றியவாறு. இவ்வாறு கூறவே, வரைந்துகொள்வா யென்று குறிப்பாற் கூறியவா றாயிற்று. மலங்கல் - ததும்பல். சோருதல் - கழலுதல். சோருதல் - இளைத்தல். மறம் - பாவம். கொலை - கொல்லுந் தொழில். விலங்கும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. படிறு - களவு. குன்றநாடு - மலைநாடு. அலங்கல் - விளங்கல். பரி - குதிரை. அணங்கு - ஆகுபெயர். புன்மையறிவாகிய விலங்கும் களவுசெய்யா எனவே மேலறிவாகிய நினக்கு வரையாது களவிலொழுகத் தகாதெனக் குறிப்பாற் கூறியவாறாயிற்று.
---------- (ஆற்றாத் தன்மை யாற்றக்கூறல் - முற்றும்) ----------
244. காவல்மிக வுரைத்தல் :
காவல்மிக வுரைத்தல் என்பது, குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல் மிக்கென்று கூறுதல்; மிகவுரைத்தல் - மிகவாயினது உரைத்தல்.
நஞ்சா ரரவந் திரிதரு கானடு நாளிரவில்
அஞ்சாது செங்கை யயில்விளக் காவணங் கின்பொருட்டால்
மஞ்சார் மதிற்றஞ்சை வாணன்வெற் பாவரல் வன்சொலன்னை
துஞ்சாள் கடுந்துடிக் கைநகர் காவலர் துஞ்சினுமே. (244)
(இ - ள்.) முகில்கள் நிறைந்த மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பில் உள்ளவனே! நஞ்சு பொருந்திய பாம்புகள் திரியப்பட்ட காட்டில் இடையாமத்தில் அச்சமின்றிச் செங்கையிலேந்திய வேலே விளக்காக அணங்குபோல் வாள் காரணமாக வாரற்க; அன்றி, நீ குறியிடத்தில் வருதற்கு இடையீடாகிய கொடுமையை யுடைய துடி கொட்டித் திரியும் நகர்காவலர் துஞ்சார்; அவர் துஞ்சினும், தலைவி குறியிடத்தில் வருதற்கு இடையீடாகிய கடுஞ்சொல்லை யுடைய அன்னை துஞ்சாள்; ஆதலால், நீ வரைந்து கொள்வாயாக என்றவாறு.
எனவே, வெளிப்படையாக வரைவு கூறியவாறு உணர்க. நடுநாள் இரவு - இடையாமம். அயில் - வேல்.
---------- (244. காவல்மிக வுரைத்தல் - முற்றும்) ----------
245. காமமிக வுரைத்தல் :
காமமிக வுரைத்தல் என்பது, தலைவி வேட்கை மிகவாயின துரைத்தல்.
தென்னாக வண்டமிழ் வாணன்தென் மாறைச் செருந்தியுடன்
புன்னாக முங்கமழ் பூந்துறை வாசுரர் போற்றமிர்தம்
பின்னாக முன்வந்த பேதைதன் காமப் பெருங்கடற்கு
நின்னாக மன்றியுண் டோபுணை யாவது நீந்துதற்கே. (245)
(இ - ள்.) பொதியமலையிற் பிறந்த வளவிய தமிழைக் கற்ற வாணன் தென்மாறை நாட்டிற் செருந்திப்பூவுடன் புன்னாகப்பூவும் கமழப்பட்ட துறைவனே, சுரர் போற்றப்பட்ட அமுதம் பின்வர முன்னே தோன்றிய எங்கள் தலைவி ஆசையாகிய பெரிய கடலை நீந்துதற்கு மரக்கலமாவது நின்மார்பன்றி வேறுண்டோ என்றவாறு.
தென்நாகம் - பொதியமலை. வண்டமிழ் - வளவிய தமிழ். 'பூ' என்பதனைச் செருந்தியுடனும், புன்னாகத்துடனுங் கூட்டுக. சுரர் - தேவர். பேதை - திருமகள்; எனவே, தலைமகளைத் திருமகளாகக் கூறினார். ஆகம் - மார்பு. புணை - மரக்கலம். செருந்திப்பூவும் புன்னாகப்பூவுங் கூடி மணக்குந் துறைவனேயென்று கூறியவதனால், நீங்கள் இருவீரும் மண த்தொடு கூடியிருப்பீரென உள்ளுறையுவமம் தோன்றியவாறுணர்க.
---------- (245. காமமிக வுரைத்தல் - முற்றும்) ----------
246. கனவு நலிபுரைத்தல் :
கனவு நலிபு உரைத்தல் என்பது, தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவற்கு உரைத்தல்.
மாணாத தெவ்வென்ற வாணன்தென் மாறை வளநகர்போல்
பூணாக மெல்லியற் புல்லினை யாகவப் பொய்யைமெய்யாப்
பேணா மகிழ்ந்து பெருந்துயி லேற்றவள் பின்னைநின்னைக்
காணாள் கலங்கின ளாற்கலங் காமனக் காவலனே. (246)
(இ - ள்.) கலங்காத மனத்தையுடைய காவலனே! மாட்சிமையில்லாத பகைவரை வென்ற வாணன் தென்மாறை வளநகரைப்போன்ற பூண்பொருந்திய மார்பை யுடைய மெல்லியலைக் கனவினிடைத் தழுவினையாக, அந்தப் பொய்யை மெய்யாக விரும்பி மகிழ்ச்சியை யடைந்து பெரிய துயிலையுற்றவள் துயிலுணர்ந்த பின்பு நின்னைக் காணாளாய்க் கலங்கினள் என்றவாறு.
மாணாத - மாட்சிமையில்லாத. தெவ் - பகை; ஆகுபெயர். பூணாகம் - பூண்பொருந்திய மார்பு. மெல்லியல் - தலைவி. பேணி - விரும்பி. பேணா - செய்யா என்னும் வினையெச்சம். ஆல் - அசை. 'பெருந்துயில் ஏற்றவள்' என்றதனால் கனவு வருவிக்கப்பட்டது.
---------- (246. கனவு நலிபுரைத்தல் - முற்றும்) ----------
247. கவினழிபுரைத்தல் :
கவின் அழிபு உரைத்தல் என்பது, தலைவி அழகு அழிந்ததனைத் தலைவற்குக் கூறுதல்.
ஏரேற்ற கொங்கை யிளங்கொடி மாந்தளி ரேய்ந்தவண்ணம்
காரேற்ற கங்குலிற் பீரலர் போன்றது காவியுண்கண்
வாரேற்ற பைங்கழல் வாணன்தென் மாறையில் வாவியின்கண்
நீரேற்ற செங்கழு நீர்மலர் போன்றது நின்பொருட்டே. (247)
(இ - ள்.) தலைவனே! நின்பொருட்டு அழகு நிறைந்த கொங்கையை யுடைய இளங்கொடி போன்றவளது மாந்தளிர்க்கு ஒப்பாகிய அழகு கருமைநிறைந்த இராக்காலப் பீர்க்கம்பூப்போன்றது; கருங் குவளைபோன்ற உண்கண், வார்கோத்துக் கட்டிய பைம்பொன்னாற் செய்த வீரக்கழல் புனைந்த வாணன் தென்மாறை நாட்டிலுள்ள வாவியிடத்துச் செங்கழுநீர் மலரில் நீர் நிறைய முகந்து கொண்ட மலர்போன்றது என்றவாறு.
ஏர் - அழகு. ஏய்தல் - ஒத்தல். வண்ணம் - அழகு. கார் - கருமை. பீர் - பீர்க்கு. அலர் - பூங்காவி, கருங்குவளை. வார் - கயிறு. கழல் - வீரத்தால் விருதாகக் காலிற் கட்டுவதோர் ஆபரண விசேடம். கருங்குவளை போன்ற கண், அழுதழுது சிவந்து நீர் கோத்த வதனால், நீர் முகந்த செங்கழுநீர்போன்றது என்று கூறினார்.
---------- (247. கவினழிபுரைத்தல் - முற்றும்) ----------
'வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்' முதலாகப், 'பிறர்வரை வுணர்த்தல்' ஈறாகக்கூறிய ஐந்தும் பொய்த்தற்குரியன.
'குறிபெயர்த்திடுதல்' முதலாகப் 'பகலினுமிரவினும் அகலிவணென்றல்' ஈறாகக்கூறிய ஐந்தும் மறுத்தற் குரியன.
'உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல்' ஒன்றுங் கழறற்குரித்து.
'வரைவெதிர் வுணர்த்த'லும், 'வரையுநா ளுணர்த்த'லும், 'அறிவறி வுறுத்த'லும், 'ஆறுபார்த்துற்ற வச்சங்கூற'லும், ‘ஆற்றாத்தன்மை யாற்றக்கூற'லும், 'காவன் மிகவுரைத்த'லும், 'காமமிக வுரைத்த'லும், 'கனவு நலிபுரைத்த'லும், 'கவினழிபுரைத்த'லும் ஆகிய ஒன்பதும் மெய்த்தற்குரியன.
இவை எல்லாங் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவு கடாவியவாறு உணர்க.
1.16. வரைவுகடாதல் முற்றிற்று.
-------------------------
1.17. ஒருவழித் தணத்தல் (248-259)
அஃதாவது, கூறிய பாங்கியொடு வரைதற் குடன்பட்ட தலைவன் தன்னூர்க்கு ஒருவழி போய்வருகிறே னென்று போதல்.
[1]'செலவறி வுறுத்தல் செலவுடன் படாமை
செலவுடன் படுத்தல் செலவுடன் படுதல்
சென்றுழிக் கலங்கல் தேற்றியாற் றுவித்தல்
வந்துழி நொந்துரை யெனவெழு வகைத்தே
ஒன்றக் கூறிய வொருவழித் தணத்தல்.'
என்னுஞ் சூத்திரவிதியால் ஒருவழித்தணத்தல் எழுவகைப்படும்.
-----
[1.17-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௫0) 50.
----------
248. தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல் :
திரைகே தகைமணங் கூடுமெம் பாடியிற் சென்றுவந்தியான்
வரைகேன் வருந்துணை வல்லியை நீதஞ்சை வாணன்செவ்வேல்
புரைகேழ் மதர்விழிக் கோங்கரும் பேர்முலைப் பூசல்வண்டு
நிரைகேச வஞ்சியஞ் சேலென்று தேற்றுதல் நின்கடனே. (248)
(இ - ள்.) தஞ்சைவாணனது செவ்வேலையொக்கும் நிறம் பொருந்திய மதர்த்த விழியையும் கோங்கரும்பு போன்ற அழகிய முலையையும் ஆரவாரிக்கும் வண்டு நிரையாயிருக்குங் கேசத்தையும் உடைய வஞ்சிபோன்றவளே! திரையானது தாழம்பூ மணத்தைக் கூட்டும் எம் ஊரில் யான் சென்று வந்து வரைவேன்; வருமளவும் நீ வல்லியை அஞ்சலென்று தேற்றுதல் நின் கடன் என்றவாறு.
திரை - அலை. கேதகை - தாழை. பாடி - ஊர். கேழ் - நிறம். மதர்விழி - மதர்த்த விழி. பூசல் - ஆரவாரம். கேசம் - அளகம். கடன் - முறைமை. அகற்சி - பிரிவு.
---------- (248. தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல் - முற்றும்) ----------
249. பாங்கி விலக்கல் :
பறந்தாங் கிவர்பரித் தேர்கட வேலுன் பதியடைந்தால்
மறந்தாங் கமையவும் வல்லையன் பாதஞ்சை வாணனொன்னார்
நிறந்தாங் கிவர்கணை போலுண்கண் மாமுகி னீர்மைகொண்டு
புறந்தாழ் கருங்குழல் வெண்முத்த வாணகைப் பொன்னினையே. (249)
(இ - ள்.) அன்பனே! நின் ஊர்க்குப்போய்ச் சேர்ந்தையானால், தஞ்சைவாணன் ஒன்னார் மார்பு தாங்க இவருங் கணையையொக்கும் உண்கண்ணையும், முகிலினது தன்மையைக்கொண்டு புறத்திலே தாழப்பட்ட கருங் குழலையும், வெண்முத்தம்போன்ற ஒளிபொருந்திய நகையையு முடைய பொன்னை யொப்பாளை மறந்து அவ்விடத்தி லிருக்கவும் வல்லையாதலால், பறந்தாற்போற் செல்லும் பரிபூண்ட தேரைச் செலுத்தாது ஒழிவாயாக என்றவாறு.
ஆங்கு - உவமவுருபு. இவர்தல் - செலுத்தல். கடவுதல் - செலுத்துதல். ஆங்கு - அவ்விடம். அமைதல் - அமைந்திருத்தல். நிறம் - மார்பு. இவர்தல் - ஏறுதல். வாள் - ஒளி. பொன் - ஆகு பெயர்.
---------- (249. பாங்கி விலக்கல் - முற்றும்) ----------
250. தலைவனீங்கல் வேண்டல் :
தலைவன் நீங்கல் வேண்டல் என்பது, தலைவன் பாங்கியுடன் படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறல்.
அறையும் பொறையு மணந்தவெங் கானத் தணங்கையில்வைத்
திறையும் பிரிவதற் கெண்ணுகி லேனெண்ண லார்வரைமேல்
மறையும் படிவென்ற சந்திர வாணன்தென் மாறையில்வண்
டுறையுங் குழலிசென் றேவரல் வேண்டுமெம் மூரகத்தே. (250)
(இ - ள்.) பகைவர் மலைமேல் மறைந்தொழியும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்ற வண்டுறையுங் குழலி! அணங்கை இல்லிடத்து வைத்து, அறையும் பொறையுங் கூடிய வெவ்விய காட்டகத்து இறைப்பொழுதும் பிரிவதற் கெண்ணுகிலேன்; எண்ணிய தென்னெனில், ஓர் காரியத்தால் எம் ஊரகத்துப் போய் வரல்வேண்டும் என்றவாறு.
அறை - கற்குகை. பொறை - துறுகல். மணத்தல் - கூடுதல். இறை - ஆகுபெயர். எண்ணலார் - பகைவர். வரை - மலை. மலர் மணங்கொள்ளுங் காரணத்தால் வண்டுறைவதெனக் கொள்க.
---------- (250. தலைவனீங்கல் வேண்டல் - முற்றும்) ----------
251. தலைவனைப் பாங்கி விடுத்தல் :
தலைவனைப் பாங்கி விடுத்தல் என்பது, பாங்கி தலைவனை ஊர்க்குப் போய்வருகவென விடுத்தல்.
இல்லத் துறையு மிவள்பொருட் டானுமக் கியானுமொன்று
சொல்லத் தவிர்கிலன் சூழ்கழ லீர்சுடர் தோய்புரிசை
வல்லத் தமர்வென்ற வாணன்தென் மாறையில் வந்துவந்து
செல்லத் திருவுளம் வைத்தகல் வீர்நுந் திருநகர்க்கே. (251)
(இ - ள்.) அணிந்த கழலையுடையீர்! இல்லிலிருக்கும் இவள்பொருட்டால் நுமக்கு யானும் ஒரு சொற்சொல்லத் தவிராது சொல்லவேண்டிய தாதலாற் சொல்கின்றேன் : கதிரோனைத் தூண்டும் மதில் சூழ்ந்த வல்லமென்னும் நகரில் அமரை வென்ற வாணன் தென்மாறையில் வந்து வந்து போகத் திருவுள்ளம் வைத்து உம்முடைய திருநகர்க்குச் செல்லுவீர் என்றவாறு.
முல்லை யுரிப்பொருள் - இருத்தல்; 'இல்லத்து உறையும்' என்று கூறியது. சூழ்தல் - அணிதல். சுடர் - கதிரோன். புரிசை - மதில். வல்லம் - ஓரூர். வந்து வந்து என்பது, விரைவின்கண் வந்த அடுக்கு.
---------- (251. தலைவனைப் பாங்கி விடுத்தல் - முற்றும்) ----------
252. பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல் :
நிலவேய் தரள நிரைத்தன்ன வாணகை நீலநிறக்
குலவேய் நிகர்பொற் றொடிநெடுந் தோளி குறுகிவரச்
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழுங்கமலத்
தலவே தியன்பெறு நாள்பெற்று வாழ்பவன் தஞ்சையிலே. (252)
(இ - ள்.) நிலவுபொருந்திய முத்தங்களை நிரைத்தா லொத்த ஒளிபொருந்திய நகையினையும், நீலநிறத்தை யுடைய விசேடமாகிய வேய்க்கு நிகராகிய பொற்றொடி யணிந்த நெடிய தோளையும் உடையாய்! நம் அன்பராயினார் செழுங்கமலத்தை இடமாகவுடைய பிரமன் பெறும் வாழ்நாளைப் பெற்று வாழ்பவனாகிய செந்தமிழ் வாணனது தஞ்சாக்கூரிற் கடுகிவரச் செலவே கருதினர் என்றவாறு.
நிலவு - ஒளி. எய்தல் - பொருந்துதல். தரளம் - முத்தம். வேதியன் - பிரமன். பிரமன் பெறுநாள் சதுர்யுக மிரண்டாயிரம் வட்டந் திருப்பின் ஒரு நாள்; அந்த நாட் கணக்கில் ஆண்டு நூறென்று உணர்க.
---------- (252. பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல் - முற்றும்) ----------
253. தலைவி நெஞ்சொடு புலத்தல் :
குளித்தா ரிளங்கொங்கை யாவியி லாவி குளிர்ப்பநம்மை
அளித்தா ரளித்தக லத்தணைத் தாரன் றணங்கின்முன்னே
தெளித்தார் செழுந்தஞ்சை வாணனொன் னாரினஞ் சிந்தைநைய
ஒளித்தா ரவரிங்ங னேநன்று நன்றிவ் வுலகியலே. (253)
(இ - ள்.) அன்பராயினார் இளங்கொங்கை யாகிய வாவியிற் குளித்தார், விரகக் கனலால் வெதும்பிய நம் ஆவி குளிர்ச்சியை யடைய நம்மை யளித்தார், அளித்து, மார்பிடத்து அணைத்தார், இயற்கைப்புணர்ச்சி கூடிய அன்று அணங்கின் முன்னே பிரியேன் என்று தெளியச்செய்தார், செழுமையை யுடைய தஞ்சைவாணனுக்கு ஒன்னாரைப் போல் நம்முடைய சிந்தை நைய வொளித்தார் அவர்; இவ்விடத்து இவ்வுலகியல் நன்று நன்று என்றவாறு.
தலைவன்மேற் குறையை உலகின்மேல் வைத்துக் கூறினாள். 'நன்று நன்று' என்பது குறிப்புமொழி. ஆவி - வாவி. ஆவி - உயிர். தெளித்தல் - தெளியச் சொல்லுதல். ஒன்னார் - பகைவர். இன் - உவமப்பொருட்கண் வந்தது. புலத்தல் - நொந்துகூறல்.
---------- (253. தலைவி நெஞ்சொடு புலத்தல் - முற்றும்) ----------
இத்துணையும் பதினான்காநாட் செய்தியென் றுணர்க.
--------------------
254. சென்றோ னீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி :
சென்றோன் நீடலிற் காமமிக்க கழிபடர் கிளவி என்பது, தலைவன் மாலைக்காலமளவும் வாராது வரவு நீடித்தலாற் காம மிகுந்தவதனால் மிகுந்த நினைவொடு கூடிய சொல்.
மயிலாடு தண்டலை மாறை வரோதயன் வாணனொன்னார்க்
கெயிலா கியகடற் கானலஞ் சேர்ப்பற் கிடையிருள்யான்
துயிலா நிலையொன்றுஞ் சொல்லாய் துணையுடன் சூழ்திரைத்தேன்
பயிலா மலரணை மேற்றுயி லாநிற்றி பாலன்னமே. (254)
(இ - ள்.) வெண்மை நிறம்பொருந்திய அன்னமே! மயிலாடப்பட்ட சோலைசூழ்ந்த மாறைநாட்டின் வரோதயனாகிய வாணன் பகைவர்க்கு அரணாயிருக்கப்பட்ட கடற்கழிக் கரையையுடைய சேர்ப்பற்கு இடையிருளில் யான் துயிலாநிலை யொன்றுஞ் சொல்லாய்; நீயோ துணை பிரியாமல் திரை சூழத்தக்கதாகத் தேன் செறிந்த அம்மலரணை மேல் துயிலாநின்றாய்; இது நினக்குத் தகாது என்றவாறு.
'துணையுடன் திரைசூழ் மலரணைமேல் துயிலாநிற்றி' எனவே, தான் அவையின்றி யிருக்கின்றே னென்று கூறியவாறு உணர்க.
தண்டலை - சோலை. ஒன்னார் - பகைவர். எயில் - அரண். வாணன் ஒன்னாரை நாட்டிலிருக்கவொட்டா னாதலால் அவர் கடலேறிச் செல்வர், அதனால் கடல் அவர்க்கு அரணாயிற்று. கானல் - கழிக்கரை. இடையிருள் - இடையாமம். பயிலுதல் - செறிதல். பாலன்னம் - வெள்ளையன்னம். 'சேர்ப்பன்' என்று தலைவனைக் கூறியவதனால் ஐந்திணையிற் கிளவிப்பொரு ளெத்திணை கூறவேண்டுமோ அத்திணைக்குரிய தலைவனும் தலைவியுமாகக் கூறுதல் இலக்கணமாதலின், இத் தலைவனும் தலைவியுமே கூறப்பட்டு வருவர்; வேறு தலைவனும் தலைவியும் அல்லர் எனக் கொள்க.
இவ்வாறு உளம் முதலியவற்றோடு கூறியும் புலம்பியும் அழுதும் பெறும் பயன் யாதோவெனின், மூடிவைத்து வேங்கலத்தை வாய்திறக்கில் ஆவிபோதலால் உட்புழுக்கஞ் சிறிது தணியுமென் றுணர்க.
---------- (254. சென்றோ னீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி - முற்றும்) ----------
255. தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல் :
தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல் என்பது, பாங்கி தலைவிக்குத் துயர் ஆறும்படி கூறல்.
ஆடுகம் வாநம் மகன்றவ ரூரக லாப்புதுநீர்
பாடுகம் வாபொற் பசலைதந் தார்திறம் பாங்கினெல்லாம்
தேடுகம் வாதஞ்சை வாணனன் னாட்டன்பர் தேர்வழிநாம்
சூடுகம் வாகவ லாதவர் கானற் றுறைமலரே. (255)
(இ - ள்.) நம்மை யகன்று அவரூரை யகலா வெள்ள நீரில் ஆடுகம் வா, பொற்பசலையை நமக்குத் தந்தவரது வெற்றியைப் பாடுகம் வா, தஞ்சைவாணன் நன்னாட்டி லுள்ள அன்பர் தேர் சென்ற வழிப்பக்க மெல்லாங் கவற்சி யில்லாது தேடுகம் வா, அவர் கானற்றுறை மலரைச் சூடுகம் வா, அஞ்சலை என்றவாறு.
தலைவி - முன்னிலையெச்சம். 'அஞ்சலை' என்பது வருவிக்கப்பட்டது. கானற் றுறை மலர் - கழிக்கரைத் துறைமலர். திறம் - வெற்றி.
---------- (255. தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல் - முற்றும்) ----------
இத்துணையும் பதினைந்தாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
256. தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல் :
பண்ணுங் குழலும் பழித்தசொற் பாவை பரியலெல்லா
மண்ணும் புகழ்தஞ்சை வாணனொன் னாரென மைக்குவளைக்
கண்ணும் கனையிருட் கங்குலு மாரன் கணைகள்பட்ட
புண்ணும் புலரவந் தார்தம தூர்வயிற் போனவரே. (256)
(இ - ள்.) பண்ணிசையும் யாழிசையும் பழித்த சொல்லையுடைய பாவைபோல்வாய், எல்லா வுலகும் புகழ்கின்ற தஞ்சைவாணன் ஒன்னாரென மைக்குவளைபோன்ற கண்ணில் நீரும், செறிந்த இருளொடு கூடிய இராக்காலமும், மாரன் கணைகள்பட்ட புண்ணும் புலரத் தமது ஊரிடத்துப் போனவர் வந்தார், ஆதலால் நீ வருந்தலை என்றவாறு.
குழல் - யாழ். பாவை - ஆகுபெயர். கண்ணிடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. புலர - என்பது இறுதிவிளக்கு. உம்மைகள் எண்ணின்கண் வந்தன. 'போனவர் வந்தார்' என இயையும்.
---------- (256. தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல் - முற்றும்) ----------
257. வந்தோன் தன்னொடு நொந்து வினாதல் :
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல் என்புழி, நொந்து - துன்பப்பட்டு; வினாதல் - நினைந்து வினாதல்.
ஒருதலைக் கெய்திய கல்லதர்க் குச்செல்ல வோருயிர்த்தாய்
இருதலைப் புள்ளி னியைந்தநுங் கேண்மையை யெண்ணியெம்மூர்
வருதலைக் கொண்க நினைந்திலை வாணன்தென் மாறைவண்டு
பொருதலைக் குங்குழ லாளழ நீகண்டு போயபின்னே. (257)
(இ - ள்.) கொண்கனே! நீ கல்பொருந்திய வழியிற் செல்ல வாணன் தென்மாறையில் வண்டு ஒன்றோடொன்று பொருது மாலையை யலைக்குங் குழலாளை அழக்கண்டு போயினபின், ஒருதலையாய்ப் பொருந்திய ஓர் உயிரை யுடைத்தாய் இருதலைப்புட்போ லியைந்த உம்முடைய வுறவை யெண்ணி எம் ஊரிடத்து வருதலை நினைந்திலை என்றவாறு.
'ஒருதலைக் கெய்திய ஓருயிர்த்தாய்' எனவும், 'கல்லதர்க்குச் செல்ல வண்டு பொருதலைக்குங் குழலாள்' எனவுங் கூட்டுக. ஒருதலை - நிச்சயம். கல்லதர் - கல்வழி. எய்தல் - பொருந்தல். கேண்மை - உறவு.
---------- (257. வந்தோன் தன்னொடு நொந்து வினாதல் - முற்றும்) ----------
258. தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் :
நொந்து வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீ ரென்று வினாதல்.
ஐவா யரவுற்ற தன்னவின் னாவிட ராற்றியென்போல்
எவ்வா றிருந்திர்நீ ரெல்வளை யீரெதிர்ந் தாரைவென்று
மைவா ரணங்கொண்ட வாணன்தென் மாறை மருவலர்போல்
ஒவ்வா வலரையுங் கேட்டிரு வீரு மொருதனியே. (258)
(இ - ள்.) ஒளிவளையீர்! எதிரேற்ற பகைவரை வென்று அவரேறி வந்த கரிய யானையை வாங்கிவந்த வாணனது தென்மாறை நாட்டை வந்து சேராதவர் போலப் பொருந்தாத பழிச்சொல்லையுங் கேட்டு இருவீரும் ஒரு தனியே ஐந்தலையரவு தீண்டியதேயொத்த பொல்லாத் துன்பத்தைப் பொறுத்து என்னைப்போல நீர் எவ்வாறிருந்தீர்; இருந்தவகையைச் சொல்லவேண்டும் என்றவாறு.
ஐவாயரவு - ஐந்தலைநாகம். இன்னா இடர் - ஐம்புலனால் வரும் பொல்லாத துன்பம். யான் இத்துன்பம் அனுபவித் திருந்தேன் என்பது தோன்ற, 'என்போல்' என்றார். எல்வளை - ஒளிவளை. மருவலர் - அடையாதவர். அலர் - பழி. ஒருதனி - ஒப்பற்றதனி. நொந்து வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீர் என்று வினாதல்.
---------- (258. தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் - முற்றும்) ----------
259. தலைவியை யாற்றுவித்திருந்த அருமை கூறல் :
இவளா ருயிர்புரந் தியானிருந் தேன்செக்க ரிந்துவன்ன
பவளா டவியிற் பயினித் திலம்பங் கயங்குவியத்
தவளா தவஞ்சொரி தண்டுறை வாதஞ்சை வாணன்தெவ்வின்
துவளாம லாற்றுவி யென்றன்று நீசொன்ன சொல்நினைந்தே. (259)
(இ - ள்.) செக்கர்வானத்துத் தோன்றிய பிறையைப் போலப் பவளக் காட்டில் நெருங்கிய நித்திலம் தாமரை குவிய வெள்ளைக்கிரணஞ் சொரியப்பட்ட தண்டுறைவனே! தஞ்சைவாணன் பகையைப்போலத் தலைவி மனந் துவளாமல் ஆற்றுவி யென்று நீ பிரிந்து போங்காற் சொன்ன சொல்லை நினைந்து இவள் அரிய வுயிரை நீங்காமல் யான் காத்திருந்தேன் என்றவாறு.
புரத்தல் - காத்தல். செக்கர் - செம்மாலை. இந்து - பிறை. நித்திலம் - முத்து. தவளாதவம் - வெண்கிரணம்.
---------- (259. தலைவியை யாற்றுவித்திருந்த அருமை கூறல் - முற்றும்) ----------
இவற்றுள், 'தன்பதிக் ககற்சி தலைவன் சாற்ற’லும், ‘பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தலும்' ஆகிய இரண்டும் செலவறி வுறுத்தற்கு உரியன.
‘தலைமகனைப் பாங்கி விலக்கல்' ஒன்றும் செலவுடன் படாமைக்குரித்து.
'நீங்கல் வேண்டல்' செலவுடன் படுத்தற் குரித்து.
'பாங்கிவிடுத்தல்' செலவுடன் படுதற் குரித்து.
'தலைமகள் நெஞ்சொடு புலத்த'லும், 'காமமிக்க கழிபடர் கிளவி'யும் ஆகிய இரண்டுஞ் சென்றுழிக் கலங்கற்குரியன.
'தலைமகளை யாற்றுவித்த'லும், 'தலைமகன் வந்தமை தலைமகட் குணர்த்த'லும் ஆகிய இரண்டும் தேற்றியாற்றுவித்தற்கு உரியன.
'பாங்கி வந்தோன்றன்னொடு நொந்து வினாதல்' முதல் மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்கு உரியனவெனக் கொள்க.
1.17. ஒருவழித் தணத்தல் முற்றிற்று.
-------------------------
1.18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் (260-280)
அஃதாவது, வரைவை இடையிலென வைத்து வரைதற்கு வேண்டும்பொருள் காரணமாகப் பிரிதல்.
தலைவன் வரைதற்குப் பொருட்காரணமாகப் பிரிந்தான் எனின் பொருளிலனாயிற்று. ஆகவே, பொருவிறந்தான் என்பதனோடு மாறுகொள்ளுமெனின், மாறுகொள்ளாது. பழங் கிடையாய்க் கிடைக்குஞ் செம்பொருள் பலவுளவேனும் அதனையெடுத்து நுகர்வோன் சிறியனாதலானும், ஆள்வினையுடையன் அல்லனெனப் படுதலானும், இவன் தன் ஊக்கத்தா லீட்டிய பொருளைப் பலவாற்றானும் நுகர்தல் உத்தம விலக்கணமென்று கருதிப் பொருள்வயிற் பிரிந்தானென்று உணர்க.
[1]‘பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை
பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வரும்வழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்
றொருமையிற் கூறிய வொன்பது வகைத்தே
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவே.'
என்னுஞ் சூத்திர விதியால், வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் ஒன்பது வகைப்படும்.
-----
[1.18-1] அகப்பொருள் விளக்கம், களவியல் - (௫௮) 58.
----------
260. என் பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல் :
கழைபோல் வளர்நெற் கவின்பெற வாரி கவர்ந்துவரும்
மழைபோல் வருகுவன் வன்சுரம் போய்த் தஞ்சை வாணன்வெற்பில்
இழைபோ லிடையாள் முலைவிலைக் காவன யாவையுங்கொண்
டுழைபோ லரிநெடுந் தண்மயி லேசென் றுணர்த்திதுவே. (260)
(இ - ள்.) மான்போன்ற செவ்வரி பரந்து நீண்ட கண்ணையுடைய மயில் போன்றவளே, வலிய சுரத்திடைப் போய்த் தஞ்சைவாணன் வெற்பிலிருக்கும் நூல்போன்ற இடையாள் முலைவிலைக்கு ஆகவேண்டிய பொருள்களெல்லாங் கொண்டு, கரும்புபோல் வளரப்பட்ட நெல் அழகு பெற நீர் கவர்ந்து கொண்டுவரும் முகில்போல், யான் வருவல், நீ தலைவி பக்கற்போய்ப் பிரிவைச் சொல்வாயாக என்றவாறு.
எனவே, தலைவி நெற்பயிராகத் தான் முகிலாகவும், பொருள் நீராகவும், அப்பொருளைக் கண்டு தலைவி மகிழ்ச்சியாற் கரும்பு போல் வளர்வதாகவும் உள்ளுறையுவமங் கொள்ளக் கிடந்தவாறு காண்க.
யான் என்றது தோன்றா எழுவாய். கழை - கரும்பு. கவின் - அழகு. வாரி - நீர். கவர்தல் - வாங்கல். மழை - முகில். சுரம் - வழி. இழை - நூல். உழை - மான். அரி - செவ்வரி. மயில் - சிறப்புருவகம்.
---------- (260. என் பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல் - முற்றும்) ----------
261. பாங்கி நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றல் :
வசையும் புகழுநின் மேலள வாந்தஞ்சை வாணன்வெற்பா
மிசையுங் கரும்பினில் வேம்புவைத் தாலன்ன வேட்கையெல்லாத்
திசையும் பரவுந் திருவனை யாள்தன் றிருவுளத்துக்
கிசையும் படிவல்லை யேற்சொல்லி நீபின் எழுந்தருளே. (261)
(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பனே! வசைவரினும் புகழ்வரினும் நின்பக்கலாம்; நின் பொருள்வேட்கை நுகரும் கரும்பிற் கைக்கும் வேம்பை வைத்தா லொக்கும்; எல்லாத் திசையி லுள்ளோரும் துதிக்குந் திருவையொப்பாள் தன் திருவுள்ளத்திற்குப் பொருந்தும்படி சொல்லவல்லையேல் சொல்லி, நீ பின் எழுந்தருள்வாயாக என்றவாறு.
வசை - இகழ்ந்து கூறப்படுஞ் சொல். புகழ் - புகழ்ந்து கூறப்படுஞ் சொல். மிசைதல் - நுகர்தல். இசைதல் - பொருந்துதல்.
---------- (261. பாங்கி நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றல் - முற்றும்) ----------
262. நீடேனென்றவனீங்கல் :
நீடேன் என்று அவன் நீங்கல் என்பது, தலைவன் நீட்டித்திராது விரைந்து வருவலென்று பாங்கியொடு கூறி நீங்குதல்.
காலைப் பொழுது கடும்பரித் தேர்பண்ணிக் கானகம்போய்
மாலைப் பொழுது வருகுவல் யான்றஞ்சை வாணனன்னாட்
டாலைப் பழன மணிந்தவெம் மூர்நும் மகங்குளிரச்
சோலைப் பயில்குயில் போன்மொழி யாயென் றுணிவிதுவே. (262)
(இ - ள்.) சோலையிடத்துப் பழகுங் குயில்போல் மொழியாய்! கதிரோன் உதிக்குங் காலத்திற், கடுகிச் செல்லும் பரியையுடைய தேரைப் பண்ணமைத்துத் தஞ்சைவாணன் நன்னாட்டிடத்துக் கரும்பு வளர்ந்தெழுந்த வயல் சூழ்ந்த எம் ஊர்க்கு, கானகங் கடந்துபோய், நும் அகங் குளிரக் கதிரோன் மறையும் மாலைக்காலத்தில் யான் வருகுவல், என் மனத்தின்கண் துணிவிது என்றவாறு.
தேர் பண்ணல் - தேர் செலுத்தற்கு உரியன வெல்லாம் அமையச் செய்தல். ஆலைப்பழனம் - கருப்பம்வயல். கடும்பரி - கடுகிச் செல்லும் பரி. 'காலைப்பொழுது கடும்பரித் தேர்பண்ணிக், கானகம் போய் மாலைப்பொழுதில் வருகுவல் யான்' எனில், 'வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோ ரிருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்.' என்னுஞ் சூத்திரத்தொடு மாறுகொள்ளுமே யெனின் அற்றன்று; காலைப் பொழுதிற்போய் மாலைப் பொழுதில் வருகுவன் எனப் பாங்கி கருதத் தன் கருத்தில் வருஞான்று மாலைப் பொழுதில் வருவதாய் எண்ணித் தலைவன் கூறியவாறென்க.
இக் கருத்தானே யன்றி, தலைவன் மீண்டு வருங்கால், 'பாகனோடு சொல்லல்' என்னுங் கிளவிச்செய்யுளில், 'சென் மாலை யந்திகண் டால்தரி யாளென் றிருந்திழையே' [தஞ். கோவை - (௨௭௪) 274] எனக் கூறியதூஉமெனக் கொள்க.
---------- (262. நீடேனென்றவனீங்கல் - முற்றும்) ----------
263. பாங்கி தலைவிக் கவன்செல வுரைத்தல் :
வில்லேய் குறும்பு மிரும்புமெவ் வாயும் விராயவெவ்வாய்க்
கல்லேய் கவலைக் கடங்கடந் தார்தமர் காய்ந்தெதிர்ந்தார்
செல்லேய் [1]முரசச் செருவென்ற வாணன்தென் மாறையினின்
வல்லேய் முலைவிலை தான்தந்து நாளை மணம்பெறவே. (263)
(இ - ள்.) சினந்து எதிர்ந்தார் இடிக்கொப்பான பல்லியம் முழக்கும் போரை வென்ற வாணன் தென்மாறை நாட்டில் நினது வல்லுக் கொப்பான முலைவிலை தந்து நாளை மணம்பெற வேண்டுமென்பது கருதி, நம் அன்பர், விற்கள் சாத்தியிருக்கின்ற குறும்பும் சிறு மலைகளும் எவ்விடமுங் கலந்து, நடப்போர் கால்களை யறுக்கும் வெவ்விய வாய்களை யுடைய கற்களும் பொருந்திய கவர்வழியையுடைய காட்டைக் கடந்தார் என்றவாறு.
குறும்பு - பாலைநிலத்து வேடரிருக்கும் ஊர். இறும்பு - சிறுமலை. கவலை - கவர்வழி. கடம் - காடு. செல் - இடி. வல் - சூது.
-----
[263-1] 'களிற்று' என்பதும் பாடம்.
----------
---------- (263. பாங்கி தலைவிக் கவன்செல வுரைத்தல் - முற்றும்) ----------
264. பூங்குழை யிரங்கல் :
பூங்குழை இரங்கல் என்பது, தலைமக ளிரங்கல்.
இப்பே ருவகை யினிப்பிரி யேனென்றும் என்முன்சொன்ன
அப்பே ருரைபழு தாமென்ன வேயர வஞ்சுமந்த
மைப்பேர் அலைகடல் வையகந் தாங்கிய வாணன்தஞ்சை
செப்பேர் இளங்கொங்கை மங்கைசெப் பாதன்பர் சென்றதுவே. (264)
(இ - ள்.) பாம்பு ஆயிரந் தலையாற் சுமக்கப்பட்ட நீலநிறப் பெரிய அலைகடல் சூழ்ந்த புவிப்பாரத்தைத் தாங்கிய வாணனது தஞ்சையி லிருக்குங் கடைந்த செப்புப் போன்ற இளங்கொங்கையை யுடைய நங்காய்! அன்பர் என்னுடன் சொல்லாது சென்றது, இயற்கைப்புணர்ச்சியிற் கூடிய ஞான்று இப்பெரிய மகிழ்ச்சியை இனிப் பிரியே னென்று என்முன் சொன்ன அப் பெரியசொல் பிரிவலென்று சொல்லிற் பழுதாமென்றோ என்றவாறு.
இவ்வாறு தலைவனை அசதியாடுதல்போல், 'கூறிய வுரையை மறந்தார்' என்று, குறிப்புத்தோன்ற இரங்கிக் கூறினாளென்க. உவகை - மகிழ்ச்சி. உம்மை - அசைநிலை. மங்கை - அண்மை விளி.
---------- (264. பூங்குழை யிரங்கல் - முற்றும்) ----------
265. பாங்கி கொடுஞ்சொற் சொல்லல் :
பாங்கி கொடுஞ்சொல் சொல்லல் என்பது, இவ்வாறு நீ யிரங்குவது என்னையென்று கழறிக்கூறல்.
ஆரணத் தானருள் பாரளித் தானடங் காதவரை
வாரணத் தால்வென்ற வாணன்தென் மாறை வயங்கொளிசேர்
பூரணத் தார்மதி போன்முகத் தாயென் புலம்புதிநின்
காரணத் தாலல்ல வோபிரிந் தாரின்று காதலரே. (265)
(இ - ள்.) பிரமனால் உண்டாகிய நிலவுலகத்தைக் காத்துப் பகைவரை யானைப்படையால் வென்ற சந்திரவாணன் தென்மாறை நாட்டில் விளங்கிய ஒளிசேர்ந்த பூரணைத் திதியினாலே நிறைந்த மதிபோன்ற முகத்தாய்! ஏன் புலம்புகின்றாய்; நின்னை மணம்புணர் காரணத்தால் அல்லவோ காதலர் இன்று பிரிந்தார் என்றவாறு.
ஆரணத்தான் - பிரமன். பூரணை - பூரணைத்திதி.
---------- (265. பாங்கி கொடுஞ்சொற் சொல்லல் - முற்றும்) ----------
266. தலைவி கொடுஞ்சொற் சொல்லல் :
தலைவி கொடுஞ்சொல் சொல்லல் என்பது, கழறிய பாங்கியை மனத்தினால் நொந்து கூறல்.
மண்டுந் திரைவையை சூழ்தஞ்சை வாணற்கு வன்புலியும்
செண்டுங் கொடுத்தகல் செம்பியர் போலன்பர் சென்றுழிமுள்
இண்டுங் கழையும் பயிலும்வெங் கானியல் கேட்டுமிந்நோய்
கண்டுங் கலங்கல்செல் லாதிந்த வூரெற் கழறல்நன்றே. (266)
(இ - ள்.) திரைநெருங்கும் வைகை சூழ்ந்த தஞ்சைவாணனுக்கு வலிய புலிக்கொடியையும் செண்டாயுதத்தையும் கொடுத்தகலப்பட்ட சோழரைப்போல அன்பர், சென்றவிடத்தில் முள்பொருந்திய ஈகைச்செடியும் மூங்கிலும் நெருங்கும் வெவ்விய காட்டினிலக்கணத்தைக் கேட்டும் யான் துயருழக்கும் இவ் வேட்கை நோயைக் கண்டும் மனத்திடத்துக் கலக்கஞ் செல்லாது இந்த வூர் என்னைக் கழறுதல் நன்றே என்றவாறு.
பாங்கி கழறியவதனை ஊரின்மேல் வைத்துக் கூறியது.
வாணனுக்கு வன்புலியும் செண்டும் கொடுத்தகல் செம்பியர் போலத் தலைவன் சென்றான் என்று தலைவனுக்கு இகழ்ச்சி தோன்றியதெனின், தலைவன் ஊர்விட்டுக் கானிடைச் சென்றதற்கு உவமை கூறியதல்லது பதிகொடுத்தற்கு உவமை கூறியதன்றாதலான், இகழ்ச்சி தோன்றாதென் றுணர்க.
மண்டுதல் - நெருங்குதல். புலியும், செண்டும் - ஆகுபெயர். செம்பியர் - சோழர். இண்டு - ஈகை. கழை - மூங்கில்.
---------- (266. தலைவி கொடுஞ்சொற் சொல்லல் - முற்றும்) ----------
267. வருகுவர்மீண்டெனப் பாங்கி வலித்தல் :
வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் என்பது, பாங்கி தலைவர் மீண்டுவருவர் எனக் கூறுதல்; வலித்தல் - கூறுதல்.
தேர்த்தானை வாணன்தென் மாறைமின் னேயஞ்சல் செம்புருக்கி
வார்த்தா லனைய வழிநெடும் பாலை மடப்பெடைநோய்
பார்த்தா தவந்தணி பாதவ மின்மையிற் பைஞ்சிறகால்
போர்த்தாலு மஞ்ஞைகண் டும்போவ ரோநம் புரவலரே. (267)
(இ - ள்.) தேர்ப்படையை யுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கு மின்னே, அஞ்சலை; செம்பையுருக்கி வார்த்தாலொத்த வெப்பத்தைத் தருகின்ற வழி நெடிதாகிய பாலைநிலத்து மடப்பத்தொடு கூடிய பெடைமயிலினது வெயிலானாகிய துன்பத்தைப் பார்த்து, அவ் வெயிற் றணிக்கின்ற மரங்க ளில்லாமையால், தனது பசிய சிறகினாலே போர்த்து அகவும் மயில் கண்டும், நம் புரவலர் போவரோ, மீண்டுவருவரோ, என்றவாறு.
எனவே, தலைவன் ஏகுங்கால் சுரத்து நிகழுந்தன்மை பாங்கி யறிந்தவா றென்னையெனின், தலைவன் செல்லுங்கால் சுரம் இத் தன்மையவென்று சொல்லியவாற்றால் அறிந்திருந்தா ளாகலின்,இவ்வாறு கூறினாளென்க.
இவ்வாறு சொல்லியதை [1]'அரிதாயவறனெய்தி' என்னும் கலித்தொகையானும் உணர்க.
தானை - படை. ஆதவம் - வெயில். பாதவம் - மரம். ஓகாரம் - எதிர்மறை.
-----
[267-1] கலித். பாலை - (௧0) 10.
----------
---------- (267. வருகுவர்மீண்டெனப் பாங்கி வலித்தல் - முற்றும்) ----------
268. பருவங்கண்டு பெருமகள் புலம்பல் :
பருவம் கண்டு பெருமகள் புலம்பல் என்பது, தலைவன் பிரியுங்கால் கார்க்கு முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப் போயின னாகையால், கார்ப்பருவங் கண்டு தலைமகள் புலம்பிக் கூறுதல்.
குறிப்பாற் கூறியது எங்ஙனமெனின், 'நீடேனென்றவன் நீங்கல்' என்னும் செய்யுளில், 'மாலைப்பொழுது வருகுவல்யான்' என்றது, மாலைக்குரித்தாகிய பொழுது கார்காலமென்று குறிப்பா னறிவித்தவா றுணர்க. அக்குறிப்பறிந்து பாங்கி தலைவிக்குக் கூறியவதனால் தலைவி கார்கண்டு புலம்பினாள் என்பது. அன்றியும், மேற்கிளவி இகுளை வம்பாகத் தோன்றியது தலைவன் கூறிய கார்ப்பருவமன் றெனப் பொருள் கொள்ளக்கிடந்தது. இவை யாவும் குறிப்பாற் கூறிய தென்றுணர்க.
மிகவும் பரந்த கரியகண் ணீர்செங்கை வெள்வளைபோல்
உகவுந் துறந்தவ ருன்னல ராலுறை கார்பொழிய
மகவுந் துணையுங் கலைதழு வுந்தஞ்சை வாணன்வெற்பின்
அகவும் பெடைமயி லுந்தமி யேனெங்ஙன் ஆற்றுவலே. (268)
(இ - ள்.) சிவந்த கையினிடத்துச் சங்கவளை யுகுந்ததுபோல மிகவும் விரிவாகிய கரியகண்ணினீர் துளித்துளியா யுதிரவும் துறந்ததலைவர் நினைந்திலர்; ஆதலால், காரானது துளிகளைப்பெய்ய மழைத்துன்பத்தா லஞ்சி மகவும் துணையும் முசுக்கலையைத் தழுவும் தஞ்சைவாணன் வெற்பிற் பெடைமயிலும் அகவும்; தனியா யிருக்கப்பட்ட யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என்றவாறு.
'செங்கை வெள்வளைபோல மிகவும்பரந்த' எனக் கூட்டுக. உகுத்தல் - உதிர்தல். உன்னலர் - நினைந்திலர். உறை - துளி. கார் - முகில். துணை - பெண்குரங்கு. கலை - முசுக்கலை.
[1]'கலையென் காட்சி யுழைக்கு முரித்தே.'
'நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்.’
என்னுஞ் சூத்திரங்களால் கலை முசுவின் ஆண்பெயரென்று கொள்க. பெடைமயில் என்புழி உம்மைத்தொகை.
-----
[268-1] தொல். பொருள். மரபியல் - (௪௫, ௪௬) 45, 46.
----------
---------- (268. பருவங்கண்டு பெருமகள் புலம்பல் - முற்றும்) ----------
269. இகுளை வம்பென்றல் :
இகுளை வம்பு என்றல் என்பது, அவ்வாறு புலம்பிய தலைவி தேறும்வண்ணம் பாங்கி இது காலத்தின் வந்த மேகமன்று, இடையே வம்பாகத் தோன்றியதென்று கூறியது. வம்பு - காலமல்லாத காலத்திற் றோன்றும் பொருள்.
தனஞ்சேர்ந்த வஞ்சிநின் சாயல்கண் டஞ்சித் தனித்தனிபோய்
வனஞ்சேர்ந் தயர்ந்த மயில்களெல் லாந்தஞ்சை வாணன்வெற்பில்
கனஞ்சேர்ந் தலர்துனி காலுமுன் னேவம்பு காலுமென்னா
இனஞ்சேர்ந் தகவின நாந்தனி வாடி யிருத்தல்கண்டே. (269)
(இ - ள்.) திரண்டதனத்தை யுடைய வஞ்சி, நினது சாயலைக்கண்டு அஞ்சி ஒன்றோடொன்று கூடாமல் தனித்தனியாய்ப் போய்க் காட்டிற் சேர்ந்து அயர்ந்த மயில்க ளெல்லாம் தஞ்சைவாணன் வெற்பினிடத்துக் கார்காலம் வந்து மேகங்கள் கூடிப் பருத்த துளிகளையும் முன்னே வம்பாக மழையைப் பெய்யு மென்றெண்ணி, நாம் அன்பரைப் பிரிந்து தனியாய் வாடியிருத்தலைக் கண்டு, கூட்டங் கூடி அகவாநின்றன; ஆதலால், இது தலைவன் கூறிய காலத்தில் வருங் காரன்று என்றவாறு.
காரியத்தைக் காரணமாக உபசரிக்கப்பட்டது. தனம் - முலை. சேர்தல் - திரட்சி; [1]'சேரே திரட்சி' என்னும் உரிச்சொல்லியற் சூத்திரத்தானு முணர்க.
அயர்தல் - இளைத்தல். அலர்தல் - பருத்தல். [2]'தண்கம ழலரிறால் சிதைய' என்னுந் திருமுருகாற்றுப்படையுட் கூறியதனா னுணர்க. அன்றியும், [3]'அலர்முலைப் பாங்கி யருளியல் கிளத்தல்' என்னும் அகப்பொருட் சூத்திரத்தானு முணர்க.
-----
[269-1] தொல். சொல். உரியியல் - (௬௭) 67.
[269-2] திருமுரு. – (௩00) 300.
[269-3] இறையனார் அகப்பொருள் - (௩) 3.
----------
---------- (269. இகுளை வம்பென்றல் - முற்றும்) ----------
270. இறைமகள் மறுத்தல் :
இறைமகள் மறுத்தல் என்பது, தலைவி பாங்கி கூறியவதனை மறுத்துக் கூறல்.
வாவித் தகையன்ன மேதஞ்சை வாணன் வரையகத்தென்
பாவித் தனிநெஞ்சு பார்த்தஞ்சு மேகண் பயின்றகண்ணார்
தூவித் தளைமயில் கோபங்கொள் ளாவரத் தோன்றியைச்சேர்ந்
தாவித் தகந்தள ரும்மணி காலு மராவென்னவே. (270)
(இ - ள்.) வாவியிலிருக்கும் அழகு பொருந்திய அன்னம்போல்வாய்! தஞ்சைவாணன் வரையிடத்து என் கண் பார்த்துப் பாவித் தனிநெஞ்சு அஞ்சாநிற்கும்; நெருங்கிய கண்களார்ந்த சிறகாகிய தளையையுடைய மயில் காந்தளை அரிய மணியையுமிழும் நாகமெனச் சினங்கொண்டு வர அல்லாமையினால் காந்தளைச் சேர்ந்து பெருமூச்செறிந்தன; ஆதலால், வம்பன்று; காலத்தில் வந்த கார் இது என்றவாறு.
எனவே, காந்தள் மலருங் காலம் கார்காலமென்பது தோன்றக் கூறினாளென்க. தகை - அழகு. அன்னம் - ஆகுபெயர். 'வரையகத்தென் கண்பார்த்து' என வியையும். 'கண்பார்த்து' என்னும் வினையெச்சம் தன்வினையைக்கொண்டு முடியாது, 'நெஞ்சஞ்சும்' எனப் பிறவாற்றான் முடிந்தது. என்னையெனின், [1]'உரற்கால் யானை யொடித்துண்டெஞ்சிய, யாநிழற் றுஞ்சிய செந்நா யேற்றை' என்றாற்போலுங் கொள்க.
தூவி - சிறகு. கோபம் - சினம். தோன்றி - காந்தள். ஆவித்தல் - பெருமூச்செறிதல், காந்தள் என்புழி இரண்டனுருபு தொகுத்தல். காலுதல் - உமிழ்தல்.
-----
[270-1] குறுந்தொகை - (௨௩௨) 232.
----------
---------- (270. இறைமகள் மறுத்தல் - முற்றும்) ----------
271. அவர் தூதாகிவந்தடைந்த திப் பொழுதெனத் துணைவி சாற்றல் :
அவர் தூதாகி வந்து அடைந்தது இப் பொழுது எனத் துணைவி சாற்றல் என்பது, தலைவி கார்காலம் வந்ததென்று கூறியசொற் கேட்ட பாங்கி, தலைவன் தான் வருகின்ற செய்தியை அறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் தூதாய் வந்து அடைந்ததென்று கூறல்.
இன்னே வருவர்நின் காதல ரேதில ரேங்கவினிக்
கொன்னே யிரங்கி வருந்தல்கண் டாய்கொற்ற நேமிவிந்தை
மன்னே யெனவந்த வாணன்தென் மாறை வரவுணர்த்த
முன்னே நடந்தன காண்கடுங் கால முகிலினமே. (271)
(இ - ள்.) அலர் தூற்றும் அயலாரேங்க நின் காதலர் இப்போதே வருவர்; இன்று வீணேயிரங்கி வருந்தலை; வெற்றியாழியைப் புனைந்த சயமாதுக்கு இறைவனென வந்த வாணன் தென்மாறை நாட்டில் தலைவர் வரவுணர்த்த விரைவொடு கூடிய முகிலினம் முன்னே நடந்துவந்தன காண்பாயாக என்றவாறு.
இன்னே - இப்போதே. ஏதிலர் - அயலார். கொன்னே - வீணே. கண்டாய் - முன்னிலையசை. கொற்றநேமி விந்தை - சய மாது. மன் - இறைவன். முகிலினம் - முகிற் கூட்டம்.
---------- (271. அவர் தூதாகிவந்தடைந்த திப் பொழுதெனத் துணைவி சாற்றல் - முற்றும்) ----------
272. தலைமகளாற்றல் :
இன்புற்ற காலத் திருவர்க்கு மொன்றுயி ரென்றுசொன்னார்
அன்புற்ற காதல ராதலி னாலகன் றாரெனநாம்
துன்புற்ற காலத் தவருமு றாரல்லர் தோழிசொல்லும்
வன்புற்ற காரளிக் குந்தஞ்சை வாணன்தென் மாறையிலே. (272)
(இ - ள்.) கார்போற் கொடுக்குந் தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில் தோழி சொல்லுஞ் சொல்லும் வற்புறுத்தலைப் பொருந்திய; அன்றியும், அன்புற்ற காதலர் தாம் இன்புற்றகாலத் திருவர்க்கும் உயிரொன்றென்று சொன்னார்; ஆதலால், நம்மைப் பிரிந்தாரென்று நாம் துன்பமுற்ற காலத்து அவரும் வாராரல்லர் என்றவாறு.
எனவே, வருவ ரென்பதாயிற்று. 'அன்புற்ற காதல ரின்புற்ற காலத்து' எனவும், 'உயிரொன்று' எனவும் மாறுக. உறாரல்லர் - வாராரல்லர். வற்புறுத்தல் - ஆற்றுவித்தலைப் பொருந்தல். காரளிக்கும் என்பது உவமத்தொகை.
---------- (272. தலைமகளாற்றல் - முற்றும்) ----------
273. அவனவட் புலம்பல் :
அவன் அவண் புலம்பல் என்பது பொருளீட்டச் சென்ற தலைவன் தன் கருமமுற்றிய பின்றையே அவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்பல்.
விழிகுழி யும்படி தேர்வழி பார்த்தனை வீழ்ந்துவண்டு
கொழுதிமி ருங்குழல் சோரக் கிடந்து குடங்கையின்மேல்
ஒழுகிய அஞ்சன வெள்ளத் துணங்கு மணங்கைமுன்சென்
றெழுகெனு நெஞ்சமென் னேயவ ரோவெனி லென்சொல்லுமே. (273)
(இது பிறசெய்யுட் கவி.)
-----
[273-1] அம்பிகாபதிகோவை - (௩௧௯) 319.
----------
---------- (273. அவனவட் புலம்பல் - முற்றும்) ----------
இத்துணையும் பதினாறாநாட் செய்தியென் றுணர்க.
--------------------
பதினாறாம் நாள்
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன்
ஐம்பத்தொன்றாம் நாள்
மீண்டு வந்தமையால் முப்பத்துநான்கு நாள் இடைப்பட்டதென உணர்க.
--------------------
274. மீண்டுவருங்காலைப் பாகனொடு செல்லல் :
வன்மா முடுக வலவதிண் தேரினி வாணன்றஞ்சைக்
கென்மா லுறுநெஞ்சின் முன்செல நாகிள வேறுபுல்லிப்
பொன்மா மணியும் பிரிந்திருந் தாரும் புலம்பமன்றில்
சென்மாலை அந்திகண் டாற்றரி யாளென் திருந்திழையே. (274)
(இ - ள்.) கழுத்திற்கட்டிய இரும்பிற்செய்த பெரிய மணியும் கணவரைப்பிரிந்த மாதரும் புலம்புறப் பசுவானது மழவிடையைச் சேர்ந்து மன்றத்திற் செல்லும் மாலையாகிய அந்திக் காலத்தைக் கண்டால், என் திருந்திழை ஆற்றாள்; ஆதலால், பாகனே! வாணன் தஞ்சையூர்க்கு என் ஆசைகொண்ட நெஞ்சு செல்வதற்கு முன்னே, இன்று திண்ணிய தேர்செல்லத் தேரிற் பூட்டிய வலிய குதிரைகளை முடுகச்செய் என்றவாறு.
வல் - வலிமை; விரைவுமாம். மா - 'குதிரை முடுகச்செய்' என்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கது. வலவன் - தேர்ப்பாகன்; அண்மைவிளி. ஏறு - விடை. [1]'எருமையு மரையும் பெற்றமு மன்ன' என்னும் மரபியற் சூத்திரவிதியானும் உணர்க. பொன் - இரும்பு;
[2]'வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.’
என்றார் பிறரும்.
'கங்கையார் தாங்குங் கானப் பெருங்கவலை
யெங்கு மறவோ ரிரைத்தெழுந்தார் — திங்களைக்கண்
டென்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ
கன்றுகாண் மெய்குளிர்மின் கண்டு.'
என்றார் பிறரும்.
மாலையந்தி, மீமிசை என்பதுபோல் நின்றது. திருந்திழை - அன்மொழித்தொகை.
-----
[274-1] தொல். பொருள். மரபியல் - (௩௯) 39.
[274-2] குறள். சூது - (௧) 1.
----------
---------- (274. மீண்டுவருங்காலைப் பாகனொடு செல்லல் - முற்றும்) ----------
275. மேகத்தொடு சொல்லல் :
மேகத்தொடு சொல்லல் என்பது, தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிச் சொல்லல்.
வேண்டும் பொருளைத் தரும்பொருட் போய்முற்றி மீண்டவென்றேர்
தூண்டும் பரிமுன் துனைமுகில் காள்சென்று சொல்லும்இந்து
தீண்டுங் கொடிமதில் சூழ்தஞ்சை வாணனைச் சேரலர்போல்
ஈண்டும் பசலைமெய் போர்த்திருப் பார்தமக் கென்வரவே. (275)
(இ - ள்.) விரும்பப்பட்ட எப்பொருளையும் கொடுக்கும் பொருட்குப் போய் முடிவாகி மீண்ட எனது தேரிலே பாகன் செலுத்தும் பரிமுன்னாக விரைந்தோடும் முகில்காள், திங்களைத் தீண்டும் கொடி கட்டிய மதில்சூழ்ந்த தஞ்சைவாணனைச் சேராதவர்போல் நெருங்கும் பசலைநிறம் மெய்யெங்கும் போர்த்திருப்பவர் தமக்கு எனது வரவினைச் சென்று சொல்வீர் என்றவாறு.
வேண்டல் - விரும்பல். 'பொருட்போய்' என்புழி, நான்கனுருபு தொக்கது. முற்றல் - முடிதல். தூண்டல் - செலுத்தல். பரி - குதிரை. துனைவு - விரைவு, [1]'கதழ்வும் துனைவும் விரைவின் பொருள்' என்னும் சூத்திரவிதியா னுணர்க. இந்து - திங்கள். சேரலர் - பகைவர். தீண்டல் - நெருங்குதல். சேரலருந் துன்பத்தால் வேறுபட்டிருப்பர், மாதரும் துன்பத்தால் மெய்ந்நிறம் வேறுபட் டிருப்பாராதலால், உவமை கூறியவாறு உணர்க.
-----
[275-1] தொல். சொல். உரியியல் - (௧௯) 19.
----------
---------- (275. மேகத்தொடு சொல்லல் - முற்றும்) ----------
276. பாங்கி வலம்புரிகேட்டு, அவன் வரவறிவுறுத்தல் :
பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிவுறுத்தல் என்பது, பாங்கி வலம்புரி யோசையைக் கேட்டுத் தலைவன் வரவை அறிவுறுத்தல்.
பொருகின்ற செங்கயல் போல்விழி யாழ்பண்டு போயநின்கைக்
குருகின் றணித்திறை கொள்வது காண்கநங் கொண்கர்பொற்றேர்
தருகின்ற சங்கத் தருவன்ன வாணன் தமிழ்த்தஞ்சைவாய்
வருகின்ற தென்றுமுன் னேயோகை கூறும் வலம்புரியே. (276)
(இ - ள்.) ஒன்றோடொன் றெதிர்க்கின்ற செங்கயல் போலும் விழியாய், முன்னாள் கழன்று போய நின் கைவளை இன்று புனைந்து தங்குவது அழகுதக; நம் கொண்கர் ஏறிவரும் பொற்றேரானது, தருகின்ற சங்கநிதியையும் கற்பகத் தருவையும் ஒத்த வாணன் தமிழ்த்தஞ்சை வீதிவாய் வருகின்றதென்று முன்னே வலம்புரிச் சங்கமானது மகிழ்ச்சி கூறாநின்றது, நீ கேட்பாயாக என்றவாறு.
குருகு - வளை. இறைகொள்வது - தங்குவது. காண்க - அழகுதக.
[1]'நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றும்
கைத்தலந் தீண்டப் பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க.’
என்னும் சிந்தாமணிச் செய்யுளில், 'காண்க' என்னுஞ் சொற்கு, ‘அழகுதக' என்று நச்சினார்க்கினியர் கூறிய உரையானு மறிக. கொண்கர் - தலைவர். ஓகை - உவகை.
-----
[276-1] சிந்தா. விமலை - (௧௯) 19.
(இவ்விசேடவுரை அச்சிட்ட பிரதியில் காணப்படவில்லை.)
----------
---------- (276. பாங்கி வலம்புரிகேட்டு, அவன் வரவறிவுறுத்தல் - முற்றும்) ----------
277. வலம்புரி கிழத்தி வாழ்த்தல் :
மால்வண் டெனமன்னி வாணன்தென் மாறைமன் னன்புகழே
போல்வண் டமிழ்மன்னர் போற்ற விளங்குக பொன்கொழிக்குங்
கால்வண்டல் வையைக் கரைமல்கு மல்லிகைக் கான்முகையின்
மேல்வண் டிருந்தது போற்கரு மாமுக வெண்சங்கமே. (277)
(இ - ள்.) பொன்கொழிக்கும் வண்டல்பரந்த வாய்க்கால் பொருந்திய வையை யாற்றங்கரையில் நிறையும் மல்லிகையினது காம்பொடியக்கூடிய முகையின்மேல் வண்டிருந்ததுபோலக் கரிய முகத்தொடுகூடிய பெரிய வெண்சங்கமானது, திருமால் கைச்சங்கே போல என்றும் அழியாமையாய் நிலைபெற்ற வண்மைபொருந்திய தமிழ்வேந்த ராலே போற்ற நின்ற வாணனாகிய தென்மாறைநாட்டு மன்னன் புகழ்போல் வண்தமிழ்மன்னர் துதிக்க விளங்குக என்றவாறு.
கால் - வாய்க்கால். வண்டல் - திரைபுரண்டு இருகரையும் பரப்பிய மண். மல்குதல் - நிறைதல். காம்புமுகத்து மெழுகு அமைத்தலால் கருமுகம் என்றது. மா - பெருமை, 'கருமுக மா வெண்சங்கம்' எனக் கூட்டுக.
---------- (277. வலம்புரி கிழத்தி வாழ்த்தல் - முற்றும்) ----------
278. தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல் :
தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல் என்பது, வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் பிரிந்த முப்பத்தைந்தாநாள் வந்தானென்று நாள் வரையறை கூறியது என்னை யெனின்,
'களவொழுக்கமிருதிங்கள்.'
என்று வரையறை கூறினமையாலும்,
[1]'களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டம்
திங்க ளிரண்டி னகமென மொழிப.'
என்ற இறையனாரகப்பொரு ளுரையில், 'திங்களிரண்டினகம்' என்பதற்குத் திங்கள் இரண்டின்கண் என்றும், ஐந்து நாள் ஆறுநாள் அவர் வரைவு முடியும் என்றும் கூறினாராகலானும், 'ஒருவழித் தணத்தல்' என்பதுவரைக்கும் இவ்வுரையில் பதினைந்து நாளென்று கூறுதலானும், வரைவியல் ஆறாம்நாள் மணமுடிந்ததாகக் கூறுதலானும், ஆக ஐம்பத்தாறாம் நாளென்று வரையறையாய் நிற்றலின், ஈண்டு முப்பத்தைந்தாநாள் என்று வரையறை கூறியதெனக் கொள்க.
[2]'வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்
இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்.'
என்னுஞ் சூத்திரவிதியான், இருதிங்கள் சென்றதென்று கூறாது முப்பத்தைந்துநாள் சென்றதென்று கூறியது என்னையெனின், இருதிங்கள் சென்று வருவதல்லது இதற்குள்ளாக வருவது அன்றென இலக்கணங் கூறிற்றிலர்; இருதுவின் கண்ணுடைத்து எனக் கூறுதலான், இவ்விருதுவிடை எவ்வளவு வரையறைப்பட்டதோ அவ்வளவே இலக்கணமெனக் கொள்க.
அன்றி, இருதிங்கள் சென்று வந்தானெனின், களவொழுக்கம் மூன்று திங்களாம்; ஆகவே, இலக்கணவழுவாய் அகப்பொருள் சிதைவாமெனக் கொள்க.
நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள்
அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர்
வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல்
நனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே. (278)
(இ - ள்.) வேள் அனையீர், அழகிய சொல்லாலே புலவர் புனையப்பட்ட சொல் ஓரிதழும் பொருள் ஓரிதழு மாகிய தமிழ்மாலையை யுடைய வாணன் தென்மாறையை வாழ்த்தாதவர் போல், நீரால் நனைந்த இரண்டிதழை யுடைய கண்ணுறங்காத துன்பந் தரப்பட்ட வேட்கை நோயையுற்ற மான்போன்றவளை நினையீர்; அப்பொருள் காரணமாகப் பிரிந்து அயனாட்டிடத்துத் தங்குமிடத்தில் நீர் நினைந்தும் அறிதிரோ என்றவாறு.
அறிவோர் - புலவர். வனைதல் - புனைதல். கண்ணி - தமிழ் மாலை. வைகுதல் - தங்குதல்; கண்ணுக்குத் தங்குதல்; இமைத்தல்; தங்காதது - இமையாதது. எவ்வம் - துன் பம். நோய் - வேட்கை; நவ்வி - மான்; இவ்விரண்டும் ஆகுபெயர்.
-----
[278-1] இறையனார் அகப்பொருள் - (௩௨) 32.
[278-2] அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - (௪0) 40.
----------
---------- (278. தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல் - முற்றும்) ----------
279. தலைவனினைத்தமை செப்பல் :
கானெடுங் குன்றங் கடந்துசென் றேனொரு காலுமைதோய்
மானெடுங் கண்ணி மறந்தறி யேன்வண்கை வாணன்தஞ்சை
நீனெடும் பெண்ணைக் குரும்பையுஞ் சூது நெருங்குகொங்கைத்
தேனெடுங் கண்ணிமென் பூங்குழன் மாதர் திருமுகமே. (279)
(இ - ள்.) மைதோய்ந்து மான்போன்ற நெடிய கண்ணையுடையாய், வளவிய கையினையுடைய வாணன் தஞ்சை நகரின்கண் நீலநிறமாகிய நெடிய பனையினது குரும்பையும் சூதும் ஒப்புநெருங்குங் கொங்கையையும், வண்டு உறையும் நெடிய மாலையணிந்த மெல்லிய பொலிவினையுடைய கூந்தலையும், மாதர் அழகிய முகத்தையும், காடும் நெடிய குன்றும் கடந்து சென்றோனாகிய யான் ஒருகாலும் மறந்தறியேன் என்றவாறு.
எனவே, மறந்திலனாதலால் நினைந்திலன் என்று கூறியவா றாயிற்று.
[1]'உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.'
என்பதனா னுணர்க.
'கானெடுங்குன்றம்' என்புழி உம்மைத்தொகை. நீலம் நீல் எனக் கடைக்குறை; 'நீனிற வண்ணன்' என்புழிப்போல. பெண்ணை - பனை. சூது - வல். தேன் - வண்டு.
-----
[279-1] குறள். காதற்சிறப்புரைத்தல் - (௫) 5.
----------
---------- (279. தலைவனினைத்தமை செப்பல் - முற்றும்) ----------
280. ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல் :
ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல் என்பது, பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவற்குக் கூறல்.
உயரா மலகந் தருங்கனி நீர்நசைக் குண்சுரம்போய்
வியராமல் இல்லின் விடுத்தகன் றாளைமென் பூஞ்சிலம்பா
அயராமல் அஞ்சலென் றாற்றுவித் தேனிவ் அவனியெல்லாம்
மயராமல் வந்த பிரான்றஞ்சை வாணன்தென் மாறையிலே. (280)
(இ - ள்.) இப்புவியெல்லாம் மயங்காமல் வந்த பிரானாகிய தஞ்சைவாணனது தென்மாறை நாட்டின் மெல்லிய பூமலிந்த சிலம்பனே! உயர்ந்த நெல்லியின் அரிய கனியை நீர்வேட்கைக்கு உண்ணப்பட்ட சுரத்திடை உடன்போய் வியர்வடையாமல் இல்லின்கண் விடுத்து நீர் பிரிந்தவளை இளையாமல் அஞ்சலென்று ஆற்றுவித்தேன் என்றவாறு.
ஆமலகம் - நெல்லிக்கனி. அருங்கனி - மழையின்றி அங்கங்கு ஒவ்வொன்றா யிருக்குங்கனி. நீர்நசை - நீர்வேட்கை. வியராமல் - வியர்வடையாமல். அயராமல் - இளையாமல். மயராமல் - மயங்காமல்.
---------- (280. ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல் - முற்றும்) ----------
'என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல்' என்பது பிரிவறிவுறுத்தற்கு உரியது;
'பாங்கி நின்பொருட் பிரிவுரை நீயவட் கென்றல்' என்பது பிரிவுடன் படாமைக்கு உரித்து;
'தலைமகன் நீடேனென்றல்' என்பது பிரிவுடன் படுத்தற்கு உரித்து;
'பாங்கி தலைவிக்கு அவன் செலவுணர்த்தல்' என்பது பிரிவுடன் படுதற்கு உரித்து;
'தலைமகளிரங்க'லும், 'கொடுஞ்சொற் சொல்ல'லும், 'பருவங் கண்டு பெருமகள் புலம்ப'லும், 'மறுத்த'லும், 'அவனவட் புலம்ப'லும் ஆகிய ஐந்தும், பிரிவுழிக் கலங்கற்கு உரிய;
'பாங்கி கடுஞ்சொற் சொல்ல'லும், 'வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்த'லும், 'பருவமன்று வம்பென்ற'லும், 'அவர் தூதாகி வந்தடைந் திப்பொழு தென்ற'லும், ஆகிய நான்கும் வன்புறைக்கு உரிய;
'தலைமகளாற்றல்' என்பது வன்பொறைக்கு உரித்து;
'தலைமகன் மீண்டு வருங்காலைப் பாகனோடு சொல்ல'லும், 'மேகத்தொடு சொல்ல'லும், ஆகிய இரண்டும் வருவழிக் கலங்கற்கு உரிய;
'பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவறிவுறுத்தல்' முதலிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்கு உரிய.
1.18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் முற்றிற்று.
-------------------------
1. முதலாவது களவியல் முற்றிற்று.
This file was last updated on 16 April 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)