pm logo

பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை
பாகம் 3 (வரைவியல் & கற்பியல் )
[சொக்கப்ப நாவலர் உரை]

tanjcaivANan kOvai -part 3
of poyyAmozip pulavar
(with cokkappa nAvalar uraiyudan)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Our sincere thanks also go to Mr. Rajendran Govindasamy of Tamilnadu, India for his assistance in
proof-reading of the OCR output and in the preparation of the e-text file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவை
பாகம் 3 (வரைவியல் & கற்பியல் )
[சொக்கப்ப நாவலர் உரை]

Source:
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய
தஞ்சைவாணன் கோவை
[சொக்கப்ப நாவலர் உரை]
இக் கோவை நாற்கவிராசநம்பி அகப்பொருள் விளக்கத்திற்கு இலக்கியமாகவுள்ளது.
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை-1.
கழக வெளியீடு: 627
இக் கோவை நாற்கவிராசநம்பி அகப்பொருள் விளக்கத்திற்கு இலக்கியமாகவுள்ளது.
First Edition: October, 1952
(Copy-right)
Published by : The South India Saiva Siddhantha Works Publishing Society Tinnelvelly, Ltd
1/140, Broadway, Madras -1; Head Office: 24, EAST CAR STREET, THIRUNELVELI
Appar Achakam, 2/140, Broadway, Madras-1.
---------------
-------------------------

பொருளடக்கம்
Parts 1 & 2
1. களவியல் (001 – 280)
Part 3
2. வரைவியல் (281 – 366)
2.19. வரைவுமலிவு (281 – 287)
2.20. அறத்தொடு நிற்றல் (288 – 304)
2.21. உடன்போக்கு (305 – 322)
2.22. கற்பொடுபுணர்ந்த கவ்வை (323 – 348)
2.23. மீட்சி (349 – 354)
2.24. தன்மனை வரைதல் (355 – 359)
2.25. உடன்போக்கு இடையீடு (360 – 365)
2.26. வரைதல் (366)
&
3. கற்பியல் (367 – 425)
3.27. இல்வாழ்க்கை (367 – 376)
3.28. பரத்தையிற் பிரிவு (377 – 407)
3.29. ஓதற் பிரிவு (408 – 410)
3.30. காவற் பிரிவு (411 – 413)
3.31. தூதிற் பிரிவு (414 – 416)
3.32. துணைவயிற் பிரிவு (417 – 419)
3.33. பொருள்வயிற் பிரிவு (420 – 425)
-------------------------

தஞ்சைவாணன் கோவை- மூலமும் உரையும்
இரண்டாவது : வரைவியல்

வரைவு என்பது, தலைமகன் தலைமகளைக் குரவர் முதலாயினோர் கொடுப்பவும் கொடாதொழியவும் வதுவைச் சடங்கொடு பொருந்தி மணஞ்செய்து கோடல்.

ஆதியில் எடுத்துக் கோடற்கண்ணே களவு என்றும் கற்பு என் றும் கைகோள் இரண்டென வைத்து, அவ்விரண்டுக்கும் நடுவே வரைவியல் என்று கூறியதனால் முன்னதனோடு மாறுகொள்ளு மெனின் மாறுகொள்ளாது; என்னை, கற்பிற்கு நிமித்தமாய வரைவு கூறுதலான் இதுவும் கற்பின்பாற்படும். ஆயின், இதனைக் கற்பின்பாற்படுத்துக் கூறாது, வரைவியல் என வேறாகக் கூறியது என்னை யெனின், வரைவு மலிவு முதலாக உடன்போக்கிடையீடு ஈறாகப் பலவகைப்பட்டு, ஒவ்வோர் வகைக்குக் கிளவிகளும் பலவாக அதிகாரப்பட்டு நடத்தலின், விளங்குதற்கு, வரைவியல் என வேறு கூறப்படும். என்னை, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி யாயினவாறுபோல, இல்வாழ்க்கையும் இல்வாழ்க்கைநிமித்தமும் ஆய வரைவும் கற்பெனப்படுமென்று உணர்க.

[1]'வரைவு மலிவே யறத்தொடு நிலையென்
றுரையமை யிரண்டும் வரைவிற் குரிய
கிளவித் தொகையெனக் கிளந்தனர் புலவர்.'

என்னுஞ் சூத்திரவிதியால், வரைவுமலிவும் அறத்தொடுநிலையும் என வரைவு இரண்டுவகைப்படும். அவற்றுள்,
-----
[2-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௨) 2.
----------

2.19. வரைவுமலிவு (281–287)

வரைவுமலிவு என்பது, வரைவு தொடங்கி நடக்கும் முயற்சி மிகுதல்.

[1]‘வரைவுமுயல் வுணர்த்தல் வரைவெதிர் வுணர்த்தல்
வரைவறிந்து மகிழ்தல் பராவல்கண் டுவத்தலென்
றொருநால் வகைத்தே வரைவு மலிதல்.'

என்னுஞ் சூத்திரவிதியால், வரைவுமலிதல் நால்வகைப்படும்.
-----
[2.19-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௩) 3.
----------

281. காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குரைத்தல் :

தொலைவிலை யாகிய பல்பொருள் காதலர் சூதமர்நின்
முலைவிலை யாக முகந்தளித் தார்முனை வேந்தர்தம்மைத்
தலைவிலை யாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த்தஞ்சைநீ
உலைவிலை யாகுக பொன்வண்ண மாறுக ஒண்ணுதலே. (281)

(இதன்பொருள்) ஒள்ளிய நுதலை யுடையாய்! காதலர் எடுக்க எடுக்கத் தொலையாத பலவாகிய பொருள்களைச் சூதுபோற் பொருந்தும் நின் முலைவிலையாக வம்பண அளவையான் முகந்தளித்தார்; பகைவேந்தர்தம்மை அவர்கள் தலையைக் கொள்ளாது விடுதற்கு அவர்கள் கொடுக்கும் பொன்னை விலையாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த் தஞ்சையி லிருக்கின்ற நீ வருத்தமில்லையாகுக, பசலை நிறத்தை யொழிப்பாயாக என்றவாறு.

சூது முலை - உவமத்தொகை. அமர்தல் - பொருந்துதல். முலைவிலை - கோடற்குரியார் கொடுத்தற்குரியார்க்குக் கொடுக்கும் பொருள். முனை - பகை. திறை - கப்பம். உலைவு - வருத்தம். பொன்வண்ணம் - பசலை. அம்பணம் - மரக்கால்.

---------- (281. காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குரைத்தல் - முற்றும்) ----------

282. காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல் :

காதலி நற்றாய் உள்ளமகிழ்ச்சி உள்ளல் என்பது, தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக் கண்டு, மகட்கு, மணக்காலம் என்று, நற்றாய் மகிழும் உள்ளத்து மகிழ்ச்சியை தலைவி நினைத்தல்.

கயமா மலரெனுங் கண்ணியை வண்டெனுங் காளைபல்புள்
இயமா மணம்புண ரீர்ந்துறை நாட ரெதிர்ந்தவர்மேல்
வயமா நடத்திய வாணன்தென் மாறை வருகுவரேல்
நயமா மணவணி கண்டியாயு மின்புறு நம்மினுமே. (282)

(இ - ள்.) குளத்திற் றாமரைமலரென்னுங் கண்ணியை வண்டென்னுங்காளை பல புள்ளினோசையே முரசமாக மணம் புணரப்பட்ட குளிர்ந்த துறையையுடைய நாடர், எதிர்ந்த பகைவர்மேல் யானையைச் செலுத்திய வாணன் தென்மாறை நாட்டில் வருகுவாராகில், அவரது நன்மணக் கோலத்தைக் கண்டு நம்மினும் யாயும் இன்புறும் என்றவாறு.

மாமலர் - திருவிருக்குமலர். 'கயமாமலரெனுங் கண்ணியை வண்டெனுங் காளை பல்புள், இயமா மணம்புண ரீர்ந்துறை நாடர்' என்றதனால், குலமே குளமாகவும், குளத்திற்பூத்த தாமரைப்பூ தலைவியாகவும், தாமரை மலர்மணம் உண்ண வரும் வண்டு தலைவனாகவும், பல புள்ளியமே வாத்தியமாகவும் உள்ளுறையுவமந் தோன்றியதெனின், இவ்வாறு தலைவன் மணமுடியாமல் உடன்போக்கு நிகழ்தலான் இறைச்சிப் பொருளென்று கொள்க. இயம் - ஒசை. ஈர்ந்துறை - குளிர்ந்ததுறை. 'ஈர்ங்கைவிதிரார்' என்றாற்போலக் கொள்க. வயமா - யானை. மணவணி - மணக்கலம். உம்மை - சிறப்பு.

---------- (282. காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல் - முற்றும்) ----------

283. பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல் :

பாங்கி தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் என்பது, பாங்கி தலைவன்றமர் மணங்கூறி வந்துழித் தலைவி தமர் மணம் எதிர்ந்தமை தலைமகட்குக் கூறல்.

மணிப்பா லிகைமுத்தம் வைத்தாங் கடம்பலர் வார்திரைதூய்
அணிப்பாய் துவலை யரும்புந் துறைவர்க் கணியெதிர்ந்து
பணிப்பா சிழையல்குல் வெண்ணகை யாய்நமர் பாரநின்னோய்
தணிப்பான் முரசறைந் தார்தஞ்சை வாணன் தமிழ்நிலத்தே. (283)

(இ - ள்.) பசிய பொன்னாற்செய்த மேகலையணிந்த பாம்பின் படம்போலும் அல்குலையும் வெள்ளிய நகையையும் உடையாய்! தஞ்சைவாணன் தமிழ்நிலத்தின் மணிப்பாலிகையின் முத்தம் வைத்தாற்போல அடம்பமலரில் நெடிய திரை தூவப்பட்ட நிரையாய்ப் பரந்த திவலை தோன்றுந் துறைவர் தமக்கு அணியால் நமர் மணமெதிர்ந்தது பார், நின் வேட்கைநோய் தணிக்கும்பொருட்டு முரசறைந்தார்; அம்முரசொலி கேட்பாயாக என்றவாறு.

ஆங்கு - உவம உருபு.

[1]'பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு.'

என்புழிப்போல. வார்திரை - நெடியதிரை. தூய் - தூவி;

[2]'உருவப் பல்பூத் தூஉய் வெருவர.’

என்புழிப்போல. துவலை - திவலை. அணியெதிர்ந்து என்புழி ஆல் நமர் என வருவிக்க. பணி - பாம்பு. நோய் - வேட்கை. எஞ்ஞான்றும் மணச்சடங்குபோற் றோன்றும் துறைவராதலால் இங்கு வரவே மணச்சடங்கு உண்டாம் என்பது தோன்றிநின்றது.
-----
[283-1] திருமுரு. – (௨) 2.
[283-2] திருமுரு. – (௨௪௧) 241.
----------
---------- (283. பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல் - முற்றும்) ----------

284. தலைமகளுவகையாற்றா துளத்தொடு கிளத்தல் :

தலைமகள் உவகையாற்றாது உளத்தொடு கிளத்தல் என்பது, தலைவி மகிழ்ச்சி யடங்காது நெஞ்சொடு கூறல்.

சோகா குலமெய்தல் காண்டுநெஞ் சேநந் துறைவரெனும்
நீகா னுடன்பள்ளி நீள்வங்க மேறி நிலம்புரக்கும்
மாகா விரியன்ன வாணன்தென் மாறைமன் னன்பகையும்
ஏகா விருட்கங்கு லாங்கடற் காலை யெனுங்கரையே. (284)

(இ - ள்.) நெஞ்சே! நம்முடைய துறைவரென்னும் மீகாமனுடன் படுக்கையாகிய மரக்கலமேறி, நிலத்தைக் காக்கும் பெரிய காவிரிக்கொப்பாகிய வாணனாகிய தென்மாறை மன்னனுக்குப் பகையாகினாரும் ஏகுதற்கரிய இருண்ட கங்குலாங் கடலைக்கடந்து காலையென்னுங் கரையைக் காண்குதும்; ஆதலால், நீ சோகத்தால் ஆகுலமெய்தலை என்றவாறு.

சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் மாரன் அம்பால்வரும் அவத்தை ஐந்தனுள், 'சோகம்' அசோக பாணத்தால் வரும் அவத்தையென் றுணர்க. ஆகுலம் - துன்பம். காண்டும் - எதிர்காலமுற்று வினைச்சொல். நீகான் - மீகாமன். பள்ளி - படுக்கை. வங்கம் - மரக்கலம். புரத்தல் - காத்தல். காலை - விடியற்காலம். பகையும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. இதனுள் இயைபுருவகம் வந்தவாறு காண்க.

---------- (284. தலைமகளுவகையாற்றா துளத்தொடு கிளத்தல் - முற்றும்) ----------

285. தலைவனைப்பாங்கி வாழ்த்தல் :

மாரியஞ் சுங்கொடை வாணன்தென் மாறையில் வாழிவண்டார்
வேரியந் தொங்கல் விரைகமழ் மார்ப விடாதவம்பல்
சேரியம் பொய்கைத் துறையலர் வாடநின் செவ்விமணம்
தூரியஞ் சங்கதி ரக்காட்டி நீயன்று சூட்டலரே. (285)

(இ - ள்.) வண்டு உண்ணுங் கள்பொருந்திய மாலை மணங்கமழும் மார்பனே, மறந்துவிடாத அம்பலையுடைய சேரியாகிய பொய்கைத் துறையிலே தோன்றிய அலர் வாட நின் அழகாகிய மணக்கோலத்தால் அன்று சூட்டின அலரை இன்று பலருமறியத் தூரியமும் சங்கும் அதிர நீ சூட்டிக்காட்டு; முகில் அஞ்சுங் கொடையையுடைய வாணன் தென்மாறை நாட்டில் நெடுங்காலம் வாழ்வாயாக என்றவாறு.

மாரி - முகில். அஞ்சும் என்னும் பெயரெச்சம் தன்வினை முதலைக்கொண்டு முடியாது, பிறவாற்றான் முடிந்தது. வாழி - முன்னிலை வினைமுற்றுச்சொல்;

[1]'வாழிய என்னும் செயவென் கிளவி
இறுதி யகரங் கெடுதலு முரித்தே.'

என்பதனான், வாழி என்பது நெடுங்காலம் என்பது அவ்வுரையானு முணர்க. ஆர்தல் - உண்டல். வேரி - கள். தொங்கல் - மாலை. விரை - மணம். மார்ப - அண்மைவிளி. அம்பல் - முகிழ் முகிழ்த்தல். அலர் - வாய்திறந்து ஒருவர் ஒருவரை நோக்கித் தூற்றுஞ் சொல். செவ்வி - அழகு. மணம் - மணச்சடங்கு. தூரியம் -முரசம். அலர் - மாலை; ஆகுபெயர்.
-----
[285-1] தொல். எழுத்து. உயிர்மயங்கியல் - (௧௯) 19.
----------
---------- (285. தலைவனைப்பாங்கி வாழ்த்தல் - முற்றும்) ----------

286. தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பரா நிலைகாட்டல் :

தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலைகாட்டல் என்பது, தலைவி மணம்பொருட்டாகத் தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து வாழ்த்திக்கொண்டு நிற்கும் நிலையைப் பாங்கி தலைவற்குக் காட்டல்.

உரவிப் பெருங்கலித் துன்பங்கள் பொய்முத லூழியின்பம்
வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்தென் மாறையன்னாள்
புரவிப் புனைநெடுந் தேரண்ண லேநின் பொருட்டணங்கைப்
பரவிப் பரவிநின் றேவரம் வேண்டுதல் பார்த்தருளே. (286)

(இ - ள்.) புரவிபூட்டிய அலங்கரித்த நெடிய தேரை யுடைய மன்னவனே வலிய இப்பெருங் கலியுகத் துன்பங்கள் போய்க் கிரேதாயுகத்து இன்பம் வர இப்புவியை வாழச்செய்த வாணன் தென்மாறை நாடுபோல்வாள் நின் பொருட்டாகத் தெய்வத்தை வாழ்த்தி வாழ்த்தி நின்று வரம் வேண்டுதலைப் பார்த்தருள்வாயாக என்றவாறு.

உரம் - வலி. கலி - கலியுகம். முதலூழி - கிரேதாயுகம். படி - புவி. புரவி - குதிரை.

---------- (286. தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பரா நிலைகாட்டல் - முற்றும்) ----------

287. பரா நிலைகண்ட தலைவன் மகிழ்தல்

இவ்வித் தகமிவட் கெய்திய தெவ்வண மெவ்வுலகும்
வவ்வித் திகழ்புகழ் வாணன்தென் மாறை மணம்பொருட்டால்
நவ்வித் தொகையின நாணுமென் னோக்கி நறைபுகையாச்
செவ்வித் தகைமலர் தூய்த்தெய்வம் வாழ்த்துந் திருத்தகவே. (287)

(இ - ள்.) எவ்வுலகத்தையும் கவர்ந்து திகழப்பட்ட புகழையுடைய வாணன் தென்மாறை நாட்டில் மான் தொகுதியினம் நாணப்பட்ட மெல்லிய நோக்கையுடையாள் மணங் காரணமாக நறும்புகையைப் புகைத்து நாட்கொண்ட அழகையுடைய மலரைத் தூவித் தெய்வத்தை வாழ்த்துஞ் சிறந்த முறைமையாகிய இவ்வல்லபம் இவட்குப் பொருந்தியது எப்படி என்றவாறு.

வித்தகம் - வல்லபம். பொருட்டு - காரணம். 'மென்னோக்கி மணம்பொருட்டு' என இயையும். நவ்வி - மான். தொகையினம் - தொக்கவினம். நறை - நறும் புகை. செவ்வி - காலம். தகை - அழகு. தூய் - தூவி. திருத்தகவு - சிறந்த முறைமை.

---------- (287. பரா நிலைகண்ட தலைவன் மகிழ்தல் - முற்றும்) ----------

'காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்த'லும், 'தலைவி மணம்பொருட்டாக அணங்கைப்பராநிலை காட்ட'லும் வரைவு முயல்வுணர்த்தல்.

'பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைமகட்குணர்த்தல்' ஒன்றும் வரைவெதிர்வுணர்த்தல்.

'நற்றாயுள்ள மகிழ்ச்சி யுள்ள'லும், 'உவகையாற்றா துளத்தொடு கிளத்த'லும், 'தலைவனைப் பாங்கி வாழ்த்த'லும் வரைவறிந்து மகிழ்தல்.

'தலைமக ளணங்கைப் பராநிலைகண்டோன் மகிழ்தல்' ஒன்றும் பராவல்கண் டுவத்தல் எனக்கொள்க.

2.19. வரைவுமலிவு முற்றிற்று.

இத்துணையும் ஐம்பத்தொன்றாநாட் செய்தியென் றுணர்க.

--------------------

2.20. அறத்தொடு நிற்றல் (288-304)

அறத்தொடு நிற்றல் என்பது, களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல். முறையே வெளிப்படுத்தி நிற்றலாவது, தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும், பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்கும் என்று கொள்க. அறத்தொடு நிற்றற்குப் பொருள், முறையே வெளிப்படுத்தி நிற்றல் என்பது. இப்பொருள் எவ்விடத்திற்கு மாகாது, இவ்விடத்திற்கு மாத்திரம் என்று கொள்க. என்னை, இக்களவொழுக்கம் புனைந்துரையாற் புலவர் நாட்டப்பட்டதன்றி வேறன்று என்பது. ஆதலால், இக்களவு வெளிப்படுத்தற்கு மாத்திரமே அறத்தொடு நிற்றல் என அவரால் நாட்டப்பட்ட பெயராயிற்றெனக் கொள்க.

[1]'முன்னிலை முன்னிலைப் புறமொழி யென்றாங்
கன்ன விருவகைத் தறத்தொடு நிலையே.'

என்னுஞ் சூத்திரவிதியான், அறத்தொடுநிற்றல் இருவகைப்படும்.
-----
[2.20-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௫) 5.
----------

288. கையறு தோழி கண்ணீர் துடைத்தல் :

கையறு தோழி கண்ணீர் துடைத்தல் என்பது, ஆற்றிக் கையற்ற தோழி அருகிருந்து கண்ணீர் துடைத்தல்; கையறல் - செயலறல்.

வரைவுமலிவான் மனமகிழ்ச்சி யடைந்திருக்கும் தலைவி அழுதுகொண் டிருத்தல் மாறுபாடு எனின், மாறுபடாது. என்னை, களவுப் புணர்ச்சியால் அலர் மிகவும் எழுதல்கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்படைந்த தறிந்த தலைவன் பிரிந்தேகப், பிரிவாற்றாமல் தலைவி அழுதனள் என்க. வெறுப்படைந்ததனால் மணத்தை மறுக்க, அதனால் தலைவன் பிரிந்தேக ஆற்றாமையினால் தலைவி அழுதனள் என்று செய்யுளிற் கூறியதின்றெனின், மேலே, 'கற்பொடு புணர்ந்த கவ்வை'யின், மகள் எங்கே போயினாள் என்று செவிலி பாங்கியை வினாவுழி, [1]'வெறுத்தா ரொறுத்துரை மேலுநங் கேளிர் விழைத லின்றி, மறுத்தா ரவற்கு மணமதனால்' என்பதனாற் கண்டுகொள்க.

அயிரார் திரைவந்துன் வண்டலம் பாவை யழித்தனவோ
செயிராத அன்னை செயிர்த்தன ளோசெறி நாரைதிண்போர்
வயிரா நரலும் வயற்றஞ்சை வாணன்தென் மாறையிலென்
உயிரா கியதைய னீகலுழ் வானென் னுளங்குழைந்தே. (288)

(இ - ள்.) நெருங்கிய நாரைகள் வலிய போர்க்களத்தில் ஒலிக்குங் கொம்புபோல் ஒலிக்கும் வயலையுடைய தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில் என்னுயிர்போன்ற தையலே! நீ உளங்குழைந்து கலுழக் காரணம் என்னை, நுண்மணலார்ந்த திரைவந்து உன் வண்டலம்பாவை யழித்தனவோ, ஒருகாலுஞ் சினவாத அன்னை சினந்தனளோ, யான் அறியக் கூறுவாயாக என்றவாறு.

அயிர் - நுண்மணல். வண்டலம்பாவை - மண்ணாற்செய்த பாவை. செயிர்த்தல் - சினத்தல். வயிர் - போர்க்களத்தில் ஒலிக்கும் கொம்பு. நரலுதல் - ஒலித்தல். கலுழ்தல் - அழுதல். என் - யாதுகாரணம். இதனுள், 'கூறுவாயாக' என்பது சொல்லெச்சமாக நின்றது.
-----
[288-1] தஞ்சைவாணன் கோவை - (௩௨௪) 324.
----------
---------- (288. கையறு தோழி கண்ணீர் துடைத்தல் - முற்றும்) ----------

289. தலைமகள் கலுழ்தற்காரணங் கூறல் :

தாரணி கொண்ட விருதோ ளொருவர் தனித்துழியென்
வாரணி கொங்கை மணந்துசென் றார்தஞ்சை வாணனொன்னார்
தேரணி வென்ற செழும்புகர் வேல்விழித் தேனினஞ்சூழ்
காரணி மென்குழ லாயது வேகலுழ் காரணமே. (289)

(இ - ள்.) தாரை அழகாகக்கொண்ட இருதோளை யுடைய ஒருவர் தனித்தவிடத்து என் வாரணிந்த கொங்கையைக் கூடிச் சென்றார்; தஞ்சைவாணன் ஒன்னாரது தேர்நிரையை வென்ற செழுமையாகிய இரத்தக்கறை நிறத்தையுடைய வேல்போன்ற விழியையும் வண்டினஞ் சூழ்ந்த மேகத்தின் அழகைக்கொண்ட மெல்லிய குழலையும் உடையாய்! யான் அழுங் காரணம் அது என்றவாறு.

தார் - மாலை. வார் - கச்சு. தேரணி - தேர்நிரை. புகர் - உதிரக்கறை. கார் - மேகம். அணி - அழகு.

---------- (289. தலைமகள் கலுழ்தற்காரணங் கூறல் - முற்றும்) ----------

290. தலைவன் தெய்வங் காட்டித்தெளிப்பத் தெளிந்தமை யெய்தக் கூறல் :

தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை எய்தக் கூறல் என்பது, தலைவன் தெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல, மெய்யென்று தெளிந்து அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறல்.

துதித்தே னணங்கொடு சூளுமுற் றேனென்ற சொல்லைமெய்யா
மதித்தே னயர்ந்து மதியிலி யேன்தஞ்சை வாணன்வையை
நதித்தே னினம்புணர் மாதர்கண் போல நகைக்குநெய்தல்
பொதித்தே னுகர்ந்தக லுங்கழிக் கானற் புலம்பர்வந்தே. (290)

(இ - ள்.) தஞ்சைவாணன் வையைநதியிலே குலாவப்பட்ட வண்டினம் மடவார்கண்போல் ஒளிவிடும் நெய்தற் பூவினிடத்துப் பொதிந்த தேனை நுகர்ந்து பிரிந்துபோங் கழிக்கரைச் சோலையுடைய புலம்பர்வந்து துதித்துத் தெய்வத்துடனே சூளையும் உற்றேன் என்று அவர் சொன்ன சொல்லை மெய்யாய் மதியிலியாகிய யான் மறந்து மதித்தேன் என்றவாறு.

சூள் - ஆணைகூறல். அயர்ந்து - மறந்து. தேனினம் - வண்டினம். நகை - ஒளி. பொதிதல் - நிறைதல். வண்டினம் தலைவனாகவும், நெய்தற்பூ தானாகவும், தேன் தன்னிடத்து இன்பமாகவும், அவ்வண்டு தேன் நுகர்ந்து நீங்கியதுபோலத் தலைவன் தன்னிடத்து இன்பம் நுகர்ந்து பிரிந்து போயினான் என்னும் உள்ளுறையுவமம் கொள்ளக்கிடந்தது. இவ்வாறு தெய்வத்தொடு சூளும் உற்றேன் என்று சொல்லியது எக்கிளவிப் பொருள் எனின், வன்புறையில், 'பிரியேன்' என்னும் கிளவியிலென்று உணர்க. ஆணைகூறல் அக்கிளவிச் செய்யுளில் இல்லையாலெனின், 'பிரியேன்' என்றது வேறோர் கிளவியினும் இல்லையால், அதுவே பொருள் என்று உணர்க.

---------- (290. தலைவன் தெய்வங் காட்டித்தெளிப்பத் தெளிந்தமை யெய்தக் கூறல் - முற்றும்) ----------

291. இறைவி தலைவன் இகந்தமை இயம்பல் :

இறைவி தலைவன் இகந்தமை இயம்பல் என்பது, இறைவி தலைவன் நீங்கினமை கூறல்.

வரியோல வண்டலை தண்டலை சூழ்தஞ்சை வாணன்வண்மைக்
குரியோ னுயர்வையை யொண்டுறை வாயுர வோர்தெளித்தும்
கரியோர் பிறரில்லை யென்றகன் றாரினிக் காரிகையாய்
பெரியோர் மொழிபிற ழாரென்று தேறுதல் பேதைமையே. (291)

(இ - ள்.) காரிகையாய்! பண்ணை யொலிக்கப்பட்ட வண்டுகள் செலவும் வரவுமாய் அலையப்பட்ட சோலைசூழ்ந்த தஞ்சைவாணனாகிய கொடைக்கு உரியோனுடைய உயர்ந்த வையையாற்றின் ஒள்ளிய துறையிடத்தில் உரவோர் தெய்வ முன்னாகத் தெளியச்செய்தும் கரியோர் பிறிதொருவருமில்லை யென்று நம்மைப் பிரிந்து போயினார்; ஆதலால்,. இனிப் பெரியோர் சொல்லியசொல் தப்பார் என்று தெளிவது பேதைமை என்றவாறு.

வரி - பண். ஓலம் - ஆரவாரித்தல். தண்டலை - சோலை. உரவோர் - அறிவோர். தெளித்தல் - தெய்வத்தின் முன்னாகத் தெளியச்செய்தல். உம்மை - சிறப்பு. கரியோர் - சான்று கூறுவோர். பிறழ்தல் - மாறுபடுதல். பெரியோர் மொழிபிறழார் என்று தேறுதல் பேதைமை யென்பது,

[1]'இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்.'

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில் 'அறனளித் துரைத்தல், ஆங்கு நெஞ்சுழிதல்' என்பதனால், 'அறனளித் துரைத்தல்' என்னும் மெய்ப்பாடு கூறியவாறுணர்க.
-----
[291-1] தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - (௨௨) 22.
----------
---------- (291. இறைவி தலைவன் இகந்தமை இயம்பல் - முற்றும்) ----------

292. பாங்கி இயற்பழித்தல் :

பாங்கி இயற்பழித்தல் என்பது, தலைமகன் இயலைப் பாங்கி பழித்துக் கூறல்.

மழவே துறந்து மறந்தவர் போற்றஞ்சை வாணன்வென்றி
முழவேய முந்நீர் முழங்கிருங் கானல் முழுதுலகும்
தொழவே தகுந்தெய்வ நோக்கிச்செல் லேனென்று சொல்லியுநீ
அழவே துறந்தன ரால்நல்லர் நல்லரவ் வாடவரே. (292)

(இ - ள்.) தஞ்சைவாணனது வெற்றி முரசொலிக்கு ஒப்பாகக் கடல் முழங்கப்பட்ட பெரிய கழிக்கரைச் சோலையிடத்து உலகமுழுதும் தொழத்தக்க தெய்வத்தை நோக்கிப் பிரியேன் என்று சொல்லியும் இளமைப் பருவத்தே துறந்து மறந்தவர்போல நீ அழத்தக்கதாகத் துறந்து போயினாராதலால் அவ்வாடவர் நல்லர் நல்லர் என்றவாறு.

மழவு - இளமை. முழவு - முரசு. ஏய – ஒப்பாக. முந்நீர் - கடல். இருமை -பெருமை. கானல் - சோலை. 'உலகமுழுதும்' என இயையும். நல்லர் நல்லர், தீயர் தீயர், என இகழ்ச்சிக் குறிப்பின்கண் வந்த அடுக்குமொழி. 'அவ்வாடவர் நல்லர் நல்லர்' என இயையும்.

---------- (292. பாங்கி இயற்பழித்தல் - முற்றும்) ----------

293. தலைமகள் இயற்பட மொழிதல் :

தலைமகள் இயற்பட மொழிதல் என்பது, அங்ஙனங் கூறக் கேட்ட தலைமகட் சொற்பொருள் ஓரியல்புபட மொழிதல்.

மாகப் புயன்மண்ணில் வந்தன வாணன்தென் மாறைமுந்நீர்
நாகப் புகர்ச்செய்ய புள்ளிப்பைங் கான்ஞெண்டு நாகிளந்தண்
பூகக் குளிர்நிழற் பேடையொ டாடும் புலம்பரின்னார்
ஆகக் கருதினல் லாயினி யாரினி யாருளரே. (293)

(இ - ள்.) நல்லாய்! வானத்திடத்தி லிருக்கும் மேகம் மண்ணிடத்தில் வந்ததுபோன்ற வாணன் தென்மாறை நாட்டுக் கடலிடத்துப் புன்னைமரத் தடியிலிருக்கும் புகராகிய சிவந்தநிறப் புள்ளியையும் பசிய காலையும் உடைய ஆண்ஞெண்டு நாகுப்பருவத்தை யுடைய வளமையையும் தட்பத்தையு முடைய குளிர்ந்த கமுகினிழலில் பெடை ஞெண்டைப் பிரியாமற் கூடும் புலம்பரைப் பொல்லாராகக் கருதின் நமக்கு இனியராயுள்ளார் இனி யார் என்றவாறு.

அவரே நமக்கு இனியராய் வந்து கூடுவாராதலால் அவரை இயற்பழித்துக் கூறத்தகாது என்றவாறாயிற்று.

மாகம் - ஆகாயம். புயல் - மேகம். நாகம் - புன்னை. நாகு - இளங்கன்றுப் பருவம் நீங்கிக் கருக்கொள்ளுங் காலம் : என்னை, பசு எருமை முதலியவற்றின் கருக்கொள்ளும் பருவத்திற்கு நாகு என்னும் பெயர் உலகவழக்கினுங் கண்டுகொள்க. புலம்பன் - நெய்தற்றலைவன். பூகம் - கமுகு. பெடை - பெடை ஞெண்டு. இன்னார் - பொல்லார். இனியார் - நல்லார்.

புன்னைமர நிழலிலிருக்கும் ஆண்ஞெண்டு பூகமர நிழலிலிருக்கும் பெடையொடு கூடும் புலம்பர் என்பதனால், தலைவன் தலைவியை வந்து கூடுமென உள்ளுறையுவமங் கொள்ளக் கிடந்ததெனின், அங்ஙனங் கூட்டம் பெறாளாய்ப் பிரிந்து வருந்துகின்றா ளாதலால் உள்ளுறையுவம மாகாது இறைச்சியிற் பிறக்கும் பொருளாயிற் றெனக் கொள்க. இறைச்சியிற் பிறக்கும் பொருளாவது,

[1]'இறைச்சி தானே பொருட்புறத் ததுவே.'

[2]'இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே.'

என்றாராகலின், 'இறைச்சி' யென்றும் 'இறைச்சியிற் பொருள்' என்றுங் கூறிய சூத்திரங்கட்கு நச்சினார்க்கினியர் செய்தவுரையிற் கண்டுகொள்க.
-----
[293-1] தொல். பொருள். பொருளியல் - (௩௫) 35.
[293-2] தொல். பொருள். பொருளியல் - (௩௬) 36.
----------
---------- (293. தலைமகள் இயற்பட மொழிதல் - முற்றும்) ----------

294. தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல் :

தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றல் என்பது, தெய்வத்தின் முன் பிரியேனென்று ஆணைகூறிப் பிரிந்துபோனாரால் தெய்வங் கொடுந்தெய்வ மாதலால் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தார் அல்லர், நீ பொறுத்துக்கொள் என்று வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவோம் என்று தலைவி பாங்கியுடன் கூறியது.

மாதங்க நல்குங்கை வாணன்தென் மாறைவை யைத்துறைவர்
ஏதம் பயந்தில ரெங்கட்கு நீயெம் மிகந்ததனால்
கோதம் படாதி கொடுந்தெய்வ மேயென்று கூர்பலிதூய்ப்
பாதம் பரவநல் லாயிரு வேமும் படர்குவமே. (294)

(இ - ள்.) நல்லாய்! புலவோர்க்குப் பெருமையை யுடைய தங்கங்களைக் கொடுக்குங் கையையுடைய வாணன் தென்மாறை நாட்டு வையைத்துறைவர் எங்கட்குக் குற்றத்தைத் தந்தார் அல்லர்; எம்மைப் பிரிந்ததனாலே கொடுந்தெய்வமே, நீ குற்றப்படாதை யென்று மிகுந்த பலிகளைத் தூவிப் பாதத்தைத் துதிக்க இருவேமும் செல்வோம் என்றவாறு.

நல்கும் - கொடுக்கும். ஏதம் - குற்றம். பயந்திலர் - கொடுத்திலர். இகத்தல் - பிரிதல். கோது - குற்றம். அம் - அசைநிலை. படர்தல் - செல்லுதல்.

---------- (294. தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல் - முற்றும்) ----------

295. இல்வயிற் செறித்தமை செப்பல் :

இல்வயிற் செறித்தமை செப்பல் என்பது, தலைவி தன் மெய் வேறுபாட்டாலும் ஊரிலுள்ளார் அலர் தூற்றலாலும் நற்றாய் உளத்தில் வெறுப்பாகி மனையிடத்தில் என்னைக் காவல் செய்தாளென்று பாங்கிக்குக் கூறல்.

தன்போ லுலகம் புரக்கின்ற வாணன் தமிழ்த்தஞ்சையார்
மன்போ லெவர்க்கும் வழங்கியுண் ணாதவர் வைத்திழக்கும்
பொன்போ லிறுகப் பொதிந்துகொண் டாளன்னை பூவையென்மேல்
வண்போ தியமட வாரலர் தூற்றிய வாறுகண்டே. (295)

(இ - ள்.) பூவைபோல்வாய்! தன்னுயிர்போல உலகத்திலுள்ள வுயிரையெல்லாங் காக்கின்ற வாணனாகிய தமிழ்த் தஞ்சையார் வேந்தைப்போல, யாவர்க்கும் வழங்கி யுண்ணாதவர் வைத்து இழக்கப்பட்ட பொன்னைப்போல என்னை அன்னை என்மேற் பொல்லாங்கு கூறப்பட்ட நமக்கு அயலாராகிய மடவார் அலர்தூற்றிய முறைமையைக் கண்டு இறுக முடிந்துகொள்ளுதல் போலுஞ் செறிப்புச் செய்தாள் என்றவாறு.

புரத்தல் - காத்தல். பொதிதல் - முடிதல். ஆறு - முறைமை. வன்பு - பொல்லாங்கு. 'உண்ணாதவர் வைத்திழக்கும் பொன்போல்' எனவே, அன்னையும் தன்னை யிழப்பவளாதலால், 'அவர்போல் பொதிந்து கொண்டாள்' என உள்ளுறையுவமங் கொள்க.

---------- (295. இல்வயிற் செறித்தமை செப்பல் - முற்றும்) ----------

296. செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல் :

செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் என்பது, செவிலி செறிந்த இருட்குறியிடத்துத் தலைவன் வரக்கண்டாள் எனத் தலைவி பாங்கிக்கு உரைத்தல்.

வெங்கார் முகவெம் புருவமின் னேயன்னை மேலொருநாள்
எங்கா தலரிரு ளெய்தல்கண் டாளிந்த ஏழுலகும்
மங்காமல் வந்தருள் வாணன்தென் மாறைவண் டானமஞ்சக்
சங்காழி கொண்டெறி யுங்கண்டல் வேலியந் தண்துறைக்கே. (296)

(இ - ள்.) வெவ்விய விற்போன்ற வெய்ய புருவத்தை யுடைய மின்னே, இந்த ஏழுலகும் கெடாமல் வந்து காக்கப்பட்ட வாணன் தென்மாறை நாட்டில் வண்டானம் அஞ்சக் கடலானது சங்கைக் கொண்டெறியும் தாழை வேலி செய்தாற் போன்றிருக்கின்ற தண்ணிய துறையின்கண் எம்முடைய காதலர் இருட்குறி வருதலை முன்னம் ஒருநாள் அன்னை கண்டாள் என்றவாறு.

கார்முகம் - வில். மங்காமல் - கெடாமல். வண்டானம் - நாரை. 'ஆழிசங்கு' என இயையும். கண்டல் - தாழை. சங்கு கொண்டெறிதல் - திரை விசையால் சங்கினை யுந்துதல்.

இவற்றுள், 'கலுழ்தற் காரணங் கூறல்' ஒன்றும் ஒழித்து, ஏனைய வெல்லாம், பாங்கி வினாவாதொழியவும், தலைவி அறத்தொடு நிற்கும் நிலை தனக்கு உரியவாமாறு அறிந்துகொள்க.

---------- (296. செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல் - முற்றும்) ----------

297. செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் :

பொன்னுற்ற கொங்கையு முத்துற்ற கண்ணுமிப் போதுகண்டேன்
பன்னுற்ற சொல்லுமின் பாலுங்கொள் ளாபதி னாலுலகும்
மன்னுற்ற வண்புகழ் வாணன்தென் மாறையென் மானனையாட்
கென்னுற்ற தென்றறி யேன்புனங் காவல் இருந்தபின்னே. (297)

(இ - ள்.) பொன்போன்ற பசலைநிறம் பொருந்திய கொங்கையும் முத்துப்போல நீருற்ற கண்ணும் இப்போது கண்டேன்; அதுவன்றியும் யான் சொல்லுஞ் சொல்லும் இனிய பாலும் உட்கொள்ளாள்; ஆதலின், பதினாலுலகும் மன்னுற்ற வளவிய புகழையுடைய வாணன் தென்மாறை நாட்டில் புனங் காவலிருந்தபின் என் மான்போன்றவட்கு யாதுற்றதென்று யான் அறியேன், என்றவாறு.

'பதினாலுலகும்' என்புழி உம்மை முற்றும்மை. 'புனங்காவ லிகந்தபின்னே' என்று பாடமோதுவாரு முளர்.

---------- (297. செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் - முற்றும்) ----------

298. பாங்கி வெறிவிலக்கல் :

பாங்கி வெறி விலக்கல் என்பது, செவிலி வெறியாட்டாளனை யழைத்து மகட்கு நோயுற்றவாறும், அது தீருமாறும் சொல்ல வேண்டுமென்று கேட்புழி, தெய்வம் வந்தாடும்போது, பாங்கி அத் தெய்வத்தை ஆடவேண்டா என்று விலக்குதல்.

வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தால் தீரும் என்புழி, அவ் வாட்டைக் கொல்லாமல் விலக்கல் எனினும் அமையும்.

அறியாமை யானொன்று கேட்கலுற் றேநும்மை யாவதொன்றும்
குறியா மறியுயிர் கொள்ளவென் றோகுரு திப்பலிகூர்
வெறியால் இவளுயிர் மீட்கவென் றோவென்றி வேல்வலத்தீர்
சிறியார் மனையில்வந் தீர்தஞ்சை வாணன் சிலம்பினின்றே. (298)

(இ - ள்.) வெற்றிவேலை வலத்தில் உடையவரே, நும்மை யாம் அறியாமையினால் ஒன்று கேட்கலுற்றேம், ஆவதொன்றுங் குறியாது மறியுயிரைக் கொள்ளவென்றோ, அந்த இரத்தப்பலி தரும் மிகுந்த வெறியினாலே இவள் உயிரை மீட்கவென்றோ தஞ்சைவாணன் சிலம்பினின்றுஞ் சிறியார் மனையில் வந்தீர், திருக்கோயிற்கு எழுந்தருள்வீர் என்றவாறு.

மறி - ஆடு. 'திருக்கோயிற்கு எழுந்தருள்வீர்' என்றது, அவாய் நிலையான் வந்தது.

---------- (298. பாங்கி வெறிவிலக்கல் - முற்றும்) ----------

299. வெறிவிலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல் :

மண்குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன்தஞ்சை
ஒண்குன்ற மங்கையர் முன்னர்மின் னேயுமை யாள்மகனைப்
பண்குன்ற வென்றசொல் வள்ளிதன் கோனைப்பைந் தாரயிலால்
வெண்குன் றெறிந்தசெவ் வேளையிவ் வாறென் விளம்பியதே. (299)

(இ - ள்.) உலகங் குன்றவந்த கலியுகத்தை மாற்றிய வாணன் தஞ்சையது ஒள்ளிய குன்றிடத்து மின்னே, உமையாள் மகனைப் பண்குறைய வென்ற சொல்லையுடைய வள்ளிக்கு நாயகனைப் பசிய மாலைசூடிய வேலினாலே வெண் குன்றமாகிய குருகுபெயர்க் குன்றத்தை யெறிந்த செவ்வேளை மங்கையர்முன்னர் இவ்வாறு நீ விளம்பியது என்ன? என்றவாறு.

அயில் - வேல். வெண்குன்று - கிரவுஞ்சகிரி. 'குன்றமின்னே' எனவும், 'செவ்வேளை மங்கையர் முன்னே' எனவும், 'விளம்பிய தென்னே' எனவும் இயையும்.

---------- (299. வெறிவிலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல் - முற்றும்) ----------

300. தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் :

தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் என்பது, பூவைக் கொடுத்ததனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்திக் கூறல்.

போருறை தீக்கணை போலுநின் கண்கண்டு போதவஞ்சி
நீருறை நீலமு நீயுநண் பாகென்று நின்மகட்கோர்
தாருறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
காருறை சோலையில் யாம்விளை யாடிய காலையிலே. (300)

(இ - ள்.) அன்னாய்! போருறைந்த தீய கணையை யொக்கும் நினது கண்ணைக்கண்டு மிகவும் அஞ்சி நீரிலே ஒளிந்து உறைந்த நீலமும் நீயும் உறவாக என்று, நினது மகட்கு, ஒரு தாருறைந்த தோளையுடையவர், வாணன் தமிழ்த் தஞ்சையைச் சூழ்ந்து புயலுறைந்த சோலையிடத்து யாம் விளையாடிய காலத்தில், நீலப்பூவைத் தந்தனர், என்றவாறு.

நண்பு - உறவு. தார் - மாலை. கார் - புயல்.

---------- (300. தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் - முற்றும்) ----------

301. புனல்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் :

புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் என்பது, புனலாற் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறல்.

ஒழிதோற் றியசொல்ல லுன்மக ளோதிக் குடைந்தகொண்டல்
பொழிதோற் றிரளுந்தி வந்தசெந் நீருந்திப் பொற்பினுக்கோர்
சுழிதோற் றிடும்பகை தீர்க்கின்ற போதொரு தோன்றலுமவ்
வழிதோற்றி வந்தெடுத் தான்தஞ்சை வாணன்தென் வையையிலே. (301)

(இ - ள்.) அன்னையே! நின் மகள் ஓதிக்கு ஒப்ப நில்லாது உடைந்த மேகம் தோற்ற பகை தீர்த்தற்காய்ப் பொழியப்பட்ட, யானைத்திரளைத் தள்ளிக்கொண்டு வந்த, சிவந்த நீர்வெள்ளம் தஞ்சைவாணன் தென்வைகையிடத்துப் பெருக, நின் மகளுந்திக்குத் தோற்றுப்போன பகையைத் தீர்த்தற்கு யாம் நீராடிய காலத்தில் சுழிவந்து நின் மகளை வாங்கிக்கொண்டு போம்போதில், அவ்வழியிலே வருவான் ஒரு வேந்தன் வந்து எடுத்தான், ஆதலால், நின் கருத்தில் தோன்றியதனைச் சொல்லுதல் ஒழிவாயாக என்றவாறு.

எனவே, புணர்ச்சியுண்மை குறிப்பினாற் றோன்றியவா றாயிற்று. ஓதி - கூந்தல். கொண்டல் - மேகம். தோல் - யானை. உந்தி - தள்ளி. உந்தி - கொப்பூழ். தோன்றல் - வேந்தன்.

---------- (301. புனல்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் - முற்றும்) ----------

302. களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் :

களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல் என்பது, களிறுதரு புணர்ச்சியாற் களவை வெளிப்படுத்தல்.

மண்ணலை யாமல் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவெற்பில்
அண்ணலை யாயிழை பாகனென் றஞ்சின மஞ்சனந்தோய்
கண்ணலை நீரிடப் பாகமு மேல்வந்த கைக்களிற்றின்
புண்ணலை நீர்வலப் பாகமுந் தோயப் பொருதஅன்றே. (302)

(இ - ள்.) அன்னையே! இப்புவியை அலையாமல் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வெற்பில் யாம் சோலையில் விளையாடுகையில், ஓர் யானை பாயவரும்போது நின் மகள் அலறிக்கூவ, அப்போது அவ்வழியில் வருகின்றோன் ஒரு வேந்தன் விரைந்துவந்து, அஞ்சலையென்று, நின் மகளை இடப்பக்கத்தில் அணைத்துக்கொண்டு வலக்கையில் வேல்வாங்கி மேல்வந்த கையொடுங் கூடிய யானைமுகத்தி லழுத்திப் பொருதவன்று ஆனைப்புண்ணில் அலைபோல் வருங் குருதிநீர் வலப்பாகமெல்லாம் நனைத்தலால் வலப்பால் சிவந்தும், அவள் அழுதபோது மைகரைந்து கண்ணாகிய கடலில் வருநீர் இடப்பாகம் நனைத்தலால் இடப்பாகங் கறுத்தும், ஆணுருவும் பெண்ணுருவும் ஒன்றாய்த் தோன்றியவதனால் அவ்வேந்தனை ஆயிழைபாகன் என்ன யாம் அஞ்சினம் என்றவாறு.

எனவே, குறிப்பால் புணர்ச்சியுண்மை யறிவித்தவாறு காண்க. அண்ணல் - வேந்தன். ஆயிழை பாகன் - சிவன். அஞ்சனம் - மை. அலை - கடல்.

---------- (302. களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல் - முற்றும்) ----------

303. தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல் :

தண்டார் தழுவிய வேலண்ணல் வாணன்தென் றஞ்சைவெற்பில்
வண்டார் குழலிதன் வண்ணமுங் கண்ணும் வடிவுமுன்னாள்
கண்டா ரறியும் படியன வேயல்ல காரணமொன்
றுண்டா லுயிரனை யாயயி ராம லுரையெனக்கே. (303)

(இ - ள்.) உயிரனையாய்! தண்ணிய மாலை யணிந்த வேலையுடைய பெருமை பொருந்திய வாணனது அழகிய தஞ்சை வெற்பிடத்து வண்டார்ந்த குழலையுடையாளது நிறமும் கண்ணும் முன்னாள் கண்டார்க்கு இப்போது வேறுபட்டிருத்தலால் அறியுந்தன்மையனவே யல்ல; இவ்வடிவு வேறுபடுதற்குக் காரணம் ஒன்று உண்டு, ஆதலால் அக்காரணத்தை ஐயுறாமல் எனக்கு உரைப்பாய் என்றவாறு.

ஐயுறுதல் - சொல்லத்தகாதென்று மறைத்தல். தண்டார் - மாலை. தழுவிய - அணிந்த. தென் - அழகு. வண்ணம் - நிறம். அயிர்த்தல் - அயர்ப்புறுதல்.

---------- (303. தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல் - முற்றும்) ----------

304. செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடுநிற்றல் :

செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்றல் என்பது, முன்னிலைப் புறமொழியால் உணர்த்தாது, முன்னிலை மொழியினாலே களவை வெளிப்படுத்திக் கூறல்.

மலைவந்த தோவெனும் வாரண வாணன்தென் மாறைமதிச்
சிலைவந்த தோவெனு நன்னுத லாயொரு செல்வரிங்கோர்
கலைவந்த தோவென வந்துவி னாவிநங் காரிகைக்கு
முலைவந்த தோவில்லை யோவென்னு நாளின் முயங்கினரே. (304)

(இ - ள்.) மலைவந்ததோ என்று ஒப்புக்கூறும் வாரணத்தையுடைய வாணன் தென்மாறை நாட்டில் மதி வந்ததோ சிலை வந்ததோ என்று ஐயந்தரு நல்ல நுதலையுடையாய்! புனங் காக்குநாளில் ஒரு தலைவர் வந்து இங்கோர் கலை வந்ததோ என்று வினாவி, நம்முடைய பெண்ணுக்கு முலைவந்ததோ இல்லையோ என்னும் பெதும்பைப் பருவத்து முயங்கினர் என்றவாறு.

வாரணம் - யானை. 'வந்ததோ' என்பதனை மதிக்குங் கூட்டுக. மதி ஈண்டுப் பிறை. முயங்கல் - புணர்தல். 'செல்வர் வந்து' என இயையும். ஓகாரம் அனைத்தும் ஐயம்.

---------- (304. செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடுநிற்றல் - முற்றும்) ----------

'தலைவி பாங்கிக்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்ற'லும், 'செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடு நிற்ற'லும் ஆகிய இரண்டும், 'பூத்தரு புணர்ச்சி' முதல் மூன்றும் முன்னிலைமொழி; 'வெறிவிலக்கல்' ஒன்றும் முன்னிலைப்புறமொழி.

2.20. அறத்தொடு நிற்றல் முற்றிற்று.

இத்துணையும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க.

--------------------

2.21. உடன்போக்கு (305-322)

அஃதாவது, தலைவன் தன் ஊர்க்குத் தலைவியை உடன்கொண்டு போதல்.

[1]'போக்கே கற்பொடு புணர்ந்த கௌவை
மீட்சியென் றாங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படைக் கிளவியின் வழிப்படு தொகையே.'

என்னுஞ் சூத்திரத்தால், உடன்போக்கு மூவகைப்படும்.

[1]'போக்கறி வுறுத்தல் போக்குடன் படாமை
போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல்
போக்கல் விலக்கல் புகழ்த றேற்றலென்
றியாப்பமை யுடன்போக் கிருநான்கு வகைத்தே.'

என்னுஞ் சூத்திரவிதியால், உடன்போக்கு எட்டுவகைப்படும்.
-----
[2.21-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௧0, ௧௧) 10, 11.
----------

305. பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல் :

பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல் என்பது, காப்புக் கைம்மிகலால் உன் ஊர்க்கு உடன்கொண்டு போதியெனப் பாங்கி தலைவற்கு உரைத்தல்.

மைந்நீர் நெடுங்கண் மடந்தை யுடன்தஞ்சை வாணன்வெற்பா
செந்நீர் விழவணி நின்னகர்க் கேகொண்டு சேர்ந்தருண்மற்
றிந்நீர்மை யல்லதொ ராறுமின் றாலிங்கெம் மையரென்றால்
முந்நீ ருலகுங்கொள் ளார்விலை யாக முலையினுக்கே. (305)

(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பா! இவ்விடத்து எம் ஐயர் கருத்துச் சொல்லின் முலையினுக்கு விலையாக முந்நீர் சூழ்ந்த இவ்வுலகத்தையும் கொள்ளார்கள்; ஆதலால், குங்கும நீராடும் வசந்தத்திருவிழா அலங்காரத்தையுடைய நின் நகர்க்கு மையெழுதிய நீர்மையை யுடைய நெடிய கண்ணையுடைய மடந்தையை உடன்கொண்டு சேர்ந்தருள்வாய்; இம்முறை யல்லாது நீ வரைவதற்கு வேறோர் வழியில்லை என்றவாறு.

'வெற்பா இங்கெம்மையர்' எனவும், 'முலையினுக்கு விலையாக முந்நீ ருலகுங் கொள்ளார்' எனவும், 'நின்னகர்க்கு மைந்நீர் நெடுங்கண்' எனவும், 'உடன்கொண்டு' எனவும் இயையும். மற்று - வினைமாற்று. செந்நீர் - குங்குமநீர். ஆறு - வழி.

---------- (305. பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல் - முற்றும்) ----------

306. தலைமகன் மறுத்தல் :

பாரோ முலைவிலை யென்பர்நின் கேளிரென் பல்கிளைவாழ்
ஊரோ அணியதன் றொண்டொடி யாய்விந்தை யுண்கண்களோ
தாரோ வளரும் புயன்தஞ்சை வாணன் தரியலர்போல்
யாரோ தனிநடப் பாரருங் கானம் இவளுடனே. (306)

(இ - ள்.) ஒள்ளிய வளையினை யுடையாய்! நின் சுற்றத்தார் பாரை முலைவிலை யென்று சொல்வாரோ? உடன்கொண்டு போதற்கு என் சுற்றத்தார் வாழுகின்ற ஊர் அணித்தன்று; அன்றியும், போவாமென்னில் சய மாதின் மையுண்ட கண்களோ தாரோ வளரும் புயத்தையுடைய தஞ்சைவாணனுக்குத் தரியலர்போல அரிய காட்டில் இவளுடன் தனியாய் நடப்பவர் யார் என்றவாறு.

எனவே, தரியலர் செல்லுங் கானத்தில் ஏனோர் சேறல் அரிது என்று கூறியவா றாயிற்று. பாரோ என்புழி ஓகாரம் என்பர் என்பதனோடு கூட்டுக; அவ்வோகாரம் வினா. ஊரோ, யாரோ என்புழி, ஓகாரம் இரண்டும் அசைநிலை. கண்களோ, தாரோ என்புழி ஒகார மிரண்டும் எண்ணின்கண் வந்தன.

---------- (306. தலைமகன் மறுத்தல் - முற்றும்) ----------

307. அவளுடன்படுத்தல் :

அவள் உடன்படுத்தல் என்பது, பாங்கி தலைவனை உடன்படுத்தல்.

சுருளேய் குழலுஞ் சுணங்கேய் முலையுஞ் சுமந்துகற்புப்
பொருளே யெனச்சுரம் போதுமப் போது புகழ்வெயிலான்
மருளேய் கலியிருண் மாற்றிய வாணன்தென் மாறையினின்
அருளே யொழியவுண் டோநிழ லாவ தணங்கினுக்கே. (307)

(இ - ள்.) சுருள்பொருந்திய குழற்பாரமும் சுணங்கியைந்த முலைப்பாரமும் சுமந்து, பொருளாவது கற்பேயெனத் தெளிந்து, சுரத்திற் செல்லும்போது தன் புகழுருவாகிய வெயிலினாலே மயக்கம் பொருந்திய கலியாகிய இருளை மாற்றிய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்ற அணங்கினுக்கு நிழலாவது நின் அருளையே நிழலென்று கொள்ளுவதல்லாது வேறொன்றை நிழலென்று கொள்ளப்படாது என்றவாறு.

சுருள் - கடைகுழற்சி. சுணங்கு - மாமைநிறம். உம்மை - எண். பொருளே என்புழி ஏகாரத்தைக் கற்பொடு கூட்டித் தேற்றப் பொருண்மை யுரைக்க. மருள் - மயக்கம். அருளே என்புழி ஏகாரம் ஈற்றசை.

---------- (307. அவளுடன்படுத்தல் - முற்றும்) ----------

308. தலைவன் போக்குடன்படுதல் :

நஞ்சோ அழலோ வெனுஞ்சுர மோசெல்ல நாடியவென்
நெஞ்சோ கொடியது நேரிழை யாய்நிழல் மாமதியோ
மஞ்சோ தவழ்மதில் சூழ்தஞ்சை வாணன் வரையிலவம்
பஞ்சோ அனிச்சங் கொலோவெனுஞ் சீறடிப் பைந்தொடிக்கே. (308)

(இ - ள்.) நேரிழையாய்! ஒளியையுடைய மதியும் முகிலும் தவழப்பட்ட மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் வரையிலுள்ள இலவம்பஞ்சோ அல்லது அனிச்சம்பூவோ என்று சொல்லப்பட்ட சிறிய அடியையும் பசிய தொடியையும் உடையாட்கு நஞ்சோ அழலோ என்று சொல்லப்பட்ட காட்டிற் செல்லக்கருதிய என் நெஞ்சோ மிகக் கொடியது என்றவாறு.

பைந்தொடி - அன்மொழித்தொகை. அழல் - நெருப்பு. நிழல் - ஒளி. அனிச்சம் - ஆகுபெயர்.

நஞ்சோ அழலோ என்புழி ஓகாரமும், பஞ்சோ என்புழி ஓகாரமும், அனிச்சங்கொலோ என்புழி கொல்லும் ஐயம். சுரமோ என்புழி ஓகாரமும், கொலோ என்புழி ஓகாரமும் அசைநிலை. நெஞ்சோ என்புழி ஓகாரம் சிறப்பு. மதியோ மஞ்சோ என்புழி ஓகாரம் எண்ணின்கண் வந்தன.

---------- (308. தலைவன் போக்குடன்படுதல் - முற்றும்) ----------

309. தலைவிக் குடன்போக் குணர்த்தல் :

தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் என்பது, தலைவனுடன் போதலைப் பாங்கி தலைவிக்கு உரைத்தல்.

பாலன்ன பாயற் பகையென்னுஞ் சீறடி பட்டுருவும்
வேலன்ன கூர்ங்கல் மிதிக்குங்கொ லென்றனர் மேதினிக்கு
மாலன்ன வாணன்தென் மாறைநன் னாட்டு வயலுகளுஞ்
சேலன்ன நீள்விழி யாய்தெரி யாதன்பர் சிந்தனையே. (309)

(இ - ள்.) மேதினிக்கு மால்போன்ற வாணனது தென்மாறை நாடு சூழ்ந்த வயலிற் பிறழப்பட்ட சேலை யொத்த நீண்ட விழியினையுடையாய்!மல்லிகைப்பூவால் நிரைத்தலால் அப் பாலையொத்த படுக்கையைப் பகையென்று சொல்லப்பட்ட சீறடியாயின், அது பட்டு உருவப்பட்ட வேல்போன்ற கூரியகல்லை மிதிக்குமோ என்றதனால் அன்பர் நினைத்த சிந்தனை யாதோ தெரியாது என்றவாறு.

'மல்லிகைப்பூவால் நிரைத்தல்' என்பது அவாய்நிலையான் வந்தது. பாலன்னபாயல் - வண்ணவுவமம். பாயல் - படுக்கை. உகளுதல் - புரளுதல். கொல் - ஐயம்.

---------- (309. தலைவிக் குடன்போக் குணர்த்தல் - முற்றும்) ----------

310. தலைவி நாணழிவிரங்கல் :

தலைவி நாணழிவு இரங்கல் என்பது, உடன்போக்கில் நாணழியுமே யென்றதற்குத் தலைவி யிரங்கிக் கூறல்.

மறவாகை வேலங்கை வாணனை மாறையர் மன்னனைத்தம்
உறவாக வெண்ணி யுறாதவர் போலுயி ரோம்பியென்றும்
துறவாத நாணந் துறப்பது வேண்டலிற் றொல்லுலகில்
பிறவா தொழிகைநன் றேயொரு காலமும் பெண்பிறப்பே. (310)

(இ - ள்.) வீரத்தால் வெற்றிகொண்ட வேலை அகங்கையிற் பிடித்த வாணனை மாறைநாட்டார்க்கு மன்னவனைத் தமக்கு உறவாக எண்ணி யுறாத பகைவர்போல் உயிர்காத்தற்பொருட்டு என்றுந் துறத்தற்குத் தகுதியல்லாத நாணத்தைத் துறப்பது வேண்டிற்றாகலான், பழையதாகிய உலகில் ஒருகாலமும் பெண்பிறப்புப் பிறவா தொழித்துவிடல் நன்று என்றவாறு.

மறம் - வீரம். வாகை - வெற்றி. அங்கை - அகங்கை;

[1]'அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரி யர்க்க.'

என்னுஞ் சூத்திர விதியானுணர்க. ஓம்பல் - காத்தல்.
-----
[310-1] தொல். எழுத்து. புள்ளிமயங்கியல் - (௨0) 20.
----------
---------- (310. தலைவி நாணழிவிரங்கல் - முற்றும்) ----------

311. கற்புமேம்பாடு பாங்கி கழறல் :

கற்பு மேம்பாடு பாங்கி கழறல் என்பது, கற்பின் மேம்பாட்டைப் பாங்கி தலைவிக்குக் கூறாநிற்றல்.

செந்நாண் மலரிற் றிருவன்ன கோலத் தெரிவையர்க்கு
மெய்ந்நா ணுயிரினு மிக்கதென் றால்விர வாவரசர்
தந்நாண் முறைமை தவிர்த்தருள் வாணன் தமிழ்த்தஞ்சைநாட்
டந்நா ணமுமட வாய்கற்பு நோக்க லழகிதன்றே. (311)

(இ - ள்.) மடப்பத்தை யுடையாய்! சிவந்த முறுக்கவிழ் பருவத்ததாய தாமரைமலரிலிருக்கின்ற திருவையொத்த அழகையுடைய தெரிவையர்க்கு மெய்யின்கணிருக்கின்ற நாண் உயிரினுஞ் சிறந்ததென்று சொல்லின், உறவு கலவாத வேந்தர் தம்முடைய வாழ்நாள் முறைமை தவிர்த்துக் கிளையாயுள்ளவரிடத்து அருளைத் தரும் வாணன் தமிழ்த் தஞ்சை நாட்டில் சொல்லப்பட்ட அந்நாணமும் கற்பைக் கருதுமிடத்தில் அழகிதன்று என்றவாறு.

திருவென்று கூறினமையால், செந்நாண்மலர் - தாமரைமலர். கோலம் - அழகு. விரவுதல் - கலத்தல்.

[1]'உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.'

என்னுஞ் சூத்திரத்தானுணர்க.
-----
[311-1] தொல். பொருள். களவியல் - (௨௨) 22.
----------
---------- (311. கற்புமேம்பாடு பாங்கி கழறல் - முற்றும்) ----------

312. தலைவியொருப்பட்டெழுதல் :

பலரே சுமந்த வுரைகளுந் தாயர்தம் பார்வைகளும்
சிலரே சுமந்து திரியவல் லார்செய்ய செண்பகநாண்
மலரே சுமந்த வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
அலரே சுமந்து சுமந்திந்த வூர்நின் றழுங்குகவே. (312)

(இ - ள்.) பலர் ஏசிச்சொல்லும் அந்த வார்த்தைகளும் தாயர் சினந்து பார்க்கின்ற கொடிய பார்வைகளும் சுமந்து திரிய வல்லமையுடையார் சிலருளர், என்னால் முடியாது; சிவந்த சண்பக நாண்மலரைச் சுமந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத பகைவர்போல வசைகூறுஞ் சொல்லையே சுமந்து சுமந்து இந்த வூரிலுள்ளார் நின்றிரங்குக என்றவாறு.

'சுமந்து திரியவல்லார் சிலரே' எனக் கூட்டுக. 'என்னால் முடியாது' என்பது அவாய்நிலையான் வந்தது. 'இந்தவூர் நின்றழுங் குகவே' என்பது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. அழுங்குதல் - இரங்குதல்; கெடுதல் என்று பொருள் கூறுவாருமுளர். இவள் கற்புடையளாதலால், கூறியசொற் பிழையாள்; ஆதலால், அவ்வாறன்றி மீண்டும் வந்து மணமுடித்தலின் அது பொருளன்மையுணர்க. இரங்கல் பொய்க்குமோ வெனில், இவள் உடன்போயினபின்னர் அவ்வூரிலுள்ளார் இரங்குதலின் பொய்யாதாயிற்று.

---------- (312. தலைவியொருப்பட்டெழுதல் - முற்றும்) ----------

313. பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல் :

செல்லிற் கொடிய களிற்றண்ணல் வாணன்றென் மாறைமன்னன்
வில்லிற் கொடிய புருவமின் னேயென் விளம்புதிநீ
சொல்லிற் கொடியநம் மன்னையைப் போல்பவர் சூழ்ந்திருக்கும்
இல்லிற் கொடியகொல் லோசெல்லு நாட்டவ் விருஞ்சுரமே. (313)

(இ - ள்.) இடியினுங் கொடியதாகிய களிற்றுப் பெருமையையுடைய வாணனாகிய தென்மாறை மன்னனது கையிற் பிடித்த வில்லினுங் கொடிய புருவத்தையுடைய மின் போன்றவளே! யான் செல்லும் நாட்டில் அப்பெரிய சுரமானது, சொல்லிலே கொடியளாகிய நம் அன்னையைப் போல்வார் சூழ்ந்திருக்கும் இல்லினுங் கொடியதோ என்றவாறு.

'சுரம் கொடியகொல் நீ விளம்புதி' என்றியையும். செல்லின் என்புழி, சிறப்பும்மை தொகுத்தல். செல் - இடி. அண்ணல் - பெருமை. கொல் - அசை. ஓகாரம் - எதிர்மறை. சுரம் - காடு.

---------- (313. பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல் - முற்றும்) ----------

314. பாங்கி கையடை கொடுத்தல் :

பாங்கி கையடை கொடுத்தல் என்பது, பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல்; கையடை - அடைக்கலம்.

[1]‘வடமால் வரைநிரை சாயினும் வண்புயல் வாரிபுகும்
கடனா கியநெறி கைவிட நீங்கினுங் கந்தலைக்கும்
அடன்மா களிற்றன்ப நின்னையன் னார்பின்னை யென்னையென்னார்
[2]உடனாய கேண்மை யொழிந்தறி யாரிவ் வுலகத்திலே.' (314)
(இது பிறசெய்யுட் கவி.)
-----
[314-1] அம்பிகாபதிகோவை - (௩௨௫) 325.
[314-2] 'பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாடிறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி தாயி னருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே.'
[314-2] கோவையார் - (௨௧௩) 213; இது சில பிரதிகளிற் காணப்படுகிறது.
----------
---------- (314. பாங்கி கையடை கொடுத்தல் - முற்றும்) ----------

315. பாங்கி வைகிருள் விடுத்தல் :

பாங்கி வைகிருள் விடுத்தல் என்பது, பாங்கி யிருளார்ந்த இடையாமத்தில் விடுத்தல்; வைகுதல் - தங்குதல்.

பொழிநான மன்றலம் பூங்குழல் நீங்கள் புணர்ந்துசெல்லும்
வழிநாடி நும்பின் வருகுவல் யான்தஞ்சை வாணன்வையைச்
சுழிநாணு முந்திநின் றொல்கிளைக் கேற்பன சொல்லியின்னா
மொழிநா வடங்க மொழிந்தய லாரை முகங்கவிழ்த்தே. (315)

(இ - ள்.) மான்மதம் பொழியப்பட்ட மணத்தோடு கூடிய பூவையணிந்த குழலையும் தஞ்சைவாணன் வையைச் சுழி நாணப்பட்ட வுந்தியையும் உடையாய், நின் பழமையால் வருகின்ற சுற்றத்தார்க்கு ஏற்பனசொல்லி, அயலாரை அலர்கூறிய நாவடங்க மொழிந்து தலைவளையச் செய்து, நீங்கள் கூடிச்செல்லும் வழிதேடி யானும் பின்னே வருவேன் என்றவாறு.

நானம் - மான்மதம். மன்றல் - மணம். புணர்தல் - கூடல். கிளை - சுற்றம். இன்னா மொழி - அலர் மொழி. 'மன்றலம் பூங்குழல், தஞ்சைவாணன் வையைச் சுழிநாணு முந்தி' எனக் கூட்டி, ஆகுபெயராகக் கூறுக.

---------- (315. பாங்கி வைகிருள் விடுத்தல் - முற்றும்) ----------

316. தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் :

தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் என்பது, ஐம்பத்து மூன்றாநாள், தலைமகன் தலைமகளைச் சுரத்திற் செலுத்தல்.

தளிபோற் கொடைபயில் சந்திர வாணன் தமிழ்த்தஞ்சையான்
அளிபோற் குளிர்ந்த இளமரக் காவு மவன்புகழின்
ஒளிபோல் விளங்கிய வெண்மணல் யாறு முவந்துகண்டு
நளிபோ தவிழ்குழ லாய்மெல்ல மெல்ல நடந்தருளே. (316)

(இ - ள்.) குளிர்ச்சியையுடைய மலர் முறுக்கவிழப்பட்ட குழலையுடையாய்! மேகம்போற் கொடுக்குந் தொழில் பழகிய சந்திரவாணனாகிய தமிழ் விளங்கப்பட்ட தஞ்சையான் அன்புபோல் குளிர்ந்த இளமரச் சோலையும் அவனது புகழின் ஒளியைப்போல வெண்மணல் செறிந்த கான்யாறும் கண்டு மகிழ்ந்து மெல்ல மெல்ல நடந்தருள்வாயாக என்றவாறு.

தளி - மேகம். பயிலுதல் - பழகுதல். அளி - அன்பு. கா - சோலை. ஆறு - கான்யாறு. உவத்தல் - மகிழ்தல். நளி - குளிர்ச்சி. 'கண்டுவந்து' என இயையும்.

---------- (316. தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் - முற்றும்) ----------

317. தலைமகன் றலைமக ளசைவறிந் திருத்தல் :

அசைவு - வருத்தம். [1]'அன்புகொண் மடப் பெடை யசைஇய வருத்தத்தை' என்றார் பிறரும்; அசைஇய - வருந்திய.

வரமாமை வேற்படை வாணன்தென் மாறை வணங்கலர்கள்
புரமான வல்லழல் பொங்குவெங் கானிற் பொருந்தியகூர்
அரமான கல்லுன் னடிமல ராற்றல வாதலினாம்
சுரமாறு மெல்லைநல் லாயிருப் பாமிந்தச் சோலையிலே. (317)

(இ - ள்.) நல்லாய், வரத்தையுடைய மாமைநிறம் பொருந்திய வேற்படையையுடைய வாணன் தென்மாறையை வணங்காதார் நகரைப்போல, வலிய அழல் பொங்கி யெழும் வெய்ய காட்டில் கூர்பொருந்திய அரத்துக்கொப்பான கற்கள் உன் அடிமலர் பொறுக்குந் தன்மைய அல்ல; ஆதலால், சுரம் ஆறுமளவும் நாம் இந்தச் சோலையிலே யிருப்பாம் என்றவாறு.

மாமை - குருதிப் புள்ளி நிறம். 'மா வைவேற்படைவாணன்' என்று பாடமோதிப், பெருமையுங் கூர்மையுமுடைய வேற்படை யெனப் பொருள் கூறுவாருமுளர். 'கூர் பொருந்திய' என இயையும். அரமான என்புழி உவமைத்தொகை. புரமான – புரம்போல. ஆற்றல் - பொறுத்தல்.

[2]'ஆற்றுவா ராற்றல் பசியாற்றல்.'

என்றார் பிறரும். சுரம் - வழி. ஆறுதல் - வெப்பந் தணிதல். எல்லை - அளவு.
-----
[317-1] கலித். பாலை - (௧0) 10.
[317-2] குறள். ஈகை - (௫) 5.
----------
---------- (317. தலைமகன் றலைமக ளசைவறிந் திருத்தல் - முற்றும்) ----------

318. உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல் :

உவந்து அலர் சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல் என்பது, தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு அலரைச்சூட்டி, அதனால் பரவச மகிழ்ச்சியடைந்து கூறுதல்.

உவகை அறிவொடு கூடியது; மகிழ்ச்சி அறிவழிந்தது. என்னை,

[1]'உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.'

என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரையானும் உணர்க.

அடிமலர் போற்றவும் போற்றியன் பாலிவ ளாய்முடிக்கியான்
கடிமலர் சூட்டவுங் காட்டிய தாற்கள்வர் காய்ந்தெறியும்
துடிமலர் சீர்க்கெதிர் கூகை யிரட்டுஞ் சுரத்திடையோர்
வடிமலர் வேற்படை யான்வாணன் மாறையென் மாதவமே. (318)

(இ - ள்.) கள்வர் சினந்து அடிக்குந் துடியின்கண் விரிவாகிய தாளவோசைக்கு எதிராகக் கூகை யொலிக்கும் காட்டிடை ஒப்பற்ற கூர்மை விரிந்த வேற்படையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கின்ற என்னுடைய மாதவம், இவளடி மலரைப் போற்றவும், போற்றி அன்பால் இவளாய்ந்து முடித்த கொண்டைக்கு யான் மணமலரைச் சூட்டவும் காட்டியது என்றவாறு.

போற்றல் - ஈண்டு வருடல்; வருடி - வருத்தந்தீர்த்து. கடிமலர் - மணமலர். காய்தல் - சினத்தல். எறிதல் - அடித்தல். துடி - பாலைநிலத்துப் பறை. மலர்தல் - விரிதல். சீர் - தாளவோசை. இரட்டுதல் - ஒலித்தல். சுரம் - காடு. வடி - வடித்தற்றொழில். ஆல் - அசை.
-----
[318-1] குறள். புணர்ச்சி விதும்பல் - (௧) 1.
----------
---------- (318. உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல் - முற்றும்) ----------

319. கண்டோரயிர்த்தல் :

கண்டோர் அயிர்த்தல் என்பது, வடிவின் மேம்பாட்டாற் கண்டோர் ஐயமுற்றுக் கூறுதல்.

சையத் திரள்புயன் சந்திர வாணன் தனிபுரக்கும்
வையத் துறைகின்ற மானிட ரோவன்றி வானவரோ
நையப் படுமழல் வெஞ்சுரத் தூடு நடந்தவரென்
றையப் படுவதல் லாலுண்மை சால அறிவரிதே. (319)

(இ - ள்.) வருகின்றோர் உளம் நையப் பாலை அழல்படும் வெய்ய சுரத்தில் நடந்த இவர், மலைபோல் திரண்ட புயத்தை யுடையவனாகிய சந்திரவாணன் ஒப்பிலாது காத்தளிக்கும் புவியின்கண் உறைகின்ற மானிடரோ! அல்லது, வானுலகின்கணுள்ளவரோ என்று ஐயப்படுவதல்லாமல் உண்மையை மிகவும் அறியவரிது என்றவாறு.

சையம் - மலை. திரள்புயம் - வினைத்தொகை. புரத்தல் - காத்தல். வையம் - புவி. 'அழல்படும்' என இயையும். சால - மிகவும்.

---------- (319. கண்டோரயிர்த்தல் - முற்றும்) ----------

320. கண்டோர் காதலின் விலக்கல் :

கண்டோர் காதலின் விலக்கல் என்பது, கண்டோர் காதலினால் போக்கை விலக்கி, எம் பாடியில் தங்கிப்போம் என்று கூறுதல்.

கண்டோராவார் - பாலைநிலத்து எயிற்றியர். ஆடவர் கண்டோர் எனில் வருங்குற்றம் என்னையெனின், 'கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்' [செய். (௩௪௭) 347] என்னுங் கிளவிச் செய்யுளில், யான் தலைவனைக் கண்டேன், என் காதலி தலைவியைக் கண்டாள் என்பதனோடு மாறுபடுமென்று உணர்க.

மாலுந் திருவு மெனவரு வீர்தஞ்சை வாணன்தெவ்வூர்
போலுஞ் சுரமினிப் போகவொண் ணாது பொருப்படைந்தான்
ஆலும் புரவி யருக்கனிக் கங்குல் அடற்கடமான்
பாலுந் தசையுமுண் டேதங்கு வீரெங்கள் பாடியிலே. (320)

(இ - ள்.) மாலும் திருவும் என்று சொல்ல வருவீர், தஞ்சைவாணன் பகைவரிருக்கும் ஊர்போலும் பாழாகிய சுரம் இன்று இவ்விடம் விட்டு அப்பாற் போகத்தகாது; ஆரவாரஞ் செய்யும் புரவிபூட்டிய தேரில் வரும் அருக்கன் அத்த வெற்படைந்தான்; இருள் வருங்காலமாகிய இக்கங்குலில் போர்செய்யும் கடமான் பாலும் தசையும் யாங்கள் தருதும், அதனை யுண்டு எங்கள் பாடியில் தங்குவீர் என்றவாறு.

தெவ்வூர் பாழாய் மக்களியக்கமின்றி யிருத்தலின், சுரம் உவமை யாயிற்று. 'அருக்கன் பொருப்படைந்தான்' எனக் கூட்டுக. ஆலுதல் - ஆரவாரித்தல். அடல் - போர்.

---------- (320. கண்டோர் காதலின் விலக்கல் - முற்றும்) ----------

321. கண்டோர் தன்பதியணிமை சாற்றல் :

கண்டோர் தன் பதி அணிமை சாற்றல் என்பது, இவ்விடத்தில் நும் ஊரில் வைகிப் போதல் பொருந்தாது, எம்பதிப் போதல் வேண்டுமென்று தலைவன் கூறியவழித், தலைவன்றன்பதி அணித் தென்பதனைக் கண்டோர் கூறுதல்.

தொடங்கும் பிறைநுதற் றோகையு நீயுமுன் தோன்றுகின்ற
கடங்குன் றிரண்டுங் கடந்துசென் றாற்கம லத்தடமும்
கிடங்கும் புரிசையுஞ் சூழ்ந்தெதிர் தோன்றுங் கிளைத்தபைந்தார்த்
தடங்குங் குமநெடுந் தோள்வாணன் மாறையுந் தஞ்சையுமே. (321)

(இ - ள்.) வளர ஆரம்பிக்கும் பிறைபோலும் நுதலையுடைய தோகை போன்றவளும் நீயும் முன்னே தோன்றுகின்ற காடும் சிறுமலையும் ஆகிய இரண்டும் கடந்து சென்றால், கமலப்பொய்கையும் அகழும் புரிசையும் சூழ்ந்து வாவியிற் கிளைத்த நீலத்தார் அணிந்த பெருமையுடைய குங்குமம் பூசிய நெடிய தோளையுடைய வாணன் மாறையும் தஞ்சையும் எதிராகத் தோன்றும் என்றவாறு.

தொடங்குதல் - ஆரம்பித்தல். தோகை - ஆகுபெயர். கடம் - காடு. குன்று - சிறுமலை. கிடங்கு - அகழ். புரிசை - மதில். கிளைத்தல் - தோன்றுதல். 'கிளைத்த பைந்தார்' என்பது,

[1]'குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி.'

என்றாற்போல, ஒற்றுமை நயத்தாற் செயப்படுபொருண்மேல் நின்றது.
-----
[321-1] திருமுரு. (௧௯௯) 199.
----------
---------- (321. கண்டோர் தன்பதியணிமை சாற்றல் - முற்றும்) ----------

322. தலைவன் தன்பதியடைந்தமை சாற்றல் :

தலைவன் தன்பதி அடைந்தமை சாற்றல் என்பது, தலைவன் தலைமகட்குத் தன்பதி யடைந்தமை யுணர்த்தல்.

சந்தனந் தோய்ந்து தயங்குமுத் தாரந் தரித்துவிம்மும்
நந்தனந் தாங்கி நடுங்கிடை போல நடந்திங்ஙனே
நொந்தனங் காலென்று நோவல்பொன் னேயொரு நோயுமின்றி
வந்தனங் காணிது காண்வாணன் மாறை வளநகரே. (322)

(இ - ள்.) பொன்போன்றவளே! சந்தனந்தோய்ந்து விளங்கப்பட்ட முத்துமாலை யணிந்து பூரிக்கும் நமது தனந்தாங்கி நடுங்கும் இடைபோல நடந்து இவ்விடத்தில் கால் நொந்தனம் என்று நோவற்க; ஒரு துன்பமும் இன்றி வந்தனம், வாணன் மாறை வளநகர் இது காண்பாய் என்றவாறு.

தான் அவள் என்னும் வேற்றுமை யின்மையான், 'நம் தனம்' என்று கூறினானென்க. பொன் - ஆகுபெயர். நோய் - துன்பம். 'வந்தனங்காண்' என்புழி, காண் உரையசை.

---------- (322. தலைவன் தன்பதியடைந்தமை சாற்றல் - முற்றும்) ----------

இவற்றுள், 'பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்த'லும், 'தலைவிக்கு உடன்போக்கு உணர்த்த'லும், ஆகிய இரண்டும் போக் கறிவுறுத்தல்.

'தலைமகன் மறுத்த 'லும், 'தலைவி நாணழிவிரங்க'லும் ஆகிய இரண்டும் போக்குடன்படாமை.

'பாங்கி தலைவனை யுடன்படுத்த'லும், 'தலைவி கற்பின்மேம்பாடு பூண்முலைப் பாங்கி புகற'லும் ஆகிய இரண்டும் போக்குடன் படுதல்.

'தலைவன் போக்குடன்படுத'லும், 'தலைவி யொருப்பட்டெழுத'லும், 'பாங்கி சுரத் தியல்புரைத்துழித் தலைமகன் சொல்ல'லும் ஆகிய மூன்றும் உடன்போக்குடன்படுதல்.

'பாங்கி கையடை கொடுத்த'லும், 'வைகிருள் விடுத்த'லும், 'தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்த'லும் ஆகிய மூன்றும் போக்கல்.

'தலைவன் தலைவி அசைவறிந்திருத்த'லும், 'கண்டோர் காதலின் விலக்க'லும் ஆகிய இரண்டும் விலக்கல்.

'தலைவன் தலைவியை யுவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்த'லும், 'கண்டோரயிர்த்த'லும் ஆகிய இரண்டும் புகழ்தல்.

'கண்டோர் தன்பதியணிமை சாற்ற'லும், 'தலைவன் தன்பதி யடைந்தமை தலைவிக் குணர்த்த'லும் ஆகிய இரண்டும் தேற்றல் எனக் கொள்க.

2.21. உடன்போக்கு முற்றிற்று.
-------------------------

2.22. கற்பொடுபுணர்ந்த கவ்வை (323-348)

அஃதாவது, தலைவி தலைவனது உடைமையாய்க் கற்பொடு கூடியவதனை அயலார் விராய சேரியர் பலரும் அறிதல்.

[1]'செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர்மனை மருட்சி கண்டோ ரிரக்கம்
செவிலிபின் றேடிச் சேறலென் றாங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வையை வகைத்தே.'

என்னுஞ் சூத்திர விதியால், கற்பொடு புணர்ந்த கவ்வை ஐவகைப்டும்.
-----
[2.22-1] அகப்பொருள் விளக்கம். வரைவியல் - (௧௩) 13.
----------

323. செவிலி பாங்கியை வினாதல் :

நலம்புனை யாயமு நீயுநற் றாயொடு நானுநன்பொன்
சிலம்புயர் சோலையுஞ் சிற்றிலும் பேரிலுந் தெண்டிரைமேல்
வலம்புரி யூர்வயல் சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
புலம்புற மாதரெங் கேமக ளேதனிப் போயினளே. (323)

(இ - ள்.) நலம்புனைந்த ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல்ல அழகிய மலையிடத்து உயர்ந்த சோலையும் அவள் விளையாடுஞ் சிற்றிலும் அவள் இயங்கித் திரியும் பெரிய மனையும், தெளிந்த திரையின்மேல் வலம்புரிச் சங்கு ஊர்ந்துவரும் வயல்சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத பகைவர்போலப், புலம்புதலடைய மாதர் எங்கே தனியாய்ப் போயினாள், யான் அறியச் சொல்வாயாக என்றவாறு.

நலம் புனை யாயம் - தலைவிக்கு அழகாய் அலங்கரிக்கும் ஆயம். ஒடு - எண்ணொடு.

---------- (323. செவிலி பாங்கியை வினாதல் - முற்றும்) ----------

324. பாங்கி செவிலிக்குணர்த்தல் :

வெறுத்தா ரொறுத்துரை மேலுநங் கேளிர் விழைதலின்றி
மறுத்தா ரவற்கு மணமத னாற்றஞ்சை வாணர்பிரான்
கறுத்தார் புரத்து நடந்தனள் காளைபின் காமர்கற்பால்
பொறுத்தா ளழற்சுரந் தன்னையன் னாய்நின் பொலங்கொடியே. (324)

(இ - ள்.) அன்னாய்! நின்பொலங்கொடி, நம் சுற்றத்தார் வெறுத்தார், அதன்றியும், ஒறுத்த சொல்லைச் சொல்லுதன்மேலும் விழைதலின்றி அத்தலைவற்கு மணத்தை மறுத்தார்; அதனால் தஞ்சைவாணர் குலத்துக்குப்பிரான் கோபித்த பகைவரூராகிய காட்டில் காளைபின் நடந்தனள், அழகிய கற்பினால் சுரத்தழல் தன்னைப் பொறுத்தாள் என்றவாறு.

ஒறுத்துரை - சினத்துப் பல்காற் கூறுதல். விழைதல் - விருப்பம். கறுத்தல் - கோபித்தல். காளை - பாலை நிலத்துத் தலைவன். காமர் - அழகு. 'மணத்தை மறுத்தார்' எனவும், 'சுரத்தழறன்னை' எனவும் இயையும்.

---------- (324. பாங்கி செவிலிக்குணர்த்தல் - முற்றும்) ----------

325. பாங்கியி னுணர்ந்த செவிலி தேற்றுவோர்க் கெதிரழிந்து கூறல் :

மாறா வளவயல் சூழ்தஞ்சை வாணன்தென் மாறையென்கண்
ஆறா வருந்துய ராற்றுகின் றீரறி வேகொளுத்தி
ஊறா வனகடிந் தென்முலை யூறமிர் தூட்டியின்சொல்
கூறா வளர்த்ததற் கோவென்னை நீத்ததென் கோல்வளையே. (325)

(இ - ள்.) வளம்மாறாத வயல் சூழ்ந்த தஞ்சைவாணன் தென்மாறையில் என்னிடத்தில் ஆறாத அருந்துயரை யாற்றுகின்றவரே, அறிவைப் பொருத்தித் துன்பமாவன கடிந்து என் முலையிலூறும் அமிழ்தத்தை யூட்டி இனிய சொல்லைக் கூறி அரிதாய் வளர்த்ததற்கோ என் அழகிய வளையையுடையாள் என்னை விட்டு நீங்கியது என்றவாறு.

‘வளமாறா' என இயையும். ஏகாரம் - ஈற்றசை. கொளுத்தல் - பொருத்தல். ஊறு - துன்பம். கூறா - கூறி. நீத்தல் - துறத்தல். கோல்வளை - ஆகுபெயர்; கோலம் - அழகு; கோல் எனக் கடைக்குறை. கோல் - வளையிற் புள்ளி யென்பாருமுளர். அழிந்துகூறல் - நொந்துகூறல்.

---------- (325. பாங்கியி னுணர்ந்த செவிலி தேற்றுவோர்க் கெதிரழிந்து கூறல் - முற்றும்) ----------

326. செவிலிதன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் :

செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்து உரைத்தல் என்பது, தலைவி போதற்குத் தன் குறிப்பினால் அறிவித்த தன்மையை அறிந்திலேன் என்று தன் அறிவின்மைதன்னை நொந்து கூறல்.

வழியா வரும்பெரு நீர்த்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
கழியாத அன்புடைக் காளைபின் னாளைக் கலந்துகொண்டல்
பொழியாத வெஞ்சுரம் போகுவல் யானென்று போங்குறிப்பால்
ஒழியாதென் முன்புசொன் னாள்பேதை யேனொன்றை யோர்ந்திலனே. (326)

(இ - ள்.) வாய்க்கால் நிறைந்து வழிந்து வரும் பெரிய நீர் சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத பகைவர் போல, நீங்காத அன்பையுடைய காளைபின்னே நாளைக் கலந்து ஒருகாலும் கார்வந்து பெய்யாத வெவ்விய காட்டில் யான் போகுவலென்று போங்குறிப்பை யெல்லாம் விடாது என்முன்பு சொன்னாள்; யான் அறிவிலேன் ஆதலால், ஒன்றையும் ஆராய்ந்தறிந்திலேன் என்றவாறு.

வழியா - வழிந்து. கழியாத - நீங்காத. ஒழியாது - விடாது. ஆல் - அசை. ஒன்றை என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது.

---------- (326. செவிலிதன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் - முற்றும்) ----------

327. செவிலி தெய்வம் வாழ்த்தல் :

இணங்கிப் புவனத் தெவருமில் லாவென் இளங்கொடியாள்
உணங்கிக் கழித லொழியவென் பால்வர உன்னையன்பால்
வணங்கிப் பலமுறை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்தெவ்வை
அணங்கித் திரள்புயத் தான்மல யாசலத் தாரணங்கே. (327)

(இ - ள்.) பகைவரை வருத்தியவதனாற் பூரித்துத் திரண்ட புயத்தை யுடையவனாகிய தஞ்சைவாணனது பொதியமலையி லிருக்கின்ற அரியதெய்வமே! இப்புவனத்து நட்புக் கூடுதற்கு எவரும் இல்லாத என் இளங்கொடிபோல்வாள் வாடிப் பாலைவனத்துப் போதலை யொழிய, என்னிடத்து வர, உன்னை அன்பாற் பலமுறை வணங்கித் துதிக்கின்றேன்; வரின் நினக்குச் சிறப்புச் செய்வேன் என்றவாறு.

இணங்க - இணங்கு எனத்திரிந்து நின்றது;

[1]‘காப்பி னொப்பி னூர்தியி னிழையின்.'

என்னும் வேற்றுமையியற் சூத்திரத்தான், இழைத்தல் என்னும் சொல் இழை என நின்றாற்போலக் கொள்க. உணங்கி - வாடி. கழிதல் - போதல். அணங்கி - வருத்தி. மலயாசலம் - பொதிய மலை. ஆரணங்கு - அரிய தெய்வம். 'வரின் நினக்குச் சிறப்புச் செய்வேன்' என்பது அவாய்நிலையான் வந்தது. இவை மூன்று கிளவியும் செவிலி புலம்பற்கு உரியவாம் என்க.
-----
[327-1] தொல். சொல். வேற்றுமையியல் - (௭௨) 72.
----------
---------- (327. செவிலி தெய்வம் வாழ்த்தல் - முற்றும்) ----------

328. செவிலி நற்றாய்க்கறத்தொடு நிற்றல் :

செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல் என்பது, செவிலி நற்றாய்க்கு உடன்போக்கை வெளிப்படுத்திக் கூறல்.

சகநல்க வந்தருள் சந்திர வாணன்தென் தஞ்சைநல்லாய்
முகநல்கி நல்க முலைகொடுத் தாரின்முத் தங்கொடுத்தார்
மிகநல்ல ரென்பது மன்பதை தேற விடலைபின்னே
மகநல்கு மந்தியங் கானடந் தாளுன் மடந்தையின்றே. (328)

(இ - ள்.) உலகத்தில் மகிழ்ச்சி கொடுக்க வந்தருளப்பட்ட சந்திரவாணனது அழகிய தஞ்சையி லிருக்கின்ற நல்லாய்! முகங்கொடுத்து மேலைக்கு மகிழ்ச்சி அவள் கொடுக்க எண்ணி முலைகொடுத்தாரின் முத்தங்கொடுத்த கணவரே மிக நல்லர் என்பது உலகத்து மக்களெல்லாம் தெளிய, உன் மடந்தை இன்று மகப்பெறு மந்திகள் இயங்குங் காட்டில் விடலைபின்னே நடந்தாள் என்றவாறு.

சகம் என்புழி ஏழனுருபு தொக்கது. நல்லாய் - நற்றாய். மன்பதை - மக்கட்கூட்டம். தேற - தெளிய. மக - குரங்குக்குட்டி;

[1]'கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப'

[1]'மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையு மன்ன வப்பா லான.’

என்பதனான் உணர்க. மந்தி - பெண்குரங்கு;

[1]'குரங்கு முசுவு மூகமு மந்தி.’

என்பதனான் உணர்க. கான் - காடு.
-----
[328-1] தொல். பொருள். மரபியல் - (௧௩, ௧௪, ௬௮) 13, 14, 67.
----------
---------- (328. செவிலி நற்றாய்க்கறத்தொடு நிற்றல் - முற்றும்) ----------

329. நற்றாய் பாங்கியொடு புலம்பல் :

முன்னே யிதனை மொழிந்தனை யேல்நுந்தை முந்தைமணம்
பின்னேய் குழலி பெறாளல்ல ளேபிற ழாதெவர்க்குந்
தன்னேயம் வைத்தரு ளுந்தஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பில்
பொன்னே யனையநல் லாயவ மேசுரம் போக்கினையே. (329)

(இ - ள்.) எவர்க்கும் நிலைவிட்டுப் பெயராது தன்னுடைய அன்பை வைத்துக்காக்கும் தஞ்சைவாணன் பொதியமலையிடத்துப் பாற்கடற்பிறந்த மடவார் பலருள்ளும் திருமகளே யொப்பாகிய நல்லாய்! சுரம்போவதற்கு முன்னமே இதனை மொழிந்தனையாகின் நுந்தந்தை முற்காலத்தில் என்னை மணஞ்செய்ததுபோலப் பின்னுதல் பொருந்திய குழலையுடையாள் மணம் பெறுவாளே, இச்செய்தியை என்னுடன் சொல்லாமல் மகளை வீணே சுரத்திற் போக்கினையே என்றவாறு.

நுந்தை - நுந்தந்தை. முந்தை - முன்பு. மணம் என்புழி உவமத்தொகை. பிறழ்தல் - பெயர்தல். நேயம் - அன்பு. பொன்னே என்புழி ஏகாரம் பிரிநிலை; அவளுடன் பிறந்தார் பலருள்ளும் அவளையே பிரித்து வாங்குதலின். அவம் - வீண். சுரம் - கான்.

---------- (329. நற்றாய் பாங்கியொடு புலம்பல் - முற்றும்) ----------

330. அதுகேட்ட பாங்கி அழுங்கக்கண்டு நற்றாய் புலம்பல் :

இல்லுங் கழங்கா டிடங்களு நோக்கி யிரங்கல்வம்பும்
வல்லும் பொருங்கொங்கை மங்கைநல் லாய்தஞ்சை வாணனொன்னார்
புல்லுந் துணைவியர் போல்வினை யேன்பெற்ற பூவையன்னாள்
செல்லுஞ் சுரத்தழ லன்றுன்கண் ணீரெற் றெறுகின்றதே. (330)

(இ - ள்.) கச்சும் சூதும் தம்முட்பொருங் கொங்கையையுடைய மங்கை நல்லாய்! தஞ்சைவாணனுக்குப் பகையாயினோர் கூடும் மனைவியர்போலத் தீவினைசெய்து யான் பெற்ற பூவைபோன்ற மகள் வருந்திச்செல்லும் பாலைச்சுரத்தில் விழுந்திருக்கும் அழலன்று, அழுகின்ற நினது கண்ணீரே யென்னைச் சுடுகின்றது; மகள் இயங்கித் திரிகின்ற மனையையும் அவள் கழங்காடுகின்ற இடங்களையும் நோக்கி நீ கலுழற்க என்றவாறு.

கழங்காடுதல் - கழற்சிக்காய் ஏழு கைப்பிடித்தாடுதல். இரங்கல் - அழுதல். வம்பு - கச்சு. வல்லு - சூது. வம்பும் வல்லும் பொருதல் - வல் ஒப்புப் பார்க்க வருங்கால் வம்பே மறையற்க என்புழி, நீ யொப்பாகாயென்று வம்பு விலக்குழி, ஒன்றோடொன்று பொருதலாயிற்று. தெறுதல் - சுடுதல்.

---------- (330. அதுகேட்ட பாங்கி அழுங்கக்கண்டு நற்றாய் புலம்பல் - முற்றும்) ----------

331. நற்றாய் பாங்கியோடு புலம்பல் :

நேயம் புணைதுணை யாகவெங் கானக நீந்தலெண்ணி
ஆயம் புலம்ப அகன்றன ளோகல் லகங்குழைய
மாயம் புகலொரு காளைபின் வாணன்தென் மாறையன்னீர்
சேயம் புயமலர் போலடி நோவவென் சில்வளையே. (331)

(இ - ள்.) வாணன் தென்மாறை நாடுபோன்ற பெண்காள்! கல்லும் நெஞ்சங்குழையப் பொய் சொல்லப்பட்ட ஒரு காளையின் எனது சில்வளையை யுடையாள் சிவந்த தாமரை மலரையொக்கும் அடிகள்நோவ வெவ்விய காடாகிய வெள்ளத்தை நீந்த எண்ணி, அன்பினைத் தெப்பமும் துணையுமாக ஆயக்கூட்டம் புலம்பப் பிரிந்து போயினாள் என்றவாறு.

நேயம் - அன்பு. புணை துணை என்புழி உம்மைத்தொகை. நீந்தல் என்பதனால் வெள்ளம் வருவிக்கப்பட்டது. ஏகாரம் ஈற்றசை. கல் என்புழி சிறப்பும்மை தொக்குநின்றது.

[1]'குன்றின், நெஞ்சுபக வெறிந்த அஞ்சுடர் நெடுவேல்'

என்பதுபோலக், கற்கு நெஞ்சு கூறினாரென்று உணர்க. மாயம் - பொய். அம்புயம் - தாமரை. சில்வளை - ஆகுபெயர்.
-----
[331-1] குறுந்தொகை. கடவுள்வாழ்த்து.
----------
---------- (331. நற்றாய் பாங்கியோடு புலம்பல் - முற்றும்) ----------

332. நற்றாய் அயலார் தம்மொடு புலம்பல் :

மேனாள் வரங்கிடந் தென்போல் வருந்தி மிகவுமெய்ந்நொந்
தீனா தவர்துன்ப மெய்துவ ரோவிமை யோருலகம்
தானாண நீடு மதிற்றஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பின்
மானார் விழியனை யாள்விளை யாடிய வண்டல்கண்டே. (332)

(இ – ள்.) தேவருலகத்தார் நாண நீண்ட மதில் சூழ்ந்த தஞ்சைவாணன் தமிழ்ச்சிலம்பில் விழிமான் போன்றவள் விளையாடிய வண்டலம்பாவையைக் கண்டு பண்டைநாளில் வரங்கிடந்து என்னைப்போற் பத்துமாதஞ் சுமந்து வருந்தி மிகவும் மெய்நொந்து பெறாதார் துன்பம் எய்துவரோ, யானும் பெறாதிராது, பெற்றுத் துன்பத்தை எய்தினேன் என்றவாறு.

மேனாள் - பண்டைநாள். ஈனாதவர் - பெறாதவர். வண்டல் - ஆகுபெயர். எய்திலரே என்பது முன்னிலையெச்சம்.

---------- (332. நற்றாய் அயலார் தம்மொடு புலம்பல் - முற்றும்) ----------

333. நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல் :

நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல் என்பது, நற்றாய் தலைவி பழகி விளையாடும் இடங்களோடு நொந்துகூறல்.

செயலைத் தருவின் திருநிழ லேபெருஞ் சிற்றில்லமே
வயலைக் கொடிநொச்சி மண்டப மேதஞ்சை வாணனொன்னார்
இயலைத் தனித்தனி தந்தன ளேநமக் கின்றிதன்றோ
கயலைப் பொருதகண் ணாள்மேலும் வாழ்விக்குங் கட்டளையே. (333)

(இ - ள்.) அசோகத்தருவின் அழகிய நீழலே! பெரிதாய் வளைத்த சிற்றில்லமே! வெளியிலே செய்த கொடிகட்டிய மதில்சேர்ந்த மண்டபமே! தஞ்சைவாணனுக்குப் பகைவ ரிலக்கணத்தை நமக்கு இன்று தனித்தனி தந்தாள் கயலுடனே போர் புரிந்த கண்ணாள்; இனிமேலும் நம்மை வாழ்விக்கும் கட்டளை யிதுவன்றோ என்றவாறு.

செயலை - அசோகு. திரு - அழகு. பெருஞ்சிற்றில் - அவர் விளையாடுஞ் சிற்றிலினும் பெரிதாய் வளைத்த சிற்றில். வயலை - வெளி. நொச்சி - மதில். 'தனித்தனிதருதல்' பகைவர் பலராதலால் அவரவர் படுந்துன்பங்களை வேறுவேறு கொடுத்தல். மேலும் - இனிமேலும். கட்டளை - முறைமை.

இவை ஐந்தும் நற்றாய் புலம்பற்கு உரியவாமென்க.

---------- (333. நற்றாய் தலைமகள் பயிலிடம் தம்மொடு புலம்பல் - முற்றும்) ----------

334. நிமித்தம்போற்றல் :

நிமித்தம் போற்றல் என்பது, சகுணப்புள்ளைத் துதித்தல்.

வடியேய் புகர்முக வாள்வல வாணன்தென் மாறையுள்யான்
அடியே தொழுந்தெய்வ மாகநிற் பேணி யரும்பலியிப்
படியே தருகுவ லென்றுமின் னேயிப் பதியுவகைக்
கொடியே வரக்கரை நீகொடி யேன்பெற்ற கொம்பினையே. (334)

(இ - ள்.) இப்பதியிடத்து மகிழ்ச்சிகொண் டிருக்கின்ற காகமே! பாவியாகிய யான்பெற்ற கொம்புபோல் வாளை ஈண்டுவர நீ அழையாய், அழைத்தவுடனே வருவள்; அவள் வந்தால், வடித்ததொழில் பொருந்திய புகர்நிறத்தை முகத்திலுடைய வாட்டொழிலில் வல்ல வாணனது தென்மாறையுள் யான் வழிபடு கடவுளாக நின்னைப்போற்றி, சோறு தசை முதலிய அரிய பலியை இன்று கொடுத்தாற் போல் என்றும் தருவேன் என்றவாறு.

வடி - வடித்ததொழில். புகர் - இரத்தக் கறைப் புள்ளி. அடிதொழுந் தெய்வம் - வழிபடுகடவுள். பேணி - போற்றி. அரிய பலி - கிடையாதபலி. இன்னே - இப்போதே. கொடி - காகம். கரைதல் - அழைத்தல். காகமழைத்தல் ஊர்க்குப் போயினார் வருவரென்னும் உலகியல்புபற்றிக் கூறினளென்று உணர்க. 'இன்னே வர' என இயையும்.

---------- (334. நிமித்தம்போற்றல் - முற்றும்) ----------

335. சுரந்தணிவித்தல் :

சுரம் தணிவித்தல் என்பது, சுரத்தின்வெம்மை குளிருமாறு கூறுதல்.

வெஞ்சுர நாடு வியன்சுர லோகமும் வெங்கடுங்கான்
ஐஞ்சுர தாரு வனங்களு மாக அகிற்புகைபோல்
மஞ்சுர வாடக மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பஞ்சுர மாகு மொழிச்சுரு ளோதியென் பைந்தொடிக்கே. (335)

(இ - ள்.) அந்நகரிலுள்ளார் குழற்கு ஊட்டும் அகிற்புகை போன்ற முகில் தவழப்பட்ட வலிய பொன்மதில் சூழ்ந்த தஞ்சைவாணனது வெற்பிடத்துப் பஞ்சுரமென்னும் பண்ணுக்கு ஒப்பாகிய மொழியையும் சுருண்ட குழலையும் உடைய என் பசிய தொடியை யணிந்தாட்கு, வெய்ய பாலையுலகும், விரிவாகிய தேவருலகும், வெய்ய கடியகாடும், அத்தேவருலகி லுண்டாகிய பஞ்சதருச் சோலையுமாக என்றவாறு.

சுரநாடு - பாலையுலகம். வியன் - விரிவு. ஐந்து சுரதரு வாவன – சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம். பஞ்சுரம் - பாலைநிலத்துப் பண். ஓதி - குழல். மொழிச் சுருளோதி - உம்மைத்தொகை. பைந்தொடி - அன்மொழித் தொகை.

---------- (335. சுரந்தணிவித்தல் - முற்றும்) ----------

336. தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல் :

தன் மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் என்பது, நற்றாய் தன்மகள் மெல்லிய இயல்பாகிய தன்மைக்கு இரங்கல்.

[1]தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்குநங் காயெரியும்
தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபா
யாமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. (336)
(இது பிறசெய்யுட் கவி.)
-----
[336-1] திருக்கோவையார் - (௨௨௮) 228.
இச் செய்யுளுக்கு மாறாக,
'அரக்காம்பல் நாறும்வா யம்மருங்குற் கன்னோ
பரற்கான மாற்றின கொல்லோ - அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கு மடி.'
— நாலடியார், (௩௯௬) 396.
என்னும் வெண்பா சில பிரதிகளில் காணப்படுகிறது.
----------
---------- (336. தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கல் - முற்றும்) ----------

337. இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கல் :

இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல் என்பது, நற்றாய் தலைவி இளமைத்தன்மைக்கு மனமெலிந்து இரங்கிக் கூறல்.

இரும்பா மனங்கொண்ட வாறென்னை நீதன்னை யேத்தியென்றும்
வரும்பா வலர்க்கருள் வாணன்தென் மாறை வளவயலில்
கரும்பார் மொழியா யழலென்று கண்ணீர் துடைத்தணைத்துன்
அரும்பா முலைசெய்ய வாய்ப்பசும் பாவைக் களிக்குமின்னே. (337)

(இ - ள்.) விளையாடும் பாவையை நோக்கி, தன்னைத் துதித்துவரும் புலவர்க்கு என்றும் அருளப்பட்ட தென்மாறை நாட்டு வளவயலில் வளருங் கரும்புபோன்ற மொழியினை யுடையாய்! அழாதையென்று கண்ணீர் துடைத்து அணைத்து, உன் மார்பில் அரும்பாத முலையைச் செய்யவாயையுடைய பசும்பொன்னாற் செய்த பாவைக்களிக்கும் இளமைத் தன்மையையுடைய மின்போன்றவளே! என்னை விட்டுப் பிரிந்துபோக நீ இரும்பையொக்கும் மனங்கொண்ட முறைமை எப்படி என்றவாறு.

பாவலர் - புலவர். பசும்பாவை என்றதனால் பொன் வருவிக்கப்பட்டது. மின் - ஆகுபெயர்.

---------- (337. இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கல் - முற்றும்) ----------

338. அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல் :

அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல் என்பது, நற்றாய் தலைவியது வெருவுந்தன்மையை நினைந்து தான் அச்சமுற்று இரங்குதல்.

நாள்மா தவிமலர் நாறிருங் கூந்தல் நடந்தவழிக்
கோள்மா குமிறுங் கொடுங்குரல் கேட்டொறுங் கூர்ங்கணையால்
வாள்மா முனைவென்ற வாணன்தென் மாறை மணிவரைவேய்த்
தோள்மா வெருவுங்கொல் லோவென்றென் ஆருயிர் சோர்கின்றதே. (338)

(இ - ள்.) குருக்கத்தியினது முறுக்கவிழ் மலர்மணக்குங் கரிய கூந்தலையுடையாள் நடந்த பாலைவழியில் கொலை செய்யும் விலங்குகள் குமிறப்பட்ட கொடிய குரலைக் கேட்குந்தோறும், கூரிய கணையினால் வாள்பிடித்துவரும் பெரிய பகையை வென்ற வாணன் தென்மாறை நாட்டில் இருக்கின்ற மணிவிளையும் வரையிடத்து உண்டாகிய வேய்போலுந் தோளையுடைய திருப்போல்வாள், அஞ்சுமோ என்று என் அரிய உயிர் வாடுகின்றது என்றவாறு.

'மாதவிநாள் மலர்' என இயையும். மாதவி - குருக்கத்தி. கோள் - கொலை. மா - விலங்கு. குமிறுதல் - சினந்து முழங்குதல். கேட்குந்தோறும் என்னுஞ் சொல் கேட்டொறும் என விகாரப்பட்டு நின்றது. முனை - பகை. வெருவுதல் - அஞ்சுதல். சோர்தல் - வாடல்.

இவை ஐந்தும் மனமருட்சிக்குரியவாமாறு காண்க.

---------- (338. அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல் - முற்றும்) ----------

339. கண்டோர் இரக்கம் :

நொந்துங் கலுழ்ந்துந் துணைவிய ராற்றலர் நோக்கொடின்சொல்
தந்துங் கவையுந் தணந்துசென் றாளெனத் தாள்பணியார்
மைந்துங் கதமுங் கடிந்தருள் வாணன்தென் மாறையன்னாள்
பந்துங் கழங்குமெல் லாங்கண்டு வாடும் பயந்தவளே. (339)

(இ - ள்.) தம்மிடத்துப் பார்க்குங் குளிர்ந்தபார்வையோடு இனியசொல் தந்ததனையும் அயலார் தூற்றும் அலரையும் விட்டு நீங்கிச்சென்றாளென நொந்தும் கலுழ்ந்தும் துணைவியராற்றலர், தாள்பணியாதார் வலியையும் சினத்தையும் போக்கிய வாணன் தென்மாறையன்னாள் விளையாடிய பந்தும் கழங்கும் மற்றுமுள்ளன யாவற்றையும் கண்டு பயந்தவள் வாடும் என்றவாறு.

கலுழ்தல் - அழுதல். 'நோக்கொடு இன்சொற் றந்ததற்கு நொந்தும் கவையைத் தணந்ததற்குக் கலுழ்ந்தும் ஆற்றலராயினார்' என நிரனிறையாய்ப் பொருள் கொள்க. தந்ததும் என்பது தந்தும் என விகாரப்பட்டு நின்றது. கண்டோர் - மாதரார்.

[1]'பாலொடு தேன்கலந் தற்றே.'

என்புழிக், 'கலந்ததற்றே' என்பது, 'கலந்தற்றே' என நின்றாற்போற் கொள்க. கவ்வை கவை என இடைக்குறை. தணந்து - விட்டு நீங்கி. மைந்து - வலி. கதம் - சினம். பயந்தவள் - ஈன்றாள்.

இஃதொன்றும் கண்டோரிரங்கற்கு உரித்து.
-----
[339-1] குறள். காதற்சிறப்புரைத்தல் - (௧) 1.
---------- (339. கண்டோர் இரக்கம் - முற்றும்) ----------

340. செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல் :

செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல் என்பது, செவிலி ஆற்றாத நற்றாயைத் தேறுமாறு கூறுதல்.

நன்றே யிதென்று முகமுக நோக்கி நகைநகையா
மன்றே அலர்சொல்லு மாதர்முன் னேதஞ்சை வாணன்தொல்சீர்
சென்றே பரந்த திசைகளெல் லாஞ்சென்று தேர்ந்தணங்கை
இன்றே தருவனன் னேவருந் தாதிங் கிருந்தருளே. (340)

(இ - ள்.) அன்னே, இவள் ஒருவன் பின்னே சுரம் போயின இது நன்றாயிருந்ததென்று ஒருவர் முகம் ஒருவர் நோக்கி நகையை நகைத்து வெளியிலே அலரைத் தூற்றும் மாதர்முன்னே, தஞ்சைவாணனது பழகிய கீர்த்தி போய்ப் பரந்த திசைகளெல்லாம் போய்த் தேடி அணங்குபோல்வாளை இற்றைப்பொழுதே தருவேன்; யான் போய்வருமளவும் வருந்தாது இங்கிருந்தருள் என்றவாறு.

முன் ஏகார மூன்றும் ஈற்றசை; பின் ஏகாரம் ஒன்றுந் தேற்றம். 'நன்றேயிது' என்னுங் குறிப்புமொழி அசதிக்கண் தீதை யுணர்த்திநின்றது. நகையா - நகைத்து. மன்று - வெளி. தேர்தல் - தேடல். அணங்கு - ஆகுபெயர்.

---------- (340. செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல் - முற்றும்) ----------

341. ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் :

ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் என்பது, செவிலி தேடிப் போங்கால் வழியிடை எதிர்வரும் முக்கோலுடைய அந்தணரை வினாவுதல்.

ஒருவெண் குடையிரு நீழல்முக் கோல்கொண் டொழுக்கத்தினால்
அருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ளீரெழுபார்
மருவெண் திசைபுகழ் வாணன்தென் மாறையென் வஞ்சியன்னாள்
பொருவெஞ் சுடரிலை வேலொரு காளைபின் போயினளே. (341)

(இ - ள்.) ஒரு வெண்குடையினது பெரியநீழலிலே மூன்று தண்டுகொண்டு ஆசாரத்தினால் அரிய வெவ்விய களர்நிலத்தி லியைந்து வழிச்செல்வீர், ஏழுபாரிலும் மருவிய எண்டிசையி லுள்ளோராற் புகழப்பட்ட வாணனது தென்மாறை நாட்டிலிருக்கும் என்னுடைய வஞ்சிக்கொம்பு போன்றவள் போர்செய்யும் சுடர்பொருந்திய இலைபோலும் வேலையுடைய ஒரு காளைபின் போயினள்; மீண்டு வரக் கூறி அருள் புரிவீராக என்றவாறு.

இருமை - பெருமை. முக்கோல் - திரிதண்டு. ஒழுக்கம் - ஆசாரம். இயைந்து - பொருந்தி. ஆறு - வழி. ‘மீண்டுவரக் கூறல்' அவாய் நிலையான் வந்தது. ஒன்றுமுதல் எட்டளவும் ஒழுங்காய்த் தொகை காட்டிவருதலால் செய்யுட்கு இஃதோர் அலங்காரந் தோன்றியவாறு காண்க.

---------- (341. ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் - முற்றும்) ----------

342. மிக்கோ ரேதுக் காட்டல் :

மிக்கோர் ஏது காட்டல் என்பது, செவிலி வினாயதற்கு மிக்கோர் அது உலகியல்பென்று காரணமெடுத்துக் காட்டல்.

இயங்கா வனமென் மகளொரு காளைபின் னேகினளென்
றுயங்கா தொழியஃ துலகியல் பாலுல வும்புயல்தோய்
வயங்கா டகமதில் சூழ்தஞ்சை வாணன் மணங்கமழ்தார்
புயங்காதல் கொண்டணைந் தாளய னார்தந்த பூமகளே. (342)

(இ - ள்.) ஒருவருஞ் சஞ்சரியாத வனத்தில் என் மகள் ஒரு காளைபின் ஏகினாளென்று வருந்தாதொழி; அவ்வாறு ஏகுதல் உலகவியல்பு; யாங்ஙனமெனின், வானத்து உலவும் புயலைத்தீண்டி விளங்கப்பட்ட பொன்மதில் சூழ்ந்த தஞ்சைவாணனது மணங்கமழ் மாலையணிந்த புயத்தைக் காதல்கொண்டு அயனார் படைத்த பூமிதேவி யணைந்தாள் என்றவாறு.

இயங்கல் - சஞ்சரித்தல். ஏகினள் - போயினள். உயங்கல் - வருந்தல். வயங்கல் - விளங்கல். ஆடகமதில் - பொன்மதில். அயனார் - பிரமனார். பூமகள் - பூமிதேவி.

---------- (342. மிக்கோ ரேதுக் காட்டல் - முற்றும்) ----------

343. செவிலி யெயிற்றியொடு புலம்பல் :

செவிலி எயிற்றியொடு புலம்பல் என்பது, செவிலி பாலைநிலத்துப் பெண்ணொடு புலம்பிக் கூறல்.

செருமக ளேயும் புயத்தய லான்பின் செலவிடுத்தென்
ஒருமக ளேயென் றுனையயிர்த் தேன்புனை ஓவியம்போல்
வருமக ளேதஞ்சை வாணனொன் னார்துன்னும் வன்சுரத்தோர்
அருமக ளேயுரை யாயவள் போன அதரெனக்கே. (343)

(இ - ள்.) போர்மகள் பொருந்திய புயத்தையுடைய அயலான் பின்னே போகவிடுத்து உன்னை என் ஒப்பற்ற மகளேயென்று ஐயமுற்றேன், அலங்கரிக்குஞ் சித்திரப் பாவைபோல் வரப்பட்ட பெண்ணே! தஞ்சைவாணனது பகைவராயுள்ளார் நெருங்கும் வலிய காட்டிலிருக்கும் எயினருக்கு அருமையாகிய மகளே! அம்மகள் போனவழியை எனக்குச் சொல்வாயாக என்றவாறு.

செருமகள் - வீரமகள். அயிர்த்தல் - ஐயமுறல். ஓவியம் - சித்திரப்பாவை. அதர் - வழி. இப்பாட்டில் இரண்டு முன்னிலை வந்ததற்கு இலக்கணமும் உதாரணமும் களவியலிற் கூறினாம், ஆண்டுக் (செய். (௯௬) 96.) காண்க.

---------- (343. செவிலி யெயிற்றியொடு புலம்பல் - முற்றும்) ----------

344. செவிலி குரவொடு புலம்பல் :

இரவேய் குழலியிவ் வேதிலன் பின்செல்லல் என்றுசொல்லாக்
குரவே அறவுங் கொடியைகண் டாய்கொடிக் கோகனகம்
தரவே யெனவந்த சந்திர வாணன் தரியலர்போம்
சுரவேய் அழல்வழி யேதனிப் போயவென் தோகையையே. (344)

(இ - ள்.) தருதற்குக் கொடியொடுகூடிய பதுமநிதி யெனவந்த சந்திரவாணன் தரியலர்போங் காட்டில் மூங்கிலழல் பொருந்திய வழியில் தனியேபோன என் தோகைபோல்வாளை நீ இவ்விடைக் கண்டுழி, இருள்போன்ற குழலாய்! இவ்வயலான்பின் செல்லாதே என்று சொல்லாத குரவே, நீ மிகவும் கொடியை என்றவாறு.

எனவே, நீ சொன்னால் மீளாளல்லள்; வாளாவிருத்தலான் அறவுங் கொடியை யென்று கூறினாள். ஏதிலன் - அயலான். 'குரவேகொடியை' என இயையும். கொடை மிகுதியாற் கட்டிய கொடி வாணன்மேலேற்றுக; கோகனகம் - பதுமநிதி. வேயழல் - மூங்கிலிற் பிறந்த அழல். தோகை - ஆகுபெயர்.

---------- (344. செவிலி குரவொடு புலம்பல் - முற்றும்) ----------

345. சுவடு கண்டிரங்கல் :

சுவடு கண்டு இரங்கல் என்பது, செவிலி நிலத்தின்மேற் காலழுந்திய குறியைக் கண்டு இரங்கிக் கூறல்.

தொடுசிலைக் கானவ ரோடிய வேற்றுச் சுவடுவையே
அடுசிலைக் காளை யடியவை யேயறிந் தோரறிய
இடுசிலைப் பார்புரக் குந்தஞ்சை வாணன் இசைக்குருகப்
படுசிலைப் பாவை பதமிவை யேவண்டு பாடுகவே. (345)

(இ - ள்.) அம்பு தொடுக்குஞ் சிலையையுடைய ஆறலைக்கானவர் எதிர் நிற்கமாட்டாது ஓடிய வேறுபட்ட அடிச்சுவடு உவையே, அவரைப் பொருஞ் சிலையுடனே அம்பு பக்கத்தில் வீழத் துரத்திய காளையது அடிச்சுவடு அவையே, தனது வீரத்தை அறிவுடையோரறியச் சயத்தம்பம் நாட்டி உலகத்தைக் காக்குந் தஞ்சைவாணனது பொதிய மலையிடத்திருக்கும் பாவையடி இவை என்றவாறு.

எனவே, அடிச்சுவடு கண்டவுடன் தலைவியை நினைந்திரங்கியவா றாயிற்று. பலராய் வந்தெதிர்த்துத் தலைவனெதிர் நிற்கமாட்டாது ஒருவர் போனவழி யொருவர் போகாதோடுவாரது அடிச்சுவடு, ஒருவரடிபோ லொருவரடி யிராது வேறுபட்டுத் தோன்றுதலால், 'கானவரோடிய வேற்றுச்சுவடு உவை' என்றும், தனித்து நிற்றலின், 'பாவை பதமிவை' என்றும் கருதிக் கூறினாளென்க. இடுசிலை - வெற்றியாலிடுஞ் சயத்தம்பம். இசைக் குருகப்படுசிலை - இராவணணைப் பிணிக்கக் குறுமுனி பாடும் இசைக்கு உருகப்பட்ட பொதியமலை. வண்டு - அம்பு. பாடு - பக்கம் உகுதல் - விழுதல்.

---------- (345. சுவடு கண்டிரங்கல் - முற்றும்) ----------

346. செவிலி கலந்துடன்வருவோர்க் கண்டு கேட்டல் :

செவிலி கலந்துடன் வருவோர்க்கண்டு கேட்டல் என்பது, உடன்போக்குப் போய்த் தலைவனும் தலைவியும்போல அன்பு கலந்து ஆற்றிடை வருவோர் இருவரைக்கண்டு செவிலி வினாதல்.

யானகம் போத வருந்தநும் போல்வனப் பெய்திவெய்ய
கானகம் போயினர் கண்டனி ரோகற்ப காடவிசூழ்
வானகம் போர்பயில் வானவற் கீந்தருள் வாணன்றஞ்சைத்
தேனகம் போருக மாதனை யாளுமொர் செல்வனுமே. (346)

(இ - ள்.) கற்பகக்காடு சூழ்ந்த வானிடத்தைப் போர் செய்யுஞ் சேரனுக்குக் கொடுத்தருளப்பட்ட வாணனது தஞ்சாக்கூரின் வாவியிலிருக்குந் தேனொளிவிடப்பட்ட தாமரையிலிருக்கும் மாதுபோல்வாளும், ஒருசெல்வனும் உங்களைப்போல் அழகுபொருந்தி யான் நெஞ்சு மிகவருந்த வெய்ய காட்டிடத்துப் போயினர்; நீங்கள் கண்டீரோ, சொல்வீராக என்றவாறு.

அகம் - நெஞ்சு. போத - மிக. வனப்பு - அழகு, கானகம் - காட்டிடம். கற்பகாடவி - கற்பகக்காடு. வானகம் - வானிடம். வானவன் - சேரன். நகுதல் - ஒளிவிடல்.

---------- (346. செவிலி கலந்துடன்வருவோர்க் கண்டு கேட்டல் - முற்றும்) ----------

347. கலந்துடன்வருவோர் புலம்பல் தேற்றல் :

கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல் என்பது, செவிலி யிரங்கிப் புலம்புதலை எதிர்வந்தோர் தேற்றிக் கூறல்.

யான்கண்ட அண்ணலு மெண்ணருங் காதலின் ஏகியவென்
மான்கண் டனகண் மயில்கண்ட மாதரு மாதருமம்
தான்கண்ட தண்ணளிச் சந்திர வாணன் தரியலர்போம்
கான்கண்ட மெய்குளி ரப்பொய்கை சூழ்தஞ்சை காண்பர்களே. (347)

(இ - ள்.) யான் காணப்பட்ட தலைவனும் என்னுடைய தலைவியாகிய மானை யுவமைகண்டாற்போலும் கண்ணையுடைய இம்மயில்போன்றவள் கண்ட எண்ணுதற்கரிய காதலினால் தலைவன்பின் போகிய மாதரும் பெரிய தருமத்தைக் கண்ட தண்ணளியையுடைய சந்திரவாணன் தரியலர் செல்லும் காட்டைக்கண்ட உடம்பு குளிர இப்போது பொய்கை சூழ்ந்த தஞ்சையைக் காண்பார்கள் என்றவாறு.

'யான்கண்ட அண்ணலு மென்மயில்கண்ட மாதரும்' என்று கூறவே, எனக்கவள் தோன்றாமல் மறைந்து நின்றாள்; இவளும் அத்தன்மையளாதலின், இவள் அவளைக் கண்டதாகவும் தான் அவனைக் கண்டதாகவும் கூறினார். மயில் ஆகுபெயர். தண்ணளி - அன்பு. தலைவியை யான் கண்ட என்று கூறாது, என் மயில் கண்ட மாதர் என்று கூறியதென்னை யெனின், தலைவன் காணுந் தன்மையளல்லது, அயலார் காணுந் தன்மையளல்லள் ஆதலால் இவ்வாறு கூறினார். என்னை,

[1]'மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றல் மதி.'

என்னுந் திருக்குறளினா னுணர்க.
-----
[347-1] குறள். நலம்புனைந்துரைத்தல் - (௯) 9.
----------
---------- (347. கலந்துடன்வருவோர் புலம்பல் தேற்றல் - முற்றும்) ----------

348. செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல் :

செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல் என்பது, செவிலி தன் புதல்வியைக் காணாது துன்பம் மிகுதல்.

நாணினுந் தாரணி கற்புநன் றென்று நயந்துமுத்தம்
பூணினும் பாரமி தென்னுமென் பொன்னையிப் போதெனக்குச்
சேணினுஞ் சார்புகழ் வாணன்தென் மாறைமன் சேரலரைக்
காணினுங் காணவந் தோவரி தாலிந்தக் கானிடையே. (348)

(இ - ள்.) நாணைப்பார்க்கவும் முல்லைமாலை யணிந்த கற்பு நன்று என்பதனை விரும்பிச் சென்றாள் ஆதலால், முத்தாரம் பூணினும் பாரமென்று சொல்லும் மெல்லிய இயல்பினையுடைய என் பொன்னை எனக்கிப்போது, சேணினுஞ்சேர்ந்த புகழையுடைய வாணனாகிய தென்மாறை மன்னன் பகைவரை இந்தக் கானிடைக் காணினும், காண அரிது, அந்தோ யான் என் செய்வேன் என்றவாறு.

நயந்து என்புழிச், 'சென்றாளாதலால்' என்னுஞ் சொல் வருவித்து முடிக்க. 'எனக்கிப்போது` என இயையும். சேண் - தூரம். காணினும் என்னும் உம்மை அவர் கரந்து திரிதலின் அருமை தோன்ற நின்றது. அந்தோ - இரக்கக் குறிப்பு. ஆல் - அசை.

---------- (348. செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல் - முற்றும்) ----------

இவ்வொன்பதும் செவிலி பின்தேடிச் சேறற்கு உரியவாமாறு உணர்க.

2.22. கற்பொடு புணர்ந்த கவ்வை முற்றிற்று.

இதுகாறும் ஐம்பத்து மூன்றாநாட் செய்தியென் றுணர்க.

--------------------

2.23. மீட்சி (349-354)

அஃதாவது, மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும், உடன்போய தலைவனும் தலைவியும் மீண்டு வருதலும் அடங்கப் பொதுப்பட மீட்சி யென்று கூறினார்.

[1]'தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென
வெளிப்பட வுரைத்த மீட்சிநால் வகைத்தே.'

என்னுஞ் சூத்திர விதியால், மீட்சி நால்வகைப்படும்.
-----
[2.23-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௨0) 20.
----------

349. தலைவி சேணகன்றமை செவிலி, தாய்க் குணர்த்தல் :

[1]'ஏடார் மலர்க்குழல் வல்லியை யன்னையித் தீவினையேன்
நாடா இடமில்லை ஞாலத் தகல்வயின் நன்கமலக்
காடார் பழனக் கழனிநன் னாடு கடந்துதன்னூர்
வாடா வளமனை கொண்டுசென் றானொரு வள்ளலின்றே. (349)
(இது பிறசெய்யுட் கவி.)
-----
[349-1] அம்பிகாபதிகோவை - (௪0௮) 408.

---------- (349. தலைவி சேணகன்றமை செவிலி, தாய்க் குணர்த்தல் - முற்றும்) ----------

350. தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல் :

தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல் என்பது, ஐம்பத்து நான்காநாள், தலைவன் மீட்சியில் தலைவியது ஊரைத் தாம் சார்ந்தமை தலைவிக்குச் சாற்றல்.

நினையான் எதிர்ப்பட்ட நீடிருங் குன்றிது நீகுடைந்த
சுனையா மதுமலர்ச் சோலைக ளாமுவை தூயவண்டல்
மனையா மிவையினி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல்
இனையா தெழுந்தருள் மானனை யாய்நம் எழில்நகர்க்கே. (350)

(இ - ள்.) மானனையாய்! நின்னை யான் முன் எதிர்ப்பட்ட நீண்ட பெரிய குன்று இது; நீ குடைந்து விளையாடிய சுனையாம் அது; நீ விளையாடிய மலர்ச்சோலைகளாம் உவை; மாசிலாத வண்டலம்பாவை செய்து விளையாடிய சிற்றில்லம் இவை; இன்று வாணன் தென்மாறையை வாழ்த்தாதவர்போல வருந்தாது, நமது எழிலையுடைய நகர்க்கு எழுந்தருள் என்றவாறு.

தான் அவள் என்னும் வேற்றுமை யின்மையான், 'நம் எழினகர்' எனக் கூறினான். இனி - இன்று. இனையாது - வருந்தாது.

---------- (350. தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல் - முற்றும்) ----------

351. தலைவி முன் செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல் :

புனையல ரேதிலர் காதலர் தாயர் பொறாமையிற்போய்
இனைதுயர் யாதொன்று மின்றிவெங் கானிகந் தியானுமம்பொன்
வனைகழ லானும் வருவதெல் லாஞ்சென்று வாணன்தஞ்சை
துனைவுட னேகுகின் றீர்சொல்லு வீரென் துணைவியர்க்கே. (351)

(இ - ள்.) வாணனது தஞ்சைக்கு விரைவுடன் செல்கின்றீர், புனைந்து அலரைத் தூற்றுகின்ற அயலார், என்னிடத்துக் காதலையுடையராகிய தாயர் இவர்களது பொறாமையினால் போய்வருந்துந் துன்பம் ஒன்றுமின்றி வெவ்விய காட்டை நீங்கிப்போய் மீண்டு யானும் அழகிய பொன்னால் வனைந்த கழலையுடையானும் வருகின்ற செய்தியெல்லாஞ் சென்று என் துணைவியர்க்குச் சொல்லுவீர் என்றவாறு.

புனைதல் - இல்லதனை யுண்டாக்கிக் கூறுதல். ஏதிலர் - அயலார். இனைதுயர் - வருந்துந்துயர். இகந்து - நீங்கி. துனைவு - விரைவு.

[1]'கதழ்வுந் துனைவும் விரைவுப் பொருள.'

என்பதனாற் கண்டுகொள்க.
-----
[351-1] தொல். சொல். உரியியல் - (௧௯) 19.
----------
---------- (351. தலைவி முன் செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல் - முற்றும்) ----------

352. முன்சென்றோர் பாங்கியர்க்குணர்த்தல் :

போதலர்ந் தல்லை முனியுமெல் லோதிப் புனையிழைதன்
காதலன் பின்வரக் கண்டனம் யாங்கண்டல் வேலிமுந்நீர்
மாதலந் தன்னிரு தோள்வைத்த வாணன்தென் மாறைவண்ணச்
சூதலந் தொல்கவிம் மித்திரள் மாமுலைத் தோகையரே. (352)

(இ - ள்.) தாழைக்காட்டை வேலியாகவுடைய கடல் சூழ்ந்த பெரிய புவியைத் தன் இருதோளில் வைத்த வாணன் தென்மாறை நாட்டில் அழகுபொருந்திய சூது இடுக்கண்பட்டுச் சுருங்கப்பூரித்துத் திரண்ட பெரிய முலையையுடைய தோகைபோல்வீர்! போதுகள் மலர்ந்து இருளைச் சினக்கும் மெல்லிய குழலினையும் புனைந்த பூணினையும் உடையாள் தன் காதலன் பின்வர யாம் கண்டனம் என்றவாறு.

அல் - இருள். ஓதி - கூந்தல். மெல்லோதிப் புனையிழை - அன்மொழித் தொகை. கண்டல் - தாழை. புயவலியால் குறும்படக்கிப் பூமியைக் காத்தலான், 'மாதலந் தன்னிருதோள்வைத்த வாணன்' எனக் கூறினார். அலத்தல் - இடுக்கண்.

[1]'அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்.'

எனவும்,

[2]'அற்றார்க்கும் அலந்தார்க்கும்.'

எனவும் பிறருங் கூறியவாற்றானுணர்க. விம்முதல் - பூரித்தல்.
-----
[352-1] திருமுரு. – (௨௭௧) 271.
[352-2] அப்பர். கோயிற் பெரிய திருத்தாண்டகம் - (௨) 2.

---------- (352. முன்சென்றோர் பாங்கியர்க்குணர்த்தல் - முற்றும்) ----------

353. பாங்கியர்கேட்டு நற்றாய்க்குரைத்தல் :

வாளேய் விழிநின் மயிலனை யாள்தஞ்சை வாணன்வெற்பில்
வேளே யனைய விடலைபின் னேசுர மீண்டினிநம்
கேளேய் பதிவரு மென்னநல் லோர்சொல்லக் கேட்டனமிந்
நாளே யனையநன் னாளுள வோசென்ற நாள்களிலே. (353)

(இ - ள்.) வாள்போன்ற விழியினையுடைய நின் மகளாகிய மயில்போன்றவள் தஞ்சைவாணன் வெற்பிடத்துக் காமனையொத்த விடலை பின்னே சுரம்போய் மீண்டு நம் சுற்றத்தாரிருக்கும் நகரின்கண்ணே வருமென்று நல்லோர் சொல்லக் கேட்டனம்; ஆதலின், இந்நாளைப்போன்ற நன்னாள் கழிந்த நாள்களிலே யுளவோ என்றவாறு.

வேள் - காமன். விடலை - பாலைநிலத் தலைவன். கேள் - சுற்றம். ஏகாரம் மூன்றும் ஈற்றசை.

---------- (353. பாங்கியர்கேட்டு நற்றாய்க்குரைத்தல் - முற்றும்) ----------

354. நற்றாய் கேட்டவனுளங்கொள வேலனை வினாதல் :

தென்மாறை நன்னகர் மன்னவன் வாணன் செழுந்தஞ்சைசூழ்
பொன்மா திரத்துப் புலனுணர் வீர்சுரம் போய்வருவோன்
என்மானை யென்மனை யிற்றரு மோதன்னை யீன்றநற்றாய்
தன்மா நகருய்க்கு மோசொல்லு வீரொன்று தானெனக்கே. (354)

(இ - ள்.) தென்மாறை நன்னகர்க்கு மன்னவனாகிய வாணனது செழுந் தஞ்சையைச் சூழ்ந்த அழகிய திக்கினுள்ளார் நினைக்கும் அறிவை யெல்லாம் அறிவீர்! சுரம் போய் மீண்டுவருந் தலைவன் மானனையாளை என் மனையிலே தருமோ, தன்னையீன்ற நற்றாயிருக்கும் தன் பெரிய நகர்க்கே செலுத்துமோ, எனக்கு ஒன்று சொல்வீர் என்றவாறு.

பொன் - அழகு. மாதிரம் - ஆகுபெயர். புலன் - அறிவு. உய்த்தல் - செலுத்தல். வேலன் - முருகவேளடையாளமாய்க் கையிலே வேல்பிடித்துத் திரிபவன்; வெறியாட்டாளன்.

---------- (354. நற்றாய் கேட்டவனுளங்கொள வேலனை வினாதல் - முற்றும்) ----------

'தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்த'லும், 'தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்ற'லும் இரண்டும் தெளிதல்;

'தலைவி முன் செல்வோர் தம்மொடு தான் வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்த'லும், 'பாங்கியர் நற்றாய்க்கு உணர்த்த'லும் இரண்டும் மகிழ்ச்சி;

'நற்றாய் தலைமகனுளங்கொள வேலனை வினாதல்' ஒன்றும் வினாதல்;

'முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தல்' ஒன்றும் செப்பல்.
2.23. மீட்சி முற்றிற்று.

இதுகாறும் ஐம்பத்து நான்காநாட் செய்தியென் றுணர்க.

--------------------

2.24. தன்மனை வரைதல் (355-359)

அஃதாவது, உடன்போய் மீண்டுவந்த தலைவன் தலைவியைத் தன் ஊர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்துகோடல்.

[1]'வினாதல் செப்பல் மேவலென் றிறைவன்
தனாதில் வரைதறான்மூ வகைத்தே.'

என்னுஞ் சூத்திர விதியால், தன்மனைவரைதல் மூவகைப்படும்.
-----
[2.24-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௨௩) 23.
----------

355. நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல் :

நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல் என்பது, தலைவி நற்றாய் தன்மனையின் மணஞ்செய்யும் விருப்பினாற் செவிலியை வினாதல்.

தாமாக மேவினு நம்மனைக் கேவந்து தண்சிலம்பார்
மாமா தினைமணஞ் செய்வதற் கேமரு வார்கமலப்
பூமாது கேள்வன் புகழ்த்தஞ்சை வாணன் பொருப்பிலினி
யாமா றுயிரனை யாய்சொல்வ மோவவ ரன்னையர்க்கே. (355)

---------- (355. நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல் - முற்றும்) ----------

356. செவிலிக் கிகுளை வரைந்தமை யுணர்த்தல் :

என்னா மியம்புவ தியாய்க்கினி நாமன்னை யின்றுதம்மில்
கொன்னாரு நித்திலக் கோதைநம் மாதைக் கொடிநெடுந்தேர்க்
கன்னாடர் மண்கொண்ட வாணன்தென் மாறையிற் காதலர்தாம்
நன்னாண் மணம்புணர்ந் தாரென்று தூதர் நவின்றனரே. (356)

(இ - ள்.) அன்னையே! கொடிகட்டிய நெடுந்தேரை யுடைய கன்னாடர் மண்ணைக்கொண்ட வாணன் தென்மாறை நாட்டில் காதலர்தாம் தம்மில்லத்துப் பெருமையார்ந்த முத்துமாலையைத் தரித்த நம்மாதை நல்லநாளிலே மணம் புணர்ந்தாரென்று வந்த தூதுவர் சொன்னார், இன்று நாம் ஆய்க்கு இயம்புவது இனி யென்னாம் என்றவாறு.

கொன் - பெருமை. நித்திலக்கோதை - முத்துமாலை. நவிலல் - சொல்லல்.

---------- (356. செவிலிக் கிகுளை வரைந்தமை யுணர்த்தல் - முற்றும்) ----------

357. வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல் :

எனைக்கே ளிருநின் றியற்றவங் கேமண வின்பமெய்தி
அனைக்கேண்மை நண்ணிய அண்ணல்பின் னாகநம் மன்னையின்றிம்
மனைக்கே வருமென வந்துசொன் னார்தஞ்சை வாணன்வெற்பில்
சுனைக்கேழ் நனைக்கழு நீர்க்குழ லாய்சில தூதரின்னே. (357)

(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பிடத்திருக்குஞ் சுனையிற்பூத்த நிறத்தையுடைய கள்பொருந்திய கழுநீரைச் சூடிய குழலாய், எல்லாக்கேளிரும் மணப்பந்தரில் வந்துநின்று மணச்சடங்கு செய்ய, தலைவனூரில் மணவின்பத்தை யெய்தி அத்தன்மைத்தாகிய நட்பைப்பொருந்திய தலைவன் பின்னே நம் அன்னைபோல்வாள் இன்று இம்மனையிடத்து இப்போது வருமெனச் சில தூதர் வந்து சொன்னார் என்றவாறு.

எனைக்கேளிரும் - எல்லாக்கேளிரும். அனைக்கேண்மை - அத்தன்மைத்தாகிய வுறவு;

[1]'அனைநிலை வகையோ டாங்கெழு வகையால்.'

என்னுஞ் சூத்திரத்து, உரையாசிரியர் உரையானுணர்க. அண்ணல் - தலைவன். ஆக - பிரிவிலசைநிலை;

[2]‘ஆக வாக லென்ப தென்னும்
ஆவயின் மூன்றும் பிரிவி லசைநிலை.’

என்னுஞ் சூத்திரத்தானுணர்க. [3]'காரெதிர் கானம் பாடினே மாக' என்னும் உதாரணத்தானு முணர்க. அன்னை - காதல் பற்றிவந்த சொல். கேழ் - நிறம். நனை - கள். இன்னே - இப்போதே.
-----
[357-1] தொல். பொருள். புறத்திணையியல் - (௧௬) 16.
[357-2] தொல். சொல். இடையியல் (௩௨) 32; நச்சினார்க்கினியம்.
[357-3] புறம் - (௧௪௪) 144.
----------
---------- (357. வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல் - முற்றும்) ----------

358. தலைவன் பாங்கிக்கு யான்வரைந்தமை நுமர்க்கு இயம்புசென் றென்றல் :

கோபுரஞ் சோலை கொடிமதில் மாடங் குலாவிமையோர்
மாபுரம் போலுந்தென் மாறை வரோதயன் வாணன்வெற்பில்
நீபுரந் தேதந்த மாதையங் கியாம்வரை நீர்மைபொன்செய்
நூபுரஞ் சூழடி யாய்சென்று கூறு நுமர்தமக்கே. (358)

(இ - ள்.) பொன்னால் செய்த சிலம்பு சூழ்ந்த அடியினையுடையாய்! கோபுரமும் சோலையும் கொடியும் மதிலும் மாடமும் விளங்கப்பட்ட அமராவதியை யொக்கும் தென்மாறை நாட்டில் வரோதயனாகிய வாணன் வெற்பில் நீ பாதுகாத்துத் தந்த மாதை என்னூரில் வரைந்த நீர்மையை நுமர் தங்களுக்குச் சென்று சொல்லாய் என்றவாறு.

'கோபுரஞ் சோலை கொடிமதில் மாடம்' என்புழி, எண்ணும்மை தொக்கு நின்றன. குலவுதல் - விளங்குதல். இமையோர் மாபுரம் - அமராவதி. புரத்தல் - காத்தல். வரைநீர்மை - வினைத்தொகை. நூபுரம் - சிலம்பு.

---------- (358. தலைவன் பாங்கிக்கு யான்வரைந்தமை நுமர்க்கு இயம்புசென் றென்றல் - முற்றும்) ----------

359. பாங்கி தானது முன்னேசாற்றிய துரைத்தல் :

அன்னைக் கியம்பின னாண்டகை யான்முன் னறிந்துதென்னன்
தன்னைப் பணிந்துகுற் றேவல்செய் யாது சமர்க்கெழுந்த
மன்னைப் புறங்கண்ட வாணன்தென் மாறை வரையிலெங்கள்
பொன்னைப் புணர்ந்துநுங் கேள்முன்னர் நீபொன் புனைந்ததுவே. (359)

(இ - ள்.) ஆண்டகையே! பாண்டியனைப் பணிந்து குற்றேவற்றொழின் முறைமை செய்யாது போர்க்கு எழுந்த மன்னைப் புறங்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் பொன்போன்றவளைக் கூடி நும் சுற்றத்தார் முன்னம் நீ திருப்பூட்டியது யான் முன்னை யறிந்து அன்னைக்கு இயம்பினேன் என்றவாறு.

ஆண்டகை - அண்மைவிளி. தென்னன் - பாண்டியன். குற்றேவல் - சிற்றாளாய்ச் செய்யுமேவல். பொன் - ஆகுபெயர். பொன் புனைதல் - திருப்பூட்டுதல்.

---------- (359. பாங்கி தானது முன்னேசாற்றிய துரைத்தல் - முற்றும்) ----------

'மணனயர் வேட்கையி னற்றாய் செவிலியை வினாதல்' ஒன்றும் வினாதல்.

'வரைந்தமை பாங்கி செவிலிக்குணர்த்த'லும், 'வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்த'லும், 'பாங்கி தானது முன்னே சாற்றியதுரைத்த'லும் மூன்றுஞ் செப்பல்.

'தலைமக னுமர்க்கியம்பு சென்றென்றல்' ஒன்றும் மேவுதல்.

2.24. தன்மனை வரைதல் முற்றிற்று.
-------------------------

2.25. உடன்போக்கு இடையீடு (360-365)

அஃதாவது, நம் மனையில் வரைந்துகொள்ளாது தன் ஊரில் வரைந்தான் என்று தலைவிசுற்றத்தார் வெறுப்படைதலால் தலைவியை உடன்கொண்டு போம்போது தலைவிசுற்றத்தார் இடையீடுபட்டு மீண்டு தலைவி வருதல்.

[1]'போக்கறி வுறுத்தல் வரவறி வுறுத்த
னீக்க மிரக்கமொடு மீட்சி யென்றாங்
குடன்போக் கிடையீ டொருநால் வகைத்தே.'

என்னுஞ் சூத்திர விதியால் உடன்போக்கிடையீடு ஒருநால் வகைப்படும்.
-----
[2.25-1] அகப்பொருள் விளக்கம், வரைவியல் - (௨௭) 27.
----------

360. நீங்குங்கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செல வுணர்த்தி விடுத்தல் :

நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவு உணர்த்தி விடுத்தல் என்பது, ஐம்பத்தைந்தா நாள், தன் ஊரைவிட்டு நீங்குங் கிழத்தி எதிர் வருவோர் தம்மொடு தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்கு உணர்த்திவிடுத்தல்.

வளவேய் மிடைந்த வழிப்படர் வீர்செங்கை வாணன்தஞ்சைத்
தளவேய் நகையென் துணைவியர் பாற்சென்று சாற்றுமின்போர்க்
களவே ளனையவோர் காளைபின் போயினள் கான்பனிநீத்
திளவேனில் வல்லிபெற் றாங்கெவ்வ நீத்தெழி லெய்தியென்றே. (360)

(இ - ள்.) வளம் பொருந்திய மூங்கில் மிடைந்த வழியில் செல்கின்றீர்! பனிக்காலத்தை நீத்து இளவேனிற் காலத்தை வல்லி பெற்றாற்போல், துன்பமெல்லாம் ஒழித்து அழகைப்பொருந்திக் காட்டிடத்தில், போர்க்களத்தின் முருகவேளையொத்த ஓர் காளைபின் போயினள் என்று, சிவந்த கையையுடைய வாணன் தஞ்சையிலிருக்கும் தளவையொத்த நகையையுடைய என் பாங்கியர்பாற் சென்று சொல்லுமின் என்றவாறு.

மிடைதல் - நெருங்குதல். படர்தல் - செல்லுதல். தளவு - முல்லை. கான் - காடு. எவ்வம் - துன்பம். எழில் - அழகு. சுற்றத்தார் செய்த வெறுப்பை, 'எவ்வம் நீத்து' எனக் குறிப்பாற் கூறியவாறு உணர்க.

---------- (360. நீங்குங்கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செல வுணர்த்தி விடுத்தல் - முற்றும்) ----------

361. தலைமகள் தன்செலவு ஈன்றாட்குணர்த்தி விடுத்தல் :

வாயார நுங்களை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்வெற்பில்
சாயாத மாதவத் தாழ்சடை யீரன்பர் தம்மொடின்றியான்
சேயாறு தேர்மிசைச் செல்வதெல் லாமெங்கள் சேரியிற்சென்
றியாயா கியகொடி யாட்கினி தாக வியம்புமினே. (361)

(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பில் கேடில்லாத மாதவத்தினாற் கொண்ட தாழ்ந்த சடையுடைய அந்தணீர், நுங்களை வாய்நிறைய வாழ்த்துகின்றேன்; தலைவர் தம்முடனே இன்று யான் சேண்வழியில் தேரின்மீது செல்வதெல்லாம் எங்களூரின்கண் சென்று தாயாகிய கொடியாட்கு இப்போதே இன்பாகச் சொல்லும் என்றவாறு.

சாயாத - கேடில்லாத. சேயாறு - சேண்வழி. 'இனிதாக' என்பது குறிப்பாற் கூறிய வெறுப்புமொழி.

---------- (361. தலைமகள் தன்செலவு ஈன்றாட்குணர்த்தி விடுத்தல் - முற்றும்) ----------

362. நற்றாய்க்கு அந்தணர் மொழிதல் :

மருள்கொண்ட சிந்தை மலைகிழ வோய்தஞ்சை வாணன்வெற்பில்
வெருள்கொண்ட மென்பிணை வென்றகண் ணாள்வென்றி வேல்வலங்கை
அருள்கொண்ட நெஞ்சினொ ரண்ணல்பின் னேயகன் றாளகல்வான்
இருள்கொண்ட கொண்டல்செல் லாவரை சூழ மிருஞ்சுரத்தே. (362)

(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பினிடத்து மகளைக் காணோம் என்று மயக்கங்கொண்ட சிந்தையினையுடைய மலைக்கரசியே! வெருட்சி கொண்ட மென் பிணைமானை வென்ற கண்ணாளாகிய நின்மகள் வெற்றிவேலை வலங்கையினும் அருளை நெஞ்சினும் கொண்ட ஓர் வேந்தன்பின்னே, அகன்ற வானிடத்துச் சூல்கொண்ட மேகம் ஒருகாலுஞ் சென்றறியாத மூங்கில்சூழ்ந்த பெரிய காட்டிடத்தே யகன்றாள் என்றவாறு.

மருள் - மயக்கம். வெருள் - வெருட்சி. பிணை - பெண்மான். 'வென்றி வேல்வலங்கை, அருள்கொண்ட நெஞ்சில்' என்புழி, உம்மைத்தொகை. வென்றிவேல் வலங்கையினும், அருள் நெஞ்சினும் என்றது, மாற்றார் வணங்காக்கால் வேல் செலுத்தலும், வணங்குங்கால் அருள்செலுத்தலும் கருதியென்க. வரை - மூங்கில்.

---------- (362. நற்றாய்க்கு அந்தணர் மொழிதல் - முற்றும்) ----------

363. நற்றாயறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல் :

நற்றாய் அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் என்பது, அந்தணர் மொழிய அறிந்த நற்றாய் குறிப்பான் அறத்தொடு நிற்றலின் தமர் சினந்து குழாங்கொண்டு பின்சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல்.

உவலைப் பதுக்கை முரம்புசெல் லாம லுலகமங்கை
தவலைத் தவிர்த்த தமிழ்த்தஞ்சை வாணன் தரியலர்போம்
கவலைக் கடத்துச் சிலைத்திரை கோலிக் கடும்பகழித்
துவலைப் படைக்கடல் தோன்றல்பொற் றேர்வங்கஞ் சூழ்கின்றதே. (363)

(இ - ள்.) தோன்றலே! தழைகளொடு கூடிய குறுந் தூறுகள் மூடி மேடுசெல்லாமல் நிலமங்கையது வளங்கெடுதலைத் தவிர்த்த தமிழ்த் தஞ்சைவாணன் பகைவர் செல்லுங் கவர்வழியில், வில்லாகிய திரைகளை யுண்டாக்கிக் கடிய அம்பாகிய திவலைகளைச் சிதறிப் படையாகிய கடல் நினது பொற்றேராகிய மரக்கலத்தைச் சூழ்கின்றது என்றவாறு.

உவலை - தழை;

[1]‘உவலைக் கூரை யொழுகிய தெருவில்.'

என்னும் முல்லைப்பாட்டிற்கு நச்சினார்க்கினியார், 'தழையாலே வேய்ந்த கூரை’ என எழுதிய வுரையானுமுணர்க. பதுக்கை - சிறுதூறு. முரம்பு - மேடு. தவல் - கேடு. கவலை - கவர்வழி. கடம் - காடு. திரை - அலை. பகழி - அம்பு. வங்கம் - மரக்கலம். இஃ து இயைபுருவகம்.
-----
[363-1] முல்லைப்பாட்டு - (௨௯) 29.
----------
---------- (363. நற்றாயறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல் - முற்றும்) ----------

364. தலைமகளைத் தலைமகன் விடுத்தல் :

ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினால்
நூறலை யஞ்சல னுண்ணிடை யாய்நும ரேலவர்முன்
சேறலை யஞ்சுவல் செல்வல்பைம் பூகச் செழும்பழுக்காய்த்
தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே. (364)

(இ - ள்.) நுண்ணிடையாய்! ஈண்டுக் கூடிவருகின்றோர் வழியை அலைக்கும் வெய்ய சிலையையுடைய வேடராகில் என் கையிற்பிடித்த ஓரம்பினால், புறப்பொருளில் தும்பைத்திணையின் நூழிலாட்டு என்னுந் துறைதோன்றக்,கொன்றுகுவித்தலை அஞ்சேன்; நும் சுற்றத்தவரேயாகில் அவர்முன் செல்லுதலை அஞ்சுவேன்; ஆதலான், நீ வாரலை; பசிய கமுகினது செழித்த பாக்குத்தாறு காற்றாலசையுஞ் சோலை சூழ்ந்த தஞ்சைவாணன் தமிழ் வெற்பிடத்தில் யான் செல்வேன் என்றவாறு.

ஆறலைத்தல் - வழிபறித்தல். நூறல் - கொல்லுதல். 'நுமரேல் அஞ்சுவேன்' என்றது, நுமரெதிர்ந்துழி அவரைக் கொலைசெய்ய வேண்டும்; செய்துழி, நீ துயருழத்தி; ஆதலால், 'அஞ்சுவல்' என்றான். தாறு - குலை. தண்டலை - சோலை. நூழிலாட்டு என்பது, ஒருவன் பலரைக் கொன்று குவித்தல்; என்னை,

[1]'பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும்.’

என்னுஞ் சூத்திரத்தானுணர்க. இதற்கு உதாரணம் மதுரைக் காஞ்சியிற் கண்டு கொள்க. 'யான் செல்வேன்' என்பது அவாய்நிலையான் வந்தது.
-----
[364-1] தொல். பொருள். புறத்திணையியல் - (௧௭) 17.
----------
---------- (364. தலைமகளைத் தலைமகன் விடுத்தல் - முற்றும்) ----------

365. தமருடன் செல்பவள் அவன்புறநோக்கிக் கவன்றாற்றல் :

தமருடன் செல்பவள் அவன் புறநோக்கிக் கவன்று ஆற்றல் என்பது, தமருடன் செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதல்.

ஏமா னெனவஞ்சு மெற்காத் தலினவ் விரவிபொற்றேர்
வாமானின் வாழ்வன வாகபன் னாட்டஞ்சை வாணனொன்னார்
போமா னதரிடத் தென்னையர் தோன்றப் புறங்கொடுத்த
கோமான் மணிநெடுந் தேர்நுகம் பூண்ட குரகதமே. (365)

(இ - ள்.) தஞ்சைவாணனுக்குப் பகைவராயுள்ளார் செல்லும் மான் சஞ்சரிக்கும் வழியிடத்து என் தந்தையர் தோன்றுதலைக் கண்டு புறங்கொடுத்துச் செல்கின்ற தலைவனது மணியிழைத்த நெடுந்தேர் நுகத்திற்பூட்டிய குதிரைகள், அம்புகண்ட மான்போல அஞ்சுகின்ற என்னைக் காத்தலால், அவ்வாதித்தனது பொற்றேரிற் பூட்டிய வாவுங் குதிரைகள்போலப் பன்னாள் வாழ்வனவாக என்றவாறு.

ஏ - அம்பு. வாமான் - வாவுமான்.

[1]'செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகரம்.’

என்பதனானுணர்க. அதர் - வழி. குரகதம் - குதிரை. 'கவன்றாற்றல்' என்பதனால், இக்கிளவி இரக்கத்தின்பாற்படும்.
-----
[365-1] தொல். சொல். வினையியல் - (௪௧) 41.
----------
---------- (365. தமருடன் செல்பவள் அவன்புறநோக்கிக் கவன்றாற்றல் - முற்றும்) ----------

'நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்தி விடுத்த'லும், 'தன்செலவு ஈன்றாட் குணர்த்தி விடுத்த'லும், 'ஈன்றாட் கந்தணர் மொழித'லும் ஆகிய மூன்றும் போக்கறிவுறுத்தற் குரிய.

'அறத்தொடு நிற்றலிற் றமர் பின்சேறலைத் தலைவி கண்டுரைத்தல்' ஒன்றும் அலரறிவுறுத்தற்குரித்து.

'தமருடன் செல்பவள் அவன்புற நோக்கிக் கவன்றாற்றல்' ஒன்றும் இரக்கத்துக் குரித்தெனக்கொள்க.

2.25. உடன்போக்கு இடையீடு முற்றிற்று.
-------------------------
இதுகாறும் ஐம்பத்தைந்தாநாட் செய்தியென் றுணர்க.
--------------------

2.26. வரைதல் (366)

அஃதாவது, ஐம்பத்தாறாநாள், தலைவன் மீண்டு தலைவியில்லின் வாராநின்றுழி, தலைவி தமர் எதிர்கொண்டுபோய் அழைத்துவந்தபின் உலக இயற்கையின்படி பலவிதமாக அருங்கலம் முதலிய வேண்டுவன கொடுத்து அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு மணச்சடங்குடனே வதுவை முடித்துக்கோடல்.

366. சென்றோன் மீண்டுவந்து அந்தணரையுஞ் சான்றோரையும் முன்னிட்டு
வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல் :


தன்னூர் வரைதலும் தன்மனைவரைதலும் என்னும் இவ்விரண்டொழித்து,

[1]’..... .... எவற்றினுங் கிழவோ
னந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலந்
தந்து வரைதல் தகுதி யென்ப.’

என்னுஞ் சூத்திரவிதியால், சென்றோன் மீண்டுவந்து அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்.

சேலார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன்தென் மாறையினம்
வேலா னெனப்பிறர் வேட்டவர் யார்மணம் வெண்டுகிலின்
பாலா ரமளியும் பாற்கட லானது பங்கயக்கண்
மாலா யினனிவ னுந்திரு வாயினள் மாதுமின்றே. (366)

(இ - ள்.) கயலார்ந்த புனல் பெருகி வரப்பட்ட வையை சூழ்ந்த தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில் வெண்டுகிலின் பான்மையார்ந்த பாயலும் பாற்கடல்போன்றது; இவ்வேந்தனும் செந்தாமரைக்கண் மாலை யொப்பான் ஆயினான்; இம்மாதரும் திருவையொப்பா ராயினர்; ஆதலான், நம் வேலானென மணம்வேட்டவர் பிறர் யார் என்றவாறு.

சேல் - கயல். ஆர்தல் - பொருந்தல். புனல் - நீர். அமளி - பாயல். இங்ஙனம் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் ஒருகால் மணமுடிப்பதன்றிப் பலகால் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவதன்றே, இவ்வாறு கூறியது என்னையெனின், உடன்போய்த் தன் ஊரின்கண்ணே வரைதலும், மீண்டுவந்து தன் மனையின்கண்ணே வரைதலும், அந்தணர் சான்றோரை முன்னிட்டுத் தாய்தமரறிய மணச்சடங்கின் முறையே முடியாமையான் அவை யிரண்டும் மணமாகா; அஃதென்னையெனின், உலகியல்பின்கண் தாய்தமர் அறியாது, மணச்சடங்கும் இன்றி, ஒருவன் உரிமை கருதித் தாலிகட்டு மணம் மணமென்று உலகின்கண் உள்ளார் கைக்கொள்ளார்; அவர்க்கே மீண்டும் மணச்சடங்குடனே மணமுடிப்பார்; ஆதலால், அந்தணர் முதலாயினாரை முன்னிட்டு அவன் மனையின் மணச்சடங்குடனே முடித்தலின் இதுவே மணமாயினவாறு உணர்க. இவ்வாறு நாள்முறையாய்க் கூறிவந்து, ஐம்பத்தாறாநாள் மணம் முடிந்ததென்று கூறியது என்னையெனின்,

[2]'திங்க ளிரண்டி னகமென மொழிப.'

என்னும் அகப்பொருட் சூத்திரத்து உரையில், இருதிங்களும் நாலு நாளிருக்க மணமுடிப்பது இயல்பென்று இலக்கணங் கூறினமையாற் கூறியதென்று உணர்க.
-----
[366-1] அகப்பொருள் விளக்கம். வரைவியல் - (௨௯) 29.
[366-2] இறையனாரகப்பொருள் - (௩௨) 32.
----------
---------- (366. சென்றோன் மீண்டுவந்து அந்தணரையுஞ் சான்றோரையும் முன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல் - முற்றும்) ----------

2.26. வரைதல் முற்றிற்று.
2. இரண்டாவது வரைவியல் முற்றிற்று.

------------------------- o0o -------------------------

மூன்றாவது : கற்பியல்

அஃதாவது, கற்பிக்கப்படுதலாற் கற்பாயிற்று. கற்பித்தலாவது என்னையெனின், அறிவும் ஆசாரமும் தலைவனாற் கற்பிக்கப்படுதலும், இருமுதுகுரவராற் கற்பிக்கப்படுதலும், செவிலியாற் கற்பிக்கப்படுதலும், அந்தணர் முதலிய சான்றோராற் கற்பிக்கப்படுதலும் எனக் கற்பித்தல் பலவாயின; ஆதலால், கற்பியல் எனப் பெயராயிற்று.

ஆயின், இவ்வாறு களவினொழுகல் கற்பின்கணொழுகல் உலகின்கண் இன்றெனின், நன்று சொன்னாய், அறிவுடையோர் மக்கட்கு மணஞ்செய்யுங்கால் இத்தன்மையாவானை நினக்கு மணஞ்செய்ய நினைத்தேம், இது நினக்கு இயைபோ, இயைபின்மையோ என வினாவி, அவரவர் கூற்றின்படி செய்வர். அவர் கூறாக்கால் குறிப்பான் உணர்ந்து செய்வர் எனக் கொள்க. தலைவியைத் தாயரும் இவ்வாறு வினவிக் குறிப்பான் உணர்ந்து செய்வர் எனக் கொள்க. இங்ஙனம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ்செய்த லியல்பாயிற்று; ஆகவே, உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்தபோதே மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்ததாயிற்று. இதனை,

[1]‘உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.'

என்னும் குறட்குப் பரிமேலழகருரையில், 'நினைத்தலுஞ் செய்தலோ டொக்கும்' எனக் கூறியதனானுணர்க. எனவே, உலகின்கண் நிகழுங் கற்பொழுக்க மெல்லாம் கந்திருவ மணத்தின்வழிக் கற்பென்றே கொள்க.
-----
[3-1] குறள். கள்ளாமை - (௨) 2.
----------

3.27. இல்வாழ்க்கை (367-376)

அஃதாவது, தலைவனும் தலைவியும் இல்லின்கண் வாழும் வாழ்க்கையைக் கூறுதல்.

[1]'கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சியென்
றீங்கு நால்வகைத் தில்வாழ்க் கையே.'

என்னும் அகப்பொருள் விளக்கச் சூத்திரவிதியால், இல்வாழ்க்கை நால்வகைப்படும்.
-----
[3.27-1] அகப்பொருள் விளக்கம், கற்பியல் - (௩) 3.
----------

367. தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் :

நின்மே லடுத்த பசலையின் காரண நின்துணைவி
என்மே லடுத்த வியல்பினன் றோபெற்ற தேழுலகும்
தன்மே லடுத்த புகழ்த்தஞ்சை வாணன் தமிழ்க்கிரிநுண்
பொன்மே லடுத்தன போற்சுணங் கீன்ற புணர்முலையே. (367)

(இ - ள்.) நுண்ணிய பொன்மேலே நெருங்க வைத்தாற்போன்ற சுணங்கைப்பெற்று இடைவெளியின்றி நெருங்கிய முலையினையுடையாய்! தன்னிடத்துத் தோன்றிய புகழ் ஏழுலகும் நெருங்கிய தஞ்சைவாணன் தமிழ்ச் சிலம்பிடத்திருக்கும் நின்மேலே நெருங்கிய பசலை நீங்குங் காரணமாக நின் துணைவி என்மேலே நெருங்கிய அன்பின் முறைமையினன்றோ இல்வாழப் பெற்றது என்றவாறு.

அடுத்தல் - நெருங்குதல். இன் - நீங்கற் பொருண்மையுணர்த்தும் உருபாகலான் நீக்கத்தை யுணர்த்தி நின்றது. இயல்பு - முறைமை. தமிழ்க்கிரி - பொதியமலை. நுண்பொன் - தகட்டிற் சிதறிய சிறுமைப்பட்ட பொன். புணர்முலை - நெருங்குமுலை. இல்வாழ்க்கை அதிகாரத்தான் வந்தது.

---------- (367. தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் - முற்றும்) ----------

368. தலைவனைப் பாங்கி வாழ்த்தல் :

தெரியா டகவிதழ்ப் பூங்கொன்றை வேணியுந் தேவியும்போல்
பிரியா துறையப் பெறுகுதி ராற்பிறை மானுநெற்றிப்
புரியாழ் நிகர்மொழிப் பூவையு நீயும் புணர்ந்துபல்கேழ்
வரியார் சிலையண்ண லேதஞ்சை வாணன்தென் மாறையிலே. (368)

(இ - ள்.) பல நிறத்தையுடைய கட்டுதலார்ந்த சிலையையுடைய அண்ணலே! தஞ்சைவாணன் தென்மாறை நாட்டில், பிறைபோலும் நெற்றியையும் நரம்புகட்டிய யாழிசைபோன்ற மொழியையும் உடைய பூவைபோல்வாளும் நீயும் கூடி, தெரிந்தெடுத்த பொன்போன்ற இதழையுடைய கொன்றைப்பூவைத் தரித்த வேணியனாகிய சிவனும் தேவியாகிய உமையும்போல எஞ்ஞான்றும் பிரியாதிருக்கப்பெறுவீர் என்றவாறு.

தெரி யாடகம் - பொன்களிற் றெரிந்தெடுத்த பொன். கொன்றைவேணி - சிவன். தேவி - உமை. ஆல் - அசை. புரி - நரம்பு. யாழும் பூவையும் ஆகுபெயர். கேழ் - நிறம். வரிதல் - கட்டுதல்.

---------- (368. தலைவனைப் பாங்கி வாழ்த்தல் - முற்றும்) ----------

369. பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல் :

கோங்கநன் மாமுகைக் கொங்கைநல் லாய்மணங் கூடுமெல்லை
யாங்கன மாற்றி யிருந்தனை நீயிப மாசயிலம்
தாங்கன மாறத் தலம்புனை வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
பூங்கன மார்குழ லாரலர் மாலைப் பொறைசுமந்தே. (369)

(இ - ள்.) கோங்கினது நல்ல பெரிய முகைபோன்ற கொங்கையையுடைய நல்லாய்! நீ மணங்கூடுமளவும் திக்கயமும் பெரிய குலவரையும் பூமிபாரமெடுத்த இளைப்பாற, அப்பாரத்தைத் தரித்த வாணன் தமிழ்த்தஞ்சையில் வாழும், பூவைத்தரித்த முகில்போன்ற குழலார் தூற்றப்பட்ட அலராற்கட்டிய மாலையினது பாரத்தைச் சுமந்து எவ்வணம் ஆற்றியிருந்தனை என்றவாறு.

இபம் - திக்கயம். மாசயிலம் - குலவரை. தலம் - பூமி, கனம் - முகில்; இதற்குப் பாரமாகிய குழலார் என்று பொருள் கூறுவாரும் உளர்.

---------- (369. பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல் - முற்றும்) ----------

370. பெருமகளுரைத்தல் :

பெருமகள் உரைத்தல் என்பது, தலைவி தான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்கு உரைத்தல்.

மைதோய்ந் தலர்ந்த மலர்த்தடஞ் சூழ்தஞ்சை வாணனொன்னார்
மெய்தோய்ந்த செந்நிற வேல்விழி யாய்துயர் வெள்ளம்வெற்பர்
கைதோய்ந் தளிப்பவ சோகத்த வாய்நிறங் கால்வனவாய்
நெய்தோய்ந் தனதழை யேபுணை யாக்கொண்டு நீந்தினனே. (370)

(இ - ள்.) கருநிறம் பொருந்தி யலர்ந்த நீலமலரை யுடைய வாவிசூழ்ந்த தஞ்சைவாணனுக்குப் பகைவராயுள்ளார் மெய்யிரத்தத்திற் றோய்ந்து சிவந்த நிறத்தையுடைய வேல்போன்ற விழியினை யுடையாய்! வெற்பர் கைதொட்டு அளிப்ப அசோகம் என்கின்ற பெயரினை யுடையனவாய் நிறத்தை யொழுக்குவனவாய் நெய்யிற் றோய்ந்தாற்போன்ற தழையையே தெப்பமாகக் கொண்டு துயர வெள்ளத்தை நீந்தினேன் என்றவாறு.

மை தோய்ந்து அலர்ந்த மலர் - நீலமலர். தடம் - வாவி. தோய்ந்து - தொட்டு. அளிப்ப - கொடுப்ப. நெய் - புழுகு. புணை - தெப்பம்.

---------- (370. பெருமகளுரைத்தல் - முற்றும்) ----------

371. தலைவனைப் பாங்கி வரையு நாளளவும் நிலைபெறவாற்றிய நிலைமை வினாதல் :

வரையுமிந் நாளள வெவ்வாறு நீரெம் மடந்தைமுகை
புரையுமென் கொங்கை பிரிந்திருந் தீர்முன் பொருப்பெடுத்தே
நிரையுமிஞ் ஞாலமுங் காத்தருள் தானன் பதாகையினீள்
திரையுங் குயிலும் விடாதெழு மோசை செவிமடுத்தே. (371)
(இது பிறசெய்யுட் கவி.)

---------- (371. தலைவனைப் பாங்கி வரையு நாளளவும் நிலைபெறவாற்றிய நிலைமை வினாதல் - முற்றும்) ----------

372. மன்றல்மனைவரு செவிலிக்கிகுளை யன்புறவுணர்த்தல் :

மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற உணர்த்தல் என்பது, கலியாண மனையில்வந்த செவிலிக்கு இகுளை இருவரது அன்பும் உறவும் உணர்த்தல்.

வளங்கொண்ட தஞ்சை வரோதயன் வாணன்தென் மாறையன்னாள்
இளங்கொங்கை கொண்டுழு தீரங்கொண் மார்பின்முத் தேற்பவித்தி
விளங்கொண் பிறைநுதல் வேர்தரும் போகம் விளைத்தன்புசேர்
உளங்கொண் டருத்துத லாலன்னை யூர னுவப்புறுமே. (372)

(இ - ள்.) அன்னாய்! வளமைகொண்ட தஞ்சையில் வரோதயனான வாணன் தென்மாறைபோன்ற தலைவி தன் இளங் கொங்கையைக் கொண்டு உழுது ஈரங்கொண்ட மார்பிடத்து முத்துமாலையினது முத்தைப்பொருந்த வித்தி விளங்கும் ஒள்ளிய பிறைபோன்ற நுதலின் வேரைத்தரும் போகத்தை விளைத்து அன்புசேர் உள்ளங்கொண்டு நுகர்வித்தலான் ஊரன் மகிழ்ச்சியுறும் என்றவாறு.

ஈரம் - அன்பு. அருத்துதல் - நுகர்வித்தல். உவப்பு - மகிழ்ச்சி. வேர் - வியர்வை.

---------- (372. மன்றல்மனைவரு செவிலிக்கிகுளை யன்புறவுணர்த்தல் - முற்றும்) ----------

373. பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல் :

சினவேய் சுளியுங் களிற்றண்ணல் வாணன்தென் மாறையினம்
மனவே யகலல்குல் வல்லியன் னாள்மறை யோர்முதலாம்
சனவே தனைகெடத் தானங்க ளீதலிற் சாலவுநன்
றெனவே நடக்கின்ற தாலன்னை நாடொறும் இல்லறமே. (373)

(இ - ள்.) அன்னை! தன் நிழலைச் சுளித்துப்பாயுஞ் சினம்பொருந்திய களிற்றுவேந்தனாகிய வாணன் தென்மாறை நாட்டில் நம்முடைய பட்டிகை சூழ்ந்த அகன்ற அல்குலையுடைய வல்லிபோல்வாள், மறையவர் முதலாகிய சனங்களது வேதனை கெடத் தானங்கள் ஈதலின் மிகவும் நன்றென இல்வாழ்க்கை நாடொறும் நடக்கின்றது என்றவாறு.

'களியுஞ்சினவேய்' எனமாறுக. மனவு - இடையிற்கட்டும் பட்டிகை. 'மறையோர் முதலாம்' எனவே, நாவலர் மிடியர் பிணியாளரையும் கொள்க. தானங்கள் - அன்னம் ஆடை நிதி முதலியன.

---------- (373. பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல் - முற்றும்) ----------

374. மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க்குணர்த்தல் :

ஒன்றோ நமக்குவந் தெய்திய நன்மை உடன்றெதிர்ந்தார்
வன்றோ லமர்வென்ற வாட்படை வாணன்தென் மாறையில்வாழ்
நின்றோகை கற்பி னிலைமையெண் ணாதெதிர் நின்றுவெந்நிட்
டன்றோ வடக்கிருந் தாள்மடப் பாவை யருந்ததியே. (374)

(இ - ள்.) கோபித்து எதிர்ந்தார் வலிய யானைப் போரை வென்ற வாட்படையையுடைய வாணன் தென்மாறையில் வாழப்பட்ட நின் தோகைபோல்வாளது கற்பினிலைமையை யெண்ணாது, மடப்பாவை போன்ற அருந்ததியானவள் ஒப்பென்று எதிர்நின்று தோல்வியையடைந்து புறங்கொடுத்ததனா லன்றோ தவஞ்செய்வதற்கு வடக்கிருந்தாள்; ஆதலால், மகளால் நமக்கு எய்திய நன்மை ஒன்றோ, பல என்றவாறு.

உடன்று - கோபித்து. தோல் - யானை. வெந்நிட்டு - புறங் கொடுத்து; தோல்வி யடைந்தோர் தவஞ்செய்தற்கு வடக்கிருத்தல் இயல்பென்றுணர்க. கவுசிகன் வசிட்டனோடு எதிர்த்துத் தோல்வி யடைந்து வடதிசையிற் றவஞ்செய்ததனானும் உணர்க. அன்னை யென்பது முன்னிலையெச்சம்.

---------- (374. மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க்குணர்த்தல் - முற்றும்) ----------

375. நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் :

நன்மனை வாழ்க்கைத்தன்மை உணர்த்தல் என்பது, செவிலி நற்றாய்க்குத் தலைமகள் மனைவாழ்க்கைத்தன்மையை யுணர்த்தல்.

விண்மே லமரர் விரும்பம ராவதி வெள்ளமுந்நீர்
மண்மே லடைந்தன்ன வாழ்க்கைய தானது வாணன்தஞ்சை
பண்மே லளிமுரல் குங்குமத் தோளவர் பங்கயம்போல்
கண்மே லருள்பெற்று வாழ்மட மாதர் கடிமனையே. (375)

(இ - ள்.) வாணன் தஞ்சைமா நகரின்மேலே வண்டு பண்ணை முரலப்பட்ட குங்குமமாலை யணிந்த தோளை யுடையவரது பங்கயம்போன்ற கண்ணினிடத்து அருளைப் பெற்று வாழப்பட்ட மடமாதர் மணமனை யானது, விண்ணுலகில் அமரர் விரும்பும் அமராவதி, வெள்ளமாகிய கடல் சூழ்ந்த மண்ணுலகின்மேல் வந்தடைந்தாலொத்த வாழ்க்கையதானது என்றவாறு.

அமராவதி - இந்திரபுரம். முந்நீர் - கடல். அளிபண்' என மாறுக. முரலுதல் - ஒலித்தல். கடி - மணம்.

---------- (375. நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் - முற்றும்) ----------

376. செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையு மறிவித்தல் :

நனையகத் தல்கிய நாண்மல ரோதி நயந்துறையும்
மனையகத் தல்லிடை வைகுத லால்தஞ்சை வாணனொன்னார்
வினையகத் தல்குதல் செல்லுவ ரேனுமவ் வேந்தர்பொற்றேர்
முனையகத் தல்கல்செல் லாதொரு நாளும் முகிழ்நகையே. (376)

(இ - ள்.) முகிழ் நகையே! கள் உள்ளே தங்கிய முறுக்கவிழ் மலரை யணிந்த கூந்தலாள் விரும்பி யுறையும் மனையகத்து இராக்காலத்தில் தங்குதலான், தஞ்சைவாணன் ஒன்னார் போர்த்தொழிலிடத்துத் தங்குதலாற் செல்லுவரேனும், அத்தலைவர் பொற்றேர் ஒருநாளும் படையகத்துத் தங்குதல் செல்லாது என்றவாறு.

எனவே, இரவின்கண் மனையிடத்துத் தங்குதலல்லது மற்றோரிடத்துத் தங்குதலில்லையென்று கூறியவாறாயிற்று.

நனை - கள். அகம் - உள். அல்குதல் - தங்குதல். நாண்மல ரோதி - ஆகுபெயர். நயந்து - விரும்பி. அல் - இரவு. வைகுதல் - தங்குதல். முனை - படை. 'செல்லுவரேனும்' என்னும் உம்மையால், செல்லார் என்பது தோன்றிநின்றது. மலர்நகை மடவார்க் கியல்பு என்றதனால், 'முகிழ்நகை' எனக்கூறினார். முன்னம், 'வறிதுநகை தோற்றற்'கும் (செய் - (௧௫) 15.) இவ்வாறே முகிழ்நகை தோன்றியதென்று உணர்க.

---------- (376. செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையு மறிவித்தல் - முற்றும்) ----------

'தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்' கிழவோன் மகிழ்ச்சி;

'தலைவனைப் பாங்கி வாழ்த்தல்' முதல், 'செவிலிக்கில் வாழ்க்கை நன்றறைதல்' ஈறாகிய ஆறனுள், 'பெருமகளுரைத்தல்' கிழத்திமகிழ்ச்சி;

அல்லன ஐந்தும் பாங்கிமகிழ்ச்சி;

'செவிலி நற்றாய்க்குத் தலைமகள் கற்பிய லுரைத்தல்' மூன்றும் செவிலிமகிழ்ச்சி யெனக் கொள்க.

3.27. இல்வாழ்க்கை முற்றிற்று.
-------------------------

3.28. பரத்தையிற் பிரிவு (377-407)

அஃதாவது, தலைமகன் பரத்தைமேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல். பரத்தையிற் பிரிவு என்றோதவே,

[1]'பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.'

என்பதனால், தலைவன் அறிவிலனாம், தலைவியிடத்து அன்பும் இலனாம், பெருமையும் இலனாம், பட்டியும் ஆம் எனின், அற்றன்று. அரசுரிமைய னாதலின், அவ்வரசுரிமைக்குப் பரத்தையரினும் வரைதற்குரியராய்த் தொன்றுதொட்டு நடக்கும் முறைமையராயும், வரையாத வுரிமையராய்ச் சேரியின்கண் உறைவாரும் ஆய இவரும் பிறந்த ஞான்றுதொட்டு இவர்க்கென வரித்திருக்கப் படுதலானும், அவரை நீக்குதல் தகுதியன்மையானும், பரத்தையிற் பிரிதல் குற்றமன்றெனக் கொள்க. அன்றியும், காலைக் கடன்கழித்தலும், உலகத்திலிருந்து நாடுகாவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொடலும், நாவலரோடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களிற் களித்தலும், மடவாரோடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப்பராவலும் ஆகிய காலவரையறை யெட்டினுள், ஆடல் பாடல் ஒன்றாதலானும், அதற்குரியர் பரத்தைய ராதலானும், அதற்குரிய காலத்தில் அவரிடத்தில் மனம்செல்லுதல் இயல்பாதலானும், பரத்தையிற் பிரிதலாற் குற்றமின்றெனக் கொள்க. ஆயின், பரத்தையர் சேரியில் செல்லுமா றென்னையெனின், அவர் பலரோடும் விளையாடற் பொருட்டும், அவருட் புணர்தற்குரியரைப் புணர்தற்பொருட்டும் பரத்தையர் சேரியிற் செல்லுமென்று உணர்க.
-----
[3.28-1] குறள். வரைவின்மகளிர் - (௫) 5.
----------

377. காதலன்பிரிவுழிக் கண்டோர்புலவிக் கேதுவிதாமவ் விறைவிக்கென்றல் :

மாறையர் காவலன் வாணன்தென் தஞ்சையில் வாணுதற்கிவ்
வாறையர் காரண மாகுமென் றேகொங்கை யானையுடன்
சாறையர் வீதிய ரிப்பறை யார்ப்பத் தயங்குகுழல்
சூறையர் சூறைகொள் வான்வய லூரனைச் சூழ்ந்தனரே. (377)

(இ - ள்.) விளங்கும் குழலையுடைய பரத்தையர் அறிவைக் கொள்ளை கொள்ளும் பொருட்டாகக் கொங்கையாகிய யானையுடன் திருவிழாச்செய்யும் வீதியில் வண்டாகிய பறைகள் ஆரவாரிக்க வயலூரனைச் சூழ்ந்தனர்; ஆதலால், மாறையர் காவலனாகிய வாணன் தென்தஞ்சையி லிருக்கும் வாணுதற்கு இம்முறைமை புலவி செய்தற்குக் காரணமாம் என்றது.

இவ்வாறு - இம்முறைமை. அயர்தல் இரண்டும் செய்தல். சாறு - விழா. அரி - வண்டு. சூறையர் - பரத்தையர். சூறை - கொள்ளை. புலவியும் அறிவும் அவாய்நிலையான் வந்தன.

---------- (377. காதலன்பிரிவுழிக் கண்டோர்புலவிக் கேதுவிதாமவ் விறைவிக்கென்றல் - முற்றும்) ----------

378. தனித்துழியிறைவி துனித்தழுதிரங்கல் :

வன்போ தணிதொங்கல் வாணன்தென் மாறை மகிழ்நர்நம்மேல்
அன்பொடு நன்னெஞ் சறிவறை போக அழலுள்வெந்த
பொன்போ னிறங்கொண் டிரவுங்கண் ணீரும் புலர்வதுபார்த்
தென்போ லவரிங்ங னேயிமை யாம லிருப்பவரே. (378)

(இ - ள்.) போதுகளாற் கட்டிய மாலை யணிந்த வாணன் தென்மாறையி லிருக்கும் வன்மையாகிய மகிழ்நர் நம்மேல் வைத்த அன்புடனே அவ்வன்பு இருக்கும் நெஞ்சறிவு கீழ்போக அழலுள் வெந்த பொன்போன்ற நிறத்தைக்கொண்டு இரவும் கண்ணீரும் எப்போது புலருமென்று புலர்வதுபார்த்து, இவ்விடத்தில் என்னைப்போல் உறக்கமின்றி இமையாம லிருப்பவர் யார் என்றவாறு.

'தொங்கலணி' எனவும், 'வனமகிழ்நர்' எனவும், 'இங்ஙனென் போல்' எனவும் இயையும். தொங்கல் - மாலை. மகிழ்நர் - கணவர். அறைபோதல் - கீழ்போதல். அழல் - நெருப்பு.

---------- (378. தனித்துழியிறைவி துனித்தழுதிரங்கல் - முற்றும்) ----------

379. ஈங்கிதுவென்னெனப் பாங்கி வினாதல் :

ஈங்கு இது என்னெனப் பாங்கி வினாதல் என்பது, மற்றைநாட் காலையில் வந்த பாங்கி தலைவியை நோக்கி நீ அழுதுகொண் டிருத்தற்குக் காரணம் என்னென்று வினாதல்.

எம்மா திரமும் புரவலர்த் தேடி யிரந்துழல்வோர்
தம்மா துயரந் தணித்தருள் வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
நம்மாவி யன்னவர் நாடொறு நாடொறு நல்கவுநீ
விம்மா வருந்துவ தென்பிரிந் தாரின் விளங்கிழையே. (379)

(இ - ள்.) விளங்கிழாய், எத் திக்கினுங் கொடுப்போரைத் தேடி யிரந்து வருந்துவோர் தம்முடைய பெரிய துயரைத் தவிர்த்தருளப்பட்ட வாணன் தமிழ்த் தஞ்சையில் வாழும் நமது ஆவிபோன்றவர் நாடோறும் நாடோறும் இன்பமளிக்கவும் நீ விம்முதலுற்றுப் பிரிந்தாரைப் போல் வருந்துவது என் என்றவாறு.

மாதிரம் - திக்கு. புறவலர் - கொடுப்போர். உழல்வோர் - வருந்துவோர். தணித்தல் - ஆற்றல். நல்கல் - அளித்தல். விம்மா என்பது வினையெச்சம். இன் உவமவுருபு.

எடுத்துக் கோடற்கண்ணே, அகப்பொருள் என்பதற்கு இன்பப்பொருள் என்று பொருள்கூறியவர், இவ்வாறு துன்பமுறுதலைக் கூறியது என்னையெனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பன இன்பத்திற்கு உறுப்பாகலின், இவ்வைந்தினில் ஒன்று நீங்கினும் அவ்வின்பத்திற்கு உறுப்புக் குறையாம்; அஃதென்னையெனின், புணர்தலே இன்பமென்றும் ஏனைய துன்பமென்றும் கூறுகின்றுழி, பிரியாது புணர்ந்துழி வெறுப்படையும், பிரிந்துழித் துன்பமுற்றிலரேல் அவர் அறிவிலராம். இருத்தலும் ஊடலும் இவ்வாறே கொள்க. ஆதலால், துன்பமுறாவிடின் இன்பக்குறைபாடே யெனக்கொள்க.

---------- (379. ஈங்கிதுவென்னெனப் பாங்கி வினாதல் - முற்றும்) ----------

380. இறைமகன் புறத்தொழுக் கிறைமகளுணர்த்தல் :

இறைமகன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தல் என்பது, தலைவன் தன்னிடத்து ஒழுகும் ஒழுக்கம் இன்று பரத்தையரிடத்து ஒழுகுகின்றா னென்று தலைவி பாங்கிக்குக் கூறல்.

'புறத்தொழுக்கு' என்பதற்குப் பொருள் பரத்தையரிடத்து ஒழுகும் ஒழுக்கம் என்று கொண்டவாறு என்னையெனின், வடநூலார் புறத்தைப் பரம் என்று கூறுவாராதலால், பரத்தையர் என்னுஞ் சொற்குப் புறமுடையவர் என்னும் பொருள்கூறி நின்றவாறு உணர்க. புறமுடையர் என்பது என்னையெனின், இவரின்பம் இன்பமன்றென்று தெய்வப்புலமைத் திருவள்ளுவனார், 'வரைவின் மகளிர்' என்னும் அதிகாரத்தால் இன்பத்திற்குப் புறம் இவரின்பம் என்று கூறியவாற்றா னுணர்க.

[1]'இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.'

என்பதனானும் உணர்க.

தாராக நல்கினர் காரிகை யாய்தஞ்சை வாணன்தன்னைச்
சேரா தவரென்னத் தீவினை யேனையச் செங்கண்வன்கட்
காரா கழனிக் கரும்பினஞ் சாயக் கதழ்ந்துசெந்நெல்
ஆரா தயலிற்பைஞ் சாயாரு மூரர் அயலவர்க்கே. (380)

(இ - ள்.) அழகையுடையாய்! தஞ்சை வாணனைச் சேராதவர்போலத் தீவினையுடைய யான் வருந்தச், சிவந்த கண்ணையும் தறுகண்மையையும் உடைய எருமை கழனியிடத்துக் கரும்புக்கூட்டம் சாய மிதித்து, விரைந்து போய்ச் செந்நெல்லையும் ஆராது, வயல்வரம்புகடந்து அயலி லிருக்கும் கோரையை யருந்தும் ஊரையுடையவர் அயலாராகிய பரத்தையர்க்குத் தார்பொருந்திய தமது மார்பைக் கொடுத்தனர் என்றவாறு.

எனவே, கரும்புபோன்ற குலக்கிழத்தியும் செந்நெல்போன்ற தானும் வருந்து மனத்தி லென்னாது வரம்புகடந்து அயலிலிருக்கும் கோரைபோன்ற பரத்தையரைக் கூடினனென உள்ளுறையுவமங் கொள்ளக்கிடந்தவாறு காண்க. தார் - மாலை. ஆகம் - மார்பு. வன்கண் - தறுகண்மை. காரா - எருமை;

[2]'பெற்றமு மெருமையு மரையு மாவே.'

என்பதனானுணர்க. கதழ்ந்து - விரைந்து. பைஞ்சாய் - கோரை.
-----
[380-1] குறள். வரைவின்மகளிர் - (௧0) 10.
[380-2] தொல். பொருள். மரபியல் - (௬0) 60.
----------
---------- (380. இறைமகன் புறத்தொழுக் கிறைமகளுணர்த்தல் - முற்றும்) ----------

381. தலைவியைப் பாங்கி கழறல் :

புனையலங் காரநங் கற்பியல் போற்றியும் போற்றருஞ்சீர்
மனையறம் பாவித்தும் வாழ்வதல் லாற்றஞ்சை வாணனன்னா
டனையவண் டார்குழ லாரணங் கேநமக் கன்பரிந்நாள்
இனையரென் றார்வமில் லாவுரை யாட லியல்பல்லவே. (381)

(இ - ள்.) தஞ்சைவாணன் நன்னாடு போன்ற வண்டார்ந்த குழலையுடைய ஆரணங்கு போல்வாய், அலங்கரிக்கும் அலங்காரம் நம் கற்பிலக்கணமே யென்று கற்பிலக்கணத்தை வழுவாமற் காத்தும், துதித்தற்கரிதாகிய சிறப்பையுடைய இல்லறத்தை யுண்டாக்கியும் அவர் வாழ்வதே யல்லது இப்போது தம்மிடத் தன்பையுடையவர் இத்தன்மையரென்று விருப்பமில்லாததாக அவர் புறத்தொழுக்கைக் கூறுதல் நமக்கு முறைமையன்று என்றவாறு.

புனைதல் - அலங்கரித்தல். போற்றல் - காத்தல். இயல் - இலக்கணம். மனையறம் - இல்லறம். இனையர் - இத்தன்மையர். ஆர்வம் - விருப்பம்.

[1]‘அன்பீனு மார்வ முடைமை.'

என்பதனாற் கொள்க.
-----
[381-1] குறள். அன்புடைமை - (௪) 4.
----------
---------- (381. தலைவியைப் பாங்கி கழறல் - முற்றும்) ----------

382. தலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி அவ்வணியுழையர்கண் டழுங்கிக்கூறல் :

செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல் என்பது, தலைவி பூத்தகாலை மூன்றாநாள் போக்கி நாலாநாள் நீராடியபின் செம்பூச்சூடிச் செவ்வாடை யுடுத்துச் செஞ்சாந்துபூசிச் சேடியைவிடுக்கப் பரத்தையர் சேரியிலிருக்குங்கால் அவ்வலங்காரத்தை அயல்மனையில் உள்ளார் கண்டு இரங்கிக்கூறல்.

வேளாண் மரபு விளக்கிய வாணன்மின் னார்கழல்சூழ்
தாளான் வளங்கெழு தஞ்சையன் னீர்சங்கந் தந்தநன்னீர்த்
தோளா மணியன்ன தொல்குல வோடையிற் றோன்றியபூ
வாளா அலர்தொடுப் பார்க்கெங்ங னேவந்து வாய்த்ததுவே. (382)

(இ - ள்.) வேளாண் குலத்தை விளங்கச்செய்த வாணனென்னும் ஒளியார்ந்த கழல்சூழ்ந்த தாளையுடையவனது வளம்பொருந்திய தஞ்சையை ஒப்பீர்! சங்கம் ஈனப்பட்ட நல்ல நீர்மையையுடைய வடுப்படாத முத்தம் போன்று தொன்றுதொட்டு வழுவில்லாது வரப்பட்ட குலமாகிய ஓடையில் தோன்றிய பூ வறிதே அலர்தொடுப்பார்க்கு எவ்விடத்திலேயிருந்து வாய்த்தது என்றவாறு.

பூவின்றி அலர்தொடுப்பார்க்கு ஒரு பூ வந்து வாய்க்கில் எவ்வாறு அலர்தொடார் என்றவாறாயிற்று. மரபு - குலம். மின் - ஒளி. தோளாமணி - தொளைபடா முத்தம். பூ - திங்கடோறும் வரும் மாதர்சூதகம். வாளா - சும்மா. 'சங்கந் தந்தநன்னீர்' என்பதனை, ‘மலர்ச் சந்தநன்னீர்' என்று பாடமோதி, வெண்மலர்போன்ற அழகையுடைய முத்தமென்று பொருள் கூறுவாருமுளர். இவ்வாறு செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல் உலகின்கண் வழக்க மின்றெனின், புலவர் நாட்டப்பட்ட செய்யுள் வழக்கமெனக் கொள்க.

---------- (382. தலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி அவ்வணியுழையர்கண் டழுங்கிக்கூறல் - முற்றும்) ----------

383. பரத்தையர்கண்டு பழித்தல் :

பரத்தையர் கண்டு பழித்தல் என்பது, அச்சேரியிற்போய சேடியைப் பரத்தையர் கண்டு பழித்துக் கூறல்.

படியொன்று சாலி யனையவர் சேரிப் படர்பவளக்
கொடியொன்று நீல மலர்ந்தது காட்டக் கொடியவெம்போர்
வடியொன்று கூரிலை வேல்வல்ல வாணன்தென் மாறையிற்பொற்
றொடியொன்று தோண்மட வார்சேரி வாய்வந்து தோன்றியதே. (383)

(இ - ள்.) புவியிற் பொருந்திய நெற்போன்றவர் சேரியினின்றும் நடந்துவந்த பவளக்கொடி யொன்று நீலம் பூத்ததைக் காட்டும்பொருட்டுக் கொடிய வெவ்விய போரைச் செய்யப்பட்ட வடித்தற்றொழில் பொருந்திய கூரிய இலைபோன்ற வேற்றொழில் வல்ல வாணன் தென்மாறையில் பொற்றொடி யணிந்த தோளையுடைய மடவார் சேரியிடத்து வந்து தோன்றிற்று என்றவாறு.

படி - புவி. சாலியனையவர் - இற்கிழத்தியாகிய தலைவி. படர்தல் - அச்சேரியினின்றும் இச்சேரியில் வருதல். நீலம் - பொய்; பவளக்கொடி நீலமாதல் பொய் என்பதுபற்றிக் கூறினார். எனவே, தலைவி பொய்யடையாளஞ் செய்தனுப்பியதெனப் பழித்துக் கூறியவாறு காண்க. வடி - வடித்தல். அகவணியாகிய நாணம் முதலிய குணங்கள் இல்லாமையான் புறவணியுடையார் என்பது தோன்ற, 'பொற்றொடி யொன்று தோள்மடவார்' என்று கூறினார்.

---------- (383. பரத்தையர்கண்டு பழித்தல் - முற்றும்) ----------

384. பரத்தையருலகியல்நோக்கிவிடுத்தலின் தலைவன்வரவு கண்டுவந்து வாயில்கள்மொழிதல் :

பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு வந்து வாயில்கள் மொழிதல் என்பது, தலைவி நீராடிய ஞான்று பரத்தையர் தங்கள் சேரியில் தலைவனிருத்தல் உலக முறைமைக்கு இயலாதென்று விடுத்தலின், தலைவன் வருதலைக் கண்டு வந்து தாதிகள் பாங்கிக்கு மொழிதல்.

வாருந்து பச்சிள நீர்முலை யார்மதன் வாணன்தஞ்சை
யாருந் தொழத்தகு மெம்பெரு மாட்டிதன் னேவலினால்
சேரும் பரத்தையர் சேரியி லேசென்ற சேடியைக்கண்
டூருந் திரைப்புன லூரன்வந் தானின் றுலகியற்கே. (384)

(இ - ள்.) கட்டிய கச்சைப் பூரித்துத் தள்ளப்பட்ட பசிய இளநீர்போன்ற முலையார்க்கு மதனையொத்த வாணன் தஞ்சையில் கற்பினால் யாவரும் தொழத்தகும் எம்பெருமாட்டி தனதேவலினால் முன் தலைவன் போய்ச்சேரும் பரத்தையருடைய சேரியிலே சென்ற சேடியைக் கண்டு ஊரப்பட்ட அலையையுடைய புனல் சூழ்ந்த ஊரன் இன்று உலகியற்கு வந்தனன் என்றவாறு.

வார் - கச்சு. திரை - அலை. புனல் - நீர். உலகியல் - தலைவி நீராடிய ஞான்று தலைவன் பரத்தையிற் பிரியாமை தரும நூலியல்பு.

---------- (384. பரத்தையருலகியல்நோக்கிவிடுத்தலின் தலைவன்வரவு கண்டுவந்து வாயில்கள்மொழிதல் - முற்றும்) ----------

385. வரவுணர்பாங்கி யரிவைக்குணர்த்தல் :

தள்ளா வளவயல் சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
உள்ளா துனைப்பண் டகன்றன ராயினு முள்ளியிப்போ
தெள்ளாது வந்துன் கடையினின் றார்நம் மிறைவர்குற்றம்
கொள்ளா தெதிர்கொள்வ தேகுண மாவது கோமளமே. (385)

(இ - ள்.) கோமளமே, நம்மிறைவர், தள்ளாத வளத்தையுடைய வயல் சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல், உன்னை நினையாது முன்பு சென்றன ராயினும் இப்போது நினைத்து இகழாது வந்து உன் கடைவாசலில் நின்றனர்; அவர் செய்த குற்றத்தை மனத்திற் கொள்ளாமல் எதிர்கொள்வதே குணமாவது என்றவாறு.

சள்ளா - நீங்காத. உள்ளாது - நினையாது. பண்டு - முன்னம். உள்ளி - நினைந்து. கடை - கடைவாசல். கோமளம் - இளமையழகு. ‘உன்னையுள்ளாது' எனவும், 'இப்போதுள்ளி' எனவும் இயையும்.

---------- (385. வரவுணர்பாங்கி யரிவைக்குணர்த்தல் - முற்றும்) ----------

386. தலைவனைத்தலைவி யெதிர்கொண்டுபணிதல் :

மருவிற் பெருநல மன்னுவ தாந்தஞ்சை வாணன்வெற்பர்
ஒருவிற் பசலை யுருக்குவ தாநமக் கூடலெவ்வா
றிருவிற் புருவ விளங்கொடி யேயெய்து மெய்தலில்லாத்
திருவிற் புனைநறுந் தார்வரை மார்பர் திருமுனின்றே. (386)

(இ - ள்.) இரண்டு விற்போன்ற புருவத்தையுடைய இளங்கொடியே! தஞ்சைவாணன் வெற்பர் நம்மை மருவினராயின் பேரழகு நிலைபெறுவதாம்; அவர் நீங்கின் பசலைநிறமும் உருக்குவதாம்; இத்தன்மையாகிய நமக்கு ஊடலெவ்வாறு, விடுதலில்லாத் திருவைப்போல் அணியப்பட்ட நறிய தாரை யணிந்த வரை போன்ற மார்பர் திருமுன்னின்று பணிதும் என்றவாறு.

நலம் - அழகு. ஒருவுதல் - நீங்குதல். எய்தும் - பணிதும். எய்தல் - விடுதல். இன் உருபு ஒப்புப்பொருண்மைக்கண் வந்தது. புனைதல் - அணிதல். திருமுன் - தகுதி வழக்கு. எய்தும் என்றது பணிதும் என்னும் பொருள்கொள்ளுமோ எனின், தேவர் கூறிய கடவுள் வாழ்த்தில்,

[1]'தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே.'

என்பதனில், சேர்தும் என்பதற்கு வணங்குதும் என நச்சினார்க்கினியர் உரையெழுதினார். சேர்தும் என்பதும் எய்தும் என்பதும் ஒருபொருட்கிளவி யாதலால், எய்தும் என்பதற்குப் பணிதும் எனவே பொருள் கொள்க.
-----
[386-1] சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - (௧) 1.
----------
---------- (386. தலைவனைத்தலைவி யெதிர்கொண்டுபணிதல் - முற்றும்) ----------

387. புணர்ச்சியின் மகிழ்தல் :

மன்னவர் காம நெடுங்கடல் வாணன்தென் மாறையன்னாள்
தொன்னலம் வார்முலை மத்தந் தழீஇத்தடந் தோளிணையாம்
பன்னக நாணிற் கடைந்திகழ் வார்திரைப் பட்டநன்னீர்
இன்னமிழ் தார்ந்திமை யோரமை யாவின்பம் எய்தினரே. (387)

(இ - ள்.) தலைவர் காதலாகிய நெடுங் கடலில் வாணன் தென்மாறை யன்னாளது அழகு பழகிய வார்முலையாகிய மத்தைத் தழுவிய பெரிய தோளிணையாகிய பன்னகநாணினாற் கடைந்து, இதழின்கண் நெடிய அலையால் உண்டாகப்பட்ட நன்னீராகிய இனிய அமுதத்தை ஆர்ந்து இமையோரது தெவிட்டாத இன்பத்தை யெய்தினர் என்றவாறு.

நலம் - அழகு; தொல் - பழமை; மாறிப் பொருள்கொள்க. மத்தம் - மத்து. பன்னகம் - பாம்பு; திரை - அலை. அமையா - தெவிட்டா. கூற்று, கவிக்கூற்று.

களவிற்புணர்ச்சி யெல்லாம் தலைவன் கூற்றாய் நிகழ்த்தி இப்புணர்ச்சி கவிக்கூற்றாயினவாறு என்னையெனின், தலைவி நாணுடைய ளாதலால் தலைவி செயலின்றித் தலைவன் செயலாய் முடிதலின் தலைவன் கூற்றாய் நிகழ்ந்தது; கற்பியல் அவ்வாறன்றி இருவர் செயலும் ஒத்து நிகழ்தலின் இருவர் கூற்று ஒருகவிக்கண் கூறலாகாமையின் கவிக்கூற்றாய் நிகழ்ந்தவாறு காண்க.

---------- (387. புணர்ச்சியின் மகிழ்தல் - முற்றும்) ----------

388. வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில்வேண்டல் :

வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல் என்பது, தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாகிய வெள்ளாடை முதலியன அணிந்து சேடியை விடுப்புழி அச்சேடியை வாயிலாகத் தலைவன் வேண்டிக் கூறல்.

என்பாற் குறையை நினைந்து மறாதெதிர் கொள்ளவல்லே
தன்பாற் புலவி தணிசென்று நீதஞ்சை வாணன்வையம்
அன்பாற் பரவும் புகழுடை யானரு ளேயனையாய்
உன்பாற் புலவி யுறாள்வண்ண வார்குழ லொண்ணுதலே. (388)

(இ - ள்.) வையம் அன்பாற் பரவும் புகழுடையானாகிய தஞ்சைவாணனது அருளைப்போல்வாய்! அழகுபொருந்திய வார்தந்த குழலையுடைய ஒண்ணுதலாள் நின்னிடத்தில் புலவியையுறாள்; ஆதலால், என்னிடத்தில் குறையை நினைந்து மறாதவண்ணம் எதிர்கொள்ள நீ விரைந்து சென்று அவடன் னிடத்துப் புலவியை ஆறச் செய்வாய் என்றவாறு.

வல் - விரைவு;

[1]‘செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்குரை.’

என்பதனானறிக. புலவி - ஊடல். வையம் - உலகு. பரவுதல் - துதித்தல். ஒண்ணுதல் - ஆகுபெயர்.
-----
[388-1] குறள். பிரிவாற்றாமை - (௧) 1.
----------
---------- (388. வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில்வேண்டல் - முற்றும்) ----------

389. தலைவிநெய்யாடியதிகுளை சாற்றல் :

தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல் என்பது, தலைவி புதல்வனைப்பயந்து நெய்யாடியதனைப் பாங்கி தலைவற்குச் சொல்லல்.

மலர்புரை யேர்கொண்ட வாட்கணெங் கோமங்கை வாணன்தஞ்சைப்
பலர்புகழ் பாலற் பயந்துநெய் யாடினள் பாங்கெவர்க்கும்
அலர்புரை நீடொளி யாடியுட் பாவையன் னாட்குளநீர்
புலர்புன லூரவென் னோதிரு வுள்ளமிப் போதுனக்கே. (389)

(இ - ள்.) மலரை யொப்பாய்! அழகுகொண்ட ஒளி பொருந்திய கண்ணையுடைய எமக்கரசாகிய மங்கை, வாணன் தஞ்சையிற் பலரும் புகழப்பட்ட பாலனைப்பெற்று நெய்யாடினள்; பாங்கியர் எவர்க்கும் அலரையொப்பாய் நீண்ட வொளியையுடைய கண்ணாடியுட் பாவைபோன்றா ளிடத்து உள்ளன்பு புலர்ந்த புனலூர! இப்போது உனக்குத் திருவுள்ளம் யாதோ என்றவாறு.

‘பலர் புகழ்' என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. பயந்து - ஈன்று. பாங்கு - பாங்கியர். 'பாங்கிலன் றமியாளிடந் தலைப்படலும்.’ என்பதனானுணர்க. ஆடி - கண்ணாடி. ‘அன்னாட்கு’ என்புழி, வேற்றுமை மயக்கம். உளநீர் - உள்ளன்பு. ஓகாரம் - ஐயம்; என்னை, பரத்தையர் சேரிக்குச் செல்லத் திருவுளமோ, ஈண்டு உறையத் திருவுள்ளமோ என ஐயந்தருதலான் எனக் கொள்க.

---------- (389. தலைவிநெய்யாடியதிகுளை சாற்றல் - முற்றும்) ----------

390. தலைவன் தன்மனத்துவகை கூறல் :

மையணி வேல்விழி வாணுதல் கூர்ந்தது வாணன்றஞ்சைக்
கொய்யணி நாண்மலர்க் கொம்பரன் னாள்குழ விப்பயந்து
நெய்யணி மேனியி லையவி பூண்ட நிலையறிந்தே
கையணி வால்வளை யைக்கண்ட நாளினுங் காதன்மையே. (390)

(இ - ள்.) மையணி வேல்போன்ற விழியையும் வாணுதலையும் உடையாய்! வாணன் தஞ்சையிற் கொய்யப்பட்ட அழகாகிய நாண்மலரையுடைய கொம்புபோன்றவள் புதல்வனைப் பெற்று நெய்யணிந்த மேனியில் வெண் சிறுகடுகு பூண்ட நிலைமை யறிந்து கையிலணிந்த ஒள்ளிய வளையினை யுடையாளைக் கண்ட நாளினும் காதற்றன்மை மிகுந்தது என்றவாறு.

வேல்விழிவாணுதல், அன்மொழித்தொகை. கூர்தல் - மிகுதல். அணி - அழகு. நாண்மலர் - முறுக்கவிழ்மலர். குழவி - மகவு.

[1]'குழவியு மகவு மாயிரண் டல்லவை
கிழவ வல்ல மக்கட் கண்ணே.’

என்பதனானுணர்க. பயந்து - பெற்று, ஐயவி - வெண்சிறுகடுகு,

[2]’நெய்யோ டையவி யப்பியை துரைத்து’

என்பதனானுணர்க. குழவி என்புழி இரண்டனுருபுதொக்கது. வால்வளை - ஆகுபெயர். காதன்மை - ஆசைத்தன்மை. வாணுதல் - அண்மைவிளி.
-----
[390-1] தொல். பொருள். மரபியல் - (௨௩) 23.
[390-2] திருமுரு. (௨௨௮) 228.
----------
---------- (390. தலைவன் தன்மனத்துவகை கூறல் - முற்றும்) ----------

391. தலைவிக்கவன்வரல் பாங்கி சாற்றல் :

ஏரார் புதல்வன் பிறந்தனன் வாழிய வென்னுமுன்னே
வாரார் வளமனை வந்துநின் றார்கங்குல் வாணன்தஞ்சை
நீராவி நீல நெடுங்கண்மின் னேநின்னை நீப்பதல்லால்
தேரா தொழிகுவ ரோபெரி யோர்தஞ் சிறுவனையே. (391)

(இ - ள்.) நெடுங்காலம் வாழ்க, அழகார்ந்த புதல்வன் பிறந்தனனென்று சொல்வதற்கு முன்னே வருந் தகுதியில்லார் கங்குலிடத்து வளவிய நம் மனையில் வந்து நின்றனர்; வாணன் தஞ்சையில் நீர்பொருந்திய வாவியிற் பூத்த நீலம் போன்ற நெடிய கண்ணையுடைய மின்னே! நின்னைப் பிரிவதேயல்லது, பெரியர் தம் சிறுவனைத் தேர்ந்தறியாது விடுவரோ என்றவாறு.

ஏர் - அழகு. வாழிய - நெடுங்காலம் பற்றிய சொல். என்னை,

[1]'வாழிய வென்னுஞ் செயவென் கிளவி'

என்பதனான் உணர்க. ஆவி - வாவி. மின் - ஆகுபெயர். நீத்தல் - பிரிதல். தேர்தல் - பிறந்தகாலத்தை யாராய்ந்தறிதல்.
-----
[391-1] தொல். எழுத்து. உயிர்மயங்கியல் - (௧0) 10.
----------
---------- (391. தலைவிக்கவன்வரல் பாங்கி சாற்றல் - முற்றும்) ----------

392. தலைவியுணர்ந்து தலைவனோடு புலத்தல் :

வயங்கே ழுலகும் புரக்கின்ற வாணன்தென் மாறையன்ன
நயங்கேழ் பெருவள நல்குநல் லூர நயந்துநண்ணி
முயங்கேல் சிறுவற் பயந்தவென் மேனியின் முத்துவடம்
தயங்கே ரகமுழு தும்பழு தாமது தானினக்கே. (392)

(இ - ள்.) விளங்கப்பட்ட ஏழுலகத்தையும் காக்கின்ற வாணன் தென்மாறையன்ன இன்பமும் ஒளியும் பெரிய வளமும் நல்கப்பட்ட நல்லூரையுடையானே, சிறுவனைப் பயந்த என் மேனியை விரும்பிப் பொருந்தி முயங்கற்க; முயங்கில், அதுதான் நினக்கு இன்பமாகிய பரத்தையர் முலைமேல் அணிந்த முத்துவடந் தயங்கப்பட்ட அழகு பொருந்திய நெஞ்சு முழுதும் பழுதாம் என்றவாறு.

வயங்கல் - விளங்கல். புரத்தல் - காத்தல். நயம் - இன்பம். கேழ் - ஒளி. தயங்கல் - விளங்கல். ஏர் - அழகு. அகம் - நெஞ்சு. 'மேனிநயந்து' என இயையும்.

---------- (392. தலைவியுணர்ந்து தலைவனோடு புலத்தல் - முற்றும்) ----------

393. தலைவி பாணனை மறுத்தல் :

தலையா கியதன்மை யூரற்கு வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
மலையா கியமதில் வையைநன் னாட்டெங்கை மான்படுக்கும்
கலையாகு நின்னிசைக் கண்ணிகொண் டேஎதிர் கன்றுதின்னிப்
புலையா கடக்கவெம் மிற்போக போக புறங்கடையே. (393)

(இ - ள்.) தலைமைத் தன்மை யாகிய ஊரற்கு வாணனது தமிழ்த் தஞ்சையைச் சூழ்ந்த மலையாகிய மதிலையுடைய வையை சூழ்ந்த நல்ல நாட்டின் எங்கையாகிய மானைச் சிக்கவைக்கும் மானுக்கு இனமாகிய கலைபோன்ற நின் இசையாகிய கண்ணிகொண்டு திரியப்பட்ட கன்றுதின்னி யென்னும் புலையா, எம் இல்லினின்றுங் கடக்கப் புறங்கடையிற் போக போக என்று கல்லெறிந்தனள் என்றவாறு.

எங்கை - என் தங்கை. கண்ணி - மான்படுக்குங் கண்ணி. கலை - இசைநூல். 'கன்று தின்னி' இகழ்ச்சிப் பெயர். 'போக போக' என்பது வெறுப்பின்கண் வந்த அடுக்கு. மேற்செய்யுளில் கல்லெறிந்தாய் என்று பாணன் தலைவியொடுங் கூறியவாறு, இச்செய்யுளில், 'கல்லெறிந்தனள்' என்பது வருவிக்கப்பட்டது.

---------- (393. தலைவி பாணனை மறுத்தல் - முற்றும்) ----------

394. வாயில்மறுக்கப்பட்டபாணன் கூறல் :

வாயில் மறுக்கப்பட்ட பாணன் கூறல் என்பது, கல் எறிந்த தலைவியுடன் பாணன் கூறல்.

நினக்கே தகுநின் னெடும்புன லூரனு நீயுமவன்
தனக்கே தகுவை தமிழ்த்தஞ்சை வாணன் தடங்கிரிசூழ்
புனக்கே கயமன்ன நின்னடி போற்றிப் புகன்றுகன்றும்
எனக்கே தகுமிகை யாலெம்பி ராட்டி யெறிந்தகல்லே. (394)

(இ - ள்.) எம்பிராட்டி! நின்னுடைய கணவனாகிய நெடும்புனலூரனும் நினக்கே தகுவன், நீயும் அவன்றனக்கே தகுவை, யான்செய்த குற்றத்தால் நீ யெறிந்தகல், தமிழ்த் தஞ்சைவாணனது விசாலமாகிய மலைசூழ்ந்த புனத்திலிருக்கும் மயில் போன்ற நின்னுடைய அடியைத் துதித்துத் தலைவன் வரவைக் கூறிய அதனால் மனங்கன்றும் எனக்கே தகும் என்றவாறு.

ஏகாரம் மூன்றும் பிரிநிலை; ஆடவரிலும் மடவாரிலும் பாணரிலும் பிரித்து வாங்குதலின். தடங்கிரி - பெரியமலை. கேகயம் - மயில். கன்றல் - வெம்புதல். மிகை - குற்றம்.

---------- (394. வாயில்மறுக்கப்பட்டபாணன் கூறல் - முற்றும்) ----------

395. விறலி வாயில் மறுத்தல் :

வண்புன லூர்வையை சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
கண்புன லூருமென் காதல்கண் டேநின் கடைத்தலைக்கே
தண்புன லூரன்வந் தானென்று சாற்றினை தானமுறப்
பண்புன லூர்களெல் லாம்பாடி யேற்றுண்ணும் பாண்மகளே. (395)

(இ - ள்.) ஈவுபெறப் புனல்சூழ்ந்த ஊர்கடோறும் பண்ணைப்பாடி இரந்துண்ணும் பாண்மகளே! வளவிய புனல் செல்லும் வையையாறு சூழ்ந்த தஞ்சவாணனை வாழ்த்தலர்போல் கண்ணிடத்துப் புனலூர்ந்துவரும் என் காதலைக்கண்டு நின்கடைத்தலையின்கண் தண்ணிய புனலூரன் வந்தனனென்று சொல்லினை, இச்சொற்கு மனம் பொறுத்தேன் சொல்லாய் என்றவாறு.

ஊர்தல் - செல்லுதல். ஊர்தல் - பெருகுதல். ஊரன் - மருதநிலத்துத் தலைவன். தானம் - ஈவு.

'இச்சொற்கு மனம் பொறுத்தேன் சொல்லாய்' என்றது வருவிக்கப்பட்டது.

---------- (395. விறலி வாயில் மறுத்தல் - முற்றும்) ----------

396. விருந்தொடு வந்துழிப்பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் :

புரவே யெதிர்ந்த நமக்கு விருந்தின்று போலவென்றும்
வரவே புணர்ந்தநம் மாதவம் வாழிய வாணன்தஞ்சைக்
குரவேய் கருமுகிற் கொந்தள பாரங் குரும்பைக்கொங்கை
அரவேய் நுடங்கிடை யாள்விழி யூர்சிவப் பாற்றுதற்கே. (396)

(இ - ள்.) வாணன் தஞ்சையிலிருக்கும் குரவலர் மாலை சூடிய கருமுகில் போன்ற அளகபாரத்தையும், குரும்பைபோன்ற கொங்கைப் பாரத்தையும் தாங்க ஆற்றாதாள்போல, பாம்பையொத்த ஒசியப்பட்ட இடையானது விழியின்கண் ஊரப்பட்ட சிவப்பாற்றுதற்கு நம்மைக் காக்க எதிராய்வந்த விருந்து இன்று வரப்புணர்ந்த நமது மாதவம் எஞ்ஞான்றும் வாழ்க என்றவாறு.

புரக்க - காக்க. 'நமக்கு ' என்புழி, வேற்றுமை மயக்கம். போல - அசைநிலை.

[1]'ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்.'

என்பதனானுணர்க. குரவு - ஆகுபெயர். கொந்தள பாரம் - அளக பாரம். நுடங்கல் - ஒசிதல். 'மாதவம் என்றும் வாழிய' என இயையும்.
-----
[396-1] தொல். சொல். இடையியல் - (௩0) 30.
----------
---------- (396. விருந்தொடு வந்துழிப்பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் - முற்றும்) ----------

397. விருந்துகண்டொளித்த ஊடல்வெளிப்பட நோக்கிச் சீறேலென்றவள் சீறடிதொழுதல் :

தெரியோர் பொருட்டன்று தேர்வின்றி யூடல் செயிர்த்தவர்க்குக்
கரியோர் தெளித்தன்ன காரணங் காட்டுவர் கானுண்டுதேன்
வரியோர் தொடைப்புயன் வாணன்தென் மாறை மலர்த்திருவே
பெரியோர் பொறுப்பரன் றேசிறி யோர்கள் பிழைத்தனவே. (397)

(இ - ள்.) மணத்தை உண்டு வண்டுகள் பண்ணை வாசிக்கும் மாலையை யணிந்த புயத்தையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்குந் திருவை யொப்பாய்! ஆராய்ச்சியின்றி ஊடுதல் ஒருபொருளை யுடைத்தன்று, தெரிவாயாக; கோபித்த வாக்கால் ஆற்றுதலின்றிச் சான்றாயுள்ளோர் தெளிவித்து என்னை காரணங் காட்டுவர், என்னிடத்துக் குற்றம் உண்டாயினுஞ் சிறியோர்கள் பிழைத்தன செய்தக்கால் பெரியோர்கள் பொறுப்பர், ஆதலால் யான் தொழுகின்றேன், என் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்றவாறு.

'ஊடலோர் பொருட்டன்று தேர்' என மாறுக. செயிர்த்தவர் - கோபித்தவர். கரியோர் - சான்றோர். கான் - மணம். தேன் - வண்டு. வரி - பண். ஓர்தல் - ஈண்டு வாசித்தல். தொடை - மாலை. அன்றும், ஏகாரமும் அசைநிலை. 'சீறடிதொழுதல்' என்னுங் கிளவிப் பொருளானும், வருஞ்செய்யுளில், 'என்பாத மிறைஞ்சுதல்’ என்று தலைவி கூறுதலானும், 'தொழுகின்றேன்' என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது.

---------- (397. விருந்துகண்டொளித்த ஊடல்வெளிப்பட நோக்கிச் சீறேலென்றவள் சீறடிதொழுதல் - முற்றும்) ----------

398. இஃதெங்கையர்காணின் நன்றன்றென்றல் :

இஃது எங்கையர் காணின் நன்று அன்று என்றல் என்பது, எங்கையராகிய பரத்தைமார் காணின் நீர் செய்த பணிவு குற்றமாய் முடியும் என்றல்.

எண்போன நெஞ்சமு நீருமென் பாத மிறைஞ்சுதல்நுங்
கண்போலு மெங்கையர் காணினன் றோகயன் மாதிரத்துத்
திண்போ தகந்தொறுந் தீட்டிய வாணன் செழுந்தஞ்சைசூழ்
வண்போ தளவிய நீர்வையை நாட்டுறை மன்னவரே. (398)

(இ - ள்.) கயற்கொடியைத் திக்குகளில் இருக்குந் திண்ணிய யானைகடோறும் எழுதிய வாணன் செழுமையை யுடைய தஞ்சையைச் சூழ்ந்த வளவியபோது கலந்துவரப்பட்ட நீரையுடைய வைகைநாட்டில் உறையும் மன்னவரே! என்னை எண்ணுதல்போன நெஞ்சமும் நீரும் என் பாதம் வணங்குதலை நுமக்குக் கண்ணையொக்கும் எனக்குத் தங்கையராகிய பரத்தையர் காணின் நன்றோ என்றவாறு.

எண் - எண்ணுதல். இறைஞ்சுதல் - வணங்குதல். எங்கையர் - என் தங்கைமார். 'நன்றோ' என்புழி, ஓகாரம் எதிர்மறை. கயல் - ஆகுபெயர். மாதிரம் - திக்கு. போதகம் - யானை. தீட்டல் - எழுதல். அளவுதல் - கலத்தல்.

---------- (398. இஃதெங்கையர்காணின் நன்றன்றென்றல் - முற்றும்) ----------

399. அங்கவர்யாரையு மறியேனென்றல் :

மன்னும் புலவியை மாற்றியுந் தேற்றியும் வல்லவண்ணம்
இன்னுந் தெளிந்திலை யென்னேயென் னேயென்செய் கேனிதற்கு
முன்னம் படிந்து முழுகுநன் னீர்க்கங்கை முன்னுறையும்
அன்னம் படியுங்கொ லோஉவ ராழியி லாரணங்கே. (399)
(இது பிறசெய்யுட் கவி.)

---------- (399. அங்கவர்யாரையு மறியேனென்றல் - முற்றும்) ----------

400. காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் :

போயே தெருவில் தனிவிளை யாடும் புதல்வற்புல்ல
நீயே திலையல்லை நின்மக னேயிவன் நீயுமவன்
தாயே வருகெனச் சேயன்ன வாணன் தமிழ்த்தஞ்சைமான்
ஏயே யெனநிற்ற லானறிந் தேன்தன்னை யெங்கையென்றே. (400)

(இ - ள்.) மகிழ்ந! முருகவேளையொத்த வாணன் தமிழ்த் தஞ்சையிலிருக்கும் மான்போன்ற பரத்தையானவள் தெருவிற்போய்த் தனியே விளையாடும் புதல்வனைத் தழுவியெடுத்தலைக் கண்டு யான், நீ அயலாளல்லை, நினக்கு மகனே இவன், நீயும் அவன்தாயே, வருக என்றழைக்க, அவள் அம்மொழி கேட்டு நாணத்தினால் ஏயேயென நிற்றலான் அவள்தன்னை எங்கையென் றறிந்தேன் என்றவாறு.

மகிழ்ந என்பது முன்னிலை எச்சம். புதல்வன் - மகன். புல்லல் - தழுவல். ஏதிலர் - அயலார். சேய் - முருகன். ஏயே என்பது நாணத்தின் வந்த அடுக்குமொழி. எங்கை - எனக்குத் தங்கை.

---------- (400. காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் - முற்றும்) ----------

401. தலைவியைப் பாங்கி கணித்தல் :

மாவா ரணமன்ன வாணன்றென் மாறைநம் மன்னர்நின்னைப்
பாவாய் பணியவும் பார்க்கிலை நீயிடப் பாகமங்கை
தாவாத சங்கரன் கங்கைதன் கொங்கை தழீஇயிதழிப்
பூவார் சடைமுடி மேல்வைத்த போதும் பொறுத்தனளே. (401)

(இ - ள்.) பாவை போன்றவளே! பெரிய யானை யொத்த வாணன் தென்மாறை நாட்டில் நம் மன்னர் நின்னைப் பணிதலைச்செய்யவும் நீ பார்க்கிலை; சங்கரன் இடப் பாகத்தை நீங்காத அம்பிகை, சங்கரன் கங்கைதன் கொங்கையைத் தழுவிக் கொன்றைப் பூவார்ந்த சடைமுடியின் மேல் வைத்தபோதும் பொறுத்தனள், இது கேட்டிலையோ என்றவாறு.

மங்கை - அம்பிகை. தாவாத - நீங்காத. இதழி - கொன்றை. உம்மை - சிறப்பு.

---------- (401. தலைவியைப் பாங்கி கணித்தல் - முற்றும்) ----------

402. தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல் :

தழங்கார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தனதருள்போல்
பழங்காத லெண்ணலென் பைதனெஞ் சேயிவள் பண்டுபைம்பொற்
கழங்கா டிடமுங் கடிமலர்க் காவுங் கடந்துபுள்ளும்
வழங்கா வழிநமக் கோர்துணை யாய்வந்த மானல்லளே. (402)

(இ - ள்.) துன்பமுற்ற என்னெஞ்சே! இவள் முன்பு செம்பொன்னாற் செய்த கழங்காடப்பட்ட இடமும், விளையாடப்பட்ட மணத்தொடு கூடிய மலர்ச்சோலையும் விட்டு நீங்கிப் புட்களும் இயங்காத பாலைநிலத்தின் வழியில் நமக்கொரு துணையாய்வந்த மான்போன்றவளல்லள், நிறைந்து ஒலிக்கும் புனலையுடைய வையையாறு சூழ்ந்த தஞ்சைவாணன் தன்னுடைய அருள்போன்ற தலைவி பழங்காதலை எண்ணவேண்டா என்றவாறு.

‘ஆர்தழங்கு புனல்' என இயையும். தழங்கு புனல் - வினைத் தொகை. பைதல் - துன்பம். கடி - மணம். கா - சோலை. கடத்தல் - விட்டு நீங்கல். வழங்கல் - உலாவல். மான் - ஆகுபெயர்.

---------- (402. தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல் - முற்றும்) ----------

403. பாங்கி அன்பிலைகொடியையெனத் தலைவனை யிகழ்தல் :

பாங்கி அன்பிலை கொடியை எனத் தலைவனை இகழ்தல்- என்பது, பாங்கி தலைவனை அன்பிலாய் கொடியாய் என இகழ்ந்து கூறல்.

மைந்நாண் மலர்த்தொடை வாணன்தென் மாறையெம் மன்னவுவந்
தந்நாண் முயங்கி அமிழ்தென வார்ந்தனிர் ஆர்வமுற்று
முந்நாண் மதிவட்ட மென்முலை மாதை முனிந்துநஞ்சென்
றிந்நாண் மிகவுவர்த் தீர்புல வாநிற்றிர் எங்களையே. (403)

(இ - ள்.) கருநிறம் பொருந்திய முறுக்கவிழ் மலர் மாலையணிந்த வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் எமக்கு மன்னரே! அந்நாள் மூன்றாம் பூரணைநாள் மதியினது வட்டம் போன்ற மெல்லிய முலைவட்டத்தை யுடைய மாதை விருப்பமுற்றுப் புணர்ந்து மகிழ்ந்து அமுதென இன்பத்தை நுகர்ந்தீர்; இந்நாள், நஞ்சென்று முனிந்து, மிகவும் வெறுத்து எங்களோடு புலவா நின்றீர் என்றவாறு.

மைந்நாண்மலர் - குவளைமலர். மன்ன – அண்மைவிளி. உவந்து - மகிழ்ந்து. முயங்கி - புணர்ந்து. ஆர்தல் - நுகர்தல். ஆர்வம் - விருப்பம். [1]நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை என முதற்றிதி தொடுத்துப் பஞ்சமிவரைக்கும் முதலாம் வட்டம், சட்டி தொடுத்துத் தசமிவரைக்கும் இரண்டாம் வட்டம், ஏகாதசி தொடுத்தும் பூரணைவரைக்கும் மூன்றாம் வட்டமாதலின், 'முந்நாண் மதி வட்டம்' என்றார். உவர்த்தல் - வெறுத்தல். புலத்தல் - ஊடுதல். எங்களை என்புழி, வேற்றுமை மயக்கம். 'அந்நாள் முந்நாள்' எனவும், 'ஆர்வமுற்று முயங்கி யுவந்தமிழ்து' எனவும், 'இந்நா ணஞ்சென்று முனிந்து மிக' எனவும், 'எங்களைப் புலவா நிற்றிர்' எனவும் இயையும்.
-----
[403-1] நந்தை - (௧, ௬, ௧௧) 1, 6, 11 : பத்திரை - (௨, ௭, ௧௨) 2, 7, 12 : சயை - (௩, ௮, ௧௩) 3, 8, 13 : இருத்தை - (௪, ௯, ௧௪) 4, 9, 14 : பூரணை - (௫, ௧0, ௧௫) 5, 10, 15 : என மதிவட்டங் கொள்ளப்படுவதனை பிங்கலந்தையில் வானவர் வகைத்தொகுதியுட் காண்க.
----------
---------- (403. பாங்கி அன்பிலைகொடியையெனத் தலைவனை யிகழ்தல் - முற்றும்) ----------

404. ஆயிழைமைந்தனுமாற்றாமையும் வாயிலாகவர வெதிர்கோடல் :

ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவு எதிர் கோடல் என்பது, தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப் போம்போது தெரிந்தெடுத்த அணியை யணிந்த புதல்வன் குறுக்காக நிற்க, அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக்கொண்டு தலைவன் ஆற்றாமையுடன் வந்துழி, தலைவி புதல்வனும் தலைவனாற்றாமையும் தூதாகத் தலைவனை எதிர்கொள்ளுதல்.

வெள்ளம் பரந்தன்ன வேட்கைசென் றாலு மிகப்பெரியோர்
உள்ளஞ் சிறியவர் மேற்செல்வ ரோவொளிர் கோமளஞ்செய்
வள்ளங் கமல மலர்த்தஞ்சை வாணன்தென் மாறையன்னப்
புள்ளம் புனல்வய லூரபுன் காமம் புகல்வதன்றே. (404)

(இ - ள்.) கடல் புரண்டுவந்தாற் போலும் வேட்கை செல்லினும் மிகவும் பெரியராயினோர் உள்ளஞ் சிறியவராகிய பரத்தையர்பால் செல்வரோ, செல்லார்; விளங்காநின்ற அழகாற்செய்த கிண்ணம்போன்ற கமலமலரில் தஞ்சைவாணன் தென்மாறை அன்னப் புள்ளிருக்கும் அழகிய புனலையுடைய வயலூர! புல்லிய காமத்தை ஒரு பொருளாய்ச் சொல்வதன்று என்றவாறு.

எனவே, நீ பரத்தையர் சேரிக்குப் போன தன்மையை யல்லை என்றவாறாயிற்று. வெள்ளம் - கடல். [1]'கடலன்ன காமமுழந்து' என்றார் பிறரும். உள்ளஞ்சிறியவர் - பரத்தையர். ஓகாரம் - எதிர்மறை. கோமளம் - அழகு. வள்ளம் - கிண்ணம். மலர் என்புழி, ஏழாம்வேற்றுமைத் தொகை. அம் - அழகு. புகல்வது - சொல்வது. தாமரைமலரில் அன்னப்புள்ளிருக்கும்; ஒழிந்த பூவில் இராதெனப் பொருள் கொண்டவதனான், தலைவன் தன்னிடத் தல்லது பரத்தையர்பால் செல்வான் அல்லனென்பதாக உள்ளுறை யுவமம் தோன்றியவாறுணர்க. 'வள்ளங் கமலமலர் அன்னப்புள் ளம்புனல்' எனக் கூட்டுக.
-----
[404-1] குறள். நாணுத்துறவுரைத்தல் - (௭) 7.
----------
---------- (404. ஆயிழைமைந்தனுமாற்றாமையும் வாயிலாகவர வெதிர்கோடல் - முற்றும்) ----------

405. மணந்தவன் போயபின்வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனையினிதிற் புகழ்தல் :

இருமையி லேயும் பயன்களெல் லாந்தன்னை யீன்றநமக்
கொருமையி லேவந் துறத்தகைந் தான்மைந்த னொண்சுடர்போல்
வருமயி லேகொண்டு மாதடிந் தானன்ன வாணன்தஞ்சைத்
திருமயி லேயனை யாய்புன லூரனைத் தேருடனே. (405)

(இ - ள்.) ஒள்ளிய ஞாயிறுபோல் ஒப்புச்சொல்ல வரும் வேல்கொண்டு மாமரமாகநின்ற சூரனை வெட்டிய முருகவேள்போன்ற வாணன் தஞ்சை நகரிலிருக்கும் அழகிய மயில் போன்றவளே! மைந்தன் இம்மை மறுமைகளில் தரும் பயன்களையெல்லாம், தன்னைப்பெற்ற நமக்கு, ஒருமையாகிய இப்பிறப்பிலே வந்து பொருந்தப் பரத்தையர் சேரிக்குப்போம் புனலூரனைத் தேருடனே தகைந்து மனைக்கு அழைத்துக்கொண்டு வந்தனன் என்றவாறு.

இருமை - இம்மை, மறுமை. ஒருமை - இப்பிறப்பு. உறுதல் - பொருந்துதல். சுடர் - ஞாயிறு. அயில் - வேல். ஏகாரம் - அசைநிலை. தடிதல் - வெட்டுதல்;

[1]'சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்'

என்பதனானுணர்க. 'மைந்தனிருமையிலே' எனவும், 'வந்துறப் புனலூரனைத் தேருடனே தகைந்தான்' எனவும் மாறுக.
-----
[405-1] திருமுரு. (௪௬) 46.

---------- (405. மணந்தவன் போயபின்வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனையினிதிற் புகழ்தல் - முற்றும்) ----------
406. தலைவி தலைவனைப் புகழ்தல் :

கொண்டானில் துன்னிய கேளிர்மற் றில்லைக் குறிப்பினென்று
தண்டா தவர்சொன்ன சால்புகண் டேன்தல மேழ்புரக்கும்
வண்டார் மலர்ப்புயன் வாணன்தென் மாறை மகிழ்நர்முன்னாள்
உண்டா கியபழங் கேண்மையிந் நாளும் ஒழிந்திலரே. (406)

(இ - ள்.) தலம் ஏழையுங் காக்கும் வண்டார்ந்த மாலையணிந்த புயத்தையுடைய வாணன் தென்மாறையி லிருக்குந் தலைவர் முன்னாள் உண்டாகிய பழகிய நண்பு இந்நாள்வரைக்கும் ஒழிந்திலர்; ஆதலால், கருதுமிடத்துக், கணவனினும் அணித்தான கேளிர் இல்லையென்று அறிவில் நீங்காத பெரியோர் சொன்ன மாட்சிமையை இன்று கண்டேன் என்றவாறு.

பாங்கி - முன்னிலையெச்சம். கொண்டான் - கணவன். உடலும் உயிரும் நெஞ்சும் அன்பும் ஒன்றாய்க் கலந்த தன்மை தந்தை தன்னையர் முதலாயினோர்க்கு இல்லையாதலால், 'கொண்டானிற் றுன்னிய கேளிர்மற் றில்லை' என்று கூறினாளென்றுணர்க. துன்னுதல் - கிட்டுதல். கேளிர் - சுற்றத்தார். மற்று - அசை. குறித்தல் - கருதல். தண்டாதவர் - நீங்காதவர். சால்பு - மாட்சிமை. மலர் - ஆகுபெயர். மகிழ்நர் - கணவர். கேண்மை - நட்பு.

---------- (406. தலைவி தலைவனைப் புகழ்தல் - முற்றும்) ----------

407. பாங்கி மனைவியைப் புகழ்தல் :

சிறந்தார் புகழ்தருந் தீம்புன லூரன்செய் தீமையெல்லாம்
மறந்தார்வ மெய்தி வணங்குத லாலிவள் வாணன்றஞ்சை
நிறந்தா ரகையன்ன நித்திலம் போலு நெடுங்குலத்தில்
பிறந்தார் நிறைந்தகற் போர்வடி வேபெற்ற பெற்றியளே. (407)

(இ - ள்.) இத் தலைவி மிக்காயினோர் புகழ்தரும் இனிமை யாகிய புனலூரன் செய்த தீமையெல்லாம் மறந்து விருப்பமுற்று அவன் அத்தன்மையன் என்று கருதாது வணங்குதலான் வாணன் தஞ்சை நகரின்கண் ஒளியின் தாரகை யொத்த முத்துப்போல் உயர்குலத்திற் பிறந்த மடவாருடைய நிறைந்த கற்பிலக்கணமெல்லாம் ஓருருவாகப் பெற்ற பெற்றியள் என்றவாறு.

சிறந்தார் - மிக்கோர்.

[1]'உலக முவப்ப வலனேர்பு திரிதரு.'

[2]'பகல்கான் றெழுதரு'

என்பனபோலப், 'புகழ்தரு' என்பது ஓர் சொல். ஆர்வம் - விருப்பம். நிறம் - ஒளி. நெடுங்குலம் - உயர்குலம்; நெடுமால் என்பது போல.
-----
[407-1] திருமுரு. (௧) 1.
[407-2] பெரும்பாணாற்றுப்படை - (௨) 2.
---------- (407. பாங்கி மனைவியைப் புகழ்தல் - முற்றும்) ----------

இச்சொன்ன கிளவிகளெல்லாம், 'வாயில்வேண்டல்' முதல் நான்கு வகைக்கும் ஒக்குமாறு அறிந்துகொள்க.
3.28. பரத்தையிற் பிரிவு முற்றிற்று.
-------------------------

3.29. ஓதற் பிரிவு (408-410)

அஃதாவது, தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். தலைமகளை எய்தியிருந்தே இவன் ஓதுவான் பிரிவானேன் எனின், முன்ஞான மில்லாதானாகவே, ஞானத்தின் வழியது ஒழுக்கமாகலானும், ஒழுக்கத்தின் வழித்துக் குலமாகலானும், இவையெல்லாம் குறையீடாமே யெனின், ஆகாது; கற்பான் பிரியுமென்பது அன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக் கற்றான், அறம் பொருள் இன்ப வீடுபேறுகள் நுதலிய நூல்களெல்லாம்; இனிப் பரதேயத்து அவை வல்லோர் உளரெனிற் காண்பல் என்று அவை வல்லார்கள் உள வழிச்சென்று தன் ஞானம் மேற்படுத்து அவர் ஞானங் கீழ்ப்படுத்தற்கு எனக் கொள்க.

408. கல்விக்குப்பிரிவு தலைமகனா னுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல் :

மல்வித்த கங்கொண்ட தோளுடை யான்தஞ்சை வாணன்தொல்சீர்
நல்வித் தகன்புவி நாவில்வைத் தோன்வையை நாடனையாய்
கல்வித் தடங்கடல் நீந்திய காதலர் கற்றவர்முன்
சொல்வித்த வென்றழ லார்சுரம் போகத் துணிந்தனரே. (408)

(இ - ள்.) மற்றொழிலில் வல்லபங்கொண்ட தோளுடையானாகிய தஞ்சைவாணனது பழைய புகழாகிய நல்ல விதையினை அகன்ற புவியினுள்ளோர் நாவில் பயிராக வைத்தவனது வைகைநாடு போன்றவளே! கல்வியாகிய பெரியகடலை நீந்திக் கரைகண்ட தலைவர் திசைகளிற் கற்றவர்முன் தாங்கற்ற கல்வியானுண்டாகிய கீர்த்தியாகிய வித்தை விதைக்க என்றெண்ணி அழலார்ந்த சுரத்தின்கட் போகத் துணிந்தனர் என்றவாறு.

மல் - மற்றொழில். வித்தகம் - வல்லபம். வித்து - விதை. புவி - ஆகுபெயர். தடங்கடல் - பெரியகடல். சொல் - கீர்த்தி. வித்த - வித்தை விதைக்க.

---------- (408. கல்விக்குப்பிரிவு தலைமகனா னுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல் - முற்றும்) ----------

409. தலைமகள் கார்ப்பருவங்கண்டு புலம்பல் :

யாணர்க் குழன்மொழி யென்செய்கு வேன்கல்வி யெல்லையெல்லாம்
காணப் பிரிந்தவர் காண்கில ராற்கடன் மேய்ந்துதஞ்சை
வாணற் கெதிர்ந்தவர் மங்கையர் போலுமென் வல்லுயிரின்
ஊணற்ப மென்னவெண் ணாவரு மேத முருமுடனே. (409)

(இ - ள்.) அழகினையுடைய குழலிசைபோன்ற மொழியாய்! தஞ்சைவாணனுக்கு எதிராகிய பகைவர் மனைவியர்போலுந் துன்பமுழந் திருக்கின்ற என்னுடைய வலிய உயிரை இனிய ஊணாக நுகர்தல் எளிதென எண்ணிக் கடல்நீரை உட்கொண்டு இடியுடனே மேகம் வாராநின்றது; இதனைக் கல்வி யெல்லையெல்லாம் காணப் பிரிந்த தலைவர் காண்கிலர், ஆதலால், யான் என்செய்கேன் என்றவாறு.

யாணர் - அழகு. செய்யா என்னும் வினையெச்சம், செய்து என்னும் இறந்தகால வாய்பாடாகப் பொருள் கொள்க. உருமு - இடி.

---------- (409. தலைமகள் கார்ப்பருவங்கண்டு புலம்பல் - முற்றும்) ----------

410. தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல் :

காதற் கயம்படிந் துன்னொடு காமக் கனிநுகரா
தோதற் ககன்ற வுணர்வுடை யோருடை நீருலக
மாதர்க் கமைந்தருள் வாணன்தென் மாறை வரக்கடவர்
ஆதற் கணங்கனை யாய்புய லேது அறிந்தருளே. (410)

(இ - ள்.) அணங்கனையாய்! காதலாகிய குளத்திற் படிந்து உன்னொடு கூடிக் காமமாகிய கனியை நுகராது ஓதற்பிரிவாகப் பிரிந்த அறிவுடையோர் பூமிதேவியார்க்கு உடையோனாகி அமைந்தருளப்பட்ட வாணன் தென்மாறையில் வரக்கடவராதற்கு வந்த புயல் நிமித்தமென்று அறிந்தருள்வாய் என்றவாறு.

கயம் - குளம். புயல் - மேகம். ஏது - நிமித்தம்.

---------- (410. தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல் - முற்றும்) ----------
3.29. ஒதற் பிரிவு முற்றிற்று.
-------------------------

3.30. காவற் பிரிவு (411-413)

அஃதாவது, நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு. இவன் நாட்டைப் பிறர் புகுந்து நலிதலும் கைக்கொள்வதும் செய்யப்பட்டவை நீக்குதற்குப் பிரிய ஆண்மையும் மதிப்பும் இலனாம் எனின், நாட்டை நலிவாருளராக நலிவு காத்தற்குப் பிரியுமென்பது அன்று; நாட்டகத்துநின்று நகரத்து வந்து முறைசெய்ய மாட்டாத மூத்தோரும் பெண்டிரும் இருகைமுடவரும் கூனரும் குருடரும் பிணியுடையாரும் என இத்தொடக்கத்தார் முறைக்கருமங் கேட்டுத் திருத்துதல் பொருட்டாகவும், வளனில்வழி வளந்தோற்றுவித்தற்கும், 'தேவர் குலமே சாலையம்பலமே' என்றித் தொடக்கத்தனவற்றை ஆராய்தற்கும், மதிசூடி யோம்புதற்கும் பிரியும் என்பது. அல்லதூஉம், பிறந்தவுயிர் தாயைக்கண்டு இன்புறுவதுபோலத் தன்னாற் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின் தான் அவர்கட்குத் தன்னுருவு காட்டுதற் பொருட்டாகவும் பிரியுமெனக் கொள்க.

411. தோழி தலைவன்காவற் பிரிவுணர்த்தல் :

விண்காவல் கொண்ட திலோத்தமை தான்முதல் மெல்லியலார்
கண்காவல் கொண்டருள் காரிகை காவலர் கார்க்கடல்சூழ்
மண்காவல் கொண்ட மனத்தின ராயினர் வாணன்தஞ்சைப்
பண்காவல் கொண்ட மொழிச்செய்ய வாயிதழ்ப் பைங்கிளியே. (411)

(இ - ள்.) விண்ணுலகப் பதவிக்கு உலகில் தவஞ் செய்து ஒருவர் வாராதபடிக்கு இடையூறு செய்து காவல் கொண்ட திலோத்தமை முதலாகிய மடவார் கண்களை அயலில் நோக்காமற் காவலாய்க் கொண்டருளப்பட்ட அழகையும், வாணன் தஞ்சைநாட்டில் பண்ணைத் தன் வாயினின்றும் போகாமற் காவல்கொண்ட மொழியையும், சிறந்த வாயிதழையுமுடைய பைங்கிளியே!காவலர் கரிய கடல்சூழ்ந்த மண்ணைக் காவல்கொண்ட மனத்தினராயினர் என்றவாறு.

விண் - விண்ணுலகு. காரிகை - அழகு. 'காரிகை பண் காவல் கொண்ட' என இயையும்.

---------- (411. தோழி தலைவன்காவற் பிரிவுணர்த்தல் - முற்றும்) ----------

412. தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல் :

மன்னுயிர் காவலன் வாணன்தென் மாறையில் வந்தளியார்
என்னுயிர் மாவல ரேந்திழை யாயித யம்புலர்த்திக்
கொன்னுயிர் வாடை கொடும்பனி நீரிற் குளிர்குழைத்துப்
பின்னுயி ராமலென் மேற்பூசு நாளுமென் பேசுவதே. (412)

(இ - ள்.) உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கின்ற காவலனாகிய வாணன் தென்மாறையில் ஏந்திழையாய்! நெஞ்சையுலர்த்தி அச்சத்தை வீசும் வாடைக்காற்றுக் கொடியதாகிய பனிநீரிலே குளிரைக்குழைத்துப் பின் யான் மூச்சு விடாமல் என்மேற் பூசுநாளினுங் காவலர் வந்து என் உயிரை அளியார், இனிப்பேசுவது என் என்றவாறு.

புலர்த்தல் - உலர்த்தல். கொன் - அச்சம். உயிர்த்தல் - வீசுதல். உயிராமல் - மூச்சுவிடாமல். 'பூசுநாளுங் காவலர் வந்தளியார் பேசுவதென்' என இயையும்.

---------- (412. தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல் - முற்றும்) ----------

413. தோழி ஆற்றுவித்தல் :

வரற்கால மென்றென் றெனப்பல கூடல் வளைத்துதிரம்
விரற்கால இன்று மெலியன்முன் னேசென்று மேதினிகாத்
துரற்கால குஞ்சர மஞ்சமஞ் சூர்ந்துறை வீசுகின்ற
சரற்காலம் வந்தடைந் தார்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே. (413)

(இ - ள்.) மின்னே! போய் நாட்டைக் காத்து உரல் போன்ற கால்களை யுடையனவாகிய குஞ்சரங்கள் அஞ்சும்படி முகில் நடந்து துளிகளை யெறியப்பட்ட சரற்காலமென் றறிந்து தஞ்சைவாணன் தமிழ்வெற்பர் வந்தடைந்தனர்; ஆதலால், தலைவர் வருங்காலம் எப்போது எப்போது என்று பலகால் கூடல் வளைத்து விரல் உதிரமொழுக இன்று மெலியவேண்டா என்றவாறு.

'என்றென்று' என்பது விரைவின்கண் வந்த அடுக்குமொழி. கூடல் வளைத்தல் - பிரிந்த கணவன் வருதற்கு விரலால் வளைத்துக் குறிபார்த்தல். கால - ஒழுக. குஞ்சரம் - யானை; சாதியொருமை. உறை - துளி.

---------- (413. தோழி ஆற்றுவித்தல் - முற்றும்) ----------
3.30. காவற் பிரிவு முற்றிற்று.
-------------------------

3.31. தூதிற் பிரிவு (414-416)

அஃதாவது, இருவர் அரசர் தம்மிற் பொராநின்றவிடத்து அவரைச் சந்து செய்வித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சந்து செய்வித்தற்குப் பிரியுமெனின், தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வார், அவர் பொருவிறப்பு என்னையோவெனின், தூதுவர் போலச் சந்து செய்வித்தற்குப் பிரியுமென்பது அன்று; இருவரரசரும் நாளைப் பொருதும் என்று முரண்கொண்டிருந்த நிலைமைக்கண், தான் அருளரசனாதலின், 'இம்மக்களும் இவ்விலங்குகளும் எல்லாம்பட இவை இருகுலத்திற்கும் ஏதம் நிகழ்ந்தது என்செய்யுமோ, யான் இப்போரொழிப்பன்' என்று இருவரையும் இரந்து சந்து செய்வித்தலும் ஒன்று. தேவரும் அசுரரும் பொருத காலத்து, தேவரையும் அசுரரையும் மிக்க செய்தாரை யான் ஒறுப்பல் என்று பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்ததுபோல, இவரையும் மிக்க செய்தாரை ஒறுப்பல் என்று சந்து செய்வித்தது எனக் கொள்க.

414. தலைமகனாலுணர்ந்ததோழி தலைமகட்குணர்த்தல் :

தூதாக அன்பர் செலத்துணிந் தாரென்றுஞ் சொற்புலவோர்
மாதாக வன்பசி தீர்த்தருள் வாணன்தென் மாறையிந்து
மீதாக அம்பு கிடந்தன போலுண்கண் மெல்லியலிப்
போதாக வம்புகல் வோரிக லார்தம் புரம்புகவே. (414)

(இ - ள்.) எஞ்ஞான்றுஞ் சொல்லிலேவல்ல நாவலர்களது பெரிய தாகத்தையும் வலிய பசியையும் தீர்த்தருளப்பட்ட வாணன் தென்மாறை நாட்டில் சந்திரன்மேல் அம்பு கிடந்தனபோன்ற முகத்தின்மேல் மையுண்ட கண்ணையுடைய மெல்லியலே! இப்போது பூசலைச் சொல்வோராகிய மாறுபாடுடைய இருபெரு வேந்தரும் பாசறை நீங்கித் தம் புரங்களிற் சென்று புக அன்பர் தூதாகப் போகத் துணிந்தனர் என்றவாறு.

இந்து - சந்திரன். மெல்லியல் - அண்மைவிளி. ஆகவம் - போர். இகலார் - மாறுபாடுடைய இருபெருவேந்தர்.

---------- (414. தலைமகனாலுணர்ந்ததோழி தலைமகட்குணர்த்தல் - முற்றும்) ----------

415. தலைவி முன்பனிப்பருவங்கண்டு வருந்தல் :

மலிகின்ற வண்புகழ் வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல்
மெலிகின்ற சிந்தையு மேனியுங் கொண்டு விளர்ப்பெனும்பேர்
பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந் தேனைப் புரந்தருளார்
நலிகின்ற முன்பனி நாளில்நண் ணார்முனை நண்ணினரே. (415)

(இ - ள்.) நிறைகின்ற வளவிய புகழையுடைய வாணன் தென்மாறை நாட்டை வாழ்த்தாதவர்போல மெலிகின்ற நெஞ்சையும் மேனியையும் உடைத்தாய் விளர்ப்பு என்கின்ற பேர் பொலிகின்ற சட்டை போர்த்திருந்த என்னை மாறுபாடுடைய இருபெரு வேந்தரது படையின்கட் சென்றார், வருத்தஞ் செய்கின்ற முன்பனி நாளினும் வந்து காத்தருளார் என்றவாறு.

மலிதல் - நிறைதல். சிந்தை - நெஞ்சு. மேனி - வடிவு. கஞ்சுகம் - சட்டை. 'விளர்ப்பெனும்பேர் பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை' என்றது, முன்பனிக்குளிர்க்குக் கஞ்சுகம் போடவேண்டுதலான், வேட்கை நோய்தந்து விளர்ப்பென்னுங் கஞ்சுகத்தைப் போர்த்திருந்தேன் என்று கூறினாளென வுணர்க. புரத்தல் - காத்தல். நண்ணார் - மாறுபாடுடைய இருபெருவேந்தர். முனை - படை. நண்ணினர் - சென்றனர்.

---------- (415. தலைவி முன்பனிப்பருவங்கண்டு வருந்தல் - முற்றும்) ----------

416. தோழி ஆற்றுவித்தல் :

சுற்றுங் குழனின் பிணிவிடுப் பான்வந்து தோன்றினர்பார்
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள்முகி லுங்கடலும்
வற்றும் பருவத்து மண்புரப் பான்தஞ்சை வாணனொன்னார்ச்
செற்றும் படையின்வெம் போர்தணிப் பானன்று சென்றவரே. (416)

(இ - ள்.) சொருகுங் குழலையுடையாய், மேகமும் கடலும் வறக்குங் காலத்தும் உலகத்தைக் காப்போனாகிய தஞ்சைவாணன் ஒன்னாரை வெகுளும் படைபோல் இரு பெருவேந்தர் பொரும் வெவ்விய போரைத் தணிக்கும் பொருட்டுத் தூதாக அன்று சென்றவர், பார்முழுதும் பொழிகின்ற முன்பனிக் காலத்தில் நின் வேட்கை நோயைத் தீர்க்கும்பொருட்டு வந்து தோன்றினார், நீ புலம்பலொழியாய் என்றவாறு.

சுற்றல் - சொருகுதல். குழல் - அண்மை விளி. பான் இரண்டும் வினையெச்சம். நாள் என்புழி, ஏழனுருபு தொக்கது. உம்மை - எதிர்மறை. செற்றல் - வெகுளல். படையின் - படை போல்.

---------- (416. தோழி ஆற்றுவித்தல் - முற்றும்) ----------
3.31. தூதிற் பிரிவு முற்றிற்று.
-------------------------

3.32. துணைவயிற் பிரிவு (417-419)

அஃதாவது, நண்பாகிய வேந்தனுக்குப் பகைவேந்தர் இடையூறுற்றவழி, அவ்விடையூறு தீர்த்தற்குத் தலைமகன் துணையாகப் பிரிதல். தன் உழையரில் ஒருவனைப் படைகூட்டிச் செல்லவிடாது, தான் போதல்வேண்டும் என்பது என்னையெனின், நட்புமிக்கால் தானே யவனாயிருத்தலின், அவன் கருமம் தன் கருமமாயெண்ணி விரைவினெழுந்து அப்பகை நீக்கத் தானே போயினன் எனக்கொள்க.

417. துணைவயிற்பிரிந்தமை தோழி தலைமகட்குணர்த்தல் :

நண்பான மன்னர்க் கிடர்தணிப் பானெண்ணி நல்லுதவிப்
பண்பான மன்னர் படர்தலுற் றார்பனி நீர்பொழியும்
தண்பா னலந்தொடை அம்புய வாணன் தமிழ்த்தஞ்சைவாழ்
வெண்பால் நலங்கொள்செவ் வாயன்ன மேயன்ன மென்னடையே. (417)

(இ - ள்.) பனிபெய்யும் நீரைப் பொழிகின்ற தண்ணிய கருங்குவளை மாலை யணியப்பட்ட அழகிய புயத்தை யுடைய வாணன் தமிழ்த்தஞ்சையில் வாழ்கின்ற வெண்மை நிறம் பொருந்திய பாலின் இனிமையைக் கொள்ளுஞ் செய்யவாயையும் அன்னம்போன்ற மெத்தென்ற நடையையும் உடையாய்! நம் மன்னர் தமக்கு நட்பான மன்னர்க்குப் பகை வந்தால் பகை வந்த துன்பத்தைத் தணிக்கும் பொருட்டாக் கருதி நல்லுதவிக் குணத்தினாலே செல்லலுற்றார் என்றவாறு.

இடர் - துன்பம். தணித்தல் - தீர்த்தல். எண்ணல் - கருதல். பண்பு - குணம். படர்தல் - செல்லுதல். பானல் - கருங்குவளை. அம் - சாரியை. தொடை - மாலை. அம் - அழகு. நலம் - ஆகுபெயர். 'செவ்வாய் நடை' என்புழி, உம்மைத்தொகை. மென்னடை - ஆகுபெயர். பின்பனிக்கால மாதலால், 'பனீநீர் பொழியுந் தண்பானல்' என்று கூறியவாறுணர்க.

---------- (417. துணைவயிற்பிரிந்தமை தோழி தலைமகட்குணர்த்தல் - முற்றும்) ----------

418. தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு புலம்பல் :

இன்னற் படுகின்ற என்னையெண் ணார்தமக் கின்றுணையாம்
மன்னற் குதவிப் பிரிந்தநங் காதலர் வாணன்தஞ்சைக்
கன்னற் கடிகை யறிவதல் லாற்பகல் காண்பரிதாம்
பின்னற் கனையிருள் கூர்துன்ப மேவிய பின்பனியே. (418)

(இ - ள்.) தமக்கு இனிய துணையாகிய மன்னர்க்கு உதவியாகப் பிரிந்த நம்முடைய காதலர், வாணனது தஞ்சை நகரில் நாழிகை யறிவிக்கும் வட்டிலான் நாழிகை யறிவதல்லது ஞாயிற்றைக் காண்பதரிதாம், பின்னலாகிச் செறிந்த இருள் மிகுந்து துன்பத்தைப் பொருந்திய பின்பனிக்காலத்துத் துன்பப்படுகின்ற என்னை நினையார், யான் என்செய்கேன் என்றவாறு.

இன்னல் - துன்பம். கன்னற் கடிகை - நாழிகை. பகல் - ஞாயிறு. 'காண்பரிதாம்' என்னும் பெயரெச்சம்,

[1]'தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி
னெச்சொ லாயினு மிடைநிலை வரையார்.’

என்னுஞ் சூத்திரவிதியால், இடையே பலசொல் வரினும், பனி என்னும் பெயரைக்கொண்டு முடிந்தது.
-----
[418-1] தொல். சொல். வினையியல் - (௪0) 40.
----------
---------- (418. தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு புலம்பல் - முற்றும்) ----------

419. தோழி யாற்றுவித்தல் :

வடுக்கண் டனையகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பின்
அடுக்கங் குளிர அசைகின்ற வாடை யகன்றவர்க்கு
நடுக்கஞ்செய் பின்பனி நாளின்வந் தாரமர் நண்பனுற்ற
இடுக்கண் களையவென் றேயகன் கானம் இகந்தவரே. (419)

(இ - ள்.) தஞ்சைவாணன் வெற்பிடத்து மாவடுவைக் கண்டாற்போன்ற கண்ணையுடைய மங்கைநல்லாய்! மலைப்பக்கமெல்லாங் குளிர அசைந்து வருகின்ற வாடைக்காற்று பிரிந்தவர்க்கு நடுக்கஞ் செய்யப்பட்ட பின்பனிக் காலத்து, போரிடத்து நட்புக்கொண்ட வேந்தனுற்ற துன்பத்தை நீக்கவென்று அகன்ற சுரத்தைக் கடந்தவர் வந்தார், நீ புலம்பல் ஒழிவாய் என்றவாறு.

வடு - மாவடு. அடுக்கம் - மலைப்பக்கம். வாடை - வாடைக்காற்று. அமர் - போர். இடுக்கண் - துன்பம். கானம் - சுரம். இகந்தவர் - கடந்தவர்.

---------- (419. தோழி யாற்றுவித்தல் - முற்றும்) ----------
3.32. துணைவயிற் பிரிவு முற்றிற்று.
-------------------------

3.33. பொருள்வயிற் பிரிவு (420-425)

அஃதாவது, பொருளீட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு; எனின், முன் பொருளிலனாமாகவே, 'உள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க் கீதலும், நள்ளுநர் நாட்டலும் நயவா ரொறுத்தலும்' என்னும் இவையெல்லாம் பொருட் குறைபாடுடையார்க்கு நிகழாமையான், இக்குறைபாடெல்லாம் உடையனாம்; அவை யுடையானது பொருவிறப்பு என்னையோவெனின், பொருளிலனாய்ப் பிரியுமென்பதன்று; தன் முதுகுரவரால் படைக்கப்பட்ட பலவேறு வகைப்பட்ட பொருள்களெல்லாங் கிடந்தது, மன்னன் அதுகொண்டு துய்ப்பது ஆண்மைத்தன்மை யன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியும் என்பது. அல்லதூஉம், தேவகாரியமும் பிதிர்க்காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செயத் தனக்குப் பயன்படுவன : என்னை, தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறாராகலான் அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியுமெனக் கொள்க.

420. தோழி தலைமகட் குணர்த்தல் :

மஞ்சைப் புனைமதில் மாறை வரோதயன் வாணர்பிரான்
தஞ்சைப் பதியண்ண லெண்ணவர் போற்றனி நாமிருக்க
நெஞ்சைப் பொருள்வயின் வைத்துநங் கேள்வர்நன் னீண்மதியின்
பிஞ்சைப் புரைநுத லாய்பிரி வானின்று பேசினரே. (420)

(இ - ள்.) நல்ல நீண்ட பிறைபோலும் நுதலையுடையாய்! முகிலையணிந்த மதில்சூழ்ந்த மாறைநாட்டில் வரத்தினால் உதயஞ்செய்த வாணர் குலத்துக்கு அதிபனாகிய தஞ்சைப்பதியில் வேந்தனை யெண்ணாதவர்போலத் தனியாய் நாமிருக்கத் தன்னெஞ்சைப் பொருளிடத்துவைத்து நம் கணவர் பிரியும் பொருட்டாக இன்று சொல்லினர் என்றவாறு.

மஞ்சு - முகில். வரோதயன் - முற்றுவினையெச்சம். அண்ணல் - வேந்தன். எண்ணலர் - பகைவர். மதியின்பிஞ்சு - பிறை. வான் - வினையெச்சம்.

---------- (420. தோழி தலைமகட் குணர்த்தல் - முற்றும்) ----------

421. தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல் :

நங்க ணிரங்க அரும்பொருள் தேட நடந்தவன்பர்
செங்க ணிருங்குயி லார்ப்பது கேட்கிலர் செந்தமிழோர்
தங்க ணிடும்பை தவிர்த்தருள் வாணன்தென் தஞ்சைவஞ்சி
திங்கள் நிவந்தது போற்கவி னார்முகத் தேமொழியே. (421)

(இ - ள்.) புலவர் தம்மிடத்து உண்டாகிய மிடித்துன்பத்தைத் தீர்த்தருளப்பட்ட வாணன் தென்தஞ்சையி லிருக்கும் வஞ்சிக்கொம்பானது திங்களை யேந்தியது போன்ற அழகார்ந்த முகத்தையும் இனிமையாகிய மொழியையும் உடையாய்! நம்முடைய கண்ணானது கலுழ அரியபொருள் தேடநடந்த அன்பர் இளவேனிற் காலம் வந்து செங்கண்ணையுடைய கருங்குயில் ஆரவாரிப்பது கேட்கிலர், யான் என்செய்கேன் என்றவாறு.

இடும்பை - துன்பம். வஞ்சி - வஞ்சிக்கொம்பு. நிவத்தல் - ஈண்டு ஏந்தல். கவின் - அழகு. ஆர்தல் - பொருந்துதல்.

---------- (421. தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல் - முற்றும்) ----------

422. தலைவியைத் தோழி யாற்றுவித்தல் :

வார்த்தன பார மடமயி லேகுயில் மாருதமாம்
தேர்த்தனி வீரன் திருநாளும் வந்தது சேர்மின்சென்றார்
தார்த்தட மேரு வெனும்புய வாணன்தஞ் சாபுரிநின்
றார்த்தது கேட்டுவந் தார்பொருள் தேட அகன்றவரே. (422)

(இ - ள்.) வார்கட்டிய தனபாரத்தையுடைய மடமயிலே போல்வாய்! தார்பொருந்திய பெரிய மேருவென்னும் புயத்தையுடைய வாணன் தஞ்சாபுரியினின்று தென்றற்றேரையுடைய ஒப்பிலாத வீரனென்னுங் காமன் திருவிழா வந்தது; பிரிந்து சென்றவர்கள் தலைவியிடத்துப் போய்ச் சேர்மினென்று குயிலார்த்தது கேட்டுப் பொருள் தேடப் பிரிந்துபோனவர் நம் பக்கல் வந்தனர், நீ புலம்பல் ஒழிவாய் என்றவாறு.

வார் - கச்சு. மாருதம் - தென்றல். வீரன் - மாரன். 'குயில் ஆர்த்தது' எனவும், 'அகன்றவர் வந்தார்' எனவும் இயையும்.

---------- (422. தலைவியைத் தோழி யாற்றுவித்தல் - முற்றும்) ----------

423. தலைவன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு சொல்லல் :

தலைமகன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு சொல்லல் என்பது, கல்விவயிற்பிரிவு முதலாய ஐந்தினுள்ளும் தூது முதலியவும் காரணமாகிய பிரிவின்கண் அவ்வினை ஓர் ஆண்டின்கண் முடியாது நீட்டித்துழித் தலைமகன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு சொல்லுதல்.

மைக்குஞ் சரநிரை யாற்றஞ்சை வாணன் மருவலரைக்
கைக்குங் களங்கெழு பாசறை யூடு கயலும்வில்லும்
மொய்க்குஞ் சுடரிள வம்புலி தானு முயங்கியெல்லாத்
திக்குந் தொழவரு மேசுரு ளோலைத் திருமுகமே. (423)

(இ - ள்.) தஞ்சைவாணன் கரிய யானைக்கூட்டத்தில் பகைவரைக் கோபிக்குங் களம்போன்ற பாசறையுள்ளே கயல்போன்ற கண்ணும் வில்போன்ற புருவமும் மொய்க்கும் ஒலியையுடைய இளம்பிறைபோன்ற நுதலும் கூடிச் சுருண்ட ஒலையையுடைய திருமுகமானது எல்லாத் திக்கினும் யான் தொழவரும் என்றவாறு.

குஞ்சரம் - யானை. நிரை - கூட்டம். கெழு - உவமவுருபு. கைத்தல் - கோபித்தல். முயங்குதல் - கூடுதல். கயலும் வில்லும் புலியும் மூவேத்தர் இலச்சினையாதலான் அம்மூவரும் இலச்சினையிட்டு வரவிடுத்த சுருளோலைத் திருமுகமென்று எட்டுத் திக்குந் தொழவருமென்று சிலேடையால் ஒருபொருள் தோன்றியவாறு உணர்க.

---------- (423. தலைவன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு சொல்லல் - முற்றும்) ----------

424. பாசறைமுற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன் பாகற்குச் சொல்லல் :

மால்கொண்ட வாரண வாணன்தென் மாறை வலவநண்ணார்
கால்கொண்ட வாளமர் கையகல் பாசறைக் கைவயின்முட்
கோல்கொண்ட வாறுநின் னேவல்கொண் டியானிக் கொடிநெடுந்தேர்
மேல்கொண்ட வாறுநம் மூர்வந்த வாறும் வியப்பெனக்கே. (424)

(இ - ள்.) மதத்தால் மயக்கங்கொண்ட யானையை யுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் வலவனே, பகைவரிடங்கொண்ட வாள்பொருந்திய பாசறையைக் கையகலப்பட்ட நீ கையிடத்தில் தாற்றுக்கோல் கொண்டவாறும், நின் ஏவலைக்கொண்டு யான் இந்தக் கொடி பொருந்திய நீண்ட தேர்மேற் கொண்டவாறும், நம்மூர் வந்தவாறும் வியப்பாய் இருந்தது என்றவாறு.

மால் - மயக்கம். கால் - இடம். அமர்தல் - பொருந்தல். கையகலல் - நீங்குதல். முட்கோல் - தாற்றுக்கோல். வியப்பு - அதிசயம்.

---------- (424. பாசறைமுற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன் பாகற்குச் சொல்லல் - முற்றும்) ----------

425. தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங்கண்டு சொல்லல் :

கொத்தல ரோதியங் கொம்பரன் னாள்பொங்கு கொங்கைவிம்ம
முத்தல ராக முயங்கினர் யாமுழு நீர்விழிபோல்
மைத்தலர் நீல மலர்வயல் சூழ்தஞ்சை வாணன்வண்மைக்
கைத்தல மான இனிப்பொழி வாழிய கார்முகிலே. (425)

(இ - ள்.) கார்காலத்து முகிலே, கொத்தாயிருக்கும் மலரைத்தரித்த கூந்தலையுடைய அழகிய கொம்புபோல்வாளது மிகுந்த கொங்கை பூரிக்க முத்துமாலை விரிந்த மார்பை யாம் முயங்கினம்; நிறைந்த நீரிற் கண்போலக் கருமையுடைத்தாய் அலரப்பட்ட நீலமலர் பொருந்திய வயல்சூழ்ந்த தஞ்சைவாணன் கொடையையுடைய கைத்தலத்துக்கு ஒப்பாக இனிப் பொழிவாய், உலகமெங்கும் வாழ்க என்றவாறு.

ஓதி - கூந்தல். பொங்குதல் - மிகுதல். விம்முதல் - பூரித்தல். முத்து - ஆகுபெயர். மைத்து - வினையெச்சம். வண்மை - கொடை. மான – ஒப்பாக. வாழிய - உலகம் வாழ்க.

---------- (425. தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங்கண்டு சொல்லல் - முற்றும்) ----------

3.33. பொருள்வயிற் பிரிவு முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்தாறாநாட் செய்தியென் றுணர்க.
--------------------

3. மூன்றவது கற்பியல் முற்றிற்று.
தஞ்சைவாணன் கோவை முற்றிற்று.

-----------
அகப்பொருட்செய்தி- நாள்வரையறை
பாட்டு முதல் -
பாட்டு வரை
நாள் :
1 - 33 முதல்நாள்
34 - 38 இரண்டாநாள்
39 - 68 மூன்றாநாள்
69 - 89 நாலாநாள்
90 - 100 ஐந்தாநாள்
101 - 159 ஆறாநாள்
160 - 189 ஏழாநாள்
190 - 193 எட்டாநாள்
194 - 208 ஒன்பதாநாள்
209 - 214 பத்தாநாள்
215 - 227 பதினொன்றாநாள்
228 - 236 பன்னிரண்டாநாள்
237 - 238 பதின்மூன்றாநாள்
239 - 253 பதினான்காநாள்
254 - 255 பதினைந்தாநாள்
256 - 273 பதினாறாநாள்
பதினாறாநாள் வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன்
ஐம்பத்தொன்றாநாள் மீண்டுவந்தமையால் முப்பத்துநான்கு நாள் இடைப்பட்டதென உணர்க.
274 - 287 ஐம்பத்தொன்றாநாள்
288 - 304 ஐம்பத்திரண்டாநாள்
305 - 348 ஐம்பத்துமூன்றாநாள்
349 - 354 ஐம்பத்துநான்காநாள்
355 - 365 ஐம்பத்தைந்தாநாள்
366 - 425 ஐம்பத்தாறாநாள்
--------------------

This file was last updated on 16 April 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)